pm logo

புதிய திரிபுரங்கள்‌
சு. சமுத்திரம்‌


putiya tirupurangkaL (novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format



Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புதிய திரிபுரங்கள்
சு. சமுத்திரம்‌


Source:
புதிய திரிபுரங்கள்‌
சு. சமுத்திரம்‌
கங்கை புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர்‌, சென்னை 600 017
கங்கை முதற்‌ பதிப்பு: செப்டம்பர்‌ 1997
உரிமை : ஆசிரியருக்கு
விலை ரூ, 25-00

Title . PUDHIYA THIRIPURANGAL
Subject : Novel
Language : Tamil
Author: SU. SAMUTHIRAM
Edition : First Edition September, 1997
Pages : 156
Price : Rs. 25-00
Published by : GANGA! PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street, Thiyagarayanagar, Chennai-600 017
நேரு அச்சகம்‌, 43, அம்மையப்பன்‌ தெரு, சென்னை--600 014
----------------
பதிப்புரை

திரிபுரம்‌ எரித்த விரிசடைக்‌ கடவுளான சிவபெருமானின்‌ நடராஜ தாண்டவத்தைப்‌ பார்த்து சு. சமுத்திரத்திற்கு ஒரு பொறி தட்டிற்று போலும்‌.

கொடியவனும்‌, அரக்சுனுமான முயலகனைக்‌ காலால்‌ மிதித்து, கையிலே இச்சட்டி ஏந்தி உக்கரத்தோடு நடனமிடும்‌ நடராஜப்‌ பெருமானின்‌ திருக்கோலம்‌, சமுத்திரத்திற்கு ஒரு இவிரவாதக்‌ கதை உருவாகக்‌ காரணமாகிறது.

கொடியவர்களாகவும்‌ கொலை பாதகர்‌களாகவும்‌ உள்ள ஒரு கட்டுமானக்‌ காண்ட்ராக்ட்‌ நிறுவனத்தன்‌ முறைகேடான செயல்களை எதிர்த்துப்‌ போராட ஒரு இளைஞல்‌ 26 வாறான்‌. தொழிலாளர்களின்‌ உழைப்பால்‌ கொழுத்து வாழும்‌ 'காண்ட்ராக்டர்‌”களின்‌ கொடுமைகளைத்‌ தட்டிக்‌ கேட்கப்‌ புறப்படும்‌. அந்து இளைஞன்‌, ஈஸ்வர சன்னதியில்‌ சாமியாரால்‌ ஆர்வதிக்கப்பட்டுக்‌ காரியத்தில்‌ இறங்குகிறான்‌.

பல்வேறு கருத்துக்களால்‌ சிதைந்து கிடக்கும்‌ தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, தொழிற்‌ சங்கம்‌ அமைத்து, உரிமைகளுக்காகப்‌ போராட்டம்‌ நடத்த முனையும்போது, அவனுக்கும்‌, அவன்‌ காதலிக்கும்‌ காண்ட்ராக்டர்களால்‌ இழைக்கப்‌பட்ட கொடுமையைக்‌ கண்டு ஈஸ்வர பூஜை செய்துகொண்டிருந்த சாமியாரே கொதித்தெழுகிறார்‌.

காவியடையைக்‌ களைந்துவிட்டு காக்கியுடை. அணிந்து, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்‌கொள்ளப்‌ புறப்படுகிறார்‌.

இதில்‌ இடம்பெறும்‌ இன்னொரு நாவலான “கேள்வித்‌ தீ' எனும்‌ குறுநாவலும்‌ ஒரு குருதிப்‌ புனல்தான்‌.

கல்விக்கூடத்தை தநிர்வகிப்பவன்‌ ஒருவனின்‌ கயமைத்தனத்தையும்‌, பகலுணவுக்கு : வரும்‌ உணவுப்‌ பொருள்களை விற்றுவிட்டு ஆட்டம்‌ போடும்‌ அயோக்கியத்தனத்தையும்‌, அதற்கு உடந்தையாக இருக்கும்‌ அதிகாரியையும்‌, இவர்‌களின்‌ கூட்டுச்‌ சதியை தட்டிக்‌ கேட்கும்‌ ஆசிரியர்‌ களை வேலைநீக்கம்‌ செய்யும்‌ அராஜகத்தையும்‌, எதிர்த்துப்‌ போராடும்‌ ஆசிரியர்களின்‌ போராட்‌டங்களையும்‌ ஆ௫ரியர்‌ சமுத்திரம்‌ அவர்கள்‌ வேசமாகவும்‌ கோபமாகவும்‌ எழுதிக்‌ காட்டுகிறார்‌. படிக்கும்‌ வாசகர்களையும்‌ கொதிக்க வைக்‌கிறார்‌. புதிய திரிபுரங்களும்‌' 'கேள்வித்‌ தீவும்‌” வாசகர்களின்‌ மனதில்‌ ஒரு கோபத்‌ தீயை மூட்டிவிடும்‌ என்பது நிச்சயம்‌,

கங்கை புத்தக நிலையத்தார்‌
--------------

புதிய திரிபுரங்கள் -அத்தியாயம் 1

பிரகாரம், கொடிக்கம்பம், பலிபீடம், கருவறை என்று ஆகம விதிப்படி அமைந்த ஆலயமல்ல, என்றாலும் ஆத்மார்ந்த விதிப்படி அமைக்கப்பட்டது போல ஜீவகளை சொட்டும் சிறு கோவில். தனிப்பெரும் ஜோதியான அருட்பெரும் ஜோதியே, அங்கே மூன்று பக்கம் மலையாகவும் முன்பக்கம் அருவியாகவும், ஒரு பக்கம் சமவெளிக்கு இட்டுச்செல்லும் மலைச்சரிவுப் பாதை யாகவும், மரம் செடி கொடிகளாகவும், மண்மேல் முகிழ்த்த தாவர சங்கமமாகவும், விண்மேல் முளைத்த வெள்ளிகளாகவும், ஒன்றில் பலதாய், பலதில் ஒன்றாய், தோன்றுவது அறியாத தோற்றங்காட்டி நிற்பது போல, நடப்பதுபோல, நிலையின்றி தாவுதல் போல, ஆட்சி செலுத்துவதாய் தோன்றும். இயல்பாக ஏற்பட்ட அந்த மலைக்குகையில் உள்ள லிங்கம், எப்போது ஸ்தாபிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது. மாடு, ‘ம்மா’ என்று கூப்பிடும்போது எப்படி வாயைத் திறந்து வைத்திருக்குமோ அப்படி இருந்தது அந்தக் குகை. மத்தியில் லிங்கம். குகைவாய் முனையில், கல்லால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை லிங்கத்திற்குப் பின்னால், குகையின் பின் புறச் சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் திரிசூலம்; குன்றின் முனைப்பில் நந்தி, ஆவுடையாரை ஒட்டி ஒரு சதுரக்கல். அந்தக் கல்லின் மேல் விபூதி சிதறிய சிறிய தட்டு. இவைதான் கோவிலாகவும், கோவிலைச் சார்ந்த சொத்துக்களாகவும் உருவமானவை.

நடுநிசி வேளை.

புல்லில் படர்ந்த பனி, லிங்க வடிவுகளாகத் தோற்றம் காட்டின. குகைக்குக் கிழக்குப் பக்கத்தில் துவார பாலகன் போலிருந்த ‘துங்குமூஞ்சி மரம்’ “நான் ஒன்றும் தூங்கும் மரமல்ல” என்று சொல்வதுபோல், இரண்டு மூன்று கிளைகள், மூன்று மூன்று கம்புகளாகப் பிரிந்து, முடிந்து, திரிசூலம் போல் தோன்ற, அந்த மரத்தின் இலை தழைகளுக்கு ஊடே உற்றுப்பார்த்தால், ஆகாயம் பல்வேறு ஸ்படிக லிங்கங்களாகத் தெரியும். பிரபஞ்ச வெளியில், லிங்க வடிவுக்கு ஒத்துவராத பகுதிகளை மரத்தின் சின்னஞ்சிறு இலைதழைகள் மறைத்து, ஊனக் கண்ணுக்கு ஞான ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. குகைக் கோவிலுக்கு எதிர்ப்புறத்திலுள்ள குன்றிற்கு மேலே சஞ்சரித்த மேகம், விஸ்வரூப லிங்கமாகத் தோன்றியது. அரூபத்தில் தான், மனதிற்கேற்ற ரூபங்களைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது போல, ரூப மற்றவை ரூபங்களாயின. மனமே பிரம்மாகவும், பிரம்மமே மனமாகவும் ஐக்கியப்பட்ட சதாசிவ நிலை நீ சதா... சிவம்... இதனால்தான் நாங்களும் சும்மா இருக்கிறோம் என்று உரைப்பது போல் காட்டு மிருகங்கள் கூட கண்ணயர்ந்தும், மரங்களில் துயில் கொண்ட பறவைகள், இறக்கைகளைப் பறக்கும் நிலையில் வைத்துக் கொண்டும் இருந்தன. ‘நீ ஆடுகின்ற அரசன். சுழற்சி வேகத்தின் உச்சகட்டமே - அசைவுகளின் பேரசைவே - தாண்டவம். பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அது நிற்பதுபோல் தோன்றுவது மாதிரி, உன் இயக்க வேகத்தால் ஏற்படும் ஸ்தம்பன மாயையை, இந்த பறவைகளும் மிருகங்களும் ‘சும்மா இருத்தல்’ என்று தவறாகப் புரிந்திருக்கின்றன. ஆனால் நான் அப்படி இல்லை. என் வேலை உன்னைப் போல், உன்னருளாலே சதா இயங்குவதே’ என்று, குகைக்குத் தென் பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவி, தன் இரைச்சலால் பேசிக் கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த அருவி மலையில் உலர்த்திப் போட்டிருக்கும் வெள்ளாடைபோல் தெரிந்தது.

அருவி சொல்லாமல் சொல்வதை தான் செய்யாமல் இருந்ததற்கு பிராயச்சித்தம் செய்வதுபோல், குகைக்கு எதிர்த்தாற் போலிருந்த குன்றின் சரிவில் உள்ள குடிசைக் கதவு, சத்தத்தை எழுப்பிக் கொண்டு திறக்கிறது. கதவை இழுத்துத் திறந்ததால், அதில் ஏற்பட்ட அதிர்வுகள சப்த அலைகளாகி அருவியோசையின் அலைகளோடு, இரண்டறக் கலந்து பிரபஞ்ச அசைவிற்கு தாள லயமாய் லயிக்கின்றன.

குடிசைக்கு வெளியே வந்த, காவி வேட்டி கட்டிய சாமியார், கதவைச் சாத்துவதற்கு முன்னதாக, கண்ணுக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கிய தன் குருநாதரின் காவி வேட்டியையும், மேலங்கியையும் விழியாடாது பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, கரங்குவித்து, தலையை லேசாகத் தாழ்த்தி பிறகு உயர்த்திவிட்டு, குகைக் கோவிலைப் பார்த்து மட மடவென்று நடந்தார். அப்படி நடக்கும்போது, இரண்டு கால் பெரு விரல்களுக்கு மேலே, அவற்றிற்கு அடுத்த விரல்களை மடக்கிப் போட்டுக்கொண்டே நடந்தார். குருநாதர் சொல்லிக் கொடுத்தது. பழைய காலத்து சாமியார்களைப் போல், காலில் கட்டைகளைப் போடாமல் விரல் மடித்து நடந்தாலும், இருந்தாலும் இச்சா சக்தி குறிப்பாக பாலுணர்வு போய்விடும் என்று அவர் சொன்ன உபதேசத்தின்படி நடந்து நடந்து பழகியவர்; இப்போது அந்தப் பழக்கமே, தன்னையறியாத ஒரு வழக்கமாக, தன் பாட்டுக்கு செய்து கொண்டிருப்பவர்.

சாமியார் கோவில் முன்னால் வந்து, இடுப்பில் செருகியிருந்த விபூதிப் பையை எடுத்து, திருநீரை இரண்டு தோளுக்குப் பக்கமாகவும், தலையிலும் போட்டுவிட்டு,‘சிவாய நம...’ என்று தனக்குள்ளேயே கூவிக்கொண்டு பிறகு திருநீரை எடுத்து நெற்றி நிறைய பூசிக்கொண்டே, அருவியைப் பார்த்துப் போனார். ஆடைகளைக் களைந்து விட்டு, லங்கோட்டுடன் அருவியில் இறங்கி அப்படியே உட்கார்ந்தார். ‘ஓ குருநாதா... ஓம் நமச்சிவாய நமக... ஓம்சிவாய நம...’ என்று அவர் சொல்லச் சொல்ல, அப்படி அவர் சொல்வது தடைபடக் கூடாது என்பதுபோல், தலையில் விழுந்த அருவி நீர், அவர் வாய்க்குள் போகாமல் தோளிலும், மார்பிலுமாகச் சிதறியது.

குளித்து முடித்த சாமியார் கோவிலுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் நடராஜர் சிலையையே உற்றுப் பார்த்துவிட்டு, நந்தியையும் வணங்கிவிட்டு மீண்டும் விபூதியைப் பூசிக்கொண்டு, லிங்கத்திற்கு அருகே இருந்த சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார். இாண்டு கைகளையும் மார்புடன் சேர்த்து வளைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக இருந்த உள்ளங்கைகளை அடிவயிற்றில் வைத்தபடி லேசாகக் கண்ணை மூடினார். அவர் மேனியை வியாபித்த காவியாடை நிலவொளியில் கிட்ட த்தட்ட மரப்பட்டைபோல் தோன்றியது. இன்னொரு விதத்தில் ஆசனம் போட்ட கால்களே ஆவுடையாராகவும், முதுகு லிங்கமாகவும் தெரிந்தது. சாமியாருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். உள்நோக்கிப் பாய்ந்த வயிறு. வெளி நோக்கி நிமிர்ந்த தோள்கள். நுனி சிவந்த மூக்கு. இரும்புத் தூணுக்கு சிவப்பு வர்ணம் திட்டியது போன்ற கழுத்து. குருநாதரின் ஆக்ஞையில் மேற்கொண்ட ஆசனப் பயிற்சிகள், அவர் தன் உடம்பை தானே உணர முடியாத நிலையில், உடம்புக் கூடு வேறு, அதில் உறையும் ஆன்மா வேறு என்று அவரே மிக மெல்லியதாய் அறியும் நிலையில் வைத்திருந்தன.

கண்களை மூடிக்கொண்ட சாமியார் காதுகளிலும், அந்த காதுகள் வழியாக நெஞ்சுக்குள்ளும், எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாடிய சிவதோததிரப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அந்தப் பாடல்களின் ஒவ்வொரு வரியும், அவரை மேலே மேலே உயர்த்திக் கொண்டிருந்தது. ஆன்மா உடம்பை விட்டு விலகி, அருகே உள்ள லிங்கத்தைச் சுற்றிச் சுற்றி சுழல்வது போன்ற ஆனந்தப் பரவசம். சவத்தை விட்டு சிவத்திடம் போனது போன்ற மெய்யானந்தம், தான் வேறு, ஈசன் வேறல்ல என்ற பரசிவ நிலை. சிவதோத்திரப் பாடல்கள் காதுகளில் கச்சிதமாக ஒலித்தன.

“அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்” என்ற வடலூர் வள்ளலாரின் பாடலையும், அருணகிரி நாதரின் ‘நாதவிந்துகலாதி நமோ நமோ’ என்ற பாடலையும், வானொலியில் கேட்கும் போதெல்லாம், அப்போது சென்னையில் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக இருந்த ராமையா அப்படியே மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார். சாமியாராய் மாறிய பிறகு இந்த பாடல்களைக் கேட்கப் பல தடவை ஏங்கியுமிருக்கிறார். ஒரு தடவை கோவிலுக்கு வந்த ஒருவரிடம், தன் அபிலாஷையை சிறு குழந்தையைப் போல் தெரியப் படுத்தினார். எங்கேயாவது தன்னை கூட்டிக்கொண்டு போய் இந்தப் பாடல்களை தான் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த பக்தர், சிரித்துக் கொண்டே போனார். ஒரு வாரத்தில், ஒரு டேப் ரிக்கார்டையும், இரண்டு டேப்புக்களையும் கொண்டு வந்து சாமியாரிடம் பயபக்தியோடு கொடுத்தார். ஏற்கெனவே டேப் ரிக்கார்டர் இயங்கும் விதத்தை சென்னையிலேயே தெரிந்து வைத்திருந்த சாமியார், அதைக் கொடுத்தவரை, இயக்கச்சொல்லி, நன்றாகத் தெரிந்து கொண்டார். கோவிலுக்குள் இருக்கும் போதும், குடிசைக்குள் முடங்கும்போதும், சதா இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருந்தார். இதனால், இதர நாமாவளிப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் கூட அவர் மரபுப்படி முணங்கவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. அல்லும் பகலும், இந்தப் பாடல்களைப் போட்டுப் போட்டுக் கேட்பதில், டேப்புக்கள் மட்டுமல்ல, டேப் ரிக்கார்டர் கூட தேய்ந்துவிட்டது. இன்றும் அவை ஒலிக்கும் நிலையிலேயே இருந்தாலும், சாமியாருக்கு அவை தேவைப்படவில்லை.

இப்போது அவர் காதுகளுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் இந்தப் பாடல்கள், நினைத்த போதெல்லாம் முன்பு கேட்டதைவிட, நன்றாகத் தெளிவாக ஒலிக்கின்றன. குறிப்பாக கோவிலுக்குள் வந்து பத்மாசனம் போட்ட உடனேயே யாரோ அருகில் இருந்து பாடுவதுபோல், அவர் காதுகளில் ஒலிக்கும். சாமியார் கூட, சில சமயம் நம்பாதவர் போல் சுற்றும் முற்றும் பார்ப்பார். டேப்பில் வாங்கிய பாடல்களை நெஞ்சம் வேண்டும் போதெல்லாம் எதிரொலிக்கத் துவங்கியது. அதுவும் அசலைவிட நகல் சிறப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தால், எது அசல், எது நகல் என்பதில் கூட அவருக்கு சந்தேகம் வந்தது. இந்த அசல் - நகல் ஆராய்ச்சியே, மனிதன், கடவுளை தன்னைப்போல் நகலெடுத்தானா அல்லது கடவுள் தன் நகலை மனித உருவில் படைத்தானா என்ற வேதாந்த தத்துவத்திற்குள் இறக்கியது. “அழியாதது எதுவோ அதுவே அசல். ஆனால் ஒருவன் இறக்கிறான். அவனின் புகைப்படமே நிலைக்கிறது. இப்படி அசல் அழிவதும் நகல் நிலைப்பதுமாக இருந்தால், இந்த அசல் நகலுக்கு அப்பால் அழியாத ஒன்று இருக்க வேண்டும். அது தான் சிவமயம்... நிஜமான அசல். இந்த அசலின் நகல்தான் அத்தனையும். முற்றிலும் நகல்படுத்த முடியாதது எதுவோ அதுவே அசலான அசல். அதுவே சர்வாம்ச சிவம்” என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர், அம்மாக்காரி சொல்லிக் கொடுக்காமலே வீட்டுக்கணக்கை சரியாகப் போட்டுவிட்டு, தாயை புன்னகைத்து நெருங்கும் குழந்தையைப் போல, அவர், மரித்துப்போன குருநாதரின் காவி வேட்டியையே உற்றுப் பார்த்திருக்கிறார். பிறகு, தன்னை அறியாமலே தாரை தாரையாக வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர், தானே சிந்தித்து எடுத்த ஒரு தத்துவ முடிவைக் கேட்க அவர் இல்லாமல் போய்விட்டாரே! என்று அழுதுமிருக்கிறார்.

சாமியாரின் மனதில் லிங்காஷ்ட பாடல்கள் முடிந்து, வள்ளலாரின் பாடலும் வந்து போய், அருணகிரிநாதரின் பாடல், டி.எம். செளந்தரராஜனின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வேத சொரூபனான முருகனை, நெஞ்சில் உருவகப் படுத்தி, அவன் கைகாட்டி அபயம் கொடுப்பதுபோல் உருவகமாக்கி, கண்களில் இருந்து பக்தி மழை பொழியப் பொழிய, பரவசத்துள் பரச்சிததாய், தன் மெய் பொய்யாக, ஞானப்பண்டிதனின் மெய்யோடு கலந்தவராய், தன்னை மறப்பதே தன்னையறிதல் என்ற தத்துவ சூட்சுமத்தில், சாமியார் சுக்கிலமாய் மாறிக் கொண்டிருந்த போது, பாறை வெடித்ததுபோல், பயங்கரமான குரல் ஒன்று கேட்டது.

“ஏய்... ஈஸ்வரா... ஒன்கிட்ட எத்தன நாளாடா கேக்குறேன்? என் நோவக் குணப்படுத்துன்னு கூட கேட்கலே... என்னை அவஸ்தை இல்லாம சாகடின்னு சொல்லுறேன். ஏண்டா கேட்கமாட்டேங்கே... ஒன் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தணும். உன் எதிருல... தூக்குப் போட்டுச் சாகப் போறேனா... இல்லியான்னு பாருடா... தேவடியா மவனே...”

சாமியார் திடுக்கிட்டுக் கண் விழித்தார். கோவிலுக்கு வெளியே, கத்தியதில் களைத்துப் போய் ஒரு தொழு நோயாளி நின்று கொண்டிருந்தார். உடம்பெங்கும் வெந்து போனது போன்ற சதைக் கட்டிகள். குறுகிக் கொண்டிருக்கும் அவயவங்கள். இந்த நோயாளியை, சாமியார் கடந்த ஆறு மாத காலமாகப் பார்க்கிறார். வாரத்தில் ஒரு தடவை, எப்போதாவது வருவார். அதுவும், தான் கோவிலுக்குள் இருந்தால், சற்று தொலைவில் பதுங்கி இருப்பவர் போல் இருந்து விட்டு, தான் போகும் போது, தட்டுத் தடுமாறி பயபக்தியுடன் எழுந்து கோவிலுக்கு சற்று முன்னால் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டுப் போகிறவர். அவருக்கு இன்றைக்கு என்ன வந்தது?

சாமியார், அந்த தொழு நோயாளியையே வெறித்துப் பார்த்தார். ‘ஈஸ்வர நிந்தனை பாவம்... மகா பாவம்...’ என்று சொல்லக்கூட நினைத்து, பிறகு மெளனமாக அவரைப் பார்த்தார். ஒருவேளை தன்னைத்தான் அவர் அப்படித் திட்டினாரோ என்று நினைத்தவர் போல், சற்று மோவாயை உயர்த்திப் பார்த்தார். இதற்குள், சுய நினைவுக்கு வந்தவர்போல் தோன்றிய அந்த உருக்குலைந்த நோயாளி, கண்களால் கெஞ்சி, கைகளால் கும்பிட்டு, உடைந்த குரலில் ஒப்பாரி வைப்பது போல் பேசினார்.

“மன்னிச்சுடு சாமீ... நானும் நடையா நடக்கேன்... இவன் சீக்கிரமா கூட்டிக்கிட்டு போகமாட்டக்கான்... ஒங்க நிஷ்டையக் கலைச்சிட்டேன்... நான் பாவி...”

அந்த நோயாளி தன்னைத் திட்டவில்லை என்பதில் ஆறுதல் பட்டவர்போல் சாமியார், லேசாகப் புன்னகைத்தார். பிறகு, ஈஸ்வரனைத் திட்டினாலும பரவாயில்லை, தன்னைத் திட்டலாகாது என்ற எண்ணம் ஏற்பட்டதற்காக, அந்த எண்ணத்தைத் தோற்றுவித்த நெஞ்சை, கையால் குத்திக் கொண்டே ஆதங்கத்தோடு கேட்டார்.

“நீ என் நிஷ்டையைக் கலைக்கல... ஏன்னா நான் இன்னும் நிஷ்டை நிலைக்குப் போகிற அளவுக்கு ஈஸ்வர கிருபை கிடைக்காதவன்... ஆனாலும் ஈஸ்வரனை சொல்லக்கூடாத வார்த்தையால...”

சாமியார், நோயாளி சொன்ன வார்த்தையைச் சொல்ல முடியாமல் அவஸ்தைப் பட்டபோது, அந்த நோயாளி சகஜமாகப் பதிலளித்தார்.

“ஈஸ்வரன அப்படிச் சொன்னா பாவமில்ல சாமீ... அவன் அனந்தன்... அப்பனும் அம்மாவும் இல்லாதவன்... இருந்தாலும்... இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன் சாமீ...”

சாமியார் நிமிர்ந்து பார்த்தபோது அந்த நோயாளி வேகவேகமாய் நடந்து மறைந்து விட்டார். கூனிக் குறுகிச் செல்லும் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாமியார் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு, அருணகிரி நாதரின் பாடலைக் கேட்கப் போனார். அந்தப் பாடலே இப்போதும் ஒலித்தாலும், முன்போல தெளிவாக ஒலிக்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடையே, அந்த தொழு நோயாளியும் வந்தார்... அதுவும் ஈஸ்வரனை நிந்திக்கும் பேச்சோடு. திடுக்கிட்ட சாமியார், கண் திறந்து மூச்சை நிறுத்தி நிறுத்தி விட்டார். ‘அவன் கர்ம வினையை... அவன் அனுபவிக்கான்... ஈஸ்வரன் என்ன செய்வான்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு, மீண்டும் கண்களை மூடினார். முருக தோத்திரப் பாடலுக்குப் பதிலாக, ஒரு தடவை அவர் குருநாதர் உபதேசித்தது இப்போது பெரும் முழக்கத்தோடு ஒலித்தது.

“மகனே! கர்மவினை என்று இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது. கண் முன்னாலேயே திருடிய ஒருவன் அளவுக்கு மீறி அடிபடும் போது கூட இரக்கப்படுவது மனித இயல்பு. அதுதான் ஈஸ்வரத்தன்மை. எப்போவோ ஒரு பிறவியில் ஒருவன் எதையோ செய்தான் என்பதற்காக அவன் இந்தப் பிறவியில் கர்மாவின் பலனை அனுபவிப்பான் என்று நினைத்து அப்படி அவனை அனுபவிக்க விடுவதும் அலட்சியப்படுத்துவதும் முறையல்ல. அது ஈஸ்வர திருவுள்ளமும் அல்ல...”

சாமியாரால், கோவிலுக்குள், ஒருமித்த உள்ளத்துடன் இருக்க முடியவில்லை. ‘ஈஸ்வரா... என்னைவிட இந்த தொழுநோயாளி எவ்வளவோ மேலானவன். உன்மேல் உரிமையுடன் கோபித்து, நிந்தாஸ்துதி செய்தான். மனிதர்கள், காலனிடமிருந்து தப்புவதற்காக உன்னை தஞ்சமடையும்போது, அவனோ உன்னிடம் ‘காலனை ஏன் காட்டல...’ என்று கேட்கிறான். அந்த நோயாளிக்கு கருணை காட்டக் கூடாதா... மருந்தாகவோ அல்லது மரணமாகவோ வரப்படாதா...’

அருவி நீர் கூடிய தடாகத்தில், ஒரு மரத்தின் கொம்பு ஒடிந்து, சலனச் சத்தம் கேட்டது.

சாமியார் எழுந்தார். பறவைகளும் ஒலியெழுப்பத் துவங்கிவிட்டன. குடிசைக்குப் போய், அருகேயுள்ள நந்தியாவட்டச் செடிகளிலிருந்து, பூப் பறித்து மாலை தொடுக்க வேண்டும். தூரத்துக் கிராமத்தில் இருந்து, ஒரு சிறுவன் பால் கொண்டு வந்துவிடுவான். அவன் வரவும், இவர் மாலை தொடுத்து முடிக்கவும் சரியாக இருக்கும். பூஜையைத் துவக்கும் நேரமும் வந்துவிடும்.

குடிசைப் பக்கமாகப் போன சாமியார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கையில் மாலையுடனும், சந்தனம் குவிந்த ஆலிலையுடனும் கோவிலுக்குள் வந்தார். அங்கே, கிராமத்துச் சிறுவன் பாலுடன் தயாராக இருந்தான். எளிமையான அபிஷேகம் முடிந்து லிங்கம் இன்னொரு கிழிந்த வேட்டியால் அலங்காரம் செய்யப்பட்டு, லிங்கத்திற்கு மேல் விபூதியும், விபூதிமேல் சந்தனமும், சந்தனத்திற்குமேல் குங்குமமும் வைக்கப்பட்டு, சாமியார் கற்பூரம் ஏற்றியபோது -

“ஈஸ்வரா... நீதாண்டா கேட்கணும்... நீதான் கேட்கணும் சின்ன வயசிலேயே புருஷன பறிகொடுத்தாலும், கற்பு தவறாம நடந்தேன். கையில கழுத்துல இருந்த நகை யெல்லாம் விற்று அவரோட தம்பிங்கள படிக்க வச்சேன். இதனால, பிறந்த வீட்டு கோபத்துக்குக் கூட ஆளானேன். அதைப்பற்றிக் கவலப்படாம இருந்த என்னை... என் மச்சினன்மாரே ரெக்கை முளைச்ச தைரியத்துல அடிச்சி விரட்டிட்டாங்க... சொத்துமில்லாம... பத்துமில்லாமப் போயிட்டேன்... இந்த வயசிலே எங்கப்பா போவேன்... ஈஸ்வரா... எங்கே போவேன்?’’

உணர்வுகளைப் போல், கிழிசல்களையே சேலையாய் அணிந்த ஒரு பெண், துக்கித்த கண்களுடன், நீர் மல்க நின்று கொண்டிருந்தாள். சாமியார் கற்பூரத்தை ஏற்றாமல் அந்த நடுத்தர வயதுப் பெண்ணையே பார்த்தார். தானே அங்கே பெண்ணாகி நிற்பதுபோல் ஒரு பிரமை. தான் மட்டுமே பட்டதாக நினைத்த ஒரு கொடிய அனுபவம், தனக்கு மட்டுமே ஏகபோகமானதல்ல என்ற நினைப்பு, ஆறுதலையும் ஆதங்கத்தையும் கொண்டுவர, அவர் மனதை நிலைப்படுத்திக் கொண்டு கற்பூரத்தை ஏற்றினார். பிறகு புற நிகழ்ச்சிகளால் தன் மனம் பாதிக்கப்படுவதை உணர்ந்து, அதை வழிப்படுத்த நினைத்தவர் போல் ஏதோ ஒரு வைராக்கியத்துடன் கண்களை மூடிக்கொண்டு, வடமொழியின் சாஸ்திரங்களிலும், தமிழ்மொழியின் தோத்திரங்களிலும் எழுந்தருளி ‘சாத்திரமும் தோத்திரமுமாய் ஆன ஈசனை’ நெஞ்சிற்குக் கொண்டுவந்து, நெஞ்சற தியானித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர் கண் விழித்துப் பார்த்தபோது, அவர் கண்கள் தானாகவே அந்த புலம்பிய பெண் இருந்த இடத்தை நோக்கின. அந்த இடமோ அவள் உட்கார்ந்த சுவடில்லாமலேயே வெறுமையாக இருந்தது. சாமியார் தன் விருப்பத்திற்கு எதிராகவே எழுந்து, கோயிலுக்கு வெளியே வந்து, சற்று நடந்து அந்தப் பெண் இருக்கிறாளா என்பதுபோல் பார்த்தார். அவளைக் காணவில்லை. மீண்டும் கோவிலுக்குள் வந்து சதுரக் கல்லில் உட்கார்ந்தார். இப்போது அவரது சொந்த அனுபவமே அவரிடம் பேசியது.
------------

புதிய திரிபுரங்கள் - அத்தியாயம் 2

எழுத்தறிவில்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் தலை மகனாய்ப் பிறப்பதே பாவம். அந்தத் தலைமகன், அரை குறையாகப் படித்துவிட்டு, அன்றாடம் அடுப்பை மட்டும் எரிய வைக்கும் மாதச் சம்பளத்தில் இருப்பது கொடிய பாவம். அவன் இந்த லட்சணத்தில் நேர்மையாய் இருந்தால் தொலைந்தான். முதல் பிள்ளை, அலுவலகத் தில் ஒவ்வொரு நாளும் தங்கம் தங்கமாக வெட்டியெடுத்து விற்பதாகவும், அவன் குடும்பம் செய்த ‘நன்றியை’ மறந்து தங்களை மறந்து விட்டதாகவும் குடும்பத்தினர் நினைப்பார்கள். அப்படிப்பட்ட நினைப்பு அவர்களுக்கு வரவில்லையானாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். உத்தியோகத்திற்காகப் போடப்படும் வெள்ளைச் சட்டை, உறவுக்காரர்களுக்கு அவனிடம் ‘கறுப்புப் பணம்’ இருப்பதுபோல் காட்டும்.

இப்படிப்பட்ட ஏழ்மையும் அறியாமையும் இணைந்த ஒரு பின்னணியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எப்படியோ கஷ்டப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி. தேறி சென்னையில், அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் தந்தை கண்ணை மூட, நண்டும் சிண்டுமாக இருந்த தம்பி தங்கைகளை கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். நேர்மையை வழிபட்ட அவருக்கு அலுவலகத்தில் உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவங்கள் நிறைய கிடைத்தன. இதனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் கிடைத்த இரண்டு உத்தியோக உயர்வுகளும், அவருக்கு, ஒரு எக்ஸ்டிரா இன்கிரிமெண்டைத்தான் கொடுத்ததே தவிர, கணிசமான சம்பள மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ஊர் வாய்க்குப் பயந்தும், உண்மையான பாசத்தின் உந்துதலாலும், இரண்டு தங்கைகளையும் சக்திக்கு மீறி செலவழித்து நல்ல இடங்களில் சேர்ப்பித்தார். தம்பிகள் இருவரையும், சென்னைக்குக் கொண்டு வந்து படிக்க வைத்தார். ஒருவன் எஞ்ஜினியரிங் டிப்ளமா. இன்னொருவன் அசல் எஞ்ஜினியர். (இப்போது, டிப்ளமாக்காரன், எஞ்ஜினியரை விட சம்பளத்திலும், கிம்பளத்திலும், அதிக உயரத்தில் கொடியைக் கட்டியிருப்பது வேறு விஷயம்.) படித்த மாப்பிள்ளைக்கு மனைவியாகப் போகும் பெருமிதத்தில் ராமையா நீட்டிய கயிற்றுக்கு பிற பெண்கள் மரபுப்படி தாழ்த்து முன்னாலேயே, தானாகவே கழுத்தைத் தாழ்த்திக் கொடுத்த அவர் மனைவி, மைத்துனன்மார்களின் துணிகளைக் கூட, தானே ஒருத்தியாய் துவைத்துப் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக, முதலில்கொதித்தாள். இரண்டாவதாக அழுதாள். மூன்றாவதாக முனங்கினாள். இறுதியில் இதுதான் வாழ்க்கை என்று புரிந்துகொண்டு அதை ஏற்றுக் கொண்டாள். ஒரு சின்ன வீட்டில் இருந்த கூட்ட நெரிசலிலும் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பையன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது, அவன் ‘சித்தப்பாக்கள்’ தங்களை முன்பு மதிக்காத உறவுக்காரர்களிடமே பெண் வாங்கி மதிப்படைந்தார்கள். அண்ணன், மகனைப் படிக்க வைக்க, தங்களிடம் பணம் கேட்டாலும் கேட்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட ‘டிப்ளமா’ தம்பி ‘நம்ம... ராஜை காலேஜுக்கு... அனுப்பாண்டாம் அண்ணா... பாவம் எங்கள படிக்க வைக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டிங்க... இன்னும் கஷ்டப்படுறதுல நியாயமில்ல... அதனால... அவனை... ஏதாவது வேலையில சேர்த்துடுங்க...’ என்ற போது, ராமையா பொறுத்துக் கொண்டார். ஆனால் குற்றேவல்காரியாகப் பணியாற்றிய, அவர் மனைவி ‘ஒங்க வீட்டுக்கு பிச்சைக்கு வரமாட்டோம்பா. ஒங்க கண் முன்னாலேயே என் மகனைப் படிக்க வச்சுக் காட்டுறேன் பாரு... மொதல்ல வீட்டைவிட்டு வெளியேறு’ என்றாள்.

ராமையா எதுவும் பேசவில்லை. அண்ணன் தட்டிக் கேட்காத கொடுமையில், தம்பி வெளியேறினான். இன்னொரு தம்பியும் சௌகரியத்தை முன்னிட்டு அவனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டான். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ‘ஒன்னையாடா இந்தப் பய இப்படிக் கேட்டான்’ என்று கேட்க வேண்டிய ராமையாவின் அம்மாவே, தன் மூத்த மகனிடம் வந்து ‘ஒன் பெண்டாட்டிய பேசவச்சு... என் மகனை விரட்டிட்டே. இப்போவாவது ஒன் மனசு குளிர்ந்துதா?’ என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள் இளைய மகன் ஒருவன் வீட்டுக்கு. பாவம்... சின்ன மருமகள் கைக்குழந்தைக்காரி... ஒத்தாசை செய்ய ஓடிவிட்டாள்.

ராமையாவுக்கு அம்மா சொன்னதுபோல் உள்ளம் குளிரவில்லை. அதற்கு அதிகமாகவே உறைத்தது. மகனை கல்லூரியில் சேர்ந்தார். அவன் பி.யூ.சி.யில் முதல் வகுப்பில் தேறினாலும் எஞ்ஜினியரிங் கல்லூரியை எட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. (அட்மிஷனுக்கு பத்தாயிரம் வேண்டுமே!) அந்தப் பையனும் அம்மா போட்ட சபதத்தை பொய்யாக்க விரும்பாதவன் போல் நண்பர்களுடன் போன ஒரு உல்லாசப் பயணத்தின் போது, விபத்தில் உயிரிழந்தான். அவன் அம்மா, ‘இதையாவது என் இஷ்டப்படி நடக்க விடுங்க’ என்று சொல்வதுபோல் மகன் இறந்த நான்கு நாட்களில் கணவர் எங்கேயோ போயிருந்த போது, அவள் எண்ணெயை ஊற்றி தன்னையே கொளுத்திக் கொண்டாள். அவளைப் போல் உணர்வுகளும் சாம்பலாக, தனித்து விடப்பட்ட ராமையாவை தம்பிகள் மீண்டும் மொய்த்தார்கள். அண்ணனைத் தனியாய் தவிக்க விடலாமா... அவன் இன்சூரன்ஸ், ஜி.பி.எஃப்., கிராஜுவிட்டி பணத்தை வைத்துக் கொண்டு தனியாக செலவழித்து அவஸ்தைப்பட வைக்கலாமா... இதில் அவனுக்கு ஒத்தாசை பண்ணாண்டாமா...

ராமையா ஒத்தாசைக்கு இடம் வைக்கவில்லை.

ஒரு மாதம் விடுமுறை போட்டுவிட்டு எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இந்தப் பக்கமாக வந்தார். இந்தக் கோவிலில் சைவப்பழம் போல் தோன்றிய சாமியாரிடம் அழுது தீர்த்தார். அந்தப் பெரியவர் ‘ஈஸ்வரன்கிட்ட வந்துட்டே... இனிமேல் எல்லாவற்றையும் அவன் பார்த்துக்குவான்’ என்று சொல்லி அவருக்கு விபூதி பூசினார். ராமையாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இப்போது அந்த வேலை எப்படி இருக்கோ... யார் பார்க்கிறார்களோ...

சாமியாருடனேயே தங்கிய ராமையா, அவருக்கு பூஜையின் போது உதவினார். கால்களைப் பிடித்துவிட்டார். அவர் சொல்லும் தத்துவங்களையெல்லாம் தன்னை மறந்து கேட்டுக் கொண்டார். பூஜையின் போது இதை எடு என்று சொல்வதற்கு முன்னாலேயே, பூஜைப் பொருட்களைக் குறிப்பறிந்து எடுத்துக் கொடுக்கும் ராமையாவை சாமியாருக்குப் பிடித்துப் போய்விட்டது. அதோடு சாமுத்திரிகா லட்சணப்படி, ஆன்மீகத்திற்காக அமைந்தவர் போலவும் சிஷ்யர் தோன்றினார். ஒரு நாள் - நல்லதோர் பௌர்ணமி தினத்தில், சாமியார் ராமையாவை இந்த அருவிநீர் விழும் தடாகத்தில் இடுப்பளவு தண்ணீரில் நிறுத்தினார். ஏதோ சில மந்திரங்களைச் சொல்லச் சொன்னார். பிறகு தான் உடுத்திய காவி வேட்டியை நீட்டி, அவரை அணியச் சொன்னார். அதன் பின் தன் கழுத்தில் கிடந்த ஒரு ருத்ராட்ச மாலையைப் போட்டுவிட்டார். பின்னர் நெற்றி நிறைய அவருக்கு விபூதி பூசி, ‘சிவா அர்ப்பணம்... சிவா அர்ப்பணம்’ என்று சொன்னபோது உணர்ச்சிப் பேரியக்கத்தில் உந்தப்பட்ட ராமையா, நீரென்றும் பார்க்காமல், ‘குருநாதா... என் அம்மையே... அப்பனே’ என்று தழுதழுத்தக் குரலில் சொல்லிக் கொண்டே நீருக்குள் நெருஞ்சாண்கிடையாக விழுந்து, குருநாதனின் பாதங்களைப் பற்றிக் கொண்டார்.

அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்திவிட்டு, சாமியார் “மகனே... மந்திரம் தந்திரம் யந்திரம் என்று எதுவும் வேண்டாம். இப்போது நான் சொன்னவையெல்லாம், உன் மனதை வழிப்படுத்தும் பயிற்சிச் சொற்கள்தான். தேசக்கொடியை நாம் வணங்குவதால், தேசம், அந்த சின்னக் கொடிக்குள் அடங்கிவிட்டதாக எப்படி நினைக்க மாட்டோமோ, அப்படி ஈஸ்வரன் இந்த மந்திரத்துள் அடங்கிவிட்டதாக நினைக்கலாகாது. அவன் அனைத்தையும் கடந்தவன். அவனை உணர, ‘மூட’ பக்திக்கு இணையானது எதுவும் இல்லை. எந்தச் சித்தும் இல்லை. யோகமும் இல்லை. எனக்கு வழி காட்டும் ஈஸ்வரன், உனக்கும் காட்டுவான். நான் காத்திருந்தது வீண் போகவில்லை” என்று சொல்லிவிட்டு அவரை ஆலயத்துள் அழைத்துச் சென்றார்.

ராமையா சிட்சை பெற்ற ஆறு மாதத்திற்குள் பெரிய சாமியார் இறந்துவிட்டார். தூரத்து கிராம மக்கள், அவரை விமரிசையாக அடக்கம் செய்ததுடன், சின்னச் சாமியாரையும் மரியாதையுடன் பார்த்தார்கள். இவரும் குருநாதரின் ஒரு ஜோடி காவி ஆடையை குடிசைக்குள்ளேயே வைத்து பூஜித்து அவரது நினைவைப் போக்கிக் கொண்டே, ஈஸ்வர சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் இன்றைக்கு அந்தத் தொழுநோயாளியும், அதற்குப் பிறகு வந்த அந்த நடுத்தர வயது மாதும், அவர் உள்ளத்தை நிலைகுலைய வைத்துவிட்டனர். போதாக்குறைக்கு நான்கு மாதத்திற்கு முன்பு அந்த இடத்திற்கு ‘பிக்னிக்குக்காக’ வந்த ஒரு கூட்டம், இப்போது அடுக்கடுக்காக பல கூட்டங்களை அழைத்து வருகிறது. தண்ணீரில் குளிக்க ‘தண்ணி’யோடு வருபவர்களும் உண்டு. அத்துடன் அருகில் ஓடும் காட்டாற்றை மடக்கி, அணை கட்டுவதற்காக, அரசின் ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. எஞ்ஜினியர்கள், தொழிலாளர்கள் ‘டெண்ட்’ போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காண்ட்ராக்டர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், மலைச்சரிவுகளில் குடிசைகள் போட்டுக் கொண்டு முடங்கிக் கிடக்கிறார்கள். எல்லோரும் இந்த அருவியில் குளிக்க வந்துவிடுவார்கள். இவர்களைப் பார்த்ததும், சொந்த அனுபவத்தால், மனித சமூகம் மீதே வெறுப்புற்ற சாமியார், ஜனத்திரளைப் பார்த்ததும் குடிசைக்குப் போய்விடுவார்.

சொந்த அனுபவத்தைத் தின்றுகொண்டோ அல்லது தின்னப்பட்டோ தவித்த சாமியார், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்த மனிதர்கள். இப்போது அருவியை நோக்கிக் கூட்டமாய் போனபோது, கோவிலை விட்டுக் குடிசைக்குப் போனார். ஆனால் நெஞ்சில் பதிந்து அந்தத் தொழு நோயாளியும், நடுத்தர வயது மாதும் போக மறுத்தனர். எந்த ஸ்லோகத்தை நினைத்தாலும், இந்த மனித ஸ்லோகங்கள் அதை விழுங்கிக் கொண்டு நின்றன.
-------------

புதிய திரிபுரங்கள் - அத்தியாயம் 3

ஒரு வாரம் போன இடம் தெரியவில்லை.

சாமியார் கடுமையான யோகப் பயிற்சிகளால், மனித ஸ்லோகங்களில் இருந்துவிட்டு, மஹேஸ்வர ஸ்லோகத்திற்கு வந்துவிட்டார்.

இனிமேல் எது வந்தாலும், அது மனமென்ற மலையில் மோதி சுக்கு நூறாகும் என்று மூக்கின் நுனியைப் பார்த்துப் பார்த்து ஓரளவு பெருமிதப்பட்ட சாமியாருக்கு, இன்னொரு நிகழ்ச்சி, வேறொரு மனப் பூதத்தைக் கிளப்பியது.

மாலை வெயில், மங்கிய இருட்டாக மாறிக்கொண்டிருந்த வேளை, சாமியார் பூஜையை முடித்துவிட்டு, குடிசைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அருவியில் குளித்த கோலத்தோடு, ஒரு வாலிபனும், இளம் பெண்ணும், கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் நின்று, லிங்கத்தையா, சாமியாரையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, கரங்கூப்பி, உடல் வளைந்து நின்றனர். அந்தப் பெண்ணும் அவனும் நின்ற தோரணை, சர்வேஸ்வரன் - சர்வேஸ்வரிபோல், சாமியாருக்குத் தோன்றியது. உரமேறிய உடலில், பூவேறிய மேனி ஒட்ட நின்ற அந்த ஜோடி, அவரைப் பார்த்து லேசாக விலகியது. சாமியார், அந்த வாலிபனை உற்று நோக்கினார். இறந்து போன மகனின் சாயல். ஏதோ ஒன்று அவர், நெஞ்சு திரண்டு, குரல்வளையைப் பிடித்தது. கிழிந்த வேட்டியின் கம்பீரமான தார்ப்பாய்ச்சலோடு நின்றவனுக்கு, மானசீகமாக, பேன்ட் - சட்டை போட்டு, கையில் ஒரு கடிகாரமும் கட்டி, அழகு பார்த்தார். அவன் தான்... அவனே தான்...

லோகாயுகத்தில் தடுமாறி விழப்போய், எதையோ, தாங்கிப் பிடித்தவர் போல், சாமியார், மூக்கின் நுனியை, கண்களால் நோக்கினார். பிறகு, புருவ மத்தியில், கண் நோக்கைப் பாய்ச்சினார். ஆனாலும், அவரால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

“உன் பேரென்னப்பா?”

அந்தச் சாமியாரை அடிக்கடி பார்த்திருக்கும் அந்த வாலிபன் - பேசியறியாத - பேச்சறியாத தன்னையும், சாமியாரையும் மாறி மாறிப் பார்த்தான். அவனாலும் ஏதோ பேச முடியவில்லை. அந்தப் பெண், அவன் விலாவில் இடித்து அவனை பதிலளிக்கச் சொல்வதுபோல் தோன்றியது. அவனும் சாமியாரை, சிரத்தையோடு பார்த்தபடி சொன்னான்.

“வேல்சாமிங்க...”

“என்ன வேலை பார்க்கிறப்பா?”

“இந்த அணைக்கட்டுல... ஒரு காண்டிராக்டர்கிட்ட கொத்துவேல பார்க்கேமுங்க.”

“சம்பளமெல்லாம் எப்படிங்க...”

இப்போது வேல்சாமி, சங்கோஜமில்லாமல் பதிலளித்தான்.

“காண்டிராக்டர் கொடுக்கிற சம்பளத்தையும், அவன் எங்கள மாதிரி ஆட்கள படுத்துற பாட்டையும் நினைச்சால், கோவிலுக்கு வரத் தோணாதுங்க... கோவிலுன்னு ஒண்ணு இருக்குமான்னு நினைக்கவும் தோணுங்க...”

வேறு யாராவது அப்படிப் பேசியிருந்தால், சாமியார் பதில் பேசாமல் போயிருப்பார். ஏதோ அவன் பேச்சு அவரைக் குத்தவில்லை. சந்தம் வார்த்தைகளிலும், சாந்தம் முகத்திலும் நடனமாட சிரித்தபடி ஏதோ பேசப் போனபோது, அவன், அவள் விலா இடி தாளாமல், மன்னிப்புக் கோரும் தோரணையில் பேசினான்.

“தப்பாப் பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சாமி!”

சாமியார் அவனையே உற்றுப் பார்த்தார். ‘தப்பாய் பேசியிருந்தால்’ என்கிறானே தவிர, பேசியது தப்பென்று நினைக்கவில்லை. கெட்டிக்காரப் பையன்... என் மகனும் இப்படித்தான்.

சாமியார் சந்தம் வார்த்தைகளிலாட, சாந்தம் முகத்திலாட சிரித்தபடி பேசினார்.

“காய் வெளிப்படத் துவங்கியதும் பூவுதிர்வதுபோல், ஒருவனுக்கு ஞானம் முதிரும்போது, கோவில் உதிரும். நீ... எதையும் தப்பாவும் பேசல - புதிதாகவும் பேசல... இன்னும் சொல்லப்போனால், கோவில் தேவையில்லாத ஒரு காலம் வர வேண்டும். உலகமே கோவிலாகவும், நாமெல்லாம் முக்திகளாகவும் மாறும் காலம் வர வேண்டும். பூமியே ஆவுடையாராகவும், ஆகாய வெளியே லிங்கமாகவும் அனுமானிக்கப்படும் காலம் வர வேண்டும்!”

தன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போன சாமியார், தான் பேசுவது அவனுக்குப் புரியாது என்பதைப் புரிந்து கொண்டவர் போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார். அந்தப் பெண், ஏதோ ஒன்றில் இருந்து விடுபட மனமில்லாமல் விடுபட்டவள் போலவும், அந்த வாலிபன், சாமியாரிடமிருந்து விடுதலை பெற்றவன் போலவும் தத்தம் தலைகளை, ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டார்கள்.

“சரி... ரெண்டுபேரும் கோவிலுக்குள்ள வாங்க... விபூதி வாங்கிக்கலாமா?” அவள் முன்னேறுவது போலவும் அவன் பின்னேறுவது போலவும் தோன்றியது. சாமியார், சிரித்தபடி அழைத்தார்.

“சும்மா வாப்பா... இது அணைக்கட்டுமல்ல... இந்த லிங்கநாதர் காண்டிராக்டரும் இல்ல... வெறுப்பை எல்லாம் வெளியே விட்டுவிட்டு வாங்கோ.”

லேசாகத் தயங்கியவனின் கையை, வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துக்கொண்டு, அந்தப் பெண் கோவிலுக்குள் வந்தாள். அதைப் பார்த்து சாமியாருக்கு வேடிக்கையாகவும் இருந்தது. இந்த நாட்டில், பக்தி பெண்களால்தான் காக்கப்படுகிறது... இவனும் கொஞ்ச நாளில், ‘என் சம்சாரத்துக்காக... கோவிலுக்குப் போனேனாக்கும், என்று பேசத் துவங்கலாம்.

வருவோர், போவோரை, தட்டில் இருந்து விபூதியை எடுத்துக் கொள்ளச் சொல்லும் சாமியார் அவர்கள் இருவருக்கும், கைநிறைய விபூதி எடுத்து, நெற்றி நிறையப் பூசினார். அப்படிப் பூசும்போது, ‘சிவ சிவா’ என்றூம் சொல்லிக் கொண்டார்.

சாமியார் கொடுத்த சலுகையில் தைரியம் பெற்றவள் போல், அவள், அவரை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு, தன்னையறியாமலே, அவர் காலில் விழுந்தாள். மனிதன் மற்றவர் காலில் விழுந்து விழுந்தே காலால் நசுக்கப் பட்டான் அல்லது காலை வாரினான் என்பதை தெள்ளப் புரிந்தவன் போல் தயங்கியபடியே, கீழே குனிந்தவளைப் பார்த்த வேல்சாமியும், அவள், தன் காலில் கிள்ளியதாலோ, அல்லது சாமியாரின் அருட்பார்வை கொடுத்த செல்லக் கிள்ளலிலோ, தன்னையறியாமலே சாமியார் காலில் விழுந்தான்.

சாமியார், இருவரையும் தூக்கிப் பிடித்து நிமிர்த்திய போது, அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் கழுத்தில் எதுவும் இல்லை. சந்தேகத்துடனும், சங்கோஜத்துடனும் கேட்டார்.

“குழந்தை... ஒனக்கு... என்ன வேணும்பா?”

வேல்சாமி நாணிப்பட்டபடியே பதிலளித்தான்.

“நான் கட்டிக்கப்போற பொண்ணுங்க.”

“பேஷ்! சொந்தமா?”

“சொந்தமல்ல பந்தம்தான் சாமி... எங்களுக்குத் தெரியாதா, சொந்தத்துக்குப் பந்தமோ பந்தத்துக்கு சொந்தமோ தேவையில்லிங்க. இன்னும் கேட்டால்... அவள் எந்த ஜாதின்னு எனக்கோ நான் எந்த ஜாதின்னு அவளுக்கோ தெரியாது. நான் சொல்றது சாமிக்கு விரசமாப் பட்டால் மன்னிச்சிடணும்.”

சாமியார், விரசமில்லாமல் சிரித்தபடியே பேசினார்.

“மனிதனுக்கு... ஜாதி கூடாது என்கிற ஜாதியைச் சேர்ந்தவன் நான்... நீ, சாமியார்னா, வைதிகமுன்னு தப்பா நினைக்கே. அப்படி நீ நினைக்கிறதுலயும் தப்பில்ல. பிராமணர்களும், சைவ வேளாளர்களும் கடைபிடிக்கிற அனுஷ்டானங்களையும், கோவில் வழிபாடுகளையும் வைத்து நீ மதத்தை எடைபோடுற... ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ... ஒரு மதவாதியை வைத்து மதத்தை எடை போடக்கூடாது. ஒரு மதத்தை வைத்து மகேஸ்வரனை எடை போடக்கூடாது. சர்வேஸ்வரனுக்கு ஜாதி கிடையாது. அவன் பிள்ளைகளுக்கு மட்டும் எப்படி ஜாதி வரும்?”

வேல்சாமி, அவரைத் திடுக்கிட்டுப் பார்த்தான். முழங்காலளவு வேட்டியுடன், வைரப்பட்ட எலும்புக்கூடு போல் தோன்றிய அந்த சாமியாரின் எளிமையின் பொருளைப் புரிந்துகொண்டவன் போல், உடலை குனிந்து, அவரை உற்று நோக்கினான். இதற்குள் அந்தப் பெண் சாமியாரின் அன்பினால் அன்னியோன்னியப்பட்டவள் போல், சரளமாகவும், சகஜமாகவும் பேசினாள்.

“மகான் தரிசனம் பாப விமோசனமுன்னும் பெரியவங்க சொல்லுவாங்க சாமி. நீங்க... விபூதி கொடுத்த பிறகாவது இதுக்கு நல்ல புத்தி வருமுன்னு நினைக்கேன் சாமி.”

சாமியார் அவனை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே, அவளிடம் கேட்டார்.

“அவனைப் பார்த்தால் நல்லவன்மாதிரி தோணுது... அப்படி என்னம்மா அடாவடி பண்ணுறான்?”

“பின்ன என்ன சாமி... வந்த இடத்துல... நாம உண்டு... நம்ம பிழைப்பு உண்டுன்னு இருக்காமல் காண்டிராக்டருக்கிட்ட இருக்கிற வேலையாட்களை சேர்த்து யூனியன் வைக்கப் போறேன்னு சொல்லுது. நேத்துகூட இதுக்கும் ஒரு சூப்பர்வைசருக்கும் அடிதடி வராத குறை. இந்த காண்டிராக்டருங்க பொல்லாத பாவிங்க சாமி! சர்க்கார் எஞ்ஜினியருங்களே... இவங்ககிட்ட சலாம் போடுறாங்க. அவங்ககிட்ட ‘இது’ மோத முடியுமா? ஏற்கனவே இதமாதிரி குதிச்ச இரண்டு மூணுபேரை... லாரியால அடிச்சி, போற இடம் தெரியாம போக்கிட்டதா ஜாடைமாடையா பேசுறாங்க. இதுக்கு ஒண்ணு ஆச்சுதுன்னா... என் நிலம என்னாகிறது சாமி? சரி என்னவிடுங்க. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இதப் பெத்துட்டு... கண்ணு தெரியாம இத்தோட ஆத்தா கிடக்கிறாள். அந்தம்மா நிலைமை என்னாகிறது. நீங்களாவது புத்தி சொல்லுங்க சாமி.”

வாலைச் சிரிப்போடு, வார்த்தெடுத்த உடம்போடு அந்தப் பெண், இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். சகலமும் துறந்த சாமியார், துடித்துப் போனவர் போல் ‘என்னம்மா குழந்தே...’ என்று சொல்லியபடியே, லிங்கத்தைப் பார்த்தார். வேல்சாமி, அவள் அழுவதால் வெகுண்டவன் போல், சாமியாரைப் பாதியும் அவளை மீதியும் நோக்கியபடி உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.

“நீங்களும் உலக நடப்புல இருந்து விடுபட்டுத் தான் சாமியாராய் ஆகியிருப்பீங்க. ஒங்களுக்குத் தெரியாதது இல்ல சாமி... நான் சொல்றதைக் கேக்கணும். அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கட்டுப்படறேன்.”

அவன் தொடர்ந்தான்.

“நாமெல்லாம் சர்வேஸ்வரன் பிள்ளைங்க என்கிறது நிஜமுன்னால், இவ்வளவு போலித்தனங்கள் எதுக்காக இருக்கணும்? அதுவும் போலித்தனங்கள் பேசுறவன்களோ புண்ணியவான்கள் மாதிரி பேசுறது... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறது மாதிரி ஆயிடுது. ஈஸ்வரன் ஒருவன் இருந்தால், அவன் இந்த நிலைமைகளை அனுமதித்தால், அவன் தேவையே இல்லையோன்னுகூட எண்ணத் தோணுது சாமி.”

“இப்போ... என்னை மாதிரி ஏழையானவர்கள் நிலையை எடுத்துக்குங்க. இந்த அணைக்கட்டுமான வேல கோடிக்கணக்கான பணத்துல, பல காண்டிராக்டருங்கிட்ட பிரிச்சு கொடுத்திருக்கு. நான் ‘மேன்ஷன்’ காண்டிராக்டருகிட்ட இருக்கேன். ஏழு வருஷமா தினக்கூலி... கேஷுவல்லேபர். டெய்லி எட்டுரூபாய் சம்பளம். லீவு கிடையாது மருத்துவ வசதி கிடையாது. பி.டபிள்யு.டி. தொழிலாளிங்களுக்காவது குவார்ட்டஸ் இருக்கு. யூனியனும் இருக்கு. நாங்க இருக்கது சேரும் சகதியும் நிறைஞ்ச குடிசை. கொசுத்தொல்ல தாங்க முடியல. ஒரு கம்பளி கிடையாது, கட்டிலு கிடையாது. எட்டுமணி நேர வேலைன்னு பேரு. பனிரெண்டு மணி நேர வேல. எங்களுக்கு வேட்டியே போர்வை. கொசுவே தோழன். நோயே உடன்பிறப்பு. பலர் காசநோய்ல கிடக்காங்க. பலர் செத்தே போயிட்டாங்க. எங்க பிள்ளைங்களும் படிக்க வேண்டாமா? பள்ளிக்கூடத்துல, கேசுவல் தொழிலாளி பிள்ளைங்களுடன் கேசுவலா கூட போக முடியாது. எங்களுக்கு எட்டு ரூபாய் கூலி, காண்டிராக்டருக்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம். நாங்க லாபத்துல பங்கு கேட்கல... உழைப்புக்கு ஏத்த கூலி கூட கேட்கல. உயிரு உடம்புல இருக்கக்கூடிய அளவுக்கு வசதி கேட்டோம். இதுக்காக சிதறிக் கிடக்கிற கேசுவல் தொழிலாளிகளை யூனியன் சேர்க்க நினைச்சேன். இது தப்பா சாமி? இந்த நிலைமை இங்க மட்டுமில்ல சாமி... நாடு முழுதும் இருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி மெட்ராஸ்ல ஒரு கம்பெனில மெக்கானிக்காய் இருந்தேன். சர்க்கார் வண்டி எந்த ரோட்லயாவது ரிப்பேர்ல நிற்கும். நான் போய் ரிப்பேர் பார்த்துட்டு வருவேன். எனக்கு ஏழு ரூபாய் கூலி - கம்பெனியில் போடுற நூறு ரூபாய்க்கு. பாத்திங்களா சாமி! இது ஈஸ்வரனுக்கு அடுக்குமா சாமி! அந்த பீடை வேண்டாமுன்னு இங்கே வந்தால்... இதுவும் பெரிய பீடையாய் இருக்கு. கம்பெனி ‘மஸ்டர் ரோல்’ல என் பேரு இருக்கு. பதினஞ்சு ரூபாய் கொடுத்ததாயும், லீவு எடுத்ததாயும் எழுதுறாங்க. எங்களுக்கும் சட்டம் இருக்காதா? எங்கே இருக்குன்னு தான் தெரியல? லேபர் அதிகாரிங்ககிட்ட கேட்டால் சிரிக்காங்க. சும்மா சொல்லப்படாது... நல்லாவே சிரிக்காங்க.”

இப்போது அந்தப் பெண்ணே இடைமறித்தாள்.

“சொம்மா பேசாதய்யா... நீங்களா சொல்லுங்க சாமி! அவ்வளவு பெரிய மனுஷன் காண்டிராக்டரே, இந்த துரைகிட்ட வந்து, ‘நீ எது கேட்டாலும் தாரேன். கையை நீட்டு, வாயை மூடு’ன்னு சொல்லிட்டார். இது கேட்கமாட்டங்கு... முன்னேறணும்னு புத்தி இருந்தால், இது அதுக்கு சம்மதிச்சிருக்கணுமா இல்லியா.. சொல்லுங்க சாமி?”

சாமியார் சொல்லும் முன்பே வேல்சாமி மேற்கொண்டு பேசினான்.

“பார்த்தீங்களா சாமி, இந்தப் பெண்ணோட புத்தி போற இடத்தை?”

“ஒனக்கு ஒண்ணுன்னா போய்யா... இனிமேல் என்கிட்ட வரப்படாது.. நீயாச்சு, ஒன்னோட யூனியனாச்சு.”

“பாத்தீங்களா சாமி... இவளோட கடைசி ஆயுதத்தை? ஒரு லட்சியத்தைப் பிடிக்கவனுக்கு சொந்த லாப நஷ்டம் ஒரு பொருட்டல்லன்னு தெரியமாட்டக்கு. திருநாவுக்கரசரை, பல்லவ மன்னன் கடலுல தூக்கிப் போடும்போது அவர் விட்டுக் கொடுத்தாரா! உயிரை வெல்லக்கட்டின்னு நினைச்சாரா? ‘நாமார்க்கும் குடியல்லோ’முன்னு சொன்னாரா, இல்லையா? சொல்லுங்க சாமி! ஏன் சாமி அப்படிப் பாக்கீங்க? எங்கப்பா பஜனை பாடுனவர். நான்கூடப் பாடுனவன்... ஒங்க ‘உலகத்துல’ எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் உண்டு!”

அந்தப் பெண் இடைமறித்தாள்.

“இது உருப்படாத கேஸ் சாமி... இது கதையே எனக்கு வேண்டாம் - நான் வாரேன் சாமி.”

வேல்சாமி, போகப் போனவளின் கையைப் பற்றி, தன் பக்கமாக இழுத்தான். பிறகு, சாமியாரைப் பார்த்துவிட்டு, சிறிது வெட்கப்பட்டவன் போல தலை குனிந்தான்.

சாமியார் “பரவாயில்லப்பா... நானும் ஒரு காலத்துல குடும்பஸ்தன் தான்...” என்று சிரித்துக் கொண்டே சொன்ன போது அந்தப் பெண் சிரிக்க முடியாமலும், அழ முடியாமலும், சிரித்தாள். அழுகை வந்துவிடும் என்று அஞ்சியவள் போல, அழுதால் சிரிப்பு வந்துவிடும் என்று நாணியவள் போல தவித்தாள். வேல்சாமி இப்போது நளினக் குரலில் முறையிட்டான்.

“இந்தா பாரு வள்ளி... நம்ம விவகாரம் இப்பவே தீரணும்... சாமி சொல்றத இரண்டுபேரும் கேட்கணும். சாமியே சொல்லட்டும். சாமி! நான் சொல்றதைச் சொல்லிட்டேன். நீங்க நாங்க வசிக்கிற இடத்தையும், நாங்க படுற பாட்டையும் நேர்ல பார்த்தால் தவிர... அந்த என்னை மாதிரி ஆட்களால சொல்லுல விவரிக்க முடியாதுன்னாலும் கால்வாசி விளக்கிட்டேன். இப்போ நீங்க என்ன சொன்னாலும் அதுக்குக் கட்டுப்படுறேன், ஒங்க முகத்துல இருக்கிற வைராக்கியத்தை பார்த்த பிறகு, நீங்க எது சொன்னாலும் அது நியாயமாய் இருக்கும். ஏன்னா, எங்கப்பாவுக்கும் இது இருந்தது. அவர் செத்துட்டார். அவர் கடைபிடிச்ச நியாயம், அது பக்திவகையோட சேர்ந்ததுன்னாலும், அது என்கிட்ட, பாட்டாளி நியாயமாய் மாறி வந்திருக்கு. சொல்லுங்க சாமி... நான் சிதறிக் கிடக்கிற ஆட்களை ஒண்ணு திரட்டி யூனியன் அமைக்கட்டுமா? இல்ல இதோ இருக்கிற லிங்கநாதர் பார்த்துக்கிடுவார்னு நினைச்சு சும்மா இருக்கட்டுமா? சொல்லுங்க சாமி! ஒங்ககிட்ட சாமியார்ங்கிற முறையில கேட்கல... என்னோட அப்பா ஸ்தானத்துல வச்சு கேக்கறேன். நான் யாரையும் விட என் அப்பாவை அதிகமாக மதிக்கிறவன்... சொல்லுங்க சாமி - நீங்க என்ன சொன்னாலும் கட்டுப் படறேன்.”

சாமியார் பரபரத்தார். ‘மகனே மகனே’ என்று கூவிய மனதை வாயரங்களில் ஆடவிடாமல் தடுத்தார். வள்ளியைப் பார்த்தார். அவள் நாணச் சிரிப்போடு அவரை நம்பிக்கையோடு பார்த்தாள். லிங்கத்தைப் பார்த்தார். அதன் விபூதிப்பட்டை, லிங்கநாதரின் வாய்போல மோனமாய் சிரித்தது. சுவாமி விவேகானந்தர் மாதிரி, மார்போடு சேர்த்து, கரங்களை மடித்து வைத்துக் கொண்டு சாமியார் அழுத்தமாகப் பேசினார்.

“நான் ஒரு வகையில சாமியார் என்றால் நீ இன்னொரு வகையில சாமியார்... என்னை விட ஒசத்தியான சாமியார். சுயநலத்தில இருந்து முழுதும் விடுபட்டு, ஊருக்காக உழைக்கிறவன் தான் உசத்தியான சாமியார். ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வழி அமைச்சுக் கொடுக்கிறான். அந்த வழிக்கு நான் குறுக்கே நின்றால் அது ஆண்டவ விரோதம்! ஒன்னோட சேவையை மெச்சுறேன்... நீ வெற்றி பெற என் ஆசி! பேய்மனதின் ஆசைகளை அறுக்கிறவன் தனிப்பட்ட சாமியார். ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறவன் சமூகச் சாமியார். சமூகம் தனிப்பட்ட மனிதனை விட உயர்ந்தது. வெற்றிவேல்! வீரவேல்! குமரேசனும் ஒரு வகையில் சமரேசன் தான். அவன் ஒனக்கு அருள்பாலிப்பான்.”

வேல்சாமி சாமியார் காலில் விழுந்து வணங்கினான். நெடுமரம்போல் பிரமித்து நின்ற வள்ளியின் காலைக் கிள்ளினான். அவளும், சாமியார் காலைத் தொட்டாள்.

இருவரும் கோவிலைவிட்டு, மலைச்சரிவு வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். வேல்சாமி, சிணுங்கியபடியே பின் தங்கி நடந்த வள்ளியை இடுப்போடு சேர்த்து அணைத்து, அவள் தலையில் செல்லமாகக் குட்டிக் கொண்டு போவதைப் பார்த்த சாமியார் மெல்லச் சிரித்துக் கொண்டார். பிறகு லிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். அப்படியே உட்கார்ந்தார். அவர் மனதில எத்தனையோ எண்ணங்கள்... இறந்துபோன மகன்... இறக்காமல் இறந்துகொண்டு இருக்கும் இந்தத் தொழிலாளிகள். இங்கே கொட்டும் மழையிலும் கல்லுடைக்கும் தொழிலாளிகளையும், குளிரில் ஆடிக்கொண்டே வேலை பார்க்கும் சித்தால் பெண்களையும் பார்க்க வேண்டும் போலிருந்தது.

மெல்ல நடந்தார்.

ஒரு கிலோ மீட்டர் நடந்ததும், அணைக்கட்டுப் பகுதி, கண்ணில் பட்டது. அணைக்கட்டுக்கு மேலே இருந்த மலைப் பகுதியில் கற்சுவர்களிலான வீடுகளும், டெண்டுகளும், கதவுகள் வழியாகத் தெரிந்த கட்டில் பீரோக்களையும், டிரான்சிஸ்டர்களையும் பார்த்த சாமியார் கண்கள், மற்றொரு பக்கம் மலைச் சரிவில், தென்னங் கீற்றுக்களால் வேயப்பட்ட குடிசைகளைப் பார்த்தார். மிருகங்கள் தீண்டக் கூடிய - ஆற்று வெள்ளம் உயர்ந்தால் அடித்துப் போகக்கூடிய - அபாயப் பகுதி. அபயம் அளிக்க ஆளில்லா நிலைமை. வீடு என்ற பெயரில் பனை மட்டைகளே தூண்களாகவும், கோணியே வாசல் கதவுகளாகவும் கொண்ட கொசு ‘வாச’ ஸ்தலங்கள். அங்கே நோயில் விழுந்த மனிதர்கள்... குச்சிக் கால், குச்சிக்கை பெண்கள்... மழைத் தூறலில் அணைந்த அடுப்பைப் பற்ற வைக்க முடியாமல் தவிக்கும் பாமர ஜாதிகள். இவர்களுக்கு வேலை மட்டும் ‘கேசுவல்’ அல்ல... வாழ்க்கையே ‘கேசுவல்’தான்.

‘ஈஸ்வரா... ஈஸ்வரா... பிள்ளைகளைப் பார்த்தாயா... பார்த்தாயா’ என்று தனக்குள்ளேயே மந்திரம்போல் ஜபித்தபடி சாமியார் திரும்பி நடந்தார்.
-----------

புதிய திரிபுரங்கள் - அத்தியாயம் 4

ஒரு மாதம் ஓடியிருக்கும்.

வேல்சாமியும், அவனுடன் பின்னிப் பிணைந்த பாட்டாளி வாழ்க்கை முறையும், சாமியார் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. எப்போவாவது அணைக்கட்டுப் பகுதியில், வாழ்க ஒழிக கோஷங்கள் கேட்கும். ஓரிரு தடவை போலீஸ் ஜீப்புகள் போவதையும் பார்த்திருக்கிறார். என்னதான் நடக்கிறது என்பதைப் போய்ப் பார்க்கலாம் என்று குறுகுறுத்த மனதை, மாயையில் உழல்வதாக நினைத்து, பத்மாசனம் போட்டு, புருவ மத்தியைப் பார்த்து அடக்கினார். சர்வேஸ்வரனிடம் ‘லேசாக நன்மைக்காக, அந்தரங்க சுத்தியோடு’ பிரார்த்தித்துக் கொண்டார். வேல்சாமியைப் பார்க்க வேண்டும்போல் ஒரு எண்ணம் ஏற்படும்போதெல்லாம், கூடவே மாண்டுபோன தன் மகனின் நினைவும், அவன் பிரிவாற்றாமயால் உயிர் துறந்த மனைவி, மனைவியால் சேவகம் செய்யப்பட்ட தம்பிகள் - தம்பிகளை மட்டுமே பெற்றதாக நினைத்த தன் தாய் - அத்தனை பேரும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒட்டு மொத்தமான நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகள் சுமந்த உணர்வுகளும் வந்தன. மீண்டும், லோக மாயையில் உழல அவர் விரும்பவில்லை. ஈஸ்வரனிடம் அர்ப்பணித்த உள்ளத்தை ஜல்லடை போட அவர் விரும்பவில்லை. ஆகையால் வேல்சாமி, தன் கண்ணில் படக்கூடாது என்று கூட, தன் விருப்பத்திற்கு விரோதமாகவே பிரார்த்தித்துக் கொண்டார்.

பிரார்த்தனை பலித்தது - சற்று அதிகமாகவே. வழக்கம் போல், அதிகாலையில் பூஜைக்குப் புறப்பட்ட சாமியார், நிலவொளியில், கோவிலுக்குச் சற்று அருகே கூட்டம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவராக, வேகமாக நடந்தார்.

அங்கே -

ஒரு பாறையில், வள்ளி கிடத்தப்பட்டிருந்தாள். அவள் கழுத்தில் சுருக்குக் கயிறு அவிழ்க்கப்படாமல் இருக்கப் பட்டிருந்தது. நாக்கு, மகிஷாசுரவர்த்தினியின் நாக்கு போல், கோரமாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. கண்கள், விழிகள் விலகி உருட்டிய பாவத்துடன், எதையோ உருட்ட நினைக்கும் கோபத்துடன் தெறித்து விழப் போகிறவைபோல் வெறித்து நின்றன. சுருக்குக் கயிற்றின் இறுக்கத்தால், அவள் கழுத்து ‘விடமுண்ட கண்டன்’ போல் வீங்கியிருந்தது. அவளைப் பார்த்த சாமியாருக்கு, ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் மயங்கிய நிலையில் உமையாள் மடியில் தலைவைத்துக் கிடக்கும் ஈஸ்வரன் சிலைதான் நினைவுக்கு வந்தது.

சாமியாரைப் பார்த்ததும், சடலத்தைச் சுற்றி நின்ற தொழிலாளிகள் அவருக்கு மரியாதையாக வழி விட்டனர். வள்ளியை குனிந்து பார்த்த சாமியார், ‘ஈஸ்வரா... ஈஸ்வரா... இது நியாயமா... நியாயமாடா... ஒன் முன்னால் என் கையால் கொடுத்த விபூதியே அவள் உடம்பை அஸ்தியாக்கிட்டே... சர்வேஸ்வரா, சர்வேஸ்வரா...’ என்று தன்பாட்டுக்கு கூவிய சாமியார், சிறிது நிதானித்து, சிறிது தியானித்து, “வேல்சாமிய எங்கே...” என்று பொதுப்படையாகக் கேட்டார். தொழிலாளர்களில் ஒருவர் பதிலளித்தார்:

“முந்தாநாள் அம்மாவுக்கு மருந்து வாங்குறதுக்காக... கீழே போனவன் ஒரேயடியாகக் கீழே போயிட்டான் சாமி! லாரில அடிபட்டு - அடிபட்ட இடத்துலயே போயிட்டான் சாமி...”

சாமியாரால் இப்போது பேச முடியவில்லை. அழுகையை அடக்கி ஆகாயத்தைப் பார்த்தபடி கேட்டார்:

“விபத்தா... இல்ல...”

“வெளியுலகுக்கு விபத்து... ஆனால் எங்களுக்குத்தான் தெரியும், காண்டிராக்டரோட வேல... அணைக்கட்டுல சுவர் எழுப்புற எங்களுக்காக பேசுனவனுக்கு, அவரு கட்டுன சமாதி! ஏழை சொல்லு எங்கே அம்பலம் ஏறும் சாமி? போன வாரம்தான் சங்கத்தைத் துவக்கினோம். அவனை தலைவனாய் தேர்ந்தெடுத்தோம்... இப்போ தலையில்லாத முண்டமாய் நிக்கோம்... மூடனாய் இருந்தவங்க, அவனால மனுஷனாகி, இப்போ முண்டமாய் நிக்கோம். இந்தப் பொண்ணு துக்கம் தாங்காமல் தூக்குப் போட்டுக்கிட்டாள். தன்னையே கொன்னுட்டாள்...”

இன்னொருவர் இடைமறித்தார்:

“தற்கொலைன்னு எப்படிப்பா சொல்ல முடியும்? அந்த மவராசனோட கையாளுங்களே அடிச்சுப் போட்டுட்டு இப்படி செய்திருக்கலாம் இல்லியா...”

“எதுக்கும் போலீஸ் வந்தால் தெரிஞ்சுட்டுப் போகுது. யாரும் கயிற்றைத் தொடாதீங்க...”

“இவன் ஒருத்தன்... போலீஸ் மட்டும் வந்து என்னத்த கிழிக்கும்! வேல்சாமி விபத்துல சாகலன்னு மனுக் கொடுத்தோம். என்ன ஆச்சு? இன்ஸ்பெக்டர் நம்மையே மிரட்டலியா? அந்தக் கதைதான் இந்தக் கதையும்...”

“நம்ம கதை அவலக்கதை தானப்பா... போன வாரம் ஒரு எஸ்டேட்டுக்குள்ள ஒருத்தி தூக்குப் போட்டுச் செத்துட்டதாப் பேச்சு... சப்-இன்ஸ்பெக்டர் எஸ்டேட் முதலாளி அனுப்புன கார்ல வந்து விசாரிச்சாரு... அவருக்கு ஓடுற காரு பெரிசாத் தெரியுமா? நின்னுட்ட ஒடம்பு பெரிசாத் தெரியுமா? இங்கேயும் தற்கொலைன்னு ‘பஞ்சாயத்து’ முடிவுபண்ணும்... இதை நாம மறுத்துச் சொன்னால், நமக்கும் லாரி கிடைக்கும்... சரி... ஏதோ தலை எழுத்தோ, காலெழுத்தோ... இனிமேல் ஆகவேண்டியதைப் பார்க்கலாம். போலீஸ் ரிப்போர்ட் பண்ண ஆள் போயாச்சா?”

சாமியார் கோவிலுக்குள் போகவில்லை. கையில் வைத்திருந்த மாலையை அந்தப் பிணத்திற்குப் போட்டார். அவள் காலருகே உட்கார்ந்து -

“வள்ளி... என்னை மன்னிச்சிடுமா. ஒன்னோட மரணத்திற்கும், ஒன்னவனோட மரணத்துக்கும் நானும் காரணமாயிட்டேன்... நான் மட்டும் அவனை யூனியன் வேண்டாமுன்னு சொல்லியிருந்தால் அவன் கேட்டிருப்பான். இந்த நிலையும் வந்திருக்காது... எனக்கு அப்படிச் சொல்ல மனமில்ல... இப்பவும் மனமில்லே... தெய்வமாய் மாறிட்ட நீ... இதோ என் பிள்ளைகள் யூனியன் மூலம் தங்கள் போராட்டத்த வெற்றிகரமாய் நடத்த வழி காட்டம்மா... வரம் கொடு தாயே...”

சாமியார் எழுந்தார். அத்தனை தொழிலாளிகளும் அவரை வியப்போடு பார்த்தார்கள். எவரோ ஒருவர் ‘வேல் சாமியையும் வள்ளியையும் ஒங்களுக்குத் தெரியுமா சாமி’ என்று கேட்கப் போனார். சாமியார் ஆகாயத்தைப் பார்த்த தோரணையையும், தங்களை ஒவ்வொருவராக ஊடுருவிப் பார்த்த கண்களில் - அந்தக் கண்களையே எரிப்பது போல் தோன்றிய அக்கினிப் பிரவாகத்தையும் பார்த்துவிட்டு, சொல்ல வந்ததை விட்டுவிட்டு சொல்லப் போகிறவரையே பார்த்தார். சாமியார் ஏதாவது பேசுவாரா என்பதுபோல் எல்லோரும் பார்த்தார்கள்.

அவர் பேசவில்லை.

குனிந்த தலை நிமிராமல், குறுகிய தோள்கள் புடைக்காமல், தரையையும் தன்னையும் பார்த்தபடி குடிசைக்குள் போனார். வெளியே கிடந்த பாறைக் கல்லில் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து பார்த்த அவர் கண்களுக்கு, பாறை மேல் சரிந்து கிடந்த வள்ளி, பாறையைப் பிளந்த ஆலமர வேர் போல தோன்றியது. அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார். வள்ளி என்று அழைக்கப்பட்ட, அந்தப் பிணத்தைப் பார்த்த அவர் கண்கள், குளமாகிக் கொண்டே வந்தன.

ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக நின்ற கூட்டத்தை அதட்டி அதட்டி எதையோ கேட்டார்கள். ஒரு போலீஸ்காரர், வள்ளியின் கழுத்தில் கிடந்த மாலையை லத்திக்கம்பால் தட்டியபடியே எதையோ கேட்டார். பிறகு சாமியார் இருந்த குடிசையைப் பார்த்தார்.

இரண்டு போலீஸ் அதிகாரிகள், சாமியாரிடம் வந்தார்கள். அவரோ, அவர்களைப் பார்த்த பிறகும் அசைவற்றவராய் அந்தப் பாராங்கல்லிலேயே உட்கார்ந்திருந்தார்.

பெரிய போலீஸ் அதிகாரி, அருகே இருந்த குட்டிக் கல்லில் உட்கார்ந்தபடி சாமியாரிடம் எதையோ கேட்கப் போனார். அதற்குள் சாமியாரே முந்திக் கொண்டு நடந்தவற்றை நடந்தவிதத்தில் கூறி முடித்தார். எல்லாவற்றையும் கேட்டு முடித்த போலீஸ் அதிகாரி, பிறகு சாவகாசமாக, “சாமி... எனக்கு எப்போ புரமோஷன் வரும்னு சொல்லுங்கோ...” என்றார். அவர் குரலின் தோரணை சாமியாரின் ஜோஸ்யம், அவரை வழக்கில் சாட்சியாக அழைக்காமல் இருப்பதற்கான லஞ்சம்போல் காட்டியது.

சாமியார் அவரைப் பார்க்காமலே பதிலளித்தார்.

“மொதல்ல வேல்சாமி... விபத்துலதான் செத்தானா? இந்தப் பொண்ணு தற்கொலையில்தான் செத்தாளா என்கிறதை நியாயமான முறையில விசாரணை நடத்துங்க. ஈஸ்வரன் உங்களுக்கு தானா வராத புரமோஷனைக் கூட வாங்கிக் கொடுப்பான்.”

போலீஸ் அதிகாரி தனது சந்தேகத்தையே, சாதுரியமாக்கினார்.

“சாமி... நீங்க பெரியவங்க... ஒங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்றேன். தப்பா நினைக்கப்படாது. இன்னொரு தடவை இப்படிச் சொல்லாதீங்க... வேற அதிகாரிகிட்ட இப்படிச் சொன்னீங்கன்னா, ஒங்களை சாமியார் வேடத்தில் இருக்கிற நக்ஸலைட்டுன்னு சந்தேகப்படுவாங்க...”

சாமியார், ஏகத்தாளமாகச் சொன்னார்:

“அப்படிப் பார்த்தால், ஒரு கையில் உடுக்கையும், இன்னொரு கையில் திரிசூலமும் ஏந்தி, சுடலைப்பொடி பூசி, ஊழிநடனம் ஆடுற ஈஸ்வரனும் ஒரு நக்ஸலைட்டுத் தான்... ஒங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், நான் கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும் வாரேன். குறுக்கு விசாரணைக்கு உடன்படுறேன்...”

“கோர்ட்டு கோவில் இல்ல சாமி...”

“தெரியும்... செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் செல்லாதுன்னு தெரியும். அதே சமயம் தெய்வ நீதிக்கு முன் செங்கோல் நீதி செல்லாதுன்னும் தெரியும். சரி போயிட்டு வாரீங்களா... ஆறு மணி நேரமா அதோ பிணம் ஒங்களுக்காகக் காத்துக் கிடக்கு... பிணம் போல வாழ்ந்தவளை மனித ஜீவி மாதிரியாவது அடக்கம் பண்ணுங்க...”

போலீஸ் அதிகாரிகள், சாமியார் மீது சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டே எழுந்தார்கள்.
--------

புதிய திரிபுரங்கள் - அத்தியாயம் 5

ஐந்தாறு நாட்கள் சாமியார் குடிசைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வேல்சாமியின் ‘விபத்தும்’, வள்ளியின் ‘மரணமும்’ தொழிலாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் போடும் கோஷங்கள், தூரத்து இடிமுழக்கமாய் கேட்டது.

சாமியார் குற்றவுணர்வில் தவித்தார். வேல்சாமியை தடுத்திருக்கலாம்... அவனுக்கும் ‘விபத்து’ வந்திருக்காது, வள்ளிக்கும் மரணம் வந்திருக்காது... நான் இரட்டைக் கொலை செய்துவிட்டேனோ... ஈஸ்வரா... ஈஸ்வரா... சர்வேஸ்வரா...

கிராமத்துப் பையன், வள்ளி இறந்த மறுநாளும் பால் கொண்டு வந்தான். சாமியார், அவனைப் பார்த்து, “நான் ஈஸ்வரனுக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்யறேன். பூஜை செய்யறதாய் உத்தேசமில்லை. நீ இனிமேல் வரவேண்டாம்” என்று சொல்லிவிட்டார். பெரிய விஷயங்களை உள்வாங்க முடியாத அந்த சின்னப் பையன் சாமியாரை, இனிமேல் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கத்தோடு போய்விட்டான்.

சாமியாரால் குடிசைக்குள் முடங்கிக் கிடக்க முடியவில்லை. குருநாதரின் காவியாடை அவரை உறுத்தியது. தூங்கும்போது, லிங்கத்திற்குப் பூஜை செய்வதுபோல் கனவுகள் வந்தன. கனவில் இருந்து வெளிப்படவும், ஈஸ்வரன் அனாதையாக நிற்பது போலவும், அவனை தானே கவனிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது.

ஒரு நாள் நடுநிசியில், ஒரு மானின் கூப்பாட்டில், அவர் திடுக்கிட்டு இருந்தார். மானின் மரணக் குரல். அது சன்னஞ் சன்னமாக அடங்கி, சதை சிதைந்த வேகத்தில் அதுவும் அடங்கியது.

சாமியார் யோசித்துப் பார்த்தார்.

“இதோ இந்தக் காட்டில், ஒரு மானை, ஓநாய்களோ அல்லது சிறுத்தையோ கொன்று புசித்திருக்க வேண்டும். ஏதுமறியாத இந்த மானை, ஒரு துஷ்ட மிருகம் கொல்ல வேண்டும்! துஷ்ட மிருகத்திற்கு கோர நகத்தையும், அதனிடையிலிருந்து தப்பிப்பதற்காக, மானுக்குப் பாய்ச்சலையும் கொடுத்தவன் யார்? தப்புவதற்கு பின் கதவைத் திறந்தும், தாக்குவதற்கு முன்கதவையும் திறந்துவிட்டவன் யார்? ஈஸ்வரன். இது அவனுடைய நீதி. எல்லா உயிர்களும் ஈஸ்வர சொரூபங்கள். கொல்வதும் கொல்லப்படுவதும் வெறும் பாவனைகளே, மானைப் புசிக்கும் சிறுத்தையின் நாடி நரம்பெங்கும் அந்த மானின் சதையும் ரத்தமும் ஐக்கியமாகின்றன. இதோ இந்த சிறுத்தை ஒரு நரியை அடிக்கிறதென்றால், அந்தச் செயல் அந்த மான்கறி கொடுத்ததால் ஏற்பட்ட ஊக்கம்தானே. அப்படியானால் மானே நரியை அடிப்பதாக ஏன் பாவிக்கக் கூடாது? ஈஸ்வர சக்தியை எப்படி என்று விவரிக்க முடியுமே தவிர, ஏன் என்று சொல்லமுடியாது. பூமியைவிட கோடிக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரத்தையே ஒரு துகளாகக் காட்டும் அண்டங்களும், அண்ட அடுக்குகளும் கொண்ட பிரபஞ்ச சொரூபனான ஈஸ்வரனை... ஏதோ ஒரு கோளத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக மறந்துவிடலாகாது ஈஸ்வரா என்னை மன்னிச்சிடு. மாயையில் இருந்து என்னை மீட்பாய். ஒன் அருள் இருந்தால் அந்தப் பையன் இன்று பால் கொண்டு வர வேண்டும். வராதே என்று தடுக்கப்பட்டவன் வலிய வர வேண்டும்.”

சாமியார் பூக்கொய்தார். மாலை தொடுத்தார். சொல்லி வைத்ததுபோல அந்தப் பையனும், பால் கொண்டு வந்தான். சாமியார் நெகிழ்ந்து போனார். ஈஸ்வர கிருபையை நினைத்து நெக்குருகினார். அன்று கோவிலில், வட்டியும் முதலுமாக மணிக்கணக்கில் பிரார்த்தித்தார்.

அவர், வெளிமனதில் வியாபித்திருந்த வேல்சாமியும், வள்ளியும், இதர முந்திய பிந்திய நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளின் மனிதப் பாத்திரங்களும் அடி மனதுள் போய்விட்டன. பூஜை, நாள்தோறும் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அன்றாடப் பூஜையும், கடுமையான ஆசனப் பயிற்சிகளும், பிரணாயமும், சாமியார் மனக்கப்பலை நங்கூரம் பாய்ச்சின.

மேலும் ஒரு மாதம் சலனங்களிலிருந்து விடுபட்டுக் கழிந்தது.

ஆனால் அன்றோ -

பௌர்ணமி இரவு மணி எட்டு இருக்கும். எங்கும் காட்டமைதி. கோவிலுக்கு வந்து, பூஜையைத் துவக்கப் போனார் சாமியார். அப்போது தொலைவில் இருட்டுருவமாய் தோன்றிய ஒரு கிழிசல் உருவம், கோவிலுக்கு முன்னால். அறுபது வயது மூதாட்டியாகி தன் தலையிலும் அடித்துக் கொண்டது. ஆடிய மேனி, வாடிய கண்கள் லிங்கத்தைப் பார்த்ததும், சொந்த தந்தையைப் பார்த்தது போல் அந்த மூதாட்டி, தலையில் பலங்கொண்டபடி அடித்துக் கொண்டு தூங்குமூஞ்சி மரத்தை ஆதரவாய்ப் பிடித்துக் கொண்டே அரற்றினாள்.

“ஏய்யா... ஈசா... இருந்தது ஒரே மகன். லாரியில் மாட்டி ஒரேயடியாப் போயிட்டான். ஒன்கிட்டதான் வந்தேன். இப்போ அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டியே... நான் என்ன பண்ணுவேன்? எங்கே போவேன்? இந்தத் தள்ளாத கிழவி என்னடா பண்ணுவேன்? ஒன்னை நம்புனவளை இப்படியாடா பண்ணுறது - சண்டாளா?”

சாமியார், சாத்துவதற்காகத் தூக்கிய பூமாலையை மடியில போட்டுவிட்டு, அந்தக் கிழவியைப் பார்த்தார். அடிக்கடி இந்தப் பக்கம் வருகிறவள், பார்த்த ஞாபகம் இருக்கிறது. மகன் போனதால், இவளுக்கு போகுமிடம் தெரியாமல் போய்விட்டதோ? ‘ஈஸ்வரா... ஈஸ்வரா... இது தப்புடா?’

பூஜை சமயத்தில் யாரிடமும் பேசாத சாமியார் இப்போது அந்த முதியவளிடம் பேச்சைத் துவக்கினார்:

“ஒனக்கு இவன்தான் ஒரே பையனா?”

“ஆமாங்க சாமி. திக்குல்லாத அனாதையாயிட்டேன். எங்கே போறது, என்ன செய்யறதுன்னே தெரியலே...”

“சர்க்கார்ல வேலை பார்த்தானா?”

“இவன் சர்க்கார் ஆளுல்ல சாமி... காண்டிராக்டர்கிட்ட வேலை பார்த்தவன்.”

“காண்டிராக்டர் நஷ்ட ஈடு கொடுக்கமாட்டாரா?”

“நல்லா கொடுத்தான். ஒன் பையன் அந்திமச் செலவுக்குக் காசு கொடுன்னு கேக்கான்.”

சாமியார், அந்த மூதாட்டியையே பார்த்தபோது அவள் அவரையே ஈஸ்வரனாக நினைத்து ஒப்பித்தாள்.

“என் மகன் சிதறிக்கிடந்த ஏழை பாழைகளை ஒன்று சேர்க்கதுக்கு சங்கம் அமைச்சான். இதைப் பொறுக்காத காண்டிராக்டரு அவன் மேல லாரியை ஏத்தி கொன்னுட்டான்... எனக்கு மருந்து வாங்கப்போன மகன், மாயமாய் போயிட்டான். அவன் போன ஏக்கத்துல, அவனையே நம்பியிருந்த ஒருத்தியும் தூக்குப்போட்டு இங்கேதான் செத்தாள். ஒங்களுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். அவளைக் கூடச் சாகடிச்சிருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். ஏழை மேல சந்தேகம் வந்தால் எது வேணுமுன்னாலும் நடக்கும். ஏழை சந்தேகப்பட்டு என்ன சாமி நடக்கும்? வயிறுன்னு ஒண்ணு இருக்கு... நானும் என் சந்தேகத்தை வெளில காட்டிக்காமல் எனக்கு ஒரு வழி பண்ணுப்பான்னு கேட்டேன்.

“இன்னொரு பையன் இருந்தால் கூட்டிக்கிட்டு வா வேலை கொடுக்கேன். இல்லன்னா ‘நீ கல்ல உடை’ன்னு சொன்னான். இன்னைக்குக் கல்லுடைச்சேன். ஆனா கோடு போட்ட இடத்துல உடைக்காமல் குறுக்கா உடைச்சேன். காண்டிராக்டர் வந்து ‘கல்லக் கெடுத்திட்டியேடி பாவி. திரும்பிப் பாராமல் ஓடலன்னா கழுத்தப் பிடிச்சுத் தள்ளுவேன்’னு சொல்லிட்டன சாமி. அவன் கை நகம் பட்டு... இந்தா பாரு சாமி கழுத்துல கீறல்.”

சாமியார், அருவியோசை அடங்கும்படி அதிரொலியுடன் கேட்டார்:

“அம்மா... நீ வேல்சாமியோட தாயா?”

அந்த மூதாட்டி ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தாள். பிறகு “ஒங்களுக்கு அவனைத் தெரியுமா சாமி! என் தங்க மகனை... என் செல்ல மகனைத் தெரியுமா சாமி? அவனைப் பெற்ற பாவி நான்தான். எனக்காக இருக்காட்டாலும் அவனையே நம்புன பொண்ணுக்காகவாவது ஈஸ்வரன் அவனை விட்டு வச்சிருக்கலாம். இப்போ முடியக்கூடாத எல்லாம் முடிஞ்சிட்டு... முடிய வேண்டிய நான்தான் முடியாம நிக்கேன். இதோ! இந்தக் கழுத்துல காண்டிராக்டர் நகம் பட்ட கீறலை மட்டும் என் செல்ல மகன் பார்த்திருந்தால் எப்படித் துடிச்சிருப்பான் தெரியுமா? இனிமேல் சொல்லி என்ன செய்ய?”

அந்த மூதாட்டி அழுவதற்குத் திராணியற்றவளாய், விக்கித்து நின்றாள். பிறகு ‘இதோ இந்தப் பையில இருக்கிற அவனோட வேட்டியையும், சட்டையையுந்தான் எடுத்து எடுத்துப் பார்த்துக்கறேன்’ என்று முனகினாள்.

சாமியார் ஒளிப்பிழம்பானார்.

“ஈஸ்வரா... ஈஸ்வரா... இந்தத் தாய் சொல்றது ஒனக்குக் கேட்டுதா? கேட்டுதா? நீ விஷத்தக் கண்டத்துல தேக்கி வச்சிருக்கே. இவளுக்கும் அதே இடத்துல நகக்கீறல் நீ தாங்குவது மாதிரி இவளால் முடியுமா? பாருடா மானுட விஷத்தை.”

சாமியார் சத்தம் போட்டுக் கூவிவிட்டு, தன்னை உருக வைக்கும் வள்ளலார் பாடிய,

என்ற பாடலை, தன்னை மறந்து கூவினார். பாடுவது தெரியாமல் பாடினார். பல தடவை திரும்பத் திரும்பப் பாடினார். கைகளை யாசகம் கேட்பவர்போல் திருவோடு போல் வைத்துக் கொண்டு பாவத்தோடு பாடினார். பயத்தோடும், நயத்தோடும் பாடினார். கைகளை யாசகம் கேட்பவர்போல் திருவோடு போல் வைத்துக் கொண்டு பாவத்தோடு பாடினார். பயத்தோடும், நயத்தோடும் பாடினார். பாடப் பாட அந்தக் குளிரிலும் அவருக்கு உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்தது. கண்களும் வியர்த்தன. பிறகு குரலை, சன்னஞ்சன்னமாக அடக்கி, அப்படியே தியானத்தில் அமர்ந்தார். ஒரு மணி நேரமாகியும் அவர் கண் விழிக்காததைப் பார்த்துவிட்டு அந்த முதியவள் தயங்கியபடியே நடந்து எங்கேயோ மறைந்தாள்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, கண்விழித்த சாமியார் யதார்த்த நிலைக்கு வந்தார். அந்த முதியவளைக் காணாதது அவருக்கு ஆறுதலாகவும் இருந்தது. தன்னையே அதட்டிக் கொண்டார். ஒரு துறவி எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்க வேண்டும்; இன்பமும் துன்பமும் அவனைத் தாக்கக்கூடாது. அவஸ்தை கொடுப்பவனையும் அதை வாங்குபவனையும் சர்வேஸ்வரன் பார்த்துக் கொள்வான். எனக்கேன் வம்பு? என் கடன் ஈஸ்வரப் பணியே. உறவுக்காரர்களே நன்றி கெட்டவர்கள் ஆனார்கள். பெற்ற தாயே மாற்றாந் தாயானாள். ரத்தத் தொடர்புள்ள உறவே, ரத்தத்தைக் கொதிக்க வைத்த போது, யாரோ ஒருவருக்காக சிந்தனையை வீணடித்தல் தவறு. நன்றி கெட்ட உலகமிது. ஒரு மனிதனிடம் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அத்தனை மனிதர்களாக அவன் நடமாடுகிறான். இனிமேல் ஈஸ்வர சிந்தனையன்றி, எதுவுமே எனக்குத் தோன்றலாகாது. ஈஸ்வரா... தோடுடைய செவியனே... அருளாளா... அருள்வாய். பாம்புபோல் பின்னியிருக்கும், கிடா, பிங்கல நாடிகளை எழுச்சி பெறச் செய்து, சுழி முனை நாடியில் ஆன்ம ஒளி பாய்ந்து குண்டலியுடன் கூட்டி அருள்வாய்... உலக பந்தத்தை அறுத்தெறி! எரிதழலே!

சாமியார் குடிசைக்குப் போக மறந்து அங்கேயே தூங்கிவிட்டார். கண்விழித்த போது சிந்தனைச் சுமை சிறிது இறங்கியது போலிருந்தது. தொழு நோயாளியையும், நடுத்தர வயதுப் பெண்ணையும், முதியவளையும், வேல்சாமியையும், வள்ளியையும் மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு, அருவியில் குளித்து முடித்துவிட்டு சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார்.

காலைப் பொழுது கலகலப்பாகிக் கொண்டிருந்தது... “சாமி... என்னை தெரியாதுங்களா!” என்ற சத்தம் கேட்டு சாமியார், கோவிலுக்கு வெளியே பார்த்தார்.

பேண்ட் - அதுவும் பெல்பாட்டம் பேண்டுடன், டிசைன்கள் போட்ட பாலிஸ்டர் சிலாக்கோடு, ஒரு நாற்பது வயதுக்காரர் சிரித்துக் கொண்டு நின்றார். அவரை அடையாளம் காண முடியாதவர் போல் சாமியார் புருவத்தை உயர்த்திய போது, அவர் மடமடவென்று ஒப்பித்தார்.

“நான்தான் சாமி... சாரங்கன். ஆறு மாதத்துக்கு முன்னால இங்கே வந்து இரண்டு மாசம் முடங்கிக் கிடந்தேனே... ஞாபகம் இருக்கா? இப்போ ஓடிப்போன என் ஒய்ஃப் - அதுதான் சம்சாரம் திரும்பி வந்துட்டாள்.”

பல் தெரியச் சிரித்த அந்த ஆசாமியையே சாமியார் மேனி சிலிர்க்கப் பார்த்தார். அவர் சொன்னதுபோல் ஆறு மாதத்திற்கு முன்பு தாடியும் மீசையுமாய் அழுக்கேறிய வேட்டியுடன் இதே இந்தக் கோவிலில் வந்து இரண்டு மாதம் வரை எழுந்தருளி, தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற பாடல்களை மாறி மாறிப் பாடி, ஓடிப்போன மனைவியைத் தந்தருளும்படி ஈஸ்வரனிடம் முறையிட்டவர் இவர். ஒருநாள் யாரோ வந்து இவரை அழைத்துக் கொண்டு போனார். அப்போது போனவர் இப்போது வந்திருக்கிறார். மனைவியைத் திருப்பிக் கொடுத்த ஈஸ்வரனைத் திரும்பிப் பார்க்க வந்திருக்கிறார். நாளானாலும் பரவாயில்லை. நன்றி சொல்ல வந்திருக்காரே... சாமியார், அன்பு ததும்பக் கேட்டார்.

“கோவிலுக்கு வந்தியா? தேங்காய் ஊதுபத்திய எங்கே?”

“நான் கோவிலுக்குன்னு வரல சாமி. இங்க அணை கட்டப்போறாங்க பாருங்க. ஒரு காண்டிராக்ட் விஷயமா நேற்றே வந்தேன். இப்போல்லாம் நேரமே கிடைக்க மாட்டேங்கு சாமி. இன்னொரு நாளைக்கு சௌகரியமாய் வாரேன். வரட்டுமா சாமி. குளிக்கணுமுன்னு வந்தேன். அதுக்குள்ள இன்னொரு காரியம் ஞாபகம் வந்துட்டு... வாரேன் சாமி.”

சாமியார் ஆச்சரியத்தில் இருந்து விடுபடுமுன்னாலேயே, அவர் போய்விட்டார். முன்பு விபூதி கொடுத்தால், “நீங்களே பூசுங்க சாமி” என்று கேட்பவன் இன்று அவரை பூசக்கூடச் சொல்ல வேண்டாம், தட்டில் இருக்கும் விபூதியை எடுத்துப் பூசியிருக்கலாமே. சீச்சீ. தப்பு. நேரமில்லாத மனிதன். விபூதி பூசுகிற நேரத்தில், டெண்டரைத் திறந்துவிட்டால்...

சாமியார் யோசித்தார்.

இவன் ஈஸ்வரனிடமே நன்றியில்லாமல் நடந்து கொள்கிறானே... ஒரு தடவை ஓடியவள், இன்னொரு தடவையும் ஓடமாட்டாளா என்ன? ஈஸ்வரா... நான் ஓடணும்னு சொல்லல. இரண்டுபேரும் நல்லா இருக்கட்டும். எப்படியோ அவள் பேர்ல சொத்தை எழுதி வச்சுட்டு, ஆப்பசைத்த குரங்குமாதிரி இருந்தவன், சந்தோஷமாய் இருக்கிறதுல சந்தோஷந்தான். ஆனாலும் ஈஸ்வரன்கிட்ட இப்படியா நன்றியில்லாமல்...

சாமியார் தன்னுள்ளே சிந்தனையை மீண்டும் அலசிப் பார்த்தார்.

“இந்த ஈஸ்வரனுக்கு, இவன் நன்றியில்லாதவன் என்பது தெரியாதா என்ன? தெரிந்துதானே இவனை இரண்டு மாதம் கொண்டு வந்து போட்டிருப்பான். தெரிந்துதானே மனைவியை மீட்டுக் கொடுத்திருப்பான்... இவன், தன்னைப் பார்க்க வராமல் அணைக்கட்டு வேலைக்காக வந்தவனை, இங்கே இப்போது கொண்டு வந்து விட்டவனும் ஈஸ்வரன்தானே. ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் சொல்கிறது. அப்படியானால், இவன் அருளில்லாமல் அவன் இங்கே வந்திருக்க முடியுமா? நன்றி என்பது ஈஸ்வரனுக்கு அடுத்தபடியான பெரிய வார்த்தை... நன்றி வந்தாலும் சரி, அதற்கு எதிர்மாறானது வந்தாலும் சரி. அவற்றை, சிவா அர்ப்பணமாக்கிவிட்டு, பலனை எதிர்பார்க்காமல் செயல்படுபவனே யோகி. அவனே ஈஸ்வர அருளுக்கு, தன்னை அருகதையாக்கிக் கொள்கிறவன். ஈஸ்வர அருள், போற்றுபவனுக்கும், தூற்றுபவனுக்கும் ஒரே மாதிரி கிடைக்கக் கூடியது. அந்த அருளுக்கு, நாம் நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதுதான் உயிர்ப்பான தத்துவம். பாவம்! அந்த முதியவள் எப்படி இருக்காளோ? சொந்தத்தையே வீடாகக் கொள்ளாமல், சமூகத்தையே வீடாகக் கொண்டவனின் தாய். ஈஸ்வரன் நிச்சயம் ‘வீடு’ கொடுப்பான். இந்த காண்டிராக்டர்கள் மண்ணையும், கல்லையும் வைத்துக் கட்டுகிறார்களா, அல்லது மனித உடல்களை அடுக்கி, குருதியால் பூசுகிறார்களா?

சாமியார், ஏதோ ஒரு பெரிய சுமை இறங்கிவிட்டது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்த போது, இரவில் வந்த முதியவள், ஒரு கையில் தூக்குப் பையுடன் வந்து கோவிலுக்கு முன்னால் நின்று கரங்குவித்தாள். அவள் கும்பிட்டு முடிவது வரைக்கும் பொறுக்க முடியாமல் சாமியார் குறூக்கிட்டுக் கேட்டார். தனிப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக் கிடக்கும் எளியோரைப் பார்த்த நினைவு அப்போது ஒட்டுமொத்தமாக வந்து நின்றது.

“என்னம்மா செய்யப்போற?”

“திக்கில்லாதவங்க என்ன செய்வாங்களோ அதைத்தான் செய்யப்போறேன்.”

“அதாவது...”

“ஊருஊராய், தெருத் தெருவாய், வீடு வீடாய், பிச்சை எடுக்கப்போறேன். ஒன் கையால போணி பண்ணுசாமி... நீ கொடுக்கற பத்து பைசா, எனக்குப் பத்தாயிரம் மாதிரி... ஈஸ்வரா! நீ, பிச்சையில உதவுறியோ இல்லியோ, ஒரு தடவையாவது இந்தக் கிழவி ஒன்னைப் பார்க்கதுக்கு வரம் கொடுப்பா. சாமி, ஒரு பத்து பைசா...”

சாமியார், யதார்த்தத்தின் சூடு தாங்கமாட்டாதவராய், அந்த முதியவளைப் பார்த்தார். அவள் முகத்தில், இப்போது புத்திர சோகம் இல்லை. எப்படிப் பிழைப்பது, எப்படி தன்னைக் காத்துக் கொள்வது என்ற ஒரு கவலை. ஒரே கவலைதான் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. மௌனமாக ஐம்பது பைசா நாணயத்தை, அவளிடம் நீட்டினார். அந்த முதியவள், ஆகாயத்தை வளைத்துக் கட்டியது போலிருந்த லிங்கத்தையே பார்த்துவிட்டு, கீழே வைத்த கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். சாமியாருக்கு ஊனெல்லாம் உருகி, உள்ளொளியாகி, அது அந்தக் கிழவியின் பின்னால் போவது போலிருந்தது. லோகமாதா, அதோ போய்க் கொண்டிருக்கிறாள். சப்த லோகங்களைப் பிரசவித்தவள் தனியாகப் போகிறாள்.

சாமியார் ஆவேசப்பட்டவராய் வெளியே வந்தார். கோவில் முனையில் ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த நடராஜர் சிலையையே விழியாடாமல் பார்த்தார். நடனம் வேகமாக நடைபெறுவதைக் காட்டும் கலைந்த சடை. மார்பிலே பாம்பாரம், ஒரு கையில் உடுக்கை, இன்னொரு கையில் அக்கினிக் குண்டம் வலதுகால் தூக்கி நிற்கிறது. இடதுகால் கொடுமையின் அவதாரமான முயலவன் மீது அழுந்தியிருக்கிறது. அந்த ‘நாதாந்த, போதாந்த, யோகாந்த, வேதாந்த’ சிலையையே உற்றுப் பார்க்கிறார். கண்கொண்ட குருடர்க்கு வழிகாட்டும் அந்தச் சிலையின் பின்னால் வள்ளலார் வந்து,

என்று பாடுகிறார்.

அந்தப் பாட்டு, அவர் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்தச் சமயத்தில், கண்களுக்கு நடராஜர் சிலை, சிறிது சிறிதாக மாறுவதுபோல் தெரிகிறது. சூரிய சந்திரர் ஆழிகளாக, பதினான்கு உலகங்களும் தேர்த்தட்டுக்களாக, எண் திசை மலைகள் தூண்களாக, இமயமலை கொடியாக, வேதங்கள் பரிகளாக, பிரம்மா சாரதியாக, மகாமேரு வில்லாக, மகாவிஷ்ணு அம்பாக, திரிபுரம் எரிக்கத் தெய்வத் தேரில் புறப்படும் விரிசடைக் கடவுளின் தோற்றம் தெரிகிறது. அது தெரியத் தெரிய செயற்பாடே பக்தி என்று ஏதோ ஒன்று சொல்கிறது. அண்ட சராசரங்கள் சுழல்வதும், எதுவுமே இருந்த இடத்தில் இல்லாமல் நகர்வதும் புரிகிறது. தீமையை எதிர்த்து செயல்படுவதே ஈஸ்வர சேவை என்று ஏதோ ஒன்று உணர்த்துகிறது. ஏழை எளியவர்களை வாட்டி வதைக்கும் புதிய முயலவன்களை எதிர்த்து அடக்குவதே ஈஸ்வர நடனத்தின் தாத்பரியம் என்று உள்ளுக்குள் ஒன்று - பெரிதான ஒன்று கூவுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளை விட எளியவர்களும் வாழ்வாங்கு வாழ, வழி காட்டுவதே ஈஸ்வர வழி என்று ஏதோ ஒன்று அவரை வழிப்படுத்துகிறது.

சாமியார் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார சக்தியைப் பிரதிபலிக்கும் அந்த நடராஜர் சிலையையே பார்ப்பதை இன்னும் விடவில்லை. பார்க்கப் பார்க்க புதிய பார்வை உண்டாகிறது. இந்த சமூக அமைப்பில் ஏழை எளியவர்களுக்கு இடமில்லை. சூப்பப்பட்ட பனம் பழமாய் அவர்கள் வீசி எறியப்படுகிறார்கள். கண் முன்னாலேயே, அதுவும் கோவில் முன்னாலேயே, திக்கின்றித் திணறும் எத்தனையோ எளியவர்களைப் பார்த்தாகிவிட்டது. இன்னும் பார்த்துக் கொண்டே இருப்பது, ஈஸ்வர நிந்தைக்குச் சமமாகும். ஏதாவது என்னளவில் செய்ய வேண்டும். இந்த முதியவளைப் போல் எத்தனை பேர், கண்ணில் கண்டுபிடிக்க முடியாத குக்கிராமங்களில் இருக்கிறார்களோ... இவர்களுக்காகப் பெரிய அளவில் செய்ய முடியாமல் போனாலும், இங்கே காண்டிராக்டர்களிடமும், வெடிப் பாறைகளிடமும் மாட்டிக் கொண்டு, சிதறிக் கிடக்கும் ஏழை எளியவர்களை ஒன்று சேர்த்து, மானுடத்தின் மேன்மைக்காகப் பாடுபடலாம். பாடுபட வேண்டும். அக்கிரமக்காரர்களை, பாடுபடுத்த வேண்டும்.

அப்போதுதான், ஞான-முக்தி பெற்றவர் போல், சாமியார் தொலைவில் மறையப் போகும் முதியவளைப் பார்த்து, “அம்மா... தாயே... தயவு காட்டி இங்கே வாம்மா” என்று உரக்கக் கூப்பிடுகிறார். அவள் நின்று, நிதானித்து திரும்பி வருகிறாள். அவள் வருவது நிச்சயப்பட்டதும் சாமியார், நடராஜர் சிலையை கைகூப்பி தொழுதபடி நிற்கிறார். இதற்குள் முதியவளும் அவர் அருகில் வந்து நிற்கிறாள். சாமியார், அந்த எளிய வர்க்கத்தின் பிரதிநிதியையும் பாமரவர்க்க நாதனாய் நிற்கும் நடராஜர் சிலையையும் மாறி மாறிப் பார்க்கிறார். பிறகு திடீரென்று தன் காவி வேட்டியைக் களைந்து உள்ளே போய் சதுரக்கல்லில் போட்டுவிட்டு, வெளியே வந்து லங்கோட்டுடன் நிற்கிறார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்பதுபோல பயந்து ஒடுங்கிய முதியவளைப் பார்த்து அமைதியாகக் கேட்கிறார்.

“பையில்... ஒன் மகனோட வேட்டி சட்டை இருக்குதுன்னு சொன்னல்லா?”

“எதுக்கு சாமி?”

“நான் இன்று முதல் ஒன் மகன். இந்த நடராஜன் என் அப்பன். நீதான் என் ஆதிபராசக்தி... வேட்டி சட்டையை எடு... உம்... சீக்கிரம்...”

முதியவள் ஒன்றும் புரியாமல் மகனின் வேட்டியையும், சட்டையையும் எடுத்து நீட்டுகிறாள். முன்பு தன் குருநாதரிடம் காவியாடையை எப்படி பயபக்தியோடு வாங்கினாரோ, அப்படி அந்த ஆடையை பயபக்தியோடு வாங்கிக் கொண்டே நடராஜரையே பார்க்கிறார். அவரையே சாட்சியாக வைத்துக் கொண்டது போல், அசுர வேகத்தில், தப்பு, ஆடலரசன் வேகத்தில் அந்த ஆடைகளை அணிந்து கொள்கிறார். பிறகு “உம்... நடம்மா... ஒன் மகனை காண்டிராக்டர்கிட்ட சொல்லி, வேலையில சேரு... ஒன் இறந்த மகன் நினைத்ததை இந்த மகன் செய்து முடிப்பான். உம், நடப்போமா தாயே...!”

முதியவள், ஏதோ ஒன்று புரிந்தவள் போல முன்னால் நடக்கிறாள். சாமியாருக்கு கோவிலை விட்டுப் புறப்படும் போதும், காவியாடையைக் காணும்போதும் மனசு கனக்கிறது. உடனே அந்த கனத்தை, ஆடலரசின் தூக்கி நிற்கும் வலதுகால் தூக்கிப் பிடித்துக் கொள்கிறது! கீழே விழுந்து கிடக்கும் முயலவன், விழாமல் நிற்கும் முயலவன்களை நினைவுபடுத்துகிறான்.

உரிமையும், கடமையும் ஒன்றான மானுடத் தேரில் ஏறி, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட்கொள்ளப் புறப்பட்டவர்போல், ராமையா அந்த முதியவள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்.

(முற்றும்)
--------

This file was last updated on 26 June 2021.
Feel free to send the corrections to the webmaster.