காலந்தோறும் பெண்
(சமூகவியல் ஆய்வு)
பாகம் 1 (அத்தியாயம் 1-13)
ராஜம் கிருஷ்ணன்
kAlantORum peN, part 1 (chapters 1-13)
(socialogy research)
by rAjam kirushNan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காலந்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)
ராஜம் கிருஷ்ணன்
Source:
காலந்தோறும் பெண்
(சமூகவியல் ஆய்வு)
ராஜம் கிருஷ்ணன்
தாகம்
ஃப்ளாட் எண் G3/8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி. நகர் சென்னை -600 017
முதற் பதிப்பு : ஜூன், 1989, இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 1991
மூன்றாம் பதிப்பு : ஜூன், 1994, நான்காம் பதிப்பு : டிசம்பர், 2000
ஐந்தாம் பதிப்பு : மே, 2002
விலை : ரூ. 55.00
KALANTHORUM PEN by RAJAM KRISHNAN
© Rajam Krishnan
Fifth Edition : May, 2002 Pages : 192
DHAGAM
G-3 /8, Masilamani Street Pondy Bazaar, T. Nagar Chennai - 600017
PRICE : Rs. 55-00
Typest at : Nehru Achagam, Chennai
Printed at : Jaiganesh Offset Printers, Chennai - 4
------------------
இந்தப் புத்தகம்
ஒரு படைப்பாளி தன் சமூகப் பொறுப்பை உணர்ந்து தான் சொல்ல விரும்பிய கருத்தின் வீச்சுக்கேற்ப படைப்பு வடிவை நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என உருவாக்கிக்கொள்கிறான்.
காலங்காலமாக மரபு வழி பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய சிந்தனைகளை, செயற்பாடுகளை இங்கு ஆய்வுக் கட்டுரை வடிவில் அலசி ஆராய்கிறார் திருமதி ராஜம் கிருஷ்ணன்.
'பெண் சுதந்திரம்' பற்றிப் பரவலாக மேடைதோறும் உச்ச தொனியில் பேசப்பட்டு வரும் இந்நாளில் ஆழமான பார்வையில் படைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். "இலட்சியப்பெண் ” இதழில் தொடரப்பட்ட இந்தக் கட்டுரைத் தொடரை முழுவதுமாக நூல் வடிவில் வடித்துத் தந்த ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு எமது நன்றி. உள் ஓவியங்களுடன் இந்நூல் வெளி வருவதற்கு உதவிய டாக்டர் ஜகதீசன், பாரதி ஆகியோருக்கும் நன்றி. “இலட்சியப் பெண்" இதழில் வெளிவந்த தனது ஓவியங்களை இந்நூலில் பயன்படுத்திக்கொள்ள இசைவு தந்த ஓவியர் திரு. சந்துருவுக்கும் முகப்போவியம் வரைந்தளித்த ஓவியர் க. உமாவிற்கும் எமது நன்றி.
அகிலன் கண்ணன்
தாகம்
------------------------
உள்ளே
1. அறிமுகம்
2. பெண்ணுக்கு மட்டும்
3. சிறகா பொற்கூண்டா ?
4. வேதத்தில் என்ன இருக்கிறது?
5. சுதந்திரத் தாய்- கற்பு விலங்கு
6. பட்டைக் கண்ணாடியும் பட்டுக் கறுப்பும்
7. கல்வி-வாழ்க்கை விபத்து
8. சநாதனத்தின் முரண்பாடுகள்
9. வருண பேதங்கள்
10. குரு பீடங்கள்
11. முன்னுச்சி வகிற்றுக் குங்குமம் தீற்றல் - அடிமைப் பெண் அடையாளம்
12. குங்குமச் சின்னம் - பொட்டும் கலையும்
13. திருவிளக்குப் பூசையில் கரையாத இருட்டு
14. வேத (அ)தர்ம பரிபாலனங்கள்
15. ஒடுக்கல் சாத்திரத்தில் ஒப்பனைக் கருவிகள்
16. புராணப் புதைகுழியில் மூடப்படும் நட்சத்திரங்கள்
17. கீதை ஒளியில் பெண்(சு)தருமம்
18. காப்பாளரும் கைவிடப்பட்ட கற்பரசிகளும்
19. சதி புராணம்
20. வரதட்சணை மகாத்மியம்
21. காதல் - சூதாட்டத் துருப்புச்சீட்டா?
22. சுமங்கலியும்-பத்துப் புத்திரர்களும்
23. சப்தபதித் தோழமை
24. வினா-விடை - அச்சுறுத்தல்
25. பொருளுரிமைக்காரி பொருளேயானாள்
26. விழிமின்! எழுமின்!
----------------------
காலந்தோறும் பெண்
1. அறிமுகம்
'காலந்தோறும்........ பெண்' என்ற தலைப்பில் மக்கள் சமுதாயத்தில் சரிபாதியாக விளங்கும் ஒருபாலரை மையமாக்கி, ஒரு சமுதாய வரலாற்றுப் பின்னணியை ஆராய வேண்டும் என்ற ஓர் உந்துதல் என்னுள் பல நாட்களாகவே முகிழ்த்து, செயலாக்கமாகப் பரிணமித்திருக்கிறது.
படைப்பிலக்கியத் துறையில், முன்பின் என்ற எந்தத் தூலமான தாக்கமும் இருந்திராத நிலையில் தானாகப் பேனாவை எடுத்து விழுந்தும் எழுந்தும் முட்டியும் ஒரு நாற்பதாண்டுக் காலத்தை ஓட்டியிருக்கும் அனுபவம் ஒன்றே என்னுள் முகிழ்த்த உந்துதலுக்கு உரமாகத் துணிவூட்ட இந்தப் புதிய பாதையில் கண்ணணோட்ட-மிடுகிறேன். இது தீர்ந்த ஆராய்ச்சி அன்று எனினும், ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பது அவா.
'கதாசிரியர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டு மென்பது அவசியமில்லை; அதுவும் பெண் எழுத்தாளரை அந்த வருக்கத்தில் உட்படுத்த வேண்டியதில்லை!' என்ற ஒரு கருத்து, பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெண் எழுத்தாளர் மாநாடு ஒன்றில் 'அறிவார்ந்த பெண்கள்' சிலரிடையே விவாதத்துக்குரியதாக அலசப்பட்டது. அதுகாறும், இப்படி ஒரு கருத்து படைப்பிலக்கியக்காரியான என்னுள் வலிமையான தாக்கத்தை உண்டு பண்ணக்கூடும் என்று நான் சிந்தித்திருக்கவில்லை.
'அவளும் அவனும் பார்த்தார்கள்; காதலித்தார்கள்; கல்யாணம் ஆயிற்று. மாமியார், நாத்தனார் குடும்பத் தகராறுகள் வந்தன என்ற மாதிரியில் கதை பின்னுவதற்கு, அறிவார்ந்த சிந்தனைகள் தேவையில்லை; கண்ணீரை வரவழைக்கவும், மனமுருகச் செய்யவும் உணர்வூக்கிகளே போதும்' என்ற கருத்தை வைத்து, ஒரு பேராசிரியப் பெண்மணி விவாதம் செய்தார். நான் அந்தப் பேராசிரிய அறிஞர் பெண்மணிகளின் விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை. வெறும் பார்வையாளராகவே அமர்ந்திருந்தேன். இந்தக் கருத்து எனக்கு முற்றிலும் புதிதன்றுதான்.
பெண் எழுத்தாளரிடம் அறிவுபூர்வமாகச் சிந்தனைகளோ தர்க்கரீதியான கருத்தாராய்வுகளையோ எதிர்பார்ப்பதற்கில்லை என்று நமது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசக மேதைகள் சிலர், தீர்த்திருக்கிறார்கள்.
அலுவலகத்திலிருந்து கணவன் களைத்து வருவதை எதிர்பார்த்துக் கையில் மணமிகுந்த காபியை வைத்துக் கொண்டு காத்திருக்கும் மனைவியைச் சித்தரிப்பதுதான் அவர்களுக்குப் பொருத்தமான இலக்கியம் என்று ஒரு முடிவை, அந்தத் தீர்ப்பில் அவர்கள் குஞ்சம் கட்டிவிட்டாற் போல் எனக்குத் தோன்றியிராமல் இல்லை.
என்னை நானே அலசிப் பார்த்துக்கொள்ளும் அவசியம்கூட நேரிட்டது.
கதைதான் எழுதுகிறோம் என்றாலும், நிகழ்ச்சிகளைக் கோத்து, பிரச்சினைகளை மோதவிட்டு, கதை மாந்தர்களை உயிரும் வடிவுமாக உலவ விடுகையில் , இயங்க வைக்கையில், ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பு அவஸ்தையில், பங்கேற்பது இந்த உணர்ச்சி நெகிழ்ச்சி அம்சங்கள் மட்டும்தானா? அசலிலிருந்து நகலின் பிரதியெடுக்கையில், மூலமான வாழ்க்கையில் யதார்த்தங்களிலிருந்து படிவங்களை ஒரு படைப்பாளி நேர்ந்து கைக்கொள்ளுகையில், கோத்து வைத்த அணியாரங்களை வார்த்தைச் சட்டங்களில் பொருத்தி அந்தப் படிவங்களை மாட்டிவிடுவது படைப்புதான் என்றால், ஏன், எதற்காக என்ற சிந்தனை தேவையே இல்லையா? கண்ணீரும் பேரிரக்கமும்தான் வெற்றிகரமான படைப்புக்குரிய அம்சங்களா? பிரச்சினைகளை, வாழ்க்கையின் குறுக்கு வெட்டுப் பதிவினூடே, யதார்த்தபூர்வமாகப் பிரதிபலிக்கச் செய்கையில், அந்தப் பிரச்னைகளின் களம், கனம் காரண காரியங்கள் ஆகிய அம்சங்கள் ஆராயப்பட வேண்டியவை அல்லவா?
ஒரு பெண் அடாங்காப்பிடாரியாக இருக்கிறாள்; வம்பு பேசுகிறாள்; புருஷனுக்கு நஞ்சூட்டுகிறாள்; தீமையே வடிவானவளாக இருக்கிறாள். உண்மையிலே இப்படி ஒரு பெண் இருந்தாலும், அத்தகைய ஒரு பாத்திரத்தைத் தன் படைப்பில் கொண்டுவரும் ஓர் இலக்கிய ஆசிரியர் அவள் ஏன் அந்தமாதிரி ஆனாள் என்று ஒரு சிந்தனையைக் காட்ட வேண்டாமா? (இப்போதெல்லாம், இந்த ஏன் கேள்வி, ஒரு பெண்ணை உடலை வைத்துப் பிழைக்கவோ, பழி தீர்க்கவோ மட்டும் ஆராயப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டு, அமர்க்களமாக ஆதரவையும் புகழையும் பெற்று ஆசிரியருக்கு விருதுகளை எல்லாம் தேடிக் கொடுக்கின்றன.
அறிவுபூர்வமான சிந்தனை, பெண்ணை வழுக்கி விழும் நிலைக்கு நியாயப்படுத்துவதற்கு மட்டும் உதவாமல் அவள் ஏன் வாயாடியாக, வம்பு பேசுபவளாக, பொறாமைக்காரியாக உருவாகிறாள் என்ற மாதிரியான கோணங்களில் செயல்படாமல் அவள் தன்மைகளுக்கு அப்படியே ஓர் அரக்கு முத்திரையைக் குத்தி, நடைமுறைப் பெண் நெறியாக நிலையாக்கப்பட்டிருக்கிறதே?
பெண்ணாவது மாயப்பிசாசு, சும்மா இருக்கும் ஆணின் மனசில் மோகப் பாம்பாக வந்து சுருண்டு அவனைக் குதறிவிடும் பேய். அவனுடைய (ஆன்மீக) உயர்வை எஞ்ஞான்றும் அனுமதிக்காமல் தடைக்கல்லாக வழியில் குறுக்கிடும் நாசச் சக்தி. அவளை எந்த நிலையிலும் நம்பலாகாது, இரகசியங்களை வைத்துக்கொள்ளத் தகுதியற்றவள் என்றெல்லாம் பெண்ணின் இருண்ட பரிணாமங்களைத் தாங்கும் அணிமொழிகள் ஏராளம், ஏராளமாகப் புனையப்பெற்று, நெறிப்படுத்தப் பெற்று, பெண்களாலேயே 'பெருமையுடன்' ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இதனால், ஒழுக்கம் என்று பேசப்படும்போது, பொது வாழ்க்கை என்று பேசப்படும் போது, அதில் பங்கேற்கும் இரு பாலருக்கும் உரியதாக வேண்டிய பொறுப்பில் பழிப் பொறுப்பு மட்டும் பெண்ணிடமே சுமத்தப்படும் நியதியும் காலம் காலமாக வலிமை பெற்று அசைக்க முடியாத அரணாக உறுதி பெற்றிருக்கிறது.
இது ஏன்?
பெண்-ஆண் என்று குறிப்பிடும்போது, இருவரும் மனிதப்பிறவிகள். இது நல்லது, இது உகந்ததல்ல என்று பகுத்தறியும் பாங்கு ஆறாவது அறிவாக மனிதப் பிறவிக்கு உரித்தாக்கப்பட்டிருக்கிறது.
அறிவும் மதிநுட்பமும் மிகுந்த ஆற்றல் பெருகுவதனால், இன்பமும் துன்பமும் அதிகமாக உணரப்படுகின்றன.
ஒரு சமயம் ஒரு போரில் பின்வாங்கிய இராணுவப் படையினரிடையே மருத்துவ அறிஞர் ஒருவரும் இருந்தாராம். வருவதை ஏற்றுக்கொண்டு தலைவனின் ஆணைப்படி பின் வாங்கிய படையினர், வழி தெரியாக் கானகங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் நடக்கையில், மருத்துவ அறிஞரோ, ஒவ்வொரு நிமிடத்திலும், மரணத்தின் திகிலை அனு பவித்தாராம். முடிவில், எவரேனும் ஒரு வீரரைத் தன்னைச் சுட்டுக் கொன்றுவிடும்படி கெஞ்சும் அளவுக்கு பசியும், களைப்பும் மேலிட சித்திரவதையை அனுபவித்தாராம். ஒருவரிடமும் அதற்கும் துப்பாக்கிக் குண்டுகள் இல்லை. அவர் அந்த கிலியிலிருந்து விடுபடாமலேயே மாண்டுபோக, ஏனைய வீரர் பத்திரமாக உயிர் பிழைத்து, மீண்டார்களாம்.
இதேபோல், அறிவின் வாயிலாகத்தான் இன்பங்களையும் நுட்பமாக ரசிக்க முடிகிறது என்றால் தவறில்லை. தன்னை மறந்து ஓர் இயற்கை காட்சியை ஒரு முழு மூடனால் நுட்பமாக இரசிக்க இயலாதுதான். கலாரசனைக்கும் அறிவின் முழு மலர்ச்சிதான் துணை செய்கிறது.
இதுமட்டுமின்றி, வாழ்க்கையில் இன்ப-துன்ப உணர்வுகளுக்கு அதிகமாக வசப்பட்டுத் தன்னை இழக்காமல் அமைதியுடன் எதையும் ஏற்கும் மனப்பண்பு, அல்லது விவேகமும், அறிவினால்தான் சாத்தியமாகிறது.
இந்த உண்மையான படிக்கற்களை வைத்து ஆண் பெண் சமத்துவத்தை நோக்குங்கால், பெண்ணின் தரம் மிகத் தாழ்ந்து நிற்கிறது. அவள் தூலமாகவும் சூக்குமமாகவும் தன் அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் சக்திகளை அறியா தவளாகவே இருக்கிறாள்.
'சவரன்' அவளோடு கூடினாலே அவளுக்கு மதிப்பு உண்டாகிறது. இல்லையேல் எந்த இலக்கமும் இல்லாத பூஜ்யமாகவே அவள் மதிப்பிழந்து நிற்கிறாள்.
சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாகத் திகழும் அவளுடைய நிலையை இன்றைய சமுதாய அமைப்பின் ஆதிக்கக் கோட்பாடுகள் நாலியும் பீலியுமாகக் குதறி எறிய முற்பட்டிருந்தும் ஒரு வார்த்தை கேட்கத் தெரியாதவளாகவே இருக்கிறாள். உயிரற்ற அணிகளால் கவர்ச்சி என்ற பொய்மையைத் தன்னில் ஏற்றிக்கொள்வதையே நல்வாழ்வுக்கான சாயுச்சியம் என்று கருதி, அதற்காகத் தனது ஏனைய மேன்மை நலங்களைப் பணயமாக்க அவள் தயங்குவதில்லை. கற்பொழுக்கம் என்ற கோலினால் அவளைக் குற்றுயிராக அடித்துக் குப்பையில் தள்ளினாலும், அந்த அடியை உவந்து ஏற்றுக்கொள்வது போல் தலை வணங்குவதுடன், குப்பையிலும் தானே வீழ்ந்ததாக, அந்தப் பழியையும் குற்ற உணர்வையும் தானே சுமக்கிறாள். இவளுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது இயங்குவது நின்று எத்தனையோ காலமாகிவிட்டது. அதில் இயற்கையான உயிரோட்டம் கிடையாது. குதிரைச் சேணம் போல் அவளுடைய அறிவுக் கண்களும் சேணம் சுமக்கின்றன. அந்தச் சேணங்களின் பார்வைக்கு உட்பட்டு, அவளது இயற்கையான ஆளுமை மலர்ச்சி குறுக்கப்பட்டு ---
ஏன் இந்த நிலை?
இந்த முடக்கம் எப்படி நேர்ந்தது?
ஒவ்வொரு படிக்கட்டிலும் இவளது அறிவியக்க மலர்ச்சி கட்டுப்படுத்தப்படுவது எதற்காக?
இவள் தன்னைத்தானே உணர இயலாதபடி, பிறவி எடுத்த நாளிலிருந்து ஒருவனுக்காக என்ற கருத்தைச் சுமக்க வைப்பதன் காரணம் என்ன?
பண்பாடு, கலாச்சாரம், சமய மரபுகள் என்றெல்லாம் இனம் புரியாத, தெளிவில்லாத பாசிக் கட்டையை இவளுக்கு உரித்தாக்கி, உயர் கல்வி, அறிவாற்றல், பல துறை ஆய்வுப் பயிற்சிகள், ஆன்மீக நெறியின் சாதனைகள் என்று விரிந்த எல்லைகளில் ஆணுக்குச் சாசனம் பண்ணிக் கொடுத்திருக்கும் முறையும் நெறிகளும் எப்போது, எப்படி யாரால் ஏற்படுத்தப்பட்டன?
இவளுக்குக் கல்வியும் ஏனைய பிற சலுகைகளும் அளித்திருப்பதாக ஆண் சமுதாய அரசியலமைப்பு, தன் பெருந்தன்மையையும் கருணையையும் பறையடித்துக் கொண்டிருந்தும் பாசிக் குட்டையின் சேற்றிலிருந்து விடுபடாத நிலையிலேயே இருப்பது ஏன்?
பாசிக்குட்டை, தன்னை எப்படிப் பிணிக்கிறது? சேற்று மொத்தையா, பளிங்கில் மூடிய குப்பைக் கசடுகளா என்பதைக்கூடச் சிந்திக்கத் தெரியாதவளா? இல்லை. பாசிக் குட்டையே பத்திரம்; இதுவே எழில் மாளிகை. கல்வி, சமத்துவம் என்று வெளி உலகை எட்டிப் பார்த்தாலும், இதன் நிழலில் பணிந்து நிற்பதே மோட்ச சாம்ராச்சியம் என்று அவளுக்கு நாள்தோறும் பல்வேறு சாதனங்கள் உள்ளுணர்வில் போதனை ஏற்றிக் கொண்டிருக்கிறது.
அந்நாள் நீதிநெறிக் கதைகள், புராணங்கள் அவள் அறிவைச் சுயமலர்ச்சியும் இயற்கையான மேன்மைகளும் பெற இயலாமல் போதனை ஏற்றின. முதியோர் வாய்மொழியாக, ஆணைகளாக, செயல்முறைகளாக அவளுக்கு உருவேற்றின.
இந்நாள் பெண் 'கல்வி' பெற்றிருக்கிறாள். எனவே, இதே போதனைகளை, உருவேற்றல்களை, நவீனமான சாதனங்கள் செய்துகொண்டிருக்கின்றன. பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி சாதனங்கள், மிகவும் வலிமையுடன், மிகவும் மென்மையுடன் பெண்களையே குறிப்பாக்கி அதே உருவேற்றல்களை வெற்றிகரமாகச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
எனவே, இந்தப் பாசிக்குட்டையைத் துழாவுவது அவசியம் என்று படுகிறது. ஆணும் பெண்ணும் சமமாகப் பிறந்த மனிதப் பிறவிகளாக இருக்கையில் இவள் மட்டும் எப்படித் தன்னைச் சுற்றி ஒரு பாசிக்குட்டையை வளரவிட அனுமதித்து, அதனின்றும் விடுபடாமல், விடுபட இயலாமல் விடுபடும் எண்ணமே தேவையில்லை என்று பின்னடைந்து அறிவில்லாத சதைவடிவம் என்று தன்னை முடக்கிக்கொண்டாள் என்று பார்க்க வேண்டும்.
வரலாற்று உண்மைகளை அறிவார்ந்து-ஆழ்ந்து துருவிப் பார்க்க வேண்டும். வரலாற்றுச் சிதிலங்கள், புராணப் பாசிகளில், உருவிழந்த மொத்தைகளாகப் போயிருக்கின்றன. ஆராய்ந்த அறிவியலார் ஏற்கனவே கண்ட சான்றுகள், இந்த நமது பக்கப் பார்வைக்கு உதவுமா என்பது ஐயம்.
அறிவுக் கண்கள் சமையலறை இருட்டிலும், பிள்ளைப் பேற்று அறையிலும் குருடாக்கப் பெற்ற காலங்களில் எத்தனை 'ஆதாரங்கள்' மாற்றப்பட்டனவோ? திருத்தப்பட்டனவோ?
எனினும், ஆராய்ச்சி அறிவுப் பாதையில் பட்டறிவு பெற்றிராத நான், எங்கேனும் கிடைக்கக்கூடிய, ஆதாரங்களைத் தேடிப் பற்றிக்கொள்ள முற்பட்டு, உங்களுடன் சேர்ந்து சிந்திக்கத் துணிகிறேன்.
இந்தத் துணிவுக்கு, ஆதாரங்களைக் காட்டிலும் 'பிரத்தியட்சங்கள்' விளக்கமாக உறுதியளிக்கின்றன.
கரைகாணாக் கடலில் பயணம் செய்கையில், கடல் நீரில், செடி, கொடிகள், நிலத்தாவரங்களின் சான்றுகள் காணப்பட்டால் நிச்சயமாகக் கரை இருக்கிறதென்றுதானே பொருள்.
'பாவங்களுக்கு மன்னியுங்கள்!' என்று பிரார்த்தனை வருமானால், மனிதன் மனச்சாட்சிக்கு மாறாகச் செயல்புரியத் துவங்கிவிட்டான் என்பதுதானே உண்மை!
காலந்தோறும் பெண்ணின் நிலை பற்றிய இந்தத் தேடல் முயற்சிக்கும், இத்தகைய கண் உறுத்தும் தடயங்களே ஆதாரங்களாகப் பற்றிக்கொள்ளச் செய்கின்றன.
முதல் சான்று ---
--------------
2 பெண்ணுக்கு மட்டும்
கடவுள் வாழ்த்தை வலியுறுத்தும் பத்துக் குறட்பாக் களையும் படிக்கிறோம். வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் பெற்ற கல்வியும் பயனில்லை. தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற் கல்லால்- பிறவாழி நீந்தலறிது. தர்மங்கள் நிறைந்த சமுத்திரம் போன்ற பகவானிடம் சரணாகதி அடைபவர்களைத் தவிர, மற்றவர் உலகத் துன்பங்களை நீந்தி வெல்ல முடியாது.
இப்படிப் படிக்கையில் ஆண்-பெண் இரு பாலருக்குமே பொதுவாக இருப்பது போல் ஒரு பிரமை உண்டாகிறது.
அடுத்தாற்போல் வாழ்க்கைத் துணை நலம் அதிகாரத்தைப் புரட்டுவோம்.
தெய்வந் தொழாள், கொழு நற்றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
"பெண்ணே! உனக்குக் கொழுநன்தானே வாழ்வு? அவன் உயிரோடு இருப்பது ஒன்றில்தானே உன்னுடைய வாழ்க்கையே தொக்கிக் கொண்டிருக்கிறது? அதனால் அவனையே தெய்வமாகத் தொழு, உனக்கு அதுவே வாலறிவன் நற்றாள். அறவாழி அந்தணன் தான் மற்றும் எல்லாமும்”- என்று அல்லவா சொல்லப்படுகிறது?
ஆனால் இதையே ஆணையாகச் சொல்லாமல், விளக்கெண்ணெய் குடிக்க குழந்தைக்கு ஆசை காட்டுவது போல் இவர்களுக்கு ஒரு பூவாரம் சாத்தப்படுகிறது. 'ராஜாவாச்சே! ஜில்லுன்னு இதைக் குடிச்சிட்டு சர்க்கரையை வாங்கிட்டுக் குதிப்பாளே?' என்று சொல்வது போல, 'உன் கொழுநனைத் தொழுவது ஒன்றைச் செய்தால், நீ மழை பெய் என்று சொன்னாலே பெய்யுமடி' என்ற ஒரு பொய்யாரம் மென்மையாகச் சாத்தப்பட்டு இவளுடைய அறிவை மறைக்கும் முட்டாள்தனத்துக்கு ஒரு பட்டுப் போர்வை போர்த்தப் படுகிறது.
'தற்கொண்டான் பேணி' என்ற தொடரே, ஒருவனுக்கு உடமைப்பொருளாவது நியாயப் படுத்தப் படுகிறது.
‘மூத்த பொய்ம்மை' என்ற சொற்றொடரே மனசில் மின்னுகிறது. ஓர் ஆணைச் சார்ந்து அவனில் தன்னைக் கரைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க வேண்டும் என்ற ஒரு பக்க நியாயம் நெறியாக இந்தப் பெயர் பெற்ற உலகப் பொதுமறை நூலில் வலியுறுத்தப்படுகிறது.
பெண்ணின் முழு அறிவு, ஆற்றல், ஆளுமைச் சிறப்பு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது கற்பு நெறி, என்ற அழுத்தமான ஓர் ஒழுக்க வளையம்தான் என்பது கூர்ந்து சிந்தித்தால் புலனாகிறது. மணவாழ்வு என்பது, வாழ்வின் இன்பங்களும், பயன்களும் ஆணுக்கே உரித்தாக்கி அதன் கடுமைகளையும், துன்பங்களையும் பெண்ணுக்கு உரியவை என்று ஒதுக்கிவிடும். ஒரு நெறியைப் பெண்ணிற்கு விதிக்கிறது. இந்த விதிக்கு மாறாக அவள் நினைத்தாளேயானால், கற்புக்குப் பங்கம் விளைவித்துக் கொள்கிறாள். பெண்ணுக்கு உயிரையும் விடப் பெரிதாகப் போற்றிக் காக்க வேண்டியது இந்த ஒழுக்கப் பண்பு என்பதை விளக்க, எத்தனையோ கதை, புராணங்கள், வழக்கங்கள், சடங்குகள் அவளுக்கு வலியுறுத்தப்படுகின்றன.
குரூபியான கணவன், தொழுநோய் கண்டு அழுகிச் சொட்டுபவன், அவளை அடித்து இம்சித்து நாள்தோறும் அவள் கண்முன் வேறொரு நங்கையுடன் குலாவுபவன், அவள் நலங்களனைத்தையும் சூறையாடி அவளைச் சக்கையாக உதறிவிட்டுக் காணாமல் மறந்து போனவன், என்றெல்லாம் கதைகளில் வரும் கணவன்மார்களை, அவர்கள் மனைவியரான கற்புக்கரசியர், கடைசி வரையிலும் தெய்வமாகத் தொழுது பணி செய்வர். அவன் உதறினாலும் அவன் காலடியில் அழுது கரைந்து, கெஞ்சி அடிமையாக ஏற்றுக்கொள்ள நிற்பர். இக்கற்புக்கரசியர் கணவன் தலைசாயுமுன் தன்னாவியை விடுத்து, அவனுக்கு முன் பரலோகம் சென்று அவனை வரவேற்பார்கள்.
இந்தக் கற்பு நெறியில் இருந்து அவள் மாறினாலோ, அவளுக்கு மரணத்தைத் தழுவுவதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. சமுதாயம் அவளைப் புறக்கணிக்கும்; பெற்றோரும், உற்றாரும், மற்றோரும் அவளை ஏறெடுத்தும் பாரார். இப்படியாகக் கற்பு நெறியின் கூரிய வாள் முனையில் பெண்ணின் சகல மலர்ச்சிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆணும் பெண்ணும் இணைந்து, மக்களைப் பெருக்கும் ஒரே செயலாற்றலில், பெண்ணே கூடுதல் பங்கையும் பொறுப்பையும் ஏற்கிறாள். பெண்ணின் உடல்கூறியல், இந்தச் சிறப்பான அவளுடைய பொறுப்புக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது. தன்னலம் கருதாத் தியாக இயல்பும், நோவு பொறுக்கும் போது அன்பு வடிவாகக் கனியும் தன்மையும் பாசமும், கருணையும் அவர்களுடைய இயற் பண்புகளாக அப்போது முழுமை பெறுகின்றன. ஆணோ, திருமண பந்தத்தினால், இத்தகைய உடலியல் இராசாயன மாற்றங்களுக்கு இயல்பாக உட்படுவதில்லை. இன்பத்தைப் பெறுகிறான். பின்னர் மக்கட்பேற்றின் பயனையும் எய்துகிறான். இவன் எந்த விலையும் கொடுக்காமலேயே இந்த இரு பயன்களையும் பெண்ணின் வாயிலாகப் பெற்று விடுகிறான்.
இதனால், ஆணுக்கு இன்பம் மட்டும் இலட்சியமாகப் பழகிவிடுகிறது; பெண்ணைப் போகப் பொருளாகக் கொள்ளும் ஒரு பங்கும் மேவுகிறது. இது காலப் போக்கில், அவளுடைய குணாம்சங்களையே அணி, பணிகள், ஆடைகள் மற்றும் உடமைப் பொருள்களால் குழைவாக்கி, தன் அச்சுக்கேற்ப ஒரு வடிவமைப்பையும் அவளுக்கு இசைத்துவிட ஏதுவாக, வாழ்க்கை நாகரிகம் வழி வகுத்திருக்கிறது.
பிறவி எடுக்கும்போது, இரு பாலருக்கும் பொதுவாகவே சித்தம், அறிவு என்று சொல்லக்கூடிய மலரும் கூறுகள் அமைந்திருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் என்ற நிலையில், ஒரே சமமான, இரு பாதிகளாக இல்லாவிட்டாலும், இருவரும் இணைந்த சேர்க்கையே முற்றிலும் நிறைவான முழுமையாகப் படைக்கப் பட்டிருக்கின்றனர்.
மிகவும் புராதனமான இந்திய சமயம் சார்ந்த கருத்துப்படி படைப்புக் கடவுள் தாமே இரு பகுதிகளாகப் பிரிந்து ஆணென்றும் பெண்ணென்றும் சக்திகளைத் தோற்றுவித்தார் என்றும், இவரே ஆதி ஸ்வயம்புவன் என்றும் மனைவி சத்ரூபி என்றும் பெயர் பெற்றனர் என்றும் புராணம் கூறுகிறது. இந்தக் கோட்பாட்டின்படியே ஒருவருக்கு மற்றவர் அடக்கம் என்ற குறிப்பு நிச்சயமாக இல்லை.
மனிதகுல வரலாற்றின் வழி நோக்குங்கால், தங்கள் இனத்தை ஏனைய கொடிய விலங்குகளின் தாக்குதலினின்று காப்பாற்றிக் கொள்ளவும், இயற்கையின் கொடிய விளைவுகளில் இருந்து தப்பவும், மனிதர் ஆதியிலிருந்தே இணைந்த குழுக்களாகத்தான் திரிந்தனர். உணர்ச்சி வெளியீடுகளின் விலங்குத்தனமான வெளிப்பாடுகள், ஒலிக்குறிகளாக, மொழியாக மலர்ந்தது. குத்திக் கிழித்துக் கொலை செய்யும் விலங்குத்தன்மையிலிருந்து படிப்படியாக மென்மையான இயல்புகளுக்கு மெருகடைந்தனர்.
அந்த ஆதி நாட்களில், மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயே முதன்மை பெற்றிருந்தாள். குழுமக்கள் அத்தாயின் பெயராலேயே வழங்கப்பெற்றிருந்தனர்.
ஒரே குழுவுக்குள் கலந்து இனம் பெருக்கிய நிலை மாற, வெவ்வேறு குழுக்களின் ஆண் பெண் இணைந்து சந்ததி பெருக்கும் முறை வந்த பின்னரும், புதிய இனக்குழுக்கள் தாய் வழியே அறியப்பட்டன.
சுவிஸ் நாட்டு பச்சோஃபெண் (Bachofen) என்ற மானிட இயல் அறிஞர், ஆதியில் மனித இனம், எந்த நியதியும் இல்லாத பாலினக் கலப்பில் விலங்கு நிலையில்தான் பல்கிப் பெருகினர்; அந்த நிலையில் தாய் வழிதான் முதன்மை பெற்று, பின்னரே குடும்பத் தலைவர் தந்தை என்ற முக்கியத்துவம் பெற மாற்றம் கண்டனர் என்று தகுந்த காரணங்களுடன் விளக்கினார். ஆனால் பல நூற்றாண்டுக் காலமாக, ஆணே உயர்ந்தவனென்று வலியுறுத்தப்பட்டு, சகல கண்ணோட் டங்களிலும், ஆணாதிக்கம் முதன்மைப் படுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுவாதிகளும், சமய குரவர்களும் இந்தக் கருத்தைத் தம் கோட்டையைக் குறிபார்த்து ஊதப்பட்ட அபாயச் சங்கொலியாகவே கருதினர் எனலாம்.
இந்த நிலையில் 'வெஸ்டர் மார்க்' என்ற அறிஞர் 'மனித இனம் ஒருவனுக்கு ஒருத்தியாகத்தான் ஆதியிலிருந்தே வளர்ச்சி பெற்றது; பின்னரே உயர்வு சிதைவாகப் பலதார மணமுறை வந்தது' என ஒரு போடு போட்டார். இந்த ஒழுக்கப்படுத்தும் ஆராய்ச்சிக் கருத்து தீவிர சமயவாதிகளுக்கும் மரபு வெறியர்களுக்கும் மிகவும் உவப்பாக இருந்தது. இவர் தமது முடிவுக்கு இன்னும் சப்பைக்கட்டுகளும், குஞ்ச ஜோட னைகளும் அமைக்கும் பல பிரசுரங்களை வெளியிட்டார்.
இந்தச் சலசலப்புக்கள், ராபர்ட் ஸ்டீஃபன் ப்ரிஃபால்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞரின் சிந்தனைகளுக்குத் தூபம் போட நுண்ணிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, 'தாயர்' (mother) என்றொரு நூலைப் படைத்தார்.
பெண் தலைவியாக அரசோச்சினாள் என்று அந்த ஆதி இனக் குழுவினரைப் பற்றித் தீர்மானமாக வரையறுக்காமல், ஆனால், சமுதாயம் சார்ந்து பெண்களே முதன்மை பெற்றிருந்தனர் என்பது அவர் கருத்து.
பொதுவாக, திருமணம் என்று வரும்போது, ஆண் பெண்ணின் வீட்டுக்கு வந்து தங்கிவிடுதல் ஒரு முறையாகவும், பெண் ஆணின் வீட்டுக்கு வந்து தங்கிவிடுதல் ஒரு முறையாகவும் இருக்கின்றன.
ஆண் பெண்ணின் வீட்டுக்கு வர, பெண் கணவன் வீட்டுக்குப் போகமாட்டாள். இது தாயர் முதன்மை இடம் பெறும் அமைப்புக் குடும்பங்கள்.
திருமணம் என்ற சொல்லே அதிகப்படியாக இருந்த காலத்தில், ஒரு குழுவைச் சேர்ந்த ஆண் இன்னொரு குழுவைச் சேர்ந்த பெண்ணை வரித்தால், சாதாரணமாக அக்குழுப் பெண்கள் அனைவருடனும் அவர் தொடர்பு கொள்ளும் மணமுறை வழக்காயிற்று. இவ்வாறே, ஆண்கள் பலரும் வரிக்கும் மாற்றுக்குழுப் பெண்ணுடன் நேர்கோட்டு , நியதி பிறந்திராத காலத்தில் இதைப் பலதார மணவழக்கு அல்லது பலநாயகர் மணவழக்கு என்று பெயரிட்டு வழங்குவதற்கில்லை.
ஒரு குழுவுக்குள்ளே கலப்புக்கள், நன்மையானவை அல்ல என்று தெளிந்து கண்ட நாகரிக முன்னேற்றம் பல வேறு குழுக்களின் சம்பந்தத் தொடர்புகளாக மாற்றம் பெற்றன. இந்த மாற்றத்திலும், ஆணே, பெண்ணைத் தேடி வருவதாக இருந்திருக்கிறது.
நீலகிரிப் பழங்குடியினரிடையே, மிக அண்மைக் காலம் வரையிலும், திருமணத்துக்குப் பெண் கேட்கச் செல்கையில், பணம் அல்லது பொன் கொண்டு செல்வதும், அப்படிக் கொண்டுவந்த பெண், வந்த குடும்பத்துச் சகோதரர்கள் எவரை விரும்பினாலும் சம்பந்தம் செய்து கொள்வதும் முறையாக இருந்தது. ஏழையாக இருக்கும் இளைஞன், பெண் வீட்டோடு வந்து இருந்து, அவர்கள் குடும்பத்துக்குரியவனாகவே உழைப்பான். சில ஆண்டுகள் இவ்வாறு கழிந்ததும், பெண்ணை மணந்து கொள்ளுவதற்குரியவனாகிறான். அஸாம் பிரதேசத்துப் பழங்குடியினரிடையே, இத்தகைய மரபுகளின் சுவடுகள் இன்னும் மறைந்து விடவில்லை.
தாய்ச் சம்பிரதாயத் திருமணத் தொடர்புகள், வடநாட்டில் கோன்ட், ஸந்தால், குண்டா போன்ற தொல்குடி இனத்தாரிடம் இன்னும் நிலவுகின்றன. சில இனத்தாரிடையே, கணவன் இரவுணவு முடித்துப் பின்னரே மனைவியைக் காண வருகிறான். வேறு எந்த வகையிலும் அவளைக் கட்டுப் படுத்துவதில்லை. குடும்பத்துச் சொத்துரிமை பெண்ணுக்கே இருந்தது.
தொல்குடி மக்களில் சிலரிடையே இப்படியும் கூட ஒரு வழக்கு நிலவுகிறது. பெண்ணுக்கென்று ஒரு சிறு தொகை கொடுப்பதற்கு இயலாத வறிய இளைஞன், திருமணம் புரிந்து கொண்டபின் மனைவியையோ குழந்தைகளையோ அவள் இடத்தை விட்டுப் பெயர்த்துச் செல்வதில்லை என்று வாக்களிக்கிறான்.
தென் இந்தியாவில், நாயர் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே, தாயகச் சம்பிரதாயம் நிலவி வந்திருப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
திருமணம் புரிந்துகொண்டு தனது வாழ்விடத்தை நிர்ணயிப்பது பெண்ணைச் சார்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் விலங்குகளின் வாழ்க்கை முறையினின்றும் மனிதர் பின்பற்றிய முறையாக இது கருதப்பட்ட போதிலும், நாகரிக வளர்ச்சியை எய்தியிராத தொல்கடிச் சமுதா யத்தினரிடையே பெரும்பாலும் பெண்ணின் சமுதாய மதிப்பும், சுதந்திரமும், ஆணுக்குச் சமமான உரிமைகளும், போற்றற்குரியவனவாகவே இருக்கின்றன. மிக நாகரிகமான நவீனமான பெண்ணுரிமைச் சமுதாயத்திலும்கூட இந்த மதிப்பும் உரிமைகளும் இந்நாள் பாதிக்கப் பட்டிராமல் இல்லை.
பெண்ணிருக்குமிடம் வந்து ஆண் சம்பந்தம் செய்து கொண்டு தங்கிவிடும் வழக்கு பின்னர், பொன்னோ பொருளோ கொடுத்து அழைத்துச் செல்லும் நடைமுறைக்கு வந்ததும், இந்நாள் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும்கூட, மணமகன் வருவதும், பெண் வீட்டிலேயே அந்தச் சடங்குகளை நடத்துவதும், பண்டைய பழக்கத்தின் சிதிலமாகிப் போன சிறு சுவடு என்றுகூடச் சொல்லலாம்.
இந்தியாவில் இன்னமும் சில பிரிவினரிடையே திருமணம் முடிந்ததும் உடனே பெண் தாய் வீட்டை விட்டுச் சென்று விடுவதில்லை. குறிப்பிட்ட காலம் வரையிலும் தங்கிய பின்னரே கணவன் வீடு செல்கிறாள் இவள். சில பழங்குடி இனத்தாரிடையே திருமணச் சடங்கு முடிந்ததும் பெண் வீட்டிலேயே, மணமகளையும் மணமகனையும் சில நிமிடங்கள் ஓர் அறையில் இருக்கச் செய்கிறார்கள்.
திருமண விருந்து முதலில் பெண்ணின் வீட்டில் படைக்கப்படுவதாக இருப்பதும்கூட, பெண்ணின் மேலான சமுதாய மதிப்பை விளக்கும் அம்சம்தான்.
"உயர் பதிவிக்குரிய, பரீட்சையில் தேர்வு பெற்ற முதல் வகுப்பு வங்கி அதிகாரியாகப் பதவியேற்றிருந்தாயே, ஏனம்மா வேலையை விட்டுவிட்டாய்?"
“ஓ, என்ன செய்வது அம்மா. என்னை எங்கோ குஜராத்திய மாநிலத்துக் கிராமத்துக்கு மாற்றிவிட்டார்கள். மேலும் திருமணமாகிவிட்டது. கணவன் வீட்டார் வேலையை விட்டுவிடச் சொல்லிவிட்டார்கள். கையில் இப்போது ஒரு வயதுக் குழந்தை இருக்கிறது. வேலை இருந்தால் பிரச்னைதானே? விட்டேன்.” இப்படி வேலையை விடும் நமது இளம்பெண்கள் இந்நாள் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.
இதுவே பல்லாயிரக்கணக்கான நாகரிக வளர்ச்சியின் அடையாளமா?
----------------
3. சிறகா? பொன்கூண்டா ?
அணிமையில் இளந்தோழி ஒருத்தியைச் சந்தித்தேன். மருத்துவக் கல்வியை முடித்து கிராமம் ஒன்றில் பயிற்சிப் பணி ஆற்றினாள்.
மிகுந்த ஆர்வமும் ஆவலுமாகக் கிராமப்பணி அநுபவங்களை என்னிடம் எடுத்துரைத்தாள். பால்வினை நோயுடன் வரும் கிராமத்து ஆணாதிக்க வருக்கங்களைப் பற்றிச் சொல்கையில், அவர்கள் நாவிலிருந்தே உண்மையை வரவழைக்கும் யுக்திகளைப் பற்றி விவரித்தாள். அவளுக்கு உள்ளூற ஒரே வெற்றிக் களிப்பு. அதே சமயத்தில் எளிய மனைவி மக்களின் தீராத பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுவதைக் கூறுகையில் முகத்தின் ஆழ்ந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. மனித வாழ்க்கையின் ஜீவாதார உரிமைகளில் குறுக்கிட்டு, கட்டுப்பாட்டை வலியுறுத்தும் போதுகூட ஆணைவிடப் பெண்ணே அதிகமாகப் பாதிக்கப் பெறுவதை உணர்ந்து வருந்துகிறாள். இவளுக்கு கிராமங்களில் ஊன்றி மருத்துவப்பணி செய்யும் பேரார்வம் முகிழ்த்திருக்கிறது. இத்தொழிலை இலட்சியப்பணி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்று நிற்கிறாள்.
ஆனால்....(ஆனால் போட்டாக வேண்டி இருக்கிறது.)
இவள் பெற்றோர், குடும்பத்து மூத்தோர், இவள் எதிர்கால வாழ்க்கையின் முக்கியத்துவம் திருமணத்தை ஒட்டியதாகவே இருப்பதாகக் கருதுகிறார்கள் 'கருதுதல்' என்று சொல்வது கூடச் சரியில்லை. அதாவது, பெண்ணின் பிறந்த வீட்டுத் தொடர்பாகிய முதல் கட்ட, இரண்டாம் கட்ட வளர்ச்சிகளில் இறுதி நிகழ்வு, கோலாகலமாகிய திருமணம் தான். இந்தச் சோதனையில் அவள் வெற்றி பெற்றாக வேண்டும். சமூக மதிப்புகள் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆணைச் சார்ந்தே வந்து இசைகிறது. இந்த நியதியை ஒரு பெண் தனிமனித நிலையில் நின்று உடைக்க முடிந்திருக்கவில்லை, இதுகாறும்.
எனது இளந்தோழியின் வீட்டார் என்ன நினைக் கிறார்கள்? இங்கும் மூன்று தலைமுறைக்காரரின் கருத்துக்கள் குடும்பத்தில் மோதி, பிரச்சனைகளை ஆழமாக்குகின்றன. படிப்பாவது, இன்னொன்றாவது? வயது இருபத்து நான்கென்றால், இதற்குள் திருமணம் முடிந்து ஒரு குழந்தையை ஏந்தியிருக்க வேண்டும். இனிமேலும் தாமதமா? எப்படியேனும் திருமணத்தை முடித்தாக வேண்டும். இல்லையேல் குடி முழுகிப் போய்விடும்...என்பது மூத்த தலைமுறைப் பிடிவாதங்கள்.
அடுத்த தலைமுறைக்காரரான பெற்றோரோ, அரும்பாடுபட்டு, மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, அவளை எத்தனை நெருக்கத்தினூடே படிக்க வைத்திருக் கிறார்கள். மகளின் ஆர்வமும், அறிவுத் திறனும் துலங்க ஊக்கம் கொடுத்து, அவளை முழுமையாக விளங்கச் செய்திருக்கிறார்கள். எனவே அவள் விருப்பப்படியே மேலும் இன்னும் சிறப்புப் பயிற்சி பெறவும், தொழில் புரியவும் அநுமதிக்கவில்லையெனில் தவறு என்று கருதுகிறார்கள்.
ஆனால் திருமணம் என்ற நிகழ்வு தம் மகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலே போய்விடுமோ என்று அஞ்சவும் அஞ்சுகிறார்கள். அவளுக்குரிய கணவரைத் தேட வேண்டும்.
அங்கும் பிரச்னை இருக்கிறது. அவன் இவளுக்கு முழு உரிமை அளிப்பானா? சமமாக நினைப்பானா? தொழில் ரீதியான பொறாமை வேறு தூபம் போடாமல் இருக்குமா? இவள் கிராமத்தில் பணிபுரிவதை அனுமதிப்பானா? ஒத்துழைப்பானா? இவள் தனித்திறமையை மதித்துப் பெருமை கொள்வானா?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவம் பயின்ற பெண்களால் ஆதாயம் இருக்கிறது என்று உணர்ந்து, மருத்துவம் பயின்ற பெண் வேண்டும் என்று திருமண விளம்பரங்களில், தேவை விளம்பரம் செய்பவர்கூட என்னென்ன முக்கியமான அம்சங்களைக் குறிக்கிறார்கள்!
Slim, Fair, Tall...ஒல்கி, ஒசிந்து உயரமாக சிகப்பாக..... என்று எந்த ஆணும் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கு இலக்கணம் வகுத்து நிபந்தனை போடுகிறான்.
எந்தப் பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணைவனாகக் கூடிய ஆண் இப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக விளம்பரம் செய்துவிட முடியாது. அவள் வேண்டுமானால் கனவு காணலாம். வெளிப்படையாகப் பெற்றோர் கோரக் கூடியதெல்லாம் படிப்பு, உத்தியோகம் அல்லது தொழில், பொருளாதாரம் சார்ந்த நிலை, சாதி போன்ற பொதுத் தகுதிகள்தாம். தனித்தன்மை பற்றிக் கேள்வி கிடையாது. அத்துடன் அவளுக்கு மடமை அச்சம் ஆகிய குறைகள் சிறப்பானவை, 'பேதமை என்பது மாதரணிகலம்' என்று வலியுறுத்தப்பட்ட வாசகம்.
அவள் ஒல்கி ஒசிந்து கொடியாய்த் துவண்டு மானின் மருண்ட விழிகளால் தனது அச்சத்தையும் சஞ்சலத்தையும் குறிப்பால் உணர்த்திக்கொண்டு ஆண் ஒருவனுக்காகத் தவிப்பவளாக இருக்க வேண்டும்.
இந்த இலக்கணங்களில்லாமல், அறிவு, சிந்தனைத் திறம், உடலாற்றல், தொழிற்பயிற்சி ஆகிய கூறுகளுடன் ஒரு பெண் இருந்தால் அவளுடைய மேன்மை ஆற்றலை அவனால் பொறுக்க இயலாது. அவள் தலைமீது கை வைத்து (அல்லது கால் வைத்து) அழுத்திக் கொண்டு ஆதிக்க அரசோச்ச முடியாது. அதற்காக அவளுடன் எதிரிட்டுப் போர் புரிய இயலுமா?
பெண் வலிமை மிக்கவளாக முதன்மைக் கூறுகளுடன் விளங்கினால் நேருக்கு நேர் நின்று விரோதிகளை முறியடிப்பதுபோல் போராடவும் இயலாது. ஆதித்தாய் இவளில்லாமல் சமூக உற்பத்தியே நடக்காது. எனவே இவள் பகையரசன் அல்ல.
மிருகங்களையும், ஏனைய பறவையினங்களையும் அடித்துத் துன்புறத்தி, அடங்கினால்தான் உயிர் வாழத் தேவையான உணவு என்று வழிக்குக் கொண்டு வரலாம்.
ஆனால் பெண்-இவள் சூக்குமமான அறிவுடையவள். நுட்பமான உணர்வுகளால் இன்ப துன்பங்களைப் புலப்படுத்தக் கூடியவள். அவனுக்கு இல்லாத மென்மையான
ஆற்றல்கள் இவளுக்கு இயல்பாக இருக்கின்றன.
இவள் தாய்; ஆக்குபவள்; பெற்றுப் பேணி வளர்ப்பவள்; அன்பும் கனிவும் கொண்டவள்; அத்துடன் வலிமை பொருந்தியவள்; வேட்டையாடுகிறாள், பகைவர்களை மூர்க்கமாக எதிர்க்கிறாள். குருதி கண்டு அஞ்சுபவளில்லை. பாதகம் செய்பவரை மோதி மிதிக்கும் ஆங்காரமும் இவளுக்கு இயல்பு. பழிவாங்கும் குரூர வெறியும் இவளுக்குப் புறம்பானதல்ல. இயற்கையுடன் ஆணைவிட நெருங்கியவள். நெருப்பாகவும், நீராகவும், கல்லாகவும், கனியாகவும் இருக்கக்கூடிய எதிர்மறைத் தன்மைகளின் இருப்பிடம்.
இன்றைய என் இளந்தோழி Slim, Fair என்ற ஒல்லி சிவப்பு இலட்சணங்களில் நெருங்காதவள். அவள் வாட்டசாட்டமாக இருக்கிறாள். உடை உணவு என்ற தேவைகளில் வசதி வலிமை என்ற கூறுகளையே முதன்மைப்படுத்துகிறாள். உழைப் பாற்றலும் சோர்விலா மகிழ்ச்சியும் உடையவளாக இருக்கிறாள்.
இவளில் அந்தப் பழந்தாயாரின் ஆதிப்பெண் மக்களின் அழகை நான் உணருகிறேன். வாயைத் திறந்து வைத்துக்கொண்டு பல்லைப் பிடுங்கிக் கொள், பொம்மையாக
அழகுப்பொருளாக வளைய வருகிறேன் என்று இவள் சொல்லமாட்டாள்.
இவளைக் கண்டபின் மீண்டும் சிந்தனை அந்த ஆதித் தாயாரின் பால் செல்கிறது. பல்லைப் பிடுங்குவதுபோல் ஆற்றல்களைப் பறிக்க, அறிவை முடமாக்க அந்தத் தாயார் எப்படி அனுமதித்தார்கள்? பெண் என்ற மொத்த சக்தியின் கூறுகள்; ஒட்டுமொத்தமாக சிதைக்கப்பட்டனவா, அன்றி அழகு என்ற தங்கக் கூட்டுக்குள் அவளுடைய இயல்புகள் மென்மையாகச் சிறை செய்யப்பட்டு வளர்ச்சிகள் முடமாக்கப்பட்டனவா?
மனித இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நாட்களிலிருந்தும், நாகரீகமடைந்து ஆண்-பெண் சேர்ந்து வாழ்தலுக்குரிய நிகழ்ச்சிகள் திருமணங்களால் பரிணாமம் எய்தின. பிறகுகூட பெண் சமுதாய முதன்மை பெற்றிருந்தாள் என்பது தெளிவாகிறது.
சீனத்தின் மிகத் தொன்மையான சமூக வரலாறு மிகத் தெளிவாக இல்லை.
நமக்கெல்லாம் அணிமைக் காலங்களில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சிக்கு முந்தைய சமூகம் பற்றித் தெரிந்ததெல்லாம் தந்தை வழி நெறிப்படுத்தப்பட்ட குடும்ப அமைப்புகளும், மிக இறுக்கமாக நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகளும்தாம். பிஞ்சுப் பருவத்தில் பெண் குழந்தைகளின் கால்களைக் கட்டிப்போட்டு தூலமாக அவளுடைய வாழ்வையே முடக்கி வைத்த ஆணாதிக்க சமுதாய முறையே நிலவி வந்தது.
ஆனாலும் ஆராய்ச்சி அறிஞர் சீனத்தின் தொன்மையான சமூக அமைப்பின் பல சான்றுகள் தாய்வழி முதன்மையைத் தெளிவாகத் துலக்குவதாகக் கண்டறிந்திருக்-கின்றனர்.
மனைவியின் வீட்டுக்குறியவனாகவே கணவன் வாழ்வதும் மனைவியின் குடும்பப் பெயரையே தனக்கு ஏற்றுக் கொள்வதும் பரம்பரையைத் தாயின் தரப்பாகவே கணிப்பதும் வழக்கில் இருந்திருக்கின்றன.
சில பகுதிகளில் பெண்கள் கணவன் வீட்டுக்குச் சென்று அவர்கள் ஆதிக்கத்தில் அல்லலுறும் வழக்குக்கு எதிராகத் திருமண மறுப்புச் சங்கங்களைத் தோற்றுவித்த செய்திகளும் தெரிய வருகின்றன. இச்சங்கம் சார்ந்த பெண்கள், மணம் புரிந்துகொள்ளும் கணவன்மார், தங்கள் வீடுகளில் வந்து தங்க வேண்டும் என்ற நிபந்தனைமீதே திருமணத்துக்கு உடன்பட்டனர்.
சீனத்துத் திருமண முறையே, சீன சமுதாய நாகரீகத்தின் தந்தையாக மதிக்கப்பெறும் (Fuhi) ஃப்யூஹி என்ற நாயகரால் நிலையுறுத்தப் பெற்றதாகக் கருதப்படுகிறது. அவரே தம் தந்தையை அறியாதவர். எனவே அதுவரையிலும் தாய்வழிச் சமுதாயமே வழக்கில் இருந்திருக்கிறது.
பல அரசிகளின் ஆட்சி வரலாறுகள் தெரிகின்றன. அரச குடும்பங்களில் பதினெட்டு வயசுக்கு வராத சிறுவன் ஆட்சி உரிமை பெறுபவனாக இருந்தால் தாயே ஆட்சி புரிந்தாள்.
ஜப்பான் நாட்டில் தந்தை வழி நடைமுறை, பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது எனலாம். அதற்கு முந்தையை காலத்தில் கணவன், மனைவி வீட்டுக்கு வந்து போவான். குடும்பம் தாயின் பெயராலேயே துலங்கியது.
இதேபோல் பண்டைய யூதர்களிடையேயும், அரேபி யாவிலும், தொன்மையாகக் கிடைக்கக்கூடிய சான்றுகள் பெண்ணின் முதன்மையையே தெளிவாக்கு கின்றன. மிகத் தொன்மையான ஹீப்ரு மொழி இலக்கியம் ஹீப்ரு இனத்தாரை, ஒரு பெண்ணே தலைமை தாங்கி நடத்திச் சென்றதாகச் செப்புகிறது. அரேபியா நாட்டில் நீதி வழங்குவோரும் அரசோச்சுபவரும் பெண்களாக இருந் திருக்கின்றனர். ஷீபா மகாராணியைக் கேள்விப் பட்டிருக்கிறோம் இல்லையா? பண்டைய அரேபியர் களிடையே பெண்ணே சொத்துரிமை பெற்றிருந்தாள். கால்நடை மந்தைகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பெண்களே திகழ்ந்தனர். கணவன்மார் அம்மந்தைகளைப் பேணிக் காப்பவர்களாகத்தான் இருந்தனர். இஸ்லாமிய சமய ஸ்தாபகரமான நபிகள் நாயகம் அவர்களே தம் மனைவியின் வாயிலாகப் பெற்று செல்வம் கொண்டே தம் கொள்கைகளை எங்கும் பரப்ப முடிந்தது.
பண்டைய ஆரோக்கியர்களிடையே ஏழு சான்றோர் இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரும் பெண்களேயாம்.
இன்றைய அரேபியா, மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் இரும்பு ஆணைகளுக்கிடையே மனித உரிமைகளையே இழந்த பூச்சிகளாக வேதனைப்படும் பெண்களை இங்கே நினைத்துப் பார்ப்போம். எத்தனை வீழ்ச்சி!
பண்டைய எகிப்திலும் தாய்வழி முறையே குடும்ப அமைப்பின் ஆதாரமாக நிலவியது. 'தாலமி' வமிசத்தினரின் சான்றாதாரங்களாகக் கிடைத்திருக்கும், “கணவனான உன்னை நான் வெறுத்தாலோ அல்லது வேறு ஒரு மனிதனை விரும்பினாலோ நான் நீ அளித்த பரிசுப் பொருளைத் திருப்பி விடுகிறேன்” என்பது ஒரு பதச்சோறு.
பண்டைய எகிப்தில் சொத்து சகோதரனுக்கன்றி சகோதரிக்குச் சென்றுவிடக்-கூடியதொரு காரணத்தினாலேயே சகோதரன் சகோதரி திருமணம் அதிகமாக வழக்கிலிருந்ததாகத் தெரிய வருகிறது.
இத்தகைய மணமுறை கிறிஸ்து பிறந்து இரண்டாம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததாம். வேதகால ஆரியச் சமுதாயம் தந்தை வழிக்குடும்பங்களின் சமுதாய அமைப்பாகவே திகழுகிறது. ஆனால் அதற்கும் முந்தைய சமுதாய உண்மைகளை, பல்வேறு தொல்குடி இனத் தாரிடையேயும் மலை மக்களிடையேயும் நிலவும் பழக்க
வழக்கங்களில் இனம் காண முடிகிறது. நாயர் வகுப்பினரின் கூட்டுக்குடும்பம் ‘தறவாடு' எனப்படும். மூத்த ஆண், சகோதரி மக்களின் உரிமைகளை, தான் பாதுகாத்துப் பேணுவார்.
ஆசாம் பிரதேசத்து 'காரோ' இனத்தினர் 'காஜி' குடியினர் இதேபோல் தாய்வழி மக்களாகவே அறியப் படுகின்றனர்.
வருணம், மற்றும் சாதிப்பிரிவுகள் தோன்றியதும் உயர்வகுப்பு ஆண், தாழ்ந்த வகுப்பு என்று கருதக்கூடிய பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டதும், குழந்தை மணத்தை வழக்காக்கியதும், 'சதி' என்று நெருப்பிலிட்டுப் பெண்ணை எரித்ததும் பெண்ணின் வீழ்ச்சியை முழுமை யாக்கித் தீர்த்தன.
இந்நாள் ஒட்டுமொத்தமாக பாரத சமுதாயம் என்று வளர்ந்துவிட்ட சமுதாயத்தின-ரிடையே எத்தனை பிரிவுகள் !
ஆனால் பெண்ணை இரண்டாம் பட்சமாக வைக்கும் ஒரே நெறியான அத்தனை வேற்றுமை இழைகளையும் பின்னி இறுக்குகிறது.
சிறகைப் பிய்த்துக் கூண்டில் அடைத்து அலங்காரமாக வீட்டில் தொங்கவிட்டு "வீட்டுக் கிளி கொஞ்சுகிறது'' என்று சொல்லுகிறோமே, அது நினைவுக்கு வருகிறது.
“பாரத கலாசாரத்தையும் ஒருமைப் பண்பையும் பெண்களே காப்பாற்றுகிறார்கள்! ஆனால் எத்தனை மாறினாலும் வழிதவறிப் போனாலும் பெண் தனது கோட்டிலிருந்து வழுவாமல் நின்று அவனை வாழ வைக்கிறாள். அவளாலல்லவோ பாரதப் பண்பாடு காப்பாற்றப்படுகிறது."
இந்தப் புகழாரம், சிறகு பிய்த்தெறியப்பட்டது தெரியாமலிருக்க வழங்கப் பெற்றிருக்கும் பொற்கூண்டு.
-----------------------
4. வேதத்தில் என்ன இருக்கிறது?
'ருக்வேத காலத்துப் பெண்கள்' என்ற நூலுக்கு முன்னுரை எழுதுகையில் இந்திய தத்துவப் பேரறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருமணம் என்ற ஓர் ஒழுங்குமுறையும் அதன் பல்வேறு கூறுகளும் வராலற்று ரீதியான ஆய்வில் அந்தந்தக் காலத்துச் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சார்ந்து அமைவதாகத் தெளிவுபடுத்துகிறார்.
"திருமணம் என்பது வெறும் இயல்பூக்க விவகாரமன்று. ஆனால் இயல்பூக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப் பெற்ற ஓர் ஒழுங்குமுறை. இருவேறு உள்ளங்களின் ஆளுமை ஆற்றல்கள் ஒருவருக்கொருவர் என்று பிணையும் அநுபவங்களில் மகிழ்ச்சியும் காதலும், துன்பமும் உடன் பாடுகளும் துயரங்களும் அடங்கியவை" என்று அவர்
குறிப்பிடுகிறார்.
இந்தக் குறிப்பில் 'தற்கொண்டான்' என்று ஒருவனிடம் பெண் தனது தனித்தன்மையை மலர வைக்கும் அறிவு, ஆற்றல், திறமை ஆகிய எல்லா மேன்மைகளையும் கரைத்துத் தன்னை முற்றிலுமாக இழந்துவிட வேண்டும் என்ற கோட்பாட்டின் இழைகூட ஊடாடி இருக்கவில்லை.
வேதங்கள் தொகுக்கப்பட்ட காலத்தை ஆராய்ச்சியாளர் கி.மு. 1300-ம் ஆண்டிலிருந்து 900-ம் ஆண்டு வரைக்குட்பட்ட காலமாக, ஏறக்குறைய வரையறுக்கின்றனர். பண்டைய ஆரிய சமுதாயத்தைப் பற்றிய தகவல்களை, முதன் முதலாகக் கொடுக்கும் இலக்கியச் சான்றுகளை இந்த வேதப் பாடல்களின் வாயிலாகவே அறிய முடிகிறது. இவற்றுள், 1028 பாடல்களை உள்ளடக்கியதும் மிகவும் புராதனமாக விளங்குவதுமாகிய ருக்வேதமே நமக்கு அக்கால வாழ்வைப் பற்றிய ஏராளமான சான்றுகளைத் தருகிறது.
அடுத்து யஜுர்வேதம், ருக்வேத காலத்துக்கு ஏறக்குறைய ஒன்றிரண்டு நூற்றாண்டு-களுக்குப் பிறகும், அதர்வண வேதம் இன்னும் பிந்தியும் முறைப்படுத்தப் பட்டதாகவும் ஊகிக்கின்றனர்.
இவற்றுள் முந்தைய யஜுர்வேதம், யாகங்கள் செய்யும் முறைகளைப் பற்றிய முக்கியமான வழிமுறைகளை முதன்மையாக்கியும், அதர்வண வேதம், மந்திர தந்திரங்கள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை முதன்மையாக்கியும் தொகுக்கப் பட்டிருக்கின்றன. ஸாம வேதம், ருக் வேதத்தைச் சார்ந்த துதிப்பாடல்களே. எனவே, சமுதாய வாழ்க்கை பற்றிய வரலாற்றுச் சான்றுகளை, முதல் வேதமாகிய ருக் வேதப் பாடல்களிலிருந்தே பெற முடிகிறது.
இந்தப் பாடல்களில் பெண்கள், ஒளியும் வீரியமும் ஒடுங்கிப்போன இல்லத்துப் பறவைகளாகவோ, உரிமைகளற்ற உடமைப் பொருளாகவோ விவரிக்கப்-பட்டிருக்கவில்லை. இக்காலத்தில், சமுதாயம் தந்தை வழிக் குடும்பங்களின்
தொகுதிகளாகவே நெறிப்படுத்தப்பட்டுவிட்டன. என்றாலும், சில குடும்பப் பெயர்கள் தாய் வழி நினைப்பூட்டுவதாகவும் இல்லாமல் இல்லை.
'வேதகால' ஆரியர் யார், அவர் எவ்வாறு இந்தியாவுக்கு உரியவராக ஆயினர் என்ற ஆராய்ச்சியே மிக ஆழமானது.
'ஆரியர்' என்ற சொல் 'அரி' என்ற மூலத்திலிருந்து உருவானது என்றும் அச்சொல்லுக்கு அந்நியர் என்று பொருள் கொள்ளலாமென்றும் கருதப்படுகிறது. இக்குழுவினர் இந்தியாவிற்கு வடமேற்கில் வட்சு நதிக்கரையில் இருந்து காந்தாரத்தில் புகுந்து பாஞ்சாலத்தை நோக்கி முன்னேறி வந்திருக்கலாம் என்றும், இவர்களை இந்தோ இரானியர் என்று குறிப்பிடலாம் என்றும் புகழ் பெற்ற வரலாற்று இலக்கிய ஆசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் குறிப்பிடுகிறார். அவருடைய 'வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலில் மானிட சமுதாயத்தினரின் வாழ்வு எவ்வாறு நாகரிகப் பரிணாமம் பெற்று வந்திருக்கிறதென்பது விவரிக்கப் பெறுகிறது.
கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த இந்தோ இரானிய சமுதாயத்தினரைப் பற்றி அவர் விவரிக்கிறார்:
வட்சு நதிக்கரையின் வடபுலம், இன்றைய சோவியத் ஒன்றியத்தின் தாஜிகிஸ்தான் குடியரசிலும், தென் பகுதிகள் ஆப்கானிஸ்தானத்துக்கு உரிய பிரதேசங்களாகவும் இன்று திகழ்கின்றன.
வட்புலத்தில் அந்நாள் வாழ்ந்த சமுதாயத்தினர் ‘மனிதன் ஒரே இடத்தில் இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை' என்ற கொள்கை உடையவர்களாக வாழ்ந்தனர்.
மலைச்சரிவுகளிலும் சமவெளிகளிலும், ஆடுமாடுகளையும் குதிரைகளையும் பழக்கி
அவற்றையே செல்வமாகக் கொண்டு வாழ்ந்தனர்.
ஆனால் தென்புலத்து மக்கள், விவசாயம், உலோ கங்களைப் பயன்படுத்தும் கலை, என்று நாகரிகத்தில் மிகவும் முன்னேற்றம் கொண்டிருந்தனர்.
அப்போது, வடபுலத்து முதியவர் ஒருவர் பிரலாபிப்பதால் ஆசிரியர் இந்நூலில் இவ்வாறு சித்தரிக்கிறார்:
"பூமியை மாதா என்றும் தேவி என்றும் கூறுகிறோம். பூசையும் செய்கிறோம். இந்தப் பாவிகள் பூமியின் நெஞ்சைப் பிளந்து விவசாயம் செய்கிறார்களாம்? பூமி மாதாவை எங்கள் முன்னோர் இப்படி அவமானப்படுத்தியது இல்லையே? பூமித் தாய், தானாக நமது ஆடுமாடுகள், குதிரைகளுக்குக் கனிந்த பசும்புல்லை ஏராளமாகத் தருகிறாள். நமக்கோ காய் கனிகள் பறிக்கப் பறிக்கக் குறையாது. காடுகளில் கோதுமை தானாகச் சிறு மணிகளாகக் கதிர் முற்றி இருக்கும். நமது ஆடுமாடுகள் கொழுக்க மேயும். நமக்கு உணவுக்குப் பஞ்சமிருந்ததா?
"இப்போது இவர்கள் பூமிமாதாவை அகழ்ந்து கோதுமை விளைவிக்கிறார்கள். நமக்குப் புல் செழித்து வளருவதில்லை. நமது ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் இடம் இல்லாமலாகிறது. அவை கொழுத்து வளருவதில்லை. கோதுமையை விதைப்பதாம், ஒரே இடத்தில் மனிதன் கட்டுண்டு கிடப்பதாம்!” என்றெல்லாம் பிரலாபிக்கிறார். பின்னும் “இந்த விவசாயத்தோடு விட்டதா?... அங்கே பெரிய தொழில் நகரம் என்று இந்த ஆண்களும் பெண்களும் பல பொருள்களுக்கு ஆசைப்பட்டுப் பித்துப்பிடித்து அலைகிறார்கள். குதிரையைக் கொடுத்து தாமிரப் பாண்டம் என்று வாங்குகிறார்கள். பெண்களோ, மஞ்சளாய், வெள்ளியாய், காதிலும், கழுத்திலும் உலோக ஆபரணங்களை வாங்கி மாட்டிக் கொள்கிறார்கள். இரண்டு குதிரைகளைக் கொடுத்து, ஒரு சிறு ஆபரணம், காதுக்கு மாட்ட...! இன்னும் சிறிது நாட்கள் போனால் நம் மிடையே உணவுக்கு ஒரு பிராணி மிஞ்சாது. தாமிரப் பாண்டமும், இந்த ஆபரணங்களுமே மிஞ்சும்!" என்று விவரிக்கிறார்.
மனிதன் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யும் நாகரிகத்தையும், பெண்கள் தங்கள் இயற்கை அழகை மேம்படுத்திக் கொள்வதாகக் கருதி, உலோக அணிமணிகளுக்கு அடிமையாகத் தொடங்கிய காலத்தையும் ராகுல் சாங் கிருத்தியாயன் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இது பெண்களின் சமுதாய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாகும்.
அவர் குறிப்பிடும் தென்புலத்து மக்கள், விவசாயம் செய்ததுடன், உழுவைக் கருவிகள், மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்களைச் செய்யவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பருத்தி விளைவித்து ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர். அது மட்டுமல்ல, அரசன், அமைச்சு, படை என்று ஒரு சமுதாயக் கட்டுக்கோப்புடன், நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்தனர். ஆடுமாடுகளைப் பழக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் பழக்கப் படுத்தினார்கள் என்றும் தெரிய வருகிறது. அரசன், அரசப் பிரதிநிதிகள், படைத்தலைவர்கள் ஆகியோரது இலட்சியங்கள் அனைத்தும் உடல்பரமான எல்லா இன்பங்களையும் அநுபவிப்பதையே சார்ந்து இருந்தன.
ஆணும் பெண்ணும், இணைவதற்கடையாளமான லிங்க சின்னத்தை இந்தத் தென்புலத்து மக்கள் வழிபட்டார்கள். வடபுலத்து வெள்ளைச் சாதியினர் தாமிரத்தையும் தங்கத்தையும் ஒதுக்கி ஒதுங்கி செல்பவர்களாக நின்று விடவில்லை. அவர்கள் தென்புலத்தாரோடு வந்து மோதினர்.
காலப்போக்கில், இவர்களை வென்றும் இமயத்தை ஒட்டி வாழ்ந்த இன்னும் பல கருப்பு இன மக்களோடு போராடியும் வடபுலத்துக்காரர் இந்திய நாட்டின் வடபகுதிகளில் தங்களை ஊன்றச் செய்து கொண்டனர். இவர்களே ஆரியர்கள் என்று பொதுவாக வழங்கப் பெற்றனர். இவர்களில் முந்தைய தனித்தன்மை போய், ஒருவரை ஒருவர் விலக்க ஒண்ணாமல் கலந்தும் காலா காலம், பழக்க வழக்கங்களில் பலவற்றை மாற்றிக் கொள்ளவும் அவசியங்கள் நேர்ந்துவிட்டன. இந்த இனத்தாரிடையே நிகழ்ந்த பல போர்களை அடித்தளமாகக் கொண்டே, இந்நாட்டின் புகழ்பெற்ற இதிகாசங்களாகிய இராமாயண மகாபாரதங்கள் உருவாயின எனலாம்.
இந்தோ -இரானியராக இருந்த சமுதாயத்தினர், இவ்வாறு இந்தியா வந்து பல இனத்தாரோடு மோதி வென்று, கலந்து ஆரிய சமுதாயமாக ஊன்றிய காலவரையை, கி.மு. 2500-லிருந்து, 1500 வரையிலான நீட்சியில் உட்படுத்துகிறார்கள்
வரலாற்று ஆசிரியர்கள்.
இந்தக் காலத்தில், பல்வேறு முனிவர்கள், அல்லது குரவர்களின் கவித்துவ மலர்ச்சியினால் உருவாகிய மிக இனிய சந்தங்களை உடைய பாடல்கள், இயற்கையைக் கடவுளராகப் புகழ்ந்து போற்றுகின்றன. இப்பாடல்கள், பல நூறு ஆண்டுகளாக மனித இனத்தின் நினைவாற்றல் மற்றும் நுட்பமான மொழித்திறன், ஓசை நயங்களுக்குச் சான்றாக, வரி வடிவம் காணாமலே காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்றால், வியப்பாக இல்லையா?
இந்நாட்டில் எழுத்தறிவு தோன்றிப் பரவலாகப் பயன்பட வந்துவிட்ட காலங்களில்கூட, வேதங்கள் மட்டும் குரு சீட பரம்பரையாய், எழுதாக்கிளவியாய், மானிடர் நினைவுக் கருவூலங்களில் இருந்து ஒலி மலர்ச் சரங்களாக எழும்பி சூழலின் புனிதத்துவத்தையும் மக்களின் தூய உணர்வுகளையும் பாதுகாக்கும் தெய்வீகக் கவசமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரமாயிரமான இப்பாடல்களை இசைத்துப் பாதுகாப்பதற்கென்றே ஆரிய சமுதாயம் தம்முள் ஒரு சிறு பிரிவினரை நெறிப்படுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த சமுதாயப் பொறுப்புக்கான மதிப்பை அளித்தனர்.
இந்தப் பாடல்கள், இன்றும் இந்து சமய-சமூகச் சடங்குகளில், இசைக்கப்படுகின்றன. எனவே, வேத கால சம்பிரதாயங்கள், புதையுண்ட வரலாற்றுச் சிதிலங்களாக உயிரிழந்து போய்விடாமல் இன்றளவும் தொடர்ந்து வரும் சமுதாயப் பரம்பரையின் சின்னங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்றால் தவறில்லை.
இவற்றுள் மிக முக்கியமான திருமணச் சடங்குதான். ருக் வேதம் விவரிக்கும் ஒளித்தேவனின் மகளுடைய திருமணச் சடங்கை ஆதாரமாக்கி, அந்த மந்திரங்களை ஒட்டியே இன்றளவும் இந்துத் திருமணங்கள் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
ஆனால், இன்றைய, காசி யாத்திரை, சவரன் தாலி, வெள்ளி மற்றும் உலோகப் பாத்திரங்கள், ரிசப்ஷன், கச்சேரி, பட்டுச் சேலைகள், ஹனிமூன், பயணச்சீட்டு என்ற குவியலிடையே, புரோகிதர் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் சில மந்திரங்களிடையேதான் அந்த நெறியைத் தேட வேண்டும். மந்திரங்களின் உயிர்த்துவம், ஒளி பெருக்கியில் கேட்கும் நாடாப் பதிவாக வாணிப் சினிமா ஒலிகளிடையே தொக்கிக்கொண்டு ஊசலாடுகிறது. உலகாயதம் விழுங்கிவிட்ட எச்சங்களாகிய புரோகிதங்களுக்கு, அம்மந்திரங்களின் ஆதியும் தெரியாது, அந்தமும் தெரியாது. பொருள்...... காண்ட்ராக்டாகப் பேசிவிட்ட நோட்டுக் கற்றையில்தான் மையம் கொள்கிறது.
இந்நிலையில், இன்றைய பெண்கள் பத்திரிகை ஒன்றில் அஞ்ஞானிகளான பெண்களின் கேள்விகளுக்கு ஞான சூரியனாக, சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டு, உலகாயதம் மிஞ்சிவிட்ட உலகுக்கு நல்வழி காட்டி வரும் சமயக் குரவராகிய அருள்மிகு சங்கராச்சாரிய சுவாமிகள், அருள்பாலிக்கும் பதில் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன்.
அஞ்ஞானக் கேள்வி: பிற மதத்தினரிடையே பெண்கள், வேத நூல்களைப் படிப்பதற்குத் தடை இல்லையே, இந்து மதத்தில் மட்டும் பெண்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்றிருப்பது ஏன்?
ஞான அருள் பதில்: வேதங்களில் உள்ள கருத்துக்களே புராணங்களில் இருக்கின்றன. நீங்கள் புராணக் கதைகளையும், நீதி நூல்களையும் பகவத் கீதையும் படிக்கலாமே?........
"அம்மா நான் பால் குடிக்கக்கூடாதா? ஏனம்மா?” என்று அஞ்ஞானக் குழந்தை கேட்கிறது. "பாலிலிருந்து தானம்மா, இந்தப் புளித்த மோர் பிறந்தது! இந்த நீராகாரத்தில் மோரின் சுவை உண்டு. கடுகு, கறிவேப்பிலை உப்பு எல்லாம் உண்டு. உனக்கு இதுவே நல்லதம்மா!” என்று தாய் பெண் குழந்தைக்கு ஒதுக்குவதைப் போலில்லை? அப்படி, அந்த வேதத்தில் பெண்கள் படிக்க முடியாதது, கூடாதது என்ன இருக்கிறது? எதற்காக இப்படித் தடை பெண்ணுக்கு விதிக்கப்பட்டது? பார்க்க வேண்டாமா?
--------------
5. சுதந்திரத் தாய்-கற்பு விலங்கு
கானகச் சூழல். அவள் கணவன் அவள் மடியில் தலையை வைத்துக் கண்ணயருகிறான். உறங்கி விழித்து எழுந்து பிஞ்சுக் குழந்தை தவழ்ந்து தணலாய்க் கிடக்கும் அடுப்பருகே செல்கிறது. அவள் கத்தினால் கணவனின் உறக்கம் கலைந்துவிடும். அவன் தலையை அசைக்கும்படி இம்மியும் நகரலாகாது; நகர்ந்தால் இவளுடைய "பதிசேவை”க்குப் பங்கம் வந்துவிடும், ஆனால் மறுபக்கம் குழந்தை. வினாத் தெரியாத குழந்தை; அது நெருப்பை நாடிப் போகிறது. கணவன் சேவை உயர்ந்ததா? குழந்தை உயிர் பெரிதா? சந்தேகமென்ன? பதி சேவைதான் பெரியது. மனசோடு அவள் அக்கினித் தேவனை வேண்டிக் கொண்டாளாம், "தேவனே! என் குழந்தையைச் சுட்டு விடாதே! அவனுக்குச் சந்தனமாகக் குளிர்ந்திடு" என்று அவள் இறைஞ்ச, இவளுடைய பதி சேவையைப் போற்றும் வகையில் அக்கினித் தேவன் குழந்தையைச் சுடாமல் இருந்தானாம்.
பெண்மை என்ற முழுமையில் விகசிக்கும் முதல் இயல்பாம் தாய்மைக்கும் கற்பு வளையமிட்டுப் பிணிக்கும் இத்தகைய சிந்தனையின் ரேகையும்கூ.ட ருக்வேதப் பாடல்களில் இல்லை.
வேத காலத்துக்கும் முந்தைய ஹரப்பா நாகரிகத்தில் மனிதர் வழிபட்டதாகக் கருதப்படும் பிரதிமைகள் சில உண்மைகளைத் தெரிவிக்கின்றன. பெண்ணுருவும்; கிளைத்து வரும் செடி போன்ற வடிவமும், பூமிவண்மை , மற்றும் மக்கட்குலம் பெருக்கும் தாய்மை இரண்டையுமே சுட்டுகின்றன. ஆனால் ருக்வேதப் பாடல்களில் உண்மையான மாறும் வடிவில், பெண்மையின் பல்வேறு இயல்புகளும் தாய்மைக்கு இலக்கணமாகத் திகழும் பண்புகளும் கவினுற வருணிக்கப்படுகின்றன; சில தெய்வீக வடிவங்களைப் பார்ப்போம். அதிதி என்ற தேவதை தாயின் முழுவடிவாகப் போற்றப்படுகிறாள். அதிதி என்ற சொல்லுக்கு எல்லை யற்றவள், கட்டுப்படாதவள், சுதந்திரமானவள் என்று பொருள். செவிச்செல்வம் பழுதானவர் அதற்குரிய மருத்துவரிடம் சென்றால் அவரே காது கேட்க ஒரு கருவியைப் பொருத்திக் கொண்டு எதிர்ப்பட்டால் நம்பிக்கை விழுமா?
எனவே இந்தத் தாய்த் தேவதை எல்லையற்ற செல்வாக்குடையவளாக மூப்பும் வாட்டமும் அறியாதவளாக விளங்குகிறாள். மிகவும் அக்கறையுடன் மக்களைப் பேணி நல்வழி நடத்திச் செல்லும் திறமையும் கருணையும், அன்பும் உடையவளாக இருக்கிறாள். இவள் மித்ரன், வருணன், அர்யமான், இந்திரன் அதித்தயர்களாகிய நிகரற்ற புதல் வர்களின் அன்னை.
இந்த அதிதியாம் தேவதை எண்பத்தெட்டு பாடல்களில் போற்றப்படுகிறாள். ஆனால் இவளுடைய புதல்வர்களாகிய ஆதித்யர்களுடனே (அதிதியின் மைந்தர்கள்) இவள் வருணிக்கப்படுகிறாளே ஒழிய, கணவனுடன் காட்சி தருபவளாகக் குறிக்கப்படவில்லை. ஆனால் வசுக்களின் புதல்வியாகவும், ஆதித்யர்களின் சகோதரியாகவும் குறிக்கப்படுகிறாள்.
ருக்வேத பாடல்கள், பல்வேறு காலங்களில் பல்வேறு கவிக்குரவர்களால் பாடப்பெற்றவை. ஆசிரியர் இந்தியா வுக்குள் வந்து தங்களை இம்மண்ணுக்கு உரியவர்களாக்கிக் கொள்வதற்கு முன்பே புனையப் பெற்ற பாடல்களும் அதில் உண்டு என்று கருத்துரைப்பாரும் உண்டு. பெண்மையின் நல்லியல்புகள், மகள், சகோதரி, அன்னை என்ற உறவு நிலைகளில் பொருந்துவதையே இங்கு அருமையாகக் காட்டப்படுகிறது.
மனிதப் பிறவியின் துன்பங்கள், பாவங்களில், இருந்து விடுபட, இந்த அதிதியாகிய தாயே துதிக்கப்படுகிறாள். இவள் மாந்தரின் உடல்பரமான துன்பங்களை மட்டுமின்றி, உள்ளங்களின் கசடுகளையும் நீக்க வல்லவள். இயற்கையில் இனிய காட்சிகளும், வண்மை வரிசைகளும், இந்தத் தெய்வீகம் செறிந்த அன்னையின் ப்ரதிபிம்பங்களே. இவளே சுவர்க்கம்; இவளே ஆகாயம்; இவளே ஒளி; இவளே காமதேனு ; இவளே எசமானி, என்றெல்லாம் வேதகால கவிஞர் அதிதியைப் பாடிப் பரவுகின்றனர்.
கீழை நாட்டு அறிவுச் செல்வங்களையும் ஆன்மீகக் கருவூலங்களாகிய இலக்கியங்களையும் உலகுக்கு மீட்டுத் தந்த மாமுனி என்று போற்றப்படும் மாக்ஸ்முல்லர், அதிதியை வானுக்கும் மண்ணுக்கும் அப்பால் விரிந்த எல்லையற்று விளங்கும் ஒரு பொருளின் நற்பண்புகளுக்கும் ஆற்றலுக்கும் பண்டு பண்டு முன்னோர் உணர்ந்தளித்த தெய்வீக வடிவு என்று வியந்து கருத்துரைக்கிறார்.
இருளில்லாமல் ஒளியில்லை. இவளுக்குக் குளிர்மையும், ஒளிக்கு மாட்சிமையும் அவை ஒன்றுக்கொன்றாய் இருப்பதனாலேயே மேவுகின்றன. இவ்வகையில் திதி என்ற பெண் தெய்வமும் இரண்டு பாடல்களில் அதிதியுடன் குறிக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பில் இவள் எல்லை கடந்தவள் என்ற பொருளுக்கு மாறாகக் கட்டுப்படாத தாய்த் தன்மையின் சிறப்பு விளக்கமாகிறது.
ஆனால் பிற்காலப் புராணங்களில், பெண்மைத் தத்துவத்தில் பிளவுகளைக் கற்பிக்க, இவளை அசுரர்களின் அன்னை என்றும் தீமைகளின் இருப்பிடம் என்றும், அதிதிக்கு இவள் விரோதி என்றும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறாள்.
அடுத்து ப்ருத்வி என்ற தேவதை போற்றப்படுகிறாள்.
ப்ருத்வி- இவளே மண்ணாகிய அன்னை. இவள் மடியில் மனிதர் கண் விழிக்கின்றனர். இவள் மார்பில் அமுதத்தை உண்டு, இவள் மீது தவழ்ந்து, ஓடி, ஆடி வளர்ந்து பல்வேறு மொழிகள் பேசிப் பல்கிப் பெருகுகின்றனர். மாந்தர், பூமி யை அண்டி, அவள் இதயம் சுரந்து தரும் வண்மைகளினால் வாழ்ந்து பெருகுவதை நன்றியுணர்வோடும் அளப்பரிய பாசத்தோடும் உன்னிக் கனிந்து பாடிப் பரவும் அற்புதப் பாக்களை, ப்ருத்வி ஸுக்தம் என்ற பகுதியில் காண்கிறோம்.
மண் அன்னையின் தோற்றமும் இந்தப் பாடல்களில் விவரிக்கப்படுகிறது. முழுதும் நீராக இருந்த காலத்து, காற்று அசைந்து மண்ணை வெளிக் காட்டியது. மண் பரவிப் பரவிப் பூமியாக விரிந்து பரவியது.
மண் அன்னைக்கு நாயகனாக வானும் குறிக்கப்படுகிறது. மழையைப் பொழிய வைக்கும் மேகங்களும் நாயகன் என்றே தொடர்பாக்கப்படுகிறது. வானின் மைந்தன் மழை.
இவ்வாறு, நாயகர்களை உருவகப்படுத்தும் நோக்கிலே, பிற்காலக் கற்பு நெறியின் ஓர் இழையோட்டத்தைக் கூடக் காண்பதற்கில்லை.
ஸீதா என்ற தேவதையைப் பின்னர் காண்கிறோம். 'ஸீதா' என்ற சொல்லுக்கு உழுபடைக்கருவியாகிய கலப்பை என்று பொருள் கொள்ளலாம். பிற்கால இலக்கியங்களில் ஸீதா மழைக்கு அதிபதியான இந்திரனின் மனைவி என்று குறிப்பிடப்பட்டாலும், ருக்வேதப் பாடல்களில் அத்தகைய குறிப்பு இல்லை. (இராமாயண இதிகாசம், இந்திரனையே இராமனாக்கி சீதையை நாயகியாக்கிப் புனையப் பெற்றது என்பதும் ஒரு கருத்து.)
நல்ல பயிர் விளைச்சலுக்கு, ஸீதையின் அருள் வேண்டப்படுகிறது.
ஓ, பேரருள் மண்ணகமே ஸீதா என்ற பெயரை உடையவளே! எங்களின் செல்வங்கள் பெருக உன்னைப் போற்றுகின்றோம்.
"காலமெல்லாம் பால்வளம் செறிந்து வண்மை
செழிக்க ஸீதே நீ அருள்வாய்
கலப்பையின் உழுமுனைகள் எங்களுக்காகப் பூமியில்
நன்கு பதிந்து செல்லட்டும்
எங்கள் ஆயர்கள் கன்று காலிகளை மகிழ்வுடன்
மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லட்டும்"
என்று துதிக்கப் பெறுகிறாள். அன்னை என்ற முழுத் தன்மைக்குரிய பல்வேறு பரிமாணங்களை இவ்வாறு பல தேவதைகளில் உருவகப்படுத்திப் பாடல்களை யாத்திருக் கின்றனர், அந்த ஆதிகவிகள்.
உஷஸ் அல்லது உஷா மிக அழகான தேவதையாக வருணிக்கப் பெறுகிறாள். ருக் வேதத்தில் இவளுக்கு இருபது பாடல்கள் இருக்கின்றன. இவள் பெயர் முந்நூறு இடங்களில் குறிக்கப்படுகின்றன. இவள் வானுக்கும் ஒளித் தெய்வத்துக்கும் பிறந்த மகளாக உருவகப்படுத்தப்படுகிறாள்.
காலையில் எழுந்ததும் வீட்டின் செல்வ மகள் எப்படி இயங்குகிறாள்?
வானிலே திரியும் இந்த எழில்மிகு ஒளிக்கன்னி கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மாட்சியைக் கண்டு இவளில் மனம் பறி கொடுக்காதவருண்டோ ?
விண்ணகத்து நன் மகள் நம் முன் தோன்றினாள் எழிலார்ந்த
உடைகளணிந்து இன்பப் பூரிப்புடன்
மண்ணகத்துப் பெருநிதியாம் பொன்னொளிப் பாவை மங்களக் கன்னியே,
உதயமே எம்மீது இந்நாள் செம்மை பொழிவாய்!
வானின் விளிம்புகளெல்லாம் ஒளிவெள்ளம் பாய்ச்சி
இருளின் துகில்களை விலக்கி எறிந்தனள்.
பொன்னின் குதிரைகளின் குளம்படி ஏரியில் பூதலம்
விழித்தெழ,
உதய கன்னிதன் நற்றேர் ஏறி வந்தனள் எழுமின் மூச்சுக் காற்றே!
உயிர் நம்மை மீண்டும் வந்தடைந்தது
இருள் தொலைந்து ஒளி பாய்ந்து பரவுகிறது.
கதிரோனின் பயணத்துக்குக் கட்டியம் கூறி
ஒளிமகள் பாதை அமைக்கிறாள்; நீண்டு வாழ்வோம்
என்றெல்லாம் பலவாறாக இவள் சுறுசுறுப்பாய் மண்ணகத்து உயிர்களைத் துயிலெழுப்பும் நேர்த்தி பாடப்படுகிறது. இவள் புராணியாய் என்றும் குன்றா இளமையும் வண்ணமுமாய், புதுமகளாய் நிதம் நிதம் குறித்த நேரம் தவறாமல் தோன்றுகிறாள். செல்வத்தை அன்றாடம் கரைக்கும் சூதாட்டக் காரனைப் போல் மாந்தர் தம் வாழ்நாளை மெலியச் செய்வதாகவும் ஒரு குறிப்பு வருகிறது.
இவள் தன் காதலனின் ஒளிக் கிரணங்கள் பட்டதும் முகம் சிவக்கப் பூரிக்கிறாள். மண்ணகத்துக் கன்னியர் கட்டுப்படாத சுதந்திர நிலையில் நடமாடுகையில் தொடர்ந்து செல்லும் இளைஞர்களைப் போல், இவளையும் பல தேவர்கள் தொடர்ந்து வருகின்றனராம். ஆனால் இவளோ மனம் கவரும் காதலன் நெருக்கத்திலே முகம் சிவக்கப் பூரிக்கிறாள். அந்தக் காதலன் ஒளியோனாகிய சூரியன்தான். அக்னியும் இவளுக்குக் காதலன், சந்தித் தேவர்களாகிய அசுவினி தேவர்களென்ற இரட்டையர்க்கும் இவள் உகந்தவள். சந்திரனுடன் தொடர்பு கொண்டவளாகவும் பேசப்படுகிறாள்.
ராத்ரி-இரவுத் தேவதையாகத் துதிக்கப்படுகிறாள். ஒரே ஒரு பாடல்தான் இவளுக்கு உரியது. உஷையின் இளைய சோதரியாக இவளும் வானவனின் புதல்வியாக வருணிக்கப்படுகிறாள். இவள் இரவுக்குரியவளாக இருந்த போதிலும் நட்சத்திரங்களாகிய ஆயிரம் கண்களுடன் ஒளிர்ந்து மலை முகடுகளையும் இருண்ட பள்ளத்தாக்குகளையும் அவ்வொளியால் இருளகற்றுபவளாகவே சித்திரிக்கப் படுகிறாள். மக்களெல்லாரும் இவள் வரவை உணர்ந்ததும் தத்தம் இல்லங்களுக்கு விரைகின்றனர். உழைப்பின் களைப்பை நீக்கிப் புத்துயிரளிக்க இவள் மாந்தரை மட்டுமி ன்றி நாற்காலிகளாகிய விலங்கினங்கள் பறவையினங்களையும் ஓய்வு கொள்ளச் செய்து அவர்கள் மீது தீமையின் நிழலும் படியாமல் பாதுகாக்கிறாள்.
உஷையும் ராத்ரியும், வானும் மண்ணும் மகிழ்ந்து குலாவும் தெய்வீகக் கன்னியர். வெவ்வேறு வண்ணங்களுடைய இவ்விரு சோதரியரும் மாறி மாறி வந்து உலகை வாழ வைக்கின்றனர். இருவருக்கும் ஒரே நோக்கம், ஒரே இலட்சியம், இவர்கள் ஒருபோதும் மோதிக்கொள்வதுமில்லை. நின்று விடுவதுமில்லை. இவர்கள் ஒரே குழந்தையைப் பேணிக் காக்கும் அன்னையராகவும் குறிப்பிடப்படுகின்றனர்.
சகோதரிச் சண்டை மட்டுமின்றி பெண்ணுக்குப் பெண் உறவுகளிலேயே வேற்றுமையும் விரோதமும் புகுத்தப்பட்டு காலம் காலமாக நெறிப்படுத்தப்பட்டு, இந்நாள் பெண்ணுக்குப் பெண்ணே யமனாக நிற்கும் நடைமுறையில் வாழும் நம்மை வேதம் படிக்க அருகதை இல்லை என்று எதற்காகக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று புரிகிறதல்லவா?
இது ஒரு ஈர்க்கு நுழையும் வெளிச்சம்தான். இன்னும் மேலே பார்க்கலாம்.
--------------
6. பட்டைக் கண்ணாடியும் பட்டுக் கறுப்பும்
விடியற்காலையில் மூன்று மணிக்கே எழுந்து, லட்சுமி பூசைக்கு உரிய பணிகளில் ஈடுபட்டுவிட்டாள் கௌரி. இத்தகைய லட்சுமி பூசை, கௌரி பூசை என்றால் பெண்களுக்கு எத்தனை பொறுப்பு? வீட்டுப் பொருள்கள் பாத்திரம் பண்டம் சுத்தமாக்கி, வீடு பெருக்கி, மெழுகிக் கோலமிட்டு மாவிலை வாழைத் தோரணங்கள் கட்டி, மலர் சேகரித்து வைத்து, பூசைக்கு முதல் நாளிலிருந்தே உழைக்க வேண்டும். பூசைக்கு முக்கியமான அடுத்த தேவைகள், நிவேதனமாகப் போகிற பலகாரங்கள். அன்றே அரிசி ஊற வைத்து மாவிடித்து தேங்காய் துருவி அரைத்து மாங்கு மாங்கென்று பலகாரங்கள் அனைத்தும் செய்தாக வேண்டும்.
லட்சமி, கௌரி விரதங்கள் பூசனைகள் பெண்களுக்கே உரித்தானவை. அவர் தம் மாங்கல்யம் விளங்கவும் குங்குமம் மஞ்சள் வாடாது துலங்கவும் இன்னும் பிற சௌபாக்கியங்கள் பெருகவும் செய்யப் பெறும் பூசைகள்தாம். இந்தப் பூசையில் இவளுடைய உடலுழைப்பு மட்டுமே தொண்ணூற்றொன்பது விழுக்காடு, ஏனைய குடும்ப உறுப்பினர் ருசித்து உண்ணும் பலகாரம் செய்வதிலேயே ஈடாக்கப்படுகிறது. அலுவலகம், பள்ளி நேரத்திற்கு முன் பூசை முடிக்க வேண்டும். 'ராகுகாலம்' என்ற ஒன்று குறுக்கே நிற்கும். முக்கியமான பூசை செய்யும் 'குரு' வானவர் நூறு வீடுகளுக்குப் போக வேண்டும். காலை ஆறு மணிக்குக் கௌரிக்கு நேரம் கொடுத்துள்ளார். அதற்குள் இவள் ஒருத்தியே, இடித்து அரைத்து, எடுத்துப் போட்டு கிண்டிக் கிளறி, இட்லி, கொழுக்கட்டை.., அதிரசம் வடை என்று செய்ய வேண்டும். அம்மன் அலங்காரம் முடிக்க வேண்டும். இன்னும் எத்தனையோ சிறுசிறு நச்சுப்பணிகள் நிறைவேற்ற வேண்டும்.
குருவானவர், வந்து மெயில் வேகத்தில் மந்திரங்களைச் சொல்லி மணியை அடிக்க இவள் மலரைத் தூவி, அர்ச்சனையை முடிக்கிறாள். பதினைந்து நிமிடம்கூட இல்லை.
தட்சணையைப் பெற்றுக் கொண்டு அடுத்த பூசைக்குச் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ விரைகிறார் அவர்.
ஏன், இப்படி ஒரு குருவை எதிர்பார்த்து, அவசர பூசை செய்ய வேண்டும்?
இந்த மந்திரமோ, அல்லது, புரிந்த தமிழ் வாசகமோ அவளே படித்து, ஒன்றிப் பூசையைச் செய்யக்கூடாதா? அதற்குரிய தகுதி அவளுக்கு இல்லையா?
பெண் கடவுளைத் தொழுவதன் நோக்கமே கணவனின் ஆயுள், மற்றும் அவன் சுகபோகங்களின் வண்மையைச் சார்ந்ததாகிறது. அந்தப் பூசனையல்லாது, அறிவுக்கும் ஞானத்துக்குமான சரசுவதிதேவியின் பூசனைகூடப் பெண்ணுக்கு உரிமையானதாக ஆக்கப்படவில்லை. அந்த மாங்கலிய சௌபாக்கியத்துக்கான வழிபாட்டையும் இவள் வாயசைக்கும் சினிமா நடிகையின் நிலையில்தான் செய்ய வேண்டும். குருவில்லாமல்-அதாவது ஆணாகிய புரோகிதர் இல்லாமல் பூசை முடிப்பது இவளுக்கு உரிமையானதாக இல்லை.
ஏன்?.....? இந்தக் கேள்வி இன்றுவரை கேட்கக்கூடாத கேள்வியாக இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள ஆதி குடியினரிடையே, மனித சமுதாயத்தின் இனக் குழு நாகரிகம் சார்ந்த சமயச் சடங்கினைப் பெண்களே நிறைவேற்றினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதிமனிதர் விளை நிலம் சார்ந்த தானியங்களை விதைத்து, விளைச்சலைப் பெருக்கி வண்மை காண, இயற்கை அன்னையைத் தொழுது நலம் விழைந்து செய்யும் சடங்குகளைப் பெண்ணே முன் நின்று நிறைவேற்றினாள் என்பதற்கான ஆதாரங்கள் இன்றளவும் தொடர்ந்து வந்திருக்கின்றன. முதல் மருத்துவரும் பெண்ணாகவே இருந்திருக்கிறாள்.
இனி ருக் வேதம் கூறும் பெண் தெய்வங்களைப் பார்ப்போம். வாக் என்று ஒரு தேவதையைப் பற்றிய பாடல் வருகிறது. ‘வாக்' என்ற பெயரில் ஒரு ரிஷியே (பெண்) இருப்பதாகவும் அவளே இப்பாடலின் ஆசிரியை என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது. வேதப் பாடல்களின் ஆசிரியைகள் என்ற குறிப்பைப் பற்றி ஐயத்துடக்கிடமான விவாதங்களும், இருக்கின்றன. எனினும் விவாதங்களைத் தவிர்த்து பாடலின் தேவதையைக் கவனிப்போம். 'வாக்' ஒலிக்குரிய தேவதை வானையும் மண்ணையும் கடந்து பிரபஞ்சம் முழுவதையும் தன் ஆக்ஞையினால் ஒன்றுபடுத்தும் ஒலிக்குரிய தெய்வம். தத்துவத்துக்கு இவளே மூல தேவதையாம். சக்தியின் மூலாதாரமான ஒலியின் கூட்டுறவின்றி, கடவுளின் எந்தப் படைப்பும் பூரணமாக நிறைவேறுவதற்கில்லையாம். எனவே தெய்வங்களுக்கெல்லாம் மேலான நாயகியாக இவள் போற்றப்படுகிறாள். பிந்தைய சக்தி வழிபாடு நெறிக்கு ஆதாரமான தேவதை இவளேயாம்.
இலா-ஸ்ரஸ்வதி- பாரதி என்று மூன்று தேவதைகள் மேலாம் இன்பத்தையும் நலன்களையும் பயக்கும் தெய்வங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இலா என்ற தேவதை, வேள்வி செய்வதற்கான விதிமுறைகளை முதன்முதலாக மாந்தருக்குப் போதிக்கும் ஆசான் என்று போற்றப்படுகிறாள். இலா என்ற பெயருக்கே வெண்ணெய் அப்பிய கையை உடையவள் என்று பொருள். இவள் வெண்ணெயை இட்டு, அக்கினியை வளர்க்கும் மாண்பினள். இவள் அக்கினி தேவனின் அன்னை என்று புகழப்படுகிறாள்.
ஸ்ரஸ்வதி: கசடுகளையும், தீய மலங்களையும் போக்கி ஞான வெள்ளமாகப் பரவும் தெய்வ வடிவினள். அறிவு, விவேகம், சாதுரியம், கற்பனைவளம், படைப்புத்திறன், புதிய கண்டுபிடிப்புக்கள், நுண்கலைகள் ஆகிய அனைத்து மனித ஆற்றல்களையும் பாதுகாத்து நலம் பயக்கும் ஞான தேவதை இவள். குருக்ஷேத்திரத்தில் பாயும் ஆற்றை ஸ்ரஸ்வதி என்ற பெயரால் குறிப்பதற்குப் பாயும் ஞான வெள்ளமாக இவளை உருவகப்படுத்தி-யிருப்பதாகவும், அந்நதிக் கரையில் தம் வேள்விகளையும் பிற சடங்குகளையும் செய்வதற்கு ஆதி ஆரியர் சேர்ந்தனர் என்ற குறிப்பும் புலப்படுகிறது. பிற்காலங்களில் இந்தச் சிறப்பு, கங்கையும் யமுனையும் கூடும் புனிதத் திரிவேணிக்கு இசைந்தது.
பாரதி: இவள் நாவன்மைக்கு நல்தேவதை. ஒலி மலர்ச் சரங்களாய் கவிதைகள் இவள். அருளாலேயே பிறக்கின்றன. எழுத்து வரிவடிவம் இல்லாத காலத்து, ஒலிகளின் நிகரற்ற ஆற்றலைப் பாகுபடுத்தி ஆயிரமாயிரமாய் அற்புதக் கவிதைகளை வடித்த ருக்வேத காலச் சான்றோர், இவ்வாறு ஒரு தெய்வத்தை உருவகப்படுத்திக் கொண்டதில் வியப்பு எதுவும் இல்லை. இலா-ஸ்ரஸ்வதி-பாரதி ஆகிய மூன்று தேவதைகள், 'வாக்' தேவியின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கும் வடிவினரேயாம்.
ருக்வேதம் விளக்கும் மணப்பெண்ணாக, சூர்யா என்னும் தேவதையை அறிகிறோம். ஆதவனின் ஒளிக் காரணமாகிய தேவதைக்கு இப்பெயரைச் சூட்டி, இவளைச் சந்திரனாகிய ஸோமனக்கு மண முடிப்பதாகப் பாடல் வருகிறது. அசுவினி தேவர்களாகிய இரட்டையர் மணமகனின் தோழனாகவும் அதே சமயம், சுயம்பரத்துக்கான போட்டியில் தேரோட்டி வென்ற காரணத்துக்கான சூர்யாவை வென்று அவளைத் தம் தேரில் வைத்து ஓட்டிச் செல்லும் உரிமை பெற்றதாகவும் குறிக்கப்படுகிறது. சூர்யாவின் கையைப் பற்றிய ஆண் ஒரே தேவனா என்பது பற்றிய தெளிவான விவரமில்லை. இவளை கேட்டுப் பல தேவர்கள் வருகின்றனராம்.
சூரியனின் ஒளியைச் சந்திரனும் அந்தி சந்தி நேரங்களும் பெறுவதாகிய இயற்கையின் எழிலார்ந்த கோலங்களே இந்தக் கூட்டுப் பாடல் தொகுப்பில் உருவகங்களா-யிருக்கின்றன.
இந்திராணி என்ற பெயரை இன்றளவும் அதிகாரத்துக்கும் செல்வத்துக்கும் உரிய பெண்ணுக்குரியதாகக் குறிப்பிடு கிறோம். இவள் தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் தன்னிகரற்ற மனைவியாம். இங்கே நாம் குறிப்பிடத் தகுந்த சிறப்பு, இந்திரனின் ஆற்றல்களுக்கும் மேன்மைகளுக்கும் இவளே காரணமாகிறாள் என்ற தனித்தன்மைதான். ஆணைச் சார்ந்து இவள் மேன்மை பெறுகிறாள் என்றில்லாமல், இவள் தனித்துவம் குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய தெய்வீக வடிவங்களைத் தவிர, வாழ்க்கையின் இன்பத்துக்கும் உயரிய நலன்களுக்கும் இலட்சியங்களாகக் கூடிய பல்வேறு கூறுகளைத் தெய்வங்களாக உருவகப் படுத்தப்பட்ட பாடல்களும் வருகின்றன.
சிரத்தா-(சிரத்தை ) அநுமதி (தெய்வ அருள்) அரமதி (உலகியல் ஞானமாகிய விவேகம்) தம்பதி (ஆணும் பெண்ணுமாக இசைவதனால் பெறும் கூட்டான ஆளுமை ஆற்றல்) ப்ரஷ்னி (புயல் மேகம்) அரண்யானி (கனிகளும் வளங்களும் புரக்கும் வனதேவதை! எவருக்கும் தீங்கிழைக்க மாட்டாள்) வருணானி அகன்யானி (வருணன், அக்னி தேவரின் மனைவியர்) ஸிந்து, கங்கை, ஸரஸ்வதி ஆகிய நதிகள் என்று தேவதைகளின் வரிசை 'நீண்டு' செல்கிறது.
இறுதியாக 'அப்ஸரஸ்' என்ற வருக்கத்தினரைப் புகழும் பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. அப்ஸரஸ் என்றாலே நீர் மீது உலவித் திரிபவர் என்று பொருள்படுகிறது. ஐந்து பாடல்களில் இந்தத் தேவ மங்கையர் போற்றப்படுகின்றனர். இந்த எழில்மிகு நங்கையரை உழைப்பும் மூப்பும் சாக்காடும் துன்பமும் உடைய மண்ணுலக மானுடருடன் தொடர்பு படுத்தாமல் 'கந்தருவர்' என்ற இனத்தாருடன் தொடர்பு படுத்தியிருப்பதைக் குறிப்பிட வேண்டும். 'ஓ! அவனுக் கென்ன கந்தருவன் போல் இருக்கிறான்!' என்றால் அழகு, இளமை, கவலையறியாது சுகபோகங்களில் துய்த்தல் என்ற கூறுகளே முதன்மையாக்கப்படுகின்றன. ஆணும், பெண்ணும் சாவு, மூப்பு, வறுமை என்ற துன்ப நிழல் படாத நிலையில் எந்த விதிக்கும் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இல்லாமல் இன்பம் துய்ப்பதை ஓர் இலட்சியக் கனவாக வைத்து, கந்தருவர், அப்ஸரஸுகள் என்று கற்பிக்கப்பட்ட வடிவங்கள் என்று கொள்ளும்படி இவர்களுடைய சித்திரங்கள் அமைந்திருக்கின்றன. அப்ஸர நங்கையர், ஆடல் பாடல்களிலும் களியாட்டங்களிலும் வல்லவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குப் புதல்வரைப் பெறும் உரிமைகள் உண்டு. வஸிஷ்ட மாமுனி ஊர்வசி என்ற அப்ஸரஸின் மைந்தராக விவரிக்கப்படுகிறார். ருக்வேதத்தில் ஊர்வசிக்கும் மண்ணுலக மன்னன் புரூரவனுக்கு-மிடையே உள்ள காதலை அழகிய பாடல்கள் சித்திரிக்கின்றன. உரையாடல்களுடன், நாடகப் பாணியில் அமைந்த இப்பாடல்களே, பிற்காலத்தில் காளிதாசன் தனது புகழ்பெற்ற விக்ரமோர்வசிய நாடகத்தை உருவாக்க வழிவகுத்தன எனலாம்.
பெண்மை என்ற முழுமையில் விகசிக்கும் தாய்மைக்குரிய அரிய இயல்புகள், மகள், மகளாக அவள் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும் ஒன்றி மலர்ச்சியைக் கூட்டுதல், ஞானமும் அறிவுச் செம்மையும் இவளுக்குச் சிறப்பான அம்சங்கள். அறிவின், தேட்டமும் ஆன்மீக உயர்வும் இவளுக்கே உரியன என்ற நிலைகள், வாழ்க்கையின் இன்றியமையாத போகங்கள். அவற்றின் பயனான சமுதாய வளர்ச்சி என்ற எல்லாப் பிரிவுகளிலும் பெண்ணை உருவகப்படுத்தி, பட்டைக் கண்ணாடியின் வாயிலாக அனைத்து வண்ணங்களையும் சிறப்பிக்கும் மாண்பாக, ஆதி ருக்வேதப் பாடல்கள் நமக்குப் பெண்மையை உணர்த்துகின்றன.
இந்த உயர்கருத்துக்கள் எப்படி ஆட்டம் கண்டன? பெண்ணின் மாட்சியில் அவை எவ்வாறு ஊறு செய்ய நச்சுப் புழுக்களாகப் புகுந்தன? அனைத்து வண்ணங்களையும் எப்படி ஒரே கருப்பாய் மாற்றித் தொலைத்தது? அறிவுக்கண் இருந்தால்தானே இப்படித் தூண்டித் துளைப்பீர்கள்? பெட்டை... பெட்டையாகவே இருந்து தொலையுங்கள்!
-------------------
7. கல்வி வாழ்க்கை விபத்து
இருவரும் சகோதரிகள்தாம். ஒருத்தி பற்றாக்குறை வருவாயுடைய இடைநிலைக் குடும்பத்துத் தலைவியாக, மூன்று குழந்தைகளுக்குத் தாயாக, தண்ணீர்த் தட்டுப்பாடுள்ள ஒட்டுக்குடித்தனம், ரேஷன் கடை க்யூவரிசை, ஆணாதிக்க மனப்பான்மையுடைய அதிகாரம் செய்யும் கணவன், இவளையே வறுத்தெடுக்கும் அவன் பக்கத்து உறவுகாரர் என்று முளையில் கட்டிய செக்கு மாடாக உழைக்கிறாள். ஊட்டமான உணவுக்குப் பஞ்சம். நல்ல பண்டம் சமைத்தால் இவள்வரை மிஞ்சாது. எஞ்சியவற்றைப் போட்டு வயிற்றை நிரப்ப வேண்டும். ஆனாலும் மஞ்சட்குங்கும மங்கல சௌபாக்யம் இவளுடைய ஒரே உயிரிப்பு. அதை எண்ணி, மங்கலியத்தைக் கண்களில் ஒத்திக் கொண்டு, மற்ற வசதிகள், தேவைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறாள்; புறக்கணிக்கிறாள்; தியாகம் செய்கிறாள்.
அடுத்த சகோதரி, இளமையில் அந்தப் பாக்கியத்தை இழந்து விட்டாள். அதனால் அவளுக்கு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, ஆசிரியப் பயிற்சி கிடைத்தது. பள்ளி ஆசிரியையாகி விட்டாள். பொருளியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் மதிக்கப் பெறுகிறாள்; பிக்குப்பிடுங்கல் இல்லை, மங்கலமில்லாக் குறையும்கூட, இந்த மதிப்புகளில் கூர்மை இழந்துவிட்டன.
குழந்தைகள் கூட, "பெரியம்மா, சாக்லெட் வாங்கித் தருவாள்'' என்று அவளை அண்டி அன்பு காட்டுகின்றன, கணவனும்கூடத் தன் அதிகாரச் செருக்கை மறந்து, பல்லிளித்து, நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறான்.
தங்கைக்கு உள்ளூறக் குமுறலாக இருக்கிறது. 'என்னையும் படிக்க வச்சிருந்தா படிச்சிருப்பேன். இப்படி வேலை செய்து சம்பாதிப்பேன். இந்தக் கல்யாணம் இல்லைன்னு அழுதேனா...?' என்று ஒவ்வொரு சமயங்களில் நினைக்கிறாள்.
குழந்தை மணக் கொடுமைகளுக்கு மாற்றாக, பெண்ணுக்குக் கல்வி, பொருளாதாரம் சார்ந்த சுய வாழ்வு என்ற சீர்திருத்தங்கள் வந்தன. பெண் கல்வி என்பது, வாழ்க்கையில் விபத்து நேர்ந்தால் மட்டுமே அனுமதிக்கக் கூடியதாக இருந்தது. கல்வி, அவள் அறிவு மலர்ச்சிக்கு வாய்ப்பளித்து, வாழ்க்கையின் பலனாகப் பல சமுதாயச் சிக்கல்களை ஓர்ந்து முழுமை காண வேண்டும் என்றோ, அறிவின் தேட்டத்தில் ஒரு பெரிய கண்டு-பிடிப்பையோ, சாதனையையோ நிகழ்த்த வேண்டும் என்றோ எந்தக் கருத்துக்கும் இடமில்லை. ஓர் ஆணைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு, அண்டி, ஊழியம் செய்து, மஞ்சட்குங்குமப் போர்வையில் தன்னைக் கரைக்கும் வாழ்க்கைக்கு ஊறு வந்தால், நெருப்பில் எரியாமல், முண்டித அலங்கோலங்களில் குத்துப்பட்டு முடக்கப்படாமல், கல்வி கற்று, வயிற்றைக் கழுவிக் கொள்ளலாம் என்பது, அந்த வரையில் மிகப் பெரிய
ஆறுதல்கள் அன்றோ ?
இந்நாட்களில் பொருளாதாரத் தேவையை முன்னிட்டு பெண் எவ்வகையிலேனும் பொருளீட்டும் தகுதியையும் பெற வேண்டும் என்ற குறிக்கோளில்தான் பொதுவாகவே பெண் கல்வி பரவலாக்கப்பட்டு வருகிறது.
"கல்லூரியில் பெண்ணைச் சேர்க்கவில்லையா?" என்று கேட்டால், “இல்லை, கல்யாணம் செய்து கொடுத்துவிடுவதாக இருக்கிறோம்” என்ற விடை வரும்.
இப்போதோ, ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள், கல்யாணமாவதற்கென்றே உயர் கல்விக்கு அலைய வேண்டி இருக்கிறது.
“பெண் வங்கியில் வேலை செய்கிறாள்.... அதனால் பல வசதிகள் உண்டு' என்ற அவள் மதிப்பு, வெளிப்படையாக, அந்த வேலைத் தகுதியில் மட்டுமே ஒட்டி, அவளை ஒன்று மில்லாமல் ஆக்கிவிடுகிறது.
முந்நாட்களில், உலகெங்கினும் நிலவிய அடிமைச் சந்தை முறை தமிழ்நாட்டிலும் இருந்ததற்குச் சான்றாக, பல கல்வெட்டுக்களும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. 'கொள்வாருளரோ, கொள்வாருளரோ' என்று அடிமையின் பெயரையும் தகுதியையும் பகிரங்கமாகக் கூறி வாங்கு பவர்களை அழைப்பார்களாம். இந்த முறை அடிமைச் சந்தையில் பெண் அடிமைகள்தாம் அதிகமாக விற்பனைக்கு உரியவர்களாக வருவது வழக்கமாக இருந்ததாகவும் தெரிய வருகிறது.
'கொள்வோம்!' 'கொள்வோம்!' என்று வாங்குபவர் கூவிக்கொண்டு அறிவிக்க, விலை நிர்ணயம் செய்யும் நல்லவர் குறுக்கிட்டு வாணிபப் பேரத்தை முடித்தார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் இந்நாட்களில் இந்த வாணிபம் மேல் என்ற வகையில் பெண்ணைக் கொள்வாருக்கு மேலும் பொருள் கொடுக்கும் முறை உயர்ந்து போயிருக்கிறது. அத்துடன் பெண்ணின் பொருளாதாரம் சார்ந்த கல்வித் தகுதி உயர உயர, அதே வகையிலும் மேலும் ஏற்றம் பெற்ற ஆணே இவளை அடிமை கொள்ள முடியும் என்ற நிலையில், மேலும் மதிப்பிழந்து போகிறாள் பெண்.
வேத காலத்தில் பெண்ணுக்குக் கல்வி பயிற்றப்பட்டது, அது எத்தகைய கல்வி? உபநயனம் என்ற சடங்குடன் அந்நாளையக் கல்விப் பயிற்சி-அறிவைத் தேடும் பருவம் ஆரம்பமாகிறது. உபநயனம் என்ற சொல்லுக்கு, இன்னொரு கண்ணைக் கொடுத்தல் என்ற பொருளையும், அறிவினால் மேலும் மேலும் கூர்ந்து காணும் நோக்கில் அழைத்துச் செல்லல் என்ற பொருளையும் கூறுகிறார்கள். ஒரு மேலாம் குருவை நாடி, மாணவ-மாணவியர் தமக்கு அறிவொளியைத் தந்து வாழ்வாங்கு வாழக்கூடிய எல்லா நலன்களையும் அளிக்கும் கல்வியைப் பயிற்றியருள வேண்டும் என்று வேண்டுவதும், குரு சீடரை மனமுவந்து ஏற்று, ஒளியூட்டும் 'காயத்ரி' மந்திரத்தை முதன்முதலாக உச்சரிக்கச் செய்து, குருகுலவாசமாகிய வாழ்வை விதிப்பது மட்டுமே அந்நாட்களில் நடைபெற்ற உபநயனச் சடங்காகும். ஆதி வழக்கில் முப்புரிநூல் பற்றிய பேச்சே இல்லை.
இந்தக் கல்வி பயிற்றுமுறை தொன்மைக்கால ஆரியக் குடும்பங்களில், பயிற்று இருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. தாயும்கூட இதற்குத் தகுதியுள்ளவளாக இருந்தாள். எனவே ஒவ்வொரு குடும்பமும், கல்வியளிக்கும் நிறுவனமாக இயங்கியிருக்கலாம் என்பதையும் அறுதியாக மறுப்பதற்கில்லை.
வேத கால ஆரியர் இந்தியாவில் வந்து ஊன்றிய காலங்களில், கானக விலங்குகளுடன் மட்டுமின்றி, பல்வேறு இனத்தாருடனும் தங்களுக்குள்ளேயே - குழுக்களுடனும் போராட வேண்டி இருந்தது. இதன் காரணமாகப் பெண்கள் மொழியும் இலக்கியமும் மட்டுமின்றி, போரிடும் கலையையும் பயின்றார்கள். ருக்வேதக் கவிஞர் வரிசையில் பல பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
கோசா, லோபமுத்ரா (அகத்தியரின் மனைவி) அபலா, ஸுர்யா, இந்திராணி, யமி , என்று நீண்டு செல்லும் பட்டியலில், இக்கட்டுரைத் தொடர்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள தேவதைகளின் பெயர்களும் அடங்குகின்றன. இது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகப் படவில்லை.
எனவே, பெண் ரிஷிகளே யாத்தவை, கணவராகிய ருஷியுடன் கூட்டாக யாத்தவை, பெண்களின் பெயரில், தெய்வங்களே யாத்த நிலையில், பிறர் பாடியிருக்கக் கூடியவை என்று பிரிக்கிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும், ருக்வேத காலத் துவக்கத்தில், கல்வியறிவு பெண்களுக்கு மிக உயர்ந்த நிலையில் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டிருந்ததெனத் தெளிவாகிறது.
போர்க்கலையில் சிறந்து விளங்கிய பெண்களைப் பற்றியும் ருக்வேதப் பாடல்களின் வாயிலாக அறிகிறோம்.
கேல அரசனின் மனைவி விஸ்பலா கணவனுக்கு உதவியாக எதிரிகளைத் தாக்கிக் கடும் போர் புரிந்ததில், ஒரு காலை இழக்க வேண்டியதாயிற்று. அசுவினி தேவர்களின் அருளால், இரும்புக் காலைப் பொருத்திக்கொண்டு மீண்டும் பகைவருக்கு யமனாக நின்றாளாம்.
முத்கலானி என்ற பெண்மணி முத்கலரின் மனைவி. இவளும் போர்க்களத்தில் வீரப்போர் புரிந்த செய்திகள் காணக் கிடக்கின்றன. காற்றில் மேலாடை வீசிப் பறக்க அம்புகளைச் சரமாரியாகப் பொழிந்து, தோற்றோடும் பகைவர் கதிகலங்கத் துரத்திச் சென்றதும், கொன்று குவித்ததும் வருணிக்கப்படுகிறது.
இதே கால கட்டத்தில், இந்தியாவில் வாழ்ந்த ஆதி குடியினர், சீரான பெண்கள் படையே வைத்திருந்ததாகவும் எண்ணிக்கையில் மிக அதிகமான இப்போராளிகளுடன் போர் புரிந்தாக வேண்டிய கட்டாயம், வந்தவருக்கு ஏற்பட்டதென்றும் விவரங்கள் காணக் கிடைக்கின்றன.
அக்காலத்தில், பொதுவாக, உலகியல் கல்வி, ஆன்மிக அறிவுக்கான தேடல், போர்க்கலை ஆகிய எல்லாப் பிரிவுகளுமே பெண்ணுக்கு உகந்ததல்லாததாக மறுக்கப் பட்டிருக்கவில்லை. அவளுக்குக் கல்வி கேள்வி வாழ்க்கை இன்பம் என்ற உரிமைகள் பூரணமாக இருந்ததென்றே கூறலாம்.
"மதுரத் தேமொழி மங்கையருண்மைதேர் மாதவப் பெரியோருடனொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசி முறைமை” என்று பாரதி குறிப்பிட்டிருக்கும் வழக்கு இருந்திருக்கிறது.
கல்வியும் நல்லறிவும் ஆடல் பாடற் கலைகளுடனும் இசைந்திருந்தது; ஆடற்கலையும், பாடற்கலையும் ஒரு பெண்ணின் இயல்பான குடும்ப வாழ்க்கைக்கு இசையாத நிலையில், 'விலை மகள்' என்ற வருக்கத்தாரைத் தோற்றுவித்து அவர்களுக்கு மட்டுமே உரிய கலைகளாக ஒதுக்கப்பட்டிருக்க வில்லை.
மாலை நேரங்களில், ஒத்த இளைஞர்களுடன் உல்லாசமாக, ஆடல்பாடல்கள், அறிவுக்கும் மனதுக்கும் உற்சாகமூட்டும் விநோதக் களியாட்டங்கள் என்ற வகையில் மாந்தர் கூடும் பொழுதுபோக்குக் கூடங்கள்-சமானங்கள் (சமாஜங்கள்) பெண்கள் பழகுவதற்கு உரிய இடங்களாக இருந்தன.
இவை அனைத்துமே, ஏழு வயசில் அவள் அறிவுக் கண்ணை பூவாலும் பொன்னாலும் பட்டாலும் குருடாக்கித் திருமண பந்தத்தில் இறுக்கிவிட்ட நிலையில், பயனற்றுப் போயின.
--------------------
8. சநாதனத்தின் முரண்பாடுகள்
"இவள் என் அண்ணா பெண் மாமி, ஆசீர்வாதம் பண்ணுங்கள்! சுப்பு, நமஸ்காரம் பண்ணு!”
நான் கண்ணிமைக்க மறந்து அந்தச் சிறுமியையே பார்த்தேன்.
பன்னிரண்டு வயது இருக்குமா இவளுக்கு?
பாவாடை சட்டையணிந்த அச்சிறுமி கழுத்திலிருந்த பவளமாலை, சங்கிலி மற்றும் தொங்கும் தாலிக்கயிறு எல்லாம் தரையில் படிய நிலத்தில் விழுந்து வணங்கினாள்.
"...இவளுக்குக் கல்யாணமாயிட்டுதா?”
எனக்கு வார்த்தைகளே நெஞ்சில் சிக்கிக்கொண்டன. சிறுமியைக் கூட்டிவந்த அவள் தமக்கை புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
"போன தை மாசம் கல்யாணமாச்சு. எங்க வீட்டில் ரொம்ப வைதீகம். எனக்கும் இவளைப்போல் வயசில்தான் கல்யாணம் நடந்தது. கௌரி பிறந்தப்ப எனக்குப் பதினஞ்சு வயது. ராமன் பதினேழு வயசிலே பிறந்தான். டென்த் பரீட்சை அப்புறம்தான் எழுதினேன்...'' என்றாள். ஒரே தெருவில் குடியிருக்கும் பெண் என்று அவளைத் தெரியும். இடுப்பில் பையனையும், கைவிரலில் பெண்ணையும் கோர்த்துக் கொண்டு நர்சரிப் பள்ளி ஆசிரியையாக அவள் தெருவில் செல்கையில் என்னைப் பார்த்துப் புன்னகை பூப்பாள்; நானும் புன்னகையுடன் தலையசைப்பேன். சில நாட்களில் மாலை நேரங்களில் இளைஞனான கணவன் சைக்கிளில் உட்கார்ந்து ஓட்ட, முன்னே பெண்ணும் பின் இருக்கையில் இவள் பையனையும் வைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
இருபத்திரண்டு வயசுக்குள் ஏழும் ஐந்துமாய் இரண்டு குழந்தைகளுக்கு அன்னையாகிவிட்ட விவரம் இப்போதுதான் தெரிய வருகிறது.
“இப்படிப் பன்னிரண்டு வயசில் கல்யாணம் பண்ணுவது சட்டத்துக்கு விரோதம் இல்லையா? பண்ணலாமா? இப்போதைக்கு நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?”
"ஆ....சட்டம் பார்த்திண்டு நிறுத்தினாத்தான் எல்லாம் தாறுமாறாப் போறது. காலாகாலத்துல பெரியவளாகும் முன்ன கல்யாணம் பண்றது தர்மம்னு எங்கப்பாம்மா ஒரே புடியா இருந்தா. மடத்துல ரொம்ப ஈடுபாடு. நெருக்கம். ஆசாரிய சுவாமிகள் ஆசீர்வாதம் பண்ணி , கூறையும் தாலியும் குடுத்தா. கல்யாணத்தின் போது அவருக்குப் பதினெட்டு வயசு. எஸ்.எஸ். எல்.ஸி. பாஸ் பண்ணிட்டு டைப் அடிச்சிட்டிருந்தார் ....அவா. வீட்டிலும் ரொம்ப ஆசாரம்....ஆனா, குழந்தை பிறந்த உடனே குழந்தையையும் யாரும் வச்சுக்க மாட்டேன்னுட்டா. அவருக்கு இருநூறு ரூபாதான் சம்பளம். நான் படிச்சுத்தான் வேலை செய்யணும். கஷ்டம் எத்தனையோ...ன்னாலும், குலாசாரம் விடலன்னு ஒரு திருப்தி...'' என்று மூச்சு விடாமல் பொரிந்தாள்.
"இவள் படிக்கிறாளா?"
"ம்; ஆறாவது முடிச்சு ஏழாவது போறா; அவன் ப்ளஸ்-டூ போகணும். போதும் படிச்சதுன்னுட்டா. அவா வீட்ல கடை ஓட்டல் ரெண்டு நடத்தறா. ஆச்சு, ஏதேனும் ஒண்ணுல உட்கார இந்தப் படிப்புப் போதும்னுட்டா. இவளை, வேணுன்னா படி, இல்லாட்டா வேண்டாம்னா. என்னைப்போல வேலை செஞ்சுதான் சம்பாதிக்கணும்னில்ல. ஏதோ எட்டோ பத்தோ படிக்கட்டும், பெரியவளாயி குழந்தை குட்டின்னு ஆனா, தன்னால வீட்டிலதானே இருக்கப் போறா. அதுவரை ஸ்கூலுக்குப் போகட்டும்னேன்.''
எனக்கு எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்று ஒரு கணம் தடுமாற்றமாக இருந்தது.
''குங்குமம் கொடுங்கள். நேரமாகிறது. அவருக்குச் சனிக் கிழமை லீவு. அடுப்பில் குழம்பு வைத்துவிட்டு ஓடி வந்தேன். சமையலை முடிச்சிட்டு அவருக்கு எல்லாம் பரிமாறி எடுத்து வச்சுட்டு நான் ஸ்கூலுக்கு ஓடணும். குழந்தைகள் இரண்டும் ரகளை பண்ணிண்டிருக்கும்.'' நான் குங்குமத்தை நீட்ட, அவசரமாக இட்டுக்கொண்டு தங்கை பெண்ணுடன் விரைந்தாள். தெருவில் கழுத்தில் தாலி தொங்கச் செல்லும் சிறுமி அதைப் பற்றிய உணர்வுடன் நடந்ததாகத் தெரிய வில்லை. ஆனால், குலாசாரம் மீட்கும் அவசியத்தை அறிவுறுத்த, இந்தப் பெண்கள், ஒன்பது கஜமும் ஆசாரிய மடமும் நெறிகளாகக் கொண்ட சில பெருமாட்டிகளுக்குத் தூண்டுகோல்களானார்கள்.
"இதுதான் கண்ணுக்கு லட்சணமாயிருக்கு, தெம்மாடி களாட்டம் பொங்கள வளர்த்து வச்சிண்டு கண்டமானிக்கும் டிரஸ்ஸைப் போட்டு வேலைக்கு அனுப்பறா. அதது அநாகரிமா கண்டவனையும் இழுத்துண்டு போறது. எப்ப கல்யாணத்தைத் தள்ளிப் போட்டாளோ, அப்பவே ஆசாரம் போச்சு!”
தருமம் நிலைநாட்ட திமுதிமுவென்று வளர்ச்சியடையும் பெண்களைப் பிடித்திழுத்து, ஒன்பது கஜத்தைச் சுற்றி உட்கார வைத்து, ஒருவன் கையில், கயிற்றைக் கொடுத்துக் கட்டுடா' என்று சொல்ல படைப்படையாக எல்லாரும் கிளம்பவேண்டும் என்று அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.
தஞ்சாவூர் நந்தியைப் பற்றிச் சிறுவயசில் நான் ஒரு கதை கேட்டதுண்டு. கல்லால் பணித்த நந்திகேசுவரர் வளர்ந்து கொண்டே போனாராம், வளர்ந்து வளர்ந்து மண்டபக் கூரையை முட்டிக்கொண்டு உடைத்து விடுவார்போல, அப்போது இறைவன் சிற்பியின் கனவில் வந்து ஓர் உபாயம் சொன்னாராம். அதன்படி இரண்டு கொம்புக்கும் நடுவில் நெற்றிப்பொட்டில் ஓர் ஆணியை வைத்து இறுக்க, நந்தி குறைந்துகொண்டே வந்து நிலைத்ததாம்.
எனக்கு அந்தக் கதை நினைவுக்கு வந்தது.
அறிவு, திறமை, ஆளுமை, ஆற்றல் இதெல்லாம் பெண்ணுக்கு வளர்ந்தால் அவளுக்கென்று தனித்த சிந்தனை, தன்னுணர்வு மிகுதியாகும். நம்பிக்கை எல்லாம் வந்து விடுமோ? எனவே, உடல் வளர்ச்சியுடன் ஏனைய இதய அறிவுமலர்ச்சிகள் எய்திவிடாமல், உடல் பரமாகவே அவள் தன்னை இழந்துவிட வேண்டுமென்றால், இழுத்து வைத்து மனையில் உட்கார்த்தி, கல்யாணம், கற்பு, சம்சாரம் என்ற முக்கூட்டு ஆணியை பலமாக அவளுள் இறுக்கிவிட்டால் பிறகு அசைய முடியாதல்லவா?
ஆனால், இந்த சநாதனத்துக்கு மறுபக்கம் என்ற ஒன்றை இவர்களால் நினைக்கவே முடிவதில்லை. சநாதன மரபு, பெண்ணைப் பன்னிரண்டு வயசில் கையில் குழந்தையைக் கொடுக்கும் தாயாக்கி, முப்பது வயசில் மூத்த கிழவியாக்கினாலும், புருஷன் அவளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். பொருளீட்ட அவளை வெளியே அனுப்பலாகாது என்று கருதியதே, அதைப் பற்றிய நினைவே அழிந்துவிட்டது. பெண் பொருளீட்டி வர எந்த வேடம் போட்டாலும் அது அனுமதிக்கப்படுகிறது.
பொருள் மட்டும் அவளுக்கு உரிமையானதல்ல. அதற்காக அவள் பெற்ற மதலையையும் எவரிடமேனும் விட்டுச் செல்லலாம். பதிக்கேற்ற சதியாக அவன் சொல்லும் சுகமே தனது வாழ்க்கை இலட்சியங்களாக நடக்க வேண்டுமென்று சநாதன தருமத்துக்குப் புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறார்கள்.
உபநயனம் மறுக்கப் பெற்று அது சம்சாரப் பிணிப்புச் சடங்காக மாற்றப்பட்டதற்கு என்ன காரணம்? அந்த நெறி எப்போது எப்படித் தொடங்கப்பெற்றது? என்கிற ஆராய்வு எங்கெங்கோ நம்மை எட்டிப் பார்க்கச் செய்கிறது. வேதம் ஓதுவதும், வேள்வி புரிவதும், சமுதாய நன்மையை முன்னிட்டென்ற கருத்தில் மக்களில் ஒரு சாராரும், தோள்வலி பெருக்கி எதிரிகளாய் இன்னல் கொடுப்போரை எதிர்த்துப் போராடும் வலிமையுடன் இன்னொரு சாராருமாக இயங்கிவந்து காலத்து, மக்களிடையே வருணபேதங்கள் ஆழ்ந்து பிரிவுப்படுத்தியிருக்கவில்லை.
வேள்விக்கும் வேதத்துக்கும் முதன்மையாக நின்ற குலத்துக்கன்னியர், தோள்-வலிமையினால் சமுதாய நலன் காத்த வீரரை மணந்தார்கள். அவ்வாறே வீரர் குலத்து மங்கையர் முனிகுமாரர்களுக்கு மனைவியாவதில் தடையேதும் இருந்ததில்லை. உபநயனம் ருக்வேத ஆசியருக்கு மட்டுமே உரிய சடங்காகவும், அறிவும் ஞானமும் அவர்களுக்கே உரித்தான செல்வங்களாகவும் கருதப் பெற்றிருக்கவில்லை.
தொன்மையான ஆரிய சமுதாயத்தில் எல்லாப் பிரிவு மக்களுக்கும் பெண்களுக்கும் உபநயனம் இன்றியமையாத சடங்கென்றுதான் கருதப்பட்டது. உபநயனச் சடங்கின் விதிமுறைகளில் ஊமையருக்குச் செய்வதற்குரிய முறைகளும் காணப்படுகின்றன. ஆசானே மந்திரங்களை உச்சரித்துக் கற்பிக்கும் முறை விவரிக்கப் பெற்றிருக்கிறது.
வீரியமற்றோர், குருடர், வலிப்பு முதலிய நோயினால் பீடிக்கப் பெற்றோர் யாராக இருந்தாலும் உபநயனம் அவருக்கு விலக்கானது அல்ல. மேலும் பாரத நாட்டில் அப்போது வாழ்ந்த நாகரீகமற்ற வேடர், மற்றும் மலை, வனங்களில் வாழ்ந்த பல்வேறு இன மக்களும் உபநயனச் சடங்கு விரும்பினால் மேற்கொண்டு ஆரிய சமுதாயத்தில் இணைவதற்குரிய விதிமுறைகளும் நெறிப்படுத்தப் பட்டிருக் கின்றன.
'விராட்ய ஸ்தோமம்' என்ற சடங்கினால் அவர்கள் புனிதமாக்கப் பெற்று உபநயனம் பெறுவதற்குரிய தகுதியை அடைந்தார்கள். சமுதாயத்தில் மானிடராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தத்தம் அறிவைத் துலக்கிக் கொண்டு மேன்மை பெறவும், ஈனமற்ற தொழில் புரிந்து நல்வாழ்வு வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை உபநயனம் மறுக்கப்படும்போது, பறிக்கப் பெறுகிறது.
ருக்வேதம் காட்டும் சான்றுகளில் இவ்வாறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் பிரதிபலிப்பு எதுவுமே இல்லை.
ஆனால், ருக்வேதத்தில் பொதிந்துள்ள 'புருஷ ஸுக்தம்' நான்கு வருணத்தவர்களைப் பற்றி விவரிக்கிறது.
ஆதி புருஷனின் நெற்றியிலிருந்து முதல் வருணத்தவரும், தோள்களில் இருந்து இரண்டாம் வருணத்தவரும் தொடைகளில் இருந்து மூன்றாம் வருணத்தவரும், பாதங்களில் இருந்து நான்காம் வருணத்தவரும் உண்டாயினர் என்று கூறப்படுகிறது.
முதல் வருணத்தவர் தன்னலமின்றி சமுதாய நலனுக்காக, பிரும்மத்தை வேட்கவும், வேதம் பயில்விக்கவும் வேள்விகள் நடத்தவும், உரிமை பெற்றவரென்றும், இரண்டாம் வருணத்தவர், தோள்வலி கொண்டு சமுதாயம் காக்க உரிமை கொண்டவரென்றும், மூன்றாம் வருணத்தவர் பொருள்வளம் கண்டு சமுதாயம் பேண உரிமை பெற்றவரென்றும், நான்காம் வருணத்தவர், முதல் மூன்று வருணத்தாருக்கும் ஊழியம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும், வேறு எதற்கும் உரிமையற்றோர் என்றும் சமுதாயத்தில் பெரிய மானுடப் பிளவைத் தோற்றுவிக்கிறது.
உபநயனம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படும் நிலைமை ஏற்படுகையில் பெண்ணும் நான்காம் வருணத்தவரின் இடத்தில் தள்ளப்பட்டாள்.
ருக்வேதம் காட்டும் சமுதாய உணர்வில், இந்தப் புருஷ ஸுக்தம் பாயசக் கல்லாகக் கடிபடுகிறது.
"நான்காம் வருணத்தவர் யாவர்?" இந்த வினாவை எழுப்பி அதற்கு விடையாக சமூக வரலாற்று அறிவியல் மேதையான டாக்டர் அம்பேத்கார் ஓர் அகன்ற, ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு, மிக ஆச்சரியமான சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். அது நம்முடைய பார்வைக்கு மிக இசைவாக உள்ளது. அதைக் கூர்ந்து பார்ப்போம்.
---------------------
9. வருண பேதங்கள்
'அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி' என்று முகப்பைத் தாங்கிய வாயிலுள் பஞ்சையாகத் தெரியும் தொழிலாளத் தாய் ஒருத்தி தன் பன்னிரண்டு வயதுச் சிறுமி யைக் கூட்டிக் கொண்டு நுழைகிறாள். நுழைவுக்கான தேர்வு முடிந்து, பணம் கட்டிப் பெயர்ப் பதிவு செய்ய வேண்டும்.
நீண்ட மேசையைச் சுற்றிப் பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆதரவாளர் என்ற நிலையில் அரசுத் தொடர் புடையோர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் பஞ்சையான தாயைப் பார்த்ததும், 'ஏம்மா அப்பாவைக் கூட்டிட்டு வந்துதான் சேர்க்கணும்னு சொன்னமில்ல? நீ மட்டும் வந்தா எப்பிடி?... போயி அப்பாரை இட்டுட்டு வா!....' என்று சொல்கிறார்கள். தாய் பதிலேதும் சொல்ல முடியாமல் விழிக்கிறாள். அப்பன் உயிருடன் இருக்கிறான். ஆனால், அவன் தொழிலுக்குப் போயிருப்பது காரணமாகாது. தன் பெண் படிக்க வேண்டும் என்று ஆசையும், அன்பும், குடும்பப் பொறுப்பும் உள்ள தந்தையாக இருந்தால், எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுவான். இவனோ "பொட்டக்கயிதக்கி இன்னாடி படிப்பு? நாலு காசி சம்பாரிச்சிட்டுவரத் தெருத்திவுடு!” என்று திருவாய் மலரும் வர்க்கத்தினன். அத்துடன், மகள் சம்பாத்தியமும் சேர்ந்தால், கள்ளுக்கடைக்குச் செல்லத் தட்டில்லாமல் வருமானம் கிடைக்கும் என்று எண்ணும் 'குடித்தலைவன்' .
"அவருக்கு வரச் சவுரியப்படாதுங்க-” என்று தாய் தயங்கி விழிக்கிறாள்.
"சவுரியப்படாதுன்னா எப்படி? அப்பாரு வந்துதான் கைநாட்டுப் போட்டு இஸ்கூல்ல சேர்க்கணும்” என்று விதியை எடுத்துரைக்கிறாள் தலைமை ஆசிரியை.
பெண் சமத்துவம், பெண் கல்வி, பெண் எழுச்சி, பெண்ணுரிமை என்றெல்லாம் சொற்கள் முழங்கப் பெறும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில், ஒரு பெண் குழந்தையைப் பெண்கள் பள்ளியில் சேர்க்க, தகப்பனே
முன்னுரிமை பெற்றவன் என்ற விதி திருத்தியமைக்கப் படவில்லை என்பது நமக்கெல்லாம் ஆச்சரியமும் வேதனையும் தரக்கூடிய உண்மை.
பழங்காலத்தில், ஆண், பெண், ஊமை, செவிடு நோயுற்றவர், வனங்களில் வசித்த பழங்குடி மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்குமே 'உபநயனம்' என்ற கல்விக் கண்ணைப் பெறும் உரிமை இருந்ததென்று கண்டோம். ருக்வேதம் பெண்ணை எட்டு வயசில் தாலிக்குத் தலைநீட்டச் சொல்லவில்லை.
ஆனால் அதே வேதத்தில் 'புருஷ ஸுக்தம்' என்ற பகுதி மானுட சமுதாயத்தின் பாரபட்சமான வருண முறைப் பாகுபாட்டை நியாயப்படுத்துகிறது. நான்காவது வருணத்தார் என்ற ஒரு பிரிவினரை எந்தக் காரணமும் இன்றிக் குழியில் தள்ளுகிறது.
எழுத்து வடிவம் பெற்றிராத வேதமொழி ஒலி வடிவங்களிலேயே தொன்று தொட்டுத் துலங்கியது; மக்கள் குலத்தை வாழ வைத்தது. சமுதாய நலம் கருதிச் செய்யப் பெறும் வேள்விகளுக்கு இந்த ஒலி வடிவங்களே உயிர் நல்கின. எனவே இந்த வேதங்களைத் தம் மூலாதாரங்களிலிருந்து நாவின் ஒலிப்பூக்களாய் வெளியிடவும், அற்புத ஆற்றலுடன் அவற்றை நினைவில் சுமந்து பாதுகாக்கவும் ஒரு சாரார் பழகினார்கள். அவர்கள் மக்கட்குலத்தின் மேலாம் பணியைச் செய்ததால் முதல் வருணத்துக்கு உரியவர்களாக ஆனார்கள். இந்த வருணத்தாருக்கு, உணவு, மற்றும் உயிர் வாழத் தேவையான பொருளுக்கு உழைக்கும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. தோள்வலியும் வாள்வலியும் கொண்டு பகைவர் மற்றும் கொடிய கானக விலங்குகளிட மிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பிரிவினரும், மண்ணில் விளைத்தும், வேட்டையாடியும், உணவைச் சேமித்துச் சமுதாயத்துக்களித்த பிரிவினரும், முதல் பிரிவினரை மேலாகக் கருதி அளிக்கும் தானத்தைப் பெறவும் உரிமை பெற்றிருந்தனர். தானம் பெறுவது எதற்காக?
சமுதாய நலன் கருதிச் செய்யப்படும் வேள்விக்காகவே அப்பொருள் செலவிடப்பட்டது. முதல் வருணத்தவருக்குச் சுயநலம், பொருள் சேமிப்பு இருக்கக் கூடாது. சமுதாயத்தின் சொத்து இந்த வர்க்கம். இந்த வர்க்கத்தினருக்கு; அனைத்து மக்களும் கல்விக் கண்ணைப் பெற, 'உபநயனம்' செய்து வைக்கும் அருங் கடமையும் உண்டு. ஏனைய மக்களுக்கும் வேள்வி புரியவும் வேதமோதவும் உரிமை இருந்தாலும், 'உபநயனம்' செய்து வைக்கும் ஆசான் என்ற உரிமை அந்த முதல் வருக்கத்தினருக்கே இருந்தது.
இவர்கள் சமமானவர்கள் என்ற தத்துவத்தை ருக் வேதத்தின் ‘ஸம்வனன ஸுக்தம்' என்ற பகுதியில் வரும் பாடல்கள் மிக அற்புதமாக வலியுறுத்துகின்றன, ஒரு சக்கரத்தின் ஆரக் கால்களைப் போன்று, ஒரே மையத்தில் இணைபவர்களாய் எத்தொழில் செய்தாலும் ஒரே நோக்கில் ஒரே சிந்தையில் குவிந்து குவிந்து சமமாக வாழ்வீர்கள் என்று உரைக்கிறது.
ஆனால், புருஷ ஸுக்தம், இதற்கு மாறான பிரிவினை களைக் கற்பிக்கிறது.
ஆதிபுருடனின் முகத்திலிருந்தும், தோள்கள், தொடைகளிலிருந்தும், பாதத்திலிருந்தும் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் வருணத்தவர் தோன்றினர் என்று உரைக்கிறது.
நான்காம் வருணத்தவர் பாதங்களில் உதித்தவராதலால், கல்வி பெறவும் கடமைகளுக்கு உரியவராகவும், தொழில் புரியவும் தகுதியற்றவர்கள். முதன் மூன்று வருணத்தவருக்கு ஊழியம் செய்து அவர்தம் கருணையில் பிழைப்பதே அவர் தருமம் என்று அறிவுறுத்துகிறது. நான்காம் வருணத்தவர் யாவர்? இவ்வினாவுக்கு, மிகச் சிறந்த சமூக வரலாற்று அறிஞரான டாக்டர் அம்பேத்கார் ஓர் அகன்ற, ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு, மிக ஆச்சர்யமான ஆதாரங்களுடன் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.
வேதங்கள், உபநிடதம் மற்றும் கிராஹ்ய சூத்திரங்கள், ஜெண்டவஸ்தா முதலிய பல சமய நூல்களில் மூழ்கி அவர் முத்துக்களை அந்நூலில் தந்துள்ளார். அந்த முத்துக்களில் வீசும் இயல்பான ஒளியின் முன், மேலை நாட்டு ஆராய்ச்சியாளரின் கூற்றுக்களும் வேதம், பிரும்மம் என்று பகுத்து ஆராய இடம் கொடுக்காமல் அதில் சேர்ந்துள்ள எல்லா இடைச் செருகல்களையும், அறிவுக்குப் பொருந்தாப் புளுகுகளையும் அப்படியே கட்டித் தூசியையும் புனிதமாக்கிப் பாதுகாக்கும் உடைமைச் சமூகத்தினரின் வாதங்களும் பல்லிளிக்கின்றன.
நான்காம் வருணத்தவரும், பஞ்சமர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களும், இந்திய நாட்டில் ஏற்கனவே தங்கி அரசு, அமைச்சு, படை என்று நாகரிகமாக வாழ்ந்த இனத்தினர் அல்ல; அவர்கள் காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளும் அல்ல; ஆரியர்கள் தங்கள் இனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தார்கள். அதனால் மற்ற இனத்தவரைத் தங்கள் சமுதாயத்தை விட்டு விலக்கி வைத்திருந்தனர் என்பதும் சரியல்ல.
அவ்வாறானால் பன்னிரண்டு தலைமுறைகளைப் பாவனமாக்கும் 'வ்ராட்யஸ்தோமம்' போன்ற சடங்குகளுக்கு இடமில்லை.
ருக் வேதத்தில் காணப்பெறும் ஒரு சான்று, ஆரியர் இந்தியாவில் ஏற்கனவே தங்கியிருந்த இனங்களுடன் சம்பந்தம் செய்துகொண்டதை விளக்குகிறது.
ஆரியர் இவ்வினத்தாருடன் போர் புரிய நேர்ந்தபோது, போரில் வென்றாலும், தோற்றாலும் சமாதான சம்பந்தங்கள் செய்துகொண்டார்கள். முன்பே குறிப்பிட்டபடி ஆரியரல்லாத இந்த ஆதிச் சமுதாயத்தில் அடிமைகள் குறிப்பாகப் பெண் அடிமைகள் இருந்தார்கள்.
ஆரியர் வென்றாலும், தோற்றாலும் அவர்கள் பக்கம் பெண் அடிமைகள் வந்தார்கள். இந்தப் பெண்கள், 'வது'க்கள் என்று குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆரிய சமுதாயத்தில் சான்றோர் மற்றும் வீரருடன் சம்பந்தம் கொள்வது தவறாகக் கருதப்படவில்லை.
'வது'க்கள் ஆண் மக்களைப் பெற்றால், ஆரிய மனைவியருக்குச் சமமானவர்களாக உயர்ந்த மதிப்புப் பெற்றனர். இந்த அடிமைப் பெண்களின் சந்ததியினரும் கல்வியுரிமை பெற்றனர் என்பதை சாந்தோக்ய உபநிடதச் செய்தி ஒன்று விளக்குகிறது.
ஸத்யகாமன் ஓர் அடிமைப் பெண்ணின் மைந்தன். அவன் மானிடரை உய்விக்கும் மேலாம் கல்வியைப் பெற விரும்புகிறான். 'தாயே, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையில் எப்படியம்மா குருகுலத்தில் மாணவனாக இடம் பெறுவேன்?' என்று கேட்கிறான்.
அதற்கு ஜாபாலி என்ற பெயருடைய அந்த அன்னை 'மகனே நீ இந்த உண்மையைச் சொல் : 'நான் ஜாபாலி ஸத்யகாமன். என் அன்னை தம் இளவயதில் பல எஜமானர்களுக்குப் பணியாட்டியாக இருந்தார். இதுதான் உண்மை !' என்று நான் உரைத்ததாகச் சொல்' என்று கூறி அனுப்புகிறாள்.
முனிவர், ஸத்யகாமன் கூற்றைச் செவியுற்றதும், 'நீ உண்மையைக் கூறியதால், மேலாம் வருணத்துக்குரியவன் தான். உனக்குக் கல்வி பயிற்றுவேன்' என்று ஏற்றாராம்.
இந்தச் செய்தி அடிமையின் மைந்தனுக்குக் கல்வி யுரிமையை உறுதியாக்கினாலும், தந்தை யார் என்ற சிடுக்கு ஒன்று உபநிடத காலத்தில் தோன்றிவிட்டதை உணர்த்துகிறது.
டாக்டர் அம்பேத்காரின் ஆய்வு நூல் உபநயனச் சடங்கில் மேவிய புதிய பரிமாணங்களையும் விரித்துரைக்கிறது.
வேதகாலத்து உபநயனத்தில் முப்புரி நூலைப் பற்றிய குறிப்பே இல்லை. பிற்காலத்தில்தான் முப்புரி நூல், தந்தைவழிப் பாரம்பரியம் கூறிக் கோத்திரம் உறுதி செய்யும் சடங்குகள் எல்லாம் உபநயனத்துடன் இசைந்தன.
அத்துடன் உபநயனம் செய்து வைக்கத் தகுதியும், உரிமையும் பெற்ற முதல் வருணத்தாருக்கும், பெண்களுக்கும், நான்காம் வருணத்தாருக்கும் உபநயனம் செய்து வைக்கக்கூடாது; மீறிச் செய்தால் பாவத்துக்கு ஆளாவர் என்ற விதி நெறிகள் ஏன் வந்தன?
வேத ஒலியைக் கேட்பதே பாவம் என்று ஒரு சாராருக்குக் கடும் ஆணையும், சொல்லி வைத்தால் கொடு நரகம் என்று இன்னொரு சாராருக்குப் பயமுறுத்தலும் யாரால், எதற்காக இந்தச் சமுதாயத்தில் புகுத்தப்பட்டன?
'ஒன்றாக நடப்பீர்; ஒன்றாகச் சிந்திப்பீர்; உங்கள் குறிக்கோள்களும் எண்ணங்களும் ஒரே மையத்தில் இணையட்டும். உங்கள் உணவு, பருகு நீர் எல்லாம் எல்லாருக்கும் உகந்ததாக இருக்கட்டும்' என்ற சமத்துவ நெறியை எதற்காகக் குதறி எறிந்தார்கள்?
முறைகேடான பிளவுகளை வலியுறுத்த, நியாயப்படுத்த, வேதத்தின் முத்திரை வேண்டும் என்று புருஷஸுக்தம் என்ற புனைவு, ருக் வேதத்தில் திணிக்கப்பட்டது. இதைத் திணித்தவர்கள், சாம்ராச்சியங்களும் அரச பதவிகளும், உடமை வருக்கப் போகங்களும் கூட்டிவிட்ட மோகங்களுக்கு அடிமைகளாகித் தீர்ந்த முதல் வருக்கக் குருமார். பிரும்மகுல ருஷி என்று முதன்மைப் பதவி அனுபவித்த வசிஷ்டர், க்ஷத்திரிய கலத்தில் பிறந்து தன் விடாமுயற்சியினால் அந்த நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்ட கோசிக முனிவராகிய விசுவாமித்திரர் ஆகிய இருவரிடையே தொடர்ந்து வந்த பூசல்களும் வழக்கு வாதங்களும் அம்பேத்காரின் நூலில் ஆராயப்படுகின்றன.
இந்த ஆய்வில், நமது புதிர்களுக்கும் சிறிது வெளிச்சம் தென்படுகின்றது. போர்களும், பழி வாங்கல்களும், பூண்டோடு குலமழிப்போம் என்ற சூளுரைகளும் வேதப் பாடல்களிலும், பின்னர் புராண மரபுகளிலும் தொடர்ந்து வருகின்றன.
'பழி வாங்கின விளைவே, உபநயனம் செய்து வைக்க முன்னுரிமை பெற்றிருந்த முதல் வருணத்தாரை, இரண்டாம் வருணத்தவராக இருந்த ஒரு பிரிவினரான எதிரிகளுக்கு உபநயனம் செய்து வைப்பதில்லை என்று கட்டுப்பாடாக ஒதுங்கச் செய்தது' என்ற முடிவை நூலாசிரியர் கொண்டு வருகிறார்.
உபநயனம் இல்லையேல், வேதம் படிக்க, அறிவொளி பெறத் தகுதி இல்லாதவராகிறார். இதனால் வேள்விகளில் பங்கேற்பு இல்லாமலாகும். இதனால் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை கழன்றுபோகும். பிறகு அவர்கள் முன் னுரிமை பெற்ற மக்களுக்கு ஊழியம் செய்துதான் பிழைக்க வேண்டும்.
சமுதாயத்தின் ஒரு சாரார் காலப்போக்கில் அறிவுக் கண்களை இழந்து அடிமைத் தளைகளுக்கு உள்ளாயினர். இது தெரியாமலிருக்க, புதிய புதிய தரும சாஸ்திரங்கள், நீதி நெறிகள் எல்லாம் தெய்வீக முத்திரைகளுடன் பெருகலாயின. பழைய மாண்புகள் திருத்தப் பெற்றன.
மூன்றுக்கு மேல் நான்காம் வருணமும், அதன்பின் பல்வேறு சாதிகளும், பஞ்சமர் என்ற ஐந்தாம் நிலை 'அதோ கதி' வருணமும் தோன்ற வழிகள் ஏற்பட்டன.
பெண்... இந்தச் சமுதாயச் சுழற்சிகளில் உயிரற்ற சுழற்சிக் காயாக மாற்றம் பெறலானாள். அவள் இத்தனை பிரிவுகளும் தோன்றக் காரணமாகவும் இருந்து அதே சமயம் தனக்குரிய மனித கௌரவத்தையும் இழந்தாள். எப்படி என்று
பார்ப்போமே!
--------------------
10. குரு பீடங்கள்
அம்மன் கோயில் விழா! மஞ்சள், சந்தனக் காப்புகள், மஞ்சளாடைகள், கொதிக்கும் வெயிலில் தீச்சட்டி தூக்கும் பக்தி வெறிகள், வேப்பிலை ஆடைகள் என்று தெருவே பிதுங்குகிறது. கோயிலில் அம்மனுக்கு மேல் அம்மனின் அருளை மனித உருவில் வழங்கும் சுவாமி இருக்கிறார். அவருடைய வேப்பிலை நீர் மேலே விழுந்ததும் பெண்கள் ஆவேசம் வந்து ஆடுகிறார்கள்....
குரு சுவாமிகள் வருகிறார். பெண்கள் படைபடையாக அருள் கேட்க பாதத்தில் விழுகிறார்கள்.
"கல்யாணமே கூடவில்லையே? என்ன செய்ய?" என்று தாய்மார்கள் பரிதவிக்கிறார்கள்.
"ஆறு வாரம் இக்கோயிலில் மஞ்சள் சரட்டைக் கட்டு, கல்யாணம் ஆகும்!" என்று சுவாமி திருவாய் மலர்ந்து அட்சதை வழங்குகிறார்.
மகளுக்காகத் தாய் பக்தி சிரத்தையாக மஞ்சள் சரட்டைக் கொண்டுவந்து சந்நிதியில் கட்டுகிறார்.
“எலுமிச்சை ரசத்தைப் பிழிந்துவிட்டு, திருப்பி நெய்யூற்றி விளக்கேற்றுங்கள், கல்யாணமாகும்!”- இது இன்னொரு வருக்குப் பரிகாரம்.
ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஆணுக்கும் உண்டு. கல்யாணம் என்பது அவளுக்கு மட்டுந்தான் அத்துணை கட்டாயமா என்று இவர்கள் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் நினைத்துப் பார்க்க ஊக்குவதில்லை.
"இந்து சமுதாயத்தில் ஒரு பெண் கன்னியாக இருக்க உரிமை அனுமதியில்லை. அவள் கைம்பெண்ணாக இருக்கலாம். அதனால் உசிதமான வயதில் கல்யாணமாகா விட்டால் ஒரு வாழை மரத்தைக் கணவனாக வரித்து மணமானவளாகத் தாலி தரித்துப் பின் மரத்தை வெட்டிவிட்டுக் கைம்மைக் கோலம் பூண்டு வாழ்வதே தரும சாஸ்திரம்" என்று சொல்லுமளவுக்குக் குரு சந்நிதானங்கள் இங்கே பெண்களிடையே 'மதிப்பை பெற்று இருக்கின்றன. காவி தரித்துத் துறவறம் என்ற நிலையில், சமயம் பரிபாலிக்கும் இந்தக் குரு பீடங்கள் உண்மையில் மக்களை வாழ வைக்கத் தான் உருவாயினவா? இதை ஆராயும்போது, பெண்ணின் வீழ்ச்சிப் பரிணாமத்தின் கூறுகளையும் பார்க்க முடிகிறது.
பெண்ணுக்கு அறிவு வேண்டாம்; அவள் உடம்புதான் முக்கியம். அவள் மக்களைப் பெறுவதற்கே படைக்கப் படுகிறாள். அந்த அளவில் அவள் முக்கியத் துவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியங்கள், நான்கு வருணச் சமுதாயங்கள் தோன்றிய காலத்தில் ஏற்பட்டு விட்டன. உபநயனம் மறுக்கப்பட்டதும், அது தெரியாமல் இருக்க, அவளுள் மணவாழ்வின் மங்கலங்களும் சடங்குகளும் புதிய நெறிகளும் ஏற்றப்படுகின்றன. அறிவும், அழகும் இணைய, சுதந்திரமாக உலவி, வாழ்வின் மையமான ஓட்டத்தில் இருந்து ஒதுங்காமல், ஓர் ஆடவனை விரும்பிச் சேர்ந்து, மக்களைப் பெற்று வாழும் உரிமை ருக் வேதத்தில் வரும் பெண்களுக்கு இருந்திருக்கிறது.
திருமணச் சடங்குகளும், மந்திரங்களும் பெண்ணை முழு மனித வளர்ச்சி எய்தியவளாகவே காட்டுகின்றன.
திருமணப் பிணைப்பில் இருவரும் ஒன்றுபடுகையில் கணவனுடைய தளையற்ற சுதந்திரமும் பிணிக்கப்படுவதாகவே குறிக்கப்படுகிறது. மணமகன் மணமகளை அணுகுமுன், கூறப்படும் சில மந்திரங்களும், சடங்குகளும் ருக் வேத காலத்தில், பருவமடைந்த பின்னரே பெண்களுக்குத் திருமணம் செய்யப்பட்டது என்பதை ஐயந்திரிபற விளக்குகின்றன.
மணமகன் மணமகளை அணுகுமுன், அவள் உடலுக்கு அதுகாறும் பொறுப்பேற்றிருந்த-வர்களாக, நான்கு தேவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். சிறுமியாக பேதைப் பருவத்தில் 'வருணன்' அவளுக்கு வளர்ச்சியைத் தருகிறான். 'ஸோமன்' என்ற தேவனின் பொறுப்பில் அவள் பூப்பெய்தும் நலன் ஏற்படுகிறது. 'அக்னி' அவளுக்கு மலர்ச்சியும், தெளிவும், சக்தியும் நல்குகிறான். 'விசுவாவசு' என்ற தேவன் அவளை இறுதியாக உரியவளாக்கிக் கொண்டு மன்மதக் கலையின் இயல்புகளை உணர்த்துகிறானாம்.
எனவே, மணமகன், மணமகளை அணுகுமுன், இந்த விசுவாவசு தேவனைத் தொழுது, “இந்தக் கன்னியை மணம் புரிந்த நாயகன் வந்துவிட்டான். எனவே அவனுக்கு அவளை அளித்துவிட்டு, தந்தையின் இல்லத்தில் உள்ள வேறு ஒரு கன்னிகையை நீ அணுகுவாயாக!'' என்று பொருள்படும் மந்திரவாசகம் சொல்லப்பட்டது. பெண்ணின் அருகில் ‘விசுவாவசு' தேவனைக் குறிப்பாக்கும் ஒரு தடி (உலக்கை) போடப்பட்டிருக்கும். அடையாளமான அச்சின்னத்தை, இம் மந்திரத்துடன் மணமகன் விலக்குவான்.
இச்சடங்கு, ஒழுக்கம் என்ற பெயரில் பெண் எப்பொழுதும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மேலும் மெய்ப்பிக்கிறது. ஒரு பெண்ணைத் தாயாகக் கருவுறச் செய்யும் உடல்பரமான முக்கிய நிகழ்ச்சிக்கு உடல் முதிர்ச்சியும் உள்ள மலர்ச்சிகளையும் நல்குபவர்கள் ஆண் தேவர்களாகவும் உருவகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த மேன்மைகள், உபநயனம் மறுக்கப்பட்ட கையோடு கட்டாயமாக்கப்பட்ட திருமணத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக வீழ்த்தப் பெற்றன. உபநயனம் மறுக்கப் பட்டதால், வேதம் படிக்கத் தகுதியில்லை.
வேத மந்திரங்களை உச்சரிக்கத் தகுதியிழந்ததால், வேள்விகளைச் செய்வதற்கும் உரிமையற்றவர்களாவார்கள். அக்காலத்துச் சொத்து உரிமை, வேள்விகளைச் செய்ய உரிமை பெற்றவருக்கே இருந்தது. அக்காலத்து உடமைகள், பெரும்பாலும் ஆடு-மாடுகள் குதிரைகளில்தான் நிலை கொண்டிருந்தன. நில உடமைச் சமுதாயம் பரவலாக வழக்கில் வரவில்லை எனலாம். ஆனால் போராட்டங்கள், நில உடமையின் காரணமாகவே நிகழ்ந்தன என்று கொள்ளலாம்.
பெண்களுக்கு உபநயனம் மறுக்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையும் இல்லாதவர்களாக ஒடுங்கினார்கள். இவ்வாறு பெண்களின் ஒடுக்கப்பட்ட பரம்பரை, சீராக இருட்டு மாயையையும் குருட்டுப் பழக்கங்களையும் வளர்க்க அரண்கள் அமைத்து, அவை காவல் மதில்கள் என்று தெரியாமல் இருக்க, பூத்தோரணங்கள், பட்டுக் குஞ்சங்கள் கட்டி அவளை அவற்றிலேயே ஒன்றிடச் செய்தார்கள்.
இப்படிச் செய்தார்கள், ஆக்கினார்கள் என்று விவரிப்பதைக் கண்டு யார் செய்தார்கள் என்ற கேள்வி என்னை நோக்கி எழக்கூடும்.
சமுதாயத்தில் வருண பேதங்கள், மற்றும் பெண்ணடி மைத்தனம் ஆகியவற்றுக்கு அவசியம், குருமார்களால் உண்டாயிற்று.
உடல் வலிமையினால் மனிதத் தொகுதிகளை திறம் பெற்றவருக்கும், அறிவு-ஆன்ம வலிமையினால் ஏற்றம் பெற்றவருக்கும், அதிகார வெறியும், பதவிப்பித்தும், சுயநலங்களும் வளர்ந்ததனால், சண்டை சச்சரவுகள், போர்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாகிய பழிவாங்கலே உபநயனம் மறுக்கப்பட்ட நிலை என்று கண்டோம். அந்த மேலான ஆதிக்க நிலையையும் இன்னும் உறுதியுடன் நிலைப்படுத்திக் கொள்ள, 'குரு வர்க்கம்' உண்டாயிற்று. வலிமையுள்ள க்ஷத்திரிய அரசர்களுக்குக் குருவாகப் பதவி வகிப்பவர்கள், அரசனுக்கும் மேலான மதிப்பையும் நலன்களையும் பெற்றிருந்தார்கள். அரச பரம்பரையில் உதித்த விசுவாமித்திரர், அதனினும் மேலான பதவியாம் 'பிரும்ம ரிஷி'ப் பட்டத்தைக் கேட்க, கடுஞ்சாதனை புரிந்தார் என்பது யாவரும் அறிந்த புராண வரலாறு. இத்தகையை குருபீடங்கள், கத்தியின்றி, இரத்தமின்றி, மக்கள் தொகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர ஏதுவாக பலப்பல புதிய உண்மைகளை, ஆன்மீகக் கருத்துக்களை அள்ளித் தெளிக்க வேண்டி இருந்தது. அவற்றில் முக்கிய மானது, இறந்தபின் மறு உலகம் என்ற கண்டுபிடிப்பு. மரித்தவர் மீண்டும் பிறவி எடுப்பார், என்று மரணத் துக்குப்பின் உள்ள ஒரு வாழ்வைப் பற்றிய நம்பிக்கைகள் கற்பிக்கப்பட்டன.
இந்த நம்பிக்கைகளின் மூலம் பெண்ணை இன்னும் ஆழக் குழியில் வீழ்த்திவிட முடிந்தது. மூளைச் சலவை செய்ய, குருபீடங்களுக்குப் பெண்களே உகந்தவர்களாயினர்!
ருக்வேத காலத்தில், பெண் குழந்தைகளுக்காகத் தனிப்பட்ட வேள்வி செய்யப்பட-வில்லையெனினும், பெண் குழந்தைகள் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். மிக முக்கியமான பால் கறக்கும் உரிமையை அவள் பெற்றிருந்தாள். இதனால் பெண்ணின் பெயரே 'து ஹித' (பால் கறக்கும் உரிமை பெற்றவள்) என்று குறிக்கப்படுகிறது.
ஆனால் ருக் வேதத்திற்குப் பிற்பட்ட அதர்வ வேதத்தில் தான், சடங்குகள், நெறிப்படுத்தப்படும் விவரங்களைக் காண்கிறோம். ‘ருக் வேத' காலத்தில் 'ஸ்திரி' என்ற சொல்லுக்குப் 'பெண்' என்ற பொருள், முழுமையானதாகக் குறிக்கப்படுகிறது. அதர்வ வேதத்தில், 'ஸ்திரி' என்ற சொல் 'மனைவி' என்று நெறிப்படுத்தப்படுகிறது. ருக் வேதத்தில், சடலங்களை எரித்ததற்கான சான்றுகளே இல்லை. புதைப்பதற்கான சான்றுகளே இருந்ததெனக் கூறலாம். ஆனால் அதர்வ வேதத்தில், புதைக்கும் பழக்கம் மாறி, எரிக்கும் வழக்கம் வந்தது. சடலங்களை எரித்த பின், நீர்க்கடன் செய்யும் வழக்கங்கள் தோன்றின. நீர்க்கடன் செய்வதற்கு ஆண் சந்ததியினரே உரியவராயினர். எனவே உலக வாழ்நாளின் கவலையைவிட மறு உலகின் நற்பலன்களைப் பற்றிய கருத்தும் கவலையும் மக்களிடையே முக்கியமானதாக ஊன்றப்பட்டன. இதனாலெல்லாம் பெண் ஆண் மக்களைப் பெறுவதற்கு மட்டும் உரிய கருவியாக நிலைப்படுத்தப்பட்டாள்.
கருவில் இருக்கும் குழந்தை, பெண்ணாகி விடாமல் ஆணாகப் பிறப்பதற்குரிய சடங்குகள் உருவாயின.
ருக் வேத வழக்குப்படி சமுதாயம் இருந்து பின்னர் அதர்வ வேத வழக்கப்படி மாறிற்று என்று காலத்தைக் கணக்கிடுவதற்கில்லை. அதர்வ வேதம் ஆரியர்களின் இன்னொரு பிரிவினரை, முன்னும் பின்னுமாக வந்தவரைச் சார்ந்தது என ஊகிக்கலாம். எனினும்,
பிற்காலத்தில் சமுதாய மாறுதல்கள், அதர்வ வேதத்தில் பரவலாகக் காணப்படும் முக்கியமான சடங்குகள் வாயிலாக, பெண்ணின் கீழ்முக இறக்கம் உறுதிப்படுத்தப் படுகிறது.
----------------------
11. முன்னுச்சி வகிற்றுக் குங்குமம் தீற்றல் - அடிமைப் பெண் அடையாளம்
வடஇந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தாரில் 'ஓரான்' என்ற இனத்தாரிடையே ஒரு நாடோடிக் கதை வழங்கி வருகிறது.
இந்த ‘ஓரான்' இனத்தாரிடையே நான்கு பேர் இளமைப் பருவந் தொட்டே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவன் ஸிந்தூரம் எனப்படும் குங்குமம் விற்பவன்; ஒருவன் துணி நெய்யும் தொழில் செய்பவன்; ஒருவன் மரச் சிற்பச் செதுக்கு வேலையில் தேர்ச்சி பெற்றவன்; எஞ்சியுள்ள இன்னொருவன் பொன் நகைகள் செய்யும் மரபில் பயின்றவன்.
இந்த நால்வகைத் தொழிற் கலைஞர்களுக்கும் கிராமத்தில் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில் அலுப்பு ஏற்பட்டது. புதிய புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தத்தம் தொழிலுக்குரிய சாதனங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வழியில் இரவைக் கழிக்க ஒரு மாந்தோப்பில் அவர்கள் தங்கினார்கள்.
ஒரே சமயத்தில் எல்லோரும் உறங்கி விட்டால், பொருள் ளவு போய்விடலாம் என அஞ்சி, அவர்களில் மூவர் உறங்க, ஞ்சியவர் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு நேர வரையறை செய்துகொண்டு முறை போட்டுக்கொண்டு விழித்திருந்தார்கள்
முதலில் மரச்சிற்பம் செய்யும் கலைஞனின் முறையாக இருந்தது. அவன் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் ஒரு காய்ந்த மரத்துண்டை எடுத்துச் செதுக்கி, அழகிய பெண் வடிவம் ஒன்றை உருவாக்கினான். அதை முடித்து நிற்கச் செய்துவிட்டு, அடுத்தவனை எழுப்பினான். இந்த முறைக்காரன் பொன் நகைகள் செய்யும் கலைஞன். அழகான மரப் பிரதிமையைக் கண்டதும் நகை செய்து போட்டால் நன்றாக இருக்குமே என்று கருதினான். பிரதிமையில் சங்கிலிகள் ஏறின. கம்மல்கள், கைவளையல்கள் என்று அழகு செய்தான்.
இதற்கு அடுத்த முறைக்காரன் துணி நெய்பவன். 'ஓ இந்த அழகிய பிரதிமைக்கு ஆடை இல்லாதது குறை அல்லவா?' உடனே அழகிய சேலை ஒன்றை நெய்து, பிரதிமைக்கு அணிவித்தான்.
இறுதியாக விழித்திருக்க வந்தவன் குங்குமம் விற்பவன். பொழுது விடியுந் தறுவாயில் அந்தப் பிரதிமையின் நெற்றியில் குங்குமத்தை எடுத்துத் தீற்றினான். மரப்பிரதிமை உடனே உயிர் மெற்று, நாணமும் எழிலும் குலவும் நங்கையாக நின்றாள்.
நான்கு நண்பர்களும் அந்தப் பெண்ணை யார் மனைவியாக்கிக் கொள்வது என்று தமக்குள் பூசலிடத் தொடங்கினார்கள். மரச்சிற்பி அவளைத் தானே உருவாக்கியதால், தானே அவளுக்குரியவன் என்று வாதிட்டான். பொன் அணிகள் செய்து மூட்டியவனும், ஆடை நெய்து அணிவித்தவனும் தங்களுக்கே அவள் உரியவளாக வேண்டும் என்று உறுதியாக நின்றார்கள்.
குங்குமக்காரனோ, தான் குங்குமம் வைத்ததாலேயே அவள் உயிர் பெற்றாள் என்று உரிமை கோரி வாதாடினான்,
இவர்கள் இவ்வாறு சச்சரவிடுகையில் அங்கொரு பெரியவர் வந்தார். அவர் நால்வரின் வாதங்களையும் கேட்டபின், இவ்வாறு தீர்ப்புக் கூறினார்.
"அவளை உருவாக்கிய சிற்பி, தந்தையாகிறான். ஆடை அணிவித்தவன் மூத்த தமையன் ஆகிறான். அணிகள் செய்து அலங்கரித்தவன் தாய் மாமனாகிறான்; அவளைத் தொட்டு நெற்றியில் குங்குமம் தீற்றியவனே கணவனாகும் உரிமையைப் பெறுகிறான்."
திருமணம் என்பது, ஓர் ஆண் ஒரு பெண்ணை உடமையாக்கிக் கொள்வது என்று பொருள் படுவதாக இக்கதை வலியுறுத்துகிறது. அவ்வாறு உடமைப் பொருளாக ஆக்கிக் கொள்வதற்குரிய அடையாளமே குங்குமத் தீற்றல் சடங்கென்பதும் தெளிவுறுத்தப் படுகிறது.
இன்றும் வடஇந்திய மக்களிடையே குங்குமத்தீற்றல் ஒன்றே திருமணம் நிறைவேறிவிட்ட பெண்ணுக்குரிய அடையாளச் சின்னமாக இருக்கிறது.
தென்னிந்தியரிடையே வழக்கில் உள்ள தாலி, அல்லது 'மாங்கல்யம்' வட இந்தியத் திருமணங்களில் இல்லை. மேலும் தென்னிந்தியச் சிறுமிகள் போல், வடஇந்தியாவில் திருமணமாகாத சிறுமிகள் குங்குமப் பொட்டு அணிவதை முக்கியமாகக் கருதுவதில்லை. ஏன், அணிவதில்லை என்று கூடச் சொல்லலாம். (இந்நாட்களில் அழகு அலங்காரப் பொருள்களாக மலிந்துவிட்ட பிளாஸ்டிக் ஒட்டுப் பொட்டுகள் விதிவிலக்கானவை)
இவ்வழக்கைப் பற்றி நான் வேடிக்கையாகக் குறிப் பிடுகையில் வங்க எழுத்தாள சோதரி ஒருவர் என்னிடம் ஒரு தகவல் கூறினார்.
"மனிதர் கூட்டம் கூட்டமாக வீடு வாசலின்றித் திரிந்த நாட்களில், ஆங்காங்கு காடுகளில் உறங்குவதும் வேட்டையாடி உண்பதும், இனம் பெருக்குவதுமாகத்தான் வாழ்ந்தனர். அந்நாட்களில் ஒருவன் ஒரு பெண்ணைக் கருவுறச் செய்யுமுன், அவளைக் கையில் உலோக வளையமிட்டு (இரும்பு) இழுத்துச் சென்று, தனிமையில் உறவு கொண்டான். அவ்வாறு அவள் பயன்படுத்தப் பெற்றதற்கு அடையாளமாக, கூரிய கல்லை எடுத்து, அவள் நெற்றியில் குத்திக் குருதி வரச் செய்து, முன்னுச்சியில் அடையாளக் கோடிட்டான். அதுவே இன்றளவும் திருமணத்தின் ஸிந்தூரச் சடங்காக முதன்மை
பெற்றிருக்கிறது."
இந்தக் கூற்றுக்கு ஆதாரம் தெளிவாகத் துலங்கவில்லை என்றாலும், இது நம்பற்குரிய சான்றாகத் தோன்றுகிறது. இந்தியப் பழங்குடி இனத்தாரிடையே இருந்து இந்த வழக்கம் வேதகால ஆரியரிடையே பரவிற்றா என்பது ஆய்வுக்குரிய கருத்தாகும்.
'பரிஃபால்ட்' தம் நூலில் பழங்குடி வழக்கங்களைப் பற்றி எழுதுகையில், திருமணச் சடங்குகளில் ஆதிக்குடியினர், மணமகள் குருதி அடையாளம் தரிக்கும் வழக்கைப் பற்றிக்
குறிப்பிடுகிறார்.
இவ்வாறு குருதியினால் அடையாளம் இடுவது அவளுடைய கணவனாக வருபவனுக்கு அவள் புனித மானவளாகவும், ஏனைய ஆடவருக்கு அவள் களங்க முடையவளாகவும் கருதப்படுவதற்கான சின்னமாக இருந்ததென்றும் குறிக்கிறார். இந்தச் செய்தி வங்கச் சோதரியின் கூற்றுக்குச் சான்றாகவே இருக்கிறது.
பெண்ணுக்கு மருதோன்றி இடும் சடங்கு, சிவப்பு ஆடையினால் அவளை அலங்கரிப்பதும்கூட, இன்றளவும் வடஇந்தியாவில் மிக முக்கியமான வழக்கங்களாக இருக் கின்றன. மணப்பெண்ணின் கைகளிலும், கால்களிலும் செம்பஞ்சுக் குழம்பில் நேர்த்தியாகக் கோலங்களிட்டு அலங்கரிப்பதும் வடஇந்தியத் திருமணங்களில் முதன்மை பெற்றிருக்கின்றன.
வங்கத்தில் இன்றளவும் சுமங்கலிப் பெண்களுக்குரிய சின்னங்களாக உலோக சங்கு வளையல்களும் ஸிந்தூரமும் துலங்குகின்றன. பழங்குடி மக்களிடையே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பரிணாம வளர்ச்சி தோன்றியிராத நாட்களிலும் சில அநுபவங்களின் மீது நிர்மாணிக்கப்பட்ட நெறிகள், ஏற்கனவே கருவுறச் செய்த நங்கை, புனிதமானவளல்ல என்று காட்டும் அடையாள அவசியத்தை உணர்த்துவதாக இருக்கலா மல்லவா...!
ருக்வேத கால ஆரியர் திருமணம் செய்து கொள்வதனால் பெண்ணை உடமைப் பொருளாகப் பாவிக்கக்கூடிய சடங்குகளும், வழக்குகளும் இருந்திருக்கவில்லை.
ஆனால் அடிமைகளாகப் பிற இனத்தாரிடம் இருந்து ஆரிய சமுதாயத்தில் வந்து சேர்ந்த வதுக்களை இங்கே நினைவில் கொண்டு வரலாம்.
ஆரியர் சிந்து- கங்கைச் சமவெளிகளில் ஊன்ற வந்தபோது, போராடுவதற்கும், நிலைப்பதற்கும், எண்ணிக்கையில் குறைவாக இருந்த காரணத்தினால், இனப் பெருக்கத்துக்காக வதுக்களுடன் தொடர்பு கொள்வது உகந்ததாக இருந்தது.
இந்த வதுக்களுக்கும், 'விலை மகள்' என்ற வழக்கில் பெண்டிரை அடிமைப்படுத்திய நிலைக்கும் மிகுந்த வேற்றுமைகள் உண்டு.
ஓர் அரசன், அல்லது செல்வச் சீமான் தனது ஆடம்பர சுகபோக சுய மதிப்பை உலகுக்கு அறிவிக்கும் வகையில் அழகிய பெண்டிரை அந்தப்புர அடிமைகளாக வைத்த நிலை முழு ஆணாதிக்கச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகும்.
ஆனால் பரிசிலாக வந்த 'வதுக்கள்' தத்தம் எசமானருடன் தொடர்பு கொண்டு ஆண்மக்களை ஈன்றதும், ஆரிய மனைவியருக்குச் சமமாகவே சமுதாய மதிப்பையும்
பெற்றார்கள்.
குங்குமத் தீற்றலை மணச்சடங்காக வழக்கில் கொண்டு வந்தவர்கள், வதுக்களாக இருக்கலாமோ என்பது சிந்தனைக்குரியது. இன்னும் ஒரு படி முன்னேறினால், அடிமைப் பெண்கள் வதுக்களாயினர் என்று அடையாள மிடப்பட்ட சின்னமே, குங்கும மங்கலத் தீற்றலாயிற்றென்றும் கொள்ளத் தோன்றவில்லை?
--------------------------
12 குங்குமச் சின்னம்
பொட்டும் - கலையும் லெனின் கிராத் நகரின் தெருவொன்றில் நடை பாதையில் நான் தனித்து விடப்பட்ட சுதந்திரத்தை அநுபவித்தவளாய் நடந்து கொண்டிருக்கிறேன்.
காலை எழுந்தவுடன் நம்மைப் பிணைக்கும் எத்தனை எத்தனையோ கடமைக் கயிறுகளிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சி; தெரிந்தது பழகிய இடம், முகங்கள் என்ற பிணைப்பும் இல்லாத புதுமைகள்; எனது ஆர்வக் கண்களால் பருக இயலாத புதுமை வெள்ளமாய் விரியும் வேற்று மொழிச் சூழல்.
சட்டென்று எனது பாதை தடைபட்டுப் போகின்றது. என்னைச் சுற்றி ஒரு வியப்பு வளையமே நெருங்கிவிட்டது. அந்த முகங்களுக்கும் மின்னிய கண்ணொளிப் பார்வை களுக்கும் கேள்விக்குறியாக நானே நிற்கிறேன். புரிந்து கொள்ளச் சில மணித்துளிகள் ஆகின்றன. எனது சேலை உடை மட்டும் அந்நிய உடையைப் பறையடிக்கவில்லை.
ஒரு மூதாட்டி மெல்லிய பறவைக் கதகதப்புடன் என் கையைப் பற்றி இழுக்கிறார். நெற்றிப் பொட்டை இன்னொரு கை சுட்டுகிறது, வியப்பு விழிகள் மின்ன வினா எழும்புகிறது.
"இந்தச் சிவப்புப் பொட்டு அணிவதன் நோக்கமென்ன? இது சமயக் குறியா?"
இதைத் தெரிந்துகொள்ளவே அத்துணை நாட்கள் தவம் கிடந்தாற் போன்றும், திடுமென்று நகரத்து நடைபாதையில் நான் அகப்பட்டுவிட்டாற் போன்றும் புத்தார்வம் குமிழியிடும் புன்னகைகள் என்னைச் சுற்றி மொய்க்கின்றன.
“இந்து சமயச் சின்னமா? சடங்குகளுக்குரியதா? ஆண்களும் தரிக்கலாமா?" பல்வேறு வினாக்கள் என்னைத் தாக்க நான் திக்கு முக்காடினாலும் சமாளித்துக்கொண்டு கோர்வையில்லாமல் ஏதேதோ கூறுகின்றேன்.
உண்மையில் எனது அறியாமை எனக்கே வெட்ட வெளிச்சம் ஆயிற்று.
“சமயச் சின்னமா சடங்குகளுக்குரியதா?" என்னால் ஆங்கிலத்தில் தான் கூற முடியும். அவர்களில் எத்தனை பேருக்குப் புரிந்ததோ புரியவில்லையோ? என்ற இயலாமை வெட்ட வெளிச்சமாகப் புரியாத புண்ணியத்தை மொழித் தடை கட்டிக் கொண்டது.
இத்தகைய சந்தர்ப்பங்கள் இந்தியாவிலிருந்து செல்லுகின்ற பல பெண்களுக்கும் நேர்ந்திருக்கும். குங்குமப் பொட்டு திலகமிடுதல் குறித்து இன்றுவரையிலும் திட்டவட்டமான கருத்தை யாரும் எடுத்துரைத்ததாக என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை.
ஒரு சமயம் பலப் பல ஆண்டுகளுக்கு முன் புறநகர்ப் பேருந்து ஒன்றில் கிராமத்து முதியவர் ஒருவரும், கிராமத்து பள்ளி ஆசிரியர் போல் தோன்றிய இள வயதுக்காரர் ஒருவரும் ஊர்தியில் உள்ளோர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் விவாதித்துக்கொண்டு இருந்தனர். பெண்களின் தியாக உணர்வைப் பாராட்டும் வகையில் இளம் ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தார்.
“பொம்பளைங்க எதுக்கு நெத்தியிலே சிவப்பு பொட்டு வைக்கறாங்க? அவங்க தியாகம் பண்ணுறவங்க, சிவப்பு பொட்டு தியாகத்தின் லட்சியம்; லட்சணம், இந்தியப் பெண்கள் தியாகத்துக்கு இருப்பிடங்கள். ஆம்பிள எப்படி எப்படியோ இருக்கலாம்; ஆனா பொம்பளைங்க தியாகத்துக்கே பிறக்கறாங்கங்கறதை வலியுறுத்தத்தான் குங்குமப் பொட்டு அவங்களுக்கே என்று வைக்கறாங்க- வைக்கணும்."
இவ்வாறு அடித்துக் கூறிவிட்டு, மீசையை நீவிக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்துக் கொண்டார்.
முதியவர் தோல்வியை ஒப்புக்கொண்டு, இளம் நண்பரின் அறிவுக்குத் தலை வணங்கினார். வண்டிக்குள் இருந்த எந்தப் பெண்மணியும் (நானும்தான்) தியாகம் செய்ய நாங்கள் பிறவி எடுக்கவில்லை என்று சீறிக் கொண்டு எழுந்திருக்கவில்லை.
சிவப்புப் பொட்டுக்கு இத்தகைய அடிப்படைப் பொருள் உண்டு என்ற கருத்து என்னுடன் பல்வேறு வினாக்களை உலுக்கிவிட்டதுதான் காரணம். என்னுடைய அன்னையின் வயது முதிர்ந்த தாய் அந்த நாட்களில் சில கேள்விகளைக் கேட்பதுண்டு. அவற்றுக்கு அவர் விடைகளை எதிர்பார்த்த தாகத் தெரியவில்லை. அதற்காக வினாக்களை வெளி யிடாமல் இருந்ததுமில்லை. அவர் தமது முப்பத்தைந்து வயதில் கைம்பெண்ணாகிப் பல ஆண்டுகள் முடியற்ற தலையை மூடிக் கொண்டு வெள்ளைச் சேலையும் ரவிக்கையில்லாத மேனியுமாக வாழும் மரபைக் கடைப்பிடிக்கும் கட்டாயத்தில் வாழ்ந்தவர். எண்பதைக் கடந்து அவர் வாழ்ந்த நாட்களிலும் முடி முற்றிலும் வெண்மையாகிப் போய்விடல்லை.
“தலை பண்ணிண்டா இன்னும் வண்டா விழறது. சவம்” முடியை நாவிதர் வழிக்கும் போது அந்தக் கழிவு கருவண்டு போல் இருக்கிறதாம்! என்பார்.
"புருஷன்காரன் தாலியையும் மடிசார்க் கட்டையும்தானே கொண்டு வந்தான்? அதைத் தொலைச்சிட்டுப் போகட்டும். தலை மயிரையும் குங்குமத்தையும் எதுக்கு விடணும்?''
எதற்கு விட வேண்டும்? தலைமுடி இந்நாட்களில் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் குங்குமத் தீண்டாமை ஏன் தொலையவில்லை.
ஓ! புருவ மத்தியில் குங்குமம் எதற்காக வைக்க வேண்டும் பெண்கள்? அங்குதான் மூலாதாரமான அவன் சக்தி நிலைகொண்டு இருக்கிறது. அந்த இடத்தை உற்றுநோக்கி
எந்த ஆண் மகனும் அவளை வசியம் செய்ய முடியாது. குங்குமப் பொட்டு கவசமாக வீற்றிருந்து அவள் கற்பைக் காக்கின்றது என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது.
அதுசரி, அப்படியானால் புருஷன் இறந்த பிறகு அவளை எவரும் வசியம் செய்ய இடமுண்டு என்றுதானே பொருள் படுகின்றது? புருஷன் இல்லாதபோது குங்குமமில்லை. எனவே இன்னொரு திருமணம் புரிந்துகொள்வதற்கும் தடை இருக்கக் கூடாதே! இப்படி எதிர்க்கேள்வி விடுத்தால் சனாதன மரபுக் குடுக்கைகளுக்குப் பேரதிர்ச்சியாக இருக்குமே? அதற்குத்தான் எல்லாம் எரிந்து பொசுங்கிவிட்டதென்று பொருள்படும் திருநீற்றைத் தரிக்கச் செய்கிறார்கள்.
எது எப்படியெனினும் குங்குமம் விடுக்கும் புதிர்கள் திருப்திகரமாக விடுவிக்கப் படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.
முன்னுச்சி வகிட்டில் கோடாகத் தீற்றப் பெறும் சிந்தூர அடையாளத்துக்கும், புருவ மத்தியில் நெற்றியில் அலங்கார மங்கலமாக வைக்கப் பெறும் குங்குமத் திலகத்துக்கும் அடிப்படைத் தொடர்பு உண்டா?
இது இன்னமும் ஆராய்ச்சிக்குரியதாகவே இருக்கிறது.
வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் விவரிக்கும் அறுபத்து நான்கு கலைகளில் நெற்றித் திலகங்களின் வாயிலாகச் செய்தி சொல்லல் ஓர் அழகுக் கலையாகவே விவரிக்கப்படுகின்றது.
ருக் வேத காலத்தில் இளவயதுடைய ஆடவரும் பெண்டிரும் ஆடல், பாடல், அறிவார்ந்த உல்லாசக் களியாட்டங்கள் என்று இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்குரிய சமானம் (அல்லது சமாஜம்) என்ற அமைப்புகள் இருந்தன. திருமணமாகாத இளைஞர்களும் திருமணம் ஆன இளைஞர்களும் இங்கே குழுமுவார்கள். காதலொழுக்கம் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்கவில்லை. தனித்துக் காதலர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு, செய்திகள் பரிமாறிக்கொள்ள இந்த அழகுக்கலை பயன்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் வாத்ஸயாயனரின் காலம் மிகவும் பிற்பட்டதாகும். 'குப்தர் காலம்' என்று கருத்துரைக்கப் படுகிறது.
பல்வேறு மகரந்தப் பொடிகளால் உடலுக்கு வாசனையும் அழகும் நறுமண மூட்டல், கண்களுக்கு மையெழுதல் ஆகிய அலங்காரங்களைப் பற்றிய குறிப்புகள் ருக் வேத கால மகளிரைப் பற்றிய விவரங்களில் காண இயலுகின்றது. ஆனால் மங்கலப் பொட்டு என்ற குங்கும திலக வழக்கம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எப்படியாகினும் குங்குமத்திலகம் கணவனுடன் வாழும் ஒரு நிலைக்குரிய அலங்காரக் காப்பாக முற்காலங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.
இராமாயண, மகாபாரத இதிகாச காலம் காவியப் பெண்களின் சித்தரிப்புக்கும், அவற்றை ஒட்டிய தமிழ் வடிவக் காவியப் பெண்களின் சித்தரிப்புக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை இந்த உண்மையினால் உணர முடிகிறது.
ஒரு சிறு எடுத்துக்காட்டாக கைகேயி, தசரதனிடம் வரம் பெறுமுன் தன் கோலங்களைக் களைந்து சோக வடிவுள்ளவளாகக் கிடந்த நிலையைப் பார்க்கலாம். வால் மீகியின் சித்தரிப்பில் கைகேயி கூந்தலை ஒற்றைப் பின்னலாகக் கிடத்திப் பின்னிக்கொண்டு கிடந்தாள் என்றும் கம்பரின் சித்தரிப்பில் அவள் திலகத்தை அழித்துக் கொண்டாள் என்றும் பார்க்கிறோம். இந்த மாறுதல் பெண்ணின் அலங்காரங்கள், கணவனுடன் வாழும் நிலைக்குரிய முக்கியத்துவமாக மாறி திட்டத்தை விளக்குகிறது. மேலும் கம்பர் திலகத்தைக் குறித்திருப்பது, பின்னால் அவள் மங்கலமிழக்கப் போவதை சூசகமாக அறிவிப்பதாகவும் விரிவுரையாளர் கூறுகின்றனர்.
நெற்றித் திலகங்களின் வாயிலாகச் செய்தி சொல்லல் என்ற கலையில் இந்த 'மங்கல' முக்கியத்துவம் கற்பிக்கப் பட்டிருப்பதாகக் கொள்ள முடியாது. வாசவதத்தை என்ற நாடகக் காவியத்தில் இந்த முறைத் தூது விவரிக்கப்படுகிறது. அரசனின் மனைவிக்குத் தோழியாகப் பணிபுரியும் வாசவதத்தை அரசனின் காதலி, காதலனாகிய அரசனுக்கு சந்திக்குமிடம் பற்றிச் செய்தி அனுப்ப அரசியின் நெற்றியில் மாறி மாறி இவர்கள் தீட்டும் திலகமே குறிப்பாகிறது.
இந்தப் பயன்படு கலைகுறிக்கும், திலகத்துக்கும் 'புருஷன்' என்ற மிகப்பெரிய அழுத்தமான பிணைப்புக்குரிய சின்னத்துக்கும் எத்தனை வேற்றுமை?
--------------------
13. திருவிளக்குப் பூசையில் கரையாத இருட்டு
வீடு தேடி வந்து, வாயிற்கதவைத் தட்டி அழைத்து இப்படி ஒரு விளம்பரத்தாளை ஒரு பையன் கொடுக்கிறான்.
திருவிளக்குப் பூசை வழிபாட்டின் ஒரு பரிமாணம் இது. இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே, வண்ண வண்ணப் படங்களை நேர்த்தியாக அச்சிட்டு, உருத்திராட்ச, தாடி சாமியார்கள், காவி மடாதிபதிகள், கோயில் கருவறைகளில் வீற்றிருக்கும் தெய்வங்கள் ஆகியோருடன் மஞ்சட் குங்குமப் பெண்களையும், கன்னியரான செல்வி யாரையும், பூசைகளையும் விளக்கமாக்கி விநியோகிக்கும் பத்திரிகைகளின் செல்வாக்கை அறிந்திருக்கிறேன். இந்தச் சுவாமி ஊர்வலம் எனக்குப் புதிதாகத் தோன்றுகிறது. விளம்பரம் வீடியோ சென்டருக்கா, விளக்குபூசை செய்யும் மங்கலப் பெண்டிருக்கா, அல்லது ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிகளுக்கா என்ற யோசனை என்னைக் குடையலாயிற்று. வீடியோ நாடாச் சுருள் பிரதிகளை ஒவ்வொரு ஸுவாஸினியும் மேற்கொண்டும் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்பதும் மறைந்திருக்கும் ஓர் உண்மையாகும்.
மஞ்சள் குளித்து, கூந்தலில் பூப்பாரம் ஏற்றிக்கொண்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுகள் ஒன்றோ, இரண்டோ வைத்துக்கொண்டு, மையார்ந்த கண்களும், சுடர்பொழியும் தோடு, மூக்குத்தி மாட்டல், சங்கிலிகள், காசுமாலைகள், வளையல்கள் என்று பொன்னும் மணியும் சுமந்து, பளபளக்கும் காஞ்சிப் பட்டாடைகளுடன், மருதோன்றிச் சிவப்பு நகங்களில் ஏறியிருக்க கால்களில் வெள்ளிக் கொலுசு, சிவப்பு ஏறிய குதிகால் தெரிய, பொருத்தமான வண்ணச் செருப்புகள் அணிந்து, வண்ணக்களஞ்சியமான ஊர்வலம், காவிச் சுவாமிகளைச் சூழ்ந்து நகருவதைக் கற்பனை செய்து பார்க்கிறேன்.
இந்தப் புதிய ஸுவாஸினிகளுக்கு வீடியோவில், தோன்றும் ஆர்வமே, மஞ்சள்குங்குமம், சுவாமி, பூசை என்று பேரார்வத்தைக் கிளப்பிவிட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் இந்தப் பூசை ஏற்பாடு செய்தவன் தத்துவம், இவர்களில் பலர் அலுவலகப் பணியாளர்களாகவும் இருப்பதில் நிலை கொண்டு இருக்கிறது. இவர்களில் சிலர், அலுவலக மேலாளருக்குப் புகை பிடிக்கத் தீ மூட்டும் சேவை செய்பவர்களாகவும் இருக்கக்கூடும். 'பார்ட்டிகளில்' ஸுராவும் மந்தகாசமுமாக வெற்றி கொள்ளும் நாயகியராகவும் விளங்கக்கூடும். அவர்களையும் இந்திய கலாச்சாரப் பெருமை வட்டத்துள் கவர்ந்து இந்தியப் பண்பாட்டைக் காக்கும் அருந்தொண்டையும் இத்தகைய ஸ்வாமிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமய நிறுவனம், இந்தத் திருவிளக்கு சோதிக்குள் நானும் வந்த அருள் பெறவேண்டும் என்று உவந்து அழைத்தது. 'தமஸோர்மா ஜோதிர் கமய 'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்வாயாக....!' என்ற வாக்கியம் எல்லோருக்கும்தானே பொது!
குப்பத்திலிருந்து தள்ளாத வயதில் கீரைக்கூடையைச் சுமந்து வந்து தெருத் தெருவாய்ச் சுற்றும் பொன்னம்மாளை இந்தப் பூசையில் சேர்த்துக்கொள்கிறீர்களா? ஐந்து குழந்தைகளுடன், புருஷன் இல்லாமல் சீவியம் செய்து அவர்களை ஆளாக்கிய பிறகும் அநாதையாக வயிறு பிழைக்க உழைக் கிறாள். இவளைவிடத் தகுதியானவர் இந்த அருளுக்குப் பாத்திரமாக இருப்பார்களா?
என்றோ புருஷன் முகம்கூட நினைவில் பதிந்திராத சுருக்கில், அவனைக் கொள்ளை நோய் பலி கொள்ள, கூந்தலை முடிந்து, வெள்ளைச் சீலைக்குள் ஒடுங்கியவளாக மடம், ஸ்வாமிகள் என்று, அங்கேயே பெருக்கி, மெழுகி, ஊழியம் செய்கிறாளே முத்தம்மை அவளுக்கு இந்தப் பூசையில் கலந்துகொள்ள அருகதை உண்டா?
நான் இந்தக் கேள்விகளைத் தொடுத்து அவர்களையும் பூசையில் இணைத்துக்கொள்ள நிபந்தனை போட்டபோது சமயத் தூண்கள் சொல்லாமல் நழுவிவிட்டன. இப்போது இந்த விளம்பரந்தான், என்னை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறது.
அகண்ட காவிரி பாயும் கிராமம் அது. எங்கள் வேதபுரத்து வீதியிலே, வெள்ளைச் சேலையும் முக்காட்டு முகமுமாக முடங்கிவிட்ட அனாதைகள் எண்ணமுடியாத வர்கள். இவர்கள் கோலோச்சுவதற்கு ஒரே ஒரு இடம் உண்டு. காவிரிப்படித்துறைதான் அது. இந்தப் படித்துறையின் இரு மருங்கிலும், பக்கச் சிறகு முளைத்தாற் போன்று சில கற்களைப் பரவி நீர்த் துறைகள் அமைத்திருந்தார்கள். பிரதானமான படிகளில் இறங்கி, அரண்கள் போன்றமைந்த கற்களைத் தாண்டினால் வசதியாகத் துவைக்கும் கல், துணி பிழிந்து உலர்த்தத் தோதான கற்சுவர் என்று இருவர் குளிக்க வசதியாக அமைந்திருக்கும். பிரதானமான படிக்கட்டுத் துறையின் இரு மருங்கிலும் உள்ள இத்துறைகளைக் குட்டிப் படித்துறை என்று சொல்லலாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவை மடிப்படித்துறை என்றே வழங்கி வந்தன. ஏனெனில் எங்கள் வேதவீதியின் வெள்ளைச் சேலை அநாதைகள் அங்கே புலராப் பொழுதின் விடியற்காலையிலிருந்து பகல் பன்னிரெண்டு மணி வரைகூட ஆதிக்கம் செலுத்துவார்கள்.
அந்தக் கால் அகன்ற காவிரியை இப்போது நீர்ப் பெருக்குக்குக் கற்பனைதான் செய்ய வேண்டும். இந்த நடுப்படித்துறை, 'மஞ்சள் பூசும் வர்க்கத்தின'ருக்கு உரியது. வண்ணச் சேலைகளுக்கும், வயிர, தங்க மினுமினுப்புகளுக்கும் உரியது. மஞ்சள் உரைத்த தடங்கள் பொன்னாய் மின்னிக் கொண்டிருக்கும். ஆங்காங்கு ஊறிய மஞ்சள் துண்டுகள், அறைத்த விழுதுகள், வெற்றிலைப் பாக்கு முதலியன சிதறிக் கிடக்கும். ஆனால் மடிப்-படித்துறைக்கு மங்கலங்கள் கிடை யாது. அவற்றைச் சுவாதீனமாக வைத்திருக்கும் சில அனாதை களில் மிகக் கடுமையான புள்ளிகள் சிலர் உண்டு. அவர்களுக்கு இந்த மஞ்சள் உரைக்கும் இனத்தினரிடம் அடிமனத்துப் புகைச்சல் குமுறிக்கொண்டிருக்கும். ஆனால் அதை எப்படி வெளிக்காட்டுவார்கள்?
எங்களைப் போன்று சோப்புத் தேய்த்துக் குளிக்கும் சிறுமி களின்மீது வெடிக்கும். "ஏண்டி சோப்பைப் போட்டுக் கரைச்சு ஜலத்தைப் பாழாக்கறே? பாவி! முகரையைப் பாரு! இதுக்கு என்ன சோப்பு வேண்டியிருக்கு? சுண்ணாம்பு நாத்தம் சொல்ல முடியலே. இத்தப் போட்டுத் துணிய வேறு தோய்க்கறதுங்க....! சனியனே! ஏண்டி தோய்க்கிறே? ஜலம் தெறிக்கறது, அத்தனையும் போச்சு! மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்...!" இப்படி வசைகள் தொடர்ந்து கொண்டே போகும்.
எங்கள் வளர்ச்சியை நானொரு நூலாக அளந்து கலி முற்றி, ஆசாரம் கெட்டு வருவதற்கான பீடைகளாக உருப்பெறுவதையும் வாயில் மென்று துப்புவார்கள். 'திமுதிமுன்னு வளர்ந்து நிக்கறது. பாவாடை, சட்டை, மேலாக்கு... கோரம்... சகிக்கலை. இப்படித்தான் பெத்தவா வளர்த்து வச்சிண்டு; கூச்ச நாச்சமில்லாம காவேரிக்கு அனுப்புவாளா? பத்து வயசாகுமுன்ன பறயன் கையிலானும் புடிச்சுக் குடுக்க வாணாமோ?”
இவர்களின் பார்வைத் துழாவலில் வார்த்தை அடிகளில் சுருண்டு, காவிரிக்குப் போகும் ஆசையை விடவும் முடியாமல் ஒரே ஒரு முங்கலுடன் ஓடிவந்த நாட்கள் பல. இந்த அநாதைகளின் கடுத்த முகங்களுக்குப் பின்னால் இவர்களுடைய வாழ்க்கைகளை எண்ணிப் பார்க்கும் ஆர்வம், எனக்குச் சிறிது வயது வந்த பின்னரே தோன்றியதுண்டு. என்னுடைய இரு பாட்டிமார், ஒரே அத்தை என்று நான் கண்விழித்துக் கண்ட உறவினர் இந்த வர்க்கத்தினரே. மிகச் சிறியவளாக இருந்த காலத்தில் அத்தை, பாட்டி, உறவுக்காரர் இப்படி வெள்ளையும் முக்காடுமாக இருப்பார்கள் என்றே எண்ணியிருந்திருக்கிறேன். எங்கள் வீதியிலே புரோகிதக் குடும்பங்கள் பல இருந்தன. அந்தக் குடும்பங்களில் சுங்கடியோ, கொட்டடிச் சேலையோ உடுத்தக்கூடிய பிரகிருதி ஒருத்தி இருந்தாலே பெரிது. ஓ! ஒரு பெரிய வீட்டை, மூன்று நான்காகத் தடுத்து, பிறைகள் போன்ற அறைகளில், அண்ணன் தம்பிப் பாகம் செய்ததினால் கிடைத்த பகுதிகளில், வெள்ளைச்சேலைத் தாயும், இதே வெள்ளை வாரிசாக இளம்பெண்கள் பலரும் வாழ்ந்த நிலையை இன்று எண்ணிப் பார்க்கிறேன். இவர்களில் சிலர் நன்றாக வேலை செய்வார்கள். 'குரோஷா' வலை அட்டைப் பூ நூல் வேலை செய்யத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பின்னலுக்குத் தாழம்பூ மல்லிகைப்பூ தைக்கும் அலங்கார வேலையில் திறமை பெற்றிருப்பார்கள். திருவிளக்கு, துளசியம்மன் தோத்திரங்கள், மீனாட்சி கல்யாணம், லலிதாம்பாள் சோபனம் போன்ற பாடல்கள், கல்யாணப் பாடல்களான நலங்கு ஊஞ்சல், லாலி, பத்தியம், ஓடம் என்ற வகைப்பாடல்கள் எல்லாம் பாடக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்தக் குருட்டுப் பிறைகளுக்குள் சென்று, பழுப்பேறிய நோட்டுப் புத்தகங்களில் இருந்து சில பாடல்களை எழுதிக்கொண்டு அவர்கள் பாடுவதைக் கேட்டு வியந்திருக்கிறேன்.
ஆனால், இத்தனை தெரிந்தும் அவர்கள் எந்தக் கல்யாணங்களிலும் விசேடங்களிலும் முகம் காட்டமாட் டார்கள். அப்பளம் இடுவார்கள். வயதான தாயார் வீடுகளில் கொண்டு கொடுப்பாள்.
ஒரு வீட்டில், பெரிய தலையான மாமியார், அவளுடைய மங்கலமிழந்த பெண் வயசுக்கு வருமுன் ஏழு வயசிலேயே வெள்ளை வாங்கியவள். ஒரே மகனும் இறந்துவிட மருமகளும்
முடங்கி, இரண்டு பிள்ளைகளை வேதம் படிக்க விட்டுவிட்டு ஒரே வீட்டில் வாழ்ந்தாள். நாத்தியின் கொடுமை வசைகள் சகிக்க முடியாதவை. ஜீவனாம்சம் என்று எதுவும் புருஷன் வீட்டில் கொடுக்கவில்லை. தாயை அண்டியே வயிறு வளர்க்க வேண்டும்.
வீடு மட்டும் பொது. மருமகளுக்கு ஏதோ சிறிது நிலம் இருந்ததென்று நினைக்கிறேன். மாமியாருடையதாகவும் இருக்கலாம். நெல் பொதுவாக அளக்கப்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கப் பெறும். வீட்டில் பாதி பாதிப் பகுதிகளில் குடும்பம் நடத்தினார்கள்.
மாமி-நாத்தியின் வசைகள், புலம்பல்களை அந்த மருமகள் பொறுத்தது பெரிதல்ல. இந்த வேதபுரம் இவள் புகுந்த வீடாதலால் பொழுது விடிந்து அவள் வெளியே தலை நீட்டியதில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு வீதியில் சாணமிட்டுப் பெருக்கிக் கோலம் போடுவாள். விடியுமுன் மயானத் துறை சென்று காவிரியில் நீராடி வருவாள். ஓ! இந்தச் சமயச் சம்பிரதாயங்கள் இவர்களை உயிரோடு நசுக்கியதற்கு எந்த நியாயம் சப்பைக் கட்டுக் கட்ட முடியும்? இதற்கு வேத இசைவு உண்டா ?
-------------
This file was last updated on 25 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.