pm logo

சமுத்திரம் எழுதிய
புதைமண் (குறுநாவல்)‌


putai maN (short novel)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புதைமண் (குறுநாவல்)‌
சு. சமுத்திரம்‌


Source:
ஒத்தை வீடு (+புதைமண் / இரு குறுநாவல்கள் )
சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041
முதல் பதிப்பு - ஜுன், 2000
விலை ரூ.60-00
வெளியீடு : ஏகலைவன் பதிப்பகம், 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 041.
ஏகலைவன் பிகே ஆப்செட் பிரஸ், சென்னை - 600 013.
-------------
புதைமண்
அத்தியாயம் 1

சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம். பென்ஸ், டாடா சுமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள்.

இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் 'அண்டர் கிரவுண்டான' அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் 'ஹலோ' என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் "ஹாய் கேய்" என்றார்கள்.

அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன். மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின் தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப் பார்வை. இன்னொன்றில் சுடலைத் தீப்பொறி. ஒ றை மார்பகம் ; இடுப்பில் ஒரு பக்கத்தை காணவில்லை. கால்கள் ஒன்றில் லாவகம். இன்னொன்றில் ஆடு தளத்தை அழுந்தப்பிடித்த - நாட்டிய பாணியில் சொல்லப்போனால் "தரைத்தட்டு”க் கோலம்.

நடுநிசி வந்துவிட்டது.

திடீரென்று மிருதங்கத்தின் அலாரிப்பும், அந்த அர்த்த நாரீஸ்வரர் சிலைமீது பூக்களும் ஒரே சமயத்தில் உராய்ந்தன. பக்கவாட்டில், நீளவாகு தேக்குப் பலகையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், ஓட்கா, பிளடி மேரி போன்ற குடி வகையறாக்கள். இடது பக்கத்து நீளவாக்குப் பலகையில் பிஷ் பிங்கர் , பிங்கர் சிப்ஸ், மட்டன், சிக்கன் வறுவல்கள், முந்திரிக்கொட்டை, வேர்க்கடலை, நனைந்த பருப்பு, நனையாத பருப்பு, உருளை வடிவமான வெங்காயம், அதேமாதிரியான வெள்ளரிக்காய், பிரியாணி, சப்பாத்தி, சமாச்சாரங்கள். இவை அத்தனையையும் ஓரங்கட்டிப் பார்த்தபடியே நின்றவர்கள், இரண்டு வரிசையாகப் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனார்கள்.

அதுவரை, மனித குரோசோம்களில் நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள் இருப்பதை கண்டு பிடித்த லண்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அலசிக் கொண்டிருந்தவர்கள் - வீட்டில் வெள்ளைக் கோட்டை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்த இவர்கள், முன் வரிசையில் இடது பக்கம் நட்புக்கு ஏற்ற வகையிலும், மேடைப் பார்வைக்கு ஏற்ற வகையிலும் உட்கார்ந்தார்கள். தர்மபுரியில், மூன்று மாணவிகளை, உயிரோடு கொளுத்திய கொடுமையை அரசியல் சாசனத்தின் வழியாகவும், இ.பி.கோ. மூலமும், அலசிக் கொண்டிருந்தவர்கள், வலது பக்கம் உட்கார்ந்தார்கள். இவர்களும் கருப்பு அங்கிகளை கார்களுக்குள் போட்டுவிட்டு வந்தவர்கள். பொறியாளர்களிடம், தான் வரைந்த கட்டிடப் பிளானை தலைகளாகப் பிடித்த கார்ப்பரேஷன் கிளார்க்கிடம் அதைச் சுட்டிக் காட்டினால் உடனே அவர் தவறுக்கு வருந்தாமல் எனக்குத் தெரியும்' என்று திமிராக பதிலளித்ததை விளக்கிக் கொண்டிருந்த சீனியர் பொறியாளரை விட்டுவிட்டு, ஜுனியர் பொறியாளர்கள் இருக்கைகளில் ஓடிப்போய் உட்கார்ந்தார்கள் சாதிச் சண்டைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத வேண்டும் என்று வாதாடி போராடிக் கொண்டிருந்த ஐ ஏ எஸ், ஐ.பி.எஸ். காரர்களும், சமூகப் பிரச்சினையாக கருத வேண்டும் என்று பதிலளித்த அரசியல் வாதிகளும் அவசர அவசரமாய் ஓடி உட்கார்ந்தார்கள் இவர்கள் அல்லாது கம்பெனி நிர்வாகிகள், மாணவர்கள், டாக்சி டிரைவர்கள், என். ஜி ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், லுங்கிக்காரர்கள் உள்ளிட்ட கலப்புக் கூட்டமாக, அந்த இருக்கைகள் மாறின. ஆனாலும், மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை.

திடீரென்று. அந்தத் தளத்தின் மேடை, வெள்ளை வாழைத் தண்டு விளக்குகளும், வண்ண பல்புகளும் அணைய அணைய, செஞ்சிவப்பு விளக்குகளால் பிரகாசித்தது. மிருதங்கம் மட்டும் பெரிதாய் ஒலிக்க, இதர இசைக்காரர்கள் தத்தம் கருவிகளுக்கு சுதி சேர்த்தார்கள். எங்கிருந்தோ ஒரு பின்னணிக் குரல்.

"ஹாய்! கேய்.. பாய்ஸ்... வணக்கம். இப்போது நமது சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரிய இடத்துப் பிள்ளையும், நடன சிகாமணியுமான மோகனனின் பரத நாட்டியமும், கதக் நாட்டியமும் நடைபெறும்."

மோகனன் என்ற பெயர் வந்தபோது நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் வி.ஐ.பி. பேர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார்களே, அப்படிப் பட்ட அழுத்தம் அந்த பெயருக்கு கிடைத்தது. நிகழ்ச்சி அறிவிப்பு முடிந்ததும், மேடை விளக்குகள் திடீரென்று அணைந்தன. அந்த இருள் மயத்தில் மெல்லிய இசைகூட பேயோசையானது. இரண்டு நிமிடங்களில் அதே மேடை விளக்குகள் மீண்டும் ஜொலித்தன.

மேடையின் மையப் பகுதியில், மோகனன் நடனக் கச்சிதமாய் காணப்பட்டான். செம்பச்சை வேட்டி இறுகக் கட்டப்பட்டிருந்தது. இடுப்பிற்கு மேல் இடது பக்கம் மட்டும் ஒரு தாவணி போன்ற துணி தோளைத் தொட்டு, முதுகை வருடிக் கொடுத்தது. ஒருகால், லேசாய் தூக்கியும், இன்னொரு கால், நளின வளைவோடும் நின்றன. காதுகள் ஒன்றில் வளையம். இன்னொன்றில் கடுக்கன். முகத்தில் ஒரு பகுதி சிவப்பு. மறுபகுதி கரும்பச்சை கீழ் உதட்டில் மட்டும் லிப்டிக்ஸ். பரதநாட்டிய இலக்கணப்படி, அவன் இரண்டு தோள்களும் ஒரே நேர்கோடாய் இணைந்தன. கழுத்து அதன் முடிச்சானது. இடுப்பின் நடுப்பகுதி ஒரு முக்கோண வடிவமாகவும், இடுப்புக்கு கீழே இருந்து பாதம் வரை இன்னொரு முக்கோண வடிவமாகவும் தோன்றின. அவன் கைகளை நீட்டி வளைத்து, அவற்றில் ஒவ்வொன்றும் முட்டிகளில் முட்டியபோது அவையும் இரண்டு முக்கோணங்களாகின.

மோகனன், ஒரு காலை மேலே தூக்கி, பிறகு பக்கவாட்டிற்கு கொண்டு வந்தான் கால்களை சலங்கை சத்தத்துடன் முன்னால் வந்து தரைத்தட்டு செய்தான். பின்னர், குதிகாலில் நின்று அப்படியே திரும்பி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி அதே காலோடு குருவான நட்டுவனாரை கைகூப்பி , அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து "சம பங்கமாய்" நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.

பல்லவி
"ஆணும் ஆணும் உறவு கொண்டால் - நீங்கள்
அலட்டிக்க என்னய்யா இருக்குது?
ஓரின உறவு, எங்களின் உரிமை - இந்த
உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!
அனுபல்லவி
என்னய்யா நியாயம்?
இதுதான் அநியாயம்!

பலத்த கைத்தட்டலுக்கு இடையே இப்படி பாட்டு ஒலித்த போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, 'அபங்கம்" செய்தான். முக்கோணமாய் உடலாட்டி "திரிபங்கம்" போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்ந்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக் கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி - விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான். மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். அய்யோ அய்யோ” என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு ஆகா ஆகா” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக் கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்” என்று பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம்.

பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் "வர்ணம்" என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.

ஓரினச் சேர்க்கை ஒருத்தரின் உரிமை
ஈரினச் சேர்க்கையால் என்னத்தை கண்டீர்? - மனித
உயிரினம் பெருகினால் உயிருக்கே ஆபத்து - எங்கள்
ஓரினச் சேர்க்கைதான் உடனடி மருந்து.

மக்கள் பெருகினால் வெள்ளம், எரிமலை,
பூகம்பம், புயல், போரென்று வருமாம்.
மாபெரும் நிபுணன் மால்தஸின் கூற்று.
ஓரினச் சேர்க்கையே இந்தக் கூற்றுக்கு கூற்று.

கருப்பை இல்லாத சேர்க்கை
உருவம் பிறக்காத சேவை....
இருப்பினும் எங்களை வெறுக்கிறீர்
என்னய்யா நியாயம்? இது அநியாயம்...

மோகனன், பாடலுக்கு ஏற்ப அபிநய ஆட்டம் ஆடிவிட்டு, கால்களை லேசாய் ஆட்டி ஆட்டி பலமாய் நின்றான். அப்போது ஒரு பின்னணிக் குரல்.

"மோகனனின் பரத நாட்டியத்தால் நீங்கள் பாலியல் ரீதியாக பரவசப்படுவது புரிகிறது. ஆகையால், தில்லானா இல்லாமல், இப்போது கதக் ஆட்டத்தை ஒரு சாம்பிளாக ஆடிக்காட்டுவான் நம் மோகனன்."

மோகனன் எழுந்து, சபைக்கு சிரம் தாழ்த்தி கைகூப்பி வணக்கம் செய்து கொண்டே, உள்ளே போய்விட்டான். கீழே கிடந்தவனும் இரண்டு குதி குதித்துவிட்டு போய்விட்டான். ஆடும் மேய்த்தாயிற்று... அண்ணனுக்கும் பெண் பார்த்தாயிற்று ..' என்பது போல், மோகனன் இளைப்பாறுவதற்கும், ஆடை மாற்றத்திற்கும் ஏதுவாக, ஒவ்வொரு இசைக்கருவியும் தனி ஆவர்த்தனம் செய்தது. முப்பது நிமிடங்களில் மோகனன் திரும்பி வந்தபோது, கைதட்டு வலுவா? இசையோசை வலுவா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

இப்போது, மோகனன் பட்டுக் கச்சை கட்டியிருந்தான். கழுத்தில் வெவ்வேறு அளவிலான விதவிதமான நகைகளை போட்டிருந்தான். கால் சதங்கையிலும், கை மணிகளிலும் மாற்றம் இல்லை. ஒரு பக்கத் தாவணியைக் காணவில்லை. பத்தம் பசலியாக ஒலித்த அதே இசைக்கருவிகள், இப்போது அட்டகாசமாய் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. மோகனனின் உடல் ஒற்றை நேர்கோடாய் நின்றது கால்கள் சமபாத நிலையில் ஊன்றின. இசைக்கு ஏற்ப அவன் இரு கால்களையும் மூன்றடி அளவிற்கு மேலே தூக்கி எம்பினான். எம்பி எம்பி குதித்தான். கை தட்டல்கள் வலுத்தன. மேடை குலுங்கியது. பின்னர் ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டே கண் புருவங்கள் வேக வேகமாய் அசைய அசைய, இன்னொரு காலை வட்ட வட்டமாய்ச் சுற்றி உடம்பையே பம்பரமாக்கினான். பூவாய் விரிந்தாடினான். மொட்டாய் குவிந்தாடினான். அந்தரத்தில் பல்டி அடித்தான். குறுக்கு நெடுக்குமாய் துள்ளினான்.

மோகனன், ஆட்டத்தை முடித்துவிட்டு, அவையோரைப் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் சீருடை வேலைக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளைக் கிளாசிலும் கால்வாசியை ரத்தக் கலராக்கி கொடுத்தார்கள். இன்னும் சிலர் கிளாஸ்களோடு வரிசையில் அமர்ந்தவர்கள் முன்னே , தட்டுக்களோடு பணிந்து குனிந்து நகர்ந்தார்கள். அப்போது, மோகனன் அவைக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான்.

"பெண்ணாதிக்கதிலிருந்து விடுபட்ட "கேய்" தோழர்களே! இப்போது உங்களுக்கு, ஒரு நல்லவரை வல்லவரை அறிமுகப் படுத்தப்போகிறேன். ஆனால் அவர் “கேய்” இல்லை. கேய்களோடு நட்பாக இருப்பவர். தமிழக அரசின் எய்ட்ஸ் பிரிவில் இணை இயக்குநராக இருந்த, சிறந்த பேச்சாளர். இப்போது அரசாங்க பொது மருத்துவமனையில் எஸ்டிடி - அதுதான் பாலியல் நோய் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சரின் தம்பி. இவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிற்கு என்ன, அண்ணனின் உதவியால் நிலவுக்கே போயிருக்கலாம். ஆனாலும், சுயமரியாதைக் காரர். இன்னும் டெப்டி டைரக்டர் அந்தஸ்துலேயே இருப்பவர். இவர் எய்ட்ஸ் நோயில் ஒரு அதாரிட்டி. நமது தோழர். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை ஏதும் செய்து விடாதீர்கள். இப்போது அவர் மேடைக்கு வரப்போகிறார். அவர்தான் டாக்டர் காந்தராஜ். காந்தராஜ் அவர்களே! மேடைக்கு வாருங்கள்.''

டாக்டர். காந்தராஜ், மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் விட்டு விட்டுத் தட்டப்பட்ட கைதட்டுக்களோடும், விசில் சத்தங்களோடும் உட்கார்ந்தார். அவையைப் பார்த்தார். அவருக்கு பழக்கப்பட்ட டாக்டர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வகையறாக்களும் இருப்பதைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். அத்தனை பேரும் மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சிக்கன் பிரைகள் சாட்சியாக மதுக் கிண்ணத்தை வாயில் சொருகியபோது, டாக்டர் காந்தராஜ், முன்னால் இருந்த மைக்கில், பொதுப்படையாகப் பேசினார்.

"ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு.."

அவையினர் அத்தனை பேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, எங்கிருந்தோ வந்தவர் போல் இடையே குறுக்கிட்டார்.

''லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல... அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள் ! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது.. பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில் தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்."

இன்னொருத்தவரும் எகிறினார்.

"ராமன் கெட்டதும் பெண்ணாலே. ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா."

காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ்., தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால்...

என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார்.

"தம்பிகளா... அண்ணன்களா. சக வயதுக்காரர்களா... உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீடி. டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு சீக்கிரமாய் என்னை அனுப்பினால் உங்களுக்கு கோடி புண்ணியம். சரி... கேளுங்கள்."

குடிமகனான ஒரு தடிமகன், ஒரு கேள்வி கேட்டான்.

"ஓகே டாக்டர்! ஓரல் செக்ஸ்ஸால் எய்ட்ஸ் வருமா?"

"பொதுவாக வராது. ஆனால், வாயில் புண் இருந்தால், உறுப்பிலும் புண் இருந்தால் இந்த இருவரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால், இது வருவதற்கு வாய்ப்புண்டு."

"இந்த ஓரல் செக்ஸ்ல, எய்ட்ஸ், வீடி, ஆபத்துக்கள் வராமல் இருக்க நாங்கள் என்ன செய்யணும்..."

"ஓரல் செக்ஸ்சுகுன்னே தனி ரக காண்டோம் இருக்குது. பனானா... பைன் ஆப்பிள்... மல்லிகை... ஆரஞ்சுன்னு விதவிதமாய் இருக்குது..."

"ஏன் இந்த மாதிரி பேரு வச்சாங்க”

"அப்படிக் கேளுங்க.... இதுல ஒரு உரையை மாட்டினால் அது வாழைப்பழம் போல் வாசனை கொடுக்கும். இன்னொன்றை மாட்டினால் ஆரஞ்சு போல் சுக வாசனையை நுகரலாம். இதனால், ஆக்டிவ் பார்ட்னர் இதை போட்டுக் கொள்ளும்போது, பாசிட்டிவ் பார்ட்னருக்கு, ஒரு இனிமையான வாசனை கிடைக்கும்.”

"டாக்டர் அய்யாவுக்கு ஒரு விண்ணப்பம். இந்த பனானா, பைன் ஆப்பிள் உறைகளில் ஒன்றை தாங்கள் போட்டுக் கொண்டு எங்களுக்கு டமான்ஸ் ஸ்டிரேட் செய்ய வேண்டும்."

"எப்பா... நான் பிள்ளைக் குட்டிக்காரன். என்னை அப்படியே விட்டுடுங்க. மோகனன் கூப்பிட்டான்னு வந்தேன். வேற எந்த பாவமும் அறியேன். ஆனால், வாயிலோ அல்லது எதிலோ செக்ஸ் நோய் வந்தால், என்னை நீங்கள் எப்போது வேண்டு-மானாலும் சந்திக்கலாம். இந்த மாதிரி விவகாரங்களில் நான் நீதிபதி அல்ல. வெறும் சாட்சிதான்...”

“நீங்க ரொம்ப ரொம்ப அழகு. எங்களுக்குன்னே பிறந்தவர் மாதிரி தோணுது. கிளப்ல சேர்ந்துடுங்க காந்தா."

டாக்டர் காந்தராஜ், வெலவெலத்துப் போனார். இந்த மோகனன் சொன்னானென்று ஒரு மாறுதலுக்காக வந்த தன்னை, எங்கே ஒருவழி ஆக்கிவிடுவார்களோ என்று பயந்து போனார். பேண்டையும் சட்டையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிட்டத்தில் வளைத்துக் கொண்டார். இந்த "கேய்" பையன்களைப் பற்றி ஆய்வு செய்து தனது துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற அவர் எண்ணம் "சம்பில் விழாத கார்ப்பரேஷன் தண்ணீர்” போல் ஆனது. ஆளை விட்டால் போதும்.'

மோகனன், நிலமையை புரிந்து கொண்டான். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை, காதலுக்கு கண் உண்டு. பெண் இல்லை. இந்த ஐம்பதிலும் அழகாக தோன்றும் காந்தராஜை எவனும் எதுவும் செய்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையானான். அவரை மேடைக்குப் பின்புறமாய் அழைத்துச் சென்று எப்படியோ அவரது காருக்குள் ஏற்றி விட்டான்.

இதற்குள் மது மயக்கத்தில் எல்லோரும் கிறங்கிப் போனார்கள். சிலர் பேண்டை அவிழ்த்து அண்ட்ராயரோடு சேர்த்து தூக்கி எறிந்தார்கள். பலர் சிலரை துகிலுரிந்தார்கள். அத்தனையும் அம்மணங்கள். அதில் ஆனந்த பரவசமானார்கள். ஒருவரை ஒருவர் இழுத்துப் போட்டு கவிழ்த்துக் கொண்டார்கள். கவிழ்ந்து கொண்டார்கள்.
----------------
அத்தியாயம் 2


படித்துக் கிழித்தான் என்று இளக்காரமாக சொல்வார்களே, அந்த சொல்லடையை சிறிது மாற்றி, செல்வாவை, எழுதிக் கிழித்தான் என்று சொல்லலாம். எழுதுவதும், எழுதிய காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்துப் போடுவதுமாக இருந்தான். அந்த அறை முழுவதும், குப்பைத் தொட்டி போல் தோன்றியது. போதாக் குறைக்கு எழுதிக் கிழித்த காகிதக் கூறுகள், மேலே சுற்றிய மின்விசிறியினால், அவன் முகத்தில் அடிப்பது போல அரை குறை வார்த்தைகளோடு முட்டி மோதின. காகிதத்தைக் குத்திய பேனா முள், அவன் தலைக்குள் வண்டாக மாறி குடைந்து கொண் டிருந்தது. களைத்துப் போன தலையும், துடித்துப் போன கண்களும், வலித்துப் போன முன் நெற்றியும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தன. தலை, பூமியைப் போல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந் தாலும், அதே பூமி சூரியனைச் சுற்றுவது போல், அடுத்த வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள கவிதாவை, மானசீகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

கவிதை எழுதுவதற்காக, காகித கற்றைகளை அடுக்கி வைப்பதிலேயே அவனுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு கவிதையின் தரம், அதைத் தாங்கும் காகிதத்தில் இருப்பது போல், ஒரு மடிப்போ, பிடிப்போ, கரும்புள்ளியோ, செம்புள்ளியோ இல்லாத காகிதங்களை "பேடில்" சொருகினான். ஆனாலும் அவன் எழுதியவை "பேடாக' இருப்பது, அவனுக்கே துல்லியமாக தெரிந்தது கவிதையின் தரத்தை உயர்த்துவ-தற்காக, சித்தப்பா வைத்துவிட்டுப் போன கோப்பிலிருந்த கணிப்பொறி காகிதங்களை எடுத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அவை லேசாய் இருந்தனவோ, அவ்வளவுக் அவ்வளவு பளபளப்பாக இருந்தன.

செல்வா, கவிதாவை மானசீகமாக முகத்திற்கு எதிராக முன்னிருத்திக் கொண்டே, எழுதப் போனான். மனதிற்குள் அந்த கவிதாதான் சுரந்தாளே தவிர, கவிதை சுரக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மனதிற்குள் அவள் வெள்ளப் பிரவாகமாக வந்து கொஞ்சம் நஞ்சம் உழைத்த கவிதைப் பயிர்களை அடித்துக் கொண்டு போய்விட்டாள்.

செல்வா, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ஒரு படைப்பாளியின் படைப்பை படிக்கும் பொழுது, 'நாமும் இப்படி எழுதலாம் போலிருக்கிறதே' என்று ஓர் உணர்வு வந்தால், அது படைப்பாளிக்கும் படைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று எங்கேயோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் இவன் நிசமாகவே மழைக்கு ஒதுங்கிய போது, ஒரு பிரபல எழுத்தாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொன்னவர் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸ், தணிகைச் செல்வன், இன்குலாப், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, அறிவுமதி, பழனிபாரதி ஆகியவர்களை மேற்கோள் காட்டினார். இவர்களுடைய கவிதைகளை இவன் படித்தானோ படிக்கவில்லையோ, அந்த எழுத்தாளர் மேற்கோள் காட்டிய வரிகளை தன்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. அப்போதே, தானும் ஒரு கவிஞன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஆனால், ஒரு வரிகூட கவித்துவ வரியாக வரவில்லை .

செல்வாவுக்குள் ஒரு பொறி.... எலிப்பொறி மாதிரியான திருட்டுப் பொறி. இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி அங்குமிங்குமாய் மாற்றி அசல் சினிமாக் கவிஞனாய் ஆகி விடலாமா என்று நினைத்தான். பள்ளிக்கூடத்தில் இவன் படித்த சங்ககால, இடைக்கால, சிற்றிலக்கிய கால கவிதைகளை கையாண்டு இப்போது பல சினிமாக் கவிஞர்கள் காரோடும், பேரோடும் இருப்பதை அறிவான். ஆனாலும், எழுத்தாளர் கோடி காட்டிய கவிஞர்களில் பலர் காதல் சுவை சொட்டச் சொட்ட எழுதவில்லை. "காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்." என்ற பட்டுக்கோட்டையார் பாடலை இப்படி மாற்றி எழுதலாமா? "கடற்கரை தனித்திருக்கு... கை காலு குறுகுறுக்கு.... கடலோரம் போய் கண்ணே கற்பனையை ஈடேற்ற வா பெண்ணே." என்று உல்டாவாக்கலமா...? 'வாவுக்கு இருபொருள் கொடுக்கலாமா...?

செல்வாவிற்கு மனசாட்சி உறுத்தியது. அதோடு கவிதா, அவன், தன்னை பற்றி புதுக் கவிதையில் வர்ணிக்க வேண்டும் என்றாள். மரபுக் கவிதை கூடவே கூடாது என்று ஆணையிட்டாள். இவன், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டபோது, செல்வம் என்றால் மரபு. செல்வா என்றால் புதுக்கவிதை' என்று ஒரு ஆசிரியை போல் அச்சுறுத்திச் சொன்னாள். அவ்வப்போது பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை படித்து அனுபவத்தில், இம்புட்டுதானா' என்கிற அலட்சியத்தோடு, அவளிடம் ஒப்புக் கொண்டான். இப்போதுதான் புரிந்தது அனுபவத்தில் அவள் இடக்கு மடக்கில் மாட்ட வைத்து விட்டாள் என்பது; முதலில் கவிதையாம். அதற்கு பிறகுதான் குறைந்த பட்ச தீண்டலாம். அவளை சந்திக்க வேண்டும் என்றால் புதுக்கவிதையோடு வர-வேண்டுமாம்.

இன்று மாலையில், கடற்கரையில் அவளைச் சந்திப்பதாக ஏற்பாடு. இப்போதோ நள்ளிரவு. சித்தப்பாவின் குழந்தைகள் ஏழு வயது அருணும், மூன்று வயது சுபேதாவும் அவன் படுக்கைக்கு இருபுறமாக படுத்திருக்கிறார்கள். குறட்டைக்கூட விடுகிறார்கள். அந்த குறட்டை அளவிற்குக்கூட கவிதை வரவில்லை . ஒருவரி கிடக்கட்டும், ஒரு வார்த்தை கூட வரவில்லை.

இதற்குள் சித்திக்காரி பாத் ரூமுக்கு போய்விட்டு வந்தாளோ என்னமோ, விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு ஷாக் அடிப்பது மாதிரி கத்தினாள்.

"இப்படி விளக்கெரிஞ்சா கரண்ட் பில் யார் கொடுக்கிறது? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பெரிய படிப்பு படிக்காராம் பொல்லாத படிப்பு. லைட் ஆப் பண்ணுடா! குழந்தைங்க தூக்கம் கெடும் என்கிற எண்ணமாவது வேண்டாம்? அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்! தூங்குற ராத்திரியிலுமா லைட்டு."

செல்வாவின் முகம் சுண்டிப் போயிற்று. சித்திக்காரி, இப்படி குத்திக் காட்டுவது வழக்கம்தான். அந்த வழக்கமான ஏச்சை வாங்கிக் கொள்வதை, இவன் ஒரு பழக்கமாக்கிக் கொண்டவன்தான். ஆனாலும், கவிதா உள்ளத்தில் இருக்கும் இந்த சமயத்தில், சித்தி அப்படிக் கத்தியது சுய அனுதாபத்தை கொடுத்தது. விளக்கை அணைக்க மறந்தவனாய், தனது வருத்தத்திற்கு அடைக்கலம் தேடுவதுபோல், கவிதாவின் காதலையும், கடற்கரையையும் நினைத்துக் கொண்டான். அவன் கண் முன்னால் கடற்கரை தோன்றியது. கவிதா தோன்றினாள். மற்ற யாரும் தோன்றவில்லை அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி பிம்பங்களாய் வந்து கொண்டிருந்தன.
-------------
அத்தியாயம் 3


கள்ளக் காதலர்களையும், கள்ளங் கபடமற்ற காதலர்களையும் கண்ணகி சிலை, ஒற்றைச் சிலம்போடு மறைத்து வைத்தாளோ அல்லது தனக்கு கிடைக்காத சுகங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறதே என்ற ஆதங்கத்தில் முகம் திருப்பி, அவர்களுக்கு முதுகைக் காட்டுகிறாளோ... அன்றைய இளங்கோ அடிகளுக்கும் இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

கவிதாவும், செல்வாவும் மெரினா கடற்கரையில் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட இரண்டும், கெட்டான் மண்வெளியில் உட்கார்ந்தார்கள். எதுக்கும் கைய கொஞ்சம் தள்ளி வையுங்க' என்று அவனைத் தள்ளிக் கொண்டே கவிதா செல்லச் சிணுங்களாய் சிணுங்கினாள். அதோடு முன்னெச்சரிக்கை... வாய்க்கு வந்தது, வயிற்றுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயம். அது பயமுறுத்தலாக வெடித்தது. திடீரென்று, வீட்டில் நடந்த ரகளை நினைவுக்கு வந்தது. செல்வா அங்கே இல்லாதது போல் அனுமானித்துக் கொண்டது போல், கவிதா, தலையைத் தொங்கப் போட்டாள். உடனடியாக அவளது மாற்றத்தை புரிந்து கொண்ட செல்வா, இப்படிக் கேட்டான்.

"ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே கவிதா..." "இன்னைக்கு வீட்ல ஒரே ரகளை எங்கண்ணன் மோகனன், வீட்டுக்கு எப்பவாவது ஒரு தடவை வருவான். வந்த உடனேயே, அப்பா கிட்ட பணம் கேட்பான் அடிக்கப்போறது மாதிரி கையை ஓங்குவான் நான் தடுக்கப் போனால், என்னையும் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவான். அப்பாவையும் மீறி பீரோவை, உடைத்து, பணத்தை எடுத்துக்கிட்டு போயிடுவான். அவன் நடவடிக்கையும் சரியாய் இல்ல... ஐ.ஏ.எஸ். ஆபீசரான எங்கப்பாவால, ஒரு நிமிஷத்துல அவனை உள்ள தள்ள முடியும். ஆனால், பெற்ற மகனாச்சே.... திடீரென்று ஏனோ அந்த ரகள் நினைப்பு வந்துட்டுது."

"ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை இருக்கு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வும் இருக்கு... கவலப்படாத கவிதா... எப்போதாவது ஒருநாள் ஒங்கண்ணன் திருந்துவார். பல பெரிய இடத்துப் பிள்ளிங்க இப்படித்தான் இருக்குதுங்க..."

கவிதா சிறிது விலகி உட்கார்ந்தாள். காய்ந்த மண்ணை குடைந்து குடைந்து ஈர மண்ணை எடுத்து வலது கையால் பிசைந்தபடியே, இடது கையை அவன் தோளில் போட்டாள். போட்டபடியே கேட்டாள்.

"எனக்கு பயமா இருக்குது செல்வா! பேசாம படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாமுன்னு உதறிவிட்டு, ஓங்க கிராமத்துலப் போயி செட்டில் ஆயிடலாமா?"

"ஒவ்வொரு நாளும் இப்படி கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதையே கேட்டால் எப்படி கவிதா? நீ இப்போ பிளஸ் டூ நானோ காலேஜ்ல முதலாம் வருடம். பட்டப்படிப்பை முடித்து எப்படியும் வேலைக்குப் போகணும். நீயும் உன் ஆசைப்படி டாக்டருக்கு படித்து கிளினிக் வைக்கணும். அதுக்குப்பிறகுதான் கல்யாணம்."

"அதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன்... நீங்க கிழவனாயிடு விங்க..."

"காதலர்களுக்கு முதுமை , வந்தாலும் காதல் என்றுமே இளமைதான் கவிதா"

"அதுவும் சரிதான் எப்போதோ வரப்போற கல்யாணத்தப் பற்றி இப்போ எதுக்கு பேசணும்?"

"காதல் என்கிறது கல்யாணம் வரையுன்னு கண்ணதாசன் பாடினாரே! நாம் காதலர்களாகவே இருப்போம்."

"தத்து புத்துன்னு உளறாதீங்க செல்வா! நான் ஒங்ககூட சுத்துறது எங்கப்பா காதுல விழுந்துட்டுதுன்னு வச்சுக்கவும் அவர் மூணுல ஒன்றை செய்வார் இல்லையான்னா மூன்றையும் செய்வார் ஒன்று, இந்த வயசிலேயே காதலாடின்னு அடி அடின்னு அடிப்பார் இல்லன்னா அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பார்."

"மூணாவது?"

"என் படிப்பை நிறுத்திட்டு, ஏதாவது ஒரு பெரிய இடத்துப் பயலுக்கு கல்யாணம் செய்து வைப்பார்."

"நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். கவலைப்படாதே. இன்னும் சில வருஷத்துல நாம் சொந்தக் காலுல நிற்கப் போறோம். அதுவரைக்கும் இலைமறைவு காய்மறைவா மூணு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ சந்திப்போம்."

சுடிதாரோடு, அவள் நிறத்தைப் போன்ற புதுநிற துப்பட்டாவோடு அவனோடு இணைந்து உட்கார்ந்திருந்த கவிதா, அவன் அப்போதே தன்னை கைவிட்டு விட்டதுபோல் அழாக் குறையாய் பேசினாள்.

"என்ன செல்வா நீங்க...? வாரத்துல ஒரு நாள் தானே சந்திக்கிறோமுன்னு நான் ஒரு வாரத்துல ஒரு நாள்தான் இருக்கணுமுன்னு ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க என்னடான்னா, மாதக் கணக்கில வாய்தா போடுறீங்க... போகட்டும் உங்களுக்கு வேலை கிடைச்சதும் உங்கப்பா உங்க சாதியிலே ஒரு பெரிய இடத்துப் பெண்ணா நிச்சயிச்சாருன்னா என்ன செய்வீங்க? நீங்கதான் அப்பா பிள்ளையாச்சே!"

செல்வா, சிறிது நேரம் கண்களை மூடினான் அந்தக் கண்களில், உள் உருவமாய் அப்பா வந்து நின்றார். ஆண் சரஸ்வதி போன்ற வெள்ளாடைத் தோற்றம். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேச்சு அழுத்தமாக இருக்கும். கிராமத்தில் எல்லாத் தந்தைகளும், தம் பிள்ளைகளைத் திட்டும்போது, இவனை அவர் “டா” போட்டு பேசக்கூட யோசிப்பார். அவர் தன்னையோ பிறரையோ திட்டி ஒரு நாளும் கேட்டதில்லை அப்படிப்பட்ட அப்பா இப்போ..

சொந்தக் கிராமத்துக்கு மானசீகமாய் போய், தந்தையின் தரிசனத்தில் மூழ்கிப் போன செல்வாவை, கவிதா, ஒரு உலுக்கு உலுக்கினாள். அவன் சோகம் அவளுக்குப் புரிந்தது பேச்சை மாற்றுவதற்காக அவன் இடுப்பில் கைபோட்டுக் கொண்டு கேட்டாள்.
"ஆமா... ஒங்கப்பா, அந்தக் காலத்துல கிராமத்துல ஆண்கள்ல பெண்கள்ல பலரை காதலிக்க செய்ததாய் திருக்குறள் மாதிரி சொன்னீங்களே. இந்த அதுக்கு ஒரு குறளோவியம் கொடுக்கிறீங்களா..."

செல்வா, மீண்டும் கடற்கரைக்கு வந்தான். தந்தையின் தரிசனத்தை அரைகுறையாய் விட்ட அதிருப்தியோடு அவளைப் பார்த்தான். அவள் சொல்லுங்க' என்று அவன் முடியை பிடித்து இழுத்தபோது, இவன் மூளைக்குள் பதிவான அப்பாவின் பேச்சு இவன் பேச்சானது.

"அந்தக் காலத்துல, அதாவது அறுபது வருஷத்திற்கு முன்னால, கிராமங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எல்லா வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதாம். குறிப்பா கலைஞரோட "பராசக்தி", "மனோகரா" வசனங்கள், ஒரு உலுக்கு உலுக்கியதாம். "பராசக்தி" நாடகங்களை போடாத கிராமங்களே கிடையாதாம்.

அதுக்கு முந்தன காலத்துல, கல்யாணமான கணவன் மனைவி, ஒருவாரம் வரைக்கும் நாணிக்கோணி, அப்புறந்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். அப்புறம் காய்ஞ்ச மாடு கம்பம் புல்ல மேய்ஞ்ச கதையாம். கல்யாணமான பதினோறாவது மாசத்திலே ஒன்பதாவது மாசம் வந்திடுமாம். கம்மாக்கரைவரை தோள் மேல கைபோட்டு, கையோடு கை சேர்த்து, பேசிக்கிட்டே போகிற இந்தத் தம்பதி, ஊருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில், புருஷன்காரன் முன்னால் நடப்பானாம். பெண்டாட்டியானவள் அவன் யாரோ தான் யாரோ என்பது மாதிரி, அரை கிலோமீட்டர் பின்னால நடப்பாளாம். இதை எங்கப்பா ஒரு உதாரணமா சொன்னாரு... எங்கப்பாவோட குட்டாம்பட்டி வாத்தியாருக்கும், வெட்டாம்பட்டி வாத்தியாரம்மாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிந்த ஒரு மணி நேரத்துல அந்த வாத்தியாரம்மா புருஷனாகிப் போன வாத்தியாருக்கு நாலுபேரு முன்னால் காபி டம்ளரை நீட்டினாளாம். "சூடு ஆறு முன்னால் குடிங்கன்னு" சொன்னாளாம். அவ்வளவு தான். ரெண்டு பட்டி வாய்களுக்கும் அவல் கிடைச்சது மாதிரியாம். இப்படி ஒரு பொம்பள இருப்பாளா?ன்னு ரெண்டு ஊர்க் காரர்களும் ரெண்டு மாசம் வரைக்கும் சிரிப்பா சிரிச்சாங்களாம்."

"அப்போ உங்கப்பாவும் அம்மாவும் காதலித்து, கல்யாணம் பண்ணினாங்க என்கிறதா நீங்க சொன்னது பொய்தானே?"

"பொய் இல்ல கவி! நிசம்தான் எங்கம்மாவும் அப்பாவும் அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை அதாவது கலைஞரோட வசனக்கால தலைமுறை. எங்கப்பா, எட்டாவது படிக்கும்போது நல்ல தமிழ் வருமாம். கலைஞர் தமிழை கண் மூடிக்கிட்டே
ஒப்பிப்பாராம் அந்தக் காலத்துல பெண்கள் ஆறு, அஞ்சு படிச்சிட்டு பீடி சுத்துனாங்க.... எட்டாவது வகுப்பான இ.எஸ்.எல்.சி. படித்துட்டு ரெண்டு வருஷம் டிரெயினிங் படிச்சுட்டு வாத்தியாரம்மாவா வந்தவங்க. பின் கொசுவம் கட்டுகிற பெண்கள் மத்தியில் இவங்க முன் கொசுவம் வச்சு புடவை கட்டினாங்களாம். வாத்தியாரம்மாக்களுக்கு செகண்டிரி கிரேட் டீச்சர், இல்லன்னா அந்தக் காலத்து பெரிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி. வாலிபர்கள் பிடிக்குமாம். பீடி சுத்துற பெண்களுக்கு ஹீரோ டெய்லர், ஒயிர்மேன், பீடிக்கடை ஏஜெண்டு, கணக்கப்பிள்ளை, பெட்டிக் கடை இளைஞன், சைக்கிளில் மிட்டாய் போடும் வியாபாரி.

ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருத்தி மேல கண்ணாம். ஆனால், தமிழ்தான் வராதாம். அப்பாகிட்ட வந்து லவ் லெட்டர்' எழுதித் தரும்படி கேட்பாங்களாம். உடனே எங்கப்பா கலைஞர் பாணியில், கண்ணே .. பெண்ணே - முத்தே... மாணிக்கமே.... இடையில்லா இளம் பெண்ணே ... வானத்துச் சந்திரனே... பூமியில் உதித்த புதுமலரே - காணியில் பூக்கும் செண்பகமே... உன் புருவங்கள் வேல்... உன் விழிகள் மீன்... உன் கழுத்தோ சங்கு' என்கிற பாணியில் எழுதிக் கொடுப்பாராம். ஒருவேளை காதலுக்கு பதிலாக, எழுதிக் கொடுத்தவரையும், எழுதச் சொன்னவரையும் கம்பத்தில் கட்டி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றிவிடலாம் என்ற அச்சத்தில், எங்கப்பாவே சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய வர்ணனையை, மார்பகத்திற்கு மேலே தான் வைத்துக் கொள்வாராம்."

சீ போங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரி மேற்கொண்டு சொல்லுங்க.... பிடிக்காட்டியும் கேட்டுத் தொலைக்கேன்."

வீட்ல அப்பா அம்மாகிட்டயும் அண்ணன்மார் கிட்டயும் முண்டக்கண்ணி, கட்டையில் போறவள், மூதேவி, மேனா மினுக்கி, க்வுகண்ணி, சண்டாளி, சதிகாரி, பிடாரி, பேய், வீட்டக்கெடுக்கிற ஊமச்சி, பல்லிளிச்சாள்' என்று பல்வேறு பட்டங்களை வாங்கிக் கொள்ளும் இந்தப் பெண்களுக்கு கண்ணே கண்மணியே என்ற வசன நடையில் எழுதிய கடிதத்தை, எழுத்து கூட்டிப் படித்த பிறகு, எழுதியவன் மீது ஒரு கிக் வந்துவிடுமாம். அப்புறம் புளியந்தோப்பாம்.... இல்லன்னா கரும்புத்தோட்டம்..''

அப்போ ஒங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காதலிகளா?

நீ வேற .. எங்கப்பாவுக்கு, அப்போ வயதே பதினாலுதான். டெயலர், ஒயர்மேன் மாதிரி ஆட்களுக்கு இந்த மாதிரி லெட்டர்கள், அவங்க பேரில் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுல எல்லாப் பெண்களுமே விழுந்துட்டாளுகளாம். ஒரு ஸ்டேஜ்ல, அதாவது எங்கப்பாவுக்கு பதினெட்டு வயசு வந்தபோது, 'நாம ஏன் இப்படி ஒரு லெட்டர் எழுதி ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடாதுன்னு ஒரு நினைப்பு வந்துட்டுதாம். இதுக்காக சிறப்புக் காதல் கடிதம் எழுதியிருக்கார். இந்த லெட்டரில் விழுந்தவள் தான் எனது அம்மா. இன்னும் எழுந்திருக்கல.... எங்கப்பா, அவ்வளவு பெரிய உள்ளூர் மேதை. கிராமத்திலேயே அந்தக் காலத்துலயே எஸ்.எஸ்.எல்.சி பாஸான முதல் படிப்பாளி. மற்றவங்க அதைத் தாண்டல.. அதோட பொது அறிவுப் புத்தகங்கள நிறையப் படிப்பாரு... வீட்ல இந்து பத்திரிகையத்தான் வாங்குவாரு... அந்தக் காலத்து வில்லுப் பாட்டாளிகளுக்கு சில சமயம் இவரே பாட்டு எழுதிக் கொடுப்பாரு... நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி அரங்கேற்றினவரு... லேசுப்பட்டவரு இல்ல..."

"எப்பாடி சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாச்சு. போகட்டும். உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. புலிக்கு பிறந்தது எதுவாய் இருக்கும்.

"என்ன பைத்தியக்காரத்தனமாக கேள்வி. புலியாத்தான் இருக்கும்."

"அதனால வர்ணனைப் புலியான லட்சுமணன் என்கிறவருக்கு பிறந்த செல்வா என்கிற நீங்க, உங்க பேருக்கு ஏத்தாப்போல, என்னை வர்ணித்து ஒரு புதுக்கவிதை எழுதி இதே இந்த இடத்துல அடுத்த வாரம் வாசித்துக்காட்டணும். இல்லாட்டி நீங்க வரவேண்டியதில்ல.... சரியா?"

"சரியில்லம்மா... பள்ளிக்கூடத்துல நேர் நேர் புளிமா என்று தமிழாசிரியர் சொல்லும் போது, இதை ஏன் "மடையா" என்று சொல்லக்கூடாது சார் என்று கிண்டலடித்தவன் நான் தமிழ்ல தட்டுத் தடுமாறித்தான் தேறினேன் என்னை விட்டுடும்மா."

"புளிமா என்கிற வார்த்தைக்கு இணையாக ஒரு வார்த்தையை கண்டுபிடித்தலிருந்தே உங்களிடம் இலக்கிய ஆர்வம் இருப்பது தெரிகிறது. அதனால நீங்க எனக்கு புதுக்கவிதையில் ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்."

"எனக்கு மேடைப்பேச்சுதான் வரும். கவிதை வராதும்மா

"ஒரு துறையில் கொடி கட்டிப் பறக்கறவங்களால் மற்ற துறையிலும் பிரகாசிக்க முடியும். காரணம் இது ஒரு வகையான சக்தி. இந்த சக்தியை அழிக்க முடியாது. மாற்றிக் காட்ட முடியும் கமான்! உங்கள் கல்லூரி மேடைப் பேச்சுத் திறனை ஒரு புதுக்கவிதையாய் வடித்துக் கொண்டு வாங்க.... வரணும்.. வந்தாகணும்.."

"கவிதையா? நானா?”

"ரெண்டுந்தான்."

கவிதா வெட்டொன்று துண்டு ரெண்டாய் பேசப் பேச, செல்வா அப்படி ஆனவன் போல் துடி துடித்தான். கவிதை... அதுவும் புதுக்கவிதை... அய்யகோ... (இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

கவிதாவிடம் அடைக்கலமாகவும் அநாதையாகவும் நினைவலைகளில் பயணம் செய்த செல்வா , அப்படியே தூங்கிப் போனான். நள்ளிரவில் செல்வாவை, சித்திக்காரி யதார்த்தத்திற்கு கொண்டு வந்தாள்.

"உன் மனசுல என்னடா நினைப்பு? இன்னும் விளக்கை அணைக்காமல் இருக்கே? நான் சொன்னதுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாம்? அவர் வரட்டும். நாளைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்."

செல்வா, இரண்டு துண்டாய் ஆனவன் போல், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.
----------------
அத்தியாயம் 4


காலை ஐந்து மணிக்கெல்லாம், கடிகார அலாரம் அலறியது. அதை அப்படியே விட்டால், சித்தி வந்து திட்டுவாள். சித்தப்பா இருக்கும் சமயத்தில் ஆறு மணிக்கும், இல்லாத சமயத்தில் ஏழு ஏழரை மணிக்கும் தூக்கத்திலிருந்து விடுபடுபவள். ஆகையால் செல்வா, படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து அலாரப் பட்டனை ஒரே அமுக்காக அமுக்கினான். இரவில் கடைசியாக தோன்றும் நினைவு, காலையில் எழுந்ததும் மனதில் முதலாக வரும் என்பார்கள்.

இதற்கேற்ப செல்வாவிற்கும் புதுக்கவிதையும் கவிதாவும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். புதிதாக ஐந்தாறு காகிதங்களை அடுக்கிக் கொண்டு கவிதை எழுதப் போனான். அது, கழுதைமேல் சவாரி செய்வதுபோல் ஆகிவிட்டது. வடிவத்திற்கு ஏற்ற உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் இல்லை உலகத்தில் உள்ள அத்தனை கவிஞர்களையும் திட்டினான். அவள் கேட்டபடி, ஒரு கவிதை எழுத முடியவில்லை என்றால், தன்னுடைய மரியாதை கடற்கரை காற்றோடு கலந்து போய்விடுமே என்று கலங்கினான் இப்ப மட்டும் தனது மரியாதை சித்தியிடம் என்ன வாழ்கிறதாம் என்று நினைத்துக் கொண்டான். ஒருவேளை கவிதையோடு போகவில்லை என்றால், தனக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதரவான கவிதா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று கலங்கினான். ஒருவேளை அப்படி நிராகரிப்ப-தற்குத்தான் பெரிய இடத்துப் பெண்ணான அவள் தன்னை கவிதை எழுதும்படி சதி செய்கிறாளோ என்றும் அளவுக்கு மீறி சிந்தித்தான்.

சித்தப்பா இருக்கும் போது, சித்திதான் காபி போடுவாள் அவர் இல்லாதபோது, இவன் போட வேண்டும். காபியோடு சித்தியை எழுப்பவேண்டும். அதுவும் ஏழேகால் மணிக்கு, குழந்தைகளுக்கோ ஆறுமணிக்கெல்லாம் காபி தேவை. ஆகையால் புதுக்கவிதையை விட்டுவிட்டு, குளியலறைக்குப் போய் அத்தனை காரியங்களையும் முடித்துவிட்டு, வெளியே வந்தபோது மணி ஐந்தரை. அவசர அவசரமாக சமையல் அறைக்குள் ஓடினான். கேஸ் சிலிண்டரை பற்ற வைத்தான். பிறகு பால் வாங்க மறந்து போய்விட்டோமே என்று அடுப்பை அணைத்து விட்டு, ஒரே ஓட்டமாய் ஓடினான். புதுக்கவிதையையும் இப்போது பழைய கவிதையையும் சேர்த்து திட்டிக்கொண்டே ஓடினான். ஆவின் பூத்திற்குள் போய் இரண்டு பால் உறைகளை கையில் எடுத்துக்கொண்டு வந்தபோது, அவை அவன் கையை உருக வைத்தன. கவிதை நினைவிலும், கவிதா நினைவிலும், பாலித்தின் பையை கொண்டு போக மறந்து, கையுருக திரும்பி வந்தான்.

அடுப்பை பற்ற வைத்தபோது, ஆறரை மணி இதற்குள் சித்தப்பா குழந்தைகள் அருணும், சுபேதாவும் "அண்ணா அண்ணா " என்று கூவினார்கள். காபி டம்ளர்களோடு அவர்களைப் பார்த்து அந்த அறைக்குள் ஓடினான். கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்பதால், பல்லை பிரஷ் செய்யாமலே காபி குடித்து பழகியவர்கள். அருணை முகத்தை கழுவச் சொல்லிவிட்டு, சுபேதாவை தூக்கிக் கொண்டுபோய் முகத்தை கழுவினான். சுபேதாவோ தனது பல்மைர் காட்டி வாட் கலர் திஸ்' என்றாள். உடனே, இவன், "வெள்ளை நிறம்” என்றான். பிறகு, அவள் உதட்டை மடித்துக் காட்டி வாட் ஈஸ் திஸ் கலர்' என்றாள். இவன் "சிகப்பு" என்றான் உடனே அந்தக் குழந்தை தனது கவுனை தூக்கிப் பிடித்துக் கொண்டு நோ அண்ணா நோ திஸ் ஈஸ் ஒயிட் திஸ் ஈஸ் பிங்க்' என்றாள்.

படுக்கை அறையிலிருந்து, சித்தியின் பயங்கரமான அலறல் கேட்டது.

"இங்கிலீஷ்ல பேசற பிள்ளிங்கள கெடுத்துடுவே போலிருக்கே.... இதுக்காகவே மாசா மாசம் இந்த பேய்களை, இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல போட்டு மாசம் அறுநூறு ரூபாய் அழுவுறோம்.... ஏற்கெனவே டாடின்னு சொல்ற பிள்ளைங்கள அப்பாவாக்கிட்டே.... மம்மியான என்னை அம்மாவாக்கிட்டே.... இதுல்லாம் சரிப் படாதுப்பா... தமிழாம் பொல்லாத தமிழு..."

செல்வா, மனதிற்குள் ஏற்பட்ட வேதனையை அதே விகிதாச்சாரத்தில் அன்பு மயமாக உரக்கக் கேட்டான்

"உங்களுக்கு காபி போடட்டுமா சித்தி."

''நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறது ஒனக்கு பொறுக்காதே..." |

இதற்குள், அருண் ஒரு விரலையும், சுபேதா இருவிரலையும் காட்டினார்கள். அருணை மேற்கத்திய டாய்லெட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, சுபேதாவை தனியாக இருந்த இந்திய டாய்லெட்டுக்கு கூட்டிப் போனான். பிறகு, அவர்களை பல்லில் பிரஷ் செய்ய வைத்தான். இரண்டு குழந்தைகளையும் ஒருசேர குளியலறைக்குள் கொண்டு போனான். அருண் தானாகத் குளித்தான். இவன், அவனுக்கு சோப்பை எடுத்து உடலெங்கும் தேய்த்தான். சுபேதாவை குளிப்பாட்டினான். துணியால் துவட்டினான். இரண்டு பேரையும் வெளியே கொண்டு வந்து, அருணுக்கு வெள்ளை மேல் சட்டையும், நீல கால் சட்டையும் அணிவித்தான். சுபேதாவிற்கு வெள்ளையும் பச்சையும் கலந்த கவுணை அணிவித்தான். சுபேதாவின் தலையை வாரிக் கொண்டிருந்தபோது, சித்தியின் குரல் சிறிது இறங்கியது போல் கேட்டது.

"கீசரை போடு. நான் இன்னிக்கி வெந்நீர்ல குளிக்கணும். அப்படியே காபி கொண்டு வா..'

செல்வா, குழந்தைகளிடம் ஹோம் வொர்க் நோட்டுகளை கொடுத்துவிட்டு , சமையலறைக்குள் ஓடி, காபி தயாரித்தான் அப்போதுதான் வந்த ஐம்பது வயது வேலைக்காரம்மாவிற்கு, சித்தியின் அறையை நோட்டமிட்டபடியே ஒரு கப் காபி கொடுத்தான். இன்னொரு கப்பை சித்தியின் அறைக்கு கொண்டு போனான். சித்தி.... சித்தி...' என்றான். அவளோ கட்டில் சுகத்திலிருந்து மீள முடியாமல் வைத்துவிட்டுப் போ என்றாள்.

செல்வா, குழந்தைகளும் தானும் இருக்கும் அறைக்கு ஓடி வந்தான் அவர்கள் ஹோம் வொர்க்கை முடிக்க இன்னும் நேரமிருப்பதை அறிந்தான். அந்தச் சமயம் கவிதைக் கற்பனை வந்தது. மீண்டும் நான்கைந்து தாள்களை வைத்துக்கொண்டு, அவனும் கவிதையும் போராடிக் கொண்டிருந்தபோது, சித்தி குளிப்பதற்காக உள்ளே வந்தாள். இவன் பாட்டுக்கு எழுதுவதைப் பார்த்து, மெல்லிய குரலில், அதேசமயம் அழுத்தம் திருத்தமாக ஒரு கேள்வி கேட்டாள்.

"பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதை விட்டு விட்டு, என்னத்த எழுதிக்கிட்டு இருக்கே.? முடியாதுன்னா சொல்லிடுப்பா... நான் டியூஷன் வச்சுக்கிடுறேன் - நீ வந்ததிலிருந்து குழந்தைங்க மார்க்கும் குறைஞ்சிட்டுது... அதுங்க பேசுற தமிழும் கூடிட்டுது.... முடியாதுன்னா சொல்லிடுப்பா - ஒனக்கு மாதிரி ஒரு டீச்சருக்கும் தண்டம் போடணும் அவ்வளவுதான்."

"இல்ல சித்தி. முன்னைவிட இப்போதான் மார்க் நல்லா வாங்குறாங்க"

"பொய் பேச வேற கத்துக்கிட்டியா?"

"நிசமாய் சித்தி. நீங்கதான் தப்பா நெனைக்கிறீங்க"

"எதிர்த்து வேற பேசுறீயா?"

அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தின் தாத்பரியம் புரியாமலே, அருண், அம்மாவின் இடுப்பில் ஒரு குத்து குத்தினான். அண்ணனைப் போல் பழகத் துடிக்கும் சுபேதாவும் அம்மாவின் பிட்டத்தில் ஒரு குத்து குத்தினாள். சித்திக்காரி கூச்சலிட்டாள்.

"முட்டாப்பய பிள்ளிகளா.. மூதேவிகளா... அம்மாவை அடிக்கிற அளவுக்கு வந்துட்டிங்களா... ஒங்க பெரியப்பா மகன் உங்களுக்கு நல்லாதான் சொல்லிக் கொடுத்திருக்கான். இன்னும் கத்தியை மட்டும் எடுத்து கையில் கொடுக்கல...”

செல்வா, கோபத்தில் பிள்ளைகளின் காதுகளை திருகினான். உடனே, சித்திக்காரி மீண்டும் கத்தினாள்.

"என் கண்ணு முன்னாலேயே என் பிள்ளைகளை இப்படி பண்றீயே... நான் இல்லாட்டால் என்ன பாடுபடுத்துவே? ஏய் பேய்ப்பய பிள்ளிகளா - இனிமே நீங்க என்கூடத்தான் படுக்கணும்..”

"போ.. மாத்தோம்" என்றான் அருண். அண்ணாகூடத்தான் படுப்பேன்" என்று சுபேதா மழலை மொழியில் பேசினாள். சித்திக்காரியும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்
குழந்தைகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் இன்று அவர் டூரிலிருந்து திரும்பி வருகிற நாள். இதுகளையும் படுக்கை அறையில் போட்டால் திட்டோ திட்டென்று திட்டுவார். செல்வாவிற்கும் இது தெரியும் அது என்னமோ தெரியவில்லை பகலில் அடிக்காத குறையாக சண்டை போடும் சித்தப்பாவும் சித்தியும், இரவில் சிரிப்பும் கும்மாளமுமாய் கிடப்பார்கள்.

அந்த அறையை பெருக்க வந்த வேலைக்காரம்மா, செல்வாவை, பரிதாபமாகப் பார்த்தாள். இவன் ஒரு சமயம், சித்தியினுடைய ஏச்சு தாங்கமுடியாமல், கட்டிய லுங்கியோடும், போட்ட சட்டையோடும் வெளியேறப் போனபோது, இந்த வேலைக்கார அம்மாதான், அவன் மோவாயைத் தாங்கி, ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சு பொறுத்துகோ ராசா பாலப் பார்க்கிறதா.. பால் காய்ச்சின பானையைப் பார்க்கிறதா ஒன் சித்தப்பா ஒன்மேல உயிரையே வெச்சிருக்காருப்பா... ஏடா கோடமா எங்கேயும் போயிடாதேப்பா என்று மட்டும் ஆலோசனை சொல்லவில்லையானால், செல்வா, இந்நேரம் ஏதோ ஒரு நகரில், பொறுக்கிக் கொண்டு இருந்திருப்பான்.

சித்திக்காரி, குளித்து முடித்துவிட்டு அடுப்பறைக்கு போனாள். அரைமணி நேரத்தில் "சாப்பிட்டுத் தொலையுங்க.. நான் கொஞ்ச நேரம் படுக்கணும்... உடம்பு சரியில்ல.” என்றாள்.

செல்வா, குழந்தைகளை யூனிபாரமாக கூட்டி வந்தான். சித்திக்காரி தட்டில் இட்லிகளை போட்டபடியே, 'உடம்புக்கு சுமமில்லன்னு சொல்றேனே என்ன சித்தி உடம்புக்குன்னு கேட்டியா? என்று அவனை வம்புக்கு இழுத்தாள் உடனே செல்வா, "எதுக்கும் டாக்டரை போய்ப் பாருங்க சித்தி... நான் வேணுமுன்னா லீவு போட்டுட்டு உங்களை கூட்டிகிட்டுப் போகட்டுமா?" என்று நேயத்தோடு கேட்டான் சித்திக்காரி கனிந்து போனாள் "நாலு இட்லி மட்டும் சாப்பிடுறியே... வயிறு கேட்குமா... இன்னையிலி ருந்து ஆறு இட்லி சாப்பிட்டாகணும் இந்தா ஒனக்கு பிடிச்சமான மிளகாய்ப் பொடி... ஏய் மூதேவிகளா! இன்னுமா உங்க அண்ணன் உங்களுக்கு ஊட்டணும். சீக்கிரமாகட்டும் அவனும் காலேஜுக்கு போகணுமில்ல..” என்றாள்.

செல்வாவும், வேலைக்காரம்மாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள் இந்த சித்தியை பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று தள்ளவும் முடியாது சாப்பாட்டு விஷயத்தில் செல்வாவிற்கு என்றுமே அவள் குறை வைத்ததில்லை ஒருசில சமயங்களில் இவன் துணியையும் துவைத்துப் போட்டிருக்கிறாள். செல்வா பாதி இட்லி வாயோடு, "டாக்டருக்கிட்ட போகலாமா சித்தி." என்றான்.

"உங்க சித்தப்பா, காலையிலே வருவாரு. அவர் கூட்டிட்டுப் போவாரு.... நீ குழந்தைகளை விட்டுட்டு காலேஜுக்குப் போ..” எனக்கு ஆஸ்மா இருக்குமான்னு சந்தேகமா இருக்குது. மூச்சு வாங்குது .. இன்னிக்கு ஒன் சித்தப்பாவ கூட்டிட்டுப் போகச் சொல்கிறேன்” என்றாள். இது கத்துவதால் ஏற்படுகிற இளைப்பு .. ஆஸ்மா இல்லை' என்று வாயெடுக்கப் போன செல்வா, அதற்கு முன்னெச்சரிக்கையாக அதே வாயை இட்லித் துண்டுகளால் அடைத்துக் கொண்டான்.

செல்வா, ஸ்கூட்டரில், சுபேதாவை முன்னால் நிறுத்திக் கொண்டும், அருணை பின்னால் இருத்திக் கொண்டும் புறப்பட்டான். ஆரம்ப காலத்தில் அப்படியே அதே வண்டியில் கல்லூரிக்குப் போவான். என்றைக்கு சித்தி "பெட்ரோல் என்ன கொட்டியா கிடக்குது...'' என்று தன்பாட்டுக்குச் சொன்னாளே, அன்றையிலிருந்து குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த இரு சக்கர வாகனத்தை வீட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, பேருந்து நிலையத்தைப் பார்த்து ஓடுவான். குறைந்தது ஐந்தாறு நிமிடம் தாமதமாகத்தான் முதல் வகுப்பிற்கே போக முடிகிறது. இதனால் மாணவர்கள் இவனுக்கு 'லேட்டன்' என்று பெயர் வைத்தார்கள். 'டே.. லேட்டா...' என்றுதான் இவனை செல்லமாகக் கூப்பிடுவார்கள். இவன் லேட்டாக வருவதால் இவனை மாணவ தாதாவாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் எதுவுமே சொல்ல மாட்டார்கள்.

கல்லூரிக்குப் போன செல்வாவிற்கு, பாடத்தில் கவனம் போகவில்லை. பொதுவாக விரிவுரையாளர் சொல்லச் சொல்ல அப்படியே தானும் சொல்லி மனதுக்குள் பதிவு செய்துக் கொள்வான். ஆனால் இன்றோ, அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை . முதல் மூன்று வகுப்புக்களிலும் கவிதை மயமானான். இடைவேளையில் எழுதிப் பார்த்தான். இயலவில்லை ஆனாலும், அதுவே ஒரு வைராக்கியமாகி விட்டது.

மாலை வகுப்புக்களை கட்டடித்து விட்டு, கல்லூரி நூலகத்திற்குள் நுழைந்தான். நீண்ட மேஜையில் பல்வேறு இதழ்கள் துண்டு துண்டாக கிடந்தன. பெரிய இதழ்கள், சிற்றிதழ்கள், அறிவு ஜீவிகள் நடத்தும் தனிச்சுற்றுப் பத்திரிகைகள் என்று பல்வேறு வகை ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு வகையில் கவிதை இருந்தது இவனுக்கு தெம்பு கொடுத்தது. கூடவே கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு பிரபல கவிஞர், லோக்கல் கவிஞர்களுக்கு சொல்லிக் கொடுப்பது போல் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். செல்வா அந்தக் கட்டுரையை மூன்று தடவை படித்தான். அந்தக் கட்டுரைக்கு ஏற்ப எழுதத் துவங்கினான். வார்த்தைகள் மட மடவென்று வந்தன. அவனுக்கு ஒரு அறிவு ஜீவியாகி விட்டது போல் ஒரு ஆனந்தம். கவிதா, மோவாயில் கை வைத்து
அவனைப் பார்த்து வியக்கப் போகிறாள் என்ற கற்பனையில், வகுப்புக்களை கட்டடித்தது கூட அவனுக்கு தவறாய் தோன்றவில்லை.
--------------
அத்தியாயம் 5


அந்த மெரினா கடற்கரை பூத்துக் குலுங்கியது. ஆண்கள் செடிகளாகவும், பெண்கள் கொடிகளாகவும் பின்னிப் பிணைந்திருந்த பகுதி. இருள்மயமே அவர்களுக்கு ஒளி மயமாக தோன்றிய இடம். என்றாலும், அங்கே சென்ற செல்வாவை கவிதா இழுத்துப் பிடித்துக் கொண்டே, முதலில் உங்க கவிதையை சொல்லுங்க' என்று கடற்கரையின் விளிம்புப் பகுதிக்கு வந்து உட்கார்ந்தாள். அவன் கையைப் பிடித்து அவனையும் உட்கார வைத்தாள். அவள் கை வலுவை பார்த்த செல்வா கேட்டான் ஒரு கேள்வி.

"நீ என்ன கராத்தே பெண்ணா ? உன் பிடி இரும்புப் பிடியாய் இருக்கே ?"

"ஒரு பெண்ணோட கடைக்கண் பார்வையில் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம் என்றார் பாரதிதாசன். இது ஒரு ஆணாதிக்கப் பார்வை. அவரே பெண்ணாக இருந்தால், காதலியின் கைப்பிடியில் காதலனும் ஓர் கடுகாமுன்னு பாடியிருப்பார். இப்போ நீங்க என் தோளில் கிடக்கிற கையை எடுக்கறீங்க... அதே கையால பைக்குள்ள இருக்கிற கவிதைய எடுத்துப் படிக்கிறீங்க.... நிறைய எழுதியிருக்கீங்களோ.... உங்க சட்டைப்பை கர்ப்பம் தரிச்ச பெண்ணு மாதிரி துருத்திக்கிட்டு நிற்குது..."

செல்வா, பெருமிதமாகச் சொன்னான்

"இது கவிதைக் கற்பம். இப்போது பிரவசம் நடக்கும் பார்"

செல்வா, இலக்கியக் கர்வத்தோடு இரண்டாய மடித்த அந்தத் தாள் கற்றைகளை எடுத்து சத்தம் போட்டே படித்தான்

"கானல் சதுரத்தின் வேனல் வெளிப்பாடு
வேனல் வெளிப்பாடுகளில் கோணல் சரிவுகள்
கானலும் சதுரமும் கலந்தவள் கவிதா
வினைப்பாலின் திணைப்பயனோ?
திணைப்பாலின் வினைப்பயனோ?
ஊடகத்தின் பூடகம்
பூடகத்தின் ஊடகம்
ஊடகமும் பூடகமும்
ஒன்றித்த லாகவங்கள்"

கவிதா 'ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்' என்று சொன்னபடியே அவன் வாயை பொத்தி, கையை ஈரப்படுத்தினாள். அந்தக் காகித கற்றையில் லயித்துப் போய் வாசித்த செல்வா அவள் கையை விலக்கிக் கொண்டே கேட்டான்.

"என்ன கவிதா! நான் நல்ல தமிழில் கவிதை படிக்கும் போது, நீ இங்கிலீஷ்ல திட்டுறியே... திட்டுறதா இருந்தாலும் கவிதையில் திட்டு ..."

"ஒங்க கவிதை லட்சணத்துக்கு, திட்டப்படாது. நாக்குல சூடு போடணும். எழுதுற கைய முறிக்கணும்..."

"இப்படித்தான் எல்லா ஜனரஞ்சக வாசகர்களும் கேட்கிறாங்க.... இந்தக் கவிதை, அறிவு ஜீவிகளுக்காக ஒரு அறிவு ஜீவி எழுதிய புதுக்கவிதை..."

புரியாததற்குப் பெயர்தான் புதுக்கவிதையா?"

செல்வா, தான் படித்த கட்டுரையின் சில பகுதிகளை தானே சொல்வது போல் ஒப்பித்தான்.

"எடுத்த எடுப்பிலேயே புரிவது கவிதையல்ல. கவிதையின் நோக்கம் வாசிப்பு சுகம் அல்ல. மூன்று நான்கு தடவை படித்த பிறகுதான், அதன் பொருள் புரிய வேண்டும் அப்படித்தான் நான் எழுதியிருக்கேன். ஒரு கவிதையில் வாசிப்பு, மறுவாசிப்பு, அசை போடல், அடிமனத் தேடல், மறு பரிசீலனை, சுய பரிசீலனை, சுயத்தை இழந்த பார்வை, பார்வையை இழந்த சுயம் இப்படி ஆயிரம் இருக்குது... ஒரு மாதம் டைம் கொடுக்கறேன்... உன்னை அறிவு ஜீவியாய் மாற்றிக் கொள். அப்புறம் இந்தக் கவிதையின் பொருள் புரியும்."

கவிதா, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஒருவேளை இவனுக்கு பித்து பிடித்துப் போய்விட்டதோ. இனிமேல் குறுந்தாடி வைக்க வேண்டியதும், ஒரு ஜோல்னா பையை போட்டுக் கொள்ள வேண்டியதும், அரக்கப் பரக்கப் பார்க்க வேண்டியதும் தான் பாக்கி. அய்யய்யோ! இவரை இனிமேல் கவிதை எழுதவே சொல்லக்கூடாது.'

கவிதா, அவனது வலது காதை செல்லமாக அல்லாமல், வலிக்கும்படி முறுக்கியபடியே கேட்டாள்

"ஒழுங்கா பதில் சொல்லுங்க! இது நீங்க எழுதுன கவிதை இல்ல. இப்போ நீங்க பேசுற பேச்சுக்கு உங்களுக்கு எவனோ பின்னணிக் குரல் கொடுக்கான். கொடுத்தவன் யார் சொல்லுங்க..."

"நான்தான் - நானேதான்."

"நம்ப மாட்டேன்... நம்பவே மாட்டேன். இந்தக் கவிதை, நம்ம, அந்தரங்கத்தை நீங்க எவன் கிட்டயோ சொல்லி, அவன், உங்க அப்பா எழுதிக் கொடுத்தது மாதிரி, இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறான். இப்போது உங்கள் காதல் மீதே எனக்குச் சந்தேகம்."

கவிதா, அவன் காதை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, கால்களைத் தூக்கி முட்டிகளின் முனையில் முகம் போட்டாள். செல்வா, அவள் முகத்தை நிமிர்த்தப் போனான். அவள் பற்களால் கடிபட்ட கைகளை உதறியபடியே, அவள் முன்னால் எழுந்து, மூன்று முறை தோப்புக் கரணம் போட்டபடியே விளக்கமளித்தான்.

"என்னை நம்பு கவிதா... நம்ம காதலைப் பற்றி எந்த பயல் கிட்டயும் மூச்சு விடல... கல்லூரி நூலகத்திற்குப் போனேன். அங்கே வந்த எங்க இணை தமிழ்ப் பேராசிரியர்கிட்ட புதுக்கவிதை பற்றி விளக்கம் கேட்டேன். பல இலக்கிய கூட்டங்களுக்கு போனவர் அவர். பல கூட்டங்களில் அடித்துப் பேசுவார். அடிபட்டும் வருவார். இந்தக் கவிதையை அவரிடம் காட்டினேன் இதற்கு ஈடாக இனிமேல் தான் ஒரு கவிதை பிறக்க வேண்டும்' என்றார். பச்சையாக சொல்லப்போனால், ஒரு இலக்கிய இதழில் வந்த கவிதையை அப்படியே காப்பி அடித்து கொண்டு வந்தேன்."

கவிதா, மீண்டும் அவன் காதைத் திருகியபடியே இன்னொரு கேள்வி கேட்டாள்.

"இனிமேல் அறிவு ஜீவிகளின் பக்கம் போவீங்களா?"

"மாட்டேன். மாட்டவே மாட்டேன்."

"சரி போகட்டும். இந்தக் கவிதை மண்ணாங்கட்டி எதுவும் வேணாம் என்னை சந்திப்பதற்கு முன்னால் நீங்க எப்படி இருந்தீங்க. என் சந்திப்புக்குப் பிறகு எப்படி ஆனீங்கன்னு யதார்த்தமா, செயற்கைத்தனம் இல்லாமல் கட்டுரை மாதிரி எழுதுங்க... உரைநடையாவது உங்களுக்கு வருதான்னு பார்ப்போம்... என்னைப் பற்றி ஒரு வர்ணணைகூட இருக்கக்கூடாது. அதை பதிவு செய்ய கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை. கண்ணாடி போதும். அதேசயமம், நான் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடணும்."

"இதைத்தான் பல தடவை நேர்லயே சொல்லிவிட்டேனே.... இந்த புதுக்கவிதை அனுபவத்திற்குப் பிறகு எழுதுறதுன்னா எனக்கு பயமாய் இருக்குதும்மா.... இப்பவே நேருக்கு நேராய் சொல்லிடுறேன்.."

"நாம் கைப்பட ஒரு கதை எழுதுறோம். அது பத்திரிகையில் பிரசுரமானால், என்ன சுகம் கிடைக்குமோ, அதைவிட அதிக சுகம் நீங்க கைப்பட எழுதின கடிதத்தில் கிடைக்கும். இதய உணர்வுகளுக்கு உங்க வாய் ஈடாகாது. நீங்கள் எழுதித் தருகிற கடிதத்தை ரகசியமான இடத்தில வச்சு கண்ணுல ஒற்றி ஒற்றி ஒரு நாளைக்கு ஒன்பது தடவையாவது படிப்பேன். அந்த அளவுக்கு நீங்க எழுதுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது..."

"மொதல்ல நான் உன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை விலாவாரியா நீ எழுதிக் கொடு.”

"நம்மளால் முடியாதுப்பா."

"ஏன் முடியாது? உன்னால் முடியும் கவிதா. ஆனாலும் பிற்காலத்துல நம்ம காதல் தோல்வியுற்றால் அந்த லட்டரை வச்சு சினிமாவுல வாறது மாதிரி நான் உன்னை பிளாக் மெயில் செய்வனோன்னு பயப்படுற...."

"அப்படிப் பயப்பட்டாலும் தப்பில்லியே..."

செல்வாவிற்கு, என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுந்தான். தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதுவும் வாகன விளக்குகள், விட்டில் பூச்சிகளாய் தெரிந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்தான். கவிதா, தான் சொன்னதன் வலிமையையும், தவறையும் உணர்ந்தவள் போல் அவன் பின்னால் ஓடினாள். சரியாக கண்ணகி சிலைக்குப் பின்பக்கமாக, அவன் சட்டைக் காலரை பிடித்து விட்டாள் சுற்றும் முற்றும் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த பெரிசுகள் என்னமோ ஏதோவென்று எழுந்துவிட்டன போய்க்கொண்டும், வந்து கொண்டும் இயங்கியவர்கள் நின்றார்கள் ஒருசிலர் கவிதா பக்கமாய் போய் நின்று "பொறுக்கிப் பயல்களுக்கு இதுவே பொழைப்பா போச்சு... ஒன்னை என்னம்மா செய்தான்? நடந்ததைச் சொல்லு.... அதோ தெரியுதா உங்கள் நண்பன். அதாம் போலீஸ் போஸ்ட். அதுல இவனை ஒப்படைத்திடலாம்." என்று பரிந்துரைத்தார்கள்.

செல்வா, வெலவெலத்தான். அவன் பற்கள் கூட தானாய் ஆடுவது போல் தோன்றியது. சுற்றி வளைத்த கூட்டத்தைப் பார்த்து கவிதா, கையெடுத்துக் கும்பிட்டபடியே கெஞ்சினாள்.

"இவன் என்னோட கஸின் பிரதர். எங்க வீட்டுல தங்கித்தான் படிக்கான். வீட்ல ஒரு சண்டை ரெண்டு நாளா ஆளக்காணோம். இங்கே தேடி வந்தால் ஆள் அகப்பட்டான். என்னைப் பார்த்ததும் ஓடுறான். அவ்வளவுதான். பார் உன்னால்... உன்னால் எத்தனை பேர் வேடிக்கைப் பார்க்கிறாங்க பாரு.."

கவிதா, நிசமாகவே அழுதாள். வேடிக்கை பார்த்த கூட்டத்திற்கு ஒரு விக்கல், அந்தரங்கம் அம்பலம் ஏறியதற்காக ஒரு கேவல். கூட்டத்தில் அப்பாவுக்கு தெரிந்தவர் யாராவது இருக்கலாம். அவ்வளவுதான் ரகளை ஏற்படும். தன் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பார்கள். அப்பா அந்த வகை. இந்த செல்வா, எந்த வகை?

கூட்டத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டார்கள் இந்த "கஸின் சிஸ்டர், கஸின் பிரதர் விவகாரம்" அவர்களுக்கும் அத்துப்படி இந்தச் சமயம் பார்த்து, கழிவறை பக்கம் ஒரு அடிதடி, கூட்டம் இவர்களை விட்டுவிட்டு அங்கே ஓடியது. முன்னெச்சரிக்கையாக, பின்வாங்கியும் முன் வாங்கியும் உஷாராக ஓடிப்போய் தங்களுக்கு ஆபத்து ஏற்படாத ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு, இரண்டு பேரின் சொற்போரோடு கூடிய மற்போரை வேடிக்கை பார்த்தது.

கவிதாவும் செல்வாவும், ஒருவரோடு ஒருவர் பேசாமல் கண்ணகிச் சிலையிலிருந்து தெற்குப் பக்கமாக பிளாட்பாரத்தில் நடந்து கொண்டே போனார்கள். அவனுக்கு பின்னால் நடந்த கவிதா பேசிக் கொண்டே நடந்தாள்.

உங்க பித்துக்குளி தனத்தால் நடக்கக்கூடாதது நடந்தது பார்த்தீங்களா... சரியான கிராக்கு .."

"நான் கிராக்கு இல்ல.. மானஸ்தன்... நான் பிளாக்மெயில் செய்தாலும் செய்யலாமுன்னு உனக்கு ஒரு எண்ணம் வந்தது பாரு.... அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை நான் ஏற்படுத்தியிருக்கேன் பாரு.. இதுக்காக எனக்கு நானே தண்டனை வழங்குறது மாதிரி பிரியுறேன்."

"ஸாரி.. செல்வா. சும்மா ஜோக்காத்தான் சொன்னேன். விலகிப் விலகிப் போன உங்களை வளைத்துப் போட்டது நான்தான். உங்க வீட்டு வேலைக்காரம்மா நீங்க படுற பாட்டை சொன்ன போது நிசமாவே அழுதுட்டேன். பெண்களை மானபங்கப்படுத்துற இந்தக் காலத்துல , நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்னு அந்தம்மா சொன்னாங்க.... காலேஜ்ல நல்லா பேசி மெடல் மெடலாய் வாங்கியிருக்கீங்கன்னு வேலைக்காரம்மா சொன்னாங்க... அதனால ஒங்க மூஞ்சு முகரக் கட்டைக்காக நான் உங்களை காதலிக்கல... உங்க டேலண்டுக்காகவும் நல்ல குணத்துக்காகவும்தான்
காதலிக்கிறேன்."

"எங்க சித்தப்பா மகன் ஐ.ஏ. எஸ். டிரெயினிங் போயிருந்தான். அவன்கிட்ட ஒரு வங்காளப் பொண்ணு... ஒரு ஒரிசா பொண்ணு... காஷ்மீரி பொண்ணு இவங்களும் ஐ.ஏ.எஸ். தான். இவன்கிட்ட ஒவ்வொருத்தரும் என்னை கட்டிக்கிறீங்களான்னு கேட்டிருக்காங்க உடனே இவன் நானோ கருப்பிலேயோ கருப்பு அண்டங் கருப்பு..... மொழியும் மதமும் வேற வேற... நான் ஒரு புத்தகப் புழு... என்ன ஏன் விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு, அவளுக ஒவ்வொருத்தியும் என் கணவருக்கு அழகு முக்கியமில்ல. ஆரோக்கியமான உடம்பு முக்கியம். எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது. பெண்களை மதிக்கத் தெரியணும்... அதனால் நீங்க எனக்கு கணவரா வந்தா சந்தோஷப்படுவேன்னு, சொல்லியிருக்காங்க..... அதாவது இந்தக் காலத்து பெரிய பதவி பெண்களுக்கு, கணவன் என்கிறவன், அவளை மதிக்கச் தெரிந்தவனாகவும், நல்லவனாகவும், தோழனாகவும் இருக்கணும்..."

"உங்க சித்தப்பா மகன் என்ன செய்தான்?"

"அந்தப் பெண்களை உதறிட்டு, நான் உங்கள் காதலிக்கிறது மாதிரி ஒரு தொட்டாச்சிணுங்கி பொண்ண காதலிக்கிறான். முகம் போற போக்க பாரு... உங்களுக்கு சென்ஸ் ஆப் ஹுமரே இல்ல... சரி போகட்டும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்கிறதை நிரூபிக்கிறதுக்கு, நானே ஒரு லவ் லெட்டர் எழுதி உங்களுக்குத் தரப் போறேன்."

"எழுது. எழுதாமல் போ. நான்தான் முதல்ல எழுதுவேன்."

"ஒங்க மேல இருக்கிற நம்பிக்கையை நிரூபிக்கிறதுக்காக இதுவரைக்கும் போகாத சீரணி அரங்கத்திற்குப் பின் பக்கம் போவோமா? இன்னிக்கு உங்களுக்கு அதிக சலுகை..."

"கொடுக்கணுமா.. எடுக்கணுமா.."

"ரெண்டும் ."

இருவரும், கடல் மண்ணில் தடம் போட்டார்கள். அந்தத் தடங்கள், ரெட்டை ரெட்டையாகவும், இரண்டு அடுக்குகளாகவும், ஒன்றின் மேல் ஒன்றாகவும் ஆழப் பதிந்தன. கால் பின்ன கை பின்ன அப்படிப் பின்னியது தெரியாமலேயே சீரணியின் பின்பக்கம் உட்கார்ந்தார்கள். ஆங்காங்கே ஜோடிகள் அருகருகே ஒன்றுக்கு ஒன்று பாதுகாவலாய் கட்டிப் பிடித்து கிடந்தன. முகமறியா ஜோடிகள். செல்வாவும் கவிதாவும் அந்த ஜோடிகளிடமிருந்து சிறிது விலகி உட்கார்ந்தார்கள். கவிதா , அவன் தோளில் தலை சாய்த்தாள். அப்போது பார்த்து, ஒரு வேர்க்கடலைப் பயல் முன்னால் போய் உட்கார்ந்தான். மூன்று ரூபாய்க்கு வேர்க் கடலையை வாங்கிய பிறகு, ஒரு பூக்காரி முழம் ஆறு ரூபாய் என்றாள். கவிதா, அவசர அவசரமாக இரண்டு முழம் வாங்கி, செல்வாவை, தன் தலையில் வைக்கும்படி குனிந்தாள். அவன் அவள் பின்னலை பூச்சரமாக்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று பேர் அவர்களை சுற்றிச் சுற்றியே வட்டமடித்தார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு பேண்ட் போட்ட எருமை அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து ரசனையோடு பார்த்தது.

செல்வாவும் கவிதாவும் அந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக நடந்து, இன்னொரு இருட்டு வெளியில் கையோடு கை சேர்த்து உட்கார்ந்தார்கள். அவன் தோளில் இவள் கையும், இவள் தோளில் அவன் கையும் படரப் போன நேரத்தில், அங்கே சுற்றிக் கொண்டிருந்தவர்கள், இங்கே வந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு அந்த பேண்ட் போட்ட எருமையும் இவர்களுக்கு முன்னால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. கவிதா பயந்து போனாள். 'போகலாம்... போகலாம்...'' என்று சொன்னபடியே எழுந்தாள். எதுக்குப் பயப்படணும்' என்றான் செல்வா. இது பயப்படுற விஷயம் மட்டுமல்ல. கற்புப் பிரச்சினை என்றாள். பிறகு ஒரு சந்தேகம் கேட்டாள் எத்தனையோ ஜோடிகள் இருக்கும் போது, நம்மை மட்டும் ஏன் இந்த தடியன்கள் சுத்துறாங்க' என்றாள். அவளுக்கு பதிலளிக்க முடியாமல், செல்வா குழம்பியபோது, அதே வேர்க்கடலை பையன், வந்தான். அவர்களுக்கு உபதேசம் செய்தான்.

"நீங்க ரெண்டு பேரும் பசங்க... அதாவது சின்ன வயசுப் பசங்க... ஒங்கள மாதிரி சின்ன வயசுக்காரங்கள் மிரட்டி கற்பழிக்கிறது இதோ சுத்துறாங்களே இந்தப் பயல்களுக்கு ஒரு பொழுது போக்கு ஏன்னா உங்களால வெளில சொல்ல முடியாது பாருங்க..... ஆனால், மத்த ஜோடிங்க அப்படி இல்ல நல்லாப் பாருங்க. ஒவ்வொருவரும் ஒரு தடியன் - இப்படில்லாம் நடக்கலாம் என்று எதிர்பார்த்து அதை சமாளிக்கிற தைரியத்தோட வர்றவங்க... இவங்ககிட்ட அந்தப் பயலுவ பாச்சா நடக்காது. இவனுகளோட ஜோடிகளும் காசுக்காகவே எதுக்காகவோ வருகிற பஜாரிங்க"

"அதனால் இந்த பெரிசு ஜோடிங்ககிட்ட போகமாட்டாங்க.... நீங்க திரும்பிப் பாராம ஓடுங்க.... எப்போ காதலிக்கிறதுன்னு வந்துட்டிங்களோ அதுக்கு ஏத்தபடி நடந்துக்கணும். அதாவது சுற்றிச் சுற்றி வராவங்களை ஓரக்கண்ணாலதான் பார்க்கணும். அவங்கள அலட்சியப்படுத்துறது மாதிரி இருக்கணும். நீங்க என்னடான்னா வாரவனையும் போறவனையும் பயந்துகிட்டே பார்க்கிறீங்க.... இதனால் உங்களை என்ன வேணுமுன்னாலும் செய்யலாமுன்னு அந்த கடற்கரை பொறுக்கிகளுக்கு ஒரு எண்ணம் வந்துடுது. அதனால் உங்களுக்கு இந்த ஏரியா ஒத்துவராது. வேர்க்கடலை வேணுமா?"

கவிதாவும், செல்வாவும் வேர்க்கடலை வாங்கும் சமயத்தில், ஏதாவது நடந்துவிடக் கூடாதே என்ற பயத்தில், வேதாந்தி போல் பேசிய அந்த பிஞ்சுப் பழத்தின் கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை திணித்து விட்டு, வேக வேகமாக வெளிச்சம் நிலவும் பகுதிக்கு வந்தார்கள். கூடவே ஆள் கூட்டம் அதிகம். பழக்கப்பட்ட குரல் கேட்டு கவிதா தெற்குப் பக்கமா திரும்பினாள். அவள் அண்ணன் மோகனன் நாலைந்து பேரோடு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறான் மத்தியில் ஒருவன் டேப் அடித்துக் கொண்டு கானா பாட்டை பாடுகிறான். அண்ணன் குதிக்கிறான்; தரையை மிதிக்கிறான். அங்குமிங்குமாய் தாவுகிறான்.

கவிதா, செல்வாவின் முதுகைத் தள்ளிக் கொண்டே கடற்கரையின் விளிம்பிற்கு ஓடினாள் அவனிடம் பதட்டத்தோடு பேசினாள்.

"இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது செல்வா. அங்கே குதிச்சுக்கிட்டிருக்கே ஒரு கூட்டம் அதுல ஆடிக்கிட்டு இருக்கிறவன் எங்கண்ணன் மோகனன். அவன் கண்ணுல பட்டால் அவ்வளவுதான்."

"நானும் அதைத்தான் சொல்லணுமுன்னு நெனச்சேன்... ஒங்கண்ணன் நல்லாவே ஆடுறான்."

"எங்கண்ணன் பரத நாட்டியம் நல்லா கற்றுக் கொண்டவன். பதினாலு வயசிலேயே இவன் நாட்டியம் அரங்கேறியது. அப்புறம் குடும்பத்துல என்னல்லாமோ நடந்தது இவன் சித்தன் போக்கு சிவன் போக்காய் ஆகிட்டான் இனிமேல் அவன் எக்கேடு கெட்டாலும் சரிதான். எங்கப்பா அவனை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு - பெற்ற கடனுக்காக அவன் கொடுக்கிற ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கிட்டு, அதுக்கு பதிலாக அவன் பணம் எடுக்கும் போது சும்மா இருக்காரு... சரி அதை விடுங்க.... நாம், இனிமேல் எப்படி சந்திக்கிறது? எங்கே சந்திக்கிறது? இந்தக் கடற்கரையில் வெளிச்சத்துல சந்திச்சா தெரிஞ்சவங்க பார்ப்பாங்க.... இருட்டுல சந்திச்சா தெரியாதவங்ககிட்ட அகப்படணும்."

"அதுதான் எனக்குப் புரியல..."

"ஒரு குட் நியூஸ் - நாளைக்கு எங்கப்பாவும் அம்மாவும் டூர் போறாங்க. ஆபிஸ் கார்ல போறாங்க. அம்மா என்னையும் கூப்பிடுறாங்க. உங்களை பிரிந்து என்னால இருக்க முடியுமா? அதனால நான் முடியாதுன்னுட்டேன். நல்லவேளை நாளைக்கு
ஞாயிற்றுக்கிழமை. எங்க வீட்டுக்கு வந்துடுங்க..."

"எனக்கு பயமா இருக்குது கவிதா - ஒருவேளை தப்பித் தவறி யாராவது இருந்தால் - ஓங்கண்ணன் கூட இருக்கலாமே..."

"போன வாரம்தான் மூவாயிரம் ரூபாய் எடுத்துட்டு போனான். இனிமேல், அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிதான் வருவான். ஒருவேளை எங்கப்பா, நானும் அவரோட போகணுமுன்னு அடம் பிடித்தால், என்னால தட்ட முடியாது. அதனால், நான் மட்டும் வீட்ல இருக்கிறதா இருந்தால் கம்பவுண்டு கதவுல ஒரு பக்கம் திறந்திருக்கும். மூடி இருந்தால், நான் இல்லன்னு அர்த்தம்."

"வாட்ச்மேன் இருக்கலாம் இல்லியா?"

"அவனையும் கூடமாட ஒத்தாசைக்கு அப்பா கூட்டிட்டுப் போறார்."

"கொஞ்சம்கூட பொறுப்பில்லாத அப்பா. அம்மாவை கூட்டிக்கிட்டு ஒன்னை மட்டும் விடலாமா - நீயும் போ-”

"ஓங்க மனசு கல் மனசு செல்வா. எனக்கு இருக்கிற துடிப்பு உங்களுக்கு இல்ல..”

"நீ சொல்லிட்ட... நான் சொல்லல..... அவ்வளவுதான் வித்தியாசம்..."

''சமையல்காரம்மா வீட்டோட இருக்காங்க. அந்தத் தைரியத்துல அப்பா என்னைப் பற்றி கவலைப்பட மாட்டார். அதோட, அம்மா - அப்பா விளையாட்டுக்கு நான் இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நினைப்பார்."

"சமையல்காரம்மா அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தால்?”

அந்தம்மாவுக்கு சாப்பாடு மட்டும்தான் போட்டுக் கொடுக்கத் தெரியும். மற்றபடி பெருந்தூக்கக்காரி. அவங்கள சமாளிக்கிறது என் பொறுப்பு. கேட்ல ஒரு பக்கம் திறந்திருந்தால், நீங்க வாறீங்க. மூடி இருந்தால், போறீங்க..."

கவிதா, தனது மாருதி காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, இடது பக்க முன்னிருக்கைக் கதவை செல்வாவிற்கு திறந்து விடப் போனாள். அந்தக் கதவின் உள் சதுரம் பியந்து போய் முரண்டு செய்து கதவை திறக்க மறுத்தது. இதனால் செல்வா, நீண்டு நெடிந்த பின்னிருக்கையில் கைகளையும் கால்களையும் தாரளமாகப் பரப்பிக் கொண்டு உட்கார்ந்தான்.
---------------
அத்தியாயம் 6


செல்வா, மத்தியானம் பன்னிரண்டு மணி வரை, கவிதாவைப் பற்றி, தான் எழுதிய உரை வீச்சை அடித்தும் திருத்தியும் அல்லோ கலப்படுத்தினான். சுமாரான காகிதங்களில் எழுதப் பட்டதை நல்ல காகிதங்களில் நகல் எடுத்தபோது, "உனக்குன்னு தனியா பறிமாறணுமா?” என்ற சித்திக்காரியின் சத்தம் அவன் காதுகளில் குத்தியது. அவன், அந்தக் காகிதங்களை பயபக்தியோடு தனது நோட்டுப் புத்தகத்தில் வைத்தபோது "தனியா சாப்பிட்டால் என்ன நாய்களா?" என்று, பிள்ளைகளுக்கு குரல் கொடுத்தாள் சித்தி.

செல்வா, அவசர அவசரமாக சாப்பாட்டு மேஜைக்கு ஓடினான். குழந்தைகள் ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்தன. சித்திக்காரியும் உட்கார்ந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அலுவலகத்திற்குப் போய்விட்ட கணவன் மீது கடும் கோபமாக இருப்பது, அவள் சாதத்தை பிசைந்து கஞ்சியாக்குவதிலிருந்து தெரிந்தது. செல்வா, ஒரு கவளத்தை சுபேதாவுக்கு ஊட்டிக் கொண்டே மறு கவளத்தை தனது வாயில் போட்டுக் கொண்டான். சித்திக்காரி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு செம்பு தண்ணீரையும் மடக் மடக் என்று தொண்டைக் குழிக்குள் அருவியாக்கிவிட்டு போய்விட்டாள்.

செல்வாவும், குழந்தைகளும் சாப்பிட்டு முடித்தபோது, சித்திக்காரியின் குறட்டைச் சத்தம் தோசைக்கல்லில் ஊற்றப்பட்ட ஈர மாவு மாதிரியான ஒலியை எழுப்பியது. செல்வா, சுபேதாவின் கையையும் வாயையும் கழுவிவிட்டு, அருணையும் அப்படி கழுவச் செய்துவிட்டு தங்களுக்கு என்று ஒதுக்கிய மேற்குப் பக்கத்து அறைக்கு வந்தான். குழந்தைகளை மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவன் அந்த இருவர்களுக்கிடையே படுத்துக் கொண்டான். அந்த இருவரும் தூங்குவதற்கு உந்துகோலாக ஒவ்வொரு கையாலும் ஒவ்வொருத்தர் தலையையும் கோதி விட்டான்.

இந்த முடிக்கோதல் ஒரு அலாதி இன்பம். அதுவும் மிகவும் வேண்டியவர்கள் வருடி விடும் போது, அது ஒரு தனித்துவ சுகத்தை கொடுக்கிறது. மகிழ்ச்சித் திரள்கள் ஒன்றாய் திரள்கின்றன. ஆறுதலுக்கு ஆறுதல். நெருக்கத்திற்கு நெருக்கம். உடலெங்கும் சுக மயம். உள்ளமெங்கும் நிர்மலம். இதனால்தான், குரானில் ஒருவரின் துக்கத்தை குறைப்பதற்கு அவரது பிடரியை தடவி விட வேண்டும்' என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஞ்ஞானம், அந்த இரு குழந்தைகளிடமும் எடுபடவில்லை. அவன் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு 'கதை சொல்லுங்க அண்ணா ' என்றன. சுபேதா பஞ்ச தந்திரக்கதை வேண்டும் என்பது மாதிரி கேட்டாள். அருண் சக்திமான் டைப்பில் கதை கேட்டான். இந்தப் போட்டியில் இரண்டு குழந்தைகளும் அண்ணன் மார்புக்குமேல் பாய்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டன அருணை முறைத்துக் கொண்டும், சுபேதாவின் கண்ணீரை துடைத்துக் கொண்டும் அவர்கள் இருவரையும் தன் மார்பில் தலைசாய்க்க செய்து முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

குழந்தைகள் தூங்கி விட்டன. செல்வா, மெல்ல அவர்களின் தலைகளை படுக்கைக்கு இறக்கி, அவர்கள் விழிக்கிறார்களா என்று நோட்டம் போட்டான். 'அண்ணா ' என்ற குரல் எழுப்பி குழந்தைகள் தன்னை காணாமல் அலறி விடக்கூடாதே என்ற அச்சம். மணியை பார்த்தான். சரியாக பிற்பகல் ஒன்று. உடனே அணிச்சையாக ஆவின் நினைவு வந்தது. பால் கார்டை எடுத்துக் கொண்டு , சமையலறையிலிருந்த பிளாஸ்டிக் கூடையையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். சித்தி விழிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதும், ஆவின்காரன் பிற்பகல் மூன்று மணிவரை இருப்பான் என்பதும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது.

செல்வா, தெருவுக்கு வந்து, அடுத்த வீட்டை தாண்டி, அதற்கு அடுத்த வீட்டின் கேட்டை நெருங்க நெருங்க இதயமும் மூளையும் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டன. கால்கள், பின்னியபடியே நடந்தன. மனம் "போ" என்றும் மூளை "போகாதே" என்றும் மாறி மாறி ஆணையிட்டன. இன்றைக்கு மட்டும்தான் என்று மூளைக்குச் சொன்னான் 'இன்றைக்கு பேச வேண்டியதையெல்லாம் பேசிவிடுவோம் என்று மனதிற்குச் சொன்னான். இந்த மனதிற்கும் மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ - தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல். மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக் காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன.

செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்த வனால் வினாடிக் கணக்கில் கூட பொறுக்க முடியவில்லை. கம்பௌண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச் சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக் கொண்டான்.

ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு. பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. நுணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது.

கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா ச மாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணீரில், தனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்பட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும் போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.

செல்வா, உப்பிப் போன தனது சட்டைப் பை யை அழுந்தப் பிடித்தபடியே, "கவிதா. கவிதா..." என்று காந்தக் குர லாடு சோபா செட்டுகளை கொண்ட வரவேற்பறையின் நடுவில் நின்று கூவினான்.

உடனே கதவில்லாதது போல் தோன்றிய பிளைவுட்டால் ஆன கிழக்கத்திய தடுப்பிலிருந்து ஒரு தேக்குப் பலகை திறந்தது. மோகனன், இரண்டு ஆண்கள் கட்டி அணைக்கும் முத்திரை படம் கொண்ட பனியனோடு நின்றான். லாகவமான உதட்டோரப் புன்னகை. சுருள் சுருளான புல்தரை மாதிரியான கிராப்பு. பிடரியைத் தாண்டிய முடி ஒற்றைக் கடுக்கன். கையில் ஒற்றை வளையம். நீளவாக்கு முகம், மாம்பழ நிறம், முகத்தில் கொய்யாக்காய் போன்ற வடுக்கள்.

செல்வா, வெலவெலத்துப் போனான். எங்கே நிற்கிறோம், யார் முன்னால் நிற்கிறோம் என்பது கூட தெரியாத அதிர்ச்சி. ஒரே ஓட்டமாய் ஓடிவிடலாம் என்பதுபோன்ற திருப்புமுனை பார்வை. அதுவே குற்றத்தைக் காட்டி கொடுக்கும் என்ற ஞானம். ஆனாலும், மோகனன் அவனை சிரித்தபடியே பார்த்தான். அந்த சிரிப்பை புன்னகையாக்கியபடியே, அவன் மெல்ல நடந்து வந்தபோது, செல்வாவின் பயம் லேசாய் தெளிந்தது. கூடவே சிரிப்பாய் வரவேற்கும் மோகனன் மீது அன்பும், இப்படித் தன்னை மாட்ட வைத்த கவிதா மீது கோபமும் வந்தது.

மோகனன், செல்வாவை நெருங்கி, ஐ எம் மோகனன் என்று கையை நீட்டினான் இடுப்போடு ஒட்டிக் கிடந்த செல்வாவின் வலது கையை பிடித்துக் குலுக்கினான். "நீ யார்" என்று அவனை கேட்காததிலிருந்து, அவனை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. செல்வாவின் கையை பிடித்த மோகனன், சிறிது நேரம் அதை வருடிக் கொடுத்தபடியே நின்றான். செல்வாவிற்கு பயம் போய்விட்டது. இவன் ஜென்டில்மேன். இவனைப் போய் கவிதா அசல் போக்கிரி என்றாளே. அதோடு அசிங்கம் பிடித்தவன் என்றும் கத்தினாளே..'

மோகனன், செல்வாவின் கரத்தை விடுவித்துவிட்டு, அறைக் கதவை நோக்கிப் போட்ட ஒற்றைச் சோபா இருக்கையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தான் எதிரே உள்ள சோபா செட்டில் செல்வாவை உட்காரும்படி சைகை செய்தான்.

அவன் உட்கார்ந்து முடித்ததும், மோகனன் தோழமையோடு கேட்டான்.

"நீங்க பக்கத்து வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கிச்சன் வீட்டு பையன்தானே?'

செல்வாவிற்கு கோபமும் வந்தது. ரோசமும் வந்தது. அவன் சித்தப்பா நேர்மையானவர். கடனே என்று கட்டிய வீடு. அதாவது அரசாங்கக் கடனில் கட்டிய வீடு. சித்தியின் நகைகளை அடகு வைத்து சுமாராக கட்டப்பட்ட அந்த வீட்டை, இவன் கிச்சன் வீடு என்று சொன்னது என்னவோ போல் இருந்தது. இவன் அப்பன் ஐ.ஏ.எஸ். காரனைப் போல் கொள்ளையடித்துக் கட்டிய வீடல்ல. இப்படி சொல்லி விடலாமா என்று கூட அவன் நினைத்தான். உடனே காரியம் பெரிதா... வீரியம் பெரிதா.... என்ற கிராமத்துப் பழமொழி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதோடு இவன், அவன் உயிருக்குயிரான கவிதாவின் அண்ணன் தமாஷ் பேர்வழி. மனதில் எந்த விகற்பமும் இல்லாமல் அப்படி கேட்டிருப்பான்.

"ஏன் யோசிக்கிறே? பதில் சொல்லு?"

"ஆமாம் ஸார். அது எங்க சித்தப்பா வீடு. ரொம்ப ரொம்ப நேர்மையானவர். அவரால் கிச்சன் வீடுதான் கட்ட முடியும். நான், அவரோட அண்ணன் மகன். கிராமத்துல அப்பாம்மா இருக்காங்க... நான் இங்கே சித்தப்பா வீட்ல தங்கி காலேஜ் படிக்கிறேன்.

"ஒன்னைப் பார்த்தால், படித்தவன் மாதிரி தெரியலியே?"

"நோ... நோ... சார்.. நான் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் ஸார்... கிளாஸ்ல பஸ்டு ஸார்.... பல கல்லூரிப் பேச்சுப் போட்டிகள்ல பஸ்ட்ல வந்திருக்கேன் ஸார்...”

"குட்... அப்படித்தான் இருக்கணும். ஆனா டிரெஸ்லேயும் கவனம் செலுத்தணும்... நான் ஒரு ஐ ஏ.எஸ். ஆபீசர் மகனாய் பிறந்தாலும், பத்தாவது வகுப்புக்கு மேல புத்தி போகல.... ஆனாலும் எவ்வளவு ஸ்டைலாக இருக்கேன் பார். ஒன் நன்மைக்காகத்தான் நான் சொன்னேன். தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுடு..."

"மன்னிக்கும்படியாய் நீங்க எதுவும் பேசல ஸார்.... உங்கள ரெண்டு மூணு தடவதான் பார்த்திருக்கேன். நீங்க விதிவிலக்கான இளைஞராம். டான்ஸ் மாஸ்டராம். ஸ்டண்ட் பயிற்சியாளராம். டி.வி.யில நிகழ்ச்சிகளுல அந்தர் பல்டி அடிச்சுக்கிட்டே பாடுவீங்களாம். ஆக மொத்தத்துல சகலகலா வல்லவராம். ஆனாலும், ஐ.ஏ.எஸ். அப்பாக்கூட மட்டும் ஒத்துப் போனால் எங்கேயோ போயிருப்பீங்களாம். இதனால உங்க டேலண்ட் வேஸ்ட் ஆகுதாம்."

"இப்படி சொன்னது யார் உனக்கு?"

"எங்க சித்தி ஸார். உங்க அம்மாவோட பிரண்டு ஸார்."

"அப்போ உங்க சித்தியை நான் டாவ்' அடிக்கட்டுமா? உட்காருடா.. எழுந்துட்டதாலேயே நீ போகமுடியாது. இப்படிச் சொன்னது என் சிஸ்டர் கவிதாதானே... நேரா உண்மைக்கு வரவேண்டியது தானடா..."

செல்வா, தலை குனிந்தபடியே , மோகனனுக்கு முகம் காட்டாமல் கிடந்தான் போதாக்குறைக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் இடது பக்க சட்டைப் பையை வலது கையால் மூடினான் அது துருத்திக் கொண்டிருப்பதை ஏற்கெனவே கவனித்த மோகனன், அவனை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான் மானசீகமாக பருகினான் மோப்பக் குழையும் அனிச்ச முகம். நாட்டுக் கட்டை உடம்பு என்றாலும் அதில் ஒரு நளினம் மன்மதனின் மனைவியான ரதியக்கா தன்னைப்போல் ஒரு மனிதச் சதையை செதுக்கியது போன்ற தோரணை. கருப்பும் மின்னும் என்பது போல் காட்டிய உடம்பில் சந்தனக் குழைவு. இரண்டுக்கும் பயன்படுவான்."

இப்போது, மோகனனின் புன்னகை போலித்தனமான கோபமானது. நாட்டியக்காரன் என்பதால் கண்கள் உருண்டு திரண்டு ஒரே நிலையில் நின்றன.

"கவிதாவை பார்க்கத்தானே வந்தே?"

"ஆமாம் ஸார். இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன் ஸார்"

"நான் காதலுக்கு எதிரியில்லை மச்சி.... பையில் இருக்கிற அந்த லவ் லெட்டரை எடு. எனக்குத் டமிழ்ன்னா உயிரு... அதோட ஒன்னை மாதிரி காலேஜ் பசங்களோட டமில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்."

"லவ் லெட்டர் இல்ல ஸார்... ஆவின் கார்டு ஸார்..."

"எனக்கு காதுல பூ வச்சு பழக்கமே தவிர, வைக்க விடுறதில்ல. மரியாதையா கையில் இருக்கிறத நீட்டு... இல்லன்னா போலீஸுக்கு போன் பண்ண வேண்டியது வரும். ஒரு மைனர் பெண்ணை கடத்த வந்த குற்றத்திற்கு, போலீஸ்ல லத்தியால லொத்து லொத்துன்னு வாங்குவாங்க. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன் போலீஸுக்கு போன் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? கம்பி எண்ணனுமா.... லெட்டர தாரீயா.."

"லவ் லெட்டர்தான் ஸார்.. கவிதாவுக்குத் தெரியாமல் நானே எழுதின டர்டி லெட்டர் ஸார்...”

"டர்டின்னு சொல்லாத மச்சி.... ஸ்வீட் நத்திங்ஸுன்னு சொல்லு. நான் காதலுக்கு எதிரியில்லை அதை ஆதரிப்பவன். நீ எப்போ என் தங்கைய லவ் பண்றதா தெரிஞ்சிதோ, அப்பவே, நான் ஒனக்கு மச்சான். நீ எனக்கு மச்சி. சரி லெட்டரை எடு..."

"இது ஒருதலைக் காதல் ஸார்.... கவிதா என்கிட்ட பேசினதே கிடையாது ஸார்..."

"அத, ஒன் லெட்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிடுறேன்... அப்புறம் ஒன்னை போக விடுறேன். ஏன்னா... கொலை மிரட்டல் மாதிரி எதுவும் எழுதியிருக்கப்படாது பாரு... சரி.. கொடு..."

செல்வாவின் உடல் வேர்வையில் நனைந்தது. தலை சுற்றியது. ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, தரைக்கு வராமல் தவிப்பது போல் இருந்தது. தயங்கித் தயங்கி ஆவின் கார்டையும் கவிதாவிற்கு எழுதிய கடிதத்தையும் கை நடுங்க, கால் ஒடுங்க மோகனனிடம் கொடுத்தான். அவனோ ஆவின் கார்டை பின் அட்டை போல் வைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, பிறகு கண்ணூன்றி படித்தான்.

"என் இனிய சுமை தாங்கியே!"

"வணக்கம். வணக்கமம்மா. நீ கடற்கரையில் ஆணையிட்டதால் மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு ஏற்பட்ட ஆசையாலும், இதை எழுதுகிறேன். இதை வாசிக்க வாசிக்க, நீ மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். ஆனாலும், இந்தக் கடிதம் உன்னை அழ வைக்குமோ என்று அஞ்சுகிறேன். ஒருவர் மனதில் இருப்பதை அப்படியே எழுதினால் பிரச்சினையில் பாதி குறையும் என்பார்கள்."

"எனக்கு காலில் முள் குத்தினால் உனக்குக் கண் வலிக்கும். இதே போல் தான் எனக்கும். மன அலையோ.... உள்ளுணர்வோ ... முற்பிறவியோ ஏதோ ஒன்று நம் இருவரையும் இனிமையாக கட்டிப் போட்டிருக்கிறது. அது மலையையும் பாதாளத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு காதல் சங்கிலி. இந்தச் சங்கிலியிலிருந்து நீ கீழே இறங்கக் கூடாது. நான் தான் மேலே ஏறி வரவேண்டும். பி.எஸ்.ஸி. முடித்ததும் வேலையில் சேர்ந்தபடியே நிச்சயம் எம் எஸ்ஸி. படித்து ஐ.ஏ.எஸ். எழுதி உன்னை கைப்பிடிப்பேன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் அடியேனின் உழைப்பில் எழும் ஆண்ட வன் சித்தம்."

"உன்னை நான் சுமைதாங்கி என்று அழைத்தற்கு, வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கொச்சையான பொருளில் எடுத்துக் கொள்வாள். ஆனால், நீயோ அசாதாரணமான பெண். தாய்மையின் உருவம். எல்லோர் மீதும் படரும் உன் தாய்மை, எனக்கு மட்டும் காதலாக கவிழ்ந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீ எல்லோருக்கும் தாய் மாதிரியான அமைதியும் அன்பும் ஊடாடும் மௌனப் பார்வைக்காரி என்னைத் தவிர்த்து, மற்றவர்களிடம் நிதானமாக உதடு அசைத்து, மெல்லவும், அதே சமயம் உறுதியாகவும் பேசக் கூடியவள். ஆடை அலங்காரத்தில் ஆசை கொள்ளாதவள். பிறர் துன்பத்தை தன் துன்பமாய் எடுத்துக் கொள்கிறவள். என் துன்பத்தை நீ பகிர்ந்து கொண்டதால், அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. நீ என் தோளைத் தட்டும் போதெல்லாம், அந்தத் தோளுக்கு ஒரு வலிமை கிடைத்தது. கண்களை துடைத்த போதெல்லாம் என் கண்களுக்கு பிரகாசம் கிடைத்தது."

இருக்கை விளிம்பில் கையூன்றி திரிசங்கு நிலையில் நடுங்கிப் போய் நின்ற செல்வாவை ஏற இறங்கப் பார்த்த மோகனன் எனக்கு டமில் புரியாது. பத்து வரைக்கும் கான்வெட்டில் படிச்சவன் இதுக்கு பேர்தான் ஒருதலைக் காதலோ என்றான்.

செல்வா, அவனை கையெடுத்துக் கும்பிடப் போனபோது, அதற்குள்ளேயே மோகனன் கடிதத்துள் மூழ்கினான்.

"நம் காதலுக்கு, முதலில் எங்கள் வீட்டு வேலைக்காரம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். நான் அங்கே படும் பாடுகளை அவள் உன்னிடம் சொல்லாவிட்டால் உனக்கு என்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. அதே வேலைக்காரம்மா என் கதையை கேட்டு நீ கண்ணீர் சிந்தியதாக சொல்லாவிட்டால், பெரிய இடத்துப் பெண்ணான உன்னிடம் என் மனம் நிச்சயமாக ஈடுபட்டிருக்காது.”

"ஆக பலருக்கு, காதல் கண்ணீ ரில் முடியும். நமக்கோ , கண்ணீரில் துவங்கியது. நிச்சயமாகச் சொல்கிறேன். தற்செயலாக உனது காரில் எனக்கு நீ லிப்ட் கொடுக்காமல் இருந்தால், நான் தற்கொலை செய்திருப்பேன். அதற்காகத்தான் அந்தப் பூங்கா பக்கம் போனேன். என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல் நீ பேசிய பேச்ச என் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாகிவிட்டது. நீ என் காதலிதான். கண்ணம்மா என் காதலி என்று பாரதி பாடினாரே அப்படிப்பட்ட காதலி நீ"

''உன் அறிவுரைப்படி பலர் முன்னிலையில் என்னை இழிவுபடுத்தும் சித்தியின் பிள்ளைகளாக அந்த குழந்தைகளை அனுமானிக்காமல், அண்ணன் மகனை முன்னுக்கு கொண்டு வரத் துடிக்கும் சித்தப்பாவின் அருமை செல்வங்களாக நினைத்து நினைத்து, இப்போது அவர்களை என் குழந்தைகளாக நினைக்கிறேன். இதற்கு பெருமைப்-படாமல் சித்தி, பொறாமைப் படுகிறாள். ஆனாலும், அவள் என்னை ஏச வேண்டும். அதை நான் உன்னிடம் ஒப்பிக்க வேண்டும். நீ வழக்கம்போல் ஆறுதல் கூறவேண்டும் என்று என்னை அறியாமலேயே ஒரு எண்ணம் வருகிறது. சித்தியையும் அதிகமாக குறை சொல்ல முடியவில்லை. என்னை திட்டுவது போலத்தான், தான் பெற்ற குழந்தைகளையும் திட்டுகிறாள். வஞ்சகம் இல்லாமல் எனக்கு உணவளிக்கிறாள். ஆபீசர் சித்தப்பாவிடம் அதிக எதிர்பார்ப்புகளோடு வந்தவளுக்கு, அவரது நேர்மை விலங்கிட்டிருக்குமோ என்று ஐயப்படுகிறேன். சித்தப்பா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது காட்டுகிறாளோ என்னவோ. ஆனாலும், சித்தி என்னை திட்டும் போதெல்லாம், நீ அங்கே தோன்றி அவளிடம் எதிர் கேள்வி கேட்டு அடக்குவது போல் கற்பித்து கொள்கிறேன். யதார்த்தமான நிசத்திலிருந்து தப்பிக்கத் தோன்றும் முட்டாளின் சொர்க்கம் என்று நினைக்காதே. நீதான் என் சொர்க்கம்."

"எதை நீக்க முடியாதோ, அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஆங்கிலப் பழமொழி. சித்தியின் ஏச்சான எச்சிக்கல் பயலே வாங்கிக் குடித்த பய மவனே... எறப்பாளி...' என்பன போன்ற வார்த்தைகளை நீங்கள் நேர்மையானவர்... வெள்ளந்தி... எதிர்கால வி.ஐ.பி.' என்று நீ சொல்லும் வார்த்தைகள் சித்தியின் வார்த்தைகளை துரத்தி விடுகின்றன.

"சித்தியின் ஏச்சை நான் பொறுத்துக் கொள்வதால், நான் சுயமரியதைக்காரன் அல்ல என்று பொருள் அல்ல. என் பெற்றோர், என்னை அப்படியும் வளர்க்கவில்லை. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். என் தந்தை, தனது தம்பியான என் சித்தப்பாவை சக்திக்கு மீறி படிக்க வைத்தவர் இதர சித்தப்பாக்கள் அவனை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர்களுக்கு வாயால் சூடு போட்டவர். எப்போதுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாய் ஒரு தூசி தும்பு படாமல் இருப்பவர். விவசாய உழைப்பாளி அல்ல. அதேசமயம் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்று சீட்டுப் போட்டு, அதில் மாதா மாதம் கிடைக்கும் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாயை சேமித்து தனது இரண்டு தங்கைகளை கரையேற்றியவர். இதனாலேயே ஊரில் அவருக்கு நல்ல பெயர்.”

"ஆனாலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதித் தீ, எங்கள் கிராமத்தையும் பற்றிக் கொண்டது. இந்தச் சாக்கில், சீட்டுப் பணத்தை ஏலத்தில் எடுத்த பிற சாதியினர், மீதி பணத்தை கட்டவில்லை. அப்பாவிடம் சீட்டுக் கட்டியதற்கான எந்தவித ரசீதும் இல்லாததால், அவரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதேபோல், அவரும் ஆதாரம் இல்லை என்ற சாக்கில் சீட்டை ஏலத்தில் எடுக்காதவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கலாம். அப்படி அவர் செய்ய மனம் வரவில்லை. சீட்டு கட்டியவர்கள், தத்தம் மகள்களை கரையேற்றுவதற்காக பணம் போட்டவர்கள். இக்கட்டான நிலையில் இருந்த அப்பாவுக்கு, வசதியான கிராமத்து சித்தப்பாக்கள் உதவிக்கு வராமல் தங்களது சீட்டுப் பணத்தையும் அவர் தந்தாக வேண்டுமென்று அரிவாள் கம்போடு வந்தார்கள். அத்தைமார்களோ, உதவப் போன கணவன் மார்களை ஏலத்தில் குரல் எழும்புவது போல் திட்டித் தீர்த்தார்கள் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது கவிதா. பொதுவாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் அனைவரையும் கரையேற்றும் மூத்த அண்ணன் அல்லது மூத்த சகோதரி கடைசியில் அதே குடும்பத்தாரால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இது எங்கப்பாவுக்கு மட்டும் நேருவது அல்ல. பலருக்கு நடந்திருக்கிறது. சமூக இயல் நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும்தான் இத்தகைய உதாசீனத்திற்கு காரணங்கள் கூற வேண்டும். சரி விஷயத்திற்கு வருகிறேன்."

"என் தந்தையிடம் மஞ்சள் கடிதாசு கொடுக்கும்படி சண்டைக்கு வந்த சாதிக்காரர்களே ஆலோசனை சொன்னார்கள். ஆனாலும் என் தந்தை கொஞ்ச நஞ்சமிருந்த சொத்தையும் அம்மாவின் நகைகளையும் விற்று, அத்தனை பேருக்கும் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்போது ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது குனிந்த தலை குனிந்தபடியே இருக்கிறது. அந்த தலையை நிமிர்த்துவதுதான் என் முதல் பணி. இரண்டாவதுதான் நீ. இதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் மூன்றாவதுதான் நான்."

"ஊருக்கு வந்த பிறகுதான், சித்தப்பாவுக்கும் சித்திக்கும் விவகாரமே தெரியும். மாதச் சம்பளக்காரரான சித்தப்பாவாலும் ஏதும் பெரிதாய் உதவ முடியவில்லை . தனது பங்குக்கு உரிய சொத்தையும் விற்கும்படி சொன்ன சித்தப்பாவை, அப்பா கண்ணீர் மல்கி கட்டித் தழுவி அழுதார். ஆனால், மறுத்துவிட்டார். அப்பா அழுவதை அப்போதுதான் பார்த்தேன். ஒரு தாய் மக்கள், பங்காளிகளாக மாறும்போது எனது தந்தையும் சித்தப்பாவும் ராம லட்சுமணர்கள். ராமரும், லட்சுமணரும், வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். ஆகையால், அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது. ஆனால், ஒருதாய் மக்கள் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை. இதற்கு விதிவிலக்கு என்னுடைய அப்பா - சித்தப்பா பிளஸ் டூ முடித்த என்னை கல்லூரியில் படிக்க வைப்பதாக சித்தப்பா அப்பாவிடம் கேட்டுக் கொண்டார் அதுவும் அழுதபடியே கேட்டார். சொத்து என்று வந்தபோது அழுது மறுத்த அப்பா, எனது படிப்பு என்று வந்தபோது 'உன் பிள்ளை எடுத்துக்கோ ' என்றார். சித்தியும், "நீ, நான் பெறாமல் பெற்ற பிள்ளை" என்றாள். இந்த சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சித்திக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் வேண்டும் என்று. பால் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாதுதான். ஆனாலும், உன்னிடம் மட்டுமே இதை தெரிவித்தேன். தெரிவிக்கிறேன்."

"இன்று, உன் வீட்டில், நான் உன்னை சந்திப்பது இதுவே முதலாவதாகவும் கடைசியாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், புனைப் பெயர்களில், நீ , என் கல்லூரி முகவரிக்கும், நான் உன் பள்ளி முகவரிக்கும் கடிதம் எழுதிக் கொள்வோம். உன் பெயர் கவியரசன். என் பெயர் செல்வி. நான் நம் இருவருக்கும் சூட்டியிருக்கும் பெயர்களின் பொருள் புரிகிறதா மக்கே.... காதல் என்று வரும்போது காதலன் காதலியாகிறான். காதலி காதலனாகிறாள்."

"உன் அண்ணன் மோகனனைப் பற்றி அதிகமா நீ அலட்டிக்க வேண்டாம். அவரை வெறுக்கவும் வேண்டாம். எனக்கு என்னமோ, அவர் நல்லவர் போலவே படுகிறது. நீயும் உன் தந்தையும் கௌரவத்தை பார்க்காமல் அவரிடம் கனிவாக பேசினால் அவரும் கனிந்து விடுவார். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்புவது உனக்கு எரிச்சலை கொடுக்கலாம். ஆனால், என் மைத்துனர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன?
இப்படிக்கு முத்தங்களுடன்,
செல்வா.

மோகனன், கடிதத்தின் முன்னுரையை படித்துவிட்டு கண் கலங்கினான். சுழித்த புருவங்கள் இறங்கின. செல்வாவை பாசத்தோடு பார்த்தான். கொடுமைக்குள்ளாகும் பெரிய இடத்துப் பெண்களுக்கு திரௌபதி வேடம் போடுகிறவன் மீது ஒன்றிப்பு ஏற்படுவதுபோல, இவனுக்கும் செல்வாவிடம் ஒரு ஒன்றிப்பு ஏற்பட்டது. ஆனால், செல்வாவோ –

"என்னை விட்டுடுங்க ஸார்... வேணுமுன்னால் அடியுங்க ஸார்.. இப்படி எழுதுனது தப்புதான் ஸார்.... இதை மட்டும் நீங்க என் சித்தப்பா கிட்டயோ, சித்தி கிட்டயோ சொன்னால், என் படிப்பு கெடும். அதைப் பற்றிக்கூட நான் கவலைப்படல ஸார். ஆனால், சித்தப்பா, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டனேன்னு என்னைப் பார்க்கிற பார்வையையோ , என் பெற்றோர் தலைகள் மேலும் தாழ்வதையோ பார்த்துகிட்டு நான் உயிரோட இருக்கமாட்டேன் ஸார்... நீங்கதான் ஸார் என்னை காப்பாத்தணும்.."

எதிர்பாராத விதமாக, செல்வா, மோகனனின் காலில் விழுந்தான். அந்தக் காலை கட்டிக்கொண்டே தலையை முட்டினான், மோதினான். மோகனனும், எந்தவித விகற்பமும் இல்லாமல், மனித நேயத்தோடு செல்வாவை தூக்கி நிறுத்தினான். அவன் கண்ணீரை துடைத்து விட்டான். தலையை கோதிவிட்டான் அழாதடா.. அழாதடா... நீ நினைக்கிறபடி எதுவும் நடக்காதுடா...' என்றபோது செல்வா, விம்மி வெடித்து அவன் மார்பில் சாய்ந்தான்.

மோகனனின் அகமும் புறமும் தீப்பற்றியது. இதயத்திலிருந்து ரத்தம் கீழ்நோக்கிப் பெருகி ஓடியது. நரம்புகள் புடைத்தன. ரத்தக் கோளங்கள் அகலமாகி, ஆழமாயின. மோகனன் பயப்படாதடா.. பயப்படாதடா... என்னால் உன் காதலுக்கோ படிப்புக்கோ தடங்கல் வராது... வா கண்ணு ... உள்ளே போய் விலாவாரியாய் பேசலாம்...' என்றான்.

மோகனனின் அறைக்கதவு, அவனையும் செல்வாவையும் உள்ளே அனுப்பியபடியே, தானாக ஒட்டிக் கொண்டது. அப்படிப்பட்ட பூட்டு கொண்ட கதவு. அதாவது ஆட்டோமேடிக் கதவு சாதாரண கதவல்ல.. அசாதரணமாய் தாளிடும் கதவு.
---------------
அத்தியாயம் 7


சித்திக்காரி, வாசலுக்கும், தெருவுக்குமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். பற்கள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறப் போயின. வாய், செல்வாவை கொண்டு வந்த கணவனையும், அதற்கு உடந்தையாக இருந்த தன்னையும் திட்டிக் கொண்டது. மணி இப்போதே நான்கு. காபி குடித்தால்தான் சமையல் செய்கிற மூடு வரும். குழந்தைகளா அவை? அசல் பேய்கள். அப்பன் மௌனசாமி என்றால், அதற்கு எதிரான குரங்குகள். அம்மா அம்மா' என்று அரற்றினால் கூட, ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். ஆனால், அண்ணனாம். அண்ணன் - வரட்டும் இந்த அண்ணன் ... வரட்டும் அந்த மனுஷர்...'

நல்லவேளையாக, சித்தப்பாவின் வீட்டிலிருந்து அந்த அரண்மனை வீட்டை பார்க்க முடியாது. இது உள்ளே தள்ளியும், அது வெளியே துருத்தியும் இருந்தன. செல்வா வீதியில் வருவதைத்தான், சித்தி, பார்த்தாள். தட்டுத் தடுமாறி வந்த அவனை நோக்கி, அதுவரைக்கும் பொறுக்க முடியாமல் வேக வேகமாய் நடந்தாள் ஆத்திரத்தில் அவன் உருவம் மட்டுமே அவளுக்கு மங்கலாகப் பதிந்தது. அந்த உருவத்தின் தடயங்கள் தட்டுப் படவில்லை

"நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்துற புத்திய விடாதாம். பால் எங்கேடா... பை எங்கேடா..."

செல்வா, தட்டுத் தடுமாறி பதில் அளித்தான். அதில் முன்னெச்சரிக்கையும் உள்ளடங்கி இருந்தது. புரைதீர்ந்த பொய்யே மெய்யாய் பேசியது.

"போகிற வழியில் மயங்கி விழுந்துட்டேன் சித்தி. இன்னும் கூட மயக்கம் முழுசா போகல சித்தி.”

சித்திக்காரி, அப்போதுதான் அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

செல்வா முகத்தில் கடிக்காயங்கள். கைகளில் சிறாப்புகள். கழுத்தில் நகக் கீறல்கள். கண்கள் பசுமையற்ற தரிசு நிலமாய் தோன்றியது. சட்டைப் பித்தான்கள் முன்னுக்குப் பின் முரணாக மாட்டப் பட்டிருந்தன. மனச் சிதைவுகளை மறைக்க முடிந்த தன்னால், இந்த உடல் சிதைவுகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று அவன் குழம்பியபோது, சித்தியின் கேள்வியிலேயே பதில் கிடைத்தது. அவள் குரல் கனிவாக வரவில்லையானாலும், காய்ப் பழுப்பாய் ஒலித்தது.

"முள்ளுச் செடியில் விழுந்திட்டியாடா."

"ஆமாம். கருவேல முள்ளுச் செடி..."

"எப்போ நடந்தது."

"எது?"

"உனக்கு கிறுக்கு புடிச்சுட்டா... எப்போ மயங்கி விழுந்தன்னு கேட்டேன்."

"பால் வாங்கிட்டு வரும் போதுதான் சித்தி. ஆவின் வேன் லேட்டா வந்துது... பால் வாங்கிட்டு வரும்போதுதான் மயங்கி விழுந்துட்டேன்."

"பால் கிடக்கட்டும்... பால் கார்டு எங்க?”

"எனக்கே தெரியல சித்தி. எப்படி நடந்ததோ.... என்ன நடந்ததோ"

"சரி விழுந்த இடத்தையாவது காட்டித் தொல் ..."
"அதோ அந்த முனையில் முள்ளுச் செடி குவியல் இருக்குதே. அதுலதான் சித்தி.”

"சரி நீயும் வா. தேடிப் பார்க்கலாம்.”

செல்வா, பிட்டத்தைப் பிடித்தபடியே அவள் முன்னால் நடந்தான் இடையில் வயிறு குமட்டியது. குடலே வெளியே வருவது போன்ற வாதையோடு வாந்தி எடுத்தான். வெள்ளை வெள்ளையான வாந்தி கோளையைப் போலவோ இல்லாமல், சாப்பிட்ட உணவுக் குழம்பு போல் அல்லாமல், வெள்ளை வெள்ளையாக, வெள்ளைத் திரள்போல் வெளிப்பட்ட வாந்தி.

எல்லாம் முடிந்த பிறகு, அந்த அறைக்குள்ளேயே மோகனன் உடைகளை சரிப்படுத்திக் கொண்டிருந்தபோது, மோகனனின் கண் முன்னாலேயே, வாய்க்குள் விரல்விட்டு, தொண்டை வரைக்கும் விரல்களை துழவவிட்டு, மஞ்சள் பூசியது போன்ற வெள்ளை திரவத்தை வாந்தி வாந்தியாய் எடுத்தான். வாய்க்குள் விட்ட கையால் மோகனனின் வயிற்றில் குத்தியபடியே, 'தேவடியா மவனே... இதோடயாவது என்னை விடுடா.... நீ நாசமாய் போக.... கவிதா சொன்னது மாதிரி நீ ஒரு காட்டுமிராண்டி அசிங்கம் பிடிச்சவன்னு அவள் சொன்ன அர்த்தத்துக்கு இப்பதாண்டா அர்த்தம் புரியுது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத ஒனக்கு தங்கைக்கும் தாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாது. அவளையாவது விட்டு வையுடா... என்னைப் போக விடுடா... புறம் போக்குப் பயலே போக்கிரி நாயே..' என்று பிரமை கலைந்தும், கலைத்தும் கொதித்து கொதித்துப் பேசினான். தலைகுனிந்து நின்ற மோகனன், கதவை திறந்துவிட்டு, கட்டிலில் படுத்து விழியாடாது கிடந்தான்.

அப்போது செயற்கையாக வரவழைக்கப்பட்ட வாந்தி, இப்போது சித்தியின் முன்னிலையில் இயற்கையாக வந்தது. குடலைக் கழுவி விட்டது போல் உணவுக் கூழ்களையும், கத்தரிக்காய் துண்டுகளையும் வெளியே கொட்டியது. அவனுக்கு உடனே, அம்மாவின் ஞாபகம் வந்தது. கிராமத்தில் ஒரு தடவை மஞ்சள் மஞ்சளாய் அவன் பிந்த வாந்தி எடுத்தபோது, அம்மா, இவன் தலையை பிடித்துக் கொண்டாள். முகத்தை நிமிர்த்தி, அதில் படிந்த வாந்தியை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டு தோளுக்கு மேலே போன தன் பிள்ளையை , தனது தோளில் சாய்த்துக் கொண்டாள் அப்பா ஓடோடி வந்து துடித்துப் போய் நின்றார். அக்காக்கள் அவன் கரங்களை ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக் கொண்டு அவனை சோகத்தோடு பார்த்தார்கள். பெரிய அக்கா அவன் கலைந்து போன சட்டையை சரிப்படுத்தினாள் சின்னக்கா, அவன் வாயை துடைத்து விட்டாள். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது, சித்திக்காரி அவன் வாந்திக்கு நேர்முக வர்ணனை கொடுத்தாள்.

"கொஞ்சமா தின்னாத்தானே ? வயிறு முட்ட சாப்பிடலாம்... வாய் முட்ட சாப்பிட்டால், இப்படித்தான் வாந்தி வரும்..... சரி. புறப்படு. பால் கார்டை தேடிப் பார்க்கலாம்.”

செல்வா, தெருவில் அப்படியே உட்கார்ந்தான். திக்கித் திக்கி பதிலளித்தான்.

"என்னால் ஒரு அடி கூட நகர முடியல... நீங்க போய் தேடிப்பாருங்க சித்தி.."

"எல்லாம் என் தலைவிதி. வேலியில் போற ஓணானை பிடிச்சு காதுல விட்ட கதை."

சித்திக்காரி, அந்த மூலை முடுக்கு முட்புதர் பக்கம் ஓடினாள். இதற்குள் அந்த தெருவாசிகளில் ஒரு சிலர் வழியில் வாந்தி சாட்சியாக உட்கார்ந்திருந்த செல்வாவை கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். அருணும், சுபேதாவும் அவனை ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே அறைக்குள் போனான். கட்டிலில் குப்புறப் படுத்தான். குழந்தைகள் அண்ணா ... அண்ணா ...' என்று அவனை உசுப்பின. அவன், கண்களை மூடிக்கொண்டு, ஒரு அனுமானத்துடன் அந்த பிள்ளைகளை இருபுறமும் இணைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுதான் குமைந்து குமைந்து புகைந்தான். பிறகு, ஆவேசமாக எழுந்து பேஸ்டை பிரஷ்ஷில் தடவி, பற்களில் தேய்த்தான். உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தேய்த்தான். வாஷ்பேஷன் தண்ணீரை வாய்க்குள் ஊற்றி தொண்டைக் குழி வரைக்கும் செலுத்தி, கவளம் கவளமாய் துப்பினான். தன் பக்கமாய் ஓடி வந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

மோகனன் பயன்படுத்திய வாயை கழுவியாயிற்று. வயிற்றை கழுவியாயிற்று. பின் பக்கத்தை கழுவியாயிற்று. ஆனால், மனதை எப்படி கழுவுவது? இது விபத்து என்று விட்டு விடுவதா? அல்லது சித்தியிடம் சொல்லி புலம்புவதா? சித்தப்பா பஞ்சும் இரும்பும் கலந்து செய்யப்பட்ட மனசுக்காரர். அலுவலகப் போராளி. விவகாரம் தெரிந்தால், அந்த மோகனன் பயலை, கை காலை எடுத்து விடுவார். இல்லயைானால் காவல் துறைக்குப் போவார். விசாரணை, அடிதடி என்று எல்லாமே வெளிப்படும். கவிதா வெளிப்படுவாள். இவன் வெளிப்படுவான். ஏற்கெனவே தாழ்ந்து போன தந்தையின் தலை கழுத்துக்குக் கீழே போகும். சித்தப்பாவின் பாசமே பாதகமாகும். ராம லட்சுமணரான அண்ணன் தம்பிகளுக்குக்கூட மனஸ்தாபம் ஏற்படலாம்.

செல்வா, திகைத்து நின்ற குழந்தைகளின் தோள்களில் கையூன்றியபடியே, படுக்கையில் இருந்து எழுந்தான். பிறகு அப்படியே விழுந்தான். ஒரு சாய்த்து படுத்தான். மீண்டும் அந்த குழந்தைகளை பிடித்துக் கொண்டு ஒப்பாரி குரலில் அழுதான். இதற்குள் சித்திக்காரியும் கூக்குரலோடு வந்தாள். அவள் கை எங்கும் முள் துவாரங்கள். ஒருச் சாய்ந்து கிடந்தவனுக்கு முன்னால் தன் கைகளை நீட்டி நீட்டி பேசினாள்.

"காபி இல்லாமலும் பண்ணிட்டே.... கையிலேயும் முள்ள குத்த வச்சுட்டே... கார்டையும் தொலைச்சுட்டே... இப்போ ஒனக்கு திருப்தி தானடா? ஏ! நாய்ங்களா - இன்னிக்கு மட்டும் காப்பி கீப்பி கேட்டிங்கன்னா... தோலை உரிச்சுடுவன்... எல்லாம் என் தலைவிதி... வீட்டுக்குள்ள ஆமை வந்தது மாதிரி.”

செல்வா, தலையை மட்டும் பாம்பு படம் மாதிரி தூக்கிக் கொண்டு பதிலளித்தான். இதுவரை நேருக்கு நேராய் பார்க்க அஞ்சிய சித்தியை நேரடியாக பார்த்தபடியே பேசினான்.

"வேணுமுன்னா, என்ன ஒரேயடியா வெட்டிப் போடுங்க சித்தி ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். இந்த பிள்ளைகளுக்காக பார்க்கிறேன். இல்லாட்டா இப்பவே இந்த வீட்டை விட்டு ஓடிடுவேன். எல்லாரும் சாகப் போறதே போறம். இடையில் எப்படி வாழ்ந்தால் என்ன. படிக்காதவன்லாம் வாழாமலா போயிட்டான். ஓடிப் போனவங்களும் உருப்பட்டிருக்காங்க சித்தி.. தப்பா பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சித்தி ... என்ன பேசறதுன்னே எனக்குத் தெரியல...”

சித்திக்காரி, வாயடைத்துப் போனாள். அவனுக்குள்ளும் ஒரு மனமும், அந்த மனதிற்குள் ஒரு ரோசமும் இருப்பதை முதல் தடவையாக புரிந்து கொண்டாள். பதில் ஏதும் பேசாமல் அப்படியே சிறிது நேரம் சுய பரிசீலனையில் ஈடுபட்டவள் போல் நின்றாள். அப்போது பார்த்து, 'மேடம்' என்ற குரல். சித்திக்கு அடையாளம் காண முடியாத குரல். ஆனால், செல்வாவிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பரிட்சயப்பட்ட குரல்.

சித்தி வெளியே வந்தாள். வந்தவனைப் பார்த்ததும் "உட்காருங்க ஸார்... உட்காருங்க ஸார்....'' என்று பரபரப்பான குரலோடு பேசினாள். அங்குமிங்குமாய் அலை மோதினாள்.

செல்வா , துள்ளிக் குதித்து, வாசல் பக்கமாய் நின்று கொண்டான். காட்டுமிராண்டிப் பயல், உன் சித்தியை டாவடிக்கட்டுமா' என்று தன்னிடமே கேட்ட பயல்... கெட்ட பயல்... என்ன ஆனாலும் சரி... அவனை ஒரே வெட்டாய் வெட்டி சித்தியின் கற்பை காப்பாற்றணும்... செல்வா, அரிவாளை தேடிக் கொண்டிருந்தபோது, மோகனன் குரல் மீண்டும் கேட்டது.

"உங்க பால் கார்டுன்னு நினைக்கேன். வழியில் கிடந்தது."

சித்தி, அந்த பால் கார்டை வாங்கி உற்றுப் பார்த்தபடியே, ''ரொம்ப நன்றி ஸார்" என்றாள். கண்களை சுழலவிட்ட மோகனனுக்கு கதவிடுக்கில், செல்வா, அரிவாளோடு நிற்பது தெரிந்தது. சித்திக்காரிக்கு பதிலளிப்பது போல் அவனுக்கு பதிலளித்தான்.

"ஸார்ன்னு கூப்பிடாதிங்கம்மா... சத்தியமாச் சொல்றேன். உங்களைப் பார்க்கிறதுக்கும் கேட்கிறதுக்கும் எங்கம்மாவைவிட ஒசத்தியாவே நீங்க தோணுது.... நான் இனிமேல் எந்தத் தப்பும் செய்யக்கூடாதுன்னு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா...”

மோகனன், செல்வாவை கண் தாழ்த்திப் பார்த்துவிட்டு, தலை தாழ்த்திப் போய்க் கொண்டிருந்தான். சித்திக்காரி, செல்வாவின் அறைக்குள் வந்தாள்.

"ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன். பெத்த தாய்கிட்ட பேசுறது மாதிரி பேசுறான். உனக்கு நான் தாய் மாதிரி. நீ என்னடான்னா, சொல்லப் பொறுக்கல ஒன்னை திட்டுறதுக்கு எனக்கு உரிமை கிடையாதா?"

செல்வா, சித்தியின் கைகள் இரண்டையும் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, மாங்கு மாங்கென்று அழுதான்.
--------------
அத்தியாயம் 8


அன்றிரவு, சித்திக்காரியே, அவனுக்கு அறைக்குள்ளேயே தட்டோடு உணவை கொண்டு வந்தாள். "சாப்பிடுப்பா" என்று ஊட்டி விடாத குறையாக, "டா" வை , "பா"வாக்கினாள் உடனே, சாப்பாட்டு மேஜையிலிருந்த குழந்தைகளும் தட்டுக்களோடு உள்ளே ஓடி வந்தன. சித்தியிடம் ஏற்பட்ட மாற்றத்தை புரிந்து கொள்ளும் நிலையில் செல்வா இல்லை. ஆனாலும், குப்புறக் கிடந்தவன், அவளுக்கு மரியாதை காட்டுவது போல் பரபரப்பாக உடல் நிமிர்த்தி எழுந்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அம்மா ஊட்டிய சாதத்தை குழந்தைகள் வேண்டா வெறுப்பாய் உண்டுவிட்டு, அண்ணனோடு தூங்கி விட்டன.

செல்வா, தன்னையே சித்தி பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக் கண் போட்டுப் பார்த்தான். அவசர அவசரமாக கத்தரிக்காய் சாம்பாரை வெள்ளை சாதத்தில் பிசைந்து இலை தளை கலவையாக்கி ஒரு கவளத்தை வாய்க்குள் கொண்டு போனான். அவனை அறியாமலேயே வாய்க்குள் சோறு போன போது, மத்தியானம் நடந்தது சோற்றோடு கலப்படமானது. குமட்டிக் கொண்டு வந்தது. இதற்குள் சித்திக்காரி , தானும் நல்லவள்தான் என்ற நினைப்போடு திருப்தியோடு போய்விட்டாள். அவள் போனதும் செல்வா, பத்து நிமிடம் வரை சோற்று தட்டையே வெறித்துப் பார்த்தான்.

பின்னர், முன்னெச்சரிக்கையாக, கதவை தாளிட்டுக் கொண்டான். மேற்குப் பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக ஒவ்வொரு கவளமாக எடுத்து வெளியே வீசினான். ஒரு பக்கம் வீசினால், வாசல் பெருக்கும் வேலைக்காரம்மாவுக்கு சந்தேகம் வரலாம் என்று நினைத்தது போல், இன்னொரு பக்க ஜன்னல் வழியாக எஞ்சியவற்றை பன்னீர் தெளிப்பதுபோல் அங்கு மிங்குமாய் வீசினான். முழுமையான முட்டையை கசக்கி சிதைத்து வெளியே வீசியபோது, சித்தியின் உழைப்பை வீணாக்குவது போன்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. பின்னர், உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டு உருத் தெரியாமல் கிடந்தான்.

இரவு பத்து மணி அளவில் வந்த சித்தப்பா சிவனுப்பாண்டி, காலையில் காபியோடு அவனை எழுப்பினார். உடம்புக்கு என்னடா என்று கேட்டபடியே, காபி டம்ளரை அவன் பக்கம் நீட்டினார். தாட்சண்யம் கருதியும், சித்தப்பா மீது வைத்திருக்கும் பய பக்தியாலும் அந்த காபியை குடிக்கப் போனான். மீண்டும் குமட்டல். ஒரு சொட்டு காப்பியும் உதடோரத்தில் நீர்க் கோடுகளாய் வெளிப்பட்டன. ஒல்லியானாலும் சாட்டைக் கம்பு போல் உறுதியான உடல் படைத்த சித்தப்பா பதறியபடியே கேட்டார்.

"என்னடா செய்யுது."

"சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் வாந்தி வருவது மாதிரி இருக்குது சித்தப்பா - என்னால் உங்களுக்கும், சித்திக்கும் சிரமம் சித்தப்பா ...''

"எங்கண்ணன் - அதான். உங்கப்பா எனக்காக பட்டிருக்கிற சிரமங்களில் இது ஆயிரத்துல ஒண்ணாக்கூட வராதுடா... வயிறு எதையும் ஏற்க மாட்டேங்குதுன்னா, அது மஞ்சள் காமாலையாய் இருக்கலாம். லட்சுமி - கொஞ்சம் வாயேன். "

சித்திக்காரியான லட்சுமி வாசல் காலில் நின்றபடியே, கணவனை புருவச் சுழிப்போடு பார்த்தாள். அவர் விளக்கினார்.

"இவனுக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கும் போல தோணுது. எதுக்கும் கொஞ்சம் பழைய சாதத்த எடுத்துட்டு வா இவன் சிறுநீர கலந்து பார்க்கலாம்.”

"நேற்று ராத்திரி நல்லாத்தானே சாப்பிட்டான்."

"நேற்று ராத்திரி கிடக்கட்டும். இப்போ சாப்பிட நினைச்சாலே வயிறு குமட்டுதாம்."

"என்ன வயிறோ."

சித்திக்காரி, பழையபடியும் - அதேசமயம் பாதியளவு மட்டுமே முருங்கை மரத்தில் ஏறினாள். நேற்று கணவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினாள். என்றாலும், ஒரு தேங்காய் சிறட்டையில், பழைய சாதத்தை வைத்து குளியலறையில் வைத்து விட்டுப் போனாள். அவள் வெளியே வந்ததும், செல்வா உள்ளே போனான். பத்து நிமிடம் கழித்து சித்தப்பா போனார். வெள்ளைச் சாதம் மஞ்சளாகவில்லை. அவன் இமைகளை விலக்கி, விழிகளைப் பார்த்தார். மஞ்சள் நிறம் இல்லை. காமாலை இல்லை என்று கண்டறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், டாக்டரிடம் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார். உடல் நிலை என்று வரும்போது, சுய அனுமானமும் சுய மருந்தும் தவறானவை என்பதை புரிந்து வைத்திருப்பவர். அண்ணன் மகனுக்கு சிறிது அதட்டலாக ஆணையிட்டார்.

"சீக்கிரமா டிரெஸ் பண்ணுடா. எனக்குத் தெரிந்து, மஞ்சள் காமாலை இல்லை. ஆனாலும், டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து பார்க்கலாம்."

வேறு வழியில்லாமல், செல்வா, அவசர அவசரமாய் லுங்கியில் இருந்து விடுபட்டு, பேண்ட் சட்டைக்குள் போனான். சித்தப்பா, அவனை கைத்தாங்கலாக நடத்தியபடியே , லட்சுமி. இவனை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறேன்' என்ற விளக்கத்திற்கு, ஆங்காரமாக ஊங் கொட்டினாள்.

வீதி வழியாக, அவளை விலாவோடு சேர்த்து அணைத்தபடி நடத்திக் கொண்டு வந்த சித்தப்பா, அந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டு வரைக்கும் தம்பிடிச்சு நடந்திடு' என்றார் போவோர் வருவோர் அந்த இருவரையும் போய்க் கொண்டும், நின்றும் பார்த்தார்கள். செல்வாவிற்கு என்ன என்பது மாதிரி கண்களால் கேட்டார்கள். சிலர் வாயால் கேட்டார்கள். அந்தத் தெரு வாசிகருக்கு செல்வா மிகவும் பிடித்துப் போன பையன். அவர்களுக்கு அவசர அவசரமாக விளக்கமளித்துக் கொண்டே சித்தப்பாக்காரர், அந்த அரண்மனை வீட்டுப் பக்கம் வந்தபோது, ஒரு இண்டிகா கார் வெளிப்பட்டது.
அவர்கள் அருகே நின்றது. மோகனன் கேட்டான்.

"எங்க போறீங்க அங்கிள்?"

"என்ன மோகனனா! ஒன்னை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவைதான் பார்க்க முடியுது. இன்னிக்கு நிச்சயம் மழை வரும்."

"அப்போவும் புழல் ஏரி பெருகாமல், நம்மை சிரமப்படுத்தும். இவனோட எங்க அங்கிள் போறீங்க....”

"இவனுக்கு சாப்பாட்டை, நினைத்தாலே வாந்தி வருதாம். அதனால மஞ்சள் காமாலையான்னு கண்டுபிடிக்க டாக்டர்கிட்ட போறேன்."

"நல்லவேளை என்கிட்ட சொன்னீங்க அங்கிள்! எனக்கும் சாப்பாட்ட நினைத்தால் குமட்டுது. இதனால எங்க பேமிலி டாக்டருக்கு போன் செய்தேன். சென்னையில் மெட்ராஸ் ஐ மாதிரி, இது ஒரு விதமான வயிற்று நோயாம். நிறைய பேருக்கு வந்திருக்காம். ஆனால், மஞ்சள் காமாலை போல, நாற்பது நாள் தங்காமல் ஒரு ஊசியோட போயிடுமாம். நானும், இப்ப டாக்டர்கிட்ட போறேன். இவனையும் வேணுமுன்னா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். டோண்ட் ஒர்ரி இவனை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க. மாமுலாயிடுவான்."

செல்வா, மிரண்டான். அரண்டான். மோகனன் அவனை தானாக காரில் ஏறிக் கொள்ளும்படி பேசினான்.

"சும்மா சொல்லப்படாது அங்கிள். உங்கப் பையன் ரொம்பவும் நல்லவன். ஒரு தடவை அவன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தேன். முத்து முத்தான கையெழுத்து. மனசுல எந்த கல்மிஷமும் இல்லாதவங்களுக்குத்தான், எழுத்துக்கள் அச்சடிச்சது மாதிரி வருமாம்."

''டி.டி.பி. போட்டது மாதிரின்னு சொல்லு என்னோட எழுத்தும் முத்து முத்தாத்தான் இருக்கும்"

"நீங்களும் கல்மிஷம், இல்லாத மனிதர்தானே. ஒங்க இலாகாவிலேயே கை நீளாத ஒரே ஊழியர் நீங்கதானே. ஆனால், ஒங்களுக்கும் சேர்த்து எங்கப்பன் கொள்ளை அடிக்கான்."

"ஆயிரந்தான் இருந்தாலும் அவர் ஒன்னை பெத்தவரு.... அவன் இவன்னு பேசப்படாது.. டேய் செல்வா! காருல ஏறுடா.. சித்தப்பாவுக்கும், கொஞ்சம் ஆபிஸுல வேலை காத்திருக்கு"

இயக்குநர் இருக்கையில் மோகனனையும், அதே மாதிரியான இடது பக்க முன்னிருக்கையில் செல்வாவையும் சுமந்து கொண்டு, அந்தப் கார் பறந்தது. மென்மையான ஏ.சி. குளியல். அது உடம்பு முழுவதும் குவிந்த சுகம். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியப்படுத்தியும், வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களை காட்டாததுமான பச்சைக் கண்ணாடி கண்ணாடியின் அருகே செஞ்சதுரமாய் இருந்த ஒரு சின்ன பெட்டியிலிருந்து மல்லிகை செண்டு, ஏ.சி. காற்றோடு கலந்து முகத்திற்கும் மனதிற்கும் மோகனத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. செல்வா, தலைக்கு மேல் சாணும் முழமுமாய் போன விரக்தியில், எடுத்த எடுப்பிலேயே திட்ட வட்டமாகக் கேட்டான்.

"என்னை என்ன செய்யப் போறடா பாவி?”

"சத்தியமாய் என்னை நம்பு. மறப்பாய் மன்னிப்பாய்ன்னு ஒன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்குத்தான் ஒன்னை காரில் ஏற்றியிருக்கிறேன். உன்னிடம் நான் நடந்து கொண்டது காட்டு மிராண்டித்தனம்தான். உன்னை நான் மிஸ் யூஸ் செய்தது தப்புத்தான்."

"நீ செய்தது மிஸ் யூஸ் இல்ல. அபியூஸ்."

"இந்த ரெண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் படித்தவனில்ல. எல்லாம் வெளி வேடந்தான். நீ என் தங்கையை கட்டிக்கப் போற மைத்துனன் என் தங்கை மீது எவ்வளவு வாஞ்சை இருக்குதோ, அவ்வளவு வாஞ்சை உன்கிட்டயும் எனக்கு இருக்குது. நீ என்னை மாதிரி ஆயிடக்கூடாது என்கிறதுல நான் கறாரா இருக்கேன். தங்கைக்கு உதவாக் கரையா போன நான், அவளுக்கு உன்னையும் உதவாக் கரையாய் போக விடமாட்டேன் இது சத்தியம்."

"இதை நிரூபித்துக் காட்டுறதுக்கு கவிதாவுக்கு நான் எழுதுன லெட்டரை இப்பவே என்கிட்ட தா."

"ஐ எம் ஸாரி பிரதர் இன் லா. வீட்ல, என் நெம்பர் லாக் சூட்கேஸ்ல வைத்திருக்கேன். சத்தியமா... நிச்சயமா... உண்மையாய்.. உறுதியாய்.. தந்துடுறேன். நான் ஒரு ஹோமாசெக்ஸ்காரன்தான் அதுவும் குடும்பச் சூழலில், என் கதையை உன்கிட்ட சொல்லி எப்படி ஒருத்தன் சந்தர்ப்ப வசத்தால் ஓரினச் சேர்க்கையாளனாய் ஆகிறான் என்பதை உன்கிட்ட சொல்லப்போறேன். இதன் மூலம் கேய் பாய்ஸ் மீது விதிவசமா உனக்கு ஏற்பட்டிருக்கிற வெறுப்பை, நீக்கப் போறேன் அந்த லெட்டரை உன் கிட்டயே கொடுத்துட்டு, என்கிட்ட இருந்து, உனக்கு ஒரு விடுதலை உணர்வை தரப் போறேன் ஒருவேளை, நான் சொல்றது ஒனக்கு ஒரு மெண்டல் சிகிச்சையாக்கூட இருக்கலாம். சரி. அதோ அந்த மோட்டலுல போய் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து சாவகாசமா பேசலாம். பேசி முடித்ததும் உன்னை உன் வீட்டுலயே டிராப் செய்றேன் ஒப்புக்கு வழியில் சில வைட்டமின் மாத்திரைகளை வாங்கித் தாரேன். இப்ப, நீதான் என் பாஸ். மோட்டலுக்கு போகலாமா?"

"வேண்டாம். காரை ஓட்டியபடியே உன் கதையைச் சொல்லு..."

"சொல்றேன். மோட்டலுல ரூம்ல, ஒன்னை, நான், பழைய படியும் மிஸ்யூஸ் பண்ணிடுவேன்னு நீ பயப்படுறது நியாயம்தான். அதனால் காரை ஓட்டிக்கிட்டே பேசுறேன் ஏதாவது விபத்து வந்தா நீதான் பொறுப்பு.

"என்னைத்தான் ஏற்கெனவே விபத்தாக்கிட்டியே..."

''உன் காலுல வேணுமுன்னாலும் விழுகிறேன். என் தங்கையோட எதிர்கால கணவனிடம் அப்படி நடந்துக்கிட்டது தப்புதான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். அதுக்கு முன்னால் என் கதைய கேளு."

செல்வா, மௌனமாக இருந்தான். கார் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. சில சமயம் தாறுமாறாகவும் ஓடியது. ஏ.சி. கார் என்பதால் முன்னாலும் பின்னாலும் போகும் லாரிக்காரர்களும், இரண்டு சக்கர வாகனக்காரர்களும் திட்டோ திட்டோ என்று திட்டுவது, இவர்களுக்கு கேட்கவில்லை. மோகனன், ஒரு கேள்வியோடு தன் கதையைத் துவக்கினான்.

"எங்க பேலஸ்ல இருக்கிற எங்கம்மாவை நீ பார்த்திருக்கியா?”

"இது என்ன கேள்வி? ஒரே தெருவுல இருக்கிறவங்கள் பார்க்காம இருக்க முடியுமா? ஒங்கம்மாவ பார்த்தால், கையெடுத்துக் கும்பிடலாம் போலிருக்கு அப்படிப்பட்டவளுக்கு இப்படி ஒரு பிள்ள.. சீ...”

"ஒனக்கு அப்படி ஆனால், எனக்கு அந்த நாயை கல்லால் அடிச்சுக் கொல்லலாம் போலத் தோன்றும்."

"பெற்ற தாயை இப்படியா பேசுறது? தாய்கிட்ட அன்பு செலுத்தாத எவனும், வேறு யார் கிட்டயும் அன்பு காட்ட முடியாது அதனாலதான் ஒனக்கு நான் பலியாயிட்டேன்."

"நான் தான் ஸாரி சொல்லிட்டேனே... பிரதர் இன் லா... அந்த மேனா மினுக்கி எங்கம்மாவே இல்ல. டூப்ளிகேட் அம்மா.."

"அய்யய்யோ ”

"என்னைப் பெற்றவள் இன்னொருத்தனோட இருக்காள்."

"அடக் கடவுளே"

"முழுசாக் கேள். இந்த பெரிய மனுஷன் வேணுகோபால் ஐ.ஏ.எஸ். இருக்கானே, அவனோட மகனான நான், ஏ.சி.கார்லேயே கான்வெட்டுக்கு போய்கிட்டு இருந்தேன். பரத நாட்டியத்துல இவன் தான் சேர்த்தான். அந்த சாக்குல நான் கதக், ஒடிசி போன்ற நம் நாட்டு நாட்டியங்களையும், வெஸ்டன் டான்ஸ்களையும் கத்துக்கிட்டேன் இங்கிலீஷ் பேச்சுப் போட்டியிலயும், கட்டுரைப் போட்டியிலயும் முதலாவது வந்தேன். பதினாலு வயசிலேயே முதலமைச்சர் தலைமையில் என் பரதநாட்டியம் அரங்கேறியது. அதை செய்தியாய் போடாத பத்திரிகை இல்லை.... டிவி. இல்லை. விமர்சனம் செய்யாத இதழ்கள் இல்லை."

"எங்கம்மா என்கிறவள் ரெண்டு பிள்ளை பெற்றாள். எனக்கு பதினாலு வயசுல, எங்க வீட்டு மாடியில் ஒரு சினிமாக்காரன் குடி வந்தான். கட்டுன பெண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தியோட வாழ்ந்துகிட்டு இருந்தான். இது தெரிஞ்சும், எங்கப்பன் பணத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கும், அவன் கள்ளக் குடும்பத்துக்கும் வீட்ட வாடகைக்கு விட்டான் அம்மா என்கிறவள் நாட்டுப்புறப் பாடல்ல கெட்டிக்காரி. எங்கப்பனோ பொம்பள பொறுக்கி. அதனால மனைவியோட டேலண்ட அமுக்கி வச்சான். நான் அவளுக்கும் நியாயம் வழங்கணும் பாரு... அதனால சொல்றேன். எப்படியோ மாடியிலிருந்த சினிமாக்காரனுக்கும் எங்கம்மாவுக்கும் தொடர்பு உண்டாயிட்டு. ஒருநாள் ரெண்டு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிட்டாங்க"

"அந்த சினிமாக்காரனோட கீப்பு நேரா எங்கப்பன்கிட்ட வந்திருக்காள். 'ஒங்க பெண்டாட்டி ஒங்கள விட்டு ஓடிட்டாள். என்கூட வாழ்ந்தவன் என்னை விட்டுட்டு ஓடிட்டான். அதனால நாம ரெண்டு பேரும், ஏன் ஒன்றாய் சேரக்கூடாதுன் னு வாதிட்டிருக்காள். அவளும் கிளாஸ் ஒன் ஆபீசர். அதாவது பெரிய அதிகாரி. அவர் சம்பளத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அவளுக்கு ஆசப்பட்டோ, இல்லன்னா எங்கம்மா கூட்டிகிட்டு போனவனை பழி வாங்கிறதுக்காகவோ, இவனும் அவளை சேர்த்துக்கிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே குடி. ஏச்சு பேச்சு... எப்படியோ எல்லா ஐ.ஏ.எஸ். பிள்ளைகளையும் போல, நல்லா இருக்க வேண்டிய நான், குறைந்த பட்சம் நாட்டியத்தில் இரண்டாவது தனஞ்செயனாக உலகம் முழுவதும் சுற்ற வேண்டிய நான், இப்போ ஒவ்வொரு பயல்கள் பின்னாலயும் சுற்றிக்கிட்டு இருக்கேன்."

"அய்யோ... இதுக்கு மேல சொல்லாதப்பா என்னால் தாங்க முடியாதுப்பா .''

"என்னை நீ இனிமேல் பகிர வேண்டாம். என் பாரத்தையாவது பகிர்ந்து கொள். எவளுக்கும், ரெண்டு பிள்ள பிறந்த பிறகும், கணவனை டைவர்ஸ் பண்றதுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அதுக்கு முன்னால் பிள்ளைகளை பற்றி ரெண்டு பேரும் ஒரு செட்டில்மெண்டுக்கு வரணும். இப்படி இல்லாமல் பிள்ளை களுடைய எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஒரு தாய், ஓடிப் போகிறாள் என்றால், அவள் அசல் தேவடியாளத்தான் இருக்கணும். காரணம், பெண்மை என்பதே தாய்மை. அந்தத் தாய்மைக்கு மிஞ்சி ஒருத்திக்கு திமிர் - செக்ஸ் திமிர் ஏற்பட்டால், அவள் பெண்ணே இல்ல.... இப்படி ஓடிப்போனவளுக்கு நானும் கவிதாவும் பிறந்தது நிசம். ஆனால், அம்மா என்கிறவள் எங்கள் இந்த லஞ்சப் பேர்வழி வேணுகோபாலுக்கு பெத்தாளோ, இல்ல வேறு யாருக்காவது பெத்தாளோ..."

"அப்படி இருக்க முடியாது. உங்கப்பா சாயல் தான் ஒனக்கும், கவிதாவுக்கும் இருக்குது...”

"அப்படி இருந்தால் வெட்கப்படுறேன். டூப்ளிகேட் அம்மாவ, கவிதாவால ஏற்க முடிஞ்சுது. ஆனால், என்னால முடியல. எங்கப்பன் லஞ்ச வாங்குறதுல சமர்த்தன். இவளும் பணம் வாங்குறதுல ஒரு பழைய பெருச்சாளி இயல்பிலேயே நேர்மை யானவன் நான். எங்கப்பன நினைத்தாலே, ஒனக்கு குமட்டுறது மாதிரி எனக்கும் குமட்டுது. வேலை போட்டு தருகிறேன் என்கிற வாக்குறுதியை நம்பி வந்தவள்கள், அலுவலக சகாக்களை பழி வாங்குவதற்காக இவனோடு படித்தவள்கள் - எல்லாம், எங்க கண் முன்னாலேயே நடந்தது. இந்த லட்சணத்துல எங்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வு பற்றி போதிப்பான் இந்த யோக்கியன்."

"எனக்கு டூப்ளிகேட் அம்மாவை ஏற்றுக்க முடியல. அந்தச் சமயத்துல திரைப்படங்களுல எக்ஸ்ட்ரா வேடம் கிடைச்சுது. பெரிய பெரிய கதாநாயகர்களெல்லாம் டான்ஸ் ஆடுறது மாதிரி காட்டுவாங்களே அது குளோசப்பாக இருக்கும். லாங் ஷாட்ல ஆடுறது என்னை மாதிரி டூப்ளிகேட்கள் தான். அவங்களுக்கு லட்ச லட்சமா பணம். எங்களுக்கு நாயே பேயேன்னு திட்டு. இந்தச் சமயத்துல, தமிழ் திரைப்படக் காட்சிய பார்க்க வந்த ஒரு ஐரோப்பியருக்கு, என்னை ரொம்ப பிடித்துப் போச்சு. நல்ல டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். நல்ல சாப்பாடு போட்டார். நல்ல படுக்கையில் போட்டார். அதுவும் ஸ்டார் ஓட்டல்ல. அப்போ அவனோட ஏற்பட்ட சேர்க்கையை நான் தட்ட நினைத்தாலும் முடியல. ஒன்னை மாதிரிதான் வாந்தி எடுத்தேன். அப்புறம் அதுவே ஒரு டேஸ்ட்டாயிட்டுது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான பையன் தேவைப்படுது; தேவைப்படுறேன். அப்போ பிடித்த இந்த ஓரினச் சேர்க்கை, இப்போ ஒரு போதை மாதிரி ஆயிட்டுது. என் தங்கையின் எதிர்கால கணவனுக்கு, என்னை மாதிரி ஒரு நிலமை ஆகிவிடக் கூடாதுன்னுதான், ஒனக்கு இதைச் சொல்றேன்."

'கவிதா, ஒங்கம்மாவைப் பற்றி என்கிட்ட ஒருவார்த்தை சொல்லுலியே."

"பாவம் அவள் நான், என் அம்மாவை ஒரு தாசியாக நினைத்து ஒதுக்கிட்டேன்; ஒதுங்கிட்டேன். அவளுக்கோ ரெண்டு அம்மாக்கள். ஓடிப்போன அம்மாவை சொல்வாளா? ஓடிவந்த அம்மாவைச் சொல்வாளா? நல்லவேளை, ஒன்னோட காதல் அவளுக்கு கிடைத்திருக்கு. இல்லன்னா என்னை மாதிரி அவள் சீரழிந்திருப்பாள். லிம்போ மேனியாக்கா, அதாவது ஒரு நாளைக்கு ஒருத்தன தேடுறவளாய் ஆகியிருப்பாள். இல்லன்னா லெஸ்பியனா மாறியிருப்பாள்."

"யாரைச் சொன்னாலும் கவிதாவைச் சொல்லாதே."

"ஒன்னைவிட அனுபவத்திலும் வயதுலும் பெரியவன் என்கிற முறையில் நான் சொல்றதை கேளு. ஒரு காதலுலயோ அல்லது காமத்திலேயோ செக்ஸ் என்கிறது கால்வாசிதான். முக்கால்வாசி உள்ளத்தால் ஒன்றுபடுதல். அதேசமயம், தம்பதிகளுக்குள்ளே செக்ஸுவல் அட்ஜெஸ்மெண்ட் இருக்க வேண்டும். இல்லை யானால், புருஷன் கொடுமைக்காரனாவான். மனைவி பத்தினியா வாழ நினைத்தால் ஸ்டீரியாவுல தவிப்பாள். இல்லாட்டால், பலரோட படுப்பாள். இப்படி படுப்பது கூட செக்ஸ் அல்ல. கணவனின் இயலாமைக்கு அல்லது அவனது கொடுமைக்கு அல்லது அவன் பிற பெண்களோடு உறவாடுவதற்கு காட்டுகிற எதிர்ப்பே இந்த கள்ள உறவின் முதல்படி அல்ல செக்ஸ். இரண்டாம் படிதான். ஆக மொத்தத்துல பலரோடு படுக்கைகளை பகிர்ந்து கொள்வதும், ஓரினச் சேர்க்கையும், ஒரு நோயின்
அறிகுறியே தவிர நோய் அல்ல."

"உங்க கதையை கேட்கிறதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும், அதனால ஒழுக்கச் சிதைவு ஏற்படக்கூடாது."

'முதல்ல எது ஒழுக்கம்? எது சிதைவு? இதை தீர்மானிக்கவே பல பட்டி மன்றங்கள் நடத்தணும். இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையையும், நளாயினியாய் இருக்கும் போது தனக்கு ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டு, மறுபிறவியில் நெருப்பில் பிறந்த திரௌபதியையும், ராவணன் படத்தை வரைந்த சீதையையும், சுக்ரீவனோடு கூடிக்குலாவிய வாலியின் மனைவியான தாராவையும், கணவன் போக்கு தவறென்று நினைத்த மண்டோதரியையும் பஞ்ச பத்தினிகள் என்று நமது புராணங்கள் கூறுகின்றன முதலில் இதற்கு பதில் சொல். கற்பு என்பது என்ன? ஒழுக்கம் என்பது என்ன? இந்த ஐந்து பெண்களின் அடிப்படையில் பதில் சொல் பார்க்கலாம். இந்த ஐவரில் மண்டோரிதான் விதிவிலக்கு. அவளையும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை தேறமாட்டாள். ஆகையால், நமது புராணங்கள் பத்தினித் தன்மையை கற்போடு இணைக்கவில்லை. உன்னை மாதிரி ஆசாமிகள் தான் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பதும் புராணச் செய்திகள் தான்."

"அய்யோ எனக்கு தலை சுத்துது... காரை வீட்டைப் பார்த்து திருப்புங்க."

"வந்ததே வந்துட்டோம். பக்கத்துல இருக்கிற கிளப்புக்கு போயிட்டு போகலாம். கேய் பாய்ஸ் - அதுதான் ஓரினச் சேர்க்கைக் காரர்கள் கிளப். நான் அந்த கிளப்போட பொதுச் செயலாளர். இதுவரைக்கும் வந்துட்டு, அங்கே போகலன்னர் என்னுடைய பதவியும், எனக்கு கிடைக்கிற வெளி நாட்டுப் பணமும் போயிடும்."

"பார்த்தியா... பார்த்தியா..... உன் செயலுக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியுதோ. அங்கே கொண்டு போய் என்னை என்ன செய்யப்போறே?"

"தட்டுக் கெட்ட முண்ட எங்கம்மா மேலேயோ, பொம்பள பொறுக்கியான எங்கப்பன் மேலயோ சத்தியம் செய்ய முடியாது இதோ என் தலையிலேயே சத்தியம் செய்றேன் ஒன்மேல ஒரு துரும்பு கூடப் படாது. நீ கார்லேயே இரு நான் கால் மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுறேன் நாளைக்குத்தான் எங்க ஐரோப்பிய பாஸ் வரார். அப்போ மட்டுந்தான் பிஸியா இருப்பேன்."

"எப்படியோ சதி செய்து என்னை கூட்டிட்டு வந்துட்டே"

"இதுக்குத்தான் பத்து கிலோ மீட்டருக்கு முன்னால் உள்ள மோட்டலுல பேசிட்டு திரும்பலாமுன்னு நினைத்தேன் காரியத்த கெடுத்ததே நீதான். என்னை மீறி ஒனக்கு எதுவும் நடக்காது. நான், நாட்டியக்காரன் மட்டுமல்ல குஸ்தி கத்துக்கிட்டவன் பயப்படாதே."

செல்வா மௌனமானான். அந்தக் கார், கேய் பாய்ஸ் கிளப்பை நோக்கி போகலாமா? வேண்டாமா? என்பது போல் தள்ளாடித் தள்ளாடி ஓடியது.
-------------
அத்தியாயம் 9


சென்னையிலிருந்து முன்பு மகாபலிபுரத்திற்கும், இப்போது பாண்டிச்சேரிக்கும் அழைத்துச் செலுத்தும் கிழக்கு கடற்கரைச் சாலை. பெருநகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பதுங்கிக் கிடந்த தர்பார் கட்டிடம் ஏக்கர் கணக்கில் சுற்றி வளைத்து, இரும்புக் கம்பி இழைகளால் வேலி போடப்பட்ட அதன் வளாகத்தில், அசோக, ஆல, அத்தி போன்ற மரங்கள் அந்த கட்டிடத்தை மறைத்துக் கொண்டிருந்தன. அதற்குள் போவது காடு மலை தாண்டி போவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இடையிடையே பாறைக் குவியல்கள். மூன்று கிலோ மீட்டரில் முக்கால் வாசியை முடித்து விட்டால், கத்தரித்த ஆடாகவும் மாடாகவும் புலியாகவும் சிங்கமாகவும் பல்வேறு வடிவங்களில் மேக்கப் செய்யப்பட்ட புல் வகையறாக்கள். சிகை அலங்காரம் செய்யப்பட்ட கற்றாழைகள். பல்வேறு வண்ணத்தில் அமைந்த தாமரைகள்.

இதன் மேல் தளத்திற்கு, ஒரு பெருந்தூணில் சுற்றி வளைத்த படிகள் வழியாகத்தான் போகவேண்டும் ஏனோ லிப்ட் வைக்கவில்லை. மேல் தளத்தின் அடிவாரத்தில், பூவாய் விரிந்த விளக்குகள். வானவில் போன்ற மின்சார வரவேற்பு வளைவுகள். நான்கடி உயரத்தில் நவீன மேடை அரைகுறை ஆடைகளோடு ஒரு சில முதியவர்களும், பல நடுத்தர வயதுக்காரர்களும், பெரும்பாலான இளைஞர்களும் மண்டிக் கிடந்தார்கள் இந்த வளாகத்திற்கு முன்னால் மிகப்பெரிய கட்-அவுட். அதில், ஒரு வெள்ளைக்காரரின் மிகப்பெரிய உருவம். ஆங்கிலத்திலான வரவேற்பு வாசகங்கள். தமிழிலும் சில சொற்றொடர்கள்.

"மறுவாழ்வு கொடுக்கும் மணியே வருக! ஓரினச்சேர்க்கையின் உருவே வருக!"

மோகனனின் கார், அந்த வளாகத்திற்குள் வந்தபோது, மேலே கேட்கும் கூச்சலை கேட்ட செல்வா, இப்போது, அய்யோ அய்யோ என்றான். உனக்கு எத்தனை தடவை சொல்றேன்... உனக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. காருக்குள்ளேயே கண்ணாடிகளை இறக்காமல் ஏ.சி.யை போட்டுக்கொண்டு பேசாமல் இரு. நான் பத்து நிமிடத்தில் வந்துடுவேன். தலையை மட்டும்தான் காட்டணும். மற்றதை காட்டுறது நாளைக்குத்தான்' என்று சொல்லிக்கொண்டே, கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் மோகனன். அப்போது, இன்னொரு கார் வந்து நின்றது. இவனுடைய காரைவிட இரு மடங்கு பெரிய கார். மும்மடங்கு பளபளப்பு. அந்தக் காரிலிருந்து செக்கச் செவேலென்ற ஒரு மனிதர் இறங்கினார். உடனே, அத்தனை பேரும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், எதேச்சையாக மோகனனை பார்த்துவிட்டார். கூட்டத்துக்கு உள்ளே ஊடுறுவி, அந்தக் கார் பக்கம் வந்து ஹலோ' என்று கை குலுக்கிவிட்டு, இடது பக்க இருக்கையில் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். பிறகு, 'யூ புராட் எ பிராப்பர் பாய்... தேங்ஸ் எ லாட்' என்றார்.

மோகனன், அதிர்ந்து போனான். மரகத பச்சை சட்டையை, பொன் வண்ண பேண்டுக்குள் இன் பண்ணி சிவப்பு, டை கட்டி அழகாகத் தோன்றிய அந்த நாற்பது வயது மனிதர், உலக நிறுவனம் ஒன்றின் இயக்குநர். தங்கச் சங்கிலி காதில் தொங்க, மூக்குக் கண்ணாடி மார்பில் பதியத் தோன்றிய அந்த மனிதர், செல்வாவை பார்த்துக் கொண்டே மீண்டும் மோகனனிடம் குசலம் விசாரித்தார். மோகனனுக்குத் தெரிந்த அளவில், இன்று அவர் வருவதாக இல்லை. நாளைக்கு காலையில் பிளைட்டில் வரவேண்டும். இவன்தான், அவரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற ஏற்பாடு. இவர்தான் எங்கேயோ சினிமாக்காரர்களுக்கு இடையே உதிரியாய் சுற்றிக் கொண்டிருந்த இவனை, ஓரினச் சேர்க்கை மூலம் கரையேற்றியவரோ? கரை படுத்தியவரோ...? இந்த நிலத்தையும், அதன் முகம் போன்ற கட்டிடத்தையும் உலக நிறுவனத்தின் சார்பில் வாங்கிப் போட்டவர். ஓரினச் சேர்க்கைக் காரர்களின் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் ஏகப்பட்ட பணம் அனுப்புகிறார் ஆனால் நடப்பதோ மறுவாழ்வு அல்ல. மருவாழ்வு. எல்லாம் இவருடைய சம்மத்தோடுதான்.

மோகனன், தவியாய் தவித்தான் பாலுக்கு காவலாயும், பூனைக்குத் தோழனாகவும் இருக்க வேண்டிய நிலைமை. செல்வாவிடம் ஓடி விடு என்று தமிழில் சொல்லலாம் என்றால், இந்த மையத்தின் துணைச் செயலாளர், அந்த உலக நிறுவன இயக்குநருக்கு போட்டுக் கொடுத்துவிடுவான் பழையபடியும் சினிமா உதிரியாக வேண்டும். இதற்குள் அந்த மனிதர், உடனடியாய், புரியாத ஆங்கிலத்தில் பேசினார்.

"லெட்டஸ் கோ மோக்..."

மோகனன், செல்வாவை, கண்டுக்காமல் அதே சமயம் முதுகுக்கு பின்னால் கையை வளைத்து அவனை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, மிஸ்டர் ஜான் ஜோவுடன் இணையாக நடக்கப் போனான். உடனே அவர், பிரிங் தட் பாய்... லெட் இம் ஆல்சோ என்ஜாய்' என்றார். உடனே இவன் அவன் என் மைத்துனன். தங்கையின் உட்பி' என்றான். சோ வாட்' என்றார் அவர். இதற்குள் துணைச் செயலாளர் சத்ருக்கன், குலுங்கிக் குலுங்கி நடந்து, செல்வாவை வெளியே இழுத்து, அந்த வெள்கைக்காரர் முன்னால் நிறுத்தினான். எல்லோரும் மேல் தளத்திற்கு ஏறிக் கொண்டி ருந்தார்கள். கடைசியாக தயங்கி நின்ற செல்வாவிடம் எப்படியாவது இங்கிருந்து ஓடிடு. இவர் என்னுடைய பாஸ்.... இவர் சொல்லை என்னால தட்ட முடியாது. என்று கிசுகிசுத்தான். உடனே செல்வா, வார வழியில் தேக்குத் தோப்புல நரிகளப் பார்த்தேன். நான் எப்படித் தனியா போறது? என்னை கொண்டு போய் விடுறது உன்னுடைய டூட்டி..' என்றான். சரி வா பார்த்துக்குவோம்.' என்று சொல்லிக்கொண்டே செல்வாவையும் இழுத்துக் கொண்டு படியேறினான்.

அந்த வெள்ளைக்காரர் , மேடையேறி, அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மோகனன் செல்வாவிடம் அதோ அந்த அறைக்குள் போய் பதுங்கிக்கோ. நான் வருவது வரைக்கும் கதவைத் திறக்காதே' என்றான். செல்வா திருப்பிக் கேட்டான்.

"நீ வாறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்."

"எப்படியும் மிட் நைட் ஆயிடும்."

"அய்யோ... சித்தப்பாவுக்கு என்ன சொல்றது? என்னாச்சோ ஏதாச்சோன்னு துடியா துடிச்சிகிட்டு இருக்கப் போறார்."

"உன்னை அப்சர் பண்ணுவதற்காக கிளினிக்கில் வைத்திருக் கதாய், உங்க சித்தப்பாவுக்கு போன் செய்யுறேன். நீ இந்த அறைக்குள்ளேயே இரு. மீண்டும் சத்தியமாய் சொல்லுறேன். அந்த வெள்ளைக்காரன் என்னை வேலைய விட்டுத் துரத்தினாலும், உன்னை இழிவாய் பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன்."
மோகனன், அவசர அவசரமாக மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவிடம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, மேடையை விட்டு படி வழியாக இறங்காமல் அப்படியே கீழே குதித்து சுழல் படிகளில் கீழே இறங்கி, அருகே உள்ள ஹே பாய்ஸ் மறுவாழ்வு மைய அலுவலகத்திற்கு ஓடினான்.

இதற்குள், மோகனன் காட்டிய அறைக்கதவை, செல்வா தொட்டான். தொடப் பொறுக்காமல் அது திறந்தது. உள்ளே ஓரடி வைத்தவன் தனது சித்தியை பார்த்தது போல் பயந்து திடுக்கிட்டான். அந்த அறைக்குள் ஆண்களும் ஆண்களும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள் ஒவ்வொருவர் வாயிலும், இடுப்புக்குக் கீழேயும் பல்வேறு நபர்களின் உறுப்புக்கள். ஒவ்வொருவரும் ஏழெட்டு பேருக்கு ஈடு கொடுத்தும், ஈடு செய்தும் முழு நிர்வாணக் கோலத்தில் அலங்கோலமாக கிடந்தார்கள். இலை தழைகளோடு பூத்துக் குலுங்க வேண்டிய பூக்கள் காய்ந்து போன காம்புகளாய், கிழிந்து போன இதழ்களாய், சிதறிப் போன மகரந்த தூள்களாய், வண்டுகளே பூக்களாய்... பூக்களே வண்டுகளாய்.... எட்டறக் கலந்து கிடந்தார்கள். (அதாவது எட்டு பேர்) இவர்களின் வலுவான குலுக்கலுக்கும் புரட்டலுக்கும் இடையே மென்மையான 'டிங் டிங்.. இசை.

வெளியே வந்த செல்வாவுக்கு, உறுப்புகளில் ஒன்றுகூட இயங்க வில்லை. நினைத்துப் பார்க்கவே அசிங்கமாய்... அருவெருப்பாய் தெரிந்தது. மிருகங்களுக்குக்கூட பாலியல் உறுப்புக்கள் இலை மறைவு காய்மறைவாய் உள்ளன. பசு மாட்டின் வால், அதன் உறுப்பை மறைக்கிறது. நாய்க்கு அடிவாரத்தில் தான் அதன் உறுப்பு உள்ளது. காகங்கள் உள்ளிட்ட சில பறவைகள் புணர்வதை பார்க்க முடியாது. ஆனால், இவர்களோ மிருகங்களை விடக் கேவலமாய், அசிங்கம் பிடித்த அம்மணமாய், அலங்கோலமாக கிடக்கிறார்கள். செல்வாவிற்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது. பத்து நிமிடம் ஒரு தூண் மறைவில் நின்றான். மோகனனைக் காணவில்லை. ஒருவேளை, அவன் வேண்டும் என்றே தன்னை இங்கே கூட்டிக் கொடுத்துவிட்டு போயிருப்பானோ என்ற சந்தேகம். அதுவே கோபமாக, தாபமாக அந்த தூணை இரண்டு கைகளாலும் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தபோது, மிஸ்டர் ஜான் ஜோ ஓடி வந்தார். அவனை, தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

"டேக் இட் ஈஸி மை எங் மேன் டிட் யூ ஈட்"

"டோன் வாண்ட் ஈட்.. எனக்குப் பசிக்கல. என்னை விட்டா போதும். மோகனன் பயல் எங்கே?” என்று வெள்ளைக்காரருக்கு அரைகுறை ஆங்கிலத்திலும், அவரைச் சூழ்ந்து நின்ற கேய் பையன்களுக்கு தமிழிலும் பேசினான். உடனே, துணைச் செயலாளர் வெள்ளைக்காரரிடமும், இந்தப் பையனிடமும் மாறி மாறிப் பேசினார். வாசகர்களின் வசதிக்காக தமிழாக்கம் செய்யப்படுகிறது.

"இவன் உங்களுக்கு பயன்படக்கூடாது என்பதற்காக, தன்னோட தங்கையை கட்டிக்கப்போறதாய், மோக், அப்போ சொன்னது நினைவிருக்குதா பாஸ்."

"ஏஸ்.... புரசீட்"

"அதாவது, இவனை அவன் மட்டுமே கீப் செய்யணுமுன்னு நினைக்கிறான். ஒரு அறைக்குள்ள தங்கும்படி இவனுக்கு எச்சரிக்கை செய்தான். உங்க பணத்தை வாங்கிக் கிட்டு உங்களுக்கே துரோகம் பண்றான்."

"தட்ஸ் ஆல் ரைட் ஹீ வில் பே பார் இட் (பரவாயில்லை . அதற்கான பலனை அனுபவிப்பான்)"

வெள்ளைக்காரர் உடம்பைச் சொறிந்து கொண்டே, தூணோடு தூணாய் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை உற்றுப் பார்த்தார். "பயல், கேய் கேம்முக்கு புதுசு. இந்த மாதிரி கன்றிவுட் பாயை விடவே முடியாது. சோதா பயல்களோட சோரம் போனது போதும்."

என்றாலும், மிஸ்டர் ஜான் ஜோ, நாலுந்தெரிந்தவர். கிளப்பின் துணைச் செயலாளரான சத்ருக்கன பொருள்பட பார்த்தார். அவன், அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தான். விட்டுப் பிடிக்க வேண்டிய கிராக்கியாம்.

செல்வாவின் அருகே, அவனுக்குத் தெரியாமல் ஒரு முரடனை நிறுத்திவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் விட்டார்கள். உடனே ஆடல் பாடல்', அம்மண அமர்க்களங்கள். நமக்கு மறுவாழ்வு அளிக்கும் மிஸ்டர் ஜோ என்று துணைச் செயலாளர் சத்ருக்கன் ஓங்கிக் கத்த, மேடையில் நின்றவர்களும், தளத்தில் கிடந்தவர்களும் "வாழ்க வாழ்கவே” என்றார்கள். பிறகு ஒரு பாடல்

"இருப்பது கொஞ்ச காலம் - அதுவே
கொஞ்சும் காலமாகட்டும்.
இறப்பது நிச்சயம் - அதனால்
இருப்பதைப் பகிர்வோம்.
ஆணென்ன பெண்ணென்ன
அனுபவ இன்பமே முக்கியம்."

இந்தப் பல்லவி, தான் எழுதியது என்றும், அதன் பொருளையும் சத்ருக்கன், ஜோவிடம் விளக்கிக் கொண்டிருந்தான். பல பேர் மேடையில் பாட்டிற்கேற்ப கொஞ்சுக் குலாவினார்கள். இதற்குள் துணைச் செயலாளனின் மோவாய் அசைப்பில் ஒருத்தன் தட்டு நிறைய பிரியாணியோடு செல்வாவிடம் போனான். 'உன்னை எதுவும் செய்ய மாட்டோம். பேசாம சாப்பிடு என்றான். இரண்டு நாள் முழுக்க பட்டினி கிடந்த செல்வா, அந்த தட்டை பாய்ந்து பிடிக்கப் போனான் உடனே தட்டுக்காரன் மொதல்ல வயித்துக்குள்ள கனமான சாப்பாட்ட திணிக்கும் முன்னால, பழரசம், சூப் எதையவாது குடிக்கணும். உனக்கு என்ன வேணும் என்றான். பசி வேகத்தில் செல்வா, 'இரண்டும்' என்றான். உடனே, தட்டுக்காரன் செல்வாவை கவனித்துக் கொண்டிருந்த முரட்டுத் தோற்றக்காரணை பார்த்து கண்ணடிக்க அவன் சூப்போடும், பழரசத்தோடும் வந்தான். செல்வா, மாங்கு மாங்கு என்று குடித்தான். பிரியாணியில் மூன்று கவளங்களை போட்டிருப்பான். மீண்டும் ஜுஸ், சூப் என்றான். கேட்டது கிடைத்தது. கிடைக்கக் கிடைக்க அவன் தலை சுற்றியது.

சிறிது நேரத்திற்குள் செல்வா, இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடைவெளி கொடுக்கும் சுரணையற்ற நிலைக்கு போய்விட்டான். கண் முன்னாலேயே கலர் கலராய் பல்வேறு விதமான படங்கள். யதார்த்தம் - மாந்தரீக இயல்பானது. தலை சுழன்றது. கண்கள் வெட்ட வெளியாயின. அப்படியே தரையில் சாயப் போனவனை, துணைச் செயலாளன் சாய்த்துப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தினான். பேண்டை உருவினான். ஜட்டியை கழட்டினான். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சாதனையாளன் போல் மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவை கூட்டி வந்தான். அவரும் ஜட்டி போடாத பேண்டை கழட்டி தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டு, கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்காய் வாயில் கவிழ்த்துவிட்டு ஓடோடி வந்தார். இதற்குள் அத்தனை பேரும் அம்மணமாக ஆங்காங்கே சுருண்டார்கள். உலக நிறுவன இயக்குநர், செல்வா மீது கவிழ்ந்து படுத்தார். பத்து நிமிடம் ஆகியிருக்கும்.

கால நேர வர்த்தமானங்களைத் தாண்டிய முப்பரிமாண நிலை. அரை மணி நேரமோ கால் மணி நேரமோ.. லேசாய் கண் விழித்த செல்வாவிற்கு, பாதி உண்மையாகவும், மீதி கற்பனை போலவும் தோன்றியது. ஆனாலும், தன் மேல் ஒரு சுமையை உணர்ந்தான். உடனே அவனுள் ஒரு வெறி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வெறி. மிஸ்டர் ஜான் ஜோவை, ஒரே உதறலாய் கீழே தள்ளி, குப்புறப் போட்டு அவர்மீது கவிழ்ந்தான். அவரை ஒரு பெண்ணாக நினைத்துக் கொண்டான். கிராமத்தில் ஆட்டை மரத்தில் கட்டி கிடாயை ஏவி விடுவதும், காளை மாடு பசுவின் மேல் கால் போடுவதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இதுவரை பசுவாக, ஆடாக கிடந்த இவன், இப்போது கட்டிளங் காளையாய், அசல் மாடாய் ஆகிப் போனான். ஆனாலும், கீழே கிடக்கும் வெள்ளையரை ஒரு பெண்ணாகப் பாவித்துக் கொண்டான்.

கால் மணி நேரத்தில், அவனுள் ஒரு சுகம் தெரிந்தது. இதுவரை அனுபவித்தறியாத சுகம். கன்னி கழியாதவனுக்கு கிடைத்த முதல் தீனி. சுவையான தீனி . சுகமான தீனி. தீனி முடிந்ததும் உடலெங்கும் ஒரு ஆயாசம். ஒரு குற்ற உணர்வு. செல்வா, மிஸ்டர் ஜான் ஜோவிடமிருந்து புரண்டு தரையில் குப்புற விழுந்தான். அவன் மீது மது வெறியிலும், மோக வெறியிலும் பாயப்போன துணைச் செயலாளரை அப்போதுதான் வந்த மோகனன் பிடித்துக் கொண்டான். கீழே கிடந்த மிஸ்டர் ஜான் ஜோ, "மோக்.. நோ. வயலன்ஸ்.. வெரி பேட்ட லெட் தம் என்ஜாய் டோண் பி எ கில் ஜாய் .... (மோகனா, நீ செய்வது தவறு. அவர்கள் மகிழட்டும். மகிழ்ச்சிக்கு கொலைகார-னாகாதே.) என்று தான் நடத்தியதில் திருப்தியும், செல்வா நடத்திக் காட்டிய மகிழ்ச்சியும் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்பதுபோல், கை கால்களை அங்குமிங்குமாய் ஆட்டினார். செல்வாவும், அவனைப் பார்த்து கையை ஆட்டி "ஐ லைக் இட் ஐ லைக் இட்” என்றான்.

இடுப்புக்கு கீழே அம்மணமாய் கிடந்த செல்வாவை, தூக்கி நிறுத்திய மோகனன், எவனோ கழட்டிப் போட்ட பேண்டை எடுத்து அவனை மாட்டச் செய்தான். கழுத்து வரைக்கும் சுருக்கி வைக்கப்பட்ட பனியனையும், பனியன் மேலான சட்டையையும் கீழே இழுத்து விட்டான். அந்தக் கூட்டத்தை அனல் கக்க பார்த்துவிட்டு, செல்வாவுடன் சுழல் படிகளில் இறங்கி, தரை தட்ட நின்றான்.

செல்வாவை, அணைத்தபடியே தனது காருக்குள் ஏற்றினான். அந்தக் கார் நான்கு சக்கர பாய்ச்சலில் கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ... இந்த இரவில் .... இவனை சித்தப்பாவிடம் ஒப்படைக்க முடியாது. காரை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும். பெட்ரோல், ரிசர்வக்கு வரும்போது, அதே இடத்தில் நிறுத்த வேண்டும்.

இருட்டு மயமான சாலையில், எதிரே வரும் வாகன ஒளியை வைத்தே ஒரு அனுமானத்தோடு, கார் ஓட்ட வேண்டும். அந்த ஒளியின் பரிமாணத்திற்கு ஏற்ப வண்டியின் எதிர் வாகனத்தின் கன பரிமாணத்தை உணர்ந்து, காயை நகர்த்துவதுபோல் காரை நகர்த்த வேண்டும். பின்னால் வரும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம், கார் கண்ணாடியில் பிரதிபலிப்பதை அனுமானமாகக் கொண்டு அதற்கேற்ற இடைவெளி கொடுத்து ஓட்ட வேண்டும். லாரிகள் மொய்க்கும் தேசியச் சாலையில் இரவில் கார் ஓட்டுவது என்பதே ஒரு தனிக்கலை. இதில் மோகனன் தேர்ந்தவன் என்றாலும், இப்போது அவன் கார் இரு தடவை விபத்துக்குள்ளாகப் போனது. இவன் வழிவிடவில்லை என்று ஒரு லாரி இவன் காரை அணைப்பது போல் ஓடியது. எதிரே நான் வருகிறேன் என்பது போல் பிரகாசமாக வெளிச்சம் போட்டும். வேக வேகமாய் ஓடிய இவன் காரை மோதப் போவதுபோல் பாவலா செய்து கொண்டே ஒரு லாரி பின் நோக்கிப் போனது. இவனே காரை நிறுத்தலாமா என்று நினைத்தபோது, பின்னிருக்கையில் படுத்துக் கிடந்த செல்வா மயக்கம் தெளிந்தது போல் கத்தினான். அலறியடித்து எழுந்து மோகனனின் சட்டைக் காலரின் பின் பக்கத்தை பிடித்திழுத்தபடியே, "சதிகாரப் பயலே... என்னை - அந்த மிருகக் கூட்டத்துல மாட்ட வச்சிட்டு - எங்கேடா போனே" என்று கத்தினான்.

கார் நின்றது. முன் கதவு திறந்தது. பின் கதவு திறக்கப்பட்டது. மோகனன், செல்வாவை வெளியே இழுத்துப் போட்டான். கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். இடுப்பில் காலால் எகிறினான். கீழே விழுந்த செல்வாவை தூக்கி நிறுத்தி, கழுத்தை, கையால் பிடித்தபடியே அந்த அந்தகார இருளில் பேய் போல் கத்தினான்.

"பொறுக்கிப் பயலே.... முட்டாப் பயலே.... நான் ஒன்னை ஒளிஞ்சுக்கோன்னு சொன்னால்... இப்படி பண்ணிட்டியே..... உன்னையே நம்பி இருக்கிற என் சிஸ்டர் என்ன பாடு படப்போகிறாளோ"

"உன் சிஸ்டர் யாருக்குடா வேணும்? நீதாண்டா போக்கிரி... புறம்போக்கு... கூட்டிக் கொடுத்த பயல்... பத்து நிமிஷத்துல சித்தப்பாவுக்கு டெலிபோன் செய்துட்டு வாறதா போக்குக் காட்டிட்டு, ரெண்டு மணி நேரமா என்னடா செய்தே...? தோ பாரு... இதுக்கு மேல கைய நீட்டுன மவனே - ஒன் முதுகிலயும் நான் சவாரி செய்வேன்."

மோகனன், புரிந்து கொண்டான். பயலுக்கு போதை மாத்திரையை கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான் லேசாக அவனுக்கு மயக்கம் தெளிந்திருக்கிறது. சொல்லிப் பார்ப்போம். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போறான்... மோகனன், தன்னிலை விளக்கமாக பேசினான்.

"நான் சொல்வதை கேளுடா நாயே போன் செய்வதுக்காக, கேய் அலுவலகத்துக்குப் போனேன். அது அவுட் ஆப் ஆடர். இருபத்தைந்து நிமிஷம் காரை ஓட்டினேன். ஒரு கடையோ, டெலி போன் பூத்தோ கிடைக்கல.. எப்படியோ ஒரு இடத்துல மூடப்போன பூத்துக்காரன் கையில் காலுல விழுந்து ஒன் சித்தப்பனுக்கு போன் பண்ணிட்டு, அப்பதான் வந்தேன். அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சிட்டே... என்னை மாதிரியே நீயும் ஆயிட்டு வாரியேடா... இதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நானே காரணமாயிட்டேனடா.... கூடப் பிறந்த தங்கைக்கே சக்களத்தி ஆக்கிட்டியேடா....”
மோகனன், நரிகள் கத்தும் அந்த நள்ளிரவில், காட்டுப் பூனைக்குப் பயந்து காகங்கள் பறந்த அவற்றில் காலடிகளுக்கு கீழே தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். காரில் தலையை முட்டி மோதினான். செல்வா, அவனை தன் பக்கமாக இழுத்தான். அவன் கண்ணீரை துடைத்தான். உடனே, மோகனன் எந்தவித விகற்பமும் இல்லாமல் தான் செல்வாவை கட்டிப் பிடித்தான். ஆனாலும்…

பற்றிக் கொண்டது.
-----------------
அத்தியாயம் 10


காரிலிருந்து இறங்கிய செல்வா, முன் நடக்க, மோகனன் பின் நடந்தான். பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு செலுத்த செல்வா வருகிறானா என்று தெருமுனை வரை கண்ணோட்டிய சித்திக்காரி, செல்வாவை பார்த்ததும் பல்லைக் கடித்தாள். அவனிடம் காட்டிய பச்சாதாபம் ஒரு நாள் கூத்தாக முடிந்தது. கணவர் சிவனுப்பாண்டி, மனைவியின் சுபாவத்தை புரிந்து வைத்திருப்பவர் போல் எங்கண்ணன் மகன் பார்வையே ஒரு தினுசா இருக்குறது நீ ஏதும் தாறுமாறா நடந்துக்கிட்டியா என்றார். படுக்கையறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல், அந்த அறைக்குள்ளேயே அவர் அப்படி கேட்டது அவளை பழைய சித்திக்காரியாய் ஆக்கிவிட்டது. 'நான் வேணுமுன்னா செத்துத் தொலையுறேன்' என்று கணவனுக்கு பதிலடி கொடுத்தாள். தன் தவறை உணர்ந்து கொண்ட அவரும், அதற்குப் பிராயச்சித்தமாக அவளை அணைக்கப் போனார். அவள் அவரது கைகளை உதறிவிட்டு செத்துப் போனவள் போலவே கிடந்தாள். இப்போது செல்வாவைப் பார்த்ததும், மரித்தெழுந்தாள். நாக்கே, நரம்பாய் முறுக்கேற நின்றவள், மோகனனைப் பார்த்ததும் குளிர்ந்து விட்டாள். இதனால் பெரிய இடத்து சாவகாசம் வைத்திருக்கும் செல்வா மீது கூட பாசம் வரவில்லையானாலும், கோபம் குறைந்தது நடை வாசலில் இருந்து உள்ளே ஓடி கணவனை வெளியே கொண்டு வந்தாள். அவர், செல்வாவின் கையைப் பிடித்தபடியே, மோகனனிடம் கண்களால் விளக்கம் கேட்டார்.

"ஒண்ணுமில்ல அங்கிள். நான் நேற்று சொன்னேன் பாருங்க... அதே கேஸ்தான்... ரெண்டு தடவை ஊசி போட்டார். இப்ப சரியாயிட்டு. இனிமே குண்டோதரன் மாதிரி சாப்பிடுவான் பாருங்க."

"மஞ்சள் காமாலை இல்லியே?"

"டாக்டர் டெஸ்ட் செய்து பார்த்தார் அங்கிள். இல்லவே இல்லை ."

"ஏங்க.... பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு நேரமாவுதே. வேன்காரன் இன்னைக்கு வரமாட்டானாம்."

"என்னாலயும் முடியாதே லட்சுமி. ஆபீசுக்கு நேரமாயிட்டுது. இரண்டும் எதிர் எதிர் திசையில் இருக்குதே...”

'அப்படியானால் செல்வாவை... '

"அறிவு கெட்டத் தனமா பேசுறியே. அவனால முடியுமா? எவ்வளவு வீக்கா இருக்கான் பார்"

மோகனன் முன்னால் தன்னை இழிவுபடுத்திய கணவனை அங்கேயே பதிலடி கொடுக்கப் போனாள். அதற்காக அவள் வாயெடுக்கும் முன்பே, மோகனனின் வார்த்தைகள் விழுந்துவிட்டன.

"நான் இந்தக் காரிலேயே குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு வாறேன் அங்கிள்"

சித்திக்காரி உச்சி குளிர்ந்தாள். அந்தப் பணக்காரப் பிள்ைைளயை, பல்லிளித்துப் பார்த்தாள். ஆனால், மோகனனோ அவளை கடுமையாகப் பார்த்தான். நேற்றைய இரவுக்கும் பகலுக்குமான இடைவேளையில் செல்வா, அவனிடம் தனது சுய வரலாற்றை கூட்டாமல் குறைக்காமல் சொல்லியிருந்தான். சித்தப்பாவின் வாஞ்சையும், சித்தியின் வாட்டலும் அந்த வீட்டையே ஒரு கூண்டாகவும், செல்வாவை அதற்குள் மாட்டிக் கொண்ட கிளியாகவும் அனுமானித்தான் ஆகவே அந்தக் கிளியின் இறக்கைகளை வெட்டி விடுகிறவளை, தன் அம்மாவை பார்ப்பது போலவே பார்த்தான். அதேசமயம், அவள் கணவரை விருப்போடு பார்த்து, இறுதியில் விருப்பையும் வெறுப்பையும் தாழ்த்திக் கொண்டே பேசினான்.

"அங்கிள் நீங்களும் கார்ல ஏறுங்க.... உங்களையும் ஆபீசுல கொண்டு விட்டுடுறேன்."

"ஒனக்கு எதுக்குப்பா சிரமம்? ரெண்டும் எதிர் எதிர் திசை"

"பாசிட்டிவும் நெகட்டிவும்தான் ஒண்ணா சேரணும். உங்கள் பற்றி செல்வா நிறையச் சொன்னான். அப்படிப்பட்ட உங்களை என் காரில் ஏற்றிக் கொண்டு போய் விடுறது எனக்கு கிடைக்கிற கௌரவம் அங்கிள். என் அப்பா என்கிறவர் மட்டும்..."

மோகனன், மேற்கொண்டு ஏதும் பேசாமல், முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டபோது அவனது இரு கரங்களும் அந்த காரின் வைப்பார்கள் போல் செயல்பட்டன. செல்வாவின் வருகைக்காக அலுவலக ஆடையுடனும், கூடையுடனும் காத்து நின்ற சித்தப்பாவிற்கு, மோகனனின் தழுதழுத்த குரலோ, முக நனைவோ, தெரியவில்லை. செல்வாவை பார்த்து துள்ளி ஓடி வந்த சுபேதாவையும், அருணையும் காருக்குள் தள்ளி விட்டார். அவர்களோ காருக்குள் நுழைய மறுத்து "எங்கே போனே அண்ணா .... ஏன் நைட்ல வர்ல அண்ணா ...'' என்று அவனை மொய்த்தபோது, சித்திக்காரி , "டைம் ஆயிட்டு... அண்ணாகிட்ட அப்புறமா வந்து கொஞ்சுங்க...'' என்று சொல்லிவிட்டு, செல்வாவிடம் ஒட்டிக் கொண்ட பிள்ளைகளை பிய்த்தெடுத்து காருக்குள் போட்டாள். முன்னால் ஓடிய கார் திரும்பாமலே பின்னோக்கி ஓடி வந்தது. சித்தப்பாகாரர் கார் ஜன்னலை தாழ்த்தி வைத்து, அதில் முகத்தை கொக்காக்கி, மனைவிக்கு ஒரு ஆலோசனை சொன்னார்.

"நம்ம கொல்லைப்புறத்துல இருக்குதே பசலிக் கீரை. அதைக் கழுவி... நல்லா அரைத்து.... இவனுக்கு கொடு.. வயித்துல புண் இருந்தால் கேட்கும். கூழ் மாதிரி ஆக்கி நீயும் குடி. இந்த பசலி எதிர்கால வயித்து நோய்க்கும் ஒரு இன்சூரன்ஸ் மாதிரி. அதனால் பசலிக் கீரையை பறித்து நல்லா கழுவி..."

"பறிக்கிறதை கழுவணுமுன்னு எனக்குத் தெரியாதா? அரைச்சால், கூழ் மாதிரி ஆகும் என்கிறத நீங்க சொல்லிக் கொடுக்கணுமா?"

சிவனுப்பாண்டி, எதுவும் பேசவில்லை. ஆனாலும், இதன் எதிரொலிப்பு செல்வா மீது விழுமோ என்று அச்சப்பட்டார். அலுவலக அவசரத்தில் அது பெரிதாக தெரியவில்லை . அவளை தாஜா செய்வதாக நினைத்துத்தான், நீயும் குடி ' என்றார். ஆனால், அவளோ குடிகாரி மாதிரியே பேசுறாள் 'அறிவு கெட்டத் தனமா பேசுறியே?" என்று இவன் முன்னால் கேட்டது தப்புத்தான் இரவில் வந்து எப்படி மன்னிப்பு கேட்பது என்று மனதில் ஒத்திகையாக பேசிக் கொண்டார்.

அந்தக் கார் போய்க் கொண்டிருக்கும் போதே, செல்வா, வீட்டிற்குள் போனான். அவனை துரத்துவது போல் பின்னால் ஓடிவந்த சித்தி, காட்டுக் கத்தலாய் கத்தினாள்.

"இப்போ ஒனக்கு திருப்திதானே? நீயுன்னுகூட அதிர்ந்து பேசாத மனுஷரை ஒரு அந்நியன் முன்னால திட்ட வச்சுட்டே... இதனோடயாவது நிற்பியா? இல்ல, இன்னும் திட்டு வாங்கிக் கொடுப்பியா?

செல்வா, சித்தி சொல் கேட்காவதன் போல் தனது அறைக்குள் போனான். அன்று தனது அறையாக தெரிந்த அந்த இடம், இப்போது பிள்ளைகளின் அறையாய் தோன்றியது. எவ்வளவு திமிர் இருந்தால் தப்புத்தான் சித்தின்னு சொல்லாமே போவே... எல்லாம் என் தலைவிதி' என்று அவள் தலையில் அடிக்காமலே கத்தியபோது, அந்த அறைக்கதவு தாளிட்டுக் கொண்டது. இது சித்தியின் கோபத்தைக் கூட்டியது. என் வீட்ல இருந்துக்கிட்டே என் ரூமையே பூட்டுறியா? கதவைத் திறடா களவாணிப் பயலே...' என்று அவள் கதவை டாம் டூம் என்று கையால் இடித்தாள் காலால் உதைத்தாள். அந்தக் கதவு, தட்டியும் திறக்கப்படவில்லை.

செல்வா , கதவு தட்டலோ - சித்தியின் ஏச்சோ எதுவும் கேட்காமல், கண் திறந்திருந்தும் பார்க்க முடியாமல், காது மடல் விரிந்தும் கேட்க முடியாமல் கிடந்தான். ஒரு ஆற்றின் மணல் மேல் குறுக்காய் நடப்பவர்களை திடீர் வெள்ளம் அடித்துச் செல்வது போல், இக்கட்டான - அதேசமயம், யதார்த்தமான வாழ்க்கை மண்ணில் நடந்தவனை, அனுபவ வெள்ளம் விழுங்காமல் விழுங்க வைத்ததை நினைத்து பிரமித்துக் கிடந்தான். உள்ளுருப்புகள் மட்டுமே இயங்க, வெளி உறுப்புகள் சூனியமாக, மல்லாக்கக் கிடந்தான்.

சித்திக்காரிக்கு கை வலியும், வாய் வலியும் ஏற்பட்டு கதவுச் சத்தம் ஓய்ந்த பிறகுதான், அவனுக்கு பிரக்ஞை ஏற்பட்டது. கூடவே அது பல்வேறு விபரீதங்களை கற்பித்துக் கொண்டது அந்த ஓரின ஆடுதளத்தில் சில சிறுவர்கள் வாய் கவ்வி கிடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவு சித்தப்பா பிள்ளை அருணை, இந்த மோகனன் சில்மிஷம் செய்வானோ என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் சுய அனுதாபத்தில் கரைய வைத்தது. காரில் சித்தப்பா இருக்கிறார் என்ற வடிகால் கிடைத்தது. அந்த வடிகாலில் சித்தப்பாவும் மூழ்கிப் போவாரோ என்ற பயம் பிடித்தது அதுவே பீதியானது. அந்த பீதி தலையணையை விசிறி அடித்தது. கைகளை தரையை அடிக்க வைத்தது. கெட்டுப் போன வாய்க்குள் கைவிட்டு நாக்கை வெளியே எடுக்கப் போனது. நாக்கு வலிக்க வலிக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சுய கோபம். சென்னைக்கு அனுப்பிய அப்பா மேல் கோபம். அவன் மீது பாசம் வைத்திருக்கும் சித்தப்பா மீது அதே எதிர் விகிதாச்சார கோபம். இந்த வீட்டை விட்டு ஓடிப்போகாமல் கட்டாமல் கட்டிப்போட்டிருக்கும் பிள்ளைகள் மேல் கோபம். சித்தி மேல் கோபக்... கோபம். சென்னை மேல் கோபம். எல்லாவற்றிக்கும் மேலாக -

கவிதா மேல் கோபம். அவளை நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. இந்த கேடு கெட்டவளுக்கு ஒரு காதல் கடிதம் தேவை. அதற்கு கிடைத்த இளிச்ச வாயன் இவன், சரியான கள்ளி. இவன் உள்ளதை உள்ளபடி ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிட்டான். ஆனால், அவளோ , அம்மா ஓடிப்போன விவகாரத்தை சொல்லவில்லை. இவன் கௌரவத்தை இழக்க வைத்து, தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காத பாவி. அவள் மனதிற்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கிடக்குதோ? வீட்டிற்கு வரச் சொன்னவளே அந்த பழிகாரிதான். அப்பனுடன் டூரில் போவதை சொல்ல நினைத்திருந்தால் அவள் சொல்லி யிருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமற்றவள். இவளைவிட இந்த மோகனன் எவ்வளவோ மேல். அவனுக்கு மட்டும் இந்தக் கெட்டப் பழக்கம் இல்லையானால் அவனைவிட நல்லவனை காணமுடியாது.

கெட்ட பழக்கம் மட்டும்தானா அது? தானும் கெட்டு பிறத்தியாரையும் கெடுக்கும் பழக்கம். ஒரு தொற்று வியாதி. அவனிடம் இந்த கவிதாவுக்கு எழுதிய கடிதம் இருக்கும் வரை வாய் கெட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வாயா? இல்லை. இரண்டு வாய்கள். இந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். சித்தப்பாவிடமோ, பிள்ளைகளிடமோ வாலாட்டக்கூடாது என்று அந்தப் பொட்டப் பயலை கத்தியோடு போய் எச்சரிக்க வேண்டும். நேற்று வாக்களித்தபடி அந்த மோகனன் மட்டும் தலையெழுத்தாய் மாறிப்போன தன் கையெழுத்திலான கடிதத்தை மட்டும் கொடுக்காது போனால் –

செல்வாவின் கைகளே ஆயுதங்கள் போல் நீண்டன. விரல்கள் திரிசூலப் பாணியில் பத்து சூலங்களாய் ஆகிப்போயின. பின்னர் அவன் சிந்தனையில் தேக்கம் ஏற்பட்டது அப்படியே தூங்கிப் போனான். எவரோ அடித்துப் போட்டது மாதிரியான தூக்கம்
-----------
அத்தியாயம் 11


செல்வா, லுங்கியில் பேண்டுக்கும் தாவியதும், அவன் எங்கேயோ புறப்படுகிறான் என்று யூகித்துக் கொண்ட அருண், "நானும் வாரேன் அண்ணா " என்றான். “நானும்” என்றாள் சுபேதா. பொதுவாக இந்த மாதிரி மாலை மயக்க நேரத்தில் செல்வா, இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு கடற்கரைக்கு போவான். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொருவரை பிடித்துக் கொண்டு, அருகே உள்ள கடற்கரைக்கு பொடி நடையாய் நடப்பான். சுபேதாவின் கால் வலித்ததும், அவளை தோளில் போட்டுக் கொள்வான். அண்ணனோடு உட்கார்ந்து குடை ராட்டினம், ஆகாய ராட்டினம் போன்றவற்றில் சுற்றுவதும், வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் நடக்கும் சங்கதிகள். அதோடு பெரிய பெரிய பலூனாய் வாங்கிக் கொடுப்பான். அம்மா, கூட்டிப் போனால், ராட்டினத்தில் ஏற்றாமல், குடை ராட்டினம் போல் தலைமுடி அவிழ்வதையும் பொருட் படுத்தாமல், அவர்கள் தலையில் குட்டுவாள். ரெடியாகுங்க' என்று கூறும் அண்ணன், இப்போது தன்னந்தனியாக புறப்படுவது கண்டு, அருண் குழம்பினான். குழந்தைகள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள். செல்வாவிற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"நான் போகிற இடத்துக்கு நீங்க வரப்படாது."

"எந்த இடத்துக்கு அண்ணா "

"எந்த இடமா இருந்தால், ஒனக்கென்னடா? வேணுமுன்னா, ஒங்கம்மாவ பீச்சுக்கு கூட்டிட்டு போகச் சொல்லுங்க."

சித்தப்பா பிள்ளைகளை அலட்சியப் படுத்தியபடியே செல்வா, இரண்டு எட்டு வைத்தபோது, அருண் அவன் முன்னால் போய் நின்று வழி மறியல் செய்தான். சுபேதா அவன் கையைப் பிடித்து இழுத்தாள் செல்வா, அந்த பிள்ளைகளை முரட்டுத் தனமாக கீழே தள்ளினான். தேன் சிந்தும் வார்த்தைகளால் அவர்களிடம் பேசுகிறவன், இப்போது தேனீ போல் கொட்டினான்.

"சனியன்களே... சொன்னா கேட்க மாட்டீங்க? நான் எங்கே தொலைஞ்சா உங்களுக்கென்ன? என்னோட வரப்படாதுன்னா வரப்படாதுதான்."

அருணும் சுபேதாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்தபடி கீழே கிடந்தார்கள். கடந்த ஒரு வருட காலமாக வார்த்தைக்கு வார்த்தை அண்ணா... அண்ணா..' என்று செல்லம் கொஞ்சும் குழந்தைகள், இப்போது "எம்மா... எம்மா...' என்று ஒருமித்துக் கத்தியபடியே தரையில் புரண்டார்கள். அவனோ, அதைப் பற்றி பொருட்படுத்தாமல், நடையை தொடர்ந்தான். எதிர்த் திசையில் என்னமோ ஏதோ என்று ஓடிவந்த சித்தியை முட்டாக் குறையாக உராய்ந்தபடி, வாசலைத் தாண்டினான். தாவித் தாவி, பாய்ந்து பாய்ந்து ஓடினான்.

பூட்டாமல் ஒட்டிக் கிடந்த இரும்புக் கிராதி கதவுகளை, இரண்டாகப் பிளந்து அந்த பிளவிற்குள் பாய்ந்து, மலைப்படிகள் மாதிரியான வீட்டுப் படிகளில் ஏறி, வராண்டாவை தாண்டி, வரவேற்பு அறையில் குதித்து, மோகனனின் அறை வாசலில் பாதி வழி மறித்துக் கிடந்த கதவை, பிய்த்து விடுவதுபோல் ஒருச்சாய்த்து தள்ளியபடியே, உள்ளே பாய்ந்த செல்வா, பிரமித்தபடியே நின்றான். உதடுகள் ஒட்டாமல், விழிகள் கொட்டாமல், அப்படியே நின்றான்.

அந்த அறையின் கிழக்குச் சுவரில் தேர் வேலைப்பாடுகளைப் போன்ற ஆறடி உயர பீரோ பலகைகள். இவற்றை குறுக்காய் இணைக்கும் மூன்றடி அகல கருஞ் சிவப்பு பலகைகள். இவற்றில் மத்தியில் ஒரு செவ்வக வடிவம். ரேடியோ சி.டி., டேப் ஆகிய மூன்றையும் கொண்ட இசைக்கருவி. இந்த குறுக்குச் சட்டத்திற்கு மேலேயும் கீழேயும் பல்வேறு வகையான இசைக் கருவிகள். சி.டியில் ஒரு பாடல். சந்த நயம் கொண்ட வேக வேகமான சொல்லடுக்குகளை கொண்ட ஊழிக்கூத்து பாடல்.

மோகனன், கால் சலங்கையும், கை மணியுமாய் தாமரைப் பூ போல் விரிந்த தார் பாய்த்த எட்டு முழ தும்பை வேட்டியுடன், இடுப்புக்கு மேலே எதுவும் இல்லாத விரிந்த மார்பும், பரந்த தோளுமாய் ஆடிக் கொண்டிருந்தான். சிவபெருமானின் ஊழிக்கூத்தின் அனந்தங்கோடி பிரமாண திரளாய் ஆடினான். ஊழித் தாண்டவம். காலும் கையும் உரசிக் கொள்கின்றன. உச்சியும் பாதமும் ஒட்டிக் கொள்கின்றன. தலை பம்பரமாய் சுழல்கிறது. பிறகு உடலோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தாவித் தாவி அந்த அறையே ஒரு பிரபஞ்ச கண்ணாடி ஆகிறது. அங்குமிங்குமாய் சுழல்கிறான். ஒரு கை உடுக்கை போல் ஆகிறது. இன்னொரு கையால் அதை அடித்துக் கொள்கிறான். பின்னர் ஒவ்வொரு கையும், ஒவ்வொரு காலோடு பின்னிக் கொள்கின்றன.

அந்த பின்னலிலும் ஒரு மாற்றம். வலது கையும் வலது காலும் பிரிந்து இடது கையும் இடது காலோடும் ஜோடி சேர்கின்றன. இடது காலும் இடது கையும் பிரிந்து வலது கையுடன் இணைகின்றன. ஒற்றைக்கால் உயர்கிறது. மற்றக்கால் துள்ளுகிறது. ஒலி முழக்கமும், உடல் முழக்கமும் ஒன்றிக்கின்றன. தரை தகிக்கிறது. சதங்கை மணிகளில் ஒன்று உருண்டோடுகிறது. கை மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதி கால் சதங்கைகளோடு இணைகின்றன. இசை, சொல்லாகிறது. உடல் வில்லாகிறது. சொற்கள் செல்லரிக்க செல்லரிக்க, வேர்வையில் குளித்த மோகனனின் உடல் மெல்ல மெல்ல நிதானப்படுகிறது. தாங்க முடியாத வேதனையோடு தாவித் தாவி ஆடியவன், இப்போது தரை இறங்கினான்.

செல்வாவை அடுத்து அந்தக் குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் பார்த்த பிறகு நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்ற தத்துவம் அவனுக்கு பரிட்சயமானது. அதற்கு எதிர்ப்பதமாய் ஆகிப்போன தன்னை நினைத்து, தன்னை படைத்த கடவுளை நினைத்து, தன்னை பெற்ற அம்மாவை நினைத்து, தன்னுள் இருந்த நாட்டியக் கலையை ஒரு வடிகாலாக ஆக்கிக் கொண்டிருந்தான். இப்படி அடிக்கடி ஆடுகிறவன்தான். அது, ஈஸ்வரியை பொன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, சிவபெருமான் ஆடினாராமே.... ஆனந்தக்கூத்து, அப்படிப்பட்ட நாட்டியம். ஆனால், இன்றைக்கோ அண்டங்கோடி அண்டங்களும், அண்ட சராசரங்களும் சுயம் சுருங்கி ஒரு அணுவுக்குள் அடங்கியது போன்ற ஊழிக்கூத்து.

மோகனனை பயபக்தியோடு பார்த்தபடியே நின்ற செல்வாவை, மோகனன், அப்போதுதான் பார்த்தான். நிதானத்திற்கு வந்து கொண்டிருந்த பாத குலுக்கல்களுக்கு இடையே, கோபம் கோபமாய் கேட்டான்.

"முட்டாள்... மூடா... என் தங்கை வருவது வரைக்கும், இந்தப் பக்கம், நீ, தலை காட்டப்படாதுன்னு ஒனக்கு எத்தன தடவடா சொல்றது...?"

"நான் ஒன்றும் ஒன்னை பார்க்க வரல... கவிதாவுக்கு, நான் முட்டாள் தனமா எழுதுன லவ் லெட்டரை வாங்கிட்டுப் போக வந்தேன். அதை வைத்து, நீ எப்ப வேணு-முன்னாலும் என்னை பிளாக் மெயில் செய்யலாமே...''

"அறிவு கெட்ட ஜென்மமே... அதோ அந்த ரேக்குல இருக்குது பார்.... அதுதான் உன்னோட காதல் லெட்டர். எடுத்துக்கிட்டு ஓடுடா ...”

சதுரமாய் மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை, செல்வா ஓடிப்போய் எடுத்துக் கொண்டான். அவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை . அவன் கைப்பட எழுதிய கடிதம்தான் செல்வா, அதை பிரித்து பார்த்து அதை படித்து முடிப்பது வரைக்கும் காத்திருந்த மோகனன், ஒரே தாவாய் தாவி, செல்வாவிடமிருந்த கடிதத்தை பிடுங்கி, சுக்கு நூறாய் கிழித்து அவன் தலை மேலேயே போட்டுவிட்டு கத்தினான்.

"கத்துக்குட்டி பையா! ஒனக்கு எதுக்குடா காதலு? அந்த லெட்டர நான் எப்படிடா வெளில் காட்ட முடியும்? அப்படி காட்டினால், என்னோட சிஸ்டர் எதிர்காலமும் பாதிக்கும் என்கிறது எனக்குத் தெரியாதா? அவளும் இந்த மண்ணாங்கட்டி காதலில் சம்பந்தப்பட்டிருப்பது, இந்த கடிதத்திலேயே தெரியுதடா... நல்லா கேளுடா... என் தலையில் நானே மண் அள்ளி போட்டிக்கிட்டேன். அதேசமயம் என் தங்கை தலையில் மண் அள்ளி போடுற அளவுக்கு நான் மோசமானவன் இல்லடா... திரும்பிப் பாராமல் ஓடுடா..."

"ஒன் தலையில் நீயோ யாரோ அள்ளிப் போட்ட மண்ணு என் தலையிலயும் விழுந்துட்டுதே... விழ வச்சுட்டியே.."

"ஒன் தலையில் விழுந்தது தூசி தாண்டா ..."

"தூசியோ தும்போ அதை என்னால் மறக்க முடியலியே."

மோகனன், மெளனமாய் தலை குனிந்தான். குனிந்த தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். கண் வழி நீரை துடைத்துக் கொண்டான். அப்படியே அசமந்த நிலையில் நின்றான். செல்வா, அவன் தலையை நிமிர்த்தினான். ஆறுதல் சொன்னான்.

"நீ நல்லவன்தான் ஆனால் இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் நெனக்கல.."
மோகனன், அவனை தள்ளி விட்டபடியே கத்தினான்.

"இந்தா பாரு பையா... இந்த தொடுற வேலைய என்கிட்ட வச்சுக்காத...”

"என்னை இவ்வளவும் செய்த ஒன்னை, தொடுறதுக்கு உரிமை இல்லியா?"

"நான் சொல்றத நல்லா கேளு செல்வா! உனக்கும் என் தங்கைக்கும் இடையில் நான் குறுக்காய் நிற்க விரும்பல..."

"அவளுக்கு ஒன்னோட இந்தப் பழக்கம் தெரியுமா?”

"தெரிஞ்சிருக்கணும். ஒரு தடவை ஹோமோ பயல்களையும், லெஸ்பியன் பெண்களையும் நிற்க வைத்துச் சுடணும்முன்னு என்னை சாடை மாடையாக பார்த்துக்கிட்டே, யார் கூடவே டெலி போன்ல பேசினாள் இப்ப அவள் என்னை திட்டியது முக்கியமில்லை . அவள் தான் முக்கியம் நீ அவளுக்கு..... அவள் உனக்கு எனக்கு பம்பாய் .."

"அப்படின்னா ."

"ஒன்னை, அந்த சொரிப்பயல் வெள்ளையனிடமிருந்து நான் காப்பாற்ற முயற்சி எடுத்ததை, அவனுக்கு எவனோ போட்டு கொடுத்துட்டான். நேற்று நள்ளிரவிலிருந்தே, என் வேலை போயிட்டுது... பதவி போயிட்டுது... ஆயிரக் கணக்கில டாலர் போயிட்டுது... ஆனால், இதுவும் நன்மைக்குத்தான். நேற்றே என் பேர்ல ஒரு லெட்டர் இங்கே கிடந்தது. எங்களுக்குன்னு பம்பாயில் ஒரு சங்கம் இருக்குது.. ஒரு பத்திரிகையும் வெளி வருது.... இப்போ இந்த சங்கத்தை அகில இந்திய சங்கமாய் ஆக்கப் போறோம். இதுக்கு என்னை பொதுச் செயலாளரா போட்டிருக்காங்க. ஒவ்வொரு மாநிலமும் சுற்றலாம். சங்கத்தின் வளர்ச்சிக்காக என்னோட நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும்.... யார் கண்டா ? நான் ஒருவேளை அகில இந்திய வி.ஐ.பி.யாக்கூட ஆகலாம். இல்லன்னா தெருவோர லோலாயியாகவும் திரியலாம்."

"இங்கே வருவதாய் இருந்தால், குறைந்தது ஐந்து வருஷம் ஆகும். அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்கிற செய்தி வந்த பிறகுதான் வருவேன். ஒரே ஒருநாள் உங்களுக்குத் தெரியாமலே தலை காட்டிட்டு ஓடிப் போயிடுவேன். சரி... மைடியர் பிரதர் இன் லா.... கவிதாவை கை விட்டுடாதேடா... ரொம்பவும் ரோசக்காரி... எவ்வளவுக்கு எவ்வளவு ரோசம் உண்டோ .... அவ்வளவுக்கு அவ்வளவு பாசம் உள்ளவள். என்னை அவள் உன்கிட்ட திட்டுனது கூட பாசத்தின் வெளிப்பாடுதான். எனக்காக அவள் அழுதுயிருக்கிற கண்ணீர் ஆயுள் முழுதுக்கும் போதும்... சரி கெட் அவுட் ப்ளீஸ்..."

"பாவம்... என்னால நீங்க போறத நெனத்தால்... மனசுக்கு கஷ்டமா இருக்குது ஸார்..."

"யாருடா ஸார்....” "ஸாரி... ஏன் மச்சான்... நீங்க இங்கேயே இருக்கப்படாதா? ஏன் பம்பாய்க்கு ஓடுறே..."

"ஒங்களுக்காக மட்டும் ஓடலடா... டூப்ளிகேட் அம்மாவுக்காக..... ஒரிஜினல் அப்பனுக்காக.... என் பிழைப்புக்காக..... ஓரினச் சேர்க்கைக்காரர்களை உதா-சீனப்படுத்தும் இந்த தமிழ்நாட்டுக்காக... கர்ணனை எப்படி அர்ச்சுனன் தன்னந்தனியா கொல்லலியே... அப்படி, ஒன்னாலயோ கவிதாவாலயோ மட்டும் நான் ஓடலே... அதனால் என்னை தியாகியாய் ஆக்கிவிடாதே..."

செல்வா, மோகனனின் கைகளை பற்றிய படியே ஏதோ ஒரு வாசனையை உணர்ந்தான். அது வந்த மேற்கு திசையை நோக்கினான். சன் மைக்கா மேசையில் செண்பக, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் வடிவங்களில் ஒரே விதமான மூன்று பொருட்கள் செல்வா, சந்தேகம் கேட்டான்.

"இது வந்து.... அதாவது..."

செல்வாவின் பார்வை அந்த பொருட்கள் மீது போனபோது, மோகனன் பதிலளித்தான்.

"உன் யூகம் சரிதான். இந்த மூன்றும் வெவ்வேறு வாசனையைக் கொடுக்கிற டீலக்ஸ் நிரோத்துகள் புத்தம் புதியவை. இம்போர்ட்டட் சரக்குகள். வேணுமுன்னா தொட்டுப் பார்."

செல்வா, அந்த மூன்றில் மல்லிகை நிறமும், அதே வாசனையையும் கொண்ட உறையை எடுத்தான். மூக்கில் வைத்தான். சுவாசம் சுவாரசியமானது. மூளைக்குள் அந்த வாசனை பதிந்தது. உடல் முழுக்க வாசனை மயம். செண்பகத்தை எடுக்கப் போனான். அதை தடுக்கப் போனான் மோகனன். கையும் கையும் உரசிக் கொள்ள, உடலும் உடலும் மோதிக் கொண்டன. மோகனன் இப்போது ஆளே மாறிவிட்டான். உருவம் மாறாமலேயே குணம் மாறியது. தங்கை மீது வைத்திருந்த பாசம், தணிந்தது. தூக்குத் தண்டனை கைதியின் கடைசி ஆசை போல் துக்கக் குரலில், தன்
ஆசையை வெளிப்படுத்தினான்.

"மைடியர் பிரதர் இன் லா...! உன்கிட்ட இருந்து ஒரு கடைசி பரிசு வேணும். ஆமாம் டியர். இந்த நிரோத்தை போட்டுக்கிறேன். இதனால் உன் வாய்க்கு சேதாரம் வராது. வயிறு வாந்தியாகாது. எனக்காக கடைசி தடவையாய், உன் ஒத்துழைப்பை கேட்கிறேன். சத்தியமாய் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலே இந்த வீட்டில் நான் இருந்தால் நீ ஒன் செருப்பாலேயே என்னை அடி ஒன் லி ஒன் டைம்... இப்படி டெம் டேஷன் வருமுன்னுதான் உன்னை இந்த வீட்டுப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்கு, நான் உத்தரவு மாதிரி போட்டேன். ஆனாலும், நான் வற்புறுத்தலப்பா... நம்மோட நிரந்தர பிரிவுக்கு பரிசாத்தான் கேட்கிறேன்."

செல்வா, மோகனனையே பார்த்தான். நேற்றிரவு, அவன் தன்மீது காட்டிய பரிவு ஒரு தாட்சண்யமானது. அதோடு, அந்த வெள்ளையன் மேல் புரண்டதில், கிடைக்காத சுகம் ஒன்று கிடைத்ததும் நினைவுக்கு வந்தது.

செல்வா, அந்த செண்பக வாசனை உறையை எடுத்துக் கொண்டான். பிறகு, ரகசிய பேசுவதுபோல் பேசினான்.

"முதலில் நீ - அப்புறம் நான்.... ஆனாலும் வேற மாதிரி..."

அவர்கள் இருந்த அறையின் திறந்த கதவு, ஒரு சின்ன தீண்டலில் வெட்கப்பட்டது போல் வாசலோடு ஒட்டிக் கொண்டது.
---------------
அத்தியாயம் 12


கவிதா, வந்ததும் வராததுமாக வாக்கிங்' என்ற சாக்கில், அந்த தெருவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். அப்பாவும் அம்மாவும் தன் கண்ணெதிரில் கொஞ்சுக் குலாவிய தணிக்கையற்ற காட்சிகளை செல்வாவிடம், சொல்லிச் சொல்லி சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அம்மாவின் பக்கத்தில் தன்னையும், அப்பாவின் பக்கத்தில் அவனையும் கற்பனை செய்து கொண்டதை சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது, அவள் முகம் சிவந்தது. சொல்கிறோமோ இல்லையோ, உடனடியாக அவனை இப்போது பார்த்தாக வேண்டும்.

பொதுவாக, நைட்டியுடன் காலையிலும் மாலையிலும் அந்தத் தெருவில் நடைபோடுகிறவள், அவன் வந்தால் அவனுடன் சேர்ந்து, போவதற்காக பாவடை தாவணி மாதிரி தனித்தனி நிறத்தோற்றம் காட்டிய கீழே வெளிர் மஞ்சளும், மேலே மஞ்சள் சிவப்புமான புடவையில், இரண்டு சக்கர வாகனத்தை காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அங்குமிங்குமாய் சுற்றினாள். "ஏம்மா! அல்பாய்சு” என்று சொன்ன வேன் டிரைவர், அப்படி சொல்லப்பட்டவள் கவிதா என்பதை உணர்ந்ததும், "மன்னிச்சுடுங்கம்மா" என்று சொன்னான். அவன் சொன்னது காதில் ஏறாமல் நடந்து கொண்டிருந்த கவிதா, ஏதேச்சையாய் வேனுக்குள் எட்டிப் பார்த்து அதிர்ந்து போனாள். அந்த வாகனத்திற்குள் அருணும், சுபேதாவும் இருந்தார்கள். காக்கா பூக்களுக்குள் இருக்கும் வெள்ளை மொட்டுக்களாக பிள்ளைகள் பெரிய மனித தோரணையில் முதுகுச் சுமையோடு உட்காந்திருந்தன.

வேன், அங்கே நின்ற நேரத்திற்கு ஈடு கட்டுவதுபோல் பாய்ந்து பறந்தது. கவிதா அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டாள். ஒருவேளை செல்வாவை, அவன் சித்தி துரத்தியிருப்பாளோ? இவனே ஒருநாள் தன்னிடம் சொன்னதுபோல் எங்கேயாவது ஓடிப் போய் இருப்பானோ? அல்லது உடல் நலம் சரியில்லாமல்....

கவிதாவால், பொறுக்க முடியவில்லை. உடனடியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் சஞ்சலப்படுகிற மனம் அந்த மனத்துக்காரனை அல்லது காரியை கோழை போல் சித்தரிக்கிறது. பிறகு அந்த சஞ்சலம் உச்ச கட்டத்திற்கு போகும்போது, அதுவே ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்துவிடுகிறது அதற்குப் பிறகு எண்ணிப் பார்ப்பது என்பது பொதுவாக இல்லை. இந்த மனோதத்துவ விதிப்படியோ என்னமோ, செல்வா வாடும் அல்லது வாட்டப்படும் வீட்டிற்கு ஏதாவது ஒரு சாக்கில் போயாக வேண்டும். போவது நிச்சயம். சாக்கு என்னவென்றுதான் புரியவில்லை.

பொய் வேடம் போடும் மெய்மைக்கும், சகவாச தோசத்தில் "புரைதீர்ந்த" பொய், வாங்காமலே வந்துவிடுகிறது. அப்பா, அம்மாவை முந்திக்கொண்டு ஒருநாள் முன்னதாக வந்த அவள், இப்போது வீட்டிற்குள் ஓடினாள். பள்ளியில் வகுப்பு பரீட்சை என்று தந்தையின் அனுமதியோடு வந்தவள், அங்கு பிரிட்ஜியில் வைத்தியிருந்த பால் பாக்கட்டுகளை வெயிலில் போட்டாள். அது ஈரம் உலர்வது வரைக்கும் காத்திருக்க முடியாமல், தவித்தாள். கூடவே ஒரு கற்பனை. இன்று வீட்டில் யாருமில்லை. இன்றைக்கு செல்வாவை வீட்டிற்குள் அழைத்து, ஆசை தீராமலே அணைத்து, சுவை தீராமலே பேசி, தனது டூர் அனுபவங்களை சொல்ல வேண்டும். அதற்காகத்தான் முந்திக் கொண்டு வந்தவள்.

அரைமணி நேரம் கழித்து, பால் பாக்கட்டுகள் கையை குளிர்விக்காமல் சூடாக்கியதில், அவள், குளிர்ந்து போனாள். ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தாள். அது கண்ணாடி பளபளப்பில் சூரிய ஒளி கற்றைகளை பிரதிபலித்து, அதன் மேலுள்ள ஆப்பிள் பழங்கள், சப்போட்டா பழங்களில் மின்னி, அதிலிருந்த தூக்குப் பையில் ஊடுறுவியது.

கவிதா, காலிங் பெல் குரலோடு ஆன்ட்டி- ஆன்ட்டி” என்று சொந்தக் குரலையும், கொடுத்தபோது, தாளிட்ட கதவு தானாய் திறந்தது. சலிப்போடு வெளியே வந்த சித்திக்காரி லட்சுமி, அவளை பார்த்ததும், சிறிதுநேரம் அப்படியே நின்றாள். வாராத மாமணி வந்ததுபோல், வாயகல நின்றவள், பிறகு வாயெல்லாம் பல்லானாள். உணர்வுகளுக்கு வார்த்தைகளால் ஒலி வடிவம் கொடுத்தாள்.

"என் கண்ணையே நம்ப முடியவில்லையே! ஒரு நாளும் வராத திருநாளா வந்திருக்கே? உன் கால் படுறதுக்கு இந்த வீடு பாக்கியம் செய்திருக்கு. உள்ளே வாம்மா..."

கவிதா, உள்ளே வந்தாள். சித்தி, தூசியும் தும்புமாய் கிடந்த ஒரு நாற்காலியை , தனது முந்தானையை துடைப்பமாக்கி, துடைத்துவிட்டு, கையும் ஓடாமல், காலும் ஓடாமல் நின்றாள். பெரிய இடத்துப் பெண் - இவள் வீட்டுக்காரரை பார்த்தாலேயே தொடை நடுங்க வைக்கும் அந்தஸ்திலிலுள்ள ஒரு பெரிய அதிகாரியின் மகள். சித்திக்காரி, வார்த்தைகள் வராமல் உளறிக் கொட்டினாள்.

"நீ... அய்யய்யோ தப்பு - தப்பு - நீங்க வந்தது எங்க வீட்டுக்குள்ள லட்சுமியே வந்தது மாதிரி இருக்கும்மா... என்னம்மா விஷயம்..."

லட்சுமி என்றதும், சிறந்த நடிகையான லட்சுமியை மனதில் பதிவு செய்தபடியே, கவிதா சத்தம் போட்டே பேசினாள். அந்தச் சத்தம், அவனை அங்கிருந்தால் வெளியே இழுத்துக் கொண்டு வரும் அளவிற்கு பெரிதாக இருந்தது. சாடை மாடையாக வீட்டுக்கு வரும்படி, அவனுக்கு சைகை செய்துவிட்டு போய்விடலாம். சித்திக்காரி, அதிசயப்பட்டு கேட்டாள்.

"தட்டும்... என்னம்மா இதுல்லாம்?"

''ஒருத்தர் வீட்டுக்கு முதல் தடவையா போகும் போது பழங்களோட போகணுமுன்னு அப்பா சொல்வார். இது கொடைக்கானலில் வாங்கினது - எடுத்துக்குங்க ஆன்ட்டி.."

லட்சுமி எடுத்துக்கொண்டே கேட்டாள்.

"இந்த தூக்குப் பையில் என்னம்மா?"

"ஒரு வாரமா வெளியூர் போயிருந்தோமா... எப்படியோ, கரண்டல ஒரு பேஸ் போய் பிரிட்ஜ் கரண் கணைக்ஷன் இல்லாமல் கெட்டுப் போச்சு. அதனால், இந்த தூக்குப் பையில் இருக்கிற, இந்த பால் பாக்கட்டுகளை, உங்க பிரிட்ஜ்ல வைத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்."

சித்திக்காரி, தனது ஏமாற்றத்தை கை சொடுக்காகவும், அவமானத்தை கண் கலங்கியும் காட்டினாள். அந்தத் தட்டை கவிதா, தன் வீட்டிற்கு தானமாய் கொண்டு வந்ததாய் நினைத்ததில் ஒரு ஏமாற்றம். அதுகூடப் பெரியதாக தெரியவில்லை . பிரிட்ஜ் இல்லாத ஏழ்மையில் ஒரு அவமானம். தட்டுத் தடுமாறி பேசினாள்.

"ஸாரிம்மா... எங்க வீட்டுல பிரிட்ஜ் வாங்கி வைக்குற நிலமையில் நான் இல்ல... வாங்கக்கூடிய அளவுக்கு சம்பளம் வரத்தான் செய்யுது. ஆனால்... ஊர்ல இருந்து, தூரத்து உறவையும், பக்கத்து உறவையும் சொல்லி, இங்கே டேரா போட்டு, இந்த வீட்டையே சாத்திரம் சாவடி ஆக்கிட்டாங்க. அதோட அவருக்கு சாமர்த்தியம் அவ்வளவு பத்தாது."

கவிதா, இன்னும் அதிகமாய் சத்தம் போட்டே பதிலளித்தாள். செல்வா , இருந்திருந்தால் இந்நேரம் வந்திருப்பார். அவர் எங்கே போனார் என்பதை எப்படி கேட்பது? இவள் தயக்கத்தைப் போல, சித்திக்காரிக்கும் ஒரு தயக்கம் பக்கத்திலிருந்து கொண்டே இப்படிச் சத்தம் போட்டு பேசுகிறாளே, ஒருவேளை, அவளிடம், தன்னை யாராவது செவிடு என்று சொல்லியிருப்பார்களோ? என்ற அல்லாடல். எல்லாவற்றையும் விட, கேவலம் தன் வீட்டில், ஒரு பிரிட்ஜ் வாங்க முடியவில்லையே என்ற கொதிப்பும் தவிப்பும் கூடிய பேரவமானம். இதைப் புரிந்த கொண்டது போல் கவிதா, தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் தோளில் கை போட்டாள். பிறகு, அவளை மாமியாராகவும், தன்னை மருமகளாகவும் பாவித்துக் கொண்டு, மாமனாருக்கு வக்காலத்து வாங்கினாள்.

"மாமாவை நினைத்து நீங்க பெருமைப்படணும் அத்தே..."

ஆன்ட்டி, அத்தையானதில், அவள் அர்த்தம் கண்டுபிடித்து விடக்கூடாதே என்று ஆரம்பத்தில் பயந்த கவிதா , அவள் முகம் மரப்பொம்மையாய் இருப்பதைப் பார்த்ததும், இவளுக்கு தத்துவ உபதேசம் செய்ய தோன்றியது.

"மாமா... ஆயிரத்துல ஒரு அரசு ஊழியர் ஆன்ட்டி அவரோட ஆபீஸ் ஒரு பணச்சுரங்கம். அங்கிள் நினைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆயிரமாய் அடிக்கலாம். பிரிட்ஜ் என்ன... வாஷிங்மெஷின், ஏ.சி., கம்யூட்டர், கார் - இப்படி "கைண்டா " வாங்கலாமாம். இவர் கண் பார்வைக்கு எத்தனையோ பேர் தவம் இருக்காங்களாம். எங்கப்பா சொல்வாரு... அதுவும் தலை குனிஞ்சுக்கிட்டே சொல்வாரு..."

"நீதான் மெச்சுக்கணும். ஆனாலும், எங்க வீட்டு மிஸ்டர் நேர்மையானவர் என்கிறதுல எனக்கும் பெருமைதாம்மா... எனக்கும் ஒரு பெண் இருக்காள்... உன்னை மாதிரியே வளரப்போறாள். இதையும் நான் நினைச்சுப் பார்க்க வேண்டியதிருக்கே. அதோட பெரிய இடத்துப் பெண்ணான உன்னை, ஒரு உருப்படியான சோபா செட்டில் உட்கார வைக்க முடியலையேன்னு ஆன்ட்டிக்கு ஒரு வருத்தம்."

"எளிமையாய் இல்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது ஆன்ட்டி "

சிறிது இடைவெளி மௌனம்.

இந்த இடைவெளியில் இரவு வீடு திரும்பும் கணவனிடம் கொடுக்க இருக்கும் கோரிக்கை பட்டியலில் சில அயிட்டங்களை கூட்டிக் கொண்டாள் சித்திக்காரி. கவிதா , சுற்றி வளைத்து விசயத்திற்கு வந்தாள்.

"ஒங்க வீட்டுப் பொருளை ஏதாவது பிரிட்ஜ்ல வைக்கணு முன்னா... யார் கிட்டயாவது கொடுத்தனுப்புங்க ஆன்ட்டி எங்க பிரிட்ஜ் இன்னும் ஒரு மணி நேரத்துல ரிப்பேராகி விடும். எங்கப்பா, டூர்ல இருந்தே, எலக்ட்ரிசிட்டி போர்டு சேர்மன் கிட்ட பேசிட்டாரு..."

இருவர் சிந்தனைகளும், தத்தம் உள் உலகிற்குள் சஞ்சரித்த போது, அதை கலைப்பதுபோல் மேற்கு அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்து எட்டிப்பார்த்த செல்வாவைப் பார்த்து, சித்தி முகம் சுழித்தாள். கவிதா, சித்திக்காரிக்கு தெரியாமல், அவளுக்கு பின்னால் நகர்ந்து கொண்டு, தலைக்கு மேலே கையை வைத்து, அவனுக்கு சமிக்ஞை செய்தாள். செல்வா, கவிதாவை பார்த்ததுதான் தாமதம். ஏற்கெனவே நொந்து போயிருந்த கதவை படாரென்று சாத்திக்கொண்டான். சித்திக்காரி, கவிதாவிடம் ஒருபாடு அழுதாள்.

"என் வீட்லேயே இருந்துக்கிட்டு, எப்படி என்னை மூஞ்சில அறையறது மாதிரி சாத்துறான் பாரு... பால் கொடுக்கிற மாட்ட, பல்ல பிடித்து பார்க்கிறான். நீ, பெரிய இடத்துப் பெண்ணு... ஆனாலும், எப்படி ஒரு ஆம்பள வரான்னு என் பின்பக்கமா மறஞ்சிக்கிடறே - இதுக்குப் பேர்தாம்மா வளர்ப்பு முறை...”

அந்தக் கதவுச் சத்தம், கவிதாவையும் பேயாய் அறைந்தது. ஆனாலும், ஒரு ஆறுதல். அவன் லுங்கியில் இருப்பதை பார்த்துவிட்டு, தனது சமிக்ஞையினால் அவன் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு சிறிது காலம் தாழ்த்தி வருவான் என்று அனுமானித்தாள். அவர் சட்டை தொலளதொளப்பாய் இருக்கிற பார்த்தால், என்னை பார்க்காம இளைச்சிட்டார் போலிருக்கே.... சாதாரண இளைப்பல்ல... பாதி இளைப்பு... முக மெலிவில் பற்கள் தான் பெரிதாய் தோன்றின. அவள் கிள்ளி விளையாடிய கன்னங்கள், கிண்ணக் குழிகளாய் தோன்றின. அந்தச் சமயத்தில், அவன் கௌரவத்தில், தன் வீட்டு கௌரவமும் இருப்பதை புரிந்து கொண்ட சித்தி, சிறிது விட்டுக் கொடுத்துப் பேசினாள்.

"ஒரு வாரமாத்தான் இப்படி எதையோ பறி கொடுத்தது மாதிரி இருக்கான். மற்றபடி, நல்ல பையன்தான். இவருக்கு கூடப்பிறந்த அண்ணன் மகன். நான் இவனை என் சொந்த மகன் மாதிரிதான் நினைக்கேன். ஆனால், அவன்தான் இந்த ஒரு வாரமா."
கவிதா, நகைத்தை கடித்தபடியே மெல்லச் சிரித்தாள். அவர் தன்னால் தான் அப்படி இளைத்துப் போயிருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போனது தப்புத்தான். ஆனால், கதவு மூடித்தானே கிடந்தது. என் மீது இருக்கும் உரிமையான கோபத்தை, இப்படி கதவைச் சாத்தி காட்டுகிறாரா... அல்லது தனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு சித்திக்கு தெரியக்கூடாது என்பதற்காக, அப்படி கதவை அறைந்தாரா? எப்படியோ, இப்போ பேண்ட், சட்டை போட்டுக் கொண்டிருப்பார். சீக்கிரமாய் தெருவிற்கு வருவார். என்னைப் பார்ப்பதற்காகவே அங்குமிங்குமாய் நடப்பார். ஆசாமியை அலைய விடக்கூடாது. வாசலிலேயே வரவேற்று, வீட்டுக்குள் கடத்த வேண்டும்.

"நான் புறப்படுறேன் ஆன்ட்டி "

"அதுக்குள்ள என்னம்மா அவசரம்? ஒரு ஜுஸ் கொண்டு வாரேன்"

கவிதாவின் பதில் சத்தம் வலுத்தது.

"நான் வீட்ல தனியாத்தான் இருக்கேன் ஆன்ட்டி... ஒரு பிரண்ட் வருவாங்க... நல்லா நேரம் போகும். சீக்கிரமா வாங்க..."

"இப்பவே வேணுமுன்னாலும் வாரேம்மா. ஒன் வீட்ட வெளியிலதான் பார்த்திருக்கேன்."

கவிதாவின், புயல் சத்தம் பூச்சத்தமானது.

"ஸாரி ஆன்ட்டி சீக்கிரமா போகணும்' என்கிறத, வாங்கன்னு என்று சொல்லிட்டேன். வீட்ல சாமான்கள் தாறுமாறா கிடக்குது. நாளைக்கு நானே வந்து உங்கள் கூட்டிட்டுப் போறேன். நான் வாரேன் ஆன்ட்டி ...”

கவிதா, அந்த வீட்டு உள்ளோட்டத்தை திரும்பித் திரும்பி பார்த்தபடியே, வெளியே வந்தாள். சொந்த வீட்டின் இரும்புக் கிராதிகளில் சாய்ந்தபடியே நின்றாள். கண்கள் மட்டும் அங்குமிங்குமாய் சுழன்றன. அவன் டிரெஸ் செய்வதற்கு பதினைந்து நிமிடம் நேரம் கொடுத்து நின்றாள். சித்தியிடம், வாங்கிக் கட்டிக் கொள்வதற்கு இன்னொரு பத்து நிமிடம். ஒருவேளை அவன் தன்னோடு அதிக நேரம் தங்கவேண்டும் என்பதற்காக, அவன் சாப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கினாள். பிறகு நகத்தை கடித்தாள் இனிமேல் ஒருவேளை குளிக்கப் போகிறாரோ என்று நேர ஒதுக்கீடு செய்தாள். சித்தி, இன்னும் சமையலை முடித்திருக்க மாட்டாள் என்பதற்காக சிறப்பு நேர ஒதுக்கீடு வழங்கினாள் ஆகக்கூடி இரண்டு மனிநேரம் வரை கத்திருந்தாள். வீட்டுக்குள்ளும் போக முடியாமல், வெயில் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாகவும் நடக்க முடியாமல், ால் வலியை சரிசெய்ய, அதை சிறிது முன்னால் நீட்டியபடியே கம்பிக் கிராதிகளில் சாய்ந்தாள். பிறகு, குறுக்கும் நெடுக்குமாய் கோணல் மாணலாய் நடந்தாள்.

அரைமணி நேரத்திற்குள், அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் ஆடை அலங்காரத்தோடு எதிரே வந்து கொண்டிருந்தான். கவிதா, அக்கம் பக்கம் பார்க்காமலே ஓடினாள். அவனை நோக்கி பறப்பது போல் கைகளை ரெக்கையாக்கிக் கொண்டாள். ஒரே நிமிடம். அவள் முகம், அமாவாசையாகியது. கூனிக்குறுகிப் போனாள். தலை தானாக கவிழ்ந்தது. செல்வா, அவளைப் பார்த்து திடுக்கிட்டு, ஒற்றைக் காலில் நின்றான். மோகனனின் பாணியில் அதே ஒற்றைக் காலை திருப்பி, வீட்டின் வெளி வாசல் கதவை மோதி, தன் வீட்டிற்குள் மறைந்து விட்டான்.

கவிதாவுக்கும், சுயமரியாதை கோபமானது. அந்த சுயத்தில், அவளுக்கு, அவள் கொண்ட காதலை தொடரவேண்டும் என்பதைவிட, அவனது பாரா முகத்திற்கு காரணம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது. சொந்த அம்மாவே தன்னை எப்போது தொலைத்தாளோ, அப்போதே, எல்லோருடைய புறக்கணிப்பிற்கும் ஆயத்தமாக வேண்டுமென்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறவள். அவன் செய்த காரியத்தைவிட, அதற்கான காரணமே முக்கியமாய் பட்டது.

ஏதோ வெறி உந்த, அவன் போன வீட்டிற்குள்ளேயே போனாள். சித்தி எதிர்பட்டால் அதற்குரிய காரணத்தை சொல்வதற்கும் ரெடியாகி விட்டாள். செல்வா, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நாட்டியத்தை தொலைக்காட்சியில் பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பரவசத்திற்குரியவன், அந்த தொலைக் காட்சி நிகழ்ச்சியில், ஏற்கெனவே நாட்டியப் பதிவு செய்த அவள் அண்ணன் மோகனன். பம்பாய்க்கு திரும்பாப் பயணமாக போவதாய் அவள் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டான். உன் உறவு தொடரட்டும்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். அண்ணனாகிய தன்னை அவள் புறக்கணித்து விடக்கூடாதே என்று அர்த்தத்தில், அப்படி அவன் எழுதியதாக, இவள் அர்த்தப்படுத்திக் கொண்டாள்.

கவிதா, இருமினாள்; செருமினாள் பின்னர், அந்த வீடு முழுவதையும் திருட்டுத் தனமாக பார்த்தபடியே, அவன் முடியை பிடித்து இழுத்தாள். செல்வாவின் முகம் மேல்நோக்கித் திரும்பியது. அவளைப் பார்த்ததும், அதே முகம், கால் கைகளை இழுத்துப் பிடித்து தரையில் நேராக நிறுத்தியது. வலது கை ரிமோட் கட்டுப்பாட்டு கருவியின் சிவப்பு பித்தானை அழுத்தியது கலர் கலரான அந்த வண்ணப் பெட்டி வெறுமையானது.

செல்வா , அவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த அறையின் குறுக்கு வெட்டை நீளவாக்கில் நடந்து அறைக்கதவை உடையும்படி சாத்திக் கொண்டான். இதற்குள், சமையலறைக்குள் தொலைக்காட்சியின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை யென்றாலும், பாடலை ரசித்துக் கொண்டிருந்த சித்திக்காரி, அது நின்று போனதும், காரணம் கண்டறிய வெளியே வந்தாள் கவிதாவை, மீண்டும் பார்த்த மலைப்பில் நின்றாள் கவிதா, தனது வருகையின் நோக்கத்தை திசை திருப்பிச் சொன்னாள்.

"எனக்கு போர் அடிக்குது ஆன்ட்டி எதிர்பார்த்த பிரண்ட் வர்ல. வரணுமுன்னு அவசியமும் இல்ல... நீங்க வாங்க ஆன்ட்டி ."

"செத்தே இரும்மா. இந்த பேயனுக்கு பொங்கிப் போட்டுட்டு வாறேன். தான் பார்க்காத டிவி. யை, பார்க்க முடியாட்டாலும், காதால் கேட்கப்படாது என்கிற ஆங்காரத்துல ஆப் செய்துட்டு உள்ளே போயிட்டான் பாரு.. இவனல்லாம் உருப்படுவானா?. நீயே
சொல்லும்மா....”

கவிதா, விரக்தியின் விளிம்பில் நின்றாள் ஆகையால், விம்மலோ, தும்மலோ எதுவும் ஏற்படவில்லை. 'நீங்க ஆற அமர என் வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி நான், உங்களுக்காக காத்திருக்கேன்' என்றாள் பிறகு, அந்த வீட்டையும், வீட்டிற்குள் அவன் இருக்கும் அந்த அறையையும் திரும்பிப் பார்க்காமலே ஒரே போக்காய் வெளியேறினாள்.
-----------------
அத்தியாயம் 13


செல்வா, குமைந்து கொண்டிருந்தான் இதயம் நெருப்பு பற்றியது போல் புகைந்து கொண்டிருந்தது. போர்வையால், உச்சி முதல் பாதம் வரை, அந்த வெயில் நேரத்திலும் இழுத்து மூடினான். இரு கரங்களையும் இடுப்போடு ஒடுக்கி, முடி களைந்தும், மூளை குழம்பியும் குப்புறப் படுத்துக் கிடந்தான் இந்நேரம், அவன், குழந்தைகளின் ஹோம் வொர்க்கிற்கு உதவி செய்திருக்க வேண்டும் ஆனாலும், அவன் உடல், அவர்களுக்கு உதவி செய்தது அவனுக்கு இரு பக்கமும் இருந்த குழந்தைகள், அவன் முதுகிலும், பிட்டத்திலும் நோட்டுப் புத்தகங்களை வைத்து, பென்சிலால் எழுதுவதும், ரப்பரால் அழிப்பதுமாய் இருந்தன அருண் சுபேதாவிற்கு திடீர் ஆசிரியரானான். அவள் தலையில் அடிக்கடி குட்டினான். இவளும் ஆசிரியை குட்டை விட, அது லேசாக இருந்ததால், அண்ணன் குட்டை பொறுத்துக் கொண்டாள்

செல்வாவிற்கும் ஒரு சுக உணர்வு. பசு மாட்டின் மேலிருந்தபடி, அதன் உண்ணிகளை கொத்தித் தின்னும் காகங்கள், அந்த மாட்டிற்கு கொடுப்பது போன்ற சுகம். ஆனாலும், மரக்கட்டையாய் கிடந்தான். உடல் இயங்கவில்லையானாலும், மனமும் மூளையும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன இருபக்கமும் அடிபட்டு, மனச்சாட்சி மௌனச் சாட்சியானது.

நேற்று, கவிதாவிடம் அவன் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனம் என்பது அவனுக்கே தெரியும், ஆனால், அவனது, காட்டுமிராண்டியான, செல்லத்தனமான மோகனனை, அவனால் மறக்க முடியவில்லை. அண்ணன், தங்கை மாறி மாறி வந்தார்கள். முதல் தடவை வாந்தி எடுத்தவனுக்கு, அந்த வாசனை மிக்க டீலக்ஸ் உறை இப்போதும், கிளுகிளுப்பூட்டும் வாசனையாக வந்தது. உடலெங்கும், உடலை லேசாக்குகிறது. அதோடு, தான் பயன்படுத்திய அந்த செண்பக வாசனை டீலக்ஸையும் நினைத்துக் கொண்டான் தன்னைவிட உருவத்திலும், வயதிலும் பெரிய மோகனனை, பாசிவ் பார்ட்னராக - சும்மா கிடக்கும் பங்காளியாக ஆக்கிக் காட்டியதில் அவனுக்கு வெற்றிப் பெருமிதம் கூட ஏற்பட்டது. தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மையாகியது. அவனுக்கு கிடைத்த ஆண்சுகம், பெண்சுகம் போலவே தோன்றியது. தன்னுள் துடித்த ஏதோ ஒன்றிற்கு வடிகால் கிடைத்த ஒரு ஆனந்த அனுபவம். அதேசமயம், மோகனனை, இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஒரு பரிதவிப்பு. அவனை அப்போதே பார்க்கத் துடித்தான். அவன் கூட்டிச் சென்ற கிளப்பிற்கு போய், அவனது பம்பாய் முகவரியை வாங்கிக் கொண்டு தானும் பம்பாய்க்கு போய்விடலாமா என்ற சிந்தனை.

ஆனாலும், அந்த கற்பனையான பயணத்தை, கவிதா மானசீகமாக வழி மறித்தாள். டூப்ளிகேட் அம்மாவுடன் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள பாவப்பட்ட பெண்தான். ஆனாலும், பழிகாரி. அந்த அம்மா விசயத்தை, முன்பே அவனிடம் சொல்லி இருக்கலாம். எனினும், சுயமரியாதை விட்டுக் கொடுத்து, வீடு தேடி வந்தாள். அவள் விளக்கமளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். ஆனால், நட்பாகத்தான் கொடுக்க முடியும். காதலாக கொடுக்க முடியாது. செல்வாவின் மனதிலிருந்து, அந்த மோகனன், அவளைத் துரத்திவிட்டு, தான் மட்டுமே தன்னந் தனியாய், தக்காரும் மிக்காரும் இல்லாமல் காலூன்றிவிட்டான்
அவன் நாட்டியத்திற்கு முன், இவள் நடை நொண்டியடிக்கிறது. அவன், கிறங்க வைக்கும் பார்வையில், இவள் பார்வை மங்கிப் போகிறது. அவன் மரகதப் பச்சை டையில், இவள் கழுத்துச் சங்கிலி, அந்த கழுத்தை சுற்றிய நாகம் போல் தோன்றுகிறது. அவன் தீண்டியதும், அவனைத் தீண்டியதும் ஒரு பெருஞ்சுகம். அவற்றின்
முன்னால், இவள் கொடுத்தவை சின்னஞ்சிறு சுகங்கள்.

அந்த மோகனனின் பாட்டுக்கு முன், இவள் கெஞ்சலும் - கொஞ்சலும், சிணுங்கலும் - குலுக்கலும் அற்பமாகின்றன. ஆனாலும், அவளையும் உதற முடியவில்லை . இவனுக்கு சுமை தாங்கியாக இருந்தவள். இவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தவள். சிறுமையில் சுருங்கிப் போன இவனை, பெருமைப்படுத்திய அவளை, இவன் சிறுமைப் படுத்திவிட்டான். ஆனாலும், அவள் தான் அதற்குக் காரணம் நேற்று வந்ததுபோல், டூருக்கு போவதற்கு முன்பு, ஏதாவது ஒரு சாக்கில், தான் போகப்போவதை சொல்லியிருக்க முடியும். ஒருவேளை, அண்ணனுக்கு இவளே தன்னை கூட்டிக் கொடுத்தாளோ என்னமோ? இப்போதைய நிலமைக்கு இவளே காரணம்; இவளே வில்லி.

செல்வா, மல்லாந்து புரண்டான். இதனால், குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், அவன் முதுகிற்குள் சிக்கின. சுபேதா, அவன் முதுகோர இடுக்குகளிலிருந்து, நோட்டை மீட்பதற்கு போராடியது போது, செல்வாவின் மனம் கிராமத்திற்கு போனது ஏரிக்கரையில் ஏழெட்டு நண்பர்களோடு சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்து, அந்த
ஏரியால் பெருக்கெடுத்த கிணறுகளில், அந்தர் பல்டி அடித்தது, குற்றாலத்திற்கு போன குளியல் நினைவுகள், மாலையில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய வாலிபால் விளையாட்டு, பம்பு செட் நீரில் அருவியாய், ஏகாந்தமாய் குளித்தது, வெட்டை வெளி பசும்புல் தரையில் ஏகாந்தமாய் படித்தது; படுத்தது, வகுப்புக்களில் முதலாவதாக வந்தது. இங்கே கூட கல்லூரியில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில், ஏதோ ஒரு வகையில் ரேங்கில் வந்தது. இப்போது நான்கைந்து நாட்களாக கல்லூரிக்குப் போவது போல் போக்குக்காட்டி, அடையாறு, குழந்தைகள் பூங்காவிற்குப் போய், தன்னந்தனியாய், தனி மரமாய், மரங்களோடு மரமாய் நின்றது; படுத்தது; புரண்டது; எழுந்தது; அலைந்தது; கிராமத்தில் முறைப்பெண் ஒருத்தி அவனை வம்புக்கு இழுத்தது; இவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனது; ஊரில் கிடைத்த நல்ல பையன் பட்டம்.

இப்போது அந்த அறைக்குள், பழையதையும் புதியதையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு இறுதியில் செல்வா மனதளவில் செத்துப் போய்க் கிடந்தான். ஒரு வாலிபனுக்குரிய ஆண்மை , நூலறுந்த காற்றாடியாய் சுற்றுகிறது. இப்போது காதலனும், காதலியும் இவனே. இவன் காதலனாகும் போது, மோகனன் காதலி ஆகிறான். இவன் காதலியாகும் போது, மோகனன் காதலனாகிறான். 'போயிற்று... எல்லாம் போயிற்று. தந்தையின் குனிந்த தலையை நிமிர்த்துவதற்குப் பதிலாய், தன் பங்கிற்கும் இவன் தாழ்த்தியாயிற்று. சித்தப்பாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாகிவிட்டது. இப்போது, வெறும் சதைப் பிண்டம். உயிர் இருப்பதால் மட்டுமே உலாவும் நடைப்பிணம். சண்டாளி; சதிகாரி நீ மட்டும் என்னை வம்புக்கு இழுத்து காதலிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் முழுமையான மாணவனாய், பாசமிக்க சித்தப்பாவிற்கு, நன்றி மறக்காத அண்ணன் பிள்ளையாய், குழந்தைகளுக்கு தோழனாய், ஒரு முழுமையான மனிதனாய் தலை நிமர்ந்து நடந்திருப்பேன். என்னை கெடுத்துட்டியேடி! அர்த்த நாரீஸ்வரனாய் என்னை ஆக்கிட்டியேடியடி! நீ வஞ்சகி.... உன்னிடம், நானே நினைத்துப் பார்க்க கூசும் என் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சொல்லி இருக்கிறேன். ஆனால் நீயோ , உனக்கு ஒரு டூப்ளிகேட் அம்மா இருப்பதைப் பற்றியோ, உன் அண்ணன், ஓரினச் சேர்க்கைக்காரன் என்றோ சொல்லல... சொல்லியிருந்தால் பிழைத்திருப்பேன். இப்போ சாகாமல் செத்துட்டேனடி..'

செல்வா, வெந்து தணியாமல் வெந்து கொண்டே கிடந்தான். இதற்குள் அருண், இவன் மார்பில் நோட்டுப் புத்தகத்தை நகர்த்தி, கண்ணுக்கு கீழே கொண்டுவந்து, 'அண்ணா ! வாட் ஈஸ் திஸ் சர்க்கிள்' என்றான். சுபேதாவோ, அண்ணா நான் வேன்ல போகமாட்டேன். அண்ணனோட ஸ்கூட்டர்லதான்... போவேன் என்று தான் என்பதற்கும், போவேன் என்பதற்கும் அழுத்தம் கொடுத்தாள். செல்வாவால் எரிச்சலை அடக்க முடியவில்லை. சுபேதாவின் காதை வலது கையால் திருகிக் கொண்டே, அருணின் கன்னத்தை இடது கையால் பிதுக்கிக் கொண்டு கத்தினான். "சனியங்களா... ஒங்கம்மா கிட்டப் போய் பாடம் கேளுங்க..." என்று சொன்னபடியே, அருணின் நோட்டுப் புத்தகத்தை கீழே வீசியடித்தான். அந்த வீச்சில், அந்த நோட்டு, தாள் கிழிந்து,
அட்டை விலகி, அலங்கோலமாய் கிடந்தது

செல்வா, தனது முட்டாள் தனத்தை உணர்ந்தது போல், இரண்டு குழந்தைகளையும் விடுவித்துவிட்டு, அந்த நோட்டுப் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்தபோது –

வாசலில், சித்தப்பா!

மனைவி, ஏற்னெவே குழந்தைகளிடம் இவன் நடந்து கொள்ளும் விதம் குறித்து சொல்லியிருக்கிறாள். அதனால்தான், குழந்தைகளை, வேனில் அனுப்ப சம்மதித்தார். இப்போது, அருணும், சுபேதாவும், கேவியபடியே அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றனர். "இனிமேல் அண்ணாகிட்ட இருக்க மாட்டேம் டாடி..." என்றான் அருண். சுபேதா, அவன் பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதுபோல், அப்பாவின் கையை விட்டுவிட்டு, அருணின் கையை பிடித்தாள்.

அண்ணன் மகனை, புனல் ததும்பப் பார்க்கும் சித்தப்பா, இப்போது கனல் கக்கப் பார்த்தார் குழந்தைகளை, அவன் அடிப்பதாக, தன்னிடம் குற்றஞ்சாட்டிய மனைவியிடம் அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியவர், இப்போது அதிர்ந்து போய் நின்றார் அப்போதே நேர்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகி, பக்கவாட்டில் சிந்தித்தார். "உங்க அண்ணன் மகனை, நம்ப அம்மா லேசா கஷ்டப்படுத்துறாங்க அய்யா. நான் சொன்னேன்னு சொல்லாம, சாடை மாடையா சொல்லுங்கையா" என்று சொன்ன அதே வேலைக்காரம்மா, நேற்று, “இந்த பிள்ளாண்டான் போக்கும் சரியில்லை அய்யா." என்றாள். அவனுடைய பிரச்சினையை கண்டறிய, அலுவலகம் போகிற வழியில், செல்வா படிக்கும் கல்லூரியிலும் விசாரித்தார். கல்லூரிக்கு அவன் நான்கைந்து நாட்களாக போகவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. செல்வாவை அழுத்தம் திருத்தமாய் பார்த்தார். அவன் தலை தாழ்த்திவிட்டு, மீண்டும் நிமிர்ந்தபோது –

“உன்னோட பிரச்சினை என்னடா?"

"ஒண்ணுமில்ல சித்தப்பா. நல்லாத்தான் இருக்கேன்"

"அதை நான் சொல்லணும். காலேஜ் போறீயா?"

"போறன் சித்தப்பா, சித்தி புளுகிறாங்க."

"பொய் பேசவும், பழி போடவும் கத்துக்கிட்டே இன்னும் என்னல்லாம் கத்துக்கிட்டியோ. சொல்லுங்க ஸார். நானே காலேஜ்ல போய் விசாரித்து வந்தேன் ஸார்."

செல்வா, தலை கவிழ்ந்தபடியே, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். பிறகு, அவரது காலில் விழுந்து கதறப் போனான். இதற்குள் சித்தப்பா முந்திக் கொண்டார்

"இந்தா பாருடா! பளுவிலேயே பெரிய பளு, நன்றிப் பளு. உங்கப்பா. அதான் எங்கண்ணன், காய் கறிகளையும், என்னையும் வண்டியில் ஏற்றிக்கிட்டு, புளியரை சந்தைக்கு வண்டி அடிப்பார். ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு மாடு , தவழ ஆரம்பிச்சுட்டுது. உடனே, அந்த மாட்டை அவிழ்த்து வண்டியில் பின் பக்கமா கட்டிட்டு, இறங்கப் போன என்னையும் இறங்கவிடாமல் தடுத்துட்டு, அந்த மாட்டுக்குப் பதிலாய் ஒரு மாடாய் வண்டி இழுத்தார். எத்தனையோ கஷ்டத்திலயும் என்னை படிக்க வைத்தார் நானும் வட்டியும் முதலுமாய் நன்றிக் கடன் செலுத்திட்டேன், வாங்குன வரதட்சணை பணத்தை அப்படியே அண்ணன் கிட்ட ஒப்படைத்தேன். உன் பெரிய அக்காவுக்கு, நானே நகை போட்டு மதுரையில் கல்யாணம் செய்து வச்சன். சின்னக்காவுக்கும் கொஞ்சம் உதவுனேன். இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, கணக்கு சரியாயிட்டு. நீ, எங்கப்பா சித்தப்பாவ படிக்க வச்சாரு. அதனால் சித்தப்பா, 'நம்மள படிக்க வைக்க வேண்டியது அவரோட கடமை.' அப்படின்னு, நீ நினைக்கக் கூடாதுன்னு சொல்றேன். இந்த வீட்ல இருந்து படிக்கக்கூடாதுன்னு சொல்லல. உன்னை தர்மத்துக்காக படிக்க வைக்கேன். இதை நீ புரிஞ்சுக்கணும்."

இடையிலே, ஒரு இடைச்செருகலாக சித்தியின் குரல்.

"எம்மாடியோ - எனக்குத் தெரியாம், இவ்வளவும் நடந்திருக்கா? உங்க அண்ணன், உங்கள நல்லாத்தான் மயக்கி ஓட்டாண்டி ஆக்கிவிட்டிருக்கார். பெரிய குடும்பமாயிருக்கு . யோசித்து செய்யுங்கன்னு, எங்கம்மா, எங்கப்பாகிட்ட சொன்னது சரியாப் போச்சு."

சித்தப்பா சிவனுப்பாண்டி, அண்ணன் மகனிடம் தொடர்ந்து பேசுவதா... அல்லது மனைவியை அடக்குவதா, என்று புரியாமல் தவித்தபோது, சித்திக்காரி தொடர்ந்தாள்.

"உங்க அண்ணனுக்காவது புத்தி வேணும். உன்ன நம்பி வந்திருக்கிற பெரிய இடத்து பெண்டாட்டிய பூ மாதிரி நடத்துணுன்டான்னு' புத்தி கெட்ட உங்களுக்கு புத்தி சொல்லியிருக்கணும். அந்த மனுஷன் பெரிய மனுஷனாம், பெரிய மனுஷன். ஒரே அடியா மொட்டை அடிச்சுட்டார்."

சிவனுப்பாண்டி, முதல் தடவையாக மனைவியை நோக்கி, கையை ஓங்கினார். பிள்கைள் மட்டும் அந்த கையை எம்பிக் குதித்து பிடிக்கவில்லை என்றால், இந்நேரம் அவள், இந்த சாதுவின் கோபத்தை தாங்க முடியாத, காடாய் சரிந்திருப்பாள். அதற்குள், செல்வா துள்ளி எழுந்தான். மிரட்டல் பார்வையோடு சித்தி அருகே சென்றான்.

"சித்தி... எங்கப்பா பற்றி இதுக்குமேல் ஏதாவது சொன்னீங்க.... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது."

"ஓஹோ - அந்த அளவுக்கு வந்துட்டியா - ஒரு நாளும், கை நீட்டி அறியாத மனுஷன, கையை ஓங்க வச்சுட்டே... இப்போ நீ வேற, அடிப்பேன் என்கிற அர்த்தத்துல சொல்றியா... வேணுமுன்னா அடிச்சுட்டுப் போப்பா."

சித்தப்பா, மனைவியை கையமர்த்திவிட்டு, செல்வாவை பார்த்து நடந்தார். இடையே குறுக்கிட்ட பிள்ளைகளின் முதுகுகளில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, அவர்களை மனைவியின் பக்கமாய் தள்ளிவிட்டார். ஆவேசமாய் பேசினார்.

"இந்த அளவுக்கு பேச வந்துட்டியாடா - அண்ணன் பிள்ளைய வளர்க்கிறதைவிட, தென்னம் பிள்ளைய வளர்க்கலாம்' என்கிறது சரியாப் போச்சு. ஆனாலும், உன் படிப்ப கெடுத்துட்டேன் என்கிற பழி பாவத்திற்கு நான் ஆளாக விரும்பல. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. எப்படியாவது காலேஜுக்குப் போ. அடுத்த வருஷம் நம்ம ஊர்ப்பக்கம் இருக்கிற டவுனுல உன்னை சேர்த்துடுறேன். நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். எம்மா.... உன்னத்தாம்மா லட்சுமி.... உன்னை கையெடுத்து கும்பிடுறன்.. ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்கம்மா.... ஒனக்கும் எனக்கும் ஊருக்குப் போகும் போதெல்லாம், தென்னை மரத்துல ஏறி, இளநீர் பறித்து கொடுத்த பிள்ளம்மா - அப்படிப்பட்ட இவன் இப்ப எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான்னு புரியல. டேய் செல்வா! நாளையிலிருந்து காலேஜ் போகணும்."

"போமாட்டேன்."

“ஏன் போகமாட்டே ?”

"போகப் பிடிக்கல."

"சித்தப்பா சொல்றத கேளுடா. எதை இடையில் விட்டாலும் படிப்பை விடக்கூடாதுடா...”

"நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்.... ஆனால் காலேஜுக்கு மட்டும் போகமாட்டேன்."

"அப்போ ... நீ இந்த வீட்ல இருக்கிறதுல என்னடா அர்த்தம்?"

செல்வா, அந்த அறைவாசல் இடைவெளியில், சித்தப்பா வையும், சித்தியையும் தன்னை அறியாமலே மோதித் தள்ளியபடி, கட்டிய லுங்கியோடு, போட்டிருந்த சட்டையோடு வாசல்வரை நடந்தான். வாசல் வரை நடந்தவன், வீதிக்கு வந்ததும், ஓட்டமும் நடையுமாகப் போனான். பின்னர் ஒரேயடியாய் ஓடுவதுபோல் ஓடினான்.
--------------
அத்தியாயம் 14


செல்வா, தலைவிரி கோலமாக நடந்து நடந்து, சொந்த ஊருக்கே நடக்கப் போவதாக அனுமானித்தான். அந்த நடைவேகத்தில், அடையாரின் விளிம்பில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை இருக்கும் பிரதானச் சாலைக்கு வந்தபோது, இளைத்துவிட்டது. அயோத்தி நகரை தாண்டிய உடனே, காடு எங்கே இருக்கிறது என்று சீதை கேட்டாளாமே - அப்படிப்பட்ட இளைப்பு ஊருக்கு நடந்து போகமுடியாது என்பது புரிந்து விட்டது. தனக்குத்தானே ஒரு சமாதானமும் செய்து கொண்டான் ஊருக்குப் போய் சித்தப்பாவிற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக்கூடாது. எதிரற்று போன எதிர்காலத்தைப் பற்றி, எங்கேயாவது உட்கார்ந்து யோசிக்கவேண்டும்.

இந்தியாவின் விஞ்ஞான மூளையான ஐ.ஐ.டி. க்கு அருகே உள்ள கிளைச்சாலையில் நடந்தான். வழக்கம்போல், குழந்தைகள் பூங்காவிற்குள் இந்தத் தடவை டிக்கெட் வாங்காமலே கண்மூடித்தனமாக நுழையப் போனான். வாட்ச் அண்டு வார்டு மேன் டிக்கெட் என்றான். வழக்கம்போல், ஒவ்வொரு தடவையும் தன்னை இப்படி கேட்க வைக்கும் அவன் மீது வார்டு எரிச்சலானான். அதேசமயம், அந்த குழந்தை முகத்தைப் பார்த்ததும், எரிச்சல் அனுதாபமானது. அதோடு, தான் கடமையில் கண்ணுமாய் இருப்பதை "கவுண்டனுக்கு” நிரூபித்துக்காட்ட பல வாய்ப்புக்களை வழங்கும் செல்வாவை, நன்றியுடன் நினைத்துக் கொண்டான்.

செல்வா, கவுண்டரில் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, அதை வாட்ச்மேனிடம் கிழிக்கக் கொடுத்துவிட்டு, கிழிப்பில் பாதியை வாங்காமலே உள்ளே போனான். ஓங்கி வளர்ந்த அத்தி, ஆல, அரச மரங்களின் அடிவாரங்களில் ஒவ்வொன்றிலும் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், லுங்கியோடு திரிந்த இவனைப் பார்த்து சிறிது அச்சப்பட்டார்கள். அதேசமயம் தங்களைப் போலவே கல்லூரிக் கோடு தாண்டிய, கல்லூரி "மேட்டுகள்" அருகில் இருப்பதால், அச்சம் தவிர்த்தார்கள்.

செல்வா, அங்குல அங்குலமாக நகர்ந்து, அடி அடியாய் ஊர்ந்து, மீட்டர் மீட்டராய் தாவி, ஒரு ஆலமரத்தின் அருகே உள்ள கரையான் புற்றில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். புற்றுமண் உரசலில் அவன் படிப்பும், பந்த பாசமும் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபோன பழமொழியை நினைவுக்குக் கொண்டு வந்தது. அந்த புற்றின் உச்சி உடைந்து, சல்லடை போட்டது போன்ற குருத்து மண் துகள்கள், அவன் தோள் வழியாய் உருண்டோடிக் கொண்டிருந்தன. எதிரே சிறுவர் - சிறுமியர் சாய்வாய் போடப்பட்ட சறுக்குப் பலகையில் வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருப்பதை பார்த்ததும், சித்தப்பா பிள்ளைகளின் நினைவு வந்தது. கூடவே கண்ணீரையும் கொண்டு வந்தது. அந்த நினைவோடு, கவிதாவின் நினைவு வெறுப்புக் குரியதாகவும், மோகனனின் நினைவு "லவ் - கேட்' எனப்படும் விருப்பும் வெறுப்பும் கலந்த கலவை உணர்வாகவும் அவனை பிழிந்தெடுத்தன. சித்தியை, அடிக்கப் போவது போல், அவளை நெருங்கி மிரட்டியதற்காக, நாக்கை பற்களால் துண்டாக்கப் போனான்.

செல்வா, அந்த புற்றின் மேல் சாய்ந்தான். சாயச் சாய அது சரிந்தது. இதை புதை குழியில் கிடப்பது போல் கிடந்தான். ஆங்காங்கே கேட்ட சிரிப்பும், கும்மாளமும் தன்னை நையாண்டி செய்வதுபோல் தோன்றியது. கணக்கிலும், விஞ்ஞானத்திலும் நூற்றுக்கு நூறாய், தொன்னூறாய் வாங்கியவன் கல்லூரி வகுப்புக் கணக்கில் பத்துக்கு பத்தாய் வாங்கியவன், இப்போது மனிதன் என்ற "ஒன்று" போய் சைபராய் கிடந்தான். அந்த எதார்த்தத்தை உள்வாங்க முடியாமல், சிறிது நேரத்தில் பிணத் தூக்கம்.

"செல்வா .... செல்வா ...."

பதில் கிடைக்காததை கண்ட கவிதா, அவனை உலுக்கினாள். அவன் அருகே உட்கார்ந்து அங்குமிங்குமாய் ஆட்டினாள். அவன் மூக்கில் கை வைத்த பிறகுதான், அவளுக்கும் சுவாசமே இயங்கியது. அவனுக்குத் தெரியாமலே அவன் பின்னால் நடந்து, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர் நடையாகி, அவன் தலை திரும்பிய பாதையில் நடந்தாள். பாம்புப் பண்ணையில் தேடினாள். பிறகு, ஒரு அனுமானத்தோடு இங்கே வந்தாள் மூச்சடைக்க அலைந்தாள். எப்படியோ கண்டுபிடித்து விட்டாள்.

"செல்வா... செல்வா.."

செல்வா, அவள் உலுக்கலில் இருந்து கண் விழித்தான் கோபத்தை காட்டுவது போல் பல் கடித்து எழுந்தான். ஆவேசக் குரலில் கேட்டான்.

"உன்னை யார் என் பின்னால் வரச்சொன்னது?" ''நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரல. நீங்கதான் என் முன்னால போனீங்க.”

கவிதா, சூழலை எளிமைப்படுத்த நினைத்தபோது, அவன் கடுமைப்படுத்தினான்

"ஒன்னால நான் பட்டது போதும். நீ ஒரு புழுகிணி.. மோசடிக்காரி. கூட்டிக் கொடுக்கிறவள். போடி..."

கவிதா, இந்த மாதிரி வார்த்தைகளை எப்போதும் எவரிடம் வாங்கி அறியாதவள். அவன் கோபம், அவளையும் தொற்றிக் கொண்டது.

"லுக் மிஸ்டர் செல்வா! நீங்க என்னை வெறுக்கிறதனால, நான் செத்துடமாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். ஆனால், உயிருக்கு உயிராய் பழகிய என்னை ஏன் வெறுக்கிறீங்க என்பதற்கு காரணங்களை கேட்க, எனக்கு உரிமை உண்டு. நீங்க சொல்லித்தான் ஆகணும்."

"சொல்றேன். உன்கிட்ட, என் மனசே நினைக்க பயப்படுற அந்தரங்கங்களை, சொன்னேன். ஆனால், நீ இப்போதைய உன் அம்மா, ஒரு டூப்ளிகேட் என்கிறதை சொல்லல."

"வயசுக்கு வருகிற பருவத்துல இருக்கிற மகளையும், நன்றாக படிக்கிற மகனையும் விட்டுட்டு, ஒருத்தி ஓடிப் போறான்னா - அவள், அம்மா இல்ல. பச்சைத் தேவடியாள். ஆனால், என் அப்பாகிட்ட வந்தவள் குழந்தை குட்டி இல்லாதவள். எங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தவள், எனக்கு அம்மாவாகிப் போனாள். நீங்கள் சொல்கிறீர்களே டூப்ளிகேட் அம்மா, இந்த அம்மா என்னை பெற்ற அம்மாவைவிட பல மடங்கு பெரியவள். அம்மா என்றால் எனக்கு இவள்தான். இந்த அம்மாவை உங்களிடம் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த அம்மாவா? நீங்களா? என்றால் எனக்கு இந்த அம்மாதான் முதலில் அவளால்தான், என் அப்பனின் ஆடாத ஆட்டத்தை சகித்துக் கொண்டிருக்கிறேன். நான் போட்ட நகைகள் பொதுச்சொத்து. அதனால், என் அம்மாவின் ஆலோசனைப்படி அப்பனை கழட்ட முடியாது என்பதால், நகைகளை கழட்டி விட்டேன். இதுதான் நீங்கள் என்னை வெறுப்பதற்கு காரணம் என்றால், நீங்கள் தாராளமாக என்னை வெறுக்கலாம்."

"இதுகூட எனக்குப் பெரிசில்ல... நாலு நாளைக்கு முன்னால என்னை பார்க்கிறதுக்காக கெட்டுப் போகாத பிரிட்ஜ் சாக்குல வரத் தெரிந்த உனக்கு, அதே மாதிரி ஏதாவது ஒரு சாக்கில் எங்க வீட்டுக்கு வந்து, நீ டூரில் ஒழியறதை சொல்லியிருக்கலாமே."

''கதவு மூடிஇருந்தால் வரவேண்டாமுன்னுதான் சொல்லியிருந்தேனே?"

"கதவு எங்க மூடி இருந்தது? முழுசா திறந்திருந்தது. உள்ளே போனால்.... உங்கண்ணன், நான் உனக்கு எழுதின லெட்டரை கைப்பற்றிட்டான். கடைசில உங்க அண்ணனுக்கு என்னை கூட்டிக் கொடுத்திட்டியேடி..”

கவிதா, சுருண்டு விழப்போனாள். அண்ணனைப் பற்றி, பிறர் சொல்லக் கேட்டிருக்கிறாள். என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அப்படி யூகிக்க யூகிக்க, அவள், ஆலமர விழுதை பிடித்துக்கொண்டே விம்மினாள். அந்த மரத்தின் தூணில் குப்புற சாய்ந்தபடியே, ஒப்பாரியாய் ஒப்பித்தாள்.

"நான் பாவி - படு பாவி - உங்களை இந்த கதிக்கு கொண்டு வந்த, அந்தப் பயலும் ஒரு அண்ணனா? கூடப் பிறந்த தங்கையோட காதலன்னுகூட தெரிஞ்சும், உங்கள விட்டு வைக்கலியா? உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் போனானே..."

"மோகனனை திட்டாத... அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு."

கவிதா, செல்வாவை அதிர்ந்து போய், உடல் திருப்பிப் பார்த்தாள். அந்த மரத்தின் தூரிலிருந்து கீழ் நோக்கி சரிந்தாள். அவன் பேசியதின் தாத்பரியம் புரியப் புரிய அவளுக்கு, தான் அவனை இழந்ததை விட, அவன் தன்னைத்தானே இழந்ததே பெரிய கொடுமையாக தோன்றியது. இப்போது, அவன் திட்டியதும், முன்பு அவளைப் பார்த்த உடனேயே பின் வாங்கியதும் குறைந்த பட்ச எதிர்வினையாகவே தோன்றியது. அவளுக்கு மூச்சு முட்டியது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று சுற்றுவது போலானது. நினைத்து நினைத்து, நினைவற்றாள். மனம் சூன்யமானது. உடல் மரக்கட்டையாது. கண்கள் வெளிறிப் போயின. அந்த சுற்றுப்புறச் சூழல் ஒரு மயான காடுபோல தோன்றியது. ஆங்காங்கே நடமாடிய காவலாளிகள் வெட்டியான்கள் போல் பட்டனர். அருகருகே இருந்த ஜோடிகள் மோகினி வடிவங்களாய் தோற்றம் காட்டின.

இதற்குள், சுயத்திற்கு வந்த செல்வா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவள் அப்படியே அவன் மார்பில் சாயப் போனபோது, அவளை விலக்கி வைத்தவன் போல் ஆலமர அடிமர அடிவாரத்தில் அவளை சாய வைத்துவிட்டு யதார்த்தத்தை சுட்டிக் காட்டினான்.

"நல்லதோ கெட்டதோ - நடந்தது நடந்துவிட்டது. என் மனசில இருந்த உன்னை, ஒங்கண்ணன் துரத்திட்டான். அவனை நினைக்கும் இந்த மனம், இனிமேல் யாரையும் நினைக்காது இப்போதும் உன்னை நேசிக்கிறேன். காதலியாக அல்ல... பெண்ணாகக்கூட இல்லை. தனிமையில் விடப்பட்ட ஒரு மனித ஜீவியாக நினைக்கிறேன். அதனால..."

"போதும் நிறுத்துங்க. எதிர்காலத்துல ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் செய்துக்கன்னு சொல்லுவீங்க. அவ்வளவுதானே?"

"அப்படிச் சொல்ல எனக்கு உரிமையில்ல. உண்மையைச் சொல்லப்போனால், ஒங்கண்ணனோட எனக்கு கிடைத்த முதல் அனுபவத்தில் எப்படி எனக்கு குமட்டிக் கொண்டு வந்ததோ, அப்படி உன்னோட உரசல்களும், முத்தங்களும் இப்ப எனக்கு குமட்டுது.”

"ஏய்.. பாவி. நீ உருப்படுவியா? என்னையும் இவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு எங்கேயோ போயிட்டியேடா- நீ நிச்சயம் நல்லா இருக்க மாட்டா "

"நல்லாத்தான் இருப்பார். அவரோட முகவரிய அவர் கிளப்ல போய் வாங்கிட்டேன். நானும் உருப்படுறதுக்கு ஒரு வழி இருக்கு. உங்கண்ணன் நிரந்தரமாய் போன பம்பாய்க்கு, நானும் போகப் போறேன். என் கையில பைசா இல்லை. நாம பழகின தோசத்துக்காக, நீ மட்டும் டிக்கெட்டும், செலவுக்கும் பணம் கொடுத்தால், நான் கரையேறிடுவேன்."

கவிதா, பிரமித்தாள். பித்துப் பிடித்தவளாய் தலையை அங்குமிங்குமாய் சுற்றினாள். சுற்றும் முற்றும் சூழ்ந்த வேடிக்கைக் கூட்டம், அவள் கண்ணில் கூட பதியவில்லை . கைகளை உதறினாள். கண்களை உருட்டினாள். முன் பல்லால் பின் உதடுகளை கடித்தாள். அய்யோ அய்யய்யோ என்றாள். அந்த கூட்டத்தின் தலைகளையும் மீறிப் பார்த்த செல்வாவின் கண்களில், எதிர்ப்புற உதிய மரத்தின் ஒதுக்குப் புறத்தில், அறுபதைத் தாண்டிய ஒரு பெரியவர், கண்பட்டார். ஆடை அலங்காரம் கச்சிதம். வாலிபன் போல் பொம்மை சொக்கா போட்டிருந்தார். சந்தேகம் இல்லை. மோகனன் அழைத்துச் சென்ற அந்த கிளப்பில், நிர்வாணமாக நின்றபடி, தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டிருந்தவர். அவரை ஒட்டினாற் போல் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவனது ஒரு கரம், பெரியவரின் தொப்புளுக்கு கீழே போயிருந்தது.

செல்வா, எழுந்தான். வீர அபிமன்யூ போல வேடிக்கை கூட்டத்தை கிழித்தபடியே எதிர்ப்புறம் கால் கிலோ மீட்டர் வரை, குதிகால்கள் தலையில் தட்டாக் குறையாய் ஓடி, அந்த பெரியவர் முன்னால் மூச்சடைக்க நின்றான். அவர், அவனை ஆசுவாசப் படுத்திப் பேசினார்.

"ஹலோ.. நீங்க மோகனனோட பார்ட்னர் செல்வாதானே? ஐ அம் தாமோதரன் அன்றைக்கு கிளப்ல பார்த்திருப்பீங்களே?"

"அதிருக்கட்டும். அந்தப் பையன் யார்?"

"இதுவெல்லாம் சொல்லியா தெரியணும். என் பக்கத்து வீட்டு குடிசைப் பையன். அவனுக்கு பிடித்தமான குலோப் ஜாம், கட்லட், சென்னா பூரி - இதுங்கல வாங்கிக் கொடுப்பேன். கை நிறைய காசும் கொடுப்பேன். அவனுக்கு பிடித்ததை நான் கொடுக்குறதால, எனக்கு பிடித்ததை அவனும் செய்யுறான். அவ்வளவுதான்."

செல்வா, அந்த சிறுவனை தூக்கி நிறுத்தினான். கன்னத்தில் மாறி மாறி அடித்தான். தலையில் கை நிறைய குட்டினான். பிறகு, கத்தினான்.

"இந்த அயோக்கியன்கிட்ட மாட்டிக்காதடா. பெண்டாளப் பிறந்தவங்கள மாதிரி.. இவன் ஆணாளப் பிறந்த அயோக்கியன் திரும்பி பாராமல் வீட்டுக்கு ஓடுடா. முதல்ல ஒன் வீட்டு அட்ரஸை சொல்லு."

"அப்பா பேரு ஜெயபால். மயிலாப்பூர் கபாலித் தோட்டத்துல மூனாவது சந்துல எட்டாம் நம்பர் வீடு"

அந்தப் பெரியவர். பெரியவர் என்ன பெரியவர்.. கிழட்டுப் பயல். அவசர அவசரமாக பேண்ட் பட்டன்களை மூடியபோது, செல்வா, அந்த பையனின் பிடரியில் ஒரு அடி போட்டான். "இனிமேல் இந்த மாதிரி காரியத்துக்கு சம்மதிப்பியா? சம்மதிப்பியா?" என்று கேட்டபடியே அடித்தான்.

"அடிக்காதண்னா - அடிக்காதண்னா - மாட்டேன் மாட்டேன் மாட்டவே மாட்டேன் "

அந்தச் சிறுவன், பையை உப்ப வைத்த பைவ் ஸ்டார் சாக்லேட்டுகளையும், பூமர் பப்லுகாம்களையும், அந்த கிழவரின் முகத்தில் கல்லெறிவது போல் எறிந்தான். பிறகு கைகளே காலாகும்படி, அவற்றை தொங்க போட்டபடியே ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான்.

இன்னும் பிரமிப்பிலிருந்து மீளாத தாமோதரக் கிழவன் மேல், செல்வா பாய்ந்தான். அவரை மல்லாக்கத் தள்ளி வயிற்றில் ஏறிக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் குத்தினான். கால்களால் இரண்டு காதுகளையும் நசுக்கினான். கூப்பாடு போடப்போன அவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு குத்து குத்தாய் குத்தினான். தாமோதரனின் வாய் உரலானது. அதற்குள், கிடந்த மண், தானியமானது. செல்வா, கை உலக்கையானது.

கவிதா, ஓடோடி வந்தாள். அவள் பின்னால் வேடிக்கை கூட்டமும் ஓடி வந்தது. அதற்குள் பூங்காவின் வாட்ச் அண்டு வார்டு வீரர்கள், செல்வாவை கீழே தள்ளி முன் கைகளை பின்புறமாய் வளைத்துப் பிடித்தார்கள். அந்தக் கிழவர் சிறிது நேரம் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார். அந்த தலையை நிமிர்த்துவதுபோல், "இவனை ஒரு வாரமா வாட்ச் பண்ணிகிட்டிருக்கேன். சரியான பைத்தியம். மேலதிகாரிகள் கிட்ட சொன்னால், 'பைத்தியத்துக்கு, எல்லாரும் பைத்தியம் மாதிரி தெரியுமுன்னு' என்னை நக்கல் பண்றாங்க..." என்றான் ஒரு வார்டு.

தாமோதரன் கிழவருக்கு தப்பிக்க வழி கிடைத்தது போல் தோன்றியது. மண் கலந்த கையோடு செல்லுலார் போனை எடுத்தார்.
----------------------
அத்தியாயம் 15


குய்யோ முறையோ கூப்பாடோ, ஒப்பாரியோ கேட்க முடியாத இருண்டு அறையில், செல்வா, போய்ச் சேர்ந்தான். முழங்கால் இரண்டிலும் ரூல் தடியை வைத்து உருட்டல், கை நகங்களில் குண்டூசிகளால் குத்தல், காதுகளை நெட்டெடுத்தல், முகக் குத்து, உச்சி முடி இழுப்பு, லத்திக் கம்படி, ஐசில் கிடத்தல் போன்ற அத்தனை தடாலடிகளுக்கும் உட்பட்ட செல்வா, மீண்டும் லாக்கப் அறையில் ஜட்டியோடு நிறுத்தப்பட்டான். ஆரம்பத்தில் கொடாக்கண்டனாக இருந்ததால், விடாக் கண்டரான இன்ஸ்பெக்டரின் ஆணையின் பேரில், காவலர்கள் நடத்திய விசாரணையில்; செல்வா கக்கிய உண்மைகள் பொய்களைவிட பயங்கரமாய் தோன்றின. புகார் கொடுத்த தாமோதரன், புள்ளிகளிலே முக்கியமான புள்ளி. அவரா அந்தச் சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டார் என்பதை இன்ஸ்பெக்டரால் ஜீரணிக்க முடியவில்லை. இவனுங்க தாய்யா இப்படி நடப்பானுங்க என்று காவலர்கள் அவரிடம் சொன்னபோது, அந்த இன்ஸ்பெக்டருக்கு, செல்வா மீது சிறிது அனுதாபம் ஏற்பட்டது சட்டப்படி பெரிய குற்றவாளியான ஒருவர், சின்னக் குற்றவாளி மீது புகார் கொடுத்ததும், அந்த விசாரணையின் போக்கு எதில் கொண்டு போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படாததும், இன்ஸ்பெக்டருக்கு குழப்பத்தைக் கொடுத்தது

புள்ளியோ பெரிய புள்ளி. அதோடு கரும்புள்ளி. ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான இவர், இது லா அண்டு ஆர்டர் பிராப்ளம்' என்று அருகே உள்ள இருக்கையில் இருந்த எல் அண்ட் ஓ இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். அந்த எல் அண்ட் ஓ வோவோ, பப்ளிக்கா நடப்பதாலேயே, லாவும் ஆர்டரும் சிதைந்ததாக அர்த்தம் இல்லை. இது கிரைம். ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான நீதான் இதை விசாரிக்கணும். என்னை விடுப்பா...' என்றார்.

லாக்கப் அறையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள், வம்படித்து சிரித்தபோது, தான் மட்டும் ஜட்டியோடு நிற்பது செல்வாவிற்கு அவமானமாகத் தோன்றியது. ஆனாலும், லுங்கி கிடைத்தால் எப்படியாவது தூக்குப் போட்டோ, இல்லையானால் எப்படியாவது தப்பித்து தண்டவாளத்தில் தலை வைத்தோ, பஸ் முன் பாய்ந்தோ , தீக்குளித்தோ, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதனால் அவன் முகம் உறுதிப்பட்டது. இதயம் வலுப்பட்டது. பார்வை தீட்சண்யமானது சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் காலளவு என்ற பழமொழியை நிரூபிப்பவன் போல் நெஞ்சு நிமிர்த்தி நின்றான். உடலெங்கும், வரிக்குதிரை மாதிரி வரி வரியாய், லத்திக் கம்பு தடயங்கள், ஒரு விரல் பரிமாணத்திற்கு குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டிருந்தன. கண் இமைகள் வீங்கிப் போயிருந்தன காதுகளில் ரத்தச் சிதைவுகள். ஆனாலும், இவற்றை பற்றி கவலைப்படாதவன் போல் கைகளை வீரக்கட்டு என்பார்களே விவேகானந்தர் கட்டு அப்படி கட்டிக்கொண்டு, நின்றான்.

ஒரு டெலிபோன் கூச்சலை மௌனமாக்கிய காவலாளர் ஒருவர், அதன் குமிழை அப்படியே வைத்துவிட்டு, இன்ஸ் பெக்டரின் காதில் கிசுகிசுத்தார் அவரும் அலறியடித்து, பேசவேண்டிய குமிழின் பொந்திற்குள் காதை வைத்தும், கேட்க வேண்டிய குமிழில் வாய் வைத்தும், "எஸ் ஸார்.” என்று சொல்லி விட்டு, எதிர்முனை ஆணைக்கு காத்து நின்றார். உடனே, கான்ஸ்டபிள் வாலிபர், அந்த டெலிபோன் கருவியை பலவந்தமாய் பிடுங்கி, உள்ளபடியே வாய்க்கும் காதுக்கும் வைத்து பொருத்தியபோது, கோபக்கார இன்ஸ்பெக்டர், "என்னடா செய்யுறே நாய்ப்பயலே' என்றார். எதிர்முனையில் என்ன கிடைத்ததோ? இன்ஸ்பெக்டரின் காக்கிச் சட்டை நனைந்தது. வேர்வையா? சிறுநீரா? என்று அனுமானிக்க முடிய வில்லை. பிறகு, "கான்ஸ்டபிளைத்தான், நான் திட்டினேன் ஸார். தப்புத்தான் ஸார். கான்ஸ்டபிளையும் அப்படி திட்டக்கூடாதுதான் ஸார்" என்று கெஞ்சினார்.

எதிர்முனைக்காரர், 'ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப் ஐ ஆர். எங்கே நான் சொன்னதைச் திருப்பி சொல்லு' என்று கேட்டிருக்க வேண்டும் உடனே இன்ஸ்பெக்டர், "ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப்.ஐ.ஆர்' என்று சத்தம் போட்டு கூவினார். எதிர்முனையில் இருந்து என்ன கிடைத்ததோ, எஸ் ஸார்' செல்வாவை விடுதலை பண்ணிடுறேன். கேஸ் புக் பண்ணல ஸார். அந்த தாமோதரன் பெரிய புள்ளி ஸார். நீங்கதான் அவர் கிட்டயும்... ஓகே.... ஓகே... ஸார்... உங்க உத்தரவுதான் முக்கியம். அப்புறம், என் மேல் போட்ட சார்ச்சீட்டு விசாரணை அறிக்கை உங்க டேபிள்லதான் இருக்குதாம். தப்புத்தான் ஸார்.... சமய சந்தர்ப்பம் தெரியாம பேசுறேன் ஸார்.' என்று சொல்லிவிட்டு, ஆயாசத்தோடு போனை கீழே வைத்தார். முன்பெல்லாம் டெலிபோனில், எஸ் ஸார்' என்று சொல்லிவிட்டு, பிறகு, தனது ஜுனியர் சகாக்களிடம், சம்பந்தப்பட்ட ஐ பி.எஸ். அதிகாரி தனது ஆலோசனையை கேட்டதாக தம்பட்டம் அடிக்கும் இவர், இப்போது குட்டு வெளியானதால் குட்டுப்பட்டவர்போல் கிடந்தார். எவ்வளவு பெரிய பதவியிலும் இருக்கும், தப்புத் தண்டா ஆசாமி எவருக்கும், மேலதிகாரி என்று வந்துவிட்டால், வேர்வை சுரப்பிகள் விரைந்து செயல்படும் என்பதும், அசல் பிச்சைக்காரர்கள் மாதிரி கெஞ்சுவார்கள் என்பது போலவும் இன்ஸ்பெக்டர் ஒரு நாடமாடும் வெறும் காக்கித் துணியானார்.

காலவர்கள் திறந்தால் நேரமாகும் என்று நினைத்தவர் போல், சுவரில் அடித்த பித்தளை கம்பிகளில் தொங்கிய சாவிகளில் ஒன்றை எடுத்து லாக்கப் அறையை திறந்தார். கான்ஸ்டேபிள் ஒருவர், மொபைல் போலீஸ் ஒப்படைத்த செல்வாவை, பய பக்தியோடு பார்த்தார். எங்கிருந்தோ கொண்டு வந்த லுங்கியை அவனை அணியும்படி கெஞ்சினார். ரத்தம் பிசிறிய சதைக் கோடுகளை மறைப்பதற்கு சட்டை இல்லை. அடித்த அடியில் அது நூல் கற்றைகளாகி விட்டன. எதிர்முனைக்காரரின் மகள் வரப் போகிறாளாம். அதற்குள், இந்த பயலின் இடுப்புக்கு மேல் நிர்வாணமான பகுதியை எப்படி மறைப்பது?

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார். அவர் லாக்கப்பிற்குள் போய் அங்கே நின்று கொண்டிருந்த ஒருத்தனின் சட்டையை கழட்டி, செல்வாவிற்கு அவரே மாட்டி விட்டு, அவனை வி.ஐ.பி. போல் சர்வ சலாம்களுடன் வைத்துவிட்டு, தனது ஆபீஸ் முதலாளி பார்த்த திசையை பார்த்தார். ஒரு அழகான பெண். அநேகமாக எதிர்முனைக்காரரின் மகளாக இருக்கவேண்டும். அவளோடு, நாற்பது வயது மதிக்கத்தக்க பிள்ளைக்குட்டி தம்பதியினர்.

இன்ஸ்பெக்டர், தானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறியவர் போல், உடனடியாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்து, வரவேற்றார்.

"நீங்க மிஸ் கவிதாதானே?”

"ஆமாம் ஸார்."

"என்ன மேடம்? நான் இன்னார் மகள்னு நீங்களே சொல்லியிருந்தால் இவனை எப்பவோ திருப்பி அனுப்பியிருப்பேன்."

“நானும், நீங்க சொன்னது மாதிரி இன்னார் மகள்னு போன் செய்தேன். யாரோ ஒருத்தன் வைடி போனைன்னு சொன்னான்"

அப்படிச் சொன்னது யாராக இருக்கும் என்பது போல், கடுமையாய் பாவலா செய்தபடியே இன்ஸ்பெக்டர், காவலர்களைப் பார்க்க, அவர்கள் "நீதான் நீயேதான்" என்பதுபோல் எதிர்பார்வை பார்த்தார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் சமாளித்தார். இங்கே யாரும் அப்படி பேசுறவங்க கிடையாது மேடம். நீங்க கேட்டது டெலிபோன் கிராஸ் டாக்கா இருக்கும்."

இதற்குள், இரும்பாய் உட்கார்ந்திருந்த செல்வா, மெழுகாய் குழைந்து எழுந்து, நின்றான். சித்தப்பாவின் காலில் அப்படியே விழுந்து, "உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் சித்தப்பா என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா" என்று காலைக் கட்டி அழுதான். அவர், அவனை தூக்கி நிறுத்திவிட்டு, தனது கண்களை துடைத்தபோது, செல்வா, சித்திக்காரியின் தோளில் சாய்ந்து, "சித்தி! எங்கம்மா திட்டாத திட்ட, நீங்க திட்டல... எங்கம்மா போடாத அளவுக்கு எனக்கு சோறு போட்டீங்க... நான் உங்ககிட்ட நன்றியில்லாம நடந்துட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படியா பண்ணிட்டேனே" என்று விம்மினான். கவிதாவையும் நன்றியோடு பார்த்தான். அந்த பார்வையில் நளினம் இல்லை. ஆனாலும், எல்லோரையும் மோசடி பண்ணிட்டேனே' என்று, கவிதாவை பார்த்தபடியே, கண்களை கைகளால் மறைத்துக் கொண்டான். குழந்தைகளை இருபக்கமாக அணைத்துக் கொண்டான்.

கவிதா, மட்டும் சிறிது விலகிப்போய் துப்பாக்கி அப்பிய சுவர் பக்கம் முகம் போட்டு, அந்தச் சுவரில் கண்ணீர் கோடுகளை போட்டுக் கொண்டிருந்தாள். இவளை, நோட்டமிட்ட இன்ஸ்பெக்டர், எல்லா விவகாரத்தையும் சொன்ன பயல், இவள் காதல் விவகாரத்தை மட்டும் சொல்லாமல் விட்டதில் திகைத்தார். "ஒருவேளை விசாரிப்பு சரியாக கிடைக்கவில்லை என்று பொருளா? அல்லது ஒரு பெண்ணின் பெயரை அம்பலப்படுத்தக்கூடாது என்ற பெருந்தன்மையா? என்று ஆய்வு செய்தார்.

எல்லோரும் பேசி, இடக்கு மடக்காய் விவகாரம் விகாரமாகி விடக்கூடாது என்று நினைத்த இன்ஸ்பெக்டர், பொதுப் படையாகக் கேட்டார்.

"நீங்க தானே இவரோட சித்தப்பா சிவனுப்பாண்டி? அந்தம்மா உங்க ஒய்ப் லட்சுமி. இது அருண், அவள் சுபேதா, சரியா..."

சரிதான் என்பதுபோல், குழந்தைகள் உட்பட எல்லோரும் தலையாட்டினார்கள். இன்ஸ்பெக்டர், மீண்டும் கேட்டார்.

"மோகனன் என்கிறவன் யாரு?"

செல்வா, குடும்பத்தினர் மெளனமாய் நின்றபோது, கவிதா, கண்ணீரை துடைத்துக்கொண்டு, "அவன் ஒரு சமூக விரோதி. என் கூடப்பிறந்த அண்ணன்." என்றாள்.

இன்ஸ்பெக்டருக்கு, போன மூச்சு திரும்பி வந்தது. இந்த மோகனனை வைத்தே, எதிர்முனை கொம்பனை மடக்கி விடலாம். தனக்கு எதிராக போடப்பட்ட சார்ச்சீட்டும், விசாரணை அறிக்கையும், பதவி உயர்வாக மாறும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை ஆனாலும், அந்த சமயத்தில், அவர் மனிதனாகவே பேசினார் சிவனுப்-பாண்டியை நேரடியாகவும், கவிதாவை மறைமுகமாகவும் பார்த்தபடியே பேசினார்.

"இந்தப் பையன் உங்க எல்லார் மேலயும் உயிரையே வைத்திருக்கான். விதி வசத்தால் தன்னையும் மீறி இப்படி ஆயிட்டான். இவன் வேணுமுன்னே உங்கள நோகடிக்கல. இப்போ .... இவன் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி மாதிரி"

செல்வா, குறுக்கிட்டான்

"எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க இன்ஸ்பெக்டர் ஸார். இல்லாட்டி, எங்க சித்தியாலதான் இப்படி ஆயிட்டேன்னு, எங்க சித்தப்பா எங்க சித்தியைத் திட்டுவார்.”

"பேசாம இருடா. பெரியவங்க பேசும்போது குறுக்கிடப்படாது என்கிற பண்பாட்டை கத்துக்கோ மிஸ்டர். சிவனுப்பாண்டி! இவன் எல்லா விஷயங்களையும் என்கிட்ட சொல்லிட்டான். இவன் ரோசமா ஓடிப்போனதும், செல்லமாய் பழகின குழந்தைகளை வெறுத்ததும், இவன் தானாய் செய்ததல்ல. அதுக்கு காரணங்கள் இருக்கு அது உங்களுக்கு தெரிய வேண்டாம். அதற்கு உரியவர்களை கவனிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இப்போது, இவனுக்கு தேவை மனோதத்துவ ரீதியான சிகிச்சை என் தங்கை சத்தியா, கிளீனிக்கல் சைக்காலஸிஸ்ட் அவள் கிட்ட ஒரு கேசை கொடுக்கிறதா நினைக்காதிங்க. பையனோட சிக்கல்கள்களை சரிப்படுத்திடுவாள். இல்லையானால், அப்பாய்மெண்ட் வாங்கவே ரெண்டு மாதம் ஆகும்"

இன்ஸ்பெக்டர், டெலிபோனில், தங்கையிடம் பேசினார். பிறகு, இவர்களிடம், ''நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அப்பாய்மெண்ட் கொடுத்திருக்காள். இந்த விசிட்டிங் கார்டுதான் அவளுடைய அட்ரஸ். என்னுடைய மைத்துனரும், அதாவது தங்கையின் கணவரும் மனோதத்துவத்தில் லண்டனில் டாக்டர் ஆப் லெட்டர்ஸ்' என்று பட்டம் பெற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர். ஆனாலும், தொழிலுக்கு மதிப்பு கொடுக்காத தேசமாச்சே நமது நாடு. எதுக்காக சொல்றேன்னா, என் தங்கையால முடியாட்டாலும், அவர் சரிப்படுத்திவிடுவார் என்கிறதுக்காகத்தான் சொன்னேன் நீங்க எல்லாரும் இந்த மேடம் கவிதாவுக்கு நன்றி சொல்லணும். இவங்க அப்பாதான் இந்த மேடத்தோட பெயரை என்கிட்ட சொன்னவரு . செல்வா ! ஆயிரம் மனச்சிக்கல்லயும் நீ கிரேட்டுடா என்று கவிதாவையும், அவனையும் மாறி மாறி பார்த்தபடி, பேசினார். கவிதா, புரிந்து கொண்டாள். செல்வா, வலி க்கிற தசைக்கோடுகளை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சித்திக்காரி, ஒரு லா பாயிண்டை கிளப்பினாள்.

"அந்தம்மாகிட்ட இவனுக்கு என்ன சிக்கலுன்னு நீங்க சொல்லலியே அய்யா.''

"உங்களுக்கு தெரியக்கூடாது என்கிறதுக்காகத்தான் சொல்லல இனிமேல் என் தங்கைபாடு... இந்தப் பையன் பாடு.... உங்ககிட்ட எந்த பணமும் வாங்க மாட்டாளாம். காரணம்.... இவன் பிரச்சினை, அவள் தொழிலில் ஒரு சவாலாம். சரி... போயிட்டு..."

குழந்தைகள் தவிர, எல்லோரும் முகத்தில் ஈயாடாமல் போனார்கள் வாசலுக்கு போய்க் கொண்டிருக்கும்போது, இன்ஸ்பெக்டர், "மிஸ் கவிதா.. இங்க வாறீங்களா - நீங்க மட்டும்." என்றார்.

கவிதாவும், இன்ஸ்பெக்டரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள்.

"மிஸ் கவிதா! இவனை நீங்க நண்பனாகவோ இல்ல காத... ஸாரி அண்டை வீட்டுக்காரனாகவோ அடைந்ததற்கு பெருமைப் படணும். நீ காதலித்த பெண் யாருடான்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி என்கிற மாதிரி அடி கொடுத்தோம். அப்படியும் அவன் மூச்சு விடல. ஆனால், உங்கண்ணன் மோகனன் மேல, நான் ஆக்ஷன் எடுக்கலாமுன்னு யோசிக்கேன்."

"எடுத்தாலும் நான் கவலப்படமாட்டேன். செல்வாவை, எங்கிட்ட இருந்து பிரித்த கொடியவன் அவன்."

இன்ஸ்பெக்டர், சிறிது ஏமாந்தார். சுருதி மாற்றிப் பேசினார்.

"தட்ஸ் ஆல் ரைட் நான் ஆக்ஷன் எடுக்கிறதாய் இல்ல. இப்போ அது முக்கியமில்ல. உங்க காதலுக்காக நீங்க பெருமைப்படலாம். பையனை, என் சிஸ்டர் உங்ககிட்ட முன்னால எப்படி இருந்தானோ, அப்படி ஒப்படைத்துடுவாள் 'பை தி பை' என் பிரமோஷன் பைலும், விசாரணை அறிக்கையும் உங்கப்பா டேபிள்ல இருக்கு.”

"கண்டிப்பா அப்பா உதவுவார் ஸார். நீங்களும் ஒங்க சிஸ்டர்கிட்ட பழையபடியும் அழுத்தமாகப் பேசி.."

"கவலைப்படாதீங்க மேடம். உங்கள மாதிரி . என்ன மாதிரி நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். நான் செய்த நல்ல காரியத்தை, நானே உங்க அப்பாகிட்ட டெலிபோன்ல சொல்லட்டுமா? இல்ல நீங்க சொல்றீங்களா?"

"நானே சொல்லிடுறேன் ஸார். அதுதான் அவர் டேபிள்ல இருக்கிற உங்க பைலுக்கு எபெக்டா இருக்கும் தேங்க் யூ ஸார்."

கவிதா, மனதிற்குள் சிரிப்பும் அழுகையுமாய் தேக்கி வைத்துக்கொண்டு, கால்களை தேய்த்து தேய்த்து நடந்தாள்.
------------
அத்தியாயம் 16


அண்ணன் அனுப்பிய அத்தனை பேரோடும், டாக்டர். சத்தியா, தனித்தனியாகப் பேசினாள் குழந்தைகளோடு பேசும்போது குழந்தை போலவே பேசினாள். இறுதியாக அவர்களில் யாராவது ஒருவர், வெளியே இருக்கலாம் என்று சொன்னாள். எல்லோருமே இருக்கப்போவதாக தர்ணா முறையில் பதிலளித்தார்கள். பிறகு, செல்வாவை கூப்பிட்டாள். சுமார் முக்கால் மணி நேரம் வரை அவனது பிரச்சினைகளை கேட்டறிந்தாள் கேள்விகளில் அளவுக்கு மீறாத அனுதாபம். அவன் பதில்களுக்கு தலையாட்டியதில், இது சகஜந்தான்... சாதாரணமானது என்று காட்டும் தோரணை சிற்சில சமயங்களில், லேசாய் அதிர்ந்த பார்வை.

டாக்டர். சத்தியா, அவன் சொன்னவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தது போல், செயல்பட்டாள். உடம்பையும், மனதையும் எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்பதை நாற்காலியில் இருந்தபடியே செய்து காட்டினாள்.

பரந்து விரிந்த பெரிய அறை. சித்தப்பா வீட்டு படுக்கை அறையையும், செல்வா, குழந்தைகள் அறையையும் விழுங்கிவிட்டு, பாதி வயிறு நிறைந்தது போல் இருக்கும் அறை. தென் முனையில் சுவரோடு சுவராக ஒரு ஒற்றைப் படுக்கை. இருபக்கமும் தேக்குக் குமிழ்களைக் கொண்ட கட்டில். இதன் எதிர்ச்சுவரில், நம்முடைய அணுகுமுறையே நம்மை தீர்மானிக்கிறது என்ற வாசகப் பொறி பளபளப்பான மரப்பலகையில் இடம் பெற்றிருந்தது. கட்டிலின் வடமுனையில் கால்களுக்கு மேலே இன்னொரு பச்சை பலகை அதில், அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்ற அப்பர் பிரானின் மேலாண்மை வரிகள், வெள்ளை வரிகள்.

மனோதத்துவ நிபுணர் டாக்டர் சத்தியாவின் வேண்டுகோள்படி, அவளிடம், செல்வா , எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அவளைப் பார்க்க பார்க்க, இவன் பதட்டம் பரவசமானது. சுமார் முப்பது வயதுக்காரி. அசல் கிராமத்து அக்காவின் நகர்ப்புற வார்ப்பு. மனிதச் சதையாலும், எலும்பு நரம்புகளாலும் கடைந்தெடுக்கப் பட்டது போன்ற உடல். நெற்றியில் உச்சிக்கு சிறிது கீழேயும், நடுவிலும் இரண்டு நிசமான குங்குமப் பொட்டுக்கள். புருவ மத்தியில் ஒளி சிந்தும் முத்துக்களால் ஆனது போன்ற அம்பு வடிவப் பொட்டு. அரவிந்தர் ஆசிரமத்தின், அந்த அன்னையின் லேமினேட்டட் புகைப்படம் மேஜையின் பின் சாய்வோடு இருந்தது. அன்னைக்கு தீட்சண்யமான பார்வை. திடப்படுத்தும் நோக்கு எல்லாமே அன்பு மயம் என்ற போக்கு.

செல்வா, அந்த கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். டாக்டர் சத்தியா, அவன் அருகே சென்றாள். டாக்டர் என்றால் ஸ்டெதாஸ்கோப் டாக்டர் அல்ல. மனோதத்துவத்தில் வாங்கிய டாக்டர் பட்டக்காரி. செல்வாவை சிறிது நேரம் பார்த்தாள்.

அவனோ, இதுவரை படுத்தறியாத சுகமான கட்டிலில், அதன் மெத்தையோடு பறப்பது போல், கிடந்தான். மயிலிறகால் செய்தது போன்ற மெத்தை. மேலேயும் கீழேயும் அவனை மென்மையாய் தாலாட்டியது. தானும் ஆடிக் கொண்டது சத்தியா, 'நான் சொன்னது மாதிரியே நீ செய்து காட்டணும்.' என்று சொல்லி விட்டு, அவன் தலைப்பக்கம் வந்தாள். அந்தக் குரல், ஆகாயத்து அசரீரி குரல் போல் செல்வாவிற்கு ஒலித்தது. மெல்லிய குரல் கொண்ட ஏ சி. வெள்ளை விளக்குகள் அணைந்து, பட்டும் படாமலும் எரியும் மஞ்சள் விளக்கு. சத்தியா, இப்போது அவன் கால்மாட்டு பக்கம் வந்து ஆணைபோல் பேசினாள்.

"கமான் யங்மேன். இப்போ நான் சொல்லிக் கொடுத்த பதினெட்டு உடல் மையங்களில் ஒவ்வொன்றாக உங்கள் பதட்டத்தை ஏற்றப் போறீங்க. அப்புறம் ரிலாக்ஸ் பண்ணப் போறீங்க..... முதலாவதாக, இரண்டு கைகளையும் முஷ்டியாக்குங்கள். இந்த இரண்டு முஷ்டிகளிலும், உங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள அத்தனை பதட்டங்களையும் முஷ்டிகளுக்கு கொண்டு வாருங்கள்."

செல்வா, இரண்டு கைகளையும், மூடிக்கொண்டு, பெருவிரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை உள்ளும் - புறமுமான பதட்டங்களையும், பயங்களையும், நடுக்கங்களையும் அங்கே கொண்டு வந்தான். முஷ்டிகள் வலித்தன. வெளியேறப்போன விரல்களை உள்ளங்கைகளோடு அழுத்தினான். இந்த முஷ்டிகள் தவிர உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும், நாடி நரம்புகளும் லேசானது போன்ற உணர்வு. இரண்டு நிமிடம் ஆனது. சத்தியா, ஒரு தோழனிடம் சொல்வதுபோல் சொன்னாள்.

"இப்போது முஷ்டிகளை விரல்களாக்குங்கள். விரல்களுக்கு இடைவெளி கொடுத்து, உள்ளங்கையோடு சேர்த்து, ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் மை பாய்.... ரிலாக்ஸ்...''

செல்வா, விரல்களை விரித்து, அவற்றையும் உள்ளங் கைகளையும் மென்மையாய் விரிவாக்கி, ஆசுவாசப்படுத்தினான். கைகளில் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு கல் கீழே விழுந்தது போன்ற உணர்வு.

"எப்படி இருக்கிறது பிரதர்."

"கைகள் பஞ்சு மாதிரி மென்மையாய் இருக்குதும்மா."

"ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்கள் ஓரினச்சேர்க்கை என்கிற புதை மண்ணிலிருந்து நிச்சயம் விடுதலை ஆவீர்கள். இப்போ அந்த மண்ணிலிருந்து கைகள் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் முழங்கைகள், மேற் கைகள் ஆகிய நான்கு மையங்கள், நெற்றி, கண், வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய ஆறு மையங்கள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் ஆகமொத்தம் பதினாறு இடங்களில் உடற்பாரத்தையும், மனப்பாரத்தையும் ஒவ்வொன்றுக்கு இரண்டு நிமிட நேரம் கொடுத்து ஏற்றுங்கள். மூன்று நிமிடம் ஒவ்வொரு உறுப்பையும் ஆசுவாசப் படுத்துங்கள். இரண்டு மையங்களாக உள்ளங்கைகளில் செய்தாயிற்று. இனிமேல் இதர பதினாறு மையங்களில் பாரத்தை ஒப்படையுங்கள்."

செல்வா, அந்த அம்மா, முன்னர் சொல்லிக் கொடுத்தது போல், தனது அத்தனை பாரங்களையும் பதினாறு மையங்களில் ஒற்றையாகவும், ரெட்டையாகவும் ஏற்றி, அவற்றை கனக்க வைத்தான். பிறகு, அந்த பாரங்களை இறக்கி, அவற்றை லகுவாக்கினான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆயிற்று. சத்தியா, கேட்டாள்.

"இப்போ எப்படி இருக்குதுப்பா?"

"உடல் காற்றில் மிதப்பது போல் இருக்கிறது மேடம். மனம் என்ற ஒன்று இல்லாதது போல் தோணுது மேடம் ."

"நல்ல அறிகுறி. ஆனால், ஒரு எச்சரிக்கை. கவிதாவோடு, நான் சொல்வது வரைக்கும், பழகவேண்டாம். அப்புறம், வட்டியும் முதலுமாய் பழகலாம்."

"பழகவே முடியாது மேடம்..."

"முடிய வைக்கிறேன். சரி... அடுத்த வாரம் இதேநாள், இதே நேரம் வாங்க... நான் சொல்லிக் கொடுத்த பயிற்சியை, அன்றாடம் செய்யுங்க... நீங்க போய்ட்டு, கவிதாவை வரச்சொல்லுங்க..."

செல்வா, சிறிது மிடுக்கோடு எழுந்தான். அந்த அம்மாவை, தன் அம்மாவைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே, வெளியேறினான்.
-----------------
அத்தியாயம் 17


டாக்டர். சத்தியா, குறிப்பிட்ட அதே வாரம், அதே நாளில், அதே நேரத்தில், செல்வா, அவளைச் சந்தித்தான். அவள் கேட்கும் முன்பே , இப்போ பரவாயில்லை மேடம்.....! என்னை நானே வெல்லமுடியும் போலத் தோணுது என்றான். உடனே அவள், அழகாய் பேசுறீங்களே... அப்புறம், கவிதா எப்படி இருக்காள்...? என்று போகிற போக்கில் கேட்கிறவள் போல் கேட்டாள்.

"பொதுப்படையாய் பேசிக்குவோம் தனித்து சந்திக்கல ஆச்சரியமாய் இருக்கு. அவளும் மாறிட்டாளோ என்னமோ..?"

"உண்மையான பெண், ஒருவனை நினைத்தால், அது குரங்குப் பிடிதான் நான் சொல்வது வரைக்கும், உன்னோட தனித்துப் பழகக்கூடாதுன்னுதான் அந்தப் பெண்ணுகிட்ட சொல்லி இருக்கேன்."

இப்போது, செல்வாவின் பூட்டிய உதடுகளில், ஒரு கீறல். டாக்டர். சத்தியாவும், காரியத்திற்கு வந்தாள். அவனை, அருகே உள்ள கட்டிலில் படுக்கும்படி சைகை செய்தாள் அந்த சைகையை, அவன் செயலாக்கியதும், அவன் அருகே சென்று, நின்றபடியே பேசினாள்.

"இப்போ கால், கைகளை விரித்துப் பரப்புங்கள். உச்சி முதல் பாதம் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள். நான் சொல்லிக் கொடுத்தபடி உங்கள் கவனம், பாதங்களிலிருந்து உச்சிக்கு ஒவ்வொரு உறுப்பையும் மென்மைபடுத்தியே வரட்டும். பிறகு, அதே கவனம் பிடரி வழியாய், முதுகுத் தண்டு மூலமாய், கால் பதங்களுக்கு போகட்டும். உடம்பை அப்படியே மிதக்க விடுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள். உள்வாங்கும் மூச்சுக்கு ஒரு நிமிடம் என்றால், வெளிவாங்கும் மூச்சுக்கு இரண்டு நிமிடம் ஆகட்டும். ஆழ்ந்து, வயிற்றை விம்மியும், எக்கியும்... ஆமாம்... இப்படித்தான்... இப்படியேதான் மூச்சு விடவேண்டும். இப்போது அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்ற இரண்டு வரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய வட்டத்தை பாருங்கள். அந்த வட்டத்தில் இருக்கும் மையத்தைப் பாருங்கள். அந்த மையத்தை மட்டுமே பாருங்கள்."

செல்வா, அவள் சொன்னபடியே செய்தான். கண்ணுக்கு வந்த வரிகள் மறைந்தன. வட்டமடித்த வட்டம் மறைந்தது மையம் மட்டுமே நின்றது. அதுவும் சிறுகச் சிறுக சென்றது அப்படிச் செல்லச் செல்ல, அவன் இறப்பிற்கும் பிறப்பிற்குமான இடைவெளியாய், தூக்கத்திற்கும் கனவிற்குமான எல்லையாய் கண்களை மூடியபடி, அரை மயக்க நிலையில் கிடந்தான்.

சத்தியாவின் குரல், இசை நிபுணர் போல ஏற்ற இறக்கத்தோடு குழைவாகவும், உறுதியாகவும் தோழியாகவும், தாயாகவும் பல்வேறு விதங்களில் ஒலித்தது.

"இப்போது உன் ஆழ்மனம் விழிக்கிறது. அந்த மனம் என் வசமாகிறது. என் சத்தத்தைத் தவிர, எந்த சத்தமும் உனக்கு கேட்காது. நான் சொல்லுகிறபடி நீ செய்யப்போறே சரியா?"

"சரிதான்."

"இப்போ உனக்கு வயசு எட்டு. தோட்டத்துக்கு போற... யாரோடு போறே...?"

"எங்க மாமா மகன் குமாரோட போறேன்."

"தோட்டத்துல என்ன செய்றீங்க?"

"பரணுல ஏறி காக்கா குருவிகளை கல் கட்டுன கயிற்றுக் கம்பை சுழற்றி சுழற்றி துரத்துறோம்.”

"அப்புறம்?"

"அம்மா அப்பா விளையாட்டு விளையாடினோம்."

"அப்படின்னா ?"

"கொஞ்ச நேரம் அவன் கீழே படுப்பான். நான் மேல் படுப்பேன். அப்புறம், நான் கீழே படுப்பேன், அவன் மேலே படுப்பான்."

"அப்புறம்?"

"அவனுக்கு குழந்தை பிறக்கிறது மாதிரி ஒரு பொம்மையை எடுத்து ரெண்டு பேருக்கும் மத்தியில் போட்டுக்கிறோம். அதைத் தாலாட்டுறோம். கொஞ்சுறோம்... குலாவுறோம்..."

"இந்த மாதிரி, அப்பா - அம்மா விளையாட்டுக்கள நீங்க மட்டும்தான் செய்வீங்களா? இல்ல எல்லாரும் செய்வாங்களா?"
"மத்த பசங்க எங்களைவிட மோசம். ஆடு, மாடுன்னு அதுங்க மேல ஏறி, அட்டூழியம் பண்ணுவாங்க"

"அப்போ நீ அவங்களைவிட மேலு... சரியா?"

"சரிதான்."

"எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் செய்கிற, இந்த மாதிரி காரியம், சிறுபிள்ளை விளையாட்டு. இதை பெரிசா எடுத்துக்க கூடாது. எடுத்துக்குவியா?"

"மாட்டேன்."

டாக்டர் சத்தியா, சிறிது இடைவெளி கொடுத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். மீண்டும் ஆணைக்குரலில் பேசினாள்.

"இப்போ உனக்கு பதினெட்டு வயசு. உங்கப்பா சீட்டு போட்டு நொடித்திட்டார். ஆனாலும், நிலம், புலனை விற்று சீட்டுப் பணத்தை கொடுத்திட்டு என்ன செய்யுறார்?"

ஒரு பெட்டிக் கடைக்குள் சிறைப்பட்டு கிடக்கார்"

"நீ என்ன செய்யுறாய்?”

"அழுகிறேன்."

"எப்படி அழுதே?"

செல்வா, அழுது காட்டினான். தலையில் அடித்துக் காட்டினான். முகத்தை மோதிக் காட்டினான். "எப்பா... எப்பா..." என்ற ஒற்றைச் சொல்லால் புலம்புகிறான்; ஆர்ப்பரிக்கிறான்.

"சரி அழுகையை நிறுத்து நீ சிறுமைப்படவேண்டியவன் இல்லை. உங்கப்பாவை பார்த்து பெருமைப்பட வேண்டியவன். இந்த சென்னையில் சிட் பண்ட் நடத்தியவர்கள், தங்கள் பணங்களை வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, திவாலாகி விட்டதாக நாடகம் போடுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்த ஹர்ஷத் மேத்தா இன்னும் கம்பீரமாய் திரியுறான். ஆனால், சொத்தையும், நகையையும் விற்று அத்தனை பணத்தையும் அடைத்த நவீன அரிச்சந்திரன் உங்கப்பா. இதுக்கு நீ பெருமைப் படணுமா? சிறுமைப்படணுமா?"

"பெருமைப்படணும்."

"நல்லது. அப்படித்தான் எடுத்துக்கணும் இப்போ உனக்கு பத்தொன்பது வயது. சென்னையில் இருக்கே. பக்கத்து வீட்டு கவிதாவை எப்படி பிடித்தே?"

"நான் பிடிக்கல... அவள்தான் பிடித்தாள்."

"சரி யார் பிடித்தீர்கள் என்பது முக்கியமில்ல. கவிதா நல்லவளா? கெட்டவளா?"

"ஆக மொத்தத்தில் நல்லவள்."

"அது என்ன ஆக மொத்தம்?"

"டூப்ளிகேட் அம்மாவ பற்றி சொல்லல"

"கவிதா, ஓடிப்போன தன் அம்மாவைவிட இந்த அம்மாவை உசத்தியாய் நினைத்திருக்கலாம் இல்லியா? பெற்று போட்ட கடமைய முடிக்கும் முன்னால, ஓடிப்போனவளவிட, வலிய வந்து இவளுக்கு தானே அம்மாவான ஒருத்தி மேலானவள்தானே..?"

"ஆமாம்... ஆமாம்..."

"கணவன் மனைவியாய் இருந்தால் கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கலாம். தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே? சொந்த அம்மாவாய் ஒன்றிப்போன ஒரு பெண்ணைப் பற்றி உன்னிடம் மாற்றிப் பேச, அவளுக்கு மனம் இல்லாமல் இருந்திக்கலாம். இதனால் மறைத்திருக்கலாம். இப்படி மறைப்பதற்கு அவளுக்கு உரிமை உண்டா இல்லையா?"

"உண்டு. ஆனால், மோகனன் கிட்ட என்னை கூட்டிக் கொடுத்தாள். வீடு திறந்திருந்தால் வரச்சொல்லிவிட்டு, டூர் போயிட்டாள்."

"அவள் அண்ணன், வீட்டுக்கு வருவதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். பூட்டிய கதவை அவன் திறந்தது அவளுக்கு தெரியாது. இது அவள் வேண்டுமென்றே செய்த காரியமா?"

"இல்லை ... இல்லை ..."

"நான் சொல்வது மாதிரிச் சொல். கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை ."

"கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை."

"அப்போ அவளை வெறுக்கலாமா?"

"கூடாது. கூடாது... கூடவே கூடாது."

"சரி... இப்போ உன்னை மோகனன், உன் அறைக்கு கூட்டிட்டு போகிறான். என்ன செய்யுறான்?”

"நான் கவிதாவுக்கு எழுதிய லெட்டரை காட்டி மிரட்டுனான். நான் நடுநடுங்கி போறேன். என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க ஒரு உதவி கேட்கிறான். நான் வாயைத் திறக்கிறேன்."

"அப்புறம்... அந்த வெள்ளைக்காரனோட உறவாடும்போது?"

"முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் நான் இயங்கும் போது ஒரு சுகம் கிடைத்தது"

"அப்புறம் மோகனனோடு டீலக்ஸ் நிரோத்தோட ஈடுபடும்போது?"

"ஒரு தனி வாசனை; தனிச் சுகம். என்னையும் மதித்து அவன், செண்பக வாசனை டீலக்ஸை கொடுத்தான். நான் அவனானேன். அவன் நானானான்.'

"உனக்கு இப்போ யாரை அதிகமாய் பிடிச்சிருக்கு?"

"மோகனனை."

"ஓ.கே. அவனோட அந்த உறுப்பு புண்ணாகி, சீழ்பிடித்து, நாற்றம் அடித்து, புண் புண்ணாய் இருக்கிறதாய் கற்பனை செய்து பார் செய்துட்டியா?"

"செய்துட்டேன். அய்யோ ! சகிக்கல."

"இப்போ புழு அரிக்கும் உறுப்பை கொண்ட அவனை, நீ காலால் உதைத்து, மல்லாக்க கிடத்துறே. கிடத்துறியா?"

செல்வாவின் கால்கள், கட்டில் சட்டங்களை உதைக்கின்றன. கைகள் அங்குமிங்குமாய் ஆகாயத்தில் குத்து விடுகின்றன. லட்சுமி, இதமாகக் கேட்கிறாள்.

"இப்போ இப்படி சீழ் பிடித்து கண்டதே காட்சி, கொண்டதே கோலமாகி' உன்னைக் கெடுத்த அந்த மோகனனுக்கும், நீ உதைத்தியே அந்த தாமோதரன் கிழவனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குதா?"

"இல்ல.... இல்லவே இல்ல.... அவன் பொறுக்கி... இவன் புறம்போக்கு."

"மீண்டும் பெயர் சொல்லி திட்டு." "தாமோதரன் கிழவன் பொறுக்கி. மோகனப் பயல் புறம்போக்கு."

"மோகனனை இன்னும் நல்லாத்திட்டு."

"அயோக்கியப் பயலே- திருட்டுப் பயலே- பொறுக்கி நாயே.. புண் பிடிச்ச பிசாசே - சீழ்வடியும் சிறங்கா"

"சரி... இப்போ நான் பத்து எண்ணுவதற்குள் நீ எழுந்து விடுவாய். நான் சொன்னது எதுவும் உன் உள் மனதில் பதியுமே தவிர, வெளி மனதிற்கு வராது. சரி. ஒன்று - இரண்டு... மூன்று – "

செல்வா, மெல்ல எழுந்தான். அங்குமிங்குமாய் கண்களை சுழற்றினான். சத்தியா, அந்த பெயருக்குரிய பொருள் போல், அமைதியாய்ச் சிரித்தாள். பிறகு ஒரு கேள்வி கேட்டாள்.

"இப்போ எப்படி இருக்குது தம்பி?"

"உடம்பு முழுக்க ஏதோ ஒரு சுகம். ஆகாயத்தில் பறக்கிறது மாதிரியான லகு. நடந்ததை நினைக்க மறுக்கும் மனம். நல்லதை மட்டுமே நாடும் இதயம். நான் கவிஞனாயிட்டேன் இல்லியா மேடம்?

"நீ கவிஞனேதான். கவிதாவைப் பற்றி மட்டும் கவிதை எழுதாதே. சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுது. உன் பெயரை வெளியிடாமல் ஓரினச் சேர்க்கையால் ஏற்படும் கேடுகளைப் பற்றி கட்டுரை எழுதி எனக்குக் கொடு. நான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி . வெளியில் உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.”

"அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?"

"மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்லவேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். "நல்லவேள் ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல. இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?"

"புரியுது, மேடம். இப்போ அதுமேல் அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?"

"திருந்திட்டே... திருந்திட்டே ... சில திருத்தங்கள் தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க. அப்புறம்..."

செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியது போல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான்.

"கவிதாவோட பழகலாமா மேடம் ?"

"லேசு- லேசாய்…"
-------------
அத்தியாயம் 18


அத்தனை பேரும் மாமூல் நிலைக்கு திரும்பி விட்டார்கள். செல்வாவை சித்திக்காரி அதிகமாக திட்டுவதில்லை. அவனும், அவள் மௌனத்தைத்தான் தவறாக எடுத்துக் கொண்டான். சித்தப்பாவுக்கும், சித்திக்கும் ஏற்படும் 'சில்லறை தகராறுகள்' வரும்போது, எந்த பயமும் இன்றி, சித்திக்கே வக்காலத்து வாங்கினான். இதில் சித்தப்பாவுக்கு உள்ளூர பெருமைதான். குழந்தைகள் மீண்டும் செல்வாவுடன் ஒட்டிக் கொண்டன. வேன், ஸ்கூட்டர் ஆனது. கவிதா - செல்வா காதல், அந்த தெருவாசிகளுக்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தெருக்களுக்கும் தெரிந்துவிட்டது. கவிதா, செல்வா வீட்டிற்கு போவதும், செல்வா, கவிதா வீட்டிற்கும் போவதும் வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே தனது தவறால் தான் மகன் மோகனன் கெட்டழிந்தான் என்ற குற்ற உணர்விலும், கூடவே தன்னோடு சேர்ந்தவளை கவிதா, அம்மா மயமாக்கியதாலும், மூத்த அதிகாரியான, கவிதாவின் தந்தை, லஞ்சம் வாங்குவதை நிறுத்த வில்லையானாலும், அதை குறைத்துக் கொண்டார். அவருள்ளும் ஒரு மாறுதல். கவிதா, மோகனைப்போல் லெஸ்பியன் ஆகாமல், இருப்பதற்கு நல்ல பையனான செல்வாவின் காதலை ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டார். ஆனாலும், ஒருநாள் –

செல்வா, முகத்தில் ஈயாடவில்லை. மோகனன், அவனுக்கு தனது பம்பாய் ஹோமோ வாழ்க்கை பற்றி விலாவாரியாய் குறிப்பிட்டுவிட்டு, தங்கை எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடிப்பதாக அவனது கல்லூரி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். இதனால் பழைய நினைவுகள் , விசுவரூபம் எடுத்தன. இந்த கடிதத்தை கவிதாவிடம் காட்டியபோது, அண்ணன் முகவரி கிடைத்ததும், மகிழ்ந்து போனாள். ஆனாலும், செல்வா சோர்ந்து போனான். அந்த சோர்வை மறைக்கக்கூடிய அளவிற்கு அவனுக்கு திட சித்தமும் இருந்தது. ஆனாலும், அந்தக் கடிதம் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. கவிதாவோடு பேசும் போது, அவள் காதலனாகவே இருக்கிறவன், இரவு நேரத்தில் மட்டும், மோகனனுக்கு காதலனாகவும், காதலியாகவும் ஆகிப்போனான். மீண்டும் குடும்பத்திலும், கவிதாவுக்கும் குழப்பம் வருமோ என்று பயந்தான். வெளிப்படையான பயம் அல்ல. உள்ளூரத் தோன்றிய பயம். மறைக்கக்கூடிய பயம்.

ஆனாலும், அந்தப் பயத்தை அடியோடு ஒழிப்பதற்காக, மீண்டும், டாக்டர் சத்தியாவிடம் முன்னதாக தகவல் சொல்லிவிட்டு சென்றான். அவன் வரவை எதிர்பார்த்தது போல், அந்தம்மா, "வா தம்பி.. வா." என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், "ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்த போது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான்.

"உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது."

"நோ... நோ... மேடம்"

"அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு.”

"அப்படில்லாம்..."

"இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்."

"இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம். ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முழுமையான ஆண், முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோர் குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மா -து. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடுதல் இருக் ம் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது... உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த ஜீன்கள் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகையால், ஓரினச் சேர்க்கையும் ஒரு வகையில் மரபு வழிப் பிரச்சினை."

"அப்படின்னா... இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாதோ?"

"முடியும். ஜீன் மட்டுமே ஒருவரது கேரக்டரை தீர்மானிப் பதில்லை . சுற்றுப்புறச் சூழல், சமூக அமைப்பு, இளமைக்கால அனுபவங்கள், சேரிடம், சேராயிடம் என்று பல காரணிகள் உள்ளன. ஒரே குடும்பத்தில் படிக்காதவர் நடைமுறை வேறு. படித்தவர் நடைமுறை வேறு. இல்லையா? ஆகையால், உடல் ஜீன்களோடு, நம் உடம்பிலுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஜீன்கள், சமூகச் சூழலையும், புதிய அனுபவங்களையும், பதிவு செய்கின்றன. இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. மனம் அந்த பிரச்சினையை கிளப்பும் போது, நீ பாட்டுக்கு, எதை வேணுமென்றாலும் நினை. எனக்கு அதற்கும் சம்பந்தமில்லை' என்ற அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்."

"என்னை மாதிரி நிறைய பேர் இப்படி இருக்காங்களே மேடம்."

"அப்படி இருப்பதா பேர் பண்ணிக்கிறாங்க. இந்த "பயர்" படம் வந்ததும் வந்தது, சமூகத்துல லெஸ்பியன் பெண்கள் அதிகமாக இருக்கிறது போலவும், மாமூல் பெண்கள் குறைவாய் இருப்பது போலவும் ஒரு மாயை ஏற்படுத்திவிட்டது. இயற்கை ஒரு பிரபஞ்ச இன்டர்நெட் மாதிரி. அதில் எல்லா நிகழ்வுகளும் உள்ளடங்கி உள்ளன. ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி. பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவு பெறுவதற்கு அந்த விதையை விதைப்பதும், விதைத்ததை சுற்றி முள்வேலியைப் போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.

"மனிதனும் சமூகமும் இயற்கையின் விதிகளை மீறும்போது, இயற்கை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல் பிரம்படி கொடுக்கிறது. அடிக்கிற கைதான் அணைக்கும்' என்பதுபோல், அதே இயற்கை மருந்துகளையும், வழிமுறைகளையும் காட்டுகிறது. காடுகளில் சாதுவான மிருகங்கள் அதிகமாகவும், கொடிய மிருகங்கள் குறைவாகவும் இருப்பது. இயற்கையின் சமச்சீர் நிலையை பிரதிபலிப்பது. பொதுவாக, அயல் மகரந்த சேர்க்கைதான் தாவரங்களில் ஏற்படுகிறது. ஆனால், வேர்க்கடலையில் அயல் சேர்க்கை ஏற்படாதபடி, அது மொட்டாக கிடக்கிறது சில ஓரினக் சேர்க்கைக்காரர்கள் பெண்களோடும், பாலியல் உறவை வைத்துக் கொள்வதைப் போல், பூவரசு மரத்தில், அயல் மகரந்தச் சேர்க்கையும், சுய மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது. இது இயற்கை தனது சமச்சீர் நிலையை பாதிக்காமல் இருப்பதற்கு, ஏற்படுத்திய விதிவிலக்குகளாக இருக்கலாம்."

"நான் எப்படி முழுமையான ஆணாக மாறுவது மேடம்?"

"நீங்கள் மாறி விட்டீர்கள். எஞ்சி இருக்கிற பத்து சதவீதம், எல்லோரிடமும் உண்டு. இது இருப்பதால் ஆபத்தில்லை. ஆனால், அது உங்களுடைய பழைய அனுபவங்களை கிளறுவதால் தடுத்தாக வேண்டும். இதற்காக நான் உங்களுக்கு 'ஸாக்தெராபி' கொடுக்கப்போறேன்."

"அப்படின்னா மேடம்."

"முதலில் கட்டிலில் போய்ப்படுங்கள்"

கட்டிலில் செல்வா, மல்லாக்க கிடந்தான். டாக்டர் அல்லது முனைவர் சாத்தியா, ஸ்டெதாஸ்கோப் மாதிரி ஒரு கருவியை கையில் எடுத்தாள். அதன் முனையிலிருந்த கறுப்புப் பட்டையை செல்வாவின் கையில் சுற்றிக் கட்டினாள். பட்டைக்குள் இருந்து வெளிப்பட்ட இரண்டு ஒயர்களில் ஒன்றை பிளக்கில் செருகினாள். இன்னொன்று இவள் கைக்குள் வட்ட உருளைக்குள் ஊடுருவி இருந்தது.

செல்வாவை முன்பு போல், அரை மயக்க நிலைக்கு செலுத்தியதும், சத்தியா , கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள். ஒவ்வொரு கேள்விக்கும், அவன் பதிலளிக்கும் போது, அந்த உருளையை இயக்கி சூடு போடுவார்களே, அதுபோல, அவன் உடம்பில் பட்டை வழியாக மின் அதிர்ச்சியை கொடுத்தாள். எந்த நினைவும் இப்படிப்பட்ட அதிர்ச்சியோடு இணைக்கப்படும் போது, அந்த நினைவு வேரறற்றுப் போகிறது.

"செல்வா! இப்போ மோகனன் உன் முன் தோன்றுகிறான். அவன் எதனால் உனக்கு பிடித்தவனாகிறான்"

"அவனின் கிறக்கமாக பார்வை. ஒற்றைக் கண்ணை மேலேற்றி, இன்னொரு கண்ணை தாழ்த்தி பார்க்கும் மோகனப் பார்வை... எம்மா ... எப்படி வலிக்குது...”

"லேசான வலிதான். அப்புறம் செல்வா! அவனிடம் உங்களுக்கு பிடித்தமானது என்னது?"

"அவனது நடனம் ஊழிக்கூத்து மாதிரியான வேக வேகமான இயக்கம். அத்தனை கர்ணங்களையும் அடித்துக் காட்டுவானாம் எப்பாடி தோளுல வலிக்குதே."

"வலி போயிடும் அவனைப் பார்த்தால் நீ எப்படி ஆகிறாய்?"

"அர்த்த நாரீஸ்வரனாய். அவன் எந்த முறைக்கும் சம்மதிப்பான்."

இன்னொரு மின் குத்து. இன்னொரு 'எம்மா '

"செல்வா, வாய்விட்டுச் சொல்லு! மோகனனே! உன்னை மறக்க முடியலியே. மறக்க முடியலியே... இப்படி பல தடவை சொல்லுப் பார்க்கலாம்."

செல்வா, பல தடவை சொன்னான். ஒவ்வொரு தடவையும், மென்மைக்கும் வன்மைக்கும் இடையேயான மின் அதிர்ச்சியில், அவன் கரங்கள், காலோடு சேர்த்து குலுங்கின.

"இன்னொரு தடவைச் சொல்லு..... மோகனனை மறக்க முடியலியே... மனசுக்குள்ளே சொல்லு.."

"சொல்லமாட்டேன் வலிக்குது.. வலிக்குது."

டாக்டர் சத்தியா, செல்வாவை வழக்கப்படி எழுப்பிவிட்டாள் அவன் தூக்கத்தையும் துக்கத்தையும் கலைத்தவன் போல் எழுந்து, அவளை புன்முறுவலாய் பார்த்தான். சத்தியா, இறுதியாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

“இனிமேல் உனக்கு பிரச்சினை வராது. கவிதாவை, அவள் அண்ணனுக்கு கடிதம் எழுதச் சொல். ஓரினச் சேர்க்கைப் பற்றி ஒரு வரிகூட வரக்கூடாது என்று கண்டிப்புடன் எழுதச் சொல். இனிமேல் எந்தக் கடிதம் வந்தாலும், அவள் மூலம்தான் உனக்கு வரவேண்டும் என்றும் அவளை எழுதச் சொல். அந்தக் கண்டிப்பில் அன்பு கனியவேண்டும். பாசம் பொங்க வேண்டும். காரணம், அவனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஆனவன்தான்."

அவனுக்கும் நீங்க சிகிச்சை."

"அது முற்றின கேஸ் என்னால் மட்டுமில்லாமல், யாராலும் முடியாது. அவனாய் நினைத்தால் தான் உண்டு."

"ஒரே ஒரு கேள்வி டாக்டர்! அய்யப்பன் அப்படி பிறக்கலியா? ஆறுமுகம் இப்படி பிறக்கலியா? பிரம்மா என்கிற ஆண், பிள்ளைகளை பெறலியா? விஷ்ணு என்கிற ஆண் வடிவம் பிரம்மாவை பெற்றெடுக்கவில்லையா? இப்படில்லாம் அந்த பசங்க கேட்கிறாங்க. அதுக்கு நாம் என்ன பதில் சொல்றது?"

"சாமர்த்தியசாலி நீ. அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ கேட்கிறே. மதங்கள் கடவுளுக்கு எதிரி புராணங்கள் மதங்களுக்கு வைரி. அர்ச்சகர்கள் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனாலும், இந்த அய்யப்பன் விவகாரத்தில் ஒரு உள் அர்த்தமும் இருக்கிறது. பரந்தும் விரிந்தும் அண்டங்கோடிகளான நட்சத்திரங்களாய் ஆகி, அவையே ஒரு அணுவாக மாறி, நாடகம் நடத்தும் பிரும்மம் என்பது ஒன்றுதான். அது, ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. அந்த பெரிய ஒன்று, தன்னையே சின்னச் சின்ன ஒன்றுகளாக பெற்றெடுக்கிறது. பிறகு, இந்த சின்ன ஒன்றுகளை ஆண், பெண்ணாக பிரித்து இறப்பாலும் பிறப்பாலும் ஒழுங்குபடுத்துகிறது. பிரும்மத்தின் சிருஷ்டி வினோதம்தான் அய்யப்பன் என்று எடுத்துக்கொள்ளலாம். கொச்சைப்-பட்டவர்கள் தான், அதைக் கொச்சைப்படுத்துவார்கள். எப்படியானாலும் அது புராணம். பொய்களிலே பெரிய பொய் புராணப் பொய்."

செல்வா, அவளை மலைப்போடு பார்த்துவிட்டு, ஒரு கேள்வி கேட்டான்.

"பொதுவாய் சைக்காட்ரிஸ்ட், சைக்காலஸிஸ்ட் என்கிறவங்க பாதிக் கிராக்காத்தான் இருக்கிறாங்க. நீங்க.... விதிவிலக்காய் இருக்கீங்களே."

"நீங்க சொல்கிறவர்கள், தங்கள் உணர்வுகளை தாங்களே பரீட்சித்து பார்ப்பதால், ஏற்படுகிற கோளாறு அது. அதோட மனநோய் என்பது, யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். என்னைப் பொறுத்த அளவில், நான் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானப் பயிற்சி பெற்றவள். பிரபஞ்சத்தை ஆராதிக்கும் வள்ளலாரின் அகவலை தினமும் படிப்பவள்."

டாக்டர். சத்தியா, அவனது கேள்வி ஞானத் துடிப்பால் தொடர்ந்தாள்.

"உறுதியான உடம்பில் உறுதியான மனம் இருக்க முடியும். உறுதியான உடலுக்கு யோகாசனம், உடற்பயிற்சி போன்றவைகளை செய்ய வேண்டும். மயிலாப்பூரில், தேசிகாச்சாரியார் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் கைநாடி பார்த்தே, ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்றபடி, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். அங்கேயும் நான் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். உடலை கழுவுவது போல் மனதையும் கழுவ வேண்டும். ஒரு விளக்கின் தீபத்தை பார்த்தல், அது நம் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொங்கி ஒளியிடுவதாய் கற்பித்தல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் வாக்கிங்காவது போக வேண்டும். முக்கால் மணி நேரம் வேர்வையே குளியலாகும் வகையில் நடக்க வேண்டும். இனிமேல் எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால், நீங்களும் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வரலாம். ஓகே..."

டாக்டர். சத்தியா, இருக்கையை விட்டு எழுந்ததால், அட்டை மாதிரி ஒட்டிக் கிடந்த செல்வா எழுந்தான். எழுந்தபடியே நடந்தான்.
--------------
அத்தியாயம் 19


கடந்த ஒருமாத காலமாக புதை மண்ணாய் தெரிந்த கடல்மண், அவர்கள் இருவருக்கும் மாலை மஞ்சள் வெயிலில் ஒளி சிந்தும் மரகதத் துகள்களாக தெரிந்தன. கடல் வெள்ளை வெள்ளையான அலைப் பற்களைக் காட்டிக் காட்டி சிரித்தது. முன் எச்சரிக்கையாக வெளிச்சம் பொங்கும் இடத்திலேயே அமர்ந்தார்கள். கைகளை மட்டும் பிடித்துக்கொண்டார்கள்.

கடற்கரையில் சந்திக்கக்கூடாது என்று, இருவருக்கும் குடும்பத்தினர் விதித்த கட்டளைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மாதம் ஒரு தடவை சந்திப்பது என்று இவர்களாகவே முடிவெடுத்துக் கொண்டார்கள். மற்ற நாட்களில், இவன் சித்தப்பா, சித்தி அங்கே போவதும், அவள் அம்மா, அம்மா இவர்கள் வீட்டுக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. இருவரும் எதிர்காலத் தம்பதியினர் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று, இரண்டு குடும்பத்துக்கும் இடையே உறுதியாகி விட்டது.

"கவிதா, நான் ஒரு கவிதை எழுதி வந்திருக்கிறேன். படித்துக் காட்டட்டுமா?"

"அய்யய்யோ இந்த கவிதையால வந்த வினையே போதும்பா நீங்க படிச்சது போதும்... கிழிந்து எறிங்க. அதோட எனக்கு இந்த கவிஞர்களோட கற்பனையே பிடிக்காது. பூ காதலியாம், வண்டு காதலனாம். இது அபத்தமான கற்பனை. மலருக்கும் மலருக்கும் மகரந்த உறவை ஏற்படுத்தும் வண்டுகள் வெறும் புரோக்கர்கள் தான். காதலன்கள் அல்ல."

"அல்லவோ.... இல்லவோ... இது வேற மாதிரியான கவிதை கவிதா.. உன்ன மாதிரி வித்தியாசமான கவிதை."

"ஏற்கெனவே கடல் காற்றுல குளிர் அடிக்குது. இந்த கவியரங்களில் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்வான் பாருங்க... கத்துக்கூட்டி கவிஞன் அதுமாதிரி பினாத்தாமல் ஒழுங்கா படிங்க. ஒருவரியை, ஒரு தடவை படித்தால் போதும்.”

செல்வா, கவியரங்கத்தில் படிக்கப் போவது போல் குரலை உயர்த்தினான். பிறகு, கவிதா பார்த்த பார்வையில், குரலை இறக்கி அவளுக்காக மட்டுமே படித்தான்

''பாலினம் என்பது ஈரினம் - அதில்
ஓரினம் என்பது பாலின ஊனம்.

கல்லை கவியாக்கும் சிற்பி
கல்லிலும் ஆண் பெண் ஆய்கிறான்.

மருந்தை உருவாக்கும் வைத்தியன்,
மருந்திலும் ஆண் பெண் காண்கிறான்.

ஏறும் கலப்பையும் யாத்திடும் தச்சன்,
மரத்திலும் ஆண் பெண் பார்க்கிறான்.

மகரந்தம் சிந்தும் செடிகளை, கொடிகளை
ஆணா பெண்ணா என்று ஆய்பவை வண்டுகள்.

வண்டுகள் கொண்ட குணம்கூட இந்த
மண்டு மனிதனுக்கு இல்லை.

இயற்கைச் சிற்பி, படைத்த உடம்பு
இனிஷியல் இல்லாமல் அழியலாமா?

பிறப்பிற்காய் ஆன இருபாலும்
ஒருபாலாய் திரிந்தால் இருபால் எதற்கு?"

நீண்ட நெடிய கவிதை எழுதி வைத்திருந்த செல்வா, அவள் கோபத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனக்கு பிடித்த வரிகளை மட்டும் பாடினான். முதல் இரண்டு வரிகளை பல்லவியோ.... அனுபல்லவியோ... அதை ஒவ்வொரு பத்தியை படித்து முடித்ததும், திருப்பி வாசிக்கப் போனவன், அதையும் அவளுக்காக விட்டுவிட்டான். அவள் மௌனமாக இருந்தாள். இவனுள் இருந்த கவிஞன் வெடித்தான்.

"கவிதை எப்படின்னு ஒரு வார்த்தை சொல்லல."

"நல்ல கவிதைன்னு என்னால சொல்லமுடியும். ஆனாலும், இது தெளிவாக புரிவதால், இந்தக் காலத்து நவீனத்துவ கவிஞர்கள், இதை கவிதைன்னு ஏற்றுக் கொள்ள-மாட்டாங்க."

"நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ அல்லது சிறுங்கவிக்கோ .... கவிப்பேரரசு.."

"கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில் என்னை பற்றி ஒரு
வார்த்தை வரலியே?"

"இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது."

கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணீரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிப்பட்டுக் கொண்டும் இருந்த இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன
----------------
சு. சமுத்திரத்தின் படைப்புகள்


பல பல்கலைக்கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்பட்டவை; முனைவர், எம்பிஎல். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை.

நாவல்கள்
1. ஒரு கோட்டுக்கு வெளியே
பதினான்கு இந்திய மொழிகளில், மொழி பெயர்க்கப்படுகிறது பதினான்கு மொழிகளில், வானொலியில் ஒலிபரப்பானது - கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1997; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1992.
2. சோற்றுப் பட்டாளம்
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், முதன் முதலாய் முழுநீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், 1992
இந்தப் படைப்பையும், உயரத்தின் தாழ்வுகள், காமன் அறிந்த ஈசனையும் இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிதாக வெளியிட்டுள்ளது.
3. இல்லந்தோறும் இதயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1982.
இரண்டாம் பதிப்பு, 1997-ல் வானதி
4. நெருப்புத் தடயங்கள்
மணிவாசகர் பதிப்பகம், 1983. இரண்டாம் பதிப்பு - கங்கைப்
பதிப்பகம்
5. வெளிச்சத்தை நோக்கி
மணிவாசகர் பதிப்பகம், 1989
6. ஊருக்குள் ஒரு புரட்சி
தமிழக அரசு முதல் பரிசு பெற்றது மணிவாசகர் பதிப்பகம், 1980
1992 (ஐந்து பதிப்புகள்)
7. வளர்ப்பு மகள்
மணிவாசகர் பதிப்பகம்,
1980-1987 (ஐந்து பதிப்புகள்)
8. நிழல் முகங்கள்
தமிழ்ப் புத்தகாலயம், 1991
9. சாமியாடிகள்
மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை - 1997
10. தாழம்பூ
மணிவாசகர் பதிப்பகம், 1992
11. மூட்ட ம்
அன்னம் வெளியீடு, 1994;
ஏகலைவன் வெளியீடு, 1996.
12. அவளுக்காக
வானதி பதிப்பகம், 1992
13. வாடாமல்லி
வானதி பதிப்பகம், 1994 இரண்டாம் பதிப்பு - 1997.
அமரர் ஆதித்தனார் பரிசு பெற்றது
14. சத்திய ஆவேசம்
மணிவாசகர் பதிப்பகம், 1987.
15. பாலைப்புறா
ஏகலைவன் பதிப்பகம், 1998,
--
குறுநாவல்கள்
1. புதிய திரிபுரங்கள் (+ கேள்வித் தீ ) மணிவாசகர் பதிப்பகம், 1982,
இரண்டாம் பதிப்பு, 1997 -
வானதி பதிப்பகம்.
2. வேரில் பழுத்த பலா
(+ ஒரு நாள் போதுமா)
சாகித்திய அக்காதெமி விருது பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,
1988, 1994.
3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
(+ பிற்பகல்)
வானதி பதிப்பகம், 1992.
4. ஒத்தை வீடு (+ புதைமண்) ஏகலைவன் பதிப்பகம், 2000

சிறுகதைத் தொகுப்புகள்
1. குற்றம் பார்க்கில்
தமிழக அரசு முதல் பரிசு பெற்றது. கல்வி வெளியீடு, 1977;
மணிவாசகர் பதிப்பகம், 1992.
2. காகித உறவு
மணிவாசகர் பதிப்பகம், 1979-1982
3. ஒரு சத்தியத்தின் அழுகை மணிவாசகர் பதிப்பகம், 1979-1985
4. உறவுக்கு அப்பால்
மணிவாசகர் பதிப்பகம், 1979.
5. மானுடத்தின் நாணயங்கள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989
6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987
7. சமுத்திரம் கதைகள்
மணிவாசகர் பதிப்பகம், 1983.
8. ஏவாத கணைகள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993
9. மண் சுமை
தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.
மணிவாசகர் பதிப்பகம், 1991
10. யானைப் பூச்சிகள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994
11. காலில் விழுந்த கவிதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.
12. மனம் கொத்தி மனிதர்கள் வானதி பதிப்பகம், 1992.
13. இன்னொரு உரிமை
வானதி பதிப்பகம், 1992
14. பூ நாகம்
வானதி பதிப்பகம், 1992
15. ஒரு மாமரமும் மரங்கொத்திப்
பறவைகளும்
ஏகலைவன் பதிப்பகம், 1996
16. பொய்யாய் - புதுக்கனவாய் கங்கை பதிப்பகம், 1993
17. சிக்கி முக்கிக் கற்கள்
ஏகலைவன் பதிப்பகம், 1999
18. ஆகாயமும் பூமியுமாய்..... ஏகலைவன் பதிப்பகம், 1999

நாடகம்
1. லியோ டால்ஸ்டாய்
மணிவாசகர் பதிப்பகம், 1987

கட்டுரைத் தொகுப்பு
1. எனது கதைகளின் கதைகள் ஏகலைவன் பதிப்பகம், 1996.
2. சமுத்திரம் கட்டுரைகள்
ஏகலைவன் பதிப்பகம், 1999

சு. சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாகத் தோன்றாமல், “இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா" என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்தப் பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப் பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதாபாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.
- என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம் நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு "புதைமண்' - ஒரு “ஒத்தை வீடு' ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும்.

டாக்டர். க. காந்தராஜ், பாலியல் நிபுணர்,
சென்னை . வெளியீடு:
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு,
டாகடர். இராதாகிருஷ்ண ன் நகர், சென்னை - 600 041. (() : 4917594
-----------------


This file was last revised on 25 Dec 2021
Feel free to send the corrections to the webmaster.