சமுத்திரம் எழுதிய
ஒத்தை வீடு (குறுநாவல்)
ottai vITu (short novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சமுத்திரம் எழுதிய
ஒத்தை வீடு (குறுநாவல்)
Source:
சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041
முதல் பதிப்பு - ஜுன், 2000
விலை ரூ. 60-00
வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041.
ஏகலைவன் பிகே ஆப்செட் பிரஸ், சென்னை - 600 013.
-------------
முன்னுரை
டாக்டர். க. காந்தராஜ் பாலியல் நிபுணர், சென்னை
"இந்த இரண்டு குறுநாவல்களுக்கும், நீர்தான்யா முன்னுரை எழுதணும் என்றார் சு. சமுத்திரம் அவர்கள். முன்னுரை எழுதுற தகுதி எனக்கிருக்கா? யோசிச்சுதான் சொல்றீங்களா? என்று கேட்டதுதான் இந்த நாவலே, உம்மோட தொழில் சம்பந்தப்பட்டது. அதனாலே நீங்க எழுதினா சரியா இருக்குமுன்னு பட்டது. படிச்சு எழுதுமய்யா' என்று நாவலை என் கையில் திணித்துவிட்டுப் போனார், நண்பர் சமுத்திரம்
எனக்குக் கதைகள் படிப்பதில் அதிகமாக ஆர்வம் இருந்ததில்லை. வரலாறு, மானுடவியல், அரசியல், சினிமா (டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி - நடிகர் நடிகையர்களைப் பற்றி அல்ல) போன்றவை சம்பந்தமான என் தொழிலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதேசமயம், சு. சமுத்திரம் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்க்கும். காரணம், வரலாற்றிற்கும், சமுத்திரம் அவர்களின் நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் வரலாற்றில், முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய செய்திகளும், அவர்களின் சாதனைகள், வேதனைகள் மட்டுமின்றி வாழ்ந்த விதமும் அடையாளமின்றி வீழ்ந்த விதமும் சொல்லப்பட்டிருக்கும். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்ப வர்களின் வரலாறாக இருக்கும்.
சு. சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாக தோன்றாமல், "இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா" என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்த பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப்பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதாபாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மீண்டும் வித்தியாசம்...
சமுத்திரம் மீண்டும் வித்தியாசப்பட்டிருக்கிறார். தமிழ் நாவல்களில், பொதுவாக எந்தப் புதுமையும் இருப்பதில்லை. சினிமாவைக் குறை கூறுகிற இந்த தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களும், பெண்களைச் சுற்றியே இருக்கும். ஒரு மத்திய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சம்பிரதாயமான ஒரு பெண்ணுக்கு நேருகிற குடும்பப் பிரச்சினைகள் தான் பெரும்பாலான தமிழ் நாவல்களின் கரு.
எதிர்வீட்டு வாலிபன், விரோதமாகிவிட்ட அத்தை அல்லது மாமா மகன், சக மாணவன், சக ஊழியன் என்ற யாராவது ஒருவரிடத்தில் காதல், வேண்டாத திருமணம், ஆகாத மாமியார், மலடு, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது கணவன், சரியான முறையில் வளராத மகன் - மகள், வரதட்சணை என்று ஒரு வட்டதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், பெண்களுக்கு முப்பத்து மூன்று என்ன - முன்னூறு சதவீதமே உரிமை வழங்கினால் கூட, இவர்கள், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.
ஏதோ அத்தி பூத்தாற்போல், சிலபேர் துப்பறியும் நாவல்கள் எழுதுகிறார்கள். அதிலும்கூட "Damsel in Distres" (ஆபத்தில் இருக்கும் அழகி) என்ற ஃபார்முலா இருக்கும். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் எழுதுவது என்பது தமிழில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு பிரபலமான விஞ்ஞானத் தொடர், பின்னால் அது தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. அதில் எத்தனை பங்கு சுய கற்பனை என்றால், சோகம். 1984 என்ற மிகப் பிரபலமான ஆங்கில நாவல், Presiclent's Analyclot, West World , Logan's Run போன்ற பிரபல ஆங்கிலப் படங்களின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, தன் சுய கற்பவனையில் எழுதியதாகக் காட்டிய அந்தப் பிரபல எழுத்தாளரின் முயற்சி, விவரம் தெரியாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது வேறு விஷயம்
சமுத்திரத்தின் நாவல்களில் சம்பவங்கள் கொஞ்சம்தான் இருக்கும். ஆனால், மனிதர்களின் மனவியல், நூல் முழுவதும் விரவிக் கிடக்கும். சமூகத்தில், வெளிவராத, இருட்டாக்கப் பட்டிருக்கிற பல மனோ வியாகூலங்களை அலசி ஆராய்ந்து அந்த சூழ்நிலையில், மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் விசித்திர, புரியாத மாறுதல்களை அப்படியே எழுத்துக்களின் மூலமாகக் கொண்டுவரும் அற்புத சக்தி கொண்டவர் சமுத்திரம்.
சிட்டுக்குருவி - கருங்குரங்கு - பச்சைப்புறா
முதலாவது நாவலின் மையக்கரு, ஆண்மை இழப்பு. இது, நம் நாட்டைப் பொறுத்தவரையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் சம்பந்தப்பட்டது என்று அசட்டை செய்கிற விவகாரம். அதன் உள்ளே நுழைந்து பார்ப்பவர்கள், மிகமிகக் குறைவு. எருதின் புண் காக்கைக்கு எப்படித் தெரியும் என்பார்கள். அதைப்போல் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர்களின் வேதனையை, சமூகம் அக்கறையோடு கேட்டதுகூட கிடையாது. இந்தத் துறையில் இருக்கும் எங்களைப் போன்ற டாக்டர்கள், பலசமயம் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் சில விபரீத முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறோம். ஆங்கில மருத்துவம், சரியான மருத்துவம் கண்டு பிடிக்காமல் திணறிக் கொண்டிருக்கம் பிரச்சினையில், இதுவும் ஒன்று. அதன் விளைவு, சிட்டுக்குருவிகளும், கருங் குரங்குகளும், பச்சைப்புறாக்களும், பச்சோந்திகளும் பரிதவித்துப் போகின்றன.
ஆண்மைக் குறைவைப் பற்றி தமிழில் வேறு நாவல்கள் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஏர்னஸ் ஹெமிங்வேயின் சன் ஆல்ஸோ ரைஸஸ் (Sun Also Rises) என்ற ஆங்கில நாவல், சில மாய்பஸான் கதைகள், தமிழில் "சாரதா” என்ற திரைப்படம் - எனக்குத் தெரிந்து இவைகள் தான், இந்தப் பிரச்சினையை ஓரளவு அணுகியவை. இவற்றில் கூட, ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவனுடைய வாழ்க்கையில் வந்த பெண்கள் அல்லது அவன் மனைவி என்று பெண்களின் பிரச்சினைகள்தான் அலசப்பட்டன மீண்டும், என்னைப் பொறுத்தவரையில், ஆண்மைக் குறைவினால், ஆண்- பெண் இருபாலர்க்கும் ஏற்படும், உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை சம அளவில் விறுவிறுப்பான முறையில் அணுகியிருக்கும் முதல் நாவல் “ஒத்தை வீடு” என்று கருதுகிறேன்.
யதார்த்தம்
சமுத்திரம் நாவல்களில், வழக்கப்படி எனக்கு ஏற்படும் பிரச்சினை, இதில் சற்று அதிகமாகவே ஏற்பட்டது. இந்த நாவலை மேலோட்டமாகப் படிக்க முடியாது. சமுத்திரத்தின் ஒவ்வொரு அலையும் வித்தியாசமானவை. அதைப் போலவே சமுத்திரம் நாவல்களின் ஒவ்வொரு வரியும் பல்வேறு கருத்துக்களோடு நம் மனதைத் தொடும். ஊருக்குப் பொது வழிப்பாதை போட நிலத்தில் இடம் கேட்டு ஆக்கிரமிக்க முயலும் கிராமப்புற ஊரார்களை, அதிகாரிகள் மூலம் சரிக்கட்டவேண்டும் என்ற பிரச்சினையைக் கொண்ட சகோதரியும், உணர்ச்சியின் உந்துதல்களுக்கு எதிர்பார்த்த மாதிரி செயல் படுகிற மாமியாராக நாயகனின் தாயும், பக்கத்து வீட்டு உமாவும், தன் மனைவிமீது கண் வைத்திருப்பதாக நாயகனை சந்தேகிக்க வைக்கும் இந்திரனும், அவ்வப்போது வந்தாலும், அவர்கள் நாவலின் யதார்த்ததத்துக்கு காரணமாகிறார்கள்.
ஆண்மைக் குறைவில், இரவு ஏமாற்றத்தை எத்தனை அழகாக நாசூக்காக சொல்கிறார் சமுத்திரம்! நாயகி காலையில் குளிக்காமல் பூஜை அறைக்கு சென்று வருகிறாள். அவள் தலையிலிருந்த மல்லிப்பூக்களின் தன்மையை வைத்தே . கணவனின் சகோதரி எதுவுமே நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறாள் என்பது, நாகலாகியிருக்கக் கூடியதை நளினமாக்கிய கவிதை "ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக
அமாவாசைகளே வந்தன." எப்படிப்பட்ட விஷயத்தை எத்தனை எளிமையாக சமுத்திரம் எழுதிவிட்டார் ! இல்லை ஓவியமாகத் தீட்டிவிட்டார்.
நாத விந்து விளக்கம்....
"நாத விந்து கலாதி நமோ” என்ற அருணகிரிநாதரின் வரிகளுக்கான விளக்கம், எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சிருஷ்டியின் ரகசியத்தை, இயற்கை (கடவுள்?) மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விந்தையை, நம் முன்னோர்கள் ஒரே வரியில் சொல்லி-யிருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவர்களின் அறிவியல் அறிவில் கோடியில் ஒரு பங்குகூட இன்றைய தமிழனிடத்தில் இல்லையே என்று நெஞ்சு கனக்கிறது. ஆங்கிலத்தில் படித்து சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த நாம், நம் முன்னோரின் இம்மாதிரி அறிவியல் திறமைகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு வழியில்லை. இந்த இரு பக்கங்களுக்கு நான் சமுத்திரம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வரிக்கு வரி மனப்பாடம் செய்ய வேண்டிய அளவுக்கு அறிவியலும் தத்துவ விளக்கங்களும் கொண்ட இரு பக்கங்கள் அவை.
"பெண் என்பவள் சக்தி சக்தியைத் திருப்தி படுத்த எந்த ஆணாலும் முடியாது.”
"தாம்பத்ய உறவில், மனைவியை அடக்க நினைக்காதே, அடங்க நினை."
"அவளை பப்ளிக்காய் அடக்கணும் , பிரைவேட்டாய் அடங்கணும்."
"ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போகவேண்டும்."
"பொம்மனாட்டிக்கிட்ட போறவன் சாதா ஆம்பிளைன்னா, அவளைக் கட்டி காக்கிறவன் பெரிய ஆம்பிளை."
இவை போன்ற விவாதத்துக்குரிய சிந்தனையைக் கிளறக்கூடிய சமுத்திர முத்துக்கள் நூலின் சிறப்பு.
மனவியல் ...
மனவியல் ரீதியாக, ஆண்மைக் குறைவானவன், அதை நிவர்த்தி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும், வெவ்வேறு பெண்களிடம் முயற்சிப்பான். அடி மனதில் அழுந்திக் கிடக்கும் பயம், முயற்சிக்கும் நேரத்தில், அவனை ஆக்கிரமித்து, அவனை செயல்பட விடாமல் செய்துவிடும். இந்த மனவியல் மருத்துவத்தின் உண்மையை வெகு அழகாக நெஞ்சைத் தொடும்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார் சமுத்திரம்.
குறிப்பாக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் கங்கா என்ற பாத்திரம், அதன் மூலம் வெளிப்படுகிற சில அனுபவ விளக்கங்கள், மனிதர்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. ஹோட்டலில் நடக்கிற சம்பவங்கள், அதன்பின் கங்காவுக்கும் மனோகருக்கும் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் சமுத்திரத்தின் பார்வையை எந்தப் பரிமாணம் கொண்டு அளப்பது என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நான் ஆரம்பத்தில் கூறியதுபோல், சமுத்திரம் அவர்களும் இந்த மையக் கருத்தைக் கொண்ட வேற்று மொழி நாவல்களிலிருந்து சம்பவங்களை எடுத்து, அதைத் தன்னுடைய எழுத்துக்களாகக் காட்டி சுலபமாக பேர் வாங்கியிருக்கலாம். ஆனால், இவர் சமுத்திரமாயிற்றே!
"ஒத்தை வீட்டின் " ஒவ்வொரு பக்கத்திலும், அவரின் உழைப்புத் தெரிகிறது. சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும், மனவியில் ரீதியான இந்த பிரச்சினையை எப்படி அணுகுகின்றன என்பதை வெகு நுட்பமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். குடும்பத்திலும், சமூகத்திலும் நடக்கும் பல்வேறு இனம் புரியாத குழப்பங்களுக்கு, ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் பிரச்சினைகள் எப்படி காரணமாகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வைத்திருக்கிறார். மருத்துவர்களுக்கே தகராறு செய்யும் இந்த விஷயத்தை, விறுவிறுப்பாகவும், சுவையாகவும், உள்ளத்தை ஊருடுறுவும் வகையிலும் சொல்ல சமுத்திரம் ஒருவரால்தான் முடியும்.
புதை மண்
புதை மண்ணில், சு. சமுத்திரம் என்ன புதிதாக சொல்ல வந்திருக்கிறார்..?
புதிது புதிதாகத் தோன்றிவரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழில்களும், ஒரு தனி மனிதனின் அடிமனதில் ஏற்படுத்துகிற பிரச்சினைகளும், அதனால் அவனுடைய வாழ்க்கையே திசை தடுமாறிப் போவதையும், பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பரவுவதற்கு, அவை காரணமாக இருப்பதையும் - என் போன்ற இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் உணர்ந்து வேதனையடைந்து, இதைமாற்ற வழியுண்டா என்று குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சு. சமுத்திரம் அவர்கள், தன் சக்திமிகுந்த எழுத்தாற்றலை, இந்தத் துறையின் பக்கம் திருப்பி, இளைஞர் சமூகத்திலும், இலக்கிய உலகத்திலும் வியக்கத்தக்க அற்புதமான மாறுதல்களை உருவாக்கியிருக்கிறார்.
அலிகளைப் பற்றிய அவரது வாடாமல்லியும், எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய அவரது பாலைப்புறாவும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் புரட்சி என்பது உலகறிந்த உண்மை . இந்தப் புதைமண், அதேபோல் சந்தர்ப்ப வசத்தால், தன்னினச் சேர்க்கையாளனாக (HOMO SEXUAL) மாறிய ஒரு கிராமத்து இளைஞனின் கதை. இதைப் படிக்கும் போது, அந்த இளைஞனின் நாட்குறிப்பை, அவனது அனுமதியோடு படிக்கின்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அவன் ஹோமோ செக்சுவலாக மாறி, அதை, அவன் ரசிக்க ஆரம்பிக்கும்போது, நமக்கு ஏற்படுகிற பதைபதைப்பு அவன் அந்த செயலில் ஈடுபட்டு, அதை உணர்ந்து வேதனைப்படும்போது, நமக்குள் கசிகிற ரத்தக்கண்ணீர், அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடும்போது, நமக்கு ஏற்படுகிற ஒரு நிம்மதி - நாவலின் உயிரோட்டத்துக்கு இந்த உணர்வுகளே சாட்சி.
சமூக அக்கறை
சு. சமுத்திரம், நுனிப்புல் மேய்பவர் அல்ல என்பதற்கு, இந்த நூல் மற்றொரு எடுத்துக்காட்டு. தன்னினச்சேர்க்கையில் ஈடுபட எந்தச் சூழ்நிலைகள் காரணம், அதிலிருந்து விடுபட பாதிக்கப் பட்டவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாகக் சித்தரித்திருப்பது சமுத்திரம் அவர்களின், சமூக அக்கறைக்கு சான்றாக விளங்குகின்றது.
வழக்கப்படி சமுத்திரம் அவர்களின் நையாண்டிக்கும் இந்த நூலில் நிறைய இடமிருக்கிறது. சில உதாரணங்கள் :
"கட்டிடப் பிளானை தலைகீழாகப் பார்த்த கார்ப்பரேஷன் கிளார்க்."
"அவர் எண்ணம் சம்ப்பில் விழாத, கார்ப்பரேஷன் தண்ணீர்போல் ஆனது."
"இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி, அங்குமிங்குமாய் மாற்றி, அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாம்."
"அய்யகோ" - இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை
"குழந்தைகளை யூனிபாரமாகக் கூட்டி வந்தான்."
"செல்வம் என்றால் மரபுக்கவிதை; செல்வா என்றால் புதுக்கவிதை."
இப்படி நூல் முழுக்கப் பரவிக் கிடக்கும் மாறுபட்ட பார்வைகள். ராமனும் லட்சுமணனும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால்தான், பாசமாக இருக்க முடிந்தது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் பங்காளிகளாக மாறும்போது, பாசம் போய்விடுகிறது.
அடுத்த பிறவியில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று தவமிருந்து திரௌபதியாகப் பிறந்த நளாயினியும், ராவணன் படத்தை வரைந்து, அவனை நினைத்த சீதையும், மைத்துனன் சுக்ரீவனோடு, காம விளையாட்டு நடத்திய, வாலியின் மனைவி தாராவும், கணவனின் செயல் சரியில்லை என்று வாதிட்ட மண்டோதரியும், பஞ்ச பத்தினிகள் என்று கொண்டாடப்படுகிறார்கள். மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வருமே கற்பில் சந்தேகத்துக்குரியவர்கள் என்றாலும், இவர்களை பத்தினி என்கிறது மதம். மதம், பத்தினித் தன்மைக்கு கற்பு தேவையில்லை என்று உறுதியாகக் கூறுகிறது.
இதுபோன்ற கருத்துக்கள், என் போன்ற வயோதிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். எப்படிப்பட்ட வாதங்கள் ! நூல் முழுவதும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள்... ஒரு வரியைக்கூட தள்ளிவிட்டு போக முடியவில்லை .
சினிமாத்தனம்
முடிவு சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், தவறுக்கு வருந்துபவனை வாழ்வதற்கு சமூகம் அனுமதிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனை, இந்த நூலைப் படிக்கும், பல தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு, நம்பிக்கையையும், நல்லவழி சென்று நல்லபடி வாழ்வதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும்.
என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம், நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு "புதைமண்” - ஒரு “ஒத்தை வீடு” ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும்.
எல்லா இளைஞர்களும், அவர்களைப் பெற்றவர்களும் கண்டிப்பாகப் பலமுறை படிக்கவேண்டிய நூல். இது சிபாரிசு அல்ல; ஆலோசனை
கத்திமேல் நடந்து....
சு. சமுத்திரம்
நமக்குக் கிடைக்கும் தகவல்கள், சில சமயம் வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறையையே மாற்றிவிடுகின்றன. என்றாலும், இந்த மாற்றத்திற்கு தகவல்களின் தன்மையும், அவற்றை உள்வாங்கிக் கொள்கிறவரின் மனப்போக்கும், காரணமாகின்றன. என்னைப் பொறுத்த அளவில், ஏழை எளியவர்களைப் பற்றியும், வாழ்க்கையின் எந்த மட்டத்திலும் வதைபடும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதிவந்தேன்; வருகிறேன். கைக்குக் கிடைத்த தகவல்கள், இந்த கருப் பொருளுக்கு வலிவு சேர்த்திருக்கின்றன.
எனது அரசுப்பணி சார்பாக சுற்றுப்பயணம் செய்தபோதும், புதிய நூல்களைப் படிக்கும் போதும், ஒவ்வொரு துறையிலும் வளமான தகவல்களைக் கொண்ட நிபுணர்களை சந்திக்கும் போதும், நான், அதுவரை பெறாத புதிய தகவல் தாக்கங்களைப் பெறுகிறேன். இவற்றை சமூக உலைக் களத்தில், புடம் போடுகிறேன். இந்தத் தகவல்களை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, எனது அணுகுமுறை மாறாமல், ஒரு கிரியா ஊக்கியாகவே இருந்து வருகிறேன். ஆனாலும், நான் மாறாமல், எனது படைப்புக்கள் மாறியிருக்கின்றன. இவற்றின் சமூகத்தளம் அப்படியே இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள், மற்ற படைப்புகளில் இருந்து, மாறுபட்டு நிற்பதாக நினைக்கிறேன். "வாடாமல்லி"யும், "பாலைப்புறா"வும் இப்படி, ஆய்வு செய்து எழுதப்பட்ட படைப்புக்கள்.
திசைமாறும் எழுத்தாளக் கவனம்......
மானுடத்தில், கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் எதிர்நோக்கும் ஆண்மைக் குறைவு பிரச்சினையைப் பற்றி, ஒத்தை வீடு, கலை வடிவத்தில் ஆய்வு செய்கிறது. முற்றிலும், ஆண்மையின்மை என்பது வேறு. ஆண்மைக் குறைவு என்பது வேறு. இதனை, டாக்டர். க . காந்தராஜ் அவர்கள், நான் நினைத்தது போல், அருமையாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஆண்மை அற்றவன், தன் பாரத்தை, விதியின் மேல் இறக்கி வைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்ப்பான். ஆனால், ஆண்மைக் குறைவு உள்ளவன் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு அத்தனை ஆசைகளும் உண்டு. ஆனால், அந்த ஆசைகளை, முழுமையாய் செயல்படுத்த முடியாதவனாகிறான். மனைவிக்கோ அல்லது மற்ற பெண்ணுக்கோ, ஆரம்ப சூரத்தமைாக ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, பிறகு அதையே தன்னைமீறி தரைமட்டமாக்கி விடுகிறான். இவன், நொந்து நொந்து, வெந்து போகிறவன். நமது இரக்கத்திற்கு உரியவன்.
என்றாலும், இவன், மனிதநேயத்தோடு அணுகப்படுவதில்லை. மூலையில் ஒதுக்கி வைக்கப்படவேண்டிய பாத்திரமாகவே வைக்கப் படுகிறான். இத்தகைய பாத்திரத்தை, பிரகாசப்படுத்துவதே, இந்த "ஒத்தை வீட்டின்" நோக்கம். பொதுவாக, ஆண்மைக்குறைவு உள்ளவனின் மனைவி, வெனோடோ ஓடிப்போவதாக அல்லது தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்படுகிறது. ஆண்மைக்குறைவு உள்ளவனுக்கு உள்ள ஆசை, இயலாமை, ஏக்கம், துன்பம், துயரம், அவமானம், சுய பரிதாபம் போன்றவற்றை எந்த எழுத்தாளியும், அதிகமாக சித்தரிப்பதில்லை. வியாபார ரீதியில், இந்த பிரச்சினைக்குரியவனின் மனைவி மீதே, எழுத்தாளக் கவனம் செல்கிறது.
இந்த வகையில், இந்த "ஒத்தை வீடு", ஒரு பெண்ணின் பாலியல் மொற்றத்தைப் பற்றி மட்டுமல்லாது, அவளது கணவனின் பிரச்சினையையும், அனுதாபத்துடனும் மனித நேயத்துடனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.
அனுபவச் சுழல்
"பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப் பிறகு, ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை , நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது. இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப் பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், "புதை மண்." ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன்.
இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவர்க்க முடியாத படி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது.
கத்தியும் "கத்தி"யும்.....
கத்திமேல் நடந்தாலும், இறுதியில், "கத்தி"யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சை முறை, கட்டுரைத்தன்மை வாய்ந்தது போல் தோன்றலாம் பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம். என்றாலும், இது தவிர்க்க முடியாதது
இவற்றைப் படிக்கும் வாசகருக்கு, இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை, உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது. அவசியமாகிவிட்டது. கதையை மட்டுமே விரும்பு கிறவர்களுக்கு, இந்த இரு படைப்புக்களின் இறுதி அத்தியாயங்கள், சலிப் பூட்டலாம். ஆனால், இவை, கருத்தைச் சுற்றிய படைப்புக்கள், படைப்பைச் சுற்றிய கருத்துக்கள் அல்ல. இவற்றைப் படிக்கிற ஒரு சராசரி வாசகருக்கு, பாலியல் திரிபுவாதிகளை, அனுதாபத்துடன் நோக்கவும், இயலுமானால் மீட்கவும் வகை செய்யும் என்றும் நம்புகிறேன். "ஒத்தை வீடு', "மாலைமதி"யில் வெளியான உடனேயே, கொடைக்கானலில் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இதனை தம்பதியருக்கு வழங்கும் ஆலோசனைக்கு ஒரு ஆதார நூலாக வைத்திருப்பதாய் அறிகிறேன்.
இந்த இரண்டு படைப்புகளும், "மாலைமதி"யில், வெளியானவை. பொதுவாக, மாத நாவல்கள், வாசகனை மலினப்படுத்தும் வகையிலிலேயே வெளியிடப்படுவண்டு. என்றாலும், நான் எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம், அப்படியே பிரசுரிக்கப்படும் என்று வாக்களித்ததோடு, தரமான ஓவியங்களோடு, அந்த வாக்கை நிறைவேற்றிய, "குமுதம்" ஆசிரியக் குழுவிற்கு , என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு படைப்புக்கருக்கள், உருவம் பெறுவதற்கு, டாக்டர். க. காந்தராஜ் அவர்களே காரணமாவார். இந்த படைப்பிற்கு, ஒரு அற்புதமான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார். அவர் தொழில் முறையில், பாலியல் நிபுணராக இருந்தாலும், பொது வாழ்வில், மிகச் சிறந்த பேச்சாளர்; இலக்கியவாதி. அவருக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், வட சென்னையில் வாழும், தாவரயியல் பேராசிரியர், முனைவர். சுப்பிரமணியன் அவர்கள், வழக்கம் போல், பல அரிய விஞ்ஞானத் தகவல்களை தந்துதவி, இந்த படைப்பை வளப்படுத்தியதற்காக, நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த நூலை, ஏகலைவனின் பிற நூல்களைப்போல், அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியரும் சிந்தனையாளருமான முனைவர் ச. மெய்யப்பன், அவருடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும், இந்த மாதிரியான, அறிவும் உணர்வும் கலந்த படைப்புக்களை எதிர்பார்த்து வாங்கிப் படிக்கும், எண்ணற்ற வாசகத் தோழர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி.
தோழமையுடன்,
சு. சமுத்திரம்.
-------------------
பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம். குறிப்பாகத் தாவரங் களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பது போல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகவேகமாய் வளர்ந்து. பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுறுவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும்.
ஒரு ஆல விதை. எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி, பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன. இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவு பெறுவதற்கு. அந்த விதையை விதைப்பதும். விதைத்ததை சுற்றி முள் வேலியைப் போடுவதும், உரமிடுவதும் காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது.
இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும். மனிதனை அல்லது மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது. அந்தக் குழந்தை. பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.
-----------------
ஒத்தை வீடு
அத்தியாயம் 1
அந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு வண்ணக் கோழியை செல்லமாகச் சிணுங்கியபடியே துரத்திக்கொண்டிருந்த வாலிப வனப்புச் சேவல் ஒன்று, திடுதிப்பென்று பின் வாங்கியது. வீட்டின் வெளிப்புற மாடத்தின் மேல் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி, ஜோடியாய்க் கிடந்த சிட்டுக் குருவிகள் இறக்கைகளை உதறிய படியே எதிர் எதிர்த் திசைகளில் பறந்து போயின அதே மாடத்திற்குள் காட்சி அளித்த பிள்ளையாருக்குத் தீபம் ஏற்று வதற்காகச் சிறிது குனிந்த காந்தாமணி, விளக்கேற்றாமல் தீப்பெட்டியும் குச்சியுமாக நிமிர்ந்தாள். காந்தாமணியின் அம்மா வான சொர்ணம்மா , பேசிய பேச்சையெல்லாம் வலது காதில் வாங்கி இடது காதுவழியாய் விட்டுக் கொண்டிருந்த அண்டை வீட்டு உமா, தனது வீட்டை நோக்கிப்போகப் போனாள் ஆனாலும் இங்கே நிற்பதா, அங்கே போவதா என்று முடிவெடுக்க முடியாமல், ஒரு காலை முன்வைத்து, மறு காலைப் பின்வைத்துத் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
இத்தனை பேரின் அத்தனை வெளிப்பாடுகளுக்கும் காரணமான மனோகர், வீட்டின் வெளிப்பக்கத்தில் வாசலுக்கு முன்னால் நின்றான். அவனது வலது கர வளைவில் ஒரு தோல் பை தொங்கியது. இடது கைப்பிடியில் ஒரு சூட்கேஸ் ஒட்டப் பட்டதுபோல் கிடந்தது. வலது தோளில் சோல்னாப் பையும், இடது கையில் தூக்குப் பையும் தொங்கி வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவன் போல் நின்றான். அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தான் வீட்டுக்குத் திரும்பியதால் ஏற்பட்ட எதிர்பார்த்த
ஒத்தை வீடு மகிழ்ச்சியுடன், அக்காவைப் பார்த்த எதிர்பாராத மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, காந்தாமணி அக்காவை ரெட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்த்தான். மனைவியைக் கண்களால் தேடிப் பார்த்தான். கண்ணில் படவில்லை. மீண்டும் அம்மாவை விட்டு விட்டு அக்காவையே பார்த்தான். அவள், தான் வந்தது தம்பிக்கு பிடிக்கவில்லையோ என்று அனிச்சமலராய் ஆகும் வரை பார்த்தான். அப்புறம்தான் பேசினான்..
"எப்போக்கா வந்தே."
"இன்னிக்கு காலையிலதான்..."
"அறுவடை சமயம்... அடைமழை நேரம்.... ஏன் இப்படி திடுதிப்புன்னு.."
"நான் சொல்லாமல் கொள்ளாமல் வரப்படாதா...?"
"ஓம்மா புத்தி ... ஒன்னை விட்டுப் போகுமா... நிலத்தை வித்துட்டோ விற்காமலோ என்னோட தங்கிடுன்னு சொல்றவன் நான்?"
இதற்குள், "என் புத்தில் என்னடா கண்டே ..” என்று முற்றத்து மேல் திண்ணையில் நின்ற சொர்ணம்மா , வீதிக்கே ஓடிவந்தாள். அறுபத்தைந்து ஆண்டுகளைக் கொண்ட மொக்கையான முகம். கண், வாய், மூக்கு, காது ஆகியவை அந்த மொக்கையில் தனித் தனியாய் ஒட்டப்பட்டது போன்ற தோற்றம்.... பின் நெற்றி முன் தலையை ஆக்கிரமித்தது போல் பொட்டல். அதில் ஒரு பள்ளம்.... பள்ளத்தாக்கைச் சுற்றிய மரங்கள் போல், அந்தப் பள்ளத்தைச் சுற்றிய முடிக் கற்றைகள்... காந்தாமணி, தம்பியிடம் இருந்த சூட்கேஸையும், ஜோல்னாப் பையையும் வாங்கிக் கொண்டிந்த போது, சொர்ணம்மா அங்கேயே, அந்த நிமிடமே ஒப்பித்தாள்....
"ஊர்ல்.... ஆறு மாசமா பேச்சு மூச்சி இல்லாமக் கிடந்த பாவிப் பயலுவ... பழைய படியும்... புத்தியக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம்.. அக்காவோட நிலம் இருக்கு பாரு... மூணு மரக்கால்... நாலு செண்டு... அசல் பட்டா இடம்... அதுல வண்டிப் பாதை வேணுமுன்னு ஊர்க்காரனுவ கேட்டாங்களாம். அக்கா, பட்டா நிலமுன்னு
சொல்லியும் கேட்காமல், ஊர்க்காரனுவ வண்டி அடிக்காங்களாம். நிலத்துல முளைச்ச காணப் பயிருல்லாம் கரையான் புத்தாய் ஆகிட்டாம்... அவங்க நாசமாப் போகணும்... போன இடம் புல்லு முளைச்சுப் போக... நீதான் பழையபடியும் பெரிய இடத்துல சொல்லணும்... இந்தத் தடவை... அவங்க காலுல கையில் விலங்கை மாட்டி... போலீஸ் இழுத்துட்டுப் போறதுக்கு, நீ ஏற்பாடு செய்யணும்..."
"ஒனக்கு மூளை இருக்குதாம்மா....? தம்பி வந்ததும் வராததுமாய்..."
மனோகர், அக்காவையே பார்த்தான் பார்க்கப் பார்க்க எரிச்சலும், பாசமும் மாறி மாறி வந்தன. உச்சிமுதல் பாதம் வரை சமச் சீரான உடம்பு. பச்சைக் கருப்பு... பச்சையான கருப்பல்ல.... பாசிப் பச்சையும், நீலக் கருப்பும் கலந்து குழைந்த வாளிப்பான நிறம்... எலும்புகள் தேக்காகவும், நரம்புகள் பித்தளை ஒயர்களாகவும், சதைகள் செப்புக் கட்டிகளாகவும் உருவெடுத்து, எஃகு போன்ற தோலுக்குள் அடங்கியது போன்ற மல்லுடம்பு.
மனோகர், எதுவும் பேசாமல் உள்ளே வந்தான்... முற்றத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பின்பக்கமாய்ச் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அக்கா கொண்டு வந்த ஒரு செம்புத் தண்ணீரை தூக்கிப்பிடித்து, நீரை அருவியாகவும், வாயைப் பள்ளத்தாக்காகவும் ஆக்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா சொன்னதையே மாற்றிச் சொன்னாள்
"பட்டா நிலத்துல வண்டிப் பாதை போடுறத்துக்கு, எங்கப்பனுக்கு பிறந்தானுவளா? இல்லை ஒன் மச்சானுக்குப் பிறந்தானுவளா - எவ்வளவு கொழுப்பு இருந்தால் - அடுத்தவன் நிலத்தை வாயில் போடுவானவ? அவனுவ துள்ளத் துடிக்கப் போவனும். கொள்ளி போட பிள்ளை இல்லாமல் போகிற இடத்துல சாகணும். வாந்தி பேதில போகணும் மனோகர் ! இத விடப்படாதுடா இப்பவே போன் போட்டு, அவங்க கையில் காலுல விலங்கு மாட்டி, போலீஸ்காரன் அவனுவள நடு ரோட்ல நாய இழுத்துட்டுப் போற மாதிரி போக வைக்கணும் யாரை விட்டாலும் அந்த ராமசாமியை மட்டும் விடப்படாது... கொள்ளையிலே போவான்."
மனோகர் பாதிச் செம்புத் தண்ணீரைத் தரையில் வீசியபடியே, புரையேறிய தலையோடு சீறினான்.
"சும்மா கிடம்மா... எக்கா... ஆறு மாதத்துக்கு முன்னாலதான் இதே மாதிரி பிரச்சினையில் தலையிட்டு, ராமசாமி வகை யறாக்களை உள்ளே போட்டோம்... போலீஸ் என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், ஒரு தடவதான் சொல்லலாம்... அடுத்த தடவ சொன்னால்... நமக்குத்தான் அசிங்கம்..."
அக்கா , காந்தாமணி, அசைவற்று பேசாமல் நின்றபோது, தாய்க்காரி மகளுக்கும் சேர்த்துப் பேசினாள்.
"இந்தப் பாவி மொட்டக்கிட்ட, காலையிலேயே படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... ஒன் தம்பியை நம்பாதே நம்பாதேன்னு தலையில் அடிக்காத குறையாச் சொன்னேன். அவன் பழைய மனோகர் இல்ல... வீட்டுக்குக் கெட்ட பிள்ளையானாலும் பரவாயில்ல... ஊருக்கு நல்ல பிள்ளையாய் பேர் வாங்க நினைக்கான்னு சொன்னேன். கேட்டியாடி.. என் பேச்சை..? எப்படிப் பலிச்சிட்டு பாரு"
மனோகர், அதட்டினான்...
"எம்மா... இதுக்கு மேலே பேசினே... திண்ணைக்குக் கூட வராமல், திரும்பிப் பாராமல் போயிடுவேன்... நீயும் சண்டைக் கோழியாய் நிற்கப்படாதுக்கா.... ஊரையும் அனுசரித்துத்தான் போகணும்... ஊர்ப் பாதைக்குத்தானே கேட்டாங்க... பெருந் தன்மையா விட்டுக் கொடுக்கலாமில்ல?"
"இந்தா பாருப்பா... நீ செய்யணும் என்கிறதுக்காக நான் வரல... ஒன்னைப் பார்க்கறதுக்காகக் கூட வரல.... என் புது நாத்தனாரைப் பார்க்க வந்தேன்... பார்த்துட்டேன்... நாளைக்கே போயிடுவேன்.... கவலைப்படாதே..."
"மூக்குக்கு மேலே கோபம் மட்டும் வந்துடும்.... சரி விவரமாய்ச் சொல்லு..."
"ஊர்ப்பாதை... வெள்ளையன் தோட்டத்தோட முடியுது... அதுக்கு நேரா.... சீமைச்சாமி நிலம், நீள வாக்குல இருக்குது... அதுல பாதை கேட்கலாமில்ல? அதவிட்டுட்டு, பத்தடி தள்ளி இருக்கிற என் நிலத்துல கேட்கிறது என்ன நியாயம்....? ஊர்ப்பாதையை வளைச்சு என் நிலம் வழியாய் விடாமல், சீமைச்சாமி நிலம் வழியா நேராய் விடலாம் இல்லியா... ஏன் விடல....? ஏன்னா , சீமைச்சாமிக்கு ஆள் பலம் இருக்குது... நான் நாதியத்தபய மகள் இல்லாதவன் பெண்டாட்டி... எல்லோருக்கும் இளக்காரமான மயினிதானே...?"
அம்மாக்காரி, சவாலிட்டாள்.
"நான் இருக்கும்போது நீ.. எப்படி நாதியத்துப் போவே... நாளைக்கே நானும் ஊருக்கு வாரேன்... எந்தப் பயல் வண்டியடிச் சுட்டு வந்தாலும் முன்னால போய் நின்னு மூக்கணாங் கயிறைப் பிடிக்கேன் "
மனோகர், சளைத்தான்.
"சீச்சீ - இது வீடா? ஒரு மாசம் நிம்மதியாய் டில்லியில் இருந்தேன் ஒருவன் கிட்டச் சிபாரிசுக்கு போறது பிச்சை எடுக்கிறது மாதிரின்னு யாருக்கும் தெரியல."
"ஒங்களுக்குத்தான் தெரியல .. ஊர்க்காரன் இருக்கிறவன் நிலத்தை விட்டுவிட்டு, இல்லாதவன் நிலத்தை பிடுங்க வந்தால் எப்படிங்க? பாதி நிலத்தை வேணுமுன்னா ஊர்ப்பொதுப் பணத்துல வாங்கிக்கன்னு அண்ணி சொல்லி இருக்காங்க... அதுக்கு முடியாதுன்னா .... அது அடாவடிதானே?... ஊர்க்காரன், ஆள் பலத்தை தப்பா பயன் படுத்தும் போது... நீங்க ஒங்க பேட்ச் மேட் எஸ்பி கிட்ட இருக்கிற நட்பை சரியா பயன்படுத்துறதுலே என்ன தப்பு ...?"
மனோகர், நிமிர்ந்து பார்த்தான்... ஈரம் கசிந்த தலைமுடியை பின்பக்கமாய்த் தட்டி விட்டபடியே, சங்கரி அவனைப் பார்த்தாள்... அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் ரசனை கண்டு நின்றாலும், போவது போல் பாவலா செய்த பக்கத்து வீட்டு உமாவை அழுந்தப் பிடித்தபடியே, கணவனுடைய பதிலுக்காகக் காத்து நிற்பவள் போல் முகம் தூக்கி நின்றாள்.... மனோகர், எதுவும் பேசாமலேயே அவளைப் பார்த்தான்... ஒரு மாதப் பிரிவிற்குப் பிறகான பரிவுப் பார்வை.... அவள் உடலெங்கும் கண்களை ஊடுருவ விட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சங்கரி மீண்டும் அவனை உசுப்பினாள்.
"இதையாவது செய்யுங்க..."
மனோகரின் பிரிவுப் பார்வை, பரிதாபப் பார்வையானது.... அவளை ஊடுருவிப் பார்த்தக் கண்கள் தன்னைத்தானே உள் முகமாய்த் தேடின... 'இதையாவது செய்யுங்கன்னு எந்த அர்த்தத்தில் சொல்றாள்? யதார்த்தமா... இல்ல குத்தலா... நோ - நோ... அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியலியே..
அக்கா காந்தாமணி, நிலைமையைச் சமாளித்தாள்.
"சரி... சரி... நாளைக்கு ஆற அமரப் பேசலாம்...”
"பேசாம இங்கேயே வந்திடுக்கா"
"அதையும் சேர்த்து நாளைப் பேசலாம்... எம்மா! சங்கரி மொதல்ல தம்பி குளிக்கட்டும்... வெந்நீர்ல குளிச்சாத்தான் அலுப்பு தீரும்... உடல்வலி போகும்... கீசரப் போடு...''
"கீசரு ரிப்பேரு அண்ணி .."
“நல்ல பொண்ணு.... அப்போ அடுப்புல போடு... தண்ணி சூடாகணும்... அவ்வளவுதானே..”
சங்கரி, கணவனை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே.., உள்ளே சமையலறைக்குள் போகப் போனாள். பிறகு திரும்பி வந்து திண்ணையில் வைக்கப்பட்ட சூட்கேஸைத் தூக்க முடியாமல் தூக்கியபடி நின்றாள்.. இன்னொரு லெதர் பேக்கைக் கண்களால் சுட்டிக் காட்டி, உமாவைத் தூக்கி விடும்படி அதே கண்களால் கெஞ்சினாள்.... ஆனால் உமா, கண்டுக்கவில்லை .... அந்நியன் பொருளைத் தொடுவது அவனை தொடுவது மாதிரிதானே... கற்பு கெட்டுப் போகாதா..."
உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கை போட்டபடியே , திண்ணைப் படியில் அவன் கால் வைத்த போது, ஒரு மோட்டார் பைக் சத்தம்... உமாவின் கணவன் இந்திரன், இடது பக்கமாக ஒடிக்கப்போன பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். உமாவை, ஒனக்கென்ன இங்கே வேலை' என்பது மாதிரி, எள்ளும் கொள்ளுமாய்ப் பார்த்தான். அவளை, அவன் பார்த்த தோரணை, உமாவைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வந்தவன் போல் தோன்றியதே தவிர, மனோகரை பார்க்க வந்தவன் போல் தோன்ற வில்லை. ஆனாலும், கடித்த பற்களை விடுவித்தபடியே ஒப்புக்குக் கேட்டான்.
"என்ன மனோ - டில்லியில் பயிற்சி எப்படி இருந்தது..."
"உட்காருங்க இந்திரன் ஸார் - பயிற்சி - பொல்லாத பயிற்சி..."
"உமா... வீட்டுக்குப் போ... அம்மா தேடுவாள் - அப்போ பயிற்சி பயனில்லன்னு சொல்றீங்க..."
"அரசாங்கத்திலே இந்தப் பயிற்சி என்கிறதே ஒரு ஏமாத்து நாடகம்... மேலிடத்துக்குப் பிடித்தவங்க அதை கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்கிறவங்க... ரிட்டயர்டாகிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்ன கூட வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போவாங்க... வேண்டாதவங்கள கழித்துக்கட்ட உள்நாட்டுப் பயிற்சின்னு அனுப்புவாங்க...”
“நீங்க எந்த வகையில் சேர்த்தி...?"
"இரண்டுலயும் சேர்த்தி இல்ல. எங்க சர்வீஸ் அதிகாரிங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்குன்னு டில்லியில் ஒரு நிறுவனம் இருக்குது - இப்போ பயிற்சியாளர்கள் அதிகமாகவும், பயிற்சி பெறுகிறவங்க குறைவாகவும் ஆகிப் போச்சு. ஆள் பஞ்சம். இதனால் என்னை வரச்சொல்லிட்டாங்க. ஆனாலும் சும்மா சொல்லப்படாது. தமிழக அரசின் இல்லத்தில் ஏஸி. ரூம். அருமையான சாப்பாடு தகராறுக்கு வராத ஆட்டோ டிரைவர்... அப்புறம் சைட் அடிக்கிறதுக்கு ஏகப்பட்ட அழகிகள்."
மனோகர், குரலைத் தாழ்த்திப் பேசியபோது, இந்திரன், உமா போய்விட்டாளா என்று கண்களைச் சுழற்றி ஒரு தாவு தாவி விட்டு, கிசு கிசுப்பாகக் கேட்டான்...
"ஏதாவது சிக்கிச்சுதா பிரதர் -? எனக்கு சல்வார் கம்மீஸ்களை ரொம்பப் பிடிக்கும்..."
"இதுல ஒரு வேடிக்கை தெரியுமோ இந்திரன் ஸார்... டில்லிப் பஸ்ல அடித்துப் பிடித்து உட்காருவீங்க... ஒருத்தி, அதுவும் அழகான இளம் பெண்... பொத்துன்னு ஒங்க இருக்கைப் பக்கம் உட்காருகிறாள் - உங்களை நெருக்கியடித்துக் கிடக்காள்... தோளில் தோள் படுது.... கையிலே கை படுது... ஆனால் நீங்க ஆயிரத்தெட்டு ஆஸ் தொல்லையால, அவள் உட்கார்ந்ததையே கவனிக்கல... அவள் ஆர்.கே. புரத்துல இறங்குறாள்... இறங்குன இடத்துல, இன்னொருத்தி ஏறுறாள். ஒங்க இருக்கைப்பக்கம் இடை வெளிவிட்டு உட்காருறாள்... நீங்க உஷாராகுறீங்க... பக்கத்துல ஒரு அழகுப் பெண் இருக்கிற கித்தாப்பு .. ஒங்களுக்கு வந்துடுது... அவளைத் தொடாமலேயே பரவசமாகிறிங்க... உடனே அந்தப் பெண், திடுக்கிட்டு உங்களை முறைக்கிறாள். பஸ் மோதி பாக்கு என்கிற இடத்துல நிற்கும் போது, வேற ஒரு சீட் காலியாயிடுது.... அதுல போய், உட்காருகிறாள்... இதுக்கு என்ன அர்த்தம் ஸார்...? இதுக்குப் பேர்தான் டெலிபதியோ... இதுக்குப் பேர்தான் உள்ளுணர்வோ - ஆச்சரியமாய் இருக்குதுல்ல...?"
இந்திரன் ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லப் போன போது, சங்கரி திண்ணைக்கு வந்து அறிவித்தாள்
"வெந்நீர் ரெடி காப்பி குடிக்கிறீங்களா ஸார்..."
"நோ தேங்ஸ். சாப்பாட்டுச் சமயம் பாருங்கம்மா - அப்புறம் ஒங்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பரீட்சை ரிசல்ட் வந்ததும், என் கிட்டச் சொல்லுங்க... கமிஷன்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க.... இன்கம்டாக்ஸ், என்போர்ஸ்மெண்ட், சி.பி.ஐ., இப்படிப்பட்ட பவர்புல் டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங்க போடச் சொல்றேன்.."
"எந்த டிபார்ட்மெண்ட்ல வேணுமுன்னாலும் போட்டுட்டுப் போகட்டும்... முதல்ல பாஸாகிறேனானு பார்ப்போம்..."
“நீங்க பாஸாகாட்டால், யாருமே பாஸாக முடியாது... எங்க உமா மாதிரியா நீங்க..? சரியான மக்கு.. இரண்டு தடவ எழுதியும் தேறல்... நீங்க மனோகர் மாதிரி கிளாஸ் ஒன் சர்வீஸ் எழுதணும்..."
"நீங்க மட்டும் இன்டெலிஜெண்ட் இல்லியா... இவர மாதிரி நீங்களும் எழுதி இருக்கலாமே...?"
"புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்.... சம்பளத்தை நம்பி மோசம் போயிட்டேன்.. கழுதை மேய்த்தாலும் சர்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது மறந்து போச்சு..."
"இப்போ மட்டும் ஒங்களுக்கு என்ன குறை... இருக்கிறதை வைச்சே நீங்க திருப்திப்படலாம். அய்யய்யோ .- வெந்நீர் ஆறிடும்... ஒங்களைத்தான் எழுந்திருங்க..."
மனோகர் எழுந்தான். அவன் உள்ளே போனாலும், தான் வெளியே போகப் போவதில்லை என்பது போல், இந்திரன் நாற்காலியில் கைகளை விரித்துப் போட்டான். இதற்குள், வெளியே தெருவில் சத்தம்... சொர்ணம்மாவுக்கும், பத்து பாத்திரம் தேய்க்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் வாயத் தகராறு - ஒடிந்து விழுவது போல் மார்பற்றுப் போன அந்தப் பெண், போராளியாய் பேசினாள் - அந்த வீட்டு காம்பவுண்டு சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்த செவ்வரளி கிளைகளைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள் …
"அதோ.. அதுல நேத்து ரெண்டு பூ பறிச்சது நிசந்தான். நீ சத்தம் போட்டதும், ஒன் கிட்டயே அந்தப் பூவைப் போடலியா.... ஆனா, இன்னிக்கு சாமி சத்தியமா நானு பூப்பறிக்கல..."
"சரியான புழுகிணிடி... அதெப்படி நேற்று ரெண்டு பூ இருந்த இடத்துல இன்னைக்கு இல்லை..? சொல்லு - பதில் சொல்லுடி"
"சரியான மாங்காய் மண்டையாய் இருக்கியே... பூத்த இடத்துலேயே பூக்கணுமுன்னு சட்டமா"
"யாருடி மாங்கா மண்டை ? பன்னாடைப் பயமவளே... பல்லை .. உடைப்பேன்... இன்னொரு தடவை சொல்லுடி பார்க்கலாம்...''
"மாங்காமண்டை.. மாங்கா மண்டை"
மனோகருக்குக் கோபம் வந்தது. இந்திரனுக்குச் சிரிப்பு வந்தது. கோபக்காரன், குரோதமாய்க் கேட்டான்
"இந்தா பாரும்மா. மரியாதையா போயிடு - வம்புச் சண்டைக்கு வந்தே, போலீஸ்ல ஒப்படைக்க வேண்டியது வரும்.''
"சரியான எட்டன் நீ... போலீஸ்ல ஒரு வாரம் வச்சிருப்பான் அங்கேயே குடித்தனம் செய்யவா விடுவான்? ஒனக்கெல்லாம் இம்மாம் பெரிய உடம்பு எதுக்குய்யா? அம்மாக்காரிய அடக்குறதுக்கு வக்கில்ல... வந்துட்ட பெரிசா - தல காஞ்சவங்கள்னா இளக்காரமா? எனக்கும் செட்டு இருக்குய்யா."
"அடியே... செருப்பால அடிப்பேண்டி"
"பாத்தியா... அந்த தத்தேறிப் பேசுற பேச்சை... சின்னப் பிள்ளாண்டான் மாதிரி நிற்கிறே... அந்தக் கஸ்மாலக் கெய்வியை தள்ளிட்டுப் போய்யா...”
மனோகரின் உதடுகள் துடித்தன. கண்கள் எரிந்தன... கைகள் துடித்தன... ஆனால் கால்கள் அந்தப் பெண்ணை நோக்கி நகர மறுத்தன. நல்ல வேளையாக காந்தாமணி ஓடி வந்து அம்மாவை, மாட்டை இழுப்பது போல் இழுத்துக்கொண்டு போனாள். சங்கரி, கணவனின் கையை பிடித்து இழுத்தபடியே, எரிச்சலாய்ப் பார்த்த அந்தப் பத்துப் பாத்திரத்தை, தங்கப் பாத்திரத்தைப் பார்ப்பது போல் பார்த்து, 'பேசினது தப்புத் தான்..... நீ போம்மா...' என்று கெஞ்சினாள். அப்படி சொல்லு மவராசி... என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குதிபோட்டு நடந்தாள்
வீட்டுக்குள் கோபமாய்க் காலடி வைத்த மனோகர், தூக்குபையை, காலால் இடறியபடியே மாடிக்குப் போனான். காந்தாமணியும் சங்கரியும் சமையலறைக்கு வந்தார்கள். சொர்ணம்மா, அங்கேயும் வந்து ஆடினாள்.
"அடியே காந்தாமணி... எனக்குன்னு இப்படி ஒரு மருமகள் வாய்த்திருக்காள் பாரு.... அவள் தலையை இழுத்து.... யாருடி மாங்கா மண்டைன்னு ரெண்டு கேள்வி கேட்டு, நாலு சாத்துச் சாத்தாம், எதிரிகிட்ட தோப்புக் கரணம் போடுறாள் பாரு...”
"தப்புத்தாம்மா... நாளைக்கு வட்டியும் மொதலுமாத் திட்டுவாள்... நீ பிள்ளையாருக்கு விளக்கேத்திட்டு வா..."
அம்மா போனதும், கேஸைப் பொருத்திய காந்தாமணி கீழே குனிந்து, நாத்தனார் கையில் இருந்த சப்பாத்திக் கட்டையை பறித்தபடியே கூறினாள்....
"நீ.... மாடிக்கு போயேன்... நான் சமையல் வேலையைப் பார்த்துக்கிறேன்."
"வேண்டாண்ணி.. அப்புறமாய்ப் போறேன். அவரு பசியோட இருப்பாரு.."
"அதனாலதான் போகச் சொல்றேன். ஒரு மாதப் பசி பாரு.."
காந்தாமணி, சங்கரியைப் பார்த்து கண்களைச் சிமிட்டினாள்... அவளோ, தலையைத் தாழ்த்திக் கொண்டு, சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். இதற்குள் மாடிக்கு போன மனோகர், வேடம் கலைத்து, லுங்கி பனியனோடு சமையல் அறைக்குள் வந்தான். அக்காவை அங்கே எதிர் பாராதது போல், ஆள்காட்டி விரலை வாயால் கடித்தான். காந்தாமணி, தம்பியையும் சங்கரியையும் மாறி மாறிப் பார்த்துப் பூரித்துப் போனாள்... ஆயிரம் பெண்களை ஒதுக்கி, ஆயிரத்தில் ஒருத்தியாக இந்த சங்கரியை தம்பிக்குத் துணையாக்கியவள் இவள்தான். இந்த ஜோடிக்கு எதிராக எந்த ஜோடியும் இருக்க முடியாது. மன்மதன் - ரதியே பொறாமைப்பட வேண்டும்..... தம்பியை விட இவள் இரண்டு விரல் கட்டைதான் உயரக் குறைவு... தம்பிக்குத் தடிப்போ , மடிப்போ இல்லாத தேகம். நாத்திக்கு வயிறு தெரியாத லாவகம்... கொஞ்சம் ஒல்லியானாலும் மல்லி... கல்யாணமானதும் பூரிப்பில் தடிக்க வேண்டும். இன்னும் தடிக்கல. ஆனாலும் வளைவில்லாத மூக்கு... பயித்தங்காய் விரல்கள் அடர்ந்த முடி.. படர்ந்த முகம். தம்பி மட்டும் லேசுபட்டவனா. மாநிறம்... என்றாலும் அதில் ஒரு பளபளப்பு.... ராஜ பார்வை ... கோணாத உடம்பு... கோடு போட்டது மாதிரி சமமான தோளு... எம்மாடி.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே'
சமையலறைக்குள் அல்லாடிய மனோகரை, 'நீ மொதல்ல வெளில போடா...' என்று மொதலுக்கு இரட்டை அழுத்தம் கொடுத்தாள்... அவன் போனதும், மாவு பிசைந்த சங்கரியை, அப்படியே தூக்கி, இரண்டு கைகளையும் குவித்து, குவித்துப் பிடித்தபடியே இழுத்து, வாஷ் பேசினுக்குக் கொண்டு வந்தாள் நாத்தியின் கைகளைக் கழுவி விட்டாள்... தலை முடியை ஒதுக்கி விட்டாள். முகத்தை ஈரக்கையால் பாலீஷ் போட்டாள். பின்னர் அவள் முதுகைத் தள்ளித் தள்ளி, மாடிப் படிகளின் முனையில் விட்டாள்... அவள் படியேறி மேலே மறைந்த பிறகுதான், சமையலறைக்குள் வந்தாள்... அவளுக்கு முன்னால், அம்மா, அங்கே நின்றாள். மகள் வந்ததும் வராததுமாக அவள் காதைக் கடித்தாள்...
"ஒரு மாசம் கழிச்சு... புருசன் வந்திருக்கான். அவள் முகத்துக்குப் பௌடர் போடல.... கண்ணுல் ஒரு கிறக்கம் இல்ல.... வாயில் ஒரு சின்னச் சிரிப்புக்கூட. இல்ல... இவள்ளாம் ஒரு பொம்புளையாம்.... சரியான ஆம்புளப் பிறவி... இந்த மாதிரி சமயத்துல... அந்தப் பாவி மனுஷன் வெளியூர்ல மூணு நாள் தங்கிட்டு வந்தாக்கூட போதும்..... நான் முகத்த அலம்பி... பொட்டு வச்சு.... பூ முடிச்சு..."
"என்னம்மா... நீ... நான் ஒன் மகள்... என்கிட்ட போயி .."
"ஆபத்துக்குத் தோசம் இல்லடி"
"மொதல்ல இங்கிருந்து போம்மா..."
அம்மா போய்விட்டாள். ஆனால் அவள் சொன்னது போகவில்லை. ஒரு வேளை அம்மா நினைத்தது மாதிரியே இருக்குமோ.. எப்படிக் கண்டுபிடிக்கலாம்....
கைகளை சொடக்குப் போட்ட காந்தா மணிக்கு, அவர்களது அந்தரங்கத்தைக் கண்டு பிடிக்க ஒரு வழி கிடைத்தது.
----------------------
அத்தியாயம் 2.
சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது... முடி வளையங்கள், பூப்பதியங்க-ளாயின... காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை.... கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல் பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப் பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள்... சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாய மாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் நிறம்....
காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, சுண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். "ஆளுக்குப் பாதியாய் குடியுங்க... ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்.” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே மெய் மறந்து குறிப்பிட்டாள்.
என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ , நளினப்பட்டோ வராமல் - ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள்.
மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பிய போது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லை யானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது. மாமியார் சவாலிட்டது... அவனது பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலிஸ்காரர் நூறு ரூபாயோடு திரும்பிப் போனது, டெலி போன் பில், கரெண்ட் பில், போன்ற அனைத்து விவகாரங்களையும் அலசிவிட்டார்கள்... எனவே இப்போ பேச்சுக்கு வேலை இல்லை... ஆனாலும் பேசினான்....
"சீக்கிரமா வரப்படாதா. நான் தூங்கின பிறகு வர்லாம் என்கிற மாதிரி வாரே..."
அவர்கள் தூங்க வச்சுட்டு வாரேன் ..''
இருவரும் சொல்லி வைத்தது போல் கட்டிலில் ஒரே சமயத்தில் விழுந்தார்கள் விழுந்து எழுந்தவளை, விழுந்து கிடந்தவன் கையைப் பிடித்து இழுத்து, தன் பக்கமாய்ச் சரித்தான்... பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை தன் மடிமேல் கிடத்தினான். தலையைச் செல்லமாகக் குட்டினான். முகத்தை அவளை நோக்கிக் குனிந்தான். அரைவளைவாய் வளைந்து, அவள் முகம் நோக்கி தன் முகத்தைக் கொக்கு போல் நீட்டினான்... அவள் உடலில் விலாப் பக்கங்களில் நீள வாக்கில் கிடந்த கரங்களை, தனது கரங்களால், அழுத்திப் பிடித்தான். கட்டில் மெத்தையில் உடல் தடயங்கள் விழும்படி இறுக்கிப் பிடித்தான்.
என்றாலும், ஒரு நிமிடத்தில் எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "மறந்துட்டேன் பாரு" என்று கூறியபடியே முகத்தை நிமிர்த்தினான். கைப்பிடிகளை அகற்றினான். மடியில் கிடந்தவளை, மென்மையாய் புரட்டி, கட்டிலில் ஒருகளித்துப் போட்டு விட்டு, எழுந்தான். சுவர் அலமாரியைத் திறந்து, ஒரு வெள்ளைப் பெட்டியை எடுத்து, அவள் பக்கம் வைத்தான். ஜிகினாக் காகிதம் சுற்றிய அந்தக் காகிதப் பேழையை எப்படித் திறப்பது என்று அவள் அதை அங்கு மிங்குமாய்ப் புரட்டியபோது, மனோகர் குளியல் அறைக்குள் போனான்.
சங்கரி, சந்தன நிறத்தில் சதுர வடிவான, அந்தப் பெட்டியை வியாபித்த ஜிகினாக் காகிதத்தைக் கிழிக்கப் போனாள். கைதான் வழுக்கியது. பிறகு பல்லால் கடித்து, ஒரு பக்கத்தை ஓட்டையாக்கி, அந்த ஜிகினாவை அக்கு வேறு ஆணி வேறாக்கினாள். ஒன்றின் ஒன்றாய்க் கௌவிய பெட்டியை பலவந்தமாக உடைத்து, கௌவப்பட்ட பெட்டியைப் பார்வையிடாள். வண்ணக் காகிதத் துண்டுகளுக்கு மத்தியில் ஒரு முத்துமாலை. வெள்ளை நிற வாளிப்போடு, ஒளி வடிவமாய் மின்னியது. முத்துக்களுக்கு இடையிடையே முடிச்சுப் போடப்பட்ட தங்கச் சரம். அவள் முத்து மாலையை தூக்கிப் பிடித்த போது, மனோகர் குளியல் அறையில் இருந்து திரும்பினான். அவன் முகத்தில் ஆங்காங்கே குமிழிகள்... நீர்க் குமிழிகளா... வேர்வைக் குமிழிகளா..... அல்லது இரண்டு வகையுமா... அவனுக்கே தெரியாது... ஆனாலும் தெரிந்தெடுத்த அந்த மாலையைப் பற்றி அவன் விளக்கினான்....
"தெருவுல விற்கிற பாசி மாலையை வாங்கிட்டு வந்ததாய் நினைக்காதே சங்கரி... இதோட விலை... மூவாயிரம் ரூபாய்... டி.ஏ. அட்வான்ஸ்ல பாதிப் பணம்.... புதுதில்லியில் இருந்து, பீல்டு விசிட்டாய் ஹைதராபாத் போயிருந்தோம்.... அப்போ சார்மினார் பார்க்கப் போனோம். அதன் சுற்று வட்டாரத்தில் பெரிய பெரிய முத்து மாலைக் கடைகள்... அத்தனையும் ஒரிஜினல் முத்துக்கள்... ஏமாந்துட் டேன்னு நினைக்காதே... என்னோட தெலுங்கு சகாக்களைக் கூட்டிக்கிட்டு போய், சலுகை விலையில் வாங்கின மாலை. விற்பனை வரியைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க... ஆனால் ரசீது தர்ல..."
எனக்கு என்னமோ இது போலி மாலையாய் இருக்குமோன்னு .."
"என்னை இப்படி நோகடிக்காதே சங்கரி.."
"ஸாரி... முத்துக்கள் போலியாய் இருந்தாலும் தங்கச் சரடு இருக்குதே... அது போதும். அதோட, நீங்க சொல்றது சரிதான். மணக்காத குறையைத் தவிர மற்றபடி நல்ல மாலைதான்.... இதை நான் வெறும் மாலையா நினைக்கல அத்தான்... ஒங்க அன்பின் அடையாளமாவே நினைக்கேன்.... ஆனாலும் காசை இப்படி கரியாக்கப்படாது. காலையில் இருக்குது ஒங்கம்மாவோட பூஜை... அவங்களுக்கு ஒரு புடவை எடுத்துட்டு வரப்படாதா - எப்படில்லாம் திட்டப் போறாங்களோ..."
"எடுத்துட்டு வருகிற புடவைக்கு... எத்தனையோ குறை சொல்ற கேஸு... இந்த முத்து மாலை விலையைக் கேட்டால்... மயக்கம் போட்டுடுவாள் - அதனால் நாம் உண்மையைச் சொல்லப்படாது .."
"அண்ணிகிட்ட சொல்லாமல் இருக்க முடியுமா? அவங்க தண்ணீருக்குள்ளேயே தடம் பார்க்கிறவங்க..."
"எப்பா - ஒன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா... நீ இங்கே அடிக்கிற லூட்டி. வெளியில் யாருக்குமே தெரியாது.."
சங்கரி , மெல்லச் சிரித்தபடியே, அந்த முத்து. மாலையை விரிவாக்கி, அதற்குள் தலையை நுழைக்கப் போனாள். மனோகர், அவளது கரங்களைப் பற்றிச் செல்லமாகச் சொன்னான்...
"நீயே மாட்டிக்கப் போனால் என்ன அர்த்தம் சங்கரி... நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேனாம்...''
மனோகர், அந்த மாலையைப் பறித்து, தனது கரங்களுக்கு கொண்டு வந்தான். அவளும் அதைப் புரிந்து கொண்டவள் போல், சின்னச் சிரிப்பொன்றைச் சிதறவிட்டு, அவன் பக்கமாக கழுத்தை நீட்டினாள். அவன் அந்த மாலையின் கொக்கியையும், அது ஊடுருவிய வட்டத்தையும் பிரித்தான்... அந்த முத்துச் சரத்தின் முனைகளை கைக் கொன்றாய் பிடித்தபடி, அவள் கழுத்துக்கு இருபக்கமும் கொண்டு போனான். பிறகு ஒரு முனை கொக்கியை, மறுமுனை வளையத்திற்குள் மாட்டப் போனான். அந்த முயற்சியில், அவள் பிடரி முடி அந்த வளையத்தில் சிக்கியது... கொக்கியை மாட்டியபோது, அவளுக்குப் பிராணன் போகிற வலி... ஆனாலும் வலியைக் கடித்தபடியே வேடிக்கையாகத்தான் கருத்துரைத்தாள்.
அய்யோ ... என் முடி சிக்கிட்டு... ஒங்க கிட்ட நல்லா மாட்டிக் கிட்டேன்... ஒங்களுக்கு எல்லாத்துலயும் எப்பவும் அவசரந்தான்.... பரவாயில்லை ... பழையபடி கழட்டிட்டு மாட்டுங்க..."
சங்கரி, அவன் கரங்கள் இயங்காமல் இருப்பதைக் கண்டாள்... கடவுளே... கடவுளே ஒன்று சொன்னால் இது இன்னொரு அர்த்தத்திலா முடியணும்.
"தப்பு என் மேலதான்... இப்படி பிடரியில் புதர் மாதிரி முடியை வளர்த்திருக்கப்படாது... சரி ஒங்க கையாலேயே கட்டி விடுங்க.."
சங்கரி, கரங்களை பின்புறமாய்க் கொண்டு வந்து, அந்த முத்துச் ச்ரத்தையும், அதில் சிக்கிய முடியையும் விடுவித்தாள்... அவன், இதைக் கட்டுவதற்கு வசதியாக அவன் மார்பில் சாய்ந்தாள். விலகிக் கிடந்த அவன் கரங்களை, அந்த முத்து மாலையாய் இணைத்தாள். சடையைத் தூக்கி, பின் தலைக்கு மேல் கொண்டு போனாள் அவன் கரங்கள், இப்போது இயங்கின. மாலை சூடியதை உணர்ந்த சங்கரி, தலையை நிமிர்த்தினாள். அவனோ , நிமிர்ந்த தலையை கையால் அழுத்தி அவளை மடியில் போட்டான். அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். பாதிச் சுவராய் பதிந்த அலமாரியைத் திறந்து, ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்தான். கையில் தொட்டாலே சுகம் கொடுக்கும் ஒரு வழுவழுப்பான துணி.... அசல் புளு... அதுதான் நீல நிறம் மார்பகம் பக்கம் வட்ட வளைவுகள்... கழுத்துப் பக்கம் ஜரிகை மாதிரியான மாலை. மொட்டாகவும், மொட்ட விழ்ந்தும், பூவாய் மலர்ந்தும் தோன்றும் நைலான் துணி மாலை. அதில் ஆங்காங்கே பதிந்த சின்னச் சின்ன சதுரக் கண்ணாடிகளைப் பார்த்து, சங்கரி கண் கூசியபடியே கேட்டாள்.
"அய்யய்ய... இது லம்பாடிப் பெண்கள் போடுறதாச்சே."
"நோ... நோ... காஸ்ட்லி நைட்டி... டில்லியில் ஸ்பெஷலாய் ஆர்டர் கொடுத்து தயாரித்த நைட்டியாக்கும்... கொஞ்சம் போட்டுக் குவியாம்..... சேலை, பாவாடை ஜாக்கெட் அனாவசியங்களைக் கழட்டிட்டு இதப் போட்டுக்கோம்மா... இதுதான் நல்ல பெண்டாட்டிக்கு அடையாளமாம்..."
"நான் கெட்ட பெண்டாட்டியாவே இருந்துட்டுப் போறேன்..."
"கெட்ட மனைவியைத் திருத்த வேண்டியது நல்ல கணவனுக்கு அடையாளமாச்சே."
மனோகர், சங்கரியை மல்லாக்கத் தள்ளி, அவள் புடவையை உருவப் போனான்... உருவி விட்டான். அவள் முதுகிற்கும், கட்டில் மெத்தைக்கும் இடையில் சிக்கிய புடவையை, அசல் துச்சாதனன் போலவே இழுத்தான். கலர்ப் பாவாடையோடு கிடந்தவள், கட்டிலில் இருந்து அவசர அவசரமாய்த் தரையில் விழுந்து எழுந்தாள்... முன்பக்க பட்டன்கள் கொண்ட அந்த நைட்டியைத் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.
ஐந்தாறு நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த சங்கரி, அந்த நைட்டியில் ஒளிர்விட்டாள். விளக்கு வெளிச்சம், சதுரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து, அவளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டன... பவளக் கம்மலில் பாய்ந்த ஒளிக் கற்றைகள், பாளம் பாளமாய் மின்னின.
மனோகர், எழுந்து போய் அவளைப் பற்றிக் கொண்டான். அவனது முன்பாதியும், இவளது பின் பாதியும் ஒட்டிக் கொண்டன. கட்டிலில் டப்பென்று விழுந்தனர். அவன்பிடி வழக்கத்திற்கு மாறாக, பலமாக இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள்.... ஆனந்தப்பட்டாள்... முட்டை பாயாசத்தின் வேலையா... சிரித்துக் கொண்டாள். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்....
மனோகரின் பிடி தளர்ந்தது. இரும்பாய்ப் பற்றிய கரங்கள், துரும்பாய்த் துவண்டன. சிறிது நேரம் செயலற்ற சூன்யம்... ஒருமை ரெண்டுபட்ட வெறுமை... சிறிது நேரத்திற்குப் பிறகு, மனோகர் மீண்டும் அவளைப் பற்றினான். அவள் புரிந்து கொண்டாள்.... அது போலியான பிடி பழக்கப்பட்டுப் போன வழக்கமான பிடி. உணர்ச்சியற்ற ஒப்புப் பிடி... இயங்குகிறேன் என்று சொல்லாமல் ஏதோ இருக்கிறேன் என்பதைக் காட்டும் வீம்புப் பிடி. வெறும் பிடி...
சங்கரிக்குத் தாபம் போய் கோபம் வந்தது. ஆசை பொங்கிய கண்களை, அழுகை படையெடுத்தது. கிறங்கிய கண்கள் தங்களுக்குத் தாங்களே இரங்கிக் கொண்டன. நாகலிங்கப் பூவாய் மலர்ந்த வாய், எருக்கலைப் பூவாய் சுருண்டது. ஒன்றாய் ஒட்டிய உதடுகள், விம்மலுக்கு அணை போட்டன. நெஞ்சில் முட்டி மோதிய வேகத்திற்கும், தாகத்திற்கும் தடை போட்டன. அவள், அவன் கரத்தை வீசியடிக்கப் போனாள். ஆனால் என்ன நினைத்தாளோ.... ஏது நினைத்தாளோ... அவன் கரத்தை மென்மையாய்த் தூக்கி அவனிடமே சேர்த்துவிட்டு, அவனிடம் இருந்து புரண்டாள்.
கோழிக்குஞ்சாய் படுத்தவனைப் பருந்தாகப் பார்க்கப் போனாள். முரட்டுத்தனமாய் இறக்கைகளை அடிக்கப் போன அந்தப் பருந்து, அடுத்த கணமே, தாய்க் கோழியானது. முட்டிக்கால் வரை சுருண்ட நைட்டியை சரிப்படுத்தினாள். குப்புறத் தலை போட்டு, ஐம்புலன்களையும் அடக்கியவளாய் ஆமைபோல் கிடந்தாள். அவன், அவளைப் புரட்டுவதற்கு, ஒரு கையை விலாப் பக்கம் கொண்டு போனான். அவளுக்கு மனம் பற்றி எரிந்தது. சூடாகக் கேட்கப் போனாள். ஆனாலும், உடல் சூடும் மனச்சூடும் ஒன்றை ஒன்று தணித்துக் கொண்டன. முத்துச் சரம் போட்டு, நைட்டியில் தன்னை ரசித்த அந்த ஆசை முகத்தை அவள் புசிக்க விரும்ப வில்லை. அவனது சுயமரியாதையை பங்கப்படுத்த விரும்பவில்லை. முத்துச்சரம் குத்திய கழுத்தை லேசாய்த் தூக்கி, அவனைப் பார்த்தாள். அவன் குரல் மீண்டும் காதுகளில் விழுந்தது. இயலாமை அல்லம் ஏமாற்றம், ஏமாளி வேடம் போட்டுக் கேட்டது.
"என்ன சங்கரி... குப்புறப் படுத்துட்டே .."
அவளுக்கு அழுகை வந்தது. தனக்காக மட்டுமல்ல.... அவனுக்காகவும் பொங்கியது. ஆனாலும், அவளது அழுங்குரல், பச்சதாப ரசமந்திரத்தில் நெகிழ்ந்தது... அவள் பேச்சு, மனோகரை ஓரளவு கம்பீரப்படுத்தியது.
"என்னை இன்னைக்கு விட்டுடுங்க... ஒரே பல்வலி... கூடவே வயித்து வலி... ஸாரி... நாளைக்குப் பார்த்துக்கலாம்... பேசாமல் தூங்குங்க... எனக்குத் தூக்கம் வருது..."
"பல்வலில் எப்படித் தூக்கம் வரும்..."
"எந்த வலியும் உச்சக் கட்டத்துக்குப் போனால் அது மரத்துப் போகும்..... கையை எடுங்க... பிளீஸ்... என்னால் முடியல... தூங்கப் போறேன்.."
'சரியான தூங்கு மூஞ்சி..... எவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிருக்கேன் தெரியுமா...?"
"அது எனக்குத் தெரியும்... தூங்குங்க."
"கொஞ்சங்கூட ஒத்துழைக்க மாட்டேங்கிறியே.... "
"நாம் நினைத்தபடியெல்லாம் உடம்பு கேட்குதா என்ன"
"ஆனாலும் நீ... சுத்த மோசம்...''
சங்கரி, மேற்கொண்டு பேசவில்லை. அவனுக்கு ஒரு சாக்கைக் கொடுத்த திருப்தியில், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனுக்காக சிலுவை சுமப்பது போலான தாலியை, உருட்டி விட்டாள்... லிங்கப்படம் போட்ட அந்த மாங்கல்யம்.... கட்டில் மெத்தையில், நேராய் நின்று, அவள் கழுத்துக் குழியை முள்ளாய்க் குத்தியது... உடனே அவள் அந்த தாலித் தங்கத்தை பின் பக்கமாய்க் கொண்டுவந்து, பிடறியில் விட்டுவிட்டு, நெஞ்சில் வெறுங் கயிரைப் படரவிட்டாள்.
இருவரும் விலகிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒரு ஊழியானது. நூற்றுக்கணக்கான நிமிடங்களின் ஊழ்வலியில் உழன்று கிடந்தார்கள்.... அவன் புரளும்போது அவளும், அவள் புரளும்போது அவனும் அசைவற்றுக் கிடந்தார்கள்... ஏதோ ஒரு வகையில் கட்டில் அசைந்தது. ஒவ்வொரு வேளையும், ஒரே ஒரு பக்கமாய் ஆடியது.
சங்கரியால்; தூக்க நாடகத்தைத் தொடர முடியவில்லை .... தலையை ஒருச்சாய்ந்து அவனைப் பார்த்தாள்... தூங்கத்தான் செய்தான்... இரண்டு கரங்களையும் வளை கோடாய் வளைத்துப் போட்டு, அடியற்ற மரம் போல் குப்புறக் கிடந்தான்.
சங்கரி, எழுந்தாள். பின் கதவைத் திறந்து பால்கனிப் பக்கம் வந்தாள்.... கதவோடு கதவாய்ச் சாய்ந்தாள். சுவரோடு சுவராக நின்றாள். உடல் வேகம் எப்போதோ நின்றுவிட்டாலும் மனோவேகம் நின்ற பாடில்லை.... திருமணமான இந்த மூன்று மாத காலத்தில், ஐம்பது இரவுகள், முழுமையாய் வந்திருக்கும். அந்த இரவுகள் ஒரு தடவை கூட விடியவில்லை ... இருட்டில் விளையாடிப் பிரகாசிக்க முடியவில்லை ... அம்மா எழுதிக் கேட்கிறாள்... ஆகலையா' என்று அப்பா பூசகமாய் எழுதுகிறார்... எதுவானாலும் எழுதிப் போடு என்று, அண்ணி வருத்தப்படுகிறாள். மாமியார், ஆடுகிறாள். இவள், அவமானம் தாங்காமல் தலை குனிகிறாள் ஒரு இரவா. இரண்டு இரவா... ஐம்பது இரவுகளும் துறவுகள். இரை தின்ன நினைத்துத் தூண்டிலில் மாட்டிய மீன்கதை அந்த மீனாவது அப்போதே செத்துப் போகும்.
சங்கரிக்குத் தன்னையறியாமலே முதலிரவின் நினைப்பு வந்தது அவளுக்கும், எதிர் மறைவில் சொல்லப்போனால், மறக்க முடியாத இரவு தான். அவள் நாணக் கண்களோடு, தத்தித் தத்தி நடந்தாள் இரு கரங்களிலும் பால் குவளையோடு வருகிறாள் அவனைக் கவிழ்த்து பார்க்கிறாள். பார்த்துப் பார்த்து நிற்கிறாள் நின்று நின்று, அவனை நோக்கி நடக்கிறாள். அவள், தலை கவிழ்ந்து, கண்மூடி, பார்வையற்றவள் போல், அவன் கரமிருக்கும் திசையை அனுமானித்து குவளையை நீட்டுகிறாள். அவன், அதை வாங்கி கட்டில் சட்டத்தில் வைத்துவிட்டு, அவளைப் பிடிக்கிறான். தோளில் சாய்க்கிறான். எலும்புகளை நொறுக்குவது போல் அழுந்தப் பற்றுகிறான். நெருக்குகிறான்...
கால் நிமிடமோ.... அரை நிமிடமோ... அண்ட கோடி வேகம் கொள்கிறான். அவளைக் கடிக்கிறான். அவள் பயந்து போகிறாள். அவனிடம், நளினத்தை எதிர்பார்த்தவள் நடுங்கிப் போகிறாள். அந்த நடுக்கத்தில் கீழே விழாமல் இருப்பதற்கு, அவனைப் பற்றுக்கோலாய் பற்றுகிறாள். அதுவே ஆசையாகிறது. மோகமாகிறது. வேகவேக மான பிடியாகிறது. அரை நிமிடத்தில் அவன் பிடி தளர்கிறது. நிறுத்தப்பட்ட மின் விசிறி போல் அவன் உடல் சுழற்சி மெல்ல மெல்ல நிற்கிறது. எந்த விகற்பமும் இல்லாமல் நிற்பவளை, கட்டிலில் உட்கார வைக்கிறான். அவள் தோளில் தன் கரங்களை முன் சடை போல் தொங்கப் போட்டுக் கேட்கிறான். என்னைப் பிடித்திருக்கா...' என்கிறான். அவள் நாணிக் கோணி தலையாட்டுகிறாள். நீள வாக்கில் முகத்தை முன்னும் பின்னும் ஆட்டுவது தெரியாமல் ஆட்டுகிறாள். காது வளையங்கள் சுழலத் தலையாட்டுகிறாள்;
உடனே, மனோகர் தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லுகிறான். எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபீஸராம். கை நிறையச் சம்பளமாம் கார் வாங்கலாமா.... மனை வாங்கலாமா.... என்று யோசிக்கின்றானாம்... அவள் சொன்னபடி நடப்பானாம். அம்மா பித்துக்குளியாம். அவளிடம், நாத்தனார் போல் தான் நடப்பாளாம்... அவளை, இவன் பொருட்டுப் பொறுத்துக் கொள்ளணுமாம்... ஆனால் அவளது கிராமத்து நாத்தனார்.... இவளை அனுப்பி வைத்தாளே காந்தாமணி, அவள் அம்மாவாய் நடப்பாளாம். இவளை, அவனுக்குப் பிடித்துப் போயிற்றாம். இவளைப் பேசச் சொல்கிறான். வாயை , பலவந் தமாகப் பிரிக்கிறான். அவள் பேசாவிட்டால், தான் பேசப் போவதில்லை என்கிறான்....
பழைய நினைவுகளில் மூழ்கி, வெறுந் சிப்பிகளை எடுத்த படியே, சங்கரி, சுவரில் இருந்து தாவி, பால்கனிக்கு வருகிறாள் குத்துக் காலிட்டு பால்கனியின் விளிம்புச்சுவரில் முகம் போட்டு, தான் பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். அழுகையும் வருகிறது. சிரிப்பும் வருகிறது.
சங்கரி தட்டுத் தடுமாறி பேசப் போகிறாள். மெல்ல மெல்ல நாக்கு, விமானம் போல் நகர்கிறது. பிறகு ஆகாயப் பாய்ச்சலாய் பாய்கிறது. நெடுநாள் பழகிய ஒரு தோழியிடம் பேசுவது போன்ற வேட்கை. பேசுகிறாள்... அவன் தலையைக் கோதிவிட கோதிவிட, பேசிக்கொண்டே போகிறாள். பெண் பார்க்க வந்தபோதே, அவனைப் பிடித்து விட்டதாம். கல்லூரிக் காலத்தில், தனக்கு வருகிறவன், எப்படி வர வேண்டும் என்று கற்பனை செய்தாளோ... அப்படியே இருக்கிறானாம். இவன் தான், அவனின் நகலாம்: இல்லை இல்லை இவனே அசலாம்... அவனைப் பார்த்த நாளில் இருந்து, சர்வீஸ் கமிஷன் பரிட்சைக்குப் படிக்க முடியலியாம்... பெயிலாகி விடுவாளாம்... ஆனாலும் கல்யாணப் பரீட்சையில் பாஸாகியதில் மகிழ்ச்சியாம்... கல்லூரித் தோழிகள், 'உன் நல்ல குணத்துக்கு ஒரு நல்ல ஜென்டில் - மேன்தான் கணவனாய் வருவான்.' என்று கணித்தது போல் கிடைத்து விட்டானாம். ஆனாலும், தோழிகளிடம் ஜென்டில்மேனுக்கு விளக்கம் கேட்டு குறுக்குக் கேள்விகளைப் போட்டாளாம்....
அந்த ஜென்டில்மேன் என்ற வார்த்தையின் பொருளென்ன... கணவனா... நல்லாயில்லே... மாண்புமிகுவா... மதிப்புக்குரியவனா.. அதிர்ந்து பேசாதவனா.... அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறவனா... அக்கடா என்று கண்டுக் காதவனர் - ஏக பத்தினி விரதனா - சூதுவாது இல்லாத சுத்தச் சுயப் பிரகாசியா - எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளடங்கி இருப்பவனா - குட் பெல்லோவா.. அல்லது குட் பார் நத்திங் பெல்லோவா...' ஒரு கணவன், மனைவியிடம் ஜென்டில்மேனாய் நடக்கப்படாது... மனைவியோட முடியைப் பிடித்து இழுக்கணும். காதைத் பிடித்து திருக்கணும். இதெல்லாம், பிறத்தியார் கிட்டே செய்தால், ஜென்டில்மேன் செயலில்லை. இதேமாதிரி , மனைவிகிட்டேயும் செய்யாமல் ஜென்டில்மேனாக இருந்தால், அந்த கணவன் என்ன ரகம்?' என்று ஒருத்தி பேசியதை பாதியில் நிறுத்திவிட்டு, குறும்பாய் பார்க்கிறாள்.
சங்கரி, பின் நோக்கிய சிந்தனையை நிறுத்தி விடுகிறாள். பின்னர் சிறிது இடைவெளி கொடுத்து, மிச்சம் மீதியை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது மனதில் தோன்றிய சிரிப்பு, அவளைப் பார்த்து, இப்போது சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறது. குண்டுச் சட்டிக்குள் குதிரையை விட்டது போல், அந்தப் பால்கனிக்குள் வட்டமிட வைக்கிறது.
மனம், மீண்டும், பின்னோக்கி பாய்கிறது.
மனோகர், அவளைப் படுக்கையில் சாய்க்கிறான்.... அவள் விளக்கு விளக்கு என்கிறாள். அவன் எழுந்து போய் விளக்கை அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான். அங்குமிங்குமாய்ப் புரள்கிறான். புரண்டதுதான் மிச்சம்... அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது.... பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளை தான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன.
சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள். அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, "தூக்கம் வர்லியா....” என்றாள்.
மனோகர், பதிலளிக்கவில்லை .... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது.
-------------------
அத்தியாயம் 3
இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள் அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக் கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோ சையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப் டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி. ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின இத்தகைய சபதங்களுக்கு முன்பே எழுந்திருக்கும் சங்கரி, அப்படியே தூக்கத்தில் லயிக்கப் போவது போல் உடம்பில் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் அவனோ, பாதாதி கேசம்வரை, மூடிக் கிடந்தான்.
என்றாலும், வெயில் உறைத்தபோது, சங்கரி கடமைக்காக எழுவதுபோல் எழுந்தாள். கண்களை முந்தானையில் துடைத்த படியே, கணவனைப் பார்த்தாள். அவனை எழுப்பப்போன கரங்களை குறுக்கி கொண்டாள்; எரிந்த கண்களை கசக்கியபடியே, வெயில் தெறித்த மாடிப்படிகளில் இறங்கினாள்.
இதனை நல்ல சகுனமாக அனுமானித்த அண்ணி காந்தாமணி, அடுத்த பத்தாவது மாதத்தில் ஒரு நல்ல குழந்தையை ஏந்தலாம் என்பது போல் தன் கைகளைப் பார்த்தாள். மைத்துனியின் கண்ணில் படும்படியாய் படிக்கட்டுக்கு அருகே நின்றாள். ஆனால் சங்கரியோ அப்படி ஒருத்தி நிற்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, சமயலறைக்கு எதிர் பக்கமாய் உள்ள பூஜை அறைக்குள் நுழைந்தாள். சுவர் முழுக்க தெய்வப் படங்கள். முருகன் - பிள்ளையார் - அய்யப்பன் அனுமான்- அம்பாள் – அஷ்ட லட்சுமிகள் - மூன்றடித் தூக்கலில் உள்ள பீடத்தில் பித்தளை உருவ வேல் முருகன், பக்கத்தில் அம்மை அப்பன் முகத்தோடு முகம் போட்ட சிவ பார்வதி அந்த சிவசக்தியை சங்கரி வெறித்துப் பார்த்தாள் - வெறுப்பாய் பார்த்தாள்... அதைப் பார்க்க மனதில்லாமல் கண்களை மூடினாள்.... அதுவே படிப்படியாய் தியானமானது. தீபம் ஏற்ற மறந்தவளாய்த் திக்கற்று நிற்பவள் போல் நின்றாள்.
இதற்குள், சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட மாமியார் சொர்ணம்மா, பூஜை அறையைப் பார்த்தபடியே பின்பக்கமாய் நகர்ந்து, மகள் காந்தாமணியின் மீது முட்டினாள். மகளின் நெற்றியில் தனது பல்பட்ட இடத்தை தடவி விட்டபடியே, முகத்தை ஒரு குலுக்கு குலுக்கி, சலிப்போடும் சத்தமாகவும் கத்தினாள்...
"இவளுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா... சுத்த பத்தம் இல்லாம எப்படி பூஜை அறைக்குள் போகலாம்... நல்ல பொண்ணாப் பாத்து என் தலையிலே கட்டிட்டே.. தடிமாடு....”
காந்தாமணி, அம்மாவின் வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, அதை அடைத்தாள்... அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்படுவது போல் இருந்தது... இந்த சங்கரி சுத்த பத்தமில்லாமல் பூஜை அறைக்குள் போகிறவள் அல்ல.... திண்ணையில் நடந்தாள். கூட காலைக் கழுவிவிட்டு சாமி அறைக்குள் போகிறவள் அப்படி நடந்திருந்தால், இப்படிப் போகமாட்டாள்....
காந்தாமணி, மெல்ல நகர்ந்து சமையலறை கதவுச் சட்டத்தில் முதுகைப் போட் டி, பூஜை அறையில் நின்றவளைப் பூடகமாகப் பார்த்தாள். தலயில் பூக்கள் கசங்கி இருந்தன... ஆனால் அவள் எதிர்பார்த்தது போல், அவை கசங்கிக் கசங்கிக் கூழாகி, அவள் தலைமுழுக்க அப்பவில்லை. எள் பிசங்குவது போல் ஈரப்பசை காட்டவில்லை. புடவையும், மடிப்புக் கலையாமல் மதப்பாகத் தெரிகிறது.
அண்ணிக்காரிக்கு லேசாகப் புரிவதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல், பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சங்கரி, அண்ணியை தலை தூக்கிப் பார்த்தாளே தவிர, நாணத்தால் கண்சிவந்து, கண்களைக் கீழ்நோக்கி கவிழ்த்து மேல் நோக்கிப் பார்க்கவில்லை. உப்புச் சப்பற்ற சிரிப்பை உதிர்த்தாளே தவிர, குறுஞ்சிரிப்பாய், குறிப்புணர்த்தும் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லை. அண்ணியிடம் பேசாமலே சமையலறைக்குள் போனாள். அங்கே பாத்திரங்களோடு மோதிக் கொண்டிருந்த மாமியார், மருமகளுக்கு ஆணை இட்டாள்.
"பால் திரிஞ்சிட்டு.-- உமா வீட்ல இருந்து ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா... புருஷனுக்குக் காபி போட்டுக் கொடுக்கணுங்கற கரிசனங்கூட இல்ல..."
சங்கரி , மடமடவென்று வெளியே வந்து, விஷயத்தை அண்ணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைக்குள் வந்தாள். காந்தாமணி, முற்றத்திற்குப் போய், எதிர்வீட்டு உச்சாணி பால்கனியில் ஒய்யாரமாய் நின்ற உமாவிடம், நின்ற இடத்தில் நின்றபடியே, நாத்தியார் சொன்னதை வெளிப்படுத்தினாள்
"எங்க வீட்டுப் பாலு கெட்டுப் போச்சு... ஒங்க வீட்ல இருந்து கொஞ்சம் பால் வேணும்.."
"அதுக்கென்ன.. இப்பவே..."
பால்கனியில் ஒரு பூச்செடியைப் பதியம் வைப்பது போல் நின்ற உமா, அங்கிருந்து மறைந்து, ஐந்தாவது நிமிடம் அந்த வீட்டிற்குள் வந்தாள். குலுக்கி, மினுக்கி சந்தோஷமாகவே வந்தாள். அவளை மாமியார் படுத்துவதாகக் கருதப்படும் கொடுமைகளை, அவள் இறக்கி வைப்பதற்கு, இந்த சொர்ணம்மா தான் ஒரு சுமைதாங்கிக் கல் நேற்றிரவு புருஷனிடம் சேரவிடாமல் மாமியார் தன்னைப் படுத்திய பாட்டை, சொர்ணம்மாவிடம் சொல்வதற்காகவும் வந்தவள் போல் வந்தாள். 'பெரியம்மா. பெரியம்மா" என்று குரலிட்டபடியே போனவளின் கையிலிருந்த பால் டம்ளரை சங்கரி வந்து வாங்கிக் கொண்டாள்... சங்கரி இருந்தாலும் பரவாயில்லை இந்த வயதிலும் பிரா போடும் மாமியாரைப் பற்றிச் சொர்ணம்மாவிடம் சொல்லியே தீருவது என சங்கரியைப் பின் தொடர்ந்த உமாவை, காந்தாமணி இழுத்துப் பிடித்து கொல்லைப் பக்கம் கூட்டிப்போனாள். இருவரும் பத்து நிமிடத்திற்கு மேலாக வாய் உரச, காது உரச நின்றார்கள். உமா, காந்தாமணியிடம் சில குறுக்குக் கேள்விகளைக் கேட்டு, தலையாட்டினாள். பிறகு காந்தாமணியைப் போகும்படி சமிக்ஞையிட, அவளும் பூனைபோல் காலடிச் சத்தம் எழுப்பாமலேயே சமையலறைக்குள் வந்தாள்.
கொல்லைப் பக்கம் உமா கூவினாள்.
"சங்கரி ஏய் சங்கரி - இங்க வாயேன்."
சமையலறையில், மாமியாருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த சங்கரி, சொர்ணம்மாவை மவுனமாய்ப் பார்க்க, அவளோ, "அவளுக்கு வேற வேலையில்ல..." என்றாள். அவள் தன் மாமியாரைப் பற்றி அவதூறு கிளப்புவது போல், இவளும், அவளிடம் தன்னைப் பற்றிக் கிளப்பி விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை.... ஆனாலும், அங்கே வந்த காந்தாமணி, குறுக்கே புகுந்து, "கூப்பிடறாள் பாரு - என்னன்னு கேளு... அதான் மரியாதை... உன் வேலய நான் பாக்கேன் ..." என்று சொன்னபடியே, சங்கரியின் முதுகைப் பிடித்துச் செல்லமாகத் தள்ளினாள். அவள் பின்வாசலைத் தாண்டியதும், அம்மாவுக்கு உதவியாளாய் ஒத்தாசை செய்யாமல், கொல்லைப்புற பின் கதவை பாதி சாத்தி, அதற்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
அந்தக் கொல்லை, பூந்தோட்டமாகவும், குட்டித் தோப்பு போலும் மின்னியது. குடை விரித்தாற்ப் போன்ற மா மரங்கள்... நிமிர்ந்து நின்ற கொய்யா மரங்கள்... வாழைப் பூவை உரசிய தென்னங்கன்று....ஒன்றை ஒன்று பின்னிக் கொண்ட செவ்வரளி... மஞ்சரளிச் செடிகள் - ராட்டினம் போல் பூக்கும் பெங்களூர் அரளி மரம் ... தரை மெத்தையான புல் பிறப்புக்கள்... அணில்களின் ஆரவாரங்கள்... பின்பக்கத்திற்குத் திரையிட்டது போன்ற அசோக மரங்கள் அவற்றின் முக்காடு போட்டத் தோரணை ..
ஆங்காங்கே அழகு காட்டிய பூக்களில் கிடந்த சருகுகளை எடுத்து கீழே போட்டபடியே, சங்கரி, உமாவை நெருங்கினாள். என்ன என்று கேட்காமல், அந்த வார்த்தைக்குப் புன்னகை வடிவம் கொடுத்தாள்... அதற்குள் உமாவுக்கு வந்த காரியத்தைவிட சொந்தக் காரியமே முக்கியமாய்ப்பட்டது...
"சங்கரி எனக்கு அந்த மாங்காயப் பறிச்சுக் கொடேன்."
"உனக்கு இல்லாத உரிமையா.. நீயே பறிச்சுக்க வேண்டியது தானே"
"நான் ஒன்ன மாதிரி உயர்ந்த மனுஷி இல்லயே.. எனக்கு எட்டல."
"லோசாக் குதிச்சா எட்டுது." "நான் குதிக்கப் படாது."
"ஏன் ?"
''அபார்ஷன் ஆயிடுமாம்.... மூணு மாசம் வரைக்கும் எச்சரிக்கையாய் இருக்கணுமாம்... வயிறு குலுங்கப்படாதாம்...”
"ஒன் புள்ளைக்கி ரெண்டு வயசு கூட ஆகல. இதுக்குள்ளே என்ன அவசரம்...?"
"உனக்கு தெரியுது. அவருக்குத் தெரியமாட்டேங்குதே... எங்க வீட்டு மிஸ்டர், குணத்துல மட்டுமில்ல... அதுலயும் உடும்புப் பிடிதான் அவர் டூர் போய்ட்டுத் திரும்பி வரும்போது, நான் பயந்து போயிடுவேன். பயமுன்னு கூடச் சொல்லப்படாது... பயபக்தி... ஒரு மணி நேரம் புரட்டி எடுத்திடுவார்.... போயும் போயும் கொல்லர் தெருவுல ஊசி விக்கிறேன் பாரு... உங்க வீட்டு மிஸ்ட்ட ரும் நேற்று ராத்திரி ஒன்ன புரட்டி எடுத்துருப்பாறே! ஆசாமியைப் பார்த்தாலே அசத்தறது மாதிரித்தானே இருக்காரு...''
சங்கரி, கண்களை மூடினாள் காணாத ஒன்றை காணவேண்டும் என்ற தாபம். ஒரு மணி நேரம் புரட்டுவாராமே.... முப்பது வினாடிகளே, அவ்வளவு இன்பமாக இருந்தால், அந்த ஒரு மணி நேரம்... அறுபது நிமிடம்... மூவாயிரத்து அறுநூறு வினாடிகள் எப்படி இருக்கும்? இங்கே ஒரு நிமிடம் கூட இல்லை ... அதிலும் பாதி. அதுவும் காதல் விளையாட்டாய்க் கரைந்து, இலக்கு இல்லாமலேயே அற்றுப் போகும்... ஒரு மணி நேரம் அடேயப்பா...
கண்மூடிக் கிடந்த சங்கரியை, உமா உலுக்கினாள்.. நேற்றைய ராத்திரி உருட்டலை, அவள் நினைத்து மனதுக்குள் இன்றைய ராத்திரிக்கு ஒத்திகை நடத்துவதாக நினைத்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு மாங்காய்தான், கண்ணில் பட்ட தே தவிர, காந்தாமணி சொன்னது நினைவிற்கு வராமலே பேசினாள்.
"ஒருவேளை நீ கூட உண்டாயிருக்கலாம்... அப்படின்னா நீயும் குதிக்கப்படாது... மாங்காய் கிடைக்காட்டால் போவட்டும்... மாவடு இருக்கவே இருக்கு.... ஆனாலும் வாலிப மாங்காய் ருசியே தனி... மாவடுவிலே புளிப்புக்குப் பதிலா துவர்ப்புதான் இருக்கும்."
"பரவாயில்ல. ஒனக்காவது ருசிக்கட்டும் நானே பறித்துத் தாரேன்."
சங்கரி, மாமரத்தை நோக்கி நடந்தாள். பின்னர், குதிப் பாய்ச்சலாய்ப் போனாள்... உடல் முழுக்க ஆவேசம்... மனம் முழுக்க ஆதங்கம். அந்த ஆவேசததையும் ஆதங்கத்தையும் உள்ளடக்க முடியாமல், ஒரே ஓட்டமாய் ஓடினாள்... மேலே தொங்கிய காய்களுக்குக் கண்களால் குறி போட்டாள்.. அத்தனையும் தலைக்கு ஒரு முழத்திற்கும் அதிகமான உயரத்தில், பிடி பார்க்கலாம் என்பது போல் பார்த்தன
சங்கரி, வலது கையை நீட்டி குதித்தாள்...... குறிப்பறிந்த மாங்காய், வலதுபக்கம் போனது.. உடனே அவள் இடது கையைத் தூக்கிக் குதித்தாள்... அது வலது பக்கம் போனது. கைப்பக்கம் வருவது மாதிரி வந்து கண் காணாத இலைப் பிரதேசத்திற்குள் மறைந்தது.. இன்னொரு பிஞ்சு, அவளை இளக்காரமாய்ப் பார்த்தது.... அவள் குதித்தாள். குதி குதியென்று குதித்தாள்... காய்களுக்காக குதித்தவள், இப்போது அவற்றின் நினைப்பற்று, சும்மாவே குதித்தாள். அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தாவினாள். குதியற்று மேலே போய், பிடியற்றுக் கீழே விழுந்தாள்... காய்கள் சிரித்தன.. இலைகள் பரிகசித்தன.. கிளைகள் அவள் தலையில் அடித்தன... கண்களைப் பிராண்டின...
உமா, ஓடி வந்தாள் : பேசிக்கொண்டே ஓடி வந்தாள்....
"சங்கரி! முடியாட்டால் விட்டிடு.... எப்பவுமே கொப்பை வளைத்துப் பிடித்து வசப்படுத்திக் கிட்டுத்தான், காயைப் பறிக்கணும்."
சங்கரிக்கு, மூச்சிரைத்தது. அவள் பிடித்த கிளைகளும் மூச்சிழைப்பது போல் அங்கும் இங்குமாய் ஆடின மாமர பச்சை அனைத்தையும் ஒன்று திரட்டி, அழுத்தப் பச்சையாகத் தோன்றிய கன்னிக் காய்கள், இலை மாராப்பில் அடைக்கலம் கொண்டு, அவளைப் பரிகசித்தன... மீண்டும் குதிக்கப் போன சங்கரியை, உமா பிடித்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப்படுத்தி, மாமரத்தின் கீழே உள்ள மணல் திட்டில் உட்கார வைத்தாள் தற்செயலாக உமா திரும்பியபோது, கொல்லைக் கதவின் பின்பக்கம் காந்தாமணி கைகளைக் கேள்விக்குறியாக்கி, அவளைப் பார்த்து முக மாட்டினாள்.
உமா, சமர்த்தானாள்.
"என்ன சங்கரி இப்படியா குதிக்கிறது? நேத்துக் கூட, நீ உண்டாயிருக்கலாம் கரு என்னாகிறது? கலைஞ்சிடாது.."
சங்கரி, ஆகாயத்தைப் பார்த்தாள் கைக் கெட்டாத அந்த மாங்காய்களைப் பார்த்தாள். உமா, அவளை மீண்டும் உலுக்கினாள்
"ஏன் இப்படி ஒரு மாதிரி ஆயிட்டே ? ஏன் கன்ணு அப்படிக் கலங்குது? இங்க பாரு சங்கரி! எதையும் மனசுக்குள்ளே கல்லு மாதிரிப் போட்டு வச்சா, அதுவே அப்புறம் பிளட் பிரஷரா.. நீரிழிவா... வயிற்றுக் கோளாறா... ஏன் பைத்தியமாக்கூ - மாறுமுன்னு, எங்க வீட்டு மிஸ்டர் சொல்லுவார்... மனசுல என்ன இருந்தாலும், அதைக் கவுத்து வாயாலே கொட்டிடு.. ஒன்னோட பிரச்சினை காதல் தோல்வியா? இதனால், அவருக்கு இடங்கொடுக்க மனசு வரலயா? காதல் தோல்வி சகஜம்... நான் கூடத்தான் காதலிச்சிருக்கேன். இப்ப உண்டாகலியா - பழச மறக்க முடியாதுதான்... அதுக்காக புதுச உதறணுமா என்ன...?"
சங்கரி, குமுறினாள். 'காதலே இல்லாத போது, அது எப்படி தோல்வியாகும்? இந்தப் பழியோட நான், இடங்கொடுக்கல என்கிற இன்னொரு பழியா.... கடவுளே.. கடவுளே..'
உமா, தொடர்ந்தாள்.
"ஒருவேளை உன் வீட்டுக்காரருக்குக் காதல் தோல்வியா? அதனால ஒன்ன விட்டு ஒதுங்குறாரா... ஒன் மேல எரிஞ்சு விழுகிறாரா... எதுனாலும் சொல்லு இவளே... பெரியவங்க எதுக்கு இருக்காங்க.."
சங்கரி, முட்டிக் கால்களில் முகத்தை அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டு, வயிற்றுக்கும் கால்களுக்குமான இடை வெளியில், வாயை மூடிக் கொண்டாள். அந்த ஏலாமனிதர் மீதும் ஒரு பழியா ...?
அவள் உடம்பு குலுங்கியது.. தொண்டைக் குமுறல், வாய் மூடிக் கிடந்ததால், அது பிடறி வழியாய்ப் பிய்த்துக் கொள்ளப்போனது... உமா, அவளை தன் மடியில் கிடத்தினாள். அவ்வளவுதான்... சங்கரி, அவள் மடியில் புரண்டு புரண்டு அலைமோதினாள்.
உமா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, பேச்சை விட்டாள்.
"அழாதடி அழாதே மனசுக்குள்ளே வச்சுக் குழப்பாதே.... என்கிட்டயாவது சொல்லு.. பெண்ணுக்குப் பெண்... தோழிக்குத் தோழி. போதாக்குறைக்கு ஒன் மாமியார் வேற , ஒன்மேல பழி போடறாள் உன்கிட்ட இருக்கிற உண்மை ஒருத்தர் கிட்டயாவது போனாத்தான், அது உன்னைச் சுடாது.... என்கிட்ட நம்பிக்கை இருந்தாச் சொல்லு. அப்புறம் ஒன்னிஷ்டம்.”
சங்கரிக்கு, சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை... தலைவெடித்து விடும் போல் இருந்தது. உடலைக் கூனிக் குறுக்கியபடியே, ஆகாயத்தில் கடவுள் இருப்பது போலவும், அவரிடம் முறையிடுவது போலவும் சொன்னாள்.
"அவரால் முடியலேயே முடியலேயே."
சங்கரி விக்கியும், திக்கியும், விம்மியும், துக்கித்தும் அடை மழை தூறலானது போல் ஏங்கியபோது, உமா நெகிழ்ந்து போனாள் அவரால முடியலேயே என்று இவள் கோபமாய்ச் சொல்லவில்லை; குற்றஞ்சாட்டவில்லை. அனுதாபமாய்ச் சொல்கிறாள்... இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா?
உமாவுக்கு, மனம் கேட்கவில்லை. ஆனாலும் முக்கால் வாசி அனுதாபம் கொண்ட மனதின் நுனியில் ஒரு அற்ப சந்தோஷமும் ஏற்பட்டது... அவள் மீது இவள் கொண்ட பழைய பகையற்ற பொறாமை, புதிய பெருமிதமாய் உருமாறியது. இந்த உமாவின் மாமியார் எதற்கெடுத்தாலும், இருந்தால், சங்கரி மாதிரி இருக்கணும்.... இங்கேயும் இருக்காளே... என்று சாடை மாடையாகப் பேசுவது உண்டு. இந்த ஒப்பீட்டுப் போராட்டத்தின் தோற்றாலும் இறுதிப்போரில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக, உமா எழுந்தாள்.
ஒரு உளவாளியின் சாதனைத் திருப்தியுடன், சரிம்மா.... இது பெரிய பிரச்சினை... ஆற அமர அப்புறமாய்ப் பேசுவோம் எங்க வீட்டுக் கொள்ளிக் கண்ணி, இதுக்கு மேலே இருந்தால் எரிச்சிடுவாள்' என்று சொன்னபடியே, சங்கரியைத் தனிமையில் விட்டு விட்டு, கொல்லையைத் தாண்டி, அந்த வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த காந்தாமணிடம், "ஒன்றும் நடக்கலியாம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.
காந்தாமணி, கொதித்துப் போனாள் இவள் ஆம்பிளப் பிறவிதான்... நேத்துக்கூட என் தம்பி, உமா புருஷன் கிட்ட டில்லி பொண்ணுகளப் பத்தி எப்படியெல்லாம் பேசினான்.. கோளாறு இவகிட்டதான் இருக்கும்... படிக்கும் போது எவனயாவது விரும்பிட்டு சினிமாவுல வரது மாதிரி, என் தம்பிக்கிட்ட ஏடாகூடமா நடந்தாலும் நடந்திருப்பாள். இந்த விவகாரம், சாண் ஏறுன்னா முழம் சறுக்குகிற கதையாச்சே. அம்மாகிட்ட சொன்னால், அவ்வளவுதான். தம்பிகிட்ட பேசவும் முடியாது... கிணறு வெட்ட பூதம் கிளம்புதே.. ராசியில்லாத நான், அவனுக்குப் பொண்ணு பார்த்திருக்கக்கூடாது ராசியிருந்தால், அந்த மனுஷன் அப்படி மாரடைப்புல சாவாரா அதுவும் மூணு வருஷத்துக்குள்ளே ...'
இதற்குள், மனோகர் முற்றத்துக்கு வந்துவிட்டான். பேண்டும் சட்டையுமாய் நடந்தான் மண்மேட்டில் கிடந்த சங்கரி, அந்தப் பக்கமாய் ஓடிவந்து அவனை படபடப்பாய் பார்த்தாள். எங்கே போகிறார்... எதற்காகப் போகிறார்...
சங்கரி நினைத்ததை, காந்தாமணி, தம்பியிடம் கேட்டாள்.
"லீவு நாளும் அதுவுமா வீட்ல இருக்காம எங்கேப்பா போறே... குறைஞ்சத எங்கிட்டேயாவது பேசிக்கிட்டு இருக்கலாம் பாரு."
"போகும் போது எதுக்குக்கா மறிக்கிறே...?"
"ஒன்ன மறிக்கலேப்பா.... ஆண்டவன் புண்ணியத்துலே.... ராவும் பகலும், நீ சந்தோஷமா இருக்கனும் - அதான் என்னோட ஆசை...”
அவள் பேச்சை முடிக்கும் முன்பே, மனோகர் அக்காவையும், மனைவியையும் ஒரு மாதிரிப் பார்த்தான். பிறகு திரும்பிப் பார்க்காமலேயே, வீட்டிற்கு வெளியே வந்தான். அப்போது, உமாவின் கணவன் இந்திரன் குறுக்கே வந்தான். இரண்டு கண்களுக்குப் பதிலாய் ஒரு கண்ணை மட்டுமே மாறி மாறி பயன் படுத்துவது போன்ற காக்கா கண்ணன். உடலைக் குலுக்காமலும், கண்களைச் சிமிட்டாமலும் அவனால் பேச முடியாது... பொம்மைச் சொக்காவில் சென்டு வாசனை படர, மனோகரிடம் பேசினான்...
"ஒரு சின்ன உதவி செய்யணும் பிரதர்... இப்ப இருக்கிற கம்பெனில எனக்கு இருக்க விருப்பம் இல்லை.... ஒரு பாரின் கம்பெனில வேகன்ஸி வந்திருக்கு... என் சர்டிபிகேட்டுகளோட நகல்களை நீங்க அட்டெஸ்ட் பண்ணணும்.... என்னை மாதிரி ஒங்களுக்கு, சம்பளம் இல்லாட்டாலும், அந்தஸ்து அதிகமாச்சே.. கெஸட்டட் ஆபீசரா, கொக்கா.."
'ஆபீஸ்லதான் சீல் இருக்கு... இன்னிக்கும் நாளைக்கும் லீவு. அடுத்தநாள் காலையிலே, ஆபீஸ் வாங்க... இல்லாட்டி ஒரிஜினல் களையும் நகல்களையும் எங்கிட்டே கொடுங்க. நான் செவ்வாய்க்கிழமை சாயங்காலம் கொண்டுவரேன்.''
மனோகர், நேற்று வரை உறவாடிய இந்திரனை எரிச்சலோடு பார்த்தான் அவன் தன்னிடம் பேசிக் கொண்டே, சங்கரியைத் துளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. எதிர்ப் பார்வை கிடைத்து விட்ட அனுபவமா
இந்திரன் மனோகருக்குள் எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான்
"எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம் ."
"என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க.... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க.... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே அதுக்குள்ளே என்ன அவசரம்....''
இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான். இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, "ஏங்க உள்ள வாங்க. மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா." என்று கத்தினாள்.
இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாது போல், மனோகர் , வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக் கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள் மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம்.
-------------------
அத்தியாயம் 4
மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும்
அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான்.
அங்குமிங்குமாய் நடந்து முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள் களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு நாய்கள், அத்தனை அமர்க்களத்திலும், ஒட்டிக் கொண்டன. அவனைப் பார்த்து பரிகசிப்பது போல் பல்லிளித்தன.
மனோகருக்கு, மனைவியைப் பாம்பென்று ஒதுக்கவும் முடியவில்லை. பழுதென்று சேர்க்கவும் முடியவில்லை.... நேற்று அவள், இந்திரனிடம் பேசியவிதம், அது சாதாரண நட்பாகத் தெரிய வில்லை. இவன் பயிற்சிக்காக புதுடில்லி போவது வரை, இந்திரனின்
அசட்டுக் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பவள், நேற்றோ , இருவரும் ஒருவரானது போல் பேசுகிறாள். ஒரு மாத காலத்தில் அப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்குமோ..? நேற்றைய ராத்திரியில், பால்கனியில் அவளுக்கு என்ன வேலை? இருக்காது... படுக்கையறையில் பெருந்தன்மையாய் நடந்து கொண்டவள், வெறுமையாய் உட்கார்ந்த தன்னை, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவதுபோல் ஆட்டியவள்... அவனுக்கு தோல்வியை இல்லை என்பது போல் சர்வசாதாரணமாக நடந்து கொண்டவள் - அத்தனை ஏமாற்றத்திலும் அவளால் எப்படி சாதாரணமாக நடக்க முடிகிறது...?
காலப்போக்கில்... சரியாகிவிடும் என்ற நம்பிக்கையா அல்லது ஒரு வேளை... ஒரு வேளை... 'நீ .. இல்லாட்டால் வேறு ஆளே கிடையாதா' என்று கேட்காமல் கேட்கிறாளா... எப்படியோ... அவளைச் சொல்லிக் குற்றமில்லை... கோளாறு என் பக்க அதன் வெளிப்பாடு அவள் பக்கம்..... இந்தச் சித்திரவதையை எத்தனை நாள் பொறுப்பது? அவள் முன் புழுவாய்த் துடிப்பதைவிடச் செத்து விடலாம்... வராத சாவை வருந்த அழைத்துக் கொள்ளலாம்.... தன்னைத் தானே கொலை செய்து கொள்ளலாம்... இந்த ஈன வாழ்க்கை வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்...
மனோகர், எழுந்தான். பேருந்துகளில் மோதப் போகிறவன் போல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.... அண்ணாந்து ஆகாயத்தை வெறுமையாய்ப் பார்த்தபடி... ஆட்டோவில் மோதினான்.... எதிர்ப்பட்ட ஒரு இளம் பெண் முகத்தில் முகமிடித்தான். அவள், பயந்து போய் ஒதுங்கியபோது, ஒரு காய்கறிக்கார கிழவி பொலிகாளப் பயலுக..... வந்துட்டானுக.. என்று திட்டியதைக் கேட்க, அவனுக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் இப்போது சாலையின் ஓரமாகவே நடந்தான் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு நடந்தவன், சங்கரியை, விட்டுவிட்டு, டில்லி நிகழ்ச்சிகளை நினைவு படுத்தினான்.
சங்கரியை, சந்திக்க வேண்டிய வகையில் சந்திப்பதற்காக, சென்னையிலும், டில்லியிலும் பரிகாரம் தேடத்தான் செய்தான் சென்னையில் பரிச்சயமான மருந்துக் கடையில், ஒரு விளம்பரப் பலகை, அவன் கண்களை முட்டியது. 'மாத்திரைக்கு முன்பு.... மாத்திரைக்குப் பின்பு என்று விலகிய ஜோடியையும், விலக்கப்படும் ஒட்டிக்கொண்ட அதே ஜோடியையும், படங்களாய் பார்த்தான்.
இவன் மாத்திரைகளை வாங்கினான். ஒவ்வொன்றும் பதிமூன்று ரூபாய் .... அறுபது மாத்திரைகளை வாங்கினான். திருப்திக்கு நாளொன்றுக்கு ஒன்றாம். படு திருப்திக்கு இரண்டு. ஆனந்தத்திற்கு மூன்று பேரானந்தத்திற்கு நான்கு.... டில்லிக்குப் போகுமுன், அவளைப் பேரானந்தமாக சந்திக்கத் தயாரானான்... சந்தித்தான்.... சந்தி சிரிக்காத குறைதான்.
என்றாலும், புதுதில்லி போனாலும், மனம் கேட்கவில்லை. அங்கே, 'கேஸ் அண்டு செக்ஸ்' என்று பிரகடனப்படுத்தும் சுவரொட்டிகளை முகவரிகளோடு பார்த்தான். அவனுக்கு தன் வயிற்றுக் கோளாறு நினைவுக்கு வந்தது. அடி வயிறு உப்பியிருப்பதும் உணர்வாய்த் தெரிந்தது.... உருவமாயம் புரிந்தது.... விளம்பரப் படுத்தப்பட்ட இடத்துக்குப் போனான்... ஆட்டோவில் போனான்... விமானம் கிடைத்திருந்தால், அதில் கூடப் போயிருப்பான். ஒரு கரண்டி சிகப்புப் பொடியும், ஒரு லிட்டர் வெள்ளைப் பொடியும் கொடுத்தார்கள். ஒரு கரண்டி வெள்ளையில் ஒரு மிளகளவு சிகப்பைக் கலந்து, பாலில் போட்டு குடிக்கச் சொன்னார்கள். மருந்தை வாங்கிக் கொண்டு பேருந்துக்கே காசில்லாமல் நடந்தே வந்தான். பத்து நாட்களில் மன்மதனே உபதேசம் கேட்க வருவான் என்று சொன்னதை நினைத்துப் பூரித்து ஒரு மாதம் வரை உட்கொண்டான். நேற்றிரவு, அவளை ஆயதபாணியாகத்தான் எதிர்கொண்டான். ஆனாலும் நிராயுத பாணியாகி விட்டான். நிர்க்கதியாகி விட்டான்.
நேற்று ராத்திரி வரையான கனத்துப்போன சிந்தனையில், கால்களின் போக்கை அறியாத மனோகரை, ஒரு ஆட்டோக் காரரின் வசவு திரும்ப வைத்தது அவனைச் அங்கேயே கட்டிப் போட்டது. எகிற எகிறித் திட்டியவனைப் பார்த்துச் சிரித்தான். எப்பவோ சூடுசுரணை அற்றுப் போனவன் போல், மலங்க மலங்கப் பார்த்தான்.
அப்போது, மலட்டுக் கண்களில், ஒரு விளம்பரப் பலகை தென்பட்டது. ஒய்யாரமான கடை கண்ணிகளுக்கு இடையே, ஒரு செவ்வக வடிவ அறை. அதன் மேல் விதானத்தில் புலிப் பாணி சித்த வைத்திய நிலையம் என்ற துருப்படிந்த பலகை. அதன் அடிவாரத்தில் வைத்தியர் செகன்னாதன் என்ற பெயர் மற்றபடி எந்த மேக்கப்பும் இல்லாத கூடம் இருபக்கத்துச் சுவர்களிலும், ஆகாயத்தை வில்லாய் வளைக்கப் போவதாய் எந்த மார்தட்டலும் இல்லை .... அதன் சாதாரணத் தோற்றம், அவனை ஈர்த்தது. டை' கட்டாத சித்த வைத்தியர். ஸ்டெதாஸ் கோப்பைக் கூடக் காண வில்லை . இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் விஷயம் இருக்கும்... இருக்குதோ இல்லையோ.... இதுவே கடைசி முயற்சி. இதுவும் பலனளிக்கவில்லையானால், இருக்கவே இருக்குது விஷம்... ரயில்வே தண்டவாளம்... தேசிய சாலையின் நடுப்பக்கம்....
மனோகர், வாழ நினைத்தவனாய் நடக்காமல், சாகத் துணிந்தவனாய், அந்த அறையை நெருங்கினான். மூன்று படிகளையும் ஒரே படியாய் அனுமானித்து, ஒரே தாவாய்த் தாவினான். பத்தாம் பசலி நாற்காலியில் முதுகைக் கிடத்தாமல், நிமிர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, பரவசப்பட்டான். சதுர முகம் - சதுராடும் பார்வை - தினவெடுத்த தோள்கள் - இவ்வளவுக்கும் அவருக்கு, வயது எழுபது இருக்கலாம்.
வைத்தியர் ஜெகன்னாதன், அவனை உட்காரச் சொன்னார். அவனை சாமுத்திரிகா லட்சணங்களால் அளவெடுப்பதுபோல், அவன் மூக்கைப் பார்த்தார். வாய்க்கு மேலுள்ள மச்சத்தைப் பார்த்தார். கால்கள், தரையில் கோலம் போடுகின்றனவா என்று கீழ்நோக்கிப் பார்த்தார். பிறகு இயல்பாகப் பேசினார்....
"எனக்கு காது கொஞ்சம் மந்தம்.... உரக்கப் பேசணும். ஏன் அப்படி மிரண்டு பார்க்கிங்க... கர்ப்பப்பை இல்லாட்டாலும் கர்ப்பிணி ஆகலாம்.... எய்ட்ஸ் நோயை இப்பவே ஒழிக்கலாம். வழுக்கைத் தலையை பசுஞ்சோலை ஆக்கலாமுன்னு' பேப்பர்ல படங்கள் வருதே... கருப்புத் துரைகள். அவங்க மாதிரி நான் இல்யேன்னு ஆச்சரியப்படுகிறீங்களா... ஸ்டெதாஸ் கோப்பை தூக்குக் கயிறாய் கழுத்துல தொங்கப் போட்டு, புன்னகை பூக்கிறாங்களே... அவங்க வேறு... நான் வேறு... இவங்க சித்த வைத்தியர்கள் இல்ல... செத்த வைத்தியர்கள்.
அந்தப் பெரியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மனோகரின் காதுகளில், தன் பேச்சு ஏறுகிறதா என்பதுமாதிரி, மூக்கும் வாயும் முன் துருத்த உற்றுப் பார்த்தார். அவன் காட்டிய ஆவலில், பேச்சை தொடர்ந்தார்.
ஆனால், என்னை மாதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தக்காலத்து வைத்தியர்கள் இன்றும் உயிரோடதான் இருக்கோம். சித்தத்தை சிவனிடம் செலுத்தி, யோகம், ஞானம், மருத்துவம், மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற அப்பியாசங்களுக்கு அதிபதிகளான நந்தீசர், மூலதீசர், அகத்தீசர், சட்டநாதர், கிடைக்காடர், சண்டிகேசர், கனராமர், போகர், சிவவாக்கியர், பேரக்கர், புன்னாக்கீசர், மச்சமுனி, பூனைக்கண்ணர், யூகமுனி, கொங்கணர், புலிப்பானி, வரமுனி என்கிற பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரை இன்னும் இருக்கத்தான் செய்யுது... ஆனால், பத்திரிகைகளுல படமா சிரிக்கிறவங்க... இந்தப் பரம்பரையின் பெயரைக் கெடுக்கிறதுக்குன்னே பிறப்பெடுத்தவங்க.. இவங்க சித்தர் முன்னோர்களின் உள் முகம் தெரியாத வான்கோழிகள்... போகட்டும் உடம்புக்கு என்ன செய்யுது?"
மனோகருக்கு ஆன்மீக மனிதராய்த் தோன்றும் அவரிடம், அற்ப விஷயத்தை எப்படிக் கேட்பது என்று புரியவில்லை .... பிடி கொடுக்காமலே சொன்னான். "வயிற்றுக் கோளாறு... வாயுத் தொல்லை... இங்கிலீஸ் மருந்து, கேட்கல.."
"சரி... எழுந்து கைகால்களை உதறிட்டு.. நிமிர்ந்து உட்காருங்க.... இல்லாத கூனை ஏன் போடுறே..?"
மனோகர், மனதை உதறிப்போடப் போவது போல், உதறிவிட்டு உட்கார்ந்தான். வைத்தியர் ஜெகன்னாதன், அவன் நீட்டிய கையின் மணிக்கட்டுக்கு கீழே, தனது மூன்று விரல்களைப் பதித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒவ்வொரு விரலாய் எடுத்தெடுத்து, மீண்டும் பதித்தார்... திடுக்கிட்டவராய் அவனைப் பார்த்தார்... கண்டதைச் சொன்னார். இப்போது அவனை ஒருமையிலேயே பேசினார்....
"என்னப்பா .... இது.. நாதம் பேசலியே...”
"அப்படின்னா ..."
"அடக் கடவுளே இது, தெரியாமல் வந்த கோளாறு ... நாதம் என்றால் ஒலி என்று மட்டும் அர்த்தமில்லை .... பருவம் வந்ததும் ஒருத்தரோட குரலை ஆண், பெண் இயல்புக்கு தக்கபடி மாற்றி அமைக்கும் நாதாந்தம் என்றும் அர்த்தம். பதினான்கு, பதினாறு வயதில், ஆண்குரல்... பெண்குரல் என்று அடையாளம் காண முடிகிறதே... அந்த மகரக்கட்டு அடையாளத்தை ஆணுக்குத் தருவது, விந்து. பெண்ணுக்குத் தருவது, நாதம்.
சகல உயிர்களுக்கும் ஆதாரமான பெரும்பொருள் மானுடத்தில் ஆணுக்குச் சுரப்பது விந்து... பெண்ணுக்குச் சுரப்பது நாதம்.... ஆணையும் பெண்ணையும் எப்படிப் பொதுப்படையாய் மனிதன்னு அழைக்கிறோமோ அப்படி விந்துவையும், நாதத்தையும் நாதமுன்னு அழைப்பதுண்டு இதனால் தான் கோடிக்கணக்கான உயிரணுக்களைக் கொண்ட விந்தையும், லட்சோப லட்சம் முட்டைகளில் ஒன்றைக் கருப்பையில் சேர்க்கும் நாதத்தையும், பரம் பொருளின் சொரூபமாய் நினைக்கிறோம் இதனால் தான் நாதவிந்துக் கலாதி நமோ.. என்றார் அருணகிரியார் நாதாந்த ஜோதி என்றார் ஞானமுள்ள தேகமெல்லாம் நாதவிந்தின் கூறு என்றார். இப்படிப்பட்ட பெரும்பொருளை இழந்து நிற்கிறியே ஒரு பெண்ணைத் தொட்டாலே தீட்டாயிடுவியே... அப்படியே ஆகாட்டாலும்... உன்னால் ஒருத்தியை ஊடுருவ முடியாதே.... கல்யாணம் ஆகிட்டா ....? ஆயுட்டுதா..."
மனோகர், அவரை மருண்டும், மிரண்டும், பயந்தும், உண்மையைப் பாக்கப் போகிற புதிய தரிசனமாய்ப் பார்த்தான். அவரோ... கேள்விமேல் கேள்வி போட்டார்....
"குடி... கூத்து.. கஞ்சா... சிகரெட்டுன்னு உண்டா ... போதை ஊசி போடுறது உண்டா ....? இல்லையா....? சந்தோஷம்.... சரி... தூர்ப்பழக்கமுன்னு சொல்றோமே, சுய இன்பம்... அந்தப் பழக்கம் இருக்குதா.?
"இருந்தது... ஆனால் இப்போ இல்லை ..."
"அந்தக் கெட்ட பழக்கந்தான்... நாதம் பேசாததுக்குக் காரணம்.. பொண்டாட்டிகிட்டே... முடியுதா..?"
மனோகர், தலை கவிழ்ந்தான். அந்தத் தலையைத் தூக்கி பதிலளிக்கத்தான் போனான். முடியவில்லை. தலை நிமிர்த்தா மலேயே மென்று விழுங்கிப் பேசினான்...
அந்தப் பழக்கம் ஒன்றும் தப்பில்லன்னு - டாக்டருங்க..."
"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வாங்களே... அது இந்த எம்.பி.பி.எஸ் அரக்கன்களுக்குப் பொருந்தும்... அவங்க வாதம் சொத்தை எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்தில் எழுகிற மூடத்தனம்..."
"விந்து என்பது பிறப்பின் ஆதாரம்... ஆகாயம், வாயு, தேயு, என்ற தந்தைப் பூதங்களும், பிருதிவி, அப்பு என்ற தாய் பூதங்களும் கொண்ட பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உடல்.... இந்தப் பூதங்களின் குறிப்பிட்ட விகிதாச்சார சேர்க்கையே ஒரு உயிர்ப்பொருள். அல்லது.. ஜடப் பொருளின் இயல்பையும், உறுதிப் பாட்டையும் தீர்மானிக்குது. அந்தப் பொருளை சமச்சீர் நிலையில் வைக்கிறது... இதைத்தான் இங்கிலீஸில் மெடாபாலிஸம் என்கிறான். உன் உடம்பில் இயற்கையாய் இருந்த இப்படிப்பட்ட சமச்சீர் நிலைகளை... நீ செயற்கையாய் செய்து செய்து சிதைத்திட்டே...
எவள்கிட்டயும், உன்னால முடியாதே...?”
மனோகர், தட்டுத்தடுமாறி சந்தேகம் கேட்டான்.
"வாயுக் கோளாறாய் இருந்தாலும்.. நாதம் பேசாமல் இருக்கலாமே.."
"என் மேலேயே எதிரம்பு விடுறியா..... சந்தோஷம்... சும்மா சொல்லலே... நிசமாவே சந்தோஷம்.... வாயுக் கோளாறு.... அது இருக்கிறது வரைக்கும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்.... இதை அலோபதிக்காரன் கணக்கில் எடுக்காதது தவறு... பெருந்தவறு... ஆனால் உனக்கு வாயுக் கோளாறு இருக்கிறதாய் நாடி சொல்லல..... நீ உண்மையின் விபரீதத்தைச் சந்திக்கப் பயந்து, அப்படி நினைக்கிறே... விந்து விட்டவன்... நொந்து கெட்டான் என்பது பழமொழி... அப்படிப் பட்டவனை, ஒரு கோழி முடியைக் காட்டயே பயமுறுத்திடலாம். குரு பரசுராமருக்கும், சிஷ்யன் பீஷ்மருக்கும் ஏற்ப்பட்ட போரில் பீஷ்மர் வென்றார்..... குருவிடம் இதற்குக் காரணம் கேட்டார்.... பரசுராமர் என்ன சொன்னார் தெரியுமா..... பீஷ்மா... ஒன் பிரம்மச்சரியம் என்னைத் தோற்கடித்தது.... என்றார். நம்ம மாதிரி சாதாரண ஆட்கள் கடைசிவரைக்கும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டிய தில்லை... ஆனால் கல்யாணம் வரைக்கும் விரதம் இருந்தால்... அதற்குப் பிறகு விரும்பறதை பலமாய்ச் சுவைக்கலாமே.... ஒன்னால் முடியாதே.... பாவம்... ஒன் வீட்டுக்காரி.....
மனோகர், புழுவாய் நெளிந்தான். சிறு பிள்ளையாய்த் துடித்தான். சங்கரி, அவன் முன்னால் வந்து ஒப்பாரி போடுவது போல் ஒரு பிரம்மை. அப்புறம் அவள், கைதட்டிச் சிரிப்பது போல் ஒரு கொடுமை. அந்தச் சமயத்திலும் ஒரு சிந்தனை ஆசாமி, இப்படி பயமுறுத்துறது வியாபாரத் தந்திரமாய் இருக்குமோ - இருக்கிறது மாதிரித் தெரியலியே தோரணை, பேச்சு, துஷ்டனுக்கு உரியதாய்த் தோணலியே விளம்பரப் பலகையில் டாக்டர் என்று போடாமல் வைத்தியர் என்று போட்டுக் காட்டும் மனிதரிடம், இப்படிப்பட்ட வில்லத்தனம் இருக்குமா இருக்காது.
வைத்தியர், எழுந்தார் நாற்காலிக்குப் பின்பக்கம் திறந்த பலகை அலமாரியில், வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட லேகியப் பாட்டில்களில் ஒரு சின்னப் பாட்டிலை எடுத்தார். சிறிது நடந்து, மேற்குப் பக்க சுவரோர கண்ணாடி அலமாரியைத் திறந்து, ஒரு சின்னக் குப்பியில் உள்ளதைக் கொட்டிக் கொட்டி, முப்பது சின்னச் சின்ன சரிகைக் காகிதங்களில் நிரப்பினார்... நிரப்பியதை மடித்துக் கொண்டு வர அவருக்கு முப்பது நிமிடமாயிற்று. நிலையற்றுக் கிடந்தவனிடம் திரும்பி வந்தார்.... பாட்டிலையும், பஸ்பத்தையும் வைத்தார்....
"பணம்..."
"நூறு ரூபாய்"
மனோகர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலேயே, சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, அவனுக்கு வைத்தியத்தை வர்ணித்தார்...
"சித்தர்கள், கட்டளைப்படி, நானே தயாரித்த மருந்து.... ஒரு கரண்டி லேகியத்தையும், இந்த காகிதத்தில் இருக்கிற பஸ்பத்தையும் கலந்து சாப்பிடு. தினம் மூணு வேளை. ஆறின பாலைக் குடிக்கணும் சாப்பாட்டிற்குப் பிறகுதான்... போட்டுக்கணும்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ, காபி, டீ குடிக்கப்படாது பத்து நாளைக்குப் பல்லைக் கடித்து, பெண்டாட்டியை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது... இந்த மருந்து பலிக்காட்டி, எந்த மருந்தும் பலிக்காது... பலன் கொடுத்தால், பதினோராவது நாள் என்னை வந்து பாரு... போய் வா..'
மனோகர் பேசாமலேயே நின்றான்.... அவரையே உதடுகள் துடிக்கப் பார்த்தான். அவர் அவன் பக்கமாய் வந்து, அவன் கையைப் பிடித்தபடியே அறிவுரையாற்றினார்......
"பெண் என்பவள் சக்தி சக்தியைத் திருப்திப்படுத்த எந்த ஆணாலும் இயலாது... அவளாய்த் திருப்திப்பட்டால்தான் உண்டு... பெண்ணிடம், ஆண் ஒடுங்க வேண்டும்... இதுதான் சித்த வைத்தியத்தின் கோட்பாடு... இதனால்தான் சித்தர்கள், மருந்துப் பொருட்களை தாய் சரக்கு, தந்தை சரக்கு என்று பிரித்தார்கள். தாய் சரக்கில் தந்தைச் சரக்கு மடிந்தால்தான் மருந்து கிடைக்கும்...”
"உதாரணமாய், கந்தகம் தாய்ச் சரக்கு ... பாதரசம் தந்தைச் சரக்கு... பாதரஸத்தை பஸ்பமாக்கி, அதை கந்தகத்தோடு சேர்த்து அரைக்க வேண்டும். இதனால் பாதரசம் மாண்டு, கந்தகத்துடன் இணைகிறது. சத்ரு எதிர்நிலை கொண்டது. சத்ரு.... தாய் நன்மை தரும் மித்ரு... மித்ருவைக் கொண்டு, சத்ருவை மடியச் செய்யவேண்டும். சத்ருவான விந்தை, மித்ருவான நாதத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்.. அதுவே தாம்பத்ய உறவு .. ஆகையால் இந்த உறவில் மனைவியை அடக்க நினைக்காதே... அடங்க நினை... இப்படிச் சொல்வதால், மனைவியை அவள் போக்கில் அடாவடியாய் விடலாம் என்று இல்லை.... அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளைப் பப்ளிக்காய் அடக்கணும் ஆனால், பிரைவேட்டாய் அடங்கணும்.. போகட்டும்... எனக்கு என்ன வயது இருக்கும்..?"
“எழுபது"
"என் வயது எண்பது - இன்னும் ஒரு பல் போகல கண்ணுக்கு கண்ணாடி போடல. ஏன் இளமையிலேயே கட்டுப்பாடான பிரம்மச்சரியம் - தியானம் யோகாசனம். அடுத்த தடவை வரும்போது உனக்கும் சொல்லித்தாறேன் - அதுக்கு முன்னால் ஒன்று சொல்றேன் கவனமாய்க் கேள்- உச்சம் வரும்போது மூக்கின் நுனியைப் பார் புருவ மத்தியைப் பார்... சரி போய் வா."
மனோகர், அங்கேயே இருக்கப் போவதுபோல் நின்றான் வைத்தியர் நாற்காலியில் உட்கார்ந்து பதார்த்த குண சிந்தாமணிப் புத்தகத்தைப் புரட்டிய போது, அவன், அவர் தனக்கு மேற்கோள் காட்டப் போவதாய் அனுமானித்து அவரைப் பார்த்தான்.
என்றாலும், வைத்தியர் அந்தப் புத்தகத்தில் மூழ்கியபோது, மனோகர், மனதுள் மூழ்கியபடியே, இப்போது நடந்தான் - மூக்கு நுனியைப் பார்த்தபடியே தொடர்ந்தான்.... போகப் போக, அந்த வைத்தியசாலையில் கிடைத்த நிம்மதி சுருங்கியது - சுருங்கிச் சுருங்கி, சுருக்கம் தெரியாமலே போய் விட்டது. மனதில் மீண்டும் குழப்பம். இந்த மருந்து பலிக்கா விட்டால் எந்த மருந்தும் பலிக்காது... என்றாரே ஒருவேளை பலிக்காமல் போனால் செய்முறைப் பழக்கம் உடலின் சமச்சீர் நிலையைப் பாதிக்கும். என்றாரே - பாதித்திருக்குமோ- நாத விந்துக்கு அவ்வளவு மகிமையா- குப்புறப் படுத்த பழைய நாட்கள், பகை நாட்களோ - போனது போனதுதானோ - குரல் உடைந்து போனதற்கு அதுதான் காரணமோ. இதனால்தான் டெலிபோனில் வரும் சிலர், அவனை அடையாளம் தெரியாமலேயே மேடம் என்கிறார்களோ மேடமா - மடமா மோசம் போனேனே நாசமானேனே.'
-------------------
அத்தியாயம் 5
மனோகர், வீட்டுக்குத் திரும்பியபோது, முற்றத்தில் அம்மா... திண்ணை விளிம்பில் அக்கா... திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி சங்கரி.... அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும்; அக்கா முகத்தில் புருவச் சுழிப்புக்கள்... அவள் முகத்தில் கண்ணீ ர் வெள்ளம்...
மனோகர் அதட்டினான் தேக்கிவைத்த வெறுப்பையெல்லாம் சினமாகக் கக்கினான்.
"என்ன இதெல்லாம் "
அக்காக்காரி கரங்களைப் பிசைந்தபோது, அம்மாக்காரி அசுரக் கோபத்துடன் பதிலளித்தாள் மருமகளைச் சுற்றி மானசீகமாக ஒற்றைக் குற்றவாளிக் கோட்டை போட்டபடியே குரலிழகப் பேசினாள்.
"லீவு நாளும் அதுமா வீட்டைவிட்டுப் போறானே என்னம்மா நடந்ததுன்னு கேட்கப் போனேன்... என் பிள்ளையைக் காணோ மேன்னு நான் பட்டபாடு... எனக்குத்தான் தெரியும்... பெத்தவளுக்குத் தெரியுறது மத்தவளுக்குத் தெரியலியே... ஒரு மாமியார், மகன் எங்கே போனான்னு மருமககிட்ட கேட்கப் படாதா.... எப்படியோ போகட்டும்... அக்காவிஷயம் என்னாச்சு. அந்தப் பயல்களைச் சும்மா விடப்படாது."
"எம்மா! எந்த நேரத்துல, ஒனக்கு, எதைப் பேசுவதுன்னு விவஸ்தை இல்லையா? சங்கரி.... எதுக்காக ஒப்பாரி வைக்கிறே... யதார்த்தமாத்தானே கேட்டிருக்காங்க..."
சங்கரியால் கட்டுப்படுத்த முடியவில்லை ... கண்ணீரும் கம்பலையுமாய் அழுதழுது சொன்னாள் –
'அப்படிக் கேட்டால் தப்பில்லதான்... ஆனால் அப்படிக் கேட்கலியே... நான் ஒங்களை வீட்ட விட்டுத் துரத்திட்டேனாம். நான் இந்த வீட்டுக்கு வந்ததிலேருந்து, நீங்க பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டிங்களாம்.... எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்... சொல்லுங்க.... ஒங்கள நானா துரத்துறேன்? வேணுமுன்னால் எங்க வீட்டுக்குப் போயிடுறேன்..."
மனோகர், பீறிட்டுக் கத்தினான். சுவரில் முகம் போட்டு நீர்க் கோடுகள் போடுகிறவள், திடுக்கிட்டுத் திரும்பும்படிக் கத்தினான்.
"ஏன் ஊரக் கூட்டுறது மாதிரி ஒப்பாரி போடுறே. சரியான காட்டுமிராண்டி... தாய்வீட்டுக்கு ஒரேயடியாய் வேணுமுன்னாலும் போயேன்... நான் தடுக்கல..."
சங்கரி, சுவரோடு, சுவராய் உறைந்து நின்றாள். இந்த மூன்று மாத காலத்தில், அவனிடமிருந்து கேட்டறியாத வார்த்தை அந்த அதிர்ச்சியில், அழுகை, திரவத்தில் இருந்து திட நிலைக்கு வந்தது.. ஆனாலும், சொர்ணம்மவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.... மகனின் சட்டையில் ஒட்டிய தூசி தும்புகளைத் தட்டிவிட்டாள்.
மனோகருக்கும், ஓரளவு திருப்தி. கட்டிய மனைவியை பப்ளிக்காய் அடக்கி விட்டானே!
----------------
அத்தியாயம் 6
சங்கரி, கட்டிலில் குப்புறக் கிடந்தாள். கண்களை மூடி, இருளில் வியாபித்தாள். மத்தியானம் சாப்பிடவே இல்லை. மாடிப்படி ஏறி வந்தவள், கட்டிலில் துக்க மயக்கத்தில் தொப்பென்று விழுந்தாள். அதுவே தூக்க மயக்கமானது. அண்ணி காந்தாமணி, மாடிக்கு வரத்தான் செய்தாள். அவளைச் சாப்பிட வரும்படி கூப்பிடத்தான் செய்தாள். எப்படி வயிற்றுக்குள் சோறு இறங்கும். அந்தப் பேச்சையும், ஏச்சையும் மாமியாரிடமிருந்து கேட்ட பிறகு தன்னால் சாப்பிட முடியும் என்று அண்ணி நினைத்தது, அதைவிடக் கொடுமை.
சங்கரி, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தாள். மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா என்று, ஆம் அல்லது இல்லை என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துவது போன்ற இக்கட்டான நிலைமை. ஆட்டையும் புல்லுக் கட்டையும், புலியையும் சேதாரமில்லாமல் சேர்க்க வேண்டியது போன்ற பொறுப்பு. பொறுப் பற்றவளுக்கு பதில் சொல்ல முடியாத பரிதவிப்பு.
அந்த மூன்று நாட்கள் முடிந்த இன்று சங்கரி மஞ்சள் தேய்த்து சாவகாசமாய்க் குளித்து விட்டு கூந்தலுக்கு வெள்ளைத் துணியால் கட்டுப் போட்டு, பூஜை அறைக்குள் நுழைந்தாள். மூன்று நாட்களாய்ப் பார்க்க முடியாமல் போன தெய்வப் படங்களை, தீபம் ஏற்றி, கற்பூரம் கொளுத்திக் கொண்டிருந்தபோது, அதற்கு மரணமணி அடிப்பது போல் மாமியார் கத்தினாள்.
ஒவ்வொருத்திக்கு கல்யாணத்துக்குப் பிறகு, குழந்தை உண்டாகாட்டாலும், பத்து நாளாவது நின்னு வரும்... இந்த வீட்ல என்னடான்னா டாண்னு வந்துடுது.... என்ன பொம்பளையோ.... சாதகப் பொருத்தம் சரியாக இருக்குன்னு சொன்னவனைச் செருப்பால அடிக்கணும்....
சங்கரி கற்பூரத்தட்டை சுற்றாமல், சுழற்றாமல், கீழே வைத்தாள். பூஜை மணியை அலட்சியப் படுத்தினாள். ஏதேச்சயாய்க் குங்குமம் எடுத்தவள் வழக்கப்படி அதை நெற்றியில் பொட்டாக்கி திருமாங்கல்யத்தில் ஒரு புள்ளியாக்குகிறவள், குங்குமத்தைப் பீடத்தில் சிதறடித்தபடியே, வெளியே வந்தாள். மாமியாரை முறைத்துப் பார்த்தாள். அவளோ, சண்டைக் கோழியாய் கைகளை மடித்து விலாவில் தட்டியபோது, சங்கரி பொறுமை இழந்தாள் 'இனிமேல் எது கேட்கணுமுன்னாலும் ஒங்க பிள்ளை கிட்ட கேளுங்க.... என்கிட்ட கேட்டால் மரியாதை போயிடும்...' என்றாள்.
பிறகு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே நம்பமுடியாமல், சிறிது கால்களைத் தேய்த்தபடியே நின்றுவிட்டு, மாடிக்கு வந்தவள் தான்.
சிற்றுண்டியும் சாப்பிடவில்லை. மத்தியானச் சாப்பாடும் வரவும் இல்லை. இவள் போகவும் இல்லை பசி மயக்கம் எடுத்தாலும் அந்த மயக்கத்தை ஏதோ ஒரு விதச் சூன்யம் விழுங்கி விட்டது. மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிப் போட, உமாவும் வருவதில்லை. உறவோ பகையோ அற்ற நிலைமை. அன்று அவள் கணவனிடம் அவர் அப்படிப்பட்டவர் இல்லை ... ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டார்..... தப்பா நினைக்காதிங்க.... என்று சொன்னபோது, இந்திரன் போட்ட பார்வை சரியாகப் படவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியுமென்று அவன் சொன்ன பதில் சொன்ன தோரணையும், என்னவோ போல் இருந்தது. யானை சேறில் சிக்கினால் தவளை கூடக் கிண்டல் செய்யுமாம்.
சங்கரி தனிமையில் தவித்தாள். இந்த உலகில் அவள் மட்டுமே தனித்திருப்பதாய் ஒரு அனுமானம். சபிக்கப்பட்டது போன்ற உறுத்தல். சாப விமோசனம் எப்போ கிடைக்குமோ என்ற ஏக்கம்.
திடீரென்று அவள் காதில் ஏதோ உரசுவதுபோல் தோன்றியது. திடுக்கிட்டுக் கண்விழித்தால், ஒரு இலைப் பொட்டலம். மல்லிகைப் பூவாய் துருத்திக் கொண்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்தால், மனோகர்! அவளுக்கு முதுகு காட்டி வீராப்பாய் நின்றான். அந்தப் பொட்டலத் தையும், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் நின்றவனையும் மாறி மாறிப் பார்த்த சங்கரி, குலுங்கப் போனாள். அவனைக் கட்டிப் பிடித்து தோளில் சங்கமமாக நினைத்தவளாய் எழுந்தாள். ஆனாலும், பழைய கசப்பு, புதிய இனிப்பை சேதாரம் செய்தது. காட்டுமிராண்டி மாதிரி ஏன் அழுகிறே என்று கேட்டாலும் கேட்பார். இதனால் மேலும் பத்து நாட்கள் சூன்யமாகலாம்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. மனோகர் முன்பக்கம் அற்றுப்போனவன் போல் முதுகு காட்டி நின்றான். அவளோ, கட்டிலில் உட்கார்ந்தபடியே விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். அந்த மல்லிகைச் சரத்தை பொட்டலத் திலிருந்து விடுவிக்கப் போனாள். பொட்டலத்தைச் சுற்றிய வாழை நாரை அவிழ்க்க முடியவில்லை பல்லால் கடித்துப் பார்த்தால், அந்தப் பல்லுக்குத்தான் வலி. பொட்டலமும் கலைய வேண்டும் பூவும் நிலைக்க வேண்டும். எப்படி. எப்படி....
மனோகர் , அவளுக்கு முகம் காட்டவில்லைதான்; என்றாலும், சங்கரிக்கு ஒரு நிம்மதி. ஆனந்தமான அதிர்ச்சி. மாமியாரின் கிரியா சக்தியால் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கணவன் மனைவி யுத்தம் முடிவுக்கு வரப்போகிற மகிழ்ச்சி அன்று அவன், ஒரு தரப்பாக போர் தொடுத்த பிறகு, இன்றுவரை அவர்கள் பேசிக் கொள்வதில்லை அன்று முதல் அவள் கட்டிலில் உடல் கொள்ளாமல் தரையில் படுத்தாள் அவனோ, அவள் இருப்பதாக அனுமானிக்கவே இல்லை. மறுநாள் அவள் காப்பி கொண்டு வரவில்லை. அவன் துணிமணிகளுக்கு இஸ்திரி போடவில்லை. ஆனாலும், மாமியார்க்காரி 'நானிருக்கேன் ராசா...' என்று கத்தியபடியே படுக்கை அறைக்கே காப்பியோடு வந்தாள் இரண்டாவது நாளும் இப்படியே. மூன்றாவது இரவில், அவன் வருவதற்கு முன்பே, கட்டிலில் படுத்தாள். அவனோ தரையில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் மாமியாரை வாசலிலேயே நிறுத்தி அவள் கையிலிருந்த டம்ளரை வலுக் கட்டாயமாக பறித்து, அவனிடம் நீட்டினாள். அவன் குளித்து முடித்து சீவிச் சிங்காரித்து ஒரு அழுக்குப் பேன்டை போடப்போன போது, அவள் அதை வெடுக்கென்று பறித்துவிட்டு, அலமாரியில் தயாராயிருந்த ஒரு நீலப் பேன்டைத் தூக்கி, அவன் மேல் எறிந்தாள். அதற்கு இணையாக பால் வெள்ளைச் சட்டை ஒன்றை அவன் தோளில் தொங்கப் போட்டாள் மறு இரவில், அவன் கட்டிலில் படுத்த பிறகு பக்கத்தில் படுத்தாள். அவனோ கல்லுப் பிள்ளையாராய்க் கிடந்தான். அவள் அழுது பார்த்தும் அவன் அசைவில்லை. இன்றைக்கு என்ன ஆச்சு... எப்படி இந்தப் பூப்பழக்கம் .. அவள் தேன் கொண்ட பூவாய் மலர்ந்தாள். முதுகை முகமாக்காதவனை நினைக்க, நினைக்க சிரிப்பு வந்தது. செல்லமாகச் சிணுங்கினாள்.
"பூவுக்கு மட்டும் குறைச்சலில்லை ..."
மனோகர், குறைபட்டவன் போல் திரும்பினான். என்ன சொல்கிறாள்.... அந்த குறைச்சலைச் சொல்லாமல் சொல்லுகிறாளோ ...
சங்கரி, அவனைச் சீண்டினாள்.
'யாருக்கு வேணும் இந்தப் பூவு. ? பிச்சைக்காரிக்கு எறிந்தது மாதிரி எறிந்தால் என்ன அர்த்தம்..? வச்சா தலையிலே வைக்கணும்."
மனோகரின் முகக்கடுமை இளகியது. முணுமுணுப்பு புன்முறுவலானது வைத்தியர் சொன்னது போல், அந்தச் சண்டையையே ஒரு சாக்காக்கி, பத்து நாட்களாய் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தவன், பதினோராவது நாரான இன்று, அவன் உடம்பு முறுக்கேறியிருந்தது. பார்வை மதப்பானது. எப்படியோ அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்ட மருந்து இன்றிரவு அவளுக்குத் தன்னை தெரியப்படுத்தும்.
மனோகர், அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். அந்தப்பூப் பொட்டலத்தை பல்லால் நார் உரித்து விடுவித்தான். தலையை கைகளால் மூடிக் கொண்டவளை, தன் மார்பில் கிடத்தினான். அவள் கைகளை தன் கைகளால் இறக்கினான். பிறகு அந்தப் பூவை அவள் தலையில் சூடினான். அவள் வீறாப்பாய் தலையை ஆட்டியபோது, அவன் கைபட்டு சில பூக்கள் கசங்கின. தலையில் சூடிய பூ கட்டிலில் விழுந்தது. அவள் செல்லமாக ஒரு பூவைக்கூட வைக்க முடியலே.... என்று சொன்னபோது, அவன் உடல் முறுக்கு லேசாய்த் தளர்ந்தது. மனம் வாதைப்பட்டாலும், உடல் அவள் பக்கமாய்ச் சாய்ந்தது. நடுக்கமற்ற சாய்வு.... நம்பிக்கை போகாத அணைப்பு... அவள், அவன் பக்கமாகத் திரும்பி அவன் தோள்களைப் பற்றிய போது.....
மாமியாரின் கனைப்புக்குரல் கேட்டது. வாசலுக்கு வெளியே உடம்பையும், உள்ளே தலையையும் போட்டுக் கொண்டு நின்றாள். "அக்கா விஷயம் என்னடா ஆச்சு...' என்றாள். சங்கரி, மாமியாரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. கணவனின் தோள்களைப் பற்றிய கைகளை அகற்றவில்லை. பார்த்தால் பார்க்கட்டும்.' ஆனாலும், மனோகர் அவள் கரங்களை அவசர அவசரமாக எடுத்துப் போட்டான் அம்மா பக்கம் போய், அவளை எரிச்சலாய்ப் பார்த்தான்.
உடனே அவள், "காந்தாமணியோட கொழுந்தன் லெட்டர் போட்டிருக்கான். 'மனோகர் பயலால என்ன செய்ய முடியுமுன்னு பார்க்கத்தான் போறோம். வண்டிப் பாதை வண்டிப் பாதைதான்.... அவன் ஆபீசரா இருக்கலாம். ஆனால், எங்க ஊருக்கு, அவன் ஒரு இரப்பாளிப் பயதான்னு ஊரு முழுக்கச் சொல்லிட்டு வாரானாம்.... இந்த ராமசாமிப் பய எல்லாம் நீ கொடுக்கிற இளக்காரம்... அவனை கைவிலங்கு கால்விலங்கு போட்டு ஜெயிலில் அடைச்சிருந்தா இப்படிப் பேசுவானா....? ஒன்னால முடியும். ஆனால், மனசுதான் இல்ல. சரிசரி... சாப்பாடு சூடு ஆறிடும்.... வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் கொஞ்சுங்க குலாவுங்க.... என்றாள்.
மனோகர், அம்மாவின் முதுகைத் தள்ளிக்கொண்டே படியிறங்கினான். சங்கரி, அவனை மாமியாரிடம் ஒப்படைக்க விரும்பாதவள் போல் கணவனைப் பின் தொடர்ந்தாள்.
தம்பியையும், நாத்தனாரையும் ஒருசேரப் பார்த்த காந்தாமணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் மாடிக்குப் போகும் போது பேன்ட் பை உப்பி இருந்ததைப் பார்த்தவள். அதுவே இப்போது நாத்தனார் கொண்டையை உப்ப வைத்திருந்தது கண்டு ஆனந்தித்தாள். தம்பியையும், தம்பி மனைவியையும், இருவர் தோளையும் அழுத்தி சின்னச் சின்ன சதுரப்பாய் இருக்கைகளில் உட்கார வைத்தாள். பரிமாற எழுந்த சங்கரியை, கண்ணால் அதட்டி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார
வைத்தாள். முட்டைப் பாயாசம் போடாமல் போனோமே என்று, தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டாள். நெத்திலிக்கருவாடு குழம்பு... முருங்கைக்காய் சாம்பார்.... எண்ணைக் கத்தரிக்காய்ப் பொரியல்.... இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
மனோகரும், சங்கரியும் ஈரக் கைகளைத் துடைத்தபடியே ஜோடியாய் மாடிப்படிகளில் ஏறப்போன போது, மாமியார் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்.... அக்காவுக்கு உதவப் போறியா இல்லியா... அந்த வண்டிப் பாதையை தடந்தெரியாம அழிக்கப் போறியா இல்லியா... ராமசாமிப்பயல ஜெயிலுல போடப்போறியா இல்லியா..... இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும்... உன்னால முடியாட்டா, நான் ஊருக்குப் போகப் போறேன்... என்று கத்தோ கத்தென்று கத்தினாள். காந்தாமணியோ, அம்மாவை ஒப்புக்குத் திட்டுவது போல் திட்டினாள்.
சங்கரிக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். அந்தச் சிவபூஜைக் கரடிகளை கண்களால் எரித்துவிட்டு, சலிப்போடு மாடிக்கு வந்தாள். மொட்டை மாடியில் அங்கும் இங்குமாய் சுற்றினாள். கீழே சத்தம் கத்தலாகியது. அந்தக் கத்தலை மீறி தெற்குப்பக்க வீட்டு மாடியில் ஒரு முக்கல் முனங்கள். என்னை விட்டுடு.... எவ்வளவு நேரமுய்யா..? வாட்ச்மேன் வந்திடப் போறான்.. அட விடுய்யா.... இந்தா பாரு... நான் அப்புறம் வரவே மாட்டேன்.. '
சங்கரி, மொட்டை மாடியின் மதில் சுவர் விளிம்பில் கை ஊன்றி எதிர்ப்பக்கத்து வீட்டை ரசனையோடு பார்த்தாள். இவள், இந்த வீட்டுக்கு வந்தபோது, காலியாக இருந்த மனை, இப்போது அடுக்கு மாடி கட்டிடமாகிக் கொண்டிருந்தது. முதல் மாடியில் தான், இந்த அமர்க்களம். ஒரு மரத்தில் தங்கும் பறவைகள் போல் கீழ்த்தளத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். அவன், வேறு ஏதோ ஒரு கட்டிடத்தில் வேலை பார்க்கும் 'பெரியாள். அவள், இந்தக் கட்டிடத்தில் வேலை பார்க்கும் சித்தாள். வாரம் இரண்டு தடவை நடக்கும் கூத்து இது. இவள் சாப்பிடப் போவதற்கு முன்பே அந்த கட்டிட முதல் மாடியில் சத்தம் கேட்டது. இன்னுமா முடியல... அடேயப்பா... எப்படி இவ்வளவு நேரம்... உமா என்னடான்னா ஒரு மணி நேரம் புரட்டினதாச் சொல்றாள்... இங்கே என்னடான்னா அதைவிட அதிக நேரம் ஆகும் போல இருக்கு... இன்னும் ஓயல ... பாவம்.. பாவப்பட்டதுகள். சந்தோஷமாய் இருந்துட்டு போகட்டும் ஆமாம்.. பாவப்பட்டது யார்...?"
என்றாலும், சங்கரிக்கு மகிழ்ச்சிதான் வீட்டுக்காரன் பேசிவிட்டான் என்பதால் மட்டுமல்ல. இன்றைக்கு அவன் பிடி அசத்தலாயிருந்தது முகத்தில் கூட ஒரு மலர்ச்சி. அவரோட அழகுக்கு வேற சொர்க்கம் இருக்க முடியாது.
சங்கரி, அந்த மொட்டை மாடியையே சுற்றிச் சுற்றி வந்தாள். படிகளில் இறங்கி பக்குவமாகப் பார்த்தாள். சத்தம் ஓய்ந்தது. அண்ணி அழுது கொண்டிருந்தாள். மாமியார் மூலையில் சாய்ந்து கிடந்தாள் அவரோ' அக்காவின் கைகளைப் பிடித்து ஏதோ பேசுகிறார். அம்மாக்காரி ஓடி வந்து அந்தக் கையைத் தட்டி விடுகிறாள்.. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்... பாவம் அவரு... கீழே போய் ரெண்டு கேள்வி கேக்கலாமா.... வேண்டாம் ஒருவேளை அவரு காட்டுமிராண்டினு கத்திடப்படாது.....
சங்கரி, சலிப்போடு அறைக்கு வந்து, மல்லாக்கப் படுத்தாள். குப்புறப் புரண்டாள். ஒரு பக்கமாய் குடை சாய்ந்தாள். திடீரென்று அவள் உடலோடு உடல் உரசியது. தோளில் ஒரு முகம் விழுந்தது ஆனந்தமாய் திரும்பினாள். அவன், அவளை அங்கும் இங்குமாய் உருட்டினான். அவள் இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு.... என்று திக்கித் திக்கிச் சொன்னபடி அவன் தலையைச் செல்லமாகக் குட்டினாள் குட்டிய தலையைக் கோதிவிட்டாள் அவன் கழுத்துக்குள் தன் முகத்தைப் பதியவிட்டாள்... அவள் ஆடைகள் அறைகுறையாகின. அந்தச் சுரணை இல்லாமலேயே அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள் - உடம்பு கனத்தது - ஒரு சுமை. சிறிது நேரத்தில் கனம் தெரியாமல் போன சுகமான சுமை.. அவன் கழுத்தை வளைத்துக் கொண்டு ஐ லவ் யூ... ஐ லவ் யூ - மனோ - என்று உளறுவது போல் உணர்ச்சிகளை கொட்டினாள் ஒரே ஒரு நிமிடத்திற்கும் குறைவே.
மனோகர், குழைந்து போனான்... அப்படிப் போகப்போக, அவனுக்கு, அவள் வெறும் சதைப் பிண்டமாகத் தெரிந்தது அவளுக்கும், அவன் சுமையாகப்பட்டது. அவளே அவனை கீழே தள்ளிப் போட்டாள். பிடித்ததும் பிடிபட்டதும் பொய்யாய், பழங்கதையாய் போனது அவள் அந்த இருட்டில் அவனை எரிச்சலோடு பார்த்தாள். வீம்புக்குதன் மேல் சாயப் போனவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, படுக்கையில் உட்கார்ந்தாள் அவனாவது சும்மா இருந்திருக்கலாம் அந்தச் சமயம் பார்த்து, நெருப்புக் கோழியாய் ஒரு கேள்விக்குள் தன்னை மறைத்துக் கொண்டதாய் தன்னை நினைத்துக் கொண்டான்.
"ஆமா... நான்தான் எங்கம்மா பித்துக்குளின்னு சொல்லியிருக் கேனே.. காலையில் அவளுக்குப் போட்டியா கூடக் கூடப் பேசினியாமே..."
சங்கரி , வெடித்தாள்... எரிமலையான வார்த்தைகள் பூகம்பமாய்ப் போன விமர்சனம்...
"எல்லாம் தலைவிதி... ஒங்களால் இது முடியலைன்னு சொல்லிட்டுப் போங்களேன்.. ஏன் வம்புச் சண்டைக்கு சாக்கு தேடுறீங்க..."
சங்கரி, அவனது எதிர்த் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாரானது போல் உடம்பை விறைப்பாக்கினாள். முகத்தைக் கடுமையாக்கினாள். வாயில் சில வார்த்தைகளைச் சுமந்தாள் ஆனாலும் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புக்கூட கேட்டகவில்லை. படுக்கை மட்டும் லேசாய் ஆடி அடங்கியது.... எல்லாமே அடங்கிப்போன அல்லது அடக்கப்பட்ட வெறுமை. காலம் நிமிடங்களாய் கழிந்து கொண்டிருந்தது.
சங்கரி, அவன் பக்கமாய்த் திரும்பினாள். ஜன்னல் கம்பிகள் வழியாய் ஊடுருவிய நிலா வெளிச்சத்தில் அவன் மங்கலாய்க் கிடந்தான். கண்களைத் திறந்து வைத்திருந்தான். கைகளை விரித்துப் போட்டிருந்தான். தற்செயலாய் அவள் காலில் பட்ட தன் காலை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டான். திறந்திருந்த கண்களை இமைகளால் பூட்டிக் கொள்ளாமல், கைகளால் மறைத்துக் கொண்டான்.
சங்கரிக்கு, என்னவோ போலிருந்தது. இப்போதுதான், தான் சொன்னதின் தாத்பரியம் அவளுக்கு முழுமையாய்ப் புரிந்தது போலிருந்தது. ஓடி... ஓடி... புறமுதுகு காட்டியவனை, அப்படி சொற்சூடு போட்டது, தவறு. ஆயிரமிருந்தாலும், அவர் கணவர் அந்தக்குறை தவிர, எந்தக் குறையுமில்லாத மனிதர். அவரை மீறிப்போன செயலின்மை... மனதும் உடம்பும் எதிரெதிராய்போன கொடுமை. ஒன்றோடு ஒன்று மல்லுக்கு நிற்கும் கொடூரமான யதார்த்தம். இந்த இரண்டிற்கும் இடையே, இவர் பிள்ளைப் பூச்சியாய் இடையில் அகப்பட்டுத் தவிக்கிறார். மனமிருந்தும் மார்க்கமற்றத் தன்மை!
'இப்படிப்பட்ட நோயாளி மாதிரியான ஒருவரை நோகடித்தாச்சு... அய்யோ... எனக்குள்ளும் இப்படிப்பட்ட ஒரு ராட்சஷியா.? அன்றைக்கு அவர் சொன்னது போல் நான் ஒரு காட்டுமிராண்டிதான். மனுஷி இல்லை இப்படியா கேட்பது. கேட்டுட்டேனே. எப்படியோ கேட்டுட்டேனே... புத்தியக் கடன் கொடுத்துட்டேனே - அவர் ஆம்பளையா இல்லாமல் இருக்கலாம்... அதனாலேயே அவர் மனுஷன் இல்லேன்னு ஆயிடுமா... அந்த மனுஷனுக்குள்ள ஒரு மனம் இருக்குமே... அது இப்ப என்ன பாடு படுதோ- நான் பெண்ணே இல்ல... பிறகு எப்படிப் பெண்டாட்டியா இருக்க முடியும்...
சங்கரி, அவனைப் பார்த்துப் பார்த்து கைகளை பிசைந்தாள்... பிறகு, தலையில், ஓங்கி ஓங்கி அடித்தாள். மனோகரோ, அவளை ஏனென்று கேட்கவில்லை... தலையைத் தாக்கும் கரங்களைத் தடுக்கவில்லை... அழட்டும்.... செத்துப்போனவனுக்கு ஒப்பாரி வைக்கிறாள்... தப்பில்லைதான்.....
அவனுள் ஒரு வைராக்கியம். பட்டது போதும். இவள் ஒப்பாரிக்கு உருவம் கொடுப்பது போல் செத்துப் போகவேண்டும். ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போக வேண்டும். அதை எப்படிச் செய்வது... எங்கே செய்வது எப்போது செய்வது...'
-----
அத்தியாயம் 7
மனோகர், துணை இயக்குநராய், அலுவலக சுழல் நாற்காலியில் சோர்ந்து போய்க் கிடந்தான். எதிர் நாற்காலிகளில் ஒன்றை மேஜைக்கு இழுத்துப் போட்டு கால்களை நீட்டி போட்டிருந்தான். தலைதட்டும் மெத்தையிட்ட நாற்காலியில் கரங்களை வளைத்துப் போட்டு, அரைக்கண் பார்வையில் கிடந்தான். தூக்கமும் துக்கமும் கலவையாகி அவனை மயக்கிப் போட்டன நினைவுகள் அவனைத் தூக்கிப் போட்டு மிதித்தன.
சங்கரி, கண் விழிக்கும் முன்பே எழுந்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு, ஐந்து மணிக்குப் புறப்பட்டு ஆறு மணிக்கு அலுவலகம் வந்துவிட்டான். பாயில் அப்போதுதான் தூக்கம் கலைத்த அம்மா, அவன் பக்கமாய் ஓடிவந்து, எங்கடா எங்கடா...' என்றபோது, அவன் அவளுக்குப் பதிலளிப்பதுபோல் டெலிபோன் எண்களைச் சுழற்றினான். வேதமுத்தா... நான் ஆபீஸ் வாரேன்... நிறைய வேலை இருக்குது... என் ரூமைக் கிளீன் செய்து வை..'
அம்மாக்காரி, அவன் சட்டை கிழியும்படி இழுத்திருப்பாள் ஆனால், ராமசாமிக்கு விலங்கு மாட்டுவதற்கு அவன் போவதாக அனுமானித்து, சும்மாவே இருந்து விட்டாள். பைக்கில் ஏறிய மனோகர், வீட்டை திரும்பிப் பார்த்தபோது, அம்மா பக்கத்தில் சங்கரி. முகத்தைக் கழுவியது போல் கூடத் தெரியவில்லை . முந்தானை விலகிய நினைப்பற்றவளாய் நின்றாள். அவனைப் போய் வழி மறித்திருப்பாள். மாமியார் ரகளைக்குப் பயந்து விட்டாள்.
அலுவலகத்தில், மனோகர் நினைவுகளை அசை போட்டான். மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்தது, என்னவோ போலிருந்தது. அங்கும் இங்குமாய் நெளிந்தான். கால் தட்டிக் கீழே விழுந்த நாற்காலியை எடுப்பதற்காக எழுந்தவன், எதற்கு எழுந்தோம் என்ற நினைப்பில்லாமல் அந்த அறையைச் சுற்றினான். அல்லாடி... அல்லாடி சோபா செட்டில் சாய்ந்தான். கொஞ்சம் சுகமாக இருந்தது. அவளிடம் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மெய்யான நியாயம். மெய் சம்பந்தப்பட்ட நியாயம். ஆனால், அந்த நியாயத்தை, அப்படி அநியாயமாக சொல்லியிருக்க வேண்டாம். அப்படியும் சொல்ல முடியாது. அவள் இதுவரை பொறுத்ததே பெரிசு. நாய் தேங்காயை உருட்டியது போன்ற கதை. அரைக்கிணறு தாண்டி, கீழே விழுந்து அடிபட்டுப்போன கதை.
"அய்யா ... ஏதாவது..."
முப்பது வயதிலும் எழுபது வயது நடுக்கத்தோடு நின்ற சவுக்கிதார் மருதனை, மனோகர் கண் திறந்து பார்த்தான். துணை இயக்குநருக்கு உயிர் நடுக்கம் என்றால், அவனுக்கு உடல் நடுக்கம். இராக்காவலாளியான இவன், இரவு பத்து மணி முதல் நான்கு மணி வரை வீட்டில் படுக்கப் போய்விடுவான். டெலிபோனை எடுத்து, கீழே வைத்து விடுவான். ஒருவேளை அதற்கு முன்பே தன் வேலையைச் சரிபார்க்க நடுராத்திரியிலேயே டெலிபோன் செய்திருப்பாரோ... என்னை ஒழித்துக் கட்டுற வேலையைத்தான் முக்கியமான வேலை என்று சொல்லியிருப்பாரோ. பத்து வருஷ சர்வீஸ் பலன் கொடுக்குதான்னு பார்ப்போம்.'
"அய்யா.. நேத்து நைட்டு முழுதும் டெலிபோன் வேலை செய்யலைய்யா. அப்பப்போ வருது அப்பப்போ போய்டுதுய்யா... கேபிள் பால்டாம்யா.."
மனோகர், அவனை, வினோதமாகப் பார்த்தான். அவன் நடுங்கி விட்டான். 'சஸ்பென்ட் சஸ்பென்டு தானோ.. எதுக்கும் அடுத்த அஸ்திரத்தைப் போட்டுப் பாக்கலாம்...'
"ராத்திரி முழுதும் எனக்குப் பேதி அய்யா - முக்கால் வாசி நேரம் பாத்ரூம்லதான் இருந்தேன் அய்யா "
மனோகருக்கு, அவனுக்கு வந்தது தனக்கு வந்தது போன்ற அசதியில் பேசினான்.
"இத மொதல்லயே சொல்லப்படாதா...? சரி நீ... வீட்டுக்குப் போ... ஒன் வேலையும் நான் சேர்த்துக் கவனிக்கிறேன்."
''அய்யா... அய்யய்யா... தப்பு தவறு செய்தாலும் பொறுத்துக்குங்க அய்யா.... எங்க மாமியார் படுத்த படுக்கையா இருக்காங்க அய்யா... எழுபது வயசு மாமியாருக்கு நான்தான் துணய்யா ...”
"மாமியாருக்காக அழுகிற முதல் மருமகன் நீதான் .."
"அவங்க எங்கூடப் பொறந்த அக்காய்யா... அக்கா பொண்ணத்தான் கட்டியிருக்கேன் அய்யா.."
"உறவை திரிக்கிற உன்ன இதுக்கே சஸ்பென்ட் பண்ணனும்..... போய்யா... பேதியானவனுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். முதல்ல வீட்டுக்குப் போ - முடிஞ்சால் சாயங்காலம் வா.."
"ஸ்வீப்பர் வரது வரைக்குமாவது இருக்கேன்யா..."
அவள் வந்தால், அவள் வேலையப் பார்ப்பாள் நீ போ.."
மருதனுக்கு, இப்போது நிசமாகவே பேதி வந்தது. என்ன ஆகுமோ.... எப்படி ஆகுமோ.... பூடகமாய்ப் பேசுறாரே.' அவன் ஒடுங்கி ஒடுங்கி வெளியேறினான். மனோகர், மெல்லச் சிரித்தான். அக்காவை மாமியாராக்கியவனை நினைத்து ரசனையோடு சிரித்தான். திடீரென்று சிரிக்க அவனுக்கு அருகதை இல்லை என்பதுபோல், சங்கரி முன்னால் வந்து கை கொட்டிச் சிரிக்கிறாள். தலையில் அடித்து ஒப்பாரி இடுகிறாள். மனோகருக்கு விரக்தி தூக்கமானது. குறட்டை ஒப்பாரியானது.
"சாரே... சாரே..."
மனோகர், திடுக்கிட்டு கண் விழித்தான். விழிப்பில் ஏன் இப்படி பயம் வரவேண்டும் என்று சிந்தித்தான். வைத்தியர் சொன்ன கோழி முடி நினைவுக்கு வந்தது. தன்னைத்தானே நிமிர்த்திக் கொண்டு, அவளைப் பார்த்தான். அலுவலகத்தை கூட்டிப் பெருக்கும் கங்கா. சேரிக்கே உரிய கம்பீரம். உழைப்பில் உருவான உடல்கட்டு. இருபத்து நான்கு தேறலாம். பார்த்தால் பற்றிக் கொள்ளத் தூண்டும் கண்கள். பேசும்போது பூ விரிவது போன்ற தோரணை. அவள், இவனைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, இவனுக்கு, அவளைத் தெரியாது ஒரு தடவை, மாதக் கூலியில் ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுக்கும்படி கேட்டபோது, இவன் நூறு ரூபாய் கூட்டிப் போட்டான் இன்னொரு தடவை, இவளை இந்த அலுவலகத்தில் சேர்த்தவள் மாமூல் கேட்பதாக இவள் முறையிட்டபோது, பக்கத்து அலுவலக பெருக்கல்காரியான அந்த மாமூலை, மிரட்டியவன் இவன்... அதோடு சரி....
"சாரே... சாரே - இந்த ரூமைப் பெருக்கித் துடைக்கணும் சாரே. இந்தாண்டை வா சாரே..."
"நாளைக்குப் பார்த்துக்கலாம்..."
"வாணாம் சாரே.. நீ பொறுத்தாலும் ஏ ஓ. கத்துவார் சாரே.... வேணுமுன்னா சோபாவில் கால்களை மடித்துப்போட்டு ஒக்காந்துக்கோ ... சாரே...'
மனோகர் , அவள் சொன்னபடியே செய்தான். அவள் அந்த அறையை பெருக்கினாள். ஒரு வாளித் தண்ணீரை வைத்துக் கொண்டே ஈரத்துணியால் மொசைக் தரைக்கு பளபளப்பு ஏற்றினாள்.
"சாரே... சாரே செத்தோண்டு நாற்காலிலே உட்காரு சாரே. சோபாவைத் துடைச்சிடறேன்."
மனோகர் எழுந்தபோது, அவன் தோள், கங்காவின் தோளில் மோதியது. அவன் கேட்டான்.
"ஆமா.. ஒன் பேரு என்ன?"
"என்ன சாரே.... அதுக்குள்ள என் பேரு மறந்து போச்சா..? ஆத்தா வச்ச பேரு கங்கையம்மா.. நானே எனக்கு வச்ச பேரு கங்கா.. நீ ஐம்பது ரூபாய ரெட்டிப்பா தந்ததை நா மறக்கல சாரே."
"உனக்கு கல்யாணம் ஆயிட்டா."
"என்ன சாரே மஞ்சக் கயித்தப் பார்த்துட்டும் அப்படிக் கேக்கிறே... ஆயி என்ன பிரயோசனம்? அந்தக் கஸ்மாலம் கை விட்டுட்டான்.. என்னப் பிடிக்கலையாம். ரெண்டு வருஷத்துக்குப் பிறகு சொல்றான்... ஒரு குரங்கு மூஞ்சியோட ஓடிட்டான்... அவன் கிடக்கான்.. என் வேலைய பெர்மனென்டு ஆக்கு சாரே..''
"பிரதம மந்திரி நெனச்சாலும் ஒன்னை பெர்மனென்டு ஆக்க முடியாது. ஆனாலும் ஒன்னை ஒரு நல்ல கம்பெனியில சேர்க்கறதுக்குப் பார்க்கிறேன்... எதுக்கும் ஒன்னைப் பத்திய பயோடேட்டா அதாவது வயது, படிப்பு இப்படிப்பட்ட விவரங்களை எழுதிக் கொடு...”
"எட்டாவது படிச்சாலும் என் எழுத்து தலையெழுத்து மாதிரி கோணல் மாணலா இருக்கும் நீ கேட்டுக் கேட்டு எழுதிக்கோ சாரே.
மனோகர், நாற்காலியில் போய் உட்கார்ந்து ஒரு தாளை எடுத்தான் அவள், அவன் பக்கத்தில் வந்தாள். பிறந்த தேதி தெரியாது என்றாள். முகவரி சொன்னாள். அவன் முழங்கை விலாவில் பட்டபோது, விலகி நின்றாள். 'குழந்தை இருக்கிறதா? என்று கேட்டபோது, 'அதான் குரங்கு மூஞ்சியோட போய்ட்டானே...' என்றாள். அவன், அவளை அனுதாபமாகப் பார்த்தான் ஒன் அழகுக்கு என்னவாம்...' என்று சொன்னபடியே கைகளை நெட்டி முறித்தான். ஒரு கை அவள் தோளில் பட்டது. அவள் அதை அறிந்தோ, அறியாமலோ, நின்றபோது, அந்தக் கை, அவள் தோளுக்கு கீழே போய், அவளை, அவன் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தது. அவன் எழுந்தான். அவளின் கலங்கிய கண்களை நான் இருக்கேன் என்பது மாதிரி துடைத்து விட்டான். அவள் திடுக்கிட்டு திமிறினாள். முகத்தோடு முகம் முட்டியதுதான் மிச்சம். பிடிகள் இறுகின. அணைப்புக்கள் அணையை உடைக்கப் போயின.
"வேண்டாம் சாரே... அது மட்டும் வேண்டாம் சாரே .."
"என்னைப் பிடிக்கலியா ?"
"பிடிக்காட்டி இப்படி இடங்கொடுப்பேனா... விடு சாரே.... பேஜாரா இருக்குது."
"இனிமேல் உன் பிரச்சினை என் பிரச்சினை.. அதுக்காக நான் சொல்லல... ஆனாலும் ஒன்னைப் பார்த்ததும்..."
"சரி சாரே... கதவையாவது சாத்திட்டு வா... வாட்ச்மேன் கேட்டுப் பக்கம் கீறாரு.."
மனோகர் , தள்ளு கதவைத் தாளிட்டான். நாணத்தோடு நின்றவளை அப்படியே அப்பிக் கொண்டான். அவளை நகர்த்தி நகர்த்தி ஆன்டி ரூம் எனப்படும் ஒரு பிளைவுட் தடுத்த ஓய்வறைக்கு கொண்டு போனான். அவளை அழுந்தப் பற்றினான். அரைகுறை ஆடைகளில் விட்டான். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்... பிறகு அப்படியே அவளை விட்டு விட்டு, உபதேசம் செய்தான்.
"கங்கா... இது ஆபீஸ்... கோயில் மாதிரி.. இங்கே வேண்டாம். வசதிப்படும்போது வெளியில் போகலாம்..."
கங்கா , மெல்லத் தலையாட்டினாள். அந்த ஆட்டு ஆமோதிப்பா, எதிர்ப்பா என்று தெரியவில்லை. சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிட்டுட்டியே சாமி - இனிமே ஒன் நெனப்புத்தான்..' என்று சிணுங்கினாள் வாளியை தூக்கிக் கொண்டு, கதவின் இடுக்கு வழியாகக் கண்ணைப் பதித்து விட்டு, பிறகு தாழ்ப்பாளை நகர்த்திவிட்டுப் போய் விட்டாள்.
மனோகருக்குப் பித்துப் பிடித்தது போல் இருந்தது. எல்லாப் பெண்களுமே அவனைத் தள்ளி வைப்பது போல் இருந்தது. அவனுக்கு காலநேரம் சூன்யமானது. ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் பத்தரை மணி அளவில் வந்தார்கள். அவன் தங்களின் காலதாமத்தை கண்டுபிடிக்க வந்திருப்பதாக அனுமானித்து, பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொன்னார்கள். அவன் போனால் போகிறது என்பது மாதிரி ஆட்டிய கைக்கு, ஒருத்தி, மானசீகமாக முத்தங்கொடுத்தாள்.
பதினோரு மணிக்கு நிர்வாக அதிகாரி, இரண்டு - பைல்களோடு வந்தார்.... ஐம்பது வயதுக்காரர்..... முக்கியமான பைல்கலள 'ரொட்டீனாக அனுப்பாமல், அவரே கொண்டு வருவார். அதாவது அவருக்கு முக்கியமானதை. ஒரு பைலைப் பார்த்தபடியே, மனோகர் கேட்டான்.
"கிருஷ்ணனை எதுக்காக மதுரை பிராஞ்சுக்கு டூர் அனுப்பணும்... பக்கத்துல இருக்கிற இராமநாதபுரத்துக் கிளார்கை அனுப்பலாமே....?"
"வழக்கமாய்ச் சொல்றதுதானே ஸார்.. அவன் பெண்டாட்டி, மதுரையில் இருக்காள். போனால், அங்க திறமயக் காட்டுறானோ இல்லியோ, ஆபீஸ்ல வந்து திறமையைக் காட்டுவான்..."
"சிரித்து மழுப்பாதீங்க..... அவன் பொண்டாட்டியோட படுக்கிறதுக்கு கவர்ன்மென்ட் எதுக்கு டி.ஏ. டீ.ஏ. கொடுக்கனும்.....
நோ... நோ..."
நிர்வாக அதிகாரி, அவனைப் புதிதாய்ப் பார்ப்பது போல், அதிர்ந்து பார்த்தார். தன் பக்கம் நகர்ந்த பைலை வாங்கிக் கொண்டு, அடுத்த பைலை நீட்டினார். அவன் இப்போது அதிக கோபமாய்க் கேட்டான்.
"என்ன அக்கிரமம் இது...? இந்த வசந்தி... மூன்று மாசத்துக்கு முன்னாலேதானே குழந்தை பெத்தாள்."
"அதனால் தான், அபார்ஷனுக்கு லீவு கேட்கிறாள்."
"இது அக்கிரமம்... மூன்று மாசம் பிரசவ லீவுல போயிட்டு போன வாரம்தான் டூட்டிலே சேர்ந்தாள் - நோ... லீவ்..."
கோப்பில் ஏதோ எழுதப்போன மனோகரின் கரத்தைக் கிட்டத்தட்டப் பிடித்துக் கொண்டு உரிமைக் குரலில் சட்டோபதேசம் செய்தார், ஏ ஓ. எனப்படும் நிர்வாக அதிகாரி.
"கவர்மெண்டு வேலையில் கல்யாணமாகாத பெண் கூட கருக்கலைப்பதற்கு லீவு கேட்டால், கண்டிப்பாகக் கொடுக்கணு முன்னு ரூல். சொல்லுது ஸார்."
மனோகர், வேண்டா வெறுப்பாய் கையெழுத்துப் போட்ட போது நிர்வாக அதிகாரி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடியே வெளியேறினார். சலுகைகளை வழங்குவதில் கர்ணனான அவன், எப்படிக் கம்சனானான் என்பது புரியாமல் போய்விட்டார். அவர் போன பத்து நிமிடத்தில் அஸிஸ்டென்ட் கிருஷ்ணன், ஒரு குண்டு மனிதரோடு வந்தான். அவனுக்கு எப்போதாவது பிரச்சினை வரும்போது, பெரிய மனிதர்களை கூட்டிவந்து மனோகருக்கு அறிமுகப்படுத்துகிறவன்.
"ஸார். இவர் எங்க கஸின் பிரதர், டாக்டர் குமார்... மதுரையில் பிரபலமான செக்ஸாலஜிஸ்ட்.."
மனோகர், வந்தவரைக் கை கொடுத்து உட்கார வைக்காமல் கை கூப்பி அமரச் சொன்னான். அடுத்த இருக்கையில் உட்காரப் போன கிருஷ்ணனை, ஒரு வேலையைக் கொடுத்து வெளியேற்றினான். "மதுரைக்கு டூர்ல போங்க... டூர் ஆர்டரை
டைப்படிச்சிட்டு வாங்க...” என்றான்.
கிருஷ்ணன், குதிக்காத குறையாய் போனதும், அந்தக் கேள்வியை எப்படிக் கேட்பது என்பது புரியாமல், மனோகர் யோசித்தான் புரிந்தது. இன்னும் புத்திசாலித்தனம் போகவில்லை.
"நீங்க எம்.பி.பி.எஸ். படித்திட்டு அப்புறம், செக்ஸ்ல பட்ட மேற்படிப்பு வாங்கி என்ன ஸார் பிரயோஜனம்...? சிட்டுக்குருவி லேகியம்.... லபு கபே... தங்கபஸ்பம்முன்னு விளம்பரம் படுத்துற நாட்டு வைத்தியர்ங்ககிட்டதானே நம்ம ஆளுங்க போறாங்க..?"
டாக்டர். குமார், நாற்காலியிலேயே துள்ளினார். நீண்ட நாளாய், ஈ ஓட்டிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு வடிகால் கிடைத்த ஆனந்தம்.
"அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீங்க... செக்ஸ்ல தோத்துப் போறவன். நெருப்புல பாய்கிற விட்டில் பூச்சியாக ஆயிடுவான்... உடலுறவுல செத்துப் போகிற ஆண் தேனீக்களோட முடிவுதான் இவன் முடிவும்... வைட்டமின் ஈ-யில் குணமாகக் கூடிய சமாசாரத்துக்கு, நூற்றுக்கணக்குல ரூபாய் செலவழித்து, லேகியம், பஸ்பம்முன்னு தின்கிறான்... கடைசியில், இதுக்குள்ளே இருக்கிற உலோகத் துகள்கள், கிட்னிக்கு வந்து அந்தக் கோளாறிலே சாகிறான்... உள்ளதும் போச்சு... நொள்ளக் கண்ணா என்கிற கதை.... இந்த மாதிரி அடாவடி வைத்தியர்களைத் தண்டிக்க தடா சட்டத்தை திருத்தணும்."
மனோகர், திடுக்கிட்டான். இன்று அந்த வைத்தியரிடம் போக நினைத்தவன், கிழட்டுப் பயல் கெடுத்துட்டானே கிட்னி போயிருக்குமோ?'
"ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் போயிடுமோ டாக்டர்..."
"கவலைப்படாதீங்க... மாதக் கணக்கிலே சாப்பிட்டாத்தான் கிட்னி கோளாறு வரும்..."
"அப்புறம் டாக்டர்... இந்தியா டுடேயிலேயோ , ரீடர்ஸ் டைஜன்டிலேயோ ஒரு கட்டுரை படிச்சேன்... மத்திய தரக் குடும்பங்கள்ல அங்கேயும் இங்கேயுமா சில கணவன்மாரால முடியலையாமே... நிசமாவா டாக்டர்...”
"அநியாயமா நிசந்தான்..."
"இந்த ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் டாக்டர்..."
"பெரும்பாலும் மனம்தான் காரணம்... கணவனுக்கு மனைவிகிட்டே உள்ளூர வெறுப்பு இருந்தால், அவனால முடியாது... கள்ளக் காதலியோட பயந்து பயந்து போனால், தேறாது... இப்படிப் பல காரணம்... இப்ப எனக்கு அவசர வேலை..... மதுரைக்கு வாங்க.... சாவகாசமா பேசலாம். நானிருக்கேன் கவலைப்படாதீங்க..."
கிருஷ்ணனின் கஸின் பிரதர், ஒரு கேஸ் கிடைத்த திருப்தியோடு போய்விட்டார். மனோகர், அவரிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று மருவினான். ஆனால், இப்போது அலுவலகமே சங்கரியாகிவிடும். என்றாலும், அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல். அவன் பிரச்சினை ஆண்மைக் குறைவு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். சங்கரி நாட்டுப்புறத் தோற்றம் கொண்டவள். பழக்க வழக்கமும் அப்படித்தான். பெண் என்ற நினைப்பற்று ஆண்களை இடிப்பது போல் நின்று பேசுகிறவள். அப்படியானால், அவளிடம் முடியாதது, இந்தக் கங்காவிடம் முடிந்திருக்க வேண்டுமே? முடிந்திருக்கும். ஆனால் பயம் அந்தஸ்தைப் பற்றிய பயம் அந்தஸ்த்துப் பேதம் பற்றிய பயம்
மனோகர், தன்னை மறக்க அலுவலகப் பைல்களை அழுத்தம் திருத்தமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று தள்ளுகதவு சத்தம் போட்டது. அவன் எரிச்சலோடு பார்த்துவிட்டு, பிறகு எழுந்து நின்றான். வந்தவள் நீலம் கவுல் - மிஸ் நீலம். வெள்ளையான கொள்ளை அழகு... பிடரிக்குக் கீழே போகாத பாப் முடி... மஞ்சள் கட் சோளி. வெளிப்படையாய்த் தெரிந்த தோள்களுக்கு இடையே அந்தச் சோளி, அவள் கழுத்துக்கு தங்க உறையாய் மின்னியது. கோவில் மாட்டுத் திமில்கள் மாதிரி உருண்டு திரண்ட புஜங்கள். ஈரப்பசையான உதடுகள். வசீகரிக்கும் சென்ட் வாசனை.
மிசௌரிப் பயிற்சியில் அவள், இவனோட பேட்ச் மேட் சில ஐ ஏ எஸ் டிரெயினிகள் இவள் பின்னால் லோ லோ' என்று அலைந்தாலும் இவனைச்சுற்றி வட்டமிட்டவள்... ஒரு தடவை என்னைக் கட்டிக்கிறியா?' என்று கேட்டவள், " இந்தக் காலத்தில் பெண் அதிகாரிகள் ஒரு நல்ல கணவனையே விரும்புகிறார்கள்... மொழியோ, இனமோ முக்கியமல்ல.. ஒன்னை எனக்குப் பிடித்திருக்கு... நீ தேகக் கட்டுள்ளவன்... ஒழுக்கமானவன்... எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவன்... கட்டிக்கோ..." என்று மன்றாடியவள் இவன்தான் பயந்து போனான்….
அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிடக்கூடாதே என்று அச்சப் பட்டான் தட்டிக் கழித்தான். நல்ல காலமோ கெட்ட காலமோ... இவளுக்கும் சென்னையிலேயே வேலை.
உள்ளே வந்த வேகத்திலேயே, மிஸ். நீலம், ஒரு போடு போட்டாள்.
"ஏம்பா... ஒன்னோட டிரெயினிங்குல ஒன்னத்தான் பெஸ்ட் டிரெயினின்னு தேர்ந்தெடுத்தாங்களாம்... எங்கிட்ட ஏன் சொல்லலே....? ஒய்ப் கிட்டயாவது கிஸ் அடிச்சு சொன்னியா....? இன்னிக்கு நான் ஒன்ன விடப்போறதா இல்லை... இதுக்கு நீ எனக்கு பார்டி கொடுக்கணும்... இல்லாட்டி நான் கொடுக்கணும்... நைட்ல என் பிளாட்ல வச்சுக்கலாமா... ஏன் அப்படிப் போக்கிரித்தனமாக பார்க்கிறே...”
மனோகர் , அவள் நெஞ்சை ஊடுருவி, அவள் மனதை தரிசித்தான். தோழனாய், காதலனாய் வார்த்தெடுத்த மனக்காரி... அழகுக்கு அழகு ... ஆசைக்கு ஆசை... அந்தஸ்துக்கு அந்தஸ்து. இவளை விட உற்ற தோழி யாரும் இருக்க முடியாது...
"ஓக்கே நீலம்... இன்னைக்கு நைட்ல உன் பிளாட்தான் என் வீடு"
"திருடா.... திருடா.."
மிஸ் நீலம், மேஜையில் அப்படியே படிந்து அவன் கழுத்தில் இரு கரங்களை வளைத்துப் போட்டாள். கதவு மீண்டும் சத்தம் போட்டதும், பால்குடிக்கத் தெரியாத பூனையாய் நாற்காலியில் பம்மி உட்கார்ந்தாள்.
-------
அத்தியாயம் 8
மின்சார விளக்குகளில் மினுமினுத்த மையிருட்டு தயிரின் தெளிந்த நீர் போன்ற ஆகாய வெளிச்சம். இரவின் பிறப்பா அல்லது இறப்பா என்று கண்டறிய முடியாத வேளை. விடியல் பிரசவத்தின் இயற்கை வெளிப்பாடுகளான குருவிச் சத்தமோ கோழிச்சத்தமோ கேட்கவில்லை. ஆனாலும் சிசேரியன் ஆப்பரேஷன் போல், இருளின் வெளிப்பாடுகள் தோன்றின. மாநகரப் பேருந்துகள் வெறுமையாக நகர்ந்தன. வைக்கப்போர், செங்கல், இரும்பு டப்பா லாரிகள் மாமூலாகப் போகாமல் மைனர் நடை போட்டன. மோட்டார் பைக்குகளிலும் ஸ்வட்டர்களிலும் பெண்கள் தலை முக்காடு களோடும், ஆண்களில் சிலர் சரிந்து வைத்த தொப்பிகளோடும் உட்கார்ந்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.
மனோகர், கரங்களைத் தலைக்கு முக்காடாக்கி நடந்தான். சிறிது தொலைவில் நாய்கள் குலைக்கும் சத்தம் மட்டும் கேட்கவில்லை யானால், தொடர்ந்து நடந்திருப்பான். தெரு நாய்களுக்குப் பயந்து, நான்கு பக்கமும் பார்த்தான் நல்ல வேளையாக பேருந்து நிழல்குடை அருகிலேயே இருந்தது. அதன் முன்பக்கமும் பின்பக்கமும் பிளாட்பார பிரஜைகள் மூட்டைகளாய் வளைந்து கிடந்தார்கள் அப்பன், பிள்ளை, மனைவி என்று பூஜ்யமாய் வட்டமிட்டு படுத்து இருந்தார்கள்.
மனோகர், அந்த நிழல் குடைக்கு வந்து அதன் இரும்பு தூணில் பின்பக்கமாய் கைசுற்றிச் சாய்ந்தான். அவ்வப்போது ஒரு காலை இன்னொரு காலால் பின்னிக் கொண்டான். நடந்ததை நினைக்க மனம் மறுத்தது. ஏதோ ஒரு மாயப் பேய் உருவம், அவனை உச்சி முதல் பாதம் வரை ஆக்கிரமித்து நெஞ்சைக் கோர நகங்களால் கீறியது. தொண்டையை அசுரப் பற்களால் கடித்தது. உலகின் அத்தனை பளுவும் தலையில் ஏறி அதைத் தாறு மாறாய் ஆடச் செய்தது. இப்படி நடக்குமா... நடக்குமா என்று மனம் அவனைக் கேட்டது. 'அவன்' மனதைக் கேட்டான். தொண்டைக்குள் ஒரு தேள் கண்களில் நெருப்புக் கதிர் வீச்சு மூளைக்குள் ஈட்டி முனைகள். வாய்க்குள் அரைப் பைத்தியமானது போல் முணு முணுப்பு.
நீலம் குடிவெறியில் தான் அப்படிப் பேசினாள் என்று ஒரே ஒரு சலுகையைத் தான் அவளுக்குக் கொடுக்க முடியும். மற்றபடி, ஆண்களைப் பிடித்துத் தின்னும் ராட்சசியாக நடந்து கொண்டது போலத்தான், அவனுக்குத் தோன்றியது. அவள் குடிக்கு கம்பெனி கொடுக்கவில்லை என்றதும், உதவாக்கரை' என்று திட்டியது கூட நட்புரிமைதான். முன்னாலேயே சேலை, பாவாடை சகிதங்களை அவிழ்த்துப் போட்டுவிட்டு கண்ணாடி கவுனை மாட்டிக் கொண்டது கூட காதலிக்கிறவள் என்ற முறையில் அதை ஒரு நெருக்கமாக ஒப்புக் கொள்ளலாம். அவன் உணவுக் கவளங்களை வாயில் ஊட்டி விட்டது, தாய் கூடக்காட்டாத வாஞ்சை. இவன் குழந்தையாகி, அவள் விரல்களை கடித்ததும், அவள், உடனே அவனை மடியில் போட்டு பஞ்சாபி மொழியில் தாலாட்டுப் பாடியதும், சங்கரியிடம் கிடைக்காத இன்பநேயம்.
அதேசமயம், படுக்கை அறையின் நான்கு சுவர்களிலும் தொங்கிய ஓவியங்கள், அதிகப்படியானவை மட்டுமல்ல அசிங்க மானவையும் கூட. சில ராஜஸ்தானிய அந்தப்புர விளையாட்டுப் படங்களாம். அந்தரங்கம் பகிரங்கப்படுத்தப்பட்ட பச்சையான விளையாட்டுக்கள். ஆடு மாடுகள் கூடச் செய்யாத காதல் களியாட்டங்கள்.
இந்த வகைப் படங்களை பார்க்க மறுத்து, அவன் தலை குனிந்தபோது, அந்தத் தலையை அவள் நிமிர்த்தியது கூட தண்டனைக்குரியது அல்ல. ஆனால், அத்தனை படங்களையும், நகலாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவள் வற்புறுத்தியது, அதிகப் பிரசங்கித்தனம். ஆனாலும், திட்டவட்டமாக மறுத்தவனுக்கு, அவள் விட்டுக் கொடுத்தது, அவளது பெருந்தன்மை.
முக்கால் இரவு வரை அந்தப் பெருந்தன்மையைக் காட்டத்தான் செய்தாள். முதல் ரவுண்டு இப்படித்தான் இருக்குமென்று அவனைத் திடப் படுத்தினாள். இரண்டாவது ரவுண்டும் இழுபறி ஆனபோது தூங்கிட்டு பார்ப்போம் என்று சொன்னவளும் அவள் தான் அவளை எழுப்பி விட்டது தப்பாய்ப் போயிற்று. மேஜைக்குத் தாவி அவனுக்காகவும் வாங்கி வைத்திருந்த அந்த திரவத்தை, அப்படியே விழுங்கிவிட்டு தாறுமாறாக ஆடினாள். இவன் பெண்ணாகவும் அவள் ஆணாகவும் மாற்றங் கொண்டது போன்ற நிலைமை. மூன்றாவது சுற்றும் முதலிரண்டு சுற்றுக்களானபோது, அவள் இப்படியா நாக் அவுட் செய்வது. "ஓடிப் போ பொட்டைப் பயலே - நல்ல வேளை... நீ என்னைக் கட்டிக்கலே.... கட்டியிருந்தே, நானே உன்னைத் துப்பாக்கியாலே சுட்டிருப்பேன்." என்றாள். இத்தோடவாவது அவள் விட்டிருக்கலாம். விடவில்லையே. "ஒன் பெண்டாட்டிய எவனும் இழுத்துட்டுப் போகும் முன்னால ஓடுடா.... நீ அவளுக்குச் செய்யத் தவறுவது கொடுமைடா... ஆந்திரா ஹைகோர்டுல இதுக்குன்னே ஒரு ஜட்ஜ்மென்ட் வந்ததுடா" என்றாள். பிறகு பஞ்சாபி மொழியில் புலம்பினாள். அவை திட்டு வார்த்தைகள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
மனோகர், உள்ளமும் உடலும் அசைவற்றுப்போக நின்ற கோலத்திலேயே நின்றான். அந்த பேருந்து நிலைய தூண்களில் ஒன்றை, கட்டியபடியே தூங்கிவிட்டான்.
இதற்குள் மனித அரவங்கள் வெளிப்பட்டன. ஆவின் வேன் அலறியது. பக்கத்துப் பால் பூத்தில் வேலைக்காரப் பெண்களின் பிலாக்கணங்கள். சிறுவர்களின் பெரியமனித தோரணையான பேச்சுக்கள். அந்த நிழல் குடையைச் சுற்றியும் கடைக் கூடார பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தவர்கள், அசைந்து கொடுத்தார்கள். பொக்கிஷங்களான மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றனவா என்று படுத்தபடியே தலையைத் தூக்கியவர்கள், டப்பாக்களில் தண்ணீர் நிரப்பி அவற்றைத் தூக்கிக் கொண்டு நடந்தவர்கள், சேலைகளையே போர்வையாக்கிப் படுத்துவிட்டு அப்போது, போர்வைகளையே சேலையாக்கிக் கொண்டிருந்த பெண்கள், கடைகளின் படிக்கட்டுகளில் திட்டு வாங்கிய நோயாளிகள், சமையலறையான மூன்றுகல் அடுப்புக்களை மூலையோரமாய்க் கொண்டு போன முதியவர்கள்.
எவரோ ஒருத்தர் மனோகரை அதட்டலாகக் கேட்டார். சுவர் ஓரம் கிடந்த பிளாஸ்டிக் பானையை கொண்டுவந்து, முகத்திற்கு சதக் சதக்' என சத்தமிட நீரடித்தபடியே, "ஏரப்பா நீ.. உனக்கு இங்க என்ன வேலை...'' என்று அதட்டலாய்க் கேட்டார் பிறகு ''பஸ்ஸுக்கா நிற்கே...'' என்று அவனுக்கு ஒரு பதிலையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
தூங்கிப் போன மனோகர், கண் விழித்தான். வினாடி நேரம் நிர்மலமான மனதில், இரவு நிகழ்ச்சிகள் நினைவுகளாய்ப் பீறிட்டன. பழைய நினைவுகளையும் இழுத்து வந்தன. வெற்றுக் குடத்தை ஆற்றுப் பிரவாகத்தில் அப்படியே முக்கிய நிலை. நீரும் ஏறவில்லை .... குடமும் நிரம்பவில்லை .... அவன் பின் பக்கமாய்த் திரும்பினான். ஒரு இளம் பெண் பாவாடை மேல் ஒரு படுத்தாத் துணியை தாவணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். முந்தானை பரவாத முன் பக்கம். தற்செயலாய்ப் பார்த்த மனோகர் அப்படிப் பார்ப்பதையே ஒரு செயலாக்கினான். மனதில் இச்சை வந்ததோ இல்லையோ, அவன் மனப்பாரத்திற்கு அவள் நெம்புகோலானாள். இதற்குள் அந்தப் பெண் சீறினாள். "யோவ். இதுக்கு முன்னாடி நீ பொம்மனாட்டிங்களைப் பார்த்ததே இல்லியா. கஸ்மாலம்..." என்று கத்தினாள். அவள் போட்டக் கூச்சலில், மிச்சம் மீதியாய் படுத்திருந்தவர்கள் எழுந்தார்கள்; அவனை நெருங்கினார்கள்.
மனோகர், அங்கிருந்து நழுவி ஓடாக்குறையாக நடந்தான் பயத்தோடு திரும்பிப் பார்த்தான். எவரும் அவனை விரட்டுவது போல் பின் தொடரவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஆயிரத்தைக் கண்டவர்கள் போல் அத்தோடு விட்டு விட்டார்கள். மனோகருக்குத்தான் மனம் கேட்கவில்லை. கொளுத்தும் வெயிலிலும் கிளுகிளுப்புச் சுகம் கொடுக்கும் குளிர்சாதன அறையும், மணி அடித்தால் மண்டியிடுவதுபோல் அலுவலர்கள் வருவார்கள். அலுவலர்களும் இன்டர்காமில் பேசினால், ஆயிரம் குழைவுகளோடு எவளாவது ஒருத்தி வருவாள். ஆனால், இப்போதைய நிலை....
ஒருத்தியிடம் பேடி..... இன்னொருத்தியிடம் பொம்பளைக் கள்ளனாய்... இது என்ன ரெட்டை வேடம்...? இதில் எது வேடம்...? எது மூலம்....? இதற்கெல்லாம் யார் காரணம்... சங்கரி... சங்கரியே... அவள் மட்டும் அழகாயிருந்து, பிற ஆண்களிடம் அளவோடு பழகி... தன்னிடம் பெண்மை குலுங்க நடந்திருந்தால்... இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீலம் நேரடியாய்ச் சொன்னதை சங்கரி மறைமுகமாய்ச் சொன்னாள். எவனயாவது இழுத்துட்டுப் போவாளாமே... போகட்டும்... அதைப் பார்க்க இருக்கக் கூடாது. செத்துப் போகணும்... தற்கொலையாய் உடம்பைச் சிதைக்கணும்...
மனோகர், நடுச்சாலையில் நடந்தான். கிறீச்சிட்டு நின்ற பல்லவனுக்குள் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் ஜனநாயகக் கூட்டணி அமைத்து இவனைத் திட்டினார்கள் காலையிலேயே குடிச்சிட்டு ஆடுறியே... நீ மனுஷனாடா...?
மனோகர், குடிகாரனாய் நடந்தான். எதிரே தென்படும் ஆட்டோக்களில் ஒன்றை நிறுத்தி வீட்டுக்குப் போகலாம் என்ற சுரணை கூட இல்லை. அந்த வீட்டின் நினைவு கூட இல்லை. வீடற்றவனாய், நாடற்றவனாய், தனக்குத்தானே அற்றுப் போனவனாய் அந்தச் சாலையில் நடந்தான். எவளோ ஒருத்தி முன்னால் போனாள். பின்பக்கத்தை வைத்து அனுமானிக்க முடியவில்லை ! அவனுக்குள் ஒரு வேகம். மனம் அவளைச் சுமைதாங்கியாய்ப் பார்த்ததோ என்னமோ... அவளுக்கு இணையாக நடந்தான். அவளை, இணையாய்ப் பார்த்தான் மின்னும் கருப்பி... காதுகளைப் பாதி மூடும் சுருள் சுருளான தலைமுடி.... அவளும் அவன் பக்கத்திலேயே நடந்தாள். இவன், இன்னும் சூரியனே உதிக்கலே... இப்பவே இப்படி எரியுது...' என்று தன் பாட்டுக்குச்
சொல்வது போல் சொன்னபோது, அவள் ஏறிட்டுப் பார்த்தாள்... காறித்துப்பினாள்.
மனோகர் , யாரையோ தேடுவது போல் அங்கும் இங்குமாய்ப் பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்தான் சாலையின் மறுபக்கம் அவனது நண்பன், நடந்து கொண்டிருந்தான் மிடுக்கான நடை இவனோடு மிசௌரியில் குப்பை கொட்டிய ஐ பி எஸ் இப்போது எஸ்பி. இவனை ரொம்பப் பிடிக்கும் டா' போட்டுத்தான் பேசிக் கொள்வார்கள். அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், ராமசாமிக்கு விலங்கு..... அம்மாவுக்கு கொண்டாட்டம். அக்காவுக்குத் துக்கக் குறைவு....
அந்த ஐ.பி.எஸ் நண்பனிடம் அக்கா சந்திக்கும் அநியாயமான அடாவடியை சொல்வதற்காக அவன் சாலையின் மறுபக்கம் போகப் போனான். அதற்குள் இன்னொருத்தி அவள் பார்த்த விதமே பன்னீர் தெளிப்பது போல் இருந்தது .... அவளை முண்டியடித்து நடந்து, முதுகில் முட்டப் போவது போல் தொடர்ந்து, அவளுக்கு முன்னால் நடந்து, திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவள், தனக்கு இணையாக வரும் வரை நின்றான். இணையாகவே நடந்தான். குரலைக் கனைத்தான் செருமினான். அவளுக்குச் செய்தி கிடைத்தது.... பதில் செய்தி கொடுத்தாள் 'ஏண்டா சோமாறி... கூடை வச்சுருக்குற பொண்ணுன்னா கூட வந்துருவான்னு அர்த்தமா... அதோ சைக்கிள்ல வர்றார். நீ ஆம்பளையா இருந்தா நில்லு.... நில்லுடா.'
மனோகர், நிசமாகவே ஓடினான் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் அலறினான். திரும்பிப் பார்த்தால், அவளைச் சுற்றி ஒரு சின்னக் கூட்டம். பக்கத்தில் சைக்கிள்... மனோகர் பதறியடித்து ஓடினான் சந்து பொந்து இல்லாத நெடுஞ்சாலை ஒளியக் கூட இடமில்லாத பெரிய பெரிய கட்டிடங்கள்.... கூர்க்காக்கள்.... எப்படியோ ஒரு ஆட்டோவை நிறுத்து என்று சொல்லாமலேயே, அதற்குள் துள்ளிக் குதித்தான்.
மனோகர், தன்னைத்தானே கூறு போட்டுப் பார்த்தான் அவன் செயல்பாடு அவனுக்கே அவமானமாகத் தெரிந்தது. இந்தப் பொம்பளைப் பொறுக்கித்தனம் எப்படி வருகிறது? எவள் கூப்பிட்டாலும், இவனால் இயலாது அப்போதைக்குப் பையில் பணமோ, உடம்பில் வீரியமோ இல்லை அப்படியும் ஏன் இப்படிப் பின் தொடர வேண்டும். ஊமையாய் அழும் மனம் அந்த ஒரு நிமிட இடைவேளையில் களியாட்டம் போடுகிறதா ? பில்லி சூன்யம் என்கிறார்களே, அப்படி யாராவது செய்திருப்பார்களோ? ராசியில்லாத சங்கரி வீட்டுக்கு வந்த வேளையா?
வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்த சொர்ணம்மா, ஆட்டோவிலிருந்து இறங்கிய மனோகரைப் பார்த்து தலையில் அடித்தபடியே ஓடினாள் காந்தாமணி ஓடிப் போய் தம்பி என்று சொன்னபடியே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விம்மினாள். திண்ணையில் இருந்து முற்றத்திற்குத் தாவிய சங்கரி, மாமியார் போட்ட கூச்சலில் திகிலடைந்து நின்றாள்
"அடே என் ராசா எங்கேடா போனே? ராத்திரி முழுசும் டெலி போன் மேலே டெலிபோனா போட்டோமேடா. காலம் இருக்கிற இருப்புல என்ன எல்லாமோ நினைச்சோமடா... இந்தச் சண்டாளி ஒன்ன என்னடா பண்ணினா ? இப்பவே இங்கேயே சொல்லுடா.. இந்த வீட்ல இந்தப் பேயாள மட்டும்தானா இருக்காள் ? நா இல்லி யா.... அக்கா இல்லியா... தெய்வமே... தெய்வமே... செத்துப் போன தெய்வமே. ஓடுற பாம்பை பிடிக்கிறது மாதிரி இருந்த என் பிள்ளை .. இந்தச் சண்டாளி வந்த பிறகு. பேயறைஞ்சது மாதிரி ஆயிட்டானே... ஏண்டா அப்படிப் பார்க்கே.. எனக்கு பயமா இருக்குடா.."
சங்கரி குன்றிப் போனாள். கால்கள் வளைந்து கொண்டிருந்தன. தலையும் கழுத்தும் சுருங்கிக் கொண்டிருந்தன. அம்மாவை அதட்டும் அண்ணி கூட, மவுனச் சம்மதமாய் நின்றாள். கொடுமையிலும் கொடுமையாகக் கட்டிய கணவன் பேசாமல் நின்றான். இதற்குள், தெருவோரம் சின்னக் கூட்டம். பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள், அவற்றை இறக்கியபடியே, ஓடி வந்தார்கள். எதிர்வீட்டு மொட்டை மாடியில் நின்ற உமாவும், அவள் மாமியாரும், நெருங்கிய தோழிகளாய் நின்றார்கள். இந்திரன் மட்டும் கீழே வந்தான். எதுவும் நடக்காதது போல், மனோகரை நெருங்கினான்.
என்ன ஸார் இப்படிப் பண்ணிட்டீங்க...? ஒரு டெலிபோனாவது செய்யக் கூடாதா? ஒங்க ஒய்பும், ஒங்க அக்காவும், எங்க வீட்டுக்கு வந்து அழுத அழுகையில் எங்க உமா இன்னும் அழுதுகிட்டே இருக்காள்... போலீஸ்ல என்னை புகார் செய்யச் சொன்னாங்க. நான் தான் இன்னைக்குக் காலை வரை பொறுத்துக்கச் சொன்னேன்... ராத்திரி என்னசார் நடந்தது..."
மனோகர், இந்திரனை, அகலிகையின் ரிஷிக் கணவன் பார்த்தது போலவே பார்த்தான். 'மானங்கெட்ட பய, வலியப் பேசுறான்... எனக்காகவா பேசுறான்.... சங்கரி எப்படி அங்கே போகலாம் ? நான் ஒரு நாள் தலை மறைஞ்சதுக்கே இப்படின்னா... ஒரேயடியா மறைந்தால்..... இந்த அக்காவுக்கு புத்தி எங்கே போயிட்டு...? அவள் சூதில்லாம போயிருப்பாள். இந்த சங்கரிதான், இதைச் சாக்காக வைத்துப் போயிருப்பாள்.
மனோகர், இந்திரனுக்குப் பதில் சொல்லாமல், சங்கரியை அதட்டலாகப் பார்த்தான். அவசரப் பிரகடனச் சட்டத்தை வெளியிட்டான்... சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல. தீர்ப்பின் அடிப்படையிலான சட்டப் பிரகடனம்.
"ஏய்... சங்கரி... ஒண்ணு உள்ள போ... இல்லைன்னா வெளிலே போ இப்படி மானத்த வாங்கிட்டு நிற்காதே..."
சங்கரி, அதிர்ந்து திரும்பினாள். கூட்டம் மட்டும் இல்லை யானால், அவனிடம் நியாயம் கேட்டிருப்பாள். ஆனாலும், அவன் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லுகிறான் என்பது புரியவில்லை. அந்தக் கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க அவளை, அவமானம் பிடுங்கித் தின்றது. மாமியார்க்காரி வேறு, அண்ணியின் கன்னத்துக்கு அருகே கையைக் கொண்டு போய், 'பெண்ணாடி பார்த்தே... சீமையில் இல்லாத பொண்ணு...' என்று கத்திக் கொண்டிருந்தாள்.
சங்கரி, சூனியப்பட்டு நின்றாள். பிறகு வாயில் முந்தானை முனையைச் சுருட்டிப் பந்தாய்த் திணித்தபடியே பின்னோக்கி ஓடினாள். படி நோக்கிப் பாய்ந்தாள். கட்டிலில் விழாமல், தரையில் வீழ்ந்தாள். வீட்டின் நினைப்பு கேளாமலே வந்தது. அப்பா, அவளைத் தாயாகப் பாவித்தார். அம்மாவோ, பேத்தி போல் செல்லம் கொடுத்தாள். என்ன கேட்டாலும் கிடைக்கும். எங்கே வேண்டுமானாலும் போகலாம். இவள் தான் கேட்டதில்லை.... போனதில்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தத்தம் பெண்களை சங்கரி இருக்காபாரு, நீயும் இருக்கியே பாரு என்பார்கள். ஆனால், இவள் சமயம் பார்த்து அந்தப் பெண்களை வீட்டுக்குக் கூட்டி வந்து, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஆற்றுப்படுத்துவாள். அந்தப் பெண்களும், அவளிடம் பகைமை காட்டியதில்லை. கல்லூரியில், அவளைப் பார்த்து சில மாணவர்கள் கிண்டலடித்தது உண்மைதான். காரைக்கால் அம்மையாராம்.... அன்னை தெரேஸாவாம்... இவளும் பதிலுக்கு அவர்களை நெருங்கி, அந்த அம்மையார்கள் போலவே ஆசீர்வாதித்து விட்டுச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு , சிரிப்பாய்ச் சிரிக்கப்படவில்லை. அந்தக் கிண்டல், நையாண்டியாய் மாறியதில்லை. தோழிகள் கூட, எங்களை இந்தப் பாடு படுத்தறானுக... உன்னை ஏண்டி விட்டு வைத்திருக்காங்க.... சொல்லுடா...' என்று சுவைபடக் கேட்பார்கள். இவள் சிரிப்பாள். அந்தச் சிரிப்பு, அவர்களையும் தொற்றிக் கொள்ளும்.
இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் இப்படிப்பட்டச் சுடு சொற்களைக் கேட்கிறாள். தெரு அவமானத்திற்கு உட்படுத்தப் படுகிறாள். பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவோமா... நீரிழிவு அப்பாவுக்கு கிட்னிதான் பெயிலாகும். அம்மா, அழுதே செத்துப் போவாள்... இன்று வரை தன்னை வியக்கும் ஊர், வாழாவெட்டி' என்று வம்புப் பேச்சு பேசலாம்.... கால வெளிப்பாட்டை அதன் போக்கிலேயே விட்டு விட வேண்டியது தான்...
கதவு தட்டப்பட்டது கேட்டு, அவள் தரையிலிருந்து கட்டிலில் உட்கார்ந்தாள் எதிர் பார்த்ததற்கு மாறாக, மாமியார் வாசல் பக்கம் நின்றாள்.
"கீழே குளிச்சிட்டு இருக்கான்... பேன்ட் சட்டையை வாங்கிட்டு வரச் சொன்னான்."
"அவரையே வந்து வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க..."
"என்ன அதிசயமோ தெரியவில்லை - ஒரு வேளை இவள் கண்களில் தெரிந்த கடுமையோ - சொர்ணம்மா பேசாமல் போய் விட்டாள். ஆனாலும், 'என் பிள்ளைய பழையடியும் துரத்துவாள் போலிருக்கே' என்ற வார்த்தைகள் மட்டும் கேட்டன.
சங்கரி, அலமாறியிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, அவன் கண்ணில் படும்படி மேஜையில் வைத்தாள். அவனை அப்படிப் பேசியதிலிருந்து அவள் பட்டபாடு அவளுக்குத்தான் தெரியும்.... 'துரத்திட்டேனே துரத்திட்டேனே' என்று இதே அறைக்குள் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவள். அவன், நேற்றிரவு வராத போது, ஒரு நிமிடம் கூட இமை மூடவில்லை . அவன் வந்ததும், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோர நினைத்தாள். 'நீங்கள் பக்கத்தில் இருந்தாலே போதும்... எனக்கு எதுவுமே வேண்டாம்.' என்று சொல்லத் துடித்தாள். ஆனால், அம்மாக்காரி அப்படிப் பேசிய போது, அதை அங்கீகரிப்பதுபோல் நின்றவரிடம் என்ன பேச்சு.... எல்லாரும் இளக் காரமாய் நினைக்கும்படி, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக உள்ளே போகச் சொன்னவரிடம், என்ன ஒட்டு....? என்ன உறவு?
சங்கரி, கதியற்று, தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தபோது, மனோகர் ஈரத் துண்டைத் தலையில் துடைத்தபடியே வந்தான். அவள் ஒருத்தி, அங்கே இருக்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, பீரோவைத் திறந்து, நீலப் பேண்டையும், மஞ்சள் சொக்காவையும் தேடினான். அந்தத் தேடலில், அவள் சேலை பாவாடைகளைக் கீழே சிதறடித்தான் கண்ணாடி முன்னாடி ஒப்புக்குத் தலை வாரினான். மேஜையில் பட்ட காகித ஓலையை பார்த்துப் பிரித்தான். இவள் கெட்ட கேட்டுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்ல பாஸாயிட்டாளாம். இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே எந்த டிபார்ட்மென்ட்ல வேலைன்னு ஆர்டர் போடுவாங்களாம்.
மனோகர், காகிதத்தை கீழே வீசி அடித்துவிட்டு திரும்பிப் பாராமல் நடக்கப் போனான். இப்போது அவள் மனதிலும் ஒரு வீம்பு.
"நான் வேலையில் சேரப் போறேன்."
அவன் நின்ற இடத்தில் நின்றபடியே திரும்பினான். அவளுக்கு ஜீ.ஓ. போட்டான்.
"வேலையும் வேண்டாம்... கீலையும் வேண்டாம்... நான் ஒருத்தன் சம்பாதிக்குறதே போதும்."
"எனக்குப் பணம் முக்கியமில்லை ."
"லுக் சங்கரி! நீ வேலைக்குப் போகல. போகல்- போதுமா"
"எனக்கு அங்கேயாவது நிம்மதி கிடைக்கும்."
"என்னால முடியலைன்னு பழையபடியும் சொல்ல வர்ற ... அவ்வளவுதர்னே."
"அய்யோ ... நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே.... அந்த நினைப்பே இப்ப இல்லை... உங்க அம்மா படுத்தற பாட்டைத்தான் சொல்ல வந்தேன்"
"நீ எதைச் சொல்ல வந்தியோ... எனக்குக் கவலை இல்லை .... ஆனா ஒரு விஷயத்தை விளக்கி ஆகணும். மனைவிகிட்டே குறைகள் இருந்தால், அவள் புருஷனால முடியாதாம்.... முதல்ல உன்னை கண்ணாடிலே பாத்துக்கோ. உன் மனசை நீயா சோதித்துக்கோ... ஏன் முனங்குறே... முனங்கி முனங்கி என்னை முக்காடு போட வைக்காதே..... எதைச் சொல்ல வந்தாலும் வெளிப்படையாச் சொல்லு... சொல்றியா..... இல்லியா..''
"எங்கிட்ட எந்தக் குறையும் நீங்க கண்டு பிடிக்க முடியாது.. அப்படிக் கண்டு பிடித்திருந்தால் உங்களுக்கு என்னை நெருங்கவே மனசு வராது. ஆசையாத்தான் வாறீங்க. அப்புறமாத்தான் - சரி இப்ப இது ஒரு விவகாரமே இல்லை .... இப்ப விஷயம் என் வேலை சம்பந்தப்பட்டது...''
"போக முடியாது." "போய்த்தான் ஆகணும். போவேன்."
"அப்போ ... வேலையில் சேருறதா லெட்டர் எழுதிப்போடு... மிஸஸ்னு எழுதாம மிஸ்ஸுன்னு எழுதிப்போடு -. நம்ம ரெண்டு பேருக்குமே நிம்மதி ..”
மனோகர், வெளியேறிவிட்டான். சங்கரியையும் பிடிவாதம் பிடித்துக் கொண்டது....
---------------
அத்தியாயம் 9
சங்கரி, கண்ணுக்கு மையிடப் போனாள். ஆனாலும் மூக்கு வரை வந்த அந்த வட்டக் குப்பிளை ஒதுக்கி வைத்தாள். பவுடரைக் கூட ஒப்புக்குப் போடுவது போல் முகம் முழுக்க அப்பாமல், அங்கும் இங்குமாய் தடவிக் கொண்டாள். கவரிங் வளையல்களைக் கழட்டி விட்டு, பீரோவில் இருக்கும் தங்க வளையல்களைப் போட நினைத்து கண்ணாடி பீரோவின் டிராயரைத் திறக்கப் போனவள், அதை இருந்த இடத்திலேயே விட்டு வைத்தாள் . மனமோ அல்லது மனசாட்சியோ அறிவுறுத்தியதற்கு அவள் இணங்கினாள். அவள், போவது அலுவலகப் பணிக்குத்தானே தவிர, அழகுப் போட்டிக்கு அல்ல... அதோடு அவரை சவால் விட்டுப் போகவில்லை. இதனாலேயே அவன் பிறந்தநாளில் வாங்கிக் கொடுத்த வாயில் புடவையைக் கட்டிக் கொண்டாள். அவன் வரணும் வரணும் என்பது போல் மாடிப்படி முனைக்குப் போனாள். வரக்கூடாது என்பது போல் திரும்பி வந்தாள்
வேலைக்குப் போவது சம்பந்தமாக ஏற்பட்டத் தகராறுக்கு ஒரு மாத வயதாகிவிட்டது ஆனாலும் அது குழந்தையாய் வளராமல், கிழடாய்ச் சுருங்காமல் அப்படியே இருந்தது. இப்போது அவன் வருவதும் போவதும் அவளுக்கே தெரியாது. அரசங்காப் பயணமா... அல்லது ஒரு மாதிரிப் பேசிக் கொள்கிறார்களே... அப்படிப்பட்ட அலைச்சலா.. அவளும் அலட்டிக்க வில்லை... அவனைப் பொறுத்த அளவில், அவள் மறக்கவில்லை என்றாலும் மரத்துப் போனாள்.
அன்றைக்கு அவளை, உள்ளே போ. அல்லது வெளியே போ..' என்று சொன்ன கணவன், எப்போது வேண்டும் என்றாலும் வீட்டை விட்டுத் துரத்தலாம். துரத்துகிறானோ இல்லையோ.... மாமியாக்காரி துரத்த வைத்து விடுவாள். அண்ணி வேறு ஊருக்குப் போய் விட்டு இன்றுதான் திரும்பியிருக்காள். அவள் விவகாரம் முடிந்ததோ... முடியலையோ பழைய அண்ணியாக இருந்தால் இந்நேரம் இங்கு வந்திருப்பாள் அல்லது இவள், அங்கே போய் இருப்பாள். தாயும் மகனும் அண்ணி எழுதிய கடிதங்களைக் கண்ணில் காட்டியதில்லை அம்மா எழுதும் கடிதங்களைக் கூட பிரித்து, மீண்டும் சிநேகிதியான உமா மூலம் ரகசியமாய்ப் படித்து பழையபடி ஒட்டுவதாக உமாவின் மாமியார் சொன்னாள் இனிமேல் அம்மாவை அலுவலகத்திற்கே கடிதம் எழுதச் சொல்லலாம்.
சங்கரி, புறப்படப் போனாள் கணவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவதை நினைக்கும்போது, வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அவன் இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கடைசி நாள். அதோடு நல்ல நாள்..... அஷ்டமி, நவமி கழிந்த தசமி நாள்.... பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஆர்டர் வந்தது. அவனிடம் சொல்லியிருக்கலாம் சண்டைக்குப் பயந்தாள். சண்டை போடப் பயந்தாள். அதோடு முந்தா நாள் வரைக்கும் அப்படியா இப்படியா என்று அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை .
நேற்றுதான் சாஸ்திரிபவனுக்குச் சென்று, தான் வேலையில் சேருகிற அலுவலகத்தை தேடிப் பிடித்தாள். அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க நினைத்தாள். அரசாங்க அலுவலகம் என்றாலே அவளுக்குப் பயம். அந்தப் பயம் இப்போது பெருமிதமாக உருமாறினாலும், நேற்றுவரை பயம்தான். கல்லூரித் தமிழ் பேராசிரியர் ஒருவர் கலாட்டா செய்யும் மாணவனிடம் பார்த்து, கல்லூரி அருமையும் ஆசிரியர் அருமையும் நீங்க வேலையில சேர்ந்த பிறகுதான் தெரியும்..... நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள்... அரசாங்கம் கல்லூரி அல்ல.... அது அடிமைக் கூடம்... ஆபீஸர் ஆசிரியர் அல்ல. அவர் ஆண்டான். உங்கள் சகாக்கள் இந்த மாவணர்கள் அல்ல.. உங்கள் அனுகூலச் சத்ருக்கள்... இங்கே நான் நிற்கிறேன். நீங்கள் உட்காருகிறீர்கள்... அங்கே ஆபீஸர் உட்காருவார்... நீங்கள் நிற்பீர்கள்... எனவே, என்று பேராசிரியர் இழுத்தபோது, ஒருத்தன் அல்லது ஒருத்தி மூலம், 'நம்ம அய்யாவை கவர்மென்ட் ஸர்வீஸ்ல இருந்து எவனோ செமத்தியா அடிச்சுத் துரத்தியிருக்கிறான்' என்ற கமென்ட் கேட்டது. ஒரே சிரிப்பு.... ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார்.... .
இப்போது, சங்கரி அதே வகுப்பறையில் இருப்பது போல் சிரித்தாள். ஆனாலும், அவள் சேரப் போகும் அலுவலகம், ஆசிரியர் பயமுறுத்தியதுபோல் இல்லை தலைமை அதிகாரி, அவளைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டார். அடேயப்பா... ரெண்டு வருஷ வேகன்ஸிக்கு விமோசனம் வந்துவிட்டது' என்றார். பஸ்ஸரை அழுத்தி, அங்கு வேலை செய்கிறவர்களை வரவழைத்து, அறிமுகம் செய்து வைத்தார். ஆக மொத்தத்தில், ஒரு குடும்பப் பாங்கு சாஸ்திரி பவன் திடலில் இடைவேளையில் வீணையும் கையுமாக பக்திப் பாடல்களை இசைக்கும் பெண்கள். விதவிதமான மனிதர்கள்....
சங்கரிக்கு, தன் சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களுக்குச் சேவையாற்றப் போவதில் ஒரு பெருமிதம் சொந்தக்காலில் நிற்கப் போகும் கம்பீரம்.
இதற்குள், தெரு ஓரத்தில் கடாமுடாச் சத்தம். சங்கரி, இந்திரனுக்காக மூடிவைத்த பால்கனிக் கதவை திறந்தாள். அவன், தன்னை ஒரு மாதிரி பார்த்திருக்க முடியாது... அப்படிப் பார்த்திருந்தால் அண்ணியின் நிர்பந்தத்தில் வேண்டா வெறுப்பாய் அவன் வீட்டுக்குப் போனபோது, வசனம் பேசியிருப்பான் உஷாராயிருக்கலாம் அதுக்காக சந்தேகப்படக் கூடாது என்ன சத்தம்... குனிந்து பார்த்தாள்
மாமியார் முழங்கினாள். 'நீ ஒரு அற்பக் காய்கறிக்காரன் எனக்குப் பதில் சொல்லாம எப்படிடா போகலாம்... நான் என்ன நாயா.... குலைச்சா குலைக்கட்டுங்கிற மாதிரிப் போறே -'
"ஹலோ. உங்களைத்தான்..."
சங்கரி நிமிர்ந்தாள் எதிர் பால்கனியில் இந்திரன். அவன் பார்வை அண்ணியோடு போகும் போது பார்த்த பொதுப் பார்வையாக இல்லை. பொலிகிடா மாதிரி பல்லை இளித்தான். அவள் கண்களை உயர்த்தி கழுத்தையும் முகத்தையும் நிமிர்த்திய போது, அவன் ரகசியக் குரலில் கேட்டான்.
"உங்களுக்கு வேலை கிடைத்துட்டாமே. அதுக்காக உங்களை பாராட்டறதா... இல்லை நீங்க படுற பாட்டுக்கு அனுதாபப் படுறதான்னு புரியலே. நீங்க அன்றைக்கு மாமரத்துக்கு கீழே சொன்ன விபரத்தை உமா எங்கிட்டே சொன்னாள். பாவம் .."
சங்கரியின் கண்கள் உள்நோக்கிப் பாய்ந்து தொண்டைக்குள் போவது போல் இருந்தது. கை கால்கள் ஆடின. ஒரு நிமிடம்தான். கண்கள் உள்ளே ரத்தத்தில் மூழ்கி மீண்டும் விழிகளுக்குள் வந்தன. கால்களும் கைகளும் போராளியைப் போல் வைரப்பட்டன. அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் அதையே அவன் ஒரு அனுகூலமாக எடுத்துக் கொண்டு குழைந்தான்.
"அந்த விவகாரத்தில் போயிட்டுதுன்னா போயிட்டதுதான். குணப்படுத்த முடியாதாம்.. பாவம் உங்க பாடு.... ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க.. வேலை வேற கிடைச்சிட்டுது. அவங்க, உங்களை என்ன பண்ண முடியும்? குணப்படுத்த முடியாத கேஸை விட்டுடுறதுதான், பெட்டர்...”
சங்கரி, சங்காரம் செய்யப் போகிறவள் போல் அவனைப் பார்த்தாள். விசை கொண்ட வெடிகுண்டாய் வெடிப்பைக் காட்டாமல், இயல்பாகப் பேசுவதுபோல் பேசினாள்.
"முடியுமுன்னு சொல்றாங்களே"
இந்திரனுக்குள் ஆனந்தக் கூத்து. கணவனுக்குச் சாதகமாகப் பேசினாலும், ஒரு அந்தரங்க விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்... இனிமேல் உடல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான் பாக்கி. "எந்த லாட்ஜ் நல்ல லாட்ஜ்."
"நீங்க நினைக்கிறது மாதிரி முடியாது."
"முடியுமாம் சார்... ஒவ்வொருவருடைய பிரச்சினையும் ஒவ்வொரு விதமாம்... அவரோட பிரச்சினை என்னைப் பிடிக்காததாலே ஏற்பட்ட பிரச்சினையாம்... உங்க பொண்டாட்டிய அவருக்கு ரொம்ப பிடித்திருக்காம்... அவள் அனுப்பி வைத்தால், அவரோட பிரச்சனை தீர்ந்திடுமாம்... அனுப்பி வைக்கிறியாடா நாகரீகம் தெரியாத நாயே... கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்கள்டா... நான் மதுரைக்காரி.... இனி ஒரு தடவை வாலாட்டினே... ஒன் தலை, ஒன் கழுத்திலே இருக்காது... ஒன் பெண்டாட்டி என்கிட்ட சொன்னதெல்லாம், நான் ஒங்கிட்ட சொன்னால், நீ தூக்குப் போட்டுச் சாக வேண்டியிருக்கும்."
இந்திரன், நிற்குமிடமும், அந்த இடம் இருக்கும் வீடும், அந்த வீடு இருக்கும் தெருவும், அற்றுப்போய் நின்றான். சொர்ணம்மா விற்கு கேட்டிருக்குமோ என்ற பயம். உமா வந்து விடுவாளோ என்ற அச்சம். அவளைப்பார்த்து தலை கவிழ்ந்து கைகளை உயரத் தூக்கினான். சங்கரி அந்தக் கதவே உடைக்கப் போவது போல் ஒரே வீச்சாய் சாத்திவிட்டு அறைக்குள் திரும்பினாள். திரும்பி வந்த கதவை காலால் இடறினாள்.
அங்கே, அவளை எதிர்பார்த்து நிற்பது போல் மனோகர் நின்றான். பேடித்துப் பிரமித்து நின்றான். அவனைப் பார்த்த சங்கரிக்கு ஒரு ஆவேசம். குறைந்தது இவர் அந்தப் பழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், கூடிப் பேசலாம். இவருடைய பாராமுகம் தான், அந்தப் பயலைப் பார்க்கும் முகமாக்கி விட்டது. இவரோடு இணைந்து போயிருந்தால், அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வந்திருக்காது. அலுவலகத்திற்கு இவர் என்னைக் கூட்டிச் செல்வதே முறை. இல்லையானால் தாலிக் கயிறைப் பார்ப்பவர் களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். அதுவே இந்தப்பயலைப் போன்ற சிலரை உற்பத்தி செய்யலாம். இவர் என் கணவர். இவர் என்னோட வரவேண்டும்... வந்தாகவே வேண்டும்.
சங்கரி அவன் கைகளை இரண்டையும் ஒற்றை ஆக்கி தன் கைக்குள் பிடித்துக் கொண்டாள். இன்னொரு கையால் அவன் தோளை உலுக்கி, கத்தினாள்...
"இன்னைக்கு, நான் வேலையில் சேரப் போறேன். சாஸ்திரி பவன்ல... வேலை கிடைத்திருக்கு... நீங்க, என்னை பைக்ல கூட்டிட்டு போகணும்.... நீங்களே என்னை அங்கே வேலையில் சேர்க்கணும்... ஆபீஸ்ல இருந்து திரும்பும்போது என்னை பிக்அப் பண்ணணும்... ஒண்ணா போய் ஒண்ணா வரணும்... புறப்படுங்க..!”
அவள் உலுக்கிய உலுக்கலில், அவன் குலுங்காமல் நின்றான். எதிர்ப் பால்கனிக்காரனிடம், என்ன பேசினாள் என்பது கேட்கவில்லை. ஆனால், ஏதோ பேசினாள். என்னைப் பார்த்ததும் நடிக்கிறாள். அவன் கூட்டிக்கொண்டு போவதாக, இருந்த ரகசிய ஏற்பாட்டிற்கு, நான் பகிரங்கமான மாற்று ஆள்...
மனோகர், ஒரு முடிவுக்கு வந்தவன் போல், அவளை அதட்டாமலும், அன்பைக் கொட்டாமலும் கேட்டான். ஆர்டரைக் காட்டு..'
சங்கரி, வியந்து போனாள்; மகிழ்ந்து போனாள். ஆவேச உணர்வுகள் ஆனந்த உணர்வுகளுக்கு வழிவிடவில்லை. ஆனாலும் அவை அடங்கிப் போயின... கைப்பை இருக்கும் அலமாரிப்பக்கம் அசைந்தாடிப் போனாள். அந்தப் பையைக் கொண்டு வந்து, அதன் விலாவைக் கிழித்து, ஒரு காகிதத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டே அவனிடம் நீட்டினாள். அவன் தோளில் முகம் போட்டபடியே நின்றாள்.
மனோகர், அந்த காகிதத்தின் மடிப்பை நீக்கினான்... அதன் மேலும் கீழுமாய் கண்களைச் சுழற்றினான். அரைக்கணத்தில் அந்த அரசாங்க முத்திரைக் காகிதத்தை இரண்டாகக் கிழித்தான். அதைத் தடுக்கப் போனவளை ஒரே தள்ளாய்த் தள்ளி தரையில் போட்டுவிட்டு, கிழித்தவற்றைக் கிழித்தான். இரண்டை நாலாய், நாலை பதினாறாய்.... சுக்கு நூறாய் கிழித்தான். உள்ளங்கையில் பாதி அளவிற்குத் தேறிய அந்த காகிதச் சில்லுகளை, கீழே கிடந்தவளின் தலையில் போட்டான். முழக்கமிட்டான்.....
''ஒன்னை கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா... கூட்டிக் கொடுக்கச் சொல்றியா... பால்கனியில் கொஞ்சிக் குலாவினியே.... அந்தப் பயலைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்ல வேண்டியது தானே... சொல்லாமலா இருப்பே... இந்த வீட்ல நீ இனிமே ஒரு நொடி கூட, நீ, இருக்கக் கூடாது..."
சங்கரி, குப்பைத் தொட்டியாய் எழுந்தாள். கண்களைச் சரித்துப் பார்த்தாள். இரையை கழுகு பார்க்குமே... அப்படிப்பட்ட பார்வை. அவளுக்குள் பரிபாலனம் செய்த உள்ச்செல் நரம்புகளும் வெளிச் செல் நரம்புகளும் முரண்பட்டுச் செயல்படுவதுபோல் முகத்தைக் கோணலாக்கினாள். மூளையின் உடலாதிக் கத்தையும், மனோ
சு. சமுத்திரம் ஆதிக்கத்தையும், உள்ளுறுப்புகளும், வெளியுறுப்புகளும் கேள்வி கேட்பது போன்ற கோணல். சுழல்வதை காட்டாதது போல், சுழல்கின்ற பூமியாய், அவள் தன்னுள்ளே சுழன்றாலும், சுழலாதவள் போல் நின்றாள். மனோகர், ஏதேதோ பேசிக்கொண்டே போனான். அவள் காதில் விழவில்லை .
திடீரென்று, அவன் மீது பாய்ந்தாள். கராத்தேக்காரி மாதிரி ஒரே தாவாய் தாவி, அவனை வீழ்த்தினாள். அவன் தட்டுத் தடுமாறி எழுந்தபோது, அவன் தலை முடியை பிடித்து இழுத்தாள். அவன் திமிறி விடுபட்டபோது, அவன் சட்டையை இழுத்தாள். அந்தக் காகிதம் போல் சுக்கு நூறாய்க் கிழித்தாள். ைெகவிரல்கள் கம்பிகளாகின... கண்கள் தீக்கட்டிகளாகின... அவன் இந்த எதிர் பாராத தாக்குதலால் சுயத்தை இழந்தான். ஏய்....ஏய் என்று அங்கும் இங்குமாய் ஓடினான். அவள், தலையணையைத் தூக்கி அவன்மீது எறிந்தாள். கையிலிருந்த அவன் சட்டைக் கிழிசல்களை வீசினாள். டெலிபோனைத் தூக்கிக் கீழே போட்டாள்... ஒரு நாற்காலியைத் தூக்கி மல்லாக்கப் போட்டாள்... பீரோ கண்ணாடிக்கு முன்னால் போனாள். அவளது உருவம் அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ.... அந்தக் கண்ணாடிக்குள் அவன் உருவமும் தெரிந்ததோ என்னமோ... கண்ணாடியைக் கைகளால் குத்தினாள்.... குத்திக் குத்தி விரல்களுக்கு குருதி வண்ணம் கொடுத்தாள்... அவனையே குறிவைப்பது போல் ரத்தமும் கையுமாய் மீண்டும் பாய்ந்தாள். அப்போது....
சொர்ணம்மா , ஓடிவந்தாள். குய்யோ முறையோ என்று கத்தினாள்.
"அய்யோ - அய்யய்யோ என் பிள்ளையப் போட்டுக் கொல்றாளே நான் உள்ளங்கையிலே ஏந்தி வளர்த்த செல்ல மகனை கொல்லு கொல்லுன்னு கொல்றாளே... கிளியை வளர்த்து பூனை கையிலே ஒப்படைச்சிட்டேனே ஏய் விடுடி அவனை விடுடி என் பிள்ளையை."
சொர்ணம்மா, மருமகளை பிடிக்கவோ அடிக்கவோ , அவள் பக்கமாய் ஓடினாள். ஆனாலும் அவள் பார்த்த பார்வையில் பைசா நகரக்கோபுரம் போல் சாய்ந்து நின்றாள். இதற்குள் காந்தாமணி, ஓடி வந்தாள். காய்கறி வண்டிப் பையன் வந்தான். கட்டிடத் தொழிலாளர்கள், ஓடோடி வந்தார்கள். சொர்ணம்மா, எல்லோரிடமும் முறையிடுவதுபோல் கத்தினாள். 'அய்யோ எங்கேயும் நடக்காத ஒரு அநியாயம் இங்கே நடந்திட்டே"
காந்தாமணி, சங்கரியை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, தம்பியை மீட்டினாள். நாத்தனாரை ஒரு சுவரோடு சாத்தி, அவள் மார்புக்குக் குறுக்கே கையை அடைப்பாக்கிக் கொண்டு, தம்பியைப் பார்த்தாள். இடுப்புக்கு மேலே துணிச் சிதறல்களோடும், கிழிசல் பொத்தல்களோடும் ஆண் கவர்ச்சி ஆட்டக்காரன் போல் நின்ற மனோகர், மருவி மருவிச் சொன்னான்.
"வேலைக்குப் போகக் கூடாதுன்னேன். அதுக்கு இந்தப்பாடு படுத்துறாள். எத்தனை வருஷம் ஜெயிலில் இருந்தாலும் சரி. இவளை நான் விடப்போறதா இல்லை"
அவன் மாவீரனாய் மனைவி மீது பாயப் போனபோது, அக்காக்காரி இன்னொரு ஒற்றைக் கையால் அவனைப் பிடித்துக் கொண்டாள். அந்தச் சமயம் பார்த்து உமா ஓடிவந்தாள். லேசாய் அமைதிப்பட்டு நின்ற சங்கரி, அவளைப் பார்த்ததும் பதட்டமானாள்.
"முதல்ல இங்கிருந்து போடி போறியா? இல்லியாடி அடுத்துக் கெடுத்தவளே - நம்பிக்கைத் துரோகி - இந்த வீட்ல உனக்கென்னடி வேலை நான் சொன்னதுமாதிரி ஒன் புருஷன் அனுப்பி வைச்சானா?"
உமா, கைகளைப் பிசைந்து திரும்பி நடக்கப் போன போது, சொர்ணம்மா, அவளைப் பிடித்துக் கொண்டு, பதில் கத்துக் கத்தினாள்.
"இது என் வீடு. இவள், எனக்கு இன்னொரு மகள் மாதிரி... போகமாட்டாள்... என்னடி செய்வே... ஏய்.. உமா. நீ நில்லும்மா..."
உமா, நிற்கத்தான் செய்தாள். ஆனால், இந்திரன் ஓடிவந்து, அவள் கையைப் பிடித்து, நாயை இழுப்பது மாதிரி இழுத்துக் கொண்டு போனான். ஆனாலும், முன்னெச்சரிக்கையாய், சங்கரிக்கு முகத்தைக் காட்டாமல், படிகளுக்குள் உடம்பைப் பதுக்கிக் கொண்டு உமாவோடு ஓடிவிட்டான்.
இருவரையும் இரு கரங்களால் தடுத்து நின்ற காந்தாமணி, தம்பியை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாத்தனாரைப் பார்த்து... நியாயம் கேட்பது போல் கேட்டாள்....
"என் தம்பியால, அது முடியலைன்னு இந்த உமாகிட்ட கேவலமாப் பேசியிருக்கே.. நான், வலது காதில் வாங்கி இடது காதில் வச்சுட்டு இருக்கேன். நீயே சொல்லு... என் தம்பியைப் பேடின்னு பேசினது மட்டுமில்லாம, இப்போ அவன அடி அடின்னு அடிச்சிறிக்கிறியே. இது ஒரு பொம்பள செய்கிற காரியமா. "
மகள் சொன்னதை சொர்ணம்மா, உன்னிப்பாய்க் கேட்டாள். முதலில் அவளுக்குப் புரியவில்லை . புரியப் புரிய வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே அந்த அறையே அதிரும்படிக் கத்தினாள். மருமகள், முன்னால் விரல்களை நீட்டி மடக்கியபடியே பேசத் தெரிந்த மிருகமாய்க் கத்தினாள்....
"அடி சண்டாளி... என் மகனையாடி ஏலாதவன்னு சொன்னே - நீ மதம் பிடிச்சுத் திறிஞ்சா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்? இப்போ சொல்றதை நல்லாக் கேளுடி... ஒன் கண்ணு முன்னாலேயே, என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்துவச்சு, ஒரு வருஷத்துக்குள்ளே... என் பேரக் குழந்தையை நான் மடில வச்சுக் கொஞ்சலைன்னா... என் பேரு சொர்ணம்மா இல்லடி அடிப்பாவி என் பிள்ளையை எப்படிக் கேவலப்படுத்தியிருக்கா..... ராத்திரிலே என்ன பாடெல்லாம் படுத்தினாளோ - அடேய்... இன்னுமாடா நீ, இவள்கூட வாழணும்... இவளை ஒரேயடியாய் மிதிச்சுப் போடாம இப்படி அடிப்பட்டு நிக்கியே... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?"
காந்தாமணி, அம்மாவின் வாயைப் பொத்தினாள். தாயின் ஆவேசம் தனயனுக்கும் வந்துவிட்டது. இப்போது பசுப்போல் மலங்க மலங்கப் பார்த்தபடியே நின்ற சங்கரியின் மீது மனோகர் பாய்ந்தான். அவள் முடியைப் பிடித்து இழுத்தான். கால்களை இடறி வயிற்றைக் குத்துவதற்காக குதிகால்களைத் தூக்கி கைகளை ஓங்கினான்.
என்றாலும், சங்கரி அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. தொப்பென்று கீழே விழுந்தாள். பின்பக்கமாய் விழுந்து மல்லாக்கச் சாய்ந்தாள் வாயில் நுரை சோப்புக் குமிழ்களாய் நின்று நிதானித்து, பின்னர் திரிந்துபோன பாலாய் ஓடியது. கண்கள் இடுக்கிக் கொண்டன. கை கால்கள் வெட்டிக் கொண்டன.. வெட்டி வெட்டி ஒன்றை ஒன்று குத்திக் கொண்டன.
----------
அத்தியாயம் 10
மனோகர் திருவான்மியூர் பேருந்து வளாகத்திற்கு எதிரே, மாமல்லபுர பேருந்து நிறுத்தத்தில், கால்களைச் சுழற்றாமலே, கண்களைச் சுழற்றினான். அவன் நின்ற இடத்தை பேருந்துக் கூடாரம் என்று சொல்ல முடியாது. அவனைப்போல் கூடாரம் அற்றுப்போன ஒரு இடம். பாதிக்கிழிந்து போன பேருந்துப் படத்தைச் சுமக்கும் வளைந்துபோன கம்பி. மழை, சாலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மண் திட்டுகள் சேறும் சகதியும் ஆன சதைகளாய் வழிந்தோடின. குண்டு குழிவாய்கள் நீரைக் கொப்பளித்தன. மூடியற்ற சாக்கடை குழிகளில், நீர் சுழி போட்டது. முந்தய மழையாலும் மண் லாரிகளாலும் ஏழைப் பெண்ணின் புடவைபோல் ஒப்புக்குப் போடப்பட்ட தார், நார் நாராய், தடம் புரண்டு, அந்த சாலையை நிர்வாணமாகக் காட்டியது. ஆள் அரவம் அதிகமில்லை. நின்றவர்களும் அருகே உள்ள கடைக் கண்ணிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.
என்றாலும், மனோகர் மட்டும் மழையில் நனைந்தபடியே நின்றான். நனைகிறோம் என்ற நினைவற்றே நின்றான். அவனுக்குக் குளிரடிக்கவில்லை. தலையைக் குட்டிய மழை நீரும், உடலை அப்பிய ஈர உடையும், அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பால் போன ஞானம். ஞானத்தின் எதிர் மறையோ, அஞ்ஞானத்தின் வெளிப்புறமோ.... முற்றும் நனைந்ததற்கு ஈரமில்லை என்பது போல் நின்றான். கங்காவுக்காக நின்றாலும், அவள் வருகையின் உணர்வற்றே நின்றான்.
சங்கரியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காக்காய் வலிப்போ... வேறு எதுவோ... இன்றைய டெஸ்டில் நாளைக்கு ரிசல்ட் தெரியும். அக்காவும், அம்மாவும் மாறி மாறித் தவம் கிடக்கிறார்கள். ஆரம்பத்தில் துள்ளிக் குதித்த அம்மா, அடங்கிப்போனாள். வரதட்சணைக் கொடுமை என்று ஆகிவிடப் படாதே என்று காந்தாமணி சொன்னதும், அவள் ஆடிப்போனாள். ஆனால், இவனுக்கோ அந்தச் சிந்தனையே இல்லை. வாடகைக் காரில், சங்கரியை பிணம் போல் ஏற்றினார்கள். அவனும் பிணம் போலவே அந்தக் காரில் ஏற்றப்பட்டான். அக்காக்காரி அந்தக் காருக்குள்ளேயே அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அம்மாக்காரி அவன்மீது முட்டி மோதினாள்.
மனோகர், நினைவுகளை உதறிவிட்டு, அந்தப் பஸ் நிறுத்தத்தில் பட்ட மரமாய் நின்றான். அவன் பாலை மனத்தில் துளிர் விட்டது ஒன்றே ஒன்று. பெண் மோகம். அந்த மோகமே பித்தானது. எதிர்காலத் திட்டமோ, நிகழ்கால நினைப்போ ஏதுமற்று, அப்போதைக்கு அப்போது, வாழும் தற்காலிக வாழல். பெண் பித்துக்காகவே வாழுதல். மனச்சுமையை மறக்கும் காமத்தேடல். இதனால் தான், இந்த ஒருமாத காலத்தில், தெருக்களில் தேடிப்பிடித்த நான்கு பெண்களோடு கடற்கரைக்குப் போய் இருக்கிறான் மூன்று பெண்களோடு சினிமாவிற்குப் போய் இருக்கிறான். ஐந்தாறு பெண்கள் செருப்புக்களைத் தூக்கியதையும் கண்டிருக்கிறான். ஜீ.பி .எப்பில் கடன் வாங்கினான். டி.ஏ. அட்வான்ஸ் வாங்கி அரசுப் பயணம் மேற்கொள்ளாமல், அதே பணத்தில் பெண் பயணத்தில் லயித்துவிட்டான். பயணம் என்றால், அறைக்குள் நடத்தும் ரகசியப் பயணமல்ல. பகிரங்கமான சினிமா தியேட்டர்களிலும், கடற்கரைகளிலும் நடத்தும் பாதிப்பயணம். எல்லையைக் காணமுடியாத இடைவேளைப் பயணம் இவனால், இப்போதைக்கு அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை உயர் பதவியின் பொறுப்பில்லை. தெருப் பொறுக்கியாய் ஆகிப்போன நினைவில்லை.
மழை , தூறல் ஆகிவிட்டது. இப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மழைத் துளிகள் பட்டு, மங்கலான கடிகாரக் கண்ணாடிக்குள், சின்ன முள்ளை பெரிய முள் கவ்வியிருந்தது ஒல்லியான வினாடி முள், வட்டமடித்தது. கடைசி முள்ளின் நிலைதான் அவன் நிலையோ.... லேசான நினைப்பு. பழைய ரசனையின் பெருங்காய வாடை வெறுமையாய்ச் சிரித்தான். பிறகு அந்த வெறுமைக்குப் பயந்துபோய் குடையைப் பிடித்துக் கொண்டு சென்ற, ஒரு பெண் பின்னால் போனான். அவளை எட்டிப் பிடிப்பதுபோல் நடந்து, லேசாய் கனைத்தான். அந்தக் கனைப்புக்கு அவள் முகம் கொடுக்காதபோது, திரும்பி நடந்தான். எதிர்பக்கம் இன்னொருத்தி பாளம் பாளமான பட்டை டிசைன் போட்ட புடவைக்காரி. பேருந்தில் அடிபடாத குறையாக அந்தச் சாலையைக் கடந்தான். அவளுக்கு இணையாக நடந்தான். அவளோ, அவனை ஒருமாதிரிப் பார்த்தாள். 'மணி என்னாச்சு' என்றாள். அவன் அவளோடு போயிருப்பான். அதற்குள், கங்கா அவனை வழி மறித்தாள். அவன் கைகளைப் பற்றியபடியே சாடினாள்.
“சொன்ன இடத்தில் நிற்காமல் ஏன் இப்படி அலையறே... அங்க போய் நின்னால், பொறுக்கிப் பசங்க முறைக்கிறாங்க.... உன்னோட பேஜாருய்யா..."
மனோகர், அவளை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதெல்லாம், அவள் ஸார்' போடுவதில்லை... போய்யா வாய்யாதான். கள்ளக் காதலிலும் அவளுக்கு ஏக புருஷ விசுவாசம். அவள் வருவாள் என்று தெரிந்தே அலைந்தான். ஆனாலும் பெண் தேடினான். எதார்த்தத்தால் தடுக்கப்படவில்லை அந்த வீண் முயற்சியிலும் ஒரு சுகம். அந்த நாய் அலைச்சலிலும் ஒரு கிளு கிளுப்பு.
மனோகர், அவளை மீண்டும் மீண்டும் பார்த்தான். நீண்ட முகத்திற்குப் போட்டியாக பின்புறத் தலையாய் முளைத்த கொண்டை அதில் பாதியை மறைத்து மல்லிகைச் சரத்தின் நிலா வெளிவட்டம் செஞ்சிவப்புப் பிடரியை கருப்புக் கோடுகளாய்க் காட்டி கொண்டையில் தொடங்கி பிடறியில் முடியும் முடிக் கிராதிகள். பாடதி கம்மல்களுக்குப் பதிலாக அங்கும் இங்குமாய் சுழலும் மீன் வடிவ வளையங்கள். இடது கையில் பொன்னிறக் கடிகாரம். வலது கையில் கைப்பை. எல்லாம் இவன் வாங்கிக் கொடுத்ததுதான் அவள் வாங்க மறுத்தும் இவன் திணித்தவைதான்.
மனோகர், தன்னை ரசிப்பதை கங்கா ரசனையோடு பார்த்தாள். போகப் போகிற அந்த இடத்தில் எவருக்கும் அந்தச் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவனே சொல்லி, அவள் செய்த அதிகப்படியான அலங்காரம். அது அலங்கோலமாகி விடக் கூடாதே என்ற பயம். அந்தப் பயத்தை அவளுள் ஏற்படுத்தியவனும் இவன்தான் இந்த இரவில் ஆட்டோவில் போனால், போலீஸ் செக்போஸ்டில் மடக்கி பூர்வோத்திரம் கேட்கலாம் என்று விவரம் சொன்னான். அதற்குப் பரிகாரமாய் பேருந்தில் போகலாம் என்றான். போகிற இடத்தில், இவள் வாயைத் திறக்கக் கூடாது என்றான். அதே சமயம் பயப்படாமல் அசத்தலாகப் பார்க்க வேண்டும் என்றான். இதுவே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. 'போலீஸில் சிக்கினால் படாதபாடு. அந்தக் கஸ்மாலத்துக்குத் தெரிஞ்சா வெட்டிப் பூடுவான்... இந்த ஆளையும் சேர்த்து வெட்டுவான். புருஷன். மேஞ்சாலும், பெண்டாட்டி யோக்கியமா இருக்கணுமுன்னு பினாத்துற ஜென்மம். அதோட மனசாட்சின்னு ..
"வாணாய்யா.... வாணாய்யா.."
"என்ன ஒனக்கு பிடிக்கலியா."
"பிடிக்காட்டி வருவேனா...”
அப்போ பேசாம வா..'
“நம்ம ஆபீஸ்ல வேற, ஒரு மாதிரிப் பேசுறாங்கய்யா..."
"அங்கே ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ண லவ் பண்ணிட்டுத் தான் இருக்கு... ஜோடிகளை மாற்றி மாற்றி லவ் பண்ணுது அதுகளுக்கு நம்மளப் பத்தி பேச யோக்கியதை இல்லை...”
"ச்சீ என்னப்போல எவளும் இருக்கமாட்டாள்."
"என்னைப்போல ஒருத்தன் ஒனக்குக் கிடைப்பானா...."
"நிசந்தான்யா.. அம்போன்னு இருந்த என்னை இப்படி பைத்தியமாக்கிட்டியே... சதா ஒன் நெனப்புத்தான்யா.."
மனோகர், பெருமை பிடிபடாமல் தன்னையே பார்த்துக் கொண்டான். வெற்றி பெற்றவன் போல் புன்னகைத்தான். சாதாரண வெற்றியல்ல சங்கரியைத் தோற்கடித்த வெற்றி. எப்படி இருக்காளோ... எப்படியும் இருக்கட்டும்... இந்தச் சின்ன வீடே இனிமேல் ஒரு பெரிய வீடு... அடியே சங்கரி... ஒன் கிட்ட முடியாதது இவள்கிட்ட முடியும்... காரணம் இவள் என்னை நேசிக்கிறவள்...'
இருவரும், பேருந்தில் ஏறி, மாமல்லபுரத்திற்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்பே இறங்கிக் கொண்டார்கள் ஆரவாரமற்ற சாலை இருவரும் பயந்து போய் ஒருவருக்கு ஒருவர் காங்களைப் பற்றிக் கொண்டார்கள். ஆனாலும் அந்த விடுதியின் நுழை வாயிலுக்குப் போன உடனேயே அவர்களுக்குப் பயம் தெளிந்தது. கடலோர விடுதி. ஆகாயம் வளைந்தது போன்ற கட்டிடம்... அதில் அப்பிய கலர் பல்பு நட்சத்திரங்கள்.
அண்ணாந்து பார்த்த கங்காவை முதுகைப் பிடித்து நகர்த்தியபடியே வரவேற்பு அறைக்குள் நுழைந்தான். அங்கே தூங்கி வழிந்தவன், தூக்கக் கலக்கத்தில், கண்களால் அதட்டினான். கீழே நான்கு ஐந்து பேர் குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்திருந்தார்கள். வரவேற்பாளன், பிணக்காட்டில் நடப்பது போல் அவர்களுக் கிடையே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து வரவேற்பு வளைவுக்கு வெளியே வந்து சாவியை நீட்டினான். நேற்று மத்தியானமே பதிவு செய்துவிட்டுப்போன முத்துசாமியை புன்னகைத்துப் பார்த்தான். இவன், அப்போது கொடுத்த ஐம்பது ரூபாய் அன்பளிப்பை இன்று மத்தியானம் தான் ஆப்பாக்கி' ஆப்பானவன் இப்போதுதான் எழுந்தான். ஒரு புல்லை' எதிர்பார்த்து, அவனே அவர்களை முதலாவது மாடிக்கு நகர்த்தி மூன்றாவது அறைக்குள் கொண்டு போய் விட்டான்.
அந்த அறையைப் பார்த்து, கங்கா அதிசயித்தாள். அருமையான கிளுகிளுப்பு. அதுவே குரலிடுவதுபோன்ற மென்மையான சத்தம். அவர்களை வரவேற்பதுபோல் டிரான்ஸ்பார்மர் அதிர்வேட்டாய் முழங்கி ஒரு சிவப்பு விளக்கைக் காட்டுகிறது. அவள் தரை தெரியாத கம்பளத்தில் நடந்து, மெத்தையைத் தொட்டாள். எம்மாடியோ என்று குரலிட்டபடியே அவனை நன்றியுடன் பார்த்தாள். கட்டில் சட்டத்தில் பதித்த சுவிட்சுகளைத் தட்டி விட்டாள் அந்த விளையாட்டில் மேல்தளம் வானவில்லானது. அறை முழுக்க மஞ்சள் வெயில் வெளிச்சம்.
கங்காவுக்கும், பயம் போய்விட்டது. வெல்வெட் சோபா இருக்கைக்குத் தாவினாள். பேண்டை கழட்டிப்போட்டு விட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு இருந்தவனை பல்லி போல் அப்பிக் கொண்டு, அவனோடு படுக்கையில் விழுந்தாள். ஒரே நிமிடத்தில் அவன் அவளிடமிருந்து விடுபட்டான். அவளோ என் ராசா ராசா..' என்று அரற்றினாள். அவனுக்கோ , அவள் முத்தம் எச்சிலாகப் பட்டது. இதற்கா இவ்வளவு அலைச்சல் என்று தன்னையே நொந்து கொண்டான். அவனுக்கு நல்ல வேளையாக கதவு தட்டப்பட்டது. தவில் அடிப்பதுபோல் சத்தமிட்டது. அதுதான் சாக்கென்று விடுபட்டான். கதவை திறந்தான் அவள் ஆடைகளைச் சரிப்படுத்த முடியாமல், குளியலறைக்குள் போகவேண்டும் என்று நினைப்பில்லாமல், கட்டிலுக்குக் கீழே பதுங்கினாள்.
வந்தவன் பணிரெண்டு, பதிமூன்று வயதுச் சிறுவன் பூவாகாமல், பிஞ்சாகாமல் வெம்பிப்போன பழம். முகத்தில் முதிர்ச்சி. அதாவது வறுமையின் முதிர்ச்சி. செடி மரமாகாமல் தடுக்க கிளைகளை வெட்டியெடுத்த; இலைதளைகள் பிய்த்து எறியப்பட்ட மரத்துப்போன செடி. கண்களைச் சிமிட்டாமல் கள்ளச் சிரிப்பை உதிர்க்காமல், அவர்களைப் பேரன் பேத்தியாய்ப் பார்த்து ஒரு தாத்தாவின் தோரணையில் கேட்டான்.
"வேற ஏதாவது வேணுமா சார்..."
"அப்படின்னா "
"அதுதான் விஸ்கி, பிராண்டி, ஜின், சிக்கன் 65, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சிக்கன் மஞ்சூரி, சிக்கன் டிரை, நான், சப்பாத்தி "
மனோகருக்கு சாப்பிடாமல் இருப்பது அப்போதுதான் உறைத்தது. கட்டிலுக்குக் கீழே கிடந்தவளைக் குனிந்து பார்த்தான். அவளோ எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாள். அந்தச் சிறுவனைப் போகச் சொல்லும்படி படகோட்டுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால், மனோகர் வேறுவிதமாக நினைத்தான். நீலம், அன்று படுக்கை அறையில் சொன்னது நினைவுக்கு வந்தது. அடே பையா - ஆளுக்கு ரெண்டு பெக் தண்ணி அடிச்சிட்டு படுக்கையில் புரண்டா அந்தச் சுகமே அலாதிடா...' என்றாள். அப்போது அதை மறுத்தவன், இப்போது ஒப்புக் கொண்டான். பாதிப் போதையில் - கண்கள் கிறங்க பெண் ஆண்வசமாக, ஆண் பெண் வசமாக, ஆணும் பெண்ணும் அற்றுப் போன நிலையில், அந்தச் சுகமே அலாதி.... இப்படி இவனே சொல்லிக் கொண்டான். சிறுவனிடம் பாதிப்பாட்டில் விஸ்கிக்கும், இதர வகையறாக்களுக்கும் பணம் கொடுத்தான் நூறு நூறு ரூபாய் நோட்டுக்கள்.
அந்தச் சிறுவன், கங்காவை ஏறிட்டுப் பார்க்காமலே போனபிறகு, அவள் கட்டிலிலிருந்து வெளிப்பட்டாள். அந்த சிறுவனை போக்கிரி பொறம்போக்கு' என்று திட்டிக் கொண்டே, கதவைச் சாத்தப் போனாள். மனோகருக்கு, இழந்துபோன உடல் முறுக்கு இன்னும் வரவில்லை. அரைமணி நேரமாவது ஆகும். அப்படி வந்தாலும் முடியுதோ.... முடியலையோ... முடிந்தால் சந்தோஷம்.... முடியாவிட்டால் பாட்டில் மீது பழி போட்டு விடலாம். அவன் ஆணையிட்டான்....
"கதவு திறந்திருக்கட்டும்."
"அந்தப்பய வாரறதுக்கு அரை அவுரு ஆகுமே... அதுவரைக்கும் என்ன செய்றதாம்...”
"இந்தா பாரு... கதவைச் சாத்தாதே... இந்த இரவு முழுசும் நமக்குத்தான் .."
அவள், லேசாய் திடுக்கிட்டாள். அவன் குரலில் காட்டிய கடுமை, அவளுக்கு என்னவோ போலிருந்தது. ஆனாலும், தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அரைமணி நேரம் முக்கால் மணியாகியது. அதுவரைக்கும் அவள் தான் பேசினாள். அவன் ஒற்றை வார்த்தையிலேயே பதிலளித்தான். அவள் 'பலாவான சில்மிஷங்களைச் செய்தாள். அந்த சதை வஸ்துவை , அவன் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான்.
இதற்குள், அந்தச் சிறுவன் ஆடி அசைந்து வந்தான். வாங்கியவற்றை அங்கிருந்த டீப்பாயில் பொட்டலங்களாகவும் பாட்டிலாகவும் வைத்துவிட்டு எஞ்சிய நோட்டுக்களையும் சில்லறைகளையும் அப்படியே கொடுத்துவிட்டு, கொசுறுக்காகக் காத்திருக்காமல் போய்விட்டான்.
மனோகர், இரண்டு கிளாஸ்களை எடுத்து பாட்டிலில் கால்வாசியைக் காலி செய்தான். எறா மாதிரி நெளிந்து கிடந்த வலுத்த முந்திரிப்பருப்பு ஒன்றை அவள் வாயில் திணித்தபடியே, 'நீயும் போட்டுக்கோ ...' என்றான்.
"வாணாம்யா..."
"பழக்கம் கிடையாதா ?"
"அந்தக் கஸ்மாலம் ஒருவாட்டி வற்புறுத்தித் தந்திருக்கான். அடிக்குப் பயந்து நானும் ஊத்திக்கினேன். அப்புறம் ஆடுனனாம் பாரு ஆட்டம்... அப்படி ஆடுனேனாம். அந்தக் கஸ்மாலத்தைப் போடா வாடான்னு திட்டினேனாம். அவன் வழக்கம் போல் அடிக்க... நான் புதுசாத் திருப்பி அடிக்க... தெருவே திரண்டிட்டு"
'ஒனக்கு புருஷன் மேலே இருந்த வெறுப்பு அப்படி வெளியாயிருக்கு.. இங்கே சூழ்நிலை வேறே... ஒரு பெக்' போட்டுக்கோ... அதுக்கும் நல்லதாம் .."
மனோகர், அவள் வாய் விளிம்பில் அந்தக் கிளாஸை திணித்து, உதடுகளை இரண்டாக்கினான். அவள் அழுத்தம் தாங்காமல் வாயைத் திறக்க, அந்தத் திரவம் அவள் வயிற்றுக்குள் தானாய் ஓடியது. அவன் கோழி வறுவல்களையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் அவள் வாய்க்குள் திணித்தபோது, அவள் கிளாஸிலிருந்து தானாகவே கொஞ்சம் ஊற்றி வாய்க்குள் விட்டாள். மூன்றாவது பெக்கை தனக்கு மட்டுமல்லாமல் அவனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல அவள் இரண்டு பட்டாள் கண்கள் தனியாய் சுழன்றன. பிறகு தலையோடு சேர்ந்து சுழன்றன. அவன் சுழன்றான். அந்த அறையே சுழன்றது..... அவள் காளியாய் எழுந்தாள். குதியாய்க் குதித்தாள்.... அவன் தோளைப் பற்றித் தூக்கியபடியே... கத்தினாள்....
"ஏன்யா... தெரியாமத்தான் கேக்கேன்... நீ ஆம்பளதானா...? இந்நேரம் அந்தக் கஸ்மாலமாயிருந்தா, என்னமா உருட்டி யிருப்பான் - கதவைச் சாத்தாதேன்னு போக்கு காட்டுறியே.... எனக்கா தெரியாது... நீ நெசமாவே ஆம்பளைன்னா... வாய்யா பார்க்கலாம்... வாய்யா ....."
கங்கா , மல்லாக்க விழுந்தாள். சேலையை அவிழ்த்துப் போட்டாள். தலையைத் தூக்கித் தூக்கி இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி "ஒனக்கு நெசமாங்காட்டியும் தில்லு இருந்தா, வாய்யா.... வாய்யா " என்று அபிநயம் காட்டி குரலிட்டாள்.
போதைக்குள் மூழ்கியிருந்த மனோகருக்கு உடனடியாய் போதை தெளிந்தது. சத்தம் போட்டவளின் வாயை கைகளால் பொத்தினான். அவள் கடித்த வலி பொறுக்காமல், கட்டிலில் கிடந்த பனியனை பந்து போலாக்கி, அவள் வாய்க்குள் திணித்தான். அவள், அவனை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டு எழுந்தாள். வார்த்தைகள் அம்புகளாகின குரல்
அதிர்வேட்டானது.
"ஒன்னையே நம்புற என்னோட வேலையப் பற்றி யோசித்தியா - இன்னாச்சு ஒன் கம்பெனி.- பொல்லாத கம்பெனி.- போவட்டும்... ஆபீஸ்லயாவது பெர்மனென்டு ஆக்கினியா- ஆமாம். தெரியாமத்தான் கேக்கேன். நீ பொம்பளப் பொறுக்கி ஆயிட்டியாமே. ஆபீஸ்ல ஒரு கிளார்க்குப் பொண்ணு வனஜா செருப்பைத் தூக்கிக் காட்டினாளாமே. நான் இருக்கேன் - ஒன் பொண்டாட்டி இருக்காள். இந்த ரெண்டையும் சமாளிச்சாலே ஒனக்குப் பெரிசு... இன்னா மன்ஷன்யா நீ... பொட்டையில்லைன்னா இப்பவே வாய்யா - ஒன்னால் நம்ம ஆபீஸே நாறுதுய்யா.... என்னையும் ஒன்னையும் அந்தக் கிருஷ்ணன் பய ஏடாகூடமாப் பேசுறான்யா - தாங்க முடியலைய்யா என்னால தாங்க முடியலைய்யா- எனிக்குப் பழி பாவத்தைக் கொடுத்திட்டியே. என்ன கைவிட்டிடாதேய்யா- என்னக் காப்பாத்தைய்யா - ஏமாத்திடாதேய்யா ஏமாத்துவியா? மவனே... ஏமாத்தின என்ன நடக்கும் தெரியுமா?"
கங்கா, படுக்கையிலிருந்து எழுவதும் விழுவதுமாகச் சுழன்றாள். பாவாடை ஜாக்கட்டில் ஒரு சினிமாப் பாட்டைப் பாடினாள். அவன் முதுகில் இரண்டு சாத்துச் சாத்தி, தாவி ஆடினாள் அவன் கையை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.... அழுதாள். அந்த அறையே குலுங்கும்படி ஒப்பாரி போட்டாள்.
"அந்த கஸ்மாலம் விட்டதுமாதிரி என்னக் கைவிட்டிடா தேய்யா... நீ.... விட்டிடுவே... விடத்தான் போறே.. எனக்கும் ஒனக்கும் எதுவும் நடக்கல..... நடத்தவும் ஒன்னால முடியல.... நடக்காமலே முடிக்கிறே... என்னால ஒனக்குப் பிரயோசனமில்ல... ஒன்னால எனக்குப் பிரயோசனமில்ல... என்னமாதிரி ஒரு வயசுப் பொம்மனாட்டிக்கி இந்த ரூமு முக்கியமில்லய்யா... பெட்டு முக்கியமில்லய்யா... தரை கூடப் போதும்யா... ஏய்யா என்னக் கூட்டி வந்தே...? என்னக் கைவிடப் போறீயே..."
கங்கா, பக்கத்திலிருந்த கிளாஸை எடுத்து பீரோ கண்ணாடி மீது வீசினாள். கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துச் சிரித்தாள். கைதட்டினாள்... கதவைக் குத்தினாள். கொண்டையை அவிழ்த்துப் போட்டாள்... பூக்களைப் பிய்த்துப் போட்டாள்... பாட்டுப் பாடினாள். தங்தங்கென்று குதித்தாள்.
அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. மனோகர் கைகளை நெறித்தான். அவள் கன்னத்தில் கூட, ஒன்று போட்டான். அவள், உடனே ஒப்பாரி இட்டாள். இப்போது கதவுக்கு வெளிப்பக்கம் வசவுகள் கேட்டன. அந்தக் கதவு அதிர்ந்தது. மனோகர் வேறு வழியில்லாமல் பெட்டிப்பாம்பாய் கதவைத் திறந்தான். வெளியே நான்கைந்து பேர் நாகப்பாம்பாய் சீறி நின்றார்கள். வரும்போது வாஞ்சையோடு இந்த அறையில் விட்டுப்போன வரவேற்பாளன், இன்னும் அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தவளை நோட்டம் போட்டபடியே கத்தினான்.
"ஏண்டா ... ஒன்னப் பார்த்தா படிச்சவன் மாதிரி தெரியுது... இப்படிப்பட்டவள் ஏண்டா கொண்டு வந்தே...'
"ஏண்டா கமால்... அவங்கிட்டே போய் நியாயமா கேக்குறே ? கற்பழிப்பு கொலைன்னு பழியை நம்ம மேல போட்டுட்டு, தப்பிக்கறதுக்கு வந்திருக்கான்... பேசாம போலீசுக்கு போன் போடு.... நீ பேசறியா? நான் பேசட்டுமா....? ஏடி ஒன்னத்தான் இதுக்கு மேலே ஆடின, கடலுக்குள்ள வீசி கடாசிடுவோம். கடாசினவங்கதான்.... கமால்... இன்னுமா டெலிபோனை எடுக்கலை..."
ஒரு மொட்டைத்தலை தடியனின் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு, வரவேற்புக் கமால், அந்த அறைக்குள் இருந்த டெலிபோனை எடுத்தான். பிரமித்து நின்ற மனோகருக்கு விபரீதம் புரிந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினான்…..
'வேண்டாம் ஸார்... வேண்டாம் ஸார்...'
அந்தச் சமயத்தில் கங்கா, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினாள்
"ஏன்? போன் போட்டாப் போடட்டுமே... போலீசு - கொம்பனா... டேய் கஸ்மாலம்.... போலீசு மச்சிக்கிட்ட பேசுடா...'
இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான் மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான்...
"என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார்... பையில் இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார்... இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார்... ஏய் கங்கா... சார் காலுல விழுடி.."
மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள்.
"அடப்போடா... அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்..."
தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான்.
"வேண்டாம் ஸார். தயவு செஞ்சு வேண்டாம் ஸார்... நான் பெரிய ஆபீஸர் ஸார்... அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார்... நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்..."
"சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஓடு... இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும்... காலைல அனுப்பி வைக்கிறோம்..."
"நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார்.... போதையிலே உளறினாலும்... புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்..."
"இவன் சரிப்படமாட்டான் போலீசு நம்பர் என்கேஜ்டா? சரி.. மூணாவது மாடியில் இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா... ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே... உக்காருடி.."
"சார்... சார் என் மானம் போயிடும்... வேலை போயிடும்... எங்களை விட்டிடுங்க சார்..."
"இந்தா பாருடா.. நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு.... நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு. இவள நாங்க விடப் போறதில்லை டேய்... அவ புடவையப் பிடுங்குடா.
மொட்டைத் தலையனின் தடித்த கால்களில் போட்டிருந்த கைகளை, மனோகர் வெட்டருவாள் வீச்சோடு எடுத்தான் அவனுக்குள் அவனையறியாமலேயே ஒன்று விஸ்வரூபம் எடுத்தது. அவர்களை நேருக்கு நேராய்ப் பார்த்து ஆணையிட வைத்தது. வீறாப்பாய் நின்று சூளுரைக்க வைத்தது....
சரி... போலீஸைக் கூப்பிடுங்க..... ஆனது ஆகட்டும்... என் உயிர் போவதற்கு முன்னால், இவள நீங்க தொட முடியாது...'
---------------
அத்தியாயம் 11
எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ரகசியமாய் ஏறினார்களோ, அதே இடத்திற்கு அருகே மனோகரும், கங்காவும் ஆட்டோவில் இருந்து பகிரங்கமாய் இறங்கினார்கள். இரவு மரித்துக் கொண்டிருக்கும் போது புறப்பட்டு, பகல் விடியல் குழந்தையாய் பிறந்தபோது, அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி போல் ஆகாயத்தில் செஞ்சிவப்பாய் ஒளிக்கற்றை. அந்தப் பிறப்பை அறிவிக்கும் குலவைச் சத்தம் போல் பறவைகளின் சத்தங்கள்.
கங்கா, மனோகரை கண்கூசிப் பார்த்தாள். அந்த அறையில் நடந்த அமர்களத்திற்குப் பிறகு இருவருமே பேசவில்லை. முகத்துக்கு முகம் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். மவுனம் பேசிற்று. பார்வைகள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அவன் பேன்ட் பையில் கையிட்டு ஐந்து இருபது ரூபாய் நோட்டுக்களை வெறுமையாய் புரட்டிய அவள், கைகளுக்குள் திணித்தான். அவள், அந்த நோட்டுக்களை, அவன் பைக்குள் சொருகியபடியே, ஆற்றாது அரற்றினாள்.
அந்தப் பசங்க கிட்ட நானு அப்படிப்பட்டவள் இல்லேன்னு நீ சொன்னப்போ - பெருமைப்பட்டேன். ஆனால், இப்போ நானு அப்படிப்பட்டவள்தான்னு நினைக்கிறது மாதிரி பணத்த நீட்டுறியே சாரே ..."
மனோகர், அவளை, அவள் கண்கள் வழியாய்ச் சந்தித்தான் கூடவே அவள் நினைவூட்டும் சம்பவக் கோர்வைகள் தானாய் மனதில் மோதின. இப்போதே அந்த நிகழ்ச்சிகள் அங்கேயே நடப்பது போல் கண்கள் பார்த்தன. காதுகள் கேட்டன.
போதை தெளிந்து பயந்து நின்ற கங்காவை, தன் உடம்போடு உடம்பாய் இணைத்துக்கொண்டு, அவன் சூளுரைக்கிறான்.... வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது குற்றமில்லை .... ஒருத்தி உடலை விற்றால்தான் குற்றம்... அதை நட்புக்காக விட்டுக் கொடுத்தால் அதில் தப்பில்லை... இவள் என்னோட தோழி... நாங்கள் உறவாடுவது எங்கள் சொந்த விவகாரம்.. வேணுமின்னா ஒன் போலீஸை வரச் சொல்லைய்யா...' என்று சவால் இடுகிறான். உடனே கமால் சிரித்தபடியே... சட்டந் தெரியாதவன்தான்யா போலீஸ் அதத் தெரிஞ்சு வச்சிருந்தால், அதை எப்படி வளைக்கனுமுன்னு அவங்களுக்குத் தெரியும்...' என்கிறான்.
உடனே மனோகர் ஆகாயமும் பூமியும் ஆனவன் போல் கர்ஜிக்கிறான்... இந்தா பாருங்கப்பா... நீங்களும் போலீசுமா சேர்ந்து என்னைக் கட்டிப் போட்டுட்டோ இல்லை கொலை செய்துட்டோ இவள, மானபங்கப்படுத்த முடியும்... அப்புறம் என்ன நடக்கும்... கொலைக் கேஸ்ல உள்ள போவீங்க.... இல்லாட்டி நான் நியாயம் கிடைக்கறது வரைக்கும் அதாவது ஒங்க கைல காப்பு மாட்டறது வரைக்கும் ஓய மாட்டேன்.... உண்ணா விரதம் இருப்பேன்... ஊரக் கூட்டுவேன்... மறியல் செய்வேன்.. எதுவும் பலி க்காட்டி.... தீக்குளிப்பேன்... எங்கே அவளத் தொட்டுப் பாருங்க... எங்கே டெலிபோன் செய்யுங்க...' என்று அதட்டுகிறான், மிரட்டுகிறான். அவர்கள் அடங்கிப் போகிறார்கள். அப்படியும் அவன் தங்கச் செயினையே பார்க்கிறார்கள். மனோகரோ 'இந்த அறைக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு முன்பணத்துல கழித்துக்கலாம்... இப்ப மொதல்ல வெளில போங்க.. இல்லாட்டி நானே போலீஸுக்கு போன் செய்வேன்.... உங்களுக்கு இன்ஸ்பெக்டரத்தான் தெரியும்... எனக்கு ஐ.ஜியையே தெரியும்... என்கிறான். அவளை ஆக்கிரமிக்கப் போனவர்கள், ஆக்கிரமிக்கப் பட்டவர்களாய் வெளியேறுகிறார்கள்.
மனோகர், ஒரு மாவீரன் போல் அவளைப் பார்க்கிறான். அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை தனது பைக்குள் திணித்துக் கொண்டே ஆட்டோவுக் காவது' என்று ஒரு வார்த்தையை ஒரு வாக்கியமாய் இழுக்கிறான். அவளோ, 'நான் நடந்தே போயிடுவேன் சாரே - நடந்து நடந்தாவது வழி குறையுறது மாதிரி என் பாரம் குறையுறதான்னு பார்க்கிறேன் சாமி...' என்கிறாள். அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தே, நடக்கிறாள். மீண்டும் அவனிடம் திரும்புகிறாள். ஆகாயத்தைச் சாட்சியாக வைத்துச் சொல்வது போல், அந்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு, அவனிடம் பேசுகிறாள்.
"நீ ஆம்பளைங்களுலேயே பெரிய ஆம்பளை ஸாரே. உன்ன மாதிரி ஆம்பளைய இப்பதான் நான் பாக்கேன் ஸாரே பொம்மனாட்டிக்கிட்டே போறவன் சாதா ஆம்பளைன்னா அவளை கட்டிக் காக்கிறவன் பெரிய ஆம்பிளை... நீ மட்டும் என்ன விட்டுட்டுப் போயிருந்தே... என்ன பீஸ் பீஸா ஆக்கி இருப்பாங்க... நானு ஒரு கபிரிச்சி.... என்னெல்லாமோ பேசியிருப்பேன்... ஆடியிருப்பேன். என்ன மன்னிச்சேன்னு... ஒரே ஒரு வார்த்தை .... எனிக்கி ஒன் ஆபீஸ்ல கூட்ற வேலை வேணாம்.... கம்பெனி வேலையும் வேணாம்... என்ன மன்னிச்சேன்னு... ஏன்னா... இனிமேங்காட்டி நாம பாக்கப் போறோமோ இல்லியோ... சொல்லு
ஸாரே.. என் வவுத்துல பால் வாரு சாரே..."
அழப்போன கங்கா, பின் பக்கமாக லேசாய்ச் சாய்ந்தாள். அப்படியும் கண்ணீர் தெரித்தது... அவன், அவளை அழுத்தமாகப் பார்த்தான். அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கொட்டினான்....
"இந்தா பாரு கங்கா! மன்னிப்புன்னு வந்தால், நீதான் என்னை மன்னிக்கனும். கலங்காத குளமா இருந்த உன்னை, குட்டையாய் கலக்கிட்டேன். ஆனால், ஒன்னோட நட்பு என் ஆயுள் வரைக்கும் நெனப்பா இருக்கும். பிரியப்போறதா நெனச்சுச் சொல்லல, நாம பிரியப் போறதும் இல்ல... ஆனா... அதேசமயம் நம்ம ரெண்டு பேரோட நடவடிக்கையும்.... வேற மாதிரி இருக்கும்.... இருக்கணும்... நான் நம்பிக்கைத் துரோகியுமில்ல... நிச்சயம் ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும்... ஆபீஸுக்கு வாரத மட்டும் நிறுத்திடாதே... ஆபீஸ்ல நான் அதிகாரியில்லே ... நீ பெருக்குறவள் இல்லே ... நான் மனுஷன்.... நீ மனுஷி... சரி... போய்வாம்மா.... சீக்கிரமா ஆபீஸ்ல போய் வேலையப் பாரு..."
"அழ வைக்கிறியே ஸாரே... அழ வைக்கிறியே... ஒன் நெலமய நினைச்சா எனிக்கு மனசு கேட்க மாட்டேங்குதே..."
கங்கா, உதடுகளைக் கடித்தபடியே, அவனை உற்றுப் பார்த்தாள். அவளை தனக்குள் உள்வாங்குவது போல், அசைவற்ற கண்ணாடி போல் சலனமின்றி நின்ற மனோகர், எதிர்திசையில் நடந்தான். இலக்கு நோக்கிச் சென்றான். சங்கரியைப் பார்க்க வேண்டும். அவள் கண்களைத் துடைத்து விடவேண்டும். அவளுக்கு எது தேவையோ அதை ஈடேற்ற வேண்டும். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மனோகர், நடையில் ஒரு மிடுக்கு... பார்வையில் ஒரு கம்பீரம்... கால்கள் தரையில் அழுந்தப் பதிந்தன. சாய்வாய் நடக்காமல் நேராய் நடந்தான். கெட்டதைப்போல் நல்லதும் தொடர்ந்து வரக்கூடியது... ஒரு நல்ல குணம் இன்னொரு நல்ல குணத்தைத் தொற்றிக் கொள்ளக் கூடியது. அழுகையும், சிரிப்பும் இப்படித்தான். இனிமேல் சிரிக்க முடிகிறதோ இல்லையோ, அழப்போவதில்லை. அழ வைக்கப் போவதும் இல்லை. எப்படி இருக்காளோ. எப்படி யெல்லாம் நடந்திருக்கேன். கங்காவை காப்பாற்றியது போல் சங்கரியையும் காப்பாற்ற வேண்டும்... எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும்.
மனோகர், பெரு விரலைப் பார்த்தபடியே நடந்தான். அக்கம் பக்கம் எந்தப் பெண்ணும் இயங்குவது அறியாமல், நடந்து கொண்டிருந்தான். தன்னைத்தானே தரிசித்ததில் ஒரு பெருமிதம். இந்த உணர்வையும் குணத்தையும் ஆவியாக்காமல் மனதுக்குள்ளேயே
கட்டிப் போட வேண்டும் என்ற வைராக்கியம்.
அந்த மருத்துவமனையின் நுழை வாயிலுக்குள் சென்றதும், மனோகரின் கால்கள் லேசாய்த் தளர்ந்தன. கால்களோடு சேர்ந்து தலையும் தாழ்ந்தது. எந்த முகத்தோட அவளைப் பார்ப்பது? தரையைப் பார்க்க மனமில்லாமல், அண்ணாந்து பார்த்தான். அந்தக் கட்டிடத்திற்கு மேலே தலை நீட்டிய அசோக மரங்களை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். ஏதோ ஒன்று மோதுவது கண்டு, கண்ணிறக்கினான். அவனிடம் முட்டுப்பட்ட கட்டுப் போட்ட மனிதர் ஒருவர், இயல்பாகச் சொல்வதுபோலவும், தன்னை நினைத்துக் கொண்டது போலவும் வலி அடக்கிப் பேசினார்...
"அண்ணாந்தும் பார்க்கப்படாது... குனிந்தும் நோக்கப்படாது.... நேராப் பார்க்கணும். நேரா நடக்கணும். நம்மோட சிரமம், பிறத்தியாரைச் சிரமப்படுத்தக் கூடாது..."
மனோகர் நின்றான். தன்பாட்டுக்குப் போய் கொண்டிருந்த மனிதரின் முதுகைப் பார்த்தான் அந்த முதுகு புறமுதுகல்ல. அவனுக்கு ஒரு கேடயம்... அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அசரீரி வார்த்தைகள்.
மனோகர், லிப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தான். அதுவே தரைத்தளம் மாதிரியான வரவேற்பறை. பார்வையாளர்கள் இருக்கைகள். அரசாங்க மருத்துவமனை காணாத பளபளப்பான தரை. இந்த மருத்துவமனை இவன் சக்திக்கு அப்பால் பட்டதுதான். போலீஸ் வழக்கு வம்பு வரக்கூடாது என்பதற்காக, தெரிந்தவர் ஒருவர் மூலம் கிடைத்த இடம்.
சங்கரியின் அறைக்கு முன்னால் நாலு பேர் அம்மா, அக்கா, மாமனார், மாமியார் அக்கா, அவ்வப்போது பேசுகிறாள். அம்மாவின் கை வீச்சுக்களுக்கிடையே முகமிட்டு, அவளுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பேசுகிறாள் மாமனார், தலையை ஒருச்சாய்த்து நிற்கிறார் மாமியார் இரண்டு கைகளையும் தலையில் குவித்துக்கொண்டு தடுமாறுகிறாள்.
இந்த சொர்ணம்மா அவர்கள் வந்ததும் பயந்து போனவள்தான். போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடாதீங்கன்னு கெஞ்சப் போனவள்தான். ஆனால் சம்பந்திகள் என் மகள் தெரிஞ்சும் தெரியாம ஏதாவது செய்திருந்தால், நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்.'' என்று அழுதபோது, அவளது பயம், பயமுறுத்தலானது. கடந்த மூன்று நாட்களில் அவள் எகிறல் மூன்று மடங்காகி, முப்பரிமாணம் பெற்றது. மனோகர் பின்னால் நிற்பதை அந்த நால்வருமே கவனிக்கவில்லை. நாயகியான சொர்ணம்மா, சுடச்சுடக் கொடுத்தாள்….
"இன்னியோட எங்க பொறுப்புத் தொலைஞ்சது. நீங்க ஆயிரம் சொன்னாலும் கேட்கப் போறதாய் இல்லை..... இனிமேல் நீங்க யாரோ- நாங்க யாரோ - ஊருக்குக் கூட்டிப் போகணுமுன்னாலும் கூட்டிப் போங்க.... இங்கேயே வச்சு அழகு பார்க்கணு-முன்னாலும் பாருங்க... ஏய் காந்தாமணி - புறப்படு."
"அண்ணி! அப்படியெல்லாம், பேசாதீங்க.... நாங்க எந்த முகத்தோட அவளக் கூட்டிட்டுப் போவோம்.?"
சும்மாச் சும்மா பினாத்தாதே - எங்கேயாவது பெண்டாட்டி, புருஷன அடிப்பாளா....? இவள் அடிச்சிட்டாளே... இவளைச் சேர்த்தால்.... ஒருநாள் ராத்திரியிலே என் மகனைக் கொலை செய்ய மாட்டாள் என்கிறதுக்கு என்ன நிச்சயம் .?”
"எம்மா... என்ன இதுல்லாம்."
மனோகர், ஓங்கிக் கத்தினான். நால்வரும் திரும்பினார்கள். கண்களில் நீர் கோர்த்த மாமியாரையும், யோகி போல் கைகட்டி நின்ற மாமனாரையும் மாறி மாறிப் பார்த்தான். மாமியார் அவனைப் பார்த்துவிட்டு, இயல்பிலேயே ஒடுங்கிப்போன உடம்பை ஒடுக்கினாள். மாமனார், அவன் கையைப் பிடித்து தேக்கி வைத்த உணர்வுகளைத் திரவமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்கள். குழந்தைகளோடுப் பழகிப் பழகி குழந்தையானவர்கள். மாமியார், மருமகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அம்மாவைப் போல் அவன் திட்டி விடக்கூடாதே என்கிற பயம். அவள் உடம்பு ஆடியது. சரணாகதியாய் ஆடியது. கும்பிட்ட கையை எடுக்காமலே மருமகனைப் பார்த்து மன்றாடினாள்.
"அவள் நடந்துக்கிட்டது தப்புத்தான் மாப்பிள்ளே - எங்க குடியைக் கெடுக்கிறதுக்கின்னே பிறந்திருக்காள். ஒரே பெண்ணாச்சேன்னு தலையிலே தட்டி வளர்க்காமப் போயிட்டோம். எங்க வீட்ல இருந்தது மாதிரியே ஓங்க வீட்லயும் இருப்பான்னு நினைத்தோம். இப்படி ஒங்களைச் சீரழிப்பான்னு நினைக்கலே... ஏங்கி ஏங்கி அழுகிறா மாப்பிள்ளே. நீங்களே சொல்லுங்க அவளை ஊருக்குக் கூட்டிட்டுப்
போக முடியுமா? அப்படிப் போய் உயிரோடதான் இருக்க முடியுமா - ஒரே ஒரு சந்தர்ப்பம் அவளுக்குக் கொடுங்க மாப்பிள்ளே - அப்பக்கூட நீங்க அவளை அடிப்பீங்களோ... பிடிப்பீங்களோ... அவள் ஓங்க பொருளு. அவளை என்ன வேணுமின்னாலும் செய்யுங்க நாங்க ஏன்னு கேட்கமாட்டோம்."
சம்மந்தியம்மா பேசி முடிப்பது வரைக்கும் பொறுமை காட்ட முடியாமல் சொர்ணம்மா, கைகளை ஆட்டிய போது, காந்தாமணி, அவற்றைப் பிடித்துக் கொண்டாள். இப்போது அந்தம்மா கைகளை நீட்டாமலேயே கத்தினாள்....
"இந்த மாதிரி பசப்பற வேலையெல்லாம் வேண்டாம். என் மகனை அவராவோட ராவா குத்திக் கொலை பண்ணணும். அப்பப்பா - என்ன நல்லெண்ணம் உனக்கு".
சொர்ணம்மா, மகளிடமிருந்து கையை எடுத்து விட்டு, அங்குமிங்குமாய் ஆடிக் காட்டியபோது, மனோகர், அம்மாவை முறைத்தபடியே கத்தப் போனான். அதற்குள் வாசல் கதவு திறக்கப்பட்டது. சங்கரியை எட்டிப் பார்க்கப்போன மனோகரின் கண்களை இரண்டு உருவங்கள் மறைத்தன. ஸ்டெதஸ்கோப் மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கூட நின்ற பெண்ணுக்கு இருபத்தேழு வயதிருக்கலாம்... டாக்டர் கத்தினார்....
"இப்படி சந்தைக்கூட்டம் போட்டால் எப்படி ? ஏம்மா நீ இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனே... எதுக்காக வந்தே...”
"காசு செலவளிக்கிறவள் நான். வரப்படாதா…”
மனோகர் எம்மா' என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு, டாக்டரைக் கேட்டான்...
"இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்..."
"கன்கிராசுலேஷன் மிஸ்டர் மனோகர்.."
மனோகர் அந்த இளம் பெண்ணை புரியாமல் பார்த்தான். அவள் தனது பாராட்டுக்கு விளக்கமளித்தாள்.
அந்தம்மா, ஒங்க பெண்டாட்டி, என்கிற நினைப்பு வந்திருக்கே... இப்போவாவது பார்க்கணுங்கிற எண்ணம் வந்திருக்கே... அதுக்குத்தான் பாராட்டினேன்..'
அந்தப் பெண்ணின் கோபத்தைச் சந்திக்க முடியாமல், மனோகர், டாக்டரிடம் அடைக்கலமானான்.
"அவளுக்கு எப்படி இருக்கு டாக்டர்...”
"நல்லாத்தான் குணமாகி வந்தாங்க..... ஆனால் இந்தம்மா... ஒங்கம்மாவா - நல்ல அம்மா- இவங்க, இந்த ரெண்டு பேரையும் படுத்தின பாட்டுல பாவம் ஒங்க மனைவிக்கு பழையபடியும் கைகால் வெட்டிட்டு"
டாக்டர் மேற்கொண்டு பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். மனோகரின் மாமியாரும், மாமனாரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று. தனித்தனியாய் அழுதிருந்தால் கீழே விழுந்திருப்பார்கள். ஒருவரையொருவர் எதுவும் பிடிபடாமல், பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் போட்டு முதுகுகளை ஈரமாக்கினார்கள்.... தலைகள் இறங்கி முண்டமான இரு உடம்புகளாய் ஆகிப்போனார்கள்.
மனோகர், பொங்கிய கோபத்தை திசை திருப்பினான். எதிர்மறை உணர்வை ஆக்கமாக்கினான். அம்மாவின் தோளில் கை போட்டபடியே அவள் முகத்தைத் தூக்கிப்பிடித்து நெகிழ்ந்து பேசினான்.
"எம்மா... ஒன் மகளாயிருந்தால், இப்படிப் பேசுவியா...? இவங்க ஒன் தம்பி தங்கச்சியாயிருந்தால், இப்படி நோகடிப்பியா? ஒன்னையும் என்னையும் நம்பித்தானேம்மா சங்கரியை ஒப்படைத்தாங்க. ஏம்மா இந்த மாதிரி எல்லாரையும் நோகடிக்கிறே... அக்காவுக்கு, சங்கரி மாதிரி வெட்டு வந்திருந்தால், நீ அவள் புருஷனை விட்டு வைப்பியா... என் பெண்டாட்டியையும் ஒன் மகளா நெனச்சுப் பாரும்மா."
சொர்ணம்மா, கண்களால் அரைவட்டம் போட்டாள். விழி பிதுங்கப் பார்த்தாள். பிறகு முகத்தை மூடிக் கொண்டாள்..... உச்சி முதல் பாதம் வரை குலுங்கியது. காந்தாமணி அவள் கைகளைப் பிடித்தபோது, அம்மாக்காரி அவள் தலையில் முகம் போட்டு மருவினாள்... ஊமை அழுகையாய் அழுதாள். மகன் அப்படிப் பேசிவிட்டானே என்று அழுகிறாளா..... மருமகள் பழையபடியும் வீட்டுக்கு வருவது நிச்சயம் என்று நினைத்து அழுகிறாளா... அல்லது அன்று முதல் இன்றுவரை தான் நடந்து கொண்டதைப் பற்றி குற்ற உணர்வில் அழுகிறாளா - குற்றஞ்சாட்டி அழுகிறாளா.. அந்த சொர்ணமாவுக்கே அது தெரியாது.
இதற்குள் டாக்டர் அதட்டுவதுபோல் பேசினார்.
இடத்தை காலிபண்ணுங்கம்மா வேடிக்கை பார்க்காங்க பாரு - இப்போ அந்தப் பொண்ணுக்கு டைசிபார்ம் ஊசி போட்டுட்டு, வந்திருக்கோம். இன்னும் நாலுமணி நேரம் அரை மயக்கத்திலேயே இருப்பாங்க. அப்பா அம்மா மட்டும் இங்கேயே இருக்கட்டும்...'
'நானும் இருக்கேன் டாக்டர்...'
'நோ மிஸ்டர் மனோகர் - ஸாரி... இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க அவளைப் பார்க்கக்கூடாது .... நாங்க ஒங்க ஒய்பை அப்ஸர்வேஷன்ல வச்சிருக்கோம்... எப்போ பார்க்கச் சொல்றோமோ... அப்பப் பார்த்தால் போதும்.... இந்தாம்மா... பெரியம்மா.. வீட்டுக்குப்போய் எவ்வளவு அழணுமோ... அவ்வளவு அழு... இனிமேலாவது யாரையும் அழவைக்காதே... இல்லாட்டி ஒனக்கும்.. மிஸ்டர் மனோகர் - என்னோட வாங்க..'
அந்த அறைக்குள் முண்டியடித்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். மனோகர், மாமனாரின், மடித்து வைத்த கரங்களில், லேசாய் பிடித்து அழுத்திவிட்டு, டாக்டரோடு போனான். கூடவே அவனைச் சாடிய அந்தப் பெண்ணும் போனாள்.
அந்த அறையில் சுழல் நாற்காலியில் மேலே கதிர் விரிந்த சூரியப் படம். எதிர்ச் சுவரில் வட்டங்களை உள்ளடக்கிய பெருவட்டப் படம். அதன் மையத்தில் ஒரு புள்ளி. அதற்குக் கீழே மெத்தையிட்ட கட்டில்.
"இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்.."
"ஒய்ப் இருக்கட்டும்.. ஒங்களுக்கு இப்ப எப்படி இருக்குது.... நோயின்னு அனுமானித்தால், அது ஒங்களுக்குத்தான். ஒங்க ஒய்புக்கு இருக்கிறது அதோட அறிகுறிகள்..... ஒங்களுக்கு மனக்காய்ச்சல்... அந்தப் பெண்ணுக்கு நெறி கட்டியிருக்கு... அந்தப் பொண்ணு கிட்டே பேசிப் பார்த்தோம்... ஓங்க செக்ஸ்லைப் பற்றி சொன்னாங்க. ஏன் அப்படிப் பார்க்கறீங்க டாக்டர்களான நாங்க தாயுமானவங்க... ஓடம் போட நிர்வாணம் மட்டுமில்லே... மனசோட நிர்வாணமும் எங்களுக்குத்தான் தெரியும்.."
அந்தப் பெண், இடைமறித்தாள். சூரிய காந்திப் பூ நிறம். அதன் விதை போலவே கன்னத்தில் ஒரு மச்சம்.
"ஆனால் உங்களுக்கு இவ்வளவு ஆணாதிக்கம் கூடாது சார். அந்த ஆர்டரை எப்படி சார் கிழிச்சுப் போடலாம்? பெண்டாட்டின்னா அடிமையா பச்சத்து வீட்டுக்காரன் ஏடாகூடமாப் பேசினான்னு அவனக் சேட்காத கேள்வியை கேட்டிட்டு, திரும்பி வரும்போது, நீங்க ஒரு கணவன், கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்கலாமா? ஒரு கேள்வி முறை இல்லையா? கோளாறை ஒங்ககிட்ட வச்சுக்கிட்டு குறையை அவங்ககிட்ட கண்டா என்ன அர்த்தம்? கற்புப் பெருமிதத்தோட வந்த மனைவியை நீங்களே மானசீகமா, அதே மனிதனை கற்பழிக்கச் செய்தீங்க.... ஆனாலும் ஆண்மைக்குறைவு உள்ளவங்களுடைய நடத்தையைப் பற்றி விளக்கி, நீங்க தற்கொலை செய்தாலும் செய்துக்கலாம் என்று அவங்ககிட்டச் சொன்னபோது, அந்தம்மா, தனக்காக அழுகிறத நிறுத்திட்டு, உங்களுக்காக அழுகிறாங்க சார். இதுதான், இந்த நாட்டுப் பெண்களோட பண்பாடோ. அல்லது சுயத்தைத் தொலைக்கும் சீரழிவோ…."
பாக்டர் சந்திரசேகரன் அந்தப் பெண்ணை கண்களால் அடக்கினாரோ கெஞ்சினாரோ. அவள் அடங்கினாள்.
"ஏம்மா.... நீ வந்தது கவுன்சிலிங் செய்யுறதுக்கு... வக்கீலா மாறினால் எப்படி....? சங்கரிகிட்டேயும் கோளாறு இல்லாம இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரிப் பார்த்ததை.... அது தனக்கு பிடிக்கல என்கிறதை... இவர்கிட்ட பகிரங்கமா சொல்லியிருக்கணும்... செக்ஸ் லைப் பற்றி, படித்த பெண்ணுக்கு தெரிந்திருக்கணும்... இவரு ஆயத்தமா நெருங்கும் போதெல்லாம், அந்தம்மா , தெரிந்தோ தெரியாமலோ, சில வார்த்தைகளைக் கொட்டியிருக்காங்க... ஆனாலும், மிஸ்டர் மனோகர் ! கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தப்பு ஒங்க மேல தொண்ணூறு சதவீதம்.... மீதி பத்து சதவீதம், அந்த பொண்ணு மேல.."
"நான் என்ன செய்யனும் டாக்டர்..? நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன் - டாக்டர்..."
"நாம் பிரச்சினையை நேருக்கு நேராய்ச் சந்திப்போமா? இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமே, உங்களோட ஆண்மைக் குறைவுதான். அந்தக் குறைவு மனோரீதியாலானதா? அல்லது ஆர்கானிக் அதாவது உடல் ரீதியாலானதா? என்கிறதை இனிமேல் தான் கண்டுபிடிக்கணும் மனோரீதியா கண்டுபிடிக்க உங்க மனசுல என்னல்லாம் உறுத்துதோ, அதை எல்லாம் எழுதுங்க எத்தனை பக்கமானாலும் சரி. எழுதுறதை என் கிட்ட கொடுங்க. அதோட சில பிஸிகல் டெஸ்டுகளுக்கும் எழுதிக் கொடுக்கிறேன். இரண்டையும் வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்.”
"நல்ல முடிவு கிடைக்குமா டாக்டர்..?"
"இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது... நீங்க உண்மையை - அது எதுவாயிருந்தாலும் சந்திக்கத் தயாராகணும்...”
----------------
அத்தியாயம் 12
உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக் கொடுத்தது போல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல... பண்பாடுங்கூட... தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி... இவன் தேறிடுவான்.
"உட்காருங்க மிஸ்டர் மனோகர் ! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்து இருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க.... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ.... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்."
மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை நிமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் தூக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக் கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப் பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள்.
டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படர விட்டபடியே கேட்டார்.
"நீங்க எழுத்தாளரா.. மனோகர்?"
"நான் கெட்ட கேட்டுக்கு..."
''லுக் மிஸ்டர் மனோகர் ! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படணும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது . பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது. இது தப்பான கருத்து. சைக்கியாட்ரிஸ்டுகளிலும் மெண்டல் கேஸ்கள் உண்டு. ஆனால், பொய்யர்கள் கிடையாது. அதனால, நான் சொல்வதை நீங்க நம்பணும்... ஒங்களுக்கு எழுத்து ஒரு கிப்டா கிடைத்திருக்கு. முயற்சி செய்தால் நீங்க மிகச் சிறந்த எழுத்தாளராய் மாறலாம். மனம் வைத்தால், அப்படி மாற முடியும். கெட்டுப்போன அருணகிரிநாதர்தான் திருப்புகழ் தந்தார். மனநோய் பீடித்த சார்லஸ் டிக்கன்ஸ்தான், டேல்ஸ் ஆப் டூ சிட்டிஸ், பிக்விக் பேப்பர்ஸ் முதலிய அற்புதப் படைப்புக்களைத் தந்தார். அதனால, கெட்டுப் போனதை, அல்லது மன மாற்றத்தைப் ஒரு அனுபவமாய் எடுத்து, நீங்க அதை எழுத்தில் ஆரோக்கியமாய் மாற்றலாம். நான் சொல்வது சரியா எழுத்தாளரே...."
மனோகர் மனதில் ஒரு குறுகுறுப்பு. சின்னதாய் ஒரு கம்பீரம். புன்னகைத்தான். டாக்டர் சந்திரசேகர் தொடர்ந்தார்.
"நான், சைக்கியாட்ரிஸ்ட் யூரலாஜிஸ்ட், செக்ஸாலஜிஸ்ட் அதோடு நல்ல வாசகன். நீங்க எழுதியதை, ஒரு நிபுணராய் படிக்கத் துவங்கி, ஒரு வாசகனாய் முடித்தேன். உதாரணத்திற்கு, நீங்க எழுதிய முன்னுரையை வாசித்துக் காட்டுறேன் பாருங்க.. இதை நீங்க எழுதியதாய் அனுமானிக்காமல், மனதை உதறிப் போட்டுவிட்டு, ரசிகனாய் கேட்கணும்."
டாக்டர். சந்திரசேகரன், அவன் எழுதிய முதல் பக்கத்தை படிக்கத் துவங்கினார்.
"தமிழகத்தில் பொதுவாக பலவகைக் கிராமங்கள் உண்டு. முதலாவது, சமபலத்தில் ஆன சாதிகளைக் கொண்ட கிராமம் இங்கே யானைக்குப் புலியிடம் பயம். புலிக்கு யானையிடம் பயம் என்பது மாதிரி பரஸ்பர பயமும் மரியாதையும் கொண்ட இந்த சாதியினர் பொதுவாய் அடித்துக்கொள்ள மாட்டர்கள். ஆனால், தப்பித் தவறி சாதிச் சண்டை வந்தாலோ, அது தமிழகப்போர் மாதிரி ஆகிவிடும். இரண்டாவது வகை கிராமம், சிறுபாண்மைச் சாதியும், பெரும்பான்மைச் சாதியும் கொண்டது. இந்த சாதியினர் அடக்கியும், அடங்கியும் போவார்கள். ஆனால், அடக்கப்படுவது அத்துமீறல் ஆகும்போது, இதர கிராமங்களில் பெரும்பான்மையாய் இருக்கும் இந்தக் கிராமத்தில் சிறுபான்மைச் சாதியினர், தம் சாதியின் பலத்தோடு ஆதிக்க சாதியை எதிர்த்துப் பொங்கி எழுவார்கள். இது மாவட்டப் போராக மாறும் மூன்றாவது வகைக் கிராமம், ஒரே ஜாதியைக் கொண்டது. இங்கே சாதிச் சண்டைக்குப் பதிலாக எந்தக் குடும்பம், பெரிய குடும்பம் என்ற பங்காளிச் சண்டைகள். எந்தத் தெரு, பெரிய தெரு என்ற வீதிச் சண்டைகள், கட்சிக் சண்டைகள், கோவில் சண்டைகள் என்று பலப் பல சண்டைகள் நடக்கும்."
"இதே சாதியம், மதங்களுக்கும் பொருந்தும். இவையும் மூன்று வகை. மூன்றும் மூன்றும் சேர்ந்தும், கிளை பிரிந்தும், யாருக்கு யாருடன் தகராறு என்று கண்டறிய முடியாத பெரும் போர்களைத் தோற்றுவிப்பதும் உண்டு. அதாவது, இரண்டாவது மூன்றில் ஒவ்வொன்றும், முதலாவது மூன்றில் எதில் சேர்கிறது? ஏன் சேர்கிறது? என்பது சேர்கிறவர்களுக்கும், சேர்த்துக் கொள்கிறவர் களுக்கும் புரியாது. சாதி - மதக் கலவரங்களில், இதுவே பெருங் கலவரமாகும். ஆனாலும், எப்படியோ, துண்டுப்பட்ட ஊர்கள் ஒன்றுபடும். ஆனாலும், இந்தச் சண்டைகள் ஜலதோசம் மாதிரி, சட்ட ஒழுங்கு நடவடிக்கையால் ஒரு வாரத்திலும், போலீஸ் தலையீடு இல்லாமல் ஏழு நாட்களிலும் தீர்ந்து போகும். 'மறப்போம்; மன்னிப்போம்.' என்ற தத்துவம், கொடி கட்டிப் பறக்கும்."
"இந்த ஆறுவகைக் கிராமங்களிலும், ஒரு வகை வீடோ அல்லது வீட்டுக் குவியல்களோ இருக்கும். இதற்கு ஒத்தை வீடு' என்று பெயர். இதில் இருப்பவர்களுக்கு ஒத்தை வீட்டுக்காரன்' என்ற பட்டப்பெயர். இந்தக் குடும்பத்தினரை, வந்தேறிகள் அல்லது வந்தட்டிகள் என்பார்கள். இந்த ஒத்தை வீட்டுக்காரக் குடும்பத்துடன் சண்டை என்று வந்தால், சொல்லுக்குச் சொல்... ஒத்தை வீட்டுப் பயலே.. ஒனக்கா இவ்வளவு திமிரு - என்கிற வசைச் சொல் வந்தபடியே இருக்கும். இந்த ஒத்தை வீட்டுக்குப் பங்காளி பலம் கிடையாது. பண பலமும் கிடையாது. ஓட்டுக்கள் குறைவு என்பதால், உள்ளூர் அரசியல்வாதிகளும் சீண்டுவதில்லை.”
"இந்த வகைக் குடும்பத்தை, சொந்த சாதிக்காரனும் அடிப்பான்; எந்த சாதிக்காரனும் அடிப்பான். எங்க வீட்டு நாயை எப்படி அடிக்கலாம்' என்று கேட்கும் ஊரில், இந்த ஒத்தை குடும்பத்திற்கு நாதி கிடையாது. இந்தக் குடும்பத்தினரை, யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். இவர்கள் சாதி இருந்தும், தள்ளாமல் தள்ளி வைக்கப்பட்டவர்கள். சமயம் இவர்களுக்குச் சமயத்தில் உதவாது. ஆனாலும், இப்படிப்பட்ட ஒத்தை வீடுகளில் சிலர், பெருத்த பங்காளிக் குடும்பத்தில் பெண் கொடுத்து, பாதுகாப்பைத் தேடிக் கொள்வார்கள். அத்தகைய பலமான பங்காளிக் குடும்பமும், இந்த ஒத்தை வீட்டில் பெண் எடுக்குமே தவிர, பெண் கொடுக்காது."
"இப்படிப்பட்ட பின்னணியில், எங்கள் வீடு ஒத்தை வீடு. இத்தகைய சூழலில் ஒதுங்கிப் போக வேண்டிய என் அம்மாவோ, கிராமத்து யதார்த்தம் புரியாத வாயாடி பட்டறிவு இல்லாத பாமரப் பெண். வெறும் உணர்வுகளால் ஆளப்பட்டவள். கெட்ட கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொள்வதிலும், அவற்றைத் திரும்பிப் கொடுப்பதிலும் வல்லவள். எத்தனையோ பெண்களிடம், சில சமயம் ஆண்களிடமும் உதைபட்டுப் போனவள். கீழே விழுந்து கிடக்கும் போதும், எதிரிகள் முகத்தில் காலால் மண் வாரித் தூத்துவாள். அடிபட்டால் வலிக்கும் என்பதுதான் அவளுக்குத் தெரியும். அவமானமாயிற்றே என்பதை அறியாதவள் "
"ஒரு தடவை, வழக்கம் போல் ஒரு சண்டை அம்மாவின் வாய்க்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு தடியன், அவன் பேர் ராமசாமி. எங்கம்மாவைப் பார்த்து, நேத்துக்கூட பத்து ரூபா கொடுத்துட்டு ஒன்கிட்டே படுத்தேனடி..." என்று அபாண்டமாய்ச் சொன்னான். உடனே எங்கம்மா, அவனுடைய மனைவியின் 'வைப்பாளன்களை பட்டியல் போட்டுச் சொன்னாள் அவ்வளவுதான். ராமசாமி, அம்மாவை மல்லாக்கத் தள்ளினான். அவன் பெண்டு பிள்ளைகள், அம்மாவின் கால், கைகளைப் பிடித்துக் கொள்ள, ராமசாமி, ஒரு கூர்மையான கல்லை எடுத்து, அம்மாவின் நெற்றியில் இடித்தான். அம்மாவுக்கு மயக்கம் வரும்வரை குத்தினான். என் அம்மாவின் நெற்றியில் இப்போது கூட அது பள்ளத்தாக்காய் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் -- இப்போது கூட அந்தப் பள்ளத்தில் ஒரு கோரக் காட்சி எனக்குத் தென்படும். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம். ராமசாமியின் பிடறியில் அடிக்கப் போனேன். உடனே, அவன் பெரிய மகன் என்னைக் கீழே தள்ளி, வாயில் மண்ணைப் போட்டு, கை முஷ்டியால் இடித்தான். இந்தச் சமயத்தில், அப்பா வந்தார். பரமசாது. "என்னை அடிக்கிறதப் பார்த்துட்டு நிற்கிறியே... நீயும் ஒரு ஆம்பிளையா?" என்று அம்மாவிடம் வாங்கிக் கட்டும் பரம சாது. அதோடு பூஞ்சையான ஒல்லி உடம்பு.”
"ஆனாலும், அந்தச் சாதுக்குக் காடு கொள்ளாச் சினம் பொங்கியது. என் மார்பில் உட்கார்ந்திருந்த ராமசாமியின் மகனை மல்லாக்கத் தள்ளினார். ஒரு கல்லைத் தூக்கி, அம்மாவை ரத்தக் காடாக்கிய ராமசாமியின் மேல் போடப் போனார். அதற்குள், அந்த ஒற்றை மனிதர் அடிபட்டதே மிச்சம். பத்துப் பதினைந்து பேருக்கு மத்தியில் சுருண்டு விழுந்தார். ரத்தமும் சதையுமாய் மயங்கிக் கிடந்தார். அப்போதுதான், புல்லுக்கட்டுடன் வந்த அக்கா காந்தாமணி, ஒப்பாரியுடன், வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஐந்து கிலோமீட்டர் தொலைவு போலீஸ் நிலையத்திற்குப் போனாள் போலீஸ் வந்தது. கோபத்தோடு வந்தவர்கள், குணத்தோடு' போனது. ராமசாமிக் குடும்பம் கொடுத்த அடியில் 'வர்மம் ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன அப்பா, ஒரு வருடத்தில் ஒரேயடியாய் முடங்கி விட்டார்.
டாக்டர் சந்திரசேகர், மேற்கொண்டு படிக்க முடியாமல், மனோகரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மனதில், அவரே முன்னால் சொன்ன இலக்கிய நயமும், வாசிப்புச் சுகமும் மரித்துப் போயின. மரித்தவை, மனித நேயமாய் உயிர் பெற்றன. அவர், மனோகரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவனோ, தட்டப்பட்டது தெரியாமல் தலை தாழ்த்திக் கிடந்தான். அந்த மொஸைக் தரை, சாணம் பூசிய வெறுந்தரையானது. மேல் தளம் பனையோலைகள் பதித்த கூரையாகிறது. அப்பா செத்துக் கிடக்கிறார். வெளியே அம்மா, ஊரைத் தூற்றி மண்வாரிப் போடுகிறாள். சிலர் திட்டுகிறார்கள். ஊர் வழியில் பிணம் போவாது என்று அவளை மிரட்டுகிறார்கள். பாவாடை-தாவணி அக்கா, அவன் தலையில் முகம் போட்டு விம்முகிறாள். ஈரப் பசையில், இருவர் விழிகளும் ஒட்டிக் கொள்கின்றன.
விநாடிகள், நிமிடங்களாய் மாறுகின்றன. எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த டாக்டருக்கு, மனோகரே இறுதியில் அடியெடுத்துக் கொடுக்கிறான்.
"அப்போதான்... அப்படின்னனா... இப்பவும் இப்படி... பட்ட காலுலயே படும்; கெட்ட குடியே கெடும் மாதிரி ஆகிட்டு."
டாக்டர், அவன் பேச்சைப் பிடித்துக் கொள்கிறார்.
"அப்போ ... அப்படி இருந்ததால் தான், இப்போ இப்படி இருக்குது. ஆமாப்பா.. ஒன்னோட பிரச்சினை, அடிப்படையில் செக்ஸ் பிரச்சினை அல்ல. ஆழ் மனதில் வேரூன்றிய பாதுகாப்பின்மை உணர்வு. அதுதான பீலிங் ஆப் இன் செக்யூரிட்டி வெளி மனதில் பாலியல் இயலாமை. வெளிப் பாடுகளாய் வேடம் போடுது. இந்த அடிமனப் பெரும் பயத்தை, நீக்கினால் தவிர, செக்ஸ் இயலாமையைப் போக்க முடியாது. ஒங்க அம்மா, சிறுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் சிறுவனான நீ, எதிரிகளை அடிக்கக் கைகளைத் தூக்கி இருக்கே... பற்களைத் கடித்திருகிகே. பெரியவனாகாமல், போயிட்டமேன்னு வருத்தப் பட்டிருக்கே. இயலாமையில் துடித்திருக்கே. கற்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவற்றை எறிந்தால் என்ன ஆவோமோ என்று நினைத்து சும்மா இருந்திருக்கே”
"பன்னிரண்டு வயதில், அம்மா தாக்கப்பட்ட போது, நீயும் ஒரு பெரிய பையனால் தாக்கப்பட்டு, அவனை மாதிரி பெரியவனாய் ஆகாமல், போனதுக்கு வருத்தப்பட்டே .... சரியா?" ஆனாலும், யதார்த்தத்தின் சூடு தாங்காமல், பேன்டஸி எனப்படும் ஒரு கற்பனை உலகில் உலவி இருக்கே. எதிரிகளின் பெண்கள் ஒனக்கு ஆறுதல் சொல்வது போல் ஒரு கற்பனை. அவர்கள் ஒன் முகத்தோடு முகம் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒன் மேலே விழும் ஒவ்வொரு பெண்ணும் படிப்படியாய் கீழே போனாள். பாயில் விழுந்த பாவை, ஒனக்கு மெத்தையாகிறாள். அப்போதெல்லாம், ஒன் விடலை உடம்பில் ஒரு இயக்கம் ; ஒரு சுகம். விதவிதமான பெண்கள். பெரும்பாலும் உள்ளூர் எதிரிகளின் பெண்கள். இவர்கள் உன்னை அடிக்க வரும் அப்பன் மார்களுக்கு எதிராய் வெகுண்டு, உன் முன்பக்கத்தில் முதுகைப் போட்டு, அவரைக் கொல்லுமுன் என்னைக் கொல்லுங்கள்' என்று கேடயமாய்ச் சுசூளுரைத்தார்கள்."
"இப்படிப்பட்ட போலிக் கற்பனையும், நிசமான பாலியல் இயக்கமும் மெல்ல மெல்ல உங்களுக்கு ஒரு பழக்கமாகிறது. பழக்கம் வழக்கமாகி, அதுவே ஒரு போதை ஆகிறது. தெருச் சண்டைகள் நடக்கும் போதும், வரப்புகளை வெட்டி ஒன் வயலை ஆக்கிரமிப்புச் செய்த மிராசுதார்கள், ஒங்கம்மாவை சிரமப் படுத்தும்போதும், கல்லூரிப் படிப்பு சங்கடத்தைக் கொடுத்த போதும், இந்த பாலியல் பழக்கத்துடன் அடைக்கலம் ஆனாய்."
'சைக்கிளில் கல்லூரிக்குப் போகும் ஒன்னை, சின்னப் பிள்ளைகளில் இருந்து பெரிய பயல்கள் வரை, ஒன் கையில் கிடந்த கடிகாரத்தைச் சாக்காக்கி, ஓட்டைக் கடிகாரம். ஓட்டைக் கடிகாரம்.' என்று நையாண்டி செய்த போதெல்லாம், நீ மிரண்டே, துவண்டே, பெரிய ஆளாகாமல் போனோமே என்று துடித்துப் போனே. வீட்டுக்கு வந்ததும், பரிகாசிகளின் பெண்கள், ஒன் படுக்கை அறைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டதால், சுய சேர்க்கையில் ஈடுபட்ட நீ, இறுதியில், அந்தச் சேர்க்கை களுக்காக கஷ்டப்பட விரும்பினே. அம்மா திட்டும்படி நடந்துக்கிட்டே சின்னப் பசங்க பரிகசிக்கும்படி, அவர்கள் கண் முன்னாலேயே கடிகாரத்தைக் கழற்றி, 'கீ' கொடுத்தே அவர்கள் கிண்டலடிக்க அடிக்க, அவன் தமக்கைகள் உன் மானசீக காதலிகளாய் ஆனார்கள்."
மனோகர், தலை தானாய் தொங்கியது; முகம் வெளுத்தது; நிமிர்ந்த மேனி, சரிந்து கிடந்தது. டாக்டர், இப்போது சுருதி மாற்றிப் பேசினார்.
"ஒனக்கு வந்தது, எனக்கு வந்தாலும், நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். பொதுவாக, வாழ்க்கையில், தாங்க முடியாத கஷ்ட நஷ்டங்களையும், சிறுமைகளையும் அனுபவிப்பவர்கள், ஒன்று ஒன் தந்தையைப் போல், பரம சாதுவாய் ஆவார்கள். அல்லது ஒன் அம்மாவைப் போல் பயங்கரியாய் ஆவார்கள் ஆனாலும், ஒனக்குத் தீமையே நன்மையாகி விட்டது. படித்துப் படித்து நல்ல வேலைக்குப் போய், குடும்பத்தோடு, ஊரை விட்டே, வேரோடும், வேரடி மண்ணோடும் போக வேண்டும் என்ற எண்ணம் ஒனக்கு ஏற்பட்டது. போதாக் குறைக்கு, பாவாடை தாவணியிலிருந்து சேலைக்கு வந்த ஒன் அக்கா, உள்ளூரிலேயே, பங்காளி பலமிக்க தேக்கன் குடும்பத்தில் நல்லவனும் வல்லவனுமான சௌரி முத்துவைக் காதலித்து, அவனையே திருமணம் செய்து கொண்ட பிறகு, உன் வாழ்க்கையில் ஒரு வாசனை வீசியது. ஒன் மச்சானே, உன் குடும்பத்தின் காவல் தெய்வமானார். ஒன்னை மோட்டார் பைக்கில் கொண்டு போய் கல்லூரி வாசலில் விட்டார். ஒன்னை, ஓட்டைக் கடிகாரம் என்று நச்சரித்த பயல்களின் காதுகளைத் திருகினார். தலைகளில் குட்டினார். மனதில் சிறுவனாய் இருந்த நீ, சம வயதுக்கு வந்தாய். சுய சேர்க்கையைக் கூட கைவிட்டாய்."
''ஆனால், வசந்தம், பாலையானது. சௌரிமுத்து, மாரடைப்பால் இறந்தபோது, அவரது சொல்லுக்குக் கட்டுப் பட்டிருந்த குடும்பம், ஒன் அக்காவை, வீட்டை விட்டுத் துரத்தியது. அவள் வந்த வேளைதான், அண்ணன் போய்விட்டான் என்று மைத்துனர்கள் ஊர்ச் சாட்சியாக அவளை அடித்து விரட்டி னார்கள். மனைவிதான், கணவனின் வாரிசு என்று சொல்ல, ஊரில் அதைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் முன்வரவில்லை. மீண்டும் நீ, மனதுக்குள் சிறுவனாய் மாறிவிட்டாய். உன்னுள் அந்தச் சிறுவன் அப்படியே இருக்கிறான். அவ்வப்போது வளர நினைக்கிற அந்தச் சிறுவனை, அம்மாவின் நெற்றிப் பள்ளமும், அக்காவின் விதவைக் கோலமும் வளர விடாமல் செய்கின்றன. ஒன் மனதில் தவிக்கும் அந்தச் சிறுவனைப் பெரியவனாக்கி விட்டால், ஒன் செக்ஸ் பிரச்சினை தீர்ந்தது மாதிரிதான். நீ, முழுமையான ஆணாய், மனைவியை நெருங்கும் போதெல்லாம், இந்தச் சிறுவன், மூக்கை நீட்டுகிறான். ஒன் மூக்கை அறுக்கிறான். அதோடு, ஓட்டைக் கடிகாரம்... ஓட்டை ' என்ற சத்தம் தானாய்க் கேட்கிறது. இந்த வன்மமான, இளக்காரமான வார்த்தைகள், ஒன் வெளித் தோற்றத்தைக் கலைத்து, உள் தோற்றமான சிறுவனை முன்னிலைப் படுத்திவிட்டன. ஆகையால், இந்தச் சிறுவனை முதலில் வேண்டும். அல்லது, அவனை வளர்த்து, ஒரு வாலிபனாக்க வேண்டும். இது சிரமமமான காரியம் ஆனால், எனக்குச் சிரமமில்லாமல்
செய்துட்டே .."
மனோகர், டாக்டரை ஒரு கேள்வியாய்ப் பார்த்தான். அவரும் பதிலாய்ப் பேசினார்.
''ஒன்னை மாதிரிப் பிரச்சினைக்காரங்களுக்கு அதிரடிச் சிகிச்சை - அதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படும். ஆனால், ஒனக்குத் தேவையில்லை அந்த விடுதி நிகழ்ச்சிகள், ஒனக்கு ஒரு அதிரடிச் சிகிக்சையைத் தந்துவிட்டன. ஒன்னுள் இருந்த சிறுவன், ஒரே சமயத்தில், ஒரேயடியாய் பெரியவனாகி விட்டான். நீ, அந்த விடுதிப் பயல்களோடு நடத்திய போராட்டம் இருக்குதே... அது வெறும் ஆண்மையல்ல.... பேராண்மை . இப்பவே, ஒன் மனதில் ஒன்னைப் பற்றி ஒரு உயர்வான எண்ணம் வந்திருக்குமே. எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனப்பான்மை வந்திருக்குமே. நான் சொல்றது சரியா? வாயைத் திறந்து பேசுறது. இப்படித் தலையாட்டினால் எப்படி"
"சரிதான் டாக்டர்."
"கேட்கிறதுக்கு சந்தோஷமாய் இருக்குது. நான் "வயதுக்கு" வந்த வாலிபன். மிஞ்சேன்; அஞ்சேன்; கெஞ்சேன். என்னால், செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும்' என்று பலதடவை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். இதுக்கு ஆட்டோ சஜ்ஜஸ்ஷன்னு பேர்... தேவைப்பட்டால், உறிப்னாடிக் சிசிக்கை கொடுக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கேன். கடைசியாய் ஒரே கேள்வி. கமர்ஷியல் செக்ஸ் ஒர்கர்ஸ்கிட்டே போனதுண்டா..."
"அப்படின்னா ..."
"விலைமாதர். இந்தப் பெண்கள் பாவிகள் அல்ல. பாவப் பட்டவர்கள். இவர்களில் பலர், தங்கள் விருப்பத்துக்கு விரோதமாய், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டவர்கள். அதனால்தான், இந்தப் பெயர் மாற்றம். சரி போனதுண்டா ?"
"எல்லாம் கடற்கரை வரைக்கும்தான். எல்லை தாண்டல..."
"குட் எதுக்கு கேட்டேன்னா ... விலை மாதருக்கு, சாரி.... ஒரு பாலியல் விற்பனைப் பெண்ணுக்கு, சலிப்பு வரும்போதோ அல்லது குற்ற உணர்வு கூடும்போதோ, நிர்வாணமாகிறவனை உற்றுப் பார்ப்பாள். பிறகு, திடுக்கிட்டது போல் பாவலா செய்வாள். அப்புறம், 'நீ ஆம்பிளையே இல்ல போய்யா... தம்மாத்துண்டுன்னு துரத்துவாள். இதனாலேயே பலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கு..."
மனோகர், அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பேச்சை முடித்து மறு பேச்சைத் துவங்குமுன்பு, அரைகுறையாகச் சொன்னான்.
"சுய சேர்க்கையாலே, ஏடாகூடமாயிடுமுன்னு மயிலாப்பூர்ல, ஜெகன்நாதன்னு ஒரு சித்த வைத்தியர் சொன்னார்."
"ஓ! அவரா. எங்க பெரியப்பாதான். என்னக் கூடத் திட்டுவார். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு, சுய சேர்க்கை ஆபத்துன்னு. அல்லோபதிக்காரன் ஆய்வு அறிக்கை விடுவான்னு கிண்டல் அடிப்பார் ஆனால், அதனாலே, எந்தக் கோளாறும் கிடையாது என்பதுதான் எங்க கட்சி. அதோட, இன்னொரு விஷயம். ஆண்மைக் குறையுள்ளவன், பெண்டாட்டியெல்லாம் ஒழுக்கங் கெட்டவளாய் இருக்க வேண்டியதில்லே.... ஆண்மையுள்ளவன் மனைவிகள் பத்தினிகளாய் இருப்பாங்க என்ற கட்டாயமும் கிடையாது வாட்ட சாட்டமானவன் ஆண்மை உள்ளவனா இருக்கணும் என்கிற அவசியமில்லே. பூஞ்சை உடம்புக்காரன் இயலாதவன் என்கிற பேச்சும் கிடையாது."
மனோகர், மேலும் சில வினாக்களைக் கேட்கப் போன போது, ஒரு யூனிபார வாலிபன், ஒரு பைலைக் கொண்டு வந்து, டாக்டர் சந்திரசேகரிடம் கொடுத்தான். அதன் மேலட்டையில் மனோகரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே மெடிகல் ரிப்போர்ட் என்ற ஆங்கில வாசகம்.
டாக்டர் சந்திரசேகர், அந்த பைலுக்குள் இருந்த எக்ஸ்ரே படத்தை உருவிப் பார்த்தார். கருப்பாய்ப் பளபளத்த பின்னணிப் படத்தில் வெளுப்பான நிழல்களைக் காட்டிய அந்த எக்ஸ்ரேயை மானிட்டரில் பொருந்திப் பார்த்தார் சர்க்கரை, ரத்தம், சிறுநீர் போன்றவற்றின் சோதனைக் குறிப்புக்களை படித்துப் பார்த்தார்.
மனோகர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டான். உடல் ரீதியில் ஏதும் கோளாறு இருக்குமோ என்ற சந்தேகம். அப்படியானால், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதில் ஓர் தீர்மானம்.
மனோகர், பிடித்திருந்த அவனது சொந்த உயிர், இப்போது டாக்டர் சந்திரசேகரின் கைக்கு மாறியது. சிறிது நேரத்தில், அவனின் கையை குலுக்கியபடியே, உயிர் கொடுத்தார்.
"கன்கிராஜ்லேஸன்ஸ் மனோ, உங்களுக்கு உடல் ரீதியிலும் எந்தக் கோளாறும் கிடையாது. ரத்தத்தில் சர்க்கரை, சாப்பாட்டிற்கு முன்பு 90-நார்மல். சாப்பாட்டிற்குப் பிறகு 130... நார்மல். ஆக நீரிழிவு கிடையாது. ரத்த அழுத்தம் 90 - 130; கச்சிதம். ஆண்மைக் குறைவுக்குக் காரணமான சயரோகமோ புட்டாளம்மன் நோயோ வந்ததில்லை. நான், ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது போல், பிட்டத்துக்குக் கீழே, உட்பக்கமாய்க் கட்டி ஏதும் இல்லை. அப்படி ஒரு கட்டி இருந்தால், அது ஆயுள் வரைக்கும் வலிக்காது. ஆனால், பாலியல் நரம்புகளை அழுத்தி, இறுக்கி அடம் செய்யும். இப்படிப்பட்ட கட்டியும் இல்லை. அதனால, ஆபரேஷனுக்கு அவசியம் இல்லை. இப்போ ஒரு நவீன முறை வந்திருக்கு. செக்ஸ் ரீதியாய் பலவீனப்பட்ட ஆணுக்கு, ஒரு பலூன் மாதிரி வஸ்துவைப் பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க கணவரோட உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால் அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை .”
மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்தது போல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர். சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.
"உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வாசனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கணும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும் போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால் தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது."
மனோகருக்கு தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது.
------------
அத்தியாயம் 13
"ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும் இருக்கக்கூடாது. இதனாலேயே ஒங்க கணவரை , தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்..."
கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும்' என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்த போது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ஆனாலும்' என்கிற வார்த்தை, சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள் போல், சங்கரி, அந்தக் கவுன்சிலிங் பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி; மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள் . உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள்.
"பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி,, அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பது போல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி..."
சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள்.
"புரியுது. சொல்ல வந்ததை முழுசா... முடியுங்க"
"அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப் புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?”
"அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க.... நான் இதுல தோற்றுப் போயிட்டேன்."
"தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் - மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!"
"ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஒங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஓசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ஓட்டை வண்டின்னு' கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை, இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்."
"என்னை ... என்னதான் செய்யச் சொல்றீங்க...?"
"அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. இன்றைக்குப் பரவாயில்லிங்கன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, புரை தீர்ந்த பொய் அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு விவாகரத்து... மறுமணம்."
"நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க! அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் என் பெற்றோரால்தான் இந்த அறையில் முடங்கிக் கிடக்கேன். ஆனால், மறுமணத்தைப் பற்றி, நான் நினைத்தே பார்க்கல... பட்டது போதும்..."
'அப்படி நினைத்தால், நீங்கதான் பட்டுப் போவீங்க. விவாகரத்து செய்கிற எந்தப் பெண்ணுக்கும் மறுமணம் செய்ய உரிமை உண்டு. பழையவன் மாதிரிதான், புதியவன் இருப்பான் என்கிற அனுமானமே தவறு ஒரு பெண் தனித்து வாழ்வதாலேயே, அவளுக்குத் தனித்துவம் வந்துவிடாது. ஒங்க பெற்றோரின் நிம்மதிக்காவது, மறுமணம் செய்துக்கணும். இது பெற்றோருக்கு செய்கிற வைத்தியம். ஒங்களுக்கு, நீங்களே ஏற்படுத்திக்கிற புனர்வாழ்வு.''
"என்ன மேடம் நீங்க. எனக்குத் தோணாதையும் சொல்லிக் கொடுக்கிறீங்க. நான் எதுக்கும் லோலோன்னு அலையுற 'லோ டைப் இல்லை , வசந்திம்மா ."
வசந்தி, அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். சங்கரி, லேசாய்ப் புன்னகைத்தில், அவளுக்கு ஆறுதல். அந்த ஆறுதலை மகிழ்ச்சி யாக்கி, சங்கரி பேசினாள்.
"அவரோடு வாழ்கிறதா... இல்லையா என்கிறதுல என்னால இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியலதான். அவரோட அடாவடித் தனங்களை, அவருடைய ஆரம்பகால இனிய சுபாவமும், நேர்மையும் இன்னும் பின்னுக்குத் தள்ளுது. ஆனால், என்னோட மாமியாரை நினைத்தால்...."
"அந்தம்மாவும் ஒரு மனநோயாளிதான். வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்து, அடிபட்டு அடிப்பட்டு அந்தம்மாவுக்கு உள்ளூர ஒருவித உறிஸ்டிரியாவும், சேடிஸமும் வந்துட்டு... நீங்க இல்லாட்டால், அந்தம்மா, சொந்த மகனையும், மகளையும் கூட பாடாய்படுத்தி இருப்பாங்க. அந்தம்மாவுக்கு, ஏவுகணைத் தாக்குதல் தான் முக்கியம். இலக்கு முக்கியமல்ல. இப்போ , அவங்களுக்கும் கவுன்சிலிங்' செய்யுறோம். பாதி குணமாயிடும். நீங்க, கணவனைச் சந்திக்க, இப்போ தயாராய் இருக்கீங்க.. சரியா."
சங்கரி, நகத்தைக் கடித்தபோது, வசந்தி, டெலிபோனில் எட்டைச் சுழற்றி, ஆப்பரேட்டரிடம் லைன் கேட்டாள். உடனே, அவள், டாக்டர் சந்திரசேகரனிடம், சங்கரி, கணவனைச் சந்திக்கத் தயாராய் இருக்கும் விபரத்தைச் சொன்னாள். பிறகு, ஐந்தாறு நிமிடம் பேசினாள். பேசி முடித்துவிட்டு, டெலிபோன் குமிழை சரியாகப் பொருத்திவிட்டு உற்சாகமாகப் பேசினாள்
"வாழ்த்துக்கள் மேடம்! உங்கள் மனோவுக்கு, உடம்பு ரீதியில், எந்த குறையும் கிடையாது. ஒரு சராசரி ஆண்மகனுக்கு உள்ள அத்தனை உடலியல் நிறைவுகளும் அவருக்கு இருக்குதாம். மனம் கூட, இப்போது பாலியல் பயம் இல்லாமல் போய்விட்டதாம். ஆனாலும், பறவை போனாலும், கிளை ஆடுவதைப்போல சில காலத்திற்கு தடுமாறத்தான் செய்யும். அப்போது, நீங்கள் தான், தாங்கிக் கொள்ள வேண்டும் - இரண்டு விதத்திலும்..... சரியா...?"
சங்கரி, நகத்தை கடிப்பதை விட்டுவிட்டு, அவளை புன்முறுவலாய் பார்த்தபோது, "ஓ.கே. குட்லக் " என்று சிரித்தபடியே வசந்தி, போய்விட்டாள்.
----------
அத்தியாயம் 14
இப்போது, அவள், அந்த அறை வாசலை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். மனோகரைக் காணவில்லை. மனம் பட படத்தது. எழுந்து அறையில் உலாவினாள். டீப்பாயிலிருந்து கீழே விழுந்த ஒரு வெண்கல டம்ளரை, எடுத்து மேஜையில் வைத்துவிட்டுத் திரும்பிய போது....
மனோகர், அவள் எதிரே நின்றான். கைகளைக் குறுக்காய்க் கட்டி, அவளை அவ்வப்போது பார்த்துப் பார்த்து தலை கவிழ்ந்தான். ஏதோ பேசுவதற்காக, முகத்தை முன்னோக்கி நிமிர்த்தப் போனான். முடியவில்லை. முயன்று, முயன்று பார்த்தான். கண்கள் தான், கசிந்தன. அவள், எடுத்த எடுப்பிலேயே தன்மீது தாவி, விழுந்து அழுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு, ஒரு ஏமாற்றம். அந்த ஏமாற்றமே, அவன் மனதை வைரப்படுத்தியது. அவளது எந்த முடிவையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லிக் கொடுத்தது.
சங்கரி, இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுகையும், ஆத்திரமும், நீரும் நெருப்பும் போல் ஒருங்கே வந்தன. படுக்கையில் உட்கார்ந்து முட்டிக் கால்களைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்தாள். இடையிடையே அவனைப் பார்த்தாள். அவனைப் போலவே, பார்க்க நினைத்து, பார்க்க முடியாமல், முகம் நீட்டியும் தலை கவிழ்த்தும் அல்லாடினாள்.
இதற்குள், ஒரு உறுதியனான முடிவுக்கு வந்த மனோகர், கட்டிலின் எதிரே உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தான். சட்டைப் பைக்குள் இரு மடிப்பாய் இருந்த ஒரு அரசாங்க முத்திரையிட்ட கவரை, ஒரு கையால் எடுத்தபடி, மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கவரை, அவள் கைகளைப் பிரித்துத் திணித்தான். சிறிது நேரம் அசைவற்ற அவள் கண்களில், அந்தக் கவர் தாளாய்ப்பட்டது. அதன் மேல் அவளது பெயர், முகவரி...
மனோகர், அந்தக் கவரை, அவளிடமிருந்து எடுத்து, உள்ள இருந்த காகிதத்தை, அவள் முட்டிக் கால்களில் வைத்தான். அதைப் படிப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழியில்லை. மூன்றாம் ஆளாய்ப் படித்தவளின் உடல் நிமிர்ந்தது. கால்கள் சம்மண மிட்டன. கண்கள் பிரகாசித்தன. சாஸ்திரிபவனில், அவள் சேர வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்துள்ள கடிதம், அவள் வேலையில் சேர ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த அவகாசம் முடிய இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளன.
சங்கரி, பரவசப்பட்டாள் சாஸ்திரிபவனில், அவள் அப்போதே வேலை பார்ப்பது போன்ற பிரமை. சக தோழிகளுடன் பேசுகிறாள்.... சிரிக்கிறாள்....
அப்போது, அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போல், அவனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க தனது மகிழ்ச்சி, மடிந்து, அவனது கோலம் மனதைக் குடைந்தது. பத்து நாளையத் தாடி; கசங்கிப் போன உடை, உள்ளுக்குள் போன கன்னங்கள். அய்யோ, இது என்ன அலங்கோலம்'
மனோகர், தட்டுத் தடுமாறி தழுதழுத்த குரலில் விளக்கினான்.
"நீ சேரவேண்டிய அலுவலகத்துக்குப் போய், தலைமை அதிகாரியைச் சந்தித்தேன். உனக்கு சுகமானதும், வேலையில் சேர்த்திடுவேன்னு அவகாசம் கேட்டேன். உடனே, அந்தப் பெரிய மனிதர், 'வெளியூர்ல அவங்க அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ சீரியஸ்னும், இதனால் ஒங்க ஒய்பு அங்கே, போயிருக்காங்கன்னும் ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஒனக்கு சுகமில்லைன்னு சொன்னால், மெடிகல் சர்டிபிகேட்டில் பிரச்சினை வரும் என்றார். நானும், ஒங்கம்மா, மதுரையில் படுத்த படுக்கையாய் இருக்கிறதாய் எழுதிக் கொடுத்தேன். எந்த நேரம் பொய் சொன்னேனோ , அது எங்கம்மா விஷயத்துல மெய்யாயிட்டு..."
சங்கரி, அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, முதல் தடவையாக அதே சமயம், எதார்த்தமான குரலில் கேட்டாள்.
"என்னாச்சு.... என்னால எல்லாருக்குமே பிரச்சினைதான். என்னாச்சு..."
"பயப்படும்படியா இல்ல நாலு நாள் படுக்கை வாசம். இப்போ பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுற அளவுக்குத் தேறிட்டாங்க. ஐ.... ஆம் ஸாரி சங்கரி.... ஒன் விஷயத்துல, அரக்கத்தனமா நடந்துக் கிட்டேன்னு, எங்கம்மாவே என்னைத் திட்டுறாங்க....”
சங்கரி, சகவாச தோசத்தில் கேட்பது போல, கேட்டாள்.
"ஒங்க அக்காவுக்கு ஏதாவது செய்தீங்களா..."
"ஆமாம். என் போலீஸ் எஸ்.பி. பிரெண்டைப் பார்த்தேன். அவரு, எங்க மாவட்ட எஸ்.பி. கிட்டே பேசினார். இரண்டு நாளுல அக்காகிட்டே தகராறுக்குப் போன அத்தனை பேரும், இங்கே வீட்டுக்கு வந்தாங்க. என் காதைப் பிடித்துத் திருகுனவன் முதல் இளக்காரமாய்ப் பார்த்தவனுங்க வரை அத்தனை பேரும் வந்தாங்க... காலுல விழாத குறையாக் கெஞ்சினாங்க. அக்காவும் சமரசத்திற்குச் சம்மதிச்சிட்டாள். பிரச்சினை தீர்ந்துட்டு."
"கடைசில... எல்லாரும் தர்மத்தை விட, போலீஸுக்குத்தான் பயப்படுறாங்க.. ஒங்க அக்காவுக்கு.... நீங்க இருக்கீங்க தப்பிச்சிட்டாங்க.... இதை மாதிரி அதிகார பலம் இல்லாத அனாதைப் பெண்கள் என்ன செய்வாங்க? உதைக்கிற காலுலதான் விழணுமா? அடிக்கிற கையைப் பிடித்துத்தான் கெஞ்சணுமா?"
சங்கரி, பாதிக் கண்களை மூடியபடி, மனோகரைப் பார்த்தபோது, அவன், அவளைச் சந்திக்க முடியாமல், முழுக் கண்களையும் மூடினான். என்ன சொல்கிறாள்? அவளோட நிலைமையைச் சொல்லாமல் சொல்கிறாளா... பேசிட வேண்டியதுதான்... முழுமையாகப் பேசி.... முடிவை அவளிடம் விட்டுவிட வேண்டியதுதான். எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டியதுதான்.
மனோகர், நாற்காலியில் நிமிர்ந்து உட்காருகிறான். மனம், விரக்தியையும், பற்றையும் விலக்கித் தள்ளியது. வாய் அதன் வெளிப்பாடாகியது.
"ஒன் விஷயத்தில், நான் ஒரு மிருகமாகவும், எனக்கு நானே பித்துக்குளியாகவும் நடந்துக்கிட்டேன். இதற்கு, டாக்டர், பல்வேறு பின்னணிக் காரணங்களைச் சொல்கிறார். ஒனக்கு, வலிப்பு வந்தது எப்படி, உன்னை மீறிய செயலோ... அப்படித்தான் நான் நடத்திய ஆர்ப்பாட்டமும், அடித்த கூத்தும், என்னை மீறிய செயல் என்கிறார். ஆனாலும், அவர் சாக்கில், நான், நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த விரும்பல... உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன். தயவுசெய்து என்னைப் பேச விடும்மா..."
"இப்போ... நான், எல்லா அம்சங்களிலும் மேன்மைப்பட்டதாய் நினைக்கேன். டாக்டரும் அதைத்தான் சொல்கிறார். இனிமேல் என்னோட சேர்ந்து வாழ்வதும், வாழாததும் ஒன்னோட உரிமை. பிளீஸ் பேச விடு... நீ என்னோட வாழ்வதற்கு வசதியாய் நானும் நடந்துக்குவேன். டாக்டர் சொன்னது மாதிரி, நம் இரண்டு பேருக்கும் சுற்றுப்புற மாற்றம் அவசியம். ஒன் முடிவு எப்படியோ... நான், வீடு பார்க்கேன். உனக்குச் சம்மதமுன்னால், புது வீடு கிடைக்குற வரைக்கும், ஒன்னோட ஊருக்கே வரத் தயாராய் இருக்கேன். ஊர்க்காரன் அடங்கிட்டதால், அம்மா, அக்காவோட ஊருக்குப் போகப் போவதாய் ஒத்தக் காலில் நிற்கிறாள்"
"இனிமேல், நீ சொந்தக் காலில் நிற்கப் போகிற சுயேச்சையான பெண் கணவன் கையை எதிர்பார்க்கிற ஒரு மனைவியின் அன்பு, மாசு, மருவற்று இருந்தாலும், சில சமயம் அது கட்டாயத்தின் பேரிலும் வரலாம். ஆனால், வேலைக்குப் போகிற ஒரு மனைவியின் அன்பு , எந்தக் கட்டாயத்திற்கும் உட்பட்டதல்ல அந்த அன்பு, நீர் தேக்கமல்ல. தானாய்ப் பீறிடும் நீரூற்று ஒன்கிட்டப் பேசின பிறகு, என் மனம் லேசானது மாதிரித் தெரியுது. ஒன்கிட்ட மனைவியாய்ப் பேசற உரிமையை, நீ தராமல் நான் எடுக்கத் தயாராயில்லை . ஒன்னை ஒரு தோழியாய் நினைத்துத்தான் பேசுறேன். நான் பேசுறதுல, ஒனக்குச் சந்தோசமோ- இல்லியோ எனக்கு ஒரு நிம்மதி. காரணம், நானும் ஒன்னை மாதிரி ஒரு வகையிலே, அனாதரவான----."
மனோகர், விம்மினான். உடனடியாய் அந்த விம்மலை, அடக்கினான். தனக்குத்தானே ஆணையிட்டான். அழுது ஆதாயம் தேடப்படாது நான் வயதுக்கு வந்தப் பெரியவன். அழமாட்டேன். எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன்.'
யந்திர சங்கரி, பெண்ணானாள். அந்தப் பெண், மெள்ள மெள்ள மனைவியாக மாறிக் கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில், மனோகரும் யதார்த்தக் குரலில் கேட்டான்.
"இப்போ , எனக்கு ஒரு பதில் வேணும். சங்கரியை, இனிமேல் நான் எப்படிப் கூப்பிடணும்? வழக்கம் போல் நீ என்றா, இல்லை நீங்கன்னா... ரெண்டு எழுத்துத்தான் வித்தியாசம். ஆனால், இது நம்மை ரெண்டாகவும் பிரிக்கலாம்; ஒன்றாகவும் ஆக்கலாம். என் முடிவைச் சொல்லிட்டேன். அதேசமயம், சங்கரி முடிவையும் மதிக்கிறேன். மனசு கேட்கல... நான் நடந்துகிட்டதுக்குப் பிராயச்சித்தம் செய்யணும். எது என்கிறது எனக்கு இப்பத் தெரியணும். இல்லாட்டியும் - நாளைக்குச் சொல்லலாம்."
சங்கரி, மனோகரை மலங்க மலங்கப் பார்த்தாள். அவன், கண் கலக்கத்தில், அவள் கண்கள், கசிந்தன. ஒரு விநாடி அவனையே அசைவற்றுப் பார்த்தவள், மறு விநாடி அவன் மேல் சாய்ந்தாள். அவன் கழுத்தை இரண்டு கரங்களாலும், சுற்றி வளைத்து, அவனை தன் பக்கமாகச் சரித்தாள். ஏதோ பேசப் போனவனின் வாயைப் பொத்தினாள். குலுங்கிக் குலுங்கி அழுதழுது, அவனையும் குலுக்கினாள். அவன் தோள்களை, அழுத்தப் பற்றி, அவன் கழுத்தில் முகம் போட்டாள். சத்தம் போட்டே கத்தினாள்.
"நான் போகமாட்டேன். ஒங்கள விட்டுட்டுப் போகமாட்டேன். என்ன ஆனாலும் சரி... எப்படி ஆனாலும் சரி... நீங்க என்னை விட்டுப் போறதுக்கு விடமாட்டேன் - பார்த்துடலாமா"
சங்கரி, அவனைச் சவாலாகப் பார்த்தாள். ஒரு குழந்தையைப் போல பார்த்தாள். அவனை, பொய்யடியாய் , கன்னத்தில் அடித்தாள். தலையில் குட்டினாள். அவன் சிரித்தபோது, இவள் அழுகை விக்கலாகி, திக்கலாகி, அவன் கழுத்துக்கு இன்னொரு முகம் முளைத்ததுபோல் மவுனமாய் முற்றுப் பெற்றது. அவளது கண்ணீர், மழை விட்ட தூவானமாய், அவன் கழுத்து மேட்டில் துளித் துளியாய் பல்கிப் பரவி நின்றது. அந்த ஒவ்வொரு துளியும், அவன் மனதில் ஒவ்வொரு நதியாய்ப் பிரவாகம் எடுத்தது. அத்தனை நதிகளும், ஒரு மகாந்தியாகி, சங்கரிக்குள் சங்கமித்தது.
கடலும் நதியும் ஒன்றானதில், அவர்களது கரங்களும், கால்களும் அலைகளாய் ஆர்ப்பரித்தன. நேரத்தை இழுத்துப் பிடித்த அலைகள் - இயக்கத்தை நிறுத்தாத புதிய புதிய அலைகள்.
*****
This file was last updated on 25 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster.