pm logo

சமுத்திரம் எழுதிய
'என் பார்வையில் கலைஞர்'
(வாழ்க்கை வரலாறு)
பாகம் 1 (அத்தியாயம் 1-10)


en pArvaiyil kalainjar, part 1 (chapters 1-10)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சமுத்திரம் எழுதிய
'என் பார்வையில் கலைஞர்' பாகம் 1 (அத்தியாயம் 1-10)


Source:
என் பார்வையில் கலைஞர்
சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை - 600 004
முதல் பதிப்பு : டிசம்பர், 2000
விலை : ரூ. 60.
உரிமை : ஆசிரியருக்கு
----------

கலைஞர் பேசுகிறார்

(சு.சமுத்திரம் எழுதிய நூல்களை வெளியிட்டு 26.7.96 அன்று கலைஞர் ஆற்றிய உரை)

இந்த நிகழ்ச்சியைக் காணும்போதும், கலந்து கொண்டு இருப்பதை நினைக்கும்போதும், இந்த விழாவைப்பற்றி கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தரு நிழலே, நிழல் தந்த சுகமே என்று நான் வர்ணிக்க வேண்டியது இருக்கிறது. காலையிலிருந்து கடும் பணிகள் பலவற்றை ஆற்றிவிட்டு, மாலையிலும் கடும் பணிகளை எதிர் கொண்டுவிட்டு, இங்கே இந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற நேரத்தில் இது கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவாக, தருநிழலாக, நிழல் தரும் சுகமாக இருக்கிறது என்பதை நினைத்து, நினைத்ததை நெஞ்சிலே பதித்து, பதித்ததை உங்களிடத்திலே நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

சமுத்திரமே நம்பக்கம்

நம்முடைய அன்புக்கும், பண்புக்கும் உரிய அருமைத் தோழர் சமுத்திரம் அவர்களுடைய மூன்று நூல்கள், இன்று உங்களுடைய அன்பார்ந்த முன்னிலையில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு தண்ணீர் தேசத்திற்கு போயிருந்தேன். (பலத்த சிரிப்பு ) கவியரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம். அதுவும் சமுத்திரத்திலே நடைபெற்ற கதை. சமுத்திரம் கதைக்கும் இன்றைக்கு வந்திருக்கிறேன். எனவே கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், தண்ணீரே கிடைக்காது என்ற சாபத்திற்கு இடையில், தண்ணீர் தேசமே உருவாகிறது என்ற அளவில், தண்ணீர் தேசமென்ன? சமுத்திரமே உன் பக்கம் இருக்கிறது என்ற அளவில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. (பலத்த கைதட்டல்)

நண்பர் நடராசன், இந்த நிகழ்ச்சியில் ஒரு வேண்டுகோளை விடுத்து, என்னுடைய சிறுகதை ஒன்றை நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பெற்று, வானொலியிலே ஒலிபரப்பிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார். எனக்கு பசுமையான நினைவுகள். அப்போது அவர் என்னிடத்திலே அந்த சிறுகதையைப் பெற்று திருச்சி வானொலியிலே வெளியிட்டது. 1967க்கு பிறகு. நான் அண்ணா தலைமையில் பொதுப் பணித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில். எழுத்துக் கணக்கும் இலக்கிய கணக்கும்...

1947ஆம் ஆண்டு, குண்டலகேசி இலக்கியத்தை, ஒரு நாடகமாக உருவாக்கி மந்திரிகுமாரி, என்று பெயரிட்டு, திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து, திரும்ப, அது என் கைக்கு கிடைத்து விட்டது. அதே வானொலி நிலையம், நடராசன் உருவத்தில் இருபதாண்டுகால இடைவெளிக்குப் பிறகு, என்னிடத்திலே ஒரு சிறுகதையைப் பெற்று, அதை ஒலி பரப்பினார்கள் என்று எண்ணும் போதுதான் எனக்கு வேதனையே. எழுத்தாளர்களை அவர்கள் இருக்கின்ற அந்தஸ்தை வைத்து, அவர்களுக்குள்ள பதவியை வைத்து தயவு செய்து யாரும் கணக்கிடாதீர்கள். (பலத்த கைதட்டல்) எழுத்தை வைத்து கணக்கிடுங்கள் என்பதுதான் எனக்குள்ள கவலையும், அந்த கவலை சார்ந்த வேண்டுகோளும் ஆகும்.

நான் முதலமைச்சராக 89-90ல் பொறுப்பேற்றிருந்த போது, தஞ்சை பல்கலைக்கழகத்தின் சார்பாக ராஜராஜன் விருது வழங்கப்பட்டது. அந்து விருது, நான் எதிர்க்கட்சித் தலைவனாக இருந்தபோதே எனக்காக சிலரால் சிபாரிசு செய்யப்பட்டு, அப்பொழுது வழங்கப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு, வேண்டாம் என்று தடுக்கப்பட்டு நின்று போன விருது. எனவே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த வரலாற்றைச் சொல்லி, ‘இதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டபோது மறுத்தேன். இருந்தாலும் பிடிவாதத்தின் காரணமாக, பிறகு, நான் ஏற்றுக் கொண்டேன். அப்பொழுது குடியரசுத் துணைத்தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அந்த விழாவிற்கு வந்து, அந்த விருதை வழங்கினார். அத்துடன் பல்கலைக்கழகம் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

அந்த நிதியை, நான் பெற்றுக் கொள்ளாமலேயே பல்கலைக் கழகத்திற்கே சேர்த்து என்னுடைய தாய் தந்தையரின் பெயரால், ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழ்ச் சான்றோர்களுடைய பெயரால் ஆண்டுதோறும் சொற்பொழிவுகளை பல்கலைக்கழகத்தில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் சொல்வதற்கு காரணம் நீங்கள் என்னை தயவுசெய்து பதவியில் இருக்கிறேன்: முதலமைச்சராக இருக்கிறேன் என்று எண்ணிப் பார்த்து என்னுடைய எழுத்துக்களை பாராட்டாதீர்கள்.

சமுத்திரத்தைச் சோதிக்க ஆசை...

இங்கே சமுத்திரம் சொன்னார். “கலைஞர் முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்திருந்தாலும், அவரைத்தான் அழைத்து இந்த நிகழ்ச்சியிலே இந்த நூல்களை வெளியிடச் செய்திருப்பேன்” என்று அவர் சொன்னாரே அதைத்தான் விரும்புகின்றேன். (பலத்த கைதட்டல்) அதை சோதித்துப் பார்க்க எனக்குக் கூட ஒரு ஆசை (பலத்த சிரிப்பு) சில ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சராக இல்லாமல் இருந்து, அவரும் இதுபோன்று நூலை எழுதி அப்பொழுது அழைக்கிறாரா இல்லையா என்று பார்க்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. இந்த ஆசை சில பேருக்கு ஆறுதலைக் கூட தரும். அப்பாடா என்று பெருமூச்சுக் கூட எழும். (பலத்த சிரிப்பு)

நான் அதற்காக இருப்பவன் அல்ல என்பதை அருமை நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுபோன்ற என்னை உணர்ந்தவர்கள் மிகமிக நன்றாக அறிவார்கள். கொள்கைக்காகவே இளம்பிராயம் முதல் வாழ்பவன் நான். அதனால்தான் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கிறேன். அதுவும் உங்களுக்குத்தெரியும். (பலத்த கைதட்டல்) அப்படி வாழதவர்கள் என்ன ஆனார்கள் என்பதைத்தான் சமுத்திரம் “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற அரிய நூலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

கனமான கணங்கள்...

ஆனால், இப்போது எவ்வளவு கனமான பணிகள்! கணம் என்றால் மாண்புமிகு என்ற பொருளில் சொல்லவில்லை. எவ்வளவு அதிகமான பணிகள் என்னை அழுத்திக் கொண்டு இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். சமுத்திரம் நூல் வெளியிட இந்த நாளை குறித்துக் கேட்டபோது நான் சொன்னேன். “அநேகமாக 25ம் தேதி நிதிநிலை அறிக்கையின் மீதான் பதில் உரை முடிந்துவிடும். மறுநாள் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னது உண்மைதான். ஆனால் அந்த அறிக்கையைத் தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட நாட்கள், அதற்காக நான் விழித்த இரவுகள், அது தயாரித்து வெளிவந்த பிறகு அதைப்பற்றி வந்த விமர்சனங்கள், அதற்கு ஏற்ப, அந்த அறிக்கையில் காணவேண்டிய திருத்தங்கள், நேற்றைய தினம் நான் ஆற்றவேண்டிய பதிலுரை, இதற்காக நான் செலவழித்த நேரம், இன்று காலையிலே, நம்முடைய இழந்த கவுன்சில்-சட்டமன்ற மேலவை மீண்டும் வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தின் மீது நான் ஆற்றிய உரை, அதற்குப் பிறகு உலக வங்கியினுடைய இயக்குநரைக் கண்டு சென்னைக்கும், தமிழகத்திற்கும் பெறவேண்டிய உதவிகளைப் பெற ஆலோசனை நடத்திவிட்டு நேராக இங்கே வருகிறேன்.

எழுத்தாளன் சொல்...

சமுத்திரம் இங்கே குறிப்பிட்டதைப் போல எனக்கும் அவருக்கும் நீண்ட காலமாக ஒரு நெருக்கம் உண்டு. பராசக்தி படம் பார்த்ததிலிருந்தே கலைஞரின் தாக்கம் எனக்கு உண்டு என்று சொன்னார். கலைஞரின் தாக்கமும் உண்டு. கலைஞரை சில நேரங்களிலே தாக்குவதும் உண்டு. (பலத்த கைதட்டல்) அந்த தாக்கம் எனக்கு ஊக்கத்தை அளித்தது. தாக்குவது என்னை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. தாக்குவது என்னை சிந்திக்கச் செய்தது. ஏன் தாக்குகிறார். ஏதோ குறை நம்மில் இருக்கிறது என எண்ணிப் பார்க்கச் செய்தது. எழுத்தாளன் சொல்வது என்றைக்காது ஒருநாள் பலிக்கும்.

நல்லா கேட்ட ஒரு கேள்வி...

நண்பர் சமுத்திரம் அவர்கள் ‘எனது கதைகளின் கதைகள்’ என்ற நூலில் நான் பல நிகழ்வுகளைப் பார்த்தேன். எப்போதும், எந்த ஒரு எழுத்தாளரின் நூலாக இருந்தாலும் அதை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் நிகழ்ச்சிக்கு நான் வருவது, வெளியிடுவது, அந்த நூலைப் பற்றிப் பேசுவது, என்பது நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அவர் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்ற தலைப்பில் இந்தக் கதைக்கான கரு உருவான செய்தியை சொல்லியிருக்கிறார். அதில் சில பகுதிகளை நான் படித்துக் காட்டுகிறேன்.

“60-ம் ஆண்டு முற்பகுதியில் சென்னையில் கல்லூரியில் படித்து வந்தேன். நான் இருந்த வீடு சேரிப் பகுதி: காம்பவுண்டு வீடு. சுமார் அய்ம்பது பேரைக் கொண்ட மனித சமூகம் என்னைப் பெரிதும் வசீகரித்தது. ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள், அப்பளம் சுடும் பெண்கள், வடை சுடும் ஆயா ஆகியோரின் மாசுமருவற்ற அன்பு என் மனக் கஷ்டத்தை மறக்கச் செய்தது. அய்ம்பது பேருக்கு ஓரே ஒரு கழிவறை. அதுவும் கதவு இல்லாதது. ‘யார் உள்ளே என்று கேட்டுக் கொண்டே மற்றவர் செல்ல வேண்டும். குளிப்பதோ குழாயடிப் பக்கம்: நான் குழாயில் இறங்கி தவலையில் தண்ணீர் பிடித்து டிரம்மை நிரப்பி குளிக்கவேண்டும். சட்டியோடோ, துண்டோடோ அத்தனை பேருக்கும் முன்னிலையில் ஐந்தரையடி உடம்பை முக்கால் நிர்வாணத்தோடு காட்டிக் கொண்டிருக்க வெட்கமாக இருந்தது. அந்தப் பின்னணியில் அந்த அசுத்தக் காற்றிலும் தென்றல் வாடை கிடைத்தது.”

“என் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு பூக்கார குடும்பம் வாழ்ந்த வீடு. அங்கே வயதுக்கு வந்த ஒரு பூக்காரப் பெண், அம்மாவும் அண்ணனும் உதிரியாக வாங்கி வந்த பூக்களை மாலையாக தொடுப்பது அவளது பணி. அவள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை இவர் சொல்கிறார். (பலத்த சிரிப்பு) என்றாலும் அழகாக இருப்பாள். கலகலவென்று சிரிப்பாள். எதற்கெடுத்தாலும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ என்பாள். அவளுக்கு என் மீது ஏதோ ஒரு அனுதாபம். நான் குழாயடியில் படும் பாட்டையும் கல்லூரித் தோழர்கள் என் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க இடம் கிடைக்காமல் நான் திண்டாடுவதையும் கண்ட அவள் ஒரு நாள் குழாயடிக்குப் போன என்னை அவள் கையாட்டித் தடுத்தாள்.

முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு - இதை எல்லோரும் என்ன எழுதுவார்கள் என்றால் நாணிக் கோணி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு என்று இவ்வளவு வார்த்தைகளுக்குப் பதிலாக ஓரே வரியில் ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறார். முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு, என் தவலையை வாங்கி தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள். எவரும் கண்ணில் தென்படாதபோது, நான் குளிக்கப் போவதும், அவள் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. (பலத்த சிரிப்பு) நான் கல்லூரிக்குச் செல்லும்போது, அவள் வாசலில் நின்று என்னை வழியனுப்பி வைப்பாள். கல்லூரியில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில், நான் வாங்கும் பரிசுக் கோப்பைகளை இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக அவளிடம் கொடுப்பேன். அவள் அதனை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு பின்னர் என்னிடம் திருப்பிக் கொடுப்பாள். இவ்வளவுக்கும் அவளை தொட்டதில்லை: கெட்டதில்லை. நம்புவோமாக (பலத்த சிரிப்பு)

பிறகு ஒரு கல்லூரி மாணவரை வீட்டிற்கு அழைத்து வர, அவன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஏதோ ஏகடியம் பேச , அதன் காரணமாக, இவர் மீதே அவள் கோபம் கொண்டு, வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டே போய் விட்டாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேருந்து நிலையத்திலே அந்தப் பெண் வயதான நிலையில், தேய்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அப்பொழுது ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள், அப்பொழுது சமுத்திரம் கேட்கிறார் “இப்படி ஆகி விட்டாயே நானும் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு விட்டேன். ஆனால் நான் உன்னைக் கேட்கிறேன், நீ அப்பொழுது என்னை காதலிச்சாயா’ என்று அப்படி தேய்ந்து போன அந்தக் கட்டையைப் பார்த்து நீ என்னைக் காதலிச்சாயா என்ற போது, அந்தப் பெண் அப்போதும் ‘நல்லா கேட்ட, ஒரு கேள்வி’ (பலத்த சிரிப்பு) என்றாள். இதுதான் சமுத்திரத்தின் இலக்கிய நயம். இதை வைத்தே ஒரு கதை எழுதினேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மரணச்சுவை

இன்னொன்று. மரண முகத்திலே கூட அந்த நிகழ்வை வைத்து எழுத்தோவியம் தீட்டும்போதுகூட எப்படி நகைச்சுவை மின்னலிடுகிறது. மின்னிப் பளிச்சிடுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சென்னை மயிலையில் வாழும் மாமுனிவர் குருஜி சுந்தர சுவாமிகளை, நானும் என் துணைவியும் மருத்துவமனைக்கு போய்விட்டு வரும் வழியில், பார்த்தோம். நான், மரண விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளியாகி, அவரை நோக்கினேன். காலை 8 மணிக்கு பத்மாசனம் போட்டு இரவு 8 மணி வரை அப்படியே அமர்ந்திருக்கும் அந்த எண்பது வயது முனிவர் எனக்கு ஆதரவு கூறியதோடு, ஒரு எலுமிச்சைப் பழத்தையும் கொடுத்து “இது சுருங்கச் சுருங்க உன் நோயும் போய்விடும்” என்றார்.

எனக்கு, அது ஒரு பெரிய மனோதிடத்தைக் கொடுத்தது. நான் படுத்துவிட்டால் இலக்கிய உலகமே துடித்துப் போகுமே என்று நினைத்தேன். சென்னை வானொலி நிலைய செய்திப் பிரிவே இயங்காது, என்ற மாய எண்ணம் எழுந்தது. அந்த மாதிரி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை . ஒருவேளை, நான் மடிந்திருந்தால், ஒரு சினிமா நடிகையின் கல்யாண செய்திக்குக் கீழே ஒரு சின்னச் செய்தி என்னைப் பற்றி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல

எப்படி உள்ளத்தை தொடக்கூடிய இந்த எழுத்து ஆழம் அமைந்திருக்கிறதென்பதற்காகத் தான் இதை நான் படித்துக் காட்டினேன். அதாவது ஒரு எழுத்தாளனின் மரணம் என்பது அவ்வளவு மலிவாகிவிட்டது. ஏனென்றால் பாரதியாரின் வாரிசு என்றும், பாரதியாரை “நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்றும் பாராட்டிய புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் மரணமடைந்த போது, ஒரு ஆங்கிலப் பத்திரிககையில் எப்படி செய்தி வந்தது தெரியுமா? சொல்லவே எனக்கு வேதனையாக இருக்கிறது. இறந்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு ஒரு சிங்கிள் கால செய்தியாக பாரதிதாசனின் மறைவுச் செய்தி வெளியிடப்பட்டது. அது அவருடைய உள்ளத்தைத் தாக்கியிருக்கிறதென்று கருதுகிறேன்.

அதனால்தான் சொல்கிறார் ‘ஒருவேளை நான் மரணமடைந்து விட்டால் ஒரு சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே அங்கே கூட பாருங்கள் சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே... ஒரு சின்னச் செய்தியாக மரணச் செய்தி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல’ என்று குறிப்பிடுகிறார். இப்படி உள்ளத்தை தொடக்கூடிய கதைகளை எழுதியவர்.

பரிணாம மரங்கொத்திகள்

“ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும்” என்ற இந்தத் தொகுப்பில் அருமை நண்பர் பொன்னீலன் எடுத்துக்காட்டியதைப் போல, பல அருமையான செய்திகளை சில பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் பரிணாம வளர்ச்சி, பரிணாமம் எதிர் பரிணாமமாக ஆகிறது. அந்த பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே ஏன் அவருடைய உள்ளத்தில் பிறந்தது என்பது எனக்குத் தெரியும். ‘நான் தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தில் பரிணாம வளர்ச்சி” என்று எங்கேயோ ஒருவர் பேசியது - எங்கேயோ அல்ல சட்டமன்ற பேரவையில் பேசியது, நம்முடைய சமுத்திரத்தின் உள்ளத்தைத் தொட்டிருக்கிறது. அதை வைத்து பரிணாம வளர்ச்சி எப்படி ஆகியிருக்கிறதென்பதைத்தான் இந்த எழுத்தாற்றலின் மூலமாக அவர் காட்டியிருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியும், எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த மிகப் பெரிய மிருகமான ‘டைனோசர்’ இப்பொழுது ஓணானாக சிறுத்துப் போனது. நாட்டில் மிகப் பெரிய தாவரமான ஒரு மரவகை இப்பொழுது பிரளிச் செடியாக ஆகிவிட்டது. இப்படி நடமாடும் பல்கலைக் கழகமான தமிழன், தவழும் நிலைக்கு தள்ளப்பட்டதும் ஒருவிதப் பரிணாமமே’ (பலத்த கைதட்டல்) புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விளக்கம் தேவையில்லை.

நடந்தது, நடக்காது

இன்னொரு இடத்திலே எந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இந்த மாநிலத்தில் நாட்டில் வளர்ந்து விட்டது என்பதை “கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்” என்ற தலைப்பில் அருமை நண்பர் சமுத்திரம், பழனிச்சாமி என்கின்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக விளக்குகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நெஞ்சுவலி, அடிக்கடி மாத்திரை சாப்பிடவேண்டும். ஆனால் அவர் உணவு அருந்தும் பொழுது ஒரு பயங்கரமான செய்தி வருகிறது. சென்னை மாநகரத்தில் சாக்கடை தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றாகக் கலந்து விஷமாகிவிட்டது என்ற செய்தி வருகிறது.

இதை உரியவர்களிடத்தில் உடனே சொல்ல வேண்டும் என்பதற்காகப் புறப்படுகிறார். புறப்படுகிற வழிகளிலெல்லாம் பல தடங்கல்கள். அந்த ஒவ்வொரு தடங்கலையும் மீறிக் கொண்டே அவர் கடைசியாக ஒரு இடத்திற்குப் போகிறார். ஒவ்வொரு தடங்கலையும் கடக்க வேண்டுமேயானால் அந்த கதாபாத்திரத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு அந்த லஞ்சத்தை கொடுத்துவிட்டுதான் கடக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர் போலீஸ்காராக இருந்தாலும், மற்ற எந்த அதிகாரியாக இருந்தாலும், இவர்களை தாண்டிச் செல்ல லஞ்சம் தேவைப்படுகிறது. இவ்வளவும் கொடுக்காமல் பழனிச்சாமி என்கின்ற அந்த நல்ல மனம் படைத்த மனிதர், தான் எந்தச் செய்தியைச் சொல்லி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சென்றாரோ அதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை. தலை பம்பரமானது: இருதயம் மத்தளம் ஆனது. சில நிமிடங்களில் அந்தக் குளிரிலும் உடம்பு வியர்த்தது. மார்பும் முதுகும் ஒன்றையொன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன. சொல்ல முடியாத வலி. நரம்புகள் தோய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய் நல்ல தண்ணீரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. இவரது முகமோ கோணல்மாணலாக. பழனிச்சாமி புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது- இந்த நாட்டைப் போல!’

பழனிச்சாமி ‘ஆனந்தம்மா, ஆனந்தம்மா’ என்று தன்னுடைய மனைவியை அழைத்தபடியே தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார். இந்த பழனிச்சாமி செத்ததே செத்தார். இன்னொன்றையும் தெரிந்து கொண்டாவது செத்து இருக்கலாம். அதாவது இவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து எடுப்பதற்குக் கூட அன்பளிப்புக் கொடுக்க வேண்டுமென்பது சமூகச் சிலுவையைச் சுமந்த பழனிசாமிக்கு தெரியவே தெரியாது.”

இது நடந்த கதை. இனி நடக்கக் கூடாதென்பதற்காக எழுதப்பட்ட கதை. நடக்காது என்ற உறுதியை நான் சமுத்திரம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)

நான் முதலிலே குறிப்பிட்டேன். என் மீது அளவு கடந்த பிரியம் ஒன்றும் சமுத்திரத்திற்கு இல்லை. ஆனால் அந்தப் பிரியம் கொள்ளும்படியாக நான் அவரிடத்திலே நடந்து கொண்டிருக்கிறேன் என்பது இன்று அவர் ஆற்றிய உரையின் மூலம் எனக்குப் புரிகிறது. அவருடைய எழுத்துக்கள், சமுதாயத்திலே உள்ள சில கேடுகளை, குழப்பங்களை, புண்களை போக்குவதற்கு என்றைக்கும் ஆயுதமாகப் பயன்படக் கூடிய எழுத்து.

ஆனால் சமுதாயத்தில் இருக்கின்ற இந்த விவகாரங்கள் மாத்திரமல்ல. ஒரு ஆட்சியினால் சுட சமுதாய-கலாச்சாரக்கேடு விளையும் என்பதை அவர் புரிந்து கொட் காரணத்தினாலே தான் அவர் ‘ஒரு மாமரமும்மரங்கொத்தி பறவைகளும்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அண்ணா அவர்கள் இப்படி உருவகப்படுத்தி கதைகள் எழுதியதுண்டு. நானும் இப்படி உருவகப்படுத்தி எழுதிய கதைகள் பல உண்டு. ஆனால் இவரைப் போல பயமில்லாமல் இவ்வளவு பச்சையாக உருவகப்படுத்தி இந்தக் கதைகளை நாங்கள் கூட எழுதவில்லை. அந்தத் துணிச்சலை பாராட்டுகிறேன். அந்தத் துணிச்சல் எப்படி வந்தது என்று பார்க்கிறேன்.

பெயர் சமுத்திரம். சமுத்திரத்தின் தண்ணீர் உப்பு கரிக்கும். ஆனால் சூரிய ஒளி பட்டால் அந்தத் தண்ணீர் நீராவியாகி மழையாகப் பொழியும். மழையாகப் பொழியும் போது தூய தண்ணீராக இருக்கும். உப்பு கரிக்காது. சூரிய ஒளி பட்டதால் சமுத்திர நீர் நல்ல நீராகிறது. (பலத்த கைதட்டல்) வாழ்க சமுத்திரத்தின் புகழ் என்று வாழ்த்துகிறேன்.
------------------

என்னைப்பற்றி நான்
-சு.சமுத்திரம்

"என் பார்வையில் கலைஞர்" என்ற இந்த நூலை படிப்பதற்கு முன்பு என் பார்வை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல், வாசகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அதை தெரியப்படுத்த வேண்டிய உற்சாகமும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளன. இந்த வரிகளை எழுதும்போது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகையில், கா, கா, கா என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையே நினைவுக்கு வருகிறது. அதில் இப்படி ஒரு பாத்திரத்தை சித்தரித்து இருந்தேன்.

‘பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். ஆனாலும் அவனை காக்கா என்றே அழைப்பார்கள். அவனது மேலதிகாரி, ஆகாயத்தில் வெள்ளைக் காக்கா பறப்பதாக சொன்னால், ‘ஆமாம் நானும் பார்த்தேன்’ என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அந்த அதிகாரியோடு சரிக்குச் சமமாய் பேசியதாய் ஆகிவிடுமாம் ஆகையால் ‘நீங்கள் பார்த்ததை நான் பார்த்தேன் என்பான்.’

நான், எனது பாத்திரத்தை சித்தரித்து இருப்பது போலவேதான், நம்மைவிட மேன்பட்டவர்களைப் பற்றி, நாம் எழுதும்போது ஒரு காக்காத்தனம் வந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள், முழுக்க முழுக்க, குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், எவர் மேலோங்கி நிற்கிறாரோ அவரைப் பற்றி புகழ்ந்து தள்ளி, காரியம் சாதித்துக் கொள்வதையே நோக்கமாக கொண்டவர்கள். கலைஞரைப் பற்றிய பல நூல்களும், இப்படிப் பட்டவையே. இந்தப் பட்டியலில் இந்த நூலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே என்னைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னைப்போல் கலைஞரை வெறுத்தவர் எவரும் இல்லை. இப்போது என்னைப்போல் அவரை விரும்புகிறவரும் எவரும் இல்லையென்பதை வாசகர்கள் இந்த நூலை படித்துவிட்டு புரிந்து கொள்ளலாம். இந்த மாற்றம், ஆண்டுக் கணக்கில் அங்குலம் அங்குலமாக ஏற்பட்ட ஒன்றாகும். இப்போதுகூட, நான் கலைஞரின், இலக்கிய நண்பர்களின் உள்வட்டத்தில் இருப்பவனும் இல்லை. இருக்க நினைத்தவனும் இல்லை. ஆனால், கலைஞர் மீது இந்த உள்வட்டக்காரர்களுக்கே இல்லாத ஒரு ஈடுபாடும் ஒன்றிப்பும் எனக்கு உண்டு. இந்த ரசவாதம் எப்படி ஏற்பட்டது என்பதை விளக்குவதற்காகவே இந்த நூல். இது, கலைஞரைப் பற்றிய நூல் என்பதை விட என்னைப் பற்றி கலைஞர் வழியாக தெரிவித்துக் கொள்ளும் நூல் என்று கூடச் சொல்லலாம். இந்த நூலில் நான் தான் தூக்கலாக பேசியிருக்கிறேன். கலைஞர் அப்படி பேசவில்லையா என்ற ஒரு கேள்வி எழும்... பேசினார். ஆனாலும், அந்த மகத்தான் தலைவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் வெளிப்படுத்த எனக்கு உரிமை இல்லை .

கலைஞரைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஆய்வுத் தகுதி இல்லை. அதிகமான இலக்கியத் தகுதியும் இல்லை. இணையான அந்தஸ்து தகுதியும் இல்லை. காலங்காலமான நட்புத் தகுதியும் இல்லை. அவரது சுகதுக்கங்களில் பங்கு கொண்ட பாசத்தகுதியும் இல்லை. ஆனாலும்-

ஒரு நேர்மையான அதுவும் தன்னலமறுப்பு இலக்கியவாதி - தமிழ்ச் சாதியான் என்ற ஒரே ஒரு தகுதி என்னிடம் நிச்சயம் இருக்கிறது. இந்தத் தகுதியைத்தான் இங்கே வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நூற்றுக்கு நூறான தகுதி என்று நானே சொல்லமாட்டேன். அதே சமயம் எனக்கு நானே எண்பது விழுக்காடுகள் கொடுத்துக் கொள்ளலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து மாணவர்களையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டபோது நான் சிறுபான்மை தேசியவாதியாகவே பொதுவாழ்க்கையைத் துவக்கினேன். இதனால் திமுக மயமான மாணவர்கள் மத்தியிலே எனக்கு கிடைக்க வேண்டிய செல்வாக்கை இழந்தேன். ஆனாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

சமூகநீதி என்று வந்துவிட்டால் நான் எனக்கு வேண்டியவர்களையும் பகைத்துக் கொள்ள தயங்கியது இல்லை. எடுத்துக் காட்டாக, நான் பிறந்த போது எனக்கு பெயர் வைத்தவர் எங்கள் ஊர் கணக்கப்பிள்ளை. ஆனாலும், அவரது கூட்டுறவுச் சங்க ஊழல்களைப் பற்றி, 15வயதிலேயே ஊரில் கூட்டம் போட்டு கண்டித்திருக்கிறேன்.

முப்பத்திரண்டு ஆண்டுகால மத்திய அரசு அலுவலக வாழ்க்கையில் அரசுக்கெதிராக மூன்று தடவை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன். பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கி அத்தனையிலும் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனாலும், அவை தந்த விழுப்புண்கள் இன்னும் வலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

புதுடில்லியில், தூசிபடிந்த கண்ணாடியாக இருந்த நான், எனது போராளிக் கைகளாலேயே, என்னை, நானே துடைத்துக் கொண்டு, எங்கள் அகில இந்திய தகவல் துறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். என்னை இழிவு படுத்திய ஒரு தமிழ் பிராமண அதிகாரியை சங்கம் இழிவு படுத்தப் போனபோது அதை தட்டிக் கேட்டு எனது அந்தரங்கக் குறிப்பேட்டை எழுதும் தலைமை அதிகாரியை பகைத்துக் கொண்டவன் நான்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு எனது சாதியை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், ஒரு சங்கத்தை திருமிகு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கியபோது அந்தக் கூட்டத்தில் வேறொரு காரணத்திற்காக சென்றிருந்த நான் கட்டாயமாக பேச வேண்டியதாயிற்று. அப்போது, ‘பணக்கார நாடார், பணக்கார பிராமணரோடு சேரும்போது ஏன் ஏழை நாடார், எழை பறையரோடும், பார்ப்பனரோடும் சேரக்கூடாது என்று’ அதிரடியாய் பேசியவன். சிவந்தி அவர்களின் மனதையும் நோகடித்தவன். இவ்வளவுக்கும், அவரது ராணியிலும், ராணிமுத்துவிலும் அவர் எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இப்படி பேசினேன்.

இதேபோல் என்னை திடீர் எழுத்தாளனாக்கிய பெருமை ஆனந்த விகடனுக்கே சாரும். அடுத்தடுத்து எனது கதைகளை பிரசுரித்து என்னைப் பிரபலப்படுத்தியது. அதே விகடன் தனது ஜூனியர் விகடன் மூலம் என்னையும், நான் பணியாற்றிய தொலைக்காட்சியையும் சம்பந்தப்படுத்தி இழிவாக எழுதியபோது விகடனை நீதிமன்றத்திற்கு இழுத்தவன் நான். இதன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள், நான் அந்த கட்டுரைக்கு மறுப்புத் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்ட போதும், அதை மறுத்தவன் நான். இதனால், பல்லாண்டுகள் விகடனில் என் கதைகள் வெளியாகவில்லை. இவ்வளவுக்கும் விகடன் ஆசிரியருக்கும், அந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்று அறிந்தேன். வேறு ஒரு எழுத்தாளராக இருந்தால் விகடன் ஆசிரியர் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு அனுதாப அலையை எழுப்பி விகடனில், தனது கதைகளை திணித்திருப்பார். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போதுதான் எனது நன்றியுணர்வும், விகடன் ஆசிரியரின் பெருந்தன்மையும் ஒரு மையத்தில் சந்தித்தன.

1982 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் சார்பில் நான் எழுதிய ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் ‘குற்றம் பார்க்கில்’ என்ற சிறுகதைக்கும் ஒரே ஆண்டு இரண்டு முதல் பரிசுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆரே, தன் கைபட அவற்றை வழங்கினார். இந்தப் புகைப்படமும், இன்னொரு புகைப்படம் மட்டுமே அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்டன. ஆனாலும், தேவி பத்திரிகை என்னை பேட்டிக் கண்டபோது ‘இது மக்கள் வரி பணத்தில் வந்த பரிசுகள், ஆகையால் மக்களுக்கு விசுவாசமாக எழுதுவேன்’ என்று குறிப்பிட்டேன். ஒரு இடத்தில் கூட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அந்தப் பரிசுகளை அந்த பொன்மனச் செம்மலின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதாக என்னிடத்தில் இன்னொருவராக இருந்தால், சொல்லியிருப்பார். வட்டியும் முதலுமாக அறுவடை செய்திருப்பார்.

எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்து விட்டது என்று ஒரு மேட்டுக்குடி பத்திரிகை எழுதப்போய் என் சாதியினர் எப்படியோ என்னை அடையாளம் கண்டு பழனியில் நடைபெற்ற ஒரு மாபெரும் மகாசன மாநாட்டிற்கு என்னை பேச அழைத்து, பெருந்தொகை கொடுத்து கொளரவிக்க முன்வந்தார்கள். ஆனால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக தலைவராகவும், எழுத்தாளராகவும் இருப்பவர்கள் சாதிய மறுப்பாளராக இருக்க வேண்டும் என்று அன்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன். ஆகையால், அந்த மகாநாட்டிற்கு வரமாட்டேன் என்று கடிதம் எழுதிப் போட்டேன்.

என் உறவுக்காரர்களைக் கொண்ட சென்னை வியாபாரிகள் சங்கம் இதே காரணத்துக்காக என்னை அழைத்த போதும் மறுத்தேன். நான் நினைத்திருந்தால் சமுத்திரம் சமூபக் பேரவை என்ற இலைமறைவு, காய்மறைவான சாதிய அமைப்பை உருவாக்கி இன்னும் பிரபலமாகி இருக்கலாம். இப்போது என்னைக் கடுமையாகவும், கொச்சைப் படுத்தியும் பேசும் பத்திரிகைகளை ஒருகை பார்த்திருக்கலாம். ஆனால், என் கையோ எழுத்தாளக் கை. தமிழ்ச்சாதி என்ற ஒன்றைக் தவிர வேறு எந்த சாதியும் இல்லை என்று எழுத்தால் சாதிக்க நினைக்கும் கை.

1980 ஆம் ஆண்டு வாக்கில் எனது நாவலான ‘சோற்றுப் பட்டாளம்’ ஊமை வெயிலாக படமாகப் போனபோது அதற்கு இசையமைத்த இளையராஜா அவர்களின் விருப்பப்படி அவரை எனது திரைப்பட தயாரிப்பாளருடன் சந்தித்தேன். பல்வேறு நாடகங்களில் நான் பாடல்கள் எழுதி அவை வெற்றி பெற்றதால், இளையராஜாவிடம் உள்ள பரிச்சயத்தை பலமாக நட்பாக்கி அவர் மூலம் திரைப்பாடல்களை எழுத நினைத்தேன். இதனால், அப்போது நிலவிய வறுமையும் வெளியேறி, இப்போதும் மக்களிடம் இன்னும் நெருக்கமாக போக முடிந்திருக்கும். ஆனால், எங்களது சந்திப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கொஞ்ச நஞ்சமிருந்த பரிச்சயமும் போய்விட்டது. இதனால் ஊமை வெயிலும் ஊமையாகவே ஆக்கப்பட்டது. ஆனாலும், எனக்கு இப்போதும் வருத்தம் இல்லை. சாதிப்பது எப்படி ஒரு சாதனையோ, அப்படி சாதிக்காமல் இருப்பதும் ஒரு சாதனை என்று நினைப்பவன் நான். ஒரு பெண் ஐ.பி.எஸ் எழுத்தாளர் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். நீதிமன்ற விசாரணைகளுக்கு அவர் அரசு வாகனங்களிலேயே வந்தார். இதை ஆட்சேபித்து அப்போது உள்துறை செயலாளராக இருந்த பூரணலிங்கம் அவர்களிடம் ஒரு மனு கொடுத்தேன். இவர் எனது இனிய நண்பர். அவர், அந்த அம்மாவை அங்கேயே வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்கச் செய்வதாக குறிப்பிட்டார். அவரும் தனது நண்பர் என்பதால் அதை தட்டமாட்டார் என்றும் குறிப்பிட்டார். ஆனாலும், நான் மறுத்துவிட்டேன். எனது வாதியை அவரது மேலதிகாரியை வைத்து நிர்பந்திக்க நான் விரும்பவில்லை.

நான் தமிழ் தேசியத்தின் பக்கம் நிற்பவன். ஆனாலும், தமிழ் பேரினவாதத்தையோ, விடுதலைப்புலிகளையோ என்னால் ஆதரிக்க இயலவில்லை. மனச்சாட்சியை தூக்கிப் போட்டுவிட்டு ஆதரித்து இருந்தால் இந்நேரம் உலகத்தில் எதோ ஒரு நாட்டில் பேசிக்கொண்டிருப்பேன். இதன் மூலம் அருமையான நண்பர்களை கூட இழந்திருக்கிறேன்.

மத்தியில் அரசு ஊழியர்கள் நலனை கவனித்து வந்த அப்போதைய அமைச்சரான என் இனிய தோழர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் எனக்கு பதவியில் நீட்டிப்புக் கொடுக்க முன்வந்தார். அதை மென்மையாக மறுத்தவன் நான்.

இவை, என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்கள். வாசகர்கள் இந்த நூலின் நம்பகத்தன்மையை இதன் மூலம் எப்படி வேண்டுமானாலும் தீர்மானிக்கட்டும்.

இந்த நூல் குறித்து வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கும். கலைஞரைப் பற்றி இரண்டாவது பகுதி எழுதப் போகும்போது இந்த திருத்தங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த நூலை அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், அதன் நிர்வாகிகளான சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும் என மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------
1953-ஆம் ஆண்டு, கலைஞர் வீட்டிற்கு ஒரு சிறுவனாக வந்தேன். அன்றுமுதல் கலைஞரைப் பார்க்கிறேன். பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அவரைப் பார்த்து முடியவில்லை.

      - வேலையாளர். மணி அவர்கள்

------------------------
சிப்பிக்குள்ளே
1. நம்ம சமுத்திரத்திற்கு ஒரு நல்ல மாலையாக
2. சமுத்திரம் மேல் ஒரு உதய சூரியன்
3. கலைஞர் வழிக் காதல் கடிதங்கள்
4. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடி
5. கலைஞர் வீட்டில் ஒரு சமுத்திர கூச்சல்
6. அன்பாலயத்தில் ஒரு அதிகப் பிரசங்கிதனம்
7. சாணக்கிய காங்கிரசுக்கு சறுக்கிய அடி
8. காகங்களா கழுகுகளா ஒரு கவித்துவமான பதில்
9. பையிலிருந்து வெளிபட்ட ஒரு பூனை
10. கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கம்
11. அடிமையின் விலை ஒரு எம்.எல்.ஏ. பதவி
12. ராணித் தேனீக்கள், சாமானியத் தேனீ, டாமர் தேனீ
13. ஒன்றாகவா, ஒன்றாக்கியா ஒரு அலசல்
14. தமிழ் அக்காதெமி, வள்ளலார் கோட்டம் ஒரு குறிப்புணர்த்தல்
15. கண்களைக் கலக்கிய ஒரு கையறு சொல்
16. மஞ்சள் துண்டு ஒரு மஞ்சள் விமர்சனம்
17. சாண்ஏறி முழம் சறுக்கிய தேர்தல்கள்
18. தோழமை என்ற ஒரு சொல்லாக நம்பூதிரிபாத், கலைஞர்
19. தேரான், தெளியான் தீரா இடும்பன்
20. ஏகலைவன் - கலைஞர் - அர்ச்சுனன்
21. கலைஞர் - முத்தமிழ் அறிஞர் எப்பேர்பட்ட மனுசன்
22. கலைஞர், மூப்பனார் ஒரு தமிழர் இலக்கணம்
23. பொது சமுத்திரத்திற்குள் ஒரு புயல் வீச்சு
24. வைகுண்டர் தலைப்பாகை, வள்ளலார் வழிபாடு
25. தம்பிரான் தோழர் ஒரு பன்முகப்பார்வை
---------------------

"என் பார்வையில் கலைஞர்"
1. நம்ம சமுத்திரத்துக்கு ஒரு நல்ல மாலையாக...

1996 ஆம் ஆண்டு... ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒருநாள்...

எனது வாகனத்தில் இரண்டு சக்கர கால்களும், எனது கைகளும் ஒன்றாக இணைய, நான்கு கால் பாய்ச்சலில் கோபாலபுரத்தில் நான்காவது குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தேன். வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, நடந்தேன். அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் என்னை ஓரங்கட்டி பார்த்தார்களே தவிர, குறுக்கு விசாரணை எதுவும் செய்யவில்லை. என்னை என் பாட்டுக்கு நடக்க விட்டார்கள். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முதல்வரின் வீட்டுக்குள் இப்படி சுயேட்சையாக நடமாட முடியாது. இது எனக்கு ஒரு புதுமையாகவும், சாராசரி மனிதனுக்கு கிடைத்திருக்கின்ற தேர்தல் புரட்சி பலனாகவும் தோன்றியது.

கலைஞரின் வீட்டிற்கு பலதடவை சென்றிருப்பதால் அதை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. பிரதான சாலையில் இந்த குறுக்குத் தெருக்களை கண்டுபிடிப்பதற்கே ஒரு ஆய்வுப் பட்டம் கொடுக்கலாம். ஆனால், தெருவின் மறுமுனையில் இருந்த கலைஞரின் வீட்டு முன்னால் ஒருசில சுழல் விளக்கு கார்களும், கூட்டமும் இருப்பதை வைத்துத்தான், அதை கலைஞரின் வீடு என்று புதிதாக வருபவர் அனுமானிக்க முடியும். அந்த தெரு முழுக்க மாடமாளிகை கூட கோபுரங்கள் போன்ற கட்டிடங்கள். கலைஞரின் வீடு இவற்றோடு ஒப்பிடும் போது மிகச் சாதாரணமானது. ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது அவர் சொந்த வீட்டில் இருக்க விரும்பினால் அரசு செலவில் அந்த வீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். முதல்வர் என்றால் கேட்க வேண்டியது இல்லை.

ஆனால், கலைஞரின் வீட்டு முன்பு ஒரு பெரியதொரு வளைந்த கொட்டகை முக்கோண வடிவத்தில் போடப்பட்டு இருந்தது. வாசலுக்கு முன்னால் இடது பக்கத்தில் பொது மக்களுக்காக பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இதுதான் முதல்வர் கலைஞர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்ட வகை என்று கருதுகிறேன். மற்றபடி அவரது வீடு பின்னைப் புதுமைக்கு புதுமையாகாமல், முன்னை பழமைக்கு பழமையாகவே தோன்றியது.

கலைஞரைப் பார்க்கப்போகிறோம், பேசப் போகிறோம் என்ற பரபரப்போடும், பரவசத்தோடும், கூடவே படபடப்போடும் கலைஞரின் வரவேற்பு அறைக்குள் நுழைகிறேன். வீட்டுக்கு முன்னால் நின்ற காவலர்களுக்கும், வாசல்பக்கம் நின்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் என்னை நன்றாகவே தெரிந்திருக்கிறது. புருவச் சுழிப்போடு என்னை உள்ளே விட்டார்கள். செவ்வக வடிவத்திலான வரவேற்பறை... மாடிப்படிகளுக்கு வழிவிட்டது போல் ஒதுக்கமாக இருந்த வெளி, பிளைவுட் பலகைகளால் தடுக்கப்பட்டு திடீர் அறையாக்கப் பட்டிருந்தது. அந்த அறைக்குள் எனது இனிய நண்பரும், முதல்வர் அலுவலகத்தின் இணைச் செயலாளருமான சண்முகநாதன் அவர்கள் தட்டச்சில் எதையோ அடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை நம்பகமான கடிதமாக இருக்கும். அதை நான் பார்க்கவும் கூடாது. அதே சமயத்தில் அவரிடம் பேசவும் வேண்டும். ஆகையால், தலையை மட்டும் ஒரு கோணத்தில் தூக்கி வைத்துக் கொண்டு ‘வந்து விட்டேன்’ என்பதற்கு அடையாளமாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தேன். அவரும் கருமமே கண்ணாக இருந்ததால் என்னை மெல்லத் திரும்பிப் பார்த்து தலையை மென்மையாக ஆட்டினார். அது மேகம் ஆகாயத்திலிருந்து கீழே குவிவது போல் எனக்குத் தோன்றியது.

இந்த சண்முகநாதன் கலைஞருக்கு ராம பக்த அனுமான் மாதிரி. கலைஞரின் மனமே இவர் மனம். பொதுவாக, கலைஞர் ஒருவர் மீது என்ன அனுமானம் வைத்திருக்கிறார் என்பதை இவரது ‘டோன்’ மூலம் அறிந்து கொள்ளலாம் என்பார்கள். என் மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர். ஒரு வாரத்திற்கு முன்பு கலைஞரை சந்திக்க இவரை அணுகினேன். நான் எதிர்பார்த்தது போல் அனுமதி விரைவில் கிடைக்காததால் எனது நண்பர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நடவடிக்கை எடுப்பது வரைக்கும் காத்திருக்க முடியாமல், மீண்டும் சண்முகநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உடனே அவர் ‘சமுத்திரம் சார்! முதல்வர் அலுவலகத்தில் உங்களுக்கு இருக்கிற ஒரே நண்பன் நான் தான்... எனக்குத் தெரியாதா கலைஞர் கிட்ட ‘எப்போ பேசி எப்போ வாங்கணும் என்று,’ என்றார். நான் வருத்தம் தெரிவித்தேன். கூடவே அவசரம் என்றேன். அவர் ஒரே நண்பர் என்று சொன்ன ஒற்றை வார்த்தையில் எனக்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவின் கடந்த காலமே உள்ளடங்கி இருப்பதைத்தான் அவர் கோடி காட்டினார்.

சண்முகநாதன் உட்கார்ந்திருக்கும் அறைக்கு எதிர்ப்பக்கம் உள்ள பகுதியில் ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். இன்னும் பலர் அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். சில புதிய முகங்கள். பல பழைய முகங்கள். இந்த இரண்டாவது வகை முகங்களைப் பார்த்ததும், நான் ஓரளவு வெட்கினேன். அந்த முகங்களும் ‘உனக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றின. குறிப்பாக ஆர்.டி. சீதாபதி அவர்கள் அன்றைக்குப் பார்த்து வந்திருந்தார். என் வணக்கத்திற்கு அவர் இயல்பாகவே பதில் வணக்கம் போட்டார். ஆனால் அவருக்கு வணக்கம் போடும் போது என் கை லேசாக ஆடியது. காரணம் கலைஞருக்கும் எனக்கும் ஏற்பட்ட மோதல்களும் முரண்பாடுகளும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

கலைஞருக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால் நான் குற்ற உணர்வில் தவிக்க இல்லை. ஆனாலும், ஒருவர் தான் எப்படிப்பட்டவர் என்பதை தனது உணர்வுகளால் தீர்மானிக்கிறார். ஆனால், மற்றவர்களோ அவரை அவரது செயல்களால் தீர்மானிக்கிறார்கள். உணர்வுகளும் செயல்பாடுகளும் பிறருக்கு முரண்பாடுகளாக தெரியும் போது தவறான கருத்துக்கு வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்புக்களை அங்கிருக்கும் நண்பர்களுக்கு நிறையவே கொடுத்திருப்பேன். காரணம் கலைஞரிடம் நான் சண்டைப் போட்டது மட்டுமே அவர்களுக்குத் தெரியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட உறவு மாற்றம் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

நான் அந்த முகங்களை பார்க்க விரும்பாது சுவரேங்கும் மாட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தேன். எதிர்ப்புறச் சுவரில் கலைஞர் தென்னை மரத்தில் லேசாய் சாய்ந்து நிற்பது போன்ற ஒரு வரவேற்பு இதழ். அதற்கு கீழே -

"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தரும்கோலென வேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான்தருத லால்"

என்று எழுதப்பட்டிருந்தது.

இன்னொரு பகுதியில் இதேமாதிரியான வெண்பாவில் ‘சங்கத் தமிழ் தந்த கலைஞரே’ என்ற வாசகம் என்னைக் கவர்ந்தது. இந்த ஒளவையார் பாடலை, மூன்றாவது வகுப்புப் படிக்கும் போது என் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததும் மறுநாள் அதை ஒப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டதும், அன்றிரவு நான் இந்த பாடலை மனப்பாடம் செய்ததும் நினைவுக்கு வந்தன. மறுநாள் அதிகாலையிலேயே மனப்பாடம் செய்திருக்க மாட்டான் என்று நான் அனுமானித்த எனது பெரியப்பா மகனை எழுப்பி இந்த பாடலை ஒப்பித்தப் போது அவன் ஒரு திருத்தம் சொன்னான். அப்போதே எனக்கு கர்வபங்கம் ஏற்பட்டது. இந்தப் பாடல் தொண்டர்களுக்கு, கலைஞர் செய்த தொண்டுகளை சொல்லாமல் சொல்வது போல் தோன்றியது.

அந்த வரிகளில் இருந்து கண்களை விலக்கி தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைவர்களுடன் கலைஞர் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்த்தேன். அன்றுமுதல் இன்று வரை கலைஞருக்கு வழங்கப் பட்ட பல்வேறு வரவேற்பு படங்களும், சுவர் இருக்கும் இடம் தெரியாமல் இடையிடையே வெண்மையைக் காட்டிக் கொண்டு காட்சி காட்டின.

இந்தச் சமயம் பார்த்து வெளியே மக்கள் கூட்டம் பெருத்து விட்டது. ஆண்களும் பெண்களுமாய் ஆளுக்கொரு மனுவை கையில் வைத்துக் கொண்டு அமைதியோடு நின்றார்கள் அவர்களை ஒழுங்கு செய்து விட்டு அமைச்சர் ஆர்க்காட்டு வீராசாமி அவர்கள் உள்ளே வந்தார். கண்ணில் தென்பட்ட என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். இரண்டு வினாடிகள் கழித்து மீண்டும் வெளியே பார்த்தார். எனக்கு என்னமோ 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் இதே வீட்டுக்கு முன்பு கலைஞருக்கும் எனக்கும் நடைபெற்ற கடுமையான வாக்குவாதம் அவருக்கு நினைவுக்கு வந்து அந்த இடத்தை அவர் அனிச்சையாக பார்க்கிறாரோ என்று கூட நினைத்தேன். அவர் சாதரணமாகத் தான் பார்த்திருப்பார். ஆனால், எனக்கோ ‘எந்த முகத்தோடு இங்கே வந்தே’ என்று அவர் கேட்பது போல் தோன்றியது. ஒருவேளை எல்லோரையும் போல் நானும் ஒரு பச்சோந்தியாகி மீண்டும் இங்கே வந்திருப்பேனோ என்று அவர் நினைத்திருந்தால் அதில் தவறில்லை.

என்னால் அவர் முகத்தை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. ஆகையால், உள்ளே உள்ள வரவேற்பறைக்குள் நுழையப் போனேன். அதன் வாசல்படிக்கு மேல் கலைஞரும், அவரது அன்னையார் அஞ்சுகம் அம்மையாரும் தாயும் மகவுமாய் இருந்த படம் என்னை சிறிது நேரம் நிற்க வைத்தது. அய்ந்து வயதிலேயே அம்மாவை இழந்த என் மனம் சிறிது துடித்துப் போனது.

உள் வரவேற்பறையில் சோபா செட்டுகள் போடப்பட்டு இருந்தன. சுவரை ஒட்டிய மேஜையின் இருபக்கமும் இரண்டு கண்ணாடி பேழைகளில் கலைஞரின் தந்தை முத்துவேலரின் படமும், அன்னையாரின் படமும் சிலைகளாக வைக்கப்பட்டு இருந்தன. மேல் சுவரில் திருவள்ளுவர் படம். இன்னொரு பகுதியில், கலைஞர், தனது குழந்தைகளோடு விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்... கலைஞரை அந்த வயதில் நான் பார்த்தது இல்லை. இப்போது போல் அவர் தலை வழுக்கையாக இல்லாமல் சுருட்டை முடியோடு அழகாகத் தோன்றியது. அந்த கண்களிலும் ஒரு குறுகுறுப்பும் ஒரு போராளிக் குணமும் தென்படுவது போல் எனக்குத் தோன்றியது.

அந்த அறைமுழுக்க வியாபித்த பார்வையாளர்களைப் பார்த்தேன். ஒரு சிலர் இ.ஆ.ப. அதிகாரிகளாக இருக்கலாம். ஒரு சிலர் தொழிலதிபர்களாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்தார்கள். கலைஞரை முன் அனுமதியுடன் சந்திக்க வந்திருப்பவர்கள். முதல்வரை சந்திக்கும் போது எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று மனதிற்குள் மாறிமாறி ஒத்திகை போட்டுக் கொண்டிருந்தவர்கள்.

ஒரே ஒருவர் மட்டும் தொப்புள் வரைக்கும் சட்டையில் பித்தான் மாட்டாமல் டாலர் சங்கிலி தோன்ற தனித்திருந்தார். விசாரித்துப் பார்த்ததில், அவர் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று அறிந்தேன். ஒரு முதல்வரை எந்த மாதிரி சந்திக்க வேண்டும் என்கிற உடை நாகரீகம் கூட இல்லாதவர். இந்த மாதிரி ஆட்களுக்கு கலைஞர் இன்னும் இடங்கொடுக்கிறாரே என்று எனக்கு இப்போது கூட வருத்தம் உண்டு. அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளி வரவேற்பறைக்கு வந்தேன். கலைஞரின் முன்னைய அமைச்சரவையில் பணியாற்றி, இப்போதும் தொடர்ந்து அமைச்சர்களாக இருக்கும் திருவாளர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் தென்பட்டார்கள். பழைய தோழரான துரைமுருகன் என்னைப் பார்த்து நட்போடு சிரித்தார். பொன்முடி பேசவில்லை. ஒருவேளை, ஒரு காலத்தில் கலைஞரோடு, நான் நடந்து கொண்ட விதம் இப்போது அவருக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

அத்தனை பேர் மத்தியிலும் நான் தனிமையில் தவித்தேன். இந்தச் சமயத்தில் லேசாய் உள் வளைந்த அய்ம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் என்னிடம் வணக்கம் போட்டார். நான் திருதிரு என்று விழித்த போது அவர் ‘உங்களை எனக்குத் தெரியும் சமுத்திரம் சார். என் பெயர் மணி’ என்றார். இந்த மணி, கலைஞரின் வேலையாள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நெருக்கடிக் காலத்தில் காவல்துறையினரால் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டவர் என்றும் அறிந்து இருக்கிறேன். ஆனால், பார்வையும் தோரணையும் இவரை வேலையாளாகக் காட்டாமல், வீட்டு ஆளாகவே காட்டியது. இந்த அளவிற்கு கலைஞரும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் இவரது விசுவாசமும் அந்த மணியைச் சுற்றி ஒரு ஒளிவட்டமாய் எனக்குத் தோன்றியது. நான் பதிலளித்தேன்.

‘உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் மணி. எவ்வளவு காலமா கலைஞர் வீட்ல இருக்கிங்க?’

‘1953ஆம் ஆண்டு சிறுவனா வந்தேன் சார். கலைஞரை அப்பப் பார்த்தவன் இன்னும் பார்த்து முடிக்கல. பார்த்துக் கொண்டே இருக்கேன் சார்’

‘தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பன் சொன்னதுதான், எனக்கு நினைவுக்கு வந்தது.’ நானும், கலைஞரை காதலாகியும், மோதலாகியும் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். ஆனாலும், இன்னும் நான் பார்த்து முடியவில்லை.

மணியோடு பேசியது எனக்கு சிறிது தெம்பளித்தது. இந்தச் சமயத்தில் மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கிய தோழர் சண்முகநாதன், நான் கலைஞரை பார்க்க மாடிக்குச் செல்லலாம் என்று சமிக்ஞை செய்தார்.

மாடிப்படிகளை ஓடாக்குறையாகத் தாவி, கலைஞர் உள்ள அறைக்குள் நுழைகிறேன். வாசற்பக்கம் முகம் போட்டுத்தான் கலைஞர் உட்கார்ந்திருக்கிறார். ஒற்றைச்சோபா இருக்கையில் இருந்து என்னைப் பார்த்ததும் ‘வாங்க சமுத்திரம்! என்று எழுகிறார். நான் பதைத்துப் போய்விடுகிறேன். ஒரு மகத்தான் மனிதர் எனக்காக எழுந்திருக்க கூடாது. அப்படியே எழுந்த அவரை அதிக நேரம் நிற்க வைக்கக் கூடாது என்று ஓடோடிப் போகிறேன்.

கலைஞர் உட்கார்ந்ததும், நானும் உட்காருகிறேன். கலைஞரை எழுத்தாளத்தனமாக பார்க்கிறேன். பல்வேறு சந்திப்புகளில் இப்படி கலைஞரை மட்டுமே பார்த்ததால் அந்த அறைக்குள் கலைஞர் மட்டுமே இன்னும் எனக்கு காட்சித் தருகிறார். புகைப்படங்கள் உண்டா... திரைச்சீலைகள் உள்ளனவா என்பது இன்றளவும் தெரியாது. கலைஞரின் பார்வையில் பழைய விரக்திக்குப் பதிலாக ஒரு பிரகாசம் தெரிகிறது. ஆனால் அந்த பிரகாசம் தன்னை பிரகாசப்படுத்தாமல், இந்த சமூகத்தைப் பிரகாசப்படுத்த முனைவது போல் என்னுள் ஒரு மதிப்பீடு எழுகிறது. மக்கள் கொடுத்த பொறுப்பை அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நினைவேற்ற வேண்டுமே என்ற சுமையை தலைதாங்கி, முகத்திலும் அதன் தடயங்கள் ஏற்பட்டுள்ளதுபோல் தோன்றியது. ஆளவந்த பெருமை இல்லாமல் அதை நிறைவேற்றும் வியூகத்தை எப்படி உருவாக்குவது என்ற சிந்தனையே, அவர் முகத்தில் மண்டிக் கிடந்ததாக எனக்குப் பட்டது.

கலைஞரிடம் அவரது வெற்றி வாகைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். பல்வேறு விவகாரங்களைப் பேசினோம். இவற்றுள் பல அந்தரங்கமானவை. கலைஞர் என்மீது நம்பிக்கை வைத்து தெரிவிக்கும் தகவல்களை மனதில் வைத்து வாயால் பூட்டி வைக்க வேண்டுமே என்ற அச்சமும் கூடவே ஏற்படுகிறது.

இன்னொன்றும் தட்டுப்படுகிறது. ஒரு குட்டி அதிகாரியைப் பார்க்கப் போனால் கூட, அவர், கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசுவார். அவர் பேசி முடிப்பது வரைக்கும் நாம் மெளனமாக இருந்தால் ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க’ என்பார். சிலர் தொலைக்காட்சி பெட்டியில் ஒரு கண்ணும், நம் மீது ஒரு கண்ணும் போட்டு நாம் பேசுவதை கேட்பார்கள். நாம் நமது பேச்சில் உச்சத்திற்கு செல்லும் போது அவர்கள் தொலைபேசி எண்களைச் சுழற்றுவார்கள். நிமிடக் கணக்கில் பேசுவார்கள். பிறகு நம்மைப் பார்த்து ‘என்னவோ சொன்னீர்களே’ என்பார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளையும் தலைவர்களையும் பார்த்து எனக்கு அத்துபடி ஆகிவிட்டது. சிலரிடம் சொல்ல வந்த தகவல்களை சொல்லாமலே வெளியேறி இருக்கிறேன்.

கலைஞர் அப்படியல்ல. எனக்கு பத்து நிமிடம் கொடுத்தால் அந்த பத்து நிமிடமும் தொலைபேசி மணி அடிக்காது. இண்டர்காம் இரையாது. கலைஞரும் எதையோ நினைவிற்கு கொண்டு வந்ததுபோல், அரக்கப் பரக்கப் பார்க்க மாட்டார். எவரும் அந்த அறைக்குள் நுழையவும் முடியாது. ஒரு முதல்வருக்கு ஒரு நிமிடத்திற்கு குறைந்தது மூன்று தொலைபேசிகளாவது வரும். இந்த சமானிய சமுத்திரத்திற்கே ஒரு நாளில் பல டெலிபோன்கள் வரும்போது, முதல்வரும், கட்சித்தலைவருமான கலைஞருக்கு வரும் எண்ணிக்கை குறித்து குறிப்பிட வேண்டியது இல்லை. ஆனால், கலைஞரோ அவற்றை வடிகட்டி வைக்கச் சொல்கிறார் என்பதே உண்மை. பார்வையாளர்களுக்கு கிடைக்கும் நேரத்தை அவர் வீணடிக்க விரும்பியதில்லை. அதே சமயம் சந்திப்பு நேரம் கூடிவிட்டால் இண்டர்காம் லேசாக இரையும். இங்கிதம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சந்திப்புகளில் ஒன்றே ஒன்றில் தவிர கலைஞர் என்னைப் போகலாம் என்று சொன்னதில்லை.

பிறகு நான் எந்த நோக்கத்திற்கு வந்தேனோ, அந்த நோக்கத்தை கலைஞரிடம் சொல்கிறேன். அப்போதுதான் வெளியான எனது சிறுகதை நூலான ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும், எனது கட்டுரைத் தொகுப்பான எனது கதைகளின் கதைகள், அயோத்தி மசூதி இடிபட்டபோது நெல்லை மாவட்டத்தின் இசுலாமிய கிராமமான மேட்டுப்பாளையம் எப்படி மதவெறி உன்மத்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டது என்பதை விளக்கும் நாவலான மூட்டம் ஆகிய மூன்று நூல்களையும் கலைஞர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில், முதல் அமைச்சர் என்பதால் அவரை அழைக்கவில்லை என்பதையும் தெளிவாக்குகிறேன்.

சென்ற தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்று தெரியாதபோதே, எனது அருமை தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரும், வழக்கறிஞரும், கலைஞர் மீது பற்றாளருமான ச.செந்தில்நாதனுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர். என். நல்லகண்ணு அவர்களோடும் ஆலோசித்து கலைஞர் வென்றாலும் தோற்றாலும் அவர்தான் இந்த நூல்களை வெளியிட வேண்டும் என்று கூட்டாக முடிவெடுத்ததைச் சுட்டிக் காட்டினேன். கலைஞர் லேசாய் சிரித்தார். எனக்கு புரிந்து விட்டது இப்படிப்பட்ட முடிவு, அவருக்கு காட்டும் சலுகை அல்ல. பிச்சையில் அதிகாரப் பிச்சை கூடாது. புரிந்து கொண்டு என் தலையில் நானே லேசாக அடித்துக் கொண்டேன்.

என்றாலும், கலைஞர் இந்த அதிகாரப் பிச்சை பற்றி அலட்டிக்கவில்லை. சண்முகநாதன் அவர்களோடு டெலிகாமில் பேசினார். ‘நம்ம சமுத்திரத்துக்கு அவரோட நூல்களை வெளியிட ஒரு தேதி வேணுமாம் வா’ என்றார். நான் நெகிழ்ந்து போனேன். நான் கடந்தகாலத்தில் வெளிப்படுத்திய கலைஞருக்கு எதிரான கண்டன அறிக்கைகளையும் மீறி அவர் ‘நம்ம சமுத்திரம்’ என்கிறார். இந்தப் பெரிய மனம் - கலைஞரின் சிறியன சிந்தியாத இயல்பு என்னை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. சண்முகநாதன் வரும்போது, பார்வை மங்குகிறது. சண்முகநாதன் டைரியை காட்டி ஏதோ சொல்கிறார். உடனே கலைஞர் என்னைப் பார்த்து வெளியீட்டு விழாவை அந்த மாதம் 26ஆம் தேதியில் வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சண்முகநாதனும் குறித்துக் கொண்டார்.

எனது மூன்று படைப்புகளையும் கலைஞரிடம் கொடுக்கிறேன். ஒவ்வொரு படைப்பிலும் தம்பிரான் தோழர் கலைஞருக்கு என்று நான் எழுதியிருப்பதை கலைஞர் சிறிது அழுத்தமாக பார்க்கிறார். இந்த மாதிரி எவரும் தமது படைப்புகளில் இப்படி எழுதி கொடுத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவும் அந்த உறவில் ஏற்பட்ட ரசாயன மாற்றமும் உள்ளடங்கி இருப்பதைச் சொல்லாமல் சொல்லும் புராணப் பொருள் மிக்க வார்த்தை அது. இதை பின்னால் விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

விடைபெறப்போன என்னிடம் எந்த இடத்தில் விழா நடைபெறும் என்று கலைஞர் கேட்டார். உடனே ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அல்லது கலைவாணர் அரங்கம் என்று பதிலளித்தேன். போய்வாருங்கள் என்பது மாதிரி கலைஞர் தலையசைத்தார்.

பொதுவாக, கலைஞரை விழாவுக்கு அழைத்தால் அந்த விழாவிற்கான பேச்சாளர்- பங்கேற்பாளர் பட்டியலை கலைஞரிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இது சர்வாதிகாரம் அல்ல. நியாமானதுதான். ஒரு தலைவரை அதுவும் மக்கள் அளவிலும், கட்சி அளவிலும், அரசு அளவிலும் ஈடு இணையற்ற தலைவராக இருக்கும் ஒருவரை விழாவிற்கு அழைக்கும்போது யாராவது ஒருவர், தறுதலைத்தனமாகப் பேசலாம். அல்லது சிக்கலான விவகாரங்களை எழுப்பி, அங்கேயே அவர் பதிலளிக்க வேண்டும் என்பது மாதிரி கூட வற்புறுத்தலாம். விழா மேடையை கொச்சைப்படுத்தி விடலாம்.

எனவே, கலைஞர் போன்ற தலைவர்கள், விழா விவரங்களையும், பேச்சாளர் பட்டியலையும் கேட்பதில் தவறில்லை. நான் கூட என்னை விழாவிற்கு அழைப்பவர்களிடம் மேடையை பகிர்ந்து கொள்ளும் மற்றவர்களைப் பற்றி கேட்பதுண்டு. எனக்கு சரிப்படாதவர்கள் என்றால் நான் மறுத்துவிடுவதும் உண்டு. இந்தப் பின்னணியில், கலைஞர், பேச்சாளர் விவரத்தை என்னிடம் கேட்காதது அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கையே காட்டுகிறது. அவரும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை. கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அப்படி சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. அவ்வளவுதான். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கும்போது கலைஞர் என்மீது வைத்திருந்த அளப்பரிய நம்பிக்கையில் பெருமிதம் ஏற்படுகிறது. கூடவே யாராக இருந்தாலும் சமாளிக்கலாம் என்கிற அவரது போர்க்குணமும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற யூகமும் ஏற்படுகிறது.

கலைஞரிடம் தேதி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நம்ம சமுத்திரம் என்று சொன்ன ஒன்றிப்பில் படியிறங்கினேன். கீழே நின்று கொண்டிருந்த ஆர்க்காட்டார் உள்ளிட்ட அமைச்சர்களையும், தலைவர்களையும் கித்தாப்பாகப் பார்த்துக் கொண்டே கலைஞரின் வீட்டைவிட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினேன்.

நான் வீட்டுக்குப் போகாமல் பாலாஜி நகரில் உள்ள நண்பர் அருண் வீரப்பன் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். திரைப்பட உலகில் வரலாறு படைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் மருமகன், இவர் மாமனாரை கேடயமாக்காமல் சுயமாக உழைத்து ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிபதிப்பு நிலையத்தை அமைத்திருப்பவர். இவரிடம், கலைஞரை சந்தித்த விவரங்களை தெரிவித்துவிட்டு, விழாவிற்கான செலவுப் பட்டியலைப் போட்டுப் பார்த்தோம். அம்பதாயிரம் ரூபாய் அளவிற்கு வந்தது. நான் அதிர்ந்து போனேன். என்னுடைய ரேஞ்சே ஐயாயிரம் ரூபாய் தான். என்ன செய்வது என்று குழம்பிப் போனபோது, அருண் வீரப்பன் அவர்கள், தனது துணைவியார் மீனாவை அழைத்தார். அவரது துணைவியாரே சிக்கலுக்கு ஒரு தீர்வைச் சொன்னார். அவர், தனது அம்மா ராஜேஸ்வரி அம்மையாரிடம் பேசி அவர் பேரிலுள்ள அந்த மண்டபத்தை எனக்கு இலவசமாக வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்தார். கலைஞர் என்று சொன்னால் அம்மா கட்டாயம் தருவார் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நானும், மீனா அருண் வீரப்பன் அவர்களும், ராஜேஸ்வரி அம்மையார் அவர்களைச் சந்தித்தோம். ராஜேஸ்வரி அம்மையார் எனக்கு ஒளவையார் மாதிரியே தோன்றியது. ஒரே ஒரு வித்தியாசம், தமிழைக் கொடுத்து அன்பளிப்பை வாங்குபவர் அல்ல. அன்பளிப்பு தந்து தமிழை வாங்குகிறவர். அவர் தனது பெயரில் உள்ள அந்த அருமையான கட்டிட வளாகத்தை என் பொறுப்பில் ஒருநாள் இலவசமாய் தருவதற்கு மகிழ்ச்சியோடு உடன்பட்டார். கலைஞர் என்றவுடனே மறுபேச்சில்லை. அவர் எதிர்கட்சியில் இருந்தபோது கூட இதே அணுகுமுறையே கொண்டவர். கலைஞர் வெளியிடும் மூன்று புத்தகத்தின் படிகளையும் ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று அந்த இடத்தில் கேட்டுக் கொண்டால் அது அசல் கொச்சைத்தனமாக எனக்கு தோன்றியது. அவருக்கு கண்களால் நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன். ஒரு வாரம் கழித்துத்தான் அவர் முதல்படிகளை வாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

வீட்டிற்குத் திரும்பியதும், மனம் என்னை உதைத்தது. கலைஞர் எனது சிறுகதை தொகுப்பை படிக்கும்போது அவர் மனம் நோகுமே என்ற பின் யோசனையில் அல்லாடினேன். கலைஞர் வெளியிட இருக்கும் ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் என்ற சிறுகதைகளில் பெரும்பாலானவை அரசியல் கதைகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த காலடி கலாச்சாரத்தை சாடும் கதை எதிர் பரிமாணம். ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் தமிழகத்தை அரசியல் கட்சிகள் அத்தனையும் என்ன பாடு படுத்துகின்றன என்பதை விளக்குகிற கதை.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐம்பெரும் விழா, பொறுத்தது போதாது ஆகிய சிறுகதைகள் திராவிட இயக்கத்தையும், கலைஞரையும் சாடக் கூடியவை. முதல் கதையான ஐம்பெரும் விழா எடுத்த எடுப்பிலேயே திராவிட இயக்கத்தை கிண்டல் செய்யும் ஒரு அங்கதக் கதை. கலைஞர் இவற்றை படித்து விட்டு விழாவிற்கு வருவாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அதே சமயம் இந்தத் தொகுப்பை உருவாக்கும் போது அவர் தான் வெளியிட வேண்டும் என்ற அனுமானத்தோடு தான் இந்தச் சிறுகதைகளை உள்ளடக்கினேன். இப்போது விழா தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டதால் கலைஞர் வருவாரோ, மாட்டாரோ என்பது மாதிரி மனதிற்குள் ஒரு புலம்பல் ஏற்பட்டது. கலைஞர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்றும் ஒரு உதறல் எடுத்தது.
---------------

2. சமுத்திரம் மேல் ஒரு உதய சூரியன்

வருவார் கலைஞர் என்றும், வாரார் கலைஞர் என்றும் நிரடலோடு ராமநாதபுரத்திற்கு மத்திய அரசின் களவிளம்பரத் துறையின் மாநில தலைமை அதிகாரி என்ற முறையில் டூர் போனேன். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விருந்தினர் மாளிகையில் தடபுடலாகத் தங்கியிருந்தேன்.

ஒருநாள் காலையில் எனது அலுவலக வாட்ச்மேன் எனப்படும் இரவுநேரக் காவலாளி என் அறைக்கு வந்தார். நல்ல இளைஞர். ஆனால் காது மந்தம். நான் பலதடவை ‘கேட்கும் கருவியை’ காதுகளில் பொருத்திக் கொள்ளும்படி கேட்டாலும் அது அவருக்கும் கேட்டாலும், கேளாதது போலவே பாவித்துக் கொண்டவர். உறுப்பு பலவீனம் பெரிதல்ல என்று நான் பலதடவை சொன்னாலும், ஒருதடவை கூட அதை ஏற்றுக் கொள்ளாதவர். காது நன்றாகக் கேட்பது போலவே நடிப்பார். அப்படிப்பட்டவர் என் அறைக்கு வந்து யாரோ நாதன்னு ஒருத்தர் இரவில் அலுவலகத்தில் டெலிபோன் செய்ததாக தெரிவித்தார். என்றாலும் எந்த பெயருக்குரிய நாதன் என்பதை அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. வெறும் நாதன் இல்லை இன்னொரு பெயரையும் முன்னால் கொண்ட ஏதோ ஒரு நாதன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குப் பயம் பிடித்து விட்டது. ஒருவேளை சண்முகநாதன் எனது அலுவலக டெலிபோன் எண்களை வாங்கி ‘இப்படி எழுதினா எப்படிங்க கலைஞர் வருவார்’ என்று சொல்லி விட்டு நிகழ்ச்சியை ரத்து செய்த விவகாரத்தை சொல்ல வந்திருப்பாரோ என்று துடித்துப் போனேன். உடனே தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியான என் இனிய நண்பர் சுபாசுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் தனக்கு தெரியாது என்றும் சண்முகநாதனிடமே நான் பேசிவிடலாம் என்றும் பரிந்துரைத்தார். எனக்கு சண்முகநாதனிடம் பேசப் பயம். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்கிற கதையாகிவிடக் கூடாதே என்கிற அச்சம். சும்மா கிடக்கிற சங்கை ஊதிவிடக் கூடாதே என்கிற முன்யோசனை.

என் துணைவியாருக்கு டெலிபோன் செய்தால் கலைஞரின் நிகழ்ச்சி ரத்தாகி விட்டதாக யாரும் தெரிவிக்க வில்லை என்றார். ஆனாலும், யாரோ ஒருவர் எனது ராமநாதபுர அலுவலக எண்ணை வாங்கியதாகவும் குறிப்பிட்டார். எதற்கு என்று தெரியாதாம். இவரும் கேட்கவில்லையாம். அவரும் சொல்ல வில்லையாம். என்னுடைய கோபத்தை மனைவியிடம் காட்டுவது போல் தொலைபேசியை டக்கென்று வைத்தேன். பின்னர் தோழர் செந்தில்நாதனுடன் தொடர்பு கொண்டேன். அவர், தான் பேசவில்லை என்றார். எனது ஆதங்கத்தைத் தெரிவித்தபோது கலைஞர் அப்படியெல்லாம் நடந்து கொள்ளமாட்டார் என்றார். இது எனக்கும் தெரியும். ஆனாலும், விவகாரம் என்னைப் பற்றியது என்பதால் ஒரு டாக்டருக்கு, தனது நோயை பற்றி ஏற்படும் சந்தேகம் எனக்கும் வந்தது.

ஒருவேளை சண்முகநாதன் இல்லாமல் வேறு நாதனாக இருக்கலாமோ. டில்லியில் தமிழ்ச்சங்க துணைத் தலைவராக பணியாற்றிய என் நண்பர் விசுவநாதனா? அல்லது என்னோடு கல்லூரிப் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டவரும் அமைச்சராக இருந்து விட்டு அரசியலில் இருந்து கவுரவமாக விலகிக் கொண்ட வேலூர் விசுவநாதனா? என் பள்ளித் தோழன் லோகநாதனா? எனது இனிய நண்பரும் தினத்தந்தியின் அப்போதைய செய்தி ஆசிரியருமான சண்முகநாதனா? சென்னை வானொலியில், என்னைச் சொல்லுக்குச் சொல் அண்ணா அண்ணா என்று அழைக்கும் இளைய சகா சாமிநாதனா? அல்லது அற்புதமான இலக்கிய விமர்சகரான பேராசிரியர் இராம. குருநாதனா? அத்தனை நாதன்களையும் நினைத்துப் பார்த்தேன். இதுவரை எந்த நாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

விழா நாள் நெருங்கியது என்பதை விட நெருக்கியது என்றே சொல்லலாம். கலைஞர் வருவதும் உறுதியாகி விட்டது. ஆனாலும், கடைசி நேரத்தில் வராமல் போய்விடுவாரோ என்று ஒரு உதறல். அப்படியானால் இந்நேரம் சொல்லி அனுப்பி இருப்பார் என்கிற ஆறுதல்.

பொதுவாக முதல்வரை வைத்து இந்த மாதிரியான விழாக்கள் நடத்துகிறவர்கள் அதிலேயே பணம் கரந்து விடுவார்கள். பிரபல தொழிலதிபர்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்து அவர்கள் முதல்வரிடமிருந்து படிகள் பெறுவது போல் தொலைக்காட்சி சாட்சியாக காட்டி ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கில் ரூபாய் கொடுக்கும்படி செய்து விடுவார்கள். முதல்வர் என்றால் கேட்க வேண்டாம். அத்தனை தொழிலதிபர்களும் கூடி விடுவார்கள். ஆனால், இது ஒரு கேவலமான அணுகுமுறை இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டும் அல்ல. இப்படி விழாவை வியாபார மேடையாக்கும் பேர்வழிகளை நான் வெறுத்து ஒதுக்குகிறவன். அதே சமயத்தில் விழாவிற்கான மின்கட்டணம் இரவு நேரமாகியதால் லேசான மின் தோரணம். பொன்னாடைகள் மாலை மரியாதைகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் என்று முப்பதாயிரம் ரூபாயாவது செலவாகும். மின்கட்டணம் மேடை அலங்காரம் என்று வேறு...

என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே எனது நண்பர் அமைச்சர் ஆலடி அருணா அவர்களை அணுகினேன். அவர் நெல்லை நெடுமாறனை தொடர்பு கொண்டு தினத்தந்தி சார்பில் சுவரொட்டிகள் அடிக்கச் செய்தார். நெல்லை நெடுமாறன் திராவிட முன்னேற்ற கழகத்தில் பொறுப்பான பணியில் இருந்தவர். மிகச் சிறந்த ஆய்வாளர், இலக்கியப் பேச்சாளர்.... ஆனாலும், நான் அவரை பேச வரும்படி அழைக்கவில்லை. அது எங்கள் இருவரையுமே கொச்சை படுத்துவதாக இருக்கும் என்று கருதினேன். ஆரம்ப காலத்தில் எனது நூல்களை வெளியிட்டு ஊக்குவித்த மணிவாசகர் நூலகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச. மெய்யப்பன் அவர்கள் அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொடுத்தார்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநரும் சிறந்த எழுத்தாளருமான ஏ. நடராசன் அவர்களிடம் ‘பொன்னாடை வாங்கிக் கொடுங்கள்’ என்று உரிமையோடு கேட்டேன். ஐந்து வாங்கிக் கொடுங்கள் நான் கலைஞருக்கு போட்டது தவிர எஞ்சிய நான்கு சால்வைகளையும் மற்ற பேச்சாளர்களுக்கு மாற்றி மாற்றி போட்டு சமாளித்து விடுகிறேன்’ என்றேன். உடனே அவர், ‘செய்வதைத் திருந்த செய்யணும் அண்ணாச்சி’ என்று அறிவுறுத்தினார். எனக்கும் சேர்த்து பொன்னாடைகளை வாங்கி கொண்டு வந்து விட்டார். அருண் வீரப்பன் அவர்கள் வீடியோ படம் எடுத்துக் கொடுப்பதாக தாமே முன் வந்து தெரிவித்து விட்டார். எனது உறவினரும் சிந்தனையாளரும், மருத்துவ துறையில் அனைத்துப் பிரிவுகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பவருமான டாக்டர் ராஜ்குமார் பத்திரிகையாளருக்கு விருந்தளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எனது உறவினரான அவர்தான் நன்றியுரை கூறினார்.

விழா நாள் வந்தது.

மாலை ஐந்தரை மணிக்கு வெளியீட்டு விழா துவங்க வேண்டும். ஆனால், கூட்டம் அதிகமாக இல்லை. நான் நம்பியிருக்கும் முற்போக்கு தோழர்கள் ஆறரை மணி அளவில்தான் வரமுடியும், ஐந்தரை மணிக்கே, கலைஞர் வரலாமா என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கேள்வி வந்து விட்டது. சுவரொட்டிகளும், அழைப்பிதழ்களும் அருமையானவை. மக்கள் இலக்கியம் மக்களே இலக்கியம் - கலைஞர் பேசுகிறார் என்ற தலைப்புச் செய்தியோடு விழாச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வரின் புகைப்படமும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் எனது புகைப்படத்தை நான் வெளியிடவில்லை. கவர்ச்சியான சுவரொட்டி அதன் தலைப்பே இலக்கியவாதிகளை இழுக்கக் கூடியது.

என்றாலும் சுவரொட்டிகளை ஒட்டும் பொறுப்பை முன்பணம் வாங்கி ஒப்புக் கொண்ட ஒரு அச்சகம், சரியாக ஒட்டவில்லை. ஒப்புக்கு அங்கே இங்கேயுமாக ஒட்டியிருந்தார்கள். கலைஞரின் வீட்டு அருகே கூட ஒட்டவில்லை. போதாக்குறைக்கு, நானும் பத்திரிகைகளை அணுகி அழைப்பிதழ்களை கொடுக்கவில்லை. இந்தப் பின்னணியில் கலைஞர் ஆறு மணிக்கு வரலாம் என்று சொல்லி அனுப்பினேன். அதற்குள் கூட்டம் கூடி விடும் என்ற நம்பிக்கை. காவல்துறை அதிகாரி ஒருவர் ஐந்தரை மணி என்று போட்டு விட்டு முதல்வரின் நிகழ்ச்சியை தள்ளி வைக்கலாமா என்று தனது கோபத்திற்கு நகைச்சுவை முகமூடி போட்டுக் கேட்டார். நானும் ஐந்தரை மணி என்று போடவில்லை. ‘ஐந்தரை மணியளவில் என்று போட்டு இருக்கிறோம்’ என்று பதிலளித்தேன்.

கலைஞர் ஆறுமணிக்கு வந்துவிடுவார் என்று இறுதியான தகவல் வந்தது.

கலைஞர் வந்ததும் மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்தால் அந்த மண்டபம் நிரம்பி வழிந்து, வெளியேயும் வியாபித்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களை விட இலக்கியத் தொண்டர்களே அதிகம். கலைஞர் குறுநகை தவழ வந்தார். நானும் எனது குடும்பத்தினரும் அவரை எதிர் கொண்டு வரவேற்றோம்.


கலைஞர், எனது மூன்று நூல்களையும் பலத்த கை தட்டலுக்கிடையே வெளியிட்டார். இவற்றை ராஜேஸ்வரி அம்மையார் வாங்கிக் கொண்டார்.

தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர். தமிழ்க் குடிமகன் தலைமை வகிக்க, எனது இனிய தோழர் கவிஞர் இளவேனில் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர் ஆலடி அருணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.என். நல்லகண்ணு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் ச. செந்தில்நாதன். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலரும் முற்போக்கு எழுத்தாளருமான பொன்னீலன், கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ், மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச.மெய்யப்பன், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் அப்போதைய இயக்குநர் ஏ.நடராசன் ஆகியோர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த என் இனிய தோழரும் மனதில் பட்டதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் எடுத்துரைப்பவருமான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு என்றே புதுடில்லியில் இருந்து புறப்பட்டு விட்டதாகச் செய்தி வந்தது.

இந்த விழாவிற்கு தலைமை வகித்து பேசிய முனைவர் தமிழ்க் குடிமகன் எனது ஒருசில கதைகளில் கட்டுரைத்தனம் வந்துவிடுகிறது என்றார். அவர் பேசி முடித்ததும் நான் விவரம் கேட்டபோது உங்கள் கதைகளில் ‘செய்திகளின் வீச்சு இலக்கிய வீச்சை அமுக்கிவிடுகிறது’ என்றார். நான் அசந்து விட்டேன். இது அற்புதமான திறனாய்வு. விமர்சகரை படைப்பாளி மதிக்கும் திறனாய்வு. கலைஞர் தக்கவரைத் தான் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக ஆக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. இந்த விழாவில் பேசிய செந்தில்நாதன் மத்திய சாகித்திய அக்காதெமி போல் மாநில அளவில் ஒரு அக்காதெமியை அமைக்க வேண்டும் என்று இன்றைய குறள்பீடத்திற்கு வித்திட்டார் என்று சொல்லலாம்.

ஆலடி அருணாவுக்கு என்னைப் பற்றி நீண்டகாலமாகத் தெரியும் என்பதால் விலாவாரியாகப் பேசினார். எழுத்தாளத் தோழர் பொன்னீலன், 1972ஆம் ஆண்டிலேயே, அரசு ஊழியர்கள் படைப்பு இலக்கியத்திற்குள் செல்லலாம் என்று கலைஞர் ஆணையிட்டதை புளங்காகிதமாகச் சொன்னார்.

கலைஞர் ஏழரை மணி அளவில் நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். மூன்று படைப்புகளில் இரண்டில் பல்வேறு பக்கங்களுக்கிடையே அம்பு காகிதங்கள் குத்தப்பட்டு அந்தப் பக்கங்களின் ஓரங்களில் கலைஞர் கையால் குறிப்பெழுதப் பட்டிருந்தது. அவரது கையில் இருந்த அந்தப் புத்தகங்களை பார்க்கும்போது அவற்றிற்கு நீண்ட வெள்ளிச் சங்கிலிகள் அணிவிக்கப் பட்டது போல் தோன்றியது.

சிறுகதை தொகுப்பில் ஆங்காங்கே சில பகுதிகளையும் எனது கதைகளின் கதைகளில் சில பகுதிகளையும், தனது விமர்சனத்துடன் அவர் வாசித்துக் காட்டியபோது விழா மண்டபம் அதிர்ந்தது. அதிகாரிகளின் ஆணவப் போக்கை சித்தரிக்கும் ஒரு கதைச் சுருக்கத்தைச் சொல்லி விட்டு ‘இது நடந்த கதை... இனிமேல் நடக்காத கதை’ என்றார். எனது கதைகளின் கதைகளில் ஒரு இளம் பெண்ணைப் பற்றி குறிப்பிடும்போது ‘அழகாக இருக்க மாட்டாள். ஆனால் கவர்ச்சியாக இருப்பாள்’ என்று ஒரு வரி வரும். உடனே, அழகைப் பற்றி சமுத்திரம் சொல்கிறார் என்று எள்ளல் சுவையோடு பேசியபோது கூட்டம் கைகளைத் தூக்கித் தூக்கித் தட்டியது. (அந்த அளவிற்கு அடியேன் அழகனாக்கும்) அந்தப் பெண்ணும் நானும் தொட்டதில்லை கெட்டது இல்லை என்ற வரியை படித்துவிட்டு நம்புவோமாக என்றார். கலைஞரின் உரை இந்த நூலுக்கு முன்னுரையாக கொடுக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டு இங்கே விளக்கவில்லை. ஆனாலும், எழுத்தாளனை அவனது அந்தஸ்தை வைத்து மதிப்பிடலாகாது என்று இப்போது இருக்கும் இலக்கியப் போக்கை விமர்சித்தார். எழுத்தாளன் சொன்னால் அது பலிக்கும் என்று தனது அனுபவத்தையே முன் வைத்தார். சமுத்திரம் எழுத்து ஆய்த எழுத்து என்றார். சமுத்திரத்திற்கு கலைஞர் மீது தாக்கமும் உண்டு கலைஞரை தாக்கியதும் உண்டு என்றார். உப்பு கரிக்கும் சமுத்திரம், கதிரொளி பட்டு நல்ல நீராகி விட்டது என்றும் ஒரு போடு போட்டார்.

எனது ஏற்புரையில் கலைஞருக்கும் எனக்கும் உள்ள மோதல், காதல், விஞ்ஞானரீதியான உறவு முறை ஆகியவற்றை எடுத்துரைத்தேன். எனது படைப்புகளை முழுமையாகப் படைத்து விட்டு, அவர் உரையாற்றியதில் நெகிழ்ந்து போன நான், பேச முடியாமல் விக்கித் திக்கினேன். இது பற்றி கலைஞர் குறிப்பிடும் போது, நான் அவரிடம் தெரிவித்த சில பரிந்துரைகளை மறைமுகமாக குறிப்பிட்டு இவற்றால் ‘நான் திரும்பிப் பார்த்தேன், திருத்திக் கொண்டேன்’ என்று உணர்ச்சிவசமாக பேசினார். என் பேச்சிலிருந்தே மேற்கோள் காட்டி, ‘சமுத்திரத்திற்கு என் மீது அப்படி ஒன்றும் அன்பில்லை ஆனால் அவர் பிரியப்படும் படியாய் நான் நடந்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.

கலைஞர் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது விமானத் தாமதத்தால் மத்திய அமைச்சரான தோழர் எஸ் ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் கலைஞர் பேசிக்கொண்டிருக்கும் போது மேடைக்கு வந்துவிட்டார். கலைஞரும் பேச்சை உடனடியாக முடித்துக் கொண்டார். எஸ்.ஆர்.பியும் பதினைந்து நிமிடம் வரை பேசினார். கலைஞரும், தான் போனால் கூட்டம் கலைந்துவிடும் என்கிற அனுமானத்தில் எஸ் ஆர்பி பேசுவது வரைக்கும் காத்திருந்தார். இந்த நயத்தகு மேடை நாகரீகம் பெரும்பாலான தலைவர்களிடம் காணக் கிடைக்காதது.

இந்த நிகழ்ச்சியில் என்னை ஆளாக்கிய எனது சித்தி ராசம்மாவிற்கு, கலைஞர் மேடையில் பொன்னாடை போர்த்தினார். அந்தக் காலத்து பின் கொசுவ புடவையோடு தோன்றிய அந்த எளிய சித்தியைப் பார்த்ததும் கூட்டமும் நெகிழ்ந்தது. கலைஞரும் நெகிழ்ந்து போனார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் ஆகியோரும் நக்கீரன் ஆசிரியர் கோபால், யு.என்.ஐ செய்தியாளரான தோழர் ரமேசன், இலக்கிய வீதி இனியவன், என்னுடைய கல்லூரி ஆசிரியரும் காவற்துறை தலைவருமான ராஜ்மோகன், நண்பர் அருண்வீரப்பன், சட்டப்பேரவைத் துணை தலைவர் பரிதி இளம்வழுதி, எனது அலுவலக ஊழியர்கள், வேலூர் விளம்பர அலுவலக அதிகாரியும் இப்போதைய திரைப்பட தணிக்கை அதிகாரியுமான தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த விழாவில் திருஷ்டி போல் ஒரு நிரடலும் ஏற்பட்டது. எனது ஏற்புரையில் முன்னைய சட்டப்பேரவையில் ஒருதடவை இப்போதைய பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி வன்முறைக்கு ஆளான போது ‘உனக்கும் காலம் வருண்டா’ என்று குறிப்பிட்டதாக தெரிவித்தேன். பேச எழுந்த கலைஞர் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளவர்களையும், பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அமைச்சர்களையும் வெறுமனே பெயரிட்டு அழைத்துவிட்டு ‘மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி அவர்களே’ என்று அழைத்தார். மற்ற அமைச்சர்களின் பெயர்களைச் சொன்ன போது கைத்தட்டாத கூட்டம் பரிதியை மாண்புமிகுவாக ஆக்கியதும் பலமாக கைத்தட்டியது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விழா முடிந்ததும் நண்பர்களிடம் விசாரித்தால் நான் சட்டப்பேரவைத் துணைத் தலைவரான பரிதியை அப்படி ‘டா’ போட்டுப் பேசியதைக் குறிப்பிட்டு இருக்கக் கூடாது என்று சொல்லி வைத்தது போல் அத்தனை பேரும் சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் கலைஞர் மாண்புமிகு வார்த்தையை சேர்த்தார் என்றும் குறிப்பிட்டார்கள். கூட்டத்தினருக்கும் இது எப்படியோ புரிந்து விட்டது. கலைஞர் பேசியதை வைத்து அவர்களுக்கு அப்படி புரிந்ததா அல்லது கூட்டத்தினர் நினைத்ததை கருத்தில் கொண்டு கலைஞர் அப்படி பேசினாரா என்பதற்கு ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம்.
------------------

3. கலைஞர் வழிக் காதல் கடிதங்கள்

எனக்கு விவரம் தெரிந்த 1954ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் கலைஞரை வெறுத்தேன். எம்.ஜி.ஆரையாவது நிழல் மனிதர் என்று அந்தக் காலத்திலேயே என் சிந்தனையில் இருந்து ஒதுக்கி இருந்தேன். கலைஞர் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு வெள்ளி விழாவை விட அதிகமான ஒரு விழாவை அல்லது நினைவு நாள் அனுசரிப்பை வைக்க முடியும். இப்போது யோசித்துப் பார்த்தால் கலைஞர் மீது நான் கொண்டது வெறுமனே வெறுப்பு அல்ல. ஆங்கிலத்தில் லவ் - ஹேட் (Love - Hate) எனப்படும் உறவு என்று கொள்ளலாம். ஒரு நாணயத்தின் இருபக்கம் போல் விருப்பும் வெறுப்பும் கொண்ட மானசீகமான உறவு.

1954ஆம் ஆண்டு வாக்கில் நான் எங்கள் ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள திப்பணம்பட்டியில் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எங்கள் ஊர் வாத்தியார், பாதி நேரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார். அப்போதைய முதலமைச்சரான ராஜாஜி கொண்டு வருவதாக இருந்த புதிய கல்வி திட்டத்தின் படி பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை செய்ய வேண்டும். இந்தக் கல்வித் திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறை முந்திரிக் கொட்டையானதோ... என்னமோ ... மாணவச் சிறுவனான நான் மற்ற மாணவர்களோடு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.

இதுதான் சமயம் என்று பார்த்த என் பாட்டையா (தாத்தா) என்னை வயல் வேலைக்குள் சிக்க வைத்தார். கமலை அடித்தேன். பாத்தி போட்டேன். நாற்று நட்டேன். தென்னையில் ஏறி தேங்காய் பறித்தேன். வயல்களுக்கு நீர் பாய்ச்சினேன். கூலியாள் மிச்சம் என்பதை புரிந்து கொண்ட என் தாத்தா இனிமேல் நான் பள்ளிக் கூடத்திற்கு பகல் பாதியிலும் போகக் கூடாது என்று தடுக்கப் போனார்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமான திருமலை ஆச்சி என்றும் சின்னத்தாயி என்றும் அழைக்கப்பட்ட எனது விதவைத் தாய் வாய்க்கால் மண்ணில் எனக்கு பல்தேய்த்தபடியே ‘என் மவனே... உனக்கு சொத்து இல்ல... சுகம் இல்லடா... நீ படிச்சி சர்க்கார் வேலைக்கு போனாத்தான் நீயும் தேறமுடியும்... இந்த அம்மாவும் தேற முடியும்’ என்று அறிவுறுத்தியது, தாத்தா பார்த்த தடியடி பார்வையில் அழுகையானது. இந்தச் சமயத்தில்தான் ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டம் நீக்கப்பட்டு, சிறுவர்களான நாங்கள் எல்லாம் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு முழுநேரமும் சென்றோம். இதில் ஒன்று குறிப்பிட வேண்டியது முக்கியம். ராஜாஜி கொண்டுவந்த திட்டத்திற்கு பெயர் புதிய கல்வித் திட்டம். இதற்கு திராவிட இயக்கம் வைத்த பெயர் குலக்கல்வித் திட்டம். முதலமைச்சரின் பெயர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி. திராவிட இயக்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் குல்லுகப்பட்டர்.

இத்தகைய வார்த்தைகளின் அருமை பெருமைகளோ அல்லது சிறுமைகளோ எனக்கு புரியாது. ஆனாலும், காமராசர் முதலமைச்சராகி எளிய பிள்ளைகள் முழு நேரம் படிக்க வகை செய்திருக்கிறார் என்பது மட்டும் தெரியும். இதற்கு தந்தை பெரியாரும் காரணமாக இருந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. உயர்நிலைப் பள்ளியில் உபகாரச் சம்பளமும் எனக்குக் கொடுக்கப்பட்டது. கல்லூரி வரைக்கும் இந்தத் தொகை நீடித்தது. ஆகையால், அந்தக் காலக்கட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் குறிப்பாக கலைஞர் எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்கு கிடைத்த முழுக் கல்வியை இவரும், அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்.

இதோடு, காமராசர் எனது சாதியை சேர்ந்தவர். என்னைப் போலவே சொந்த சாதியால் ஒதுக்கப் பட்டவர் என்பது எனக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது. எங்கள் ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் உள்ள எங்கள் சாதியினர் காமராசர் ஆட்சிக்கு வந்ததை தாங்கள் ஆட்சிக்கு வந்ததாகவே கருதினார்கள். காரணம் பெரும்பாலும் பனையேறி நாடார்களை கொண்ட எங்கள் கிராமத்தில் நாங்கள்தான் பெரும்பான்மையினர். ஆனாலும், மிகச் சிறுபான்மையினரான ஆசாரிகளும், வெள்ளாளர்களும் எங்கள் ஆட்களை ஒருமையில்தான் பேசுவார்கள். அறுபது வயது நிரம்பிய எனது தாத்தாவை ஒரு ஏழு வயது ஆசாரி சிறுவன் ‘உதிரமாடா! எங்க வீட்டுக்கு வருவீராம்’ என்று சொல்லிவிட்டுப் போவான். எங்கள் தாத்தாவும் ‘அப்படியா ஆசாரி அய்யா’ என்பார். ஒற்றை கணக்கப்பிள்ளை வீட்டிற்கு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு போவார்.

பொதுவாக பிராமணர்களைத்தான் சூத்திரர்கள் இப்படி அழைப்பது உண்டு. ஆனால், சூத்திரர்களான எங்கள் ஆட்கள் இன்னொரு சூத்திரர்களை பிராமணர்களை போல் நடத்த வேண்டிய நிலைமை. இதனை பிற்காலத்தில் என்னைப் போன்ற இளைஞர்கள் தலையெடுத்து நீக்கி விட்டோம் என்றாலும் அப்போது மனோ அடிமையில் கிடந்த எங்கள் சாதியில் ஒருவர் முதலமைச்சர் ஆனதே ஒரு பெரிய சாதனை. ஒரு பனையேறி வீரர் ‘காமராசர் காமராசர் என்கிறார்களே அவரு நம்ம ரிவன்யூ இன்சுபெக்டர் அய்யாவவிட பெரியவரா’ என்று ஒரு பெரிய கேள்வியாகக் கேட்டார். இப்படி எங்களைப் போன்ற எளியவர்களை உய்விக்க வந்த காமராசரை படிக்காதவர் என்றும், பாமரர் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மேடைகளில் திட்டித் தீர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காமராசரின் எதிரிகள் சிறுவனான எனக்கும் எதிரிகளே. இந்த எதிரிப் பட்டியலில் முன்னணியில் இருந்த கலைஞரும் என் எதிரியே.

என்றாலும், காமராசர் சாதியை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட அத்தனை பேருமே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்பதே தாரக மந்திரம். தமிழ்த்தாயை, இந்தி அரக்கி கொலை செய்ய போவதாக ஒரு எதிர்பார்ப்பு. இதனால், வடநாட்டு மக்களுக்கும், இந்தி மொழிக்கும் எதிராக அனைத்து மாணவர்களும் திமுக கொடியின் கீழ் ஒன்று திரண்டிருந்த நேரம். படிக்காத மனிதர்கள் கூட மேடையில் திமுகவினர் காமராசரை படிக்காதவர் என்று சொல்லும் போது இவர்கள் என்னமோ லண்டனில் படித்து விட்டு பாரிசில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் கைதட்டுவார்கள். இத்தகைய அரசியல் சூழலில் நான் காமராசரை பார்க்காமலே அவர் பக்தனானேன்.

அந்தக் காலகட்டத்தில், என் வரைக்கும் திராவிட இயக்கம் என்பது திராவிட முன்னேற்ற கழகம் தான். அவ்வப்போது தந்தை பெரியார் பேசுவது தினத்தந்தியில் மட்டுமே வரும். அதோடு சரி. இந்தக் கட்டத்தில் பள்ளிக்கூட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் நான் சிறிது சமூக சிந்தனையையும் வளர்த்துக் கொண்டேன். பாரதியார் மனைவி செல்லம்மா பிறந்த கடையத்தில் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பாரதியார் வாழ்ந்த விதம் பற்றி பல பெரியவர்களிடம் கேட்பேன். மாவட்ட அளவிலான உயர்நிலைப்பள்ளி பேச்சுப்போட்டியில் நான் வெற்றிப் பெறுவதற்காகவும், அந்த வெற்றிக்கு வித்தியாசமான பேச்சு இருக்கவேண்டும் என்பதற்காகவும் பாரதியை மெய்யாக விரும்பியதாலும் அவரோடு பழகியவர்கள், அவர்களது வாரிசு உறவினர்கள் ஆகியோரை சந்தித்து மாணவத்தனமாக சில கேள்விகளைக் கேட்டதுண்டு.

உண்மையாகவே, பாரதியார் கழுதையின் வாலை பிடித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடியிருக்கிறார். செல்லம்மா கொஞ்சம் நஞ்சம் கிடைத்த அரிசியை புடைக்கும் போது ஓடிப்போய் அவற்றில் ஒரு குத்தை எடுத்து பறவைகளுக்கு வீசியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கவிஞனை பார்ப்பனக் கவி என்று வர்ணித்த திராவிட இயக்க பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால், கலைஞர் இந்த அணியில் இருந்தாரோ இல்லையோ இந்த இயக்கத்தின் முன்னோடியாக சித்தரிக்கப்பட்ட அவர் மீது எனக்கு தீராப்பகை ஏற்பட்டது.

இன்னொரு முக்கிய காரணம், திராவிட இயக்கத்தைப் பற்றிய சரியான தகவல்களோ அல்லது அன்றைய பிராமணர்கள் கிழித்த சூத்திரக் கோட்டையோ அந்தக் கோட்டிற்கும் கீழே உள்ள ஆதிதிராவிட மக்களைப் பற்றி வரலாற்று ரீதியான தகவல்களையோ இந்த இயக்கம் சொல்லாலோ அல்லது எழுத்தாலோ தெரிவித்ததில்லை. எனக்கு தெரிந்து ‘உஞ்சிவிருத்தி பாப்பான்’ என்பன போன்ற வசவு வார்த்தைகளே அதிகமாக புழங்கப்பட்டன. இதனால், இந்த இயக்கத்தின் மீது எனக்கு ஒட்டுமொத்தமான கடுமையான வெறுப்பு என் இளம் வயதிலேயே பதிந்துவிட்டது. பிராமணர் பக்கமே அனுதாபம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது முப்பாட்டிகள் இடுப்புக்கு மேலே எந்த துணியையும் போடக்கூடாது என்று இருந்த இந்து மத அட்டூழியமோ, பஞ்சமருக்கு இடமில்லை என்று அந்தக் கால பேருந்துகளில் வெளிப்படையாக எழுதி வைக்கப்பட்டதோ, குற்றால அருவியில் குளிக்கக் கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை கிடையாது என்ற தகவலோ எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல்களை தாங்கிய நூல்களை நான் படித்ததில்லை. இவை கிடைத்திருந்தால் படுகளத்தில் ஒப்பாரி தேவையில்லை என்று கருதி நான் ஒரு வலுவான திராவிட இயக்கவாதியாக மாறியிருப்பேன். இந்த தகவலின்மையே இந்த இயக்கத்தை நான் எதிரியாக பாவிக்கும் மனப்போக்கை என்னுள் ஏற்படுத்தி விட்டது.

இந்த இயக்கத்தின் வடிவமாக அண்ணா எனக்கு தோன்றவில்லை. காரணம் அவர் தமிழ், சிந்தனையாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தாண்டி பாமர மக்களுக்கு போகவில்லை. ஆனால் கலஞைரின் தமிழோ பாமர மக்களை கவர்ந்தது. அவர்கள் மத்தியில் அண்ணாவை விட கலைஞரே வலுவாக நின்றார். மாணவர்கள் அண்ணாவை மதித்தார்கள். வியந்தார்கள். ஆனால் கலைஞரை தங்களில் ஒருவர் என்பது போல் நேசித்தார்கள். இதனால் கலைஞர் மீது எனக்கு கண்மூடித்தனமான கோபம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனை, திமுக தொண்டர்கள் குறிப்பாக மாணவர்கள், தொந்தி கணேசன் என்றும், திருப்பதி கணேசன் என்றும், கஞ்சன் என்றும் திட்டித் தீர்த்து அவரது அற்புதமான நடிப்பை மூடி மறைத்தது எனக்கு இந்த இயக்கத்தின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

இளம் வயதில் ஒன்று பதிந்து விட்டால், அப்படி பதிந்தது பதிந்தது தான் என்பது என் வரைக்கும் உண்மையாயிற்று. திராவிட இயக்கத்துடன் மானசீகமாக இணைவதற்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்டன. ஆனாலும், பசுமரத்தாணி என்பார்களே அப்படி திராவிட எதிர்ப்பு என்னுள்ளே பதிந்துவிட்டதால் எனக்கு ஏற்பட்ட சிறுமைகள் கூட பெரிதாக தெரியவில்லை.

எடுத்துக் காட்டாக, ஒரு தடவை பாரதி விழாவில் நடந்த பேச்சுப் போட்டியில் எந்த சூது வாதும் இல்லாமல் பாரதி பாடிய ‘பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே’ என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினேன்.

அன்று முதல் கடையத்தில் உள்ள சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை எதிரி மாதிரி நடத்த துவங்கினார்கள். அவர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த நான் வில்லப் பிள்ளையாகப் போய்விட்டேன். ஒருசிலரை தவிர்த்து, அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை வகுப்புகளில் அவமானப் படுத்தினார்கள். பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த என்னை ஒதுக்கி வைத்தார்கள். அப்படியும் எனக்கு, பிராமணர்களை விடுங்கள் பிராமணீயத்தின் மீது கூட வெறுப்பு ஏற்படவில்லை.

இதே சமயத்தில் கலைஞரையோ அல்லது அவரது தமிழையோ என்னால் உதற முடியவில்லை. 1952ஆம் ஆண்டில் வெளியான அவரது பராசக்தி படம், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து ஓலைக் கொட்டகை டூரிங் தியேட்டர்களுக்கு வந்தது. இது இளைஞர்கள் மத்தியிலே மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. எட்டாவது வகுப்பு வரை படித்த ஒவ்வொரு இளைஞனும் மேடை நாடகங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பாணியில் பேசத் துவங்கினான். அவனை அறியாமலே தமிழை பொறுத்த அளவில் அவனுடைய நாக்கு சரஸ்வதியானது என்று சொல்வதை விட அதற்கு இணையாக கலைஞரானது என்று சொல்லலாம். சரஸ்வதி கம்பனையும், ஒட்டக் கூத்தனையும் பெரிய அளவில் நாடறியச் செய்த ஞானத் தெய்வம். ஆனால், கலைஞர் என்ற மானுடரோ ஒவ்வொரு பாமரனையும் தமிழால் தட்டி எழுப்பி தன்னைப் போல் அவனை பேச வைத்தார். அப்போது இதைக் கோபமும் குமுறலுமாக ஒப்புக் கொண்டேன்.

நானும் கலைஞரின் தாக்கத்திற்கு உட்பட்டேன். படித்த (அதாவது அந்த காலத்து எஸ்.எல்.சி) பல இளைஞர்கள் கலைஞர் வசன பாணி நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் அரங்கேற்றினார்கள். நானும் கட்டுரைப் போட்டிகளில் கலைஞர் பாணி தமிழையே கையாண்டு வெற்றி பெற்றேன். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது கூட அதை பொறுக்காத சில பேர்வழிகள் எனது சிறுகதைகள், நாவல்களில் வரும் உரையாடல்கள் ஓசை நயத்தோடு இருப்பதாக குற்றம் சாட்டுவதாக நினைத்து தங்களுக்கு தெரியாமலே எனக்கு புகழாரம் சூட்டினார்கள். இந்த ஓசை நயம் நான் என்னையும் மீறி கலைஞரிடம் இருந்து கடன் வாங்கியது.

இன்னும் ஒரு சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். கலைஞரின் தமிழ் என் மூலம் வெளிப்பட்டு பல இளைஞர்களையும், இளம் பெண்களையும் காதலர்களாய் மாற்றியது. அந்தக் காலத்தில் காதல் என்பதே அப்போதுதான் அரும்பத் துவங்கியது. அதற்கு முன்பு காதலில் சிக்கியவர்கள் குறிப்பாக பெண்கள் பிடிபட்டால், அவர்கள் இரவோடு இரவாக எரித்துக் கொல்லப்படுவார்கள். ஆண்களாக இருந்தால், மொட்டை அடிக்கப்பட்டு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைகளில் ஏற்றப்படுவார்கள்.

உதாரணமாக, எங்கள் ஊர் வாத்தியாருக்கு வெளியூரில் கல்யாணம். தாலிகட்டிய உடனே, அவருடைய மனைவி அவருக்கு தேநீர் கொடுத்தாளாம். உடனே எங்க ஊர்ப்பக்கம் ‘இப்படியும் ஒரு பொம்பளையா’ என்று வக்கணை பேசுவார்கள். திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்று தாய் வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண் கூட, பிறந்த ஊரில் கம்மாகரை வரைக்கும் கட்டிய கணவனோடு உல்லாசமாகப் பேசி நடப்பாள். ஊருக்குள் நுழைந்ததும் அவர் யாரோ தான் யாரோ என்பது மாதிரி ஒரு பர்லாங்கு எட்டி நடப்பாள்.

இந்தப் பின்னணியில், திராவிட இயக்கம் காதலிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் அறிமுகமான பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு பெட்டிக் கடை வைத்திருப்பவர்களும், வயர் மேன்களும், டெய்லர்களும் கதா நாயகர்கள். விவசாயக் கூலிப் பெண்களுக்கு வில்லுப் பாட்டாளிகளும், மேடை நாடக நடிகர்களும் நாயகர்கள். எஸ்.எல்.சி பெயிலான பயல்களுக்கு ஹையர் கிரேடு எனப்படும் எட்டு படித்த பயிற்சி பெற்ற ஆசிரியைகள் நாயகிகள். வேலை பார்க்கும் படித்த இளைஞர்களுக்கு செகண்டரி கிரேடு எனப்படும் உயர்தர ஆரம்பப்பள்ளி ஆசிரியைகள் நாயகிகள்.

இப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான இளைஞர்களுக்கு எனக்கு நன்றாக எழுத வரும் என்பது எப்படியோ தெரிந்து விட்டது. தாங்கள் நேசிக்கும் பெண்களுக்கு அவர்கள் பெயரில் நான் காதல் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞனும் விடுக்கும் வேண்டுகோள். நான் உடனடியாக மசிய மாட்டேன். என்னிடம் காதல் கடிதம் பெற நினைக்கும் ஒரு இளைஞன் எங்கள் ஊரில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள குற்றாலத்திற்கு என்னை சைக்கிளில் ஏற்றிச் செல்ல வேண்டும். குற்றால அருவி வெள்ளத்தில் எனது டவுசரையும், சட்டைகளையும் சோப்பு போட்டு துவைத்து தரவேண்டும். திரும்புகிற வழியில் தென்காசியில் ஒரு அய்யரம்மா வீட்டளவில் நடத்திய விடுதியில் சாப்பாடு வாங்கித் தர வேண்டும். சாப்பாடு நாலணா. நிறைவாக இருக்கும். பிறகு தென்காசி பரதன் தியேட்டரில் சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும். வருகிற வழியில் பாவூர்சத்திரம் என்ற இடத்தில் ஒரு டீயும், இரண்டு மசால் வடையும் வாங்கித் தரவேண்டும்.

இப்படி ஒரு தடவை என்னைக் கவனித்தால்தான், நான் காதல் கடிதங்கள் எழுதுவது பற்றி யோசிப்பேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடையழகு, உருவ அழகு, நடையழகு, சொல்லழகு போன்றவற்றை மிகைப்படுத்தி அசிங்கமான தோற்றங்களை எடிட் செய்து ‘கண்ணே, கற்பூரமே, கஸ்தூரி பெட்டகமே, தேவகுல பெண்ணே, நாவல் பழ நிறத்தாளே’ என்று மனதில் உருவாகும் வார்த்தைகளை எல்லாம் ஒன்று திரட்டி கடிதமாக்கி, கொடுத்து விடுவேன். வீட்டில் பெற்றோரிடமும் அண்ணன் தம்பியிடமும் நாயே பேயே என்றும் கவுகண்ணி, மஞ்ச கடஞ்சாள், ஆமை, எருமைமாடு போன்ற பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கும் இளம் பெண்களுக்கு இத்தகைய கடிதங்கள் வரப்பிரசாதமாகவும், வடிகாலாகவும் அமைந்திருக்கும். இந்தக் கடிதங்களை அவர்கள் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். கடிதம் கிடைத்த மூன்று நாட்களிலேயே புளியந்தோப்பில் சந்தித்துக் கொள்வார்கள். ஆணும் பெண்ணும் நிலம் பார்த்தும், குலம் பார்த்தும் காதலித்ததால் பிரச்சனை அதிகமாகவில்லை. சில இளைஞர்கள் கையோடு பிடிபட்டு அடிபட்டு இருக்கிறார்கள். இவர்களை அப்படி அடித்த சம்பந்தபட்ட பெண்ணின் சகோதரர்களுக்கு நான்தான் காதல் கடிதங்களை எழுதி கொடுத்தவன் என்பது தெரியும். ஆனாலும் என் கிட்டே வரமாட்டார்கள்.

கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்குச் சென்ற நான் கலைஞர் பாணியில் எழுதிய ஒரு நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறேன். எனக்கு சிவாஜி போலவே வசனம் பேசுபவன் என்றும், கருணாநிதி போலவே வசனம் எழுதுகிறவன் என்றும் ஏகப்பட்ட நல்ல பெயர். ஆகையால், கலைஞர் அந்த வயதிலேயே தமிழை பொறுத்த அளவிலாவது என் வழி காட்டியாகிவிட்டார். ஆனாலும், வழியைத்தான் பார்த்தேனே தவிர வழிகாட்டியை பகைமையுடன் ஒதுக்கி விட்டேன்.

சென்னையில் சர் தியாகராய கல்லூரியில் நான் படித்த போது, திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் இளைஞர்கள் வடசென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் என்ற ஒரு பத்திரிகையை நடத்தினார்கள். அதில் திராவிட இயக்கத்தை கிண்டல் செய்து ஆசிரிய எண்சீரடி விருத்தத்தில் நான் ஒரு கவிதை எழுதி அது பிரசுரமாயிற்று. அப்போது காங்கிரஸ் மாணவரான செந்தில்நாதனின் அண்ணன் ராஜா, என்னை அந்த பத்திரிகைக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்பு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகமும் கிடைத்தது. இந்த பலத்தில் பல்வேறு அரசியல் மேடைகளில் பேசினேன். அண்ணாவை கிண்டலடித்து அருமை நண்பர் கரிகாலன் எழுதிய ஒரு நாடகத்திற்கு நான் பாடல் எழுதி அது பிரமாதமாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மகாநாட்டில் பெருந்தலைவர் காமராசர் முன்னிலையில் அடுக்கு மொழியில் பேசினேன். தேசிய முழக்கத்தில் எழுதிய கவிதையை அப்படியே ஒப்பித்தேன். காமராசர் பரவசமாகி விட்டார். அதிக பிரசங்கித் தனமாக பேசுகிறவர்களை மேடையிலே சட்டையைப் பிடித்து இழுக்கும் பெருந்தலைவர் என் பேச்சுக்கு கிடைத்த பலத்த கைதட்டல்களால் மகிழ்ந்து போனார். அவர் பேசும் போது ‘எங்க கிட்டேயும் அடுக்கு மொழி பேசறவன் இருக்கான், இவன் கூட பேசறதுக்கு வரியா’ என்று அறைகூவல் விடுப்பது போல் பேசினார்.

இந்த வெற்றிக்கு காரணம் கலைஞரின் தமிழே எனது பேசும் பாணி வித்தியாசமானது என்றாலும் நான் ‘அடக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, மடக்கப்பட்டது’ என்ற அடுக்கிக் கொண்டே போவேன். இது கலைஞர் தன்னையறியாமல் தந்தது. நான் என்னையறியாமல் பெற்றது. இந்தத் தமிழை வைத்தே அண்ணாவின் வீட்டு முன்பு அவரையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். மறுநாள் அண்ணா இருந்த மேடையில் ஒரு திமுக பேச்சாளர் அப்போது நெல்லை சமுத்திரமாக அறியப்பட்ட என்னை கடுமையாகச் சாட அண்ணாவோ பேச்சாற்றல் மிக்க அந்த இளைஞர் என் பக்கம் வந்தால் அவரை தலையில் வைத்து தாங்குவேன் என்பது மாதிரி பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களால் சல்லிக்காசு எனக்கு பிரயோசனமில்லை என்று தெரிந்தும், என்னால் அண்ணாவின் பக்கம் தாவமுடியவில்லை. காரணம் விவாதமும், எதிர்விவாதமும் ஒரு கட்டத்தில் சடுகுடு ஆட்டமாகி விடுகிறது. இதில் உண்மை வெல்ல வேண்டும் என்பதற்கு பதிலாக தீயவைகளை பயன் படுத்தியாவது தனது அணி வெற்றிப் பெற வேண்டும் என்பதே மேலோங்குகிறது.

இந்த அரசியல் சடுகுடு ஆட்டத்தில் நான் தேசிய அணியில் இருந்தேன். அந்தக் காலத்தில் திராவிட நாடு, நம்நாடு, முரசொலி, தென்றல், இனமுழக்கம் போன்ற ஏகப்பட்ட திமுக பத்திரிகைகளை நான் படிப்பதுண்டு. சிலம்புச் செல்வரின் செங்கோல், ஜீவாவின் தாமரை போன்ற இதழ்களையும் படிப்பதுண்டு. அந்த காலத்தில் ஒவ்வொரு கட்சி கிளை அலுவலகங்களிலும் தினமணி, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளும், கட்சி பத்திரிகைகளும் வைக்கப் பட்டிருக்கும். காங்கிரஸ் பேச்சாளன் என்று அறியப்பட்ட நான், வடசென்னையில் திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று பல்வறுே பத்திரிகைகளை படிப்பேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த அளவுக்கு சர்வக்கட்சி சமரசம் நிலவியது.

வடசென்னையில் உள்ள சர்தியாகராய கல்லூரியில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தமிழ் மாணவர் மன்ற சார்பாக உரையாற்றிய போது, அவரது பேச்சு திராவிட மயமாக இருந்ததால் அதை ஆட்சேபித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த தேசிய மாணவனான நான் ஒற்றை மனிதனாய் வெளிநடப்பு செய்தேன். என்னைத் தவிர எல்லோருமே திமுக மாணவர்கள். ஒருவர் கூட என்னைக் கேலி செய்யவில்லை. என்னுடைய வெளிநடப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் அதற்கு மரியாதை தெரிவித்தார்கள்.

அந்தக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்றத்திற்கு என்னையே தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே தமிழ் தெலுங்கு மாணவர் பிரச்சனை ஏற்பட்ட போது நானும் திமுக மாணவர்களும் ஒன்றுபட்டு போராடி அதன் விளைவாக எங்களில் ஆறு பேர் கல்லூரியில் இருந்து துரத்தப் பட்டோம். அப்போது கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் உதவிக்கு வரவில்லை . காங்கிரஸ் ஆட்சியினர் எனக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

இறுதியில், தந்தை பெரியார்தான் எங்களை காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஆனாலும், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். நானும் காங்கிரஸ் மாணவனாகவே இருந்தேன். அந்த அளவுக்கு தனி நபர்கள் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பின்தள்ளி தாங்கள் கொண்ட தத்துவமே முன்னிலைப் படுத்தப்பட்டது. இதனால் திமுக பேரலையில் தலைவர்களான, அமைச்சர்களான கவிஞர் வேழவேந்தன், வேலூர் விசுவநாதன், துரைமுருகன், ஆலடி அருணா, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்கள் இன்னும் என் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படி தனிநபர் உறவு பாதிக்கப் படாமல் இருந்த நமது பொது வாழ்க்கை யார் கண்பட்டோ மாசுபட்டு விட்டது.

மாற்று கட்சியான திமுக மாணவர்களோடு ஒன்றிப்போன என்னால் கலைஞரோடு மட்டும் ஒன்ற முடியவில்லை.

1966ஆம் ஆண்டு புதுடில்லி வானொலி நிலையத்தில் தமிழ் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக சேர்ந்தேன். சட்டப் பேரவை தேர்தலில் விருதுநகரில் காமராசர் தோற்ற செய்தியை மத்தியான செய்தியில் அழுதபடியே வாசித்தேன். காமராசர் தோல்வியை அங்கிருந்த கறுப்புத் தமிழர்களும், வெள்ளைத் தமிழர்களும் வாண வேடிக்கையோடு கொண்டாடினார்கள். இதற்கெல்லாம் முதல் காரணம் கலைஞர் என்றே நான் நினைத்தேன். அவர் மீது இருந்த வெறுப்பு மேலும் மேலும் கூடியது.

இந்த தோல்விக்குப் பிறகு காமராசர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் அங்கேயே முகாமிட்டு பெருந்தலைவரை தோற்கடிப்பதற்காக தேர்தல் பிரசாரத்தை முடிக்கி விடுகிறார். ஊர் ஊராக போகிறார். காமராசரை பற்றி காரசாரமாக விவாதிக்கிறார். நான் மட்டும் அவரது தேர்தல் கூட்டத்தை பார்த்திருந்தால் அவரை நோக்கி. ஒரு கல்லைக்கூட வீசியிருப்பேன். ஆனாலும் காமராசர் வெற்றி பெற்று விட்டார் காமராசர் எதிரி என் எதிரி என்று நினைத்த நான் இப்போதோ என் எதிரியான கலைஞர் காமராசரின் எதிரி என்று நினைக்கத் துவங்கினேன்.

காமராசர் வெற்றி பெற்ற செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் அரசு விடுப்பில் சென்னை வந்தேன். என் இனிய நண்பர் க.பா. பழனியை சந்தித்தேன். மாணவர் காங்கிரஸ் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இனிய நண்பர். வெளிப்படையாக பேசுகிறவர். கன்னியாகுமரி தேர்தலில் முகாமிட்டவர். அவரை பார்த்ததும் காமராசரை முறியடிக்க நினைத்த கருணாநிதி என்பவரை கண்டபடி திட்டினேன். ‘அந்தாளு எந்த மாதிரி’ என்று கேட்டேன். உடனே பழனி ‘பிரிலியன்ட் பெல்லோ பிரைனி சாப், திமுகவின் பேக்போன்’ என்று மணிப் பிரளவ ஆங்கிலத்தில் அசத்தினார். நான் அவரை அச்சுறுத்துவது போல் பார்த்தபோது ஒரு நிகழ்ச்சியை விளக்கினார்.

தஞ்சையில் திமுக அரசுக்கு எதிராக இந்த பழனி ஒரு போராட்டம் நடத்தினாராம். அங்கே சுற்றுப் பயணமாய் சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியதோடு. ‘பானை இங்கே படியரிசி’ எங்கே’ என்று திமுகவினர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்தினாராம். காவல்துறையினரும் காங்கிரஸ்காரர்கள் பரம சாதுக்கள் என்பதால் கலைஞரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வில்லையாம். ஆனால், அமைச்சர் கருணாநிதியோ கறுப்புக் கொடி காட்டிய தொண்டர்களின் தலைவரான பழனியை நெருங்கி ‘காங்கிரஸ் போராட்ட தலைமை உங்களிடம் வந்ததற்காக உங்களை வாழ்த்துகிறேன் பழனி’ என்று சொல்லி விட்டு போனாராம்.

அகாலமாக மரணமடைந்த தஞ்சை மனிதரான என் தோழர் பழனி அரசியலை ஒரு சடுகுடு ஆட்டமாகவே எடுத்துக் கொண்டார். கலைஞரின் புகழையே அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். பொதுவாழ்க்கையில் தனிமனித வெறுப்போ, துதி பாடலோ கூடாது என்பார். அவரால் பெருந்தலைவர் காமராசரையும் நேசிக்க முடிந்தது. அதே சமயம் பெருந்தலைவரை கடுமையாக விமர்சித்த கலைஞரோடும் அன்பு பாராட்ட முடிந்தது.

ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. பழனி ஆயிரம் சொன்னாலும் கலைஞருக்கு எதிரான என் வன்மம் கூடியதே தவிர, குறையவில்லை. இவ்வளவுக்கும் கலைஞருக்கு இந்த சமுத்திரத்தைப் பற்றியே தெரியாது. தெரிந்தாலும் ஒரு பொருட்டல்ல. ஆனாலும், கலைஞரை வெறுப்பதை ஒரு சமூக கடமையாகவே நான் நினைத்தேன்.

புதுடில்லியில் இருந்து விடுமுறையில் வந்தபோது, அப்போதைய மவுண்ட் ரோடு வழியாக நண்பர்களோடு நடந்துக் கொண்டிருந்தபோது, ஒரு கார், முன்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது, ஒரு நண்பர், அந்தக் காரில் முன்னிருக்கையில் கலைஞர் போவதாகக் குறிப்பிட்டடார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாக பின்னிருக்கையில் இரண்டு பக்கமும் பறவைகளின் இறக்கை மாதிரி கைகளைப் போட்டுக் கொண்டு அமராமல், முன்னிருக்கையில் உட்கார்ந்து, சடன் பிரேக்கில் முகம் கண்ணாடியை இடிக்கக் கூடிய நிலையில் அவர் ஏன் அப்படி போனார் என்பது புரியவில்லை. இதுதான் கருணாநிதியின் இயல்போ என்று அப்போது வியந்துக் கொண்டேன்.
----------------

4. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடி...

1974 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை வானொலி நிலையத்தில் உள்ள நிகழ்ச்சிப் பத்திரிகையான வானொலிக்கு பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை சென்னைக்கு மாற்றும்படி டில்லி மேலிட அதிகாரிகளை கெஞ்சியிருக்கிறேன். அவர்கள் கண்டுக்கவே இல்லை. அகிய இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு சில தடாலடி நடவடிக்கைகளை எடுத்து அமைச்சகத்தை அதிரச் செய்தேன். ஆனாலும், குடும்ப நிலவரம் காரணமாக நான் சென்னைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம். காலையில் மனு போட்டேன் தொலைந்தால் சரி என்பது மாதிரி மாலையிலே மாற்றல் உத்தரவை போட்டு விட்டார்கள். எங்கள் சகாக்களின் மகத்தான் வருத்தம் கலந்த வழியனுப்போடு சென்னை வந்து பொறுப்பேற்றேன். அப்போது இளைய ராஜா வானொலி நிலைய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, கொண்டிருப்பார். அவருடைய புகைப்படத்தை அடிக்கடி வானொலி பத்திரிகையில் வெளியிட்டேன்.

1975 ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேலிக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த இந்திராகாந்தியை பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரியது அற்பத்தனமானது. இதற்காக இந்திராகாந்தி நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்தியது அசிங்கமானது. என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றை தவிர பெரும்பாலான கட்சிகள் நெருக்கடியை வரவேற்றன. வீர தீர பிரதாபங்களை வெளியிடும் பல்வேறு சங்கங்களும், ஊழியர் அமைப்புகளும் இந்த பிரகடனத்தை வரவேற்பதாக அறிக்கைகள் விட்டனர். எங்கள் நிலையத்திற்கு முன்னால் எனது கண் முன்னாலேயே அரசை விமர்சித்ததற்காக ஒருவரை வடநாட்டு போலீசார் கைது செய்து கொண்டு போனார்கள். இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற கதைதான்.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது முதல்வராக இருந்த கலைஞர் மறைமுகமாகப் போர்க்கொடி தூக்கியது அவர் மீது எனக்கு முதல் தடவையாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்திராகாந்தியை எதிர்த்த ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களுக்கு அவர் புகலிடம் வழங்கினார். பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய வேண்டும் என்று வந்த ஆணையையும் கிடப்பில் போட்டு விட்டார். நெருக்கடி நிலையினால் நாடு என்ன ஆகுமோ என்று பதறிப் போன பெருந்தலைவரும், கலைஞரும் ஒருவருக்கு ஒருவர் முட்டுக் கொடுத்துக் கொண்டார்கள். ஆனால், பெருந்தலைவர் 1975ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி அண்ணல் காந்தி பிறந்தநாளில் காலமானார். கலைஞர் அரசு 1976ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டது. குடியரசு தலைவரின் ஆட்சி அமுலுக்கு வந்தது. இ ஆய அதிகாரிகளான ஆர்.வி. சுப்பிரமணியமும், தாவேயும் தமிழக அரசின் ஆலோசகர்களாக வந்தார்கள். ஆர்.வி.எஸ் பதவியேற்ற உடனேயே தவத்திரு குன்றக்குடி அடிகளாரை கைது செய்ய ஆணையிட்டதாக அறிகிறேன். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் தலையீட்டால் அடிகளார் கைது செய்யப்பட வில்லை.

என்றாலும் தேசியவாதி என்ற முறையில் கலைஞர் ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதில் மகிழ்ச்சிதான். இந்திரா அரசு கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவருக்கு வேண்டிய முக்கியமானவர்களை சிறையில் தள்ளியது.

ஒருநாள், எனது அறையில் நானும் வானொலியின் மூத்த செய்தியாளரும் இப்போது பத்திரிகை தகவல் அமைப்பின் இயக்குநராகவும் உள்ள டி.ஜி. நல்லமுத்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார். முன்பெல்லாம், கலைஞரை விமர்சிப்பதுதான் எங்களது பொழுது போக்காக இருந்தது. இப்படி, நாங்கள் கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் சமயங்களில் கலைஞரின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் எங்க அலுவலகத் தோழர் ஒருவர், ஆட்சி மாறிய பிறகும், எனது அறைக்கு வந்தார். ஒரு தகவலை சிரித்தபடியே சுவையாக எங்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடோ என்னவோ குறிப்பிட்டார்.

மு.க. ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டாராம். கலைஞர் வேனில் இருந்த தனது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு விடை கொடுக்கப் போனாராம். அப்போது, ஒரு வடநாட்டு காவலர், லத்திக் கம்பால் வேனை அடித்து, கலைஞரை மிரட்டும் தொனியில் பார்த்துவிட்டு ‘சலோ சலோ’ என்று சொல்லி விட்டு ஸ்டாலினோடு வேனில் ஏறி பறந்து விட்டாராம்.

இந்தத் தகவலை கேட்ட நான், மகிழ்ச்சி பொங்க தோன்றிய அவரிடம் ‘கொஞ்ச வேல இருக்கு... தயவு செய்து அப்புறம் வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அப்படியே அசையாது இருந்தேன். உடனே, நல்லமுத்து ‘எதற்குப்பா அவர விரட்டுற’ என்றார். நான் விளக்கினேன். விளக்கினேன் என்பதை விட நெகிழ்ந்து போன குரலில் உடைந்து போய்ச் சொன்னேன் என்று குறிப்பிடலாம். ‘ஆயிரந்தான் இருந்தாலும் கருணாநிதி (கலைஞரல்ல) நம்மவர்’ மூன்று நாட்களுக்கு முன்புவரை, அரசனாக வாழ்ந்தவர். அவரை கேவலப்படுத்துவது போல் ஒரு காவலர் நடந்து கொண்டது தமிழனின் கண்டனத்துக்கு உரியது. இதைவிடக் கேவலமானது கலைஞரின் ஆதரவாளராக கூறிக்கொண்ட இந்த நண்பர் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று நினைத்து, இந்த தகவலை சிரிப்பும் கும்மாளமுமாய்ச் சொன்னது! என்று பதிலளித்தேன்.

இந்தச் சூழலை எழுதும் இப்போது கூட, கலைஞர் வேனை தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் ஸ்டாலின் வேனுக்குள் இருப்பது போலவும் காவலன் அப்படி நடந்து கொண்டது போலவும் காட்சி வருகிறது. இதற்கு பெயர்தான், தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பதோ? உண்மையிலோ அந்த தகவலை கேட்ட நான் ஆடிப் போய்விட்டேன்.

சென்னை வானொலி நிலையத்தில் இருந்து சென்னையிலே உள்ள களவிளம்பரத்துறைக்கு என்னை மாற்றினார்கள். கலைஞர் அரசு செய்ததாக கூறப்படும் ஊழல் பட்டியலை கையில் கொடுத்து மேடைதோறும் பேச வேண்டும் என்றார்கள். அப்போது பத்திரிகை தணிக்கை செயல்பாட்டில் இருந்ததால் எங்களது அரசியல் பேச்சு செய்திகளானது இல்லை. எனக்கு இது அதிகமாக பிடிக்கவில்லை என்றாலும் பொது வாழ்க்கையில் ஊழலற்ற நிலைமை வரவேண்டும் என்ற காரணத்திற்காக மேடையில் ஏறியதும் கலைஞர் அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். அதேசமயம் மேட்டுக்குடியான மத்திய மாநில உயர் அதிகாரிகள் கலைஞரை விமர்சிக்கும் போது, என் ரத்தம் கொதித்தது.

ஒரு தடவை, மத்திய, மாநில மக்கள் தொடர்பு அதிகாரிகளின் கூட்டம் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் சர்வ வல்லமை மிக்க ஆலோசகர் தவே அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் பேசி முடித்ததும் நான் ‘நெருக்கடி காலத்தை சாக்காக்கி காவற்துறையினரும் இதர அதிகாரிகளும் தங்கள் மாமூலைக் கூட்டிக் கொண்டார்கள். மக்கள் மத்தியில் ஒரு முணுமுணுப்பு இருக்கிறது’ என்றேன். இது தவேக்கு பிடிக்கவில்லை. கோள் சொல்லலாகாது என்றார். உடனே, என் எதிர்ப்பை காட்டும் வகையில் அவர் முன்னால் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதுபோல் பத்து நிமிடம் வெளியே போனேன். இதனால் எனக்கு திமுக முத்திரை குத்தப்பட்டு என்னை அந்தமானுக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் குழு அமைச்சரவைக்கு பரிந்துரைத்து அதுவும் ஆணையாகப் போன நேரம். எப்படியோ செய்தி தெரிந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய பொதுச் செயலாளர்களில் ஒருவரான என் இனிய தோழர் ஏ.கே. சண்முகசுந்தரத்தை அணுகினேன். அவர் அந்த ஆணை வராமலே பார்த்துக் கொண்டார்.

நெருக்கடிக்கால பத்திரிகை தணிக்கை அதிகாரிகள் குறிப்பாக இலக்கியவாதியான வெங்கட்ராமன் என்பவர் முரசொலியின் சாதுரியத்தை அதன் பின்னால் உள்ள கலைஞரின் திறமையை பாராட்டுவார். பத்திரிகைகள் முன்கூட்டியே தனது செய்திகளையும், லே அவுட்களையும் தணிக்கை குழுவிடம் காட்டியாக வேண்டும். தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக வேண்டும் என்ற இரும்புக் கரம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. முரசொலி பத்திரிகையும் தணிக்கைக்கு வரும். ஆனால், கலைஞரோ ஒரு சில செய்திகளில் தணிக்கை அதிகாரிகளின் கண்களை மறைத்து விட்டார். சிறையில் எவரெல்லாம் கைதிகளாக இருக்கிறார்கள் என்று கூட பத்திரிகைகள் வெளிப்படையாக எழுத முடியாத நேரம். இந்தச் சமயத்தில் கலைஞரின் முரசொலியில் அண்ணா சமாதிக்கு வர இயலாதவர்கள் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பெயர்களை விலாவாரியாக வெளியிட்டார்.

சென்னை தொலைக்காட்சியிலும், வானொலியிலும் கலைஞரை வில்லத்தனமாக பல தலைவர்கள் சித்தரித்தார்கள். திருப்பி பதிலளிக்க கலைஞருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலே அவரோடு கூடிக் குலாவியவர்கள் கூட இந்த ஊடகங்களில், கலைஞரை கடுமையாகவும், கேவலமாகவும் சித்தரித்து பேசினார்கள். இந்த மாதிரி சமயங்களில் கலைஞரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நான் நினைத்தபோது எனக்கு கலைஞர் மீது அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபமே அன்பானது.

வெந்த புண்ணில் வேலை பாய்ப்பது போல், வள்ளுவர் கோட்டத்தைக் கட்டிய கலைஞருக்கு அங்கே இடமில்லாமல் போய்விட்டது. வள்ளுவத்தின் மாண்புகளையும் அதில் உள்ள நவீனத்துவங்களையும் தக்காரும் மிக்காரும் இல்லாமல் இந்த கோட்டத்தைக் கட்டிய கலைஞர் அங்கே இகழப்பட்டார். வள்ளுவர் கோட்ட திறப்பு விழாவில் பேச்சாளர்கள் அனைவரும் கலைஞரை கேவலப்படுத்தி சித்தரித்தார்கள். இதை உவமை கவிஞர் சுரதா கடுமையாக எதிர்த்து ஒரு ரகளையே ஏற்படுத்தி விட்டார். இது கண்டு நானும் ஒரு முழுத் தமிழனானேன். கவிஞர் சுரதா இப்போது கோமாளித்தனமாக பேசிவிடுகிறார். ஒரு கட்டத்தில் காலடி கலாச்சாரத்திலும் சிக்கிக் கொண்டார். ஆனாலும் அன்று தன்னுடைய உயிரைப் பற்றி கவலைப் படாமல் அவர் எதிர்ப்பு காட்டியது இன்னும் என்னை வீறுகொள்ளச் செய்கிறது.

இதனால், நான் கலைஞரை மறுபரிசீலனை செய்யத் துவங்கினேன்.
-----

5. கலைஞர் வீட்டில் ஒரு சமுத்திரக் கூச்சல்

1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திட்டம் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் உதவி செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.

இந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க நான்தான் சரியான அலுவலர் என்று நினைத்து டில்லி மேலிடம் என்னை அந்த நிலையத்தில் நியமித்தது. இந்தச் செய்திப் பிரிவு இப்போது போல் ஒழுங்கு செய்யப்படாமல் கிட்டத்தட்ட பைத்தியக்கார மருத்துவமனை போல் தோற்றம் காட்டியது.

இந்த நிலையத்தில் முக்கால்வாசிப்பேர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் தீவிரமான, அதே சமயம் தெளிவான ஆதரவாளர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு வெள்ளோட்டமாக ஏதோ ஒரு விழாவில் அவரை குத்து விளக்கேற்றச் செய்தார். கலைஞரின் தீவிர பக்தரான ஒரு எடிட்டர் இந்த விளக்கு நிகழ்ச்சியை துண்டித்து விட்டார். இது என் கவனத்திற்கு வந்த போது, தேசிய செய்தி ஒளிபரப்பில் குத்துவிளக்கு இத்தியாதிகள் செய்திகளாகாது என்பதால், அந்த வெட்டை ஏற்றுக் கொண்டேன். இதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு கடுங்கோபம்.

மறுநாள் கோபத்துக்கான இந்தக் காரணத்தை வெளிப்படையாக சொல்லாமல் வேறு காரணங்களைக் கூறி தொலைக்காட்சியை பகிஷ்கரிப்பதாக அறிவித்தார். தமிழக அரசு விழாக்களை படமெடுப்பதற்கு அனுமதி கொடுக்க மறுத்தார். கடைசியில் எங்கள் இயக்குநரும் இன்னும் சில அதிகாரிகளும் மேலிடத்தின் கட்டளைப்படி முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

இந்த நிலைமையில்தான், செய்தி ஆசிரியருக்கு உறுதுணையாக ஒத்துழைத்தேன். இதனாலேயே, பல சுயநலமிகள் செய்திகளுக்குள் நுழைத்த மூக்குகளை எடுத்துக் கொண்டார்கள். நானும் பகுதி நேர செய்தியாளர்களை நியமிக்க காரணமானேன். பிரபல நடிகர் சரத்குமாரின் தந்தையும் எனது மூத்த சாகாவுமான ராமநாதன், எழுத்தாளரும் வானொலி மூத்த செய்தியாளருமான சுந்தா, இசக்கி, அருணாசலம், கூடவே தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோர் எங்கள் பிரிவில் பணியாற்றினார்கள்.

இப்படி அந்தச் செய்திப் பிரிவை ஒழுங்கு படுத்திய பிறகு, செய்தி ஆசிரியர் தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கினார். என்னை டெலிபிரிண்டரில் கட்டுக்களை மட்டுமே எடுக்கச் சொன்னார். அற்பத்தனமான செய்திகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் துண்டு துக்கடா ஆசாமிகளின் செய்திகளை தேசிய செய்தியாக ஒளிபரப்பினார். இதில் அவருக்கும் எனக்கும் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில், அம்பேத்கார் பிறந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த செளடேக்கர் என்பவர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அம்பேத்காரியத்தில் இவருக்கு அத்தனையும் அத்துபடி. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அலுவலர்களுக்காக மேலதிகாரிகளையும் பகைத்துக் கொண்டவர். என்னை அவருக்குப் பிடித்து விட்டது. என் பக்கம் உள்ள செய்தி நியாயமும் புரிந்து விட்டது. ஆகையால், எனக்கு ஆதரவாக செயல் பட்டார். இதனால், சர்வ வல்லமை மிக்க எனது செய்தி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளானார். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் நிலைய இயக்குநர்களை விட செய்தி ஆசிரியர்களே செல்வாக்கு உள்ளவர்கள். அத்தனை அரசியல் வாதிகளும் இவர்கள் சொல்வதைதான் கேட்பார்கள்.

உதவி ஆசிரியரான எனக்கும் அந்த செய்தி ஆசிரியருக்கும் ஒரு கெடுபிடி போர் நடந்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் மத்தியானம் நிலையத்திற்குள் நுழைந்தேன். அப்போது இயக்குநரின் அறைக்கு வெளியே ஒரே கூட்டம். கணித மேதை என்று கருதப்படுகிற சகுந்தலா தேவி, தலைவிரி கோலமாக ‘மகாராஷ்டிர கயுதே’ என்று திட்டிக் கொண்டு இருக்கிறார். அத்தனை ஊழியர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். சிலர் ‘மேடம், மேடம்’ என்று தாஜா செய்கிறார்கள். விசாரித்துப் பார்த்ததில், தன்னை கணித மேதையாகக் காட்டிக் கொண்ட சகுந்தலா தேவி, எங்கள் இயக்குநர் அறைக்குள் நுழைந்து தொலைக்காட்சியில் தனக்கொரு நிகழ்ச்சி தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இயக்குநர் தனது இயலாமையை அவருக்கு விளக்கியிருக்கிறார்.

அப்போது கர்நாடக மாநிலத்திலும் தொலைக்காட்சி நிலையம் இல்லை. இதனால், இந்த அம்மையாருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வேண்டும் என்று இந்த இயக்குநரே மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த அம்மையார் இந்திரா காந்திக்கு எதிராக தேர்தலில் போட்டி இட்டதை மனதில் வைத்து, இவரது முகமே தொலைக் காட்சியில் தெரியக் கூடாது என்று மேலிடம் ஆணை போட்டது. இதைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், எங்கள் இயக்குநர் இவரிடம் மென்மையாகப் பேசி சமாளிக்கப் பார்த்திருக்கிறார். ஆனால், இவரது கொடூரமான ஆபாசமான வார்த்தைகளால் அதிர்ந்து போன இயக்குநர், எப்படியோ அறை வாசலைத் தாண்டி இரண்டாவது மாடிக்கு சென்று ஒரு அதிகாரியின் அறைக்குள் ஒளிந்து கொண்டார்.

சகுந்தலா தேவியோ அப்போதே அங்கேயே நிகழ்ச்சி கொடுக்கவில்லை என்றால் நடப்பது வேறு என்று மிரட்டுகிறார். இடையில் சென்ற நான், எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என்னுடைய நயவுரை அவருக்குப் புரியவில்லை . பிறகு மரியாதயா போடி இல்ல போலீஸ்ல ஒப்படைப்பேன் என்று கத்தினேன். இந்த இயக்குநரிடம் ஆதாயம் தேடிய அதிகாரிகள் சும்மா இருந்த போது, சில தலித் ஊழியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். சகுந்தலா தேவி சொல்லாமல் கொள்ளாமல் ஒடிவிட்டார்.

இரண்டாவது மாடியில் இருக்கும் செய்தி பிரிவுக்கு வந்த நான், இந்தச் சம்பவத்தை, எனது சகாக்களோடு பகிர்ந்து கொண்டேன். செய்தி ஆசிரியரின் கழுகுக் கண்களை நான் பார்க்கவில்லை. உடனடியாக அவர் பத்திரிகை தகவல் அலுவகத்தில் உதவி தகவல் அதிகாரியாக இருந்தவரும் கலைஞரால் பின்னர் இருநாவுக்கரசு என்று வர்ணிக்கப் பட்டவருடன் தொடர்பு கொண்டு சகுந்தலா தேவிக்கு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டார். இந்த நரித்தனத்தை மறுநாள் செய்திதாள்களில் பார்த்தோம். சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குநர் அலுவலகத்தில் குடிபோதையில் இருந்ததாகவும், சகுந்தலா தேவியுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அத்தனை பத்திரிகைகளிலும் கிட்டத் தட்ட தலைப்புச் செய்திகள் வெளியாயின. இந்த பத்திரிகைகளுக்கு செளடேக்கர் தரப்பில் என்ன நடந்தது என்பதை கேட்க வேண்டும் என்ற ஒரு நாகரீகம் கூட இல்லை . அவர் ஒரு தலித் என்பதுதான் காரணம். சகுந்தலா தேவியின் செல்வாக்கை கணக்கில் எடுத்து செளடேக்கரை களங்கப்படுத்தி செய்திகளையே வியாபாரமாக்கி விட்டார்கள்.

இதன் எதிர்வினையாக, தாசில்தாராக இருந்து பின்னர் படிப்படியாக முன்னேறிய செளடேக்கரை பற்றிய சுயவரலாற்றுக் குறிப்பை முதலில் தாமரையில் வெளியிட்டேன். இவர் ஒழுக்கம் என்று வருகின்ற போது அப்பழுக்கற்றவர். குடி என்றால் என்ன என்றே தெரியாதவர். சிறந்த கவிஞர். போராளி. என்றாலும் தமிழகத்தின் பத்திரிகைத்தனம் புரியாமல் ஆடிப் போனார். ஆனாலும், நான் அவரை ஆற்றுப்படுத்தினேன்.

எந்த குங்குமத்தை வைத்து கலைஞரை குங்குமத் தமிழன் என்று முன்பு வர்ணித்தேனோ, அதே குங்குமத்தில் செளடேக்கரின் சுருக்கமான சுயவரலாறு வெளியாகும் படி செய்தேன். சகுந்தலா தேவி அவரை இழிவு படுத்திய விவரமும் குங்குமத்தில் இடம் பெற்றது. தமிழகமெங்கும் உள்ள தலித் மக்கள் கொதித்துப் போனார்கள். அணி அணியாக லாரியில் வந்து செளடேக்கருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அன்று முதல் செளடேக்கர் ஒரு வி.வி.ஐ.பி. ஆகிவிட்டார். குங்குமம் இவருக்கு உடலானது. கலைஞர் உயிரானார். நன்றிப் பெருக்கில் கலைஞர் என்ற பட்டத்தை சொல்ல முடியாமல் அவர் மழலையாக மாறும் போது எங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செளடேக்கரின் மூத்த மகளின் திருமணம் சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அழைப்பிதழும் தயாராகி விட்டது. செளடேக்கர் கலைஞரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்க வேண்டும் என்றார். நானும் அழைப்பிதழ் கொடுக்க ஒரு நிமிடம் தானே என்று அவரை அழைத்துக் கொண்டு கலைஞரின் வீட்டிற்குச் சென்றேன். கலைஞர் மாடியில் எழுதிக் கொண்டிருப்பதாக உதவியாளர்கள் சொன்னார்கள். ஒரே ஒரு நிமிடம் என்று மன்றாடினோம். உடனே மாடிக்குப் போன ஒருவர், மீண்டும் திரும்பி வந்து ‘கலைஞர் எழுதும்போது யாரும் போகக் கூடாதுங்க’ என்றார். கலைஞர் எங்களை அனுமதிக்கவில்லை என்று அனுமானித்துக் கொண்டோம். ஒருவேளை, அந்த உதவியாளரே கலைஞரின் எழுத்து ‘மூடைப்’ பார்த்து விட்டு அவரிடம் விவரம் சொல்லாமல் வந்திருக்கலாம் என்ற சிந்தனை எங்களுக்கு ஏற்படவில்லை. முன்னனுமதி பெறாமல் சென்றதும் எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை.

எனக்கோ , கட்டுக்கடங்காத கோபம். கலைஞருக்கு ஆதரவாக செளடேக்கர் மூலமும் அப்போது பொறுப்பு ஆசிரியராக இருந்த என் மூலமும் ஏராளமான நிகழ்ச்சிகளை, செய்திகளை ஒளிபரப்பி வந்தோம். கலைஞரும் எங்களிடம் ஈடுபாடு கொண்டிருப்பார் என்பதைவிட கொண்டிருக்க வேண்டும் என்றே நினைத்தோம். எனக்கோ, ஒரு சக்தி வாய்ந்த நிலையத்தை, கலைஞருக்கு சரியாக பயன்படுத்தத் தெரியவில்லையே என்ற கோபம். ஒரு நிமிட சந்திப்பில் என்ன ஆகிவிடும் என்கிற வேகம். அவரது வீட்டிலேயே அவருக்கு எதிராக கத்தினேன். ஒரு சாதாரண வீட்டில் இப்படி கத்தினாலே விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஆனால், கலைஞரின் உதவியாளர்களோ, முகத்தில் கோபக்குறியை காட்டாமல் நயம்பட பேசி எங்களை அனுப்பி வைத்தார்கள். இந்த நயத்தகு நாகரீகம், கலைஞர் கொடுத்த பயிற்சியால் ஏற்பட்டிருக்கலாம்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு திரும்பியதும் என் கூச்சலை நானே கேட்டு எனக்கு உள்ளூர உதறல். ஆயிரம் இருந்தாலும், நானும், செளடேக்கரும் அரசு ஊழியர்கள். அதிகார வர்க்க ஏணியில் நடுப்படிக்கட்டுகள். கலைஞரோ, இந்த ஏணியே எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர். எனது நடத்தையைப் பற்றி ஒரு வரி முரசொலியில் எழுதினால் போதும். நான் சஸ்பெண்ட் ஆவேன். எலியோடு தவளை கூட்டு சேர்ந்த கதைபோல் செளடேக்கரும் ஒரு வழியாகி இருப்பார். இப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என்று மேலதிகாரிகளும் இருநாவுக்கரசிடம் வாங்கித் தின்ற ஒருசில செய்தியாளர்களும் காத்துக் கிடந்தார்கள். ஒரு வாரம் வரை முரசொலியை ஆழமாக படித்தேன். சின்னச் செய்திகளைக் கூட தேடித்தேடி படித்தேன். கலைஞர் கூட அப்படி படித்திருக்க மாட்டார். செளடேக்கர் மகளின் திருமணநாள் வந்தது. மாலையில் வரவேற்பு. ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், நடிகநடிகையர்கள், அரசு அதிகாரிகள் என்று கண்கொள்ளாக் கூட்டம். திடீரென்று கூட்டத்தில் ஒரு பரபரப்பு. கலைஞர் வந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் நான் அவரை முதல் தடவையாக நேருக்குநேர் பார்க்கிறேன். அவர் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு.

நான், அப்போதைக்கு கலைஞர் மயமாகி விட்டேன்.

இந்தக் கட்டத்தில் கலைஞருக்கு ஏற்பட்ட ஒரு வன்முறை எனக்கு ஏற்பட்டதாக துடித்துப் போனேன்.

பிரதமர் இந்திராகாந்தியுடன் கலைஞர் கூட்டணி வைத்திருந்த காலம். அவர் சென்னைக்கு வந்திருந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரும், கூட்டணி சகா கலைஞரும் விமான நிலையத்திற்குச் சென்றார்கள். விமானம் தரையிறங்கியதும் எம். ஜி. ஆர் விமானத்திற்கு அருகே போயிருந்தார். இந்த இடத்திற்கு முக்கியமான தலைவர்களைத்தான் அனுப்புவார்கள். கலைஞரும் விமானத்திற்கு அருகே போக முற்பட்டபோது அப்போதைய துணை போலீஸ் கமிசனர் ஒருவர் கலைஞரின் கையைப் பிடித்து போகக்கூடாது என்பது போல் இழுத்தார். இதைப் பார்த்து பத்திரிகையாளர்களான எங்களில் ஒரு சிலர் கூச்சலிட்டோம். முதல்வர், இந்திரா காந்தியோடும் திரும்பி வந்தார். கலைஞர் அவரிடம் தனக்கு ஏற்பட்ட வன்முறையை விளக்குவது போல் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் கண்டு கொள்ளவில்லை. இருவரும் இடம் மாறி இருந்தால், கலைஞர் எம் ஜி ஆரை அவமதித்த அந்த அதிகாரியை அங்கேயே அவரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்திருப்பார்.

காரணம், இது தமிழன் பண்பாடு.
-----------------

6. அன்பாலயத்தில் ஒரு அதிகப் பிரசங்கித்தனம்

சென்னை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நீதிமன்றம் சென்று பின்னர் மேல் மட்டத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதவாக்கில் பெங்களுரில் மத்திய அரசின் களவிளம்பரத்துறை மாநில தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றேன். கன்னட ஊழியர்கள், என்னை பிறவி எதிரியாகவே பார்த்தார்கள். இதற்கு நம்மவர்களின் உலகாண்ட தத்துவமும், அந்த மாநிலத்தின் அரசியலில் ஒன்றிருக்காமல் தி.மு.க. அ.தி.மு.க என்று கட்சி வைத்துக் கொண்டு இங்குள்ள சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக போனதும் ஒரு காரணம். இதனால், கன்னட ஊழியர்கள், நானும் உலகாண்ட தமிழன் பரம்பரை என்று என்னை ஒரு மாதிரி பார்த்தபோது, நான் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தை ஒரு மாறுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும் அணுக வேண்டியதாயிற்று.

இங்கேதான், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெங்களுர் சண்முகசுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பு ஒரு மாத வாக்கில் தீவிர நட்பாகி விட்டது. இவர் சிறியன சிந்தியாத மனிதர். வள்ளலார் பக்தர். அதே சமயம் தமிழ்ச் சாதியிடம் கொண்ட தணியாத காதலால் விடுதலைப்புலிகளின் உள்நாட்டுப் போரை தீவிரமாக ஆதரித்தவர். இவர் உதவியில் பல விடுதலைப் புலிகள் தங்கி இருந்தனர். என் மீதும் அன்பு பொழிந்தனர்

அப்போது இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளை மட்டும் அல்லாது வேறு வழியில்லாமல் அவர்களை ஆதரிக்கும் இலங்கை தமிழர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்தது. ஆனால், எதிர்க் கட்சித் தலைவரான கலைஞரோ பாராமுகமாய் இருப்பதுபோல் தோன்றியது. இவர் வழங்கப்போன நன்கொடையை விடுதலைப் புலிகள், முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பயந்து மறுத்துவிட்டது எங்களுக்கு கலைஞருக்கு ஏற்பட்ட அவமானமாகத் தோன்றவில்லை. இது விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரமாகவே தோன்றியது. நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசுவதைத் தவிர, தி.மு.க அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. கலைஞரின் மௌனம் எங்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. கலைஞரை சந்தித்து, கர்நாடகத் தமிழர்களின் ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

1986ஆம் ஆண்டுவாக்கில், கோபாலபுரத்தில், கலைஞரின் வீட்டை, தேடிக் கண்டுபிடித்து வாசலுக்குள் போய்விட்டேன். வீட்டில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாதது போன்ற தோற்றம். கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவர் அந்தக் கட்சிக்கு அரசர் ஆயிற்றே - தொண்டர்கள் அவரை கைவிட்டு விட்டார்களா என்ற சிந்தனையோடு, கண்களைத் துழாவியபோது-

ஒடிசலான, மங்களகரமான ஒரு அய்ம்பது வயது பெண்மணி தென்பட்டார். முன்னர் பார்த்தப் புகைப்படத்தை வைத்து அவர்தான் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மா என்பதை தெரிந்து கொண்டேன். என்னை எழுத்தாளன் என்றும் பெங்களூரில் அரசு வேலை பார்ப்பவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு கலைஞரை பார்க்க வந்ததாக சொன்னேன். அப்போது அவர் பதிலளித்த வார்த்தைகளை என்னால் முழுமையாக ஒப்பிக்க முடியாது. ஆனால் இந்த பொருளில்தான் சொன்னார்

‘உங்களுக்குத் தெரியாதா? அவர போலீஸ் பிடிச்சுட்டு போய் ஜெயிலுல போட்டுட்டாங்க.’

ஒரு தலைவரின் மனைவி போராளியாகவும் இருக்கலாம், அதேசமயம் அந்தத் தலைவரை வழிபடுத்தும் குடும்பப் பெண்ணாகவும் இருக்கலாம். ஆய்ந்து பார்த்தால் இந்த இரண்டிற்கும் வேறுபாடே கிடையாது. தயாளு அம்மா, ஒற்றை நகையோடு, காலணா அங்குலப் பொட்டோடு என்னைப் பார்த்ததையும் கலைஞர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று மண்வாசனை தஞ்சை தமிழில் விளக்கியதையும் கேட்டுக் கொண்டிருந்த போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரோடு பல, இடங்களுக்கு மாலை மரியாதைகளோடு சென்ற இந்த அம்மையார், பாதிக்கப்பட்ட கலைஞரின் துணைவியாராய் அவர் கண்களில் தோன்றிய கலக்கமும், வார்த்தைகளை உருவாக்கிய மெல்லிய குரலும் இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை. எனது சந்திப்பு, அந்த அம்மாவிற்கு ஆயிரத்தெட்டு நிகழ்ச்சிகளில் ஒன்று. நிச்சயம் அவர் மறந்திருப்பார். ஆனால், என்னால் இன்றுவரை அந்த நிகழ்ச்சியை, அவரது துயரமான முகபாவத்தை மறக்க முடியவில்லை .

தயாளு அம்மாவை பார்த்து விட்டு, பெங்களூர் திரும்பிய நான் சண்முகசுந்தரம் அவர்களிடம், முதல்வர் எம். ஜி. ஆர் கலைஞரை அடாவடியாக வீட்டிலேயே கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை குறிப்பிட்டேன். அவரும் இதர தமிழர்களும் கொதித்துப் போனார்கள். ‘நம்ம தமிழனுக்கு புத்தி இல்லையே’ என்று நொந்து கொண்டார்கள்.

தயாளு அம்மாவை சந்தித்த மூன்று மாத காலத்திற்குள் கலைஞரை சந்திக்கச் சென்றேன். அப்போது அறிவாலயம் இல்லை . தி.மு.க. தலைமை அலுவலகமான அன்பாலயம் இதற்கு அருகே மறுமுனையில் உள்ள இடத்தில் இருந்தது. அந்த அலுவலகத்தின் வரவேற்பு அறையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சட்டமன்ற உறுப்பினருமான சா. கணேசன் ‘பி.ஏ.வாக’ உட்கார்ந்திருந்தார். இதற்கு முன்பே, இவர் எனக்கு பழக்கம். அன்பு பொங்கும் முகம். உரத்துப் பேசாத மென்மை. பார்த்த உடனேயே நேசிக்க தோன்றும் முகபாவம். ஆக மொத்தத்தில் எளிமையின் உருவம். என்னை அன்புடன் வரவேற்றார். கலைஞரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்ன தோரணையில் கலைஞருக்கும் எனக்கும் நீண்டகால பழக்கம் இருக்கிறதாக நினைத்தாரோ என்னவோ.. ஒரு வேளை, எழுத்தாளர் ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் தன்னை பார்ப்பதை கலைஞர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் நினைத்திருக்கலாம். ‘உங்களுக்கென்ன தடையா போடுவார்? தராளமாகப் போங்க’ என்றார்.

நான் மாடிப்படியேறி கலைஞரின் அறைக்குச் சென்றேன். கலைஞருடன் பேராசிரியரும் கட்சியின் பொருளாளரான சாதிக் பாட்சா அவர்களும் உடனிருந்தார்கள். பேராசிரியரையும், கலைஞரையும் ஒருமித்து பார்க்கும் போது எனக்கு பாட்டாளித் தோழர்களின் முதுகெலும்பை நிமிர்த்திய மார்க்சுக்கும், ஏஞ்சலுக்கும் இருந்த நட்பும், அனுசரனையும் நினைவுக்கு வந்ததது.

1969 ஆம் ஆண்டிடு கலைஞர் முதல் தடவையாக முதல்வரானபோது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேராசிரியர், இருவரும் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ‘கலைஞரை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை... தளபதியாக ஏற்றுக் கொள்கிறன்’ என்று வெளிப்படையாகச் சொன்னவர். உடனே கலைஞரும் ‘தளபதியாகவே இருக்கிறேன். தளர் பதியாக ஆக்காதீர்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். நாவலர் போன்றவர்கள் மறுபக்கம் போன போதும், பேராசிரியர் தனது கட்சியின் பக்கமே நின்றார். இருவரும் ஒருவரோடு ஒருவர் ஆலோசிக்கும் தோரணை அதில் கட்டுண்டுள்ள சமூகநல அக்கறை, ஒரு எழுத்தாளனுக்கு நல்லதொரு காட்சியாகும்.

நான், அவர்கள் மூவருக்கும் பொதுப்படையாக கும்பிடு போட்டு விட்டு, கலைஞரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரும் தெரியும் என்பது போலவே காட்டிக் கொண்டார். எதற்காக வந்தீர்கள் என்பது போல் இயல்பாக என்னைப் பார்த்தார். எங்களின் அரைநிமிட உரையாடல் இந்த பாணியில்தான் நடந்தது.

‘உங்களிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.“’

‘இங்கேயே பேசலாமே’

‘இல்ல தனியாத்தான் பேசணும்’

‘இப்போது முடியாதே’

‘அப்ப நான் வாரேன்’

‘சரி’

நான் ஏறிய வேகத்திலேயே இறங்கினேன். என்னைப் பார்த்ததும் சாகணேசன், அவர்கள் பதறியடித்து எழுந்தார். ‘என்னங்க என்ன நடந்தது’ என்றார். கலைஞர், நான் இறங்குவதற்குள் அவரைத் தாளித்து இருப்பார் என்பது புரிந்து விட்டது. நானும் நடந்ததை சொல்லி விட்டு மடமடவென்று வெளியேறினேன். சா.கணேசன் அவர்கள் இடத்தில் நான் மட்டும் இருந்திருந்தால், அடிதடியில் இறங்கி இருப்பேன். ஆனால், இவரது முகத்தில் ஒரு சின்னக்கோபம் கூட ஏற்படவில்லை. தப்பான ஆளை அனுப்பி விட்டோமே என்று நிச்சயம் மனதுக்குள் புழுங்கியிருப்பார். இப்போது கூட சாகணேசன் அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துவேன்.

கலைஞரோடு இப்படி நான் நடந்து கொண்ட போது எனக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். சிந்திக்க தெரிந்த வயதுதான். ஒரு மகத்தான் தலைவரிடம், முன்னாள் முதல்வரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய வயதுதான். அதுவும் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்டவர் கலைஞர். காகிதத் தலைவர் அல்ல. அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் போய் தனியாக பேச வேண்டும் அதற்கு ஏதுவாக அவர், என்னோடு எதாவது ஒரு அறைக்கு வரவேண்டும் அல்லது கட்சியின் பொதுச் செயலாளரும், பொருளாளரும் எனக்காக அந்த அறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்பார்த்து சென்றது பித்துக் குளித்தனமல்ல அசல் பைத்தியக்காரத்தனம்.

அந்தக் காலக்கட்டத்தில், இலங்கை தமிழர் போரட்டத்தின் மீது, குறிப்பாக விடுதலைப் புலிகளின் மீது நான் வைத்திருந்த கண்மூடித்தனமான ஈடுபாடே என்னை அப்படி நடக்க வைத்து விட்டது. இடம், பொருள், ஏவல் அற்றுப் போய், ஒரு கொள்கை வெறியனாக மாற்றிவிட்டது. கொள்கை வெறி உள்ளவர்களுக்கு இந்த மூன்றும் அற்றுப் போய் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும் என்பதற்கு இலங்கையில், நமது விடுதலைப் புலிகளே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

பொதுவாக, கலைஞரை கோபக்காரர் என்பார்கள். ஒருவர் சொந்த இருப்பிடத்திலேயே இருக்கும் போது இடைச் செறுகலாக சம்பந்தமில்லாத இன்னொருவர் வந்து அதிகப் பிரசங்கிதனமாய் நடந்து கொள்வது, என் வீட்டில் நடந்தாலும் நான் முதலில் சொல்லக் கூடிய வார்த்தை ‘வெளியே போடா’ என்பதுதான். ஆனால், கலைஞரின் முகத்தில் ஒருதுளி கோபம் கூட இல்லை. அவர் பதிலில் ஒரு சின்ன சூடு கூட இல்லை. வார்த்தைகளால் சூடு போடுவதில் வல்லவரான கலைஞர், என்னிடம் ஏன் அப்படி மென்மையாக நடந்து கொண்டார் என்பது இதுவரைக்கும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எழுத்தாளனின் கிறுக்குத் தனங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு கணத்தில் பெருந்தலைவர் காமராசரை போல், ஆட்களை எடை போடுவதில் வல்லவரான கலைஞர் நான் வெள்ளந்தி என்று நினைத்தாரோ என்னமோ.

நான் என்னமோ உலகத் தமிழினத் தலைவர் போலவும், அவர் என்னவோ தொண்டர் போலவும் நான் அப்போது நடந்து கொண்ட விதம் இப்போது கூட என்னையே நான் ஒரு இங்கிதமற்ற பேர்வழியாக நினைக்கத் தோன்றுகிறது.
-------------------

7. சாணக்கிய காங்கிரசுக்கு சறுக்கிய அடி

கர்நாடக மாநிலத்தில் இருந்து 1987ஆம் ஆண்டில், மார்ச் மாதம் பெங்களுரில் இருந்து சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றேன்.

அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தார். முதல்வருக்கும், எதிர்கட்சித் தலைவரான கலைஞருக்கும் சம அளவிலான செய்திகளை வெளியிட்டேன். அப்போது வாரெனலி செய்தி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. சென்னை தொலைக்காட்சி தவிர, வேறு எந்த தொலைக்காட்சியும் இல்லாத நேரம். சாதாரண மக்களை சென்றடையும் வானொலியின் மீது அனைத்து அரசியல் வாதிகளுக்குமே ஒரு கண். அதிலும் எங்கள் செய்திகள், பெரும்பாலானவர்கள் கண்விழிக்கும் காலை ஆறு நாற்பது மணிக்கும், மத்தியானம் இரண்டு பத்துக்கும், மாலை ஆறு முப்பதுக்கும் ஒளிப்பரப்பாகும். சட்ட பேரவை நிகழ்ச்சிகளையும் நேரில் சென்று நடந்தவற்றை பார்த்து, அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கிய பகுதிகளை விட்டு விட்டு, அந்த சபை ஏதோ நாகரிகமான சபை என்பது போல் மக்களுக்கு ஒரு பொதுக் கருத்தை கொடுத்து செய்திகள் வெளியாகும்.

சட்டப் பேரவையில், அதன் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் அவர்கள், பலதடவை கலைஞரை மிகவும் கேவலமாக விமர்சித்திருக்கிறார். அடிதடிக்கும் தயார் என்பது போல் திமுக உறுப்பினர்களுக்கு சவால் விடுவார். ஒருதடவை அவர் கலைஞரை சுட்டிக் காட்டிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சிலேயே குத்திக் கொண்டிருக்கின்றன. நேரில் பழகுவதற்கு இனிமையானவர்தான். ஆனால், சட்டப் பேரவையில் தனது புரட்சி தலைவரைப் பார்த்து விட்டால் போதும். எதிராளிகள் அவருக்கு வெறும் தூசு. 1987ஆம் ஆண்டு வாக்கில், இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமே கொதித்து வேலை நிறுத்தங்களும், ஊர்வலங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. தமிழகம் ஓரே மனிதன் போல் நிமிர்ந்து இலங்கை தமிழ் தோழனுக்காக போர்க்குரல் கொடுத்தது. நானும் விடுதலைப்புலிகளுக்கு ஏகப்பட்டச் செய்திகளைக் கொடுத்தேன். வீரத்தளபதி கிட்டு சுடப்பட்டார் என்று ஒரு தனிப்பட்ட விவகாரத்தை தலைப்புச் செய்தியாக்கி இலங்கை அரசின் கோபத்துக்கு உள்ளாகி மத்திய அரசின் கண்வலைக்குள்ளும் சிக்கி விட்டேன். இந்தச் சமயத்தில் இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, வட இலங்கை தமிழர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கின இந்தச் செய்தியை ‘விமானங்களைப் பார்த்து, அவை ராணுவ விமானங்கள் என்று பயந்து போய் பதுங்கிய தமிழ் மக்கள், பின்னர் இது குண்டு விமானங்கள் அல்ல... தொண்டு விமானங்கள் என்று வீதிக்கு வெளியே வந்து ஆரவாரம் செய்தார்கள்’ என்று செய்தி போட்டேன். இந்த செய்தியை கேட்ட மறுவினாடியே திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தொலைபேசி மூலமாக என்னைப் பாராட்டினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரை தமிழ்ச் சமூகத்தைக் கருதி நான் விரும்பவில்லை என்றாலும், அவர் நோய் வாய்ப்பட்ட போதும் பேசமுடியாமல் திணறிய போதும் என் கண்கள் நீருக்குள் மூழ்கின. அவர் இறந்து செய்தியை மிகச் சிறப்பாக வெளியிட்டோம். அதே சமயம் அவரது இழவெடுத்த தொண்டர்கள் என கருதப்படுபவர்கள் அண்ணாசாலை கடைகளை சூறையாடியதை அடக்கி வாசித்தோம். இதே போல் அங்கிருந்த கலைஞர் சிலையை உடைத்ததையும் சட்ட ஒழுங்கைக் கருதி இலைவு மறைவு காய் மறைவாகதான் வெளியிட்டோம்.

ஜானகி அம்மையார் பதினைந்து நாள் முதல்வராக பதவி வகித்து பிறகு காணாமற் போனதும் வரலாறு. சட்டப் பேரவையில் அடிதடியே நடைபெற்றது. இதைப் பற்றி எனது செய்தியில் சட்டசபை ரத்த சபையாகி விட்டது சொற்போருக்கு பதிலாக மற்போர் நடந்தது என்று குறிப்பிட்டதை இப்போது கூட செய்தியாளர்கள் பாராட்டுவார்கள்.

ஜானகி அம்மாள் ராஜீவ் காந்தி அவர்களோடு இந்தியில் பேசி காங்கிரஸ் ஆதரவை பெற்று விட்டார் என்று ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார். ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்த போது என் மானசீகமான ஆதரவு ஜானகி அம்மாவுக்கு இருந்தது என்பதை விட ஆர்எம் வீக்கே இருந்தது. ஆனாலும், தொண்டர் பலம் ஜெயலலிதாவின் பக்கம்.

சட்டப் பேரவையில் இந்த இரண்டு அணிகளுக்கும் பலப்பரீட்சை நடந்த போது ஜானகி அணியின் சார்பாக நின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜீவ் காந்தி மனதை மாற்றி ஜானகி அணிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து சட்டசபை ரத்தச் சபையானது வரலாறு. ஜானகி அணியின் சார்பிலான பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன், ஜெயலலிதா அணி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் பதவி நீக்கம் செய்து கொண்டே இருந்தார்.

இந்த அணியின் சார்பில் ஒரு குழுவினர் கலைஞரை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்க, அவரோ மறுத்து விட்டார். இதனால் ஜானகி அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டது. கலைஞர் ஜானகி அணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்ததன் மூலம் ஒரு மாபெரும் அரசியல் தவறை செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஜெயலலிதாவை அரசியல் ரீதியில் வளர்த்து விட்டால் பின்னர் அவரை அந்த களத்திலிருந்து நீக்குவது என்பது கடினம். இதை காங்கிரஸ் உறுப்பினர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதன் அரசியல் சமூக விளைவுகளை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராளியாக நான் பெரிதும் மதித்த ஆர்எம்வி அவர்கள் கூட ஜெயலலிதாவுடன் அடிமை பூண்டதில் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

1967ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சுயத்தை இழந்த காங்கிரஸ் நண்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. சினிமாத்தனங்கள் மலிந்த தமிழக அரசியலில் முன்னாள் கதாநாயகியான செல்வி. ஜெயலலிதா, அங்கிருக்கும் சினிமா செட்டப்பையும், அரசியலுக்குக் கொண்டுவந்து நிரந்தரமாக நின்று தங்களை வேலைக்காரர்களை விட கேவலமாக நடத்துவார், என்பதை அனுமானிக்க முடியாமல் போனார்கள். ஜானகியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது போயிருந்தால் குறைந்தபட்சம் ஆர்எம்வி. முதல்வராக வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்தி இருக்கலாம். என்றாலும், இந்த சாணக்கிய காங்கிரஸ் அடி சறுக்கி இன்னும் அப்படியே விழுந்து கிடக்கிறது.
------------------

8. காகங்களா? கழுகுகளா? ஒரு கவித்துவமான பதில்


1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி கலைஞர் இரண்டாவது தடவையாக முதல்வராகப் பதவியேற்றார்.

ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கலைஞர் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதும், அதிமுக ஜெயலலிதா அணி எதிர்க்கட்சி ஆனதும் காங்கிரஸ் அடுத்து வந்ததும் பழைய செய்திகள்.

வெற்றிவாகைச் சூடிய கலைஞர், தான் உருவாக்கி, அதுவரை தனக்கே இடமில்லாமல் போன வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்றார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களோடு நானும் கோபாலபுரத்திற்குப் போனேன். கலைஞர் காரில் ஏறவதற்கு முன்பாக, அருகே உள்ள வீட்டிற்குச் சென்று, இரண்டு மூதாட்டிகள் காலில் முழங்காலிட்டு விழுந்தார். அவர் கன்னங்களில் அலை அலையாக நீர் கொட்டியது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது. இரண்டு தமக்கையரும், அப்படியே, அவரது முதுகை தட்டித் தலையை கோதிவிட்டு, கலைஞரின் கண்ணீருக்கு, கண்ணீரையே பதிலாக்கினார்கள். பாசமலர் தோற்றுவிடும்.

கலைஞர் பதவியேற்ற மறுநாளே, சென்னைக் கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். நான் ஒரு கும்பிடு போட்டதும் என்னைத் தெரியும் என்பது போல் தலையாட்டினார். பல்வேறு கேள்விகளை, செய்தியாளர்கள் கேட்டார்கள். சில சமயங்களில் வித்தியாசமான கேள்விகளை நான் கேட்பேன். இதை எல்லோரும் ரசிப்பார்கள் கலைஞரிடம் இப்படிக் கேட்டேன் ‘மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களிடம் இருந்த காக்காக் கூட்டம், இப்போது உங்களை மொய்க்கும். நீங்கள் இவர்களை என்ன செய்ய போகிறீர்கள்?’

‘காகங்கள் துப்புரவு பணிக்குத் தேவை. ஆனாலும் அவை கழுகுகள் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்படும்’

இந்தப் பதிலில் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளடங்கி உள்ளன. ஒவ்வொரு செய்தியாளரும் தத்தம் பத்திரிகைகளின் நிலைபாடுகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள முடியும். மக்களாட்சி முறைமையில் தொண்டர்களை கவனித்துக் கொள்ள வேண்டியதோடு, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தும் உதிரிகளையும், உதிரி கட்சித் தலைவர்களையும் கவனித்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாதது.

கலைஞரின் செய்தியாளர் சந்திப்புகள் மிகவும் இனிமையானவை. பொதுவாக பிற தலைவர்களை நோண்டும் செய்தியாளர்கள், கலைஞரிடம் அடக்கமாகவே கேள்வி கேட்பார்கள். கணிப்பொறி போல் அரைக் கணத்தில் உலகமெல்லாம் இயங்கும் இண்டர்நெட் போல் அவர் உடனடியாக பதிலளிப்பார். கேள்வியை பதிலாக திருப்பிக் கொடுப்பார். கேட்டவரும் அவரோடு சேர்ந்து சிரிப்பார்.

பொதுவாக தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளில் நொறுக்குத் தீனி கிடைக்கும். தொழிலதிபர்கள், செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால், என்னவெல்லாமோ கிடைக்கும். ஆனால், கலைஞரின் செய்தியாளர் கூட்டங்களில் இப்போது எப்படியோ அப்போது குடிக்கத் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். ஒருதடவை முதல்வர் கலைஞரின் பேட்டி ஒன்றரை மணியைத் தாண்டிவிட்டது. வயிற்றுப்பசி அகோரமாக இருந்தது. உடனே நான் ‘சார் முதல்ல வயிற்றுக்கு உணவிட்டு விட்டு அப்புறம் செவிக்கு உணவிடுங்கள்’ என்று உரிமையுடன் கேட்டேன். அவர் வழக்கம் போல் நையாண்டியாக பதிலளிக்கவில்லை. சிரித்தார். அன்றுமுதல் அவரது செய்தியாளர் கூட்டத்தில் தேநீர், பிஸ்கட் வகையறாக்கள் கிடைத்தன.

ஒரு தடவை, ஊட்டியில் இப்போது காணாமல் போன பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் திரைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னொரு தொழிற்பிரிவை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வானொலிச் செய்தியாளராக சென்றிருந்தேன். பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் தொழிலமைச்சராக இருந்த வெங்கல்ராவ் தலைமையேற்க, முதல்வர் கலைஞர் அந்தப் பிரிவைத் துவக்கி வைத்தார். நான் வாழ்க்கை வெறுத்துப் போய் கூட்டத்தின் பின்பக்கம் ஒதுங்கி உட்கார்ந்திருந்தேன். சென்னை தொலைக் காட்சியினருக்கு ராஜமரியாதை. வானொலிக்காரனான என்னை சீண்டுவார் யாரும் இல்லை. இவ்வளவுக்கும் அதிகார ஏணியில் நான் இருக்கும் படிகளுக்கு கீழே நிற்கும் தோழர்கள்தான் தொலைக்காட்சி சார்பாக வந்திருந்தார்கள். அமைச்சர்களுக்கான அடுத்தபடியான வரவேற்பு அவர்களுக்குத்தான்.

நான் நொந்து போனாலும், காரியத்தில் கண்ணாய் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்த பத்து நிமிடங்களுக்குள் புதுடில்லியில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியில் இந்த நிகழ்ச்சியை தலைப்புச் செய்தியாக ஒலிப்பரப்பும்படி செய்து விட்டேன். வானொலி செய்தியை கேளுங்கள் கேளுங்கள் என்று காலைப் பிடிக்காத குறையாக அந்த நிறுவன அதிகாரிகளை கெஞ்சிக் கூத்தாடி கேட்கச் செய்தேன். அவர்கள், முதல்வரையும், மத்திய அமைச்சரையும் கேட்கச் செய்தார்கள். அப்படியும் செய்தி போட்டவர் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

இதை தெரிந்து வைத்தது போல், வெளியே புறப்பட்ட கலைஞர், என்னிடம் நேரிடையாக வந்தார். ‘சமுத்திரம் உங்கள் நான் அப்பவே பார்த்துட்டேன்’ என்று கூறிவிட்டு குசலம் விசாரித்து விட்டு சென்று விட்டார். அத்தனை பேரும் என்னை மொய்த்து விட்டார்கள். நான் அவர்களுக்கு திடீர் வி.வி.ஐ.பியாக மாறிவிட்டேன். இந்த நிறுவனத்தின் இயக்குநர், என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்று, அந்த நிறுவனத்தை எப்படி மேன்படுத்த வேண்டும் என்று எனக்கு விளக்கினார். அவரது நோக்கம், நான் கலைஞருக்கு சொல்லி, கலைஞர் மூலம் மத்திய தொழிலமைச்சருக்கு செய்தி போகவேண்டும் என்பதுதான். என்னை அடிக்கடி மேன்மைபடுத்துகிறவர் கலைஞர். இப்படி பல நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி நட்பாக போய்க் கொண்டிருந்த வானொலிச் செய்திகள் கலைஞரை காயப்படுத்தியதும் உண்டு. செல்வி ஜெயலலிதாவின் அப்போதைய மனச்சாட்சிக் காவலரான நடராஜன் வீட்டில், காவல்துறை ரெய்டு செய்து, அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா பேரவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை கைப்பற்றி, பேரவைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அன்றிரவு சுமார் ஒரு மணியளவில் நடராசனும், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அந்த கடிதத்துடன் கூடிய அறிக்கையை அவர் விலக்கிக் கொண்டார் என்றார்கள். அதாவது அரசியலில் தொடர்ந்து நீடிப்பார் என்று பொருள். இந்தப் புதிய தகவலை நான் வானொலியில் ‘ஸ்கூப்’ என்பார்களே அப்படிப்பட்ட சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன். காலையில் வெளியான எல்லா நாளிதழ்களும் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக மிகப் பெரிய பேனர்களோடு செய்திகளை வெளியிட்ட போது, சென்னை வானொலி மட்டுமே அவர் வாபஸ் வாங்கி தொடர்ந்து அரசியலில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறார் என்ற செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

டில்லி மேலிடத்தின் ஆணைப்படி நான் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று மேற்கொண்டு நடந்தவற்றை ஆங்கிலச் செய்தியாக்கினேன். எனக்கு கிட்டத்தட்ட கதாநாயக வரவேற்புதான்.

இந்த விவகாரம் முதல்வர் கலைஞருக்கு உளவுச் செய்தியாக போயிருக்கும். சென்னைக் கோட்டையில், அவரது அலுவலகத்தில் நானும் ஒரு சில செய்தியாளர்களும் அவரை நண்பகலில் சந்தித்தோம். என்னைப் பார்த்ததும் கலைஞர் முகத்தில் ஒரு கோபச்சலனம். இதரச் செய்தியாளர்களைப் பார்த்து ரெய்டுக்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு ஆப் - தி - ரெக்கார்டாக சில விவரங்களைச் சொன்னார். இதனுடைய விளைவுதான் அந்த கடிதம் என்றார். ஆனால், அதை கைப்பற்றும் ரெய்டுக்கு தான் காரணமில்லை என்றார். ஒருவேளை அவருக்குத் தெரியமாமேல அதிகாரிகள் சபாஷ் பட்டம் வாங்குவதற்காக அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், முக்கால்வாசி , கலைஞருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. பல்லாண்டு காலமாக பொறுமையைக் கடைபிடித்த கலைஞர், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டார் என்றே சொல்லலாம். அதன் விளைவுகள்தான் இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. கலைஞரின் விளக்கத்தை செய்தியாளர்கள் எழுதிக் கொண்டிருந்தபோது, நான் பேசாமல் முதல்வர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. நான் சொல்வதை குறிப்பெடுக்காமல் இருக்கீங்க. பிறகு எதற்கு வந்தீங்க என்று கோபமாகக் கேட்டார். ஒருவேளை, நான் ஜெயலலிதாவின் ஆளாகிவிட்டேன் என்று அவர் அனுமானித்து இருக்கலாம். உடனே நான் ஒலிபரப்புச் செய்தி சுருக்கமானது என்றும், அவர் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டேன் என்றும் தெரிவித்தேன். பிறகு ஒப்புக்கு குறித்துக் கொள்வது போல், பக்கத்தில் உள்ளவரிடம் ஒரு பேப்பரை கடன் வாங்கி, மை இல்லாத பேனாவால் எழுதுவது போல் பாவனை செய்தேன். உடனே ‘இது கலைஞரின் ஓரக் கண்ணுக்குத் தெரிந்து எங்கே எழுதியதைக் காட்டுங்கள் என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம். என்றாலும் திருச்சியில் பகல் இரண்டு பத்து செய்தியில் கலைஞர் குறிப்பிட்ட அத்தனையும் முதல் செய்தியாக ஒலிப்பரப்பானது.

இந்த அரசியல் பரபரப்பை அடுத்து, இதைவிட பயங்கரமான ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவைக் கூட்டம் கூடியிருக்கிறது. முதல்வர் கலைஞர், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்து நிற்கிறார். அதுவரை சட்டப் பேரவைக்கே வராத எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அன்று வந்திருக்கிறார். முதல்வர் நிதிநிலை அறிக்கையை படிக்கப் போகும் போது அவர் படிக்கக் கூடாது என்று வாதாடுகிறார். இந்தச் சமயத்தில் ஜானகி அணியின் ஒற்றை உறுப்பினரான பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவுக்கு எதிராக ‘இது கோர்ட் அல்ல சட்டப்பேரவை’ என்று அந்த அவையே அதிரும்படி கத்துகிறார். இதுவே பேரவையின் கலிங்கத்துப் பரணிக்கு பிள்ளையார் சுழியாகிறது.

ஜெயலலிதா, கலைஞரை கிரிமினல் என்கிறார். உடனே கலைஞர் ஏதோ பதிலுக்குச் சொல்கிறார். பேரவையிலிருந்து மூன்றடித் தூக்கலில் உள்ள செய்தியாளர் மாடத்தில் இருந்த நாங்கள் உஷாராகிறோம். உன்னிப்பாக கவனிக்கிறோம். கலைஞரின் மூக்குக் கண்ணாடி, ஜெயலலிதா, அவரது பைலை தட்டிவிட்டதால் கீழே விழுகிறது. உடனே திமுக உறுப்பினர்கள் ஜெயலலிதாவை நோக்கி முன்னேறுகிறார்கள். ஆனால், அவரோ சோபா செட்டுக்குள் போய் பதுங்கிக் கொள்ளுகிறார்.

இப்படி நுழையும் போது அவரது மேல் சேலை கலைகிறது. இதை என் கண் முன்னாலேயே பார்த்தேன். திமுக உறுப்பினர்கள் அந்த சோபாவுக்குள் முதுகு காட்டிக்கிடந்த ஜெயலலிதா மீது காகிதச் சுருள்களை எறிகிறார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவரான திருநாவுக்கரசு, செல்விக்கு பாதுகாப்பாக முதுகு வளைய நின்று கொள்கிறார். அமைதி திரும்புகிறது. ஜெயலலிதா சோபா செட்டில் இருந்து எழுந்து கலைந்திருந்த தலைமுடியை முழுமையாக கலைத்து விட்டு முகத்தை அழுகை ஆக்கிக் கொண்டு பேரவையில் இருந்து வெளியேறுகிறார். முதல்வர் நிதி நிலை அறிக்கையை தட்டுத் தடுமாறி படிக்கிறார்.

இந்த நிகழ்வை, திருச்சி வனொலி செய்தியில் உள்ளது உள்ளபடி விளக்கிவிட்டு, இறுதியில் கலைஞரின் கண்ணாடி உடைந்ததையும், ‘ஜெயலலிதாவும் தலைவிரி கோலமாக பேரவையிலிருந்து புறப்பட்டு இதோ போய்கொண்டிருக்கிறார்’ என்று செய்தி போட்டேன். மாலை பத்திரிகைகள் வருவதற்கு முன்பே இது காட்டுத் தீ போல் பரவிவிட்டது. அ.தி.மு.க தொண்டர்களுக்கு தலைவிரி கோலந்தான் மனதை உறுத்தியதே தவிர அதற்கு முன்னாலும் பின்னாலும் நடந்த நிகழ்ச்சிகளை உள்வாங்க மறுத்தார்கள்.

நானும் என் உதவியாளர்களும் கோட்டையில் இருந்து பல்லவ பேருந்தில் புறப்பட்டோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அருகே பேருந்து வரும் போது நான்கைந்து குண்டர்கள் அல்லது தொண்டர்கள் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் எறிந்தார்கள். தலைபிழைத்ததே தம்பிரான் பாக்கியம். நான் ஒலிபரப்பிய செய்தியே கல்லாக பாய்ந்தது கண்டு, சிறிது நேரம் கல்லாகிப் போனேன். பேரவையில் நடந்த சமாச்சாரங்களுக்கு பயணிகள் எப்படிப் பொறுப்பாவார்கள் என்கிற குறைந்தபட்ச பகுத்தறிவு கூட இவர்களுக்கு இல்லை. இந்தக் காட்டுமிராண்டித் தனமான கல்லெறியை நினைத்தால் இப்போது கூட பயமெடுக்கிறது.

மாலையில் அத்தனை பத்திரிகைகளும் ஜெயலலிதா துகிலுரியப் பட்டதாக செய்திகளை வெளியிட்டன. ஆனால், சென்னை வானொலி நிலையம் மட்டும் பட்ஜெட் செய்திகளை வெளியிட்டு விட்டு, பின்னர் பேரவையில் நடந்த சம்பவங்களை விளக்கியது. ஜெயலலிதா துகிலுரியப் பட்டார் என்று ஒரு வரிகூடச் சொல்லவில்லை. ஆனாலும், ஜெயலலிதா தாக்கப்பட்டு அவமானப்படுத்தப் பட்டதை நேரில் பார்த்தது போல், நமது தலைவாதி தலைவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கைகளை செய்திகளாக்க வேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. இது ஒரு விசித்திரம். கண்முன் நடந்தது ஒன்றாக இருக்க அதை, கண் கொண்டு பார்க்காதவர்கள் வேறு விதமாகச் சொன்னாலும் எனக்கு அந்த அறிக்கைகளை இருட்டடிப்பு செய்ய உரிமை இல்லை .

இத்தகைய எனது நடுநிலைமை செயல்பாடுகள், கலைஞருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும். சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் மாற்றப் பெற்றதும் கலைஞரே அப்போதைய தகவல் ஒலிபரப்பு அமைச்சரான உபேந்திராவிடம் தொலைபேசியிலும் நேரிலும் பேசி, என்னை தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்தார்.

எனக்கும் கலைஞர் எனது நடுநிலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் அபரீதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு தமிழனின் ஆட்சியை தாக்குப் பிடிக்கச் செய்வதற்கு அணில் முயற்சியாக தொலைக்காட்சியில் பணியாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். கலைஞரின் பதவிக் காலத்திலேயே இலவசமாக அல்லது சலுகை விலையில் அரசு நிலத்தை வாங்கி, வானொலி - தொலைக்காட்சி நகர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் - நினைத்தது ஒன்று. நடந்தது வேறு.
-------------

9. பையிலிருந்து வெளிப்பட்ட ஒரு பூனை

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றேன்

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கலைஞர் பரிந்துரைத்த என்னை, மூன்று மாத காலம் உள்ளே நுழைய விடாமல் இழுத்தடித்தது. மீண்டும் கலைஞர், அமைச்சர் உபேந்திராவுக்கு நேரில் பேசி என்னை அங்கே அனுப்பினார். ஆனாலும், அந்த நிலையத்தின் இயக்குநரும், அவரது துதிபாடிகளும் என்னை பகைப்பார்வையாகவே பார்த்தார்கள். வானொலித் துறையில் அதன் இயக்குநருக்கு இணையான செய்தியாசிரியர் முற்றிலும் சுயேச்சையானவர். இங்கேயும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால், நிலைய இயக்குநரோ நான் அவருக்கு கீழே வேலை செய்வது போல பாவித்துக் கொண்டார்.

செய்தி ஆசிரியரின் தலைமையில் இயங்க வேண்டிய செய்தியாளர்கள் நிலைய இயக்குநரின் தலைமையில் இயங்கினார்கள். போதாக்குறைக்கு லவ்வு வேறு. ஒரு பெண் செய்தியாளர், எனது அறைக்கு வந்து எனது மேசையில் உள்ள டெலிபோனை எடுத்து ‘ஹலோ! தாமு’ என்று கொஞ்சு மொழியில் பேசுவார். அவர் அப்படிப் பேசுவது என்னை மிரட்டுவது போலவும் இருந்தது.

நான் ஒரு நாள் பொறுத்தேன். கூடவே அலுவலக தொலைபேசி, முக்கியமான செய்திகளுக்காகவே தவிர, மூடத்தனமான காதலுக்கல்ல. மறுநாள் இந்த பாரும்மா, இந்த காதல் பேச்செல்லாம் இங்கே பேசாதே. வேறு எங்கேயாவது போய்ப் பேசு. நான் வேண்டாங்கல’ என்று சொல்லிவிட்டேன். உடனே, எங்கள் அமைச்சகத்தில் சர்வ வல்லமை மிக்க இணைச் செயலாளர் தாமுவுக்கு, என் மீது கடுமையான கோபம். இவரை அண்டி பிழைக்கும் நிலைய இயக்குநருக்கும் அதைவிடக் கோபம். ஆனாலும், செய்தித் துறையில் இருந்த அத்தனை பேரும் என் பக்கம். குறிப்பாக பீர் முகமது என்ற தயாரிப்பாளர் கலைஞரின் பக்தர். ஆனாலும், நிலைய இயக்குநர் ஒட்டு மொத்தமான பொறுப்பாளர் என்ற தொலைக்காட்சி இலக்கணப்படி எனக்கு தீராத தலைவலி ஆனார்.

அலுவலகத்தில் இப்படி என்றால், செய்திப் பணியிலும் பன்மடங்கு தொல்லை. அப்போது, வி.பி.சிங் தலைமை அமைச்சராக இருந்த நேரம். உதிரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் எலியும், தவளையுமாக கூட்டணி அமைத்து, அரசு நடத்திய காலம். அப்போது வேறு தொலைக்காட்சிகளும் கிடையாது. இல்லாதவன் பெண்டாட்டி எல்லாருக்கும் அண்ணி என்பது மாதிரி அத்தனைக் குட்டித் தலைவர்களும் எனது செய்திப்பிரிவில் உரிமை கொண்டாடத் துவங்கினார்கள். மாநில ஜனதாதள தலைவராக இருந்த சிவாஜி கணேசனுக்கு கலைஞருக்கு இணையாக செய்திகள் போட வேண்டும் என்பது தளபதி சண்முகம், ராஜசேகரன் போன்றோரின் மிரட்டல் நடிகர் திலகம் மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் போது, அவர் சென்னையில் இருந்து அறிக்கை வெளியிடுவதாக எனக்கு ஜனதா தளத்திலிருந்து செய்தி அறிக்கைகள் வரும். இது அயோக்கியத்தனம் என்பதால் நான் அவற்றை ஒலிபரப்ப மறுத்துவிட்டேன். இதனால், தளபதி சண்முகம் கொலை மிரட்டல் போன்ற கடிதம் ஒன்றை கூட என் பெயரில் எனக்கு அனுப்பி வைத்தார்.

திராவிடக் கழக தலைவர் வீரமணி அவர்கள் ‘எங்கள் ஆட்கள் பொல்லாதவங்க சமுத்திரம்’ என்று தனது பொல்லாத்தனத்தை தொண்டர்கள் மீது காட்டினார். பாரதிய ஜனதா கட்சி, குறிப்பாக அதன் குரு கட்சியான ஆர்.எஸ்.எஸ் தங்கள் கட்சியும் கூட்டணியை ஆதரிப்பதால் தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது - ஜானா கிருஷ்ணமூர்த்தி தலையிடுவதே இல்லை. ஆனாலும், சில்லறை தேவதைகள், இரவில் வீட்டுக்கு தொலைபேசியில் பேசி கண்டபடி திட்டுவார்கள். இந்தத் தொல்லைகள் போதாது என்பது போல், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் எனக்கு எதிராக நிலையத்திற்கு முன்பு ஒரு ஆர்பாட்டமே நடந்தது. காங்கிரஸ் செய்தியை நான் சரியாகப் போடவில்லையாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த எனது நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் முறையிட்டால் ‘கலைஞரையும், மூப்பனாரையும் ஏன் அப்படி குளோசப்ல காட்டுறே’ என்ற பதிலளித்தார்.

‘இது அரசியலுக்கானது... எனக்கு எதிரானது அல்ல’ என்றும் ஆற்றுப்படுத்தினார். ஆனால், இப்போது குளோசப் லாங்சாட்டாகவும், லாங்சாட் குளோசப்பாகவும் மாறியிருப்பது அரசியல் விந்தை. ஆனாலும், கலைஞர் மையப் புள்ளியில்தான் இருக்கிறார். வட்டக்கோடு தான் மாறியிருக்கிறது. போகட்டும்.

எனது செய்திப் பிரிவு, திரெளபதி போல் துகிலுரியப் பட்டது. கெளரவர்களால் அல்ல. கணவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் அதிமுக கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி ஆர், என்னை தினமும் தாக்கிக் கொண்டிருந்தது. அரசியல் சில்லரைகள் எனக்கு எதிராக கையெழுத்திட்டும், மொட்டையாகவும் மனுக்களைப் போட்டுக் கொண்டுயிருந்தார்கள்

இத்தனை நெருக்கடிகளிலும் நான் கருமமே கண்ணாக இருந்தேன். எனக்கு முன்பு பொறுப்பாசிரியராக இருந்தவர் அங்கேயே காலூன்ற வேண்டும் என்று நினைத்தோ என்னவோ தொலைக்காட்சியின் இரண்டு செய்தி அறிக்கையிலும், வாரத்திற்கு ஏழு நாட்களும் கலைஞரின் வாய்ஸ் காஸ்டை - அதாவது அவரது பேச்சை ஒலிப்பரப்பினார். இது கலைஞரையே நாளடைவில் மாசுபடுத்தும் என்பதோடு செய்தி நெறிகளுக்கே முரணானது.

எனவே, நான் கலைஞர் குரலை, செய்தியில் சேர்ப்பததை வாரத்திற்கு மூன்றாக்கி பிறகு, அதையும் இல்லாமல் செய்து விட்டேன். முக்கியமான நிகழ்ச்சிகளின் போது மட்டுமே, கலைஞரின் பேச்சை ஒளிபரப்பினேன். தமிழகம் முழுவதும் எனக்கு தெரிந்தவர்கள், தொடர்ந்து கலைஞரின் பேச்சை நாள்தோறும் ஒளிபரப்பினால் செய்தியின் இலக்கணமும், நம்பகத்தன்மையும் போய்விடும் என்றார்கள். கலைஞருக்கும் கெட்ட பெயர் என்றனர். கலைஞரும் இதை சரியாகவே எடுத்துக் கொண்டார். பொது நிகழ்ச்சிகளில் என்னைப் பார்க்கும் போதெல்லாம், ஒரு பார்வையாலோ அல்லது ஒரு சொல்லாலோ என் பிரசன்னத்தை அங்கீகரிப்பார். இதனால், நான் பட்டபாடுகள் மறைந்து போகும்.

எனது செய்தி வித்தியாசமாக இருந்தது. எடுத்துக்காட்டாக சென்னையில் வெள்ளம் பெருகி, தனது குடிசையை நோக்கி செல்லும் நீரை ஒரு ரிக்ஷா தொழிலாளி மண்ணை போட்டு தடுக்கிறார். இந்த நிழல் காட்சியை பார்த்துவிட்டு நான் வயிற்றில் மண்ணள்ளிப் போட்ட மழைக்கு , இவர் மண்ணள்ளி போடுகிறார்’ என்றேன். வெளிநாடுகளில் இருந்து, மனிதநேய (Human interest) நிழல்படங்கள் வரும். இவற்றிற்கு, நான், தக்கபடி விளக்கம் எழுதி ஒளிபரப்பினேன். அப்போது நரசிம்மச்சாரி என்பவரும் என்னோடு செய்தியாசிரியராக பணியாற்றினார். நல்ல பண்பாளர். தமிழகமெங்கும் ஒளிபரப்பாகும் செய்திகளை ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, இது சமுத்திரம் செய்தியா அல்லது நரசிம்மாச்சாரி செய்தியா என்று மக்கள் பந்தயம் வைப்பதாகவும் அறிந்தேன். தமிழகம் முழுக்க எங்கள் செய்தியின் தோரணைக்கு மிகப்பெரிய வரவேற்பு.

கலைஞர் விடுக்கும் நான்கு பக்க அறிக்கைகளை, அவற்றின் தன்மை மாறாமல் ஒருபக்க செய்தியாக சுருக்கி வெளியிடுவேன். இப்போது மாநில மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் உதவி இயக்குநராக இருக்கும் அப்போதைய மக்கள் தொடர்பு அதிகாரியும் எனது இனிய நண்பருமான சுபாஷ், மாநில அரசுச் செய்திகள் தக்கபடி வரும் வகையில் தொடர்பு கொள்வார். சிலசமயம் அவற்றை அனுப்ப முடியவில்லை என்றால் படித்துக் காட்டுவார். நான் அவற்றில் முக்கியமானவற்றை குறித்துக் கொண்டு உடனடி செய்தியாக்குவேன்.

1990ஆம் ஆண்டு அக்டோபர் முப்பத்தியொன்று .... வழக்கம்போல் இரவு பத்து இருபது செய்திகளை முடித்துவிட்டு பதினொரு மணியளவில் வீடு திரும்பினேன். கலைஞருடன், நான் உடனே பேசவேண்டும் என்று உதவியாளர் சண்முகநாதன் தெரிவித்ததாக என் மனைவி குறிப்பிட்டார். உடனே, நான் சண்முகநாதனை தொடர்பு கொண்டபோது ‘கலைஞர் கோபமாக இருக்கிறார். உங்களை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொன்னார்’ என்றார். நான், உடனே கலைஞருக்கு டெலிபோன் செய்து, அவரது கோபத்தை குறைக்கும் வகையில் ‘என்ன சார் ரொம்ப கோபமா இருக்கிங்களாமே’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டேன். இப்படி ஒரு முதல்வரிடம் கேட்கலாகாது. கலைஞரிடம் உரிமை கொண்டாடியதால், அப்படி நான் கேட்டு விட்டேன். கலைஞரும் கோபத்தைக் காட்டாமல், வருத்தத்துடன் பேசினார்.

‘நீங்களும் என்னை சூத்திரனா நினைச்சுட்டிங்க சமுத்திரம்’.

‘நானே பனையேறி... உங்களை ஏன் சார் சூத்திரனா நினைக்கப் போறேன்?’.

‘நான் பனையேறிக்கும் கீழே இருப்பவன்’

‘என்ன சார் நீங்க? உங்களை விட முழுமையான தமிழன் யார் சார்? அவனவன் சாதித் தமிழனா இருக்கான். நீங்க ஒருத்தர்தான் முழுமையான தமிழன். இது எல்லாருக்கும் தெரியும். சார். உங்களுக்கு ஏன் சார் தெரியல?’

‘அப்படின்னா நீங்க ஏன் செய்திகளில் கலைஞர் கருணாநிதின்னு போடக்கூடாது?’

‘அப்படி யாருக்கும் போடுவது இல்ல சார். எல்லாம் திரு அல்லது திருமதி தான்’

‘அப்படின்னா அன்னை இந்திராகாந்தின்னு என் நியூஸ்ல போட்டீங்க’

நான் புரிந்து கொண்டேன். கலைஞருக்கு தன்னை செய்தியில் கலைஞர் என்று அழைக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, எதற்காக நான் அன்னை என்று அடைமொழி போட்டு செய்தி ஒலிபரப்பினேன் என்பதுதான் அவரது மனத்தாங்கல் அல்லது வாதம். இதற்காக அருமையாக ஒரு சொல்வலை பின்னி என்னைச் சிக்க வைத்து விட்டார். உடனே, நான் பதிலளிக்கத் தயங்கினேன். அமங்கலமான ஒன்றை எப்படிச் சொல்வது என்று யோசித்தேன். பிறகு, சமாளித்துக் கொண்டு இன்றைக்கு ‘இந்திராகாந்தியோட நினைவுநாள் அந்தம்மா கொலை செய்யப்பட்ட நாள்’. இந்த மாதிரி நினைவு நாட்களில் தலைவர்களுக்கு உரிய அடைமொழிகளை போட்டுக் கொள்வோம், என்றேன். உடனே கலைஞரும் ‘நீங்க சொல்வதும் சரிதான், நான் எதற்காக அப்படிச் சொன்னேன் என்பது புரியும்’ என்று அமைதியோடு பதிலளித்தார். எனக்கு தூக்கம் நன்றாக வந்தது. இதையடுத்து, கலைஞரின் பிறந்தநாள் வந்தது. எங்கள் அமைச்சர் உபேந்திராவையும் விட்டுவிட்டு, கலைவாணர் அரங்கத்திற்கு காமிரா சகிதமாக ஓடினேன். அப்போது காவற்துறையின் துணை கமிசனரும், இப்போதைய கூடுதல் கமிசனருமான பாலசந்திரன் அவர்கள், எனக்கு மேடைக்கு வழிவிட மறுத்தார். எனக்கு என் தொழில் முக்கியம். அவருக்கு அவர் தொழில் முக்கியம். கூடவே, தொலைக்காட்சி என்ற கொம்பு எனக்கு முளைத்திருந்தது. பயங்கரமான வாக்குவாதம். யாரோ தலையிட்டு, அவரே சாந்தமாகி என்னை உள்ளே அதாவது மேடைக்கு அனுப்பிவைத்தார். இதை எதற்காக சொல்லுகிறேன் என்பது வாசகர்களுக்கு பின்னால் தெரியும். இந்த ஐபிஎஸ் அதிகாரியான பாலசந்திரன், அந்த ஒரு தடவை தவிர வேறு எந்தத் தடவையும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.

இப்படி பத்திரிகையாளருக்கும் காவற்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும், இவை வெறும் ஊடல்கள்தான். அன்றைய செய்தியில், கலைஞருக்கு எத்தனை அடைமொழிகள் உண்டோ அத்தனையும் போட்டு, அவரது பிறந்தநாள் விழாவை பெருமைப்படுத்தினேன். அவர் பார்த்தாரோ கேள்விப்பட்டாரோ. எனக்குத் தெரியாது. அவரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி சொல்வதற்கு எனக்குக் கூச்சம்.

இந்தச் சமயத்தில், விடுதலைப்புலிகளைப் பற்றி ஏஜென்ஸி செய்திகளில் வருபவற்றை தக்கப்படி எடிட் செய்து, செய்திகளில் சேர்ப்போம். இந்திய அமைதிப்படையோடு ஆரம்பத்தில் நான் யாழ்பாணம் சென்றபோது அங்குள்ள மக்கள் அந்தப் படைக்கு கையாட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். இந்தப் படையை விடுதலைப்புலிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே என் கருத்து. ஆகையால் நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருந்த காலம் போய்விட்டது. விருப்பு வெறுப்பற்ற செய்தியாளனாகவே, இவர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்திகளைப் போட்டோம். இது அப்போது தனிக்குடித்தனத்திற்கு துடித்துக் கொண்டிருந்த வைகோவிற்கு அவலாகி விட்டது. எங்களது செய்திப் பிரிவைப் பற்றி அமைச்சர் உபேந்திராவுக்கு கடுமையாக பல்வேறு கண்டனக கடிதங்களை எழுதினார். அவை அனைத்தும் என்னுடைய கருத்து கேட்டு வந்தன. தனிப்பட்ட முறையில் அவர் என்னைத் தாக்கவில்லை. ஒருவேளை உபேந்திராவிடம் நேரில் சொல்லியிருக்கலாம். இந்தக் கால கட்டத்தில் மத்திய அமைச்சர் தகவல் ஒளிப்பரப்பு அமைச்சர் உபேந்திரா புதுவைக்குச் சென்ற போது அவரோடு நானும் உடன் சென்றேன். புதுவை அரசினர் மாளிகையில் உபேந்திரா அவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, கலைஞரின் நடுநிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, வை.கோ. போன்றவர்கள் திமுகவின் பெயரால் விடுதலைப்புலிகளின் அடாத செயல்களை ஆதரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். என் செய்திப் பிரிவையும் அப்படியே ஆக்குவதற்கு வை.கோ. நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினேன். ஆகையால், நான் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறப் போவதாகக் குறிப்பிட்டேன். உடனே அமைச்சர் ‘வைகோ. ஒரு தீவிரவாதி, அவரைப் பொருட்படுத்தாதீர்கள். சிக்கல் வரும்போது முதல்வரையோ அல்லது முரசொலி மாறனையோ சந்தித்து ஆலோசனை கேளுங்கள், நான் உங்களை மாற்றப் போவதாக இல்லை’ என்று பதிலளித்தார். பேச்சு வாக்கில் வைகோ போன்றவர்களால் திமுக மக்களிடையே செல்வாக்கு இழந்து வருகிறது என்று சொல்லிவிட்டேன்.

மறுநாள் உபந்திராவுடன் சென்னைக்குத் திரும்பினேன். மாலையில் புதுடில்லிக்குப் புறப்பட்ட அவரை, சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் சந்தித்தேன். உடனே அவர் ‘நீங்கள் காங்கிரஸ்காரரா’ என்று கேட்டார். உடனே நான் ஒரு காலத்தில்’ என்றேன். ‘நேற்று இரவு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ராஜிவ் காந்தியின் பேச்சை செய்தியில் போட்டு விட்டு, அதற்கு பதிலளித்த பிரதமர் வி.பி.சிங்கின் பேச்சை நீங்கள் ஏன் போடவில்லை?’ என்று கோபமாகக் கேட்டார். உடனே நான், செய்தி வெளியான அன்றிரவு அவருடன் புதுவையில் இருந்ததை சுட்டிக்காட்டி, அந்தச் செய்தியை இன்னொரு செய்தியாசிரியரான நரசிம்மச்சாரி போட்டிருப்பார் என்று விளக்கினேன். உபேந்திராவின் கோபம் புன்முறுவலானது. கலைஞரை சந்தித்து விளக்கம் சொல்லும்படி ஆணையிட்டுச் சென்று விட்டார்.

பத்திரிகைகள் போல் அல்லாது, வானொலி தொலைக் காட்சிகளுக்கு ஒரு வசதி உண்டு. செய்தி முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு கூட கடைசி செய்தியை சேர்த்து விடலாம். ஆனால் நான் இல்லாதபோது இரவு எட்டு நாற்பதற்கு ஒளிபரப்பாகும் செய்திக்கு எட்டு மணிக்கே டெலிபிரிண்டர் பக்கம் போக மாட்டார்கள். இதன் விளைவு தான் எட்டு மணிக்கு வந்த ராஜிவ் காந்தியின் நாடாளுமன்றப் பேச்சு செய்தியாகி எட்டரை மணியளவில், டெலிபிரிண்டரில் வந்திருக்கக் கூடிய பிரதமர் வி.பி.சிங்கின் பதில், டெலிபிரிண்டருக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கும். நான் எத்தனை பேருக்குத்தான் சிலுவை சுமப்பது!

எனக்குக் கிடைத்த தொலைக்காட்சி ஜீப்பில், உபேந்திராவின் விருந்தினர் மாளிகையில் இருந்து நேராகக் கலைஞரின் கோபாலபுர வீட்டிற்குச் சென்றேன். இரவு நேரம். கலைஞர், கோவைக்குச் சுற்றுப்பயணமாக செல்வதற்கு வீட்டில் இருந்து படியிறங்கி விட்டார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள்... காரில் ஏறப்போன அவர் என்னைப் பார்த்து நின்றார். முகத்தைக் கோபமாக்கிக் கொண்டார். எங்களுக்கிடையே நடந்த உரையாடலின் விவரம் இதுதான்.

‘உபேந்திரா கிட்ட தி.மு.க. அன்பாப்புலர்ன்னு சொல்லி இருக்கீங்க’

‘ஆமாம்... அவர் என் அமைச்சர். அவரிடம் அரசியல் சூழலைச் சொல்ல வேண்டியது, என்னோட கடமை. இதனால் உங்களுக்கு நான் செய்தி போடுவது, எந்த விதத்திலும் குறையவில்லையே?’

‘ஓகோ... நீங்க நாங்கன்னு பிரித்துப் பேசுறீங்களா? பூனை பையில் இருந்து வெளிப்பட்டு விட்டது. உங்கள் உண்மையான சுயரூபம் இப்போதுதான் தெரிகிறது.’

‘சார். உங்களுக்கே தெரியும். நான் காமராசர் தொண்டன். கட்சியை மீறி உங்களை இரண்டாவது காமராசாகப் பார்க்கிறேன். நீங்கள் முழுமையான தமிழன் என்கிற ஒரே காரணத்தால்தான், இப்பவும் டிவியில் பல்லைக் கடிச்சிட்டு இருக்கிறேன். நீங்களும் இப்படிப் பேசினா என்ன சார் அர்த்தம்?

‘சரி. பார்க்கலாம்.’

‘வாரேன் சார்’

‘நன்றி’

கலைஞர், காரில் ஏறினார். அவர் போவது வரைக்கும் அங்கே நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் - அதாவது என்னை ஒரு அரசுச் செய்தியாளனாகக் கருதாமல், எழுத்தாளத் தனி மனிதனாகக் கருதி அந்த இடத்தில் இருந்து அவர் கார் புறப்படும் முன்பே வெளியேறி விட்டேன். கலைஞருக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கூட அவர் அறிக்கைகளை செய்தியாக்குகிற என் மீது அவர் அப்படிக் கோபப்பட்டது அப்போது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை வைகோவிற்காக, கட்சித் தலைவர் என்ற முறையில் என் மீது கோபப்பட்டதாக பாவனை செய்து இருக்கலாம். நானும், அன்றிரவுச் செய்திக்குப் பொறுப்பல்ல என்று விளக்கி இருக்கலாம். அல்லது தனியாகச் சந்தித்துப் பேசுகிறேன் என்று அப்போதைக்குச் சொல்லி விட்டு, பின்பு நான்கு நாள் கழித்து அவரை நேரில் சந்தித்து, வை.கோ. அணியினரால், திமுகவிற்குக் கெட்ட பேர் வருவதை நம்பகமாகச் சொல்லியிருக்கலாம். நானும் அவசரப்பட்டு விட்டேன். வேண்டுமென்றே என்னைப் போட்டுக் கொடுத்த உபேந்திரா போல், ஒரு பியூன் கூட நடந்து கொள்ள மாட்டார்.

நான் மறுநாள் அலுவலகம் திரும்பியதும், மேற்கொண்டும் தொலைக்காட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், வை.கோ. போன்றவர்களின் விடுதலைப் புலி வேகத்தை, என்னால் செய்தியாக்க முடியாது என்றும் எழுத்து மூலம் அமைச்சர் உபேந்திராவுக்குத் தெரிவித்து விட்டேன். பொதுவாக ஒரு அதிகாரி, இந்த மாதிரியான கருத்துகளை, தனது உடனடி அதிகாரி மூலம் அமைச்சரவைச் செயலாளருக்குத்தான் அனுப்ப வேண்டும். ஆனால், விவகாரம் அரசியல் கலந்ததாக இருந்ததால், அதில் செய்தி ஆசிரியர் என்பவர் விருப்பத்திற்கு விரோதமாகவே ஈடுபடுத்தப்படுவதால், ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதி, அமைச்சருக்கே நேரிடையாக எழுதி விட்டேன்.

துவக்கக் கட்டமாக, என்னைப் புது டில்லியில் பயிற்சி என்ற பெயரில் பார்சல் செய்தார்கள். அங்கே போன ஒரு மாத காலத்திற்குள், சென்னை வானொலி நிலையத்திற்கு என்னை மாற்றி, ஆணை பிறப்பித்தார்கள். வீடு, அலுவலகம், பயிற்சி நிலையம் என்று ஒரே மாதிரியான மூன்று ஆணைகள் எனக்கு வந்தன. சென்னைக்குத் திரும்பியதும், யானை போல், வஞ்சம் வைத்திருந்த நிலைய இயக்குநர், தாமுவிடம் பேசி எனக்கு ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்காமல், பணியிலிருந்து விடுவித்து விட்டார். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில், நான் ஆறு மாதங்களே குப்பை கொட்டினேன். குப்பை கொட்டினேன் என்பதை விட, அவற்றை அப்புறப் படுத்தினேன். கலைஞர், மூப்பனார், ஜெயலலிதா போன்றவர்களைத் தவிர, வேறு எந்தத் தலைவரின் செய்திகளையும் போடுவது இல்லை. இப்போது நன்றாக நினைவிருக்கிறது. உதாரணத்திற்குத்தான் சொல்கிறேன். ஒரு உதிரிக் கட்சித் தலைவர், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து தாம் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தெரிவித்தார். உடனே நான், ‘முதலில் அந்தக் கிராமத்தில் போய் உண்ணாவிரதம் இருங்கள், இல்லையென்றால், மறியல் செய்யுங்கள். நான் தொலைக்காட்சி கேமராவோடு வருகிறேன், நீங்க எந்தச் செயலும் செய்யாமல், என்னால் செய்தி போட முடியாது’ என்று மறுத்து விட்டேன். இப்படி மறுக்கப்பட்டவர்களுக்கு, எனது மாற்றம் ஒரு வரப் பிரசாதமானது.

எனக்குக் கலைஞர் மீது கட்டற்ற கோபம். அவரை உண்டு, இல்லை என்று பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
---------------

10. கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கம்

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வானொலி நிலையத்தில், மூத்த செய்தியாளராகப் பொறுப்பேற்றேன். அப்போது செய்தி ஆசிரியர் நீண்ட கால மருத்துவ விடுப்பில் இருந்ததால் அவரது பணியையும் கவனித்துக் கொண்ட எனக்கு, கலைஞருக்கு எதிராக ஒரு செய்தி இயக்கத்தையே செயல்படுத்த முடிந்தது.

கலைஞர்தான் என்னை மாற்றி விட்டார் என்று திட்ட வட்டமாக நம்பினேன். பத்து நிமிடத்திற்குள் அவரது செய்தியைத் தொலைபேசி மூலமே உள்வாங்கிக் கொண்டு வெளியிட்ட என்னை, தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும். இந்த வகையில் கலைஞரே முதல் தமிழன் என்று மனப்பூர்வமாக நினைத்து, இதனைத் தொலைக்காட்சியில் சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்த என்னை, கலைஞர் கடைத் தேங்காய் ஆக்கி விட்டாரே என்ற கோபம்.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாத காலத்திற்குள், டிசம்பர் மாத மத்தியில் நான் எழுதிய வேரில் பழுத்த பலா என்ற இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய படைப்பிற்கு, சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. இதனால் பல பத்திரிகைகள் என்னைப் பேட்டி கண்டன.

சென்னை தொலைக்காட்சியில், திமுக அரசு எனக்குத் தொல்லை கொடுத்ததாக, அத்தனை பத்திரிகைகளிலும் தெரிவித்தேன். இதர கட்சிகளும் ஆளுக்கு ஆள் நாட்டாண்மை செய்ததாகவும் குறிப்பிட்டேன். தினமலரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் இந்தப் பகுதியைப் போடவில்லை. ஆனால், தினமலர் இந்தப் பகுதியை மட்டும் பெரிய செய்தியாகப் போட்டது. கலைஞர் நிச்சயம் இதைப் படித்திருக்க வேண்டும். அப்போது, குங்குமம் வார இதழில் எனது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக வெளியிடப்படுவதாக இருந்தது. அது வெளி வரவில்லை. நானும் அதை எதிர் பார்க்கவில்லை. ஆனாலும், குங்குமத்தில் பராசக்தி பதிலில் என்னை 'இலக்கிய ஜெயலலிதா’ என்று வர்ணிக்கப் பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இன்னொரு தாக்குதலைத் தொடுத்தேன். தொடுத்ததாக நினைத்தேன். தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வலம்புரி ஜானின் மகள் திருமணம் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞர்தான் திருமணத்தை நடத்தி வைத்தார். வலம்புரி ஜான், லேட்டஸ்ட் விவரம் தெரியாமல், என் பெயரையும் வாழ்த்துரையில் சேர்த்திருந்தார். பெரும்பாலும் கழகத் தொண்டர்களே அதிகமாக இருந்தார்கள். தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள், பிரமுகர்கள் கூடியிருந்தார்கள். மரபுக் கவிதையில் கொடி கட்டிப் பறக்கும் கவிஞர் இளந்தேவன், வரவேற்புரை ஆற்றியதோடு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து பேச வைத்தார்.

என் முறை வந்த போது, நான் கறுப்புத் தங்கம் என்றும், சாகித்ய அகடாமியின் விருது பெற்ற தகுதி மிக்க எழுத்தாளர் என்றும் தெரிவித்தார். கூட்டத்தினர் கை தட்டவில்லை. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தினமலர் பத்திரிகையில், கலைஞருக்கு எதிராக ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அவர்தான் என்னை சென்னை வானொலிக்கு தூக்கியடித்தார் என்று குறிப்பாகச் சொல்லியிருந்தேன். இதை தெரிந்து வைத்திருந்த தொண்டர்கள், பேசாமல் வீறாப்போடு முதுகுகளை நிமிர்த்தினார்கள். சிலர் ஏனோதானோ என்று பார்த்தார்கள். பலர் நான் சீக்கிரமாகப் பேசி விட வேண்டும் என்பது மாதிரி கடிகாரத்தைப் பார்த்தார்கள். மைக் அருகே வந்த நான் இப்படி வாழ்த்தினேன்.

“தந்தை பெரியாருக்குப் பிறகு, தமிழகத்தில் முழுமையான தமிழன் இன்னும் பிறக்கவில்லை. தோழர் வலம்புரி ஜானின் மகளும், மருமகனும் ஒரு தமிழ்க் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் நாடே நன்றி தெரிவிக்கும்.”

ஒரு நிமிடத்தில் பேசி முடித்து விட்டு, நான் மேடையை விட்டு இறங்கினேன். கலைவாணர் அரங்கில் கலைஞரைக் காணச் சென்ற என்னுடன், கடுமையாக வாதிட்ட காவற்துறை உயர் அதிகாரியான அதே பாலச்சந்திரன் என்னை ஆச்சரியாகப் பார்த்தார். இரண்டு மூன்று மாத இடைவெளிக்குள் நான் ஏன் அப்படி மாறினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்காது. ஆனாலும், உடனடியாக அவர் இயல்பான நிலைக்குச் சென்றுவிட்டார். இப்போது கூட, கலைஞரோடு சேர்த்து அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், எனக்குக் கூச்சமாகவே இருக்கும்.

நானும், இன்னும் ஒரு சிலரும் பேசி முடித்த பிறகு, இறுதியாகக் கலைஞர் எழுந்தார். அவர் என்னைப் பற்றி என்ன பேசப் போகிறார் என்பதை அறிவதற்காக அந்த வளாகத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தேன். பொதுவாக, எதிராளிகளுக்குப் பொதுக் கூட்டங்களில் நாசூக்கான குட்டு வைப்பதில் கலைஞர் நிபுணர். அழைப்பிதழை எடுத்துப் படித்தார். அதிலுள்ள பெயர்களுக்கு முன்னால் தம்பி, உடன் பிறப்பு போன்ற வார்த்தைகளை அடைமொழியாக்கி விட்டு, அந்தப் பெயர்க்கு உரியவர்களைச் சுட்டிக் காட்டினார். அழைப்பிதழில் என் பெயர் இருந்தாலும், சமுத்திரம் அவர்களே என்று அவர் சொல்லவில்லை. இதுதான் என் பேச்சுக்கு அவர் காட்டிய குறைந்தபட்ச எதிர்ப்பு.

நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். செல்வி. ஜெயலலிதா கலந்து கொள்ளுகிற இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் கலைஞரை மறைமுகமாகச் சாடியது போல், அவரைச் சாடினால் என்ன நடந்திருக்கும்? அவரது அதிமுக உடன் பிறப்புகள் சும்மா இருந்திருப்பார்களா? அல்லது இவர்தான் சும்மா இருக்க விட்டிருப்பாரா? இம்பீரியல் ஓட்டலை நான் பார்க்கும் போதெல்லாம், கலைஞரின் மென்மையான எதிர்ப்பும், கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டைக் காத்து நின்ற திமுக தோழர்களின் பண்பாடும்தான் நினைவுக்கு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அல்லாத மற்றவர்கள் முதலமைச்சர்களாக இருந்தாலும், நான் தாக்கப்படாமலோ அல்லது வசவு வாங்காமலோ திரும்பி இருக்க முடியாது.

இந்தச் சமயத்தில், பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கேயே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா முதல்வராக மாறிய பிறகு, கோவையில் புதிய விமான நிலையம் ஒன்றை துவக்கி வைத்தார். வானொலிச் செய்தியாளராக அங்கே சென்றிருந்தேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கும். சில கசமுசாக்கள். மத்திய விமானத் துறை அமைச்சரான மாதவ ராவ் சிந்தியா, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, கோவை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செ.குப்புசாமி ‘மாகாராஜா சிந்தியா அவர்களே’ என்று முதலில் அவர் பெயரைக் குறிப்பிட்டார். அவ்வளவுதான். அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பயங்கரமாகக் கத்தினார்கள். குப்புசாமியைப் பேச்சை முடிக்கும்படி வாயதிரக் குரலிட்டார்கள். ஜெயலலிதா, அவர்களின் நடத்தையை அங்கீகரிப்பது போல் பேசாதிருந்தார். இந்த அடாவடி நிகழ்ச்சியை திருச்சி வானொலி நிலையத்தில் முதல் செய்தியாக ஒலிப்பரப்பினோம்.

மீண்டும் கலைஞர் அரசுக்கே வருகிறேன். தமிழக அரசிற்கு, குறிப்பாக கலைஞருக்கு எதிரான செய்திகளை, முக்கியப்படுத்தினேன். அதே சமயம் கலைஞரை கட்சித் தலைவர், முதல்வர் என்ற முறையில் அவருக்குரிய செய்திகளையும் ஒலிபரப்பினேன். ஆனால், கலைஞருக்கு எதிரான செய்திகளே அதிகம். காலையில் ஆறு நாற்பதுக்கு ஒலிப்பரப்பாகும் செய்திகள் மக்கள் மனதில், குறிப்பாக பாட்டாளி மக்களிடம் மகத்தான் தாக்கத்தை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியவை. பொதுவாக, இந்த மாதிரி அரசுக்குப் பாதகமான செய்திகள் வெளியானால், மக்கள் தொடர்பு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருத்தம் - அல்லது மறுப்புக் கொடுப்பார்கள். ஆனால், செய்தியாசிரியர் நான் என்பதால் என்னமோ, என்னுடன் அவர்கள் தொடர்பு கொண்டதில்லை.

கலைஞர் அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் ஒரு ஊழல் பட்டியல் கொடுக்கப் பட்டிருந்தது நான் அத்தனை பாயிண்டுகளையும் ஒன்று விடாமல், ஆனந்தமாகச் செய்தியாக்கினேன். இதற்குப் பதிலளிப்பது போல், அதே நாள் மத்தியானம் கலைஞர் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஆனால், எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வரவில்லை என்றாலும் ஒரு செய்தியாளன், தன்மானம் பற்றிக் கவலைப்படாமல், போய்த்தான் ஆக வேண்டும். இல்லையானல், டில்லிக்காரன் தாளித்து விடுவான். ஒரு கட்சி, திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டதால், கலைஞரும் கோட்டையில் முதல்வராகப் பதிலளிக்க விரும்பாமல், கண்ணியம் காத்தார் என்றே நினைக்கிறேன். ஆகையால், செய்தியாளர் சந்திப்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதிமுகவின் ஊழல் பட்டியல் அறிக்கை செய்தியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு, கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். தாமதமாகப் போன நான், பேசிக் கொண்டிருந்த கலைஞரை இடை மறித்து, இப்படிக் கேட்டேன்.

‘சார் நீங்க என்னைக் கூப்பிடல. ஆனாலும் வந்துட்டேன்’

‘நீங்க எங்க செய்தியப் போடமாட்டீங்க... ஆனாலும் வரவேற்கிறேன்’.

செய்தியாளர்கள் சிரித்து விட்டார்கள். 'கலைஞரிடம் ஏன் வாயக் கொடுக்கறிங்க' என்று சிலர் என்னைச் செல்லமாகத் தட்டினார்கள். கலைஞர் முகத்தையே பார்த்தேன். காலையில்தான், அவரைப் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை, நேரில் கண்டது போல் செய்தியாக்கி இருந்தேன். ஆனால், அவர் முகத்தில் எந்தக் கடுகடுப்பும் இல்லை. என்னைப் புன்முறுவலோடு பார்த்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு துளி கோபத்தைக் கூட அவர் கண்களோ, முகபாவமோ காட்டவில்லை. இன்று வரை இது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

செய்தியாளர் கூட்டம் முடிந்ததும், அதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைப் பார்த்து 'எங்க செய்தியையும் ரேடியோவில் போடுவீங்களா அண்ணே?' என்றார். இந்த அண்ணே என்ற வார்த்தை என்னைக் கசக்கிப் பிழிந்தது. இவர் முகத்திலும் ஒரு சின்ன எள் கூட வெடிக்கவில்லை. மாறாக, என்னை நட்பாகவே பார்த்தார். அதிமுகவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலையும், மாலைச் செய்தியில் தலைப்புச் செய்தியாகப் போட்டு, விளாசித் தள்ளி விட்டேன்.

இந்த அணுகுமுறை, என்னை ஓரளவு மென்மைப்படுத்தியது. ஆனாலும் அரசுக்கு எதிரான செய்திகள் வழக்கம் போல் ஒலிபரப்பாகிக் கொண்டுதான் இருந்தன.

இந்தக் கால கட்டத்தில் இலங்கைக்குச் சென்ற, இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது. கலைஞர் இந்தப் படை சென்னை திரும்பிய போது, அதை வரவேற்கச் செல்லவில்லை.

இலங்கைத் தமிழ் பெண்களிடம், இந்திய ராணுவம் அத்து மீறி நடந்து கொண்டது என்பது கலைஞரின் வாதம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோண மலை என்று பல்வேறு இடங்களுக்குப் பயணித்த எனக்கும், இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அப்போது சென்னையில் சுவாகத் ஹோட்டலில் தங்கியிருந்த மூப்பனார் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் உடனடியாய் ராஜீவ் காந்தியைச் சந்தித்துத் தக்க பரிகார நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து, இந்தியப் பெண் போலீஸ் அங்கே அனுப்பப்பட்டது.

இந்திய அமைதிப் படையினர் இலங்கைத் தமிழர்களுக்காக நல்லதும் செய்திருக்கிறார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு, ஆயுதங் கடத்திய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராளிகளை, பலாலி விமான நிலையத்தில் இருந்து, ஒரு இலங்கை விமானம் மூலம் கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தீர்மானித்து விட்டது. விமானமும் வந்து விட்டது. அந்த விமானத்தைத் தடுப்பதற்காக, இந்தியப் படை சுற்றி வளைத்ததும் எனக்குத் தெரியும். ஆனால், மத்திய அரசின் முட்டாள் தனமான அரசியல் முடிவால், இந்தப் போராளிகள் சயனைடு அருந்தித் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கலைஞருக்குச் சாதகமான வி.பி.சிங் அரசு, நாடாளுமன்றத்தில் பதவி இழந்தது. கலைஞருடன் பகைமை பாராட்டி, அதிமுகவுடன் உறவாடிய ராஜீவ் காந்தியின் தயவில், சந்திரசேகர் அமைச்சரவை மத்தியில் பதவியேற்றது.

அந்தக் கால கட்டத்தில் கலைஞரின் செய்தியாளர் கூட்டம், என்ன காரணத்தாலோ கட்சி அலுவலகமான அறிவாலயத்திலேயே நடைபெற்றது. நான் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தேன். அந்த அறைக்குள் நுழைந்த கலைஞர் 'என்ன சமுத்திரம்! எப்படி இருக்கீங்க?’ என்று என்னை மட்டும் தனிப்படுத்தி நலம் விசாரித்தார். நானும் ஒரு மகத்தான தலைவர் இப்படி நலம் விசாரிக்கும் போது, அவருக்கு எதிராக ஒரு சின்ன கேள்வியைக் கூட எழுப்பக் கூடாது என்று உறுதி பூண்டேன். ஆனால் ஒரு செய்தியாளர் இந்திய அமைதிப் படை பற்றி ஒரு கேள்வி எழுப்பி, கலைஞர் பதிலளித்த போது, என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

நானும் ஒரு தர்ம சங்கடமான கேள்வியைக் கேட்டேன். கலைஞருக்கு பயங்கரமான கோபம். அப்போது முகத்தில் மட்டும் எள்ளைப் போட்டிருந்தால், அது எண்ணெய் ஆகியிருக்கும். என்னை நேரடியாகப் பார்த்து, ‘ஆமாய்யா... இந்தியப் படை இலங்கைத் தமிழ்ப் பெண்களைக் கற்பழிச்சது. இப்பவும் சொல்றேன், உன்னால நியூஸ்ல போட முடியுமா’ என்று சவால் விடும் தோரணையில் கேட்டார். நானும் ‘இன்னைக்குச் சாயங்காலமே போடுறேன் சார்’ என்றேன். இந்த அமளியில் செய்தியாளர் கூட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது.

நான் ஆடிப் போய் விட்டேன். கலைஞர் இப்படி எந்த செய்தியாளரையும் ‘நீ, நான்’ என்று ஒருமையில் பேசியது இல்லை. இதர செய்தியாளர்களுக்கும் ஆச்சரியமாகி விட்டது. நான், திக்கு முக்காடி அந்த அறையை விட்டு அகல முடியாமல் நின்ற போது, கலைஞர் என் அருகே வந்தார். ‘நான் சொன்னதை அப்படியே போட உங்களுடைய வானொலி நெறிமுறைகள் இடம் தராதே. நீங்க எப்படிப் போடுவீங்க?’ என்று கேட்டார். நான், வாழப்பாடி ராமமூர்த்தியையோ, அல்லது எனக்குப் பெருமளவு உதவியிருக்கும் திருமதி. மரகதம் சந்திரசேகரையோ அணுகி 'ஆகவே, கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் குற்றச்சாட்டிற்கு ஈடு கொடுத்து, அந்தச் செய்தியைச் சமச் சீராக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு, ‘போட முடியும்’ என்றேன்.

கலைஞர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். அவர் அப்போது என் மீது சீறியது கொள்கை அடிப்படையில் அல்ல என்பதும். வீம்புக்காகப் பேசியது என்பதையும் புரிந்து கொண்டேன். அந்தச் செய்தியை நான் எனது செய்தி அறிக்கையில் சேர்க்கவே இல்லை.

சந்திரசேகர் அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், மத்தியத் தகவல் ஒலி பரப்புத் துறைக்கும், உள் துறைக்கும் இணையமைச்சரான சின்ஹா சென்னைக்கு வந்திருந்தார். உள்துறை இணையமைச்சர் என்ற முறையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பரிசீலனை செய்வதற்கு, மாநில அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினார். முதல்வர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முடிவடையும் போதுதான் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும், மத்திய அமைச்சர் சின்ஹாவும் பேசிய முறையில் இருந்து, இரண்டாமவர், முதலாமவரின் ஆளுமைக்கு உட்பட்டு விட்டார் என்பது புரிந்து விட்டது. இந்த அமைச்சர், பிரதமர் சந்திர சேகருக்கு மிகவும் வேண்டியவர்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, சின்ஹா, மறுநாள் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நான் சும்மா இருக்க வேண்டும் என்ற உறுதியோடுதான் போயிருந்தேன். ஆனால், சில செய்தியாளர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராகச் சில கேள்விகளைக் கேட்ட போது, நானும் சேர்ந்து கொண்டேன். 'மத்திய அரசு கலைஞர் ஆட்சி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது' என்றும் கேட்டேன். அப்போது அமைச்சருடன் இருந்த மத்திய அரசின் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சரின் காதைக் கடித்தார். நான் இன்னார் என்று சொல்லி விட்டார். உடனே அமைச்சரும் கோபத்தோடு, 'எதுவும் பேசாமல், சும்மா இருங்க சார்' என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னார். அப்போது கலைஞரின் நாற்காலியை விட என் நாற்காலிதான் ஆடிப் போனது.

மாலையில், இதே ஐ.ஏ.எஸ் அதிகாரி சென்னையில் உள்ள தகவல் ஒளி பரப்புத் துறை உயரதிகாரிகளின் கூட்டத்தை, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் கூட்டினார். இதில் அமைச்சகத்தின் செயலாளரான மகேஷ் பிரசாத்தும், கலந்து கொண்டார். எங்கள் அமைச்சகத்தின் தலைமை அதிகாரி இவர்தான். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அப்போது துணை இயக்குநராக இருந்த எழுத்தாளர் ஏ. நடராசனும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்.

இந்த இ.ஆ.ப, ‘தமிழக அரசை, குறிப்பாக முதலமைச்சரை, இங்குள்ள ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன். இனி மேலும், இப்படி முதலமைச்சருக்குத் தர்ம சங்கடமான நிலைமையைத் தோற்றுவித்தால், அவர்கள் மீது நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்’ என்று ஓங்கிக் கத்தினார். கூட்டத்தில் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒரு வேளை, எப்போதாவது தப்பித் தவறி கலைஞரைக் குறை கூறி இருப்போமோ என்பது மாதிரி, தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

என்னால் பொறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன். ‘நீங்கள் சொல்வது என்னைத்தான்... நான் தமிழக அரசை விமர்சிப்பது, கலைஞரை விமர்சிப்பது ஆகாது... முதல்வருக்கும், விடுதலைப் புலிகளின் மீது அப்படி ஒன்றும் பாசம் கிடையாது. ஆகையால், புலிகளைப் பற்றிச் செய்திகள் வெளியாவதை அவரும் ஆட்சேபிக்க மாட்டார். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. தேவையானால் என்னை மாற்றுங்கள்’ என்று உரக்கக் கூவினேன். எங்கள் செயலாளர் மகேஷ் பிரசாத், 'ரிஷி கர்ப்பம் இரவு தங்காது' என்பது போல், உடனடியாகக் கோபத்தைக் காட்டி, நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனாலும், பொறுமையாக இருந்தார். இந்தக் கூட்டம் முடிந்ததும், என்னைப் பற்றி உயர்மட்டக் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அப்போதைக்கு என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை என்று செயலாளர் தீர்மானித்து விட்டதாக அறிந்தேன்.

மத்திய அரசு கலைஞர் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், தமிழக அரசியல் நிர்பந்தம் கருதி, ராஜீவ் காந்தியின் தூண்டுதலில், ஜெயலலிதாவின் வற்புறுத்தலில், கலைஞர் அரசு 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதே இணைச் செயலாளர் சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும், ‘கங்குராஜுலேஷன்யா’ என்றார். உடனே நான், எனக்கு, இணை இயக்குநர் பதவி வந்து விட்டதாகக் கருதி, நன்றி தெரிவித்தேன். எந்த இடத்தில், எந்தப் பதவியில், நான் நியமிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை அவரே சொல்லட்டும் என்பது போல் ஆவலோடு பார்த்தேன். உடனே அவர் ‘உங்க நண்பர முடிச்சிட்டோம். பார்த்தீங்களா’ என்றார். அப்போதும் புரியாமல், நான் அவரைப் பார்த்த போது 'கருணாநிதியைத்தான் சொல்றேன். டிஸ்மிஸ் பண்ணிட்டோமே, உங்களுக்கு சந்தோஷம்தானே' என்றார்.

நான் சந்தோஷப் படவில்லை. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எப்படிப் பச்சோந்திகளாக மாறுகிறார்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறேன் என்றாலும், இப்போது அவரை அழுத்தமாகப் பார்த்தேன். ஒரு வகையில் சொல்லப் போனால், அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.காரர்கள் தான். அரசியல்வாதிகளுக்குக் குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுப்பவர்களே இவர்கள்தான். இந்த அரசியல்வாதிகளுக்காவது, கட்சி, மக்கள், தேர்தல் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இவர்களுக்கோ, வடமொழி மந்திரம் போல் அரசு சட்ட, திட்டங்கள்தான் வழிகாட்டி. ஆனாலும், அந்த விதிகளுக்கும் வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்கள் இவர்கள். என்றாலும், இன்றைய இளைய தலைமுறையில் உருவாகி இருக்கும் நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நம்மால் பார்க்க முடிகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் போதே, சென்னைக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், இரவு எட்டரை மணிக்குப் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருந்த ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் மனிதக் குண்டால் கொல்லப்பட்டார். அவர் பிரதமராகக் கூடாது என்பது விடுதலைப் புலிகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதில் கலைஞரும் முதல்வராக முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றாலும், தமிழக அரசியலைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. கலைஞரைக் கொன்றுதான் தமிழ் ஈழம் உருவாக வேண்டும், என்றால் அதற்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.

பல தடவை வட இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இருக்கிறேன். இந்த விடுதலைப் புலிகள் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை, இலங்கை இராணுவம் கொன்ற எண்ணிக்கைக்குச் சளைத்ததல்ல. மாற்றுக் கருத்துள்ள தமிழ்ச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள் போன்றோர்களைக் கடத்துவதும், அவர்களைக் கொலை செய்வதும் இவர்களுக்கு வாடிக்கை. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் கூட ‘நீங்க கலைஞரை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஜெயலலிதாவை எதிர்த்துச் செய்தி போடுங்க. ஆனால் எல்டிடியை எதிர்த்துச் செய்தி போடாதீங்க. வீட்டிலேயே வந்து கொல்லுவாங்க!' என்றனர்.

இவர்களுக்குப் பயந்து கொழும்பில் ஒதுங்கியிருந்த அமிர்தலிங்கம் வீட்டிலேயே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, ஈரக்கை உலரும் முன்பே அந்தப் பெருமகனை சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு தமிழகத்தில் கலைஞர் இருந்தாலும் சரிதான், போனாலும் சரிதான். ராஜீவ் காந்தி கொலையில், நமது ரத்தமான பதிமூன்று தமிழ் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதை, இவர்களுக்கு இன்னும் கொம்பு சீவி விடும் இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் பேசுவதே இல்லை.

ஸ்ரீபெரும்பதூருக்கு நான் கூடப் போயிருப்பேன். ஒரு வேளை கொல்லப்பட்டும் இருக்கலாம். முன்பு, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை வடமராய்ச்சி வரை துரத்தி, நிர்மூலம் செய்யப் போன போது போர்ப் பிரகடனம் செய்வது போல், இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, பின்னர் இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி. இவரது அன்னைதான், இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிப் புலிகளைப் போராளியாக்கியவர். பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை கேட்ட போது, அதைப் புறக்கணித்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவின் அணுகு முறை தவறாகப் போய் விட்டாலும், விடுதலைப் புலிகளை வைத்தே, வட இலங்கையில் தமிழ் போலீஸை அமைக்கவும், இந்த வீரர்களின் மறு வாழ்விற்காகக் கணிசமான நிதி ஒதுக்கவும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வகை செய்தவர்.

பாலஸ்தீனிய மக்களுக்கு உரிமைக் குரல் எழுப்பும் யாசர் அராபத்தைப் பின்பற்றி, பிரபாகரனும், சகோதரக் கொலைகளில் ஈடுபடாமல் நீக்குப் போக்காக நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். ராஜீவ் காந்தி கொலை மூலம், இவர்கள் தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அந்நியக் கலாச்சாரத்திற்கு அடி கோலியவர்கள். இலங்கை புலி மாகாண சபையைக் கைப்பற்றி, அதைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளும் பக்குவமற்றவர்கள். பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள் இருவர், தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அதே சமயம், இலங்கைத் தமிழ்ப் பொடியன்கள், கட்டாயமாக விடுதலைப் படையில் சேர்க்கப் படுகிறார்கள். பிரபாகரன் பிள்ளைகள் படிப்பதில் மகிழ்ச்சியே. இந்த அடிப்படை உரிமையை இவர் ஏன் இலங்கைப் பொடியன்களுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி. என்றாலும், இலங்கைத் தமிழர்கள் சாகட்டும் என்று சிலர் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நானோ இலங்கைக் தமிழன் சாகிறானே என்று இவர்களை ஆட்சேபிக்கிறேன்.

இந்தக் கொலை நிகழ்ச்சி தெரிந்ததும், கலைஞர் ஆடிப் போய் விட்டதாக அறிகிறேன். மத்திய அரசின் பதவி நீக்கத்தால், மக்களிடையே அனுதாபம் பெற்ற திமுக, இந்தக் கொலையால், தேர்தலில் ஒன்றும் இல்லாமல் போகும் என்பது கலைஞருக்கும் தெரிந்து விட்டது. ஆகையால், கையறு நிலையில், இரண்டு கைகளையும் உதறி ‘எல்லாம் போயிட்டே, எல்லாம் போயிட்டே’ என்று அரற்றியதாக அறிகிறேன். சென்னை பொது மருத்துவ மனையில், ராஜீவ் காந்தியின் சடல கோரத்தைப் பார்த்து விட்டு, சென்னை வானொலியில் செய்தியாக்கிய போது, கலைஞர் ஒரு திரைப்படத்தில் ‘பிஞ்சு மாங்காயைப் பிளந்தது போல்’ என்று குறிப்பிட்ட உரையாடல் வாசகத்தையே செய்தியிலும் குறிப்பிட்டேன்.

அதிமுக தொண்டர்கள் எனப் படுவோர் ராஜீவ் காந்தி கொலைக்கு அடுத்த படியாக, மூன்று நாட்கள் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் வீடுகளையும், சொத்துகளையும் சூறையாடினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மாத காலம் வீட்டிற்கு வெளியேயே தலை காட்டவில்லை. தமிழகம் முழுவதுமே மயான அமைதி.

இதையடுத்து, நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று, 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதைக் குறிப்பிட வேண்டியது இல்லை. அவர் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்போதைய மதுரை வானொலி நிலைய இயக்குநர் பாலசுப்ரமணியமும், ஊட்டி வானொலி நிலைய உதவி இயக்குநர் சங்கரனும் உடன் வர, புதிய முதல்வரைத் தொழில் நிமித்தம் நேர் காணல் செய்யச் சென்றோம்.

என்னிடம் ஜெயலலிதா இயல்பாகவும், இனிமையாகவும் நடந்து கொண்டார். எதிரே பணிவன்போடு நின்று கொண்டிருந்த எதிர்கால அமைச்சர், முத்துசாமியை உட்காரச் சொன்னார். இவர்தான், முன்னதாகக் கொடுக்கப்பட்ட வானொலிக் கேள்விகளுக்கு ஜெவுக்குப் பதில் எழுதிக் கொடுத்தவர் என்று அனுமானிக்கிறேன். சசிகலா நின்று கொண்டே இருந்தார். இந்த சசிகலா எனக்கு ஒரு காலத்து குடும்ப நண்பர். இவரது கணவர், தோழர் ம. நடராசன் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், நான் மத்திய அரசின் செய்தி விளம்பர அதிகாரியாகவும் பணியாற்றினோம். எங்கள் வீட்டிற்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இந்த நடராசன் பிரபலமானதும், ஒரு தடவை என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது ‘கலைஞருக்கு வேண்டிய நீங்கள், தமிழ் மண்ணில், ஒரு புதிய கலாச்சாரத்திற்கு வித்திடலாமா’ என்று பொருள்படக் கேட்டேன். உடனே அவர் ‘ஆலமர நிழல் (ஆர்.எம்.வீ) கிடைக்கல. அதனால பனை மரத்து நிழல்ல (ஜெயலலிதா) அண்டி இருக்கேன்’ என்றார்.

முதலமைச்சராகத் தேர்வு பெற்ற ஜெயலலிதாவுக்கு, நேர் காணல் பதிவு சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. என்னிடம் விடை பெறப் போனார். உடனே நான், ‘நீங்க இனி மேல் முதலைமைச்சர் ... உங்கள் சொல்லையும், செயலையும் நாடே உன்னிப்பாகக் கவனிக்கும். உங்கள் நன்மைக்காகச் சொல்கிறேன். கலைஞர், தலைவர் மட்டுமல்ல, ஒரு முன்னாள் முதல்வர்... உங்களை விட வயதில் மூத்தவர். அவரை கருணாநிதி என்று சொல்லாதீர்கள். கலைஞர் என்றே சொல்லுங்கள். இது உங்கள் அந்தஸ்தைத்தான் கூட்டும்.’ என்றேன். பொதுவாக இந்த மாதிரி உபதேசம் செய்தால், அவர் சீறி விழுவார் என்பார்கள். அதையும் எதிர் நோக்கித்தான் செய்தியாளன் என்கிற பொறுப்பை மறந்து, ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பில் அறிவுரை சொன்னேன். அவருக்கு என்ன அவசரமோ... எதுவும் பதில் சொல்லாமல் மாடிக்கு விரைந்தார்.
-----------------
continued in part 2 (chapters 11-25)

This file was last updated on 22 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)