பண்டாரசாத்திரம் உபாயநிட்டை வெண்பா,
நிட்டைவிளக்கம் (உரையுடன்)
ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
paNTAra cAttiram - upAyaniTTai veNpA
niTTai viLakkam (with commentaries)
by ampalavANa tEcikar of tiruvAvaTuturai AtInam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Archive.org/Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பண்டாரசாத்திரம் உபாயநிட்டை வெண்பா
& நிட்டைவிளக்கம் (உரையுடன்)
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகமூர்த்திகள்
Source:
உபாயநிட்டை வெண்பா& நிட்டைவிளக்கம் (உரையுடன்)
திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகமூர்த்திகள்
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணியதேசிக பரமாசாரிய சுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம்
குரோதி - புரட்டாசி - விசயதசமி, 15-10-1964
உரிமை பதிவு.
வெளியீடு எண் 195./ பதின்மூன்றாவது சித்தாந்த சைவ மாநாட்டு மலர்
ஸ்ரீ நமசிவாயமூர்த்தி அச்சகம் - திருவாவடுதுறை
-----------------
உ
சிவமயம்
முகவுரை
நூல்கள் உலகியலுணர்த்துவனவும், ஒழுக்கம் உணர்த்து வனவும், உண்மை உணர்த்துவனவும் என முத்திறப்படும். அவற்றுள் உண்மை உணர்த்துவன ஞான நூல்கள். அவை இலக்கணம் உணர்த்துவனவும், அனுபவம் கூறுவனவும் என இருவகைப்படும். இலக்கணம் உணர்த்துவன சிவாகமங்களின் ஞான பாதங்கள். இலக்கணமும் அனுபவமும் கலந்து உணர்த் துவன மெய்கண்ட சாத்திரங்கள். அனுபவங்கூறி மாணாக்கன் ஐயமறுத்து வழிகாட்டி ஞானநெறிக்குக் கைகொடுத்து அவனை மெதுமெதுவாக அழைத்துச்செல்வன் பண்டார சாத்திரங்கள். பண்டாரங்கள் என்பார் சிவன் ஆன்மாக்களின் மீது வைத்த அளவில்லாக் கருணையினாலே மானிடச்சட்டை தாங்கி வந்த மகான்கள். அவர்கள் தம் மாணாக்கர்களுடைய சாதகநிலைக்குத் தக அவ்வப்போது விளையும் ஐயங்களை அவர்கள் அனுபவங் கண்டு அறுக்கவேண்டியநிலை உண்டாக அதற்காக அருளிச் செய்யப்பெற்றவையே இந்நூல்கள்.
பண்டார சாத்திரங்கள் சிவாகமங்களையும், மெய்கண்ட சாத்திரங்களையும் முதனூலாகக் கொண்டெழுந்தவை. ஆதலால் அவற்றில் காணும் கருத்துக்களே அளித்தும் குழைத்தும் காட்டியும் ஊட்டப்பெறுகின்றன. பண்டாரசாத்திரங்களும் பதினான்கு எனல் மரபு. அவற்றுள் நிட்டையை விளக்கும் நூல்கள் இரண்டு. அவை உபாயநிட்டை வெண்பா , நிட்டை விளக்கம் என்பன.
நிட்டையென்பது நன்றாக நிலைபெறுதல் என்னும் பொரு ளது. நி என்பது நிதராம்' என்னும் வடசொல்லின் திரிபாய் மிகவும் என்னும் பொருளைத் தரும் உ .பசர்க்கமாகிய இடைச் சொல். "ஸ்தாகதி நிவிருத்தெள'' என்னும் வேர், போக் கொழிதல் என்னும் பொருளது . நி என்னும் உபசர்க்கத்தோடு கூடியதால் ஸ்தா ஷ்டாவாகி நிஷ்டா என ஆயிற்று. நன்கு நிலைபெறல் என்னும் பொருள் தந்தது.
எங்கு நிலைபெறுதல்? யார் நிலைபெறுதல்? என்ற ஐயம் எழுதல் இயல்பே. நிலைபெறும் இடம் அழியாததாக என்றும் ஒருபடித்தாக இருந்தாலல்லது வேறொன்று அங்குச் சென்று ஒட்டி நிலைபெறுதல் இயலாது. ஆகவே நிலைபெறும் இடம் நித்தியமானதாகல் வேண்டும். அவ்விடம் சிவம், சிவந்தான் நித்தியமானதும், நிறைந்ததும், மாற்றமும் தோற்றமும் இல்லா ததும் ஆகும். அதனிடம் நிலைபெறுதலே நிட்டை .
அடுத்து யார் நிலைபெறுதல் என்பதைக் கவனிப்போம். புற்றீசல்போலத் தோன்றி நின்று மறைவன் நிலையாதன். நிலை யாத பொருள்கள் நிலையான இடத்து நிலைபெறுதல் முடியாது. நிலையற்ற பொருளை நிலையான பொருளும் ஏற்காது. ஆகவே நிலையான பொருளே நிலையான பொருளைச் சாருதல் வேண்டும். ஆயின் சாருவதும் சாரப்படுவதும் நிலையான பொருளாயின் சாரவேண்டிய நிலை ஏற்பட்டேயிராதே எனின், ஏதோ ஒரு வகையால் நிலையான சாரும்பொருள் குறையுடையதே எனல் பெறப்படும். அக்குறை சாரக்கூடாத ஒன்றைச் சார்ந்ததால் விளைந்தது. அதனை விலக்கவே சாரவேண்டியதைச் சாரவேண் டிய இன்றியமையாமை ஏற்பட்டது என்பது பெறப்பட்டது. சாரக்கூடாதது மலம். அதன் வலியொடுக்க வந்தது மாயையும் கன்மமும். இவை மூன்றும் உயிரைப்பற்றித் தம்வயப்படுத்தி உயிர்க்குணத்தை மறைத்துத் தம் குணமே மேவச்செய்து நின்றன. அவற்றைப் போக்கச் சிவன் ஆசான் மூர்த்தியாக எழுந் தருளி உண்மை ஞானத்தை உதவினான். அதனால் உயிர் சார வேண்டிய சிவத்தைச் சார்ந்து நிலைபெற்றது. அதுவே நிட்டை எனப்பட்டது.
நிட்டை உபாயநிட்டை ஞானநிட்டை என இருவகை. உபாயநிட்டை எண்வகை யோகவுறுப்புக்களான் உருவில் உள்ளத்தைப் பதித்து உருவே தான் என்னும் பாவனையில் அசையாது நிற்கும் அறிவுச்செயல். ஞானநிட்டை நீரும் நீரும் கலந்தாற்போல அறிவுருவான ஆன்மா அறிவுருவச் சிவத்தி னிடம் அருளே தானாய் அசையாது நிற்கும் நிலை. ஞானநிட்டை யெய்த உபாயநிட்டை சாதனம். இங்ஙனமாக உபாயநிட்டை யையும் உபதேசமுறையில் பெறாதார், கருவி கரணங்களைக் காரியப்படாது மறைத்தோ மூடியோ அசைவற்று இருத்தலே நிட்டையென வெளித்தோற்றத்தை அளித்துச் சவம்போலக் கைகால் நீட்டிக் கிடந்தார்களாக, அவர்களை நோக்கி உடல் அசையாமல் இருப்பது மட்டும் உபாயநிட்டை ஆகாது என உண்மையை உபதேசிக்க வந்தது உபாயநிட்டை வெண்பா. இது நாற்பத்தாறு நேரிசை வெண்பாக்களுடையது. போலி நிட்டையை மறுத்து உபாயநிட்டையை விளக்கிச் செல்கிறது. இந்நூல் முழுதும் சிவஞானபோதம் ஒன்பது பத்தாம் சூத்திரக் கருத்தைத் தாங்கி அவற்றைச் சீடன் தன் அனுபவத்திற்குக் கொண்டுவருங்கால் விளையும் ஐயங்களை அகற்றுகிறது.
நிட்டை விளக்கம் என்பது கட்டளைக் கலித்துறையான் அமைந்துள்ளது. இருபத்தாறு பாடல்கள் கொண்டது. ஞான நிட்டையினியல்புகளை விளக்குவது. உயிர் உடற்பற்று நீங்கி அருட்டுணையால் அரனோடு ஒன்றி அசையாமல் இருப்பதே நிட்டை யென்று அறிவிக்கிறது. சரியையாதி நால்வகை நிலை களும் முப்பத்திரண்டு வகையாதலையும், அவை அனுபவத்திற் புலப்படுமாற்றையும் அறிவிக்கின்றது. மிக மிக அருமையான அநுபவ நூல்.
பட்டினத்தார் பாடிய 'மாயநட்டோரை' 'சொக்கிட் டரமனை' என்ற பாடல்கள் இரண்டும் இதில் கலந்துள்ளமை யின் 'நிட்டை விளக்கம் நிகழிருபா னெட்டையும்' என்று நூலிறுதியிலுள்ள வெண்பாவில் குறிக்கப்பெற்றுள்ளது. அவ் விருபாடல்களை நீக்கி இருபத்தாறு பாடல்களே இப்பதிப்பில் தரப்பட்டுள்ளன.
பண்டாரசாத்திர நூல்களின் கருத்தைத் தெரிவிக்க வந்த அபியுக்தர் ஒருவர் இவ்விரு நூல்களைப்பற்றி,
போக்கொடு வரவும் புரிதலுஞ் செறிவும்
பொத்திய மலப்பிணி கரப்பும்
போர்க்கெழு மாயைப் புணர்வொடு கன்மப்
பொருபடை வலிமையும் நீத்துப்
பொன்னிக ரிதழி யந்தொடைப் புனிதன்
பொலங்கழல் தன்னையும் தனையும்
புகலுறக் காட்டல் உபாய நிட்டையதாம்;
போற்றியோங் கொளிதழை நம்பன்
துதிதனை யாடி யவனடி நண்ண த்
தூயசிந் தனையதைக் கூறிச்
சுடரிய ஞானச் செயல்பல புகறல்
சுருக்கமில் நிட்டையின் விளக்கம்.
என்று குறித்துள்ளார்.
இத்தகைய இரு நூல்களுக்கும் வழக்கம்போல உரை எழுதி வெளிப்படுத்தும் வண்ணம் அவிச்சின்ன பரம்பரையாக வரும் ஞான ஆதீனத்து இருபத்தொன்றாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ - ல - ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவருளாணை உதவினார்கள். குருமகாசந்நிதானம் அவர்கள் ஸ்ரீ நமசிவாயமூர்த்திகளின் அருள்வழி நடப்பவர்கள் ; மூச்சிலும் பேச்சிலும் குருநாதன் திருவருள் குடிகொண்டிருக் கப்பெற்றவர்கள் : ஆதலின் அவர்களுடைய அருள் நோக்கே அடியேற்கு இந்த ஆற்றலை உதவியது.
இம்மலர் குரோதி ஆண்டு புரட்டாசித்திங்கள் விசயதசமி விழாமலராகத் திருவெண்ணெய் நல்லூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மெய்கண்டதேவநாயனார் திருவடிக் கண் சாத்தப்பெறுகிறது. புதுமைநலம் குன்றாத திருவடிக்கு அணிசெய்வதால் இம்மலரும் வாடாமல் மணம் குன்றாமல், ஸ்ரீ - ல - ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் புகழ் போல எங்கும் என்றும் மணம் பரப்பி மகிழச்செய்யும். சிவாநுபவச் செல்வர் கள் இம்மலரைத் திருவருட்பிரசாதமாக ஏற்றுச் சிந்தித்துத் தெளிந்து பேரின்பம் எய்துவார்களாக.
திருவாவடுதுறை)   இங்ஙனம்,
10- 10 - 64. ஆதீன மகாவித்துவான்.
ச. தண்டபாணி தேசிகர்.
-------------------
நூலாசிரியர் வரலாறு
ஸ்ரீ அம்பலவாண தேசிகர் திருவிடைமருதூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் மரபிலே தோன்றியவர். இவர் தம் சிறுபிராயத்திலேயே திருவாவடுதுறைப்பதியை அடைந்து, ஞானாசாரியரை அடுத்துத் துறவுநிலை பெற்றுத் தொண்டு பூண்டொழுகியவர். இவருடைய சிவஞான அனுபூதிநிலையை அறிந்தே தமக்குப்பின் சித்தாந்த ஞானோபதேசம் செய்து வருமாறு பரமாசாரியராக ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகரால் நியமித் தருளப் பெற்றவர். இவருக்கு முன்பு சிவஞானோபதேசம் பெற்றுச் சிவானந்த நிட்டையிலே இருந்துவந்த மறைஞான தேசிகர் திருவாவடுதுறையிலே ஒரு தைமாதத்துச் சுவாதி நாளில் சிவபரிபூரணமாயினர். அந்த ஞான சமாதியில் இவர் திருக்கோயில் அமைத்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து கும்பாபிஷேகம் முதலியன இயற்றி, நாடோறும் பூசித்து வழி பட்டு வருவாராயினர். தம்மை அடைந்த பக்குவர்களுக்குக் குருமாபிலே பெற்ற சிவஞானபோதம், சிவஞானசித்தியார். சிவப்பிரகாசம் முதலிய நூல்களைப் போதித்துச் சிவஞானோப தேசம் செய்து விளங்கினர்.
சித்தாந்த சாத்திரங்களில் அங்கங்கே இலைமறை காய் போல் மறைந்து கிடந்த அரும்பொருள்களையெல்லாம் எளி திலே மாணவர் அறிந்து உணர்ந்து உய்யவேண்டும் என்ற திருவுளம் உடையராய்த் தமது சிவானுபவமும் துணை செய்ய அவற்றின் சாரமாகப் பல நூல்களை இயற்றியருளினர். அவை வருமாறு : தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை , சித்தாந்த சிகாமணி , உபாயநிட்டை வெண்பா , நிட்டை விளக்கம், உபதேசவெண்பா, அதிசயமாலை, நமச்சிவாயமாலை என்னும் பத்து நூல்களாம்.
ஒரு சமயம் வைணவப் பிராமணர் ஒருவர் ஞானதேசிக ராகிய அம்பலவாணதேசிகரைச் சரணாக வந்து அடைந்தார்; உபதேசம் பெற விரும்பினார். ஞானாசாரியர் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த அவரை நன்கு சோதித்து அறிந்து சைவ சன்னியாசமும், நைட்டிக நிர்வாண தீட்சையும் செய்து, சிவஞானோபதேசமும் செய்தருளினர். பின்பு, மெய்கண்ட நூல்களையும் தாம் அருளிய தசகாரியம் முதலிய நூல்களையும் உபதேசித்தனர். அவருக்குத் தீட்சாநாமமாக 'உலகுடைய நாயனார் ' எனப் பெயர் கொடுத்தார். உலகுடைய நாயனார் சிவஞானோபதேசம் பெற்று, நல்ல சிவானுபூதி உடையவர் ஆனார். பின்பு, சைவசித்தாந்த சாத்திரக் கருத்துக்களை உள்ளடக்கித் தோத்திரவடிவமாகத் தம் ஞானாசிரியர்மீது பத்துத் திருவிருத்தங்களை இயற்றினர். அது உலகுடைய நாயனார் திருவிருத்தங்கள்' எனப் பெயர்பெற்று விளங்குவ தாயிற்று. உலகுடைய நாயனார் கழிநெடில் எனவும் இது வழங்கப்பெறும்.
உலகுடைய நாயனார் செய்தருளிய திருவிருத்தங்களில் முதற்பாட்டு மலமெனும் தடத்தில் கருமசே தகத்தின் என்று தொடங்குகிறது.
முந்துமா கமத்தை அருட்டுறை யண்ணல் மொழிபெயர்த் துரைத்த நூல் முதலா
முதல்வழி சார்பா மூன்று நூற் கருத்தும் முறைதெரி யாமலே கருதி
நந்தவே யெழுதும் உரைதனைக் குருவாய் நாடிய குரவரை நம்பி
நற்கதி யடையா உயிர்களுக் கிரங்கி நற்கதி கொடுத்திட வேண்டிச்
சிந்தனை யாக்கிப் பதிபசு பாசத் தெரிந்திட லளிதமா வுரைத்துன்
திருவடி நீழல் மருவிட வைத்த தேசிக சிகாமணி நீ காண்
ஐந்தலை அரவின் நடித்தமால் ஈரைந் தாதிய பிறவிநோய் தவிர்த்த
ஆவடு துறைசை அம்பல வாணா அடியவர்க் கருளுமா நிதியே.
என்பது இறுதித் திருவிருத்தம்.
ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக பரமாசாரியர்பால் சிவஞானோப தேசமும், சித்தாந்த சாத்திரங்களும் ஞானாசிரியத்தன்மையும் ஸ்ரீ அம்பலவாண தேசிகருடன் பெற்றுச் சங்காபிடேகமும்
செய்து கொண்டு, திருவாவடுதுறையிலே சிவானந்தநிட்டையி லிருந்து சிவானுபூதியில் உறைத்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் தசகாரியம், உபதேசப் பஃறொடை என்னும் இரு
ஞான நூல்களையும் அருளிச்செய்தார்.
ஸ்ரீ அம்பலவாணதேசிகரிடத்திலே ஞான தீட்சையும் சிவ ஞானோபதேசமும் பெற்றுச் சிறந்த சிவபுரம் - பெரியபிள்ளை என்பவர் தமது ஞானாசிரியர் மீது தோத்திரப்பாடல்களாகப் பத்துத் திருவெண்பாக்களைப் பாடியருளினர். அவை சிவபுரம் பெரியபிள்ளை பாடல்கள் என வழங்கப்படும். 'அந்த மலத் தத்துவிதம்' எனத் தொடங்குவது முதல் திருவெண்பா.
ஆதியே தென் துறைசை யம்பலவா ணாவெனை நீ
பேதமறக் கூடி நின்ற பெற்றிதனை - ஓதிலது சாக்கிரா
தீதந் தருமான்ம லாபமின்பம்
ஆக்கு சிவ போகமென லாம்.
என்ற திருவெண்பாவால் ஆசாரியர் தமக்குச் செய்தருளிய பரமோபகாரச் செயலை விளக்குகின்றார்.
----------------
சிவமயம்
குருமரபு வாழ்த்து
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில் வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழிற்றிருவாவடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.
- ஸ்ரீ மாதவச்சிவஞானயோகிகள்.
-----------------
உ
சிவமயம்
1. ஸ்ரீ அம்பலவாணதேசிகர் அருளிச்செய்த உபாயநிட்டை வெண்பா
கற்றுடலற் றேயுயிரைக் கண்டருள்கொண் டேயரனைப்
பெற்றனமெய் யம்பலவாணன் பெருமை - யுற்ற நலப்
பண்பா வடு துறைச்சீர் பன்னும் உபாய நிட்டை
வெண்பா வுரையை விரும்பி. 1
இவ்வெண்பா. இந்நூலைக் கற்றதன் பயன் இதுவென்பதை உணர்த்துகிறது.
இதன்பொருள் : சத்தியமே வடிவான அம்பலவாண தேசிக குருநாதன் எல்லாப் பெருமைகளும் ஒருசேர வாய்க்கப்பெற் றதும் நன்மைப்பண்புகளனைத்தும் செறிந்ததும் ஆன திருவா வடு துறையினது பெருமையை விளக்குவதாய உபாயநிட்டை வெண்பாவாகிய ஆசாரிய வசனத்தை விரும்பிப் படித்துத் தேகாபிமானம் கெட்டு, ஆன்மாவைத்தரிசித்து, சிவனருளைக் கண்டு, சிவபெருமானையே அடைந்தேம் என்றவாறு.
உபாயநிட்டை வெண்பாவை விரும்பிப் படித்து, மாயா காரியமான புறப்பற்று நீங்கி, சிவனருளால் சிவனைப்பெற்றேம் என்பது கருத்து.
இதனால் ஆசிரிய வணக்கமும், உபதேசச் சிறப்பும் அதன் பயனும் உரைக்கப்பெற்றன. ஆசிரியர் அம்பலவாண தேசிகர். ஆசாரியனே கடவுளாதலின் அவன் வணக்கம் கருதுதலே வாழ்த்தாயிற்று என்று மாணவகன் கருதிக்கூறியது இந்தச் செய்யுள் என்க.
சித்தும் சடமுமாகிய உலகப் பொருள்களில் சடமாயின அநித்தமாதலின் அவை பொய்யாய்க்கெடச் சித்தாயுள்ள உயி ரும் இறைவனுமே நித்தமாய் என்றுமுள்ளன. அவற்றுள்ளும் ஆசாரியனாகிய அம்பலவாணன் சிவமே ஆதலின் என்றும் நிலைத்த சித்தாயினான் என்பதை உணர்த்த 'மெய் அம்பல வாணன்' என்றார்.
அம்பலவாணன் - சிற்றம்பலத்தும், அரசம்பலமாகிய திரு வாவடுதுறைக்கண்ணும் ஒப்ப வாழ்கின்றவனாகிய ஞானமா நடராசப்பெருமான் திருநாமமே தமக்கு நாமமாகப்பெற்ற குரு நாதன். அம்பலம் - பலர்கூடித் தெளியும் வெளி. வாணன் : வாழ்நன் என்பதன் மரூஉ.
பெருமையுற்ற ஆவடு துறை, நலப்பண்பு ஆவடுதுறை என இயைக்க. பெருமை வேற்றிடங்களுக்கு அமையாத சித்தித் தலமாகிற தனிச்சிறப்பு. நவகோடி சித்தர்கள் வாழ்கின்ற பெருமையுடையது என்பதாம்.
நலப்பண்பு - இம்மை வாழ்விற்கு இன்றியமையாத வயல் வளம், நீர்வளம், சோலைவளம், சாலைவளம் முதலியனவும், மறுமை வாழ்விற்கு இன்றியமையாத யோகவளம், ஞானவளம்
முதலியனவும் ஆகிய நலப்பண்புகள்.
ஆவடு துறை - பசுத்துவ நீக்கம் செய்து சிவத்துவ விளக் கந்தரும் இடம். இந்நூல் ஆவடு துறையென்னும் சித்தித் தலத் தின் சிறப்பையே விளக்குவதாகலின் சீர் பன்னும் உரை' யென்றார். பன்னுதல் - பலகாற்சொல்லி விளக்குதல்.
உபாயம் - இலக்கை அடைவதற்குரிய சொல்லும், செயலும், பிற சாதனங்களுமாகிய வழிகள். இலக்கு - சிவப்பேறு. அதற் குரிய உபாயம் புறப்பற்றற்றுத் தன்னைக்கண்டு , அருளுதவ, அவனே தானேயாக நிற்பதாகிய சாதக நிலை.
ஆசாரிய வசனமாதலின் அதனை உரையென்றது. இது ஏனையவற்றைப்போல நூலன்று, உபதேசமொழி என்ற சிறப் புரைத்தவாறாம்.
கற்றல் - பயிலுதல். அது கடமைக்காகக் கற்றலும், தேவைக் காகக் கற்றலும், இதுவே நமக்கு உறுதி பயப்பதாம் என உண்மையுணர்ந்து விரும்பிக் கற்றலும் எனப் பலதிறப்படும். இது மூன்றாவதாம் என்பார் விரும்பிக்கற்று' என்றார்.
கல்வியின் பயன் உண்மை உணர்தல். உண்மையுணர்த லாவது காணப்படுகிற உலகமும், அதனைத் துய்க்கக்கிடைத்த உடலும் மாயையின் காரியமாதலின் நிலையற்றன என்று அறி தல். அங்ஙனம் உணர்ந்தவுடன், தேகமே நான் என்றிருந்த அத்துவிதநிலை அகலும். இருளகற்சியும் ஒளிப்பேறும் பொருள் புலப்பாடும் முன்பின்னாக அன்றி ஒருங்கு நிகழ்தல் போலத் தன்னை அடிமையாக உணர்தலும், தலைவன் அருளும் தலைவனை அடைதலும் ஒருங்கு நிகழும் என்பார் 'உடல் அற்று உயிரைக் கண்டு அருள் கொண்டு, அரனைப் பெற்றனம்' என்றருளினார்.
இத்திருப்பாடல் அளைமறிபாப்புப் பொருள்கோள்.
--------------
நூல்
தொந்தித்த காயந் தொலைவதற்கு முன்னுயிரைச்
சிந்தித்தார்க் கன்றோ திடமாகும் - சந்தித்த
தோலோ வெலும்போ தொகுத்ததசை தானோவென்(று)
ஆலோசித் தார்க்கறிவே யாம். 1
இவ்வெண்பா, சாதனம் உள்ளபோதே சாத்தியத்தை எய்துக என்கின்றது.
இ - ள் : மாயை கன்மங்களால் கூட்டப்பெற்ற இவ்வுட லம் அழிவதற்கு முன்பே ஆன்மாவைப்பற்றி ஆராய்ந்தவர் கட்கன்றோ உறுதியுண்டாகும்; அங்ஙனமன்றிக் கூடிய இது தோலோ எலும்போ தொகுத்துவைத்த தசை நாரோ என்று ஆய்வார்க்கு அறிவு ஆமே என்றவாறு.
எடுத்த இவ்வுடல் அழிவதற்குமுன் இவ்வுடலை இடமாகக் கொண்டு உறைந்து வினைப்போகங்களைத் துய்க்கும் உயிரைப் பற்றிச் சிந்திக்கவே உண்மை ஞானம் உண்டாம். அங்ஙன மன்றி நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ என்று
ஆராய்வார்க்கு உண்மை அறிவு உண்டாகாதென்பது கருத்து.
இத்திருப்பாடல் , நானார்? என் உள்ளமார் ? ஞானங்கள் ஆர்? என்னை யாரறிவார்? என்று உயிரைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்க . அவற்றை விட்டு உமிகுத்திக் கையிளைப்பார் போல, நரம்போ தோலோ என்றாராய்தல் பயனற்ற செய்கை யாம் என்பது அறிவிக்கின்றது.
தொந்தித்த காயம் - வினை நுகர்ச்சிக்காகச் சேர்க்கப்பெற்ற இவ்வுடல். தொந்தம் - வினைக்கட்டு. காயம் - உடல். தொலைத லாவது வினை நுகர்ந்து தீர்ந்த பிறகு அழிந்து வேறாதல்;
அஃதாவது வினைப்போகத்திற்காகப் புணர்க்கப்பெற்ற இவ் வுடல் உள்ளபோதே என்பதாம்.
சிந்தித்தல் - ஆராய்தல். இவ்வுடலை உயிர் வீடுபேறெய்த இறைவனருளிய சாதனமாகக் கருதாது. தோலென்றும் நரம் பென்றும் சீழென்றும் உவர்ப்பொன்றே குறியாகக்கொண்டு இழித்தெண்ணுவார்க்கு நிலையாமை ஞானம் ஒன்றே நேர்வ தாம்; உண்மைஞானம் உதியாதாம் என்பாரும் உளர்.
ஓகாரங்கள் வினாப்பொருளில் வந்தன. ஐயப்பொருளில் வந்தனவுமாம். 'நாடியோ என்போ ' என்னும் சிவஞானபோத வெண்பாவிற்குச் சிவஞானசுவாமிகள், தம்மை அறியுமாறு உணர்த்து முகத்தானே தலைவனை அறிந்தபின் அறியப்படுவ தாகிய தமது அறிவு கொண்டு தலைவனை அறியுமாறு யாண்டை யது என மறுத்து வலியுறுத்த பகுதியுள் தன்னை அறியுமாறு ஒன்றனையும் உணர்த்தியருளியவாறு காண்க.
---------------
அங்கத்தை நோக்கி யடுத்ததசை தோலெலும்பாம்
பங்கத்தைத் தீதென்னப் பார்ப்பாரேல் - சங்கத்தை
அற்றாரே பூரணமா யானவரன் தாளுணரப்
பெற்றாரே யில்லைப் பிறப்பு. 2
இவ்வெண்பா . அரன் தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணலுற்றார் எய்தும் பயன் உணர்த்துகின்றது.
இ - ள் : எடுத்த இவ்வுடம்பை ஆய்ந்து, இவ்வுடம்பை யடுத்துள்ள தசை தோல் எலும்பு முதலான இழிந்தவற்றைத் தீதென்று அறிவாராயின் அவர்கள் சந்தேகமற்றவர் ஆவர்; அவர்களே எங்கும் நிறைந்த பரிபூரணத்துவமான சிவனருளை அறிந்தனுபவிக்கும் இயல்பினர்; அவர்களுக்குப் பிறப்பில்லை என்றவாறு.
உடம்பை ஆராய்ந்து, இவ்வுடம்பு சப்த தாதுக்களால் ஆனது என்றுணர்ந்தவர்களே சங்கமற்றவர்கள்; அவர்களே சிவனருளைப் பெற்றவர்கள். அவர்களுக்கே வினைவயத்தான் வரும் பிறவி இல்லை என்பது கருத்து.
அங்கம் - உடல் . அங்கத்தை நோக்குதலாவது மாயாகாரி யமாய் வினைவயத்தான் வந்தது என்றும், வினைப்போகங்கழிந்த வழி உயிர் அதனைவிட்டு நீங்கும் என்றும், இது உயிரோடு அநந்நியமாக ஒன்றி நிற்றலின் நான் என்ற வாசகத்திற்கு வாச்சியமாய் நிற்பினும் எனதுடல் என்றலின் வேறே என்றும் அறிதல்.
உடல் - உறுப்பியாய், தசை முதலான ஏழுவகைத் தாதுக் கள் அடுத்து விளங்குதலின் அடுத்த தசை தோல் எலும்பாம் பங்கம்' என்றார். பங்கம் - இழிவு. இழிவு தரும் உறுப்பைப் பங்கம் என்றது காரணத்தைக் காரியமாக உபசரித்ததாம்.
தீது என்னப்பார்த்தலாவது நிலையற்றது, வினைப்போகம் கழிந்தவழி அழுகிய கனிபோலவும், வாடிய மலர்போலவும் கெடுவது என்றுணர்தல். பார்ப்பாரேல் என்றது பார்க்கும் உண்மையறிவு ஒருசிலர்க்கே சிவனருளாற் சித்திக்கும் என்ற அருமை உணர நின்றது.
சங்கம் . சந்தேகம். சங்கை சங்கம் என்பன ஒருபொருட் கிளவிகள்.
எங்கும் நிறைந்த பொருள் தானே சிவமாகலின் பூரணமே யான அரன்' என்றார். தாள் என்றது திருவருளை. உணரப் பெறுதல் திருவடி ஞானத்தைப் பெறுதல்.
பார்ப்பாரேல் அவர் சங்கத்தை அற்றார்; அவர் தாள் உண ரப்பெற்றார்; அவர்க்குப் பிறப்பில்லை எனச் சில சொற்கள் வரு வித்து முடிக்க.
-----------------
கண்ணென்றும் மூக்கென்றுங் காதென்றும் நின்றதனு
எண்ணொன்றி நின்றங் கிசையாவாம் - கண்ணொன்றி
நோக்குவதே யாவியென நுண்ணறிவா லெவ்விடத்தும்
ஆக்குவதே யாவிக் கணி. 3
இவ்வெண்பா, உயிரும் உயிருக்கு அணியும் இதுவென்கின்றது.
இ-ள் : கண் காது மூக்கு என உறுப்பின் கூட்டமாய் நின்ற உடல் எண்ணத்துப் பொருந்தி நின்றறியாத சடமாம்; கண்ணோடு வேறின்றிக் கலந்து நின்று பொருளையுணருவதே உயிராம் என்று நுட்பமான ஞானத்தால் எங்கும் அவ்வறிவு பரந்திருப்பதை அறிவதே உயிருக்கு அழகாம் என்றவாறு.
உறுப்பின் கூட்டமாய் உறுப்பியாய் நின்றவுடல் எண் ணத்தோடு ஒன்றி நின்று உணரும் ஆற்றலில்லாத சடமாம். ஆகையாலே காணும் கண்ணோடு ஒன்றி நின்று அறிவது எதுவோ அதுவே உயிர் எனவும், நுட்பஞானமாய் எங்கும் பரவி நிறைந்து விளங்குவதே உயிருக்கு அணியாம் எனவும் உணர்க என்பது கருத்து.
காணும் கண்ணுக்குக் காட்டும் உளமே உயிர் என்பதைக் 'கண் ஒன்றி நின்று நோக்குவதே ஆவி' என்பதால் உணர்த் தியவாறு. இங்ஙனம் உணர்தல் நுட்பமானது என்பார் நுண் ணறிவால்' என்றருளினார். ஏகதேச ஞானமாக அன்றி எங்கும் பரந்த ஞானமாக எண்ணுவது உயிருக்கு அணி என்பதாம்.
--------------
கண்ணே யொருபொருளைக் காணில் கலந்தொன்றாய்
எண்ணுவான் தன்னை யிழந்ததுவாம் - கண்ணினால்
பூணு மொருவனையே பூணி னவனாகக்
காணும் பொறியாகுங் கண். 4
இவ்வெண்பா . கண் பத பதார்த்தங்களை நோக்கும் பொழுது அவையாய் பொருளாய் எண்ணுபவனை இழந்து நிற்கும் ; அக்கண்ணாலே பரத்தை நோக்கின் கண் அதுவாகும் என்பது உணர்த்து கின்றது.
இ-ள் : உலகில் இது கடம் இது படம் எனப் பொருள் களைப் போதித்து உணருங்கண்ணே ஒரு பொருளை உணருங் காலத்து அப்பொருளோடு கலந்து, வேறின்றி, அதுவேயாய் உணரும் கருத்தாவாகிய ஆன்மாவை விட்டுக் காணப்படு பொருளாயே நிற்கும்; அக்கண்ணினால், காணத்தக்க ஒருவ னைக் காணின் அவனேயாக , கண் கருவிமாத்திரமாய் நிற்கும் என்றவாறு.
கண்ணால் ஒரு பொருளைக் காணும் போது, அக்கண் காண் பானைவிட்டுக் காணப்படுபொருளேயாய் நிற்கும் அக்கண்ணினாலேயே பரம்பொருளைக் காணின் அவனேயாகி , கண் கருவி மாத்திரமாய்ச் சடமாய் உபகாரப்படும். அதற்கு ஒரு முதன்மை யின்று என்பதாம்.
ஒரு பொருள் - மாயா காரியமாய் அறியப்படும் மாடு மனை முதலாயினவற்றுள் ஒரு பொருள். கலந்து - காணுங்கண்ணும், காணப்படும் பொருளுமாகிய இரண்டும் பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து; அதாவது கருவியாதற்றன்மை ஒழிந்து காணப்படு பொருளேயாய் என்பதாம்.
எண்ணுவான் - கண்ணாகிய கருவியைக் கொண்டு உலகியற் பொருள்களை உற்றறிபவனாகிய ஆன்மா. இழந்து அதுவாம். காண்பானை விட்டுக் காணப்படு பொருளாயே நிற்குமென்பது.
கண்ணுக்கு அணிகலமாய்ப் பூணத்தக்கது பரம்பொருளா தலின், அதனைப் பூணும் ஓருவன்' என்றார். ஒருவன் என்றது ஒப்பற்றவன் என்பது.
அவன் ஆக - அப்பரம்பொருளே தானாகப்பெற்று. அதா வது காண்பான் காணப்படு பொருளேயாக என்றதாம். அவனே தானேயாய் என்றவாறு.
கண் காணும் பொறியாகும் என்றது காணப்படு பொரு ளாயே காண்பானை மறந்திருந்த கண், காண்பான் காட்சிப் பொருளாகத் தான் கருவிமாத்திரமாய் நிற்கும் என்றவாறு.
-------------
ஊனு முயிரு மொருங்கொப்ப நிற்பினும்
ஊனுயிரை நோக்கா வொழுங்கன்றோ - ஊனைக்
குறித்தறிவை நோக்கிக் குறியா வறிவால்
பறித்தெறிவ தன்றோ பயன். 5
இவ்வெண்பா . கருவியைக் கொண்டு காரியத்தைச் சாதிப்பதே பயன் என்கின்றது.
இ - ள் : உடலும் உயிரும் ஒருசேரக் கலந்திருப்பினும், உடல் உயிரை அறியாது ; அது முறையன்றோ ? அதுபோல உடலைத் தாத்துவிகமெனக்கண்டு, அறிவு வடிவாகிய உயிரை உணர்ந்து, கடந்த பேரறிவால் உடலுக்கும் உயிருக்குமுள்ள உறவைக்களைந்து பிறவியை எறிவதன்றோ உடலெடுத்ததன் பயனாவது என்றவாறு.
உடல் உயிரை அறியாவாறு போல, உயிர் உடலைச் சடம் எனவும், கருவியெனவும் கண்டு கழித்துப் பேரறிவாய் நிற்பதே பிறந்ததன் பயன் என்பது கருத்து.
ஊன் - உடல் : கருவியாகுபெயர் . வினைப்போகம் கழியு மளவும் உடலும் உயிரும் ஒத்தியங்கலின் 'ஊனும் உயிரும் ஒருங்கொப்ப நிற்பினும்' என்றருளியது.
ஊன் சடமாதலின் சித்தாகிய உயிரை அறியாது. அது போல உணர்த்த உணரும் அறிவாகிய ஆன்மா, பேரறிவாகிய சிவத்தையறிந்து சிவமேயாக, உடல் வீனைக்கழிவிற்காகவுதவிய கருவியெனக் கண்டு கழித்தல் வேண்டும் என்பார் 'ஊனைக் குறித்து, அறிவை நோக்கி' என்றார்.
குறியா அறிவால் - இத்தகைத்து இவ்வண்ணத்ததென்று சுட்டி அறியப்படாத அறிவால் ; அறிவென்றது ஈண்டுச் சிவ பரம் பொருளை. பரஞானத்தை என்றலுமாம்.
பறித்து - வினைக்குக்காரணமான பற்றுக்களையும், அதனால் விளையும் பிறவியையும் நீக்கி எனச் செயப்படுபொருள்வருவிக்க. பறித்து என்னும் சொல்லாற்றலால் அவை களைகளாகக் கருதப் பெற்றன என்பதாம்.
இங்ஙனம் பரஞானத்தால் பரமே பார்த்துப் பிறவியை யறுப்பதே பெறும் பயன் என்பதுணர்த்தியது இச்செய்யுள்.
--------------
உயிரு முடலு மொருங்கொப்ப நின்றாங்(கு)
உயிருடலை நோக்கி யுறுமால் - உயிர்தான்
பிடிக்குங்கா லொன்றாய்ப் பிடிக்கும்பின் போந்து
விடுக்குங்கால் வேறாய் விடும். 6
இவ்வெண்பா , உயிரும் உடலும் ஒன்றாயும் வேறாயும் இருக்கும் இயல்பை விளக்குகிறது.
இ-ள் : ஆன்மாவும், வினைக்கீடாகக்கிடைத்த உடலும் ஒருங்கு இயைந்து நின்று, அங்ஙனமே சித்தாகிய உயிர் உட லாகிய தாத்துவிகத்தையும், தத்துவங்களையும் கண்டறியும்; உயிரானது உடலைப்பற்றி நிற்குங்கால் வேறின்றி ஒன்றாய்ப் பற்றி நிற்கும்; அங்ஙனமே பிரியும் போது வேறாகிவிடும் என்றவாறு.
புளியங்காயாக இருக்கும் போது ஓடும் தசையும் வேறாகாது ஒட்டி ஒன்றாய் நின்றது. பழமான காலத்து ஓடும் புளியும் வேறானாற் போலப் பிரியும் என்பதாம்.
உடலைப்பற்றி நின்று வினைகளை நுகரும்போது உயிர் உட லோடு அநந்நியமாய் நிற்கும். உடலின் வேறாக - தன்னைச் சித்தாக உணரும் போது உயிர் உடலின் வேறாகவே உணரும்
என்பதாம். ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும், வேற்றுமை நயத்தின் வேறேயுடலுயிர் என்பதாம்.
-----------------
அறிவாற் பிறியு மறியாமை யாலும்
செறிவாந் தனுத்தெசிக்கத் தேரின் - பிறிவான்
மனமிடைய வாக்கை மனுவாங் கருவி
தனுமிடைய வாவி தகும். 7
இவ்வெண்பா , உடலையறியவும், மனம் உடற்பற்றைத் துறக்க வம் உளங்கொள்ள உயிர் பரிபாகப்படுதலை உணர்த்துகிறது.
இ - ள் : அறிவால் நீங்கத்தக்க அறியாமையாலும் நெருங்கியுள்ள உடலைக்காண அதனை ஆராயின் மனம் உடற் பற்றைத் துறக்க, வாக்கை மந்திரமாகிய காரண சரீரம் பொருந்த, உயிர் பரிபாகம் எய்தும் என்றவாறு.
அறிவு வடிவாகிய உயிரும், அறியாமையும் ஒன்றாய் உறை கின்ற உடல் என்பார் 'அறிவால் பிறியும் அறியாமையாலும் செறிவாம் தனு' என்றார். ஒளியும் இருளும் ஒருங்கு உறையா வாக, அறிவாலும் அறியாமையாலும் செறிவாம் தனு என்றது எங்ஙனம் இயையும் எனின், உடல் உயிர் உறைதற்குரிய இட மாதலானும் உயிர் உணர்த்த உணரும் சித்தாதலானும் இவற் றின் இயைபு பொருந்துவதாம் என்க.
உயிருக்கு அறிவு நித்தியமாதலானும், அறிவு விளக்கம் பெறவே அறியாமை பிறிதல் இயல்பாதலானும் 'பிறியும் அறி யாமையாலும்' என அறியாமையை விசேடித்ததாம்.
தெசிக்க - தெரிரிக்க என்பதன் சிதைவு; காண அல்லது அறிய என்பது பொருள். சித்தத்து அயலாய்த் தெசித்ததாம்' (செய். 33) என்பார் பின்னும். ஆவி, தெசிக்கத் தேரின் மன மிடைய, வாக்கை மனுவாம் கருவி தனு மிடையத்தகும் எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
---------------
தன்னைத்தா னென்னான் தகுமுடலைத் தானென்பான்
பின்னற்றாற் செத்த பிணமென்பான் - முன்னத்தால்
சேட்டிக்கு மாவி செயற்படுவ தங்கமென
நாட்டுகையா லாவியென நாடு. 8
இவ்வெண்பா , உயிரைத் தரிசிக்கும் முறை உணர்த்துகின்றது.
இ - ள் : உயிராகிய தன்னைத் தான் ' என்று வியவகரி யான் ; இடமாகத்தக்க உடலையே தான்' என்பான் ; பின்பு, உயிர் உடலைவிட்டுப் பிரியின் அவ்வுடலைச் செத்த பிணம் என்பான்; முன்னைய வினைகளால் இயங்கும் உயிரால் செயற் படுவது உடல் என உறுதிப்படுவதால் ஆன்மாவை உள்ள வாறு அறிவாயாக என்றவாறு.
உயிராகிய தன்னைத் தான் என்னான் ; உயிர் தங்கும் குடிலா கிய உடலையே தான் என்பான்; வினைக் கழிவின்கண் உயிர் அற்றுப்போனால், உடலைப் பிணம் என்பான் என்று, தான்' என்று உணரத்தகாததை உணர்ந்த இழிவு புலப்படுத்தியவாறு காண்க.
முன்னதால் என்பது முன்னத்தால் என விரிந்தது. முன்னது - பழவினை; ஈண்டுப் பிராரத்தத்தை. சேட்டிக்கும் - தொழிற்படும். உயிர்கள் வினைப்படுவது பழவினை காரணமாக ஆதலின் இங்ஙனம் கூறியருளியதாம். ஆவி சேட்டிக்க அங்கம் செயற்படுவது என நாட்டுகையால் ஆவியே தான் என நாடுக என்பதாம்.
-------------
மருவுந் தனுவதனை மற்றுயிர்மேல் வைத்தல்
தெரியும் பொருளைத் தெரியத் - தெரியாத்
தனுவனைத்து நோக்கித் தகுமுயிரே தானா
வினையனைத்து நிற்கும் விரைந்து. 9
இவ்வெண்பா , சிவதரிசனம் செய்ய சிவமே தானாம் என்பது உணர்த்துகின்றது.
இ - ள் : பொருந்திய இவ்வுடலை உயிரோடு பொருந்த வைத்த - ஆராயப்படும் பொருளாகிய சிவபரம்பொருளைத் தரிசிக்க , அன்னமய கோசமாகிய இப்பருவுடலேயன்றி அறியப் படாதனவாகிய பிராணமய கோசம் மனோமய கோசமாதிய உடல்களையும் கண்டு பரிபாகமுற்ற உயிர் சிவமேயாக விளங் கும்; அப்போது எஞ்சிய வினைப்போகங்கள் அனைத்தும் விலக விரைந்து நிற்கும் என்றவாறு.
உடலை உயிரோடு கூட்டிய சிவத்தைத் தரிசிக்க உயிருக்கு உள்ள ஏனைய கஞ்சுகங்களும் காணப்பெறும்; உயிர் சிவமாம்; அப்போது வினைகள் அனைத்தும் விலகும் என்பது கருத்து.
பிராரத்தகன்மப் பொசிப்பிற்காக இவ்வுடல் இறைவனால் கொடுக்கப்பெற்றதாதலின் மருவும் தனு' எனப்பெற்றது.
உடலை உயிர்மேல் வைத்தலாவது உயிருக்குக் கஞ்சுகமாக உடலைப் பொருத்துதல். கஞ்சுகம் - சட்டை. பொருள் - சிவம்.
தெரியாத்தனு அனைத்தும் என்றது. பருப்பொருட்டாக அறியப்படாதனவும், கலப்பான் வேறாக அறியப்படாதனவு மான தத்துவ தாத்துவிகங்களாலான உடல்கள்.
சிவத்தை ஆன்மாவால் தரிசித்துப் பாவிக்க அநாதியாய்க் கூடி நின்ற பொதுவியல்பைத் தான் விட்டு நிற்குமாதலின் தெரியும் பொருளைத் தெரிய உயிரே தானாம் ஏகனாகிய இறை பணி நிற்கும் நிலையுண்டாம் என்பது. இதனை,
"கண்டதை யன்றன்று எனவிட்டுக் கண்டசத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த
ஊனத்தைத் தான் விடுமா றுத்தமனின் ஒண்கருட
சானத்தால் தீர்விடம் போல் தான்"
என்னும் சிவஞானபோத வெண்பாவான் உணர்க.
-------------
கருவி யனைத்தினையுங் காணுங் கருவிக்(கு)
ஒருவ னிவனெனவு மோரா - மருவும்
கருவியே தானாய்க் கலந்தொன்றாய் நிற்கும்
மருவுமுயிர்க் குற்றதோர் மாண்பு. 10
இவ்வெண்பா , உயிரின் இயல்பு இது என்கின்றது.
இ - ள் : கருவிகளாகிய மனம் முதலியவற்றையும், கண் முதலியவற்றையும் இயக்கும் கருவியாக உயிர்க்கு உயிராக இருப்பான் இவன் ஒருவனே என்று அறியாவாய், தம்மோடு பொருந்திய கருவிகளே தாமாகக் கொண்டு மயங்கி அநந்நிய மாய் நிற்குமிதுவே உயிருக்குற்றமாட்சிமையாம் என்றவாறு.
கருவிகளோடு ஒன்றிக் கருவியாயே நிற்பதன்றி, கருவி களைக் கொண்டு காணும் உயிராகிய தன்னைப்போல, தன்னைக் கருவியாகக் கொண்டு காட்டுவான் ஒருவன் உளன் என்பதை அறியாமையே உயிரினியல் பாம் என்பது கருத்து.
கருவி - அகமும் புறமுமாகிய கருவிகள் ஒன்பதையும். காணும் - தன் கருத்தின் வண்ண ம் செயற்படுத்தும். கருவி என்றது ஈண்டு உயிரை. உயிரே கண் முதலான கருவிகளை மனத்தொடு பொருந்தி நின்று இயக்குகின்றமையின் அதுவும் இறைவனாகிய கருத்தாவானியங்குதலான் கருவி எனப்பட்டது.
ஒருவன் என்றது இறைவனை. உடம்பு முதலானவற்றோடு கலந்து ஒன்றாய்த் தன்னை மறந்து நிற்பது போலத் தன்னை இயக்கும் தலைவனையும் மறந்து இருத்தலே உயிரின் இயல்பு என்றவாறு.
-----------------
புலமனைத்து நின்று பொருந்தியுமற் றுன்னைத்
திலமளவுங் காணத் தெரியா - மலமனமே
அங்கமே பொய்யா யகன்றபோ தாவிதான்
சங்கமே யாகத் தகும். 11
இவ்வெண்பா, மனத்தை விளித்து உண்மை உபதேசிக்கிறது.
இ - ள் : நீ ஐம்புலன்களோடும் நிலை பெற்றுப் பொருந்தி யும், உன்னை எள்ளளவும் அறியமாட்டாத மலத்தான் மறைப்புண்ட மனமே ! எடுத்தவுடல் பொய்யாக அழிந்து பட்டபோது உயிரே உனக்குச் சங்கமாகத்தகும் என்றவாறு.
உடற்பற்று நீங்கிய போது உயிரே உனக்கு உற்ற துணை யாவது என்று மனத்திற்கு அறிவித்தவாறாம். புலம் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற விஷயங்கள். மனம் பொறிகளோடு கூடிப் புலன்களை நுகர்ந்ததும் மனம் பொறிகளை இயக்கும் தன்னை அறியாது என்றதாம்.
மல மனமே - மாசுடைய மனமே . மாசுகள் ஆணவமல காரியமான காம வெகுளி மயக்கங்கள்.
அங்கம் - உடல். உடற்பற்று நீங்கிய போது உயிரோடு கூடவேண்டியவன் நீ என்பார் அங்கமே பொய்யாய் அகன்ற போது ஆவிதான் சங்கமேயாகத் தகும்' என்றார்.
---------------
ஓட்டி யறிவை யுறுமுடலைப் பேதமென
வாட்டியபேர்க் காவி வளமாகும் - மூட்டிக்கை
வித்தாரஞ் செய்து வெறும் பிணத்தைத் தானாக
வைத்தார்க் குயிரேன் வரும். 12
இவ்வெண்பா . உடலும் உயிரும் வேறென உணர்வோர்க்கு ஞானமுண்டாம் என்கின்றது.
இ-ள் : அறிவைக் கொண்டு ஆராய்ந்து, வினைப்போகத் திற்காகக் கிடைத்த இவ்வுடலை உயிரின் வேறானது என்று உணர்ந்து, அதனைத் தவத்தானும் தியானத்தானும் வாட்டிய வர்கட்கே உயிர் பரிபாகமுற்றதாகும்; அங்ஙனமன்றிக் கை களைச் சேர்த்து விரித்துக்கொண்டு, பிணமாகிய உடலைத் தானென்று மயங்கிய போர்கட்கு உயிர் எங்கிருந்து வரும்? ஏன்வரும்? என்றவாறு.
உடலின் உயிர் வேறானது என்று உணர்ந்தவர்களுக்கே ஞானவளம் உண்டாம்; உடலையே நான் என்று வாதிக்கும் தேகான்ம வாதிகளுக்கு உயிர்வளம் எங்கிருந்து உண்டாம்? உண்டாகாது என்பது கருத்து.
ஒட்டி - செலுத்தி. உடலுயிர் ஒன்றியிருக்கு நிலையில் வேறு பிரித்தறிதல் அருமையாகலின் அறிவைச் செலுத்தியே இதன்று இதன்று எனக் கழித்து உண்மை அறியவேண்டுதலின் இங் நுனம் கூறினார். சுட்டியுணர்வதனைச் சுட்டி அசத்து என்ன அறிந்து, இனியுளது சாத்தே காண் என அறிதலும், அங்ஙனம் அறிந்த நீயும் சாத்தல்லை; ஆதலால், அசத்தினைப்பற்றி நின்று உணர்ந்த நீ சத்தினைப்பற்றி நின்று உணர்ந்து பொய் நீங்கு மாற்றை அறிந்துய்க என விளக்கினார்கள்.
அறிவு - ஆன்மா . உயிர் உணர்த்த உணரும் சித்தாகலின் அறிவு எனப்பட்டது.
வாட்டுதல் - தவத்தானும் விரதங்களானும் பொறி புலன் களை ஒடுக்குதல் வாயிலாக உண்மையுணர்தல்.
ஆவிவளமாதலாவது உண்மைஞானம் விளங்கப்பெறுதல். நீ யார்? என்று ஒருவன் வினாயவழி கைவிரல்களை விரித்து மார்போடு வைத்துக்கொண்டு நான் தான் என்று தேகத்தைச் சுட்டுதலைக் கைமூட்டி, வித்தாரஞ்செய்து வெறும் பிணத்தைத் தானாகவைத்தல்' என்றார்கள்.
உயிர் ஏன் வரும் எனினும் உயிருக்கு வளம் ஏன்வரும் எனக்கொள்க. இதனால் தேகேந்திரிய கரணங்களைத் தானென மதியாது அவற்றைக் கருவியாகக் கொண்டு உணர்வு வடிவா யிருந்து இயக்கும் உயிரை நானென்றுணர்க; அப்போது இவ் வுடலோடு கூட்டிய தலைவனிடம் பற்றுப்பிறக்கும். அது உய்யு நெறியாம் என உயரும் உண்மையை உபதேசித்தவாறு.
-------------
மனவாக்குக் காயத்தை மன்னியபின் னல்லால்
தனியே யறியத் தகாதால் - மனவாக்குக்
காயத்துக் கெட்டாக் கருதியதோர் பூரணமாம்
மாயமே யாவியென மன். 13
இவ்வெண்பா, உடலின் வேறாக உயிரை உணருமாறு உணர்த்துகின்றது.
இ-ள் : மனம் வாக்குக் காயங்களைப் பொருந்திய பின் அல்லது தனியே உயிரை அறியத்தகாது ; ஆகையால், அவை கட்கு எட்டாத உணர்வு வடிவான நிறைந்த பொருளாம் மாயமே உயிர் என்று எண்ணுக என்றவாறு.
கருவி கரணங்களின் சேட்டையைக் கொண்டு இவற்றை இயக்கும் இயமானனாகிய உயிர் உண்டென்று அறியப்படுவது அன்று. ஆகவே, கருவிகளைத் துணைக்கொண்டு அவைகட்கு எட்டாத ஆன்மா உடலெங்கும் நிறைந்த பொருளாக மாயம் போல் மறைவாக இருக்கிறதென்று உணர்வாயாக என்பதாம்.
நினைப்பும், சொல்லும், செயலும் வாயிலாகவே உயிர் உண்மை அறியப்படுதலின் மனம் வாக்குக் காயத்தை மன்னியபின் அல்லால் தனியே அறியத் தகாது' என்றார்கள்.
அவற்றான் உயிர் உண்மை அறியப்படுவதாயினும் அவை சடமாதலின் சித்தாகிய இதனை உணரமாட்டா என்பார் எட்டா தது என்றார்கள்.
அளவுட்பட்டதான உடலின் அளவு நிறைந்துள்ளது உயிர் என்பார் பூரணமாம் உயிர்' என்றார்கள்.
ஆயினும், அனுமான அளவையான் அறியப்படுவதன்றி வேறு அளவைகளான் அறியப்படாமையின் 'மாயமே ஆவி' என்றார்கள்.
இங்ஙனம் கருவி கரணங்களானன்றி உண்மை உணர இயலாததும், அவைகட்கு எட்டாததும், உடலெங்கும் பூரண மாய் இருப்பதும், மாயமானதுமே உயிராம் என்பதுணர்த்தப் பெற்றது.
----------------
உறையுந் தனுவி லுறையு முயிர்தன்
நிறைவை யறிந்தொருகானில்லா - அறையுமுடல்
சேட்டையல்லான் மற்றுயிரின் சீவகமே யில்லையெனக்
காட்டுகையா லாவியிலைக் காண். 14
இவ்வெண்பா. செயல்களனைத்தும் உடற்சேட்டையேயன்றி உயிரின் சீவகமன்று என்னும் பிறர்கூற்றை விளக்குகிறது.
இ - ள் : உலகில் உறைகின்ற உடம்பில் தங்கியிருக் கின்ற உயிர் தன்னுடைய நிறைவைத் தான் தெரிந்து ஒரு காலம் நில்லா; அன்றியும் சொல்லப்படுகின்ற உடம்பின் சேட்டையே அல்லாமல், உயிரின் பிழைப்பு இல்லையென்று அறிவித்தலால் உயிர் என்பது ஒன்று இல்லை; இதனை நன்கு ஆராய்ந்து பார் என்றவாறு.
உடற்சேட்டையே அல்லாமல் உயிருக்குப் புடைபெயர்ச்சி யின்மையால் ஆவி என்பது ஒன்றில்லை என்பாரை நோக்கி, உண்மையை உணர்த்துவது மேல் வரும் வெண்பா ஆதலின், இது உடலில் உறையும் உயிர் தான் உடல் முழுதும் வியாபித் திருத்தலை அறிந்து ஒருகால் உடலோடு கூடியே நில்லாதாம் என்பது உணர்த்தியவாறு.
தனு - உடல். உடல் வினைப்போகங்களைத் துய்ப்பதற் காகத் தத்தம் கால எல்லை வரையில் இவ்வுலகத்து உறைதலால் "உறையும் உயிர்' எனப்பட்டது.
அத்தனுவை இடமாகக்கொண்டு குடத்துள் விளக்குப் போல அறிவு வடிவாய் ஆன்மா நிறைந்து உறைதலின் 'உறையும் உயிர் தன் நிறைவை அறிந்து ஒருகால் நில்லா' என்றார்.
காண்டலும் கேட்டலும் முதலான அறிசெயல்களும், உண் ணல் உடுத்தல் முதலான புறச்செயல்களும் உடலின் புடை பெயர்ச்சியே ஆதலின் அவற்றை உடற்சேட்டை என்றார்.
சீவகம் - உயிரின் இருப்பு. உடலின் புடைபெயர்ச்சிகள் உயிரின் இருப்பால் அன்று. ஆகவே உயிர் என்பது ஒன்றில்லை என்று பரபக்கம் கூறியவாறாம்.
------------------
சீவிக்குங் காயம் செடமாமால் சீவகத்தை
ஆவிக்கு நன்கா யமைப்பதல்லால் - சீவிக்கும்
காயமே தானாய்க் கருதியவா றெல்லாம் பொய்
மாயமே யென்ன மதி. 15
இவ்வெண்பா , உடல் சடமாதலின் உயிரே உடலின் புடை பெயர்ச்சியை நிகழ்விப்பது என்கிறது.
இ - ள் : உயிரைக் கொண்டு பிழைக்கும் உடல் சடமாத லின், இவ்வுடல் உயிருக்கு இடமாவதை நன்றாக விளக்குவ தல்லாமல் உயிரோடு கூடி இயங்கும் உடலையே தான் எனக் கருதி இருந்ததெல்லாம் பொய்யும் மாயமும் ஆம் என்று எண்ணுவாயாக என்றவாறு.
இயங்கும் உடல் அறியாமையுடையது ஆதலின், உயிருக்கு இடமாதலை நன்கு பொருந்துமே அல்லாமல் உடலே தான் ஆகாது; அவ்வாறு எண்ணுவது பொய்மையும் மயக்க உணர் வுமாம் என்று, ஆவி இல்லை என்பாரை மறுத்துரைத்தவாறு.
சீவிக்கும் காயம் - உயிரோடு கூடி இயங்கும் உடல். சடம் - அறிவற்றது. சீவகம் - உயிருக்கு இடமானது. அதாவது உடல். அதனை நன்றாக அமைத்தலாவது, போக நுகர்ச்சி கழியும் வரை பிணியும் மூப்பும் சாக்காடும் ஆதிபெளதிகமாதியாய மூவகைத் துன்பங்களும் இல்லாமல் பாதுகாப்பது. ஒன்றான உடலையும் உயிரையும் வேறு பிரித்து அறியமாட்டாது, உடலையே தான்
என்று உணர்தல் பொய்யும் மயக்க அறிவுமாம் என்றதாம்.
-------------------
ஆவியென வேறோ பொய் யாக்கையே தானாக
மேவியதே யன்றோ விளம்புங்கால் - ஓவியம் போல்
நீக்கித் தனுவை நிகழறிவைப் பூரணமாய்
ஊக்குவதே யாவிக் கொழுங்கு. 16
இவ்வெண்பா , ஆக்கையே தான் என்பாரை நோக்கி, உடல் ஓவியம் போன்றது; அதன்கண் நிகழும் அறிவு போன்றது ஆவி என்று உயிரின் இயல்பு உணர்த்துகின்றது.
இ-ள் : உயிர் என்று வேறு ஒரு பொருள் உண்டோ ? நிலையாமையையுடைய உடலையே தாமாகப் பொருந்தியது அன்றோ உயிர் என்பது. ஆதலால், உடலை ஓவியம் போன்றது என்று நீக்கி, அவ்வுடலின்கண் நிகழ்வதாகிய ஞானத்தை எங்கும் நிரம்பியதாகச் செலுத்துவதே ஆவிக்கு ஒழுங்காம் என்றவாறு.
உயிரென ஒரு பொருளில்லை; தான் என்பது உடலையே என்பாரை மறுத்து, உடலை ஓர் ஓவியம் போன்றது என்று உதறித்தள்ளி, அதன்கண் நிகழ்வதாகிய அறிவை நிறைந்த பொருளாகச் செலுத்துவதே உயிர்களுக்கு முறைமையாம் என்பது கருத்து.
ஓவியம் - சித்திரம். சித்திரத்தைக் காணும்போது அதனால் அறியப்படுகின்ற கருத்தைக் கொண்டு , ஓவியத்தைக் கருத்தை யுணர்த்தும் கருவியாக எண்ணுவதுபோல, உடலைக் கருவி யாகக் கொண்டு உயிரையே தான் என்று எண்ணுக என்பதாம்.
-----------------
ஒன்றித் தனுவை யுறுமதனைப் பேதமெனக்
கொன்றுயிரை வாங்கல் குணமாகும் - நன்றி தனக்(கு)
உற்றார் தமக்கே யுறும்புத்தி யொவ்வாமல்
அற்றார் தமக்கேத மாம். 17
இவ்வெண்பா . உடலும் உயிரும் வேறே என்று உணர்வதே முறை என்கின்றது.
இ-ள் : அபேதமாய் ஒன்றுபட்டு உடலைப் பொருந்தி யிருப்பதாகிய உயிரை உடலின் வேறானது என்று எண்ணிப் பிரித்து உயிரைத் தனியே உணர்தலே குணமாம்; இத்தகைய அறிவு புண்ணியத்தைப் பொருந்திய பேருக்கே உண்டாவ தாம்; அங்ஙனமன்றிப் புண்ணியமற்ற பேருக்கு விளைவது துன்பமேயாம் என்றவாறு.
உடலை இடமாகக்கொண்டு உறையும் உயிரை உடலின் வேறென்று உணர்தல் புண்ணியமுடையார்க்கே பொருந்துவ தாம்; அன்றிப் பாவிகட்கு இத்தகைய உண்மை தோன்றா தாம்; அதனால் விளைவது மயக்க உணர்வாகிய துன்பமேயாம் என்பது கருத்து.
ஒற்றுமை நயத்தான் ஒன்றெனத் தோன்றலின் 'தனுவை ஒன்றி உறுமதனை' என்றார்.
கொன்று - நீக்கி என்னும் அளவிற் பொருள் தந்தது. அங்ஙனே வாங்கல் என்பதும் வேறாக உணர்தல் என்னும் பொருளதாய் நின்றது. ஒவ்வாமல் - பொருந்தாமல்.
--------------
சோதித்த காயத் துடக்கற்றால் தொல்லைமலம்
சேதித்த தாகுமெனச் செப்பு நூல் - பேதித்த
ஆவியே தானா யடையு மரனடியும்
மேவியே நிற்கும் விரைந்து . 18
இவ்வெண்பா. உடற்றொடக்கு அற்றபோது மல நீக்கமும். சிவனருளும் விளையும் என்கின்றது.
இ - ள் : தத்துவக் கூட்டம் இது என்று ஆராய்ந்தறியப் பெற்ற உடலின் சம்பந்தம் நீங்கிய போது, அநாதியே ஆன் மாவைப்பற்றி நிற்பதாகிய ஆணவமலம் நீக்கப்பெற்றதாம் என்று ஆகமங்கள் அறிவிக்கின்றன; உடலின் யான் வேறு என்று பேதஞானமுற்ற உயிரே தானாகச் சிவத்தைச் சாரும்; திருவருளும் விரைந்து உயிரைப் பொருந்தும் என்றவாறு.
உயிர் இவ்வுடலின் வேறானவன் யான் என்று உணர்ந்த போதே சரீரசம்பந்தம் நீங்கும்; மலம் நீங்கும்; உயிர் சிவத்தைச் சார்ந்து சிவமாகும். திருவருள் உயிரைச் சாரும் என்பதாம்.
சோதித்தல் - இதுவரை இவ்வுடலே தானென்று மலமாயை களைச் சார்ந்து அவையேயாய் இருந்த உயிர், அவையே தானன்மையை உணர்தல்.
காயத்துடக்கு - சரீர சம்பந்தம். வினைவயத்தால் இந்த உடலோடு உயிருக்கு ஏற்பட்ட தொடர்பு. அஃதறுதலாவது. தத்துவரூப தரிசன சுத்திகளைப் பெறுதல். ஒளிவருதலும் இருள் கெடுதலும் ஒருங்கு நிகழுமாறுபோல, தத்துவங்களைக் கண்டு நான் தத்துவ தாத்துவிகங்கள் அல்லேன் என்ற உண்மை ஞானம் உதிக்கத் தானே மலபரிபாகம் நிகழும் ஆதலின் 'தொல்லை மலம் சேதித்ததாகும்' என்றருளியது. நெல்லுக்கு உமியும் நிகழ் செம்பினிற் களிம்பும் போல் அநாதியே நிகழ்வது
ஆகலின் தொல்லை மலம்' என்றதாம்.
சேதித்தல் - வெட்டுதல். ஈண்டு அறவே நீக்குதலன்று; அதன் வலி ஒடுக்குதல் என்ற அளவே கொள்க. நூல் - சிவ பெருமான் அருளிய சிவாகமங்களாகிய சைவ நூல்கள்.
ஐம்புல வேடரின் அயர்ந்து வளர்ந்த உயிர், தம்முதல் குருவுமாய்த் தவத்தினின் உணர்த்த, புலக்கூட்டமாகிய உடலை விட்டு, வேற்றுச்சார்பு தமக்கு இன்மையான் இறைவன் திரு வடியையே சாருமாதலின் 'பேதித்த ஆவியே தானாய் அரனை யடையும் அரனடியும் விரைந்து ஆன்மாவை மேவியே நிற்கும்' என்றருளியவாறு.
----------------
அளந்துடலை நோக்கி யறிவின் வாட் பூட்டிப்
பிளந்ததனை யாங்கே பிரித்து - வளர்ந்ததனைச்
சுட்டா நிராமயமாய்த் தோன்றாத வின்பமதாய்
எட்டாத பூரணமென் றெண். 19
இவ்வெண்பா , உடலையும் உயிரையும் சிவனாகக் காணுமாறு இது என்கிறது.
இ - ள் : நமக்குக் கிடைத்த உடலைத் தத்துவங்களின் சேர்க்கையென்று அளவைகளால் அளந்தறிந்து, அறிவு என் னும் வாளைக் கொண்டு பிளந்து ஆன்மாவாகிய தன்னை அப் பொழுதே உடலினின்று வேறாகப் பிரித்தறிந்து அவ்வுயிரி னுள் உயிராக வளர்ந்திருக்கின்ற சிவபரம்பொருளைச் சுட் டுணர்வால் அறியப்படாத இன்பவடிவாக - எவற்றிற்கும் எட்டாத குறைவிலா நிறைவாக எண்ணுக என்றவாறு.
அளவைகளான் தாத்துவிகமாகிய உடலை அளந்தறிந்து, ஞானவாளால் தத்துவ தாத்துவிகங்களைச் சேதித்து, அறிவு வடிவான தன்னை உடலின் வேறாக உணர்ந்து, தனக்குள் வளர்ந்த தற்பரம்பொருளாகிய சிவத்தை நிர்க்குணமாய் நிரா மயமாய் இன்பமாய் மனம் வாக்குகளுக்கு எட்டாத பரிபூரண மாய் எண்ணுக என்பது கருத்து.
அளவைகள், காட்சியும் கருதலும் நூலும் என மூன்று ஆகலின், அவற்றைக் கொண்டு உடல் உயிரின் வேறாயது என்று உணர்க என்பார் . உடலை அளந்து நோக்கி' என்றார்.
அறிவு என் வாள் - ஞானம் என்று சொல்லப்படும் வாள். மாயாகாரியமாகிய உடலைப் பிளக்க ஞானவடிவான வாளே ஏற்றது என்பார் அறிவு என் வாள் பூட்டி' என்றார்.
உடலைப் பிளத்தலாவது வேறு பிரித்து உணர்தல். பிளந்த தன்னை ஆங்கே பிரித்து எனப் பிரிக்க. தன் என்றது ஆன் மாவை. வளர்ந்த தன்னை என்றது சிவத்தை.
சுட்டப்படுகின்ற பொருள்கள் யாவும் வடிவுடையவாய்த் தோன்றி அழிவதாய் மாயையின் காரியமாயிருத்தலின் இறைவ னைச் சுட்டா நிராமயமாய்' என்றார்.
--------------
அறியு மறிவே யறிவறிய நிற்கும்
பொறியும் பொருளும் பொருந்தச் - செறியுமரன்
காட்டியவா றென்னக் கருதி யறிவதனை
ஈட்டியவா றன்றோ வியல்பு. 20
இவ்வெண்பா . அறிவு அறியச் சேர்த்த கருவி பொறி என்று உணர்க என்றது.
இ .ள் : தன்னையும் தலைவனையும் தத்துவங்களையும் அறியும் அறிவே, அறிவைத் துணையாகக் கொண்டு பொருள் களை அறிகின்ற ஐம்பொறிகளும் அவற்றின் விஷயங்களான ஐம்புலன்களும் பிரிப்பின்றி பொருந்திச் செறியும். அதனைச் சிவபெருமான் காட்டியவாறு எனக்கருதி, சிவஞானத்தைச் சம்பாதித்தலே ஆன்மாவின் இயல்பாம் என்றவாறு.
எல்லாவற்றையும் அறியும் அறிவு வடிவானது உயிரே, அது அங்ஙனம் அறியப் பொறி புலன்களோடு கலந்து அதுவாய் நிற்கும். அதனை அங்ஙனம் உணரக் காட்டும் உபகாரம் செய்தவன் அரன் என எண்ணிச் சிவஞானத்தைச் சேர்த்தலே ஆன்மாவின் தன்மை என்பது.
அறிவு அறிய நிற்கும் பொறி என்றது அறிவைத் துணை யாகக் கொண்டு விஷயங்களை அறிய நிற்கும் கருவிகளாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் முதலியனவற்றை .
பொறிகள் அறிவின் கருவியாக நின்று துணை செய்யுமே னும் தம்மையும் பொருளையும் தாம் அறியா; அவைகளுக்குக் காட்டியது உயிராகிய உளமே; அவ்வுயிராகிய அறிவிற்குக் காட்டியவன் அரனே எனச் சிவஞானத்தைச் சேர்க்க என்பதைப் பின் இரண்டு அடிகள் தெரிவிக்கின்றன.
அறிவதனை வீட்டியவாறு அன்றோ இயல்பு' என்று பாடங் கொள்ளின் பொறிகளை வாயிலாகக் கொண்டு உயிர் உணர்த்து மேனும் அவ்வுயிரும் உணர்த்த உணரும் சிற்றறிவு ஆதலின் அதனை உணர்த்தியவன் அரனே என உணர்ந்து சீவபோதத் தைக் கெடுக்க என்க.
-------------
வாக்குமனக் காய மருவா வறிவு பொய்
யாக்கையின்பா லுற்றங் ககப்பட்டால் - நீக்கித்
தெரிசித்துத் தன்னைத் திகழ்பரத்தோ டொன்றாய்ப்
பரிசித்த லன்றோ பயன். 21
இவ்வெண்பா , உயிர் உடலொடு கூடிய தன் பயன் , உடலொடு கூடி உடலாய் இராமல், பரத்தோடு ஒன்றிப் பரமாய் இருப்பதே என்கின்றது.
இ - ள் : வாக்கு , மனம், மெய்களுக்கு எட்டாத அறிவு வடிவாகிய ஆன்மா , பொய்யான இவ்வுடலின்கண் அகப்பட் டுக்கொண்டால், உடலையும் உயிரையும் வேறாகப் பிரித்து உணர்ந்து உயிராகிய தன்னை விளங்குகிற பரம்பொருளோடு ஒன்றாய் எண்ணிப் பரிசிப்பதே பிறந்ததன் பயனாம் எ - று.
உயிரை உடம்பின் வேறாகக்கண்டு அதைப் பரசிவத்தோடு ஒன்றவைத்து, சிவத்தைத் தீண்டிக்கொண்டு இருப்பதன்றோ பிறந்ததன் பயன் என்பது கருத்து.
உயிர் மனம் வாக்குக்காயங்களான் அறியப்படாத அருவா யிருத்தலின் வாக்கு மனக்காயம் மருவா அறிவு' எனப்பட்டது.
உடல், மெய் என்ற உபசாரவழக்குடைய தேனும் தோன்றி நின்று அழிவதொன்றாதலின் அதனியல்பு உணர்த்தப் பொய் யாக்கை' என்றார்.
அகப்பட்டால் என்றது பாசத்தோடு கூடிப் பாசமாய் சிக் குண்டால் என்றவாறு.
உடலாகிய மாயாகாரியத்தினின்று உயிரைப் பிரித்தலாகிய தத்துவசுத்தி உண்டான கணமே ஆன்மரூப ஆன்மதரிசனங் களும் உடன் சித்தித்தலின் 'தன்னை நீக்கித் தரிசித்து' எனக்
குறிப்பித்தார்.
தன்னைக்கண்டு தத்துவங்களின் நீங்கிய உயிர் சுத்திபெற் வச் சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம் எய்துதலின் ' பரத் தோடு ஒன்றாய்ப் பரிசித்தல் அன்றோ பயன்' என்றார்.
--------------
அறிவால் பலகாலு மாராய்ந்து பார்த்துப்
பிறிவால் தனுவைப் பிரித்துக் - குறியாம்
அறிவோ டறிவா யடங்குவதே முத்தி
நெறியாகு மென்ன நினை. 22
இவ்வெண்பா , முத்திநெறி இன்னது என்று மொழிகின்றது.
இ - ள் : ஞானத்தால் பலமுறையும் ஆராய்ந்து, கண்டு, உயிரோடு அபேதமாக இருக்கும் உடலைப் போதித்து, இலக் காய் விளங்கும் சிவஞானத்தோடு ஒன்றி, அதனுள் முனைப் பற்று அடங்கியிருப்பதே முத்திநெறி என்று எண்ணுவாயாக என்றவாறு.
பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பத பதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அதனின் வேறாய் நின்று, பரஞானத்தால் பரத்தோடு ஒன்றித் தன்முனைப்பற்று அடங்கியிருப்பதுவே முத்திநெறி என்பது கருத்து.
முதற்கண் அறிவு என்றது பாச பசு ஞானங்களை. அவற் றால் அறியும் அறிவு நிலையாமையின் 'பலகாலும் ஆராய்ந்து' என்றார் . இவ்வுடல் நான் அன்று' என்று உணர்கின்றவரை இவ்வுடலே தானென்று இருக்கின்றமையின் அதனைப் பிரியாத் தனு' என்றார். பிறிவால் தனுவாய என பாடங்கொள்வாரும் உளர். அங்ஙனம் கொள்ளின் வேறுபடுத்தி உணர்தலால்
எனப் பொருள் கொள்க.
குறியாம் அறிவு - குறித்து உணரத்தக்கதாயுள்ள அறிவு; என்றது ஞான சொரூபியான சிவத்தை. குறித்துணரப்படுவத னைக் குறி என்றது உபசாரம்.
நீரோடு நீர் அளாவுதல் போல அறிவோடு அறிவாய் அடங்குதலே முத்தி என்றவாறு. ஆயினும் பொருட்டன்மை யால் வேறாம் என்க.
---------------
சேமப் படுத்தி மலஞ் சிற்றுயிரைத் தன்னெறியில்
காமப் படுத்தியொன்றுங் காட்டாதால் - தீமை
விளையுந் தனுவினுக்கு வேறா யறிவோ(டு)
அளையுமே லாமாம் விபு. 23
இவ்வெண்பா , உயிர் மல மாயைகளோடு கூடிய வழி, அவை யேயாய் மயங்கியும், உடலுக்கு வேறாய் அறிவோடு அறிவாய்க் கலந்தவழி அறிவாயும் விளங்கும் என்கின்றது.
இ - ள் : ஆணவ மலமானது உணர்த்த உணரும் அறிவு வடிவாகிய சிற்றுயிர்களைத் தம்மகப்படுத்தித் தடை செய்து தன் நெறியிலேயே விருப்பத்தை மிகுவித்துத் தன்னையும் காட்டாமல் தலைவனையும் காட்டாமல் உயிரையும் காட்டா மல் எல்லாவற்றையும் மறைத்து நிற்கும்; அவ்வான்மா தீமையே விளையும் இவ்வுடலுக்கு வேறாய்ப் பரஞானத்தோடு ஒன்றுமாயின் பரம்பொருளேயாய் நிற்கும் என்றவாறு.
மலம் உயிரைப் பந்தித்து ஒன்றையும் காட்டாது: உயிர் உடலின் வேறாய் அறிவோடு அறிவாய்க் கலக்குமேல் இறைவ னோடொன்றும் என்பது கருத்து.
சேமப்படுத்தி - சிறைப்படுத்தி. ஆன்ம வியாபகத்தை ஆணவமலம் மறைத்தலானும், அறியாதவாறு தடுத்தலானும் ' சேமப்படுத்தி' என்றார்.
மலம் - ஆணவமலம். நெல்லுக்கு உமி தவிடும் நிகழ் செம் பினிற்களிம்பும் போல அநாதியாதலின் காலம்குறியாது சேமப் படுத்தி' என்று மட்டும் கூறியமை காண்க.
ஆன்மாக்கள் எல்லாவற்றையும் ஒருசேர உணரும் பேரறி வின அல்ல ஆகலானும், உணர்த்த உணர்தலும் மறந்து மறந்து உணர்தலும் பெரிது உணர்த்தச் சிறிது உணர்தலும் மாறி உணர்தலும் உடையன ஆகலானும் அவற்றைச் 'சிற்றுயிர்' என்றார். உயிர்களை மலம் வினைப்போகத்துள்
அழுத்தி அனுபவிக்கச்செய்தலைத் தன் நெறியில் காமப்படுத்தி' என்றார்.
பொருள்களைப் புலப்படுத்தாத இருள் கருமையால் தன்னை யாயினும் உணர்த்துவதாக இருக்க, இம்மலமாகிய இருள் ஒன்றையுமே காட்டாமையின் 'ஒன்றும் காட்டாது' என்றார்.
மேலும் மேலும் வினைகளைச் செய்தற்கு உதவியாதலான் தீமை விளையும் தனு' என்றார். அறிவு - சிவம். அளையுமேல். கலக்குமேல் . விபு - பிரபு - சிவம்.
---------------
தன்னைத்தா னென்னா தகுமுடலைத் தானென்னச்
சொன்னத்தால் தீதனைத்துந் தோற்றியதால் - தன்னை
அறியுமா றெவ்வா றகன்றவுடல் தன்னைப்
பிறியுமா றாமாற் பெறும். 24
இவ்வெண்பா, திரிபு உணர்ச்சியால் விளைந்த தீமையிது என் கின்றது.
இ - ள் : உயிராகிய தன்னைத் 'தான்' என்று அறியாமல், தனக்குக் கிடைத்த உடலைத் தான் என்று சொன்னதால் தீமைகள் அனைத்தும் தோன்றின; ஆகவே உயிராகிய தன்னை உணரும் வகை யாது எனின், வினைக்கழிவின்கண் நீங்கும் உடல் தன்னைப் பிரிதலால் உயிரை உணரலாம் என்றவாறு.
தன்னை அறியாது, உடலைத் தானென உணர்கின்றமை யால் கேடுகள் பல விளைகின்றன. ஆகவே, உயிரை உடலின் வேறாக உணர விரும்பின், உடல் பிரிந்தவழி உயிர் தனித்தலைக் கொண்டு உணரப்பெறும் என்பது கருத்து.
'தன்னைத் தானென்னாத் தகும் உடல்' எனப் பாடங் கொண்டு தன்னைத் தானென்று சொல்லும் தகுதியற்ற அதா வது சடமாகிய உடல் எனலுமாம்.
தீதுகளாவன : வினைகளும், அதனால் மேன்மேல் விளையும் பிறவிகளும், அப்போது நுகரப்படும் சுவர்க்க நரகப்பேறுகளும் ஆம்.
---------------
அகமோ புறமோ அகம்புறமோ ஆவி
செகமோ தனுவினுக்குத் தேரின் - இகமே
பிறியாத் தனுவைப் பிறித்தறிவை நோக்கில்
அறிவா யகம்புறமே யாம். 25
இவ்வெண்பா , உயிர் எவ்விடத்தது என்பதுணர்த்துகிறது.
இ-ள் : உயிரானது உடலுக்கு உள்ளே உள்ளதோ? புறத்தே உள்ளதோ? இருமருங்கும் உள்ளதோ? அல்லது உலகமோ? என்று ஆராயின் இம்மையிலே நம்மோடு விட்டு நீங்காது இருக்கின்ற உடலைத் தன்னின் வேறாகப் பிரித்து அறிவை ஆராயின் உயிரும் அறிவாய் அகம் புறமாய் இருக்கும் என்றவாறு.
உயிர் எவ்விடத்தது என்று ஆராயின், உயிரினின்று உடலை வேறாகப் பிரித்துச் சிவத்தையும் நோக்கில் உயிர் அறிவே வடிவாய் அகத்தும் புறத்துமாம் என்பது கருத்து.
ஆவி தனுவினுக்கு அகமோ? புறமோ? அகம்புறமோ? செகமோ, (எனத்) தேரின் இகமே பிரியாத் தனுவைப் பிரித்து அறிவை நோக்கில் அறிவாய் அகம் புறமே ஆம் எனக் கூட்டுக.
உயிர் எடுத்த பிறவிக்கண் வினைக்கழிவுவரை உடலைவிட்டு நீங்காமையின் இகமே பிரியாத் தனுவை' என்றார். இகம் இப்பிறப்பு.
அறிவை நோக்கில் என்றது ஞானவடிவாகிய இறைவ னைத் தரிசித்தால் என்பதாம்.
அகம் புறமேயாம் - ஆவி அறிவே வடிவாய் அகத்தும் புறத்தும் எங்கும் வியாபகமாம் என்பது கருத்து.
----------------
அகமேல் தனுவோ டழியும் அகத்தின்
புறமே பொறிவழியில் சேரா - உறுமரனோ(டு)
அத்துவித மாமா லரன் நிறைவோ டொன்றாக
ஒத்ததுவாய் நிற்குமென ஓர். 26
இவ்வெண்பா , மேலே கூறியதனை ஏ துக்களான் வற்புறுத்துகின்றது.
இ - ள் : உயிர் உடலினுள் இருக்குமாயின் உடல் அழி யும் போது உயிரும் அழியும். புறத்தே உள்ளதாயின் கண் காது முதலியன வழியாகச் சென்று புலன்களைப் பொருந்தா வாகும். தன்னோடு அநாதியாகப் பொருந்திய சிவபெருமா னோடு வேறற்று அத்துவிதமாய் நிற்கும். ஆகையால் இறைவ னுடைய பூரணத்தோடு ஒன்றாக ஒத்துச் சிவமேயாய் நிற்கும் என்று அறிவாயாக என்றவாறு.
உயிர் யாக்கையின் அகத்ததாயின் யாக்கை அழியும் போது அதுவும் அழிதல் வேண்டும்; புறத்ததாயின் பொறிகளைப் பொருந்தாவாதல் வேண்டும்; ஆகவே, சிவத்தோடு ஒன்றிச் சிவ பரிபூரணத்தில் அடங்கிச் சிவமேயாய் நிற்கும் என்பது கருத்து.
--------------------
யானென்ற காய மெனதென்றால் யானென்னும்
தானிற்கச் செய்யத் தகுமன்றோ - ஊனின்று
பற்றறவே விட்டறிவாய்ப் பார்க்கில் நிரா தாரமாய்
உற்றதுவே யாகுமென ஓர். 27
இவ்வெண்பா , உயிரையும் உடலையும் வேறாய் அறியும் உபாயம் உணர்த்துகின்றது.
இ-ள் : நான் நான் என்னும் உடலை எனது உடல் என்றால் யான் என்னும் பொருள் எனது உடல் என்னும் பொருளின் வேறாயிருக்குமன்றோ? ஆதலால் இவ்வுடம்பின்க ணுள்ள பற்றை அறவே நீக்கி அறிவுவடிவாய் ஆவியைப் பார்க்கின் நிராதாரமாய் நிற்கும்; அதுவே உயிராம் என நினைக்க என்றவாறு.
நான் என்னும் உடலை எனது உடல்' என்று சொல்லும் போது நான் என்பவன் உடலின் வேறாகத்தானே இருக்க வேண்டும். அங்ஙனம் வேறாயிருக்கும் உயிரை ஞானவடிவாய் ஆராயின் பற்றற்று ஞானமேயாய் நிற்கும் என்பது கருத்து.
இவ்வெண்பா "எனது உடல் என்றலின் ஆன்மா உளது" என்னும் மேற்கோளையும், அதன் எடுத்துக்காட்டாகிய,
"எனதென்ற மாட்டி னெனதலா தென்னா(து)
உன தலா துன்கைகால் யாக்கை - எனதென்றும்
என்னறிவ தென்றும் உரைத்து நீ நிற்றிகாண்
உன்னிலவை வேறாம் உணர்''
என்பதனையும் விளக்கி நிற்கின்றது. உலோகாயத நூல்களை உணர்வதற்கு முன்னர் மனைவி மக்களை நான் என்று மயங்கி நின்றது போல, கை கால் முதலிய யாக்கைகளை யான் என்றே இருக்கும் நீ எனது என்றும்' கூறுகின்றாய் ஆதலால் மனைவி மக்களின் வேறாக நீ என்னும் ஒரு பொருள் நின்றது போல உடலின் வேறாக நிற்கும் நீயே உயிர் என்று உணர்க என்று விளக்கியவாறாம்.
--------------
எங்கு மிருக்கு மிசைந்ததனு வோடிசைந்து
தங்கி யறியத் தகுவதாம் - மங்குமுடல்
சேதித்தா ரன்றோ திருவருளோ டத்துவிதம்
சாதித்தா ரென்னத் தகும். 28
இவ்வெண்பா, திருவருளோடு அத்துவிதமாம்முறை உணர்த்து கின்றது.
இ-ள் : தத்தம் வினைக்கீடாக வந்து பொருந்திய உட லோடு உயிர் கூடி எங்கும் இருக்கும். ஆயினும் எடுத்த இவ் வுடற்கண்ணே தங்கித் தன்னை அறியத்தக்கதாம். அங்ஙனம் அறிந்து அழியும் உடலை யானல்லன் யான் சித்து எனப் பிரித் தறிந்தாரன்றோ திருவருளோடு ஒன்றான தன்மையைச் சாதித் தவர்கள் என்னத்தக்கார் என்றவாறு.
உடலோடு ஒன்றிய நிலையைவிட்டு அருளோடு ஒன்றியவர் களே உடலாற் பெறும் பயனைச் சாதித்த பேர்கள் என்பது கருத்து.
உயிர் உடலோடு காணப்படுதல் எங்கும் இருத்தலின் எங்கும் இருக்கும் இசைந்த தனுவோடு இசைந்து' என்றது. இசைதல் - முற்பிறவிகளில் தாம் தாம் செய்த வினைகட்கீடாகக் காலம், கருவி முதலியன அமைதல்.
உடலோடு ஒன்றி உடலே தான் என்று இருக்கும் உயிர் உடல் குடில், குடியிருப்பவன் உயிர் அது உணர்வு வடிவினது என்று தங்கியிருந்து அறிய என்க.
வினைகள் நுகரப்பெற்றுக் கழிந்தவழி உடல் தானே அழி தலின் மங்கும் உடல்' என்றார்.
ஊசல் கயிறற்றால், தாவித் தரையில் ஆனாற்போல , உடற் பற்று நீங்கியவழித் திருவருளையே சார்தல் ஆவிக்கு இயல்பு என்பார் 'உடல் சேதித்தார் அன்றோ திருவருளோடு அத்து விதம் சாதித்தார்' என்றார்கள்.
-------------
பேதித்துக் காயத்தைப் பின்னமற எவ்விடத்தும்
சாதித்தால் முத்தித் தகைமையாம் - சேதித்த
அங்கத்தால் செய்ததவ மத்தனையு முத்திபதச்
சங்கத்தா லாகத் தகும். 29
இவ்வெண்பா , பெத்தநிலையில் சாதித்த தவங்கள் முத்திபத நிலைக்கு ஆம் என்கின்றது.
இ - ள் : உடலைத் தன்னின் வேறாக உணர்ந்து, வேறு பாடு அற எங்கும் பழகிவரின் முத்திக்குரிய தன்மை தானே விளையும். பிரித்துணரப்பட்ட உடலாற் செய்த தவங்களனைத் தும் முத்தி நிலையைக் கூடற்குப் பயன்படத் தகுவனவாம் என்றவாறு.
இளமையில் ஈட்டிய பொருள் முதுமைக்கு ஆவதுபோல, உடலே தானாக இருந்தகாலத்துச் செய்த தவங்கள் எல்லாம் முத்திக்கு உபகாரப்படும் என்பது கருத்து.
அரசவேடம் பூண்டு நடிப்பவன், மீட்டும் பழைய கந்தனா னாற்போலன்றி, எங்கும் என்றும் உடலைத் தன்னின் வேறாக. கருவியாகச் சாதனை செய்யின் முத்திக்கு உரிய தன்மைகள்
விளையும் என்பதைக் 'காயத்தைப் பின்னமற எவ்விடத்தும் சாதித்தால் முத்தித் தகைமையாம்' என்பதால் விளக்கினார்கள்.
எய்தக்கூடிய நிலைகளில் முத்தி ஒன்றானதால் 'முத்தி பதம்' எனப்பட்டது. சங்கம் - சேர்க்கை .
--------------
பொறியனைத்து மொன்றைப் புணராமற் றாவி
அறிவனைத்து நோக்கி யணையும் - பொறியனைத்தும்
அற்றார்க்கே யத்துவித மாகுமாம் நற்றவத்தைப்
பெற்றார்க்கே முத்திபதப் பேறு. 30
இவ்வெண்பா , பொறிகளைத் தானென மயங்காது. ஞானத்தை நோக்கி உயரும் உபாயம் உணர்த்துகின்றது.
இ-ள் : உயிர் பொறிகளுக்குள் ஒன்றையும் புணராமல், புலன்களான் அறியப்பெறும் அறிவையே சாரும். பொறிகள் காரியப்படாது அடங்கின போர்க்கே அருளோடு ஒன்றான நிலை உண்டாம். அத்தகைய நல்ல பெரிய தவத்தைப் பெற்ற வர்க்கே முத்திநிலை உண்டாம் என்றவாறு.
உயிர் பொறிகளைச் சார்ந்து புலன்களை நுகராது, அறிவே வடிவாய் அருளைச் சார்ந்து ஒன்றான நிலையே நற்றவம்; அதுவே முத்தி நிலை என்பது கருத்து.
பொறிகள் அறிபொறியும் செயற்பொறியும் ஆகிய இரு வகைத்தெனினும் ஈண்டு அறிபொறிகளாகிய மெய் வாய் கண் மூக்குச் செவிகளே கொள்ளப்படும். அவைகளே உயிரரசனால் ஆளப்பட்டுக் காரியமே கருத்தாகத் தம்மை ஆளும் அரசனை யும் அறியாமல் நிற்பன ஆகலான்.
ஒன்றை என்றது பொறிகளுள் ஒன்றை. பொறி அனைத் தும் ஒன்றைப் புணராமல் என்று பாடங்கொண்டு, ஒன்றை என்பதற்குப் புலன்களுள் ஒன்றை என்பாரும் உளர்.
உயிர் பொறிகள் வாயிலாகப் புலன்களைச் சென்று பற்றிப் போகமாத்திரையாய் மயங்காது. அவற்றான் விளையும் வினைக் கழிவாகிய அனுபவ அறிவைக்கொண்டு வரும் என்பதாம்.
பொறிகளோடு கூடி அவையே தானாய் நில்லாது, அவற் றைக் கண்டு கழித்து, அருளோடு அத்துவிதமாகும் நற்றவத் தைப் பெற்றார்க்கே முத்தி பதப்பேறாம் எனக் கூட்டிப் பொருள் காண்க.
-------------
சாக்கிரத்தோ டஞ்சவத்தை தானாவர் தம்முடம்பை
நீக்கியபே ரன்றோ நினையுங்கால் - தூக்கும் சரியாதி
மூன்றில் தகும் பதத்தில் நிற்போர்ப்
பிரியா வுடல் பிரியாப் பேர். 31
இவ்வெண்பா பிரியும் உடலும் பிரியா உடலும் உற்றோர் இவர் என்கின்றது.
இ-ள் : ஆராயுமிடத்துச் சாக்கிரம் முதலான ஐந்து அவத்தைகளும் தானாகப் பெற்றவர்கள் தமது தூல உடம்பை நீக்கிய பேர்கள் அன்றோ ? ஆராயப்பெறும் சரியையாதி மூன் றாகிய நிலைகளில் நிற்போர் என்றும் நீங்கா உடலை நீங்காதே நிற்போர் ஆவர் என்றவாறு.
இப்பருவுடல் நானன்றென உணர்ந்தபின் சூக்கும தேகமே நானென்று இருப்போர்கள் அஞ்சவத்தை எய்தும் பொழுதும், அவற்றின் மீண்டுத் தூலவுடம்பை எய்தும் பொழுதும் அதுவும் தானன்மையை உணர்தலின் அவர்கள் உடம்பை நீக்கியோ ராவர் . சரியை கிரியை யோகமாகிய மூன்று நிலைகளில் நிற்பதன் பயனாகிய சாலோக சாமீப சாரூப நிலைகளை எய்திப் பதமுத்தியி னிற்போர் என்றும் பிரியா உடலைப் பெற்றோராவர் என்பது கருத்து. ஞானநெறி நின்றோர் சிவசாயுச்சியமாகிய வுடலில்லாத உணர்வு வடிவான நிலையை எய்துதலின் முதல் மூவரையே கூறினார்.
சாக்கிரத்தோடு அஞ்சவத்தை - சாக்கிரம் , சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. இவற்றுள் ஆன்மா நிற்கும் போது தூலமும் சூக்குமமும் காரணமும் ஆகிய உட லுடன் இருப்பதால் அவத்தை தானாவர்' என்றார்கள். அன்றி,
'' அறிந்தும் அறிவதே யாயும் அறியா (து)
அறிந்ததையும் விட்டு அங்(கு) அடங்கி - அறிந்த(து)
எதுவறியும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்
அதுவது தான் என்னும் அகம் ''
என அறிதலுமாம். இதன் விரிவை மாபாடியத்து எடுத்துக் காட்டின் பொழிப்பிற்காண்க.
---------------
பெத்தருக்கே காயமெனப் பேசிச் சமயநெறி
முத்தருக்கே யின்றாய் மொழியுமால் - சத்தியமே
மந்திரமே தேகமென மன்னியதும் ஆவிக்குப்
பெந்தமே யாமால் பிழை. 32
இவ்வெண்பா , மந்திர தேகமுங்கூடப் பெந்தமே என்கிறது.
இ - ள் : சமய நூல்கள் மல மாயைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களுக்கே உடல் உரியதாம்; முத்தான்மாக் களுக்கு உடற்கட்டு இல்லையாம் என்னும். உண்மைதான். மந்திரங்களைத் தேகம் எனக்கொண்டு அதில் நிலைத்திருப் பதுங்கூட உயிருக்குப் பெந்தமேயாம். அது பிழையும் ஆம்
என்றவாறு.
பெத்தான்மாக்களுக்கே உடற்பந்தம் உளதாம், முத்தருக்கு இல்லை என்று சமய நூல்கள் சொல்லும். மந்திர தேகத்தில் உயிர் இருப்பதுங்கூடக் கட்டென்றே உணர்க என்பது கருத்து.
பெத்தர் - மலமாயை கன்மங்களோடு கட்டுண்ட உயிர்கள். அவர்களுக்கே அவற்றை அழுந்தி அனுபவிப்பதற்காகவும், அவற்றின் நீங்கி உய்வதற்காகவும் உடல் உதவப்பெற்றதாம் என்பது.
சமயநெறி - சமய உண்மைகளைப் போதிக்கும் தத்துவ நூல்கள். நூல்களில் உணர்த்தப்பெறுவனவாகிய நெறியின் பெயர் அவற்றை உணர்த்தும் நூல்களுக்கே ஆயின. ஆதலின் ஆகுபெயர்.
முத்தர் - மல மாயை கன்மங்களினின்று பரிபாக விசேடத் தால் விடுதிபெற்றவர்கள். வினைப்போகங்கள் இன்மையின் அவற்றின் கழிவிற்காக உதவிய உடலும் இல்லையாம் என்க.
மந்திரமே தேகம் என மன்னுதல் - எண்ணப்படும் மந்தி ரங்களையே உடலாகக் கொண்டு உயிர் நிலவுதல். அதுவும் தியானிக்கப்படும் மந்திரமும் தியானிப்போனும் ஆகிய பேத ஞானத்தை விளைத்தலானும், தியானத்தால் ஞானம் பயவாமை மாத்திரமே அன்றிக் காரியங்களையும் பயப்ப உதவலானும் அதுவும் ஒரு பெந்தமாயிற்று. அதுமட்டுமன்று பிழையுமா யிற்று என்பதாம்.
----------------
அத்துவா ஆறின் அமைந்ததாம் மந்திரத்தைச்
சித்தத் தயலாய்த் தெசித்ததாம் - முத்தர்
நிருமலமே தானாய் நிகழ்சிவமே யாமால்
ஒருமலமும் இல்லையென ஓர். 33
இவ்வெண்பா . மந்திர தேகத்தையும் அறிந்து அகற்றும் உபா யம் உணர்த்துகின்றது.
இ - ள் : வர்ணம் முதலான ஆறு அத்துவாக்களிலும் பொருந்தியதான மந்திரத்தைத் தியானிக்கும் மனத்திற்கு அயலாக எண்ணிக் காணுதல் மந்திர தேகத்தையும் அகலுத லாம். அங்ஙனம் மந்திர தேகத்தையும் வேறாகக்கண்டு வில கிய முத்தான்மாக்கள், அநாதியே மலமற்ற பரசிவமே தானாக விளங்குவர். அவர்களுக்கு ஒருமலமும் இல்லை என்று அறிவா யாக என்றவாறு.
ஆறத்துவாக்களிலும் தான் அமைந்து அறியின் மந்திர தேகமும் அகலும். அப்போதுதான் முத்தனாகலாம். அப்போது தான் நிர்மலமான பரசிவமேயாக விளங்கலாம் என்பது கருத்து.
வர்ணம், பதம், மந்திரம், புவனம், தத்துவம், கலை என்பன அத்துவாக்கள் ஆறு. அத்துவா - நெறி. இவற்றில் ஒன்றான மந்திரம் என்பார் அத்துவா ஆறின் அமைந்ததாம் மந்திரம்' என்றார்.
சித்தம் - மந்திரத்தைத் தியானிக்கும் மனம். அதின் வேறா கத் தெசித்தலாவது மந்திரமே தானாக எண்ணாது, மனத்தை யும் உயர்த்தி நிறுத்தும் உபாயமாக மந்திரத்தை எண்ணி, ஏறியவன் ஏணியை விடுவதுபோல மனம் நிராதாரமான நிலையில் தங்கப் பழகியவுடன் அதனையும் விடுதல். தெசித்தல். தரிசித்தல்.
ஒரு மலமும் - மும்மலங்களில் ஒன்றும். ஒரு மலமும் - ஒன் றான மூலமலமுங்கூட இல்லையாம் எனலும் ஒன்று.
------------
காயமுயி ரென்னக் கருதுங்கால் பேதமாம்
தோயுங்கா லொன்றாகத் தோற்றுமால் - காய
நடையொருகா லாவி நடையொருகா லாகத்
தடையெடுத்து நிற்கத் தகும். 34
இவ்வெண்பா, ஒற்றுமை நயத்தின் ஒன்றெனத்தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறாம் உடல் உயிர் என்கின்றது.
இ-ள் : இது உடல், இது உயிர் என்று எண்ணும் போது உடலும் உயிரும் வேறேயாம். இரண்டும் ஒன்றி உறையும் போது ஒன்றாகவே தோன்றும். ஆகையால் உடலின் நடப்பு ஒருகாலும், உயிரினியக்கம் ஒருகாலுமாகத் தடுத்து நிற்கத் தக்கதாம் என்றவாறு.
உடலும் உயிரும் ஒன்றி உறையும் போது ஒன்றாயும், வேறு பிரித்தறியும் போது வேறாயும் தோன்றும். ஆதலால், உடலின் இயக்கமும், உயிரின் இயக்கமும் வேறாகப் பிரித்துணரத்தகும் என்பது கருத்து.
கருதுங்கால் - வேறென ஆராயுமிடத்து. தோயுங்கால் இரண்டும் ஒன்றி உறையும் போது. ஆல் : அசை.
காய நடை - உடலியக்கம். ஒருகால் - ஒருதடவை . தடை யெடுத்து நிற்றலாவது இரண்டன் செயலையும் ஒன்றென நினையாது இவை உடற்சேட்டை இவை உயிர்ச்சேட்டை என வேறு பிரித்து ஒன்றை ஒன்றென மயங்காது உணர்ந்து பழகுதல். தகும் - தகுதியையுறும்.
------------
ஊனாய்த் திரிந்தங் குழலுமொரு கால் மனுவே
தானாய்த் திரியத் தகுமொருகால் - கோனாகு
நேயமே தானாக நிற்குமொரு காலுயிரின்
காயமே லுற்ற கடன். 35
இவ்வெண்பா , உயிர் உடலோடு கூடி நிற்கும் முறை உணர்த்துகிறது.
இ - ள் : உயிர் , உடலோடு ஒன்றி உடலேயாய்த் திரிந்து துன்ப இன்பங்களால் ஒருகால் வருந்தும்; மந்திர வடிவான உடலோடு கூடி மந்திரமே தானாகத் திரியும் ஒருமுறை : பர சிவமான ஞேயப்பொருளே தானாக நிற்கும் ஒருகால்; இது உயிர் உடலோடு கூடியதால் விளையும் பயனாம் என்றவாறு.
உயிர் பௌதிக உடலோடு கூடி உடலாயும், மந்திர சரீரத் தோடு கூடி அதுவாயும், சிவத்தோடு கூடிச் சிவமாயும் நிற்கும் என்பது கருத்து.
ஊன் - உடல் : ஆகுபெயர். ஊனாய்த் திரிந்தங்கு உழலும்' என்றது ஊனடைந்த உடல் வினைக்கீடாக அலைந்து திரியும் என்றவாறாம்.
மனு - மந்திரம். மந்திரமே வடிவதாகச் சுற்றும். நேயம் ஞேயம் - அறியப்படுபொருள். அது சிவம்.
உயிர் தனக்கென ஒரு தன்மையின்றி, எவ்வுடம்பைச் சார்ந் ததோ அவ்வண்ணமாம் என்பது.
-------------
ஆகந் திரியாமெய் யாவியல்லா லங்கத்துப்
போகந் திரியாப் பொறியல்லான் - மோகநிலை
ஆவியே சென்றங் கடையுமே லெவ்விடத்தும்
தாவியவை யாகத் தகும். 36
இவ்வெண்பா . உயிர் சார்ந்ததன் வண்ணமாதலை மேலும் விளக்குகிறது.
இ - ள் : உண்மைப் பொருளாகிய உயிரே அன்றி, மெய் திரியாவாம்; உடற்கண் பொறிகள் மாறுவனவே அன்றி, வினைப்போகங்கள் மாறாவாம்; உயிரே மயக்க அறிவைச் சாரு மாயின், எங்கும் பற்றி அவையவையாக நிற்கும் என்றவாறு.
மாறுவன உயிரும் பொறிகளும் ஆதலின், உயிர் மோக நிலையைப் பொருந்தி நிலையுதலில்லாத எல்லாப் பொருளினும் பற்றி அவ்வப்பொருளாக நிற்கும் என்பது கருத்து.
மெய் ஆவி - சத்தாகிய ஆன்மா. மெய்க்கண் ஒன்றி விளங்குவதான உயிர் எனலும் ஆம். ஆன்மா சித்தாதலின் சார்ந்ததன் வண்ணமாம். உடல் சடமாதலின் சித்துச் சார் தற்கு இடந்தந்து நிற்றலேயன்றித் திரியாவாம் என்று அருளினார்கள்.
அங்கம் - உடல். உடற்கண் உள்ள பொறிகள் - ஞானேந் திரியங்கள். பொறிகளே மனனுடனிற்கப் புலன்களைப் பற்றி அறமறங்களை ஆற்றி வினைகனை ஈட்டுவன. அவ்வினைகளான் பழுத்துவந்தனவே போகங்கள். ஆதலால் அன்றே நிலைத்தன. போகங்களை நுகர்வதால் விருப்பு வெறுப்பு வடிவான மாற்றங் களைப் பொறிகளே எய்துவன என்பதாம்.
ஆவி சென்று மோக நிலை அடையுமேல் எவ்விடத்தும் தாவி அவையாகத் தகும் என இயைக்க.
உயிர் சகசமாயுள்ள மலத்தின் காரியமான அறியாமையா கிய மயக்க அறிவைப் பொருந்துமாயின், போகசாதனமான இந்த உலகில் எங்கும் சென்று கண்ட கண்ட பொருள்களாக நிற்கும் என்பதாம்.
----------
ஆவி தனுவை யடையுங்கா லாவியற
மேவித் தனுவாய் விளங்குமால் - ஆவியினை
ஆக்கையே சென்றங் கடையுமா லாக்கையறத்
தாக்குமது வாகத் தகும். 37
இவ்வெண்பா . உடலின் வேறாய் உயிரை அறியும் முறைமை உணர்த்துகிறது.
இ-ள் : உயிர் உடலைப் பொருந்தும் போது உயிர் வேற றக்கலந்து உடலாகவே விளங்கும். உயிரை உடலே சென்று பொருந்தும் என்னும் மயக்க ஞானமாகிற உடல் நீங்க, இது சடம், சித்தாகிய உயிர் அன்று என அறிவிப்பது எதுவோ அதுவே உயிராகத்தக்கது என்றவாறு.
உயிர் உடலைமேவி உடலாயும், யாக்கை சடமாயிற்றே எங் ஙனம் அது சென்று உயிரைச் சாரும் என்று எண்ண, அங்ங னம் எண்ணுவது எதுவோ அதுவே உயிர் என்பது கருத்து.
உயிர் உணர்த்த உணரும் சித்தாயினும் சுதந்திரமற்றது ஆதலின் தானே உடலைச் சாராது; அங்ஙனமாகவும் ஆவி தனுவை அடையுங்கால்' என அடைதலை உயிரின் தொழிலாக உணர்த்தியது, முதல்வன் அடைவிக்க அடையுங்கால் என்க. கருவியான உடலைக் கர்த்தாவாகவே எண்ணியது என்பதாம்.
மால் ஆக்கை - மயக்க உணர்வாகிய தேகம். உயிர் உருவ முடைய தன்மையின் செல்லுதலும் அடைதலுமாகிய வினைகள் உருவாகிய யாக்கைக்கே உரியது எனக் கொண்டு மயங்கி ஆவியினை யாக்கையே சென்றங்கடையும் என்றது மாலாக்கை யாயிற்று.
------------
பூணுந் தனுவே பொறிக்கிடமாம் பொய்யிதெனக்
காணுமவர்க் கவ்வாறே காண்பதுவாம் - வீணும்
தனதாகி நிற்குந் தகுதியோர் தங்கள்
மனதாகி நிற்கு மதி. 38
இவ்வெண்பா , உயிர் யார் யாருக்கு எங்ஙன் எங்ஙன் நின்று உதவும் என்கின்றது.
இ - ள் : பூணப்படுகின்ற உடலே பொறிகட்கு இடமாம்; இவ்வுடல் அநித்தியமானது. பொய் என அறியும் அவர்கட்கு அங்ஙனமே அறியும் பொருளாகிய ஆவியாம். வீணான இவ் வுடலைத் தனது' என எண்ணியிருக்கும் தன்மையுடையா ரிடத்து உயிர் மனமாகி இருக்கும் இதனை எண்ணுவாயாக என்றவாறு.
உடல் பொறிகட்கு இடமாம், பொய்யென அறிபவர்கட்கு இவ்வுடலின் வேறாக அதனைப் பொய் என்று அறியும் பொருளாகிய ஆவியாம். தனது என்று அறிவாரிடம் ஆவி மனமாகி யிருக்கும் என்பது கருத்து.
வினைகளுக்கு ஈடாக மேற்கொள்ளப் பெறுதலின் உடல் பூணும் தனு' எனப்பட்டது. எதனால் என்ற வினாவிற்கியைய உயிரால் பூணப்படும் என்க. பொறிக்கு இடமாம் என்றது பொறிகளோடு கூடி உயிர் பொறிகளாகவே கலந்து உணரப் படும் என்பது .
தோற்றக் கேடுகளான் இவ்வுடல் பொய்யென்று உணர் வார்கள் அங்ஙனம் உணர்தற்கு வினை முதலாகிய அதாவது காண்பானாகிய உயிர் தனித்து உணரப்படுவதாம்.
வீண் - பயனற்றது. ஈண்டு உடலையுணர்த்திற்று. வீணும் தனதாகி நிற்கும் தகுதியோர் - பயனற்ற உடலைத் தனது உடல் எனக் கிழமை பாராட்டி நிற்போர். மனதாகி நிற்றலா வது எனது உடல் என்றவழி அங்ஙனம் கூறும் 'எனது' என்னும் சொல் உடலின் வேறாக மதிக்கும் உயிர் என நினைக் கும் மனமாக நிற்றல். இதனைத் தொகுத்து 'மனதாகி நிற்கும் மதி' என்றருளினார்கள். இங்ஙனம் உயிர் பொறிக்கு இடமாகிய உடலாயும், காண்பானாகிய தானாயும், எனதுடல் என்றவழி மதிக்கும் மனமாயும் நிற்கும் என்பது உணர்த்தப்பெற்றது.
---------------
மலமடைய மாயா தனுவிளையு மந்த
மலமிடையக் காய மனுவாம் -
ஆக்கையறக் காய மருட்டனுவா மோர்தனுவில்
தாக்கியமெய் பாவகத்தால் தான். 39
இவ்வெண்பா , உயிர் எய்தும் நிலை வேறுபாடுகளை உணர்த்துகின்றது.
இ-ள் : ஆணவமலச் சேர்க்கையால் மாயா காரியமான இவ்வுடல் தோன்றும்; அந்த மலம் கெடுதற்காக மந்திரவடி வாம்; நலஞ்செறிந்த கட்டுக்கள் நீங்க அவ்வுடல் திருவருளே யாம். தியானிக்கப்படுகின்ற திருவருளேயான தேகத்தில் பற்றியுள்ள தியான பாவனையால் தற்பரம் பொருளாகிய சிவமேயாம் என்றவாறு.
உயிர் ஆணவமலத்தோடு அநாதியே தொடர்புண்டிருத் தலின் அதன் வலியொடுக்குதற்காக உடம்பொடுகூடி அதன் மறைக்கும் வலியால் உடலாகவே இருக்கும். மலவாதனை போக் குதற்காக ஆசாரியன் அருளிய மந்திரத்தை விதிப்படி விடாது எண்ணுவதால் மந்திர வடிவாகும். மல மாயா பந்தங்கள் மந்திர தியானத்தால் அகலத் திருவருளே வடிவாயிருக்கும். திருவருளே வடிவாய்ச் சிவத்தைச் சார்ந்த போது சிவமேயாம் என்பது கருத்து.
'மலம் அடைய' எனப் புதிதாக வந்தடைவது போலக் கூறினும், அநாதியே இயல்பாகப் பொருந்த எனப் பொருள் கொள்க.
உடல் மாயையாகிய முதற்காரணத்தின் காரியமாதலின் மாயாதனு எனப்பட்டது. உடலுக்குத் தோற்றக்கேடுகள் உண் மையின் தனு விளையும் என்றருளினார்கள்.
அந்த மலம் - அறியப்படுவதாகிய அந்த மலம். இடைய - கெட . மனு - மந்திரம். மலவன்மை கெட ஆசாரியன் தீட்சை யாதிகள் புரிந்தளித்த சிவ மந்திரம். இடைவிடாத மந்திர பாவனையால் உயிர் மாயாகாரிய உடலினகன்று மந்திர உடலைப் பற்றி அதுவாயே நிற்றலைக் காயம் மனுவாம் என்பதால் அருளிச்செய்கின்றார்கள்.
மந்திரதேகம் மறைத்தலைச் செய்யாது உயிருக்குத் திரு வருள் பொருந்த வழிசெய்தலின் அது நலமுடைய ஆக்கை எனப்பட்டது. ஆயினும் அதுவும் பந்தமேயாதலின் ஆக்கை எனப்பட்டது. அருள் தனுவாம் - திருவருளே தேகமாம்.
பாவகம் - பாவிக்கப்படும் பொருள் ; அது பரசிவம். ஓர் தனு - ஆய்கின்ற உடலாகிய திருவருள் தேகம். அதில் தாக்கிய பாவகம் - திருவருளை இடமாகக்கொண்டு வந்து பொருந்திய சிவவிளக்கம். அதனால் தானேயாம் என்றது. தான் என்றது சிவத்தை. ஆகவே திருவருள் தேகத்தில் பாவகமாகிய சிவம் விளங்கித் தோன்றச் சிவமேயாம் எனச் சாதிக்கும் முறை உப தேசித்தவாறு.
------------
ஆகமற்ற தாலடைவ தாகுமர னாலுமல
பாகமுற்றால் மந்திரத்தின் பண்பாகும் - தேக
மனுவால் துறந்தறிவின் மன்னுமரன் ஞானத்
தனுவாகு மென்னத் தகும். 40
இவ்வெண்பா , ஞானசரீரம் பெறும் உபாயம் உபதேசித்தருளுகிறது.
இ - ள் : உடலைப் பற்றி நின்ற பற்றறச் சிவம் தாமே வெளிப்பட்டு ஆன்மாவைச்சாரும். இடைவிடாது இவற்றைச் சார்ந்தே நிற்க மலபரிபாகம் ஏற்படும். அதனால் உயிர் சீபஞ்சாக்கரத்தின் தன்மையேயாய் நிற்கும்.
மந்திர தியானத்தால் மாயாகாரியமான உடற்பற்று நீங்க அறிவாயே நிற்கும். அது ஞான தேகமாம் என்றவாறு.
உடற்பற்று நீங்கச் சிவம் சாரும். அதனால் மலபரிபாகமும், அதனால் மந்திர தேகமும், அதனால் சிவஞானமும், அதனால் ஞானதேகமும் ஒருங்கு தோன்ற உயிர் ஞானதேகியாய் நிற்கும் என்பது கருத்து.
ஆகம் - உடல். ஈண்டு ஆகுபெயராக அதன்கண் வைக் கும் பற்றை உணர்த்திற்று. அரன் - சிவன்.
மலம் மந்திர பாவனையால் வலி ஒடுங்காதவழி, ஆன்மா வின் வியாபகத்தை மறைத்து ஆரவாரித்து நிற்பதால் ஆலும் மலம்' என்று விசேடித்தார்கள். ஒரு தொடராக்கி, உடற்பற்று நீங்கியதால் அடையும் அரனாலும் மலபரிபாகமுற்ற வழி மந்திரதேகமாம் எனலுமாம்.
மந்திரத்தின் பண்பாகும் என்பதற்கு மாயாகாரியமான உடல் மந்திரத்தியானம் சித்தித்தவுடன் அழியும் என்பதன்று; மந்திரத்தின் தன்மை பெற்றுத் தன் குணமாகிய மயக்குந் தன்மை கெட்டுச் சிவஞானம் பெறுதற்கு உறுதுணையாகும் என்பது கருத்து. ஞானத்தனு - ஞானசரீரம்.
---------
ஆவி தியானத் தடங்காவா மாங்கரனைத்
தாவி மனமுஞ் சருவாவாம் - மேவும்
உடலகலத் தோற்று முயிரா லுயிரின்
கடனகலத் தோற்றுமரன் காண். 41
இவ்வெண்பா , உயிரினிடமாகச் சிவம் பிரகாசிக்கும் விதம் உணர்த்துகிறது.
இ - ள் : உயிர் தியானத்தில் அடங்கியிராதாம். அரனைத் தாவிப்பற்றி மனமும் நழுவாதிருக்கும். இந்நிலையில், உயிர் மேவியுள்ள உடலின் வேறாக உயிர் அறியப்பெறும். உயிரின் கண்ணவாகிய வினைகளாகிற கடன்கள் நீங்க அவ்வுயிரினிட மாகச் சிவன் விளங்கித் தோன்றுவன் என்றவாறு.
உயிர் தியான பாவனை ஒன்றானே அடங்காது ஆகையால் மனம் இறைவனைத் தாவிப் பற்றி நீங்கா நிலையில் நிற்க, உடற் பற்றுத் தொலையும்; அது தொலையவே உயிரினிடமாகச் சிவம் பிரகாசிக்கும் என்பது கருத்து.
தியானத்து ஆவி அடங்காவாம் என விறிக் கூட்டுக. உயிர் தியான பாவனையால் மட்டும் அறியப்படாததாய் தியானிப்போனாக இருத்தலின் இங்ஙனம் கூறினர்.
ஆயின், உயிரை அறிவது எப்படி எனின், உயிர் மனத் துணை கொண்டு உடல் உலகம் ஆதிய பாசங்களின் நீங்கிப் பதியைச் சார்ந்து நழுவாதிருக்கும் என்பது மனமும் அரனைத் தாவிச் சருவாவாம்' என்பதால் உணர்த்தப்பெற்றது. சருவு தல் - நழுவுதல்.
உடல் நீங்கின் உயிரும் அறியப்படாது; ஆகவே உடல் அகல உயிர் தோற்றும் என்றது எங்ஙனம் இயையும் எனின், உடல் ஈண்டு ஆகுபெயராக அதன் சார்பை உணர்த்திற்று. ஆகவே, உயிர் உடற்சார்பை நீங்கி அறிபவனாகிய தன்னின் வேறாக உடலை அறியின் என்பதே கருத்தாகக் கொள்க.
உயிரின் கடன் - வினைப்போகங்கள். இவை உயிரைப் பற்றி நின்று உயிருக்குள்ள சிவத்துவ வியாபகத்தையும், அறிவையும் மறைக்கும் ஆதலின் அவை நுகர்ந்து கழிய உயிரி னிடமாகச் சிவம் பிரகாசிக்கும் என்க.
-----------
அங்கத்தார்க் காகு மரிய தியான மலப்
பங்கத்தை மாற்றுதற்குப் பாங்காகும் - துங்கம்
கருமி தொழிலோடுங் காண்பான் மெய்ஞ் ஞானத்
தருமியுறு ஞான நூற் றான். 42
இவ்வெண்பா , உலோகதருமிணிக்குக் கிரியையும், சிவதருமி ணிக்கு ஞானமும் உரிய என்கின்றது.
இ - ள் : உடலொடு கூடி உலகமாதிய போகங்களில் உழல்வார்க்குத் தியானம் மலச்சேற்றைக் கழுவுதற்கு உரிய உபாயம் ஆகும். உயர்ந்த கருமவான்களாகிய உலோகதரு மிணிகள் தீட்சையாதிய கிரியைகளால் அறிவர். உண்மை ஞானத்தையுற்ற சிவதருமிணியானவன் ஞான நூல்களை அறி வன் என்றவாறு.
பெத்தான்மாக்களில் போகமுறுவார்க்குத் தியானமும், அதனால் மலநீக்கமும் விளையும். கன்ம குரவர்கள் கிரியை யாலும், ஞானகுரவர்கள் ஞான நூற்கேள்வியானும் ஞானமுறு வர் என்பது கருத்து.
அங்கத்தார் - தனு கரண புவன போகங்களாகிற உறுப்புக் களை உடையவர்கள். இவர்கள் தம் நுகர்ச்சியால் உவர்ப்புத் தோன்றி இவற்றைவிட்டு, பெரிய நிலை பெறவேண்டித் தியா னிப்பார்களாயின் மலபரிபாகம் பெறுவர் என்பார் அரிய தியானம் மலப்பங்கத்தை மாற்றுதற்குப் பாங்காகும்' என்றார்.
கருமி - கிரியாவான்களாகிய ஆசாரியர். இவரைக் கன்ம குரவர் கன்மாந்தகுரவர் என்னும் சிவாகமம். இவர்கள் குண்ட மண்டலங்களைப் புறத்தேயிட்டு, ஆகுதி முதலியவற்றான் சீட னுடைய மலமாயா கன்மங்களைச் சேதித்துப் பாவனையால் சிவஞானம் வருவிப்போர். தொழில் என்றது ஆகுதி முதலிய கிரியைகளை .
மெய்ஞ்ஞானத் தருமி - ஞான ஆசாரியர்கள். இவர்களை ஞானகுரு , ஞானாந்த குரவர், சிவதருமிணி என வழங்கும் ஆகமம். இவர்கள் தீட்சைக்குரிய குண்ட மண்டலங்களை மனத்தால் படைத்திட்டுத் தாம் சிவமாந்தன்மையிலிருந்து சீட் னுக்கு மலபரிபாகம் வருவித்துச் சிவஞானம் சேர்ப்போர். இவர்களுக்கு ஞான நூற்கேள்வியான் ஞானம் தோன்றும் என்பதாம்.
----------
கருமி தியானங் கருதியதும் ஞானத்
தருமிநூ லோதுந் தருக்கும் - தெரியுங்கால்
சாலோக மாதிப் பதநோக்குஞ் சற்குருவால்
நூலோது வார்க்கறிவே நோக்கு. 43
இவ்வெண்பா , நூற்கேள்வியானும் வேறுபாடுண்மை விளக்கு கின்றது.
இ - ள் : ஆராயுமிடத்துக் கன்மாந்தகுரவன் சிவோகம் பாவனையாகிற தியானம் செய்வதும், ஞானாந்த குரவன் ஞான நூல்களை ஓதும் செருக்கும் சாலோக முதலியன பதவிகளைப் பெறும் எதிர்நோக்காம். சற்குருமுன்பு அவனருளால் ஞான நூல்களை விதிப்படி உபதேசிக்கக் கேட்பார்க்குச் சிவஞானம் ஒன்றுமே நோக்காம் என்றவாறு.
கன்மி சிவோகம்பாவனை செய்வதும், ஞானி ஞான நூல் களை ஓதுவதும் சாலோகம் முதலான பதமுத்திகளைப் பெற்று உய்யவேயாம். ஞானி ஞானாசாரியன் வாயிலாக ஞான நூல் களைக் கேட்டல், சிவஞானம் பெற்று உய்யவேயாம் என்பது கருத்து.
நூல் ஓதுதல் ஞான தருமிணிக்கும் ஞானிக்கும் ஓக்குமே னும், முன்னது தன்னறிவால் தானே ஓதுதலாகவும், பின்னது ஞானாசாரியன் முன்பு இருந்து அறிவனூலுரையும் அனுபவமும் கேட்டும் கண்டும் அறிதலாகவும் கொள்க.
------------
நாட்டமற்றா னாங்கவன் போல் நாட்டமற்றார்க் கேமதியைக்
காட்டியது முண்டோவக் கண்ணுடையான் - நாட்டமற
வந்தார்க்குக் காட்ட வழக்குண்டோ ஞானத்தை
நந்தா தவர்க்குரைக்க நன்று. 44
இவ்வெண்பா , ஞான நாட்டம் உடையோர்க்கே ஞானத்தை உரைக்க என்கின்றது.
இ - ள் : குருடன் குருடனுக்குப் பூரண சந்திரனைக் காட்டிய துண்டோ? கண்ணுடையானொருவன் கண்ணற்றவ னுக்குக் காட்டத்தான் வழக்கமுண்டோ ? ஆதலால் அது போல ஞானத்தைக் கேடற்ற ஞானநாட்டம் உடையார்க்கே நன்றாக உரைக்க என்றவாறு.
குருடன் குருடனுக்கு நிறைமதியைக் காட்டமுடியாதவாறு போல ஞான நாட்டம் இல்லாதானுக்கு ஞானத்தை ஊட்டற்க; உடையானுக்கே நன்கு உரைக்க என்பது கருத்து.
நாட்டம் - கண் . " குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழுந்த வாறே" என்பது திருமந்திரம் ஆதலின் இங்ஙனம் கூறியவாறாம்.
நந்தாதவர்க்கு - குறையாதவர்க்கு. அதாவது ஞான நாட்ட மிக்கவர்கட்கு என்றவாறாம். நன்று உரைக்க எனக் கூட்டுக.
------------
நாட்ட மிருவருக்கு நண்ணுமென வெண்மதியைக்
காட்டாமல் தானே கருதுமரன் - நாட்டம்
பிரிந்தான் மெய்த் தோற்றத்துப் பின்னொருகால்
பெற்றுத் தெரிந்தான் தெரிவே துரை. 45
இவ்வெண்பா , உண்மைஞானம் பெறத் திருவருள் நோக்கம் இன்றியமையாதது என்கின்றது.
இ-ள் : கண் நம்மிருவருக்கும் கிடைக்கும் என்று, வெள்ளிய மதியைக் காட்டாமல் தானே கற்பனையால் கருது பவனாகிய சிவத்திருவருணோக்கம் அற்றவன், பின்பு ஏதோ ஒருகால் உண்மைத் தோற்றத்தால் பெற்று அறிந்தானாயி னும் அவனறிவு எத்தன்மைத்தாகும் என்று உரைப்பாயாக என்றவாறு.
திருவருணோக்கம் பெறாதவன் உண்மைஞானத்தை ஒருக் காலும் அடைய இயலாது. இயலுமேனும் அவ்வறிவு எங்ஙனம் இருக்கும்? ஐயமும் திரிபுமாகவே இருக்கும் என்பது கருத்து.
இருவர் - காட்ட முற்பட்ட குரவனும், காணத் தலைப்பட்ட சீடனும் ஆய இருவர். யாம் இதுபோழ்து குருடர்களேயானா லும் தியான பாவனையால் பின்னொருக்கால் கண் பெறலாம் எனக் கருதிக் கலைமதியைக் கண்ணுள்ளான் ஒருவன் இது தான் வெண்மதி எனக் காட்டக் காணாமல் தானே கற்பனையால் தியானிப்பவனாகிய திருவருணோக்கம் பெறாதவன் என்பதாம்.
அரன் நாட்டம் பிரிந்தான் - சிவனுடைய திருவருணோக்கம் பெறாது பிரிந்தான். அவனருளாலே கண்ணாகக் காணவேண் டிய ஞானத்தைத் தியான பாவனையால் சிந்திக்கக் கைகூடும் என்று அறியலுறின், அவனறிவு ஏதாம் என்றவாறாம்.
தெரிவு - ஞானம்.
-------------
சீவிக்குங் காயம் சிவனலவே யென்னுமலப்
பாவிகட்கிந் நூலைப் பகரற்க - மேவும்
உயிரே செயலற் றொடுங்கும்போ தீசன்
செயலென்பார்க் கேயுரைக்கச் செய். 46
இவ்வெண்பா, இந்நூற்கேள்விக்குரிய அதிகாரி இவரென உணர்த்துகின்றது.
இ-ள் : உயிர் உறைதற்கிடமாகிய உடல் சிவமன்றோ என்னும் மலத்தான் மறைப்புண்ட மதியையுடைய பாவி கட்கு, உபாய நிட்டை வெண்பாவாகிற இந்த நூலைச் சொல் லற்க. இவ்வுடற்கண் மேவியுள்ள உயிர் தன் செயல் அற்று, சிவத்துவ வியாபகத்துள் தாடலைபோல மடங்கிக்கிடந்த காலத்து எல்லாம் சிவச்செயலேயாம் என்ற அநுபவம் மிக் கார்க்கே உரைக்கச்செய்க என்றவாறு.
உடலே சிவமாம் என்பார் சாணி நீறானாற்போல இந்த உடலே சிவனாம் என்னும் பரிணாமவாதிகள். அவர்கட்கு மாயா காரியமான உடல் அநாதிமலமுத்தனாகிய சிவமாகாது என்ற உண்மைஞானம் புலப்படாவண்ணம் மலமறைப்பு உண்மையின் அவர்களை மலப்பாவி' என்றார்கள்.
'எல்லாம் சிவன் செயல்' என்று இருப்பார்க்கே இந்நூல் உபதேசிக்கத் தக்கது என்பதாம்.
---------------
நூற்சிறப்பு
உபாய நிட்டை வெண்பா வுரைத்தானாற் பத்தா (று)
அபாய நிட்டை வாராம லார்க்கும் - உபாயநிட்டை
வெண்பாவா லாவடு தண்டுறையை வெஃகினர்க்கு
நண்பாகும் அம்பலவாணன்.
இ - ள் : சிவனடி சேர்தற்கு உபாயமான ஞானநிட்டை சித்தி பெறச்செய்யும் வெண்பாவினாலே திருவாவடுதுறையை விரும்பினபேர்கட்கு நண்புடையராகும் ஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானாசாரியன், ஒருவர்க்கும் அபாயமான துன்பத்தி லிருக்கை வாராவண்ணம் உபாயநிட்டை வெண்பா என்னும் இந்த நாற்பத்தாறு வெண்பாக்களையும் அருளிச்செய்தான் என்றவாறு.
திருவாவடுதுறையைச் சேர்ந்தோர் அனைவருக்கும் நண் பாரும் அம்பலவாணதேசிகமூர்த்திகள் ஒருவருக்கும் தீங்கு சாராவண்ணம் உபாய நிட்டை வெண்பா என்னும் இந்த நாற்பத்தாறு பாக்களை அருளினன் என்பது கருத்து.
உபாயநிட்டை வெண்பா முற்றிற்று
-------------------
திருச்சிற்றம்பலம்
சிவமயம்
2. ஸ்ரீ அம்பலவாண தேசிகர் அருளிச்செய்த
நிட்டை விளக்கம்
நெஞ்சே உனையிரந்தேன் நீயம் பலவாணன்
நெஞ்சா வடு துறைமெய் யின்பருளச் - செஞ்சொல்புனை
நிட்டை விளக்கம் நினைதலினால் எப்பிறப்பும்
இட்ட முனைப்பெறவென் றெண்.
இப்பாடல் , மனத்தை விளித்து. இந்நூலின் தனித்தகுதியை விளக்குகிறது.
இதன்பொருள் : மனமே! உன்னை யான் வேண்டிக்கொள் கின்றேன்; நீ அம்பலவாணராகிய ஸ்ரீ ஞானமா நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறைக்கண் உண் மையான பேரின்பத்தை அருள, செஞ்சொற்களால் புனையப் பெற்ற நிட்டை விளக்கம் என்னும் நூலை நினைத்தலால், யான் எப்பிறவியை எத்தனைதரம் எடுத்தாலும் உன்னைப் பெற எனக்கு இஷ்டம் என்று நம்புவாயாக என்றவாறு.
நெஞ்சே ! நீ நிட்டை விளக்கத்தை நினைதலால், யான் எத்தனை பிறவி எடுக்கினும் உன்னை அடைய விருப்பம் என்று எண்ணுக என்பது கருத்து.
நெஞ்சு நம் விருப்பின்படி நினையவேண்டியதை நினையாம லும், நினையவேண்டாததை நினைத்தும் வினைகளைப் பெருக்கிக் கொண்டே போம். என் நெஞ்சாகிய நீயோ நிட்டை விளக் கத்தை நினைக்கிறாய். ஆதலால், எனக்கு வினையில்லை. ஆகவே வரும் பிறப்பும் இல்லை. ஆதலால், ஒத்துழைக்கும் உன்னோடு எத்தனை பிறவி எடுத்தாலும் கூடிவாழ விருப்பம் என்று அருளி யவாறு.
செஞ்சொல் - தன் பொருளை நேரிய முறையில் காட்டும் சொல். செஞ்சொல், ஆக்கச்சொல், குறிப்புச்சொல் என்ற சொல்வகையுள் ஒன்று.
நூல்
ஆட்டி மவுலியை யார்ப்பரித் தோங்கி யடித்துக்கைகால்
நீட்டிக் கிடப்பது நிட்டைய தோநிலை யாத்தனுவை
ஓட்டி நின் பாதத் தொடுக்கி யுயிரையும் நீயெனவே
நாட்டிய வம்பல வாணா திருத்தில்லை நாயகமே. 1
இப்பாடல். ஆரவார நிட்டை உண்மை நிட்டை ஆகாதென் கின்றது.
இ - ள் : அழிந்துபடுவதாகிய உடலைப் பேதமாக ஓட்டி, உயிரை உன் திருவடியில் தன் செயலற்று அடங்கிக் கிடக்கச் செய்து, அதனைத் தேவரீராகவே நிலை பெறச்செய்த அம்பல வாணா! திருத்தில்லை நாயகமே! தலையை ஆட்டிக் கொண்டும் கைகால்களை ஓங்கி அடித்துக்கொண்டும், நீட்டிக்கொண்டும் கிடப்பது நிட்டையாமோ? என்றவாறு.
தன்செயல் அற்றுத் தாமற்றபின் நாதன் தன் செயலே என்று இருக்கச்செய்த பரம உபகாரியான அம்பலவாணா! கை கால்களை நீட்டி முடக்கிக் கிடப்பது நிட்டையாமோ? மனத்தை ஒருக்கி நின் மலரடிக்கண் பேராது நிறுத்துவதே நிட்டையாம் என்பது கருத்து.
மவுலி - முடி; கிரீடம். தானியாகுபெயராகத் தலையைக் காட்டியது. பிராணாயாமம், கண்டசுத்தம் முதலியன புரிவதாக மூச்சைச் சாத்தம்பட இழுத்தும் விட்டும் கனைத்தும் உரப்பியும் செய்யும் ஆரவாரமே ஆர்ப்பரித்தல் என்பது.
உண்மை நிட்டையின் இலக்கணத்தை, உடற்பற்றை நீக்கி உயிரை ஒடுக்கி, பாதத்துத் தன் செயலற்று அடங்கி இருக்கச் செய்து, உயிரைச் சிவமாக்குதலே என, உபகாரியின் மேல் வைத்து உடம்பொடு புணர்த்தலாக உணர்த்தியவாறு.
-----------
ஓங்கிய நெஞ்சத் தருளோ ருருவைத்தங் குற்றமலம்
நீங்கிய தன்று பொய் யெல்லா மகல நிருமலத்தே
தேங்கிய தன்று சிவமே வருமெனச் செய்கையறத்
தூங்கிய வாறென்கொல் தில்லையு ளாடிய துய்யவனே. 2
இப்பாடல் , கடமையைச் செய்தாலன்றிக் கடவுள் வாரார் என்கின்றது.
இ - ள் : திருத்தில்லையுள் ஆனந்த நடனம் புரியும் பரம பரிசுத்தனே! உயர்ந்த மனத்திலே திருவருளை ஓருருவாக வைத்துத் தியானித்தலால் உயிரைப் பற்றியதான மலம் நீங்கியபாடில்லை. நிலையாமை பொருந்திய உலக போகங்கள் நீங்க, நிர்மல சிவத்தினிடம் மனம் நிலைபெற்றபாடும் இல்லை. அங்ஙனமாகச் சிவம் தாமே எழுந்தருளிவரும் என்று மனப் பால் குடித்துக்கொண்டு வேலையற்றுத் தூங்குவதால் என்ன பயன்? என்றவாறு.
மலபரிபாகமும், சத்திநிபாதமும் இன்றிச் சிவத்தைப் பெற லாம் என்று வேலையற்றுக் கண்மூடிக்கிடப்பதுதானா நிட்டை என்று உண்மை உணர்த்தியவாறு.
------------
அரனே ருறினுடற் சோகம தென்னி லகத்தினுநீ
வரினே தனுவு முளதாய் மயக்கும் வருவதின்றாம்
பரனே மலமற நின்றாவி பற்றிப் பசுப்பரமாய்த்
தரினே சிவமென்னு மம்பல வாதில்லைச் சங்கரனே. 3
இப்பாடல். உடற்பாசம் உள்ளவரையில் சிவோகம்பாவனை சித்தியாதென்பது உணர்த்துகின்றது.
இ-ள் : பரனே உயிர்கள் மல வலியொடுங்க நின்று விடா துபற்றிப் பசுக்களைப் பரமாக்கித்தரின் அவை சிவமாம் என்றுபதேசிக்கும் அம்பலவாணா! தில்லைச் சங்கரனே! சிவன் திருமுன் நிற்பினும் இவ்வுடலைச் சேரகம்பாவனை செய்யினும், மனத்திலும் தேவரீர் எழுந்தருளப்பெறினும் உடற்பாவனை உளதாயின் அது மயக்கந்தருவதாம்; அதனால் விளைவதொரு பயனும் இன்றாம் என்றவாறு.
சிவனே கருணை கூர்ந்து எதிர்ப்படினும், உடலை நான் என்று எண்ணும் வரையில் அது மயக்கஞானமாம். அதனால் வருவதொரு பயனும் இன்றாம் என்பது கருத்து.
நேருறினும் என்னிலும் வரினேயும் என உம்மை விரித்துப் பொருள் கொள்க.
அரன் நேர் உறினும் என்பதற்குச் சிவத்தை உயிர் நேர் உற்றாலும் என உயிர்களின் செயலாகவும், நீ வரினே என்ப தற்குச் சிவமாகிய நீ உயிர்கள் மீது இரங்கி எழுந்தருளினும் எனச் சிவத்தின் கருணைச்செயலாகவும் உரைக்க.
தனு - உடல் . வருவது - வருவதொரு பயன்.
சிவசன்னிதியிலிருந்து உடலோடு கூடிய தன்னைச் சிவ மாகப் பாவிக்க , இறைவனே அவன் மனத்து எழுந்தருளினும் உடற்பந்தம் உண்மையால் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தோன்றாது; அது மயக்க ஞானமேயாம். ஆயின், மலவாதனை அகன்று, திருவருளைப்பற்றிப் பசுவைப் பரம்பொருளாக்கி நீதரின் அவ்வுயிர் தன்னைச் சிவத்தோடு ஐக்கியமாய் உணரும் இதுவே உண்மை நிட்டையாம் என வேண்டுவதந்து முடிக்க.
---------------
வருத்துந் தனுவினை யோரிட மாக மனஞ்சுருக்கி
இருத்த வருமரு ளென்மனம் நோக்கி யிருத்துதற்கோர்
கருத்தனும் வேண்டும் பின் னீங்குதற் கோர்வினை காண்பதுண்டாம்
திருத்தியல் பாகவென் னம்பல வாதில்லைச் சிற்பரனே. 4
இப்பாடல், அவனருளாலே அவன் தாள் வணங்கும் இயல் பான திருத்தம் உதவுக என்கின்றது.
இ-ள் : வினைப்போகங்களை நுகர்ந்து வருத்தும் உடலில் மனத்தை ஓரிடமாக இருக்கச் செய்து, வினைகளைச் சுருக்கத் திருவருள் தாமே வரும்; ஆனால் என் மனத்தை அலையாமல் இருத்துதற்கோ ஒரு தலைவன் இன்றியமையாது வேண்டப் படுவன். அவ்வினைகள் என்னை விட்டு நீங்குதற்கு ஓர் செயல் புரிதல் வேண்டும். ஆதலால் அம்பலவா! தில்லைச் சிற்பரனே! இயல்பாக அடியேனைத் திருத்தியருளுக என்றவாறு.
மனஞ்சுருக்குதல், தலைவன் துணை வேண்டுதல், வினையின் நீங்குதல் முதலான பல அலைவுகளின்றி அடியேனை இயல் பாகவே திருத்தி ஆட்கொள்க என அம்பலவனை வேண்டுகின்றார்கள்.
என் அம்பலவா - எனது புருவமத்தியாகிய சிற்றம்பலத்து உள்ளவனே என்பதாம். அங்ஙனமே புறத்துத் தில்லைக்கண்ணதாகிய சிற்சபையில் எழுந்தருளியுள்ள பரனே என்பது தில்லைச் சிற்பரனே என்பதால் உணர்த்தப் பெறுகின்றது.
வருத்தும் தனுவில் மனம் ஓரிடமாக வினை சுருக்கி எனக் கூட்டி, உடலில் மனத்தை ஓரிடமாகக் குவியப்பண்ணி வினை களை ஏறாதவண்ண ம் சுருக்கி என்க. மனம் பரபரந்து பல புலங்களில் சென்று பற்றுவதாலேயே வினைகள் மிகுகின்றன. ஆகவே, மனம் புறம் போகாது உடலில் புருவமத்தி இதயம் முதலான இடங்களில் ஒன்றி நிற்க, வினைகளை நான் செய்தேன் என அகங்கரித்துச் செய்யானாதலின் வினைகள் ஏறா, குறையும் என்றவாறாம். வினை குறையவே அருள் தோன்றும் என்பது.
ஆனால், மனமோ எனக்கு அடங்கி , இரு என்ன இராது; தாவுகின்ற குரங்கினைக் கட்டுவான் ஒருவன் இன்றியமையாதது போல மனத்தை இருத்த ஒரு முதல்வன் வேண்டும்.
பின் - தலைவன் மனத்தை நிலை நிறுத்தியபின். நீங்குதற்கு. வினைகளினின்று உயிர் நீங்கித் தூய்மையுறுதற்கு. ஓர் வினை காண்பது உண்டாம் - ஒரு நற்றவம் செய்வது உண்டாம்.
ஏன் இத்தனைத் துன்பங்கள்? தேவரீரே இயல்பாகத் திருத்தி அருளத் திருவருள் சுரக்க வேண்டும் என்பார் இயல் பாகத் திருத்து' என்றார்.
------------
தெரிசித்த லர்ச்சித்தல் சிந்தித்தல் மூன்றுந் திகழ்பதத்தைப்
பரிசித்த னூலினைப் பார்த்தல் சன் மார்க்கமிப் பண்பதற
வருசித்து மற்றக் கரண மடக்க வருஞ்சிவமென்(று)
உருசித்த வாறென்கொல் தில்லையு ளாடிய வுத்தமனே. 5
இப்பாடல், பொறியடக்கம் ஒன்றுமே சிவதரிசனத்திற்கு ஏது வாகாமையை உணர்த்துகிறது.
இ-ள் : சிவாலயங்களைத் தரிசித்தலும், பூசை செய்த லும், தியானித்தலும் ஆகிய இம்மூன்றுடன், விளங்குகின்ற இறைவன் திருவடிகளைச் சிந்தையால் தீண்டுதலும் சிவஞான நூல்களைப் படித்தலும் ஆகிய இவைகள் சன்மார்க்கங்க ளாகும். தில்லையுள் ஆடிய உத்தமனே! சிலர் இப்பண்புகள் நீங்க விளையும் சித்து பொறிபுலன்களைப் புறம்போகவிடாது அடக்குதல் ஒன்றாலேயே சிவக்காட்சி கிடைக்கும் என்று சுவைத்தது என்னவோ என்றவாறு.
சிவாலய தரிசனம் முதலான சரியையாதி சன்மார்க்கங்களை விட்டுச் சித்து வரும் ; பொறி அடக்கச் சிவம் பிரகாசிக்கும் என்று சிலர் சுவைகண்டது எப்படியோ என்று இரங்கியவாறு.
தரிசித்தல் - நித்தலும் எம்பெருமான் கோயில் சென்று உடற்றொண்டுகளாகிய அலகிடல் மெழுகல் பூமாலை புனைந்து ஏத்தல் புகழ்ந்து பாடுதல் முதலாயினவாம். இவை சரியைத் தொண்டுகள்.
அர்ச்சித்தல் - விசேட தீக்கை பெற்று, சிவபூசை செய்தல். இது கிரியை. சிந்தித்தல் - அட்டாங்கயோக முறைப்படிப் பிராணாயாமங்கள் செய்து யோகத்திருத்தல். இது யோகம்.
திகழ் பதத்தைப் பரிசித்தல் - சிவனருளால் சிவன்றாளைத் தியானித்தல் . நாயகன் சேவடி தைவரு சிந்தையினராதல் என்க. நூலினைப் பார்த்தல் - சிவஞானக் கேள்வி. அதாவது ஞானசாத்திரங்களைப் படித்தலும் கேட்டலும் உபதேசித்தலும். இவை இரண்டும் ஞானம்.
இவற்றைவிட்டுச் சித்து வரும், பொறியடக்கச் சிவம் வெளிப்படும் என்ற ருசி எப்படி உண்டாயிற்றோ என்றது உபா யங்களை விட்டு உபாதேயம் எங்ஙனம் விளையும் விளையாது என்று உண்மை உணர்த்தியவாறாம்.
---------------
மாயஞ் சிறிது மடியமுற் பாதத்தின் மன்னு நின்பால்
தோயச் சிறிதங் கறிவுள தாகுந் துடர்ந்து மற்றும்
பாயப்பொய் மாயம் பறிந்தறி வாய் நிற்கும் பண்பதென்றால்
யாக மயக்கென்கொ லம்பல வாதில்லைக் கண்ணுதலே. 6.
இப்பாடல் , நால்வகை நெறிகளான் அன்றி யாகாதிகளால் பயனில்லை என்கின்றது.
இ - ள் : மயக்கவுணர்வு சிறிது அகல, முதற்பாதமாகிய சரியையில் நிலைத்து நிற்கும்; பின்பு சிவமாகிய நின் திருவடி களில் சிவார்ச்சனை முதலியன செய்து பொருந்தச் சிறிது சிவ ஞானம் உண்டாம்; அந்த நிலையில் நழுவாது மேன்மேலும் தொடர்ந்து சிந்தை பள்ளம் புகு புனல் போல் திருவடிக்கண் பாய அநித்தியமான அறியாமை நீங்கி ஞானமே வடிவாய்த் திகழும்; இதுவே உயிர்கள் எய்தத்தகும் பண்பு என்றால் யாகத்தைச் செய்யின் எல்லாம் அடையலாம் என்ற மயக்கம் என்ன பயனைத் தரும்? என்றவாறு.
சரியையாதி நாற்பாதங்களினின்று சிவஞானத்தின் வாயி லாகச் சிவனருளைச் சேரலாமே அன்றி யாகாதிகளினால் ஒரு சிறிதும் பயனில்லை என்பது கருத்து.
"பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம் - இசைத்த
இருவினை யொப்பின் இறப்பில் தவத்தால் மருவுவனாம் ஞானத்தை வந்து ''
என்னும் வெண்பாவும், அதற்குச் சிவஞானசுவாமிகள் தரும் 'வேள்வி முதலாயின எல்லாம் அழிதன்மாலையவாகிய காமி யங்களைப் பயப்பனவன்றித் தத்துவஞானத்தைப் பயவா . அம் மட்டுமேயன்றித் தீவினைபோல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் உடைமையின்' என்ற உரையும் ஈண்டு எண்ணற்கு உரியன.
மாயம் சிறிது மடிய - முற்புண்ணிய விசேடத்தாலும், குடிப் பிறப்பு, நல்லிணக்கம், நூற்கேள்வி முதலியவற்றாலும் கலா தத்வம் காரியப்பட அதனால், ஆன்ம அறிவை மறைத்து நின்ற மாயம் சிறிது நீங்க என்பது.
முற்பாதம் - முதற்பாதமாகிய சரியாபாதம். மன்னும் நிலைத்து நிற்கும். சரியையாவது திருக்கோயிலுக்குச் செல்லல், திருவலகிடுதல், மெழுகுதல், திருநந்தவனம் அமைத்தல், பூத் தொடுத்தல் முதலிய உடலால் செய்யப்படும் தொண்டுகளாகிய ஒழுக்கங்கள். அவற்றால் இறைவனிடத்து நீங்காத அன்பு விளையும். அதனால் இறைவனைப் பூசிக்கும் விருப்பு உண்டாம். அதனையே அடுத்துவரும் நின்பால் தோய' என்பதால் விளக்குகின்றார்கள்.
அறிவு - ஞானம். அஃதாவது, உலகமும் உடலும் அநித்திய மானவை. அவை கிடைத்தபோது நிலையான இன்பத்திற்கு வழிதேடிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை உணர்வு. இது கிரியை.
மற்றும் தொடர்ந்து பாயப் பொய்ம்மாயம் பறிந்து அறிவாய் நிற்கும் - அன்பு சிவபெருமானிடம் இடையறாது செல்லப் பொறியுணர்வும் போகமுமாகிய நிலையாமையோடு கூடிய மோகம் நீங்கச் சிவஞானமே வடிவாய் நிற்கும் என்ப தாம். இது யோகமும் ஞானமும் கூறியது.
யாகம் - அக்கினிட்டோமாதி யாகங்கள். இவற்றின் பயன் பகை நீக்கமும் சுவர்க்கம் முதலான பேறும் ஆதலானும் அவை தத்தம் கால எல்லையில் நீங்கும் அனித்திய சுகமேயாதலானும் அதனால் பயன் இல்லை என்பார் 'மயக்கு என்கொல்' என் றருளினார்கள்.
இங்ஙனம் யாகாதி காமியப்பயனால் காரியமில்லை; சரியை யாதி நெறிகளே சிவஞானம் தந்து அதன் வாயிலாகப் பேரின் பம் தரும் என்பதாம்.
--------------
திருக்குச் சிறிதுமுற் பாதத் துறவருட் சிந்தையுற்றங்(கு)
உருக்குஞ் சிறிது பின் மற்றவை யோங்கி னுளங்குழைவாய்ச்
செருக்க வுருக்கும் தென்றால் தனுமையல் சேருமெனப்
பெருக்கிய வாறென்கொ லம்பல வாதில்லைப் பெற்றியனே. 7
இப்பாடல், உடல் மயக்கந்தராது ஞானவாயிலாம் என்பது உணர்த்துகின்றது.
இ-ள் : அம்பலவாணா! தில்லைக்கண் எழுந்தருளியிருக் கும் திருவருட்டன்மையனே! சரியாபாதத்தில் நோக்கம் சிறிது பொருந்தத் திருவருள் மனத்தைப் பொருந்தி இறைவ னிடம் கனிந்த அன்பைத்தந்து சிறிது உருக்கும். பின், அவ் வன்பு ஓங்கிவளரின் மனங்குழைந்து ஆணவமலத்தை வாட் டும். இங்ஙனம் சிவத்தொண்டும், சிவனடிக்கு அன்பும், மல நீக்கமும் பயக்கும் இவ்வுடலால் மயல் சேரும் எனக்கூறியது என்னையோ? என்றவாறு.
நம் நோக்கம் சிறிது சரியைக்கண் வீழ்ந்தாற் போதும். உடனே சிவனடிக்கு அன்பும், நீங்காத தியானமும், ஞானமும் முறையே வளர்ந்து மல நீக்கம் உண்டாகும். அங்ஙனமாக உடல் மயக்கம் சேர்க்கும் என்றல் எங்ஙனம் பொருந்தும் என்பது கருத்து.
திருக்கு - கண் அல்லது நோக்கம். அருள் உற்று அங்குச் சிறிது உருக்கும் எனக் கூட்டுக.
அவை - அவ்வன்பும், அதனாலடைந்த திருவருளும். உளங் குழைவாய்ச் செருக்க உருக்கும் என்பது மனம் குழைந்து செருக்கினை விளைப்பதான மலத்தை வலி வாட்டும் என்னும் கருத்தது. அன்றிச் செருக்க - திகட்ட எனலுமாம்.
சரியையாதிகளினின்று குழையக் கிடைத்த உடல் மயக்கத் தைச் சேரும் எனல் எவ்வாறு என்பதாம்.
----------------
மலம்பரி பாக முளதாஞ் சரிதையு மற்றது போல்
செலும்பரி பாகங் கிரியையும் யோகமுந் தீமையறச்
செலும்பரி பாகமெய்ஞ் ஞானமு மிவ்வண்ணஞ் சேருமென்றால்
புலுங்கர ணங்க ளடக்குவ தென்றில்லைப் புண்ணியனே. 8
இப்பாடல், பொறிபுலன்களை அடக்குவதால் மட்டும் பயனில்லை என்கின்றது.
இ - ள் : தில்லைக்கண் உள்ள புண்ணியமே வடிவான பெருமானே! சரியையால் மலபரிபாகம் உண்டாம்; அது போலவே கிரியையாலும், யோகத்தாலும், மெய்ஞ்ஞானத் தாலும் பரிபாகம் உளவாம் என்றால், நம்மைத் தழுவியுள்ள கரணங்களை அடக்குவதால் பயன் என்னையோ? என்றவாறு.
சரியையால் விளையும் மலபரிபாகம் முறையான் கிரியை யோகங்களான் நிலைத்து மெய்ஞ்ஞானத்தை உண்டாக்கும். ஆகவே, கரணங்களை அடக்குவதால் பயனில்லை என்பதாம்.
சரியையாவது : உயிர்கள் உய்தற்பொருட்டு இறைவன் தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூவகை வடிவு கொண்டருளுவன். அவ்வடிவங்களை வழிபடும் முறைமையை வேத ஆகமங்களில் வகுப்பன். அம்முறை உணர்ந்து உயிர்கள் வழி பட்டு உய்யும் நுண்ணுணர்வு இன்மையின் சகளமாகிய தூல வடிவத்தை மாத்திரம் பொருளென்று உணர்ந்து உடற்றொண்டு களால் வழிபடுவதாம். இது சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்கு வகைப்படும். அவற்றுள் திருக்கோயில் அலகிடல், மெழுகல், நந்தவனம் அமைத்தல் முதலியன சரியையிற்சரியை. விநாயகர் முதலான பரிவாரங்களையோ மாகேசுவர வடிவங்கள் இருபத் தைந்தில் ஒன்றையோ பூசிப்பது சரியையிற்கிரியை. சீகண்ட ருத்திரரை நெஞ்சில் இருத்தித் தியானம் செய்தல் சரியையில் யோகம். தியானபாவனையின் உறைப்பால் அனுபவ உணர்வு நிகழ்வது சரியையில் ஞானம்.
கிரியையாவது : சரியையில் பழகிவரவர அதனால் நிகழும் பக்குவ விசேடத்தால் நுண்ணுணர்வு பெற்று அருவுருவத் திருமேனியே பொருளெனக் கண்டு, அதனை வழிபடுதற்கு இடம் உருவத் திருமேனி என்று உணர்ந்து பூசை வணக்கம் முதலிய புறத்தொழிலாலும், தியானம் பாவனை முதலிய அகத் தொழிலாலும் விதிப்படி வழிபடுவதாம். அதுவும் சிவபூசைக் குத் தேவையான சாதனங்களைச் செய்து கொள்ளும் கிரியையிற் சரியையும், சிவாகம விதிப்படி ஐவகைச் சுத்தியும் அமைத்துச் சிவலிங்கத்திற்குச் செய்யும் பூசையாகிய கிரியையிற்கிரியையும், மனத்துள் பூசை ஓமம் தியானம் மூன்றற்கும் மூன்று இடம் வகுத்துக்கொண்டு செய்யப்படும் அந்தரியாகமாகிற கிரியை யில் யோகமும், அந்தரியாக உறைப்பின்கண் நிகழும் அனுபவ உணர்வாகிய கிரியையில் ஞானமும் என நால்வகைப்படும்.
யோகமாவது : கிரியையில் இடைவிடாமல் பயின்றுவர அதனால் நிகழும் பக்குவ விசேடத்தால் அதிநுட்பவுணர்வு பெற்று, அருவமாகிய சிவமே பொருள் உருவமும் அருவுருவ மும் அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனி என்று அறிந்து அகத்தொழில் ஒன்றாலேயே வழிபடுவது. இதுவும் இயமம் நியமம் ஆதனம் பிராணாயாமம் என்னும் நான்காகிய யோகத் தில் சரியையும், பிரத்தியாகாரமும் தாரணையும் ஆகிய யோகத் தில் கிரியையும், தியானமாகிய யோகத்தில் யோகமும், சமாதி யாகிய யோகத்தில் ஞானமும் என நான்காகும். இந்நான்கும் உருவம் அருவுருவம் இவைகளைப்பற்றிச் செய்யும் ஆதார யோகமும், அருவத்தையே பற்றி நின்று செய்யும் நிராதார யோகமும் என இருவகைப்படும்.
ஞானமாவது யோகத்தில் பல நாள் பயின்று வந்த பக்குவ முதிர்வால் உண்மைஞானம் பெற்று, சச்சிதானந்தப்பிழம்பே சொரூபம், உரு அரு அருவுரு முதலிய மூன்றும் அதனை உணர் தற்கும் வழிபடுதற்கும் இறைவன் மேற்கொண்ட திருமேனி என்று உணர்ந்து ; காயத்தொழிலும், மனத்தொழிலும் கழன்று; கேட்டல் முதலிய அருவத்தொழில் மாத்திரத்தால் வழிபடுவது. இதுவும் கேட்டலாகிய ஞானத்திற் சரியையும், சிந்தித்தலாகிய ஞானத்திற் கிரியையும், தெளிதலாகிய ஞானத்தில் யோகமும், நிட்டை கூடலாகிய ஞானத்தில் ஞானமும் என நான்காம்.
புல்லுங்கரணம் என்பது புலுங்கரணம் என்றாயிற்று.
இச்சரியையாதி நான்கும் உபாயமும் உண்மையும் என இருவகைப்படும். இவற்றையே அவச்சரியை என்றும் தவச் சரியை என்றும் இந்த நூல் கூறுகிறது. இவற்றால் எய்தும் பயன் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் பத முத்திகளாம். இவைகள் இடையிட்ட பயனே. உண்மைப்பயன் ஞானம் ஒன்றே .
-----------
ஒருக்குமை யற்சிறி தேயுறும் போதத்தி லுற்ற தன்பால்
தரிக்குஞ் சிறிதன்பு மற்றந்தப் பாதத்துந் தங்கியன்பு
பெருக்குமெய்ஞ் ஞானத் தவவாற்றிற் சீவனும் பேரன்பென்றால்
தருக்குங் கரண மயலே துரை தில்லைச் சங்கரனே. 9
இப்பாடல் . மடைமாறிப் பாய்ச்சுவதுபோலக் கரணங்களைச் சரியையாதிகளால் சிவகரணமாக்கின் அதனால் மயலில்லை என் கின்றது.
இ-ள் : தில்லைச் சங்கரனே! சரியையினால், மயக்கம் நீங்க ஞானம் சிறிதுண்டாம்; அங்ஙனம் ஞானம் பெற்ற தன் னிடம் சிறிது அன்பு நிலைபெறும்; அங்ஙனம் அன்பு நிலை பெறச் செய்வதான கிரியாபாதத்தில் நிலைத்து, யோக வாயி லாக மெய்ஞ்ஞானத்தைச் செய்யின் உயிரும் பேரன்பைப் பெருமானிடம் பெருக்கும் என்றால் தருக்கிய கரணங்கள் மயக்கம் விளைப்பது எங்கே? சொல்லுவாயாக என்றவாறு.
சீவகரணங்கள் சரியையாதிகளால் சிவகரணம் ஆதலினால் அவை மயல் தரும் என்பது யாங்ஙனம் பொருந்தும் என்பதாம். இது பொறியடக்கமே நிட்டை என்பாரை மறுத்துச் சிவகரண மாக்கிச் சிவத்தோடொன்றி அன்புமயமாயிருத்தலே உண்மை நிட்டை என உரைக்கின்றது.
ஒருக்கும் மையல் - சுருக்கிய மயக்கம். அஞ்ஞானத்து அழுந்திக் கிடந்த உயிர் சரியைத் தொண்டுகளைச் செய்யத் தொடங்கியதும் சிறிது சிறிதாக மயக்கம் ஒருக்கப்படுதலின் உடம்பொடு புணர்த்தி 'ஒருக்கும் மையல்' எனப்பட்டது. ஆகவே, பரந்து ஆன்மாவைத் தன்னகப்படுத்தி நிற்கும் மையல் சரியையால் சுருங்கியதாம் என்பது கருத்து.
போதம் - மயக்கம் சுருங்கிய போது வெளிப்படும் ஞானம். தன்பால் - ஆன்மாவினிடம்.
இந்த அடிக்கு ஒருக்கும் மையல் சிறிதே அறும் பாகத் தில் தரிக்கும் சிறிதன்பு' என்ற பாடங்கொள்ளின் மயக்கம் சிறிது சுருங்க அது அற்ற பாகத்தில் திருவடிக்கு அன்பு சிறிது தரிக்கும் எனப் பொருள் கோடலுமாம்.
தவ ஆற்றில் - தவ நெறியில். சீவனும் அன்பு பெருக்கும் மெய்ஞ்ஞானத்தவ ஆற்றில் தங்கி, பேரன்பு பெருக்கும் என்றால் எனக் கூட்டிப் பொருள் காண்க.
--------------
அவமே சரிதை புரியிலஞ் ஞான மவனியறத்
தவமே சரிதை புரியின் மெய்ஞ் ஞானமித் தன்மையறச்
சிவமே யுறுஞ்செய லெல்லா மறவெனச் செப்புமையன்
நவமே துரைதில்லை யம்பல வாதில்லை நாயகமே. 10
இப்பாடல். ஞான சரியையில் நின்றோர்க்கு மெய்ஞ்ஞானமே விளையும் சிவப்பேறுண்டாம் என்பது சிவனுபதேசம் ஆகையால், உயிர்க்கு அறியாமையால் விளையும் குற்றமில்லை என்கின்றது.
இ - ள் : தில்லையம்பலவா! தில்லைநாயகமே! அவச்சரியை புரியின் அஞ்ஞானம் விளையும். தவச்சரியை புரியின் மெய்ஞ் ஞானம் விளையும். இத்தன்மைகள் நீங்க, சிவம் விளங்கித் தோன்றும் ஆதலால் செயல்களனைத்தையும் மறந்துவிடு என எம் தலைவனாகிய குருநாதன் கூறும். அங்ஙனம் ஆக எமக்குக் குற்றம் ஏது? நீயே சொல் என்றவாறு.
நாம் சரியை புரிகின்றோம் என்ற தன்மையும் அறச் சிவம் பிரகாசிக்கும். ஆதலால், தன் செயல் அற்றுத் தாமற்றிருத்தலே கடன் எனத் தலைவன் கூறுவன். ஆகவே, குற்றம் இல்லை என்பது கருத்து.
சரியை - மெய்த்தொண்டு. அது தன் இந்திரிய நிறைவிற் காகவும் பசுக்களுக்காகவும் செய்யப்படுமாயின், அவச்சரியை யாம். அதன் விளைவும் மேன்மேலும் கீழ்ப்படுத்துவதாகிய அவஞானமாகிய அஞ்ஞானமாம் என்பது.
அத்தொண்டையே சிவனுக்குச் செய்யின் தவச்சரியையாம். இதன் பயன் மெய்ஞ்ஞானமாம்.
இத்தன்மை அற - இங்ஙனம் நாம் சரியை செய்கின்றோம் என்ற தன்முனைப்பும் நீங்க. ஆன்மாவினிடம் அநாதியே ஒன்றாய் நிற்கும் சிவம் மாசு கழுவிய மணியுள் ஒளி வெளிப் படுவது போல, தன்செயலற்ற தாமற்ற ஆன்மாவிடம் பிரகா சிக்கும் என்பதாம்.
நவம் - குற்றம். நவை என்பது அம்முப்பெற்று வந்தது. மையல் நவம் எனப் பிரித்து மயக்கமாகிய குற்றம் என்பாரும் உளர்.
-------------
சத்திநி பாதஞ் சதுவிதத் தாற்பொய்த் தகுமலத்தின்
பித்த தகல்வது நால்வகைத் தாம்பிரி யாதவினைக்
கொத்த தகல்வது மவ்வகைத் தாமாற் கொடுங்கரணச்
சித்த மொழிப்பதென் னம்பல வாதில்லைச் சிற்பரனே. 11
இப்பாடல், சத்திநிபாதமும். மலபரிபாகமும், வினை நீக்கமும் நால்வகையாம்போது கரணங்களையும் மனத்தையும் அடக்குதல் மட்டும் நிட்டையாகாது என்கின்றது.
இ - ள் : அம்பலவா! தில்லைநாயகமே! சத்திநிபாதங் களும், அவற்றால் பொய்த்தன்மையான மலங்களின் பித்து நீங்குவதும் நால்வகையாம். நீங்காது தொடர்ந்து வருவ தான வினைகளின் கூட்டங்கள் நீங்குவதும் அவ்வாறே நால் வகையாம். ஆகையால் கொடிய கரணங்களும் அவற்றைக் கொண்டு செலுத்தும் சித்தமும் ஒழிப்பதால் பயனென்னை? என்றவாறு.
சத்திநிபாதமும், அவற்றால் விளையும் மலநீக்கம் முதலிய வைகளும் நால்வகையாகும்போது கரணங்களையும் சித்தத்தை யும் அடக்குவதால் பயன் என்ன என்பது கருத்து.
சத்திநிபாதம், மந்ததரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என நால்வகைப்படும். அதனால் விளையும் மலபரிபாகமும் மந்ததர மலபரிபாகம், மந்தமலபரிபாகம், தீவிர மலபரிபாகம், தீவிரதர மலபரிபாகமென நான்காகும். வினைக்கூட்டங்களின் கழிவும் அங்ஙனமே நால்வகைத்தாம்.
சத்திநிபாதமாவது இதுவரை மலத்திற்குத் துணையாக நின்று நடத்திய திரோதானசத்தி சரியையாதிகளால் மலபரி பாகம் எய்தியவழி கருணையாய், பராசத்தி ரூபமேயாய் ஆன் மாக்கள் மாட்டுப் பதிவது. நிபாதம் - வீழ்ச்சி அல்லது பதிதல் ; சத்தி நிபாதம் - சத்தியின் பதிவு. இது மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்குவகைப்படும். இது உயிரை உலக வாழ்க்கைக்குப் பயந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்விக்கும். இது நான்காகவே இதனால் விளை யும் மலபரிபாகமும் நான்கு வகைப்படும். அதனால் விளையும் இருவினையொப்பும் நால்வகைப்படும். ஏனைய விளக்கங்களை மாபாடியத்தில் கண்டு கொள்க.
பற்றிய புலன்களையே பற்றி நின்று வினைகளைச் சம்பாதித்து மேன்மேலும் பிறவிக்கு ஏ துவாகச் செய்தலின் உயிருக்குத் தீமை செய்யும் பொறிகள் கொடுங்கரணம் எனப்பட்டன.
சித்தம் ஒழித்தல் ஒன்றுமே நிட்டை ஆகாது. சத்திநிபாத மும், மலபரிபாகமும், வினைக்கழிவும் ஒருங்கே அமைதல் வேண் டும் என்பது விளக்கப்பெறுகின்றது.
--------------
மரணந் தவிர்க்குஞ் சரியாதி நான்கும் வருமறிவுன்
சரணம் புகிற்றனுத் தான் புகுந் தச்செயல் சாருமென்றார்
கரண மடக்க வருமரு ளென்றுன்னிக் காத்திருக்கும்
முரணெ துரையெனக் கம்பல வாதில்லை முக்கணனே. 12
இப்பாடல், சிவனருள்சாரச் சரியையாதி நான்கும், அவற்றின் பயனாக ஞானமும் பற்றலாவதாக, அங்ஙனங்கொள்ளாது அந்தக் கரண அடக்கமே அருட்சார்புக்கு ஏதுவாகும் என்றல் பொருந் தாது என்கின்றது.
இ - ள் : அம்பலவா! தில்லை முக்கண்ணனே! தேவரீரு டைய திருவடி புகுந்து என்மனத்து இடைவிடாது பொருந்து மாயின் சரியையாதி நான்கினும் அடியேன் பொருந்துவேன்; அதனால் ஞானம் பொருந்தும் என்று என் ஆசாரியன் கூறி னார். அங்ஙனமாக, அந்தக்கரணங்களை அடக்கத் திருவருள் கிட்டும் என்று எண்ணிக் காத்துக்கிடக்கும் மாறுபாட்டால் பயன் ஏது? உரைப்பாயாக என்றவாறு.
திருவருளும், அதனால் உயிர் எய்தும் நான்கு நிலைகளுமே ஞானமெய்த வாயிலாம்; அதனால் சிவவிளக்கம் உண்டாம்; அந்தக்கரண அடக்கமே திருவருளை அடைய ஏ துவாம் எனல் வேண்டா என்பது கருத்து.
சரியையாதிகள் ஞானவாயிலாய்ப் பிறவாமையைப் பயத் தலின் பிறவாமைக்குப் பின் விளையும் மரணமும் இல்லையாம்; அதனால் மரணம் தவிர்க்கும் சரியாதி' என்றது.
இந்நான்கையும் பற்றும் ஞானமும் சிவத்திருவருளால் விளைவதேயன்றி வேறு ஏதுக்களான் விளைவன அல்ல என்பார் 'அறிவு உன் சரணம் புகில் தனுத் தான் புகுந்து அச்செயல் சாரும்' என்றார். தனு - உடல்.
கரணம் - பொறிகளும், உட்கரணங்களாகிற மனம் புத்தி சித்தம் அகங்காரங்களும் ஆம். கரண அடக்கமே நிட்டை என்பது மாறுபாடான கொள்கை ஆதலின் 'முரண்' என்றார்.
இங்ஙனம் கரண அடக்கமே நிட்டையாகாது; சிவனரு ளால் நால்வகை நிலைகளினின்று சிவஞானம் எய்துதலே உண்மை நிட்டையாம் என்று உணர்த்தியவாறு.
--------------
சரியாதி நான்குஞ் சதாசிவத் தோங்குந் தகுதியன்பு
விரிசா தகஞ்செய்ய வேண்டுந்தக் கோர்கள் வெருண்டு நிட்டை
வருசாத கர்லிங்க மாறாக நோக்கி வருவரென்னும்
ஒருசா தகமென்கொ லம்பலவா தில்லை யுத்தமனே. 13
இப்பாடல், சிவனன்பு சேர நால்வகை உபாயங்களால் சாதகஞ் செய்ய வேண்டியிருக்கச் சிவன் உருவையே தியானித்தல் மட்டும் சாதகம் ஆகாது? என்கின்றது.
இ - ள் : அம்பலவா ! தில்லையுத்தமனே! சதாசிவமூர்த் தியைப்பற்றி யோங்கும் தகுதி வாய்ந்த பேரன்பு விளையச் சரியையாதி நான்கு உபாயங்களையும் செய்யவேண்டும். அங் ஙனமாகத் தக்க பெரியோர்கள் மருண்டு, நிட்டை செய்யும் சாதகர்கள் சிவலிங்கத் திருமேனியாகிய உருவத்தை வாயி லாகக் கொண்டு அதனையே தியானித்து வருவர் என்னும் சாதகம் என்ன பயன் தருவதோ? என்றவாறு.
உருவை மனத்தில் நிறுத்தி உட்கார்ந்திருப்பது நிட்டை அன்று. நால்வகை உபாயங்களினால் சதாசிவமூர்த்தியினிடத் துப் பேரன்பை விளையச்செய்து ஞானத்தை எய்திப் பிரியாது இருப்பதே நிட்டையாம் என்பது கருத்து.
சரியையாதி நான்கும் முற்கூறப்பட்டன.
------------
துறக்கும் பொய் வஞ்சஞ் சிறிதே துறந்துன் றுணை மலர்த்தாள்
நிறைக்கும் வகைசிறி தே நிறைத் தேற நிகழ்சரிதை
பிறக்கும் பின் மற்றவை பேரன்பென் றாலுனைப் பெற்றுமந்தோ
வெறுக்கும் பசாசருக் கென்சொல்லு கேன் தில்லை வேதியனே. 14
இப்பாடல், உபாயச் சரியையாதிகளால் உண்மைச் சரியை யாதிகளும் அவற்றால் பேரன்பும் பெற்றிருந்தும் அதனை வெறுக்கும் பாஷண்டிகளுக்கு உணர்த்துமாறு ஒன்றுமில்லை எனகின்றது.
இ - ள் : தில்லை வேதியனே! விடத்தக்க அநித்தியமான உலகப்பற்றைச் சிறிது துறந்து தேவரீர் திருவடித் தாமரை களை மனத்துள் நிறைக்கும் வகை நிறைத்துப் பயில் , முறையே மிகச் சரியையாதிகள் தோன்றும். அவற்றால் பின்பு இறைவனிடம் நீங்தாத பேரன்பு பிறக்கும் என்றால் தேவரீரை அடைந்தும் வெறுக்கின்ற பசாசக்குணம் உடையவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன் என்றவாறு.
உண்மைச் சரியையாதிகளால் பேரன்பு பிறக்க, அதனால் உண்மைப் பிறவி பெற்றும் பசாசர்கள் வெறுக்கின்றார்களே அவர்களுக்கு உண்மையை உணர்த்துவது எப்படி? என்பது கருத்து.
துறக்கும் பொய் வஞ்சம் என்பதற்கு நீக்கத்தக்கனவாகிய பொய்யும் வஞ்சனையும் என்பாரும் உளர். பொய்யும் வஞ்சனை யும் நீங்குதல் மட்டும் இறைவன் திருவடிச்சார்புக்கு ஏற்றது அன்மையின் இதுபோன்ற பல குற்றங்களுக்கு இடனாகிய உலகப்பற்றைத் துறத்தல் ஒரு சேர எல்லாக் குற்றங்களையும் துறத்தலாம் ஆதலின் அநித்தியமாகிய பிரபஞ்சப்பற்றைச் சிறிதே துறந்து என்று உரை கூறினாம். வஞ்சம் என்பது பிரபஞ்சம் என்பதன் குறை.
திருவடியை நிறைக்கும் வகையாவது அப்பர் சுவாமிகள் நாயகன் சேவடி தைவரும் சிந்தையினராக இருந்ததுபோல நெஞ்சை இறைவன் திருவடி ஒன்றற்கே உரியதாக்குதல்.
ஏற - சாதகம் மிக . சரிதை : சரியை என்பதன் மரூஉ . சரிதை பிறக்கும் என்பதைச் சரியை முதலியவற்றால் பேரன்பு பிறக்கும் என உருபு விரித்துப் பொருள் கொள்க.
பசாசர் - கொண்டதை விடாத பசாசுபோலத் தாம் பிடித்த அறியாமைக் கொள்கையை விடாது நிற்பவர். தாம் கொண்ட கொள்கை விடாது நிற்கும் உலுத்தரைப் பசாசர் என்றார்.
என் சொல்லுகேன் என்றது காணாதாற்காட்ட இயலாது என்பது குறித்தவாறு.
------------
பித்தனித் தம்பிர வஞ்சமென் றோடிப் பிணியொதுக்கி
அத்தனித் தன்னென் றறிவதற் கோவென் னகத்தினுள்ளே
சத்திநி பாத முதித்ததந் தோதனுச் செய்கையற்றுச்
சித்தமும் பித்துறு தற்கோ சொல் தில்லைச் சிதம்பரனே. 15
இப்பாடல். சத்தி நிபாதம் பெற்றதன் பயன் எதற்கு என்று வினவுவதுபோல் உண்மை நிட்டையை உணர்த்துகின்றது.
இ-ள் : தில்லைச் சிதம்பரனே ! அடியேனுடைய உள் ளத்தில் சத்திநிபாதம் தோன்றியது பித்தனாகிய யான் நாள் தோறும் உலக மையலில் அகப்பட்டு உலகம் உலகம் என்று
ஓடி உயிர்ப்பிணியாகிய மல மாயைகளை ஒதுக்கி இறைவன் நித்தியன் என்று அறிவதற்கோ? அல்லது உடலின் வியாபா ரங்கள் நீங்கி மனம் பித்து உறுதற்கோ? சொல்லியருளுக
என்றவாறு.
அடியேன் சத்திநிபாதம் பெற்றது நித்தியனாகிய பரமேசு வரனை அறிந்து, சிவஞானம் பெறுதற்கே அன்றி, உடலின் வியாபாரங்களை அடக்கிப் பித்துறுதற்காக அன்று என்பது கருத்து.
இத்திருப்பாடல் உடற்றொழில் அற்றுச் சித்தம் பித்தனாய் விளங்குவதே நிட்டை என்பாரை நோக்கிப் பிரபஞ்ச மையல் அற்று, மலபரிபாகம் பெற்று, சிவத்தை அறிந்து, சிவமேயாய் இருத்தலே சத்திநிபாதத்தால் விளையும் உண்மை நிட்டையாகு மென்பதை வலியுறுத்திற்று.
பித்தன் - பித்தனாகிய யான் என்க. இது தன்னைப் பிறன் போல் கூறியது.
பிரவஞ்சம் என்று ஓடி என்றது இவ்வுலகத்தைக் கண்டு வெரீஇயவாறு. பிணி ஒதுக்கி என்றது மலபரிபாகம் எய் தியதை உணர்த்தியவாறு. அத்தன் நித்தன் என்று அறிவ தற்கோ என்றது சிவஞானம் பெற்றதை உணர்த்தியவாறு.
தனுச்செய்கை - உடலின் தொழிலாகிய ஆடுதல், பாடுதல், அசைதல், இருத்தல், எழுதல், நடத்தல், கிடத்தல் முதலாயின. மலபரிபாகத்தால் மனம் அடங்க உடல் தானே அடங்குமாத லானும் அதனால் சித்தம் சிவமாகும் ஆதலானும் அதனைச்செய் யாது உடற் சேட்டைகளை வலிந்து தடுக்கச் சித்தம் பித்தாதல் போலி நிட்டையின் பயனாம் என்பது உணர்த்தியவாறு.
----------
என்னிச்சை யுன்னோ டுறுமிச்சை யுன்னிச்சை யேமலத்தின்
தன்னிச்சை யுன்னிச்சை யென்னிச்சை யாகத் தருவதுண்டேல்
அன்னிச்சை நீயற் றருளிச்சை யாக வடையுமந்த
மன்னிச்சை யே நிட்டை யென்றான் சிவாய நம் மன்னவனே. 16
இப்பாடல், உண்மை நிட்டை இது என்கின்றது.
இ - ள் : என் இச்சை உன்னோடு என்றும் பொருந்தும் இச்சையே; அதுவும் உன் இச்சையே; என்னோடு அநாதியே பற்றியுள்ள மலத்தின் இச்சையை உன் இச்சையாகவும் என் இச்சையாகவும் தருவதுண்டேல் அது அடியேனுக்கு அனிச் சையாம் என அடியேன் விண்ணப்பிக்க, திருவைந்தெழுத் தைத் தம் சிறப்புப் பெயராகக் கொண்ட குருநாதன் ஆன்ம போதம் கெட்டுச் சிவபோதமாகப் பெறும் அந்த நிலைபேறான இச்சையே உண்மை நிட்டை என்று உபதேசித்தான் எ - று.
ஆன்மா என்றும் சுதந்திரமற்றது ஆதலின், அதன்விருப்பு யாவும் இறைவனுடைய விருப்பே. போக போக்கியங்களை விரும்பும் மலத்தின் காரியமாகிய இச்சைகள் இறைவனதும்
அவனருள் நிற்கும் ஆன்மாவினுடையதும் ஆகாது. ஆதலால், நான் என்பது அற்றுத் திருவருள் இயக்க இயங்குமதே உண்மை நிட்டை என்பது உணர்த்தியவாறு.
இச்சை - ஐம்பொறிகள் வாயிலாக மனத்திற்கு மகிழ்ச்சி ஊட்டும் பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம்.
சரியையாதிகளால் மலபரிபாகமுற்ற உயிர் இறைவனோடு உடனாயும் ஒன்றாயும் இருப்பதையே விரும்பும் ஆதலின் - என் இச்சை உன்னோடு உறும் இச்சை' என்றார்.
ஆன்மா காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல் காணக் கண்ணினைக் கண்டு காட்டும்' ஒருவன் அருளால் விரும்புவது அன்றித் தானாக இச்சைகொள்ளும் தன்மையது அன்றாகலின் அதுவும் உன் இச்சையே' என்றார் .
பெத்தகாலத்தில் ஆணவமலத்தின் காரியமாகிய அறியா மையால் விளையும் போக காமத்தை உன் இச்சையாகவும் என் இச்சையாகவும் தருவதானால் அடியேனுக்கு அது உகந்தது அன்று என்பார் 'தருவதுண்டேல் அன்னிச்சை' என்றார். அனிச்சை என்பது அன்னிச்சை என எதுகை நோக்கி விரித்தல் விகாரம் பெற்றது. அனிச்சை - வெறுக்கத்தக்கது.
நான் என்ற முனைப்பும், அதன் காரியமாகிய அறியாமை யும், வினைப்போகங்களும் உள்ளவரை திருவருளாகிய சத்தி உயிரை ஆட்கொள்ளாது. மலபரிபாகம் வந்த பின்பே சத்தி
பதிந்து நாதன்றன் செயலாக விளங்கச் செய்யுமாதலானும், அதுவே நிலைபேறுடைய விருப்பம் ஆதலானும் அதனை 'மன்னிச்சை' என்றார். சிவாய நம் மன்னவன் என்றது சீபஞ்சாக்கர தேசிகனாகிய ஞானாசாரியனை.
-----------------
நீணாட்டியானித் திடினு முடலுயிர் நீதிசற்றுங்
காணார்கண் மூடிப் பயனென்கொ லோகலை யாலருளைக்
கோணா துணர்த்துங் குருவே யறிவைக் கொடுப்பனின்பம்
நாணா திது நிட்டை யென்றான் சிவாய நமகுருவே. 17
இப்பாடல், உபாயநிட்டையாற் பயனில்லை, உண்மை நிட்டையே உயர்ந்தது என்கின்றது.
இ-ள் : நமசிவாய தேசிகர், உடல் ; உயிர்; உடலுக்கும் உயிருக்கும் உளதாகிய தொடர்பு; அதனால் உயிர் அடையும் பயன் இவற்றைச் சற்றும் அறியாதவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இருப்பதால் பயன் என்னை? தன்னுடைய கலா தத்துவத்தால் ஆன்மாவின் அறிவைச் சிறிதுவிளங்கச் செய்து உண்மையைக் கோணாமல் உணர்த்தும் குருவே உண்மை ஞானத்தை உதவுவன்; அதனால் விளையும் இன்பத்து வெட்க முறாமல் இருக்கும் இதுவே நிட்டையாம் என்று உபதேசித் தான் என்றவாறு.
கண் மூடி நீண்டநாள் தியானித்தாலும் பயனில்லை; குரு உபதேசத்தினால் சத்தி நிபாதம் பெற்றே உண்மை ஞானம் விளங்கி, பேரின்ப அனுபவநிலையில் இருத்தலே நிட்டையாம் என்பது கருத்து.
உடல், உயிர், நீதி சற்றும் காணார் . கண் மூடி நீள் நாள் தியானித்திடினும் பயன் என்கொல் எனக் கூட்டிப் பொருள் கொள்க.
காணார் என்றது தத்துவ நூல்களை ஓதியும் உணர்ந்தும் அனுபவஞானம் பெறாதாரை.
புலன்களைச் சென்று பற்றும் கண்களை மூடிக்கொண்டா லும் மனம் கண்டதே கண்டு, கருவியின்றியே பற்றும் இயல் பினதாதலின் கண்மூடிப் பயனென்' என்றார்.
கலை - ஆன்மாவின் அறிவைச் சிறிது விளக்கம் செய்யும் நிவிர்த்தியாதி பஞ்ச கலைகள். ஆன்ம அறிவு சிறிது விளக்க முற்ற பின்பே திருவருள் சேர்தலின் கலையால் அருளை உணர்த் தும்' என்றார். உபதேசகலையால் என்று உரைத்தலுமாம்.
ஆசாரியன் மாணாக்கனுக்கு உண்மை ஞானத்தை உதவும் போது, சாதகனாகிய இவன் சாதித்துப் பெருநிலை எய்துக என்று மனம் கோணாமல் உணர்த்துதல் இன்றியமையாதது ஆதலின் அருளைக் கோணாது உணர்த்தும் குருவே' எனக் கூறினார்.
ஏகாரம் : தேற்றம், அறிவைக் கொடுக்கும் தகுதிப்பாடு வேறொருவர்க்கு இன்மையின்.
உண்மை நிட்டையாவது, சிவஞானமே வடிவாய் அவன் அருளில் தோய்ந்து நிற்கும் நிலை என்பது உணர்த்தியவாறு.
-------------
உருவே தியானித் துறுவர்கண் மூடி யுறுமுடலின்
கருவே தியானித்துக் காண்பதுண் டோகலை யாலுணர்த்தும்
குருவே யறிவைத் தருவ னிமையினைக் கூடலின்றித்
தெரிவே தெரிநிட்டை யென்றான் சிவாயமெய்த் தேசிகனே. 18
இப்பாடல், இமை கொட்டாமல் விழித்த நிலையில் ஞானத்தாற் காண்டலே நிட்டை என்கின்றது.
இ - ள் : நமசிவாய தேசிகமூர்த்திகள், அப்பா! உரு வத்தை மனத்தில் தியானித்துக் கண்மூடி இருப்பவர்கள் கிடைத்த இவ்வுடற்கு முதற்காரணமாகிய மாயை மலம் முதலியவற்றைத் தியானித்துக்காண்பார்களோ? ஆகையால், தம் கலையால் இது உயிர் , இது உடல், இவை உயிராகிய நீ உடலோடு கூடுதற்குரிய கரணங்கள் என உபதேசத்தால் உணர்த்தும் குருநாதனே உண்மை ஞானத்தை உதவுவன்; அப்போது இமை கொட்டாமல், விழித்தபடியிருந்து அறிவதே
ஞான நிட்டையாம் என்று உபதேசித்தனர் என்றவாறு.
விழித்த கண் விழித்தபடி இருக்க, குருநாதன் உபதேசித்த உண்மைஞானத்தால் உள்ளதை உள்ளவாறே உணர்ந்து, மனம் ஒன்றியிருப்பதே ஞான நிட்டையாமென்று ஸ்ரீ நமசிவாய
மூர்த்திகள் உபதேசித்தார் என்பது கருத்து.
தம்மால் காணப்பட்டதொரு சகளத் திருமேனியைத் தியா னித்துக்கொண்டு கண்மூடி இருத்தல் உண்மைஞானத்தை உதவாமையின் அது நிட்டையன்று என்றவாறாம்.
உடலின் கரு - இவ்வுடலின் மூலப்பொருளாகிய மாயை முதலியன. இவ்வுடலைத் தந்த மூலப்பொருள் எனக் கொண்டு சிவம் எனலுமாம்.
கலை - முற்கூறிய பஞ்ச கலைகள். தெரிவு - ஞானத்தால் காண்டல் . தெரிநிட்டை - ஞான நிட்டை.
-----------
ஓவிய மேதனு வுற்றோ ருயிர்க்கு முவமையின்றால்
பாவிய மேதனு வாமான் மெய்ஞ் ஞானம் பகர்ந்த நன்னூல்
ஆவியை மிக்க சிவத்தோ டழுத்துமவ் வாற துறத்
தாவிய தேநிட்டை யென்றான் சிவாயமெய்ச் சற்குருவே. 19
இப்பாடல், சிவத்தோடு உயிரை ஒன்றுவித்தலே நிட்டை என்கின்றது.
இ - ள் : சித்திரம் போல உடலசையாதிருப்போர் உயி ருக்கு ஓருவமையுமின்றாம்; அவர்களால் பாவிக்கப்படுவதே உடலாம்; ஆதலால், உண்மைஞானத்தை உணர்த்தும் சிவா கமநூல் சொல்லியபடி உயிரை , உயர்ந்த சிவபரம்பொரு ளோடு அழுந்தியிருக்கச்செய்வதே நிட்டையாம் என்றான் ஸ்ரீ பஞ்சாக்கரதேசிகமூர்த்திகள் என்றவாறு.
உடல் அசையாமல் , எழுதிய சித்திரம் போல இருப்பது நிட்டை அன்று. உடல் சித்திரமாயின், அதன் உள்ளிருக்கும் உயிர்க்கு உவமை என்ன? ஏதோ ஒன்றைப் பாவிக்கிறார்களே அதுவே உடலாம். ஆகவே, ஞான நூல்கள் உணர்த்திய வண்ணம் உயிர் சிவத்தோடு அழுந்தத் தாவிப் படர்வதே உண்மை நிட்டை என்று உணர்க என்பது கருத்து. மூச்சையும் அடக்கி, எழுதிய சித்திரம் போல அசையாதிருப்பதே நிட்டை என்று இருப்பாரை எள்ளி உண்மை உணர்த்தியவாறு.
பாவியம் - பாவிகம் என்பதன் திரிபு.
மிக்க சிவத்தோடு ஆவியை அழுத்தும் அவ் ஆறு அது உறத் தாவியதே நிட்டை எனப் பிரித்தும் கூட்டியும், பரசிவத் தோடு உயிரை அழுந்தச் செய்யும் அந்த நெறி பொருந்தத் தாவச் செய்வதே நிட்டை எனப் பதப்பொருள் கொள்க.
------------
பிறிவே பிறித்துப் பிறியா வறிவெனும் பெற்றிதந்த
செறிவேகண் மூடித் தியானித்த லோசொல்லு சேர்ந்த நன்னூல்
அறிவே யறிவை யறிவித்து நற்சிவ மாக்குமின்ப
நிறைவே தகுநிட்டை யென்றான் சிவாய நெடுந்தகையே. 20
இப்பாடல் , மெய்ஞ்ஞானாகமங்களை உணர்த்திச் சிவமாக்கும் இன்ப நிறைவே நிட்டை என்கின்றது.
இ - ள் : பிறியத்தக்கனவாகிய மல மாயா கன்மங்களைப் பிரித்து, நீங்காத அறிவே நீ என்னும் உண்மையை உதவிய பூரணம் கண் மூடித் தியானித்தால் மட்டும் வருமோ? சொல்; ஆதலால் உபதேசபரம்பரையான் வந்த சிவாகமக் கேள்வி யான்விளைந்த ஞானமே சிவஞானத்தை உணர்த்தி ஆன்மா வைச் சிவமாகச் செய்யும்; அத்தகைய இன்ப பரிபூரணமே ஞான நிட்டை யென்று உணர்த்தியருளினான் ஸ்ரீ நமசிவாய குருமூர்த்திகள் என்றவாறு.
சிவாகமக் கேள்வியான் விளைந்த உண்மைஞானத்தால் உண்டான சிவஞானத்து அழுந்திச் சிவத்தை அறிதலே ஞான நிட்டை என்பது கருத்து.
பிறிவு - பிறியத் தக்கனவாகிய மலங்களும், மல காரியங் களும். இவை ஆகந்துகமாதலின் பிறிவாயின. சகசம் ஒன்றும் வலி குன்றி அபகாரம் செய்யாது நிற்கும் என்பது. பிறியா அறிவு - என்றும் நீங்காத உயிரின் குணமாகிய ஞானம். செறிவு - நிறைவாகிய பூரணம். செறிவு கண்மூடித்தியானித்த லன்று; கண்களை மூடாமல் காணத்தக்க ஞானத்தைக்கண்டு சிவத்தோடு ஒன்றுதலே நிட்டை என்பதாம்
--------------
உறவே யறிவறி வேயுடம் பாகு முடம்புஞ்சுட்டி
அறவே யுயிரினு மாவியு மாமரு ளோடுறையும்
நிறைவே தியானித்து நிற்பது வோசொல்லு நீயிதனை
மறவே லது நிட்டை யென்றான் சிவாய நம் மன்னவனே. 21
இப்பாடல். அருளும் தானுமாய் ஒன்றி நிற்பதுவே நிட்டை என்பது உணர்த்துகின்றது.
இ - ள் : நமசிவாய குருநாதன், ஞானம் பொருந்த அந்த ஞானமே உயிருக்கு உடம்பாக நிற்கும்; அவ்வுடம்பும் சுட்டியறியப்பட்டு நீங்கின் உயிர் என்று சொல்லப்படும் ஆன்மாவாம். அவ்வுயிர் திருவருளோடு தங்கும் பூரணமாம். அதனைத் தியானித்து நிற்பதுவே நிட்டையாம். இதனை நீ மறக்காதே என்று உபதேசித்தான் என்றவாறு.
ஆவி அறிவே வடிவாய் அறிகின்றேன் என்ற முனைப்பும் அற்று அருளோடு பொருந்தியிருக்கின்ற பூரணத்தைத் தியா னிப்பதே நிட்டை ; இதனை மறக்காதே என்று எனது குரு நாதன் உபதேசித்தான் என்பது கருத்து.
அறிவு உறவே அறிவே உடம்பாகும் எனக் கூட்டி, உயிரி னுடைய பாச பசு ஞானம் அகல, பதியை உணரும் ஞானம் பொருந்த, அதனையே தாரகமாகக் கொண்டு உயிர் நிற்றலின் இங்ஙனம் கூறப்பட்டது. அப்போது நான் அறிகின்றேன் என்ற சுட்டுணர்வு இருக்குமாதலின் அதுவும் அகல, உயிர் தனியே நிற்கும். அதற்குத் துணை அருள் ஒன்றுமே . அருளில் வியாப்பியமாய் உடலுள் உயிர்போல அருளில் ஆன்மா நிறைந்து நிற்கும். அதனைத் தியானித்து நிற்பதுவே நிட்டை எனச் சொல்லு ; இதனை மறவாதே என்று ஆணை தந்தான் ஆசாரியன் என்பது உணர்த்தப்பெறுகின்றது.
------------
முகத்தே யிருகண் மறைக்கமெய்ஞ் ஞான முளைக்குங்கண்கள்
பகுத்தே நடக்க வருள் பாயு மென்பது பாவமெய்ந்நூல்
செகத்தே பிறித்தங் கறிவறி வாக்கிச் சிவத்தை நல்கும்
அகத்தே விடு நிட்டை யென்றான் சிவாய வருட்குருவே. 22
இப்பாடல், கண் மூடியிருப்பது நிட்டையாகாது : ஞானத்தால் சிவத்தை அகத்தே நாடுதலே நிட்டை என்கின்றது.
இ - ள் : நமசிவாய அருட்குருநாதன், முகத்திலுள்ள இருகண்களையும் மறைக்க உண்மைஞானம் தோன்றும்; கண் களைப் பிரித்துப் புறத்தே செல்லவிடாது அகத்தே நடக்கச் செய்தல் ஒன்றாலாயே அருள் மனத்தே பாயும் என்பது பாவ மாம். உலகப்பற்றிலிருந்து அறிவு வடிவாகிய ஆன்மாவைப் பிரித்து ஞானமேயாக்கிச் சிவத்துவவிளக்கம் பெறும் உள் நெறியிலே விடுவதே ஞான சாத்திரங்கள் கூறும் நிட்டை யாம் என்று உபதேசித்தான் என்றவாறு.
முகத்திலுள்ள கண்களை மூடினால் ஞானம் தோன்றும். கண்களைப் பாகுபடுத்தி நடக்கத் திருவருள் தோன்றுமென்பது பாவம். உயிரை ஞான சொரூபமாக ஆக்கி, அகமார்க்கத்தில் செலுத்துவதே மெய்ந்நூல் கூறும் நிட்டை என்பது ஆசாரியன் உபதேசம் என்பது கருத்து.
முளைக்கும், அருள் பாயும் என்பன முளைக்காது, பாயாது என்ற பொருளைத் தந்து இகழ்ச்சி தோன்ற நின்றன. அறிவு செகத்தே பிரித்து அறிவு ஆக்கி - ஞான சொரூபியான ஆன் மாவை உலகப்பற்றிலிருந்து பிரித்து ஒன்றனையும் பற்றாது ஞானமேயாகச் செய்து என்க.
சிவத்தை நல்கும் அகத்தே விடு - சிவத்தை விளங்கச் செய்யும் அகமார்க்கத்தில் செலுத்து. அதுவே நிட்டை என்றா னென்க. தானே பிரகாசிக்கும் சிவத்தை நல்கும் அகமென்பது உபசாரம். மெய்ந்நூல் - ஞானசாத்திரங்கள்.
------------
பொன்னேர் கணினிறம் பூணும் பொறியொன்று பூண்டுசுவை
தன்னே ரறிவொன்று தானொன் றுவமை தகாசிவத்தின்
அன்னே ரறியு மறிவொன்று தம்மு ணயப்பு மொன்றாய்ச்
சொன்னே ரிடனிட்டை யென்றான் சிவாயமெய்த் தூயவனே. 23
இப்பாடல், பொறியும் அறிவும் தானும் ஞானமும் விருப்பும் ஒன்றாய்க்கூடுமிடமே நிட்டை என்று உணர்த்துகின்றது.
இ-ள் : ஸ்ரீ நமசிவாயதேசிகமூர்த்திகளாகிய தூயவன், பொன்னை நேராகக்கண்ட கண்போலச் சார்ந்ததன் வண்ணத் தைப் பூணுகின்ற பொறியின் அங்ஙனம் பூண்டு புலன்களின் சுவையை அறிகின்ற அறிவும், ஆன்மாவாகிய தானும் உவமை கூறமுடியாத சிவத்தினை நேர்ந்து நன்றாக அறியும் சிவஞானமும் தமக்குள் விளைவதாகிய விருப்பமும் அபேத மாய் ஒன்றுபட்டு நேரும் இடமே நிட்டையாம்; இதனை நீயும் சொல் என்றான் என்றவாறு.
பொறியும், புலனும், அறிவும், உயிரும், சிவஞானமும், விருப்பமும் ஒன்றாய் விளங்கும் இடமே நிட்டை என்பது கருத்து.
சிவாய மெய்த்தூயவன் - பஞ்சாக்கரதேசிகராகிய உண்மை ஞானி .
பொன் நேர் கண்ணின் நிறம் பூணும் பொறி - பொன்னை நேர்ந்த கண்ணைப்போலச் சார்ந்ததன் வண்ணத்தைத் தாங்கு கின்ற பொறி. கண் பொன்னைச் சார்ந்து பொன் நிறமாவது போலக் காது, மூக்கு, நாக்கு, உடல்களும் அவ்வவற்றுக்குரிய புலன்களைச் சார்ந்து அவையவையா- யிருக்குமாதலின் இங்ங் னம் கூறினார். கனி நிறம்' எனவும் பாடம்.
ஒன்று என்பன அனைத்தும் எண்ணுதற்பொருளில் வந்தன.
பூண்டு சுவை நேர் தன் அறிவு ஒன்று - பொறிகள் புலன் களைப் பூண்டு, அவற்றின் சுவைக்கண் எதிர்ப்படுகின்ற ஆன்ம அறிவு என்பதாம். அஃதாவது, சர்க்கரை தின்ற நாக்கு அச் சுவையில் ஈடுபட்டுத் தித்திப்பு ஒன்றையே அறிதல் மாத்திர மாய் நிற்பது போல, பொறிகள் அனைத்தும் நுகர்ந்து அதன் மயமாய் இருத்தல்.
தான் ஒன்று - பொறிகளாகிய அறிகருவியைக் கொண்டு புலன்களை நுகர்ந்து, சுவையை அறியும் ஆன்மாவாகிய தான் என்பது. பொறிகள் புலன்களை நுகர்ந்து, சுவை மயமாதல் அறிவானாகிய தானின்றி இன்மையின் 'தானொன்று' எனப் பட்டது.
உவமை தகா சிவம் - சுட்டி அறியப்படும் பொருள்கள் எதனையும் உவமை கூறத் தகாத அளவு உயர்வற உயர்ந்திருக் கின்ற சிவம். சிவத்தின் நேர் அறியும் அறிவு - சிவத்தை உள்ள வாறு உணரும் பரஞானம்.
தம்முள் நயப்பு - உயிர் பொறி புலன்களை நீங்கிப் பர ஞானத்தால் பரத்தைப் பார்க்க வேண்டும் என்கின்ற உயிருள் எழுவதாகிய விருப்பு.
ஒன்றாய் நேர் இடன் நிட்டை சொல் என்றான் எனக் கூட்டுக. இவ்வண்ணம் பொறி முதலாகத் தோன்றும் பேத ஞானமற்று அந்நியமாய் நிற்கும் இடமே நிட்டை என்று உபதேசித்தான் என்பது.
-----------
அறிவே யறியிலறிவனு போக மறிவுளருள்
உறவே யறியி லுறவனு போக முயர்சிவத்தின்
நிறைவே யறியி னிறையனு போக நிலைமையொன்றாய்ச்
செறிவே யிதுநிட்டை யென்றான் சிவாயமெய்த் தேசிகனே. . 24
இப்பாடல் , அனுபோக வகைகளும் உண்மை நிட்டை அனு போகமும் இவை என்கின்றது.
இ - ள் : உயிர் அறிவையே அறிவால் அறிவது அறிவு அனுபோக அறிவாம். அறிவுள் அருள் கலந்திருத்தலை அறி வது உறவு அனுபோகமாம். எல்லாப் பொருளிலும் உயர்ந் திருக்கின்ற சிவத்தின் நிறைவை அறிவது இறை அனுபோக மாம். இந்நிலைமைகள் அனைத்திலும் ஒன்றாய் வேறற்றுச் செறிவதுவே நிட்டை என்று உபதேசித்தான் என்றவாறு.
அறிவு அனுபோகத்திற்கும், உறவு அனுபோகத்திற்கும், இறை அனுபோகத்திற்கும் அப்பாற்பட்டு எல்லாம் ஒன்றாக இருப்பதுவே நிட்டை என்பது கருத்து.
அறிவு அனுபோகமாவது, அறிவு வடிவாகிய தன்னைச் சடமாகிய தனு கரண புவனங்களிலிருந்து வேறாகவும் அறிவே வடிவாகவும் அறிவதாம்.
உறவு அனுபோகமாவது திருவருளுக்கும் ஆன்மாவுக்கு முள்ள அருளுறவை அறிவதாம்.
இறை அனுபோகமாவது, பேதஞானமகன்று காண்பா னும், காட்சியும், காணப்படு பொருளும் அற்று அறிவினுக்கு அறிவாய்ச் செறிவு ஒழியாது நிற்பதை அறிவதாம். இதுவே உண்மை நிட்டை என்பது ஆசான் உபதேசம் என்பதாம்.
-----------
சொலவே யறிவு விளங்குமெஞ் ஞான்றுஞ் சொலவுசொல்லிற்
றிலவே பகுத்தறி வின்றா யிருந்த படியிருக்கும்
வலபே ருரையை மருவமெய்ஞ் ஞான மருவுந்துன்பம்
அலவே யிது நிட்டை யென்றான் சிவாய வருட்குருவே. 25
இப்பாடல் , குரு உபதேசவாயிலானன்றி உண்மை நிட்டை கைகூடாது என்கின்றது.
இ - ள் : நமசிவாய அருட்குரு நாதன் உபதேசிக்கவே எப்பொழுதும் அறிவு விளங்கும். உபதேசச் சொற்களால் உணர்த்தாவிடில் பகுத்தறிவு இல்லையாய் கல்போலப் புடை பெயர்ச்சியும் பரிணாமமும் இன்றி இருந்தபடி இருக்கும். அறி யாமையை அகற்றவல்ல மகாவாக்கியத்தை நாம் பொருந்தி யிருக்க உண்மைஞானமாகிய பரஞானம் வந்து பொருந்தும். இங்ஙனம் இருத்தல் துன்பமற்ற செய்கையாம். இங்ஙனம் இருத்தலாகிய இதுவே நிட்டையாம் என்று உபதேசித்தான் என்றவாறு.
சொலவு சொல்லிற்றிலவேல் பகுத்தறிவு இன்றாய் இருந்த படி இருக்கும் என்றது பரமாசாரியன் சொல்ல வேண்டிய உபதேசமொழிகளைச் சொல்லாது ஒழிவானாயின் புண்ணியம் பாவம் என்ற பகுத்தறிவின்றி உபலம் போல உயிர் இருந்த படியே இருக்கும்.
பேருரை - மகா வாக்கியம். அது தத்துவமசி என்பது. தத்துவமசி என்ற மகாவாக்கியத்தை மனத்தில் மனிதன் மருவ விடுவானாயின் சிவஞானம் தானே சேரும். அதுவே நிட்டை என்பது உணர்த்தியவாறு.
-------------
ஆவியைக் காயத் தடக்கியஞ் ஞானத் தழுத்திமல
மேவிய தாலதை மாற்றிமெய்ஞ் ஞான மருவவங்கம்
ஓவியன் கைவழி யோவியம் போலவொன் றாகியுற்றுத்
தாவிய தேநிட்டையென்றான் சிவாயமெய்ச் சற்குருவே. . 26
இப்பாடல், ஓவியன் கைவழி ஓவியம் போல ஒன்றுபட்டதே நிட்டை என்கின்றது.
இ - ள் : உயிரை இவ்வுடம்பினுள் சிறைப்படுத்தி, அறி யாமைச் சேற்றில் அழுத்தி ஆணவமலம் முழுதும் மறைத் திருப்பதால் அவ்வுயிரை அந்நிலையினின்று மாற்றி உண்மை ஞானம் பொருந்துவதற்காக உடலை ஓவியன்கையோவியம் போல ஒன்றுபட்டுத் தாவியதே நிட்டை என்று காட்டினான் ஸ்ரீ பஞ்சாக்கரதேசிகன் என்றவாறு.
உயிர் இவ்வுடம்பில் அறியாமையோடு ஆணவத்தழுந்திக் கிடப்பதால், அதனைப் பிரித்து, ஓவியம் எழுதுபவன் கையும் ஓவியமும் பிரிப்பின்றி இயங்குவது போலத் தியானிப்பவனும் திருவருளும் பிரிப்பின்றி இயங்கப் பற்றிக் கிடப்பதே நிட்டை என்பது கருத்து.
மலம் அடக்கிய முத்தி மேவியதால் அதை மாற்றி ஞானம் மருவ, அங்கம் ஓவியம் போல ஒன்றாகி உற்றுத் தாவியதே நிட்டை என்றான் எனக் கூட்டுக.
மலம் சடமாயினும் அநாதியே உயிரோடு ஒட்டியிருத்தலின் அதனால் அஞ்ஞானம் விளைதலின், மலத்தை வினைமுதலாக்கி, அதன் வினையாகக் கூறினார்கள். ஆயினும், மலம் மேவி மூடி யிருப்பதை மாற்றிச் சிவம் உயிரைக் காயச்சிறையில் அடக்கி, வினைகளை அழுந்தி அனுபவிப்பதற்காக அஞ்ஞானத்தழுத்திய தாகவும், அதனை அவனருளே துணை செய்ய மாற்றி மெய்ஞ் ஞானமருவ ஒன்றாகி உறுவதே நிட்டை என்று உணர்த்திய தாகவும் கொள்க.
ஓவியன் கை ஓவியம் போல - எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல ஓவியமும் ஓவியனும் ஒன்றாகி இருப்பது போலச் சிவமும் உயிரும் ஒன்றாகியுற்றுத் தாவியதே நிட்டை என்பதாம்.
--------------
நூற்சிறப்பு
நிட்டை விளக்கம் நிகழிருபா னெட்டையு நஞ்
சட்ட மறுப்பதற்காய்ச் சாற்றினான் - சிட்டன்
திருவா வடு துறையான் சென்றடைந்தார்க் கெல்லாம்
அருளாகு மம்பலவாணன்.
இ - ள் : சிட்டனும், திருவாவடுதுறைக்கண் வீற்றிருப்ப பவனும், வந்தடைந்த பக்குவிகள் அனைவருக்கும் அருளே வடிவானவனுமான அம்பலவாண தேசிகன் நிட்டைவிளக்க நூல் இருபத்தெட்டுப் பாடல்களையும் நம் உடற்பற்றை ஒழிப்பதற்காக உரைத்தருளினான் என்றவாறு.
சட்டம் - உடல் ; ஆகுபெயராக உடற்பற்றை உணர்த் திற்று. சிட்டன் : சிஷ்டன் என்பதன் தமிழாக்கம். விதித்தபடி ஒழுகுபவன் என்பது பொருள்.
நிட்டை விளக்கம் முற்றிற்று
-------------------
திருச்சிற்றம்பலம்.
செய்யுள் முதற்குறிப்பகராதி உபாய நிட்டை வெண்பா
[வெண்பா எண்]
அகமேல் தனுவோடு 26
அகமோ புறமோ 25
அங்கத்தார்க் காகும் 42
அங்கத்தை நோக்கி 2
அத்துவா ஆறின் 33
அறியு மறிவே 20
அளந்துடலை நோக்கி 19
அறிவால் பலகாலும் . 22
அறிவாற் பிறியுமறி 7
ஆகந் திரியாமெய் 36
ஆகமற்ற தாலடைவ 40
ஆவி தனுவையடை 37
ஆவியென வேறோ 16
ஆவி தியானத்தடங் 41
உபாயநிட்டை 47
உயிரு முடலுமொரு 6
உறையுந் தனுவில் 14
ஊனாய்த் திரிந்தங் 35
ஊனு முயிருமொரு 5
எங்கு மிருக்குமிசை 28
ஒன்றித் தனுவையுறு 17
ஓட்டி யறிவையுறு 12
கண்ணென்றும் 3
கண்ணே யொரு 4
கருமி தியானங்கரு 43
கருவி யனைத்தினையு 10
கற்றுடலற் றேயுயிரை
காயமுயி ரென்ன 34
சாக்கிரத்தோ டஞ்ச 31
சீவிக்குங் காயம் சிவ 46
சீவிக்குங் காயம் செட 15
சேமப் படுத்தி மலஞ் 23
சோதித்த காயத் 18
தன்னைத்தா னென்னா 24
தன்னைத்தா னென்னான் 8
தொந்தித்த காயம் 1
நாட்டமற்றா னாங்கவ 44
நாட்ட மிருவருக்கு 45
புலமனைத்து நின்று 11
பூணுந் தனுவே 38
பெத்தருக்கே காயம் 32
பேதித்துக் காயத்தை 29
பொறியனைத்து மொன் 30
மருவுந் தனுவதனை 9
மலமடைய மாயா 39
மனவாக்குக் காயத் 13
யானென்ற காயம் 27
வாக்கு மனக் காயம் 21
-----------------
செய்யுள் முதற்குறிப்பகராதி -
நிட்டைவிளக்கம் [ வெண்பா எண்]
அரனே ருறினுட 3
அவமே சரிதை 10
அறிவே யறியி 24
ஆட்டி மவுலியை 1
ஆவியைக் காயத் 26
உருவே தியானித் 18
உறவே யறிவறி 21
என்னிச்சை யுன்னோ 16
ஒருக்குமை யற்சிறி 9
ஓங்கிய நெஞ்சத் 2
ஓவிய மேதனு 19
சத்திநி பாதஞ் 11
சரியாதி நான்குஞ் 13
சொலவே யறிவு 25
திருக்குச் சிறிது. 7
துறக்கும் பொய் வஞ்ச 14
தெரிசித்த லர்ச்சித்த 5
நிட்டை விளக்கம் 27
நீணாட் டியானித் 17
நெஞ்சே உனை
பித்தனித் தம்பிர 15
பிறிவே பிறித்துப் 20
பொன்னேர் கணி 25
மரணந் தவிர்க்கு 12
மலம்பரி பாக 8
மாயஞ் சிறிது 6
முகத்தே யிருகண் 22
வருத்துந் தனுவினை 4
-----------------
This file was last updated on 22 June 2021.
Feel free to send the corrections to the webmaster.