pm logo

வளர்ப்பு மகள்
(பாகம் 1, அத்தியாயம் 1-10)
சு. சமுத்திரம்‌


vaLarppu makaL (novel), part 1 (chapters 1-10)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வளர்ப்பு மகள்
சு. சமுத்திரம்‌


Source:
வளர்ப்பு மகள் ( & இந்திர மயம் )
சு. சமுத்திரம்
திருவரசு புத்தக நிலையம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை -600 017
முதற் பதிப்பு ஜூலை 1980; ஆறாம் பதிப்பு டிசம்பர் 2002
பதிப்பாசிரியர்: வானதி திருநாவுக்கரசு
விலை ரூ.50.00
ஒளி அச்சு : ஏகலைவன், சென்னை - 600 041.,
Printed at : Mani offset, Chennai - 5.
---------
இதனுள்....
---------

ஆய்வேடு காட்டும் வளர்ப்பு மகள்

பெற்ற மனத்தின் தன்மை இந்த நாவலின் கதைக்கரு. இதில் பெண்களின் உரிமை, எழுச்சி விளக்கப்படுகிறது. நாவல்களில் நல்லனவற்றையே சித்தரித்துக் காட்டும் இயல்பு உள்ளது. தீயனவற்றையும், தீமையையும் காட்ட வேண்டியதுதான். ஆனால், காட்டப்படும் தீமை அறுவருக்கத்தக்கதாக இருக்கவேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும். அதன் அற்பத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும். ஏனெனில், "தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதையாரும் கண்டு அஞ்சமாட்டார்கள்" என்று வேதநாயகம் பிள்ளை கூறுவார். சமுத்திரம் இந்த நாவலில் நன்மை - தீமை இரண்டையும் காட்டி மக்களுக்குத் தெளிவு ஏற்படும்படி செய்துள்ளார்.

கதைப்பின்னல் இயற்கையாக அமைதல் வேண்டும்: ஆசிரியர் பாடுபட்டு வலிந்து அமைப்பதாக இருத்தல் ஆகாது. நடக்கக் கூடியதே என்று நம்பத்தக்க வகையில் இயல்பாக அமையும் கதைப் பின்னலே கதைக்குக் கவர்ச்சி தருவதாகும். அதற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதாயாசிரியரின் திறனே ஆகும். உணர்ச்சி, அனுபவம் மிக்க ஆசிரியர் உணர்ந்து தேர்ந்த கதைப்பின்னல் சிறப்புடையதாக விளங்கும். இச்சிறப்பு இல்லையானால், எவ்வளவு சிறந்த வாழ்க்கைப் பகுதி கதையில் அமைந்தாலும் பயன் விளையாது.

"கதையின் போக்குக்கு இன்றிமையாத நிகழ்ச்சிகளை இணைத்து அந்நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அமையும்படிச் செய்வது என்பது நாவலாசிரியரது கடமை. இந்த நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை என்ற உணர்வு உண்டாகும்படி அவற்றை அமைக்கவேண்டும். இதை எடுத்து விட்டாலும் கதையின் போக்குக்கோ பாத்திரங்களின் குணசித்திரத்துக்கோ வேறுபாடு ஏதும் இல்லை என்று எண்ணும் வகையில் ஏதேனும் நிகழ்ச்சி இருந்தால், அது நாவலின் செறிவைக் கெடுத்து விடும்.

தாமஸ் ஹார்டியின் கலைத்திறனைப் பற்றி பிரடெரிக் ஆர். கார்ல் என்பார், 'ஹார்டியின் கலைத்திறன் அழகிய முறையில் செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் இதயத்தையும் உட் பொருளையும் உயிரோவியமாகத் தீட்டுவதே ஆகும்' என்று கூறுவார்.

கதைப்பின்னல்

சு. சமுத்திரத்தின் வளர்ப்பு மகளில்' இத்தகைய கலைத் திறனைக் காண்கிறோம். மனித மனத்தின் தன்மைகளைத் தெளிவாகக் காட்டும் வண்ணம் கதைப்பின்னல் அமைந்துள்ளது முந்தைய நாவல்களில் பெற்ற அனுபவத்தை இதில் காண்கிறோம்

ஒரு பெண் தனது தாய்ப் பாசத்திற்கும் கடமையுணர்வுக்கும் இடையே தடுமாறுகிறாள். இரண்டுக்கும் நடுவில் ஒருவழியைப் பின்பற்றி வாழ்க்கையில் நிறைவு பெறுகிறாள். படிப்பவர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தி விடுகின்றார் ஆசிரியர். கதைப் பின்னலின் ஒரு முக்கிய பகுதியான இதனை, ஆசிரியர் மிகத் திறமையோடு படைத்திருக்கிறார்.

வளர்ப்பு மகளில் கதைப்பின்னல் எளிமையானதாக - இயற்கையானதாக அமைந்துள்ளது. கருத்துவேறுபாட்டால் மல்லிகா தன் வளர்ப்புத் தந்தையை விட்டுப் பிரிவதும், பின்னர் சூழ்ச்சி செய்தவர்கள் சூரியனைக் கண்டு நீங்கும் காரிருள் போல் நீங்க, மல்லிகா மீண்டும் தன் வளர்ப்புத் தந்தையோடு சேர்ந்து கொள்கிறாள். இவ்விதமாகத்தான் கதையின் முடிவு அமைய வேண்டி உள்ளது. வேறு முறையில் அமைவதற்கு வழியில்லை என்று படிப்பவர்கள் நினைக்கும்படி கதையின் முடிவு அமையவேண்டும். கதை மாந்தர்களின் செயல்கள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையில் இயற்கைக்கு விரோதமாக இராமல், இயல்பானதாக மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. கருது பொருளை மையமாக வைத்து சுவையாக கதைப்பின்னலை அமைத்துள்ளார்.

பாத்திரப் படைப்பு

கதை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப் பெறும் நாவல்கள் பல, வாழும் இயல்பை இழந்து விடுகின்றன. நாவலைப் படிப்பவர்கள் சில காலத்திற்குப் பிறகு மறந்து விடுவர். பாத்திரப் படைப்பிற்கு முதலிடம் தந்து எழுதப்பெறும் நாவல்கள் உயர்ந்த இலக்கியமாகப் போற்றப்படுகின்றன. அந்த நாவல்களில் வரும் கதைமாந்தர்கள் நம் நெஞ்சை விட்டு நீங்கா இயல்பினராக மாறிவிடுகின்றனர். கல்கியின் சிவகாமியின் சபதத்தில்' வரும் சிவகாமியையோ, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி வந்தியத் தேவனையோ நாம் மறக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் அந்த நாவலைப் படைத்த ஆசிரியரின் படைப்பாண்மைத் திறமையாகும். சமுத்திரத்திற்கு இந்த வித்தை நன்கு கைவரப் பெற்றிருக்கிறது. பெண்களின் உயர்ந்த உணர்ச்சிகளை நுட்பமாக தெளிவாக, நல்ல அழகு தமிழில் வெளியிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது இத்தகைய ஆற்றல். கீட்ஸ்' இதற்கு Filling some other's body என்று பெயரிடுவார். சு. சமுத்திரத்திற்கு இந்த ஆற்றல் அரிய திறனாகும். பெண்ணுள்ளத்து வேதனைகளையும், சிக்கல்களையும் சித்தரித்துள்ள முறையினையும், சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களைப் பற்றியும் இந்நாவலில் அறிந்துக் கொள்கிறோம்.

மொழிநடை

இலக்கிய ஆராய்ச்சியில் எழுத்தாளர் மொழிநடையை ஆராய்வதற்கே நிறைந்த புலமைத் தேவைப்படுகிறது. ஒருவர் பாடும் போது, அவர் குரலைக் கொண்டு அவர் இன்னார் என்று கண்டு பிடித்து விடுவதுபோல, எழுத்தாளரின் எழுத்தைப் படித்த அளவிலேயே இது இன்னாருடைய நடை என்று சொல்லிவிடலாம். எல்லோருமே மொழியைப் பயன்படுத்தினாலும் படைப்பிலக்கிய ஆசிரியர் மொழியை தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதற்கு ஏற்ற வாயிலாகக் கொண்டு தன் போக்கிற்கு ஏற்ப அமைப்பதை மொழிநடை என்கிறோம்.

சு. சமுத்திரத்தின் மொழிநடையிலே தமிழின் ஆற்றல் மிகுதியாகக் காணமுடிகிறது. படிப்போரை ஈர்க்கும் வேகம் நடையிலேயே காணலாம். இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தியைக் காணலாம் உணர்ச்சிக்கேற்ற நடையையும் அமைத்துள்ளார்.

"சு. சமுத்திரம் அவர்கள் சொற்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்."

'அந்தக் குழந்தை அம்மா அம்மா' என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது. அவள் இதயத்தைத் தொட்டது."

"பாசத்தைக் கொட்டிக் கொண்டே அவள் தன்னையும் 'கொட்டுவதை உணர்ந்தாள் மல்லிகா."

"அந்த நல்ல ராமனைக் கட்டியே, சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மகள் கட்டினால் அட பகவானே...''

"இந்த மூதாட்டியின் பெயர்.... பெயர் எதற்கு? அவளே பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது?'

வர்ணனை

பெண்களை வர்ணிப்பதில் ஆசிரியரின் தனிச்சிறப்பைக் காணலாம். அவ்வகையில் சேக்கிழாரின் மனோநிலை ஆசிரியரிடம் அமைந்துள்ளது எனலாம். சேக்கிழார் தமது காவியத்துள் பெண்கைளப் பற்றியும், காதலைப் பற்றியும் வருணிக்கும் இடங்களில், மிகத் தூய்மையான எண்ணம் தோன்றும்படி வருணித்துள்ளார். பரவையார் வருணனை, பரவையார் - சுந்தரர் காதல் - இவ்விடங்களில் சிறிதும் கீழ்த்தர உணர்ச்சி தோன்றா வகையில் வருணித்துள்ள சிறப்பியல்பைப் போன்று, சு. சமுத்திரம் களங்கமில்லாத எண்ணம் தோன்றும்படி பெண்களை வர்ணித்து உள்ளார்.

சு. சமுத்திரம் வெறும் பொழுது போக்கிற்காக மலிவான சுவையைத் தரும் கதைகளைப் படைக்காமல் மனித வாழ்க்கைக்கு எந்தக் காலத்திற்கும் பொதுவான, அடிப்படையான உணர்ச்சி களையும், பண்புகளையும் விளக்கி கதைகளைப் படைப்பதால் அவருடைய நாவல்கள் என்றுமே வாழும் இயல்பைப் பெறுகின்றன. சமுதாயம் சீர்திருந்தி, அமைதியான வாழ்க்கை எல்லோர்க்கும் கிடைக்கும்படியாய்ச் செய்வதே அவருடைய எண்ணமாதலால் சமுதாயம் உள்ளவரையும் அவருடைய நாவலும் வாழும்.

        வை. சதாசிவம் எழுதிய "சு. சமுத்திர நாவல்கள் ஒரு ஆய்வு"
        (ஜூலை 1980)
---------------

முதலுரை

1979-ம் ஆண்டு ராணிமுத்துவில் மாத நாவலாக வெளியாகி 1980-ம் ஆண்டு முதல் ஐந்து பதிப்புகளைக் கொண்ட வளர்ப்பு மகள்' நாவலையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாசுகி பத்திரிகையின் பொங்கல் இதழில் வெளியான இந்திரமயம்' என்ற குறுநாவலையும் உள்ளடக்கியது இந்த நூல். பல பதிப்புகளைக் கண்ட வளர்ப்பு மகளுக்கு நான் முன்னுரை எழுதியதே இல்லை. இப்போது இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதோடு, அதே சாக்கில் இந்திரமயக் குறுநாவலின் பின்னணியைப் பற்றியும் குறிப்பிடுகிறேன்.

மலரும் நினைவுகள்

எனக்கு இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது. 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எனது குடும்பத்தினருடன் பழனி செல்வதற்காக திண்டுக்கல்லை நோக்கி ரயிலில் பிரயாணித்தேன் - பகல் வேளை. அப்போதுதான் ராணி முத்து நாவலாக வெளியான 'வளர்ப்பு மகள்' நாவலை சிலர் கையில் வைத்திருந்தார்கள். சிலர், தள்ளுவண்டியில் இருந்து வாங்கிக் கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை . மாத நாவல் வாசகர்கள், எப்படி தத்தம் புத்தகங்களில் ஒன்றிப் போய்விடுவார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த நாவலை வாங்கியவர்கள் ஒரு சில பக்கங்களைப் படித்துவிட்டு முகஞ்சுளித்தபடியே மூடி விட்டார்கள். ஏற்கனவே கையில் வைத்திருந்தவர்களோ, அதை விசிறியாகவும், தலையணையாகவும் பயன்படுத்தியதைக் கண்கள் எரியப் பார்த்தேன். 'நான்தான் அந்த எழுத்தாளர்' என்று அவர்களிடம் சொல்லப் போன வாயை மூடிக்கொண்டேன். என் மனைவியும், குழந்தைகளும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். இந்தப் பின்னணியில் ராணி முத்து நிர்வாகம் என்னிடம் மேற்கொண்டு மாத நாவல் கேட்காததை வருத்தமில்லாமல் புரிந்து கொண்டேன்.

இந்தச் சூழலில் ஓரிரு ஆண்டுகளில், இந்த நாவல் டில்லிப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கும், மத்திய அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாவது வகுப்பிற்கும் பாடநூலாய் வைத்திருப்பதாக தமிழனின் கூனை கவிதைகளால் நிமிர்த்த முயன்ற பேராசிரியர். சாலய் இளந்திரையன் அவர்கள் என்னிடம் தெரிவித்தார். காலமான அந்தப் போராளிக் கவிஞரை இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். காரணம், எனது படைப்புகள், பல பாடநூல்களாக வைக்கப்பட்டாலும், இந்த 'வளர்ப்பு மகள்' தான் முதலாவது பாடநூல். பேராசிரியர் சாலய் இளந்திரையன் அவர்கள் நக்கீரக் குணம் கொண்டவர். இந்த நாவலில் அவர் எதிர்பார்க்கும் தரமும், உரமும், நோக்கும், போக்கும் இல்லாதிருந்தால், நிச்சயம் இந்தப் படைப்பைப் பாடநூலாக்க முன்மொழிந்திருக்கமாட்டார் என்பதை நினைத்ததும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கியது.

படைப்பும் - படைப்பாளியும்

ஒரு படைப்பாளி தன்னையும் சேர்த்துத்தான் படைப்பை உருவாக்குகிறான். நானும் முப்பது குடித்தனங்களுக்கு ஒண்ணே 'ஒண்ணு கண்ணே கண்ணாக இருந்த கதவில்லாத கழிப்பறைக்குள் ஆளிருக்கா' என்று கேட்டுக்கொண்டே போவதும், குழாயடியில் என் சாண் உடம்பை ஒரு சாணாய் குறுக்கியபடியே குளித்ததும், வீட்டுக்குள் மூட்டைப் பூச்சி, வெளியே கொசுக்கடி என்று இரவில் தூங்கமுடியாமல் அல்லாடியதையும், இப்போது கூட நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த இன்ப துன்ப அனுபவம், நான் வட சென்னை கல்லூரியில் படித்த 1958-62 ஆண்டு காலக்கட்டத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், இந்தக் கதையில் வரும் ராக்கம்மா, இட்லி ஆயா, துரைமுக கந்தசாமி, ரிக்ஷாக்கார நாயக்கர் போன்ற பழைய மூத்தத் தோழர்களின் அன்பில் கசிந்து போனது, இன்னும் கண்களைக் கசியச் செய்கிறது. என் சித்தப்பா பாண்டி நாடாரும், என் சித்தி ராசம்மாவும் என்னைப் படிக்க வைப்பதற்கு நகைகளை அடகு வைத்ததும், கோணி சுமந்து படிக்க வைத்ததும், நெஞ்சில் நீங்காத நினைவுகளாகச் சுழல்கின்றன. கூடவே, அனைத்து குடித்தன குடியிருப்புகளிலும், வீட்டுக்காரிகள் அசல் அகங்காரிகளாக நடந்த அனுபவங்களை பார்த்ததுண்டு. அதேசமயம், அவர்களுக்கும் என்மீது அளப்பரிய அன்பு... மரியாதை...

இட்லி ஆயா

இந்த நாவலில் வரும் இட்லி ஆயா இப்போது இல்லை. ஒரு சிறுகடை வைத்திருந்த அந்த மூதாட்டியிடம், நான் சென்று, அவளை தனது பழையக் காதல் சங்கதிகளைப் பேச வைத்தது இப்போதுதான் நடந்தது போல் தோன்றுகிறது. அவளும் கையில் காசில்லாமல், மூக்குறிய எனக்கு சிகரெட்டையும், வாயூறிய எனக்கு நிலக்கடலை மிட்டாயும் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன. ஆக, காதல் படம் காட்டியவளே எனக்குக் காசு வாங்காமல், இவற்றை அடிக்கடி தருவாள். கையில் காசு இல்லாத எனக்கோ, அவளது அடுத்த காதல் காட்சிகளை கிளறிவிட்டு, தம் அடிக்க வேண்டுமென்று ஆசை எழும். இந்த நாவலில் வரும் மல்லிகாவிற்கு கிடைத்த அன்பு போல், எனக்கும் இவளின் அன்பு கிடைத்தது. எனது சித்தப்பாவும் சித்தியும் என்னை அடிக்கடி கடிந்து கொண்டாலும், அதில் அன்பு மயமே வேரானது. இன்னும் சொல்லப்போனால், இவர்களுக்கு நானும் ஒரு வகையில், வளர்ப்பு மகனான ஆண் மல்லிகா

சொக்கலிங்கத்தில் சொக்கிப்போய்....

என்றாலும், லியோ டால்ஸ்டாய் தன் மனைவியை மட்டம் தட்டுவதற்காக அன்னா கரீனா' என்ற நாவலை எழுதத் துவங்கி, பின்னர் அந்த நாவல் நாயகியை நல்லவளாக்கி அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிப் போனார். இதேபோல், ஒரு சங்க மலரில் என்னைத் தாக்கி எழுதிய என் உறவினர் சொக்கலிங்கத்திற்கு சூடுகொடுக்க நினைத்து, இந்த நாவலை எழுத முனைந்தபோது, பாத்திரப் படைப்பிலும் தகவல் அடிப்படையிலும் இந்தச் சொக்கலிங்கம் சுகலிங்கமாகி விட்டார். நாவலில் வரும் திருமண நிகழ்ச்சி, அந்தக் காலத்தில் வட சென்னையில் உண்மையிலேயே நடந்த ஒன்று. உறவுமுறைச் சங்க பேர்வழிகள் நாவலில் வரும் அடை மொழிகளோடுதான் அப்போது அழைக்கப்பட்டார்கள்.

இந்திரமய சந்திரா

வளர்ப்பு மகளில் வரும் மல்லிகாவும் இந்திரமயத்தில் வரும் சந்திராவும், கால வேறுபாட்டால் மாறுபட்டவர்கள். என்றாலும் இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தள்ளப் பட்டவர்கள். இந்திரமயக் கதாநாயகி, இன்றையப் பெண்களின் பிரச்சினைகளை உருவகப்படுத்துகிறவள். நமது பெண்ணியவாதிகளும், இதில் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ஆண் படைப்பாளிகளும் சொத்துரிமையை வற்புறுத்தாத வரதட்சணை, கணவன் கொடுமை, சமையலறைச் சமாச்சாரங்கள், படுக்கையறைத் துன்புறுத்தல்கள் போன்றவற்றை அகலப்படுத்தி, சிற்சில சமயங்களில் ஆபாசமாகவும் எழுதி இருக்கிறார்களே தவிர, இன்றையப் பெண் எதிர்நோக்கும் ஆபத்தான பிரச்சனையை அணுகவே இல்லை - அநேகமாக என்னைத் தவிர.

இன்றைய கிராமங்களிலும் நகரங்களிலும், ஆண்கள் வெளியே போய் வரைவு மகளிரோடு கூடிக்கலந்து வாங்காத நோய்களையெல்லாம் வாங்கி விடுகிறார்கள். இதை அறியாமலே மனைவியாகிப் போன பெண் அந்த நோயை கணவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறாள். அவனது இத்தியாதிகளை தெரிந்து வைத்திருக்கும் பெண் கூட, அவனிடம் உடலுறவு கொள்ள முடியாது என்று மறுக்க இயலவில்லை. கேட்டால் அடி கிடைக்கும். மறுத்தால் உதை விழும். இந்தப் பயத்தின் அடிப்படையில் தத்தம் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று இந்த அறியாமைப் பெண்டீர், தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். இதனால், லட்சோப லட்சம் பெண்கள் வெளியே சொல்லமுடியாத் நரக வேதனையும், அவமானமும் தரும் பாலியல் நோய்களை சகித்துக் கொண்டே வாழ்ந்தபடி' சாகிறார்கள்.

போதாக்குறைக்கு, இந்த நோய், பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாத உட்புறத்தில் தோன்றுகிறது. இதனால், நோய் முற்றும் வரை, அந்த பாவப்பட்ட பெண்ணுக்கு அதிகமாக அதன் தாக்கம் தெரிவதில்லை. இந்தநிலையில், நோய் வாங்கிய கணவனையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று எந்த வீதி நாடகமோ , எந்தத் திரைப்படமோ , எந்த பத்திரிகையோ , எந்தப் பட்டி மன்றப் பேச்சாளரோ இதுவரை எழுதியதில்லை, சொன்னதில்லை. இந்த லட்சணத்தில், வீதி நாடகங்கள் கூட, இந்த பாலியல் நோய்க்கு காண்டம் களை பயன்படுத்தச் சொல்கிறதே அன்றி, பெண்களை பாலியல் நோய்க்கார கணவனை எதிர்த்து நிற்கச் சொல்லவில்லை. இந்த லட்சணத்தில் இவர்களுக்கு அரசாங்கம் வேறு நிதியளிக்கிறது.

கள ஆய்வுகள்

மத்திய அரசாங்கத்தின் கள விளம்பரத் துறைக்குத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய போது, தமிழகம் முழுவதையும், கிட்டத்தட்ட அங்குலம் அங்குலமாக பார்த்திருக்கிறேன். இப்போதும், அடிக்கடி எஸ்ட்ஸ் தடுப்பு வீதி நாடகங்களை பார்வையிட செல்கிறேன். தமிழகம் முழுவதும், இப்படிப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன் - பேசுகிறேன். அந்தந்த இடங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகள், இவர்களைப் பற்றியச் செய்திகளையும் எனக்குத் தெரிவித்துள்ளன.

பாலியல் நிபுனரான டாக்டர். காந்தராஜ், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில், பொம்பளைச் சீக்கு என்று கொச்சைப் படுத்தப்படும் இந்த நோயின் விபரீதங்களை படக்காட்சி மூலம் விளக்கினார். இருபது ரூபாய் மருந்து, மாத்திரை, ஊசியில் குணமாகக்கூடிய இந்த நோயை முற்ற விட்டால், அது அகலிகையின் முனிக்கணவர் சாபத்தால், உடம்பு எல்லாம் பெண்குறியாகிப் போன இந்திரனைப் போல, பாதிக்கப் பட்ட ஒவ்வொரு பெண்ணும், ஆணும் மாறுவார்கள் என்று இயல்பாகப் பேசியே அதிர வைத்தார். அவர் காட்டிய பாலியல் நோய் படங்களை நினைத்துப் பார்த்தால், இப்போது கூட என் உடம்பு நடுங்குகிறது இந்த நினைவு போகும் வரை, உண்ண முடியவில்லை.

அந்த முனிவரின் மனைவி அகலிகையாவது, கல்லாகித் தப்பிவிட்டாள். ஆனால், கல்லானாலும் கணவன்' என்று நினைக்கும் நமது தமிழ்ப் பெண்கள் தான் நடமாடும் நோயாளிகளாய் மாறுகிறார்கள். கணவர்களின் பாவத்திற்கு சிலுவைச் சுமக்கிறார்கள் அகலிகையைப்போல், இந்தப் பெண்களால் பாலியல் நோய்க்கார கணவன்களுக்கு சாபம் கொடுக்க முடியவில்லை. சாபம் கிடக்கட்டும் - பாலியல் சந்தர்ப்பங்களை நிராகரிக்க இயலவில்லை. இந்த இயலாமையை உடைத்தெறியும் முயற்சியே, இந்த இந்திரமயம்'.

காலப் பரிணாமம்

இந்த இரண்டு நாவல்களும் நோக்கிலும், போக்கிலும், நடையிலும் வித்தியாசமானவை. சந்திராவை நேர்கோட்டில் நடக்க வைத்தேன். அவளைப் பாலியல் பிரச்சனைகளுக்கு உட்படுத்த வில்லை. அப்படியே உட்படுத்தி இருந்தாலும் இந்திரமயத்தில்' வரும் அளவிற்கான பிரச்சினைகளை அந்தக் காலக்கட்டத்தில் அவள் உள்வாங்கியிருக்கத் தேவையில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், பலதரப்பு நட்பும் அவளையோ அவளுக்கு வருகின்ற கணவனையோ பாலியல் சிக்கல்களில் அதிகமாக உட்படுத்தியிருக்காது. ஆனால், 'இந்திரமயத்தில் வரும் சந்திரா, ஒரு வகையில் சந்திராவின் காலப் பரிணாமம். இன்னொரு வகையில் இன்றைய ஆடியோ, வீடியோ வர்த்தகக் கலாச்சாரச் சூழலின் தாக்கங்களாலும், வேரற்றக் குடும்பச் சூழலாலும் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதி.

'வளர்ப்பு மகள் நடை எளிமையானது, இனிமையானது. ஒரே கோட்டில்... போகக் கூடியது. விரிவாகவும் விளக்கமாகவும், முற்றிலும் சுய அனுபவப் பின்னணியில் எழுதப்பட்டது. ஆனால் இந்திரமயமோ', பின்னோக்கிய உத்தியில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்பதற்காக தப்பாகவோ, சரியாகவோ ஓரளவிற்கு எளிமையையும், இனிமையையும் பலி கொடுத்து எழுதப்பட்டது. கூடவே, பக்க கட்டுப்பாட்டைக் கருதி, மிக விரிவாக எழுத வேண்டிய நவீன காலப் பெண்ணியப் பிரச்சனையை, சுருக்கமாக எழுதியது. எனக்கே ஒரு குறையாகத் தெரிகிறது. இந்தக் குறுநாவலை வளர்ப்பு மகள்' அளவிற்கு பரந்த தளத்தில் எழுதியிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், இந்திரமயத் தளம், வளர்ப்பு மகள் தளத்தைவிட அகலமானது, ஆழமானது. காரணம் வளர்ப்பு மகள் அத்திப் பூத்தது போல் ஒரு தனிப் பெண்ணின் பிரச்சனை இதுவோ இன்றைய சராசரிப் பெண்களின் பிரச்சனை... இந்திரமயத்தை, விரிவாக மாற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். என்றாலும், எழுதிய எதையும் திரும்ப எழுத, என் மனம் ஒப்புவதில்லை . காரணம், எழுதும்போது இருக்கும் வேகம், விரிவான வடிவாக்கத்தின்போது வருவதில்லை. கூடவே, இவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும், இன்றைய அவசர உலகில் பெண்ணியவாதிகள் கூட, படிக்க மாட்டார்கள்.

'வளர்ப்பு மகளை' துவக்கத்தில் வெளியிட்ட ராணி முத்து நிர்வாகத்திற்கு நன்றியுடையேன். இந்த நாவலின் ஆய்வேடும், எனது படைப்புக்களில் முதலாவது ஆய்வாகும். இதற்காக, ஆய்வாளர் வை. சதாசிவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திரமயத்தை வெளியிட்ட வாசுகி இதழின் ஆசிரியரான, என் முன்னோடி எழுத்தாளர் தாமரை மணாளன் அவர்களுக்கும், அந்த இதழின் உதவி ஆசிரியராகச் செயல்பட்ட என் அருமைத் தோழர் செல்வா அவர்களுக்கும் நன்றியுடையேன். இப்போது இந்த இரண்டையும் உள்ளடக்கி வெளியிடும் பெரியவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

        சு. சமுத்திரம்
        (டிசம்பர் 2002)
------------

வளர்ப்பு மகள்

அத்தியாயம் 1


சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.

பழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

மேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.

கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.

‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

உள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.

நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்த சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி. மொத்தத்தில் சொல்லப் போனால், ஆசாமி அழகாகவே இருப்பார்.

அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர், மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவர் கண் முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்து விட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள்! ஏதோ, இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.

மல்லிகாவை பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று, ‘டப்பும்’ டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, “நான் சொன்னது... உன் காதுல விழலியாம்மா” என்றார்.

“என்னப்பா சொன்னீங்க?”

“இந்தாபாரு... ஒண்ணு ‘என்ன அப்பா’ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நீ எனக்கு பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?...”

மல்லிகா சிரித்துக் கொண்டே சொன்னாள் “நீங்களும் பண்ணவில்லையா? ‘அம்மா’ன்னு பிரித்துச் சொல்லுங்க... இல்லன்னா...”

“சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படு முன்னால... அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை கூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்...? குளித்து முடித்துவிட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்...”

மல்லிகா சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக் கொண்டு, மார்புக்கு மேலே சேலையை சுற்றிக் கொண்டு, வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, “மல்லி... நீ போய் குளிம்மா” என்றாள்.

“நான் அப்புறமா குளிக்கேன்.”

“கல்யாணத்துக்கு நேரமாகுது.”

“நான் வரலை... தலை வலிக்குது.”

சொக்கலிங்கம் பதறினார்: “உனக்கு வயசு வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா... நாலு பேரு என்ன நினைப்பாங்க...”

பார்வதி அவளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே, “நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள் தான் ஒன்னை தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்...” என்றாள்.

“முதல்ல அப்பா குளிக்கட்டும்.”

“உங்க அப்பா குளிக்கறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போவாரு...”

“நான் மிஷின்ல புரளாட்டா நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு... பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள், நீதான். மறந்துடாதே.”

“நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையில தான் நனையும்!”

“போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி...”

மல்லிகா சிரித்துக் கொண்டே, குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளே போய், ஒரு நாட்டுப் புடவையை எடுத்து, சொக்கலிங்கத்திடம் தவறிப் போய் “மல்லிகாகிட்டே கொடுங்க” என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக் கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும், பின் பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, தான் அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் போனாள்.
--------------
அத்தியாயம் 2


சொக்கலிங்கம் டெலிபோனைச் சுழற்றினார்.

“அலோ... செட்டியாரா... சாரு ரெடியா... பரவாயில்ல. அரைமணி நேரம் கழித்தே அனுப்புங்க... அப்புறம் வேளச்சேரி விவகாரம் பழம்... நேர்ல பேசலாம்... சரி... காரை அரை மணிக்கு அப்புறமாவே அனுப்புங்க. மூவாயிரம் ரூபாய் குப்பன் கிட்டே கொடுத்து அனுப்புறேன்... அதை முடிச்சிடுங்க... வச்சிடட்டுமா... வச்சுடுறேன்.”

சொக்கலிங்கம் டெலிபோனை வைத்தபோது, பார்வதி கண்ணாடி பொருத்திய பீரோவைத் திறந்து, வைர நெக்லஸ், ஏழு பவுன் இரட்டைவடச் சங்கிலி முதலியவற்றைக் கழுத்திலும், நான்கைந்து தங்கக் காப்புகளை கைகளிலும், மூன்று மோதிரங்களை விரல்களிலும் போட்டுக் கொண்டாள். நகைகளைப் போடப் போட, கல்யாண வீட்டிற்கு எப்போது போவோம் என்று அவளுக்கு அவசரம், ஆவேசமாகும் அளவிற்கு வளர்ந்தது.

குளித்துவிட்டு வந்த மல்லிகாவிற்கு பார்வதி தலைவாரி விட்டாள். “போங்கம்மா நான் குழந்தையில்லே... எனக்கும் கையிருக்கு” என்று அந்தக் கல்லூரிக்காரி சிணுங்கியபோது, பார்வதி, “இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எப்படி டிரஸ் பண்றது என்பதை விட, எப்படி எப்படிப் பண்ணாமல் இருக்கலாம் என்பதுதான் அதிகமாய் தெரியும். சும்மா தலையைக் கொடுடி. அப்படி இப்படி ஆட்டாதே!” என்று சொல்லிக் கொண்டு, அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, இரட்டைப் பின்னல் போட்டள். பிறகு கண்ணுக்கு மை போட்டாள். அதன் பின் பிரோவைத் திறந்து, நகைகளை நீட்டினாள்.

மல்லிகா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்: “ஏ, அம்மா... முதுகில அடிக்கணுமுன்னு சொல்லுங்க... குனியுறேன். கன்னத்துல முத்தங் கொடுக்கணுமுன்னால், முகத்தை நிமிர்த்துறேன். ஆனால் நகை போடுறதுக்கு கழுத்தையோ கையையோ நீட்ட மாட்டேன். போங்கம்மா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது...”

“உனக்குப் பிடிக்காவிட்டால் போகட்டும்... எனக்குப் பிடிக்கிறதுக்காவது போடக் கூடாதா... இன்னைக்கு மட்டும் போட்டுக்க ராஜாத்தி...”

“இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடுங்கம்மா... ப்ளீஸ். இதுங்களை நீங்களே போட்டுக்கங்க... உங்கள் அழகை எடுப்பா காட்டும்...”

பார்வதி யோசித்தாள்.

கணவனிடம் இருந்து இதுவரை வராத, “அழகு... எடுப்பாய் இருக்கும்” என்பன போன்ற வார்த்தைகளின் வசீகரங்களில் சிக்குண்ட அவள், மல்லிகாவுக்காகச் செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலனவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டாள். தோளும், கழுத்தும் தொடும் இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட குரல்வளை வரைக்கும் நகையடுக்குகள்.

இதற்குள் குளியலறையில் இருந்து, “ரெடியாயிட்டீங்களா” என்று கூவிக்கொண்டே வந்த சொக்கலிங்கம், மனைவியைப் பார்த்து, “இந்தக் கம்மலைக் கழட்டிட்டு அவளோட ரிங்கை போட்டுக் கோயேன்... கொப்பரைக்கு வளையம் போட்டது மாதிரி இருக்கும்...! வேணுமானால் காம்பவுண்டு கதவுச் சங்கிலியைக் கழட்டித் தரட்டுமா... அதையும் தங்கச் சங்கிலி மாதிரி போட்டுக்கோ! ஆளைப் பாரு நாற்பது வயதுக்கு மேல உடம்பைக் குறைக்கறதுக்கு பார்க்காமல், நகைகளை கூட்டப் பார்க்கறாள்...”

“நான் வேணுமானால் தடியா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்ன நஷ்டம்? ஏண்டி இப்படிச் சிரிக்கிற?”

“சிரிக்கலம்மா, அப்பா... அம்மாவை நீங்கள் ஓவரா பேசுறீங்க...”

“நாம இப்போ அவரு கண்ணுக்கு அப்படித்தாண்டி தெரியும்! இவரு இவ்வளவு பேசுறாரே, இவரு காலப் பாரு, குளிச்சாரம். காலுல தண்ணியே படல...”

“தண்ணி போடுற உன் ராமனை விட நான் தேவலடி...”

“என்னம்மா நீங்கள்... அப்பா தமாசுக்கு பேசுறாரு... நீங்கள் சீரியசா எடுத்தால் எப்படி?”

“விளையாட்டு வினையாகும்னு சொல்லுடி.”

“வினை கூட என்கிட்டே விளையாட்டாகும்ன்னு சொல்லும்மா...”

“நான் ஒண்ணும் சொல்லப் போறதுல்ல. அதோ, கார் வந்துட்டு. போயிட்டு சீக்கிரமா வந்துடணும்...”

மூவரும் காரில் ஏறினார்கள்.

மல்லிகா இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

உரித்த வாழைத்தண்டு போன்ற கால்கள். ஆமணக்குச் செடியைப் போன்ற சிவப்பும் ஊதாவும் ‘கலந்த’ நிறம். அது, ரத்தச் சிவப்பும் இல்லை; குங்குமச் சிவப்பும் அல்ல. அழகான சிவப்பு. தாமரைத் தண்டு போன்ற கழுத்து, நளினமும், கம்பீரமும் கலந்த பார்வை. எவர் சொல்வதையும், உண்மையிலேயே உன்னிப்பாகக் கேட்பது போல், முதுகை வளைத்து, முகத்தை முன்பக்கமாய் கொண்டு வரும் நேர்த்தி. குட்டையென்றோ, நெட்டையென்றோ சொல்ல முடியாத உயரம். பல்வேறு டிசைன்கள் போட்ட அந்த ‘மோஷி மோஷி’ சேலையில், இரட்டைப் பின்னல்களில் ஒன்று தோளின் முன்பக்கம் தொங்க, சேலைக் கடையின் முன்னால் நிற்கும் மெழுகுப் பெண்ணைப் போல, அதே சமயம் ஆபாசம் இல்லாத கவர்ச்சியுடன், பாலுணர்வைத் தூண்டாமல், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற பாங்குடன் மல்லிகா தோன்றினாள். அவளையே இமை விலகப் பார்த்த திரு-திருமதி சொக்கலிங்கங்கள், ஒருவருக்கு ஒருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டே புளகாங்கிதமானார்கள்.

டிரைவர் என்ஜினை ‘ஆன்’ செய்த போது, ராமசாமி வந்தார். பார்வதியின் பெரியண்ணன். அந்த உறவுக்கு ஏற்ற உருவம். உருவத்திற்கு ஏற்ற பணம் உள்ளவர். பணத்திற்கு ஏற்ற ‘பாவலா’ மனிதர்.

“கல்யாணத்துக்குப் புறப்பட்டாப் போல இருக்கு?”

சொக்கலிங்கம் முகத்தைச் சுழித்தார். காலங்காத்தால வந்துட்டான்! இவன் வாடை பட்டாலே, மூச்சு முட்டும். இனிமேல் போன காரியம் உருப்பட்டாப்லத் தான்!

‘அண்ணன் கேட்டதுக்கு ஏதாவது சொல்லுங்களேன்’ என்பது மாதிரி, பார்வதி, கணவனின் இடுப்பை ரகசியமாக இடித்தபோது, சொக்கலிங்கம், தன் மூத்த மைத்துனருக்குப் பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார். கனகச்சிதமாகவே பதில் சொன்னார்.

“பின்ன என்ன... உங்கள் தங்கை இவ்வளவு நகை நட்டு போட்டிருக்கும் போது, நான் இந்தப் பட்டு வேட்டியை கட்டியிருக்கும் போது, கல்யாணத்துக்குத்தான் போவோம்... கருமாந்தரத்துக்கா போவோம்?”

ராமசாமி சளைக்கவில்லை.

“அடடே... நம்ப மல்லிகா அக்காவோட கல்யாணமா? எனக்கு மறந்தே போயிட்டு! நானும் கார்ல ஏறிக்கிறேன்.”

“இல்லத்தான், நாங்கள் வழில ஓர் இடத்துக்குப் போயிட்டு வரப்போறோம். நீங்கள் முன்னால போய் அங்க இருக்கவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க. டிரைவர்! அவரு மறிச்சிக்கிட்டு நிற்கிறாரேன்னு யோசிக்க வேண்டாம். வண்டியை எடு. அவரு தானா துள்ளுவாரு... வண்டிக்கு சேதம் வருமேன்னு பார்க்கியா? சீக்கிரமாய் எடுப்பா...”

கார் சீறிக்கொண்டு புறப்பட்டது. ராமசாமி, அப்போதைக்கு ஒதுங்கிக் கொண்டார்.

பார்வதியால் தாளமுடியவில்லை. மல்லிகாவை விட்டு சிறிது விலகி உட்கார்ந்து கொண்டே, “எங்கள் அண்ணங்கன்னால் ஏன் உங்களுக்கு இப்படி பற்றி எரியுது?” என்றாள்.

“வத்தி வச்சால் பற்றித்தான் எரியும்.”

“உங்கள் தங்கை புருஷனை விட எங்க அண்ணன் தம்பிங்க மோசமில்ல. கல்யாணம் நிச்சயிக்கிறதுக்கு முன்னால, உங்கள்கிட்ட பெண்ணுக்குத் தாய்மாமனாச்சேன்னு, ‘இந்த இடம் பிடிக்குதா அத்தான்னு’ ஒரு வார்த்தை கேட்டாரா? சரி, கேட்கல. கல்யாண நோட்டீசை நேரிலயாவது வந்து கொடுத்தாரா? சரி. கொடுக்கல. கல்யாண வீட்ல யார் யாருல்லாமோ வாழ்த்துரையோ மண்ணாங்கட்டியோன்னு போட்டிருக்கே, உங்கள் பெயரையும் போடுறது? சரி போடல. பெண் வீட்டார்னு சொல்லி, அண்ணன்மாருங்க பெயருங்களை போட்டிருக்காரு... பிள்ளைகளோட பெயருங்களை போட்டிருக்காரு... தாய்மாமா பெயரை ஏன் போடல? இவள் பெயரைக் கூட போட்டிருக்காரு. இவளை எடுத்து வளர்த்த உங்கள் பேரு எங்கேயாவது இருக்கா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க? அரவ மிஷின் மாதிரி கத்துவீங்களே, இப்போ ஏன் பேசமாட்டேங்கிறீங்க?”

சொக்கலிங்கம் பட்டும் படாமலும் பதில் அளித்தார். “இதனால அவங்களுக்குத்தான் நஷ்டமே தவிர நமக்கில்ல. நாலுபேரு நாலுவிதமாய்ப் பேசப்படாதேன்னு போறோம். அவ்வளவுதான். உங்கள் அண்ணன்மாரு தாழ்த்தின்னோ, இல்லை என் மச்சான் உசத்தின்னோ எதுவும் கிடையாது. எல்லாருமே காலச் சுத்துன பாம்புங்க. டிரைவர், நீ ஏய்ய நாங்க பேசுறதக் கேட்கிறது மாதிரி வண்டியை மெதுவா விடுற? சீக்கிரமா விடுப்பா... இன்னொன்னும் சொல்றேன் கேளுடி. அண்ணன் தம்பிங்களானாலும் சரி, அக்கா தங்கைகளானாலும் சரி, அம்மா வயித்துல இருந்து ஒருவரோடு ஒருவர் சொல்லிட்டுப் பிறக்கல. ஒண்ணா பிறக்கறதுனாலேயே ஒண்ணா ஆயிட மாட்டாங்க. கூடப்பிறக்கறதுனாலேயே கூடி வாழ்ந்துட மாட்டாங்க. உறவை விட, நட்பு இருக்கே, அதுலயும் பால்ய சிநேகிதம் இருக்கே, அதுக்கு இணையாய் எதுவும் ஆக முடியாது. சொந்தக்காரங்கிட்ட உடம்புல ஓடுற ரத்தம் துடிக்கலாம். ஆனால், சிநேகிதங்கிட்ட அந்த உடம்புக்குள்ள இருக்கிற ஆன்மா துடிக்கும். இந்தச் செட்டியாரையே எடுத்துக்கோ... அவரு எங்கே பிறந்தாரோ, நான் எங்கே பிறந்தேனோ, அவரு செட்டியார்ல நாட்டுக்கோட்டையா, வாணியச்செட்டியா, ‘வளையல் செட்டியா’ன்னு கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவரை விட, எனக்கு நெருக்கமான மனுஷன் யாருமே இல்ல...”

“ஆயிரம் சொல்லுங்க, என் கூடப் பிறந்தவங்க... உங்கள் தங்கை புருஷன் மாதிரி நடக்க மாட்டாங்க... எங்கள் அண்ணனை நாயை நடத்துறதவிட மோசமாய் நடத்துனிங்க. கார்ல ஏறப்போனவரக் கூட முகத்துல அடிச்சதுமாதிரி பேசுனிங்க. அப்போ கூட அவரு கோபப்பட்டாரா? சிரிக்கிறத விட்டாரா...?”

“கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுஷண்டி. அதோட, ரோஷம் இருந்தால் தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்!”

“சரி சாமீ! எங்கள் ஆட்கள் ரோஷங்கெட்டவங்கதான், ஆபத்தானவங்கதான். இவள் அப்பாதான் ரோஷக்காரர், யோக்கியர், போதுமா...?”

“உனக்கு அறிவு இருக்காடி? இவள் நம்ம பொண்ணு. நம்மைத் தவிர வேற யாரையும் நினைக்காத பொண்ணு. நம் மடியிலேயும், தோளுலேயும் புரண்ட பொண்ணு. இவளையும், அந்த குடிகாரனையும் எதுக்காகடி சம்பந்தப்படுத்திப் பேசுற? பாரு, அவள் முகம் போற போக்கை...”

பார்வதி அப்போதுதான் உணர்ந்தவள் போல் திடுக்கிட்டு, மல்லிகாவைப் பார்த்தாள். அவள் அருகே நெருங்கி உட்கார்ந்து கொண்டு, அவளை தனது வலத்தோளில் படும்படியாய் அணைத்துக் கொண்டாள்.

மல்லிகா, சிரித்துக் கொண்டே, “நான் ஒண்ணும் கோபமும் படல, வருத்தமும் படல. நீங்கள் யாரைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும், எனக்குக் கவலையில்லை. என் கவலையெல்லாம் நீங்கள் சண்டை போடக் கூடாது என்கிறதுதான்” என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் இருவரின் கைகளையும், தன் இரு கரங்களால் பலமாகப் பிடித்துக் கொண்டாள்.

அந்தப் பிடியின் பலத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால், மல்லிகா, ஏதோ பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.

அவர்களின் கைகளைப் பிடித்திருப்பது, “என்னை கைவிட மாட்டீர்களே” என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.
--------------
அத்தியாயம் 3


வடசென்னையில், ‘வண்ணாரப்பேட்டை’ என்று வாயாலும், ‘வண்ணையம்பதி’ என்று எழுத்தாலும் அழைக்கப்படும் பகுதி; அதில் நெருக்கமான வீடுகள் கொண்ட ஒரு சுருக்கமான தெரு. அந்தத் தெருவை, கிராமத்துப் பாணியில் சொல்வது என்றால், ‘முக்கடி முடங்கடி’ என்று சொல்லலாம். சென்னைத் ‘தமிழில்’ சொல்வது என்றால் ‘முட்டுச் சந்து’. உள்ளே போகிற காரும் வண்டிகளும் நேராக, அந்தத் தெருவின் இரண்டு பக்கத்தையும், குறுக்காக அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் போய்த்தான் முட்டவேண்டும். அந்த வீட்டை முட்டாமல் வண்டிகள் திரும்பவும் முடியாது. இந்த இலட்சணத்தில், அங்கே, ஒரு லாரியும், இரண்டு மூன்று ‘டிரக்’ வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

முகவரி தெரியாமல், மெயின் ரோட்டில் இருந்து வருபவர்களை, இங்கே கொண்டு வந்து, “இந்தா, முட்டு”, என்பது மாதிரி, செயலற்றதாக்கும் வல்லமை, இந்தத் தெருவுக்கு உண்டு. இந்தப் பகுதி மக்களுக்கும் உண்டு. “செல்லும் செல்லாததுக்கு செட்டியார்” என்பது போல் முகவரியில் உள்ள தெருவின் விவரம் தெரியாமலும், அதே சமயம் விவரம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மனப்பான்மையுடனும், கேட்பவரிடம், “லெப்ட்ல கட்பண்ணி... ரைட்ல திரும்பி... அப்புறம் ‘சீரா’ போய்... ரைட்ல திரும்பி...” என்று சொல்பவர் சொன்னதும், அப்படிக் கேட்டுத் தொலைத்தவர்கள், இறுதியில் இங்கே வந்து தங்களைத் தாங்களே தொலைத்தவர்கள் போல், தடுமாறியது உண்டு.

என்றாலும், எப்போதும் கலகலப்புக்குப் பெயர் போன அந்த அதாவது, அந்த முனுசாமித் தோட்டத்தின் மூன்றாவது சந்து, இப்போது கலகலப்பான கலகலப்புடன் காட்சியளித்தது. குறுக்கே மறித்து நின்ற அந்த வீட்டின் வாசலில், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. (வாழை விலை அதிகம். வாங்கி கட்டப்படவில்லை) ஒலிபெருக்கியில், “ஓரம் போ... ஓரம் போ” என்று பாடல் ஒலித்தது. எந்த ஓரத்திலும் இடம் இல்லாத அளவுக்கு, அளவுக்கு மீறிய மக்கள் நெரிசல். மணமகளின் தந்தையும் சொக்கலிங்கத்தின் தங்கை கணவனுமான பெருமாளும், எதைச் சம்பாதிக்கவில்லையானாலும், நண்பர்களை சம்பாதித்து, தானும், அவர்களின் சம்பாதனைக்கு உட்பட்டவர் போல் தோன்றியது.

மணமேடையில் மணமக்கள், ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். சுற்றி நின்றவர்கள், ஏதாவது சத்தங்கேட்டு, வேறு பக்கமாகத் திரும்பும் போதெல்லாம், இவர்கள், தைரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணமகன் பேசக் கூடப் போனான். மணமேடைக்கு முன்னால், இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்ப்பதற்காகவே, சினிமாவை ‘தியாகம்’ செய்து விட்டு அங்கே, முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த ‘ரெண்டாங்கெட்டான்’ வயதுப் பயல்கள் சிரித்துக் கொண்டார்கள்.

கெட்டிமேளம் முழங்கியது. ஒரு தாம்பாளத் தட்டில் வெற்றிலை, தேங்காய் வகையறாக்களுக்கு மேலே இருந்த தாலியை, கூட்டத்திற்கு இடையே கொண்டு போய் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டு, மணமேடைக்குப் போய், தாலியை, பெருமாள், மணமகனுக்குக் கட்டப் போவது போல், அவன் கழுத்துப் பக்கமாக எதேச்சையாகக் கொண்டு போய்விட்டு, பிறகு மருமகனாகப் போகிறவனின் கையில் கொடுக்க, கூட்டம் சிரிக்க, மேளம் ஒலிக்க, மணமகள் கழுத்தை ஒருவர் பிடித்து நீட்ட தாலி கட்டப்பட்டு விட்டது.

அது, ஒரு சீர்திருத்தக் கல்யாணம். ராகுகாலம், எமகண்டம் பார்த்து, பக்குவமான சமயத்தில் நடத்தப்படும். அப்படியும் ஆகாமல், இப்படியும் ஆக முடியாமல் போன ஒரு ‘கலப்படக்’ கல்யாணம். நெல்லை மாவட்டத்தில், அருகு அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் குடியிருக்கும் இந்தப் பகுதியில், இப்படிப்பட்ட கல்யாணங்கள் தான் நடக்கின்றன. இருப்பினும் இந்தக் கல்யாணம், ஓரளவு வேறுபட்டது.

பெருமாளின் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவு முறைச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி யிருக்கிறார்கள். பணக்காரர்கள் ஆட்டிப் படைக்கும் இந்தச் சங்கத்தில், ஏழைகள் வீட்டுத் திருமணங்களில், சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியாக வேண்டும். இது, ஒரு கட்டாய ‘இன்வைட்டேஷன்’. இல்லையானால், அந்த ஏழைகள், தள்ளி வைக்கப்பட்டு விடுவார்கள்.

நிர்வாகிகள், ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். கோளாறே, அங்கே தான் இருக்கிறது. முதலாவதாக ஆளுக்கொரு வார்த்தை பேசாமல் ‘ஊமைக்கு ஊறுவாயன் சண்டைப் பிரசண்டன்’ என்பது போல், ஒவ்வொரு பணக்கார நிர்வாகியும், தன் பவுன்கார மோதிரங்களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும், ஏழை பாழைகள் தொடாமலே பார்க்க வேண்டும் என்பது போல், அரைமணி நேரமாவது பேசுவார். இந்த அரை மணிக்குள், “அதாவது... அதாவது” என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும். இரண்டாவதாக, நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகம். பணக்காரர்கள் மட்டும் நிர்வாகிகளாக இருப்பதா என்று ஒரு பேச்சு வந்த போது, அந்த தந்திரக்கார நிர்வாகிகள், ‘போர்ட் ஆப் ரெவின்யூ’ என்பது மாதிரி, வருவாய்க் குழு, மலர்க் குழு என்று இரண்டு குழுக்களைப் போட்டு, சில வாயாடி ஏழைகளை அவற்றில் போட்டு விட்டார்கள். ஆக, அந்த வ.கு.உ. (வருவாய்க் குழு உறுப்பினர் - இப்படித்தான் அழைப்பிதழில் போட்டிருந்தது), ம.கு.உ. (மலர்க் குழு உறுப்பினர்) செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், உதவிச் செயலாளர், நிர்வாகச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர், உதவித் தலைவர், நிர்வாகத் தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர், இணைப் பொருளாளர், நிர்வாகப் பொருளாளர் என்று இருபது பேர் பேசி, நேரம் இருந்தால் இன்னும் பத்துப் பேரும் பேச வேண்டும்! இவர்கள் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருப்பது என்றால் மணமக்களுக்கு, முதல் இரவு வருவதற்கே மூன்று மாதம் ஆகும்.

மணமக்களை வாழ்த்தி, தலைவரும், இதர நிர்வாகிகளும் பேசி முடித்த பின்னர், ஒரு வ.கு.உ. பேச எழுந்தார். மணமக்களுக்கு, தாங்க முடியாத எரிச்சல். பேசி முடித்தவர்களுக்கும், பேசப் போகிறவர்களுக்கும் அதே எரிச்சல். பேசுகிறவர் மட்டும், எவரையும் கண்டு கொள்ளவில்லை. கூட்டத்தினருக்கோ பசித் தொல்லை. சாப்பாடு பக்கத்திலேயே இருந்த போதும், பசி, வயிற்றுக்கு வெளியேயே வந்த போதும், ஒரு பேச்சை - அதுவும் உருப்படாத பேச்சைக் கேட்பது என்றால்...

செவிக்கு உணவு திகட்டியதால், வயிற்று உணவை தியாகம் செய்துவிட்டு, ஒரு சிலர் வெளியே வந்த போது, சொக்கலிங்கம் மனைவி - மகள் சகிதமாக காரில் இருந்து இறங்கினர்.

உள்ளே இருந்து ஓடி வந்த அவருடைய தங்கை செல்லம்மா, “வாங்கண்ணா... கொஞ்சம் முன்னாலேயே வரப்படாதா...” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள். அண்ணனின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

பார்வதியல் பொறுக்க முடியவில்லை. “இவரு என்ன மேடையிலா உட்காரப் போறாரு. சீக்கிரமாய் வாரதுக்கு” என்ற போது, மல்லிகா சிரித்துக் கொண்டே, “மேடையில் பேசுறவங்க தான் கடைசியில வரணும். அப்பா... நீங்கள் லேட்டா வந்ததனால, தலைவரா ஆயிட்டிங்க! அதனாலே மேடைல போய் உட்காரணும், இடம் இருந்தால்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“ஆமாண்ணா... அவரு அப்போதே உங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தார்” என்றாள், செல்லம்மா.

செல்லம்மா அவர்களை வரவேற்பது போல், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, முன்னால் நடக்க, மூவரும் உள்ளே போனார்கள். கூட்டத்தில் லேசான பரபரப்பு. சொக்கலிங்கத்தின் உதவி தேவைப்படலாம் என்று கருதிய இரண்டு பேரும், அவர் ஒரு காலத்தில் செய்த உதவியை இன்னும் நன்றியுடன் பாராட்டும் ஒருவரும், நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.

சொக்கலிங்கம் குடும்பத்தினர் உட்கார்ந்த போது செல்லம்மா, அண்ணனைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டே, கணவனிடம் போய், “அண்ணன் வந்துட்டாரில்ல, போய், ‘வாங்கத்தான்’னு ஒரு வார்த்தை கேளுங்க... போங்க” என்றாள். “போடி! உன் அண்ணன்... தாலி கட்டுற நேரத்தில் வந்துட்டாரு பாரு... காலுல விழுந்து கும்பிடணும்! அவருகிட்ட பணம் இருந்தால் அவருவரைக்கும். நான், ஒரு குதிரை காலுல கட்டுன பணத்துக்குப் பெறுமா...?” என்றார். “அவரு பணக்காரருன்னு உங்களை கூப்பிடச் சொல்லல. உங்கள் பெண்டாட்டியோட கூடப் பிறந்த அண்ணன். என்னை வருஷத்துல முன்னூற்று அறுபத்தஞ்சு நாளைக்கும் அடிச்சி தொலைச்சிங்க. இன்னைக்காவது, நான் சொல்றத கேட்கப்படாதா? உங்களைத்தான். போய் கூப்பிட்டு, மேடையில் உட்காரவையுங்க. நீங்கள் பெத்த பெண் மல்லிகாவை, எவ்வளவு பேரும் புகழுமா வைத்திருக்கார், பார்த்தீங்களா. போங்க...”

செல்லம்மா மன்றாடினாள்.

பெருமாள், வேண்டா வெறுப்பாக, சொக்கலிங்கத்திடம் போனார்.

“மேடைக்கு வாங்கத்தான்...” என்றார், இவர். “பரவாயில்லை... இங்கேயே இருக்கேன்” என்றார், அவர். பிறகு இவரும் வற்புறுத்தவில்லை. அவரும் எழவில்லை.

“நம்ம மல்லி காலேஜ்ல பேசுறவள் தானே, இங்கே பேசச் சொல்லலாமா?” என்று சொக்கலிங்கம் சொன்ன போது, பார்வதி, அவரை சூடாகப் பார்த்தாள். சொக்கலிங்கம், அடங்கிப் போன போது, அடக்க ஒடுக்கம் இல்லாத பெருமாள், ‘சரிதான் போய்யா...’ என்பது போல் போய்விட்டார்.

மணமகள் சந்திரா, தன் தங்கை மல்லிகாவையே பார்த்தாள். அவள் வருவது வரைக்கும், கணவன் தன்னை ஓரக்கண்ணால் பார்க்கிறானா என்று கவனித்துக் கொண்டு இருந்தவள், இப்போது, தங்கை தன்னை கவனிக்கிறாளா என்று பாசத்தோடு நோக்கினாள். கணவன், தன் முதுகைக் கிள்ளுவது தெரியாமலே - உணராமலே பார்த்தாள்.

மல்லிகாவும், அக்காவையே பார்த்தாள். உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த பாசத் துடிப்பு, அவள் நெஞ்சத் துடிப்பை அதிகமாக்கியது. பிறகு, மணமக்களின் இடத்தில், தானும், சரவணனும் அமர்ந்து இருப்பது போல் ஒரு பிரமை. அமர வேண்டும் என்ற ஓர் ஆசை. இங்கே இருந்த குண்டு குழி வீட்டில் அல்ல; ஆபர்ட்ஸ்பரியில் அல்லது, ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் வேண்டாம், சரவணனோடு எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காரலாம்; உட்கார வேண்டும்.

கூட்டத்தின் பெரும்பகுதி, மல்லிகாவையும் பார்வதியையுமே மாறி மாறிப் பார்த்தனர். மல்லிகாவை, கொஞ்சம் அழுத்தமாகப் பார்த்தனர். “எங்கே இருக்க வேண்டியவள், எங்கே இருக்கா... பார்த்திங்களா? ஆனாலும் நல்ல பொண்ணு... கர்வமே கிடையாது.”

மணமேடையில் ‘ம.கு.உ.’ ஒருவர், இடம், பொருள், வயிறு தெரியாமல் பேசிக் கொண்டே போனார். எரிச்சல் தாங்க முடியாமல், மல்லிகா, சரவணனோடு, தன்னை இணைத்துக் கொண்ட இன்பக் கோட்டையைக் கூட சிறிது தகர்த்துக் கொண்டு, கைகளை நெறித்தாள். பேசுபவர் வார்த்தைகள் மோதாமல், முட்டாமல் இருப்பதற்காக காதுகளைக் கூட கைகளால் அடைத்துக் கொண்டாள். பிறகு மேடை அநாகரிகத்தை ஆட்சேபிப்பதற்கு, இது நாகரிகமான எதிர்ப்பு அல்ல என்று நினைத்தவள் போல், கைகளை எடுத்துவிட்டு முகத்தைச் சுழித்தாள்.

அப்போது, ஒரு மாதத்துக்கு முன்புதான் வயதுக்கு வந்த அவளுடைய இரண்டாவது தங்கை, இரண்டு மூன்று தம்பிகள், அவள் அருகே வந்தார்கள். “அக்கா” என்று அந்த வார்த்தையை வாய் வழியாக மட்டும் விடவில்லை. முகமலர நின்று, கண்கள் விரிய அந்தப் பாசத்தை உதடு துடிக்கக் காட்டினார்கள். செல்லம்மாவும் அங்கே வந்து மகளை, மலைப்போடும், மலையில் ஏறிவிட்ட அலுப்பு கலந்த அமைதியோடும் பார்த்தாள். பெற்ற வயிற்றைத் தடவிக் கொண்டே பார்த்தாள்.

மல்லிகா எல்லோரையும் பொதுவாகப் பார்த்துவிட்டு, லேசாகப் புன்முறுவல் செய்தாள். அம்மாவுக்கு மட்டும், சற்று அதிகமாகப் புன்முறுவல் செய்தாள். அவ்வளவு தான். ஆனால், அவளைப் பார்த்த அந்த ஏழைப் ‘பாசிகள்’ அவளது பாசத்தின் பதில் வெளிப்பாட்டை கண்டுபிடிக்கும் அளவுக்கு மனதைச் சிதறவிடவில்லை. அவளை முழுமையாகப் பார்த்ததால், மல்லிகாவின் பாசக் குறைவு, அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்தச் சமயத்தில், சொக்கலிங்கம் எழுந்தார். நேரே மேடையைப் பார்த்துப் போனார். வாழ்த்துரை வழங்கியவர், இவர் தாக்க வருகிறாரா, அல்லது மைக்கைப் பிடுங்க வருகிறாரா என்று பயப்படும் அளவுக்கு பாய்ந்து போனார். நேராகப் போய், மணமகளின் கையை எடுத்து, ஆள்காட்டி விரலைத் தூக்கி, ஒரு பவுன் மோதிரத்தைப் போட்டுவிட்டார். மணமகன் கையில், ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். இந்தப் பரிசை சற்றும் எதிர்பாராத மணமக்கள், மேடையிலேயே எழுந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மணமக்கள் எழுந்ததும், இதுதான் சாக்கு என்று, கூட்டத்தினரும் சொல்லி வைத்தது போல் எழுந்தார்கள். “ஒரு வரைமுறை வேண்டாம்? எவ்வளவு நேரமய்யா வெறும் பேச்சைக் கேட்கிறது? ஒருவனாவது முன்னால் பேசுனவன் சொல்லாத விஷயத்தைச் சொல்றானா? சீச்சீ!”

கூட்டம் எழுந்து, பந்தியில் உட்காரப் போன போது கூட, ம.கு.உ. பேசிக் கொண்டு இருந்தார். இறுதியில், மைக் வலுக்கட்டாயமாக ‘ஆப்’ செய்யப்பட்டது. அவரது பேச்சு, பாதியில் கோவிந்தா! இன்னும் பேச இருந்த பத்துப் பேர்வழியினர் அடியோடு கோவிந்தா.

பேச வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டபோது, சொக்கலிங்கம் மனைவியிடம் வந்து “சரி... நான் டாக்சியில் போறேன். செட்டியார் காத்திருப்பார். நீங்கள் சாவகாசமா சாப்பிட்டுட்டு, கார்ல வாங்க” என்று சொல்லிக் கொண்டே, சட்டைப் பித்தானைப் பூட்டினார். புறப்படுகிறாராம்.

மல்லிகாவும் எழுந்தாள்.

“நானும் வரேம்பா. எனக்கு போரடிக்குது. நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கு. பிளீஸ்... நானும்...”

சொக்கலிங்கம், சிறிது யோசித்துவிட்டு, அப்புறம் யோசிக்காமலே பேசினார்.

“என்னம்மா நீ, சின்னப்பிள்ளை மாதிரி பேசுற? நாலு பேரு என்ன நினைப்பாங்க? அம்மா, அப்பாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறமா வா. நீ செய்யுறது தப்பு. அவங்க தான் உன்னைப் பெத்தவங்க. உன்னைப் பார்த்து, அவங்க மனசும் குளிரணும்; கொதிக்கப்படாது. பார்வதி, நான் வரட்டுமா? இவள் அவசரப்படுத்துறாள்னு நீயும் அவசரமாய் வந்துடாதே. நகை பத்திரம். எவனாவது கத்தரி போட்டுடப் போறான்...”

சொக்கலிங்கம் போய்விட்டார்.

மல்லிகாவிற்கு, லேசாகக் கண்ணீர் கூட வந்தது. எவ்வளவு நேரம் இந்த வீட்டில் இருப்பது? ஒரே புழுக்கம்... ஒரே வாடை ஒரே எரிச்சல்... சீ...

மல்லிகாவும், பார்வதியுடன் பந்தியில் உட்கார்ந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை. இந்நேரம், தியாகராய நகர் வீட்டில், இடியாப்பம் - குருமா சாப்பிட்டு இருப்பாள்! மிக்சியில் ஆரஞ்சுப் பழங்களையோ அன்னாசிப் பழங்களையோ பிழிந்து ஒரு கிளாஸ் சாறு குடித்து இருப்பாள். சாப்பாடா இது? உருளைக்கிழங்கு அளவிற்கு அரிசி! அதுவும் பாதி வேகாத அரிசி. காம்பு போகாத கத்தரிக்காய் - பொறியலாம். ரசமாம்... சரியான குழாய்த் தண்ணீர்.

மல்லிகாவால் சாப்பிட முடியவில்லை. பார்வதி சாப்பிடுவது போல் பாசாங்கு செய்து கொண்டும், மற்ற பந்தி ரசிகர்கள் முண்டியடித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருந்த போது, மல்லிகா, அத்தனை கண்களும் தன்னை மொய்க்கும்படியாக எழுந்தாள். அவள் அம்மா செல்லம்மாவுக்கு, என்னவோ போலிருந்தது. இருந்தாலும், எங்கே போய் கைகழுவுவது என்று தெரியாமல் மல்லிகா திகைத்து நின்ற போது, செல்லம்மா, அவளுக்கு அருகே இருந்த அண்டாப் பாத்திரத்தில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு தன் முந்தானையால், மகளின் வாயைத் துடைக்கப் போனாள். மல்லிகா, முகத்தைச் சுழித்துக் கொண்டே, ஒதுங்கிக் கொண்டாள்.
-----------
அத்தியாயம் 4


பந்தி முடிந்து, பெரும்பாலானவர்கள், ‘ஐந்தோ பத்தோ’ மொய் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். மணமக்களும், பார்வதியும், பெருமாளும், இந்தப் பிள்ளைகளும், அந்த ‘முக்கு வீட்டுக்குள்’ உட்கார்ந்து இருந்தார்கள்.

சின்ன அறை. சிக்கலான அறை. தட்டுமுட்டுச் சாமான்கள் மறைத்த இடம் போக, மற்ற இடத்தில் மூன்று ஆழ்வார்கள் பாடியது போல, அந்த மூவரும் உட்கார்ந்து இருந்த திண்ணையைப் போல, ‘மூவர் நிற்க, இருவர் உட்கார, ஒருவர் படுக்கும்படியான’ இடம். போதாக் குறைக்கு, அன்றைக்கு மழை பலமாகப் பெய்வது போல் தோன்றியது. வெளியே படுக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் படுக்க வேண்டும். அப்படியானால், முதலிரவை எங்கே வைப்பது? மாப்பிள்ளை வீட்டிலும் வைக்க முடியாது. அங்கேயும், இதே மழை பெய்யும். இதே மாதிரியான சின்ன அறைதான்! இதே மாதிரியான குழந்தை குட்டிகள். போதாக்குறைக்கு, கிழடு கட்டைகள்.

பெருமாள், மோவாயைப் பிடித்து யோசித்துக் கொண்டு இருந்தார். மூத்த மகளின் திருமணத்தை நடத்தி விட்ட திருப்தி, அந்த முகத்தில் இல்லை. ஒன்றும் இல்லாத அவருக்கு, அவரைப் போலவே ஏழையாய் உள்ள, ரத்த உறவு இல்லாத நண்பர்கள், ரேஸ் சகாக்கள், பட்டைச் சாராயப் பங்காளிகள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேலேயே மொய் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் மனதில் தெம்போ, திராணியோ இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும், தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்.

எப்படியெல்லாம் வாழ்ந்தேன்... ஒரு வீட்டுக்கு மூன்று வீடு வைத்திருந்தேன். மோட்டார் பைக் ஓட்டினேன். சொந்த மோட்டார் பைக்... எண்ணூரில் பத்து ஏக்கர் நிலம்... எல்லாம் கிண்டிக் குதிரை மாதிரி ஓடிட்டு. என்னோட முதலிரவு வெல்வெட் மெத்தை போட்ட கட்டிலில், பங்களா மாதிரி இருந்த வீட்டில் நடந்தது. ஆனால், என் பொண்ணுக்கு, கட்டிலுக்குப் பதிலாக வெறும் பாய்தான். பாயாவது பரவாயில்லை - அந்தப் பாய் விரிக்க இடம் இல்லையே என்ன செய்யலாம்? - கையில் ரூபாய் இருக்கு. ஓர் ஏர்கண்டிஷன் லாட்ஜ் பார்க்கலாமா? சீச்சீ! இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு அங்கே நடக்கிற விவரங்கள் தெரியக்கூடாது.

பெருமாள் தலையைப் பிடிக்காத குறையாக, சிந்தித்துக் கொண்டு இருந்தார். மணமகனை ரசித்துக் கொண்டு இருந்த சந்திரா, திடீரென்று ஏதோ நினைவில் பட்டவளாய் வெளியே வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து... மாடிப் போர்ஷனில் டி.வி. காட்சியாக வாழும் வீட்டுக்கார அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்த மல்லிகாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி, வீட்டுக்குள் வந்தாள். வீட்டுக்கார அம்மா ‘என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த படித்த ‘ரீசண்டான’ பொண்ணையா, முகத்துல அடிக்கறது மாதிரி கூட்டிக்கினு போற... இரு இரு... உன்ன கவனிச்சுக்கிறேன்’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டே, அந்த மதயானை மாடிப் படிகளில் ஏறியது.

மல்லிகாவிற்கு, அந்த வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. மூட்டைப்பூச்சிகள், கடித்த இடங்களை விட்டு விட்டு, ‘பிடித்த’ இடங்களைக் கவ்வின. சந்திரா மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே, தன் கணவனையும் பார்த்தாள். “நானும் பெரிய இடந்தான்... பெரிய இடத்துக்காரியோட அக்காவாக்கும் நான்” என்று, அவனிடம் சொல்வது போல், கண்கள் விரிந்தன. உதடுகள் லேசாகப் பிரிந்தன.

மூத்த மகளின் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்த பெருமாளும், மல்லிகாவை பெருமிதத்துடன் பார்த்தார். “இவளாவது நல்லா இருக்கட்டும். எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தியாவது நல்லா வாழணும். கடவுளே! அவளை நல்லா வாழ வை.”

அங்கே, எதுவுமே நன்றாக இல்லாததுபோல் தோன்றியதாலோ என்னமோ, மல்லிகா, பார்வதியைப் பார்த்து “வீட்டுக்குப் போகலாம்மா...” என்றாள். பார்வதி, அதைப் பொருட்படுத்தாதது போல, மாப்பிள்ளைப் பையனிடம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவன் அவளுக்கு, தொலைவாய்ப் போன நெருங்கிய உறவு என்பது தெரிய வந்தது. அதில் அவளுக்கு மகிழ்ச்சி. மல்லிகாவுக்கோ அதற்கு எதிர்மாறான உணர்ச்சி.

மற்றவர்கள் கேள்விக்குப் பதிலையும், பதிலுக்குக் கேள்வியையும் போட்டுப் பேசிக் கொண்டு இருந்த போது, நொடிக்கு ஒரு தடவை, “வீட்டுக்குப் போகலாம்மா; வீட்டுக்குப் போகலாம்” என்று சிடுசிடுப்புடன், செல்லக் கிறுக்குபோல் முணுமுணுத்துக் கொண்டு இருந்த மல்லிகா, திடீரென்று எழுந்து, “சரி நீங்கள் இருந்துட்டு காலையிலே வாங்க. நான் பஸ்ல போறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்படப் போனாள். உடனே, செல்லம்மா, கண்ணில் பெருக்கு எடுத்து விழப்போன நீரை நிறுத்தி வைத்துக் கொண்டே, “நீயும் இந்த வீட்லதாம்மா பிறந்தே. இங்க இருக்கவங்கெல்லாம் உன் கூடப் பிறந்தவங்கம்மா. கொஞ்ச நேரம் இருக்கப்படாதா” என்றாள்.

அப்படியும் மல்லிகா புறப்படப் போனபோது, அவள் கையை கீழே உட்கார்ந்து கொண்டே பார்வதி இழுத்த போது, பெருமாள், தன்னை மீறிவிட்டார். ‘குழந்தைங்க எல்லாம் எவ்வளவு பாசமாய் பார்க்குதுங்க. மருமகப் பிள்ளை கூட எவ்வளவு மரியாதையாய்ப் பார்க்கிறார். இவளைப் பார்த்ததும், எதுக்கும் மசியாத என் மனங்கூட எப்படி கலங்குது? இவளுக்கு ஏன் புரியல...? புரியாட்டால் போகட்டும்.’

இயல்பிலேயே துடிப்புக்காரரான, நாற்பத்தெட்டு வயது பெருமாள் கத்தினார்: “இவள் எனக்குப் பிறந்திருக்க மாட்டாள். சனியன் போனால் போகட்டும். அவள் கையை விடு, அக்கா. மூதேவி போனால் போகட்டும்...!”

எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். மேற்கொண்டு ஏதோ பேசப்போன பெருமாள், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, வெளியே போய் நின்றார். பார்வதி, பிரமித்தவளாய், ஆகாயத்தையே பார்த்தாள். செல்லம்மாள் கைகளை நெறித்தாள். பிள்ளைகள் கலங்கிப் போய் நின்றன.

எவரிடம் இருந்தும், இந்த மாதிரியான வார்த்தைகளையோ, அதட்டல்களையோ கேட்டு அறியாத மல்லிகாவிற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. ஏன்... இந்த ‘ஆளு’ இப்படிப் பேசுறாரு... ஏன் இப்படி மூதேவின்னு சொல்றாரு...?

மல்லிகா, தன் கைகளைப் பிடித்த உண்மை அம்மாவை உதறிக் கொண்டே, மடமடவென்று வெளியே வந்து, காரில் உட்கார்ந்து கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். உள்ளே இருந்த பார்வதி, அது வரைக்கும் சிரித்துக் கொண்டே பேசியவள், “அவள் போன பிறகு, எனக்கு மட்டும் என்ன வேலை இருக்கு? நாகரிகம் தெரியாத வீட்டுக்கு வந்தால் அவமானந்தான் கிடைக்கும். அவள் வரமாட்டேன்னுதான் சொன்னாள். நான் தான் நாலுபேரு தப்பா நினைப்பாங்களேன்னு கூட்டி வந்தேன். கடைசில, நாலு பேரு முன்னாலேயே அவளை அவமானப் படுத்திட்டிங்க...” என்று சொல்லிக் கொண்டே காருக்குள் வந்து, மல்லிகாவை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள். “காரை எடு தம்பி... இந்த இடத்துக்கு வாரது இதுதான் கடைசித் தடவை...” என்று அவள் கத்த, கார், கத்திக் கொண்டே ஓடியது.

நடைவாசலில் நின்று, நடப்பதை நம்பாதவர்கள் போல் கவனித்துக் கொண்டு இருந்த செல்லம்மாவும், அவள் பெண்டு பிள்ளைகளும், கட்சி பிரிந்து விவகாரத்தை வாதாடப் போனார்கள். இதற்குள், குழாய்ப் பக்கமாக நின்ற பெருமாள் அங்கே வந்து, “எல்லாம் உன்னால வந்த கோளாறுடி. தத்து கொடுக்காதடி... கொடுக்காதடின்னு எவ்வளவோ தடவை சொன்னேன்; நீதான் கேட்கல. இப்போ நான் பெத்த மகளே... ஏன் பெத்தோம் என்கிறது மாதிரி நடந்துக்கிறாள். இனிமேல், மகளைப் பார்க்கப் போறோம்னு போ... அப்புறம் பாரு வேடிக்கையை... ஒரு கையையாவது, காலையாவது ஒடிக்காட்டால் ‘என்னடா நாயே’ன்னு கேளு...” என்றார்.

தொலைவில் போன காரையே செல்லம்மா வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கணவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். மீறிப் போனால், சொன்னபடி செய்யக்கூடிய அரிச்சந்திரன், அவர்.

செல்லம்மா மனதுக்குள்ளே புலம்பினாள்.

‘நான் பெற்ற என் செல்ல மகளோட பழகத்தான் முடியல. இனிமேல் பார்க்கவும் முடியாதோ? கண்ணை கண்ணே பார்க்க முடியாதாம். இனிமேல், என் கண்ணை என் கண்ணால பார்க்கக் கூட முடியாதோ... முடியாதோ...’
--------------
அத்தியாயம் 5


சொக்கலிங்கமும், பெருமாளும் ஒரு காலத்தில் பிராண சிநேகிதர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஒன்றாகவே சுவரேறிக் குதித்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் இருந்து, இருபது வயதிலேயே, ‘பஞ்சம்’ பிழைப்பதற்காக, ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் எப்படியோ மாற்றி மாற்றிக் காட்டி, சென்னை வந்தவர்கள்.

இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம் அது. அந்த சமயம் கொடுத்த சமாச்சாரங்களால், பல்வேறு வியாபாரங்களைச் செய்த இருவரும், பலமாகச் சம்பாதித்தார்கள். சொக்கலிங்கம், பெருமாளின் சார்பில், பல இடங்களுக்குப் போய், அலைந்து அவருக்கு இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தார். பெருமாள், சொக்கலிங்கத்திற்காகச் சுற்றியலைந்து, மூன்று வீடுகளை வாங்கிக் கொடுத்தார். இப்போது சொக்கலிங்கத்திடம் இருக்கும் அரவை மிஷினுக்கு முன்பணம் கொடுத்தது கூட இந்தப் பெருமாள் தான். நட்பை, உறவுக் கயிற்றால் நன்றாகக் கட்ட வேண்டும் என்று கருதிய சொக்கலிங்கம், கிராமத்தில் இருந்த தன் ஒரே தங்கை செல்லம்மாவின் கழுத்தில், பெருமாள், மஞ்சள் கயிற்றை கட்டும்படி செய்தார். சொக்கலிங்கமும், சென்னையில், ஓரளவு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதியைக் கட்டிக் கொண்டார். சொல்லப் போனால், இந்தப் பார்வதியை கட்டிவைத்த பெருமையோ அல்லது சிறுமையோ, இந்தப் பெருமாளுக்குத்தான் சேரும்.

கால வேகத்தில், பெருமாள், குதிரை வேகத்தைக் கணக்கிடப் போனார். தொழிலில் மட்டும் குறியாக இல்லாமல், எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் அவருக்கு, பல்வேறுபட்ட சகவாசங்கள் கிடைத்தன. குதிரைக்கு பந்தயம் கட்டுபவன், அவருக்கு நெருங்கிய நண்பன். கள்ளுக்கடை கந்தப்பன், இவரிடம் நிஜமான அப்பன் மாதிரியே பழகினான். பருத்திச் சூதாட்டக்காரன் ஒருவன், இவர்மேல் வேட்டி மாதிரி பின்னிக் கொண்டான். போதாக் குறைக்கு சோடா பாட்டல்களை எடுத்து வீசும் ‘சோமாறிகளின்’ பேரன்பும் இவரைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பிடியில், இரண்டு வீடுகளும், போடு போடென்று ஓடிக் கொண்டிருந்த எண்ணெய் கடையும், எண்ணூர் நிலமும், இவர் பிடியை விட்டு, மீண்டும் பிடி கொடுக்காத அளவுக்குப் போய்விட்டன. பெருமாள், தெருவுக்கு வந்தார்.

சொக்கலிங்கமும், எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவ்வப்போது, தங்கையிடம், மனைவிக்குத் தெரிந்தும், தெரியாமலும், பணம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை, பெருமாள், மனைவியை உதைத்துப் போட்டுவிட்டு, எடுத்துக் கொண்டு போகிற செய்தி, அவருக்குக் கேளாமலே போய்ச் சேர்ந்தது. தங்கை அடிபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தோடு, இன்னும் பல காரணங்களும் சேர, அவர் பணத்தை நிறுத்தினாரே தவிர பாசத்தை நிறுத்தவில்லை.

அந்தப் பாசத்திற்கும் ஒரு சமயம் கண்டம் வந்தது. தங்கையின் வீட்டுக்குப் போயிருந்த அவரை, அப்போது குடித்துவிட்டு வந்த பெருமாள், “ஏண்டா... சோமாறி... என் பெண்டாட்டிக்கிட்ட வத்தி வைக்கவாடா வந்தே...” என்று சொல்லி, கையைக் காலை ஆட்டியபோது, சொக்கலிங்கம், மச்சானின் அடிகளுக்காக அங்கே அப்போது ஒதுங்கிக் கொண்டது போல், தங்கையின் குடும்பத்திடம் இருந்து, கிட்டத்தட்ட அடியோடு ஒதுங்கிக் கொண்டார். போதாக்குறைக்கு, பார்வதியின் அண்ணன்கள், “‘கழுதை கூட சேர்ந்தால், கவரிமானும் எதையோ தின்னும்’ என்கிறது மாதிரி ஆயிடப் போகுது. பெருமாள் உங்களை மாதிரி ஆக முடியாட்டாலும் கவலை இல்லை. நீங்க அவனை மாதிரி ஆகிடக்கூடாது பாருங்க. அதனால...” என்று மேற்கொண்டு பேசாமல் விட்ட போது, சொக்கலிங்கம், “அதனால” என்பதற்கு உண்டான அர்த்தங்களைப் புரிந்து கொண்டார். பார்வதியும் ஒத்துப் பாடினாள். சொக்கலிங்கம், தங்கை வீட்டை எட்டிப் பார்ப்பதே இல்லை. உயிருக்குயிராய் நேசித்த தன் தங்கையை, தன் உயிருக்குள்ளேயே சங்கமித்துக் கொண்டவர் போல், அவளிடமும், அவர் பாராமுகமாய் இருந்தார். செல்லம்மா தான் எப்போதாவது, அண்ணனின் நினைவு வரும்போதெல்லாம், அவர் வீட்டுக்குப் போவாள். அதுவும், அவளுக்கு குழந்தை குட்டிகள் அதிகமாக அதிகமாக, அவள் வரவும் குறைந்து கொண்டே வந்தது.

பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில், சொக்கலிங்கம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பெருமாள், பிள்ளைகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ‘துள்ளி’ விளையாட பிள்ளை பிறக்காததில், சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். சிலர், அவருக்கு மறுமண யோசனையைத் தெரிவித்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட, அப்போதைய இளம்பெண்ணான பார்வதி, தூக்கில் தொங்குவதாகச் சபதம் போட்டதோடு நில்லாமல் ஒரு கயிற்றில் - அவள் தொங்கினால் அறுந்து விழக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கயிற்றை கையில் வைத்துக் கொண்டாள்.

அவள் அண்ணன்மார்கள், “அடிப்பேன் பிடிப்பேன்” என்றார்கள். இவ்வளவுக்கும், அவருக்கு, மறுமண ஆசை ஏற்படவே இல்லை. யாரோ சொன்னார்கள். இவரும் யாருக்கோ என்பது மாதிரி கேட்டார். இவ்வளவுதான்.

டாக்டர்கள் தனது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டாலும், பார்வதி அசரவில்லை. ஓர் ஆயுர்வேத டாக்டரின் யோசனைப்படி, கணவனுக்கு, பாயாசத்தில், பச்சை முட்டையை உடைத்தும், பாதாம் பருப்பைப் பாலில் கலந்தும் கொடுத்தாள். விளைவு, சொக்கலிங்கம் வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கினார். இந்த விவகாரங்களை ஜன்னல்களை எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்ட பார்வதி, கணவனுக்கு, பாதாம் பருப்பு வசதிகளை நிறுத்தியதோடு, இரவில் தலைவலி என்று சாக்கு சொல்லி, புருஷனை பட்டினி போட்டாள். சொக்கலிங்கம் சரியானார். ஆனால் எப்படியாவது ஒரு பிள்ளை வேண்டும் - எந்தப் பிள்ளையையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார்.

விவகாரத்தை, தங்கை சொல்வதற்கு முன்பாகவே, ‘அரவை மில்’ ஒற்றர்கள் மூலம் புரிந்து கொண்ட, பார்வதியின் சகோதரர்கள், தத்தம் பிள்ளைகளைக் காட்டி, “இந்தா பிடி” என்றார்கள். யார் பிள்ளை தத்துக்குப் போவது என்ற விவகாரத்தில் அந்த சகோதரர்களே, ஒருவருக்கொருவர் மனங்கோணி, அடிக்காத குறையாகப் பேசிக் கொண்டார்கள். இறுதியில், தங்களுக்குள்ளேயே சமாதானப்பட்டு, தங்களின் அக்காள் பிள்ளையான ஆறு வயது ராமனைக் காட்டி “இந்தாங்க...” என்றார்கள்.

சொக்கலிங்கம் யோசித்தார். மைத்துனன்மார்கள், தனது திரண்ட சொத்துக்களைத் திரட்ட நினைத்தே, இப்படி உருப்படாத பிள்ளைகளைக் காட்டுவது போல் தோன்றியது. அதோடு, மறுமணம் என்ற யோசனையை யாரோ சொல்ல, இவரையே, “அடிப்போம் - பிடிப்போம்” என்ற பயல்கள். இவன்களிடம் தத்துகித்து எடுத்தால், அப்புறம் கழட்டிக்க முடியாது. ஜென்மாந்திர தண்டனைக்குச் சமமானது. அவருக்குத் தங்கையை கண்ணால் பார்க்காமல் இருக்க முடிந்ததே தவிர, உள்ளத்தால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளது இரண்டாவது மகளான இந்த மல்லிகா மீது அவருக்கு அளவற்ற பாசம். அவள் பிறந்த பிறகு தான், ஜோதிடர் ஒருவர் சொன்னது போல், தாய் மாமனான தனக்கு, யோகத்திற்கு மேல் யோகம் அடிப்பதாக நம்பினார். தங்கையின் வீட்டுக்குப் போய் மூன்று வயதுக்கேற்ற லாவகத்துடன், மான் குட்டி மாதிரி கவர்ச்சியாய், மீன் குட்டி மாதிரி சுறுசுறுப்பாய் விளங்கிய மல்லிகாவைக் கேட்டார். தங்கைக்காரியோ, தன் மகளைத் தர முடியாது என்பதை தயக்கத்தோடு வெளியிட்ட போது, “உன் பிள்ளை என் பிள்ளை இல்லியா? எப்படியோ... ஒருவரை ஒருவர் பாராமல் இருக்கும்படியாய் ஆயிட்டுது. உன் பிள்ளையைப் பார்த்தாவது, உன்னைப் பார்க்கிற ஆறுதல், எனக்கு வேண்டாமா?” என்று அவர் கேட்டபோது, செல்லம்மாவால், தாள முடியவில்லை. “இவள் பிறக்கதுக்கு முன்னாலேயே நாம் பிறந்தவங்க அண்ணா” என்று சொல்லிக் கொண்டே மல்லிகாவை, அவரிடம் நீட்டினாள்.

சொக்கலிங்கம், நேராக வீட்டுக்கு வந்து, மனைவியிடம் குழந்தையை நீட்டினார். அப்புறந்தான், அவளுக்கு விஷயமே புரிந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாள்; அசந்து போன அண்ணன்களின் பேச்சைக் கேட்டு, சில சமயம் குழந்தையை அடித்திருக்கிறாள். சொக்கலிங்கம் குழந்தையை வைத்துக் கொஞ்சும் போது, பொறாமை கூட ஏற்பட்டிருக்கிறது என்றாலும் குழந்தையின் மேலான சிரிப்பில், கள்ளங்கபடமற்ற கையாட்டும் லாகவத்தில், அவள், தன் எரிச்சலை அடக்குவது தெரியாமலே அடக்கினாள். அந்தக் குழந்தை அவளை, ஒரு சமயம் “அம்மா அம்மா...” என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது, அவள் இதயத்தைத் தொட்டது.

ஒரு சமயம், கணவனிடம் ஏதோ மனத்தகராறில் சாப்பாட்டுத் தட்டை முன்னால் வைத்துக் கொண்டே, சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், அவள் கோபத்தாலும், அந்தக் கோபத்தை மீறிய பசியாலும் சுவரில் தலையைத் தேய்த்துக் கொண்டே இருந்த போது, இந்தக் குழந்தை, தன் வெள்ளரிப் பிஞ்சு விரல்களால், சோற்றை எடுத்து, அவள் வாயில் ஊட்டிய போது, பார்வதியின் வயிறு நிறைந்ததோ இல்லியோ, இதயம் நிறைந்தது. அன்றில் இருந்து இன்றுவரை, குழந்தை எங்கிருந்து வந்ததோ, அங்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஆசைக்கு, நிராசை கொடுத்துவிட்டு, இயல்பான தாய்மையினால் உந்தப்பட்டு, மல்லிகாவை, அவள், தாய்க்குத் தாயாக வளர்த்து வருகிறாள்.

சகோதரர்களின் சகவாசத்தால், அவ்வப்போது அவளுக்கு “நான் அனாதையாயிடுவேனோ... மல்லிகா கை விட்டுடுவாளோ” என்கிற எண்ணமும், பீதியும் எட்டிப் பார்த்தனவே அன்றி, இதுவரை, அவை எகிறவில்லை.

அப்படியே, அண்ணன்மார்களின் உபதேசத்தால், மல்லிகா கல்யாணம் ஆனதும் மாறினாலும் மாறலாம் என்ற எண்ண உளைச்சலில், அவள் சிக்கித் தவித்து, ஓரளவு சினந்தவளாய் இருப்பதுண்டு.

கல்லூரிக்குப் போகும் மல்லிகா, எப்போதாவது “சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது” என்று சொல்லுவாள். பார்வதி உடனே ஒன்றும் தெரியாது என்றும் ஒன்றும் தெரியாத தன்னை, மல்லிகா, சொந்த அப்பாவுடன் சேர்ந்து கொண்டு, ஏமாற்றப் போகிறாள் என்றும், இன்றைக்கே சொத்து பற்றி இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்றும், நாள் முழுதும் துடிப்பாள். என்றாலும் கல்லூரியில் இருந்து, மல்லிகா திரும்பியதும், நினைத்ததை மறந்து, “பக்கடா போடட்டுமாம்மா... ஆரஞ்சு வேணுமா... ஆப்பிள் வேணுமா...” என்று கேட்பாள்.

வாசல் அருகே நின்ற ஆட்டோ ரிக்‌ஷாவின் டிரைவர் உள்ளே எட்டிப் பார்த்தார். மல்லிகா இன்னும் வராதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையில், வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஆட்டோ அது. மல்லிகாவை கல்லூரியில் கொண்டு போய் விடவேண்டும். மாலையில் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

குளியலறைப் பக்கமாய்ப் போன பார்வதி, ஆட்டோவைப் பார்த்ததும், மல்லிகாவின் அறைக்கு வந்தாள். மல்லிகா, எதுவுமே புரியாதவள் போல், மேஜையின் முன் கைகளை ஊன்றி, முகத்தை அவற்றில் வைத்து, நெற்றியை, கோடுகள் விழும் வண்ணம் சுழித்தாள், எங்கேயும் போகப் போவதில்லை என்பது போல். படுக்கும் போது உடுத்திருந்த பருத்தி ஆடையோடு இருந்தாள். பார்வதி, அவளருகே வந்து, முகத்தை நிமிர்த்தினாள்.

“பைத்தியம்... இன்னுமா அந்த மனுஷன் பேசினது மனசில நிக்குது? இதுக்கு வருத்தப்படுறவள், எதுக்குத் தான் வருத்தப்பட மாட்டே? சொந்த அப்பாதானே பேசினார்? பேசினால் பேசிட்டுப் போகட்டும். இனிமேல் வேணுமுன்னால், அங்கே போக வேண்டாம். சரி, ஆட்டோ வந்துட்டுது, புறப்படுடி.”

“சொந்த அப்பா, சொந்தமில்லாத அப்பான்னு பேசுனிங்கன்னால், எனக்குக் கோபங்கோபமாய் வரும். அப்பா பேசிட்டார்னு நான் வருத்தப்படல... அந்த ஆள், நாலு பேரு மத்தியில், சனியன்னு பேசிட்டார்னு தான் வருத்தமாய் இருக்கு. ஏம்மா, படிக்காதவங்களுக்கு நாகரிகமாய் பேச வராதோ...”

“நான் கூடத்தான் படிக்கல. நாகரிகமாய் பேசாமலா இருக்கேன்...”

“நான் படிக்காத ஆண்களைச் சொன்னேன்.”

சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

“நான் கூடத்தான் படிக்கல... எப்போதாவது அநாகரிகமாய் பேசியிருக்கேனா? இழவு எடுத்த பயல், பேசினால் பேசிட்டுப் போறான். ஏதாவது பட்டச் சாராயம் போட்டிருப்பான். பன்னாடப் பயல்... அவனுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்கே? பெருமாள் மாதிரி ஆட்களையும், அவங்க பேசறதையும், நாம, அவங்களை மனுஷனாய் எண்ணி மதிப்புக் கொடுத்தால், அப்புறம் நாம எண்ணுறதுல்லாம் மனுஷத்தனமாய் இருக்காது. விடு கழுதையை... சீக்கிரமா புறப்படு... நானும் நுங்கம்பாக்கம் வரை, ஆட்டோவுல வரணும்... உம் புறப்படும்மா... நான் மட்டும் அவன் பேசும் போது இருந்திருக்கணும்... சரி... ஜல்தியாய் புறப்படும்மா...!”

அந்த ஆளை மனதில் இருந்து கட்டாயமாக விலக்கிக் கொண்டே, மல்லிகா புறப்பட ஆயத்தமானாள். புடவையை எடுப்பதற்காக, அவள் பீரோவைத் திறந்த போது சொக்கலிங்கம் வெளியே வந்தார்.

சொக்கலிங்கமும் மல்லிகாவும் ஆட்டோவில் ஏறிய போது பார்வதியின் அண்ணன், அந்த ஆட்டோவை வழி மறிப்பது மாதிரி வந்து நின்றுவிட்டு, பிறகு “காலேஜுக்கா... இல்ல செட்டியார் வீட்டுக்கா... எப்படியோ... நீங்க காலேஜுக்கும் மல்லிகா செட்டியார் வீட்டுக்கும் தெரியாமல் போயிடப்படாது. டிரைவர், யார் யார் எங்கு இறங்கணும் என்கிறதை ஞாபகப் படுத்துங்க...” என்று சொல்லிக் கொண்டே, வாசல் படிக்கட்டில் கால் வைத்தார்.

வாசலில் நின்ற பார்வதி, “வாங்கண்ணா” என்றாள்.

சொக்கலிங்கம், திடீரென்று, ஆட்டோவில் இருந்து இறங்கி, “நீ போம்மா... நான் செட்டியார் வீட்டுக்குப் போகலை. இவரு முகத்துல விழித்த பிறகு எங்கேயும் போகப்படாது. நீ கூட ஜாக்கிரதையா போயிட்டு வா” என்று மல்லிகாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனங்கிக் கொண்டே மச்சான்காரரைத் திரும்பிப் பாராமல் நடந்து, அரவை மில்லை நோக்கிப் போனார். ‘காலாங் காத்தால என்னடா சாமி இது... யாரை வேணுமுன்னாலும் அனுப்பு... ஆனால் இவரை மட்டும் அனுப்பாத...’

சொக்கலிங்கம் வெளியே போனபோது, பார்வதியும் அவள் அண்ணனும் வீட்டுக்குள் வந்தார்கள். ராமசாமி பெருமூச்சு விட்டுக் கொண்டே பேச்சைத் துவங்கினார்.

“உன்னை அடிக்கடி வந்து பார்க்கணும் போலத் தோணுது. அதே சமயம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டான்னு சொன்ன பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கு.”

“என்னாண்ணா... புது மொழியாய் பேசுறீங்க...”

“பின்ன என்னம்மா... மச்சான் என்னை நாயை பேசுனது மாதிரி பேசுறாரு. எத்தனை நாளைக்குத்தான் வாலைச் சுருட்டிக்கிட்டு வாரது?”

“அவரைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே. மனசில ஒண்ணுங் கிடையாது.”

“மனசில ஒண்ணுமில்லாம இருக்கவங்களுக்கு தலையில் ஏதாவது இருக்கும். உன் வீட்டுக்காரருக்கு அங்கேயும் ஒண்ணுங் கிடையாது. இல்லன்னால், நோட்டிஸ்ல வெறும் பெயரைக் கூடப் போடாத வீட்ல போய், ஒரு பவுன் மோதிரமும், நூறு ரூபாயும் கொடுப்பாரா... என் வீட்ல ஒரு கல்யாணம் காட்சி நடந்து, நான் அவரு பெயரை போடலன்னு வச்சுக்கோ... மனுசன் சும்மா இருப்பாரா... நீதான் சும்மா இருப்பியா?”

“எப்படியோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அவங்க படிவாசல் கூட மிதிக்கப் போறதுல்ல...”

“அங்க தான் நீ தப்புப் பண்ற.”

“எங்க?”

“சின்னப் பிள்ளையில எப்படி இருந்தியோ... அப்படியே தான் இருக்கம்மா. பெருமாள் மல்லிகாவை திட்டி அனுப்புன பிறகு, அப்புறம் என்ன பேசுனான்னு தெரிந்தா, இப்படிப் பேசுவியா?”

“என்ன பேசுனாராம்?”

“நீ மல்லிகாவை மிரட்டி, அவங்க கூட பேசக்கூடாதுன்னு வைத்திருக்கியாம்... எல்லாம் சொக்கலிங்கம் மச்சானோட முகத்துக்காகப் பார்க்கானாம். அவரு மண்டையைப் போட்டதும், மல்லிகா மூலம் உன் கண்ணுல விரல் விட்டு ஆட்டுவானாம்.”

“குடிகாரன்... அப்படித்தான் பேசுவான்... விட்டுத் தள்ளுங்க...”

“விட்டுத் தள்ளக் கூடிய சமாச்சாரமில்லம்மா... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... பெருமாள் சொன்னபடி செய்ய மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்?”

“மல்லிகா அதுக்கு இடம் கொடுக்க மாட்டாள். நல்ல பொண்ணு. என் மேல் உயிரையே வச்சிருக்காள். ஏண்ணா சிரிக்கிங்க?”

“‘தான் பெறணும் பிள்ளை. தன்னோட பிறக்கணும் பிறவி’ என்கிறது பழமொழி. ஆயிரம் பிள்ளைகள் எடுத்து வளர்த்தாலும், ஒரு சொந்தப் பிள்ளைக்கு இணையாகிடுமா?”

“அதுக்குத்தான் எனக்குக் கொடுத்து வைக்கலியே.”

“கொடுத்து வைக்கலன்னு சொன்ன பிறகு... கெடுத்து வைக்காமலாவது இருக்கணுமில்லையா? நம் சொத்தை நாமே கட்டிக் காப்பாத்தணும் இல்லியா... பெருமாள்கிட்ட மாட்டி, செக்குமாடு சமாச்சாரமாய் ஆகி, சொத்து போயிடக் கூடாதே.”

“அப்படியெல்லாம் ஆகாதுண்ணா... மல்லிகா சொத்துக்கு ஆசைப்படுகிறவள் இல்ல. நேத்து, கல்யாணத்துக்குப் போகும் போது கூட, நகைகளை போடமாட்டேன்னுட்டாள்.”

“அப்படி நீ நினைக்கிற. நீ அவளை அருமை பெருமையாய் வளர்க்கிறது பிறத்தியாருக்குத் தெரியக் கூடாது என்கிறதுக்காக அப்படிச் செய்திருக்கலாம் இல்லியா... சும்மா பேச்சுக்குத்தான் சொல்றேன்; ஒரு வாரத்துக்கு முன்னால, செல்லம்மா, கல்யாணப் பெண்ணுக்குப் போட்டுட்டு, கழட்டித் தாரேன்னு சொல்லி, இவளோட நகையைக் கேட்டாள். நீ முடியாதுன்னு சொன்னே. இந்த மல்லிகா, ஒரு வார்த்தை, உன்னோட சேர்ந்து முடியாதுன்னு சொன்னாளா? கடைசில அவள் நல்லவளாயும், நீ பொல்லாதவளாயும் ஆகிப் போச்சு. ‘உங்களுக்கு ஒண்ணுந் தெரியாதும்மா’ன்னு அவள் அடிக்கடி சொல்றத நீ தாராளமா நினைக்கிற... எனக்கு அப்படிப் படல...”

“இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது போலிருக்கே.”

“இதுதான் உண்மை... யாரையும் நம்பக் கூடாது, என்னைக் கூட நம்பக் கூடாது. மச்சான் கூட... ஒரு பவுன் மோதிரம் வாங்குனாரு... மல்லிகாவைக் கூட்டிக்கிட்டுப் போய், கடை கடையாய் அலைந்து, இந்த மோதிரத்தை தேர்ந்தெடுத்திருக்காங்க... அவரோ... இல்ல இந்த மல்லிகாவோ... ஒரு வார்த்தை சொன்னாங்களா... எதுக்காக இந்த மூடுமந்திர வேலைன்னு கேக்குறேன். மல்லிகா எனக்கு என்னமோ... பசப்புக்காரியா தெரியுது.”

“எனக்கு தலை குழம்புதுண்ணா... வேற விஷயத்தைப் பேசலாம். காபி போடட்டுமா, டீ போடட்டுமா...?”

“நீ எதுவும் போட வேண்டாம். நான் இப்போ சொல்றதுதான். இனிமேல், என்கிட்ட நீ கேட்டாலும், நான் பேசப் போறதில்லை. சத்தியமாய் உட்கார்ந்த இடத்துல இருந்து சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. மல்லிகா, நல்ல பெண்ணாவே இருக்கலாம். ஆனால் பெண் புத்தி பின்புத்தி... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒன்று ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... சும்மா பேச்சுக்கு. இப்போ நல்லா இருக்கிற மல்லிகா, அப்போவும் நல்லா இருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? நாளைக்கு, மல்லிகாவுக்குக் கல்யாணம் நடக்கப் போகுது; அவள் புருஷனோ இல்ல மாமன் மாமியாரோ, அவளை குரங்காய் ஆட்டிப் படைக்க மாட்டாங்க என்கிறது என்ன நிச்சயம்? இவள் பெருமாள்கிட்டே போகமாட்டாள் என்கிறது என்ன நிச்சயம்? தான் ஆடாட்டாலும், சதை ஆடாதோ, நான் உன்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி... நீ என்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி, இவளும், அப்பன்கிட்ட பாசத்தைக் காட்டமாட்டாள்னு எப்படிச் சொல்ல முடியும்? அப்படியே காட்டினாலும், அதுல என்ன தப்பு?”

“நீங்க எப்பவுமே இப்படித்தாண்ணா... எதையாவது சொல்லிக் கோளாறு செய்வீங்க... ஆனால் வழி மட்டும் காட்டமாட்டீங்க.”

“இதுக்கு ஒரே வழி இருக்கு.”

“சொல்லுங்க... அவரு வந்துடப் போறாரு.”

“உன்னால மல்லிகாவை விட்டுட்டு இருக்க முடியாது. அதே சமயம், மச்சானுக்குப் பிறகு உன் கையே ஓங்கி இருக்கணும். இதுக்கு ஒரே வழி, நம்ம ராமனுக்கு, மல்லிகாவை கட்டிப் போட்டால்தான் முடியும்.”

“அது எப்படிண்ணா முடியும்? சின்ன வயசுலே உருப்படி இல்லாமல் போயிட்டான். நீங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எட்டாவது வகுப்புக்கு மேல தாண்டல. தாகம் எடுக்கும் போதெல்லாம் பட்டைச் சாராயத்தைப் போடுறான். இதுல வேற ரவுடித்தனம்.”

“இந்தக் காலத்துல ரவுடித்தனம் இருக்கவன் தான் இந்த மெட்றாஸ்ல பிழைக்க முடியும். பட்டச் சாராயம் இப்போ குடிக்கான். நாளடைவில் அதையே காய்ச்சி, கார் பங்களா வாங்க மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்? அதோட உன்னோட சொந்த அக்காள் மகன். ரத்தத்துக்கு ரத்தம். உன்னோட கடைகண்ணிகளை கட்டிக் காப்பாத்த இப்படிப்பட்டவன் தான் லாயக்கு. பெருமாள் இவன்கிட்ட வாலாட்ட முடியுமா? அவன் கேடிதான். ஆனால், நம்ம பயல் ரவுடி!”

“நூறாண்டுப் பயிருண்ணா.”

“என்னவோ... இப்பவே கல்யாணத்துக்கு நிச்சயமானது மாதிரி பேசுறியே. என் மூத்த மகளை ராமனுக்கு கொடுக்கலாமுன்னு நினைத்தேன். ராசிப் பொருத்தம் இல்ல. இரண்டாவது பெண்ணை கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன். ஒரு வாரம் டயம் கொடுக்கிறேன். யோசித்துச் சொல்லு. உன் அக்காள் மகன் மேல உனக்கில்லாத பாசமா? உனக்கில்லாத பொறுப்பா? ஒரே ஒரு வாரந்தான் டயம். நீ, மல்லிகாவை கொடுக்கலன்னா, நான் என் இரண்டாவது மகள் நளினியை கொடுக்கப் போறேன். அப்புறம் என் மேல வருத்தப்படப்படாது. நான் வரட்டுமா?”

பார்வதி, அண்ணனைப் ‘போய் வாருங்கள்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு, பித்துப்பிடித்தவளாய் இருந்தாள்.

ராமசாமி போய்விட்டார். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் போகவில்லை. அவள், தன் உள்ளத்தையே போர்க்களமாக்கி விட்டாள்.

‘மல்லி ஒருவேளை... அவருக்குப் பிறகு, அப்பா கூட சேர்ந்திடுவாளா... அந்த குடிகாரன் சொன்னபடி எல்லாம் ஆடுவாளோ? அப்படியானால் என் கதி, என் கதி? அனாதையாக ஆயிடுவேனோ? சொத்தெல்லாம் போயிடுமோ? மல்லி நல்லவளாய் இருந்து, அவள் புருஷன் மோசமாய் இருந்தால் என் கதி என்னாகிறது? என்கிட்ட சூதாய் பேசமாட்டாரு... என் நன்மைக்காகத்தான் பேசுவாரு... அதோட இந்த ராமன், என்னோட சொந்த அக்காள் மகன். ஊரில் ரவுடித்தனம் செய்தாலும், என்னை ‘சித்தி’ன்னு வாய் நிறையக் கூப்புடுற பிள்ளை. அவனும் நல்லா இருக்கணும், மல்லிகாவும் நல்லா இருக்கணும். குடிகாரன் பெருமாள் கிட்டே வரப்படாது. அதுக்காக, பொருத்தம் இல்லாத கல்யாணத்தைப் பண்ண முடியுமா? முடியணும். எப்படியோ முடியணும். இந்த மல்லிகா பெருமாள் பெண் தானே... அப்பன் புத்தியில் கால்வாசியாவது இருக்காதா?’

ராமசாமி போனதில் இருந்து மல்லிகா கல்லூரியில் இருந்து திரும்புவது வரைக்கும் பார்வதிக்கு ஒன்றும் ஓடவில்லை. வயிற்றுக்கு எப்போதும் வஞ்சகம் செய்யாத அவள், அன்று சரியாகச் சாப்பிடக் கூட இல்லை.

துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே வந்த மல்லிகா, “அம்மா, நான் கட்டுரைப் போட்டியில் இரண்டாவதாக வந்திருக்கேன் அம்மா” என்றாள்.

பார்வதி அப்போதைக்கு, அண்ணனையும், அவர் சொன்னதையும் மறந்து விட்டாள். “என்ன போட்டிம்மா...?”

“கட்டுரைப் போட்டி...”

“அப்படின்னா?”

“சும்மா கிடங்கம்மா... உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது. உங்ககிட்ட சொன்னதே தப்பு. துளைத்து எடுத்துடுவீங்க. கட்டுரை என்றாலே என்னன்னு தெரியாது. அதை விளக்கிட்டு, அப்புறம் போட்டியைப் பற்றி விளக்க இரவு மணி பன்னிரண்டாயிடும். பசிக்குதம்மா. அப்பா வரும் போது விவரமாய் சொல்றேன். நீங்கள் அப்போ கேளுங்க. இப்போ பசிக்குது.”

பார்வதிக்கும், இப்போது மனதுக்குள் பசியெடுத்தது. அண்ணன் சொன்னது சரிதான். நான் தான் ஒண்ணும் தெரியாதவளாய் வெளுத்ததை எல்லாம் பாலுன்னு நினைக்கிறேன்.

பார்வதி சற்று காரமாகவே பதில் சொன்னாள்; “இப்போ நான் உன் கண்ணுக்குப் பிடிக்குமா? என்னைப் பார்த்தால் உனக்கு மனுஷியாய்த் தெரியுமா? எல்லாம் தலைவிதி.”

பார்வதி சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய் விட்டாள். மல்லிகா, அவளை விரோதமாகப் பார்த்தாள். ஏன் இப்படிப் பேசுறாங்க? அவள் உள்ளே போய் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “உடம்புக்கு எதுவும் பண்ணுதாம்மா?” என்று கேட்டாள்.

அவளையே பார்த்தாள் பார்வதி. அண்ணன் சொன்னதை எல்லாம், அவளிடம் சொல்லலாமா என்று கூட நினைத்தாள். பிறகு அந்த அருமை அண்ணன், “எனக்கென்னமோ மல்லிகா பசப்புக்காரியா தெரியுது” என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

பார்வதி எதுவும் பேசாமல், அவளுக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். மல்லிகாவும் மறுபேச்சுப் பேசாமலே, எந்திரம் போல் தந்ததை வாங்கிக் கொண்டாள்.

இரவு சொக்கலிங்கம் வந்தார். மல்லிகாவால் தன் வெற்றி விவரத்தை அடக்கி வைக்க முடியவில்லை. அப்பாவிடம் கட்டுரைப் போட்டியின் விவரத்தை விவரமாகச் சொன்னாள். அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே, பார்வதி தன் தாம்பத்ய அறைக்குள் போய் விட்டாள்.

முன்பெல்லாம் காது விரியக் கேட்கும் அம்மா இப்படிப் போவதில் மல்லிகாவிற்கு வருத்தந்தான். தன்னையே ஆறுதல் படுத்திக் கொண்டாள். அம்மாவுக்கு உடம்புக்குச் சுகமில்லை போலும். உடம்பு சரியில்லன்னா மனசும் சரியா இருக்காது. அம்மாகிட்ட போய் பேசலாமா? வேண்டாம், எரிச்சல் இருக்கிற சமயத்தில் போனால் தப்பு. காலையில் பார்த்துக்கலாம்.

சொக்கலிங்கம் மகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தார்.

“என்னடி ஒரு மாதிரி இருக்கே?”

“ஒண்ணுமில்ல.”

“ஓ... உன் அண்ணன் வந்துட்டுப் போனாரோ... இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படித்தான் இருப்பே. அடுத்துக் கெடுக்குறதுல்ல நிபுணனாச்சே.”

“ஆமாம்... அவரு அடுத்துக் கெடுக்கவரு. நீங்க அரிச்சந்திர பிரபு. ஒரு பவுன் மோதிரம் வாங்குனதை சொன்னீங்க பாருங்க.”

“தற்செயலாய் வாங்குனேன்டி. அதுல அர்த்தம் பார்க்காதே.”

“நான் நடக்கிறதை எல்லாம் கவனிச்சிட்டுதான் பேசுறேன். மல்லிகா மேல் உங்களை விட எனக்குப் பாசம் அதிகம். அதனால்தான் கேக்குறேன். என் அக்காள் மகன் ராமனுக்கு நம்ம மல்லிகாவை கல்யாணம் பண்ணலாமுன்னு நினைக்கேன்.”

“என்னடி இது. காது கொடுத்தால், எதையும் பேசலாமுன்னு நினைக்கிறியா? பேசறதுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்? உனக்கு அறிவிருக்கா... அந்த ஓணான் பயலுக்கா இவளை கொடுக்கச் சொல்ற... இனிமேல், இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால், நான் பொல்லாதவனாய் மாறிடுவேன். ஜாக்கிரதை.”

பார்வதி புரண்டு படுத்தாள். மல்லிகா ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும் போது, அவள் மீது ஏற்பட்ட வெறுப்பு, இதுவரை அவளுக்குத் தெரியாமலே அடி மனதில் பதிந்து இருந்தது. அந்த உளைச்சல் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. ராமன் இருக்க வேண்டிய இடத்தில், இன்னொருத்தியின் மகள், ஒரு குடிகாரன் பெற்ற பெண் இருக்கிறாள் என்று நினைத்து நினைத்து அவள் பேயாக மாறிக் கொண்டிருந்தாள்.
------------
அத்தியாயம் 6


நாலு மாதம் கடந்தது.

பார்வதி பழைய பார்வதியாக இல்லாதது மல்லிகாவிற்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அரவை மில்லில் வேலை பார்க்கும் பையன்களைத் திட்டும் சாக்கில் “ஊர்ப்பயல் பிள்ளைகள் ஊர்ப்பயல் பிள்ளைகள்தான்” என்று ஜாடைமாடையாகத் திட்டத் துவங்கினாள்.

இப்போது மல்லிகாவிற்கு தலைவாரி விடுவதில்லை. கண்ணுக்கு மை போடுவதில்லை. அதே சமயம் எதுவுமே நடவாதது மாதிரியும் பல சமயங்களில் மல்லிகாவிடம் நடந்து கொள்கிறாள். ஒரு தடவை ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறும் போது மல்லிகா கால் தவறி கீழே விழப்போன போது பார்வதி பதறிப்போய் “பார்த்துப் போம்மா. நீ வர்றது வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு” என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அம்மா, பழைய அம்மாவாக மாறிவிட்டாள் என்று மகிழ்ந்து போன மல்லிகா, மாலையில் துள்ளிக் குதித்து ஓடி வந்து ‘அம்மா’ என்ற போது, அண்ணனுடன் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அம்மாக்காரி “அம்மா இன்னும் சாவாமல் தான் இருக்கேன்” என்று சொன்னாள்.

உடனே மல்லிகா, ‘நாம சாவாமல் இருக்கோமோ’ என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டாள். அண்ணன் ராமசாமியின் வருகை அதிகரிக்க அதிகரிக்க, அம்மாக்காரியின் வெறுப்பின் வேகம் ஏறிக் கொண்டிருப்பது கல்லூரிக்காரிக்குத் தெரியாது.

ராமனும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.

“உன் சித்திக்காரியை கெட்டியாய் பிடித்துக்கடா... அவ்வளவுதான் நான் இப்போ சொல்ல முடியும்” என்று பெரிய மாமா ராமசாமி சொன்னதன் உள்ளர்த்தம் புரியாவிட்டாலும், வெளியர்த்தம் புரிந்தவன் போல், சித்தி வீட்டுக்கு வரத் துவங்கினான்.

“இங்கே எதுக்குடா வந்தே” என்று கேட்கிற சித்தி, “ஏண்டா, அடிக்கடி வரமாட்டேங்கிற” என்று சொன்னதில் அவனுக்கு பட்டைச் சாராயத்தைக் குடிக்கும் போது ஏற்பட்ட ‘கிக்’கை விட அதிகமான ‘கிக்’ கிடைத்தது. சொக்கலிங்கம் தான் அவன் வருகையை அறவே அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவன் “சித்தப்பா, சித்தப்பா” என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டே, அவர் கொண்டு வரும் டிரம்களையும், தகர டப்பாக்களையும் எடுத்து வீட்டுக்குள் வைத்த போது, சொக்கலிங்கம் அவனை விரும்பவில்லையானாலும், வெறுக்காமல் இருந்தார்.

ஒரு சமயம் அவர் அரவை மில்லில் ஏதோ கலாட்டா. மிளகாயை சரியாக அரைக்கவில்லை என்று ஒரு பட்டாக் கத்தி மைனர் சொக்கலிங்கத்தை மிரட்டினான். பயந்து போன சொக்கலிங்கம், அவனிடம் வாங்கிய காசைத் திருப்பிக் கொடுத்தார்.

பட்டாக்கத்திக்கு மேலும் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. “என்னோட மிளகாயை கஸ்மாலமா பண்ணிட்டே. அதுக்கு ‘மாலு’ வெட்டுறியா... இல்லே மவனே... குடல உருவட்டுமா... நம்ம கிட்டயா டபாய்க்கிற நய்னா...” என்று சொன்னது, சொக்கலிங்கத்திற்கு அதிக பட்சமாகத்தான் தெரிந்தது. “செய்யுறதைச் செய்டா” என்றார். அவனும் செய்ய வேண்டியதைச் செய்தான். அவரது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, “இன்னாய்யா சொன்னே... விட்டேன்னா ஒரு குத்து” என்று, எச்சில் துளிகளில் சாராயத் துளிகள் தெறிக்கும்படி கத்தியபோது, எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ராமன், விட்டான் ஒரு குத்து. பட்டாக்கத்தி சுருண்டு விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கும் முன்னால் விட்டான் ஒரு உதை. பட்டாக் கத்தி படுத்துக் கொண்டே, “விட்டுடு வாத்தியாரே... இவரு... உன்னோட தோஸ்துன்னு தெரியாமப் பூட்டு... அப்பா விட்டுடு... அம்மா விட்டுடு” என்று புரண்டு கொண்டே புலம்பினான்.

“அவரு என்னோட தோஸ்து இல்லடா... சொந்தமான சின்ன நய்னாடா... அவருகிட்ட மன்னுப்புக் கேள்டா கயிதே...” என்று ராமன் கழுதை மாதிரி கனைத்து, ஆள்காட்டி விரலால், சித்தப்பாவைச் சுட்டிக் காட்டிய போது, அந்த ‘கயிதே’யும் சொக்கலிங்கத்தின் கையிலும், காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, திரும்பிப் பாராமல் ஓடியது.

சொக்கலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. அந்தத் தெருவுக்கே எஜமானனாகவும், திண்ணைப் பொறுக்கியாகவும் வாழும் ஆனானப்பட்ட பட்டாக்கத்தியையே, இந்த ராமன் அடக்கி விட்டான் என்றால், இவன் சாதாரண ராமன் அல்ல. ரவுடி ராமன். இவன் நமக்கு எப்போதும் தேவை!

அந்த நன்றிப் பெருக்கில், அவனுக்கு தன் வீட்டுக்குள் சகல உரிமைகளையும் கொடுத்தார், சொக்கலிங்கம்.

இதை பெரியண்ணன் மூலம் புரிய வைக்கப்பட்ட பார்வதி ஒருநாள், மல்லிகாவைப் பார்த்து “ராமன்கிட்ட ஏம்மா சிடுசிடுன்னு பேசுற. கொஞ்சம் சிரித்துத்தான் பேசேன். நீன்னா அவனுக்கு உயிரு” என்று பட்டும் படாமலும் பேசினாள்.

அம்மாவின் அபிலாஷை புரியாத மல்லிகா, “இவருகிட்ட சிரித்துப் பேசுறவள், யாருகிட்டயும் சிரித்துப் பேசுறவளாத்தான் இருப்பாள். இதுவும் இது மூஞ்சும். அப்பா சொன்னது மாதிரி சரியான ஓணான் மூஞ்சு” என்று எரிச்சலோடு சொன்ன போது, பார்வதிக்கு படு எரிச்சலாக இருந்தது. அண்ணன் வந்ததும் வராததுமாக “நான் பூடகமாய்ப் பேசிப் பார்த்தேன். இவள், சம்மதிக்க மாட்டாள் போலிருக்கே” என்ற போது, ராமசாமி, ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்துக் கொண்டார்.

“பாரு... பக்குவமாகச் சொல்லிப் பாரு. மாட்டேன்னுட்டாள்னா, கழுதையை வீட்டை விட்டுத் துரத்து...”

“அது எப்படியண்ணா...”

“சில சமயம்... ஆபரேஷன் செய்யணுமுன்னா செய்துதான் ஆகணும். ராமனைக் கட்டிக்க சம்மதிக்கலன்னா, அவள் இங்க இருக்கிறதுல அர்த்தமில்லை... இது உன்னோட சொந்த விஷயம். கேட்டாக் கேளு... விட்டால் விடு. ஆனால் ஒண்ணு அப்புறமாய், பெருமாள் திட்டுறான்... மல்லிகா புருஷன் அடிக்கடி வாரான்னு எங்கிட்ட வரப்படாது சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியணும். இல்லை என்றால், என் ரெண்டாவது மகள் இருக்கவே இருக்காள்...”

“ஏண்ணா கோபப்படுறீங்க... நான் பெண். எனக்கு என்ன தெரியும்? உங்ககிட்ட யோசனைதானே கேட்டேன்.”

“அதைத்தான் சொல்றேன். மல்லிகா, இந்த வீட்ல இருக்கிறதாய் இருந்தால், நம் ராமன் பயலோட இருக்கணும். இல்லை என்றால், எங்கேயும் போகட்டும். நீ, ராமனையே சுவீகாரமாய் எடுத்துக்கலாம். என் ரெண்டாவது பொண்ணு, உனக்கே மருமகளாய் வந்துடலாம். நீ கண் மூடுறது வரைக்கும், கண் கலங்காமல் பார்த்துக்குவாங்க...”

சிறிது திடுக்கிட்ட பார்வதிக்கு, மல்லிகாவை என்ன தான் வெறுத்தாலும் அவளை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதே சமயம், அண்ணன் சொன்னதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல், லேசாகச் சிரித்துக் கொண்டாள். சோகச் சிரிப்பு.

பார்வதி அண்ணன் போய்விட்டார் என்பதை, அரவை மில் பையன் ஒருவனை அனுப்பி நிச்சயப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

அந்தச் சமயத்தில், மல்லிகாவும், கல்லூரியில் இருந்து வந்தாள். வந்தவுடனேயே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, “அப்பா... சபையர் தியேட்டரில் ஒரு நல்ல ஆங்கிலப் படம் வந்திருக்கு... என்னை கூட்டிக் கொண்டு காட்டுங்களேன்” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

“நாளைக்குப் போகலாண்டா” என்று தனக்கு அவள் ஆண்பிள்ளை என்பதுபோல் சொக்கலிங்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பார்வதிக்குப் பற்றி எரிந்தது. காக்கா பிடிக்கிறாளோ... அப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, ராமனை காட்டமாட்டேன்னு சொல்லிவிடுவாளோ... கடைசியில், அந்த குடிகாரன் பெருமாள்கிட்ட அவஸ்தைப் பட வேண்டியதிருக்குமோ... இதுக்கெல்லாம் யார் காரணம்... இவள் தான்... இவளே தான்...

கணவன், காது கேட்காத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை, வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்ட பார்வதி, அங்கிருந்தபடியே, “பொம்புளன்னா... ஒரு அடக்கம் வேணும். இங்கிலீஷ் படம் பார்க்கப் போறாளாம்... எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம். கொடுப்பாரக் கண்டால், பேய் கூட குழைந்து குழைந்து ஆடுமாம்” என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே சமையலறையைப் பார்த்துப் போனாள். இப்படிப் பேசினாலும், மல்லிகாவிற்கு டிபன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை விரும்பாதவள் போல நடந்து கொண்டாள்.

இப்படி, பாசத்தைக் கொட்டிக் கொண்டே, தன்னையும் ‘கொட்டுவதை’ உணர்ந்த மல்லிகாவால், அவளை, அம்மா இல்லை என்று உதறவும் முடியவில்லை, அம்மா தான் என்று ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தனக்குள்ளேயே, சமாதானம் செய்து கொண்டாள். ‘ஒவ்வொரு பொண்ணுங்களை அவங்க அம்மாக்கள் எப்படித் திட்டுறாங்க... சில சமயம் அடிக்கக் கூடச் செய்றாங்களே... இந்த அம்மா அப்படி இல்ல. நான் ஆங்கிலப் படம் பார்த்து, ஆங்கிலக்காரியா மாறிடக் கூடாதுன்னு, நிஜமாகவே பயப்படுறாங்க... இதுல தப்பில்ல...’

என்றாலும், மல்லிகா அந்நியப்பட்டவள் போல் உணர்ந்தாள். அப்பாவிடம் கூட, அவளால் முன்பு பழகியது மாதிரி பழக முடியவில்லை. அவரிடம் பேசும் போதெல்லாம், அம்மாக்காரி, கண்களை உருட்டுவது போல் அவளுக்குத் தோன்றியது.
----------------
அத்தியாயம் 7


இந்த நேரத்தில் ஒரு நாள் சொக்கலிங்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.

டாக்டர், உடனே வந்துவிட்டதால், ஈமப்பத்திரிகைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. என்றாலும் மனிதர் ஆடிப் போய் விட்டார். இது, இரண்டாவது முறை. மூன்றாவது எப்படி இருக்குமோ...

பார்வதியும், மல்லிகாவும், அவரை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள். செல்லம்மாவும் வந்து பார்த்தாள். கல்யாணமாகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்திராவும், அவள் புருஷனும் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். ஆனால் பெருமாள் மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

எப்படியோ, சொக்கலிங்கம் தேறி வந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பார்வதி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். கணவர் பதறிப் போனார்.

“ஏம்மா அழுவுறே... எனக்குத்தான் சுகமாயிக்கிட்டே வருதே!”

“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தால, இந்தத் தடவை என் தாலி கெட்டியாய் இருக்கு... இன்னொரு தடவை இப்படி வந்து, நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், என் கதியை நினைத்துப் பார்த்தேன். நாய் கூட திரும்பிப் பாராது.”

“பைத்தியம்... அப்படியெல்லாம் பேசப்படாது. உனக்கு ஒரு குறையும் வராது. மல்லிகா நல்ல பொண்ணு.”

“மல்லி நல்லவள் தான்... அவளுக்கு வாய்க்கிறவன் நல்லவனாய் இருக்கணுங்கறது என்ன கட்டாயம்? அவள் அப்பன்... என்னை மிரட்ட மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்?”

“சரி, கவலைப்படாதே... உடம்பு சுகமானதும், அவளுக்கு நல்ல பையனாய் பார்க்கிறேன்!”

“கையில வெண்ணெயை வைத்துக்கிட்டு எதுக்காக நெய்க்கு அலையணும்?”

“என்ன சொல்றே?”

“நம்ம ராமன்...”

“நெஞ்சு லேசா வலிக்குது... மருந்தை எடு.”

“என்னை குழந்தை மாதிரி வச்சிருக்கிங்க... இனிமேல் வேலைக்காரியாய் ஆகப் போறேன்.”

சொக்கலிங்கம், நான்கைந்து நாட்களாக தலையை உருட்டிக் கொண்டு யோசித்தார். மனைவி சொல்வதில் ஓரளவு நியாயம் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர் காலத்திற்குப் பிறகு, அவள் காலம் எப்படி ஆகுமோ... அவள் சொல்வது மாதிரி... பெருமாள் ஏடா கோடம் செய்தால்...? போன உயிரை டாக்டர் மீட்டுயிருக்காரு... ஆனால் இந்த பெருமாள் ‘இருக்கியா செத்தியான்னு’ கூட கேட்கல... போதாக்குறைக்கு, “உன் மச்சான் மண்டையை போடட்டும். அப்புறந்தான் விவகாரமே இருக்கு” என்று இரண்டாவது மைத்துனன் கிட்ட சொல்றானாம். சொன்னபடி செய்றவனாச்சே... பார்வதிக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிடக் கூடாதே... நமக்கோ இந்த மாரடைப்பு எப்போ வேணுமுன்னாலும் வரலாம்... நீரிழிவு... இரத்த அழுத்த நோய்... இதுல ஒவ்வொண்ணும் முறை வைத்தது மாதிரி, நெஞ்சை அடைக்குது... திடீர்னு செத்து... விவகாரம் தீராமல் போனால், எல்லோருக்குமே தொல்லை... இந்த மல்லிகா வேறு... வர வர ஒதுங்கி ஒதுங்கிப் போறாள். இவளையும் நம்ப முடியாது போலிருக்கு... எப்படியாவது பார்வதிக்கும் பாதுகாப்பு வேணும்... மல்லிகாவுக்கும் பாதுகாப்பு வேணும். ராமனை மாதிரி ரவுடியாலதான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும்... அதுக்காக மல்லிகாவை... அவனுக்கு...

ஒருநாள் பார்வதி அவருக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்த போது, அவர் சில சந்தேகங்களைக் கேட்க, பார்வதி அவற்றைத் தீர்த்து வைத்தாள்.

“ராமன் படிக்காதவனாச்சே...”

“படித்தவங்க மட்டும் என்னத்த கிழிச்சிட்டாங்க... நம்ம எதிர்வீட்டு கமலா டாக்டருக்குப் படித்தவள். புருஷன் எஸ்.எஸ்.எல்.சி. பெயில். அவங்க குடும்ப உறவு எப்போதாவது பெயிலாகி இருக்கா? மூணாவது தெருவுல இருக்காளே... முனுசாமி மகள் சரோஜா... பி.ஏ. படித்துவிட்டு ஆபீசரா வேலை பார்க்கிறாள். ஒரு பஸ் கண்டக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கிறாள். எப்பவாவது அந்த கண்டக்டர், பஸ்ல முறைக்கது மாதிரி அவளை முறைக்கிறானா... படிப்பு... இந்தக் காலத்தில் தண்ணி பட்டபாடு. மரியாதை கிடையாது.”

“அதிகமாய் குடிக்கானடி...”

“இப்போ நாட்டுல எவன் குடிக்கல? குடிக்கிறது பெரிய பாவமா? நான் கூட ஜுரத்துல துடிக்கையில்... எங்க டாக்டர் சொன்னார்னு, இரண்டு ஸ்பூன் விஸ்கியையோ கிஸ்கியையோ கொடுக்கலியா... அதோட இப்போ ராமன் கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறதை விட்டுக்கிட்டு வாரான். கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பழக்கத்தையும், மல்லிகாவைக் கட்டுனதும் மறந்துடுவான். அவளும் அவனைத் திருத்திடுவாள்.”

“அவள் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.”

“நாம வளர்த்த பொண்ணு நம்மை மீறிப் போவாளா... ஒரு தடவை, ஒரு கிழவர் ‘யாரையாவது காதலிக்கியாமா’ என்று கேலியாகக் கேட்டதுக்கு ‘காதலாவது... கீதலாவது... அப்பா எவனையாவது காட்டி கட்டுன்னால் கட்டுவேன். வெட்டுன்னால் வெட்டுவேன்னு’ அவள் சொன்னது ஞாபகம் இருக்கா?”

“எதுக்கும் நானே ஒரு வார்த்தை...”

“நீங்க கேட்க வேண்டாம். வெட்கப்படுவாள். நானே கேக்கிறேன். அப்புறம் அவள் இஷ்டம்.”

“சரி. எனக்கு மூளை குழம்புது. நாலையும் யோசித்து, நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு நீங்க எல்லாரும் நல்லா சந்தோஷமாய் இருக்கணுங்கிறதுதான்.”

“நீங்க நினைக்கிறது மாதிரியே நடக்கும்.”

பார்வதி ஆனந்தப் பரவசமாக வெளியே வந்தாள். அப்போது, அத்தானைப் பார்க்க அங்கே வந்த இரண்டாவது அண்ணன் சுப்பையாவிடம் “அவரு... ராமனுக்கு, மல்லிகாவை கொடுக்க சம்மதிச்சுட்டாரு. பெரியண்ணன் போட்ட குறி பலித்துவிட்டது” என்றாள்.

சுப்பையா வெளியே ஓடினார். பெரியண்ணன் போட்ட குறி பலித்தால், அவர் எப்படி பெரிய மனிதனாவது? அவர் பொறுப்பில் கல்யாணம் நடக்க வேண்டாமா? அவரை ‘குள்ளப் பயலே’ என்று சொல்லி அடிக்கப் போன ராமனுக்கா மல்லிகா? கூடாதுய்யா கூடாது.

சுப்பையா ஓடினார். பெருமாள் வீட்டைப் பார்த்து ஓடினார்.
---------------
அத்தியாயம் 8


மல்லிகா, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். காலை நேரம். கல்லூரிக்குப் போக, இன்னும் நேரம் இருந்தது. புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, அன்று கல்லூரியில் நடக்க இருந்த பேச்சுப் போட்டி நினைவுக்கு வந்தது. பெயரைக் கொடுத்து விட்டாள். முதல் பரிசு சரவணனுக்கே போய்ச் சேரும். சந்தேகமே இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசாவது அவள் வாங்கியாக வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரி வாசலில் சைக்கிள் பெடலில் ஒரு காலை வைத்துக் கொண்டு நின்ற சரவணனிடம், அவன் நண்பன் ஒருவன் “எங்கேடா புறப்பட்டுட்டே?” என்று கேட்டதும், அதற்கு அவன், “தி.நகரில் எங்க மாமா வீட்டுக்குப் போய்விட்டு வரணும்” என்று சொன்னதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே, ‘என் வீடும் அங்கேதான் இருக்கு’ என்று அவனிடம் சொல்லவேண்டும் என்பது போல் துடித்தாள். துடித்தது, வாயில் வராத வார்த்தையாகி, இதயத்துள் எழுந்து, இனம் புரியாத இன்ப துன்ப எல்லையைக் கடந்த ஒரு வித மோன உணர்வாய் முகிழ்த்தது.

மல்லிகா, ஊஞ்சல் பலகையில், இரண்டு நாட்களாக வந்து உட்காருவதற்குக் காரணமே இந்த சரவணன் தான். ஒரு வேளை அவனது மாமா வீடு, இந்தத் தெருவிலேயே இருக்கலாம். மாமாவீடு என்றாரே... அந்த மாமாவுக்கு பொண்ணு எதுவும் இருக்கலாமோ? அவளைக் காதலித்துத் தொலைத்திருக்கலாமோ?

மல்லிகாவிற்கு தாபமாக இருந்தது. அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றியது. அடுத்த தெருவிலேயே ஒரு கூட்டம் நடந்து, அது எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும், அவன் அதில் பேச வேண்டும்; அவள் முன் வரிசையில் உட்கார்ந்து, முன்பல் தெரியச் சிரித்து கைதட்ட வேண்டும் என்று நினைத்தாள். திடீரென்று அவள் மனதில் இன்னொரு எண்ணம்; சீச்சீ இந்த மாதிரி எண்ணம் வரக்கூடாது. அவரே பேச முயற்சி செய்யாதபோது, நான் ஏன் அவரைப் பற்றி நினைக்க வேண்டும்? எனக்கேன் தன்மானம் தலைகீழாகப் போகவேண்டும்?

மல்லிகா, சரவணனை, மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு, கையில் இருந்த புத்தகத்தில், கண்களைப் படரவிட்டாள்.

வாசலில் சத்தம் கேட்டு, புத்தகத்தில் இருந்த கண்ணை விலக்கிய மல்லிகா வாசல் பக்கம் தயக்கத்துடன் நின்ற செல்லம்மாளைப் பார்த்துவிட்டு, பின்னர் சமையலறைக்குள் சரசமாடிக் கொண்டிருந்த பார்வதியை நோக்கி, கண்களை வீசிக்கொண்டே, “அம்மா... உன் நாத்தனார் வந்திருக்காங்க...” என்று கூறிவிட்டு, மீண்டும் புத்தகத்தின் முனையில் முன் தலை மோத, குனிந்தாள்.

செல்லம்மாளுக்குப் பற்றி எரிந்தது. ஒட்டிப்போன வயிற்றின் ஓரமாகக் கிடந்த ‘அச்சடி’ புடவையை இழுத்து வயிற்றை மூடிக் கொண்டாள். வயிறாரப் பெற்ற மகள், மூணாவது மனுஷியைச் சொல்வது போல், ‘உன் நாத்தனார்’ என்றதுமே, அவள் ஒரு கணம் செத்துப் போனாள். மறுகணம் “ஆமாண்டி... நான் நாத்தனார் தான். பெத்த தாயையே நாத்தனாரா ஆக்கின உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால் தான், உனக்கு என் நிலைமை புரியுண்டி” என்று சொல்லப் போனாள். பிறகு, தான் பெற்ற பிள்ளைக்கு, தன்னைப் போன்ற நிலைமை வரக்கூடாது என்று நினைத்தவள் போலவும், மகளைத் திட்ட நினைத்ததர்கு அபராதம் செலுத்துபவள் போலவும், “மல்லிகா, உங்க அப்பாவை... எங்கம்மா?” என்று கேட்டாள்.

மல்லிகா, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அந்த நடுத்தர வயதுக்காரியின் உதட்டுத் துடிப்பும், உட்குழி கண்ணும், அவளை என்னவோ செய்தது. ஊஞ்சல் பலகையில் இருந்து இறங்கி, “உள்ளே வாங்க” என்று சொல்லிக் கொண்டே, அவள் மீது கண்களை கருணையாய் பாய்த்துவிட்டு உள்ளே போய் விட்டாள்.

‘நீ உள்ளே வாங்கன்னு சொல்லாமல், வெளியே போங்கம்மான்னு ஒரு தடவையாவது சொன்னாலும் நான் சந்தோசப் பட்டிருப்பேனடி’ என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு செல்லம்மாள் உள்ளே வந்தாள். பார்வதி செல்லம்மாளை வழக்கம் போல் எதிர்கொண்டு அழைக்கவில்லை.

செல்லம்மா சமையலறைக்குள் போய் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கப் போன பார்வதியிடம், “நான் இறக்குறேம்மா” என்று சொல்லிவிட்டு மட்டும் நிற்காமல் பாத்திரத்தையும் இறக்கி வைத்தாள். பின்னர், நாத்தனாரிடம் செயலில் பேச நினைத்தவள் போல், பக்கத்தில் கிடந்த துடைப்பத்தை எடுத்து சமையலறையைப் பெருக்கினாள். எச்சிக் காபி தம்ளர்களை துப்புறப்படுத்தி குலுக்கி அவற்றைக் கழுவி வைத்தாள். ஜொலித்துக் கொண்டிருந்த எவர்சில்வர் தம்ளர்களை, தன் புடவையை வைத்துத் துடைக்கப் போனாள். அந்த அழுக்குப் புடவையால் எவர்சில்வர் அழுக்காகும் என்று நினைத்தோ அல்லது எவர்சில்வர் அதில் ஒட்டிக் கொண்டு எடை குறையும் என்று எண்ணியோ, “தம்ளருங்க நல்லாத்தானே இருக்கு” என்று பார்வதி முகத்தை அந்தப் பெயருக்குரிய லட்சணம் இல்லாமல் சுருக்கிக் கொண்டே கேட்டாள்.

பெருமாள் பேசிய பேச்சு, அவளுக்கு அப்போது முழுதாகக் கேட்டது.

சிறிது நேரம் மௌனம்.

செல்லம்மா திக்கித் திணறிப் பேச்சைத் துவக்கினாள்.

“பார்வதி... நான் கேள்விப்பட்டது நிசந்தானா...?”

பார்வதிக்கு, எரிச்சலுக்கு மேல் எரிச்சல் தமாஷாசுப் பேசுவது போல், திமிராகச் சொன்னாள்...

“நீங்க எதைக் கேள்விப்பட்டீங்கண்ணு, நான் என்ன கனவா கண்டேன்...?”

“இல்ல... நம்ம மல்லிகாவிற்கு... மாப்பிள்ளை...”

“ஆமாம், பார்த்துகிட்டு இருக்கோம்...”

“முடிச்சுட்டதா கேள்விப்பட்டேன்...”

“முடிஞ்சது மாதிரிதான்...”

“நம்ம ராமன் தான் மாப்பிள்ளையாமே...”

“ராமனே தான்...”

செல்லம்மா லேசாகக் கூனிக் குறுகினாள். மேற்கொண்டு பேசினால் அவள் பத்ரகாளியாவாள் என்று தெரியும். அவள் தன் உணர்வுகளை ‘பத்திரமாக’ வைக்க நினைத்தாள். இருந்தாலும் பெற்ற பாசம் கேட்கவில்லை.

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது...”

“நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க... தப்பா நினைக்கக் கூடிய விஷயமா என்கிறதை சொன்ன பிறகு... சொல்றேன்...”

“உனக்கு இல்லாத உரிமை இல்ல... நான் பெத்துத்தான் போட்டேன். அப்புறம் வளர்த்ததெல்லாம் நீதான். இருந்தாலும்... எனக்குக் காபி வேண்டாம்மா... வர வர... காபி குடிச்சால் வாந்தி வந்துடுது... இருந்தாலும்... ராமனுக்குக் கொடுக்கிறதுன்னா...”

“ஏன் ‘இன்னா’ போடுகிறீங்க. அவனுக்கு என்ன குறைச்சல்?”

“உனக்கே தெரியும். இவள் படித்தவள். அவன் படிக்கல. படிக்காட்டியும் பரவாயில்ல. குடிக்கறான்... குடித்தாலும் பரவாயில்ல... பட்டச் சாராயமா குடிக்கறான்...”

“உங்க புருஷன் குடிக்காததையா இவன் குடிக்கறான்?”

“என் நிலைமை... என் பொண்ணுக்கும் வரக்கூடாதுன்னுதான் உன்கிட்ட பிச்சை கேட்க வந்தேன். என் வீட்டுக்காரர் குடிச்சதும் அப்படியே படுத்துக்கிறார். ஆனால், உன் ராமன், குடிச்சிட்டு சோடா பாட்டில் எடுக்கறான். இதுக்குள்ள மூணு தடவை... ஜெயிலுக்கு வேற...”

பார்வதியால் மேற்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. கழுத்தில் கிடந்த நெக்லசை, நைலக்ஸ் புடவையின் முனையால் துடைத்துக் கொண்டு, உள்ளத்து உணர்வுகளையும் துடைப்பவள் போல், வார்த்தைகளைப் பெருக்கிக் கொண்டே போனாள்.

“நீங்க காலங்காத்தால... வந்ததை பார்த்தவுடனே நினைச்சேன். இந்தக் கல்யாணத்துல தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது. பிறந்ததுல இருந்து, வளர்த்தது வரைக்கும் கவனிக்கிறவள் நான். பெத்துடுறது பெரிசல்ல. பெத்ததை வளர்க்கிறதுதான் பெரிசு. நாங்க யாருக்குக் கொடுத்தால் உங்களுக்கென்ன?”

“நான்... எதுக்கு சொல்றேன்னா...?”

“நீங்க... எதுக்கும் சொல்ல வேண்டாம். அவள் என் வீட்ல இருக்கிற வரைக்கும் என் பொறுப்பு. மல்லிகா உங்க பொண்ணு இல்லன்னு நான் சொல்லல்ல. மகராசியா, உங்க மகளை வேணுமுன்னா உங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய், எந்த அர்ச்சுன ராசதுரைக்கு வேணுமுன்னாலும் கொடுங்க. ஆனால் ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கதை வேண்டாம். இப்பவே வேணுமுன்னாலும் கூட்டிக்கிட்டுப் போங்க. இவள் பண்ற கூத்துக்கு நான் ஒருத்திதான் சரிக்கட்டிக்கிட்டுப் போக முடியும்...”

செல்லம்மா, அண்ணன் இல்லாத சமயத்தில், அவன் மனைவியிடம் மாட்டிக் கொண்டதற்காக வருந்தினாள். மீள வேண்டும் என்று நினைத்தவள் போல், அண்ணன் வருகிறாரா என்று வெளியே பார்த்தாள். போகலாமா என்று அடியெடுக்கப் போனாள். ஆனால் பாழும் கால்கள் நகர மறுத்தன. பெற்ற மனம் பெயர மறுத்தது. ‘அந்த நல்ல ராமனைக் கட்டியே சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மவள் கட்டினால்? அட பகவானே... இதுக்கா அவளைப் பெத்தேன். இதுக்கா என் கிளியை, இவள் கிட்ட விட்டேன். இதுக்கா என் மாலையை... இவள் கையில் கொடுத்தேன்... அட கடவுளே...’

செல்லம்மாவால் பேச முடியவில்லை. தொண்டை கட்டியது. கண்களும் கொட்டியது. விம்மல் சத்தம், வெடிச்சத்தம் போல் கேட்டதால், பார்வதியே சிறிது நேரம் திகைத்துப் போனாள். பிறகு சமாளித்துக் கொண்டாள்.

“இந்தா பாருங்க... இந்த நீலி மாதிரி... அழுகுற வேலை வேண்டாம். நான் தான் சொல்லிவிட்டேனே... மல்லி என் வீட்ல இருக்கிற வரைக்கும்... என் அக்கா மகன் தான் மாப்பிள்ளை. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் இப்பவே, இந்த கணமே அவளை பெட்டி படுக்கையோடு கூட்டிக் கிட்டு போகலாம். ஏய் மல்லி... ஏய்...”

செல்லம்மாள் நாத்தனாரின் வாயைப் பொத்தினாள். ஏற்கெனவே ஏழு பிள்ளைகளோடு அவதிப்படுகிறவள். ஒருத்தி கரையேறி விட்டாள். இன்னொருத்தி கரையேற வேண்டும். பையன்களில் கடைசிப் பையன் படிக்கிறான். ஒருவன் மாமாவுடைய மளிகைக்கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் வெட்டி. கடைசியாக உள்ள பத்து வயது மகளும் ஏழு வயது மகளும் வீட்டில். இருபது குடித்தனங்கள் உள்ள காம்பவுண்டு வீட்டுக்குள், பத்தடி ஐந்தடி பரப்பிற்குள் கக்கூஸ் பக்கம் உள்ள முதல் அறையில் குடியிருக்கும் அவளால் மல்லிகாவை அங்கே கொண்டு போக முடியாது. இரவில், அறைக்குள் படுத்தால் மூட்டைப் பூச்சியோடு, புழுக்கம். வெளியே படுத்தால் கொதிக்கும் தரை. ஒன்று மாற்றி ஒன்றாக அழும் குழந்தைகள். குடித்துவிட்டு மனைவிகளை அடிக்கும் கணவன்மார்கள். குடிக்காமலே அந்த போதையைவிட அதிக போதையில் ஆம்படையான்களை திட்டும் சம்சாரங்கள். இந்த சகாரா சாகரத்துக்குள் அவளால் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தவளால் கழிநீர் ‘கால்வாய்’ திட்டில் உட்கார முடியாது. மெத்தையில் படுப்பவளால், மேடை போல் இருக்கும் அடுப்புத் திட்டில் படுக்க முடியாது. மின் விசிறிக்குள் அமர்ந்து, தலைமுடி ஒயிலாக ஆடி அசைய, ஒய்யாரமாக இருக்கும் அவளால், ஒண்டிக் குடித்தனத்தில் கை விசிறி கூட இல்லாத புழுக்க லோகத்தில் புக முடியாது. இவள் இங்கேயே இருக்கட்டும். இங்கேயே இருக்க வேண்டியவள். வேண்டியவளோ இல்லியோ இருக்க வேண்டும். அட... மாரியாத்தா... ஏழையின் பிள்ளை பணக்காரப் பிள்ளையாய் வாழ்ந்தாலும் அது ஏழை தானோ? ஏழையின் பிள்ளை ஏழையாக இருந்தால் தான் நல்லதோ?

செல்லம்மா நாத்தனாரிடம் மீண்டும் மன்றாடிப் பார்க்கலாமா என்று யோசித்தாள். அது வீண் என்பது போல் பார்வதி, “தராதரம் தெரியாத பய பிள்ளைகளை வீட்டுக்குள்ள சேர்க்கிறதே தப்பு... ஊர்ல சோறு தண்ணிகிடைக்காம... திரிஞ்ச... இந்த மாடசாமிப்பயல்... சாப்பிட்ட தட்டை கழுவாம போயிட்டான். வரட்டும். ஊருக்கே அவனை அடிச்சி விரட்டுனாத்தான் பன்னாட பயமவனுக்கு புத்திவரும். ஒவ்வொருத்தரையும் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்னு சொல்றது சரிதான்...” என்று தன்பாட்டுக்குப் புலம்பினான்.

அவளின் பரிபாஷை செல்லம்மாவுக்குப் புரிந்து விட்டது. “கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவியாம்மா...” என்று சொல்லிக் கொண்டே அதற்குக் காரணமான பதில் வருமுன்னே, செல்லம்மா சமையலறையை விட்டு வெளியே வந்தாள். மல்லிகா, சமையலறைக்கு வெளியே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமில்லாமல், முகமே அழுது கொண்டிருப்பது போன்ற தோற்றம்.

அம்மா, மகளை ஏறிட்டுப் பார்த்தாள். செவ்வாழை நிறத்தில், சிவந்திப்பூ நயத்தில், அளவெடுத்து வார்த்தெடுத்த சிலைபோல் விளங்கிய மேனியையும், ஆடாத வண்டுபோல் இருந்த கண்களையும், அசைகின்ற சங்கு போன்ற கழுத்தையும், முன் நெற்றி சுருங்க, முழுமேனி சுவரில் சாய, நின்ற மகளை அழாமல் அழுது கொண்டே பருகினாள். அவளருகே, உடம்பெல்லாம் பச்சை குத்தி, உடலெல்லாம் பட்டை போல், படைபடையாய் அடுக்கடுக்கான தோலோடு அருவருப்பான உருவத்தோடு, ஆடி இளைத்த பருவத்தோடு, ஆட நினைக்கும் கர்வத்தோடு உள்ள ராமனைப் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். செல்லம்மாவால் அங்கே நிற்க முடியவில்லை. அழ முடியாமல் அழுதாள். ஓட முடியாமல் ஓடினாள்.

மல்லிகா, இப்போது செல்லம்மாளை, போகிறாளே என்பது போல் பார்த்தாள். காய்ந்து, உலர்ந்து, தேய்ந்து போன சுரைக்காய் போல உள்ள அவள் மார்பில் தான், தான் பால் அருந்தியிருக்க வேண்டும்; இனிமேல் கிழிய முடியாது என்பது போல் கிழிந்து போன புடவை கொண்ட அவள் மடியில் தான், தான் புரண்டிருக்க வேண்டும்; வயிறெரிந்து ஓடும் அவள் வயிற்றில் தான், தான் ஜனித்திருக்க வேண்டும் என்ற சாதாரண உண்மை, இப்போது பேருண்மையாக, முதல் தடவையாக “அம்மா... அம்மா...” என்று லேசாகக் கேட்குமளவிற்குப் பேசினாள்.

“ஏய் மல்லி” என்று ‘அம்மா’ கூப்பிட்ட போது அங்கே ஓடி வந்தவள், உள்ளே அடிபட்ட பேச்சு, தன்னை அடிக்கும் பேச்சு என்று தெரிந்ததும், அவள் இங்கே இந்த சுவரில் சாய்ந்தாள்.

மல்லிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

ராமனுக்கா அவள்? தெரு முழுதும் புரண்டு கொண்டு போவானே அவனுக்கா நான்? குடித்துக் கொண்டு புரள்வது மோசம் என்று நினைத்து புரண்டுகொண்டே குடிப்பானே, அந்த ராமனுக்கா நான்? கெட்டை வார்த்தை தவிர, எந்த வார்த்தையும் பேசாத அந்த கெட்டவனுக்கா நான்? முடியாது முடியவே முடியாது.

என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்தவாறு அவள், தலையை சுவரில் உருட்டிய போது பார்வதி வெளியே வந்து, “சுவர்ல தலைய வைக்கிறியே அறிவிருக்கா உனக்கு? இந்தா பாரு சுவருல்லாங்... எண்ணெய்க்கசடு... உன் அம்மா புத்திதானே உனக்கும் இருக்கும். வேணுமுன்னா அவள் கூட போயேண்டி ஏண்டி... அழுவுறாப்போல நிக்கறே?” என்று அதட்டினாள்.

ராமனை, அவள் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்ற உள்ளுணர்வு, அவளை, இதுவரை பேசாத வார்த்தைகளைப் பேச வைத்தன.

மல்லிகா திடுக்கிட்டாள். என்னதான் அம்மா என்றாலும், முகம் பார்த்துப் பேசியறியாத அந்த அன்னை வாழும் வீட்டுக்குள் அவளால் போக முடியாது. அவளால் எப்படிப் போக முடியும்? போனாலும், எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டை விட அந்த ஜனங்களை விட ராமன் தேவலையோ... ஒவ்வொருத்தர், அண்ணன் தங்கைன்னா உயிரை விடுறாங்க. சினிமாவுல கூட காட்டுறாங்க. நம்மால் அப்படி இருக்க முடியலியே... இந்த வீட்டையும் சில சமயம் சொந்த வீடாய் நினைக்க முடியலியே... ஏன்... ஒரு வேளை... நான் தனிப் பிறவியோ... இல்ல தனிப்படுத்தப்பட்ட பிறவியோ...

மல்லிகா தன் வசப்பட்டு நின்றபோது, பார்வதி உணர்ச்சிவசப்பட்டாள்.

“ஏண்டி... பித்துப் பிடித்து நிக்கறே? உன் அம்மா... மருந்து தடவிட்டுப் போயிட்டாளோ? வேணுமுன்னா போயேண்டி... நான் வேணுமுன்னா... கொண்டு விடட்டுமா?”

அந்த சின்னஞ்சிறிசுக்கு, சுய உணர்வு வந்தது. அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாளோ? அந்த ‘ஆளிடம்’ பேச்சு வாங்க வேண்டியது வருமோ?

மல்லிகாவுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.

திடீரென்று பார்வதியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் இவளை விலக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவள் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு புரண்டு, “என்னை அங்கே அனுப்பிடாதீங்கம்மா... அனுப்பாதீங்க... அம்மா... அம்மா” என்று அரற்றினாள். விம்மினாள்.

பார்வதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தாய்மைப் பேறு அடையவில்லையானாலும், இப்போது அது பெயர் சொல்லும்படி விழித்துக் கொண்டது. மல்லிகாவின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டே, “அழாதடி... நானிருக்கையில ஏண்டி அழுவுறே? ராமன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்...” என்றாள்.

இப்போதும் மல்லிகா அழுதாள். ‘என்னை ராமன்கிட்ட அனுப்புறதை விட ‘அவங்க’ வீட்டுக்கே அனுப்பிடுங்கம்மா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, வெளியே மறுமொழி கூறாமல் தனக்குள்ளேயே அழுதாள்.
------------
அத்தியாயம் 9


கல்லூரி மாணவ மாணவிகள் அந்த அறையில் கூடி விட்டார்கள்.

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அங்கே நடைபெறப் போகிறது.

சரவணன் பேச்சியில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும் எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேசுவது போன்ற பாணி, இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி, பரிசுக்காக பரபரப்படையாத இயற்கைத்தன்மை, இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற் பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சில ‘வண்ணப் பூச்சிகள்’ மேடையில் நாக்காடுவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.

கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நடுவர்களை அறிமுகம் செய்துவிட்டு, ‘பெண்ணுரிமை’ என்ற தலைப்புதான் போட்டியின் தலைப்பு என்று சொன்ன பிறகும், அவர் மைக்கை விட மனமில்லாமல், பெண் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்து விட்டு ‘உரிமைக்கு’ வந்த போது “உக்காருய்யா சுக்குத் தண்ணி” என்றது ஒரு குரல். ஆசிரியர் குரலடங்கி உட்கார்ந்தார்.

போட்டிக்கு முதலாவதாகப் பேச வந்த பையன் ஒருவன், “பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால்” என்று பாரதியாரை மேற்கோள் காட்டியபோது, “ஆஹாஹா... ஆஹாஹா... அப்பனே பாரதி பேரா... அடச்சீ” என்றது இன்னொரு குரல். உடனே மாணவிகள் கூட்டத்தில் பலத்த சிரிப்பு. அந்த சிரிப்பு மேலும் பலக்க வேண்டும் என்பதற்காக பல தடவை “அடச்சீக்கள்”. ‘பட்டறிந்த’ பேச்சாளன் பட்ட மரமானான்.

மூன்றாவதாக வந்த மாணவி “பெண்கள் என்றால்...” என்று தொடங்கவும், “அது நீ இல்லே, நீ... இல்லே...” என்று அந்தப் பெண்ணை டபாய்த்தார்கள். அவளும் ஓய்ந்த பிறகு நடுவர் “மல்லிகா” என்றார்.

மல்லிகா எழுந்திருக்கவில்லை. கோர்ட்டில் அழைப்பது போல இரண்டாவது தடவையாக “மல்லிகா!” என்ற போது, கூட்டத்தின் கண்கள், அவளை மொய்த்தன.

மல்லிகா மரியாதையாக எழுந்து, “நான் பேசப் போவதில்லை” என்று சைகை செய்தாள். அவளைக் கோட்டா செய்யப் போன மாணவர்கள், அவள் முகத்தில் படர்ந்திருந்த துயரத்தையும், கலைந்திருந்த முடியையும், கவிழ்ந்திருந்த தலையையும் பார்த்து, பரிதாபப்பட்டது போல் சும்மா இருந்தார்கள். ஒரே ஒரு ஆகாதவன் மட்டும், “சரவணின் பியூட்டியே... அடிமே உன் லூட்டியை” என்று சொன்ன போது, “மக்குப் பையா... கொக்குத் தலையா... மரியாதி போயிடும், சும்மா இருய்யா” என்றான் இன்னொரு பையன். அவனுக்கு மல்லிகா தன்னைக் காதலிப்பதாக ஒரு பிரமை. அப்படியே காதலிக்கவில்லை என்றாலும், இப்படிச் சொன்னதால், இனிமேலாவது காதலிப்பாள் என்கிற தன்னம்பிக்கை. காதல் பாதி நிறைவேறிவிட்டதில், அவனுக்கு ஒரு திருப்தி. அதாவது அவன் ரெடி.

பல மாணவர்கள் கவர்ச்சியாகவும், கழுத்தையறுத்தும் பேசிய பிறகு, சரவணன் பேசினான். பொருளாதார உரிமை வந்தால் தான் பெண்ணுரிமை வருமென்றும், ‘பொருளா? தாரம்’ என்ற நிலை இருக்கும் வரை பெண்ணுரிமை வெறும் மேடைப் பேச்சே என்றும், ‘பண்’ செய்து அவன் பேசிய போது, பலத்த கைத்தட்டல். “தாய்மார்களே” என்று விழிக்கும் ஒவ்வொருவனும், பதினெட்டு வயதுப் பெண்ணைப் பார்க்கையில், “இந்த வயதில் என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பாள்” என்றும், எண்பது வயதுக் கிழவியைப் பார்க்கையில், “என் அம்மாவும் இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள்” என்றும் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் காலந்தான் பெண்ணின் விடிவுக்காலம், உரிமையைப் பற்றிப் பேசத் தேவையில்லாத அளவிற்கு ஏற்படும் ‘பொற்காலம்’ என்று அவன் சாதாரணமாகப் பேசியபோது, கைதட்டிப் பாராட்டினார்கள்.

இந்தத் தடவையும் முதற்பரிசு சரவணனுக்கே. வழக்கமாக இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு பெறும் மல்லிகாவுக்குப் பதிலாக இன்னொருத்தி வாங்கினாள்.

மல்லிகா, சக தோழிகள் “ஏன் பேசவில்லை” என்று கேட்டால் எப்படிப் பதிலளிப்பது என்று புரியாமல், அந்த தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழ் உதவிப் பேராசிரியர், ‘நன்றி’ சொல்லிக் கொண்டிருந்த போது, அவள் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள். ஆட்டோ ரிக்‌ஷாக்காரரை பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்ல வேண்டும் என்று முந்திய இரவு நினைத்தவள், தான் ராமனுக்கு மனைவியாகலாம் என்ற அவலத்தில் அதை மறந்துவிட்டாள்.

மெள்ள நடந்து கொண்டிருந்தாள்.

“நீங்கள் ஏன்... இன்றைக்குப் பேசவில்லை...” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

சரவணன்!

சைக்கிளை மெதுவாக விட்டுக் கொண்டு, பெடலை லேசாக அழுத்திக் கொண்டு, அவளுக்கு இணையாக வந்தான். பிறகு, அவளுக்கு மதிப்புக் கொடுப்பவன் போல், சைக்கிளை விட்டு இறங்கினான்.

“சொல்லுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

மல்லிகா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். மானசீகமாக அவனருகிலேயே அந்த ராமனை நிறுத்திப் பார்த்தாள். வேறு பக்கமாகத் திரும்பி, கண்ணீரை உதிர்த்துக் கொண்டாள். அவளுக்கு சரவணன் மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அழகில் சாதாரணமானவன் தான். ஆனால் பேச்சாற்றலும், எல்லோரையும் தன்னைப் போல் நினைத்து மனம் விட்டுப் பழகும் சுயமரியாதையும், அவனுக்கு ஊன அழகு கொடுக்காத, ஒரு ஞான அழகைக் கொடுத்திருத்தது. குறைந்தபட்சம், அப்படி இருப்பதாக பல பெண்கள் நினைத்தார்கள். மிதவாதியான மல்லிகா, இந்த நினைப்பைப் பொறுத்த அளவில் ஒரு தீவிரவாதி. தன்னை மீறிய, தன்னையே அறியாத ஒரு தீவிரவாதி.

“சொல்லுங்க... ப்ளீஸ்... எதற்காகப் பேசவில்லை? பையன்களின் கலாட்டாவுக்குப் பயந்துட்டீங்களா?”

மல்லிகா பேசப் போனாள். அப்படிப் பேசப் போனால், அழுகை வந்திடும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள். பிறகு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவனிடம் ஓராண்டு காலமாக சாதாரணமாகப் பேசிப் பழகுபவள். அந்த உரிமையில் தான், அவனும் கேட்டான். ஆகையால் இப்போதும் சாதாரணமாக ஆனால் உள்ளர்த்தத்துடன் பேசினாள்.

“பெண்கள்... பொருளாதார விடுதலை இல்லாததாலே... கணவன்மார் செய்யும் கொடுமையை... சகிச்சிக்கிறதாச் சொன்னீங்க... உண்மைதான். அதே சமயம்... கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும், பொருளாதாரப் பாதுகாப்புக்காக ஒரு... ஏதோஒரு இனம் புரியாத பாசத்தாலும், வேண்டப்படாத இடத்தைப் பிடிச்சுக் கிட்டே இருக்கலாம் இல்லையா?”

“நீங்கள் என்ன சொல்றீங்கள்?”

“நான் கேட்கிறது... பொருளாதார, சமூக நிர்ப்பந்தத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கும் ஏதாவது செயல் திட்டம் இருக்கா?”

“நீங்கள் பேசுவதைப் பார்த்தால்... சொந்த அனுபவம் மாதிரி...”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொடுத்து வச்சவள். எல்லாப் பெண்களுக்கும் ஒரு அப்பா அம்மா. எனக்கு ரெண்டு அப்பா அம்மா. என் பிரச்சினை கிடக்கட்டும், அது... வேண்டாம், விட்டுடுங்க. குறிப்பிட்ட ஒரு பழக்க வழக்கத்தில் ஆட்பட்ட பெண், அந்தப் பழக்க வழக்கமான சமூகத் தட்டுலே இருந்து தாழ்ந்து போகாமல் இருக்க, அவளோட உரிமையை மட்டும் கேட்டால் போதாது. ஒரு பணக்கார இளைஞன் அவளைக் கல்யாணம் பண்றதினாலும் முடிந்து விடாது. இதுக்கு வேறே வழி இருக்கா?”

”கொஞ்சம் யோசிக்கிறேன். ஒரு நிமிடம்... கொடுங்க வந்து... ஒரு பெண் சமுதாயத் தட்டில் இருந்து கீழே இறங்கிடுவோமோன்னு பயப்படாமல் இருக்கணுமுன்னா, கீழ் தட்டுன்னு ஒண்ணு இருக்கப்படாது. அதாவது, எல்லாம் பொருளாதார சமத்துவம் பெறணும். பெண்கள் பிரச்சினை தனிப்பிரச்சினை அல்ல. அரிஜனப் பிரச்சினையைப் போல அது ஒரு சமூகப் பிரச்சினை. சரி, ஓட்டலில் ஒரு காபி குடித்துக் கொண்டே பேசலாமே?”

மல்லிகா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பயந்து போய் சிறிது விலகிக் கொண்டாள். சரவணன் புரிந்து கொண்டான்.

“நான் நீங்க நினைக்கிற இனத்தைச் சேர்ந்தவன் இல்லை. வரதட்சணைக் கொடுமைன்னு அடிக்கிறாங்களே, அதைப் பேசலாமுன்னு எண்ணிக் கேட்டேன். உங்களிடம் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாளைக்கு கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற ஒரு பேச்சுப் போட்டிக்கு நீங்கள் பாயிண்ட்ஸ் கொடுத்தால், பரிசு வாங்கிடுவேன்.”

“இங்கேயே நின்று பேசலாமே?”

“வரதட்சணைக் கொடுமையால பல பெண்களுக்கு கல்யாணம் நடக்கலேன்னு மேடையில பேசறோம். இந்தப் பெண்கள், பெரிய பெரிய ஆபீசருக்கு மனைவியாய்ப் போகிற ஆசை நிறைவேறாமல் போவதைத் தான் வரதட்சணைக் கொடுமைன்னு சொல்றாங்க. இவங்க ஏன் ஒரு பியூனைக் கல்யாணம் பண்ணப்படாது? ஏன் ஒரு ரிக்‌ஷா தொழிலாளியைக் கல்யாணம் பண்ணப்படாது? நான் பண்ணணுமுன்னு சொல்லவில்லை... பண்ண முடியாதுன்னும் தெரியும்... ஏன் தெரியுமா?”

“சொல்லுங்க...”

“இந்த சமூக அமைப்பிலே... பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபீசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாச்சாரம் வேறே, பணக்காரன் கலாச்சாரம் வேறே. இவை போய்... கலாச்சார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால் தான், வரதட்சணைப் பிரச்சினையும் தீரும். இல்லை என்றால், அது அன்பளிப்பு பிரச்சினையா மாறுவேடம் போடும்...”

“நான் வரட்டுமா?”

“போராடிக்கிறேனோ?”

“இல்ல. சில பிரச்சினைகள், சில விஷயங்கள் புரியப் புரிய பயமாய் இருக்கு.”

“என்னால உதவி பண்ண முடியுமா?”

“பொருளாதார சுதந்திரம் இல்லாத உங்களாலே, எனக்கு சுதந்திரம் வராது. அதுக்காக, உங்கள் மூலம் வரக்கூடாதுன்னு நினைக்கவில்லை. சொல்லப் போனால், வரணுமுன்னு நினைக்கிறேன்.”

சற்று நேரத்திற்கு முன்பு, ஓட்டலில் சும்மா காபி குடிக்கக் கூப்பிட்ட போது முகத்தைச் சுழித்து, கழுத்தை கேள்விக்குறி போல் வளைத்த இந்தப் பெண், ஏன் சரசத்துடன் தலை கவிழ்கிறாள் என்பது புரிய, அவன் மலைத்தும், மகிழ்ந்தும் நின்ற போது, மல்லிகா மெல்ல நடந்தாள். சரவணன் சிறிது நேரம் நின்றான். பிறகு சைக்கிளை வேகமாக உருட்டிக் கொண்டு, அவளருகே போய், “நான் ஓட்டலுக்குக் கூப்பிட்டதை தயவுசெய்து தப்பா நினைக்காதம்மா. எத்தனையோ பெண்கள் ‘போகலாமா காபிக்கு’ என்று சொல்வதை பொழுதுபோக்கா வைத்திருக்கிறாங்க. ஆனால் நீங்க அப்படிப்பட்ட இனம் இல்லை. உங்களைப் பார்த்தாலும் தப்பாக் கூப்பிடத் தோணாது” என்றான்.

“பொழுதுபோக்கும் பெண்களைப் பற்றி நல்லாத்தான் தெரிந்து வச்சிருக்கீங்க. சொந்த அனுபவமா?”

“உண்டு. பிறர் சொல்வதைக் கேட்ட அனுபவமும் உண்டு. உங்ககிட்ட பேசிட்டேனா... இனிமேல் நாலு நாளைக்கு எந்தப் பெண் கூடேயும் காபி குடிக்கப் போக மாட்டேன். போகத் தோணாது. செக்ஸ் கிளாமரை, ஒரு குடும்பப் பெண்ணாலதான் விரட்ட முடியும். நான் வரேன்.”

சரவணன் சைக்கிளை சுற்றி வளைத்துக் கொண்டு அவளுக்கு எதிர்திசையில் உருட்டினான். ‘கடவுளே... இவரு நாலு நாளைக்கு மட்டுமல்ல, எப்போதும் காபி குடிக்க நாலு பேரோடு தான் போகணும். ஜதையாய் போகப்படாது’ என்று மனதுக்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டு மல்லிகா நடந்தாள். இனிமேல் திரும்பி வந்தாலும் வருவாரோ? சூதுவாது இல்லாதவர்... வந்தாலும் வருவார். அய்யோ, அப்படி வந்தால், நாலு பேர் தப்பா நினைப்பாங்களே?

சரவணன் ‘வரக்கூடாது’ என்று வெளிமனம் ஒப்புக்குச் சொல்ல, ‘இன்னும் ஒரு தடவை வரப்படாதா? சைக்கிள் தான் இருக்கே’ என்று உள்மனம், அவளை மீறித் துடிக்கும்படி நடந்து கொண்டிருந்த அவளை, பல தடவை பின்னால் திரும்ப வைத்தது. பிறகு அவள் மடமடவென்று நடக்கத் துவங்கினாள். சரவணனுடன் பல தடவை பேசியிருக்கிறாள். ஆனால் இன்று அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுப்பொருள் இருப்பது போல் இருந்தது... எட்டாவது வகுப்பில் படித்த அதே குறளை, கல்லூரியில் வேறு கோணத்தில் படிப்பது மாதிரி...

திடீரென்று போதாக்குறையாக தன்னருகே ஒரு சைக்கிள் நடனமிட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து, அவள் மகிழ்ச்சியோடும் நாணத்தோடும் ஏறிட்டுப் பார்த்தாள்.
--------------
அத்தியாயம் 10


ராமன் பிரேக் இல்லாத ஒரு சைக்கிளில், சவாரி வந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்பவன். ஏதாவது அவசியத்தால் பேச வேண்டியது ஏற்பட்டால் “பாப்பா... மச்சானுக்கு காபி வேணுமாம்” என்று ஒதுங்கி நின்றே கேட்பவன். ஆனால் இன்று...

மல்லிகா, வேக வேகமாக நடந்தபோது, அவனும் சைக்கிளை வேகவேகமாக மிதித்துக் கொண்டு “சைக்கிள்லே ஏறிக்குமே. அந்த ரிக்‌ஷா கஸ்மாலம் எங்க பூட்டான்” என்றான்.

மல்லிகா, அவனை கோபத்தோடு பார்த்தாள்.

“நான் என்ன எருமை மாடா ‘மே’ங்றீங்க?”

“கோவிச்சுக்காதமே. அக்காள், உன்னை ஏத்திக்கினு வரச்சொல்லிச்சு.”

“எனக்கு நடக்கத் தெரியும்.”

“ஒரு கஸ்மாலம் உன்கிட்ட பேசுனானே, அவன் யாரு?”

“கண்ணுக்கு எல்லாம் கஸ்மாலமாத்தான் தெரியும். அவரு... என்னோட நண்பர்...”

“அக்காண்ட சொல்லட்டுமா?”

“சொல்லேன். சரி... வழியை விடுங்க...”

ராமன் எதிர்திசையில் சைக்கிளை உருட்டினான். ஒரு வேளை, சரவணனை வழிமறித்துத் தாக்கப் போகிறானோ என்று மல்லிகா நினைத்தாள். பின்னாலேயே ஓடலாமா என்று கூட எண்ணினாள். ‘அவரை அடிக்காதே... அடிக்காதே’ என்று கத்துவதுபோல் முகத்தைக் கொண்டு போனாள். தலை தெறிக்க சைக்கிளை மிதித்த ராமனையும், தொலைவில் போய்க் கொண்டிருந்த சரவணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

மல்லிகா வீட்டுள் நுழைந்த போது, பார்வதியின் அண்ணன்மார்கள் இருவர் மச்சானோடு ஊஞ்சல் பலகையிலும், ஒருவர் சாய்வு நாற்காலியிலும் அமர்ந்திருந்தார்கள். ராமன் ஒரு ஓரமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு, போன உயிர் திரும்பி வந்தது. சரவணனை இவ்வளவு சீக்கிரம் ராமன் அடித்திருக்க முடியாது.

மகளைப் பார்த்ததும், சொக்கலிங்கம் பதைத்துப் போனார். “ஆட்டோ ரிக்‌ஷாவை வரச்சொல்லி போன் பண்ணினால் என்னம்மா? இப்படியா, வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வருவது?”

பார்வதியின் வாய் பல்லாக மாறியது.

“நான் ராமனை சைக்கிளில் அனுப்பி வச்சேன். இவள் பின்னால ஏறிக்க மாட்டேன்னு சொல்லி விட்டாளாம்.”

ஊஞ்சல் பலகையில் இருந்த பெரிய மைத்துனர் ராமசாமி, இடி இடியென சிரித்துக் கொண்டே பேசினார்.

“நீ என்ன பார்வதி... கல்யாணம் ஆகும் முன்னால், கட்டிக்கப் போறவனாய் இருந்தாலும் சைக்கிள்லே ஏறலாமா? மல்லிகா அப்படிப்பட்டவளாய் இருந்தால், உன் மகளை அவனுக்கு கேட்பேனா? கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பாரு அவன் ராமன் சைக்கிள்ல, பின்னால உட்கார மாட்டாள். முன்னால்தான் உட்காருவாள். இல்லியா மல்லிகா?”

‘இல்லை, இல்லவே இல்லை’ என்று கத்த வேண்டும் போலிருந்தது மல்லிகாவுக்கு. ஆனால் அப்படிக் கத்தவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்பாவையும் இறங்கப் பார்த்துவிட்டு, தனது அறைக்குள் போனாள். தலை திடீரென்று கனத்தது. “நாளைக்கே வெத்திலைப் பாக்கு மாத்திடலாம்” என்று வெளியே கேட்ட பார்வதியின் சத்தம், அவளுக்கு தன் தலையே வெடித்து, அப்படி ஒரு சத்தத்தை எழுப்புவது போல் தோன்றியது.

பேசாமல் அந்த ‘ஆளோட’ வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவோட ‘நாத்தனார்’, நல்லவங்கதானே. சீ... அங்கே... அந்த குண்டு குழி விழுந்த வீட்டுக்குள்ள, எப்படி இருக்க முடியும்? அப்பாவை விட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருக்க முடியும்? அதோட, அந்த ‘ஆளு’ வேற குடுச்சிட்டு திட்டுவாரு. அதுக்காக இந்த நொள்ள ராமனை கட்டிக்க முடியுமா? இப்படியெல்லாம் எண்ணினாள், மல்லிகா. வெறித்த கண்களுடன், கடித்த உதடுகளுடன் அவள் கலங்கினாள்.

கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எந்த மேளத்தை அமர்த்த வேண்டும், யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வெளியே பலமாக விவாதங்கள் எழுந்தன.

மல்லிகா குப்புறப்படுத்தாள். அவள் மனத்திரையில் சரவணன் வந்தான். வந்த வேகத்திலேயே போய் விட்டான். ஆனால் கிழிந்த புடவையும், மஞ்சள் கயிற்றுக் கழுத்தும், தனித்தனியாக வந்து, பின்பு மருண்ட பார்வையோடு, மிரண்ட முகத்தோடு, கூனிக்குறுகிய தோற்றத்தோடு, ஒரு உருவம் வந்தது. அது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது. அவள் செல்லம்மா... மல்லிகாவின் நிஜமான அம்மா. அவளால் இதுவரை ஒதுக்கப்பட்ட அவளைப் பெற்ற பாவி!

செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “கடைசியில் ராமனுக்குத்தான் கட்டப் போகிறார்களா? இதுக்கா பெத்தேன்? அவரு, தத்து கொடுக்காதே கொடுக்காதேன்னு சொன்னாரே, நான் பாவி. தூரத்தில் நின்னாவது, மகள் உயரத்துல இருக்கறதை தலைநிமிர்ந்து பார்க்கலாமுன்னு நினைச்சேன். இப்போ பள்ளத்தில் விழப்போறவளை, நானுல்லே தலைகுனிந்து பார்க்கணும் போலிருக்கு. அட கடவுளே. இங்கே கூட்டி வந்துடலாமா? எப்படி முடியும்? ராணி மாதிரி இருக்கிற அவளால், இந்த தேனிக் கூட்டில் இருக்க முடியுமா? இருக்கத்தான் சொல்லலாமா?”

செல்லம்மா, முழங்கால்களுக்குள் தலையை வைத்து, முட்டிக் கொண்டும், மனதுக்குள் மோதிக்கொண்டும் இருந்த போது, அவளுடைய கடைசி மகள் முறைவாசல் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு குடித்தனமும் தத்தமக்குள்ளே முறை வைத்துக் கொண்டு, சதுரமாக அமைந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். பொது இடமான களத்தைப் பெருக்க வேண்டும். இதற்கு முறைவாசல் பரிபாஷை. இன்னொரு மகன் சரியாய் எட்டு மணிக்கு, ராஜாதி ராஜ கம்பீரத்துடன், தோழி சகிதமாய் வரும் வீட்டுக்கார அம்மாவுக்கு குழாயை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவசரமாகத் தண்ணீர் பிடித்தான். ஒரு பையன் தெருவில் நின்ற ஒரு டிரக் வண்டியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

செல்லம்மாளின், பித்துப் பிடித்த தலைக்குள்ளும் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

கணவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த கல்யாணத்தைத் தடுத்து ஆக வேண்டும். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமாள் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார். கோணி வியாபாரம் செய்பவர் கோணிக்கடையில் கோணிகளை லைட்டீஸ் கோணி, உப்புக் கோணி, அஸ்கா கோணி என்று பிரிவு படுத்தி, பிரிவுப்படியான பணத்தை ஒன்றுபடுத்தி பத்து ரூபாய் லாபத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்ததும் வராததுமாக செல்லம்மா, அவரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நேரமோ ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாதியில் நிச்சய தாம்பூலம் ஆகிவிட்டால் பாதிக் கல்யாணம் முடிந்தது மாதிரி. வேறு எவனும் கல்யாணம் செய்ய முன் வர மாட்டான்.

புருஷன், தான் சொல்லப் போகும் செய்தி கேட்டு தன்னை அடித்தாலும் அடிக்கலாம் என்று நினைத்து, அப்படி அடித்தால் முகத்திலோ தலையிலோ படக்கூடாது என்று எண்ணியவள் போல், செல்லம்மா, ஒரு புறமாக தோளைக் காட்டிக் கொண்டு, ஜாக்கிரதையான இடைவெளி கொடுத்துப் பேசினாள். கணவனுக்கு இதுவரை விஷயம் தெரியாது.

“உங்கள் மகள் மல்லிகாவை கூட்டி வாறீங்களா?”

“அவளை என் மகள்னு சொல்லாதடி. இங்க வந்தவுடனேயே வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்றவள், என் மகளாய் இருக்க மாட்டாள்.”

“நீங்க அப்படிச் சொல்றதுனால்தான், நாம் பெத்த பொண்ணு சீரழிகிறாள்.”

“என்ன சொல்றே?”

“பார்வதியோட அக்காள் மகன் ராமனுக்கு அவளை கொடுக்கிறதுன்னு நிச்சயம் பண்ணிட்டாங்களாம்.”

“என்ன... இன்னொரு தடவை சொல்லு?”

செல்லம்மா, இன்னொரு தடவை சொல்லிவிட்டு, விஷயத்தை ஆதியோடு அந்தமாக விளக்கிவிட்டு, நாத்தனார்காரியிடம் தான் போய் மன்றாடியதையும், அவள் தன்னை உதாசீனப்படுத்தியதையும், ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, “செத்தாலும் வாழ்ந்தாலும் நம்மோடயே அவள் சாகட்டும். போய் மகளைக் கூட்டிக் கொண்டு வாங்க” என்றாள்.

செல்லம்மா எதிர்பார்த்தது போல், பெருமாள் கோபப்படவில்லை. அடிக்க வரவில்லை. பித்துப் பிடித்தவர்போல் அப்படியே தலையில் கை வைத்தபடி ‘குத்துக்கால்’ போட்டு அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்.

‘என்னை, பாசத்தோடு பார்க்காதவள் படட்டும்’ என்று பழிவாங்கும் நெஞ்சத்தோடு கணவன் மதர்ப்பாக உட்கார்ந்திருக்கிறாரோ என்று கூட செல்லம்மா நினைத்தாள். “உடனே நீங்கள் போய் கூட்டி வாறீங்களா... நான் போகட்டுமா? எல்லாம் என் தலைவிதி. நீங்கள் சொன்னதை நான் அப்பவே கேட்டிருந்தால், இப்படி வந்திருக்காது” என்று முனங்கினாள்.

அப்போது, செல்லம்மா எதிர்பாராத ஒன்று நடந்தது. பெருமாளின் கண்களில் நீர் முட்டியது.

“என்னங்க இப்படி?” என்று செல்லம்மா அவர் கையைப் பிடித்ததும், அவரால் தாள முடியவில்லை. கேவிக் கேவி அழுதார். மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து, “என் பெண்ணுக்கா இந்த கதி... என் பெண்ணுக்கா” என்று அவர் புலம்பிய சத்தம் கேட்டு, குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்துவதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட மேல்மாடி பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் அங்கே “அப்பா, அப்பா” என்று சொல்லிக் கொண்டே கூடினார்கள். இதுவரை அழவைத்த அப்பா, இப்போது அழுவதைப் பார்த்ததும், ஏதோ பயங்கரமான ஒன்று நடந்திருக்கும் என்பதைப் பாவித்துக் கொண்டு பிள்ளைகள், ஆளுக்கொரு பக்கமாகப் புலம்பினார்கள். அதைரியப்பட்ட செல்லம்மாவே இப்போது அவருக்கு தைரியம் சொன்னாள்.

“என்னங்க சின்னப் பிள்ளை மாதிரி. நம்ம பொண்ணு நம்மகிட்ட வர்றதுக்கு சந்தோசப்படுறதை விட்டுப்புட்டு...”

பெருமாள், அவள் குரலை மேலும் பலமாக அழுது தடுத்தார். பின்னர் கேவிக்கொண்டே, “நீயும் புரிஞ்சுக்காம இருக்கியேடி. விதம் ஒரு புடவை கட்டி, தினம் ஒரு வகை சாப்பாடு சாப்பிட்டு வாழ்ற என் ராஜகுமாரியால, இந்த வீட்டுக்குள்ள எப்படி இருக்க முடியும்? அய்யோ, அவள் இங்க வந்து கஷ்டப்படுவதை இந்தக் கண்ணால பார்க்கிறதை விட, நான் செத்துப் போகலாம்டி” என்று சொல்லிக் கொண்டே, அவர் அழுகையை நிறுத்திய போது, அத்தனைக் குடித்தனக்காரர்களும் வாயடைத்துப் போனார்கள். வீட்டுக்குள் அடிதடி நடத்தினாலும் வெளியே வருவது போவது தெரியாமல் சாதுவாக இருக்கும் பெருமாளின் அழுகை, எல்லோரையுமே ஒரு குலுக்குக் குலுக்கியது. ஒரு எழுபது வயது ஆயாதான், நிதானமாகப் பேசினாள்:

“இன்னா பெருமாளு, அய்யோ இப்படியா அழுவுறது? உன் வீட்டுக்காரி செல்லம்மாக் கூடத்தான் ராசாத்தி மாதிரி வாழ்ந்தாள். இப்போ இருக்கறத சரிக்கட்டி பூறாளே... அதான் வாழ்க்கப்பா. உன்னோட மவளும் சரிப்பண்ணுவா. சீக்கிரமா போய் பொண்ணை கூட்டிவா நாய்னா. மனுஷனுக்கு மானந்தான் முக்கியம் நாய்னா. இஷ்டப்படி வசதி இருந்தாலும் இஷ்டப்படி வாழ முடியாதுன்னா, அது வாழ்வா நாய்னா? தூ! கூழ் குடிச்சாலும், சொந்தக் கூழக் குடிக்கோணும். சீக்கிரமா போய் கூட்டி வா நாய்னா.... அய்யோ... எய்ந்திரு... எய்ந்திரு...”

பெருமாளுக்கு மூளை வேலை செய்யத் துவங்கியது. பெண்ணைப் போல் பெண்கள் மத்தியில் அழுததற்காக சற்று வெட்கப்பட்டு, விரக்தியாகச் சிரித்துக் கொண்டார். எழுந்து, துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். “இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த உன் அண்ணனை, என்ன பண்ணினாலும் தகும்டி” என்று மனைவியிடம் மீண்டும் பழைய முகத்தைக் காட்டிக் கொண்டு, ஆவேசமாகப் புறப்பட்டார்.

“கடவுளே! என் அண்ணனை இவரு ஏதாவது பண்ணிடப்படாதே”ன்னு செல்லம்மாள் கைகளை நெறித்துக் கொண்டாள்.
-------------
continued in part 2 (chapters 11-20)

This file was last updated on 12 July 2021
Feel free to send the corrections to the webmaster (at pmadurai AT gmail.com)