pm logo

குருஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எழுதிய
திரிபதார்த்தருபாதி தசகாரிய அகவல் & சிவபோகசாரம்


tacakAriya akaval & civapOkacAram
by kurunjAna campantar of tarumapura AtInam
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to archive.org for providing a PDF version of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக
பரமாசாரிய சுவாமிகள் எழுதிய சைவ சிந்தாந்த நூல்கள்
திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் & சிவபோகசாரம்

Source: ஸ்ரீகண்ட சந்தான சாம்பிரதாய அவிச்சின்ன ஞான பீடாதிபதியாகிய
திருக்கைலாய பாம்பரைத் தருமபுர ஆதீனம்
ஆதி குருமூர்த்தி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளிய
திரிபதார்த்தருபாதி தசகாரிய அகவல்
௸ ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகபரமாசாரிய சுவாமிகள்
ஆக்ஞைப்படி வித்வான் சட்டை நாதத்தம்பிரான் சுவாமிகள்
மேற்பார்வையில்
ஸ்ரீகாழி , வித்வான் ப. அ. முத்துத்தாண்டவராயபிள்ளையவர்களால்
சீகாழித் திரிபுரசுந்தரி அச்சுக்கூடத்தில்
அச்சிடப்பெற்றது.
பிரபவ ௵ ஆவணி ௴ 24.
பிரதி 500., காப்பிரைட். 1927.
Printed at the THIRUPURASUNDARI PRESS, SHIYALI.
--------------

பிரசுரம்.

சிவாநுபவ முற்றிய சிவஞானச் செல்வர் உண்மைநிலையைத் திரிபதார்த்தங்களினது உருவ மாதி தசகாரியங்கள் வாயிலாக உணர்த்துதல் வேண்டு மென்பது சைவாகமங்களுட் டுணிபு. இத்திறத்தசகாரிய நூல்களுள் தருமையாதீனத்து ஆதிகுருமூர்த்தி சுவாமிகள் அருளிய தசகாரிய அகவலே மிகச் சீரியது என்பது இந் நூற்பொ ருளை நோக்குவார்க்குத் தெள்ளிதிற் புலனாம். ரூபாதி என்ற தொடர்மொழி உருவம் ஆதிய பத்துக்காரியங்கள் எனப் பொருள்படும். அவை பதிப்பொருட்கே யன்றிப் பசுபாசங்கட்குமாம் என்பது 'மேவுருப சொரூபசுபா வம்விசே டம் வியாத்தி, தாவுவியா பகங்குணமே வன்னந்தான் ஓவுந், தெரிசனஞ் சுத்தியெனச் சேர்பவை பத் து, மருள் பசுபா சங்கட்கு மாம்' என்ற வெண் கலிப்பாவா லறியப்படும். இந் நூல் ரூபத்திற்கு ஆதி யாகிய ஆறினையும், ரூபத்தை யாதியாகக் கொண்ட நான்கினையும் சுபாவ முதலாகக்கூறும்; பாசத்தை இப் பத்து வகையானும், பசுவை அப்பத்தின் மேல் லாபத்தைச் சேர்த்துப் பதினொரு வகையானும், பதியைச் சுத்தி நீக்கி யோக போ கங்களைச் சேர்த்துப் பதினொரு வகையானும் தொகுத் துரைக்கும். திரி பதார்த்தங்களையும் பத்து வகையா லாராயும் இதர நூல்கள் ரூபத்தை வன்னமென்றும், சிவயோக சிவபோகங்களைச் சுத்தியென்றும் உரைக்கும்,

பரமாசாரிய சுவாமிகள் நியமனப்படி இச் சிறந்த சிவானுபவத் திரு நூலைக் கற்றல், கேட்
டல்களுக்கின்றியமையாத திருவெண்பாக்களும், மேற்கோள் திருவிருத்தங்களும் தெளிபொருள் விளக்கத்தோடு விரைவின் வெளிவரும்.
----------------

திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்.

ஸ்துதி .

சித்தி தருநாதன் றென்கமலை வாழ்நாதன்
பத்திதரு நாதன் பரநாதன்- முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாச னுண்மை
தருநாத னங்குருநா தன்.

நூல்.

பாச தசகாரியம்.

பதிபசு பாசத் தொகுதக் காரியம்
விதிபெற வுரைப்பன் விரும்பிக் கேண்மின்
பாச சுபாவம் பாச வியாத்தி
பாச வியாபகம் பாசத்தின் குணம்
பாசவிசேடம் பாச ரூபகம்
பாச ரூபம் பாச சொரூபம்
பாச தெரிசனம் பாச சுத்தியென்
றாகி யொருபது வகைவிரி யறிமின்
நீடு சுபாவம் நிறைவறி வின்மை
நாடு வியாத்தி நவிலா ணவ மலம்
மாயை காமியம் மாமாயை திரோத
மேய வைவகை வியாபக முரைக்கில்
ஆணவம் ஒன்றா யனைத்துயி ரிடத்துங்
காணா வியாத்தியாய்க் கலந்து நிற்கும்
மாயை ஒன்றாய் வடிவற நிற்க
வாய தனு முத லாகியு நிற்குங்
கன்ம மொன்றாய்க் காசற நிற்கப்
பண்ணிய சஞ்சித பாவ புண்ணியம்
பொருந்திய பிராரத்த புண்ணிய பாவம்
விரும்பிய நால்வகை விளங்கியு நிற்கும்
ஒப்பின் மாமாயை யொன்றாய் நிற்கத்
தப்பறு சுத்த தத்துவ மாகியும்
சகல சாத்திரந் தானுமாய் நிற்கும்
இகலறு திரோதம் இருக்க வொன்றாய்
மருவு முயிரினை மறைப்பித்து நிற்கும்

திருந்திய குணமது சடமா யிருக்கை
விசேட மது தான் மெய்ச்சட மாகிலும்
விசேட மாகிய வினைசெயப் படுதல்
இகலறு ரூபக மித்தன்மை யெல்லாம்
பலவற வொன்றாய்ப் பரந்து நிற்கும்
பாச முளவெனப் பற்றி நிற்றல்
ஆசறு ரூபம் அதுதா னடுத்துத்
தேக வடிவாய்த் திகைப்புற நிற்கை
வாகை சொரூபம் மன்னுயிர் தனக்கு
வடிவிற் காளிதம் மன்னு தல் போலச்
சடமது வாகிலுந் தான் மறைப் பிக்கும்
உடலிற் கொண்ட வுருவிடம் போல
மடமை நனியாய் மயக்கு விக்கும
தவிராத் தண்டந் தானது போல
உயராப் பொசிப்பா யூட்டுபு வருத்தும்
தேரிற் பாகன் செலுத்து தல் போலப்
பேரா நின்று பிரேரிப் பிக்கும்
இருளுக் கிருள்போ லெங்கு மொக்கப்
பிரிவற நிற்கும் பேரந்த காரம்
ஆகியு நிற்கு மாசறு தெரிசனம்
பாகற நின்று படுமுயிர் பொய்யை

மிச்சை யென்று வினவா தன்றி
நிச்சய மாக நீள்வடி வறியாப்
பிரமந் தானே பிறிதிலை யென்று
மருளைச் சிவனை யறியா தாகி
யிதமு மகிதமு மினிதுற வயின்று
சிதமற நிற்குந் தெரிசன மிதுவே
சுத்தி யாவது தொல்லை யிறையையு
நித்த பாசமும் நேர்பணி யில்லை
யென்னு மதுவு மிவையுயி ரல்ல
மன்னுயிர் வேறென மதிப்பது கடனே.

ஆன்ம தசகாரியம்.

ஆத்ம சுபாவம் ஆத்ம வியாத்தி
ஆத்ம வியாபக மாத்மா வின் குணம்
ஆத்ம விசேடம் ஆத்ம ரூபகம்
ஆத்ம ரூபம் ஆத்ம சொரூபம்
ஆத்ம தெரிசனம் ஆத்தும சுத்தி
ஆத்தும லாப மாயவை பன்னொன்

சாத்தும சுபாவ மனவா தமுமே
சாற்று தத்துவம் தானாய்க் கூடுதல்
வியாத்தி தத்துவ வவாவுள் ளளவும்
வியாத்த மாகி விடயத் திருத்தல்
வியாபகந் தத்துவ மிக்குள் ளளவும்
வியாபகந் தானாய் மேலிடு முயிரே
குணமும் மடமாங் கோதில் விசேடம்
குணமறி யாமை குறுகி யிருக்க
விருண்மல பக்குவம் எய்திய போதில்
அருளிறை யுணர்த்தவறிவாய் விடுதல்
உற்ற ரூபகம் உடம்பே யொழிய
மற்றுயி ருண்டென வாய்மை பொருந்து தல்
உரூப மிச்சை யுயர்ஞா னந்தொழில்
சொரூப மாகித் துனியுற் றிருத்தல்
இச்சை பதார்த்த மிராக மாத்தன்
னிச்சய ஞானம் நிகழ்பண் டங்களில்
பகுத்தறி வாகை பகருங் கிரியை
மிகுத்த பதார்த்த மிகவப் கரிக்கை
சொரூபம் மெய்போற் றோன்று தேகாதி
உருவ மிந்திர வுயர் தனுப் போலும்
பொய்யென வுணர்த்தப் பொருந்து த றானே

மெய்யுயிர்த் தெரிசனம் விரிவறி வாகை
சுத்தி யுரைக்கிற் றொழிலறி விச்சை
மத்த வுணர்வும் மட்டற விட்டே
யுணர்வு மசைவு மொன்றற நிற்றல்
புணர்வி லாபம் புகலுங் காலை
நிரஞ்சன மாகி நின்றவ தரத்தில்
உரமற விளைந்த வுயரானந்த
போகம் புணர்ந்து பொருந்து த றானென
ஆகம மெல்லா மறைந்தன மாதோ.
-------------

சிவ தச காரியம்.

சிவ சுபாவம் சிவ வியாத்தி
சிவ வியாபகம் சிவத்தின் றன் குணம்
சிவ விசேடம் சிவ வுரூபகம்
சிவ வுரூபம் சிவ சொரூபம்
சிவ தெரிசனஞ் சிவ வியோகம்
சிவனது போகந் தெரித்தபன் னொன்றில்
சுபாவம் தத்துவத் துரிசற நிற்கை
விபாவ வியாத்தி விரிபுவ னத்திலும்

சகல வுயிரிலுந் தடையற நிற்கை
இகலறு வியாபகம் எங்கும் நிறைந்தே
விமல நிராமய மேவிய நிலையில்
தமதி லிரண்டறத் தங்கி யடங்கிய
உயிரீ டேற்று முபாயகா ரணமாய்ப்
பயிறிரு மேனி படிமிசைக் கோடல்
குணமெந் நாளுங் குன்றா வறிவாம்
புணரும் விசேடம் பொருந்த வரைக்கில்
அறிவுக் கறிவு மன்றி யசேதனம் பிறி
வறத்தொழிற்செயல்பெற்றியுண்டாக்குகை
தீதறு ரூபகம் திகழறிவுக்குக்
கோதறு முயிராய்க் கூடா நிற்பன்
பரம மாகிய பானெனத் தோன்றுதல்
விரியு முரூபம் விளங்கப் புகலில்
இச்சா ஞான மிருந்தொழி லான
நிச்சய ரூபமாய் நிலைபெற நிற்கை
இச்சை யுயிர்களை விரட்சிப் பதுவாய்
மிச்சையி லாசை விரிவது தானே
ஞான மகில ஞால முயிர்கள்
யானங் கைக்கனி மதித்தன மான
வொருகாலத்தி லுணர்ந்தே யிருத்தல்

கிரியா சத்தி கிளருயிர் களையும்
தேக மிந்தியங்கள் திகழ்வுறக் கூட்டிப்
போக கன்மங்களைப் பொசிப்பித்து நிற்கும்
சொரூப மொன்றொடுந் தோயா திருத்த
லிலகறு தெரிசன மெழினிரு விகற்ப
மெங்கும் பூரண வெழிலுற நின்ற
சங்கமில் வடிவைத் தானறக் காண்கை
யோகம் செப்பி லுயரா னந்த
யோக மாக வொழிவறத் தோன்றல்
போக முன்னைப் புகன்ற விலாபம்
ஆக வாகம மறைந்த திதுவெனத்
தேசிக சிகாமணி தென்கம லாபுரி
நாசமில் சீர்த்தி ஞானப் பிரகாசன்
அருளிய அட்ட வணையி னடைவே
பெரிதும் பயனுறப் பேசின னறியே.

திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் முற்றும்.

ஸ்ரீ குருஞானசம்பந்த சுவாமிகள் திருவடிவாழ்க.
----------------------

சிவபோகசாரம்

1. அடிகள் வணக்கம்

சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை
தருநாதன் நம்குருநா தன். 1

அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவ னுயிர்க்குயிரா யோங்கித் – திருவார்
கமலைவரு ஞானப்ர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான். 2

ஆரறிவார் நீதிவழி யாரறிவார் சித்திமுத்தி
ஆரறிவார் நற்றவங்கள் அன்பனைத்தும் – பாரெவர்க்கும்
கத்தன் கமலையில்வாழ் ஞானப்ர காசனெனும்
அத்தனென்போல் வந்திலனா னால். 3

அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று. 4

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான். 5

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன். 6

இருளுதய நீங்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன். 7

ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள். 8

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன். 9

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய். 10

2. பெறுதற் கருமை

ஒருமையுடன் ஈச ன ருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே. 11

தன்பெருமை யெண்ணாமை தற்போத மேயிறத்தல்
மின்பெருமை யாஞ்சகத்தை வேண்டாமை – தன்பால்
உடலைத் தினம்பழித்தல் ஒங்குசிவத் தோன்றல்
நடலைப் பிறப்பொழியு நாள். 12

உரையிறந்தால் உன்னும் உணர்விறந்தால் மாயைத்
திரையிறந்தால் காண்கின்ற தேவை – வரைபெருக
வாசிப் பதுநாவால் வாழ்த்துவது நாடகமாய்ப்
பூசிப்ப தும்சுத்தப் பொய். 13

பரம ரகசியத்தை பாழான வாயால்
இரவுபகல் எந்நேர மின்றிக் – குரல்நெரியக்
கூப்பிட்டுங் காணுமோ கோழைமட நெஞ்சேமால்
பூப்பிட்டுங் காணாப் பொருள். 14

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம். 15

அன்புமிக உண்டாய் அதிலே விவேகமுண்டாய்த்
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய் – இன்பம்
தரும்பூ ரணத்துக்கே தாகமுண்டாய் ஒடி
வருங்கா ரணர்க்குண்மை வை. 16

3. அறியும் பகுதி

உருவை அருவை ஒளியை வெளியை
இருளைச் சிவமென் றிராதே – மருளைப்
பிறிந்தறிவிற் கண்டதனைப் பின்னமற எங்குஞ்
செறிந்தபொருள் தானே சிவம். 17

அகமாதி கண்ட அறிவாகி எங்குஞ்
சுகமாகி இன்ப சுகமாய்ச் – சுகாதீதத்
தானந்த வெள்ள மதுவாய்ச் சுகத்தைஅகன்
றானந்தம் ஆதியிலா தான். 18

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை. 19

ஆறாறு தத்துவமும் ஆணவமும் நீங்கிஉயிர்
வேறாக நின்றஇடஞ் சொல்லின் – மாறா
இருளாய பாவனையிற் றெங்குமாய் நின்ற
பொருளேகாண் நீயே புணர். 20

நனவாதி அந்தத்தில் நாடுசுகந் தன்னைக்
கனவாதி அந்தத்தில் கண்டு – நனவாதி
தோற்றிடும்போ தந்தச் சுகரூபங் கண்டவர்கள்
மாற்றிடுவர் என்றும் மலம். 21

தத்துவங்கள் எண்ணித் தலையடித்துக் கொள்ளாதே
தத்துவங்கள் ஏதென்னின் சாற்றக்கேள் – மெத்துஞ்
சுகாரம்ப மாஞ்சிவத்தில் தோயாத மாயா
விகாரங்கள் தத்துவமா மே. 22

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நிறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஒர்விருத்தப் பாதிபோ தும். 23

4. உபதேச விளக்கம்

பரவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே – திரமாக
நில்என்றான் கண்டஎல்லாம் நேதிபண்ணி மும்மலமும்
கொல்என்றான் ஞான குரு. 24

காயம் கரணமுதல் நான்கிற்குங் காரணந்தான்
ஆ யஇருள் மாயை அதுஎன்றால் – தூயபொருட்
போதனே ! செங்கமலப் பொற்பாத னே ! எனைநீ
ஏதேன்று சொல்லாய் இனி. 25

என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம். 26

எங்கும் இருக்கும் அறிவுநீ ஏகமாய்
அங்கங் குணர்த்தும் அறிவுநாம் – பொங்கு
மலமறைத்தல் மாயை மயக்கல் விகாரப்
பலமனைத்தும் கன்மமலம் பார். 27

செங்கமலப் பொற்பாதன் சீர்பாத வல்லவங்கள்
நங்கமலை வாழ்கிளியே ! நாடிக்கேள் – சங்கையிலாத்
தத்துவத்தைக் காட்டியதின் தத்துவத்தைக் காட்டிஅருள்
தத்துவத்தைக் காட்டியது தான். 28

தேசு செறிகமலைச் செங்கமலப் பொற்பாதன்
பேசுதமிழ் ஞானப் பிரகாசன் – பாசவினை
வாட்டினான் மீட்டுநான் வாரா வகையருளைக்
காட்டினான் கூட்டினான் காண். 29

நானிங்காய் நீயங்காய் நாட்டமற வைத்ததற்பின்
நானெங்கே நீயெங்கே நாதனே ! – வானெங்கும்
ஒன்றாகி நின்ற உணர்வுநீ உன்னறிவில்
நன்றாகத் தோன்றுசுகம் நாம். 30

அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே
நிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்
றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)
இருந்துவிடெப் போதும் இனி. 31

அகத்தை இழந்தருளாய் அவ்விடத்தே தோன்றுஞ்
சுகத்தில் அழுந்திவிடச் சொன்னான் – மகத்தான
சிற்பரனா ரூர்தனில்வாழ் செங்கமலப் பொற்பாத
தற்பரஞா னப்பிரகா சன். 32

கிட்டாத ஈசனுனைக் கிட்டி அருள்புரிந்த
நிட்டாநு பூதி நிலையிலே – முட்டா
திருவன்னி சேர்ந்துமாற் றேறியபொன் போல
வரும்இன்ப பூரணமா வை. 33

அநாதிசுக ரூபி அரனடிக்கீழ் என்றும்
அநாதி சுகரூபி ஆன்மா – அநாதி
இருந்தமலம் போக்கி இறைஅருளி னாலே
இருந்தபடி யேகண் டிரு. 34

இற்றை வரைக்கர ணத்தோ டிணங்கினையே
இற்றைவரைச் சென்மம் எடுத்தனையே – இற்றைவரைத்
துன்பவெள்ளத் துள்ளே துளைந்தனையே யீதறநல்
இன்பவெள்ளத் துள்ளே இரு. 35

தேகாதி நானல்ல என்றறிந்தால் சித்தமயல்
போகாத தென்னையோ புண்ணியா – தேகாதி
தன்னளவே அம்மயக்கம் சத்தியமாய் எப்பொழுதும்
உன்னளவே இல்லை உணர். 3

ஆறாறு தத்துவநீ அன்றென் றறிந்தனையே
ஆறாறும் கண்டறிவன் ஆயினையே – மாறாமல்
உன்னறிவில் ஆனந்தத் தோங்கினையே ஒராமல்
நின்னறிவை விட்டதுவாய் நில். 37

மாதா பிதாச்சுற்றம் என்று மயங்கினையே
நீதான் தனுவாகி நின்றனையே – ஈதெல்லாம்
பொய்யென் றறிந்தனையே பூரணா னந்தவெள்ளம்
மெய்யென் றறிந்தனையே மெய். 38

மனையில்வரு போகத்தின் மாதர்மக்கள் பாச
வினையில் அழுந்திவிடாதே – உனைஇழந்து
காணாமற் கண்டானைக் காட்சி யறக்கலந்து
பூணாமல் எப்பொழுதும் பூண். 39

சுத்தவத்தை நாடியிடுஞ் சுத்த இராப்பகலா
மெத்தவத்தை நாடி விடுவையேல் – சுத்தவத்தை
தானாய் இரண்டுந் தவிர்த்த சிவானந்த
வானாவை நீயே மதி. 40

சுத்தநிலம் உன்றனக்குச் சொல்லக்கேள் தொல்லைவினைத்
தத்துவங்கள் ஆறாறுந் தாம்பெருக் – கத்திடுவர்
எல்லாம் இழந்த இடமே அதுவாக
நில்லாய் அதுவே நிலை. 41

நெருப்பென்றால் வாய்சுடுமோ நெய்பால்தேன் கட்டி
கருப்பென்றால் தித்தியா காணீ – விருப்பமுடன்
நீபிரமம் என்றக்கால் நீபிரமம் ஆயினையோ
நீபிரமம் சற்குருவால் நில். 42

ஆர்க்குந் தெரியாத ஆனந்த இன்பவெள்ளம்
மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்
தெரியாப் பரப்பிரமஞ் சேர்த்தாய் உனக்குச்
சரியார் சிதம்பரநா தா. 43

5. அநுபூதி நிலை

உள்ளங் கரைய உடல்கரைய ஆனந்த
வெள்ளங் கரைபுரண்டு மேலாகக் – கள்ளமலம்
பொய்யாக என்னுட் புகுந்தவா றென்கொலோ
ஐயா தியாகவினோ தா. 44

எதேது செய்தாலும் எதேது சொன்னாலும்
எதேது சிந்தித் திருந்தாலும் – மாதேவா
நின்செயலே என்று நினதருளா லேஉணரில்
என்செயலே காண்கிலே னே. 45

மாயைமலம் எங்கே மறைந்ததோ ! மாயைதனில்
ஆயசகம் எங்கே அழிந்ததோ ! – காயமதில்
தங்கும் புருடனெங்கோ ! சச்சிதா னந்தவெள்ள்ம்
எங்கு மிகக்கோத்த தே. 46

நானுஞ் சுகவடிவாய் நண்ணினேன் நின்னருளால்
வானுஞ் சுகவடிவாய் மன்னிற்றே – வானுஞ்
சுகரூப மன்றுமணந் தோற்றநிலம் போலுன்
அகரூப மட்டே அது. 47

ஈசன் அடியில் இருக்கையிலே எங்கெங்கும்
ஈசனடி தேடி இளைத்தேனே – பேசரிய
பொற்பதத்தன் செங்கமலப் பொற்பாதன் தன்னுடைய
நற்பதத்தைக் காணாமுன் நான். 48

நற்பதஞ்சேர் ஆரூரின் ஞானப்ர காசனெந்தை
தற்பரனோர் ஞானவாள் தந்தானே – சொற்பனத்தும்
காரார் மறலிஅயன் கண்ணனுக்கும் அஞ்சேனை
யாராலும் என்செய்ய லாம். 49

வெறும்பாழிற் பேரின்ப வெட்டவெளி தன்னில்
குறும்பாளர் காணாக் குடிலின் – உறும்பாசம்
ஒட்டிஎனை வைத்தனனே உற்றபிர பஞ்சமெலாம்
ஆட்டியஞா னப்பிரகா சன். 50

என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் – மன்றில்
நடமாடும் ஆரூரன் ஞானப்ர காசன்
திடமாக என்னுள்ளத் தில். 51

நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் – பேதமற
ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டிஎனை
இன்றறவே வைத்துவிட்டா ரே. 52

நன்னெஞ்சே நீகேட்ட நன்மையெல்லாஞ் சொல்லுதற்குக்
கன்னெஞ்ச மாலயனுங் காணாதோன் – வன்னெஞ்சர்
இன்னகுறை உண்டென்னா ஈசன் எதிர்வந்தான்
என்னகுறை சொல்லாய் இனி. 53

இட்டசனம் எங்கே இதமகிதந் தானெங்கே
துட்டசனம் எங்கே தொழிலெங்கே – சிட்டருடன்
கூடி யிருந்ததெங்கே குன்றாச் சிவானந்தம்
நாடியது வாயிருந்த நாள். 54

வாக்குமனக் காயத்தான் வந்தபொருள் அத்தனையும்
வாக்குமனக் காயமுடன் மாயுமே – வாக்குமனக்
காயம் உடனிழந்து காண்ஞா திருஞான
ஞேயம் இழந்த நிலை. 55

புசிப்போம் சிவபோகம் பூரணாமாய் எங்கும்
வசிப்போம் உலகில் வசியோம் – முசிப்பின்றி
வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோம் எமக்கார் சரி. 56

6. உபாய நிலை

அறிவுநீ என்ன அறிந்தறிந்து மாயைச்
செறிவுநான் என்றென்று சேர்ந்தால் – அறிவு
தெரிந்திடுமோ இன்பசுகஞ் சேர்ந்திடுமோ நின்னைப்
பிரிந்திடுமோ சென்மப் பிணி. 57

அரணங்கள் தாம்எரித்த அத்தரே என்னுள்
கரணங்கள் ஒட்டும்வகை காட்டீர் – கரணங்கள்
நீஅதுவாய் நில்லாமல் நின்னறிவைக் கண்டருளிற்
போயதுவாய் நின்றுவிடப் போம். 58

தானல்லா தத்தனைய்ந் தானென் றுழலாமல்
தானெல்லா மாயதனுள் தாக்காமல் – தானெல்லாம்
ஆனோம் எனும்போதந் தாக்காமல் ஈசனிடத்(து)
ஆனோனே ஆயினவ னாம். 59

தேகநாம் என்றென்றூ செஉபுவீர் ஈதில்வரும்
போகநாம் என்று புலம்புவீர் – நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படிநீர் போய். 60

தன்னை இழந்திடத்தே தானே சுகவடிவாய்
இன்னபடி என்றறியா எங்கோனுட் – பின்னமற
நின்றநிலை தானுந் தெரியாதே நின்றவர்கட்(கு)
அன்றோ பிறப்பறுக்க லாம். 61

உன்னாதே பற்றா துரையாதே யொன்றி அதில்
நின்னாமம் இல்லை நிகழாதே – பன்னாட்
பரையிறந்து நிற்கும் பயனணைந்தார் நெஞ்சில்
திரையிறந்து நிற்கும் சிவம். 62

அருளறிந்து தானாம் அறிவறிந்தே ஆங்குட்
பொருளறிந்து தானடங்கிப் போத – இருளகல
விம்மா திருந்து விகற்பமற ஒன்றாகிச்
சும்மா இருக்கை சுகம். 63

செறியுந் தனுவாதி சேர்ந்தறிந்து நின்ற
அறிவை அறிவால் அறிந்தே – அறிவிழந்து
நின்றால் சுகானந்த நீடு நிலைவேறு
சென்றால் சுகங்கிடையா தே. 64

தத்துவத்தை விட்டருளிற் றான்கலந்து தன்னிழப்பின்
மெத்துஞ் சுகத்தின் மிகஅழுந்திச் – சுத்தமாய்
ஒன்றாகி நின்ற உணர்வும் ஒழிந்தக்கால்
அன்றோ சிவபோக மாம். 65

சுட்டறிவு கெட்ட சுகாதீத உண்மையிலே
விட்டகலா தென்றும் விரவுவோர் – இட்டமுடன்
யோக சமாதிகளும் உட்புறம்பாம் பூசைகளும்
ஆக நினையார் அவர். 66

நின்னறிவில் யானொளித்து நீயாகி நின்றதுபோல்
என்னறிவில் நீயொளித்தே யானாகி – எந்நாளும்
நிற்கவல்லை யாமாகில் நின்சனனம் போக்குதற்குக்
கற்கவல்ல தேதுமில்லை காண். 67

இன்பசுகத் துள்ளே இருக்கலாம் எப்போதும்
துன்பவினை உன்னைத் தொடராது – வன்பா
மருட்டேக மாயடங்கி மாயாமல் நெஞ்சே
அருட்டேக மாயடங்கு வாய். 68

தேக மறந்து திருவருளாய் நின்றுசிவ
போகம் விளையப் புணர்நெஞ்சே – நோக
வருந்தாமல் தீவினையின் வாடாமல் துன்பம்
அருந்தாமல் நீபிறவா மல். 69

பூதாதி பாசமன்றோ பூரணா னந்தமன்றோ
பேதமற நம்முட் பிரானன்றோ – வாதனைகள்
விட்டால் சுகமன்றோ என்றுணர்வில் வேண்டுவதுங்
கெட்டால் பிறப்பும் கெடும். 70

அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்
ஏறித் திரும்பலா மே. 71

என்றுஞ் சனனத் திடர்க்கடலி லேமூழ்கிப்
பொன்றுமன மேஉனக்கோர் புத்திகேள் – நன்று
தனிச்சங்கஞ் சேராமல் தற்பரனைச் சேரில்
இனிச்சங்கஞ் சேரா திரு. 72

7. பணியறுத்தல்

அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் – அவரவரை
நல்லார்பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே
எல்லாம் சிவன்செயலென் றெண். 73

எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ
எங்கே இருத்துமோ என்றறியேன் – கங்கைமதி
சூடினான் தில்லையிலே தொந்தொமென நின்றுநடம்
ஆடினான் எங்கோன் அருள். 74

போகம் புவனம் பொருந்துமிடம் எங்கெங்கும்
தேகம் கரணந் திரியுமே – யாகிலது
தன்னைநீ யென்று தவியாதே நெஞ்சமே
நின்னையே கண்டருளில் நில். 75

எதேது செய்திடினும் எதேது பேசிடினும்
எதேது சிந்தித் திருந்திடினும் – மாதேவன்
காட்டிடுவ தானவருட் கண்ணைவிட்டு நீங்காது
நாட்டம் அதுவாய் நட. 76

எடுத்தஉடற் கேய்ந்தகன்மம் எப்போதும் ஊட்டும்
விடுத்துவிட்டோம் என்பர் விழலர் – விடுத்த
ததுவன்றோ ஐந்துமலம் ஆறாறும் நீத்த
இதுவன்றோ யாம் துறவென் பேம். 77

எவ்வுயிருங் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவதும் நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம்
வருகுவதும் தானே வரும். 78

முப்பதுஞ்சென் றால்விடியும் முப்பதுசென் றாலிருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே – எப்பொழுதும்
ஆங்காலம் எவ்வினையும் ஆகும் அதுதொலைந்து
போங்காலம் எவ்வினையும் போம். 79

ஆவலுற்றி டுஞ்சகலத் தாவதுவும் ஆங்கவரே
கேவலத்தின் மூழ்கிக் கிடப்பதுவும் – நாஅரற்றல்
இல்லாத சுத்தத் திருப்பதுவும் இம்மூன்றும்
இல்லான் செயலென் றிரு. 80

பாசஞ் சடமுயிரோ தானாகப் பற்றறியா
ஈசன் இரண்டும் இணைத்தாட்டிப் – பூசலென்றுஞ்
செய்பவனே தானே திரும்பிஅருள் செய்யாமல்
உய்பவர்கள் உண்டோ உரை. 81

முற்றின்ப மாமருளின் மூழ்குவதும் மோகமிகு
சிற்றின்ப மாமருளிற் சேர்குவதும் – உற்றிங்(கு)
அறிந்தானன் நெஞ்சே அகிலாண்ட மெங்குஞ்
செறிந்தான் செயலே தெளி. 82

என்னிடத்தில் நின்செயலே இல்லையென்றால் யாதுறினும்
நின்னிடத்தில் யான்வேண்டல் நிச்சயமே – என்னிடத்தில்
இன்மை உயிர்க்குயிர்நீ யின்மை இருந்தியற்றின்
நன்மைதின்மைக் கேதுவோ நான். 83

நாம்பெரியர் என்னுமதை நாடா தடக்குமவர்
தாம்பெரியர் என்றுமறை சாற்றியிடும் – நாம்பெரியர்
என்பார் சிறியர் இவரலா லிவ்வுலகில்
துன்பார் சுமப்பார்கள் சொல். 84

கட்டமாங் காயம் கலையனைத்தும் கற்றாலும்
அட்டமா சித்தி அடைந்தாலும் – இட்டம்
பரம சுகமே பதியாத போது
திரம சுகமே தெளி. 85

மனவாக்குக் காயமுயிர் மன்னியசைப் பானும்
அனமாதி போகமளிப் பானும் – நனவாதி
கூட்டிவிடு வானுமுத்தி கூட்டிடுவா னும்பிறப்பில்
ஆட்டிவிடு வானும் அரன். 86

முன்னைவினைக் கீடா முதல்வன் அருள்நமைக்கொண்
டென்னவினை செய்ய இயற்றுமோ – இன்னவினை
செய்வோம் தவிர்போம் திரிவோம் இருப்போம்இங்(கு)
உய்வோம் எனும்வகையே து. 87

ஊட்டும் வினையிருந்தால் உன்னொணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் – கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே நெஞ்சே இரு. 88

என்னதன்று நிசெயலே என்றறிந்தால் யான்விரும்பி
என்னவென்று வாய்திறப்பேன் ஈசனே – இன்னம்இன்னம்
எப்படியோ நாயேனை ஈடேற்ற வேண்டும்உனக்(கு)
அப்படியே செய்தருளு வாய். 89

வன்மைபுரி காய மரப்பாவை தன்னைஅரன்
கன்மமெனுஞ் சூத்திரத்தால் கட்டியே – நன்மைதின்மை
ஆட்டுவது நாட தறிவிலார் தஞ்செயலாய்
நாட்டுதல்போல் உண்டோ நகை. 90
-----------------

This file was last updated on 23 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.