pm logo

சமுத்திரம் எழுதிய
தராசு (சிறுகதைகள்)


tarAcu (short stories)
by cu. camuttiram
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தராசு (சிறுகதைகள்)
சு. சமுத்திரம்‌


Source:
தராசு (சிறுகதைகள்)
சு. சமுத்திரம்
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017.
முதற் பதிப்பு, டிசம்பர் 2001
விலை: ரூ. 35.00
Title THARAASU
Author Su. Samuthiram
Language , Subject : Tamil : Short Stories
Edition First Edition, December, 2001
Pages_: xiv + 162 = 176
Published by : GANGAI PUTHAKA NILAYAM 13. Deenadayalu Street, TNagar Chennai - 600 017.
Price_ : Rs. 35-00
Printed at : Ragavendra Agencies, Chennai - 5
----------
மணிக்கொடியும் - மனிதக்கொடியும்
ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)

சமுத்திரம் அவர்களின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும் காரணத்தால், எனக்கும் இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று, நான் கர்வம் கொள்ளவில்லை. அல்லது சுரண்டல் லாட்டரி மாதிரி, இது ஒரு சான்ஸ் என்றும் எடை போட்டுக் கொள்ளவில்லை.

சாகித்திய அகாடமியால் கௌரவிக்கப்பட்ட நாவல் ஆசிரியரின், சிறுகதைப் படைப்பாளியின், சட்டயர் என்னும் சாட்டையால் சமூக அநீதிகளை போலீஸ் அடி' போல் உள்காயம் கொடுத்துச் சாடும் இலக்கியத் தோழரின் கதைகளைத் தொகுப்பாகப் படித்து, அவரது பரிமாணங்களின் வீச்சை காணமுடிந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன் என்பதே உண்மை.

இந்தத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகளை நான் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாததால், அவற்றில் வெளிவந்த சமுத்திரத்தின் கதைகளை நான் அனுபவிக்க முடியாமல் இருந்தது. ஆனால் மேற்படி கதைகளில் பல, இந்தத் தொகுப்பில் இடம் பெற்று பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறது.

சு. சமுத்திரம், வார்த்தைகளை எடுத்து ஆளுகிற லாகவம், வாசகர்களை அழுத்தமாக ரசிக்க வைக்கிறது.

மூத்த மகளை, அப்பா ஒரு படிக்காதவனுக்கு கட்டி வைத்தார். இளைய மகளுக்கு ஒரு சேஞ்ச்சுக்காக, படித்த மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைத்தார். அவன், மாசக் கடைசியில் சேஞ்சே இல்லாத ஆபீஸ் சூப்பிரென்டன்ட் என்று தெரிகிறது. அடிக்கிற அடியில், புளியங்காய் கொத்தாகக் கீழே விழுகிற மாதிரிதான் கதையில் கடைசி பகுதி அமைகிறது.

எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளுக்கு ஒரு பிடி சோற்றுக்கு வழி பண்ணலாயக்கில்லாத கணவன், ஆபீசில், எந்த லஞ்சத்துக்கும் மசியாதவனாக என் பொண்டாட்டி பகட்டுக்கும், சேலைக்கும் பணம் கேட்டு தாலியைக் கழட்டி எறிகிறவள் அல்ல, என்னோட... நேர்மையை தன்னுடைய தாலி பாக்கியமாக நினைக்கிறவள் என்று சொல்லும் போது மனுஷங்க இருக்க வேண்டிய இடம் எது என்கிறதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். இது கதைத் தலைப்பாக காட்டி இருப்பது சாலப் பொருத்தமே.

சொந்த வாழ்க்கையை மனித நேயத்தோடு வாழ்கிறவர் களால் தான் இலக்கியவாதியாகவும் திகழ முடியும்.

கூலிக்கும், புகழுக்கும் எழுதுகிறவன் எழுத்து நன்றாகவே விற்பனையாகும். அவை, அன்றாடம் சமையலுக்குத் தேவையான காய்கறிகள். அவையும், அவசியந்தான். ஆனால் பாரிமுனை பேனா வியாபாரியின் கிறுக்கல்களை யனார்பாடோவின்ஸியின் ஓவியங்களோடு ஒப்பிடக்கூடாது.

சமையலறைக்குள் போடா வின்ஸிகள் வராவிட்டாலும் சமையலறையில் உள்ளவர்கள், ஓவியக் கண்காட்சிக்கு போகலாம்.

ரசிக்கலாம். ஆகவே இம்மாதிரியான சிற்பங்கள் பத்திரிகை உலகுக்கு ஒரு கட்டாயத் தேவை.

சமுத்திரத்துக்கு ஒரு ராகம் உண்டு. அவரே கண்டு பிடித்துள்ள ராகம். பொருளாதாரத்திலோ, சமூக அந்தஸ்திலோ, சாதிசமயங்களிலோ அமுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு ஜடமாகி விட்டவர்களை மனிதராக்கி - மகோன்னதமாக்கிக் காட்டும் ரச வித்தையாளர்.

கொட்டாவிக் கச்சேரி செய்ய, சமுத்திர பாகவதருக்குத் தெரியாது. அன்றே, என் ஆவியும், உயிரும் குன்றே அனையாய் ஆட் கொண்டனையே என்ற மாணிக்க வரிகளில் வரும் ஆவியை ஆன்மாவை உணரச் செய்யும் கருத்துச்சேரி, இவரது கதைச் சேரி.

அனைத்துக் கதைகளிலும் சிறிதும் மழுங்கவே மழுங்காத வைர ஊசி போன்ற உறுதியான கண்ணோட்டம். சமூக சீர் திருத்த நையாண்டி, இந்த சமுத்திரத்தில் விழுந்தால் வேஷக்காரர்களின் அரிதாரம் கரைவதைத் தவிர, வேறு வழியே இல்லை .

அரசு அதிகாரிகள், அரசு சிப்பந்திகள், மேல் தட்டினர் ஹிப்போக்கிரைட்ஸ் எனப்படும் மித்யாசாரர்கள் - ஆகிய இவர்களுடைய உலகத்தில் புகுந்து, நம்மால் அடிபட முடியாது. ஆனால் அத்தகைய அடிகளும் ரணங்களும் எப்படி இருக்கும், ரணப்படுத்துகிறவர்களின் வக்கிரங்கள் எப்படி இருக்கும், ரணப் படுகிறவர்களின் சதையும் மனசும் எப்படித் துடிக்கும் என்பதை சமுத்திரத்தின் கதைகள் மூலம் அனுபவித்து விடலாம்.

கதைகளைப் படிக்கும் போதே, நமது ஆழ் மனத்தில் நல் சிந்தனைகளை மேலெழுப்பி நம்மை உயர்த்தும், உயர்ந்த சேவையை, இவரது அனைத்துக் கதைகளிலும் ரசிக்கலாம். ருசிக்கலாம். திருந்தக்கூடாது என்று பிடிவாதமான திடவாதமான மனோ இயல்பு கொண்ட மூர்க்கர்கள் கூட தங்களை அறியாமல், ஓரளவாவது பண்படுவார்கள்.

மெஸேஜ் மெஸேஜ் என்று ஏன் தேடுகிறார்கள்? தமிழகத்தில் மேஸேஜைத் தவிர என்ன இருக்கிறது? மற்றவர்களைக் காட்டிலும் சமுத்திரத்தின் திவ்ய சக்ஷக்களுக்கு

அந்த மேஸேஜ் தெளிவாகப் புலப்படுகிறது. நன்றி

ஆழ முகிழ்ந்து எடுத்த மனிதநேயத்தின் பண்பாட்டுத் தத்துவங்களை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் விநியோகிக்கும், பிரசார பிராண்டு அற்ற மனித நேய உணர்வே அவரது எழுத்துக்களின் வசீகரத்துக்கும், வாழ்வுக்கும் காரணங்களாக அமைந்துள்ளன.

புதுமைப்பித்தனிலிருந்து ஜெயகாந்தனில் இருந்து வேறுபட்ட ஓர் எழுத்து மேதை சமுத்திரம். இவரது வார்ப்புகள் மனிதக் கட்சியைச் சார்ந்தவை.

பழையவர்கள் மணிக்கொடிக் காலம் என்ற ஒன்றைச் சடங்காகக் கொண்டாடுவார்கள். சமுத்திரம், மனிதக் கொடி கால எழுத்தாளர் என்பதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது.
--------------
உங்களுடன் - ஒரு கதையாடல்...
சு.சமுத்திரம்

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் இருபது ஆண்டுகளாக பழமை உடையவை. இதுவரை இந்தக் கதைகள் நிற்கின்றன. இனிமேல் நிற்குமா என்பதை காலந்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், அந்தக்காலத்தில், வைகை ஆற்றுக்கு எதிராக நல்ல படைப்புக்கள் எதிர்நீச்சல் போட்டதாக அறிகிறோம். ஆனால், இந்தக்காலத்தில், சில இலக்கிய தலிவான்கள் உருவாக்கும் குட்டைக்குள் எதிர்நீச்சல் போட வேண்டிய அவல நிலை இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும், இந்த குட்டையும், இவற்றை அரிக்கும் இலக்கிய கொசுக்களும், மக்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமற் கல்கியை தூற்றியவர்களே இன்று அவருக்கு பல்லக்கு தூக்கும் காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கதையின் பின்னணி அனுபவங்களை பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் தொகுப்பின் முதல் கதையான தாணடி சதையாடி, ஒரு அன்பு பிரபாகத்தில் நீச்சல் அடிக்கிறது. இந்த அன்பு, பாசம் இருக்கிறதே, இவை மகத்தான மாறுவேடதாரிகள்... எங்கள் ஊர்ப் பக்கம், தன் மகனை படிக்க வைத்த ஒரு பெரியவர், அவனால் கல்லூரியில் இழிவுப்படுத்த பட்டதும், ஆண்டுக்கணக்கில், அவன் முகத்தை ஏறேடுத்துப் பார்க்கவே மறுத்தார். வெறுத்தார். ஆனால், அதே மகன் அகாலமாய் மரணம் அடைந்தபோது, சடலம் புதைக்கப்பட்ட மறுநாள் யாருக்கும் தெரியாமல், கடுகாட்டிற்கு ஓடி புதைக்குழியை தோண்டி பெற்ற மகனை பார்ப்பதற்கு முயற்சித்தார். ஆக, அன்பு ஒரு வெறுப்பு முகமுடியைப் போட்டுக்கொள்ள முடியுமே தவிர, அந்த அன்பால் தனது முகத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இந்தத்தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் முதலாவது கதை.

'நாமற்க்கும் குடியல்லோம்' எழுதப்பட்ட காலத்தில் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு பேசிக்கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் வழக்கமில்லை. ஆனால், இன்றோ தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல, இருவரும், பல இடங்களுக்கு தனியாகவே செல்கிறார்கள். அன்றைய காலத்தில் நான் எதிர்நோக்கிய, இன்றைய காலத்துப் பெண் இதில் வரும் வேதா

உண்மையில் விபவள் - இப்படி அப்பாவியாக இருக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் ஏற்படலாம். ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு, முன்பு மூதாட்டிகளாக இருந்தவர்கள், கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தார்கள். அதே சமயம், லஞ்ச லவண்யங்கள் காலத்தால் மாறுவேடம் போட்டாலும், சுயங்கள் அப்படியே இருக்கின்றன என்பதை காட்டுக்கிற கதை.

கட்டாயம் இல்லாத காதல் - நான் வசிக்கும் பகுதியில் நடந்தது. மனைவியான அக்காள் மகள், தன்னை நிராகரிக்கப்பட்ட ஒரு இளைஞனும், கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், இருவருமே தெனாலிராமன் பூனைகளாய் போனதால், இவர்களுடைய இணைப்பும் நடைபெறவில்லை. இருவருக்குமே, சட்டம், தங்களை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம். சட்டம் ஒன்றும் அப்படி பிடித்துக் கொள்ளாது என்று எனது அருமைத்தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர். செந்தில்நாதன் என்னிடம் தெரிவித்த போது, நான் ஆலோசனை கூற முடியாத அளவிற்கு, அந்தப் பெண் எங்கோ போய்விட்டாள். ஆகையால், எதிர்காலத்தில் அல்லாடும் இப்படிப்பட்ட இளம் தலைமுறையினருக்கு இந்தச் சிறுகதை வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

கா... கா... கா..... - இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒருவரைப் பற்றிய பதிவு. நல்ல மனிதர். மனதில் ஏதோ ஒரு பயப்பிராந்தி இருந்ததால் காக்காத்தனங்களில், ஈடுப்பட்டிருக்கலாம் என்று இப்போது எனது அனுபவம் கூறுகிறது. ஆனால், அப்போதோ அவரை கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதை. நல்ல வேளையாக, கதையில் நான் கொடுத்த தண்டனை அவருக்கு நேரவில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல்.

சுதந்தர மாடன் சிறுகதை, நாடு முன்னேறி உள்ள அளவிற்கு நாட்டு மக்கள் முன்னேற வில்லை என்பதை தெரிவிக்கும் கதை இப்படிப்பட்ட , பல சிறுவர்களை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். இது, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று அமைப்புகளுக்கும் இப்போதும் பொருந்தும்.

இட ஒதுக்கீடு - அல்லும் பகலும் உழைக்கும் ஒரு அரக வாகன டிரைவரை, அதிகாரிகள் எப்படி இழிவாக நடத்துகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது. அதேடிரைவர், சட்டம் பேசினால், இந்த அதிகாரிகளின் நிலைமை என்னவாகும் என்பதை கதை எடுத்து கூறுகிறது. இந்த மாதிரியான டிரைவர்களை மையப்படுத்தி, ஐந்தாறு சிறுகதைகளை பல்வேறு பார்வையில் எழுதியிருக்கிறேன். பல அதிகாரிகள் பந்தாக்களை விடமுடியாமல், டிரைவர்களை பந்தாடும்போது, அவர்களது கள்ள பயணம் வெளிப்பட்டு பந்தா பறி போய் விடுகிறது.

டிராக்டர் தரிசனம், அந்தக் காலத்து விவசாயப் புதுமை. கல்கி பத்திரிகை, இதைப் பற்றி எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க, எழுதப்பட்ட கதை. ஆனாலும், கதையில் பாதி பக்கங்களை கரையான் தின்றுவிட்டது. ஆகையால், மீதியை நான் ஒப்பேத்தி இருக்கிறேன். பழைய கவை இந்த ஒப்பேத்தலில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் , கவை குறைவுதானே தவிர சுவையற்றது அல்ல.

வினை - விதை - எதிர்கால முதியவர்களுக்கு ஒரு படிப்பினை. இந்தக் கதையே, அதை தானாகக் கூறுகிறது. பிஞ்சுப் பிராயத்தில், எந்த தாக்கத்தையும், தாத்பரியம் இல்லாமல் உள்வாங்கிக்கொள்ளும் சிறுவர் சிறுமியர்களிடம் பெற்றவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அதற்கு அன்பே அடிப்படையாக இருந்தாலும், அந்த அன்பு, பாராமுகத்தில் கொண்டு போய்விடும் என்ற அனுபவப் பகிர்வே இந்தக் கதை. இதனால், பெற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தவிர்க்க முடியாது ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டிக்காட்டும் சிறுகதை.

தலைப்புக் கதையான தராசு, முதல் தலைமுறை அலுவலர்களிடமிருந்து பெற்றோரும், உற்றோரும், மனைவியும், மக்களும் சம்திங்காக' எதிர்பார்ப்பது உண்டு. ஒரு அலுவலர் தன்னளவில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது. எளிமை இல்லாமல், நேர்மை இல்லை என்பதை குடும்பத்தினருக்கும் உணர்த்தி, அவர்களை அப்படி வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். என்னளவில் வெற்றி பெற்ற இந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாக்கி உலாவிட்டிருக்கிறேன்.

பாவலாக்கள் மூலமாகவே நமது அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்பதை மத்திய அரசு அலுவலர் என்ற முறையில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இந்த அனுபவ பின்னணியே, இந்தக் கதை. இது, இந்தத் தொகுப்பின் வாசிப்பில் ஒரு கலகலப்பு ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது.

ஒரு எழுத்தாளன், தான் படித்தறிந்த ஒரு தகவலை வைத்தும், கதை பண்ண முடியும் என்பதற்கு ஒன்றுக்குள் இரண்டு ஒரு எடுத்துக்காட்டு. ஒரே மாதிரியான மனோநிலையில் உள்ளவர்கள், ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை.

ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும்.

ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழ வாங்கல் உண்மையிலயே நடந்தது. ஆனாலும், அவரது அடாவடித்தனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான் தான் மென்மையாக கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப் பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு.

சண்டைக் குமிழிகள் பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு , தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் கமைதாங்கிகளாகவே உள்ளன. இவர்களுக்கு, சண்டைக் காலத்தில் மட்டும், எதிர்தரப்பினர்கமை தாங்கிகள். அது முடிந்ததும் ஒருவருக்கொருவர் தாங்கி கொள்வார்கள்.

இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் முதுபெரும் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள், எனது எழுத்துலக வழிகாட்டி. அந்தக் காலத்தில், குமுதத்தில், எனது கதைகள் பெரும்பாலும் வாரம்தோறும் வருவதற்கு காரணமாக இருந்தவர். வீட்டைக் கட்டிப் பார்', 'வாழ்க்கை ஒரு சமுத்திரம்' ஆகிய குமுதக் கட்டுரைகள் இன்று கூட பேசப்படுகின்றன என்றால், அதற்கு ஜ.ரா.சுந்தரேசன் அவர்களே காரணம். அந்த அளவிற்கு உட்தலைப்புகளோடு, வெளியிட்டார்.
எந்தவித குமுத பந்தாவும் இல்லாமல் என்னிடம், அன்று முதல் இன்றுவரை, இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் பெருந் தோழர். அனுமானுக்கு தன் பலம் தெரியாததுபோல் இவருக்கும் தனது இலக்கிய பலம் தெரியவில்லை . இவரது பாத்திரங்களான அப்புசாமியும், சீதாய் பாட்டியும் இன்றைய இலக்கிய தரகர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அவை இந்த இருட்டடிப்பை கிழித்துக் கொண்டு வீறுமிக்க வெளிச்சமாய் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகை இலக்கியத்தில், தனித்துவம் மிக்க படைப்பாளி ஜ.ரா. சுந்தரேசன் அவர்கள். இவரது முன்னுரை எனக்கு ஒரு இலக்கியக் கௌரவம்.

பெரியவர் திருநாவுக்கரசு அவர்களிடம், அவரது அருமை மகன் ராமு அவர்கள் மூலம் இந்த பழைய சிறுகதைகளை வெளியிட வேண்டும் என்று 'தூது விட்டேன். அவரும், உடனடியாக சம்மதித்தார். நவீனக் கதைகளே, வேலையில்லாத் திண்டாடத்தில் தவிக்கும் போது, இந்தப் பழங்கதைகளை பொருட் செலவைப் பற்றி கவலைப்படாது வெளியிட அவர் முன்வந்தமைக்கு, ஆயிரம் நன்றிகள் சொன்னாலும், அவை போதா.

இறுதியாக -

எப்போதும் எழுதும் வாசகப் பெருமக்கள், எனது அந்தக்கால சிறுகதைத் தொகுப்புகளில் எப்படியோ விடுபட்டுப்போன பழங்கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, காலத்திற்கு அடக்கமா அல்லது பொருத்தமா என்பது குறித்து ஒரு வரி எழுதினால் நன்றியுடையேன்.
----------------------
உள்ளடக்கம்
1. தானாடி... சதையாடி...
2. நாமார்க்கும் குடியல்லோம்
3. 'உண்மையில்' எரிபவள்
4. கட்டாயமில்லாத காதல்
5. கா.... கா... கா...
6. சுதந்திர மாடன்
7. இட ஒதுக்கீடு
8. டிராக்டர் தரிசனம்
9. வினை - விதை
10. பாவலாக்கள்
11. தராசு
12. ஒன்றுக்குள் இரண்டு
13. ஒரு காதல் கடிதம்
14. ஒரே பகலுக்குள்...
15. சண்டைக் குமிழிகள்
-----------------

1. தானடி.... சதையாடி....

ராசம்மா, அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த வேளை. அவள் அண்ணண்வைத்திலிங்கமும், அண்ணி வடிவம்மாவும், மல்லுக்காக சொற்களை ஆயுதங்களாய் வீசிக்கொண்டிருந்த சமயம். மாடுகளுக்காக தொட்டியில் தவிட்டை அள்ளிப் போட்டு, ஒரு பனை மட்டையால் குடைந்துக் கொண்டிருந்த தம்பி மயில்வாகனன், உலக்கையில் நெல் குத்திக்கொண்டிருந்த, தங்கை ராணியை திட்டிக் கொண்டிருந்த நேரம்....

சித்திரசேனன், தோளிலே தூக்குப் பை தொங்க, ஒரு கை டிரங்க் பெட்டியைப் பிடிக்க, உள்ளே வந்தான். ராசம்மா, அவன் பெட்டியை வாங்கவரவில்லை. குறைந்தபட்சம், கணவனின் வரவை அங்கீகரிக்கும் வகையில் எழுந்திருக்ககூட இல்லை.

வீட்டின் கொல்லைப்புறத்தில் குதிபோட்டுக்கொண்டு இருந்த எட்டு வயது மகனும், ஆறு வயது மகளும், அப்பாவைப் பார்த்து, துள்ளிக் குதித்தபடி உள்ளே தாவியபோது, ராசம்மா, அவர்களின் கைகளைப் பிடித்து, தன்பக்கம் இழுத்துக்கொண்டாள். இரு குழந்தைகளையும் இரு பக்கமும் அணைத்தபடியே கவரிலே தலைபோட்டு, அவனைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள்.

அவனை வாங்க மாப்பிள்ளை' என்று அதட்டலாகக் கூப்பிட்டாலும், அதில் அன்பை வைக்கும் ராசம்மாவின் அண்ணன் வைத்தியலிங்கம் கூட, உம்' என்று உருமினான். அதற்கு வாங்க என்று அர்த்தமா அல்லது போய்யா' என்ற பொருளா என்பது புரியாமல், சித்திரசேனன் குழம்பினான். அதற்குமேல், அடியெடுத்து வைக்க முடியாமல் நின்றான்.

அந்தச் சமயம் பார்த்து, மைத்துனி ராணியின் உலக்கைச் சத்தம் பயமூட்டும்படியும், பயமுறுத்தும் படியும் ஒலித்தது. அவள் தன்னையே தலைகீழாகப் பிடித்து, உரலில் ஓங்கி இடிப்பதுபோல், சித்திரசேனன், தனது தலையை கையால் பிடித்துக் கொண்டான். இப்படி எல்லோரும், அவனை ஏளனமாகவும், இளக்காரமாகவும் பார்த்தபோது -

வைத்தியலிங்கத்தின் வடிவம்மா, கையில் ஒட்டிக்கொண்ட அரைகுறையான மஞ்சள் மசாலா கைகளோடு ஓடிவந்து, அவன் கையில் இருந்த டிரங் பெட்டியை ஒரு கையால் வாங்கி, தரையில் வைத்தபடியே, இன்னொரு கையால் அவன் தூக்குப்பையை வாங்கி, அதிலேயே தனது மசாலா கையை துடைத்தபடி, எல்லோரையும் திட்டினாள்.

"அண்ணாச்சி ஆறுமாசத்துக்குப் பிறவு மெட்ராஸ்ல இருந்து அரையாளா வாராவ. அவிய கிட்ட வான்னு கேட்க வாய் வரமாட்டக்கோ? இதுதான் ஒங்க குடும்ப லட்சணம். நீங்க வாங்கண்ணாச்சி.... யார் பேசினா என்ன...? யார் பேசாட்டா என்ன...? நானிருக்கேன்.''

சித்திரசேனனுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. எல்லோரையும் நோட்டம் போட்டுப் பார்த்தான். அவர்கள் என்னமோ, அவனை உள்ளே வரவிட்டதே பெரியது என்பது மாதிரி, அவனைப் பார்க்காமலே, அவன் அங்கே இல்லை என்பதுபோல் இருந்தார்கள்.

சித்திரசேனன், மனைவியின் பிடியை மீறி முண்டியடித்த, தனது குழந்தைகளை குறிப்பாகப் பார்த்தபோது, ராசம்மா விம்மினாள். இரண்டு கைகளிலும் பிடித்து வைத்திருந்த மகனையும், மகளையும் சித்திரசேனன் பக்கமாகத் தள்ளிவிட்டபடியே, "போங்க. ஒப்பாகிட்டே , நீங்க பட்டபாட்டைச் சொல்லுங்க...'' என்று சொன்னபடியே முகத்தைத் திருப்பி, முன் நெற்றியைச் சுவரில் சாய்த்தபடி கேவிக் கேவி அழுதாள்.

சித்திரசேனன், குழந்தைகளை இரண்டு விலாப் பக்கமும் அணைத்தபடி, எல்லோரையும் தர்ம சங்கடமாகப் பார்த்தபோது, கவரிலே தலைபோட்ட ராசம்மா, திடீரென்று முகத்தைத் திருப்பி, அவனை முகத்தால் முட்டப்போவதுபோல் நெருங்கினாள். இரண்டு பிள்ளைகளின் முதுகுகளிலும் இரண்டு கைகளால் பட்டுப் பட்டென்று சாதிவிட்டு -

பிறகு, மகன் ஆறுமுகத்தை, குனிந்து அவன் காதை நிமிர்த்தி பின்பகுதியைக் காட்டினாள். அதில் நகப் பதியல் இருந்தது. ரத்தச் சவடு மங்கி, காது ஒட்டுப்போட்டு தைக்கப்பட்ட சதைப் பகுதி போல் காட்டியது. ராசம்மா, மகனை விட்டுவிட்டு, மகளைத் திருப்பி, அவள் பிடரியைக் காட்டினாள். அது லேசாக வீங்கியிருந்தது. அம்மா, அடிப்பாள் என்று பயந்துபோய், இன்னும் முதுகை குனிந்து வைத்திருந்த ஆறுமுகம் பயல் நிமிர்ந்தான். அடக்கி வைத்த வார்த்தைகளை ஆவேசமாகக் கத்தினான்.

"அப்பாப்பா.... சித்தப்பா...''

"ஏல்....! எவனப்போயி சித்தப்பான்னு சொல்லுதே..... நடந்தத மட்டும் சொல்லுலே..."

அந்தப் பயல், நாய்மாமன் போல் குலைத்த தாய் மாமனை பயத்தோடு பார்த்துவிட்டு, தந்தையிடம் பாசத்தோடு சொன்னான்.

"அப்பாப்பா.... அந்த துரை சித்தப்பா... தப்புத் தப்பு..... படபடத்தான்... துரை.... என் காதைப் பிடிச்சு... அந்தரத்துல அப்படியே தூக்குனாம்பா... காது ரெண்டும் பிஞ்சுட்டுப்பா.... என்கிட்டே வந்த தங்கச்சி தலையை வளைச்சுப் பிடிச்சு அடிச்சுட்டான். அம்மாவை வேற அரிவாளை எடுத்துட்டு வெட்டப் போனாம்பா. அம்மாவை கொல்றதுக்குன்னே அரிவாளை வச்சுட்டே இருந்தாம்பா."

ராசம்மாவின் அண்ணன், துண்டை எடுத்து தூரமாய் எறிந்துவிட்டு, சித்திரசேனனை பேச்சாலேயே எரித்தான்.

"ஏன் ...... அரிவாள் எடுக்கமாட்டான்? இல்லாதவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மயினிதானே.? புருஷன் சரியாய் இருந்தால், பொண்டாட்டி இப்படியா சீரழிவாள்?"

சித்திரசேனனுக்கு சற்றே கோபம் வந்தது. அதேசமயம், மச்சானுக்கு கோபத்தை ஏற்படுத்தாத அளவுக்கான கோபத்தோடு கேட்டான்.

"நான் எதுல மச்சான் சரியாய் இல்ல?"

மச்சான்காரன் வைத்தியலிங்கம், சித்திரசேனனை நெருங்கினான். அண்ணன் அக்காவின் கணவனை அடிக்கப் போகிறானோ என்று பயந்து, தவிட்டைத் அலம்பியதம்பி எழுந்தான். உரலைக் குத்திய ராணி, உலக்கையை அந்தரத்தில் பிடித்தபடி யந்திரமாய் நின்றாள். ஆனாலும் மச்சான்காரன், சிறிது இடைவெளியில் நின்றபடியே கத்தினான்.

"என்ன கேட்கீரு? எதுல சரியில்லன்னா ... நீரு எதுலயுமே சரியில்ல... ஊால் விவசாயம் செய்து பிழைக்க கரி' வலிச்சுப் போய் மெட்ராஸ் போனீரு. அங்கே போன பயலுக ஊருல சொத்து எடுக்கும் போது, நீரு ஊருல இருக்க சொத்த வித்து, கடையில் போட்டீரு. அதாவது பரவாயில்லே.... ஒம்ம அம்மாக்காரி, தான் பேரில் இருந்த வீட்ட ஒமக்குத் தராமல் .... சின்ன மகனுக்கே கொடுத்துட்டாள் . பெத்த தாயோட ஓரவஞ்சனையை தட்டிக் கேட்க ஒமக்கு துப்பில்ல... சரி, கட்டுன பொண்டாட்டியையாவது கையோட மெட்ராஸுக்கு கூட்டிப் போயிருக்கலாம். அவளையும் பிள்ளைகளையும் ஊர்ல விட்டுட்டு, மெட்ராஸைப் பார்த்து ஓடிட்டியரு ஒம்மதம்பி, என் தங்கச்சிய பேசின பேச்சையும், திட்டுன திட்டையும் ஓமக்கு லெட்டர் லெட்டராய் எழுதுனோம். ஒப்புக்கு வந்து அந்தப் பயகிட்டே பிச்சைக்காரன் மாதிரி கெஞ்கனீயரே தவிர.... மிஞ்சல."

இப்போது, தம்பிக்காரன், அண்ணணிடம் இருந்து வாய்ப் பொறுப்பை வாங்கிக் கொண்டான்.

"இப்படி நீரு... இடம் கொடுத்ததால்தான், என் அக்கா அந்தப் பயலுக்கு பயந்து வீட்டை பூட்டிட்டு இருக்க வேண்டியதாப்போச்சு... நாங்க போய் கேட்கப் போனோம். ஒங்க ஊர்ப்பயலுவ... ஒண்ணாம் நம்பர் போக்கிரிப் பயலுவ... ஊர்விட்டு ஊர் வந்தா அதட்டப் போறீங்கன்னு எங்களை அதடறானுவ... ஒரு பொம்பளைய, ஒரு முழுத்த ஆம்புள அரிவாள் தூக்கிட்டு வெட்டப்போனது பெரிசாத் தெரியல..... என் அக்காவை, கிளியை வளர்த்து பூனைகிட்டே கொடுத்தது மாதிரி ஒம்மகிட்ட கொடுத்திட்டோம்."

அண்ணன் - தம்பியரின் குரல்கள், எப்படி படிப்படியாக ஏறியதோ, அதுபோல் ராசம்மாவின் அழுகையும் கூடியது. விம்மல்கள், வெடிச் சத்தங்களாயின. தலைமுடி, தடம்புரண்டது. இதைப் பார்த்துவிட்டு தங்கைக்காரி ராணியும் அழுதாள். அது தான் சாக்கு என்றோ அல்லது இயற்கையாகவோ, உலக்கையை சுவரில் சாய்த்துவிட்டு அக்காவைக் கட்டிப் பிடித்து அழுதாள். அண்ணிக்காரியும், சுயத்தை இழக்கப் போவதுபோல் கைகளைப் பிசைந்தாள். இந்தப் பின்னணியில், மீண்டும் தவிடு கலக்கிய தம்பி, "இந்த உடம்பை வச்சுட்டு எதுக்காக இருக்கணும்?" என்று தன்பாட்டுக்குச் சொன்னான். தனது உடம்பையும் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான்.

சித்திரசேனனிடம் சினத் தீ மூண்டது. பச்சிளம் மகளின் வீங்கிய பிடரியைப் பார்க்கப் பார்க்க, அவன் முகுது நிமிர்ந்தது. சேதாரக் காதைக் காட்டிய மகனை நோக்க நோக்க, அவன் முகம் சிவந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக, அவனைப் பார்த்ததும், ஏய் யார் வந்திருக்கா பாருங்க..... அப்பாடா அப்பாடா...' என்று சொன்னபடியே , குழந்தைகளோடு முன்னால் வந்து நின்று வரவேற்கும் ராசம்மா, இப்போது அதுகளை விரட்டிவிட்டு, கணவனை ஓரம் சாய்த்துப் பார்த்தபடியே , உள்ளறைக்குள் போகிறாள். போகிற போக்கில் பார்த்தால், அவளது பளபளப்பான மிளகாய்ப் பழ மேனி, இப்போது வத்தலாகிப் போனது போன்ற தோற்றம்... கோலிகள் போன்ற கண்கள், தேய்ந்து போனதுபோல் கிடந்தன. மலை மேடான கன்னங்கள், பள்ளதாக்காய் காட்டின. மனைவியை பார்க்கப் பார்க்க -

சித்திரசேனனுக்குள் ஒரு இந்திரசித் எழுந்தான். என்றாலும், அவனுக்கு எதிராக ஒரு லட்சுமணனும் மூளைக்குள் உருவானதால், அவன் உளறியும், இடறியும் பேசினான்.

"ஆனாலும்... முச்சந்தியில்... அவள் கிட்ட அசிங்மாய்..."

"எதுய்யா அசிங்கம்...? சொந்த பொண்டாட்டிய ஒருத்தன் அரிவாளை எடுத்துட்டு விரட்டுறான். அது அசிங்கமா தெரியல? அப்படி அரிவாளை எடுத்த கையை, வெட்டாமல் இருக்கிற நீரு பேடியிலயும் பேடி, பெரிய பேடின்னு அர்த்தம். உம்மால் ஒம்ம தம்பியை அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான், நாங்களும் வரபோறோம். நீரு என்னடான்னா செத்த பிணமாய் நிக்கியரு... உடனே புறப்படும்.... ஏன், செத்தவன் கையில் வெத்தல கொடுத்தது மாதிரி முகத்த வைக்கியரு? சரி... ஒமக்கு இப்போ வேண்டியது தம்பியா....? பொண்டாட்டியா...?''

சித்திரசேனனின் இந்திரசித், லட்சுமணனை மயக்கிப் போட்டுவிட்டு, சூளுரைத்தான்.

"எத்தான்.....! இந்தத் தடவ அவனை விடப்போறதுல்ல.... இனிமேல், நான் அவனுக்கு அண்ணனும் இல்ல. அவன் எனக்குத் தம்பியுமில்ல.... சரி... எடும், வேல் கம்பை ..."

இன்னும், தொட்டியை குடைந்து கொண்டிருந்த தம்பி மயில்வாகனனை பார்த்து, அண்ணன் வைத்திலிங்கம் கத்தினான். !

"ஏல நீ பேடியா...?"

தம்பிக்காரன், தான் பேடியல்ல என்று அண்ணனுக்காவது நிரூபித்தால், அவனை எதிர்காலத்தில் பயமுறுத்த எளிதாக இருக்கும் என்பதுபோல், வேக வேகமாய் வீட்டுக்குள் ஓடி, ஒரு உருட்டை தடியை எடுத்துக் கொண்டான்.

அந்த வீட்டின் மூன்று பெண்களும் "அய்யோ... அய்யோ.." என்றார்களே தவிர, அந்த புறநானூற்று வீரர்களை தடுக்கவில்லை.

கால, எம தூதர்கள் போல், அந்த மூவரணி, ஒரு வாய்க்கால் பாலத்தின் மேல் உட்கார்ந்திருந்தது. அதிக நேரம் காத்திருக்க அவசியமில்லை . எதிர்திசையில், சித்திரசேனனின் தம்பி துரை வந்தான். ஒரு சைக்கிளில் படுவேகமாக வந்தான். இரும்பைச் செதுக்கியது போன்ற உடம்பு. எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் கண்கள்.

சித்திரசேனன், தம்பியின் சைக்கிள் முன்னால் போய் நின்றான். உடனே துரையும் ஒரு காலை ஊன்றியபடியே சைக்கிளோடு நின்றான். "எப்பண்ணா வந்தே?" என்று சொல்லப் போனவன், அண்ணனின் தோரணையையும், அவனது மச்சான்கள் பற்களைக் கடித்துக் காட்டும் பகைப் பார்வையையும் பார்த்துவிட்டு பகைப்புலத்தை, நோட்டம் போட்டபடியே, உடம்பில் கழுத்துக்குக் கீழே அசைவற்று நின்றான். அண்ணனான சித்திரசேனன், சுக்கிரீவனாகி, தம்பியை வாலி போல் பாவித்துக் கொண்டான்.

"என் பொண்டாட்டிய... எதுக்குல. வெட்டப் போனே...? ஏல படபடத்தான் ! ஒன்னத்தான்... கேட்கேன் பதில் சொல்லாமல் நீநகர முடியாது."

'வெட்டுறதுக்கு அருவாள் தூக்கிட்டா... வெட்டுவனா?

'என் பிள்ளியள் எதுக்குல காத பிடிச்சி ரத்தம் வரும்படியா திருகுன?

" என் பிள்ளியிளக்கூட திருவுறேன். உன் பிள்ளிய வேற என் பிள்ளிய வேறயா... மயினி சொல்லிக் குடுக்குற கெட்ட கெட்ட வார்த்தைவள் ஒண்ணுகூட பாக்கியில்லாம, முட்டாப் பய புள்ளிய என் மேல ஏவி விட்டு துக.... ஏதோ கோவத்துல திருகிட்டேன். பிடரியில அடிச்சுட்டேன். அதுக்காவ என் மனக என்ன பாடு பட்டுது தெரியுமா? அப்புறம் வழியில் போன உன் பிள்ளியளுக்கு, கடல மிட்டாய் வாங்கிக்கூட குடுத்தேன். அம்மாக்காரி சொல்லிக் கொடுத்தது மாதிரி, அந்த மிட்டாயை என் மேல காறித்துப்பி எறியுதுக. நெசமாவே சொல்லபோனா, அண்ணன் - தம்பியை பிரிக்கிற உன் பொண்டாட்டிய, நெசமாவே வெட்டிப் போடணும். நான் அப்படி வெட்டாம விட்டதுக்கு நீ சந்தோஷப்படணும்."

'இதே மாதிரி ஒன் பொண்டாட்டிய நான் வெட்டிப் போட்ட்டுமா?

'உன் கொழுந்தியாள நீ என்ன வேணுமுன்னாலும் செய்துட்டுப் போ. உனக்கு இல்லாத அவமானமா எனக்கு...? கண்ணால் கண்டதும் பொய்யி ... காதால் கேக்கறதும் பொய்யி... தீர விசாரிக்கிறதே மெய்யின்னு ஒரு சொலவடை இருக்கு... நீ படிச்சாதானே உனக்கு தெரியும்? இன்னும் கேட்பார் பேச்ச கேக்குற மிருகமாத்தான் இருக்கே?

'யாருல மிருகம்... இதுக்கு மேல பேசின கழுத்த கடிச்சி ரத்தத்த குடிச்சிடுவேன்.'

'ஒன் கழுத்து இருந்தா தானே, அப்படி குடிக்கதுக்கு? நீ அண்ணனா பேசல... பங்காளியா பேசுறா... நீ எத்தன தெம்மாடி பயவள கூட்டி வந்தாலும் நான் கவலப்படல்... வேணுமுன்னா பார்த்து புடலாம்.'

மச்சான்காரன் வைத்திலிங்கம், சண்டைக்கு முன்னுரையாக, ஒரு கேள்வி கேட்டான்.

"என் தங்கச்சி, இவரு பொண்டாட்டியா? இல்ல... ஒன் பொண்டாட்டியால்? இப்பவே எனக்கு தெரியணும்."

"அட போய்யா... ஒனக்கு தெரியாதா அண்ணன் பொண்டாட்டி அரப் பொண்டாட்டி... தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டின்னு ஒரு சொலவடை இருக்கு"

துரை, ஓரளவு பயந்தும், ஓரளவு இயல்பாகவும் விவகாரத்தை சாதாரணமாக ஆக்கப் போனான். அதற்குள், பெரிய மச்சான்காரன், அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில், துரையை மல்லாக்கக் கிடத்தினான். மைத்துனன் மயில்வாகனன், அவன் மார்பில் வலது காலை வைத்து ஆழப் பதித்தான். பிறகு, அதே பாத விரல்களால், அவனது மோவாயை கால் நகங்களால் குத்திக் குத்தி எதிரியின் முகத்தை மேலே மேலே நிமிட்டினான். துரை, மரண வலியில் துடித்தான். அதே சமயம், என்னை விட்டுங்க' என்று சொல்லப் போன வார்த்தைகளை கடித்துக் கொண்டான்.

நடந்ததை பார்த்துக் கொண்டு நின்ற சித்திரசேனனுக்கு, என்னவோ போல் இருந்தது. தம்பியை இடுப்பில் எடுத்ததும், தோளில் தூக்கியதும், நினைவுக்கு வந்தன. இவன் அடிக்கும் போதெல்லாம், அவனால் திருப்பிக் கொடுக்க முடியும் என்றாலும், தலைகுனிந்து செல்லும் அன்றைய தம்பி , அவன் நெஞ்சில் நிரலாடினான். ஒரு தடவை, தோட்டத்தில், கள்ளத் தேங்காய் பறித்ததாக தன் மீது குற்றஞ்சாட்டிய தெற்குத் தெருகாரப் பயல்கள் இரண்டு பேரை நோக்கி, தம்பி, அரிவாளோடு பாயந்ததும் நினைவுக்கு வந்தது. எங்க அண்ணாச்சி சம்மதிக்காம, நான் எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று அடிக்கடி சொன்னதும் கூர்மையாகக் குத்தியது.

சித்திரசேனன், மச்சான்கள் மீது பாய்ந்தான். பெரிய மச்சானை பிடரியில் இரண்டு போடு போட்டு தென் பக்கமாக உருட்டி விட்டான். தம்பியின் மார்பில் காலை அழுத்தியமைத்துனின் மார்பில் ஒரு குத்துக் குத்தி அவனை மல்லாக்க விழச் செய்தான்.

பிறகு, தம்பியை நிமிர்த்தி, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

நிலவளம் - 1990
-----------------

2. நாமார்க்கும் குடியல்லோம்

அந்தப் புத்தகம், வேதா , உதடுகளை பெருமளவு பிரிய வைக்காமல், அதே சமயம் அவற்றுக்கு இடையே ஒரு வெண்கோட்டைப் போட்டது. அந்தச் சமயம் பார்த்து டெலிபோன் மணி அடித்தது. அவள் வேண்டா வெறுப்பாய் எழுந்து புத்தகத்தை தொலைக்காட்சிப்பெட்டி மேல் வைத்துவிட்டு, கூடாரம் போன்ற முகப்பு அறையிலிருந்து உள்ளறைக்குள் ஓடியபோது, அந்த டெலிபோன் மூச்சடங்கியது. சிறிதுநேரம் அங்கேயே காத்து நின்றாள். ஒரு வேளை கட்டாகாமல் லைனில் இருப்பார்களோ என்று மீண்டும் ரிசீவரை எடுத்தாள். அதுவோ, வெறுமனே இருப்பதைக் காட்டும் வகையில் பழைய காலத்து கிறிஸ்துவப் பாடல் போல ஒலித்தது.

வேதா, மீண்டும் முகப்பறைக்குள் வந்து அந்தப் புத்தகத்தைப் பிரித்தாள். பெரும்பாலும் ஆண்மையற்றவனே மனைவியைச் சந்தேகிப்பான். அதேபோல் சில பெண்கள் சிடுசிடுவென்று இருப்பதற்கு அவர்கள் இல்லற சுகத்தில் ஏமாற்றமுற்றதே காரணம் என்ற வரிகளை எந்தப் பக்கத்தில் படித்தது என்பது புரியாமல் பக்கங்களைப் புரட்டினாள். கல்யாணமான தோழியிடமிருந்து ரகசியமாக வாங்கிய புத்தகம். எப்படியோ அந்த வரிகளைக் கண்டு பிடித்த அவள், சிறிது சிந்தித்தபோது, மீண்டும் டெலிபோன் ஒலித்தது. அவள் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே முனங்கிக்கொண்டு நடந்தாள். டெலிபோனை எடுத்தால் மீண்டும் வெறுமனே ஒலித்தது. பழையபடியும் புத்தகத்திலிருந்து கண்ணை நகர்த்தாமல், அவள் நடந்தபோது, மீண்டும் அது ஒலித்தது. முன்பு மாதிரி மிட்டாய்க்காரர் மணி மாதிரி அடிக்காமல், ஆலயமணி போல் தொடர்ந்து ஒலித்தது. அவள் அதைப் பொருட்படுத்தாமல் புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்தாலும், அந்த டெலிபோன் ஒலியும் விடப்போவதில்லை என்பதுபோல் அடித்துக் கொண்டே இருந்தது. டெலிபோன் செய்த எதிர்முனை ஆளை அவள் மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டு நிதானமாக நடந்து, அதன் குமிழை எடுத்து, எதிர்தரப்புக் குரல் கேட்கும் முன்பே தன் குரலைத் தாவவிட்டாள்.

"ஹலோ... என்ன... யார் பேசறதா? முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க.... இது என்னடா வம்பா போச்சு? நான் யாருன்னு உங்களுக்கு எதுக்காகத் தெரியணும்? நீங்க யாரு?"

அவள், டெலிபோன் குமிழை முகத்துக்கு நேராக, மைக் மாதிரி பிடித்துக்கொண்டு யோசித்தாள். அந்தக் குமிழோ நேருக்கு நேர் பேசுவது போல் "ஹலோ, ஹலோ, நான்தான், நான் தான்" என்று கத்தியது. அப்படியும் அவள் மசியவில்லை . பல வீடுகளில் சம்பந்தா சம்பந்தாமில்லாதவர்கள் டெலிபோன் டைரக்டரிகளைப் பார்த்துசில எண்களைச் சுழற்றி அப்பாவி பெண்களின் வாய்களைக் கிளறுவார்களாம். ஒரு சில பெண்கள் கூட இப்படிப்பட்ட டெலி போன்களால் ராங் நம்பராகியிருப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறாள்.

அவள் மின்னல் வேகத்தில் சிந்தித்தாள். எதிர்முனைக் குரல் ஆண்குரல் கேட்ட குரல் மாதிரி ஒலித்தாலும், அது கெட்ட குரலாகவும் இருக்கலாம். அந்தக் குரலோடு பேச்சுக் கொடுத்து டெலிபோன் நம்பரை வாங்கி போலீசுக்கு புகார் செய்யலாமா? இப்படித்தான், அவள் அலுவலகத்தில் ஒருத்தியுடன் அத்துமீறி டெலிபோனில் பேசியவனை மாட்ட வைத்தாள். ஆனால், அந்தப் பயலோ, தனக்கும், தான் டெலிபோன் செய்த பெண்ணுக்கும் ஒரு 'இது' இருந்ததாகச் சொல்லித்தப்பிக்கப் பார்த்தான். இந்த மாதிரி தனக்கும் வரக்கூடாது. அதுவும் கல்யாணம் நிச்சயித்த பிறகு.

இதற்குள் டெலிபோன் வாய் அலறியடித்துக் கதறியது. "ஹலோ.. ஹலோ.. ஒன் மினிட் பிளீஸ்.... நான் சொல்றதக் கேளுங்க ப்ளீஸ்.... ஒன் மினிட் பிளீஸ்.. நானே நான் தான்.....

வேதா எதிர்முனைக்காரன் முகத்தில் அறைவதுபோல், டெலி போனை வைக்கப் போனாள். அப்படி வைத்தால், மீண்டும் டெலி போன் செய்வான். என்னதான் செய்திடுவான்? அதையுந்தான் பாத்திடலாமே.... அவள் , டெலிபோன் வாயைக்காதில் வைத்துக் கேட்டாள்.

"யாருங்க... சஞ்சையா? நெசமாவா? நானா? நான்தான்..... நானேதான். நீங்க..."

அவளுக்கு ஒரு பயம். வேறு எவனோ ஒருவன் போன புதன் கிழமை வீட்டில் நடந்ததைக் கண்டறிந்து, இப்படிப் பேசலாமே?... அவள் உஷாரானாள். பேசுவது சஞ்சய்தான் என்று கிட்டத்தட்ட உறுதியானாலும், மிமிக்கிரி கலையில் கைவந்தவர்கள் இருப்பதைக் கணக்கிலெடுத்து "உங்க டெலிபோன் நம்பரைச் சொல்லுங்க. நான் ரிங் பண்றேன்.... ஃபோர்செவன்.... நோ... உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமில்ல... ஒருத்தர் கொடுக்கிற ரூபா நோட்டுகளை எண்ணுகிறோமுன்னா, அவர்மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமா? எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான் - ஓகே. போனை வையுங்க... மூணு நிமிஷத்தில் கூப்பிடறேன்...' என்றாள்.

வேதா, பதட்டப்பட்டாள். பரவசப்பட்டாள். அங்கேயே இருந்த தனது கைப்பையை, எங்கெல்லாமோ போய்த் தேடினாள். தம்பி, தங்கைகளை திட்டினாள். பிறகு டெலிபோன் மேஜைப்பக்கமே, அது இருப்பதைப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே செல்லமாகத் திட்டிக்கொண்டு, அந்தப் பையின் வாய் மூடிய ஜிப்பைத் திறந்து உள்ளே குடைந்தாள். வழுவழுப்பான கண்ணாடி மாதிரியான ஒரு விசிட்டிங் கார் கார்டில் மூன்று வரிசைகளில் முத்து முத்தான டபுள் கலர் எழுத்துக்கள். சஞ்சய், கம்ப்யூட்டர் இன்ஜினியர்... அதே நம்பர்.

வேதா , டெலிபோன் நம்பர்களை ஒவ்வொன்றாய் அழுத்தினாள். அவசரத்தில் நான்கு ஐந்தாகிவிட்டது. யாரிடமோ திட்டு வாங்கினாள். பிறகு அவசரப்பட்டாள். அய்யயயோ... தப்பா நினைப்பாரே... மூணு நிமிஷம் பத்து நிமிஷமாயிட்டே.... நான் உதாசீனம் செய்யுறதா நினைச்சிடப்படாதே... சே... இப்ப பார்த்து ஒரு டெலிபோன்... ஒரு வேளை அவரா?... யாரு? கமலாவா? நான் வேதா இல்ல... எத்தனை தடவை சொல்றது... ராங்க் நம்பர்..... வையுங்க போனை"

வேதா, சத்தம் போட்ட டெலிபோனை - அதன் கழுத்தை, தனது மனச்சாட்சியை நெறிப்பதுபோல் நெறித்து, கீழே வைத்தாள். மீண்டும் எடுத்தாள். "அப்பாடா.... நல்லலவேளையா லைன் கெடச்சிட்டு.....

"ஹலோ... சஞ்சயா.... ஸாரி... மிஸ்டர் சஞ்சயா? ஏன் அப்படி கேட்கிறீங்க....நான் வேதாதான் பேசுறேன். வீட்ல யாருமில்லை.... என்ன விஷயம்?... ஸாரி... நான் ரூடாய் பேசலை.... அப்பாக்கிட்ட ஏதாவது பேசணுமான்னு கேக்கத்தான் அப்படிக் கேட்டேன்.... அப்பாவா? அவரு , அம்மா, அண்ணி எல்லாரும் எனக்கு நகை வாங்கப் போயிருக்காங்க. அவங்ககிட்ட ஏதாவது சொல்லணுமா? என்ன சொல்றீங்க....? உங்களைப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பெரியவங்க நிச்சயம் செய்ததை கட்டித்தானே ஆகணும்? நோ. நோ.... இந்த மாதிரி பேசுறது முறையா? அதுவும் இப்பவே... ஸாரி.. என்கிட்ட தப்பாகக் கேட்டிங்கன்னு சொல்லலை... அதுக்கு நான் பதில் சொல்றதுதான் தப்புன்னு சொல்ல வந்தேன். சரி... சரி.. ஆம்..

அதுக்காக...'

வேதா, டெலிபோன் குமிழை கன்னத்தில் உரசியபடியே யோசித்தாள். அவனின் ஹலோ ஹலோ குரல், அவள் கன்னத்தில் அவன் உதடுகளாய் உரகவது போல் கூச்சப்பட்டாள். டெலிபோனை மீண்டும் காதுப்பக்கம் கொண்டு போனாள். அவன், அவள் காதுக்குள் வாயை வைத்து கிக்கிகப்பது போன்ற உணர்வு... அந்த உணர்வின் வளர்பிறையான நாணம்... அது தூண்டிவிட்ட சிந்தனை, தனக்குள்ளயே இப்படி மௌனமாக, உதட்டை

அசைக்காமல் மனதுக்குள்ளயே பேசிக் கொண்டது.

'இப்படி பேசுறவர்கிட்ட எப்படி பேசுறதாம்? அவரை மாதிரி என்னால் வர்ணிக்க முடியுமா? ஆனாலும், நல்ல ரசிகர்தான்... என் அழகைவிட தோரணை ரொம்ப பிடிச்சிருக்காமே.... அப்போ நான் அழகில்லாதவளா? 'அப்புறம்' கவனிச்சுக்கலாம். அவர தலைகுனிந்து பார்க்காமல் நேருக்கு நேராப் பார்த்தது அதிகமாப் பிடிச்சுப் போச்சாம்..... இவரு மட்டும் என்னவாம்? சூட்டு, கோட்டுன்னு அமர்க்களப்படுத்தாமல் சாதாரண உடைக்கே எவ்வளவு கம்பீரம் கொடுத்தார்? ஒவ்வொரு கேள்விக்கும் அதை உள்வாங்குவது போல் அவர் முகம் காட்டிய கம்பீரமும், அதற்குப் பதிலளிக்கும்போது முகத்தைக் குழைத்த இனிமையும், பேசும்போது குறுக்கிட நினைத்துபோல் ஆள்காட்டி விரலைத் தூக்கி முகத்தை நிமிர்த்தி, பேக்கிறவரை தனது பேச்சால் முறியடிக்காமல் பேசியவரின் கவனத்தைக் கவர கையாண்ட நளினிமான உத்தியும் - எல்லாவற்றிற்கும் மேல் அந்த ஆளுமையான தோற்றமும்....

வேதா, அதிக நேரம் சிந்திக்க அவகாசம் கொடுக்காமல் கன்னத்தில் உரசிய டெலிபோன் குமிழை வாயருகே கொண்டு வந்து, சிறிய உதறலோடும், உற்சாகத்தோடும் தத்தித் தத்திப் பேசினாள்.

"நீங்க பிடிக்காட்டி இப்படிப் பேசுவனா? நீங்க சொல்லிட்டீங்க. நான் சொல்லலை. என்ன குரல் நடுங்குதா? நோ.. நோ. பதிபக்தி இல்லை ... பயபக்தி. ஆமா... நானும் கவிதை எழுதியிருக்கிறேன். சரி... வச்சுட்ட்டுமா? என்னடா இது. ஸாரி உங்களை டா போடலை. எவ்வளவு நேரமா பேசுறதுன்னு சொல்ல வந்தேன்.... வாட்? ஒரு நிமிஷம் பெர்மிஷன் கொடுக்கணுமா? சொல்லுங்க....

வேதா, லேசாய் சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு அலையலையாய் அந்த டெலிபோன் குமிழுக்குள் பாய்ந்து, துள்ளிக் குதித்து, ஒளி வேகத்தில் மாறுவேடம் போட்டு, மீண்டும் ஒலியாய் மாறி, எதிர்தரப்புக் காதில் உரசியது. அந்த உந்து சக்தியில், அவன் பேசப் பேச , இவள் 'உம்' கொட்டினாள். தொலைக்காட்சியிலும் சில திரைப்படங்களிலும் பேச்சுக்களுக்கு இடையே 'விஷுவல்கள்' வருமே, அப்படி அவன் பேசியதை உருவகப்படுத்திப் பார்த்தாள்.

மணப்பந்தலில் கிள்ளுக்குப் பதில் கிள்ளு, பார்வைக்கு எதிர்ப்பார்வை, சிரிப்புக்கு புன்னகை.... வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசை என்ற பெயரில் நடைபெறும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், இவள், தனது தோழிகளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்கள், அவனை அண்ணாந்து பார்த்துவிட்டு, இவள் கையை பலமாகக் குலுக்கும் போது, குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள். அப்புறம் முதலிரவில் ... அதற்கு மேல் அவள் சிந்திக்க நாணப்பட்டாள்.

எதிர்முனைக்காரனும் அந்த விஷுவல் காட்சியை ரசித்தபடியே ஒரு கேள்வி கேட்பது போலிருந்து. அவள், வேகவேகமாய் பதிலளித்தல்:

"நான் ஒண்ணும் பராக்குப் பார்க்கலை. நீங்க பேசற பேச்சை கேட்டுட்டுத்தான் இருக்கேன். சாரி... போனை வையுங்க... எங்கப்பா வாரார்... மொதல்ல நீங்க கட் பண்ணுங்க... எனக்கு கட் பண்ண மனசு வர மாட்டேங்குது. அய்யய்யோ ... இன்னும் ஒரு நிமிஷமா. அப்பா ரெண்டு நிமிஷத்திலே வந்திடுவார்.... ஆமாம்... அந்த கவர்மெண்ட ஆபீஸ்ல ஸ்டெனோ கிராபராகத்தான் இருக்கேன். ஆபீஸர் அறைக்குள்ள அப்பப்போ போய்த்தான் ஆகணும்.... டெலிபோன்ல கனெக்ஷன் வாங்கித்தான் கொடுக்கணும். இது எப்படி எடுபிடி வேலையாகும்? ஆபீஸர் , அவரு வேலையைப் பார்ப்பார். நான் என் வேலையைப் பார்ப்பேன்... இதில் என்ன கேவலம் ? எப்படிங்க முடியும்? சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கஷ்டப்பட்டு வாங்கின வேலை. உங்களுக்கு , ரெண்டு மாருதி கார் இருக்கட்டும்... ஒரு பங்களா இருக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு வேலையை விடணும்? என்ன... யோசித்துப் பார்க்கணுமா? இதுல யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லையே...."

ஆனாலும், வேதாடெலிபோன் வாயை நெற்றிப்பொட்டில் வைத்து லேசாய் அடித்தபடியே, அவனுக்காக மட்டுமே யோசிப்பது போல் யோசித்தாள். அப்படி யோசிக்க யோசிக்க, அவள் உறுதி வைரப்பட்டதே தவிர, பித்தளையாகவில்லை. இப்போது உரத்த குரலில் பதிலளித்தாள். நாணமும், பெண்மையும் நாய்களாய் ஓட, அவள் திட்டவட்டமாய்ப் பேசினாள்:

"ஸாரி ஸார்... என்னால் வேலையை விட முடியாது. உங்களோட இருந்தாலும் நான் சொந்தக்காலில் நிற்கவிரும்புறேன் - குடும்பத்துக்கு மட்டுமில்ல, சமூகத்திற்கும் பயன்படுறோம் என்கிற சந்தோஷத்தை அனுபவிக்க விரும்பறேன்... இதனால் தன்னம்பிக்கை ஏற்படுது... இப்படித் தன்னம்பிக்கை ஏற்படுற ஒருத்தியாலதான் கணவன்கிட்ட தூய்மையான அன்பைச் செலுத்த முடியும். இல்லாவிட்டால், அந்த அன்பே ஒரு கலப்படமாகும். என்ன ஸார் உளறுளீங்க.. வீட்டில் புருஷன் உசத்தி. ஆபிஸ்ல மேலதிகாரி ஒசத்தி... இதுக்கு ஏன் முடிச்சுப் போடுறீங்க? வேலையை விடமுடியாதுன்னா முடியாது... ஓகே. கட்டிக்காட்டாப் போங்க. இப்ப நானே ஒங்களை மறுபரிசீலனை செய்திட்டிருக்கேன். நாமார்க்கும் குடியல்லோம்... ஆனாலும் ஒரு சின்னரிக்கெஸ்ட் இந்த நாட்ல பொண்ணு பிடிக்கலன்னு மாப்பிள்ளை சொல்ல முடியும். ஆனால், மாப்பிள்ளை பிடிக்கலைன்னு பொண்ணு சொல்ல முடியாது. அதனால்... அதோ எங்கப்பா வரார். நீங்களே சொல்லி டுங்க... பொண்ணுபிடிக்கலைன்னு சொல்ல எத்தனையோ காரணம் இருக்கே. உங்களுக்கா தெரியாது? நான் வேலையை விடமாட்டேன்னு சொன்னதாய் மட்டும் சொல்லாதீங்க. மொட்டைக் கடுதாசி... அழகில்லை... இப்படி எதையாவது சாக்குப் போக்கா சொல்லுங்க... இதோ எங்கப்பாவே வந்துட்டார்.... நீங்களே சொல்லுங்க...''

பேச்சின் கடைசி வார்த்தைகளை, ரகசியமாகவும் ஆழமாகவும் சொன்ன வேதா, அந்த டெலிபோன் குமிழை மேஜையில் கிடத்திவிட்டு, முகப்பறைக்கு வந்து கதவைத் திறந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்ற தந்தையிடம் பற்றற்றக் குரலில் - அதே சமயம் பாரம் விலகிய ஆறுதலில் சொன்னாள்:

"எப்பா - உங்ககிட்ட யாரோ பேசணுமாம்... லைன்ல இருக்காங்க"

- செம்மலர் - 1980
----------

3. 'உண்மை 'யில் எரிபவள்'

ஊரின் பொதுவிடமான பிள்ளையார் கோவில் முகப்பில், பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருமே, அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உட்கார்ந்திருக்க, சின்ன மனிதர்கள் என்று கருதப்படுகிறவர்கள், அங்குமிங்குமாக நின்று கொண்டிருந்தார்கள். பெரிய மனிதர்கள் வந்து விட்டார்களே தவிர, மகாப் பெரிய மனிதர்கள் இன்னும் வரவில்லை. எப்போது வரவேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த அந்த உள்ளூர் லேட்' தலைவர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார யாருக்கும் தைரியம் வரவில்லை. ஒரு நாற்காலியில் உட்காரலாமா என்பது மாதிரி அதன் விளிம்பில் கைவைத்த ஒரு "முன்னாள்" தலைவரை பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு இந்நாள்' தலைவர் பார்த்த பார்வையில், பார்க்கப்பட்டவர், நாற்காலியில் அழுக்குப் படிந்திருப்பதை பாரர்த்து விட்டு , மனம் பொறுக்காமல் துடித்ததற்கு அத்தாட்சியாக தன் துண்டை எடுத்து அதைத் துடைத்தார்.

இதேபோல சின்ன மனிதர்கள்தான் அங்கே நின்றார்களே தவிர, மகா சின்ன மனிதர்களை அங்கே காணவில்லை. வரவேற்பு வளைவை கட்டுவதிலும், தரிசனம் தரப்போகிற அதிகாரிகளுக்கு ராஜ நாற்காலிகளைத் தூக்கிப் போடுவதிலும், தின்பண்டங்களை தயாரிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். இன்னொன்று. இந்த மகாசின்ன மனிதர்களில் - பெரும்பாலோர், வயல்வரப்புக்களில் குளத்து மேடுகளில் அல்லாடிக் கொண்டிருக்கிறவர்கள்.... அவர்கள் வரவில்லை . ஏன் வரவேண்டும்? அவர்களுக்குத்தானே அதிகாரிகள் வருகிறார்கள் !

ஆயிற்று.

எல்லாம் வந்துவிட்டன. எல்லாரும் வந்துவிட்டார்கள். ஜீப் சத்தத்தைத்தான் காணவில்லை. அந்தக் காலத்து விருந்தோம்பல் பொருட்களாக, நுங்கிற்குப் பதில் "ஐஸ் கிரீம்கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இளநீர்களுக்குப் பதில், 'பேண்டாக்கள்... பதனீருக்குப் பதில், 'பாம்கோலாக்கள் ' ஒரு கூடை நிறைய பூமாலைகள்... அவற்றின் மேலே செண்டுகள். அவற்றிற்கும் மேலே எலுமிச்சம் பழங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலே எலுமிச்சைப் பழம் மாதிரி கண்களைத் துருத்திக்கொண்டு, ஊர் முனையையே பார்த்துக் கொண்டிருந்த பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், புதிய தலைவராக வரத்துடிக்கும் கனகலிங்கம், பள்ளிக்கூட மானேஜர் இசக்கி முத்து, கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள், பிராஞ் போஸ்ட்மாஸ்டர்ராமசுப்பு நாட்டாண்மை பெருமாள் முதலிய மகாப் பெரிய மனிதர்கள், நாற்காலிகளில் உட்கார முடியாமலும், எழுந்திருக்க முடியாத நிலையிலும் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

"பால் ரெடியா இருக்கா" என்றார், பழைய பஞ்சாயத்து.

"பேசாமல் டவுனிலிருந்து ஆவின்' பாலே கொண்டு வந்திருக்கலாம்" என்றார் புதிய பஞ்சாயத்து.

"ரெண்டும் இருந்தாலும் தப்பில்லியே" என்றார் பழைய கர்ண ம்.

"இல்லாவிட்டாலும் தப்பில்லை” என்றார் பதவி போனாலும், காணத்திடம் உள்ள பகையை மறக்காத பழைய முன்சீப்.

"பாலு பத்தாதுன்னு நினைச்சேன். ஏன்னா, ஒரு வேளை.... ஆர்.டி.ஓவும் வரலாமுன்னு தாசில்தார் என்கிட்டே சொன்னார்" என்றார் பழைய பஞ்சாயத்துத் தலைவர்.

"டி.டி.ஓ.வும்' (டிவிஷனல் டெவலப்மெண்ட் அதிகாரி ) வரலாமுன்னு பீ.டி.ஓ.' என்கிட்ட சொன்னார்" என்றார் பஞ்சாயத்தின் எதிர்காலம்.

அதிகாரிகளின் பதவிப் பெயர்களைவிட, என்கிட்ட' என்ற வார்த்தைக்கே, இருவரும் அதிகம் அழுத்தம் கொடுத்து, அங்கேயே முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குவது போல் தோன்றியது. இந்தச் சமயத்தில், ஒரு இடக்கு - மடக்குவாதி " எதுக்கும்... நிறைய பாலு வாங்கி வைக்கலாம்... சர்க்கார் போல் அவங்க குடிக்க வராவிட்டால்.... அவங்க போல நாம குடிக்கலாம்" என்றார் - நாக்கைச் சப்பிக்கொண்டே, பிறகு " அப்போ மட்டும் நமக்கா இந்தப் பயலுவ பால் தருவாங்க..... நாற்காலியில் ஒக்காந்திருக்கிறவங்க. ஒரே மொடக்கா குடிச்சுப்பட மாட்டாங்களா என்ன..." என்று நினைத்தவர்போல், உதட்டைத் துடைத்த நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார்.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர, ஜீப்சத்தம் கேட்கவில்லை. அந்த ஊருக்குள் எந்த ஜீப்பும் நுழைவதற்கு முன்னால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே, இழவு மேளம் மாதிரி சத்தம் கேட்கும். எதிரொலி கொடுக்கும் வகையில் பாறைகளை ஊர் உள்ளடக்கி வைத்திருப்பதே காரணம். இன்னும் சத்தத்தையே காணோம். எப்போ வந்து..... எப்போ பேசி....

தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தின் கீழோ அல்லது மனு நீதித் திட்டம் என்ற ஒன்றின் கீழோ , ஏதோ ஒன்றின் கீழ், பெரிய அதிகாரிகள் அன்று ஊருக்கு வந்து முகாம் போட்டு மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து, முடிந்தால் அங்கேயே ஆவன செய்யவேண்டும் என்பது ஏற்பாடு. இதற்காக எப்பாடு பட்டாவது அதிகாரிகள் வரப்போகிறார்கள். நோட்டீஸ் அச்சாகி விட்டது. அது போதாதென்று தண்டோரா போட்டு காற்றுப்புறமெங்கும் சொல்லி யாகிவிட்டது. அதிகாரிகள் வந்த பிறகு, கிராமத்தில் தேனும் பாலும் ஓடும் என்று சொல்லியாகிவிட்டது. சொன்னதுக்கு ஏற்ப பால் (அதிகாரிகளுக்கு காய்ந்து கொண்டிருந்தது. தேனுக்குப் பதிலாக, கேசரி புரண்டு கொண்டிருந்தது. இன்னொரு பிரமுகர் வீட்டில், கோழிகள் சதை சதையாக வெந்து கொண்டிருந்தன.

திடீரென்று வண்டி வரும் சத்தம் கேட்டது. பெரிய மனிதர்கள் எழுந்து நின்றார்கள். மிகப்பெரிய மனிதர்கள், நான்கடி

தூரம் முன்நோக்கி ஓடிப்போய் நின்றார்கள். சின்ன மனிதர்கள், சிறிது ஒதுங்கி நின்று கொண்டார்கள்.

வந்தது வண்டிதான். காண்டிராக்டர் துரைச்சாமியின் மோட்டார் பைக் . வரும்போதே இதோ வந்துக்கிட்டே இருக்காங்க' என்று சொல்லிக்கொண்டே, வண்டியை அவர் ஓடித்த வேகத்தில், சற்று தொலைவில், போட்டிக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த எருமை மாடுகள் கூட , ஜீப்பை வரவேற்கப் போவதுபோல், ஊர்முனையைப் பார்த்து ஓடின. புதுப்பணக்காரரும், ஒரே சாதியில் "இரப்பாளிவம்சத்த" சேர்ந்தவருமான காண்ட்ராக்டரமாசானம், ஒரு நாற்காலியில் உட்காரப் போனபோது, சில பெரிய மனிதர்கள், வெற்றிலைச் சாரை வெளியேற்றும் சாக்கில் தூ என்றார்கள்.

எல்லோரும், ஜீப்பை எதிர்பார்த்து, கண்களை காக்க வைத்தபோது, நான்கைந்து பேர் தலைகளில் விறகுக் கட்டோடும். புல்லுக்கட்டோடும் வந்து கொண்டிருந்தார்கள். எந்தப் பயல்கள் வந்தாலும் நம்ம பொளப்பு மாறப்போறதில்ல. சீக்கிரமா நடங்கடா என்று ஒரு நடுத்தர விவசாயத் தொழிலாளி முணுமுணுத்தபோது 'தலைக்கட்டு கூட்டம் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், தலையில் விறகை வைத்திருந்த முனியம்மா மட்டும், அங்கே யாராவது விறகு வாங்குவார்களா என்று நினைத்ததுபோல், நெற்றியில் வழிந்து, கண்களுக்குக் விழப்போன வேர்வையை, வலது கை ஆள்காட்டி விரலால் கண்டி விட்டுக்கொண்டே, எம்பிப் பார்த்தாள். அறுபது வயதுக்காரி ; விதவை. சொந்த பந்தம் இல்லாதவள். அவளைப் பார்த்துவிட்ட கண்டிராக்டர் மாசானம், "முனியம்மா... செத்த நேரம் நில்லு... ஒனக்கும் நல்ல காலம் பிறக்கப்போகுது...” என்றார்.

'எனக்கா' என்பது மாதிரி, அகலவாய் பிரித்து அவள் பார்த்த போது, திசைமாறிய தலையில் விறகுக்கட்டு தடுமாறியது. காண்டிராக்டர் கண்களைச் சிமிட்டிக் கொண்டே பேசினார்.

"ஆமாம் பாட்டி... அதிகாரிங்க ஊர்ப்பிரச்சினையைத் தீர்க்க வராங்க. ஒனக்கு முதியோர் பென்ஷன் கொடுக்க ஏற்பாடு பண்ணலாம். தாசில்தார்கிட்ட நீயும் சொல்லு. நானும் சொல்றேன்..."

இரண்டு மூன்றுபேர், மாதா மாதம் ஏதோ பணம் வாங்கப் போவதாகக் கேள்விப்பட்டிருந்த முனியம்மா, விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு, அதன் மேலேயே உட்காரப் போனாள். பிறகு அப்படி உட்காருவது அவள் செய்யும் தொழிலுக்கு மரியாதைக் குறைவானது என்று நினைத்தவள்போல், கிழிந்த புடவையை கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டே நின்றாள். பெரிய மனிதர்களில் ஒருவர், காண்டிராக்டரின் விலாவில் இடித்து, "ஒமக்கு தராதரம் தெரியமாட்டக்கே" என்றபோது, காண்டிராக்டர் "சொம்மா கிடயும்... மந்திரிங்க எல்லாம், 'டவுன் டிராடன்' - அதாவது ஏழைபாளை ஏழைபாளைன்னு பேசுற காலம். நாமும், ஊர்க்கூட்டத்தில் ஏழைகபாளைங்கள் சேர்த்திருக்கோமுன்னு தெரியாண்டாமா?" என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேசப்போனவர் திடீரென்று எழுந்தார்.

ஜீப் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஜீப் தெரிந்தது. அடேயப்பா... ஒரு ஜீப் அல்ல. நான்கைந்து ஜீப்கள் வந்தன. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு அதிகாரிகள்.....

முன்கூட்டியே , முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய வீட்டுச் சின்னப்பிள்ளைகள், அதிகாரிகளுக்கு, சந்தன தட்டையும், வெள்ளைக் கற்கண்டு தாம்பாளத்தையும் காட்டின. அதிகாரிகள் பூசிக் கொண்டும், மென்று கொண்டும் ராசாதி ராச கம்பீரமாய் தயாராக இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரியின் மேல், மானேஜர் கண்களை விட்டார். இதேபோல் டெவலப்மென்ட் ஆபீசரமேல், இரண்டு பஞ்சாயத்து போட்டிப் பிரமுகர்களும், டெப்டிரிஜிஸ்டிரார்மேல், கூட்டுறவு சங்கத் தலைவரும், மாவட்ட சிறு தொழில் அதிகாரிமேல் உள்ளூர் பீடித் தயாரிப்பாளர்களும், என்ஜினீயர் மேல் காண்டிராக்டரும், தத்தம் கண்களைச் செலுத்தினார்கள். அவர்கள் பக்கத்தில் போய் உட்கார இடம் கிடைக்குமா என்பது மாதிரி தாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளை தள்ளிக்கூடப் பார்த்தார்கள். மாவட்ட குடும்பநல அதிகாரிமீதுதான், யாரும் கண்வைக்கவில்லை. அவர்தான், கேஸ் கிடைக்குமா என்பது மாதிரி சற்று தொலைவில் வயிறு உப்பிய பெண்களைப் பார்த்தார்.

சிறிது மௌனம்.

வரவேற்பு நிகழ்த்துபவர்போல், பழைய கூத்தாடியும், இன்றைய பண்ணையாருமான ஒருவர், "ராமன் கால்பட்டு, அகல்யைக்கு விமோசனம் வந்ததுபோல், ஒங்க கால்பட்டாவது இந்த ஊருக்கு விமோசனம் வரட்டும்" என்றார். அவர் சொன்னது சரிதான் என்பது மாதிரி ஊர் பிரமுகர்கள் அத்தனை பேரும் கல்மாதிரி இருந்தார்கள்.

முனியம்மாவுக்கும் மகிழ்ச்சி அதிகரித்தது. ஆபீசர் எஜமான்கள் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்தால், அவளுக்கும் முதியோர் பென்ஷன் கிடைக்கும் என்று நம்பினாள். பணம் மாசா மாரசம் வருமாமே.... எப்படியோ..... இந்த விறகு வெட்டுற வேலைய நிறுத்தணும். கழிசடத் தொழில். சீ... அப்டில்லாம் பேசப்படாது. பணம் வருதுன்னு கண்ணு மண்ணு தெரியாம ஆடப்படாது. விறகு வெட்டுறது கஷ்டமுன்னால், புல்லாவது வெட்டணும்."

அதிகாரிகள் அந்தஸ்து எப்படி இருந்தாலும் அதிக அதிகாரங்களைவைத்திருந்த ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர், "சரி... பட்டுப்பட்டுன்னு ஒங்க குறையைச் சொல்லுங்க" என்றார்.

உடனே ஒரு பிரமுகர் , "பள்ளிக் கட்டிடத்துல மழைவந்தால் ஒழுகுது. வேற ஒன்று கட்டிக்கொடுக்கணும்” என்றார். இதற்குப் பதிலளிப்பது போல் மாவட்ட கல்வி அதிகாரி, "இங்கே தனியார் பள்ளிக்கூடம் இருக்கு. இதுக்கு நாங்க கட்டிடம் கட்ட முடியாது... கூடாது" என்றார்.

பள்ளி மானேஜர், பழைய பகையை புதிய விதத்தில் காட்டிய பேசிய பிரமுகரை முறைத்துப் பார்த்துக்கொண்டே, டெப்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து இளித்தார். எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பள்ளிக் கட்டிடத்தைப் பற்றி பேசினால், மானேஜர் இசக்கிமுத்து இடிந்துவிடுவார். வேண்டாம், நம்ம ஊர்க்காரன். நீண்ட மெளனம்.

முனியம்மா , தன் அனாதரவான நிலையைக் கூறி, முதியோர் பென்ஷனைப் பற்றி பேசப்போனாள். பிறகு யோசித்தாள். 'ஊர் விவகாரந்தான் முக்கியம். சொந்த விவகாரம் அப்புறம். பள்ளிக்கூடம் இடிந்து விழப்போவுதுன்னு ஏதோ கேட்டாங்க. அப்புறம் ஏன் பேசாம இருக்காங்க. நாமளாவது யோசன சொல்லணும். பாவம்... முன்னால் மதுரையில் செத்தது மாதிரி வாழப்போற குழந்தை செத்துடப்படாது. பாரு ....'

முனியம்மா, சத்தம் போட்டே பேசினாள்.

"ஏன் சாமி யோசிக்கிய ? இசக்கிமுத்து பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க முடியாதுன்னா அதுவே சின்னப் பிள்ளிய எல்லாத்துக்கும் பெரிய சமாதியா ஆயிடும். நீங்களே மடத்தூர்ல இருக்கது மாதிரி ஒரு பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கக் கூடாதா? பிள்ளியளுக்கும் மத்தியானச் சோறு கொஞ்சமாவது கிடைக்கும். இசக்கிமுத்துதான் என்ன பண்ணுவான்? அவ்வளவு வாத்தியாருக்கும் சம்பளம் கொடுக்கணும். அவங்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கதுக்கே படாதபாடு படுறான்."

எல்லோரும், முனியம்மாவைப் பார்த்தார்கள். இசக்கிமுத்து, பல்லைக் கடித்தார். கிழவி, சம்பளம் சரியாகக் கொடுக்கவில்லை என்பதிலிருந்து மத்தியானச் சாப்பாடு போடாதது வரை சொல்லிட்டாளே. கிழட்டுச் செறுக்கி... இருடி இரு...'

முனியம்மா, அப்பாவித்தனமாகச் சிரித்தாள். எல்லோரையும் களங்கம் இல்லாமல் பார்த்தாள். திகைத்துப் பார்த்த அதிகாரிகளை ஒரு தலைவர் திகைக்காமலே பார்த்தபடி, "பாவம் ஏழைக்கிழவி எதையும் தெரியாம பேசுவாள்" என்றார். அதிகாரிகள் பயத்தோடு சிரித்தார்கள்.

முனியம்மா யோசித்தாள். 'பென்ஷனைப் பற்றிப் பேச, இதுதான் சாக்கு சொல்லட்டுமா...? தப்பு. ஊர்விவகாரம் மொதல்ல முடியட்டும்.'

பள்ளிக்கட்டிடத்தைப் பற்றி பைசல் செய்யாமலே, "கூட்டுறவு சங்கத்துல எல்லாப் பொருளும் சரியா கிடைக்குதா?" என்றார் கூட்டுறவு அதிகாரி

எல்லோரும் மௌனமாக இருந்தபோது, கூட்டுறவுச் சங்கத் தலைவர், தன் தொடையில் கிள்ளிய வலி தாங்க முடியாத ஒரு பிரமுகர், "எல்லாம் கிடைக்குது. எப்பவும் கிடைக்குது" என்றார்.

நீண்ட மௌனம். முனியம்மா யோசித்தாள். ஒரு யோசனையும் சொன்னாள்.

"எங்க சாமி சரியா கிடைக்குது? பெருமாள்தான் என்ன பண்ணுவான்? வெளியூர்ல இருக்க ஹோட்டல் காரங்க கூட, அவன் கிட்ட வந்து அரிக்கிறாங்க. இவங்க உபத்திரம் தாங்க முடியாம, நேத்துக்கூட , ஒரு மூட்டை சர்க்கரையை வண்டிலே ஏத்தி அனுப்புறான். நீங்க நிறைய கொடுத்தால் ஊர்சனத்துக்கும் அவன் ஏதோ கொடுப்பான்... இல்லியா...? அதிகமா கொடுங்க சாமி."

பிரமுகர்கள், இப்போது முனியம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். கிழவி திட்டம் போட்டுப் பேசுகிறாளா? யாரும் தயார் பண்ணி விட்டிருக்காங்களா?

முனியம்மா, இப்போதும் களங்கமில்லாமலே சிரித்தாள். சிறிது தைரியப்பட்டவளாய், கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டாள். அந்தச் சமயத்தில் பழைய பஞ்சாயத்துத் தலைவர், " எல்லா ஊருக்கும் பஸ் வந்துட்டுது. எங்க ஊருக்கு இன்னும் வரல. கொஞ்சம் சீக்கிரமா..." என்று இழுத்தார்.

போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏதோ பதிலளிக்கப் போனபோது, முனியம்மா குறுக்கே புகுந்தாள்.

"பஸ்ஸு கிடக்கட்டும். தட்டுப்பாறை ரோட்ட மொதல்ல கவனிங்க. ஊர்த் தெருவைப் பாருங்க..... மூணு வருஷமா ஒரு வண்டி மண்ணுகூட அடிக்கல. பஸ் வந்தா திரும்பிப் போவாது."

மாவட்ட என்ஜினீயர் , காண்டிராக்டரையும், யூனியன் எஞ்ஜினீயரையும் ஒரு மாதிரிப் பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்புதானே, பத்தாயிரம் ரூபாய் எஸ்டிமேட்டில் வேலை நடந்ததாகப் 'பில் வந்தது. அவர் ஏதோ சொல்லப்போனபோது, காண்டிராக்டர் சுதாரித்துக் கொண்டார்.

"நம்ம முனியம்மா... திக்கில்லாத கிழவி. முதியோர்பென்ஷன் கொடுக்கணும். பாட்டி விவரமா... அய்யாமாருங்க கிட்ட ஒன்னப் பத்திச் சொல்லு...''

முனியம்மா, விவரமாகச் சொல்லப் போனாள். அப்படிச் சொல்வதற்கு ஆயத்தமாக தலையை நிமிர்த்தியபோது, தற்செயலாக வெளியே முப்பது வயது மாயாண்டி சற்றுத் தொலைவில் நொண்டிக்கொண்டே போவது தெரிந்தது. பனை மரம் மாதிரி இருந்தவன்; இப்போ கோணத் தென்னை மாதிரி ஆகிட்டான். நாமாவது விறகு கமந்து பொழைப்போம்; அவன் வேலைக்கு கீலைக்கு போக முடியாமல் அவஸ்தப்படுறான்... அவன் விவகாரத்தமொதல்ல பேசலாம்.'

முனியம்மா, அங்கிருந்தபடியே கத்தினாள்.

"ஏய்... மாயாண்டி.... யாரும் ஒன்ன அடிக்க மாட்டாங்க. சும்மா வாடா. பன்னாரிப்பய மவன்... பாக்கான் பாரு . வாடா..... ஒனக்கு நல்ல காலம் பிறந்துட்டு... ஓடியாடா.... ஓடியா...''

எல்லாரும், அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதுமாதிரி, பைத்தியக்காரத்தனமாய் சிரித்தார்கள். முப்பது வயது மாயாண்டி, என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு, முனியம்மாவின் பேச்சுக்குக் கட்டுப் பட்டவன் போல், முதலில் மெள்ள மெள்ள நடந்து, பிறகு வேகமாக வந்தான். வந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டே, முனியம்மா அரற்றினாள்.

"பாருங்க சாமி. இவன் ஆறு மாசத்துக்கு முன்னால், அடியும் தலையும் ஒரே மாதிரி ராசா மாதிரி இருந்தான். சொம்மாக் கிடந்தவனை 'குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கடான்னு... இழுத்துக்கிட்டு போனாங்க. என்ன பண்ணுனாங்களோ தெரியலே... வலிக்குதுன்னு துடிச்சான். அறுத்துப்போட்ட ஆஸ்பத்திரிக்கு பலதடவை போனான். எல்லாரும் நாளைக்கு வாநாளைக்கு வான்னு சொன்ன துல.... இப்போவ இவன் சாவுறதுக்கு நாளைக்கோ இன்னைக்கோன்னு ஆயிட்டான். பிள்ள குட்டிக்காரன். ஏதாவது பண்ணுங்க சாமி... ஒங்க ஆளுங்க, ஆள அறுக்கதுக்கு காட்டுற வேகத்த, அப்புறம் காட்டமாட்டக்காங்க. பன்னாடப்பய மவனே..... எசமாங்ககிட்ட சொல்லேண்டா.."

மாயாண்டி, பேசத் திறனின்றி தலையைச் சொறிந்தான். இதற்குள் உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவர், எதுவும் பேசாதே என்பதுபோல், தன் வாயில் ஆள் காட்டி விரலை வைத்து அடித்தார். மாயாண்டி புரிந்து கொண்டான். புரியாத முனியம்மா மாயாண்டிக்காகப் பரிந்து பேசினாள்.

"பயப்படுறான் சாமி... போன வாரம் , இவங்க சேரிக்கும்... எங்களுக்கும் சின்னத் தகராறு. எங்க ஆளுங்க, இவங்கள் ஊருக்குள்ள வரப்படாதுன்னு... வழியில் முள்ள வச்சு அடைச் கட்டாங்க. இவங்க, இப்போ இந்தப் பக்கம் வாரது இல்லே. இவன் எப்படியோ வந்துட்டான் . நீங்கதான் இந்த விவகாரத்தையும் தீர்த்து வைக்கணும்... சாமிமாரே. இல்லான்னா, சேரி ஆளுங்களுக்கும் எங்க ஆளுங்களுக்கும் சண்ட வந்து, பத்து கொலையாவது விழும். ஏல மாயாண்டி ! எப்டி, ஆப்ரேஷன் பண்ணாங்க... அப்புறம் என்ன ஆச்சுன்னு தர்மதுரைங்ககிட்ட.... சொல்லுடா... இப்போ சொல்லாட்டா... ஒன் கோளாறு எப்போதான் தீரும்? ஊருக்குள்ளே வந்ததுக்காவ , எங்க ஆட்கள் அடிக்க மாட்டாங்க.... சும்மா சொல்லுடா..."

ஊர்ப் பிரமுகர்கள், ஒன்றானார்கள். பஞ்சாயத்தின் கடந்த கால, எதிர்காலத் தலைவர்கள், ஒருவரையொருவர் ஆதரவாகப் பார்த்துக் கொண்டார்கள். கிழட்டுக் செறுக்கிக்கு என்ன திமிரு இருந்தால், இப்படி பேசுவாள்.. ஊர்க்காரங்களையே காட்டிக் கொடுக்காளே...

காண்டிராக்டர், அதிகாரிகளை நோக்கிக் கனிவாகப் பேசினார்.

"அடடே... நேரமாகிட்டே... மொதல்ல சாப்பிட்டுட்டு வந்துடுவோம். அப்புறம் பேசலாம்."

எல்லாரும் ஆனந்தப் பரவசத்துடன் எழுந்தார்கள். கோழிகள் கருகிய வீட்டைப் பார்த்து மெல்ல நடந்தார்கள்.

கூட்டம், மெள்ள மெள்ளக் கரைந்தது.

முனியம்மா, விறகுக் கட்டிலில் கைபோட்டு, ஒரு கல்மேல் உட்கார்ந்தாள். மாயாண்டி, அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். விருந்துக்குப் போக முடியாத சிலர், அவளை விரோதத்துடன் பார்த்தார்கள். முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'தன் பேச்சுக்கு யாருமே மறுபேச்சு பேசலியே... ஏன்... அதிகாரிங்க பேசல.... பாவம், பசியில் வந்திருப்பாங்க.... சாப்பிட்டுட்டு வரட்டும். இந்த மாயாண்டி பயலைப் பத்தி அடிச்சுப் பேசணும். நம்ம பென்ஷனப் பத்தியும் கேக்கணும்.'

எங்கேயோ நகரப்போன மாயாண்டியின் வேட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டே "இருடா... இப்ப வந்துடுவாங்க..." என்றாள்.

ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.

தரையின் சூடு தாங்காமல், விறகுக்கட்டே பற்றி எரியப்போவதுபோல் சுட்டது. முனியம்மா எழுந்து நின்று எட்டி எட்டிப் பார்த்தாள். அதோ... வாசலுக்கு வெளியே அதிகாரிங்க வந்துட்டாங்க.... ஏய்மாயாண்டி நீயும்... ஒன் நிலைமையை அடிச்சுக் சொல்லுடா... என்ன இது... ஜீப்பு வண்டிங்க... ஊரவிட்டு ஓடுது. போயிட்டாங்களா - ஒரு வேள் - சாயங்காலம் வருவாங்களோ - பாவம் வெயிலாச்சே...'

முனியம்மா, மாயாண்டியை போகவிட்டு, தானும் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளை வழியனுப்பி வைத்துவிட்டு, ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம், அவளை நோக்கி வந்தது. முனியம்மா, விகற்பம் இல்லாமல் கேட்டாள்.

"சாயங்காலம் வருவாங்களா...?" காண்டிராக்டர், உடனே பதிலளித்தார்.

"ஆமாம். ஒன்னப் பார்க்க சாயங்காலம் வாராங்க. ஒனக்கு மாசம் நூறு ரூபாய் பென்ஷன் தருவாங்களாம்."

முனியம்மாவால் நம்ப முடியவில்லை . 'நூறு ரூபாயா... மாரியம்மா.... தெய்வமே.. நீ நிசமாவே தெய்வந்தாண்டி' அந்தக் மூதாட்டி, வயது வித்தியாசத்தைப் பார்க்காமல், காண்டிராக்டர் காலில் விழப்போனாள். உடம்பு இருந்த சோர்வில், அவளால்

அப்படி செய்ய முடியவில்லை. மனம்விட்டு கூவினாள்.

"ஏதோ... ஒன் புண்ணியம் ராசா... இந்த மாயாண்டிப் பயலுக்கும்...''

"தனி ஆஸ்பத்திரியிலே... காட்டி, இவனை மட்டும் கவனிக்கப் போறாங்களாம். சாயங்காலம் வரப்போறாங்க. எங்கேயும் போயிடாதீங்க. அறிவு கெட்ட முண்ட... இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடமா கேக்குற..? திருட்டுச் செறுக்கி..."

முனியம்மாள் திடுக்கிட்டாள். பிரமிப்புடன் காண்டிராக்டரைப் பார்த்தாள். அவர்பற்கள், ஒன்றுடன் ஒன்று பிராண்டின. இதற்குள் ஊர்ப் பிரமுகர்கள் வாய்க்கு வந்தபடி கேட்டார்கள்.

"ஒன்ன... எவன் பேசச் சொன்னான்? சர்க்கரையைப் பற்றிய எதுக்குடி பேசுற? ரோடு எப்டி இருந்தா ஒனக்கென்ன நாயே...? கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதவளுக்கு பள்ளிக் கூடத்தப்பத்தி பேச என்ன யோக்கிய இருக்கு? சேரிப் பசங்கள் வரவிடாமல் வழியை அடச்சத.... எதுக்குழா சொன்னே ? ஏ..... மாயாண்டி எதுக்குல... ஊருக்குள்ள வந்தே..? ஓடுல....ஏய் கிழட்டுச் செறுக்கி! என் நிலத்துல போட்டுருக்க குடிசையை ராத்திரியோட ராத்திரியா எடுத்துடணும். இல்லன்னா... அங்கேயே வச்சு.... ஒன்னை எரிச்கடுவேன்."

முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவுமே ஓடவில்லை. எதுக்காக திட்டுதாவ. என்னத்த அப்படிச் பெரிசா பேசிப்பிட்டேன். இதனால் யாருக்கு நஷ்டம் ? அடமாரியம்மா... நான் என்னத்தடி அப்படிப் பேசிப்பிட்டேன். வழியில் கிடக்க ஓணான எடுத்து மடில் போட்ட கதையாப் போச்சே. இதுவரைக்கும் ஒரு சொல்கூட வாங்காத என்னை, ஒரேயடியா வாங்கவச்சுட்டியேடி.'

முனியம்மா, தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த மாயாண்டியைப் பார்த்தபோது, தலைவர்களில் ஒருவர், "இப்ப மட்டும் இந்தப் பயலால எப்டி ஓட முடியுது? குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனால் நடக்க முடியலன்னு நடிச்சிருக்கான். இந்த கிழட்டுச் செறுக்கியும் எப்டி நடிச்கட்டாள் பாருங்க... என்றார்."

எவரோ ஒருவர் முனியம்மாவை அடிக்கப் போனார். இன்னொருவர் அவரை பிடிக்கப் போனார். சிறிது அமைதி ... பிறகு எல்லோரும் போய்விட்டார்கள் ஒற்றுமையாக.

முனியம்மா ஊர்ப் பெரிய மனிதர்கள் முதுகுகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். எதுக்காவ , பேய்ப்பயலுவ... பேய் மாதிரி ஆடுறானவ? என்ன நடந்தது இப்போ ? அதுவும் நானா வரல்லியே. அவன் தான் கூப்பிட்டாள்... பேசுனதுல இது இது தப்புன்னு சொன்னால் அர்த்தம் இருக்கு.... அர்த்தம் இல்லாம திட்டுறதுல என்ன இருக்கு? குடிசையை வேற எரிப்பேன்னு மிரட்டுறான். எரிச்சால் எரிக்கட்டுமே. ஈமச் செலவு மிச்சம்.''

அறுபது ஆண்டுகால, உயிர் அங்கேயே பிரிந்து போனதுபோல், முனியம்மா கண்கள் தெறிக்க, நாக்கு துடிக்க, அப்படியே நிலையிழந்து நின்றாள். கண்கள் திறந்திருந்தாலும் எல்லாம் இருட்டாகி, தானும் இருட்டான துபோல தோன்றியது. சிறிது நேரத்திற்குப் பிறகு விறகுக் கட்டைப் பார்த்தாள். அதுவும்

அவள் பேசிய உண்மையைப் போல், மரத்துக் கிடந்தது.

உண்மை என்ற தர்மத்தை தன்னை அறியாமலே தலையில் ஏற்றுபவள் போல் அவள், விறகுக் கட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு....

அந்தவிறகாலேயே, தன் உடம்பை, தானேளிக்கப்போகிறவள் போல் போய்க்கொண்டிருந்தாள்.

தினமணிக் கதிர், 18-12-1981
-------------

4. கட்டாயமில்லாத காதல்

பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகளை, துள்ளியோட வைக்காமல், அந்தக் கார் நிற்பது தெரியாமலே நின்றது. வழக்கமாக 'பல்லவன்கள்' நிற்பதுபோல் வழிமறித்து நிற்காமல், பின்னால் வரும் வாகனங்கள் தாராளமாகப் போகும் அளவிற்கு கௌரவமான இடைவெளி கொடுத்து நின்றது. பயணிக்கப் போகிறவர்கள் ஒரு சிலரின் கவனத்தையும் அந்தக் கார் ஈர்த்தது. புத்தம் புதிய கார். மாலை நேர மஞ்சள் வெயில், அதன் மரகத நிறத்தில் படிந்து, அவனையும் அந்தக் காரையும் மின்ன வைத்தது. இடி வாகனங்களுக்குப் பயந்தோ அல்லது அவற்றை எதிர்கொள்ளவோ கர்ணனின் கவச குண்டலம் மாதிரி, முன்னால் பொருத்தப்பட்ட இரும்பு வளையம்... ரதிக்கு மட்டுமே மன்மதன் தெரிவதுபோல், வெளியே இருப்பவர்கள் உள்ளே பார்க்க முடியாமல், காரவாசிகளை மட்டுமே பார்க்க வைக்கும் பச்சைக் கண்ணாடி.

டிரைவர் இருக்கையில் இருந்த, ராமச்சந்திரன், இடது பக்கமாக உடம்பை சாய்வுக்கோடாய் நிறுத்தி, அதே பக்கத்து பச்சைக் கண்ணாடியை கீழே இறக்கி, ஓரடித் தூக்கலில் விட்டான். அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக நின்ற பழனியம்மாவை குறி வைத்தபடியே, பார்த்தான். அவளோ , கூட்டத்தோடு கூட்டமாய் தொலைவில் வரும் பேருந்து எண்களை அடையாளப்படுத்த, காமிராக்காரர்கள் போல் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த பழைய பல்லவனுக்குப் பதிலாக, வந்தது மகாபலிப்புரத்துக்காரன் என்பதால், சோர்வாகத் திரும்பி தற்செயலாகத்தான் அந்தக் காரைப் பார்த்தாள். ராமச்சந்திரன், எதிர்பக்கப் பின் கதவை திறந்தபடியே, அவளை நோக்கி, வா... வா...' என்பதுபோல் முகத்தை கையாக்கி முன்னாலும் பின்னாலுமாய் சமிக்ஞை செய்தான்.

பழனியம்மா, ஒருகணம், அக்கம் பக்கத்தை அலறியடிக்காதக் குறையாகப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். மறுகணம், நான் வரல...' என்பதுபோல், முகத்தை பக்கவாட்டில் ஆட்டி, அதற்கு முன்னால் நிறுத்திய கைகளையும், எதிர்மறையில் ஆட்டினாள். இதைக் கவனிக்காத ராமச்சந்திரன், வெளிப்படையாகவே உரக்க அழைப்பிட்டான்.

"ஏறுங்கம்மா."

பேருந்து நிலைய இளவட்டங்களில் ஒருசிலர், அழைத்தவனை சந்தேகமாகவும், அழைக்கப்பட்டவளை சபலமாகவும் பார்த்தனர். இன்னும் சிலர், பழனியம்மாவின் மீதும், ராமச்சந்திரன் மீதும், கண்களை மாறி மாறி மொய்க்க விட்டனர். ஆனாலும், பெரும் பான்மையோர், எதிர்வரும் பேருந்துகளையே கவனித்தனர். எதிர்பார்த்த பேருந்து நிற்காமல் ஓடியபோது, ராஸ்கல். இவங்கள் நிற்க வச்சு சுடணும் ' என்று ஒரு பெரியவர் முணுமுணுத்தார். இந்த கடுசொல், தனக்கும் அந்த ராமச்சந்திரனுக்கும் சேர்த்துக் கூறப் பட்டதாக அவள் அனுமானித்தாள், இதனால், பழனியம்மாள், நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்டு, காருக்குள் ஏறினாள். இப்போது, நின்றால் தான் தப்பு

பழனியம்மா, அவசர அவசரமாய் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, அந்தக் காரின் பின்னிருக்கையில் ஓடி விழுந்தாள். ராமச்சந்திரன், தனது வலது பக்க வளைவுக் கம்பியை அழுத்த, இடதுப்பக்க பின்கதவு தானாக மூடிக்கொண்டது. பழனியம்மா, கூண்டுக்குள் போன கிளிபோல் தவித்தாள். பரீட்சைக்கு போகும் மாணவன் போல் கொதித்தாள். பிறகு, ராமச்சந்திரனைப் பார்த்து, எரிச்சலோடு கேட்டாள். வார்த்தைகளுக்கு உருவம் இருந்தால், அவை இந்நேரம் ஆவியாகி இருக்கும். அவ்வளவு கொதிப்பு....

"நான்தான் வரமாட்டேன்னு சொல்லாமச் சொன்னேனே.... போகவேண்டியதுதானே... பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..."

இதற்குள், எந்தக் காரையும் இரையாகக் கருதுவதுபோல், ஒரு கிழட்டு நாயின் ஓலத்தோடு , ஒரு பழைய பேருந்து, காரை மோதாமல் இருக்க, ராமச்சந்திரன், தனது காரை வலது பக்கமாக ஒடித்து, கார்களின் வில்லன்களாய் குறுக்குச் சால்பாய்க்கும் ஆட்டோக்களின் ஒன்றின் பக்கவாட்டை லேசாய் உரசி, இந்த இரண்டுக்கும் பொது எதிரிகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர சுமை வண்டி, முன்னாலும் பின்னாலும், கிட்டே வந்து பார்' என்று சவாலி டுவதுபோல், கூர்மையான இரும்புக் கம்பிகள் துருத்திக் கொண்டிருக்க, நத்தை போல் நகர்ந்த மாட்டுவண்டி, மனித இரை தின்னிகளான சென்னை குடிநீர் லாரி ஆகியவற்றை முட்டக் கொடுக்காமலும், முட்டாமலும், ஒரு சமயம் லாகவமாகவும் , மறுசமயம் முரட்டுத்தனமாகவும், காரில் இயங்கினான். ஆகையால், பழனியம்மா சொன்னது அவன் காதுகளுக்கு, ஒலிகளாக விழுந்ததே தவிர, மூளையில் வார்த்தைகளாகப் பதிவாகவில்லை. இதை, ஆணவம் கொண்ட அலட்சியமாக கருதிய பழனியம்மா , "வண்டியை நிறுத்துங்க எனக்குப் போகத்தெரியும்." என்று கத்தியதும், அவனுள் பதிவாகவில்லை .

எப்படியோ, காரை வரிசை வரிசையான வாகன ஓட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த திருப்தியோடு, அவளை நோக்கி, பின்பக்கமாய் ஒரு திரும்பு திரும்பி, பிறகு முன்பக்கமாக முகம் திருப்பி , அப்புறம் சாலையில் ஒரு கண்ணும், அவளிடம் ஒரு கண்ணுமாய் சாவகாசமாகக் கேட்டான்.

"ஏதோ பேசினாப்போல கேட்டுது. எப்பவுமே டிரைவர் சிக்னல் நெரிசலில் அல்லாடும் போது, பேசப்படாது, எங்க வக்கீலய்யா மாதிரி, அப்படி இப்படின்னு தொணதொணப்பும் செய்யப்படாது. இது விபத்துல போய் விடும். சரி போகட்டும். என்ன சொன்னீங்க...?"

"நான் வரமாட்டேன்னு சைகை செய்தேனே... நீங்க பாட்டுக்குப் போக வேண்டியதுதானே... கூட்டம் பார்த்த பார்வையில் எனக்கு அவமானமாய் போச்சு.''

ராமச்சந்திரனுக்கு, ரோஷம் வந்தது. அவளை இறக்கி விடலாமா என்பதுபோல், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வரப்போனான். 'இறங்குங்க' என்று சொல்வதற்காக, பின்பக்கமாய் திரும்பினான். அவளோ, அந்தக் காரின் உள்ளழகில் சொக்கிப் போனதுபோல், கண்களை கற்றவிட்டது, அவனைப் பரம சாதுவாகப் பேச வைத்தது.

"ஒரே தெருவுல.... அதுவும் பக்கத்து பக்கத்து வீட்ல வேலை பார்க்கோம். எங்கய்யா வீட்ல, தண்ணீர் தட்டுப்பாடுன்னா.... அவர், ஒங்கய்யாகிட்ட சொல்ல, நீங்க தண்ணீரை டியூப் வழியா கொடுக்கீங்க. நான் காரைக் கழுவுறேன். ஒங்கய்யா வீட்ல தண்ணி இல்லாதபோது, எங்கய்யாவீட்டு பைப்புல குடிதண்ணீர் எடுத்துட்டு போறீங்க. நானே சிலசமயம், பைப்புல அடிச்சு கொடுக்கேன். இந்தப் பழக்கத்துல , அய்யோ பாவமுன்னு ஏத்துனா... இந்தப்போடு போடுறீங்க...''

"நான் எந்தப் போடும் போடல . பிறத்தியார் தப்பா நினைக்கப்படாது பாருங்க. இதே பஸ் ஸ்டாண்டுலதான், இதே நேரத்துலதான், நான் நிற்கிறது. தினமும், உங்கக் காரு, இந்த வழியிலதான் வரும். நீங்க என்னைப் பார்த்தாலும், பார்க்காதது மாதிரி போவீங்க.... இன்னைக்கு மட்டும் என்ன கரிசனம்?"

"எங்கய்யாவ ஏத்திக்கிட்டுப் போவேன். அந்தச் சமயத்துல, உங்களை ஏத்துனால், என் சீட்டை கிழிச்சிட மாட்டாரா.... இப்போதான், அவர சுப்ரீம் கோர்ட்போறதுக்கு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வாறேன். தனியா போறோமேன்னுதான், கூப்பிட்டேன்."

"அய்யயயோ ."

"தப்பா நினைத்தா, இப்பவே இறங்கிக்கலாம்."

"தெரியாத்தனமா உளறிக்கொட்டிட்டேன். நீங்க நல்லவருன்னு எனக்குத் தெரியும். நீங்க படுற பாட்டை சொல்லக் கேட்டிருக்கேன். ஒங்க கல்யாணக் கதையும் எனக்குத் தெரியும்."

ராமச்சந்திரன், பின்னால் திரும்பி, பழனியம்மாவை திடுக்கிட்டுப் பார்த்தான். காரும், திடுக்கிட்டபடியே, தாறுமாறானது. இதற்குள், பின்னால் வந்த கார்களின் கத்தல்கள், கதறல்கள்... 'டே.... சாவுக்கிராக்கி' என்ற வசவுகள் ...

ராமச்சந்திரன், காரை நெறிப்படுத்தி ஓட்டியபடியே, அவளைத் திரும்பிப் பார்க்காமல், பாதிப்பில்லாமல் பேசுவதுபோல், பாவனை செய்துகொண்டு, கேட்டான்.

"சொல்லுங்க பார்க்கலாம். என் கதையில் எனக்குத் தெரியாம எதுவும் இருக்குதான்னு பார்க்கலாம்."

"அய்ந்து வருடத்திற்கு முன்னாலேயே, கிராமத்துல, அக்கா மகளை கல்யாணம் செய்தீங்க. அவளோ ஒங்களோட வாழ மறுக்காள். நீங்க, கெஞ்சிப் பார்த்தீங்க... மிஞ்சிப் பார்த்தீங்க....

அவள் மசியல்... சரியா?"

ராமச்சந்திரன், தலையை குனித்துக் கொண்டான். இருக்கையின் பின்புறம் லேசாய் தலை சாய்ந்தான். அந்தக் கார், திரைப்படங்களில் - குறிப்பாய்டூயட் பாடல்களில், அரைத்த மாவாய் வருமே, வண்டிச் சக்கரம் மாதிரியான பாலம். அதுதான் அண்ணா சமாதிக்கு அருகே - அந்தப் பாலத்தின் முனையில், சிவப்பு சிக்னலால் நிறுத்தப்பட்டது. அவன், தலை குனிந்தபடியே, கேட்டான்.

"ஒங்களுக்கு அவளைப் பற்றி இவ்வளவுதான் தெரியுமா?"

"நான் கேள்விப்பட்ட அந்த அசிங்கத்தை, சொல்லிக் காட்டுறது நாகரீகம் இல்ல பாருங்க."

''அவளைச் சொல்லியும் குற்றமில்லை. தோளுல குழந்தையாய் தூக்கி வைத்த மாமன், புருஷனாய் வந்துட்டானே என்கிற ஆத்திரம். அக்காக்காரி அழுதாலும், தம்பிக்காரனுக்கு மூளை எங்க போயிட்டுது என்கிற கோபம். இந்த எதிர்ப்பைக் காட்டத்தான், இன்னொருத்தனோட திரியுறாள்."

பழனியம்மா, பேச்சை மாற்றப் போனபோது, போக்குவரத்து சிக்னலில் ஒரு மாற்றம். அதைப் பாராமல் தன்பாட்டுக்கு கிடந்தவனை, அவள் உசுப்பிவிட்டாள்.

"அதோ பாருங்க. பச்சை விளக்கு வந்துட்டுது."

அந்தக் கார் மட்டுமே, ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. பழனியம்மா, தன்னை அறியாமலே, ராமச்சந்திரனின் இருக்கை முனையில், இரு கைகளையும் மடித்துப் போட்டபடியே, அவனுக்குப் பூடகமாக ஆறுதல் சொன்னாள்.

"விட்டுத் தள்ளுங்க. வீட்டுக்கு வீடு வாசல்படிதான். நாம் என்னமோ... நாம் மட்டுமே அதிகமாய் கஷ்டப்படுறோமுன்னு நினைக்கோம். அதுலயும் ஒரு சுகம் தேடுறோம். ஆனால், உலகத்து மனிதர்களோட கஷ்ட நஷ்டங்களை ஒன்று திரட்டி, அதை எல்லோருக்கும் சமமாய் பங்காக்கி கொடுத்தால், பழைய சுமையே தேவலைபோலத் தோணுமாம். எங்க பங்களாம்மா, இப்படிச் சொல்வாங்க.''

"வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொன்னீங்களே, எந்த அர்த்தத்துல..."

"என் கதை வேற மாதிரின்னாலும், மனநோவுன்னு வரும்போது, ஒங்க கதை மாதிரிதான். ஒருவனுக்கு கட்டிக் கொடுத்தாங்க. குடிகாரனாச்சேன்னு நான் அழுதேன். அரசாங்க உத்தியோகம்.... கழுதப்பயல்தான்... ஆனால், சர்க்கார் கழுதையை மேய்க்கிறானேன்னு , அப்பா சொன்னார். அவர் சொன்னா சொன்னதுதான். இல்லாட்டால், பயளிக்கா அடிப்பார். எவன் கூட்டி திரியுறேன்னும் கேட்பார். எங்க அக்காளை இப்படிக் கேட்டவர்தான். அப்பாவின் வசவும் அடியும், அவனைக் கட்டிக்கிறதை விட பெரிய அவமானம். அதோட, எனக்குப் பின்னாலயும் வயசுக்கு வந்த இரண்டு தங்கச்சிங்க. கூடவே, இந்த மனசு இருக்கே, அதையும் சொல்லணும். நிலைமைக்கு ஏற்ப, அது நம்மையும் ஏமாற்றி, ஏமாந்து போகும். அவரைத் திருத்திடலாமுன்னு ஒரு நப்பாசை. ஆனாலும், கல்யாண மேடையில் குவார்ட்டர்... மறுவீட்டுக்கு போனால் ஆப்... முதல் நாள் ராத்திரியில் புல். இதுதான் ஒவ்வொரு நாளும். அவர்கிட்ட நான் கண்டது. எந்தவித சுகமும் அதிகமாய் கிடைக்கல. அது குடிச்சால், 'இது அதிகமாய் இருக்காதாம்.''

பழனியம்மா, அவரசத்தில் அப்படிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். அவனும், அதைக் கண்டுக்காததுபோல், பாவனை செய்துகொண்டே, ஆறுதல் சொல்வதாக நினைத்துப் பேசினான்.

"நன்மையிலும் தீமையிருக்கு... தீமையிலும் நன்மையிருக்கு பத்து பாத்திரம் தேய்க்கிற உங்களுக்கு, இப்போ, சர்க்கார் வேலை கிடைக்கிறதுக்கு காரணமாய் இருந்திருக்காரே."

"நான் பாத்திரம் தேய்த்தாலும், பத்தாவது வரைக்கும் படித்தவள்."

"நானும்தான் பிளஸ் டூ."

"ஏரோபிளேன்ல போற வேலை கிடைத்தாலும், ஒரு தாலிக்கயிறுக்கு ஈடாகுமா? அதாவது- பிறத்தியார் பார்வையில்..."

"என் பெண்டாட்டி, தப்புத் தப்பு. அக்கா பொண்ணு கழுத்திலயும்தான், நான், கட்டுன தாலி இன்னும் கிடக்குது."

மீண்டும் மௌனம்.

ராமச்சந்திரன், கார் ஓட்டுவதில் மட்டுமே கவனமானான். பழனியம்மாவும் முன்னிருக்கை உச்சியில் போட்ட கைகளை பிடரிப் பக்கமாக வளைத்துப்போட்டு, பின்னிருக்கையில் சாய்ந்தாள். அவன் மேற்கொண்டு ஏதும் கேட்டால் பேசலாம் என்ற எண்ணம்.... பேசவில்லையே என்ற ஆதங்கம்... தானே பேசலாமா என்ற சபலம்... மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்ற ஆவேசம்.

அந்தக் கார், சாந்தோம் கடற்கரை தேவாலயத்திற்கு, துவார பாலகர்போல் தோன்றும் சிக்னல் கம்பத்தில், மஞ்சளை மறைத்த சிவப்பால், நிறுத்தப்பட்டது. ராமச்சந்திரன், சலித்தபடியே பேசினான்.

"ஒரு இடத்துல சிவப்பு விளக்கு விழுந்துட்டால்... கடைசி வரைக்கும் சிவப்புதான்."

"இதுக்குப் பெயர்தான், பட்ட காலிலே படும்... கெட்ட குடியே கெடும் என்கிறது."

"அப்படி ஏன் நினைக்கிறீங்க? பட்ட மரமும் துளிர்க்குமுன்னு நினையுங்களேன். எப்படியோ உங்களுக்கு அரசாங்கத்துல பியூன் வேலை கிடைச்சுட்டுது. இதை நினைச்சு ஆறுதல் படுங்க..."

"அய்யோ! இந்த வேலைக்கு நான் பட்டபாடு , வேலை கிடைச்ச சந்தோஷத்தையே விழுங்கிட்டுது. 'இருசப்பன், குடிச்சு குடிச்சு செத்தது, தற்கொலைக்குச் சமம். மனைவி பழனியம்மாவது திருத்தி இருக்கலாம். திருத்தல்.... அதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்த அம்மாவுக்கு வேலை போட்டு கொடுக்க முடியாதுன்னு, ஆபீஸுல் , எவனோ ஒருத்தன் கிறுக்கி வச்சதுல, எல்லா கிறுக்கன்களும் கையெழுத்துப் போட்டுட்டாங்க. இதுவும் போதாதுன்னு , நான் கம்பெனி வேலை பார்க்கிறதாயும்... சொந்த வீட்ல குடியிருக்கிறதாயும்... அதனால், மனிதாபிமான அடிப் படையில், தனக்குத்தான், அண்ணன் இருசப்பன் வேலையை கொடுக்கணுமுன்னு பெத்தவங்க தூண்டுதலுல, அவரோட தம்பிக்காரன் எழுதிப் போட்டுட்டான். எங்க அம்மாவோட , சர்வண்ட் குவார்ட்டர், என்னோட வீடாம். பத்து பாத்திரம் தேய்க்கிறது கம்பெனி வேலையாம். இப்படிச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு வக்கீலு...''

ராமச்சந்திரன், தனது பிடரி பேசுவதுபோல் பேசினான். "அடக்கடவுளே. அப்புறம்...."

"எங்கம்மா தூண்டுதலுல, எங்க பங்களாய்யா தலையிட்டு, அவருக்கு இருக்கிற செல்வாக்குல, வரவேண்டிய வேலையை வாங்கிக் கொடுத்தாரு... அப்படியும் மனசுல நிம்மதியில்ல..."

"ஏன்?"

"எனக்கு ஆபீஸுல வேலை வாங்கிக் கொடுக்க, அங்கேயும் சிலர் முயற்சி செய்தாங்க.... அந்த முயற்சிக்குப் பலனா, பணம் கேட்டாக்கூட பரவாயில்ல... ஆனால் கொடுக்க கூடாததை கேட்கிறாங்க..... சில பிரம்மச்சாரிப் பயல்கள், கல்யாணம் செய்துக்கலாமான்னும் கேட்டாங்க.... இவங்கெல்லாம் செத்துப் போன, என் புருஷனையே நல்லவனாக்குகிற அளவுக்கு குடிகாரங்க... இந்தப் பழக்கம் இல்லாதவங்களுலயும் சிலரு, எனக்காக இல்ல... என் சம்பளத்துக்காக கட்டிக்கச் சொல்றாங்க..."

"அப்போ... எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போறீங்க? இப்போ நல்லாத்தான் இருக்கது மாதிரித் தெரியும். நாற்பது வயசுக்குமேல அனாதையாய் ஆயிட்டோம் என்கிற உணர்வு ஏற்படும்."

"என்ன செய்யுறது... என்னதான் செய்ய முடியும்?"

"கல்யாணம் செய்தால் பழைய புருஷனால் கிடைத்த வேலை போயிடுமேன்னு யோசிக்கிறீங்களா...."

"மனிதாபிமான அடிப்படையில், ஒரு விதவைக்கு புருஷனோடு வேலை கிடைத்து, அவள் மறுமணம் செய்தால், வேலையிலிருந்து அவளை நீக்கலாமுன்னு , முன்னால் சட்டம் சொல்லிச்சாம். ஆனால், இதை எதிர்த்து, பலபெண் இயக்கங்கள், போராடு துனால், ஒருவிதவை மறுமணம் செய்தாலும், அவளோட வேலை பாதிக்காதுன்னு சர்க்குலர் வந்துட்டாம்."

"அப்போ .... உலகத்துல ஆண்களுல நல்லவனே இல்லியா...? ஒருத்தனை கட்டிக்க வேண்டியதுதானே...''

"சரி. ஒங்க அக்கா பெண்ணை என்ன செய்யப் போறீங்க?"

"நான் கழிச்சு கட்டுறதுக்கு முன்னாலலேயே, அவளே கழிஞ்சுட்டாள். ஆனாலும், மனைவி என்கிற முறையில், அவள் மேல் கோபம் வந்தாலும், அக்கா மகள் என்கிற முறையில், இன்னும் பாசம் இருக்கத்தான் செய்யுது."

ராமச்சந்திரன், கலகலப்பான சிரிப்பை, சோகத்தோடு முடித்தான். அந்தக் காரும், புதிதாய் உருவாகும் அடையாறு மேம்பாலத்தின், கிழக்கே, ஒற்றையடி பாதை போன்ற ஒருவழிச் சாலையில், வாகன நெரிசலுக்குள், முக்கி முனங்கி, ஆவின் பூங்காவைத் தாண்டி, பெசன்ட் நகருக்கு கிளை பிரிந்த சந்தடி இல்லா சாலையில், ஓடுவது தெரியாமல் ஓடியது. இப்போது பழனியம்மா, தன்னை அறியாமலே, வார்த்தைகளை சிந்திவிட்டு, பின்னர், அவற்றை அள்ள முடியாமல், அல்லாடினாள்.

"எனக்கு மட்டும், எந்தவித கெட்டப் பழக்கமோ... நோய் நொடியோ இல்லாத, கம்பீரமான, பாசமான, மொத்தத்தில் உங்களை மாதிரி ஒரு நல்லவர் கிடைச்சால்..."

ராமச்சந்திரன், திடுக்கிட்டானோ... இல்லையோ, அவன் கார் திடுக்கிட்டு நின்றது. அவளை, அவன் ஒரேயடியாய்த் திரும்பிப் பார்த்தான். அதுவரை வெறும் மனுஷியாக தெரிந்தவளை, ஒரு இளம் பெண்ணாக, புதிய பார்வையில் பார்த்தான். அவனுக்கு , கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, காரும் ஓடவில்லை.

ராமச்சந்திரன் நடுரோட்டில் காரை நிறுத்தி இருப்பதை புரிந்துகொண்டு, மீண்டும் அதை, இயக்கி, பத்து பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் நடக்க விட்டான். இதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டானோ... என்னவோ, பழனியம்மா சோகமாக சமாளித்தாள் . துள்ளி விழுந்த வார்த்தைகளில் சிலவற்றை எடுக்கப் பார்த்தாள் .

"ஒங்களை மாதிரின்னு சொன்னேனே தவிர, ஓங்களைன்னு சொல்லல... அடுத்தவன் தொட்ட பெண்ணாச்சேன்னு , நீங்க நினைக்கிறது எனக்குத் தெரியும்."

அந்தக் கார், அவசர அவசரமாக ஒரு ஆலமரத்தின் குடைக் கிளைகளுக்கு இடையே, ஓரங்கட்டி நின்றது. அவன், அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

"என்ன வார்த்தை பேசிட்டீங்க? நீங்க கிடைத்தால், நான் கொடுத்து வைத்தவன்."

"ரொம்ப ரொம்ப சந்தோஷம். அப்போ, ஒங்க அக்கா மகள் கிட்ட, நீங்க ரெண்டாவது கல்யாணம் செய்ய சம்மதமுன்னு

ஒரு கடுதாசி வாங்கிட்டு வந்துடுங்க...''

"அப்படி வாங்கினாலும், அது சட்டப்படி செல்லாது." "என்ன சொல்றீங்க..."

"நான் பெரியவக்கீலோட்டிரைவர் என்கிறத மறந்துட்டிங்க. பலர், அவர்கிட்ட கார்லயோ, ஆபீஸ்லயோ பேசுறதையும், அவர் பதிலளிக்கிறதையும் கேட்டு, நானே, பாதி வக்கீலாயிட்டேன். ஒரு மனைவியோ அல்லது கணவனோ நினைத்தால், விவாகரத்து வழக்கையும், வாய்தா வாய்தாவாய் வருடக்கணக்குல இழுக்கலாம்."

"அடக்கடவுளே... என் ராசியே அப்படித்தான். பரவாயில்ல... பட்ட காலுதானே..."

"ஆனாலும், சட்ட விரோதமில்லாத ஒரு வழி இருக்கு. கல்யாணமான ஒருவன், இன்னொருத்திக்கு தாலி கட்டினால் ஜெயிலுக்கு போகணும். அதேசமயத்தில், ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டுல, கூடியும் கொஞ்சியும் வாழலாம். குழந்தைகளும் பெத்துக்கலாம். இந்த ஏற்பாட்டுல, ஆணுக்கு, தன்னோட வாழுற பெண் சொத்துலயோ, பெண்ணுக்கு அவனோட சொத்துலயோ உரிமை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் பிறக்கிற குழந்தைகளுக்கு ரெண்டு பேர்சொத்துலயும் உரிமை உண்டு . சட்ட விரோத் தம்பதிங்கன்னு உண்டு. ஆனால், சட்டவிரோதமாய் பிறந்த குழந்தைன்னு கிடையாதாம். இப்படித்தான் சட்டம் சொல்லுதாம்.”

பழனியம்மா, களிக்கூத்து ஆடினாள்.

"எங்கம்மாவும், 'இப்போ நீ நாலாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற அரசாங்கத்துல வேலை பார்க்கிறே... இனிமேல், நீ என் வீட்டு வேலைக்காரி இல்ல . புதுசா ஒரு வீடு பார்த்து, குடிபோயிடுன்னு சொல்லிட்டாங்க... நீங்க சொல்ற ஏற்பாட்டுல எனக்கு சம்மதம்."

"ஆனாலும்..."

"என்ன ஆனாலும்..."

"ஒங்களுக்கு நாலாயிரம் ரூபாய் சம்பளம் ஓட்டி கீட்டின்னு வேற. இந்த நாட்டுல ஒரே வேலைக்கு பலவிதமான சம்பளம். அரசாங்க டிரைவருக்கு ஆறாயிரம் சம்பளம். சனி, ஞாயிறு லீவு. போதாதற்கு போனஸ். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மட்டும் லீவு எடுக்கிற டிரைவரான எனக்கு இரண்டாயிரத்து ஐநூறு . என்ன நியாயம் இது?"

"போகட்டும். நம்ம நியாத்த பேசுவோம்."

"நாலாயிரத்துக்கும், ரெண்டாயிரத்து ஐநூறுக்கும் ஒத்து வருமான்னு யோசிக்கிறேன்."

"இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். தன்னோட வீட்டுக்காரி, தன்னைவிட எல்லா வகையிலும், மட்டமாய் இருக்கணும் என்கிற நெனப்பு. தெரியாமத்தான் கேட்கிறேன்..... வீட்டுக்காரி புருஷனைவிட அதிகமாய் சம்பளம் வாங்கினால், உலகம் அழிஞ்சுடுமா.? குழந்தை குட்டி பிறக்காதா....? உங்களை எப்படியோ நெனச்சேன். கடைசில நீங்களும் சராசரிதான். தெளிவாய் இருந்த என் மனசை ஒரு கலக்கு கலக்கி, சேரும் சகதியுமாய் ஆக்கிட்டிங்க..."

"சரி... சரி. புலம்பாம்... முன்னால் வந்து உட்காரு...''

"பேச்சு ஏக வசனமாய் போகுது." "வீட்டுக்காரியை எப்படிக் கூப்பிடுவாங்களாம்?"

"யோவ்! முன் கதவைத் திறக்காமல், எப்படிய்யா உட்காருறது? இந்த சீட்டை தாண்டி குதிக்கச் சொல்றீயா..."

முன்கதவு திறந்தது. ராமச்சந்திரன், அவளைப் பரவசமாய் பார்த்தபோது, அவள் பரபரப்பாய் கேட்டாள்

"என்னால் நம்ப முடியலய்யா... இப்படியும் அரைமணி நேரத்துக்குள்ளே, காதல் வருமா? இந்தக் காதல் எதுலய்யா சேர்த்தி?"

"இந்தக் காதல் எந்தெந்த வகை இல்லன்னு மட்டும் என்னால் சொல்ல முடியும். எதுல சேர்த்தியின்னு சொல்ல முடியாது. இது, உருவக் கவர்ச்சியில் ஏற்படுகிற அவசரக் காதல் இல்ல. தற்கொலை செய்கிற புனிதக்காதலும் இல்ல. ஆடல் பாடல்ல அசந்து, ஏற்படுகிற சினிமாக் காதலும் இல்ல. பெரிசுகள் போல் நினைச்சுக்கிட்டு, பள்ளிக்கூடத்து சிறுக்கள் செய்கிற பால்ய காதலும் இல்ல. பெரியவங்க பேச்சால் ஏற்படுகிற , பாரம்பரியக் காதலும் இல்லை . ஆனால், எந்தவகைக் காதலுன்னுதான் சொல்ல முடியல..."

"நான் சொல்றேன். வாழ்ந்துதான் ஆகணும் எங்கிறதுக்காக ஏற்பட்ட கட்டாய காதல். சரியா?"

"சரியில்ல பழனிம்மா... இது கட்டாயம் இல்லாத காதல் தான். நாம ரெண்டு வருஷமா, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறோம். லேசாய் பேசிக்கிறோம். இது உனக்கும் எனக்கும் தெரியாமலே, நம்ம மனகல, ஒரு ஈடுபாடாய் - ஒரு விதையாய் விழுந்துட்டுது. பயம், கூச்சம் மாதிரியான வறட்டுத் தனங்களையும் மீறி, இதயத்தில் விழுந்த விதை, இப்போ , வாய் வழியாய், காதல் செடியாய் வளர்ந்திருக்கு. நம்ம காதல், கட்டாயமில்லாத காதலுன்னாலும், நெசமான காதல் தான். ஒரு ஆணும் பெண்ணும், ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறது தெரியாமல், ஒரு கட்டத்துல, காதலை வெளிப்படுத்துறதான், நெசமானக் காதல் புரியுதா?"

"புரியுது... புரியுது... அதோட, இருட்டுனுதும் புரியுது. காரை எடு."

அந்தக் கார், இப்போது வெளிச்சத்தோடு ஓடியது - அதுவும் இரட்டை வெளிச்சமாய்....

வாக்கி - 1991.
-------------------

5. கா... கா...... கா...

பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். என்றாலும், அவனை அந்த அலுவலகத்தில், எல்லோரும் காக்கா' என்றே அழைப்பார்கள். உருவத்தையோ நிறத்தையோ பொறுத்த அளவில், அவனுக்கும் காக்காவுக்கும் காத தூரம். சொல்லப் போனால் அவன் விசுவாசி. ஆகாயத்தில் வெள்ளைக் காக்கை பறந்தது' என்றால் 'ஆமாம், நானும் பார்த்தேன்,' என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால் அது ஆபீசருக்குச் சரிநிகர் சமானமாய்ப் பேசியதாய் ஆகிவிடுமாம். ஆகைால், 'நீங்கள் வெள்ளைக் காக்கையைப் பார்த்ததை நானும் பார்த்தேன்' என்று கீழ்ப்படிதலாகத்தான் சொல்லுவான்.

இந்த அளவுக்குப் பக்குவமாக நடக்கும் பண்டாரத்திடம், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் மானேஜர் , அவன் வசியத்திற்கு மசிவதாகத் தெரியவில்லை . அவன், ஒரு ஜெனரல் மானேஜருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கக் வடாது என்று நினைத்தானோ, அத்தனையும் புதியவரிடம் இருந்தன. அவரிடம் இருந்த கயமாகச் சிந்திக்கும் மூளை, நேர்மை, நாணயம், பாரபட்சமற்ற மனப்பான்மை ஆகிய பண்புகள், பண்டாரத்தின் வசிய ைேலக்குக் கடுக்காய் கொடுத்தன. அத்தோடு அவரிடம் பெண் மோகம் கடுகளவுகூடக் கிடையாது. இதுதான் பண்டாரத்திற்குப் பெரிய வேதனையாக இருந்தது. ஆசாமியை எப்படி மடக்கிப் போடலாம்...?

ஜெனரல் மானேஜர், ஊழியர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதற்காகவும், அவர்களின் பிரசினைகளைப் புரிந்து கொள்வதற்காகவும் , கான்பரன்ஸ் ஹாலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். எல்லா ஊழியர்களும் முன்னதாகவே வந்து உட்கார்ந்தார்கள். பண்டாரம், வாசலுக்குப் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஜி.எம்., தன் அறையிலிருந்து அடியெடுத்து வைத்தார். அவ்வளவுதான்,

பண்டாரம் அவரை நோக்கி ஓடினான். அவர்கையை இழுத்து ஒரு குலுக்குக் குலுக்கி, அவரோடு நடந்து வந்தான். ஊழியர்கள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் தான், மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். சுரேஷ் மட்டும் 'சீச்சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று பாரதியாரிடம் போய்விட்டு, பிறகு இந்தப் பயல், நம்மவர்க்கத்துக்கே ஒரு அசிங்கம் என்று, என்று பலமாகக் கூற, ஊழியர்கள் சிரித்தார்கள். சிலர் கேவலம் என்றார்கள். ஆனால், ஜெனரல் மானேஜர், பண்டாரம், தன்னிடம் வந்து கை குலுக்கியத்தைக் கேவலமாக நினைக்கவில்லை. அவன், ஊழியர் சங்கச்செயலாளராக இருப்பான். ஆகையால்தான் தன்னை எதிர் கொண்டு வரவேற்றிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டார்.

அலுவலர்களிடம் பேசினார் ஜி.எம்... உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசர அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். பண்டாரம் அன்று மாலையில் கழுத்துக்கு எண்ணெய் தடவி நீவிக் கொண்டான் என்றால், அவரின் பேச்சுக்கு எந்த அளவிற்குத் தலையாட்டியிருப்பான் என்பதை எடுத்துரைக்க வேண்டியதில்லை. ஊழியர்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என்று ஜி.எம். முடிவுரை கூறிவிட்டு பேச்சை முடித்தார். சுரேஷ், ஏதோ சந்தேகம் கேட்க எழுந்தான். அதற்குள் பண்டாரம் ஜி.எம்.மின். அருகில் போய், 'சோடா வேணுமா சார்? என்று ரகசியமாய்க் கேட்டான். அவர் வேண்டாமென்று தலையாட்டினார். ஊழியர்களின் மத்தியில் ஒரு லஞ்ச் கலகலப்பு. பண்டாரம் ஏதோ யோசனை கூறி இருக்கிறான் .... ஜி.எம். நிராகரித்து விட்டார்.

பண்டாரத்திற்கும் என்னவோ போலிருந்தது. இருந்தாலும் மனத்தைத் தளரவிடவில்லை . அப்போது பார்த்து பியூன், ஜி.எம்.மின் அறையில் இருந்து, ஏதோ செய்தி கொண்டுவருவதுபோல் வேகமாக வந்தான் பண்டாரம், எழுந்தான். நடந்தான். பியூனை மடக்கி, அவன் கொடுத்த செய்தியைச் சுமந்து கொண்டு வந்து, ஜி.எம்மிடம், 'உங்களுக்கு போன் வந்திருக்காம் சார், என்றான். அதற்கு , யார் பேசினாலும், ஒரு மணிநேரம் கழித்து போன் செய்யும்படி, பியூனை 'ரிப்ளை செய்யுமாரும், பண்டாரத்திடம் கூறினார்.

பண்டாரம் எளிமையானவன். ஆகையால்..... பியூனுக்கப் பதிலாக, அவனே ஜி.எம். அறைக்குப் போய் போனில் பதில் சொன்னான். போனில் பேசியவரை ஆழம் பார்த்தான். அப்படியாவது ஜி.எம்.மின். வீக்னெஸ் சங்கதிகள் கிடைக்குமா என்று குழைந்தும், இழைந்தும் பேசினான்....

ஊஹூம்... பண்டாரம் நேராக ஜி. எம்மிடம் வந்து, அவர் காதிற்கு மட்டும் கேட்கும்படியாக, சொல்லிவிட்டேன் சார், என்று ஒரு பெரிய ரகசியத்தைத் தெரியப்படுத்தினான். அவரும், 'தாங்ஸ்' என்றார். ஊழியர்கள் வெவெலத்துப் போனார்கள். ஆக, புதிய ஆசாமியையும் பண்டாரப் பயல் பைக்குள் போட்டுக் கொண்டானா? அவன் சொன்ன யோசனையை அவர் அங்கீகரித்து விட்டார் போலிருக்கே.... இனிமேல் யார்யாருக்கு என்ன ஆபத்தோ? அவன் எத்னை பேரைத் 'தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப் போகிறானோ....? எத்தனை பேருக்கு 'பெஸ்டிவல் அட்வான்ஸும்' 'இனக்கிரிமென்டும்' கிடைக்காமல் போகப் போகிறதோ?

பண்டாரமும் பொருமினான். இன்னும், அவன், ஜெனரல் மானேஜரைப் பிடிக்க வேண்டிய அளவிற்குப் பிடிக்கவில்லை. அவரும் பிடி கொடுக்க வேண்டிய அளவுக்குக் கொடுக்கவில்லை. எத்தனையோ பேரை ஒரே நாளில் மடக்கிப் போட்ட பண்டாரத்திற்கு, புதியவர் பிடிபடாமல் இருப்பது, தன்மானத்திற்கும் சுய திறமைக்கும் விடப்பட்ட சவாலாகத் தோன்றியது. அடிமேல் அடிவைத்தால் அம்மியே நகரும்... இந்த ஆசாமி மட்டும் என்ன விதி விலக்கா .....?

மறுநாள் காலை மணி பத்திருக்கும். பண்டாரம் அலுவகத்தின் வாசலுக்கருகே நின்று கொண்டான்.

எதிரே ஜி.எம். வந்துகொண்டிருந்தார். உடனே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். பராக்குப் பார்த்துக்கொண்டு இருப்பது போல் பாவனை விட்டான். பிறகு அப்போதுதான் ஜிஎம். மைப் பார்ப்பதுபோல பாவ்லா செய்து கொண்டு, சிகரெட்டை டப்பென்று அணைத்து விட்டு, ஆட்டோ ரிக்ஷா மாதிரி உடம்பை ஆட்டிக் கொண்டே, 'ஐ ஆம் சாரி சார்... நீங்க வருவதைப் பார்க்காமே சிகரெட்டை' என்று இழுத்தான். டில்லியில் தன் முகத்தில் படிந்த சிகரெட் புகைகளால் கண் ளிந்து, கண்ணாடி போட்டுக் கொண்ட மானேஜர், அவனைக் கனிவோடு பார்த்து முதுகில் தட்டி விட்டுச் சென்றார். (பண்டாரத்திடம் இதுவரை புகை பிடிக்கும், கெட்ட பழக்கம் மட்டும் கிடையாது என்பதும், இப்போது பிடித்த சிகரெட்டால் ஒருவாரம் வரை, அவன் இருமினான் என்பதும் தெரிவிக்க வேண்டிய சங்கதிகளாகும்.)

இதனால், பண்டாரம் ஜி.எம்.மிடம் கொஞ்சம் நெருங்கி விட்டான். என்றாலும் நெருங்க வேண்டிய அளவுக்கு நெருங்கவில்லை.

ஜி.எம்.மின் கார் சர்வீஸுக்குப் போயிருப்பதை, கடன் வாங்கிக் காலம் தள்ளும் பியூன் மூலம் பண்டாரம் தெரிந்து கொண்டான். ஒரு ஸ்கூட்டரை நண்பனிடம் ஓசியாக வாங்கிக் கொண்டு, அவர் வீட்டருகே, தலைமறைவாக நின்றான். ஜி.எம்., ஒரு டாக்சியைக் கை தட்டி கூப்பிடப் போன சமயத்தில், பண்டாரம் ஸ்கூட்டரோடு தற்செயலாக வருவது போல வந்து, ஏறிக் கொள்ளுங்கள் சார், என்று நெளிந்தான். அந்த நெளிவை அவரால் தட்ட முடியவில்லை .

இருவரையும் ஒரே வண்டியில் பார்த்த அலுவலர்கள், அதிர்ந்து போனார்கள். ஜெனரல் மானேஜருக்காக அவர்கள் அடித்த சல்யூட்களை பண்டாரமும் தலையாட்டி அங்கீகரித்தான்.

ஜெனரல் மானேஜர் , பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை பிஸியாக இருப்பார். யாரும் அவரை நெருங்க முடியாது.... கூடாது. பிறகு ஓர் அரைமணி நேரம் ரிலாக்ஸ் செய்வார். மீண்டும் இரவு எட்டு மணி வரை பைல்களைப் பார்ப்பார். இதைப் புரிந்து கொண்ட பண்டாரம், மாலை ஐந்து வரை வெளியே சுற்றுவான், சரியாக இரவு ஏழரை மணிக்குத் தன் கதவுகளைத்திறந்துவைத்துக் கொண்டு - பைலை புரட்டுவான்.

பண்டாரத்தின் அறையைக் கடந்துதான் ஜெனரல் மேனேஜர் படியிறங்க வேண்டும். அந்த வழியாக வரும் அவர் முகத்தை வேறுபுறமாக வைத்துக் கொண்டால், அவரது கவனத்தைக் கவருவதற்காக இருமுவான். நாற்காலியை இழுப்பான். இரவில் தனித்து நிற்கும் ஜி.எம்., தவித்து நிற்கும் பண்டாரத்தைக் கனிவுடன் பார்ப்பார். சில சமயம் மறுநாள் காலையில் இன்னின்ன விஷயங்களைத் தனக்கு நினைவு படுத்தும்படி கூறுவார். மறுநாள் காலையில் அவருக்கு முன்னதாகவே பண்டாரம் அவர் அறையில் முன் ஸீட்டில் உட்கார்ந்து கொள்வான்.

ஆக, இப்போது பண்டாரம் ஜெனரல் மானேஜரை ஜேபியில் போட்டுவிட்டான். அலுவலகமே அவனைக் கண்டு ஆடியது. புதிய ஜெனரல் மானேஜரிடம் கண்ட நேர்மையாலும், டைப்பிஸ்டுகளைப் பார்த்து பல் இளிக்காத ஒழுக்கத்தாலும், பாரபட்சமற்ற நிர்வாகத் தாலும் ஏற்பட்ட புதிய காற்றை சுவாசித்த சில விசுவாச ஊழியர்கள் 'ஜி.எம்., கரியமலவாயுவாகி விடக்கூடாதே என்று வருந்தினார்கள்.

க்குநனை நான் பண்டாயானததைக உன்னான்னதால் படுத்து மலையில் தலையில்

நாட்கள் நகர்ந்தன.

இரவு மணி எட்டாகி விட்டதால், ஜெனரல் மானேஜர், தன் அறையை விட்டு எழுந்தார். பண்டாரம், தன் அறையில் இருமிக் கொண்டிருந்தான்.

"என்ன மிஸ்டர் பண்டாரம் ! டாக்டரைப் போய்ப் பார்க்கக் கூடாது?' என்றார் ஜி.எம்.

"உழைக்கிறவனுக்கு ஒரு நோயும் வராது. வந்தாலும் போயிடு முன்" னு நீங்க சொன்னது என் மனசிலே அப்படியே பதிஞ்சிட்டுது சார்... இந்த இருமலை உழைப்பாலேயே போக்கிடுவேன்."

"அப்புறம் ஒரு விஷயம்... நம்ம ஆபீஸிலிருந்து திறமையான ஒரு இளைஞனை பம்பாய்க்கு மாத்தணுமுன்னு மானேஜிங் டைரக்டர் எழுதியிருக்கார்... யாரை அனுப்பலாம். மிஸ்டர் பண்டாரம்?"

பண்டாரம் சிந்தித்தான். சுரேஷ் பயல் வசமாய் மாட்டிக் கொண்டான். முகத்துக்கு எதிரேயே காக்காய் என்கிறவனை விட்டு வைப்பதா? ஒருநாள் 'உனக்கெதுக்குடா பேண்டும் சட்டையும்? என்று வேறு இவனைக் கேட்டிருக்கிறான். டேய் சுரேஷ்! இந்த பண்டாரத்தையா பகைத்தாய்?

"மிஸ்டர் பண்டாரம்..... யாரை அனுப்பலாம்? சும்மா சொல்லுங்க.... தயங்க வேண்டாம்."

"நம்ம சுரேஷ் டயனாமிக் பெல்லோ சார்."

"சுரேஷா... நேற்றே அவர்கிட்ட கேட்டேன். பம்பாய்ல வீடு கிடைக்காது' என்று அழாக் குறையாச் சொன்னாரு..."

"ஆபீஸ் விஷயத்துல அதெல்லாம் பார்த்தால் முடியுமா சார்? என்னோட சித்தப்பா பம்பாய்ல இரண்டு வீடு கட்டிக்கிட்டு வசதியாய் இருக்காரு... அவருக்கு, லெட்டர் எழுதி கரேஷுக்கு ஒரு போர்ஷனை விடும் படியா ஏற்பாடு பண்ணிடுறேன்."

"அதோடு, சுரேஷுக்குக் கல்யாணம் ஏற்பாடாகப் போகிறதாம். அதனாலே முடியாதுங்கறார்."

''அவன் யங் பெல்லோ தானே சார்? அடுத்த வருடம் பண்ணிக்கிட்டா போச்சு. குடியா முழுகிடும்?"

"அது மட்டுமில்லையாம். அவங்க அப்பாவுக்கு நோயாம். இவர் தான் ஒரே மகனாம்."

"சாக்கு சொல்லணுமுன்னா ஆயிரம் சொல்லலாம் சார்...."

"ஓகே மிஸ்டர் பண்டாரம் நான் யோசிக்கிறேன். தாங்க்யூ பார் யுவர் சஜ்ஜஷன் வாரீங்களா... வழியிலே டிராப் பண்ணிடுறேன்."

"நோ, தேங்க்ஸ் சார். வேலை நிறைய இருக்கு. நான் புறப்பட மணி பத்தாயிடும். எப்படி உழைக்கணும் என்கிறதுக்கு நீங்க

முன்னுதாரணமாய் இருக்கீங்க."

"குட் நைட் மிஸ்டர் பண்டாரம்." "குட் நைட் ஸார்" பண்டாரம், ஆனந்தக் கூத்தாடினான்.

மறுநாள், பண்டாரம் அலறியடித்துக் கொண்டும், ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டும் ஜெனரல் மானேஜர் அறைக்குள் ஓடினான்.

"சார், கடைசியிலே என்னை பம்பாய்க்கு மாற்றி இருக்கீங்களே..."

"டேக் இட் ஈஸிமிஸ்டர் பண்டாரம் மிகத்திறமையான, அதே நேரத்தில் இரவு பகலுன்னு பாராமல், உழைக்கிற இளைஞரை அனுப்பணுமுன்னு இருக்கிறதுனாலே.... உங்களையே அனுப்ப வேண்டியதாய்ப் போச்சு'

"சுரேஷ் என்னைவிட திறமைசாலி சார்..."

"இருக்கலாம். ஆனால் உங்களை மாதிரி அவராலே கஷ்டப்பட்டு உழைக்க முடியாது. நீங்க இரவு பத்து மணி வரைக்கும் வேலை பார்க்கிறதை, என் கண்ணால் பார்த்திருக்கேனே."

"சார், சார், பம்பாயிலே வீட்டுப் பிரச்சினை பயங்கரப் பிரச்சனை."

"உங்க சித்தப்பாவுக்குத் தான் ரெண்டு வீடு இருக்கே."

"அது மட்டுமில்ல சார். இந்த ஆவணியில் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சார்."

"நீங்க யங் -மேன்... அடுத்த வருஷம் பண்ணிக்கிட்டா குடியா முழுகிடும்"

"சார், சார் . தயவு செய்யுங்க சார். அப்பாவுக்கு டி. பி. அம்மாவுக்கு ஆஸ்தமா... சிஸ்டருக்கு வளைக்காப்பு..."

"சாக்கு சொல்லணுமுன்னு நினைச்சா ஆயிரம் கிடைக்கும்."

பண்டாரம், மழையில் நனைகிற காக்காய் மாதிரி ஆடினான். ஜெனரல் மானேஜரின் முகத்தில் படர்ந்த உறுதி, அவர், அவன் ஜிகினா வேலைக்கு மசியமாட்டார் என்று தெரிந்தது. மாற்றல் உத்தரவையே வெறித்துப் பார்த்தான்.

ஜெனரல் மானேஜரோ, ஆயிரம் பண்டாரங்களைச் சாப்பிட்டவர்போல் கன்னத்தை உப்பினார். பண்டாரம் எல் போர்டு ஆசாமி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வது மாதிரி, காலைத் தரையில் உதைத்துக் கொண்டே, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் வெளியேறினான்.

- குமுதம் - 1975
-------------------

6. சுதந்திர மாடன்

1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதியன்று நள்ளிரவில் சுதந்திரம் பிறந்துவிட்டதைக் காட்டும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுவர்க்கடிகாரங்கள் பன்னிரண்டு தடவை மணி அடித்து, டில்லி செங்கோட்டையிலும் பீரங்கிகள் முழங்கியபோது, குட்டாம்பட்டியிலும் பண்ணையார் பரமசிவத்தின் கவர்க்கடிகாரம் பன்னிரண்டு தடவை முழங்கியது. ஊர்ச்சாவடியில் அவர்வைத்திருந்த ரேடியோவில், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே பாடலோசை அலைகளாக காதில் மோதியபோது, விடுதலை வீரர்கள் குதூகலமாக கூடிக்குலாவி , கிட்டப்பாவின் பாட்டுக்களை எட்டரைக் கட்டையில் பாடிக் கொண்டிருந்தபோது -

அதே ஊரில் எட்டடி நீள அகல குடிசை வீட்டுக்குள் மங்கம்மா , பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் பிரசவத்தைக் கவனிக்க குடிமகள் தவிர யாரும் அங்கில்லை .

மங்கம்மா, கூரையைப் பார்த்தாள். கண்களில் இருந்து நீரூற்று போல் தோன்றிய கண்ணீர் கன்னங்களில் விழுந்து அமங்கலமாக இருந்த கழுத்தை நீர்த்தாலிச்சரடாய் சுற்றி மங்களம் ஆக்கியது. எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கும் போது, வண்டியில் கருப்பட்டியை ஏற்றிக்கொண்டு, கேரளாத்தில் உள்ள புனலூர் சந்தைக்குப் போன அவள் கணவன் - ஏழமாதங்களுக்கு முன்புவரை, தாலி கட்டிய மனைவிக்கு கையில் மல்லிகைப் பூவோடும், பையில் மிட்டாய்களோடும் திரும்பும் அவள் கணவன், வண்டியில் கிடத்தப்பட்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் இன்னொருவன் வண்டியோட்ட, இவன் பிணமாகத் திரும்பினான். காலரா என்றார்கள். காத்துக் கருப்பு என்றார்கள். சொந்தக்காரர்கள், இந்த முண்டயோட ஜாதகம்... கழுத்துல இருக்கிற அறுதலி, ரேகையை பார்த்தியாளா...' என்றார்கள்.

இந்திய சுதந்திர தினத்தில் மங்கம்மாவுக்கு, அதே நள்ளிரவில் ஆண்குழந்தை பிறந்ததால், உள்ளூர் கிராம முன்சீப், அவள் பையனுக்கு சுதந்திரமாடன்' என்று பெயர் வைத்தார். 'போயும் போயும் அந்த அறுதலி மவனுக்கா.... இந்த மாதிரி பேரு... ஒமக்கு மூளகிள பிசகிட்டா மச்சான் என்று சிலமைத்துனர்கள், முனீசிப்பை 'கோட்டி' பண்ணினாலும், பயலுக்கு எப்படியோ சுதந்திரமாடன் என்று பெயர், நமது சுதந்திரத்தைப் போல் நிலைத்துவிட்டது.

பாரதம், சுதந்திரம் அடைந்ததால், மங்கம்மாவும் ஓரளவு முன்னேறினாள். குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்து, அவன் அப்பனைமாதிரி, அவனும் சொந்தத்தில் ஒரு வண்டி வாங்கி புனலூர் சந்தைக்குப் போகாமல், சீவலப்பேரிச் சந்தையில் கருப்பட்டி வியாபாரம் செய்யவேண்டும், என்ற வைராக்கியத்தில், பக்கத்தில் உள்ள சட்டாம்பட்டியில் ஒரு ரெட்டியாரின் பூந்தோட்டத்தில் உள்ள மல்லிகை இருவாட்சி பூக்களை உதிரியாக வாங்கிவந்து வீட்டில் இருந்துகொண்டே மாலையாகத் தொடுத்தாள்.

குட்டாம்பட்டியின் முடிசூடா மன்னராக விளங்கிய பரமசிவம், அடிக்கடி அந்த ஊரிலும், அடுத்த ஊர்களிலும் விழாக்கள் நடத்தியதால், அவள் மாலைகளுக்கு நல்ல கிராக்கி. அந்தப் பக்கம் வரும் எல்லா அமைச்சர்களுக்கும், மங்கம்மாவிடமே மாலைகள் வாங்குவார்கள், கூட்டங்கள், கோஷ்டிகள். கால்கோள் விழாக்கள், கட்டிடத் திறப்புக்கள் முதலியவை சதா இருந்ததால், மங்கம்மாவின் தொழிலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களால், கிணறு வெட்டுவதற்கும், மாந்தோட்டம் போடவும், கோழிப் பண்ணை வைக்கவும் கொடுக்கப்பட்ட கடன்களை , வாங்கவேண்டியது, ஒரு குடிமகனின் கடமை என்ற நாட்டுப்பற்றான தேசபக்தியின் உந்தலில், பரமசிவம், தானும் வாங்கி, சொந்தக்காரர்களையும் வாங்க வைத்து, அந்தப் பணத்தை வைத்தே ஏழை எளியவர்களின் நிலத்தை வாங்கிப் போட்டார்.

மங்கம்மா, சாதாரண பூமாலை விற்பதில் இருந்து, ரோசாப்பூ மாலைவிற்கும் அளவுக்கு முன்னேறியபோது, பரமசிவம், கூட்டுறவு சங்கத் தலைவரானார். பஞ்சாயத்துத் தலைவரானார். அவர் மைத்துனர் பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டராகவும் மாறினார்.

அப்போது, பஞ்சம் வந்தது. கூடவே மங்கம்மாவுக்கும், பரமசிவத்திற்கும், தத்தம் முன்னேற்றத்தில் ஒரு பரீட்சை வந்தது. அவள், மாலையை விலைபேச ஆளில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், தலைவர்களும், அந்தப் பஞ்சப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு அஞ்சியதால். கூட்டங்கள் நடக்கவில்லை. மாலைகளுக்கு அவசியமில்லை.

அதே சமயத்தில், நாட்டின் உணவுப் பொருட்களை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும் என்ற உன்னத நோக்கில், வந்த ரேஷனைப் பயன்படுத்தி, எங்க ஊரு ஏழைங்க... ரேஷன் இல்லாட்டா செத்துப் போயிடுவாங்க' என்று சொல்லி, பரமசிவம் ரேஷன் கடை வைத்தார். குழந்தைகள் உணவில்லாமல் வயிறு முட்டியபோது, அவர் வயிறும் முட்டியது. ரேஷன் கடையால், பல நன்மைகள் ஏற்பட்டன. பரமசிவம், பக்கத்து டவுனில் மரக்கடை வைத்தார். உள்ளூரில் ஜவுளிக்கடை வைத்தார். ஏழை விவசாயத் தொழிலாளிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக, வயலுக்கு டிராக்டர் வாங்கிப் போட்டார். ஆகரேஷன் கடை வைத்ததால், ஏழைகளுக்கு வயிற்றுக்கு கிடைத்ததோ இல்லையோ, கைவேலை செய்ய மரக்கடையும் ; எண்சாண் உடம்பில் இருசாணையாவது மறைக்க ஜவுளிக்கடையும் கிடைத்தன.

குட்டாம்பட்டியும், நாட்டோடு சேர்ந்து முன்னேறியது. அப்படி முன்னேற முன்னேற , மங்கம்மாவும், இதர ஏழைகளுடன் சேர்ந்து பின்னேறிக் கொண்டிருந்தாள். பொதுக்கூட்டங்கள், விழாக்கள், மாலைகளை நேசிக்காமல், 'துண்டுகளையும்' 'பொன்னாடைகளையும் நேசிக்கும் அளவுக்கு பிரமுகர்கள் முன்னேறிவிட்டதால், அவள், கூலி வேலைக்குப் போனாள். நடவுக்கு கிடைத் எட்டணாவை வைத்துக்கொண்டு, தன்னையும், தன் மகனையும் தற்காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, சுதந்தர மாடன், ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மக்காச் சோளத்தை சாப்பிடும் அவனை, பெரிய இடத்துப் பையன்கள் சோத்துமாடன்' என்று அழைத்தாலும், அவன், படிப்பில், 'வேட்டைக்குப் போகும் உதிரமாடன் போல் ஆர்வம் காட்டினான். பரமசிவம் மகன் பரீட்சைகளில் கீழே முதலாவது ஆளாகவும், இவன் மேலே முதலாவதாகவும் இருந்தபோது, விதி சிரசாசனம் செய்தது. பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந்த சுதந்திர மாடனைப் பார்த்த பரமசிவத்திற்கு, மனசு கேட்கவில்லை. சாய்ந்து கிடந்த அவன் வயிற்றையும், அம்மாவிடம், சிலேட்டு வாங்க காக கேட்டு, கையடி பெற்றதால், கன்னத்தில் கறையாமல் நின்ற உப்பு நீரையும் பார்த்த அவருக்கு, உப்புக்கடலளவு கருணை பிறந்தது. அவர், ஆள்வைத்து நடத்தும் பால் கடையில், ஒரு மசால் வடையை, அவன் கையில் திணித்தார். பயல், அவரை நன்றிப் பெருக்கோடு பார்த்தபோது, "இன்னும் வடை வேணுமா...?" என்றார்.

"எனக்குப் போதும்... அம்மாவுக்கு .... ஒண்ணு வேணும்..."

"இந்தா... வாங்கிக்கல... இதோ பாருல... நம்ம தலைவருங்கெல்லாம்... தொழில் கல்வி வேணுமுன்னு சொல்லு தாங்க.... நீ சுதந்திர நாள்ல பிறந்த பய.... ஒன் பிறந்தநாள்..... சாதாரணமான துல்ல.... நீ கூட... தொழில் கல்வியப் பத்தி நினைக்காட்டா என்னல... அர்த்தம்?"

"நான், என்ன மாமா செய்யணும்..?"

"ஊரல். எல்லாரும் படிச்சிட்டு டவுனுக்குப் போயிட்டா - நம்ம ஊர் என்னாவுறது? ஒன்ன மாதிரி புத்திசாலிப் பயலுவளுக்கே புரிய மாட்டக்கே... அப்புறம் வேற எவனுக்கு புரியப் போவுது...?"

"நான் என்ன மாமா செய்யணும்...?"

"நம்ம நாட்டுக்கு இப்போதேவை உழைப்பு... நம்ம தலைவரு சொன்னது மாதிரி, நாம் உற்பத்தியப் பெருக்கணும்... உணவு... ஏற்றுமதியாகணும்... அதுக்கு ... கதந்திர நாள்ல பிறந்த ஒன் பங்கு என்னடா.... சொல்லு பார்ப்போம்..."

" நல்லா படிக்கணும்... வாத்தியார் சொல்றபடி நடக்கணும்.... தாயிற் சிறந்த கோவில் இல்லன்னு நினைக்கணும்..."

"மெத்தப் படிச்சவன், கத்தப் பயித்தியக்காரன்னு ஒரு பழமொழி இருக்கு... தெரியுமால? படிச்சது போதாதா...? படிப்பு, உழைப்புக்காகவா... உழைப்பு... படிப்புக்காக.... அதனால், பேசாம, ஒன்னை மாதிரி பையங்க, பேனா பிடிக்கக் கூடாது. ஏர் பிடிக்கணும்... சிலேட்டுக்குப் பதிலா.... உரமூட்டை தூக்கணும்..."

"ஒம்ம மவன் மட்டும் படிக்கான்...''

"அவன், உருப்படாடத பய... நீயும் அவனை மாதிரி கெட்டுப் போகணுமுன்னு நினைச்சா, பேஷா படி.... அம்மாவுக்கு கஞ்சி ஊத்தணும்.... பிறந்த கிராமத்தை, முன்னுக்கு கொண்டு

வரணுமுன்னா .... வயலுல உழை... ஒன் இஷ்டம்...''

"வயலு இல்லியே. மாமா." "அறிவிருக்காடா... என் வயல் வேற... ஒன் வயலு வேறயா.?" "மாமா.....''

"இந்தால் இன்னொரு வடை. ஏய், ஜோஸப்பு! நான் சொன்னேன்னு அவன் மாசானம் கசாப்புக் கடையில், அரைச் சேரு கறி வாங்கி, இந்தப் பயகிட்ட கொடு. வீட்ல போயி ... அம்மாவ, ஆட்டுக்கறி வைக்கச் சொல்லி, சாப்புடுல... அப்புறம் அடுத்த விஷயத்த யோசிக்கலாம். நல்லாச் சாப்புடு... ஏமுல... பட்டினி கிடக்க....? உன் வயித்தப் பார்த்தால், என் வயிற என்னவோ பண்ணுது..."

ஆட்டுக்கறி சாப்பிட்ட சுதந்திர மாடன், அம்மாவின் ஆலோசனையை மீறி - அடிக்கப்போன அவளை, எதிர்த்து அடிக்கப் போனான். பிறகு இப்படி வார்த்தைகளை வீசிப் போட்டான்.

"இனிமேல்... வயலுல நடுறதுக்கு போனீயான்னா, செறுக்கி மவளே கொன்னுப்புடுவேன்... இன்னயில் இருந்து, நான் வேலக்கி... போறேன்... ஆட்டுக்கறி வாங்கி வருவேன்... சமையல் பண்ணணும், நான் ஊட்டுறபோது, வாயைத் திறக்கணும்.... இல்லன்னா.. கொன்னுப்புடுவேன்... அதுவும் இல்லன்னா.... பட்டணத்துக்கு ஓடிப் போயிடுவேன்.... மசால் வடையை, ரெண்டு நாளா.. ஏன் திங்கமா வச்சிருக்க... திங்கிறியா? பம்பாய்க்கு ஓடிப் போவட்டுமா...?"

மங்கம்மா, அவன் ஓடிப்போகாமல் இருக்க, அழுத வாய்க்குள் மசால்வடையை வைத்தாள். மற்றபையன்களைப்போல், தன் மகனும் படித்து, வாத்தியாராகி, இஸ்திரி ' போட்ட சட்டையோடு, இன்னொரு 'வாத்திச்சியைக் ' கல்யாணம் பண்ணி, சுகமாக வாழவேண்டும் என்று நினைத்த அந்தத் தாய், இப்போது மகன் எப்படியோ இந்த ஊரில் வாழ்ந்தால் சரிதான் என்று நினைத்தான், ஒரே பிள்ளை, கண்ணுக்கு முன்னாலேயே இருக்கவேண்டும் என்று எண்ணியும், தொண்டைக்குள் விக்கிய மசால்வடைத் துண்டுகளை, தண்ணீரைக் குடித்து வயிற்றுக்குள் அனுப்பினாள்.

சுதந்திரமாடன், பரமசிவத்தின் வீட்டிற்குத் துள்ளிக் குதித்துப் போனான்.

ஆண்டுகள் போய்க்கொண்டிருந்தன. மங்கம்மாவின் உடம்பும், உயிரும் பிரிந்ததை பொருட்படுத்தாமல் போய்க் கொண்டிருந்தன.

'நாட்டில் ஒருமைப்பாடு நிலவவேண்டும்; நிலவப்பட வேண்டும்' என்றும், அதற்கு முன்னோடியாக, கிராமத்து மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட வேண்டும்' என்றும், ஊரில் பரமசிவத்தின், ரைஸ்மில்லை திறந்து வைத்து, உணவு அமைச்சர் பேசியதை, சுதந்திர நாளில் பிறந்த மாடன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

அம்மா இறந்த துக்கத்தை, பரமசிவத்தின் மனைவியை 'அம்மா' என்றழைத்து மறந்தான். அவளும் , "அட கட்டையில் போற மவனேன்னு" சொல்வதை, ஒரு தாயின் கரிசனமாக எடுத்துக் கொண்டு, "போற பய மவனுன்னு , சொல்லாதிய... எங்கய்யா, போயிட்டதால்..... போன பய மவனேன் னு சொல்லணும்...'' என்று சொன்னபோது, திருமதி பரமசிவம், 'பய மவனுக்கு ... வாயப் பாரு..." என்று சிரிப்பாள்.

நாட்டில் ஒருமைப்பாடு ஏற்பட்டதோ இல்லையோ, சுதந்திரமாடன் பரமசிவக் குடும்பத்துடன் ஐக்கியமானான். சமயலறை வரைக்கும் இவன் சாம்ராஜ்யம். வீட்டில் ஆள் இல்லையென்றால், இவனே பானையைத் திறந்து, சாப்பாடு போட்டுக் கொள்ளலாம். மிளகாய் வத்தல் மூட்டைகளை, இவனே வண்டியில் ஏற்றி, சந்தைக்கு கொண்டுபோய் விற்கலாம். விற்ற பணத்தில், இவனே, பரமசிவத்துக்கு எட்டுமுழ வேஷ்டி வாங்கி வரலாம். இவனே சந்தையில், 'மஞ்சள் மசலாக்களையும்' லட்டுகளையும் வாங்கி வரலாம்.

பரமசிவத்தின் மகள் - செகண்டரி கிரேட் வாத்தியார் டிரெயினிங் படிக்கும் பத்மாவை, இவன்தான், திருநெல்வேலியில் கொண்டு போய் விடுவான். அவள் கூட, இவன் மூலந்தான், தன் பிரச்சினைகளை அம்மாவிடம் சேரும்படிச் செய்வாள். கல்லூரியில் படிப்பதாகக் கருதப்படும் பகிருஷ்ணன், இவனைச் சரிக்கட்டித்தான், அப்பாவிடம் மோசடிப் பணத்தை வாங்கப் பார்ப்பான். தன் காதலுக்குக்கூட, இவனைத்தான் நம்பி இருக்கிறான்.

அவள் ஒருதடவை, பரமசிவம், நான்கு மூட்டை கத்தரிக்காய்களை விலைபேசி, 'அட்வான்ஸ் வாங்கிவிட்டார். அப்போதுதான் வயலில், இருந்துவந்த சுதந்திரமாடன், "கொஞ்சமாவது முன்ன பின்ன யோசித்து பார்த்தீரா....? மூட்டை எட்டு ருபாயா இருக்கையில்.... ஆறு ரூபாய்க்குக் கொடுக்கிறதா.... அதெல்லாம் முடியாது...'' என்று சொல்லி, வியாபாரியின் வேலையாட்கள் முதுகுகளில், பரமசிவம் ஏற்றிய மூட்டைகளை, இறக்கி வைத்தான். பத்மாவுக்கு , பக்கத்து ஊரில் இருந்துவந்த ஒரு வரனுக்கு பரமசிவம் சம்மதித்தபோது, "யாரு , அந்த முட்டக் கண்ணுப் பயலுக்கா...? ஆலம் பழத்த, அண்டங்காக்கா கொத்துறதா...?" என்று முறியடித்தான். பரமசிவம், பயலுக்கும், தன் மகளுக்கும் இஸ்கு - தெஸ்கு இருக்குமோ என்று சந்தேகப் பட்டபோது, என் தங்கச்சிக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணுமுன்னு.... எனக்குத்தான் தெரியும்.... ஒம்ம பாட்டுக்கு கிடயும்..." என்றான்.

மொத்தத்தில், அந்த வீட்டின் நிர்வாகமே அவன் கையில். வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரம்... வயலில், எந்தப் பயிரையும் விளைவிக்க சுதந்திரம்... எதையும் விற்கச் சுதந்திரம், எந்த யோசைனையும் சொல்லச் சுதந்திரம்... எங்கும் சுதந்திரம்.... எல்லாவற்றிலும் சுதந்திரம்..... 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்ற பாரதி பாட்டுக்கு நாயகனாய் விளங்கும் அளவுக்கு, அளவற்ற சுதந்திரம்.

பரமசிவத்தையும், சும்மாச் சொல்லக்கூடாது. சுதந்திர மாடனின் பேச்சு சுதந்திரத்திற்கு, செயல் கதந்திரத்திற்கு, வீட்டு சாசனத்தில் உத்திரவாதம் அளித்துவிட்டார். அவனுடைய , உடல் நலத்தில், அவனைவிட, அதிக அக்கறை செலுத்தினார். ஒரு தடவை, சந்தையில், தக்காளி மூட்டைகளை விற்றுவிட்டு , பெற்ற பணத்தில் நோட்டுக்களை, 'மடிச்சீலைக்குள்' வைத்துவிட்டு, சில்லறை நாணயங்களை, கைகளில் வைத்துக் குலுக்கிக் கொண்டே, ஒரு சிங்கிள் டீயை , மசால்வடையின் துணையில்லாமல் குடித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்ததும் , பரமசிவம் கோபப்பட்டார்; சினந்தார்; சீறினார்; எகிறினார்.

"வெறும் டீயைக் குடிச்சால்... உடம்பு என்னத்துக்குல ஆகும்? போயிவைரமுத்துக்கடையில்.... பிரியாணி சாப்புடுறதுக்கு என்னல...? என் பணம் வேற... உன் பணம் வேறயால... போல.... போயி பிரியாணி சாப்புடுல... வேணுமுன்னா , ஒரு ஆம்லேட்டும்... சாப்புடு... டீ குடிக்கானரம் டீ....."

இதேபோல், இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரிக்காரன், வாத்தியாரம்மாவான பதமா, ஆகியோருக்கு உடன் பிறப்பாய், அறுபது வயது பரமசிவத்திற்கு, ஐந்தாண்டுக்கு முன்பு பிறந்த ஒரு பொடியன், அவர் மனைவி ஆகியோர் எல்லோரும் 'கோரம் பாயில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுதந்திரமாடனும், அவர்களோடு, உட்கார்ந்து உணவருந்தினான். கல்லூரிக்காரன், "மாடா கொஞ்சம் உப்பு எடுத்துக்கிட்டு வா...'' என்றான். உடனே, நமது மாடன், "காலு ஒடிஞ்சா போயிட்டு போடா... உப்பு எடுத்துக்கிட்டுவாரகையோட எனக்குத் தணணியும் கொண்டுவா..." என்றான். பரமசிவம், சிரித்தார். பத்மா, புன்னகைத் தாள். பல சினிமாப் படங்களில், 'குணசித்திர வேலைக்காரர்கள் எசமான்... எசமான்... உங்க உப்பத் திங்கிற நாயி... நான் -.' என்று நெளிந்து, குழைந்து, ஓரளவு விலகி, வினயமாய்ப் பேசும் காட்சிகளை, கதாநாயகத் தோரணையில் கண்டுகளித்த கல்லூரிக்காரன், சுதந்திரமாடனின் போக்கை அதிகபட்சமாகக் கருதி, வார்த்தைகளை ஏவிவிட்டாள்.

"மாடா...! நீ வேலைக்காரன் எங்கிறதை மறந்துடாத... எதுக்கும் ஒரு அளவு வேணும்... எல்லாம் இவங்க... கொடுக்கிற இளக்காரம். நரிக்கு... நாட்டாம கொடுத்தால்..."

அவ்வளவுதான்.

பரமசிவம், அனல் பிழம்பாக எழுந்தார். மகனை, அடிக்கப் போன அவரை, மாடனே தடுத்தான். ஆனால், அவர் பேச்சைத் தடுக்கவில்லை.

"என்னல... வேலக்காரன்... கீலக்காரன்னு பேசுற... பைத்தியம் பிடிச்சுட்டால்....? யார்ல... வேலைக்காரன் ? ஒன்னை ... நான் பெத்ததுனால்.... இந்த வீட்ல வச்சிருக்கேன். இவன் பெறாம, பெத்தப் பிள்ள... இவனயால், வேலைக்காரன்னு சொல்றே..? எங்க.... இன்னொரு தடவை சொல்லுல பார்க்கலாம். குடல உருவி, தோள் மலயா போடுறனா இல்லியான்னு பாரு.... எல்லாம் இந்தச் செறுக்கி மவள்.... கொடுக்கிற இளக்காரம்... ஒன்னெல்லாம், பிறகும்போதே வாயில் நெல்லப்போட்டு கொன்னுருக்கணும்..."

"செறுக்கி மவளான" அவர் மனைவி, "இன்றிருப்பார், நேற்றில்லை... நேற்றிருப்பார் இன்றில்லை... இப்படி இருக்கையில்... வேலக்காரன்னு நாக்குமேல பல்லப் போட்டுச் பேசலாமடா... நீ... படிச்சவனாக்கும். மூக்காலமும் காக்கா, முழுவிக் குளிச்சாலும், அது கொக்காயிடுமா...? ஒய்யாவோட... அல்பத்தனமதானே ஒனக்கு வரும்..?" என்றாள்.

அன்று , பாசத்தால் விம்மிய சுதந்திரமாடன், இப்போதும் விம்மிக் கொண்டிருக்கிறான். பரமசிவத்தின் வீட்டையே, பாரதத் திருநாடாகக் கருதி, எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்ததாக கருதிய இதே சுதந்திரமாடன், இப்போது, எருமை மாட்டுக் கொட்டடிக்கருகே, கொசுக்கள் அரிக்க, 'லொக் லொக்' என்று இருமிக் கொண்டிருக்கிறான்.

நாளைக்கு, வருடப் பிறப்பு.

எப்படியும் பரமசிவ மாமாவிடம் பக்குவமாகச் சொல்லிவிட வேண்டும். இனிமேல் இந்த வீட்டில் இருக்கமுடியாது. இருக்கக் கூடாது... நடந்ததை நினைத்தான்.

சென்ற பொங்கலின்போது, இரவே பொங்கலிட்டு, பூஜை செய்துவிட்டு, " இன்னைக்குமாடா வயலுக்கு?" என்று சொன்ன பரமசிவத்தை, கண்களால் எரித்துவிட்டு, வேலைக்குப் போனான். மறுநாள், மாட்டுப்பொங்கல் உழவு மாடுகளை, தொழுவில் இருந்து அவிழ்த்து, புண்ணாக்கு கலந்த தொட்டியில் தண்ணி காட்டிவிட்டு, அவற்றைக் குளிப்பாட்ட குளத்துக்குக் கொண்டு போனான். ஒரு மாட்டைக் குளிப்பாட்டியபோது, அது தற்செயலாகவோ அல்லது கூச்சத்தாலோ திமிர, அதன் கொம்பு, விலாவில் பட்டு, இருபது அடிக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டான். ரத்தமில்லாத ஊமைக்காயம். பிராணனைப் பிடுங்கும் வலி. பரமசிவம், பதைபதைத்தார். அவர் மனைவி, படபடத்தாள். 'அயோடக்ஸ்' போட்டார்கள். அய்யய்யோ ' என்றார்கள். இதப் போயி பெரிசா...' என்றான் மாடன்.

நாளாக நாளாக, சுதந்திரமாடன் இருமத் துவங்கினான். வர்மப்பிடி என்றார்கள். அவனால், வேலைகளைச் செய்ய முடியவில்லை. எழுந்தால், களுக்குப் பிடித்தது. உட்கார்ந்தால், மூச்சு முட்டியது. அவனால், வழக்கம் போல் அதிகாலையில் எழ முடியவில்லை. மிளகாய் மூட்டைகளை, தூக்கவே முடியவில்லை.

முதல் தடவையாக, பரமசிவத்திடம், தயங்கிக் கொண்டே வந்து, தலையைச் சொறிந்துகொண்டே " உடம்புக்குள்ள.... எலும்பு முறிஞ்சிருக்கலாம்... இல்லன்னா , நரம்பு பிசகி இருக்கலாமாம். போட்டோ எடுத்து பார்க்கலாமா...?" என்றான்.

பரமசிவம், அவனைச் சினந்து பார்த்துக் கொண்டே, "அதெல்லாம் ஒண்ணுமிருக்காது... ஒன் மனசுல தான் பீதி.... சரியாயிடும்..." என்றார்.

சரியாகவில்லை .

சுதந்திரமாடனின் இருமல், நாட்டின் பிரச்சினைகள்போல், நாளுக்கு நாள் வளர்ந்தது. வைரம் பாய்ந்த அவன் உடம்பு, கரையான் அரித்த பூவரசு மரம்போல் ஆகியது. நெஞ்செலும்புகள் வெளியே வரத் துடித்தன. கண்கள், உள்ளே போக முயன்றன. இருமும்போது, லேசாக ரத்தம் வரத் துவங்கியது. ஆரம்பத்திலேயே கவனிச்சிருக்கலாம்.... இனிமேல் பார்த்தால், ஆயிரம் ரூபாய்க்கு மேல... ஆகுமே...' என்று யோசித்த பரமசிவம், தற்செயலாக வெளியூரில் இருந்து வந்த, இன்னொரு பன்னிரண்டு வயது அனாதைப் பயலை, வீட்டுக்குக் கொண்டு வந்து, விளக்கேற்றச் சொன்னதுடன், சுதந்திரமாடனை, விடவும் முடியாமல், தொடவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், அவன் விலகுவதற்கான் சூழ்நிலைகளை உருவாகினார்.

சுதந்திரமாடன் கண்ணெதிரிலேயே , புது வேலைகாரப் பையனை, மிளகாய் மூட்டைகளை விற்கச் சொன்னார். "பிரியாணி சாப்பிட்டுட்டு வாடா...'' என்றார் ; கொஞ்சினார்; குலாவினார். போதாக்குறைக்கு மாடனைப் பார்த்து, "நாலு எருமை மாடு வாங்கித்தாரேன் - மேய்க்கியா...?" என்றார். அவரது தர்மபத்தினியும், "இப்படியே இருமுனா எப்படி... மாடு முட்டுன சாக்குல, வயலுக்கு போகாட்டா என்ன அர்த்தம்.? பாசாங்குக்கும் அளவு வேணாமா...?" என்றாள். பழைய சுதந்திரக் கோளாறில் அல்லது உரிமையில், கல்லூரிக்காரனை, கிருஷ்ணா... இந்த சட்டை ஒனக்கு நல்லா இல்லடா...' என்று சுதந்திர மாடன் கேட்டபோது, 'நான், ஒன்னமாதிரி, வேலைக்காரனா... கண்டதப் போடுறதுக்கு..." என்றான் அந்த கிருஷ்ணன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம், லேசாகச் சிரித்தார்... லேசாத்தான்.....

சுதந்திரமாடன், இந்த முப்பத்திரண்டாவது வயதில், மனைவி வேண்டும், மனை வேண்டும் என்று நினைக்காமல், 'உழைப்பு... உழைப்பு...' என்று சொல்லாமல் செயலில் காட்டியவன், இன்றும் இருமிக் கொண்டிருந்தான். குடலை, வாய்க்குக் கொண்டுவரும் இருமல், வெள்ளைச் சளி ; குங்கும் எச்சில். எம்மா... எம்மா... என்ற வார்த்தைப் பிளிறல்கள். எனக்காம்மா ரத்தம்' என்ற கத்தல்கள். எனக்குச் சீக்கிரமா சாவு வரமாட்டங்கே.' என்ற புலம்பல்கள். இருபதாண்டு கால உழைப்புக்கு, ஒரேயடியாய் ஓய்வெடுக்கும் இயலாமைப் பெருமூச்சு . இதுதான் உலகமா என்ற ஆதங்கம். எல்லா இடத்துலயும் ஏழைகள் கறிவேப்பிலைகளோ என்ற இருமலுகளுக்கிடையே தோன்றிய ஆராய்ச்சி.

சுதந்திர மாடன் இருமினான். யானை பிளிறுவதுபோல் இருமினான் . ஆந்தையின் மரண ஓலத்தைப்போல் இழுத்துக் கொண்டே இருமினான். பாம்பு வாயில் அகப்பட்ட சாகாத தவளைபோல் - பல்லியிடம் சிக்கிய பூச்சி போல், இருமலில் சிக்கி, ரத்தஞ் சொட்டச் சொட்ட கக்கி, இருமியபோது -

பரமசிவம், வந்தார். படுத்திருந்த கோலத்தோடு வந்தார்.

"என்னடா... ஒன் மனசுல என்ன... நெனப்பு... நாங்கெல்லாம் தூங்கணுமா....? வேண்டாமா..?"

திருமதி. பரமசிவம், வந்தாள்.

"எல்லாம் நீரு கொடுத்த இளக்காரம். நாம தூங்கக் கூடாதுன்னு வார பாசாங்கு இருமலு... நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்ச கத..... நம்ம வீட்டுக்கும் வந்துட்டு."

சுதந்திரமாடன், பரமசிவத்தைப் பார்த்தான். நாளைக்கு வருஷப் பிறப்பு. சொல்லிட வேண்டியதுதான்.

"மாமா, என்னால முடியல... நாளையிலே இருந்து நின்னுடுறேன்... ஒம்ம கையால்..... ஒரு வெத்துல பாக்கு கடைவச்சிக் கொடுக்கணும்... என் கணக்கப் பார்க்கணும்."

"பொல்லாத கணக்கு.... ஒம்மா சாவும்போது, முந்நூறு கொடுத்தேன். அந்த முந்நூறு இப்போ மூவாயிரம் ரூபா மாதிரி. நாளைக்கு கணக்குப் பார்க்கலாம். யாரு யாருக்கு கொடுக்கணும் என்கிறதை... காலையில் பேசிக்கலாம்... ஒன் பணத்துல, ஒருபைசா வேண்டாம்...''

பரமசிவம், மனைவியோடு போய்விட்டார்.

சுதந்திரமாடனுக்கு, ரத்தம் உறைவது போலிருந்தது. இருமல் கூட, அவனுக்குப் பயப்பட்டு சிறிது விலகியது.

'சாமக் கோழி கூவியது. புதிய வேலைக்காரப்பையனிடம், பரமசிவம் பேசுவது அவனுக்குக் கேட்டது.

"ஏய்... ராசதுரை... எழுந்திரு ராசா. மாட்டுக்கு தண்ணி காட்டு.... வயலுக்கு ஜாக்கிரதையா போடா... இல்லன்னா - கொஞ்சநேரம் தூங்கு..... முடியாட்டா தூக்கக் கலக்கம் போறதுக்கு ... காத்தமுத்து கடையில் ஒரு டீ குடிச்சிட்டுப்போ... வெறும் டீ ஆகாது... ஒரு மசால்வடையும் தின்னு... இந்தா காக.... எழுந்திரு... ராஜா... மாடு , ஒன்னையே பாக்குது பாரு..."

சுதந்திரமாடன், ஒரு முடிவுக்கு வந்தான்.

பரமசிவத்தின், சாப்பாட்டுக்குள் சாப்பாடாகப்போகும் அந்த, பையனிடம் தன் கதையை பக்குவமாகச் சொல்லி, அவனை மீட்கவேண்டும்..... அப்புறம், தான் அலட்சியப்படுத்திய சக விவசாயத் தொழிலாளிகளின் இடத்திற்குப் போகவேண்டும். 'என்னைப்போல் ஆகாமல் இருக்க என்ன வழி...' என்று கேட்க வேண்டும். அதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும்.

அப்புறம்..... இருமல் விட்ட வழி...

தாமரை, ஆகஸ்ட் - 1979
-----------------

7. இட ஒதுக்கீடு

அவர்கள், அம்பாசிடர் காரில் போகுமளவிற்கு கிளாஸ் ஒன்' அதிகாரிகளும் அல்ல. அதே சமயம் அரசாங்க சைக்கிள்களில் சவாரி செய்யும் கிளாஸ் போர் ஊழியர்களும் இல்லை. அதோ அந்த அலுவலகம் முன்னால் நிற்கும் ஜீப்பில் ஏறக்கூடிய கெஜட்டட் அதிகாரிகள். இந்த வகையில் இரண்டுபேர். இவர்களுக்கு ஒத்தூதும் உதவியாளர்கள் இருவர். ஜூனியர் அஸிஸ்டென்ட்களோ அல்லது அஸிஸ்டென்ட் ஜூனியர்களோ - இன்னொருத்தர் காக்கி பாண்ட் காக்கி சட்டை வாலிபன். யூனிபாரமாக அதை போட்டிருந்தானா, அல்லது அதுதான் அவன் ஆடையா என்பது அவனுக்கே தெரியாது.

எல்லோரும் படியிறங்கி வந்து அந்த ஜீப்பையே மொய்த்தார்கள். காக்கிச் சட்டை வாலிபன் மட்டும் டிரைவர் இருக்கைப் பக்கம் நின்று ஸ்டியரிங்கை துடைத்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேச்சு நிற்காது என்பது அறிந்தவன் போல் ஒரு துணியை எடுத்து இருக்கையை துடைத்தான். பிறகு ஜீப்பின் மோவாயை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்தான் . டயர்களை ஒரு அமுக்கு

அமுக்கிப் பார்த்தான்.

இதற்குள் கெஜட்டட அதிகாரிகளில் ஒருவர் அருகே தெரிந்த வெற்றிலை பாக்குக் கடையை நோக்கி நடந்தார். உயரம் குறைவு. உடல் சதை அதிகம். நடையோ நாட்டியம். ஜீப் அருகே நின்ற இன்னொருத்தர் உயரமும், சதையும் ஒரே வாகில் அமைந்தவர். ஆட்களை அமுக்கிப் பார்க்கும் கண்காரர். கடையைப் பார்த்துப் போன கண்களை, காக்கிச் சட்டை வாலிபன் பக்கம் திருப்பிவிட்டுக் கேட்டார்.

"யோவ் கந்தா, பெட்ரோல் போட்டுட்டியா?"

"நேற்று நைட்லயே போட்டுட்டேன் சார்...''

"குட்... சில டிரைவருங்க புறப்படும் போதுதான் தும்மல் வாரது மாதிரி பெட்ரோல் பங்க பார்த்து விடுவாங்க. அப்புறம் நாளைக்கு நான் சொன்னது?"

"மறக்க மாட்டேங்க.... காலையிலேயே அம்மாவையும் பிள்ளிங்களையும் முருகன் கோயிலுக்கு...."

"யோவ்... ஏன்யா பராக்குப் பாக்கீங்க.... ஜீப்புல ஏறுங்களேன்யா ...''

அந்த அதிகாரி, டிரைவரிடம் பெட்ரோல் பற்றிக் கேட்டபோது அக்கறை காட்டாமல் நின்றுவிட்டு, அம்மாவையும் பிள்ளிங்களையும் அரசு ஜீப்பில் ஏற்றும் செயல்திட்டம் பற்றி அதிகமாய்த் தெரிந்து கொள்ள அந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் சிறிது நெருங்கி நின்றது, அவருக்குப் பிடிக்க வில்லை . ஆகையால், அவர் குரலி ட்டதும், அவர்களும் அவர் சொல்வதை பயபக்தியோடு கேட்பதுபோல் பாவலா செய்துகொண்டு, பின்பக்கமாக ஜீப்பில் ஏறினார்கள். ஆனாலும், அவர்கள் கண்கள் என்னமோ இன்னும் அதிகாரி டிரைவர் உரையாடலில் தான் நிலைகொண்டது. ஜூனியர்கள் ஒருவர் கண்ணில் ஒருவர் முகம் படும்படி, கண்ணடித்துக் கொண்டார்கள்.

இதற்குள், டிரைவர் கந்தன், ஜீப்பை உரும் வைத்தான். ஆனாலும் அவனிடம் பேச்சுக் கொடுத்த அந்த அதிகாரி, இன்னும் அதில் ஏறாமல், வெற்றிலை பாக்குக் கடையில் "ஊதிக் கொண்டு வந்த அடுத்த கெஜட்ட அதிகாரிக்கு காத்திருப்பவர் போல் நின்றார். இந்தக் காத்திருத்தலுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. எந்த அரசு ஜீப்பிலும் ஜன்னலோர இருக்கையில் சீனியர் அதிகாரி உட்காருவார். அவருக்கும், டிரைவருக்கும் மத்தியில் ஜூனியர் உட்கார வேண்டும். கடையிலிருந்து வருகிறவரும், கிடையில் நிற்பதுபோல் நிற்பவரும், ஒரே ராங்க அதிகாரிகள் வந்துகொண்டிருப்பவர், கெஜட்ட அதிகாரியாகப் பதிவி பெற்று, முப்பத்தைந்து வயதைத் தட்டியவர். நிற்பவர், கிளார்க்காகச் சேர்ந்து கெஜட்ட ராங்கிற்கு வந்திருப்பவர். முன்னவர் நேரடி நியமனக்காரர். பின்னவர் புரமோட்டி'. இந்த இருதரப்பு புரமோட்டி- நேரடி நியமன அதிகரிகளுக்கும் இப்போது சீனியாரிட்டி சண்டை . விவகாரம் கோர்ட்டுக்குப்போயிருக்கிறது. அதுவரைக்கும் யார்யாருக்கு சீனியர் என்பது செட்டியார் முடுக்கு மாதிரி. ஆகையால் நின்று கொண்டிருக்கும் ஐம்பது வயதுக்காரர், வருகிறவரை ஜூனியராக அனுமானித்து அவரை உள்ளே தள்ளிவிட்டு, ஓரச்சீட்டில் உட்கார காத்து நின்றார். ஆனால், வருகிறவோதனது ஜீனியர் ஏன் இன்னும் நடுப்பக்கம் போய் உட்காராமல் இருக்கிறார் என்று சிந்தித்துக் கொண்டே வந்தார்.

நடப்பவர் நெருங்கியதும், நிற்பவர் கேட்டார்.

"உன் ஒய்ப்புக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னீயே... இப்ப எப்படிப்பா இருக்குது?" (அப்படியாவது குசலத்துக்கு மயங்கி போய் உட்காருவான்னா என்று பார்ப்போம்) "சரி ஜீப்புல ஏறு , நீங்க ஏறினால் தானே நான் ஏற முடியும்?"

"ஊளைக்காற்று வீசுது பாரு.... எனக்கு கொஞ்சம் ஆஸ்துமா.... ஒத்துக்காது. நீ மொதல்ல ஏறு.....

நின்றவருக்கு ஆஸ்துமா என்ற ஒரே காரணத்திற்காக, தான் நடுப்பக்கம் உட்கார இசைந்ததாக புரமோட்டி மீது ஒரு பரிதாபப் பார்வையை வீசிக்கொண்டே, நேரடி நியமனம் முதலில் ஏறினார்.

டிரைவர் கந்தன், இருக்கையில் எகிறிக் குதிக்காமல், அவர்களைப் பயபக்தியோடு பார்த்துக் கொண்டே, பணிவோடு ஏறினான். அவனுக்கு அவசரம். பிள்ளைத்தாய்ச்சி பெண்டாட்டி. சீக்கிரம் திரும்ப வேண்டும். விபத்து கிபத்து நடக்காமல் இருப்பதற்கு, சாமியைக் கும்பிடுவது போல், அவன் கைகளை குவித்தபோது, அந்த பாடாவதி ஜீப் போட்ட சப்தம் அசல் அமங்கலமாய் ஒலித்தது.

எப்படியோ, அந்த ஜீப் அங்குமிங்குமாய் புதுமணப் பெண்போல் நாணிக்கோணி, மேடையாடும் ரிக்கார்டு ஆட்டக்காரிகள் போல் குதித்துக் குதித்து, மெயின் ரோட்டுக்கு வந்தது. டிரைவர் ஆக்ஸிலேட்டரை எழுவது கிலோ மீட்டருக்கு அழுத்தப் போனபோது, ஒரு வெள்ளை யூனிபார போலீஸ், வண்டிய நிறுத்தச் சொல்லி கையை குறுக்காகப் போட்டது. கந்தன் கேட்டான் :

"என்ன சார்...."

"துரை கீழே இறங்கிப் பேச மாட்டீங்களோ.."

சிவபெருமான் கழுத்து பாம்புபோல் தன்னை நினைத்துக் கொண்ட கந்தன், அந்த கெஜட்டட் அதிகாரிகளைப் பார்த்தான். அவர்கள், அந்த வெள்ளைப் போலீஸை மிரட்டுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்களோ, அது அவன் பிரச்சனை என்பது போல் சொல்லி வைத்ததுபோல், வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களாம். அந்த எம்.எல்.ஏ . கலெக்டரை - அடிக்கத்தான் வந்தானாம். ஆனா அப்போகையில் கிடைச்சது ஸ்டேனாதானாம்.'

கந்தன், வெறுப்போடு கீழே குதித்தான். வெள்ளைப் போலீஸ், அவனை சாலையின் மறுமுனைக்கு கூட்டிப்போனது. கந்தன் கேட்டான்:

"நான் என்ன சார் தப்புப் பண்ணினேன்?"

"அதுகூட உனக்குத் தெரியலையா? ஜீப்போட லைட்டு கண்ணைப் பறிக்கும்படியா பிரகாசமா இருக்கப்படாதுன்னு கவர்ன்மென்டல ஒரு ஜீ.ஓ . வந்திருக்கே.... அதோ பார்.... உன் ஜீப்பை ...."

"ஆமா சார்... லைட்ட ஆப் செய்ய மறந்துட்டேன்.... சொன்னதுக்கு நன்றி சார்.''

"நன்றி வேணாம். அபராதந்தான் வேணும். ஆமா உன் பெயரென்ன?"

"தெரியாமத்தான் கேனே. லைட்டால் கண்ணு கூசி அதினால் எதிர் வண்டிங்களுக்கு, இடைஞ்சல் வரக் கூடாதுன்னுதான், அரசாங்கத்துல இப்படி ஒரு கண்டிஷனக் கொண்டு வந்திருக்காங்க.... இப்போ பட்டப்பகலு. சூரியன் வேற கடுது. அந்த லைட்டு எப்படி சார் கண்ணக்கூச வைக்கும்?"

"கூடக்கூடவா பேசுறே.... சரி உன் பேரென்ன? எது பேசணுமுன்னாலும் கோர்ட்ல வந்து பேசு.''

"சார்.... சார்.... எனக்கு யாருமில்ல சார்... இன்னும் நான் வேலையில் பெர்மனன்ட் ஆகலை சார். புதுசா கல்யாணம் ஆனவன் சார்.''

"உன்னைப் பார்க்க பாவமாத்தான் இருக்கு ... அதோ முன்னால் இருக்கான் பாரு பொதிமாடு மாதிரி. அந்த ஆசாமிய இங்க வரச்சொல்லு... உன்ன இந்தத் தடவ மன்னிச்சிடணுமுன்னு என்கிட்டச் சொல்லச் சொல்லு...''

வெள்ளை போலீஸ் கையில் வைத்திருந்த பெரிய ரசீது' புத்தகத்தைத் திறந்து அதன் மத்தியிலிருந்தபென்சிலை பாதிவரை தூக்கி, வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தது.

டிரைவர் கந்தன், அலறியடித்து ஜீப் பக்கம் ஓடினான். ஓர இருக்காரைக்காரர் ஓய்யாரமாகக் கேட்டார்.

"என்னையா தலையைச் சொறியரே?"

"அய்யா அங்கே வந்து என்னை விட்டுவிடும்படியா போலீஸ்காரர்கிட்ட சொன்னால், அவரு விட்டு விடுவாராம் ஸார்..."

"என்னய்யா நினைச்சுக்கிட்டான் அவன்? நான் கெஜட்டட் ஆபீஸர். அவன் கண்டைக்காய் டிராபிக் சார்ஜண்ட். நான் போய் அவன்கிட்ட கெஞ்சணுமா? போப்போ.. நீயுமாச்சு... அவனுமாச்சு..."

அவரை நம்ம முடியாததுபோல் பார்த்த கந்தன். சாட்சிக்காரனைவிட சண்டைக்காரன் தேவலை என்பதுபோல், அந்த சாலையின் மறுமுனைக்குச் சென்று வெள்ளை யூனிபாரத்தின் முன்னால் தலையைச் சொறிந்தான். அவரோ, அவன் பேசப் பேச கேஸ் புக்காகவும், கேஷ் புக்காகவும் பயன்படும் அந்த சார் ஷீட் புத்தகத்தைத் திறந்து அவனைப் பற்றிய புதுக்கவிதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். கந்தன், அவர் மோவாயைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

"சார்.... சார்... நான் இன்னும் பெர்மனன்ட் ஆகலை சார்.... கோர்டல ஏதாவது ரிமார்க் வந்தா அம்போன்னு ஆயிடுவேன்.. சார்...."

"அதோ இருக்காரே உங்க ஆபீசரு... அவன்கிட்ட சொல்லு. அவனால் உன்னை காப்பாத்த முடியுமான்னு பார்த்துடலாம்.... இந்தா பிடி..."

பழைய காலத்து முனிவர் போல், போலீஸ்காரர் கொடுத்த அந்த சாபக் காகிதத்தை, கந்தன் வாங்கிக் கொண்டு, சிறிது நேரம் நின்றான். பிறகு ஜீப் நின்ற பக்கம் வந்தான். அதில் ஏறிக் கொண்டான். எரிந்து கொண்டிருந்த லைட்டை 'ஆப்' செய்யவில்லை. ஜீப்பை விட்டான். "அடப்போய்யா... லைட்டு... பொல்லாத லைட்டு இந்த நாட்ல பகலே இருட்டாகுது..."

ஓரக்காரர் உபதேசித்தார்.

"ஒன் டூட்டியை நீதான் சரியாச் செய்யணும். அப்படிச் செய்திருந்தால் இப்டி மாட்டிக்க வேண்டாம் பாரு.... சரி... சரி.... ஜீப்பை பார்த்து ஒட்டு...."

ஜீப்பின் பின்னிருக்கையில் கிடந்த ஜூனியர் உதவியாளர்களில், ஒருத்தர் ஒட்டகங் சிவிங்கி மாதிரி தன் முகத்தை கெஜட்டட் அதிகாரிகளின் தலைகளுக்கு மத்தியில் நீட்டிக் கொண்டே, போலீஸ்காரருக்கு கந்தன் மேல் கருணை படாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லாமல் சொன்னார்.

''அந்த டிராபிக் போலீஸ்காரர்..... நம்ம ஆபீசுக்கு முந்தாநாள் வந்திருந்ததார்.... ஏதோ ஒரு சலுகை கேட்டு வந்தப்போ, நீங்க அவர உட்காரக்கூடச் சொல்லலையாம். எங்கிட்ட வந்து எனக்கும் காலம் வரும் கவனிச்சுக்கிறேன் னு முனங்கிக்கிட்டே போனார்...."

"கெஜட்ட ஆபீஸர் நான் .... ஆப்டர் ஆல் அவன் ஒரு நான் - கெஜட்டட சார்ஜண்ட்... எப்படியா உட்கார சொல்ல முடியும் ? எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? யோவ்! வண்டியை ஸ்பீடா ஓட்டேன்யா...''

டிரைவர் கந்தன், கோர்ட்டில் வாங்கப்போகும் ரிமார்க்கைப் பற்றியே நினைத்ததால், ஜீப்பை ரிமார்க்க பிளாக ஓட்ட முடியவில்லைதான். ஆனாலும், அவன் ஒரு தொழில் விசுவாசி. அப்படிப் பட்டவர்களுக்கு எத்தகைய சிரமங்களும் தூசாகத் தெரியுமே அப்படிப்பட்ட தூசை துடைத்த தோரணையில் சிந்தனை வாதையிலிருந்து விடுபட்டு, ஜீப்பை ஏவினான்.

அந்த ஜீப், கடலில் கப்பல் மிதப்பது போல் சென்றது. முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலையில் பாய்ந்து, அங்கிருந்து கப்பிச்சாலைக்குப் பிரிந்து, பிறகு ஒரு மண்சாலை வழியாக ஓடியது. ஒருமணி நேர ஓட்டத்திற்குப் பிறகு, மண் பாதையில் நடப்பதுபோல் நின்று, பிறகு மடமடவென்று பாய்ந்தது. அந்தச் சமயம் பார்த்து நம்ப முடியாமல் பேய்மழை நானிருக்கிறேன்' என்பது மாதிரி தரையில் இறங்கியது. மண்பாதையோ, உடனே ஜீப்பை தனக்குள் இறக்கியது. போதாக்குறைக்கு, ஜீப் மக்கர் கந்தன் எஞ்சினை ஏற்றிவிட்டு கீழே குதித்தான். ஜீப்பின் மோவாய் மாதிரியிருந்த பானெட்டைத் திறந்து, உள்ளேயிருந்த அதன் இயந்திரப் பற்களை அங்குமிங்குமாக ஆட்டினான். முன்னிருக்கைக் கெஜட்டட் அதிகாரிகள் முணுமுணுத்தார்கள். ஆனாலும் அவனை அரட்டவில்லை. காரணம், நான்கு நாட்களுக்கு முன்பே, வண்டிக்கு நோய் வந்திருக்கிற விவகாரத்தை இந்தக் கந்தன் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் கண்டுக்கவில்லை.

கந்தன், சளைக்கவில்லை. டிரைவர் இருக்கையில் இருந்த ஒரு கத்தை ஸ்பேனர்களை எடுத்து ஜீப்பிற்கு வைத்தியம் செய்தான். அரைமணிநேர ஆப்ரேசனை கொட்டு மழையில் செம்மையாய்ச் செய்துவிட்டு இருக்கையில் ஏறிய கந்தன், வண்டி நகரத் துவங்கியதும் அனைவரையும் பெருமிதமாகப் பார்த்தான். ஆனால், உடலெங்கும் பாண்ட்டும் சட்டையும் அவன் உடம்பில் கோந்து மாதிரி ஒட்டிவிட்டது. தலையிலிருந்து மழைத்துளிகள் தோளில் சொட்டின....

அந்த மழையின் வேகத்தைப் போலவே, ஜீப்பும் பறந்தது. கல்லும் மண்ணும் கலந்த யூனியன் சாலையில் தக்காரும் மிக்காரும் இல்லாமல் ஓடியது. பிறகு ஒரு கண்மாய்க்கு அருகே நின்றது. அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஓடி, ஒரு கசிவு நீர்க்குட்டையின் பக்கம் கரையை உராய்ந்தபடி குந்தியது. பிறகு ஒரு பத்துக்கிலோ மீட்டர் ஓட்டம். ஆனால் அதற்கு மேல் போக முடியாதபடி, ஒரு சின்னப் பாலம் உடைந்து, தண்ணீர் வெள்ளம் அந்த உடைப்புகளின் இடுக்குகளின் வழியாகப் பாய்ந்தது. ஒரு கிளை பாதை வழியாகப் போகலாம் என்றால், அதன் குறுக்கே ஒரு காட்டு வாகை மரம் விழுந்து கிடந்தது.

வேறுவழியில்லாமல், அந்த ஜீப் வந்த வழியில் திரும்பியது. ஜீப்பில் வைப்பர்' வேறு அவுட். ஆனாலும் கந்தன், தனது கைக்குட்டையால் அதைத் துடைத்துத் துடைத்து வழிதேடி ஓடினான். அந்த கெஜட்டட அதிகாரிகளுக்கும், ஒரே பசி வெள்ளத் சேதத்தைப் பார்வையிட வந்த அவர்களுக்கு , ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தனது அலுவலகத்தில் மட்டன், சிக்கன், வடை, பாயாசம் ஆகியவற்றுடன் காத்துக் கொண்டிருப்பார். ஆனால், பாழும் பாலம் எந்த நேரத்தில் கீழே விழுந்ததோ அவர்கள் வயிற்றை அடித்துவிட்டது. இப்போது நடுபக்க கெஜட்டட் ஆணையிட்டது.

"கந்தா! வழில ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து ஜீப்ப நிறுத்து"

கந்தனுக்கும் பசி... காலையில் சாப்பிடவில்லை . அவன் புறப்படும்போது பிள்ளைத்தாய்ச்சி மனைவி கத்தினாள். " இப்படி ராவும் பகலும் வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகும்?" என்று கேட்டாள். அவனும், இப்படித்தான் ஆகும் என்பதுபோல் திருப்பிக் கத்தினான். அவள் கொடுத்த இட்டலியை உடனடியாக உட்கொள்வது, அவனுக்கு நாகரீகமாகத் தோன்றாததால், வெளியேறிவிட்டான். இப்போது, கொட்டும் மழை. நேற்றைய மழையிலேயே அவனது வீட்டுத்தரை, மனைவியின் வயிறுமாதிரி உப்பியது. இப்போது எப்படி இருக்குதோ..... இருக்காளோ.....

அந்த ஜீப், ஒரு சாதாரண டவுன் வழியாக அங்குமிங்கும் ஆடியாடி போனது. பல ஹோட்டல்களை கழித்து விட்டும், கடந்துவிட்டும், ஒரு முனியாண்டியின் முன்னால் அதற்குக் கட்டுப்பட்டு நிற்பதுபோல் நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். அவசர அவசரமாய் ஓட்டலுக்கும் புகுந்தார்கள். ஒரே கூட்டம். சாப்பிடுகிற ஒவ்வொரு ஜீவராசிக்கும் அருகே, இன்னொருத்தர் நின்று கொண்டிருந்தார். அப்படியும் எவரும் இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக சாப்பாட்டு டோக்கன் காகிதங்களை எச்சில் டேபில்களில் ஒட்டி வைத்திருந்தார்கள். அதோடு சாப்பிட்டு முடிந்தவர்களோ, நாற்காலிகளை விட்டு நகராமல் ஜம்மென்று இருந்தார்கள். எவன் வெளிலபோய்... மழையில நனைவான்?

டிரைவர் கந்தன், கல்லாவில் இருந்தவரின் காதைக் கடித்தான்.

அதிகாரிகளைச் சுட்டிக்காட்டி, அவர்கள் எப்பேர்பட்டவர்கள் என்று விளக்கினான். உடனே கல்லாக்காரர், சாப்பிடுபவர்களின் கைகள் கீழே போகும்போது அவர்களது வாழை இலைகளையும், மேலே போகும்போது அவர்களது வாய்களையும் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளின் முன்னால் போய் சல்யூட் அடித்தார். பிறகு அவர்களை பேமிலி ரூமிற்குள் கூட்டிப்போய், அங்கே பீடா போட்டுக் கொண்டிருந்த இருவரை தூரத்திவிட்டு, உட்கார வைத்தார். ஒரே ஒரு மேஜை... நான்கு நாற்காலிகளில் இரண்டில் வேகன்சி. கெஜட்டட் அதிகாரிகள் அதில் எதிரும் - புதிருமாக உட்கார்ந்தார்கள். ஜூனியர் அசிஸ்டெண்ட்கள் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டார்கள். கந்தனுக்குத்தான் இடமில்லை. அவன் காத்திருந்தான். இடமிருக்கிறதா என்று எல்லா இடங்களையும் கண்ணால் நோண்டினான் ... காலி இல்லை.

கந்தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்டாட்டியை நினைத்துக் கொண்டும் பசிப்பிரசவ வேதனையில் அல்லாடினான். இதற்குள் புரமோட்டி கெஜட்டட் அதிகாரியின் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து கோழி பிரியாணி சாப்பிட்ட ஒருவர் எழுந்துவிட்டார். ஆசாமிக்கு குமட்டல் கந்தன் டபக்கென்று அதில் உட்கார்ந்தான். மியூசிக்கல் சேர் போட்டியில் உட்காருவார்களே அப்படி.......

புரமோட்டி கெஜட்டட ஆபீஸருக்கு வாயில் கடித்துக் கொண்டிருந்த கோழித்துண்டுக்கு மேல் கோபம் கொப்பளித்தது. கெஜட்டட் ஆபீஸருக்கு இணையாக எப்படி உட்காரலாம்? இன்டிசிப்பிளின் ... வாய்க்குள் இருந்த கோழிக்கறி வெளியே நாக்குமாதிரி துருத்தும்படி, கண்டிப்பாகச் சொன்னார்.

"இந்தாப்பா.... உனக்கு வேற பக்கத்தில் இடம் கிடைக்கலையா?"

இதுவரை டிரைவரிடம் அதிகமாகப் பேசாத நேரடி நியமனமும், அவனுக்கு அறிவுரை சொன்னது.

"வேற பக்கமா போய் உட்காரேன்..."

கால் வலித்த கந்தன், இப்போது மனம் வலித்து எழுந்தான். இதற்குள் அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் தத்தம் இருக்கையில் இருந்து எழுந்து இரண்டு மொட்டை நாற்காலிகளை ஒரே இருக்கையாக்கி அவனை தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவனுக்கு இடஒதுக்கீட் எதிர்மறையால் செய்துவிட்டு, எஞ்சிய இடங்களில் உட்கார்ந்தார்கள். கந்தன் அவர்களைப் பார்த்துத் தலையாட்டினான். பிறகு தலையைத் தொங்கப் பொட்டுக்கொண்டே வெளியேறினான். அவனுள் எழுந்த சீற்றமோ , சிறுமையோ ஏதோ ஒன்று அவன் பசியைப் புசித்துவிட்டது.

வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவதற்குப் பதிலாக வயிற்றுச் சேதத்தை ஈடுகட்டிய கெஜட்டட அதிகரிகள் , பீடாவைக் குதப்பிக் கொண்டே வெளியே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து கீழே குதிக்கும் கந்தன் ஜீப்பில் அசையாமல் இருப்பதைப் பார்த்தவிட்டு ஆச்சரியப்பட்ட புரமோட்டி ஆபீஸர் அவனுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

"கெட்டிக்காரன்யா நீ... இதுக்குள்ள சாப்பிட்டுட்டியே... நாராயணா..ஏறேம்பா..."

"ஒரு சேஞ்சுக்கு இப்போ நீங்க உட்காருங்களேன்."

நடுப்பக்கத்து நேரடி நியமன நாராயணன் ஓரங்கட்டி நின்றபோது, ஓரங்கட்டி நின்றவர் சிறிது யோசித்துவிட்டு பின்னர் ஜீப்பில் ஏறி நடுப்பக்கம் உட்கார்ந்தார். அவர் ஓரத்திற்கு வந்துவிடக் கூடாதே என்பதுபோல் அடுத்தவரும் உடனடியாய் ஏறினார்.

"கந்தன் சாவியை போட்டு ஜீப்பை உருமவிட்டான். ஆனால், அது உருமி உருமி மீண்டும் நிசப்தம் ஆனது. சங்கலிக் கோர்வையாய் சப்தமிடவில்லை. உடனே, கந்தன், கீழே குதித்து பேனட்டை திறந்து எஞ்சின் தலையில் தட்டினான். அதிகாரிகள் அவனை பொருள்பட பார்த்த போது, இவன், ஒரு அலட்சிய பார்வையை வீசியபடியே, மீண்டும் இருக்கையில் குதித்தான். சாவியை திருப்பினான், இப்போது லேசான உருமல் கூட கேட்கவில்லை. கந்தன் சிறிது அதிகார தோரணையிலே ஆணையிட்டான்.

சார் வண்டியிலடைனமோ கோளாறு தள்ளிவிட்டாத்தான் ஓடும். ’

அந்த இரண்டு அதிகாரிகளும் எஞ்சி உள்ள அலுவலர்களும் கீழே இறங்கி, ஜீப்பை தள்ளோ தள்ளு என்று தள்ளுகிறார்கள். கந்தன், பல்லக்கில் உட்கார்ந்து இருப்பதுபோல் சும்மாவே இருந்தான். இனிமேல் தான் ஜீப்பிற்குள் சாவியை திருப்ப வேண்டும்.

கந்தன், சாவியைத் திருப்பியபடியே, அருகே உட்கார்ந்த புரமோட்டி அதிகாரியிடம் காதைக் கடிக்காமல், ஜிப்புக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, வழிப்-போக்கர்களுக்கும் கேட்கும்படி விவரம் சொன்னான். பணிவுக்குரலில் தான் பேசினான். அதேசமயம், பின்புறம் திரும்பி, சாட்சிகளை வைத்துக் கொண்டு பேசுவதுபோல் பேசினான்.

"சார்! நாளைக்கு நீங்க கேட்டது மாதிரி ஒங்க வீட்டுக்கு வரமுடியாது சார். அம்மா கோயிலுக்கு போறதுக்கு வேற ஏற்பாடு செய்துக்கலாம்.... இனிமேல், அபிசியலாத்தான் ஜீப்போ காரோ ஓட்டுவேன். இல்லாட்டி, நானும் மாட்டிக்குவேன் பாருங்க..."

செம்மலர் - 1992
--------------------

8. டிராக்டர் தரிசனம்

"எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது... எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது... இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம்... ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் காயப்போடாதேன்னு சொன்னேனே... கேட்டியா...? கேட்டியா..?"

வயலின் வரப்போரத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி தந்தை மருதமுத்து சொன்னது, மகன் கணபதியா பிள்ளையின் காதில், "கெட்டியா- கெட்டியா-” என்றேதான் கேட்டது. தந்தையைச் சத்தம் போடப் போனார். இயலவில்லை. அவர் முகத்தைப் பார்க்கக் கூச்சப்பட்டு, வயலின் ஓர் ஓரத்தில் கல்லடுப்பில் பொங்கிய பாத்திரத்தைப் பார்த்தார். அதில் கோழித் துண்டுகள் குதித்துக் கொண்டிருந்தன. வேலைக்காரப்பெண் ராசகிளி, தீ மூட்டிக் குழாய் மூலம் ஊதி, அடுப்பை மூட்டிவிட்டு, "கறி வெந்திருக்கா" என்று பார்ப்பதற்காக, ஒரு கோழித் துண்டை வாய்க்குள் திணித்துவிட்டு, பிறகு சூடு தாங்காமல் துப்பினாள்.

"கடைசியில் எவனெவனுக்கெல்லாமோ நான்...'' என்று பேசிய அவர் மனைவி மரகதம், பிறகு அந்தப் பேச்சை முடிக்க வில்லையானால், அது ஆபத்தான அர்த்தத்தில் கொண்டு போய்விடும் என்று உணர்ந்து "சோறாக்க வேண்டியதிருக்கு" என்றாள். கணவனைக் கடுகடுப்பாகப் பார்த்தாள். அந்தப் பார்வை தாங்க மாட்டாத கணபதியாபிள்ளை, தமது வயலைக் கண்களால் உற்றுப் பார்த்தார்.

எல்லா வயல்களும் நெற்பயிர்களால் அலங்காரமாய்த் தோன்றியபோது, இந்த வயல் மட்டும் மொட்டையாய்,மூளியாய்க் கிடந்தது. வயலைப் பார்க்க மனமில்லாத கணபதி, கண்களை நகர்த்தி, தெற்குப் பக்கமாய்ப் பார்த்தார். ராமையாத் தேவரோட வயல் மற்ற வயல்களைவிட அதில் மட்டும் நெற்பயிர்கள் ஓரடி அதிகமாக வளர்ந்திருந்தன. இவ்வளவுக்கும் அடுத்த வயல்களில் நட்டபோது தான் தேவர் வயலிலும் நடப்பட்டது. ஆனால் தேவர் வயலில், அவரைப் போலவே பயிர்கள் மினுக்காக நின்றன.

ராமையாத் தேவர், கணபதியா பிள்ளையைப் பார்த்து, மீசையைத் தடவி விட்டார். கையில் இருந்த டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் தட்டி விட்டார். சிறுமைப்பட்டுப் போன கணபதியா பிள்ளை , கிழக்குப் பக்க வயலைப் பார்த்தார். அங்கே, ஆறுமுக நாடார், லாவகமாகப் பூச்சி மருந்தை வீசிக் கொண்டிருந்தார். பிள்ளையை அவர்பார்த்த விதம், அவரையும் சேர்த்து வீசப் போவது போலிருந்தது.

எவரையும், எதையும் பார்க்க முடியாமல் தவித்த கணபதி, பண்ணையாள், பால் பாண்டியனைக் கோபமாகப் பார்த்தார். 'எல்லாம் இவனால் தான் வினை. நான்கு முனைத் தேர்தல் போட்டியில் ஒரு முனையாவது டிக்கெட் வாங்கி விடலாம் என்று அலைந்து, அவர் ஏர்முனையை மறந்து, வயலை டிபாஸிட இழந்த வேட்பாளர் நிலையில் விட்டது உண்மைதான். ஆனாலும், நேற்று வாடகை உழவுக்கு ஆள் அமர்த்தப் போனார். இந்தப் பால்பாண்டிதான், "உழவு மாடுங்க ஒரு வாரம் எடுத்துக்கிடும்.... டிராக்டரை வாடகைக்கு வாங்கலாம்..." என்று சொல்லிவிட்டான். 'பெரிய பண்ணையாளிடம் வருடக்கணக்கில் வேலை பார்த்தவனாச்சே என்று நம்பி விட்டார். இவ்வளவுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னால் தான் பால்பாண்டி இவரிடம் வேலையாளாய்ச் சேர்ந்தான். இப்போது இவரையே வேலையாளாய் ஆக்கிவிட்டான் என்பது கிழவர் மருதமுத்துவின் வாதம்.

கணபதியா பிள்ளை , அழப் போனார்.

டிராக்டருக்குப் பணம் கட்டியாகி விட்டது. எட்டு மணிக்கு வரவேண்டியது. பத்து மணியாகியும் வரவில்லை . இருசால் உழவு செய்யணும். மத்தியானமே "தொளி" மிதிக்கணும். அதாவது உழுத நிலத்தில் இலை தழைகளைப் போட்டு கால்களால் மிதிக்க வேண்டும். அதோ கிணற்று மேட்டில் வாதமடக்கிப் பூவரசுக் கிளைகள் குவிந்து கிடக்கின்றன. வேலையாட்களுக்கும் சொல்லி யாச்சு... டிராக்டரைத்தான் காணோம்... வருமா....?

ஒரு காலத்தில் வயலெல்லாம் வியாபித்து, இப்போது ஓரங்கட்டப்பட்ட ஐ.ஆர். எட்டு நெல் ரகம் போல் கழித்துக் கட்டப்பட்ட தந்தைக்கார மருதமுத்து, இப்போது ஆட்டம் போடும், ஐ.ஆர். இருபதை - அதுதான் பண்ணையாள் பால்பாண்டியனை எரிந்து விழுந்து பேசினார்.

"எல்லாம் உன்னால் வந்ததுடா.. ஒன்னால்தான் வந்ததுடா.."

"ஆமாம்... என்னாலதான் வந்தது... அதோ பாருங்க..."

எல்லோரும் பால்பாண்டியன் காட்டிய திசையைப் பார்த்தார்கள். சந்தேகமில்லை. டிராக்டர்... ராட்சதச் சிகப்பு கம்பளிப்பூச்சி போல், அது ஓடி வந்தது. அதன் அரியாசனத்தில், ஒரு வாட்டசாட்டமான ஆசாமி. 'அடடே..... என்ன இது... ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும் ஓடிப்போய் டிராக்டரை மறிக்கிறாங்க...? என்ன அநியாயம். டேய் பால்பாண்டி.... அரிவாளை எடுடா...'

கணபதியாபிள்ளை வேட்டியை முந்தானை மாதிரி தூக்கிக் கட்டிக்கொண்டு, டிராக்டர் மறிக்கப்பட்ட இடத்தைப் பார்த்து ஓடினார். அவர் பின்னால், பால்பாண்டி அரிவாளுடன் ஓடினான்.

டிராக்டர் முன்னால் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும், டிராக்டர் அரியாசனத்தில் இருந்தடிரைவரையும், அவன் பின்னிருக்கையில் கட்டப்பட்ட கம்பத்தில் பறந்த ஒரு கட்சியின் கொடியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். ராமையா தேவர், கொடியைப் பார்த்தபோது, ஆறுமுகம் நாடார் குரல் கொடுத்தார்.

"நிலம் பூமாதேவிடா... எல்லாருக்கும் பொது மனுஷிடா... வயலுக்குள்ள எப்படிடா நீ கட்சிக்கொடியோடு வரலாம்? ஒண்ணு கொடியை எடுத்துக் கீழே போடு. இல்லேன்னா வந்த வழியா வண்டியை விடு வயலுக்குள்ளே மட்டும் இறங்கப்படாது."

"வண்டியை ரிவர்ஸில் எடுக்க முடியாதே." "அப்போ கொடியை எடு... எடுக்கியா...? எடுக்கட்டுமா...?"

கணபதியா பிள்ளையால் தாள முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் கொடியைவிட, தமது வயல் தரிசாகக் கிடக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம் என்று நினைத்தார். சூடாகவே கேட்டார்.

"என்னய்யா நீங்க.... இந்தக் கொடில என்னய்யா இருக்குது..?"

"ஆயிரம் இருக்குதுய்யா. டிராக்டர , வயலுக்குள்ளே தூரத்துப் பார்வையா பார்க்கிறவன், ஒம்ம வயலுல பறக்குதா..... என் வயலுல பறக்குதான்னு சந்தேகப்படுவான்....''

"அப்போ அடுத்த கட்சிக்காரன் கிட்டப் பணம் வாங்கிட்டீரா...''

"யோவ் பிள்ளை.... இந்த மாதிரி பேச்சை யார்கிட்டே வச்சுக்கிட்டாலும், என்கிட்டே வச்சுக்காதேயும். ஏய் பால்பாண்டி கையில் என்னதுடா.... போட்டுப் பார்ப்போமா....? நீ அரிவாக் கையோடயும், நான் வெறுங்கையோடயும் மோதிப் பார்ப்போமா..."

" அய்யோ சாமி. இதோ ஒங்ககிட்டேயே கொடுக்கேன். நீங்களே என்னை வெட்டுங்க..."

"சரி கொடு. கணபதியா பிள்ளைக்கும் டிரைவருக்கும் தேவைப்படும். படுவாப் பயலே கொடுடா... அரிவாளை...."

பால்பாண்டி, அரிவாளை விடவும் முடியாமல், தொடவும் முடியாமல் தவித்தபோது விவசாயப் பிரமுகர்கள் விவகாரத்தைத் தீர்த்து வைத்தார்கள் சம்பந்தப்பட்ட அந்தக் கட்சியின் கொடி, நேராக நிறுத்தப்படாமல், டிராக்டர் மேல் படுக்க வைக்கப்படவேண்டும் என்பது தீர்ப்பு.

எப்படியோ.... டிராக்டர், கணபதியா பிள்ளையின் வயலுக்குள் வந்தது. டிராக்டரின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்ட அரியாசன டிரைவர், படுத்துக் கிடந்த கட்சிக் கொடியைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, அந்த வயலைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது, பால்பாண்டி, டிராக்டரில் தனக்குள்ள நிபுணத்துவத்தைக் கோடி காட்ட விரும்பினான். அதட்டலாகவே கேட்டான்.

"டிரைவர்... கேஜ் வீல் இருக்குதா....? வயலுல சேறும் அடிச்சுடலாம் பாருங்க..."

டிரைவர்பால்பாண்டியைப் பட்டும் படாமலும் பார்த்தபோது, கணபதியா பிள்ளை, தமது வேலையாளிடம் விளக்கம் கேட்டார்.

" அதென்னப்பா புது வீலு...?"

"சொல்லுதேன்... மொதலாளி சொல்லுதேன். இந்த டயர்ச் சக்கரங்கள் வச்சுச் சேறு அடிக்க முடியாது. அப்படி அடிச்சா டிரைவரோட சேர்த்து, இந்த டிராக்டர் முங்கிப் போகும். இந்தச் சக்கரங்களில் எதை இடது பக்கம் மாட்டணும், எதை வலது பக்கம் மாட்டணுமுன்னு இருக்கும். மாற்றி போட்டால் மாட்டிக்கிடுவோம். டிரைவர்! நீங்க கட்டிக்கலப்பையைப் பொருத்தி இருக்கணும். இந்த ஏர்க்கலப்பை, இந்த வயலுக்கு லாயக்குப் படாது. சரியா உழாது."

பாம்புக் காது மருதமுத்துக் கிழவர் கத்தினார்.

"டேய் என்னடா சொல்றே... ஆழ உழாடால், தொளி அடிக்க முடியாதேடா..."

"கவலைப்படாதிய மொதலாள்... நான் எதுக்கு இருக்கேன்." "அதுதாண்டா புரியல..."

டிரைவர், இன்னும் வண்டியை நகர்த்தவில்லை. அவரைப் பதறிப் பார்த்த கணபதியா பிள்ளையிடம் அட்டகாசமாகக் கேட்டார்.

"இது எவ்வளவு ஏக்கர்...?" "ரெண்டு ஏக்கர். ஏன் அப்படி கேட்கறீக..."

"ஏய்யா.... மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு ஏக்கர்னு எங்கய்யா கிட்டச் சொல்லி, 240 ரூபாய் கட்டினால் போதுமா? ஒரு ஏக்கருக்கு மேல் கொண்டு ரூ.120 கட்டணும்."

"ரெண்டே ரெண்டு ஏக்கர்தான் ஸாரே. வேணுமுன்னால் பத்திரத்தைக் காட்டட்டுமா..."

"இதோ பாரும் பிள்ளை... ' எங்கய்யாவை ஏமாற்றியது மாதிரி என்னை ஏமாத்த முடியாது.... எங்கய்யாவை ஏமாத்தும்... ஆனால், என்னை ஏமாத்தாதீங்க....''

கணபதியா பிள்ளைக்குக் குழப்பம் வந்தது. ஆனால் பால்பாண்டி, டிரைவர் கடைசியாய்க் கக்கிப் போட்ட 'பஞ்ச தந்திர வார்த்தைகளில் சூட்சுமம் இருப்பதைப் புரிந்து கொண்டு தீர்மானித்தான்.

"சரிண்ணே .... 120 ரூபாய்ல ஒனக்குப் பாதி. எங்க முதலாளிக்குப் பாதி... சரி தானே..."

"ஒன் முகத்துக்காவ ஒக்காக்கறேன். சரி காசைக் கட்டச் சொல்லு...."

"நீ உழுது முடி..."

"தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாய் வயிறு வேறு. இல்லாட்டி சக்கரம் கத்தாது."

கணபதியா பிள்ளை, வேறு பக்கமாகத் திரும்பி, சட்டைப் பையில் இருந்த ஒரு கத்தை நோட்டுக்களில், ஆறு தாள்களைப் பிய்த்து, மீண்டும் டிரைவருக்கு முகங்காட்டி, கை நீட்டினார். டிரைவரின் சட்டைப் பைக்குள் ரூபாய் நோட்டுக்கள் உட்காரவும், டிராக்டர் நகரவும் சரியாக இருந்தது.

பால்பாண்டி, டிராக்டர் அண்ணணிடம், எப்போது, எப்படி, எங்கே, எவ்வளவு கமிஷன்' கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

கல்கி (விடுமுறை மலர்) - 1995
----------

9. வினை - விதை

அழகேசனுக்கு, ஆண்டுக்கணக்கில் உண்டு உடுத்து நடமாடிய அந்த அறை, இப்போது அசல் சிறைபோலவே தோன்றியது. அவசர அவசியச் சூழல் போட்ட தடுப்புக்காவல் அறைபோல், அதிலிருந்து தப்பிக்க நினைத்தவர்போல் அங்குமிங்குமாய் சுற்றினார். சுவரோடு கவராக உள்ள அந்த டெலிபோனையே உற்றுப் பார்த்தார். கருநாகம்போல் வளைவு வளைவான கருப்பு ஒயர்கள் கவ்விப் பிடித்த அந்த டெலிபோனுக்குள், தனது மகன் ஒளிந்து இருப்பது போலவும், எப்போது வேண்டுமானாலும் அவன் வெளிப்படலாம் என்பது போலவும் அவருக்கு ஒரு பிரமை.

அழகேசன் பிரமை கலைந்தார். வழக்கமாக இந்த கிழமையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஒலிக்கும் டெலிபோன், இன்னும் ஒலி க்கவில்லை. ஒருவேளை, டெலிபோன் என்கேஜ்டாக' இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, அதன் குமிழை எடுத்து, காதிற்குக் கொண்டு போய், அதன் டயலிங்குரலை சரிபார்த்தார். பிறகு, அந்தக் குமிழை, மினி அம்மி போல் இருந்த டெலிபோன் அடிவாரக்கருவியில் ஒரு குழவி போல பொருத்தினார். அப்புறம், அடியற்ற மரமாய் கட்டிலின் விளம்பில் இருந்து உள்நோக்கி நகர்ந்து, கால்களை நீட்டிப்போட்டு தலையை கவரில் சாய்த்தார்.

அழகேசன், தனது வாழ்க்கையிலேயே இப்படி அந்த டெலிபோனுக்கு, எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஒப்புக்கு பார்ப்பவர். இப்போது அதை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயம் பார்த்து, டெலிபோன் ஒலித்தது. அது வெளிநாட்டுச் சத்தம் போல் ஊளையிடாமல், மணி மணியாய் அடித்தது. அதனால் அவரும்பிக்கை கொண்டாலும், ஒருவேளை, அமெரிக்கக் குரல் மாறியிருக்கலாம் என்ற அனுமானத்தோடு, வேக வேகமாய் எடுத்தார். ஆனாலும் ஏமாந்தார். அவர் மனைவிக்கு எங்கிருந்தோ ஒரு கால் . எதிர்முனைக்கு கேட்கும்படி ச்சோ' போட்டார். அது, அந்த முனைக்காரிக்கு முத்தம் கொடுப்பதுபோல் ஒலித்திருக்கவேண்டும். 'அவள் வீட்டில் இல்லை. எப்போ வருவாங்கன்னு சொல்லமுடியாது' என்று கூசாமல் பொய் சொன்னார்.

மகனிடம் பேசுகிறார் என்ற அனுமானத்தில், அவருக்கு ஒத்தாசையாக உள்ளே வந்த மனைவியை கையமர்த்தி, " அந்தக் 'கால்' வந்துடட்டும்...'' என்றார். அவளை, தோளை அழுத்தி உட்கார வைத்தார். பிறகு இன்னொரு டெலிபோன் சத்தம். ஓடிப்போய் பற்றப் போனார். உடனே அந்தம்மா, "டெலிவிஷன்ல வாறடெலிபோன்" என்று சொல்லி, அந்த தொடரின் பெயரையும் சொன்னாள். வேறொரு சமயமாக இருந்தால், அந்தம்மாவின் பேசிய வாய் வாயடைத்துப் போகும்படி ஏசியிருப்பார். ஆனால் இப்போதோ, இவர், ஓடிப்போய் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு குமிழைத் திருகி, அதன் வாயைத்தான் அவரால் அடைக்கமுடிந்தது.

அழகேசனும், மங்கையர்க்கரசியும் அந்த டெலிபோனையே அதிசயித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயிற்று... ஒரு மணி நேரம் உற்றுப் பார்த்தாயிற்று. வழக்கமாக பேசுகிறவர்கள் கூட, பேசவில்லை . இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தம்மா , மடியில் வலது கையை ஊன்றி, உள்ளங்கையில் முகம் போட்டு, அச்சில் பொருத்தப்பட்ட பூமி உருண்டை பொம்மை போல் முகத்தை வைத்துக் கொண்டாள். அவர், " என்ன மங்கை இப்படி...?" என்று இழுத்து இழுத்துப் பேசினார். இந்த மாதிரி மனைவியிடம் அந்தக் காலத்தில் கூட, இப்படி அவர் குழைந்ததில்லை. உடனே அந்தம்மா, சுரைக்காய் கூடாய் கருங்கிப்போன உடம்பை நிமிர்த்தியபடியே, ஒரு யோசனை சொல்ல முற்பட்டபோது, அழகேசன் பொத்தாம் பொதுவாய்ப் பேசினார்.

"ஆயிரம் இருந்தாலும், கவர்மென்ட் வேலை..... கவர்மென்ட் வேலைதான் மங்கை. இதனால்தான் கழுதையை மேய்ச்சாலும், சர்க்கார் கழுதையா மேய்க்கணுமுன்னு சொல்லுவாங்க. பதவியிலி ருந்து ஓய்வு பெற்றதும், பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் சொளையாய் கிடைத்திருக்கும். மாசா மாசம் பென்ஷனும் வந்திருக்கும். ஆறாயிரம் ரூபாய்ல ஒரு ஹெல்த்கார்டு வாங்கிட்டால், அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே இலவச சிகிச்சை. மகன், மகள் பக்கத்தில் இல்லாத நாம், சாகும் போது கூட, அனாதையாச் சாகாம, டாக்டருங்க... நர்சங்க மத்தியில் சாகலாம். கடைசியில் புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்."

மங்கையர்க்கரசிக்கு, அவர், தன்னைக்குறிவைப்பது புரிந்து விட்டது. முன்பெல்லாம் தாம் தூம்' என்று குதித்திருப்பார். இப்போது அவர் நாக்கு கூட கழல மறுப்பதை அறிவாள். அதேசமயம், தன்னையும் அவள் நொந்து கொண்டாள்.

கணவருக்கு அடங்கிப் போகவேண்டிய காலத்தில், இவரும் ஒரு அரசாங்க வேலையில் தான் இருந்தார். மகளும் மகனும் கல்லூரிப் படிப்புக்கு, திரளப்போன சமயம். இவருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் பிடிப்புப் போக வரும். இந்தச் சமயத்தில், அலுவலகத்தில் இவரோடு தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்த அரசு வாடிக்கைக் கம்பெனி ஒன்று, இவரது நேர்மையையும் திறமையையும் கண்டு, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நல்ல வேலையை கொடுக்க முன்வந்தது.

சம்பளம் ஐந்து மடங்கு பெருகப் போவதால் ஏற்பட்ட சபலம், அவரை, இந்தம்மாவிடம் ஆலோசனை கேட்க வைத்தது. இவளும், பையனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டியதையும், மகளை படிப்பின் மூலமோ அல்லது படித்த ஒரு மாப்பிள்ளை மூலமோ நல்லபடியாய் கரையேற்ற வேண்டிய அவசியத்தையும் கணக்கில் எடுத்து, அவரை கம்பெனி வேலையிலேயே சேரும்படி செய்துவிட்டாள். கை நிறையச் சம்பளமும், பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுகிற வசதியும் குடும்பத்திற்கு வந்ததில் அவருக்கும் ஆரம்பத்தில் மகிழ்ச்சிதான். ஆனாலும், அந்தக் கம்பெனி எல்லா அலுவரையும் போல் இவரையும், எந்தச் சமயத்திலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளலாம் என்கிற நிலைமை. கம்பெனி அவருக்கு வேலை போட்டுக் கொடுத்தது கூட, அந்த அரசாங்க அலுவலகத்திலிருந்து, அவரை நீக்குவதற்கு செய்யப்பட்ட தந்திரமாகவும் தோன்றியது. குறிப்பிட்டபடி சம்பள உயர்வும் கொடுக்கவில்லை.

இந்த வஞ்சக வலையிலிருந்து மீள முடியாமல், அழகேசன், சிலந்தி கவ்விய பூச்சியாய் துடித்தார். எப்படியோ ஒருவழியாய் கம்பெனி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் மிச்சமாக ஒரு பைசாகூட தேறவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. வாயைக் வயிற்றைக் கட்டி சொந்தமாக கட்டிய வீட்டு வாடகையை வைத்து, வயிற்றுப் பிழைப்பை ஓட்டி விடலாம் என்றாலும், நல்லது கெட்டதுக்கு அமெரிக்க மகன் கையை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம்.

இந்தக் கட்டாயத்தின் நிர்ப்பந்தத்தால், துக்கத்தை உருவகப்படுத்துவதுபோல் தோன்றிய அந்தக் கருப்பு டெலிபோனை அழகேசன் பரிதாபமாகவும், மங்கையர்க்கரசி கோபங் கோபமாகவும் பார்த்தார்கள். 'கோளாறு டெலி போனில் தான் இருக்கும்; மகனிடம் இருக்காது' என்பது அவள் கட்சி. மகனிடம் மட்டுமே கோளாறு என்பது அழகேசன் கட்சி இப்படியாக இரண்டு மணி நேரம் கட்சி பிரிந்து ஒன்றாக இருந்தவர்களுக்கு ஒன்று புரிந்துவிட்டது. அன்று இந்தியச் சனி. அவனுக்கோ, அமெரிக்க ஞாயிற்றுக்கிழமை. இவர்களுக்குப் பகல். அவனுக்கு இரவு. பேசுவதாக இருந்தால், இந்நேரம் பேசியிருக்கவேண்டும். இப்போது மனைவியோடு தூங்கிக் கொண்டிருப்பான். ஆனாலும் அவனிடம் பேசியாக வேண்டுமே...

மங்கையர்க்கரசி, கணவர் மறுத்துவிடக்கூடாதே என்ற பயத்தோடு ஒரு யோசனை சொன்னாள்.

"நாமே போன்ல பேசிடுவோமே...?"

"எப்படிம்மா முடியும்? நம்மக்கிட்ட எஸ்.டி.டி. கூட கிடையாதே."

"உங்களுக்கு ஞாபகம் இருக்குதா? ஜோசியம் குறித்துக்கொடுத்த கல்யாணத் தேதியை அவன்கிட்ட சொல்றதுக்காக, அடுத்த தெருவுல ஐ.எஸ்.டி. வைத்திருக்கிற சின்னத்தம்பிகிட்ட பேசி, அவன் தன்னோட டெலிபோன் மூலம் கனெக்ஷன் வாங்கி உங்களுக்குக் கொடுத்தானே...''

அழகேசன் மனைவிக்குப் பதில் ஏதும் சொல்லாமல், சின்னத்தம்பிக்கு டெலிபோனை சுழற்றினார். பல சுற்றுகளுக்குப் பிறகு, இறுதிச் சுற்றாக சின்னத்தம்பியின் குரல் கேட்டது. இவரின் கோரிக்கைக்கு, அவன் உடன்பட்டான். உடனே அழகேசனும் , மகனிடம் எப்படிப் பேசுவது என்று மனதில் ஒத்திகை நடத்தினார். அந்தக்காலத்தில், பிள்ளைகளையும் மனைவியையும் திட்டும்போது, இப்படி ஒத்திகை பார்க்காதவர்தான். இப்போதோ எமனுக்கு அடமானம் வைக்கப்பட்டவர்போல் தவித்தார். பிள்ளைகளுக்கும் அவர்களைப் பெற்றவளுக்கும் பிச்சை கொடுப்பதுபோல் எக்காளமாய் பணம் கொடுத்தவர், இப்போது தொழிலுக்குப் பழக்கப்படாத பிச்சைக்காரன் போல் கூசினார்.

இதற்குள், சின்னத்தம்பியின் டெலிபோன் குரல் கண்டங்களைக் கடந்து, அமெரிக்காவில் கிடக்கும் இளங்கோவின் குரலை இழுத்துப் பிடித்து, இந்த வீட்டு டெலிபோனுக்குள் ரசமாற்றம் செய்தது. ஆனாலும் , ஒலித்துவிட்டு மீண்டும் ஊமையானது. அது, மீண்டும் ஒலிக்கும் என்பதை அனுபவத்தால் தெரிந்து வைத்திருந்த மங்கையர்கரசி, கணவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தாள்.

"அவனோட ஒய்புதான் மொதல்ல எடுப்பாள். அவள் கிட்ட நான் பேசத் தயராய் இல்ல. போன தடவை , அவள் பேசின டோனே சரியில்ல. அமெரிக்கா போனாலும், மருமகள் என்கிறவள்களோட புத்தி மாறாது போலிருக்கு. அப்படி என்ன பெருசாய் கேட்டேன்? அமெரிக்காவுல லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிற என் பையனுக்கு, கல்யாணச் செலவையாவது ஏத்துக்கங்கன்னு சொன்னேன். அப்படியும் அவளோட அப்பா, அந்த செலவையும் நம்ம தலையில் கட்டிட்டதால் அவரை லேசாய் சத்தம் போட்டேன். அதை மனசில கருவிக்கிட்டு, ஒங்க மருமகள், என்கிட்ட பேசுற டோனே திமிராய் இருக்குது."

"அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? நானே நொந்து போயிருக்கேன்."

"அதுக்கு ஒரு வழி இருக்கு டெலிபோன்ல அவள்தான் முதலி ல் வருவாள். அவள் கிட்ட பேசிட்டு, நம்ம பையன் லைன்ல வரும்போது, எங்கிட்ட கொடுங்க. நீங்களும் அவன்கிட்ட ஏதாவது பேகங்க. அவன் குரலைக் கேட்டதும், 'இந்தா ஒன் அம்மான்னு, ஒங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி வழக்கமா, டெலிபோனை எங்கிட்ட கொடுப்பீங்களே... அப்படி கொடுக்காமல், அவன்கிட்ட ரெண்டு வார்த்தை நல்லபடியாய் பேசுங்க."

அழகேசன், சுருண்டு போனார். மனைவியை மலங்க மலங்கப் பார்த்தார். மாணவியாய் நடந்தது கொண்டவள், ஆசிரியையாய் நடந்து கொள்வதில் லேசான வருத்தம். ஆனாலும், அவள் சொல்வது நியாயம் என்ற யதார்த்தம். மீண்டும் டெலிபோன் குரலிட்டது. அவர், டெலிபோனை தயங்கித் தயங்கி எடுத்தார். அது காதில் உரசியபோது, அவரது மகனே ஹலோ என்றான். அசல் அமெரிக்கன் கூட அப்படி உச்சரித்திருக்கமாட்டான். உடனே இவர், "நான் தாண்டா அப்பா பேசுறேன்" என்றார். அதேவேகத்தில் அவனும் கேட்டான்.

"சொல்லுங்கப்பா"

'எப்படி இருக்கீங்கப்பா' என்று எல்லா பிள்ளைகளையும் போல கேட்காமல், அவன் அப்படி 'பிசினஸ் லைக்காய் கேட்டதில், அழகேசனுக்கு சொற்தடை ஏற்பட்டது. வாலில்லாத ஒரு பூச்சி, தொண்டைக்குள் போவது போலவும், தலையில்லா ஒரு புழு வாய்க்குள் நெளிவது போலவும் தோன்றியது. ஒரு அந்நியனிடம் பேசுவதுபோல் சொல்லுங்கப்பா' என்று சொல்கிறவனிடம், சொல்லும்படியாய் என்ன பேசமுடியும்? ஆனாலும், அவர் சொல்லி வைத்தார். முன்பின் பழக்கமில்லாதவர்கள், அறிமுகம் செய்யப்படும் போது, பொதுப்படையாக பேகவோமே - சீதோஷ்ண நிலை, பந்த், ஊழல், கிரிக்கெட் என்று - அப்படிப்பட்ட குரலில் பேசுவதற்காக பேசுவதுபோல் பேசினார். அது, ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்பதற்கு முன்பு, குடு குடுப்பை ஆட்டுவானே, அப்படித்தான் அவருக்கு உறைத்தது.

"வேலையெல்லாம் எப்படிடா இருக்குது?"

அமெரிக்க மகன் பதிலளிக்க முயற்சித்தபோது, அவனை இருமல், மொழி மறித்ததுபோல் தோன்றியது. அந்த ஒரு கணத்தில் அழகேசனின் மனம், வாய்க்காலை உடைத்த நீர்போல, பயிர்களுக்குப் பாயாமல், காய்ந்து போன நிலத்தின் இடுக்குகளில் தாவுவதுபோல் தோன்றியது.

அப்போது, கணிப்பொறி பட்டப் படிப்பில், தனித்துவமாய் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருந்த அந்தக் காலத்து இந்தியனான இளங்கோவை, ஒரு தனியார் கம்பெனி, கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, எடுத்த எடுப்பிலேயே பதினைந்தாயிரம் சம்பளம் வழங்க முன்வந்தது. நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் மெள்ளமாக போனாலும், அதே காலக்கட்டத்தில் இவன் சம்பளத்திட்டம், நாற்பதாயிரத்தை தொடும் என்றும் தெரிவித்திருந்தது.

அழகேசன், அந்த நல்ல செய்தி வந்த, அந்த ஒரு நாளில் கடுகடுப்பாக இல்லை. யாரையும் எடுத்தெறிந்து பேசவில்லை. பிள்ளையை பெற்றவன் போல் பார்த்தார். ஆரம்பத்தில் வாமனமாய்க் குழைந்து, இப்போது விகவரூபம் எடுத்திருக்கும் தனது கம்பெனியை இனிமேல் எதிர்த்துப் பேசலாம் என்ற நம்பிக்கை. சொந்தமாக ஒரு வீடு கட்டி, ஓய்விற்குப் பிறகும் ஒரு வீட்டுக்கார பாஸோ அல்லது மேடமோ இல்லாமல் நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாம் என்ற மனக்கணக்கு. கூடவே, பிளஸ் டூ முடித்த மகளை, இவனை மாதிரி ஒருகணிப்பொறி என்ஜினீயரின் தோளில் ஏற்றி, மகளை ஆனந்தப் பரவசமாய் பார்க்கலாம் என்ற இன்னொரு மனக்கணக்கு . ஆனால் இளங்கோ, அத்தனை கணக்குகளையும் பொய்மைப்படுத்த முயற்சித்தான். ஜி.ஆர்.ஏ. பரீட்சை எழுதி அமெரிக்காவில் மேற் கொண்டு படிக்க தகுதி பெற்றுவிட்டானாம். மூன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருக்கிற தாம். ஆனாலும் உதவிப் பணம் கிடைக்குமா என்பதை உடனடியாய் சொல்ல முடியாதாம். இவனே, பணத்தோடு போகவேண்டுமாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஆறுலட்சம் ரூபாய் தேவைப்படுமாம்.

அழகேசன், அவனிடம் நயந்து பேசினார். உள்நாட்டு வேலையே உசத்தி என்றார். இதையே , மனைவியையும் பேசும்படி கூறினார். மங்கையர்க்கரசியும் பேசினாள் - மகனுக்கு ஆதரவாய். வங்கிக் கடன் வாங்கலாமே' என்று வக்காலத்து வாங்கினாள். அழகேசன், மனைவியை மட்டுமல்ல, மகனையும் நோக்கி கை ஓங்கினார். கனவுகள் பொய்த்த நனவுத் தளத்தில் அவர், ருத்ரதாண்டவமாய் குதித்தார். வங்கிக்கடன் வாங்கப்போவதில்லை என்று தனது சாவின் மீது சத்தியம் செய்தார். ஆனாலும் பயல், கடப்பாரையாய் கிடந்தானே தவிர அசையவில்லை. ஒரு மாதத்தில், அவர் கண் முன்னாலேயே பணக்கார நண்பர்கள் மூலமும், அம்மாவின் மௌனச் சம்மதத்தின் அடிப்படையிலும், அமெரிக்கா போய்விட்டான். எம்.எஸ். படிப்பையும் முடித்துவிட்டு, இப்போது ஆறாயிரம் டாலர் மாதா மாதம் வாங்குகிறான்.

அழகேசன், அவன் அமெரிக்கப் படிப்பிற்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இருந்தோமே என்று இப்போது ஒரு துரும்பாய் சிறுமைப்பட்டார். அவனது அமெரிக்க வழியில், சாலை மறியல் செய்து, தாதாவாய் நடந்துகொண்ட தந்தைக்கு, மகனின் வேலையைப் பற்றிக் கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது, என்றும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் அழகேசனின் காலமான தந்தை, இவரின் கண்களில் வந்து விரலாட்டுவதுபோல் தோன்றியது. கழலப்போன நாக்கை பிடித்திழுப்பதுபோல் ஒரு வலி. பெற்ற தந்தையை சரியாக கவனிக்க முடியாத, தான், மகனிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று மனதுக்குள்ளேயே ஒரு கேள்வி

அந்தக் கேள்வி விடையில்லாமலே முற்று பெறும்படி, அமெரிக்க மகன் ஏதோ பதிலளிக்கிறான். இவருக்கு, அவன் சொற்கள் கேட்கிறதே தவிர, அவற்றின் பொருள் புலப்படவில்லை. சர்வ வல்லமையுள்ள மேலதிகாரியிடம் பேசும்போது, எப்படிக் கூனிக் குறுகி நிற்பாரோ, அப்படி நின்றார். அப்போது வேர்த்தது போலவே, இப்போதும் வேர்த்தது. இது புரியாமல் அமெரிக்க மகன், அப்புறம்பா...' என்றான். அழகேசனுக்கு ஒரு சந்தேகம். அப்புறம் அப்பா என்கிற வார்த்தைகளை ஒட்ட வைத்துப் பேசுகிறானா அல்லது வேலைக்காரனிடம் பேசுவதுபோல் பேசுகிறானா என்கிற சந்தேகம். ஆனாலும் தான் பேசுவது தனக்கே புரியாமல் பதிலளித்தார்.

"அப்புறம் எப்படிடா பொழுது போகுது?"

அந்தக் கேள்வியை வரவேற்பதுபோல், அவன் உற்சாகமாக, நயாகரா நீர்வீழ்ச்சி, ஜிம், பனிச்சறுக்கு, தமிழ்ச்சங்கம் போன்ற வார்த்தைகளை கொட்டிக் கொண்டே இருந்தான். அழகேசனுக்கு மேலும் ஒரு சந்தேகம். ஒங்களால் கொடுக்க முடியாததை நான் அனுபவிக்கிறேன் என்று குத்திக் காட்டுகிறானோ..?

அதற்குள், அந்த அமெரிக்க மகனுக்கு இன்னொரு தொடர் இருமல்.

தந்தைகாரருக்கு, இன்னொரு நினைவு பூதாகரமாய், அவர் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்தது.

இளங்கோ ஒன்பதோபத்தோ படித்த காலம் பள்ளிக்கூடத்தின் சார்பில் சுற்றுலா போகவேண்டுமாம். அவனது கல்வி நிலையம் 'கொழுத்த பள்ளிக்கூடம் என்பதால், அவர்கள் கேட்ட தொகையிலும் கொழுப்பேறியிருந்தது. அப்போதுதான் அழகேசன், ஜி.பி.எப்., தீபாவளி அட்வான்ஸ், ஸ்கூட்டர் அட்வான்ஸ், பொங்கல் அட்வான்ஸ் என்று அத்தனை அட்வான்சுகளுக்கும், அசல் சம்பளத்தில் பாதியை பறிகொடுத்த நேரம். அந்த இயலாமையில் வீட்டுக்கு வந்தவர், அங்கே இருந்த இளைத்தவர்களிடம் கோபமாக எகிறினார். அந்தச் சமயம் பார்த்து, மகனின் சுற்றுலா தேவையை, இதே இந்த மங்கையர்க்கரசி உணர்த்தியபோது, இவர், தகப்பன் கோவணத்தில் இருக்கிறானாம் , மகன் இழுத்து மூடப்பா என்றானாம்' என்று ஒரு கிராமப் பழமொழியை இளக்காரமாக சொன்னார். உடனே இந்த இளங்கோ, அப்போது அப்பாவிடம் இருந்து வணம் வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்த அம்மாவை முதுகைப் பிடித்து தள்ளினான். வலிக்காத தள்ளல். இந்தம்மா கூட சிரித்தாள்.

என்றாலும் இந்த அழகேசனோ, பையன் மேல் பாய்ந்தார். அம்மாவை தள்ளுவியா... தள்ளுவியா...' என்று அவனை புரட்டி எடுத்தார். தடுக்க வந்த மனைவியை கீழே தள்ளிப்போட்டார். மீண்டும் மகனை அடித்தார். அவர் அடித்த தோரணை, அம்மாவை அப்படி தள்ளியதற்காக இல்லை என்பது போலவும், அவன் சுற்றுலாவிற்கு போகக்கூடாது என்பது போலவும் தோன்றியது. அதுவரை, அவர் வீட்டுக்குள் வரும்போதும் போகும் போதும், அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு 'அப்பா அப்பா' என்று கொஞ்சுகிறவன் தான். அன்று முதல் ஒதுங்கிக் கொண்டான். அவர் சாலையில் வரும்போது, எதிர்ப் பக்கமாக நடப்பான். வீட்டுக்குள் இருக்கும் போது, ஒரு அறைக்குள் முடங்கிக் கொள்வான். அவருக்கும் அலுவலக நெருக்கடிகளில், இது ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை .

இந்தப் பகையை மறந்து, அவன் பழையபடி மகனாகப் போனவேளை. வீட்டுக்கு முன் உள்ள மைதானத்தில், பொழுது போக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த அழகேசன், அவனிடம் 'எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டியா? என்று நேரிடையாகக் கேட்டார். காலையில் அவன் அப்படிக் கட்டவேண்டும் என்று மனைவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் போனவர். தந்தையோடு, நான்காண்டு களாக பேச மறுத்து, அதேசமயம் மனதுக்குள் மருவிக் கொண்டிருந்த இளங்கோப்பையன், தந்தையிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் - ஒரு வேளை, அவரே முதலில் பேசிவிட்ட வெற்றிப் பெருமிதத்தில், அம்மா பணம் தரல. அதனால்....... என்கிற நான்கு வார்த்தைகளை தந்தையிடம் பேசுவதாக தனக்குள் பேசிக்கொண்டு பின்னர், கட்டல' என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்தான். அழகேசன், அது இல்லாத ஈசனானார். மகன் மேல் பாய்ந்து, அவனைக் கீழே தள்ளினார். அவன் சட்டைக் காலரைப் பிடித்து தூக்கி நிறுத்தி, குஸ்திப் பயில்வான்கள் துணியிடப்பட்ட மணற்பொம்மைகளை குத்துவார்களே, அப்படிக்குத்தினார். அவன் கிரிக்கெட் ஸ்டெம்ப் மீது விழுந்தான். அந்தக் குச்சிகள் போலவே கிடந்தான். மங்கையர்க்கரசி ஓடி வந்தாள். கணவன், பகிரங்கமாகத் தன்னையும் ஏசலாம் என்பது தெரிந்தும், அவரை ஆங்காரமாகப் பார்த்தாள். இது ஒரு தகப்பன் செய்கிற காரியமா?' என்றும் கண்களில் புனலும், வாயில் அனலும் கனக்கக் கேட்டாள்.

பழைய நினைவுகளில் மூழ்கி, முத்தில்லாத சொத்தைச் சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த அழகேசனை, மகன் எதிர்முனையில் உசுப்பினான். 'எதாவது விசேஷம் உண்டாப்பா....?

அழகேசன், குழந்தையாய் குழைந்தார். என்ன விசேஷம்... மகனின் தயவு இல்லையென்றால், இழவுவிஷேந்தான். எப்படியோ கேட்கப்போனார். அந்தச் சமயம் பார்த்து, ஏற்பது இகழ்ச்சி என்று, வள்ளல்களிடம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒளவையின் பள்ளிக்கூட வாசகம் இப்போது மரண வாசகமாக ஒலித்தது. ஆபத்துக்கு பாவமில்லையென்று , பாவப்பட்ட மனிதராய் சொல்ல வேண்டியதை சொல்லப் போனார். அதற்குள், தோழனோடாயினும் ஏழமை பேசேல்' என்று அதே ஒளவை அவரது வாயைப் பொத்துகிறாள். ஆனாலும், அவர் பேசுகிறார். எனக்கு' என்கிற வார்த்தை உனக்கு என்று துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி' என்கிற வார்த்தை சர்ஜரிபைபாஸ் ஆகிறது. ஆபரேஷன் என்கிற வார்த்தை ’ஆப்’ ஆகிறது.

அவரது தடுமாற்றத்தை கண்ட மங்கையர்க்கரசி, அவரது நடுங்கும் கையில், நடுக்கமெடுத்த டெலிபோனை லாகவமாய் பற்றினாள். கட்டிலில் உட்கார்ந்தபடியே மகனிடம், உரிமைக்குரல் கொடுத்தாள்.

"ஏண்டா ... என் சுகம் கிடக்கட்டும். நீ ஏண்டா இருமுற? டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே. இங்க மாதிரி முடியாதா? முன்கூட்டியே சொல்லிட்டுதான் போகணுமா. என்ன அமெரிக்காவோ... சரி கஷாயம் வச்சாவது குடிக்கிறது...? இதுகூட ஒன் பொண்டாட்டிக்கு வச்சுக் கொடுக்க தெரியாவிட்டா என்னடா அர்த்தம்..."

மகன்காரன் , மீண்டும் இருமியபோது, தாயக்காரி, கணவனை பார்த்து 'பாவம் பிள்ளைக்கு உடம்புக்கு சரியில்லயாம்' என்று சொல்லிவிட்டு, மீண்டும் மகனிடம் உரையாடினாள்.

ஏண்டா ..... அப்பாகிட்ட , 'சுகமா இருக்கீங்களான் னு கேட்டியா? அவர் சுகமாய் இல்லாததுனாலதான் இப்படிப் பேசுறேன். அவருக்கு இருதயத்துல கோளாறு. பைபாஸ் சர்ஜரி செய்யணும். இரண்டு லட்ச ரூபாய் தேவையாம். என்னடா இது.... எவ்வளவு டாலர் அனுப்பணுமுன்னு கேட்கிற...? நீ படிச்சவன்தானா? நீயே டாலால் கணக்குப் போட்டுக்கோ. ஆமாம், உடனே அனுப்பு. உன் பெண்டாட்டிய நான் விசாரிச்சதாச் சொல்லு என்னடா.... அப்பா உடல்நிலையைப் பற்றி விவரமாச் சொல்லணுமா?"

கட்டிலில் உட்கார்ந்திருந்த மங்கையர்க்கரசி. தலையை நிமிர்த்தி நிமிர்த்தி, பின்னர் கம்பீரமாய் எழுந்து மகனிடம் விலாவாரியாய் விளக்கிக் கொண்டிருக்கிறாள். அவளது ஒவ்வொரு அங்குல நிமிர்வும், அழகேசனின் மேனியை ஒவ்வொரு அடியாய் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

வாசுகி - 1995
---------------------

10. பாவலாக்கள்

அந்த அறையில் நான்கு பக்கச் சுவர்களையும் மறைத்து, அவற்றில் ஆடை ஆபரணங்கள் போல் வழுவில்லா வழுவழுப்பாய் ஜொலித்த சன்மைக்கா கலந்த காகிதக் கலவை, பல்வேறு வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவிய ஒயிலுடன் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தபோது -

ஜெனரல் மானேஜர் டி.கே. ராமன் இன்டர்காமில், ஏதோ ஒரு பெரிய போருக்கு, வியூகம் சொல்லிக் கொடுப்பதுபோல், கத்தோ கத்தென்று கத்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், பூமியின் பாரத்தைத் தனியொருத்தியாய்த் தாங்குவதுபோல் புருவத்தைச் சுழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுகந்தி. ஒப்பாரி வைப்பதுபோல் ஒலித்த டெலிபோனை எடுத்து எஸ் பிளீஸ்' என்று அவள் படு ஒப்பாரி போட்டபோது, ஜெ.எம். இன்டர்காமில் ஒன் மினிட்' என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து, அந்த ஃபைலைக் கொடுக்கலியா? என்று கேட்டார்.

ரிசீவரில் காது வைத்த ககந்தி, "எஸ்... சார்...'' என்று சொல்லிக் கொண்டே, எம்.டி. வீட்டிலிருந்து பேசுகிறார் ஸார் என்று சொல்லி டெலிபோனை நீட்டினாள். மேனேஜிங் டைரக்டரின் குரல் சலிப்போடும் வலிப்போடும் ஒலித்ததில் இருந்து அவர், தம் வீட்டில் இருந்துதான் பேசவேண்டும் என்று அவள் அனுமானித்து புன்னகைத்தபோது, ரீசிவரை வாங்கிய டி.கே. ராமன், அவளைப் பார்த்து, "அந்த பைலை என்ன பண்ணினே?" என்று சொல்லிக் கெண்டே "ஹலோ" என்றார்.

எதிர் முனையிலிருந்து "என்னய்யா இது...? நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்க கேட்கறிங்க.. அதுவும் மரியாதை இல்லாமல்....." என்ற குரல் விழுந்து, சுகந்தி காதிலும் கம்பிக் குரலாகத் தாவியது. ஜெனரல் மானேஜர், "எஸ்.... ஸார்.... ஸாரி ஸார்... ஷூர்சார்... டெபனட்லிஸார்... ஓ.கே.ஸார்.... உடனே ஸார்..." என்று அஷ்டோத்ர ஸார்களைப் போட்டு, உரையாடலை முடித்துவிட்டு, ரிசீவரை அதன் இருப்பிடத்தில் வைக்கக்கூட நினைவில்லாதபடி, அதை எடுத்துத் தம் முன் நெற்றியில் அடித்துக் கொண்டார். "அந்தப் பைலை எம்.டி. கிட்டக் கொடுக்கலியா....? என்னம்மா நினைச்சுக்கிட்டீங்க. அக்கௌண் டண்டைப் பார்த்து சம்பளத்தை செட்டில் பண்ணுங்கோ ....'' என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனார்.

சுகந்தியின் உடம்பை நாடி நரம்புகள் இழுத்துப் பிடித்து விறைக்க வைத்தன. வியர்வைச் சுரப்பிகள் வேகமாகச் செயல்பட்டன. நெற்றி மேளம் போல் விம்மியது. வாய், உதடுகளை முன் குவித்துக் கூம்பியது. எந்த பைல் ஸார்...? என்று கேட்கப் போனாள். பிறகு, இதுகூடத் தெரியலியா...? என்று அந்த பெல்லோ கத்துவானே என்று நினைத்தவள் போல, பேசாது, பெருவிரலால் பிளாஸ்டிக் தரையில் அரை வட்டம் போட்டாள். டி.கே.ராமன் என்ற ஜெனரல் 'மானேஜர்கம் நெருப்புக்கோழி' அவசரமாகச் சொன்னது.

"போன புதன்கிழமை, எம்டி கிட்ட பெர்சனலாய்க் கொடுக்கச் சொல்லிக்கொடுத்தேன் பாருங்கோ... ஒரு கான்பிடன்ஷியல்பைல் படிக்காமலே கொடுக்கும்படிச் சொன்னேன் பாருங்கோ - அதுதான்... பில்டிங் டெண்டர் பைல்.... அதுதான். ஜே.கே. பிரதர்ஸுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கும்படி சிபாரிசு செய்த பைல்.... அதை நீ கொடுக்கவில்லையா? ஹைலி கான்பிடன்ஷியல் பைல்.... கொடுக்கலியா...? கொடுக்கலியா....? கொடுக்கவே இல்லியா...?" என்று யாவில் பல ஆ'க்களைப் போட்டார்.

சுகந்திக்கு , வேலை பார்க்கும்போது, ஏற்படுவது போன்ற ஆயாசம் ஏற்பட்டது. அந்தபைலை இந்தடி கே.ராமன் கொடுக்கச் சொன்னது நிஜம்தான். அன்று, 'வென்ஸ்டேய' என்றதும் நிஜம்தான். படித்துப் பார்த்ததில் அது, எம்.டி. மட்டுமே படிக்க வேண்டிய கான்பிடன்ஷியல் பைல் என்பதும் நிஜம்தான். அன்று, பாய் பிரண்ட்ஸ்க ளில் ஒருவனான கோபால்தாஸ் வந்ததும் நிஜம்தான். இந்த பேமிலி லேடி , அவனுடன், அருகே இருந்த ஹோட்டலில் 'பேமிலி அறைக்குள் போனதும் நிஜம். ஆளுக்கொரு டீ சாப்பிட்டுவிட்டு, அரை மணிநேரம் கழித்து அல்லது களித்து, வெளியே வந்ததும் நிஜம். அந்த பைலைக் காதலானுபவ சுகபோதையில் எம்.டியிடம் கொடுக்க மறந்ததும் நிஜம். ஆனல், அது இப்போது எங்கே இருக்கிறது என்பதுதான் நிஜமாகவே தெரியவில்லை .

சுகந்தி, தனதுடெரின் புடவை முந்தானையின் முனையைப் பிடித்து, மூளைக்குப் பதிலாக அதைத் திருகியபோது, ஜெனரல் மானேஜர்டிகே. ராமன், அவளின் மௌன சம்மதத்தைத் கலைப்பது போலக் கத்தினார்.

"என்னம்மா நினைச்சுக்கிட்டீங்க..? இன்றைக்கு போர்ட் மீட்டிங் நடக்கப் போவுது... எம்.டி., அந்த பைலைப் படித்தால் தான், போர்ட் அப்ரூவலுக்கு வாதிட முடியும்.... அவர்கிட்ட கொடுக்கச் சொல்லியும், கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்...? அவரு என்னை சஸ்பெண்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டார். அதனால், நான், உங்களை டிஸ்மிஸ்பண்ணாமல், சஸ்பெண்ட் ஆகப் போவதில்லை. கோ அண்ட் மீட் தி அக்கௌன்டன்ட்... உங்களுக்கு சேரவேண்டிய கணக்கை இப்பவே செட்டில் பண்ணுங்க.... போகிற வழிக்கு அப்படியே ஸ்டெனோவையும் வரச் சொல்."

சுகந்திக்கு, இயல்பான தற்காப்பு உணர்வு தலைக்கு வந்தது.

"ஐ ஆம் நாட் இர்ரஸ்பான்ஸுபிள் ஸார். நீங்க கொடுத்த பைலை நேரா எம்.டி. கிட்டக் கொடுத்துட்டு .... அப்புறமாத்தான் என் சீட்டுக்கே போனேன்."

"அப்போ எம்.டி. கான்பரன்ஸ்ல இருந்தார். எப்படிக் கொடுக்க முடியும்?"

"தமிழில் ஆகுபெயானு கேள்விப்பட்டு இருக்கீங்களாஸார்..? அதுமாதிரி எம்.டியோட அறையில் வச்சுட்டுப் போனேன்."

"நிஜமாவா?"

"நல்ல ஞாபகம் இருக்கு... என்னைப் போய்... என்னைப் போய்.''

சுகந்தி, கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒற்றியபோது, டி.கே. ராமன், அவளைக் கனிவாகப் பார்த்தார்.

"நான் வச்சுட்டேன் ஸார்... சத்தியமா எம்.டி. ரூம்லே..."

"என்னம்மா நீங்க... சாம பேத் தானத்தோட பேசினால் நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்க போலிருக்கே... எம்டியிடம் நேரடியாய் லையக் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க கொடுத்தீங்களா கொடுக்கலியா.... என்பது முக்கியமல்ல. கொடுத்தீங்க என்கிறதைக் கொடுக்காமல் கூட நிரூபிக்கிறதுதான் முக்கியம். எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல கொடுத்த பைல் வரலைன்னா - உங்களுக்கு டிஸ்மிஸ் நிச்சயம் கொடுத்திட்டிங்கன்னா, ஒரு பத்துநாள் சஸ்பென்டோட நிக்கும்... ஏன்னா, இனிமேல் அந்த பைல் கிடைச்சாலும், எம்.டியால் படிக்கவும் முடியாது. எம்டிக்காக அதை எந்த கோஷ்டும் படிக்கவும் முடியாது. போர்ட் மீட்டிங் அஜெண்டாவுல வைக்கவும் முடியாது. ஓ.கே... நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துல பைலோட வரப்போறீங்க..... இல்னேன்னா டிஸ்மிஸ்ஸோடப் போகப் போறீங்க.... ப்ளீஸ் கெட் அவுட். ஐ ஸே கெட் அவுட்"

சுகந்தி, தன்னுடல் இருப்பது தனக்கே தெரியாதவளாய், நடந்து இருக்கையில் வந்து அமர்ந்தாள் . எதிர்வரிசையில் உள்ள பாதிக் கிழங்கள் பார்வை தாங்கமாட்டாது, தன் உடலே தனக்கு சுமையாக, நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தாள். தனக்கு தானே பேசிக் கொண்டாள்.

"பைல் கிடைச்சால் சஸ்பெண்டாம் ; கிடைக்கவில்லை என்றாலடிஸ்மிஸ்ஸாம்... அவள் பொருமிக்கொண்டாள். இப்போது, நிஜமாகவே ஒரு சொட்டு - ஒரே சொட்டுக் கண்ணீர் வந்தது. வெறுமையுடன் அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். தனது கண்கள் கலங்குவது, எதிர் வரிசை இளசில்லாச் சிட்டுக் குருவிகளுக்குத் தெரியவேண்டாம் என்பதுபோல் கீழே குனிந்தபோது -

மேஜையின் கீழே மத்தியில் போடப்பட்ட கம்பியின் பாதி நீளத்தை அடைத்துக் கொண்டு ஒன்று கிடந்தது. விவசாய கூலிப் பெண்ணின் குழந்தை திண்ணையில் குப்புறக் கிடப்பதுபோல், கிடந்த அந்த ஒன்றை எடுத்தாள். அடடே... அடேயப்பா... ஹை... கான்பிடன்ஷியல் பைல் ! அதுவும் ஹைலி கான்பிடன்ஷியலான அதே அந்தப் பைல் தான். அதன் ரேப்பரில் சுகந்தி தெரியாமல் மிதித்த செருப்புச் சுவடு அட்சர சுத்தமாகத் தெரிந்தது. இன்னொரு சுவடும் மங்கலாகத் தெரிந்தது. ஒருவேளை, பாய் பிரண்டு கோபால் தாஸின் பூட்ஸ் சுவடோ என்னவோ...?

அவள், அந்த பைலை விரித்துப் பார்த்தபோது, ஜெனரல் மானேஜர்டி. கே. ராமனே, அங்கு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்.

"பைல் கிடைச்சுதா....? நல்லாத் தேடுனீங்களா...? நானும் தேடுறேன்..."

டி.கே. ராமன் சொல்லிவிட்டு நிற்கவில்லை. அவள் மேஜை டிராயரை இழுத்தார். அங்கே இருந்த மேக்கப் சாமான்களை எடுத்து, கையில் தூக்கி கான்பிடன்ஷியல் பைலோ என்று பார்த்தார்.

சுகந்திக்கு, அவர் தன் காதல் கடிதங்களைப் பார்த்தது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. கையில் உள்ள பைலை மறைக்க வேண்டும். இல்லையானால், கொடுக்காமலாவைத்தாய் என்று கெடுத்துவிடுவார். 'நீங்க கொடுத்தீங்களா என்பது முக்கியமல்ல.. கொடுக்காமல் கூட கொடுத்ததாய் நிரூபிக்கிறதுதான் முக்கியம் என்று டி.கே. ராமன், பித்துக்குளி ராமனாய்ச் சொன்னது, அவள் சித்தத்தில் இருந்த பித்தத்தை நீக்கித் தெளிய வைத்தது. பைலைக் கொடுக்காமலே கொடுத்ததாய் நிரூபிக்கணும். அப்போதுதான் சஸ்பென்ட் வராது. அப்போது தான் டிஸ்மிஸ் வராது...'

டிகே.ராமன், அய்யோ - நான் பிள்ளைக்குட்டிக்காரனாச்சே...' என்று பச்சைக் குழந்தையைப் போல், புலம்பிக் கொண்டே திரும்பிப் போனார். சுகந்திக்கு லேசாகச் சிரிப்புக்கூட வந்தது. "இந்த மானேஜருக்கு நிர்வாகத் திறமை இல்லையே...? நானாக இருந்தால், 'அந்த பைலை மறந்திட்டீங்க போலிருக்கு.... பரவாயில்லை .... ஒண்ணும் குடி முழுகிடல... அதுவும் நல்லதுக்குத்தான். ஒரு கரெக்ஷன் பண்ணனும் கொண்டு வாங்க' என்ற பதமாகச் சொல்லி , கிளார்க் கொண்டு வந்ததும், குரல்வளையை ஒரே பிடியாய்ப் பிடித்திருப்பேன்."

டி.கே. ராமன், தம் அறைக்குள் பைத்தியம் போல் கற்றிக் கொண்டிருந்தபோது, சுகந்தி, நாற்காலியில் டங்கென்று உட்கார்ந்தாள். டி.கே. ராமனின் 'கொடுப்பது முக்கியமல்ல.... கொடுத்ததாய் நிரூபிப்பதுதான் முக்கியம்' என்ற வார்த்தைகள் காதுகளில் வலம் வந்தன. அப்படி நிரூபித்தால் தான், தானும் தப்பமுடியும், அந்த அசடும் தப்பலாம்.... அது தப்ப வேண்டும். அப்போதுதான், பிரியாய் இருக்கலாம்.

ஒவ்வொரு ஊழியரும், தனக்கு மேலே இருப்பவர் அசடாக இருந்தால், அந்த ஆசாமியை நேசிப்பதுபோல், சுகந்தியும், இப்போது டி.கே. ராமனை நேசித்தாள்.

இந்த பைலை என்ன செய்யலாம்...?

சுகந்தி, எம்.டி. அறைக்கருகே போனாள். எம்.டியோ , டி.கே. ராமனை நோக்கிக் கையைக் காலை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஸ்டேனோ பெண் ஒருத்தி, சுருக்கெழுத்து குறிப்பேட்டுடன் குறிப்பறிய நின்றாள். கிவ் மீ ஒன் அவர்டயம் ஸார் என்று அழும் குரலோடு சொல்லிக் கொண்டே டிகே.ராமன் வெளியே வந்தபோது, சுகந்தி எதிரேயிருந்த டாய்லட் அறைக்குள் போய் ஒளிந்து கொண்டாள். அங்கேயே காத்திருந்தாள்.

கால்மணி நேரத்தில், எம்.டி. போய்விட்டார். அவரது பியூன், குறட்டை விட்டார். ஸ்டேனோ மங்கை எங்கேயோ போய்விட்டாள்.

சுகந்தி, அடி மேல் அடி வைத்து, அம்மி நகர்வதுபோல், கால்களை நகர்த்தி, எம்.டி. அறைக்குள் நகர்ந்தாள்.

அந்தக்குளுகுளுப்பு அறையில் இருந்த கிளுகிளுப்பான சோபா செட்டையும், கழல் நாற்காலியையும், பூதாகரமான மேஜையையும் உற்றுப் பார்த்துக் கொண்டே , முன்னேறினாள். எம்.டி.யின் இருக்கைக்கு அருகே வந்து, படபடப்புடன் நோட்டம் விட்டாள். நல்ல வேளையாக, மேஜை டிராயர் ஒன்று, ஒருசில உபயோகமில்லாத தட்டுமுட்டுச் சாமான்களுடன் பாதியறை திறந்தவெளிக்கோலத்தில் கிடந்தது... அதை இழுத்து முந்தானைக்குள் இருந்தபைலை எடுத்து திணித்து உள்ளே தள்ளிவிட்டு , ஒரே ஓட்டமாகத் திரும்பி ஓடியவள், தன் சொந்த இருக்கைக்கு வந்த பிறகே மூச்சுவிட்டாள்.

ஒரு மணி நேரம் ஓய்ந்த து.

எம்.டி.யிடமிருந்து மீசைக்கார பியூன் வந்து, அவளைப் பார்த்து, எம்.டி. அறைக்கு உடனடியாய் வரும்படி அலட்சியமாக சைகை மூலம் தெரிவித்து விட்டுப் போய்விட்டார். சுகந்தி, எம்.டி.யின் அறைக்குள் போனபோது, அவர், டி.கே. ராமனைத் தாளித்துக் கொண்டிருந்தார்.

மானேஜிங் டைரக்டர், தமது இளமைக் காலத்தை நினைவு படுத்துவதுபோல் கத்தினார்.

"அப்படின்னா .... அந்த பைலை நான் விழுங்கிட்டேனா....? பழைய பேப்பர்காரன் கிட்டே வித்துட்டனா..?"

இரண்டு சபார்டினேட்டுகளும் தலைகளைத் தாழ்த்தியபோது, எம்.டி. தம்மைப் பற்றித் தமக்குள்ளேயே எழும் சந்தேகங்களை, இப்போது கேள்விகளாகத் தொடுத்தார்.

"நான் என்ன - ஒன்றும் தெரியாத மக்கா ? அப்ஸாவ்பண்ணத் தெரியாத அசடா..? மேஜையில் இருக்கிற பைலைக் கண்டுபிடிக்க முடியாத ஆபீஸரா..? வாட் ஈஸ்திஸ் டோண்ட்டாக்"

சபார்டினேட்டுகளின் தலைகள் இன்னும் நிமிராதபோது, எம்.டி., இப்போது பெருமிதமாகப் பேசினார்.

"ஒரு குண்டூசி இருந்தால் கூட கண்டு பிடிக்கிறடைப் நான்... ஒரு பேப்பர் வெயிட்டை அரை அங்குலம் நகர்த்தி வைத்தாலும், அறியக்கூடிய டைப் நான்... நீங்க கொடுத்ததாய்ச் சொன்ன பைல் இப்போ இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம்... திறமை இல்லாத நபர்னு மீனிங்... டோண்ட் டெல்மி காக் அண்ட் புல் ஸ்டோரி..'

டிகே. ராமனின் தலை, முன்னிலும் அதிகமாகத் தாழ்ந்தபோது, ககந்தி, தலையை நிமிர்த்தி, சுவரைப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

"நீங்க பிஸி ஆபீஸர்ஸார்... உங்களுக்குப் பதிலாய், இந்த சீட்ல யார் இருந்தாலும் சமாளிக்க முடியாது. ஊழியர்கள் ஒவ்வொருவரும், எம்.டி. தங்களையே தனிப்பட்ட முறையில் வாட்ச் பண்ணிட்டு இருக்கிறதாய், ஒரு பிரமையைக் கொடுக்கிற அளவுக்கு நிர்வாகம் செய்யறீங்க..... பட்... ஆனாலும், நான் வச்ச பைலை ஒங்க பியூனே... தவறுதலாய் எங்காவது வச்சிருக்கலாம் இல்லியா...? ஜி.எம். ஸார்.... வாங்க தேடிப் பார்க்கலாம்."

புகழாரம் கழுத்தில் கருக்குப் பிடி போட, மானேஜிங் டைரக்டர் எதுவும் புரியாமல் விழித்தபோது, டி.கே. ராமனும் சுகந்தியும், எம்.டியின் அறையில், ஒவ்வொரு மூலையிலும் இருந்த பைல் கட்டுக்களைக் குடைந்தார்கள். பீரோக்களைத் திறந்தார்கள். ரேக்குகளை இழுத்தார்கள். அலமாரிகளைக் குடைந்தார்கள். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பிடித்து, உற்றுப் பார்த்தார்கள். சோபா செட்டுக்களுக்குக் கீழேயும் குனிந்தார்கள்.

மானேஜிங் டைரக்டரும், ஒரு அனிச்சைச் செயலாக, அங்குமிங்கும் கற்றினார். பிறகு, தம் இருக்கையில் அமர்ந்து, டிராயரை இழுத்து, சிகரெட்டை எடுக்கப் போனார். தற்செயலாக உள்ளே ஒன்று தென்பட்டது. 'என்னது.... அடேடே ஞாபக மறதியில் இங்கே வச்சுட்டேன் போலிருக்கு... அட, கடவுளே..! அதே அந்தரங்க பைல்... அதே... அதே...'

அலமாரிகளைப் பிடித்து, பீரோக்களை இழுத்து, கடைசியில் எம்.டியின் மேஜையைக்குடைவதற்காக, டி.கே. ராமனும், சுகந்தியும் அவரருகே வந்தபோது, மானேஜிங்டைரக்டர் டக்கென்று டிராயரை மூடினார். பைல் இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம்' என்று சொல்லிவிட்டு, அப்புறம்.... கூடாது.... காட்டக்கூடாது... சொல்லக்கூடாது....

மானேஜிங் டைரக்டர், இருவரிடமும் ஆணையிடுவதுபோல் பேசினார்.

"நான் இங்கே நல்லாத் தேடிட்டேன். எதுவும் இல்லை. மிஸ்டர் டி.கே. ராமன்... ஒங்க ரூமுக்குப் போய்த் தேடலாம்... வாங்கோ !"

இப்போது, மானேஜிங் டைரக்டரின் மேலான தலைமையில், டிகே. ராமன் அறையில் தூள் பறக்கிறது.

கல்கி , 15-3-1981.
---------------

11. தராசு

கைத்தறி லுங்கியை, செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் -

அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெபடி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச் சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சலில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ , காரின் குரல் படபடத்தது. டிரைவர் ஹாரனை வயலின் வாசிப்பதுபோல் உகப்பினார்.

விசுவநாதனிடம் சொல்லப்போனதை மறந்து, செந்தாமரை அவன் கையில் காகிதப் பார்சலைத் திணித்தாள். அவள் புடவை மாதிரியே கசங்கிய அந்தப் பொட்டலத்தை தூக்கு பையில் போட்டபடி, விசுவநாதன் காருக்கு அருகே போய் சல்யூட் மாதிரி வலது கையை வளைத்தான். உள்ளே இருந்த வயிறு பெருத்த டெப்டி டைரக்டர் , கார் கதவைத் தள்ளிவிட, அவன் உள்ளே போனான்.

செந்தாமரை தத்தளித்தாள். எப்படியாவது சொல்லியாக வேண்டும். அவள் முகபாவனையை விகவநாதன் பார்க்கவில்லை. டெப்டி டைரக்டர் பார்த்து விட்டார். "என்னம்மா விஷயம்.... வெளில போறியா?"

"ஆமாங்க ஸார், கடைக்குப் போகணும். கெஸ்ட்ஸ் வாராங்க."

"கார்லே ஏறிக்கோம்மா."

"வேண்டாம் ஸார்."

"தானாப் போற கார்ல் நீயும் வாரதுல தப்பில்லமா. நீ என் மகள் மாதிரி வாம்மா.''

அவர்களின் உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரி, விஸ்வநாதன் காருக்குள் இருந்த ஒரு கோப்பை எடுத்துப் புரட்டினான். செந்தாமரை, அந்த அதிகாரியை அதிகமாகக் காக்க வைக்கக் கூடாது என்று, கதவை வேக வேகமாய் இழுத்து மூடப்போனபோது, மீண்டும் வீட்டுக் கணக்கு நினைவுக்கு வந்தது. காருக்குள் அவரிடம் பேசமுடியாது. இப்போ எப்படி... சட்டென்று ஓர் எண்ணம்...

"ஏங்க, கதவைப் பூட்ட முடியல. கொஞ்சம் வாரீங்களா?"

எழுந்து வந்த விஸ்வநாதன் கதவைப் பூட்டியபடியே கேட்டான். "கதவு ஈசியாத்தானே பூட்டுது?"

"ஒங்களுக்கு எல்லாமே ஈசிதான். இதனால்தான் எனக்கு எல்லாம் கஷ்டமாகுது."

"என்ன பூடகமா பேசுறே... என்ன விஷயம்?"

"மத்தியானம் ஒங்கண்ணாவும் அண்ணியும், குழந்தை குட்டிகளோட வீட்டுக்கு வரப்போறது தெரியுமா? அவங்களுக்கு ஆக்கிப்போட அரிசி இல்லன்னு தெரியுமா?"

கோபமாகச் சொன்னவளைப் பார்த்து, விஸ்வநாதன் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளையும் தொற்றியது. விஸ்வநாதன் பிசிறில்லாமலே பதிலளித்தான்.

"ஸாரி மேடம் ! வழக்கமாய்த் தினமும் நீ தருகிற ரெண்டு ரூபாயைக் கூட நான் கேட்காததிலிருந்து ஒன்னோட பட்ஜெட் நிலைமையை நான் எப்படிப் புரிஞ்சிட்டிருக்கேன்னு உனக்கே தெரியும். நாளைக்குத்தான் சம்பளம்.''

"விருந்தாளிகள் இன்னைக்கே வாராங்களே?"

"எப்படியாவது சமாளிம்மா"

செந்தாமரை, ஏதோ கோபமாகச் சொல்லப் போனவள். அப்போது காருக்குள் அடைபட்டுக் கிடந்த டெப்டி டைரக்டர் வெளியே வந்து நின்று, நேரமாவதைச் சொல்லாமல் சொல்வதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இங்கிதம் தெரிந்த செந்தாமரை, அது தெரியாத விஸ்வநாதனை விலாவில் இடித்தபடியே காருக்குள் கூட்டிப் போனாள்.

அந்தக் கடை முன்னால், பிரேக் போட்டு, அந்தப் பகட்டு கார் நின்றது. காரில் இருந்து இறங்கிய செந்தாமரையை அந்தக் கடையை மொய்த்த பெண்கள் வியந்து பார்த்தார்கள். இவ்வளவு பெரிய காரில் வந்தாலும், எவ்வளவு அடக்கத்தோடு இருக்கிறாள் !

பெண்கள் இரண்டாகப் பிரிந்து, செந்தாமரைக்கு வழி போட்டுக் கொடுத்தார்கள். ஆனால் கடைக்காரர் அக்காய சூரர். மஞ்சள் மசாலா மளிகைக்கடைக்கு முன்னாலேயே ஒரு மேஜைமேல் வியாபித்த பிளாஸ்டிக் விரிப்புமேல் விதவிதமான காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார். ஒரு பக்கம் ஐஸ் மோர். இன்னொரு பக்கம் மூன்று அரிசி மூட்டைகள், கோணி வாயில் வெள்ளைப் பற்களைக் காட்டிக் கொண்டிருந்தன.

செந்தாமரை கடனுக்குப் பீடிகையாய், என்ன அண்ணாச்சி... ஊர்ல மழை பெய்துதாம்மா? எப்போபோறீங்க என்று கேட்கலாமா என்று நினைத்தாள். சீச்சீ.. இந்தப் பசப்பு வார்த்தையைப் பேசுகிற வாய் பட்டினி கிடக்கலாம். அது சரி... நான் பட்டினி கிடக்கலாம்... விருந்தாளிகளையுமா....

சகலகலா மண்டி வியாபாரியான கடைக்காரர், செந்தாமரையைக் கவிழ்கண் போட்டுப் பார்த்தார். அவளைப் பார்த்த கண்ணோடு, அங்குள்ள அத்தனை பெண்களையும் பார்த்தார். இச்சையாக அல்ல - எது எது கடன் பாக்கி என்ற ஆய்வோடு. செந்தாமரை உதட்டைக் கடிப்பதிலிருந்தும், கால் பெருவிரலால் தரையில் கோடு போடுவதிலிருந்தும் அவர் புரிந்து கொண்டார்.

கடைக்காரர், ஒரு பாட்டி மீது பாய்ந்தார்.

"என்ன ஆயா நீ... கொசுருன்னு சொல்லிட்டு அவ்வளவு கறிவேப்பிலையும் எடுத்தா எப்படி? மாட்டுக்குத் தீவனமா போடப் போறே? ஏய் செங்கணி! ஒங்க வீட்டுக்காரம்மா எப்போதான் அந்தப் பாக்கியைத் தரப் போறாங்களாம்?"

"வந்து.... சாயங்கலாமாய்த் தருவாங்களாம்."

"நீயும் சாயங்காலமாவே வா. போன மாசத்துப் போடு கணக்குத் தீர்க்கும் முன்னால், ஒரு அரிசிகூட போடமாட்டேன். பேரெடு கணக்கில் முந்நூறு ரூபாய்தாண்டுற எந்த அம்மாவுக்கும் அதுக்கு மேல் கடன் கிடையாது"

கடையைச் சுற்றி நின்ற அத்தனை பெண்களும், தத்தம் கரங்களில் இருந்த கைக்கு அடக்கமான நோட்டு புத்தகங்களைப் பயபக்தியோடு பிரித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளிலும் அவர்கள் வாங்கிய பொருட்களும், அவற்றின் விலையும் எழுதப்பட்டுக் கடைக்காரரால் கையெழுத்திடப் பட்டிருந்தன. கடைக்காரர் கொடுத்திருக்கும் ஒருவிதமான பாஸ் புத்தகங்கள்.

முந்நூறு ரூபாய்க்கு மேல் போன பெண்கள் முகம் கழித்தும், அதற்கு உள்ளேயே இருந்த பெண்கள், முந்தைய பெண்களின் முகக் கலவரத்தை ரசித்தபடியும் நின்றபோது, ஒரு மாமி வந்தாள்.

"என்ன கடைக்காரரே, சௌக்கியமா?"

"ஒங்க கடன் பாக்கி நானூறு ரூபாயாய் நிற்கும்போது நான் எப்படி சௌக்கியமாய் இருக்க முடியும்மா? நான் ஏதோ தமாஷ் பேசுற மாதிரி சிரிச்சு மழுப்பாதீங்கம்மா! ஸ்கூட்டர்ல போகத் தெரியுது. சினிமாவுக்குப் போக முடியுது. ருசிருசியாய்ச் சாப்பிடத் தெரியுது. கடைப் பாக்கியை மட்டும் தரத் தெரியலை."

"ஏன் இப்படி தெரியாதது மாதிரி பேசறேள்? ஒங்க காசைக் காக்கா கால்லே கட்டி அனுப்புவேனாக்கும்?"

"அதைச் செய்யுங்க முதல்ல. வியாபாரத்துல தெரிஞ்ச வங்கன்னு யாரையும் பார்க்கப்படாதும்மா. அப்படிப் பார்த்தால், நான்தான் தெரியாமப் போயிடுவேன். அதோ அந்த அம்மாக்கூட ஒங்களைவிட எனக்கு அதிகமாய்த் தெரிஞ்சவங்க தான். எங்க ஊர்ப்பக்கம் வேற. அவங்க கேட்டால் கூடக் கடன் கொடுக்கப் போறதில்ல. உங்களுக்கோ அவங்களுக்கோ கொடுக்கப்பாதுன்னு அர்த்தமில்லே. நான் அவ்வளவு தூரம் நொடிச்சிட்டேன்னு அர்த்தம். ஏய் மூதேவி தக்காளியை ஏன் அப்படிப் பிசுக்கிறே? உடைச்சிட்டால் ஒப்பனாகாசு தருவான்? செந்தாமரையம்மா, ஒங்களுக்கு எந்தக் காய் எத்தனை கிலோ வேணும்மா? சில்லறையாக் கொடுங்க. அம்பது ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டு.. அவஸ்தைப்படுத்தாதீங்க..."

பாம்புபோல் நெளிந்த புடலங்காய்களையும், பல் விதைகளைக் காட்டிய தார் பூசணியையும், கண்டெலிபோல் தோன்றிய சேப்பன் கிழங்குகளையும், தன் முகம் போல் காட்டிய உருளைக் கிழங்கு களையும் தொலைநோக்காய்ப் பார்த்த செந்தாமரை, கடைக்காரரைப் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வைராக்கியத்தோடு , நடக்கப் போனாள். கடைக்காரர், அவளைச் சாய்த்துப் பார்த்தபோது, "அரிசி வாங்குறதுக்கு தூக்குப்பை எடுத்துட்டு வரேன்” என்று சொன்னபடி நடந்தாள்.

செந்தாமரை வீட்டுக்குப் போய்த்தான் என்ன ஆகப்போகிறது என்பதுபோல், மெள்ள நடந்தாள். பிறகு, இவரோட பவிக, விருகம்பாக்கம் அண்ணனுக்கும் தெரியட்டும் என்று அதைத் தெரியப்படுத்தப் போகிறவள் போல் வேகமாய் நடந்தாள். ஊரில் அம்மா, கழுதை வயசுக்கு வந்த பிறகும் தனக்கு உணவூட்டி விட்டது மனதிலே நினைவுகளாய் வாயிலே பெருமூச்சாய் , கண்ணிலே நீராய் உருமாறின. பழைய இனியவை, புதிய கசப்போடு வந்தன.

ஒன்றரை வருடத்திற்கு முன்புதான், அப்பா வில்லாதி வில்லனாக ஆகாமல் போன இந்த விஸ்வநாதனிடம், அவளைத் தள்ளினார். மூன்று பெண் மக்களை வியாபாரிகளுக்குத் கொடுத்த தந்தை, ஒரு சேஞ்சுக்காக இவளை பட்டதாரியும், அரசாங்க ஆசாமியுமான இந்த விஸ்வநாதனிடம் ஒப்படைத்தார். பிளஸ்டூ' செந்தாமரைகூட தனது அக்காக்களுக்காக அனுதாபமும், தனக்காகப் பெருமிதமும் கொண்டாள். அப்புறந்தான் தெரிந்தது - அப்பா சேஞ்சுக்காகப் பிடித்த மாப்பிள்ளை மாதக் கடைசியில் சேஞ்சே இல்லாதவர் என்று. வியாபாரி - மச்சான்களின் ஒருநாள் சம்பாதனை, இவரின் ஒரு மாதச் சம்பளம்.

செந்தாமரை, வீட்டுக் கதவை திறந்து, அதைக் காலாலேயே உதைத்தாள். ஒரு முக்காலியில் இருந்த டெலிபோனைத் தூக்கி எறியப் போனாள். 'நீங்க கெட்ட கேட்டுக்கு...' ஒங்களுக்கு டெலிபோன் ஒரு கேடா?' என்று அவனிடமே கேட்பதற்காக டயலைச் சுற்றினாள்.

'ஹலோ - ஆபீஸ் சூபரின்டென்ட், மிஸ்டர்விஸ்வநாதனோட பேசணும்."

"அவரு வேறடெலிபோன்ல பேசிட்டு இருக்கார். லைன்லேயே இருங்க."

செந்தாமரை டெலிபோன் குமிழைக் காதில் பட்டுப் பட்டென்று அடித்துக் கோபத்தைக் கொட்டியபோது, விஸ்வநாதன் குரல் தெளிவாகக் கேட்டது.

"ராமச்சந்திரனோட ஆறு லட்சம் ரூபாய் கொட்டேஷடன் லோவஸ்ட்தான். ஆனாலும், கொடுக்கணுமுன்னு கட்டாயம் இல்லையே? போன பைனான்ஷியல் வருஷத்திலேயும் இதே மாதிரி லோவஸ்ட் ரேட் செய்து அப்புறம் பாதி பீரியட்ல... விலைவாசி கூடிட்டு என்கிற சாக்கில் அதிகமாய் மூன்று லட்சம் கேட்ட கம்பெனி. அது தேவையில்லை. கோபி கம்பெனி ஆறு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கேட்டாலும் குவாலிட்டி கம்பெனி. சொன்ன சொல்லில் நிற்கிற நிறுவனம். முப்பதாயிரம் அதிகமாய் இருக்கட்டுமே. ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய்... பட்ஜெட்ல சரிக் கட்டிக்கலாம்."

செந்தாமரை மனம் குமுறியது. அவன் பேசுவது அவள் காதுக்கு நன்றாகவே கேட்டது. இவளும் தனக்குள் பேசிக் கொண்டாள்.

ஆப்டர் ஆல் ரெண்டு கிலோ அரிசி வாங்க வக்கில்ல. ஒரு வாழைக்காய் கூட வாங்குறதுக்குத் துப்பில்ல.... ஆப்டர் ஆல் முப்பதாயிரம் ரூபாய்னு பேசறதைப் பாரு . வீட்டு பட்ஜெட்டை சரிகட்டாத மனிதருக்கு, கவர்மெண்ட் பட்ஜெட் எப்படி வரும்? இதனாலதான் நாடு உருப்படல.

விஸ்வநாதன் குரல் அழுத்தமானது. அவள் தன்னிடம் தான் பேக்கிறாரோ என்பதுபோல் செந்தாமரை உற்றுக் கேட்டாள்.

அவன், இன்னும் அதே போனைத்தான் கட்டியழுதான்.

"ஐ ஆம் ஸாரி ஸார். நான் பிழைக்கத் தெரியாதவனாவே இருந்துட்டு போறேன் ஸார். அடுத்தவர் காக எனக்குத் தேவை இல்லை ஸார் என் ஒய்ப் நச்சரிப்பு இல்ல ஸார். என்னோட நேர்மையைத் தன்னோட தாலி பாக்கியமாய் நினைக்கிறவள். யாரோட பட்டுச் சேலைக்கும் பகட்டுக்காருக்கும் பணம் கேட்டுத்தாலி யைக் கழட்டி எறிகிறவள் இல்ல ஸார். ஐ ஆம் ஸாரி ஸார். உங்க வீட்டு இன்சிடென்டைச் சொல்லல ஸார். குடும்பத்தையும் கவனிக்கணுமுன்னு நீங்க சொன்னதால்... இப்படிச் சொன்னேன்....

படபடத்துப் பேசிய விஸ்வநாதன், எதிர்முனை பதிலை எதிர்பார்த்தபோது, அதே முனையில் டங்கென்று ஒரு சத்தம்.

"அடடே... அஸிஸ்டெண்ட் டைரக்டர் போனை டப்புன்னு வச்சுட்டாரே. இந்த லைன்லே யாருய்யா இருக்குது? ஹலோ ஸாரி.... பார் கீப் யூ வெயிட்டிங். யார் பேசுறது?" என்றான் விஸ்வநாதன்.

செந்தாமரையால், பேச முடியவில்லை . உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒன்று காற்றா புனலா - கதகதப்பான சூடா, ஏதோ ஒன்று உட்சென்று அவளை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. அத்தனை கோபதாபங்களும், ஆக்கபூர்வமாய், நேர்மை வேள்விக்கு எருக்களாயின. விஸ்வநாதன் உதவியாளரிடம் பேசுவது கேட்டது.

"என்னப்பா, இது ராங் நம்பரா?" செந்தாமரை உரக்கவும், உற்சாகமாகவும் கூவினாள் - "ரைட் நம்பர், ரைட்லேடி. என்னங்க.... ஒங்களத்தான்..."

- குமுதம், 25.8.88
----------------------

12. ஒன்றுக்குள் இரண்டு

அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ்மானேஜர்கழிவதாலும், புதிய சேல்ஸ்மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமான வராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு , ஒரு தகுதியாக வாய்த்தது. மானேஜிங் டைரக்டர், "திஸ் இஸ் யுவர் பிராஞ்ச் - ஹி ஈஸ் ஹெட்கிளார்க் சோணாசலம்...” என்று சொல்லி முடித்து, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய் விட்டார்.

செக்ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்; டைப்பிஸ்ட்காரி கொண்டையை சரிசெய்து கொண்டாள். சேல்ஸ் - அசிஸ்டண்ட் சிங்காரம், சட்டைப் பித்தானைப் போட்டுக் கொண்டான். 'மாடர்னாக' இருப்பதாய் காட்டிக்கொள்ள விரும்பிய பெண்கள், பௌவியமாய் இருப்பதாய் நினைத்துக் கொண்ட பெண்கள், கிளாட் டூ மீட் யூ ஸார் என்ற வார்த்தை களை அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே சொல்லியாக வேண்டும் என்பதற்காக, அவற்றை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் - இப்படி அலுவலகம், தீபாவளியை கொண்டாடுவதுபோல், புதுமையாகத் தோன்றியது.

சேல்ஸ் மானேஜர் சதாசிவத்திற்கு இருபத்தெட்டு வயதிருக்கலாம். டூவிட்பேண்டும், சிலாக்கும், உடம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் மின்விசிறியில் லேசாக ஆடின. கூர்மையான பார்வையும், அறிமுகப் படுத்தப்படுவோரின் கண்களை, அவன், நேராகப் பாத்ததில், அப்படிப் பார்க்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்கள் போல், தலைகளை குனிந்து கொண்டார்கள்.

தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கௌண்டன்ட் சுந்தரம், தான் லேட்டாக வந்ததற்கு, மற்றவர்கள்தான், வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தவன் போல், மதர்ப்புடன், அடிமேல் அடிவைத்து நிதானமாக நடந்து வந்தான்.

தலைமைக்குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, 'அம்போ' என்று விட்டுவிட்டு, கந்தரத்தைப் பார்த்தார். அவனை, முதலில் அறிமுகப் படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான்.

"ஹி ஈஸ்... சுந்தரம்... ஸார்" என்றார் சோணாசலம். "கிளாட் டுமீட்யூ மிஸ்டர்... சதாசிவம் " என்று சொல்லிக்கொண்டு, சுந்தரம் மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான். எல்லோரும் ஸார் போடுகையில், இவன் மட்டும் மிஸ்டர் என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை . அதோடு, அவன் பேசிய தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான் தான் அக்கௌண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள் கூட, பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், ஆப்டர் ஆல்' ஒரு அக்கௌண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜருக்குப் பிடிக்கவில்லை . ஆகையால், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது சுப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான்.

"கிளாட்டு மீட் யூ ஆல்... ஒர்க்ஈஸ்காட் உங்களுக்கு, எந்த பிரச்சினை என்றாலும்.... என்கிட்ட வரலாம்... பட்... டிஸ்ஸிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்.... நான் .... லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ்... படிக்கும் போது.... அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்...'

அலுவலக ஊழியர்கள் அனைவரும் மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள் போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம்.

ஆனால், அக்கௌண்டண்ட் சுந்தரம், அலட்சியமாக மேலே ஓடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாகப் புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் சதாசிவம் லட்சியம் செய்ததுபோல், கோபமாக கேட்டான். லேட்டாய் வருகிறவர்களை டிஸ்மிஸ் பண்ணிடுவேன். தாமதமாக வருவது ஒரு சமூக விரோத செயல்" என்று பேசிக்கொண்டே போனான்.

ஊழியர்கள், அவருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். சுந்தரம் மட்டும் ஒனக்கு ஒரு திறமை இருந்தால்.... எனக்கும் ஒரு திறமை இருக்கு.... நீ என்ன சொல்றது..... நான் என்ன கேட்கிறது' என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகைக்குள் தலை நுழைத்தான்.

மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும் பார்த்துவிட்டார்கள். மானேஜர் சதாசிவம் அட்வைஸ் முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போய்விட்டான். அவனை எப்படி மடக்கலாம் என்று மானேஜரும், ஆசாமி மீது எப்படி ஒரு வழி செய்யலாம் என்று அக்கௌன்டன்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த பைலையும் பார்க்கவில்லை.

இரண்டு மூன்று நாட்கள் ஓடின.

அக்கௌன்டன் சுந்தரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கிழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை புதிய மானேஜரைப் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.

'அடுத்த தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய அக்கௌன்டென்ட் , 'குட்மார்னிங் ஸார். ஆபீஸிற்கு வாரீங்களா என்று கேட்டு வைத்தான்.

மானேஜர் சதாசிவம், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள் தான் நுழைவதைப் பார்த்த பிறகும் ஆபீஸிற்கு வாரீங்களான்னு' கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், அவன், லண்டனில் பிஸினஸ் அட்மினிஸ்ட் ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை. அக்கௌன்டன்டுக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் யூ மீட்மி இன்மை ரூம் என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான்.

அக்கௌன்டன்ட் சுந்தரத்தின், ரத்தம் கொதித்தது. மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும்... இருக்கட்டும்..... இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம்.

மானேஜர், சொன்னபடி அவன் பார்க்கவில்லை. பியூன் வந்து சொன்ன பிறகு, கால்மணி நேரம் கழித்து மானேஜர் அறைக்குப் போனான். அப்போது, மேனேஜர், அவனைக் அழைத்ததை மறந்தவன் போல் பாவலா செய்து கொண்டே, ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக்கொண்டிருந்தான்.

"சரண்சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்?"

அந்தப் பெண் (அழகானவள்) மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள். அதற்குள் அங்கே நின்றுகொண்டிருந்த அக்கௌன்டன்ட் சுந்தரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே "நம் நாட்டுக்கு" ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்” என்று பேசிக் கொண்டே போனான்.

அந்த இளம் பெண், மானேஜரை விட்டு விட்டு சுந்தரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கௌன்டன்ட் பேசியது மானேஜர் சதாசிவத்திற்கு சகிக்கவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது சதாசிவம், அவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.

'இம்ப்ரஸ் செய்தான்.

'மிஸ்டர் சுந்தரம்! நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ், வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட மீன்'

"நீங்க வந்த சமயத்துல நானும் வந்துடுறேனே.'

அந்த இளம் பெண், அக்கௌன்டன்டின் பதிலில் ஒளிந்திருக்கும் சட்டயரை, ரசித்தவள் போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள்.

மானேஜர்சதாசிவத்திற்கு ரத்தம் கொதித்தது. ஒரு பெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவனை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப்படுத்துவதா? முடியாது; விட முடியாது.

'மிஸ்டர் சுந்தரம்! டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளீஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸே ஒய் ஆர் யூ லேட்"

அக்கௌன்டன்ட் சுந்தரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி என்ன நினைப்பாள்?

ஆகையால் அவன் பதிலடி கொடுத்தான்.

'லுக்' மிஸ்டர் சதாசிவம் ! ஏன் அனாவசியமாய் பஸ் பண்றிங்க? இப்போலேட்டாய் வந்ததுனால எந்தக் குடி முழுவிப் போச்சு? நீங்களுந்தான் லேட்டாய் வந்தீங்க"

"எதிர்த்தா பேசுற... யூ ஆர் சேலஞ்சிங் மை பவர்"

"நோ... நோ... யூ ஆர் பாஸிங் மீ டூ மச். பெரிய பதவிக்கு சின்ன புத்தி கூடாது."

"ஓட்... திமுராவா பேசுற... கெட் அவுட் ஐஸே யூகெட் கெட் அவுட்."

"போகிறேன். கொஞ்சம் மானேர்ஸ் கத்துக்கங்க"

"இங்க எதுக்கு மேன் வந்திங்க?" "நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?"

" எதிர்த்தா பேகற்"

"நீ நான்னு பேசினா... நானும், நீன்னு பேச வேண்டியது வரும்...''

"ஐ ஸே யூ கெட் அவுட்"

"ஐ ஸே யூ ஷட் அப்"

மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினான். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் சேலஞ்ச்' செய்யப்பட்டதை, அவன் விடத் தயாராகயில்லை .

அக்கௌன்டன்ட் கந்தரம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா . அவள் கடைக்கண் பார்வையில் மண்ணில், அக்கௌன்டன்பான அவனுக்கு அந்த மாமலை மானேஜரும், ஓர் கடுகாம்.

மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஓடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆசுவாசப்படுத்திய அவர்கள், வெளியே வந்து கந்தரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை . இதற்குள், அந்தச் இளம் பெண் ஓடிவிட்டாள்... ஒரேயடியாய் ஓடுவதுபோல் ஓடிவிட்டாள்.

மானேஜிங் டைரக்டர் மதனகோபாலும் குலுங்கினார். சாம்பசிவம், சுந்தரத்தைப் பற்றியும், கந்தரம் சாம்பசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர். அவன் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். கந்தரம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது.

'ஆக்ஷன்' எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அக்கௌன்டன்டும் பீலர்ஸ்' விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர், இறுதியில் இருவருக்குமே 'மெமோ' கொடுத்தார். அக்கௌன்டன்டுக்கு சிவியர் மெமோ'.

சேல்ஸ் - மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜர்களை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று சுந்தரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித கெடுபிடி' நிலவி வந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார்கள்.

அதையும் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது.

ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவன், தான் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் 'ஹம்பிள் பிரைட்' (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய், அவர்களை உடகாரச்சொன்னான். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து, ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவங்கினான்.

"என்ன விஷயம்?"

"வந்து ஸார்... நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்தப் போறோம்".

மானேஜர் சதாசிவம் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவனீர் களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்திற்கு அவன் எழுதியதை அப்படியே பிரகரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதி இருக்கிறான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள், அவனிடம் ஸ்கிரிப்ட்' கேட்க வந்திருக்கிறார்கள் போலிருக்கு. வெரிகுட்

வந்தவர்கள் 'ஸ்கிரிப்டை' விட்டு விட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். வாய்விட்டே கேட்டான்.

"டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதுறது"

"நம்ம அக்கௌன்டன்ட் சுந்தரம்தான் ஸார். நீங்க தலைமை தாங்கணும்".

"நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்."

ஊழியர்கள், கந்தரத்திடம் விவரத்தைச் சொன்னார்கள். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன் போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.

சுந்தரத்தின் ஸ்கிரிப்டை' சதாசிவம் படித்தான். அவனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, அந்தக் கம்பெனிலிலேயே தனக்கு மட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு, அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய கந்தரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும் , ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் குடைந்தன.

ஸ்கிரிப்ட் எப்படி ஸார் இருக்கு" என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள்.

"இதுக்கு பேரு ஸ்கிரிப்டா? கதையே இல்ல.... வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற போல சம்போக கோர்வை... சீச்சி... இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க."

"டூ லேட் ஸார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க."

"நான் பணமும் தாரேன், ஸ்கிரிபடும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள் நீங்க படித்ததில்லையா?"

ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை அக்கௌன்டன்டிடம் சொன்னார்கள். அவன் கத்துவான் என்று எதிர்பார்த்தார்கள், அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள்.

"சுந்தரம் எப்படிடா உன்னால் கோபப்படாம இருக்க முடியுது?"

"சேல்ஸமானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கணும்?"

அக்கௌன்டன்ட் , தான் 'பெருந்தன்மையானவன்' என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப்பட்டான். இதுபோல், சதாசிவமும், நாடகத்தை, அவன் 'டைரக்ட் செய்ய 'பெருந்தன்மையோடு சம்மதித்தான்.

ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாற்றங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. அவனால், கத்தாமல் இருக்க முடியவில்லை.

"நிறுத்துங்க... இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது."

அக்கௌன்டன்டும், நாடக டைரக்டருமான சுந்தரம் விடுவானா? விடவில்லை .

"சொல்லுங்களேண்டா.... ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு."

"அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?" "எல்லாக் காட்சியும் மட்டாக இருந்தால், என்ன பண்றது?"

"என் ஸ்கிரிப்டா மட்டம். நான் சென்ஸ் . டைரக்ஷன் தான் மகா மட்டம்"

"என் டைரக்ஷனா? இடியாட்டிக்... மட்டமான ஸ்கிரிபடையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்ஷன் ஒரு உதாரணம்".

"மிஸ்டர் சுந்தரம்! நீ ரொம்பத்தான் பேசுற"

"மிஸ்டர் சதாசிவம் இங்க நீங்க மானேஜர் இல்ல... ரைட்டர். நான் அக்கௌண்டண்ட் இல்லே... டைரக்டர் டோண்ட்பீஸில்லி."

"வார்த்தையை அடக்கிப் பேசு . இந்த மாதிரி டைரக்ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்.''

"எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட டைரக்ஷன் எவ்வளவோ மேல்."

"டேய்! என்னடா நினைச்சிக்கிட்டே?" "டாய்... என்ன நினைக்கணுங்குறடா?" "இப்படி பேசினா பல்லை உடைப்பேன்" "இதோ நானே உடைக்கிறேன் பாரு."

ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த, நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது.

விவகாரம், மானேஜிங்டைரக்டர் தனபாலுக்கு மட்டுமல்ல, பத்திரிகைகளுக்கும் போய்விட்டது. இப்போது சதாசிவமும், கந்தரமும் இடைக்கால பணி நீக்கத்தில் இருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக யாரை போடுவது என்பதில் ஒரு பணி போர் நடப்பதால், இன்னும் விசாரணை தொடங்கவே இல்லை.

சாம்பசிவம் எப்படியோ... சுந்தரத்திற்கு அடி மேல் அடி.... மனைவியின் ஊமை குகம்பில், மாமனார், மாமியார் கரித்துக் கொட்டல்.... அவன் அதிகாரி... எப்படியும் தப்பிச்சுக்குவான். நீ வெறும் அகௌவுண்டனெட்டு. உனக்குத்தான் வேலை போகும் என்ற அப்பாவின் ஜோசியம், இதனால், சுந்தரத்திற்கே, தனது அனுகுமுறையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், புத்திசாலி என்பதால், ஒரு மனோ தத்துவ நிபுணரை சந்தித்து, தனது வரலாற்றை ஆதியோடு அந்தமில்லாமல் ஒப்பித்தான். அவர், அவன் மனோ பிரச்சனையை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றாலும், அந்த விவகாரத்தின் காரண காரியங்களை கண்டு பிடித்தவர்போல், ஒரு கண்டு பிடிப்பாளருக்கு உரிய கர்வத்தோடு தெரிவித்தார்.

"உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர், தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு. சய - குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது ஈத் தடுக்கிறது. 'ஈகோ' அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள், இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும் போது, ஒருவன், அவனை ஜென்மப் பகைவனாய் கருதுகிறான். வெறுப்பதன் மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால்தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், மரத்தை மறைத்தது மாமத யானை' என்றதுக்கும், சாக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்' என்று சொன்னதுக்கும், பைபிளில் 'உன்னைப்போல் மற்றவனை நேசி' என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன், தன்னே சோதித்துக் கொள்ள வேண்டும்."

சுந்தரம் யோசித்தான். மானேஜர் சதாசிவத்தின் நடை உடை பாவனைகள், தன்னைப் போலவே அமைந்திருப்பது அப்போதுதான் உறைத்தது. தான், மானேஜராக இருந்தால் சதாசிவம் போல்தான் நடந்திருக்க முடியும் என்பதும், அவன், தன் நிலையில் இருந்தால், அவனும் தன்னைப்போல்தான் நடந்திருப்பான் என்பதும் புரிந்தது. விவகாரம் பதவிக் கோளாறு அல்ல மனிதக் கோளாறு என்பதும் கண்கெட்டு உறைத்து.

அண்ணா - பொங்கல் மலர், 1982
----------------

13. ஒரு காதல் கடிதம்.....

ஆடை அலங்காரத்தின் உச்சக்கட்டமாக இரண்டாவது மாடியில் ஒண்டி போர்ஷனில் தெற்குப் பக்கம் உள்ள ஜன்னலுக்கு வகிடெடுத்தது போல் தோன்றிய இரண்டு செங்குத்தான கம்பிகளுக்கு இடையே, கட்டங்க கட்டமாக முடிந்த நடுப்பகுதியில், நடுப்பக்கத்துக் கட்டத்தில் சதுரக் கண்ணாடியை சாத்தி வைத்துவிட்டு, சிவராசன், முகத்திற்குப் பவுடர் தடவும் சாக்கில் முதல் மாடியில் இரண்டாவது போர்ஷனில் இருக்கும் ஓர் இளசைப் பார்த்தான். அதே அறையில் அதே சமயம் கிழக்குப் பக்கம் இருந்த குறுகலான ஜன்னலில் கையளவு கண்ணாடியை பிரித்தபடியே கிரவுண்ட் போர்ஷனில் வாழும் அல்லது காதலில் வாடும் ஒருகடலளவு கண்ணினாளை, வரதன் கையில் எடுத்தஸ்னோவைக் காதில் தேய்த்தபடி பார்த்தான்.

"டேய், கண்ணாடியை பார்க்கிறியா இல்ல கண்ணாடியை பாக்கிறியா? எவ்வளவு நேரண்டா? நானும் இவளைப் பார்க்கப்படாதா? புறப்படுடா?" என்று சிவராசனை, வரதன் சாடினான்."

"ஒன்னால் அவளைப் பாக்க முடியலன்னா நானும் இவளப் பார்க்கப்டாதா? ஏண்டா இந்தப் பொறாமை புத்தி?"

அந்த அறைக்குள், மூன்றாவது இளைஞனான ரங்கன் சிவராசனை ஏறிட்டுப் பார்க்காம தனக்குள்ளேய பேசியபடி தனக்குள்ளேயே சிரித்தான்.

வரதன் அதட்டினான்.

"ஏண்டா, நீ வாரதுவரைக்கும் காத்திருந்து ஒனக்கு ஸ்பெஷல் ஷோ காட்டப் போறதாய் நினைப்பா? புறப்படுடா! டேய், ஒன்னைத்தான் .... ஒனக்குக் காதலிக்கத்தான் தெரியாது. எங்களோட காதலை ரசிக்கவும் பிடிக்காது. நிழல் காதலையாவது வந்து பாருடா. எழுந்திருடா சண்டி மாடு"

ரங்கன் மெல்லச் சிரித்தபடி நண்பர்களைப் பார்க்காமலே நாவசைத்தான். "நான் சினிமாவுக்கு வர்ல."

"என்ன... வரலியா? உனக்கும் சேர்த்து என் கையிலே இருந்து காசைக் கொட்டி ரிசர்வ் பண்ணியிருக்கேன், ஒப்பன் வீட்டுப் பணமுன்னா இப்படிச் சொல்வியா?"

"எப்பன் வீட்டு காகன்னாலும் வரமாட்டேன்."

"சிவராக ! வாடா போகலாம். டேய ரங்கா, ஒன்னை வந்து கவனிச்சுக்கிறோம்.''

நண்பர்கள் போய்விட்டார்கள்.

ரங்கன் அறைக்குள் வந்தான். கதவைத் தாளிட்டான். எவராவது உள்ளே வரலாம் என்பதுபோல், அனுமானித்து வாசலுக்கு கதவால், தடைப் போட்டான்.

அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்து, மீட்டு வந்த காகித உறைக்குள் கையை விட்டான். கறுப்புமை பூசிய காகிதத்தை எடுத்தான். மார்புக்கு நேராக அதை வைத்துக் கொண்டு படிக்கப் போனான். மின் விசிறியால் அது பரபரப்படைந்தது. உடனே அது கிழிந்து விடக் கூடாதே என்று பயந்து ஸ்விட்ச் போர்ட் பக்கம் போனான். இந்த இடைக்காலத்தில் காகிதம் பறந்துவிடக் கூடாதே என்று மீண்டும் மேஜைக்கருகே தாவினான்.

கடிதத்தின் வாசகம் மனப்பாடந்தான். அதற்காகக் கடிதத்தை விட்டுவிட முடியுமா? அது வெறும் கடிதம் அல்ல.... அவன் காதல் சாம்ராஜ்யத்தின் பவளக்கொடி. ஒரு வருட காலமாக வயல் வெளியிலும் கிணற்றடியிலும் கோவில் முனையிலும் உண்ணா விரதம் இருந்து பெற்ற காதல் கொடி தேசியக் கொடியைப் போல் மாலையில் இறங்காமல், உயரத்தில் பறக்கவிடப்படும் அன்புக் கொடி.

எங்கள் மீண்டும் கடிதத்தை மார்புக்கு நேராகப் பிரித்தான். காகிதம் கசங்குவது போலிருந்தது. உடனே சிறிது மென்மையாக விட்டுப் பிடித்தான்.

" அன்புள்ள அத்தானுக்கு,

நலம் நலம் அறிய அவா.

என்னடா, இந்த விஜயா எடுத்த எடுப்பிலேயே அத்தான் என்கிறாளே என்று யோசிக்கிறீர்களா? யோசியுங்கள். உங்களைக் காதலிக்கிறவள் என்ற வகையில் மட்டும், நீங்கள் எனக்கு அத்தானில்லை. உங்கள் அம்மாவோட பாட்டியின் பெரியத்தான் மனைவி, எங்கள் குடும்பத்தில் பிறந்தவளாம். ஆக, சுற்றி வளைத்துப் பார்த்தாலும் நீங்கள் எனக்கு அத்தான் தான். 'சுற்றி வளைத்து' என்ற வார்த்தையின் பொருள் புரிகிறதா? எனக்கு, அது புரியப் புரிய , மனம் அல்லாடுகிறது. வெட்கம் வெட்கமாய் வருகிறது.'

இதோ வெட்கம் போய் இப்போது பயம் வருகிறது. ஒருவேளை நான் எதிர்பார்ப்பதுபோல் நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருந்தாலும் இருக்கலாமோ என்ற பயம்.!'

ஆமாம் அத்தான் தெரியாமல் தான்... கேட்கிறேன் - விரும்பிய பெண்ணிடம் ஓர் ஆடவன்தான், தன் விருப்பத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என்பது உலக ரகசியம். ஆனால் காத்திருந்து, காத்திருந்து கண்ணெல்லாம் நீர் நிறைந்து, இப்போது நானே நாணத்தை விட்டு ஆசையைத் தெரிவிக்க வேண்டியது இருக்கிறதே என்பதை உணரும்போது, என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. அதே சமயம், ஆசையை, அதற்கு உரியவரிடம்தானே தெரிவிக்கிறோம் என்று தெளியும்போது சிரிப்பு வருகிறது.

உங்களுக்கு ஞாபகம் வருகிறதா அத்தான்? கல்லூரிகளில் வெவ்வேறு சமயங்களில் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விடப்பட்ட விடுமுறைகளால், மூன்று வருடங்களாகச் சந்திக்காத நாம், கிராமத்து கரும்புத் தோட்டத்திற்கு அருகே சந்தித்தோம். உங்களோடு ஒட்டிக் கொண்ட ஒங்களின் பத்து வயது அக்கா மகனைப் பார்த்து நான், என்னடா ஆளே அடையாளம் தெரியல? என்றேன். நீங்கள் என்னை உற்றுப் பார்த்தது உண்மைதான். ஆனால் ஒரு வார்த்தை நீயுந்தான்' என்று சொன்னீர்களா?

இன்னொரு நாள்... நீங்கள் டவுனுக்கு பிரமாதமாய்ப் போய்க் கொண்டிருந்தீர்கள். குளத்தில் குளித்துவிட்டு, சுமதியோடும் வளர்மதியோடும் வந்த நான், மஞ்சள் சட்டையும் சிமெண்ட் கலர் பேண்டும் பளபளக்க , வார்த்தெடுத்த இரும்புபோல் சுருட்டைத் தலையோடும் சொக்க வைக்கும் முகத்தோடும் போன உங்களிடம் கிறங்கிப்போய், யாராவது அழகாய் மாறணுமுன்னால் இந்த ஊர்ல நாலுவருடம் இருக்கப்படாது. அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அடிக்கடி குற்றாலத்தில் போய் குளிக்கணும்' என்றேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்கள் திரும்பிப் பார்த்தீர்கள். யாரை? வளர்மதியை ! நல்லவேளை அவள் உங்களுக்கு சொந்த சித்தி மகள் என்பதால் எனக்கு நிம்மதியாயிற்று.

இன்னொரு முக்கியமான இடத்திற்கு வருவோம்.

அந்தி சாய்ந்த வேளை. எங்கள் புளியந்தோப்பில் இருந்து நான் மேற்கு நோக்கியும், நீங்கள் கிழக்கு நோக்கியும் நடக்கிறோம். நான் உங்களைக் கண்டவுடனேயே, கைகளைப் பிசைந்தபடி தவழ்வது போல் நடக்கிறேன். நீங்களோ ஊரைத் திரும்பித் திரும்பி பார்த்தப்படியே வருகிறீர்கள். இருவரும் சந்தித்தபோது, நீங்கள் கடிகார கையை ஆட்டியபடியே, இப்போ மணி என்ன இருக்கும் என்று அழாக் குறையாகக் கேட்டு முகத்தைத் துடைத்துக் கொள்கிறீர்கள். நான் சீக்கிரமாய் வந்த சிரிப்பை அடக்கியபடியே, நேரம் தெரியலியா? இல்ல, ஒரு வேளை நேரம் சரியில்லையா? என்றேன். நீங்கள் விழுந்தடித்து மீண்டும் மீண்டும் ஊரைத் திரும்பிப் பார்த்தபடியே ஓடினீர்கள். காதலர்களுக்கு வார்த்தைகள் ஸ்வீட் நத்திங்ஸ்தான் .... இருந்தாலும் நீங்கள் கொடுத்த ஸ்வீட்டுக்குப் பிறகு காரம் வேணுமென்று நான் சமையல்காரி மாதிரி நடந்து கொண்டது தப்புத்தான்.

இதற்குப் பிராயச்சித்தம் செய்வதுபோல் உங்கள் வீட்டுக்குப் பக்கமாக நடமாடினேன். அழுமூஞ்சியிலும் சிடுஞ்சியான உங்கள் தங்கையிடம் , குமுதம் இருக்குதா' என்று உங்கள் வீட்டுக்கு வந்தே கேட்டேன். அவளோ, வாங்கிப் படியேன் என்றாள். நான் சிரித்து மழுப்பினேன். 'உங்க அண்ணாவுக்கு வேலை கிடைக்கலையா? என்றேன். அவளோ, உங்க அண்ணணுக்கு கிடைக்குதான்னு பாரு முதல்ல. அவருக்கே கிடைக்காதபோது எங்கண்ணாவையா இளக்காரமாய் பேசறே?' என்று சண்டைக்கு வந்தாள். அவள் குட்டக் குட்டக் குனிந்தேன். யாருக்காக.... எதற்காக? உங்கள் தலையில் செல்லமாகக் குட்டவேண்டு என்ற லட்சியம்தானே?

அப்புறம் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். உங்கள் தெருவிற்கு குழாய்த் தண்ணீர் பிடிக்கும் சாக்கில் வருகிறேன். நீங்கள் சாளரம் வழியாய் என்னையே பார்க்கிறீர்கள். வரிசையின் முன்னணிப் பானையா இருந்த என் பாத்திரத்தை இதர பானைகளுக்காக விலக்கி வழிவிட்டு அரைமணி நேரம் உங்களையேப பருகுகிறேன். ஞாபகம் இருக்கிறதா அத்தான்!

சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். ரயில் நிலையத்தை நோக்கி நடக்கும் உங்கள் பின்னால், ஏதோ ஒரு சாக்கில் நானும் நடக்கிறேன். வழியில் போன காமாட்சிப் பாட்டியைப் பார்த்து, 'பாட்டி, மெட்ராஸுக்கு மகள் வீட்டுக்குப் போறீங்களாமே? என்னை மறந்துடாதீங்க. நான் எப்பவும் உங்க பேத்திதான்.' என்கிறேன். புரிந்து கொண்டவர்போல், அப்பாவுடன் சென்ற நீங்கள், என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்கள். எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை .

உங்கள் கம்பெனி முகவரியைக் கண்டுபிடிக்க நான் பட்டபாடு இதற்கே எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுக்கலாம்.

காதல் திலகி' என்று நீங்களே கொடுத்துவிடுங்களேன்.

நமது ஊர்க்காரர்களான வரதனும், சிவராசனும் நீங்களும் ஊரில் ஒன்றாகச் சுற்றியதுபோல் ஒரே அறையில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஒரு சின்ன வேண்டுகோள். சிகரெட் அதிகம் பிடிக்காதீர்கள்.

முடிவாக -

என்னை நீங்கள் காதலிக்கவில்லை என்றால், என்னை இந்தக் காகிதமாக பாவித்துக் கிழித்துவிடுங்கள். நீங்களும் காதலிப்பதாக இருந்தால், அடுத்த சனிக்கிழமை என் கைக்குக் கிடைக்கும்படி கடிதம் எழுதுங்கள். அன்று அப்பா வெளியூர் கலயாணத்திற்குப் போகிறார். அண்ணா எட்டாவது தடவையாக இண்டர்வியூவிற்குப் போவான். எனக்குக் கல்லூரித் தோழிகள் கடிதம் எழுதுவதுண்டு, ஆகையால் அம்மா சந்தேகப்பட மாட்டாள்.

இது ஒத்திகை பார்த்து எழுதிய கடிதமல்ல. கண்ணில் ஒற்றி எழுதிய கடிதம்.

முத்தங்களுடன் முடிக்கும்
அன்பு விஜயா.

ரங்கன் கடிதத்தை மார்புடன் அணைத்தபடி மெய்மறந்து நாற்காலியில் சாய்ந்தான். பிறகுதான் அவனுக்கு அன்றைக்கு பதில் எழுத வேண்டிய நாள் என்பது ஞாபகம் வந்தது. வாசல் கதவை இன்னொரு தடவை செக்கப் செய்துவிட்டு பேனாவைத் தூக்கினான்.

நிஜமான காதலைக் காட்டிய அவனுக்கு, எழுத்தில் தடை வரவில்லை. கால் மணி நேரத்தில் இரண்டு பக்கங்களை காதல் விழுங்கிவிட்டது. அவள் விட்டுவைத்திருந்த இன்னும் சில காதல் சமிக்ஞைகளை நினைவுப்படுத்தி எழுதினான். இறுதியாக, 'உன்னை நான் நினைக்கவில்லை என்று கூடச் சொல்வேன். மூச்சு விடுவதையும் இதயத் துடிப்பையும் நினைத்துக் கொண்டா இருக்கிறோம்? என்று முத்தாய்ப்போடு முடித்தான்.

அப்படியும் இப்படியுமாய் மணிமாலை நாலரையாகிவிட்டது. இப்போது போஸ்ட் செய்தாக வேண்டும். கடிதத்தை வைத்தபடி அறையைப் பூட்டப் போனான். நண்பர்கள் தத்தம் நகல் சாவிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்லாமல் அவசரத்தில் அறையிலேயே வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன செய்யலாம் ? பரவாயில்லை. ஒரு லெட்டர் போஸ்ட் செய்துவிட்டுத் திரும்ப எவ்வளவு நேரம் ஆகும்?

அறையைப் பூட்டி விட்டு, தெருவாசியான ரங்கனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இன்று வியாழக்கிழமைதான். வழக்கமாய் இரண்டு நாளாகும் தபால் போக . ஆனால் தப்பித் தவறி, இது மறுநாளைக்கே அங்கே போய்ச் சேர்ந்து விடுமோ? நாளை போஸ்ட் பண்ணினால்? தாமதமாகி விடவும் கூடும். அக்ஸபட் யுவர் லவ்-ஸெயிலிங் இன் தி சேம் போட்' என்று சனிக்கிழமை காலையில் தந்தி கொடுத்துவிட்டால் என்ன? நோ , நோ... தந்தி என்றால் கிழவிகள் ஒப்பாரி வைப்பார்கள். அதுவே அவர்கள் காதலுக்கும் கடுகாடாகும்.

ஒரு மணி நேரயோசனைக்குப் பிறகு, அன்றைக்கே போஸ்ட் செய்வது என்று முடிவு செய்து சிறிது தூரம் நடந்து தபால் பெட்டியைத் தொட்டுவிட்டான். அதன் வாய்க்குள் கடிதத்பை போடப் போனவன், திடீரென்று கையை வெளியே எடுத்தான். இந்த ஒதுக்குப் புறப்பகுதியில் கடிதங்களை எப்போது வந்து எடுப்பார்கள் என்பதே தெரியாது . ரிஸ்க் எதற்கு? காதலில் ரிஸ்க் எடுத்தாலும் கடிதத்தில் கூடாது. அடையாறுக்குப் போய் போடலாம்.

அடையாறு வந்தான். அதற்குள் போஸ்ட் ஆபீஸ் மூடியாகிவிட்டது.

மொபைல் வண்டி ஆறு பத்துக்கு வரும் என்றார்கள். மொபைலை எதிர்பார்த்து இம்மொபைலாக நின்ற கூட்டத்தில் கலந்தான். ஒரு சின்னச் சந்தேகம். இந்த லெட்டர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்ஸில் தான் போகணும். அது ஏழே காலுக்குப் புறப்படு கிறது. ஆறு பத்துக்கு வந்து ஆறு நாற்பதுக்கு புறப்படும் மொபைல் வண்டியில் போட்டால் எக்ஸ்பிரசுக்கு எப்படிப் போய்ச் சேரும்? பேசாமல் ரயில்வே ஸ்டேஷனுக்கே போய்ப் போட்டுவிடலாம்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி எழும்பூர் என்றான்.

அவன், தன் அறைக்குத் திரும்பும்போது மணி இரவு பத்துக்கு மேலாகிவிட்டது. அறைக்கு வெளியே முழங்காலில் தலை வைத்து அசல் ஓணான்கள் மாதிரி உட்கார்ந்திருந்த வரதனும், சிவராசனும் அவன் கைகளைப் பிடித்து ஆளுக்கு ஒன்றாகத் திருகினார்கள். ரங்கன் சிரித்தான் . வலிக்கவில்லை. விஜயாதான் அவன் கரத்தைத் தடவி விடுகிறாளே!

ரங்கன் மதர்ப்பாகப் படுத்தான். அதிசயமான சாதனையைச் செய்துவிட்ட அளவிட முடியாத திருப்தி. அவள் காதலுக்கு, தான் தகுதியுள்ளவனாகிவிட்ட தன்னம்பிக்கை.... அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்ட பெருமிதம். அதேசமயம், லெட்டர் அவள் கையில் கிடைக்காமல் போனால்?' என்று அப்பப்போ உதறல்கள்.

ரங்கன், சிகரெட்டை அடியோடு அல்ல, அடி முதல் நுனிவரை விட்டு விட்டான். போதாக்குறைக்கு, புகைத்த நண்பர்களை, "வெளியில் போய்ப் பிடிங்கடா ஒரே வாடை" என்று பகைத்தான். படியாத தலை முடி படிந்தது. ஏறாத பவுடர் ஏறியது. தலை முழுக்கப் போர்வையை மூடிக்கொண்டு காலையில் ஏழு மணி வரைக்கும் கிடந்து வெயில் உறைப்பில் எழுபவன், பக்கத்துத் தெருவில் இன்னும் பிரியாணி போடும் பருவத்திறகு வராத இளஞ்சேவலின் கூவலில் எழுந்தான். எங்கேயும் எப்போதும் எதிலும் ஒன்றே ஒன்று: விஜயா.... விஜயா.... விஜயா.... அவளைக் கட்டிப் பிடிக்க வேண்டும் என்ற கற்பனை வரவில்லை. முத்தமிட வேண்டும் என்று உதடுகள் முனங்கவில்லை. இனந்தெரியாத உணர்வு உண்ணும்போதும் உறங்கும் போதும், எண்ணும்போதும், எழுதும்போதும், எப்போதும் விஜயாவோடு இருக்கவேண்டும் என்ற அவா. பௌதிக விதிகளுக்குக் கட்டுப்படாத ரசாயன விதி.

ஒரு வாரம் ஓடியது. மறுவாரம் பிறந்தது.

ரங்கன், விஜயாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தான். திங்களில் அவர், செவ்வாயில் எதிர்பார்ப்பு, புதனில் ஏமாற்றம், வியாழனில் கலக்கம், வெள்ளியில் நடுக்கம், சனியில் வேதனை. விஜயா ஏன் கடிதம் எழுதவில்லை ? ஒருவேளை கடிதம் விஜயாவிடம் போகாமல், அவள் தந்தையிடம் போயிருக்குமோ? தபால்காரர் கடிதத்தைத் தாமதமாய்க் கொடுத்திருப்பாரோ? அப்படியே இருந்தாலும் விஜயா விவரமாய் எழுதி இருக்கலாமே.... எப்படிச் சொல்ல முடியும்? மானத்தை வேல் கம்பாலும் வெட்டரிவாளாலும் எடைபோடும் அவள் தந்தை, அவளை வீட்டோடு சிறை வைத்திருந்தால்? என்னால் தானே இந்தச் சிரமம்....

'என்ன ஆனாலும் சரி, ஊருக்குப் போய் அவளைப் பார்த்தாகணும்' என்று தீர்மானித்தான்.

ரங்கன் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு சம்பளம் இல்லாத விடுமுறை போட்டுவிட்டு, கிளம்பினான். வரதனும் சிவராசனும் லெதர் பேக்கை தூக்கியபடியே நின்ற ரங்கனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சிவராக அதட்டிக் கேட்டான்.

"எங்கேடா போற?"

"ஊருக்கு"

"ஊருக்கா? ஊர்ல் என்னடா இருக்கு?"

"ஏதோ இருக்கு. எனக்குப் பிடிச்சது பிடிபட்டு இருக்கு..."

"என்னடா மூடு மந்திரம்? எதுக்காக இப்போ ஊருக்கு?" வரதன், சிவராசன் விட்ட இடத்தைத் தொடர்ந்தான்:

"விஜயவாபைப் பார்க்கவா? அவள் எழுதிய காதல் கடிதத்திற்கு நேரில் பதில் சொல்லவா?"

ரங்கன், ஆச்சரியப்பட்டான். நண்பர்களிடம் தானும் விஜயாவும் நடந்து கொண்ட விதத்தை பல தடவைச் சொல்லி இருக்கிறான். ஆனால் கடிதம் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்?

வரதன் அட்டகாசமாய்ச் சிரித்தபடி பேசினான்.

"மடையா! ஊர்ல உதை வாங்கவா போறே? நீ விஜயாவுக்கு எழுதின லட்டர், அவள் அப்பன் கிட்ட சிக்கியிருக்கு. அவள், தனக்கு எதுவும் தெரியாதுன்னு அழுதிருக்காள் அப்பனக்காரர் மீனை எதிர்பார்த்து இருக்கிற கொக்கு மாதிரி வேல்கம் போடு , ஒனக்காகக் காத்திருக்கான்.

சிவராசு, தன் பங்குக்கு சிரிக்காமல் கோபமாகவே கேட்டான்.

"மூளை இருக்காடா ஒனக்கு? வந்த தபால் உறையில் முதல்ல தபால் முத்திரையைப் பார்த்தாயா? எங்க கிட்ட நீ அப்பப்போ புலம்பனதை நோட் பண்ணி நாங்கதான் அந்த லெட்டரை எழுதினோம்! நீ எங்ககிட்டே கேட்காமல் ஏண்டா அவளுக்கு எழுதின? அப்படி அவள் என்ன கிளியோபாட்ராவா? இந்நேரம் எவன் கிட்ட பல்லைக் காட்டிச் சிரிச்சிட்டிருக்கிறாளோ"

சிரித்த நண்பர்கள், திடீரென்று பிரமித்துப் பின்வாங்கினார்கள்.

ரங்கன், ஆவேசியானான். திடீரென்று அவர்களை தாக்கினான். வரதனின் வயிற்றில் விட்டான் ஓர் உதை. சிவராசனின் தலை முடியைப் பிடித்துச் சுவரில் மோதவைத்தான். அவர்கள் இருவரும் என்னடா , என்னடா, என்று சொல்லிவிட்டு பின்னர் தற்காப்பிற்காக அவனைத் திரும்பித்தாக்கப் போனபோது....

ரங்கன் பொத்தென்று தரையில் உட்கார்ந்து, தன் தலையிலேயே மாறி மாறி அடித்துக் கொண்டான். தலையை கட்டில் சட்டத்தில் மோதிக் கொண்டான். சட்டைப் பையில் போற்றிப் பாதுகாத்து வந்த கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்து அங்குமிங்குமாகச் சிதறடித்தான். பிறகு தன் பாட்டுக்குப் புலம்பினான்.

"ஆசை காட்டி மோசம் செய்திட்டிங்களேடா பாவிங்களா! நான் கட்டின கோட்டையே , எனக்கு சாமாதியாயிட்டதே. ஒரு வருட கணக்கில இதயத்தில் இருந்தவளை, ஒரு வாரமாய் என் உடம்புல ஒவ்வொரு அணுவிலேலயும் வியாபிக்க வச்சிட்டு, இப்போ என்னை அணுஅணுவாய்க் கொன்னுட்டிகளே! கண்ட கண்ட பெண்களைக் கண்ணாலமேயுற உங்களுக்கு காதலப் பற்றி என்னடா தெரியும்? நடக்கிறது நடக்கட்டும். இப்பவே ஊருக்கு போய் உண்மையை சொல்ல போறேன். என்னை அடித்துக் கொன்றால், அவள் விடும் ஒரு சொட்டுக் கண்ணீர் எனக்கு பால் வார்க்கிறது மாதிரி அப்படியே அவள் கண்ணீர் விடாட்டாலும், அவளால் சாகிறதாக நினைக்க மாட்டேன். அவளுக்காகச் சாகிறதாக நினைப்பேன். இதுக்கு பேருதான்டா காதல். வழிவிடுங்கடா"

பையைத் தூக்கியபடி முண்டியடித்த ரங்கனை நண்பர்கள் முதலில் தட்டிக் கொடுத்து கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவர்களால் வியப்பிலிருந்து விடுபட முடியவில்லை . விவகாரம் இப்படி ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை. அவனைத் தொடத் தொடத் துக்கம் வந்தது. அவனைக் கட்டி பிடித்து கதறவேண்டும் போல் தோன்றியது.

ரங்கன் பெட்டியை விழப்போட்டு கட்டிலில் கிடந்த சிகரெட்டையும் வத்திப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தான். கவர் மூலையில் சாய்ந்தான். தன்னையறியாமலேயே சிகரெட்டைப் பற்றவைத்தான். ஊதினான். அவன் தலைக்குமேல் புகை வட்ட வட்டமாய்ச் கழன்று கோடு கோடாய்ப் பிரிந்து அரும்பரும்பாக அற்றுக் கொண்டிருக்க

ரங்கன், ஒரேயடியாய் புகைந்துக் கொண்டிருந்தான்.

குமுதம், 1982
-------------------

14. ஒரே பகலுக்குள்....

ஒரு பெண்ணை , முதல் தடவையாகத் தொட்டும் தொடாமலும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு ஆணைப் போல, பெருமாள், அந்த அரசாங்கக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் தெற்கு வீட்டின் கதவுக்கு மேலிருந்த காலிங்பெல்லை பட்டும் படாமலும் தொட்டார். வீட்டுக்குள் நிலைப்படிக்கு மேல் டிரான்ஸிஸ்டர் வடிவத்திலுள்ள ஒரு டப்பா இந்நேரம் கீச்கீச்சென்று இரண்டு தடவையாவது கத்தியிருக்குமென்பதும் அவருக்குத் தெரியும். அந்த எலெக்ட்ரானிக் கருவிமேலுள்ள குருவி படத்திற்கு ஏற்ப, இதுவும் அசல் குருவியாகக் கத்துவதால், 'ஆபீஸரையா' சில சமயம் குருவிச் சத்தத்தை, காலி ங்பெல் சத்தமாகவும்... காலிங்பெல் சத்தத்தை, குருவிச் சத்தமாகவும் எண்ணி ஏமாந்து, பிறகு தன்னையே ஏமாளியாக நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொள்வதும் இந்தப் பெருமாளுக்குத் தெரிந்ததுதான். ஆகையால், பெருமாள் கதவு மத்தியில் பொருத்தப் பட்ட லென்ஸ் மாதிரியான கண்ணாடியில் வலது கண்ணைப் பதித்தார். ஆள் நடமாட்டம் தெரிந்தது.

பெருமாள் காத்திருந்தார். ஒரு நிமிடம்... ரெண்டு... மூணு... ஐந்து நிமிடங்கள்... அந்தச் சமயம் பார்த்து மாடிச் சுவர் விளிம்பில் உட்கார்ந்து கத்திய ஒரு சிட்டுக்குருவியைத் துரத்திவிட்டு, மீண்டும் காலிங்பெல்லை அழுத்தினார். கால் நிமிடம் வரை கையை அதிலேயே வைத்திருந்தார்.

முகத்தில் அறைவதுபோல் கதவு திறக்கப்பட்டது. திறந்த வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த கவர்மென்ட் கதவு, அதைத் திறந்தவரை மாதிரியே ஆடியது. வீட்டுக்காரருக்கும் முகம் எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல் துடித்தது. சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம். ஊதினால் பறக்கும் என்பார்களே, அப்படிப்பட்ட பூஞ்சையான உடம்பு. வெள்ளைக் கண்ணாடி. கருடன் மாதிரி வளைந்த மூக்கு ... மனைவி கொடுத்த மாத்திரை ஒன்றை வாயில் போட்டு, அந்த வாய்க்குள் தண்ணீரையும் ஊற்றியிருப்பார் போலிருக்கிறது. பெருமாளைப் பார்த்து, அவர் கத்திய கத்தலில் வாயில் கிடந்த அந்த மாத்திரை வெளியே தெறித்தது.

"ஏன்யா.... எத்தனை தடவை உனக்குச் சொல்றது? எனக்கென்னன காது செவிடா? லேசா பட்டனை அழுத்தினாப் போதாதா?"

"இல்லீங்க அய்யா... ஆரம்பத்துல லேசாத்தான் அழுத்துனேன்..."

"பொய் வேற சொல்றே..."

"அப்படி இல்லீங்க அய்யா... நெசமாவே..."

"எதிர்த்து வேற பேசறே...."

"மன்னிச்சிடுங்க அய்யா... தப்புத்தான்..."

"நடிக்க வேற செய்யறே...''

பெருமாள், மேற்கொண்டு பதிலளிக்கவில்லை. போனவராம் இதுக்காகவே காலிங்பெல்லை லேசாகத் தொட்டார். பத்து நிமிடத்திற்குப் பிறகு தற்செயலாய் கதவைத் திறந்த இந்த ஆபீஸர்... " உள்ளே ஆயிரத்தெட்டு வேலையில் இருக்கேன்.... அதோட டெலிபோன் சத்தம்... டி.வி. சத்தம்... டூ இன் ஒன் சத்தம்.... குழந்தை சத்தம்... இந்த மழையின் சத்தம்... இந்த சத்தத்துல நீ பாட்டுக்கு லேசா பிடிச்சா என்னப்பா அர்த்தம்?" என்றார். இதற்காகவே மறுநாள் பலமாக அதிகநேரம் அழுத்தினால், "கர்நாடகக் கச்சேரியாக செய்யறே..?" என்றும் சீறினார்.

சிந்தித்துக் கொண்டிருந்த பெருமாள், தன்னை மாதிரி ஆட்களுக்கு சிந்தனை ஒரு ஆபத்து என்று உணர்ந்தவர்போல், ஆபீஸர் கோபத்தைச் சரிக்கட்டும் வகையில் டீப்பாயிலிருந்த கூடையை ஒரு கையால் தொட்டார். அடுக்கடுக்காக இருந்தபைல் கட்டுக்களை இன்னொரு கையால் தொட்டார். இரண்டையும் காவடி போல் தூக்கிக் கொண்டார். கூடைக்குள் ஹாட் பாக்ஸ், தெர்மாஸ் பிளாஸ்க், ஒரு வாழை இலை, பீர்பாட்டில் மாதிரியான ஒரு தண்ணீ ர் பாட்டில்....

பெருமாள் வாசலுக்கு வெளியே வந்து, அவசர அவசரமாக செருப்பை மாட்டினார். அவருக்குப் பின்னால் வந்த ஆபீஸர், "குயிக்... குயிக்..." என்று கத்துவதும், அவரது மூச்சுக்காற்று, தனது காதுக்குள் நுழைவதும் பெருமாளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால், செருப்புகளுக்குள் போன பாதங்களின் பெருவிரல்கள் அவசரத்தில் அதன் வளையங்களுக்குள் நுழைய மறுத்தன. பெருமாள், அதைப்பற்றிக் கவலைப்படாமல் பெருவிரல்களை அந்த வளையங்களுக்குள் மாட்டிக் கொள்ளாமலே, சர்க்கஸ்காரன் மாதிரி பாலன்ஸ் செய்தபடியே நடந்தார். கீழே விழப்போனவர், எப்படியோ தாக்குப் பிடித்துக் கொண்டார்.

பெருமாள் கீழே வந்ததும், அவர் நின்ற தரையைவிட ஒரு அடி தூக்கலான சிமெண்ட் முகப்பில் நின்றபடியே ஆபீஸர் கம்பீரமாய்க் கேட்டார்.

"கார் எங்கே ?"

"அதோ ... அதோ ..."

"ஏன்? வழக்கம் போல இங்கேயே கொண்டு வந்தா என்ன?"

"நாலு நாளா மழையா? இங்கே ஒரே சேறு..... முள்ளுச்செடி வேறு விழுந்து கிடக்கு அய்யா. கொஞ்சம் நடந்தா...."

"நடக்கேன்... நடக்கேன்... மதுரையில் டெபடி டைரக்டர் ராமபத்ரன் இருக்காரே, அவரோட வீடு... இப்படி இடுக்குல இல்ல.... பெரிய மைதானம் முன்னால் இருக்கு. நீ அங்கேயே போய் வேலை பார்க்கலாம். மாத்திடுறேன்.."

பெருமாள் அலறியடித்து ஓடினார். கார் இருக்கையில் துள்ளிக் குதித்து ஏறினார். அகலமான பாதையில் நின்ற அந்தக் காரை ஒடித்து வளைத்து, ரிவர்ஸில் எடுத்தார். அந்த இடுக்குப் பாதைக்குள் கார் ஒப்பாரி போட்டுக்கொண்டே போனது. அதென்ன... என்ன தடுக்குது?

பெருமாள், கார் இருக்கையிலிருந்து இறங்கினார். கணுக்கால் அளவு சேறு இருக்குமென்று நடந்தால், அது முழங்கால்களைத் தொட்டுவிட்டது. கீழே ஒடிந்து கிடந்த கருவேல மரக் கிளையை கையில் முள் குத்து, தம் பிடித்துத் தூக்கி, ஒரு ஓரத்தில் போட்டார். டயர் பஞ்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே கண் சிமிட்டிய ஒற்றைக்கண் முட்களையும், ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினார். ஆபீஸரோ, "குயிக்மேன் - குயிக்மேன் " என்றார். பெருமாள் மீண்டும் காரைப் பார்த்து ஓடி , இருக்கையில் எகிறிக் குதித்துரிவர்ஸில் வந்தார். சக்கரங்கள் சேறுக்குள் மாட்டிக்கொண்டு, ஒரே இடத்திலேயே சுற்றி வந்தன. பெருமாள் கீழே இறங்கி, வண்டியைத் தள்ளி, சக்கரங்களை நகர்த்தி ஆபீஸருக்கு கதவைத் திறந்து வைத்தபடியே நின்றார். அந்த நேரத்தில் மாடிப்படி வழியாக வந்த போதைக்கார மகனை திட்டிக்கொண்டே இருந்த ஆபீஸர் திட்டுவதை முடிப்பது வரைக்கும், பெருமாள் பேச்சற்றுப்போனவராய் பத்து நிமிடம் கார்க் கதவை திறந்து வைத்தபடியே நின்றார்.

எப்படியோ, அந்தக் கார், அரைக்கிலோ மீட்டர் ஓடி, ஒரு குட்டைப் பக்கம் வந்தது. பெருமாளுக்கு காலில் சேறு அப்பியதால் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியவில்லை. பிரேக்கும் பிடிபடவில்லை. வண்டியை நிறுத்தினார். பின்னால் தினசரி பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த ஆபீஸர், மேல் புருவங்களை நிமிர்த்தியபோது, பெருமாள் விளக்கமளித்தார்.

"காலிலே ஒரே சேறு... அந்தக் குட்டையிலே லேசா காலைக் கழுவிட்டு ..."

"லேசாய் கழுவ வேண்டாம்... பலமாவே குளிச்சிட்டு வா... நான் டாக்ஸியிலே போயிடறேன்...''

கார்க் கதவைத் திறக்கப்போன பெருமாள், அதை விட்டுவிட்டு கீரைகோபம் கோபமாக இழுத்தார். கார் பறந்தது. ஆபீஸர், அவரது முதுகைப் பார்த்தபடியே ஒரு கேள்வி கேட்டார்.

"ஏன்யா... யூனிபார்ம் போடலை?"

"அதுங்களா அய்யா... நேற்று நைட்ல உங்களை இங்க விட்டுட்டு ஆபீஸ் போனேனா. ஒரே மழையா? சைக்கிள்ல வீட்டுக்குப் போறப்போ வெள்ளை யூனிபாரம் தெப்பமா நனைஞ்சிட்டு... இன்னொரு யூனிபாரமும் முந்தா நாள் இதே மாதிரி ஆயிட்டு... அதோட இந்த உல்லன் பேண்டும் கோட்டும், குளிர தவிர்க்குது...''

"அப்படியா? நீ யூனிபாரம் போடாம இருக்கிறதுக்கு ஏற்பாடு செய்யறேன்..."

"ரொம்ப நன்றிங்க அய்யா...''

"அதாவது... உன்ன வேலையில் இருந்தும் யூனிபாரத்தில் இருந்தும் கழட்டி விடுறேன்."

"அய்யோ .... அய்யா ... நான் புள்ள குட்டிக்காரன்... தெரிஞ்சு தெரியாம பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க...."

நீண்ட மௌனம். டிரைவர் பெருமாள் கருமமே காரானார். அதிகாரி, தன்னைத்தானே, அதிசயத்து பார்த்துக் கொண்டார். அப்போது, அந்தக் கார், சாலையில் குறுக்கசால் பாய்ச்சும் ஒரு கடையை தாண்டிப் போனது. அரை கிலோ மீட்டர் போனதும், ஒரு வெட்ட வெளி. அதில், காரை நிறுத்தச் சொன்னார் அதிகாரி பிறகு, ஆணையிட்டார்.

"அதோ, அந்த கடையில் போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா. இந்தா அய்ம்பது பைசா."

பெருமாள், தலையை சொறிந்து கொண்டே நடந்தார். சடைப் பய... கடை முன்னாலயே, காரை நிறுத்த சொல்லி இருக்கலாம். ஆனாலும், பெருமாள் சிந்தனையை உதறி போட்டுவிட்டு, அந்த கடையில் இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். அந்த பழங்களை கையில் வைத்தபடியே, மேலும் கீழுமாய் பார்த்த அதிகாரி மீண்டும் ஆணையிட்டார்.

"இதுக்கு பேரு பழமய்யா... வெயிட்டே இல்ல... இந்த பழத்த திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வா...."

பெருமாள், மீண்டும், வாழைப் பழத்தை கைகளில் ஏந்தி கடைக்காரரிடம் போனார். விவரத்தை சொன்னார். கடையோ, நாயே, பேயே என்று சொல்லாத குறையாக பெருமாளை திட்டியது. பழத்தை வாங்கவும் மறுத்துவிட்டது. வேறுவழியில்லாமல் பெருமாளே, அந்த இரண்டு பழங்களை தின்றுவிட்டு, சட்டை பையில் இருந்த அய்ம்பது காசை ஆள்காட்டி விரலுக்கும், பெருவிரலுக்கும் மத்தியில் வைத்துக் கொண்டு அதிகாரியிடம் வந்து கொடுத்துவிட்டு, இருக்கையில்

அவசரம் கருதி, குதித்து ஏறினார். வாங்கிக் கட்டிக் கொண்டார்.

"உனக்கு அறிவு இருக்கா.... காருல எப்படி ஏறணுமுன்னு தெரியாதா... நான் ஒருத்தர் ஆபீசர் பின்னால் இருக்கேன். நீ என்னடான்னா திமுரா குதிச்சு ஏறுறே. பழையபடி இறங்கி, வழக்கம் போல ஏறுய்யா ."

பொமாள் பழையபடியும் இறங்கி, வழக்கம் போல் அவரை பயபக்தியோடு பார்த்துவிட்டு, இருக்கையில் பூ விழுவது போல விழுந்தார்.

அதிகாரியின் பேச்சையும், ஏச்சையும் பெருமாளால் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், அந்தக்காரால் தாங்க முடியவில்லை போல் தோன்றியது. மக்கர் செய்தது. நகர மறுத்தது. பெருமாள் காரின் முன் பக்கம் போய் திறந்துப் பார்த்தால், பேன் பெல்ட் அவுட்டு, ஒருவேளை அதிகாரி வீட்டு முன்னால் குண்டுங்குழியுமான நீர் தரையில் சிக்கியதால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். பேன் பெல்டை வாங்கித்தான் போட வேண்டும். அவர் கெஞ்சி கெஞ்சி விவரம் சொன்னார்.

"போன் பெல்ட் அறுந்துட்டுங்கய்யா.... புதுசா வாங்கிப் போட்டாத்தான் ஓடும்..."

"இப்போ , நான் எப்படிய்யா ஆபீஸ் போறது."

"அவசரத்திற்கு தோஷசம் இல்லிங்க அய்யா. அதோ பல்லவன் பஸ் வருது.... நம்ம ஆபீஸ் முன்னாலயே நிற்கும். கூட்டமும் அதிகம் இல்ல... அதனால், இன்னிக்கு மட்டும் அய்யா அதுல போகலாம். மதியானத்திக்குள்ள நம்ம காரு ரெடி ஆயிடும்."

அந்த அதிகாரி, கையாட்டியதும், பல்லவனும் நின்றான். இவரோ, ராசாதிராசகம்பீரத்தோடு, பெருமாளை எப்படி பார்ப்பரோ, அப்படி, பல்லவ ஓட்டியை பார்த்தபடியே அன்னம் போல் நடை நடந்தார். பேருந்தின் பின் முனையில் எட்டிப் பார்த்துக் கொண்டு நின்ற நடத்துனர், இப்படிக் கத்தினார்.

"யோவ் சாவுகிரக்கி..! பெரிய கதாநாயகன்னு நெனப்போ.... சீக்கரமா ஏறி தொலையேன்..."

குங்குமம் - 1987
-----------------

15. சண்டைக் குமிழிகள்

இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய வாழாத வடக்குத் தெருவில், தங்கம்மா - லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஓலமிட்டு துடிதுடித்தன.

இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும்லி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும் இது. ரிஷிமூலம், நதி மூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியை நம்புபவர்கள், இவர்களின் போர் முழக்கத்தைப் பார்க்கக்-கூடாதுதான். மாதம் மூன்று தடவை மண்மாரியுடன் துவங்கும் அல்லது முடியும், இந்தச் சண்டையின் காரண காரியத்தைக் கண்டு பிடிப்பவருக்கு, ஒரு டாக்டர் பட்டமே வழங்கலாம். ஆனாலும் ஐம்பது வயது ஒடிசல் ஆசாமியான "தீக்கொளுத்தி" சின்னவயதில், அம்மாக்காரி, கோவில் கொடையின் போது கூட தோசை கட்டுக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில், வீட்டுக்கூரையைத் தீயால் எரித்த பழைய மாடசாமிய பையன்தான் - இந்த ஐம்பது வயதிலும் ஐந்து வயது குழந்தை உட்பட அனைவரும் 'தீக்கொளுத்தி' என்று அவருக்கு தெரியாமல் அழைக்கிறார்கள்.

வெளியூர் விளக்கெண்ணெய் வியாபாரியிடம் சண்டையின் சக்கையையும், சாரத்தையும் விளக்கிக் கொண்டிருக்கிறார்.

அதாவது -

நாற்பத்தைந்து வயது தங்கம்மா, வீட்டுத் தொழுவத்தில் கிடந்த மாட்டுச் சாணத்தையும், வைக்கோல் கழிவுகளையும், சாணிப் பெட்டியில் வாரிப் போட்டுக் கொண்டு, அந்தப் பெட்டியோடு வடக்கு பக்கமாக உள்ள தன்னோட எருக்குழியில் போட வந்தாளாம். வந்தாளா? வந்தாள். அப்போது, புடலங்காய் உடலும், பூணிக்குருவி குரலும் கொண்ட, அதே வயது லிங்கம்மா தன் வீட்டுக்குத் தெற்குப் பக்கமாய் நின்னாளாம். காறிக் காறித் துப்பினாளாம். சட்டாம்பட்டியில் பிறவியிலேயே நெருங்கிய சொந்தக்காரியான தங்கம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, அவள், தன் மீது கூடத் துப்பிக் கொண்டாளாம்.

அந்தச் சமயத்தில், இந்தத் தங்கம்மாவின் அருகே வாலையாட்டி நின்ற குடிமவனின் ராஜபாளைய நாய்க்கு, இருமல் வந்ததாம். லிங்கம்மாவிடம் விடைபெற்ற அந்த நாய், தங்கம்மாவிடம் வந்து காறித் துப்புவது போல், வாயை பண்ணியதாம். உடனே இந்த தங்கம்மா , லிங்கம்மாவை ஜாடையாய்ப் பார்த்தபடியே சாடை பேசினாளாம். எப்படி?

"பய நாயி... காறித் துப்புது பாரு காறி .... என்னமோ சொன்னான் கதையில்.... எலிரவுக்கை கேட்டுதாம்... சபையில்... நீ ராசபாளையமா இருந்தாலும், நாய் நாயிதான்..."

லிங்கம்மா, விடுவாளா? விடவில்லை. "யாரைப் பாத்துழா நாயின்னு சொல்லுதே நாயே." "நீ எதுக்குழா என்னப் பாத்து துப்புனே....''

"நீ... வாரதுக்கு முன்னே, இங்க நின்னு துப்பிக்கிட்டே இருக்கேன்... ஒனக்கு கண்ணுதான் அவிஞ்சிட்டு.... காதுமா செவிடாயிட்டு...."

"நான் வருவேன்னு தெரிஞ்சே... முன்னாடியே வந்து நின்னு துப்புறியா? அவ்வளவு திமிராடி உனக்கு....?"

"ஆமாம். நீ அழகு ராணி.... ரம்.. ரதி... நீ வருவன்னு வந்து நிக்கேன். ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்."

"ஏழா ஜாக்கிரதையா பேசு... இல்லன்னா கொண்டையை அறுத்துப்புடுவேன்."

"ஒனக்கு கொண்ட போட முடியிலன்னன்னாழா இப்படி பேசறே... மொட்டச்சி... மூதேவி... பொட்டப்பய பொண்டாட்டிக்குத் திமுரப்பாரு... என்னத்திரும்பித்திரும்பிப் பாத்து... திரும்பித்திரும்பி நீ துப்புறதுக்கு.... எத்தனாவது சட்டத்துலழா எடமிருக்கு?"

"சீ... நாய்கூட ஒன்னத் திரும்பிப் பாக்காது. நானா திரும்பிப் பாப்பேன்."

"ஏய்.... நாறப்பய பொண்டாட்டியே... நண்டுப் பய பொண்டாட்டியே... நீ இருந்த இருப்பு தெரியாதாழா... நடந்த நடப்பு மறந்துட்டாழா...."

"ஏடி..... நீ நல்ல குலமானுன்னா .... என் இருப்பச் சொல்லு.... என் நடப்பச் சொல்லு..."

"நான் எதுக்குழா சொல்லணும்? படியும் தராசும் ஊர்ல.... கைப்புண்ணுக்கு கண்ணாடியா.. ஏகேன்னானாம். எம்.ஆர்.ராதா"

"ஊர்ல வேணுமுன்னா கேட்டுப் பார்ப்போமாழா... வெங்கப்பய பொண்டாட்டியே... வேட்றபய மவளே.... நான் நடந்து போற தூசில.... அறுந்து போற தூசிக்கு பெறுவியாழா நீ...?"

தங்கம்மா-லிங்கம்மாவின் சொற்போர், வசவுப் போராய் மாறியதைக்கண்ட கேட்ட அக்கத்து பக்கத்துக்காரிகளும், காரர்களும், ரசனையோடு , தத்தம் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். 'தீக்கொளுத்தி ' சாய்ந்து கிடந்த முருங்கை மரத்தில், உடம்பை சாய்த்தபடியே பீடிைையக் கொளுத்தினார். இருக்கிறபோது பேச்சி முத்து அண்ணாச்சி என்றும், இல்லாதபோது வாலன் (அதாவது வம்பன்) என்றும் கூப்பிடப்படும் ஒரு மனிதர் " ஏமுழா பேசிக்கிட்டே இருக்கியே... புடுச்சி பொறளுங்களா... சேவல் சண்டை மாதிரி - கோழிக்சண்டையும் நடக்கட்டும்.” என்றார் குதூகலத்தோடு. வடகிழக்கு மூலையில் தென்னந்தட்டியை வாசல் கதவாய்க் கொண்ட ஓலைவீட்டுத் திண்ணையில், பல சரக்கு கடை நடத்தும் பலவேசம் 'படியும் தராசம் ஊரல் என்ற வார்த்தைகளைக் கேட்டுவிட்டு , எடுத்த தராசை இடையிலே விட்டார். மாட்டுத் தரகர் மாணிக்கம் அந்தப் பெண்களை, மாட்டுக்கு கழிபார்ப்பதுபோல் கழித்துப் பார்த்தார். வட்டிப் பணம் வசூலிக்க வந்த தெற்குத் தெரு 'பிலாங்கன் (இவர் சின்ன வயதில் சிங்கப்பூரில் இருந்தவர். இதன் தலைநகர் பிலாங்)
ஒரு நிமிடம் வந்ததை மறந்தார்; வட்டியை மறந்தார்.

அந்த மளிகைக் கடைக்கும், இந்த எருக்குழிக்கும் இடையே இருந்ததிட்டில், பீடிச் சுற்றிக்கொண்டிருந்து ஐந்தாறு பொட்டப் பிள்ளைகள் ' இருவர் வாய்களிலும் ஆவி பறக்க வந்த 'ஆபாச

வார்த்தைகளை கேட்க விரும்பாதவர்கள் போல், பாவலா காட்டி, காதுகளை லேசாய் பொத்திக் கொண்டார்கள். பிறகு, கொண்டை ஊசியை அட்ஜஸ்ட் செய்வதுபோல் காதுகளில் இருந்தகைகளை, தலைகளுக்கு கொண்டு வந்து, தங்கம்மா - ராசம்மாப் போரில் தாராளமாய் புரண்ட 'ஏராளமான வார்த்தைகளை, காதுகளில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். அதேசமயம், ஒப்புக்கு முகஞ் சுழித்து நீராவுது இந்தச் சண்டையை நிறுத்தும்' என்பது மாதிரி தீக்கொளுத்தியையும் நிறுத்திடாதயும் என்பது போல வாலனையும், இரு கண்களையும் வேறு வேறாக்கிப் பார்த்தார்கள்.

தங்கம்மாவோ, லிங்கம்மாவோ இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாய் தெரியவில்லை. தங்கம்மா , காதுகளில் பாம்படம் பப்படமாய் ஆட , தன்வீட்டு எல்லைக்கோடான எருக்குழியில் இருந்து, லிங்கம்மா நின்ற திசையை நோக்கி மூன்றடி முன்னேறியபடியே, திட்டிக் கொண்டு போவாள். லிங்கம்மா பதிலடி கொடுக்கும்போது, அதை சிறிது உற்றுக் கேட்டுவிட்டு, பின்பு ரோஷமான பார்வை மாறாமல் நான்கடி பின்னே நடப்பாள். லிங்கம்மா கதையும் இதேதான்.

"கை நீட்டலாமுன்னு பாக்கியா... நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால் இந்த எருக்குழியத் தாண்டி வாழா பாக்கலாம்."

"நீ ஒருத்தனுக்கு முந்தாணி விரிச்சிருந்தா.... இந்த முருங்கை மரத்த தாண்டுழா பார்க்கலாம்..."

"நான் ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிக்கேன். ஒன்ன மாதிரி பல பேருக்கு விரிக்கல.... ஒன் கதயக் கேட்டா... ஊரே காறித் துப்பும்..."

"ஆமா... ஒரு சமயத்துல ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிப்யே ..."

"ஒன் புத்திக்குத்தான் , ஒன்ன காஞ்சானுக்கு கொடுத்தாக..."

"என் புருஷன் காஞ்சான் தான். ஆனால், ஒன் வீட்டுக்காரன் மாதிரி நோஞ்சான் இல்ல.."

இப்படி, இவர்கள், எருக்குழியைத் தாண்டாமலும், முருங்கை மரத்தை மீறாமலும் எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடி பரதநாட்டியம் ஆடுவதுபோல் கால்களைத் தூக்கி, குச்சிபுடி ஆடுவதுபோல் கரங்களை வளைத்து, காபரே டான்ஸ்போல் புடவைகளைச் சுருக்கி, ரிக்கார்ட் டான்ஸ்போல் சுழன்று கழன்று ஆடியபடியே வசவுப் பாணங்களை ஏவுகணையாய் எய்து கொண்டிருந்தபோது -

லிங்கம்மாவின் வீட்டுக்காரார் தங்கையா எனப்படும் காஞ்சான் வயலில் கமலை அடித்துவிட்டு, காளைமாடுகளின் மூக்கணாங்கயிறுகளை சாட்டைக் கம்போடு கையில் சேர்த்துப் பிடித்தபடி, தோளில் வட்டை கமந்தபடி வந்தார். இந்தத் தங்கையா வம்பு தும்புக்குப் போகாத மனிதர். எந்தப் போரிலும், தன் மனைவியையே மட்டந்தட்டிப் பேசும் மாமனிதர். இந்தச் சமயத்திலும், மனைவியை அடக்கப் போனார். அந்தச் சமயத்தில் தங்கம்மா, ஒரு ஏவுகணையை எகிறி விட்டாள்.

"ஒன் அல்பப் புத்திக்குத்தான், ஒன் புருஷன் காஞ்சான், இருக்கிற நெலத்த ஒவ்வொண்ணா விக்கான்..... மிராசுதார் ராமகப்பு இவன நல்லா ஏமாத்துறார். எல்லாம் ஒன் புத்தியால..."

"சரி... என் புத்தியால்... இந்த மனுஷன் கெட்டது போதும்... நீ வேணுமுன்னால் இவன வச்சுக்கிடுறியா.? வேணுமுன்னா.. வாழா.... தூ... எச்சிக்கல நாய... இரப்பாளிப் பய மவளே..."

தங்கமான மனிதரான தங்கையாவால் தாங்க முடியவில்லை. "என் நெலத்தத்தான் விக்கேன். இவள் நெலத்தையா விக்கேன். நான் மட்டுமா மிராசுதாரர்கிட்டே மாட்டிக்கிட்டேன். இவா புருஷன் மேலத்தெரு -- வில்வண்டிக்காரன் கிட்டே வில்லங்கமாக நிக்கலியா? இந்தச் சாக்குல- எனக்கு வாச்வன் - இவன்னு என்னை சொல்லுதா பாரு..."

தங்கையா, தனக்குக் கோபம் வந்துவிட்டதைக் காட்டும் வகையில், மாடுகளை சாட்டைக் கம்பால் அடித்தார். வட்டை தூக்கி தூரே எறிந்தார். இதற்கு தங்கம்மா ரன்னிங் கமென்டரி' கொடுத்தாள் :

"பொண்டாட்டிக்குப் பயந்தவன் ஓலப் பட்டய போட்டுப் போட்டு அடிச்சானாம்... ஆம்புளையாம் ஆம்புளை.''

"அதான் சொல்லிட்டேனே... அவர் ஆம்புளயான்னு தெரிஞ்சுக்கணுமுன்னா வாழா.... கள்ளத் தாசி, புள்ளைக்கு அழுதாளாம்."

தங்கம்மா- லிங்கம்மா வசவுப்போர் சென்சார் லெவலை தாண்டிவிட்டது. பீடி சுற்றும் சின்னஞ் சிறுக்கள், நிஜமாகவே காதுகளைப் பொத்திக்கொண்டார்கள் வாலன் ஏழா... ஏழா...' என்று எச்சரித்துவிட்டு, துண்டை உதறியபடியே அங்குமிங்குமாய் நடந்தார். இதற்குள், வாய் வலித்த போராளிகள், கீழே குனிந்து குனிந்து மண்ணை அள்ளி, எதிர்த்திசையை நோக்கி வீச வீச, மண் துகள்கள், அணுத் துகள்கள் மாதிரி ஆகாயத்தை அப்பின.

இந்தச் சமயத்தில், அதிகாலையிலேயே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோரணமலைக்குப் போய், பல்வேறு மனித மிருக இடர்பாடுகளுக்கு இடையே விறகு வெட்டி, வெட்டியதைக் கட்டி, கட்டியதை தலையோடு தலையாய் கொண்டுவந்த பூவரசி. மற்போரிடும் அம்மாக்காரியான தங்கம்மாவை முறைத்தும், லிங்கம்மாவை முறைக்காமலும் பார்த்தபடியே விறகுக் கட்டை பொத்தென்று போட்டாள். தலையில் சிம்மாடு போல் கருள் சுருளாய் மடித்த முந்தானைச் சேலையை நேர்ப்படுத்தியபடியே முதுகுவலி யைப் போக்குபவள்போல், முதுகை முன்னாலும் பின்னாலும் ஆட்டினாள். பிறகு, இந்தச் சண்டை ஒரு பொருட்டல்ல என்பது போல், அவள் வீட்டுக்குள் போன போது மண்ணெடுத்துக் கைவலித்த தங்கம்மா, எதிர்தரப்பு சேதி ஒன்றை இலைமறைவு காய்மறைவாய் வெளிப்படுத்தினாள்:

"எங்க.... அக்கா... தங்கச்சி எவளும் கள்ளப் பிள்ள கழிக்கல...."

லிங்கம்மா, ராமபாணத்ததை எடுத்துவிட்டாள்:

"குத்தி காட்டுறியாக்கும் குத்தி... கள்ளப் பிள்ள கழிச்ச எங்க அக்காவ... எங்கய்யா ராத்திரியோடு ராத்திரியா... தோட்டத்துல எரிச்சாரு... ஆனால், மூளி அலங்காரி மூதேவி சண்டாளி... தட்டான்கூட கொஞ்சிக்குலாவல...? இவ்வளவு நீ பேசுன பிறவு... இந்த லிங்கம்மா யாருன்னு காட்டுறேன் பாரு... மாப்பிள்ள வீட்டுக்காரங்க கிட்ட... ஒன் மவள் , கரெண்ட்காரன்கிட்டே ஆடுன ஆட்டத்தையும், பாடுன பாட்டையும் சினிமாவுல வாரது மாதிரி சொல்லப் போறேன்.... ஒன் மவள் கல்யாணத்த கருமாந்திரமாய் மாத்திக் காட்டாட்டால்..... என் பேர மாத்திக் கூப்புடுழா....''

தங்கம்மா, அதிர்ந்து போனாள். கரெண்ட் ஷாக் பட்டவள் போல், வாய் துடிக்க, கை துடிக்க, மெய் துடிக்க பதறிப் போனவளாய் கைகளை உதறினாள். லிங்கம்மாவின் கொண்டையைப் பிடித்திழுக்க நடக்கப் போனாள். கால்கள் நகரவில்லை . மண் அள்ளப் போனாள். குனிய முடியவில்லை . லிங்கம்மாவின் முகத்தை நோக்கிவிட்ட பார்வையை விலக்காமல், விலக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். லிங்கம்மா வெற்றிப் பெருமிதத்தில் அக்கம் பக்கம் பார்த்தாள். பீடிப் பெண்கள், லிங்கம்மாவின் கடைசி அஸ்திரத்தை சகிக்க முடியாமல், பீடி இலையை ஒரு கையிலும், கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் பிடித்தபடி, லிங்கம்மாவை முறைத்தார்கள். பிறகு, ஒருத்தி அந்தப் பெண்கள் சார்பில் குரலிட்டாள்.

"ஏய்.. லிங்கம்மா சித்தி... ஒனக்கு மூள பிசகிட்டா? முன்னப் பின்ன யோசித்துப் பேசு... வீட்ல ஆம்புளப் புள்ளங்க இருக்கிற தைரியத்துல பேசப்படாது.... ஒனக்கும் இந்த வயசுலயும் ஒரு பொம்புளப் பிள்ள பிறக்கலாம்... தங்கம்மா பாட்டியை என்ன வேணுமுன்னாலும் பேசு... அவா மவன... நூறாண்டுப் பயிர... ஏமுழா நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசுறே...? வாய் அழுவிடப் போவுது..."

"சரிதான் போங்கடி சண்டை துவங்கும்போது வரமாட்டியா? தானா முடியும்போது வருவியே... ஒங்க சங்கதியளும் எனக்குத் தெரியும்..."

பீடிப்பெண்கள், லிங்கம்மாவின் தாக்குதலைப் தாக்குப் பிடிக்க முடியாமல், தரையை நோக்கியபோது, இந்தத் தெருவிலி ருந்தும் கல்லூரிக்குப் படிக்கப் போகும் கனகலிங்கம், தன் வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டான். மேடைப் பேச்சாளி மாதிரி பேசினான். ஏற்கெனவே கல்லூரி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுகிறவன். எல்லா மாணவர்களும், செந்தமிழில் பேசும்போது இவன் மட்டும் பேச்சுத்தமிழில் பேசுவான். இதனாலயே, இவனுக்கு வெற்றி. நாளைக்கு மறுநாளும் ஒரு பேச்சுப்போட்டி, அதை ஒத்திகையாகவும், அங்குள்ள கூட்டத்தை கல்லூரி மாணவ மாணவிகளாகவும் அனுமானித்துக் கொண்டு ஒரு சிக்ஸர் அடித்தான்.

"உலகத்துல அவனவன், சந்திர மண்டலத்துல சஞ்சரிக்கான். 'இன்சாட்-பியை விட்டு, இந்தியாக்காரன் கூட என்னவெல்லாமோ சாதிக்கான்... சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணிக்கிறான். உலக மக்களே ஒன்றுபடுங்க என்கிறான். இந்த தெருவுல என்னடான்னா.... சொந்தக்காரர்களே.... நாயும் பூனையும் மாதிரி அடிக்கிறாங்க.... சாகிறதுவரைக்கும் பக்கத்து வீட்டு மச்சான் பெண்டாட்டியையோ... சொந்த வீட்டு மாமியாரையோ.. ஜென்ம எதிரியாய் நெனச்சு செக்குமாடு மாதிரி சண்டையிலேயே சுற்றிச் சுற்றி வாராளுவ .... இவளுவ பொழப்பே... இந்த ஒரு தெருவுக்குள்ளே முடிஞ்சுடுது... தெக்குத் தெருவுல என்ன நடக்கு என்கிறது கூட வடக்குத் தெருக்காரிக்குத் தெரியாது.... குழந்தையாய் இருக்கும் போது சின்னய்யா மவன் எதிரி... ஆளானபோது, அண்ணன் பெண்டாட்டி எதிரி... கல்யாணம் ஆன பிறகு மாமியார் எதிரி... பெண்ணெடுத்த பிறகு ... மருமகள் எதிரி... சாவு எதிரியாய் வாரது வரைக்கும் இவங்களுக்கு... எதிரித்தனமே சிநேகிதமாய் போயிடுது... சாகிறவள் கூட, சாவுக்கு வருத்தப்படாம, மச்சான் பொண்டாட்டி சாகிறதுக்கு முன்னால் சாக போறமேன்னுதான் வருத்தப்படுறாள்... இதெல்லாம் ஒரு பொழப்பா.... ஊருலயே இது கேவலமான தெருவா போச்சு.... நானும்.... இந்தத் தெருவவிட்டு எங்கேயாவது ஓடிப் போயிடலாமான்னு பார்க்கேன்."

கல்லூரிப்பையன், தோளைக் குலுக்கி, கைகளை விரித்துக் காட்டி, கால்களை நடக்கவிடப் போனபோது, தீக்கொளுத்தி முருங்கை மரத்தில் இருந்து முதுகை எடுக்காமலே அவனை வைதார்.

"ஒண்ணே ஒண்ணு.... கண்ணே கண்ணாய்... இந்த தெருவிலேயே படிச்ச பயல் நீதான் ... நம்ம சொந்தக்காரங்க எல்லோருக்குமே நீ செல்லப்பிள்ள... நீ இப்போ சொன்னீயே... உலக விஷயம். இத.... இவளுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததால்.... இவளுவ இப்பிடி... தெருவ நாறடிப்பாளுவளாடா? இவளுவளுக்கு நாலு எழுத்து சொல்லிக் கொடுத்தியா? நாகரீகத்தைப் பற்றித் தெரியப்படுத்தினியா? இவளுவா... திருந்துறதுக்கு நீ என்னடா செஞ்சே...? இந்த ஒண்ணுந் தெரியாத மண்ணுவாள் .... நீ நெனச்சிருந்தால் தங்கமா மாத்தியிருக்கலாம்."

தீக்கொளுத்தி, காதில் சொருகி இருந்த ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டார். அந்த சமயம், நகரப்போன கல்லூரிக்காரனை கையாட்டி தடுத்தபடியே விட்டார் ஒரு பானம்.

"இது போவட்டும்... வட்டிக்கார தங்கபாண்டிகிட்டே நம்ம ஆளுக மாட்டிக்கிட்டு தவியாய் தவிக்காங்க... நீ இவங்களுக்கு பேங்கல கடன் வாங்க... ஏற்பாடு செய்தியா? கிடைக்கோ.. கிடைக்கலியோ.? அது வேற விஷயம். மிராசுதாரர் சீமைச்சாமி, பெரியண்ணன் கிட்ட வெறுந் தாள்ல கையெழுத்து வாங்கி வில்லங்கம் பண்ணுனான். கண்டிராக்டர் ராமசாமி, ஆறுமுகம் நிலத்த அடாவடியாய் எழுதி வாங்குனான். அவ்வளவு ஏன்? எங்கேயோ நடந்த களவுக்கு ஒன் பனையேறி சித்தப்பாவபோலீஸ்காரங்க... அடி அடின்னு அடிச்சி..... விலங்கு போட்டுக்கொண்டு போனாங்க... நீ தட்டிக் கேட்டியாடா? பேச்சுக்குப் பேச்சு... தெக்குத் தெரு... தெக்குத் தெருன்னு... சொல்றியே... அங்கே இருக்கிற பொட்டப் பிள்ளிய... கண்ணடிக்கத் தவிர.... நீ வேற உருப்படியாய் என்னடா செய்தே..?"

கல்லூரிப் பையன், தீக்கொளுத்தியை ஆச்சரியமாகப் பார்த்தான். அவரை அங்கீகரிப்பதுபோல், சின்னய்யா.... இந்தாரும் பீடி' என்று ஒரு வண்டல் கட்டைக் கொடுத்த, பீடி சுற்றி' பெரியப்பா மகளை வியந்து பார்த்தான். குற்றமனோபாவம், அவன் தலையை குனிய வைத்தது. அண்ணாச்சி..... நமக்கு எதுவும் செய்யாண்டாம்... கல்யாண ஆன பிறவும் இந்த தெருவுக்கு, மாதம் ஒரு தடவ வந்துட்டுப் போனால் போதும். அதுவே நமக்கு மதிப்பு என்று நெகிழ்ந்து சொன்ன ஒருத்தியை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல், கவிழ்ந்து பார்த்தான். அப்புறம் பையப் பைய நடந்தான் - தெற்குத் தெருவை நோக்கி....

புயலுக்குப்பின் ஏற்பட்ட அமைதி...

தங்கம்மா, வீட்டுக்குள் போய் கும்பாவை எடுத்தாள், மண்பானையை மூடியிருந்த "உல மூடியை அகற்றிவிட்டு, கும்பாவை நோக்கி பானையைச் சாய்த்தாள். சோளக்கஞ்சி, பொல பொலவென்று கும்பாவுக்குள் விழுந்தது. பிறகு, ஒரு சட்டியில் அவித்து வைத்த அகத்திக் கீரையை எடுத்து கும்பாவுக்குள் போட்டாள். நான்கைந்து மிளகாய்களை கும்பாவைப் பிடித்த கையோடு சேர்த்துக்கொண்டு, உப்புப் பெட்டியை இன்னொரு கையில் தூக்கிப் பிடித்தபடி முற்றத்தில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடி கிடந்த பூவரசியின் முன்னால் வைத்தாள். கும்பா முற்றத்துக் கல்லில் உரசிய சத்தத்தால் தன்வயமான மகளின் கண்கள், கும்பாவிற்குள் நீரை ஊற்றின. தங்கம்மா, தன்னைச் சமாளித்தபடியே, தன் மகளுக்கு ஆறுதல் கூறினாள்:

"ஏழுழா... அழுவுறே....? அந்த ஆக்கங்கெட்ட கூவை. சொன்னான்னா புலம்புற..? கழுதய விடு... பதினெட்டு வயது வரைக்கும் ஒழுங்காய்த்தான் இருந்தே... என்ன நேரமோ...? அந்த கரென்ட்காரன் மயக்கிட்டான்."

"நீ பெத்த மவள் ஒன்னை மாதிரியே இல்லாமப் போயிட்டேனே..?"

"நீ ஒரு தப்பும் பண்ண ல... இந்த வயசுல இது சகஜம். கரெண்டகாரன் ஒன்னை நிசமா விரும்புறான்னு லேசாய் இடம் கொடுத்தேன்..." "ஆனாலும், எப்போ அந்தப் பயல்... கள்ளச்சாராயம் குடிக்கிறவன்... எல்லாப் பொட்டப் பிள்ளியட்டவும் ஒன்கிட்ட ஆச வார்த்த காட்டுனது மாதிரி காட்டுறான்னு தெரிஞ்சதும் நீ விலகுன பாரு அதுதான் பெரிசு.... மத்தது சிறிக....''

"லிங்கம்மா மயினி லேசுப்பட்டவள் இல்லியே..."

" அவளப் போயி ஏமுழா... மயினிங்கிற... சொள்ளமாடன் மேல் பாரத்தைப் போட்டுட்டு சும்மாக் கிடழா... அப்படியே இந்த மாப்புள்ள போனால்... இன்னொரு மாப்புள்... விடு கழுதய...."

தங்கம்மா, மகளைத் தட்டிக் கொடுத்தாலும், உள்ளூர உதறலோடுதான் இருந்தாள். நாலு பெரிய மனிதர்களிடம் சொல்லி லிங்கம்மாவின் கல்யாணக் கலைப்பைப் பற்றி முறையிடலமா என்று கூட யோசித்தாள். இது, சும்மா இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததுபோல் ஆகும் என்று அனுமானித்தாள், அமைதியிழந்தாள்.

லிங்கம்மா, வழக்கம் போல் காறித் துப்பும் போதெல்லாம், தங்கம்மா, தன் எச்சிலை தொண்டைக்குள் விட்டுக்கொண்டாள். அவள், சீவி சிங்காரித்து எங்கேயாவது புறப்படும் போதெல்லாம் இவள் படபடத்தாள். மாப்பிள்ளை வீட்டுக்குத் தான் போகப் போகிறாளோ என்று மயங்கினாள். போதாக்குறைக்கு, இந்த லிங்கம்மா, தன் மகனைப் பார்த்து, "பொறு பொறு... ஒன் பவுக ஒரு வாரத்துல தெரியும்.." துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி என்கிட்டே இருக்குது சூரிக்கத்தி... என்று தாளலயத்தோடு ஜாடை போட்டாள்.

தங்கம்மா , பொருமினாள். 'மாப்பிள்ளை நல்ல இடம். தங்கமான பையன்... பாவி மொட்ட கெடுத்துடப்படாதே... என் செல்ல மகள் வாழ்க்கை போயிடப்படாதே.'

ஒருவாரம் ஓடியது. மறுவாரம் திங்கள் கிழமையாக கழுத்தை மட்டும் நீட்டியது.

பூவரசி, தனக்கு வரப்போகிறவனையும், அவனை வரவிடாமல் தடுப்பதாய்ச் சபதம் போட்டலிங்கம்மாமயினியையும் ஒருசேர நினைத்தபடி, ஓய்ந்து கிடந்தாள். தங்கம்மா, வாடிப்போன மகளையே வைத்தகண்வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தபோது

திடுதிப்பென்று இருபது இருபத்தைந்து ஆண்களும், பெண்களும் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருத்தி இடுப்பிலும் கொட்டப் பெட்டி... அதன் உள்ளே நான்கைந்து கிலோ அரிசி எல்லோரும், தாங்கள் கொண்டு வந்த அரிசியை, நெல் குத்தும் உரல் பக்கம் அம்பாரமாக்கினார்கள். இதற்குள், தீக்கொளுத்தி ஒரு வெள்ளாட்டை தலையைப் பிடித்து இழுத்தபோது, "வாலன்" அந்த ஆட்டை பின்னால் இருந்து தள்ளினார். வாலன், தங்கம்மாவை அதட்டினார்.

"என்ன மயினி... கப்பல் கவுந்தாலும் கன்னத்துல கை வைக்கலாமா? பூவரசிக்கு இன்னைக்கி சொக்காரங்க ஆக்கிப்போட வாரது தெரியாதது மாதிரி முழிக்கே? ஏழா... ராசாத்தி... முட்டாப்பய மவ மவளுக்கு பேர் மட்டும் பெரிசு... ஏழா... சரோஜா... ஊர்க்கிணத்துல போயி, தண்ணியெடுத்துட்டு வாங்க.... ஏல ராமசுப்பு... குடிமகனை ஆட்ட அறுக்க கூட்டிட்டு வா.... நான் சத்திரம் சந்தையில் போயி... மஞ்ச மசாலா வாங்கிட்டு வாறேன் உம் சீக்கிரம் ஏழா- இன்னைக்கு பீடி சுத்தி கிழிச்சது போதும். குடத்தை எடுங்களா..."

வாலனின் ஆணைக்குப் பயந்தும் பணிந்தும், பெண்கள் குடங்களையும், தவலைப்பானைகளையும் இடுப்பிலும் தலையிலும் போட்டபடி துள்ளி துள்ளி நடந்தார்கள். ஒருத்தி அம்மியை கழுவப் போனாள். இன்னொருத்தி அரிசியைப் புடைக்கப் போனாள். ஆலமரம்போல் கிளைவிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பங்காளி களான சொக்காரர்கள், வழக்கப்படி, தங்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகப்போகிற பெண்ணுக்கு ஆக்கிப் போடுவார்கள். அதாவது, தத்தம் வீட்டில் இருந்து அரிசி கொண்டு வந்து, கூட்டாக ஆடு வாங்கி அறுத்து, மொத்தமாகச் சாப்பிடுவார்கள்.

கடந்த பத்து நாட்களாய் தனிமைப்பட்டுக் கிடந்த தங்கம்மா, கூட்டத்தை பாசத்தோடு பார்த்தாள். பிறகு அந்தக் கூட்டத்தில், "பாவி மொட்டை"லிங்கம்மா இருக்காளா என்று நோட்டம் விட்டாள். கண் வலித்ததுதான் மிச்சம். அவள் வராதது, தங்கம்மாவின் அதிர்ச்சியை அதிகமாக்கியது. வாலனை, அர்த்தபுஷ்டியாகப் பார்த்தாள். வாலன், பொதுப்படையாகப் பேசுவதுபோல், குறிப்பாய்ப் பேசினார்.

"எந்த நாயி சந்தைக்குக் போனால் உனக்கென்ன மயினி..? வந்தால் வாராள். வராட்டால் போறாள். அன்னைக்கு அவள் சபதம் போட்டதைப் பற்றி யோசிக்கியளா.... அப்படி அவள் சொன்னதை செய்தாள்னா.... அவள் குடலை உருவி தோள் மாலையா போட்டுட மாட்டனா...? கவலைப்படாதிய. ஏழா.... செல்லக்கனி! வாடாப்பூ கல்யாணப் பெண்... வார ஞாயிறுல கல்யாணம். அவள் ஏமுழா அடுப்புப் பக்கம் அனுப்புற ? ஆக்கிக் போட வந்த லட்சணத்தப் பாரு... நீங்க, ஏன் மயினி கவலைப்படுதிய...? அவள் வராட்டால், நாம அவ வீட்டு... எட்டுக்கோ.... எழவுக்கோ போவமாட்டோம்.... கரென்ட் கனைக்சன சொன்னான்னா... குடலை உருவி...''

வாலன், லிங்கம்மாவின் குடலை உருவி தோள் மாலை போட்டால், தங்கம்மாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது கரென்ட்காரன் - வாடாப்பூ காதல் விவகாரத்தை எட்டு ஊருக்கு' தம்பட்டம் அடிக்கது மாதிரி ஆயிடுமே... இந்த நொறுங்குவான் வாலன், கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்னு சொல்ல மாட்டக்கானே... அந்த தட்டு கெட்ட லிங்கம்மா குடல் யாருக்கு வேணு? இப்பவே நான் பெத்த பொண்ணு... ராத்திரியில் திடீர்னு எழுந்து உட்காருறாள்... பரக்கப் பரக்க விழிக்காள். பையப் பபைய அழுவுறாள். இந்த தட்டுக்கெட்ட முண்டயால, கல்யாணம் நின்னுட்டால், என் செல்ல மகள் ஆத்துலயோ.... குளத்துலயோ.... அரைமுழக் கயித்துலயோ...

தங்கம்மா, முக்கைச் சிந்தியபோது -

லிங்கம்மா, இடுப்பில் வலது கை கற்றிப்பிடித்த, கொட்ட பெட்டியில் அரிசி குலுங்க, இடது கை சுற்றிப்பிடித்த பெரிய விறகு கட்டோடு உள்ளே வந்தாள். விறகுக்கட்டை பொத்தென்று தரையில் போட்டுவிட்டு, மூச்சோடு மூச்சாக அட்டகாசமாக கேட்டாள்.

ஏமுழா... உங்களுக்கு அறிவு இருக்கா? இவளு பேருக்கும் ஆக்குறதுக்கு தங்கம்மா அத்த வீட்டுல நிறையா விறகு இருக்குமான்னு யோசித்து பார்த்திகளா... தீக்கொழுத்தி மச்சான். அய்யோ தப்புதான் உம்ம அப்படி பேசப்படாதுதான். ஆனாலும், அடுப்புல தீக்கொளுத்துறதுக்கு முன்னால் நீரும் கொஞ்சம் விறகு வெட்டிக்கிட்டு வந்துடும்...'

செம்மலர் - 1988
-----------


This file was last updated on 5 Jan. 2022.
Feel free to send the corrections to the Webmaster (pmadurai AT gmail.com)