pm logo

திரு. வி. கலியாணசுந்தரனார் எழுதிய
உள்ளொளி
(சொற்பொழிவு/ கட்டுரைகள்) - பாகம் 1


uLLoLi (essays)
by tiru vi. kalyANacuntaranAr
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a soft copy of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு. வி. கலியாணசுந்தரனார் எழுதிய
உள்ளொளி (சொற்பொழிவு /கட்டுரைகள்) - பாகம் 1


Source: :
உள்ளொளி
ஆக்கியோர் : திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார்
வெளியிடுவோர் : அரசி புக் டிப்போ 9, திருவள்ளுவர் கோயில் தெரு
மயிலாப்பூர் : சென்னை - 4 உரிமையுடையது.
1969 (ஆறாம் பதிப்பு : ஜனவரி 1969 )
விலை ரூ.4.50
மெட்ரோபாலிட்டன் பிரின்டர்ஸ், சென்னை-2
-------------
உள்ளுறை
தோற்றுவாய்
உள்ளமும் உருவமும்
உள்ளுணர்வும் வழிபாடும்
உள்ளொளி
இறுவாய்
-----------

முன்னுரை

வாழ்க்கை மாண்புடையதென்று சொல்லப்படுகிறது. எப்பொழுது அது மாண்புடையதாகும்? வாழ்க்கை உள்ளொளியைக் குறிக்கொண்டு அமைந்ததொன்றாயின், அப்பொழுதே அது மாண்புடையதாகும். மற்றையது மாண்புடைய தாகாது. வாழ்க்கையின் குறிக்கோள் உள்ளொளிப் பேறாயிருத்தல் வேண்டும்.

உள்ளொளி உண்மையில் எனக்குச் சிறிதும் ஐயம் தோன்றுவதில்லை. எனது ஐயப்பாட்டைக் கல்வி கேள்வி ஆராய்ச்சி மட்டுங் களையவில்லை. எனது வாழ்க்கையும் தொண்டும் அடைவும் ஐயப்பாட்டைக் களைந்தன. அத்தகைய உள்ளொளியைப் பற்றி ஒரு பெரியார் மணிவிழாவை முன்னிட்டு, ஒரு நூல் இயற்றும் வாய்ப்பு, எனது வாழ்வில் கிடைத்தமை குறித்துத் திருவருளுக்கு வணக்கஞ் செலுத்துகிறேன்.

மணிவிழா எது? அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மணிவிழா என்று வழங்கப்படுகிறது. மணிவிழா ஒரு நாட்டில் மட்டுங் கொண்டாடப்படவில்லை. அது பல நாடுகளில் கொண்டாடப் படுகிறது. உலகப் பொதுமைகளில் மணிவிழாவும் ஒன்றாயிருக்கிறது. இதனால் அவ்விழாவில் ஏதோ ஒரு விதச் சிறப்புள்ளதென்று தெரிகிறது.

மணிவிழா என்று தோன்றியது? அது தோன்றியதற்குக் காரணமென்னை? அதன் உள்ளக்கிடக்கை யாது? அஃது ஏற்றுக்குக் கொண்டாடப்பெறல் வேண்டும்? இன்னோரன்ன வினாக்கட்கு அளிக்கப்படும் விடைகள் பலப்பல; பலதிறத்தன. அப்பலபட்டடையில் ஈண்டு நுழைய வேண்டுவதில்லை.

உலகில் பலதிறப் பிறவிகள் காணப்படுகின்றன. அவைகளுள் விழுமியது எது? மனிதப் பிறவி என்று எவருஞ் சொல்வர்; ஆத்திகருஞ் சொல்வர்; நாத்திகருஞ் சொல்வர். மனிதப் பிறவியின் விழுப்பத்துக்கு அடிப்படையான காரணம், அப்பிறவியில் அறத்தொண்டு நிகழ்ச்சிக்கு இடம் உண்மையே யாகும். அறத்தொண்டு இருவிதம். ஒன்று கட்டுப் பட்டது; இன்னொன்று கட்டுப் படாதது. கட்டுப்பட்ட அறத்தொண்டு உற்றார் உறவினர் அளவில் நிகழ்வது. எல்லாரிடத்திலும் நிகழ்வது கட்டுப்படாத அறத்தொண்டு. இது தெய்வத்தொண்டு என்பது. இத்தொண்டு ஒவ்வொருவர்பால் ஒவ்வொரு வயதில் அரும்பும். பொதுவாக இதற்கொரு கால வரை கோலவேண்டுமென்று ஆன்றோர் சிலர் முயன்றிருப்பர். அவர்தம் முயற்சியில் சிற்சில ஆண்டு திரண்டு திரண்டு இறுதியில் அறுபதாம் ஆண்டு நிறைவு நிலைத்து நின்றிருக்கும். அறுபதாண்டு கடக்கப்பெற்ற மக்கள் கட்டுப்படாத அறத் தொண்டில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை நலமுடைய தாய்ப் பிறவி நோக்கத்தையும் நிறைவேற்றுவதாகுமென்று ஆன்றோர் கருதியிருக்கலாம். மக்கட்கு உரிய நூற்றிருபது வயதில் ஒரு பகுதி கட்டுப்பட்ட அறத்தொண்டுக்கும், மற்றொரு பகுதி கட்டுப்படாத அறத்தொண்டுக்கும் பயன் படுதல் வேண்டுமென்றும் அவர் எண்ணியிருக்கலாம்.

அறுபதுக்கு மேல் வாழ்க்கையில் ஒருவித மாறுதல் உறுவது இயற்கை. அம்மாறுதல் கட்டுப்பட்ட தொண்டைக் கட்டுப்படாத தொண்டாக்குவதென்று ஊகித்து உணரலாம். இயற்கை போக்குக்கு அரணாக வாழ்க்கையை நடாத்துவது அறம். அதற்கு மாறுபட்டு வாழ்க்கையை நடாத்துவது அறமாகாது. கட்டுப்படாத அறத்தொண்டுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்தக்கால் கொள்ளும் ஒருநாள் திருநாளாகக் கொண்டாடப்படுகிறதென்று யான் கருதுகிறேன். அக்கொண்டாட்டத்தை 'மணிவிழா' என்று உலகம் தொன்று தொட்டு வழங்கி வருகிறது போலும்.

கூட்டுறவு உலகில் பேர்பெற்று விளங்கும் கீழைகிழார் - திவான்பகதூர் - தெய்வசிகாமணி முதலியார் மணிவிழா, சென்ற விஷ ஆண்டு தைப்பூச நன்னாள் (10-2 -1941) முதல் இருபது நாள் கொண்டாடப் பெற்றது. அவ்விழா, ஆண்டவன் வழிபாடு , ஏழைமக்கட்குச் சோறு கூறை அளித் தல், சொற்பொழிவு நிகழ்த்தல் ஆகிய அளவில் நடைபெற் றது. பழைய முறைகள் பல விடப்பட்டன.

திரு . தெய்வசிகாமணி முதலியார் வாழ்க்கையில் அறியத்தக்க நுட்பங்கள் பல உண்டு. அவைகள் மற்றவர் வாழ்க்கைக்குப் பல வழியிலுந் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. திரு. முதலியார் தமது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தாமே எழுதி உதவுவாராயின், அவர் நாட்டுக்கு ஒருவித நற்பணி செய்தவராவர்.

தொண்டை நாட்டிலே மூவரால் பாடப்பெற்ற திருப்பதிகள் முப்பத்திரண்டு. அவைகளுள் ஒன்று திருவிற் கோலம். இத்திருப்பதி கூவம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவிற்கோல வட்டத்திலே பல சிற்றூர்கள் சூழ்ந்துள்ளன. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கது கீழைச்சேரி . கீழைச்சேரி கூட்டுறவு இயக்கத்துக்குத் தாயகம். அவ்வூர், தெய்வசிகாமணி முதலியார் குடும்பத்தால் இந்நாளிலே பேர்பெற்று விளங்குகிறது.

கீழைச்சேரியிலே, வழிவழி வளர்ந்து வரும் வேளாண் மரபிலே, விக்கிரம ஆண்டு மாசித் திங்கள் 24-ம் நாள் (5-3-1881) பிறந்தவர் தெய்வசிகாமணி முதலியார். அவர் தம் தந்தையார் குப்புசாமி முதலியார்; தாயார் காவேரி அம்மையார். தெய்வசிகாமணியாரின் கூர்த்தமதி அவர்தஞ் - சிறிய தகப்பனார் - ஜில்லா ரிஜிஸ்தரார் - ராவ்சாஹப் மாரியப்ப முதலியார் நெஞ்சைக் கவர்ந்தது. அக்கவர்ச்சி தெய்வசிகாமணியைக் கல்விச் செல்வராக்கும் முயற்சியாகப் பரிணமித்தது.

தெய்வசிகாமணி முதலியார் பச்சையப்பனில் படித்தவர். அவர்தம் பள்ளி வாழ்வு வெற்றியுடையதாகவே அமைந்தது. மாணாக்கருள் முதன்மணியா யிலங்கினவர் தெய்வசிகாமணியார். அவர் மெற்றிகுலேஷன் பரீட்சையில் தேறி, எப். ஏ. வகுப்பில் பயின்று வந்தபோது அவரை வேலை வலிந்து ஈர்த்தது.

கீழைகிழார், கூட்டுறவு இலாகாவில் சேர்ந்தனர். அவர் தம் நுண்மதியும் நல்லொழுக்கமும் இலாகாவின் அடியினின்றும் முடிவரை அவரை இவரச் செய்தன. அவர் ஜாயிண்ட் ரிஜிஸ்தரார் பதவியில் வீற்றிருந்து, கூட்டுறவு இயக்கத்தை நடாத்திய திறத்தைச் சென்னை மாகாணம் நன்கறியும். கூட்டுறவு உலகில் திவான் பகதூர் - தெய்வசிகாமணி முதலியார் ஒரு ஞாயிறென மிளிர்ந்தார் என்று கூறல் மிகையாகாது. இந்நாளிலும் அவர்தம் கூட்டுறவுத் தேர்ச்சியும் அடைவும் நாட்டின் பல பாகங்களில் பயன்பட்டே வருகின்றன. தெய்வசிகாமணியாரின் இயற்கை அறிவு எந்த இலாகாவையும் திறம்பட நடாத்தும் தன்மை வாய்ந்திருத்தல் குறிக்கற்பாலது.

திரு . தெய்வசிகாமணி முதலியாரது வாழ்க்கை நலத்துக்குத் துணைவராய் வாய்ந்தவர் திரு. பாலகுஜாம்பாள் என்பவர். இருவரும் ஈருடல் ஓருயிர் என்ன வாழ்ந்து நல்லறத்தை ஓம்பி வருகின்றனர். அவர்தம் இல்லம் 'முருகனருள்.' முருகனருளில் அவருடைய வாழ்க்கை மணம் பெற்று வளம் பெற்று வழிவழி வளர்ந்து வருகிறது.

கீழைகிழாரிடத்தில் விளங்கும் நல்லியல்புகள் பல அவைகளுள் குறிக்கத்தக்கன பொய்ம்மைக்கஞ்சல், காய்தல் உவத்தல் அகற்றி நடுநின்று கடனாற்றல், நீதிவழுவாமை முதலியன. இவ்வியல்புகள் அவரைப் பெரியவராக்கின.

ஓய்வு பெற்றுள்ள இந்நாளில் தாம் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் ஒருவிதப்பணி செய்தல் வேண்டும் என்ற எண்ணம் திரு. முதலியாரின் பிடரைப் பிடித்து உந்திக்கொண்டிருந்தது. இப்பொழுது அதற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ' சென்னைத் தமிழ்ச் சங்கம்' என்றொரு நல்லமைப்பு அணித்தே காணப்பட்டது. அதில் தலைமை வகித்துத் தொண்டாற்றும் பேறு திரு. முதலியார்க்கு வாய்த்துள்ளது.

அன்பர் தெய்வசிகாமணி முதலியார் மணிவிழாவை முன்னிட்டுச் சென்னை சிந்தாதிரிப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் இருபது நாட்களில் இருபத்திரண்டு சொற்பொழிவுகள் நடைபெற்றன. அவைகளுள் முதல் மூன்று (10, 15, 16- 2 - 1941) என்னால் நிகழ்த்தப்பட்டன. முறையே பேசப்பட்ட பொருள்கள், 'உள்ளமும் உருவமும்', 'உள்ளுணர்வும் வழிபாடும்!', 'உள்ளொளி' என்பன. அப்பேச்சுக்களை நூலாக்குமாறு மணிவிழாத் தலைவர் உள்ளிட்ட நண்பர் பலர் என்னிடங் கூறுவர்; பன்முறை வலியுறுத்தியவர் உயர்திரு. ஷண்முகானந்த அடிகள்.

நூலெழுத யான் முயன்றபோதெல்லாம் ஒவ்வொரு விதத்தடை குறுக்கிட்டே வந்தது. அடிக்கடிக் கதவடைப்பு, வேலை நிறுத்தம் என்ற பெயர்களால் தொழிலாளர் தொல்லைகள் மூண்டன. சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் அத்தொல்லைகளில் மூழ்கல் நேர்ந்தது. திருப்போரூரில் அமைதியில் நின்று நூலை எழுதலாமென்று சென்றேன். அங்கு ஈண்டிய நண்பர் குழாம் எனது விருப் பத்தை நிறைவேற விடவில்லை. எப்படியோ பல திங்கள் கடந்தன.

கடந்த ஜூலை தொடக்கத்தில் எனது வலது கால் கடை விரலில் ஒரு குறுங்கட்டி எழுந்தது. அதனால் சிறிது ஓய்வு கிடைத்தது. அவ்வேளையில் மணிவிழாப் பேச்சுக்களை நூலாக்கும் முயற்சியில் தலைப்பட்டேன். முயற்சி ஒருவாறு முற்றுப் பெற்றது. நூல் அச்சாகி வந்தபோது ஆகஸ்ட் இறுதியில் ஒரு பெருந்தொழிலாளர் தொல்லை விளைந்தது. சண்டைக் காலத்தில் - இந்தியப் பாதுகாப்புச் சட்டம் வீறிடும் வேளையில் - அச்சட்டத்தின் மயிர்ப்பாலத்தில் நடந்து தொல்லை என்னும் தீயிடை நின்று தொண்டு செய்தல் நேர்ந்தது. விவரம் இங்கே வேண்டுவதில்லை.

ஒரு பக்கம் 'உள்ளொளி' - இன்னொரு பக்கம் 'உலகொளி' என்று யான் எண்ணுவதுண்டு. இரண்டுங் கலந்த ஒன்றில் தொண்டு நிகழ்த்த வேண்டுமென்பது எனது வேட்கை. அவ்வேட்கை தொழிலாளர் தொண்டாக நிறைவேறுகிறது போலும். எல்லாம் ஆண்டவன் செயல். பலதிற இன்னலிடை 'உள்ளொளி'த் தொண்டும் செய்யப்பட்டது.

யான் பேசிய மூன்று பொருட்களில் உயிர் போன்றது 'உள்ளொளி.' மற்ற இரண்டும் அதன் அரண்போன் றன. ஆகவே, நூலுக்கு , 'உள்ளொளி' என்னுந் தலைப்பே அணியப் பட்டது.

இந்நூல் - உள்ளப்பாகுபாடுகள், உருவ அருவ அருவுருவ இயல்கள், உள்ள உருவத் தொடர்பு, இரண்டுங் கடந்த நிலை, உள்ள உருவத் தொடர்பால் விளங்கும் உள்ளுணர்வும் உள்ளுணர்வு உள்ளொளியாதற்குரிய வழிபாடு , கடவுளின் இருநிலை, இயற்கை நுட்பம், காதல் வீரம் அழகு அறிவு நீதி முதலிய தெய்வக் கூறுகள், அவைகளின் வழிபாட்டுத் திறங்கள், பெண்ணின் பெருமை, குழந்தை மேன்மை, நாகரிக வகைகள், இசை காவியம் ஓவியம் ஆகியவை வழி பாட்டுக்குத் துணை செய்யும் முறைகள், தெய்வ உருவங்களின் தத்துவங்கள், உருவ வழிபாட்டின் சிறப்பு , வழிபாடு கடந்த நிலை, யோக விதங்கள், தியான யோகம், முறையீடு, தொண்டு , சமரச சன்மார்க்கம், பொது அறம், அநுபூதி, உள்ளொளி விளக்கம் முதலிய நறும் பொருள்களை உள்ளுறை யாக் கொண்டது. அகப்புற வாழ்க்கைக்கு இன்றியமையாத பல பொருள்கள் இந்நூற்கண் திகழ்கின்றன. இதை ஒரு சமரச சன்மார்க்கப் பொருட்காட்சி என்று கூறலாம். உலகத் தொல்லையிடை எழுந்த 'உள்ளொளி ', உள்ளிருளில் உள்ளொளி எழுப்பி, உன் தொல்லையைப் போக்குமென்று நம்புகிறேன்.

இந்நூலிடைச் சிலவிடங்களில் மாயா காரியங்கள், தத்துவங்கள், சிறப்பாக விந்து நாத தத்துவங்கள், கடவுள் தத்துவங் கடந்ததென்பது, கடவுளின் இருநிலை, இறை யுடல் இயற்கை என்பது முதலிய சில பொருள்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகள் அநுவாதம் பற்றி அவ்வாறு சொல்லப்பட்டன என்று நேயர்கட்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யான் கூட்டத்தில் பேசியதைப் போலவே நூலை எழுதியுள்ளேன். இதை ஒரு பேச்சு நடை நூலாகக் கொள்க.

குற்றங் குறைகளைப் பொறுத்தருள்க.

சென்னை, இராயப்பேட்டை 30-9-1942       திரு. வி. க.
---------------------

உள்ளொளி - தோற்றுவாய்

தோழர்களே! நாம் அனைவரும் இங்கே ஏன் கூடியிருக்கிறோம்?, திவான்பகதூர் - கீ. தெய்வசிகாமணி முதலியாரின் மணிவிழா நம்மை இங்கே கூட்டியிருக்கிறது. நமது நாட்டில் மணிவிழாக்கள் எப்படிக் கொண்டாடப்படுகின்றன? முறைகள் உங்களுக்குத் தெரியும். இம் மணி விழாவில் அம்முறைகளைப் பெரிதுங் காண்டல் அருமை. இதற்கு ஒருவிதத் தனிச் சிறப்புண்டு. அஃதென்னை? மணிவிழா, சொற் பொழிவு விழாவாக மாற்றப்பட்டதாகும். அறிவு விருந்து போற்றற்குரியதன்றோ ? மணிவிழாத் தலைவர், வாழ்க ! அவர்தங் குடும்பம் வாழ்க !

இன்று முதல் இங்கே பலதிறச் சொற்பொழிவுகள் நடைபெறும். பல துறையில் வல்லவர் பல பொருள் பற்றிப் பேசுவர். முதல் மூன்று சொற்பொழிவு நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இன்று (10 - 2 - 1941) 'உள்ளமும் உருவமும்' என்பது பற்றியும், பின்னே (15-2-1941) 'உள்ளுணர்வும் வழிபாடும்' என்பது பற்றியும், இதைத் தொடர்ந்து (16-2-1941) 'உள்ளொளி' என்பது பற்றியும் பேசும் பணி எனக்கு நல்கப்பட்டிருக்கிறது.

இம்மூன்று பொருளும் வெவ்வேறல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பொருள் வைப்புள்ள இடம் 'உள்ளொளியே' யாகும். 'உள்ளொளி' உயிர் போன்றது. அதற்குக் காரணம் போன்றது இரண்டாவது சொற்பொழிவு. இன்றையது உடல் போன்றது. ஆகவே இன்று. "உள்ளொளிக்கு உடல் அமைக்க முயல்வேன்.

'உள்ளமும் உருவமும்' என்னும் பொருளில் பல நுட்பங்களுண்டு. அவைகளை யெல்லாம் நிரலே கிளந்து கூறுதற்கு யான் அருகனல்லன். ஒல்லும் வகையாதல் எனது கருத்தை முற்றும் வெளியிடுதலும் பொருந்தாது. 'உள்ளமும் உருவமும்' என்பது தனிப்பட்ட ஒரு சொற்பொழிவாக எனக்குக் கொடுக்கப்படவில்லை. 'உள்ளொளிக்கு உடல் அமைக்கும் வகையில் அப்பொருளைப் பற்றிப் பேச வேண்டுவது எனது கடனென உணர்கிறேன். இரண்டாவது சொற்பொழிவும் 'உள்ளொளி'க்குக் காரணம் அமைக்கும் முறையிலேயே நிகழும் என்பதை இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.
--------------

1. உள்ளமும் உருவமும்

'உள்ளமும் உருவமும்' என்பது பொருள். முதலாவது உள்ளத்தைப் பற்றியும், பின்னே 'உருவத்தைப் பற்றியும், அதற்குப் பின்னே இரண்டுக்குமுள்ள தொடர்பைப் பற்றி யும் பேசலாம் என்று எண்ணுகிறேன். முதலாவது உள்ளத்தின் மீது கருத்துச் செலுத்துகிறேன்.

உள்ளம் -ஆராய்ச்சி

உள்ளத்தைப்பற்றிய ஆராய்ச்சி, உலகிலே முற்றுப் பெற்றதா? இன்னும் முற்றுப் பெறவில்லையா? கீழ்நாட்டில் உள்ளத்தைப் பற்றிய ஆராய்ச்சி முற்றுப் பெற்றதென்று அறுதியிட்டுக் கூறலாம். மேல் நாட்டில் அவ் வாராய்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தியங்காது முழங்கலாம். என்னை? கீழ் நாட்டின் ஆராய்ச்சி, அனுபவத்தை அடிப்படையாக்கொண்டு நிகழ்ந்தது. அதனால் உண்மை விளங்கலாயிற்று. இதற்குக் கீழ்நாட்டுத் தத்துவ நூல்கள் உள்ளத்தைப் பற்றிப் பெரிதும் ஒருவிதக் கருத்தை வெளியிட் டிருத்தலைச் சான்றாகக் கொள்ளலாம். மேல் நாட்டின் ஆராய்ச்சி, ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. அதனால் உண்மை ஒரோவழியில் காட்சியளித்து மேலும் மேலும் ஓங்கி ஓங்கி உயர்ந்தே போகிறது. இந்நாட்டவர் ஆராய்ச்சி பெரிதும் புற நோக்கில் நிகழ்ந்து வருதலால், புறத்துக்கு அப்பாலுள்ள பல நுட்பங்கள் இவர்க்கு விளங் காமற் கிடக்கின்றன. பலபட்ட உள்ளப் படிகளில் மேல் நாட்டார் சிலவற்றைக் கடந்து வந்துள்ளனர்; இன்னுஞ் சின்னாளில் வேறு பல படிகளையுங் கடக்கும் பேறு பெறுவர் இவர்தம் ஆராய்ச்சி முற்றுப்பெற்றால் பல சிக்கல்கள் அறுந்து போகும்; கீழ்நாட்டவர் கண்ட பல நுட்பங்கள் எளிதில் விளங்கும் பேறு பெறும். இப்பொழுது கீழ்நாட் டவர் அனுபவமும், மேல் நாட்டவர் ஆராய்ச்சியும் வேண்டற் பாலனவே. எதையுந் தள்ளுதல் கூடாது.

'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' (குறள்)

பொருள்
உள்ளம் என்பது பலபொருள் ஒரு சொல்; இங்கே உள்வதன் மேலது. உள்வது - நினைப்பது. உள்வது எது? மனம்[1].

உள்ளதா? இல்லதா?

[2] உள்ளம் பொருளா அன்றா என்பதைச் சிறிது தொடுத்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. உள்ளத்தைப் பொருளென் போரும் உளர்; பொருளன்று என்போரும் உளர். உள்ளத்தைப் பொருளன்று என்று கொள்வோரும் அது விவகாரத்தில் பொருளாகவே விளங்குகிறதென்றும், பாரமார்த்திகத்தில் பாழாய் (சூந்யமாய்ப் போகிறதென்றும் கூறுவர் . விவகாரத்தில் கட்சி இல்லை. பாரமார்த்திகத்திலுங் கட்சி இல்லை என்று சொல்லலாம். பாரமார்த்திகத்தில் உள்ளம் மறைவதை இருசாராரும் ஒப்புக் கொள்கின்றனர். மறைவு நிலையைக் குறித்து விவகார உலகில் வாதப் போர் நிகழ்கிறது. எப்படி ?

--------
[1] மந்வாநோம : - பிருஹதாரண்யம் : 3:4.
அருளேயோர் ......
[2] நெஞ்சே நீ - மருள் தீர் முயற்கோடோ வான் மலரோ பேய்த்தேரோ - இருள் தீர நீயுறைந்த தெவ் விடமோ - தாயுமானார்.
-------

பாரமார்த்திகத்தில் மறைவுறும் மனம் பாழாவதில்லை என்றும், அது பொருளாகவே கிடக்கிறதென்றும், ஞாயிற்றின் ஒளி முன்னர்த் திங்களின் ஒளியும் உடுக்களின் ஒளியும் இருந்தும் விளங்கித் தோன்றாமலிருப்பது போலப் பாரமார்த்திகத்தில் மனம் இருந்தும் விளங்கித் தோன்றுவதில்லை என்றும் ஒரு சாரார் கூறுப. மற்றொரு சாரார் பார மார்த்திகத்தில் மனம் பாழே ஆகும் என்று கூறுப. மறைவைப் பற்றிய விவாதம் விவகாரத்தில் எற்றுக்கு என்பது எனது கேள்வி. பூனை கண்ணை மூடிக்கொண்டால் அதற்கு அந்நிலையில் உலகம் புலனாவதில்லை. அதற்கு உலகம் இருந்து புலனாக வில்லையா? இல்லாமலே போகிறதா? என்று விழிப்பினர் போரிடுவதால் விளையும் பயன் என்ன?

யான் விவகார உலகில் வாழ்பவன். எனக்கு மனம் பொருளாகவே தோன்றுகிறது. விவகார உலகம் கட்சியற்ற தென்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பாரமார்த்திகத்தில் விளைவது விளைக. அதைப்பற்றி விவகார உலகம் எற்றுக்குக் கவலை கொள்ளுதல் வேண்டும்?

சடமா? சித்தா ?

மனம் சடமா? சித்தா? என்னும் விசாரணையும் இவ் வுலகில் நிகழ்ந்தே வருகிறது. இங்கே , சடத்தினின்றும் சித் பிறக்கிறதா? சித்தினின்றும் சடம் பிறக்கிறதா? சடமும் சித்தும் தனித்தனி இருப்புடையனவா? இரண்டும் வேறு வேறாகப் பிரிந்து நிற்பனவா? கலப்புடையனவா? என்று பலப்பட்ட ஐயப்பாடுகள் எழுதற்கு இடமுண்டு. இவைகளில் கருத்துச் செலுத்தினால், இச்சொற்பொழிவு இன்றே முடிவு பெறுதல் அருமையாகும். ஆதலின் ஐயப்பாடுகளாம் அருஞ் சுரங்களில் யான் புகாமற் செல்கிறேன். உலகம் உள்ளவரை ஒவ்வொன்றைப்பற்றி ஒவ்வொருவித ஐயம் திரிபு மயக்கம் எழுந்தவண்ண மிருக்கும். அவரவர் ஆராய்ச்சி அநுபவங்கட் கேற்றவாறு உண்மை விளங்கிக் கொண்டே போகும்.
-------
எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல் இருக்கவிலையோ மனதெனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமைச் சடம்தென்றுனைச் சித்தென்றுமே - அந்நாளில் எவனோ பிரித்தான் .......... சுகவாரியே - தாயுமானார்.
-------

யான் இளமையில் சடத்தைப்பற்றியும் சித்தைப்பற்றியும் அறிவுறுத்தும் தத்துவ நூல் பல பயின்றேன்; அவைகளில் பன்னொடுநாள் உழன்றேன் என்றுஞ் சொல்வேன். இடையில், அறிஞர் ஹெக்கலும், ஸர் ஓலிவர் லாட்ஜும் முறை முறை ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அன்னிபெஸண்ட் அம்மையார், 'தியொ ஸொபிஸ்ட்' என்னுஞ் சஞ்சிகையில் 'சடமும் சித்தும்' என்னுந் தலைப்பீந்து எழுதிவந்த கட்டுரைகளைப் படித்தல் நேர்ந்தது. அவைகள் பலதிற ஐயப்பாடுகளை நீக்கின. அறிஞர் ஹெக்கல், எல்லாம் 'சடமயம்' என்றும், சித்தென்னுந் தனிப் பொருள் ஒன்றில்லை என்றும், சித்தென்பது சடத்தினின்றும் தோன்றி நின்று ஒடுங்கும் ஓர் இயல்பு என்றும் தமது ஆராய்ச்சிக்கு முடிவு கட்டினர். இது ஸர் ஓலிவர் லாட்ஜால் மறுக்கப்பட்டது.

சடமுமுண்டு சித்து முண்டு என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. சடத்தினின்றுஞ் சித் தோன்றுவதென்பதும், சித்தினின்றுஞ் சடம் தோன்றுவதென்பதும் கொள்ளற்பாலனவல்ல. நெல் கமுகாய் நீளாது. உள்ளது போகாது; இல்லது வாராது. சடத்தினின்றுஞ் சடமே பிறக்கும்; சித்தினின்றுஞ் சித்தே பிறக்கும். அதிலிருந்து இதுவும் இதிலிருந்து அதுவும் பிறத்தல் அரிது. சடமும் சித்தும் தனித்தனி இருப்பிலுள்ளன. ஆனால் இரண்டும் வேறு வேறாகப் பிரிந்து நிற்பனவல்ல; கலந்தே நிற்பன. சடம் சித்தை விடுத்து நிலவாது; இயங்காது. சடமுள்ள இடங்களிலெல்லாம் சித்துமிருக்கும். சடத்துக்கு மேலுங் கடந்து சித் ஓங்கித் தனித்து நிற்கும். 'அதுவாகும்' பாரமார்த்திக நிலையைப்பற்றிய பேச்சே ஈண்டு வேண்டுவதில்லை. சடமும் சித்தும் பிரிவற்ற இரண்டு. சித்தின் துணையின்றிச் சடம் ஒன்றுஞ் செய்வதாகாது . இதுவே ஸர் ஓலிவர் லாட்ஜ் கண்ட முடிவு.

இங்கே மனம் சடமா சித்தா என்னும் கேள்விக்கு என்ன பதிலிறுப்பது? மனம், தோற்ற நிலை இறுதி என்னும் மாறுத லுடையது. இம்மாறுதல் சித்துக்குக் கிடையாது. ஆதலின், மனம் சடம் என்று பதிலிறுக்க. அது மாயா (சடத்தின்) காரியங்களிலொன்று; சித்தின் கலப்பாலும் துணையாலும் இயங்குவது.

இடமும் தோற்றமும்

இனி, மனம் எங்கே இருக்கிறது? அதன் தோற்றம் எப்படி? என்று சிறிது ஆராய்வோம்.

மனம் உள்ள இடத்தைப்பற்றி வெளிவந்துள்ள கருத்துக்கள் பல; பலதிறம். மேல் நாட்டு அகத்திணையர் (மனோ தத்துவர் - Psychologists) ஒருவிதமாகவும், கீழ்நாட்டுப் பண்டை அகத்திணையர் சிற்சில கருத்துக்களில் வேறுவித மாகவும் கூறியுள்ளனர்.

நம்மிடம் காண்டல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உணர்தல், எண்ணல், விரும்பல், வெறுத்தல், ஆராய்தல் முதலியன நிகழ்தல் வெளிப்படை. இவைகட்கு ஊற்று எது? காண்பன கேட்பன முதலியன எண்ணங்களாதலை அறி கிறோம். அவ்வெண்ணங்கள் எங்கே தங்குகின்றன? எங்கி ருந்து பேச்சாகவும் செயலாகவும் வெளியாகின்றன? ஒருவன் பல பாடல்களை நெட்டுருச் செய்கிறான். சமயம் நேரும் போதெல்லாம் அவைகளை அவன் பாடுகிறான்; பல முறை பாடுகிறான். பாடல்கள் எவ்வடிவில் எங்கே படிகின்றன? எப்படி வெளிப்படுகின்றன? ஓர் அறிஞன் ஒருபோது சூரியனைப்பற்றியும், மற்றொரு போது அழகைப்பற்றியும், இன்னொரு போது மின்சாரத்தைப்பற்றியும், வேறொரு போது ஒழுக்கத்தைப்பற்றியும் பேசுகிறான்.

------
இடம் பெறு ... மடம்பெறு மாயை மனமே; தன்னிலே..... பொன்னிலோ பணிபோலும் மாயை தருமனமே - தாயுமானார்.
------

பேச்செல்லாம் ஒருவனிடத்திலிருந்தே பிறக்கின்றன. மீண்டும் பலவிடங்களில் அவைகளைப் பற்றி அவனே பேசுகிறான். கருத்தும் பேச்சும் ஒவ்வொரு போதும் இடையீடின்றி அவ்வொருவனிடத்திருந்தே சுரந்து வருகின்றன. இவையெல்லாம் ஒருவனிடத்தில் எங்கே மண்டிக் கிடக்கின்றன? இன்னோரன்ன கேள்விகள் பல எழுப்பிப் பார்ப்போம்; சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாக உலகம் என்ன கூறுகிறது? உள்ளம் - மனம் - என்று கூறுகிறது. ஒன்றும் அறியாத ஒருவன் - கல்வி அறிவில்லாத ஒருவன் - ஆராய்ச்சி மூலையுந் தெரியாத ஒருவன் - மனம் என்று முடிவு சொல்கிறான். ஆனால் படித்தவர் பல கூறுவர். சாதாரண உலகம் காரணங் காணாது சொல்லி வந்தனவற்றுள் எவ்வளவோ விஞ்ஞான உலகால் காரணத்துடன் உறுதி செய்யப் பெற்றமை உலகுக்குத் தெரியும்.

மனம் எங்கே இருக்கிறது? சாதாரண மனிதன் இங்கே இருக்கிறது' என்று நெஞ்சத் தாமரையில் கை வைப்பான். அகத்திணையர் - மேல் நாட்டு அகத்திணையர் - கீழ்நாட்டு அகத்திணையர் - என்ன சொல்கிறார்? பார்ப்போம்.

மூளையும் மனமும் - மேல் நாட்டார் கருத்து

மேல் நாட்டார் பொதுவாக மனம் மூளையிலிருக்கிறது என்கிறார். அவர், மூளை மற்ற உறுப்புக்களுடன் தொடர்பு பெற்றிருத்தலையும், அத்தொடர்பு நரம்புகளால் ஆக்கப்பட் டிருத்தலையும், மூளை நரம்புத் தொடைகளால் வேயப்பட்டிருத்தலையும், அத்தொடைகளை வேறு பல மெல்லிய நரம்புக் கோப்புக்கள் காத்து வருதலையும், அக்கோப்புக்களைக் காக்க மிக மெல்லிய மூல நரம்புகளிருத்தலையும், அவைகளினூடே மிக மிக நுண்ணிய அறைகள் செறிந்திருத்தலையும் முறை முறையே விளக்கி, அவ்வறைகளின் செறிவில் ஒருமைப்பா டிருக்கிறதென்றும், அவ்வொருமைப்-பாட்டினின்றும் உருக் கொள்வது மனம் என்றும் நிருவிக் காட்டுகிறார். மனத்தை அவருட் சிலர் பண்பு என்கிறார்; சிலர் விளைவு என்கிறார்; சிலர் பொருள் என்கிறார். மேல் நாட்டு அகத்திணையரிடையுஞ் சிற்சில கருத்து வேற்றுமைகளுண்டு.

தொடர்பு
மூளைக்கும், நரம்புத் தொடைகட்கும், மனத்துக்கும் தொடர்பிருப்பின், அவைகட்கு ஊறு நேருங்கால், இதற்கும் ஊறு நேர்தல் வேண்டுமன்றோ? அப்பொழுது ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருத்தல் உறுதிப்படும்.

வண்டியில் போன இராமன் மீது கோவிந்தன் கல்லெறிந்தான். அவன் தலையில் பலத்த காயம் பட்டது. இராமன் மயங்கி விழுந்தான். சிகித்சை செய்யப்பட்டது. அவன் கண் விழித்தான்; வாய் குழறினான். அவனுக்குத் தனது தம்பி பெயர் நினைவுக்கு வரவில்லை. காரணம் என்ன? மூளையில் ஏற்பட்ட கலக்கம் மனத்துக்கும் ஏற்பட்டமையாகும்.

ஒருவன் நள்ளிருளில் 'முத்திநெறி அறியாத' என்று பாடி வழியே சென்றான். வேகமாக ஓடிவந்த ஒரு மோட்டார் வண்டி அவனை மோதிற்று. அவன் கீழே விழுந்தான்; மருத்துவச்சாலைக்கு எடுத்துச் செல்லப் பெற்றான். மருத்துவர் சிகித்சை செய்தனர். கனவு உணர்வு சிறிது பிறந்தது. பிறந்ததும் அவன் வாய், 'மூர்க்கரொடு முயல்வேனை' என்று பாடிற்று. சூழ்ந்திருந்தவர்க்கு ஒன்றும் விளங்கவில்லை. பொழுது புலர்ந்தது. சூழ நின்றவருட் சிலர் அவனை நோக்கி, "என்ன அப்பா! இரவு சிறிது உணர்வு பிறந்ததும், மூர்க்க ரொடு முயல்வேனை' என்று பாடினையே" என்று கேட்டனர். "யான் முத்திநெறி அறியாத' என்று பாடத் தொடங்கிய வேளையில் மோட்டாரால் மோதப் பெற்றேன். பின்னே விளைந்தது ஒன்றுந் தெரியாது. என் வாய், 'மூர்க்கரொடு முயல்வேனை' என்று பாடியதும் எனக்குத் தெரியாது' என்றான். பலர்க்கு வியப்பூட்டிற்று. மூளை ஆராய்ச்சியில் வல்லவர் ஒருவர் அங்கே போந்தனர். அவரிடம் நிகழ்ச்சிகள் சொல்லப்பட்டன. முத்திநெறி அறியாத' என்று அவன் பாடிய வரை அவனது மூளைக்கும் மனத்துக்கும் இடையிலுள்ள தந்தி நரம்புகள் நன்னிலையிலிருந்தன என்றும் , மோட்டார் அவனை மோதியபோது அந்த நரம்புகட்குக் கலக்கம் நேர்ந்தது என்றும், பாட்டின் தொடர்ச்சி அப்படியே அவன் மனத்தில் படிந்து கிடந்தது என்றும், கனவு உணர்ச்சி உற்றபோது மூளை நரம்புகட்கும் மனத்துக்கும் ஏற்பட்ட தளர்ச்சி ஓரளவில் நீங்கியது என்றும், மனத்தில் முன்னரே படிந்து கிடந்த பாட்டின் மற்றப் பகுதியை அவனை அறியாமலே அவன் வாய் விரைந்து வெளியிட்டது என்றும் விளக்கஞ் செய்தனர்.

சேந்தன் பேட்டையில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் பாக்களை ஆயிரக் கணக்கிற் பாடஞ் செய்தவர்; தங்கு தடை யின்றி அப்பாக்களைப் பாடவல்லவர். குடும்பத்தால் அவர்க்குக் கவலை நேர்ந்தது. தங்கு தடையின்றிப் பாடும் வல்லமை அவரை விடுத்து அகன்றது. ஓரடி பாடுவார்; மற் றோரடி நினைவுக்கு வருவதில்லை. அவரே காந்தன் பேட்டைக் குச் சென்று சில நாள் தங்கினார்; நன்றாக உண்டு உறங்கினார். அவரிடம் பாடல் எழும்பும், பாட்டுக்கள் பழையபடி தங்கு தடையின்றி வரும். காரணம் என்னை? காந்தன் பேட்டையில் கவலை பண்டிதரை விட்டு நீங்கி நின்றமை என்க. கவலையால் நரம்புத் தளர்ச்சியுறுவதுண்டு. அது மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பையும் தளர்ச்சியுறச் செய்யும்.

கவலையால் பீடிக்கப்பட்ட ஒருவனுக்குப் பகலில் அவன்றன் நண்பரின் பெயர் கூட நினைவுக்கு வருவதில்லை. அவன் இரவு உறங்கி எழும்போது நண்பர் பெயர் தானே நினைவுக்கு வரும். காரணம் உறக்கத்தில் கவலை சிறிது ஒதுங்கி நிற்றலாகும்.

ஒருவன் இயற்கை இன்பத்தில் மூழ்கி வாழ்ந்து வந்தான். எப்படியோ அவன் வெம்மை நோயால் பீடிக்கப்பட்டான். மூளையில் கொதிப்பு எறிற்று. அவனுக்கு இள ஞாயிற்றின் ஒளியும், திங்களின் நிலவும் , வானின் நீலமும், சோலையின் பசுமையும், பறவையின் பாட்டும், பெண்ணின் வனப்பும், குழந்தையின் மழலையும், வீணையின் முழக்கும், இன்ன பிறவும் இன்பூட்டுவதில்லை. எங்கே மாறுதல்? மூளையில் மாறுதல். மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பை ஓர்க. இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறலாம்.

மூளை நன்னிலையிலிருத்தல் வேண்டும். அப்பொழுதே மனமும் நன்னிலையிலிருக்கும். மூளைக்கும் மனத்துக்கும் உள்ள தொடர்பு பெரிது. அத்தகைய மூளையைக் காத்து வரவேண்டுவது மக்கள் கடமை. கஞ்சா, அபினி, கள், சாராயம் முதலி யவற்றின் மயக்கம் உறாதவாறும், வெம்மை , பித்து, நச்சுநீர் முதலியன தேங்காதவாறும், தீயொழுக்கம் முதலியவாற் றான் நரம்புத் தளர்ச்சி உறாதவாறும், வேறு எவ்வகையிலும் கேடு புகாதவாறும் மூளை காக்கப்படல் வேண்டும். மூளையின் நரம்புத் தொடைகள் பழுதுற்றபின் பொறி என் செய்யும்? புலன் என் செய்யும்? பிற உறுப்புக்கள் என் செய்யும்? இவைகள் கலக்கமுற்றுக் கேடு செய்யவும் புகும். எக்காரணம் பற்றியும் மூளையில் கோளாறு உறுதலாகாது. மூளைக் கோளாறு மனக்கோளாறாகும். ஆகவே, மூளை ஒழுங்கும், நரம்பு ஒழுங்கும், மன ஒழுங்கும் வாழ்வுக்கு இன்றியமை யாதன என்று தெளிக. இவ்வொழுங்குகள் 'உள்ளொளி விளக்கத்துக்குத் துணை செய்யும் என்பது உணரற்பாற்று.

கீழ் நாட்டார் கருத்து

கீழ்நாட்டவர் தியான யோகம் முதலியவாற்றால் மனத்தின் பரிய இயல்களையும், நுண்ணிய இயல்களையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்ந்திருக்கின்றனர். அவைகளிற் பல, வெறும் புற ஆராய்ச்சியாளர்க்கு விளங்குவதில்லை. மேல் நாட்டவர் இதுகாறும் ஆராய்ச்சியாற் கண்ட பல உண்மைகள், கீழ்நாட்டவர் அனுபவத்திற் கண்ட நுட்பங்களையெல்லாம் தெளிவு செய்தற்குப் பெரிதும் துணைபுரியும் நிலையை இன்னும் அடையவில்லை என்று கூறுதல் மிகையாகாது.

கீழ்நாட்டு அகத்திணையர், மனம், விழிப்பில் பெருமூளையில் நிலவுகிறதென்றும், கனவில் சிறு மூளையில் இறங்குகிறதென்றும், உறக்கத்தில் இதயம் நண்ணுகிறதென்றும், ஞானயோகியர் மனத்தைத் தம் வயப்படுத்தி அதை ஆட்டவல்லவரென்றும், இவர் மனத்தை உடலுள் எவ்விடத் தும் நிகழச்செய்வரென்றும் கூறுப. கீழ்நாட்டவர் கண்ட நுட்பங்கள் பேச்சையும் எழுத்தையும் கடந்து செல்வன; அனுபவத்தில் விளங்குவன. எதற்கும் சொந்த அனுபவமும் தேவை. அதுவே பெரிது.

மனமுள்ள இடத்தைக் காண ஆழ்ந்த ஆராய்ச்சியில் புகவேண்டுவதில்லை. நாம் [$]காண்பன கேட்பன எண்ணுவன உணர்வன முதலியன ஓரிடத்தினின்றும் தோன்றி நின்று ஒடுங்குதல் உண்மை . அவ்விடம் ஒரு நுண்ணிய கருவியாகவே இருத்தல் வேண்டும். அஃது எது என்று எண்ணி எண்ணி அதனூடே ஆழ்ந்து செல்லச் செல்ல அதன் இடம் இயல் முதலியன விளங்கும்.
------
[$]. 'Mind' is a name given to the sum of the states of (consciousness grouped under thought, will and feeling. - The Secret Doctrine 1 : 111
---

கீழ்நாட்டவர் வெளியிட்டுள்ள கருத்துக்களிற் சிலவற்றைத் தொகுத்துக் கூற விரும்புகிறேன். இந்நாட்டவர் ஆராய்ச்சி, தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர் மனத்தை ஒரு தத்துவமாகக் கொண்டனர். தத்துவம் என்றதும் மருட்சி யடைய வேண்டுவதில்லை; தலைக் குத்தல் என்று கருத வேண்டுவதில்லை. உழைப்புத் தேவை. உழைப்பில் வாரா உறுதிகளில்லை.

மாயை வகை

தத்துவம் என்பது மாயாகாரியம்; [1] மாயை சடம். இயற்கை என்றுஞ் சொல்லப்படும். மாயை மூன்றுவிதம். அவை, சுத்தம் அசுத்தம் பிரகிருதி என்பன. சுத்த மாயை மிக நுண்மை வாய்ந்தது. அதன் பருமை அசுத்த மாயை. அசுத்த மாயையின் திண்மை பிரகிருதி மாயை. சுத்தம் ஆவி போன்றது. அசுத்தம் நீர் போன்றது. பிரகிருதி கட்டி போன்றது. சுத்தத்தின் காரியம் –[2]ஐந்து. அசுத்தத்தின் காரி யம் [3]ஏழு . பிரகிருதியின் காரியம் இருபத்து நான்கு[4]. ஆக முப்பத்தாறு காண்க. இம் முப்பத்தாறுந் தொகை. இவற்றின் வகை தொண்ணூற்றாறு. தொண்ணூற்றாறு தத்துவங்களின் காரியங்களே தனு கரண புவன போகங்கள்.

கலா தத்துவம்

[5] உயிரின் அறியாமையை நீக்கித் தன்னைப்போல் அறிவாக்க இறைவன் அதற்கு மாயா காரியங்களாகிய தத்துவங்களைத் தனு கரண புவன போகங்களாகச் சேர்க்கிறான். அவைகளால் உயிர் சிற்றறிவும் சிறுதொழிலும் பெற்று விளக்கம் அடைகிறது. பொதுவாக எல்லாத் தத்துவங்களா லும் உயிர் விளக்கம் பெற்றாலும், சிறப்பாக ஒன்றினால் அஃது அதிக விளக்கம் பெறுவதாகிறது. அஃது எது? அது கலா தத்துவம்.
-------
[1] அநாத்ம மூலம் மாயா - யஜுர்வேத ஸர்வஸாரோபநிஷத்
[2]. நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை .
[3]. புருடன், மாயை, வித்தை , அராகம், நியதி, கலை, காலம்.
[4]. சித்தம், அகங்காரம், புத்தி, மனம், உபத்தம், பாயு, பாணி, பாதம், வாக்கு, சுரோத்திரம், துவக்கு, சட்சு , சிங்குவை, ஆக்கிராணம், சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி.
குறிகளோடு ... [5]அறிவதேதும் அற அறிவிலாமை மயமா யிருக்குமெனை அருளினால் அளவிலாத தனுகரணமாதியை அளித்த போதுனை அறிந்து நான் - தாயுமானார் .
-----

உயிர் , விளக்கத்தின் பொருட்டுப் பல தத்துவங்களைப் படிப்படியே இறைவன் அருட்டுணையால் பெற்று வருங்கால், அது [1] கலை நியதி காலம் வித்தை அராகம் என்னும் ஐந்தில் படியும் போது புருடன் ஆகிறது. இவ்வைந்தும் பஞ்ச கஞ்சுகம் எனப்படும். இவைகளை உயிர் பெறும்போது சிறிது விளக்கம் பெறுகிறது. உயிர் தன்னைச் சீவன் - புருடன் - என்று உணர்வதாகிறது. இவ்வுணர்வாகிய விளக்கத்தை நல்குவது கலா தத்துவம்.
--------
மருவிய ...... [1]கலாதிக ளைந்துங் கூடி - ஒரு புலனுகரும் - சிவப்பிரகாசம்.
---------

மனம்

இக்கலையாலும் அதன் இனத்தாலும் பிறக்கும் புருடன், காண்டல் கேட்டல் முதலியவற்தைத் தானே நிகழ்த்தல் அரிது. புருடனுக்குத் துணை தேவையாகிறது. அத் துணை - மனம் என்பது.

பருஉடலில் ஐம்பொறிகள் மலர்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புலன் உள்ளது. புலன் வாயிலாக மனம் காண்டல் கேட்டல் முதலியவற்றை நிகழ்த்து கிறது. மனமின்றிப் பொறி புலன்களே காண்டல் கேட்டல் முதலியவற்றை நிகழ்த்த ல் அருமை. ஒருவன் கண் ஓர் அழகுப் பொருளில் ஈடுபட்டு அதன் வயப்பட்டது. அவ்வேளையில் ஒருவன் குழல் வாசிக்கிறான். அக் குழலோசை, அழகுக் காட்சியில் ஈடுபட்டவனுடைய செவியில் நுழைவதில்லை. ஏன்? மனம் கட்புலனில் ஒன்றி நின்றமையால் என்க. மற்றொருவன் செவி நல்லிசையில் ஈடுபட்டு அதன் வயமாகியது.

அந்நேரத்தில் அழகே வடிவு கொண்டாலென ஓர் உருவம் அவன் முன்னே உலவுகிறது. மைந்தன் கண்ணில் அழகு உருவம் தோன்றவே இல்லை. ஏன்? மனம் செவிப் புலனில் ஒன்றுபட்டு நின்றமையால் என்க. இவை களால் காண்டல் கேட்டல் முதலியவற்றை நிகழ்த்துவன கண் செவி முதலியன அல்ல என்பதும் அவைகளை மெய்ம்மையில் நிகழ்த்துவது மனமே என்பதும் விளங்குகின்றன.

புருடன், காண்டல் கேட்டல் முதலியவற்றை ஆற்ற மனத்துணை தேவை. மனம், பொறி புலன்கள் வாயிலாகத் தன் கடனைச் செய்கிறது. எனவே, மனம் புருட தத்துவத் துக்கு முன்னும், பொறி புலன்கட்குப் பின்னும் நின்று இயங் குவதென்று சொல்லலாம். மனம், புருடனுக்கும் புலன் களுக்கும் இடையே உழலும் தூது என்று கொள்க. தைச்ச அகங்காரமும் சாத்துவிகமும் கூடியவிடத்துக் காரியப் படுவது மனம் என்று தத்துவர் கூறுவர். பொதுமை நோக் கிப் புருடனுக்கும் மனத்துக்கும் இடையேயுள்ள சில கருவி கரணங்கள் இங்கே சொல்லாமல் விடப்பட்டன.

வேறு முறை

இன்னும் ஒரு முறையால் மனத்தைக் காண முயல்வோம். உடல் நிலைகளைக் கொண்டும் மனத்தின் இருப்பை உணர்தல் கூடும். உடல் வகை எத்தனை? மூன்று. ஒன்று பருமை; மற்றொன்று நுண்மை; இன்னொன்று முதன்மை இவை முறையே தூலம், சூக்குமம், காரணம் எனப்படும். பருஉடலின் (தூல சரீரத்தின்) உறுப்புக்களின் செயல்கட் கெல்லாம் மூலமாயிருப்பது நுண்ணுடல் (சூக்கும சரீரம்). நுண்மை, பருமைக்கு ஆதாரமாக நின்று அதை இயக்குவ தென்பது இயற்கை விதி. பொறி புலன் முதலிய கருவிகள் வாயிலாகப் பருவுடலைப் புருடன் உதவியால் இயக்குவது மனம் என்றுஞ் சொல்லப்படுகிறது. பருவுடலை இயக்குஞ் சூத்திரதாரி எது? நுண்ணுடலா? அல்லது மனமா? இரண் டுமா? பருவுடலை இயக்குவது ஒன்றே. அது நுண்ணுடல் என்றுஞ் சொல்லப்படுகிறது; மனம் என்றுஞ் சொல்லப் படுகிறது. இதனால் அறியக்கிடப்பதென்னை? நுண்ணுடலும் மனமும் ஒன்றென்பது.

நுண்ணுடலே மனமென்றும் மனமே நுண்ணுடலென்றும் கொள்ளல் தவறு என்றும், மனம் நுண்ணுடலின் ஒரு கூறு என்றும் சொல்வோரும் உளர். தத்துவ உலகில் நுழைந்துள்ள சிறு சிறு கருத்து வேற்றுமைகளை ஈண்டு நுணுகி ஆராயப் புகுவது அநாவசியம். அநுபவ மில்லாதார் கூற்றுக்களும் இடைக்காலத்தில் தத்துவ உலகில் புகுந்தன. தத்துவ உலகம் சாற்றும் புல்லிய வேற்றுமைகள் அனுபவத் தில் தோன்றுவதில்லை.

மனத்தின் நிலைகள்

இனிச் சிறிது நேரம் மனத்தின் நிலைகள் மீது எண்ணஞ் செலுத்துவோம். மனத்தின் நிலைகள் பலபடப் பேசப்பட் டுள்ளன. அவைகள் மூன்றாகவும் இரண்டாகவும் தொகுக்கப்படலாம். மனத்தின் மூன்று நிலைகள் மேல் (புறம்) நடு - அடி - என்பன. இம்மூன்றும் புறம் அகம் என்னும் இரண்டில் அடங்கும். புறமனம் அகமனம் (அடிமனம்) என்னும் ஆட்சியே பெரிதும் வழக்கிலிருப்பது. நடுமனம் என்பது புறத்தின் கடையிலும் அகத்தின் விளிம்பிலும் இருப்பது. புறத்தையும் அகத்தையும் தொடர்புபடுத்தி இருப்பது நடு. நடுவைப் புறத்திலோ அகத்திலோ சேர்த்து, அதை விடுத்துப் புறத்தையும் அகத்தையுங் கொள்வதும் மரபே. ஆகவே, மனத்தின் கூறுகளை மேல் - நடு - அடி - என்று மூன்றாகவோ, புறம் அகம் என்று இரண்டாகவோ கொள்ள லாம். கருத்துக்களை நன்கு வெளியிடுதற்பொருட்டு இங்கே மன நிலைகளை மூன்றாகவே கொள்கிறேன்.

ஒவ்வொன்றையும் சுருங்கச் சொல்லும் கடமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் பலதிற ஐயப்பாடுகட்கு இடம் உண்டாகலாம். என் செய்வேன் ! இங்கே பேசப்பட்ட மேல் மனம் நடுமனம் அடிமனம் என்பன வெவ்வேறாகப் பிரிந்து இடை விட்டு நிற்பன அல்ல. விவகாரத்தின் பொருட்டு நிலை , இங்கே மனம் மனம் என்று பேசப்படுகிறது. மனம் ஒன்றே. அது மூன்று நிலைகளை எய்துகிறது. மேல்மனமென்னும் புறமனமே ஒருநிலையில் நடுமனமாகும்; மற்றொரு நிலையில் அடிமனமாகவும், இன்னொரு நிலையில் ஒன்றுமில்லாததாகவும் மாறும். பொருளின் நிலைகளை விளக்கத்தின் பொருட்டுத் தனித்தனி வேறுபடுத்திப் பேசுவதும் ஒருவித மரபு.

காட்டினின்றும் புதிதாகக் கொணரப்பெற்ற ஒரு குதிரை மருளாது வழியே விரைந்து ஓடுமோ? அது புரியும் தொல்லைக் கோர் அளவுமுண்டோ ? அது பண்படப் பண்பட அதன் மூர்க்கம் சிறிது நீங்கும்; ஒரோவழியில் (ஏகதேசத்தில்) மருண்டு மருண்டு ஓடுவதாகும். முற்றும் பண்பட்டு மூர்க்கம் அறவே ஒழிந்தால், அக்குதிரை தன்னை ஓட்டு வோன் உறங்கினும் தானே வழிபற்றி ஏகுவதாகும். குதிரை போன்றது மனம். ஒரே குதிரை மூன்று நிலை எய்துகிறது. ஒரே மனம் மூன்று நிலை அடைவதாகிறது. நிலைமைகளில் விளையும் மாறு பாட்டால் மன இயல்புகளும் மாறுபடும்.

மனத்தின் மூன்று நிலையும் நாடோறும் நமது அனுபவத்தில் ஒருவாறு விளங்கியே வருகின்றன. இதை எளிதில் உணர லாகும். சிந்தனா சக்தியால் உண்மை தெளிதல் கூடும். நமது வாழ்க்கையில் விழிப்பு, கனவு, உறக்கம் உற்று வருகின்றன. விழிப்பில் உழல்வது புறமனம். இதனை வலியுறுத்த ஏதுக்கள் எதுவும் வேண்டுவதில்லை. அநுபவமே சாலும். கனவில் புற மன ஆட்டம் இருக்கிறதா? இல்லை. பின்னை எது அங்கே இயங்குகிறது? நடுமனம். புறமனத்தின் குவியலே நடுமனம். புறமனம் புலன்களுடன் கலந்து விழிப்பில் உழல்கிறது. கனவில் அது புலன்களின் கலப்பை இழந்து நடுமனமாகிறது.

கனவு கடந்த உறக்கத்தில் நடுமனம் அடியிற் செல்கிறது. அதனால் அஃது அடிமனம் என்று அழைக்கப்படுகிறது. அடிமனம் படிப்படியே தன திருப்பைக் குலைத்துக் குலைத்து ஒடுக்கமுறுவதாகும். (உறக்கத்தில் மனம் வெளிவந்து உலவு கிறது என்று சில யோகியர் கூறுப. அப்பொழுது உயிரைக் காத்து நிற்பது பிராணன். விழிப்புறுங்கால் பிராணன் மிக விரைந்து மனத்துக்குச் செய்தி அனுப்பும். மனம் தன்னிடம் புகுந்து கடனாற்றும்.) விழிப்பிலும் கனவிலும் உறக்கத்திலும் மனம் உறும் நிலைகள் தியான யோகப் பெருக்கில் நன்கு விளங்கும்.

புறமனம் அலைவதென்பதும், நடுமனம் மருளுக்கு (ஹிப்னோடிஸ நிலைக்கு) உரியதென்பதும், அடிமனம் தியான யோகத்துக்கு உரியதென்பதும் ஈண்டுக் குறிக்கற்பாலன. இக்குறிப்பு , பின்னே மனத்தைப்பற்றி வருவனவற்றிற்குத் துணை செய்வதாகும்.

புறமனம்

மேல் மனமென்னும் புறமனம் பொறி புலன் முதலிய கருவிகளுடன் கூடி வினைகளை ஆற்றுகிறது. இம்மனம் குறும்புகள் பலவற்றிற்கும் மூலமாக நிற்பது என்று சொல்லப்படுகிறது. இதைப் [1]பேயென்றும் குரங்கென்றும் ஆன்றோர் இழித்துக் கூறியுள்ளனர். இப்பொல்லா மனத்தை அடக்கி வயப்படுத்துவதன் [2]அருமைப்பாட்டை அநுபூதி-மான்களும் அருளியுள்ளார்கள்.

---------

பாராதி ... [1]பேய்மனதை அண்டியே; பொறியிற் செறி... மறுகிச் சுழலும் மனக்குரங்கு; கூறாய் ...... குணமிலா மன மெனும் பேய்க்குரங்கின்; மனமான வானரக் கைம்மாலை யாகாமல். - தாயுமானார்.
பூதலய மாகின்ற ... [2]பாதரச மாய்மனது சஞ்சலப் படும் லால் பரமசுக நிஷ்டை பெறுமோ; பட்டப் பகற்பொழுதை..... நடுவே முளைத்த மனதைக் கட்டஅறியாமலே வாடினேன்; எனதென்பதும் ... மளதென்பதுமோ என் வசமாய் வாராது - தாயுமானார்.
------

பொல்லாத புறமனம் குவிந்து குவிந்து நடுமனமாகித் தன் குறும்புச் சேட்டைகளினின்றும் படிப்படியே விடுதலை யடையும் இயல்பும் உடையது. நடுமனம் விளக்கமுறுந் தறுவாயில் அது புறமனக் காலால் உதையுண்ணும். அவ் வேளையில் அதை மிக எச்சரிக்கையாக நடத்தல் வேண்டும். நடுமானத்தை நல்வழியில் நடத்தும் பயிற்சி இன்றியமை யாதது. நடுமனம் நல்வழியில் செல்லச் செல்ல அதற்குப் புறத் தாக்குதல் படிப்படியே அற்றுப்போகும். அது பலவித அருஞ் செயல்கள் நிகழ்த்துவதாகும். நாளடைவில் அஃது அடிமன மாகும். அடிமனம் அரும்பும் போதே அஃது அறத்தின் உறையுளாகும். எல்லா நலன்களும் முளையும் இடம் அதுவே என்று சுருங்கச் சொல்கிறேன்.

நடுமனம்

புறமனம் பொறி புலன் முதலிய கருவிகளுடன் கலந்து உலகுடன் தொடர்பு கொள்ளும் ஒன்றாதலாலும், அதன் செயல்கள் பெரிதும் வெளிப்படையாக விளங்கி வருதலா லும் அதைப்பற்றி விரித்துரைப்பது அநாவசியம். அடிமனம் பண்பட்டதொன்றாதலாலும், அஃது ஒடுக்கமுறும் இயல்பின தாதலாலும் அதைப்பற்றியும் விரிவுரை பெரிதும் வழங்க வேண்டுவதில்லை. ஆதலின், நடுமானத்தைப் பற்றிச் சிறிது பேசலாமென்று கருதுகிறேன்.

புறமனம் பொறிபுலன்களின் வழி உழன்றே உலகுடன் தொடர்பு கொள்கிறது. அதனால் அதற்குப் பொறி புலன்களின் கலப்புத் தேவையாகிறது. அக்கலப்பின்றிப் புறமனம் ஒன்றும் செய்யாது. புறமனம் பொறி புலக் கட்டுடைய தாதல் கருதற்பாலது. நடுமனம் பொறி புலன்களின் கலப் பில்லாமலே இயங்கவல்லது. இதற்குப் பொறி புலக் கட்டில்லை. கட்டுடைய ஒன்றினும் கட்டற்ற ஒன்று சக்தி வாய்ந்ததென்று சொல்லலும் வேண்டுமோ?

யான் இங்கே இருக்கிறேன். எனது புறமனம் இங்கிருந்த படியே பல்விடங்கட்குப் பறந்து செல்லும். அம்மனம் உங்களைப் பார்க்கிறது; காவேரியைக் காண்கிறது; பொதிகையில் புகுகிறது; கன்னியைச் சார்கிறது; கங்கையை அடைகிறது; இமயத்தை நண்ணுகிறது; சீனத்திற் செல்கிறது; சைபேரி யாவைச் சேர்கிறது; நியுயார்க்கை நாடுகிறது; லண்டனுக் குப் போகிறது; பம்பாய் வருகிறது; உங்களை நோக்குகிறது. இவைகளிற் சில யான் கண்டன; சில கேட்டன. காணாதன வும் கேளாதனவும் புறமனத்தில் இடம் பெறுமா? இடம் பெறா. புறமனம் குவிந்து நடுமனம் விழித்து எழுந்தால் காணாதனவும் கேளாதனவும் எளிதில் விளங்கும்; நனி விளங்கும்.

மானதக் காட்சி

இங்கே புறமனத்துக்கும் நடுமானத்துக்கும் உள்ள வேற்றுமையைக் கவனியுங்கள். புறமனம் பொறி புலன்களின் கலப் புடையது. அதனால் அது கட்டு உடையதாகிறது. நடுமனமோ பொறி புலன்களின் கலப்பில்லாதது. அதனால் அதை எப் பொறியும் எப்புலனுங் கட்டுப்படுத்தவதில்லை. குருடரும் செவிடரும் நடுமனம் நன்கு விளங்கப்பெறுவராயின், அவரும் ஓரிடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் அறியும் பேறு பெறுவர். நடுமன விளக்கம், மானதக் காட்சி - யோகக் காட்சி - என்று வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தண்டியடிகள் என்றொரு நாயனார் இருந் தனர். அவர் குருடர். அவர் நாட்டமிகு தண்டி' என்று வன்றொண்டரால் போற்றப்பெற்றார். 'நாட்டம்' புறத்தை உணர்த்துவதன்று; அகத்தை உணர்த்துவது.

இப்பெற்றி வாய்ந்த நடுமன விளக்கம் நமக்கு வேண்டுமா? வேண்டாவா? வேண்டா என்று அறிஞர் எவரும் கருதார். அவ்விளக்கம் பெற முயல்வது அறிவுடைமையாகும். அதைப் பெறும் வழி முதலியவற்றைக் குறித்துப் பின்னே பேசுவன். நடுமனப் படிகளில் ஆள் ஏறுங்கால் சில விசித்திரங்கள் ஆங்காங்கே நிகழும். இதற்குப் பலருடைய வாழ்க்கைக் குறிப்புக்களிருக்கின்றன. அவைகளைச் சுருங்கிய முறையில் குறித்துச் செல்லினும் கால வரம்பு கடத்தல் நேரும். ஆதலால் சிலருடைய வாழ்க்கைக் குறிப்புக்களை ஆங்கொன்று ஈங்கொன்றாகத் தூவிச் செல்கிறேன். மன்னித்தல் வேண்டும்.

சில நிகழ்ச்சிகள்

கூல்ரிட்ஜ் வழக்கம் போலப் பாட்டு எழுதப் புகுந்தார். ஒருபோது தடை ஏற்பட்டது. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கண்கள் சோர்ந்தன. பொறி புலன்களின் கூட்டுறவு அற்றது. அந்நிலையில் அவர்தங் கை எழுதத் தொடங்கியது சிறிது நேரங் கடந்து கூல்ரிட்ஜின் கண்கள் திறந்தன. அவர் பாட்டு முற்றுப்பெற்றிருத்தல் கண்டார்; வியப்படைந்தார்; யார் எழுதியது' என்கிறார்; கையெழுத்துத் தம்முடையதா யிருத்தலைக் காண்கிறார்; கனவு நினைவாகி எழுத்தாகியதை உணர்ந்து கொண்டார். புறத்தால் ஆகாத ஒன்றை அகம் ஆக்கியது!

புராக்டர் என்பவர் சதுரங்க ஆட்டத்தில் தலைப்பட்டார். அவருக்குத் தூக்கம் வந்தது. அவர்தங் கை மட்டும் 'யானை' யையும் குதிரை' யையும் உருட்டிக் கொண்டிருந்தது. அவரே வெற்றி பெற்றார். புராக்டர் கண் விழித்தார்; நண்பர் வாயிலாக வெற்றியை உணர்ந்தார்; வியப்புற்றார். கனவு நினைவாகிச் செயலாகியது ! அகக்கண் செய்யும் அற்புதம் என்னே! என்னே! ஓரிடத்தில் விளங்கப்பெறாத அரிய கணிதம் புராக்டரின் கனவில் விளங்கியதாம்.

நடுமனம் மலர மலர விழிப்பிலேயே பல அரிய காரியங்களை நிகழ்த்தும் ஆற்றலை அது பெறுவதாகிறது. டாக்டர் ஸேஜ்ஜைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் வேகமாக ஓடிய இயந்திரத்தை நிறுத்தியதும், கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஒரே சமயத்தில் ஒரு கணத்தில் துயிலச் செய்ததும் விழிப்பில் நிகழ்ந்தனவே.

லண்டனில் ஹைட்பார்க் என்று ஒன்றுளது. அவ்விடத்தில் பாம்பே கிடையாதென்று பேசப்பட்டதாம். அங்கிருந்த ஹிப்னோடிஸ்ட் ஒருவர், 'நாளை இங்கே பாம்புகளே மலியும்' என்றார். அவர்தங் கூற்று நகரில் பரவிற்று. அடுத்த நாள் மக்கள் கூட்டம் பார்க்கில் திரண்டது. ஹிபனொடிஸ்டும் அங்கே போந்தார். எங்கணும் பாம்புகளே மலியலாயின. அறிஞரின் நடுமனம் எதை எண்ணியதோ அது, அதுவாகவே எங்கும் காட்சியளித்தது.

மேல் நாட்டில் ஒரு சகோதரியார் பிறர் எண்ணுவனவற்றை, அவரவர் உள் நுழைந்து நேரிற் கண்டாற்போல அவ்வவ்வாறே உடன் உடன் வெளியிட்டு வந்தனர். இந்நாளில் சிலர் அச்சக்தி பெற்றுள்ளனர். சிற்சிலர் சக்தியைத் துர்விநியோகஞ் செய்கின்றனர். நடுமன விழிப்பு என்னவே செய்யாது!

ஐரோப்பாவில் முன்னொரு போது ஒரு மகாயுத்தம் நடைபெற்றது. ஓரிடத்தில் ஒரு பக்கம் ஒரு பட்டாளம் அமர்ந்திருந்தது. இரவில் சுற்றுப்பக்கங்களில் ஆங்காங்கே காவலாளர் நிறுத்தப்பட்டனர். காவலாளரைச் சோதிக்கச் சேனைத் தலைவர் வருவர்; போவர். ஒரு காவலாளியைத் தூக்க மயக்கம் அடர்ந்தது. அவன் மயங்கினான். ஆனால் அவன் நன்றாகத் தூங்கினானில்லை. அந்நிலையில் அவனது கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. தலைவர் வந்தார், குதிரையொலி கனவு நிலையிலுள்ள காவலாளிக்குத் தெரிந்தது. உடனே அவன் எழுந்து பக்கத்திலிருந்த ஒரு பெரும் பீரங்கியைத் தூக்கிச் சுமந்து நின்றான். தலைவர் அக்காட்சியைக் கண்டார்; குதிரையை விடுத்து இறங்கினார்; காவலாளியை அணுகினார். காவலாளி விழிப்பிலில்லை. தலைவர் சிலரைக் கூவி அழைத் தார். அவர் தங் கூச்சல் காவலாளியை விழிக்கச் செய்தது. தலைவர் காவலாளியை நோக்கி, 'என்ன! இவ்வளவு பெரிய பீரங்கியை எப்படித் தாங்கி நிற்கிறாய்' என்று கேட்டார். கேட்டதும் காவலாளியின் புறமனம் புலன்களுடன் சேரலாயிற்று. உடனே பீரங்கி அவனை உறுத்திக் கீழே விழுந்தது. மனம் புலன்களில் கலவாத காலத்தில் அதற்கு உண் டாகும் வல்லமை வருணனைக்கு எட்டுவதோ?

சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளை நீங்கள் அறிவீர்கள். அவர்தம் அருமைப் புதல்வர் வித்வான் மறை திருநாவுக்கரசு இளைஞராயிருந்த ஞான்று நோய்வாய்ப்பட் டார். மருந்துகளால் பயன் விளையவில்லை. அடிகள் தம் புதல்வரை ஒருவித அறிதுயிலில் அமர்த்தினார்; தம் மனத்தின் வழியே புதல்வர் மனத்தை இயங்கச் செய்தார்; 'நோயே போ' என்றார். நோய் அரசை விடுத்து அகன்றது.

மறை திருநாவுக்கரசரின் அன்னையார் அறிதுயிலில் காணும் நிகழ்ச்சிகள் விழிப்புலகில் நடப்பனவாகின்றன. தமது புதல்விமாருள் ஒருவர் ஒரு கேணியில் விழுந்ததாக அம்மையார் ஒரு போது அறிதுயிலில் கண்டனர். அவர் கண்டது நினைவுலகில் நிகழ்ந்தது. மற்றுமொரு போது அம்மை யார் தம் மூத்த புதல்வியார் கோவையில் இறந்துபட்டதாகக் கனவுலகில் கண்டார். காலையில் தம் மூத்த புதல்வியார் இறந்துபட்ட செய்தி அம்மையார்க்குக் கிடைத்தது.

இவைகளிற் சில யான் நூல்களிற் படித்தவை; சில கேட்டவை. கண்டன சில கூற விரும்புகிறேன்.

இராயப்பேட்டையில் அயோத்திதாஸ் பண்டிதர் என்ப வர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த மருத்துவர்; நூலாசி ரியர்; தமிழ்நாட்டில் பெளத்தம் வளர்த்தவர். அப்பண்டித ரிடம் ஒற்றைத்தலை நோயர் வரும்போதெல்லாம் அவர் மருந்து கொடுப்பதில்லை. அவர் நோயாளரின் தலையில் ஒரு பாதி வளைந்த இரும்பைத் தடவுவர். நோய் தீர்ந்துவிடும். தேள் கொட்டலுக்கும் பாம்புக் கடிக்கும் பண்டிதர் மருந்து சிகித்சை செய்வதில்லை. அவர் புன்னகை புரிந்து கொண்டே தமது தலையைச் சொரிவர். கூக்குரலிட்டும் அழுதும் புரண்டும் வந்தவர் சிரித்து நிற்பர். தீராத மயக்கங்களை யெல்லாம் அயோத்திதாஸர், ஆட்களைத் தமது முன்னே இருத்தி அவர்களை உற்று நோக்கி நோக்கிக் குணஞ் செய்வர். பண்டிதர் தமது செயல்களைப் பெருமிதமாகப் பேசுவதில்லை. அவர், "சில நாள் பயிற்சி செய்தால் எல்லார்க்கும் இச்சக்தி உண்டாகும்' என்பர். மூலம் நடுமன விளக்கமே.

யான் சிறுவனாயிருந்தபோது சென்னைக் கந்தசாமி கோயில் பக்கம் சென்ற போதெல்லாம் அங்கோ ஓர் அழுக் குருவம் என் கண்ணில் படுவதுண்டு. அவரைச் 'சாமியார்' 'சாமியார்' என்று ஒரு கூட்டம் சூழ்ந்த வண்ணமிருக்கும். பல ஆண்டு கடந்த பின்னை, நண்பர் வேலூர் இரத்தினவேல் முதலியாரால் அழுக்குருவச் சாமியார் மாண்பு தெரிய வந்தது. நண்பர் ஒருமுறை அச்சாமியாரிடம் என்னை அழைத்துச் சென்றனர். இருவேமும் வழியில் பேசியவற்றின் சாரத்தை வாய் பிதற்றுவது போல அச் சாமியார் வெளியிட்டனர். அவர்தம் நடுமானத்தில் எமது பேச்சின் சாரம் படிந்து கிடந்தது. சமயம் நேர்ந்தபோது அது புறத்தே வெளியாயிற்று.

நண்பர் இரத்தினவேல் முதலியார் உயிர் நூல் பயின்று தேர்ச்சியடைந்து பி.ஏ. பட்டம் பெற்றவர். அவர்தம் பெரும்பொழுது யோகாப்பியாசத்திலேயே செல்லும். அவர் சென்னை இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபைக்குரிய 'குகானந்த' நிலையத்தில் சிலநாள் தங்கியிருந்தனர். ஒருநாள் நள்ளிரவில் அவர் வாய் பிதற்றினர். யான் விழித்து அவரை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். அவர் விழித்தெழவில்லை. அந்நிலையில் அவர்தம் வாய், பட்டினப் பாலை'யில் ஒரு பகுதியைப் பாடலாயிற்று. யான் அவரை எழுப்புவதை நிறுத்திக் கொண்டேன். 'உரை சொல்லுங்கள்' என்றேன். உரை ஒழுங்காக வெளிவந்தது. இலக்கணக் குறிப்புக்கள் கேட்டேன். அவைகளுஞ் சொல்லப் பட்டன. ஏறக்குறைய அரைமணி நேரம் சம்பாஷணை நடந்தது. விழிப்பில் பேசுவது போலவே எல்லாம் நடந்தன. பின்னே படிப்படியே நண்பர் வாய் குழறிக் குழறி விழித்தனர்; எழுந்தனர்; என்னைக் கூப்பிட்டனர்; "நாம் நள்ளிரவில் பட்டினப் பாலையைப் பற்றிப் பேசுதல் எற்றுக்கு நேர்ந்தது'' என்று வினவினர். இருவேமும் நீண்ட நேரம் மனத்தின் கூறுபாடுகளையும் பிறவற்றையும் பேசிப் பேசி இரவைப் போக்கினோம்.

'குகானந்த நிலைய'த்தில் படுத்துவந்த வேறு ஒருவர் வே. தியாகராயர் என்பவர் மிக இளைஞராயிருந்தபோது சில வேளைகளில் இரத்தினவேல் முதலியாரைப் போலவே கனவில் உரையாடியதை யான் காணலானேன். இவ்வாறு உரையாடுஞ் சிலரைப் பின்னாளில் யான் சந்தித்தல் நேர்ந்தது. அணித்தே ஒருவர் நடுமன உணர்விலிருந்து பேசி வந்தது இடையில் நின்றமை கண்டேன். இவைகளெல்லாம் தொடக்கத்தில் தோன்றும் மின்னல்களாகும். இம்மின்னல் தோன்றப் பெறுவோர் நடுமன விளக்கத்துக்குரிய பயிற்சிகளை முறையே செய்து வருவரேல், அவர்க்கு விழிப்பிலேயே மானதக்காட்சி விளங்குவதாகும்.

யான் பள்ளி விடுத்ததும் சமய நூல் சிலவற்றைப் படித்து வந்தேன். அந்நாளில் அப்படிப்பு எனக்குச் சாமியார் பித்தை எழுப்பிற்று. அக்காலத்தில் திருவான்மியூரில் ஒரு சாமியார் இருந்தார். அவர்தம் பெருமை சென்னையில் பல இடங்களில் பேசப்பட்டது. அவரைக் காண யான் சிலருடன் போவது வழக்கம். சாமியார் மௌனி. அவர் தமது உள்ளக் கிடக்கைகளை மணலில் எழுதி எழுதிக் காட்டுவர். ஒரு நாள் சுமார் பிற்பகல் மூன்றரைமணி யிருக்கும். அங்கே வேறொரு சாமியார் வந்தார். அவர்தம் விகார வடிவம் எங்களுக்கு அச்சமூட்டிற்று. அவர் திருவான்மியூர் சாமியாரிடம் பேசிப் பேசி இடையிடையே 'வித்தையைக் கற்பியுங்கள்' என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆவல் மட்டும் அதிகரித்தது. 'என்ன வித்தை' என்று விகார சாமியாரை யான் கேட்டேன். அவர் சீறிவிழுந்தார். அவர் திடீரென எழுந்து, தம் கையிலிருந்த கோலால் மௌன சுவாமியைச் சுற்றி ஒரு வட்டமிட்டார். இட்டதும், மௌனி அப்படி இப்படி அசைந்தாரில்லை. கைகால்கள் கட்டப்பட்டன. அவரது துன்பம் எங்கள் உள்ளத்தை உருக்கிற்று. மௌன சாமியார் சிறிது நேரங்கடந்து வீறி எழுந்தார்; ஓடினார்; திருவான்மியூர் அப்பன் திருக்குளத்தில் மூழ்கினார்; திருக்கோயிலைக் கும்பிட்டார்; திரும்பி வந்து அமர்ந்தார். விகார சாமியார் மீண்டும் வட்டக் கோடிட்டார். இம்முறை மௌன சாமியாரை வட்டம் ஒன்றுஞ் செய்யவில்லை. சூழ்ந்திருந்த பலரும் வாளா இருந்தனர். யான் மௌன சாமியாரை நோக்கி, 'சாமி! ஒன்றும் விளங்கவில்லையே' என்றேன். அவர், 'எனது கவலை ஈனம் எனக்குத் துன்பம் விளைத்தது' என்று எழுதினர்; வேறு என்னென்னவோ எழுதினர். அவைகளை இங்கே விரித்தல் அநாவசியம். எனது ஐயம் நீங்கவில்லை. பின்னே யான் அகத்திணையருடன் நெருங்கிப் பழகப் பழகச் சாமியார்கள் நிலைகள் புலனாயின. இருவரும் ஓரளவில் நடுமனம் விளங்கப் பெற்றவர் என்பதும், ஒருவர் மனம் ஆக்கத்திலிருந்த போது அது மற்றொருவர் மனத்தை ஆண்டது என்பதும், பின்னே இவர் மனம் ஆக்கம் பெற்று அவர் மனத்தை ஆண்டது என்பதும், விகார சாமியார் தமது மன விளக்கத்தைத் தீய வழியில் பயன்படுத்தினார் என்பதும், நடுமனம் செவ்வனே பண்பட்டால் அதற்கு எத்தகைய வீழ்ச்சியும் நேராதென்பதும், இன்ன பிறவும் ஒருவாறு விளங்கலாயின.

யான் ஆயிரம் விளக்கு வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியனா யிருந்தபோது ஒரு கிறிஸ்துவ சகோதர சங்கத்திற் சேர்ந்து தொண்டாற்றி வந்தேன். கோயில் கிறிஸ்துவர் அச் சங்கத்தை வெறுத்துப் பழிப்பதுண்டு. சங்கத்தில் ஆவியுலக நுட்பங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. அதன் பயனாக இருவர் தேர்ச்சியடைந்தனர். அவர், ஒரு சிறு பையன் முன்னே ஒரு பளிங்குப் பொத்தானைக் காட்டிக் காட்டி அவனை மயக்கத்தில் அதாவது துயிலில் சேர்ப்பர். பல கேள்விகள் கேட்கப்படும். பதில்கள் பையன் வாயிலாக வெளிவரும். ஒருநாள் பையனை நோக்கி இருவருள் ஒருவர், பீட்டர் எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். 'மோட் சத்தில்' என்ற பதில் கிடைத்தது; மீண்டும் 'வெஸ்லி எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். 'மோட்சத்தில்' என்ற பதிலே வந்தது . யான் பையனைப் பார்த்து 'தாயுமானார் எங்கே இருக்கிறார்' என்று வினவினேன். 'நரகத்தில்' என்று விடை பிறந்தது. மறுபடியும் 'நம்மாழ்வார் எங்கே இருக்கிறார்' என்று வினவினேன். 'நரக' விடையே பிறந்தது. என் மனம் புழுங்கிற்று. வீடு சேர்ந்தேன். ஹிப்னோடிஸத்தில் நற்பயிற்சி பெற்ற திரு. ஆர். கே. நாயுடுவிடஞ் சென்றேன்; நிகழ்ச்சிகளை முறையிட்டேன். அவர், பையனைத் துயிலச் செய்யவும் கேள்விகள் கேட்கவும் என்னைச் சங்கத்தார் விடுவரா?' என்று கேட்டனர். சங்கத்தார் சம்மதம் பெறப் பட்டது. திரு. நாயுடு குறிப்பிட்ட ஒரு நாளில் சங்கம் போந்து, தமது முறைப்படி பையனைத் துயிலச் செய்தனர். பின்னே அவர், 'பீட்டர் எங்கே இருக்கிறார்' என்று வினவினர். 'நரகத்தில்' என்ற பதில் கிடைத்தது; மீண்டும் 'தாயுமானார் எங்கே இருக்கிறார்' என்று கேட்டனர். 'மோட்சத்தில்' என்ற பதில் கிடைத்தது; மோட்ச நரகம் உள்ள இடம் ஹிப்னோடிஸ்ட் மனம் என்பது தெளிவாயிற்று. ஹிப்னோ டிஸ்ட் மனத்துக்குப் பையன் மனம் எளிமை ஆகிறது. அம் மனம் நினைப்பதை இம்மனம் வெளியிடுகிறது. என்ன அதிசயம்!

மணிவிழாத் தலைவர்க்கும் எனக்கும் தெரிந்த ஜோசியர் ஒருவர் இருக்கிறார். அவர், எவர் என்ன நினைந்து வருகிறாரோ அதை நேரிற் கண்டது போலக் கூறுவர். இது பலரை மயங்கச் செய்தது. மணிவிழாத் தலைவர், 'இது மனப்பாங்கு. நமது நினைவுகள் படியும் மனம் ஜோசியரிடம் மலர்ந்திருக்கிறது. மனத்தில் படிந்தனவற்றைத் திரட்டி அவர் வெளியிடுகிறார்' என்று சொல்வர். இச்சொல் சிலர்க்குப் பிடிப்பதில்லை. மன இயல் தெரியாதார்க்கு எல்லாம் வியப்பாகவே தோன்றும்.

மற்றுமொரு ஜோசியர் நினைவு இங்கே உதிக்கிறது. அவர் தஞ்சையில் வாழ்ந்தவர். கடிதத்தில் சில கேள்விகள் பொறித்து, அதை உறையில் சேமித்து, அரக்கிட்டு அனுப்பினால் ஜோசியர் உறையை உடையாமலே பதில் விடுப்பர். அவர்க்கு இராயப்பேட்டை நண்பர் ப. கோவிந்தராஜர் என்பவர் ஒரு கடிதம் வரைந்து கொண்டிருந்தார். அதில் பொறிக்கப்பெற்றிருந்த கேள்விகளுள் ஒன்று, என் தாயார் எப் பொழுது இறந்து படுவார்' என்பது. அருகிருந்த யான், 'என் தந்தையார் எப்பொழுது இறப்பார்' என்றொரு கேள்வியையும் சேர்க்குமாறு நண்பரைத் தூண்டினேன். அக்கேள்வியும் சேர்க்கப்பட்டது. கடிதம் முறைப்படி அனுப்பப்பட்டது. விடை வந்தது. 'தாயார் இன்னும் ஓராண்டில் இறப்பார்' என்றும், 'தந்தையார் இறக்க இன்னும் ஏழாண்டு ஆகும்' என்றும் விடையில் காணப்பட்டன. நண்பர் தந்தையார் மாண்டு பல ஆண்டுகளாயின. சோதிடர் மனத்தில் கேள்விகள் உருக்கொண்டன. ஆனால் நிகழ்ச்சிகளின் உண்மை உணரும் நிலையை அவர் மனம் அடையவில்லை. இதனால் நடு மன விளக்கத்திலும் பல திறங்கள் உண்டு என்பதும், ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையில் விளக்கம் நிகழும் என்பதும் விளங்குகின்றன.

இப்பொழுது குறிமேடை நினைவு எழுகிறது. உங்களுக்கும் அந்நினைவை உண்டாக்கி விட்டேன். அந்த உலகிலும் யான் நுழைந்து ஆராய்ச்சி செய்துள்ளேன். அதைப்பற்றித் தனி நூலொன்று எழுதவும் எண்ணிய காலமுண்டு. குறி சொல்லுதலும் மனோவித்தை என்ற முடிவுக்கு வந்தேன்.

கூடம் பல வழியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விளக்கு வெளிச்சம் கண்ணைப் பிடுங்கியது. பம்பை உடுக்கை சிலம்பு முதலிய வாத்தியங்கள் முழங்குகின்றன. பாட்டுகள் வீறுகின்றன. கர்ப்பூர தீபம் எரிந்தவண்ணமிருக்கிறது, பெண்மணி குளிர்ந்த நீராடி வந்து பீடத்தில் அமர்கிறாள். ஆங்குள்ள அலங்காரமும், வாத்திய முழக்கமும், பாட்டொலி யும், பிறவும் அவள் புலன்களைக் கவர்கின்றன. தலைமைப் பூசாரி கர்ப்பூர தீபத்தை உற்று நோக்குமாறு அவளைப் பார்த்துப் பார்த்து அடிக்கடி கூக்குரலிடுகிறான். கர்ப்பூர தீபத்தை இடைவிடாது உற்று நோக்கியிருக்கும் பெண்மணி யின் புறமனம் குவிகிறது; நடுமனம் சிறிது அரும்புகிறது. இம்மனத்தில் அங்குள்ளவர்களின் எண்ணங்கள் படிகின்றன. மருளிலுள்ள பெண்மணி தலைமைப் பூசாரியின் வழிநின்று குறிசொல்லத் தொடங்கு-கிறாள். சாதாரண மக்களுக்கு வியப்புண்டாகிறது!

குறிமேடை ஆராய்ச்சியில் யானும் என் நண்பர்களும் தலைப்பட்டிருந்த காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சிகளில் இரண் டொன்றை இங்கு இயம்ப முற்படுகிறேன்.

இராயப்பேட்டையிலே ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்குத் தெய்வமேற்ற நாள் குறிக்கப்பட்டது. அக் குடும்பம் என்பால் சகோதர நேயம் பூண்டது. சகோதரியாரை யான் நன்கு அறிவேன். அவரிடம் அன்று பகல் அணுகி, 'அம்மா! யான் சொல்வதைக் கேளும். இன்றிரவு கொலுக் கூடத்தில் கர்ப்பூர தீபத்தையோ அல்லது குறிப்பிட்ட வேறு ஒரு விளக்கையோ உற்று உற்று நோக்குமாறு பூசாரி உம்மைத் தூண்டித் தூண்டி உடுக்கையடிப்பான்; பாட்டுப் பாடுவான். அவ்வேளையில் நீர் மனத்தை அவன் வழிச் செலுத்தாமல் திருப்போரூருக்குப் போகும் பாதை, படகுப் பிரயாணம், வாணியன் சாவடியிலிறங்கல், கட்டுச் சோறுண்ணல், கோவளக் கதவடைப்பு, உப்பளம், படகுவிட் டிறங்கல், கூட்டத்துடன் உரையாடி வழிநடத்தல், திருப்போரூர் அடைதல், சத்திரம் சேர்தல், உணவருந்தல், காலையிலே சரவணப்பொய்கையில் நீராடல், தேங்காய் பழம் வாங்கல், கோயிலை வலம்வரல். பிரார்த்தனை செலுத்தல், பிச்சைக்காரர் நெருக்கம் முதலியவற்றைப் படிப்படியே தொடர்ச்சியாக நினைந்து கொண்டே இரும்; திருப்போரூர் யாத்திரை முடிந்து விடின், உமக்குத் தெரிந்த பாடல்களை மனத்துள்ளே பாடிக் கொண்டிரும்; வேறுவழியில் மனத்தைச் செலுத்திக் கொண் டிரும்' என்று சொன்னேன். சகோதரியார் என் சொற்படி நடக்க உறுதிமொழி கூறினர். பூசாரி என்னென்னவோ செய்து பார்த்தான். அவன் வித்தை பலிக்கவில்லை. என் செய்வான் பாவம் ! இக்கூட்டத்தில் தீட்டுக்காரர் வந்திருக்கிறார். அதனால் மருள் வரவில்லை' என்று கதறி வாழ்த்துப் பாடினான். சகோதரியார் மனம் பூசாரியின் மயக்க வித்தைக்கு எளிமையாகவில்லை. விளக்கம் வேண்டுமோ?

ஏமாற்றக் குறி மேடைகளும் இருக்கின்றன. மனங் குவியப்பெறாதாரும் குறி சொல்வதுண்டு. அவரிடை மோசம், வஞ்சம், சூழ்ச்சி முதலிய கொடுமைகள் தாண்டவம் புரியும். பணம் பறிக்கவல்ல சமர்த்தரும் குறிக்குத் துணை செய்வர். இவ்வநியாயங்களை என்னென்று கூறுவேன்! இவைகளிலும் எனது சோதனை நடந்தது.

இராயப்பேட்டைக்கடுத்த விநாயகம்பேட்டையிலே ஒரு குறிமேடை அமைக்கப் பட்டிருந்தது. அங்கே ஓர் அம்மையார் செவ்வாய் - சனிக்கிழமைகளில் குறி சொல்வார். அம்மையாருக்கு உண்மை மருள் வருவதில்லை; நடிப்பு மருள் வருவதுண்டு. அவர்தம் மருளைச் சோதிப்பதற்கென்று ஓர் இளங்குழு திரண் டது. அக்குழுவினர் ஒரு சனியன்று பருத்த நெரிஞ்சிமுட் களைப் பறித்துச் சேமித்து, அம்மையார் நீராடி வருவதற்குள், அவர் அமர்ந்து குறி சொல்லும் விளக்கு நிழல் செறிந்த இடத்தில் முட்களைத் தூவிப் பரப்பினர். அம்மையார் வழக்கம்போல் நீராடி அட்டகாசமாகத் தமக்குரிய பீடத் தமர்ந்து தலையைச் சுழற்றினார். சுழல் மிக மிக முட்களுஞ் சுழன்றன. அம்மையார்க்கு நோய் பொறுக்க முடியவில்லை. அவர் கரும்புடவை உடுத்தி அங்கே நின்றிருந்த ஒருத்திமீது பாய்ந்து அவளை அடித்துத் துரத்தி, 'இன்று இங்கே காட்டேரி வந்தது' என்று சொன்னார். சொன்னதும் தெய்வம் மலையேறிவிட்டது. கூட்டம் பலவாறு பேசிப் பேசிக் கலைந்தது.

மயிலாப்பூரில் ஓர் இளங் கைம்பெண் குறி சொல்லி வந்தாள். மருள் அவளை அணுகுவதே இல்லை. இளம்பெண் பெரிய மோசக்காரி. அவள் சூழ்ச்சிகள் அளப்பரியன. அவள் வீட்டின் ஒரு பகுதியில் ஓலை வேய்ந்த மாட்டுத்தொழுவம் ஒன்றிருந்தது. அதன்மீது உலர்ந்த சுரைக்கொடிகளும் பிறவும் படர்ந்திருந்தன. ஒருநாள் மாலை - அந்தி வேளை - தொழுவத்தின் உச்சியில் பாம்பு, படம் எடுத்து ஆடுவது போன்ற ஒரு தோற்றம் உண்டாயிற்று. பாம்பு அப்படி இப்படி அசையவில்லை. படம் அசைந்து கொண்டே இருந்தது. இளம்பெண் எழுந்தாள்; தலை விரித்தாடினாள்; கூச்சலிட்டாள்; 'பாளையத்து மாமாரி படமெடுத்து ஆடுகின்றாள் வலது சொன்ன பேர்களுக்கு வந்திடுமே பேதி - வந்திடுமே -சாவு ........' என்று அலறினாள். கூட்டம் பெருகிவிட்டது. இவ்வளவு சந்தடிக்கும் பாம்பு ஓடாமலிருக்கிறதே; படமும் ஒடுங்காமலிருக்கிறதே' என்று சிலர் ஐயுற்றனர். மருண்டு நின்றவரெல்லாம் என்னென்னவோ பேசினர். அஞ்சா நெஞ் சுடைய ஒருவர் தடைகளை யெல்லாம் மீறி ஏணி தாங்கிப் புறப்பட்டார்; பின்புறம் சென்றார்; தொழுவத்தின் மீது ஏறினார்; பாம்பின் படத்தைக் கிள்ளியெடுத்தார்; கீழே இறங்கினார்; பாம்பின் படம் பாருங்கள், பாருங்கள்' என்று கிள்ளிக் கொணர்ந்ததைக் காட்டினார். பொருள் என்ன? யாம்பின் படமா? உலர்ந்த சுரை இலை! அந்தி வேளையில் அது பாம்பாகிவிட்டது ! பழுதை பாம்பாகிய கதையோ என்னவோ தெரியவில்லை.

விலங்கு பறவை முதலியவற்றின் மனோநிலைகளின் மீதும் என் கருத்து நடக்கிறது. விலங்கு முதலியவற்றின் மனோ நிலைக்கும் மனித மனோநிலைக்கும் வேற்றுமை உண்டா? இல்லையா? வேற்றுமை உண்டு என்று எவருங் கூறுவர். இது பொதுக்கூற்று; பெரும்பான்மை நோக்கிச் சொல்லப் படுவது. எதற்கும் புறநடை உண்டு. மனிதரிலும் நாயுண்டு; கழுதையுண்டு; புலியுண்டு; பிறவுண்டு. விலங்கு மனோ நிலையை வில்லியம் ஜேம்ஸ் உள்ளிட்ட அகத்திணையர் நன்கு ஆய்ந்து பல நுட்பங்களை உலகுக்கு உதவியுள்ளனர். அவர் தமது நூலில் எடுத்துக்காட்டியுள்ள ஒரு நாயின் நடக்கை போன்ற தொன்று ஆயிரம் விளக்கில் ஒரு நாயினிடத்திலும் நிகழ்ந்தது.

ஆயிரம் விளக்கில் ஓர் ஆங்கிலோ இந்தியர் ஒருநாய் வளர்த்தார். அந் நாய் அறிவும் பரிவும் உடையது; ஆங்கிலோ இந்தியர் பால் நட்பு கொண்ட என்னை ஆயிரம் விளக்குப் பாதையில் பார்க்கும் போதெல்லாம் அந்நாய் என்னுடன் பள்ளிவரைத் தொடர்ந்து வந்து திரும்பும். அந் நாயை ஒரு நண்பன் என்றே சொல்வேன். அதன் அருஞ்செயல்கள் பலப்பல என் நினைவில் உறுகின்றன. அது கூடையையும் பெட்டியையும் கவ்விச் செல்லும் பயிற்சி பெற்றிருந்தது. காய்கறிக் கூடையை அது கவ்விப் போவதும் வருவதும் பொதுமக்கள் கருத்தையும் சில சமயம் ஈர்க்கும். ஆங்கிலோ இந்திய நண்பர் காலமல்லாக் காலத்தில் வழியில் ஏதேனும் பொருள் வாங்கிக் கூடையை நினைந்து நாயைப் பார்ப்பார். குறிப்பறிந்து நாய் வீட்டுக்கோடிக் கூடையைத் தாங்கி வரும்; மீண்டும் அதை எடுத்துச் செல்லும். ஆங்கிலோ இந்தியரும் அவர் தம் மனைவியாரும் பந்தாட்டம் பார்க்க ஒருநாள் வெஸ்லியன் பள்ளி வெளிக்குச் சென்றனர். நாயும் அவரைத் தொடர்ந்தே போனது. என்னுடன் அவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் நண்பர் தாம் எடுத்துவர எண்ணிய பெட்டியைப்பற்றி மனைவிக்கு நினைவூட்டினர். அம்மையார் நாய்முகம் நோக்கி, 'பெஞ்சு மீதுள்ள தோல்பெட்டியைக் கொண்டுவா' என்று கட்டளை யிட்டார். நாய் விரைந்தோடி மீண்டது. கொண்டு வந் தது. எதை? வேறொரு பெட்டியை. அம்மையார், 'இப் பெட்டி தூணின் பக்கத்திலே இருந்தது. முன்னே தோன்றி யதை நாய் எடுத்து வந்தது. நாயின் பகுத்தறிவு இவ்வளவே' என்றார். அம்மையார் நினைந்தமை நாய் மனத்தில் நுழைந் தது. ஆனால் பொருள் இஃது என்பது மட்டும் நாய் மனத் தில் நுழையவில்லை. அது நுழைய இயற்கையும் இடந் தராது. நாய் மூளையைச் சூழ்ந்துள்ள நரப்புத் தொடைகளின் அளவினதாகவே அதன் மனம் விளங்கும். அதற்கு மேல் அதன் மனம் விளங்காது. பகுத்துணர்தற்குரிய நரம்புகள் வளர்ச்சியுறாமல் விலங்கு மூளைகளில் கிடக்கின்றன என்பது அகத்திணையர் உள்ளக்கிடக்கை.

மனித மூளைகளெல்லாம் ஒரே தன்மையில் அமைந்துள்ளனவா என்னும் கேள்வி இங்கு எழலாம். மனிதரிலும் விலங்கு மூளை யுடையவர் இருக்கிறார். அவர் எதையும் ஆழ ஆராய விரையார்; கலைகளை அவர் மனம் காதலியாது. தத்துவ நுட்பங்கள் அவர்க்குச் சுமையாகவே தோன்றும். அவர்தம் அறிவு, பருமைகளையே பற்றிப் படரும்; நுட்பங்களில் நுழையாது. நுண்மைகளில் அவர்க்கு நம்பிக்கையும் உண்டாகாது. அவரை இருகால் விலங்குகள் என்று கூறுவது மிகையாகாது.

மனிதப்படைப்பிலும் படித்தரங்களுண்டு. தென்னாப்பிரிக்காவில் சில மனிதக் கூட்டங்களிருக்கின்றன. அவைகட்கு இரண்டு காலும் இரண்டு கையுமிருக்கின்றன; மூளையு மிருக்கிறது. எத்தகைய மூளை? சில கூட்டம் ஐந்து வரை எண்ணும்; சில கூட்டம் பத்துவரை எண்ணும். இத்தகைய முளை! இக்கூட்டங்களும் மனித இனமே.

மனவிளக்கம் எல்லார்க்கும் ஒருவிதமாக உறுவதில்லை. விளக்கமே உறாத பிறவிகளுமுண்டு. அப் பிறவிகள், இன்னும் பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். ஒவ்வோர் அளவில் சிற்சிலர்க்கு மனவிளக்கம் உண்டாகும். சிலருக்கு அவ்விளக்கம் தங்கு தடையின்றிப் பெருகிக்கொண்டே போகும். எல்லாம் மூளையின் நரம்புத் தொடையல்களின் அமைவைப் பொறுத்தன என்க.

சித்து

புறமனங் குவிந்து நடுமனம் முகிழ்க்குங்கால் சிலரிடத்தில் சில சித்திகள் உண்டாகும்; சில சக்திகள் பிறக்கும். அவைகளை நல்வழியில் மேலும் மேலும் நடுமனம் மலர்ந்து கனிதற்குப் பயன்படுத்தல் வேண்டும். சித்திகளையும் சக்தி களையும் தீயவழியில் பயன்படுத்தினால், நாளடைவில் நடு மனவிளக்கம் வெம்பிச் சாம்பி மீண்டும் புறமனமாகவே பூரிக்கும். மறுபடியும் நடுமனம் விளக்கம் பெறுதற்கு எவ்வளவு காலமாகும்! கிடைத்த வாய்ப்பை வீணாக்குவது அறிவுடைமை யாகாது.

இங்கே இராமலிங்க சுவாமிகள் பாட்டொன்று நினைவுக்கு வருகிறது. அது, திருஞான சம்பந்தர் தமக்கு அறிவுறுத்திய நன்மொழிகள் இன்ன இன்ன என்று உலகுக்குத் தெரிவிக்கும் முறையில் சுவாமிகளால் பாடப்பட்டது. அப்பாட்டு, 'உலகியலின் உறுமயலின் அடைவு பெறும் எனது இதயம் ........' என்னுந் தொடக்கம் உடையது. அதன்கண், 'அட்ட சித்திகளும் நினது ஏவல் செயும் நீ அவை [1] அவாவி யிடல் என்ற ஒளியே' என்றொரு மணிமொழி ஒளிர்கிறது. 'அவாவி யிடல்' என்பது கருதற்பாலது; பன்முறை கருதற்பாலது.

--------
[1] யோகிகள் கால் கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.       - திருமூலர்.
-------

நடுமன விளக்கத்தால் தம்மாட்டுப் பிறக்குஞ் சக்திகளைக் கொண்டு பிறர்க்குத் தீமை புரியத் தொடங்குவோரும் உளர். அவரை விலங்கென்று விளம்புவதா? பேய் என்று பேசுவதா? அரக்கரென்று அறைவதா? என்னென்று கூறுவதென்பது எனக்குத் தெரியவில்லை. பெற்ற சக்திகளைத் துர்விநியோகப்படுத்துவதன் விளைவு என்ன ஆகும்? பேயர் அதை எண்ணிப் பார்ப்பதில்லை போலும்! பிறர்க்குச் சிறு தீமை விளையினும் விளையும். ஆனால் பெருந்தீமை எவர்க்கு விளையும் ? தீமை தன்னைப் படைத்த பேயரிடமே சென்று அவரைத் தாக்கும். தன்வினை தன்னைச் சுடுதல் இயற்கை துர்விநியோகம் தீமை விளைக்கும் அளவில் நின்றுவிடாது. அது, முன் பெற்ற சக்திகளைப் போக்கும்; இன்னும் என்ன செய்யும் ? நடுமன விளக்கை அழிக்கும்; புறமன இருளைச் செறிவிக்கும்; ஆளைப் பல வழியில் அலைக்கும்; ஒறுக்கும்.

சூந்யம் வைப்போர், அறம் பாடுவோர் முதலியோர் உலகில் எப்படி வாழ்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கு மென்று நம்புகிறேன். அவர்தம் வாழ்வு மிகவும் இரங்கத் தக்கதாக முடியும். அவர்தம் நினைவை இங்கே உண்டாக் கியது குறித்து வருந்துகிறேன். ஆண்டவனை நினைப்போமாக; அடியவரை நினைப்போமாக.

*வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகு மவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்றுச்சி யளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம்
கண்ணிணையும் மரமாம் தீ வினையி னேற்கே.
      --- திருவாசகம்.

*சிந்தனை நின் தனக்காக்கி நாயி னேன் தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்களார
வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
      --- திருவாசகம்.

நடுமன எழுச்சியை நல்வழியில் பயன்படுத்துவதே அறிவுடைமை. அதனால் அம்மனம் மேலும் மேலும் மலரும்; கனியும்; அடிமனம் முகிழ்க்கும். அடிமனம் முகிழ்க்க த் துணை செய்யும் ஒன்றினுஞ் சிறந்தது வேறொன்றிருக் குமோ? நடுமன விளக்கத்தைத் தொடக்கத்திலேயே நல்வழியிற் செலுத்தி ஒழுங்கு செய்தால் விளைவைக் கண்கூடாகக் காணலாம். என்ன! அகக்கண் திறக்கும்; மானதக்காட்சி கூடும்; பேத உணர்வு அருகும்; பொதுமை உணர்வு பெருகும்; பிறர்க்குத் தீங்கு நினைத்தல் அற்றுப் போகும்; உயிர்கட்குப் பயன் கருதாத் தொண்டு செய்வதில் ஊக்கம் பிறக்கும்; இன்னோரன்ன நலங்கள் உண்டாகும். இவையெல்லாம் பாவக் கருவின் வேரறுக்கும் ஞான-வாட்களல்லவோ?

ஒரு பெருஞ் சமய சங்கத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் ஐரோப்பியர். அச்சங்கத்துக்கு யான் போவதுண்டு. ஆனால் ஐரோப்பியப் பெரியாரிடம் யான் நெருங்குவதில்லை. அவர் நடுமன விளக்கத்தை நல்வழியில் பெருக்கி ஞான திருஷ்டி படைத்தவர் என்று அறிஞரால் போற்றப்பட்டார். அவர் எழுதிய நூல்களிற் சிலவற்றுடன் யான் உறவு கொண்டு வந்தேன். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சில ஐயப்பாடுகள் தோன்றின. அவைகளைக் களைதற்குக் கலைப்புலமை துணை செய்யவில்லை. ஐரோப்பியப் பெரியாரை அணுகிப் பார்க்கலாம் என்று அவரிடஞ் சென்றேன். சிறிது நேரம் அவர்பால் உரையாடிய பின்னர் ஐயப்பாடுகளை வெளியிட்டேன். அவர்க்குத் தமிழ் தெரியாது. திருமந்திரம் தமிழாலாகிய ஒரு பெரும் நூல்! என் செய்வது! பெரியார் நூலைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். மறுநாள் திருமந்திரத்தை எடுத்தேகினேன். அவர் நூலை வாங்கித் தமது மேசை மீது வைத்தார்; அதைத் தொட்டவண்ணம் சிறிது நேரம் கண்மூடி மௌனஞ் சாதித்தார்; பின்னே விழித்தார்; சில ஐயப்பாடுகளை நீக்கினார். அவரிடம் நெடுநேரம் பேசினேன்; பல நுட்பங்கள் விளங்கப் பெற்றேன். மொழிகளெல்லாம் தனி நாதத்தின் பரிணாமம் என்றும், நாதமே மொழிகட்கெல்லாம் மூலம் என்றும், நாதம் வெறுஞ் சப்த மயமா யிருப்ப தென்றும், அதன் அலைகள் படிப்படியே பருத்துப் பருத்து நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பலதிற மொழிகளாக ஒலிவடிவில் பரிணமிக்கின்றன என்றும், ஒலிவடிவு பின்னே வரிவடிவாகிறது என்றும், புறமனம் ஒடுங்க, நடு மனம் மலர , அடிமனம் விளங்கி அடங்க, விந்து நாதம் வரைச் சென்று திரும்பும் பயிற்சி பெற்ற ஒருவர், நாமரூப முள்ள எம்மொழியையும் நாதமாக்கிக் கருத்தைத் தெளிந்து பின்னே அதைத் தமது சொந்தமொழியில் வெளியிடுதல் கூடும் என்றும், தமிழும் ஆங்கிலமும், பிறவும் நாமரூபம் முதலியன அற்று நாதமாகுங்கால் ஒன்றேயாகும் என்றும், வேற்றுமை புறமன அளவில் நிகழ்வது என்றும் அவர் உண்மையை விளக்கிக் காட்டினர். நடுமனம் அவர்பால் நன் முறையில் விளங்கியிருந்தது. அதனால் அவர் விளம்பரத்தைச் சிறிதும் விரும்பினாரில்லை. அஃது எனது உள்ளத்தைக் கவர்ந்தது.

கிறிஸ்து பெருமான் தம் சீடரைப் பல இடங்களுக்கு அனுப்பியபோது, அவர் எங்கெங்கே செல்கிறாரோ அங்கங்கே பேசப்படும் மொழிகள் அவர்க்கு இயற்கையாகவே விளங்கித் துணைபுரியும் என்று அருளியதும் இப்பொழுது எனது நினைவிலுறுகிறது.

பலமொழி நூலாசிரியர் உள்ளமெல்லாம் ஒன்றுபட்டுத் தொண்டாற்றுதலும் ஈண்டு உன்னற்பாலது. சிறு கதைகள், களிக் கதைகள் முதலியன எழுதுவோர் புற மனத்தளவில் நின்று தொண்டாற்றுவோர். அவர்தஞ் சிந்தை ஆழ்ந்து ஆழ்ந்து செல்வதில்லை. அவரல்லாத நன்னூலாசிரியர் சிந்தனையில் மூழ்கி மூழ்கி அதில் சமாதியாவ துண்டு. அவர்தம் நடுமனமும் விழிப்புப் பெறும். அவருள் ஒருவர் ஒரு மொழியில் வல்லவராய் ஒரு நாட்டில் இருப்பர்; மற்றொருவர் வேறு மொழியில் வல்லவராய் இன்னொரு நாட்டில் இருப்பர். இருவர் உள்ளத்திலும் ஒரே கருத்துப் படிந்து அவரவர் மொழியில் அது வெளிவரும். காரணம் இருவர் அகக்கண்ணும் திறக்கப் பெற்றமையாகும். அகக் கண்ணர்க்கு மொழி வேற்றுமையுமில்லை; பிற வேற்றுமைகளுமில்லை.

கெழுதகை நண்பரிடத்தும் நடுமனம் சிற்சிலபோது சிறிது விழித்து நிகழ்ச்சிகளை உணர்வதாகும். எமது அச்சுக் கூடத்தில் சிலகாலம் மேற்பார்வையாளராக ஒருவர் இருந் தார். அவர் பெயர் அருணாசலம். அவர் என் தமையனார் உலகநாத முதலியாரிடத்தும், அவர்தம் புதல்வன் பால சுப்பிரமணியனிடத்தும் ஆழ்ந்த நட்புக் கொண்டவர். பாலசுப்பிரமணியன் உயிர் நீத்த செய்தியை அஃதுற்ற அப்போதே அருணாசலம் கனவில் கண்டு வருந்தி வருந்திக் கண் விழித்தார். மரணச் செய்தி வாயிற்படியில் காத்து நின்றது. என் தமையனார்க்கு ஒருமுறை உற்ற ஒருவிதக் கொடுந் துன்பம் அருணாசலத்தின் கனவுலகில் நுழைந்தது. மறுநாள் அவர் அச்சுக்கூடம் போந்து தமையனாரைக் கண்டு உண்மை தெரிந்து சென்றனர்.

இனி எங்கே கருத்துச் செலுத்தலாம்? சாமியார் கூட்டம் ஒன்றிருக்கிற தன்றோ? சாமியார் கூட்டம் திரளாத இடமில்லை. சாமியார் கூட்டத்தில் பலவகை உண்டு. அவ் வகைகளை விரித்தால் அவைகள் பாரதமாகும். இங்கே வேண்டும் அளவில் சிலவற்றை ஆண்டு கொள்கிறேன். சாமியாருள் முக்கண் நீலகண்டம் சூலம் காட்டுவோர், சங்கு சக்கரம் காட்டுவோர், மயில் வேல் காட்டுவோர் இருக்கிறார்; மந்திரங்களால் நோய் தீர்ப்போர், பேயோட்டு வோர் இருக்கிறார்; இன்னபிற நிகழ்த்துவோரும் இருக் கிறார். இவர்தஞ் செயல்களைக் கண்டு உலகம் மருள்கிறது. சாமியார் செயல்களை ஜாலவித்தை என்று கருதுவோரும் உளர். சாமியாருள் ஜாலவித்தை செய்வோரும் இருக் கிறார். யான் இங்கே குறிப்பிட்டவைகள் ஜாலவித்தை யைக் கடந்தன. அவைகளை என்னென்று கொள்வது? மேல் நாட்டு அகத்திணை வழிநின்று பார்த்தால், சாமியார் செயல்கள் 'ஹிப்னோடிஸம்' என்று விளங்கும். ஆனால், சாமியார் அவைகளை 'ஹிப்னோடிஸம் ' என்று உணர்வ தில்லை. அவர் யோகாப்பியாசத்தால் பெற்ற சக்தி என்றே நினைக்கிறார் ! சாதாரண மக்களும் அவ்வாறே கருதுகிறார் கள். இங்கே சோதனை வேண்டும். இதற்கு விஞ்ஞானக்
கலையினதும் அகக்கலையினதும் துணை தேவை.

நடுமனப் படிகளில் மகன் நடமாடுங்கால், அவ்வப் படித்தரத்துக் கேற்றவாறு சில சில விநோதங்கள் நிகழும். அவ்விநோதங்களால் உலகை மயக்குவோரும் இருக்கிறார்; அவைகளை உள்ளவாறே நம்பி நடப்போரும் இருக்கிறார். விளக்கம் பெற்றோர் மனம், அது பெறாதார் மனத்தைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்கிறது. அவர்மனம் என்னென்ன நினைக்கிறதோ அவை இவர்தம் மனத்துக்கும் கண்ணுக்கும் காட்சியளிக்கும். இவைகளைச் சோதனை செய்து உண்மை காண்பது எப்படி?

ஒரு சாமியார் வேல் மயில் காட்டுகிறார். அக்காட்சி இன்னொருவர்க்குப் புலனாகவில்லை. ஏன்? அவர் நடுமனம் ஏறிய படிகளை , இவர் நடுமனங் கடந்து மேலுஞ் சென்றிருக்கிறது. அதனால் அவர் வித்தை இவரிடம் பலிப்ப தில்லை. இவ்வாறு பல சாமியார் சோதனையில் அகப்பட்டுத் தவிப்புற்றதைப் பார்த்து யான் இரங்கியதுண்டு.

ஒருவர் தலை வேறு கைவேறாகி மீண்டும் அவை ஒன்றுபட எழுகிறாரென்றும், அவரை ஓர் அறையில் பூட்டிட்டு அடைத்தாலும் அவர் வெளியே வந்து உலவுகிறாரென்றும், அவர் ஒருவரே பலவிடங்களில் ஒரே காலத்தில் பேசுகிறா ரென்றும், முருகன் காட்சி கண்ணன் காட்சி முதலிய தெய்வக் காட்சிகளை வழங்குகிறாரென்றும், பாம்பு விடம் அவரை ஒன்றுஞ் செய்வதில்லை யென்றும். சாதாரண மக்கள் வியந்து வியந்து அவரை அவதாரமென்றும் போற்றலாயினர். சாமியாரிடம் ஆயிரக்கணக்கில் பணம் குவிகிறது! அடிக்கடி அவரிடம் செல்லும் அம்மையார் ஒருவர்க்கு யான் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். அவர் தங்கணவர் கட்டுப்பாட்டுக்கும் அடங்கி நடப்பதில்லை. ஒரு நாள் அம்மையார் பாம்பு விடம் சாமியார்க்கு ஏறாமை யைத் தாம் நேரிற் கண்டதாகத் தெரிவித்தார். பாம்பு விடம் ஏறப்பெறாத உடலமைப்புகளுமுண்டு என்றும், இளமையிலிருந்து செய்துவரும் சில பழக்க வழக்கங்களா லும், சில மூலிகைகளை உண்பதாலும் பாம்பு விடம் ஏறாத உடலைப் பெறுவதுமுண்டு என்றுங் கூறி, 'உங்கள் சாமியார் உடலில் மார்பியாவைச் சிறிது அதிகமாக ஊசி வாயிலாக ஏற்றிச் சோதனை செய்ய அவர் உடன்படுவாரா? அவரிடம் கடிதம் பெற்றுவர முடியுமா?' என்று கேட் டேன். அம்மையார் சென்று சாமியாரிடத்தில் என் கருத்தைத் தெரிவித்தார். சாமியார் உடன்படவில்லை. அம்மையார்க்குச் சிறிது ஐயம் பிறந்தது. அந்நாளில் ஓர் ஆந்திரர் சென்னை போந்து பலவிடங்களில் அரிய செயல் களை நிகழ்த்தி வந்தனர். அவர் கூட்டங்களின் முன்னிலை யில் நைட்ரிக் ஆஸிட், பாஷாணம், நஞ்சு , ஆணி , ஈய எழுத்து முதலியவற்றை உண்டு காட்டுவர். யமன் அவரை ஒன்றுஞ் செய்வதில்லை. அவர் சாமி என்றோ யோகி என்றோ தம்மைச் சொல்லிக் கொள்வதில்லை; ' பயிற்சி பயிற்சி' என்று சொல்வர். அவரிடம் அம்மையாரை அழைத்துச் சென்றேன். அவர்தஞ் செயல்கள் அம்மை யாரைப் பிரமிக்கச் செய்தன. படிப்படியே சாமியார் பித்து அம்மையாரை விடுத்து அகன்றது. இன்னுஞ் சாமியார் கதைகள் பல உண்டு. 'ஹிப்னோடிஸம்', 'மெஸ்மெரிஸம்'' 'டெலிபதி' முதலியவற்றை யோக நிலைகளென்று மருளும் அறியாமை, நாட்டை விடுத்து ஒழிதல் வேண்டும். அறியா மையை யொழிக்க ஆங்காங்குள்ள அறிஞர் முயல்வாராக. உண்மை யோகிகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துக் கூறி, அவர்கட்கு வணக்கமுஞ் செலுத்துகிறேன்.

போலியைக் கொண்டு மெய்ம்மையே இல்லை என்ற முடிவுக்கு வருவோருமுளர். இது தவறு. போலி வெறுக்கற் பாலதே. அப்படியே மெய்ம்மைக்கு இன்மை கூறலும் விரும் பற்பாலதன்று. மெய்மையின்றிப் போலி தலைகாட்டாது. போலியைக் கொண்டே மெய்ம்மை இருப்பை உணரலாம். நற்பவளம் உள்ளமையாலன்றோ போலிப் பவளம் தோன்றலாயிற்று?

யான் கண்ட நிகழ்ச்சிகள் இன்னுஞ் சில இருக்கின்றன. அவகளில் மூவர் பால் நிகழ்ந்தவற்றை உங்கள் முன்னிலை யில் கிடத்தலாம் என்று எண்ணுகிறேன்.

சுரைக்காய் சுவாமியாரை உங்களிற் சிலராவது நேரிற் கண்டிருக்கலாம். அவர் சிலகாலம் சென்னையில் திருவல்லிக் கேணியில் பார்த்தசாரதிப் பெருமாள் தோட்டத்தில் தங்கி இருந்தவர். அவரைக் கண்டு தொழ மக்கள் கூட்டம் ஈண்டி நிற்கும். வேடிக்கை பார்க்க இளைஞருஞ் செல்வர் அவருள் யானும் ஒருவன். அங்கே ஓர் ஊமை கொண்டு வரப்பட்டான். நாளடைவில் அவன் பேசலானான். பல வழியில் தொல்லை விளைத்துவந்த பேயாடி ஒருத்தி கொண்டு வரப்பட்டாள். அவள் தோட்டமுழுவதும் ஆட்சி செலுத்துவாள்; அங்கும் இங்கும் ஓடுவாள்; பலவாறு பிதற்றுவாள்; பல மணி நேரம் ஏற்றம் பிடித்து இறைப்பாள். ஆனால் அவள் தோட்ட எல்லையை விடுத்து அகல்வதில்லை. ஒரு நாள் அவள் திடீரெனச் சுவாமியாரை அடைந்து பணிந்து நின்றாள். அச்சமும் நாணமும் அவளைச் சூழ்ந்தன. அவள் நல்லுணர்வு பெற்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பலர் பலவாறு பேசினர். சுவாமியார் பெரியவர்; அவர் மருள் நிலை முதலியவற்றைக் கடந்த ஞானியர். அவர் முன்னிலை யில் நிகழ்ந்தனவற்றை எந்த வித்தையில் சேர்க்கலாம்? சிந்தியுங்கள்.

மருதூரில் ஓர் அம்மையார் இருக்கிறார். அவரிடம் நிகழும் அற்புதங்கள் பத்திரிகைகளில் வெளியாயின. அம்மையார், ஒரு தட்டிலே அன்பர் கொணரும் மாலைகளை வைத்துப்
பழனியப்பா' என்று தூக்கியதும், அவை ஆகாய வழியே சென்று மறைகின்றன என்றும், தேங்காய் பழம் முதலியன வும் அவ்வாறே அனுப்பப்படுகின்றன என்றும், உடைபட்ட தேங்காய் மூடியும், திருநீறும் இறங்கிவருகின்றன என்றும், ஒருமுறை ஒரு குழந்தையைத் தட்டிலே வைத்து அம்மை யார் 'முருகா' என்றதும், குழந்தை மறைந்து சில மணி நேரங் கழிந்த பின்னர்த் திருநீற்றுக் கோலத்துடன் இறங் கியது என்றும், அவர் அதைப்பற்றி உரியவரிடஞ் சேர்த் தனர் என்றும், இளநீர் சர்க்கரைப் பொங்கல் வேல் முதலி யனவும் அவரால் வரவழைக்கப்படுகின்றன என்றும் சொல் லப்பட்டன. இன்னோரன்ன அற்புதங்களைக் காணப் பலர் சென்றனர். என் தமையனார், இராயப்பேட்டை ஜவுளி நடேச முதலியாருடன் போயினர். அகத்திணை வல்ல மறைமலை அடிகளும், சச்சிதானந்தம் பிள்ளையும் அம்மை யாரின் செயல்களை நேரிற் கண்டனர். பலநாள் கடந்து யானும் சில நண்பருடன் ஏகினேன்; நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். என்னுடன் போந்தவருள் சிலர் சிலவற்றை நினைந்து அவை கைகூடுமா கூடாவா என்று அம்மையாரை நோக்கிக் கேட்டனர். என்னையும் ஏதாவதொன்றை நினைந்து கொள்ளுமாறு அவர் தூண்டினர். அவர் எண் ணியவற்றிற்கெல்லாம் விடைகள் கிடைத்தன. எனக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. நண்பர் விழித்தனர். யான் ஒன்றும் நினைக்கவில்லை; அதனால் பதில் வரவில்லை' என்று சொன்னேன். பின்னே அவ்வூரிலுள்ள சிலரிடம் போய் நாங்கள் விசாரணை செய்தோம். அம்மையார் ஒருநாள் புளியம்பழம் உலுக்கிக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் அவர் தலைமீது குதித்து மிதித்தனர் என்றும், அன்று முதல் அம்மையாரிடம் அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், பல ஆண்டுகட்கு முன்னரும் ஒரு மூதாட்டியார் பால் இச்செயல்கள் நிகழ்ந்து வந்தன என்றும், அவர் தலை மீதும் ஒரு முனிவர் குதித்து மிதித்தனர் என்றும் அவ் வூரவரால் கூறப்பட்டன. மருதூர் அம்மையார் கல்வி அறி வில்லாதவர்; ஆராய்ச்சி இல்லாதவர்; நடுமனம் அடிமனம் முதலியவற்றைக் கேட்டும் அறியாதவர். அவரிடம் நிகழும் அற்புதங்களைக் குறித்துப் பலர் பலவாறு பத்திரிகைகளில் எழுதினர். ஆராய்ச்சியால் அம்மையார் நடுமன விளக்க மில்லாதவரென்பது நன்கு தெரியவந்தது. என்ன முடிவு கூறுவது? அம்மையார் தலைமீது குதித்த முனிவர் நுண் ணுடல் தாங்கி அங்கே உலவுகிறார் என்பதும், அவர் தம் ஆவித்துணை அம்மையார்க்குக் கிடைத்துள்ள தென்பதும், அதனால் அவரிடம் அற்புதம் நிகழ்கிறதென்பதும் எனது உள்ளக்கிடக்கை. என்னுடையதையே முடிவாகக் கொள் ளாது நீங்களும் உண்மை காண முயலுங்கள்.

சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தனர். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகஞ் சொல்லும். அவ்வம்மையார் பறவை யைப்போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வாசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்துவந்து நின்றனர்.

மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்கு. மென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னை யில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மை யார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவிகரண அமைப்புக்கள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகைப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்ற வரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யான் 'தேசபக்தன்' ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், 'அம்மையார் சித்தரினத்தில் சேர்ந் தவர்' என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்து வத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்.

அற்புதங்கள்

அற்புதங்களைக் கண்டு , ' தெய்விகம் - தெய்வீகம்' என்று மயக்குறுவோர் பலர். அற்புதம் உலகைக் கவர்வதுபோல வேறெதுவும் அதைக் கவர்வதில்லை. 'அற்புதம் ' செய்யும் சாமியார்க்கே அதிக மதிப்புச் சாதாரண உலகந் தருகிறது. அற்புதத்தை மதிக்கும் பேதைமை உலகை விடுத்து அகலுதல் வேண்டும். அற்புத நாட்டம் உள் ளொளிப் பெருக்கிற்குத் துணை செய்யுமா?

அற்புதம் அரியதா? எளியதா? புறமனச் சுழலில் அகப் பட்டு அலைவோர்க்கு அற்புதம் அரியதாகத் தோன்றும், அம்மனம் ஒடுங்கப்பெற்றோர்க்கு அஃது எளியதாக - மிக எளியதாகத் - தோன்றும். நடுமன விளக்கம் பெற்றவரிடம் அற்புதம் எளிதில் நிகழ்தல் கூடும்.

ஒருவர் ஒரு போது ஏதோ சில காரணம் பற்றி அற்புதஞ் செய்தார். அவரே உள்ளொளிக்குரிய ஞான போதனையுஞ் செய்தார். இரண்டில் சிறந்தது எது? அற்புதமா? போதனையா? போதனை என்றே யான் பறைசாற்றுவேன். அற்புதத்திற் கருத்துச் செலுத்தினால் உள்ளொளிக்குரிய வேட்கை எழுதலும் அரிதாகும். போதனையிற் கருத்துச் செலுத்தி, அதன்படி சாதனையுஞ் செய்துவந்தால், உள் ளொளி ஊற்றுத் தானே திறக்கும்.

'கிறிஸ்து பெருமான், திருஞான சம்பந்தர் உள்ளிட்ட பெரியோரும் அற்புதங்கள் செய்திருக்கிறாரே' என்று சில சகோதரர் நினைத்தல் கூடும். அற்புதங்கள் அவரைப் பெரியவராக்கவில்லை என்றும், அவரது ஞான போதனைகள் அவரைப் பெரியவராக்கின என்றும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்து பெருமானும், திருஞான சம்பந் தரும், மற்றவரும் தமது வாழ்நாள் முழுதும் தாமே வலிந்து அற்புதஞ் செய்து திரிந்தாரில்லை; அற்புத விளம்பரஞ் செய்தாரில்லை. அற்புதத்தை அவர் அவாவியது-மில்லை. அவர் காலத்திலும் நோய்கள் நடமாடின; மரணங்கள் நிகழ்ந்தன; காலன் ஆட்சி நடைபெற்றது. சிலபோழ்து இரக்கம் முதலிய காரணங்கள் பற்றிப் பெரியோர் பால் இரண்டோர் அற்புதம் நிகழ்ந்துவிடும். அற்புதமே அவர்க்குப் பெருமை அளித்ததென்று அதற்கு மதிப்பளிப்பது வாழ்வைப் பாழ்படுத்துவதாகும். அற்புதங்களைக் கொண்டு பெரியோர்க்கு உலகம் மதிப்பளித்தலைக் கண்ட பௌராணிகம் அற்புதக் கதைகளைப் பெருக்கிவிட்டது.

இராமலிங்க சுவாமிகள் சமீபகாலத்தி லிருந்தவர். அவர் தம் அரிய போதனைகளடங்கிய அருட்பா' பலரால் பதிக்கப் பட்டுள்ளது. முற்பதிப்புக்களில் காணப்படாத அற்புதங்கள் பிற்பதிப்புக்களில் காணப்படுகின்றன. பதிப்புக்கள் பெருகப் பெருக அற்புதங்களும் பெருகி வருகின்றன. இதனால் விளைந்த தென்னை? விளைவுகளை ஈண்டு விரிக்கில் பேச்சுப் பெருகுமென்று அஞ்சுகிறேன். இப்பொழுது நாட்டில் இராமலிங்க சுவாமிகளின் அவதாரங்கள்' பெருகி வருதலை மட்டும் ஈண்டுக் குறிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த அளவில் பதினொருவர் தம்மை இராமலிங்க சுவாமிகள் என்று கரந்து கரந்து சொல்லித் திரிகின்றனர்; மக்களை ஏமாற்றுகின்றனர். இவருள் எவர் உண்மை இராமலிங்க சுவாமிகள் என்று தெரியவில்லை. ஒருவர் இன்னொருவரைப் போலி இராமலிங்கரென்றும், இவர் அவரைப் போலி யென்றும் வாதமிட்டு வருவதும் ஒருவித அற்புதம் போலும்! ஆகவே, பெரியோரின் அற்புதத்தின் மீது வேட்கை கொள்ளாது, அவர்தம் போதனைமீது வேட்கை கொள்வது உள்ளொளிக்கு ஆக்கந் தேடுவதாகும்.

உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக் கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையுந்
திருப்பிக்கொடு.       - கிறிஸ்து (லூக்கா 6:28 - 9)

பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர்
ஐமிகுத்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
      - திருஞானசம்பந்தர்

அப்பா நான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலை மேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண் டுவனே.
      - இராமலிங்க சுவாமிகள்

இப்போதனைகள் சிறந்தனவா? அற்புதங்கள் சிறந் தனவா? என்று கேட்கிறேன். எனக்குப் போதனைகளே சிறந்தனவாகத் தோன்றுகின்றன. விஞ்ஞானக் கலைகள் பெருகிவரும் இந்நாளில் அற்புதங்கட்கு மதிப்பளித்தல் ஆன்ம ஞான முயற்சிக்குக் கேடு சூழ்வதாகும். கண் ணொளி இழந்தவர் மூக்கொளியால் காண்டல், இளமையோ டிருத்தல், எதையும் பொன்னாக்கல் முதலியன விஞ்ஞான உலகில் நுழைந்துவரும் இந்நாளில் அற்புதத்தில் மயங்குவது அறிவுடைமையாகாது.

பெரியோர் பால் நிகழும் மெய்யற்புதங்கள் இருமுகம் பெற்று உலகுக்குப் பயன்படுவன. அவை புறமுகத்துக்கு ஒருவிதக் காட்சியையும், அகமுகத்துக்கு வேறுவிதக் காட்சி யையும் அளிப்பன. புறுமுகம் பௌராணிக உலகுக்கு உரியது. அகமுகம் ஞான உலகுக்கு உரியது. அற்புதங்கள் உள்ளுறையுடையன என்று மாது பிளவட்ஸ்கி கருதுகிறார்.

அடிமனம்

இன்னும் நடுமனத்தைப் பற்றிய சான்றுகள் பல காட்டிச் செல்ல என் மனம் ஒருப்படவில்லை. நடுமனத்தை இவ்வளவில் நிறுத்திவிடுகிறேன். இனி அடிமனத்துடன் கில நிமிடம் உறவு கொள்ள முயல்கிறேன். அடிமனத்தைப் பற்றி என்ன பேசுவது! பேச்சற்ற ஒரு நிலைக்குக் கால் கொள்ளும் பெற்றிமை வாய்ந்த அடிமனம் நீண்ட பேச்சை விரும்புமா?

நடுமனம் நலம் பெறப் பெற அஃது ஒடுக்கமுற் றுத் தூய்மை அடைந்து அடிமனமாகும். அடிமனம் அரும்பியதும் அஃது அசைவற்றதாகும். அங்கே மாசேது? மருளேது? தூய்மை துலங்கும்; சீலம் செறியும்; அறம் அமரும். அடிமனத்தைக் கரும வேர் அறுக்கும் ஞான வாளின் உறையுள் என்று சுருங்கச் சொல்லலாம். அடிமனம் மலர மலரச் சிறு மாறுதல் நிகழும். காமன் எரியுண்பான்; காலன் உதையுண்பான்; பொய்யாயின வெல்லாம் பொய்யாகும்; மெய்யாயின வெல்லாம் மெய் யாகும். அடிமனம், புறமனத்தால் விளைந்த குறும்புகளை யெல்லாம் போக்கி, உயிரை அறவண்ணமாக்கி, அதைப் பிராணனுடன் சேர்த்துத் தான் மறைவுறும். பின்னே உயிர் விந்துவின் துணைபெறும். விந்து உயிரை நாதமென் னும் பிரணவத்துடன் சேர்க்கும். அங்கே சுத்த மாயையின் தொடர்பு அற்றுப் போகும். மேலே மிளிர்வது ஒன்றே. [3]அதுவே உள்ளொளி; பரவொளி; பரவெளி. அதை எண்ணுதற்குரிய மனம் ஏது? பேசுதற்குரிய நா ஏது?

-----
பற்றுவன .... [1]பிராணலயம் என்னுமொரு பூமியைப் பற்றின் மனம் அறும் - தாயுமானார்.
[2] அராப்புனை ...... மனமும் பதைப்பறல் வேண்டும் - அருணகிரியார்.
[3]. மனமெனுமோர் பேய்க்குரங்கு மடப்பயலே நீதான் மற்றவர்போல் எனை நினைந்து மருட்டாதே கண்டாய், இன முற என் சொல்வழியே இருத்தியெனிற் சுகமாய் இருந்திடு நீ என்சொல் வழி ஏற்றிலையா னாலோ , தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திருவருளாற் கணத்தே , நனவிலெனை அறியாயோ யாரென இங்கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.
      - இராமலிங்க சுவாமிகள்.
-------
மனம் ஒடுங்கி மறைவதென்பது அதன் குறும்புச் செயல்கள் அற்றுப்போவதை உணர்த்துவது. குறும்பற்ற மனம் தன் ஆணை செலுத்தாது. அது ஞானியின் வழி அடங்கி நடக்கும். அடங்கிய மனம் வறுக்கப்பட்ட நெல்லைப்போலவும், நஞ்சற்ற பாம்பைப் போலவு மாகும். அந்நிலையில் மனம் நல்லதாய்க் [1]குருபோல உள்ளொளிக்குத் துணையுஞ் செய்வதாகும்.

தோழர்களே ! எடுத்த பொருளுக்கேற்ப உள்ளத்தைப் பற்றிச் சுருங்கிய முறையில் ஒருவாறு பேசினேன். இன்னுஞ் சில பகர்ந்து உள்ளத்துக்குரிய உருவத்தைப் பற்ற முயல்வேன்.
மனவெளி

[2]வெளிகள் பல உண்டு. அவை, அறிவு வெளி; அருள் வெளி; ஆகாயவெளி; மனவெளி முதலியன. பலதிற மனங்கட்கெல்லாம் மூலமாயிருப்பது மனவெளி. மனத்திலுள்ள மாசுகள் அகன்றால் அது மனவெளியில் ஒன்றும். எனது மனத்தில் மாசு படர்ந்துள்ளமையால், அது மனவெளி யின் தொடர்பை இழந்து கிடக்கிறது. புறமனம், நடுமன மாகி அடிமன நாட்டங் கொள்ளும் போது மனவெளி யின் தொடர்பு ஏற்படும். அந்நிலையில் மனம் ஞானதிருஷ்டி
பெறும்.

எண்ணங்கள்

மனவெளி எண்ணங்களைத் தாங்கி ஓம்பி வருவது. மனித உடல் மறையும். எண்ணங்களோ தொடர்ந்து வரும். உருவம் அற்றுப்போகும் வரை எண்ணங்களின் தொடர்பு ஆட்சியிலிருக்கும்.
----
[1] மனதேகல் லாலெனக் கன்றோ – தெய்வ மௌன குரு வாகி வந்து கை காட்டி,
என தாம் பணியற மாற்றி – அவன் இன்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி
      – தாயுமானார்'

வெள்ளத்தார் ... கள்ளத் தைக்கழி யம்மனம் ஒன்றிநின் –
பள்ளத் தில்லொளியைக் கண்டதுள்ளமே - அப்பர்.

விண்ணிறைந்த வெளியாய் என்மன வெளியிற் கலந்து; அரார் –
பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி பிறங்குவ தலாது;
வெளியான நீ என்மன வெளியூடு விரவின்
- தாயுமானார் .

ஒரு தத்துவர் மன ஆராய்ச்சியில் நுழைகிறார். அவர் உண்மை காணச் சிந்தனையில் ஆழ்கிறார்; மூழ்குகிறார்; சமாதி யாகிறார். அவர்தம் உள்ளத்தில் சில நுட்பங்கள் விளங்கு கின்றன. அவரது பருவுடல் மறைகிறது. ஆனால், அவர் உள்ளத்தில் எண்ணிய எண்ணங்கள் மறைவதில்லை. அவருடைய எண்ணங்கள் அவரைப் போன்று தத்துவ ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்குவோரின் உள்ளம் புகுந்து துணை செய்கின்றன. [1]அவரது எண்ணங்கள் அவர்பின், வரு வோர்க்குத் துணைபுரிகின்றன. ஒரு விஞ்ஞானியின் எண் ணங்கள் அவரளவில் நின்று ஒடுங்குவதில்லை. அவை தொடர்ந்து தொடர்ந்து விஞ்ஞான உலகையே வளர்த்து வரும். இவ்வண்ணம் கலைஞர் எண்ணங்கள் கலை உலகை வளர்ப்பவனவாகின்றன. மற்றவர் எண்ணங்களும் மற்ற மற்ற உலகங்களை ஓம்பிவருகின்றன. இம்முறையில் உலகம் வளர்ந்து வருகிறது.
-----
[1] Actually: I am a transmitter and not a maker, believing in and loving the ancients - Confucius. (Life and teachings of Confucius : 1 : 95

எண்ணங்களில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. நல்ல எண்ணங்கள் நல்லுலகை வளர்க்கும்; தீய எண்ணங்கள் தீய உலகை வளர்க்கும். எவ்வுலகம் வளர்தல் வேண்டும்? நல்லுலகமென்று எவருங் கூறுவர் , கூறுவதால் மட்டும் நல்லுலகம் வளர்ந்துவிடாது. நல்லெண்ணங்களைப் பெருக்க உறுதி கொள்ளல் வேண்டும்.

நல்ல எண்ணம் தீய எண்ணம் என்னும் இரண்டில் எது ஆற்றல் வாய்ந்தது? சிலர் நல்லதென்பர்; சிலர் தீயதென்பர். சிலசமயம் தீயதே பேராற்றல் வாய்ந்தது போலத் தோன்றும். ஆழ்ந்த ஆராய்ச்சியால் நல்லதே பேராற்றல் வாய்ந்ததென்பது விளங்கும். எண்ணத்தின் ஆற்றர் பொது வாக அது தோன்றும் இடத்தைப் பொறுத்து நிற்பது. ஒரு வனது நெஞ்சம் தீமையையே எண்ணி ஆழ எண்ணி அதில் ஒன்றி அதுவாகிறது. இன்னொருவன் நெஞ்சம் நல்லதை எண்ணுகிறது; ஆனால் அதுவாகவில்லை. இவ்விருவித எண்ணங்களில் அது ஆற்றல் வாய்ந்தது? தீய எண்ணமே ஆற்றல் வாய்ந்ததாகும்.

வேறொருவன் உள்ளம் நல்லதி லேயே ஒன்றி ஒன்றி அதுவாகிறது. மற்றொருவன் உள்ளம் தீயதில் ஒவ்வொரு போது படிகிறது. ஆனால் அதுவாகவில்லை. இவ்விருவகை எண்ணங்களில் வல்லமையுடையது எது? நல் லெண்ணமே வல்லமையுடையதாகும். தீமையையே எண்ணி எண்ணி அதுவாகிய நெஞ்சம் ஒன்று. நல்லதையே எண்ணி எண்ணி அதுவாகிய நெஞ்சம் ஒன்று. இரண்டும் அவ்வத்தன் மையில் பூரண சக்தி பெற்றிருக்கின்றன. இவைகளில் எதைப் பெரிதென்று சொல்வது? இதற்கு, அனுபவம் தேவை. நல்லதே பெரிது என்று அனுபவம் உணர்த்தும். முழு நல்லது முழுத் தீமையை வெல்லும். அரைகுறை யிலேயே (நல்லதிலேயே) தீமை மேம்படுவதாகும். ஆகவே, நல்லெண்ணங்கள் பெருகப் பெருக உலகம் நலம் பெறுவ தாகுமென்க.

நல்லெண்ணத்தால் பழுத்த மனமுடையாரை எவ்வகைத் தீமையும் ஒன்றுஞ் செய்யாது. தீமை அவரைத் தாக்கினும் வெற்றி பெறாது; தோல்வியுற்றுச் சாயும். நல்லெண்ணங் கனியாத நெஞ்சுடையார் உலகில் மிக எச்சரிக்கையுடன் வாழ்தல் வேண்டும். இல்லையேல், அவரைத் தீமைப்பேய் தாக்கித் தாக்கித் தன் வயப்படுத்தும். அவர் தீமைப்பேய்க்கு எக்காரணம் பற்றியும் இரையாதலாகாது. அவர் தீயருடன் கலவாது நல்லாருடன் கலந்து வாழ்வாராக.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவும் தீதே அவரோ
டிணங்கி இருப்பதுவுந் தீது.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி இருப்பதுவும் நன்று. - ஒளவையார்

ஒரு சிற்றூரிலே ஒரு பெரிய ஆலமரமிருக்கிறது. சில காலத்துக்கு முன்னர் அம்மரத்தடியில் சிலர் வதிந்தனர். அவர் தீய எண்ணமுடையவர். அவர் ஒருவரோடொருவர் பிணங்கிப் போரிடுவர். அவர்தங் குடில்கள் தீக்கிரையாயின. அவர் வெவ்வேறூருக்குச் சென்றனர். தீயர் மரத்தடியை விடுத்து அகன்றாலும், அவரிடத்திருந்து பிறந்த தீய எண்ணங் கள் அங்கேயே உலவலாயின. எவரேனும் அம்மரத்தடியில் சென்றால் அவரைத் தீய எண்ணங்கள் அலைத்து அல்லற் படுத்தும். இருவர் மூவர் சேர்ந்து செல்லினும் ஒருவரோ டொருவர் பிணங்கிப் போரிடுவோராவர். அங்கே ஆடு மாடு கள் செல்லினும் போரிட்டுக் கொள்ளும். அதையுணர்ந்த பலர் அம்மரத்தடியிற் செல்லாதொழிந்தனர். அவ்வூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. பட்டணத்தார் சிலர் அத் திருமணத்திற்குச் சென்றனர். அவருள் இருவர் ஒன்று சேர்ந்து பேசிக்கொண்டே போய்க் கொடிய மரத்தடியை அடைந்து உறங்கினர். உறங்கி எழுந்த பின்னை இருவரும் ஏதேதோ பேசி ஒருவரை ஒருவர் தாக்கி மற்போர் புரிந் தனர். அதுகண்ட கிராமத்தார் சிலர் வேகமாக ஓடி அவ் விருவரையும் மரத்தடியினின்றும் வெளியே விரைந்து விரைந்து ஈர்த்துத் தள்னி வந்தனர். வெளிவந்த இருவரும் தமது பிணக்கை மறந்து, தம்மை மரத்தடியினின்றும் வெளியேற்றியவர் ஓடிவந்த வேகத்தையும், தம்மை ஈர்த்துத் தள்ளிய விரைவையும் சிந்தித்தே நடந்தனர்; வீடு சேர்ந்ததும் பழையபடி நண்பராயினர். அவர் தமக்குள் பகைமை மூண்டதற்குரிய காரணங் காண முயன்றனர்; விசாரணையில், மரத்தடி நிகழ்ச்சியைக் கேட்டு நிலைமையை விளங்கிக் கொண்டனர். தீய எண்ணங்கள் அம்புகள் போலப் பாய்ந்து கேடு விளைக்கும்.

ஒருபோது அச்சிற்றூருக்குப் பெரியவர் மூவர் போந்தனர். அம்மூவரும் தீய ஆலமரத்தடியில் சிறிது நேரம் தங்கச் சென்றனர். எதிரே வந்த சிலரால் அவர் தடுக்கப் பட்டனர். காரணம் அவர்க்கு விளக்கப்பட்டது. அவர் அஞ்ஞாது அம்மரத்தடியிற் சென்று, 'வேயுறு தோளிபங்கன்' என்னுங் கோளறு பதிகம் ஓதித் திருவாசகத்தில் 'சிவபுரா ணம்' பாடினர். கிராமத்தார் பலர் தூரத்திருந்தே பாட லைக் கேட்டு நின்றனர். மூவரும் அவ்விடத்தை விட்டு உடனே போக விரும்பவில்லை; கிராமம் போந்து உணவு கொண்டு ஆலின் அடியிலேயே தங்கி வந்தனர். அவர்க்குள் பிணக்கு உண்டாகவில்லை. காரணமென்ன? அம்மூவரும் நல்லவர்; குணமலைகள். மரத்தடியில் சூழ்ந்து துன்புறுத்தி வந்த தீய எண்ணங்கள் அவர்களை ஒன்றுஞ் செய்தல் இயல வில்லை. பெரியவர் மூவரும் நாடோறும் காலையிலும் மாலை யிலும் தமிழ்மறை ஓதிப் புராணப் பிரசங்கஞ் செய்து வந்த னர். இரண்டு வாரத்தில் மூர்க்கர் விடுத்துச் சென்ற தீய எண்ணங்கள் பெரியவர் மூவரது நல்லெண்ணங்களால் விழுங்கப்பட்டன. ஆலின் கீழ் உலவி வந்த ஆலகாலம்
ஒழிந்தது; அங்கே அமிர்தம் பொங்கலாயிற்று.

வழியே நடந்து போகிறோம்; நல்லதையே நினைந்து பேசிச் செல்கிறோம். திடீரென ஓரிடத்தில் மளங் கெடு கிறது; மனம் தீயதை நினைக்கிறது; வாய் தீயதைப் பேசு கிறது. சிறிது தூரம் கடந்ததும் இடையிற் பிடித்த சனி விட்டொழிகிறது. மீண்டும் மனம் நல்லதை நினைக்கிறது; வாய் நல்லதைப் பேசத் தொடங்குகிறது. என்ன காரணம்? இடை எல்லையில் எவனோ ஒருவன் தீய எண்ணங்களையே எண்ணி எண்ணித் தீமைகளையே செய்திருப்பான். அப்பேய் ஓர் எல்லைவரைத் தொடர்ந்து தொல்லை விளைக்கிறது.

ஒரு கிராமத்துள்ள ஒருவனுக்கும் இன்னொரு கிராமத் துள்ள வேறொருவனுக்கும் எக்காரணம் பற்றியோ பகைமை மூண்டு வளர்ந்தது. ஒருநாள் அவனை இவன் கொல்லக்
கூரிய வாளேந்திப் புறப்பட்டான். இடையில் காற்றும் மேகமும் அச்சுறுத்தின. அணித்தே ஒரு சிறு கோயில் கண்டு கொலைஞன் அதில் புகுந்தான். அங்கே ஒரு புலவர் திருக் குறளில் 'கொல்லாமை' அதிகாரத்தைப் பிரசாரஞ் செய் தனர். அதைக் கேட்டு வந்த கூட்டத்தவருள் கொலைஞனும் கலந்து கொண்டான். பிரசாரம் முடிந்தது. புலவரும் இரண்டொருவரும் கோயில் மண்டபத்திலே படுத்துறங் கினர். கொலைஞனும் அங்கே தங்கிச் சிறிது நேரம் உறங் கினன். இரவு இரண்டு மணிக்குத் தீயன் எழுந்தான்; தன் உள்ளத்தில் மாறுதல் நிகழ்ந்ததைத் தெளிந்தான்; மீண்டும் தன் ஊருக்கே திரும்பினான். அவன் சில நாள் குறளிலுள்ள 'கொல்லாமை', 'அருள்' முதலிய அதிகாரங்களைப் படித்துப் படித்துத் திருவள்ளுவர் அடியவனாய்க் கொல்லா அறத்தில் உறுதியுடையவனானான். கோயிலில் சூழ்ந்திருந்த நல்லெண் ணங்கள் ஒரு கொலைஞனைக் கொல்லா அறவோனாக்கி விட்டன.

பல ஆண்டுகட்கு முன்னர் பலவிதச் சமய சபைகட்கு யான் சென்று வருவதுண்டு. அவைகளிற் சிலவற்றில் தீக் குணங்கள் திரண்டு திருவிளையாடல் புரிந்ததை உணர்ந்து அனுபவித்துள்ளேன். அச்சபைகளில் நுழையும் போதே வெம்மை எரிப்பது போலத் தோன்றும்; பேய் பிடித்து இறக்குவது போலத் தோன்றும். இரண்டொரு சபைகள் பாழாயின. இரண்டொன்றில் சிலர் செல்வதை நிறுத்திக் கொண்டனர். அவைகளின் ஆக்கம் சுருங்குவதைப் பற்றி என்னிடம் நண்பர் சிலர் கேட்பதுண்டு. தீய எண்ணங்கள் நடமாடுவதே ஆக்கஞ் சுருங்குதற்குக் காரணம் என்று யான் சொல்வது வழக்கம். சில நாள் கடந்து அச்சபை களின் நிர்வாகம் மாறியது. அவ்விடங்களில் திருவாசகம், திருவாய்-மொழி, திருமுருகாற்றுப்படை, கந்தரநுபூதி முத லிய நன்னூல்கள் ஒரு மண்டலம் ஓதப்பட்டன. பின்னே படிப்படியே அவைகள் நன்னிலை எய்தின.

முதியவர் ஒருவர்; இளைஞர் ஒருவர். இருவரும் நெருங் கிப் பழகி வந்தனர். எப்படியோ இருவருக்குள் பிணக்குப் புகுந்தது. ஒருநாள் முதியவரைக் காண யான் சென்றேன். அன்று முதியவர்க்கும் இளைஞர்க்கும் போர் நிகழ்ந்தது. முதியவர் இளைஞரைக் கண்டபடி வைது நிந்தித்துச் சாப மிட்டனர். சாபம் எனக்குப் பிடிக்கவில்லை. அஃது அம்பு போல் எனக்குத் தோன்றியது. முதியவரிடம் விடை பெற்று என் வீடு நோக்கினேன். இளைஞர் என்னைத் தொடர்ந்து வந்து என்னைக் கண்டு, முதியவர் மீது வழக்குத் தொடுக்கலாமா?' என்று கேட்டனர். அவர் வேகம் என் னைப் பதிலொன்றுங் கூற விடவில்லை. 'இளைஞரே! நாளை வாரும்' என்று சொல்லி அவரை அனுப்பினேன். அவர் மறுநாள் என்னைக் கண்டனர். யான் கிறிஸ்து பெருமானது மலைப்பொழிவைப் படிக்குமாறு அவரிடம் பைபிலைக் கொடுத் தேன். அவர் அமைதியாக அதைப் படித்தனர். 'மலைப் பொழிவின் சாரம் உமது உள்ளத்தில் இறங்கியதா? ஒன்றி யதா?' என்று வினவினேன். இன்னும் இரண்டொரு நாள் அப்பொழிவைத் திருப்பித் திருப்பிப் படித்துத் தங்களைக் காண்கிறேன் ' என்று சொல்லி இளைஞர் விடை பெற்றனர். மூன்று நாள் கடந்து அவர் என்னைப் பார்க்க வந்தனர். அவரது முகத்தில் ஒருவித மாறுதல் கண்டேன். அகத்தி லுற்ற மாறுதல் முகத்தில் உற்றுள்ளது. அவர் நோக்கில் அமைதியும் சாந்தமும் தவழ்ந்தன. கிறிஸ்து பெருமான் எப்படிப்பட்டவர்? சாந்தமூர்த்தி; அருட்கடல். அவர் தம் மனத்தினின்றும் எழுந்த தண்ணமிழ்தம் மலைப் பொழிவு. அவ்வருட் பொழிவு இளைஞர் மனநிலையை மாற்றியது. 'வழக்கு எப்பொழுது தொடுக்கப்போகிறீர்?' என்று இளைஞ ரைக் கேட்டேன். அவர் பேசாது நின்றனர். 'அன்பார்ந்த இளைஞரே ! மலைப்பொழிவு படிந்த உள்ளத்தால் ஜெபஞ் செய்க. ஜெபம் உம்முடைய உள்ளத்திலெழுந்த வழக்குப் பேயை ஓட்டும்; முதியவர் சாபம் உம்மை அணுகாதவாறு காக்கும்; உமது உள்ளத்தில் நல்லெண்ண அலைகளை எழச் செய்யும். அவைகள் முதியவரிடம் சென்று அவரது மனத்தையும் மாற்றும்; அவரது சாபவாயை ஜெபவாயாக மாற் றும். நல்லெண்ணங்களால் ஜெபஞ் செய்க' என்றேன்.

இளைஞர் மனந்திரும்பி ஜெபஞ் செய்யத் தொடங்கினர் ஜெபத்தில் ஆழ்ந்தனர். அவர் நெஞ்சம் அன்புக் கடலா யிற்று. நல்லெண்ண அலைகள் எழுந்து வீசின. அவை இளைஞரையுந் தூய்மை செய்து, சாபமிட்ட முதியவரையுந் தூய்மை செய்தன. சில நாட்கள் கழிந்தன. முதியவர் இளைஞரை அழைப்பித்து மன்னிப்புக் கேட்டனர். வசையும் நிந்தனையும் சாபமும் முதியவரை விடுத்து அகன்றன. இளைஞர் வழக்குத் தொடுத்திருந்தால் அவர் எரிவாய்க் கொள்ளிப் பைசாசாகி இருப்பர். அவரைக் காத்தது கிறிஸ்து பெருமான் திருவுள்ளம்.

தற்கால உலகம் எப்படி இருக்கிறது? அந்தோ ! சொல்ல நாவெழவில்லை, என்றும் காணாத கொடிய கொலைப் போரை உலகங் காண்கிறது; படாத பாடுபடுகிறது. இன்னுஞ் சின் னாளில் நாமெல்லாம் எங்கே இருப்போமோ? உற்றார் உற வினர் எங்கிருப்பரோ? வீடு வாசல்களும் கன்றுகாலிகளும் எந்நிலை அடையுமோ? [*] எறிகுண்டுக் கலையும் பீரங்கிக் கலை யும் நீர்மூழ்கிக் கலையும் அல்லவோ பெருகிவிட்டன? இவைக ளெல்லாம் தீய எண்ணங்களின் பரிணாமம். பிஸ்மார்க் எண்ணிய எண்ணங்கள் கெய்ஸரிடம் வளர்ந்தன. கெய்ஸர் எண்ணிய எண்ணங்கள் ஹிட்லரிடம் வளர்ந்திருக்கின்றன. அவ்வாறே பல நாடுகளிலுள்ள பொல்லாத அரசியலார் எண்ணிய எண்ணங்கள் - கொலை எண்ணங்கள் - உலக யுத்தமாக மூண்டிருக்கின்றன. தீய எண்ணங்களே உலகை வளைத்துக் கொண்டால், உலகம் என்ன ஆகும்? உலகம் பாழாகும். அந்நிலையை இயற்கை இறை உண்டு பண்ணாது. நல்லெண்ண உலகை அறவே இயற்கை இறை தொலைத்து விடாது. இந்நாளிலும் கிறிஸ்து பெருமான் எண்ணம் - திருவள்ளுவர் எண்ணம் - பாழ்படவில்லை. அவை சிலரிடத் தில் வளர்ந்தே வருகின்றன.
----
[*]இச் சொற்பொழிவு நிகழ்ந்த காலத்தில் அணுகுண்டு காணப்படவில்லை. இப்பொழுது அக்குண்டு காணப்பட்டது.

அச்சிலருள் ஒருவர் நம் நாட்டிலிருக்கிறார். இருள் சூழ்ந்த இக்காலத்தில் - கொலை மலிந்த இந்நாளில் - அஹிம்சா தர்மத்தை - கொல்லாப் பேரறத்தை - உலகுக்கு அறிவுறுத்தும் பெருந்தகை நமது நாட்டில் வாழ்வது நமக்குப் பெருமிதமே. காந்தியடிகள் வாழ்க; அவர்தம் நல்லெண்ணங் கள் வாழ்க; அவைகளால் உலகம் நலம் பெறுவதாக.

எல்லாவற்றிற்கும் அடிப்படை உள்ளம். உள்ளம் நல்வழியில் பண்படல் வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? அலையும் உள்ளத்துக்கு ஒரு கொழுகொம்பு தேவை. கொழுகொம்பு எது? உருவம் ! உருவம் ! உருவம்!

உருவம்

இனி உள்ளத்துக்கு விடை கொடுப்போம்; உருவத்தை எதிர்கொள்வோம்.

உருவம் என்றதும் சிலர்க்கு எரி உண்டாகும். அவர், 'என்ன? உருவமா? அஞ்ஞானம் - துக்கம்' என்பர்; 'உருவங் கடந்த ஒன்றே தேவை; அதுவே ஞானம்' என்பர். இந்த ஞானப் பேச்சு நன்றாக இருக்கிறது! இது திண்ணை வேதாந்தம் பேசிக் கொட்டாவி விட்டுக் காலங் கழிப் போருக்கு இன்பமும் ஊட்டும். ' உருவம் அஞ்ஞானம் - துக்கம்' என்போர் தமக்குக் கை கால் கண் மூக்கு வாய் உண்டா இல்லையா என்று சற்றுச் சிந்திப்பாராக. உருவம் அஞ்ஞானம் - துக்கம்' என்று நினைப்பது எது? பேசுவது எது? ' உருவமற்ற ஒன்றை ' நினைப்பது எது? பேசுவது எது? உன்னுங்கள். சகோதரர் மனத்தை விடுத் தும் வாக்கை விடுத்தும், உருவத்தைப் பழித்து உருவமற்ற தைப் போற்ற முயன்று பார்ப்பாராக. அம்முயற்சி முட வன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக முடியும். உருவத்தி லிருந்து கொண்டும், உருவத் துணை கொண்டும், நினைந்தும், பேசியும் வாழ்வு நடாத்தும் சகோதரர் உருவத்தைப் பழிப்பது தவறு. அது நன்றி கொல்வதாகும்.

சூந்யப் பேச்சு

உருவத்தை நினைத்துப் பார்ப்போம். நானாவித உருவங்கள் மீது உள்ளஞ் செல்கிறது. உருவமற்றதை உளங் கொண்டு பார்ப்போம். என்ன உறுகிறது? ஒன்றையுங் காணோம். 'உருவமற்றது - உருவமற்றது' என்று மட்டும் பேசப்படுகிறது. அப்பேச்சுக்குரிய பொருள் எது? அதை நினைத்தலும் இயலவில்லை. நினைவுக்கெட்டாத ஒன்றைக் குறித்து வாய் பேசுகிறது! என்ன வியப்பு ! உருவமற்ற ஒன்று பேச்சுக்கு மட்டும் அடங்குவதாகுமோ? பேச்சுக்கு அடிப்படை நினைவு. நினைவுக்கு எட்டாத ஒன்று எப்படிப் பேச்சில் அடங்கும்? அதைக் குறித்து எப்படிப் பேசுவது ? என்னென்று பேசுவது? அது மூலமற்ற பேச்சு - பொரு ளற்ற பேச்சு - சூந்யப் பேச்சு - ஆகும். சூந்யாப் பேச்சைக் கேட்பவரில்லையா? எதையுங் கேட்பவர் உலகிலிருக்கிறார். உருவமற்றதைப் பற்றி ஒருவர் பேசுகிறார்; மற்றவர் கேட் கிறார். இவர் உள்ளத்தில் என்ன நிலைக்கும்? பேசுவோரது வாயுங் கண்ணும் மூக்கும் தாடியும் பிறவும் நிலைக்கும். மற்றுமொன்று நிலைக்கும். அஃதென்ன? உருவ நிந்தனை. உருவமற்றதைப் பற்றிப் பேசுவோர் அதைப்பற்றி அவர் எங்ஙனம் பேசுதல் கூடும்? உருவத்தை நிந்தனை செய்வதே உருவமற்ற ஒன்றைப் பற்றிய பேச்சு என்று மக்கள் கொள்ளல் வேண்டும் போலும்! மனமும் வாக்கும் உடை யார் உருவமற்றதைக் குறித்துப் பேசுவதாலும், அதை மற்ற வர் கேட்பதாலும் விளையும் பயன் என்னவோ தெரிய வில்லை .

உருவ இயல்

உருவம் எது? வடிவமுடையது உருவம் என்று பொதுப்படச் சொல்லிவிடலாம். வடிவம் எது எனில் என் செய்வது? உருவமுடையது வடிவம் என்று சொல்லு தல் வேண்டும். இது நீரைப் புனல் என்று சொல்வதை ஒக்கும். உருவத்தை எப்படி விளக்குவது? 'உருவம்' பெரியதிற் பெரியதாக வளர்ந்து செல்வது; சிறியதிற் சிறியதாகத் தேய்ந்து போவது. உருவத்தை விளக்கப் புகும் பொழுதே அதன் அருமைப்பாடு புலனாகும். பெரியதிற் பெரியதாகவும், சிறியதிற் சிறியதாகவும் உள்ள ஒன்றைப் பெரியதிற் பெரியதைப் பரந்து பார்க்கவும், சிறியதிற் சிறி யதைக் கூர்ந்து நோக்கவும் இயலாத ஒருவன் (அதை) எங் ஙனம் விளக்கிக் காட்டுதல் கூடும்? உருவத்தின் இயல்கள் பலப்படக் கிடக்கின்றன. அவைகளில் இரண்டொன்றைச் சுருங்கச் சொல்ல முயல்கிறேன். காலத்தைப் பற்றிய கவலை வேண்டுவதில்லை. இன்றைய சொற்பொழிவு இன் னுஞ் சிறிது நேரத்தில் முற்றுப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லை

உருவம் எது? எல்லையுடையது என்று சுருங்கச் சொல்லலாம். இக்கல் எல்லையுடையது; இச்சுவர் எல்லை யுடையது; இக்கட்டிடம் எல்லையுடையது; இச் சிந்தாதிரிப் பேட்டை எல்லையுடையது; சென்னை எல்லைக்குட்பட்டது; சென்னை மாகாணம் எல்லைக்குட்பட்டது; இந்தியா எல்லைக் குட்பட்டது; ஆசியா எல்லைக்குட்பட்டது; உலகம் எல்லைக்குட்பட்டது; சந்திரனுக்கு எல்லையுண்டு; சூரிய னுக்கு எல்லையுண்டு; கோள்களுக்கு எல்லையுண்டு; அண் டங்கட்கு எல்லையுண்டு; அண்டகோடிகளெல்லாம் எல்லைக் குள் இருப்பனவே. அண்டகோடிகட்கு மேலும் மனம் எட்டி எட்டித் தாவுகிறது; பாய்கிறது; முட்டுப்படுகிறது; சுழல்கிறது; எண்ண அலைகள் மோதுகின்றன. எல்லை கொண்ட இக்கல்லின் துணுக்கு எல்லையுடையது; துகள் எல்லையுடையது; அணு எல்லையுடையது; பரமா அணு எல்லையுடையது; அணுவுக்கு அணுவா யுள்ளதற்கும் எல்லையுண்டு; அதற்குள்ளும் மனம் நுழைந்து நுழைந்து பார்க்கிறது; நெருக்கு ஏற்படுகிறது; எண்ணங்களே முகிழ்க்கின்றன. எல்லையற்ற ஒன்றைக் காணும் பேறு மனத்துக்கில்லை,

எண்ணமும் உருவமும்

எண்ணம் உருவமா? உருவமற்றதா? எண்ணத்துக் கும் வடிவம் நிறம் முதலியன உண்டு என்று இக்கால விஞ் ஞானியர் கண்டுள்ளனர். எண்ணத்தின் நிறங் கொண்டு மக்கள் குணம் இந்நாளில் கணிக்கப்படுகிறது. இவைகளை யெல்லாம் ஆராய்ந்து தெளிந்த அறிஞர் பலரும், எண்ணத் துக்கும் வடிவம் உண்டு என்ற முடிவுக்கு வந்தனர்.

எண்ணம் பிறக்குமிடம் உள்ளம். உள்ளம் மாயா காரியமென்றும், ஒரு தத்துவமென்றும், தோற்ற ஒடுக்க முடையதென்றும் முன்னே விளக்கப்பட்டன. ஆதலின், உள்ளமும் உருவம் என்க.

எண்ணமாவது ஒலியின் ஈட்டம். ஒலி இருவகை. ஒரு வகை கேட்கும் ஒலி; மற்றொருவகை கேளா ஒலி. இதைப் பற்றி விஞ்ஞானப் பேராசிரியர் இராஜேசுவரி யம்மையார் இரண்டொரு நாளில் இங்கே பேசப்போவது உங்களுக்குத் தெரியும். கேளாத ஒலியின் ஈட்டமே எண்ணம். அவ் வொலியலைகள் இந்நாளில் விஞ்ஞானிகளால் படம் பிடிக்கப் படுகின்றன. ஆகவே, ஒலியும் உருவத்தின் பாற்பட்ட தென்று கொள்க.

உருவம் அருவம் அருவுருவம்

'எண்ணம் ஒலி முதலியவற்றை அருவமாகக் கொள்ள லாகாதோ' என்று சிலர் கருதல் கூடும். அருவமென்பது உருவம் அற்றதன்று. உருவின் நுண்மையே அருவம். பருமை உருவமென்றும், அதன் நுண்மை அருவமென்றும் வழங்கப்படுகின்றன. கட்டி பருமை; நீர் நுண்மை . நீர் ஆவி யாம் போது நீர் பருமையாகிறது; ஆவி நுண்மையாகிறது. இம் முறையில் உருவ அருவ நிலைகளைக் கொள்க. நுண்ணுருவமே அருவமென்பது.

அருவுருவமென்பது யாது? அது நுண்மையும் பருமை யுங் கலந்த ஒன்று. அதுவும் உருவினதே. உருவம் அருவம் அருவுருவம் என்று வழங்கப்படுவனவெல்லாம் உருவத்தின் பாற்பட்டனவே. வேற்றுமை, பருமை நுண்மைகளை ஒட்டி நிற்பது.

'சிவன் உரு அருவுமல்லன் .......' என்ற தொடக்கத்தை யுடைய பாட்டொன்று சித்தியாரில் இருக்கிறது. சிவன் உருவுமல்லன்; அருவுமல்லன்' என்று சித்தியார் ஆசிரியர் அருளியிருக்கிறார். [1] அருவம் உருவமற்றதாயின், ஆசிரியர் அருவத்தைப் பாட்டிற்பெய்யாது விலக்கியிருப்பர். அருவம் நுண்ணுருவமுடையதாதலின் அதையுங் கடந்தது 'சிவம்' என்று உலகுக்கு அறிவுறுத்தவேண்டி, ஆசிரியர் 'சிவன் உருவுமல்லன்; அருவுமல்லன்' என்னுங் கருத்துப்பட -அருளலாயினர்.

----
ஐந்து பூதம் ... [1]தொந்த ரூபமுடன் அரூபமாதி குறி குணமிறந்து வளர் வஸ்துவே; அருவுருவமெல்லாம் அகன்று அதுவாயான பொருள் - தாயுமானார்.
-----

உருவம் எல்லையுடையது என்று சொல்லப்பட்டது. உருவத்தின் நுண்மைகளும், அவைகளின் கூறுகளும் எல்லையுடையனவே. எல்லையுடையனவெல்லாம் அழிதன் மாலையன. எல்லையுடையன அரண்டரண்ட பகிரண்ட மாயினுமாக; அணுவுக் கணுவாயினுமாக. எல்லாம் அழிந்து படுவனவாம். எல்லையுடையது அழியுந் தன்மைய தாயின் அழியுந்தன்மையும் உருவின் ஓர் இயலாகும்.

காரண காரியம்

உருவம் காரணமா? காரியமா? உருவமெல்லாம் காரியமே. காரியம் நாமரூபமுடையது. நாமரூபமுடைய ஒன்று - அது எதுவாயினும் - என்றாதல் அழிந்தே தீரும். 'தோற்றமுண்டேல் மரணமுண்டு' என்றார் வன்றொண்டப் பெருமானார்.

உருவத்தின் இயல்களுள் இங்கே குறிக்கப்பட்டன இரண்டு. ஒன்று எல்லையுடைமை; மற்றொன்று அழியுந் தன்மை. வேறு பல இயல்கள் இவ்விரண்டில் அடங்கும்.

எல்லையும் அழியுந்தன்மையும் உடைய எல்லாம் முத லும் முடிவுங் கொண்டனவா யிருத்தல் வேண்டும். அவை ஓரளவையு முடையனவா யிருத்தல் வேண்டும்.

உருவமெல்லாம் மாயா காரியம். மாயா காரியம் ஒன்றா? இரண்டா? பலப்பல ! அவை மெய்யறிஞரால் தத்துவங்களாக முறை செய்யப்பட்டன. தத்துவங்கள் முப்பத்தாறாகத் தொகுக்கப்பட்டன. அத் தொகைவிவரம் முன்னே பேசப்பட்டது. முப்பத்தாறு தத்துவங்களும் [1]நாதம் முதல் மண் ஈறாக உள்ளன. ஒவ்வொரு தத்துவ மும் எத்துணையோ புவனங்களாக விரிந்துள்ளது. தத்துவ புவனங்களைக் கணக்கிட்டு அறுதியிடலாகாது. அவ்வளவும் உருவமே. உருவம் நாதமுதல் நுண்ணியதாக அரும்பி அரும்பிப் படிப்படியே பருமையாகிப் பருமையாகி மண் வரை விரிந்து நிற்பது. பருமை உருவம் மண்ணினின்றும் படிப்படியே நுண்ணியதாய் ஒடுங்கி ஒடுங்கி நாதம் வரைச் செல்லும்.
----
[1] பூதமுத லாகவே நாதபரி யந்தமும் பொய்யென்று - தாயுமானார்.

[1] இத் தத்துவங்களைக் கடந்து நிற்பது. எதுவோ அதுவே உருவமற்ற ஒன்று. அது வாக்கு மனங் கடந்தது; எல்லையற்றது. உருவத்தை மட்டும் நினைக்கும் பண்பு வாய்ந்த மனத்தால் உருவமற்ற ஒன்றை நினைத்தல் கூடுமோ? இதற்குப் பெருத்த தர்க்க வாதங்கள் தேவையில்லை .
---------
[1] ஆறாறி னதிகமக் ராய மனுதினம்............ சாமிமலை யுறை - தம்பிரானே - அருணகிரியார்.

உருவமும் இயற்கை அன்னையும்

அண்ட கோடிகளும் அணுக் கோடிகளும் உருவ மாகவே அமைந்துள்ளன. அவைகளினூடே இயற்கை அன்னை புரிந்து வரும் திருவிளையாடல்களை நோக்க நோக்க உருவத்தின் பெற்றிமை இனிது புலனாகும். உருவங்களில் அன்னை, உருவத் திருவிளையாடலே புரிகின்றாள். அவை களைக் கண்டு இன்புறப் பல உலகம் புக வேண்டுவதில்லை. நமது நிலவுலகக் காட்சியே சாலும்.

நமது நிலவுலகை நோக்குவோம். இஃது உருவம் உடை யதே. இதற்கு அகல நீளம் உண்டு. இதனின்றும் மலையும் காடும் வயலும் கடலும் பூத்துள்ளன. எற்றுக்கு? உருவத் தின் மாண்பை உணர்த்தவே இவைகள் பூத்துள்ளன. மலை யும் காடும் வயலும் கடலும் ஒருதிறமாயில்லை. அவை பல திறமாக அமைந்துள்ளன; பலதிறப் பெயர்களையும் பெற் றுள்ளன. ஏன்? உருவத்தின் பெருமையைப் புலப்படுத் தவே என்க. மரங்களில் பாகுபாடு - பறவைகளில் பாகு பாடு - விலங்குகளில் பாகுபாடு - மக்களிலும் பாகுபாடு - காண்கிறோம். இப் பாகுபாடுகளால் விளங்குவதென்னை? உருவத்தின் சிறப்பே விளங்குகிறது. இந்நாட்டு மரம், இந் நாட்டுப் பறவை, இந்நாட்டு விலங்கு, இந்நாட்டு மக்கள் என்று பேசப்படுதல் கண்கூடு. இப்பேச்சு உணர்த்துவ தென்னை? உருவத்தின் பெற்றியையே உணர்த்துகிறது. மக்களெல்லாம் ஒரே இனம். அவர்கள் உயிரில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

ஆனால், மக்கள் பலவேறு அமைப் புடையவர்களாய், பலவேறு நிறமுடையவர்களாய், பல வேறு மொழியுடையவர்களாய், பலவேறு உடையுடைய வர்களாய் வாழ்கிறார்கள். இப்பன்மை, உருவத்தின் உயர் வைக் காட்டவே தோன்றியுள்ளது. இன்னார் இத்தொழில் ஏற்றுள்ளவர் என்று உலகம் உணர்ந்து கொள்ளப் பலவித உடைகள் காணப்பட்டுள்ளன. உடையைக் கொண்டு இவர் வக்கீல் - இவர் சிப்பாய் - இவர் போலிஸார் - என்று அறிகிறோம். இவ்வேற்றுமை உருவத்தின் மேன்மையைத் தெரிவிப்பதாகும். ஒரே கடவுள் - ஒரே சமயம் ! ஆனாலும் உலகம் கடவுளைச் சிவன் என்றும், திருமால் என்றும், ஜொஹோவா என்றும், அல்லா என்றும் தொழுகிறது. திருநீறு, திருமண், அங்கி, தாடி முதலியவற்றைச் சமயக் கோலங்களாக உலகம் கொண்டுள்ளது. இவ்வேறுபாடு களிலும் உருவத்தின் விழுப்பமே பொதிந்து கிடக்கிறது.

விஞ்ஞானியர் இயற்கையிலுள்ள சக்திகளின் உண் மையை முதலாவது ஊகஞ் செய்கிறார்; பின்னே உண்மை காணக் கருவிகளைக் கொண்டு ஆராய்கிறார். கருவிகளாகிய உருவங்களின் துணையின்றி விஞ்ஞானியராலும் இயற்கைச் சக்திகளின் உண்மையை நிறுவிக்காட்டல் இயல்வதில்லை. ஆகாய அலை, மின் அலை, வெப்ப அலை, ஒளி அலை, ஒலி அலை முதலியன எப்படி உணர்த்தப்படுகின்றன? உருவக் கருவிகளின் துணையா-லல்லவோ உணர்த்தப்படுகின்றன?

ஆசிரியர் கணிதம் போதிக்கிறார். போதனையை மாணாக்கர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிவிக்க அவர் கரும்பலகையில் எண்களைப் பொறிக்கிறார்; கோடிடுகிறார்; வட்டமிடுகிறார். இவை யாவும் உருவங்களல்லவோ?

பத்திரிகாசிரியர் சில கருத்துக்களைப் படங்கள் வாயி லாக வெளியிடவே முயல்கிறார். ஏன்? படங்கள், கருத் துக்களை நன்கு புலப்படுத்து மென்பது அவர்தம் உள்ளக் கிடக்கை .

நூலாசிரியர் உள்ளத்தில் பல கருத்துக்கள் செறிந்து கிடக்கின்றன. அவர்தம் உள்ளத்தில் கருத்துக்கள் செறிந்து கிடப்பதால் மற்றவர்க்கு என்ன பயன் விளையும்? அவர்தங் கருத்துக்களை எழுத்துருவில் இறக்கிய பின்னரே அவைகள் மற்றவர்க்குப் பயன்படுகின்றன.

இக் கட்டடத்தைப் பாருங்கள். அழகிய கட்டடம்! இது முதல் முதல் சிற்பியின் உள்ளத்தில் கருக்கொண் டது; பின்னே கல் மண் சுண்ணம் மரம் இரும்பு முதலிய வற்றின் சேர்க்கையால் இவ்வுருக் கொண்டது. கல் முதலிய உருவங்களில்லையேல், சிற்பியின் எண்ணம் இக் கட்டடமாகிக் காட்சியளிக்குமோ?

ஓவியத் துறையில் கைபோய ஒருவன் இருக்கிறான். அவன் ஓவியம் வரையாமலோ வடியாமலோ கிடந்தால் அவன் திறம் எப்படி வெளியாகும்? அவனால் ஓர் ஓவிய உருவம் வரையப்படின் - அல்லது வடிக்கப்படின் - அப் பொழுதே அவன் திறம் விளங்குவதாகும்.
அறிவு அழகு காதல் முதலியன பேசப்படுகின்றன. இவைகளை எப்படி அனுபவித்தல் கூடும்? இவைகள் உருக் கொண்டு கண்ணெதிரில் உலவுகின்றனவா? இல்லை. அறி வுக்கு நிலைக்களன் மூளை. மூளையில் நிலைத்து ஒருவர் வாயி லாகத் தன்னை உணர்த்துவது அறிவு. அழகு ஒருவரிடம் ஒன்றியே தனது இயல்பைப் புலப்படுத்துகிறது. காதல் மிக உயர்ந்தது; ஒப்புயர்வற்றது. ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான்; இவளும் அவனைக் காதலிக்கிறாள். இருவர் மனமும் ஒன்றாகிவிட்டது. ஆனாலும் காதலாகிய பயன் விளைந்ததோ? பயன் விளைவுக்கு உறுப்பு வேண்டுவ தாகிறது. ஆகவே, அறிவு அழகு காதல் முதலியன தன் தன் இருப்பை வெளிப்படுத்த உருவங்களை அவாவுதலைத் தெளிக.

உள்ளம் நினைக்கிறது. அது தானே நினைக்கிறதா? இல்லை. அதற்குக் கருவி கரணத் துணை தேவையாகிறது. உள்ளம், கண்கொண்டு காண்கிறது; காது கொண்டு கேட்கிறது. கண் காது முதலிய கருவிகளின் துணையால் உள்ளம் தன் கடமைகளைச் செய்கிறது.

உடலில் பொறி புலன்கள் பூத்துள்ளன. அவைகள் படிந்து வினையாற்ற உலகமிருக்கிறது. உலகமில்லையேல், பொறி புலன்கள் என் செய்யும் ? பொறி புலன்களில்லை யேல், உலகால் என்ன பயன் விளையும்? பொறி புலன் களும் உலகமும் ஒன்றுவதினின்றுமே வாழ்க்கை அரும்பு கிறது; மலர்கிறது. வாழ்வுக்கு ஈருருவச் சேர்க்கை வேண்டும்.

எல்லாம் உருவம்

உருவத்தைப்பற்றி இன்னும் பலப்பட விரித்துக் கொண்டே போகலாம். காலத்தின் அருமையை நோக்கி இவ்வளவில் நின்றுவிடுகிறேன்.

ஒலி உருவம் - எண்ண ம் உருவம் - உள்ளம் உருவம் - கருவி கரணங்கள் உருவம் - பொறி புலன்கள் உருவம் - உடல் உருவம் - அகிலம் உருவம் - அகில கோடிகளெல்லாம் உருவம் - அணு உருவம் - அணுவுக்கு அணுவும் உருவம் - எல்லாம் உருவம். உருவிலே பிறந்து, உருவிலே வளர்ந்து, உருவிலே வாழ்ந்து, உருவாக விளங்கும் நாம், உருவத்தை
எள்ளுவதும் பழிப்பதும் நிந்திப்பதும் அறிவாகுமா?

நமது உள்ளத்துக்கு - கரணங்கட்கு - பொறி புலன் கட்கு - உடலுக்கு - உலகுக்கு - வாழ்வுக்கு - எல்லாவற் றிற்கும் உருவம் தேவை; தேவை; உருவமற்ற ஒன்றை உணர்வதற்கும் உருவத் துணை தேவை.

தொடர்பு

இனி வரவேண்டுவது உள்ளத்துக்கும் உருவத்துக்கும் உள்ள தொடர்பு. இத்தொடர்பு பின்னே பேசப்போகும் உள்ளுணர்வும் வழிபாடும்' என்னும் பொருளிலும் கலந்து வரும். ஆதலின், இப்பொழுது அதுபற்றி இரண் டோர் உரை பகர்ந்துவிடலாமென்று எண்ணுகிறேன்.

உள்ளத்துக்கும் உருவத்துக்கும் உள்ள தொடர்பு இயற்கையானது; இன்றியமையாதது. இதைத் 'தாதான் மியம்' என்று தத்துவர் கூறுப.

உள்ளத்தின் இயக்கம்

உள்ளம் தோற்ற முடையதென்றும் ஒடுக்கமுடைய தென்றும் முன்னே சொல்லப்பட்டது. இவ்விரண்டியலை யும் உடையது உருவம் என்பதும் முன்னர் விளக்கப் பட்டது. ஆதலின், உள்ளம் உருவமுடைய தென்று மீண்டும் இங்கே வலியுறுத்த வேண்டுவதில்லை. உருவங்களில் நுண்மை வாய்ந்தனவற்றுள் உள்ளமும் ஒன்று.

நுண்ணுருவமுடைய உள்ளம், மற்ற உருவங்களில் எவ்வகையிலாதல் ஒன்றியே தன் கடமைகளை ஆற்றும். அகு தனித்து இயங்காது; ஏதாவது ஓர் உருவுடன் கலந்தே இயங்கும்.

எண்ணுவது எது? உள்ளம். உள்ளம் தானே எண்ணாது. அதற்குத் துணைக்கருவி வேண்டும். துணைக் கருவி எது? கரணம். உள்ளம் கரணத் துணை கொண்டே பொருளை எண்ணுவதாகிறது. கரணத்துக்கு ஆதாரமாக மற்றக் கருவிகள் நிற்கின்றன. ஆகவே, உள்ளம் ஒன்றை எண்ணுதற்குக் கருவி கரணத் துணை வேண்டி நிற்கிற தென்க ..

உள்ளம் பொறி புலன்களின் தொடர்பு கொண்டே காண்டல் கேட்டல் முதலிய செயல்களை ஆற்றுகிறது.

உள்ளத் தொடர்பு

உள்ளம் பற்பல உறுப்புக்களின் வாயிலாகவே உலகுடன் தொடர்பு கொள்கிறது. உறுப்புக்க ளில்லையேல், உள்ளம் எங்ஙனம் உலகுடன் தொடர்பு கொள்ளும் ?

உள்ள நிகழ்ச்சிக்கு எல்லா வழியிலும் உருவச் சேர்க்கை வேண்டப்படுகிறது. உள்ளத்துக்கு உருவம் தேவை; உருவத்துக்கு உள்ளம் தேவை. அஃதின்றி இஃதில்லை; இஃதின்றி அஃதில்லை. உள்ளமுள்ள இடத்தில் உருவமிருக்கும்; உருவமுள்ள இடத்தில் உள்ளமிருக்கும். இரண்டும் ஒன்றுபட்டே வாழ்க்கையை - உலகை - அமைக் கின்றன.

உள்ளம் உள்ளவரை பிரகிருதி உலகமுமிருக்கும்; இஃதுள்ளவரை அஃதுமிருக்கும். உள்ளம் உறங்கினால் அவ்வுலகமும் உறங்கும்; இஃது உறங்கினால் அஃதும் உறங்கும். இரண்டும் ஒன்றே என்ற ஒரு சித்தாந்தமு முண்டு. அச்சித்தாந்தம், மனமே கரணமாய்ப் பொறி புலன்களாய் உடலாய் உலகமாய்ப் பரிணமிக்கிறது என்றும், மனம் மறைந்தால் எல்லாம் மறையும் என்றும் அறிவுறுத்துவது. இங்கே மனம் உள்ளவரை பிரகிருதி உலகமும் உண்டு என்பதும், அது மாய்ந்தால் இதுவும். மாயும் என்பதும் இரண்டுக்குமுள்ள தொடர்பை உணர்த் துவனவாம். உள்ளம் உலகுடன் கலந்தும், உலகம் உள்ளத்துடன் கலந்தும் உழன்று உழன்று படிப்படியே ஒடுக்கமுறும். அவை ஓடுங்க ஓடுங்கப் பிராணன் தனி ஆட்சி செலுத்தும். பிராணன் ஆட்சியில் விந்து நாதநெறி தோன்றும். விந்து நாதம் உள்ளொளிக்குரிய வழி காட்டும். உன்ளொளி , தோற்றமுற்றதும் விந்து நாதம் ஒடுங்கும். விந்துவும் நாதமும் முறையே ஒளி ஒலி ஆகிய நுண்ணுரு வங்களுடையவை. அவை ஒடுங்கியதும், நுண்ணுருவங் களுக்குரிய சுத்த மாயையின் தொடர்பு அற்றுப்போகும்.
அந்நிலையில் உள்ளொளிப் பேறு கிடைக்கும்; உருவமற்ற பெருவெளி - சிதாகாச - உண்மை விளங்கும்.

உள்ளொளிப் பேற்றுக்கு உள்ளத் துணையும் உருவத் துணையும் தேவை. அவை இன்றியமையாதன. இரண்டும் ஒன்றியே உள்ளொளிக்கு வழி கோலுகின்றன. அவை கட்கு எந்நன்றி செலுத்துவது? உள்ளமும் உருவமும் வாழ்க; வாழ்க.

கூடுத லுடன் பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க் குவிதலுடன் விரித லற்றுக்
      குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான குழியற்று மலமு மற்று
நாடுதலு மற்றுமேல் கீழ் நடுப் பக்கமென நண்ணுதலு மற்று விந்து
      நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று ஞாதுருவின் ஞான மற்று
வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிரண்டற்று வாக்கற்று மனமு மற்று
      மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே வாய்மடுத் துண்ட வசமாய்த்
தேடுதலு மற்றவிட நிலையென்ற மௌனியே சித்தாந்த முத்தி முதலே
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்த குருவே.
      - தாயுமானார்
---------------

2. உள்ளுணர்வும் வழிபாடும்

உள்ளுணர்வு

தோழர்களே !
முதல் நாள் ' உள்ளமும் உருவமும்' என்ற பொருள் பேசப்பட்டது. இன்று 'உள்ளுணர்வும் வழிபாடும் என்பது பேசப்படும். இரண்டும் தொடர்புடையனவே.

உணர்வு வகை

உணர்வு இருவகை. ஒன்று வெளியுணர்வு; இன் னொன்று உள்ளுணர்வு. இவை முறையே பொய்யுணர் வென்றும் மெய்யுணர்வென்றும் வழங்கப்படுகின்றன முன்னையது மனம் புறத்தே விரிந்து அலைந்து பொருளல் லாத பொருளிற் படியுங்கால் விளங்குவது; பின்னையது மனங் குவிந்து குவிந்து செம்பொருளிற் படியப் படிய விளங்கிவருவது.

விவகாரத்தில் உள்ளமும் உருவமும் ஒன்றுடன் ஒன்று ஒன்றும் போது தன்னை விளங்கச் செய்து கொள்வது உணர்வு. அஃது இரண்டு பொருள் சேர்க்கையில் தோன்றும். புதுப் பண்பு போன்றதன்று. உணர்வு, எங்கும் இருப்பது, இரண்டின் கூட்டுறவிலே துலங்குந்தன்மையது.

வெளியுணர்வு பொய்ம்மையது. அது பொறுமை அமைதி சாந்தம் அன்பு அருள் ஒப்புரவு முதலிய நறுங் குணங்களை வளர்க்கும் ஆற்றல் இல்லாதது. அதைப் பற்றிய பேச்சு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. எடுத்துள்ள பொருளும் அஃதன்று.

உள்ளுணர்வுத் தோற்றம்

உள்ளமும் உருவமும் ஒரு நிலையில் மறைந்தொழிவன. அவைகளின் கூட்டுறவால் எழும் உள்ளுணர்வோ அவைகளுடன் மறைந்தொழிவதன்று. உள்ள உருவக் கூட்டுறவு அற்றதும் உள்ளுணர்வுக்கு வேறு கூட்டுறவுகள் கிடைக்கும். அக் கூட்டுறவுகளால் அவ்வுணர்வு படிப்படியே தன்னைப் பெருகச் செய்துகொண்டே போகும். அது தன் சொரூபம் அடைந்ததும் பரவெளியில் கலக்கும்; ஒளியாகும்; உள்ளொளி யாகும்; பரவொளியாகும்.

உள்ளுணர்வு உள்ளொளிக்குத் துணை செய்வதென்று சிலரும், உள்ளுணர்வே உள்ளொளியாகும் என்று வேறு சிலரும் கூறித் தம்முள் பிணங்கி வாதப்போரிடுவர். இது வாய் வேதாந்தம். உள்ளொளி நிலையில் வாக்கேது? மன மேது? அங்கே வாதமேது? ' கலத்தல் ', ' அது ஆதல்' முதலிய சொற்களை வாய் வேதாந்திகள் மனம் போனவாறு பொருள் படுத்தித் தாங்களும் பாழாகிப் பிறரையும் பாழ்படுத்துகிறார்கள். அனுபவத்தில் தெளிவு பெறத்தக்க நுண்மைகளைப் பருமையுணர்வால் வாதத்தில் புகுத்துவது அறமாகாது.

உள்ள உருவச் சேர்க்கையால் தலைகாட்டும் உள்ளுணர்வு வாளா இராது. அது, தன்னை மேலும் மேலும் விளங்கச் செய்யவே விரையும். விரையும் உள்ளுணர்விற்கு ஏதாவ தொன்று வேண்டுமன்றோ? பொருந்தியது எது? வழிபாடு. வழிபடுதல் வழிபாடு. உள்ளுணர்வு வளர்ச்சிக்கு வழிபாடு ஒளிபோன்றது.

வழிபாடு

'உள்ளமும் உருவமும்' என்னும் பொருளில் ' உள் ளுணர்வும் வழிபாடும்' என்பது தொக்கி நிற்பது. உள்ள மும் உருவமும் ஒன்றுடன் ஒன்று உறவுடையன. இவ்வுற வால் விளைவது உள்ளுணர்வு. உள்ளுணர்வுடன் கேண்மை கொண்டது வழிபாடு. இத்தொகை-முறைமையை 'உள்ள மும் உருவமும்' என்பதும், ' உள்ளுணர்வும் வழிபாடும்' என்பதும் வகைப் படுத்துவனவாம். சில விடங்களில் தொகை முறைமை பற்றியும், சில விடங்களில் வகை முறை மைப்பற்றியும் பேசிச் செல்வன்.

உருவ வகை

உள்ளம் எத்தனையோ வித உருவங்களில் படிகிறது. அப்படி வினின்றும் எழுவனவெல்லாம் உள்ளுணர்வாகுமா? ஆகா . உள்ளுணர்வை எழுப்பவல்ல உருவங்களில் உள்ளம் சேர்க்கை பெறுதலே நல்லது. இல்லையேல் உள்ளுணர்வு அரும்புதலுஞ் செய்யாது. இங்கே உருவங்களில் வகைக ளிருத்தலைக் கருதுங்கள். வகைகளைப் பலப்பட விரிக்கலாம்.

பலபட்ட விரிவு இங்கே அநாவசியம். வகைகளை இரண் டாக இங்கே தொகுக்கலாம். ஒன்று, உள்ளம் தன்பால் படியுங்கால் உள்ளுணர்வை எழுப்பத் தகுதி வாய்ந்த உருவக் கூட்டம்; மற்றொன்று, உள்ளுணர்வை எழுப்பத் தகுதி இல்லாதது. முன்னையதில் உறுவது வழிபாடு; பின்னையதில் உறுவது வழிபாடாகாது. வழிபாடு ஆழ்ந்த பொரு ளுடையது. வழிபாடென்று கண்ட கண்ட உருவங்களிற் கருத்துச் செலுத்தலாகாது. வழிபாட்டுக்கு விழுமிய உருவைக் குறிக்கொள்ளல் வேண்டும்.

உள்ளம் உருவத்தில் ஒன்றி ஒடுங்குதற்கும், அதனால் உள்ளுணர்வு எழுதற்கும் வேண்டப்படுவது வழிபாடு. அவ்வழிபாட்டைச் சிறிது விரித்துப் பேச முற்படுகிறேன்.

விழுமிய ஒன்று - கடவுள்

விழுமிய ஒன்றைக் குறிக்கொண்டு நிகழ்த்தப்படுவது வழிபாடு. விழுமிய ஒன்று எது? மனநெடுந்தேரேறிச் செல் வோம். விழுமிய ஒன்று [1]'இஃதன்று இஃதன்று' என்றே மனஞ் செல்கிறது; மேலுஞ் செல்கிறது; மனம் தளர்கிறது; சோர்கிறது; வீழ்கிறது. மேலே மேலே கடந்து அது செல்லி னும் அதனால் விழுமிய ஒன்றன் எல்லை காண்டல் இயல வில்லை. எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்றதாக உள்ள ஒன்று இருத்தல் வேண்டும். எல்லைக்கு எல்லையற்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். அஃது எது? அதையே உலகம் கடவுள் என்று ஏற்றுப் போற்றி வருகிறது. கடவுளே விழுமியது. கடவுளினும் விழுமியதொன்றில்லை.

---------
[1]. 'அல்லைஈ தல்லை ஈதென மறைகளும் அன்மைச்
சொல்லி னால் துதித் திளைக்குஞ் சுந்தரன்
- திருவிளையாடற் புராணம்

பொருள்

கடவுள் என்பது ஒரு சிறந்த சொல்; தமிழ்ச் சொல். கடவுள் - கடத்தல் என்னும் பொருளுடையது; எல்லா வற்றையுங் கடந்து எல்லையற்று நிற்பது. கடந்த உள் (உள்ளம் ) என்று கொண்டு எல்லாவற்றையுங் கடந்த உள்ளத்தில் பொலிவது என்று பொருள் கூறுவோரும் உளர். கடவு உள் (கடவுதல் - செலுத்துதல்) என்று கொண்டு எல்லா உள்ளங்களையும் - உயிர்களையும் - செலுத்துவது என்று பொருள் விரிப்போரும் உளர். இன்னும் பல பொருள் பகர்வோரும் உளர்.

கடவுள் வழிபாடு

கடந்த ஒன்றே விழுமியது. அதனிடம் உள்ளத்தைச் செலுத்துவது வழிபாடாகும். வழிபாடு என்றதும் உலகம் எதைக் கருதுகிறது? கடவுள் வழிபாட்டையே கருதுகிறது. இவ்வாறு கருதுவது பெருவழக்காய் - மரபாய் - விட்டது. ஆகவே, வழிபாடென்பது கடவுளையே குறிக்கொண்ட தென்று கொள்க. என்னை? கடவுளுக்குமேல் விழுமிய தொன்று இன்மையால் என்க. இங்கே யானும் ' வழிபாடு என்று கடவுள் வழிபாட்டையே பேசப் புகுகிறேன்,

கடவுள் உருவமா? உருவமற்றதா?

வழிபாடு உருவத்தைப்பற்றி நிகழ்வது என்று முன்னே சொல்லப்பட்டது. இங்கே வழிபாடு கடவுளைக் குறிக்கொண்டது என்று சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் கடவுள் உருவமா? உருவமற்றதா? என்னுங் கேள்வி எழாமற் போகாது. கடவுள் உருவமாயின், அஃது எல்லை யுடையதாய் அழியுந் தன்மையதாதல் வேண்டும். கடவுள் எல்லையுடையதும் அன்று; அழியுந் தன்மையதும் அன்று. கடவுள் உருவமற்றதாயின், அதை எப்படி வழிபடுவது? உருவமற்றதை எவ்வாறு மனம் நினைக்கும்? வாய் வாழ்த் தும்? கை கும்பிடும் ? கடவுளை உருவம் எனில் அதன் இயல் புக்கே ஊறு நேர்வதாகிறது. கடவுளை உருவமற்ற தெனில் வழிபாட்டுக்கு ஊறு நேர்வதாகிறது. தர்ம சங்கடம் ! என் செய்வது ! கடவுளின் உண்மை நிலை தெரியவரின் ஒருவித முடிவுக்கு வரலாம்.

கடவுளின் உண்மை நிலை - சொரூபம்

கடவுளின் உண்மை நிலையை அறுதியிட்டுக் கூறுதற்கு என் போன்றார் அருகரல்லர். எனக்கு வாக்குண்டு; மன முண்டு. வாக்கும் மனமும் எல்லையுடையன. எல்லையுடைய வாக்கும் மனமும் எல்லையற்ற கடவுளை எங்ஙனம் ஆராயும்? விஞ்ஞானக் கலையும் கடவுளாராய்ச்சிக்கு முற்றுந் துணை செய்யாது. அதன் துணை சிறிது தூரம் கிடைக்கும்; மேலே கிடைத்தல் அரிது. திருஞானசம்பந்தர்,

'ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா ......'

என்று அருளியுள்ளனர். ஏன்?

'சுடர்விட்டுளன் எங்கள் சோதி'

என்று அவர் காரணமும் காட்டுகிறார். கடவுளை ஆராயப் புகுந்தால் , அஃது ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் வளர்ந்து செல்லுந் தன்மையது என்பது கருத்து. பின்னை எவ்வாறு முடிவு காண்பது? அநுபூதிமான்களை அடைவதே நல்லது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களிருப்பிடங்கள் அவர்கள் நூல்களே. அவர்கள் துணையை நாடுவோம். பெரியோர் மறைமொழிக ளெல்லாம் ஒருமுகமாகக் கடவுள் உருவமற்றது' என்றே அறை கூவுகின்றன.

தம்மை யாரும் அறிவாரில்லை. - திருஞானசம்பந்தர்

பின்னு சடை...
இன்ன உரு என்று அறி வொண்ணா தான் காண்.
நற்பதத்தார் ............
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை       - திருநாவுக்கரசர்

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுணர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரினும் இறைநிலை உணர்வரிது.       - நம்மாழ்வார்.

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க.
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே       - மாணிக்கவாசகர்

யார் அறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறி வார் அந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதன்
வேரறி யாமல் விளம்புகின் றேனே.
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்.       - திருமூலர்

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் எது?       - காரைக்காலம்மையார்

வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொணாதது.       - அருணகிரியார்

பெருவெளியாய் .......
. ... மனமாதிக்கு எட்டாத பேரின்ப மயமாய்.
சொல்லுக் கடங்காச் சுகப்பொருளை
சொல்லாய தொகுதியெலாங் கடந்து நின்ற
சொரூபானந் தச்சுடரே.       - தாயுமானார்

இப் பெருமொழிகளை நோக்குழிக் கடவுள் உருவ மற்ற ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது.

வழிபாடு - உருவம் - உருவமற்றது

உருவமற்ற கடவுளை எப்படி வழிபடுவது? உருவ மற்றது உள்ளத்தில் எவ்வாறு தங்கும்? அப்பொழுது கடவுள் வழிபாடு நடவாமலிருத்தல் வேண்டுமன்றோ ? கடவுள் வழிபாடு நடவாமலா இருக்கிறது? அஃது எங்கணும் நடைபெற்றே வருகிறது.

கடவுள் உருவமற்றது என்று பேசிக் கொண்டே அதை நினைக்கின்றவரும் இருக்கின்றனர். ஜெபிக்கின்ற வரும் இருக்கின்றனர். அன்னவர் உள்ளம் எதைப்பற்றி நினைக்கிறதோ? வாய் எதைப்பற்றி ஜெபிக்கிறதோ? தெரிய வில்லை .

பல ஆண்டுகட்கு முன்னர் உருவ வழிபாட்டைக் கண்டிப்பதற்கென்று சென்னைச் செங்கான்கடைக் கொட் டகையில் ஒரு பெருங் கூட்டங் கூடிற்று. அக் கூட்டத்தில் உருவ வழிபாடு மிக உரமாகக் கண்டிக்கப்பட்டது. இறுதியில் ஒரு ஜெபக்கூட்டம் நடந்தது. முடிவில் பர மண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' என்பது ஜெபிக் கப்பட்டது. அங்கிருந்த உருவம், பரமண்டலம் எங்கே இருக்கிறது? அங்கே பிதா எக்கோலத்துடன் வீற்றிருக் கிறார்? இரண்டும் உருவமல்லவா?' என்று கேட்டார்; இன்னொருவர். 'நீங்கள் ஜெபம் செய்யும் போது உங்கள் உள்ளத்தில் ஏதேனும் உருவம் நிலைக்கிறதா? அல்லது அது சூந்யமாய்க் கிடக்கிறதா?' என்று கேட்டார். இக் கேள்விகட்குப் பாதிரியார் பதிலளியாமலே புறப்பட்டார். கூட்டத்திலிருந்த ஒரு சகோதரியார் , "பாதிரியார் ஜெபஞ். செய்தபோது அவரால் பெரிய பாதிரியாக மதிக்கப் பெற்ற 'பிஷப்' உருவம் அவர் உள்ளத்தில் நிலவியிருக்கும்; எனக்கு அவ்வாறு அவர் நிலவுவது உண்டு" என்றார். அங்கே இருந்த வேறு ஒரு பாதிரியார், 'நீ ஒரு கிறிஸ்துவப் பெண்ணா ?' என்று . சகோதரியாரைக் கடிந்தார். உருவ வழிபாட்டை மறுக்கும் பலரிடை யான் உரையாடியுள்ளேன். ' மனம் உருவமற்றதை எப்படி நினைக்கும்?' என்னுங் கேள்விக்குப் பொருந்திய விடையை யான் பெற்றதே இல்லை.

வழிபாட்டைக் குறித்து எவ்வழியில் நின்று ஆராய்ந்து பார்த்தாலும், உருவமற்ற கடவுளை, உருவமே நிலைக்கும் மனமுடையார் வழிபடல் இயலாதென்று தெரிகிறது. கடவுள் உருவமுடையதாயின் வழிபாடு நிகழ்தற்கு இட முண்டாகும். கடவுளோ உருவ-முடையதன்று. அஃது உருவமுடையதாயின், அஃது எல்லையுடையதாய் அழியுந் தன்மையதாகும். கடவுள் எல்லையுடையதுமன்று; அழியுந் தன்மையதுமன்று. இதை மீண்டும் மீண்டுங் கூறுவதால் என்ன பயன் விளையும் ? வழிபாடு வேண்டா என்னும் பயனே விளையும். வழிபாட்டை விட்டு விடலாமா? வழிபாடு விடப் படின் மக்களுலகம் மாக்களுலகமாகும். வழிபாடு வேண்டும்; அவசியம் வேண்டும்.

எதை எப்படி வழிபடுவது? ஒன்றும் விளங்கவில்லை. என் செய்வது! கடவுளுண்மையைத் தெளிந்து மெய்யுணர்வு பெற்ற அநுபூதிமான்களின் மறைமொழிகளைத் துணை கொண்டு பார்க்கப் பார்க்க வழி தோன்றும் என்று நினைக்கிறேன்.

கடவுளின் உருவநிலை

மறைமொழிகளை ஆய்ந்தால் அவைகளில் கடவுளுக்கு இருநிலை காணப்படுகின்றன. ஒருநிலை எல்லாவற்றையுங் கடந்து கடவுள் மட்டுந் தனியே நிற்பது; மற்றொரு நிலை எல்லாவற்றுள்ளுங் கடவுள் கலந்து நிற்பது. அது சொரூ பம் (நிர்க்குணம்) என்றும், இது தடத்தம் (சகுணம்) என்றும் வழங்கப்படுகின்றன. தடத்தம் மூவிதம். அவை : சகளம் (உருவம்), நிஷ்களம் (அருவம்), சகளநிஷ்களம் (அருவுருவம் ) என்பன. உருவம் அருவம் அருவுருவம் ஆகிய மூன்றும் உருவமுடையன என்பது முதல் நாள் விளக்கப் பட்டது. நிஷ்களத்தைச் சிலர் உருவம் அருவம் அருவுருவங் கடந்த சொரூபம் என்று சொல்வர். அது தவறு.

எல்லாவற்றையுங் கடந்த சொரூபம் உருவமில்லாதது. மனத்துக்கு எட்டாதது; பேச்சற்றது. இத்தகைய ஒன்றை மனமுடைய யான் எவ்வுரையால் அளந்து கூறவல்லவனா வேன்? தடத்தம் உருவமுடையது; கடவுளின் இருநிலையில் ஒன்றா யிருப்பது.

உருவத்துக்குத் தோற்றம் அழிவு என்னும் விகார -முண்டு. கடவுளுக்கு அவ் விகாரமில்லை. விகாரமில்லாக் கடவுளுக்குத் தடத்தம் என்னும் உருவமும் பேசப்படுகிறது! இஃதென்ன? மயக்கம் உண்டாகிறது. இங்குச் சிறிது விளக்கந் தேவை.

கடவுள் உருவமற்றதே. அதில் எவ்வித ஐயமுமில்லை. கடவுள் உருவமற்றதாயின், அஃதல்லாத பிற எல்லாம் உருவமற்ற கிடக்கின்றன? இல்லை, அவை யெல்லாம் உருவமுற்றே கிடக்கின்றன. மாயாகாரிய தத்துவ புவன 'மெல்லாம் உருவமே. மாயாகாரிய தத்துவம் எதுவரை? நாதம் வரை. மண் முதல் நாத மீறாக உள்ள தத்துவங் களும், அவைகளின் விரிவுகளும் உருவமே. உருவமுடைய மாயாகாரிய தத்துவ உலகங்களெல்லாம் சடம். சடம் தானே இயங்குமா? இயங்காது. சடஉலகங்கள் இயங்கு கின்றனவா? இல்லையா? அவ்வுலகங்கள் இயங்குதலை நாம் நன்கு உணர்கிறோம். எப்படி அவைகள் இயங்கு கின்றன?

சடஉலகங்களை இயக்கும் ஒன்றிருத்தல் வேண்டும். அவ்வொன்று சடமாக இருத்தலாகாது. அது சடத்துக்கு மாறுபட்ட சித்தாய் (அறிவாய்) இருத்தல் வேண்டும். அதுவே கடவுள் என்பது. உலகங்கள் கடவுளால் இயக்கப் படுகின்றன. அவைகளைக் கடவுள் எங்கிருந்து இயக்கு கிறது? ஓரிடத்திலிருந்து கைகால் கொண்டா இயக்கு கிறது? கடவுள் எங்குமுள்ளது; எங்கும் நீக்கமற நிறைந் திருப்பது. அஃது இல்லாத இடமில்லை. ஆங்காங்கே கடவுளின் கலப்புப் பெற்றே மாயாகாரிய உலகங்கள் இயங்குகின்றன.

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை.
எல்லா உலகமும் ஆனாய் நீயே.

அருந்த வர்கள் .............
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைக ளெட்டும்
திரிசுடர்கள் ஒரிரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை ...       - திருநாவுக்கரசர்

துன்பமும் இன்பமு மாகிய செய்வினையாய் உலகங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனிய நல் வான்சுவர்க் கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல மாய மயக்குகளாய்
இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்றேது மல்லலிலனே.
- நம்மாழ்வார்

தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.       - திருமூலர்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங் கிருப்பது நீ யன்றோ பராபரமே.
எங்கெங்கும் பார்த்தாலும் இன்புறுவாய் நீக்கமின்றித்
தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ.       - தாயுமானார்

பாராதி எட்டுமப் பாலுமெப்பாலுமாய்
ஓர்சோதி யேநின்ற துந்தீபற
உன்னுவே றில்லையென் றுந்தீபற.       - சாந்தலிங்கர்

கடவுள் உருவமற்றது; எங்கும் உள்ளது. எங்கும்' என்பது இடத்தை உணர்த்துவது. மாயாகாரியம் எவ் வளவு தூரம் மண்டி நிற்கிறதோ அவ்வளவு தூரமும் மண்டி நிற்பது எங்கும்' என்பது. 'எங்கும்' என்பதற்கு மேலுங் கடந்து நிற்பது கடவுள். எங்கும்' வரை நிலவுவது கடவுளின் தடத்தம்; அதற்குமேல் தனித்து விளக்குவது கடவுளின் சொரூபம்.

உருவமற்ற கடவுளுக்கு மாயாகாரியம் (எங்கும் வரை) உடலாகிறது. இவ்வுடலைக் கடவுளின் உருவம் என்று சொல்வது மரபு. கடவுள் ஒன்றே. நிலைமட்டும் இரண்டு. மாயாகாரியம் வரைக் கடவுள் உருவ நிலை பெறுகிறதென்றும், அதற்குமேல் அஃது உருவமற்ற நிலையிலிருக்கிறதென்றுங் கொள்க.

கலப்பு நுட்பம்

பூதம் ஐந்து. அவைகளில் ஒன்று ஆகாயம். ஆகாயத் தின் இயல்பென்னை? ஆகாயம் தனித்தும் மற்றப் பூதங் களிற் கலந்தும் நிற்பது. இதேபோலக் [1]கடவுளும் தனித்தும்
மற்ற மாயாகாரிய உலகங்களில் கலந்தும் நிற்பது. ஓர் ஆகாயத்துக்கு இரண்டு நிலை இருப்பது போல ஒரு கடவுளுக்கு இரண்டு நிலை இருக்கின்றன. ஆகாயம் மற்றப் பூதங்களினூடே கலந்து நிற்றலால், இவைகளின் தாக்குதலோ மாறுதலோ அதற்கு உண்டாவதில்லை. அங்ஙனே மாயா காரியங்களில் கடவுள் கலந்து நின்றாலும், அவைகளின் தாக்குதலோ மாறுதலோ கடவுளுக்கு உறுவதில்லை.

----
[1] ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாய்மறை நாய்காய்வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே.       - திருஞானசம்பந்தர்
-------

இயற்கை

மாயை', 'மாயை' என்று அடிக்கடி சொல்லி வரு கிறேன். மாயை எது? இயற்கை. மாயை என்பது பழைய கால ஆட்சி. இயற்கை (Nature) இக்கால ஆட்சி. மாயை என்றால் இக்கால இளைஞர்க்கு மயக்கம் உண்டாகும். இயற்கை என்றால் அவர்க்கு மயக்கம் உண்டாவதில்லை; பொருளும் எளிதில் விளங்கும். இயற்கை கடவுளின் உடல். அதற்குள் கடவுள் உயிராக நின்று அதை இயக்குகிறது. நம்முடைய உடலில் உயிர் இருப்பது போல இயற்கையில் கடவுள் இருக்கிறது. கடவுள் இயற்கை அளவில் நின்று விடவில்லை; அதற்கு மேலும் கடந்து நிற்கிறது. இயற்கை கடந்த கடவுளின் நிலை சொரூபம் என்றும், இயற்கையினுள் இருக்கும் அதன் நிலை தடத்தம் என்றும் அடிக்கடி சொல்ல வேண்டுவதில்லை.

என்னுடைய உடல் இருக்கிறது. அதனுள் உயிர் இருக் கிறது. உயிர் காணத்தக்கதா? காணத்தக்கதன்று. அத னால் உயிர் இல்லாததாகுமா? ஆகாது. உயிர் இருப்பது. அதனால் உடல் இயங்குகிறது. ஆனால் அது காணக்கூடியதா யில்லை. காணக்கூடாத அதன் உண்மையை எப்படி உணர் வது? காணக்கூடிய உடலைக்கொண்டே காணக்கூடாத உயிரை உணர்தல் வேண்டும். உடலை விடுத்து உயிரை உணர்தல் இயலுமா?

கடவுள் உயிர் போன்றது. இயற்கை உடல் போன்றது. உடலாகிய இயற்கையைக் கொண்டு உயிராகிய கடவுளை உணர்தல் வேண்டும். கடவுளுண்மையை உணர்தற்கும் இயற்கை உடல் - உருவம் - தேவையாகிறது. ஈண்டும் உருவத்தின் பெற்றி விளங்குதல் காண்க. [1]இயற்கையை விடுத்துக் கடவுள் உண்மையை உணர்தல் இயலாது. உட லாக நின்று கடவுள் உண்மையை உணர்த்தும் ஆற்றல் இயற்கைக்கு இருத்தலால், அதைக் கலைஞரும் ஞானியரும் பிறரும் பற்றலாயினர்; போற்றலாயினர். கலையும் ஞானமும் பிறவும் இயற்கையை அடிப்படையாக் கொண்டு பிறப்பனவாம்.
----
[1] வெற்ற ...... இயற்கையை யொழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன்       -திருஞானசம்பந்தர்.

உருவமில்லாத கடவுளை நேரே உணர்தல் அருமை கடவுள் உண்மையை உணர்தற்கு அதன் உடலாக உள்ள இயற்கையைப் பற்றுதல் வேண்டும். இயற்கையைப் பற்றிப் பற்றி அதனுடன் ஒன்ற ஒன்றக் கடவுள் உண்மை படிப் படியே விளங்கி வரும். இயற்கையைக் கடந்துள்ள சொரூ. பம் எப் பற்றுதலுக்கும் எட்டாதது.

இயற்கையைப் பற்றுவது கடவுள் உடலைப் பற்றுவ தாகும். உடலைக் கொண்டே உயிருண்மை உணர்தல் வேண்டும். இயற்கை என்னுங் கடவுளின் உடலைப் பற்று வதை வழிபாடென்று உலகம் உரைக்கிறது. வழிபாடு கடவுளைக் குறிக்கொண்டதென்பதன் பொருள் இங்கே விளங்குதல் காண்க. இயற்கையை வழிபடுவது கடவுளை வழிபடுவதாகும். இயற்கை ஒரு வாயில் . வழிபாடு அதன் வழியே அதன் உயிராக உள்ள கடவுளைச் சாரும்.

'உருவமற்ற கடவுளை வழிபடுவதெப்படி' என்ற ஐயம் எழுந்ததன்றோ? இப்பொழுது அவ் வையத்துக்கு இட முண்டோ ? கடவுள் உருவமற்றதே. ஆனால் அஃது ஒரு நிலையில் உடல் பெறுவதாகிறது. அதனால் அதன் நிலை மையோ தன்மையோ மாறுவதில்லை. ஒரு நிலையில் கடவுள் இயற்கை உடல் பெறுவதால், அதை உருவநிலை யென்று உலகம் கொள்ளலாயிற்று.

உயிர் உடலைத் தாங்கினமையால் உயிர் உருவமாகப் பரிணமித்ததாகுமோ? ஆகாது. உயிர் தன் தன்மையினின் றும் வழுவுவதில்லை. உயிர் உயிராகவே இருக்கிறது. அதன் உண்மையை உணர்த்த உடல் கருவியாகத் துணை புரிகிறது. இதேபோலக் கடவுள் இயற்கையை உடலாக் கொண்டமை யால், அது தோன்றி நின்றழியும் உருவமாகப் பரிணமித்த தாகாது. கடவுள் கடவுளாகவே இருக்கிறது. இயற்கை தன் அளவுவரை அதற்கு உடலாகி, அதன் உண்மையை உணர்த்துங் கருவியாய் நிற்கிறது. கடவுள், இயற்கையை உடலாக் கொண்ட நிலையை அதன் உருவமென்று சொல்வது உலக வழக்கு. இயற்கையின் எல்லையைக் கடந்து கடவுள் தனித்து நிற்கும் நிலை உருவமற்ற சொரூபம் என்று சொல் லப்படுகிறது.

கடவுள் எல்லாவற்றையுங் கடந்து தனித்து நிற்கும் தனது நிலையுடன், இயற்கையை உடலாகத் தாங்கும் மற்றொரு நிலையையுங் கொண்டுள்ளது. இஃது அதன் அருளேயாகும். உலகிடை வழிபாட்டை வாழச் செய்யவே கடவுள் இயற்கைக் கோலம் பூண்டது. இதைத் தெளிந்து வழிபாட்டை வளர்க்க வேண்டுவது நமது கடன்.

இயற்கையில் செயற்கை

உலகில் பலதிற வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவைகள் யாவும் தொடக்கத்தில் இயற்கையை அடிப்படை யாகக் கொண்டே எழுந்தன. நாளடைவில் அவைகளிற் பலப்பல செயற்கைச் 'செக்கு களாயின. காரணம், இயற்கை வழிபாட்டிலே உலகம் நுழைத்த கிரியைகளேயாம். அந்தோ ! உலகம் கோலிய கிரியை ஒன்றா? இரண்டா ? பல்லாயிரம்! பல்லாயிரம்! பொருளற்ற வெறுங் கிரியைகள் இயற்கை வழிபாட்டைச் செயற்கையாக்கின. இயற்கைக்கு அரண் செய்யத்தக்க கிரியைகளுஞ் சில உண்டு. அவைகளை இங்கே தொகுத்துக் கூறவேண்டுவதில்லை. வழிபாட்டுத் திறங்கள் பலவாக; கிரியைகள் பலவாக. வழிபாடு மட்டும் இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொள்வதாயின், அதற்கு எவ்விதக் கேடும் நேராது.

இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொண்டு நிகழ்வது வழிபாடு. அதை இயற்கை வழிபாடென்று சுருங்கச் சொல்லலாம்; இன்னும் வழிபாடென்று சுருக்கலாம். வழிபாடென்பது இயற்கை வழிக் கடவுளைக் குறிக்கொண்ட ஒன்று என்று கோடல் வேண்டும்.

இருவகை வழிபாடு

வழிபாட்டை இரண்டு கூறிட்டுக் கொள்ளலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. புற வழிபாடு, அக வழிபாட்டுக்கு ஆக்கந் தேடுவது. புறமனத்தை அலைய வைத்துக்கொண்டு அக வழிபாடென்று பேசுவதும் முயல் வதும் கானற்சலத்தை நம்பியோடினவன் கதையாக முடியும். புற வழிபாடு நேரிய முறையில் நடைபெறின், அக வழிபாடு தானே படிப்படியே கூடும். புற வழிபாடு ஏணி போன்றது.

சகமலா தடிமை யில்லை தானலால் துணையு மில்லை
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை ஐயன்ஐ யாற னார்க்கே.

இது திருநாவுக்கரசர் திருவாக்கு. இதில், புற வழிபாடு அக வழிபாட்டுக்குச் செய்யுந் துணையும், இரண்டுக்குமுள்ள தொடர்பும் விளங்குதல் காண்க.

புற வழிபாடு, கடவுளைத் தன்னினின்றும் வேறு படுத் திப் பிரித்து மகன் வழிபடுவது. அக வழிபாடு அவன் கடவுளைத் தன்னினின்றும் பிரியாது தன்னுட்கொண்டு வழிபடுவது. இவை முறையே துவித வழிபாடென்றும், அத்துவித வழிபாடென்றும் வழங்கப்-படுகின்றன. இதனை, 'வேதமுட னாகம் ....... ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞானமாகும்' எனவருந் தாயுமானார் மெய்ம் மொழி வலியுறுத்துவதாகும். கிறிஸ்து பெருமான், பர மண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே' என்கிறார்; [1]கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது'' என்கிறார்; [2] நானும் பிதாவும் ஒன்றே' என்கிறார். இம்மூன்றும் ஒருவ ரிடத்திருந்தே பிறந்த மொழிகள். இவை உலகோபகாரமாகப் பிறந்தன; தொடர்புடையன. முதலாவது புற வழி பாட்டை உணர்த்துவது; இரண்டாவது அக வழிபாட்டை அறிவிப்பது; மூன்றாவது வழிபாட்டைக் கடந்த நிலையைத் தெளிவிப்பது. தமிழ்நாட்டிற் றோன்றிச் செந்நெறிவளர்த்த நால்வரும் தமது மறைமொழிகளின் தொடக்கத்திலேயே அகவழிபாட்டுக் குறிப்புக்களைப் பொறித்தருளியது இங்கே கருதத்தக்கது. 'எனது உள்ளங் கவர் கள்வன்' என்று திருஞானசம்பந்தரும். பிரியாது வணங்குவன் எப்பொழுதும்' (பிரிந்து வணங்கல் புற வழிபாடு) என்று திருநாவுக்கரசரும், 'நினைக்கின்றேன் மனத்துன்னை' என்று வன்றொண்டரும், * இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்று மாணிக்கவாசகரும் அருளியிருத்தலை நோக்குக. இவர் புற வழிபாட்டைப் பெரிதுஞ் செய்து, அவ் வழிபாட்டைப் பாடியது உலகறிந்த தொன்று. ஆனால், அக வழிபாட்டைத் தொடக்கத்திலேயே ஏன் அருளிச் செய் தனர்? அக வழிபாடு சிறந்ததென்று உலகம் உணர்ந்து அதை அடைவதற்குரிய புற வழிபாட்டில் ஈடுபடவேண்டு மென்பது அவர்தம் உள்ளக்கிடக்கை. ஆகவே, புறவழி பாடு இன்றியமையாது வேண்டற்பால தென்க. புறவழிபாட்டைப் புறக்கணிப்போர்க்கு அக வழிபாடு கூடுதல் அரிது! அரிது! அரிது !
-----
[*]. மத்தேயு : 6:9. 'லூக்கா : 17 : 21. [2] யோவான் : 10 : 30

வழிபாடு - யோகம்

வழிபாடு என்றதுஞ் சிலர்க்கு அலட்சிய நோக்கு உண் டாதலை யான் பார்த்திருக்கிறேன். வழிபாடு என்னுஞ் சொல்லே அவர்க்குப் பிடிப்பதில்லை. 'சாதாரண அஞ்ஞானி கள் நிகழ்த்துவது வழிபாடு' என்று அவர் சொல்கிறார். மெய்ஞ்ஞானத்துக்கு வழி யாது என்றால் அவர் ' யோகம்' என்பர். இச் சகோதரர் வழிபாடு' யோகம்' என்னுஞ் சொற் களில் கருத்துச் செலுத்துவோர் என்று தெரிகிறது. வழிபாடு என்றால் என்ன? யோகம் என்றால் என்ன? இரண்டும் பொருளில் வேறுபட்டனவல்ல; ஒன்றே. தாயை , அன்னை' என்றால் என்ன? மாதா' என்றால் என்ன? மாதா என்னுஞ் சொல் தமக்கை என்னும் பொருளைத் தருவதாகுமோ? வழிபாடே யோகம்; யோகமே வழிபாடு. எவ் வழிபாடு? அக வழிபாடு.

யோகம் என்பது ஒன்றல் என்னும் பொருளுடையது. ஒன்றல் தனித்த ஒன்றில் நிகழாது. ஒன்றலுக்கு இரண்டு தேவை. ஒன்றுடன் ஒன்றலே ஒன்றல் என்னும் பொரு ளுடையதாகும். இரண்டு எவை? சீவான்மா பரமான்மா. சீவான்மா பரமான்மாவுடன் ஒன்றுவது யோகம். இதைச் சீவான்மா பரமான்மாவை அகத்தில் வழிபடுவது என்றுங் கூறலாம். ஒன்று ஒன்றுடன் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றே. ஆகவே, யோகமே அக வழிபாடு; அக வழிபாடே யோகம் என்று தெளிக. யோகமென்னும் அக வழிபாட்டுக்குக் கால்கொள்வது புற வழிபாடு.

யோகங்கள்

யோகங்கள் பலபடப் பேசப்படுகின்றன. அவைகளின் விரிவைக் கடலுக்கு ஒப்பிடலாம். நல்யோக முறைகள் பெருக்கெடுத்தபோது அவைகளினூடே போலிகளும் கலந்து கொண்டன. 'இது செவ்வியது; இது போலி ' என்று பகுத்தறிதல் தொல்லையாயிருக்கிறது. ஆராய்ச்சி அனுபவம் முதலியவாற்றால் பகுத்தறிவை நல்வழியில் பயன்படுத்தினால் உண்மை விளங்காமற் போகாது.

யோக விதங்கள்

யோக விதங்கள் பலவற்றுள்ளுஞ் சிறப்பாகக் குறிக்கத் தக்கன சில. அவை அஷ்டாங்க யோகம், பக்தி யோகம், கர்ம யோகம். இராஜ யோகம் முதலியன. இந் நல்யோகங் களின் விரிவைப் பதஞ்சலி யோக சூத்திரம், பகவத் கீதை , திருமந்திரம், விவேகாநந்தம் முதலிய நூல்களிற் பார்க்க. யோகப் பயிற்சிக்கு நூல் துணை மட்டும் போதாது. பயிற்சி யில் தேர்ச்சி பெற்றவர் துணையுந் தேவை. இந்நாளிலும் சிலரால் யோக நூல்கள் எழுதப்படுகின்றன. அவைகளிற் பெரும்பான்மையன தீமை விளைத்தே வருகின்றன. அந் நூல்களைப் படித்துப் பயிற்சியில் அமர்ந்த சிலரை யான் அறிவேன். ஒவ்வொருவர் ஒவ்வொருவித நோயால் பீடிக் கப்பட்டு அகால மரணமடைந்தனர். யோகம் தவறுதலாகச் செய்யப்படின், அது பக்கவாயு, தொண்டைப் பிளவு , வா யடைப்பு, காதடைப்பு, பார்வை மங்கல், மந்தம், மயக்கம், காமாலை, இதய நோய், காசம் முதலிய கொடிய நோய்களை உண்டுபண்ணும். பழைய நூல்களை முறைப்படி ஆய்ந்து, தக்கார் துணைபெற்று யோகப்பயிற்சியில் இறங்குவதே சிறப்பு. போலி யோகிகளையும் அவர்கள் நூல்களையும் நம்பி மோசம் போகாதிருக்குமாறு பொதுமக்களுக்கு எச் சரிக்கை செய்ய வேண்டுவது அறிஞர் கடன். மின்னல் ஒளி ஓடும் கம்பிகட்கு ஊறு நேர்ந்தால் என்ன விளையும்? விளைவைக் கண்கூடாகக் காண்கிறோம். அதே வண்ணம் யோகப்பயிற்சியில் தவறுதல் நேர்ந்தால் தீமை விளைதல் ஒருதலை. எச்சரிக்கை !

போலிகளின் புறக்கோலங் கண்டு சிலர் ஏமாந்துவிடு கின்றனர். [1]நல்யோகத்துக்குக் காவியும் தாடியும் சடையும் கோலும் தோலும் பிறவும் வேண்டுவதில்லை. யோகி தோட்டியாகவும் இருப்பன்; தொண்டைமானாகவும் இருப்பன். வேடத்தைக் கண்டு ஏமாறுவது அறியாமை.
---
[1] செந்துகில் புனைவார் சீவரந் தரிப்பார்
திரிதண்டோ டொருதண்டு பிடிப்பார்
தந்தமுத் திரைகள் பலப்பல தரிப்பார்
தவமெனத் தம்முடம் பொறுப்பார்
முந்து காய் கிழங்கோ டிலையயின் றிடுவார்
மோனமென் பார்கத றிடுவார்
இந்தவா குலத்தால் ஈசன்மே விடுமோ
இவர் துயர் உறுவதேன் அந்தோ .       - தத்துவ சரிதை.
[2] உமாறுபடு ...... சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி
செக்கச் சிவக்க அறிவார் ........ உனையாவர் அறிவார்       - தாயுமானார் .
-----

பிராணாயாமம்

அஷ்டாங்க யோகங்களுள் பெரிதும் பிராணாயாமமே பயிற்சி செய்யப்படுகிறது. இப்பயிற்சி நன்கு கைகூடின், மற்ற யோகப் பயன்களெல்லாம் தாமே பயிற்சியாளனிடம் பரிணமிக்கும். பிராணாயாமம் யோகங்களில் ஜீவ நாடி போன்றது. பிராணாயாமம் தூலம் சூக்குமம் காரணம் என மூவகைப் படும். தூல பிராணாயாமம் நறுங்காற்றை உள்ளிறக்கி இறக்கி வெளியே விடுவது (Breathing Exercise). இதற்கெனத் தனி முயற்சியில் புகுந்து முகஞ் சிவக்க வலிந்து வலிந்து மூச்சை ஈர்த்து ஈர்த்து விட்டுக்கொண்டிருக்க வேண்டுவதில்லை. தூல பிராணாயாமத்துக்கென்று தனி முயற்சி வேண்டுவதில்லை. நறுங்காற்று வீசுமிடத்தில் உலவிவந்தால் போதும்; அமர்ந்து வந்தால் போதும். இயற்கை தன் கடனை முறை முறையே ஆற்றும். சூக்கும் பிராணாயாமத்துக்குத் தேர்ச்சி பெற்றவர் துணை வேண்டும். இது, நுரை ஈரலையும் நாடி. நரம்புகளையும் தூய்மை செய்து உடல் நலனைக் காத்துவரும். காரணமென்னும் மூலப் பிராணாயாமம் சொலற்கரியது; எழுதற்கரியது. அது மக்களின் அக வொழுக்கத்தையொட்டி இயங்குவது. அதற்கு இயம நியமம் அடிப்படை; சீலம் இன்றியமையாதது. மூலப் பிராணாயாமம் அமல யோகத் துக்கு அகரம் போன்றது.

யோகங்களிற் பல மலயோகத்தின் பாற்பாடும்; சில [1] அமலயோகத்தின் பாற்படும். மலயோகம் உடலுக்கு மட்டும் நலஞ்செய்யும். அமலயோகம் உயிரினுக்கும் உடலினுக்கும் நலஞ் செய்யும். இங்கு இவ்வளவே விளக்குதல் சாலும்.
----
[1] அமல யோகர் உளவை யெலாம் - இராமலிங்க சுவாமிகள்
----

பிராணாயாமம் என்று சிலர் மூக்கைப்பிடித்து மூச்சை ஈர்ப்பர்; சிலர் கண்ணைப் பிசைவர்; சிலர் மூலக்கனலை எழுப்புவர். வேறு தீய - ஈன - முறைகளில் தலைப்படுவோரும் உளர். இவர் ஒளி காண்கின்றனராம்! பாவம் ! ஒன்றுடன் ஒன்றைத் தேய்த்தால் அது தீயை எழுப்பி ஒளி காட்டுவது இயல்பு. இவ்வொளி போன்றது தீயர் காண்பது. வலிந்து செய்யப்படும் எதுவும் யோகமாகாது. வலிந்து மூச்சைப் பிடித்தல் முதலிய யாவும் மூர்க்கத்தின் பாற்படும். அவைகளை மூர்க்க அரக்க யோகங்களென்று தள்ளுக; அவைகட்கு. இரையாகாது ஒதுங்குக.

மூச்சைப் பிடிப்போர் முதலியோர் பல பெரியோர் பாக்களை எடுத்துக் காட்டித் தங்கோளை நிறுத்த முயல்வர் தமிழ் நாட்டவர் பெரிதும் திருமூலர் திருமந்திரப் பாக்களை எடுத்து காட்டுவது வழக்கம். சில பாக்களை யானும் இங்கே சொல்கிறேன்.

ஆரிய னல்லன் குதிரை யிரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவி னருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் றிருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

இவை மந்திர மொழிகள். இவைகளில் முதலிரண்டு யாட்டிலும் குருவின் 'அருள்' பேசப்படுதலை ஓர்க. குருவின் அருளில்லாமல் வெறும் ஏடுகளின் - போலிகள் எழுதியுள்ள ஏடுகளின் - துணைகொண்டால் தீமையே விளையும். மூன்றாவது பாட்டில் 'கணக்கறிதல்' என்றொரு குறிப்பிருத்தலைக் காண்க. கணக்கு விநாடிக் கணக்கன்று. விநாடிக் கணக்கு இயற்கையாகாது. இயற்கைக் கணக்குக்கும் குருவருள் தேவை. நான்காம் பாட்டில் ஒரு குறிப்புள்ளது. அது புறப் பட்டுத் திரிகின்ற வாயுவை ஈர்த்து - நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில் ....' என்பது.

ஞாயிற்றின் ஒளி விழுங்கும் மரங்களின் நறுங்காற்று நமக்கும், நமது அழுக்குக் காற்று மரங்கட்கும் பயன்பட்டு வருதல் சிறுவர்க்குந் தெரியும். நறுங்காற்று மூக்கின் வழி உள்ளே நுழைந்து நமக்கு நலஞ் செய்கிறது. அதன் துணை இல்லையேல், நுரைஈரல் பாழ்பட்ட சுனையாகி வாழ்வுக்கே ஊறு செய்யும். ஒருவரது நல்வாழ்வுக்கு நுரைஈரல் வள முடையதா யிருத்தல் வேண்டும். அதற்குப் 'புறப்பட்டுத் திரிகின்ற வாயு' தேவை. அவ்வாயுவை ஈர்த்து நெறிப்பட உள்ளே நின்மல மாக்கினால் உறுப்புச் சிவக்கும்; உரோமங் கறுக்கும்; புரிசடையோனும் புறப்பட்டுப் போகான். உள்ளே 'நின்மலமாக்கல்' என்பதில் நுட்பம் இருக்கிறது. காற்று ஈர்க்கப்படுகிறது; உள்ளே நிறுத்தப்படுகிறது; மீண்டும் வெளியே விடப்படுகிறது. உள்ளே செல்லும் காற்றை நெறிப்பட அங்கேயே நின்மலமாக்கும் வித்தை வேண்டற்பாலது. 'காற்று உள்ளே நின்றால் அஃது அழுக்காகி மற்ற அழுக்குகளுடன் கலந்து நுரைஈரலுக்கு ஊறு செய்யும் ' என்று இக்கால விஞ்ஞான உலகம் கருதும். பிற்கால விஞ்ஞான உலகம் உண்மை கண்டு திருமூலர் கருத்துக்குத் துணை புரிவதாகலாம். காற்றை உள்ளே நின் மலமாக்கினால் நம்மிடத்தில் தோன்றும் அழுக்குக் காற்று வெளி வாராமலே அங்கேயே நின்மலமாகும். நாளடைவில் படிப்படியே வெளிக்காற்றின் துணை தேவையில்லாமற் போகும். அந்நிலையில் அண்டாதித்தன் பிண்டாதித்தனாகி ஒளி உமிழ்வன். அவ்வொளி உள்ளொளி எழுச்சிக்குத் துணை நிற்பதாகும். பிற அனுபவத்தில் உணரத்தக்கன.

உடல் நலன்

உள்ளொளி விளக்கத்துக்குப் பலதிறத் துணைகள் வேண்டும். அவைகளுள் சிறந்த ஒன்று உடல் நலன். உடல் நலம் இழந்தோர் உள்ளொளி விளக்கம் எளிதில்
பெறுதல் அருமை. மேற்பாட்டிலுள்ள உறுப்புச் சிவத்தல்,
-----------
[1] உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று
உடம்பினை யானிருத் தோம்புகின் றேனே       - திருமூலர்

உரோமங் கறுத்தல், புரிசடையோன் புறப்படாமை ஆகி யவை உடல் நலத்தைக் குறிக்கொண்டு நிற்றல் வெள்ளிடை மலை. அந் நலத்துக்குக் காற்றை நெறிப்பட உள்ளே நின் மலமாக்கும் பயிற்சி வேண்டும் என்று திருமூலர் அறிவு கொளுத்தியவாறு காண்க. எந்த நல்யோகத்துக்கும் அறிஞர் உதவி வேண்டுமென்பதை மறத்தலாகாது.

தீய யோகங்கள்

யோகம் என்ற பெயரால் சில தீய மூர்க்க அரக்க யோகங்களும் வளர்ந்து வாழ்க்கை பெற்றுள்ளன, அவை கட்கும் நூல்கள் இருக்கின்றன; 'குருமார்' இருக்கின்றனர். அக் கொடிய யோகங்களால் தீயொழுக்கம் பெருகும்; பெரிதும் பெண்ணுலகம் பாழாகும். அந்த யோகிகட்கு நற் கதி நினைவு தோன்றுவதில்லை போலும்! அவரை இயற்கை அன்னை ஒறுத்தே வருகிறாள். ஒறுத்தும் அம் மூர்க்கர் நல்லறிவு பெறுகிறாரில்லை.

'மனம் அடங்க என்னென்னவோ செய்து பார்த்தோம். மனம் அடங்கவில்லை, அதனால் யோகத்தில் தலைப்பட லானோம் ' என்று சிலர் மூச்சைப் பிடிக்கின்றனர். மூச்சைப் பிடிப்பதால் மனம் அடங்கிவிடுமோ? தீய எண்ணங்கள் மாறிவிடுமோ? மூச்சு யோகிகள் தங்கள் மன நிலையைச் சோதித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். சிறுநேர மன அடக்கம், அடக்கம் ஆகாது. கஞ்சா முதலியன கூட மயக்கம் விளைத்துச் சிறுநேரம் மனத்தை நிலை பெறுத்துகின்றன. அதனால் கஞ்சா யோகத்தையும் கொள்ளல் வேண்டும் போலும் ! இப் பீடையை இவ்வளவில் நிறுத்திக் கொள்கிறேன்.

தியான யோகம்

யோக விதங்கள் பலவா யிருத்தலால், அவைகளுள் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? இக்கேள்வி பலர் எழுப்புதல் எனக்குத் தெரியும். தீயொழுக்கத்தை வளர்க்கும் பொல்லாத அரக்க யோகங்கள் தள்ளற்பாலனவே. உடலுக்கு நலஞ் செய்யும் யோகங்கள் தள்ளற்பாலன அல்ல. அவைகளை முறைப்படி செய்யத் தக்கார் மாட்டுப் பயிலுதல் சிறப்பு. எல்லாவற்றிற்கும் விழுமியதாய், எவ்வித ஊறுஞ் செய்யாததாய் இருப்பது ஒன்றுள்ளது. அதற்கு எப்பெயர் வழங்கினும் வழங்குக. யோக உலகம் அதைத் தியானயோகம் என்று வழங்கி வருகிறது. அஃது அஷ்டாங்க யோகத்தின் முடிவாயிருப்பது. அதில் எல்லா நல்யோகங்களும் அடங்கும்.

தியான யோகம் வழிபாட்டுக்கு அப்புறப்பட்டதன்று. வழிபாடு, மனம், மொழி, மெய்களின் வழி நடைபெறுவது. மனம் நினையாமல் வாய் மொழியாது; கை கும்பிடாது. மொழிக்கும் மெய்க்கும் அடிப்படை மனம். தொடக்கத் தில் மனத்தை நிலைபெறுத்த வாயும் மெய்யும் தொடர்ந்த வழிபாடு செய்தல் வேண்டும். நாளடைவில் வாயும் மெய்யும் ஓய்வு பெறும். மனம் ஒன்றே வழிபாட்டில் ஈடுபடும். இதுவே தியான யோகமென்பது. இதற்கு ஒரு குறி வேண்டும். அக்குறி இறையையுணர்த்தும் தத்துவமுடையதா யிருத்தல் வேண்டும். இதற்கு இயற்கையை அடைவோமாக.

பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிரானைப் பிரதிட்டை யது செய்து
தேசுற் றிடவே பதியான மது செய்யே       - திருமூலர்


இயற்கை வழிபாடு

இயற்கை பெரியது; பல கூறுகளை உடையது. வழிபாடோ பலவகை. இங்கே எவைகளைத் தொடுவது? எவைகளை விடுவது? தடுமாற்றம் ஏற்படுகிறது. பெருங் காடு எதிரிலே தோன்றுகிறது. எவ்வழியில் நுழைவது என்று தெரியவில்லை. எனது சித்தம் எங்கெங்கோ செல் கிறது; சென்று சென்று காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றில் படிகிறது. காதல் முதலியன இயற்கைத் தெய்வத்துக்கு வேறுபட்டனவல்ல. அவைகள் இயற்கைத் தெய்வத் தன்மை வாய்ந்தன. அவைகளை இயற்கைத் தெய்வக் கூறுகள் என்றுங் கொள்ளலாம். அத்தெய்வக் கூறுகளை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தப்பெறும் வழிபாட் டில் வழிபாட்டுத் திறங்கள் பல அடங்கிவிடும். காதல், வீரம், அழகு, அறிவு, நீதி முதலியவற்றின் மீது கருத்துச் சென்றமையால், உருவம் உள்ளத்தைவிட்டு அகன்றுவிட்ட தென்று எவரும் எண்ணவேண்டுவதில்லை. காதல் முதலி யன உருவங்களின் வாயிலாகவே தங்கள் இருப்பை - பொலிவை - உணர்த்துவன என்று முன்னைப்பேச்சில் யான் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். காதல் முதலியன உருக்கொண்டு உலவுவன அல்ல. ஆனால், அவை உருவங்களின் வாயிலாகவே தங்க ளிருப்பை உணர்த்துவன. காதல் காதலரிடத்தும், வீரம் வீரரிடத்தும், பிற பிறரிடத்தும் நுண்மையிற் பொலிந்து கலைஞர் நெஞ்சைக் கவரும்; அவர்க்கு விருந்துமாகும். காதல், வீரம் முதலியவற்றைப் பற்றிய வழிபாடு என்றதும் உருவம் போய்விட்டது என்று கருதற்க. உருவ வழியே வழிபாடுகள் நிகழ்ந்து தீரவேண்டுமென்று வலியுறுத்துகிறேன். காதல் முதலியவற்றைப் பீடிகையாக் கொண்டு வழிபாட்டுத் திறங்களை ஆங்காங்கே விரிக்கும் முகத்தான் எனது உள்ளக் கிடக்கைகளை வெளியிடலாமென்று எண்ணுகிறேன்.

காதல்

காதல், அன்பின் கூறுகளுள் ஒன்று; சிறந்த ஒன்று. அன்பின் உயிருள்ள இடம் காதல். காதல், அன்பின் முழுமையாகும் இயல்புடையது.

காதலும் காமமும்

ஒருவன் உள்ளத்தில் என்னென்னவோ உறுகின்றன. காதலும் உறுகிறது. உற்ற பலவற்றில் காதல் ஒன்றாகுமா? ஆகாது. காதல் எல்லாவற்றையும் அடிப்படுத்தித் தான் முடியா யிலங்கும். வேறு ஏதாவதொன்று கடந்து மேம் படுமாயின் உற்றது காதலன்று என்று கொள்ளல் வேண்டும்.

ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்கிறான். சிலநாள் கடந்து அவன் நாட்டம் இன்னொருத்தியினிடஞ் செல் கிறது. அம் மணமும் இந்நாட்டமும் காதலின் பாற்பட்டன ஆகுமா? ஆகா. அவனிடம் காதல் முன்னும் முகிழ்க்க வில்லை; பின்னும் பிறங்கவில்லை. அவனிடம் எழுந்தது காமம். பலவிடங்களை நாடி நாடி ஓடும். காதல் அவ்வாறு ஓடாது; ஓரிடத்திலேயே நிலைத்து நிற்கும்.

ஓருயிர் ஈருடல்

[1] காதலால் விழுங்கப்படும் இருவர் ஒருவராவர். அவர் தம் உடல் மட்டும் இரண்டாகத் தோன்றும்; உயிர் ஒன் றாகும். 'ஈருடல் ஓருயிர்' என்ற ஆட்சி , காதலையொட்டியே எழுந்தது போலும். காதல் இருமை போக்கி ஒருமை யாக்கும் பேராற்றல் வாய்ந்தது. ஓருடலுக்கு நோய் உறின் இன்னோருடலும் நோயுற்றது போலாகும். ஒன்றைத் தேள் தீண்டின் மற்றொன்றும் தேள் தீண்டியது போலாகும். காதல் ஈருடல் ஓருயிர் கொண்டதன்றோ ?
----
[1]. ஆனந்த வெள்ளத் தழுந்து மோர் ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்
........... சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத்
துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நானிவ ளாம் பகுதிப் பொற்பா ரறிவார் .......... - திருக்கோவையார்
----

காதல் கிழவன் ஒருவனுக்கும் காதல் கிழத்தி ஒருத்திக்கும் ஒரு மகள் பிறந்தாள். அவள் கற்பன கற்றுக் கேட்பன கேட்டு உற்ற வயதடைந்தாள். தனக்குரிய நாயகனைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவள் ஒரு தீம் பொழிலுக்கு அனுப்பப்பட்டாள். தோழியும் அவளுடன் சென்றாள். இருவரும் சில சமயம் சேர்ந்தும் சில சமயம் தனித் தனியாகவும் பொழிலகம் சுற்றி வருவர். ஒரு நாள் இளம்பெண் ஒரு வழியே ஏகினாள். தோழி மற்றொரு வழியே போனாள். இளம்பெண் ஓர் இளைஞனைக் கண்டாள். இவனும் அவனைக் கண்டான். காதல் தெய்வம் இருவர் மனத்தையும் ஒன்றுபடுத்தியது, இருவருங் காதலில் மூழ்கியபின்னை நாளை வருவதாக இளைஞன் உறுதி கூறி விடைபெற்றான். இருவர் உடல் மட்டும் பிரிந்தன. இளம் பெண்மணி தனது இருக்கை சேர்ந்தாள். முன்னரே இருக்கை நண்ணிய தோழி தன் தலைவியைக் கண்டதும் ஐயுற்றாள். புறத் தோற்றம் ஐயமூட்டிற்று. வெளிப்படையாக வினவி உண்மை காணத் தோழி விரும்பினாளில்லை. அவள் தலைவியைப் பார்த்து, ''இன்று நீர் எவ்வழிச் சென்றீர்? அங்கே எவ்வெப் பூக்களைக் கண்டீர்? எவ்வெப் பூக்களைப் பறித்தீர்?'' என்று கேட்கலானாள். தலைவியின் நெஞ்சம் ஓரிடத்தில் பதிந்து கிடந்தது. அந்நெஞ்ச முடையவள் என்ன விடையிறுக்க வல்லாள் ! தோழி, தலைவியின் நிலையை ஒருவாறு உணர்ந்தாள்; உணர்ந்து, ''அம்மா! யான் சென்ற வழியில் அழகிய மயில்களைக் கண்டேன்; குயில்களைக் கண்டேன்; மான்களைக் கண்டேன்; பூப்பறித் துத் திரும்பியபோது வேறு ஒரு வழியே புகுந்தேன்; அவ் வழியில் ஓர் அழகிய இளைஞரைக் கண்டேன்; 'இவ்வழியே யாவரேனும் போயினரோ ' என்று அவரைக் கேட்டேன். 'ஓர் இளம் பெண் போயினள் ' என்று அவர் சொல்லிய வேளையில், ஒரு புலி வாய் திறந்து அவர் மீது பாய்ந்தது என்றதும், தலைவியின் உடல் விதிர் விதிர்த்தது. வியர்வை சொரிந்தது. கண்கள் சோர்ந்தன. பெருமூச்செறிந்தது. தோழி, 'இளைஞர் தங்கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார் ' என்றாள். உடனே தலைவியினிடம் மாறுதல் உண்டாயிற்று. தலைவியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மகிழ்ச்சி பார்வையில் ததும்பிற்று. தோழி உண்மை உணர்ந்தாள். காதல் ஈருடலை ஓருயிராக்கும் தன்மைய தென்பது இங்கே கருதற்பாலது. தோழி, 'இளைஞர் தங் கை வேலால் புலியைக் குத்திக் கொன்றார் ' என்று சொல்லச் சிறிது காலம் தாழ்த்தி இருப்பாளாயின் தலைவியின் நிலை என்னவாயிருக்கும்?

காதலும் கடவுளும்

காதலுக்கு ஒப்பானதுமில்லை; உயர்வானதுமில்லை. அஃது எல்லாவற்றையுங் கடந்து நிற்பது. அதற்கு மேம் பட்டதொன்று இருத்தல் கூடாது. கடந்த ஒன்றைக் கடவுள் என்று சொல்வது மரபு. இதனால் 'காதற்கடவுள்' என்றோர் ஆட்சியும் பிறந்தது போலும். காதலனுக்குக் காதலியினுஞ் சிறந்த பொருள் வேறொன்றில்லை. இவளுக் கும் அப்படியே. அவனுக்கு இவள் கடவுள்; இவளுக்கு அவன் கடவுள். இவர்க்கு வேறு தெய்வம் எற்றுக்கு?
காதல் இயற்கை

காதல் இயற்கையா? செயற்கையா? இயற்கை என்று எவருங் கூறுவர். காதல் எவரால் செய்யப்படுகிறது? அது செய்யப்படுவதா? காதல் இயற்கையாக எழுவது. காதல் இயற்கையாதலின், அஃது உலகில் வளரவேண்டுமென்னும் நோக்கத்தை இயற்கைத் தெய்வம் உடைத்தாயிருக்கிறது. இஃது இயற்கைத் தெய்வத்தின் படைப்பை நோக்கி நோக்கி அதன்கண் படியப் படிய இனிது விளங்கும். நிலமும் திணையும் நாம் வாழும் நிலம் குறிஞ்சி என்றும், பாலை என்றும், முல்லை என்றும், மருதம் என்றும், நெய்தல் என்றும் பாகுபட்டிருத்தல் கண்கூடு. இப் பாகுபாடுகள் பருமை. பருமைக் குரிய நுண்மை இருத்தல் வேண்டுமன்றோ? நுண்மை புணர்தல் என்றும், பிரிதல் என்றும், இருத்தல் என்றும், ஊடல் என்றும், இரங்கல் என்றும் பாகுபாட்டுக் கிடக்கிறது. புணர்தலும், பிரிதலும், இருத்தலும், ஊடலும், இரங்கலும் இயற்கைக் காதலுக்கு ஆக்கந் தேடுவன. இயற்கைக் காதலே உலகில் வளர்தல் வேண்டும். காதலுக்கு மாறுபட்ட ஒரு தலைக் காமம், பொருந்தாக் காமம் முதலியன வளர்தலாகாது. அவ்வளர்ச்சியால் உலகம் ஒழுக்கமுடையதாய், அமைதியில் நின்று, அன்பில் திளைப்பதாகும். இவ்வளர்ச் சியால் உலகம் பாழ்படும் என்னும் அளவில் நின்றுவிடுகிறேன்.

நந் தமிழ்நாட்டில் காதலுக்கு இலக்கணங் கண்டவர் தொல்காப்பியனார் உள்ளிட்டவர். இலக்கியங் கண்டவர் திருவள்ளுவர் உள்ளிட்டவர். காதல் பொருளற்றதாயின் அதற்கென்று இலக்கணங்களும் இலக்கியங்களும் எழ மாட்டா. காதல் வளர்தல் வேண்டுமென்றே சான்றோர் அதற்கென்று நூல்கள் யாத்துச் சென்றனர். நூல்கள் இயற்கைத் தத்துவங்களின் ஓவியங்கள் - படங்கள் - என்பதை இப்பேச்சில் விரித்துரைக்க வேண்டுவதில்லை.

இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் காதல் வளரவேண்டு மென்பது. அதை நூல்களும் வலியுறுத்துகின்றன. ஆதலின், இயற்கைத் தெய்வத்தின் நோக்கம் நிறைவேறச் சேவை செய்வது அத்தெய்வத்துக்கே சேவை செய்வதாகு. மென்க. வேவை என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன ?

உலக வளர்ச்சி

ஒருவன் பிறந்தான்; வளர்ந்தான்; கற்பன கற்றான்; கேட்பன கேட்டான். ஒருத்தியும் பிறந்தாள்; வளர்ந்தாள்; கற்பன கற்றாள்; கேட்பன கேட்டாள். அவன் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது; இவள் உள்ளத்திலும் காதல் முகிழ்க்கிறது. முகிழ்ப்பு இருவர் உள்ளத்தையும் ஒருமைப் படுத்துகிறது. மணம் கமழ்கிறது. திருமணம் ஒருவித இயற்கை வழிபாடு. உலக வளர்ச்சிக்குத் துணைபுரிவது இயற்கைத் தெய்வத்தை வழிபடுவதாகும். இவ்வழிபாடு பெரும் பெரும் வழிபாட்டுக்குக் கால் கொள்வது.

ஒப்புரவு

ஒருவன் இளைஞனா யிருந்தஞான்று பெரிதும் தன்னையே நேசித்து வந்தான்; ஒருத்தியும் இளமையில் தன்னையே நேசித்து வந்தாள். காதல் மணத்துக்குப் பின்னர் அவன் இவளை நேசிக்கிறான்; இவளும் அவனை நேசிக்கிறாள். ஓரிடத்தில் கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு இப்பொழுது ஈரிடத்திற் செல்கிறது. அவ்வளவில் தன்னல மாசு அகல்கிறது. பின்னே மக்கட்பேறு உண்டாகிறது. இப்பொழுது தாயும் தந்தையும் தம்முடைய நலங்களை யெல்லாம் மக்கட் பொருட் டுத் தியாகஞ் செய்கின்றனர். அவர், தம் பொருட்டு வாழாது மக்கட்பொருட்டு வாழ்வோராகின்றனர். மாறுதலைக் கருதுங்கள். ஒருவனும் ஒருத்தியும் தாய் தந்தையராகிய பின்னர், தம் நல நேசமென்னும் மாசினின்றும் விடுதலையடைதல் உன்னத்தக்கது. தன்னலம் அற்ற இடத் தில் எழுவது அன்பு . தாய் தந்தையரிடம் அன்பு கோயில் கொள்கிறது. அவ்வன்பு என்ன அறிவுறுத்தத் தொடங்கு கிறது? ' உமக்கும் உம் மக்கட்கும் பசி பிணி முதலிய துன்பங்களிருப்பது போல மற்றவர்கட்கும் உண்டு. உம் பசி பிணி முதலிய துன்பங்களையும், உம் மக்களின் பசி பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க நீர் முயல்வது போல, மற்றவர் பசி பிணி முதலிய துன்பங்களையும் தீர்க்க முயல்மின்' என்று அறிவுறுத்தத் தொடங்குகிறது. இஃது அன்பின் இயல்பு. அன்பின் அறிவுறுத்தலுக்குத் தாய் தந்தையர் செவிசாய்க்கின்றனர்; ஒல்லும்வகை அவர் தம் சக்திக்கு ஏற்பப் பிறர்க்குத் துணைபுரிய முயல்கின்றனர். கைம்மாறு கருதாது அன்பால் பிறர்க்குதவுவது விருந்தோம்பல் எனப் படும். தம்மைத் தனித்தனியே நேசித்துக் கொண்டிருந்தவர் ஒருமை மனத்தவராய்த் தாய் தந்தையராய்த் தியாகி களாய் இப்பொழுது பிறர்க்குதவும் [1]அந்தணராகின்றனர்; இந்நிலையில் அவர் 'தன்னல'மாசு அகலப் பெறுகின்றனர். அறவோர் ஆகின்றனர்.

எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுவது உயிர்கள் வழிபாடென்பது. உயிர்களில் வீற்றிருப்பது இறை. ஆகவே, உயிர்கள் வாயிலாக இறை வழிபாடு நடைபெறு கிறதென்க. காதல் வழிபாடு படிப்படியே உயிர்கள் வழிபா டென்னும் இறை வழிபாடாதல் காண்க.
----
[1]. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் –
செந்தண்மை பூண்டொழுக லான்       - திருவள்ளுவர்.

திருவள்ளுவர்

'மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறம்' என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அவ் வறநிலையை அடைதற்கு அவர் இல்வாழ்க்கை என்றும், வாழ்க்கைத்துணை என்றும், மக்கட்பேறென்றும், அன்புடைமை என்றும், விருந்தோம்பல் என்றும் வழி கோலியுள்ளதை ஓர்க. இவ்வழி , இயற்கைத் தெய்வ நோக்குக்கு அரண் செய்து நிற்றலை உன்னுக. திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையை அவர்தம் நூலுக்கு யான் கண்ட விரிவுரையில் விளக்கஞ் செய்துள்வேன். விளக்கம் விரும்புவோர் அவ்வுரையைப் பார்ப்பாராக.

இயற்கை வாழ்க்கை

ஒருவனும் ஒருத்தியும் காதலை வெறுத்து மணவாழ்வு கொள்ளாது, தன்னந்தனியராய் வாழ்ந்துவரின், அவரிடம் தியாகம் அணுகுமோ? அன்புத் தெய்வம் கோயில் கொள்ளுமோ? உயிர்கள் வழிபாடு நடைபெறுமோ? அவர் அறவோர் ஆவரோ? தனி வாழ்க்கை, தன்னலத்தை வளர்ப்பதாய் அன்பை அழிப்பதாய்த் தீயொழுக்கத்தைப் பெருக்குவதாய் வழிபாட்டைக் கூட்டாதொழியும். தனி வாழ்க்கை செயற்கை; இயற்கையன்று. [1]சேர்க்கை வாழ்வே இயற்கையின் பாற்பட்டது. சேர்ந்து வாழ்வதே மக்களியல்பு என்னுஞ் சீரிய கொள்கை இக்கால உயிர் நூல் வல்லவராலும் வலியுறுத்தப்படுகிறது. உயிர்கள் வழிபாட்டுக்குச் சேர்ந்த வாழ்க்கையெனுங் காதல் வாழ்க்கை வேண்டற்பாலது.

இறைவனுங் காதலும்

ஒருவனும் ஒருத்தியுங் காதலில் ஒன்றி அன்பராகி உயிர்கட்குத் தொண்டு செய்யும் அந்தண்மை என்னும் இறைநிலை எய்தல் இதுகாறும் பேசப்பட்டது. இந்நிலையைக் கூட்டுதற்குரிய காதல் வழிகள் இன்னும் பல உண்டு. அவைகளுள் இங்கே குறிக்கத்தக்கது ஒன்று. அஃது [2]இறைவனை நேரே காதலித்து வழிபாடு நிகழ்த்துவது. இவ்வழிபாடு நிகழ்த்திப் பேறு பெற்றவர் பலருளர். அவருள் ஆண்டாள் அம்மையார் நினைவு இங்கே தோன்றுகிறது. பெண்பிறவிக்கு வீடுபேறில்லை என்ற பொல்லாத கொள்கை தமிழ்நாட்டில் வேரூன்றிய காலத்தில் ஆண்டவன் அருளால் தோன்றியவர் ஆண்டாள் அம்மையார். அவர் காதல் நெறி நின்று ஒழுகி, அந்நெறியை நேரிய முறையில் ஓம்பிப் பெண்ணுலகுக்கு விழுப்பந் தேடிய பெருமை வாய்ந்தவர்.

----
[1]. மனையி லிருந்தவர் மாதவ ரொப்பர்
ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
[2]. காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாத னிருந்த நகரறி வாரே.       - திருமூலர்
---

அம்மையாரின் காதல் நாயகன் நீலமேனியன்; பவளவாயன்; கமலக்கண்ணன்; செங்கையன் - அடியன்! இத் திருக்கோலமுடைய அரங்கநாதன் மீது அம்மையார் கொண்ட காதல் - உயிர்க்காதல்,

கருவிளை யொண்மலர்காள் காயாமலர்காள் திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய் வழக் கொன்றுரையீர்
திருவிளையாடு திண்டோள் திருமாலிருஞ் சோலை நம்பி
வரிவளை யில் புகுந்து வந்திபற்றும் வழக்குளதே.

பைம்பொழில் வாழ்குயில் காள் மயில்காள் ஒண்கருவிளைகாள்
வம்பக்களங் கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலை நின்ற
எம்பெருமா னுடைய நிறம் உங்களுக் கென்செய்வதே.

துங்கமலர் பொழில் சூழ் திருமாலிருஞ் சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப்போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந்தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே.

இப் பாக்களில் தேங்குதல் காண்க. குயிலும் மயிலும் பூவும் கனியும் இன்ன பிறவும் அம்மையார்க்குக் காதலூட்டுகின்றன. இவையா? அரங்கநாதன் மேனி - அரங்க நாதன் முகம் - அரங்கநாதன் கை - அரங்கநாதன் கால் - அரங்கநாதன் வடிவம். அரங்கநாதன், மயிலாகவும் குயிலாகவும் பூவாகவும் கனியாகவும் இன்ன பிறவாகவும் அம்மையார்க்குக் காதல் ஊட்டுகிறான். அம்மையாருள் காதல் எழுகிறது; பொங்குகிறது; ததும்புகிறது : வழிகிறது; தேங்குகிறது; வெள்ளமாகிறது; கடலாகிறது. எங்கணும் ஒரே கடல் - எல்லையற்ற கடல் - அன்புக் கடல் - பசுங்கடல்! எல்லையற்ற அன்புப் பசுங்கடலில் அம்மையார் வீழ்ந்தார்; ஆழ்ந்தார். கடல் அரங்கனா? ஆண்டாளா? தெரியவில்லை. ஆண்டாள் உயிரெலாம் அரங்கன்; உள்ளமெலாம் அரங்கன்; உடலெலாம் அரங் கன்; எல்லாம் அரங்கன்; எங்கும் அரங்கன் ! அரங்கனே ஆண்டாள்; ஆண்டாளே அரங்கன் ! காதல் - காதல் ஒருமை ! ஒருமைக் கடல்; கடலில் தரங்கம் எழுகிறது; எழுந்து,

வெள்ளை விளிசங் கிடக்கையிற் கொண்ட
விமலனெனக் குருக்காட்டான்
உள்ளம் புகுந் தென்னைநைவித்து
நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக்காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங்குயிலே
மெள்ளவிருந்து மிழற்றிமிழற்றா
தென்வேங்கடவன் வரக்கூவாய்.

இந்திர னுள்ளிட்ட தேவர்குழா மெல்லாம்
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.

அழிலும் தொழிலும் உருக்காட்டான்
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால் தழையின்
பொழில் வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே.

உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டவன்மார்வில் எறிந்தென் அழலைத் தீர்வேனே

என்று தமிழ் பாடுகிறது. தமிழ்ப் பாட்டு – [1]காதல் - காதல் மணம்.
---
[1]. சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே யுணத்தருவேன் மொய்பவளத் தொடுதளம்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.       - திருஞானசம்பந்தன்

கிறிஸ்துவும் காதலும்

மற்றுமொரு காதல் வடிவத்தின் மீது கருத்துச் செல்கிறது. அது கிறிஸ்து வடிவம். கிறிஸ்து உயிர்களெல்லாம் துன்பக்கடலினின்றும் இன்பக்கரை ஏறுதல் வேண்டும் என்னும் பெருங் காதலுடையவர். காதலின் முழுமையே அன்பு; அன்பே கிறிஸ்து. அவர் அன்பே ஆகி அன்பையே போதித்தார். அவர் அன்பே தெய்வம் என்றார்; அயலவனிடம் அன்பு கூருங்கள் என்றார். அவ்வளவில் அவர் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்று, பகைவனிடத்திலும் அன்புகூருங்கள் என்றார். இதுவே அன்புக்கு அறிகுறி. மெய்யான அன்பு பகைவனை வெறுக்கச் செய்யாது , அவனையும் நேசிக்கச் செய்யும். அன்பைக் கிறிஸ்து பெருமான் போதனையுஞ் செய்தார்; சாதனையிலுங் காட்டினார். அவரைக் கொல்லச் சிலுவையில் நிறுத்தி ஆணி அறைந்த கொடியவரிடத்தும் அவர் அன்பு காட்டினார்.

அப்பொழுது இயேசு, பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே . - லூக்கா : 23 : 34.

இவ்வருள் மொழி எங்கிருந்து எழுந்தது? கொலை மரத்தினின்றும் எழுந்தது! அன்பின் அன்பு என்னே!

அன்புள்ள இடத்தில் தியாகமிருத்தல் இயல்பு. தியாகமில்லாத இடத்தில் அன்பிருத்தல் அரிது. கிறிஸ்து அன்பு - அன்பின் முழுமை. அன்பே அவர்; அவரே அன்பு. அன்பு என்ன செய்தது? தியாகஞ் செய்தது. எத்தகைத் தியாகம்!

ஒருவன் பொன்னை அளிப்பன்; பொருளை அளிப்பன்; வீட்டை அளிப்பன்; நிலத்தை அளிப்பன்; அரசை அளிப் பன். உயிரை அளிப்பனோ? ' உயிர் அளிப்பு' என்றதும் சிந்தனை உண்டாகும். கிறிஸ்து பெருமான் எதைத் தியாகஞ் செய்தார்? தமது ஆருயிரைத் தியாகஞ் செய்தார். எவர் பொருட்டு? உயிர்கள் பொருட்டு; தம்பொருட்டன்று. அவர் உயிர்கள் மீது வைத்த காதல் அவரை இன்புடன் உயிர் துறக்கச் செய்தது. மெய்க்காதல் என்ன செய்யாது?

ஓருயிர் தனக்கினிய ஓருயிரின் பொருட்டுத் தியாகஞ் செய்வதைக் காண்கிறோம்; கேட்கிறோம்; இது காமிய அன்பு; கட்டுப்பட்ட அன்பு. கிறிஸ்து பெருமான், மற்ற உயிர்களின் பொருட்டுத் தாமே பலியானார். இதுவே நிட்காமிய அன்பு; கட்டற்ற அன்பு. உயிர்களெல்லாம் பாவத்தினின்றும் விடுதலையடைதல் வேண்டுமென்ற பெருங் காதலால் கிறிஸ்து தம்மையே தியாகஞ் செய்தனர். இத் தியாகத்துக்கு அடிப்படை காதல். காதல் வடிவம் கிறிஸ்து. கிறிஸ்து காதல் மணவாளன்; நாம் காதல் மணவாட்டிய ராதல் வேண்டும். கிறிஸ்துவைக் காதலித்து அவரை; வழிபடுவோம். நாம் அன்பாவோம்; தொண்டாவோம்; தியாகமாவோம்.

வீரம்

காதலைத் தொடர்ந்து வருவது வீரம்; காதலுக்கும் வீரத்துக்கும் தொடர்புண்டு. காதல் திகழும் இடத்தில் வீரம் செறியும்; வீரம் செறியும் இடத்தில் காதல் திகழும். அஃது இல்லாத இடத்தில் இஃது இராது : இஃதில்லாத இடத்தில் அஃது இராது. காதல் அகம்; வீரம் புறம். அக நூல்கள் காதலையும் புற நூல்கள் வீரத்தையும் விளம்புதல் உங்கட்குத் தெரியும். காதல் காதலர்வழி இயங்குவது போல வீரம் வீரர்வழி இயங்கும். காதல் நெஞ்சில் கடவுள் விளங்குவது போல வீர நெஞ்சிலும் கடவுள் விளங்கும். இதுபற்றியே வீரர் வழிபாடு உலகெங்கும் நடைபெறுவ தாயிற்று. பண்டை நாளில் வீரர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்தம் புகழ் பொறிக்கப்பெற்ற ஒரு கல் நாட்டப்படும். அது வீரக்கல் என்றும், நடுகல் என்றும் போற்றப்படும். அக் கல்முன்னே பலவித வந்தனை வழிபாடுகள் நடைபெறும்.

வீர மூலம்

[1]வீரத்துக்கு மூலம் ஈரம்; கோபமன்று; வன்மமன்று. ஈரத்தினின்றும் எழுவது வீரம். கோபத்தினின்றும் வன்மத்தினின்றும் எழுவது வீரமாகாது. அது வெறி. இந் நாளில் அன்பற்ற கோபத்தினின்றும் - வன்மத்தினின்றும் - எழுவது வீரமென்று கருதப்படுகிறது, இதனால் அறப் போர் குலைந்து மறப்போர் தலையெடுக்கலாயிற்று. கோழை கள் வீரர்களாகக் கருதப்படுகிறார்கள். முன்னாளில் போருக் கென்று ஓரிடம் குறிக்கப்படும். அவ்விடத்திலுள்ள ஆக்கள், அந்தணர் , பெண்மக்கள், நோயாளர், மக்கட்பேறில்லா தவர் முதலியோர் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே போர் துவங்கப்படும். நிராயுதபாணிகள் மீது எக்காரணம் பற்றியும் அம்புகள் சொரியப்படமாட்டா. இக்காலப் போர்முறைகளைப் பேசவும் வேண்டுமோ? பேசவும் நா எழவில்லை. ஆடு

---
[1] ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீரம் என்னால் விளம்புந் தகையதோ       - சேக்கிழார் .


மாடுகள், அறவோர், பெண்மணிகள், குழந்தைகள், நோயாளர், நிரபராதிகள், நிராயுதபாணிகள் முதலியோர் மீது குண்டுகள் பொழியப்படுகின்றன! கொடுமை ! கொடுமை ! அறம் எங்கே போயிற்றோ? அன்பு எங்கே போயிற்றோ? இக்கொடிய மறப்போர் புரிவோர் வீரராவரோ? அவர் உருவங்களை வழிபடலாமோ?

காதலும் வீரமும்

காதலும் வீரமும் தொடர்புடையனவாதலின், அதற்கு ஏதேனும் இடர் நேர்வதாயின், இது வாளா இராது; வீறுடன் எழும். வீர எழுச்சிக்கு அடிப்படை காதலே; சீற்றமன்று; இகலன்று. வீரம் எழுங்கால் அதனிடைத் தெய்வத் தன்மை நடம் புரியும். மாசற்ற காதல் கடவுள் தன்மை வாய்ந்தது போல மாசற்ற வீரமும் கடவுள் தன்மை வாய்ந்ததே. இக்காரணம் பற்றியே வீரர் வழிபாடு உலகில் தோன்றியிருக்கும். வீரர் நெஞ்சில் சீற்றமில்லை; இகலில்லை. அங்கிருப்பது காதல். இத்தகைய வீரர் உள்ளம் தெய்வக் கோயிலாகுமன்றோ?

காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு விளக்கவல்ல எடுத்துக்காட்டுக்கள் பல உண்டு. விரிவஞ்சி இரண்டொன்றைக் குறித்துச் செல்கிறேன்.

ஒரு களிறும் ஒரு பிடியும் காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தன. அவ்வேளையில் ஒரு சிங்கம் எதிர்ப் பட்டது. பிடி, களிற்றின் பக்கலில் நெருங்கிற்று. களிறும் பிடியும் காதலால் பிணிக்கப்பட்டவை. காதல் நடுக்கங் கண்டு வீரம் வாளா கிடக்குமோ? வீரம் களிற்றினிடம் எழும்பிற்று. காதலினின்றும் எழும் வீரத் தெய்வத்தின் முன்னே எவர் நிற்றல் முடியும்? உலகம் முழுவதும் ஒருங்கு திரண்டு எதிர்த்தாலும் காதல் வீரத்தைச் சாய்த்தல் இய லாது. களிற்றின் வீரம் பிடிக்கு என்ன உணர்த்திற்று?

'காதலே, அஞ்சற்க. உன் காதலே எனது வீரம். என்னுயிர் நீ. என்னுயிர் போம்வரை உன்னைக் காப்பேன்' என்பதை உணர்த்திற்று. காதல் வீரம் சிங்கத்தை நடுக்குறச் செய்தது. சிங்கத்துக்கு யானை அஞ்சி ஓடுவது இயற்கை. ஆனால் காதல் வீரம் இயற்கையையும் மாற்றியது. அது யானையைச் சிங்கமாக்கியது; சிங்கத்தை நரியாக்கியது. காதல் வீரம் எங்கே எழுந்தது? உயர்திணை உயிரினிடத்திலா? அஃறிணை உயிரினிடத்திலா? எளியதினிடத்திலா? வலியதினிடத்திலா? காதல் வீரத்தின் எழுச் சியை அஃறிணை உயிரினிடத்தில் - எளியதினிடத்தில் - ஏற்றி, உலகுக்கு அவ்வீரத்தின் பெற்றியை அறிவுறுத்திய பெருமை யாருடையது? திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளையும் எதிர்த்த அஞ்சா நெஞ்சமுடைய வீரர் நக்கீரருடையது.

நனந்தலைக் கானத் தாளி யஞ்சி
இனந்தலைத் தரூஉம் ஏறுழ்கிளர் முன் பின்
வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடா அத்துப்
பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல்
இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக்
கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல்...

இஃது அகநானூற்றிற் போந்த நக்கீரர் காதல் மொழி -- வீரமொழி.

ஒரு களிறு, காதல் காரணமாக ஒரு சிங்கத்தை நடுக் குறச் செய்தது; உயிரைப் பொருளாக மதியாது தன்னி னும் வல்ல சிங்கத்தை எதிர்க்கலாயிற்று. [1]மனைவி மாட்டுள்ள காதல் என்னே? பெண்ணுலகைக் காக்க ஆணுலகங் கடமைப்பட்டதை உன்னுக. மனைவிக்கு ஆபத்து நேருங்கால் தன்னுயிரைக் காக்க ஓடுவோன் கணவனாகான் : உயிர் நாயகனாகான்; காதல் கொழுநனாகான். அவன் வீர மகனல்லன்; பேடி; கோழை.

----
[1]. பிழைத்த பிடியைக் காணா தோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங் குறங்குஞ் சாரல் அண்ணா மலையாரே.
      - திருஞானசம்பந்தர்

கோழமை

இக்கால ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தி யும் 'காதல்' என்னும் பெயரால் பதிவுமணஞ் செய்து கொண்ட னர். அவன் எம். ஏ. இவள் பி. ஏ . இவர் அடிக்கடி காடுகளிற் போந்து சுற்றிவருவது வழக்கம். ஒருநாள் காட்டில் ஒரு மரத்தடியில் தூர்த்த ன் ஒருவன் பி.ஏ. பெண்ணைக் காணலானான். அவனது உள்ளக் குறிப்பை உணர்ந்த பெண்மணி பக்கத்திருந்த நாயகனுக்கு ஆங்கிலத் தில் அதைத் தெரிவித்தாள். தெரிவித்ததும் தன் உயிரைக் காக்க வேண்டி எம். ஏ. ஆண் ' ஓட்டமாக ஓடினான். இஃது ஐந்துநதி பாயும் அழகிய ஒரு நாட்டில் ஓரிடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை முற்றுங் கூற விரும்புகிறேனில்லை. ஓடிய ஆள் தன் மனைவியைக் காதலித்தவனா? காமுற்றவனா? என்பதொன்றே ஈண்டுக் கருதற்பாலது. அவன் மனைவி யைக் காதலித்தவனல்லன்; காமுற்றவனே. காதல் தன் னுயிரை விடுத்து ஓடச்செய்யுமா? ஓடச் செய்வது காமம். காதல் வீரத்தை யன்றோ எழுப்பும் ? நக்கீரர் காலக் காட் சிக்கும், இக்காலக் காட்சிக்கும் எவ்வளவு வேற்றுமை? இவ்வளவில் நின்று மேற்செல்கிறேன்.

இராமபிரான்

நமது நாட்டில் இராமாயணம் படிக்கப்படாத இடமே இல்லை என்று கூறலாம். இராமாயணம் என்ன அறிவுறுத்துகிறது? காதல் வீரத்தை அறிவுறுத்துகிறது. சீதாராமன் : என்ன பொருள்? காதல் - வீரம் என்பது பொருள். சீதை காதல்; இராமன் வீரம். காதலும் வீரமும் தொடர்புடையன. ஒன்றுள்ள இடத்தில் இன்னொன்றுமிருக்கும். இராமபிரான் வீரர்; ஈர நெஞ்சினர். இராமபிரானுக்கு 'முடிசூட்டு விழா ' என்ற செய்தி உலகுக்கே மகிழ்ச்சியூட்டியது. ஆனால் அவர் அத்தருவாயில் சிற்றன்னை விரும்பியவாறு நாட்டை விடுத்துக் காட்டுக் கேகினர். என்ன தியாகம்! தனிமுடி கவித்து ஆளும் அரச இன்பத்தைத் திடீரென ஒரு நொடியில் அகமலர்ச்சி யுடன் துறத்தல் எளிதோ ! இராமபிரான் தியாகமே தியாகம் ! தியாகத்துக்கு ஊற்று ஏது? ஈர நெஞ்சமே. இராமபிரானின் ஈரநெஞ்சம் என்னென்ன செய்தது? வேடனையும், குரங்கையும், அரக்கனையும். அணிலையும் சகோதரமாகக் கருதச் செய்தது; போரில் இராவணன் நிராயுதபாணியாக நின்ற காலத்தில் 'இன்று போ, நாளை வா' என்று சொல்லச் செய்தது. மற்றும் பலவற்றை இராமாயணத்திற் பார்க்க. இராமபிரான் உள்ளத்தில் சீற்றமில்லை ! இகலில்லை; ஈர வீரமே இருந்தது. ஈர வீரம் பகைவனிடத்திலும் இரக்கங்காட்டச் செய்தது. ஈர நெஞ்சமுடைய இராமபிரான் வீரம் - சொலற்கரிய வீரம் - இராமாயண முழுவதும் பேசப்படுகிறது. வீர ராகவன் என்ற பெயரும் இராமபிரானுக்கு உண்டு. இராமபிரான் வீரம் எப்பொழுது வீறி எழுந்தது? காதல் சீதைக்கு இடுக்கண் நேர்ந்தபோது இராகவன் வீரம் வீறி எழுந்தது. எப்படி எழுந்தது? அதை வருணிக்க யான் வான்மீகியல்லன் ! கம்பனல்லன். இராமபிரான் கடல் தாண்டிப் பெரும்போர் புரிந்து காம அரக்கப் பூண்டுகளை யெல்லாம் அறுத்தொழித்துக் காதற் சீதையைக் காத் தருளினர். 'இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். நாம் வேறு ஒருத்தியை மணம் செய்து வாழலாம்' என்று இராமபிரானது ஈரநெஞ்சம் - வீரநெஞ்சம் - நினைந்ததோ? அப்படி அந்நெஞ்சம் நினைக்குமோ? நினையாது. அந்நெஞ்சில் ஈர வீரம் படிந்து கிடந்ததற்கு அடிப்படை என்ன? சீதைக் காதல் ஊறி ஊறி இரண்டற்று ஒன்றினமை அடிப்படை. காதலுக்கும் வீரத்துக்கும் உள்ள தொடர்புக்கு இராமபிரான் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - ஒரு பெரும் இலக்கியம். வான்மீகி அருளிய இராமாயணத்தைத் தமிழ் மணங் கமிழக் கம்பர் பாடப் புகுந்ததன் நுட்பத்தைச் சிந்தித்தல் வேண்டும். இராம காதையிலுள்ள காதல் வீரம் தமிழ்க் கம்பரை இராமாயணம் பாடுமாறு தூண்டியது. தொல்காப்பியரும், நக்கீரரும், திருவள்ளுவரும், மாணிக்கவாசகரும், ஆண்டாளும், மற்றவரும் வாளா கிடப்பரோ?

------
continued in part 2
------------------------
This file was last updated on 19 Jan 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)