கவிராஜ பண்டித, நா. கனகராஜய்யர் எழுதிய
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
periyanAyaki piLLaittamiz
by kanakarAja iyer
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library, Chennai for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of the soft
copy of this work
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிராஜ பண்டித, நா. கனகராஜய்யர் எழுதிய
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
Source:
ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம்
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்
புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தமிழாசிரியர்
கவிராஜ பண்டித, நா. கனகராஜய்யரால் இயற்றப்பெற்று
பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர்
ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்
புதுக்கோட்டை ஸ்ரீ. R. ஜகதீசன். அவர்களின்
கமலா பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது,
1942.
விலை 10 அணா
-----------------------------
முகவுரை.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
-திருநாவுக்கரசர் தேவாரம்.
அன்புரு அறிவுரு இன்புரு என்று மறைகள் முழங்கும் பரம்பொருளை 'ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியல்லன்’ என்று மெய்யன்பர் விளக்குவது தமிழ் மக்கள் அறிந்த உண்மையே, ''அம்மையேயப்பா வொப்பிலா மணியே அன்பினில் விளைந்தவாரமுதே," எனவும், “அப்பனீயம்மையு யண்ணனுநீ," எனவும், ‘தாயான செல்வன்' எனவும் வாக்கு மனமிறந்த வள்ளலை வழுத்துவது தமிழர் மரபாகும். பிறபல நெறிபற்றிய மக்களெல்லோரும் இறைவனை ஆண்பால் என்ற எல்லையில் அடக்க விரும்புவது உண்மையே. அவன் பால், திணை, இடம், காலம் என்ற எல்லைகளைக் கடந்தவன் என்பது தமிழ் மக்கள் நன்கறிந்துள்ள உண்மையாம். தமிழகம் எங்கும் அருள்வள்ளல் அமர்வதற்கெனப் பல பெருங்கோயில்கள் அமைந்துள. சிவபரஞ்சுடரை
நாடும் அன்பர் குழாங்களுக்கு உரிய கோயில்கள் ஆயிரத்தெட்டு என்பர். மூவர் முதலிகள்
தேவாரம் அருளிச் செய்த காலத்தே இவை விளங்கின என்பர். திருமால் என்ற
நாமரூபத்தால் இறைவனை வழிபடும் அன்பர் குழாத்துக்கு நூற்றெட்டுத் திருப்பதிகள்
உள என்பர். ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களைப் பெற்ற இவை இறைவன் அருள் விளக்கம் விளக்குவன ஆகும் எனவும் உரைப்பர். இந்த இரு வகுப்பிலும் அடங்காத சிவாலயங்கள் பலவும் திருமால் கோயில்கள் பலவும், முருகன் கோயில்கள் பலவும், பிறபல தேவாலயங்களும் நம் நாடெங்கும் இந்தாளில் உள்ளன. அவற்றுட் சில புராணம் பெற்றனவாகவும் உள்ளன. வடமொழியிற் புராணம் இருப்பது தலங்களின் பெருமைக்கு உறுதுணையாகும் என்று கருதிய அன்பர்கள் பெரும்பான்மையான திருத்தலங்களுக்கு வடமொழிப் புராணங்களே காண்பாராயினர். சில திருப்பதிகளுக்குத் தென்மொழிப் புராணங்களும் தோன்றியுள்ளன. இங்ஙனம் புராணங்களைப் பெறாதேயிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அன்போடு போற்றி வணங்கி அவரவர் நினைத்த யாவகைப் பேறுகளையும் எய்தவுரிய நிலைக்களங்களாக அமைந்த பல தலங்கள் இன்றும் நம் நாட்டில் உண்டு. இவை சில புதுப் பிரபந்தங்களைப் பெற்று விளக்கமுறுவதும் உண்டு.
திருவரங்கத்திற் பேரன்பு பூண்டிருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்ற திவ்விய கவிஞரும், திருவருணையிற் பேரன்பு பூண்டிருந்த எல்லப்ப நாவலர் என்ற புலவர் பெருமானும் இயற்றிய பல சிறு பிரபந்தங்கள் உண்டு. திருப்புகழ்ச்செல்வர் அருணகிரியார் அமுதமய வாக்கின் அருமையைத் தமிழ்பேசும் குழவிகளும் அறியும். பட்டினத்தடிகள், தாயுமானவர், இராமலிங்கசுவாமிகள் முதலிய பெரியோர் அருளிய செய்யுட் செல்வங்கள் பக்திப் பெருநெறிக்கு இடையிடையிட்ட தூண்டா விளக்கங்களாக உதவுகின்றன. நல்லோர் சென்ற தெறியைப் பின்னோரும் பின்பற்ற முயல்வது இயல்பே என்பதனைச் சென்ற நான்கைந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் எழுந்த பல அந்தாதி, கலம்பகம், தூது, உலா, கோவை முதலிய பிரபந்த வகைகள் நன்கு விளக்குகின்றன.
இந்நாளைய அறிஞர் பலர் 'பிரபந்தங்கள் இயற்றுவதும் இறைவனை வழுத்துவதும் பழைய முறை; உண்மைப் புலமை இருப்பின் அது புதுப்புது நெறிகளில் நுழைந்து - புதுப் புது நலன்களை விளக்கி மொழியின் ஆற்றலை வளர்க்க வேண்டும்,' என்பர். இஃது உண்மையே என்பதை நன்கு உணர்ந்து, புதுக் கவிதையுலகில் மகுடம் பூண்ட திரு. சுப்பிரமணிய பாரதியார் புதுமை வழிகளிற் சந்தங்களைப் படைத்துக்கொண்டு பல புதுப் பொருள்களைப் பற்றிக் கவிதைகள் புனைந்தனர்.
புதித்துறைக்கு அடிகோலிவைத்த அப்புலவர் கவிதைகளிற் பெரும்பாலன பழைய நெறிக்கு அரணாக நிற்பன என்று ஒருவர் கூறத் துணிந்தால், நவயுகச் செல்வர்கள் நகையாதிரார். அவர் நகைப்பிலும் உண்மை அதுவே என்று துணிந்து கூறலாம். வேதாந்தப் பாட்டுக்கள், கண்ணன் பாட்டுக்கள், தேவி கீதங்கள் முதலியவை பழைய நெறியைப் புதுவுருவத்தில் விளக்குவன, பாஞ்சாலி சபதமும் ஸ்வசரிதையும் பழமையை மறைத்த புதுமை முறைபொருந்தியமைந்தன. திருப்பள்ளியெழுச்சி, திருத்தசாங்கம், நவரத்தின மாலை, தோத்திரப் பாடல்கள் என்பவை முழுவதும் பழைய நெறியையே பின்பற்றி அமைந்தன. பிற பாட்டுக்கள் புதுமை விளக்க வந்தவை என்று கூறலாம். இங்ஙனம் கூறுவதால் பாரதியார் புதுமை மணத்துக்கு ஒரு குறையும் விளைந்து விடாது, பழமையை முற்றிலும் வெறுத்து ஒதுக்கி நிமிர்ந்து தனித்து நிற்கும் ஆற்றல் புதுமைக்கு இல்லையென்பதே விளங்கும். பழமையும் புதுமையும் வலக்கரமும் இடக்கரமும் போல இணைந்தேயிருப்பது உலக இயல்பு என்பதை உயிர்வகை ஒவ்வொன்றிலும் காண்கிறோம். அங்ஙனமே உயிர்ச்சக்தியுள்ள கவிதைச்செல்வமும் இருமையும் பொருந்த அமைவதேயாகும் என்பதை அறிஞர் ஏற்றுக்கொள்வர். இந்த உண்மையை உள்ளத்திற்கொண்டு செய்யுட் செல்வத்திற்றிளைக்க விரும்புவோர் தத்தமக்கு எவ்வெத்துறையில் மிக்க சுவை தோன்றுமோ அவ்வத்துறையிலே முயற்சி புரிந்து பயன்பெற நினைப்பதே அடைவாகும்.
மோனை எதுகை முதலிய முட்டுக்கட்டைகள் வளருங் கவிதைக்குத் தடைவிளைக்கும் என்பது மலையாளிகள் கருத்து ஆகும். பாரதியார் புதுமைக்கவிதை ஒவ்வொன்றிலும் மோனை எதுகைகள் முத்துமுத்தாக அமைந்திருப்பதை, அவற்றை அனுபவித்துப் பாடுவோர் அறியாதிருக்க இயலாது. ஆரிய மொழிக்கும் அதன் இனமாகிய பிறமொழிகளுக்கும் இன்றியமையாத செய்யுளங்கம் என்று கருதப்பெறாத மோனை எதுகைகளே தமிழ்ச்செய்யுளின் தனிச்சிறப்பை விளக்குவன. இவற்றின் பெருமையை மதியாது தமிழுக்கு இவை வேண்டா என்று உரைக்கத் துணிவோர் தமிழ்மகளின் உயிர் நிலையை அறிந்து தமது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சங்கச்செய்யுளில் இந்த நியதிகள் இல்லையே என்பார்க்கு, அவற்றின் நடையும் பிற்காலச்செய்யுள் நடையும் வெவ்வேறாக இருப்பதும் இவற்றின் போக்கே மாறியிருப்பதும், நோக்கமே வெவ்வேறு வகையாய் அமைந்திருப்பதுமே சிறந்த காரணங்களாக எடுத்துக்காட்டத்தக்கனவாம்.
இனி ஒரு சிலர் "தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந் நாளில் வேண்டுவது உரைநடையே; செய்யுள், அளவு கடந்து வளர்ந்து விட்டது; இனி அதன் வளர்ச்சியை ஒடுக்கி உரை நடையைப் பெருக்க வேண்டும்,'' என்று கூறுவது உண்டு. தமிழ்மொழி பூரண வளர்ச்சி பெற்று உலகத்தினை ஆண்ட பல நூற்றாண்டுகளின் பிறகு வளர்ச்சியும் இயக்கமும் பெற்ற மொழிகளை எடுத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்றேனும் இன்று ''எமது வளர்ச்சிக்கு உரைநடையொன்றே போதும்; செய்யுள் நடை வேண்டா,” என்று கூறுவது உண்டா? கூற நினைப்பதும் இலையே. அங்ஙனம் இருக்க, இருதுறைக்கும் போதியவளவு ஆற்றல் பெற்றிருக்கும் நம் அமுதத் தமிழ்மொழி ஒரு துறையே வளர்வது சாலும், மற்றொரு துறை அருகுக என்று நினைப்பது அறிவுடைமையின்பாற்படுமா? அயல்நாடுகளில் ஒரு நாளில் நூறாயிரக்கணக்கில் புற்றீசல் போல் எழுந்த உரைநடை நூல்கள் எல்லாம் நீண்ட வாழ்வு படைத்து உள்ளனவா? நம் நாட்டில் இந்த நூற்றாண்டிலே எத்துணை உரைநடை நூல்கள் எழுந்தன? இவற்றுள் எத்துணைய இரண்டாம் பதிப்பே பெறாது மறைந்தன? இந்தக் கணக்கை எவரேனும் சற்றுப் பொறுமையாய் எடுத்துப் பார்ப்பது உண்டா? ஒருமுறை நூறாயிரக் கணக்கில் விலையாகிய புத்தகங்கள் பிறகு தேடுவாரற்றுப் பொதுப் புத்தக சாலைகளின் மூலைமுடுக்குகளில் உறங்கிக்கிடப்பது உண்மையனுபவம் அன்றோ? ஆதலின் ஒரு நூல் நிலையான புகழ்பெறுதற்கு அதன் உள்ளுறை காரணமாகுமேயன்றி நடை காரணம் ஆகாது என்பது வெளிப்படை, செய்யுளாயினும் உரைநடையாயினும் அதனை ஆக்கியோன் உண்மைப் புலமை படைத்தவனாய் இருப்பின், அது என்றும் அழிவுறாது. சில புலவர் பல்லாயிரக் கணக்கிலே செய்யுள் செய்தும் புகழ்பெறாது மறைந்ததுண்டு. ஒன்று இரண்டு செய்யுள் இயற்றிய புலவர் சிலர் அழியாப் புகழோடு விளங்குவதுமுண்டு இதற்குக் காரணம் கூறவும் வேண்டுமோ? அவரவர் வாய்மொழியே காரணத்தை விளக்கிவிடும். செய்யுட் செல்வம் ஒரு நாட்டின் உண்மைப் பெருமையை விளக்கும் கருவியாதலால், அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு மகனும் ஊக்கம் கொள்ளல் வேண்டும்.
புதுமை நெறியிலே பல செய்யுட்கள் வளர்தற்குரிய இந்நாளிலே பழமை நெறிபற்றிய சில செய்யுட்கள் ஆங்காங்கு தோன்றுதலும் நலமே. மல்லிகை முல்லை சாதி சாமந்தி முதலிய மலர்களையே அணிந்து பழகிய தமிழப் பெண்மணிகள் இந்நாளில் ரோஜாமலரிலும் கனகாம்பர மலரிலும் மனத்தைச் செலுத்தித் தம் நாட்டுப் பழைய மலர்களை மறந்து வருகின்றனராயினும் கதம்பம் என்ற பெயரோடேனும் சில சமயங்களில் அவற்றையும் அணிய விரும்புகின்றனர். அங்ஙனமே புதுமைக் கவிதைகளில் உளம் புகுத்திய தமிழ் மக்கள் பழமை முறை பற்றி வரும் பிரபந்தங்களையும் அவற்றில் உள்ள சுவையை அறியும் நோக்கத்தோடு பயின்று மகிழ்வர்.
இம்முறையாலே, தட்சிண கோகர்ணம் என்று காந்தத்தாற் புகழப்பெற்றதும் பழமை பொலிந்த புராணம் உடையதும் புதுக்கோட்டைத் தமிழ் மன்னர் குலத்துக்கு வழிபடு தெய்வமாகிய பெரியநாயகியையும் கோகன்னநாதனையும் தன்னகம் கொண்டதுமாகிய திருக்கோகர்ணம் என்ற திருத்தலத்தைப் பற்றி முன்பு இயன்ற சில பிரபந்தங்கள் முத்த மிழிலும் உளவாதலால் நன்னாவலர் சென்ற அச்செந்நெறி பற்றியே அருள்வெள்ளம் பொழியும் திருவிழியும் அன்பரையாளும் கழன்மலருங் கொண்ட 'ஸ்ரீ பிரஹதம்பிகை' என்ற பெரியநாயகியின் துதியுருவமாக அமைந்த இப்பிள்ளைத் தமிழ் தமிழுலகிற் புகுகின்றது.
பிள்ளைத் தமிழ் இலக்கணம் நன்குணர்ந்த பெரியோர்கள் மலிந்த தமிழகத்தே தனித்தமிழரசில் இச்செய்யுளை இயற்றி அன்னைக்கு அர்ப்பணம் செய்யாத துணிவு கொண்டது, மறை மொழிகளையே மலர்களாகக்கொண்டு அருச்சிக்கும் திருவடியில் மண்ணில் விழுந்த மலர்களும் புகுதற்கு இடம் பெறும் உரிமையை நோக்கியேயாகும். "குற்றமே தெரிவார் குறுமா முனிசொற்ற பாவினும் ஓர் குறை சொல்வரால்” என்பது உண்மையே யாயினும், "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தா சொன்னவும் பன்னப் பெறுபவோ" என்ற கம்பர் கவி முழங்குவதை உலகம் அறியும்.
ஆன்றோர் செய்யுட்களாலும் கன் மக்கள் வாய்மொழிகளா லும் கேட்டுக் கேட்டுப் பழகியிருக்கும் தமிழ் மக்களுக்கு இப்பெரிய நாயகி பிள்ளைத் தமிழின் தோற்றம் மிகையாகத் தோன்றாது.
பிரபந்தங்கள் பலவகையாமாயினும் அவற்றுள் அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, கோவை என்ற வகைகளே மிகுதியாக வழக்கில் உள்ளன. பிரபந்த வகைகளை யெல்லாம் தம் நாத்தினவு தீர நன்கு பாடிய மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்ற இருவகைக்கும் பல அமைத்துள்ளார்கள். அவர்கள் வைத்த வழிபற்றி இந்நூற்றாண்டிலும் சிலர் இப்பிரபந்தம் இயற்றியுளர். இவற்றையெல்லாம் ஆதியோடந்தமாகப் பயின்று இன்புறுவோர் மிகுதியாய் இல்லாத இந்நாளில், ஆழத்திலும் அகலத்திலும் நாட்டம் இன்றிச் சொல்லடுக்கால் அவையை வெருட்டும் புலமையில் மருண்ட பலர் மிக்க இந்நாளில் தமிழ் மக்கள் ஆதரவை நாடி இச்செய்யுள் வெளி வருகின்றது.
இச்செய்யுளிற் பன்னூறு குறைகள் இருக்கலாம். இலக்கண நெறிப் பிறழ்ச்சி இருக்கலாம். ஆயினும் தெய்வத் திருவருள் பெறும் கருத்து முன்னாட் புலவர்க்கு இருந்தவளவில் எட்டுணையும் குறைவில்லையென்பதே ஆக்கியோன் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்வதாம். தெய்வத்தை எந்த உருவத்தால் நினைந்து, எக்காலத்தில், எந்நாட்டில், யார் பரவினாலும் அருள்வது என்பதே அதன் இயல்பாம். கண்ணனும் கீதையில் ‘என்பக்தன் அழிவுறுவானல்லன்' என்று பிரதிஞ்ஞை செய்தான். கல்மஷமிக்க சித்தமும் பாவத்திரவியத்தால் வாழும் வாழ்க்கையையும் தக்கன தகாதன அறியாப் பேதமையும் உள்ள மாந்தர்க்கு இக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே கதியாகும் என்பது ஒரு வடமொழிச் செய்யுளின் கருத்தாம். இதுபோன்ற பல நற் கருத்துக்களை ஆன்றோர் செய்யுட்களாலும் நன்மக்கள் வாய்மொழிகளாலும் கேட்டுக் கேட்டுப் பழகியிருக்கும் தமிழ் மக்களுக்கு இப்பெரியநாயகி பிள்ளைத்தமிழின் தோற்றம் மிகையாகத் தோன்றாது.
செய்யுள் செய்யும் துறையில் முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றமையாலும், பல நல்லிசைப் புலவர்களது அரும்பொருட் பேழைகளிலே புகுந்து புகுந்து சொல்லும் பொருளும் கவரும் திறம் படைத்துண்மையாலும், இறைவனருள் ஒன்றே துணையெனக் கொண்டு தொண்டைமான் நாட்டில் உத்தியோக பதவி வகித்திருக்கும் உரிமையாலும் தமிழ்த்திருப்பணி புரிவார் இனத்துள் எவ்வழிபாலேனும் கலந்து கொள்ளல் வேண்டும் என உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தாலும், கடலிடையில் விழுந்தாரையும் காத்தருளும் கருணைவல்லியென அப்பெருமாட்டியின் புகழ் கேட்ட செயலாலும் வாழ்வுக்கடலில் வீழ்ந்து தவிக்கும் ஒவ்வொரு உயிரையும் தனது கழற்புணையாற் கரையேற்றும் நாயகி அவளே என உணர்ந்த உறுதியாலும் இப்பிள்ளைத்தமிழை அவள் திருவடி மலரிற் சமர்ப்பிக்கின்றேன். இச் செய்யுள் இயன்று இரண்டாண்டுகள் ஆகியும் அச்சுருவம் கொடுத்து உலகிற்குதவும் அமயம் இப்பொழுதே அமைவதாயிற்று.
தமிழ் மகளின் தவப்பேறாகத் தோன்றி அரும்பணிபுரிந்து தமிழ் மக்களைத் தமக்குப் பலவழியாலும் கடப்பாடுடையராகச் செய்து இருமதிமுன் சிவபதம் புகுந்த முதுபெரும் புலவர் மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் பார்வைக்கு இச்செய்யுள் அனுப்பப் பெற்றிருந்தது. அவர்கள் அம்புலிப் பருவத்திலே சில திருத்தங்கள் தெரிவித்தார்கள். அவர்கள் விரும்பியவாறு திருத்தங்கள் எல்லாம் முறையே அமைக்கப் பெற்றன. அவர்கள் எனது வேண்டு கோட்கியைந்து ஒரு சாத்துக்கவி செய்து அனுப்பியிருந்தார்கள். அதனை இப்புத்தகம் அச்சுக்கு வரும்போது உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி எனது தமிழ்ப் புத்தகசாலையில் வைத்திருந்தேன். இறைவன் திருவருள், தமிழ்த்தாய் புலம்ப, அப்புலவர் பெருமானை அழைத்துக்கொண்டது போன்று சாத்துக்கவியையும் மறைத்து விட்டது. பலமுறை தேடியும் அகப்படவில்லை. ஆகவே இச்செய்யளுக்கு இனி எவரிடமும் சிறப்புப்பாயிரமோ சாத்துக்கவியோ கேட்பதில்லை என்ற முடிபோடு இப்பொழுது வெளியிடப் பெறுகிறது.
இப் பிரபந்தம் நிறைவேறிய பிறகு, 'கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ் என்ற பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களும் சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் என்ற ஒரு காவியமும் நிறைவேறின. கம்பர் பிள்ளைத்தமிழ் காரைக்குடிக் கம்பர் கழகத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் விக்ரம ஆண்டு பங்குனி மாதத்தில் நிகழ்ந்த கம்பர் விழாவிலும் நாட்டரசன் கோட்டையில் நிகழ்ந்த கம்பர் விழாவிலும் அரங்கேறியது கம்பர் கழகத்தார் அதனை அச்சிடுவதாகக் கூறி வைத்திருக்கின்றனர். நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட ஏற்றுக்கொண்டதால் அவர்களிடம் உள்ளது. சங்கரர் பிள்ளைத் தமிழ் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் திரு
முன்பு, நீடாமங்கலத்துக்கு அடுத்த பூவனூர்த் திருத்தலத்தில் சித்திரபானு சங்கர ஜயந்தியன்று அரங்கேறியது. சதாசிவப் பிரம்மேந்திர விஜயம் என்ற காவியத்தின் இரண்டாயிரம் செய்யுட்களும் நெரூரில் உள்ள சதாசிவப்பிரம்ம அதிஷ்டானத்தில் அரங்கேறின. உபநிடதச் செய்யுளும் இக்காவியமும் இந்நாளில் நெரூர்த்தலத்தில் யோக சமாதியின் பொருட்டு எழுந்தருளியிருக்கும் ஐம்மொழிப் புலமை படைத்த வேதாந்த கேசரி ஸ்ரீ பிரணவானந்த சிவப்பிரம்மேந்திரஸ்வாமிகள் திருமுன்பு படனம் செய்யப் பெற்றுப் பரம அனுக்கிரகத்துக்குப் பாத்திரம் ஆயின. “வித்வந் மண்டலத்தின் பரிதோஷம் பெறுமளவும் கவிக்குப் பிரயோக விஞ்ஞானம் சாதுவாகத் தோன்றாது" என்பது மகாகவி காளிதாசன் கருத்தாம். அவ்வுண்மையை நன்கு அறிந்து, இச்செய்யுட்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் பல பெரியோர் முன் படித்துக் காட்டியுளேன். இறைவன் திருவருளால் இவையனைத்தும் தக்க ஆதரவு பெற்று விரைவில் வெளிவந்து தமிழுலகுக்குப் பயன்படவேண்டும் என்பது எனது வேணவா ஆகும்.
சங்கத்தால், தமிழமுதம் ஊட்டி, அளியேனைத் தமிழ்ப் பணிக்கு ஆளாக்கிவைத்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பேருதவியை உலகம் அறிய வெளியிடுவதே யான் அவர்கட்கு இயற்றும் சிறு கைம்மாறு ஆகும். தமிழ்மயமாய் விளங்கிய திரு. பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள் ஸ்தாபித்த தமிழ்ச் சங்கமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையும் இல்லாதிருப்பின் எனக்கும் தமிழ்க்கும் தொடர்பு தோன்றுதற்கு இடம் இல்லை. ஆங்கிலக் கல்வியின் மோகம் வளரும் நாளிலே என்னைத் தமிழ்ப்பயிற்சிக்கு ஊக்கிய எனது குலதனமாகிய வறுமைக்கும் ஒரு பெருவணக்கம் உரியதாகும். இன்று எங்கள் குலத்தில் நால்வர் தமிழ்ப் பயிற்சி பெற்றவராய் இருப்பினும் தொடங்கிய நாளில் முன்னின்ற தனிப்பெருமை எனக்கேயுரியதாகும். இந்த உரிமையை ஒன்றுக்கும் பற்றாத சிறியேற்குத் தந்த தமிழ்த் தெய்வத்தின் திருவருளை என்றும் மறவேன்.
இனி இச்செய்யுள் அச்சேறிய வரலாறு சிறிது உரைக்கப்படும். ஒவ்வொரு பொருளும் விலையேறி நிற்கும் இப்பெரும் போர்க்காலத்தில் காகிதத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுவது நன்கு அறிந்தும், பெருநகரங்களில் என்ன விலை கொடுத்தும் காகிதம் வாங்குவதே அரிதாகத் தோன்றும் நிலைமையில், இறைவி திருவருளே இப்பிரபந்தம் வெளிவருவதற்கு ஒரு துணையைத் தந்தது. செய்ந்நன்றியை நாவாரப் போற்றி உலகம் அறியவைத்தல் நன்றி பெற்றவர்க்கும் பிறர்க்கும் நன்மை விளைக்கும் புண்ணிய கைங்கரியம் ஆதலால், இவ்வுதவி செய்தார் பெருமையைச் சிறிது உரைக்கத் துணிகின்றேன்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் உலக நலம் கருதிப் பலவகைத் தருமங்கள் இயற்றுவதிற் பயின்று பயின்று புகழ் புனைந்த புண்ணிய மரபினர் என்பது தமிழகம் நன்கு அறிந்த உண்மையாம். ஆசுர மயமாக நிகழ்ந்து வரும் இந்நாளைப் போர்க் கிளர்ச்சியால் இம்மரபினரிற் பலர் தம் செல்வத்திற் பெரும் பகுதியை இழந்தது பத்திரிகை படிப்போர் எவரும் அறிந்ததே. செல்வக் காலையில் அரும் பெருந்தருமங்கள் செய்த இக்குலத்தார் இன்றும் தரும் நோக்கமேயுடையராய் இருப்பது இனியும் விரைவிலே இவர்கள் முன்னிலைமை பெறுதற்கு ஏற்ற அறிகுறியாகும். ஆடம்பரத்திற்கென்றே தருமம் செய்வார் பலர் உண்டு, உள்ள உணர்ச்சி தூண்டலால், ஏழைகளுக்கு இரங்கித் தருமம் செய்வார் மிகச்சிலரே. ஆயிரம் செல்வர் விருந்துண்ணும் பிரபுவின் மாளிகை வாயிலில் கஞ்சிக்குக் கதறுகின்ற ஏழைகளைத் துரத்தியோட்ட நாய்கள் பல இருப்பது உண்மையே. இந்த ஆரவாரம் விரும்பாமல் தருமங்கள் புரிந்துவரும் பரம்பரையிற் பிறந்த பொருள் வணிகர் புகழ், தென்னாட்டிலும் பிறநாடுகளிலும் ஆசந்திரார்க்கம் நிகழ்கின்ற ஆலய தருமம் வித்தியாதானம் அன்னதானம், தண்ணீர்ப்பந்தர் முதலிய தருமங்களால் என்றும் நின்று நிலவும்.
புகழ்க்கே உடம்பெடுத்த பொருள்வணிகர் மரபில் பலவான்குடியில் நெடுநாளாக நிலைத்த குலம் ஒன்று உண்டு. வயிரவன்கோயிற் பிள்ளையார் வகுப்பிற்குரிமைபூண்ட இக்குலத்தாருள் உயர்திரு, ராம. கு. சுப்பிரமணியன் செட்டியார் என்ற செல்வர்க்கும் திருமதி வள்ளியம்மையாச்சி என்ற செல்விக்கும். தவப்புதல்வராகத் தோன்றிய திருவாளர், ராம. கும.சு. குமரப்ப செட்டியார் என்ற செல்வச்சீமான் இப்பிரபந்தம் அச்சிட்டு வெளியிடும் முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொண்டார். இவரது அன்னையார் குன்றாக் குடியில் திருவாசக மடம் அமைத்து அனுதினமும் அடியார்களுக்கு அன்னதானம் செய்துவரும் சிவநேசச் செல்வர் சிவாச்செட்டியார் என்ற பழனியப்ப செட்டியார்க்கும் கோனாபட்டு கற்பக விநாயக கலாசாலையைப் பல்லாண்டு நன்கு நடத்திய மகாதேவா என்ற முருகப்ப செட்டியார்க்கும் உடன்பிறந்த தமக்கையார் ஆவர். இவரது தந்தையாரும் இக்குலத்தாரும் பலவான்குடியில் திருவாசக பாடசாலை குமரகணபதி கோயில், திருக்குளம், நந்தவனம் முதலிய சிவதருமங்களில் ஈடுபட்டுள்ள பெருங்குணமணிகள் ஆவர். முதுமொழிக்காஞ்சி மூதுரை நல்வழி என்ற நீதிநூல்களின் பதிப்பு ஒன்று இவர் தந்தையாரால் தரும வெளியீடாகக் கற்பக விநாயக கலாசாலையின் மூலம் வெளி யாகியது.
ஆண்டில் இளைஞரேயாயினும் அறவுள்ளத்திற் பெரியாராகிய இவர் சிவபுராணத் திருவகவலை மாணிக்கவாசகர் குருபூசை வெளியீடாகத் தருமமாக வெளியிட்டுப் பலர்க்கும் உதவினர். பிரதோடவிளக்கம் என்னும் வசன நூலும் இவர் உதவியால் சிவநேசச் செல்வர் வெளியீடாகப் பரோபகாரமாக வெளிவந்துள்ளது. சைவசித்தாந்த சமாஜத்தார் திருவாசகப்பதிப்புக்கு உரிய பொருளுதவியை முன்பணமாக இவரே மனமுவந்து செய்துள்ளார். குன்றாக்குடியைச் சேர்ந்த சண்முகநாதபுரத்தில் ஷண்முக வித்தியாசாலைத் தருமத்தையும் நன்கு நடத்தி நிர்வகித்து வருகின்றார். திருவையாறு அரசர் கல்லூரியிலே பயிலும் தமிழ் மாணவருள் ஒருவனுக்கு வேண்டிய எவ்வகை யுதவியும் இவர் செய்துவருகின்றார். குன்றாக்குடி மலையடிவாரத்தில் திரு நந்தா விளக்குத் தருமம் ஒன்று செய்துள்ளார். தமது அன்னையார் பெயரால் அமராவதி புதூர் மகளிர் இல்லத்துக்குப் பொருளுதவி செய்திருக்கிறார். கோனாபட்டு நகரத்தில் கொப்புடையம்மன் திருக்கோயில் முன் உள்ள வளைவில் மின்சார விளக்கு விளங்கத்தக்க பொருளுதவியை மனமுவந்து புரிந்துளர். இங்ஙனம் பலவகைத் தருமங்களிலும் இள மையிலேயே ஈடுபட்டு இன்னும் எவ்வெத் தருமங்களை எங்கெங்கு எவர்பொருட்டு இயற்றலாம் என்ற எண்ணமே உடையாராய் இருக்கும் இச்செல்வர் திருக்கோகர்ணம் பெரியநாயகியின் பூரண அனுக்ரகத்துக்குப் பாத்திரர் ஆகும் வண்ணம் இத்தருமத்தையும் ஏற்றுக்கொண்டது தமிழ் மக்கள் பேறேயாகும். இவரும் இவர் குலமும் நல்வாழ்வு பெருகி நீடூழி வாழ இறைவி திருவருள் நல்குக என அவள் திருக்கழல்களை மனமார இறைஞ்சுகின்றேன்.
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமுமாற்றலரிது. (வள்ளுவர்)
புதுக்கோட்டை, ) நா. கனகராஜய்யர்,
சித்திரபானு, ஆனி.) தமிழாசிரியர்.
22-6-42. )
------------------------------------------------
பாயிரம்.
விநாயக வணக்கம்
1. பொருள்மணம் பொலியும் கவிமலர் தொடுத்துப்
புரைதவிர் உளத்தினால் நினையும்
புலவர்தங் கருத்தில் விளங்கொளி யாகிப்
பூரண வானந்த மயமாம்
அருள்மதம் பொழியும் கயமுகப் பெருமான்
அறுமுகன் வள்ளியை மணக்க
அடைந்தருள் பெரிய களிற்றர சாகும்
அமலனோ ரிருகழல் பணிவாம்
தெருள்வளம் கனியும் புதுவையர் கோமான்
திருமுடி யணிசெயுங் கழலாள்
தேவர்கள் தேடி யறிவரும் பெருமைச்
சிவபரஞ் சுடரிடம் பொலிவாள்
மருள்மலங் கழற்றி யடியனே னுளத்தும்
வந்தருள் கோகனத் திறைவி
வண்மைசால் பெரிய நாயகி புகழாய்
வருபிள்ளைத் தமிழ்தழைத் திடவே.
-------------------------
சிற்சபாநாதன்.
2. முனிவர் மூவா யிரவரும் சுரரும்
முறைமுறை வணங்கியேத் தெடுக்க
முழுமுதற் றலைமை தனதெனு முண்மை
மூவகை யுலகமு முணரத்
தனிவரு மெய்ம்மை யானந்த மயமாம்
தத்துவம் விளக்கிய நட்டம்
தமனியப் பொதுவிற் குனித்தருள் கூத்தன்
தாண்மலர் முடிமிசைப் புனைவாம்.
பனிபடு வரையிற் பிறந்ததே யன்றிப்
பக்தியின் வலையினிற் பட்டுப்
பற்பல தலத்தும் கோயில்கொண் டருளும்
பரவசக் கருணைபூண் செல்வி
இனியபைந் தமிழின் தலைமைபூ ணிறைவி
எழில்வளர் பெரியநா யகியின்
இணைமலர்க் கழல்கட் கிசைந்தசெந் தமிழின்
இணர்த்தொடை நன்குவாழ் கெனவே.
-----------------------------
விசுவேசுவரன்.
3. முத்தியை யருளும் நகரங்கள் தம்முள்
முதன்மைகொள் திருத்தல மாகி
முழங்குறு கங்கை பெருக்கெடுத் தொழுகு
முறைமைகொள் காசியம் பதியிற்
சித்தியை விழையும் யோகியர் எவர்க்கும்
தெளிவுறக் காட்சிதந் தருளித்
திரும்புத லில்லாப் பெரும்பெயர் வாழ்வு
செகத்திலே யருள்செயும் பெருமான்
சத்திய வுருவ மெனத்தனை யடைவோர்
தாரக பிரமநன் குணரத்
தந்தருள் விசுவ நாதனாந் தலைவன்
சரணங்கள் கைதொழுஉப் புகழ்வாம்
பத்தியை யுணர்வோர் மனத்தடத் தலர்ந்த
பாததா மரைகொள்கோ கன்னப்
பார்ப்பதி பெரியநாயகி புகழைப்
பரவிய தமிழ்தழைத் திடவே.
---------------------------------
சிவனடியார்.
4. தங்குல மறந்து தந்நிலை மறந்து
தமக்குள தருமமு மறந்து
தம்மையே சிவத்தின் திருப்பணிக் கெனவே
தகைமையாற் கொடுத்திடு பெரியர்
சங்கர னருளிற் றனயனை யரியத்
தாரத்தைக் கையளித் தகலத்
தந்நிலை விரத பங்க நேராது
சத்திய வாக்குரைத் தமைய
மங்கள வாழ்வு பரசிவ னடியார்
மனமகிழ் பணியெனத் துணிய
வல்லவ ரெனவே யுலகங்கள் புகழும்
மாதவர் அடிமுடி புனைவாம்
பொங்கிய வளங்கள் பழுநிய தமிழப்
புதுவையர் தலைவனை யாண்ட
புண்ணியச் செல்வி பெரியநா யகியின்
பொலன்கழற் கணிபுனைந் திடவே.
------------------------------------
நல்லிசைப் புலவர்.
5. இலக்கண மைந்துந் தமைப்பணிந் திறைஞ்சி
யியன்றகுற் றேவல்கள் புரிய
இயற்றமிழ்த் துறையு மிசைத்தமிழ்த் தொடையும்
இறையவன் புகழ்விரித் திடற்கே
கலக்கவே பொருந்த வின்றுநன் கிருந்து
நாளையே யழிந்திடு மனித்தர்
நலமிலாச் சிறப்புப் புனைவது கருதா
நல்லிசைப் புலவரைப் பணிவாம்
அலக்கணி ணினைந்து நினையுமுன் படியர்
அகம்புகுந் தவரவர் வேட்ட
அளவகல் வாழ்வு விழிக்கடை நோக்கால்
அருள்செயும் கோகனத் தெய்வம்
விலக்கறு மிறைவ னாற்றலே யுருவாய்
விளங்கிய பெரியநா யகியாம்
விமலையின் கழலிற் புனைந்திடு கவிதை
வியனுல கதினிலை பெறவே.
-------------------------
அவையடக்கம்.
6. நாற்கவித் துறையும் முறைமுறை யறிந்த
நல்லியற் புலவர்சொல் புகழே
நயந்துதன் செவியி னேற்றருள் புரியும்
நாயகி கோகனத் திறைவி
பாற்படு பொருளின் றிறநுனித் துணராப்
பச்சிளங் குழவியா மடியேன்
பாடலை யணியுந் திருவருட் பொலிவாற்
பரவச முறச்செவி சாய்ப்பாள்
வேற்படைப் பெருமான் செய்யவாய் மலர்ந்த
விரிந்தநான் மறையெனு மழலை
விருப்புடன் கேட்டு மகிழ்வது போன்றே
விழலனேன் புன்சொலுஞ் சுவைக்க
ஏற்குமெம் பெரிய நாயகி யன்னை
யின்னருள் வண்மையீ தன்றே
எளியருக் கெளிமை வலியருக் கருமை
யியைபுறு மிறைவியா மவளே.
---------------------
நூல்
1. காப்புப் பருவம்.
திருமால்.
7. திருநான் மறையின் சிரத்தமர்ந்த
திருப்பொற் கழல்கள் வருந்தமுந்தை
செழிக்கும் புனல்பா யமுனையிடைச்
சிறுவர் காணக் காளியன்றன்
பெருமால் கழலத் திருநடனம்
பேணி யினிய குழலிசைத்துப்
பெரும்பா ரதப்போர்க் களத்தினிடைப்
பேசவரிய பொருள்பேசும்
திருமால் கழல்கள் நாப்புகழ்ந்து
சிந்தை யாரத் துதிபுரிவாம்
திருக்கோ கனத்துச் சிவபெருமான்
தேவ தேவ னிடத்தமரும்
பெருமா விறைவி யருள்கனிந்து
பிறங்கு விழியா ளடியவர்கள்
பேணு முருவ மெலாமுடைய
பெருநா யகியைக் காக்கவென்றே. 1
-------------------------
சிவபிரான்.
8. கங்கை யடங்கு சடாடவியிற்
கதிர்கொள் பிறையும் பணியுமனங்
கலந்து பொருந்தி யுறவாடக்
கருணை பழுத்த பரஞ்சுடரின்
சங்கை யறுத்து மறைப்பெருநூல்
சாற்ற வரிய திருவுருவைத்
தகவே யுளத்தில் நிறுத்தியவன்
சரண கமலம் பணிகிற்பாம்
தங்கை யெனவே பயோததிவாழ்
தலைவ னுரிமை கொண்டாடத்
தக்கன் இமய மலையரயன்
தனயை யெனவே பரிந்தழைப்ப
மங்கை யுருவோ டடைந்துபர
மங்களத் தைமணந் தருளும்
மனங்கொள் பெரிய நாயகியை
வண்மை நலத்தாற் காக்கவென்றே. 2
---------------------------
விநாயகர்.
9. பெருகுறு புனலைக் கரகத்தி னடக்கிப்
பிறைமுடிப் பொருளையே நினைந்து
பிறங்கிய வளங்கள் பொலிதமி ழகத்திற்
பேச்சற நடந்துறு முனிவன்
அருகடைந் தவன்கைக் கரகத்தை வாங்கி
யருள்வெள்ள மெனப்பரந் தோட
ஆர்புனை முடிமன் னவர்குலக் கொடியாம்
ஆறென வுலகிலுக் குதவும்
கருணையின் முகிலைச் செய்யமா ணிக்கக்
காந்திகொள் கரியினைப் பணிவாம்
கடலினும் பெரிதாந் தமிழ்க்கலை வளர்க்கும்
கடமைகொள் புதுவைமன் னவனை
அருள்புனை யடிமை யெனக்கொளு முரிமை
அருமறைத் தலைவிகோ கன்னத்
தமர்ந்தரு ளிறைவி பெரியநா யகியை
அன்பொடு காத்தருள் கெனவே. 3
----------------------------
முருகப்பிரான்.
10. இருக்கின் மறைந்த வொருபொருளை
எளிய வரிய செம்பொருளை
இதுவென் றுணர வுலகுயிர்கட்
கிசைக்கும் கடம்பூண் டுளவிறைவன்
செருக்கின் மலிந்த வவுணர்குலம்
தேவர்க் கியற்றுந் தீமையெலாம்
செய்யோன் கதிர்முன் பனிநிகர்ப்பத்
தீய்ந்தே யொழிபப் புரியயிலோன்
பொருப்பின் முடியில் விளையாடு
புலமைப் பெருமான் கழல்பணிவாம்
புவியும் விண்ணும் பிறவண்டப்
பொருளு முறையே யீன்றுமின்னும்
விருப்பின் விளங்கு கன்னியுரு
விளங்கப் பொலிந்த பெருமாட்டி
விண்னோர் பரவும் கோகன்ன
விமலன் துணையைக் காக்கவென்றே. 4
---------------------------
நான்முகன்.
11. ஒலியுருவப் பிரணவத்தின் உட்பொருளென்
றறிவர்கணம் உணர வந்த
உரையிறந்த பொருள்தெரிக்கும் மறைக்கடலில்
உரிமையினால் உண்மை காணும்
மெலிவில்பணி யுடையவனென் றதுபுகன்ற
மரபறிந்து விரிந்த ஞாலம்
விளங்குயிர்கள் படைத்தருளும் பரமனெனக்
கலைக்கிறைவி விரும்பி யேற்ற
தலைவனென வுலகுசொலுந் திசைமுகனை
மனநினைந்து தணிதல் செய்வாம்
தமிழ்க்கிறைமை தனியுரிமை தனக்கெனவே
தாங்குகுடி தனக்குத் தாயாம்
நிலைமைபெறு கோகன்னத் தலத்திறைவி
யடியருளம் நிறைந்த செல்வி
நிகமமறிந் துரைப்பரிய வருட்பெரிய
நாயகிதாள் நிலைத்தற் கென்றே. 5
----------------------------------
இந்திரன்.
12. ஐந்தரு நின்று நினைந்த வணஞ்செய
ஆளம ராவதியான்
அவுண குலாசனி முகிலினை யூர்தரும்
அமரகு லாதிபதி
செந்திரு நாயக னிளவ லெனப்பெறு
திருவுறு பிறவியுளான்
செயலுறு வேள்வியி னவிகளி னுரிமை
செறிந்தவ னைப்பணிவாம்
சிந்தனை புரிபவர் நெஞ்சக மேவிய
திருவருள் நிறையிறைவி
சிவனை மணந்துல குயிர்கள் புரந்தருள்
தேவி புராதனிதாள்
வந்தனை செய்திடு முரிமை யெனக்கருள்
வண்பெரு நாயகியை
வஞ்சமில் புதுவையில் மன்னவர் தாயினை
வன்பொடு போற்றுறவே. 6
-------------------------------
திருமகள்.
13. உயிர்கள் வளர்ந்திட வுலகு மலிந்திட
வுளமுற வருள்தலைவி
உவமை கடந்துறு மெழிலுறு நலமமை
உருவுள செம்மலராள்
பயிர்கள் கிளர்ந்திட மழைகள் பொழிந்தருள்
பண்ணவ னிளவலெனும்
பண்டைய தெய்வத நெஞ்சிடை மருவுறு
பரவிய தாள்பணிவாம்
செயிர்கள் நிறைந்துள வுளனு மடைந்தருள்
தேவர்கள் தேவிசிவை
திருவளர் கோகன நாயகி புதுவையர்
சேவக மேயுடையாள்
அயிர்கள் மலிந்துள கடலெனு மாடையை
அணிநில மாமகளின்
அன்புறு மக்களை யின்பொடு காத்தருள்
அமலையை யருள்கெனவே. 7
----------------------------------
கலைமகள்.
14. அறிவுதருங் கலைகளெலாம்
தனதுருவாய் அமைந்திருந்தும்
அறிபொருளை நாடுவள்போல்
ஏடமையும் அணிகரத்தள்
நெறிபெருகு மிசைத்துறையின்
முடிபுணரு நிமலையெனல்
நெகிழ்வறுநல் லிசைபொழியும்
வீணையினால் நிறுவியவள்
செறிவுடைய பரம்பொருளை
யுலகுணரத் தெளிவுறுக்கத்
திருவிளங்கு படிகமணித்
திருக்கோவை யேந்துமன்னை
நறியமலர்க் கழலிணைகள்
நாடிமனத் தடத்தடைப்பாம்
நம்புமவர்க் கருள்பெரிய
நாயகியைக் காக்கவென்றே. 8
---------------------------------
துர்க்கை.
15. அமரகுலம் வாழ அவுணகுல மாள
அருள்புரியு ஞான பரையாகி
அடியவர்கள் தேடி நினையுமுரு மேவி
அகிலவுல காளு மனையாகும்
சமரவய வீர நெறிநிலவு தேவி
சரமசரம் வீறு பெறநாளும்
தகைமைதரு சூலி யிறைவிமயி டாரி
சரணமலர் நாடி யடைவோமே
இமயவரை வாழ்வு பெறவெழில்கொள் மேனை
இதயமகிழ் தூய மகளாகி
எளிதில்வரு வாளை வெளியவுரு வாளை
இனியதமி ழோது புலவோர்கள்
சமயமறி வாளை மனமறிகி லாத
சருவனிட மேவு பெரியாளை
தமிழரிறை தாயை யருள்கெழுமிவாழு
தலைமைநிலை நீடு நினைவானே. 9
-----------------------
சத்த மாதர்.
16. அன்ன வூர்தி யமர்ந்தருள் பெண்மணி
ஆட லேற்றினை யூர்ந்த வணங்குபூண்
அணிகொள் கேகய வாகன மங்கையே
அரிய வீயர சாண்டு நடத்துவாள்
மன்ன நீடரி யேறமர் மாதுசீர்
மாம தத்த யி ராவத மூர்பவள்
வலிய பேய்களை யூக்குவ ளாமெழு
மாத ரார்கழல் வாழ்த்தி வணங்குவாம்.
சொன்ன வண்ண நலங்க ளருளியே
சூழ்ந்த வன்பரைக் காத்தருள் நாயகி
தூய மாதவர் நான்மறை யோதினர்
தோத்தி ரஞ்செய முன்வரு நாரணி
தன்ன மும்பிரி யாது தமிழிறை
தான தன்மந் தழைக்கு மனத்துறை
சங்கரப் பெருமான் பெரு நாயகி
தாள்கள் வாழ்வுற நாடு நினைப்பினே. 10
------------------------------
முப்பத்து முக்கோடி தேவர்.
17. சோதித்த நூல்கள்புகல் சொல்லுக் கடங்கரிய
தூய்மைப் பவித்திரைநல் வாய்மைச் சிறப்புடையள்
துன்பத்து மின்பத்து மொன்றுற்ற நெஞ்சுடைய
சொற்செல்வர் நாட்டத்து வைத்திட்ட சோதியுரு
வாதித்த வாதியர்கள் காணரிய மாயையென
வாழ்வுள்ள தேவதையெம் மாலைக் கெடுத்தருள
வந்துற்ற செல்விதமிழ் மன்னர்க்கு நல்லன்னை
வரையற்ற புகழ்பெற்ற வள்ளற் பிராட்டிசிவை
சாதித்த தற்செய்கை யொன்று மறியாதவுயிர்
தர்க்கத்தின் மீறியவோர் சாந்தத்தை பெய்தவருள்
தாய்மைத் திருத்தலைவி கோகன்னம் வாழிறைவி
தாளைத் தகுந்தநெறி வாழப் புரிந்தருள்வர்
ஆதித்தர் பன்னிருவர் பதினோரு ருத்திரர்கள்
ஆயுள்வேதி யரிருவர் நாலிருவ சுக்களெனும்
அன்னார்கள் தலைமைபெறு முப்பத்து முக்கோடி
யாகவுல கம்புகழு தேவர் தம் தலைவரே. 11
-----------------------------
2. செங்கீரைப்பருவம்.
18. ஏவரும் பருகிலாச் செவியமுத நுகர்வுறுநல்
ஏற்றத்தை நாடிநின்றேம்
இறைவனெம் பரசிவத் துரிமையென விமவான்
இயற்றிய தவத்துதித்தே
பாவரும் புகழ்பெருகு மேனைதன கலசம்வரு
பாலமுத முண்டுவளர்வோய்
பனிவரைச் சிகரமிசை விளையாடி மகிழ்கின்ற
பச்சை பசுங்குழவியே
தாவறுந் தவநெறியர் தலையூன்று தாண்மலர்கள்
தம்மையெழி லாய்முடக்கித்
தலைநிமிர்த் தொருகரத் தளிரினை யெடுத்தொருகை
தரையின்மீ தூன்றிவைத்தே
தேவரும் பெறலரிய சீரமுத மொழுகவே
செங்கீரை யாடியருளே
தென்றிருக் கோகன்னம் வாழ்பெரிய நாயகீ
செங்கீரை யாடியருளே. 1
---------------------
19. எழுதுதற் கரியதாம் கிளவிக்க ணுறுமெய்ம்மை
ஈதென வெடுத்துரைக்கும்
இனியபணி பூண்டருளும் வேற்படைச் செவ்வேளை
யெந்தைவரு கென்றெடுத்தே
கெழுமுநற் சுவைமழலை மொழிகமத லாயெனக்
கேட்டுமகிழ் வெய்துமன்னே
கிரியையினோ டிச்சையே ஞானமா சத்தியாக்
கிளர்வுறும் தேவதேவி
தொழுதுனைப் பரவியே தாமெண்ணு பேறுறத்
தொண்டரினம் வந்தணைந்தே
சொற்செல்வம் நல்குவாய் நல்குவாய் என்னவே
சோர்விலா தோதிநிற்கும்
செழுமைமிகு புதுவைநா டாண்டருளு மரசியே
செங்கீரை யாடியருளே
தென்றிருக் கோகன்னம் வாழ்பெரிய நாயகீ
செங்கீரை யாடியருளே. 2
-----------------------
20. பொருளினை யடக்கும்நெறி புல்லாத சொல்லுண்டு
பொருள்கள்செல் லும்திறத்தாற்
புலமைக்கு வளர்வெல்லை நிறுவியமர் சொல்லுண்டு
புலவரு மருண்டுநிற்க
இருளினை யடைந்த சொற்பொருளுண்டு சத்தியால்
இன்னவையெலாம் விளக்கும்
இறைவிநீ யெனவுன்னை யுள்ளமலர் ஏற்றிநின்
றேத்திநிற்பார் இமையவர்
அருளினைப் புல்குபர தெய்வமே யடியரேம்
ஆனந்த வெல்லையறிய
அருமறைச் சிரமுறையு மெய்ப்பொருளை யோதியருள்
அன்னையே தமிழவேந்தன்
தெருள்வளரு புதுவையர சுரிமைபூ ணரசியே
செங்கீரை யாடியருளே
தென்றிருக் கோகன்னம் வாழ்பெரிய நாயகீ
செங்கீரை யாடியருளே 3
-------------------------------
21. இந்திரத் தலைவனொடு கனலியும் வாயுவும்
இறுமாந்த நெஞ்சர்நின்றே
எதிர்வந்த வுருவம்யா தென்னநன் கறிகிலார்
எளியபுன் சிறு துரும்பால்
தந்திரத் தலைமைபெறு மறையினுட் பொருளறிவு
சாரமுயல் கின்றநாளில்
தத்துவச் செம்பொருளை யிற்றென் றுரைக்கவரு
சங்கரீ யைமவதியே
மந்திரத் தெய்வமென மாதவர்கள் தெளிகின்ற
மாதுதிரி புரசுந்தரி
வள்ளன்மை யுருவெடுத் தோங்கிவளர் செல்வியே
வாக்கைக் கடந்தபரையே
செந்திறக் தமிழிறைவி புதுவைநக ராளியே
செங்கீரை யாடியருளே
தென்றிருக் கோகன்னம் வாழ்பெரிய நாயகீ
செங்கீரை யாடியருளே. 4
--------------------------------
வேறு
-------
22. பொற்கிரி வில்லியின் மெய்யொரு பாதி
பொருந்திய மெய்யுருவே
புண்ணிய வன்பர்த நெஞ்சக மாமலர்
பொழியு மதுத்தெளிவே
கற்குடி மங்கையர் வேண்டிய வாழ்வுகள்
நல்கு திருக்கவுரீ
காவலர் நாவினு நெஞ்சினு நின்று
நலந்திகழ் சேயொளியே
கற்பக நாடியர் உள்ள நிறைந்தருள்
கருணையின் வாரிதியே
கரிமுகன் வேலவ னெனுமிரு மதலையர்
கனிவொடு தழுவனையே
சிற்பரை கோகன சங்கர னம்பிகை
செங்கோ செங்கீரை
தென்றமிழ் நாடுடை யாய்பெரு நாயகி
செங்கோ செங்கீரை. 5
-------------------------
23. சத்துசித் தென்னவே யானந்த மென்னவே
சாற்றிய மும்மையுமாய்
சச்சிதா னந்த வொருமை யுமாகிய
சங்கரன் மெய்த்தலைவி
சுத்த சிவத்தின தானந்த தாண்டவம்
சொல்லறு தூவெளியில்
தூய விழியிணை கண்டு களித்தருள்
சோதியே ஞானநிதீ
அத்துவி தப்பொருள் மெய்க்குரு வோத
வருளிய நாவிறைவி
ஆரண நாடரு செய்யவ ளேசிவை
யாகிய சாசுவதீ
சித்து விளங்கிய கோகன நாயகி
செங்கோ செங்கீரை
தென்றமிழ் நாடுடை யாய்பெரு நாயகி
செங்கோ செங்கீரை. 6
------------------------
வேறு.
24. அந்தர விமையவர் வந்து வணங்கவும்
அன்பால் நன்றாளும்
அங்கண னருள்பெற முந்திய சிந்தையர்
அன்றே வந்தாரே
சுந்தர விமவதி யென்று புகழ்ந்தவர்
தொண்டே கொண்டாயே
சும்பநி சும்பரை யன்றுவ தஞ்செய்து
துன்பே விண்டாயே
சந்திர னிணையறு சுந்தர வதனியே
சந்தோ கம்பேசா
சங்கரி யருள்பொழி மங்கள சிவையுரை
தந்தா ளெந்தாயே
செந்திரு கலைமகள் வந்தனை பெறுபவள்
செங்கோ செங்கீரை
தென்றமிழ் உரிமைகொள் தொண்டையர் இறைவியே
செங்கோ செங்கீரை. 7
-------------------------------------
25. விண்டல முனிவரர் மண்டினர் நினதிசை
விண்டார் கண்டாயே
விஞ்சிய வவுணரை யண்டர் நி னருளினில்
வென்றார் நின்றாரே
கண்டிகை பொடியணி யெண்குண னிடமுறு
கம்பேர் மென்றோளீ
கங்கையின் வளரறு மைந்தரை முருகனே
கந்தா வென்றாயே
மண்டல வினைவலி விண்டிட நினைவரை
வந்தா ளெந்தாயே
வஞ்சகர் உளமிசை நின்றனை யெனுமவர்
வம்பே நன்கோர்வாய்
திண்டிறல் அரசினர் வந்தனை பெறுபவள்
செங்கோ செங்கீரை
தென்றமிழ் உரிமைகொள் தொண்டையர் இறைவியே
செங்கோ செங்கீரை. 8
-------------------------------
வேறு.
26. ஒளிபெறு ஞாயிறு நிகழ்முடி யாட
உவப்பால் நுதலாட
உரையறு புருவமும் விழிகளு மாட
உதித்தே குமிழாட
தெளிவுறு முத்தினை வெலுநகை யாடச்
சிறியித ழிணையாட
சிவனருள் மறைவுறு மகலமு மாடத்
திருவளர் கரமாட
எளிவரு மடியவர் நினைகழ லாட
எடுத்தே எதிராட
இணையறு மழலைகள் நாவசை வாட
இசைத்தே முகமாட
அளிவரு கருணையி னுருவுடை யம்பிகை
யாடுக செங்கீரை
அமுதுறழ் தமிழிறை யடிமைகொள் சங்கரி
யாடுக செங்கீரை. 9
---------------------------------
27. திருமறை நாறிய கழலிணை யாடச்
செந்திரு கலைமகளாம்
தேவியர் ஒப்பனை செய்குழ லாடச்
செந்தமிழ் கேட்டளவில்
உருகிய நெஞ்ச முவப்புட னாட
வுயிர்த்தொகை வேட்கையுறும்
உரிமையை நல்கிய விழியிணை யாட
ஒளிக்கதிர் போலொளிரும்
திருநுதல் மேல்வரு சுட்டியு மாடத்
தெய்விக நூல்கள்சொலும்
செம்பொருள் காட்டிய புருவமு மாடத்
திருமுகம் வெயர்வாட
அரிபுகு பரிபுர வம்பிகை பண்பெற
வாடுக செங்கீரை
அமுதுறழ் தமிழிறை யடிமைகொள் சங்கரி
யாடுக செங்கீரை. 10
--------------------------
தாலப் பருவம்.
28. அருக்கோ தயத்தின் ஒளிபொருந்தி
யதன்க ணமைந்த வெம்மையின்றி
அணிகொள் திங்க ளுதயத்தின்
அழகு பொருந்தி மறுவகன்று
தருக்கோ டடிமை திருக்கழற்கே
தம்மை யளித்துப் பிறதெய்வம்
தலையால் வணங்காப் பெருந்தவத்தோர்
தவத்திற் பழுத்த தனிப்பழமே
இருக்கோ லிடவும் இனுமறியா
இறைவி திருக்கோ கனமுடையான்
இடத்தே யமர்ந்து பலகோடி
யெழுந்த வுலகம் படைக்குமன்னே
பெருக்கோ டொழுகு வெள்ளாறு
பேணு மரசீ தாலேலோ
பிறப்பும் இறப்பும் ஒழித்தருளும்
பெருநா யகியே தாலேலோ. 1
---------------------------------
29. உண்டே யுலகம் அறவுருவம்
உடையாய் நின்ன திருவருளால்
உரிமை யுளதே தவமுனதே
உயர்வு முளதே நலமுளதே
தண்டே னொழுகு கமலநிகர்
தாட்போ துடைய பெருமாட்டீ
தமிழைப் புரக்குந் தனிக்கடமை
தாங்குந் தொண்டை மன்னர்குலம்
பண்டே யடிமை பூண்டருளிப்
பாலித் துவக்கும் பராபரையே
பாடற் குருகும் உளமுடையாய்
பழநான் மறைசொல் கோகனத்தான்
பெண்டே தமிழர் பெருந்தலைவீ
பிறையேர் நுதலாய் தாலேலோ
பிறப்பும் இறப்பும் ஒழித்தருளும்
பெருநாயகியே தாலேலோ. 2
---------------------------------
வேறு.
30. மறைகள் தெளித்தருள் பொருளை யுணர்ந்திட
வந்த பெருந்தவர்கள்
மவுன நெறிப்பெறு சிவம தடைந்திட
வண்மை விளங்குகுரு
இறைவ னினைத்தன எவையும் நிகழ்த்துற
என்றருள் எம்மனையே
எழுதவு மோதவு மெண்ணவு மரியதோர்
எழில்வளர் மெய்யுருவே
குறைகள் பலப்பல நிறைவுறு சீவர்கள்
கோதறு வாழ்வுபெறக்
குவளை நிகர்ப்புறு கருணை விழித்திடு
கோமள விழியிணையாய்
பிறையை மிலைச்சிய சடையினன் நாயகி
பெண்மணி தாலேலோ
பெருமைகொள் நாயகி திருவளர் கோகன
பிடியே தாலேலோ. 3
------------------------------
31. பண்டைய நான்மறை நாடி யுணர்த்திய
பண்புறு மெய்ப்பொருளாம்
பழமையி னியலொடு புதுமையி னியல்கொள்
பரம்பொரு ளின்றுணையே
எண்டிசை நாவலர் பாடிய சீர்த்தி
பியைபுறு தொண்டையர்கோன்
எங்குல தெய்வ மெனச்சொலி யேத்தலும்
இன்பருள் பூரணியே
கண்டன வாழ்வுகள் யாவையு மடியவர்
கருதுமு னேயருளிக்
காத்தருள் கோகன நாயக னாகிய
கருணையி னுருவமுளான்
பெண்டென மன்பதை தாயென நின்றருள்
பெண்மணி தாலேலோ
பெருமைகொள் நாயகி திருவளர் கோகன
பிடியே தாலேலோ. 4
----------------------------------
வேறு.
32. உலகுகள் யாவும் ஒடுங்கிய நாளினில்
உள்ளத னுள்ளுருவாய்
உத்தம வைந்தொழில் நட்ட மிடுஞ்சிவ
னோடுள பெண்ணுருவே
வலமிட மாகி யமர்ந்தனை யென்னிலும்
வள்ளலி னித்தநடம்
மக்கள் நலம்பெறு நோக்கொடு காணிய
வந்த பெருந்தலைவி
அலகில வாகிய மெய்ந்நெறி சென்றுபி
னாய்ந்துணர் மாமறையின்
அந்தமு மாதியு மெங்கு நிறைந்தொளிர்
அறிவுமெ யின்புருவே
தலைமை கொளுஞ்சிவை கோகன நாயகி
தாலோ தாலேலோ
தண்டமிழ் மன்னர் குடிப்பெரு நாயகி
தாலோ தாலேலோ. 5
---------------------
33. பற்பல கோடிக ளாமுல கங்கள்
படைத்து வளர்த்திடினும்
பான்மையின் வேற்றுமை யின்றி விளங்கிய
பச்சை யிளங்குழவீ
கற்பனை யெல்லை கடந்து நிறைந்தொளிர்
காதலர் காதலியே
காரண காரியம் யாவு மெனப்பெறு
கரிசறு மெய்த்தெளிவே
அற்பமு மெய்ந்நெறி செல்லுணர் வற்றவர்
அரியபல் பேறுமுற
ஆண்டருள் பூரணி நாரணி யன்புரு
வாகிய தெய்வதமே
சற்பத கோகன சிற்பத நாயகி
தாலோ தாலேலோ
தண்டமிழ் மன்னர் குடிப்பெரு நாயகி
தாலோ தாலேலோ. 6
--------------------------------
வேறு.
34. அஞ்சலி கண்டனர் நன்புல
வோர்நீ பாவாலே
அன்புரு கும்பரி சுண்டென்
நூலா லோர்வாரே
சஞ்சல சிந்தையின் வந்தமர்
சோதீ தேவேசீ
சங்கரி யம்பிகை யெண்குணன்
வாமார் தாயே நீ
அஞ்சலெ னுஞ்சொலை என்கருள்
சீரோ டாள்வாயே
அம்பொனி னம்புயம் வென்றொளிர்
தாளாய் கேளாயே
தஞ்சந லந்தரு சங்கரி
தாலோ தாலேலோ.
தண்டமிழ் கன்கருள் அம்பிகை
தாலோ தாலேலோ. 7
-------------------------------
35. அண்டர்கள் தந்துயர் விண்டனர்
மேவார் வாழ்வாரோ
அன்பர்கள் வந்தணை கின்றனர்
வாழ்வே மேவாரோ
வண்டின மொன்றிய கொன்றையர்
பாலே சேர்பூவாய்
வம்பலர் பொங்கிய குந்தள
மானே மாறாதே
தொண்டர் நினைந்தன வன்பொடு
சூழ்வாய் பாவாய்மா
சும்ப நிசும்பரை வென்றருள்
சூலீ மாதேவீ
தண்டை யணிந்தருள் சங்கரி
தாலோ தாலேலோ
தண்டமிழ் நன்கருள் அம்பிகை
தாலோ தாலேலோ. 8
---------------------------
வேறு.
36. வெளிய மேனியை சங்கரி தாலோ தாலேலோ
விமல நாயகி சுந்தரி தாலோ தாலேலோ
அளியர் வாழ்வுற நின்றனை தாலோ தாலேலோ
அரிய நான்மறை கண்டவள் தாலோ தாலேலோ
தெளிவி னோருளம் வந்தவள் தாலோ தாலேலோ
தெளிகி லாரிடம் அன்புளை தாலோ தாலேலோ
பிளிறு மாகரி கொண்டனை தாலோ தாலேலோ
பெரிய நாயகி யம்பிகை தாலோ தாலேலோ. 9
-----------------------
37. நிறையும் வாழ்வருள் அங்கணி தாலோ தாலேலோ
நிகில லோகமும் நின்றவள் தாலோ தாலேலோ
குறைவில் பாடல்கள் கொண்டவள் தாலோ தாலேலோ
குரையும் நீள்கழல் ஒன்றினள் தாலோ தாலேலோ
மறைகள் ஆய்கழ லம்புயை தாலோ தாலேலோ
மகன்மை மேவிய கந்தனை தாலோ தாலேலோ
பிறையை வாழ்வருள் அன்பனை தாலோ தாலேலோ
பெரிய நாயகி யம்பிகை தாலோ தாலேலோ. 10
---------------------------
4. சப்பாணிப்பருவம்.
38. உளமுறத் தெளிவதற் கரியதவ முயல்கின்ற
உத்தமருள் மிக்க பெருமை
உள்ளபெரு வள்ளலர்கள் ஞானியர்கள்
வாழ்வுபெறு மூலவாத புகழ்பொருந்தும்
வளமிகப் பெறுதமிழ்த் திருநாட்டி னணிகெழுமு
மாண்புடைப் புதுவை நாட்டில்
வண்டமிழ்க் கலைவளர்த் திடுமுரிமை பூண்டகுடி
மன்னவர் வணங்கு மிறைவீ
இளவிரற் றளிருடைப் பதநினைத் தடியவர்கள்
எண்ணம் நிறைவேற வென்றே
எவ்வகைய வாழ்வையும் தரவுரிய கருணைவிழி
எங்கணு மலர்ந்து நோக்கத்
தளவமொத் தலர்கின்ற விரன்மலரு பாணியாற்
சப்பாணி கொட்டியருளே
தமிழ்வளரும் வல்லியே பெரியநா யகியம்மை
சப்பாணி கொட்டியருளே. 1
--------------------------------------
39. செய்வதற் குரியவினை தவிர்வதற் குரியவினை
செம்மை நெறி யோர்கிலாது
சிந்தையி னினைந்தவழி யைந்துவெம் பொறிகளும்
செலவிட்ட சிற்றறிவினோர்
நைவதற் குரியநிலை வாழ்க்கையிடை நணுகுதலு
நஞ்சென நடுங்கி நின்றே
காளைவரு தீவினையை யெங்ஙனம் வேறுமென
ஞானம் பெறாதி ரங்கி
உய்வதற் கெளியநெறி யருள்வெள்ள மொழுகுமின்
ஒருவிழிக் காளா வதென்
றோர்கிலார் அத்தகையர் செவிகேட்க மும்மையா
முலகவு யிர்யா வுமறியச்
சைவநற் பேறருள வல்லவொரு பாணியாற்
சப்பாணி கொட்டியருளே.
தமிழ் வளரும் வல்லியே பெரியநா யகியம்மை
சப்பாணி கொட்டியருளே. 2
---------------------------------
40. பெருமைக்கு மடைகின்ற சிறுமைக்கு மவரவர்கள்
பேணுநெறி சென்றறிந்த
பெட்பினால் முறைநெறியி னுரியபய னெய்தவே
பிறர்வருந் தாதியற்றும்
கருமமே கட்டளைக் கல்லென்று மெய்ப்புலவர்
கட்டுரைத் திடுவதுண்டே
கருமங்கள் தம்மொடவை தருகின்ற பயனுமே
கட்டோ டழிந்தகலவே
அருமையுறு ஞானத்தை யடையமுய லுகவென்ன
அறைகின்ற நூலுமுண்டே
அன்புநெறி யொன்றினே யெவ்வகைப் பேறுமுள
வாதலா லதுபற்றியே
தருமமற வாதறிவு நெறிநிற்க வருள்தேவி
சப்பாணி கொட்டியருளே
தமிழ்வளரும் வல்லியே பெரியநா யகியம்மை
சப்பாணி கொட்டியருளே. 2
-----------------------------------
41. அமுதைப் பருகுதல் கருதிய வமரர்கள்
அரிகுறை சொல்லாமே
அருளிற் புரிபணி யிதுவென வருவிடம்
அரனருள் கொல்லாமே
கமையிற் பயில்வுறு கருணைப் பதியணி
களனிரு கையானே
கருதித் தழுவுபு கடுவிட நிறுவிய
களநிகர் குழல்மானே
இமயக் கிரியிடை யெழிலுற வளர்வுறும்
இளமைய பிடியானாய்
இதயத் தடைவுற நினைபவர் வினைகளை
எளிதினில் வெல்வாளே
குமரக் குழவியை மகிழ்வொடு தழுவுமை
கொட்டுக சப்பாணி
குலனிற் பழையவர் புதுவையர் இறைவியே
கொட்டுக சப்பாணி. 3
-----------------------------------
42. மறையைப் பயில்பவர் தமிழ்மொழி பயில்பவர்
மனமுற வுறவாடி
மதியைத் தகுநெறி யுலகினர் பயனுற
வளர்வது செயுமாறு
கறையைப் பெறுகளன் முனிவரர் அறிபொருள்
கரைவது துணிநாதன்
கருணைத் திருவுரு வுடையவ னருள்நெறி
கரிசற நிலையாகும்
முறையைப் பெறுதமிழ் இறைமைகொள் புதுவையில்
முனிவரர் நினைவேறும்
முழுமெய்த் தவமய வுருவுள பரசிவை
முதமருள் விழிமானே
குறையைப் புகல்பவர் உளமலர் நிறைபவன்
கொட்டுக சப்பாணி
குலனிற் பழையவர் புதுவையர் இறைவியே
கொட்டுக சப்பாணி. 5
------------------------
வேறு
43. அம்பினர் வில்லினர் வேலினர் வாளினர்
ஆகிய வீரரெலாம்
அஞ்சலி செய்தனர் வெற்றியை நல்கினை
ஆண்டருள் தாயெனவே
செம்பொருள் நாடிய நன்கவி வாணர்கள்
சேவரு கோமகனார்
திப்பிய மெய்யருள் பெற்றருள் கென்னவே
சிந்தை நினைந்தனரே
உம்பரும் வன்பொடு கண்டகர் தம்மைவெ
லூற்றம் விழைந்தனரே
ஒப்பனை யற்று விளங்கிய செல்வியே
ஒத்த தளித்தருளிக்
கொம்ப ரிளங்குயில் பண்பயில் மென்மொழி
கொட்டுக சப்பாணி
கோகன நற்பதி வாழ்பெரு நாயகி
கொட்டுக சப்பாணி. 6
----------------------------
44. அடியவர் நெஞ்சக மாரண மேநிகர்
ஆலய மாகுமெனா
அருளின டைந்தருள் பதயுக ளங்கொளும்
அம்பிகை சங்கரியே
படியவள் செய்யவள் நாமகள் என்பவர்
பண்டு பணிந்தனராப்
பரவுதல் புரியவும் அருள்புரி கவுரியே
பைந்தமிழ் நாடுடையாய்
நெடியவ னன்புறு தங்கையெ னும்பெயர்
நின்ற பெருந்தலைவீ
நீர்நிறை மாகடல் சூழலகியா வையும்
நித்திய வின்பமுறக்
கொடிகொள் தடித்தினை யடிமைகொள் நுண்ணிடை
கொட்டுக சப்பாணி
கோகன நற்பதி வாழ்பெரு நாயகி
கொட்டுக சப்பாணி. 7
-----------------------------
வேறு.
45. என்றுமுள தென்றமிழை முனியகத் தியனுணர
ஏற்றகுரு வாகவந்தே
இலக்கண நெறித்துறைகள் எவையுநன் கருள்செயும்
இயற்றமிழ்ப் புலவனாகும்
மன்றினட மிடுநின்ற சிவபரஞ் சுடரினது
வாமத்தி னமர்தேவியே
வாக்கெல்லை மனவெல்லை வீறிநின் றொளிர்கின்ற
வள்ளற் பெரும்பிராட்டீ
தன்றுணைவ னைந்தொழிலு நன்குநிறை வேறவரு
சக்தியே பக்திநிதியே
சாத்திரத் தொகுதியுறை சாரமே கோத்திரத்
தலைமீது வளர்குழவியே
குன்றனைய வினையறுத் தன்பர் நலமெய்தவே
கொட்டியருள் சப்பாணியே
குடியடிமை புதுவையரை சுடையபெரு நாயகி
கொட்டியருள் சப்பாணியே. 8
---------------------------
46. புகலியம் பதியினிற் பானினைந் தழுதவொரு
புண்ணியச் செல்வனுக்குப்
போத பரிபூரண நலங்கனிந் தொழுகவே
பொன்னினாம் வள்ளத்திலே
மிகவிழைந் தறுமுகனு முண்ணா முலைப்பயம்
வேட்டளவு தந்தருளியே
வேதநெறி சைவநெறி யோங்கவருள் புரிகின்ற
விமலையே யிமயவல்லீ
தகவுகண் டடியர்நினை பேறெலாம் பொழிகின்ற
தண்ணளிகொள் கட்கடையினாய்
சமயங்கள் தொடர்கின்ற முடிவின்க ணிறைகின்ற
சாசுவத வானந்தமே
குகமதலை மழலைகேட் டுருகுசிறு செவியினாய்
கொட்டியருள் சப்பாணியே
குடியடிமை புதுவையரை சடையபெரு நாயகி
கொட்டியருள் சப்பாணியே. 9
----------------------------
வேறு.
47. இணருறு பூவால் வளமுறு காவே
எட்டுவ கொப்பானே
இமையவர் நாடே யெனவரு சீர்சால்
இக்கொடு நற்சாலி
மணமுற நேரே வளர்புது நாடே
வைத்தருள் மெய்த்தாயே
மதிமலி நாவால் நிலமகிழ் துயோர்
மட்டு மலர்க்கோவை
பணமலி தோளீ நினதருள் நாடா
பற்றொடு மிட்டாரே
பவுரிகொள் தாளான் இடமுறு தேவீ
பச்சிள மைப்பேடே
குணநிறை ஏலோர் உளமலர் சோதீ
கொட்டுக சப்பாணி
குளிர் தமிழ் நாடீ புதுவையர் வாழ்வே
கொட்டுக சப்பாணி. 10
----------------------------------
5. முத்தப்பருவம்.
48. அடலவுணர் குலமழிய வயிலினொடு மயிலிவரும்
அணிகெழுமு குமரமதலை
அருமறையி னினியபொருள் தெளிவுபெற மொழிமழலை
அருளினொடு செவியினடையா
படவரலர் அறுவர்தரு பயமொழுகு முகமலரில்
மகிழ்வினொடு முத்தமருள்வாய்
மதியணியு முடியுடைய பரசிவமு மனமுருக
மடியில்வரு கரியின்முகவன்
மடையொழுகு கரமுமுக மலருநிறை சுவடுபட
வாய்நிறைய முத்தமருளும்
மதிநுதலி யிமயவரை யரசுமவன் மனைமகளும்
வரநினைய வருகுழவியே
கடவுளர்கள் தலைமைநிலை நிலைமைபெற வருள்செல்வி
கனிவாயின் முத்தமருளே
கனிதமிழி னரசுபணி பெரியநா யகியம்மை
கனிவாயின் முத்தமருளே. 1
----------------------------------------
49. வெஞ்செயல்கொ ளவுணகுல மாண்டொழிய வமரகுலம்
வீடாது வாழ்வுபெருக
வேதமொழி யன்னமென வோதுதிரு மால்விபுத
வேந்தெனொடு பாற்கடலையே
மஞ்சுபடி மந்தரமும் வாசுகியும் முறைமையினில்
மத்துகடை கயிறாகவே
வானவரும் வஞ்சமிகு தானவரு மவ்வுழி
மதித்திடலு மேலெழும்பி
நஞ்சுவர வதுகண்டு மதனவினை கைவிட்டு
நாற்புறமு மவரோடவே
நாயகத் தெய்வத்தை நஞ்சமுண் ணச்செய்து
நன்முத்த மீந்தருளுவாய்
கஞ்சமலர் வஞ்சியர்கள் அஞ்சலிசெய் பதவல்லி
கனிவாயின் முத்தமருளே
கனிதமிழி னரசுபணி பெரியநா யகியம்மை
கனிவாயின் முத்தமருளே. 2
--------------------------------
50. செம்மைச் செறிவு கருமையொடு
சிறந்த வெண்மை யிவைகளால்
திருமா மகளேபர சிவையே
திசைமா முகனார் தலைவியென
மும்மைக் குணங்கள் புரிந்ததவம்
முறையே விளங்க வெளிவருவாய்
முறையா லொருமைத் தலைமையினால்
முழுமெய் யுருவும் பூண்டுளையே
அம்மைக் கிணையா முறவுளதோ
அகில வுலகு மன்னையென
அருளால் உரிய பணிபூண்ட
அனையே கயிலை யிறையருளும்
மும்மைத் தமிழி னுரிமைகொளு
முதல்வீ தருக முத்தமே
முழங்கு மறைதேர் கோகன்ன
முதல்வி தருக முத்தமே. 3
--------------------------------------
51. கனியு முளத்தாற் சிவக்குறிக்குக்
காதாற் புனலாட் டுதல்புரிந்து
கருணை பொழியு மதனருகே
காவல் புரிந்து பணிபூண்ட
இனிய குணத்துக் கபிலைசெயும்
எழிலார் வழிபா டேற்றருளி
இறைமை சான்ற பதமதனுக்
கியைபா லருளுங் கோகனத்தான்
தனிமை தவிர்க்க வருமிறைவி
தமிழைப் புரக்கும் புதுவையிறை
தலைமீ தொளிரு முடியெனவே
சரண மலரை யளித்துவப்பாய்
முனிவர் வழிபா டுவந்தருளும்
முதல்வீ தருக முத்தமே
முழங்கு மறைதேர் கோகன்ன
முதல்வீ தருக முத்தமே. 4
------------------------------------
52. சங்கரப் பெயருடைய மங்களப் பொருளினொடு
சண்முகச் செல்வமுடனே
சஞ்சலத் துயரகல வன்பரைப் பரிவினொடு
தஞ்சம்வைத் தருள்தலைவியே
பொங்கலைத் ததிபயமொ டன்றுவிட் புலவரசு
பொங்குவெஞ் சினமடையவே
பொங்கருற் றிடுகிரியின்முன் புறீஇச் சிறுவயிறு
பொங்கவைத் தருள்கரியமால்
தங்கையிர் பிறவிபெறு வஞ்சியிற் சிறியவிடை
தண்ணமுத மொத்தமொழியாய்
தண்டையிற் பொலிவுதரு மென்கழற் றிருமலர்கள்
தண்டமிழ்க் கருளுமிறைவீ
சிங்கநற் பரியிவரு மங்களத் தலைவியுமை
செம்பவள முத்தமருளே
செந்தமிழ்க் குரிமையினர் தொண்டையர்த மிறைவியே
செம்பவள முத்தமருளே. 5
--------------------------------------
53. விண்படரு கமுகின்வரு முத்தத்தை விழைகிலேம்
வேழத்தின் முத்தம் விழையேம்
வெண்சங்க மீன்றகலு முத்தத்தை நாடிடேம்
மீனுதவு முத்தம் வேண்டேம்
பண்பயிறு மங்கையர்கள் மென்களத் தெளிதின்வரு
பண்புடைய முத்தம் நினையேம்
பழுத்தகுலை தாங்குபெரு வாழையின் முத்தமும்
பைஞ்சாலி முத்து மணுகேம்
அண்டர்புல நின்றதிரு கின்றமுகில் முத்தமும்
அடியரேம் தேடல் துணியேம்
அவையெலாம் பவளத்தின் விளைவவோ வுலகத்தை
யாட்கொள்ள வலியுள்ளவோ
திண்கரும பந்தமற வன்பருள நின்றசிவை
செம்பவள முத்தமருளே
செந்தமிழ்க் குரிமையினர் தொண்டையர்த மிறைவியே
செம்பவள முத்தமருளே. 6
---------------------------------------
54. தழுவு மிறைவர் குழைய மகிழு
சகளை தருக முத்தமே
தவனின் முதிரு முனிவர் கருது
சதுரை தருக முத்தமே
இழுமென் மொழியின் மழலை மொழியும்
இறைவி தருக முத்தமே
இமய வரையன் மகிழ வளரும்
இனியை தருக முத்தமே
கொழுமை செழுமை தழுவு புதுவை
குமரி தருக முத்தமே
குடியொடடிமை யரசை யுடைய
குமரி தருக முத்தமே
முழுமெய் அருளின் உருவமுடைய
முதல்வி தருக முத்தமே
முதிய தமிழின் உரிமை மருவு
முதல்வி தருக முத்தமே. 7
----------------------------------
55. நிறையு முரக பணிகள் புனையும்
நிமலை தருக முத்தமே
நினையு மடியர் நினைவ தருளும்
நிமலை தருக முத்தமே
அறையு மறைகள் அறிய வரிய
அமலை தருக முத்தமே
அமுது பருகு மமரர் பணியும்
அமலை தருக முத்தமே
தறையும் விபுத ருலகு மறிவில்
தலைவி தருக முத்தமே
முறைமை தழுவு புதுவை யரயர்
முதல்வி தருக முத்தமே
முதிய தமிழின் உரிமை மருவு
முதல்வி தருக முத்தமே. 8
--------------------------------------
56. விதுவினை முடிமிசை யணிபவ னிமையவர்
மெய்ப்படு தத்துவமே
வெளியுற வறிவது கருதிய திருவுளம்
விச்சையி னுற்றுணரா
மதுமலர் புனைமுடி மகபதி முனமொரு
வட்டம தித்திருமா
வதனமு மிரணிய பணியணி யுருவமும்
வைத்துவ குத்தனையே
கதுமென மறைவுறு பொருளது சிவமெனும்
கட்டுரை யிட்டருளால்
கடவுளர் பெறுபுகழ் அருள்பவ னவனெனல்
கற்ப விரித்தனையே
முதுதமிழ் இயலிசை பயில்பவர் தவபலன்
முத்த மளித்தருளே
முழுமுதல் இடமமர் புதுவையர் குலநிதி
முத்த மளித்தருளே. 9
--------------------------------
57. மறைகளு மிதுவிலை யிதுவிலை யெனமொழி
வைப்பெனு மெய்ப்பொருளாம்
மதியணி சடைமுடி யிறையவ னிடம்வரு
வச்சையில் தத்துவமே
இறைமையு முறைமையு மெழுமையு நினகழல்
இச்சைகொள் சித்தமுமே
எளிதினின் வருமென நினைபவ ருளரெனில்
எப்படி யொப்பிடலாம்
கறைவரு மலரணி தளியென வுடையவர்
கற்றிரு வுற்றிடவே
நலமுற விழியருள் பொழிசிவை கருணையின்
நத்தம் வளர்த்தருள்வாய்
முறைபுகல் மறைமுடி நடமிடு கழலினை
முத்த மளித்தருளே
முழுமுத லிடமமர் புதுவையர் குலநிதி
முத்த மளித்தருளே. 10
---------------------------------
6. வாரானைப் பருவம்.
58. துறப்பினெறி யுலகுக்கு நன்குதெரி விக்கவரு
துயமா தவகுரவராம்
சொற்செல்வ மாண்டசங் கரமுனிவர் மனமுறத்
தொழுததிரி புரசுந்தரி
சிறப்பெனுஞ் சொல்லினாற் புலவர்புகல் வீட்டுநெறி
செல்வமென வடியருக்கே
திருமிகுங் கருணையா லருள்கின்ற தேவியே
சிகரவிம கிரியின்மகளே
உறப்பெறும் பேறுதனை யுணர்வதற் கறிவிலா
துழலுவே முள்ளமலரில்
உலவிநட மிடுகின்ற சோதியுரு வாகியே
உள்ளிய வெலாமுமருளிப்
பிறப்பையும் இறப்பையும் போக்கவருள் விழிநல்கு
பெரியநா யகிவருகவே
பிறைமுடிக் கோகன்ன நாதனை மணம்புணர்
பெரியநா யகிவருகவே. 1
--------------------------------------
59. பொன்னையருள் பூமியருள் மாணிக்கம் வயிரமொடு
புருடராகமு மருளவாய்
புந்தியைப் பேரின்ப மெய்தச்செய் மழலைதரு
புத்திரப் பேறருளுவாய்
அன்னையே யெனநின்று வேண்டுபவர் பலருளார்
ஆயினும் தேவதேவி
அருள்வெள்ள மாகுநின் றிறமறிந் தவரவர்க்
காவனவும் நன்குணர்ந்தே
நின்னையே தந்தருள்க நின்னடியர் பேறென்னு
நினைவினால் நின்றுபணிவார்
நீணிலந் தனிலுள்ள பலகோடி மக்களுள்
நிமலையே யெத்துணையரோ
பின்னையொடு சொற்சொல்லி முடிதாழு மிணையடிகொள்
பெரியநாயகி வருகவே
பிறைமுடிக் கோகன்ன நாதனை மணம்புணர்
பெரிய நாயகி வருகவே. 2
---------------------------------------
வேறு
60. துதியைப் புரியு மடியர்மனச்
சோதீ வருக இயலிசையாற்
சுவைசேர் தமிழைப் புரந்தருளும்
துணையே வருக வழிவிலதாம்
நிதியைப் பொழியும் விழியிணைகொள்
நிமலே வருக நிறைமனத்தில்
நிறைவாய் விளங்கும் பரமசுக
நிலமே வருக நினைந்தவர்க்குக்
கதியைத் தருவான் விடையூர்தி
கண்ணே வருக விமயம்வளர்
கரிணீ வருக கரையிறந்த
கங்கே வருக கலைநிறையும்
மதிபைப் புறங்கொள் வதனவல்லி
வருக பெரிய நாயகியே
வளமைத் தமிழ ரரசுபெறு
வாழ்வே வருக வருகவே. 3
----------------------------
61. அள்ளற் பழன நிறைபுதுவை
யரசீ வருக வமரரெலாம்
அல்லும் பகலும் மலர்சொரியும்
அடியாய் வருக அடியவர்கள்
உள்ளத்தகளி யொளிவிளக்காம்
உருவே வருக வுருவமிலா
ஒன்றே வருக வருவருவம்
உடைய பெருமான் துணைவருக
கள்ளக் கசடு நினையவுணர்
கருத்தைக் கெடுப்பாய் வருகவெமைக்
காக்கும் பொறுப்பே தனதெனக்கொள்
கடவுள் திருக்கோ கனமுடைய
வள்ளற்பெருமான் உளம்புகுந்தாய்
வருக பெரிய நாயகியே
வளமைத் தமிழ ரரசுபெறு
வாழ்வே வருக வருகவே. 4
----------------------------
வேறு
62. அமரி வெளிய வுருவ முடைய
அமலை வருக வருகவே
அமரர் மனமும் மனித ருளமும்
அலரும் உருவம் வருகவே
சமரி சருவ சிவனை மருவு
தருணி வருக வருகவே
சரமு மசர மயமும் நிலவு
சலச வதனை வருகவே
பமரி முரலு குழலி புதியை
பழையை வருக வருகவே
பரம னடன முறைமை யுணரு
பரிசை வருக வருகவே
குமரி கவுரி யிமய சயில
குழவி வருக வருகவே
குலவு தமிழி னுரிமை தழுவு
குடியி னிறைவி வருகவே. 5
-------------------
63. மறையில் மறையு முருவ முடைய
மலரின் வதனை வருகவே
மகன்மை கரியு முருகு மமைய
வளரு மரசி வருகவே
சிறையில் நெடிய பகலு மினைதல்
சிதைய வருள்வை வருகவே
சிகர விமய வரையின் வளரு
சிறிய குழவி வருகவே
துறையின் மலியு மரிய பனுவல்
துருவ வெளியை வருகவே
சுரர்கள் பிரமம் அறிய வருள்செய்
சுவணை வருக வருகவே
குறைவில் தவமு நெறியு முடைய
குகையின் நிலவு வருகவே
குலவுதமிழி னுரிமை தழுவு
குடியி னிறைவி வருகவே. 6
---------------------------
64. உலக வுயிர்கள் நினையு முருவ
முடைய பெரியை வருகவே
உயிரு முளமு முரிமை தழுவும்
உமையின் வருக வருகவே
கலக மிடுவ பொறிகள் ஒருமை
கதுவ வருள்வை வருகவே
கடவுள் உடலில் மருவு பசிய
கருணை யமலை வருகவே
விலக வரிய செயல்க ளுடைய
விமலை வருக வருகவே
விபுதர் தலைவி புதுவை யரசு
விழையு மொளியை வருகவே
மலரின் மகளிர் பணியு முருவை
வருக வருக வருகவே.
மகிமை நிறையு மரபினிறைவி
வருக வருக வருகவே. 7
---------------------------
65. இளமை யெழில்கொள் முருக மதலை
இனிமை யறிவை வருகவே
இமைகள் அசைவில் அமரர் பணியும்
இறைவி வருக வருகவே
பளகில் மறைகள் பரச வரிய
பழைய தலைவி வருகவே
பரம பிரம நிலைமை யுணரு
பரமை வருக வருகவே
குளனில் நிறைவு களனில் மலிவு
குலவு செயலை வருகவே
குசலம் வினவி படியர் நினைவு
குளிர வருவை வருகவே
வளமை தழுவு புதுவை யரசு
மனனி னிறைவு வருகவே
மகிமை நிறையு மரபி னிறைவி
வருக வருக வருகவே. 8
----------------------------------
வேறு
66. எதியிற் பெரியா னருந்தவத்தை
இருநீ ருலக மறிந்துய்ய
இளமைப் பருவத் தனிமை கொளும்
இறைவீ வருக புலவர்புகல்
துதியிற் புகுந்து கணிப்பரிய
சோதி யுருவாய் விளங்கிநின்ற
சொல்லி னெல்லை கடந்தபெருந்
துணையே வருக குறைவணுகா
நிதியிற் செலுத்து கருத்துடையார்
நினையே யதுவா நிறைவறிந்து
நிலையாம் பெரும்பே றடையவருள்
நிமலே வருக நுண்ணுணர்வின்
மதியிற் பெரியார் மனநினைந்து
வணங்கும் தலைவி வருகவே
வளர்கோ கன்ன மலையில்வரு
மயிலே வருக வருகவே. 9
-------------------------------
67. கல்லா லமர்ந்து நால்வருக்குக்
கருதற் கரிய பொருள்மவுனக்
கற்பால் விளக்கும் பரம்பொருளின்
கருணை யுருவே வருகதமிழ்ச்
சொல்லா லடியே முரையிறந்த
தூய்மைப் பொருளா நினைந்துருகித்
துயர்நீங் குதலுக் கருள்பொழியும்
துரிய நிறைவே வருகவெமைப்
பொல்லா வினைகள் தொடராது
புரைதீர் ஞான விளக்கருளிப்
பொங்கும யக்கவிருள் போக்கிப்
புரப்பாய் வருக ஞானதவம்
வல்லார் புகழும் தமிழரிறை
மனத்தே மலர்ந்தாய் வருகவே
வளர்கோ கன்ன மலையில்வரு
மயிலே வருக வருகவே. 10
-----------------------------
அம்புலிப் பருவம்.
68. கடல்பொங்க விரிகின்ற கதிர்களுளை யாதலாற்
காசினியும் விண்ணுமகிழக்
கரையற்ற தண்ணொளியை யன்பொழுக வீசிவரு
கடமைபூண் டுளையாதலால்
மிடல்பொங்கு மவுணரினம் வீழ்ந்தொழிய வமரகணம்
வெற்றிபெற வமுதமுதவும்
வினைபுரிதி யாதலால் நினையுமெம் பெருமாட்டி
மேதகைமை யுளதன்னொடும்
நடநன்கு பயிலாடல் புரியவுரி யவனென்று
நல்லுளங் கொண்டழைத்தாள்
ஞாலமுள பிறரெய்த லரியவிப் பேறுநினை
நணுகுவது நின்றவங்காண்
அடல்கொண்ட சிங்கவா கனிபெரிய நாயகியொ
டம்புலீ யாடவாவே
அரவிந்த வல்லிபணி கலியாண வல்லியொடு
மம்புலீ யாடவாவே. 1
------------------------------------
69. அஞ்சலித் துளமுருகு மன்பர்நிறை வாழ்வுபெற
வருளுமொரு தலைவனருளால்
அரவினொடு விளையாடி யிதழிமண மலிகின்ற
வணிசடைக்காட்டி னொளிர்வாய்
செஞ்சவித் திருவுடல மொருபாதி நிறமாறு
செயல்புரிந் தரசுபூணும்
தேவியுல கன்னைதன தருகுவரு தகுதியுள
சிறுவனென நினைநினைதலால்
மஞ்சிடைத் தவழ்குழவி யாதலால் மலைமுடியில்
மகிழ்வின்வரு திறமுடைமையால்
மலர்க்கர மசைத்துனை மதித்தரு கழைத்தனள்
மலைக்கொரு குலக்கொழுந்து
அஞ்செழுத் துருவன்மகிழ் வஞ்சியர்க் கிறைவியொடு
மம்புலீ யாடவாவே
அரவிந்த வல்லிபணி கலியாண வல்லியொடு
மம்புலீ யாடவாவே. 2
---------------------------------
70. மகபதியு மங்கியம் பகவனும் வாயுவும்
வந்தெதிரி னின்றவுருவின்
வகைமையறி யாதுள மயங்குகா லையிலவர்முன்
வந்தருளி யெங்குநிறையும்
பகவனரு ளறிகிலீர் போர்வென்ற பின்பவன்
பண்பினை மறந்துநின்றீர்
பாருநீ ரெனவுண்மை நன்றே விளக்கியருள்
பரமகுரு வாகிநின்றான்
தகவுடைய பிறர்பல ரிருக்கவே நினையென்னை
தண்ணளியி னாலழைத்தாள்
சாத்திரத் தெல்லைகளை மீறியுயர் கோத்திரத்
தனயைகோ கன்னமுடையாள்
அகமகிழ முனிவர்புகழ் வகுளவன வல்லியொடு
மம்புலீ யாடவாவே
அரவிந்த வல்லிபணி கலியாண வல்லியொடு
மம்புலீ யாடவாவே. 3
---------------------------------
71. விண்டனிற் சிலகால முழுவுருவ முடையையாய்
வெள்ளிய நிலாப்பொழிதியே
விதியினாற் சிலநாள்கள் தேய்ந்துமாய்ந் தழிதியே
மேகங்கள் குழுமிவருமேல்
மண்டலத் துயிர்கள்விழி காணாத வாறுருவ
மறையுமொரு சிறுமையுளையே
வளர்விலாத் தேய்விலாக் கட்டிளமை யெழிலுருவின்
வல்லியிவள் கழல்கள்துணையால்
என்டவத் தலைவர்களு மெண்ணரிய பெருவாழ்வி
னெய்தலெளி தாமுணர்தியே
இன்னருளி னானின்னை யொருபொருட் டாயெண்ணி
யீங்குவரு கெனவழைத்தாள்
அண்டருக் கரியள்சிவ தொண்டருக் கெளியளொடும்
அம்புலீ யாடவாவே
அரியநான் மறைபரவு பெரியநா யகியினுட
னம்புலி யாடவாவே. 4
--------------------------
72. உரைசெலா வுயர்நிலையி னியல்பினமை யொளிதிகழு
முருவமுள பெரியளிவள்காண்
உததிநீர் பருகிவரு கரியகார் வரின்மறையும்
ஒருபரிதி யுதவுமொளியால்
தரையினோர் மனமருள விண்ணின்வரு சிறுமையுளை
தண்ணிலவு பொழியுமதியே
தாரகா கணமிடையில் வருகிநீ யரமகளிர்
தரையின்மகள் மலரின்மகளும்
வரையிலா வருள்கருதி வழிபாடு புரியவே
வருகருணை வல்லியிவளே
வாழ்வெலாந் தரவல்ல தேவிநினை யருளினால்
வருகவென் றாள்தொண்டைமான்
அரசுதாள் பணியவருள் உரிமைபூ ணிறைவியொடு
மம்புலீ யாடவாவே
அரியநான் மறைபரவு பெரியநா யகியினொடு
மம்புலீ யாடவாவே. 5
--------
73. குறைகள்பல வுடையநின திழிதகவு முலகுடைய
கோமாட்டி தகவுமறிவாய்
குளிரமுத கிரணமுள பெருமிதமுளங் கொண்டு
கொடைமல்கு தாண்மலரிலே
நிறைவுபெறு முள்ளமொடு பணிவது துணிந்தடைதி
நிகிலவுல கங்கள்காணும்
நிலவுதரு மேனியினள் அமுதமழை பொழிதரூஉம்
நிலையின்ப விழிகளுடையாள்
நறைகமழு மலர்கள்பல வாயிர மெடுத்தறிவர்
நாளும்வழி பட்டொழுகவே
நல்வாழ்வு நல்குதாட் டாமரையள் வாவென்று
நற்கர மசைத்தழைத்தாள்
அறைமுரசொ டரசுபுரி தொண்டையர்த மிறைவியொடு
மம்புலீ யாடவாவே
அரியநான் மறைபரவு பெரியநா யகியினொடு
மம்புலீ யாடவாவே. 6
----------------------
74. தன்பெருமை தானறிகி லாதவொரு தன்மையாள்
தண்கழ லடைந்தவளவே
தலைவனார் வெஞ்சினத் தாளாகி நிற்பினும்
தளிர்க்கரத் தபயமருள்வாள்
முன்புநின் மனைவியர்ப் பெற்றவொரு முனிமுனிவின்
மூவுலகு ளோருமிகழ
முளைத்தெழுந் தனைவாட்டு கயநோயின் வருதுயர்
மொழிந்தடிமை யெனவுய்யலாம்
மன்பதையர் பலபிறப் படைகொடிய வினைகளையு
மங்களத் தீர்த்தமுடையாள்
வகுளவனம் வாழவரு பெருமாட்டி நின்னையிவண்
வருகென்று நாவசைத்தாள்
மன்பரவு தொண்டையர்கள் குடிதாங்கி யொடுமாட
வருகவம் புலிவருகவே
மணமலியு மழகியொடு குணநிறைய விளையாட
வருகவம் புலிவருகவே. 7
------------------------
75. தகுநெறியி லரியதவ முயல்பெரிய கபிலமுனி
தனதுகுறை சொற்றவளவே
தருதும்வர மெனவருளு கலியாண வல்லியிரு
சரணமடை பேறுபெறுவாய்
புகுவதெளி தெனவெண்ணி நின்றனை யெனிற்கடிய
புன்கணடை சிறுமை யுறுவாய்
புலமைநல மரியதவ மொன்றிலாச் சிறியைநீ
போதபூ ரணைதிருமுனே
மிகுபெருமை யுடையபல தேவர்களு முனிவர்களும்
வீழ்ந்துபணி காட்சிகாணாய்
விரைவில்வரு கெனநின்னை விமலையருள் கூரவே
மேதகைமை யெய்திநின்றாய்
வகுளவன முறையிறைவி மனமகிழ விளையாட
வருகவம் புலிவருகவே
மணமலியு மழகியொடு குணநிறைய விளையாட
வருசவம் புலிவருகவே. 8
----------------
வேறு
76. உருவா யுள்ளத் தருவா யருளால்
ஒளிமய மாய்வருவாள்
ஒழியா மெய்ம்மைப் பெருவாழ் வருளற்
குரியாள் மறையறியாள்
மருவார் மும்மைப் புரமே பொடியா
வருமா நகையுடையாள்
மதியே நின்னைச் சரணா கதியால்
மகிழ்வா னருள்விழைவாள்
கருவா யெய்தப் பெறுவாழ் வறவே
கடிதே வினைகடிவாள்
கமையார் வள்ளற் பெருமா னிடம்வாழ்
கருணா வல்லியிவள்
வருவா யென்னப் பெறுவது மெளிதோ
வாவம் புலிவாவே
வளர்கோ கன்னத் திறைவியி னருகே
வாவம் புலிவாவே. 9
--------------------------------
77. அருளே பொலியப் பெறுமுரு வுடையெம்
மனைசெயல் சிறிதறியாய்
அளவே யறியப் பெறலரி தெனவரு
மாழியி னிடைவருவாள்
இருளே மலியத் திரிவது புரியுநின்
இழிவை மறந்தனையோ
எமையா ளிறைவி விழிக்கடை செம்மை
யியைந்த தெனப்பெறினே
பொருளே யுடையன வலகின பதவிகள்
போகு மிமைப்பொழுதே
புரிவது தெளிதி யெனப்பெறின் விரைவொடு
போந்திவள் பதமலரில்
மருளே தவிர்வுறு சேவை புரிந்திட
வாவம் புலிவாவே
வளர்கோ கன்னத் திறைவியி னருகே
வாவம் புலிவாவே. 10
-----------------------------
8. அம்மானைப் பருவம்.
78. தமராகு முரிமையினை மேனைக்கு முன்னமொரு
தக்கன் மனை விக்குமருள்வாய்
சங்கரச் செல்வத்தை யெய்தவரு செல்வியே
சதுமுகன் றேவியுடனே
அமராவ தித்தலைவ னிளவலென வருகண்ணன்
அன்புடைத் தேவிவந்தாள்
அழகுகுடி கொண்ட பரைபொன்னினால் முத்தினால்
அணிவயிர மரகதத்தால்
குமரேச னின்னிளஞ் செல்வனிற மொக்குமக்
குறைவிலாச் செம்மணியினால்
கோமேத கத்தினால் அம்மனைகள் அவ்விருவர்
கொண்டுவந் தார்கள்அன்னே
அமரேசர் பணியவரு பெரியநா யகியம்மை
அம்மானை யாடியருளே
அழியாத வழகுடைய கலியாண சுந்தரீ
அம்மானை யாடியருளே. 1
-------------------------------------
79. முடியா லிறைஞ்சிநின் விழிநோக்க மெய்தவே
மொய்த்து ளாரரமக ளிர்தாம்
முப்பத்து முக்கோடி தேவருங் குழுமியின்
முகமதி யகாந்தி முன்னே
விடியாத மாயையிருள் விடியுமென வெண்ணியே
வேண்டுதல் புரிந்து நின்றார்
மெல்லியலர் தோழியர்கள் முன்வந்து கனகமணி
மிளிருமம் மனைகள் தந்தார்
நெடியோனை யண்ணனென் றுரிமையினினு டையபெண்
ணேயமொ டுகைசிவப்ப
நிழல்பாவ வெழிலாக வெவர்மனமு மகிழவே
நெறியறிந் துரியமு றையால்
அடியார்கள் குறைதவிர வருள்பெரிய நாயகி
அம்மானை யாடி யருளே
அழியாத வழகுடைய கலியாண சுந்தரீ
அம்மானை யாடி யருளே. 2
-----------------------------
80. முமலமென் றடியவரை யணுகமுயல் பகையினைய
மோதிய டியோடொ ழிக்கும்
முறைமையுள தெய்வமே நவமணி குயிற்றிய
முழுப்பொன் னினாத னத்தே
கமலவல் லியரிருவர் தம்மெதி ரமர்ந்துமுக
கயிரவத் தொளியும் விழியாம்
கயலொளியும் முத்தம்வெல் பல்லொளியு மிரணியக்
காந்தியும் விழுந்தொ ளிரவே
விமலவங் கையினெடுத் தம்மனைகள் பேறுபெற
விண்ணு மண்ணும் களிக்க
வெள்ளிமலை வள்ளறிரு வுள்ளமகிழ் கொள்ளவே
வினயவ டியார் மகிழவே
அமலகோ கனநாத னிடம்வாழும் நாயகி
அம்மானை யாடி யருளே
அழியாத வழகுடைய கலியாண சுந்தரீ
அம்மானை யாடி யருளே. 3
------------------------------
81. சிகரமே பொன்னமையு மிமயவரை வளருமொரு
செல்வமே மேருவில்லான்
தேவியே யெண்ணில்பல கோடியுல கங்கள்வரு
சிறுவயிற் றுப்பெண்மணி
மகரமே யெறிகின்ற கடலின்விளை முத்தமும்
மலையின்வரு மாணிக்கமும்
வள்ளற் பிராட்டிநின் கைம்மலரில் நின்றொளிர
வாய்ந்ததவ மென்னைகொல்லோ
பகரவே யியலாத விணைவிழியி னொளிர்கிரண
பந்திபாய்ந் தவைசிறப்பப்
பாவையர்க ளுளமகிழு மம்மனையி னின்னருகு
பாய்ந்துவரு காட்சிகாணாய்
அகரமோ டுகரமே மகரமா மிறைவியே
அம்மானை யாடியருளே
அழியாத வழகுடைய கலியாண சுந்தரீ
அம்மானை யாடியருளே. 4
----------------------------
வேறு
82. பேறருள் தெய்வத நீயென நன்குணர்
பெட்புடை யன்பெரெலாம்
பெண்ணர ராகிய வன்னைநின் சேவடி
பேசுவர் பாடுவரே
மாறடை யவுணரு நின்னருள் வேல்கொடு
வர்தடைமைந் தன்முன்னே
வாய்திற வாதும டங்கிவி ழுந்தனர்
மற்றவை யென்சொலுவோம்
நீறணி நெற்றியை யரவணி கையினை
நின்மலை பொன்மயமாய்
நின்முக வெழில்முனர் நிற்கவும் வெள்குறும்
நிலைபெறு மும்மணியால்
ஆறணி வேணியர் காமுறு மம்பிகை
ஆடுக வம்மனையே
ஆரண மோதரு காரணி சங்கரி
ஆடுக வம்மனையே. 5
-----------------------
83. தேசுற முன்புரி மெய்த்தவ வாழ்வெனும்
செய்கை விளங்கிடவே
செம்மணி வெண்மணி பசுமணி யம்மனை
செவ்வியின் வந்துளவே
ஈசனை யோர்பகிர் நேசமு டன்கொளும்
எம்மனை மூவுலகும்
எய்தரு பேற்றினை யெய்துற வேலவன்
ஏறிய மயிலினொடும்
பேசற நன்கமை மழலைகள் நன்செலி
பெற்றனை யுண்மகிழ்வாய்
பின்னையு சாமக ளுந்தொழு மன்னையே
பிறைதொடு மாடநிறை
ஆசறு கோகன நாயகி சுந்தரி
ஆடுக வம்மனையே.
ஆரண மோதரு நாரணி சங்கரி
ஆடுக வம்மனையே. 6
----------------------
84. இன்புரு வாகிய சங்கரி கங்கையின்
இன்புனல் நன்செவியால்
எம்பெரு மான்முடி மீதபி டேகம்
இயற்றிய வெண்கபிலை
துன்புற முன்வரு வேங்கையு நின்னருள்
சொற்றறி துணையெனவே
தூயநன் மாதவர் ஓதவு ணர்ந்துள
சொற்பய னன்கறிவோம்
வன்புறு மம்மனை மென்கர நன்மலர்
வந்தன கன்றிடவே
வஞ்சமி லன்பர்த நெஞ்சக மாடிய
மரைமலர் வெல்கழலீ
அன்புடை யார்மன நின்றருள் பொன்கொடி
ஆடுக வம்மனையே
ஆரண மோதரு நாரணி சங்கரி
ஆடுக வம்மனையே. 7
-------------------------------
வேறு
85. இணையே யெதையு நினைக்கரிய
இறையா மொருவ னிடபமெனும்
ஏற்றுக் கொடியான் இதழிமலர்
ஏறுமுடி யான்திரு நீற்றான்
துணையே துணைவன் வாய்ப்பிறந்த
சொல்லாஞ் சுருதி யறிவரியாய்
தோன்றி மறையு முலகத்தோர்
துயர மறியா வாழ்வுபெறப்
பிணையே நிற்கும் பெருமாட்டீ
பிடித்த சிறிய வம்மனைகள்
பேற்றைப் பெறவே யமரருக்குப்
பீழை விளைத்த வவுணரினம்
கிணையே கறங்க மாய்த்தருளும்
கிளியா டுகபொன் னம்மனையே
கிரிவாழ் பெருமா னிடமமரும்
கிளியா டுகபொன் னம்மனையே. 8
-----------------------
86. தளவே புறங்காண் வெண்ணகையின்
சாயை படிய வெண்ணிறமாய்த்
தமையே நிகராம் விழியினொளி
சார வுடனே கருநிறமாய்
அளவே யறியா வுலகங்கள்
அனைத்து மாண்ட கைம்மலரில்
அடைவே புகலும் செந்நிறமாய்
அமைந்த மும்மைத் தோற்றமுறு
வளமேபெறுநல் லம்மனைகள்
மனமே மகிழ வெடுத்தருளி
வலிய வவுண மரபொடுங்க
வான வமர குலம்வளரக்
கிளர்வேற் படையா னுரைமகிழும்
கிளியா டுகபொன் னம்மனையே
கிரிவாழ் பெருமா னிடமமரும்
கிளியா டுகபொன் னம்மனையே. 9
---------------------------
87. அடையா மறைகள் கழன்மலரின்
அருமை யறிந்து புறநிற்ப
அருளால் மகிழும் அடியர்கணம்
அமய மறிந்தே யகம்புகுத
விடையான் இடத்தை உரிமையினால்
வேண்டும் பிராட்டி திருக்கோயில்
விமலச் செல்வ மதுபெறுதல்
விழைவார்க் குரிய பேறருளி
சடையால் விளங்கு புதுவையர்கோன்
நாட்டம னைத்து நல்கிநிற்பாய்
ஞான வுருவே ஞானியர்க்கும்
நாவின் செல்வம் படைத்தவர்க்கும்
கிடையா கெடுவாழ் வுடனருளும்
கிளியாடுகபொன் னம்மனையே
கிரிவாழ் பெருமா னிடமமரும்
கிளியாடுகபொன் னம்மனையே. 10
---------------------------
9. நீராடற் பருவம்.
88. விரிகின்ற வானவுல கெங்குநன் கோடியே
விண்ணவரை யின்பமூட்டி
வெள்ளிவரை யமர்கின்ற வள்ளல்சடை யாரணியம்
வீழ்ந்துபனி மலையின்வந்தே
இரிகின்ற திரிபதகை மந்தாகினிப் புனலொ
டினியசான வியுமாகி
எழில்பொங்கு காளிந்தி வாணியொ டிணங்கியே
யிருநிலத் தவர்களெல்லாம்
விரிகின்ற பாவமது கழலவே நாடிவரு
விமலபகி ரதிநதிக்கே
விரையவே சென்றுதன் கன்றினை நினைந்துமடி
மிக்கபால் பொழியமீளும்
கரியவுடல் தாங்குபுண் ணியவுருவ கபிலைதரு
கங்கைநீ ராடியருளே
கங்காளர் பங்கிலுறை மங்கையே கபிலைதரு
கங்கை நீராடியருளே. 1
-------------------------------
89. பரிதிகுலம் வருபுகழ்ச் சகரமன் னவன் முன்பு
பரிமக மியற்றுநினைவான்
பரிகினா றுயுதரா மதலையரை நிலம்வளை
பாய்பரிப் பின்போக்கவே
நிருதர்பகை யிந்திரன் கபிலமுனி யோகுபுரி
நீள்தவச் சாலையின்கண்
நெறியறிய வியலாது சாகரர் மயங்கவே
நினைந்துபரி யினைமறைக்க
அரசகுலம் வருமைந்தர் யாதலந் தேடியே
அரியமுனி சாபமேற்க
அவர்சாம்ப ராயநிலை கண்டுபின் மரபின்வரும்
அறிவனாம் பகிரதன்றான்
கரியுரிவை போர்த்தமுதல் அடிதொழுஉப் பரவவரு
கங்கைநீ ராடியருளே
கங்காளர் பங்கிலுறை மங்கையே கபிலைதரு
கங்கைநீ ராடியருளே. 2
-------------------------
90. பானினைந் தோடும் புனிற்றிளங் கன்றையும்
பாராது பகிரதிக்கே
பகலுற நடந்துசென் றரியபுனல் செவியிடைப்
பரிவினொ டெடுத்துவந்தே
கானநடு வீற்றிருந் தரியதவ முயல்முனிவர்
கபிலர்வழி பாடுவக்கும்
கண்ணுதற் பெருமானை யின்பநீ ராட்டவே
கருதரியபணி பூண்டதாம்
ஆனினது மெய்யன்பு சோதிக்க வேங்கையுரு
வண்ணலார் கொண்டெய்தவே
ஆவியைத் தருவதாய் வாக்களித் தான்மேனி
யாட்டிமீள் காலையதுதான்
கானிதழி யார்க்குதவ வாக்குசிறு சுனையின்வரு
கங்கைநீ ராடியருளே
கங்காளர் பங்கிலுறை மங்கையே கபிலைதரு
கங்கைநீ ராடியருளே. 3
---------------------
வேறு.
91. துதிபுகல் நாவினர் மனமுறை நாயகர்
சொல்லிய நான்மறையே
துருவியு மறிகல தாயொளிர் தாண்மலர்
குடிய சென்னியினார்
மதிதெளி சோதியை மதிமுக வாரியை
மகவெனும் வேல்வலவன்
வலிநிறை தீயரை யொருநொடி சாடுநல்
வளமுற வருளனையே
புதியதொ ருருவொடு பெருகிய திருநதி
புகுவது புதுவையினே
புலமையும் வளமையு முதவுவ ததனிடை
பொலிவுறு விழவுடையாய்
மதிதொடு கோகன வரையுறை நாயகி
வரநதி யாடுகவே
வகுள வனத்துறை சங்கரி கங்கையின்
வளநீ ராடுகவே. 4
------------------------
92. அறைகழ லடியினில் முயலக னெளிவுற
ஆடிய சங்கரனார்
அரையுட லுரிமையி னடைதரு நாயகி
அமுதுறழ் தமிழ்வளமே
நிறைதரு புதுவையி னரசர்கள் குடியினை
நிலையுற வாண்டருள்வாய்
நிகில சராசர மடைய வளர்ந்திட
நிலவுறும் வயிறுடையாய்
பொறைநெறி மேவிய கபிலரு மமரரும்
புவிமகள் திருமகளும்
புரைதவிர் வாழ்வுறு நினைவொடு பூசனை
புரிய வுவந்தருள்வாய்
மறைபுகழ் கோகன விறையவ னாயகி
வரநதி யாடுகவே!
வகுள வனத்துறை சங்கரி கங்கையின்
வளநீ ராடுகவே. 5
-------------------
வேறு
93. அமலக் கரியோன் மனைத்தலைமை
அமைந்த திருவு நிலமகளும்
அமுதத் திருநாட் டியல்மறந்தே
அவனி மகளிர் தமைநிகர்ப்ப
முமலக் குறையா லுளத்திலெழும்
முறைகே டுடைய பிணக்குறவே
முதல்வ னருள்பெற் றிதுவழியே
முடுகுபா வமொழி மினென
விமலத் தலைவ னருளவன்
விருப்பிற் கிணங்கி வகுளவனம்
விரைந்தே புகுந்து தவம்புரிந்தார்
விழுமம் தீர்ந்தா ரவராட்ட
விமலப் பிடியே நினக்குரிய
வெள்ளப் புனலினா டுகவே
விபுதர்க் கரியாய் வெள்ளாற்றின்
வெள்ளப் புனலினா டுகவே. 6
--------------------------
94. அயன் வேதங்கள் பயின்றோதி
அருளை நாடி யடைந்துள்ளான்
அரிய தவம்பூண் கபிலமுனி
அலரு மிலையு மெடுத்துவந்தார்
கயன்மீன் வென்ற விழியாட்டி
கடவுட் பெருமான் மனையாட்டி
கருணைத் தமிழர் கோமாட்டி
கலைகள் கடந்த பெருமாட்டி
செயன்மா ணமரர் மகளிரொடு
திருமா மகளும் கலைமகளும்
திகழும் புதுமைப் புனலாட்டிச்
சிறப்புச் செய்ய நிறைந்துள்ளார்
வியன்கோ கன்ன வரைமயிலே
வெள்ளா றிதன்க ணாடுகவே
விபுதர்க் கரியாய் வெள்ளாற்றின்
வெள்ளப் புனலின் ஆடுகவே. 7
---------------------------------
வேறு
95. மூதண்ட கோடிகளை யம்மனைகழங் கென்ன
முறைமுறையி னாடுபரையே
மும்மையாக் கிளர்கின்ற வொருமைப் பரம்பொரும்
முழுவுடல மரையாக்கினாய்
காதண்ட வோடுவிழி பொழிகருணை மழையினால்
காசினியும் வானவுலகும்
காத்தருள நின்றபெரு நாயகி புலிதொடரு
கபிலைதரு கங்கைநீரில்
கோதண்ட பாணியுர மேவுதிரு மங்கையொடு
கோகனகம் வாழுமறையோன்
குளிர்நாவி லுறைமங்கை சைவல நிகர்க்குமின்
கூந்தல்கோ தாட்டநின்றார்
வேதண்ட மேருகிரி யாள்கின்ற தேவிபுது
வெள்ள நீராடியருளே
விள்ளரிய கோகன்ன வள்ளலிடம் வாழுமுமை
வெள்ளநீ ராடியருளே. 8
-----------------------------
96. அரிபிரமர் தன்னொடு பொருந்தவே முக்கவடு
மாயொருமை காட்டுமொருவன்
அருமறைகள் தெளிவரிய திருவுருவ முடையபர
மானந்த தாண்டவத்தான்
கரியுரிவை புலியுரிவை மான்மழுவொ டரவமணி
கங்காள னாயபரமன்
கண்ணிணை புதைத்துலக முககால மிருளவே
காசினியின் வந்துமுனைனாள்
அரியசெய லெனவறிஞர் புகலுமுப் பத்திரண்
டறங்களை வளர்த்தசெல்வீ
அமலனொடு தைத்திங்கள் அமுத நீ ராட்டமுறல்
அடியர்தவ வாழ்வுகண்டாய்
விரிபுவன கோடிகளை யுரிமையி னளித்தபரை
வெள்ளநீ ராடியருளே
விள்ளரிய கோகன்ன வள்ளலிடம் வாழுமுமை
வெள்ளநீ ராடியருளே. 9
----------------------
97. வள்ளலர்கள் கைபொழியும் நிதிபோல மழைதந்து
வண்டமிழ்ப் புதுவை நாட்டை
வண்மைகெறி தண்மைநல முண்மையொடு திண்மைவளம்
வாய்ப்பவர சாண்டதலைவீ
உள்ளமுற வழிபடூஉ மடியவர்கள் வேண்டும்வாழ்
வுவப்புட னளிக்குமுமையே
உயிரெலாம் வளரும்வட விலைவயிற் றாய்மக்கள்
ஒருகோடி வந்துநின்றார்
தள்ளரியபுது நுரையொ டுன்கருணை போலவே
தான்பெருகு வெள்ளாற்றினில்
சாந்தநெறி கண்டதவ முனிவர்மன மகிழவே
தைப்பூச நன்னாளிலே
வெள்ளியு மெழுந்தளது ஞாயிறு பிறக்குமுனம்
வெள்ளநீ ராடியருளே
விள்ளரிய கோகன்ன வள்ளலிடம் வாழுமுமை
வெள்ளநீ ராடியருளே. 10
----------------------------------
பொன்னூசற் பருவம்
98. விண்ணவரு மரமகளிர் தம்மினமு நின்னருளை
வேண்டியெதிர் வந்துநிற்பார்
விஞ்சைய ரியக்கர் கின்னரர்கள் கிம்புருடரொடு
மிக்கசா ரணரும் வந்தார்
மண்ணவரு மினியதமிழ் மன்னரொடு பலகோடி
வந்துநின் றார்களன்னே
வள்ளலருண் மிக்கசிவ னுள்ளமுணர் செல்வியே
மாணிக்கம் வயிரமுத்தம்
எண்ணரிய விலையுரிய மரகதமொ டரியமணி
ஏற்றவகை நாற்றிவிட்டே
எழில்வளரு காவல்வகு பொன்னா னியன்றிலகும்
இணையற்ற வூசலின்கண்
புண்னியர்கள் கண்ணவருள் பெரியநா யகியம்மை
பொன்னூச லாடியருளே
பொன்னசல வில்லிகோ கன்னனிட முறைவல்லி
பொன்னூச லாடியருளே. 1
----------------------------------
99. மன்றினிடை யைந்தொழிலு நன்கொளிர நட்டமிடும்
வள்ளற்கு வாய்த்தபெண்ணே
மறைகள்தெளி வரியவுரு அடையசிவை யெனமுனிவர்
மனமுற வறிந்தவிறைவீ
குன்றினிடை விளையாடு குமரனெனு மதலையைக்
கொஞ்சிமகிழ் தம்பிராட்டீ
குளிர்வகுள வனமதனில் வளருமெழில் கெழுமுசிறு
கோயிலிடை வந்ததாயே
சன்றமையு நவமணிகொள் மண்டபத் திடைநின்று
காமகளும் மலரின்மகளும்
நவிலரிய கற்புடை யருந்ததி புலோமசையும்
நாற்புறமும் நின்றாட்டவே
புன்றலைய புல்வாயை வென்றவிணை விழியன்னை
பொன்னூச லாடியருளே
பொன்னசல வில்லிகோ கன்னனிட முறைவல்லி
பொன்னூச லாடியருளே. 2
----------------
100. மங்களநல் வாழ்வருள வந்தபுனல் கண்டருளி
மாமுனிவர் போற்றநின்றாய்
வாசநிறை மகிழமலர் நிலமெலாஞ் சிந்திமலி
வகுளவன வாலயத்தே
ஐங்கானு மறுமுகனு மன்பினுடன் விளையாட
ஆனிளங்கன் றும்வைத்தாய்
அண்டர்களு மடைவரிய தண்டமிழி னமுதத்தை
அடியருக்கருள் செய்துளாய்
தங்கமய மேருகிரி வந்தது நிகர்க்குமொரு
சாம்புநத மண்டபத்தே
சத்தரிடி பத்தினியர் தொட்டசையு முசலிற்
சங்கரனொ டன்புகுலவிப்
பொங்கிவளர் தொண்டையர்த மரபடிமை பூண்டசிவை
பொன்னூச லாடியருளே
பொன்னசல வில்லிகோ கன்னனிட முறைவல்லி
பொன்னூச லாடியருளே. 3
----------------------
101. முத்தர்பெறு தெய்விகச் செல்வமே யன்பொழுகு
மூவர் தேவார விசையை
முறையினாற் கேட்டருளி வாதவூ ரடிகள்திரு
மொழிகளும் செவியினேற்றாய்
பத்தர்பலர் குழுமிநின் றறிவுருவ மாகுகின்
பண்பமைய மற்றையடியார்
பாடியுரு குந்திருப் பாடலு மிசைத்தரிய
பழமறைச் சாமத்தையும்
சுத்தவிசை மயமான பிறவினிய பாடலும்
சொல்லிநின் றார்களன்னே
சுவணத்தின் மயமாகி யுவமிக்க வியலாத
சோதிநிறை யூசலின்கண்
புத்தமுத மனையதமிழ் உரிமைகொளு மன்னையே
பொன்னூச லாடியருளே
பொன்னசல வில்லிகோ கன்னனிட முறைவல்லி
பொன்னூச லாடியருளே. 4
--------------------
102. அரிகள்பண் பாடுமலர் கோடானு கோடியாய்
அலருமகி ழரணியத்தே
அணிகயிலை யிதுவென்று நினகொழுந னாடிவரு
மருவரை குடைந்தகோயில்
உரிமைகொளு மன்னையே யரியதவ முயல்கின்ற
உத்தமர்கள் நெஞ்சில்நின்றாய்
உயர்வற வுயர்ந்தவிர ணியகிரியி னிகரென்ன
உள்ளதிரு மண்டபத்தே
பதிகள் மனைவியரும் மறையவர் மடந்தையரும்
நன்றவட மாட்டிநிற்க
சனுகுமவர் நினைவின்வரு நலமெலா நிறைவேற
நாவலம் பொன்னூசலில்
அருமறைகள் துருவிநின் றடைவரிய பதவல்லி
ஆடியருள் பொன்னூசலே
அழிவில் மங்களவல்லி எழில்கொள் சுந்தரவல்லி
ஆடியருள் பொன்னூசலே. 5
-----------------------
103. வன்புநெறி யியல்புடைய வேடர்குல நாகனொடு
மயிலனைய தத்தைபுரியும்
வளமிக்க மெய்த்தவப் பேறாக வுலகின்கண்
வந்ததிண்ணக் குழமகன்
நன்புநிறை யுள்ளத்தின் மாண்பதனை வேதமுணர்
ஞான கோசரியுமறிய
நங்கைநீ கண்டுள மயங்கவே யெம்பிரான்
நல்விழிகள் செந்நீர்தரப்
புன்புலனை வென்றதவ முனிவரினு மிக்கவப்
புண்ணியன் கண்ணையப்பிப்
புடவிபுகழ் கண்ணப்ப னாயகதை பாடியே
புலமங்கை யாட்டுகின்றாள்
அன்புடைய மலர்மகள்செய் நன்பணியு வந்தவுமை
ஆடியருள் பொன்னூசலே
அழிவில்மங் களவல்லி யெழில்கொள் சுந்தரவல்லி
ஆடியருள் பொன்னூசலே. 6
------------------------------------
104. ஆடக சிலோச்சயம் வில்லென்று கொண்டுலக
மருள்பொங்க வாண்டமுறையால்
அன்புடையர் கொண்டாட வம்பர முவந்துறையு
மமரர்கண நின்றாடவே
காடகத் துறைகாளி தன்றிறமை காட்டும்
கருத்துட னெதிர்த்தாடவே
காணரிய காட்சியென முனிவரிரு வோர்மனம்
கண்ணொடும லர்ந்துநிற்க
ஏடகத்தறிவரிய மெய்ப்பொருள் விளக்கியே
எடுத்தபதம் ஊன்றுபதமென்
றிருகழலு மம்பிகைநின் னருகினில் நிறுத்தியே
யெம்மையாண் டருளவெனவே
ஆடியுல காள்பரம னோடமரும் நாயகீ
ஆடியருள் பொன்னூசலே
அழிவில் மங்கள வல்லி யெழில்கொள் சுந்தரவல்லி
ஆடியருள் பொன்னூசலே. 7
-------------------------------------
வேறு
105. பஞ்சன மெல்லடி விஞ்சையர் மங்கையர்
பாடினர் நின்றனரே
பாவையர் தேவம டந்தையர் ஆடினர்
பண்பொ டடைந்தனரே
செஞ்சொலின் விஞ்சிய நாமகள் வந்தனள்
திருமகள் வந்தனளே
திருமிகு மிந்திர பத்தினி யெய்தினள்
சேவையு வந்தனளே
வஞ்சியர் மாதவ பன்னியர் வந்து
வணங்க நிறைந்தனரே
மண்டல மங்கையர் மண்டப மெங்கும்
வளர்ந்து செறிந்தனரே
அஞ்சவி கண்டவர் நெஞ்சுறு மம்பிகை
ஆடுக பொன்னூசல்
ஆரண நாடிய கோகன நாயகி
ஆடுக பொன்னூசல். 8
-------------------------------
106. பொன்புனை வில்லொடு திரிபுர முன்பு
புகைக்கந கைத்தபிரான்
புண்ணிய மேயத னஞ்சய னன்று
புரிந்த தவத்துருகா
மின்பொரு மேனியை நின்னொடு நாயொடும்
வேட னெனப்புகுதா
மிக்க கொடுஞ்செயல் புக்கதொர் பன்றியை
வீழ்த்திய வவ்வளவே
தன்பெரு வன்மை மதித்த தனஞ்சயன்
தன்னொடு மற்பொருதே
தகுதிகொள் பாசுப தந்தரு நாயகன்
சக்திவி ளக்குமையே
அன்பரை யாள்விழி யாய்பெரு நாயகி
ஆடுக பொன்னூசல்
ஆரண நாடிய கோகன நாயகி
ஆடுக பொன்னூசல். 9
---------------------------
107. பாண்டிய மன்னவ னட்ட மிழைத்தில்
பண்களி மன்றிடையே
பல்வகை யானுந டித்தன னோய்ந்து
பதங்களை மாற்றுகெனா
வேண்டிய வெல்லையில் மதுரையில் இருகழல்
வேற்றுமை தோற்றிநடம்
விஞ்சையி னாடிய தம்பெரு மானிடம்
மேவிய மெய்த்தலைவி
பூண்டுள வணிகளின் நல்லொளி விஞ்சிய
பொன்மணி மன்றிடையே
பூமகள் நாமகள் இந்திரை யாதியர்
பொன்வட மாட்டுதலால்
ஆண்டருள் தெய்வத சங்கர சுந்தரி
ஆடுக பொன்னூசல்
ஆரண நாடிய கோகன நாயகி
ஆடுக பொன்னூசல். 10
---------------------------------
வாழ்த்து.
108. மறையவர் வாழிய மன்னவர் வாழிய
வணிகரும் வாழியவே
மண்மகள் மக்களும் வாழிய வுழவெனு
மாதவம் வாழியவே
குறைவறு மெய்ம்மை யுணர்த்திய வைதிக
கொள்கைகள் வாழியவே
கோதறு மாதவ நோன்பறு முனிவரர்
கூடினர் வாழியவே
நிறைவுறு செல்வமு முலகினர் நன்மையு
நிலவவ றம்புரியும்
நீள்புகழ் வாழ்வுறு புதுவையர் பேறெனு
நிருபதி வாழியவே
கறைமலி கண்டனை நாடிய தொண்டினர்
கணமுற வாழியவே
காரணி நாரணி கோகன நாயகி
கழன் மலர் வாழியவே.
-------------------
This file was last updated on 6 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail)