காலந்தோறும் பெண்
(சமூகவியல் ஆய்வு)
பாகம் 2 (அத்தியாயம் 14-26)
ராஜம் கிருஷ்ணன்
kAlantORum peN, part 2 (chapters 14-26)
(socialogy research)
by rAjam kirushNan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காலந்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)
ராஜம் கிருஷ்ணன்
Source:
காலந்தோறும் பெண்
(சமூகவியல் ஆய்வு)
ராஜம் கிருஷ்ணன்
தாகம்
ஃப்ளாட் எண் G3/8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி. நகர் சென்னை -600 017
முதற் பதிப்பு : ஜூன், 1989, இரண்டாம் பதிப்பு : டிசம்பர், 1991
மூன்றாம் பதிப்பு : ஜூன், 1994, நான்காம் பதிப்பு : டிசம்பர், 2000
ஐந்தாம் பதிப்பு : மே, 2002
விலை : ரூ. 55.00
KALANTHORUM PEN by RAJAM KRISHNAN
© Rajam Krishnan
Fifth Edition : May, 2002 Pages : 192
DHAGAM
G-3 /8, Masilamani Street Pondy Bazaar, T. Nagar Chennai - 600017
PRICE : Rs. 55-00
Typest at : Nehru Achagam, Chennai
Printed at : Jaiganesh Offset Printers, Chennai - 4
------------------
உள்ளே
14. வேத (அ)தர்ம பரிபாலனங்கள்
15. ஒடுக்கல் சாத்திரத்தில் ஒப்பனைக் கருவிகள்
16. புராணப் புதைகுழியில் மூடப்படும் நட்சத்திரங்கள்
17. கீதை ஒளியில் பெண்(சு)தருமம்
18. காப்பாளரும் கைவிடப்பட்ட கற்பரசிகளும்
19. சதி புராணம்
20. வரதட்சணை மகாத்மியம்
21. காதல் - சூதாட்டத் துருப்புச்சீட்டா?
22. சுமங்கலியும்-பத்துப் புத்திரர்களும்
23. சப்தபதித் தோழமை
24. வினா-விடை - அச்சுறுத்தல்
25. பொருளுரிமைக்காரி பொருளேயானாள்
26. விழிமின்! எழுமின்!
----------------------
காலந்தோறும் பெண்
14. வேத (அ) தர்ம பரிபாலனங்கள்
சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பேட்டை மாதர் சங்க உறுப்பினர்கள் காஞ்சியில்
சென்று அங்கு தங்கியிருக்கும் ஆசாரிய சுவாமிகளைத் தரிசித்து அருள் பெற்று வர ஒரு 'சுற்றுலாப் பயணத்திட்டம்' போட்டிருந்தார்கள். இந்தத் திட்டத்தில் நானும் புகுந்து கொண்டேன். சுமார் ஐம்பது பெண்மணிகள், பிராமணர், அல்லாதார், முதியவர், இளையவர் என்று பாகுபாடில்லாத வகையில் சேர்ந்திருந்தனர். அது சித்திரை மாசக் கோடை நாள் காலையில் கிளம்பி, சுவாமிகள் தங்கியிருந்த குளக்கரை ஓரத்துக் கோயில் முன் எங்கள் வண்டி வந்து நிற்கையில், மணி பன்னிரண்டரையாக இருந்தது. அடியும் பொடியும் ஒட்டும் உச்சி நேரம். பலருக்கும் தாகம். சில சிறுமிகள், குழந்தைகளும் இருந்தனர். இந்த நேரத்தில் எப்போது நிழல் கண்டு, விடாயாற்றிக் கொண்டு, மூச்சு விடுவோம் என்று வெம்மை நெருக்கடியேற்றியிருந்தது. சில சிறுவர்கள் பசி பசி என்று கட்டுச் சோற்றுக் கூடைகளைப் பார்த்துப் பிடுங்கி எடுத்தார்கள். வண்டி, நின்று பெண்கள் இறங்கத் தொடங்கியதும் உள்ளிருந்து ஒரு பிராம்மணர்...வெளி வேடம் அப்படி) வந்தார்.
"நில்லுங்கோ, இங்கே தலைமுடி வச்சிண்டவா, ஸ்மார்த்தா, வடகலைக்காரா, புருஷனில்லாதவா வரப்படாது. மத்தவா வரலாம்...'' என்றார். எனக்கு இச்சொற்களைக் கேட்டதும் பேயறை கொண்டாற்போல் இருந்து. உண்மையில் இதை ஏற்பாடு செய்த பெருமாட்டிகளில் முக்கியமானவர், அவர் குறிப்பிட்ட ஸ்மார்த்தப் பிரிவினில் வந்தவர். கணவரை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. தலைமுடி வைத்திருந்தார். அவர் கணவர் இருந்த காலத்தில் சுவாமிகளை மாதர் சங்கத்துக்கே அழைத்து, பாத பூசை விமரிசையாகச் செய்து மகிழ்ந்திருக்கிறார். இப்போது இவர் உள்ளே வருவதற்கே தடைக்கோடு கிழிக்கப்படுகிறது. இந்த அவமானம் என்னைத் தவிர அங்கே யாருக்குமே உறைத்ததாகத் தெரியவில்லை. அந்தத் தடைச் சொற்களைவிட, பெண்மணிகள் தலைவணங்கி அதை ஏற்றுக்கொண்டது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
சங்கத்தின் காப்பாளர் போல் ஊழியம் செய்த பெண்மணியும் கைம்பெண்தான். ஆனால் அவள் பிராம்மண வகுப்பில் உதித்தவளல்ல. எனவே அவள் உள்ளே , வரலாம். வைணவ சம்பிரதாயத்தில் தென்கலை, வடகலை என்ற இரு பிரிவினர் உண்டு. அவர்களில் வடகலை மரபில் வந்து கைம் பெண்ணானவர் மட்டுமே மகா பாபிகள். எனவே அத்தகைய பெண்டிரில் சிலர் உள்ளே வர இயலாது. தென்கலை மரபினரில் ஒரே ஒரு பெண்மணி, கைம்பெண்ணானவள் உள்ளே வந்தாள். வரக்கூடாதவர்கள் ! அந்த இடத்தை ஒட்டிய நீர்க்கரைத் தோப்பொன்றில் தங்கிவிட, மற்றவர், காணிக்கைகள் அடங்கிய தட்டுகள் தாம்பாளங்களுடன் சுவாமி களைத் தரிசித்து, கோலாகலமாக அருள் பெறச் சென்றார்கள். பாடல்களைப் பாடினார்கள். தனித்தனியே அறிமுகம்
பெற்றார்கள்.
எனக்கு உள்ளே அடிவைக்க மனச்சாட்சி மறுத்தது. எனது நியாய அநியாய உணர்வை வெளிப்படுத்தி யாருமே உள்ளே செல்லக்கூடாது என்று சொல்லிப் பார்த்தேன். அது எடுப்பாதென்பது மட்டுமில்லை, அந்த அமைப்புக்கே ஒவ்வாத ஆசாமியாக ஒதுக்கப்பட்டேன். பெண்களுடன் நிற்க மன மின்றி, வெதும்பி, அந்த நீண்ட பொழுதைக் கழித்தேன். விலங்கினத்திலும் கேடு கெட்ட மனப்பாங்காக இது தோன்றியது.
இந்த நிலையில், ஸ்மார்த்த வடகலை, தென்கலைச் சம்பிரதாய மரபு, என்னுள் ஒரு கேலிக்கூத்தாகவும் ஓர் ஆர்வத்தைக் கிளப்பியது. தங்கள் தோழிகளாக உற்றவர்களாக மகிழ்ந்து பழகியவர்கள், இவ்வாறு மனிதப்பண்பு இல்லாத கொடூரமான சொற்களுடன் விலக்கப்படும்போது, அதனால் ஒரு சிறு பாதிப்பும்கூட இல்லாதவர்களாக, மற்றவர் அந்தப் பிராமணரை வணங்கி உள்ளே செல்கிறார்கள் என்றால், பெண்களின் கல்வியும் பல முன்னேற்றங்களும் ஒட்டு மொத்தமாகப் பயனே அளிக்கவில்லை என்றுதான் தோன்றிற்று. ஏன் என்று கேட்கும் அறிவு யாருக்குமே இல்லை. அந்த அறிவு அன்று ஏழு வயதில் உபநயனம் முடக்கப்பட்டு கல்யாண பீடத்தில் இவளைத் தள்ளிய நாளிலேயே மழுங்கடிக்கப்பட்டதாகி விட்டது. இந்நாள் வரை, அந்த அறிவுக் கண் துலங்கி நல்லொளியைக் காட்டவில்லை.
சமுதாயக் கட்டுக்கோப்பு, குழந்தைகள் அன்பும் அரவணைப்புமாக வளர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்கி விரிக்க வேண்டும் என்ற நோக்கில், காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஆதிமக்கள், திருமணம், குடும்பம், இல்லாமல் சொத்து, சுகம் என்று நாகரீகமடைந்தவர்கள். பாரத நாட்டுப் பழங்குடியினர், தாய்வழி மக்களாகவே இருந்தனர் என்பதையும் பல சான்றுகளால் ஊகிக்க முடிகிறது.
ஆரியர் வருகைக்கு முந்திய ஸிந்து வெளி நாகரிக மக்கள், மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் சான்றுகளை ஒட்டிப் பார்த்தால், தாயின் முதன்மையும், தாய்வழிபாடும் முதன்மை பெற்றிருந்தது என்பதை முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்தியாவில் தாயர் உரிமை (Mother right in India) என்ற நூலில், மானிட இயல் வரலாற்றறிஞர் (0. R. Ehrentfels) எஹரன் ஃபெல்ஸ், இந்தியாவில் தாய்வழி சம்பிரதாயத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த கேரள நாயர் இனத்தாரை, அந்த ஸிந்து வெளி நாகரீக இனத்தாருடன் தொடர்புடையவர் களெனச் சான்றுகள் கொடுக்கிறார். அது மட்டுமின்றி, இன்றளவும், நம்மில் பல பிரிவினர்க்கும், தாய் வீட்டில் திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் எல்லாச் சடங்குகளுக்கும் தாய் மாமனே முக்கியத்துவம் பெறுதல் ஆகிய எல்லா வழக்கங்களும், அந்தத் தாய் வழிச் சம்பிரதாயம் தேய்ந்து வந்ததன் சிதைவுகள் தாமென்று கருதவும் இடமிருக்கிற தென்பதை வலியுறுத்துகிறார்.
ஏனைய எல்லா இடங்களிலும், இஸ்லாமியப் பெண்கள் பர்தாவுக்குள் முடக்கப்பட்டாலும் கேரளத்தில் வரவில்லை. தாய்வழிச் சம்பிரதாய நாயர்குல மகளிர், சுதந்திரமுடையவர்களாக, பொது வாழ்வில் ஈடுபடக்கூடிய துணிவு பெற்ற வர்களாக விளங்குவதைக் காண்கிறோம்.
இந்தத் தாய்வழிச் சம்பிரதாயம், பெண்ணைக் கற்புக் கூட்டுக்குள் முடக்கவில்லை. அவளைப் புருஷன் வீட்டுக்கு ஊழியம் செய்ய வழி கோலவில்லை. கணவன் இவளுடன் தொடர்பு கொள்ள வருவான்.
இந்தத் தாயுரிமை மாற்றி, தந்தை வழி நாகரீகம் கேரளத்தில் வடக்கிலிருந்து வந்த நம்பூதிரி இனத்தாரால் வந்தது. நாயர் இனத்தில், மகளிர் வயது வந்து அறிவும், தேர்ச்சியும் பெற்றபின், தனக்குரிய மணவாளனைத் தேர்ந்து, மக்களைப் பெறும் சுதந்தரத்தையும் கட்டுப்படுத்தி விட முடியவில்லை. எனினும், சம்பிரதாயமாக பெண் பூப்படையுமுன் திருமணம் செய்வதுதான் உகந்தது என்ற வழக்கம் புகுந்தது.
இளம் வயதுச் சிறுமியர் பலரை உட்கார்த்தி வைத்து, ஓர் ஆண் தாலி கட்டும் சடங்கு புகுந்தது. பின்னர் சம்பந்தம் செய்யும் கல்யாணமாக, அதாவது வயது வந்த பெண்ணின் மனைவியாக விரும்பியவனுடன் வாழ்வதற்குரிய சம்பந்தம் செய்துகொண்டனர். இந்தச் சம்பந்தத்தில், மரபுச் சடங்குகள் என்று பெண்ணின் ஒவ்வொரு இயக்கத்தையும் பிணிக்கும் வழக்கங்கள் இருந்திருக்கவில்லை.
இந்தியா முழுவதுமாக ஆதிகுடிகளின் வழக்கங்களிலுள்ள தாய்வழி முதன்மை , தந்தை வழி முதன்மையாக மாறத் திணிக்கப்பட்ட வழக்கங்களில், முதலாவது, மேன்மையான கல்வி, செல்வம், வயது, மதிப்பு என்று ஆணை உயர்ந்த நிலையில் வைத்து சம்பந்தமாகத் திருமணம் செய்து கொடுத்தல் (Hypergamy) இரண்டாவது, குழந்தை மணம், மூன்றாவது, கைம்மை நிலை என்ற கொடிய வழக்கங்களுக்குப் பெண்ணை உள்ளாக்குதல்.
தாழ்ந்த சாதி, தாழ்ந்த படிப்பு, தாழ்ந்த செல்வ நிலை, பெண்ணுக்கு இருக்கலாம். சரிசமமான வயதும்கூடத் திருமணப் பொருத்தமில்லை. பெண் அடங்கிப் போக வேண்டும். இந்த நாகரீகம் பெண்ணின் சுதந்திரமான உரிமைகளைப் பறிக்க முதல்படியாக வந்தது. கல்வி உரிமை போய், கற்பொழுக்கமும், குழந்தை மணமும், பெண்ணின் வாழ்வுக்குக் கடிவாளங்களாகப் பூட்டப் பெற்றதுடன், கைம்மைநிலை என்ற கொடிய தண்டனை அவள் செய்யாத பாவத்துக்கு உரியதாக ஆயிற்று.
கைம்பெண் என்ற கொடுமை வேத காலத்தில் இருந்திருக்கவேயில்லை. கணவனுடன் மனைவியை எரிக்கும் பழக்கம், மிக மிகத் தொன்மையான காலத்தில் ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்குமுன், இந்தோ, ஐரோப்பியக் குடிமக்களிடையே இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆரியர் வந்த காலத்தில் இது நடைமுறையில் இல்லை.
ருக் வேதத்தில் காணப்படும் ஒரு பாடலிலும்கூட, 'அக்ரே' என்ற சொல், 'அக்னே' என்று திருத்தப்பட்டதன் சான்று வெளிச்சமாகிறது. கணவன் இறந்ததும் மனைவியைத் தீயில் புகும்படி செய்வதற்கு 'வேத அங்கீகாரம்' வேண்டுமே? உண்மையில் பெண்ணுக்கு வாழச் சகல உரிமைகளையும் கொடுக்கும் பாடல்களாக அல்லவோ ருக் வேதத்தில் இருக்கிறது?
பிற்காலத்திய பண்டிதப் புலிகள் கண்களில் நெய்யூற்றிக் கொண்டு பாடல்களைத் துழாவினார்கள்.
'ஓ! பெண்மணியே! நீ இன்னும் இவ்வுலகில் வாழ வேண்டியவள். அவன் உயிர் போய்விட்டது; நீ இங்கே வா. இன்னொரு கணவரைத் தேர்ந்துகொண்டு தாயாக வாழ்வாய்' என்று அழைக்கும் பாடல் இருக்கிறது. தொடர்ந்து "மங்கலப் பெண்டிரே, தாயாரே துயரின்றி, கண்ணீரின்றி, முன்னே ஏகுவீர், அவளை மீண்டும் வாழ்வுக்குரியவளாகச் செய்வீர்...." என்று பொருள் படும் பாடல், அந்த இடத்திலேயே அவர் கையை விரும்பி ஏற்கும் ஆணுக்குரியவளாகச் செய்யும் மறுவாழ்வுக்கு வழிவகுக்கிறது. இந்தப் பாடலில், முன்னே என்று பொருள்படும் சொல் என்று நுட்பமாகத் திருத்தப் பட்டிருக்கிறது. முன்னே அழைத்து வரவேண்டாம் - நெருப்பில் தள்ளலாம் என்று, வேதம் சொல்வதாக, அநுமதி பெற்று விட்டார்கள்; மனச்சாட்சிக்கா, அல்லது மறுக்கும் நியாயவாதிகளுக்கா என்று தெரியவில்லை.
இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தவர், வேதநூல் ஆராய்ச்சியாளராகிய மாக்ஸ்முல்லர் என்றும், வில்ஸன் என்றும் சொல்லப்படுகிறது. வேதங்களில் மட்டும் இவ்வாறு புரட்டுகளைச் செய்திருக்கவில்லை. பின் எழுதப்பட்ட கோட்பாடுகளிலும் பெண்ணை நசுக்குவதற்குரிய கூறுகள் தந்திரமாகப் புகுத்தப்பட்டன.
பெண் சமுதாய உற்பத்திக்கான மக்களைப் பெற்றுப் பேணுகிறாள். அவளை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும். 'இளமையில் தந்தையும்; பின்னர் கணவனும்; முதுமையில் மகனும் அவளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட சாத்திரக் கோட்பாடே, பெண் இளமையில் தந்தையின் ஆளுகையிலும் பின்னர் கணவனின் ஆதிக்கத்திலும், முதுமையில் மகனுக்குக் கீழ்ப்பட்டும் இருப்பதற்கு உரியவள், சுதந்திரம் அவளுக்குரியதல்ல' என்று ஒரே போடாக மாற்றப்பட்டது. ஆனால் இந்த மனுவும்கூட, பெண் கணவனை இழந்ததும், முடியை இழந்து மூடுண்டவளாக மூலையில் முடங்க வேண்டும் என்று சொல்லவில்லை; நிச்சயமாக இல்லை.
இப்போது, இந்தச் சமயக் குரவர்கள்தாம் வைதீகமான தரும சூத்திரக் கோட்பாடுகளின்படி சமூகத்தைப் பரிபாலிக்கிறார்களாம்.
பதைபதைக்கும் வெயிலில் வாயிலில் வந்து நிற்கும் பெண்களை, குரூரமான கோடிமுத்துத் தடுத்து நிறுத்தும் அநாகரிகம், எந்த வைதீக தருமத்துக்கு உரியது?
----------------
15. ஒடுக்கல் சாத்திரத்தில் ஒப்பனைக் கருவிகள்
'புடவைத் தலைப்பில் ஒரு துண்டு மஞ்சளைக் கட்டிக்கொண்டு போம்மா' என்று முதிய பெண்கள், இளையவர்களுக்கு, மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்லும்போது சொல்லுவார்கள். மரணம் சம்பவித்த வீட்டிலிருந்து தலை முழுகாமல் திரும்ப முடியாது. கிராமங்களில் ஆறு அல்லது குளங்களில் தானே தலை முழுகுவார்கள்? நீராடும்போது, உடலழுக்குத் தேய்ப்பதோ, துணி துவைப்பதோ முக்கியமில்லை. ஆனால் கட்டுக் கழுத்திகளான மங்கலப் பெண்கள், வெறுமே நீராடக்கூடாது. மஞ்சளை உறைத்துப் பூசிக்கொண்டுதான் நீராட வேண்டும். அதற்கு அந்தக் காப்பு மஞ்சள் சேலைத் தலைப்பில் முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். அறிவார்ந்த ரீதியில் வேறு பல காரணங்களுக்காக மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கமாக இருக்கலாம். முகத்திலும், மேனியிலும் மழமழப்பும் ஒளியும் கூடுவதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், அழுக்கு உடம்பில், சிக்குத் தலையுடன், ஒரு காய்ந்த மஞ்சள் துண்டை சாஸ்திரத்துக்காகக் கல்லில் தேய்த்து நெற்றியில், கன்னங்களில் வைத்துக்கொண்டு அழுக்குத் தேய்க்க நேர மில்லாமல், அல்லது அவசியமில்லாமல் நீராடும் முக்கியம், அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதேபோல், ஒருவரை ஒருவர், குங்குமம் தொட்டு வாழ்த்திக் கொள்ளும் வழக்கம் வேரூன்றி இருக்கிறது. 'மஞ்சளும், குங்குமமுமாய் இரம்மா' என்ற வாழ்த்துதலில் தான்
பெண்ணின் உயிர் நாடியே தொக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த மஞ்சள் குங்குமங்கள், சாதாரணமாக ஒப்பனை அலங்காரங்களுக்குரிய பொருள்களே. ஆனால் இவை கணவனுடன் வாழ்வதற்கான சின்னங்களாகப் பரிபாலிக்கப் படுவதன் காரணம் யாது?
கோழி, ஆடு, பன்றி முதலிய வீட்டுப் பிராணிகள், மாமி சத்துக்காகவே பரிபாலிக்கப்படுகின்றன. அவற்றைப் பேணிப் பராமரித்து, ஊட்டமளிப்ப தெல்லாம், அவற்றை அடித்துக் கொல்லும் செயலில் பூரணமாகிறது. அவற்றைக் கொன்று, இரையாக்கிக் கொள்வதற்கே அவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் மஞ்சள் குங்குமம், மங்கலச் சேர்க் கைகளின் முக்கியத்துவம், கணவனைச் சார்ந்தே கரிசனம் காட்டப்படுவது எதனால்? அவற்றின் இழப்பைப் பெண்ணுக்குக் கொடூரமாக்குவதற்குத்தான் என்றால் தவறில்லை. மேனியழகைப் பராமரிக்கக்கூடிய சில பொருள் கள், கணவனுடன் வாழும் மேன்மைக்குரிய மங்கலச் சின்னங்களாக 'சக்தி'யேற்றப்பட்டு, அவள் உள்ளத்தை, உயிரனைய உள்ளொளியைக் கவ்விப்பிடிக்கும் பிணிப்புக்காக மாறிப் பதிந்துவிடுமளவிற்கு, அவள் கணவனுக்கே உரிய பாவையாக தனித்த உணர்வோ, அறிவோ, சிந்தனையோ இன்றி ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்கல் மஞ்சள், குங்கும் மங்கலத் தாலியுடன் பூரணமாகிறது.
கோழிக்கும், ஆட்டுக்கும், பன்றிக்கும் தங்களை யமன் வட்டமிடும் முன்னுணர்வு இல்லாமல் இருக்காது. பகுத்தறிவு அற்ற விலங்கினங்களுக்கு 'இயல்பூக்கம்' என்பது இயற்கையாக அமைந்த சிறப்பாகும். ஆனால் மனிதரை அண்டி, அவர் போடும் உணவுக்காக அடிமை வாழ்வுக்குப் பழகிய 'நாகரீகம்' விலங்குகளை வந்தெய்திய பிறகு, மனிதரை விட்டுப் போகத் தெரியாமலே, இயல்பூக்க முன்னுணர்வு மழுங்கிப் போகிறதோ என்னவோ?
இத்தகைய அண்டிப்பிழைக்கும், நாகரீகமடைதல் என்ற வகையில்தான் பெண்ணும் தன் தனித்தன்மையை இழந்து வந்திருக்கிறாள். இந்த நாகரீகப் பின்னோட்டத்தில் மஞ்சளும், குங்குமமும் மிக முக்கியமான கருவிகளாகப் பயன் பட்டிருக்கின்றன என்றாலும் மிகையில்லை.
கணவன் இறந்தபிறகு, அவளுக்குச் செய்யப்படும் பல சடங்குகளில் முக்கியமான ஒன்றாக, மஞ்சள் குங்குமம் இழத்தலை அவள் உணரச் செய்வதாக அமைந்ததாகும். இந்தச் சடங்கை, அவமானத்தை, அவள் உள்ளத்தைக் குதறிப் பிடுங்குவது போன்ற கொடூரத்தை, அவளைப்போல் கணவனை இழந்த பாவிகள்தாம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சிகளை, அவளுடைய சொந்த மகளோ, அன்னையோ கூட, சுமங்கலிகளாக இருந்தால் பார்க்கலாகாது.
அவளை நீர்க்கரையில் நிற்கச் செய்து, அடித்துக்கொண்டு அழுது, கொடுமையாக, மஞ்சள் பொடியை வீசி எரிந்து, இந்தா, கடைசி, கடைசி, தொலைத்துக்கொள் என்று கடுமையான சொற்களால் குதறுவார்கள். அதாவது இந்தக் கொடுமையை ஏற்றி, இதற்குள்ளாகும் நிரபராதியான பெண்ணை உருக்குலைப்பதே, இந்த மஞ்சள் குங்குமங்களின் உட்பொருளோ என்று இத்தகைய காட்சியைக் காண நேர்ந்த நான் உள்ளம் துடிதுடித்துப் போனேன்.
இந்நாட்களில், எத்தனையோ சீர்திருத்தங்கள் வந்திருக்கின்றன. கணவனை இழந்த பெண்கள் வண்ணச் சேலை உடுத்துவதும் பொட்டணிவதும் முகம் திருத்திக் கொள்வதும் வழக்கம் என்று வந்திருக்கிறது. ஆனால் அவள் உள்ளத்தில், கணவன் இழந்ததால் தான் ஒரு குற்றவாளி போன்றும், துர்ப்பாக்கியவதி என்றும் ஏற்பட்டுவிடும் வடு, அகலுவதில்லை. அந்த வடுவை அப்படியே சமுதாயத்துக்கு ஒப்பாதவளாக வைத்திருக்க, இதே குங்குமம்-மஞ்சள் சிலும்பிக் கொண்டு கேள்விக்குறி நிற்கின்றன. இந்த ஒடுக்கல் கொள்கை, இந்த இருபதாம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சாதனமாகிய திரைப்படங்களின் வாயிலாக, கல்வி கற்று, அறிவியலாளராக வளர்ச்சி பெற்ற பெண் பாலரையும்கூட அக்குற்ற உணர்வினின்று விடுபட இயலாதவராக அறிவுறுத்தப் படுகிறது. கணவன் இறந்ததைக் காட்ட, கொடூரமாக, ஒரு கை வந்து அவள் பொட்டை அழிக்கும். வளையல்களை உடைக்கும். முடியை அவிழ்க்கச் செய்யும். ஏன்? இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குச் செல்லும் இந்த நூற்றாண்டின் இறுதிக் காலங்களிலும்கூட, கைம்பெண் வெள்ளைச் சேலையை விரும்பி ஏற்பவளாகச் சித்தரிக்கப்டுகிறது.
திருமணம் கணவனையும், மனைவியையும் ஈருடல் ஒருயிராகச் செய்யும் முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்பட்டு, கருத்தொருமித்த காதலராக இருவரும் இன்பமாக வாழ்ந்த கணவன் மறைந்ததும் மனைவி விரும்பி, கைம்மைக் கோலம் ஏற்பதை தர்ம நியாயமாகச் சித்தரிப்பவர்கள், மனைவி இறந்ததும் அதே வகையான இழப்புக்குள்ளான கணவன் எந்தப் போகத்தையும் துறப்பவனாக, மறந்தும் யாரும் சித்தரிப்பதில்லை. மாறாக அவளை, இழந்த சோகத்தை மறக்க, அவளையே உரித்து வைத்தாற் போலிருக்கும் அவள் சகோதரியையோ, வேறு ஒரு பெண்ணையோ காதலிப்பான்; அல்லது கல்யாணம் செய்துகொண்டு அவளே இறுதியில் அவனிடம் கேட்டுக்கொண்ட வரத்தை நிறைவேற்றுவான். 'திருமணமே செய்துகொள்ள மாட்டேன்' என்று பிடிவாதமாக இருப்பவனைக்கூட இன்னொரு பெண்ணின் நற்குணம், தர்ம நியாயக் கல்யாணத்துக்கு அவனை இணங்கச் செய்யும்.
வேத காலத்திலும், ஸ்மிருதிகள் என்ற கோட்பாடுகள் தோன்றிய காலத்திலும், 'கைம்பெண்கள்' என்று அறிவும் மனமும் முற்றிலும் ஒடுக்கப்பட்டு, பதப்படுத்தப்படும் நெறிகள் அறிவுறுத்தப் பட்டிருக்கவில்லை எனலாம்.
தர்ம சூத்திரங்கள் என்ற பெயரில் குறிக்கப்பட்டு, ஆதியில் சட்ட நெறிகளைத் தோற்றுவித்த ஆசிரியர்கள், கைம்பெண்கள் மணம் புரிவதற்கு இடமளிக்கிறார்கள். ஒருவன் சந்ததியில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி, அதே கோத்திரத்துக்குரிய ஒருவருடன் கூடி ஒரு மகனைப் பெறலாம். அந்த மகன் இறந்துபோன கணவனுடைய சொத்துக்களைப் பெறவும், அவனுக்கு நீர்க்கடன் செய்யவும் உரிமையுள்ளவனாகிறான்.
இதே கண்ணோட்டத்தில், 'மனு'வும் கைம்பெண்கள் இறந்த கணவனின் சொத்துரிமையைப் பெற, அதே கோத்திரத்தில் உதித்த ஒருவனுடன் கூடி (மறுமணம் கொண்டு) மகனைப் பெறலாம் என்று அனுமதிக்கிறார். ஆனால் அடுத்த சில பாடல்களில் இவ்வாறு மக்களைப் பெறுவதற்கு ஒன்று அல்லது இரண்டு என்று உச்சவரம்பு காணப்படுகிறது. தொடர்ந்து, இதே மனுவின் பெயரால் அறியப்படும் நெறி முறைகள், முற்றிலும் மாறான கருத்துடன் வருகின்றன. கணவனை இழந்தபின் மறுமணம் செய்துகொள்வதனால், தரும நெறிகளை மீறி பாவத்துக்குட்படுறாள். அவள் தன்னை ஒடுக்கி போகங்களைத் துறந்து, கனிகளை மட்டுமே உண்டு, இன்னொரு ஆணின் பெயரைக்கூட மனதில் எண்ணாத வளாகத் தவ வாழ்வு வாழ்ந்து முடிய வேண்டும்.
'மனுஸம்ஹிதை' குறித்து எழுதும் சிறந்த ஆராய்ச்சி அறிஞரான திருமதி சகுந்தலாராவ் சாஸ்திரி ‘மனுஸம்ஹிதை' என்ற தொகுப்பு, ஆதியில் தோன்றிய தர்ம சூத்திரங்கள் சட்ட நெறிகளுக்கும் இடையே பாலமாக 'மனு' என்ற ஆசிரியரின் பெயரில் பலரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தொகுப்பு எனலாம் என்று கருத்துரைக்கிறார். ஏனெனில் பெண்ணின் உரிமைகள், திருமணம் என்ற மிக முக்கியமான சமூக வழக்கங்களைச் சார்ந்து பெண்ணின் மதிப்பை வலியுறுத்தும் பல சட்ட நெறிகளுக்கும் 'மனு' என்ற பெயருடைய ஆசிரியர் பொறுப்பானவராகக் கருதப்படுகிறார். எனவே இவர் பெயரிலேயே, முன்னுக்குப் பின் முரணான சட்டநெறிகள் வலியுறுத்தப்படுகின்றன.
கைம்பெண்கள் மணம் புரிந்துகொண்டு சொத்துரிமை யைப் பெறவும், நீர்க்கடனுக்கு உரிய மகனின் தாய் என்ற மதிப்பைப் பெறவும் அனுமதி இருந்ததனால்தான் இன்றளவும் வசைச் சொல்லாக வழங்கப் பெறும் 'கைம் பெண் மகன்' என்ற தொடரே வழக்கு மொழியில் தோன்றியிருக்க வேண்டும். இதேபோல் ஒரு மனிதனுக்கு தாசியிடம் பிறக்கும் மகனுக்கும் சொத்துரிமை, மற்றும் நீர்க்கடன் உரிமை வழங்கப் பெற்றிருந்தால்தான் அந்த வழக்குச் சொல்லும் இன்று வசைச் சொல்லாக மாற்றம் பெற்றிருக்கிறது.
ருக்வேத காலத்திலிருந்து, தரும சூத்திரங்கள் நெறிப்படுத்தப்பட்ட காலங்களில் அதாவது, கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், பெண்ணின் மதிப்பு திருமணம் சார்ந்தும், கல்வி மறுக்கப்பட்டும் மிகவும் இழிந்துவிடவில்லை.
பிறகு குழந்தை மணம், நெறிப்படுத்தப்பட்டதும் உபநயனச் சடங்கு வெறும் பாவனையாகி; வேண்டியதே இல்லை என்று தீர்ந்து, இன்னும் ஒரு கீழ் நிலையில், கல்விக்குரியவள் இல்லை என்றும், கணவனைத் தவிர வேறு பற்றுக்கோலே இல்லை என்றும், படிப்படியாகக் குருடியாக்கப்பட்டாள். இதற்குரிய நெறிகள் முந்தைய ஆசிரியர்களின் பெயரிலே முரணாக இணைக்கப்பட்ட காலங்களில், இந்தக் கீழ் முகத்தை எதிர்த்துப் போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள். 'காதம்பரி' என்ற நாவல் போன்ற காவியத்தை எழுதிய பட்டபாணர், பெண்ணை நெருப்பில் போடும் உடன்கட்டையை எதிர்த்துப் போராடியிருக்கிறார். 'பெண்ணை எரிப்பதும், கைம்மைக் கொடுமையில் அழுத்துவதும் கொலைக்குரிய பாவம்' என்று உரைத்திருக்கிறார்.
தந்திரவாதிகளும், (மஹா நிர்வாண தந்திரம்) பெண்ணை தெய்வீக வடிவினள் என்று போற்றி, அவளைச் சிதையில் வைத்து எரிப்பவர்கள் மிகக் கொடிய நரகத்துக்குரியவர்கள் என்று இயம்புகின்றனர்.
இவ்வாறு, சதியும் கைம்மைக் கொடுமையும் வலுப்பெற்று, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பத்தாம் நூற்றாண்டு கால கட்டத்தில் முழுதுமாக நெறியாகித் தீர்ந்து போயிற்று.
சங்கராசரிய மடத்தில், தென்கலை வைணவப் பெண், கைம்பெண்ணாக இருந்தால் முடியெடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விலக்கு அளித்தார்களே, அந்த மர்மம் என்ன தெரியுமா? அடுத்து அதைப் பார்ப்போம்.
------------------------
16. புராணப் புதைகுழியில் மூடப்படும் நட்சத்திரங்கள்
ஈராண்டுக்கு முன்போ, இன்னும் சில மாதங்களுக்கு முன்போ, (குறிப்பாக நினைவில்லை) சென்னை தொலைக்காட்சியில், ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு நாடகம் ஒளிபரப்பாயிற்று. அந்த நாடகத்தில், ஆதிசங்கரரின் அன்னையார் முண்டிதமும் முக்காடுமாகக் காட்சி அளித்தார். சேலைக் கட்டும் தென்னிந்திய ஸ்மார்த்தப் பெண்கள் அணியும் விதமாக இருந்தது. தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மிகப்பெரிய சமய குருவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கின்றோம் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி ஏதோ புனை கதைகளைக் காட்சிகளாக்குவது போன்ற (அ)சிரத்தையுடன் செயல்பட்டிருந்ததைக் குறித்து வருத்தமாக இருந்தது.
ஆதிசங்கரரின் காலத்தில் அந்த வழக்கம் இருந்ததா? இல்லையா? என்ற வினா ஒருபுறம் இருக்கட்டும்; ஆதிசங்கரரின் தந்தை, நம்பூதிரி இனத்தவர் என்பது உண்மை. அண்மையில் ஆதிசங்கரரின் வரலாறு சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டு இந்திய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறது. இந்தப் படம் சில மாதங்கட்குமுன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று.
நமது தொலைக்காட்சி சித்தரிப்புக்குப் பிராயச் சித்தமாகவும் இது அமைந்திருந்தது.
இந்தப் படத்தில், சங்கரரின் அன்னை -இளமையும் எளிமையும், எழிலுமாகக் காட்சியளித்தார். ஆரோக்கியமும் சுதந்திரமான வனப்பும் உடைய நாயர் இனப் பெண்ணின் பிரதிநிதியாகவே தோற்றம் தந்தார். நம்பூதிரி பிராம்மணர் இடையே மூத்த மகன் மட்டுமே தம் இனத்துப் பெண்ணை முறையாக மணந்துகொள்ளும் வழக்கம் உண்டு. ஏனைய சகோதரர்கள் நாயர் இனப் பெண்களுடன் 'சம்பந்தம்' வைத்துக் கொள்வார்கள், அவ்வளவே; நாயர் இனப் பெண்கள், கணவன் வீடு வரமாட்டார்கள்.
இது குறித்து ஏற்கனவே, சில சான்றுகளை இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். 'மருமக்கத்தாயம்' என்ற தாய்வழிச் சம்பிரதாயத்தில் சுதந்திரமாக விளங்கிய பெண்களை, தந்தைவழிச் சம்பிரதாய முதன்மையில் வளைக்க, வடக்கிருந்து நம்பூதிரி இனத்தார் வந்தனர் என்று இந்தியாவில் தாயர் உரிமை என்ற நூலில் எஹ்ரென் ஃபெல்ஸ் என்ற மானிட இயல் அறிஞர் குறிப்பிடுகிறார்.
ஆதிசங்கரரின் காலத்தில் சமுதாய நிலைமை, நம்பூதிரி-நாயர் இனப்பெண் தொடர்புகள் முழுதுமான தந்தைவழிச் சம்பிரதாயங்களில் நிலைப்பட்டிருக்காது எனக் கருதவே இடமிருக்கிறது. ஆதிசங்கரரின் இளமைப் பருவம் குறித்து தெளிவான வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கவில்லை. சங்கரரின் இளம் பருவத்திலேயே தந்தை இறந்தார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும், தந்தை இவர் பிறக்குமுன்பே இறந்து போனார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும் வழக்கில் இருக்கின்றன. ஏனைய நம்பூதிரி சமூகத்தினருடன் ஒட்டாமல் தனித்தே ஆர்யாம்பாள் வாழ்ந்ததாகவும் வரலாற்றிழைகள் கிடைக்கின்றன. எனவே தாய் தம் மகன் துறவறம் மேற் கொள்வதாகச் சொல்லும்போது, எஞ்சிய காலத் தனிமையையும் அந்திம கால நினைவையும் மிகுந்த கவலையுடன் கருத்தில் கொள்கிறார்.
இறுதிக்காலத்தில் கங்கரர் தம் அன்னைக்கு அந்திமக் கிரியை செய்ய வருவதாக வாக்களிக்கிறார்.
இந்த வரலாற்றுத் தரவுகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கும்போது, சில உண்மைகள் புலப்படுகின்றன.
நாயர் இனத்துப் பெண்களே நம்பூதிரிகளால் திருமணம் என்ற பந்தத்தினால் பிணைக்கப் பெற்று, நம்பூதிரிப் பெண்களாக ஏற்றம் பெற்றபின் அவர்களுக்குப் பல கடுமையான சட்ட திட்டங்களும், கற்பொழுக்கமும் விதிக்கப்பட்டன. 'அந்தர் ஜனம்' என்றாலே; பர்தாவுக்குள் ளிருப்பவர் என்று பொருள் படக்கூடிய வகையில் அவர்கள் 'ஆசாரம்' காப்பவர்களாயினர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட கற்பொழுக்கக் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானவை. இவர்கள், இதற்கென்று செயல்பட்ட குழுவினரால் சந்தேகிக்கப் பட்டால், 'பிரஷ்டையாகி' குடும்பத்தில் இருந்து விலக்கப்படுவர்.
நம்பூதிரிப் பெண்களுக்கு மட்டும் இத்துணை கட்டுப் பாடுகள் ஏன் விதிக்கப்பட்டன? பிள்ளை பெறும் கருவி களாகவே ஏன் பாவிக்கப்பட்டனர்?
ஏனெனில் அவர்கள் பூர்வீகம், மிகுந்த உரிமைகளை உடைய, சுயேச்சையான இயல்பில் அல்லவா வலிமை பெற்றிருந்தது!
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், லலிதாம்பிகா அந்தணர் ஜனம் எழுதிய ஒரு சிறுகதை இப்போது நினைவில் வருகிறது.
ஒரு நம்பூதிரிப் பெண்மணியான தாய், அந்தக் காலத்தில் தாழ்ந்த வகுப்பினனான ஒரு புலையனின் குடிலில் மரணப் படுக்கையில் இருக்கிறாள். மனைக்கலில் (நம்பூதிரியின் இல்லம்) எசமானரிடம் இச்செய்தியைத் தெரிவிக்க ஒருமுறை தான் அந்தப் பெரிய இல்லத்தில் வாழும் உரிமை பெற்றிருந்தவள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள, ஆதங்கத்துடன் புலைக்குடிமகனிடம் வேண்டுகிறாள். அந்தச் சிறு குடிமகனாலும் மனைக்கலின் அரண் கடந்து உள்ளே செல்ல முடியாது. எனினும் அந்தத் தாயின் ஆசையை நிறைவேற்றப் பெருமுயற்சி செய்கிறான், முடியவில்லை.
கதையின் சாராம்சம் இதுவே. அவள் அந்த இல்லத் துக்குரியவளாக இருந்து, கற்பொழுக்கம், ஐயத்துக்கு இடமானதாகக் கற்பிக்கப்பட்டு, பிரஷ்டம் செய்யப்பட்டவள். எனவே, தாய் ஆரியாம்பாளின் நிலைபற்றிய ஊகங்கள் எங்கெங்கோ கொண்டு செல்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: கணவனை இழந்தவள் என்று அவளை அலங் கோலப்படுத்தும் கொடுமை, அவர்களிடையே நிச்சயமாக இல்லை.
இந்து மரபில், வாழ்க்கையின் முதல் படியிலேயே துறவு நெறி முதன்மைப் பட்டிருக்கவில்லை. சமண, புத்த சமயங்களில் தாம் துறவுநெறி கோலோச்சி இருந்தது. சங்கரர், இளவயதிலேயே துறவு நெறி மேற்கொண்டு, சமயத்துக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் மடங்களை நிறுவியதற்கும்கூட, அதுவே காரணம் என்றால் தவறில்லை. ஏனைய சமயங்களின் செல்வாக்கைக் குறைத்து, மக்களை இந்துச் சமயத்தின்பால் ஈர்ப்பதற்காகவும் துறவு நெறி பூண்டு நாடெங்கும் தமது அத்துவைத சித்தாந்தத்தைப் பரப்பினார் எனலாம்.
ஆதிசங்கரரின் வரலாற்றில், அக்கால மகளிர் நிலை பற்றிய அற்புதமான உண்மைகள் தெரிய வருகின்றன. அவர் வாதிட வந்த மண்டனமிசிரரின் மனைவி சரஸவாணி, கல்வியறிவும், ஞானமும் ஒருங்கே அமைந்த பெண்மணியாகத் திகழ்கிறார். தம் கணவருடன் வாதிட வந்த சங்கரரை வரவேற்று, நடுவராகவும் அவர் பொறுப்பேற்றார். இருவர் கழுத்திலும், மாலை ஒன்றைக் கொடுத்து அணியச் செய்கிறார்.
எந்த மாலை முதலில் வாடத் தொடங்குகிறதோ, அவரே தோற்றவராகிறார். அதாவது, மன இறுக்கம் அதிகமாகி, வெம்மை வெளிப்படும்போது உடலில் படும் மலர் வாடத் தொடங்கிவிடும். மண்டனமிசிரர் தோற்று சரஸவாணி வெளியே வருகையில், சங்கரரின் கால்களில் மண்டனமிசிரர் பணிந்து தோல்வியை ஒப்புக்கொண்டு தம்மைச் சீடராக ஏற்கும்படி வேண்டுகிறார்; ஆனால் சரஸவாணி இதை ஒப்பவில்லை.
இந்து தருமப்படி, கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே ஒரு முழு அங்கமாகின்றனர். எனவே அவரை மட்டும் வாதில் வென்றதாகச் சொன்னால் போதாது. மேலும், அவர் அவளையும் வெல்லாமல், கணவரை மட்டும் சீடராக்கிக் கொள்ள துறவுநெறிக்கு இழுப்பது நியாயமும், தருமமும் அல்ல. எனவே “எனது வினாக்களுக்கு நீங்கள் சரியான விடையளித்தாலே வென்றவராவீர். பின்னர், என்னையும் உங்கள் நெறியில் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று விதிக்கிறார். அவர் தொடுத்த வினாக்களுக்கு உரிய விடையளிக்க சங்கரர் உலகியல் ஞானம் பெற வேண்டி இருந்தது. பின்னர், மண்டனமிசிரர், சரேந்திராசாரியார் என்று பெயர் பெற்ற சீடராகிவிட, அவர் மனைவி என்ற நிலை விட்டு ஒரு தாய் என்ற உறவோடு சங்கரருடனும், சீடர்களுடனும் சரஸவாணி ஏகினார்.
ஆனால், சரஸவாணி பற்றிய இந்த விவரங்கள் மறைக்கப்பட்டு, அவர் சரஸ்வதியின் அவதாரம் என்ற தெய்வச் சிமிழில் அடைக்கப்படுகிறார். வரலாற்றில், தப்பித் தவறி
ஒரு நட்சத்திரம் ஒளிய வந்தாலும், ஓ அது மானுட வடிவல்ல, மானிடப்பெண்ணால் எட்டமுடியாத தெய்வீகம் எட்டு வதற்குரியதல்ல என்ற அறிவுறுத்தலுடன் புராண,
அசாதாரணப்பட்டில் மூடிப் புதைக்கப்பட்டது! பெண்ணின் அறியாமை எவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது!
சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில், அவர் இறதியில் அன்னைக்கு அந்திமக்கிரியைகள் செய்ய வந்த விவரங்கள் இன்றும் சில ஐயங்களைக் கிளப்புகின்றன. அவர் அன்னைக்கு அந்திமக்கிரியைகள் செய்ய வந்தபோது, நம்பூதிரி சமுதாயம் அதை ஏற்கவில்லை. "பற்றற்று துறவு பூண்டவன், தாய்க்குக் கிரியை செய்வதா? தகாது!” என்று அந்தப் பிராமணர்கள் எதிர்த்தனர் - அதாவது, ஆரியாம்பாளுக்கு, இறுதியிலும் நிறைவான அமைதி கிடைக்கக்கூடாது என்று வம்பு செய்தார்கள். ஆனால் சங்கரர், தாயே தம் முதல்வி என்று தீர்மானமாக அதே இடத்தில் அவளுக்கு எரியூட்டிக் கிரியைகளைச் செய்தார். அந்தப் பிராம்மண சாத்திரங்களைத் தகர்த்தெறிந்தார். சங்கரரின் சித்தாந்தம் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவர் பிறந்த இடத்தில், அவர் பெரும்புகழ் அடையவில்லை. எனவே ஆதிசங்கரா சாரியருக்கும், கைம்பெண்களின், அலங்கோல அவமதிப்புக் கொடுமைகளுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
சமணம், தன் நெறிக்குள் பெண்களுக்குத் தாராளமாக இடம் அளித்த சமயம். பெண்களுக்கும் துறவு உரியது; இல்லமே குறிக்கோள் இல்லை என்று உரிமை வழங்கியது. அவர்கள் தம் முடியை (தாமாகவே பிடுங்கிக் கொள்ளும் கொடுமையில்) இழந்து, கடுமையான வாதங்களுக்கும், சோதனைகளுக்கும் தம்மை உட்படுத்திக் கொண்டு துறவு பூண இடமளித்து, அந்நாளைய இந்து சமய சாத்திர நெறியாளரின் சிந்தையை ஊக்கிவிட்டது. கணவனை இழந்த பெண்கள் எல்லா நலன்களையும் துறந்துவிட வேண்டியவர் தாமே?...அவர்கள் முடியைப் பிடித்து இழுத்து முண்டனம் செய்து வெள்ளை போர்த்தினார்....? குரூரமான இந்த வெறி, ஆணாதிக்க வெறி 'தரும சாத்திரங்களில்' புகுத்தப்பட்டது. இந்தப் புகுத்தப்பட்ட சாத்திரங்களுக்கு 'மருமாதிகாரி'களாக சங்கராசாரியாரின் குரு பீடங்களில் அமர்ந்தவர்கள் தாங்களாகவே நியமனம் செய்துகொண்டாற் போல் பரிபாலனம் செய்தார்கள்; செய்து வருகிறார்கள்.
வைணவ நெறியைக் கடைப்பிடிக்கும் ஆதி மரபினரான தென்கலையார், சமண சமுதாயத்தினருக்கு உரிய நெறிகளை கைக்கொள்வதை மூர்க்கமாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். எனவே அவர்கள் மரபில் எந்தப் பெண்ணும் கணவனை இழந்ததற்காக, முடியை இழக்கக்கூடாது என்று விதிக்கப் பட்டது.
அவ்வாறு ஒரு செயலுக்கு அபலைப் பெண்களை உட்படுத்துபவர். 'நரகத்துக்குச் செல்வார்' என்றுகூட வைணவ தரும சாத்திரங்கள் எழுதப்பெற்றன.
'இந்து நாகரீகத்தில் மகளிர் நிலை' என்ற நூலில் பாக்டர் அல்டேகர் என்ற வரலாற்றாசிரியர், மகளிருக்கு இழைக்கப்பெற்ற இக்கொடுமை பற்றி மிக விரிவாக ஆராய்கிறார். ஆனால், வைணவ நெறியினரில் தொன்மையான தென்கலை மரபிலிருந்து பிரிந்து புதுமைகளுக்கு இடம் கொடுத்தனர், பின் நாளைய வடகலை மரபினர். இவர்கள், பெண்களின் உரிமைகளைப் பறித்து, அலங்கோலம் செய்வதில் (ஸ்மார்த்து சைவப் பிரிவினரின் புதிய சாத்திரங்களை ஏற்றி, சைவ வைணவ ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார்கள்! எனவே சங்கராசாரிய மடத்துப் பிராம்மணர், தென்கலைப் பெண்களுக்கு விலக்களித்து, வடகலைப் பிரிவுக் கைம்பெண்கள் முடியை இழக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் ! புதிர் விடுபடுகிறதல்லவா?
இன்னும் பார்ப்போமே!
-----------------
17. கீதை ஒளியில் - பெண் (சு) தருமம்
“பாத்திரக் கடையில் மாசம் இருநூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வேலைக்குப் போகச் சொன்னேன் மாமி! பழிகாரி, பிராமண சாதியில் பிறந்துவிட்டு, சாதி கெட்டு எவங்கூடவோ ஓடிப்போயிட்டா. என்ன செய்வேன். அன்னிக்கே காலை ஒடிச்சி உள்ள போட்டிருக்கணும். வயத்துக் கொடுமை மாசம் இருநூறானால், ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம் சேர்த்து, கையில் ஒரு வளைன்னாலும் அடிச்சுப் போடலாமே, நாம்தான் சமையல்காரனைக் கட்டிண்டு ஆயுசுபூரா அவஸ்தைப்பட்டாச்சு. ஏதோ இதை பத்தாவது படிக்க வைச்சிருக்கோம்; ஒரு கிளார்க் உத்தியோகம் பண்றவனையேனும் பார்த்துக் குடுக்கணும்னு நாயா, பேயா அலைஞ்சு நாலு காசு சேக்கறேன். இப்படிப் பண்ணிட்டாளே. வெக்கம், மானம், சூடு, சொரணை, ரோசம் ஒண்ணில்லாம இப்படி ஓடுமா?"
இப்படிப் பிரலாபிக்கும் ஏழைத்தாய், புருஷன் இறந்தபின் அடுப்பறையில் வெந்து பட்சணம் போட்டும், சின்ன சமையல் ஏற்றும், (பெரிய சமையலுக்கு ஆண்கள் இருக்கிறார்களே) ஐந்து மக்களைக் காப்பாற்றுபவள். ஓடிப்போன பெண் மூத்தவள். இவள் சாதி கெட்டு பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குத் தாவினாலும் இந்தத் தாய் மன்னித்து ஏற்கமாட்டாள். ஏனெனில் குல நெறிகளை முழுவதுமாகக் கட்டிக் காப்பவர்கள் இத்தகைய பஞ்சைகளே. சமய சமுதாய ஆதிக்கம் இந்த அபலைப் பெண்களையே பலமாகக் கவ்விக்கொண் டிருக்கிறதென்றால் மிகையில்லை.
எனவே அந்தப் பெண் வீடு தேடி மருமகனுடன் வந்தால் முரட்டுக்காளையாகச் சீறுவாள். பிரசவம்.....? ம்ஹும்... மூச்சு விடக்கூடாது. தலை முழுகிவிட்டேன் சாகட்டும் என்பாள். சில பல ஆண்டுகள் சென்றபின் இவள் மகனும் இதுபோன்ற தகராறில் மாட்டிக்கொண்ட பின்னரே, அல்லது இவள் அண்டியுள்ள உயர் மதிப்புள்ள வீட்டாருக்குச் சமமான பொருளாதார மதிப்புடன் மகள் வந்து, அவர்கள் அங்கீகரித்த பின்னரோ, ஒருகால் இவள் ஏற்கக்கூடும். உயர்குலத்துப் பெண் தாழந்து போனால், எவ்வளவு பெரிய சீர்திருத்தவாதியும் மனம் சுருங்காமல் ஏற்றுக்கொள்வதில்லை.
ஏனெனில், இந்தியக் கலாச்சாரம் என்பது இத்தகைய உயர் பெண்களின் வாழ்க்கைச் சுதந்திரத்தில்தான் பின்னிக் கிடக்கிறது என்றால் பொய்யில்லை. இவளுடைய
ஒழுக்கத்தில்தான் அது நிலைகொண்டிருக்கிறது.
அந்நாளில் அருச்சுனனுக்குப் போர்க்களத்தில் கண்ணன் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்தப் போர்க்கள உரை, இன்றளவும் இந்துக்களின் தெய்வீக வேத நூலாக சத்தியப் பிரமாணமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்திய ஆன்மீகத் தத்துவம் என்றால், உடனே கீதையைப் புரட்டும் அறிவாளரும் சான்றோரும்தாம் நினைவில் வருகின்றனர். இந்தப் போர்க்கள உபதேசத்துக்குக் காலம் காலமாக, பல வேத விற்பன்னர்கள், தத்துவவாதிகள், புதிய சித்தாந்தங்களை வகுத்தவர்கள், தத்தம் நோக்கில் உரைகள் எழுதியுள்ளனர். அயல் நாட்டிலிருந்து வந்த அறிவாளரையும்கூட இந்த நூல் கவராமலில்லை. உலக முழுதும் பல மொழிகளில் ஆக்கப்பெற்ற இந்த நூல், இந்துக்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுவதற்குறிய உயர்ந்த நூலாக விளங்குகிறது.
இந்த நூலில் கண்ணனின் உரைக்குத் தோற்றுவாய் என்று கருதும் முதல் அத்தியாயத்தைப் படிக்கையில், ஒரு பெரிய உண்மை புலப்படுகிறது.
அர்ச்சுனன், எதிர்த்தரப்பில், தன் சுற்றத்தாரையும் வணங்குவதற்குரிய சான்றோரையும், ஆசாரியரையும் காண்கிறான். பலவீனமடைகிறான். போர் செய்வதனால் ஏற்படக்கூடிய பெரு நட்டத்தை இழப்பை, அவன் மனக் கண்ணால் கண்டு உணருகிறான். அப்படி ஏற்படக்கூடிய பேரிழப்பு எது? "குல நாசம்' என்று இங்கு அறிவுறுத்தப் படுகிறது. பேராசையால் கவரப்பட்டு திருதராஷ்டிரனின் மக்கள் குலநாசம் விளைவிக்கும் பாவத்தைச் செய்ய முன்வந்துள்ளனர். ஆனால், இந்தக் கேட்டை நன்கு உணர்ந்த நாம், இப்பாவத்துக்கு உடன்படாமல் பின்வாங்குவதாக ஏன் கருதக்கூடாது?
குலம் அழிந்தால், குலதருமங்கள் அழிகின்றன. தருமங்கள் அழிந்தால் அதர்மம் பெருகி முழு நாசம் விளையும். இந்த 'அதர்மம்' என்பதில் முதன்மையாக இருப்பது எது? குலப்பெண் கணவரிறந்தபின் மாற்றானைக் கூடும் நிலை, கற்பிழக்கும் நிலை (கணவரிறந்த பின் ஏரியில் விழுவதும், கைம்பெண் கொடூரங்களும் அந்நாள் வழக்கில் இல்லை என்று ஊகிக்கலாம்) இந்தப் பெண்கள் மாற்றாரைச் சாரும் நிர்ப்பந்தம் வரும்போது, வருணக் குழப்பம் நேரிடும், சாதி தருமங்கள் கெடும்; அதனால் குலத்தோரும் அதனை அழிப்போரும் நரகத்தில் வீழ்வார்கள். ஏனெனில், வருணக் குழப்பத்தினால், 'பித்ருக்களுக்குப் பிண்டத்தையும் நீரையும் அளிக்கவல்ல நீர்க்கடன் செய்வதற்குரியவர் இல்லாமல் போகின்றனர்.' எனவே, அர்ச்சுனன் குலநாசம் விளைவிக் கக்கூடிய பெரும்பாவத்தைச் செய்வதிலிருந்து பின்வாங்குவ தாக உரைக்கின்றனர். அவன் நோக்கில், குலநாசத்தைப் பொருட்படுத்தாத பாதகர்களான துரியோதனாதி-களுடன் போரிடுவது, அந்தப் பாவத்தைத் தாமும் செய்வதாக ஆகிறது. இச்செயலை அந்தோ கொடிய பாவம் (அஹோபத மஹத் பாபம்) எனக் குறிப்பிடுகிறான். பெண்கள், குலம், ஜாதி, வருணம் என்ற பிரிவுகளை அப்படியே காப்பதற்குரிய முக்கிய கருவிகளாகக் கருதப்பட்டனர். உண்மை நன்கு விளங்க வில்லையா?
ஆசிரியர், தம் இனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் குறியாக இருந்தனர் என்று சொல்வது முற்றிலும் பொருந்தவில்லை. அவர்கள் வெவ்வேறு இனக் குழுவினருடன் சம்பந்தம் செய்துகொண்டனர். தம் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள வேற்று இனக் குழுவினரின் அடிமைப் பெண்களுடன் தொடர்பு கொண்டனர் என்பதைக் கண்டோம். கலப்பு வந்து சேராமல் இல்லை. ஆனால் நால்வகை வருணங்கள் உறுதியாக பிளவுபட்ட பிறகு, இந்த மேலான வருணத்தார் தங்கள் வருணங்களைக் கலப்பின்றி வைத்திருப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இந்தக் காரணத்தினால்தான் மேல் அல்லது உயர் வருணங்களில் பிறந்து பெண்கள் மிக அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
பகவத்கீதையில் நம் கருத்தைக் கவர்ந்து பிணிக்கும் இன்னும் சில கூறுகளும் பெண்களின் நிலையைத் தெளிவாக்குகின்றன. கண்ணன், ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களின் அடிப்டையில் நான்கு வருணங்களைப் படைத்ததாகக் கூறுகிறான். (அத்-4) இன்னும் அவனவன் தனக்குரிய (ஸ்வதர்மம்) தருமத்தைச் செய்தலே சிறந்தது. பரதர்மம் நன்கு இயற்றப்பட்டாலும், அதைக் காட்டிலும் தனக்குரிய தர்மம் மேலாம் என்றும் அறிவுறுத்துகிறான். (அத்-3) மேற்குறிப்பிட்ட முக்குணங்களின் இயல்பில், வருணங்களைப் பிரிவுபடுத்துவதைப் பார்ப்போம். ஸத்வ குணமுடையவர்களின் இயல்பு, அறிவையும் ஞானத்தையும் வேட்பதாகும்.
சாந்தம், மென்மை, தூய்மை, தியாகம் இவற்றின் பிறப்பிடமாம்-மேலாம் ஞான ஒளியையே உண்மையென வாழும் இவன் சாத்வீகமான நலம் பொருந்திய நல்லுணவை மிதமாக உண்பவன். இவனே மேலாம் வருணத்தினன்.
ராஜஸ குணம், ஆசை, கோபம், வீரம், தோள்வலி, உடலால் திளைக்கக்கூடிய இன்பங்களை வேட்டல், காரம், உப்பு, உவர்ப்பென்ற உஷ்ண உணவுகளை விரும்பி உண்பவன். இவனே இரண்டாம் வருணத்தினன். தாமஸ குணம், மந்தபுத்தி, சோம்பல், செயலின்மைக்கு இருப்பிடம் இந்த குணத்திற்குரியவன் ஆறியது, பழையது, ஊசியது, எச்சிலானது எதையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறான். (தாமஸ ப்ரியம்) (அத்-17) வருணத்தவருக்குரிய கருமங்கள், கடைசி அத்தியாயத்தில் குறிக்கப்படுகின்றன. அவரவர் இயல்புக்கேற்ற கருமங்களால் பிரிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டு முதல் இரு வருணத்தினரின் தொழில்கள் குறிப்பிடப் படு கின்றன. உழவும் கால்நடை காத்தலும், வாணிகமும், இயல் பாயுண்டாகிய. வைச்ய தருமங்களாகும். இட்டபணி ஏவல் செய்து அண்டிப் பிழைப்பது சூத்திரனக்கு இயல்பாயுண்டாய கருமம், தருமம்; (அத்-18) ஒரே மனிதருக்கு இயல்பில் முக்குணங்களும் உள்ளன. மேலான உயர்குண இயல்புகளை வளர்த்துக்கொள்ள முயலுவதே மனித வாழ்வின் மேன்மை, ஏற்றம் என்பது பொதுவிதி என்றாலும் இப்பொது விதியை, தூலமான சில கூறுகள் கட்டுப்படுத்தவில்லையா? இந்தக் குணத்தினால், இன்ன உணவை உண்பான், இப்படி இயங்குவான்; இந்தத் தொழில் அவனுக்குரியது; இதுவே ஸ்வதருமம்; இதை மீறுவது சரியல்ல என்றால் அதற்கு என்ன பொருள்?
ஸத்வகுணம் ஓங்கியிருக்கும்போது மரணமடைவானாயின் ஞானவான்களின் நல்லுலகை அடைகிறான். ரஜோ குணத்தில் காலமாகிறவன் செயலூக்கம் உடையவர்களுக்கிடையே பிறக்கிறவன். தாமஸ குணத்தில் ஊன்றி விழிப் பெய்தாமலே மரணம் எய்துகிறவர்கள் அறிவிலிகளின் கர்ப்பத்தில் பிறக்கின்றனர். (அத்-14)
அவரவர் அவரவர்க்குரிய தருமத்தை, கருமத்தைச் செய்தலே நியாயம். அந்தந்தக் கருமத்துக்குரிய குணங் களிலேயே ஊன்றும் வகையில் தொழிலும் உணவும் உரியன என்று அறிவித்துவிட்டு, மூட யோனிகளில் தாமஸ குணமுடையவர் பிறக்கின்றனர் என்றால் என்ன பொருள்? அடிமைப் பணி செய்துகொண்டு, எஞ்சிய உணவைப் புசிக்கவே ஜீவ மரணப் போராட்டம் நிகழ்த்துபவன், விழிப்பையோ எய்தக்கூடாது என்றுதானே ஆகிறது? விளக்கை அணைத்தபின் இருளே வா என்று அழைக்க வேண்டுமா?
இந்த அனைத்துப் பாகுபாடுகளும், மனிதன் என்ற பொதுத் தத்துவத்தை நிறுத்திப் பேசப்படுகிறதா? இல்லை.
இதில், பெண் அடக்கம் இல்லை. இவள் ஏற்கனெவே அடிமையாகித் தீர்ந்தவள். இது மீண்டும் ஒன்பதாம் அத்தியாயத்தில் தெளிவாகிறது;
"பார்த்தா! கீழான பிறவிகளாக இருக்கும் பெண்கள் (பாவ யோனிகளில் ஜனித்தவர்களாகிய ஸ்திரீகள்) மற்றும் வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் என்னைச் சார்ந்தால் பரகதி அடைகின்றனர்'' என்று கூறுகிறான் கண்ணன்.
அவனுடைய பெருங்கருணை மகிமைப்படுத்தப்படும் இந்த சுலோகத்தில் பெண்ணின் நிலையும் கடைசி வருணத்தாரின் நிலையும் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.
பெண் என்று வரும்போது, மொத்தமாகவே அவள் பாபயோனியில் பிறந்தவளாகவே கருதப்படுகிறது. அவளுக்கென்று முக்குணப் பாகுபாடு, தனித்தொழிலியல்பு எதுவும் கிடையாது. அருச்சுனனால், தெளிவாக்கவும் உண்மை நிலை அவள் இனவிருத்திக்கு உரிய ஒரு கருவி என்பதேயாம், அதனால் அவள் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது; அறிவு, சிந்திக்கும் ஆற்றல், எல்லாம் கற்பென்னும் ஒழுக்கத்தில் பறிக்கப்படுகின்றன.
இவளுடைய சுயதருமம்தான் யாது? வருண ஒழுக்கப்படி, பதிசேவை செய்து, ஆண் மக்களைப் பெருக்கி ஆணுக்கு முன் உயிர் துறத்தலேயாம்.
வருண ஸங்கரம் என்ற கலப்புக்கள் நிகழாமலிருக்கவே, இவளைக் கட்டிப் போட்டாலும் காற்றையும், கதிரொளியையும் போல் இயல்பான ஆற்றல்களும், ஊக்கங்களும் முழுதும் கட்டுப்படுத்த முடியாதவை. இதன் விளைவே, இன்றும் ஓர் உயர் வருண நங்கை, தாழ்ந்த சாதிக்காரனுடன் மணவாழ்க்கை நடத்தப் போகிறாள்.
இந்தக் கலப்புக்களால் விளைந்த பிளவுகளே, சாதிகளும் மற்றும் பஞ்சமர் என்றும், வருணங்களில் சேராதவர் என்றும் குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஊகிக்க முடிகிறது. பெண் எவ்வாறு இந்தப் பிரிவுகளுக்குக் காரணி யானாள் என்று இன்னும் பார்ப்போம்.
-------------
18. காப்பாளரும் கைவிடப்பட்ட கற்பரசிகளும்
ஒரு திருமணம். மணமகள் நிலவைப் பழிக்கும் முகமும், கார்மேகம் ஒத்த கூந்தலும் என்று கவிகளின் வருணனைக்குப் பொருந்த விளங்குகிறாள். மணமகன் நல்ல கறுப்பு. இந்த ஜோடியைப் பார்க்க வந்தவர்கள் விமரிசனம் செய்யாமல் இருப்பார்களா? பெண் நல்ல நிறம்; மாப்பிள்ளை அத்தனை நிறமில்லை.......
'பிள்ளை கறுப்பாக இருந்தால் என்ன? ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்? இப்படித்தான் பெண்களின் கருத்துட் பரிமாறல் நடக்கும். 'பெரிய ஆபீசராம்' என்று முத்தாய்ப்ட வைக்கப்படும். பெண்ணும் பெரிய ஆஃபீசராக இருக்கலாம் ஆனால் அது முதன்மைப்படுத்தப் படுவதில்லை.
இதுவே எதிர்மாறாக இருக்கட்டும். பெண் கறுப்பாகவும், ஆண் சிவப்பாகவும், இருக்கட்டும். இந்தச் சேர்க்கை , பெண்ணுடன் வரும் ரொக்கம், தங்கம், வெள்ளி அந்தஸ்தில்தான் இணைந்திருக்கும். ஆனாலும், பெண் அட்டைக்கரி, அவன் ராஜாவாக இருக்கிறான். இந்த மூஞ்சிக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா? என்று பொங்கிப் பொருமுவார்கள், பெண்களே. இதிலும் இவள் குழந்தைகளைத் தன் வண்ணத்தில் பெற்றுவிட்டால், தொலைந்தது! 'சனியன் அம்மாவைக் கொண்டு அட்டைக்கரியாகப் பிறந்திருக்கு!' என்று இடிப்பார்கள்.
ஆண் கறுப்பாக இருந்து, அவனைக் கொண்டு பெண் குழந்தை பிறந்தாலும், அப்பாவைக் கொண்ட பெண் அதிர்ஷ்டமாக இருக்கும். கறுப்பாக இருந்தாலும் லட்சணம் என்று சொல்லிக் கொள்வார்கள். அவளுக்குத் திருமணமாகும் போதே எதிர்ப்படக்கூடிய பிரச்னை வேறு.
தந்தையின் மேலான ஆதிக்கம், ஒரு குடும்பத்தில் ஓங்கி யிருப்பதையே சமுதாயம் ஒத்துக்கொள்கிறது. பெண்ணும் வளைந்து ஏற்கிறாள்.
எனவே கலப்புக்கள் நேர்ந்து, வருணங்களின் நூல் பிடித்த ஒழுங்குகளும் பிளவுகளும் தாறுமாறான போது, பல்வேறு பிரிவுகள் தோன்றின.
இந்தக் கலப்பு மணங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டன. தந்தை உயர் வருணத்தினனாகவும், தாய் தாழ்ந்த வருணத்தில் பட்டவளாகவும் இருந்தால், அவ்வளவு மோச மில்லை. அது அனுலோமம். (அதாவது தலைமுடியைப் படிய
அதன் போக்கில் வாருவது போன்றது) இந்தக் கல்யாணத் தினால், தந்தைக்கு இழுக்கல்ல. அவன் தன்னோடு இணைந்த தாழ்ந்த வருணத்தவளை, ஏழு தலைமுறைக்குப் பிறகு, தன் வருணத்தினவளாக ஏற்றுக்கொள்ள, சந்ததி ஏற்றம் பெறுகிறது.
இவ்வாறு பிரிவுக்குள்ளான வகுப்புக்களை மனுஸ்ம்ருதி குறிக்கிறது.
தந்தை தாய் கலப்பினம்
பிராம்மணர் க்ஷத்திரியர் முர்த்த வஸிகத
" வைசியர் அம்பாஷ்ட
" சூத்திரர் நிஷாத
க்ஷத்திரியர் வைசியர் மஹிஷ்யா
க்ஷத்திரியர் சூத்திரர் உர்கா
வைசியர் சூத்திரர் கரன
இந்த ஆறு பிரிவினரில், உயர்ந்த வருணத்துத் தந்தைக்கும் கடைசி வருணத்துத் தாய்க்கும் பிறந்த மக்களின் சாதியை நம்மால் இனம் காண முடிகிறது. நிஷாத் என்ற சொல் காடுகளில் வேட்டையாடித் திரிந்த இனத்தைக் குறிக்கிறது. அந்த இனத்தார் நாட்டிலிருந்தே விலகி நெருப்புக் கொடுப்போர் இல்லாமல் வாழ நேர்ந்திருக்கலாம். என்றாலும் இந்த வமிசத்தவர் அனைவருக்கும் ஏழு தலைமுறைகளுக்குப் பின் உய்வு உண்டு. ஆனால், பிரதிலோமம்' என்ற முறையில் தாய் உயர் வருணத்தவளாக இருப்பாள். பிரதிலோமம் (முடியைப் படியவிடாமல் எதிர்நோக்கி வாருவது போன்ற முறை) என்ற முறையில் அவ்வாறு கரை ஏற முடியாத உய்வில்லாத வீழ்ச்சி அது. இந்தக் கலப்புக்களில் பிறவி எடுத்த மக்கள் சமதாயத்தில் தான் பஞ்சமர் என்றும் அவருணத்தினர் என்றும் சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட இனம் தோன்றியது என்று ஊகிக்க முடிகிறது.
பிரதிலோம முறையில் ஏற்பட்ட வகுப்புக்கள் : 2
தாய் | தந்தை | கலப்பினம் |
பிராம்மணர் | சூத்திரர் | சண்டாளர் |
பிராம்மணர் | வைசியர் | ஸுதர் |
பிராம்மணர் | க்ஷத்திரியர் | மாகத |
க்ஷத்திரியர் | சூத்திரர் | க்ஷத்தர் |
க்ஷத்திரியர் | வைசியர் | வைதேஹர் |
வைசியர் | சூத்திரர் | அயோகவர் |
ஸுதர்- தச்சுவேலை செய்பவர்
க்ஷத்தர்-மிருகங்களைக் கொன்று புசிப்பவர்
இந்த வரையறைக்குட்பட்டவர்களில், பிராம்மண அன்னைக்கும், சூத்திரத் தந்தைக்கும் பிறந்த இனம் மிகவும் தாழ்ந்த இனமாக, இன்றளவும் நமக்கு இனம் கண்டுகொள்ளும் வகையில் நீடித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு பிராமணப் பெண், வரையறை மீறி நான்காம் வருணத்தவரைச் சேர்ந்த குற்றம், ஒரு சபிக்கப்பட்ட பரம்பரையாக இன்னும் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகள், நான்காம் வருணத்தவரையும், பெண்களையுமே மிகவும் தாழ்ந்த நிலையில் தள்ளப்பட் டிருப்பதையும் விண்டுரைக்கின்றன.
இந்த நான்காம் வருணத்தவர் யாவர்? அவர்கள் எப்படித் தோன்றினார்கள்? பெண்களின் நிலைமைக்கு அவர்களைத் தாழ்த்த வேண்டியதன் அவசியம் எப்படி ஏற்பட்டது?
நான்காம் வருணத்தவர் 'பாரதர்' என்ற இனக் குழுவில் தோன்றிய சுதரஸ் என்று க்ஷத்திரிய வம்ச மன்னனின் சந்ததியார் என்று, டாக்டர் அம்பேத்கார் தம் ஆய்வு நூலாகிய, 'சூத்திரர் யாவர்?' என்ற ஆராய்ச்சியில் கருத்துரைக்கிறார்.
இந்த மன்னன் க்ஷத்திரியன்; வேள்விகளியற்ற இருக்கிறான். இந்த இனத்தினர், அரச பதவிகளில் வந்ததும் முதல் வருணத்தவரை இழிவுபடுத்தித் துன்பங்களுக்கு ஆளாக்கியதன் காரணமாக, அவர்கள் இவர்களுக்கு உபநயனம் செய்ய மறுத்துப் பழிவாங்கியதால் நான்காம் வருணம் தோன்றியது. அவர்கள் மேலாம் நிலையிலிருந்து கல்வி உரிமையும் அதனால் சொத்துரிமையும் மறுக்கப்பட்டு கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் மற்ற பிற வருணத்தவரைக் காட்டிலும் இவர்கள் மீது பகையும் வன்மமும் தோன்றி யிருந்தது. திருமணம் வருண பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்த நிலைமை மாறி, பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். டாக்டர் அம்பேத்காரின் இந்தக் கருத்து, பெண்ணின் அனைத்துச் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டதன் காரணங் களோடு இசையப் பொறுந்துகிறது. இன்றளவும் சாத்திர சம்பிரதாயங்கள் உயர் வருணப் பெண்களுக்கு மிக அதிகமான கேட்டை விளைவித்திருக்கின்றன.
கல்வி, மற்றும் மேம்பாட்டு உரிமை முதல் மொத்த மனித உரிமைகளையே பறித்த ஒரு கலாச்சாரத்துக்குப் பெண்களைப் பூச்சிகளாக்கித் தீர்த்தது. இந்த மேலாம் வருண சமுதாயம், அந்நியர் வந்து ஆக்கிரமித்த போது அவளைப் பாதுகாத்ததா?
வரலாற்றின் ஏடுகளைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டில், அராபிய வர்த்தகர்கள் பாரத நாட்டை நோக்கி வரத் தொடங்கினார்கள். எட்டாம் நூற்றாண்டில் 'ஸிந்து'ப் பிரதேசம் அவர்கள் வசமாயிற்று. வர்த்தகர்கள், முகம்மதிய ஆக்கிரமிப்பாளராக இந்துகுஷ் கணவாய் வழியே இந்நாட்டுக்குள் அடிவைத்தனர். இக்காலங்களில் இங்கு தென்பட்ட பெண்களே, படையினரின் ஆக்கிரமிப்புக்கு முதலில் இலக்காயினர்.
பெண், அந்நிய வித்துக்குக் கட்டாயமாகத் தன் கருப்பையில் இடமளிக்க வேண்டிய கொடுமைக்காளானதும், அக்கால சாத்திர விதியாளரிடையே இது பிரச்னையாயிற்று, அவளுக்குச் சில சுத்தி பரிகாரச் சடங்குகளைச் செய்து. கருப் பத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ம்மிருதியில் இடம் அளித்தார்கள்.
ஆனால், இது, இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல் நூற்றுக்கணக்கில் பரவலாக ஏற்படத் தொடங்கியதும், சாத்திர நெறியாளரை அச்சம் பிடித்தது. அத்துணை அந்நியவித்துக்களும், இவர்களுடைய சமுதாயத்தில் உரிமை பெறுமானால் என்ன விளையுமோ?
எனவே, வித்துக்கு இடமளித்த நிலத்தையே உதாசீனம் செய்துவிட முடிவு கட்டினார்கள்.
கணவனே தெய்வம். இந்த சம்பிரதாய சமுதாயமே தனக்குப் பாதுகாப்பு என்று குருட்டுத் தன்மையுடன் பற்றிக் கொண்டிருந்த பெண் அந்நியனால் குலைக்கப்பட்டதும், நடுத்தெருவில் வந்து வீழ்ந்தாள். முகமதிய ஆட்சியாளரிடம் காமக்கிழத்தியாகவும் பணிப்பெண்ணாகவும் அதற்கும் இட மில்லாத வகையில் சக்கையாகத் துப்பப்பெற்ற நிலையிலும் வீழ்ச்சியுற்றாள்.
கற்பென்றும் தொண்டென்றும் ஒரு தவநெறியே வாழ்க்கை எனப் புகுத்தப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட பெண்டிர், அந்நியரின் காலடிகளில் வீழ்ந்து இறுதி வாழ்வைத் தொடரவும் இயலாமல் அல்லலுற்றனர்.
இளமையில் தந்தை; குமரிப்பருவம் வந்ததும் கணவன்; பின்னர் முதுமையில் மைந்தன் என்று இவளுடைய காப்பாளராக இருந்தவர்கள் கால்களால் உதைத்துவிட்டுக் கைகளை மடக்கிக் கொண்டனர்.
எனவேதான் 'பாலனம்' என்ற பொறுப்பு விடுபட்டு, எந்நாளிலும் பெண் சுதந்தரமாக இருக்கத் தகுதியற்றவள்; இன்னின்ன காலங்களில் இவர்கள் ஆளுகைக்குட்பட்டவளாக இருக்கிறாள் என்று மாற்றப்பட்டது போலும்!
ஐந்து கணவர்களும் கைவிட்டதும் பாஞ்சாலி ‘கண்ணா ?' என்று கூவி அழைத்தாள். புதிது புதிதாய், வண்ண வண்ண மாய் காவியத்தில் சேலை வளர்ந்தது. ஆனால் அன்னாள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட அபலைகளுக்கு அப்படிக் கூவக் கூடத் தெரியாதே? எனவே சாவதைத் தவிர வேறு வழி யில்லை என்றாயிற்று. வரலாற்றுக்கால 'ஸதி' வழக்கில் வந்தது. அரச குலப் பெண்களே கொத்துக் கொத்தாக எரி வளர்த்துப் புகுந்தார்கள்.
-------------------
19. சதி புராணம்
இவ்வாண்டின் தொடக்கத்தில் வங்கத் தலைநகரில் நிகழ்ந்த பாரதீய பாஷா பரிஷத் அமைப்பின் பரிசளிப்பு விழாவை ஒட்டிப் பரிசு பெற்ற நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பரிசு பெற்றவர்களில் ஒருவரான இராஜஸ்தானத்து நூலாசிரியர் தனது கட்டுரைத் தொகுப்பு நூலைப் பற்றிய கருத்தை உரைத்தார். இராஜஸ்தானத்துப் பெருமைகளையும் மாண்பையும் விளக்கும் அந்நூலில், கற்புடைப் பெண்டிர் பற்றியும் வருகிறது போலும்? இராஜபுதனத்து நங்கையர் தீக்குளித்து 'சதி' தர்மம் காத்ததைப் புகழ்ந்தும், இன்னமும் அத்தகைய பத்தினிகளுக்குக் குறைவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கருத்தரங்குகளுக்குத் தலைமை வகித்தவர் ஓர் இராஜஸ்தானத்துப் பெண்மணியே, கவிஞர்; சிறந்த அறிவாளர்; பரிஷத்தின் செயலாளரில் ஒருவர். அவரால் இதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
'இன்னமும் அத்தகைய சதிகள் இருப்பது பெருமையல்ல' என்று எழுந்தார்- அமைதியாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் சலசலப்பு நேரிட்டது. விவாதம் முழுவதும் இலக்கியமான இந்தி மொழியில் நிகழ்ந்ததனால், என்னால் வெறும் பார்வையாள-ராகவே இருக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அண்மைக் காலங்களில் சாக அடிக்கப்பட்ட அந்த மரபை, உயிர்த்தெழச் செய்த சதி தர்மத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சிகள் இராஜஸ்தானம், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாரதத்தின் புகழைப் பரப்பிக் கொண்டிருக் கின்றன. அதுவும் போதாதென்ற வகையில், 'வரதட்சணை சீர்' என்ற சாக்கில், இளம்பெண்களை நாடு முழுதுமான எல்லாப் பகுதிகளிலும் உயிருடன் தீக்குளிக்கச் செய்தும் சதிகளுக்கான சொர்க்கத்துக்கு இந்த இருபதாம் நூற்றாண்டின் இந்துச் சமுதாயம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதில், சந்தனம் முதலிய வாசனைக் கட்டைகள் இல்லை ; ஸ்டவ், பெட்ரோல், எரிவாயு என்ற நவீன சாதனங்கள் அப்பணியைச் செவ்வனே செய்கின்றன.
எனவே, இந்த சதி தர்மத்தைப் பற்றியும் இப்போது ஆராய்வது உகந்தது என்று கருதுகிறேன். அந்நியர் ஆக்கிர மிப்புக்கு உட்பட்டால், அரச மாளிகையில் இருந்து நடுவீதிப் புழுதியில் வீழ்ச்சியுறும் நிலையை உணர்ந்திருந்த பெண்கள் பகைவர் நாட்டில் புக மன்னர் இடம் கொடுத்துவிட்டனர் என்ற நிலையிலேயே எரி வளர்த்துப் புகுந்து தம் மானத்தைக் காப்பபாற்றிக் கொண்டனர். சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு பொன்னேட்டில் துலங்குவதாகும்.
இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் பெண்கள் தம் மானம் காக்க வழக்காக்கித் தீர்ந்த தீக்குளிப்புகள், பாதிவிருத்யம், சதி என சர்க்கரைப்பாகில் தோய்க்கப் பெற்றன. இந்நாட்டின் பெண்களைக் காப்பாற்ற இயலாத முதுகெலும்பற்ற முடிமன்னர் வருக்கத்தில் மன்னர் இறந்ததும், மன்னரின் பெருமையை உலகரியச் செய்ய அவருடைய பட்டத்து மனைவியருடன், அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருந்த கிளிகளும் கூடச் சிதையில் ஏற்றப்பட்டார்கள். யாருமே ஏறுவதற்கில்லை எனினும் சில அடிமைப் பெண்களை-யேனும் பிடித்துச் சிதையிலேற்றி மன்னர் மதிப்பைக் காப்பாற்றினார்கள்.
இவ்வாறு அரசருக்குரிய க்ஷத்திரிய வருணத்தாரிடமே இந்த 'சதி' தீக்குளிப்பு வழக்கில் பரவியது. மேலாம் வருணத்தினர் தங்களை மீறி இரண்டாம் வருணத்தினர் பெண்களைச் சதியாக்கிப் பெருமைப்படுவதைப் பொறுப் பார்களா, ஆதியில் கௌதமர் என்ற ரிஷி 'பிராம்மணி தற்கொலை செய்துகொண்டால், தனக்கோ கணவருக்கோ சுவர்க்கம் தேட முடியாது' என்று சொல்லி வைத்திருந்ததைக் கூட, மாற்றினார்கள். பிராமண (ஹத்தி) ஸ்திரீஹத்தி என்ற பாவம் அழிக்கப்பெற்று, புண்ணிய நெறியாக மாற்றப்பட்டது. இதை ஊக்குவிக்கும் வகையில், முன்பு ஸதிக்கு விரோதமாக எதுவும் சொல்லாதிருந்த முனிவர் பெருமக்களைத் தேடிப் பிடித்தார்கள். அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக சதி சாத்திர நெறி வகுக்கப்பட்டு பறையடிக்கப்பட்டது.
அறிவு குருடாக்கப்பெற்ற அபலைகளை எரியில் தள்ளி, அவர்களை ஆசைகாட்டிய வாசகங்கள் இவை:
1. கணவனுடன் சிதையடுக்கி, உடன்கட்டை ஏறும் பெண், அருந்ததிக்குச் சமமாகப் பத்தினிகளுக்குரிய சுவர்க்கம் புகுகிறாள்.
2. கணவனுடன் மறு உலகம் செல்பவள், மனித உடலில் உள்ள ரோமக்கால்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கம் அனுபவிக்கிறாள்.
3. மகாபாவம் செய்த கணவனாக இருந்தாலும், பாம்புப் பிடாரன் பொந்தில் இருந்து பாம்பை இழுத்து விடுவதுபோல் கணவனைத் தன் பதிவிரத சக்தியினால் கொடிய நரகத்தில் விழுந்துவிடாமல் மீட்டு அவனுடன் மகிழ் உலகம் (சொர்க்கத்தில்) அநுபவிக்கிறாள்.
4. கணவனுடன் உடன்கட்டை ஏறுபவள் மூன்று பரம்பரையினரின் பாவத்தைக் கரைத்து விடுகிறாள். i) தன் தாய்வழிப் பரம்பரை, ii) தன் தந்தைவழிப் பரம்பரை, iii) புகுந்த வீடாகிய கணவன் தோன்றிய பரம்பரை.
5. கணவனையே தெய்வமாக நினைந்தொழுகும் கற்பரசி உடன்கட்டை ஏறுவதால் பதினான்கு இந்திரர் ஆளும் காலத்துக்கு சுவர்க்கத்தில் மிக உன்னதமான மகிழ்ச்சியைக் கணவனுடன் அனுபவிக்கிறார்கள்.
6. எல்லா பாவங்களிலும் கொடிய பாவம் பிராம் மணனைக் கொன்ற பாவமே. (பிராம்மணத்தியை அல்ல) அந்தப் பாவத்துக்கு ஆளாகி இருந்த போதிலும் சதி உடன் கட்டை ஏறுவதன் வாயிலாக கற்பரசியின் உயிர்த்தியாகம் அத்தகைய கொடிய பாவத்தில் இருந்தும் அவனை மீட்கிறது. ஹரிதர் என்ற ரிஷி மிகவும் 'காட்டமாக' ஒரு மாத்திரை கொடுக்கிறார்:
'உன்னால் பிற்படுத்தப்பட்ட பெண் பார்த்துக் கொள்வாள். நீ எத்தகைய பாவத்தையும் செய்யலாம்' என்று ஆண் தட்டிக் கொடுக்கப்படுகிறான். ஆனால் பெண்ணோ "மரியாதையாகச் சிதையில் ஏறிவிடு! இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் இதுதான்!” என்று பயமுறுத்தப்படுகிறாள்.
மேற்கூறிய ரிஷிமுக வாசகங்கள் எப்போது, எப்படி உதித்தன என்பதற்கெல்லாம் விளக்கங்கள் தேடுவது சிரமமான செயல். ஆனால் தேடினால் எதை எதையோ கண்டுபிடிக்கலாமாகவும் இருக்கும். ஏனெனில் பெண்ணின் கீழ்முக வரலாற்றை ஆராய முடியாதபடி, தெய்வீக வேத முத்திரைகள் என்ற இட்டு வித்தபின், புராணங்கள் என்ற புனைகதைக் களஞ்சியங் களையும் ஆதாரமாக்கிக் கொள்ள இப்புளுகுகளைக் கொட்டி நிரப்பி வைத்தார்கள்.
இந்த வகையில், பிரும்ம புராணம் சொல்கிறது : -
'கணவன் வேற்று நாட்டில் இறந்தால், உத்தம பத்தினி அவனுடைய காலணிகளை மார்பில் வைத்துக்கொண்டு அக்கினியில் புகுவாள்!'
பெற்றுப் பேணி, தன் நிணத்தையும் குருதியையும் தோய்ந்து ஆணினத்தை வாழ்விப்பதையே நெறியாகக் கொண்டிருந்த பெண்ணினத்தை, இவ்வாறு வஞ்சக வார்த்தைகளால் கரைத்து உயிரோடு நெருப்பிலிடும் கொடுமை 'சதி' என்ற பெயரில் பல நூற்றாண்டுகளுக்கு ஏனென்று கேட்பார் இல்லாமல் நடைபெற்றது.
இராஜாராம் மோஹன்ராய் தோன்றி, இக்கொடுமைக்கு சமாதி கட்ட அரும்பாடு பட வேண்டி இருந்தது. ஆங்கிலேயே அரசின் ஆதரவைப் பெற ஆன பாடும் பட்டது. வேதம் என்றும் புராணம் என்றும் புளுகுகளை அவிழ்த்துவிட்டு நியாயம் தேடிற்று.
அவர்களைப் பார்த்து ராஜாராம் மோஹன்ராய் கேட்டார்: ''கணவனை இழந்தவள் தானாகவே சங்கற்பம் செய்து கொண்டு உடன் கட்டை ஏற வேண்டும் என்பதுதானே விதி? உங்கள் வழிக்கே வருகிறேன்; ஆனால் நீங்கள் மரித்த கணவனுடன் அவளை உயிரோடு கயிறு கொண்டு பிணைக்கிறீரே? பின்னர், அவளை வைத்து மேலே சிதை அடுக்குகிறீர்களே? அவள் எழுந்திருக்கவே இயலாதபடி பெரிய மூங்கில் தடிகளை வைத்து அழுத்துகிறீர்களே? ஹரிதரும் மற்ற முனிவர்களும் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார்களா...?"
இது அப்பட்டமான பெண் கொலை தவிர வேறொன்று மில்லை. இந்தியப் பெண்களின் அவல நிலை, அரசாள வந்த அந்நியருக்கும்கூட உறுத்திற்று. வில்லியம் பெண்டிங், சதி ஒழிப்பைச் சட்டமாக்கித் தீர்த்தார். நூற்றாண்டுகளாக அடக்கிப் பதப்படுத்தப்பட்ட இந்தியப் பெண்மை, மாற்றாரின் பரிவுக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானது வியப்பில்லை. அவர்களின் மென்மையுடைய பரிவும் பொறுக்கும் திறனும், உண்மையான உள்ளொழுக்கமும், தங்களுக்கு எத்தகைய கொடிய சோதனைகள் நேரிட்ட போதிலும் அமைதியுடன் ஏற்றுக்கொள்ளத் துணை புரிந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் டெல்லி தலைநகரம், மற்றும் முகலாய - அரசர்கள் வாழ்ந்த இடங்கள், சமாதிகள் என்று சுற்றிப் பார்க்கச் சென்றபோது அக்பரின் வாழ்விடத்துக்கு வந்தபோது, அவரை மணந்த ராஜபுதனப் பெண்மணியின் மாளிகை என்று காட்டினார்கள். இந்திய பாணியில் உப்பரிகை, தூபிகள் என்று விளங்கிய மாளிகையைப் பார்த்தேன். அக்பர் ஒரு போச்சுகீசியப் பெண்ணைக்கூட மணந்திருந்ததாகவும் கூறி அந்த இருப்பிடத்தையும் காட்டினார் வழிகாட்டி; அவருக்கென்று உள்ளே தனி மாதா கோயில் போன்ற தொழுகை இடமும் இருந்ததாக நினைவு.
ஆனால், என் சிந்தையை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டவர், அந்த ராஜபுதனத்துப் பெண்மணி ஜோத்பாய்...
அக்பர், சிறந்த இராஜதந்திரியாக, இரு சமயப் பரம்பரையினரையும் ஒன்றிணைப்பதான பெயரைப் பெற, இத்தகைய கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக இருந்தார். ஒரு மன்னர் மன்னன், கரம் நீட்டி, தாழ்ந்த இடத்திலிருந்தும் தூக்கிவிடுவதால் அழியாப் பெருமை பெறுகிறான். சக்கரவர்த்தியான பிறகு ராஜபுத்திரப் பிரபுக்களும் வீரர்களும் அவர்களுக்கு அடங்கியவர்களே. மேலும் அவர்கள் எழும்பி விரோதமான கிளர்ச்சிகள் செய்யாமல் இருக்க இந்தப் பெண் எடுப்பு பேருதவியாக இருந்திருக்கிறது. இரு தரப்பிலும் பெண் கொடுத்து, வாங்கப்படும் பரிவர்த்தனை அன்று இது. ராஜபுத்திரப் பெண்களே முகமதிய அந்தரப்புரத்தில் வாழக் கொடுக்கப்பட்டனர். இந்தியப் பெண் சுயாதீனமற்ற ஒரு வாணிபப் பொருள் போல்தான் திருமண பந்தத்திலும் இன்றளவும் கொடுக்கப்படுகிறாள். முற்றிலும் எல்லாப் பழக்கங்களிலும் மொழி மற்றும் உணவாகாரங்களிலும் வேறுப்பட்ட ஒரு சூழலில் வெளி உலகமே தெரியாது வளர்ந்த ஒரு மங்கை அடி வைத்தபோது, மாறுதலை ஏற்றுக்கொள்ள எப்படி மௌனமாகப் போராடி இருப்பாள் என்ற நினைவே என்னுள் நிறைந்தது.
வரலாற்றுப் பாட நூலில் அக்பர் மத ஒற்றுமைக்காகச் செய்த இந்த அரிய மேன்மைகளுக்காகப் பாராட்டப்படுகிறார். இந்தப் பாட நூல்களில், தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு கையில் ரோஜா மலருடன் விளங்கும் மார்பளவுச் சித்ரமான பேரழகி நூர்ஜகானை முதன்மையாக அச்சிட்டிருப்பார்கள். ஆனால் அக்பர் மணந்த ஜோத்பாயின் படமும், முழு அளவில் தலையை மூடும் சீலையும், கணுக்கால் வரை தொங்கும் பாவாடை போன்ற உடையும், கொலுசு, காப்புகளும் தெரிய சிறிய அளவில் இடம் பெற்றிருக்கும்.
அந்த ஜோத்பாய், தாஜ்மகாலைக் கட்டச் சொன்ன மும்தாஜைவிட பேரழகி, நூர்ஜகானைவிட வரலாற்றில் சிறப்புப் பெறுபவள் என்று நினைத்தேன்.
------------------
20. வரதட்சணை மகாத்மியம்
தமிழ் நாட்டில் இலக்கியம், மக்கள் ரஞ்சகப் பட்டி மன்றங்கள் இந்நாள் வரையிலும் கண்ணகியின் கற்பையும் மாதவியின் கண்ணியத்தையும்தான், கல்லில் அடித்து வைத்துக் கொண்டிருந்தன. இந்நாட்களில் பட்டி மன்றங்களில் சுவை கூட்ட மேலும் பல தலைப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, வரதட்சணைக்குக் காரணம் ஆணா பெண்ணா என்பதாகும்.
அண்மையில் ஒரு வரதட்சணை எதிர்ப்பு விழா (?) வுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கருத்தரங்கில் ஒரு நுண்ணறிவாளர், இந்தியாவில் வரதட்சணைக்குக் காரணம், ஓர் ஆணுக்கு ஏழு என்ற விகிதத்தில் பெண்மக்கள் தொகை இருப்பதாகும் என்று கருத்துரைத்தார். இன்னொருவர், பெண்ணுக்குச் சொத்துரிமை கிடைத்துவிட்டால் இந்தப் பேய் அடியோடு அழிந்துபோகும் என்றார். (சொத்து இல்லாத குடும்பங்களில் பிறந்த பெண்களைப் பற்றியோ, கடன் உள்ள குடும்பங்களில் பிறந்த பெண்களைப் பற்றியோ, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.) பட்டி மன்றத்தில், வரதட் சணைக்கு ஆணே காரணம் என்று முழக்கமிட்ட பெண்ணை எதிர்த்துப் பேசிய இளைஞர், வரதட்சணை வாங்கித்தானாக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிப்பது மாமனார் அல்ல, மாமியாரே; சகோதரன் மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாத்தனாரே, பையன் தன் தாய் சொல்லைத் தட்ட முடியாமல் சங்கடப்படுகிறானே ஒழிய அவனே வரதட்சணை கேட்ப தில்லை என்று விளக்கினார். அதிரடிகளும், எதிரடிகளுமாகப் பட்டிமன்றம் கலகலவென்று களை கட்டியது. முடிவில் நடுவர் வரதட்சணைக்குக் காரணம், ஆண்களும் தான், பெண் களும்தாம் என்று தீர்ப்புக் கூற இரு அணிகளும் தம் தம் வாதிடும் திறமையில் நம்பிக்கையுடன் மகிழ்ந்தார்கள்! விழா இனிது நிறைவேறியது.
கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, சிந்தனை எங்கெங்கோ போயிற்று. பெண்ணுக்கு அவள் சொந்த மானுட மதிப்புக்கு மேல் ஒட்டிக்கொள்ளும் பொன்னும் பொருளும் அவளையே வெற்றுக் கூடாக்கிவிட எப்போது உரிமை பெறத் தொடங்கின?
ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்து இனம் பெருக்க மக்களைப் பெறுவது என்று இருந்த நிலையில் சமுதாயக் கட்டுக்கோப்பான நாகரீக மலர்ச்சி எய்தியதும், திருமணங்கள் தோன்றின. மனுவின் பெயரால் தொகுக்கப்பட்ட நெறிமுறை களில் எட்டு வகைத் திருமணங்கள் காணப்படுகின்றன.
1. பிரும்ம விவாகம், 2. தெய்வ விவாகம்,3. பிராஜாபத்ய விவாகம், 4. அர்ஷ விவாகம், 5. ஆசுர விவாகம், 6. காந்த ருவ விவாகம், 7. ராட்ஸ விவாகம், 8. பைசாச விவாகம் என்பவை அவை.
1. பிரும்ம முறை: நாற்பத்தெட்டு ஆண்டுகள் பிரம் மச்சரியம் காத்த பிராம்மணனுக்கு அதே வகுப்பில் உதித்த பண்ணிரண்டாண்டுகளே நிரம்பிய பெண்ணை இரண்டாம் பூப்பெய்து முன், அணிகலன்களுடன் கொடையாக நீர் வார்த்துக் கொடுக்கும் விவாகம் இது. இந்தத் தம்பதிக்குப் பிறக்கும் மகன் இருபத்தோரு தலைமுறையினரைக் கரையேற்ற வல்லவன்.
2. தெய்வ முறை: வேள்வி நடத்தும் ஆசிரியருக்கு வேள்வித் தீயின் முன், மகளைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இந்த மணத்தில் உதிக்கும் புதல்வனால் பதினைந்து தலைமுறையினர் ஈடேறுவார்.
3. பிரஜாபத்திய முறை: மணமகன் வீட்டார் கொண்டு வந்து கொடுக்கும் பரிசுப் பொருள்களைப்போல் இருமடங்கு சேர்த்துப் பெண்ணுக்குக் கொடுத்து மணமுடித்தலே இந்த முறை. இந்தத் தம்பதி பெறும் மகன் பதின்மூன்று தலை முறையினரைக் கரையேற்றுவான்.
4. அர்ஷ முறை: ஒரு காளை, ஒரு பசு இரண்டையும் பெற்றுக்கொண்டு பெண்ணை மணமகனுக்கு உரியவளாக்கிக் கொடுத்தல். இந்த மணமக்கள் பெறும் ஏழு தலைமுறை யினரின் கரையேற்றத்துக்கு உத்தரவாத மளிக்கிறான். இந்த நான்கு முறைத் திருமணங்களும், உயர் வகுப்பினராகிய பிராம்மணருக்கு உரியதாம். இந்த முறைகளில் காளையையும் பசுவையும் பெற்றுக்கொண்டு மகளை தாரைவார்த்துக் கொடுப்பது, மகளை விற்பதற்குச் சமமாகும் என்று மனுவே, (எந்த மனுவோ) கண்டனம் செய்ததான குறிப்பும் இருக்கிறது.
5. ஆசுர முறை: வில்வித்தை, ஏறு தழுவுதல் போன்ற பராக்கிரமச் செயலால் பெண்ணைப் பரிசமாகப் பெறும் மணம்.
6. காந்தர்வ முறை: வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பித் தாங்களாகவே மணம் புரிந்துகொள்ளல்.
7. இராட்சஸ முறை: பெண்ணுக்குத் தெரிவிக்காமலே, ஒருவன் கவர்ந்து சென்று தானே மணக்கலாம் அல்லது பிறருக்கும் மணமுடிக்கலாம்.
8. பைசாச முறை: இது முறையான திருமணமன்று. மணமகனைவிட மூத்தவளாகவோ கள்ளுண்ட நிலையிலோ உறக்க நிலையிலோ விருப்பத்திற்கு மாறாகவோ பலாத்
காரமாகப் புணர்ந்து உரியவளாக்கிக் கொள்ளுதல்.
பிந்தைய நான்கு முறைகளும் க்ஷத்திரிய வருணத்தவருக்கு உரியவையாக நெறிப்படுத்தப் பட்டன. ராட்சச முறை தவிர்த்த ஏனைய மூன்று முறைகளும் மூன்றாம் நான்காம் வருணத்தவருக்கு உரியனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நாட்களில், நூல் பிடித்த கோடாக இல்லை எனினும், இந்த எல்லா வகைத் திருமணங்களின் கூறுகளும் அன்றிருந்தாற் போன்றே சமுதாயத்தில் நிலவுகின்றன என்றே சொல்லலாம்.
இந்த நாட்டில் ஆரியர்களின் வருகைக்கு முன், தாய் வழிச் சம்பிரதாயமே மக்கள் பழங்குடிச் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கிறதென்று கொள்ளச் சான்றுகள் இருக்கின்றன. இதை முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். அந்தச் சம்பிரதாயத்தில், பெண் வீட்டை விட்டுப் போக மாட்டாள். பிறந்த வீடு உரிமையுள்ள வீடு. அவளை மனைவி யாக வரிப்பவன் அவள் வீடு தேடி வருவான். அவள் பெறும் மக்களை அவன் தன்னுரிமை பதித்துக்கொண்டு போகமாட்டான்.
இந்த நிலை தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம் பெறும் போது, மணமகன் சிறிதளவேனும் பொருள் கொடுத்து அவளைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்லும் வழக்கம் வந்தது. இதை ஏறக்குறைய 'ஜாமீன்' என்ற பொருளில் கொள்ளலாம் என்று தோன்றவில்லை?
பெண் இந்த வீட்டுக்குரியவளில்லை; அவள் கணவன் வீட்டுக்குச் செல்கிறாள் என்ற மாற்றம் வேத காலத்தில் தொடங்கிவிடுகிறது. வேத காலத்து மணப்பெண் தனக்குப் பரிசிலாகக் கிடைத்த பொன், பொருள் எல்லாவற்றையும் கணவன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள். இந்த வீட்டு மகள் வேறு வீட்டுக்குச் செல்கிறாள் என்ற கனிவோடு, அவளுக்குச் சகோதரனும் மற்ற உறவினரும் கொடுக்கும் இப்பரிசுகளே, சீதனம் என்ற அவளுடைய உரிமைப் பொருளாயிற்று என்று கொள்ளலாம். இதில், பிறந்த வீட்டுச் சொத்தின் உரிமைகள் அவளுக்கு அறவே இல்லை என்ற பெரிய உண்மையும் பொதிந்து கிடக்கிறது. இந்தத் தந்தை வழி மாற்றம் பழைய பாரம்பரியங்களை அறவே துடைத்து விட முடியாது என்ற நிலையில்தான், மணமகனைப் பரிசம் போடுவதும் காளையும் பசுவும் கொடுத்ததுமாகிய வழக்கங்கள் நெறிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். 'ஜாமீன்' சரி; 'எதிர் ஜாமீன்' என்று பேசப்படுவது எதனால்? 'ஜாமீன்' என்ற தொகைக்கு மாறாகவே, நாமே அந்தப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணையும் கொடுக்கிறோம் என்று தோன்றவில்லை. சிறிது சிந்தனை செய்தால் உண்மை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது. தந்தை வழிச் சம்பிரதாயம் பழக்கத்தில் வரும்போதுதான், மணமகன் சிறிதளவு பொன்னோ, அல்லது பொருளோ கொடுத்து விட்டுத் தன் இல்லத்துக்கு மனைவியை அழைத்துச் சென்றான். ஆனால் முகம்மதியர் நமது நாட்டில் புகுந்த காலங்களில் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாக அஞ்சினார்கள். 'தாலி' வழக்கம் இந்த முகம்மதியர் ஆதிக்கம் பெற்றதன் விளைவாகவே ஏற்பட்டது என்று ஒரு கருத்தும் கூட வரலாற்றறிஞரிடையே நிலவுகிறது. ஏனெனில் 'தாலி' ஒரு பெண்ணை 'மணமானவள்' என்பதைப் பார்த்த மாத்திரத்தில் அறிவிக்கிறது. மணமான பெண்ணை முகம்மதியப்படை வீரர் தீண்டமாட்டார் என்ற அடிப்படையில், பெண்ணுக்குத் தாலி ஒரு காப்பாகவே அமைந்தது. மேலும் இதே காரணத்துக்காகப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதில் அக்காலச் சமுதாயத்தார் மிகவும் தீவரம் காட்டியிருக்க வேண்டும். இந்தத் தீவிரம், பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு இல்லாத நிலையில், பணமும் பொருளும் கொடுத்துக் கட்டி வைப்பதாக முடிந்திருக்க வேண்டும். பொன்னும் பொருளும் கொள்வதற்குப் பதிலாக- கொடுத்தேனும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஆயிற்று. எனவே, இந்த முறை 'எதிர் ஜாமீன்' என்ற சொல்லால் குறிக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மகளை மணமுடிக்க வருபவன், வரன். இவனுக்குப் பெண்ணைத் தானமாகக் கொடுப்பதுடன், 'தட்சணை' என்று கூட ஒரு பொதியையும் கொடுக்கும் வழக்கம், ஆண் ஆதிக்கம் மேலோங்கி, பெண் சகல உரிமைகளையும் இழந்த சூழ்நிலையில்தான் பரிபூரணமாகிறது.
எப்படியாயினும், முகம்மதியர் வருகை குறிப்பாக தென்னிந்தியாவில் திருமண வழக்கங்களைப் பாதித்திருக்கிறது. முகம்மதியப் படைவீரன், மாற்றான் மனைவியைத் தொடமாட்டார்கள்; அத்த வகையில் ஒரு பெண் திருமணமானவள் என்று அறிவிப்பதற்கே தாலியைக் கழுத்தில் கட்டினார்கள் என்ற ஊகத்துக்கு இடம் உண்டு. பழந்தமிழர் மரபில் கூட இந்தச் சின்னம் தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. எதிர் ஜாமீன் என்ற வழக்குச் சொற்றொடர் ஆய்வுக்குரியது என்று படுகிறது.
எப்படியோ, பெண்ணின் சார்புநிலை திருமணத்தினால் தான் உறுதிப்படுகிறது. அவள் தானே நிற்க முடியாது, உறுதி யற்ற பெண் கொடி, பைங்கொடியானாள். கொழு கொம் புக்கு அவள் தனது சகலத்தையும் உரித்தாகத் தீர வேண்டிய தாயிற்று.
இன்று, வரதட்சணை அல்லது எதிர் ஜாமீன், ஆதி மரபுகள் சொச்சமிச்சமாக ஒட்டியிருந்த சமுதாயங்களிலும் பெண்ணின் மனித மதிப்பை அடியோடு துடைத்துவிட்டது. அது கர்ப் பத்திலிருக்கும் சிசுவை இனம் கண்டு அழிக்கும் அளவுக்கு நம்பிக்கை வேரையே தின்று கொண்டிருக்கிறது. கர்ப்பத்தில் வளரும் சிசு ஆணாக வலிமை பெற மந்திரங்கள் தோன்றிய அதர்வ வேத காலத்தில் தொடங்கி, இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும், அந்தப் பெண்ணின் மனித மதிப்பு ஏறிவிடாமல் முழ முழமாய் சறுக்கி இன்று அவளை வெறும் கூடாக்கி, அழிப்பதற்கும் தரும நியாயம் சொல்லும் அளவுக்கு வரதட்சணையை ஆணாதிக்கச் சமுதாயம் வளர்த்திருக்கிறது. இந்நாள் மக்கள் பெருக் கத்தினால் கூடிவரும் பிரச்சனைகளைத் தவிர்த்து மக்கள் சமுதாயத்தை வாழ வைக்க, தெருவுக்குத் தெரு கருச் சிசு, ஆணா, பெண்ணா என்றறிய சோதனை நிலையங்களை ஏற்படுத்திப் பெண் சிசுக்களை அழித்தாலே மக்கள் பெருக்கம் தடுக்கப்படலாம் என்ற மிக அருமையான கருத்துக்கள் நம் பெண்களிடையே கூட நிலவி வருகிறது!
இந்த நிலையில் வரதட்சணை ஒழிப்புக் கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு கலா நிகழ்ச்சிகளுக்கு மேல் எந்தச் சாதனையைச் செய்துவிடும்?
காசி யாத்திரைக்குக் கைத்தடி, குடை, செருப்பு, விரதத் துக்கு நூற்றெட்டு நெய் அதிரசம், அது வைக்க வெள்ளிக் கூடை (தங்க முலாம் பூசினால் உத்தமம்), கண்ணாடி, பட்டு, கன்னிகையைத் தானம் கொடுக்கும்போது, அந்த மாப்பிள் ளையை சாட்சாத் மகாவிஷ்ணுவாகப் (அல்லது பரமேசுவர னாக!) பாவித்து, தாய் நீர் வார்க்க; தந்தையானவர் காலைக் கழுவ, வெள்ளித்தட்டு என்று திருமண சடங்குகள் ஒவ்வொன்றும் பெண்ணைப் பெற்றவரிடம் இருந்து பொருள் கறக்க இடம் தருவதில் என்ன விந்தை இருக்கிறது?
திருமணச் சடங்குகள்.... அவை என்ன சொல்கின்றன? பார்ப்போம்....
-------------
21 காதல் - சூதாட்டத் துருப்புச் சீட்டா ?
நமது புனைகதைகள், நாடகம், சினிமா, தொலைக்காட்சி வழிவரும் சமூக நாடகங்கள் எல்லாவற்றிலும், அடிக்கடி தவறாமல் வரும் காட்சியானாலும், அலுப்பூட்டும்படி புளித்துப் போகாமல், அன்றுதான் புதிதாய்ப் பார்ப்பது போல் ஓர் ஆவலையும் ஐயப்பாட்டையும் தேக்கி, ஈர்க்கக்கூடிய செய்தி எது என்று கோடிட்டுக் காட்டச் சொன்னால்..... ஒரே ஒரு செய்திதான் சட்டென்று நினைவில் முட்டி வரும்.
பெண் பார்க்கும் படலம்தான் அது. இப்போதெல்லாம் தொலைக்காட்சிச் சித்திரங்களில் பெண் தொடர்பான முன்னேற்றக் கருத்துக்களைச் சொல்வதற்குரிய ஒரு களம் என்ற வகையில் 'பெண் பார்க்கும்' நிகழ்ச்சிகளே, முதலிடம் பெருகின்றன. அவள் சிங்காரித்துக்கொள்வதும், இந்த ஒப்பனைகளில் தேற வேண்டுமே என்று, மிகப் பெரிய போட்டித் தேர்வில் வென்று, முதல் தர உத்யோகத் தகுதியைப் பெற்ற பெண்ணும் பலவீனத்துக்காளாவதும் இக்காட்சிகளில் இடம்பெற்றிரா விஷயங்களில்லை. “ஓ, பெண் கொண்டு வந்த காபி, பிரமாதம்” என்று பிள்ளையோ பிள்ளை வீட்டாரோ பாராட்ட, “எங்கள் பெண்ணே தயாரித்த காபி!” என்று தாயும் தந்தையும் பெருமைப்பட, பெண், பூபாரம் அழுத்த தலை குனிந்து, “எல்லாம், 'சிங்கம்' மார்க் காபித்தூளின் மகிமை !" என்று அசட்டுச் சிரிப்பு எட்டிப் பார்க்கச் சொல்வதும், இன்றைய நவீன தொலைக்காட்சி விளம்பர உத்திகள். சோப்பு, சீப்பு, பற்பசை, துணி ஈடான பல பயன்படு பொருள் களுக்குமேல், கடலைமாவு, சமையலெண்ணய் பிசுக்குப் போக்கும் தூள்வரை அத்தனை பொருள்களையும் இவ்வாறு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி, அவளும் ஒரு பயன்படு பொருளே என்று அஃறினைக் கூட்டத்தில் தள்ளப்படுவதை அவளே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே திருமணம் என்று வரும்போது ஒவ்வொரு பெண்ணும் காட்சிப் பொருளாகப் பரிசோதனைப் பொருளாக மாறும் ஓர் அவல நிகழ்ச்சி, முன் எந்தக் காலத்தைக் காட்டிலும் இந்நாட்களில் முக்கியமாக இடம் பெற்று இருக்கிறது. வீட்டில் மூத்த தலைமுறை ஆண்கள் மூன்றாம் தலைமுறைச் சிறுமிக்குத் திருமணம் நிச்சயித்த காலங்களில் இத்ததைய பரிசோதனைகள் அவளைக் காட்சிப் பொருளாக்கியதில்லை. அந்தக் காலத்தில் அவள் எந்த உரிமையைப் பற்றியும் எந்த உணர்வும் இல்லாத வெறும் சடப்பொருள். கல்வி, அறிவு கிடையாது. கூண்டுக்குள் குருடாக்கி வளர்க்கப்பட்ட கிளி. பெண் பூப்பெய்திய பின்னரே திருமணம்; அதுவும் பிள்ளை வீட்டார் வந்து கேட்க வேண்டும் என்ற மரபுடைய சமுதாயங்களிலும் இத்தகைய பெண் பார்க்கும் படலம்' இருந்தாலும், இன்றைய இழிநிலை இருந்ததில்லை. பெண் 'ஆளான ' நாளிலிருந்தே வெளி உலகுக்கும் அவளுக்கும் இடையே திரை விழுந்துவிடும். பெண் கேட்டு வரும் இடங்களில் இருந்து பெண் மக்களே பரிசோதனைக்கு வருவார்கள். அநேகமாக இத்தகைய சமுதாயங்களில் ஆணே தேடி வந்து பரிசம் போட்டு மணந்து கொள்ளும் முறை இருந்ததால், பெண்ணுக்குக் கடுகளவும் மதிப்பு இல்லாமல் போய்விடவில்லை.
இன்றோ , 'நாகரிகம்' வந்த நிலையில், சாதி மரபுகள் கட்டுப்பாடுகள் அநேகமாகத் தகர்ந்து, பூப்பெய்திய பின்னரே திருமணம் என்ற வழக்கு வந்துவிட்டது. திரைக்குப் பின் பெண்கள் கட்டிப் போடப்படுவதில்லை; பள்ளி, கல்லூரி என்று கல்வி பெறுவதும், பொது இடங்களில் பணியாற்றச் செல்வதும், பொருளாதாரம் சார்ந்து தன் காலால் நிற்கக் கூடிய நிலையை எய்தியிருப்பதும், கண்கூடு. அதுவுமின்றி, வயதுவந்த ஆணும் பெண்ணும் கலந்து பழகும் சந்தர்ப்பங்கள் பல இருக்கும் நிலையில், தாமாக ஒருவரை ஒருவர் விரும்பி மணம் செய்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி இருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்தக் கட்டத்தில்தான் பெண்ணின் சுதந்திர நிலை பளிச்சென்ற ஒளியில் விழும் கருநிழலாக அவள் 'மதிப்பு அழுத்தமாகப் புலப்படுகிறது.
வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள், நாடகங்களில் சினிமாக்களில் அளவு மீறிப் பழகும் காதலர்களைக் காட்டுவார்கள். வயதுவந்த பின், பொருளாதார சுதந்திரம் உள்ள நிலையில், இருவரும் ஓடிப் போய்த் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? அதுதான் நிகழாது.
ஆண் தீவிரம் காட்டுவதெல்லாம், அவளை அனுபவிக்கும் ஒரே 'த்ரில்'லுக்குத்தான். பெண் கட்டுப்பட்டுக் குட்டுப்பட்டே முதிர்ந்திருப்பவள் அல்லவா? சட்டென்று வேலியைத் தகர்த்துவிட மாட்டாள். எனவே, திருமணம் என்று நிர்ப்பந்தம் செய்வாள். வேலி தகர்ந்தாலும், இந்த வகையில் அவள்தான் பதை பதைத்துப் போவாள். தன் பெற்றோரை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவாள். இந்த வகையில் சங்க இலக்கியத்துத் தலைவன் தலைவி நிலையையும் கூடச் சொல்லலாம், தோழி வந்து, 'வரைவு கடாதலை' வலியுறுத்துவது ஏன்...
இப்போதுதான் உண்மையான சோதனைகள், இடுக்கிப் பிடிகள் எல்லாம் பெண்ணைத் தாக்குகின்றன. அவர்கள் கோரிய வரதட்சணை, சீர்வரிசை எல்லாவற்றுக்கும் பெண் வீட்டார் தலையசைத்து ஒப்ப வேண்டும். ஏனெனில் 'காதல்' என்ற ஒன்று குறுக்கிட்டுப் பெண்ணுக்குக் கரும்புள்ளி குத்திவிட்டதே? இந்தக் கட்டத்தில் அந்தப் பிள்ளையாண்டான், கயவன் என்று வெளிப்பட்டாலும்கூட, பெண்ணைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ளும் பெற்றோர் அபூர்வம் அதுமட்டுமல்ல, பெண்ணே , தன் கற்பு உணர்வால் பின் நகர இடம் கொடுக்கமாட்டாள் - இத்தனையும் வந்தபின், அந்தப் பிள்ளையாண்டான், தன் உறவினர் குழாத்துடன் 'பெண் பார்க்க' வரும் நாடகத்தையும் அரங்கேற்றுகிறான்; பெண் வீட்டாரும் - ஏன் பெண்ணும் உடன்படுகிறாள். அவளைக் காட்சிப் பொருளாக்கிப் பேரம் நடக்கிறது. இங்கு 'காதல்' பிள்ளை வீட்டாருக்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படுகிறது.
"பெண் பார்ப்பதெல்லாம் எதற்கு?” என்று, இந்த நிலைக்கு வந்த பெண், கதைகளில், சினிமாக்களில் கூடக் கேட்கமாட்டாள்! இந்தப் பெண்பார்க்கும் படலம், இவ்வாறு எல்லாப் பொழுது போக்கு அம்சங்களிலும் திருப்பித் திருப்பி, சாதி-மதப் பாகுபாடு இல்லாமல் சித்திரிக்கப் படுகிறது. ஓட்டலில், பார்ட்டியில், சினிமாவில் நாகரிக அறிமுகமாகப் பார்ப்பதும்கூட, அதிமாக வலியுறுத்தப் படுவதில்லை.
எந்தப் புடவை உடுத்திக்கொள்வது? அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி அனுமதி கேட்பது? என்ன டிபன் செய்வது? எந்தப் பாட்டைப் பாடுவது? என்று ஓராயிரம் பிரச்னைகளில் பெண் நிம்மதி இழக்கும் நிலையும், இறுதியில், "ஊருக்குப் போய்க் கடிதம் எழுதித் தெரிவிக்கிறோம்'' என்று சொல்லிவிட்டு மறக்காமல் வழிச் செலவுத் தொகையைப் பெற்றுக்கொண்டு செல்வதும், நாகரீகப் பரிமாணங்களாக மேவிவிட்டன.
இதற்கு உடன்படமாட்டேன் என்று சொல்லக்கூடிய பெண், தன் வாழ்நாளில் திருமணம் என்ற நிகழ்ச்சியையே காணாதவளாகி விடுவோமோ என்று அஞ்சுகிறாள்.
இவ்வாறு பெண்ணைப் பொறுக்க, தேர்ந்தெடுக்க மணமகனுக்கு உரிமை இருப்பதுபோல் அவளுக்கு ஏன் தன் துணைவனைத் தேர்ந்துகொள்ளும் உரிமை இல்லாமல் போகிறது? பெண் எப்போது இவ்வகையில் ஒரு காட்சிப் பொருள் நிலைக்கு இழிந்தாள்?
பின்னோக்கிப் பார்த்தால், வேத முறைகளைப் பின் பற்றித் தோன்றிய, தரும் சூத்திரங்கள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே, பெண்ணின் சார்பு நிலை கட்டாயமாக வலி யுறுத்தப்பட்டதென்று காண்கிறோம்.
பெற்றோர் மகளுக்கு மணமகனைத் தேர்ந்தெடுக்கையில், அறிந்த குடும்பத்தினராக, குலம், கோத்திரம் உகந்ததாக இருக்கவேண்டும் என்ற கருத்து மட்டும் குறிப்பாகிறது. ஏன்? அரசகுடும்பச் சுயம்வரங்களிலும் கூட, பெரும்பாலும், பெண் தனக்கு விருப்பமானவனைத் தேர்ந்தாள் என்பது, 'நள தமயந்தி' கதை தவிர வேறு வரலாறுகளில் காணப்படவில்லை. ஆனால், மணமகன் ஒரு பெண்ணைத் தேர்ந்து கொள்ளச் சில விதிமுறைகள் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
தருமசூத்திரங்களில் காணப்படும் ஒரு முறை -
வெவ்வேறு இடங்களில் இருந்து, கொண்டுவரப்பட்ட மண்களைத் தனித்தனி உருண்டைகளாக்கி- (எட்டு உருண்டைகள்) வைத்திருப்பார்கள். திருமணத்துக்குரிய பெண், ஓர் உருண்டையை எடுத்து வர ஏவப்படுவாள்.
இந்த மண் உருண்டைகள், ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்திலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கும்.
1. இருபோகம் விளையும் வயல் 2. மாட்டுக் கொட்டில் 3. வேள்விச் சாலை
4. வற்றாத ஏரி 5. சூதாடும் இடம் 6. நாற்சந்தி
7. வறண்ட நிலம் 8.சுடுகாடு
பெண் இருபோகம் விளையும் வயல் மண்ணை எடுத்து வந்தாடே, அவள் வரும் வீட்டில் தானியங்கள் கொழிக்கும் பெண்ணைக் கொள்ளலாம். மாட்டுக் கொட்டில் மண்ணைக் கொண்டு வந்தால் கன்று காலிகள் செழித்து, பால்வளம் பெருகும், பெண்ணைக் கொள்ளலாம். வேள்விச் சாலை பான் அவள் கையிலேறினால், அவள் தெய்வீக அருள் பெறுவாள். வற்றாத ஏரி மண்ணை எடுத்து வந்தால் அவள் தொட்டது துலங்கும்; தவிர்க்க வேண்டாம், சூதாடும் இடத்து மண்ணை எடுத்து விட்டால், அவளுக்கும் அத்தகைய இயல்பு வருவதாக இருக்கும். இதனால் இந்தப் பெண் கொள்வதற்
குரியவள் அல்ல. நாற்சந்தி மண்ணைக் கொண்டு வருபவள், அலைபாயும் மனதுடையவளாக இருப்பாள். இவளும் தவிர்க்க வேண்டியவளாகிறாள். வறண்ட பாலை மண்ணை எடுத்து வருபவள் தரித்திரத்தைக் கொண்டு வருவாள்; அதனால் இவள் வேண்டாம். சுடுகாட்டு மண் அவள் கைகளில் ஏறுமானால், அந்தோ, இவள் கொண்டவனுக்கு யமனாவாள்! இவள் மிதிக்கும் மண்ணே தகாதது. இந்த மண்ணுருண்டைகள், அவளுடைய மண வாழ்வை நிர்ண யிப்பது போன்று, கணவனைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு எந்த ஒரு வழியும் இல்லாமலாகிறது. இதே மண்ணுருண்டைப் பரிசோதனையை அவனுக்கு அவள் வைக்க முடியுமா?
தேர்ந்தெடுக்கும் உரிமை காலம் காலமாக அவனுக்கே இருந்து வருகிறது. நீர் நிறைந்த குடத்தை இடுப்பிலேற்றி வரச் செய்தல்; சுண்ணாம்பு கொண்டு வரச் சொல்லல் என்ற பரிசோதனைகள் இருந்த இடத்தில், பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா, ஆங்கிலம் பேச வருமா என்ற வினாக்கள் எழுந்தன இக்காலத்தில். வங்கியில் அல்லது வேறு இடங்களில் நிரந்தரச் சம்பளத்தில் வேலை செய்பவளாக, குடும்பப் பாங்கானவளாக, அடக்கமுள்ளவளாக என்ற விதி முறைகள் வீசப்படுகின்றன.
அக்காலத்தில், திருமணம் என்பது, ஆணுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்கக்-கூடியவளாக, அதே வம்சம் விளங்க ஆண் மக்களைப் பெற்றுத் தருபவளாக ஒரு பெண்ணைத் தன் ஆளுகைக்குக் கொண்டு வரும் சடங்காகத்தான் இருந்தது என்றால் தவறில்லை.
பெண்ணின் அறிவைக் காட்டிலும், அவள் உடலமைப்பும், மென்னையான குணங்களுமே வேட்கப்பட்டன.
பிறிதொரு இடத்தில், "நன்னடத்தையும், அளவான அவயவங்களின் இசைவும், மென்மையான கூந்தலின் இரு சுருண்ட பிரிகள் வலதுபுறக் கழுத்தில் நீண்டு இருக்கும் படியுமான பெண்ணின் கையைப் பற்றும் ஆணுக்கு அவளால் மகிழ்ச்சி உண்டு; சந்ததி விளங்கும். கையைப் பற்றும்போது, அவளுடைய கட்டைவிரலைத் தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளும்படி பற்ற வேண்டும். ஆறு ஆண்மக்களை இவள் பெற்றுத் தருவாள்'' என்று காணப்படுகிறது.
ருக் வேதத்தில், ஆதிப் பகுதிகளில், பெண் குழந்தைகளை விரும்பாத நோக்கு எதுவும் புலப்படவில்லை. ஆனால் அதர்வ வேதத்தில், கருவில் இருக்கும் பிண்டம் ஆணாக இருக்க வேண்டும், பெண்ணாக இருக்கலாகாது என்று வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை இடம் பெறுகிறது.
பிள்ளை இல்லையே என்ற குறை தீர்க்க வேண்டும் பிரார்த்தனைகளிலெல்லாம், 'ஆண் மகவு பிறக்கட்டும்' என்ற வேண்டுதலையே மேலேங்கி நிற்கிறது....
திருமண நோக்கமே இதுதான்... ஆண்பிள்ளைகளை அவள் பெற வேண்டும்!
---------------
22 சுமங்கலியும் - பத்துப் புத்திரர்களும்
“ஸுமங்கலி ரியம் வதூரிமாம் ஸமேத பச்யத,
ஸௌபாக்ய மஸ்யை தத்வாயா யாஸ்தம் விபரேதன!"
"தசாஸ்யாம் புத்ரானாம் தேஹி! பதிம் ஏகாதசம்க்ருதி!"
விவாஹ மஹோத்ஸவத்திலே... மகா ராஜ ராஜ ஸ்ரீ ….
அவர்கள் ஆசீர்வாதம், பெண்ணுக்கு லட்சம் கட்டி வராகன்.... பட்டுப் புடவை, பட்டு ரவிக்கை... (அல்லது பிரஷர் குக்கர், மிக்ஸி போன்ற நவீன சமையலறைச் சாதனம், அல்லது ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய உறையாகவும் இருக்கலாம்.)
'மொய் வைத்தல்' என்று சாதாரணமாகக் குறிக்கப்படும் (முக்கியமான!) கல்யாணச் சடங்கை, பிரும்ம, அல்லது வேத விதிப்படி செய்வதான இந்து திருமணச் சடங்குகளில் 'ஆசீர்வாதம்' என்று கௌரவமாகக் குறிக்கிறார்கள். இந்த ஆசீர்வாதச் சடங்கில், புரோகிதர் மேற்கூறிய மந்திரங்களை ஓதி, மணமகளுக்கான பரிசுகளை வழங்குவது இன்றளவும் வழக்கில் உள்ளது. வேத விதிப்படி என்று ஒழுங்கு செய்யப் பட்ட பழைய நாளையத் திருமணங்களில் நான்கு நாட்கள், புதிய தம்பதி தொடர்ந்து தீ வளர்த்துப் பேணி இல்லறத்தான் என்று பழைய கால ஒழுக்கத்தில் புகுந்ததற்கு அடையாளமாகச் சடங்கு செய்வார்கள். ஐந்தாம் நாள் இறுதியாக 'ஓமம்' செய்தபின், இந்த ஆசீர்வாதச் சடங்கு நிகழும். அப்போது வேத வாசகங்களால் மணமகளையும் மணமகனையும்
அந்தணர் பலர் கூடி ஆசீர்வதிப்பது வழக்கம்.
ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இந்நாட்களில் பழைய சடங்குகள் வெறும் சின்னங்களாப் போக, (அல்லது பொருளற்ற கேலிக் கூத்துகளாகிப் போக) புதிய சடங்குகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
நிழற் படங்களுக்காக வீடியோ காட்சிகள் எடுப்பதற்காக, தாலி கட்டும் சடங்கு முதல் மீட்டும் மீட்டும் ஒழுங்கு செய்யப்படுகிறது. ரிசப்ஷன், லைட் மியூஸிக் என்ற நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்று, தீ வளர்த்தல், ஆசீர்வாதம் என்ற அம்சங்களைச் சுருக்கச் சடங்குகளாக்கி, முகூர்த்தம் நிகழ்ந்த கையுடனே முன் தள்ளி, மணமகனையும், மணமகளையும் வைதீகக் காப்புத் தளையில் இருந்து விடுவித்துவிடுகின்றன.
எனவே, இன்றைய பல இலட்சக்கணக்கான வேத விவாகங்கள் எனப்பெறும் சடங்குகள், முழுதுமே கேலிக் கூத்தாகக் கொள்ளும்படி முக்கியத்துவம் இழந்துவிட்டன. இது எந்த அளவில் மணமகனையும் மணமகளையும் ஆன்மீக ரீதியாகப் பிணிக்கிறது என்பது ஐயத்துக்குரியது.
ஆனால், இந்த மந்திர வாசகங்கள், சில சடங்குகள், புரோகித வருக்கத்தைக் காப்பாற்றுவது போல், கேலிக் கூத்தான நிலையிலும் பொருள் பிரித்துக் காண மனமின்றி, கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அந்தப் பிடியின் மாயையில் பெண்ணின் அறிவைக் குழப்பும் செயலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன.
"ஸுமங்கலி ரியம் வதூ" என்று தொடங்கும் முதல் இரண்டு வரி வாசகமும், மிக மிகத் தொன்மையான ருக் வேதப் பாடல்களில் காணப்படுபவை. சூர்யா என்ற மணமகளுக்கும், ஸோமா என்ற மணமகனுக்கும் நிகழ்வதாகக் கற்பிக்கப்பட்ட திருமணத்தில் கூறப்படும் மொழிகளாகும். சொல்லப் போனால், ருக்வேத கால மகளிரின் சமுதாய நிலை, திருமணம் போன்ற விவரங்களைப் பற்றிய சான்றுகளை, இத்தகைய பாடல்களின் வாயிலாகவே அறிகிறோம்.
மேற்கூறிய 'வாழ்த்து' வாசகம் இடம்பெறும் நிகழ்ச்சி திருமணம். மணமகள் தன் மணாளனின் கரம் பற்ற, அலங்கரித்துக் கொண்டு, சான்றோர் பெருமக்கள் நிறைந் திருக்கும் அவைக்கு வருகிறாள். முதல் இரண்டு வரிகளான 'ஸுமங்கலி ரியம் வதூ ரிமாம் ஸமேத பச்யத ஸௌபாக்ய மஸ்யை தத்வாயா யாஸ்தாம் விபரேதன” என்ற மொழிகளின் பொருள், 'எல்லா மங்கலங்களும் பொருந்திய இந்த மணப் பெண்ணைப் பாருங்கள்! நீங்கள் யாவரும், இவளுக்கு எல்லாப் பேறுகளும் இசையட்டும் என்று வாழ்த்தி விடை பெற்றுச் செல்லுங்கள்!" என்பதாகும்.
இங்கு காணப்பெறும் 'ஸுமங்கலி' என்ற சொல்லை முதலில் நாம் பார்க்கலாம்.
இந்நாளில் இச்சொல், பெண்ணின் தாலி, பூ பொட்டு, சேலைக்கட்டு என்ற புறச் சாதனங்களையே குறிப்பாக்குகிறது. ஆனால் உண்மையில், இச்சொல், நல்ல மங்கலங்களை உடைய பெண்-அதாவது, உடல் பலமாக, ஒரு புருஷனைக் கூடி, மக்களைப் பெறக்கூடிய இளமையும், அதற்குரிய முழு வளர்ச்சியும், இயல்புகளும் பெற்றவள் என்ற பொருளையே குறிப்பாக்குகிறது. இது, பிற்காலத்தில் வலி யுறுத்தப் பெறும் 'கட்டுக் கழுத்தி' என்ற நிலைக்கு முன்பாக திருமணமாகு முன்னரே ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல்லாக வருகிறது. இவள் ஆரோக்கியமுள்ளவளாக, இளமையும் எழிலும் கூடியவளாக, மணவாழ்வை மகிழ்வோடு ஏற்கும் எதிர்பார்ப்பும் ஆவலும் உடையவளாக, நல்ல அதிர்ஷ்டம் கூடியவளாகக் காணப்படுகிறாள். ("வதூ ” என்று குறிக்கப் பெறுவதால் இந்த மணமகள் என்று கொள்ளலாம்) இவளுக்கு எல்லா நற்பேறுகளும் இசையட்டும் என்று நீங்கள் வாழ்த்திவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்புங்கள் என்ற வாசகங்களையே நாம் இங்கு காண்கிறோம்.
இந்தத் திருமண வாசகங்கள் அடங்கிய பாடல்களில், தாலிக்கட்டோ, குங்குமத் தீற்றலோ, சேலை கொடுத்தலோ, மோதிரம் மாற்றலோ போன்ற எந்தச் சடங்கும் காணப் படவில்லை. ஸவிதாவின் மகளான சூரியா, ஸோமனாகிய மணாளன் கைத்தலம் பற்றித் தேரேறி அவனுடைய இல்லத்துக்கு வருகிறாள்.
(இது சூரியனின் கதிர்கள் சோமனாகிய சந்திரனில் கலந்து ஒளியூட்டும் ஒரு இயற்கை நிகழ்வின் வருணனை என்றுகூடக் கொள்ளலாம்.)
இவ்வாறு இவள் புறப்படுமுன், சான்றோர் வாழ்த்தி ஆசி கூறிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இன்றைய ஆசீர்வாதத்தின் முதல் இரண்டு வரிகளின் பொருளும் இடமும் இவையே.
ஆனால், இன்றைய ஆசீர்வாதங்களில் அடுத்ததாகக் காணப்பெறும் இறுதி வரி, "தசாஸ்யாம் புத்ரானாம் தேஹி: பதிம் ஏகாதசம் ஜருதி!" என்பதாகும்.
இதன் பொருள் பத்துப் புதல்வர்களை இந்தக் கணவனுக்குப் பெற்றுத் தருவாயாக! பின்னர், இக்கணவனையே பதினோராவது புதல்வனாகக் கொள்வாய்!"
இந்த வாசகம், உண்மையில், மணப்பெண், மணமகனின் இல்லத்துக்கு முன்வந்து இறங்கியதும் அவளைப் பலவாறாக வாழ்த்தும் வாசகங்களில் வருகிறது. “இந்த இல்லத்தின் அரசிபோல் நீ எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வாய்; இந்த இல்லம், இதன் நாயகனான உன் கணவன், மற்றும் அவனுடைய உறவு சார்ந்த குடும்பத்தினர், கன்று காலிகள், என்று எல்லோருடனும் பொறுப்பை நிருவகித்து, அன்பால் பேணி ஆள்வாய் என்ற வாழ்த்துரையோடு, பத்துப் புதல்வர்களை இக்கணவனுக்குப் பெற்றுத் தருவாய்; பின்பு பதினோராவது... உன் கணவனையே புதல்வனாகக் கொண்டு நலம் பேணுவாய்!” என்று முடிக்கப் பெறுகிறது.
வேதகாலத்து வாழ்த்தே 'நூறாகப் பெருகட்டும்' என்ற மொழியாக இருந்திருக்கிறது. நூறு என்ற சொல்லே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பொருளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறுவதாக நான் நினைப்பதுண்டு. இன்றும் நமது வழக்கு மொழிகளில் "நூறுதரம் படித்துப் படித்துச் சொன்னேன்; கேட்கவில்லை'' என்றோ, “ஒரு நூறு நடை நடந்தேன். பணம் பெயரவில்லை '' என்றோ , 'நூறு' என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம் (துரியோதனாதியர் நூறு பேர்' என்பதும் அப்படித்தான் வழக்கில் வந்திருக்கும். ஒரு பெண் நூறு மக்களைப் பெற முடியுமா? என்று நினைத்ததுண்டு. அண்மையில், இந்த நூறு புதல்வர் உண்மையை நிலைநாட்ட, ஒரு தமிழ் தொலைக்காட்சி நாடகப் பாத்திரம், நூறு பேருடைய பெயர்கள் ஒப்புவிக்கக் கேட்டேன்!)
சாவித்திரி தன் பெற்றோருக்கு நூறு புத்திரர்கள் பெற வரங் கேட்டதாகச் சொல்வதுண்டு.
"அப்படி நூறு என்பது வாழ்த்துச் சொல்லாக இருந்த காலத்தில், அது வழக்கு வாழ்த்துத்தான். உண்மையில் பத்துப் புதல்வர்களுக்கு மேல், நீ ஒரு வாழ்க்கையில் சுமக்க வேண்டாம். ஏனெனில் நீ வாழ்நாள் முழுவதும் கணவனைப் பேணிக் காக்க வேண்டும். இதனால் பத்துக்கு மேல் பதினோராவது மைந்தன் கணவனே என்று வைத்துக்கொள் என்று குடும்பக் கட்டுப்பாடு அறிவுறுத்தப் பெறுகிறது. "உன் கணவன் முதுமை நிலை அடைந்துவிட்டான் என்று அலட்சியம் செய்துவிடாதே! அவனையே புதல்வனைப் பேணுவது போன்ற வாஞ்சையுடன் பாதுகாத்து வா!” என்றும் மறைமுகமாக வற்புறுத்துகிறது இப்பாடல் அடிகள்.
ஆக, இந்த மூன்று வரிகளையும், ருக் வேத காலத்திலிருந்து திருமண மந்திரங்களில் வைத்து இன்றளவும் சொல்லும் முறை வழக்கில் வந்திருக்கிறது.
இந்த வழக்கு, ஒருவகையில் குருட்டுத்தனமாகவும், முட்டாள்தனமாகவும், கருதும்படியும் தொடர்ந்து வருகிறது.
ஒரு சமயம், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டப் பகுதியில் ஒரு புராதன முருகன் கோயிலில் குருக்கள் நிறைந்த ஈடுபாட்டுடன் கணீரென்ற குரலில் முருகனின் திருநாமங் களைக் கூறி, வழிபடுபவர் மனமொன்றித் துதிக்கும் வண்ணம் அர்ச்சனை செய்ததைக் கேட்டேன். பிரசாதத் தேங்காய் மூடித் தட்டை, என்னிடம் கொடுக்கையில் அவர் மொழிந்த ஆசி மொழிகள் ஒரு கணம் என்னை அதிர்ச்சியுறச் செய்தது.
"தசாஸ்யாம் புத்ரானாம் தேஹி! பதிம் ஏகாதசம் க்ருதி'' என்ற வாசகத்தைக் கேட்டால் பின் எப்படி இருக்கும்?
இதையேனும் ஓரளவு சீரணித்துக் கொள்ளலாம்.
என் நெருங்கிய உறவினர். கணவன் முகத்தை நன்றாகப் பார்த்தறியாத குழந்தைக் கைம் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி, சகோதரர்களின் ஆதரவில் வாழ்ந்தவர். அவருடைய அந்தச் சகோதரருக்கும் மனையாளில்லை. இந்த அம்மையார் ஆண்டு-தோறும் தன் கணவனுக்குப் பிதிர்க் கடன் ஆற்ற 'திதி' கொடுப்பார். அவருக்குத்தான் முப்புரி நூல் கிடையாதே? எனவே, தம்பி, அவள் கைத்தருப்பத்தை வாங்கி, அந்தக் கடனைச் செய்வான். அந்த அம்மை தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து 'திவசம்' செய்து வந்திருப்பவளாக இருக்கும். ஏன்? கல்யாணம் என்ற ஒன்றின் பலனே, அவளை முண்டனம் செய்து அலங்ககோலப்படுத்துவதற்கும், இறந்தவனுக்குச் சிரத்தையாக இத்தகைய நீர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கும் என்றே முடிந்திருக்கிறது.
அத்தகையதொரு திதி நாட் சடங்குகளை நான் நேரில் காணும் சந்தர்ப்பம் ஒரு சமயம் வாய்த்தது. அப்போது அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கலாம். சகோதரனும் அறுபதைக் கடந்தவர்- சடங்குகள் முடிந்த பின் இறுதியில் மங்கள வாசகம் கூறிப் புரோகிதர் முடிக்கையில், "தசாஸ்யாம் புத்ரானாம் தேஹி' பதிம் ஏகாதசம் க்ருதி!" என்றாரே பார்க்க வேண்டும்!
நான் நிச்சயமாக என் செவிகளையே நம்பவில்லை. ஆனால், புரோகிதர் அதே சொற்களைத்தாம் சொன்னார்.
அவளுக்கும் புருஷனில்லை; தம்பிக்கும் மனைவியில்லை. (இறந்துபோய் இருந்தாள்) பின் இந்த ஆசி மொழிகளின் பொருள் என்ன?
என்னுள் இந்த முரண்பாடுகள் புழுவாகக் குடைய லாயிற்று.
வைதீக சம்பந்தமாக நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும், மங்கள, அசுப, அல்லது தெய்வீகமான சமயம் சார்ந்த எந்தக் கூட்டத்திலும், பெண் வருக்கத்துக்கு என்ற இரண்டாம் பட்சநிலை, தனித்து ஒதுக்கப்பட்டிருப்பதை உணர முடியும். சமய குரு அல்லது ஆசாரியார், இந்த ஸ்த்ரீ வருக்கம்-பூணூல் போடத் தகுதியற்ற வருக்கம் பிழைத்துப் போகட்டும் என்று கருணை கூர்ந்து தீர்த்தம் கொடுத்து ஆசி வழங்குவார். இந்த வருக்கத்தினர், தாழ்த்தப்பட கௌவரவ அடிமைக் கூட்டம். எவ்வளவுக்கு மிகுதியாகக் கூடுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் சமய குரவர்களின் கருணா விலாசமும், பதுமம் பெருகுகின்றன. இவர்களைக் கவருவதற்கே, திருவிளக்குப் பூசை, மாங்கல்யச்சரடு, உற்சவம் என்பது போன்ற சடங்குகள். பெருமளவில் இந்நாள் நிகழ்கின்றன. சமய குரவர்கள் சந்தேக விளக்கங்கள் கூறி அறிவார்ந்த பெண்களையும் தங்கள் ஆளுகைகளை விட்டுப் போக விழிப்புணர்வு பெற்று விடாமல் ஆட்கொள்கிறார்கள்.
“சுவாமிகளே நவராத்திரி ஒன்பது நாட்களும் ஏன் தைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்? ஊசியில் அம்பாள் தவமிருப்பது மெய்தானா' என்று கேட்கும் பெண், குறைந்த பி.எஸ். அல்லது எம்.எஸ்ஸியாக இருக்கலாம். அவளுடைய விஞ்ஞான அறிவு, சுவாமிகளிடம் சந்தேக விளக்கம் கேட்கும் ஒரு பயனைக் கொண்டு வந்திருக்கிறது. " அப்படிச் சொல்றது - சம்பிரதாயந்தான். நவராத்திரி ஒன்பது நாட்கள் விசேஷ நாட்கள், பெண்களுக்கு. ஊசி எடுத்துத் தைத்து, கைகளில் குத்தி , இரத்தம் வந்தால் மனச்சஞ்சலம் உண்டாகும். இதெல்லாம் எதற்கு? அதனால்தான், பெரியவர்கள், தைக்கக்கூடாது என்று ஒரு சம்பிரதாயம் வைத்திருக்கிறார்கள்.-'' திருவருட் புன்னகை சந்தேக விளக்கமாக மலருகிறது.
பெண்களுக்கு சமயச் சடங்குகள், அல்லது தானாகச் செய்யக்கூடிய தெய்வ வழிபாட்டு உரிமையும் கூட ஒருவகையில் மறுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் கூடிச் செய்யும் எந்தச் சடங்குக்கும் வேண்டிய எல்லாப் பணிகளையும் பெண்கள் செய்ய வேண்டும். இடம் துப்புரவு செய்து, கோலமிட்டு, பொருட்களைச் சுத்தமாக்கி வைத்து, கடினமாக உடலுழைப்புப் பணியை அவளே செய்ய வேண்டும். அத்துடன், அவளுடைய பங்கேற்பாக, ஒரு சில சலுகைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
குடும்பப் பெண்களுக்கு முறையான கல்வியும் கலைப் பயிற்சியும் மறுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களாகச் சமையலறை எல்லைக்குள், சில தோத்திரங்களும் பாடல்களும் பாடுவதற்கு அனுமதிக்கப் பெற்றிருந்தார்கள். வாழ்க்கையே முடக்கப்பட்ட நிலையில் மூலையில் இருந்த சில பெண்கள் அவர்கள் எல்லைக்குள் மீனாட்சியம்மன் கல்யாணம், பார்வதியம்மன் சோபனம் என்று பாடல்களைப் பாடி ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பாட்டுத் திறனுடன் ஒருத்தி சுமங்கலியாக, (கட்டுக்கழுத்தியாக) இருந்தால் அவளுக்குத் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் ஒரு பெருமை கூடும்.
வேத வாசகங்கள், மேள தாளங்களுக்கிடையே புரோகிதரின் குரல் ஒலிக்கும். “பெண்கள் பாடட்டும், கௌரி கல்யாணம் பாடட்டும்!” இந்த அடிமை வருக்கத்தினரின் குரல், மங்கள ஒலி என்ற மினுக்கைப் பெற்று, அவையில் ஒலிக்கப் பெறும் சலுகை!
இது திருமண விழாவுக்கு மட்டுமல்ல புதுமனை புகுவிழாவோ, காதுகுத்துக் கல்யாணமோ, பூணூல் சடங்கோ, ஆண் குழந்தையின் 'அட்சராப்பியாச' விழாவோ, எதுவா னாலும் “பெண்கள் பாடட்டும்...! 'கௌரி கல்யாணம்' பாடட்டும்!” என்ற ஆணை வரும்.
எங்கோ மூலையில் இருந்து சுருதி இராகம் என்ற எந்த ஒழுங்கான பயிற்சியும் இல்லாத கிழக்குரல் ஒன்று ஒலிக்கும்.
"கௌரி கல்யாணமே வைபோகமே!
வசுதேவகுல பால அசுரகுல காலா
சசிவதன ருக்மணி சத்ய பாமா லோலா
கௌரி கல்யாணம்...''
என்று சைவ வைணவ ஒருமைப்பாட்டை நிலைநாட்டும் பெண்களின் இந்தப் பாட்டு வெறும் மங்கள வாசகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் சர்வகனம் பொருந்திய புரோகிதர், குருமார்கள் வேத வாசகங்களைச் சொல்லும்போது இவ்வாறு முரண்பாடு வருமா?
ஒருகால் இந்த இரண்டாம் பட்சப் பெண் ஜன்மத்துக்கு வேத வாக்கியத்தின் கன பரிமாணங்கள் புரியவில்லையோ? இதை நன்கு உணர்ந்த ஒரு பெரியவரிடம் கேட்க வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தேன்.
ஏனெனில் இந்த மாதிரியான கேட்கக்கூடாத அஞ்ஞான சந்தேகங்கள் கேட்பதே பாவமாயிற்றே! “பெண்ணாய்ப் பிறந்துவிட்டு, வேத வாசகத்துக்கு நீ சந்தேகம் கேட்கிறாய்!" என்ற அம்புதான் பாய்ந்து வரும்.
எனவே, சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தேன் வாய்த்தது. வேதம் ஓதி உணர்ந்த முதிய புரோகிதர்; வாழ்க்கையின் நடப்பியல், உண்மை இரண்டையும் புரிந்துகொண்டவர். என்னிடம் பெருமதிப்பு உடையவர். அவர் கூறினார்:
“உங்கள் சந்தேகம் சரிதானம்மா. இதில் அறிந்தவர் எவருமே இல்லை. அரைகுறைகள், அறியாமை தான் அதிகம். வேத வாசகங்கள் உச்சரிப்பு ஒலிகளினால்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. பிழைப்புக்காக, கிளிப்பிள்ளை போல் சில வாசகங்களைச் சொல்லிச் சொல்லி உருப்போட்ட பின் புரோகிதம் செய்கிறார்கள். பொருளைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? சமூக மதிப்பு இல்லாத இந்தப் புரோகிதத் தொழிலுக்கு யார் வருகிறார்கள்? வேறு கல்வி பயில முடியாதவர்கள் புத்தியும் சக்தியும் இல்லாத வயிற்றுக்கில்லாப் பிள்ளைகளை, பிழைப்பும் சாப்பாடும் இலவசம் என்று இந்த நிறுவனத்தை ஆதரிக்கும் பெரியவர்கள் இழுத்துப் போடுகிறார்கள். எந்தச் சொல்லைச் சொன்னால் அது உச்சரிப்புப் பிழையினால் தவறான விபரீதப் பொருளாகக் கூர்மை பெறாதோ, அதையே மங்கள வாசகமாகச் சொல்லப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவுதான். நிச்சயமாக, அது எந்த சந்தர்ப்பத்துக்கும் பொருந்தாத சரியில்லாத வாசகம்தான்!" என்றார்.
ஆக, இந்த வேத வாசக விஷயமும் பெண்களின் கல்யாணப் பாட்டுப் போன்ற வெறும் ‘மங்கள வாசகம்'தான் என்று புரிந்தது.
ஆக, ருக்வேதப் பாடலில் காணும் 'சுமங்கலி' என்ற சொல்லுக்கு இன்றைக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் புனைவுகள் சிறிதும் பொருந்தா. இவள், தாலி, மெட்டி, மஞ்சள், குங்குமம் முதலிய புறச் சின்னங்களால் உருவாக்கப்பட்டவள் அல்ல.
கணவன் வீட்டுப் பொறுப்புக்களை ஏற்று நிறைவேற்றக்கூடிய, கன்றுகாலிகளை, மாமன்மாமி, சுற்றத்தார் அனைவரையும் பேணி, அன்பையும் வன்மையையும் பெருக்குபவளாக, கணவனுக்குகந்த திடமான பெண்மணி யாகப் பத்துப் புதல்வர்களைப் பெற்று, முதிய வயதிலும் அவனுக்குப் பணிவிடை செய்யக்கூடிய ஆரோக்கியத்தையும் பெற்றிருப்பவள் இவளே சுமங்கலி. இந்த மங்கலங்கள் பொருந்தியவள் 'வது' என்ற மணமகளாகிறாள்.
-----------------
23. சப்த பதித் தோழமை
'திரிசங்கு சொர்க்கம்' என்ற சொற்றொடர்...அங்கு மில்லை. இங்குமில்லை என்ற இரண்டுங்கெட்டான் நிலையை அறிவுறுத்துவதுடன், திரிசங்கு என்ற மன்னனின் பெயரையும் சிரஞ்சீவியாக்கியிருக்கிறது. இவன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்ப இவள் மீது அளவற்ற அபிமானம் கொண்ட குரு விசுவாமித்திரர், இவனுக்காக ஒரு சொர்க்கத்தையே நிறுவினாராம். இவள் நிலை அங்குமில்லை இங்குமில்லை
என்ற தனித்துவம் பெற்றது.
இந்தத் திரிசங்குவின் ஆதிப் பெயர் சத்யவிரதன் என்று தெரிகிறது. இவருடைய தந்தையாகிய மாமன்னனும், குருவாகிய வசிஷ்டமாமுனியும் நெருங்கிய நண்பர்கள். அரசகுமாரன் சத்தியவிரதன், நகரில் உள்ள ஓர் இளம் பெண்ணைக் கண்டு மையல் கொண்டான். அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான். அந்த இளம்பெண், மணமானவள். இன்னொருவனின் மனைவியை விரும்பிய துடன் மட்டுமின்றி, அவளைக் கவர்ந்து சென்றது குற்றம் என்று அவளை நாடு கடத்தினான் தந்தை. ஆனால் சத்யவிரதன், அவள் மாற்றான் மனைவியாகித் தீர்ந்து விடவில்லை; ஏனெனில் அவள் சப்தபதிச் சடங்கு நிறைவேறு முன் அதாவது மந்திரத்தின் கடைசி அடியைச் சொல்லுமுன் அவளைக் கொண்டுவந்ததால், தண்டனைக்குரிய குற்றத்தைத் தான் செய்துவிடவில்லை என்று வாதாடினான். இது வசிட்ட முனி அறிந்த நீதிதானே? அவர் இவனுக்காகப் பரிந்துரை செய்யாமல் வாளா இருந்தது கண்டு சத்யவிரதன் கடுங் கோபமுற்றான். விசுவாமித்திரர் கடுந்தவசில் ஆழ்ந்த அச்சம யத்தில் அவர் மக்கள் வறுமையினால் வருந்த சத்யவிரதன் கானகத்தில் அவர்களைக் காப்பாற்றி, விசுவாமித்திரரின் மட்டற்ற அபிமானத்துக்கு உரியவனானதாகப் புராண வரலாறு தொடருகிறது. இவன் மூன்று பாவங்களைச் செய்த தால் 'திரிசங்கு' என்ற பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப் படுகிறது.
இந்த வரலாற்று, முக்கியமாக 'சப்தபதி' என்ற திருமணச் சடங்கைப் பற்றிய விபரம் காண்கிறோம். ஓமத்தீயைச் சுற்றி மணமகனும் தத்தம் ஆடைகள் முடிச்சால் பிணிக்கப்பட்ட நிலையில் வலம் வரும் இச்சடங்கு இன்றளவும் நம் இந்தித் திரைப்படங்களில் கூடப் பின்பற்றப்படுகிறது - திருமணச் சடங்கின் முக்கிய நிகழ்ச்சியாக.
தீயைச் சுத்தி, ஏழடி இணைந்து வைக்கும் இச்சடங்குக்குரிய மந்திரம், மிகத் தொன்மையான காலத்தில், (சத்யவிரதன் வரலாறு குறிப்பிடப்படும் புராண காலம்) மணமகளைப் புறச்சின்னம் எதையும் சுமக்கச் சொல்பவளாக இல்லை. மேலும் இந்த மந்திரப் பாடலின் மொழிகள், ஒருவருக்கு மற்றர் உட்பட்டதான குறிப்பைப் புலப்படுத்துவதாகவும் இல்லை. நாங்கள் உள்ளார்ந்து அன்பு கொண்டு இணைந்தவர்களாய் வாழ்க்கைப் பாதையின் துவக்கமான ஏழடிகளை வைத்து ஒன்றுபடுகிறோம் என்று உறுதி பூணும் மகிழ்ச்சிச் செய்தியைப் பலர் முன் அக்கினி சாட்சியாக அறிவிப்பதாகவே இச்சொற்கள் விளங்குகின்றன.
1. இந்த வாழ்வின் உயிர்ப் பசுமையின் இணைப்பால் நாம் ஓரடி வைப்போம்.
2. உயிர்த்துவத்தின் ஆற்றலாய் ஈரடி வைத்து முன் ஏகுவோம்.
3. வண்மையும் செழுமையும் கொழிக்க மூன்றாம் அடியை வைப்போம்.
4. இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் இணைந்து நான்காம் அடி வைப்போம்.
5. நல்ல சந்ததிகளைப் பெற இருவரும் கூடி ஐந்தாம் அடி வைப்போம்.
6. ஒருவருக்கு மற்றவர் என்று உறுதியாய் நிலைப்போம் ஆறாம் அடியில் -
என்று ஆறு அடிகளையும் இருவரும் சேர்ந்து சொல்லும் மந்திர மொழிகளுடன் வைக்கின்றனர். ஏழாவது அடி ஒருவரை நோக்கி மற்றவர் சொல்வதாக இருவரும் இதைத் தனித்தனியே சொல்லிப் பிறகு அவையோரை-அக்கினியைத் தொழுது நிற்பதாக முடிகிறது.
ஏழாவது அடி 7. ஓ, நீ எனது வாழ்க்கைத் துணையாக வந்து இணைந்தாய்; இந்த ஏழாவது அடியுடன்....
நாம் என்றென்றும் ஒருவருக்கொருவராக இணைந்து பல புதல்வர்களைப் பெற்று, அவர்களும் நீடூழி வாழத் தொழுது நிற்போம்.
இதுவே சப்தபதிச் சடங்கு எனப் பெறுகிறது.
முன் குறிப்பிட்ட 'ஸுமங்கலிரியம்வது' என்ற மொழிகள் காணப்படும் திருமண விவரங்களில் இச்சடங்கு இல்லை. என்றாலும், சப்தபதிச் சடங்கு வேத விவாகங்களில் பழங்காலத்திலேயே இடம்பெற்று-அதுவே முக்கியச் சடங்காக இருந்திருக்கிறது என்று கொள்ளலாம். இந்தச் சடங்கு தோன்றிய காலத்தில், பெண் உபநயனம் பெறும் உரிமை பெற்று, வேள்வி செய்யும் தகுதியுடையவளாக இருந்திருக்க வேண்டும். இந்தத் திருமணச் சடங்கு, பெண் பூப்பெய்திய பின், நன்கு வளர்ச்சியுற்ற பெண்ணையும், உற்ற ஆணையும் இணைக்கும் சடங்காகவே காணப்படுகிறது. மண வாழ்க்கையின் நோக்கமாகிய பயன்களையும் அவற்றை எய்துவதற்கு இன்றியமையாத பிற கூறுகளையும் ஏழு அடிகளில் வைத்து, வாழ்க்கைப் பாதையின் நுழைவாயிலாகத் திருமணச் சடங்கை அறிவுறுத்துகிறது, இம்மொழிகள்.
இந்தச் சடங்கு, வடநாட்டில் முக்கியத்துவம் பெற்ற அளவுக்குக்கூட தென்னாட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்க வில்லை. இச்சடங்கு ஒன்றே திருமணத்தை உறுதி செய்த அந்த நாட்களில், பெண் தன் கணவனை முழுமனதோடு விரும்பித் தேர்ந்து, மணவாழ்வுக்கு உட்படுபவளாக இருந்திருக்க வேண்டும்.
வருண பேதங்கள், பெருமளவாக, மானுட சமுதாயத்தைக் கூறு போட்டிராத நாட்களில் நாகரிகமான இத்தகைய திருமணம் மட்டுமே வழக்கில் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் வருண பேதங்களும், வருக்க வேற்றுமைகளும் ஆழ்ந்த பிளவுகளாக மனித சமுதாயத்தைக் கூறு போடத் தொடங்கிய பிறகு, பெண் கட்டுப்படுத்தப்படுவது அவசியமாயிற்று. எனவே திருமண முறைகளிலும் பல்வேறு பாகுபாடுகள் வந்திசைந்தன. பல்வேறு மாறுதல்களைக் கற்பிக்க வேண்டியதும் அவசியமாயிற்று. ஏனெனில் ஏழு வயது சிறுமியை மணவாழ்வில் பந்தப்படுத்த வேண்டிய கட்டாயம் புகுந்தபிறகு, உள்ளார்ந்த மணம் கொண்டு மொழியும் மந்திரச் சடங்குகள் அவருக்கு எந்த விதமான கடமையுணர்வையும் மனதோடு அறிவுறுத்தாது. முதலில் தன்னைக் கட்டியவன் தனக்கு மேலானவன், சமமானவன் அல்ல; அவனே குரு, அவனே தெய்வம் என்ற உணர்வை அவள் உள்ளத்தில் அழியாப் பதிவாகப் பதிக்க வேண்டும்.
அந்த இளம் உள்ளத்தில் இந்தப் பதி தத்துவம், தன் உயிரினம் மேலான மதிப்புடையதாக ஏற்றம் பெற வேண்டும். ஒரு பெண் தனிமையில் இருப்பதும், சுதந்தரமாக வாழ்வதும் மிகவும் கேவலமான நிலை, சமுதாயம் ஒப்புக்கொள்ள முடியாத இழிநிலை என்ற அளவில், திருமணச் சடங்கு, சமயம் சார்ந்து, முக்கியப்படுத்தப்படும்போது 'கணவன்' என்ற பதவி அல்லது உயர்மதிப்பின் கௌரவமே, அவனுடைய உண்மையான தகுதிகளைக் காட்டிலும் அவளுக்கு 'மகத்தான தாகக் கற்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான பயன்களைக் குறிப்பாக்கித் திருமணச் சடங்குள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன.
ருக்வேத காலத்தில் இல்லாத சடங்குகள் அதர்வ வேத காலத்தில் வழக்கில் வந்தன.
மனைவியின் மதிப்பு, கணவனிடம் அவள் கொண்டுவரும் வண்மை வரிசைகளைப் பொறுத்து ஏற்றம் பெற்றன.
'அம்மி மிதித்தல்' என்று பிற்காலத்தில் வழக்கில் வந்த சடங்கு துவங்கப் பெற்றது.
ஒரு கல்லின்மீது தம்பதி இருவரும் ஏறி நிற்க, நீண்ட ஆயுள், உறுதியான இல்லறம் (பெண்ணும் ஆணும் பிரிந்து போவது இயல்பாக இருந்த சூழலில்) இரண்டையும் வலியுறுத்தும் வகையிலான சடங்குதான் இது. "மண்ணின் மடியிலே உறுதியாக அமைந்த இக்கல்லைப் போல் (மழைக்குக் கரையாமல்) நிலைத்து நீடித்து நாங்கள் வாழ, 'ஸவிதா' அருள் புரியட்டும்” என்ற பிரார்த்தனையுடன் இருவரும் கல்லில் ஏறி நிற்கும் சடங்கு, பிற்காலத்தில், பெண்ணை மட்டும் கணவன் 'அம்மிக்' கல்லில் ஏற்றி வைத்து, 'இந்த அம்மியைப் போல் ஜடமாக, எத்துணை நசுக்குப்பட்டாலும் அசையாத கற்புடையவளாக இருப்பாய்' என்று அச்சுறுத்தும் சடங்காக மாறியது. உபநிடத காலங்களில், திருமணச் சடங்குகள் இன்னும் விரிவாயின. பெண், ஆண் மகனைப் பெறுவதற் கான ஒரு கருவி போன்ற சாதனம். இவள் இணங்காவிட்டால் ஆண் வற்புறுத்தலாம் என்ற உரிமை ஆணுக்கு ஆதிக்கப் பார்வையை நல்கியது.
அடுத்து, 'பிராம்மண'ங்கள் இன்னும் சில சலுகைகளை, ஆண்களுக்கே விட்டுக் கொடுத்தன.
மனைவி கணவனில் சரி பாதி என்ற சரிகைக் குஞ்சம் பளபளவென்று கண்களைப் பறித்தாலும், அவன் உணவு கொண்ட பின்னரே, எஞ்சியதை அவள் உண்ண வேண்டும் என்றும், அவன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசக்கூடாதென்றும் சாத்திரக் கயிறுகள் அவள் ஜீவாதார உரிமைகளைப் பிணிக்கவும் விதிகள் எழுதப்பட்டன. (சதபதப்ராம்ணம்) -
பின்னர் தரும சூத்திரங்கள் என்ற கோட்பாடுகள் தொடுக்கப்பட்ட காலத்தில் திருமணச் சடங்குகள் பூரணமாக மனைவியை, சிறுமியை பொம்மையாக்கித் தீர்த்தன.
கணவன் நூற்றாண்டு வாழட்டும் என்று, எரி வளர்த்துத் தேவர்களை வேண்டும் வேள்வியைக் கூட மணமகள், தன் சகோதரன் உதவியுடன் திருமணத்துக்கு முன்பாகச் செய்கிறாள். இதுவும் தாலி கட்டிய பின்னர் அவள் செய்யும் சடங்காக, லாஜ 'ஹோமம்' மணமகளின் சகோதரன் பொரியிடல் என்ற பெயரில் இன்றும் வழக்கில் இருக்கிறது. திருப்பாவை அருளிய கோதை நாச்சியார் தம் கனவைச் சொல்கையில், தாலியைப் பற்றியோ குங்குமம் தீற்றுவது பற்றியோ குறிப்பிடவில்லை. ஆனால்-அம்மி மிதித்தலையும், பொரியிடுவதையும் குறிப்பிடுகிறார். வேத காலத்து சப்த பதியில் இருந்து வேறுபடும் வகையில், தொடர்ந்து வந்த காலங்களில் மந்திர வாசகங்கள் முற்றிலும் மாற்றப்பட்டன. இவ்வாசகங்கள் அனைத்தும் கணவன் மனைவிக்குச் சொல்லும் மொழிகளாகவே அமைந்து, அவளைக் குரலற்றவளாகத் தீர்த்திருக்கின்றன.
1. விஷ்ணு உனது உணவின் தேவையை நிறைவேற்ற முதல் அடியை எடுத்து வைப்பாய்.
2. விஷ்ணு உனது உடல் வலிமையைக் கூட்ட, இரண்டாம் அடியை எடுத்து வைப்பாய்.
3. விஷ்ணு உனது விரதங்கள்-தவங்களை நிறைவேற்ற, மூன்றாம் அடிக்கு உன்னைக் கொண்டு செல்லட்டும்.
4. விஷ்ணு, உனது நான்காம் அடியை நட்பின் மலர்ச்சியுடன் அழைத்துச் செல்லட்டும்.
5. விஷ்ணு, உனது ஐந்தாவது அடியை, கன்றுகாலி களாகிய வளர்ப்புப் பிராணிகளின் நலன்களை முன்னிட்டு அழைத்துச் செல்லட்டும்.
6. விஷ்ணு , உனது ஆறாவது அடியை சப்தருஷிகளின் ஆசிகளோடு நடாத்திச் செல்லட்டும்.
7. இந்த ஏழாவது அடியுடன், நீ எனது தோழியாகிறாய்!
இந்தச் சப்த பதிக்கும் முந்தைய சப்த பதிக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள்!
உணவின் தேவைக்கு (அவளுக்கும்தான்...உழைத்தாலே உணவு!) குடும்பத்துச் சமையல்காரி, உடல் வலிமை, வைத்த சுமையை ஏற்று, உழைக்க வேண்டுமே? விரதங்கள்- தவங்கள் சுயநலங்கள், சுயதேவைகள் சுருக்கி, கணவன் வீட்டாருக்காக உயிர்வாழும் பொருட்டு-உழைக்கும் பொருட்டு, சில பழகு நெறிகளில் விரதங்கள் தவங்களைக் கைக்கொள்ள வேண்டும்.
நட்பின் மலர்ச்சி... இத்தனை சுமைகளையும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஏற்கலாமா? சிரித்த முகத்தோடு "இது என் பேறு'' என்று ஏற்க வேண்டும்.
கன்று காலிகளாகிய வளர்ப்புப் பிராணிகள் உனது ஜீவாதார உரிமைகளைக் காட்டிலும் அருமையானவை. வளமை பெருக்கும் செல்வங்கள். எனவே இந்தப் பொரு ளாதார வளமை எக்காரணம் கொண்டும் உன்னால் அலட்சிய மாகக் கருதப்படலாகாது! அது ஓங்க வேண்டும். சப்த ருஷிகள் பூசனைக்குரியவர்கள். இவர்கள் தந்தையார் (தாய்வழிச் சமுதாயப் பரம்பரை என்ற ஒரு உணர்வின் ரேகை கூட உன்னிடம் மிஞ்சலாகாது. தந்தையர்... ருஷிகளே தலைவர்கள்) இவர்கள் அருள் தேவை.
இத்தனைஅடிகளையும் வைத்த பிறகு (நிபந்தனைகளுக்குப் பிறகு) நீ என் தோழியாவாய்!
தோழமை என்ற பெயரில் வளையம் நெருக்கும்போது, அவள் உண்மையில் தோழியாகவா இருக்க முடியும்? தோழி என்ற பெயரில், நெருக்கப்பட்டு, இயக்கப் படுகிறாள் என்பதே உண்மை.
இந்நாள், இச்சப்தபதி மந்திரத்தையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு தாலிகட்டுச் சடங்கு அவளை வாழ்நாள் முழுதும் உணர்வு ரீதியாகவும், பிணித்துக் கொண்டிருக்கிறது.
---------------
24. வினா - விடை - அச்சுறுத்தல்
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அறிவியல் தொழில் நுட்பப் பட்டம் பெற்று, அருகிலுள்ள தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியப்பணி ஏற்க வந்திருந்தாள். அந்த நிறுவன வளாகத்தில், பெண் ஆசிரியைகளுக்கான தங்கும் விடுதி வசதி கிடையாது. இவளுக்காக அண்டை அயல் வட்டங்களில், ஓர் அறை அல்லது, பகுதி வீடு (வாடகை) தேடி அவளுடன் நானும் அலைந்தேன். திருமணமாகாத இளைஞன் என்றால் கூட வாடகைக்கு இடம் கிடைத்துவிடும்; பெண்களுக்கு இடமே கிடைக்காது என்பதை அந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டேன். பிக்குப் பிடுங்கல் இல்லாத முதிய தம்பதிகூட இவ்வாறு தன்னந்தனியாகச் சம்பாதித்து வாழ வந்த பெண்ணுக்கு வீட்டில் ஓர் அறை வசதி செய்து கொடுக்க விரும்பவில்லை.... ஓர் ஆணின் ஆதிக்கத்தில் இல்லாத திருமணமாகாத, பொருளாதார வசதியுடைய பெண் என்றால் அவள் ஒழுக்கம் நிச்சயமாகக் கண்களில் எண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணிப்பதற் குரியதென்று எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கருதுவது ஏன்?
அந்தப் பெண்ணுக்கு இருபது மைல்களுக்கப்பால் ஓர் உழைக்கும் மகளிர் விடுதியில் இடம் கிடைத்தது. அவளுக்குக் காலை எட்டு மணிக்குள் தன் பணியிடம் வரவேண்டும். ஏழு மணிக்கே கிளம்ப வேண்டும். அந்நேரம் அங்கு காலையுணவு தயாராகாது; மதிய உணவும் கொள்ள முடியாது. ஆனால், இந்த ஒரு நேர உணவுக்கான தொகையும் விடுதித் தொகையுடன் கொடுத்தே ஆக வேண்டும். இந்தச் சங்கடங்களைத் தவிர்க்க முடியாமல், அவள், ஒரு சில மாதங்களில் இந்த வேலையை விட்டு விட்டே போனாள். பதினைந்து ஆண்டுகளில் இந்த நிலைமை சீராகிவிடவில்லை. திருமணமாகாமல், ஒரு பெண், தனிவாழ்வு வாழ முடியுமா என்ற வினா, இன்றைய இளம்பெண்களை மிகவும் அச்சுறுத்துகிறது. 'வரதட்சணைப் பேய்க்கு இடம் கொடுக்க மாட்டேன்' என்று கல்லூரி நாட்களில் வீர சபதம் செய்யும் பெண்ணும் கல்லூரி நாட்களை விட்டு, வாழ்க்கைப் பட்டறையில் இடிபடும் போது, தனது வரதட்சணைக்குத் தானே சேமித்துக் கொள்ளத்தான் முற்படுகிறாள். அன்றாடம் கயவர் களிடமிருந்தும் கல்லூரி விடலைகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாப்பது தாலி என்ற மந்திரக்கயிறே என்று நினைக்கிறாள். ஏன், ஒரு கதையில், இப்படி ஒரு கதாநாயகி பொய்த்தாலி ஒன்றைக் கட்டிக்கொண்டு அலுவலகம் வந்து போகிறாள்.
இவளுடைய தோழியின் சகோதரன் இவளை உள்ளூறக் காதலிக்கிறான்-ஆனால் அயலான் மனைவி என்ற உணர்வு அவனுடைய உத்தம குணத்தைக் காட்ட - அவன் தன்னை அடக்கிக் கொள்கிறான். பின்னர், சகோதரி வாயிலாக இவள் தாலி வெறும் கயிறு என்று அறிந்தபின் மகிழ்ச்சி கரைபாய சுபம்-சுபம்-சுபம்....
ஒரு பெண் ஓர் ஆணின் பாதுகாப்பில் தான் இருக்கலாம்; இல்லாவிட்டால், அவளால் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற ஒரு நீதி, ஒவ்வொரு பெண்ணுக்கும் வழிவழியாகத் தாயின் இரத்தத்தில் ஊறும் நாட்களிலேயே போதிக்கப்படுகிறது.
முற்போக்குச் சித்தாந்தம் பேசும் வீட்டிலேயே , பட்ட மேற்படிப்புப் படித்த பெண்ணுக்கு முப்பதினாயிரமும் சீர் வரிசைகளும் கொடுத்துத் திருமணம் உறுதி கொள்கிறார்கள். ''உங்கள் பெண் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாள்?" என்று கேட்டால், “அவள் ஒத்துக்கொள்வாளா? குதிக்கத்தான் குதித்தாள். அந்த ஆளைப் போய்க் கேட்பேன் என்றுதான் கிளம்பினாள். பெரியவங்க எல்லாம் குறுக்க விழுந்து அப்படி யெல்லாம் கேட்டு கலியாணத்தை நிறுத்தினா, உனக்கு இந்த ஆயுசில கலியாணம் ஆகாது. கலியாணம் இல்லாம நிப்பியா? முடியுமான்னு நிறுத்திவிட்டோம்.” என்று சிறிதும் தயக்கம் இன்றி ஒத்துக்கொள்கிறார்கள்.
திருமணமான நிலையிலேயே 'பெண்' என்பவள் வேட்டைக்குகந்த பிராணி என்ற சமூக (அவல) மதிப்பைப் பெற்றிருக்கும்போது, இந்த அபாயம். நீ கன்னியாயிருந்தால், எந்தக் கணமும் உன்னை விழுங்கக் காத்து இருக்கிறது என்ற கருத்தை அன்றாடம் நமது மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆணுக்கு ஊக்கமாகவும் பெண்ணுக்கு அச்சமாகவும் இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கருத்து எப்படி உருவாகி, நிலைத்து, இன்னும் நூற்றாண்டுக் காலங்களில் வலிமை பெற்று, பெண்ணை எந்த முன்னேற்றத்தின் பயனையும் பெற இயலா வண்ணம் பிணித்துக் கொண்டிருக்கிறது?
இதைக் கூர்ந்து சிந்தித்தால், பெண்ணின் அறிவுக் கண்ணை மறைக்கும் ஒரு சாதனமாகவே திருமணம் அவளுக்கு வலியுறுத்தப்படுவதாகப் புலப்படுகிறது. இவள் அறிவு பெற்றுவிட்டால், சுயமாகச் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டால், ஒருபக்க நியாயங்களை உணர்ந்துகொள்வாளே?—
மேலும், வஞ்சிக்கப்படுபவர் விழித்துக்கொண்டால், காலம் காலமான பொய்ச் சித்தாந்தங்கள் புகையாகிப் போய்விடுமே?
பிரஹத்தாரணிய உபநிடதத்தின் ஆறாவது பிராம் மணத்தில், யாக்ஞவல்க்யர்-கார்க்கி உரையாடல், இக்கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றாக வேண்டும் என்று கருதுகிறேன்.
பிரும்மவாதி என்று போற்றப்படுபவர், இந்து சட்டவிதிகளாகிய தரும சாத்திரங்களை நெறிப்படுத்தியர் என்று புகழ்பெற்ற யாக்ஞவல்க்யர், ஜனகனின் அவையில் இருக்கையில் கார்க்கி அவரை நாடி வருகிறாள். இன்றும், பண்டைய வேதகாலப் பெண்மணிகளின் சிறப்பைச் சொல்கையில், 'மைத்ரேயி, கார்க்கி போன்ற பெண்மணிகள்' என்றே குறிக்கப்படுவதைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த இரண்டு பெண்மணிகளின் வரலாற்றிலும் யாக்ஞவல்க்யர் வருகிறார்.
பிருஹத்தாரணிய உபநிடதத்தில் - ஆறாவது பிராம்மணம், கார்க்கியை வாசக்னு என்பவரின் மகளாக அறிவிக்கிறது. இவளுக்குத் திருமணமாயிருந்ததாகக் குறிப்பு இல்லை. இவள் உபநிடதத் தொகுப்பில் அழியா இடம் பெறுவதற்குக் காரணம், இவள் பெண்களுக்குத் தகாதது என்று தடுக்கப்பட்டாற் போலிருந்த அறிவுப்பாதையில் தனது சிந்தனையைத் திருப்பியதுதான். ஒரு பெண்ணாகப் பிறந்தவள், ஜனகரின் பேரறிவாளர் நிறைந்த அவையில் சிறந்த பிரும்ம தத்துவ மேதையாகிய யாக்ஞவல்க்யரிடம் அந்த 'பிரும்மம்' பற்றிய ஐயப்பாட்டை எழுப்பினாள் என்றால், அது சாதாரண விஷயமா?
"நான் உம்மிடம் சில ஐயங்களைப் போக்கிக்கொள்ள விழைகிறேன்'' என்று கூறும் கார்க்கி, அவரை ஏதோ சவாலுக்கு அழைப்பது போல் தொனிக்கிறது. யாக்ஞவல்க்யர்
ஒப்புக்கொள்கிறார். உரையாடல் தொடங்கியது.
"ஓ, யாக்ஞ? இந்த நானிலம் நீரடுக்குகளின் பரப்பில் நிலைபெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆதாரம் எங்கு நிலை கொள்கிறது?"
"கார்க்கி, நீர் வாயுவின் அடுக்கில் நிலை கொண்டிருக்கிறது."
"யாக்ஞ, வாயுக்கு ஆதாரம் எது?"
"கார்க்கி, இது ஆகாயமாகிய வெற்றிடத்தால் நிலை கொண்டிருக்கிறது."
"அப்படியானால், ஆகாயத்துக்கு மூலம் யாது?"
"கார்க்கி! இது கந்தருவர்களின் பிரதேசத்தில் நிலைபெற்றது.''
"யாக்ஞ! இந்தப் பிரதேசம் எங்கிருக்கிறது?"
"...இது சூரிய மண்டலத்தில் நிலைபெறுகிறது.”
"யாக்ஞ. சூரிய மண்டலம் எங்கே நிலைபெறுகிறது?"
''கார்க்கி, இது சந்திர மண்டலத்தில் நிலைபெறுகிறது."
"அது எங்கே இருக்கிறது?”
"அது நட்சத்திர மண்டலத்தில் நிலைகொண்டது."
"அது எங்கே நிலைபெறுகிறது?"
“அது கடவுளர்களின் பிரதேசத்தில்....”
"கடவுளர்களின் பிரதேசம்?"
“இந்திரன் உலகில்....''
“இந்திர உலகம் எங்கே இருக்கிறது?"
"பிரஜாபதியின் உலகில் உள்ளது."
"பிரஜாபதியின் பிரதேசம் எங்கே உள்ளது?"
"அது பிரும்ம உலகில் இருக்கிறது, கார்க்கி!”
"பிரும்ம உலகம் எங்கு உள்ளது யர்க்?"
“இனிமேல் கேட்காதே! எதை நீ கேட்கக்கூடாதோ அதைக் கேட்கிறாய்; உன் வினாக்களை இத்தடன் நிறுத்து! மீறினால்... உன் தலை உருளும்!"
ராஹுல் ஸாங்க்ருத்யாயன், மனித சமுதாய வரலாற்றை விவரிக்கும் நூலில் சமுதாயம், சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்ற வருக்கங்களாகப் பிரிவுப்பட்ட பின் இந்த வருக்கபேதம் நிலைத்தாலே, பிரபு வருக்கமும், அரச வருக்கமும் தங்கள் போக வாழ்க்கையை நடத்த முடியும் என்று வந்த அவசியங் களை விவரிக்கிறார். உழைத்துப் பிழைக்கும் வருக்கம் தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்துவிடா வண்ணம், மாயமான பரலோகக் கற்பிதங்களில் அவர்கள் மனங்கள் அமிழ்ந்துவிடும் வகையில், தத்துவங்கள் கற்பிக்கப்பட்டன என்று விளக்குகிறார். அந்த வகையில், அவர் எழுதிய வரலாற்றுச் சித்திரங்களான-'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலில், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
'பிரும்மம்' என்ற புதிரை, அடுத்து வரும் தலைமுறைகள் முழு முதலாக வைத்துக்கொண்டு கவலையின்றி, வருக்கபேத சமுதாயத்தை ஆளமுடியும் என்றே தோற்றுவித்ததாகக் குறிப்பாக்குவார்.
இந்தப் புதிரை உடைக்கும் வகையில் கார்க்கி எழுப்பிய வினாக்கள், பிரும்மவாதிகளான-காவலர்களான, மேலாம் வருக்கத்தாருக்கு அடிமடியில் கைவைத்த திகிலையும்
ஆத்திரத்தையும் கிளப்பியதில் வியப்பில்லையே?
“கார்க்கி! இது வெறும் அச்சுறுத்தல் அன்று! நிச்சயமாகவே நீ மேலும் வினாக்களைத் தொடுத்திருந்தால், உன் தலை உருண்டிருக்கும்!” என்று கார்க்கியின் அத்தையான
மூதாட்டி கூறுவதாக அவர் எழுதியுள்ளார்.
ஆனால், இத்தகைய வரலாறுகள் இடம் பெறுகையில், ஒரு பக்கம் வரலாறு என்ற நிலையில் நிகழ்வுகள் குறிப்பாக்கப்பட்டாலும், ஆணாதிக்க சமுதாயம் வலுப்பெற்ற நிலையில் தொகுக்கப்பட்ட இந்த நூல்கள், இவ்வாறு கார்க்கியின் வினாக்கள் அச்சுறுத்தலோடு மடக்கப்பட்ட சம்பவத்தை முடித்துவிட இடம் கொடுக்கவில்லை. இதே உபநிடதத்தில் எட்டாம் பிராம்மணத்தில் மீண்டும் வருகிறது.
இப்போது கார்க்கி, அவையில் கூடியிருக்கும் பெரியோரைப் பணிந்து தொழுது, தான் அவருடைய அறிவைச் சோதிக்கும் முகமாகவோ, அல்லது பிரும்ம தத்துவத்தின் ஐயப்பாடு காரணமாகவோ வரவில்லை என்றும், இரண்டே இரண்டு வினாக்களை மட்டும் ஏந்தி வந்திருப்பதாகவும், கேட்க அனுமதி வேண்டும் என்று கோருகிறாள்.
முன்பு விட்ட வரலாற்றின் தொடர்ச்சியன்று இது அதே வரலாறு, கார்க்கியை அவர்கள் விரும்பும் விதத்தில் சித்திரிக்கிறது எனலாம். பழைய ஐயப்பாட்டு வினாக்களே
இரண்டாகச் சுருக்கமாகிக் கேட்கப்படுகின்றன.
'ஆகாயத்தில் நிலை கொள்கின்றன' என்று வந்த மறுமொழியிலேயே கார்க்கி நெளிந்து, “ஓ, யாக்ஞவல்க்யரே! வணங்குகிறேன். தாங்கள் நன்கு விளங்க எனக்கு விடை யளித்துவிட்டீர்கள். இப்போது சொல்லுங்கள், இந்த ஆகாயம் எதில் நிலை கொள்ளுகிறது?"
இப்போது யாக்ஞவல்க்யர், பிரும்ம தத்துவத்தைப் பற்றிக் கூறுகிறார். இவ்வுலம் பிரும்மத்தில் நிலை கொள்கிறது-இதற்கு நிறம், உருவமில்லை..... என்ற விவரங்கள். (ராஹுல்ஜியின் கருத்துத்தான் வலிமை பெறுகிறது; நமக்குப் புரியவில்லை.)
கார்க்கி, நிறைவு கொண்டு, அவரை வணங்கி அவையோரிடம் விடைபெற்றுச் செல்கிறாள்.
இதிலிருந்து ஒரு நீதியும் நமக்குக் கிடைக்கிறது.
யாக்ஞவல்க்யர், பிரும்ம தத்துவ விளக்கத்தைக் கூற மறுத்து, மரண தண்டனையைக் கூறி அச்சுறுத்தியும், அவள் மேலாம் அறிவுத் தாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் வந்து, பிரம்மஞானம் பெற்றாள்-என்பதே நீதி.
இதே யாக்ஞவல்க்யர்க்கு-இரு மனைவியர். ஒருத்தி காத்யாயனி; மற்றவள் மைத்ரேயி, யாக்ஞவல்க்யர் எல்லாம் துறந்து இறுதித் தவம் மேற்கொள்ளக் காட்டுக்குச் செல்லுமுன் தனது 'சொத்துக்களை' இரு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினார். அப்போது, மைத்ரேயி மட்டும் “இந்த சொத்துக்களினால் என்ன பயன்? மேலாம் பிரும்மஞானம் மட்டுமே தங்களிடம் நான் பெற விரும்புகிறேன்” என்றுரைத்ததாகவும், அவர் அவளுக்கு அந்த அறிவை நல்கியதாகவும் வரலாறு. இதனால், மைத்ரேயி, பட்டுப் பட்டாடை, செல்வம், பிள்ளை என்ற உலகியல் அநுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஞானத்தை வேட்டவள் என்று வரலாற்றில் புகழ் பெறுகிறாள். யாக்ஞவல்க்யரும் போற்றப்படுகிறார்.
இத்தகைய பெண்கள் அடிக்கடி வந்துவிட்டால்? திருமணம், இக உலகப் பேறுகள் என்று சொல்லப்படும் அறிவு மறைக்கும் பட்டுக் குஞ்சலங்களின் உட்பொருள் அவர்களுக்கு விளங்கிவிட்டால்?
எனவே, பெண்ணுக்குத் திருமணம் சார்பு நிலை, தான் தருமம் என்று வலியுறுத்தப்-படுவதற்கும் மேலாக, திருமணமாகாமல் நிற்பதனால் சமுதாய ஒழுக்கத்தையே குலைக்கிறாள் என்ற நோக்கில் ஓர் அம்பு செருகப்பட்டது. பெண்ணாய்ப் பிறந்ததன் பாவமே ஓர் ஆண் குழந்தைக்குத் தாயாவதில்தான் விலகுகிறது! இந்த ஆண் குழந்தையைத் திருமணத்தின் வாயிலாகவே பெறமுடியும். திருமணம்....!
அவளுக்கு அறிவு தேவையில்லை ; உடல்வாகு, அடக்கம், பணிவு, பொறுமை, உழைப்பு, தியாகம்....
திருமணமாகாமலே சமுதாயத்தில் நிற்கவேண்டிய நிலை வந்துவிட்டால்? இப்படியும் ஒரு நிலை இருந்திருக்க ஆதாரம் இருக்கிறது.
ஏனெனில் யமனே! நீ ஏற்றுக் கொள்வாய்! இவளை உனக்கு அர்ப்பணிக்கிறோம்! என்ற பொருளில், அவளை யமனுக்கு மணவாட்டியாக்கும் ஒரு பாடல் வருகிறது. இதற்குச் சரியான பொருள் விளக்கப் படவில்லை.
திருமணமாகாத பெண், உயிர் வாழக்கூடாது; அவள் யமனுக்கு மணவாட்டியாகப் போகலாம் என்று நமது வைதீக சமயத்தார் வழிகாட்டுகிறார்களா? இதனால்தான் போலும், இந்த இருபதாம் நூற்றாண்டு இறுதிக்கட்ட சமயகுரு ஒருவர், இந்து சமுதாயத்தில் கன்னிப் பெண் வாழ இடம் கிடையாது; எனவே ஒரு வாழை மரத்தை உரித்துத் தாலியைக் கட்டிக்கொண்டு, மரத்தை வெட்டி, தாலியைக் களைந்து வைதவ்யக் கோலம் மேற்கொண்டு வாழலாம் என்று கருணையுடன் திருவாய் மலர்ந்தருளினாரா என்று புரியவில்லை !
'வளர்ந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வது ஒரு கூடை பாம்பை வைத்துக் கொண்டிருக்கும் அபாயம்!' என்று இல்லறம் நடத்தும் பெற்றோருக்கு 'தரும'க் கட்டாயம்
அறிவுறுத்தப்படுவதும் இதனால்தானோ?
---------------------
25. பொருளுரிமைக்காரி - பொருளேயானாள்
"....ஐயர் இருக்கிறாரா?...”
“இல்லையே? வெளியூர் போயிருக்கிறார். வர ஒரு வாரம் ஆகும்" என்று முன்னுச்சி நரைத்த அவர் மனைவி கூறுகிறாள்.
“இருபத்தெட்டாந் தேதி ஒரு ஃபங்ஷன். ஒரே நேர விருந்து. ஜாங்ரி போடணும். நூற்றைம்பது பேருக்குச் சாப்பாடு..... அதனால் அட்வான்ஸ் சொல்லி தந்துட்டுப் போகலாம்னு வந்தேன்...''
"இருபத்தெட்டாந் தேதியும் அவருக்கு வர சவுரியப்படாது. ஊரிலே ஏதோ காரியம்..."
"...அடாடா....? ஒரு நேரந்தான் அம்மா? உங்களுக்குத் தெரியாதா? நம்ம வீடுன்னா, எங்கிருந்தாலும் வந்துடுவாரே? எங்க தாத்தா நாள் தொடர்பு; எந்த விசேஷம்னாலும், ஐயர்தான்.''
'....அது தெரியும். ஆனா, இப்ப சந்தர்ப்பமில்ல. அவர் பெண் நாகலட்சுமி தவறிப் போயிட்டா. இருபத்தெட்டாந் தேதி பன்னண்டு நாளாறது....''
"த்ஸ்....த்ஸ... பாவமே?... அப்படியாயிட்டுதா?... அப்ப...எங்கே போயி வேற ஆளைத் தேடுவது...'' என்று வந்தவர் தவிக்கின்றார் சிறிது நேரம்.
"ஆ. அவரோட வருவனே, சேதுன்னு ஒரு பையன்? அவன் கூட எல்லாம் செய்வான். அவன் விலாசம் தெரியுமா?"
"அவன் இப்ப இங்க இல்லியே? பம்பாய் போயிட்டான்" என்ற பெண்மணி சிறிது யோசனையுடன், "உங்களுக்கு ஆட்சேபமில்லைன்னா நான் வரேன். ஜாங்கிரியும் போட்ட சமையலும் கச்சிதமா முடிச்சிடுவேன். கல்யாணம், டிபன், காபின்னாத்தான் முடியாது. ஒரே சமையல்தானே?...'' என்று சொல்கிறாள்.
“நீங்களா?" சற்றே திகைக்கிறார் வந்தவர்.
"நான் எல்லாம் செய்யறத்தான். போன வாரம்கூட கவுசல்யாம்மா வீட்ல, நிச்சயதார்த்தத்துக்கு நானும் என் பெண்ணும்தான் போய்ச் செய்தோம்...'
"என்ன ரேட்டு?" –
“எழுபத்தஞ்சு... அவாள்ளாம் நூத்திருபதுன்னு நூத்தி அம்பதுன்னு வாங்குவா. ஆனா, எங்க சமையலும் அற்புதமாயிருக்கும். கொட்டாம சிந்தாம, பாழ் பண்ணாம பண்ணுவோம். தயங்காதேங்கோ. நீங்க கௌசல்யாம்மாவைக் கேட்டுப் பாருங்கோ. இதோ தெருமூலைதான்."
'ரேட்டுக்காக' வேனும் அவர் இதை ஒப்புவார் என்று அந்த அம்மை நினைக்கிறார். ஆனால் வந்தவரோ "பெண்டுகள் இந்த மாதிரிச் சமையலுக்குச் சரியில்லை. ஏதோ , திவசம், சமாராதனை என்றால் போனால் போகிறதுன்னு வைக்கலாம்" என்று திரும்பிப் போகிறார்.
உயர்ந்த சாரத்தின் மேல்முண்டாசுத் தலையும் அடர் மீசையுமாக மேஸ்திரி வசதியாக அமர்ந்த கொத்துக் கரண்டியினால் அந்த உலகை ஆள்கிறார். கூனிக்குறுகி உலர்ந்து நைந்த உழைப்பின் உருவங்களாகப் பெண்கள் சும்மாட்டுக் கந்தையின்மீது, கல்லோ, மண்ணோ , கலவையோ சுமந்து சாரத்தில் ஏறி இவர்களுக்கு உதவுகின்றனர். மேஸ்திரி அங்கு உட்கார்ந்து காபி அருந்துவார், பீடி குடிப்பார், வெற்றிலை போடுவார்; ம்; ஆகட்டும்! ஆகட்டும்! என்று 'சித்து'ப் பெண் பிள்ளைகளை அதிகாரத்துடன் முடுக்கிய வண்ணமிருப்பார். இவர்கள் கட்டுமானத்துக்கு வேண்டிய தண்ணீர் சுமக்க வேண்டும்; பெருக்க வேண்டும்; சலிக்க வேண்டும்; ஓராயிரம் பிற வேலைகளில் தங்கள் ஆற்றலைக் கரைத்து விளக்க வேண்டும். ஆனால் பெயருக்கு மெல்லியல்; ஊதியத்துக்கு வலிவில்லாதவள்.
குழுத்தலைமை, தாய்த்தலைமை, முதல்வி என்ற ஆதிமதிப்பில் இருந்து இழிந்து, வீடென்ற எல்லைகளுக்குள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற அறியாமையில் பெண் ஊறிவிட்ட பிறகு, உடலுழைப்பு இவளுக்கே உரியதாக ஒட்டிவிட்டது. கல்வி இல்லை என்றே தீர்ந்துவிட்டது. ஆதிச் சமையற்காரி, ஆதிக் குடிசைக்காரி, ஆதிப் பயிர்த் தொழிலாளி, ஆதி நெசவாளி என்று தொழில்களை வீட்டு வளைவில் செய்ய முற்பட்டவள் பெண்தான். ஆனால் இந்நாளில், உடலுழைப்புத் தொழிற்களத்திலும் இவள் ஆணுக்கு உதவியாளர் என்ற சார்பு நிலையில்தான் நிற்கிறாள். வாணிப் ரீதியில் ஒரு உற்பத்திச் சாதனம் தொழிற்களத்தில் உருவாகிறதென்றால், அங்கும் ஆண் முன்நின்று தன் மதிப்பை முதல் தரமாக்கிக் கொண்டு இவள் உழைப்பை இரண்டாம் பட்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் நிலைமையிலேயே இன்று எல்லாத் துறைகளிலும் பார்க்க முடிகிறது.
இவளுடைய கல்வி' இவளுடைய 'திறமை' இவளுடைய 'மதிப்பு அனைத்தும், உடலியல் சார்ந்ததாகவே முற்றுப்புள்ளி குத்தப்பட்டதுதான், இதற்குக் காரணம் எனலாம்.
பெண்ணுக்கும் வேள்வியில் பங்கு கொள்ள, உரிமையுண்டு; இந்த உரிமையை, ஆண், உபநயனம் போன்ற சடங்கில், திருமண காலத்தில் நல்குகிறான் என்று சொல்லப்படுகிறது.
கைத்திரிய பிராம்மணம், இதை வ்ரதோபநயனம் என்றுரைக்கிறது. இன்றளவும் கூடத் திருமணச் சடங்குகளில், 'அக்கினிக்கு முன்' கணவன்-மனைவியராக மணமக்கள்
அமர்ந்திருக்கையில், மணமகன், அவள் இடுப்பில், முப்புரிகளாலாகிய முன்ஜப்புல் (தருப்பம்?) கயிற்றைக் கட்டுகிறான். இந்தக் கயிறு 'யோக்த்ரா' ஒன்றும் கட்டுப்படுபவர், (பசு போன்ற பிராணி?) 'யாஹ்யா' என்றும் குறிப்பிடப் பெறுகின்றனர்.
இடுப்புக்குக் கீழ் அவள் தூய்மைப்படுத்தப் பெறும் சடங்கு என்றும் இதற்குப் பொருளுரைக்கப்படுகிறது.
இவளே வேள்விப் பொருள்; இவளிலிருந்து தோன்றும் சந்ததி-ஆண் வேள்வியின் பயன்.
இதை உள்ளொளியை வேட்கும் உபநயனச் சடங்குக்கு ஒத்ததென்று கூறலாமா?
இந்தச் சடங்கு விதியில் எத்தனை அரிய பொருள் பொதிந்திருக்கிறது? பெண்ணே ! உனது முக்கியத்துவம், இடுப்புக்குக் கீழ் மட்டுமேதான்? இதற்கு முன், தாய்ச் சம்பிரதாய ஒழுக்கத்தில் நீ சதந்திரமானவளாக இருந்திருக்கலாம்; ஆனால் நீ இப்போது, இந்த ஆணுக்கே கட்டுப்படுத்தப்படுகிறாய்; வளர்ப்புப் பிராணியைக் கயிறு கொண்டு பிணிப்பதுபோல உன்னைப் பிணிக்கிறோம் என்று, சொல்லாமல் அறிவுறுத்தும் சடங்கே இது 'வரதோப நயனம்' என்ற சொல், உட்பொருளை மறைக்கும் சர்க்கரைப் பூச்சு.
பெண் கல்வி என்று, கண் திறப்புச் செய்ய வேண்டிய அவசியத்தை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியல் விடுதலைக்குக் குறிவைப்புச் சாதனமாகப் பல தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஆனால் அதிலும் எத்துணை வேற்றுமைகள், கூர்ந்து நோக்கினால்?
பெண் கல்வி, பெண் மானம், என்றெல்லாம் தலைப்பிட்டுப் பெண்ணுக்காகக் குரல் கொடுத்த முதல் தமிழ் நாவல் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. ஸ்திரீகள் தங்களுக்குப் படிப்பிக்கும்படி புருஷர்களை வேண்டுவதாகப் பாடுகிறார்.
உத்தமவான்களே-சத்திய பூமான்களே,
உங்கட்குக் கண்களான பெண்களாம் எங்களுக்கு,
வித்தையைப் படிப்பியுங்கள் தயவு செய்து)
இப்படிப் படிப்பிப்பதால் நாங்கள் உங்களை மீறிப் போய் விடுவோம் என்று சிறிதும் ஐயம் கொள்ள வேண்டாம், என்று கைமேல் அடித்துப் பெண்கள் சத்தியம் செய்து கொடுப்பது போல் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது.
"கொஞ்சம் நீர் கோபஞ்செய்யில் அஞ்சிடுவோம் - எங்கள்
குற்றம் பொறுக்கச் சொல்லிக் கெஞ்சிடுவோம்
தஞ்சமதாகவுமை நம்பிடுவோம்-உம்மேல்
சாகித்தியம் செய்து தினம் கும்பிடுவோம்..!
(படிப்பு எதற்கு என்று புரிகிறதல்லவா?) பின்னும் பார்ப்போம்
“உத்தியோகம் தந்தாலும் ஒரு கைபார்ப்போம் - தினம்
உதவி செய்துங்கள் தொழில்களைத் தீர்ப்போம்
பத்தியாய் குடித்தனம் தலை ஏற்போம்- கல்வி
பாலருக்குப் போதித்து நல்வழி சேர்ப்போம்-எங்கள்
பதி நீரே-சர்வ
நிதி நீரே-தினம்
கதி நீரே-கன
மதி நீரே-நல்ல வித்தையைப் படிப்பியுங்கள்)
இரவில் நீர் தூங்கினபின் படுப்போம் நீங்கள்
எழுமுன் எழுந்து வேலைகளைத் தொடுப்போம்,
தருமவதிகள் என்று பெயர் எடுப்போம்..."
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பட்டியல் நீண்டு போகும் இனியும் தொடுத்தால் என்றாலும், இந்த வரிகளையும்விட முடியவில்லை.
எங்களுக்குக் கல்வி கொடுத்து விட்டால்,
“அடித்தாலும் முகம் கோணிச் சுழிப்போமா?- கல்லா
உதவாத கணவரானாலும் பழிப்போமோ?"
என்றும் கேட்கச் செய்கிறார் ஆசிரியர். கல்வி, கண்களை மூடிக்கொண்டு கணவன் என்ற பிம்பத்தைத் தொழுது வாழ்வதற்கே என்ற இலட்சியம் புலனாகிறது.
“பெண்ணே , நீ அச்சத்தை விட்டொழி, ஓராணுக்காக உன்னைப் பொம்மை போல் அலங்கரித்துக் கொள்ள ஒருநாளும் உடன்படாதே!” என்று அறிவுரைகள் நல்கிய காந்தியடிகள் பெண் கல்வியைக் குறித்து என்ன கருத்துத் தெரிவிக்கிறார் என்ற ஆவல் உண்டாகிறதல்லவா?
பெண் கல்வியைத் திட்டமிடும்போது, ஓர் உண்மையை மனதில் கொள்ள வேண்டும். ஆண் வீட்டுக்கு வெளியே தம்பதியின் புற உலகில், உன்னதமாகக் கருதப்பட வேண்டியவன் (Supreme). எனவே அதற்குத் தகுந்தாற் போன்று, அவனுக்கு அதிகமான கல்வியும் ஞானமும் அளிக்கப்பட வேண்டும். வீட்டு உலகம்-மனையியல் பெண்ணுக்கே உரியது. வீட்டை நிருவகிக்க, குழந்தைகளைப் பெற்று வளர்க்கக்கூடிய கல்வி அவளுக்கு அளிக்க வேண்டும்
பெண்களுக்கென்று ஏற்படுத்தப்படும் கல்விக் கூடங்களில் ஆங்கிலக் கல்வி தேவையில்லை...
ஆணும் பெண்ணும் சமமானவர்கள் தாம்; ஆனாலும் அவர்கள் தத்தம் இயல்புகள் முழுமையாகப் பரிணமிக்க, கல்வி ஒரே மாதிரி இருத்தலாகாது என்று மேலும் உரைக்கிறார் தேசத்தந்தை.
நமக்கு ஏதோ விளக்கெண்ணெய் நாவில் பட்டாற்போல் இல்லை ? இவளுடைய முழுத்திறமையும் அறிவும் ஆற்றலும், ஆணுக்கு உதவியாக, சமைத்துப் போட்டு, பணி செய்து வீட்டைப் பேணி, குழந்தைகளைப் பார்த்து... எந்த முரண்பாட்டிலும் விட்டுக் கொடுத்து, தலைவணங்கி, பொருளாதார உற்பத்தி உரிமை எல்லாம் அவனுக்கே யாக்கி.... இந்தக் கல்விதான் வலியுறுத்தப்படுகிறது.
கொஞ்சம் மாறுதலாக, விடுதலைக் காற்றை நாம் பாரதியின் வரிகளில்தான் சுவாசிக்க முடிகிறது.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்து வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை
என்றெல்லாம் தெம்பு கொடுக்கிறார். அத்துடன் கல்வியின் குறிக்கோள் ஓர் ஆணின் சுகத்துக்கு இல்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
'சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள் தீயிட்டுப்
பொசுக்கிட வேண்டுமாம்'-என்று தீர்த்து விடுகிறார்.
பின்னர், வெறும் மனையடிக் கல்வி இல்லை என்பதை.
"உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல் வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று, புதுமை கொணர்ந்திங்கே - நாங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்!'' என்று வட்டத்தை மிகப் பெரிதாக்கி விடுகிறார். இத்தனையும் செய்தபின், ஏற்றி, 'ஆண் மக்கள் போற்றிட' என்று சொல்லி அவர்கள் மனந்திரும்பிப் புதிய நெறியை ஏற்றுப் போற்றியாக வேண்டியதையும் குறிப்பாக்குகிறார்.
இது புதிய காற்று; புதிய சுவாசம்; புதிய மணம்.
தாய் முதன்மைச் சமுதாயம், கூட்டு நாயகச் சமுதாயம், தந்தையாண்மைச் சமுதாயமாகி, பிரபுத்துவ நெறி, முதலாளித்துவ நெறி என்றெல்லாம் மாற்றங்கள் சமுதாயத்தின் செயல்பாடுகளில், மக்களின், நிலைகளில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தன. வருக்க பேதங்களை நீடிக்கச் செய்யும் நியதிகளே, ஒடுக்கப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்தும் சீர்திருத்தங்களிலும் உயிரோட்டமாக இருந்து வருகின்றன. இந்த அனைத்து மாறுதல்களிலும், அன்றிலிருந்து இந்நாள் வரையிலும், இந்த உயிரோட்ட நாயகியாகத் திகழ்பவள் பெண்ணே. ஆதிப்பீடத்தில் இருந்து அடுக்களைச் சிறைக்குள் வந்த நாளிலேயே பொருளாதார உரிமை பறி போயிற்று. இவள் சார்ந்த கொம்பே, முட்களாக மாறி இவளைக் குலைத்ததையும் ஏற்றாள். சாத்திரங்களும், மரபுகளும், கலைகளும் காவி யங்களும், இவளைப் பூச்சியாகப் பதப்படுத்தவே உருவாக்கப் பட்டன. காலந்தோறும் என்ற நூற்றாண்டுகளின் பயணத்தில், இவளுடைய தெளிவான பார்வையே, மரபுகளின் மைப்பூச்சில் தன் சிறையிருக்கிறதெனலாம். சிறைச்சுவர்கள் என்று தெரியாமலே அதன் வண்ணங்களில் மயங்கிப் போகிறாள்,
"கற்பு நெறி எனக்கு மட்டுந்தானா?” என்று பாரதி என்ற மாகவிஞன் சொல்லிக் கொடுத்தும் கேட்கத் தெரியவில்லை.
அலுவலகத்து மேலாளனுக்குப் புகைக் குச்சி பற்ற வைத்து, உடலழகு தெரிய நடந்து பேசி, வாணிபச் சரக்கோடு சரக்காக அதன் மதிப்பைக் கூட்டி, பெற்ற ஊதியத்தைக் கணவனுக்குக் குடிக்கக் கொடுப்பதினால் கற்பரசியாக இருப்பதாக எண்ணுகிறாள்.
ஒழுக்கத்துக்கு அப்பால் வந்துவிட்ட கருவைத் தன்னுடைய மாசாக ஏற்றுக்கொண்டு தீக்குளிக்கத் தயங்குவதில்லை. எஞ்சியதைச் சாப்பிடவே உழைக்க வேண்டும் என்று இயங்குகிறாள்.
அன்றாடம், பெண்ணின் பெருமை பேசப்படாத அரங்கு இல்லை. ஓ, பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கும்..... எல்லாத் துறைகளிலும்....
--------------------
26. விழிமின்! எழுமின்!
"அம்மா, கனவிலே பாட்டி வந்தாங்க.... 'நல்லா இருக்கிறியான்னு கேட்டாங்க?” என்று அருமை மகள் கூறும்போது –
தாய் மகிழ்ச்சியுடன் 'அப்படியா?' என்று கேட்கவில்லை , பாட்டி, மங்கலமில்லாதவள். கைம்பெண். “அப்படியாம்மா? நல்லாருக்கியான்னு கேட்டாளா? மாரியம்மன் கோயில்ல கற்பூரம் கொளுத்தி வச்சுக் கும்பிடம்மா? ஒண்ணும் வராது!" என்று தாய் மகளின் தலையில் பரிவுடன் கையை வைக்கிறாள். "ஏம்மா? பாட்டிதானே வந்தாங்க?"
ஆமாம்மா. மாரியம்மாதா வந்திருக்கிறதாச் சொல்வாங்க. ஊரில், அங்க இங்கே அம்மை பூட்டிருக்கு. நாம பயப்படக் கூடாது. அவ நல்ல படியாப் பார்த்துப்பா...'' என்று மாரியம் மனைத் தஞ்சம் அடைகிறாள்.
இது என்ன நம்பிக்கை?
கனவிலே கட்டுக்கழுத்தி வந்தால் தெய்வ ஆசீர்வாதம், கைம்பெண் வந்தால் மரரித்தெய்வத்தின் அச்சுறுத்தலா?
தாய் வழிபாடு, தந்தைவழிச் சமுதாயமாக வந்த ஆரியர்களிடம் முதலில் இருந்ததில்லை. இந்தியப் பழங்குடி மக்களுடன் போராடியும், வென்றும், சமரசம் செய்து கொண்டும், அந்தப் பழங்குடி மரபுகளையும் கலாசாரங் களையும் தங்கள் கலாசாரங்களோடு ஏற்றுக்கொண்ட விளைவுகளையும் என்று ஊகிக்கும்படி, இன்று நம்மிடையே பல நம்பிக்கைகள் நிலவுகின்றன.
ருக் வேதப் பாடல்களில் பெண் தெய்வங்கள் போற்றப்பட்டாலும், இயற்கையின் ஆற்றல்களின் மாண்புகளே, அத்தெய்வங்களுக்கு வடிவாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. கெடுதல், அச்சுறுத்தல், உயிர்ப்பலி ஆகிய கூறுகளை அத்தெய்வ வழிபாடுகளில் காண முடியவில்லை.
மனிதன் முதன் முதல், இறப்பையும், பிறப்பையுமே தன் அறிவுக்கு எட்டாத பெருவியப்புக்குரிய நிகழ்வுகளாகக் கண்டான். ராஹுல்ஸாங்க்ருத்யாயன், தம் 'மனித சமுதாயம்' என்ற நூலில் கூறுகிறார்:
மனிதன் அடிப்பட்டதும், குருதி பெருகுகிறது; குருதி பெருகி ஓடியபிறகு, அவன் சத்திழந்து, வீழ்ந்து, மரணநிலையை அடைந்துவிடுகிறான். இதற்குப் பிறகு அவனை எழுப்ப முடியவில்லை. எனவே, குருதி அவன் அறிவுக்கு விலைமதிப் பற்ற பொருளாயிற்று. இதேபோல், பிறப்புக்குக் காரணமாக அவன் பெண்ணின் பிறப்புறுப்பை அற்புதமாகக் கருதினான். அந்தச் சின்னத்தையே வணங்கத் தலைப்பட்டான். இதுவே பின்னர், ஆணின் உறுப்புடன் சம்பந்தப்படும் இணைவாக
லிங்க வடிவாயிற்று என்று கருத்துரைப்பார். தாய் வழிபாடும், குருதிப் பலியும், ஆதிச் சமுதாயத்தின் முதல் அச்சங்களைத் தவிர்த்துக் கொள்ளும் இறை நம்பிக்கைகளாக உருவெடுத்தன. இந்தத் தொல் குடியினரின் மரபுகள் தாய்வழிச் சம்பிர தாயங்கள், இங்கே நிலவிய போது, தந்தையாண்மை சமுதாயத்தினரான ஆரியர் வந்ததும், நிகழ்ந்த மாற்றங்களும் பல்வேறு சான்றுகளால் குறிப்பிடப்பட்டிருப்பதை இதுகாறும் கண்டோம்.
சுருங்கக் கூறினால் இந்தச் சமுதாய வரலாறே, பெண்ணின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, அவள் இயக்கங்களை ஒருவழிப்படுத்த, ஓர் அடிமை மனப் பான்மையில் நிறைவு கொள்ள, பதப்படுத்தும் வரலாறாகவே வந்திருக்கிறதெனலாம்.
இந்தியாவில் தாயர் உரிமை நூலை எழுதிய, அறிஞர் எவர்ரென்ஃபெல்ஸ், குழந்தை மணம், ஆண் மேல்நிலைத் தொடர்புடைய மணம், கைம்பெண் சாத்திரம், சதி முதலிய கூறுகளை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
கற்பு என்று ஒரு நெறி, வலியுறுத்தப் பெறுகிறது. பெண்ணுக்கு மட்டுமே மாரி, பிடாரி எல்லையம்மன் என்ற சிறுபெண் தெய்வங்களனைத்தும் அந்தந்த இடத்தைச் சார்ந்த வரலாறுகள் - பல விவரங்களைத் தருகின்றன. குறிப்பாக, ரேணுகாதேவி அம்மன், மாரியின் அம்சமாகக் கருதப்படுகிறாள்.
கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் கந்தருவன் என்றும், ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா அவனைப் பார்த்து மனம் தடுமாறினாளென்றும் அதனால் மணலால் லிங்கம் பிடித்துப் பூசை செய்ய முடியாமல் கற்பு நெறி குலைந்ததால், ஜமதக்கினி முனிவர் வெகுண்டு, தனயன் பரசுராமனை அவள் சிரம் துணிக்கச் சொன்னாரென்றும் பரசுராமன் தந்தை சொல்லேற்றுத் தாயைக் கொன்றான் என்றும் கதை சொல்லப்படுகின்றது.
தந்தையின் வாக்கை நிறைவேற்ற, பரசுராமன் தாயை கோடாரியால் வெட்டிக் கொன்றான். தந்தை மனமகிழ்ந்து வரம் கேட்கச் சொல்ல தனயன் வரம்பெற்றுத் தாயை எழுப்பினான் என்பது வரலாறு.
இந்தக் கதையில் முக்கிய நெறியாகிய கற்பும், தந்தைதான் பெரியவர் என்ற நீதியும் வலியுறுத்தப்படுகின்றன.
ரேணுகை, தாய்ச் சம்பிரதாயக் கன்னியாக, சுதந்தரமாகக் கார்த்த வீரியார்ச்சுனன் என்ற க்ஷத்திரியனை விரும்பி இருக்கலாம். பெண்ணின் விருப்பமே இங்கு பறிக்கப்படுகிறது. முனிவராகிய அந்தணருக்கு மனையாட்டி என்றால், ஒடுக்கப்பட்ட துறவு வாழ்க்கை, முனிவர்கள் பல பெண்களைக் கூடலாம். ஆனால் முனிபத்தினிக்குக் கற்பு உயிரைக் காட்டிலும் பெரிதும் பெரிது. எனவே தலை துண்டிக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் பின்பகுதியில் ரேணுகா, தெய்வமாகிறாள். ஒரு தேவனுக்குத் தேவி என்றில்லாத ஆங்காரத் தேவதை தலைமட்டுமே தெரியும் அம்மன் உருவங்கள் பலவும் இவ்வாறு தாயுரிமை அழிக்கப்பட்ட வரலாற்றின் சின்னங்களாக, தந்தையாதிக்கம்-பின்னர் ஆணாதிக்கச் சமுதாய தெய்வங்களில் உயர்வரிசைகளில் இல்லாவிட்டாலும் குடித் தெய்வங்களாக, ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அநியாயமாகப் பறிக்கப்பட்ட உயிர் என்ற வகையில் இத்தெய்வங்களின் கோபமே மனிதருக்கு ஏற்படும் நோய், பிணிகளுக்கெல்லாம் காரணம் என்ற கருத்தும் நம்பிக்கையும் தோன்றியிருக்க வேண்டும். பாரதம் போன்ற வெப்பப் பிரதேசத்தில் ஏற்படும் அம்மை நோயின் கடுமைக்கு, ஆதியிலேயே இவ்வாறு தேவனற்ற ஒரு தெய்வம் காரணமாக நம்பப்பட்டு வந்திருக்கிறது.
உயிருடனிருக்கும் போது செய்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக, அவளைத் தெய்வமாக்கிவிடும் நடப்பே இங்கு தொடர்ந்து வந்திருக்கிறது என்று கருதலாம். ருக்வேதப் பெண் தெய்வங்கள், பல புதல்வர்களுக்கு அன்னையராக, சகோ தரிகள் புதல்வியர் என்ற நிலையில் விளங்குகின்றனர்.
ஆனால், கொற்றவை, பகவதி, போன்ற இந்தத் தெய்வங்கள் அவ்வாறு ஆண் தொடர்பு இல்லாத நிலையில், உக்கிர சக்தி வடிவங்களாகவே திகழ்கின்றனர். பிற்காலத்தில், இந்த இரு மரபுகளும் இன்னும் பந்தப்படும் வகையில், காளி, பரமசிவனின் தேவியென்றும் திருமாலின் சோதரி என்றும் சமுதாயத்தின் உயர்வருண-மேல்படி மக்களும் வழிபடற் குரியவர்களாக இணைக்கப்பட்டனர் என்று ஊகிக்கலாம்.
சிவசக்தி நடனம் என்ற ஒரு புராண வரலாறு, இன்றும் தில்லை நடராசப் பெருமானையும், அங்கு ஏற்கெனவே கோயில் கொண்டிருந்த எல்லைக் காளியையும் தொடர்புபடுத்திக் காட்டும். காளி அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்தாள். நடராசப் பெருமாள் அங்கு வந்ததும் இடத்துக்காக ஒரு போட்டி நடனம் தொடங்கியது. நடனத்தில், காளி அற்புதமாக ஆடினாள். நடராசப் பெருமானால் காளியை வெல்ல முடியும் என்று தோன்றவில்லை. அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ஒரு காலை ஆகாயத்தில் தூக்கினார். இந்த நடனத்தைப் பெண்ணாகிய காளியினால் பின்பற்ற முடியவில்லை. எனவே தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். இடத்தை விட்டுக் கொடுத்து எல்லைக்கு அப்பால் சென்றாள் என்பது வரலாறு.
பெண்ணை , இத்தகைய , கற்பொழுக்கம் சார்ந்த, ஒரு வரையறையில் பிணிப்பதை இந்நிகழ்வு அறிவுறுத்துகிறது. அவள் காலைத் தூக்கி ஆடும் ஆட்டத்துக்குப் பாலியல் சார்ந்த ஒரு பொருளைச் சுட்டி, அவளைக் கட்டுப்படுத்துகிறது. அவளுடைய சுதந்திரத்தின் நாணம் என்ற ஒரு கடிவாளக் கயிறைப் பூட்டும் இந்த நெறி பெண்ணுக்குரிய அடிமைக் கலாசார மரபின் முதல் பிணிப்பாகப் புகுத்தப்பட்டது. இந்த நாணம் அவளைத் தன்னை எப்போதும் பாலியல் தொடர்பான ஓர் எண்ணத்திலேயே அமிழ்த்திக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து, அச்சம், அறியாமை என்ற எல்லாம் அவளுடைய 'குண நலன்களாக' வரையறுக்கப்பட்டு விட்டன. 'பேதைமை என்பது மாதர்க் கணிகலம்' என்று போற்றப்பட்ட போது, கண்மூடிய அஞ்ஞானத்துடன், அதில் மகிழ்ந்து போயிற்று, இந்தப் பெண்குலம். இன்றும், அது தொடர்ந்து வருகிறது.
துர்க்கை , காளி, பராசக்தி, மாரி என்ற தாய் வழிபாட்டுத் தெய்வங்கள் இந்நாளில், மூலை முடுக்குகள் விடாமல் பல பெயர்களில் கோயில் கொண்டுள்ளனர். சந்தோஷி மாக்கள், சீதளா தேவியர், கண்ண கி, பகவதி, என்று நாடு முழுதும், இத்தெய்வ வழிபாடுகள் அணிமைக் காலங்களில் செல்வாக்குடன் பரவி வருவதைக் காண்கிறோம்.
இந்த வழிபாட்டில், அதிகமாகப் பங்கு பெறுபவர் பெண்களே. கூட்டம் கூட்டமாகப் பெண் மக்கள் குழுமுகிறார்கள். புகழ்பெற்ற தேசியத் தலைநகரில் உள்ள கோயில் துர்க்கையம்மனுக்கு இராகுகால அபிஷேகம். குடம் குடமாகப் பால் வந்திறங்கி ஒரு வெண்மைப் புரட்சியையே, நீர்க்கால்களில் அவிழ்த்து விடுகிறது. அணியணியாகப் பெண்கள், கன்னியர், வந்த வண்ணமிருக்கிறார்கள். இக்கன்னியர், ஸல்வார்-கமீஸ், அணிந்து வருகிறார்கள்; தாய் மொழியில் பேசுவதைக் கூட அநாகரிகமாகக் கருதுகிறார்கள்.
இவர்கள் ஸ்டெதஸ்கோப் பிடிப்பவர்களாக இருக்கலாம், காரோட்டலாம்; பேனா பிடிக்கலாம், ஆணையிடும் அதிகார பதவியைப் பெற்றிருக்கலாம். நீதிமன்றங்களில் வழக்காடு பவர்களாக இருக்கலாம். இங்கே வரும் வருக்கத்தினர் அனைவரும், சமுதாய அளவில் முன்னணியில் நிற்பவர்களே. ஆனால் இந்தப் பெண்கள், எலுமிச்சம்பழத்தைக் கொண்டுவந்து மூடிகளாக்கி, சாற்றைக் கல்லில் பிழிந்துவிட்டுக் கிண்ணம் போல் திருப்பி, கையில் கொண்டுவந்த குப்பி நெய்யை அதில் கவிழ்த்து, திரி போட்டு துர்க்கை சந்நிதியில் விளக்கு ஏற்றிவிட்டு மூன்றோ ஐந்தோ சுற்றுக்கள் சுற்றி விட்டும் போகிறார்கள். ஏன்? பிரார்த்தனை.
கருமாரி கோவிலிலோ, மாங்காட்டு அன்னையின் கோவிலிலோ ஞாயிற்றுக்கிழமைப் பேருந்தகளில் வந்து குவியும் கன்னியரோ, தாயரோ ஏராளம்...
இவர்கள் அனைவரும் இந்த உக்கிர தேவிகளை வழிபடுவதற்குரிய பிரார்த்தனை எதுவாக இருக்கும்?
தாயே, உனது கடாட்சம், என் துணிவுக்கு ஆதரவாக இருக்கட்டும், என்று கேட்கிறார்களா? உனது வீரியத்தை, உனது ஆற்றலை தனித்து நிற்கும் உன் செம்மையை எங்களுக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார்களா? கயமையும் மோசடியும் நிறைந்த இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில், அஞ்சியஞ்சி ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் ஊறு வராமலிருக்க வேண்டுமே என்று சாகாமல் செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, இந்த மூடக் கட்டுப்பாடுகளையும் மூத்த பொய்மைகளையும் உடைத்தெறிய வல்லமை தா என்று வரம் நாடி வருகின்றனரா?
இந்த வரங்களெல்லாம் கேட்கவும்கூட, அவர்கள் தாங்களாகச் சிந்திக்க வேண்டுமே?...
இவர்களை இந்த வழிபாட்டைச் செய்ய ஆணை யிட்டிருப்பவர்கள், காவியுடைச் சாமியார்களோ, தாடி மீசை, உருத்திராட்சப் பூசாரிகளோ தாமே?
ஆறு வாரம் எலுமிச்சை விளக்கேற்றுங்கள்; அதற்குள் மங்கள மஞ்சள் ஏறத் திருமணம் நிச்சயமாகும்.
ஆறு வாரம் அம்பாள் சந்நிதியில், மஞ்சள் சரடு கொண்டு கட்டுங்கள், உங்கள் புதல்வியின் கழுத்தில் மஞ்சள் சரடு தவழும்.
இராகுகாலப் பூசை, அபிசேகம் செய்யுங்கள், உங்கள் போக போக்யங்களை அனுபவிக்க ஒருவன் வந்து குதிப்பான்!
அம்மன் சந்நிதிகளில் எத்தனை மஞ்சள் சரடுகள்? எனது, உடல் உள்ளம், திறமை, பொருள், எல்லாவற்றின் மீதும் ஓர் ஆணின் முடிச்சு இறுகட்டும்; அவன் ஆதிக்கம் என்னைச் சிறைப்படுத்தட்டும், என்னை ஓர் ஆண் குழந்தைக்குத் தாயாக்கட்டும்.... கண்களை மூடிக்கொண்டு, மூடத்தலத்திலேயே இவர்களை வழிநடத்திச் செல்வதில், சமயச் சக்திகள் விழிப்புடன் இருக்கின்றன.
ஆயிரமாயிரமாகக் கல்லூரிகளில் கல்வி கற்றும் தொழில் செய்தும், சமத்துவம் சமத்துவம் என்று முழங்கியும், இவர்கள் அறிவுக் கண்கள், இரண்டாம் பட்ச மயக்கத்தையே சொர்க்கம் என்று எண்ணி மயங்கிக் கொண்டிருக்கிறது. நான் ஏன் இந்தச் செய்கைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்கும் அறிவு சுத்தமாக மூடிக் கிடக்கிறது.
வரதட்சணைக் கொலைகள், குரூரக் கற்பழிப்புக்கள் ஒழிக்கப்பட்டது என்று நினைத்திருந்த 'ஸதி' எரிப்பின் மீட்சிகள், பெண் சிசுக் கொலைகள், பெண் கருவழிப்புக்கள் எல்லாம், ஒரு பக்கம் ஓங்கி வரும் பெண் எழுச்சிக் கருத்துக்களை, ஓங்கி அடித்து அமுக்கும் ஆதிக்கத்தின் எதிரொலிகளே. ஆனால் 'காலந்தோறும்' வரலாறாகத் தொடர்ந்து வந்திருக்கும் அடக்குமுறை ஆதிக்கக் கூறுகள், சமயப் போர்வை போர்த்தாலும், சாத்திரப் போர்வை போர்த்தாலும், அது கிழிபட்டு வீழும் நாள் அருகாமையிலேயே இருக்கின்றதென்று நம்புவோம். புதிய சமுதாய சமத்து வத்துக்குப் பெண்ணே வழியமைப்பாள்.
-------------------
ராஜம் கிருஷ்ணனின் பிற படைப்புகள்
கூடுகள்
பாதையில் பதிந்த அடிகள்
அழுக்கு
தோட்டக்காரி
மண்ணகத்துப் பூந்துளிகள்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
கோபுர பொம்மைகள்
ஆண்களோடு பெண்களும்
புதிய சிறகுகள்
சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசுபெற்றது)
வீடு
கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது)
முள்ளும் மலர்ந்தது
விலங்குகள்
வேருக்கு நீர் (சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
பெண் குரல் (கலைமகள் பரிசு பெற்றது)
புயலின் மையம்
மானுடத்தின் மகரந்தங்கள்
கூட்டுக் குஞ்சுகள்
இறுதியும் தொடக்கமும்
அலைவாய்க்கரையில்
ரோஜா இதழ்கள்
குறிஞ்சித்தேன்
வளைக்கரம் (சோவியத் நாடு நேரு பரிசு பெற்றது)
சிறுகதைத் தொகுதி
களம்
கனவு
அவள் (சரஸ்வதி பரிசு பெற்றது)
வரலாறு
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
கட்டுரை
காலந்தோறும் பெண்மை
காந்தி தரிசனம்
யாதுமாகி நின்றாய்
------------- ----------