pm logo

சிவங் கருணாலய பாண்டியப் புலவர் இயற்றிய
திருக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ்


tiruk katirkAmap piLLaittamiz
by karuNAlaya pANTiyap pulavar
In unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Padmanabha Iyer of London and Noolaham.org for providing a soft copy of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the
soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவங் கருணாலய பாண்டியப் புலவர் இயற்றிய
திருக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ்.


Source: :
கொழும்பு விவேகானந்தசபை யியற்றமிழாசிரியர்
திருநெல்வேலி நாட்டு மலையடிக்குறிச்சிச் சிவங் கருணாலய பாண்டியப் புலவர் இயற்றிய
திருக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ்.
ஆராய்ச்சிக் குறிப்புரையும், கதிரகாம வரலாறும், ஓவியமுமமைந்தது.
கொழும்பு, ராபர்ட் பிரஸ் லிமிட்டெட் அச்சுக்களரியிற் பதிப்பிக்கப்பட்டன.
கொல்லமாண்டு தாஉெ. ஆடித் திங்கள். நம் கிழமை 18-7-1937.
[Copyright Reserved.)
------------------------

ஓம்: திருச்சிற்றம்பலம்.
நேரிசை வெண்பா.
உரித்தா குககதிரை யொண்புலவேற் செவ்வேள்
பரித்தார் தமிழ்ப்பிள்ளைப் பாட்டுக் - கருத்தாங்கி
யெற்பெற்ற முற்றெய்வ மின்கோ மதியம்மைத்
தற்பெற்றாற் பெற்றுயர்ந்த தாய்க்கு.

ஓம்: கதிரகாம முருகன் துணை.
கந்தரநுபூதி.
''யாமோ தியகல்வியுமெம் மறிவும்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே னடவீர் நடவீரினியே.”
===========

முகவுரை.

தெய்வச் செந்தமிழ்ச் சிறப்பியற்றனிமொழி, வழக்கும் செய்யுளுமென இருபாற்படும். அவற்றுட் செய்யுள் உரைச்செய்யுள், பாச்செய்யுள் நூற்செய்யுள் (சூத்திரம்) என முத்திறப்படும். அவற்றுட் பாச்செய்யுள், கடும்பாச்செய்யுள், (ஆசுகவி) இன்பாச்செய்யுள், (மதுர கவி) அரும்பாச்செய்யுள், (சித்திரகவி) பெரும்பாச் செய்யுள்; (வித்தாரகவி ) என நாற்கூறுபடும். அந்நான்கனுள்ளும் பெரும்பாச்செய்யுள், தனிநிலைப்பாச் செய்யுள், தொடர்நிலைப்பாச் செய்யுள் தொகைநிலைப் பாச்செய்யுள் என மூவகைப்படும். அவற்றுட் டொடர் நிலைப்பாச் செய்யுள் என்பது ஈற்றெழுவாய் (அந்தாதி)த் தொடையானாதல் ஒரு பொருட்செய்தியின் மேலாதல் தம்முள் ஒன்றனோடொன்று தொடர்ந்து நிற்கும் பலபாக்களின் றொகுதியாகச் செய்யப்படுதலின் அவ்வாறு காரணக்குறிபெற்று அவ்வாற்றான் இருவேறு படும். அவ்வாறுபடும் சொற்றொடர் நிலைச்செய்யுள், பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்னும் இரண்டனுள்ளும் பொருட்டொடர்நிலைச்செய்யுள் பலவகைப்படும். அவற்றுட் பிள்ளைத்தமிழ் என்பதும் ஒன்று. இது பிள்ளைச் செய்தியாகிய ஒரு பொருண்மேற் பல செய்யுளாய் வருதலாற் றொடர்நிலைச்செய்யுள் எனப்படுமாயினும் ஒவ்வொரு பாவும் தனித்தனிப் பொருண்முடிந்து தொக்கு நிற்றலிற் றொகைநிலைப்பாச் செய்யுளெனினு மிழுக்காது. இனித் தொகைநிலைப்பாச் செய்யுளையும் ஒருவாற்றாற் றொடர்நிலைப்பாச் செய்யுளின் பாற்படும் என்பார்க்குப் பிள்ளைத்தமிழ் போல்வனவும் தொடர்நிலைப்பாச் செய்யுளேயாம்; இது பாட்டியனூலுடையார் கொள்கையாகும். ஏனை யது அணியியனூலுடையார் கொள்கையாகும். இனிப் பன்னிருபாட்டியல் முதலிய நூலுடையாரெல்லாம் முதற்கண் எடுத்தோதி இயல் கூறப்பெறும் பெற்றி வாய்த்தலிற் பிள்ளைத்தமிழின் சிறப்புடைமை நன்கு விளங்கும்.

கடவுளருளாயினும் மாந்தருளாயினும், பிள்ளைப் பெருமாளாயுற்ற பேரருளாளரைப் பாட்டுடைத்தலை மக்களாகக் கொண்டு அன்னாரை அவரது பிள்ளைமைப் பருவத்தின்கட் செவிலித்தாயார் முதலிய மகளிர்கள் பேரன்பு சுரந்து ஆர்வமீதூர்ந்து கழியுவகை கூரப் பலபடப் பாராட்டிச் செப்பியும் அகவியும் கிளக்கும் கிளவியாகச் செந்தமிழ்ப் புலவராற் புனைந்து நாட்டிப் பஃறொடை வெண்பாவாயினும் அகவல் விருத்தமாயினும் கலி விருத்தமாயினும் அப்பிள்ளைமைப் பருவத்தின் கூறு பாடுகடொறும் ஒரொன்றாகவாவது, மும்மூன்றாகவாவது, ஐவைந்தாகவாவது, எவ்வேழாகவாவது, ஒவ்வொன்பதாகவாவது பப்பதினொன்றாகவாவது இங்ஙனம் ஒற்றைப்பட்டுவர யாத்திசைத்துப் பாடப்படுதலும் பப்பதினொரு பாக்களினிகப்பப் பாடப்படுதல் கூடாமையும் பிள்ளைத்தமிழ்ப் பாட்டியன் மரபு. அங்ஙனம் பாடுங்கால் முதற் செய்யுளினாலடியும் தம்முள் ஒற்றொழிய எழுத்துக்கள் எண்ணலள வொத்திருத்தல் வேண்டும்' ஒரு பருவத்தின்மேல் வரும் பல பாக்களும் ஓரோசை வண்ணத்தாற் பாடப்படுமாயின் அவற்றின் ஈற்றடியி னிறுதி ஒருசொற்றொடராகவே பாடப்படுதல் வேண்டும். காப்புச்செய்யுள் ஒன்பதாகவேனும் பதினொன்றாகவேனும் பாடுகவென்பது நூன்முடிபாயினும் அவற்றிற் குறைவாகவோ ஏனைப் பருவச் செய்யுட்களின் றொகை யளவாகவோ, முன்னர்ச் செப்பிய தொகை வரையறையிற் பிறழ்ந்தும்வருதல் வழக்குண்மையிற் பிறவாறுபாடுதல் இழுக்காகுமெனக் கடியப்படாதாதல், எதிரது போற்றல் என்னும் நூற்புணர்ப்பாற் புதுவது புகுதலாகத் தழீஇக் கொண்டு ஆளப்பெறும் என்க. இனி இற்றை ஞான்று வழங்கும் பிள்ளைத்தமிழ்ச் செய்யுட்கள் பலவும் அகவல் விருத்த மொன்றானேயே செய்யப்பட்டுள்ளன. எனைப்பஃறொடை வெண்பாவாலாயினவும் கலிவிருத்தத் தாலாயினவும் இறந்தனபோலும். மற்றுப் பதினாறாட்டை யகவைகாறும் ஆண்பாலாரும் பூப்புத்தொடக்கங்காறும் பெண்பாலாரும் பிள்ளையென வழங்கப்படுவர்; அவரை விளித்து மேற்போந்த மகளிர் உரையாடுந் தமிழாதலிற் பிள்ளைத்தமிழ்; எனப்பெயரும், ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் என வகையும் எய்துதலாயின. இப்பாட்டு வடமொழி முதலிய பிறமொழிக் கண்ணும் உளவாய்ப் பொதுவாகாது தமிழ்மொழி யொன்றற்கே சிறந்தமையாற் றமிழென்னும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராய் நின்றது. தமிழ்மொழிக்கே சிறந்ததனைத் தமிழ்மொழியெனவும் பெயர் பகர்தல், தமிழ்மொழிக்கே சிறந்த அகத்திணைப் பொருணுதலிய தனைத் தமிழ் நுதலிற்றெனக் களவியலுரை வழங்குமாற்றானும் பெறப்படும். இனிப் பிள்ளைத்தமிழென்பதனைப் பிள்ளைப்பாட்டெனவும் பிள்ளைக்கவி யெனவும் வழங்குவர். இனிப் பிள்ளைமை கழிந்த பாட்டுடைத் தலைமகனையும் பிள்ளையாகப் படைத்துக்கொண்டு பாடுதலும், தாம்பாடும் பிள்ளைச் செயல்களுக்குப் பருவம் வரையறுத்தலும், புகழ் புனையும் புலமகளாளர் கோண்மரபு. பிள்ளைத்தமிழ்ப் பாட்டொன்றுமே பிள்ளையைக் கொண்டாடிக் கூறுவதன்றிப் பிள்ளையைக் கொண்டாடிக் கூறும் பிற பாட்டுக்களுமுள. பெரியாழ்வார் திருமொழியிற் றாயார் முதலிய இடையர் மகளிர்கள் பிள்ளைப்பருவத்துக் கண்ணனைக்காதல் விஞ்சி யிகழ்ந்தும் புகழ்ந்தும் பாராட்டியவாறு காணப்படும். இனி ஆண்பாற் பிள்ளைப்பருவம் பதினான்கும் பிறவுமாகப் பாற்படும் என்ப. அவையிற்றின் பெயரும் முறையும் காலமும் பின்வரும் பிங்கலந்தை நூற்பாவான் இனிதுணர்ந்து கொள்க.

"பின்ளைப்பாட்டுத் தெள்ளிதிற் கிளப்பிற்
றிங்க ளிரண்டிற் றெய்வங் காக்கென
இன் றமிழ்ப் புலவ ரியம்பிய காப்பும்
ஐந்தாந் திங்களிற் செங்கீரை யாடலும்
ஆறாந் திங்களிற் கூறுதல் கற்றலோ
டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
எட்டாந் திங்களி னியற்ற லாட்டலும்
ஒன்பதாந் திங்களி லுயர்சப் பாணியும்
பத்தினோ டொன் றின் முத்தங் கூறலும்
ஆண்டுவரையின் ஈண்டுவரு கென்றலும்
மதீயீ ரொன்பதின் மதியை யழைத்தலும்
இரண்டா மாண்டிற் சிறுபறை கொட்டலும்
மூன்றா மாண்டிற் சிற்றில் சிதைத்தலும்
நாலா மாண்டிற் சிறுதே ருருட்டலும்
பத்திற் பூணணி பன்னீராண்டினிற்
கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
றின்னவை பிறவு மாகுமி வற்றுண்
முன்னர் மொழிந்த வொழிந்தவற்றோடும்
பெற்ற வாண்பாற் பிள்ளைப் பாட்டாம்.''

என்பது. இப்பருவ நிகழ்ச்சிகளுள் ஆறாந்திங்களிற் கூறுதல் கற்றலும் ஏழாந்திங்களின் இன்னமுதூட்டலும் பத்தாமாண்டிற் பைம்பூணணிதலும் பன்னீராண்டினி லுடைவாள் செறித்தலும் என்னும் இந்நான்கும் பிறவெனப்பட்டனவும் இப்பொழுது வழங்கும் ஆண்பாற் பிள்ளைத் தமிழ்களிற் சொல்லப்படவில்லை.

அவ்வவர்க்குரிய பருவமுற்றும் ஒருங்கிசைத்தல்வேண்டும் என்னும் கட்டளையின்றிப் புலவர், தாம் வேண்டியவாறு குறையவுங் கூறிப்போதரலாமென்பதன்றி மேன்மொழிந்த நான்கும் பிறவும்பாடற்க; என விலக்கற்குவேண்டற்பால வாயிலொன்றும் சொல்லக்கூடாமையால் அவையிற்றைக் கூறுவார் கூறின் அதனான் நேரும் இழுக்கொன்று மில்லையென வுணர்க. இனி இரண்டாந் திங்கட் செய்தியின் பின்னர் ஐந்தாந் திங்கட் செய்தி, மூன்று நான்காந் திங்கட் செய்திகளை யிடையிட்டு வருமாறுபோல ஐந்தாமாட்டைச்செய்தியின் பின்னர்ப் பத்தாமாட்டைச்செய்தி, ஆறு ஏழ் ஒட்டு ஒன்பதாமாட்டைச் செய்திகளை யிடையிட்டு வருதலமையும். இனி மொழி பயிலலும் அமுதூட்டலும் பூணணிதலும் உடைவாள் செறித்தலும் போல்வன, ஏனைச் செய்திகள் அவ்வப்பருவங்களின் நிகழ்ந்தமைந்து மாறுதல் போலத் தத்தமக்கடைத்த பரு வங்களின் நிகழ்ந்தமைந்து மாறாது ஏனைப் பருவங்களினும் தொடங்கவும் தொடர்ந்து நிகழவும் பெறுதலின் அவை கூறப்பெறாவெனின், அது பொருந்தாது; என்னை? பிள்ளைத்தமிழ் பாடுதலின் கருத்துப் பிள்ளையின் வரலாறு காட்டுதலன்று; கன்று காட்டிப் பசுவைப் பாலைக்கறக்குமாப்போலப் பிள்ளைமையை நினைப்பித்துத் தாயார் முதலியோரது பெறலரும் போன்புச் சுவையை உள்ளத்தினின்றும் வெளிப்படுத்து நுகர்ந்து இன்புறல்வேண்டும் என்னும் வேணவாவேயாமாதலானும் அத்தகைய விழுமிய காதலே சிற்றுயிர்கள் மாட்டுச் சென்று பற்றுமாயின் அறம் பொருளின்பங்களையும் பேருயிர் மாட்டுச்சென்று பற்றுமாயின் அழிவிலின்பத்து ஒழிவில் வீடுபேற்றினையும் பயக்கும் ஆற்றல் சான்றது; என்பவாதலானும் இதுநோக்கியே


"இன்பமும் பொருளு மறனு மென்றாங்'
கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கின்
எனத் தொல்காப்பியனாரும்

"என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப்
பொன் போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ இருகி யகங்குழை வார்க்கன்றி
யென்போன் மணியினை யெய்த வொண்ணாதே ''
எனத் திருமூலவடிகளும்

"என்பு தோலுடை யார்க்குமிலார்க்குந்தம்
வன்பகைப் புலன் மாசற மாய்ப்பதென்
முன்பு பின்பின்றி மூவுலகத்தினும்
அன்பின் அல்லதோராக்க முண்டாகுமோ ''

எனக் கம்ப நாடரும் அன்பின் இன்றியமையாச் சிறப்பு விளக்கி வற்புறுத்திக் கூறுவராதலானும் அன்னையர் முதலியோர்க்குப் பிள்ளையின் சொற் கேட்டற்கண்ணும் சோறூட்டற்கண்ணும் பூணணிந்து நோக்கற்கண்ணும் உடைவாள்செறித்தலை விழைதற்கண்ணும் தம் இயற்கையன்பு எல்லைகடப்பப் பொங்கி வழிதலியல்பாமாறு காண்டுமாதலானும் அதுவே, தம்உயிர்க்கு நனிபெருஞ் சுவை விளைக்குமாதலானும் அதனாற் பிள்ளைமையைப்பாடு முகத்தான் அம்மகளிரது பேரன்பினைத் தம் உள்ளத்துத் தோற்றுவித்து வளர்த்தற்கட் புலவர்க்கு அவாவெழுதல் கூடுமாதலானும் ஈண்டுப் பாடப்படும் பிள்ளை நான்முகனாற் படைக்கப்பட்டிறக்கும் பிள்ளையாகாது புலவராற் படைக்கப்பட்டு நிலைபெறும் பிள்ளையாமாதலானும் அகத்திணைச் செய்யுள் பாடுங்கால் ஐவகை நிலங்களுள் ஒன்றற்குரிய கருப்பொருள் உரிப்பொருள்கள் ஏனை நிலங்களின் கண்ணும் உளவாதல் காணப்படுமேனும் அங்ஙனம் விரவச் செய்யுள் செய்யாது அவ்வந் நிலங்கட் குரியவெனப் படுபவற்றை யவ்வந் நிலங்கட்கே சார்த்திச் செய்யுள் யாத்தல் வேண்டும் என்பது புலவர்மரபா மாறுபோல மேற்பகர்ந்த பருவங்களுள் ஒன்றற்குரிய நிகழ்ச்சி பிற பருவங்களினும் நிகழ்தல் கூடுமேனும் அவ்வாறு செய்யுள் செய்யாது அவ்வப்பருவங்கட்கே சார்த்திச் செய்யுள் யாத்தல் வேண்டுமென்பதூஉம் புலவர் மர பாதலானும், அவை நான்கும் ஏனைப்பருவங்களிற் றாயர் செய்து காட்டலேயன்றிப் பிள்ளைகள் தாமாகவேயும் செய்யுமாதலானும் அக்காலத்து அச்செயல் அத்துணைச் சுவைப்படாவா மாதலானும், அதனாற் கூறுதல்கற்றலும் அமுதூட்டலும் பூணணிதலும் உடைவாள் செறிதலும் தத்தமக்கு முறைப்படுத்திய பருவங்களுள் நிகழ்தலே சிறப்புடையனவெனப்படுதலானும் சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதலே செய்யுட்கியல்பாதலானும் பிங்கலந்தை அந்நான்கனையும் எடுத்தோதுதலானும் அதனான் அந்நூலுண்டாதற்கு முன்னர் அந்நான் கற்கும் எடுத்துக்காட்டுண்மை கருதலளவைக்குப் புலனாமாதலானும், அவ்வெடுத்துக்காட் டுடையார் நல்லிசைப் புலமைச்சான்றோராவ ராதலானும் அவர் நெறி பழிக்கப்படுவதன்றாமாதலானும் பிறவாற்றானும் மேற்கூறிய நான்கனையும் பாடுதல் கூடாது என மறுப்பார் கோட்பாடு அறிஞரால் ஏற்றுக்கொள்ளற்பாற் றன்றெனத் துணிக. இனிப்பன்னிரு பாட்டியன் முதலான நூல்கள் பிங்கலந்தைக்குப் பின்னர் எழுந்தனவாதலான் அவையெல்லாம் பிங்கலந்தை நூற்குமாறு போலாது முற்கூறிய நான்கனையும் நூலாதொழிந்தனவாதற்கு வாயில், அக்காலத்து இந்நான்கும் புனைந்துரைத்த பிள்ளைத் தமிழ்ச் செய்யுள் அவராற் காணப்படாமையேயாம். காணப்படும் பொழுது, பிள்ளைத்தமிழ் பாடுங்கால் அந்நான்குங் கூட்டியும் பாடப்படும் என முடிக்கும் பாட்டியல் நூல்களும் வழிநூல்களாகத் தோன்றற்பாலனவா மென்க. இனித்தாம் எடுத்துக்கொண்டு பாடப்படும் பொருளுக்கு முன்னையோர் ஆட்சி வேண்டுமாலெனின் அதுபொருந்தாது; ஆட்சிக்கு எடுத்துக்கோள் வேண்டும். எடுத்துக்கோட்கு ஆட்சி வேண்டுமென ஒன்றனை யொன்று பற்றுதல் என்னுங் குற்றம் தங்குமென்பதனால்.

இனி ஆண்பாற் பிள்ளைக்கு ஓதிய வாரானைப்பருவ முடியக்கிடந்த எண்பருவ நிகழ்ச்சியும், குழமணமொழிதல், ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றல், நீராடல், பாவையாடல், அம்மனையாடல், கழங்காடல், பந்தடித்தாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் என்னும் பத்துங் கூட்டிப் பெண்பாற் பிள்ளைக்குச் செய்யுள் செய்யப்படும். இவற்றுட் குழமணமொழிதல் மூன்றாமாண்டின் நிகழ்வது. ஒழிந்தன ஐந்தாமாண்டு முதல் ஒன்பதாமாண்டுகாறும் நிகழ்வனவாமென்பர். இனிப் பன்னீராண்டினிற் காமனோன்பு கூறலுரித்தென மொழியும்; பன்னிருபாட்டியல். இனி இவ்விரு பிள்ளைகளுக்கும் செங்கீரைப் பருவத்தின் முன்னர்ப் பிறப்பு, சுற்றத்தாருவகை, காப்பு, வளர்ச்சி, அச்சமுறுத்தல் என்றிவ்வைந்தும் பாடுதலுமுண்டு. அவை இக்காலத்துத் தனித்தனிப் பாடாதொழியினும் சுருங்கச்சொல்லன் மாட்சிபற்றி ஏனைப்பருவங்களிற் சார்த்திப்பாடாதொழி தலுமில்லை: இனிப் பிள்ளைத்தமிழ்ப் பாட்டுடைத்தலைவர் கடவுளராயின் நற்றாய் கூற்றுக் கிளக்கப்படாது. இனி அவர் மக்கட் பிறப்பாயின் அவரது மூன்றாந் திங்கண் முதல் இருபத்தொன்றாந் திங்களெல்லையி னுளாயினும் ஓராண்டு முதல் ஐயாண்டெல்லை யினுளாயினும் அவர்க்குப் புலவராற் பிள்ளைத்தமிழ் பாடிக் கொடுக்கப்படும். கடவுளர்க்கு இவ்வரையறையில்லை. அவர், நினைப்பார் நினைந்த கோலத்தோடு, நினைந்தபொழுதே நினைந்தவாறே காட்சியளிப்பாராதலான், இதனான் அவர்க்கு இளமை கழிதலுமில்லையாதலான் அவரது பிள்ளைமை புனைந்துரையுமன்று. நிலவேந்தர் முடிசூடினதன் பின்னர்ப் பிள்ளைப்பாட்டுப் பெறார். எனவே குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் அவன் முடிசூடு முன்பு பாடப்பட்டதாயிற்று. இனித் தம் பிள்ளைகளுடைய குணங் கண்டுழியுவந்தும் குற்றங்கண்டுழிச் சினந்தும், அப்பிள்ளைகள் செய்வன செய்யுமாற்றினை விழையாது, தாம் பணித்த நெறியிற் பிள்ளைகளை நடப்பித்தும் ஒழுகும் அறிவே பிழம்பாகிய தந்தையர் முதலிய ஆண்மக்களிடத்து அவ்வாற்றாற் பிள்ளைகள் பாற்றமக்குள்ள காதல், இடையிடையே மறைந்து மறைந்து வெளிப்படுதல் வேண்டப்படுவதன்றாதலின் அவர் கூற்றாகப் பிள்ளைத்தமிழ் பாடாது, தம் பிள்ளைகள்பாற் குற்றங்குணங்கள் விரவிக் கிடப்ப அவற்றுட் குணமேயன்றிக் குற்றமும் உடன் காணமாட்டாத பேதைமையும் பிறர்க்கம் பிள்ளையின் குற்றங்காட்டிக் குறித்த வழியும் வெகுளாது குற்மத்தையும் குணமாகக் கொண்டுவக்கும் ஒரு தலைப் பற்றும் சூழும் அன்பே பிழம்பாகிய தாயர் முதலிய பெண்மக்களிடத்து அவ்வாற்றான் அவ்வன்பின் விழுப்பம் எக்காலும் சிறிதும் மறையாது வெளிப்பட்டு நிலைநிற்றலே வேண்டப்படுமாதலின் அன்னோர துளங்கனிந்துருகும் கூற்றாகவே பிள்ளைத்தமிழ் பாடக்கடவராவர்; புலவர் பெருமக்கள். இனிக் கல்வி கற்றல் முதலிய பிள்ளைச்செய்தி கூறல், தந்தையர் முதலிய கல்வியறிவு துய்த்தொழுகும் ஆண்மக்கட்கே இயைபுடையனவாதலாற் கொழுநர் முதலியோர் அறிவித்தவாறு அறிந்தொழுகுதலன்றித் தாமாக வறிந்தொழுக மாட்டாத மடமை பூண்ட பெண்டிர் கூற்றாகிய பிள்ளைத்தமிழுள் விள்ளப்பெறாவாயின. இனி இத்தகைப் பெண்டிரது இயற்கைப் பேரன்பினை ஆடவர் தாம் விரும்பும் வீடு பேற்றுக்குச் சிறந்தது எனக் கருதுங்கால் தம்மைப் பெண்டிராக நினைவாற் படைத்துக்கொண்டு அவ்வன்பினைத் தம்பாற் செய்து கொள்ளுதலியல்பு. அதனானன்றோ திருவாதவூரடிகள் ஆளுடையவரசு, நம்மாழ்வார் போலும் நம்பிகளெல்லாம் தாம் பெண்டிர் நிலையின் நின்றே கடவுளைப் பெரிதும் பாடிக் காதலிப்பாராயினர். கடவுளு முட்படத் தப்பிப் போகாமல் எளிதிற் பிணிக்கும் ஆற்றல், செருக்கற்ற பேதைப் பெண்களது அன்பின் கணன்றி வேறெப் பொருளகத்தும் இயல்பான் இல்லையன்றோ? இனிப் பாட்டுண்ணும் தலைமக்களும், அவர் புகழும் உலகியல் வழக்காகவும் அவரைப் பிள்ளைகளாகப்படைத்து விளித்து மகளிர் கூற்றாகப் புலவர் கூறும் கூற்றுப், புனைந்துரையாகிய கூத்தியல் வழக்காகவும் அமைதலிற் பிள்ளைத் தமிழின் பொருள் அவ்விரு திறமும் விராய் வருதலாகிய புலனெறி வழக்கு எனப்படும். அதனாலன்றே புலனெறி வழக்குப் பாடற்குரிய கலிப்பா வென்னும் இசைப்பாவாகிய செந்துறைப் பாட்டாற் பிள்ளைத்தமிழ் பாடுதல் பெருவர வாயிற்றென்க. அகவல் விருத்தமுதலிய பாவினங்களும் கொச்சக் கலிப்பாவின்பாற் படுமாதலான் அகவல் விருத்தத்தாலாயினவற்றைக் கலிப்பாவாலாயினவெனக் கூறினேம். அகவற் பாவினையும் செந்துறைப் பாட்டாக்கிப் பாடினாருமுளர். தமிழ்மாலை (தேவாரம்) யுள்ளும் நாலாயிரத் திருமொழியுள்ளும் வரும் விருத்தங்கட்குப் பண்ணும் சீரும் அடைத்தலான் அவையெல்லாம் செந்துறைப்பாட்டென்பது கொள்ளப்படும். பண்ணும் சீருமுணர்த்திப் பாடற்கு மட்டுமேற்கும் பாட்டுச் செந்துறையெனப்படும். அங்ஙனமன்றி விறல்படப்பாடியாடுதற்குமியைந்துவரும் பாட்டு, வெண்டுறையெனப்படும். இனிப்பிள்ளைத்தமிழ் புதுவது புனைந்தயாப்பாதலிற் றொடர்நிலைச்செய்யுட்கு வேண்டப்படும் அம்மை முதலிய எண்வகை வனப்புக்களுள் விருந்து என்னும் வனப்பாம் என்க. மற்று இச்செய்யுட்கிளவி, தாயர் முதலாகிய ஒருமருங்குபற்றிய கேண்மையாதலாற் கைக்கிளை திணையாய்ச் சுட்டியொருவர்ப் பெயர்கொளப்பட்டு எல்லாரானுமுணர்ந்து நுகரப் படவெளிப்பட நிகழ்தலிற் புறமாய்க், கைக்கிளைத்திணைப் புறமாகிய பாடாண்டிணையாகுமெனவும் பாடாண்டிணைத்துறைகளுட் குழவிக்கட்டோன்றிய காதலின்ப மென்னுந்துறையாமெனவும் உணரப்படும். இவ்வின்பம் இம்மைப்பேறாதலின் அறம்பொருளின்பங்களுள் ஐம்பொறிகளானும் துய்க்கப்படுவதாகிய இன்பம் எனப் பொதுவாயொன்றாயடங்குமாயினும் சிற்றில் சிதைத்தற் றுறைக்கிளவியும் ஏனைத் துறைக்கிளவியும் தம்முள்வேறு வேறாயொக்கவின்பமென்பது வுய்த்துணர்ந்து கொள்க. சிற்றில் சிதைத்தற்றுறைக்கிளவி, இடக்கர்ப்புணர்ச்சி விளைவினது. ஏனைய அன்னவல்ல. இனிப்பிள்ளைத் தமிழ்க்கு மெய்ப்பாடு உவகை. செல்வவுவகை, புலனுவகை, புணர்வுவகை, விளையாட்டுவகையென்னும் நாலுவகைகளுள் இது புணர்வு வகை. ஒழிந்த மூன்றும் மகளிரது மேற்கூறிய புணர்வுவகையைச் சார்ந்து தலைமகன் மாட்டு நிகழப்பெறுவன. இனி இப்புணர்வுவகையைச் சார்ந்து மற்றை நகைமுதலிய மெய்ப்பாடுகளும் காணப்படும். இனிப்பிள்ளைத்தமிழாற் பெறும் பேறு: முன்னர்க் கூறிவந்த முறையான் நூற்பொருள் நாற்பேறுமாமென்க. இன்னும் இக்கூறி வந்தவைபோலும் பிள்ளைத்தமிழின் திறங்களெல்லாம் ஈண்டுரைப்பிற் பெருகும். இடனேர்ந்துழிச் செப்புதும்.

இனிக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ் என்பது, இமிழ்திரை புடைசூழ் ஈழவள நாட்டிற் கதிரகாமம் என்னும் மூதூரிடத்துத் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியுறையும் முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைமகனாக எடுத்துக்கொண்டு அப்பெருமானைப் பிள்ளையாகப்புனைந்து படை த்து மேலே பிள்ளைத்தமிழ்க்குக் கூறிய சிறப்பியலும் நன்மைப் (மங்கலப்) பொருத்த முதலிய பொதுவியலும் அமைய இப்பொழுது எம்மால், முந்தைப் பிள்ளைத்தமிழ்ச் செய்யுள் பல்வகையாகப் பாடிப்போந்த ஆசிரியர் பலரின் நெறிச்சுவட்டினையொற்றி, அவருடைய சொல்லும் பொருளும் போற்றித்தொடுத்து முடிக்கப்பட்டுள்ளது' இத்தொடர்நிலைச் செய்யுளினகத்துச் செய்யுட்காப்புப் பாவொடு காப்புப்பருவமுதல் உடைவாள் செறித்தற் பருவமீறாகவுள்ள பதினான்கு பருவங்கட்கும், பருவந்த தொறும் மும்மூன்று பாக்களாக நாற்பதிற்று மூன்று ஆசிரிய விருத்தப்பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.

இனி, நெடுவேண் முருகன், எழுத்துச்சொற்பொருளாகிய முத்திறமும் ஒருங்குணர்த்தும் இயல், இசை, கூத்து என்னுந் தமிழ் மூன்றுந் தோன்றுங்காலத்தே உடனமைந்து ஒருங்கு தோன்றுதலானே அப்பெருந்தகை, தமிழகமக்கட்குச் சிறந்த தண்ணளிக்கடவுள் என்பது வடபனிமலைக் கொடுமுடியிற் கொளுத்திய சுடர் விளக்காகும்.

இனி, அப்பெருமிதக்குரிசில் தனது இயற்கைப் பேரருளுடைமையானே தான் பெற்ற பேரின்பம் பெறுக விவ்வையகமும் எனத்திருவுளத்தடைத்துத் தனது, அழிவும் அளவுமகன்று பொலியும் ஆற்றலாகிய அரிவைமாரொடும் மறைமொழிப்பிழம்பு (மந்திராத்துவாவடிவம்) தாங்கி வானினின்றுங் கீழிறங்கி வீற்றிருந்து சிற்றுயிர்த் தொகுதியை மருளொழிய அருணெறியிற் செலுத்தி மண்ணுலகைப் பொன்னுலகமாக்கும் சிறப்பார்ந்த திருக் கோயில்களுட் கதிரகாமம் என்பதும் ஒன்று.

இஃது ஈழவள நாட்டிற்கு இப்பொழுதைத் தலைமைப்பட்டினமாகிய கொழும்பினின்றும் ஏறக்குறைய இருநூறு நாழிகைவழிக்கொடு (சாய்ந்த) கிழக்காகச் சென்று சேரும் சேய்மையிலே, தத்தம் பிடியையழைக்குங் களிற்றாரவாரங் கறங்கும் மரமடர்ந்த பெருங்காட்டினூடே, மாயோகிகள் போல இறுமாந்து நிமிர்ந்த கரிய மாணிக்கக்குன்றின் சாரலிலே, தன் இருமருங்குக் கரைகளையும் தன்பால் நீராடுவாருடைய பாவங்களையும் அரித்துக்கழுவிக்கொண்டு மலையருவியாகிய புதல்வர் ஓடி வந்து தம்மேல்வீழ அவரை மார்பினணைத்துத் தழீஇ மோந்து முத்தமிட்டு உவந்து ஆரவாரித்து மாணிக்கக் கங்கையாகிய நங்கை, திரைக்கைகளிற் பழக்குலைகளும் மணிக்குவையுமாகிய கையுறையேந்திக் கடலாகிய கொழுநனை நச்சி நெய்தனிலமாகிய வேட்டகம் புகும் வழித்துறையிலே குயில் கூவவும் மயிலாலவும் குரங்குதாவிக் கொம்பு பிழைப்பவும் புன்முறுவல் பூத்து இயற்கைக்காட்சி வனப்புக்களாகிய கண்ணாடிகள் தோறும் தன் திருவருண் மேனிச்சாயலைக் கண்டுகளித்துத் தானுந்தன் தையலுமாகத் தன் அடியார்களாகிய செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நல்விருந்தாகிய மணிமுருகப் பெருமானது "கதலிசூழ் தென்றிசைப்பயிலுமீழத்தினிற் கதிரகாமத்தினைக்காணப்பெற்றால் செய்வமென்ப தொன்றெய்தியதில்லென முரணிக்கூறு முழுமகனுக்கும்'' “தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' மெய் வகையுணர்ந்து வீடுபெறுதல் ஒருதலையானேயுளதாம்; என்பது யாம் சொல்லவும் வேண்டுங்கொல்லோ?

உள்ளங் குவியவொருமுறை நினைப்பினும் உயிர்க்கண் வேர்க்கொள்ள மயிர்க்கூச்செறியுமன்றோ? இன்னணம் அருமை பெருமைவாய்ந்த கதிரகாமம் 'வாக்கிற்கருணகிரி''யெனச் சிறப்பித்துப்புகழப்பெறும் திருவருட்புலவரது திருப்புகழ்த் தீஞ்சுவைப்பாடல் பெறாமல் எங்ஙனம் இருக்கமுடியும். திருப்புகழிற் கதிரகாமத்தைப் பற்றிய அரிய உண்மை வரலாறுகள் சில பொதிந்து கிடக்கின்றன.

"பதிகள் பலவாயிரங்கள் மலைகள் வெகுகோடிநின்ற
பதமாயர்கா ணவந்த கதிர்காமா!''

என்னும் அடியில் தனிப்படைவீடு ஐந்தும் தொகைப் படைவீடு ஒன்றுமாகிய, முருகன் திருப்படைவீடுகளாறனுட் குன்றுதோறாடலாகிய தொகைப்படை வீடுகளுள் தலைமைசான்றது கதிரகாமம் என்பது குறிக்கப்படுகின்றது. திருப்புகழால் மாணிக்கக்கங்கைக்கு வடவையாறு என்பதும் கதிரகாமக்காட்டுக்கு யானைக்காடு என்பதும் கதிரகாம மலைக்கு மாணிக்கமுக்கோணமலை யென்பதும் பெயரெனத் தெரியவருகின்றன.

''கதிர்விடுவேலைக் கதிரினின்மேவிக்
கலைபல தேர்முத தமிழ்நாடா!''

எனவரும் அடியிற்குன்றெறிந்த குமரவேள் கதிரகாமத்திலிருந்து கலைபலதேர்ந்தான் எனவும் அதனாற் கதிரகாமநாடு முத்தமிழ்நாடு எனப் பெயர்பெற்றிருந்தது எனவும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இன்னோரன்ன குறிப்புக்கள் ஆராய்ச்சியாளர்க்கு மிக இறும்பூதும் கழியுவகையும் விளைக்கும் பெற்றியனவாகும். இற்றை ஞான்று கதிரகாமநாடு சிங்கள நாடாகவும் ஆண்டு வாழ்வார் சிங்களராகவும் இருத்தல் முறையே பண்டு தமிழ்நாடாகவும் தமிழராகவுமேயாயிருத்தல் வேண்டும் என்னும் ஒரு சாரார் கடைப்பிடிக்குத் தக்க மேற்கோளாகும், மேற்போந்த குறிப்புக்கள். இங்கு எடுத்துக்காட்டிய திருப்புகழிற் கதிரினின் என்றது கதிரகாமத்தையே யென்பது வேலையென்னும் அடைமொழியாலினிது பெறப்படும். வேலை -- கடல். வடவிந்திய நாட்டினைக், கி-மு, மூன்றாம் நூற்றாண்டில் அடிப்படுத்து அரசாண்டுவந்த அசோகமன்னன் காலத்தில் இலங்கையில் இலங்கைமன்னனுக்குப் பின் பெரியாராகக்கருதத்தக்கவர் கதிரகாமத்திலிருந்தனர் என மாவம்மிசம் என்னும் சிங்களப் பௌத்தச் செய்யுளாற் புகழப்படுகின்றவர், மேற்கூறியவாற்றானே தமிழ்ப்பெரியாராகல் வேண்டும் போலத் தோன்றாநிற்கும், என்னை? சிங்களர் இலங்கையிற் கி-மு, மூன்றாம் நூற்றாண்டின் முன்னர் இருநூற்றாண்டாகவேதான் சிறிதுசிறிதாகப் பெருகிவருவாராயினர். அவரும் கல்வியறிவொழுக்கமுடையரல்லரென்பது அம்மாவம்மிசச்செய்யுளானேயே கேட்கப்படும் என்ப. அன்ன வியல்பினர் இருநூற்றாண்டிற்குட் கல்வியறிவொழுக்களாற்றிருந்திப் பெரியராயினர் எனக்கொள்ளல் பொருந்தாததொன்றாகும். அல்லதூஉம் ஒருதன்மையராய்வந்த சிறுபான்மைச் சிங்களருட் கதிரகாமச்சிங்களர் மட்டும் விதந்து வேறுபடவுயர்த்துச் சொல்லப்படற்பாலருமாகார். அல்லதூஉம் மலைச்சாரல்தோறும் அந்நிலக்கிழானாகிய முருகவேளைக் குறிஞ்சிபாடித் துடிகொட்டிக் குரவையாடி யாற்றுப்படுத்து வழிபாடாற்றிய வேட்டுவரொழுக்கம் தமிழகத்திற்குரித்தாகவே நிகழ்ந்தது எனத்தமிழ் நூல்களான் அறியக் கிடத்தலன்றிப் பிறநாட்டிற்கும் பொதுப்பட நிகழ்ந்தது என்றல் கேட்கப்படாமையானும் கதிரகாம முருகன் கோயில் தமிழ்வேட்டுவராலேயே வழிபடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது துணியப்படும். வேட்டுவர் சிங்களரல்லர் என்பது விசயனோடு வேட்டுவரும் வந்தார் எனச் சொல்லாப்படாமையாற்பெறப்படும் என்ப. கதிர காமம் சிங்களரதாயிற் சிங்களர் செறிந்துள்ள வேறெங்கணும் முருகன் கோட்டம் இல்லாமைக்கு வாயில் என்? இக்காலத்தும் ஈழம்வந்தேறும் தமிழருட் சிலர் சிங்களர் சார்பாற் சிங்களருடைய நடையுடை மொழிகருத்துக்களை மேற்கொண்டு சிங்களராகவே தோன்றல் கண்கூடாயிற் கதிரகாமத்தமிழ் வேட்டுவர், நெடுங்காலமாகப் பெரும்பான்மைச் சிங்களர், தம்மைச் சூழப் பெருகி வலியுற்று வாழுஞ்சார்பாற் சிங்களராக மாறிக் காட்சியளித்தலை அவர் சிங்களர் என்பதற்கு அடையாளமாக எடுத்துக்காட்டல் ஒரு சிறிதும் பொருத்தமன்றாகும். ஆகவே கதிரகாமநாடு பண்டைக்காலத்துத் தமிழ்நாடாயிருந்தது என்பதூஉம் ஆண்டுவாழ்ந்தார் தமிழ்வேட்டுவரேயென்பதும் அவராலேயே ஆண்டு முருகன் கோட்டம் வழிபடப்பட்டது என்பதூஉம் வலியுறும். இனி அந்நாடு முத்தமிழ்நாடு எனப்பெயரெய்துதலின் அந்நாட்டு வேட்டுவரெல்லாம் தமிழ்ப்புலமை வாய்ந்திருந்தனர் என்பதாயிற்று. கதிரகாமத்தில் ஒரு வேட்டுவிச்சி தமிழ்ப்புலமை நிரம்பி முருகனுக்குப் பாமாலை சூட்ட முருகன் அதனை உவந்தேற்றருளியிருந்தான் எனத்திருப்புகழ் கூறும். அதுவருமாறு

“கடகடவருவிகள் தபவரி யதிர்கதிர்
        காமத்தாங்க மலைவீரா!
………………………….
அயிலவ சபரிசெய் கவி புகல் தருகவி
        யாளப் புயங்கொண் டருள்வோனே''

என்பது. இங்ஙனம் வேட்டுவரிற் பெண்பாலாரும் செய்யுள்பாடும் புலமை நிறையப் பெற்றிருந்தாராயின் ஆண்பாலார் தமிழ்ப்புலமை நிரம்பியிருந்தாரென்றல் ஒரு வியப்பாகுமா? சபரி - வேட்டுவிச்சி. ஆகவே கதிரகாம நாட்டை முத்தமிழ்நாடு என்றற்குத் தடையென்னை? பழங்காலத்திலே தமிழரெல்லாம் ஐந்நிலமக்களாகவே வழங்கப்பட்டுவந்தனர் என்பது தெரிதலால் தமிழ்ப்புலவரும் தமிழ்மன்னரும் ஐந்நிலமக்களின் வேறல்லராவர். இவர் கல்வியறிவொழுக்கங்களானே திருந்தினரும் ஏனையர் திருந்தாத மாக்களுமாவர். முத்தமிழ் பாண்டிய மன்னர்கட்கு உரியனவாதலால் முத்தமிழ்நாடாகிய கதிரகாம நாட்டினையும் வேட்டுவர் பாற்பட்ட பாண்டிய மன்னரே யாண்டிருந்தாராகக்கொள்க. இறையனார் களவியலுரைப்பாயிரம் முதற்றமிழ்க் கழகப் புலவனாகக்குன்றெறிந்த குமரவேள் வீற்றிருந்தான் எனவும் அக்கழகமிருந்த நாடு தென்பாற் கடல் கொள்ளப்பட்ட பாண்டியநாடு எனவும் எடுத்தோது தலைக் 'கதிரினின் மேவிக்கலை பலதேர் முத்தமிழ்நாடா என்னுந் திருப்புகழ்க் கருத்தோடு இணைத்துப் பார்ப்போமாயின் அவன், கதிரகாம முருகனேயாம்; அந்நாடு, கதிரகாமநாடேயாம்; கழகத்து ஊரும் கதிரகாமமேயாம்; என்னும் உண்மைவலியுறும். முருகவேள் கோயிலிருக்கும் இடமே அவன் புலவனாக வீற்றிருக்கும் கழகத்திற்கும் இடமாகவேண்டும். அவனுடைய வேற்றூர்கள் அதற்கு இடமாதல் பொருந்தாமையாற் கதிரகாமமே அக்கழகத்திற்கு இடமாதலமையும் இனிக் கதிரகாமம் வேட்டுவர் நாட்டுக்குத் தலைமை யூராதலின் ஆண்டு இருந்த வேட்டுவ மன்னனுக்கே வள்ளிநாச்சியார் மகளாராக வாய்த்திருத்தல் கூடும். வள்ளிநாய்ச்சியாரை முருகவேள் கடிமணம் செய்த நிலம் கதிரகாமம் என ஈழ நாட்டுவழக்கமிருத்தல் போலவே திருப்புகழ்த் திருவருட்பாவும் விளக்கிக் கூறுதலான் மேற்காட்டியது உண்மையெனக் கோடற்கு இடனுண்டு. அன்றியும் ஒரு வேடன் அருளிய வழிபாட்டுக்கு மகிழ்ந்து கதிரகாமத்து எழுந்தருளியிருந்தான், முருகன் எனச் செப்புதலான் முதன்முதல் ஒரு வேட்டுவனே கதிரகாம முருகனை வழிபட் டான் என்பது போதரும். அதனான் இன்றும் அவ்வேட்டுவன் மரபினரே வழிபட்டு வருகின்றனர். அதனான் அக்கோயிற்கு அவரே உரியராகின்றனர். திருப்புகழ் வேட்டுவன் கொடுத்த அல்லது செய்த வென்னாது அருளியவென வுயர்த்துரைத்தலின் அவ்வேட்டுவன் முருகற்கு மகட்கொடை பூண்ட மாமன் போலும். அங்ஙனம் அவன் முருகனை வழிபடுதல் சிறந்திலதாயின் அவன்பால் வள்ளிநாய்ச்சியார் சார்தலமையாது. இனி இக்கதிரகாமம் இன்னகாலத்து உண்டயிற்றென்று வரையறுத்து உரைக்கவியலாதாயினும் சீதையைத் தேடியிலங்கைக்கு வந்த அனுமான் சீதையைக் காணப் பெற்றுத் தன்னைத் தசரதராமன் தூதன் எனச் சீதை தேறுதற்காக இராமன் கொடுப்பக் கொணர்ந்த திருக்கணையாழியைச் சீதைபாற் காட்டிக்கொடுத்து விட்டு, அவள்பால் விடை பெற்று மீண்டு கதிரகாமத்தில்வந்து முருகக்கடவுளை வணங்கிநிற்ப அவற்கு முருகன் இன்னருளீந்து உவந்துருளினான் என்னுமொரு குறிப்புத் திருப்புகழிற் காணப்படுதலால் இற்றைக்கு ஏறக்குறைய நாலாயிரத்தைந் நூறியாண்டுகட்கு முன்னர்த் தொடங்கியே கதிரகாமம் விளக்கமுற்றிருந்தது எனத்தெரியவரும். அப்பொழுது சிங்களர் என்னுமோரினமே உலகத்திருந்ததில்லையாதலானும் கதிரகாமம் சிங்களரதன்று என்பது ஒருதலை. அக்காலம் தென் தமிழ்நாடு கடல்கொண்டதொடக்கமாதலால் ஈழமெல்லாம் தனித்தமிழ்நாடாக வமைந்திருந்தது. அங்ஙனமாயிற் கதிரகாமநாடு முத்தமிழ் நாடாதலில் ஐயுறவு எழுதற்கு இடனின்று.

கதிரகாமம் இடைக்காலமாகிய சிங்களராட்சிக்காலத்திலும் நீர்வளம் நிலவளமிக்க பேரூராகவேயிருந்தது என்றற்கு அப்பெயரேகரியாகும் கதிரகாமம் என்பது சிங் களப்பெயர் திரிந்த தமிழ்ப்பெயர். கதரகம என்பது சிங்களப்பெயர், கம என்பது கிராம என்னும் வடசொற் சிதைவு. கிராம என்பதற்கு வயல்சூழ்ந்தவூர் என்பது பொருள். அவ்வூர் அழிந்து போக முருகன் கோட்டமும் அதனைவழிபடும் வேட்டுவப்பார்ப்பார் மனைகளும் நீத்தார்பாழிகளும் (மடங்களும்) முருகனைக்காணவருவார் குழுமியுறையும் மன்றங்களுமே இன்று காணப்படுகின்றன. இவையும் பின்னர் உண்டாக்கப்பட்டனவேயன்றிப் பண்டைக்காலத்தனவல்ல. சிங்களப்பகை மன்னர் படையெடுப்பே அவ்வழிவிற்குவாயில். இதனானும் கதிரகாமம் தமிழரது என்றாயிற்று, அங்ஙனம் அழியுங்கால் முருகன் கோயிலும் சிதைய அவன் கற்பிழம்பும் காணப்படாமற் போயிற்றுப்போலும். திருவுலாம்பிழம்பு (உற்சவவிக்கிரகம்) மாணிக்கத்தால் அமைந்ததாகலால் அதனை வேட்டுவர், ஊறுபடாமற் காத்தோம்பிப் பெட்டிக்குட் பொதிந்துவைத்தனர். அதுமுதற்றொட்டு அப்பேழை வாயிலாகவே உள்ளிருக்கு முருகனை வழிபாடாற்றிவரு கின்றனர். முருகக்கடவுளும் அப்பேழைமுகமாகவே தொண்டர்கட்குத் திருவருள் சுரந்து உதவுகின்றனன். யாண்டும் நிறைவுற்றுக் கட்டற்றுப் பொறிகட்கு எய்தாத முழுமுதற் கடவுளும் பெட்டிக்குட் கட்டுற்றான்; என்னே! முருகனது அடியார்க்கெளிமை. மாணிக்கம் விளையும் நாட்டிலே மாணிக்கமலைச்சாரலிலே மாணிக்கக் கங்கையாற்றங்கரையிலே குடிவாழும் முருகன் திருப்பிழம்பும் மாணிக்கமாகவேயிருத்தல் வேண்டும் என்பது கூறாமேயமையும்.

''கன மாணிக்க வடிவனே மிக்க
திரகாமத்தி லுறைவோனே:''

என்னுந் திருப்புகழும் ஈண்டுக்கருதற்பாலது. இங்ஙனமான பேழைப்பொருள் என்பதன் உண்மைக் கருத்துக் கந்தரநுபூதித் திருவிருத்தமொன்றால் அருண கரியார் அழகாக விளக்கிக்காட்டுகின்றனர். அது வருமாறு:

''வாழைக் கனிமா மதுரச்சுளையே!
யேழைக் கரிதென் றிடுவா ருளரோ
பாழைப் பயிர் செய் திடு சிற்பரையின்
பேழைப் பொரு ளாகியபே ரொளியே" என்பது.

இன்னும் இக்கதிரகாமத்தின் ஏனைவரலாறுகள் இதன் பிற்சேர்க்கப்பட்டுள்ள கதிரகாமவரலாற்றுச் சுருக்கம் என்னுங்கட்டுரையுள் இனிதுணர்ந்துகொள்க. இங்ஙனம் பழம் பெருமைவாய்ந்த கதிரகாம முருகப்பெருமான், அருணகிரியார் கூறியவாறே '' இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கிரங்கும்'' பெருமாளுதலான் அவன் மேல் அவனதருளான் அவன் தாள் வணங்கி இப்பிள்ளைத்தமிழ் என்பதொன்று பாடலாயிற்று. இதன் செய்யுட்களின் பொருள் எளிதிற் புலப்பட ஒரு குறிப்புரையும் வரைந்து இச்சுவடியின் இறுதிக் கட்சேர்த்தல் நலமாயிருக்கும் என அன்பர் சிலர் கேட் டுக்கொண்டதன் பொருட்டு அவ்வாறே குறிப்புரையும் பொறித்துச் சேர்க்கநேர்ந்தது. அதனை இன்னும் விளக்கமாக எழுதிப் பதிப்பித்தற்கு யாம் குறித்த காலமும் பொருளும் போதாமையான் அவ்வேட்கையினைக் கைவிட வேண்டிற்றாயிற்று, ஒல்லுமேல் இரண்டாம் பதிப்பு முதலியவற்றில் அவ்வாறு செய்துகொள்ளலாம் எனக் கருதியிராநின்றேம்.

இனி ஊழான் நேர்ந்த நல்குரவாற்பற்றப்பட்டு இது போலும் சுவடிகளை வெளிப்படுத்தற்கு நினைக்கவுமாட்டாதிருந்தேமாகக் கதிரகாமவேலவன் திருவருள் போல வந்து கதிரகாமப்பிள்ளைத்தமிழ் பாடுக; என நினைப்பூட்டிக் கேட்டுக்கொண்டு அங்ஙனமே யாம் பாடுமாறு ஊக்கங்கிளர்வித்து முடிப்பித்துத் தமிழறிஞரவைக்களனின் ஏற்றுவித்து இச்சுவடி பயன்படுமாறு இன்றியமையாத நன்முயற்சியை மேற்கொண்டவரும் தக்கார்பால் அன்பும் பணிவும் ஒழுக்கமும் கடைப்பிடித்தொழுகிவரு பவரும் தமிழ்மொழிக்கண் ஆர்வமும் பயிற்சியும் உடையராய்த் தமிழ்மொழிக்குப் பணியாற்றுங் கடப்பாட்டாளரும் என்னுடைய இயற்றமிழ் மாணவருள் ஒருவரும் கொழும்பு வேத்தியற்களரிக்கல்வித்துறை யெழுத்தாளருமாகிய திருவாளர் யாழ்ப்பாணத்துக் கரும்பனூர்க் குல, சபாநாதன் என்பவர்க்கும் கல்வியறிவொழுக்கங்க ளுடையார் மாட்டு மனமொழிமெய்களான் முறையே அன்பும் முகமனும் பணிவும் செய்தலை எஞ்ஞான்றும் மறவாது கடைப்பிடித்தொழுகுஞ் செல்வரும் எம்பால் உழுவலன்பு செறியப்பெற்றோரும் கல்விச்சுவை கண்டு உவப்போரும் கொமும்பு முறைப்பெருமன்றத்துத் தமிழ்மொழி பெயர்ப்பாளருமாகிய வெள்ளவத்தை, முதலியார் செ. சின்னத்தம்பியவர்கட்கும் எம்மை நன்குமதித்தொழுகித் தமிழ் நூலாராய்ச்சியே பொழுதுபோக்காகவுடையவரும் எம்முடைய நன்மையை விரும்புபவரும் உயர்ந்த எண்ணங்கள் வாய்ந்தோரும் வேத்தியற்களரியெழுத்தாளருமாகிய கல்கிசை, வ. கந்தையா அவர்கட்கும், மிகப்பெருந்தன்மை வாய்ந்தோரும் தமிழார்வ மிக்குள்ளோரும் எம்பால் அன்பு கெடாதாருமாகிய கொழும்பு வேத்தியற்றுறை முகப்பொருளறைக்களரி யெழுத் தாளருமாகிய வல்வை R. வைத்தியலிங்கமவர்கட்கும் புலவர்மரபினரும் எம்முடைய கொழும்பு வாழவுக்கு இன்றியமையாத காரணமாயிருப்பாரும் எம்மைத் தம்மின் வேறாகக்கருதாத பேரன்பு வாய்ந்தோருமாகிய வல்வைச் சங்கர, வைத்தியலிங்கமவர்கட்கும் ஏனை என்னுடைய அன்பான இயற்றமிழ் மாணவர்கட்கும் யாம் கொழும்புப் பட்டினத்தில் முட்டுப்பாடு இன்றித் தமிழ்ப்பணி செய்துபோதருதற்கு இன்றியமையாத அறுசுவையுண்டி அன்போடு அளித்துக்காப்பாற்றி வரும் அருட் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்குவாய்க்கப் பெற்றவர்களாகிய திருவாளர் வலமபுரி, வயி. லெ. இலக்குமணச் செட்டியாரவர்கட்கும் திருவாளர் வயி. வ. வடுகநாதச் செட்டியாரவர்கட்கும் கொழும்புப் பம்பலப்பிட்டியாவிலுள்ள திருப், பழைய கதிரேசன் கோயிலில் யாம் வேண்டியபோது இனிது உறைதற்கு அருமையான இடம் அளித்து உதவிக் கடவுளிடத்தும் தமிழ்மொழிக்கண்ணும் தமிழ்ப்புலவர்களிடத்தும் தங்களுக்குள்ள நல்லெண்ணத்தைப் புலப்படுத்துகின்றவர்களாகிய, கொழும்பிற் செட்டியார் தெருப் பழைய கதிரேசன் கோயில் நகரத்தார்களுக்கும், அவர்கள் போலவே கொழும்பில் யாம் விரும்புங்காலத்துத் தங்களுடைய மேல் வீட்டினை எனக்கு உதவி எனக்கு வேண்டுவனவற்றைச் செய்து எனக்குப் பற்றுக்கோடாயிருக்கும் திருவாளர் நெய்க்குப்பை, ப, ராம. லெ. இலக்குமணச்செட்டியாரவர் கட்கும் கதிரகாமத்து மாணிக்கமுருகவேள் வள்ளல், எஞ்ஞான்றும் எல்லாநலங்களையும் பொழிந்து குறைவற்ற வாழ்வு அருளி, அவர்கள் இம்மையினும் மறுமையினும் இன்பமுறத்திருவுள்ளம் செய்து அவர்கண்மேற் கடைக்கண் செலுத்தியருள்வானாக. இக்கதிரகாமப் பிள்ளைத்தமிழ்ச்சுவடியைப் பதிப்பித்துத் தருதற்குரியகாலம் மிகப்போதாதிருந்தும் தங்களுடைய வியாபார முறையும் மெய்ம்முயற்சி வருத்தமும் பொருட்படுத்தாது என்பால் தங்கட்குள்ள பெருந்தகையன்பினையே குறிக்கொண்டு யாங்குறித்த காலத்துள்ளே திருத்தமுற்ற பதிப்பாக இச்செய்யுள் புறம்போந்துலாவற்கு வாயிலாயிருந்த ராபர்ட் பிரஸ் லிமிடெட், (The Robert Press, Ltd) அச்சுக்களரியின் தலைவர், முதல்வர் (Manager) அச்சுக் கோத்துப்பதித்த பணியாளர் என்றிவர்களுடைய அன்பும் பொறுமையும் பெருந்தன்மையும் முயற்சித்திறைமையும் எம்மாற் பாராட்டாமலிருக்க முடியவில்லை. அவர்கட்கு எம் நன்றியறிவும் கடவுளுடைய திருவருளும் உரியனவாகுக. கதிரகாம நிழற் கிழி (Block) கொடுத்துதவிய S. பற்பநாத அய்யரவர்கட்கும் எம் நன்றியறிவும் பணிவும் உரியனவாக.
---------------------

நேரிசை வெண்பா.
வாழி மணிநெடுவேள் வாழி யவன்றொழும்பர்
வாழி குறுஞ்சுனைக்கண் மாண்குழவி- வாழி
கலக்கிய சின்,னீரைக் களிறுண் கதிரை
மலக்குறும்பு மாற்று மலை.
--------------------------------------

திருக்கதிரகாம வரலாறு.
---------------
மணியுமிழ்ந்து மாமலைமேன் மேய்வனவு நாகம்
   ,   மடவர லார்கொய்ய மலர்வனவு நாகம்
பிணிய விழ்ந்து நன்னாளாற் பூப்பனவும் வேங்கை
   ,   பிறங்கன்மாத் தொலைத்தவற்றூன் றுய்ப்பனவும் வேங்கை
இறைக்காசா னெம்மருளா மாலையு மாலை
   ,   யெமக்கினிதா யாமவனைச் சூடுவது மாலை
நிறைக்காய்த்தி நெஞ்சஞ்சச் சுடுவதுவுங் காமம்
   ,   நிலங்காக்குஞ் சேஎய்த னெடுநகருங் காமம்

''யாப்பருக் கலவிருத்திமேற் கோள்.''
   ,   (பெருத்தொகை பக்,- 25.)

ஆதி பவானிமடிமீது வைத்துயிர்க் கைந்தக்கர
மோதி யுணர்த்தும் பொருவருங் காசியி னோங்கிக்குகன்
கோதில் குலங்கொண்டு முக்கோணம் வாய்ந்து குலவருட்ச
மாதி யொளிருங் கதிர்காம மீழநன் மண்டபலே.
   ,   (ஈழமண்டல சதகம்)
----------------

முன்னுரை.

திருக் கதிரகாமத்தின் வரலாற்றினை மட்டும் தொகைப்படுத்தி யெழுதுமாறு எமதாசிரியர் சிவங் கருணாலயப் பாண்டியப் புலவர் அவர்கள் பணித்தார்கள். அக்கட்டளையைத் தலைமேற் கொண்டு இக்கட்டுரை எழுதப்படலாயிற்று. சேர். பொன். அருணாசலம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய 'The Worship of Muruka'' எனும் கட்டுரையும், முதலியார் இராசநாயகம் அவர்கள் 'Hindu Organ' பத்திரிகையில் வெளியிட்ட கதிரகாம வாலாற்றுக் கட்டுரையும், நண்பர், வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள் தந்துதவிய 'Manual of Uva' எனும் நூலும் இக்கட்டுரையினை எழுதற்குப் பெரிதும் பயன்படலாயின. இவ்வறிஞர்கட்கு எஞ்ஞான்றும் நன்றி மறவாக்கடப்பாடுடையேனாவேன்.


முருக வழிபாடு.
உலகத்தில் மன்பதை மரபினர் முதல்வர் தோன்றியவிடம் குறிஞ்சி நிலமென்பது ஆராய்ச்சியாளர் கண்ட துணிபு. கரந்தைத் திணையின் துறைகளுளொன்றாய குடி நிலையென்பதற்கு எடுத்துக்காட்டிய,

"பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி."

எனும் புறப்பொருள் வெண்பாமாலையின் அரிய பழஞ்செய்யுளும் இப்புதியவாராய்ச்சித் துணிபினை முன்னரே கூறியிருத்தல் வரலாற்றாராய்ச்சியாளர்க்குப் பெருவியப்புப் பயக்கும். பண்டொருபொழுது மக்களறிவு இத்துணை வளர்ச்சியடையாத ஞான்று 'பேராழி யுலகனைத்தும் பிறந்தகலி யிருணீங்க, வோராழிதனை நடத்தும் ஒண் சுடர்' தவறுதலின்றி நாடோறும் தோன்றிப் பயனளித்து வருதலால் அதன் இன்றியமையாமையை யுணர்ந்த மாந்தர் பலரும் அதனையே கடவுளாக ஒருங்கு போற்றுவாராயினர். அறிவு முதிரமுதிர, அஞ்ஞாயிற்றினை நம்மனோர் உடம்பு போலவும் கல் முதலியன போலவும் ஓர் உயிரற்ற பொருளேயாமெனக் கண்டு அதனை யியக்குதற்கு வேறொன்றன் ஆற்றல் இருத்தல் வேண்டுமென ஆராய்ந்து அவ்வாற்றலின் இயல்பும் அவ்வாற்றலுடைய தனியல்பும் கண்டுகொண்டனர். ஞாயிற்றினூடாகத் தெரியவந்த அவ்வாற்றலோடு கூடிய உயிர்ப்பொருளாகிய பரசிவத்தின்கட் கழியாவிளமையும் அழியாவனப்பும் காணப்பெற்று மருட்கையெய்தி அவை வாயிலாக அப்பொருள்படும் முருகனெனப் பெயரிட்டுத் தமக்கியன்றவாற்றான் வழிபட்டு வந்தனர். முருகன் என்னுஞ் சொற்கு இளமையழகுடையான் என்பது பொருள். இதனாற் பழந்தமிழ் மக்கள் ஒவ்வொரு பொருளிடத்தும் அழகினை ஊடுருவிப் பார்த்து வந்தனரென்பதும், அவ்வழகின் கவர்ச்சியால் அதனையே கடவுளாகப் போற்றி அவ்வுண்மை நெறியால் தாங்கருதிய பயனும் பெற்றுவந்தனர் என்பதும், தெரியப்படும். இங்ஙனம் ஒவ்வோரியற்கைப் பொருளிடத்தும் வேறுவேறாகப் பரசிவம் காணப்படும் எனும் உண்மையினை.

''இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறி யுங்காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயறாகி ஆகாசமாயட்ட மூர்த்தியாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி
கெரு கலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே''

எனும் திருத்தாண்டகம் புலப்படுத்தியிருத்தல் காண்க. மூத்த பிள்ளை வழிபாடும் முருக வழிபாடும் முறையே சிவவழிபாடும் சிவசத்தி வழிபாடுமாமெனக் கொள்ளப்படும். சிவ சத்தியும் சிவமும் பரசிவத்தின் வேறுவேறு நிலைகளெள்பதனைச் சிவஞான சித்தியார் இரண்டாஞ்சூத்திரத்துட் காண்க,

முருகன் தமிழ் சங்கத்தே வீற்றிருந்து தமிழராய்ந்தமை குறிப்பிடப்படலால், தமிழர்கள் பண்டுதொட்டு வழிபட்டு வந்த தெய்வம் முருகக்கடவுளென்பது பெறப்படும். இன்னும் தமிழ் நூல்கள் பல முருகன் பெருமையை எடுத்துரைத்தலும் அவன் எழுந்தருளியிருத்தற்குரிய ஆறு திருப்படை வீடுகளும் தமிழகத்தின் கண்ணேயே அமைந்து கிடத்தலும், மறுக்க முடியாத பெருஞ்சான்றல்லவோ? மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் கண்ணும் 'சேயோன் மேயமைவரை யுலக' மெனக் குறிஞ்சி நிலத்துக் கடவுளாகக் கூறப்பட்டிருக்குமாயின் முருகக்கடவுள் தமிழர்க்கேயுரிய கடவுளென்பதில் ஐயமுண்டோ? அன்றியும் ஆரியர்க்கு வழக்கமாகாத களவு மணம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டதனாலும் முருகன் தமிழ்க்கடவுளேயாம்.


கதிருகம்.
முருக வழிபாட்டிற்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி தலம் தீர்த்தம் எனுமும்மையானும் புகழ்பெற்றுத் திகழ்வது திருக்கதிரகாமமென்பது. இத்தலத்தின் பெயர்க் காரணவாராய்ச்சி இன்னும் முற்றுப் பெற்றிலது. கதிரகாம என்னுஞ் சொல் கார்த்திகேயகிராம என்பதன் மரூஉ வெனவும், கஜாகம என்பதன் சிதைவெனக் கொண்டு யானைவாழ் கிராமமெனவும், கதிரு கிராம என்பதன் சிதைவெனக்கொண்டு கதிருமரம் (நச்சுமரம்) நிறைந்த கிராமம் (கதிருகொட என்பதுபோல) எனவும் கொள்வர் சிலர். இன்னும் சிலர் இதனைத் தமிழ்ச் சொல்லெனவே கொண்டு கதிர்காம மென்பது கடவுட்டன்மையுடைய ஒளியும் (கதிர் ஒளி) அன்பும் (காமம் - அன்பு) கலந்து விளங்குமிடம் எனவும், ஆறு கதிர்ப் பொறிகளாற் பிறந்த ஆறுமுகன் வள்ளி நாய்ச்சியார்மேற் காதல்கொண்டு மணம் புரிந்த விடமாதலிற், கதிர்காம மாயிற்றெனவுங் கூறுவர். இன்னுஞ்சிலர், 'கதிரங்கருங்காலி' யெனும் பிங்கல நிகண்டுச் சூத்திரத்தையெடுத்துக் காட்டிக், கதிரமரம் (கருங்காலி) நிறைந்த கிராமமாதலின், இப்பெயர்த் தாயிற்றென்பர். கதிரகாமம் என்பது சிங்கள மொழிச்சொல்லின் மரூஉவாய்த் தமிழ்மொழியின்கண் திசைச் சொல்லாய்ப் பிற்காலத்து வழங்கிய வழக்கென்பதே எமது முடிபு. அம்முடிவக்கியையக் கதிரு மரங்களையுடைய ஊரெனப் பெயர்க்காரணம் கோடலே பொருத்தமுடைத்துப்போலத் தோற்றுகின்றது.

பொதுக்கோயில்.
மக்கள் யாவர்க்கும் பொதுவான இறைவனை வழிபடற்குப் பல சமயங்களும் படிகளாக வமைந்திருத்தலையொப்பப், பல சமயத்தவர்களும் வழிபடும் தெய்வத்தன்மை வாய்ந்து விளங்கும் திருத்தலம் திருக்கதிரகாமமாகும்.
புத்த சமயத்தினர் வழிபடல்:- புத்த பகவான் யோகத்தமர்ந்த திருத்தலங்கள் பதினாறனுட் கதிர்காமமும் ஒன்றாகக் கி.மு. 309க்கு முன்பே கருதப்பட்டு வந்தது. அத்தலங்களாவன:- 1 மகியங்கன (ஊவாமாகாணம்) 2 நாக தீபம் 3 களனி 4 ஸ்ரீபாதம் 5 திவாகுவா (சிவனொளி பாதத்திற்கு அண்மையில்) 6 தீகவாபி (மட்டக்களப்பு) 7 முத்தியங்கன (வதுளை ) 8 திஸ்ஸமஹாவிஹார (அம்பாந் தோட்டை) 9 மகாபோதி 10 மிரிசவெற்றிய 11 ரூவான் வெலிசேய 12 தூபாராம் 13 அபயகிரி 14 ஜேதவன (9-14 அ நூதபுரத்தில்) 15 ஸேலசேதிய (மிகிந்தலை) 16 கஜரகம்.

சிங்களவரசருட் பெரும்பாலார் கதிர்காம தெய்யோவையும் (கதிர்காமக் கடவுள்) பத்தினி தெய்யோவையும் (கண்ணகி) வணங்கி வந்தனரென்பது சரித்திர நூல்களால் நன்கு பெறப்படும். சிங்களரின் தலைநகராயிருந்த கண்டியிலும் இத்தெய்வங்கட்குக் கோயில்கள் அமைந்திருத்தல் மேற்கூறிய கொள்கையினை வலியுறுத்தும். கண்டியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் 'பெரஹாரா' (Perahera) எனும் விழாவில் கதிர்காமத் தெய்யோவுக்கு முதன்மை கொடுக்கப்பட்டு வந்தது. இவையாவும் சரித்திரப் பகுதியில் விரிவாக விளக்கப்படும்.

முஸ்லிம் தொடர்பு.
அல்கேதர் (Alkhedar) எனும் முகம்மதிய அடியார் கதிர்காம தலத்தையடைந்து ஞானம் பெற்றுய்ந்தாரென்பதும் சிலகாலம் ஆண்டுத் தொண்டாற்றும் நோக்குடன் தங்கினார் என்பதும் ஐதிகம். இவ்வடியார் சமந்த கூடத்திலும் சிறிதுகாலம் வதிந்தாரென்ப. கதிர்காமத்தில் இன்றும் பெரியாரொருவர் அடங்கிய இடமுமுண்டு. பண்டைக்காலந் தொட்டுக் கதிர்காமத்தில் நடக்கும் திருவிழாக்களில் முகமதியர் விளக்குப்பந்தம் பிடிக்கும் வழக்கமொன்றுண்டெனச் சைமன் காசிச்செட்டியவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது இவ்வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. சமந்த கூடத்திற் காணப்படும் திருவடி ஆதாமின் திருவடியெனக் கொள்வர். இங்ஙனம் சிறந்த திருத்தலங்களில் முகமதியரின் தொடர்பிருத்தல் ஊன்றி நோக்கற்பாற்று.

புராண வரலாறு.
முருகவேள் சூரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கொடு எழுந்தருளியபொழுது, கதிர்காமத்தையடைந்து மாணிக்கக் கங்கையருகிற் பாசறை வகுத்து வீற்றிருந்தாரென்றும் அவ்விடம் ஏமகூடம் எனப்பட்ட தென்றும் பின்னர்ச் சூரபன்மனை வென்று வாகைசூடி மீண்டபொழுது கதிர்காமகிரியில் நவகங்கா தீர்த்தமுண்டாக்கிச் சிந்தாமணியாலயத்தில் தேவர்கள் துதிக்க வீற்றிருந்தாரென்றும் புராணம் கூறுகின்றது. வள்ளி நாச்சியாரைக் கண்டு காதலித்து மணமுடித்த இடம் கதிர்காமமென்பது ஐதிகம். முருகப் பெருமான் முதலில் தெய்வயானை அம்மையாரையும் மணமுடித்துப் பின் திருத்தணி மலைக்கருகினுள்ள வள்ளிமலையில் வள்ளி நாயகியாரை மணம்புரிந்து, பின்னர் இருவரையும் நோக்கித் தாம் விரும்பும் தலம் கதிர்காமமெனக்கூறி அவர்களுடன் கதிர்காமகிரியை அடைந்து சிந்தாமணியாலயத்தில் எந்நாளும் அன்பர்கள் வழிபட்டுய்யுமாறு வீற்றிருக்கிறார் எனத் தக்ஷிண கைலாசபுராணம் கூறும். 'பிள்ளையார் மலை, வீரவாகு மலை, தெய்வயானையம்மை மலை, வள்ளியம்மை மலை ஆகிய இவைகளும் பிற மலைகளுமாகிய இவற்றின் நடுவிலே சோமன், சூரியன், அக்கினி யென்னும் முச்சுடர்களின் சோதி பெற்று உலகுக்கெல்லாம் பேரொளியாய் விளங்குவது கதிரை மலையென்றும், அம்மலைச்சிகர நடுவில் அநேக கோடி சூரியப்பிரகாசம் பொருந்தி விளங்கும் சிந்தாமணி ஆலயத்தில் நவரத்தின மயமான சிங்காதனத்தில் வள்ளி நாயகி தெய்வயானையம்மை சமேதராய் அநேககோடி சூரியப் பிரகாசத்தோடு கதிர்காமகிரீசர் எழுந்தருளியிருக்கின்றாரென்றும் இப்புராணம் கூறும். கதிர்காம நகரச்சிறப்பினையும் இப்புராணம் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகின்றது.

"கதிர்காம நகரம் முக்கோண வடிவமான வீதியையுடையது. அந்நகரத்தின் நடுவிலே பவளத் தூண்கள் நிறுத்திப் பொன்னால் இயற்றி இரத்தினங்கள் இழைத்த திவ்வியமாகிய சோதி மண்டபம் (சுவாமி சந்நிதி) ஒன்றிருக்கின்றது. அம்மண்டபத்தின் நடுவில் இந்திர நீலமணியினாற் செய்து பிரகாசமும் அழகும் பொருந்திய சிங்காசனத்தின் மேலே தெய்வயானையம்மையார் வள்ளியம்மையார் என்னும் இரு சத்திகளோடு ஞானசத்தி வடிவாகிய வேற்படையைத் தாங்கிக் கிருபா சமுத்திரமாகிய கதிர்காமநாதர் விளங்குகிறார். அச்சோதி மண்டபத்தின் எதிரிலே எல்லா இலக்கணமும் வாய்ந்த வள்ளியம்மை மண்டபம் இருக்கின்றது. அதன் அருகிலே மேன்மை பொருந்திய சமாதியோக மண்டபம் ஒன்றிருக்கின்றது. விநாயகருக்கும் பரமசிவனுக்கும் உரிய வேறு வேறு மண்டபங்களும் அங்குள்ளன, வீரவாகு முதலான வீரருக்குரிய மண்டபங்களும் இருக்கின்றன......... கதிர்காம நகரத்தருகிற் புண்ணிய நதியாகிய மாணிக்கக் கங்கை பாய்ந்து கொண் டிருக்கும்.

சரித்திரம்.
சீதா பிராட்டியாரைத்தேடி இலங்கைக்கு வந்த அநுமான் கதிர்காமப் பெருமானை வணங்கிச் சென்றாரென்பது சில சரித்திராசிரியர் கொள்கை. கி.மு 500ம் ஆண்டளவில் விஜயன் இலங்கைத் தீவில் கதிரையாண்டவருக்கு ஒரு கோயிலமைத்தானென யாழ்ப்பாண வைபவமாலை கூறும். சிங்களரின் சரித்திர நூலாகிய 'மகாவம்சம்,' அசோக மன்னனது அருந்தவப்புதல்வி சங்கமித்தை வெள்ளரசுடன் தேவ நம்பியதிஸ்ஸ அரசாண்ட காலத்தில் அநுராதபுரியை யடைந்தபொழுது, இலங்கையரசனுக்குப்பின் கஜரகாமத்துப் பிரபுவையே அடுத்தபடியாகக் குறிப்பிடுகின்றது. இவ்வரசின் கிளையொன்று இப்பிரபுவால் கதிர்காமத்துக்குக் கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் நாட்டப்பட்டதாகவும் அந்நூல் கூறும். இப்பொழுது காணப்படும் வெள்ளரசு இதனடியிற் றோன்றியதெனக் கருதுவர். கி.மு. 300ம் ஆண்டளவில் மகாநாகன் எனும் அரசனாற் கட்டப்பட்ட புத்த விகாரையொன்று இவ்வரசடிக்கு அரைமைல் தூரத்துக்குட்பட விருக்கின்றது.

துட்டகெமுனு எனும் சிங்களவரசன் எல்லாளனெனும் புகழ்பெற்ற தமிழரசனை வெல்லுதற்குரிய ஆற்றலைத் தமக்களிக்க வேண்டுமெனவும் அளிப்பிற் கதிரையாண்ட வர் ஆலயத்தைக் கட்டுவிப்பதாகவும் விரதம் பூண்டு அக்கடவுள் அருள் பெற்றுத் தன் பகைவனை வென்றதால் தான் கூறியவாறே கி.மு. 101ம் ஆண்டளவில் ஆலயத்தைக் கட்டியதாகவும் 'கந்த உபாத' எனுஞ் சிங்கள நூல் கூறுகின்றதெனச் சேர். பொன். அருணாசலம் துரையவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இலங்கை, சோழர் ஆளுகைக்குட்பட்ட பொழுது சிங்கள அரசனாகிய ஐந்தாம் மகிந்தனும் அவன் மனைவிமாரும் சிறைப்படுத்தப்பட்டனர். இங்ஙனம் சிறைப்பட்ட அரசனின் வழித்தோன்றலாய மானவர்மன் எனும் சிறந்த கல்வியாளன் முருகப் பெருமானின் அருள் பெறவேண்டிப் பல்லாண்டுகளாகத் தவஞ்செய்து கண்மலரையும் அர்ச்சித்து ஈற்றில் அவனருளைப்பெற்றுத் தனது சாதியினரை வருத்திய சோழரை இவ்வூரினின்றும் இந்த மானவர்மனின் சந்ததியார் துரத்த முடிந்ததென மகாவம்சம் கூறும்.

பண்டைக் காலந்தொட்டுப் பலபுலவர்களும் அறிஞர்களும் துறவிகளும் இத்தலத்தைத் தரிசித்திருத்தல் வேண்டும். யாப்பருங்கல விருத்தி மேற்கோட் செய்யுளைப் பாடிய புலவரும் இதனைத் தரிசித்திருத்தல் கூடுமெனக் கருதற்கிடமுண்டு. இனி இத்தலத்தைப்பற்றிய பழஞ் செய்யுளொன்று பிரசங்க மாலையின் கணுள்ளது. அதனையும் ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம்.

எட்டைய புரநாகலாபுரம் மணியாச்சி யிரசக்க னூர்கோட் டையூர்
ஏழா யிரம்பண்ணை சந்தையூ ரூற்றுமலை யெழுமலை மருங்கை நல்லூர்
இலகுமன் னார்கோட்டை பாவாலி சிவகிரி யிலக்கைய னூர் முல்லையூ
ரிடையகோட்டைப்பதி நிலைக்கோட்டை தேவாரம் ராமகிரி கன்னிவாடி

தொட்டப்ப னூர்கம்பை காசைவா ராப்பூரு தோகைமலை யழகாபுரி
சுரண்டை தலை வன்கோட்டை பழனியாய்க் குடி சமுத்தூர் விருப்பாச்சிபடமாத்
தூர்கடம் பூர்பெத்த ணன்னூற்று நகர்குளத் தூர்காமனூர் சாப்பிடூர்
தும்பிச்சி நாய்க்கனூர் நத்தமூர்க் காடு சேற் றூர்வெள்ளி குன்ற மலைய

பட்டி வட கரையமைய நாயக்கனூர்கொல்ல பட்டிசக் கந்தி கோலார்
பட்டிமத வானையூர் மேன்மாந்தை ரோசலைப்பட்டி வீ ரமலை சிங்கம்
பட்டிநெற் கட்டுசெவல் நற்பெரிய குளமாத்தி பட்டிகுரு விகுள மதுவார்
பட்டிகரி சற்பட்டி நடுவுக் குறிச்சிகோம் பைகவண் டன்டையூர்

கட்டபொம் மன்னூர்கு மரவாடி கவினிளசைகடுவூர்நல் லுதயப்ப னூர்
கனகொலங் கொண்டானொ டெழுபத்தி ரண்டுடன் கருது மெண்ணேழ் தேசமுங்
கவியருமை யறிபவர்க ளுண்டதினு நின்போற் கவித்திறமி யாவரறிவார்
கனமேவு புனல் சூழும் வயல்நீடு மலைமேவு கதிர்காம வடிவேலனே.

(செந்தமிழில் வெளிவந்த செய்யுள்)
------------------------

பதின்மூன்றாம் நூற்றாண்டிற் புகழேந்திப் புலவர் யாழ்ப்பாண அரசனின் உதவியுடன் இக்கோயிலைத் தரிசித்துள்ளார். இவர், கதிர்காமத்து வேலர்முன் பாம்பை மயில் விடப் பாடியதாக ஒரு செய்யுள் தமிழ்நாவலர் சரிதையிலுண்டு.

"தாயரவை முன் வருத்துஞ் சந்த்ரோ தயந்தனக்குன்
வாயரவை விட்டு விட மாட்டாயோ- தீயரவைச்
சீறு மயிற்பெருமா டென்கதிர்கா மப்பெருமாள்
ஏறு மயிற்பெருமானே!

14-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவரெனக்கருதப்படும் அருணகிரிநாதரும் இத்தலத்தைத் தரிசித்து இருபத்தைந்திற்கு மேற்பட்ட திருப்புகழ்மாலைகள் சாற்றியுள்ளார். கி.பி. 1581-ம் ஆண்டளவில் அரசுபுரிந்த முதலாம் இராசசிங்கனும் சைவசமயத்தைக் கடைப்பிடித் தொழுகியவனாகக் கூறப்படலால், இவனும் இவ்வாலயத் திருப்பணியில் ஈடுபட்டிருத்தல் கூடுமெனச் சிலர் கருதுப. இப்பொழுது காணப்படும் ஆலயம் கி. பி. 1634-ம் ஆண்டளவில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்கனால் கட்டப்பட்டதென்பதே சரித்திராசிரியர் துணிபு.

16-ம் நூற்றாண்டிற் போர்த்துக்கேயர், கதிரைமலையிலுள்ள கோயிலிற் பணமிருக்குமெனக்கருதி, அதனைச் சூறையாடும் நோக்கோடு சென்ற செய்தி, 1640-ம் ஆண்டளவில் இலங்கைக்கு வந்து சிலகாலமிருந்த ‘ரிபேயிரோ' (Rebeiro) எனும் போர்த்துக்கேயன் எழுதிய இலங்கைச் சரித்திரத்திற் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனையும் ஈண்டெடுத்துக்காட்ட விரும்புகின்றாம். ''பழைய யாலா (Yala) அரசிருந்தவிடத்திற்குப் பன்னிரண்டுகட்டைத் தூரத்தில் உள்நாட்டிற், புறச்சமயிகளாற் பெரிதும் போற்றப்படும் கோயிலொன்றுளது. பலவாண்டுகளாகக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளாகிய தங்கம், ஆபரணம், விலையுயர்ந்த கற்கள் முதலியன இங்கு பாதுகாக்கப்படுதலின் ஆயுதம் பூண்ட ஐந்நூறு பேர்கொண்ட படையொன்று காவல் புரிந்துவந்தது. இவற்றைக் கைப்பற்ற வேண்டுமென்னும் பேராசையாலுந்தப்பட்டுப் பன்முறை இவற்றைப்பற்றி உசாவினோம். 1642-ம் ஆண்டின் தொடக்கத்தில், எங்களெல்லோரானும் நன்குமதிக்கப்பட்டவரும், அவ்வூராரின் மொழி, வழக்கம் முதலியவற்றை நன்குணர்ந்தவரும் ஆய காஸ்பார் பிகூராடிகேப் (Gasper Figueira de Cerpe) என்பவரின் தலைமையின் கீழ்ப் பெரும்பாலும் கிறீஸ்தவர்களாயுள்ள 2000 காலாட்படையும் (Lascarins) 150 போர்த்துக்கேயருமாகக் கோயிலை நாடிச்சென்றோம். குறித்த ஆலயமிருக்குமிடத்திற் கண்மையில்வந்து அங்குள்ளானொருவனை விசா ரித்தபொழுது, ஆலயமிருக்குமிடம் தனக்குத் தெரியுமெனவும் மிகவண்மையிலுண்டெனவுங் கூறினான். அவனே எங்கட்கு வழிகாட்டியாகி அப்பகுதியிற் காணப்பட்ட தனிக்காடடர்ந்த மலை வழியாகக் கூட்டிச்சென்றபொழுது சுற்றியலைந்து முன் சென்றவழியையே பன்முறை திரும்பிக்கடக்க நேரிட்டது. ஆலயம் மலையினுச்சியிலுள்ளதென்பது உண்மையாயினும், அதன்கண் எத்தகைய மந்திரவாற்றல் இருக்கின்றதோ அறிகிலேன். என்னை! எங்கட்கு வழிகாட்டிய ஐவருள் முதன் மூவர் பைத்தியம் பிடித்தவர்போல் நடித்தமையால், எங்களையேமாற்றுகிறாரெனக்கருதி அவர்களைக் கொல்ல நேர்ந்தது. கடையிருவரும் அவ்வண்ணமே செய்தமையால் கதிரகோ என்றழைக்கப்படும் அவ்வாலயத்தைக் காணாமலும், எண்ணிய செயலை நிறைவேற்ற முடியாமலும் வந்தவழியே திரும்பவேண்டி நேர்ந்துவிட்டது.

முத்துலிங்கசுவாமி - கலியாணமடம்.
கி. பி. 1600-ம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து வந்த அடியார்கள் பலரைக் கண்டியரசனுக்குதவி புரியவந்த படையென ஐயுற்ற போர்த்துக்கேய அரசினர், யாழ்ப்பா ணத்திலிருந்த அதிகாரியாகிய எதிர்மன்னசிங்க பரராசசேகரன் மூலம் முந்நூறு பேர்களைக் கதிர்காமத்துக்குச் செல்ல விடாது தடுத்துத் திருப்பியனுப்பினர். அந்நாட்களில் ஒரு சிலரே கதிர்காமயாத்திரை செய்யத் துணிந்தனர். அங்ஙனம் துணிந்தவர்களுள் காஷ்மீரத்திலிருந்து வந்த கலியாணகிரி அல்லது கலியாணநாதர் எனும் அந்தணருமொருவர். இவர், வடதேயத்தலிருந்து வந்து மிக்ககாலமாகக் கதிரை மலையில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கந்தசுவாமியை அம்மலையினின்றும் பெயர்த்துத் தமதூருக்குக் கூட்டிச் செல்லவேண்டுமென்னும் நோக்கொடு விரைந்து சென்றார். சென்ற கந்தசுவாமியைக் கண்ணாரக் காணுங்கருத்தொடு பன்னீராண்டு கடுந்தவமுஞற்றியபொழுது ஒரு வேட்டுவச் சிறுவனும் சிறுமியும் இவ்வடியாருக்குத் தொண்டாற்றி வந்தார்கள். தவத்தாற் களைத்து ஞானியார் ஒரு நாட்கண் அயர்ந்து விட, வேட்டுவச்சிறுவன் இவரைத் தட்டி விழிக்கச்செய்தான். பலவாண்டுகட்குப்பின் வந்துற்ற நித்திரைக்குப் பங்கம் விளைந்ததால் ஞானியார் சீற்றங்கொண்டு சிறுவனை யேச, அவனும் ஏதோ சாட்டுச் சொல்லி முணுமுணுத்துக்கொண்டு ஓடவாரம்பித்தான். சிறுமியும் பின் தொடர்ந்தாள். கலியாணகிரியும் அவர்களைப் பிடிக்கும் நோக்குடன் விரைந்து பின்தொடர, அச்சிறுவர் இருவரும் மாணிக்கக்கங்கையின் ஆற்றிடைக்குறையில் மறைந்து கந்த சுவாமியும் வள்ளிநாயகியுமாகக் காட்சியளித்தனர். இக்காட்சியைக்கண்ட அடியார் உரோமஞ்சிலிர்ப்ப உரை தடுமாறி அடியற்ற மரம்போல் எட்டுறுப்புந்தோய நிலத்தில் வீழ்ந்து தொழுதார். தொழுதவடியார்க்கு ஆறுதலையளிக்க விரும்பிய ஆறுமுகவேலவர் 'நின்குறை யாதென வினவ' அடியாரும் தமதுள்ளக் கிடக்கையினை வெளியிட்டார். இதனைக் கேள்வியுற்ற வள்ளிநாயகியார் தமது மணாளனைப் பிரித்துக் கூட்டிச்செல்லல் தகுதியன்றாமாறும் மாங்கலியப் பிச்சையளிக்குமாறும் பரிவுடன் கேட்டனர். ஞானியாரும் மறாது இயைந்து ஆண்டே தாமும் தமது வாணாளை இறைவன் பணியிற் கழிக்கத் தீர்மானித்தார். அன்றியும் கோயிலில் அமைத்து அடியார்கள் வணங்கும் பொருட்டுப் பொற்றகட்டில் எந்திரமொன்று கீறி முருகவேட்குரிய மந்திரவெழுத்துக்களை அதன்கணமைத்து உருவேற்றிப் பெட்டியொன்றில் வைத்தார். இப்பெட்டியே விழாக்காலங்களில் யானை மேலேற்றி உலாப்போவது. இங்ஙனம் முருகன் அருள் பெற்ற அடியாரே அக்காலத்திருந்த அரசனின் உதவியொடு கோயிலைத் திருத்தியமைத்தார். இவர் ஒடுக்கமடைந்தபொழுது இவரது திருமேனி முத்துமயமான லிங்கவடிவாயிற் றாதலின் முத்துலிங்கசாமியென இப்பொழுது மக்கள் வணங்குகின்றனர். இவரிருந்த இடம் கலியாண மடமென வழங்கப்படுகின்றது.

முதலியார் இராசநாயகம் அவர்கள் இச்சரித்திரத்தைச் சிறிது மாறுபடக் கூறுகின்றனரெனினும், அம்மாறுபாடு மிகப் பொருத்தமுடைத்தாகக் காணப்படுதலின் ஈண்டுத் தருகின்றாம்.
கலியாண நாதர் கந்தசுவாமியைப் பன்னிரண்டு வருடம் பூசித்தும் காண முடியாமையாற், பொற்றகடொன்றில் எந்திரம் கீறி உருவேற்றிப் பெட்டியிலடைத்து முருகவேளை இந்தியாவுக்குக் கொண்டுசெல்ல ஆயத்தஞ்செய்தார். அவர் வெளியே சென்ற சமயம் பார்த்து, அவருக்கு வேலை செய்து கொண்டிருந்த வேட்டுவச்சிறுமி, அப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்கு நேராக ஓடி உள்ளே நுழைந்து மறைந்தனள். கலியாணநாதர் அவளைத்தொடர்ந்து கோயிலுக்குச் சென்றதும், வள்ளி நாச்சியாரும் மணாளனும் காட்சியளித்தனர். இதற்குப் பின்னர் நிகழ்ந்தனவாகச் சேர். பொன். அருணாசலம் அவர்கள் குறிப்பிட்டனவும் முதலியார் அவர்கள் குறிப்பிட்டனவும் ஒத்திருக்கின்றன.

17-ம் நூற்றாண்டில் இலங்கையில் இருபதாண்டுவரை சிறைப்பட்டிருந்த ரொபேட் நொக்ஸ் (Robert Knox) எனும் ஆங்கிலேயன் (1681) எழுதிய 'இலங்கைச் சரித்திரத் தொடர்பு' (Historical Relations of Ceylon) எனும் நூலிற் கதிர்காமத்தைப்பற்றிய குறிப்புக்கள் சிலவள. அவையிற்றை ஈண்டுக்காண்க.

"நான் கேள்விப்பட்டவரையில், இலங்கையின் கிழக்குக்கரை நிலப்பாகம் மலைகளாலும் கப்பல் செல்ல வசதிக்குறைவான கடலாலும் சூழப்பட்டிருக்கின்றது; சுகமுடைய இடமுமன்று. இதற்குக்காரணம் அண்மையிலிருக்கிற பட்டினத்திற் கோயில்கொண் டெழுந்தருளியிருக்கும் ‘கொட்டாகன்' எனும் தெய்வத்தின் ஆற்றல் என்பர். உப்பு அள்ளச்செல்லும் யாவரும் இத்தெய்வத்திற்குக் காணிக்கையிட்டே செல்லவேண்டுமாம். போர்த்துக்கேயருக்கோ அல்லது ஒல்லந்தருக்கோ, தங்கள் நாட்டு மன்னவனுக்கு எதிராகத் துணைசெய்த இராசத்துரோகிகளாய சிங்களர்க்கும் இத்தெய்வத்தின் பெயரும் வல்லமையும் பெருந்திகிலையுண் டாக்கிவிடுகின்றன. அவ்வழியாற் படையெடுத்துப்போக அவர்கள், துணை தானும் செய்யமாட்டார்கள்.''

நொக்ஸினுடைய காலத்திற் கண்டிப்பெரஹராவிற் புத்தர் பற்கள் சேர்க்கப்படவில்லையெனவும் அவ்விழாவில் அலுத்நுவரை தெய்யோவும் (விஷ்ணு), கொட்டாகன் தெய்யோவும் (கதிர்காமக்கடவுள்), பத்தினி தெய்யோவும் (கண்ணகி) திருவுலா வந்தன எனவும் அவ்வறிஞர் குறிப்பிட்டிருத்தல் ஈண்டு நினைவு கூர்தற்பாற்று. பத்தினி வழிபாடு, முதலாங் கயவாகுகாலத்தில் (கி. பி. 145) இலங்கையிற் பெரிதும் பரவிற்றென்பது பெரும்பாலார் கொள்கை. இவ்வேந்தன் பெயரே சிலப்பதிகாரத்தில், கடல் சூழிலங்கைக் கயவாகுவென்பான்' என உரைபெறு கட்டுரைக்கண்ணும், 'கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தனும்' என வரந்தருகாதைக் கண்ணும் கூறப்பட்டுளதென்பது இக்கொள்கையாளர்தம் துணிபு.

பாலசுந்தரி.
கண்டியில் அரசாண்ட கடையரசனாகிய ஸ்ரீவிக்கிரமராசசிங்கன் காலத்தில் இந்தியாவின் வடபாகத்திலுள்ள அரசனொருவன் மக்கட்பேறின்மையால் இத்தலத்தைத் தரிசித்துத் தனக்குப் பிள்ளைப்பேறுண்டாகுமாயின், மூத்த பிள்ளையைக் கதிர்காமவேலருக்குத் தொண்டாற்ற விடுவேனென்ற விரதம் பூண்டு சென்றான். பிள்ளை பிறந்ததும் அதன் அழகு காரணமாகப் 'பாலசுந்தரி' யெனப்பெயரிட்டுத் தான் முன்பு செய்த விரதத்தை மறந்திருந்தான். அதனை நினைவூட்டற்குரிய செயல்கள் பல நிகழ்ந்தன. உடனே தனது பிள்ளையைக் கொணர்ந்து பல தோழியருடன் கதிர்காமத்தில் விட்டுச்சென்றான். அரசிளங்குமாரியும் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுத் தனது காலத்தை இறைவன் பணியிற் போக்கிவந்தாள். இத்தலத்திற்கு வழிபட வந்த கண்டியரசன் இவளைக்கண்டு காமுற்று அரண்மனைக்கு மீண்டதும் மணஞ்செய்யும் நோக்குடன் பல பரிசில்கள் கொடுத்தனுப்பினன். அவையிற்றை இவள் பொருட்படுத்தாது திருப்பியனுப்பினள். இவளை எங்ஙனமாயினும் ஒருப்படச்செய்தல் வேண்டுமெனக்கருதிய அரசன், அரண்மனைக்கு இவளை அழைத்து வரும்படி தனது படைவீரரை யனுப்பினான். என் செய்வாள் பாவம்! திக்கற்றவர்க்குத் தெய்வமன்றோ துணை! அடியாரிடத்து அஞ்சுமுகந் தோன்றினால் ஆறுமுகம் தோன்றாதிருக்குமா? இங்ஙனம் கட்டளையிட்ட அரசனையே இவளுடைய பழி சூழ்ந்தமையால் ஆங்கிலவரசினர் சிறைப்படுத்தினர். இங்ஙனம் முருகன் திருவருளாற் றப்பிய அரசகுமாரி கிழப்பருவம் வரையுமிருந்து தொண்டாற்றி கி. பி. 1876-ம் ஆண்டளவில் இறைவன் திருவடி நீழலையடைந்தனள். இவ்வரலாற்றை இரண்டாம் இராசசிங்கன் மேலேற்றிக் கூறுவாருமுளர்.

ஜயசிங்ககிரி சுவாமி.
கண்டியரசன் சிறைப்பட்டபின்பு, 1815ல் கூட்டிய 'கண்டிச் சமாதான சங்கத்'தில் அளித்த வாய்மையின்படி, அதிகாரமும் உரிமையுமிழந்து வருந்திய அதிகாரிகளைத் துணையாகக்கொண்டு 1817-ம் ஆண்டு, கண்டி மாகாணங்களிற் பெருங்கலகமொன்று உண்டாயிற்று. இக்கலகம் பெருவன்கண்மையாகவே யடக்கப்பட்டது. ஊவா மாகாணம் இத்தகைய நிலைமையினின்றும் மீள நெடுங்காலஞ்செல்ல நேர்ந்தது. இக்கலகம் ஒழிந்த காலத்திற்றான் தேசாதிபதி பிரௌவுன்றிக் அவர்கள், வைத்தியத் தலைவர் டாக்டர் டேவி அவர்களுடன், கதிர்காமத்தைக் கண்ணுற்றார்கள். அப்பொழுது அவர்களை அங்கு வரவேற்றவர் ஜயசிங்ககிரி சுவாமிகளாகும். இவ்வடியாரைக் குறித்தும் கலியாண மடத் தைக் குறித்தும், 1816 முதல்-20ம் ஆண்டுவரை, படைத் தலைவராயும் மருத்துவராயுமிருந்த டக்டர் டேவி அவர்கள் 'இலங்கை வரலாறுகள்' எனும் நூலிற் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்பகுதியை மொழிபெயர்த்து ஈண்டுத் தருகின்றோம். "மிக மதிக்கப்படுகின்ற கல்யாண மடம் இன்றும் கதிர்காமத்தில் ஒருபுதுமைப் பொருளாகக் காணப்படும். அது, காலற்ற சாய்வு நாற்காலியொப்ப, உயர்ந்த பக்கங்களையும் பின் புறத்தையுமுடையதாய் ஒருமேடை மீது களிமண்ணாலான பீடமாகும். அது புலித்தோல்களால் மூடப்பட்டுளது. ஆலய வழிபாட்டிற்குரிய கருவிகள் அதன்கணுள. அதனருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. இஃது ஒரு மண்டபத்தின் நடுவண் அமைந்துளது. இம்மண்டபம் இங்குள்ள அந்தணரின் இருப்பிடம். அப்பிராமணர், கலியாண மடமானது முதற் குருவாகிய கல்யாண நாதருக்கே யுரியதென்றும், அக்கலியாண நாகர் பத்திமேலீட் டினாற் சாதற்றுயரையனுபவியாது முத்தியடைந்தபொழுது அப்பீடத்தைத் தமக்குப்பின் தொண்டாற்ற வரும் குரு பரம்பரைக்குத் தூய்மையான ஆட்சியாக விட்டுச்சென்றன ரென்றும், அவருடைய ஆசாரிய பரம்பரையில் வந்தோர், இப்பீடத்தின்மீது கிடந்தே இவ்வுலகவாழ்வை ஒருவவேண்டுமென்றும் கூறினர். இங்ஙனம் கூறியவர், தாமும் அவர்களைப்போலவே அதன் மீதிருந்தே உயிர் துறக்கும் பெரும் பேற்றினை மிகவண்மையிற் பெறும் ஆவலுடன் நம்பியிருக்கின்றார். இதனை வைராக்கியத்துடனும் பயபத்தியுடனும் அவர் கூறியது, அவர் தம்மொழி, வெற்றுரையன்றெனக் காட்டிற்று. உருவும் உறுதி மொழியும் உளத்தில் ஆழ்ந்து பதியும் தகையவாயிருந்தன. ஓவியம் வரைவானொருவன் தன் தொழிலுக்குச் சிறந்தவரென ஆயிரத்திலொருவராகத் தேர்ந்தெடுக்கும்படியான உயர்ந்த மெல்லிய உருவுடையராகக் காணப்பட்டார். அவருடைய தாடி, நீண்டு வெண்மையாயிருந்தது. ஆனால், அவருடைய மெலிந்த யாக்கையில் முகத்திற்கு உயிர்ப்பளிக்கும் அக்கண்கள் இன்னும் ஒளி நிறைந்திருந்தன. அவர் வயோதிக தசையின் மெலிவு தோற்றாது, நிமிர்ந்து நிற்கும் நிலையுடையவராயிருந்தார்."

ஜயசிங்ககிரி சுவாமிக்குப் பின் மடாதிபதியாக விருந்தவர், மங்களகிரி சுவாமியவர்கள். இவ்வடியாரும் 1873ல் இம்மை வாழ்வொருவினர். இவருக்குப்பின் மடாதிபதியாக விருந்தவர், பால்குடிபாபா அவர்களாகும். இவருடைய சரித்திரத்தை இனி நோக்குவாம்.

கெசபுரி சுவாமி அல்லது பால்குடி பாபா.
ஸ்ரீ கெசபுரி சுவாமியவர்கள் ஏறக்குறைய 125 ஆண்டுகட்கு முன் (1820-39?) வட இந்தியாவிற் பிரயாகையிலுள்ள (Alahabad) மடத்திலிருந்து இளமைப்பருவத்திற் கதிர்காமத்தையடைந்தனர். முற்கூறிய மடத்திற் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்பு காட்டுக்கேகிப் பலவாண்டுகளாத் தவம் புரிந்துகொண்டிருந்தார். இங்ஙனமிருக்கும் நாளில், சுரராஜபுரி சுவாமி என்றழைக்கப்படும் ஓரிளந்துறவிகள் கதிர்காமத்தை யடைந்தனர். இவர் திருவும் கல்வியும் கடவுட் பத்தியும் சிறந்த உருவும் உடையவர். இவர் முதலிற் காஷ்மீர் மகாராசாவின் குதிரைப்படைத் தலைவராயிருந்தவர் செல்வ நிலையாமையினை யுணர்ந்து துறவறத்தை நாடும் உள்ளமுடையராதலின், இவருடைய சுற்றமெனும் தொல்பசுக்குழாம் பற்றிப்பிடித்து இல்லறம் நடாத்த வேண்டுமென்று இவரை நெருக்க, இவர் இயையாமை கண்டு, விட்டுச்செல்ல நேரிட்டது. மகாராசா அவர்கட்கும் இதனை அறிவித்து அவர் வாயிலாக இல்லற வாழ்விற் புகும்படி நெருக்கியபொழுது, பெரும்பிறவிப் பௌவத் தடந்திரையாற் பற்றொன்றி எற்றுண்பானொருவன், கனியைநேர் துவர்வாயாரெனுங்காலாற் கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு உய்யுமாறறியாது மயங்குதலை யாமும் பெறுதுமெனக்கருதி, வீட்டினின்றும் புறப்பட்டு இரந்துண்டு இராமேஸ்வரத்தையடைந்தார். இத்தலத்தில் வதியும் நாளில் ஸ்ரீ பாதத்துக்குச் செல்லும்படி கடவுள் ஆணை கிடைத்தது. உடனே அவர் புறப்பட்டு இலங்கைக்கு வந்து சமனொளி மலையினையடைந்தார். ஆண்டுச் சிலநாட்டங்கியதும், கதிர்காமத்திற்குப் போகும்படியும், அங்கே மலைச்சாரலிற் கடுந்தவம் புரியும் அடியாரொருவரைக் காண்பாரென்றும், திருவருள் ஆணையுண்டாயிற்று. சுரராஜபுரி சுவாமிகள் அங்ஙனமேயொழுகி மலையிலிருந்த தவத்தினரைக் கோயிலுக்குக் கொணர்ந்தார். சிலகாலம் முருகப் பெருமானின் கட்டளைப்படி அவர் சோறுண்டாரேனும், தமது உடல் நிலைக்கு ஒவ்வாமை கண்டு, பால்மாத்திரம் உணவாகக் கொண்டார். இதனால் இவரை மடத்திலுள்ளாரும் பிறரும் "பால்குடி பாபா" என வழைத்தனர். இவரொடு சுரராஜபுரி சுவாமியும் மடத்தில் தங்கினர். இங்ஙனமிருந்த பால்குடி பாபா 1898ம் ஆண்டு ஆடித் திங்கள் கொழும்பு நகரத்தில் உயிர் நீத்தார். இவருடைய சீடர்கள் உடம்பினைக் கதிர்காமத் திற்கெடுத்துச் சென்று சமாதி செய்து ஓர் கோயிலுங்கட்டி யுள்ளார்கள். சுரராஜபுரி சுவாமிகளும் இவ்வாண்டிற்றானே கார்த்திகைத் திங்களில் இறைவன் திருவடி நிழலையடைந்தார்.

கதிர்காமத்திலுள்ள எல்லாக் கோயில்களையும் மடத்திலுள்ள சுவாமிகளே பார்த்துவந்தார்கள். அங்குள்ள சிங்களக் கப்புராளைமார் (பூசாரிகள் ) சிறிது சிறிதாகக் கோயில்களின் உரிமையைக் கைப்பற்றினர். பிரௌவுன்றிக் தேசாதிபதியவர்கள் கதிர்காமத்திற்குச் சென்றபொழுது கப்புராளைமாரைக் கோயிற் பூசையினின்றும் விலக்கி ஜயசிங்ககிரி சுவாமியையே பார்க்கும்படி கொடுத்தார். வள்ளிநாயகி கோயில் மட்டும் வேட்டுவக் கப்புராளைமாருக் கிருந்தது. ஆனால் அக்கப்புராளைமார் மீட்டும் கலகம் செய்து பயமுறுத்தி மூலஸ்தான வழிபாட்டிற் பங்கு பற்றத்தொடங்கி முற்றையும் பிடித்துக்கொண்டனர். அவர்கள் கந்தவேளை ‘மச்சினா' (மைத்துனன்) என உரிமை பாராட்டுவது வழக்கம்.

வழிபாட்டு முறை.
ஒரு பற்றுமற்று அருவாய்த்தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருளை வழிபடும் முறையே (கந்தழிவழிபாடு) கதிர்காமத்தில் உண்டென்பது சில ஆராய்ச்சியாளர் துணிபு. கந்தழி வழிபாடெனிற் கோயிலமைத்தல் வேண்டற்பாற்றன்றென ஐயுறற் கிடமுண்டு. வேட்டுவர் கந்தழிவழிபாடாற்றும் நுண்மதியுடையாரோ வென்பதும் ஈண்டாராயற் பாற்று. அனற் பிழம்பு வடிவமே இங்குக் கற்பூர தீபமாக இன்றும் நிலைத்து நிற்கின்றதெனக் கொள்ளற் கிடமுண்டெனினும், துணிந்து கூறமுடியாது.
திருப்புகழ்ப் போக்கினைச் கவனிக்குமிடத்து மாணிக்கத்தாற் செய்த விலை மதித்தற்கரிய திருவருவம் ஒன்றிருந்திருத்தல் கூடுமெனக் கருதற் கிடமுண்டு. அன்றியும் டாக்டர் டேவி அவர்களும் கதிர்காமத்திற்குச் சென்றபொழுது, கதிர்காமத்திலுள்ள திருவுருவம் பெருங் கலகம் நிகழ்ந்த காலத்து மறைக்கப்பட்டு இன்னும் காட்டிற் கிடக்கின்றதெனக் குறிப்பிட்டிருக்கின்றார். இதனாலும் மூலஸ்தானத்தில் விக்கிரகம் ஒன்றிருந்ததென்பதும் அது மிக விலையுயர்ந்த தென்பதும் பெறப்படும்.
இப்பொழுது முருகப்பெருமானின் திருவுருவம் வரைந்த திரைச்சீலையே மூலஸ்தானத்தை மறைத்து நிற்கின்றது. இத் திரைச்சீலை ஒரு பொழுதும் எடுக்கப்படுவ தில்லை. கப்புராளைமார், தம் வாயை மஞ்சட்சீலைத் துண்டினாற்கட்டி அமுதினை உள்ளே காவிச்சென்று வைத்தபின்னர் வெளியே வந்து திரைச்சீலை முன்பாக நின்று ஓங்கார வடிவாகக் கைகளிரண்டையும் கூப்பி வழிபாடியற்றுகின்றனர். திருவிழாக் காலங்களிற் கற்பூரத்தீபம் இருளைப்போக்க, அடியார்களின் 'அரோகரா'வெனும் ஒலி வானத்தைப் பிளப்ப, யானை மீதெழுந்தருளிப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்குக் காட்சியளிப்பது, முன்னர்க் குறிப்பிட்ட எந்திரம் அமைந்த பெட்டியாகும். கதிர்காமத்திற் குச் செல்வோர் அங்கிருக்கும் காலம் வரையிலாயினும் தம் சுற்றத்தவரையும் மறந்து தம்மையும் மறந்து கடவுளிற் பற்றுடையவராகக் காணப்படுகின்றனர்.

வேல்விழா.

'குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவு
மன்றங் கமரரிடர் தீர்த்ததுவு-மின்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவு
மெய்விடா வீரன் கை வேல்.’

‘வீரவே றாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வே டிருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந்
துளைத்தவே லுண்டே துணை.'

முருகக் கடவுள் சூரபன்மனைக் கொல்லச் செல்லுமுன்னர்த் தமது வேலாயுதத்திற்குப் பூசை நிகழ்த்தினாரெனவும் இதனான் வேலின் சிறப்பு, கூறி முடிக்கும் அளவிற்றன்றெனவுங் கூறுவர். சில கோயில்களில் வேலாயுதத்தையே வழிபடுகின்றனர்.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் அளப்பில்லா அடியார்கள் கதிர்காம வேலவரைத் தரிசித்து அவனருள் பெற்றுச் செல்வது வழக்கம். சில தொண்டர்கள் வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைக் குடத்தில் முகந்து நிறைத்துச் சுமந்து கொண்டுவந்து அபிஷேகம் செய்வர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வழியாகவும் மட்டக்களப்பு வழியாகவும் கால்நடையாகவே பலபுகழ்மாலைகளைப் பாடிக்கொண்டு கூட்டங் கூட்டமாகச் செல்வது வழக்கம். கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுரி, கம்பளை, வதுளை என்னுமிடங்களிலிருந்து ஆண்டுதோறும் ஏழுவேல் கதிர்காமத்திற்கு வருவது வழக்கம். இவற்றுடன் எண்ணிறந்த அடியார்களும் பின்தொடர்ந்து வருவார்கள். நாட்டடுக்கோட்டைச் செட்டியார்கள் கதிரேசன்பால் மிக்கபத்தியுடையவர்களாதலின், இவ்வேல் விழாவில் அதிக ஊக்கமெடுத்துவந்தார்கள். வேலுடன் அதிக நாட்கள் நடப்பதாற் சிலர் இடைவழியில் நிற்க நேர்தலுமுண்டு. சிலகாலங்களில் தொற்றுநோய் பரவி வேற்படையை யெடுத்துச்செல்லும் தொண்டர்கட்குப் பேரிடையூற்றினை யுண்டாக்கிற்று. இத்துணைத் தூரத்திலிருந்து கால்நடையாக வேலெடுத்துச் செல்லும் வழக்கத்தை உடல் நலங்காரணமாகவே அரசாங்கம் தடைசெய்துவிட்டது. இங்ஙனம் தடைசெய்த காலம் கதிர்காமத்திற் பெருங்கலகம் நிகழ்ந்த காலமாய் (1817 1818) இருத்தல் கூடும். அன்றேற் கொள்ளை நோய் பரவிய காலமாயிருத்தல் கூடும். (1858). இதனாற் கொழும்பிற் செட்டியார் தெருவிலுள்ள கதிரேசன் கோயில்வேல், புறப்பட்டுப் புதுக்கதிர்காமம் என்றழைக்கப்படும் பம்பலப்பிட்டிக் கோயிலுக்கு ஆடிமாதத்திற் சென்று திரும்பும் வழக்கமுண்டாயிற்று. சிறிது காலத்தின் பின்னர் வெள்ளவத்தையிலும் ஒரு கோயிலைக்கட்டி இவ்விரு கோயில்களுக்கும் மாறி மாறிச் செல்லும் வழக்கத்தை யுண்டாக்கிக் கொண்டனர். காலியிலுள்ள கதிரேசன் கோயில் வேல், புறப்பட்டு உணுவற்றன எனுமிடத்திற்குச் சென்று திரும்புவது வழக்கம்.

கதிரையாத்திரை
கதிர்காம யாத்திரை செய்வது இக்காலத்தில் அவ்வளவு துன்பமானதொன்றன்று. தொண்டர்களின் வசதிக்காகப் பலவிடங்களில் மடங்கள் அமைத்துள்ளார்கள். கொழும்பில் மருதானையில் ஓர் மடமும், காலிச்சிவன் கோயிற்கருகில் ஓர் மடமும், மாத்தறையிற் பெரியதோர் மடமுமுண்டு இவ்விடங்களிலுள்ள சபைகள், இம்மடங்கட்கு வருவோர்க்கு வேண்டிய வசதிகளை யளிக்கின்றன. கதிர்காமத்திலும் சில தண்ணளிச்சீலமுடையாரின் உதவியால் தங்குதற்கு மடங்களுண்டெனினும், செல்பவர்கள் மழைக்காலங்களில் தங்கி நிற்றற்குப் போதா.
இத்தலத்திற்கு ஆண்டுதோறும் இந்தியாவினின்றும் இத்தீவின் பல பாகங்களினின்றும் வரும் மக்களின் தொகை கூடிக்கொண்டே செல்கின்றதெனின், இத்தலத்தின் மகிமையினை நாயினுங் கடையேனாகிய யான் எடுத்து மொழிதல் எளிதாமோ.

"மாணிக்க நிறைகங்கை யாடியுன் னைப்பணிய
        வந்திடும் பூதலத்தோர்
வாயூமர் பாடவுங் குருடர்கண் பார்த்திடவு
        மலடிகள் பின் மைந்தர் பெறவும்

காணிற்கு மாரவே லாவென்னு மன்பரைக்
        கரடிபுலி யானை சிங்கங்
காலிற் பணிந்தஞ்சி யோடவும் கந்தனே
        கண்கண்ட தெய்வ மெனவே

யாணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினு
        னடியேனை யாண்டு கொண்டெ
னாகத்தில் வந்தபிணி தீர்த்திடவு முன்னிற்கு
        மாறுமுக மெய்த்தெய்வமே

சேணிற் புலோமசை வளர்த்த பெண் பிடிகணவ
        செங்கீரை யாடிய ரூளே
தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேலனே
        செங்கீரை யாடியருளே.''
(சுப்பிரமணிய தலக்கோவைப் பிள்ளைத் தமிழ்.)

கதிர்காம மலைநாத நாமெந்தை தனையேத்து
        கடவுளர்கண் முனிவர் சித்தர்
கந்தருவர் கின்னரர்கள் கருடர் கிம்புருடரொடு
        ககனர் வருமுரகர் முதலாம்

பதினெண் கணத்தடிய வர்க்கெலாந் திருவருள்ப
        ரிந்து பாலித்து நாளும்
பரிவினிற் கதிரைமலை தவிராது வைகினான்
        பரமசுக முலகுபயில
முதிர்விநா யகர்தமலை வீரவா கமருமலை
        மொழிதேவ சேனாமலை
முதுவள்ளி மலையஞ்சு காமமலை செந்தமிழின்
        முனிமலைக ளயலின் முடுகுஞ்

சதிரிலுன் றிருவடியடைந்திடத் தகுவதோ
        சாந்த நாயகி சமேத
சந்த்ரமௌ லீசனே யெந்தொழில் விலாசனே
        சந்த்ரபுர தலவாசனே.
(சந்திர மௌலீசர் சதகமென்னும் ஈழமண்டல சதகம்.)

கொழும்பு, இங்ஙனம்,
வெள்ளவத்தை. குல. சபாநாதன்
18-7-37.
முற்றும்.
------------
ஓம்:
திருச்சிற்றம்பலம்.
கொழும்பு வேத்தியற் றமிழ்ப் பாடச்சுவடிக் கட்டளைப் பெருங்குழுவினுறுப்பாளரும் கொழும்புச் சகிராக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமாகிய, அன்பர், யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டைத் திரு. மு. நல்லதம்பியவர்கள் வழங்கிய சிறப்புப்பாயிரம்.

நேரிசை வெண்பா.

புலவர் பரசிமகிழ் பொன்னம் புலவன்
குலவு தமிழ்க் கொண்டல் குணக்குன்-றுலவுபுகழ்
வந்தகரு ணாலயனவ் வண்கதிர காமற்குத்
தந்தனனொண் பிள்ளைத் தமிழ்.

இன்னிசை வெண்பா.

பிங்கல நூற் கொள்கை பிறழாப்பிள் ளைத்தமிழ்ப்பா
நங்கதிரை யங்கோமா னல்கவருண் மாணுறுத்தான்
பொங்குபொருட் சொற்சுவைகள் பொற்பநலி சைப்புலவன்
பைங்கருணைப் பாண்டியனென் பான்.

சிவனடியாரை வணங்குதல்

நேரிசை வெண்பா.
மறுமைநல மிம்மையென மாற்றொளிகொ ணீற்றர்
நறுமையடிப் பூஞாறு ஞாலம் - வறுமை
யமையாத வானோரு மஞ்சுவரே தீண்ட
நமையாளு நம்பியினு நன்கு.
-----------------

கதிரகாமப் பிள்ளைத்தமிழ்.


செய்யுட் காப்பு
திருமூத்த நாயனார் காப்பு

அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரியவிருத்தம்.

(கலிப்பா)
பூமேவு சிவசெஞ்சு டர்த்தவழு மிளவெயில்பொ
        ரப்பிணிமு றுக்குடைந்து
புள்ளார வாரிப்ப நெகுமுளரி யம்போது
        புய்த்தொரும ருப்பின்மூக்கி
னேமார மோப்பமுற் றெம்முயிர்க் குளனணையி
        கப்பநனி திரைபுடைபெயர்ந்
திழுமெனவ ருட்கடாங் கலுழிசுர வாநிற்ப
        வீர்ம் பரிவு நீர்குடைவுழி

மாமால்வி டைக்களிறு பிடிமாலு மழமுதுவ
        யக்குறுந டைக்குழவிவான்
மதிமுடிக் கவினவோ மோமெனப் பெயர்கூயின்
        மன்றவோ மோமென்றுவந்தி
யாமீயு மிருவினைக் கவளமுண் டுலவுதன்
        யாணரடி மாண நினைதும்
யாபன்னி ரண்டுகைக் கதிர்காம மான்புணரும்
        யானையின் றமிழ்பொலியவே.         (1)

பிள்ளைக்காப்பு.
திருமால் முதலிய முக்கடவுளர் காப்பு.
எண் சீர்க்கழிநெடிலடி யீரிரட்டை யாசிரியவிருத்தம்.

மணி திருவ மறுவியன் மார்பமதி னவிர்வர
        மணமுடைய கோதையும் வைப்புண வொளிர்தலின்
மடமையணி கலமணி நிலமகள்பொ றாமையான்
        வருமொர்துனி புலவியின் மடிதிரை யுடையிடை
வரையவிழு கிடையினண் மழமழென வொழுகுகண்
        மழைவெருவி பொருதுடை மடிமிசை மலைமுலை
மருவுபொழு தடுபடை வறுவியகை நால்கினான்
        மறையிளவ லடிதொடு மாணவ வடிகளை

யணியிதழி வளர்பொலங் காவின்மறை பின்னையை
        யறிதலினை யொழிதர வாவென வெருவர
வரவுறினு மொருமுறை யானுமனை யறமக
        ளஃதறிய வரின்வரு மோவென வயிர்வுற
வறிதுயில்கொ ளறிஞர்தந் நுதனடுவ ணிணைவிழி
        யடைசியென வடைசியெம் மாளுடை யொருகுயி
லவவுமொரு பாலினிற் கட்கடைசெ லக்கருத்
        தமர்களவ கற்புநூ லாசிரிய ரியவுளைத்

துணியவலர் மறைபுண ராரியமென் மாதராள்
        தொடர்பறுவ ளிதுவுமோ? தொன்னிறை யிலளிறை
தொடுகிழமை யுருகலள் கடியதால் வாயினள்
        சொலன்மிகுந ளவடுணைத் தோள்புணை தழுவலன்
றுனியலென வீரடிப் பாற்குறளை மொழிபுநாற்
        றுவரிதழின் வாய்நறாச் சோர்தரத் தமிழ்மொழித்
துணைவியின றம்பொருள் வழுவுதலில் காதலின்
        சுவை நிறையு மின்பமார் தோணுகர் கடவுளைத்

தணியுமணை மனனுழை வாழுமவர் மாஞ்சினைத்
        தளிரடியில் வைகறைத் தாழ்துமெந் தலைகொடு
தகையினின ணங்குமின் கொடியிடையர் புட்கடி
        தழலொழிய வெறிகவண் டழனிகர் குருமணி
தலைமைபுனை யிமையவர் கையுறையொ டும்பராய்த்
        கழையவரு ளிழிதல்போற் றாழ்கதிர் மலைவருந்
தமியமிட ராரிரு ளிரியமிளிர் குமரவே
        டனையினிது காத்தருட் சார்பினைப் பெறுகவே.        (1)
--------------------------
ஏனைக்கடவுளர் பலர் காப்பு.
அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டை யாசிரிய விருத்தம்.

பொன்னியம் புதிய புனல் கொள்கலங் குப்புறிய
        பொள்ளெனக் குறுகுபறவை
பூம்புகார்ப் பொருநற்கொர் செண்டுகொடை பூண்டுலாப்
        புறமுய்த்த காரிவள்ளல்
உன்னிவண் மறைஞாளி யூர்காடு காள்புதல்வ
        னும்பர்வேள் விக்கணுணவெள்
ளும்பலூர்ந் திழிதண்ப ணைக்கிழவன் மாமா
        னுழையினாத் தூணங்கையாள்
மன்னிவாழ் கலைஞாடி மன்னர்முடி தாழ்ப்பிக்கும்
        வாய்மைநாக் கொம்பர் மகடூஉ
மடிகொண்டு மிடியாது வருவிருந் தோம்புமவர்
        மலர்முகனின் வாழ்திருமகள்
கன்னிமா ரெழுவர்முப் பான்மூவ ரிவர்தமைக்
        கருதிவழி பாடுசெய்வாம்
கதிரைக்கு றத்திமாப் பிள்ளையைக் காக்கெனக்
        காலைதொறு மாலைதொறுமே (2)


முழுமுதற்கடவுள் காப்பு.
வேறு
பாண்டியர்வ ளர்த்தமுக் கழகத்த மிழ்த்தொண்டு
        படுசுவைப் பொதியிலடிகள்
பண்ணன் முத லாயுமீ ரெண்டொழிலு முய்த்தொரேழ்
        பாலையாழ் கொளுவிநோன்பு
வேண்டியது றக்கமன் செல்விபா லரமகளிர்
        வேள்புலமை யருள்வனப்பு
விறலென்றி வற்றைப்பு னைந்துசெப் பியதிறமி
        சைந்திசைக் கும்மிசைநயந்
தீண்டியபல் கறையடிக் குழுமெய்ம்ம றந்திளக
        வின்றுறுக லென்றுழுவைமா
னியையத்து யின்றுடல மூரிவிடு கதிர்காம
        வேந்தப்பு ரந்தருளுக
வூண்டிகழு முப்பான்மை யுயிர்தொறருள் வெளியிலின்
        பொளிர்திருக் கூத்துநவிலு
மொன்றிரண் டாயுயிரொ டுலகுமாய் வேறுமா
        யுடனுமா முண்மைமுதலே. (3)
-------------------------------

2. செங்கீரையாடல்.

அறுசீர்க்கழிநெடிலடி யீரிரட்டை யாசிரியவிருத்தம்.

மலையிறையன் வனைபாவை யிணைகணைக் கான் மூட்டு
        வார்ந்திருந் திடைநுடங்க
வள்யாமை முதுகுபுரை புறவடிய கவடுகொள
        வாய்ப்பக்கி டப்பியருகே
மருவுதன் றாய்மணிக் கலனினிள வெந்நீரை
        வார்ப்பவார்ப் பப்பைப்பய
மழமகவு யிர்ப்பெறிய நுதன்மீய கங்கைவிரல்
        வைத்துவழி நீர்தகைந்து

விலைவிஞ்சு பசுமஞ்சள் விழுதினைத் தைவந்து
        மீண்மீள மண்ணிமொக்குள்
வீழ்சுழிக் கொப்பூழி னூதியிமை மிகவூதி
       மெய்ச்செவியி னறலகற்றி
விழிமுனையை யுகிர்நுனியின் விரியப்பி ளந்துமுலை
        மேலாடு துகிலாடையான்
மென்மெலென வுடலொற்றி யீரஞ்சு வற்றிநுதல்
        வெண்பொடிக் காப்பிட்டுவிம்

முலையி றகு வார்நெகிழ வாய்மடுத் தமுதூட்டி
        முகமிணைய முத்தமிட்டு
முன்கையிற் பாராட்டி வாழ்ந்தமைந் துச்சியினை
       மோந்து பள்ளிப்படுப்ப
முதுகுகுனி கடுவனொடு மந்திபார்ப் பைக்கொஞ்சு
        முதுக்கிரை யந்தாள்வரை
முட்குடமு ழாப்பலவி னிழலிளஞ் சேய்துகண்
       முகிழ்விரல் வாய்புகுப்பச்

சிலைமுகிலி னவ்விவுச் சுட்டுவிர லுய்ப்பவரு
        சிறுதூசி வீசிவெகுளுஞ்
செவ்விவயி றுங்குழிய வாய்கூம்ப வழுமெழில்
        சிவனோடு நுகரவளர்நிற்
சிவணுமக வைப்பொறையு யிர்த்துயத் தொழுவரிவர்
       செங்கீரை யாடியருளே
திருவுயர்ப டைத்தலைவ! கவுணியர்கு டிப்புலவ!
        செங்கீரை யாடியருளே (4)


வேறு
தாழைப் பழமுதி ரச்சிதர் வாழைத்
       தாறுவ ழுக்குநெறி
தள்ளவண் முத்துச் சூலுளை வால்வளை
        தட்டுக் கான்றுகலுந்
தணிமாங் கனிதலை யிடறிநி மிர்ப்பச்
       சாறிதழ் வாய்வடியுந்
தண்பொழி லோவப் பைம்மணி மனைதுவர்
       சான்மணி சுடரெறியும்
மாழைத் தெருநேர் யாற்றக் கதிர்கா
       மக்கிழ வா! மழவா!
வளவிய வயல்சூழ் வங்கக் கலிங்க
       மன்னன் றவமகளார்
மாண்புநிறப்பச் சிங்கள வேந்தனை
       வன்சிறை செய்ம்மறவா!
வடமன் பன்னீர் யாண்டுந் துயிலான்
       வழிபட வருகுறவா!

பீழைப் படுபிணி தீர்க்கும ருந்தே!
       பெருமித வின்சுவையே!
பேணிய வடியவர் ஞானப் போழல்
       பெற்றுரு கும்பொன்னே!
பிணிமுக வேழவு லாப்போ தருயாழ்
       பிறவா வின்னிசையே!
பெரியார் கதிர்மலை வருவாருணநெய்
       பெய்வெள் ளவிழ்முறுவற்

சீழைப் புட்புன் பிறவிப் பகைமைச்
       சிறுநகை முகிழ்முகிழச்
செங்கைநிலத்தின ழுத்திமு ழந்தாள்
       செவ்வன்ம டித்தொன்று
சீர்ப்பநி மிர்த்துத் திருமுக மசையச்
       செங்கோ செங்கீரை
திருவின் றிருமகள் வள்ளிம ணாளா!
       செங்கோ செங்கீரை (5)


அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்.

எளியாரை யுணர்தற்கு மவ்வவர்க் குதவற்கு
       மெட்டுப்பத் துச்சாலுமோ
வென்றுபனி ரண்டுநீள் கைவிழிப டைத்துடைமை
       யெத்துணைக் கடவுளரினு

மளியானு மொப்புயர்வி லாயாத லுணரவரு
       மைதுசான் றென்பவாலோ
வல்லாத பிறர்போல்வி னைத்தொடர்பி லாய்நினக்
       கழிவில்கவி னிளமையொக்கும்

விளியாத விருண்மைநிற் றொடுதல்வற் றன்றாதல்
       வேலேகு றித்துரைக்கும்
வேறுமீ ரியல்பிரும டந்தைமார் கூங்கோழி
       மீளிமயின் மறையருளிது

தெளியாத வேழையர வி லங்கல்ல ரோவைய!
       செங்கீரை யாடியருளே
தேனருவி யுவகைவிழி நீரூறு கதிர்மலைச்
       செங்கீரை யாடியருளே (6)
-----------------------------

3. மொழிபயிலல்.

அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்.

இகலுமிணை யங்கயற் கண்ணிமக வாய்த்தமிழ்
        யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
       யற்றின்ப மார்வெள்ளமே!

தொகனனவு கனவுதுயின் மீத்துயின் மீமிசைத்
        துயிலிருண்மை மருண்மைதூய்மை
தொடராது பேசாது வாளாதி ருந்தநீ
        தொன்றுவெண் குன்றினங்கட்

பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
        பாலின்வெள் ளைக்குநடுவட்
படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
        பகர்மொழிப கர்ந்தவாற்றை

யகலிடத் தடியேம வாயிரப் பேங்கதிரை
        யண்ணலே வாய்மலர்கவே
வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
       கத்தலர வாய்மலர்கவே (7)


வேறு
குறிய மதத்த ரறமெம்பாற்
       கூறக் கேட்ட செவிப்புண்ணுங்
கொடாதா ரிரப்போர்க் கடிந்துரைத்த
        கொடுஞ்சொற் கேட்ட செவிப்புண்ணுஞ்

சிறிய குடியிற் பிறந்தபழிச்
        செல்வர் வறிய புலவர்தமைச்
செருக்கி யிழிப்பக் கேட்டிருந்த
       தீயூழ் படைத்த செவிப்புண்ணும்

நறிய வழிழ்திற் றமிழ்கேடு
       நண்ணப் புறஞ்சொல் வழக்காறு
நாளுங் கலந்து வரல்கேட்டு
       நனிசீ வடியுஞ் செவிப்புண்ணு

மறிய வொழியக் கதிரமலை
       யழகே! யமிழ்தம் பொழிகவே
யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
       லமிழ்தம் பொழிக பொழிகவே (8)


வேறு

மலரவ னான்மறை யோதக் கல்லான்
       மரநிழ லமிர்தென்னன்
வாய்மையை நால்வர்க் கோதவு ரைக்கும்
        மன்பே ராசிரிய!
புலரியி னிமையோர் தொழுகதிர் காமா!
       புகலுரை நிற்குரையேம்
பொலிசுவை யொழுகுதல் பருகிய கேட்பேம்
       புகழூ மைப்பிள்ளா
யுலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
       வுரலிடை யாப்புண்டோ
னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
       வுலர்மர முங்குழைய
வலரன செந்நா வரசைய ழைத்தா
       யஃதெங் ஙனமருளே
யண்பே யார்தமை நுந்தைய ழைத்தா
       னஃதெங் ஙனமருளே (9)
-------------------------

4. உணவூட்டல்.

வேறு

எறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
        ளேறே!மு ழைக்குள்யாளி
யினியரின் னடைகண்டு வெள்கியுளை யக்கதிரை
        யேர்வடவை யாற்றின்றுறை
தோறும்விளை யாட்டயர்ந் தாங்காங்கு நீராடு
        தொண்டர்க்க டைக்கணிக்குஞ்
சோனையருண் மாரியே! தித்தித்த தேம்பாகு
        தோய்ந்தகட் டிக்கரும்பே!
கீறு முலை யமுதூறல் பருகுகோ மானின்று
        கிளர்கொங்கை யொப்பாகுபொற்
கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
        கெழுநெய்ய ளாய்ச்சமைத்த
சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
        சூழ்மருக! வுண்டருள்கவே
சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
        சோறமுது முண்டருள்கவே         (10)
-
வேறு
ஆழி கடைந்து குடம்நிறைத்த
        வமுது மிதற்கு நிகரல்ல
வந்தண் வேள்வி யவிசொரியு
        மதுவு மிதற்கு நிகரல்ல
வாழி திருந்து செந்தமிழின்
        வழக்கு மிதற்கு நிகரல்ல
வள்ளி யூடிக் குழைந்துசொலும்
        வழக்கே யிதற்கு நிகராகும்
காழி ஞானப் பால்குழைத்த
        கலையு மிதற்கு நிகராகும்
கதிர காமத் தன்பர்பலர்
        கனிவுங் குழைத்த திதுவாகும்
கோழி கூவுங் கொடியசைக்குங்
        கோவே சிறிதே யுண்டருளே
குறித்த வருண்மெய் கொழுத்துயரக்
        கோவே சிறிதே யுண்டருளே (11)


வேறு
ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
        னாடியி ளைப்பதுபோ
லாரிய முனிவர ருந்தக்,கண்ணன
        ருந்திய முறையேபோற்
காடுக றங்கக் கதிர்மலை கூவக்
        கன்னியர் கூவுதல்போற்
கதிர்வடி வேன்முரு கா!வரு ளாகிய
        கழிபசி மீதூர்வாய்
கூடுவி னைத்துப் பாருயி ராரக்
        குற்றடி யார்நினது
கொண்டா டுங்குண னாரப் பயிருங்
        கொண்டன் மழையார
வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
        வாய்ச்சோ றார்குகவே
வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
        வாய்ச்சோ றார்குகவே (12)
------------------

5. தாலாட்டல்

வேறு
நீரின் முளைத்த மாவீழ
        நெருப்பின் முளைத்தின் னருடழைத்து
நினைவு பூத்துப் புலங்காய்த்து
        நிறையப் பழுத்த கற்பகமே
நேருன் னடித்த ணிழலன்றி
        நிற்பார் வெப்பந் தணிவாரோ!
நெடுநாள் வானோர் வாழ்வாரோ?
        நீதா னாரோ? யாமாரோ?
வோரின் னெனச்சொல் வடித்துணர்வா
        ருலவாப் பெருமை யாராரோ?
வுணர்வார் கூற்றங் கொள்ளுங்கா
        லுற்றார் பெற்றா ராராரோ?
காரின் மலருங் கதிர்காமக்
        கடம்பா! தாலோ தாலேலோ
கலைமான் பாடக் கண்வளராய்
        கனியே! தாலோ தாலேலோ (13)


வேறு
சேரன் சோழன் பாண்டியன்முச்
        சீர்மைத் தமிழக முடிமன்னர்
செங்கோற் கொற்றஞ் செலவரிசை
        சிறந்த கட்டிலி லமர்ந்தஞான்
றீரந் தோய்ந்த நெஞ்சம்போ
        லிழைத்த கோட்டமெ ழுந்தருள்பே
ரின்பம ணித்திரு வருண்மேனி
        யிற்றைக் கெவனோ மறையமறச்
சூரன் கோட்டை சிதையவெழுந்
        தோன்றாப் பிழம்பு வெளிநிற்பத்
தொல்குடி மரபின் றலையளிபோற்
        றோன்ற வொழுகிம ணிக்கங்கை
வாரங் கொண்டும ணிப்பூத்தூய்
        வாழ்த்துங் கழலோய் தாலேலோ
வந்தெந் தொழும்பு கொள்காம
        மணியே தாலோ தாலேலோ (14)


வேறு
உணர்நின் றந்தைகொ டாதொழிந்த
        வொருமாம் பழத்திற் கழுதாயோ?
வுயிர்கள் பிறந்து படும்பாட்டிற்
        குருகிப் பொருமி யழுதாயோ?
புணருங் காழிப் பெருந்தகைதான்
        புடைத்தான் கொல்லோ வேனழுதாய்?
புலவர் மகளிர் கவுட்கிள்ளப்
        பொறாதோ? பின்னை யேனழுதாய்?
வணர்மென் குழலி முலைச்சாய்ந்து
        மார்பம் பாய லாச்செங்கண்
வளர்வாய் தவத்த ரெய்த்தலச
        வாரா யன்பர்கசிந்து மலர்
கொணருங் கதிர மலைவந்த
        குழகா! தாலோ தாலேலோ
கொடும்போ ரசைவு தவிர்துயிலைக்
        கொள்ளாய் தாலோ தாலேலோ (15)
-----------------------------

6. சப்பாணிகொட்டல்

வேறு
பொய்யாமொ ழிக்குவழு வுண்டென்ற முட்டைப்பு
        கழ்ச்சிவேட் டுவ!புலவனைப்
புகழ்புனைந் தினிதுபா டியநல்லி சைப்புலவ!
        புலவராற் றுப்படைப்பாட்
டெய்யாத பூதத்தை யுயிருண்ட வேற்குரிசி
        லிறையனார் களவியற்க
ணெள்ளரும் பொருள்காண வொண்ணுதற் றலைவிபுண
        ரின்குறிஞ் சித்தலைவநிற்
சையார வழிபடக் காதலர் காதலியர்
        கையேந்து மிளநீரெனக்
கச்சின்முலை பற்றுங்க திர்க்காட வேளேக
        ருக்கொண்டு நின்னைப்பெறக்
தையான திங்கட்ட வங்கிடந் தாட்கம்ம!
        சப்பாணி கொட்டியருளே
தாரகன் சூரனிவர் சூழ்ச்சிநன் றென்றுநகு
        சப்பாணி கொட்டியருளே (16)


எண்சீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்.
நச்சர வும்புலியும் பச்சிலை நச்சியிட
        நவையறு மாடலதின் சுவைநுகர் வித்துணர்வு
நல்குத லானும்வெளி புல்குத லானும்விழி
        நாடுந் தண்டில்லங் காடுங் காமமதோ?
விச்சிய தின்றிவிளை விப்பவ னுந்நீயோ?
        வென்றொளிர் பூமிசையே கன்றுவ திருவடியோ?
விட்புல வாணர்க்கு முட்புல னாகாத
        வெளியோ? நின்னுடல மளியோ? நின்னியல்பே
யிச்செய னீ தாமே யாயின வர்க்கன்றி
        யாதுந் தெரியாதென் றோதும் மறைமுடிபே
யெம்மிரு கண்மணியே மன்னுயிர் தம்முயிரே
        யிளஞா யிற்றினொளி யெனமா மயிலிவர்வோய்
துச்சிலி ருக்குமுயிர்ப் புக்கில ளிப்பலெனத்
        தொட்டவ ளைக்கையாற் கொட்டுக சப்பாணி
சொற்பொரு ளல்லாத மெய்ப்பொருண் முனிவர்க்குச்
        சுட்டிய பொற்கையாற் கொட்டுக சப்பாணி (17)

-
அறுசீர்க்கழிநெடிலடி யீரிரட்டை யாசிரியவிருத்தம்.

சேரியிற் கிள்ளைமொழி சூதினைவெ குண்டுநிமிர்
        திருஞெமிரு மாமைமுலையாற்
றீப்பறப் பப்பொருத புண்கூர்த லிற்கலவி
        செய்யிகலி டைந்தயருநீர்
செழுநொச்சி சூடியெயில் காத்தசூ ரினைவஞ்சி
        திருமுடிவ னைந்துசென்று
திகழுழிஞை சூடிமுற் றித்தும்பை சூடிச்செ
        ருச்செய்துயிர் பருகிவென்றி
யீரியற் றுணர்வாகை சூடிப்பு லால்கமழு
        மெறிகாழ்க்க ரந்தையிணர்வே
லெழிலுறக் கைக்கொள்ளு மள்ளரா மாறென்னை?
        யிமையோரு முனிவோருமீண்
டிழிதரவு மீனோரு மேனுலகி னேறவுமி
        யைந்தகண் ணேணியென்னு
மின்கதிர காமத்தி ருக்குன்ற வண்சார
        லெங்கள்பெரு மானடிகளே!
வாரியிற் புனல்வற்று மூழிமுகின் மொள்ளுறும
        ணிக்கங்கை யாறுகுடையும்
வான்மகளிர் தம்மாகம் வெதுவெதென விஃதெவன்?
        மடவிர்!வெந் நீர்யாறுகொல்?
மதனைப்பொ டித்தநுத லழல்வந்த காளையிசை
        வைகனா ணீராடலின்
மாறியதுகொன்? மொழிமி னெனநல்கி யவர்கொங்கை
        வருடுமிள மென்கையிணையக்
கூரியற் குறுநகைவெண் முத்தந்து கிர்ப்பேழை
        கொட்டமர முங்கசிந்து
குழுமுதேன் கொட்டநும் மளிதுளும் பிப்புறங்
        கொட்டவிழி யிமைகொட்டயாம்
கொடுமையைக் களைகொட்ட வுமையுநாக் கொட்டநீர்
        கொட்டுதிர் சப்பாணியே
குன்றவர்ம கிழ்ந்துபூக் கொட்டிக்கை கொட்டநீர்
        கொட்டுதிர் சப்பாணியே (18)
----------------------------

7. முத்தந்தருதல்.

அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டை யாசிரியவிருத்தம்.

முன்னையொரு பொழுதுதமி ழகமுடைய தாய்ப்பின்பு
        முனையாரி யர்க்குறையுளாய்
முனிவர்வேட் கும்வெண்ப னித்திரட் குவையநெடு
        மொழிவான ளாவுவெற்பி
னன்னையன் பென்னக்கு ளிர்ச்சிபெரு குந்நாண
        லஞ்சுனைப் பொய்கைபூப்ப
வான்மீன் றிதலைநகி லடையவுஞெ முங்குறவ
        ணைப்பச்சொ ரிந்தமுத்தம்
பின்னையிம யக்கரும் பூங்கோதை யள்ளிப்பி
        றங்கன்முலை யூற்றெடுப்பப்
பெற்றானொ டுச்சிமோந் திதழ்வாய் நெரித்துணப்
        பெய்தவெழு கோடிமுத்தம்
இன்னயவ காமமணி யாற்றங்கரைக் கொழித்
        தின்றுமுத் தந்தருகவே
சம்பொருளு டம்பாவி யாவும்விற் பேம்வணிக!
        விந்தமுத் தந்தருகவே. (19)

-
வேறு
ஐயா றாறிரு ளாவியரு
        ளப்பா லெய்ப்பின் வைப்பேயோ?
வவ்விய மில்லாப் புலவர் குழீஇ
        யழகிது சாவுங் கெழுதகையோ?
செய்யா வியற்கைப் பொருளாக்கந்
        தேர்ந்த வுணர்வின் றெளிவேயோ?
தேனெய் கரும்பு பழமமிழ்தந்
        தீம்பால் குழைத்த திரள்பதமோ?
கையாக் குடிமை யளிதூய்மை
        கல்வி கற்பென் றிவையுடையாள்
கணவன் வாழ்வோ? வெல்புகழோ?
        கடவு ட்செந்தமிழ் முப்பாலோ?
வையா! முருகா! நின்முத்த
        மன்பே? முத்தந் தருகவே
யருமைக் கதிர மலைவாழ்வே
        யம்மே! முத்தந் தருகவே. (20)


வேறு
வேய்முத்த மும்மஞ்சின் மின்முத்த மும்மிப்பி
        விண்முத்த முங்கொம்பியல்
விழைமுத்த மும்மாதர் கழைமுத்த மும்மீனின்
        விளை முத்த மும்மேனவுந்
தேய்முத்த மெய்யறிஞர் தேடாத முத்தமுண்
        டீஞ்சுவையி லாமுத்தமேர்
திரியமா றும்முத்த முத்தமோ? கதிர்மலைத்
        திருநீறு பூத்த செந்தீத்
தூய்முத்த மீன்முத்த மே!குறுவெ யர்ப்புள்ளி
        சொரிமுத்த நெற்றி யினர்கண்
டுளிமுத்த முக்கமதி முகமுத்த முத்திக்கு
        தொகைமுத்த முண்டு கனியும்
வாய்முத்த மேமுத்த முலகெலாம் போதாத
        வாழ்முத்த முண்ணவருளே
வானுமுயி ருங்கைத்து வேண்டேம் வெ றுத்தயாம்
        வாழ்முத்த முண்ணவருளே (21)
-----------------------------------

8. வருகை.

வேறு
கூட லமணர் கூட்டழித்த
        குழந்தாய்! வருக வானவர்கோன்
குடுமி முடியை யுடைத்ததொடிக்
        கோப்பாண் டியனே! வருகதுவர்க்
கோடல் புனைய வருககுலக்
        கொழுந்தே! வருக பிசைந்துமுலை
குடிக்க வருக வொருமுத்தங்
        கொடுக்க வருக பொழுதொழிந்த
தாடல் வருக நெய்யழிய
        லாமோ? வருக சிறாரடிப்ப
ராசே! வருக வழக்காட
        லழகோ? வருக மாமன்மகள்
தேட வருக தெள்ளமுதே!
        திருவே! வருக வருகவே
தெவிட்டா தொழுகுங் கதிர்காமத்
        தேனே! வருக வருகவே. (22)


வேறு
நூலாத நூலாடை யூசியொடு குயிலாத
        நொய்யசின் மெய்யுறையது
நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட
        நுண்ணுதன்மு டிக்கொண்டையின்
மேலாய பூச்செண்டு கண்பிணித் தாடநில
        மிசையறம் நடையாடவூண்
விழையாத விழுமியோர் வேணவாத் தளவாட
        மெள்ளமெய் தள்ளாடவெண்
ணாலாய கைமுகன் பெருமிதமு மோடவிண்
        ணாடர்சிறை நீங்கியோட
நாடோட நடுவூடு கடலசுரர் படையோட
        நாயனைய மவலமோட
மாலாகி யாமழன் மெழுகினெக் கென்புருகி
        மழையோட வேவருகவே
வளர்கதிர வரைமுற்ற மமர்முருக! வெமர்சுற்றம்
        வாழவின் னேவருகவே (23)


வேறு

குன்றந் தோறும் பன்றிபுனங்
        கொன்று நொக்கக் குறவர்செலல்
குறித்துப் பகலிற் றினைகோழி
        கொறிப்ப வுணக்கும் பாறைமிசைச்
சென்றங் கெறிந்த விளநிலவிற்
        செங்கை பிணைந்து குரவைதழீஇச்
சிரித்துக் குலுங்கு மகளிரொடு
        திரியும் கதிர்கா மக்கள் வா!
வின்றஞ் சியும்யா மெடுப்பேமென்
        றிருந்தா யேலஃ தெமக்கொல்லா
தேங்கி யழக்கை காலமுக்கி
        யிஞ்சிச் சாறூட் டேந்தினவு
தின்றந் தோபாற் குடங்கொட்டிச்
        சிந்து முலைகாண் வருகவே
சிங்கக் குருளை தவழ்வதுபோற்
        செல்வா! வருக வருகவே. (24)
-----------------------

9. நிலாவழைத்தல்.

அறுசீர்க்கழிநெடிலடி யீரிரட்டையாசிரிய விருத்தம்.

வெங்கட் டேறற் றேட்கடுப்பின்
        மீக்கூர் களியா னகையரும்ப
மீன்கண் மறுகச் செவ்வழியாழ்
        வெறிப்பப் பணைத்துத் தருக்கிமத
வேளைச் சினந்து பணிகொள்ள
        விரைசேர் குரும்பை வெளிவிம்ம
விரும்புங் களம ரேர்ப்பகட்டை
        வெடிசே லுழக்கி யுகைத்தோட்ட
வங்கட் கரும்பிற் களைகளையோ
        டாண்மை யுளமும் பறிப்பார்கட்
கமர்சூற் கமுகஞ் செறிவேலிக்
        கப்பா லிதணிற் கொடிச்சியர்க
ளருமா ணிக்கங் கிழங்குதினை
        யளிகண் மொய்க்குங் கொம்பிற்றே
னார்வம் வழங்கி நறைக்குவளை
        யார வாங்கிக் குழற்கணிந்து
தங்கட் குரிய பரண் காவல்
        சாருஞ் சாரற் கதிரமலை
தனித்துக் காட்டு ணிலைநின்ற
        தவத்தின் விளைவித் தமிழ்ப்பிள்ளை
தனது குவியா நீலமொடு
        தனியே யலர்ந்த தாமரைகாண்
டடுக்கு மீக்கோள் வாய்வைத்துச்
        சாய்ந்து மலர்ந்து சிரிக்கின்றான்
றிங்கட் செல்வா நினைக்கண்டு
        திருக்கை யோச்சி விளிக்கின்றான்
றேடக் கிடையா னின்னும்மைச்
        சிறப்பாற் சிறிது நின்னோடு
திருவிளை யாடல் செயப்போலுந்
        திருவுள் ளக்கிடை வாநிலவே!
சிறுவன் றமப்பன் செய்ந்நன்றி
        சிதையா தாட வாநிலவே! (25)


வேறு
கீழ்பாலின் வேந்துகுடை பற்றமேல் பாற்கடவுள்
        கிளர்கவரி வீசவடபாற்
கிழவன்மடி சுருள் கொடுப் பத்தென்ன வன்போற்றி
        செய்யநா ரதமுனிவர்பேர்
யாழ்சால வின்சுவைப் பண்செய்ய வரைதொறும்
        யாடுபாய் கதிரவெற்பின்
யாளியணை மீதுநா ளோலக்க மாயிருந்தி
        யாண்டுமுள விருதிணையுயிர்
தாழ்வோடு தன்னாணை நெறிநிற்ப வுய்க்குமித்
        தலைவனைச் சிறியனென்ற
தறுகணா டற்சூரு மலரோனு மாழுமிழி
        தகவினை நினைக்கநிலவே!
வாழ்வான கடலலவ னுறழவிண் டவழலவ!
        வந்துவிளை யாடுவாயே
வடிவேலன டைகைபிழி சாறயில லாமினிது
        வந்துவிளை யாடுவாயே. (26)

-
வேறு
நாம்புக முருள்பூங் கடம்பினமர்
        நம்பி யழகு குதலைகட்கு
நயமில் புல்லொடு கல்லுருகும்
        நரைக்கூன் றிங்கா ணீயுருகாய்
நளிகார்க் கரந்து நகைக்கின்றாய்
        நாணா தெங்கள் பறம்பினிமேல்
நணுகினி துக்கா ணெற்றுவனாம்
        நம்பன் சடைமுடி புகல்புகலின்
வாம்பொரு சிம்புட் கழறுகைப்ப
        மதியே பொன்றக் கெடாதுய்ந்தாய்
மதியா னாண்டு மிதிப்பனிவன்
        மதலை துடுக்கன் குறும்பாளன்
வணக்கும் பொருப்பு வில்லியுரை
        வாங்கா னவற்கு மாசிரியன்
வாவி நீந்து மன்னம்போல்
        வனப்பிற் கேய்ந்த குணனில்லாய்
காம்பும யிற்பரி மேலழகன்
        கானங் கோழி முட்டைகளிற்
கழனித் தாரா வடைகிடக்குங்
        கதிர்கா மப்பிள் ளைப்பெருமாள்
கலைமுக மதிபோ லகவிருளைக்
        கழிக்கு மாற்ற லின்மையினாற்
கவற்சி யுட்கிக் குறைகின்றாய்
        கழறும் போது கறுக்கின்றாய்
தேம்பிய வாழிப் புள்ளன்னார்
        தேக்க நிலவு கொப்புளித்துத்
திறம்பா மங்கு லியங்குமிது
        செருக்கு வேண்டா கருநஞ்சு
சேர முழுதும் பரவாமுன்
        றிரும்பி யீண்டு வாநிலவே!
திருக்கை தீண்டப் படினொழியத்
        திருந்தா யாட வாநிலவே! (27)
---------------------------

10. சிறுபறை முழக்கல்.

வேறு

ஈரெழுத் தீரிருசொன் முப்பொருளி னாற்பாவி
        யைந்தமுச் செய்யுளணிக
ளிசைகூத் திவற்றையவ் வக்கலைஞர் கழகத்தெ
        டுத்தகட் டுரைமுழக்க
விவ்வூனை மண் ணொடெரி நரிதின்னு முன்னீரி
        ரண்டாவ துறுதிநிலைக
ளெய்துபாக் குயிர்வளியொ ருக்கிக்க திர்க்காம
        மேகிவாய் வாளாவதிந்
தோரெழுத் தறிவுவெளி யுயர்வுள்ளி யுய்ம்மினென
        வறுவர்வாய்ப் பறைமுழக்க
வொல்லெனவி ரைக்குமரு விச்சாரல் வித்திவிளை
        யுலர்தினையின் மடையெதிர்படைத்
துறுபுலித் துப்பினிமிர் கானவர்து ணங்கையொடு
        மொண்டொண்ட கம்முழக்க
வூர்ப்பொதியி லிற்குனிப் போன்முழுத் தோன்மடியு
        டுக்கைவன் பறைமுழக்கக்
கூரெழுத் தாணியென வன்சூரன் மார்பேடு
        குறிகொளப் புகழெழுதுவேல்
கொண்டதிண் டிறல்பரவு மிமையோர்க ளடுவென்றி
        கூறுவிட் பறைமுழக்கக்
குன்றுகுடை யாவெடுத் தானிரைபு ரந்தான்கு
        றிப்பிற்செ லத்துரத்துங்
கோலக்கு ளிற்றாழ வேழ்துளையின் விரன்ஞெண்டு
        கூடவேய்ங் குழன்முழக்கச்
சீரெழுத்துன்னி யெனவிணைதோ ளுயர்த்தித்தி ணுக்கெனச்
        சாய்த் திடக்கை
சேப்புறவி டுக்கிக்க ளித்துச்சி மிட்டிவரி
        சிதர்துடிக் கைக்குணில்கொடு
திருமாமி நாணவும் மிருதாயர் காணவுஞ்
        சிறுபறைமு ழக்கியாடாய்
தெந்தோம்நு மக்கினரு டந்தோமெ னப்படச்
        சிறுபறைமு ழக்கியாடாய் (28)


வேறு

பத்துமு டித்தலையின் கொத்துவி ழுத்தியவிற்
        பற்றிய கையழகன் பத்துத் தேரன்மகன்
பண்டும கட்பரிசு கொண்டுகொ டுத்தவளம்
        பாடுமி லங்கைமுகி லாடுபு கழ்க்காமத்
தத்துமி றாற்குன்றிற் றுய்த்தர சாளுமெழிற்
        றனியொரு மருமானே யினியொரு பொருள்கேட்பேந்
தங்கியி ருக்குமிவ ரிந்திர ரிவர்பிரமர்
        தண்டமி ழன்பரிவர் கண்டுகொ ளைய!விவ
ரித்தனை பெயருமுயர் முத்திப் பேறுமிகழ்ந்
        திவணுற் றனரஃதுஞ் சிவணற் றகுதித்தன்
றென்று நிலப்பிறவி நன்றென் றெண்ணுவர்பே
        ரின்பக் கடலாடி யன்பிற் றுளிசொட்டத்
தித்தவெ னக்கைச்சீர் செப்பவெ ழுந்தாடச்
        சிவமத யானைவரச் சிறுபறை கொட்டுகவே
செந்தமிழ் நாடெல்லா முய்ந்ததெ னக்கொடிய
        செருவிறல் பலாறியச் சிறுபறை கொட்டுகவே (29)


வேறு
ஆறுகூற் றத்தமிழ்ப் பேராமை யூராமை
        யாளரருண் முந்நீர்திளைத்
தாடுவான் வருமிருட் பொதுள்புதற் றலைகரந்
        தாறலைக் குஞ்சிங்களர்
வேறாவே றாயிரிந் தோடநின் பொருள் கவர
        வேண்டுமயு ரொப்புவேளிர்
வினைதொடர வோடப்ப சுந்தமிழ்ப் புலனுழுநர்
        மீனுவர்க் கடன்மாடரின்
மாறுசீர் முன்றிலைத் தீண்டாது போகவவர்
        வறுமைப்ப சாசமோட
மலருண்மண மாகுகின் மான்யானை மருளவரு
        மாவோட யாளியோடச்
சீறுமா லரவோட நாததத் துவவிடிச்
        சிறுபறைமு ழக்கியாடாய்
சேண்கதிர வெற்புமுத் தமிழ்நூல்கள் கற்பநின்
        சிறுபறைமு ழக்கியாடாய்— (30)
-----------------------------

11.சிற்றில் சிதைத்தல்.

வேறு
அள்ளித் திரட்டு மணிப்பரலி
        னழித்துத் திருத்தி மனைகோலி
யாய்த வடுப்புக் குவைகூட்டி
        யதிற்செம் பவழத் தீமூட்டிப்
பள்ளித் தவர்பொற் பழங்கரகப்
        பானை மணியாற் றாமான்வெண்
பசும்பா லுலைநீ ரூற்றியமைப்
        பருமுத் தரிசிச் சோறாக்கி
வள்ளிக் கிழங்குக் கறிகுழம்பு
        வைத்தே மிற்றைப் பகன்முழுதும்
வளைக்கை கடுக்கு முதுகுபுறம்
        வளைந்து சுளுக்கு மிதனருமை
யெள்ளித் தகர்க்கொம் பீர்த்தாடு
        மெந்தாய்! சிற்றி லழியேலே
யெங்கதிர் காமவி ளக்கேநிற்
        கென்னாஞ் சிற்றி லழியேலே (31)


வேறு
அன்றி லங்குருகு குன்றி னூடுபுக
        வம்பு விட்டதக வொன்று நெஞ்சினை
யன்று வீடுமற் பொன்று விப்பவம்
        பாளி னங்கையின லங்க றந்தனை
நன்றி நல்லியக் கோடன் வெல்லவே
        னட்ட பாடிவே லூரு மாய்த்துசெந்
நாவ டங்குதலி லாத பூவனுமி
        ஞால மேன்மகனு மாதல் கேட்டுமா
லின்றி யாநினக் கஞ்ச லின்றியுமி
        றைஞ்ச லின்றியுமி ருப்பெ மோவடி
யேழை யேமொடுநி னக்கு நேர்ந்தபகை
        யென்ன வோவிதியை யன்றி நின்னிவட்
சென்றி யென்றவளை நோவெமோ கதிரை
        சேர்ந்த சேந்த!சிதை யற்க சிற்றிலே
சீற டிக்கொடெந் தலையெ ழுத்ததுசி
        தைக்க வேந்த! சிதை யற்க சிற்றிலே- (32)


வேறு
அன்றுதொ டங்கி யாளாவே
        மகம்போந் துண்டா லாகாதோ?
வழிக்கும் பூந்தா ணோவாதோ?
        வணியுங் குலைந்து போகாதோ?
வென்று நினக்கிடர் செய்தோமோ?
        விறைவன் பிழைக்கின் முறையுண்டோ?
வெம்மா மிக்கு நேற்றந்தி
        யார்நின் குறும்பு சொன்னாரோ?
நன்றுமை யாள்புனை யுஞ்சிற்றி
        னாணவ ழிக்குஞ் சிவன் மகனே!
நனைக்கோங் கெம்மக லம்புடைக்கு
        ஞான்று தமிழ்க்கா மப்பொதும்பர்
சென்றமு யங்கா மோ?கேண்மோ
        சீறேல் சிற்றில் சிதையேலே
சிதையாப் பேரில் செய்பெரியோய்!
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே- (33)
-----------------------------

12. சிறுதேருருட்டல்

வேறு
திருவேங்க டக்கோடு வடவரைப் பாவுடைய
        செந்தமிழ் வளநாடதன்
றென்வரைக் கதிரக்கு றுஞ்சோலை கெழுமுஞ்செ
        ழுங்கதிரை யம்புரவல!
பெருநாளு மாடியந் திங்களின் றேநிற்பி
        றப்பித்த வான்கங்கையாள்
பீடுபெறு முகமதியு நகைரேம் பிற்றுப்பி
        றங்குதிரு நீற்றுவெள்ள
மொருவாம லரகாசி வாவென்னு மார்ப்பொலியு
        றங்குமா லினையெழுப்ப
வொருகோடி கப்புரவி ளக்கிலகு மெய்க்குறிப்
        புன்னுமவர் தம்மிழப்பத்
தெருவோகை யயிலயிற் றிருவிழாப் பூமழைச்
        சிறுதேரு ருட்டியருளே
தேடுமுழு மாணிக்க மே!குணக் குன்றமே!
        சிறுதேரு ருட்டியருளே— (34)

-
எழுசீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்.
மாயாக் களிமண் ணியனால் வாய்மை
        வாய்ந்தகொ டிஞ்சியி மிழ்சிறுதேர்
மடனுயி ரச்சினி னிருவினை யீருருண்
        மாறிக் கோத்து மருளுமவா
வீயா வாணி செருகிவெ றும்பாழ்
        வெட்டவெ ளிக்கண ருட்கையினால்
வினைபல விளைதர வீர்த்துமு ருட்டியும்
        விளையா டும்முனை வன்புதல்வா!
பேயா மதமுறு கோள்களெ லாமுறை
        பிறழ்புரு ளப்பயி லூராண்மைப்
பேராண் மைத்தமி ழரசிய லாழி
        பெட்பவொ ராழியொ டுருளவொளி
சீயாக் கதிர்கா மப்புக ழுருளச்
        சிற்றில் சிதையவு ருட்டுகவே
சிறிபோ ரீட்டிய திருவில் பொருள்பொற்
        சிறுதே ருருளவு ருட்டுகவே - (35)


அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்.

திருவாவி நன்குடிதி ருப்பருங் குன்றமிகு
        தெண்குன்று தொறுமேரகஞ்
சேக்கையலை வாயினிய பழமுதிர் சோலையித்
        திண்பாடி வீடாறுமே
யுருவாகு மாறகக் களமாவை யாறெழுத்
        தோராறு பேற்றுமுகமு
மொழுகுபன் னிருகண்மடை யாறருள்பு றம்பொசிய
        வோவாவி ராறுபடையும்
மருவாம லீராறு தாடொடுகை கன்றவார்
        வட்டுடைவ னப்பசையவும்
மாமுனிவர் கண்டவெளி மட்டுமிக் கதிர்காம
        மறுகுதொறு முள்ளந்தொறுஞ்
செருவீறு சேவலங் கொடியாட நிற்குமஞ்
        சிறுதேரு ருட்டுவாழி
திருவாள ரீழவள நாடர்கொணர் பொன்மணிச்
        சிறுதேரு ருட்டுவாழி--- (36)
---------------------------------

13. பூணணிதல்.


செம்புலமு ழாநிற்கு மைந்துமலி புனவன்றெ
        விட்டக்கொ டிச்சிகொடுபோந்
தினையினது வெய்துநெய்ப் பாற்பொங்க னெறியிடைத்
        திறவாது கண்முகைத்துத்
தம்புலமி றந்தபழ வேங்கையின்ம ராடியின்
        றண்ணிழற் குளிர்தூங்குறுஞ்
சான்றோர்ப்ப ணிந்தவர்தம் வாய்ப்பெய்த ருத்தித்த
        ழைக்குங்க திர்க்காமனே!
யும்பரொரு வர்க்குமில் கட்டழகு னக்குண்டு
        கப்பிதற் கழகுமுண்டோ?
வொப்பனைசெ யக்காமு றும்பேதை மைக்குணனோ
        ழித்தலுமெ மக்குளுண்டோ?
விம்பரது பொழுதறிபொ றிப்பூட்டு கைப்பூட்டி
        ணைப்பொலந் தொடிபூண்கவே
யிறைவ!கமு -க்கமுத் தியையுமுத் தாரமொடி
        மைப்பொலங் கொடி பூண்கவே— (37)


வேறு
வயிரம் பதித்துத் தெருளுள்ளம்
        வளையவ ளைக்கு நரன்ஞெகிழம்
வள்ளிக் கொடிகண் மணிபதிக்கு
        மார்பிற்ப தக்க முகிலூர்தி
செயிரின் றியமும் மணிக்கோவை
        தெளிநான் முகனான் மணிமாலை
தேரிள வன்மா ரொன்பதின்மர்
        திகழ்ந்த வொன்பான் மணிமாலை
தயிருண் டோடிய நல்லம்மான்
        றந்த துயல்பன் மணிமாலை
தனியாண் பால்பெண் பாலொருவர்
        சாத்தும் புன்னகை மணிமாலை
யுயிரின் புறுகதிர் மலைக்குமரா!
        வுணர்வு திருடப் புனைந்தருளே
யுலகனை யணியும் நின்வடிவ
        முரவோர் வருடப் புனைந்தருளே- (38)


வேறு
கண்ணிற் கணிகண் ணோடுதன் மாந்தர்
        காண்டக வுரைவினவுங்
கல்விக் கணிபொருள் கசடற, மொழிதல்
        கருதற் கணியருளே
மண்ணிற் கணிகதிர் காமக், கோட்ட
        மதிநூற் கணியுவமம்
மன்பெரு மைக்கணி பொறையே மனையற
        மாட்சிக் கணிமகவே
யெண்ணிற் சால்பிற் கணிநா ணுடைமை
        யிளைஞர்க் கணிபணிவே
யெங்கண்மு டிக்கணி நின்றிரு வடியே
        யெழுதரு மழமுருகே!
விண்ணிற் கணிநீ நின்றிரு மெய்க்கணி
        வினையேம் பொற்பணியே
வேசறு மடியார் விழிவாய் பருகவி
        துத்தனர் பொற்பணியே – (39)

14. உடைவாள் செறித்தல்.

வேறு
மான்கொன்ற முடைநாறி றைச்சியொடு திரிதாடி
        மயிரணற் கொடுவிலெயினன்
வழிபாடு தரவருளி வலவையாற் றங்காடு
        வந்தகதி ரைத்தெய்வமே!
யூன்குன்ற மாமசுரர் வண்கண்மை யாற்றலா
        கம்பரார் நுந்தையடிவீழ்ந்
துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் விடியற்க
        ணுந்தையஞ் சறகவென்று
வான்குன்ற லொழியுநுந் தலைவனின் னுஞ்சிறிஞன்
        மழலையுநி ரம்பிற்றிலன்
வருகநா லைந்தாண்டி னிப்போக வென்றருள்வ
        ழங்கிலுங் கடிதுபோர்க்குத்
தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
        சாலுடைசெ றித்தல்பயிலே
தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
        தாழுடைசெறித்தல்பயிலே – (40)


வேறு
பொருந்து மெளியே மவவின்மைப்
        பொதியோ வியமெய் யுறைபோர்க்க
பொல்லா விருசார் பற்றின்மைப்
        பொன்னஞ் செருப்பிற் கழல்சேர்க்க
முருந்து மூரன் முகமனிக்கு
        முதல்வா! கதிரை யெம்பெரும!
முந்து குறங்கில் வட்டுடைஞாண்
        முழந்தா டொடங்கி நுசுப்புவரை
விருந்து பொடிப்பச் சுருக்கிப்பல்
        வேறு கலையின் செல்வமெனும்
விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
        வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
தெருந்து முமிழ்காழ் மறைத்தடற்று
        ளீர்வாண் ஞானஞ் செறித்தருளே
யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
        வீர்வாண் ஞானஞ் செறித்தருளே (41)


வேறு
கூளிச் சுற்றத் தூசிப்பஞிலங்
        குணலைக் கூத்தியலுங்
கொன்புத் தேளிர் யாழ்சூழல், முழவிசை
        குவிபூப் பொதுளுமரோ
வாளிச் செலவிற் றோகைக், குடைமயில்
        வடிவிந் திரன்வந்தான்
வண்டமிழ் ஞானத் தொண்டர், படையணி
        வலனா வலங்கொட்டுந்
தூளிப் பொடிமூ வுலகும், பூசச்
        சூரடி மைவாழ்வு
தொலைவற லெவிவ ரப் பேர றமுந்
        துண்ணென வேநிமிரத்
தாளிற் றரியலர் நாணநி மிர்ந்து
        தார்வா ளுடைசெறியே
தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
        தார்வா ளுடைசெறியே- (42)

ஓம் :

குறிப்புரை.


1. பூ - பொலிவு (மங்களம்) சிவவென்னுஞ் சொற்குப் பொருள், உயர்வற வுயர்ந்தவன் என்பது. சிவ, வென்பது மக, விளவெனவந்த அகரவீற்றீரெழுத்தொரு மொழித்திணைப் பொதுப்பெயர், அஃறிணைப் பெயர்கள் போலவந்த அகாவீற்றீரெழுத்தொரு மொழியுயர் திணைப்பெயராதலிற் சிவச்செஞ்சுடரென வொற்றிரட்டியாது இயல்பாற் புணர்ந்து நின்றது. முற்கூறிய பொருட்கு இவ்விரண்டெழுத்துச் சிறப்புப் பெயருண்மை,

“சிவசிவ வென்றே தெளிகில ருமர்
சிவசிவ வாயுவுந் தேர்ந்துள்ளடங்கச்
சிவசிவ வாய தெளிவினுள்ளார்கள்
சிவசிவ வாகுந் திருவருளாமே'' என்னும்

நுண்டிருவைந்தெழுத்துத் திருமந்திரச் செய்யுளான் உணரப்படும். சிவவென்பது பேராற்றலுடையதும் அவ்வாற்றலுமாயிருப்பானொருவன் என உறுப்புப்பொருள் படும் காரணக்குறிப்பெயர். சி - ஆற்றலுடையது. (செம்பொருள்.) வ - ஆற்றல் (சத்தி) உயிரெழுத் தும் மெய்யெழுத்தும் இணைந்து கிடந்த வோரெழுத்திற்கு உயிர்மெய், என்பது உம்மைத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித்தொகைப் பெயராயவாறு போலச் சிகரப்பொருளும் வகரப்பொருளும் இணைந்து அமைந்து கிடந்தவொரு பொருட்குச் சிவ, வென்பது உம்மைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயராயிற்றெனக் கொள்க. சிலவென்னுமிவ் விரண்டெழுத்தும் தத்தம் பொருளைச், சொல்லுவாரது குறிப்பாலுணர்த்தும் இடைச்சொற்களாக நின்று ஓரெழுத்தொரு மொழிப்பெயர்ச்சொற்றன்மைப்பட்டுப் புணர்ந்து தொடர்ச்சொற்களாய் நின்றன. ''மன்னிய சிவன்யான்'' எனச் சிவன் தன்னைத்தான் சிவன் எனப்பெயர் கூறியதும் இத் தமிழ்ப்பெயர்ச் சொல்லுண்மைக்குத்தக்க மேற்கோளாகும். ஈண்டுச் சிவன் எனனகரவொற்று இறைவன், உமையாள் என்றாற்போல் உயர் திணைப்பாலை விளக்க வந்ததன்றி அஃது அப்பெயரது ஈற்றெழுத்தன்றாமென்க. ஏனையிடங்களினும் இவ்வாறு கண்டுகொள்க.

செஞ்சுடர் - செந்நிறவொளி. செஞ்சுடராகிய இளவெயில் என இருபெயரொட்டாக்குக. சிவசெஞ்சுடர் என்பது சிவத்தினுடைய செஞ்சுடரெனப் பண்புத்தற்கிழமைப் பொருளின்கண்வந்த ஆறாம் வேற்றுமைத்தொகை நிலைத்தொடர். தவழும் என்பது இளவெயிலைச் சிறப்பித்து நின்ற இடைப்பிறிது வரலெனப்படுமாதலிற் செஞ்சுடர்த்தவழு மிளவெயிலென்னும் பண்புத்தொகை, தழா அநிலைத் தொடராமென்க. தவழுமிளவெயில் என்பது அடையடுத்த குறித்துவருகிளவி. இனிச்செஞ்சுடர் என்பதனை ஞாயிறு (சூரியன்) என்பதாகக் கொண்டு ஞாயிற்றினது இளவெயிலென விரித்துச் சிவ மாகிய செஞ்சுடர் எனப்பெயரொட்டாக்கிச் சிவவென்பது வடசொல்லாதலின் ஒற்றிரட்டித்துப் புணராதா கற்பாற்று என்பாரும், அவ்வாறாக்கிச் சிவம் என்பது தமிழ் மொழிப் பெயர்ச்சொல் எனக்கொண்டு சிவம் என்பது செய்யுணோக்கி மகாவொற்றுக் கெட வல்லெழுத்து மிகற்பாற்றன்றுதல் கூடும் என்பாரும் உளர். செஞ்சுடரிள வெயிலெனவே சிவவென்பான் ஞாயிறாகும் என்பதும் பெறப்படும். சிவன், இயற்கைப்பேரொளி ஞாயிறாதலிற் சிவனை மேல் ஞாயிறெனக்குறிப்பிற்கொண்டது குறிப்புருவகமன்று. தவழும் - மெள்ள வூர்ந்து பரந்து விரியும். இளவெயில் - எப்பொழுதுங் குளிர்ந்த வெயில்; பிறிதினியைபு நீக்கிய அடையடுத்து நின்றது. ஈண்டு இளவெயிலென்பது பராசத்தியென வழங்கப்படும் அருளாற்றலென்க, பொர - தீண்டுதலால், ஈண்டு இளவெயில் பொருதலாவது; உயிர்களது ஆணவமல நீக்கத்துக்கண் திரோதான சத்தியென வழங்கப்படும் சிவனது மறைப்பாற்றல் பராசத்தியாகிய அருளாற்றலாகக் காணப்பட்டுத் தனிநிலையுயிரிற் படிதலாகிய சத்திநி பாதமாமெனக்கொள்க. பிணி - கட்டு: பூவின் இதழ்கள் கூம்பித் தம்முள் ஒன்றனோடொன்று அழுந்த அமுக்கியிறுகி நிற்றலும், ஆணவமலக்கட்டுமாம்.

முறுக்கு - பின்னல்: பூவினிதழ்கள் தம்முடகலந்து செறிதலும் ஆணவமலக் கட்டினானாய உயிரது மயக்கவுணர்வுமாம். உடைந்து, நெகு - மலரும். முளரி - தாமரை. அம், சாரியை; அழகுமாம். போது - பூ. முளரியம் போது என்றது சிவனடியன் பருள்ளத் தாமரையை 'மலர்மிசையேகினான்’ என வள்ளுவனர் அவ்வுள்ளத்தினை மலர் என்றது கண்டு கொள்க. ''உலகந்தழீஇ இயதொட்ப, மலர்தலுங், கூம்பலுமில்ல தறிவு'' என்னுந் திருக்குறளில் அறிவிற்கு வேறாகிய உள்ளம் மலர்தலுங் கூம்பலுமுடையது; எனக்குறிப்பாற் பூக்களின் வினையை உள்ளமும் உடையதாகக் கூறலானும் உள்ள முந்தாமரை யென்பது உணரவரும். இதனை இலக்கணையாகிய சமாதியென்னுங் குணவணியென்பாருமுளர். அல்லதூஉம் பெரியாரெல்லாரும் உடம்பினகத்து ஆறு நிலைக்களங்களில் உள்ளம் அமைந்து நிற்கும் நிலையினைப் பலபலவிதழ்த் தாமரைப்பூக் களாகக் கண்டு கூறியுணர்த்துவதூஉம் ஈண்டுக்கருதற்பாலது. இவ்வாற்றால் உள்ளமும் புறத்தாமரை போலும் அகத்தாமரையாதலிற் பிணிமுறுக்குடைந்து நெகுமுளரிப்போது என்றது இயைபுருவகமன்று; குறிநிலையணியென்க. காணப்படும் குளத்துத்தாமரையென வொலித்தலான். அன்றியியை புருவகமெனினுமாம். முளரிப்போது உடைதல் சிவஞானம் உயிரதுள்ளத்தின் கட்பிறத்தலாகவும் நெகுதல், சிவபத்திச்சுவைதோன்றி யின்புற்று மகிழ்தலாகவும் கொள்ளப்படும். உயிர்கள் கட்டுங்கிச் சிவபத்தியாலின் புற்று மகிழுங்காற் சிவப்பொலிவினை நாவாற்பலபட வாழ்த்திப்புகழுமியல்பினைப் புள்ளார வாரித்தலென்றது உருவகவனி. புள் - வண்டு: தாமரைப்பூ மலர்ந்தால் அதன்கண் வண்டுகளொலிக்கும் எனக்கொள்க. ஆரவாரிப்பவென்பது காரியப்பொருட்டுச் செயவென் வினையெச்சம். புய்த்து - பறித்து: பொர உடைந்து நெகு முளரிப் போதினைப் புய்த்து என்க. ஒரு மருப்பு - ஒற்றைக்கொம்பு. மூக்கு - புழைக்கை. யானைக்குப் புழைக்கையே மூக்குமாமாதலின் அதனை மூக்கென வழங்குதலுமுண்டு. மருப்பினையுடையவென்க, மூக்கின்; இன், ஏழனுருபு. மூக்கின் வைத்து எனவொரு சொல் வருவித்துரைத்தல் இசையெச்சம். ஏமம் - இன்பம். அம், கடைக்குறை. ஆர - நிறைய மோப்பமுற்று - மோந்து, யானை தாமரைக் குளத்திற்குளித்து விளையாடப்புக்கால் அதன்கண் உள்ள தாமரைப்பூக்களைப்பறித்து மோந்து புழைக்கையில் வைத்துக்கொள்ளுதலியல்பாமென்க. ஈண்டு யானைக்கன்றென்றது செந்நிலைப்பிழம்பை (சாந்தவடிவத்தை) யாதலின் அந்நிலைக்கண் மெய்யன்பருள்ளம் வேண்டுதல் வேண்டாமையொழிந்து முயற்சியற்றுப் பொறிவழிப் புலன்களிற்போகாது பாழ்போலக் கிடத்தலை இவ்யானைக்கன்று அன்பருள்ளத்தாமரைப் பூவைப்பறித்தலாகக் கூறியது உருவகமாமாறு கண்டுகொள்க.

உயிர்க்குளன் - உயிராகிய குளம் என இயைபுருவகம். குளம்; குளன்: ஈற்றெழுத்து மயக்கம். அணை - குளக்கரை. என்றது ஒருவழியுணர்வு. (உயிரது ஏகதேசஞானம்.) வரையறைப்பட்டு நிற்றலின். இகப்ப - நீங்க; என்றது. ஒருவழியுணர்வழிந்து முற்றுணர்வுண்டாக வென்றவாறு. நனி - மிக. திரை - அலை; அன்பினாலாகிய ஆர்வத்திற்கு உருவகம். புடைபெயர்ந்து - மிக்கெழுந்து மோதுதலாற் புடைபெயாவென வெச்சத்திரிபாக்குக. இழுமென, அருவியொழுகு மொலிக்குறிப்பிடைச்சொல், கடாம் - மதநீர். கலுழி - அருவி. சுரவாநிற்ப - ஊறிவழிந்து கொண்டிருப்ப. ஈர் - குளிர்ந்த. பரிவு - அன்பு, பரிவாகிய நீர் எனவுருவகம். "ஈரமளைஇ"யென முப்பாலுள் அன்பினை ஈரமென்றது கண்டுகொள்க. குடைவழி - முழுகிக்குளித்து விளையாடுங்கால், யானை தாமரைக்குளத்திற் குளித்து விளையாடுதலின்கண் மிகவிருப்பமுடையனவாதலியல்பு. குடைவழி; வுழி, வினையெச்சவிறுதி நிலையுருபு. மாமால் - திருமால். விடை -திருமாலாகிய ஆனேறு. விடைக்களிறு - ஆனேற்றினையூர்ந்து வருங்களிறு என்றது சிவபெருமானை. விடைக்களிறு என்பது முரண் விளைந்தழிவணி. பிடி - பெண்யானை, என்றது உமையாளை களிறும் பிடியும் உருவகமல்ல. பெருமானும் பெருமாட்டியும் முறையே களிற்றியானையும் பிடியானையுமாகக் கோலமாறித் தம்முட் புணர்ந்து யானைக்கன்றினைப் பயந்தார் என்பதாகப் புராணமுண்மையான். மாலும் - மயங்கும். மயங்குதல்; விழைவுவெறுப்பற்றுச் செம்மை (சாந்தம்) யினின்ற அவ்விரண்டும் தங்கன்றின்கட் பற்றுச்செய்து அதனது திருவிளையாடல் கண்டுகளித்தல். மாலும் என்னும் பெயரெச்சவினை குழவியென்னும் ஏதுப்பெயர் கொண்டு முடியும். மயங்குதற்கு ஏதுவாகிய வெனவீரிக்க. மழ – இளைய; முது - மூத்த, வய - வலிய. யானைக்கன்றைக் குழவி யென்றலு மரபாம். "குஞ்சரம் பெறுமே குழவிப்பெயர்க்கொடை” என்பது தொல்காப்பியம். புய்த்துமோப்ப முற்றுக்குடைவழி யென்க. உயிர்க்குளனது அணை திரைபுடைபெயர்தலால் இகப்பக் (அழிந்து நீங்கக்) குடைவுழியென்க. சுரவாநிற்ப நீரிற்குடைவுழியென்க. குடைவழிக்களிறு பிடிமாலும் குழவியென வியைக்க, வால்- வெள்ளிய. வான்எனக் கொள்ளினுமாம். கவின் - அழகாக விளங்க. திருமுத்தபிள்ளையார்க்கும் மதி திருமுடியிற் சூடப்பட்டிருத்தல்,

மதிபாய் சடைமுடித்து மாசுணப் பைம்பூட்டுச்
சதிபாய் குறுந்தாட்டுத் தான -- நதிபாய்
இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தெனுள்ள
முருகவிட்டு நின்ற வொளி'' என்னும் பழைய

வெண்பாவானுணரப்படும். ஓம் என்னும் பெயர் யானைமுகக் கடவுளுக்குச் சிறந்தது. இவ்வுண்மை, அக்கடவுட்குரிய நிலைக்களமாகிய மூலாதாரத் தாமரையிதழி லமையுமெழுத்து ஓம் என்பது எனச்செப்புதலாற்றுணியப்படும். அல்லதூஉம் அக்கடவுளது திருமுகம் ஓம் என்னும் வடிவெழுத்துப் போலுதலானும் அக்கடவுள்தான் ஏனையெல்லாக்கடவுளர்க்கும் முந்துற வணங்கப்படுதலானும் மேற்கூறிய பொருள் வலியுறும். கூயின் - கூப்பிட்டு அழைத்தால், மன்ற, தேற்றப்பொருள் குறித்துணர்த்தும் ஓரிடைச்சொல், ''மன்றவென் கிளவிதேற்றம் செய்யும்” என்பது தொல்காப்பியம். "மடவை மன்றவாழிய முருகே'' என்னுங் குறுந்தொகைச் செய்யுளில் வரும் எடுத்துக்காட்டும் காண்க. ஓம்ஓம் என்றுவந்து - ஓம்ஓம் என்று தன்னையுணர்த்திச் சொல்லிக்கொண்டுவந்து. ஒருவர் ஒருவரைப் பெயர்கூவியழைத்தால் அவ்வழைக்கப்பட்டார் தம்மையுணர்த்தித் தாம் கேட்டற் குறிப்புணர்த்ததற்கு ஓம்ஓம் என்றல் வழக்காறு; சாத்தா! என விளித்தாற் சாத்தன் ஓம் எனச்சொல்லித் தன்னையுணர்த்துவான் என்றவாறும். ஒருவர் வினாயசெயற்கு உடம்பட்டானும் ஓம் என்பன்; சாத்தா! இது செய்வாயோ?வென வினவிற் சாத்தன் ஓம் என்பான் என்றவாறு. ஓம்ஓம் என நின்ற இவ்விரண்டடுக்குக்கள், விரைவு பொருண்மையினின்றன. மேற்கூறிய யானைக்கன்றை ஓம்ஓம் எனப் பெயர் கூவியழைத்தால் அக்கன்று ஓம்ஓம் எனச் சொல்லிக்கொண்டோடிவரும் என்றதாகக்கொள்க. இரு; என்பதனைக் கவளத்திற்குங் கூட்டியுரைக்க. இருவினையிரு கவளம் என்றது உருவகம், இருவினை: இன்பநுகர்ச்சியுந் துன்பநுகர்ச்சியுமாகிய இரண்டு ஊழ்வினைகள். கவளம் - யானையுண்ணுமுணவு. குளித்தலும் வருதலும் உண்ணுதலும் உலவதலும் ஒரு வினை முதலின் முறையே நிகழுஞ் செயல்களாதலின் குடைவுழி மாலுங்குழவிவந்து உண்டு உலவுமென்றது வினை முதல் விளக்கணி. குழவியாகியதன் எனவியைக்க, யாணர் - அழகு. மாண - திருந்த: நன்றாக நினைதும் - நினைப்பாம். யாவென்பது அசைநிலையிடைச் சொல். இதற்கு ''யாபன்னிருவருளர் மாணாக்கர் அகத்தியனார்க்கு'' என்னும் எடுத்துக்காட்டினையே தொல்காப்பியவுரையாசிரியர் பலரும் வரைந்து போதருவர். பன்னிரண்டுகையானை யெனக்கூட்டுக. இது சிறப்புருவகவணி. முருகக்கடவுளை யானை யென்றலின். யானைமுகக்கடவுளை முதுயானையெனவே இவ்யானை இளயானையாம் என்க. களிற்றினையானையென்றலு மரபாம். கதிர்காமமான் - வள்ளி நாய்ச்சியார், மானுக்குப்பிறத்தலான். உவமையாகுபெயருமாம், உருவகவுயர்வு நவிற்சியணியுமாம். காதல்பற்றிவந்த திணை வழுவமைதி யெனினுமாம். கதிரகாமம் என்பது கதிர்காமம் என மருவிவந்ததாதலிற் கதிர்க்காமம் என ஒற்றுமிகாதாயிற்று. கதிர்க்காமம் என்றே வழங்காமையிற் கதிர்க்காமம் எனத் திருப்புகழ்ப்பாடலில் வருவதூஉ மரூஉவேயாம். காமம் – ஊர் - கதிர, என்பது ஒரு நச்சுமரம் கதிரவென்னும் ஒருவகை ரச்சு மரங்களை யுடைய வூர் என அவ்வூர்க் குக் கதிரகாமம் என்பது காரணக்குறிப்பெயர் எனக்கொள்க. இப்பெயர், சிங்களச்சொற் சிதைந்த தமிழ்ச்சொல். கதிரகிராம, என்னும் ஆரியச்சொற்சிதைந்து கதிரகம்; எனச் சிங்களவட சொல்லாயிற்று, இனிக் கதிரம் என்னும் வடசொல்லிற்குக் கருங்காலிமரம் எனவும் பொருளுண்மையிற் கருங்காலி மரங்களையுடையவூர் என்றுமாம். இனிக் கார்த்திகேய கிராமம் என்னுஞ்சொற் கதிரகாமம் என்று மருவிற்று என்பாரும் கஜாகிராமம் என்னுஞ் சொற் கதிரகாமம் என மரூஉவாயிற்று என்பாரும் உளர். கார்த்திகேய கிராமம் என்பது முருகவேளூர் எனப்பொருள்படும். கஜாகிராமம் என்பது யானைக்காட்டூர் எனப்பொருள்படும். இனிப் பிடியைப்புணரற்பால களிற்றியானை மானைப்புணரும் என முரணக்கூறியது முரண் விளைந்தழிவணி. யானையின்றமிழ் - பிள்ளைத்தமிழ் என்னும் செய்யுள். யானையென்பது உவகைபற்றிவந்த திணை வழுவமைதிப் பெயராதலிற் பிள்ளையெனப் பொருள்படுதற்குரித்தாதல் கண்டுகொள்க' செய்யுளும் வழக்குமெனத் தமிழ்மொழி இருகூறுபடுமாதலிற்றமிழ் என்பது ஈண்டுச் செய்யுண்மேல் நின்ற பொதுப்பெயர், ஆகுபெயராற் செய்யுளையுணர்த்திற்றன்று. ஒரு செய்யுளும் செய்யுளேயாம். பல செய்யுளுஞ் செய்யுளேயாமாதலிற் பல செய்யுளாகிய செய்யட்டொகுதியென்னும் நுலையுணத்துங்காலும் தமிழ் என்பது இயற் பெயராதலன்றி யாகுபெயராதலில்லையென்க, பிள்ளைத்தமிழ் என்னும் செய்யுள் தமிழ்மொழிக்கே சிறந்த கூறுபாடு; ஆதலின் அடை சிறந்த தமிழ் என்னும் பொதுப்பெயராலே வழங்கப்படும். தமிழ்மொழிக்கேயுரியது, தமிழ் என்னும் பொதுப்பெயராலே வழங்கப்படுதலுமுண்டு என்பது தமிழ்மொழிக்கே சிறந்த அகத்திணைப்பொருள் நுதலிய இறையனார் களவியலைத் தமிழ் நுதலிற்று என அவ்வுரையாளர் அப்பாயிரத்துட் கூறுதலாற் கொள்ளக்கிடக்கும். பின்ளைத்தமிழ் என்னுஞ் செய்யுள், இயற்றமிழும் இசைத்தமிழும் கூத்துத்தமிழுமாய் விரவிக்கிடத்தலாள் அம்மூன்றற்கும் பொதுப்பெயராகிய தமிழ் என்னும் பெயரால் வழங்கப்படுதற்குரித்தாதல் பெறுதும். பிள்ளைத்தமிழின் மாட்டுக்கிடக்கும் எழுத்தும், சொல்லும் அணியும் இயற்றமிழ். பாட்டு இசைத்தமிழ், பொருளும் மெய்ப்பாடும் கூத்துத்தமிழ். முருகனைப் பிள்ளையாகப்படைத்துக் கருதிக்கொண்டு புனைந்து எண்வகைச் சுவையுந்தோன்றச் செப்பிக்கூறுதலிற் பொருளும் மெய்ப்பாடுங் கூத்தெனப்படும். இங்ஙனம் உள்ளோன்றலைவனாக வில்லதோர் பொருண்மேற் செய்தல், கூத்திற்குரியவிலக்குக்கள் எனச் சொல்லப்படும் பாட்டுக்களுக்கு உறுப்பாய் வரும் பதினான்கனுட் பிறப்பென்னும் உறுப்பாமென்க. பிறப்பினை யோனியென வழங்குவர். பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைப்பாட்டு எனவும் வழங்கப்படும். பொலிய - இடையூறின்றியினிது முடிந்து விளங்கி நிலை பெற்று வாழ. பொலியக் குழவியாகிய தன்னடியை நினைதும் என வினை முடிக்க. வெயில் பொருதலால் உடைந்து நெகு முளரியம் பூவைப்புய்த்து மூக்கிற்கொண்டு குடைவழி மயங்கப்படுங் குழவியாகிய தன்னுடைய அடியைத் தமிழ்பொலிய நினைதும், எனவும் உயிராகிய குளனில் ஈர்ம்பரிவாகிய நீரில் திரைபுடைபெயர்தலால் அணையிருக்குமாறு அருவிசுரவாநிற்பக் குடைவுழி; யெனவும், ஓம்ஓம் எனப்பெயர் கூயின் ஓம்ஓம் எனக்கூறித் தன்னையுணர்த்திக் கொண்டு முடியில் மதிகவினவந்து உண்டு உலவு தன்னடியைத் தமிழ்பொலிய நினைதும் நாம். எனவும் தொகுத்துத் தொகுத்து வினை முடிவுத்திறங்களெல்லாம் கண்டுகொள்க.

க. மணி - கௌத்துவவிரத்தினம். மணியவிர் வர எனக் கூட்டுக. திருவென்பது திருமாலின் திருமார்பின்கட் கிடக்கும் மறுவிற்குப் பெயர். அகரம், சாரியை. வியல் - அசலம். மார்பம்: அம், சாரியை. அது, முதனிலைப் பொருளிறுதி நிலையுருபு. இன், ஏழனுருபு அவிர்வர - ஒளிவிட்டு விளங்க. வரு, துணை வினை முதனிலை, கோதையென்பது கோதை சூடிக் கொடுத்த நாய்ச்சியார்க்குப் பெயர்; இஃது ஆகுபெயரால் திருமகளையுணர்த்திற்று. வைப்புணல் - வைக்கப்பட்டிருத்தல் உம்மை, இறந்தது தழீஇயவெச்சவும்மை. மார்பதிற் கோதையும் வைக்கப்பட்டிருத்தல் ஆண்டு மணி விளக்கு அவிர்வருதலான் ஒளிர்ந்தது - விளங்கிற்று.

'மணமுடைய கோதையும் வைப்புண லொளிர்தலின் என்புழி முன்னே பிறனை மணஞ் செய்த பெண்ணொருத்தி வைப்பாட்டியாக வைக்கப்பட்டிருந்தது மணிவிளக்கொளியில் தெரிதலால் என மற்றொரு பொருளும் பலபொருட் சொற்றொடரணிபற்றித் தெரிந்து கொள்க. இது புனைவுளிப்பல்பொருட் சொற்றொடாணி. துனி புலவி, உம்மைத்தொகை. ''துனியும் புலவியு மில்லாயிற் காமங், கனியுங் கருக்காயுமற்று' என்பது இன்பத்துப்பால். மடி திரை - வளைந்த அலை; மடித்த மடிப்பு. உடையாவது கடலெனக் கொள்க. இடைவரைய வென்பதனை இடத்தை நீக்க வெனவும் மருங்குலை நீக்கவெனவும் கடலுக்கும் உடைக்கும் பொருந்தக்கொண்டு இரு பொருள் கொள்க. இடம் நீக்க வென்றது கடல்வற்றி நிலம் வெளிப்படுதலை எனவும் மருங்குலை நீக்க வென்றது ஊடிய வருத்தத்தால் நிலமகளுடல் மெலிய இடையினின்றும் உடை சுழலுதலையெனவும் கொள்க. விழுகிடை - விழுந்து கிடத்தல். கண்மழை - அழுத கண்ணீர்; உருவகம். திருமாலின் துடைமடியில் நிலமகளிருக்கின்றாள் என்றன் மரபு. மடிமிசைவைத்து என ஒரு சொல் வருவிக்க; இசையெச்சம். மகிழ்வித்தற் பொருட்டு மடிமிசை வைத்து என்றது தற்குறிப்பேற்றம். மலைமுலை யென்றதனை உவமத் தொகையும் பண்புத் தொகையுமாய் முறையே உவமவணியும் உருவகவணியுமாகப் பெண் என்றதற்கும் நிலம் என்றற்கும் பொருந்தப் பல்பொருள் கொள்ள நின்றதாகக் கொள்க. சில மலைகளிற், கிடந்த திருக்கோலத்தோடு எழுந்தருளியிருத்தலை முலை மருவுதல் என்றது தற்குறிப்பேற்றம். மருவுபொழுது வறுவியகையெனப் புணர்க்க. வறுவிய - இல்லாத நால்கு - நான்கு. 'பால்புரை புரவி நால்குடன் பூட்டி'யென்பது பொருநராற்றுப் படை. மறை - மறையோர் பிறப்பு, மறையோன் எனினுமாம், கொல்லர் பிறப்பையும் கொல்லரையும் கொல்லனையும் கொல் என வழங்குமாறு போலக் கொள்க. இளவல்- இளையாழ்வார். (ராமாநுஜாசாரியார்) உடையவர் எனவும் வழங்கப்படுவர். உடையவருடைய அடியைத்தொட்டு வணங்கு மாணவனாகிய வடிகள் என்றது திருமாலை. திருமால் உடையவரிடம் கோலமறைந்து உள்வரி கொண்டு சென்று அவரைப் பணிந்து தன்னை மாணவனாக ஏற்றுக்கொண்டு தனக்கும் ஐந்திரு நல்லாக்கம் (பஞ்சம்ஸ்காரம்) செய்தருளுமாறு வேண்டிப்பெற்று மறைந்து அவ்வைந்திரு நல்லாக்கத்தின் சிறப்பினையும் உடையவர் சிறப்பினையும் மெய்யுணர்தலின் சிறப்பினையும் உலகிற்கு வற்புறுத்தியுணர்த்தியருளினான். உடையவரைத் திருமாற்கு இளவல் என்றது உடையவர் இராமன் தம்பி இலக்குமணனது அவதாரம் என்பது பற்றி. காமந்துறந்தமையின் இளவல் பெரியனாயினன். காமந்துறவாமையின் மூத்தோனாயினும் திருமால் இளவலை வழிபட்டான் என்னும் பொருளும் ஒலித்தது காண்க. அடிகள் - பெருமான், "சாவக நோன்பிக ளடிகளாதலின்'' என மாதரி கோவலனை அடிகள் என்றது நினைத்துக் கொள்க. இதழி – கொன்றை. சிவபெருமான் திருமுடி மேலணிந்த கொன்றைப்பூவினைக் காவென்றது மிகுதிபற்றி. தாமரைக்காடு என்ற கம்பராமாயணம் திருவவதாரப் படலம் கருதுக. பின்னை - தங்கை; என்றது கங்கையை. கங்கையும் உமையும் மலையரசன் மகளிர் என்பர். அம்முறை பற்றியும் சிவபெருமானுக்கு இரண்டாமனைவி யென்பது பற்றியும் கங்கை உமைக்குத் தங்கையெனப்படுவள். கொன்றைப் பூவோடு கங்கை மேற்கொள்ளப்பட்டிருத்தலைக் காவில் மறைய வைத்திருக்கின்ற மனைவி யென்றது தற்குறிப்பேற்றம்.

கங்கையை உமை அஞ்சிப்பாராதிருத்தற் பொருட்டுப் பாம்பு வைக்கப்பட்டிருப்பினும் என்றதுந் தற்குறிப்பேற்றம், ஆனும் - ஆயினும். மனையற மகள் - உமை. காஞ்சிபுரத்தில் முப்பத்திரண்டறமுஞ் செய்தலின். நுதல் - புருவம். அறிதுயில் - சமாதி நிட்டை. அறிஞர் - ஞானிகள். நுதல் - புருவம். நடுவண் ஆறு ஆதாரங்களுள் ஆஞ்ஞையெனப்படுவது. இணை - இரண்டு. விழியும் என்னும் உம்மை தொக்கது. நுதல் நடுவண் விழிசெருகுதல், பிரத்தியாகாரம் எனப்படும் யோகாங்கம். அடைசியென - செருகினாற்போல. குயில் என்றது உமையாளை. இது உமைக்குக் குரலினிமையும் நிறமும் என்னும் ஒப்புமைபற்றி வந்த உவமையாகு பெயராகிய உருவகவுயர்வு நவிற்சியணியாதலன்றியும் சிவபெருமான் கட்டளையாற் குயிலாய்ப் பிறந்து ஆயிரம் யாண்டு கூவித் திரிந்தாள் என்னும் புராண கதையும் உண்மையின் இயற் பெயருமாம். அவவம், பெயரெச்ச வினைச்சொல். அவா என்பது குறியதன் கீழாகார வீற்று அஃறிணைப் பெயராதலின் அவ எனக்குறுகி உகரச்சாரியை பெற்று வினை முதனிலையாய் நின்றது. ''அவவுக்கை விடலது மனும்பொருளே” என்னும் பாலைக் கலியினும் அவா, அவவு என நின்றது கண்டுகொள்க. சிவபெருமான் யோகம் செய்தல் போலக் காட்டித் தன் கருத்தை உமையாளுக்கு மறைத்ததாகக் கூறியது பொருந்து மாற்றணி (யுத்தியணி) யின் பாற்படும். இயவள் - தலைவன். களவு கற்புநூலாசிரியர் தலைவன் என்றது மிகுதி பற்றிக் களவியல் எனப் பெயர் சொல்லப்படும் நூலை இறையனார் ஆக்கியமை கருதி.

துணியவென்பது தொடங்கிப் படைப்புக் கடவுளைக் கூறுகின்றது. படைப்புக் கடவுளே திருவள்ளுவனாக வந்து முப்பால் நூலருளிச் செய்தனான். ஈண்டுப் படைப்புக் கடவுள் திருவள்ளுவனாராக வுட்கொண்டு புனையப்படும். வள்ளுவனார்க்கு வடமொழியும் தமிழ் மொழியும் இரு மனைவியராகப் படைத்து வைத்துக் கொண்டு, அவருள் வடமொழியைத் தமிழ்மொழியிடம் புறங்கூறித் தமிழ்மொழியின் ஊடல் தீர்த்துத் தமிழ்மொழியைப் புணர்ந்து இன்பம் நுகர்ந்தவாறு பல்பொருட் சொற்றொட (சிலேடை) ருருவக வணியாற் கூறப்படும். துணியவலர் மறைபுணர் - உண்மைப் பொருளைத் துணிந்துணர்தற் பொருட்டு விரிந்து பரந்து சென்ற வேதம் பொருந்திய; எல்லாரானும் ஐயமின்றி யறியப்படுமாறு, பழித்துக் கூறுதலையுடைய களவிற் புணரப்பட்ட. ஆரியமென் என்பதனை என் என்றாவது மெல் என்றாவது பிரித்துக் கொண்டுரைக்க. தொடர்பு - எழுத்துக்களுள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்றற்குரிய பிறப்பையும் ஓசையொற்றுமையையும் உடைய எழுத்துக்கள் தொடர்ந்து நிற்றல். மனைவிக்கு, மணம் செய்து கோடற்குரிய குடிமுறையென்க. எழுத்துத் தொடர்ந்து நிற்றல் தமிழ்மொழியின் மாட்டுண்மையும் வடமொழியின் மாட்டின்மையும் கண்டு கொள்க. ஓகாரம், எதிர்மறைவினாவோகாரம். உம்மை, முற்றும்மை, இதுமட்டுமன்று; இன்னுமுண்டு; அவை வருமாறு என்றவாறு. தொல் - பழமை. நிறை - நிறுத்தல். அஃதாவது ஒரு மொழி முதலிறுதிகளில் நிறுத்தப்படவேண்டும் எழுத்துக்கள் நிறுத்தப்படுதல் - அன்றி ஒரு நாட்டெல்லைக்குள் நிறுத்தல் எனினிமாம். இவையிரண்டும் வடமொழிக்கில்லை; தமிழ் மொழிக்குண்டு. பெண் என்றற்கேற்ப ஐம்பொறிகளைப் புலங்கள் தோறும் சொல்லாமல் தடுத்து நிறுத்தலாகிய கற்புடைமையிலாள் என்றதாகக் கருத்துக் கொள்க. இறை - முன்னங்கை; கடவுள். தொடு - பிடித்த; தொடர்ந்த. கிழமை - உரிமை. கைப்பிடித்து மணஞ்செய்த வுரிமைபற்றி என்னிடம் அன்பாற் கரைந்துருகுகின்றிலள் என்றவாறு. இனிக் கடவுளோடு உயிர்கள் ஆண்டான் அடிமையியைபுடைமை கண்டு அக்கடவுளை நோக்கிக் கருங்கல்லும் கரைந்துருக மனங்கரைந்துருகிக் கூறும் தேவார திருவாசக நாலாயிரங்கள் முதலியன போல்வன வடமொழிக்கில்லாமையும் குறிக்கப்பட்டது. கடிய குரல்வாயினள் - அஞ்சத்தக்க ஆரவாரச் சொற்களைச் சொல்லும் வாயினையுடையளாயிருக்கின்றனள். இத்தன்மையாளும் மனைவியாகக் கொண்டு கூடிவாழத் தகுதியளல்லளாவள் என்றவாறு. இனி உரப்பியும் எடுத்தும் கனைத்தும் முயன்று கூறவேண்டும். அரிய இன்னாத வல்லோசை வடமொழிக்கு மட்டும் இருத்தலும் தமிழ்மொழிக்கு அரிதின் முயன்று கூறவேண்டாது எளிதின் எவ்வுயிர்களானுமியலும் மெல்லிய வினியவோசையே யிருத்தலும் உணர்ந்து கொள்க. சொலல் மிகுநள் - ஒரு பொருண்மேற் கூறியது கூறல், மிகைபடக் கூறல் முதலிய வழுப்பட அடக்கமின்றி ஓயாமல் வாயாடிக்கொண்டிருப்பவள். இப்பெற்றி வாய்ந்தாளும் வாழ்க்கைத் துணைவியாதலிலள். இனி வடமொழிக்கட், கற்பார் கற்றற்கு மனங்கொள்ளாதவாறு நூறாயிரம் பத்து நூறாயிரம் முதலிய தொகையளவான பாக்களையுடைய பாரத முதலிய செய்யுட்கள் மிக்கிருத்தலும் தமிழ் மொழிக்கட் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினுடைய மக்கட் பிறப்பினருமைக்குத் தக்கவாறும் கற்றற்கு உள்ளம் மடிகொள்ளாதவாறும் ஏறக்குறையப் பன்னீராயிரத்திற்கு மேற்போகாத தொகையளவான பாக்களையுடைய செய்யுட்களே யிருத்தலும் அவற்றுளெல்லாம் இடைச் செருகலை யொழித்து ஆராயிற் கூறியது கூறல் முதலிய வழுக்கள் காணப்படாமையும் அவற்றுக்கு மாறான சுருங்கச் சொல்லல் முதலிய மாண்புகளே காணப்படுதலும் ஆராய்ந்து கொள்ளப்படும். அவள் என்றது வடமொழி மாதராளை: தோளைப் புணையாகத் தழுவல் செய்யேன் என விரிக்க. தழுவலன் - தழுவேன் என்றது இனி வடமொழி உலக வழக்காற்று மொழியாய் வாராது என்பதனையுட்கொண்டு. அதனால் என்பது இசையெச்சமாக விரித்துரைத்துக் கொள்க. துனியல் - ஊட வேண்டா; எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ஈரடிப்பாற் குறளை மொழிபு என்பது பல்பொருட் சொற்றொடர். (சிலேடை) மனைவிக்கேற்ப இரண்டு காலடியின்கண் வீழ்ந்து வணங்கிப் புறஞ்சொற்சொல்லி; யெனவும் தமிழிற்கேற்ப இரண்டு பாவடிகளையுடைய, முப்பாலையுணர்த்தும் குறள் வெண்பாவாலாகிய திருக்குறள் என்னும் நூலைச்சொல்லி யெனவும் உரையுரைக்க. மொழிபு சொல்லி, நால்வாய் எனவியைக்க, படைப்புக் கடவுட்கு நான்கு முகமுண்மையின் நால்வாய் என்பது கூறப்படும், துவர் - பவளம் செம்மை நிறம் எனினுமாம். இதழினையுடைய வாய் என்க. நறா - தேன். சோர்தர - சொரிய நால்வாயும் என்னும் முற்றும்மை தொக்கது. சோர்தர மொழிபு எனக்கூட்டு. நால்வாயுந்தேனைச் சொரியச் சொல்லி என்றவாறு. தமிழ்மொழியாகிய துணைவியின்; தோள் என இயைக்க. இன்பம் - காவின்பம். ஆர் -நிறைந்த; பொருந்திய வெனினுமாம். துணைவியின் தோளின்பம் அறமும் பொருளும் எழுவுதலில்லாததாய்க காதற்சுவை நிறைந்துள்ளது. எனவே வடமொழியாளின் தோளின்பம் அறமும் பொருளும் வழுவியதும் காதற்சுவை நிறையாதது மாயிற்று என்பது பெறப்படும். அகத்திணையியல் என்னும் நூல் தமிழ்மொழிக் கண்ணேயே சிறந்து காணப்படுதலும் வடமொழிக்கண் அங்ஙனம் காணப்படாமையும் உலகமறியும். அறம் பொருள் இன்பமெனவே திருக்குறளிற் கூறப்படும் முப்பாலும் பெறப்பட்டன, கடவள் - பிரமதேவன். துனியலெனச் சோர்தரக் குறளை மொழிபு தோள்நுகர் கடவுள் என முடிக்க. தணியும் - காமம் முதலிய குற்றங்கள் குறைந்து அடங்கிய. தணியு மனமாகிய மணையுழையென மாறிக் கூட்டுக. மணை - வீற்றிருக்கும் பலகை. உழை - ஏழனுருபு. அவர் - முற்கூறிய கடவுளர் மூவர். சினை - கொம்பு. தளிரடி - தளிர்போலச் சிவந்து மெல்கிய திருவடிகள். வைகறை - துயிலெழும் விடியற்பொழுது, தலைகொடு - தலையால், தலைகொடுதாழ்தும் என்க. தகையினின் - அழகினால். அணங்கும் - வருத்தும்; "தகையணங்குறுத்தல்" என்னுந் துறைப் பெயரும் ஈண்டுக் கருதற்பாலது. மின் கொடி - மின்னலொழுங்கு. புள் - தினைக்கதிர்மேய வரும் கிளி முதலிய குருவிகள், கடி- ஓட்டும். தழல் - குருவியோட்டும் கருவிகளுள் ஒன்று.

"தழலுந் தட்டையும் குளிரும் பிறவும், கிளிகடி மரபின'' என்பது பெருங்குறிஞ்சி. தழலொழிய - தழலைப் புடையாமல். எறி - வீசியோட்டும். கவணெறியென மாறிக் கவணால் வீசியோட்டும் என விரிக்க. தழல் - நெருப்பு. குரு - நிறம் வாய்ந்த. மணி மாணிக்கக் கற்கள். இவை கதிர்காம மலை படுவளம்.
''கல்லிற் பிறக்குங் கதிர்மணி'' யென்பது நான்மணிக்கடிகை. தலைமை புனையிமையவர் என்றது கீழ்பால் முதலிய எண்பாற் காவற்கடவளரை, கையுறை - காணிக்கைப்பொருள். பராய் - வாழ்த்தி. அருள்தழையவென மாறுக. இழிதரல் - வானுலகினின்றுமிறங்கி வருதல். அரூள் - முருகக் கடவள் திருவருள். தழைய - தம்பால் மிகுதற்பொருட்டு. தாழ் - கீழ் வீழ்கின்ற; இடப்பொருட் பெயரொடு முடிந்த பெயரெச்சத் தொகை. புனங்காக்குங் குறச்சிறுமியராற் கவணில் வைத்து எறியப்பட்டு மேற்போன மணிக்கற்கள் தாழ்கின்ற கதிர்மலையென்க. இமையவரும் மிக்கவொளி யுடையராதலின் மாணிக்கக்கற்கள் வீழ்தல் இமையவர் கீழிறங்கு தலையொக்குமாயிற்று. இனிது - இடையூறின்றாக. சார்பு - துணை.

"அறத்திற்கேயன்புசார் பென்பவறியார், மறத்திற்கு மஃதே துணை'' யென்பது முப்பால். அருளாகிய சார்பென்க. ஈண்டு அருள், முக்கடவுளர்க்கும் மன்னுயிர்களைத் துன்பம் தீண்டாதவாறு காக்க வேண்டும் என்றெழும் இரக்கம். அதனைப் பெறுதலாவது: உள்ளவதனை இழவாமற் காத்தோம்பல். பெறுக: வியங்கோள், வேண்டிக்கோடற் பொருண்மைத்து; பெறவேண்டும் எனவுரைக்க. பெறுக என்னும் வியங்கோட் பயனிலைக்கு அவர் என்பது இசையெச்சவெழுலாய். இனி வாழுமவர் என்பதனை யெழுவாயாகக் கொண்டு அவா, அருட்சார்பினைப் பெறுவாராகவெனப் பொருளுரைத்து, அதன் பொருட்டு அவருடைய அடியில் என அதன்பொருட்டு என்பதும் அவருடைய என்பதும் இசையெச்சமாக வருவித்துரைக்கப்படும் எனக்கொள்ளினுமாம்.
----------

2. பொன்னி - காவிரியாறு அம், அழகுமாம், சாரியையுமாம். கொள்கலம் - கமண்டலம், குப்புறிய - தாவிக்கவிழ்ந்துருளுதற்கு. பொள்ளென, விரைவுக் குறிப்பிடைச்சொல் குறுகு – வந்தடைந்திருந்த. பறவை - காக்கை; என்றது யானை முகக்கடவுளை. யானைமுகக்கடவுள் இந்திரனுடைய சீகாழிப்பூந்தோட்டம் அழிந்து போகாது செழித்தற்பொருட்டு அவனுடைய வேண்டுகோளாற் காக்கைவடிவமெடுத்துப் போய்க் குடகுமலையில் வந்திருந்த அகத்திய முனிவருடைய கரகத்தினுள் இருந்த காவிரி நீரைக் கொட்டிக்கவிழ்த்து யாறாகப்பெருக்கெடுத்தாச் சீகாழிப் பூந்தோட்டத்திற்கு அந்நீர்போமாறு செய்தவரலாறு கந்தபுராணத்து அசுரகாண்டத்துப் பெறப்படும். புகார் -காவிரிப்பூம் பட்டினம். பொருநன் - அரசன். அவன்: கரிகாற்சோழன். இவனுக்கு ஐயனார் செண்டுப்படை கொடுத்ததனைக்

“கச்சிவளைக்கச்சி காமக்கோட் டங்காவன்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு” எனச்

சிலம்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்தகாதையுரையில் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய மேற்கோள் வெண்பாவான் உணர்ந்து கொள்க. உலாப்புறம்--திருவுலாப்புறம் என்பதொரு நூல் இது ஞானவுலாவெனவும் ஆதியுலாவெனவும் தெய்வீகவுலானெவவும் வழங்கப்படும். இது சேரமான் பெருமாள் நாயனாரால் அருளிச் செய்யப்பட்டு நம்பியாண்டார் நம்பிகளாற் பதினொன்றாந்தொகைத் திருமுறையிற் கோக்கப்பட்டுள்ளது. இஃது அந்நாயனாராற் சிவபெருமான் திருமுன் கயிலைமலையிற் களமேற்றப்பட்டதனை ஆண்டுக் கேட்டுக்கொண்டிருந்த கடவுட் சாத்தன் கொண்டுவந்து திருப்பிடவூரில் அந்தணர்கட்கு வெளிப்படச்சொல்லிக் கொடுத்தருளிப் போயினான் என்னும் வரலாற்றினைச் "சேரர்காவலர் விண்ணப்பஞ்செய் தவத்திருவுலாப்புறமன்று, சாரல் வெள்ளியங்கைலையிற்கேட்ட மாசாத்தனார் தரித்திந்தப் பாரில் வேதியர் திருப்பிடவூர்தனில் வெளிப்படப்பகர்ந்தெங்கும், நாரவேலை சூமுலகினில் விளங்கிட நாட்டினார் நலத்தாலே” என்னுந் திருத்தொண்டர் புராணத்து வெள்ளானைச் சருக்கத் திருப்பாட்டான் உணர்ந்து கொள்க. உய்த்த - கொண்டுவந்து கொடுத்த காரி - மாசாத்தன்; கரியோனாதலின். வள்ளல் - பெருங்கொடையாளி. உன்னி - (தனக்குத் தகுதியாகக்) கருதி. வள் – அழகிய; மறை - வேதம். ஞாளி – நாய்; ஊர் – ஏறிச்செலுத்துகின்ற; காடுகாள் - மாரியம்மை. காடுகிழாள் என்பதன் மரூஉ; காடுகளுக்கு உரியவள் என்றவாறு. இவள் வைரவக்கடவுள் தாய். உம்பர் - தேவர். ஆகுபெயர். உம்பர் வேள்வி - தேவர்களைக் குறித்துச்செய்யும் வேள்வி. உண (வேட்போன் மந்திரமூலமாகக் கொடுக்கும் தனக்குரிய அவிப்பாகத்தினை) உண்ணுதற்கு. உம்பல் - யானை. இழி - இறங்கிவருகின்ற. தண்பணை - மருதநிலம். கிழவன் - உரியோன். மா - திருமகள், மாவின் நாத்தூணங்கையாள் என்க. மானுழை - உழைமான்; இருபெயரொட்டு மானுழையினை ஊர்தியாகவுடைய நாத்தூணங்கையாள் என்க. நாத்தூணங்கை - கணவனுடன் பிறந்தான். ஈண்டு நங்கையென்பது புதல்வன் மனைவிக்குக் கூறும் முறைப்பெயரன்று: சிறந்த பெண்பாற்பொதுப்பெயர். நாத்தூணாகிய நங்கையென விருபெயரொட்டாக்குக மகன் மனைவி பெயராகிய நங்கையென்பதும் கணவனுடன் பிறந்தாளுக்கு வழங்கப்படுதல் இக்காலத்துக் கொங்குநாட்டு வழக்கு. நாத்தூணாள் என்பது இக்காலத்து உலகவழக்கிலுமிண்டு. திருமகளுக்கு நாத்தூணாள் என்றது பாலைக்கிழத்தியாகிய துர்க்கையை. மதுரையிற் கண்ணனோடு ஒரு வயிற்றில் தேவகிக்குப் பிறந்தாளாதலின். சத்தியின் கூறு என்பது பற்றி அங்ஙனம் கூறியதூஉமாம்.

மன்னி - ஒரு தன்மையாய். நிலைபெற்று எனினுமாம். கலைஞரடியில் மன்னர் முடியை வணங்கச்செய்யுமகடூஉவென்க. ''மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச்செய்வாய்'' என்னும் சகலகலாவல்லி மாலை ஈண்டுக்கருதற்பாலது. மகடூஉ - பெண்மகள். கொம்பர்மகடூஉ - (வஞ்சிக்) கொம்புபோலுமுருவமுடைய பெண் என உவமத்தொகை. நாமகடூஉ - நாவில் வீற்றிருக்கும் மகடூவுவென ஏழாம் வேற்றுமைத்தொகை. வாய்மையென்பது ஆகுபெயராற் செய்யுள் அல்லது நூலையுணர்த்தி நிற்கும். செய்யுள் அல்லது நூலையோதும் அல்லது செய்யும் நாவென்க. நாமகடூஉ - நாமகள். மடிகொண்டு - மடியையின்பமெனக் கொள்ளுதலால் - எனவே பொருள் வருவாய்த்தொழிலை முயலுதலால் என்றதாயிற்று, மிடியாது - வறுமைப்படாமல் - செல்வமுடையராகி யென்றவாறு. முகன் - முகம். போலி. மலர்போலும். கன்னிமாரெழுவராவார்: பிரமணி, நாராயணி, மாயேசுவரி, கௌமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி, என்றிவர் எனப் பிங்கலந்தை கூறும். முப்பான் மூவர் - முப்பத்து முக்கோடிப் புத்தேளிர். அவராவார்: பன்னிரண்டு கோடி ஞாயிற்றோரும் பதினெண்கோடி யுருத்திரரும் எட்டுக்கோடி வசுக்களும் இரண்டு கோடி மருத்துவரும் என்றிவர் என்பர். மாப்பிள்ளை - மணவாளன். காக்க, ஈறு தொகுத்தல். ஏகாரம் ஈற்றசை நிலையிடைச்சொல். யாம் தோன்றாவெழுவாய், யாம், பிள்ளையைக் காக்கெனக் காலைதொறும் மாலைதொறும் இவர்தமைக் கருதி வழிபாடு செய்வாம் என வினை முடிக்க.
--------

3. பாண்டியர் வளர்த்த; ''மருவுமுத்தமிழை முன்னாள் வளர்த்த பாண்டியரேபோல'' என்பது நிகண்டு சூடாமணிச் சிறப்புப்பாயிரம். முக்கழகம்: முதலிடைகடைத்தமிழ்ச் சங்கங்கள். தொண்டு - ஒன்பது. ஒன்பதாகிய சுவையாவன; நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, நடுநிலை, என்பனவாம். இவற்றுள் இரக்கமும் துன்பமும் அழுகையெனப்படும். இளிவரலெனினும் இழிப்பு எனினும் அரு வருப்பெனினும் ஒக்கும். மருட்கையெனினும் வியப்பு எனினும் ஒக்கும். பெருமிதம் எனினும் வீரம் எனினும் ஒக்கும். சுவையை நுகரும் அடிகள் என விரிக்க. அடிகள் என்றது அகத்தியனாரை.

பண்ணல் முதலாக ஆயப்படும் இருவகை எண்டொழில்களாவன: பண்ணல் முதலியவெட்டும் வார்தல் முதலிய வெட்டுமாம். அவற்றுட் பண்ணல் முதலிய வெட்டாவன: பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்பொக்கு என்பனவாம். ஏனையெட்டாவன: வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடையென்பனவாம். இவற்றின் விரிவெல்லாம் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் விளங்கவுணரப்படும். ஈண்டு எடுத்துரைப்பிற் பெருகும். இவை யாழ்நரம்பின் கண் இசைமீட்டற்குரிய தொழில்கள். உய்த்து - (யாழ்நரம்புகளிற்) செலுத்தி. பாலையாழ் என்பது ஒருவகை யாழ்ப்பண்ணுக்கு ஆகுபெயர். அதன் வகையேழாவான: செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை யென்பனவாம். பாலையாழ், நாற்கூற்றுப் பெரும்பண்களுள் ஒன்று. இது பண்களுட் சுவைமிகுதியும் சிறப்புமுடையது என்பர். இதன் விரிவைச் சிலப்பதிகார அரங்கேற்று காதையுரைகள் முத லிய வற்றிற் கண்டு கொள்க. கொளுவி - மூட்டியெழுப்பி. (தொடங்கிவாசித்து) செல்வி -தேவசேனை நாய்ச்சியார். அரமகளிர் - தேவவுலகத்துப் பெண்கள். வேள் - முருகக்கடவுள். புலமை - கல்வியறிவு. விறல் - வெற்றி. மிசைந்து இசைக்கும் இசை - (திறத்தைப்பாடுங்கால்) அனுபவித்துப்பாடும் இராகப்பாட்டு. உய்த்துக்கொளுவிப் பாலையாழ்ப்பண்ணில் திறத்தையிசைக்கும் இசையை விழைந்து என இயைத்துக்கொள்க. முருகவேள் தேவசேனை நாய்ச்சியாரை மணமுடிக்கப்போவதாகக் கேள்வியுற்றபொழுது தோழிகளாகிய மற்றைத் தெய்வப்பெண்கள் தேவசேனை நாய்ச்சியாரிடத்து அவருடைய மாப்பிள்ளையாருக்குரிய புலமையும் அருளுடைமையும் வனப்புடைமையும் போர்வெற்றிப் பேயாண்மையும் என்னும் சிறப்புப் பண்புகளை எடுத்து விளக்கிக் கூறித் தேவசேனை நாய்ச்சியார்க்கு உவகையும் நாணமும் மிகச்செய்ததனைப் பாலைப்பண்ணிற் பாட்டாகப்பாடி முருகக்கடவுள் கதிர்காமத் திருக்கோயிலிலிருந்து முருகனை உவகை மிகுவித்துத் தாம் இன்பவடிவமாதற்பொருட்டு அகத்தியனார் யாழ்வாசிக்கும் இசையை விரும்பியென்றவாறு. யானைகள் யாழிசைக்குருகிவயப்படுதல் "கைவலத்தியாழ்வரை நின்றது களிறு'' என்பதனானும் பெருங்கதைச் செய்யுளிற் கூறப்படும் உதயணன் வாலாற்றானும் பெறப்படும். கறையடி - யானை. இளக - உருக. இன்துறுகல் - (படுத்து உறங்குதற்கு) இனிய குண்டுக்கல். உழுவை - புலி, உழுவைமான்; உம்மைத்தொகை. ஒன்றற்கொன்று பிறப்புப்பகையாகிய அவ்விரண்டு விலங்குகளும் முருகக்கடவுள் திருவருளாற் பகைமையொழிந்து நட்புற்று ஓரிடத்து உறங்குவனவாயின. அவ்விரண்டும் யானையைக் குண்டுக்கல் என்று ஒப்புமைபற்றி மயங்கினவென்றது மயக்கவணி. மூரிவிடுதல் - துயின்ற சோம்பலைப் போக்குதற்கு உடலை நெளித்து நிமிர்த்து ஓசைவரச்செய்தல்; ஏந்தல் - தலைவன். ஊண் - இன்பதுன்ப நுகர்ச்சி. திகழும் - விளங்கும். ஊணாற்றிகழும் என விரிக்க. அஃதாவது: வினைப்பயனுகர்ச்சியால் ஆணவமலந்தேய அறியாமை குறைந்து அறிவு விரிதல். பான்மை - வகைமை. மூவகை யுயிர்கள்: ஓரழுக்குயிர், ஈரழுக்குயிர், மூவழுக்குயிர். என்பனவாம். வெளியில் என்பதற்கு ஆதாரமின்றியென்பது கருத்து. மன்னுயிர்களாகிய பிறவற்றிற்குப் பேரின்பம் விளங்குதற்குக் காரணமும் இறைவனாகிய தனக்குப் பேரின்பம் விளங்கிநிற்றலின் காரியமுமாகிய கூத்து என விரிக்க. கூத்து - படைப்பு முதலிய ஐந்தொழிலாகிய விளையாட்டு வரிக்கூத்து. தில்லைவெளியிற் கூத்து எனின் உருவகவணியாம். மறைத்தலும் அருளலும் உயிரின் கண்ணும் ஏனைப்படைப்புக்காப்பு அழிப்பு மூன்றும் உலகின் கண்ணும் நிகழ்த்தப்படுமாயினும் உலகோடு உயிர்க்குள்ள ஒற்றுமை நயத்தான் உயிர்தொறும் ஐந்தொழிற்கூத்து நவிலும் எனக்கூறிற்று. நவிலும் - பயிலும். என்றது உயிர்கள் கட்டுண்டு மயங்குங்காலும் வீடுபெற்று விளங்குங்காலும் ஒப்ப இடைவிடாது செய்யும் என்றவாறு; இஃது இன்பக்கூத்து எனப்பட்டதனால் இஃது இறைவனாற் செய்யாது செய்யப்படும் எனவும் இயற்கையெனவும் அதனால் இறைவற்கு இளைப்பும் வருத்தமும் ஓய்வும் கட்டும் உண்டாகாவெனவுந் தெளிக. ஒன்றிரண்டாய்; என்பதனை ஒன்று இரண்டாய் எனவும் இரண்டு ஒன்றாய் என மாறியும் இருமுறை இரட்டுறமொழிந்து இருபொருள் உரைத்துக்கொள்க. இறைவனுடைய இந்நிலை, ஒற்றுமையுமாகாது வேற்றுமையுமாகாது அவ்விரண்டும் விரவியதொரு நிலையாமென்க. ஒன்றாய் - வேறன்றி. இரண்டாய் - வேறாய். இறைவன் சத்தியோடு வேறன்றி நின்றே வேறாயும் வீடுபெற்ற வுயிர்களோடு வேறாய் நின்றே வேறன்றாயும் நிற்பன் என்பதனைக் கேட்டு ஆராய்ந்து தெளிந்து நுகர்க. உலகிற்கு இடம் உயிர்களும் - உயிர்கட்கு இடம் இறைவனுமாதலின் இறைவன் உலகினை நேரே சார்ந்து நிற்றலின்றி உயிரோடு சார்ந்து நிற்கும் வாயிலால் உலகினையும் சார்ந்து நிற்குமுறைமை தோன்ற உயிரொடுலகு எனக் கூறிற்று. இறைவன் உலகுயிர்களோடு கலப்புத் தன்மையால் அவையேயாயும் பொருண்மையாகிய தன்னியல்பால் அவற்றின் வேறாகியும் அவற்றைத் தொழிற்படுத்துங்கால் அவற்றுடனின்று அவ்விரண்டு தன்மையாயும் பிற்பன். வேறாதல், சிறப்பியல்பு. ஏனையிரண்டும் பொதுவியல்பு. இன்னும் இத்திறம்பலவும் ஈண்டுரைக்கற்பாலவல்லவாம். நவிலுமுதல்; உடனுமாமுதல்; உண்மை முதல் என தனித்தனி கூட்டுக. முதல்வனை உண்மையென்றது ஏனைப்பசுவும் பாசமும் பதியை நோக்கப் பொய்ம்மையாமது பற்றி. முதல் - முன்னைப்பழம்பொருட்கு முன்னைப்பழம்பொருள். உலகத்தோற்றத்திற்கு நிமித்தகாரணம் என்றுமாம். முதல் எனினும் காரணம் எனினும் ஒக்கும். இப்பொருளின்கண் இறைவனுக்கு முதல் என்பது ஆகுபெயரன்று. முதல் ஏந்தலைப் புரந்தருளுக என முடிக்க.
----

4. இறையன் - அரசன். இணை - இரண்டு. மூட்டு - முழந்தாளும் துடையும் பொருந்தும் பொருத்துவாய்ப்புறம். வார்ந்து இருந்து - வளையவிருந்து. நுடங்க - நெளிந்தசைய, வள் – அழகிய; புரை - ஒக்கும். புறவடிக்கு யாமைமுதுகு வடிவுவமம். புறவடிய; உடைமைப் பொருளின் கணின்ற வினைக்குறிப்புப் பெயரெச்சம்; ஈண்டுக்கவடு - கணைக்காலும் புறவடியும் பொருத்து மூட்டுவாய்ப் புறத்தின் நிமிர் வளைவு. இணை யென்பதனைப் புறவடியோடும் கவடி என்பதனோடும் கொண்டுவந்து கூட்டியுரைக்க. கொள – பொருந்த; வாய்ப்ப - நழுவி விழாமல் கொளக்கிடப்பி; வாய்ப்பக்கிடப்பியென்க, தாய்மார் குழந்தைகளைப் புறவடிக்கவட்டிற் கிடக்கவைத்திருந்து நீராட்டுதல் மரபு. தனதாய் என்றது உமாதேவியின் தாயாகிய மலையரசன் மனைவி மேனை எனப்படுவாளை. மணிக்கலன் - மாணிக்கச்செம்பு. (செம்பு - காகம்) பைப்பய வார்ப்பவார்ப்பவென மாறும் அடுக்கு, இடைவிடாமைப் பொருண்மேற்று. உயிர்ப்பு – மூச்சுக்காற்று. எறிய - விடுதற்பொருட்டு. நுதன்மீயகம் - நெற்றியின் மேலிடத்தின்கண். அகம், ஏழனுருபு. வழிநீர் - ஒழுகும் நீர். தகைந்து - தடுத்து. விஞ்சு - மிக்க. பசு மஞ்சள் - சிறு பசுமஞ்சள் என்பதொரு சாதி மஞ்சள். விழுது - மை; என்றது அரைத்த மஞ்சளை. தைவந்து - தடவி. மீண மீள – மீளமீள; அடுக்குத் தொடர். மண்ணி - நீராட்டி. மொக்குள் - நீர்க்குமிழி. வீழ - ஒப்ப. வரு - தோன்றுகின்ற. அறல் - நீர், உகிர - நகம். குழந்தைகளின் கண்கள் பெரியவாதற்கு அவற்றின் முனைக் கீற்றுக்களைத் தாய்மார் தம் நகத்தினால் மெல்லெனக் கீறுதலுமரபென்பர். பிரபுலிங்க லீலையில் இங்ஙனம் சொல்லப்பட்டுள்ளது. ஆடு - அசைகின்ற. கதிர்காம மலைச்சாரலில் திருவெண்ணீறு போல்வதொன்று மண்ணின்கண் விளைதலின் ஆண்டுத் திருவெண்ணீறே மண்ணாம் என்பது கருதி மண் காப்பிட்டு எனக் கூறற்பாலது வெண்பொடிக் காப்பிட்டு எனக் கூறிற்று. விம்முலை - விம்மும் முலை; வினைத்தொகை. வார் - கச்சு, நெகிழ - ஒதுங்கச்செய்து. செய்து என்பது இசையெச்சம். மடுத்து - புகுத்தி, வாரை நெகிழ்த்து முலைக்கண்ணினை வாய்க்குட் புகுத்தியென்க. அமுது - பால். இணைய - இரண்டாகத் தோன்ற. வாழ்ந்திருந்து - மகிழ்ந்திருந்து. அணைக்கண் படுக்கையின்கண். கிடப்ப - படுத்துக்கிடவா நிற்ப. முது - பழைய. கதிரை, கதிர்காமம் என்பதன் மரூஉமொழி. மேலுங்கண்டுகொள்க, கதிரையின் கண் என விரித்துக்கொள்க. மான், ஈற்று மயக்கம். கொஞ்சுமரன் என்க. கொஞ்சுமென்பது நிலப்பெயர் கொண்டு முடிந்தது. கீழ் - ஏழாம் வேற்றுமையுருபு நிழற்கீழ் அணைக்கண் உச்சியினை மோந்து கிடப்பவெனக் கூட்டுக. மொய் - செறிந்த. துகள் - தூசி. துகள்விரல் - தூசிபடிந்த விரல், முகிழ்விரல் - தாமரையின் சிறுமொட்டுப்போலக் குவிந்த விரல், அடங்க - எல்லாம். குழறி - தடுமாறி. விதிர்ந்து - நடுங்கி. சிலை முகில் - ஒலிக்குமுகில்: கை சிலைத்தல் - ஒலித்தல், வில்லையுடைய முகிலெனிற் சிலை வடசொல். கைம்மாறு கருதாது உயிர்களுக்கு உடல் பொறி நிலம் புலங்களைக் கொடுத்தலான் உமாதேவி கைக்கு முகிலுவமமாயிற்று. உய்ப்ப - வாய்க்குட் செலுத்த, வரு - வெளிவருகிற. செவ்வி - பொழுதில். வயிறு குழிய வாய்கூம்ப வழுமென்றது. தன்மை நவிற்சியணி. எழில் - அழகினை. நுகர - அநுபவிக்க. பாவை சிவனோடு நுகரவென வியைக்க. பாவை நுடங்கவார்ந்திருந்து, கிடப்பி, வைத்துத்தகைந்து, தைவந்து, மண்ணி, ஊதி, அகற்றிப் பிளந்து, ஒற்றிச், சுவற்றி, ஊட்டி, இட்டுப் பாராட்டி, வாழ்ந்தமைந்து மோந்து கிடவா நிற்குங்காற் சேய் புகுவிப்பக் குழறி விதிர்ந்து அஞ்சித் துகள்கள் வீசி வெகுளுஞ் செவ்வியில் அழும் எழிலை அவள் தன் கணவனோடு அனுபவிக்க வளர்ந்த நின்னை எனக் கூட்டி முடிக்க. சிவண - ஒப்ப, நன்மகவு, புலமை, அருள், வனப்பு, வெற்றி, புகழ் முதலியன பெறுமகவு. வயிறு வாய்த்து - சூர்கொண்டு, உய - பெற்று உயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டு, இவர் - இங்கு வந்து வாங்கிடக்கும் இக்கற்புடை மகளிர். தொழுவர் - பிள்ளை வாம் வேண்டிக் கும்பிட்டுப் பாடுகிடப்பர். இவர்க்குப் பிள்ளை கிடைத்தற்பொருட்டு என்பது குறிப்பெச்சம். திருவயர்படை - புத்தேளிர் படை. படைத்தலைவன் என்றது சேனாதிபதி என்ற பெயர் விளக்கியவாறாம். கவுணியர் குடிப்புலவ! வென்றது முருகன் ஆளுடைய பிள்ளையாராய் இருதலினால். கவுணியர் என்பது கௌண்டின்யவென்பது சிதைந்த வடசொல் கௌண்டினியர் என்பது ஒரு சிறந்த தவமுனிவர் பெயர். அவருடைய மரபு, கௌண்டினிய கோத்திரம் எனப்படும். கோத்திரம் எனினும் குடியெனினும் ஒக்கும் கௌண்டினியன்: குண்டினிமென்னும் முனிவன் மகன் எனப்பொருள் படும் வடசொல். திருமுருகாற்றுப்படைத் திருவேரகக் காட்சியிற் கூறிய ''இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி'' என்னும் அடியினுரையில் நச்சினார்க்கினியர், ''குடி - குண்டினர், காசிபர் என்றாற்போல்வன'' வெனப் பார்ப்பார் குடிப்பெயர்க்கு எடுத்துக்காட்டாக இக்குண்டினர் பெயரையெடுத்தாளுகலான் இக்குடிப்பெயரின் உண்மையும் பெருமையும் புகழுந் துணியப்படும்.
--------

5. தாழை - தெங்கு, சிதர்தாறு என்க. தாறு - பழக்குலை. தள்ள - விலக. வள் - பெரிய. உளை - வருந்தும். வால் - வெண்மை. வளை - சங்குகள். தட்டு - தடுத்து. களைந்து என்பது தட்டு என வரும்; களைந்து என்பது கட்டு என வருமாப்போல பாக்களிற்றளை தட்டும் என்புழியும் இப்பொருட்டு. கான்று - கக்கி. உகலும் - சிந்த. சூலாலுளையும் வாலியவளைகள் விலகினார் கால்தட்டு முத்தைக்கக்கிச் சிந்தவென்க. தணி - தாழத்தொங்குகின்ற. தலையை நிமிர்ப்பவென்க. சாறு, தலையிடறிச் சிதைந்த மாம்பழச் சாறு. வாயிலே வடியும் பொழில் என்க. ஓவம் - ஓவியம். பைம்மணி - மரகதவிரத்தினம்; பொழிலாகிய மனையெனவுருவகமாக்குக. பொழில்கள் மாணிக்கக் கங்கையாற்றினிருகரையினும் ஒழுங்காகப் பலநிறப்பூக்களோடு இலைகளாற் பசுத்துக் காணப்படுதலின் ஒவப்பைம்மணி மனையெனச் சிறப்பித்துருவகிக்கப்பட்டன. துவர் - செந்நிறம். சால் - அமைந்த. மணி - மாணிக்கவிரத்தினம். இவை மாணிக்கக் கங்கையாற்றினாற் கொண்டுவந்து கரைப்பொழிலில் ஒதுக்கப்பட்டன. அன்றிக் கதிர்காம மலைச்சாரலில் விளைவன வெனினுமாம், சுடர் - விளக்கொளி, எறியும் - வீசும். எறியும் வீசுதற்கு இடமாகுகின்ற; என நான்காம் வேற்றுமைக்கோடற் பொருளில் வந்த பெயரெச்சம் தெருவென்னும் இடப்பெயரொடு முடியும். மனை, மணி, விளக்கினொளி வீசுதற்கு இடமாகின்ற தெருவென்க. மனையின்றொழில் தெருவின்றொழிலாகக் கூறப்பட்டது. மாழை - பொன், தெருநேர் - தெருவையொக்கும். யாறு - மாணிக்கக்கங்கை. தாழ்ந்து நீளச் செல்லுதலானும் இருகரையினும் பொழில்கள், ஓவியந்தீட்டிய, மரகதவிரத் தினத்தாலான, மாணிக்கம் விளக்காக வொளிவீசம் மேனிலை மனைகள் போலத்தோன்றுதலானும் மாணிக்கக்கங்கை மக்கள் மடக்கும் ஊர்த்தெருப்போல்வதாயிற்று. ''யாறெனக்கிடந்த தெரு' வென்பது மலைபடுகடாம். 'யாறு கிடந்தன்னவகனெடுந்தெரு” என்பது மதுரைக்காஞ்சி. கதிர்காமக்கிழவா - கதிரகாமத் திருவூர்க்கு உரியோனே! மழவா - வீரனே! வங்கக்கலிங்கம் - வங்காளநாட்டின் ஒரு கூறாகிய கலிங்கநாடு. மகளார், ஆர்; உயர்வுப் பன்மைப் பொருண்மை குறிக்கு மிடைச்சொல். தவமகள் - முருகன் திருவருளால் அவனுடைய திருவடிப்பேற்றின் பொருட்டு உலக வாழ்வில் வெறுப்புப்பிறந்து துறவுபூண்டு கதிரகாமத்து வீற்றிருந்து முருகனை வழிபட்டு இன்புற்று நோற்றொழுகிப்புகழும் சிறப்பும் பெற்று வாழ்ந்த பாலசுந்தரியெனப் பெயர் வழங்கப்படும் நங்கையார்; இவருடைய வரலாற்று விளக்கம், முதற்கட் சேர்க்கப்பட்டுள்ள கதிரகாம வரலாறு என்னும் கட்டுரைக்கட் பெறப்படுமாதலின் ஆண்டுக்கண்டு கொள்க. மாண்பு - தவச்செயலும் ஞானப்பேறும். நிறுப்ப - அழியாது நிலைபெறச்செய்தற் பொருட்டு, சிங்கள வேந்தன் - கண்டி நாடாகிய, சிங்கள நாட்டின் கூற்றத்தை யாண்டு வந்த வோரரசன். இவன் பெயர் திருவிக்கிரம ராசசிங்கன் என்பது. இவன் இயற்பெயர், கண்ணுச்சாமியென் பது என்ப. இவன் ஓர் ஆந்திரத்தமிழன். இவனே, கி. பி. 1798 முதல் 1815 வரையும் சிங்கள நாட்டையாண்டு வந்த கடை மன்னன். இவனுக்குக் கோட்டை (இராசதானி) கண்டி. இவன் கி. பி. 1815-ம், ஆண்டிற் பிருட்டன் படைகளாற் கைக்கொண்டு காவல்செய்து 1816-ம் ஆண்டில் தமிழகத்துத் தொண்டைநாட்டு வேலூரிற் சிறைப்படுத்தப்பட்டிருந்து கி. பி. 1832-ம் ஆண்டில் இறந்து போயினான் என்பர். இவன் பாலசுந்தரியாருடைய பெயருக்குத் தகவுள்ள கட்டழகினால் ஈர்ப்புண்டு அவர்மேற் காதல்செய்த வரலாற்றினை முன்னுரைக்கட்கண்டு கொள்க. வடமன் ஆரியன். இவன் வடவிந்தியாவினின்றும் கதிர்காமத்திற்குவந்து யாதோவொரு காரணங்கருதி வேலவனை எந்திரமந்திரவலியால் தன்னாட்டிற்குக் கொண்டு போதற்கு முயன்றவொரு தவமுனிவன். கலியாணகிரி யென்பது இவன் பெயர். இவன் வாழ்ந்த காலவரையறை இன்னுந் துணியப்படவில்லை. கலியாணகிரியென்னும் இவன் பெயர், இம்முனிவனே கதிரகாம மலைக்குக் காரணம் பற்றியிட்டு வழங்கியதாய்த் தனக்குந்தானே வழங்கிக்கொண்ட பெயர் போலும். இவனைப்பற்றிய வரலாறும் முன்னுரைக்கட்குறிக்கப் பட்டுள்ளது ஆண்டே விளங்கக்கண்டு கொள்க. இவனால் நிறுத்தப்பட்ட முருக மந்திரவடிவமே கதிரகாமத் திருக்கோயிலில் இப்பொழுது வழிபாடாற்றப்பட்டு வருவது என்பர்.

அக்கோயிலில் இப்பொழுது விக்கிரக வடிவமில்லையாயினும் முருகன் திருவருள் ஆண்டு வெளிப்பதற்குக் காரணம் அம்மந்திர வடிவம் ஆண்டு நிலை பெற்றிருப்பதேயாம் என்பர். அம்மந்திர வடிவமடங்கிய தகடுதான் பெட்டிக்குட் பொதியப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டு வருகின்றது எனக் கூறுகின்றனர். இக்கூறிய வரலாற்றால் அவ்வட நாட்டு முனிவன் கதிரகாமத்திற்கு வருமுன்னரே முருகக்கடவுள் ஆண்டு வீற்றிருந்தருளியது பெறப்படும். பெறப்படவே முன்னிருந்த முருகன் கோயில் எக்காரணத்தாலோ சிதைக்கப்பட்டுப் போனதன் பின்னர் அவ்விடத்திலேயே பின்பு இப்பொழுதுள்ள சிறிய குடிசைக் கோயில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியவரும், மாணிக்க விக்கிரகமும் மறைக்கப்பட்டுப் போயிற்றுப்போலும். இன்னும் இதனை நன்கு ஆராய வேண்டும். பீழை - துன்பம். பெருமிதம் - வீரம். சுவையென்றது ஒன்பது சுவைகளுள் ஒன்றென்றவாறு. பெருமிதச் சுவைக்குக் கடவுள் முருகனாதலின் முருகன் பெருமிதச் சுவை வடிவமாயிருப்பன். சுவையென்றது புனைந்தரையன்று. பொன் உருகுதற்குத்தக ஞானத்தைப் போழல் என்றது தகுதியணி. ஏதுவணிப்பாற்படுப்பர் தண்டியார். இத்தகு தியணியினுள் உருவாக வணிகலத்தலும் கண்டு கொள்க. பிணிமுகம், என்பது முருகக் கடவுளுடைய யானைக்குப் பெயர் அவனுக்கு யானையூர்தியும் உண்டு. யாழிற்பிறவா வின்னிசையென்றது விலக்குருவகம். முறுவல் - பல். முறுவற் சிறுநகையெனக் கூட்டுக. அவிழ்முறுவல் - சோறு போலும் வெள்ளிய சிறிய பற்கள். சிறுநகையைக் கண்டார்க்குப் பிறவி கெடுமாதலிற் சிறநகை பிறவிக்குப் பகையாதற்றன்மை யுடைத்தாயிற்று. முகிழ் முகிழ - சிறிது சிறிதாக அரும்பிவெளித் தோன்றிவர. சீர்ப்ப - வாய்ப்ப. திருமகள் - செல்வ மகள். திருமகளாகிய வள்ளி. வள்ளியைப்பெற்ற மானாக வந்தது திருமகளாகிய இலக்குமியாதலின் வள்ளி திருவின் திருமகளாயினள். இனி வள்ளி முற்பிறப்பின்கண் திருமாலின் வலக்கண்ணிற் பிறந்திருந்தவாறே இப்பிறப்பின்கண் வந்து தோன்றுதலால் திருமகளுக்கு மகளென்றவாறுமாம். இனித் திருவின் திருமகள் என்பதற்கு எல்லார்க்கும் நல்ல ஆக்கத்தைக் கொடுக்கின்ற திருமகளாகிய கடவுளுக்கும் தான் ஆக்கங் கொடுக்கின்ற திருமகளாகிய கடவுள், வள்ளியென்றதாகக் கொண்டு வள்ளியை இலக்குமிக்கும் இலக்குமியாக்கித் திருவினுடைய திருவாகிய மகள் என விரித்துப் பொருளுரைப்பினுமாம். திருமாலுக்கும் இடுக்கண் செய்த சூரனைக் கொன்று திருமாலையும் வாழ்வித்துக் காத்தலின் முருகனால் திருமாலின் மனைவியாகிய திருமகளும் வாழ்ந்தாளாயினள். ஆகவே முருகனுடைய சத்தியாகிய வள்ளி திருமகளுக்குந் திருமகள் என்பது பொருந்துமாதல் கண்டு கொள்க. அன்றி முருகனைப் பரசிவமாகக் கொள்ளுங்கால் வள்ளி பராசத்தியாமாதலானும் வள்ளி திருமகளுக்குத் திருமகள்; எனக் கூறப்பட்டனள் எனினுமாம். செங்கோவென்பது செங்கீரையென்பதன் மரூஉமொழி. செங்கீரையென்பது இசையெச்சம். செங்கீரையாடுக வென்றதெனக் கொள்க.
----------

6. எட்டுப்பத்து என்பது உலகவழக்கு நவிற்சியணியாய்க் குறிநிலையுமாயிற்று, ஐந்தாறு என்றல்போல் எட்டுப்பத்து என இணைத்தும் உலகம் வழங்குதல் ஒலித்தது. பிரமதேவனுக்குக் கையும் விழியும் எவ்வெட்டு. உருத்திரனுக்குப் பப்பத்து. அவை உணர்தற்கும் உதவற்கும் போதாதனவாம் என்றவாறு. பன்னிரண்டு கைவிழியுடைமையான் முருகன், அவரினுமிக்கான் என்றவாறு. சாலுமோ - போதுமோ; ஓகாரம் எதிர்மறை. போதாவென்றவாறு. பன்னிரண்டு; னகரவொற்றுத் தொகுத்தல். பன்னிரண்டுநீள் என்னும் அடைமொழியை விழிக்கும் கூட்டிக் கொள்க, ஐது-அழகியதாகிய. சான்று - மேற்கோள் (சாட்சி) ஆலும், ஓவும் அசைநிலையிடைச் சொற்கள். என்ப; வென்பதனையும் அசைநிலையாக்கினுமாம், விளியாத - கெடாத. இருண்மை - ஆணவ மலத்தின் தன்மை. அஃதாவது: அறியாமை. வற்று - வல்லது. வேல், ஞானசத்தியைக் குறிக்குமாதலின் இருண்மை, தீண்டாமை குறித்துக்கொள்ளப்படும். வேறு, ஏனையென்னும் பொருட்டு. ஈரியல்பும் என உம்மைமாறுக. எனவே ஞானசத்தி யொழிந்த இரண்டு சத்திகளை ஈரியல்பு என்றவாறாயிற்று. இரு மடந்தைமார்: வள்ளிநாச்சியாரும் தேவசேனை நாச்சியாரும். வள்ளி நாச்சியார் இச்சாசத்தியும் தேவசேனை நாச்சியார் கிரியாசத்தியுமாகக் கொள்க. இரு மடந்தைமாரும் ஈரியல்பாம் என முடிக்க. மாரும் என்னும் முற்றும்மை தொக்கது. ஈரியல்பும் என்னும் முற்றும்மையைக் கூட்டிக்கொள்ளினுமாம். இங்ஙனம் வேற்படையும் மனைவியரிருவரும் ஞான சாத்தியும் ஏனையிரண்டு சத்தியுமாம் என்பது.

"ஞானசத்தியினால் வைகு நவையறு சிவன்பாகத்தி
னானபேரிச்சா சத்தியரி துசெய் கிரியாசத்தி
யூனமின் மூன்றுமொன்றா யுயர்வுடனி ருத்தல்போல
மானவேற் படையான சிந்து மாநகர்வ திந்தான்மாதோ

என்னுந் திருச்செந்தூர்த் தலபுராண வள்ளியம்மை திருக்கலியாணவத்தியாயச் செய்யுளானும்.

''கல்லகங்குடைந்த செவ்வேற்கந்தனோர் தருவதாகி, வல்லியர் கிரியை ஞானவல்லியின் கிளையாய்ச்சூழப், பல்லுயிர்க் கருளைப்பூத் துப்பவநெறி காய்த்திட்டன்பர், எல்லவர் தமக்கு முத்தியிருங்கனியு தவுமென்றும்," என்னுங் கந்தபுராண வள்ளியம்மை திருமணப்படலச் செய்யுளானும் பிற மேற்கோள்களானும் பெறப்படும். வள்ளியை ஆன்மாவென்பார்க்குத் தேவசேனையாகிய கிரியாசத்தியோடொத்த இச்சாசத்தி வேறுவேண்டுமாதலானும் அஃதின்மையானும் வீடுபெற்ற ஆன்மாவைப் பக்கத்துவைத்து வேறுபாடு தோன்றக்காட்டி நிற்றல் பொருந்தாமையானும் பொருந்துமேல் சிவபெருமானுக்கும் வீடுபெற்ற ஆன்மாவோடு வேறுபடத்தோன்றி என்ற வடிவங்காட்டி வழிபடவேண்டுமாதலானும் அங்ஙனம் வழி படக்காணாமையானும் வீடு பேற்றின்கண் ஆன்மாச்சிவத்தை நுகர்தலன்றி சிவம் ஆன்மாவை நுகருமென்றல் கூடாமையானும் அங்ஙனம் நுகருமேல் அஃது ஆன்மாவை நுகர்வித்தா லாமாதலன்றித் தான் நுகர்தலாகக் கொள்ளப்படாதாதலானும் வேட்டுவக்கிழவனை மணஞ்செய்து கொள்ள வள்ளி உடம்பட்டு விட்டுப் பின்னர் முருகவடிவத்தை மணஞ்செய்துகொண்ட தனை யுய்த்துணருங்காற் கற்புக்கு இழுக்கு நேருமாதலின் வள்ளி இயற்கையாகவே முருகனுக்கு வாழ்க்கைப்படவேண்டும் என்னும் வேண்டுகோளும் முருகன்பாற் பேரன்பும் உடையளாயிருந்திருக்க வேண்டும் என்பது தெரிதலின் அவளை வலிந்து ஆட்கொள்ள வேண்டியதில்லையாதலானும், முருகக்கடவுளை நினைந்திருப்பவளை வேட்டுவன் முதலிய வடிவத்தால் மயக்குதல் கூடாமையானும் கிரியையின்றிச் செய்யுமணம் இச்சையினாலாவ தாதலிற் களவுமணம், வள்ளி இச்சாசத்தி யென்பதனைக்காட்டி நிற்றலானும் முருகன், வேட்டுவன் முதலிய வடிவத்தால் வாராது தன்னியல்பால் வள்ளிக்குக் காட்சியளிப்பானாயின் அவள் உடனே தன்னை மணஞ் செய்துகொள்ள வுடம்பட்டு விடுவள், அதனாற் களவொழுக்கச் சுவை நிகழ்ந்து வள்ளி இச்சாசத்தியென்பது தோன்றா தாதலானும் வள்ளி பக்குவமில்லாத ஆன்மாவாயின் அவள் போலும் இன்னும் பல மகளிரை அவ்வாறு மணஞ்செய்தவரலாறு சொல்லப்பட வேண்டுமாதலானும் அங்ஙனம் சொல்லப்படாமையானும் களவுமணம் ஆன்மாவைக் கடவுள் ஆட்கொள்ளுமுறையோடு ஒருபுடை யொப்புமையுடையதாதலின் திருக்கோவை முதலிய செய்யுட்களை நுவலா நுவற்சியணி பற்றிப் பெரியோர்கள் கூறினார்கள் எனத் தெரிதலானும் பெண்களுக்கு இன்றியமையாத கற்பு என்னும் அறம்கெட ஆட்கொள்ளு முறையாகிய ஞானத்தை யேற்றுதல் கூடாமையானும் கூடுமேல் கற்பென்பது இறைவன் சொல்லியருளிய அறம் எனப்படாமையானும் முற்கூறியவாற்றால் வள்ளி கடவுள் நினைவின்றி மயங்கியிருந்தாள் என்பது பொருந்தாது எனப் பெறுதலிற் குறவரை ஐம்புல வேடரெனல் பொருந்தாமையானும் அவர்களும் முருகனை வழிபடுந்தன்மை யுடையராதலானும் ஐம்புலவேடராயின் வள்ளியை முருகனுக்கேயல்ல வேறியாருக்கும் மணஞ்செய்து கொடுக்கக் கடவால்லராதலாதனும் அங்ஙனம் சொல்லுதல் பொருந்தாமையானும் முருகனும் தங்களைக் கேளாது வள்ளியைக் கொண்டவதற்கே மகண்மேற்கொண்ட வுலகியற் காதலால் வேடர் முருகனோடு பொருதார் எனச் சொல்லுதலன்றி வள்ளியை மணஞ்செய்து கொண்டதற்குப் போர்பொரவில்லை யாதலானும் முருகனும் அழகிய செல்வ வேட்டுவக்கோலத்தோடு வள்ளியினிடம் வந்து கேட்டதுபோலக் குறவரிடம்போய் வள்ளியை மணஞ்செய்து தரவேண்டும் எனக்கேட்டிருப்பானாயின் அவர்களே வள்ளியை முருகனுக்கு மணஞ்செய்து கொடாமலிருக்க மாட்டார்களாதலானும் அங்ஙனம் கொடுக்கத்தக்கவரை ஐம்புல வேடர் என்றல் தகாமையானும் அவரும் வள்ளியைக்காத்து வளர்த்ததன்றி முருகனை வழிபடச்செய்யாமல் வள்ளியை மயக்கவில்லையாதலானும் அங்ஙன மயக்குதல் குறவர் சாதி வழக்கமன்றாதலானும் தம்பிள்ளைகளை முருக வழிபாடு செய்யப் பயிற்றுதலே அச் சாதி வழக்கமாதலானும் முன்னோரும் வள்ளியை ஆன்மாவெனக் கூறாமையானும் இச்சாசத்தியெனவே கூறுதலானும் பிறவாற்றானும் வள்ளியை ஆன்மாவென்றல் பொருந்தாமை கண்டுகொள்க. கோழியு மயிலு முறையே ஆகமஞானமும் அனுபவஞான முமாகிய மறைமொழியும் திருவருளுமாம் என்றது நிரனிறையணி. ஏழையர் – பிறமதத்து மாக்கள்.
----------

7. இகலும் - மாறுபடும். இணை - இரண்டு, இயன்று பயில் - சொல்லிப்பழகிய. அஞ்ஞை - அன்னை. கண்ணியாகிய அன்னையென்க. செம்மல் - மகன். தொகல் -கூடுதலையுடைய துயில் - சுழுத்தி மீத்துயில் - துரியம். துயின்மீயென்பது மீத்துயில் என நின்றது. கண்மீயென்பது மீகண் என வருமாப்போல. மீமிசைத்துயில் - துரியாதீதம். துயின் மீமிசையென்பது மீமிசைத்துயில் என மாறிற்று. துயிற்குமேலிற்குமேல் என்றவாறு; அஃதாவது. சுழுத்தியவத்தைக்கு மேலாகிய துரியாவத்தைக்குமேல் எனப்படும் துரியாதீதாவத்தையென்பதாம். இருண்மை - சேவலாவத்தை, மருண்மை - சகலாவத்தை. தூய்மை - சுத்தாவத்தை. வாளாதிருந்த – சும்மாவிருந்த; தொன்று - முன். வெண்குன்று - கயிலாயமலை. குன்றினங்கண - குன்றினிடத்து, பகலிரவுமாற - பகற்பொழுது இராப்பொழுதாக வேறுபட, பச்சையென்றது உமையினிறத்தை. மறுபால் - முரு கக்கடவுட்கு வலப்பக்கம். வெள்ளை யென்றதி சிவபெருமான் நிறத்தை. செக்கர்வான் - அந்திமேகம். செம்மையென்றது சிவனுக்கும் உமைக்கும் நடுவேயிருந்த முருகன் நிறத்தினை. செம்மை; ஈண்டு முருகக்கடவுள். பச்சையையும் வெள்ளையையும் முறையே உமையும் சிவனுமாகக்கொள்க. செக்கர்வானன்ன செம்மை யென்றது சிவனும் உமையும் முறையே பகற்பொழுதும் இராப்பொழுது மொப்பர் எனக் குறிப்பான உவமங்கோடற்கு. அவர் என்றது அவ்விருவரையும் பகர்மொழி: அம்மா அப்பா, என்பன. அகலிடம் - உலகம். மன்பேராசிரியவென்றது குறிப்பேது.
--------

9. புலரி - விடியற்காலம். புகனுரை – நீ சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும் சொற்களை உரையேம் - சொல்லிக்கொடுக்க முயன்றேமல்லேம். பருகிய - குடித்து இன்புறுதற்கு. கேட்பேம் – நீ சொல்கவென்று கேட்கின்றேம், ஊமைப்பிள்ளாயென்று முருகனைக் கூறியது, உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனாகிய ஐயாட்டையகவை யூமைப்பிள்ளையாக வந்தது கருதி. உயிர்மெய் - உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களுமென உம்மைத்தொகை. ஏனையவுயிர்: - அகரமொழிந்த பதின்மூன்றுயிர். உயிர்ப்ப - ஒலிப்ப, அலர் - தாமரையிதழ். செந்நாவரசு- திருநாவுக்கரசு நாயனார். அவரையழைத்தது: ஆளுடையபிள்ளையார் அப்பா! என்றழைத்தது. உயிர்ப்பவும் கைப்பவும் குழையவும் அரசையழைத்தாயெனவும் உயிர்ப்பவும் கைப்பவும் குழையவும் அருள் எனவும் தனித்தனிக் கூட்டிக்கண்டுகொள்க. உயிர்ப்ப அழைத்தாயென்றது வாய்க்காப்பவென்றவாறு; வாய்திறத்தலோடே அகரவெழுத்தும் பிறத்தலானும் அதனால் ஏனையெல்லாவெழுத்துக்கட்கும் அவ்வகரம் இன்றியமையாத காரணமாய் நிற்றலானும் அகரமுதலாகிய அம்மா அப்பா என்னும் இயற்கைத் தமிழ்ச்சொற்களையே சொல்லத்தொடங்குதலானும் அன்றேல் அகரமட்டுமேயாவது ஒலித் தொழிதலானும் அவ்வாறு கூறப்பட்டது என அறிக. அஃது:--- அவ் அப்பா அம்மா என்னுஞ் சொற்கள். அண்பேயார் - அணுகிய பேயார் என வினைத்தொகை பேயார்- காரைக்காற் பேயம்மையார். நுந்தை - சிவபெருமான். அவன் அவரையழைத்தது: அம்மாவென்றது.
-----------

10. கோதாட்ட – குற்றத்தைக் குணமாகப் பாராட்ட; இது சிறு குழந்தைகளிடத்துத் தாய் தந்தையர் முதலிய பேரன்புடையார்க்கு நிகழ்தல் வழக்கிற் கண்டுணர்க. ஏறேயென விளித்தது ஆனேறுமாம் சிங்கவேறுமாம்; ஆகுபெயரன்று; உவகைபற்றி வந்த திணை வழுவமைதி. யாளி - சிங்கம். வெள்கி - நாணி. உளைய வருந்திக்கிடப்ப, என்றது தற்குறிப்பேற்றவணி. ஏர் - அழகு. நீர், மேலெழுந்தவென்றுமாம். மாணிக்கக் கங்கையாற்றிற்கு வடவையாறு என்பதும் ஒரு பெயர். இதுவே முற்பட வழங்கிய பெயர் போலும் இஃது அருணகிரிநாதரருளிச் செய்த கதிரகாமத் திருப்புகழிற் கண்டெடுக்கப்பட்டது. சோனை - விடாப்பெருமழை. பாகு - குழம்பு. தோய்ந்த - இறுகிய. கட்டிக்கரும்பு என்றதனைக் கரும்பின் கட்டியென மாற்றிப் பொருள்கொள்ளப்படும். கட்டி - வெல்லச்சக்கரை. கீறு - முருகன், பால்குடிக்குங்கால் நகத்தாற் கீறிய; என்றவாறு. அமுது - பால். ஊறல் - ஊற்று. கோமான், அண்மைவிளி. போலும் என்னும் முற்று, ஈற்றுயிர்தொக்குத் திரிந்து நின்றது. போனம் என்னும் முற்று வினைச்சொல்லின் பின்னர் அத்தகை நறுமணத்தையுடைய நெய் என இசையெச்சம் வருவித்துரைத்துக் கொள்ளப்படும். அன்பாகப் பொருந்திய நெய் என விரிக்க. எனவே அன்பை நெய் என்ற குறிப்பும் பெறப்படும். அன்பை நெய்யாக உருவகிக்குங் குறிப்பிற்குப் பொருந்த நறுமணத்தைச் சிவமணம் என்ற உருவகமும் படக்கூறியவாறு கண்டுகொள்க. அங்ஙனங் கொள்ளுங்காற் போலும் என்பது உவமவுருபன்று. உரையசை நிலையிடைச் சொல்லாகிய ஒப்பில் போலி. அவ்விடத்து நறுமணம் சிவமணமாகவுடைய அன்பாகிய நெய் என விரித்துணர்ந்து கொள்க. இங்ஙனம் கொள்ளவே இரட்டுறமொழிதலுமாயிற்று. சோறென்றது "பாதகமேசோறுபற்றினவா" என்புழிப்போலவும் நின்றது. தொட்டு -தோண்டி. சொற்றோமும்பாளர் – பொய்யடிமையில்லாத புலவர். உளங்கவர்ந்துண்டல் என்பது ''என்னுள்ளங்கவர்கள்வன்'' என்னும் பிள்ளையாரருளிச்செயலை நினைப்பிக்கும். கவர்தல்: தன்னையே நினைக்குமாறு செய்தல். உண்டல்: அத்தியான முதிர்ச்சியாற் சமாதியிலொடுங்கச்செய்தல்
------

11. ஆழி - திருப்பாற்கடல். குடம் - அமுதகலசம். அந்தண் - அந்தணர்; மறையோனை மறையெனவும் கொல்லனைக் கொல் எனவும் அரசனை அரசு எனவும் வழங்குமாறு போல. அன்றி வேள்விக்கேற்ற அடையாக்கினுமாம். செந்தமிழின் வழக்கு: உலக வழக்கு செய்யுள் வழக்குக்கள். குழைந்து சொலும் வழக்கு - ஊடிச்சொல்லாடும் தருக்கவாதம். காழி - சீகாழியூர். பிள்ளையார் கிண்ணப்பாற் சோற்றையுண்டவளவிற் சிவசம்பந்தஞானம் பிறந்தமையான் அச்சோறு ஞானத்திற்கேற்புடைத்தாகிய கலையென உருவகிக்கப்பட்டது. செய்யுளும் பண்ணும்பாடுதலாற் கலையும் சிவனைப் புகழ்தலால் ஞானமும் உடையாயினர். கனிவு உருக்கம்: பரவச அன்பு. குறித்த - குறிகொண்ட. குறி: பெயரும் வடிவும் குணமும் முதலாயின. அருண்மெய், அருளாகிய திருமேனியெனவும் அருட்சத்தியாலாகிய திருமேனியெனவும் கொள்க. சோற்றுணவுண்டால் உடம்பு பெருத்து வளரும் வழக்கியல் குறிப்பித்தது.
----------

12. ஆடும் என்றது ஐந்தொழிற்படுதலை. இருட்டிாள் மும்மலம். அயா-இளைப்ப; ஈண்டுக் கருத்து: பக்குவமாக என்பதாம். பெரியோன் - பரமசிவன் ஆடியிளைத்தல்: ஐந்தொழில் செய்து உயிர்கட்குத் தன்னையடையும் பக்குவம் வருவித்தல். ஆரிய முனிவர்: துருவாசர். துரியோதனன் வேண்டுகோளாக காடுறை வாழ்க்கைப் பாண்டவர்பால் உரியபொழுது கழிந்து விருந்தாக வந்த துருவாசர் வெகுண்டு வைதிடாமைப் பொருட்டுத் துரோபதையினது அன்புடைமைக்கருளிக் கண்ணன் வந்து தோன்றிக் கழுவிக் கவிழ்த்திய பானையில் ஒட்டிக்கிடந்த ஒரு சோற்றவிழை யுண்டவளவில் நீராடப்போன துருவாச முனிவர் நிறையச் சோறுண்டவர்போன்று வயிறு நிரம்பப்பெற்று விருந்துண்டலை வெறுத்து விருந்து படைக்க மாட்டாமையால் நேரவிருந்த வெகுளியும் சாபமுமொழிந்து பாண்டவரையும் துரோபதையையும் வாழ்த்திச் சென்ற வரலாறு பாரதத்துட் கேட்கப் படும். அவ்வாறேபோல் முருகன் உண்ண உலகமுண்ணும் என்றவாறெனக் கொள்க. ஆர என்பனவெல்லாம், நிறைய உண்ணும் படியாக என்னும் பொருளனவாம். மலை கூவுதல்: எதிரொலி யொலித்தல். மலையெதிரொலி செய்தலைக்கேட்டு மகிழ்தற் பொருட்டு மலையையழைத்தல் சிறுமியர் விளையாட்டுக்களுள் ஒன்று.
----------

13. நீர் - கடல்நீர். மா - சூரபன்மனாகிய மாமரம். இனி, "அவுணரெல்லாருந் தம்முடனே யெதிர்ந்தார்வலியிலே பாதி தங்கள் வலியிலே வந்து கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்ததொருமாமரம் எனினும் அமையும். இங்ஙனமாகியவொரு மாமரம் முருகக்கடவுளால் வெட்டப்பட்டது என "அவுணர் நல்வல மடங்கக்கவிழிணர், மாமுதறடிந்த மறுவில் கொற்றத்து'' என்னும் முருகாற்றுப்படைத் திருப்பரங்குன்றக் காட்சியடிகட்கு எழுதிய நச்சினார்க்கினியருரையால் தெரியவரும். இது மாயை மரமாதலிற் கீழ்நோக்கின பூங்கொத்துக்களை யுடைத்தாயிருந்தது என்பார் நக்கீரர் "கவிழணர்மா" வென்றார். இனிச் சூர்மாவை அவ்வாறு கூறாமல் வேர் மேலாகித் தலை கீழாக முளைத்திருந்தது என்பர் பிறர். நெருப்பு - நெற்றிக்கண்ணெருப்பு. நெருப்பின் முளைத்து என்றது தகுதியின் மையணி. வினைவு - அனுபவ தத்துவ ஞானம். புலங்காய்த்து என்பது பல்பொருட்சொற்றொடரணி (சிலேடை). ஐம்புல அவா வினை யவியச்செய்து எனவும் புலத்தினைக் காயாகக் காய்த்து எனவும் இருபொருள் தோன்ற நிற்றலின் காய்காய்த்து என்பது புனைவுளியாயும் அவியச்செய்து என்பது புனைவிலியா யும் கொள்ள வருதலின் இருமைப் பல்பொருட் சொற்றொடர் என்க. நிறையப் பழுத்தவென்பதும் இருபொருள்படும். ஆன்மா அணுவாகாது வியாபகமாகப் பக்குவமாகி நிற்குமிடமான வெனவும் மரத்திடமெல்லாம் நிறையப் பழம் பழுத்தவெனவும் கொள் எனப்படும். எனவே வீடுபேறே பழம் என்றவாறாயிற்றாகக் கொள்க. கற்பகம், சிறப்புருவகம். நேர் - வாய்த்த. அடி, மரத்தினடியும் காலடியுமாம். வெப்பம் - புழுக்கம். என்றது பிறவியான் வரும் முத்திறத்துத் துன்பங்களை. அவையாவன: தன்னால் வருவதும் பிறவுயிர்களால் வருவதும் ஊழால் வருவதுமாம். தணிவாரோ வாழ்வாரோவென்னும் ஓகாரங்கள் எதிர்மறை. வாழ்வாரோவென்ற கருத்து முன்னமே சூரபன்மனாலிறந்து பட்டிருப்பாரென்றவாறு. ஓரின் - ஆராய்ந்தால். ஓரின் நீயார் யாமார் எனச் சொல்வடித்துணர்வார் பெருமையென்க. நீ யாரோ? யாமாரோ? வென்னும் ஓகாரங்கள் அசைநிலையோகாரங்கள். என - என்று ஐயுற்று ஆராய்ந்து, சொல் - ஞான நூல்களை. வடித்து – ஆராய்ந்து துணிந்து, உணர்வார் - அனுபவித்துணர்பவர். உலவா - கெடாத. பெருமையை உணர்வார் எனக் கொண்டு கூட்டுக. ஆராரோவென்னும் ஓகாரம் அசைநிலையிடைச்சொல். ஆர் ஆர் என்பன எதிர்மறைப் பொருள் குறிக்கும் வினாவினைக் குறிப்பு முற்றுக்கள். கொள்ளுங்கால் என்பதற்கு அங்ஙனமுணராரையெனச் செயப்படு பொருளும் அவாய்நிலை யான் இசையெச்சமாக வருவித்துரைக்கப்படும். கலைமான் - நாமகள்,
----------

14. கொற்றம் - அரசியல் செல, நாடெங்கும் பரவ. வரிசை - மேம்பாடு. சிறந்த - ஏனையரசர்க்கும் பொதுவாகாது தமக்கேயுரித்தான. கட்டில் - சிம்மாதனம், ஈரம் - அன்பு; ''ஈரமளை இப்படிறிலவாம்" என்பது முப்பால், தோய்ந்த - நனைந்த; மனத்திற்கு நனை தலாவது: ஆர்வமிகுதல். இழைத்த செய்த கோட்டம் - கோயில், மணிமேனி- மாணிக்க விக்கிரகம்; அழகிய மேனியுமாம். எவனோ - எக்காரணத்தாலோ. கோட்டை - இராசதானி. எழும் - படையெடுத்துப் புறப்பட்ட, பிழம்பு - வடிவம். வெளிநிற்ப வென்பது கட்புலனாகவெனவும் உருவின்றிப் பாழ் வெளியே வடிவமாகக் கொண்டு வழிபட நிற்ப வெனவும் இரு பொருள்படும். தலையளி - அன்பான் முகமலர்ந்து இன்சொற் கூறல். தொல்குடி - பழம் பெருங்குலம். மரபு - பாரம்பரியம். தொல்குடி மரபின் தலையளி, யாரையு முவப்பித்தலிற் குளிர்ந்து, இடையறாது வழிவழியாகத் தொடர்ந்தொழுகி வருமாறுபோல மாணிக்கக் கங்கையும் எவ்வுயிர்க்கும் குளிர்ந்து வற்றாது இடையறாது தொடர்ந்து ஒழுகி வருதலின் அவ்யாறு தொல்குடி மரபின் தலையளியொழுகுதல்போல ஒழுகும் எனப்பட்டது. இனித் தலையளியாவது: முருகன்பால் அவ்வாறு மேற்கொண்ட தலைமையன்பு எனக்கொண்டு அக்கங்கை நீரின் இடையறாத குளிர்ச்சியுடைமையைத் தலையளியெனத் தற்குறிப்பேற்றமாகக் கூறியதெனக் கொள்ளினுமாம். இப்பொருட்குப்போல் என்பது ஒப்பில் போலியாகிய அசைநிலை இடைச்சொல்லாகவும் தொல்குடி மரபு என்றது, அவ்வாறு உயர்ந்த மலைக்கட்பிறந்து பண்டுதொட்டே இடையறாது நீரொழுகும் ஒழுக்கத்தையெனவும் கொள்ளல் வேண்டும், வாரம்: அன்பும் யாற்றங்கரையுமாம். அலையெறியு மாணிக்கத்தை அடி தூவும் பூவென்றது உருவகவணி. தூய் - தூவி. தூவுதலும் வாழ்த்துதலும் தற்குறிப்பேற்றம்; மணி சிதறுதலைப் பூவருச்சித்தலாகவும் அலையும், வெள்ளமும் ஆரவாரித்தலை வாழ்த்துதலாகவும் குறித்தமையான். காமம்; கதிரகாமம் என்னும் பெயரின் இசையெச்சம்; மரூஉமொழி யெனினுமாம். இவ்வாறு முன்னும் பின்னும் வருமாறுணர்க. தந்தை - சிவபெருமான். ஒரு மாம்பழம் - தன்னை வலம் வருதலால் உலகத் தொகுதியை வலம் வந்தவனாகிய மூத்த பிள்ளைக்குத் தான் சொன்னவாறே சிவபெருமான் பணையமாக நல்கிய மாம்பழம். பெருந்தகை - சிவபாதவிருதயர். புடைத்தல் - அடித்தல் கொல்லும் ஒவும் என்பனவற்றுள் யாதானுமொன்றனை வினாவிடைச்சொல்லாகக் கருதிக்கொண்டு ஏனையதனை அசைநிலையிடைச்சொல்லாகக் கொள்ளல் வேண்டும். புலவர் – தேவர்; கவுள் - கன்னம். வணர் - சுருண்ட. குழலி - ஏற்புழிக்கோடலான் வள்ளியென்க. முலைச்சாய்ந்து - முலை தலையணையாக அதன் கண் தலைவைத்து, பாயல் - படுக்கையணை. அலச - தளர்ந்து வருந்த. கொணரும் - கொண்டு வந்து வழிபடும். அசைவு - இளைப்பு. தவிர - நீங்குதற்குக் காரணமாகிய; கொள்ளாய் - கொள் என்னும் ஏவல் வினை.
-----------

16. பொய்யாமொழி - பொய்யாமொழி யென்னும் புலவர் பெருமான், தஞ்சைவாணன் கோவையாக்கியோன். வழு - மாறுபடக்கூறல் என்னும் மலைவு. முட்டையென்பது, கோழிக்குஞ்சையும் பாடுவதில்லையெனப் பரியாயவணிபடக் கூறித் தன் வேண்டுகோட்கு உடம்படாத அம்மாட்டுப் புலவன் அக்குஞ்சைக் காட்டினும் குறைந்த முட்டையைப் பாடினானாகச் செய்தற்கு வேட்டுவக்கோல முருகக்கடவுள் தனக்குத்தானே இட்டுக்கொண்ட விடுகுறியாக்கப் பெயர். முருகக்கடவுள், ஏனைச் செல்வரைப் பாடும் புலவரைப் போலாது புலவனைப்பாடும் புலவனாயினன் என்று கூறியவாறு காண்க.

''விழுந்ததுளி வானத்தே வேமென்றும் வீழ்ந்தா
லெழுந்து சுடவருமென் றேங்கிச்- செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்"

என்பது வேட்டு முருகன் பொய்யாமொழியைப் பாடிய திருப்பாட்டு. புலவராற்றுப்படை - திருமுருகாற்றுப்படை. பாட்டு என்றது, பத்துப் பாட்டு என்னும் சான்றோர் தொகைச் செய்யுளின் கட்டொகுக்கப்பட்டுள்ளது என்றவாறு. பாட்டால் உயிருண்டவென விரித்துப் புணர்க்க. பாட்டின் பெருமையை அறியாத பூதம் எனினுமாம். கையார - கைநிறைய. கையேந்தும் - ஒழுக்கத்தோடு தாங்கும். அஃதாவது: இடைக்குக் கீழ்ப்படாமல் மேற்படத் தாங்கும் என்றவாறு. காதலியர் முலைகளை, அவர், முருகனை வழிபட மார்பினணைத்துக் கைநிறைய ஏந்திக்கொண்டு வந்திருக்கும் இளநீராகும் என இளநீரல்லாததனை யிள நீரென மயங்கக் கருதிக் காதலர் கைப்பற்றியதென்றது மயக்கவணி. முருகவேளைக் காமவேள் என்ற நயமும் உணர்க. தவங்கிடந்தாட்கு- தவங்கிடந்தவுமையம்மை, மகிழ்வெய்தற் பொருட்டு அம்ம- உரையசை நிலையிடைச் சொல்; யான் சொல்லுவதனைக் கேள் என்னும் ஏவற் குறிப்புணர்த்தும். நன்று என்பது இகழ்ச்சிக்குறிப்புச் சொல். நல்லதன்றென்பது கருத்து; ''கற்கறித் நன்கு அட்டாய்'' எனக் கூறுவது போலப் படிற்றுப் புகழ்ச்சியணி,
----------

17. அரவு - பாம்பும் பதஞ்சலி முனிவரும். புலி - புலி விலங்கும் வியாக்கிரபாத முனிவரும், கதிரகாமத்தில் முருகக்கடவுளது திருவருளாற் பாம்பும் புலியும் அறிவு வந்து முருகக்கடவுளை யருச்சித்தின் புறுந்தன்மையன வென்க. நவை – குற்றம். ஆடல் - சிதம்பரத்திற் கூத்தாகவும் கதிரகாமத்தில் திருவிளையாடலாகவும் கொள்க. வெளிபுல்குதல், சிதம்பரத்திற்கும் கதிரகாமத்திற்கும் ஒப்பக்கொள்ளப்படும்; வெளி வடிவமாகக் கோயில் கொண்டெழுந்தருளி நிற்றல். தில்லங்காடு - தில்லைவனம், சிதம்பரம். காமம் - கதிரகாமம். அது - பகுதிப்பொருள் விகுதி. வினாவோகாரம் தெரிநிலைப் பொருள் குறித்து நிற்கும்; விளைவிப்பவன் - பரமசிவன். வென்று -புலங்களை வென்று, ஒளிர் - உண்மையறிவு தோன்றும். பூ - மனம். ''மலர்மிசை யேகினான்" என்பது முப்பால் கன்றுவ, கூத்தாடிச் சிவப்பனவெனவும் விளையாடிச் சிவப்பனவெனவும் கொள்க. உள்வெளியெனக் கூட்டி மனவெளியென்க. புலனாகாத பொறிகளாற் பற்றப்படாதவெனவும் உருவமில்லாதவெனவும் இரு பொருள் கருதிக் கொள்க; உடலம் - வடிவம். அளி – அருள்; இயல்பு – குணம்; இதுகாறும் கதிரகாமத்தைச் சிதம்பரமாகவும் முருகக்கடவுளைச் சிவபெருமானாகவும் கூறியதாகக் கொள்க. நீதாமேயாதல் என்றது ஞானயோக சமாதியுடையார் தம் உயிர்த்தன்மை மறையச் சிவமேயாய் நிற்றல்; மறை முடிபு - வேதாந்தம்: உபநிடதம். இளஞாயிற்றினொளியென வென்றது – “பலர்புகழ்ஞாயிறு கடற்கண்டாங்கு'' என்ற நக்கீரனார் வாய்மையினை நினைந்து. துச்சில் - ஒதுக்குப்புறமானவிடம் ஈண்டுத் துச்சிலென்றது உடம்பினகத்து நெஞ்சினுள் ஒரு விரலளவாய சிற்றிடம், உயிர்ப்புக்கில் உயிர்க்குப், புறம்போகாது நிலைத்துத் தங்கி வாழ்தற்குரிய வீடு. அளிப்பல் – கொடுப்பேன்; தொட்ட - அணிந்த; வளை - கைக்காப்பு. ஒரு காரியத்தைத் தொடங்கி முடித்தன்றி நில்லேன் என்னும் நோன்பிற்கு நினைகுறியாகக் கங்கணமணிதல் அக்காலத்துச் சூளுறவுகளுள் ஒன்று. மெய்ப்பொருள் - சுட்டிறந்த பொருள்.
------------

18. சேரி - குறச்சேரி. கிள்ளை - கிளி, கிள்ளைமொழி - வள்ளி நாச்சியார்; உவமத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயரெழுவாய். சேரியில் வளர்ந்தவென விரிக்க, பயனிலை தொக்க தொகை. திரு - வீற்றுத்தெய்வம் ஞெமிரும் - பரந்திருக்கும். "தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றது'' என்பது நெடுநல்வாடை. ''வரிமணன் ஞெமிரக் கற்பக கடக்கும்'' என்பது புறம். மாமை - சுணங்கு. இகல் – போர்; இடைந்து - தோற்று, அயரும் - சோர்ந்து விழும். முற்றி - (மதில்) வளைந்து. சூரனை யுயிர்பருகியெனக் கூட்டுக. வென்றி வாகையென்க. கல்வி வெற்றிவாகை முதலியனவு முண்மையின் இது போர் வெற்றி வாகையென விதந்து கிளக்கப்படும். ஈரியல் - இரண்டு வகை; அவை: பொன்னாற் செய்த பூவும் மலர்ப் பூவுமாம் துணர் - பூங்கொத்து. எறி -கைவிடும். காழ் - வேற்காம்பு. இணர் - பூ. சூரன் கவர்ந்து சிறைசெய்து வைத்த புத்தேளிரை மீட்டலிற் கரந்தைப் பூவுஞ் சூடிற்று. எழிலுற - அழகாக. மள்ளர் - வீரர். ''செருவிலொருவ பொருவிறன் மள்ள" என்பது பெரும்பாண். கலவிப் போரில் தோற்கும் நீர் இங்ஙனமான வேற்படையைக் கைக்கொள்ளும் வீரராமாறென்னை? யென்றது கூடாமையணி. தண்டியார்க்குச் சிறப்பணி. இனி அங்ஙனம் வியந்தது வியப்பணியுமாம். இங்ஙனம் பலவணிபட நிற்றல் கலவையணி. ஈண்டு - இந்நிலவுலகத்திற்கு. இழிதர - இறங்கிவர. ஏனுலகு - ஏனைத் துறக்கவுலகம். கண்ணேணி - கணுக்களையே படியாகக் கொண்டு ஏறியிறங்க இணைத்துப்பிணைக்கு மூங்கிலேணி. பெருமானடிகள் என்றது - முருகக்கடவுளை, இஃதொரு பெயர்ச்சொல் என்பதனை ''ஆலவாயிற் பெருமானடிகள்'' எனக் களவியலுரை வழங்குமாற்றான் உணரலாகும். இஃது ஒருமைப்பன்மை மயக்க வழுவமைதித் தொடர். பெருமானடிகளது வெற்றியை வேற்படைக்குக் கூறியது; ''மீடியவரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை”யென இராமன் வெற்றியை அவன் விற்குக் கூறியது போலக் கொள்க.

வாரி – கடல்; ஊழி - உலக முடியும் கடைக்காலத்தில். ஊழிக்கண் எனவுருபுவிரித்து மொள்ளுறு மென்பதனோடு முடிக்க. ஊழிக்காலத்து முட்பட நீர்வற்றற்பாலதல்லாத கங்கையெனற்பாலதனை அம்முகில் மொள்ளும் கங்கையென வேறொருவாற்றாற் குறிப்பித்தது, பிறிதினவிற்சியணி. வற்றற்குரிய கங்கையை வற்றாது என்றது தொடர்புயர்வு நவிற்சியணி. ஆகம் - உடம்பு. இசை - புகழ். வைகலும் என்னும் உம்மை தொக்கது; நாள்தோறும் என்பது பொருள், நாள்நீராடல் என்பது நாள்தோறும், விடி யற்காலையிற் குளித்தற்கு ஒருபெயர், நாள் - விடியற்காலம். மாறுதல், ஈண்டுவெதும்புதல். கொல், ஐயக்குறிப்பிடைச்சொல். என - என்று தோழியரை நோக்கிக் கூறி முருகவேண் மேற்சென்ற காமவெப்பம் பொறுத்தலாற்றாது போய்ப் புழுங்கிவருந்த. வான்மகளிர், தமக்கு முருகனது கட்டிளவனப்பின் மேனிகழ்ந்த நினைவாலுண்டாய காமவெப்பத்தைக் கங்கையாறு தந்ததாகக் கூறுவது, மயக்கவணியும் தண்ணீர்யாற்றினை வெந்நீர்யாறென்றது வியப்பணியும் இயற்கை வெந்நீர்யாறு கொல்லோ? முருகன் நீராடலானாய செயற்கை வெந்நீர்யாறு போலுங்கொல்லோ? எனவையுற்ற வையுறவு. ஐயவணியும், இங்ஙனமாதலிற் கலவையணியுமாம் எனக்கொள்க. நல்கி - அங்ஙனம் அம்மகளிர்படும் ஆற்றாமைக்கு இரங்கி; அவர் - அவ்வானவர் மகளிர். வருடுதல் - தடவுதல். அவ்வெப்பமொழிதற்பொருட்டு வருடுமெனக்கொள்க. பேழை - பெட்டி. பற்கோவைகளை முத்துக்கோவைகளாகவும் அவற்றைப் பொதிந்து சிவந்தவாயை அம்முத்த நகைகளைப் பொதிந்து மூடி வைத்திருக்கும் பவழப்பெட்டியாகவுங் கொண்டு வாய் திறப்ப முறுவனகை வெளிப்படுதலைப் பவழப்பெட்டியைத் திறந்து முத்தநகைகளைக் கொட்டுதலாகக் கூறியவாறென்க. இஃது இயைபுருவகமும் வண்ணவுருவகமுமாம். அருள் ததும்பிப் புறங்கொட்டவென்றது, ஒருகொள்கலம் நிறையவிருந்த தண்ணீர் முதலியன, அக்கலம் அசைந்தவழித் துளும்பிப் புறங்கொட்டுமியல்பு தோற்றிற்று. சப்பாணி கொட்டுங்கால் திருமேனி குலுங்குதலைக் கலமசைலாகவும் திருவருள்மிக்கு நன்கு விளக்கமாதலை நீர்த்தும்பிப் புறங்கொட்டுதலாகவும் இலக்கணையாக்கியுருவகித்தவாறு கண்டு கொள்க. களைகொட்டுதல் - களை செதுக்குதல். உலகத்து அறம்வளர வொட்டாமற் றடைசெய்து இடுக்கண் விளைத்தலான் மறம் களையெனப்படும்;

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்'' என்னும்

வாய்மொழியை நோக்குக. நாக்கொட்டல் - ஆர்வ மீதூர்ந்து முத்தமிட நாவால் இச்சிச்சென்னுங் குறிப்பொலி படவொலித்தல்; இஃது

"ஆற்றங் கரையி னருகிருந்த மாமரத்திற்
காக்கையிருந்து கஃகஃகெனக் - காக்கைதனை
யெய்யக்கோ லில்லாம லிச்சிச் செனவெய்தான்
வையக்கோனார் தம் மகன்'' என வரும்

வெண்பாவிலும் கூறப்பட்டிருத்தல் உணர்க. கைகொட்டல் – கைதட்டிக் கூத்தாடுதல். கொம்மைகொட்டிக் கூத்தாடுதலாகக் கொள்ளிற்குன்றவரை மகளிராகக் கொள்க. கொம்மையென்பது கும்மியென மரூஉவாய் வழக்கிற்பயிலும். இச்செய்யுளிற் பிள்ளை முருகனைப் பன்மைப்பாலாகக் கூறியது, அன்புமிகுதியான் உயர்த்துதற் பொருண்மைக்குறிப்பின் கண்ணதாகும். ஈழகத்திற் சிறுபிள்ளைகளைப், பெற்றோருமுட்பட நீர் எனவுயர்த்துக் கூறுதன் மாபு. (ஈழகம் - ஈழநாடு).
-----------

19. தமிழகம் என்பது தமிழ் நாட்டின் இயற்பெயர். தமிழகத்தினையுடைய தாய் எனச் செயப்படுபொருள்பட விரிக்க. தமிழகத்தினுடைய தாய் எனக்கிழமைப் பொருள்பட விரிப்பின் தமிழகமுடையாராற்கைக் கொண்டு தம்முடையதாக ஆளப்பட்டது என்னுங்கருத்தன்றித் தமிழகத்தின்கட் பனிமலை அமைந்து கிடந்தது என்னுங்கருத்துப் பெறப்படாது. முனை - போர். குவைய - குவியலையுடைய. நெடுமொழி - புராணப்புகழ். வானளாவுதல். நெடுமொழிக்குமாம் வெற்புக்குமாம். வெற்பு; இமயமலை. முருகக் கடவுளைப்பயந்தது பொய்கையாதலிற்றாய்க்கு இயல்பாக வாய்ந்த அன்புடைமையே பொய்கைக்கு இயல்பாக வாய்ந்த குளிர்ச்சியுடைமையெனத் தற்குறிப்பேற்றிக் கூறியவாறு கண்கொள்க. என்னவென்பது ஈண்டு உவமவுருபன்று; ஆகவென மாட்டேற்றுப் பொருள்படும் பண்புருபு. இமயமலைச்சுனை குளிர்ச்சிமிக்கிருத்தலியல்பு. அன்னை, இருதிணைப்பொதுப்பெயர்; தொகுதியொருமை. சுனையாகிய பொய்கையெனப் பெயரொட்டாக்குக. பொய்கை – மாந்தராலாக்கப்படாத நீர்நிலை. பொய்கையிற் பிறந்ததற்கியையப் பூப்பவெனவும், தாயரை மீனெனவும் ஒலிப்பித்தது குறி நிலையணி. ஆரால் - கார்த்திகை. மீன் - விண்மீன். திதலை - சுணங்கு. இளம்பரு வத்திற்கேற்ப மகளிர் சிலவுறுப்புக்களிலமையும் நிறவேறுபாடு. நகில் - முலைகள். அடையவும்: உம்மை, இசைநிறையிடைச் சொல். அடைய - எல்லாம்: கார்த்திகைப் பெண்களறுவர்க்கும் இவ்விரண்டாகவுள்ள முலைகள் பன்னிரண்டுமென்றவாறு. ஞெ முங்கல் - அழுந்தல். கோதை - உமையாள், அள்ளி - வாரியெடுத்து, பிறங்கல் - மலை. இன்னயவ – மிகவினிமை பயப்பனவாகிய. காமம் - கதிரகாமம்; விருப்பம் எனவும் ஒலித்தது. மணியாறு - மாணிக்கக்கங்கை யாற்றங்கரையில் முத்தங்கொழிக்கப்படும் என்னும் இயைபும் ஒலித்து நின்றது காண்க. யாவும் விற்பேம் என்புழி உயிரும் பிறவும், இறைவனுக்கு முறையே அடிமையும் உடைமையுமாம் என்னும் மெய்ம்மை தோன்றக் கூறியவாறு கண்டுகொள்க. உடல் பொருளாவியை விற்பேம் முத்தம் தருகவென்றது மாற்று நிலையணி (பருவருத்தனை) ப்பாற்படும் வணிகவென்றது, இப்பொழுது விலைக்கு முத்தங்கொடுக்கவென்பது கருதியுருவகித்தது மட்டுமன்று; வள்ளிக்கு வளையல் விற்கும் வணிகனாக வந்தமையும் மதுரையில் மாணிக்கம் விற்கவந்த வணிகன் மகனாதலும் உப்பூரிகுடிகிழான் என்னும் வணிகன் மாட்டு ஐயாட்டையகவை யூமைப்பிள்ளையாகிய உருத்திரசன்மனாக வந்து தோன்றினமையும் உடன் கருதிக் கூறிய தன்மை நவிற்சியணியு மாம் எனக்கொள்க. சொரிந்த முத்தமும் எழுகோடி முத்தமுமாகிய முத்தத்தையாற்றங்கரையிலே கொழித்து இன்று (எமக்குத்) தருக எனக்கொண்டு கூட்டி வினை முடிவு செய்து கொள்க.
------------

20. ஐயாறு, பண்புத்தொகை. ஐயாறாறு, உம்மைத் தொகை. முப்பத்தாறு என்றவாறு. இது சிவாகமதத்துவங்களைக்குறிக்கும் தொகைக் குறிப்புப் பெயர். இருள் -ஆணவமலம். ஆவி - ஆன்மா. அருள் - சத்தி. அப்பால் என்பது தனித்தனிப் பிரிந்து சென்று கூடியுந்தன் பொருள் விளக்கி நின்றது. அஃதாவது: ஐயாறாறு தத்துவங்களினப்பால் ஆணவம்; அதற்கப்பால் ஆன்மா; அதற்கப்பால் சத்தி; அதற்கப்பாலுள்ளது சிவமாகிய வைப்புப்புதையல் என்க. ஐயாறாறு என்பது இரட்டுற மொழிதலாய்த் தத்துவங்களையும் அவற்றின் முதற்காரணங்களாகிய ஓரிரு மாயையையும் குறிக்கும். அங்ஙனம் குறிக்கு மிடத்து, மாயைக்கு அன்மொழித்தொகைப் பெயராகக்கொள்க. மாயை கூறவே அதனைப் பற்றுக்கோடாகவுடைய கருமமும் கூறப்பட்டது என்பது, பொருட்பேற்றளவையால் தட்டப்பம் போலத் தானே போதருமென்க. ஈண்டு மூவைந்து பதினைந்து அவத்தைகளும் அவத்தாதீதமும் பெறப்படுதல் காண்க. இன்னும் விரிப்பிற் பெருகும். உய்த்துணர்ந்து விரித்துக்கொள்க. அழகிது, குறிப்பு முற்று வினையெச்சம். உசாதலுக்கு அடை கெழுதகை - நட்புரிமை. இயற்கைப்பொருள் - பெளதிக மூலப்பொருள். பொருளால் என மூன்றன்றொகை. ஆக்கம் - செயற்கைப்பொருள் தோன்றுதல். தேர்ந்த - கருவிகளாலாராய்ந்துணர்ந்த, அச்செயற்கைப்பொருளாவன: ஞாயிறு திங்கள் முதலியனவும் இப்பொழுதைய ஊர்திப்பொறி, வினைசெய்பொறி, விளக்குப்பொறி முதலியனவும் மருந்து முதலியன பலவுமாம். செய்யாமை ஈண்டுத் தனிமையைக் குறித்து நின்றது. கலப்பின்றித் தனித்த மூலப்பொருள் என்றவாறு. தேனாகிய நெய் என இருபெயரொட்டாகக் கொள்க. தேனையும் நெய்யென்பர். பன்னாடையின் பெயராகிய நெய்யரி என்பதற்குத் தேனை வடிப்பது எனப்பொருளுமுரைத்து மேற்கோளுங்காட்டுவர். ''அன்ன மாவே” யென்னும் நன்னூற் பாயிரச் சூத்திரத்திற் குறிப்புரையாசிரியர், உ.வே. சாமிநாதையரவர்கள்.

தீம்பால் - ஆன்பால். குழைத்த - கூட்டிக்கலந்து சமைத்த. திரள் - பக்குவமான. பூப்புத்தொடங்கி நுகர்தற்குரிய பக்குவமாயினாளைத் திரண்டாள் என வழங்கும் உலகம். பதம் - செவ்வியுணவு. கையா - இகழ்ந்து வெறுக்கப்படாத. குடிமை - உயர் குடிப்பிறப்பு. வெல் என்பது காரணப்பொருட்டுப் பெயரெச்சத்தொகை. காரியப்பெயர் கொண்டது. கல்வி முதலியவற்றின் வெற்றிப்புகழும் மிகக்களிப்புப் பயக்கும். கடவுட்செந்தமிழ் - கடவுளாற் பேசப்படும் செந்தமிழ்மொழி. மக்களாற் றோற்றுவியாதது; என்றவாறு. முப்பால் என்பது அடையடுத்தவாகுபெயர், திருக்குறள் என்னும் நூலின் இயற்பெயர். இது பதிணெண் கீழ்க்கணக்கிற் றொகுக்கப்பட்டது. இப்பொழுது தமிழ்மொழிக்கண் நூற்பேறு நாற்பொருளும் பாற்படுத்துக் கூறி முடிக்கும் முதனூல் இஃதொன்றுமேயாம். நூற்கு ஆகாவெனக் கடியப்படும் குன்றக்கூறல் முதலிய குற்றம் பத்தும் முற்றச்செறுத்துச் சுருங்கக் கூறல் முதலிய மாட்சிபத்துங் காட்சிப்படுத்து உடன்படல் முதலிய எழுகிறக்கோளும் தழுவுறவமைந்து நுதலிப்புகுதல் முதலியவாகிய நூற்புணர்ப் புப் பலவுமேற்புறப்பெற்று உரைக்கிடனாத் தமிழ் வரைப்பினில் நிலவிச் சொற்சுவை பொருட்சுவை பொற்புற மிளிருமிவ்வருமந்த நூல்

“நவிறொறும் நானயம் போலும் பயினொறும்
பண்புடையாளர் தொடர்பு'' எனத்தானே

கூறியவுவமைக்குத்தானே யெடுத்துக்காட்டாயமைந்து வீற்றிருக்கும். இந்நூற்படைப்பு, உலகப்படைப்புக் கடவுளாகிய நான்முகன் திருவள்ளுவனாரென வந்து திருவாய் மலர்ந்தருள் செய்தது.

“திருத்தகுதெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தரு நற்பலகை யொக்க - விருக்க
உருத்திரசன் மரென வுரைத்து வானி
லொருக்கவோ மொன்றதோர் சொல் "

என்னும் வெண்பாவினுள் இவ்வெண்பாப் பாடினவன் பெயர் ஓம் என்பது எனவும் எனவே அவன் முழுமுதற்கடவுளாம் எனவும் எனவே அவனே திருவள்ளுவர் வாயிலால் முப்பால் மொழிந்தருளினானாம் எனவும் ஓம் என்பதன் கண்ணுள்ள மூன்றெழுத்தே முப்பால் எனப்படும் எனவும் அம்முதன் மறைமொழியே முப்பாலின்றொகையாகிய முகவுரைப் பாயிரமென்பதெனவும் அதனான் அதனை ஒவ்வொரு குறட்பா முதற்கண்ணும் ஒவ்வொரு பான் முதற்கண்ணும் நூன்முதற்கண்ணும் கூட்டியும் தனித்தும் ஓதவும் நினைக்கவு நுகரவும் வேண்டும் எனவும் பிறவும் பெறப்படுதல் உய்த்துணரக்கிடத்தலின் இந்நூற் பெருமையுணர்ந்து சொல்லுவாரெல்லாம் "தேவர்குறளும்'' எனவும் ''வள்ளுவர் நுலன்பர் மொழி வாசகம்" எனவும் பிறவிடங்களினும் சிறப்பித்து முதற்கண்வைத்துப் புகழப்படும் பெற்றி வாய்ந்தது இம்முப்பால். தமிழ்மொழிக்கண் உள்ள சுவைமிக்க நூல்களையெடுத்தோதும்

"திருத்தக்க மாமுனிசிந் தாமணி கம்பர்
விருத்தக் கவித்திறமும் வேண்டேம் - உருத்தக்க
கொங்குவேண் மாக்கதையைக் கூறேம் குறளணுகேம்
எங்கெழிலென் ஞாயி றெமக்கு" என்னும்

அருமை வெண்பாவினுள் திருக்குறள் ஏனையசுவை நூல்களினும் சுவை விஞ்சியது என்னுஞ் சிறப்புத்தோன்ற இடமுதலாகிய விறுதிக்கண்வைத்து அதனையணுகேம் எனக்கூறுங் குறிப்புமொழியால் ஆன்றோரது அவியுணவுபோலுஞ் செவியுணவாகிய அம்முப்பாலின் ஒப்புயர்வில்லாச் சுவைநய மிகுதி தெளியப்படும்.
-----------

21. மஞ்சு - மேகம். விண்முத்தம் - விள்ளுமுத்தம், வினைத்தொகை, வெடிக்குமுத்தமென்றவாறு கொம்பு, எனப் பொதுவிற்கூறினமையான் யானைக்கொம்பும் பன்றிக்கொம்புங் கொள்க. இயல் - உள்ள; "வேண்டினுண்டாகத் துறக்க துறந்தபின், ஈண்டியற்பால பல" என்னுந் திருக்குறளின் வந்த இயல் என்னுமொழிக்குவரைந்த பரிமேலழகருரை நினைக்க, கொம்பின்கண் உள்ளவென விரிக்க. விழை - விரும்பப்படும். மாதர்; காதலையுணர்த்து முரிச்சொல். காதலைப் பிறப்பிக்குங் கரும்புமுத்தமென்க. மீனின் - மீனிடத்து. ஏனவும் - பிறவும். வடங்கோத்தற்குத் துளைத்தல் முதலியவற்றால் தேயுமுத்தம் என்க. ஏர் - அழகு; எழுந்து. திரிய - கெட; அலைய. மாறும் - வேறுபடும்; விற்கும். அழகுகெட வேறுபடு முத்தமெனவும், எழுந்து அலைய விற்கப்படு முத்தமெனவும் இரட்டுறமொழிதலால் இருபொருளும் கொள்ளப்படும். முத்தமோ; ஓகாரம், எதிர்மறை முத்தமன்றென்பது. தூய்முத்தமென்று சிவபெருமானைச் சொன்னாள். அவன் மூங்கிலிற் பிறந்தானென்பதனால், ஈன்முத்தம், ஈன்ற முத்தமென இறந்தகால வினைத்தொகை. முத்தமென முருகனைக் கூறியது, முத்துக்குமாரசாமி, முத்தையன், சரவணமுத்து; என்றாற்போலும் பெயர்வழக்கமுடைமை நினைந்தென்க. துளிமுத்தம் - துளிக்கின்ற முத்தம். மதியென்றது முத்துப்பிறக்குமியைபுடையது எனவொலித்தற்கு. (ஒலி - தொனி) முத்துப்பிறக்கும் நிலன் இருபதனுள் இந்துவும் ஒன்றெனக் கூறுப. முகம் - முகத்தில் முத்தமுத்தி - முத்தமிட்டு. நகு - அதனால் அம்மகளிர் நாணிச்சிரிக்கின்ற. தொகை - கூட்டம், முத்தமென்றது பற்களை உருவாகவுயர்வு நவிற்சியணி. கனியும் - சிவந்து இனிக்கும். முத்தமே - முத்தமொன்றுமே. ஏகாரம், பிரிநிலைப்பொருளில் நின்றதேற்றேகாரம். போதாத - விலையாக நிரம்பாத. வான் - வீட்டுலகம். வாழ்தல் - நிலைபெற்று மகிழ்தல். வாழ் என்னும் பெயரெச்சத்தொகையினை வாழ்தற்கு வாயிலாகிய முத்தமென ஏதுப்பெயரொடு முடிக்க.

இதனுள் முத்தமெனப்பலகால் வருதல் சொற்பொருட்பின்வருநிலையணியும் சொற்பின்வருநிலையணியுமாகக் கொள்க. முன்னும் பின்னும் இங்ஙனம் வருவனவும் இங்ஙனம் பிரித்தறிந்து கொள்க.
-----------

22. கூடல் - மதுரையம்பதி; இது மதுரையென்னும் வடமொழிப்பெயர் வழங்குமுன் வழங்கிய தனித்தமிழ்ப்பெயர்; இரண்டியாறு வந்து கூடிய நிலத்தின் கண்ணதாயிருந்தமையாற் கூடல் என ஆகுபெயர்த்தாயிற்று. பின்னுள்ளோர் பிறவாறு கதை கூறுவாருமாயினர். கூட்டு - எண்ணாயிரவர் திரள். குழந்தாய்! - ஆளுடைய பிள்ளாய்! குடுமிமுடி – மயிர்க்குடுமி மறையக்கவித்த மணிமுடி. கோப்பாண்டியன்: அரசு கட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன். இவன் தொடியான் வானவர்கோன் முடியை யுடைத்தது,

"இடிப்படைவானவன் முடித்தலையுடைத்த
தொடித்தோட்டென்ன வன்கடிப்பிடு முரசே''

என்னுஞ் சிலப்பதிகார ஆய்ச்சியர்குரவைச் செய்யுளடிகளினும் பிறவற்றினும் பெறப்படும். இவன் செயற்கரும் பேராண்மைச்செயலான் முருகக்கடவுட்டன்மை வாய்ந்திருந்தான் எனத் தெரியவருதலின் இவனை முருகக்கடவுள் என முன்னோர் கூறுப. இங்ஙனமே முருகக்கடவுட்டன்மை நிரம்பவாய்ந்திருந்த, உப்பூரிகுடிகிழான் மகனார், ஆளுடைய பிள்ளையார் போல்வாரைப் பெரும்பான்மை பற்றி முருகக்கடவுள் எனக்கூறி வழிபடுதல் மறுக்கப்படுவதன்றாமாறு உய்த்துணர்க. திருமாலின் கூறாகிய இராமன் கண்ணன் முதலியோரைப் பெரும்பான்மைகருதித் திருமால் எனக்கூறி வழிபடுமாறும் நீணிலங்காக்கும் காவலர் பிறரையும் அங்ஙனம் கூறி வழிபடுமாறும் நினைத்துக்கொள்க. துவர்க்கோடல் - செங்காந்தள். ஆடல் - விளையாடவேண்டா; எதிர்மறைவியங்கோள், வேண்டிக்கோடற் பொருண்மையினின்றது. நெய், தேய்த்து முழுகிய எண்ணெய்க்காப்பானுளதாயபயன். ஓகாரங்கள், எதிர்மறை தேட, - நின்னோடு கூடித்தெருவில் விளையாடவருகின்றவள் நின்னையிவ்விடத்துக் காணாமையாற் பிரிவாற்றகில்லாது வருந்தித் தேடிக்கொண்டிருப்ப. அமுதே! திருவே! தேனே! எனவொரு பொருண்மேற் பலவுருவகங்களை ஆர்வத்தாற் சொல்லுதல், ஆர்வமொழியணி. முற்பிற்பாட்டுக்களினும் கண்டு கொள்க. பல பெயர்களைக் கூறினுமது. தெவிட்டாதொழுகுந்தேன் என்றது விலக்குருவகவணி.
-------------

23. நூலாத நூல் - மக்கள் கையாற் கருவியாற் செய்யாது பட்டுப்புள் இழைத்த நூல்; என்றது: பட்டு நூல். ஊசியொடு - துன்னூசியால். குயிலாத - தையாத. 'ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்' எனப்பயிலும் எடுத்துக்காட்டு நினைக்க. நொய்ய - மெல்லென்ற. சில் – சிறிய; சில்பலியரிசியைச் சிறுபலியரிசியென்ப. சிறிதினைச் சிலவென்றல் மரூஉ வழக்கென்ப. மெய்யுறை - சட்டை. அங்கியென்னும் வடமொழி வழக்குச் சொல்லினுறுப்புப் பொருளுமிது. தெய்வத் தன்மையாற்றலால் தையாமலே பட்டாடையில் முருகனுக்குச் சிறு மெய்யுறையமைந்தது. சிறு சட்டை செய்து குழந்தைகளுக் கணிதல் வழக்கம். அது, முதனிலைப் பொருட்டிறுதி நிலையுருபு. நோன்பு - தவம். தழும்பி - அடிப்பட்டுப்பழகி. நின் உள்ளும் - நின்னை நினைத்துருகும் உளம் என-தொண்டருள்ளம்போல. ஆட - அசைய, மெய்யுறை ஆட என்க.; சிறு சட்டை, முருகன் திருமெய்யிற் போர்க்கப்பட்டுக் கிடந்தசைந்து அழகாக விளங்கிக்கொண்டிருப்ப வென்றவாறு. திருமேனியைப் பொதிதலும் அசைதலுமாகிய வொப்புமையால் முருகன் சிறு மெய்யுறை தொண்டருள்ளத்தோடு ஒப்பிக்கப்படும். "பெரிது பெரிது புவனம் பெரிது'' என்னும் அகவலுள் இறைவனைத் தொண்டருள்ளத் தொடுக்கம் எனச்செப்புதல் ஈண்டு நினைக்கப்படும். நுண்ணுதல் - சிறு நுதல். முடிக்கொண்டை - கொண்டைமுடி. விழுமியோர் - முனிவர். வேணவா - வேட்கையினாலாகிய அவா, மூன்றன்றொகை. வேட்கை, பொருள் கண்மேற்றோன்றும் பற்றுள்ளம். அது மேன்மேலெழுதல், அவாவெனப் படும். வேணவாவொடு கூடியதளவு என விரிக்க. தளவு - முல்லை: நகை. எண்ணாலாய கைம்முகன் என்பது நிரனிறையணி. எட்டாயகையும் நான்காய முகமும் உடையவன் என விரித்து நிரனிறைப் பொருளாமாறு கண்டுகொள்க. பெருமிதம் - செருக்கு, நளி - செறிவு. கடலிடைக்குடை - தீவகம். கொடு வினையர் - சூரன் முதலிய அசுரர். அவலம் - துன்பம். மாலாகி - அன்பான் மயங்கி. மெழுகின் - மெழுகுபோல. நெக்கு - நெகிழ்ந்து. என்பு - என்பும் என விரிக்க. உருகி - உருக. எச்சத்திரிபு. மழை - கண்ணீரென்க.
------------

24. புனம் - தினைப்புனம். கொன்று - மிதித்தழித்து. நொக்க - தின்று குறைத்தலால். செலல் - இரவிற் புனங்காத்தற்குப் போதல், குறித்து - காத்திருந்து நோக்கி. பகலிற்றினையை யுணக்கும் பாறையென்க. கோழி:காட்டுக்கோழி. கொறிப்ப - கொத்தித் தின்ன; காரியப்பொருட்டு வினையெச்சம். உணக்கும் - காயவிரிக்கும். இனிப் பகலிற்குறித்து எனமாறி மகளிர் புனங்காக்கும் பகற்பொழுதிலே இரவுக்குறி யுணர்ந்து வைத்து எனினுமாம். பிணைந்து - கைகோத்து. தழீஇ - மெய்யணைந்தாடி ஒல்லாது - இயலாது. அந்தோ - ஐயோ; இடைச்சொல்; தனக்கும் குழந்தைக்கும் பயன்படாதூறி வாளாவழிந்தோடுதலைக் குறித்திரங்குதலைக் குறித்து நின்றது. பாற்குடங்கொட்டிச் சிந்து முலை - பாற்குடத்தைக் கவிழ்ப்பப் பால் வழிந்து சிந்துதல் போல அமுதப்பால் அன்பு மிகுதியான் மிக்கூறிச்சுரந்து வழிந்து சிந்தியோடும் முலை. இங்ஙனம் குழந்தைமேற் செல்லும் அற்புள்ளத்தால், மகவை முலைப்பாலூட்டாத வழியும் முலைப்பால் சுரத்த லுண்மை ,

"சுரந்த திருமுலைக்கே துய்யசிவ ஞானஞ்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த
தன முடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையா ளன்பிருந்த வாறு,''

என்னும் திருக்களிற்றுப் படியாரானும் உணரப்படும்.

"மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே."

என் புழியும் இத்தாய்மைபெறப்படுதல் கண்டுகொள்க.
--------

25. வெங்கள் - காய்ச்சினகள். தேறல் - தெளிவு. கள்ளின் கடுப்பிற்குத் தேட்கடுப்பு, உவமை. "தேட் கடுப்பன்ன நாட்படுதேறல்" புறம். களி - கள்ளுண்ட மயக்கம். மீக்கூர்ந்த களி - மாற்ற முடியாது மீதூர்ந்த களி. கடுப்பினால் மீதூர்ந்த வென்க. மீன் கண் - மீன் போலப் பார்வை பிறழுங்கண். மறுக – சுழல; செவ்வழியாழ் - மருத நிலப்பண். வெறிப்ப - இசை பிறழ்ந்து பண் உருக்கெடுதல். பணைத்து - பெருத்து. மதவேள் - மன்மதன். பணிகொள்ள என்றது தற்குறிப்பேற்றம். விரை - அகிற் குழம்பு முதலிய மணப்பொருள்கள். குரும்பை - முலை; உருவகவுயர்வு நவிற்சியணி, வெளிவிம்ம – மறைப்பின்றிப் புடைத்துத் தெரிய. விரும்பும் அம்முலைகளைப்பார்த்துக் காமமீதூர்ந்து தொடர்ந்து உழாமல் நின்று கொண்டிருக்கும். களமர் - உழவர். ஏர் - கலப்பை. பகடு - ஆணெருமை. வெடிசேல் - துள்ளிய சேன் மீன்கள். உழக்கி - சேற்றைக் கலக்கி. உகைத்து - அவ்வேர்ப்பகட்டைப் பாய்ந்துகைத்து. அம் - அழகு கண் - கணுக்கள். களைகளை - களைந்து எறியவேண்டிய களைகள்; என வினைத்தொகை. அவற்றோடு ஆடவருள்ளங்களையும் பறிப்பார் என்றது அவர் தம்மை விழையச் செய்தலை; புணர் நிலையணி. பறிப்பார் - பறிக்கும் மருதநிலவுழத்தியர். அமர் - விரும்பப்படும். இதண் - பரண். இதணிலுள்ளவெனப் பயனிலைத்தொகை. கொடிச்சியர் - குறிஞ்சிநில மகளிர். அரு - மருத நிலங்களில் விளையமாட்டாத. அளிகள் - வண்டுகள்: தேனீக்கள். நறை - தேன்; நறுமணமெனினுமாம். ஆர - நிறைய, வாங்கி - பெற்று. கதிரமலை தன்னியல்பால் தனித்துக் காட்டுள் நிலை நின்றதனைத் தவம் என்றதும் தமிழ்ப்பிள்ளையை அத்தவத்தின் விளைவு என்றதும் தற்குறிப்பேற்றவணி. தவமாவது பிறரொடு கூடாது தனித்துக் காட்டுட்போய் ஊண் உறக்க முதலியன விழையாது குளிர் வெப்ப முதலிய விரட்டைகளாற் றளர்வெய்தாது நிலைநிற்றலாம். தமிழ் - இனிமை. தமிழ்நாட்டுப் பிள்ளையெனினுமாம். குவியா - மலர்ந்த. நீலம் - கருநெய்தற்பூ; பண்பாகு பெயர்; என்றது: பிள்ளையின் கண்ணினை. தனியே - ஏனைத் தாமரைகளுக்கு மாறாய் வேறாகவே. ஏனைத் தாமரைகளெல்லாம் நிலவினைக் கண்டு குவிய இஃதொன்றுமே குவியாது மலர்ந்தது என்று கூறுவான் தனியேயென்றது பொருந்துதல் கண்டு கொள்க. அன்றி யேனைத் தாமரைகளின் கூட்டத்திலன்றி யொன்றாகவே யெனினுமாம். அன்றியேனைத் தாமரைகள் போலக் குளத்திற் பூவாதே எனினுமாம். அலர்ந்த - விரிந்த. தாமரையென்றது பிள்ளையின் முகத்தினை. அது நிலவினைக்கண்ட அளவில் நகை தோற்றியதனை அலர்ந்த தாமரையெனக் கூறினள். தாமரை, முதலாகு பெயர்; பூவையுணர்த்தி நிற்றலின். தனியே யலர்ந்த தாமரை யென்றது ஒட்டணி. நீலம் என்றது உருவகவணி. நீலப்பூவொடு கூடி விரிந்த தாமரைப்பூ வென்றது வியப்பணி. தடுக்கும் - கால் கைகளைப் புடைப்பெயர்க்குங்கால் தடை செய்கின்ற மீக்கோள் - போர்வை. உம்மை - முற்பிறப்பு. சிறப்பு – நல்வினை; போலும், ஐயக் குறிபிடைச்சொல். ஈண்டு ஐயமாவது: குறிப்பானன்றிச் சொல்லாலுணராமை. கிடை - ஈண்டுக் கருத்து, கிடந்தவாறு என்க. தமப்பன் - சிவபெருமான்; அவன் நிலவிற்குச் செய்த நன்றியாவது: வீரபத்திரன் காலாற்றேய்ப்புண்டு இறந்து பட்டொழியாதவாறு தன் திருமுடிமேல் எடுத்து வைத்துச் சூட யுயிர் பிழைப்பித்தருளிய வுதவியாம். சிதையாது என்றது விளையாட வருதற்குக் குறிப்பேதுவாய் நின்றதாதலின் ஏதுவணிபாற்படும்.
-----------

26. கீழ்பால் - கிழக்குத் திசை வேந்து - இந்திரன். மேல்பாற் கடவுள் - வருணன். வடபாற் கிழவன் - போன். சுருள் - வெற்றிலை மடிப்பு; தென்னவன் - தென்பாற் காவலனாகிய கூற்றுவன். பேர்யாழ் என்பது மகதியாழ் என வழங்கும் வடமொழிச் சொல்லோடொத்த தனித் தமிழ்மொழிச்சொல்; மகதியாழ் - நாரதமுனிவன் மீட்டும் யாழ். இஃது ஆதியாழ் எனக் கூறவும்படும். இஃது ஆயிரம் நரம்பு தொடுத்தியன்றது. வெற்பின்: இன், ஏழனுருபு. யாளியணை - சிங்காதனம், மீது, ஏழனுருபு. நாளோலக்கம் - கொலுவிருத்தல். இருதிணை; உயர்திணை, அஃறிணை யென்பன; இயங்கு திணை, (சரம்) நிலைத்திணை (அசரம்) யெனினுமாம். ஆழும் - அழுந்தும். இழிதகவு - இளிவரல் (அவமானம்) இழிதகவினை நினைக்கன்றது

"இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும்போழ்து''

என்னும் பொய்யா மொழியின் பொருளினை நினைந்து. தறுகண் - பழிபாவமஞ்சாமை. ஆடல் - போர் வெற்றி. சூர் – சூரபன்மன்; அலரோன்: பிரமதேவன்; பூவிற் பிறந்திருந்தோன் எனவும் பழிமொழியை யுடையோன் எனவும் முதனிலை, இருபொருள் பயந்து இரட்டுற மொழிதலாயிற்று. கடல் வாழ்வான அலவன் என மாறுக. உறழ - ஒப்ப. கடல்வாழ்வானவெனவும் விண்டவழ் எனவும் நின்ற அடைமொழிகள் அலவன் என்னும் பல பொருளொரு சொற்பொருளை வெளிப்படுத்து நிற்றல் வெளிப்படையணி. ஒரு சார் ஒட்டணி யென்பதுமிது. அலவன் என்பது ஞெண்டிற்கும் சந்திரனுக்கும் பெயர். சந்திரனுக்கு இருமடியாகு பெயர்; கடகராசிக்கு உடையானென்பதனால், இரண்டலவனுக்கும் பொதுத்தன்மை: உருண்ட வடிவும், வெள்ளியநிறமும், நீல நிறத்தோற்றப் பரப்பின்கண் ஊர்தற்றொழிலுமென்க. மீனிறக்கடற்கு நீனிற விண், பொருளாகும். அடை - தேனடை: தேன்றட்டு. கையாற் பிழியும் என விரிக்க. சாறு - தேன், அயிலலாம் - உண்ணலாம். தேன் - ஞானானந்தமுமாம். இனிது - வருத்தமின்றி: வலிந்து பிடித்துக் கொணரப்படாமல் நீயே வந்து விடுதலால் வருத்தமின்றி யென்றவாறு. வேலன் சாறென்க. அடை கைபிழியென்பது, சாற்றிற்கு அடை. வேலன் பிழிந்தவென்ற தன்றென்றவாறு. வேலன் மலையினுள்ள தேனாதலால் வேலன் தேனாகும் எனக் கொள்க. இது, கதிரகாமக் குறக்குல வடியார்களால் முருகனுக்கு மடை கொடுக்கப்படுவது. இத்தேனை ஞானானந்தமுமாம் எனவும் உரைத்தது உருவகவுயர்வு நவிற்சியணி பற்றி. ஞானானந்தத்திற் காட்டிலும் தேன் உயர்ந்ததன்றாயினும் மக்களால் நுகருஞ் சுவைகளுள் உயர்ந்தது என்பது கொண்டு ஞானானந்தம் தேனாக வுருகிக்கப்படுதல் மறுக்கப்படுவதன் றென்பது மரபு. இங்ஙனங் கொள்ளுங்கால் வேலன் சாறு என்புழி வேலன் என்பது, மலைத்தேனன்றெனப் பிறிதினியைபு நீக்கி நின்ற அடைமொழி. இக்கருத்து இவ் அடைமொழியை எடுத்தலோசைப் படக்கூறத்தானே பெறப்படும்.
----------

27. உருள்பூ - உருளும் பூவென வினைத்தொகை. தேருருள் போன்றிருக்குமாதலின் உருள்வதாயிற்று. 'உருள பூந் தண்டார்'' என்பது முருகு. முருகக் கடவுள் கடப்ப மரத்தின் கண் வீற்றிருத்தல், முருகினுட் காணப்பட்டது. நயம் - அறிவின்பம். கல்லும் என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டுள்ளது. நரை - வெண்மை. கூன் - வளைந்த. நளி - செறிந்த, கார் - மேகம். கரந்து - மறைந்து. நகைக்கின்றாய் என்றது தற்குறிப்பேற்றம், பறம்பு - மலை. இதுக்காண் என்பது ''உதுக்காண்டோன்றும்'' என்பது போல நின்றது. எற்றுவன் - உதைப்பான். ஆம் என்பது துணியாமைக் குறிப்புணர்த்தும் ஓரிடைச் சொல், இது செய்யுளினின்றி வழக்கின் கண் வழங்கும். இது புகியன புகுதல். நம்பன் - சிவபெருமான். புகல் - அடைக்கலம். வாம் - வாவும் என்னும் பெயரெச்சம் ஈற்றுயிர் மெய் மறைந்து நின்றது. தாவிப் பறந்து செல்லும் என்றவாறு. சிம்புள் - எண்காற்புள். என்றது வீரபத்திரக் கடவுளை; எண்காற்புள் வடிவமாயிருத்தலின். துகைப்ப - மிதித்துத் தேய்ப்ப. பொன்றக் கெடுதல் - மீளாது இறந்தொழிந்து போதல். மதலையாதலால் தந்தை தலையென்றும் பாராமல் அவ்விடத்தும் நின்னை மிதிப்பான் இவன் என்க. துடுக்கு விரைந்து செய்தல். குறும்பு - ஆராயாது செய்தல். வணக்கும் - வளைக்கும். பொருப்பு - மலை. வில்லியென்றது சிவபெருமானை. உரைவாங்கான் என்றது முருகனைச் சிவபெருமான் பார்த்துப் பிரமனைச் சிறைவீடு செய்கவென்னுங் கட்டளையை அவனேற்றுக் கொள்ளாமை கருதி. சிவபெருமானுக்குப் பிரணவப்பொருள் செவியறி வுறுத்தினமையால் அவற்கும் ஆசிரியன் என முருகன் கூறப்பட்டான். வாவி - குளம். வனப்பிற்கேய்ந்த குணனில்லாயென்றது: ஒருவர்க்கு அழகு எவ்வளவு மிக்கிருக்கும் அவ்வளவு மிக்கிருக்கும், குணமும் என்னும் உறுப்பியல் நூலார் கூற்றுக்கு முரண்பாடு நின்னிடத்துக் காண நின்றாய் என்றவாறு. உறுப்பியல் நூலுடையார், ஒருவர்க்கு அவர் எழிலினளவாகக் குணமிருக்குமெனக் கூறுவார் என்பது நைடதத்துட் காணப்பட்டது. குணனில்லாய் என்றது வியப்பணி. காம்பு - மூங்கில், மூங்கிலின் மேலிருக்கும் மயிலென விரிக்க. பரி - குதிரை. ஈண்டுக் குதிரையென்பது, குதிரைப் பொருண்மேல் நில்லாது சிறந்த வூர்தியென்னும் பொருண் மாத்திரையாய் நின்றது. மயிலாகிய பரியென இரு பெயரொட்டாக்குக. பரிமேலழகன் என்புழித் திருக்குறளுரையாசிரியருள் ஒருவனெனவும் ஒலித்தது குறிநிலையணி. காட்டுக்கோழி முட்டைகளை தம் முட்டையென மயங்கக் கருதித் தாராப்பறவை அடைகிடக்கும் என்றது மயக்கவணி. திரிபதிசயவணியென்பர் தண்டியார். கலை, பல்பொருட் சொற்றொடரணி. (சிலேடை) கல்வியெனவும் பிறைக் கலையெனவும் இரு பொருள்படுதலின். முகமதியென்றது வேற்றியலுருவகம் (விரூவந உருவகம்.) அகவிருள் - அறியாமை, இயல்பால் வளைந்து சந்திரன் தேய்தலைப் பொறாமையிற்கவன்று நாணிக் குறைகின்றாய் என்றது, தற்குறிப்பேற்றவணி. கழறும் போது கறுக்கின்றாய் என்பது இங்ஙனம் அழுக்காறுறுதலாகாதுகாண் என நினக்கு இடித்துரைக்கும் பொழுதில் வெகுள்கின்றாயெனவும் சொல்லுதல் போல மலர்ந்த தாமரைப்பூவை வாடிக் கூம்பச் செய்கின்றாயெனவும் இரு பொருள்படும். இது பல்பொருட் சொற்றொடர்த் தற்குறிப்பேற்றவணி. தேம்பிய - உணலின்றி வருந்திய. ஆழிப்புள் – சக்கரவாகப் பறவை. இது நிலவையுண்ணுமியல்பினது என்பர். அப்புட்போல்வார் - முருகன் திருவருளுண்ணும் ஞானயோகிகள். தேக்க - நிறையவுண்ண. கொப்புளித்து - வெளிப்படச் சொரிந்து. திறம்பா - தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத. மங்குல் - விண்வெளி, இது - இம்மதி; என்றது, பிள்ளை முகத்தினை. இது இயங்கும் என முடிக்க. களங்கத்தைக் கருநெஞ்சு என்றது உளபுலவேதுத் தற்குறிப்பு; பாம்பு தீண்டிய துண்மையின். சேர - ஒருங்கு. முழுதும் - இடமெல்லாம். திருந்துதல்: நஞ்சால் வரும் நோயும் சாக்காடும் நீங்கிப் பிழைத்து இன்புறுதல்.
-------------

28. ஈரெழுத்து: முதலெழுத்துச் சார்பெழுத்து என்பன. முதலெழுத்து முப்பதும் சார்பெழுத்து மூன்றுமாம் எனக் கொள்க. அன்றி உயிரெழுத்து மெய்யெழுத்து என்னும் அவ்விரு சாரெழுத்துக்கள் எனினுமாம். அங்ஙனம் கொள்ளுங்காற் குற்றியலிகர குற் றயலுகரங்களுட்பட வுயிரெழுத்துப் பதினாலும் ஆய்தப் புள்ளியுட்பட மெய்யெழுத்துப் பத்தொன்பதுமாம் எனக் கொள்ளப்படும். ஈரிருசொல் - இயற்சொல், திரிசொல், நாட்டுச்சொல், வடசொல் என்னும் நான்கு சொற்களுமாம். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நான்கு சொற்களும் எனினும் ஒக்கும், முப்பொருளாவன - அகத்திணைப்பொருள், புறத்திணைப்பொருள், அகப்புறத்திணைப்பொருள் என்பனவாம். அறம், பொருள், இன்பம் என்பனவெனினுமாம். நாற்பாக்களாவன - வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா; என்பனவாம். நூற்பா, மருட்பா, பரிபாடற்பா வென்னு மூன்று பாவும் பன்னிரண்டு பாவினங்களும் மேற்கூறிய நான்கினுடைய குறைவும் கலப்பும் சிதைவுமல்லது வேறன்மையின் அந்நான்கன்பாற் பட்டடங்கும். இயைந்த - அப்பாக்கள் தனித்து நின்றும் சேர்ந்து நின்றும் உண்டான. முச்செய்யுள் முவ்வணிகளென மூன்றினை அணிகளுக்குக் கூட்டியுரைத்துக் கொன்க. முச்செய்யுட்களாவன:- தனிநிலைச் செய்யுள், தொடர் நிலைச்செய்யுள், அவ்விரண்டுமாகிய தொகைநிலைச் செய்யுள் என்பனவாம். முவ்வணிகளாவன -பொதுவணி, பொருளணி, சொல்லணி என்பனவாம்; இவ்வைந்திறமும் இயற்றமிழ். இசையும் கூத்துமெனவே முத்தமிழும் பெறப்பட்டன. அறுபத்து நாலும் பிறவுமாகப் பிற நூலார் விரித்துக் கூறிய கலைகளெல்லாம் மேற்கூறிய மூன்று கலைகளாகத் தொகை வரையறைப்படுதலிற் றமிழ்நூலார் தமிழ்க்கலையை முத்தமிழென்றல் தொன்றுதொடு வழக்காறாகும். இந்நெறி இவர்க்கே சிறந்ததன்றிப் பிறர்க்கும் பொதுவன்று.

நச்சினார்க்கினியர், இவை கலைகளுட் சிறப்புடையவையாதலால் முத்தமிழ் எனக் கூறப்படும் எனவும் ஏனைக்கலைகள் இவற்றுள் அடங்காவெனவும் மூன்றென்பது தொகை வரையறையன்றென்பதும் போதரத் தொல்காப்பியப்பாயிர வுரைக்கண் வரைந்திருக்கின்றனர். அது பொருந்தாமையுய்த் துணர்ந்துரைத்துக்கொள்க. அவ்வப் புலவர் - இயற்றமிழ்ப் புலவர், இசைத்தமிழ்ப் புலவர், கூத்துத்தமிழ்ப் புலவர். கழகம் - அவ்வக்கலைகள் பயிலுமிடமும், அவற்றைப்பலரும் அறிந்து கொள்ளக் காட்டுமிடமாகிய ஆயக்களமுமாம். ஆயம் - கூட்டம்; எண்பேராயம் என்புழியுணர்ந்து கொள்க. அவைக்களம் என்றவாறு. எடுத்த - சொல்லுதற்கு மேற்கொண்ட. கட்டுரை மாணவர்க்கு ஓதும் பொருள் பதிந்த சொற்றொடரும், பெருங்குழாங்களின்கண் எடுத்து விளக்கும் நெடுமொழியாகிய களமுமாம். களம் - பிரசங்கம், கோட்டியென்பன ஒரு பொருளன. ஆகுபெயர்கள் ஊன் - உடம்பு, ஆகுபெயர். உடம்பை வூனென்றது, அதனது அருவருப்புத்தன்மை நினைவுகோடற் பொருட்டு. நரி தின்னுமுன் என்றது அறிவு வாய்த்தற்குத்தக்க மக்கட் பிறப்பு உள்ள பொழுதே யென்றவாறு. ஈரிண்டாவது என்பதனை நிலையென்பதனோடுங் கூட்டி நான்காவதாகிய நிலையும் எனவுரைத்துக்கொள்க. உறுதி நிலைகள் என்பது உம்மைத்தொகை. உறுதியும் நிலையும் என்றவாறு. உறுதிப் பொருள்கள் நான்கு. விலைகள் நான்கு. நான்காவதுறுதி: வீடுபேறு. நான்காவது நிலை: துறவு. வீடுபேறும் துறவு நிலையும் ஒன்றற்கொன்று முறையே ஆக்கமும் முதலுமாய் நின்று இனமா வனவாம். எய்துபாக்கு - அவ்விரண்டையும் அடைதற்பொருட்டு. எய்துபாக்கு என்பது செயவென் வாய்பாட்டின் பாற்படும் வினையெச்சம். உயிர் வளி - பிராணவாயு. ஒருக்கி -ஆயாமம் செய்து: தடுத்து நிறுத்தி. பிராணாயாமம், உபலக்கணம்; இயமம் முதலிய எட்டு யோகாங்கமும் செய்து என்றவாறு. வாய் வாளாமை - பேசாமை, இதுவும் உபலக்கணம்; பட்டினி பொறுத்தலும் தட்பவெப்பம் பொறுத்தலுமின்றி வாய் வாளாமை முடியாதாதலின் அவ்விரண்டு பொறைகளும் அவற்றால் ஏனைப் பதினொரு பொறிகளும் நான்கு உட்பொறிகளும் தாமே தொழிலொழிந்து வாளாதிருக்குமாதலின் அவ்வெல்லாப் பொறியடக்கங்களும் தழுவிக்கொள்ளப்படும். ஓரெழுத்து: ஓம் என்பது. மெய்யெழுத்துச், சார்தற்றன்மையான் எண்ணப்படாதாதலின் ஒரெழுத்தாயிற்று. யோக ஞானமுடை யார்க்கு அதுவல்லது ஒலிக்கமுடியாதாதலானும் ஒலிக்கப்படாது ஆதலானும் ஒலிப்பின் வேறு பயனில்லையாதலானும் ஒரெழுத்தும் என எதிரது தழீஇயவெச்சவும்மை கொடுக்கப்படாதாயிற்று. அறிவுவெளியைப் பரமாகாசம், சிதாகாசம் என்றாற்போல வழங்குவர் வடநூல் வழிவந்த தமிழாசிரியர். உயர்வினைப் பரத்துவம், அல்லது பரதத்துவம் என வழங்குவர் வடநூலார். உய்தல் - எல்லாத் துன்பங்களினின்றும் நீங்கி நிற்றல். உறுவர் - முனிவர். வாய்ப்பறைக்கு நாக்கடிப்புக் கொள்க. இரைக்கும் - ஒலிக்கும். மடை - பலிச்சோறு, துப்பு - வலி, கானவர் - வேட்டுவர். துணங்கை - கைமடக்கி விலாவிலடித்துக் கொண்டாடுங்கூத்து. இது சிங்கிக்கூத்து எனவும்படும், சிங்கியடித்தல் என வழக்கிலும் வழங்குதலுண்டு. தொண்டகம் - குறிஞ்சிநிலப்பறை. ஊர் - பரத்தலையு டைய. பொதியில் - திருச்சிற்றம்பலம். குனிப்போன் - கூத்தாடுவோன். முடை, புலால் நாற்றம்; இது தோலின் சாதித் தன்மையணி. தோல்மடி - விலங்கின்றோலை உள் புறமாகவும் புறம் உள்ளாகவும் மடித்துப் பறையின் கண்ணாகப் போர்த்த. விட்பறையினைத் தேவதுந்துபியென்பர் பிறர். இமையோர்களுடைய விட்பறையென வியைக்க முருகனுடைய, சூரனைக் கொன்ற வெற்றியைக் கூறும் பறையென்க. மாடுகளை யடித்தோட்டப்படாதாதலிற் கண்ணன் ஆக்களைக் குறிப்பிற் செலத் துரத்துவானாயிற்று. அக்குள் - கைம்மூலம்; கம்புக்கூடு என இக்காலத்து வழங்கப்படும். கக்கம் எனவும் வழங்குவர். மாடுமேய்ப்பார், வழியிற் குழலூதுங்கால் ஆத்துரத்துங்கோலை இடக்கக்கத்தில் வைத்து இடுக்கிக் கொண்டு இடத்தோளிற்றலை சாய வைத்துக்கொண்டு குழலூதுதல் மரபு. புல்லாங் குழலூதுங்கால் ஏழ்துளையிலும் மூன்றும் நான்குமாகிய ஏழ்விரலும் தனித்தனிச் சேர்ந்து உள்வளைந்து மாறிமாறிப் புடை பெயர்ந்து வருதல், ஞெண்டூர்தலோடொக்கும் எனக் கூறுவர். ஞெண்டு, வடிவும் தொழிலும் விரவிவந்த விரவுவமம். சீர் - அழகு. எழு - தூண்; கணைய மரமுமாம். துன்னியேன - திண்ணெனச் செறிந்தாற் போல. இணைதோள், இணைந்த தோள் என வினைத்தொகை. இணைந்த - இரண்டாய்த் தம்முன் ஒத்த, ஒருதோளையுயர்த்தி ஒருதோளைச் சாய்த்து என்க. சாய்த்து - தாழ்த்து. சேப்பு - சிவப்பு, உற - மிக. குணில் - பறையடிக்குங் குறுந்தடி. திருமாமி - திருமகளாகிய மாமி. இரு தாயர் - கங்கையும் உமாதேவியும். தெந்தோம்: பறையடிக்கும் ஒலிக்குறிப்பிடைச் சொல். தெந்தோமைத் தந்தோமென்றது தற்குறிப்பேற்றவணி.
------------

29. அழகன் - இராமன் என்னும் வடசொல்லின் தனித்தமிழ் மொழிபெயர்ப்பு. பத்துத் தேரன் - தசரதன், தேர் மறவர் பதின்மர் அசுரருடைய பத்துத் தேரையும் அழித்தோனாதலின் அவன் அக்காரண குறிப்பெயரனாயினன். ஈண்டு மகட்பரிசு என்பது ஒருவர், தம் புதல்வியரை மணஞ்செய்து கோடலுரியார்க்குக் கொடுக்குங் கையுறை. (தக்ஷினை) அஃது ஈண்டுத் திருமால் வள்ளி தெய்வயானையார்க்குக் கொடுக்கும் பரிசு என்க. கொண்டு - இராவணனொடு போர்செய்து வென்று கைக்கொண்டு. திருமால் பரிசாகக் கொடுத்த இலங்கை நாடு என்க. இங்ஙனங் கூறியது, தற்குறிப்பேற்றவணி. இராமன் திருமாலெனவும் முருகக்கடவுளின் இரு மனைவியரும் திருமாலின் புதல்வியரெனவும் வழங்கும் புராணமுணர்ந்து கொள்க. வளம் - வருவாய்; விளைபொருள். காமக் குன்றென வியைக்க. கதிரகாமமென்றவாறு. தத்தும் - உடைந்து குதித்து விழும். இறால் - தேன்கூடு, துய்த்து - மாமனார் வீட்டிலிருந்து நுகர்தற்குரிய பலவகைத் துப்புரவுகளையும் நுகர்ந்து. சீர் - சிறப்பு. மருமான் - திருமாலின் மருகன். இனி -இப்பொழுது. வினை மாற்றிடைச் சொல்லுமாம். பொருள் - (செயப்படு பொருள்) காரியம். அஃதும் - அம்முத்திதானும், உம்மை, உயர்வு சிறப்பும்மை. சிவணல் - தாம் அடைதற்கு. தகுதித்தன்று - தகுதியுடையதன்று. எனவே வீடுபேற்றின் சுவையினும் கதிரகாம மேலனைக் காண்டற்சுவை நனிவிஞ்சிற்றாயிற்று. என்றெனவும் என்றும் எனவும் பிரித்துக்கொள்க. நிலப்பிறவி - மண்ணுலகிற் கதிரகாமத்தோடு யாதானுயோ ரியைபுடைய யாதானுமாய்ப் பிறக்கும் பிறவி, கடலாடித் துளிசொட்டவென்றது நீராடினார்க்கு அந்நீர் தம்முடலினின்றும் சொட்டிக்கொண்டிக்கும் இயல்பு தோன்றக் கூறிற்றாம். கைச்சீர் - கையாற்றட்டுந் தாளம். செப்ப - சொற் சொல்லுதல் போலவொலிப்ப. ஆட - கூத்தாட. யானை வருங்கால் முன்னே பறை கொட்டுதலும் போரில் வென்றால் வெற்றிப்பறை கொட்டலுமாகிய வியல்புணர்ந்து கொள்க.
------------

30. தமிழ் - தமிழகம். தமிழகத்தின் ஆறு கூற்றமாவன: பாண்டி, சோழ, சேர, கொங்கு, தொண்டை, ஈழவள நாடுகள். பேராமை - போர்க்கட் புறங்கொடுத்தோடாமை. ஊராமை - புறங்கொடுத்தோடினாரை வலிந்து சென்று வருத்தாமை. ஆளர் - உடையார். பேராமையும் ஊராமையும் உடையார் என்றவாறு எனவே போர் மறவர் என்பதாயிற்று.

"பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றதெனஃகு''

எனவிப்பொழுது வழங்கும் குறட்பாடம்.

'பேராமை யென்ப தறுகணான் றுற்றக்கா
லூராமை மற்றத னெஃகு''

என முன்னர் வழங்கியிருக்கவேண்டும் போல இப்பொழுது தோன்றுகின்றது. பரிமேலழகர் எழுதிய விளக்கவுரை ஊராண்மைக்குப் பொருத்தமின்மையும் ஊராமைக்கு மிகப் பொருத்தமுடைமையும் இராவணனை இராமன் வலிந்து மேற்சென்று வருத்தாமையையே எடுத்துக் காட்டுதலும் உற்றக்கால் என்னும் வினையெச்சத்திற்குச் செய்து என்னும் ஒரு சொல்லை இசையெச்சமாக வருவித்தன்றி அதனையினிது முடிக்க மாட்டாமையும், உற்றக்கால் என்பது ''உற்றழி யுதவியும்,” எனவும் ''உற்றிடத் துதவி'' யெனவும் வருமாறுபோல இடையூறுற்றால் எனப் பொருள் தந்து நிற்றலின் எதிரிகள் இடையூறுற்றால் எனப்பொருள் கூறவேண்டுமாயின் ஒன்று என்னும் அடைகொடுக்கமாட்டாராதலும் ஒன்றுற்றக்காலெனின் எதிரிகள் பிறரால் ஓரிடையூறுற்றால் எனப் பொருள் படுமன்றித் தன்னால் ஒரிடையூறுற்றால் எனக்கருத்துப் பொருள் படாமையும் தான் எதிரிகளால் ஓரிடையூறுற்றால் எனவே யினிது நடைப்போக்கிலேயே பொருள்படுதலும் ஒன்றுற்றக்கால் தான் பேராமையைத் தறுகண் என்பவென வினிது பொருள்படுதலும் மற்று எனும் வினைமாற்றிடைச் சொல், ஒன்றுற்றக்கால் என்னும் உடம்பாட்டு வினையையும் அதன் பயனிலையாகிய போா பேராமையென்னும் எதிர்மறை வினையையும் மாற்றி எதிரி ஒன்றுறாது புறங்கொடுத்துப் பெயர்ந்தோடுதலின்கண் எனப் பொருள் தோற்றி நிற்றலும் பேராமையும், ஊராமையும் முறையே தான் புறங்கொடுத்தோடாமையையும் பிறர் புறங்கொடுத்தோடின் அவர்மேற் செல்லாமையையும் உணர்த்தித் தம்முள் இயைபுடையன வாயினமாய் நிற்றலும் இங்ஙனம் இனமாதலையே மற்றென்பது சுட்டி நிற்றலும் குறட்பாவும் ஒரு பொருண்மேல் வருதலும் பிறவும் எம்கருத்தினையே வலியுறுத்தவல்ல சான்றுகளாகக் காணப் படுகின்றன. இன்னும் அறிஞர்களெல்லாம் ஆராய்ந்து உண்மையைத் துணிந்து நிறுத்தக் கடவாராக. முந்நீர் - கடல். கதிரகாம வேலன் திருவருளாகிய முந்நீரென்க. திளைத்து -முழுகிக் குளித்து. ஆடுதல் - நீராடுதல். ஆடுவான் - ஆடும் பொருட்டு என வினையெச்சம். வரும் ஆறு எனக்கூட்டுக. பொதுள் - தழைத்த, செறிந்தவெனினுமாம்; வினைத் தொகை. புதல் - தூறு. அலைக்கும் - பொருள் பறித்து வருத்தும். வேறுவேறாய் - தனித்தனியாய். இரிந்தோட – திக்கிட்டோட. வேண்டும் - விரும்பின. அயுரொப்பு என்பது யுரொப் என்னும் இங்குலிச் சொல்லின் தமிழ்த் திரிபு. இது, ஆசுயம், அயுரொப்பு, அப்புரிக்கம், அமரிக்கம், அசுற்றெலியம்; என்னும் உலகத்தின் இப்பொழுதைய ஐம்பெருங் கூற்றங்களுள் ஒன்று. வேள் என்பதன் பன்மை, வேளிர். வேள் - வெளியவன்; வெள்ளை நிறமுடையான். கரியனைக் காரியெனவும் செய்யனைச் சேய் எனவும் வழங்கிய சாயலான் வெளியளை வேள் எனக் கூறினேம். வெள் என்னும் முதனிலை வேள் என நீண்டு திரிந்து வேறுபட்டதற்கேற்ப வெள்ளையவனாகிய, இயைபுடைய வேறு பொருள் படுதல் தக்கதாமென்க. ஈண்டு வேளிர் போர்ச்சுக்கீசியர். இவர் நாடு போர்ச்சுகல் என்பது. இவர் கி.பி 1615 முதல் 22-6-1658 வரையும் ஈழ நாட்டினையாண்டு கொண்டிருந்தனர். அப்பொழுது கதிரகாமவேலனது உண்டியற் பொருட்டிரளைக் கவர்ந்து கொள்ளவேண்டும் எனக் கெடுவினை நினைந்து இருமுறை கதிர்காமக் கோயிலுக்குப் படைதிரண்டு சென்று சேர்ந்தபொழுது அவ்வுண்டியற் பேழையைக் கண்டு கொள்ளவுமுடியாது போயிற்று. இவ்வரலாறும் முன்னர்ப் பெறப்படும். புலன் - கல்வியறிவு. புலனுழுநர் - கல்வியறிவையே உழுதொழிலாகக்கொண்டு வருவாய் பெற்றுண்டுதவி வாழ்பவர். "புலனுழுதுண்மார் புன்கணஞ்சி'' யென்பது புறநானூறு, மாடு - செல்வம். மாடர் - செல்வர். நன்றியில் செல்வமுடையார்க்கு உவர்க்கடல் உவமம். கடல்போலுமாடர் எனவுவமத்தொகை. ‘உவர்க்கடலன்ன செல்வருமுளரே’ யென்பது புறம். சீர் - செல்வம். சீர்மாறு முன்றில் என மாறுக. செல்வம் மாறிவிடும் முன்றிலென்க. தீண்டுதல் - புலையாது புலைமை. அவர்: அப்புலனுழுநர். வறுமைப் பசாசம் ஓடவென்வென்பது பறைகொட்டிப் பசாசம் ஓட்டும் நாட்டு வழக்குக் குறித்து நின்றது. மலருண் மணம்போன்ற மின்மான் யானையென்றது முறையே மான் பெற்ற வள்ளியம்மையையும் தெய்வ யானை யம்மையையும். மருள, வியப்பவெனவும் மயங்கவெனவு மிருபொருள் கொள்க. வியப்பவென்புழி ஓடவென்னும் எச்ச வினைகளொடு முடியும். மயங்க வென்புழி வரும் என்னும் பெயரெச்ச வினையொடு முடியும். மான் யானை மருளவருமாவோட யாளியோட வென்பது புனைவுளிப் பல்பொருட் சொற்றொடரணி. மா - குதிரையும் குதிரை முகமுடைய சூரபன்மனும். யாளி - சிங்கமும் சிங்கமுகமுடைய சூரன்றம்பியும். பின்னர்க் கேட்கும் வள்ளியம்மையும் தெய்வயானையம்மையும் தன்னையுவக்கும்படியாக முருகன் தன்மேற் போர்க்கு வரும் சூரபன்மனும் சிங்கமுகாசுரனும் தோற்றோடவெனவும் கதிரகாமக்காட்டுன் வாழும் மானும் யானையும் வருந்தி மயங்கும்படியாக அவற்றைக் கொல்ல வருகின்ற, அவற்றின் முறையே பிறவிப் பகைகளாகிய குதிரையும் சிங்கமும் அஞ்சிக் கொல்லாது ஓடவெனவும் இருபொருள்படுதல் கண்டு கொள்க. மலருண் மணம்போலு மான் யானையெனக் கூட்டிமுடிப்பிற் பல்பொருட் சொற்றொடரணி யெனக் கொள்ளாது ஒலியாகிய குறிநிலையணியெனக் கொள்க. மால் - மயக்கம், ஈண்டு ஆகுபெயரால் மாயாமலத்தை யுணர்த்திற்று. மாயையாகிய பாம்பிற்குக் கரும மலத்தைச் சீற்றமாகவும் ஆணவமலத்தை நஞ்சாகவும் கருதிக்கொள்க. அரவோட்டத்திற்கியைய இடியென்றது இயைபுருவகம். ஏனைய வோட்டத்திற்கியைய இடியென்பதனை இடிபோலும் என உவமவணியாகக் கொள்க. அரவிற்கு இடியாகிய நாததத்துவம் எனவும் நாததத்துவமாகிய சிறுபறையெனவும் மாறி உருவக வுருவகமாக்கிக் கொள்க. ஏனையவற்றிற்கு நாததத்துவம் போலும் இடி; இடிபோலும் சிறுபறையென வுவமைக்குவமை வழுவாக்காது நாததத்துவத்தையும் இடியையும் ஒக்கும்; சிறு பறையென இடைப்பிற வரலடைமொழியாக்கித் தனித்தனியுவமையாக்கிக் கொள்க. சேண் - உயர்ச்சி. வெற்பும் எனும் உம்மை பொதியின் மலையேயன்றியெனப் பொருள் தரும்; இறந்தது தழீஇயவெச்சவும்மை. பொதியின் மலையில் அகத்தியனார்க்கு முத்தமிழ் நூல்களை முருகக் கடவுள் கற்பித்தருளினானெனவே பொதியின் மலையும் முத்தமிழ்நூல் கற்றது என்பது கொள்ளப்படும். இப்பொழுது முருகக்கடவுட் பிள்ளையின் சிறு பறையினினின்றும் எழுத்தோசைகளும் இசையோசைகளும் கூத்தாகிய தாளமும் எழக் கதிரமலையில் எதிரொலி யெழுதலைக் கருதிக் கதிரமலையை முத்தமிழ் நூல் கற்பதாகவும் முருகன் அதனைக் கற்பிக்கும் ஆசிரியனாகவும் கூறியது தற்குறிப்பேற்றம். ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுத்தவுடன் மாணவரும் ஆசிரியர் சொல்லியவாறே அடுத்து எதிராக இடையீடின்றிப் பாடம் சொல்லுமியல்பு போலச் சிறுபறையொலித்தவாறே கதிரமலையும் அடுத்து எதிராக இடையீடின்றி ஒலித்தல் அமைந்து காணப்படும்.
-----------

31. பரல் - சிறு பருக்கைக் கற்கள். மாணிக்கமே ஆண்டு சிறு பருக்கைக் கற்களாய்க் கிடக்கும். குவை - குவியல், பள்ளி - முனிவராசிரமங்கள். தவர் - முனிவர். பொற்பழங்கரகம் - பொன்னாற் செய்யப்பட்ட, பழையதாய்க் கழித்துப் போடப்பட்ட கமண்டலம். இவை இல்லறத்தாராற் கதிரகாம முனிவர்கட்குத் தானமாகக் கொடுக்கப்பட்டன. பானை - சோறு பொங்கும்பானை. பானையில் வார்த்தவென வுருபும் பொருளும் விரிக்க, மணியாறு - மாணிக்கக் கங்கை. ஆமான் - காட்டுப்பசு. யாற்றுப்பால் எனக்கூட்டி யாற்றின்கட் பெருகிவரும் பால் என்க. எனவே மாணிக்கக் கங்கையாற்றிற் காட்டுப்பசுக்கள் கறந்தபால், வெள்ளமாய்ப் பெருகி வருவது அல்லது தண்ணீர், வெள்ளமாய்ப் பெருகி வருதலில்லை யென்றதாகக் கொள்க. பசும்பால் - குளிர்ந்த பால். யாற்றின்கட் பெருகிவரும் பாலை முகந்து கரகப்பானையில் உலைநீராக வார்த்தார் அச்சிறுமியர் என்க. உலைநீரிற் பெய்தவென விரிக்க. அமை - மூங்கில். எள்ளி - இகழ்ந்து தகர் - யாடு. ஈர்த்து - இழுத்து. ஆடும் - விளையாடுகின்ற. நாரத முனிவர் வேள்வியிலெழுந்து உயிர்களைப் பாய்ந்து கொல்லவந்த ஓர் யாட்டினைக் கொம்பைப் பிடித்து அடக்கி ஊர்தியாகக் கொண்டருளினான் முருகன், அதனை நினைந்து சிறுமியால் தகர்க்கொம்பு ஈர்த்தாடும் எந்தாய் என விளிக்கப்பட்டான் அம்முருகன். என் ஆம் - அழித்ததனால் (நிற்கு) என்ன நன்மை கிடைக்கும். என் என்னும் வினாவினைக் குறிப்புப் பெயர், ஈண்டு எதிர்மறைப்பொருள் குறித்து நின்றது. ஒரு நன்மையும் உண்டாகாது என்றவாறு.
---------

32. பரசுராமனோடு கூடி முருகக்கடவுள் சிவபெருமானிடம் விற்கல்வி பயின்று கொண்டிருக்குங்கால் ஒரு பொழுதின்கண் இமயமலைச் சாரலில் முருகக் கடவுள் பரசுராமனோடு உலாவி வருங்கால் அன்றிற் பறவைகள், கொடுமுடியினுயரத்தால் வடபாற் செல்லமாட்டாது வருந்தி முயன்றதனைக் கண்டிரங்கி அம்மலையை அம்புவிட்டெய்து துளைத்து வழியுண்டாக்கி எளிதாகப் பறந்துபோய் வருமாறு முருகன் செய்தான். அதனால் அம்மலை அன்றிற்குன்று எனப் பெயர் சொல்லப்படும். வடமொழியிற் கிரவுஞ்ச பருவதமென வழங்கப்படும். கிரவுஞ்சம் - அன்றில். "குருகு பெயர்க்குன் நங்கொன்றோன்'' என்பது மணிமேகலை. குன்று துளைத்தது பாசுராமன் எனவும், ஒற்றுமை நட்புரிமை பற்றியும் ஏவன் வினை முதலென்பது பற்றியும் முருகன்மேல் ஏற்றிக் கூறப்படும் எனவுங் கூறுதலுமுண்டு. அங்ஙனங் கூறுதலின் கருத்து: முருகனது அடியார்க் கெளிமை, ''சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்” என்னுங் குறளின் பொருள், தந்தையே ஆசிரியனுமாயிருத்தலால் மக்கட்குக் கல்வி சிறவாமை, மகன் என்னும் உரிமைபற்றி மற்றை மாணாக்கர்க்குக் காட்டிலும் மறைப்பொருளை மகனுக்குச் செவியறிவுறுத்தி நடுவுநிலையும் வாய்மையும் பிறழ்தலில்லாத ஆசிரியன் தன்மை முதலியனவற்றை விளக்குதலாம். நெஞ்சினை - மனமுடையாய், அன்று - பாரதகாலம். வீடுமன் - சந்தனு மகன். அம்பாள், காசிநாட்டரசன் மகள். இவள் வீடுமனால் வலிந்து கொணரப்பட்டுப் பின் அவள் விரும்பியவாறு சாலுவ நாட்டாசன்பாற் போகவிட அவனும் புறக்கணிப்பப் பின்னர்ப் பரசுராமனாலும் வீடுமன்பாற் சேரமுடியாது நொந்து வீடுமனைக் கொல்லுதற் பொருட்டு முருகக்கடவுளை நோக்கித் தவஞ்செய்து அவன் தோன்றி வீடுமனைக் கொல்லத்தக்காரால் அணியப்படும் ஒரு பூமாலை கொடுக்கப்பெற்றாள். நல்லியக்கோடன், சிறுபாணாற்றுப்படைப் பாட்டுடைத் தலைவன். நாகர் குடிகளுள் ஓவியர் குடிப் பிறந் தவன். தொண்டைவள நாட்டு இருபத்துநாலு கோட்டங்களுள் எயிற்கோட்டம், ஆமூர்க்கோட்டம், வேலூர்க்கோட்டம் என்னும் மூன்று கோட்டங்களையுடைய ஏறுமாநாடாண்ட குறுநில மன்னன். இவன், தன் பகைமிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட பொழுது முருகன் கனவிற்றோன்றி இன்ன கேணியிலுள்ள பூவைப்பறித்துப் பகைவரையெறி யென்றுகூறி மறைய, நல்லியக்கோடனும் அவ்வாறே செய்ய, அப்பூ, வேற்படையாக மாறிப் பகைவரைக் கொன்றது. வேல் பூவாகப் பூத்திருந்தவூர்க்கு அதனால் வேலூர் என்ற பெயருண்டாயிற்று. அவ்வூர் இப்பொழுது உப்பு வேலூர் என்று வழங்கப்படுமென்பர். செந்நா - நூல்கள் பயின்ற நா. பூவன் - தாமரைப் பூவிற்றோன்றிய படைப்புக் கடவுள். உம்மை, உயர்வு சிறப்பும்மை. இஞ்ஞாலம் என்பது தொக்கது. முருகக் கடவுள் அசுரரை அழித்துப் புத்தேளிரைக் காத்ததற்காக இந்திரன் தன் மகளார் தெய்வயானையாரை முருகக்கடவுளுக்குக் கொடுத்தபொழுது முருகக்கடவுள் தம் கையிலுள்ள வேலைநோக்கி 'நமக்கு எல்லாந் தந்தது இவ்வேல்'' என்று சொல்ல அருகிருந்த பிரமன் ''இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ'' என்றானாக நம் கையில் உள்ள வேலுக்கு நீ கொடுப்பதோராற்றலுண்டோ? என்று வெகுண்டு ''இங்ஙனங் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய் என்று வைய அவனும் அவ்வாறே மண்ணிடைப் பிறந்தான் என்பர். சீறடிக் கொடு - சிறிய திருவடிகளால். சீறடிக்கொடு எம் தலையெழுத்துச் சிதைக்க வென்றது: நின் காலடியில் எம் தலை தோய விழுந்து யாம் கும்பிடுகின்றோம் என்றவாறு.
-----------

33. அன்று - அநாதி. ஆளாவேம் - அடிமையாயிருப்பேமுடைய. அகம் - சிற்றில், போந்து - வந்து. ஓகாரங்களெல்லாம் எதிர்மறை. எம்மாமியென்றது பிள்ளையார் தாயாரை, சொன்னாரோவென்னும் ஐயவோகாரம், யாம் சொல்லவில்லையென்னுங் குறிப்புணர்த்திற்று. நன்றும் - மிகவும். சிற்றிலையழிக்கும் என்க. செய்சிற்றிலென்றது உலகத்தொகுதியை. அழிக்குந்தோறுங்காமக் குறிப்புத் தோன்றியுள்ள மொடுங்குதலின் நாணுவள், உமை. கோங்கு நனையெனமாறுக. ஈனை - அரும்பு. கோங்கரும்பு போலுமுலை யென்க. வடிவுவமம். அகலம் - மார்பு, புடைத்தல் - முகிழ்த்தெழுதல். தமிழ் - இனிமை. காமம் - கதிரகாமம். பொதும்பர் – சோலை. இனித்தமிழ் மொழிக்குச் சிறந்த அகத்திணைக் களவொழுக்கத்திற்கு வாய்ந்த பொழிலென வேறொரு பொருளும் ஒலித்தது குறிநிலையணி. முயங்குவாமோ? எனவரற்பாலது "ஆடாமோவூச" லென்பதுபோல முயங்காமோ? என மரீஇவந்தது. முயங்குவாம் வருவாயா எனத் தழுவிப்பேசிச் சிற்றிலழியாதவாறு சிறுமியர் முயன்றது காண்க. கேண்மோ; மோ: முன்னிலை யசைநிலையிடைச்சொல். சிதையா - எஞ்ஞான்றுங்கெடாத. பேரில் - பேரின்பப்புணர்ச்சிக்குரிய பெருவீடு, சிதையாப்பேரில் செய்பெரியோயென்றது கருத்துடையடைகொளியணி. சிறியரது சிற்றிலைச் சிதைத்தல் பெரியாரது பெருமைக் குத்தகாது என்னுங்கருத்தைப் பெரியோய் என்னும் அடைகொளி உடையதாயிருத்தலின். இனிச்சிற்றில் சிதையற்கவெனக்கூறு மூன்று செய்யுளின் கண்ணும் பலதிறப்பட்ட விலக்கணி வருமாறோர்ந்துணர்க. வருகைச்செய்யுள் முதலியவற்றினும் இவ்விலக்கணி வருதலுய்த்துணர்ந்து கொள்க.
-------------

34. கோடு - மலை. வடவரைப்பு - வடவெல்லை. தென் - தெற்கு, வரை - எல்லை. கதிரம் - கருங்காலிமார். கதிரை - கதிரகாமம். பெருநாள் - திருநாள். ஆடித்திங்கள் - ஆடி மாதம். அம், சாரியை. இவ்வாடிமாதம் என இகராச்சுட்டு இசையெச்சமாக வருவித்துரைக்கப்படும். பெருநாளும் இன்றேயாம் எனக்கூட்டியுரைக்க. நிற்பிறப்பித்த - நின்னைப்பெற்ற வான் கங்கை - ஆகாய கங்கை. பீடு - பெருமை. மதியைக் கங்கையாள் முகம் என்றது தற்குறிப்பேற்றவணி. நகையென்பதனை முறுவல் எனவும் பிறைக் கலையெனவும் இரட்டுறமொழிந்து கொள்க. ஆடித்திங்களின்கண் நிறையுவாவிற் (பௌர்ணமி) கதிரகாமவேற்றிருவிழா நிகழ்த்தப் பெறுமாதலின் மதிநிரம்பிற்று எனக்கூறப்பட்டது. திருநீற்று வெள்ளம் என்றது சைவமதத்தினர் திருக்கூட்டம். வெள்ளம் - ஆற்றுநீர்ப்பெருக்கு. திருக்கூட்டம்; இடையறாது மிகப்பெருகி இடமறைய ஒலித்து அலையால் வெளுத்து வந்து கொண்டிருத்தலின் வெள்ளம் என ஒட்டணி தோன்ற கூறப்பட்டது. இனிவெள்ளம், மிகுதிபற்றியும் ஆரவாரம் பற்றியும் அலைதல்பற்றியும் கடல் என்னும் பொருள் படக்கூறப்பட்டதுமாம்; அல்லது ஓரெண்ணின் பெயருமாம், ஒருவாமல் - இடைவிடாமல். மால் - திருமால், திருப்பாற்கடலில் உறங்குமால் என்க. எழுப்ப - துயிலுணர்த்த. மாலினையெழுப்ப வென்றது தொடர்புயர்வு நவிற்சியணி. ஒருகோடியென்னும் வரையறைப்பெயர் ஈண்டு அளவின்மையைக் குறித்து நின்றது. கப்புரம் - கற்பூரம். வேறு நெய்விளக்கு முதலியன கதிரகாமவேலவற்கு இடப்படாமையிற் கப்புரவிளக்கு மட்டும் கூறப்பட்டது. வேறு விளக்கு இடாமைக்குக்காரணம், முருகனுக்கு ஆண்டு விக்கிரக வடிவமில்லாமையேயாம். மெய்க்குறிப்பு - உண்மைக்கருத்து. அஃதாவது வெளுத்தகப்புரம் நெருப்புப்பற்றப்பட்டு எரிந்து முறையே ஆவியாய்க்கரைந்து மேற்சென்று மறைந்து காணப்படாதவாறுபோல மும்மலங்களினின்றும் நீங்கித் தனித்துத் தனக்குத்தானே விளங்கிநின்றவுயிர் சிவஞான நெருப்புப்பற்றப்பட்டுச் சிவஞான வடிவமாய் விளங்கியெரிந்து சிவமாய்க்கரைந்து மேற்சென்று தான் மறைந்து காணப்படாது போம்; என்னும் அனுபவஞானமாகிய கருத்து. இனிக் கப்புரத்தை உயிர்களோடு ஒப்பியாது முருகக்கடவுளோடொப்பித்து முருகக்கடவுள் ஆன்மாவின்கண் ஞானவடிவமாய்நின்று அஞ்ஞானத்தைப் போக்கித் தத்துவப்பொருள்களை விளக்கிப் பின்னர் அவ்வான்மாக்களோடு கதிரகாமக்கோயில் வெளிவடிவமாய் மறைந்து நிற்கின்றான் என்னும் உண்மைக்கருத்தெனினுமாம். விக்கிரக வடிவமெல்லாம் கடவுளுக்குரிய மந்திராத்துவா வடிவமாகிய உபசாரவடிவம் என்பர். விக்கிரக வடிவம் என்பது ஐம்பூசங்களுள் ஒன்றைத் திருமேனியாகப் பாவனையாற்கொண்டு பற்றிநிற்றல். கதிரகாமத்திருக்கோயிலில் ஆகாயப்பூதத் திருமேனிக்குரிய மந்திரவோசைவடிவம் நிறுத்தப்பட்டிருத்தலின் ஆண்டு வெளிவடிவமாக வழிபட்டார்க்குத் திருமுருகன் திருவருள் சுரந்து நிற்கின்றான். அம்மந்திரவடிவத்திற்கு வேண்டும் பீடமாகிய தகடும் விக்கிரகமும் ஒருபெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்டு சிற்றுடல்போலும் சிறுகுடிற்கோயிலினுள் வைத்து உபசரிக்கப்படுகின்றன. அப்பெட்டியே திருவிழாக்காலங்களில் யானைப்பிடரியில் வைக்கப்பட்டு வீற்றிருந்து திருவுலாப்போந்தருளுதல் இப்பொழுது வழக்கமாகக்காணப்படுகின்றது. அதனை அங்ஙனம் வழிபட்டு எழுந்தருளுவிப்போர் இப்பொழுது சிங்களப்பார்ப்பார். இவர் வேட்டுவர் பாற்பட்டவர். அப்பெட்டிக்குள்ளே தான் முருகனுக்குரிய மாணிக்கவிக்கிரகம் இருக்கவேண்டும் போலும். அவ்விக்கிரகம் மாணிக்கவிரத்தினமாயிருத்தலும் பெட்டிக்குள் வைத்து மறைத்தற்கு ஒரு காரணமாயிருக்க வேண்டும் போலும். தம்மிழப்பவென்றது தந்தன்மையாகிய உயிர்த்தன்மையிழந்து சிவத்தன்மை யெய்தவென்றவாறு. தெருவில், ஓகை - மகிழ்ச்சி. அயில் - கூர்மை. அயில் - வேற்படை, அயிற்சிறுதேர், திருவிழாச்சிறுதேர், பூமழைச்சிறுதேர் எனத்தனித் தனிக்கூட்டுக. அயிற்சிறுதேர் – வேற்படையையுடைய சிறுதேர். முருகன் தன்கையில் வைத்திருந்த வேற்படையைச் சிறுதேருருட்டுதற் பொருட்டு அத்தேரின் மேல்வைத்து அவ்வேற்படையையுடைய தேரினை அவ்வேற்படை வைத்திருந்த கைகளாலுருட்டினானாதலிற் சிறுதேர், வேற்படையுடைத்தாயிற்று. ஆடி வேல் விழாவென்னும் பெயர்க்குப் பொருள் ஈண்டுத் தற்குறிப்பேற்றியுரைத்தவாறு கண்டு கொள்க. திருவிழாச் சிறுதேர் – திருவிழாக் கொண்டாட்டத்தைப் பயக்கும் சிறுதேர். பூமழைச் சிறுதேர் - மாந்தரும் கடவுளரும் பெருமகிழ்ச்சியாற் சொரியும் பூமழையையுடைய சிறுதேர். ஓசையும் அயிலுமுடைய அயில். முருகன் திருக்கையைத் தீண்டப்பெறுதலால் வேற்படை மகிழ்ச்சியுடைத்தாகும். தெருவிலுருட்டியருளெனக. பற்றறுத்து இன்பம் விளைத்தலான் முருகன் அறிஞராற் றேடத்தக்க முழு மாணிக்கமாம். எனையுலகியன் மாணிக்கம், பற்றை வளர்த்துத் துன்பம் விளைத்தலிற்றேடத்தக்க தன்றாயிற்று. முழுமாணிக்கம் - இலக்கணமெல்லாம் நிரம்பப்பெற்ற மாணிக்கம். பெரியமாணிக்கமெனினுமாம். முருகன் எல்லா நற்குணங்களும் ஒருங்கு திரண்டிருக்கப்பெற்று நிலைபெறுதலிற் குணக்குன்றமெனப்படுவன்.
----------

35. மாயா; என்பதனை ஆகாரவீற்றுத் தனித் தமிழ்ப்பெயரெ னக்கொண்டு உலகப்பரப்புத் தோன்றியொடுங்கற்கு ஆக்கமுத (முதற் காரணம்) லாயிருப்பது என உறுப்புப்பொருள் தோன்றவுரை கூறுவர், சிவஞானபோதப் பேருரையாளர் மாதவச் சிவஞானயோகிகள். மாய் - மாய்ந்து: மறைந்து. ஆ - ஆதல்: உண்டாதல்; வெளிப்படுதல்; முதனிலைத் தொழிற்பெயர். மறைந்து வெளிப்படுதல் என்னுந் தொழிற்பண்பின் பெயர், அப்பண்பினையுடைய முதற்பொருளை யுணர்த்தி நிற்றலின் அடையடுத்த பண்பினாகுபெயர். மாயாவென்பது மரூஉவால் இறுதிநிறலையுருபு தொக்குப்புணர்ந்த வினையெச்சத் தொடரன்றிப்பாடாண் என்றாற் போலத்தொகை நிலைத்தொடரன் மையான் அன்மொழித்தொகைப்பெயரன்று. உடல், பொறி, நிலம், நுகர்ச்சியென்னும் நான்கங்கன்றொகுதியாகிய உலகம் என்னும் பகுப்பொருட் காரியவடிவமாகத் திரிந்து விரிந்து வெளிப்பட்டுக் காரணவடிவமாகிய நுண்பொருளாக மடங்கியொடுங்கி வெளிப்படாது நிற்றற்றன்மை யமைந்தது என்றவாறு. பின்னர் உயிர்களுக்கு இருவினையுண்மை கூறுதலால் ஈண்டுமாயா வென்றது மாயாவினது, அழுக்குப்படிந்து தூய்தல்லாத ஓரிடத்தினையென்பது குறிப்பாற் பெறப்படும். களியென்பது தழாலணி (சிலேடையணி) பசைப்பசுமண் எனவும் மயக்கம் எனவும் இருபொருள் தருதலின். மண்ணியல் - மண்ணாலான. வாய்மை - வாக்குக்கள். நால் வாய்மைகளாவன: நுணுக்கம், (சூக்குமை) பான்மை, (பைசந்தி) இடைமை, (மத்திமை) கேள்வி, (வைகரி) என்பனவாம்; இந்த நான்கு வாய்மைகளும் தூமாயா (சுத்தமாயை) வினது இயப்பொருண்மை (நாததத்துவம்) (இயம்- நாதம். பொருண்மை - தத்துவம்.) யின் வளர்ச்சித்திரிபு (விருத்திப் பரிணாமங்களாமெனக் கொள்க; ஈண்டு நால்வாய்மையென்பது, ஐம்பால், (கூந்தல்) ஐயுணர்வு (திருக்குறள், மெய்யுணர்தல்; 6) என்பனபோல அன்மொழித்தொகைப் பெயராக நின்று நால்வாய்மையுடைய தூமாயாவினையுணர்த்திற்று; தூமாயா, சிவபெருமானது திருவருளாற்றல் சென்று பற்றித்தொழில் செய்யும் இடமும் செயப்படுபொருளுமாம். கொடிஞ்சி:- தேரில் வீற்றிருப்போர் கைப்பற்றுதற் கமைந்ததோர் தேருறுப்பு; இது தாமரைப்பூ வடிவமாக வமைந்திருக்கும் என நச்சினார்க்கினியர் கூறுவர். இமிழ் - ஒலிக்கின்ற கொடிஞ்சிடையுடைய சிறுதேரென்க, மண்ணானியன்ற சிறுதேர். அச்சு - உருளை கோக்குமிடம். மன்னுயிராகிய அச்சின்கண்; எனவுருவகம். இருவினையாகிய ஈருருள். உருள் - தேர்ச்சக்கரம். அச்சினின் ஈருருளையைக்கோத்து. மாறிக்கோத்தல் - ஓரச்சின் கண் இருவினையாகிய ஈருருளையை மாறிமாறியிணைத்தல். மருளும் - மயங்குதலானாகிய மயங்குதல்: ஒருபொருளை மற்றொரு பொருளாகத் திரியக்கோடல். அவாவாகிய ஆணி. வீயா - கெடாத. ஆணி: அச்சுருவாணி. உருளை கழலாமல் அச்சுரும்பில் கடைக்கட் செருகும் அது. வெறும் பாழ்வெளி: உயிர் முதலிய எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடாய் அவற்றாற்றாக்குண்ணாது நிற்கு முழுமுதற் சிவனதொருதனிநிலை மை. வெட்டவெளி: அப்பொருள் தனக்கொரு பற்றுக்கோடின்றி நிற்கும் நிலைமை. அருள் - திரோதான சத்தி (மறைப்பாற்றல்) அதுவே மாயையைத் தீண்டித் தொழில் செய்தலிற் சிவபெருமான் கையெனப்படும். வினை பலவிளைதர என்பது தழாலணி; (சிலேடையணி) சேரீர்த்துருட்டற் றொழில்கள் பலவுந் தோன்றவெனவும் உயிர்களது வினைத்தொகுதி, ஆணவமலம் பக்குவப்பட்டுக் கழிதற்கு இன்ப துன்பப்பயன் நுகர்விப்பவெனவும் பலபொருள் படும். ஈர்த்தல்: தான் முன்னின்று தேர் பின்வரக் கயிற்றாலிழுத்துச் செல்லல், உருட்டல்: பின்னின்று தள்ளியுருட்டலும் தேர்மேலேறியிருந்து கால்களாலதல் பொறிகளாலாதல் உருளைகளைச் சுழற்றி யுருட்டலுமாம். ஈர்த்தலும் உருட்டலும் முறையே உயிர்களின் ஒடுக்கமுறை நிகழ்ச்சிமுறை (பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம்) களைக் குறிப்பனவாம். பேயாம் - பேய்த்தன்மை பெறுதற்குக் காரணமாகிய; பேய்த்தன்மை: பேயாய்ப் பிறத்தலும் பேய்கோட்படுதலும் பேய்போல அறிவுதிரிந்து ஒழுக்கமின்றி வேண்டியவாறு திரிந்து மூன்று பிறவுயிர்கட்கு இன்னா செய்தொழுகுதலுமாம். கோள் - கொள்கை, முறை: காரண காரியமுறையும் முன்பின்றொடர்ச்சி முறையும் இலக்கண முறையும் நீதிமுறையுமாம். பிறழ்பு - பிறழ்ந்து; தடுமாறி. உருள – கெட. பயில் - பழகிய. ஊராண்மை - நாகரீகம்: கல்வியறிவொழுக்கங்களான் மேன்மேலுயர்ந்து செல்லல். ''ஊராண்மையென்பதோங்கிச் செல்லல்" என்னும் பிங்கலந்தை நூற்பாவிற்கு மிதுவே கருத்து. ஊராண்மைக்குப் பொருள் நாகரீகமென்றுரை கூறியவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியாரவர்கள். 'ஊராண்மைக் கொத்தபடிறுடைத்தென்பது கலித்தொகை. பேராண்மை - செயற்கருஞ்செயல் செய்தல், 'பேராண்மை யென்பதரிய செயலே'' யென்பது பிங்கலந்தை. அரசியலாழி - ஆணைச்சக்கரம். பெட்ப - விரும்ப. ஓராழி: ஞாயிற்றுச் செல்வனது தேர்க்குரிய ஒற்றையுருளை. சீயா - நீக்காத. திரு - நல்வினை. திருவில் பொருள் - அறத்தானன்றி மறத்தான் ஈட்டப் பட்டுத் தீநெறியிற் செலவிடும் பொருள். உருளும் - நிலைபெறாது நீங்கிப் போய்க்கொண்டிருக்கும். திருவில் பொருள் உருளும் என்பது.

''அருளொடு மன்பொடும் வாராட்பொருளாக்கம்
புல்லார் புரள விடல்'' என்னு

முப்பாலாற்பெறப்படும். உருளுமெனினும் புரளுமெனினும் ஒக்கும். "சகடக்கால் போலவரும் என்பது நாலடி.''
-----------

36. பழந்தமிழ் வழக்கு என இப்பொழுது தெரியவருதலால் ஆவிநன்குடியெனவும் பருங்குன்றமெனவுங் கூறினாம். ஆவிநன்குடி யென்பது ஆவியது நல்ல குடியிருந்தவூர் என அன்மொழித் தொகையாய்க் காரணப் பொருள்படும். ஆவி: வேளாவி என்னும், வேளிர் குடிப்பிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் ஆவியர் குடிக்கு முதல்வன். பருங்குன்றமென வழங்கியதனை ஒலிவேற்றுமை பெரிதுந் தோன்றாமையானும் சிறந்த பொருளுடையது என்பதனானும் பாண்டியர் தமிழ்க்கழகச் சான்றோராலேயே பரங்குன்றம் எனச்சிறிது திருத்திச் செய்யுளினும் வழக்கினும் பயின்றதாகல் வேண்டும். குன்றம் - சிறு மலை. உருண்டு பெருத்த சிறிய கற்களைப் பருக்கைக் கற்கள் என்றல்போல உருண்டு பருத்த சிறிய மலையைப் பருங்குன்றம் என்றல் தக்கதேயாம். கிரியென்னும் வடசொற்குப் பான் என்னும் சொல்லியையுமாறு போலக் குன்றம் என்னுந் தமிழ்ச் சொற்கு இயையாமையும் பரு என்னுந் தமிழ்ச்சொல் இனிதியையுமாறும், பரங்கிரியென்பது செய்யுளினன்றி வழக்கிற் பயிலாமையும் நுனித்தாராய்ந்து இருங்குன்றமென்றாற்போலப் பருங்குன்ற மென்றிருத்தல் வேண்டுமென்பது தெளிக. கூடலை மதுரையெனப் பிறர் வழங்கியதனைத் தமிழரும் வழக்கியவாறு போலப் பரன்குன்றம் எனப் பிறர் வழங்கியதனைத் தமிழரும் வழங்கினாரெனக் கொள்க. தமிழர் தாமே பரன்குன்றமென வழங்குமியல்பினரல்லர். இனிப் பருமையைக் குன்றத்திற்கு அடையாக்கிக் குன்றமென்பதேநின்று ஒழிபளவையானும் இனத்தானும் பொதுமை நீங்கித் திருப்பரங் குன்றத்தினைச் சிறந்துணர்த்திற்றெனக் கொள்ளினுமமையும். தெண்குன்று - தெளிந்த குன்று: புகழான் விளங்கிய குன்றென்றவாறு. ஏரகம்: மலை காட்டகத்தொரு திருப்பதியென்பர் திருமுருகாற்றுப்படை யுரையாசிரியர் நச்சினார்க்கினியர். சுவாமி மலையென இக்காலத்து வழங்கப்படுவது என்பர். திருப்புகழ்ச் செய்யுளுடையார். சேக்கை - தங்குதற்கு உரிய. அலைவாய் - திருச்சீரலைவாய். இக்காலத்துத் திருச்செந்தூர் என வழங்கப்படும்; இது. - சேந்தனூர் என்பது செந்தூர் எனவும் சேந்தனில் என்பது செந்தில் எனவும் மரீஇ வழங்கப்பட்டுத் திருச்சீரலைவாயைப் புகலும். திண் பாடிவீடு - அழிவின்றி நிலைபெறும் பாசறை. உரு - உட்கு: நன்கு மதிப்பு. ஆகும் - தோன்றுதற்கு வாயிலாகிய அகக்கள மாவை - மூலாதாரம் முதலாகவுள்ள, உள்ளம் நின்று நினையும் நிலைக்களங்களாகவுடைய; முன்னிலை வினையாலணையும் பெயர். ஆறு படைவீடுகளும் ஆறாதாரங்களா மென்றவாறு. ஆறெழுத்தென்பது முருகன் திருமறை. அது: நாமோகுமாராய வென்பதென்பர் நச்சினார்க்கினியர், சரவணபவ என்பது இக்காலத்துப் பெருவழக்கு. வேறும் முருகன் பெயர்த் தமிழ்த் திருமறை, ஆறெழுத்துக்களை யுடைத்தாயின் அதனைக் கொள்ளினுமாம். ஆறெழுத்தான் உணரப்படும் ஆறு செல்வமுகங்களின் கண்ணும் எனவுரைக்க. ஆறு செல்வங்களுமே ஆறுமுகங்களாயுமுள்ளன. ஆறு செல்வங்களுமாவன: ஆட்சி, திண்மை, புகழ், மெய்யுணர்தல், திரு, அவாவின்மை யென்பனவாம். மடை - நீர் போகும் வாயில், அருளை நீரென்னாமையால் மடை, ஒருவழியுருவகம். ஆறு - வழி; மடைவழியாகவென்க. ஒழுகு மடை - கண்களாகிய மடைவழியாக, நெஞ்சகக் குளத்திற்றேங்கிக் கிடந்த அருளாகிய நீர் வெளியே கசிந்தொழுக வென்க. ஓவா - விட்டு நீங்காக. தேரோட்டுதற் பொருட்டுத் தன் பன்னிரு கைகளினும் பன்னிரு படைகளும் மருவாவாயின. முழந்தாள் வரையும் படக்கை மீண்டு வளர்ந்திருத்தல் தலைவனியல். கையும் என்னும் முற்றும்மை தொக்கது. கன்ற - நொந்து தழும்பு பட. வார் நீண்ட வட்டுடை: முழந்தானளவு முடுக்கும், போர் மறவருடை... முருகன், படைத்தலைவனாதலின் வட்டுடை கூறப்படும். வனப்பு அழகு. வட்டுடையாலேயாகிய வனப்பு. வனப்பசைதல் - கட்டழகு; இலாவணியம் என்பர் வடநூலார். மாமுனிவர் கண்டவெளி; முழுமுதலாகிய அறிவுவெளி அதுவரையும் தேருருட்டுவாவது: அறிவால் தத்துவங்களைக் கடந்து திருவருள் வெளியைச் சேர்தலேயாம் என்பது கருத்து. மறுகு - தெரு. செரு - போர். வீறு - சிறந்த; வினைத்தொகை. பொன் மணிச் சிறுதேர் - பொன்னாற் செய்து மணிகளழுத்திய சிறுதேர். வாழி என்பன வாழ்க வென்றுமாம் அசைநிலையிடைச் சொல்லுமாம். ஆறு திருப்படைவீடும் ஆறாதாரங்களாகவுடைய நீ, பொசியவும் கன்றவும் அசையவும் உருட்டு என முடிக்க. உம்மையில்லனவற்றிற்கு உம்மை தொக்கனவாக்கி விரித்துரைக்க.
-------------

37. செம்புலம் - முன் உழாது கிடந்த கொல்லை நிலம். உழாநிற்கும் - உழுகின்ற. மைந்து - இளமைப் பருவத்து வலிமை. மலி - மிக்க. புனவன் - குறவன். தெவிட்ட -வெறுப்ப: வேண்டுமளவு முண்ணுதற் பொருட்டு, கொடுபோம் - கொண்டு போகின்ற. தினையினது சோறு; வெய்துசோறு; நெய்ச்சோறு; பாற்சோறு, எனத் தனித்தனிக் கூட்டிமுடிக்க. பொங்கல் - வடியாது பொங்கின சோறு. வெய்து பொங்கல் -வெப்பமுடையதாகிய பொங்கல். வெய்து என்பது வினைக்குறிப்பு முற்றுப் பெயரெச்சம்; இரு பெயரொட்டாகக் கொள்ளின் முதனிலையிற் பொருள் சிறந்து அஃது எடுத்தலோசையாற் சொல்ல நிற்றலில்லையாம் பாற்பொங்கலையென விரித்து அருத்தி என்பதனோடு கொண்டுபோய் முடிக்க. நெறியிடை - வழிநடுவே, கண் திறலாது முகைத்து என்க, முகைத்து - மூடி. கண்மூடியிருத்தல், பிரத்தியாகாரம் என்னும் யோகவுறுப்பு. யோகிகள் உள்ளம் மடங்கி உண்ணாட்டங் கொள்ளுங்காற் புறப்பார்வையைக் கண்மூடி யொழித்தலியல்பு. தம்புலம் - ஆன்ம ஞானம். இறந்த - கடந்து அப்பாற்பட்டு நின்ற. பழவேங்கை - பழைய வேங்கை; என்றது முன்னர் வள்ளியோடு களவோழுக்கமொழுகப்புக்கு வேட்டுவர் வரவையஞ்சி மறைதற்கு வேங்கைமரமாய் நின்ற முருகக்கடவுளை. இனிப் பழவேங்கை யென்பதற்குப் பழம் பழாத, உலகத்து வேங்கைமரம் போலாது முருகக்கடவுளாகிய வேங்கைமரம் பழம் பழுக்கும் வேங்கை மரம் என வெளிப்படுத்துக் கூறியதாகக் கொண்டு பொருளுரைத்துப் பழமாவ : முத்திப்பழம்; என்றதாகக் கொள்க. 'முத்திப் பழம்'' என்னும் ஆட்சியினை

"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங்-கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடியெழுங்கா ணின்று "

என்னுந் திருக்களிற்றுப்படியாரிற் கண்டு கொள்க. பழவேங்கையென்றது வெளிப்படையணியென்னும் ஒருசார் ஒட்டணி. வேங்கையின் என்னும் இன், ''திருவின் செய்யோள் போன்றினிதிருப்ப' என்னு மணிமேகலையடியிற் போல அல்வழிச்சாரியை, மரவடியென்பது மராடியென மருவி வழங்கும். வேங்கையாகிய மாத்தின் அடியென்க. மரத்தினடி திருவடியாய் நின்றது. தண்மையும் நிழலும் திருவடிக்கியையப் பேரின்பமும் பிறவி வெப்பமொழிதலுமாமாறு கருதிக்கொள்க. குளிர்ந்து என்னும் வினையெச்சம் குளிர் எனச்சிறுபான்மை தொக்கு நின்றது; ''வரிப்புனைபந்து'' என்றாற்போல குளிர்தல் - தங்குதல். இஃதொரு நாட்டுச்சொல் என்ப தூங்குறும் என்பது யோக சமாதி யொடுக்கங்கொள்ளும் என்னும் கருத்தாமாறுங் காண்க. சான்றோர் - துறவானமைந்தோர்: பன்னாட் பட்டினி நோன்பு கிடந்தமையாலுற்ற மெய்த்தளர்ச்சியால் அம்முனிவர் தாமே எடுத்துண்ணமாட்டாமையாற் குறத்தி அம்முனிவர் வாயிலூட்ட வேண் டியதாயிற்று அருத்தி - உண்பித்து. தழைக்கும் - மனமகிழும் குறத்தியானவள் தன் கணவனுக்குக் கொண்டுபோம் பாற்பொங்கலை முனிவர்க்குக் கொடுத்தலாற் கணவனும் வெகுளாது மகிழுமியல்புடையான் என்க. தமக்கு இம்மை மறுமை வாழ்வு எளிதிற் கிடைக்கும் என்பதனால் அவர் இருவரும் அவ்வாறு மகிழ்வராயினர். தழைக்கும் என்னும் பெயரெச்சம் கதிர்க்காமம் என்னும் இடப்பெயரொடு முடியும். உம்பர் - தேவர்; ஆகுபெயர். உகப்பு - உயர்வு; உரிச்சொல்; "உகப்பேயுயர்வு'' என்பது தொல்காப்பியம். உகப்பிதற்கும் - உயர்வாகிய இவ்வழகிற்கும். அழகும் என்னும் உம்மையை இதற்கும் என மாறுக. ஓகாரங்கள் எதிர்மறை. ஒப்பனை - அலங்காரம். ஈண்டு ஒப்பனை செய்தல்: அணிகலம் பூணுதல். இம்பாது - இவ்வுலகத்தின் கண்ணதாகிய. பொழுதறி பொறி - கடிகாரம். சிறு கடிகாரத்தைப் பொற்றொடர்க்காப்பிற் பூட்டி முன்னங்கையிற் பூட்டிக்கொள்ளுதல் இக்கால வழக்கு. இணை - இரண்டு. பொலந்தொடி பொற்காப்பு: தொடர்க் (சங்கிலிக்) காப்பு. பொறியைப் பூட்டின பொலந்தொடியென்க. கையிற் பூட்டுதற்கமைந்த பொலம் தொடியென்க. கமுகு போலும் கழுத்தென விரிக்க. அம்: சாரியை. கழுத்து: முருகக்கடவுள் கழுத்து. கழுத்து - கண்டம். இயையும் – தகுந்த; முத்தாரம் - முத்துமாலை. முத்துக் கமுகிலிருத்தல் பொருந்துமென்றது தகுதியணி. முத்துப்பிறக்கு மிடங்களுட் கமுகமரமும் ஒன்று. இமை - விட்டு விளங்குதல்; முதனிலைத் தொழிற் பெயர். இமைத்தலையுடைய வென்க. பொலங்கொடி - பொன்னரிமாலை பூண்க என்னு - வியங்கோள் முன்னர் வந்த வியங்கோள் போல வேண்டிக் கோடற் குறிப்பின் கண் நின்றன.
------------

38. வயிரம் - வயிரவிரத்தினம். தெருள் - ஞானம். காற்சிலம்பினையே நோக்கி நிற்குமுள்ளம், நினைவு முதிர்ச்சியான் அச்சிலம்பாகவே காணப்படுமாதலிற் சிலம்பின் வளைவினை உள்ளத்தின் மேலேற்றி உள்ளம்வளையவெனக் கூறியது காண்க. இனித் தெருளுள்ளமானது முருகனுடைய திருவடிகள், தன்னினின்றும் போகாமல் தனக்கு அகப்பட்டுக் கிடக்குமாறு அத்திருவடிகளை வளைத்துத் தடுத்துப் பற்றிக்கொண்டாற் போலும் ஞெகிழம்; எனினுமாம். வளைய - அகப்பட, வளைக்கும் - தடுத்து நிறுத்திப் பற்றிக்கொண்டாற்போலும், நரல் - ஒலிக்கின்ற; வினைத்தொகை. ஞெகிழம் - சிலம்பு. வள்ளிக்கொடி - வள்ளி நாச்சியார். அவர், முருகனுடைய திருமார்போடு சேர்தலாலழகு மிக்க பதக்கத்தின் வாய்ப்பட்டுப் பதக்கத்தையே நோக்கிய நோக்கு மீட்க மாட்டாமையைக் கண்மணி பதிக்குமெனக் கூறினாள். இனிக் கண்மணி பதிக்கும் என்புழி மணியென்பது ஒரு சிறப்புவாய்ந்த விரத்தினம் எனவும் ஒலித்து நின்றது காண்க. முகிலூர்தி - இந்திரன். செயிர் - குற்றம். இன்றிய - இல்லாத. மும்மணிக்கோவை -புருடராகம், வயிடூரியம், கோமேதகம் என்னுமும்மணிகளாலாகிய மாலை. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மாணிக்கம் விற்ற திருவிளையாடல், இருபத்திரண்டாஞ் செய்யுளும் அதன் கீழ்க்குறிப்பும் பார்க்க. முகிலூர்தி கொடுத்த மும்மணிக்கோவையென்க, நான்முகன் தந்த நான்மணி மாலையென்க. இளவன்மார் - தம்பிகள். ஒன்பதின்மர், வீரவாகு தேவர் முதலிய ஒன்பதின்மர் என்க. திகழ்ந்த - பிறத்தற்கு வாயிலாகிய; என்றது: அவ்வொன்பதின்மருடைய தாயர் ஒன்பதின்மரும் ஒன்பது இரத்தினங்களினின்றும் பிறந்தார் என்னும் புராணவழக்குக் கருதியவாறு. ஒன்பான் மணிமாலை - நவமணிமாலை. தயிருண்டோடிய நல்லம்மான்: திருமால். நல்லம்மான் - தாயுடன் பிறந்த மாமன்; துயல் - அசையும், பன்மணி மாலையென்பது ஓரணிகலம். மும்மணிக் கோவை, நான்மணி மாலை, நவமணிமாலை, பன்மனி மணிமாலை யென்பன அவ்வப்பெயர்களையுடைய தொடர்நிலைச் செய்யுட்களையுணர நிற்றல் குறிநிலையணி. தனியொருவர் - உவமையில்லாதவொருவர்; பிரிவில்லாதவொருவர் எனினுமாம்! ஆண்பால் வடிவமும் பெண்பால் வடிவமும் தம்முன் ஒன்றனுள் ஒன்று மறைந்து நில்லாது வேறுவேறாய் வெளிப்பட்டுக் காணப்படுகின்ற வொருவரெனினுமாம். இவ்வடிவங்களுன் ஆண்பால் வடிவம் பெண்பால் வடிவத்தைத் தன்னுட் கரந்தொடுக்கி நிற்கும் என்பது

"பெண்ணுரு வொருதிறனாகின் றவ்வுருத்
தன்னுளடக்கிக் காக்கினுங் கரக்கும் ''

என்னும் புறத்திற் கண்டுகொள்ளப்படும். ஆண்பால் – ஒருவன். பெண்பால் - ஒருத்தி. ஒருவனும் ஒருத்தியுமாகிய ஒருவர் என்றது பெண்ணொரு கூற்றுக் கண்ணுதற் கடவுளை. ஆண்பால் பெண்பாலொருவர் என்பதற்கு ஆண்வடிவுக்கூறும் பெண்வடிவுக் கூறுமாயிருக்கு மொருவர் எனினுமாம். (பால் – கூறு. சிவனும் உமையும் ஈண்டு ஒருவர் என்னும் பொதுச் சொல்லாற் கூறப்படுகின்றனர். ஒருவர் என்பது ஆண் பெண் பொதுப் பன்மையாகக் கொள்ளப்படாத வழி உயர்வுப்பன்மையாகும் எனக்கொள்க. ஆண் பெண் வடிவமாகிய சிவசத்தியினை ஒருங்கு உடன் குறித்தற்குத் தமிழ்மொழியிலுள்ள இவ்வொருவர் என்னுஞ் சொல்லன்றி உலகத்து வழங்கும் வடமொழி முதலிய வேறு பல்லாயிர மொழிகளுள்ளும் இல்லையென்பர் குமரகுருபரவடிகள்.

''அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்
        கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட
மருவருக்கன் மதிவளிவான் யமானன் றீநீர்
        மண்ணெனுமெண் வகையுறுப்பின் வடிவுகொண்ட
ஒருவனுக்கு மொருத்திக்கு முருவொன் லவ்
        வுருவையிஃ தொருத்த னென்கோவொருத்தியென்கோ
இருவருக்கு முரித்தாக வொருவரென்றோ
        ரியற்சொலில தெனில் யான்மற் றென்சொல்கேனே

என்பது அப்பெரியார் திருவாய் மொழிந்த சிதம்பரச் செய்யுட்கோவைச் செய்யுள். இதனை விரித்துரைத்து மேற்கூறிய கருத்தமைந்தவாறு நோக்கி மகிழ்க.
இதனாற் சிவவழிபாடு தமிழரிடத்தே முதன்முதற் பிறந்து உலகமெலாம் பரவிற்று என்பதூஉம் அதனான் அது கடவுண் மொழியென்பதூஉம் பிறவும் பெறப்படும். இவ்வாய்மை திருவருளான் உணரப்பெற்றதனானன்றே திருவாதவூரடிகளும் “தென்னாடுடைய சிவனே போற்றி'' யெனவும் ''தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே'' எனவும் "பாண்டி நாடே பழம்பதியாக'' எனவும் 'சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்'' எனவும்

"ஏதமிலா வின்சொன் மரகதமே யேழ்பொழிற்கு
நாதனமை யாளுடையா னாடுரையாய் -காதலவர்க்
கன்பாண்டு மீளா வருள்புரிவா னாடென்றுந்
தென்பாண்டி நாடே தெளி”


எனவும் பலகாலும் வற்புறுத்தி மொழிந்து போதருவராயினர். சாத்தும் - சூட்டும். புன்னகை - குறுமுறுவல். மணி - முத்து; என்றது பற்களின் ஒளிகளை. மாலை - வரிசை, சிவனும் உமையும் மகிழ்ந்து சிரிக்குங்கால் அவர் பல்வரிசைகளின் ஒளி வரிசைகள் முருகன் திருமேனி மேற்றோன்றுதல், புன்னகை மணிமாலை யெனப்பட்டது. உயிர் - ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயீரீறாகிய வுயிர்களெல்லாம். இன்புறு - இம்மையின்பம், மறுமையின்பம், வீடுபேற்றின்பங்களைப் பொருந்துதற்குக் காரணமாய் நின்ற. இனி இன்புறு என்னும் அடைமொழியைக் கதிர்மலைக்கே கூட்டுதலன்றிக் குமரனுக்குங் கூட்டி, அறம்பொருளின்பங்களாகிய மூன்றின்பங்களைப் பொருந்துதற்கு வாயிலாகிய கதிரமலையில் எழுந்தருளியிருக்கும், வீடுபேற்றின்பத்தைப் பொருந்துதற்கு வாயிலாகிய குமரனே! என விரித்துரைப்பினுமாம். உணர்வு: புலங்களையே அவாய்ச் செல்லும், உயிர்களது உணர்வு; திருடுதல்: தன்னையே அவாய் நிற்குமாறு திருத்துதல், பிறருடைமையை அவரறியாமற் களவாடச் செல்லுவார், தம்மைப் பொய்க் கோலஞ்செய்து தாம் பிறர் மனைகளுட் புகுமாறு போலப் பிறருணர்வினை அவரறியாமற் களவாடச் செல்லும் நீயும் நின்னைப் பொய்க்கோலஞ் செய்து அவருள்ளங்களிற் புகுகவென்பது கருத்து. இங்ஙனமே இறைவன் மெய்யுணர்வுள்ள மில்லாதாரைத் தன்னகப்படுத்தற் பொருட்டுச் செயற்கைக் கோலங் கொள்ளுதலைத்

'தோடுடைய செவியன் விடையேறியொர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடிப்பூசி யென் னுள்ளங்கவர்கள்வன்''

என ஆளுடைய பிள்ளையார் கூறினர். அணியும் - தாங்கிய. உலகினைத் தாங்கிய நின் வடிவமென்றது விசுவரூபத்தை. முருகனுடைய திருமேனி யுறுப்புக்களில் உலகமெல்லாந் தாங்கப்பட்டுத் தங்கி நிற்றலைக் கந்தபுராணத்துட் சூரபன்மனுக்கு அறுமுகக்கடவுள் தன் உலகெலாமாகிய வடிவங் காட்டியது கூறியவாற்றான் உணர்ந்து கொள்க. உரவோர் -திண்ணிதாகிய மெய்யுணர்வுடையோர். மெய்யுணர்விற்குத் திண்மையாவது: ஐயந்திரிபு அறியாமைகளின்மை, புலங்கடோறும் செல்லாமை யெனினுமாம். வருட - தடவ. நினைந்துருகுதல், வருடுதல் எனப்பட்டது. வருடப் புனைதலாவது: முருகக்கடவுள் தன் திருமேனியிற் சாத்திய மணிமாலை முதலியன, விண்மீன்றொடை, ஞாயிறு, திங்கள் முத லிய ஒளியுலகங்கள் போலச் சுடர்விடுதலான் அவ்வணிகலம் பூண்ட காட்சியைக் கண்ணுற்ற அறிஞர்கள் உலகங்களையெல்லாந் தாங்கி நிற்கும் முருகன் திருக்கோல நினைவு பிறந்து அக்கோலத்தைக் கண்டு மெய்ம்மறந்து உருகுமாறு அங்ஙனங் கோலங் கொள்ளுதலாம் என்றவாறு. ஞெகிழமும் பதக்கமும் கோவையும் மாலைகளும் புனைந்தருள் என முடிக்க. கண்ணோடுதல் - பயின்றார் சொல்லியன மறக்கமாட்டாமை; (தாட்சண்ணியம்) ஆகு பெயர்.
-------------

39. கண்ணிற்கணி கண்ணோடுதல் என்பதனைக் ''கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப்படும்'' என்னு முப்பாலாற் பெறுதும். காண் - அழகு. தக - பொருந்த. உரை – நூற்பொருள்; வினவும் - ஆசிரியரிடத்துக் கேட்டு ஆராய்ந்து தெளிந்த, பொருள்: தாங்கற்ற அறம் பொருளின்பம் வீடு பேறுகள். கசடு - அறியாமை, திரிபு, ஜயங்கள். மொழிதல்: மாணாக்கர்க்கும் அவைக்களத்திலுள்ளார்க்கும் விளக்கி வழுவின்றி மனங்கொள்ளக் கட்டுரைத்தல், கல்விக்கணி பொருள் கசடறமொழிதல் என்பது ''கல்விக்கழகு கசடற மொழிதல்” என்னும் நறுந்தொகையாற் பெறுதும். மண் - நிலவுலகம். கோட்டம் - கோயில். மதி நூல் - மதியாலாராயும் நூல் மதி இயற்கையறிவு; மதியை வளர்க்கும் நூலெனினுமாம். மதிக்கு நூல் வேண்டுமென்பதனை "மதிநுட்பம் நூலோடுடையார்க்கு" என்னுங் குறளான் உணர்க. நூற்கணி பிறவும் உளவேனும் சிறப்புடைமைபற்றி உவமமே அணியெனப்பட்டது. இனிச் சிறப்புடைமை கருதாது பிறவணிகள் அணிகளல்ல; உவமம் ஒன்றுமே அணியெனக் கூறுவாருமுளர். மன் - மிக்க. பொறை. குற்றங்கண்டு வெகுளாதொழிதல். ''பொறையெனப்படுவதாடவர் தமக்குப் பூண்'' என்பது வில்லி புத்தூராழ்வார் பாரதம். மனை - இல்லாள். அறமாகிய மாட்சி; மாட்சி - நற்குண நற்செய்கைகள். மனையறமாட்சிக்கு அணி மகவு என்பது

“மங்கல மென்பமனை மாட்சி மற்றத
னன்கல னன் மக்கட் பேறு "

என்னுந் திருவள்ளுவாரற் பெறுதும். எண்ணின் – ஆராய்ந்தால். சால்பு - எல்லா நற்குணங்களாலும் நிறைந்திருத்தல்: சான்றாண்மைக்கு நாணுடைமை அணியென்பது

“அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃதின் தோற்
பிணியன்றோ பீடு நடை''

என்னும் பொய்யாமொழியாற் பெறுக. பணிவு - அந்தணர், சான்றோர் அருந்தவத்தோர், தம்முன்னோர், தந்தை, தாய், ஆசிரியன் என்றிவர்க்கு இருக்கை விட்டெழுதல் முதலியன செய்தல்.

"பணிவுடைய னின் சொல னாதலொருவற்
கணியல்ல மற்றுப்பிற”

என்பது குறள். எழுத அரு என்பது எழுதரு எனத் தொக்கது, எழுதலரியவெனினுமாம். "ஓவியத் தெழுதவொண்ணாத” என்றவாறு. மழ, இளமைப் பண்புணர்த்து முரிச்சொல். அரசனை அரசு என்பது போல முருகனை முருகு என்றலும் பொருந்துமென்பது முருகாற்றுப்படை யென்புழி யுணரப்படும். விண்: துறக்கவுலகமும் வீட்டுலகுமாம் அணி என்பனவெல்லாம் அணிகலம் என்னும் பொருளனவாம்; சொற்பொருட் பின்வரு நிலையணி. இதற்கு இஃது அணியெனக் கூறியன நிகரெடுத்துக் காட்டொப்புமைக் கூட்டவணி. வினையேம் பொற்ப - வினையேமால் நின்னை அணிவிக்கப்படும் பொன்னாலாகிய அணிகலங்கள். இனி அருவமும் உருவமுங் கடந்த நீ உருவத் திருமேனி கொண்டதற்கு அழகாவது வினையேமை ஆட்கொள்ளுதலேயாம் என்னுங் கருத்தாற் பொற்பணி யென்னுந்தொடர்க்கு அழகாகிய அடிமைத்தொழில் எனப் பொருளுரைப்பினுமாம். அழகென்பது ஈண்டுப் பயன் என்னும் துணையாய் நின்றது.

"வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
        நேகனேக னனுவணுவி லி றந்தா யென்றங்
கெண்ணந்தான் றடுமாறி யிமையோர் கூட்ட
        மெய்துமா றறியாத வெந்தா யுன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
        மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டா
        யெம்பெருமா னென்சொல்லிச் சிந்திக்கேனே."

என்னுந் திருவாசகச் சதகத் திருவிருத்தத்துள் மேற்கூறிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. வேசறும் - தம்மைத்தாம் வெறுத்துத் தளர்ந்து வருந்துகின்ற. அடியார் முன்னரெல்லாம் முருகக்கடவுளைக்காண முயலாததங் குற்றத்தின் பொருட்டுத் தம்மைத் தாம் வெறுத்துத் தளந்து சோர்வராயினர். ''ஏசினும் யானுன்னை யேத்தினு மென் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்'' என்னும் நீத்தல் விண்ணப்பத்துள்ளும் வேசறுதல் என்பது இப்பொருட்டாதல் காண்க, விழிவாய் - கண்களாகிய வாயால். பருக - குடிக்க; நின் திருமேனி யிளமையழகாகிய அமுதினைப் பருகவென்றவாறு. வாய் என்பதும் பருகவென்பதும் உருவகம். விதுத்தனர் - விரைந்தனர். விதுத்தற்குப் பொருள் இஃதாம் என்பது ''கண் விதுப்புறுதல்'' என்புழிப் பெறப்படும். பொற்பு - அழகை. அணி - பூண்களால் அழகு செய்வாயாக. விதுத்தனர் என்பதன் பின் அதனால் என ஏதுவருவிக்க பலரும் தம்மைப் பார்க்க வருவராயிற் சிறார் தம்மை நகை முதலியன அணிவித்துக்கோடல் விரும்புவராதலான், அடியார் பலரும் நின்னைப் பார்க்க விரைந்தனராதலால் நகைகளையெல்லாம் பூட்டிக் கொள்வாயாக எனக் கூறுகின்றனள்.
-----------

40. முடை - புலால் நாற்றம். திரி - முறுக்குண்ட தாடி மோவாய் மயிர். அணல் -கதுப்பு. வேட்டுவர் மயிர் களைந்து கொள்ள மாட்டாமையால் மயிரணலும் திரிதாடியும் கூறப்படும். கொடுவில் – வளைந்தவில்; உயிர்க்கொலை செய்தலிற் கொடிய வில்லுமாம். எயினன் - வேட்டுவமறவன், வழிபாடு - பூசை. தர - செய்ய, அருளி - அதற்கு இரங்கி; வலவையாறு – மாணிக்கக் கங்கையாறு. இது வலவையாற்றின் கிளையாதலால். வலவையாறு என்பதனை வடவையாறு என அருணகிரிநாதர் வழங்குவர். இவ்யாறு சமனொளி மலையிற் பிறந்து பெருகி மாணிக்கம் விளையும் நாட்டில் ஓடும் மாவலி கங்கை, வலவையாறு, கம்பளை, கல்லணை என்னும் நால்யாறுகளுள் ஒன்று எனப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறும். அக் கூற்று வருமாறு :

'கருதிடிற் கங்கை மாவலி கங்கை கம்பளை கல்லணை யென்றுந்
தருசமனொளி சூழ்நதிகணான் கிடமாஞ்சாதி நான் கந்தணன் வெள்ளை
பரிவுறு மாசன் சிவப்புவாழ்வணிகன் பச்சைசூத்திரன் கருப்பவைதா
மருவிய பெயர்கோ மளங்குரு விந்தம் பதுமராகம்பணாமணியே ''

என்பது. வேட்டுவனொருவன் கதிரகாம முருகனை வழிபட அதற்கு முருகன் மகிழ்ந்தெழுந்தருளிய வரலாறு

''வன முறை வேடன ருளிய பூசை
மகிழ்கதிர்காம முடையோனே''

என்னுந் திருப்புகழடிகளிற் காணப்படும். இன்றும் கதிரகாம வேட்டுவர் மானைக் கொன்று இறைச்சியை முருகனுக்குப் படைத்து விழாக்கொண்டாடி வழிபட்டு அவ்விறைச்சியைத் தம்முட் கூறு ய்து உண்டு மகிழ்வர் என்பராதலின் முதற்கண் வழிபட்டான் எனப்பட்ட வேட்டுவன் மானிறைச்சி படைத்து வழிபட்டமை புலனாகும். ஊன் குன்றம் - இறைச்சிமலை. ஊன் குன்ற மாமசுரர் என்றது சிறப்புருவகம். வன்கண்மை - கொடுமை. ஆற்றலா - பொறுக்க மாட்டாத. உம்பரார் - தேவர், நுந்தையென்றது சிவபெருமானை. உளறி - குழறி: அச்சமிகுதியால் நாத்தடுமாறி. புலம்பி - அழுது முறையிட்டனர் - தம்மைக் காத்தருள வேண்டும் என விண்ணப்பித்தனர். உம்பரார் விடியற்கண் நுந்தையடி வீழ்ந்துளறிப் புலம்பி முறையிட்டனர் என்க. வான் துறக்கம். குன்றல் - கெடுதல். ஒழியும் - நீங்கி விடும். சிவபெருமான் புத்தேளிரைக் கடைக்கணித்து நோக்கி நுந்தலைவன் என்றது தன் இளையமகனாகிற முருகனை. கடவுளர் படைத் தலைவனாக முருகனைக் கருதி அங்ஙனங் கூறினான். இன்னுஞ சிறிஞன்--இப்பொழுதும் சிறியனாயிருக்கின் றான். மழலை - குதலைச் சொல்; நிரம்பிற்றிலன் - எழுத்தொலி நிரம்பப் பெற்றிலன். சிவபெருமான், மகவின் மேற்சென்ற காதலான் அவனை விட்டுப் பிரிய மாட்டாமையின் இப்பொழுது அசுரொடு பொருதற்குத் தகுதியிலன்; அதனான் முருகனை இப்பொழுது போர்க்குச் செலுத்த முடியவில்லையென்பான். மழலை நிரம்பின முருகனை மழலை நிரம்பிற்று மிலனென்றான். நிரம்பிற்றும் என்னும் உம்மை விரித்துக்கொள்க. தாடகை சுவாகு மாரீசர்களைப் போய்த்தொலைத்தற்குக் கௌசிக முனிவன் இராமனை வந்து கேட்டபொழுது தசரதன் கூறியவாறு ஈண்டுக் கருதத் தக்கது. இனி நாலைந்தாண்டு வருக என்றான்; இப்பொழுது உடைவாள் செறிக்கும் பன்னிர்யாண்டகவையனாதலாற் பதினாறாட்டையகவைக் காளைப்பருவமே போர்பொரத் தொடங்கத் தகுதியுடைத்து எனக் கருதி; இவ்வாறு முருகனை அசுரப் போர்க்குத் தகுதியிலனென்றது தகுதியின்மையணி. நாலைந்து என உலக வழக்கச்சொல்லாற் கூறி யது உலகவழக்கு நவிற்சியணி. இங்ஙனம் சிவபெருமான் முருகனைப்பிரியமாட்டாமையாகிய விறலினை (சத்துவத்தை) மறைத்துரையாடினது கொய்ம்மையணி. (இலேசவணி) போக - அது வரையும் நுங்களுலகம் புக்கிருக்க; என்று அருள் - விடை. வழங்கினும் - கொடுத்தானாயினும் தான் - சிவபெருமான். தான் அருள் வழங்கினும் நின்னைக் கடிது போர்க்குச் சென்றுவர விடுப்பான் போலும் என இயைக்க. கடிது - விரைந்து. விடுப்பான் - விடுக்குக் கருத்தினனாயுள்ளான். உயர்வறவுயர்ந்த கடவுளாயினும் மகவின் மேற்சென்ற காதன் மயக்கங் கடக்கமாட்டாமையாற் புத்தேளிருடைய பரிபுலம்பற்கும் இரக்கமில்லான் போலச்சொன்னானாயினும் தம்பேரறிவான் ஒருவாறு தேறி விரைவில் நின்னைப் போர்க்குச் செலுத்திக் கடவுளரைக் காப்பானெண்ணினான் என்றவாறு, அதனால் வாட்படையை எடுத்து உடையின், இடையிலிறுக்கிய கச்சிற்கோத்த உறையிற் செருகி அடக்கிப் பழகுவாயாகவென வுரைக்க அதனால் எனவொரு சொல் இசையெச்சமாக வருவிக்க. சால் - அமைந்த. உடை -கச்சுடை. ஆகுபெயரால் அதிலே கோத்துக்கட்டிய வாளுறையை உணர்த்திற்று. செறித்தல், உறையில் அடக்குதலுமாம்; உறையிற் பொதிந்த வாளை உடையிற் கச்சினாற் கட்டுதலுமாம். கண்வாளோடு உடைவாளைச் செறித்தல் பழகுவாயாக வென்றது வினைப் புணர் நிலையணி. முருகன் உறையிலே வாளைச் செறிக்கும் எழிலினைத் தகுதியான இளம் பருவ மங்கையர்கள் காதலித்துக் காமுற்றுக் கண்ணானோக்குதலைக் கண்வாள் செறித்தல் என உருவகித்துக் கூறினாள். தாழ் - நீண்ட. இச்செய்யுளிற் பண்டு நடந்து கழிந்த புத்தேளிர் புலம்பலும் முருகனைச் சிவபெருமான் சூரபன்மப் போருக்கு விடுத்தலும் இப்பொழுது நிகழ்வன போலக் கூறியது நிகழ்வினவிற்சியணி.
------------

41. எளியேம் பொருந்தும் என மாறுக. ஈண்டும் அவா; என்பது அவவு என நின்றது. ஓவியம் பொதிந்த என மாறியுரைக்க. மெய்யுறை - கவசம்: சட்டை. பொதி - மறைத்த: மெய்யுறைப்புறம் முழுதும் பல்வேறு ஓவியமமைத்து நிரப்பிய; என்றவாறு. புலங்களிற் பரவும் அவாவில்லாமை, அப்புலங்களினின்றும் வரும் கேடு புகுதாமற் காத்தலான் மெய்யுறையாக வுருவகிக்கப்படும். அதனை முருகன் போர்த்தலாவது நம்மனோரது அவாவில்லாத வுள்ளத்தின்கண் அவன் புக்கிருப்பானாதல். அவாவின்மையாகிய மெய்யுறையென விரிக்க. பொல்லா; என்பது பொலியும் என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பொலியும் - நன்மைபயக்கும். எனவே பொல்லாத என்பது: கேடுபயக்கும் என்பதாயிற்று. இருசார்ப்பற்று இரண்டு வகைப்பற்றுக்கள்; ஆவன: அகப்பற்றுப் புறப்பற்று என்பன. பற்றாவது: தம்பாலுள்ள பொருளை விடமாட்டாமை. அவா, அன்னதன்று; தம்பாலில்லதனைத் தமக்கு வேண்டுமென்றிருத்தல். பற்றும் அவாவும் தம்முண் முறையே காரண காரியவியைபுடையன. பற்றின்மையாகிய செருப்பு; என வுருவகமாக்குக. பொன்னாலாகிய அழகிய செருப்பு என்க. இருவகைப் பற்றும் அற்றக்கால் நிகழும் தன் வயமிழத்தலும் இறைவயப்படுதலும் என்னும் இரண்டும், இறைவனுடைய இரண்டு திருவடிகள் எனப் புனைந்து கூறுவராதலிற் பற்றின்மையாகிய செருப்பிற் கழலைச் சேர்க்க; எனச் செப்பினாள் செவிலி. முருந்து மயிலிறகின் அடிமுள்; அதுபோலு மூரல் என மெய்யும் நிறனும் பற்றி வந்த விரவுமமாக்குக. மூரல் - பற்களும் நகையுமாம். மூரலால் முகமனிக்கும் என விரிக்க. முகமனிக்கும் - உபசரிக்கும்; கடைக்கணிக்கும் என்பது போலப் பெயரடியிற் பிறந்த வினை. அன்பர்களை உபசரிக்கும் என்க, கதிருகாம முருகன் தன் அடியார்களைக் கண்டுழி அருள்சுரந்து முறுவல் பூத்தல் மாத்திரையால் உபசரிப்பான் என்றவாறு.

''குனித்தபுருவ முங்கொவ்வைச் செவ்வாயிற் குமிண்
சிரிப்பும்”

என்பர் ஆளுடையவரசுகள். முந்து - உடைவாள் செறிக்குமுன்னர். குறங்கு - துடை வட்டுடை - முழந்தாளளவு முடுக்கும் போர்மறவ ருடைவகை. முருகனும் போர் மறவனாதலான் இவ்வுடை கூறப்படும். ஞாண்: வட்டுடையை நுசுப்பிலே சுருக்கிக் கட்டுதற்கு வட்டுடை விளிம்புறையினுட் கோத்த சிறந்த கயிறு. இனி வட்டுடையைப் பழிபாவம் அஞ்சுதலாகிய நல்ல இல்லற துறவற, வொழுக்கமாக உருவகித்துச் சிலேடையாமாறுங் கண்டுகொள்க. நுசுப்புவரை - இடையளவும். விருந்து - புதுமை; ஆகு பெயராற் புதுமைபற்றி உள்ளத்தின் கணிகழும் உவப்பின் மேற்றாயிற்று. பொடிப்ப -தோன்றி விரிய. சுருக்கி - குறுக்கிக் கட்டி "நல்யாழாகுளி பதலையொடு சுருக்கி '' என்பது புறம். நுசுப்பு வரையும் மறையவுடுத்தியென வருவித்துரைக்க; இசையெச்சம். வட்டுடையை நுசுப்பு வரையும் மறைய விரித்துக் குறங்கிலுடுத்தி நாணாற் சுருக்கியென வியைக்க. வேறு - பல.

"ஒரு பொருள் குறித்த வேறு சொல்லாகியும்
வேறு பொருள் குறித்த வொரு சொல்லாகியும்
இருபாற்றென்ப திரிசொற் கிளவி”

என்னுந் தொல்காப்பிய நூலின் கண் வேறு என்பது பல என்னும் பொருட்டாய் நின்றது நினைக்க. கலையின் செல்வமாவது: கலைகளினானாகிய அறிவு நிரம்புதல். கலையின் செல்வமென்னும் கச்சு என்க. விளிம்பு - இரண்டருகும். பச்சைமணி - மரகதவிரத்தினம். நிரைத்த - வரிசையாக வைத்துப் பதித்த. நிரைத்தகச்சு என்க. பாம்பு, கச்சுக்கு வடிவுவமம். வெருள் - அஞ்சும். வெருளும் பாம்பு சுருளுமாதலின் இடைவளையுங் கச்சிற் கினிதுவம மாகும். ஆர்த்து - கட்டி; ஆர்ப்பது வட்டுடை மேலென்க. எருந்து - கடல்விளை கிளிஞ்சில், உம்மை இறந்தன தழீ இயிற்றுமாம். உமிழ் - ஓடு உடைந்து வெளிப்படுத்தும். காழ் - முத்து காழ்த்தடறு எனக்கூட்டி முத்துக்கள் தைத்த தடறு எனவுரைக்க. தடறு - வாள் புகுத்தும் உறை மறைத்தடறு - வேதமாகிய வாட்கூடு எனவுருவகம். வாளாகிய ஞானம் உறையும் இடனாதலின் வேதம் வாளுறையாதல் பொருந்தியவாறு காண்க. ஞானமாகிய ஈர்வாள் என மாறிக் கூட்டிப் பொருளுரைக்க. ஈர்வாள் - அஞ்ஞானமாகிய அசுரரை வெட்டிப் பிளக்கும் வாள். தடற்றுள் உறையும் ஈர்வாளைக் கச்சிற் கட்டியருள் என்க. எண்ணும் செந்நிலை, எண் செந்நிலை. எண்ணும் - கருதும். ஞானத்திற்கு வாயிலாகக் கருதப்படும் என்றவாறு; நன்கு மதிக்கும் எனினுமாம். செந்நிலை - சாந்தம்; அஃதாவது: இன்ப துன்பங்கள் தோறும் முறையே விழைந்தும் வெறுத்தும் தந்நிலை கெடத் திரிந்து பிறழாது ஒரு நிலையே நிற்றலே சாந்தம் எனப்படுமாதலிற் சாந்தம் செந்நிலையெனப் பெயர் வழங்கப்படும். செம்மை - திரியாமை: இயற்கை. கைப்பிடி - வாளின் பிடி: வாளிற் கைப்பற்றுமிடம். சாந்தமே ஞானவாளுக்குக் கைப்பிடியாதலிற் செந்நிலையாகிய கைப்பிடி எனவுருவகத் தொகை நிலையாக்குக. கைப்பிடியுடைய ஈர்வாள்

வயிர வீர்வாள் - வயிரவிரத்தினத்தாலிழைக்கப்பட்ட ஈர்வாள் ஞானத்திற்கு வயிரம், உறுதி; அஃதாவது: மறவி வாயிலாகப் புகும் அவாவினாற் கெடுதலில்லாது ஐயந்திரிபு அறியாமைகளினீங்கி நிற்றல். இச்செய்யுளில் வந்தன இயைபுருவகம். ஞானஞ் செறித் தருளுதலென்பது ஞானத்தைத் உயிர்க்கட்டோற்றுவித்தருளுதல் என்னுங் குறிப்பிற்று. ஞானத்தை வாட்படையாகத் திருவாதவூரடிகளும் திருப்படையெழுச்சியிற் கூறியருளியவாறு நினைக்கப்படும். ஆண்டுக்கூறிய திருப்படைக்கும் ஈண்டுக்கூறிய முருகன் படைத்தலைவன். இச்செய்யுளின் கண்ணே வட்டுடைக்கும் கச்சுக்கும் வாளுறைக்கும் வாளுக்கும் தொடர்பு காணப்படுதல் போலவே நாணாகிய நல்லொழுக்கத்திற்கும் நூற்கலைக்கும் வேதத்திற்கும் ஞானத்திற்கும் தொடர்பு காணப்படுதலுங் கருதுக.
-----------

42. கூளி பூதம். தூசி - முன் செல்லும் படை: கொடிப் படை. பஞிலம் - படைத்தொகுதி. பைஞ்ஞிலம் என்பது பஞிலம் எனத் திரிந்து நின்றது. 'பன்னூறடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்'' என்பது புறம், தூசிப்பஞிலமாகிய சுற்றமெனப் பெயரொட்டு. படைத்தலைவனுக்குப் படையே சுற்றமாதலிற் றூசிப்பஞிலச் சுற்றமெனப்படும். குணலைக் கூத்து - வெற்றி பெற்றுக் களித்தாடும் ஒருவகைக் கூத்து. வெற்றிபெறுதல் ஒரு தலையாகலின் வெற்றிபெற்றதாகவே கொண்டு கூளிச்சுற்றங்கள் குணலைக் கூத்தியலுமாயின. இயலும் - ஆடும். கொன் - பெருமையையுடைய; இடைச்சொல். புத்தேளிர் - தேவர். புத்தேளிருடைய வருடும் யாழிசையும் ஊதும் குழலிசையும் அடிக்கு முழவிசையும் தூவு பூத்தொகுதியும் என்க. இசையென்பதனை யாழோடும் குழலோடும் கூட்டிக்கொள்க. குவிபூ – பூக்குவியல்கள். பொதுளும் - செறியும்; இடையீடின்றித் தோன்றும் என்றவாறு. இது படையெழுச்சிக் கொன்டாட்டம். வாளிச் செலவின் - அம்பின் செலவுபோலும் விரைந்தசெலவினை யுடை. தோகை - மயிற்றூவி. தோகைக் குடை விரிக்கு மயில் - தோகையாகிய குடை. மயிலின் மேல் வீற்றிருக்கும் முருகக்கடவுளுக்கு அரசியற் குடையாகவும் வெயில் முதலியன காக்குங் குடையாகவும் தோகை விரிந்து நிழற்றுமாதலிற் றோகைக் குடையெனப் படும். தோகைக்குடையெனப் பழனிப் பிள்ளைத் தமிழும் கூறும். மயில் வடிவாகிய இந்திரனும் வந்தான். உம்மை விரிக்க. முருகனுக்குப் பண்டு இந்திரனே மயிலாகப் போர்க்களத்துத் தாங்கினான் என்பர். படையணி - படை வகுப்பு, வலன் - வெற்றி; வெற்றி தோன்ற. ஆவலங் கொட்டல் - வாய்கொட்டி ஆரவாரம் செய்தல். இது வெற்றி முழக்கங்களுள் ஒன்று. தூளிப்பொடி, சுருங்கச் சொல்லலணி. புழுதியாகிய பொடியன்றித் திருவெண்ணீற்றுப் பொடியெனவும் வேறு பொருள் தரும். தூளிப்பொடி, நீருட் குழையாத வெண்ணீற்றுப் பொடி. சூரடிமையென்பதும் சுருங்கச் சொல்லலணி; சூரனுக்கு அடிமைப்பட்டு வாழ்தெலென்பதன்றி நடுக்கத்தைச் செய்யும், பிறர்க்கு அடிமைப்பட்டு வாழும் எம்மனோரது வாழ்வு எனவேறு தகுதியான பொருளுங் குறித்தறிய நிற்றலின். தொலைவுறவென்பது காரண காரியப் பொருட்டுச் செயவென் வினையெச்சம். பூசவும் தொலைவுறவும் உலவிவர; என்க. உலவிவரல் - திருவுலாப்புறம் போந்தருளுதல். உலவிவாச்செறியென முடிக்க. உலவிவர என்பதனையும் உலாவிவருதற் பொருட்டு எனக்காரண காரியப் போருட்டு வினையெச்சமாகக் கொள்க, பேரறம் - வைதிக மதம். உம்மை எதிரது தழீஇயிற்று. எதிரது: முருகன் நிமிர்தல். தரியலர் – பகைவர். நாண - வெட்கமுற்று வணக்கஞ் செய்ய. நிமிர நிமிர்ந்து நாண நிமிர்ந்து என்க நிமிர; என்பதூஉம் காரண காரியப்பொருட்டு வினையெச்சம் நாண; என்பது காரியப்பொருட்டு வினையெச்சம், தார் - மாலை. ஆண்டகை; என்பது அண்மைக்கண் வந்த இயல்பு விளி, வாழி - வாழ்க ; வியங்கோள். வாழியென்றது வாழ்த்தென்னுமோரணி.

முற்றும்.
-----------------------------------

This file was last updated on 10 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)