திருவேங்கடம் அம்மாள் எழுதிய
கோவர்த்தனக் கும்மி
kOvartanak kummi
by tiruvEngkaTam ammAL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This work was prepared using Google OCR and subsequent proof-reading, corrections of the OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருவேங்கடம் அம்மாளால் எழுதிய
கோவர்த்தனக் கும்மி
Source:
ஸ்ரீராமஜெயம்.
கோவர்த்தனக் கும்மி.
வானமாமலை ராமாநுஜ ஸ்வாமி
திருவடி ஸம்பந்தியாகிய திருவேங்கடம் அம்மாளால் இயற்றப்பட்டது.
இஃது திருநெல்வேலி, ஹிலால் பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது.
விலை 1927.
அணா 3.
-----------------
ஸ்ரீராமஜெபம்,
கோவர்த்தனக் கும்மி.
1. 'வாணிவராய் என்னாவில்' என்ற வர்ண மெட்டு.
மங்கை என்னாவில்வராய்-ஸ்ரீவா
மங்கை என்னாவில் வராய்
மங்கை என்னாவில் வராய் சங்கையில்லாமல் தானே
சிங்கார கண்ணன் செய்யும் சரித்திரத்தை யுரைக்க (மங்)
2. தெய்வ நாதன் பத்தினியே
தேசம்புகழ் உத்தமியே
ஐயன் ராமானுசனுக்கு
அரசியே விரசலாய் (மங்)
3. பட்டர்பிரான் மாமுனிவன்
பாதமலரைப் பணிந்து
பருவத குடைபிடித்த
பகவான் கதையுரைக்க, (மங்)
4. மன்னவன் கலியன் திரு
மலரடியைப் பணிந்து
மலையைக் குடைகவித்த
மாதவன் மகிமை சொல்ல. (மங்)
-------------
2-வது கட்டம்.
இந்திரனுடைய பூஜைக்காக ஆயர்பாடி இடையர்கள் செய்தவைகளை சுகர் பரிக்ஷித்துக்கு சொல்லுவது.
நொண்டிச் சிந்து.
1. கேளுமைய பரீக்ஷித்தனே
கேசவன் மகிமை என்னும் கீர்த்திகள் தன்னை (கே)
2. ஸுகமுனி மனமகிழ்ந்து
செப்பிடுவார் பரிக்ஷித்து மன்னவருக்கு (கே)
3. ஆய்ப்பாடி இடையரெல்லாம்
ஆவலுடன் இந்திரனை பூஜைகள் செய்ய (கே)
4. வாய்ப்பான வஸ்துக்களினால்
வாசமுள்ள பக்ஷணங்கள் வகைவகையாய் (கே)
5. ததியன்ன ஷீர அன்னமும்
தரமுள்ள பொங்கல் புளியோதரை தினுசும் (கே)
6. ஆவலுடன் அமைக்கலுற்றார்
அவலிடித்து பொரிகள் பொரிக்கலுற்றார் (கே)
7. மாடங்களைப் பூசித்திருத்தி
மண்டபங்கள் சாலை எல்லாம் தூசி ஒதுக்கி (கே)
8. செய்குவதைக் கண்ணனறிந்தார்
சிங்கார லீலைகளைச் செய்யத் துணிந்தார் (கே)
------------------
3-வது கட்டம்.
கண்ணன் கோபிகளை உங்கள் மனைகளில் என்ன விசேஷமென்று கேட்பது.
பாராயப்பா மண்டபம் தன்னை என்ற வர்ணமெட்டு
1. கோபாலன் மனமகிழ்ந்தார்
கோபிகளின் குடிசைகளில் போய் நுழைந்தார்
கோபிகளே உங்கள் வீட்டில்
குஞ்சாலாடு லட்டு செய்யும் கோலா கலமென்னடி என்றான்
கோவிந்தனும் கோலா கலமென்னடி என்றான்.
2. அண்டை வீட்டில் போய் நுழைந்து
அச்சுதனாம் கண்ணனவன் உண்டை சீடைமுருக்கு தேன் குழல்
உத்தமியே உங்கள் வீட்டில் என்னடி என்றான்
3. பக்க வீட்டு கோபியிடம்
பாலகண்ணன் ஓடிச் சென்று
பால்தொட்டி ஷீர அன்னங்கள் பண்ணுவதை
பாவையரே கூறடி என்றான்.
4. இன்னுமொரு கோபி வீட்டில்
ஈசன் கண்ணன் போய் நுழைந்து
இனிய ஜிலேபி மிட்டாய்கள்
ஏந்திழையே யின்று செய்வ தேதடி என்றான்.
5. அரவிந்தக் கண்ணனவன்
ஆயரின் மனைவிகளை
அவலிடித்துப் பொரியமைத்திடும்
அதிசயத்தை ஆரணங்கே கூறடி என்றான்.
6. கண்மணி என் கோபிகளே
காதலுடன் உங்கள் வீட்டில்
காராபூந்தி கரிச்சிக்காய் செய்யும் காரணத்தைக் காரிகையே கூறடி என்றான்.
7. மான்விழியே என்னை யிப்போ
மதித்திடாமல் நீ மறந்து
மைசூர்பாகு செய்திடும் மர்மமதை
மங்கையரே ஓதடி என்றான்.
8. சேயிழையே உன் முகத்தை
தேடி நானும் வந்திருக்க
திரும்பிடாமல் சோலி பார்த்திடும் செய்தி தன்னை தேன்மொழியே செப்படி என்றான்.
9. கிளிமொழி என் கோபியே நீ
கேசவனைக் கவனிக்காமல்
கற்கண் டலுவாக்கள் செய்திடும்
காரணத்தைக் காரிகையே கூறடி என்றான்.
10. கோவிந்த னுரைக்கலுமே
கோபிகள் மனமகிழ்ந்து
கூறிடுவார் மறுமொழிகள்
கொஞ்சி நல்ல கஞ்சமலர் முகவிழிகள்.
-----------------
4-வது கட்டம்.
கண்ணனிடம் கோபிகள் இந்திர பூஜை செய்யப் போகிறோமென்று சொல்லுவது.
[பாரும் சகாய என்ற வர்ணமெட்டு.)
1. கோகுல வாஸயிதை கேளும் சர்வேச
ஆக்கள் தன்னை மேய்த்துவரும்
ஆயருக்கு மன்னவராம்
கோகுலத்து நந்தருக்கு
குழைந்து வடிவாயுதித்த. (கோ)
2. பாலகண்ணா யின்றுமாட்கள்
பக்ஷணங்கள் செய்வதெல்லாம்
கோலமுள்ள யிந்திரனைக்
குறித்து நாங்கள் செய்ய. (கோ)
3. வகை வகையாய் அன்னமிட்டு
வாவி குளம்போல் குழித்து
தயிர் பால்கள் நெய் சொரிந்து
தடவரை போல் தான் குவிப்போம். (கோ)
4. வகை வகையாய்ப் பந்தலிட்டு
வாழை தோரணங்கள் நட்டு
வாஸவன் தனக்கு யிட்டு வாழ்த்தி
மிக பூஜை செய்வோம். (கோ .)
5. மாளியலங்காரமிட்டு
மண்டபங்கள் கோலமிட்டு
மேளமிசை தாளமுடன்
மேன்மையுள்ள பூஜை செய்வோம். (கோ.)
6. வாஸனைகள் தூபம் போட்டு
வாட்டமில்லா தீபமிட்டு
வானவர் கோனைக் குறித்து
வணங்கி நாங்கள் பூஜை செய்வோம். (கோ)
7. அயிராவத நாதனுக்கு
ஆயரெல்லாம் பூஜை செய்தால்
பயிர் தழைக்க மழை பொழியும்
பசுக்களெல்லாம் பால் சொரியும். (கோ.)
(என்றுரைத்தார்கள் அந்த யிளங்கொடி மாதர்.)
--------------------
5-வது கட்டம்.
இந்திர பூஜை பண்ணுவதை கண்ணன் தடுத்து
கோவர்த்தன பூஜை செய்பச் சொல்லுவது.
(கோழி சொல்லு சூர்ப்பணகை என்ற வர்ண மெட்டு)
இந்திரனார் பூஜையிது என்ற தனைக் கேட்டார்
சுந்திர கோபாலனதைத் தந்திரத்தால் மீட்டார். (இ.)
ஆயர்களே நீங்களெல்லாம் ஆகாய இந்திரர்க்கு
கேயமுடன் பூஜை செய்ய நினைப்பதை விடுங்களென்றான். (இ.)
கன்னிகை பகலிகையின் மேல் காதலது முட்டி
காகரூபமாகச் சென்று கத்தினின்றமட்டி
தவமுனிவர் சாபத்தினால் தேகமெல்லாம் யோனிகளாய்
அவமானம் அடைந்து வந்த அவன் தனக்கோ பூஜைஎன்றார் (இ.)
ஸ்ரீயஃபாதிமாலை தன்னை துருவாஸன் கொடுத்தான்
செல்வச்செருக்கினால தனை தண்ணிய தாய் நினைத்தான்
ஆயுதத்தால் வாங்கியதை ஐராவதம் கைக்கொடுத்தான்
அரியமுனிசாபத்தினால் அப்பொழுதே அரசிழந்தான். (இ.)
அரக்கனிடம் போரினிலே அவமானம் அடைந்தான்
அவனுடைய ஆக்கினைக்கு அஞ்சி பயந்து நடந்தான்
இந்திரஜயித்து என்னும் ஏத்தமவன் கைகொடுத்த
மந்தமதியான தொரு மன்னனுக்கோ பூஜை என்றார். (இ.)
ஸுயரூபமாக வந்து சேர்ந்து இந்திரனும்
செய்யும் உங்கள் பூஜை தன்னை ஸந்தோஷித் திடுவானோ
பயமில்லாமல் கோவர் தனபருவதத்தை பூஜை செய்தால்
பக்ஷணங்கள் அன்னமெல்லாம் அக்ஷணமே உண்ணுமென்றார் (இ.)
கோவர்தன பருவதத்தை கும்பிட்டு பூஜித்தால்
கோவடனே கன்றுகளும் கோகுலத்தில் சிறக்கும் வாவிகுளம் நீர் பெருகும் வயல்களெல்லாம் நெல் தருகும்
ஆவினங்கள் பால் செழிக்கும் ஆயர்பாடி பொன்கொழிக்கும். (இ)
-----------------
6-வது கட்டம்.
ஆயர்கள் கண்ணன் மொழியைக் கேட்டு இந்திர பூஜை
செய்யாமல் கோவர்த்தன பூஜை செய்வது.
(காய்க்கும் கனி மரங்கள் என்ற வர்ணமெட்டு.)
1. கோகுலத்தில் கோபரெல்லாம் கூட்டமாகக் கூடினார்
கோவிந்தன் னுரையைக் கேட்டு ஆனந்தங்கொண்டாடினார் (ஆ)
2. ஆகாயத்து இந்திரர்க்கு அஞ்சிடாமல் மீறினார்
அக்ஷணமே கோவர் தன பூஜை செய்யக் கோரினார் (பூ)
3. ஸொர்க்கலோக மன்னவனை சற்றும் மதியாமலே
சீல கண்ணனே நமக்கு தெய்வமென்று கோரியே (தெ)
4. நந்தபாலனே நமக்கு நாதனென்று கோரியே
இந்திரனுக்கு பூஜைகளை இல்லை என்று தேரியே (இல்லை)
5. வகைவகையாய் வஸ்துக்களை வண்டிதன்னி லேத்தியே
வண்ணமணி கோவர்த்தன பருவதத்தில் மாத்தியே (பரு)
6. ஆகாயத்தை எட்டிடவே அன்னங்களைத் தட்டினார்
ஆடை தயிரு பாலு நெய்யை ஆறுபோலே கொட்டினார் (ஆறு)
7. வாழை கமுகு தோரணங்கள் வரிசையாகக் கட்டினார்
விசித்திரமாய்ப் பந்தலிட்டு வானுலகை முட்டினார். (வானு)
-------------------
7-வது கட்டம்.
(கௌஸலைக்கு மைந்தரான என்ற வர்ணமெட்டு)
1. கோபால கோபியர்கள் கும்பலாகக் கூடினார்
கோவர்த்தன பருவதத்தைக் கூட்டமாக னாடினார்
2. வாஸனைகள் தூபம் பத்து யோஜனைக்கு வீசவே
வாட்டமில்லா தீபமெட்டு திக்கிலும் ஒளியாகவே
3. கோவர்த்தன பருவதத்தை கும்பிட்டு வணங்கினார்
கொள்ள வேணும் நாங்கள் செய்யும் பூஜை என்றிணங்கினார்
4. கோவர்த்தன ரூபியாக கொண்டல் வண்ணனாகினார்
கொடுத்த சோறு பூஜை எல்லாம் கூசாமல் விழுங்கினார்
5. பருவதத்துக்கிட்ட சோத்தை பகவானு மருந்தினார்
பார்த்து ஆயர் ஆச்சரிய பாவசம் பொருந்தினார்.
-------------------
8-வது கட்டம்.
இடையர்கள் செய்த கோவர்த்தன பூஜையை இந்திரன் அறிந்து
கோபித்துச் சொல்லுவது.
[பாலகிருஷ்ணன் லீலைகளை என்ற வர்ணமெட்டு).
1. இந்திரனும் தானறிந்தான் இடையர் செய்த பூஜை எல்லாம்
மந்தமதி கண்ணன் செய்த மாயத்தினாலானதென்று (இ)
2. மாட்டுடனே ஆடுகளை மந்தைகளில் மேய்த்திடுவான்
காட்டுமலை பூஜையுண்டு களித்துவிட்டான் கள்ளனென்று (இ)
3. மாதர்களைத் தொட்டிழுப்பான் மத்தடிப்பட்டேயழுவான்
பூதம்போலே சோற்றையுண்ணப் பண்ணிவிட்டான் மோசமென்று
4. குழலெடுத்து ஊதிடுவான் கோபிகளைக் கூவிடுவான்
கொஞ்சி மொழி பேசிடுவான் கேலி நம்மை செய்தானென்று
5. பண்டு முதல் எந்தனுக்கு பாத்தியமாம் பூஜை தன்னை
கொண்டல் வண்ணன் கோளுரைத்துக் கோவர் தனத்தில்
(கொடுத்தான்
6. அண்டருக்கு நாயகன்னான் ஆயர்களை எதிர்த்துவிட்டால்
அற்பனிந்த கண்ணனவன் அஞ்சிடாமல் தாங்குவனோ?
7. கொண்டலுக்கு னாயகன்னான் கோகுலத்தை எதிர்த்து
விட்டால் கூழையந்தக் கண்ணனவன் குலுங்கிடாமல் தாங்குவனோ
8. இடி இடித்து மழை சொரிந்து எழுதினம் கோகுலத்தில்
குடியடைத்துக் கோபரெல்லாம் கூச்சலிடச் செய்வேனென்று.
----------------
9-வது கட்டம்.
(கோவிந்தா இதென்ன ஞாயமோ என்ற வர்ணமெட்டு)
இந்திரன் சபை ஏறினான் இடையரை நிந்தனைசெய்து கூறினான்
அந்தர தேவருக்கு அஞ்சாமலே துணிந்த
நந்தகோபாலனுக்கோ னாணியிருப்போமென்று. (இ.)
அம்மான் மதுரைராஜன் கஞ்சனுக்கு அஞ்சி பயந்த சூரன்
பம்மாத்து மிரட்டுகள் பண்ணிகொண்டு கோகுலத்தில்
சும்மாயிராமல் நம்மை சுரும்புகள் செய்தானென்று (இ.)
ஆநெய் திருடும் மட்டி கோபியர்கள் ஆடையொளிக்கும் செட்டி
பூனையை நகைத் தெலி போருக்கழைத்தது போல்
வானவர் பூஜையுண்டு வந்தான் சண்டைக்க என்று (இ.)
இந்திரனென்று உரைத்தால் ஈசனுடன் எவ்வுலகும் நடுங்குமே
செந்தாமரையயனும் சிந்தை னடுங்குவனே
இந்த இடையர்களோ எனக்கெதிரென் அரைத்து (இ.)
ஆரும் அணுக னடுங்கி ஓட்டமிட்டு அஞ்சிடும் அரவினுக்கு
கூரிய மூக்குடைய கருடனும் ஓடுவனோ கோப இடையரைனான் கொல்லாமல் விடுவேனோ? (இ.)
------------------
10-வது கட்டம்.
இந்திரன் வருணனை கோகுலத்தில் சென்று மழைபெய்யச் சொல்ல
வருணன் இடைவிடாமல் ஏழு தினம் மழை பெய்ய ஆயர்கள் சோகிப்பது.
(பட்டாடை திருடிய என்ற வர்ணமெட்டு)
வாஸவனுரைத்த மொழி வருணனவன் கேட்டுமே வந்துவிட்டான்
கோகுலம் தன்னில் கொஞ்சமும் பயமில்லாமல் யிருதயம் தன்னில்
வாடைமழையும் கோடைபிடியும் வந்துகவிந்து எங்குமிருண்டு (வா)
அல்லும் பகலுமாக ஆயர்பாடி ஊரிலே கல் வருஷங்கள்
சொரியவே கொஞ்சமும் நில்லாமல் வெள்ளம் பெருகவே.
ஆ வுடன் கோபர்கள் ஓ ஓவென்று அலரிப் புலம்பிடவே (வா.)
குடமழையாய் எழு தினம் கோகுலனகரிலே கொண்டல் மாரிகள்
சொரியவே கொஞ்சமும் இடைவிடாமலே பொழியவே
கூட மழகிய மாடங்களெல்லாம் குலுங்கிச் சரிந்திடவே (வா.)
கோபால கோபியர்கள் கூச்சலிட்டுக் கூவியே
கொண்டல் வண்ணா எங்களாவியே
கோவர்த்தன பூஜை செய்தோம் உன்னை மேவியே
கோவிந்தனே உன் வார்த்தையைக் கேட்டு கெட்டோம்
இப்படிப் பட்டோமென்றார் (வா.)
கோபர்கள் குலக்கொழுந்தே ஆபத்துக்கு மருந்தே
ஐயனேயினி என்ன செய்குவோம் யாவரும் உன்னடி பணிந்து
உய்குவோம் அச்சுதனேனீர் பிக்ஷணம் தன்னில்
நிச்சயம் எங்களை நேசித்துக் காரும் (வா.)
----------------
11-வது கட்டம்.
(கண்டு மகிழ்ந்திடவே பக்தியுடன் கேளீர் என்ற வர்ணமெட்டு)
1. அய்யனே என்ன செய்வோம்
யாரும் கெதியில்லையே இப்பொழு
தையனே என்ன செய்வோம்
உய்யும் உபாயம் உரைத்திட யிங்கு,
ஒருவரும் தானிலையே
ஐயோ யிந்த ஆபத்திலெங்களை
ஆதரிப்பாரிலையே கண்ணா (ஐய.)
2. உந்தனுரையை உறுதியாய் நம்பி
இந்திர பூஜை தன்னை
தந்தோம் கோவர்தனகிரி தன்னில் சிந்தாகுலமடைந்து ரொம்பவும்
நொந்தோமே கண்ணா.
3. சசிபதி தனக்கு தந்திடும் பூஜையை அக்ய
தடவரை தனக்கு யிட
கொசு சமானமான கோபர்களிந்த
கூழைகளாலாமோ கண்ணா ஏழைகளால் போமோ.
4. ஆனைப்பலமுள்ள அண்டர்கள்
பூஜையை கானமலை தனக்கு
பூனைக்கி பயந்திடும் பலமுள்ள ஆயர்கள் பண்ணிவிடலாமோ கண்ணா எண்ணிடவும் போமோ.
5. கன்றுகள் விரைக்குதே கைகால் பறக்குதே
குன்றுகள் குலையுதே கார்முகில் வண்ணனே
கமலம் போல் கண்ணனெ கழலிணை சரணமையா
எங்களைக் கார் திடத் தருணமையா.
6. குஞ்சு குழந்தைகள் கூவியழுகுதே
கொடுமழை சொரியுதே அஞ்சன வண்ணனே
ஆயர்கள் எண்ணனே அன்புடன் கார்த்திடுவீர்
எங்கள் துன்பங்கள் தீர்த்திடுவீர்.
------------------
12-வது கட்டம்.
கோபர்கள் மழையால் நொந்து கண்ணனை சரணமடைவது.
(ராமா உன்னை பணிந்தேன் என்ற வர்ணமெட்டு)
1. கண்ணா உம்மைப் பணிந்தோமே
கார்த்து எங்கள் கெதியைப் பார்த்து ரெக்ஷித்திடுவாய்
அண்ணா உன்னைத் தவிர யாரும் கெதியுமில்லை
மன்னா இந்த மழையை மாத்திட உபாயமில்லை (கண்.)
2. கோபால கோபியர்கள் கூறும் மொழிய தனை
கோவிந்தனுமறிந்து பார்த்தார்
கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடிக்க எண்ணி
கூசாமல் கைவிரலால் பேர்த்தார். (கண்.)
3. ஸொர்க்கலோக மன்னவன் செய்த வீரியத்தை எல்லாம்
சற்று பொழுதினிலெ வாறினார்
சீலகுண கண்ணனும் தன் சிங்கார லீலைகளை
செய்ய மனதிலெண்ணி தேரினார். (கண்.)
4. இந்திராணினாயகனை ஏளனங்கள் பண்ணிவிட
எண்ணித் துணிந்தவனை மீறினார்
தந்திரமாய் கோவர்தனம் தன்னை எடுத்துவிட
சுந்திர கோபாலனவன் தேரினார். (கண்)
5. கோவர் தன பருவதத்தை கொடுமுடியுடனெடுத்து
கைவிரலினால தனைத் தாங்கினார்
கோபால கோபியர்கள் கண்டு மகிழ்ந்திடவே கூசாமல் கையதனை ஒங்கினார். (கண்)
6. கோவர்தன குடைய தனில் கோபியர்கள் தொட்டிலிலே
குழந்தைகளை யிட்டு மே தாலாட்டிட
கோவுடனே கன்றுகளும் குடம் குடமாய் பால் சொரிந்து குதித்து குதித்து புல்லு மேய்ந்திட (கண்)
7. மகரிஷிகள் தவமிருக்க மான் கிளி மயில் குதிக்க
மந்தி எல்லாம் கொம்புகளில் தாவ
பூம்பொழில் தழைத்திருக்க புல்லுகள் செழித்திருக்க
புண்ணியன் பருவதத்தைத் தாங்கிட. (கண்)
8. ஆயசெல்லாம் மாயன் செய்யும்
அதிமானுஷ சேஷ்டிதத்தில் ஆச்சரிய பாவசராகினார்
அண்டரெல்லாம் பூஜை செய்யும் புண்டரீக பாதனென்று தெண்டனிட ஓடி வந்து கூடினார் (கண்)
9. தேவரெல்லாம் பூஜை செய்யும் தெய்வமும் நீதானுமென்று
தோத்தரித்து எல்லவரும் தேரினார்
தேவனில்லை தெய்வமில்லை தேகபந்து உங்களுக்கு சத்தியமிதென்று கண்ணன் கூறினான். (கண்)
10. அண்டரெல்லாம் புஷ்பங்களை ஆகாயத்திலிருந்து
கொண்டல்மணி வண்ணனுக்கு கோஷித்தார் கொண்டல் மழையாலடித்த கோபமுள்ள இந்திரனை
பண்டை பழி எடுத்து தூஷித்தார்.
-------------------
13-வது கட்டம்
கோபாலன் எடுத்த கோவர்த்தன குடையில் கோபர்கள்
மழை துயரம் அறியாமல் ஸூகிப்பது.
(பாலன் அருந்தவமிருந்தார் என்ற வர்ணமெட்டு).
1. கோவர் தன குடை பிடித்தார் கோகுலத்திலனைவரும்
கொண்ட துயரத்தை விடுத்தார்
தேவர்கள் அதிபதி திரமுள்ள சசிபதி
ஏவிய இடிமழைக்கிளையாமல் கண்ணன். (கோ )
2. மாடு மந்தைகளில் சென்று மகிழ்ச்சியுடனாகவே
ஓடி புல்லுக்கள் தன்னைத் தின்று
கூடியே ஆயர்கள் குழலெடுத்து திட
தேடியே மனைகளைத் திரும்பிவந்து அடைய (கோ)
3. மேகவண்ணன் மலைக்குடையில் மகிழுடன் ஆயர்கள்
சோக மழைகளை மறந்து
மோக பாவசர்களாகியே அனைவரும்
போக சயனங்களில் பொருந்தி சுகித்திருக்க (கோ)
4. தையலர் காலையிலெழுந்து
தாமோ தரனை துதிசெய்து தவிகளைக் கடைந்து
நெய்யொடு பால்களை நிதமும் கரித்து உண்ண
ஐயன் கோபாலனை அணைந்து கித்துக்கொள்ள (கோ)
---------------
14-வது கட்டம்
கண்ணன் கோவர்த்தனமெடுத்து மழையைத் தடுத்ததை
இந்திரன் அறிந்து லஜ்ஜித்துக் கூறுவது.
ஆஸுரி கேசர்க்கும் செந்தமிழுலகினில் வந்திட்ட கந்தனே நீ என்ற வர்ணமெட்டு )
1. குன்றைக் குடைபிடித்த கோபாலன் மகிமையை
இந்திரன் தானுடறிந்தான்
சிந்தை தனிலே ரொம்ப துயரமடைந்தான்.
2. பாரமலை எடுத்த பாகோபாலனவன்
மேலு மென்னை விடுனோ
இன்னு மெத்தனை க்ஷிேசெய்ய வருவானோ.
3. பண்டு அகலிகையினால் மட்ட துயரமெல்லாம்
இன்றுனினைக்கலாச்சே .....
இடையனிடம் எந்தன் பல ..........
4. மாவலியை .............
சத்து மண்ணை யளந்து கொண்ட பற்றியாமலே
மூடுவிடுத்தேன் ஏய ஈன மதியாலே
5. பூதனையை முடித்த பாலனை இப்பொழுது
போருக்கு வளைத்தேனே
அவன் திறத்தைப் பார்த்துநா னிளைத்தேனே
6. அண்டர்க் காயனென்று எண்டிசையும் புகழ
கொண்ட பெயரும் போச்சே
குறைவா யெனைக் கண்டோர் பழிக்கலாச்சே.
7. ஸொர்க்க உலகு மன்னன் தீரனென்று எந்தனை
செப்பு மொழியும் போச்சே
கோபாலனிடம் தப்பிப் பிழைக்கலாச்சே.
8. என்று பயந்துமந்த இந்திரன் புலம்பியே
சிந்தை துயரமடைந்தான்
கண்ணனடியில் வந்து சரணம் புகுந்தான்.
9. கண்ணா என் குற்றங்களை எண்ணிடாமலே நீரும்
கார்த்திடவேணுமையனே
உமக்குயிப்போ தோற்றேனேனானும் மெய்யனே.
10. என்று உரைத்துமந்த இந்திரன் புலம்பியே
சிந்தை அயரமடைந்தான்
கண்ணனடியில் வந்து சரணம் புகுந்தான்,
11. கண்ணா என் குற்றங்களை எண்ணிடாமலே நீரும்
கார்த்திட வேணுமையனே
உமக்கு யிப்போ தோற்றேனானும் மெய்யனே
12. சிந்தை நடுங்கி வந்து சரணங்கள் புகுந்த
இந்திரனுக்கிரங்கினான்
கோபால கண்ணன் அஞ்சலென்று அருளினான்.
13. கோவிந்தராஜ பட்டாபிஷேகமதனை
கொண்டல் வண்ணனுக் களித்தான்
இந்திரன் துதி பாடி பணிந்து களித்தான்
---------------
15-வது கட்டம்.
(ஆலகையோ ஸ்ரீ பாலகிருஷ்ணா என்ற வர்ணமெட்டு)
1. கோவர்த்தனகிரியை எடுத்த கண்ணா குடை பிடித்த மன்னா
கோபாலர் துயாத்தை விடுத்த கண்ணா.
2. யானைக்கருள் புரிந்த ஆயகண்ணா அன்பர் நேய கண்ணா
சோனை மாரி தடுத்த சுந்திர கண்ணா.
3. பாஞ்சாலி துயரத்தை விடுத்த கண்ணா துயில் கொடுத்த
பார்த்தனுக்கு ஸாரத்தியம் பண்ணின கண்ணா (கண்ணா)
4. ஆலிலையில் பள்ளிகொண்ட நீலகிருஷ்ண குணசீலகிருஷ்ண
அரவு படத்தில் நடனமாடிய கண்ணா
5. பூதனையை முடித்த பாலக்ருஷ்ணா கோபாலக்ருஷ்ணா
பூங்குருந்துகளொடித்த மேகவண்ணா
6. புள்வாய் பிளந்து சகடுதைத்த கண்ணா
பொல்லாத கஞ்சனுயிரெடுத்த கண்ணா
---------------
16-வது கட்டம்.
[ஓடி வாரும் க்ருஷ்ணா ஓடி வாரும் என்ற வர்ணமெட்டு.)
1. கோகுலத்தில் வாஸனுக்கு ஜெய மங்களம்
கோபியர்கள் நேசனுக்கு சுப மங்களம்.
2. எசோதையின் பாலனுக்கு ஜெய மங்களம்
இந்திரனை ஜெயித்தவருக்கு சுப மங்களம்
3. மண்ணளந்த மாயனுக்கு ஜெய மங்களம்
வெண்ணையுண்ட வாயனுக்கு வெகு மங்களம்.
4. கொண்டல் மணி வண்ணனுக்கு ஜெய மங்களம்
கோவர்த்தன மெடுத்தவர்க்கு கோடி மங்களம்.
5. அண்டர் பூஜை உண்டவர்க்கு ஜெய மங்களம்.
கொண்டல் மழை காத்தவர்க்கு சுப மங்களம்..
6. கோவர்த்தன மெடுத்தவர்க்கு ஜெய மங்களம்
கேர் குலத்தை காத்தவர்க்கு கோடி மங்களம்
7. மங்கை தெய்வனாதனுக்கு ஜெய மங்களம்
மன்னவன் கலியனுக்கு சுப மங்களம்.
8. கோவர்த்தன மெடுத்தவர்க்கு ஜெய மங்களம்.
முற்றிற்று.
This file was last updated on 24 Dec. 2021
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)