pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 1
அரும்பாத்தை வேதவிநாயகர்
பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


arumpAttai vEtavinAyakar piLLaittamiz
(piLLaittamiz kottu - part 1)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 1
அரும்பாத்தை வேதவிநாயகர்
பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து
(குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU
(WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956
Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50

------------
பொருளடக்கம்
1. அணிந்துரை (ஆங்கிலம்)
2. அணிந்துரை (தமிழ்)
3. நூற் பெயர் குறிப்புரையுடன்:
i. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
ii வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் ....
iii இராகவர் பிள்ளைத்தமிழ் ..... ......
iv தில்லை, சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
v புதுவை, திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ்...
vi தூத்துக்குடி, பாகம்பிரியாவம்மை பிள்ளைத்தமிழ் ....
vii சிவானந்தன் பிள்ளைத்தமிழ் .....
4. செய்யுள் முதற்குறிப்பகராதி
5. பிழை திருத்தங்கள் ..... ......
6. பாடரூப பேதங்கள் ...... ........
7. கருதும் சில பாடங்கள் .......
----------

1. INTRODUCTION:

In the long glorious history of Tamil Literature in the medieval period, we come across 96 minor works running under the name of Prabandams. Pillaittamil is enjoying a towering and unique position among them. It usually consists of one hundred stanzas and it is split into ten sections. Each section is divided into one aspect of childhood. It is composed in praise of gods, kings and patrons. They form the theme of the poets who glorify the charm and the beauty of childhood.

The poem opens with a benediction. The child's lisp, the prattle, the cradle song, its tender clapping, its beckoning unto the moon, all this is described with great consummate artistic skill of the poet. Perhaps in Periyālvār, who belonged to the 8th century A.D., we recognize the spring and source of this species of composition. Subsequent poets followed in his foot-steps and their poems are cold imitations of the immortal poet whose songs cannot. but ring across ages.

This edition, published under the name of Pillaittamil Kottu, consists of seven works.

Arumpāttai Vēda Vināyakar Pilļaittamil arrests our attention. The worship of Vinayaka prevails not only in India but also in lands beyond the seas. This worship was introduced during the Pallava reign by the General Paranjöti after the crushing defeat of Pulikësin A.D. 641-42. We believe that the devotees of Vināyaka will welcome this work which has a peculiar charm and grace of its own. This work is based on a palm leaf manuscript bearing No. R 2677 presented to this library by Sri K. Shanmugam of Kumarakuppam village in the South Arcot district during 1951-52.

Vaikuntanāthan Pilļaittamil is sung in praise of the deity enshrined in the temple at Tiruvaikuntam. Though the name of the author is not known, from the references seen in the manuscript, it would be clear that he was a disciple of one Periya Nambi who lived in Sānthür village. This work is based on a palm leaf manuscript bearing No. R 441 presented by Sri Villiputtūr Appu Iyengar during the year 1920-21.

Ragavar Piļļaittamil deals with Ayodhya and her ancient glory and the renown of Raghu's race. The author of this work is Kulandai Mudaliar of Kurrālam. This work is based on a palm leaf manuscript bearing No. D 323 deposited in this library.

Tillai Sivakāmi Ammai Pilļaittamil , sung in praise of Cidambaram, is marked by philosophical discussions. The style is fluent and the diction dignified; the handling of the theme and the choice and classical expression occuring in many places in this work are a proof of the author's full acquaintance with ancient Tamil literature and they reveal gifted poetic talent of a high order. It is learnt from the work that the author is an anonymous poet of Tiruccendil. This work is based on a palm leaf manuscript bearing No. D 324. Manuscripts bearing Nos. R 2860 and 2619 have been of great use in the matter of compiling this work.

The author of the work Puduvai Tiripura Sundari Pilļaittamil is one Muttukkumaran, whose date is difficult to determine. This work is based on a palm leaf manuscript bearing No. D 326 deposited in this library.
In Tūttukkuļi Pākampiriyā Ammai Pillaittamil we get a vivid description of a different variety of pearls. This edition is based on a paper manuscript bearing No. R 590 (b) transcribed during the year 1924-25 from a manuscript belonging to the Mahārāja of Ettaiyāpuram, Tirunelvēli district.

Śivanandan Pillaittamil speaks of Sivanandan, the hero of the theme, as a native of Tiruvárūr. This work is based on a palm leaf manuscript bearing No.R 2676 presented by Sri K. Shanmugam of Kumarakuppam village in South Arcot district during 1951-52.

I must express my grateful acknowledgements to:
1. the authorities of Dr. U. V. Swaminatha Aiyar's Library, Adyar, for making their manuscript accessible to me for comparison,
2. the owners of the manuscripts mentioned above who presented them to the Government Oriental Manuscripts Library,
3. Sri S. Sachidanandam Pillai, B.A.L.T., Retired District Educational Officer and Dr. M. A. Dorai Rangaswamy, M.A., M.O.L., Ph.D., Senior Lecturer in Tamil, University of Madras, for throwing light on some of the obscure tenets and doctrines of Saiva philosophy and
4. Vidván B. R. Purushothama Naidu, Junior Lecturer in Tamil, University of Madras, for offering valuable suggestions and interpretations of certain obscure lines in the text.
My thanks are also due to Srīmāns E. B. Venu gopal, V. S. Krishnan and M. Pasupathi, Tamil Pandits of this Library, who prepared the press copy and carefully corrected the proofs and to the Rathnam Press for their willing co-operation.


Madras,       T. CHANDRASEKHARAN,
12–2–1956       Curator, Govt. Oriental Mss., Library
-------------------

2. அணிந்துரை

இனிமையும் மென்மையும் கன்னிமையும் பெற்ற சொற்கள் நந்தமிழ் மொழியில் அமைந்து பாட்டுக்களாகத் திகழ்கின்றன. தண்டமிழ் வல்லுநர் மங்கலச் சொற்களால் போற்றுவதும் உலோபிகளை நச்சுச் சொற்களால் தூற்றுவதுமுண்டு. எனவே தமிழ்ச் சொற்களில் சில உணர்ச்சி நிரம்பியன; சில பக்தி நிரம்பியன; இன்னுஞ் சில கழிபேரின்பம் பயப்பன. நந்திக்கலம்பகம் ஓர் வசைக்கவி. தமிழில் புகழ் நிரம்பிய இன்பம் பயக்கும் செந்தமிழ்ப் பாடல்களை அவாவினர் அரசர், உபகாரிகள் முதலியோர். அப்பாடல்களிலெல்லாம் இனிமைச் சுவையைப் பிரதிபலிப்பதில் ஈடற்று விளங்குவது பிள்ளைக்கவிப் பாட்டே. இளமைப் பருவம் ஒருவர்க்குக் கடைசிவரை இருப்பின் எவ்வாறு வரவேற்று இன்பமனுபவிப்பாரோ அவ்விதம் வரவேற்று இன்பம் நுகரப்படுவது பிள்ளைத்தமிழெனின் மிகையாகாது. குழவிப் பருவம் மாசற்ற நல்லெண்ணங்களையும் அவ்வெண்ணங்களின் வாயிலாகக் களங்கமற்ற தூய அன்பையும் பெற்றுத் திகழ்தலால் அவ்வெண்ணம், அன்பு ஆகியன பெற விரும்புபவரும், வெளியிட விரும்புபவரும் இடையறா இன்பத்தில் திளைக்க விரும்புபவரும் பிள்ளைத் தமிழ்ப் பாட்டுக்களில் மனம் ஒன்றிப் பழகுவது அவசியமாகும்.

''மக்கண்மெய் ............... செவிக்கு" என்ற தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் வாக்குப்படி தீண்டல் உடற்கின்பமும், கேட்டல் செவிக்கின்பமும் விளைவித்தலைப் போன்று இளமைச்சிறார்கள் ஆடும் விளையாட்டும் கண்ணுக்கினிமை தரும் என்பது போதருகிறது. “குழவி தளர்நடையைக் காண்டல் இனிதே........'' என்றார் இனியவை நாற் பதினும். இக்கொத்தின் 566-ஆம் பாட்டினும் “காதுக்கினிதுன் மழலை யஞ்சொல் கண்ணுக்கினிதுன் காட்சியின்பம் கனிவாய்க் கினிதாய்த் கவுணெரித்துக் கன்னந்தனை முத்துவதின்பம்.... பேதைக்கினியைம் பொறிக் கின்பம் பிள்ளைக்கனியன்றியு முண்டோ!" என்னும்போது பிள்ளைக்கனி எவ்வித இன்பமும் தரவல்லது எனக் கூறுவது தவிர நாவெழவில்லை. இதற்காகவன்றோ பாண்டியன் அறிவுடை நம்பியும் “படைப்புப் பல படைத்து .......... பயக்குறையில்லைத்தாம் வாழும் நாளே,” என்றான் புறநானூற்றினும். மற்றும் "குழலின் யாழி னமுதிற் குழைத்த சொன், மழலை தங்கண் மகார்வயிற் கேட்டலாற், றழையு முள்ளமெய் தன்னைத் தொடிற்புறங், குழவியின்பங் குறித்ததொர் தோற்றமே.” என்றார் கருணீக புராணத்தினும். தம்மையாதரித்த அரச வள்ளல்கள், பிரபுக்கள் ஆகியோரிடத்து அன்புடன் பழகும் புலவர்கள் அவர்களை அவ்வன்பிற்கினிய கள்ளங் கபடமற்ற பிள்ளைமைப் பருவமுடையராய்க் கற்பனை செய்து ஆண்பாலானால் ஆண்குழவிகளின் விளையாட்டு வகைகளையும் பெண்பாலானால் பெண்குழவிகளின் விளையாட்டு வகைகளையும் அமைத்து இனிய கொஞ்சும் கன்னித் தமிழிலே இன்பச் சுவை நனி சொட்டச் சொட்டக் காப்பு முதலிய 10-பருவங்கட்கு ஏற்ப செயல்களை வகுத்துக் கூறி ஆசிரிய விருத்தப்பாவால் அமைத்தனர். அரசர், உபகாரிகள் ஆகியோர் இங்ஙனம் கேட்டுக் கழிமகிழ்வு பெற்ற பின்னர் புலவர்கட்கு வேண்டிய வேண்டியாங்கு அளித்தனர். இதனாலன்றோ 'ஈதலிசைபட வாழ்தல்........ .... யுயிர்க்கு'' என்றும் "புலவர்பாடும் புகழுடையோர்....... வானவூர்தி.......” என்றும் கூறினர்.

தொல்காப்பியத்தில் பாடாண்டிணையுள் "குழவி மருங்கினும் கிழவதாகும்'' என்றவாறு காமப் பகுதியின்பாற்பட்டு மக்கட்குழவிக்குரியதாக அரசரையும் ஏனையோரையும் பாடும் புலவர் "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்றவாறு அக்குழவியோடு ஒற்றுமையுடைய தெய்வத்துக்கும் உரியதாக இவ்வாறு பாடுவர்.

பிள்ளைத்தமிழ்ப் பாட்டில் காலத்தால் முற்பட்டது பெரியாழ்வார் இயற்றிய பிள்ளைக்கவியாகும். அவர் பிள்ளைக்கவியெனத் தனியாகப் பாடாமல் தம் திருமொழியில் கண்ணனின் குழவிப் பருவத்தையே முக்கியமான பகுதியாகப் பாடியுள்ளார். பிற்காலத்திற்றான் பிள்ளைக் கவியெனத் தனிப்பிரபந்த முறை தோன்றியது. பெரியாழ்வார் கி. பி. 769-770-க்கு முன்பிருந்தவர் என வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். பகழிக்கூத்தர் பாடிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், அந்தகக் கவி வீரராகவர் பாடிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், வேப்பந்தூரார் பாடிய அழகர் பிள்ளைத்தமிழ் ஆகியன பழமை மிக்கவை.

இத்தகைமை வாய்ந்த பிள்ளைக்கவி தமிழிலமைந்த 96 பிரபந்த வகைகளுள் ஒன்று, பிரபந்தம் வடசொல். பிர-மிகுந்த, பந்தம் கட்டு; ஒவ்வொரு பிரபந்தமும் யாதாமொரு கட்டினால் கட்டப்படுகிறது. கலம்பகம் 18- துறைகளாற் கட்டப்படுதல் போன்று பிள்ளைத்தமிழும் பத்துப் பருவங்களாற் கட்டப்படுகிறது.

இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைத்து; ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு முதல் சிறுதேர் ஈறாகவும், பெண்பாற் பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதி மூன்று பருவங்கட்குப் பதில் அம்மானை, நீராடல், ஊசல் பெற்றும் வரும். காப்பு, தால், செங்கீரை என முறை மாறியும் வருமென்பர். ஒவ்வொரு பருவமும் 10 - பாட்டுக்கள் பெறுதலியல்பு; பழனிப் பிள்ளைத் தமிழ் போன்றன குறைந்து வந்தன. இவைகளினிலக்கணத்தை இல - விள. பாட்டியல் 46, 47-வது சூத்திரங்களால் உணரலாம். இக்கவி 3- ஆம் மாதம் தொடங்கி 21-ஆம் மாதம் வரை ஒற்றித்த மாதமாகிய 10 - மாதங்களினும் கேட்பிக்கப்படும். அன்றியும் 5-ஆம் ஆண்டினும் 7-ஆம் ஆண்டினும் கேட்பினும் இழுக்காது. "முறைதரு மூன்றாதி மூவேழீறாந்திங்க, ளறைகநிலம் பத்து மாண்டைந்தே....................' (வெ. பா. செய். 7) என்பதனையும், "பிள்ளைப்பாட்டே தெள்ளிதிற் கிளப்பின், மூன்று முதலா மூவேழளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே'', "ஒன்று முதலையாண்டோதினும் வரையார்'' (பன். பாட்டியல்) என்பதனையும் ஓர்க.

1. காப்புப்பருவம்:- காப்பு - காவல், காப்புக் கவியைக் குறிப்பதால் தொழிலாகு பெயர். இது 2-ஆம் மாதத்தில் நிகழ்வது; 3-ஆம் மாதமென்பர் வெண்பா பாட்டியலுள். திருமால் முதலிய கடவுளர் பாட்டுடைத்தலைவராகிய குழவியைப் பாதுகாக்க வேண்டுமென்று அமைப்பது காப்புப்பருவம்; திருமால் காவற்கடவுளாதலால் முதற்பாட்டு அவரைப் பற்றியதாக இருக்கும். குழவி பிறந்த ஏழாவது நாள் காப்பிடலெனும் உலக வழக்கு நோக்கி இஃது இலக்கிய வழக்கிலும் அமைக்கப்பட்டது.

2. செங்கீரைப்பருவம் : - கீர் - சொல், இச்செயல் 5-ஆம் மாதத்தில் நிகழும். பொருள் தெரியாத ஒலியை எழுப்பும் பருவமாகும் இது. இப்பருவத்தில் பச்சிளங் குழவிகள் 'ங்க', ங்க' எனக் கூறக் கேட்டுத் தாய்மாரும் பிறரும் மகிழ்வர். இவ்வொலி மழலையைக் காட்டிலும் இனிமை மிக்கது; இளமையானது. மழலையை ஒரு வகையிற் பொருள் செய்யினும் இப்பருவப் பேச்சு ஒலி மாத்திரமாய்த் தோன்றலால் உணர்தலரிது. யாப்பில் தொடைகள் சரிவரப் பொருந்தாத ஒன்றைச் செந்தொடை என்ற பான்மைபோல் சொல்லுக்குரிய அமைதியற்ற இதனையும் 'செங்கீர்' என்றனர்போலும். செங்கீரை என்பதனை ஒரு நிருத்ய விசேடமெனக் கூறுவர் பெரியவாச்சான் பிள்ளை. செங்கீரையென்பதன் சொற்பொருள் முன்னர் விளக்கப்பட்டதாயினும் செங்கீரையாடுகவெனும் வழக்கை நோக்கின் கீழ்க்கண்டவாறு கொள்ளல் வேண்டும் என்பது புலனாகும்.

"...கருணையொடு மெள்ளக் கவிழ்ந்திருகை யூன்றிமென்
கமலமுக மேறெடுத்துத்
தெய்வத் தமிழ்ப் புலவர் போற்றுதரு மச்செல்வி
செங்கீரை யாடியருளே....'" (புதுவை. திரி. சுந்தரி பிள்:)

“மல்காந்து மெல்லக் கவிழ்ந்து விளையாடவே
மன்னுயிர்கள் யாவுமாட
விருதாளு மூன்றியிரு கையுமூன் றித்தலை
யெடுத்துத் தவழ்ந்திடவுமே....” (சிவகாமி. பிள்).
இவைகளின்படி இருகால்களையும் இருகைகளையும் நிலத்திலூன்றி முகத்தை மேல் நிமிர்த்தியாடுதல் இப்பருவச் செய்கை.

3. தாலப்பருவம்:- தால் - தாலு, நாக்கு; தாலாட்டு - ஓர் வகை நாவசைப்பு. அது ஆகுபெயராய் அச்செயலோடு உடனிகழும் பாட்டையுமுணர்த்திற்று. தாலாட்டென்பது தாலென மருவிற்று. தாலாட்டைக் கவனிக்கும் பருவமென்பர். இது ஏழாம் மாதம் நிகழும்; எட்டாம் மாதமென்பர் பிங்கலந்தையில். குழவிகளைத் தாயர் தம் மடித்தலத்தும், மணித்தவிசினும், மணித் தொட்டிலினும் துயிலச் செய்வற்காகப் பாட்டுப் பாடுதல் வழக்கம். திவ்வியப் பிரபந்தங்களில் தாலாட்டெனத் தனித்துப் பாடியுள்ள பாடற்றொகுதிகளைக் காணலாம். செங்கீரை யாடியருளென்னும் அடுக்கு செங்கோ செங்கீரையென விணைந்தும் 'செங்கீரை'யெனத் தனித்தும் மரீஇ நின்றாற்போல தாலாட்டையேல் தாலாட்டையேல் என்னும் அடுக்குத்தொடர் தாலோ தாலேலோ எனவிணைந்தும் தாலெனத் தனித்தும் மரீஇயிற்று என்பர் ஈசான்ய மடம் இராமலிங்க சுவாமிகள்.

4. சப்பாணிப்பருவம்: - ஸ: பாணி - சப்பாணி, ஸ:- கூட. பாணி-கை சப்பாணி கொட்டல் - கையோடு கை சேர்த்துக்கொட்டுதல். இது 9-ஆம் மாதம் நிகழும். இங்ஙனம் சப்பாணி கொட்டுமாறு குழந்தையிடம் கூறுவதாகப் பாடப்படுவது இப்பருவம். நம் வீட்டிலும் தாயர் முதலியோர், "தத்தாங்கி தத்தாங்கி தலைமேலே யென்னாடி" என்று கூறிக் கைத்தட்டச் சொல்வதைக் கண்டிருக்கலாம். கால்வலியின்றிக் கைவலி கொண்டு நகர்ந்து செல்லுங் குழந்தைகளைச் ‘சப்பாணி' யென்று கூறும் வழக்கை யுணர்க.

5. முத்தப்பருவம்:- முத்தம் - வாயிதழ் (பிங்); அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலியுண்டாக உதடுகளாற் பரிசித்தல் (சூடா), குழந்தையை முத்தந் தாவென்று தாயரும் பிறரும் வேண்டுவதாகக் கூறுதல் மரபு. இது 11-ஆம் மாதம் நிகழும். முத்தம் எனும் சொல் முத்தினையும் குறித்தலின் முத்தப்பருவத்தில் புலவர்கள் பிறவிடங்களில் கிடைக்கும் பலவகை முத்தங்களினும் கெடாத நின் வாய் முத்தமே சிறந்ததாகலின் அதனைத்தருக'' என்று அமைத்தல் வழக்கம். இவ்வாறு இறுதி 4-பிள்ளைத் தமிழிலும் பரக்கக் காணலாம். சிவானந்தன் பிள்ளைத் தமிழில் மேலும் 10-வகை முத்தி வகைகளைக் கூறி அவை \களைக் காட்டிலும் ''அருளொடு புணர்ந்த முத்தியே சிறந்தது" என்று கூறியிருப்பது நோக்கத்தக்கது.

6. வருகைப்பருவம்: - இது வாரானைப் பருவம் என்றும் வழங்கப்பெறும். வாரானை - வருகை, ஆனை - தொழிற்பெயர் விகுதி. தளர்நடை யிட்டுவரும் குழவியைத் தோழியர் வாவென்று அழைப்பதாகக் கூறுவது இப்பருவச் செய்தி. இது 12-ஆம் மாதத்திற் கிளத்துவது. குழவிகளை அணி, உடை முதலியன அணியக் கூப்பிடுவது முறை. சில குழவிகள் அடம் செய்து அவைகளையணிய மறுக்கும்; இதனை எதிர்மறை குறிப்புணர்த்தல் மூலம் சமாதானப் படுத்தலாமென்பர் மன நூலறிஞர். இதன்படி 596-ஆம் பாட்டு அமைந்திருக்கிறது.

7. அம்புலிப் பருவம்: - அம்புலி -சந்திரன். சந்திரனைக் குழந்தையோடு விளையாட வாவென்று அழைத்தலைக் கூறுவது; 16-ஆம் மாதத்தில் சந்திரனை யழைப்பது நிகழும். 18-ஆம் மாதமென்பர் பிங்கலந்தையில். இராமர் குழவிப் பருவத்தில் சந்திரனைக் கண்டு அருகில் வரச் சொன்னபோது யாராலும் முடியாமற் போனதால் அழுகை மிக, இறுதியில் சுமந்திரன் கண்ணாடியில் சந்திரனைக் காட்டிச் சமாதானப் படுத்தியதை யாரேயறியார் ! இப்பருவம் ஏனைய பருவங்களினும் அரியதென்பார் "பிள்ளைக் கவிக்கம்புலி புலியாம்" என்பதால் விளங்கும். அம்புலியை யழைக்கையில் சாம, பேத, தான, தண்ட வகையால் முறையே சந்திரனுக்கும் பாட்டுடைத் தலைவர்க்கும் ஒப்புக் கூறுதலும், வேற்றுமை கூறலும், விளையாட வரின் பெறும் நன்மை கூறலும், வாராவிடின் நிகழுந் துன்பங் கூறலும் மரபு. (சாமம் - சமமாகக் கூறல், இனிமையாகத் கூறல்); இவ்வேழு பருவங்களும் இருவகைப் பிள்ளைத்தமிழிற்கும் பொது. இதன் மேலுள்ள பிரிவுகளைக் காண்க.

8. (அ) சிற்றில் பருவம்:- சிறுமை + இல் - சிற்றில், சிறுவீடு. மூன்றாம் ஆண்டிற்குரியது. சிற்றில் விளையாடும் சிறுமியர், பாட்டுடைத் தலைவர் தம் சிற்றிலை யழிக்கும்போது "எம் சிற்றிலை அழியாதொழிக என வேண்டுதல் கூறப்படும். சிறுமியர் மணலில் சிறுவீடு கட்டி நிலாச்சோறு பொங்குவதனை ஆண் சிறுவர்கள் குறும்புக்காக அவற்றைக் கலைத்துச் சிறுமிகள் அழ மட்டிலா மகிழ்ச்சி கொள்வதை யாவரும் கண்டிருக்கலாம். இந்நிகழ்ச்சியை மன நூலார் "பாவனை விளையாட்டு என்பர். பெண் குழவிகளைச் "சிறுவீடு கட்டுவாயாக" என்று பெண்பாற் பிள்ளைத்தமிழில் கூறுவதும் உண்டென இக்கொத்தின் 4, 5. பிள்ளைத்தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன.

9. அ. சிறுபறைப்பருவம்:- பாட்டுடைத் தலைவரைச் சிறுபறை முழக்கும்படி வேண்டப்பெறும். இது 2-ஆம் ஆண்டில் கூறப் பெறுவது. இப்பருவம் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழில் முதற்கண் வந்து பின்னரே சிற்றில் பாடப்பட்டுள்ளது. இங்ஙனம் வருவது இல. வி. பா. 46- ஆம் சூத்திரத்துக்கும் வருட முறைக்கும் ஒத்ததாயிருப்பினும் "அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்" என்ற பன் பாட். சூத்திரப்படியே பெரும்பாலும் அமைந்துளது.

10. அ. சிறுதேர்ப்பருவம்:- சிறுதேர் (நடைவண்டி) உருட்டுமாறு பாட்டுடைத் தலைவரை வேண்டுதல் கூறப்பெறும். இது 4-ஆம் ஆண்டில் கூறப்பெறும்.

8. ஆ. அம்மானைப்பருவம்:- சில பிள்ளைத் தமிழில் இதற்குப் பதில் கழங்காடற்பருவம் வரும். கழங்காவது மரம், ஈயம் முதலிய பொருள்களான் உருண்டையாகப் பந்து போன்று செய்வது. அதனை மகளிர் மேலே ஒன்றன் பின் ஒன்றாக எறிந்து கையாற் பிடித்து விளையாடுவர். கடைச்சங்க காலத்தில் கழங்காடல் மிகுந்திருந்தது என்பது ''பந்துங் கழங்கும்" (பரிபாடல் 81.-107) "குறுந்தொடி மகளிர் பொலஞ் செய் கழங்கிற்" (புறம் 36) "முற்றுறு கழங்கொடு முதலகடு" (பெருங் கதை பக். 104) என்பவைகளாலறியலாம். அம்மானைக் காய்கள் கொண்டு இங்ஙனம் விளையாடுவதும் இப்பருவத்தின் தன்மை. இது17-ஆம் மாதத்தில் நிகழும். பாட்டுடைத் தலைவியைத் தோழிகள் முத்தம்மானை முதலிய அம்மானைக் காய்கொண்டு ஆடியருளுமாறு கூறுவதாகும். மகளிருக்கேயுரிய விளையாட்டினுள் இஃதொன்று; கலம்பக உறுப்புக்களில் அம்மானையென வருவது மகளிர் மூவர் கூடித் தம் நாட்டுத் தலைவனை (அல்) காதலரைக் குறித்தோ ஒருத்தி வினா எழுப்ப மற்றொருத்தி அதற்கு விளக்கங்கூற, பின்னொருத்தி இவ்விருவர்க்கு விடை கூறி அம்மனைக் காய்களை மேலே வீசிப்பிடித்துக் கொண்டு முடித்தலாக இறுதிச் சீரில் அம்மானையென்ற சொல் வரப் பாடுதலாகும்.

9. ஆ. நீராடற்பருவம்:- இது 19-ஆம் மாதம் நிகழும். தலைவியை நீர் நிலையிற்சென்று புனல் விளையாட்டயர வேண்டுமென்று வேண்டுவதாகும். இச்செய்தி நல்ல கணவன்மாரையடைய கன்னிகள் நோற்கும் மார்கழி நோன்பைத் தழுவியுளது. "வெம்பாதாக வியனில வரைப்பென அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர் ........" எனவரும் பரிபாடலால் கன்னிப் பெண்கள் தாயருகாக நின்று நீராடினர் என விளங்குகிறது. ''பேணுஞ் சிறப்பின் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழ மணம் ஒழிதலும் ஐந்தின் முதலா ஒன்பதின் காறும் ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும் பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்" (பிங்கலந்தை) என்பதால் 5-9 வயதுள்ள சிறு கன்னியரே நீராடி நோன்பு நோற்றற்கு உரியர் என்பது போதருகிறது. இச்செய்தி 'தாயருகாக நின்று" என்ற பரிமேலழகர் உரைக்கு ஏற்றதாயினும் சிவிறியால் நீரிறைத்தல், மூழ்கி விளையாடுதல் போன்றன வயது மிகுந்த பெண்கட்கே தக்கது. ஐங்குறு நூறு 84-ஆம் பாட்டு, நற்றிணை 80ஆம் பாட்டு, கலித்தொகை 59-ஆம் பாட்டு, புறம் 70-ஆம் பாட்டு, திருப்பாவை, திருவெம்பாவை ஆகியன நீராடலைப்பற்றி விளக்குகின்றன. இன்றும் மலையாள நாட்டுப் பெண்கள் அருணோதய காலம் வரை நீராடுவதில் காலம் போக்கிப் பின்னர் கரையேறி நன்கு உடலைத் துடைத்துக்கொண்டு தூய்மையான அலங்கார உடை வகைகளையணிந்து கண்களுக்கு மையிட்டு நெற்றியில் திலதமிட்டுத் தாம்பூலம் போட்டுத் தம்மை ஒப்பனை செய்வர்; பின்னர் ஊஞ்சலாட்டத்தைத் தொடங்குவர். இத்தகை ஆட்டங்கள் இச்செய்தியால் பெண் களுக்கேயென்பது தெற்றென விளங்குகிறது.

10. (ஆ) ஊசற்பருவம்:- இது 21.ஆம் மாதம் நிகழும். பாட்டுடைத் தலைவியை ஊசலொன்றிலேறி விளையாடி மகிழுமாறு கூறும் பருவம்; அஷ்டப் பிரபந்தம் முதலியவற்றில் தனியாகக் கூறப் பெறுவது மிஃதே.
______________________________

1. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

"பிள்ளையார் பிள்ளையார் அவர் எங்கேயோ பிள்ளையார்........." என்று சிறுவர் முதல் சிறுமிவரை பாடிக் களிக்கும் பெருமான் விநாயகரே. இவர் வழிபாடு இங்கு மட்டுமின்றிக் கடல் கடந்த நாடுகளினும் நேபாளம், திபெத், துருக்கி ஆகியவற்றினும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் இந்துக்கள் மட்டுமின்றிச் சமணர், பௌத்தர் ஆகியோரும் பூசிக்கின்றனர். நந்தமிழ் நாட்டிற்குப் பல்லவன் தளபதி பரஞ்சோதியார் வாதாபியைக் கொள்ளை கொண்டபோது அங்கிருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து தம் ஊரான திருச்செங்கட்டாங்குடியில் கணபதீச்சுரம் என்ற கோயில் கட்டி எழுந்தருளச் செய்தார். இச்செய்தி நிகழ்ந்தது கி. பி. 641-42 என்பர் சரித்திராசிரியர். சங்க காலவிலக்கியங்களில் விநாயகர் பற்றிய பேச்சேயில்லாதால் இது முதற் கொண்டே விநாயகர் வணக்கம் தொடங்கியதெனலாம். இவர் ஒருமுகப் பிள்ளையார், ஓங்காரப் பிள்ளையார் எனப் பலவிதமாகப் போற்றப் பெற்றார்.

சீனாவில் 'குங்ஷீன்' என்னுமிடத்திலுள்ள பெளத்த குகைக் கோயிலில் செதுக்கப்பட்டுள்ள விநாயகருருவம் கி.பி. 31-ஆம் ஆண்டைச் சார்ந்ததாம். மெக்ஸிகோ நகரிலும், பெருவிலும் (அமெரிக்கா) கணபதி அறுவடை காலக் கடவுளாகப் பூசிக்கப்படுகிறார். ஆதிசங்கரர் இந்து மதத்தை விரிவுபடுத்தியபோது தான் கடவுளரின் தனித்தனி வழிபாடு ஏற்பட்டது. அது தொடங்கி கணபதியைப் பூசிப்பவர் 'கணாபத்யர்' எனப்பட்டனர். 10-வது நூற்றாண்டுக்குப் பின்னரே தேவிகளுடன் பிள்ளையார் ஏற்படுத்தப்பட்டார் எனத் தெரிகிறது.

இப்பிள்ளைத்தமிழ் விநாயகரைப் பற்றியதாதலால் அவரைப் பற்றிய துதியோ, காவற் கடவுளாகக் கூறப்படுவதோ காணப்படவில்லை. 15-வது பாட்டின் குறிப்பில் நாதத்திலெழுபறை என்பது அபிதான சிந்தாமணியில் உள்ள வண்ணம் காட்டப்பட்டுளது. பிற நூல்களில் மாறுபாடு காணப்படுகிறது. திருநள்ளாற்றினிலுள்ள கணபதியைப் பூசித்து நளன் கலி நீங்கினான் என்றும் அக்கணபதி நளகூபக் கணபதி என்றும் 28-வது பாட்டு தெரிவிக்கிறது. இன்றும் திருநள் ளாற்றினிலுள்ள சனீஸ்வரர் கோவிலுக்கு மக்கள் சென்று களிப்பதோடு ‘எள் கலந்த சோறும்’ காகத்திற் கிடுகின்றனர். தாயர் தாமரை மலர்போன்ற கைகளைக் கொட்டி யழைத்தவுடன் ''குந்தியெழுந்த பதங்கள் சதங்கை குலுங்கு சிலம்பிரையத் தொத்தணி முத்தொடு முத்து நகைக்குளிர் சோதிநிலா விசிறத், தொந்தியொடுஞ் சிறு பண்டி யசைந்திடு தொங்கல் புறஞ்சுழலக் கைத்துணை வைத்துமெடுத்து மடிக்கடி காலொடு கால்விலக்க காலையிளங்கதிர் போலொளி பொங்கிய கதிர்முக மெதிர்மரைத் தத்தடியிட்டு ....'' வருகின்றார் விநாயகர். ஒருகுழவி நம் கண்ணெதிரே நடந்து வருவது போலுள்ளது இச்சொல்லோவியம்; என்னே! கவி இன்பம்.

விநாயகர் பிறப்பினை நோக்கிய பல புராணக் கதைகளில் சிவபுராணம் பார்வதி தானிருக்குமிடத்தில் ஆடவர் யாரும் வாராவண்ணம் காவல்காக்க ஒருவரை யேற்படுத்தினாரென்றும் அவரே விநாயகர் எனவு மியம்புகிறது. ஈண்டு 42-வது பாட்டு சிவனும், பார்வதியும் மண்டபமொன்றனை யடைந்து ஆண்டிருந்த வனப்பை நுகர்வுழி, தேவி அங்குப் பிரணவப் பொருளை நோக்க அதனில் ஆண் பெண் யானைகள் கலவி செய்ய அதனைக் கண்ட இறைவி யாதெனலும் நின் சம்பந்தமாகி ஒருமகன் தோன்றுவ" னென்னக் கூறி சிவன் களிற்றினை நோக்கி நிற்றலும் முடிவில் விநாயகர் அதினின்று எழுந்து வந்து வணங்கினர் என்று கூறுகிறது. இதனைக்,

''கடிவி ராவிய மதம்பொழி களிற்றினையந்த
வடிகணோக்கி நின்றன ருளத்தார்வமோ டம்மை
பிடியை நோக்கி நின்றன ளவைபேணிய கலவி
முடிவின் மேதகத் தோன்றினார் மொய்விநா யகரே,"
(விநா. புரா.) என்ற பாட்டாலறியலாம்.

46-வது பாட்டு திவோதாதன் என்கிற திவோதானன் வரலாற்றை விரித்துக் கூறுகிறது. திவோதாதன் காசியில் தேவர்கள் இராதபடி பிரமனிடம் வரம்பெற்று அங்ஙனமே ஆட்சி செய்ததால் மந்தரமலைக்கு வரம் கொடுக்கச் சென்ற சிவன் காசி திரும்பும் வண்ணம் முயற்சி செய்தும் முடியவில்லை. இறுதியில் கணபதியை யனுப்ப அவர் சோதிடனாய்ச் சென்று முறை திறம்பச் செய்தார். 'கூர்ந்த நித்திரையிற் சென்று கொடுங்கன வாக்கி யந்தச், சார்ந்த சொப்பனத்தைத் தப்பா நனவிடைத் தயங்கச் சாற்றி, நேர்ந்திடு மிதனுக்கின்ன நெடும் பயனென்று, சொல்லி யார்ந்தவப் பயனுங் கூட்டி யநேகரைத் திறம்பச் செய்தார்." (விநா. புரா.) பின்னர் இவர் கூறியவாறு திருமால் நிமித்த முரைப்பவனாய்ச் சென்று அரசனைச் சம்மதிக்கச் செய்த பின்னர் மந்தர மலையினின்று சிவன் முதல் யாவரையும் அழைத்திருத்தினர். இதனையே "கன்னி மடவார் தமக்குமிளங் காளையருக்குங் கனவுரைத்துக் காசித்தலத்தை மீண்டு வரக்கருதும்...'' என்றனர். இதனைச் செய்தவர் விநாயகர் என்பதனை "... தழைந்த காசிநகர் வாழ்க்கை தந்தாய் நீயே யெனச் சால விழைந்துடிண்டி விநாயகரை ....'' என்பதனால் காண்க.

விநாயருக்கு 16-பெயர்கள் உண்டு என்பதனை,

“சுமுகரே யேக தந்தரே கபிலர்சூழ் கெசகன்னரே நாத
மிமிழ்தரு மிலம் போதர ரெழில்விகட ரிலகிய விக்கினராச
ரமைவர்சூழ்ந் தேத்துங் கணாதிபர் தூமகேது நன்றருள் கணத்தியக்க ருமிழொளிப் பாலசந்திரர் தானமூற் றிருந்தெழுங் கசானனரே.''
“வக்கிரதுண்டர் வயங்கிய சூர்ப்பகன்ன ரோம்பர் வான் வரங்கார்
...க்கருள் கந்தபூர்வச ரெனவே சொல்லிய பெயர் பதினாறு..”
(விநா. புரா.) இவைகளால் 58-ஆம் பாட்டின் பெயர் விவரம் ஓர்க.

சிவனுக்குரியன யாவும் விநாயகருக்குமுண்டு என்பதை 61-ஆம் பாட்டு விளக்குகிறது. வெண்பிறைக் கொழுந்தைக் கணபதி யணிந்தனர் என்பது “மருவிய கலைகளுள் வையகந்தொழ வொருகலை நமதொளிர் முடியின் வைகுக....'' (வி. புரா.) என்பதால் விளங்குகிறது. அரவக்கலனை யணிந்தது விநதையின் வேண்டுகோளால் சம்பாதி, கருடன் முதலியவரை மீட்டு வரச் சென்ற போதாகும்.

"இரிந்த பன்னாகமு மெய்தித் தாழ்ந்தன -
புரிந்தவை தம்மையும் பரித்த வங்கதம்
புரிந்தவண் குழைபுனை யார மாதியாத்
தெரிந்துதம் முருவெலாஞ் சிவணு வித்தனர்.
"தந்தையார்ச் சித்ததே தரும் மன்னதை
மைந்தரார்ச் சித்தலும் வழக்க மாதலா
லந்திவா னிறத்தவ ரணிந்த வாளரா
வெந்தையா ரணிதலு மேற்ற தாகுமே." (வி. புரா.)
என்பவைகளால் விளங்கக் காண்க.

21- பத்திரங்கள் கொண்டு விநாயகரை வணங்க வேண்டுமென விநா. புரா. உமையம்மை சதுர்த்தி விரதமனுட்டித்த படலத்தில் 33, 34, 35 பாடல்களில் எவ்வெப் பெயருக்கு எப்பத்திரம் கொண்டு பூசிக்க வேண்டுமெனக் கூறுகின்றன. “பெருமண மாசிப்பத்திரம் சுமுகன் ...'' என்பதனைக் காண்க. 55-வது பாட்டில் பூவணப் பிள்ளையாய் என வருவது அழகிய நிறம் பொருந்திய (பூ+வணம்) இளமைப் பருவமுடையவனாய் என்றும் மதுரைக்கருகில் வைகையாற் சூழப்பெற்ற செடி நிறைந்த ஊரான திருப்பூவணத்தினின்று வந்த பிள்ளையார் என்றும் பொருள் கொள்ளலாம்; ஏடகம் என்ற தலத்தில் தான், வைகை நீரில் எதிர்ந்த ஏடு கரையேறியது. இது வைகையின் வடகரையிலுள்ளது. அறிஞர் ஆராய்க.

''பின்பு மெழில் குன்றாத பிள்ளையாரென வரும் பிள்ளையிவ...'' என்பதில் பிள்ளையார் என்ற பெயர் பெற்றது பிள்ளைப் பருவச் சிறுவர்கள் சதா எழுத்து வேலை செய்வது போன்று இவரும் மேருமலையில் தன்னொரு தந்தத்தை யொடித்துப் பாரதம் எழுதியதாலேயே எனக் கருணீக புராணம் இயம்புகிறது.
69- ஆம் பாட்டு விநாயகரே பிரணவப் பொருள் என இயம்புகிறது; ''பிரணவ முன்னர் வைகும் பெருமறை தொகுத்தகாலை, பிரணவ முன்னோதாமற் பேசுதலின்மையாலே, பிரணவ மொழியாற் றன்னைப் பேசினை யெனவுட்கொண்டு பிரணவப்பொருளாயுள்ளான் பேரிடர் காத்தானன்றே.'' ''வளரோங்காரத் துருக்கொண்ட வள்ளலிவனே ...'' (விநா. புரா.) என்பன ஓர்க.

விநாயகர் உருவ வழிபாடு இன்ப நிகழ்ச்சி (அ) துன்பநிகழ்ச்சியா தொன்றற்கும் இன்றியமையாதது. “வைத்தால் பிள்ளையார் வழித்தெறிந்தால் சாணி" “வெல்லத்தில் பிள்ளையார் செய்து அதிலேயே கிள்ளி நைவேத்யஞ் செய்தாற்போல'' என்ற பழமொழிகளை நோக்க விநாயகரைச் சாணியினாலும் வெல்லத்தினாலும் மற்றுஞ் சந் தனம், மஞ்சள், மண் முதலியவைகளாலும் செய்து வணங்கலாமென்று விளங்குகிறது. இத்தகைய எளிய செலவில் வைத்து வணங்கும் கடவுளர் வேறு யாவர்! பாற்கடல் கடையும் போது விநாயகரை வணங்காததால் ஆலகால விஷம் பிறக்க இந்திரன் முதலியோர் கடல் நுரையால் திருவலஞ்சுழியில் பிள்ளையார் செய்து வணங்கினராம், (75-ஆம் பாட்டு); இவ்வெள்ளைப் பிள்ளையார்க்குத் துதிக்கை யாது காரணத்தாலோ வலப் பக்கமாக உளது. இத்தகையவரைச் சிவனும் பார்வதியும் தங்கள் திருமணக் காலங்களிலே வைத்து வணங்காமலில்லை. சிவனும் திரிபுர சங்காரத்தின் போது விநாயகரைத் துதியாததால் தேரின் அச்சு முதலியன முறியப் பின்னர் துதித்துச் சரியானதாக பாட்டு இயம்புகிறது.

81-வது பாட்டால் எங்குச் செல்லினும் யாதொன்றற்கும் விநாயகரை நினைத்தே காரியந் தொடங்குவர் என்பது விளங்குகிறது. முற்காலத்தில் இந்திய வியாபாரிகள் கடற் பிரயாணம் செய்யும்போது புயல், கப்பல் கொள்ளையர் தொல்லைகள் முதலியன ஏற்படாமலிருப்பதற்காகக் கப்பலில் பிள்ளையார் விக்கிரகத்தை எடுத்துச் செல்வது வழக்கமாம். இவர்கட்குத் துன்பம் நேரின் இவ்விக்கிரகத்தைத் தலைகீழாக வைப்பராம். நம் வீட்டிலுங்கூட இங்ஙனமானால் விக்கிரகத்தை நீரில் போடப் பார்க்கிறோம். துன்பம் நேரிடாமல் காப்பாற்றாத கணபதிக்கு இஃதோர் ஏற்ற தண்டனை போலும்! எனவேதான் "கடலிலே வங்க மேறிச் செல்லினும் '' என்றார்.

“பந்துங் களபப் பனிச் செப்பும் " என்ற 25-வது பாட்டு மாதர்கள் தங்களை வந்து தழுவும் கணவரைப் பார்த்து "இதோ தேனிறால் ஒன்றுளது; அதைப் பிடித்து வடித்துத் தருதிர் " என்று கூறுவதற்கு "....... நெய்தலுங் குமுதப்பூவு நெகிழ்ந்த செங்கமலப்போதுங் கைகளு முகமும் வாயுங் கண்களுங் காட்டக் கண்டு கொய்திவை தருதிரென்று கொழுநரைத் தொழுகின்றாரால்." (எழுச். பட. 54) என்ற கம். இரா. செய்யுளை ஏறக்குறைய ஒப்புமை கூறலாம். 97-ஆம் பாட்டிலுள்ள "வானேறு சினையேறி மந்திக் குலங்களால் '' என்பது

"அந்தர நிவந்தசோலை யலர்பசுங் கோட்டிறால் கண்
மந்திக ளுகளுந் தோறுங் கிழிந்து வார்மது நீர் பாய்ந்து
செந்தினை விளைக்குஞ்...'' (விநா. புரா)
என்பதனை யொத்தல் காண்க,

தமிழன்பு :- இவ்வாசிரியர் விநாயக புராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் பயிற்சி மிக்கவராவதோடு வடமொழி, தென்மொழி ஆகியவற்றையும் பலபடப்புகழ்கின்றவர். காமேவு மியலிசை நாடகமெனு முத்தமிழின் கடலை (செய் 5) திணை செந்தமிழ்க் கொளு (9) மேலான வடசொலும் தென் சொலுங் கற்ற மேலோர் (11) மூவகைத் தமிழாட (13) கோதற்ற வடமொழியோ (15) தெய்வத் தமிழ்கொளு (16) வீறுதமிழ் கொண்டு (55) மெய்த்தமிழளித்திடும் (56) செந்தமிழின் வளமைபெறு (70) சிந்தையுருகிப் பைந்தமிழ் நூல் (86) ஆகியவைகளாலறியலாம்.

92-ஆம் பாட்டில் இராமன், சீதை, இலக்குமணன் ஆகியவர்களைப் படைகளோடு தேரில் ஏற்றி வந்து அயோத்தியில் சேர்த்தனர் என்பது விநா. புரா. விஷ்ணுவைப் பற்றிய புராணங்களில் காணப்படாச் செய்தி. புராணங்களிலில்லாத செய்தி தலபுராணங்களில் கூறப்படுவதுண்டு என மச்சபுராணம் பதிப்பாசிரியர் முகவுரையில் கூறியதன்படி தலபுராணம் இதற்குண்டோ என்ற ஐயம் நேருகிறது. வரலாறு தெரியாததாலும் ஒரே பிரதியாதலாலும் ஐயமான விடத்தில் மூலத்திலுள்ளவாறே பதிப்பிக்கப்பட்டுளது. அவ்வையமான வரிகள் கீழ்க்கண்டவாறுமிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

''விண்டேரில் ஏறி இகல் வென்று மாதரசியொடு
மீமையிரு தேரில் நான
வெற்றிமக னும்வீர் கத்திவிட வேமணி
வியன் தேர் இறங்கி மணிநூல்
பண்டேர் வனத்தினில் பணியும்நாள் அப்பேர்
படைத்து ....''

(மீ+மை+ இருதேரில் - மேலேசெல்லும் மேகம் போன்ற பெரிய புட்பக விமானத்தில்; நான வெற்றி மகன் - ஞானத்தையும் எங்குச் செல்லினும் வெற்றியையுமுடைய அனுமான்; அப்பேர்படைத்து - இராமனது பெயரையும் சேர்த்து விநாயகர் பெற்று.) இராமேஸ்வரம் தவிர திருவுசாத்தானத்திலும் இராமர், சுக்கிரீபன், சாம்புவான் ஆகியோர் பணிந்ததாகத் தேவாரம் கூறுகிறது. மற்றும் திருநாளைப் போவார் புங்கூரில் குளஞ்சமைத்ததில் கூலியைப் பகிர்ந்தளித்தனர் விநாயகர் என்பது பெரிய புராணத்தில் காணப்படாதது.

இத்தகை சிறந்த நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியாமலிருப்பது வருந்தத்தக்கது. இருப்பினும் இந்நூலில் 19-வது, 29-வது பாடல்களினின்று சிற்சில குறிப்புக்கள் கிடைக்கின்றன.

இவ்வாசிரியர் வறுமைப் பேயால் வஞ்சிக்கப்பட்டுப் புதுச்செல்வம் தோன்றியார் கண்ணெல்லாம் சென்று இந்திரா, சந்திரா என்று கூறி நின்றவராம். இவரிடம் இவ்விநாயகர் தனது பாதத்தை மறவாதிருக்குமாறு கூறி யாட்கொண்டனராம் (செய். 19). இவ்வாசிரியர்க்கு இரு பிள்ளைகள் பிறந்தனரென்றும் வேதவிநாயகரே குருவாக வந்து தீட்சை புரிந்தாரென்றும் அப்பிள்ளைகட்குச் சுப்பிரமணியன், வேதவிநாயகன் (அல்) இக்கடவுளர்க்குரிய பெயரை வைத்தன ரென்றும் நெஞ்சில் நினைத்தவைகளை யெல்லாம் விநாயகர் கொடுத்தனரென்றும் தாய், தந்தை, குரு, தெய்வம் ஆகியவராய் விளங்கினரென்றும் 29-ஆம் பாட்டு கூறுகிறது.

இவ்வரும்பாத்தை தென் ஆற்காடு மாவட்டத்தில் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள ஓர் சிறிய ஊராகும் எனத் தெரிகிறது. இவ் வட்டத்திலுள்ள ஊர் புள்ளி விவரப்பட்டியல் புத்தகத்தில் (Village Statistics Register) 'அரும்பாத்து' எனக் குறிக்கப் பெற்றுளது. எங்களிடம் உள்ள ஓர் ஓலைச்சுவடியில் இவ்விநாயகர்மீது பாடிய கீர்த்தனத்தில் "அரும்பாத்தி வேதவிநாயகர் '' எனக் குறிக்கப் பட்டுளது. இவைகளை நோக்கின் இவ்வூர் அரும்பாத்தை, அரும்பாத்தி, அரும்பாத்து என்று வழங்கப்பட்டுளதென அறியலாம். இங்கு வேதவிநாயகர் கோயிலொன்றே யுளது என்பது காப்புச் செய்யுளில் தல சிவபிரான், உமை ஆகியவர்மீது பாடல்கள் காணப்படாததால் உய்த்துணரலாம். விநாயகன், வினாயகன் இரண்டையும் பேதமின்றி யாளுவது ஓலைப்பிரதியில் கண்டவுண்மை. இப்பிரதியில் சில பாடங்கள் மூலத்திலுள்ளவாறே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

இப்பிள்ளைத்தமிழ் மூவருடக் காடலாக்கு 2677 - ஆம் எண்ணினின்று வெளியிடப்பெறுகிறது. இது தென்னாற்காடு மாவட்டம், குமரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. K. ஷண்முகம் அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும்.
__________________________

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
1. காப்புப் பருவம்

திருமால்
1. மணிபூத்த பொற்குவட் டிமையா சலத்திடை
      வளர்ந்துவெண் ணிலவொழுகுமால்
வடகயிலை வெற்பிலுறை கடகளிற் றொடுபுணர்
      மடப்பிடி பயந்தமக்கோ
வணிபூத்து வருமரும் பாத்தைபுரி தன்னிலுறை
      யைங்கரனை யுலகுக்கெலா
மாதிகண பதியென்னும் வேதகண பதியையென
      தையனை மிகப்புரக்க
கணிபூத்த தண்டுழாய் மார்பகத் தொருமணி
      கறங்குதெண் டிரைமுகட்டிற்
கதிரா யிரங்கோடி யுதயஞ் செய்தாலெனக்
      காட்சிமீ மிசைகிளைப்பப்
பணிபூத் தெழுந்திடங் கொண்டுமான் மதமொடு
      படீரம் புனைந்ததெய்வப்
பங்கயச் செல்வியிரு கொங்கைவரை யிற்குலவு
      பச்சைப் பசுங்கொண்டலே.       (1)

சிவபெருமான்
2. ஆடக மாமலை மூரிவிற் சேர்த்தவ
      ராரண கோடியை நேர்பெறக் கோத்தவ
ராலடி மாதவர் காதலைத் தீர்த்தவ
      ராரமு தூற லருமதிக் கீற்றவர்
நாடிய பாணியை வேணியிற் காத்தவர்
      நாவல னேவிய வேலையைப் பார்த்தவர்
நாயகி யார்முலை மார்பினிற் பூத்தவர்
      ஞான சபாபதி யார்தமைப் போற்றுதும்
பாடிய வேத வியாதன் முற்சாத்திய
      பாரத காதையை மாமலைக் கோட்டொரு
பாரிச மேல்வகை யேபெறத் தீட்டிய
      பாலனை நாலுகை யாளனைத் தாக்கனை
வீடருள் சீலனை யோர்முனைக் கோட்டனை
      வீரனை வாருதி போல்மத்த தீர்த்தனை
மேதகு மூடிக வாகனக் கூத்தனை
      வேத வினாயக தேவனைக் காக்கவே.       (2)

உமை
3. தோயா தெவையுந் தோய்ந்தபரஞ்
      சுடர்வா னவன்பூ ணிளமதியைச்
சூடா மலர்க்கே தகையெந்தை
      தொடுமோ வென்னச் சடைக்காட்டுப்
போயா தரித்தாங் கறிந்துவரும்
      புழைக்கை யானை யரும்பாத்தை
புரிவாழ் வேத வினாயகனைப்
      புத்தேள் மணியை நனிகாக்கத்
தாயா யகிலப் பரப்பனைத்துஞ்
      சலியா தளித்து மெண்ணான்கு
தருமந் தழைக்க வுயிர்தழைக்க
      தழைத்துக் கடவு ளைந்தொழிற்கு
மோயா முதலாய்த் தனுவாதி
      யுதிக்க வொடுக்க வலிபடைத்து
மொன்றா முதலோ டொன்றாகி
      யுறையும் பச்சைப் பசுங்கொடியே.       (3)

திருமகள்
4. தருமக ளைத்துணை யொருமக ளாக்கித்
      தவளசரோ ருகம்வாழ்
தருமக ளைச்சித் தசன்மனை யகம்வாழ்
      தருமகளொடு சேர்த்துத்
திருமகிழ் தருமரு மகளி ரெனத்துணை
      செய்துலகத் தினுளோர்
சிறுமை களைத்தவிர் பெருமை களைத்தரு
      திருமகளைத் தொழுவா
மொருமக ளைப்புனை துடையி லிருத்தி
      யசத்து முகத்துமகட்
குறுதுணை யைப்பொரு தருதுணை மகிழ
      உவந்தொரு குறமகளை
பொருமக பதிமக ளுடனணி வைத்த
      புராணனை யுலகிலருட்
போதனை வேத கணேசனை யன்பு
      புரிந்து புரந்திடவே.       (4)


சரசுவதி.
5. மாமேவு மகமேரு முகட்டினெடும் பசும்பொன்
      மழைகிடந்தா லென்னமணி வதனபடாம் புனைந்து
பூமேவு மெய்ஞ்ஞான மதம்பொழியும் வேத
      போதகத்தை யரும்பாத்தை புரிமுதலைப் புரக்க
காமேவு மியலிசைநா டகமெனுமுத் தமிழின்
      கடலைநிலை கண்டெவற்குங் கருத்தின்மதி பொருத்தி
தேமேவு முதுவானத் தொளியி னொளிபரந்த
      செங்கமலத் தவன்புணரும் வெண்கமலக் கொடியே       (5)

பிரமன்
6. வளமேவு திரைகடலி னாலந் தளிர்க்குளே
      மழைபோலு மினிது துயில் மாலுந்தி மட்டிலே
தளமேவு நளினமலர் வாசம் பொறுத்துவாழ்
      தருமாதி சதுமுகனை மேலன் பிருத்துவாம்
அளியூறு கணபதியை ஞானம் படைத்துளோ
      ரகலாத கணபதியை மானம் பெருக்குநீள்
ஒளியூறு கணபதியை வேதந் துதிக்கவா
      ழொருவேத கணபதியை நாளும் புரக்கவே.       (6)

இந்திரன்
7. மலர்நெடும் பாற்கடலி னுறைதருந் தூக்கமலி
      மாநிறமா முகிலி னாகம் படைத்துநீள்
வலியொடுங் காக்களிறு முனையொடுங் காப்படையு
      மாமழை வாகனமும் வாழ்வுஞ் செழிக்கவே
அலர்மணந் தேக்கியபொன் மலர்நறுந் தோப்பிலுறை
      யாயிர யோசனை விசாலம் பொறுத்துவா
ழமரர்தம் பார்த்திபனை யகிலமுங் காப்பவனை
      யாதர வானமன மேகொண் டிருத்துவாம்
பலர்தருந் தோத்திரனை மலைபொருங் காத்திரனை
      நாரணி வாரணி பொன்னாகம் படைத்துநீள்
பரிமணம் பூத்திலகு துணைநெடுங் கோட்டுமுலை
      பீரிடு பாலமுத பானந் திளைக்குமோர்
விலகருந் தாட்டிகளை யளியொடுங் காப்பவரை
      மூடிக வாகனனை யாருந் துதிக்கவாழ்
விரிதடம் பூத்துநிறை தருமரும் பாத்தைபுரி
      வேதவி நாயகனை நாளும் புரக்கவே.       (7)

சத்தமாதர்கள்
8. கோகன வாசமலர் மனையிற் செழித்தவள்
      கோலமக மேருகிரி வளையப் பிடித்தவள்
கோரமுள சூரன்முடி சிதறத் துணித்தவள்
      கோதிலொளி தாவுமுரு மணியைத் தரித்தவள்
ஆகவலி யாலுமுது புவியைப் பெயர்த்தவ
      ளாடல்புரி மாமலைக ளமரப் பணித்தவள்
ஆகாய மீதில்விதி கலையைப் பறித்தவ
      ளானவெழு மாதர்திரு வடியைப் பழிச்சுதும்
வாகுபெறு சோதிமணி யரவப் புயத்தனை
      மாசகல வீடுதவு கருணைக் கருத்தனை
மார்பில்மணி நூபுர மதாணிபொற் பதத்தனை
      வாசமல ராமிதழி புனைமத் தகத்தனை
ஏகமயில் வாகனன்முன் வருவிக்கிர மத்தனை
      யேழையடி யேன்மொழியி லருள்வைத்த சித்தனை
யீசனொரு பாகமரு மைபெற்ற புத்திரனை
      யேதமகல் வேதகண பதியைப் புரக்கவே.       (8)

துர்க்கை
9. கணையைந் தினாலாதி சிவனையொரு படியாதி
      கரிதாக வெய்தமாரன்
கையின்மலர் பாதமலர் மீதுமணு காதுவளர்
      கன்னியைத் தன்னிகரிலாத்
துணைவெங் கருங்கோட்டு மயிடங் கவிழ்த்துச்
      சுரரதிபர் கரங்குவிப்ப
துங்கவலி மலிவீர சிங்கமிசை வருமாதி
      சுந்தரியை யஞ்சலிப்பாம்
அணைகொண்ட நதியும்வான் மதியும்வா ளரவுமணி
      யத்தரைப் போலும்வதனத்
தணியுமதி நதியும்வெண் கோட்டிளம் பிறையுநல்
      லரவமுந் திகழுமணியைத்
திணைசெந்த மிழ்க்கொளு மரும்பாத்தை புரியிலுறை
      தெய்வங்கள் மணவாளனைச்
சீதகண பதியையணி வேதகண பதியையனு
      தினமும் புரக்கவென்றே.       (9)

முப்பத்துமுக்கோடி தேவர்
10. வேதைபெரு கியவறுமை வாதமொடு கொலைவலிகள்
      மேல்வகைப் பிணிகளிவை திக்கெட்டி லோடவும்
வேளினிடர் கொடியதொரு நாளினிட ரடறவரு
      கோளினிடர் முதலிடர்கள் பக்கிட்டு மாறவும்
யாதொருவர் நினையுமொரு காரியமு நிறைவுற
      விராசசபை யினில்மணி விளக்கொத்து வாழவு
மேதமுறு மிருவினையு மோதிமுது பலவுயிர்க
      ளியாவுமுறு பரகதி நிலத்துக் குளேறவும்
வாதமிரு பரசமைய பேதமுறு துறைபலவு
      மாறியொரு சிவசமைய வைப்புக் குளாகவும்
வாழுமொரு தடவிகட வீரகெச முகனைநெடு
      மாயன்மரு மகனைவெகு வெற்றிப் பிரதாபனை
யாதிகண பதியைமனு நீதகண பதியையுயர்
      வேதகண பதியானை வனப்புக்கோர் காவலனை
யாறிருவர் பதினொருவர் நாலிருவ ரிருவரென
      யாகவகை பெறுமமரர் முப்பத்து மூவரே.       (10)

அவையடக்கம்
11. மண்டலம் புரையிருட் படலம் கிழித்தெழும்
      வயங்கொளிப் பரிதிநிகராம்
வளர்கதிர் பரப்புமுழு மணிபல பொதிந்தநெடு
      வாருதி நீராடுவா
னண்டரிய வன்புலத் தேழுசிறு கற்கொண்ட
      லங்குமொலி வெண்டிரையின்வா
யங்கைதனி லேகொண்டு மன்பதை யளிக்குமாங்
      கதனைக் கடுக்குமன்றோ
பண்டைமறை யொருநாலு மாறுநூ லும்பெருகு
      பனுவனா லேழுமெண்ணென்
பலகலைக் கியானமுந் தலையிலே யோதிப்
      படித்தடி வழுத்தமேவும்
தெண்டிரைக் கடலுலகின் மேலான வடசொலுந்
      தென்சொலுங் கற்றமேலோர்
செஞ்சொலுண் டிடுவேத குஞ்சரக் கன்றினிரு
      செஞ்செவிக் கென்கவிதையே.       (11)
______________________________

2. செங்கீரைப்பருவம்

12. சுகவாரி சக்கரத் துமையம்மை குங்குமத்
      தோயநீ ராட்டியம்பொற்
றுகில்கொண்டு நீவிவண் காப்புமிட் டாரந்
      துலக்கிவெண் ணீறுசாத்திப்
பகல்போலு முழுமணிச் சுட்டி யொடுபட்டம்
      பரித்துநா ணரைவரித்துப்
பதநூ புரம்பூட்டி மிதமூறு கும்பப்
      படாமுலையி னமுதமூட்டித்
தகைமேய தொட்டிலின் வளர்த்திடப் பூண்மணித்
      தரளத்து நிலவைவீசித்
தாய்விழிச் சேயரிக் காவியை மலர்த்தித்
      தயங்குமெழில் வளரவளருஞ்
செகராசர் தொழுமரும் பாத்தைபுரி வாழ்மதலை
      செங்கீரை யாடியருளே
செயமே யளிக்கும்வே தவினா யகக்கடவுள்
      செங்கீரை யாடியருளே.       (1)

13. பூவையயி ராணியொடு கேள்வன்விளை யாடவன்
      புவிவளமை யாடவீணைப்
புண்ணியன் கயிலைவரை நண்ணியுரை யாடவும்
      பொதியன்முன் மன்றாடநீள்
காவிரி பசும்பொற் கடத்திலுற வாடவது
      கைக்கொண்டு நடமாடுநாள்
காகங் கவிழ்ந்தாடு நதிகொண்டு காழிவாழ்
      கடவுளர்கள் பூசையாட
மூவகைத் தமிழாட வண்காக்கை யாடல்போய்
      முன்காக்கை யாடல்காட்டி
முறுக்காடு குட்டவன் முடிகாட்டி நகையாட்டி
      முன்புகூத் தாடுமுனிவன்
சேவைகொண் டாடிய வரும்பாத்தை புரியண்ணல்
      செங்கீரை யாடியருளே
செயமே யளிக்கும்வே தவினா யகக்கடவுள்
      செங்கீரை யாடியருளே.       (2)

14. குன்றாடு திசையானை மதமாடு நனைகவுட்
      குழிகண்மே டாடவண்ட
கோளம் புதைந்துசெந் நிறமாட நதிகளொடு
      குளிராழி யன்றாடிடக்
கன்றாடு கையன்னை யிளையாளை யுன்னிக்
      களிப்பாட வுடனுதித்தோன்
கவலைசிறி தாடவிண்ண ரமகளி ராடுபூங்
      கற்பகா டவியின்மகவா
னின்றாடல் பெற்றே னெனச்செருக் காடவா
      யிரமுடிச் சேடனாட
விருநிலந் துகளாட வடிபெயர்த் தொருவா
      லெடுத்தவுண ரேக்கமாடச்
சென்றாடு மூடிகத் தேறிவிளை யாடுவோன்
      செங்கீரை யாடியருளே
செயமே யளிக்கும்வே தவினா யகக்கடவுள்
      செங்கீரை யாடியருளே.       (3)

15. நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
      நல்லமத் திமைவைகரி
நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
      நான்மறை யெழுத்தினுக்குங்
கோதற்ற வடமொழியோ டொன்பதிற் றிருவகைக்
      குறியெழுத் துக்குமப்பாற்
குறைவிலோங் காரமா நிறையெழுத் துக்குமுன்
      கொளுமெழுத் தாளிமேலாம்
போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
      புந்திக்கு மெட்டாததோர்
புண்ணிய வெளிக்குளே நண்ணரிய வொருபரம்
      பொருளான தெய்வவொளியே
தீதற்ற விசைகொளு மரும்பாத்தை புரிமுதல்வ
      செங்கீரை யாடியருளே
செயமே யளிக்கும்வே தவினா யகக்கடவுள்
      செங்கீரை யாடியருளே.       (4)

16. சைவத் திறத்தினிற் சமையதே சிகரெனத்
      தாரணி வழுத்துஞான
சம்பந்தர் சுந்தரரோ டப்பரிப் பெருமூவர்
      தலமதை மிதிப்பவஞ்சி
கௌவைக் கடும்புனற் காவேரி சூழாதி
      கடவூரி லெய்திடாமற்
கால்பெயர்த் திடுபோது நீலமணி கொண்டமைக்
      கண்டனிருள் கொண்டுவலிசால்
மைவைத்த வரையென்ன வோரானை யெனவந்து
      வழியேயொதுக் கியவர்தாம்
வரவரக் கோயிலுட் புகுதல்கண் டொருகள்ள
      வாரண மெனப்புகழ்ந்த
தெய்வத் தமிழ்க்கொளு மரும்பாத்தை புரிமுதல்வ
      செங்கீரை யாடியருளே
செயமே யளிக்கும்வே தவினா யகக்கடவுள்
      செங்கீரை யாடியருளே.       (5)

வேறு
17. துங்க முகத்தணி பட்டமும் வட்டச்
      சுட்டியு மெழிலாடச்
சோதி நகைச்சிறு துவரொளி யாடத்
      தோளணி வளையாட
தங்க மணிச்சிறு கிண்கிணி யாடத்
      தனிமணி வடமாடத்
தண்டை சிலம்பு கலந்தொலி யாடத்
      தக்ககை வளையாட
செங்கன கக்குழை யுங்குழை யாடிய
      செவியு மசைந்தாடச்
சிவபர னிருவிழி பாவிட விரவிய
      செங்கதிர் வெண்கதிரா
யங்கன கத்திரு மேனியு மாடிட
      வாடுக செங்கீரை
யாதி மனோகரன் வேத வினாயக
      னாடுக செங்கீரை.       (6)

18. இந்திரன் வந்து வணங்கு கிறானிமை
      யோர்கள் வணங்குகிறார்
இட்டத் தயனரி குட்டிக் கொண்டல
      ரிட்டுப் பரவுகிறார்
கந்திரு வப்புல வோர்மலர் தூவி
      காதலி னொடுதோப்புக்
கண்டமு மிட்டிசை யாடு கிறார்வர
      கன்னிய ராடுகிறார்
பந்தியின் மேல்கீ ழுலகினர் யாரும்
      பலபல வூழியமே
பண்ணு கிறாரென நண்ணு துவாரப்
      பாலக ரோலமெடுத்
தந்தர முரைசெய் கடைத்தலை யுள்ளவ
      னாடுக செங்கீரை
யாதி மனோகரன் வேத வினாயக
      னாடுக செங்கீரை.       (7)

19. மாவடு நேர்விழி மாமகள் மேவிய
      சந்திரா இந்திராவிவ்
வார்கடல் சூழுல கோருயி ராகிய
      பண்பா நண்பாமுன்
மூவெழு பேரினு மேதகு தியாக
      வசந்தா கந்தாசொல்
மூதறி வாளர் சிகாமணி யேயென
      நன்றாய் நின்றோதி
யீவறி யாவறி வீனரை நாடி
      யிரந்தே நொந்தேனை
யீரடி மீது தியானம் விடாதிரு
      வென்றாய் குன்றாத
தேவ குணாகர மூடிக வாகன
      செங்கோ செங்கீரை
சீத நிலாவணி வேத வினாயக
      செங்கோ செங்கீரை.       (8)

20. ஆர்கடல் மேலொரு நாகணை மீதி
      லுறங்கா நின்றோனு
மாடளி பாடிய வேடவிழ் தாமரை
      கொண்டாள் கின்றோனு
மேர்கொள்விண் ணோர்கள் சபாபதி யாகி
      யிருந்தாளுங் கோனு
மேறிய வாழ்வினு மேதகு வாழ்வரு
      ளெந்தாய் சந்தாரும்
வார்கெழு மாமுலை மாதுமை யாள்புணர்
      கின்றோன் முன்றோயு
மார்பினி லேறி யுலாவரு சேவடி
      மைந்தா நந்தாத
சீர்கெழு மாமயில் வீர சகோதர
      செங்கோ செங்கீரை
சீத நிலாவணி வேத வினாயக
      செங்கோ செங்கீரை.       (9)
21. மாறடு தோளிணை மாமலை மாதிர
      மெண்பா லுந்தாவ
வாசக கோர மகாதொனி மேக
      பதம்போய் விண்டோட
வேறிய தோர்சின மூறிய நீள்விழி
      மின்போல் முன்பாய
வேதிலர் வேதைகள் சாடிட நாடி
      யெழுங்கோ பங்கால
வூறொலி சூழ்வட வானல் வேணி
      யலங்கா ரங்காண
வோடு மகாசல நாம கணேசன்
      முரண்டோள் கொண்டேறுந்
தேறிய வீர வகோர மதாசல
      செங்கோ செங்கீரை
சீத நிலாவணி வேத வினாயக
      செங்கோ செங்கீரை. (10)
----------------------

3. தாலப்பருவம்

22. பளிக்கு மணிமேனி வலத்தலத்திற்
      பவளக் கொடியன் னவர்குழலிற்
பாடிச் சிறந்த வரியளியோ
      டூடிப் பறந்த பெடையளிதா
னொளிக்கு மலர்ப்பூந் தருவனத்தி
      லுடனா டியமா மடநல்லா
ளோங்கி யடித்த பசுந்துகள்போ
      யுறைப்ப நறைத்தே னுமிழ்ந்துபரி
மளிக்கும் பொலன்கொம் பசைத்திடலால்
      மருண்டு வெருண்டு பண்டிருந்த
மலர்ப்பூங் குழற்கா னகத்தேறி
      வரிவாய்ச் சுரும்பை மணந்துசுக
மளிக்கு மரும்பாத் தைப்பதிவா
      ழமுதே தாலோ தாலேலோ
வருள்சேர் வேத வினாயகனா
      மரசே தாலோ தாலேலோ.       (1)

23. மூளும் பிறவித் தடங்கடல்வாய்
      மோகச் சுறவா லெறியுண்டு
முறையே துக்க சுகங்களெனு
      மூரி வலையா லலைப்புண்டு
நாளுங் கரைகண் டறியாது
      நலியு முயிர்கள் கரையேற
நளினத் திருத்தாட் புணைகாட்டி
      நன்மந் திரத்தாற் பிடிவித்து
நீளும் பரவைத் தடங்காதி
      னெடுங்கா லீட்டி யினிப்பிறவா
நெறியே காட்டி முத்தியெனு
      நிலத்தி லேற்றிக் கருணைபொழிந்
தாளு மரும்பாத் தைப்பதிவா
      ழமுதே தாலோ தாலேலோ
வருள்சேர் வேத வினாயகனா
      மரசே தாலோ தாலேலோ.       (2)

24. எடுக்குந் தனிவெள் ளே றுடைய
      னெயின்மூன் றட நாட் சகடினிலொன்
றீரா றாகிப் பிறிதொன்று
      மீரெட் டாகி யிகலாகத்
தொடுக்குங் கணைபத் துருவாகி
      நாணும் பலமா முகமாகி
தூக்குஞ் சிலையா யிரத்தெட்டாய்த்
      துரங்க நாலு முகமாகித்
தடுக்கும் பொழுது முன்னருளாற்
      றான்சே வகனா யெதிர்நகைத்துத்
தரியா ருயிருண் டிடலாலே
      தலைவன் றனக்குந் தலைவனென்றே
யடுக்கு மரும்பாத் தைப்பதிவா
      ழமுதே தாலோ தாலேலோ
வருள்சேர் வேத வினாயகனா
      மரசே தாலோ தாலேலோ.       (3)

25. பந்துங் களபப் பனிச்செப்பும்
      பதும முகையுங் களியானைப்
பணைவெண் மருப்பும் புறங்கொடுப்ப
      பணைத்துப் பருகித் திலமணிந்து
சந்தங் கமழு முகிழ்முலையார்
      ஆடல் பயிலு மேனிலைமேற்
றண்ணங் கதிர்சேர் வெண்மதியின்
      றகுமா மறுவை யறியாமல்
வந்து தழுவுங் கொழுநரைத்தாள்
      வணங்கி யிதுதே னிறாலெடுத்து
வடித்துத் தருதி ரெனத்தொழலு
      மைந்தர் மகிழ்கூர்ந் தினிதாடு
மந்தி வரும்பாத் தைப்பதிவா
      முமுதே தாலோ தாலேலோ
வருள்சேர் வேத வினாயகனா
      மரசே தாலோ தாலேலோ.       (4)

26. கயலே கணையே கடல்விடமே
      காலன் வேலே கருவிளையே
காமன் கணையே யென்றிவற்றைக்
      கடிந்த தடங்கண் மடநல்லார்
மயலே கொழுநர் பிழைக்காக
      வாங்கி யெறிந்த மணிப்பணிகள்
மைந்தர் சிறுதே ராழிபடர்
      வழியைத் தடுக்க மேனிலையிற்
புயலே வெளிமேற் கொடிநிரைகள்
      கதிரோ னாழி வழிதடுக்கப்
புனைவீ திகளின் முழவொலிக்குப்
      பொதும்பர் தோறு மயில்களிக்கு
மயலே யரும்பாத் தைப்பதிவா
      முமுதே தாலோ தாலேலோ
வருள்சேர் வேத வினாயகனா
      மரசே தாலோ தாலேலோ.       (5)

27. வீழி யிடைத்திரு மால்பணி யத்தனி
      மேருவரைச் சிலையான்
வீறு பெறச்சுட ராழி யளித்ததை
      வீசியிடக் கடிதே
பாழி யுடைக்கனி வாயி லடக்கிய
      பான்மை குறித்துடனே
பாணி வளைத்துடல் கோணி நடித்தது
      பார்வை யினிற்குறியா
வாழி நகைச்சிறு மூரல் விளைத்திட
      மானில முற்றதனால்
மாய னதைக்கொடு போக வளித்த
      மகாபலி விக்கிரமனே
தாழி வயிற்றொரு வேழ முகத்தவ
      தாலோ தாலேலோ
தாதை முனோர்பணி வேத வினாயக
      தாலோ தாலேலோ       (6)

28. வந்த கருங்குழல் வல்லி பொருட்டு
      வலாரியனுப் பியநாண்
மண்டு கொடுங்கலி கொண்டு கலங்குபு
      வருடமோ ரேழரையுஞ்
சிந்தை தளர்ந்து மெலிந்த நளன்பல
      தேசமெலா முலவித்
திருநள் ளாறது தனில்விள் ளாவகை
      சேவித் தருகுறவே
கந்த மிகும்பல கனிமல ராதிகள்
      கைக்கொடு நளகூபக்
கணபதி யென்றடி பரவிட வரமொடு
      காசினி யுந்திருவுந்
தந்தரு ளுந்தனி யைந்து கரத்தவ
      தாலோ தாலேலோ
தாதை முனோர்பணி வேத வினாயக
      தாலோ தாலேலோ.       (7)

29. அன்பு செலுத்திய நண்பின வர்க்கரு
      ளற்புத முண்மையினா
லண்டிய தம்பி நெடும்பெய ராற்றுணை
      யாகிய நின்பெயரான்
முன்பொடு பின்பு கொடுத்திரு மைந்தரை
      முற்றும் வளர்க்கையினால்
மூதறி வாலுயர் தேசிக னென்னவு
      முன்னுற வந்தமையா
லின்ப முறும்படி நெஞ்சி னினைத்தமை
      யாவு மளிக்கையினா
லிருமுது குரவர்கள் குருவொடு தெய்வ
      மெனத்துணை யாகியுமுன்
றன்பத மேபணி யச்செயும் வித்தக
      தாலோ தாலேலோ
தாதை முனோர்பணி வேத வினாயக
      தாலோ தாலேலோ.       (8)

30. பேதமை மாறிய மாதுமை யாளருள்
      பேறே போரேறே
பேணிய பேர்குல மாமணி போல்வரு
      நேயர் மாகாயா
வாதியு மாகி யனாதியு மாகிய
      கோனே மேலோனே
யாணவ வேரறு மாதவ ரோதிய
      தாளா சீராளா
பூத பசாச விமோசன காரண
      வீரா வாகாரா
பூதல பாதல மீதல வாணர்சொல்
      வாழ்வே மாதேவே
தாத விழ்மாலை நிலாவிய நீள்புய
      தாலோ தாலேலோ
தாதை முனோர்பணி வேத வினாயக
      தாலோ தாலேலோ.       (9)

31. கொத்து மலர்க்குழ லம்மனை கைம்மலர்
      கொட்டி யழைத்திடவுங்
குந்தி யெழுந்த பதங்கள் சதங்கை
      குலுங்கு சிலம்பிரையத்
தொத்தணி முத்தொடு முத்து நகைக்குளிர்
      சோதி நிலாவிசிறத்
தொந்தி யொடுஞ்சிறு பண்டி யசைந்திடு
      தொங்கல் புறஞ்சுழலக்
கைத்துணை வைத்து மெடுத்து மடிக்கடி
      காலொடு கால்விலக்க
காலை யிளங்கதிர் போலொளி பொங்கிய
      கதிர்முக மெதிர்மலரத்
தத்தடி யிட்டு வருஞ்சிறு மதலாய்
      தாலோ தாலேலோ
தாதை முனோர்பணி வேத வினாயக
      தாலோ தாலேலோ.       (10)
________________________

4. சப்பாணிப் பருவம்

32. கொத்துவிரி தலையுரக நெளியத் தடங்கடற்
      குட்டமள றிட்டுமறுக்க
குடுமிமக மேருவரை கிடுகிடென மூதண்ட
      கூடங் கலங்கிவெருவத்
துத்திமுடி யரவமோ ரெட்டுமுட் டாடித்
      துடிப்புற முடக்கெயிற்றுச்
சூரன் பகீரிடச் சந்திர சூரியர்கள்
      செந்தூளிபட நீடுமண்டப்
பித்திபொதி ரெறியநிரு தப்படை நடுங்கியவர்
      பேருயிர்க் கொட்டிநிற்ப
பெருவரிச் சிறைவிரித் தாடுங் கலாபப்பிர
      சண்டமயின் மீதிலேறுஞ்
சத்திதரன் முன்வரு மரும்பாத்தை புரிமுதல்வ
      சப்பாணி கொட்டியருளே
தவராச ரோதும்வே தவினா யகக்கடவுள்
      சப்பாணி கொட்டியருளே.       (1)

33. பனிகொண்ட திங்களங் கண்ணிபுனை யொண்ணிறப்
      பவளவே ணியனொருக்காற்
பகல்வேளை யளவிலிவ் வுலகேழு முலவிவரு
      பரிசுளோர் பெறுவரிந்தக்
கனியென்ற போதுளங் கனிகின்ற வேலவன்
      கலபமயின் மீதிலேறிக்
கந்திரு வரம்பெருக வலமாக வருமுனங்
      கருதினா லுன்னையல்லா
லினியெந்த வுலகெந்த வுயிரென்று சுற்றியர்
      னெந்தையே முந்தினேனா
லீங்கரு ளெனக்கடவுண் மாங்கனியை வாங்கியத
      னின்சுவை சுவைக்கநன்றாய்த்
தனிகொண்ட கைக்கொண் டரும்பாத்தை புரியரச
      சப்பாணி கொட்டியருளே
தவராச ரேர்தும்வே தவினா யகக்கடவுள்
      சப்பாணி கொட்டியருளே.       (2)

34. மாமறைகள் பலவுந் தொகுத்துப் பகுத்தவை
      வகுத்துவழி கண்டமுன்னூன்
மாதவரின் மாதவன் வியாதமுனி யைந்தா
      மறைப்பொருளை யாருமறிவான்
றேமருவும் வாயால் விதித்தநா ளாடகச்
      சிகரமக மேருவினிலோர்
திண்கோடு பொலியமுனம் வெண்கோடு கொண்டது
      திறம்பாம லடிமுடிகள்கண்
டாமியற் படவட மொழிக்கவித் தொகையிலக்
      கத்துக்கு மேலுமிருபத்
தையா யிரத்தினையு மைதீரெழுத் தின்மணி
      யாகப் பதித்தசெங்கைத்
தாமரை யினாயரும் பாத்தைபுரி வருகளிறு
      சப்பாணி கொட்டியருளே
தவராச ரோதும்வே தவினா யகக்கடவுள்
      சப்பாணி கொட்டியருளே.       (3)

35. தூவுந் தரங்கக் குளத்திற் கராவொன்று
      துடியடி பிடித்திழுப்பச்
சொல்லாதி மூலத்து முதல்வனே யென்றொரு
      துதிக்கையை யெடுத்தரற்றிக்
காவென்று கூவுங் கடாக்களிற் றொலிகண்டு
      கமலையுங் கைநெரிப்பக்
கட்செவிக் கடவுளுந் தலைபனிப் பப்பொருங்
      கருடத் துரங்கமேறிப்
போவென்று காலா லிடுக்கியப் பொய்கை
      புதுப்புனல் குடைந்தகரியின்
பொருதுய ரகற்றுமக் கருமுகிலின் மருகவெப்
      புவனமுஞ் சுபமெமக்கே
தாவென்று தொழுதிடு மரும்பாத்தை புரியதிப
      சப்பாணி கொட்டியருளே
தவராச ரோதும்வே தவினா யகக்கடவுள்
      சப்பாணி கொட்டியருளே.       (4)

36. அண்டாதி யுலகுமெவ் வுலகுதொறு நால்வகைய
      தாம்பிறப்பும் பிறப்பி
லாமெழு வகைத்தோற்ற முந்தோற்ற மாறுபா
      டாமளப் பருமுயிரெலாங்
தண்டாமை யெண்பத்து நாலிலக் கம்யோனி
      தனில்வேறு வேறுகாட்டித்
தனுகரண புவனபோ கங்களை யளித்தாண்ட
      தனிமுதல்வ னீதன்றியே
பண்டாய மூவினை யினால்வரும் இடையூறு
      பற்றித் தொடர்ந்திடாமற்
பாதுகாத் திடவுதவ வௌவகை செலுத்தியிப்
      பார்தனின் மிக்கபுகழ்சேர்
தண்டாம மணிப்புய வரும்பாத்தை புரிமுதல்வ
      சப்பாணி கொட்டியருளே
தவராச ரோதும்வே தவினா யகக்கடவுள்
      சப்பாணி கொட்டியருளே.      (5)

வேறு
37. நந்தணி மாலய னிந்திரன் வானவர்
      நச்சரவத் தரச
னனிபல முனிவ ரனுதின முந்தொழு
      நற்றுதி பெற்றவனே
அந்தி நிறத்தர னாருமை யம்மை
      யளித்த மதக்களிறே
யங்குச பாசமு வந்தணி நால்வா
      யற்புத கற்பகமே
சிந்தையி லெண்ணி வணங்குநல் லடியவர்
      சித்த நினைத்தபடி
செயமே பெறவர மிகவே யுதவிய
      சித்தி படைத்தவனே
கொந்தித ழித்தொடை சந்தத மணிமணி
      கொட்டுக சப்பாணி
கோதறு சீர்புனை வேத வினாயக
      கொட்டுக சப்பாணி.       (6)

38. தாமரை மாமியு மாமரு மானம
      தாணிகள் பலகொட்டத்
தான முலாவிய வானவர் கோனுறு
      தாருவின் மலர்கொட்டத்
தேமலர் சூடிய வானுல கோர்செய
      பேரிகை யெதிர்கொட்டத்
தீய கயாசுரன் மாமனை யாரிரு
      சேல்விழி புனல்கொட்டப்
பூமி யுளோரிள நீர்கனி மோதக
      போளிகை மலைகொட்டப்
பூவைய ராடல்கள் பாடல் களாலிசை
      பூண்முழ வொலிகொட்டக்
கோமள மேனி மனோன்மணி பால
      கொட்டுக சப்பாணி
கோதறு சீர்புனை வேத வினாயக
      கொட்டுக சப்பாணி.       (7)

39. பெட்டக மொத்த மதக்கரி நெற்றி
      பிளந்துபன் மணிகொட்டப்
பேரு முனைப்படை வீர ரடிப்படு
      பிறையெயி றுகள்கொட்டத்
தொட்டெறி யத்திசை யெட்டினும் வாசிகள்
      சொரிகுரு திகள்கொட்டத்
தோதக மாடிய பூத கணாதிபர்
      தோளொடு தோள்கொட்டக்
கட்டற விட்ட கயாசுரன் மூசு
      களத்தி னிளைப்பகலக்
காளி யொடும்பல கூளிக ளுண்டவை
      கையொடு கைகொட்டக்
கொட்ட மடக்கிய சிவகண நாயக
      கொட்டுக சப்பாணி
கோதறு சீர்புனை வேத வினாயக
      கொட்டுக சப்பாணி.       (8)

40. பனிப்பிறை சூடிய வார்சடை யண்ணல்
      படைத்திடும் வாகனமும்
பங்கய லோசன புங்கவ னேவல்
      பரித்திடும் வாகனமும்
தனிக்கம லாசன மேவிய தந்தை
      தகைந்திடும் வாகனமும்
தண்மலர் வெட்சியி னொண்மல ரைப்புனை
      சண்முகன் வாகனமும்
இனிப்படர் நீங்கிய விரவிகள் சந்திர
      ரேறிய வாகனமு
மேனை நெடுந்திசை வானவர் வாகன
      மும்பிற கேதிரியக்
குனித்து முனேசெலு மூடிக வாகன
      கொட்டுக சப்பாணி
கோதறு சீர்புனை வேத வினாயக
      கொட்டுக சப்பாணி.       (9)

41. வாருதி பாலமு தேபெற நாடிய
      மந்தர வெற்பேணி
வானவர் தானவர் மாலய னாதியர்
      வண்பெல னிற்பேணி
யாரெழில் வாசுகி யேகயி றாக
      விழுக்க வதிற்சேணி
னாருட னியாவரு மாள விடத்தை
      யளிக்க மழுபாணி
காரணர் தாமுண வேயதை வீறு
      மிடற்றமை கட்டாணி
காரணி தானரு ளுத்தம பால
      கரத்தி லெழுத்தாணி
கூரிய கோடென வேநினை சேவக
      கொட்டுக சப்பாணி
கோதறு சீர்புனை வேத வினாயக
      கொட்டுக சப்பாணி       (10)
_______________________

5. முத்தப்பருவம்

42. குலவா வரிவண்ட லம்புகொன்றைக்
      கோதைப் பெருமான் கோதையொடுங்
குரைவெள் ளருவிக் கயிலையின்கீழ்
      குளிர்பூம் புனத்தோர் மண்டபத்தி
னிலகோங் காரத் தினிற்பிடியுங்
      களிறு மெனவந் தணைந்தளிப்ப
விளஞா யிறுபோ லுமையிடைமே
      லேற்றங் குகந்தே மாற்றரிய
வுலவா வேதா கமக்கடலி
      னூறிக் கிளர்ந்த தேறலென
வொழுகு மமுதக் கனிவாயென்
      றொவ்வா தலர்ந்த செவ்வாம்பன்
மலரா லரும்பாத் தைப்பதிவாழ்
      மகவே முத்தந் தருகவே
வாழ்வே வேத வினாயகமா
      மணியே முத்தந் தருகவே.       (1)

43. அலையார் வேணிச் சிவபெருமா
      னளிக்க நீண்ட துளைக்கரமு
மம்பொற் கரங்க ளீரிரண்டு
      மணிமா முகமும் விழிமூன்றுங்
கலையா வலியும் பெற்ற செழுங்
      கனியே நினையு மவர்க்கருள்கூர்
கண்ணே மண்ணோர் புரியுமெந்தக்
      கருமங் களுக்கு முதலான
நிலையே யறிவா லறியாது
      நின்ற துரிய நிலைகடந்த
நேயத் தடங்கா வெறுவெளிக்கு
      நேரே காண வருள்சோதி
மலையே யரும்பாத் தைப்பதிவாழ்
      மகவே முத்தந் தருகவே
வாழ்வே வேத வினாயகமா
      மணியே முத்தந் தருகவே.       (2)

44. தேயா மயக்க விருவினையாற்
      றிறம்புங் கறங்கு போற்சுழன்று
சென்மக் கடலி லாழாது
      தேறு முணர்வா லுலகியற்கை
போயா தரஞ்சேர் திருநாளைப்
      போவார் புலியூர் சேர்வனென்று
புறங்கண் டேகி யவர்வருநாட்
      புனிதன் கனவி லினிதியம்ப
வோயா வளங்கூர் புங்கூரி
      லுளங்கொண் டெவருங் குளஞ்சமைப்பா
னோரைந் துருவா யாள்வேலைக்
      குள்ள கூலி பகுத்ததனி
வாயா வரும்பாத் தைப்பதிவாழ்
      மகவே முத்தந் தருகவே
வாழ்வே வேத வினாயகமா
      மணியே முத்தந் தருகவே.       (3)

45. செழித்த புகழ்ப்பெண் ணாகடத்தைச்
      சேரச் சுதனாங் களப்பாளன்
சிறுவன் வேண்டி வெண்காட்டிற்
      செறிமுக் குளநன் னீராட்டிக்
கொழிக்குந் திரைநீர் வேணியினான்
      கொடுத்த வரத்தாற் பெறுமகவைக்
கொடுபோய் வளர்ப்ப மழலைமொழி
      கூறா மையிற்கண் டாறாமல்
பழுத்த மதியார் சன்னிதிமுன்
      பாலன் றனைவைத் தவனகலப்
பலநூல் வருத்தி மெய்கண்ட
      பரம குருவென் றவற்கிறைநூல்
வழுத்து மரும்பாத் தைப்பதிவாழ்
      மகவே முத்தந் தருகவே
வாழ்வே வேத வினாயகமா
      மணியே முத்தந் தருகவே.       (4)

46. அன்னம் வயற்சூழ் காசிநக
      ரகிலே சனையு மமரரையு
மருவிக் கோட்டு மந்தரத்தி
      லகல்வா னேவி யொருகுடைக்கீழ்
மன்னர் வணங்க வரசுசெய்து
      வருதி வோதா னன்புவியோர்
மதியுங்கதிருங் கலங்கும் வண்ணம்
      வன்னி யெனப்போந் தனனிலையே
கன்னி மடவார் தமக்குமிளங்
      காளை யருக்குங் கனவுரைத்துக்
காசித் தலத்தை மீண்டுவரக்
      கருதுங் கருணைக் கடகளிறே
மன்னு மரும்பாத் தைப்பதிவாழ்
      மகவே முத்தந் தருகவே
வாழ்வே வேத வினாயகமா
      மணியே முத்தந் தருகவே.      (5)

வேறு
47. தேவர் படுமிடர் தீர வலியொடு
      செயமளிக்குங் குழவியே
தீய வினையிருண் மாய வருளொளி
      திசைவிரிக்கும் பரிதியே
யாவி யுடல்பொரு ளாக வினைவழி
      யடிமைவைக்குங் குரிசிலே
யாதி நடுமுடி வாரு மறிவரு
      மதிசெயச்செங் கனகமே
மாவின் வகிரள வான மைவிழி
      மலர்களிக்குங் கமலமே
மாயன் மலரய னாதி யடியுறை
      மணிகொழிக்கும் பரவையே
தாவின் முதுகலை வேள்வி யவர்தொழு
      தலைவமுத்தந் தருகவே
தாதை யருள்புனை வேத கணபதி
      தருகமுத்தந் தருகவே.       (6)

48. மீன முறுமுடை நாறு மறிகடல்
      விசிறுமுத்துங் கழணிவாய்
வீறு கழையினி லாலை நெரிபட
      விரியுமுத்துங் கருவிவா
னீன முறுபல தான மிசைவிழ
      விறையுமுத்துங் கமுகிலே
யேறு படவடி சாறு மொழிவழி
      யிழியுமுத்துங் குணமெனா
வான மதிநதி யாடு சடையனை
      மகிழுமுத்தம் புவியெலாம்
வாழ வருளிய வேழை திருவுள
      மலருமுத்தங் கருணைசேர்
தான மொழுகுநின் வாயின் மிகுசுவை
      தழையுமுத்தந் தருகவே
தாதை யருள்புனை வேத கணபதி
      தருகமுத்தந் தருகவே.       (7)

49. ஆல மணியிலை மீதி லறிதுயி
      லளிமலர்ப்பைந் துளவனோ
டாதி முதுமறை நாலு மருளிய
      வயன்முதற்பைந் தருவின்வாழ்
கோல மலியிமை யோர்க ளொடுமதி
      குறைபடைத்தெண் டிசையுளோர்
கோதை யுமைபுண ராதி யடியிணை
      குறுகிமுற்றும் பரவியே
நீல கயமுக வீர வசுரனை
      நிலையழிக்குந் திறமெனோ
நீயி தருளென வாய்மை யருள்விழி
      நெடுமலைப்பெண் கொடியொடே
சால வருளிய பால னெனவரு
      தலைவமுத்தந் தருகவே
தாதை யருள்புனை வேத கணபதி
      தருகமுத்தந் தருகவே.      (8)

50. ஆடல் புரிபல கூளி குறளிக
      ளலகைமுட்டுங் குறையுமே
யாதி முதுகதி ராதி கிரகமு
      மடல்விளைக்குந் துயருநேர்
கூட வரியவி யாதி பலபல
      கொடுநடக்கும் படருநூல்
கூறு மறநெறி சீறு மரசர்கள்
      குறைசெலுத்தும் பிழையெலாக்
தேடு மதியொடு நாளு மழகிய
      திருவடிச்செங் கமலமே
சேர நினைதரு வோர்முன் வெயில்படு
      திரைகடற்றண் பனிகள்போல்
சாடி யருள்புரி ஞான தினகர
      தருகமுத்தந் தருகவே
தாதை யருள்புனை வேத கணபதி
      தருகமுத்தந் தருகவே.       (9)

51. மூல மெனும்வெகு கோடி முதுமறை
      முடிவுணர்த்தும் பிரணவமாய்
மோக வினையகல் யோக முனிவரர்
      முனமுதிக்குஞ் சுடருமா
யேல வொருபொழு தேனு நினைபவ
      ரிருதயத்தின் பிரபையுமா
யேது கருதினு நாடி யதையெதி
      ரினிதளிக்குங் கடவுளா
யோல மறிகடல் போலு மிருவினை
      யொழியநிற்கும் பதவியா
யோது மவர்குல நாத னெனமன
      துள்தளிர்க்குந் தருவுமாய்த்
தால மிசையுயர் சீல முதலிய
      தலைவமுத்தந் தருகவே
தாதை யருள்புனை வேத கணபதி
      தருகமுத்தந் தருகவே.       (10)
________________________________

6. வருகைப் பருவம்

52. தொங்கற் பெருஞ்சுடிகை பளபளென வாடகத்
      தோள்வலைய நிகநிகென்னச்
சுட்டிமணி விட்டவொளி தளதளென நூபுரம்
      தொட்டமணி கலகலென்னத்
தங்கத் தகட்டாடை மளமளென வொழுகுமத
      சலவருவி களகளென்னச்
சன்ன வீரத்தணி பளீரெனக் காலிலணி
      தண்டைகள் கலீரெனத்தான்
செங்கைத் தலங்கொட்டி மங்கைப் பிராட்டியுமை
      சென்றழைத் தெனதுவாழ்வே
சீராட்ட வருகமொழி பாராட்ட வருகவென்
      றிருவருக வெனவருகுவோர்
வெங்கட் பணைக்கரட துங்கக் களிற்றுமுக
      வீரவிக்கிர மன்வருகவே
மிகுமரும் பாத்தைபுரி வளர்பெருங் கீர்த்திபுனை
      வேதகண பதிவருகவே.       (1)

53. கறைகொண்ட வாள்வா யரக்கர்குல வசுரர்குல
      காலரென் றோலமிட்டுக்
கடவுளரில் வலிகொண்டு மெழில்கொண்ட வுருவுபோய்க்
      காலூதி கொண்டுமென்பூச்
சிறைகொண்ட கணைகொண்டு நாணியளி கொண்டுபூஞ்
      சிலைகொண்ட வேளையஞ்சித்
தெரிவைமார் கொங்கையை யரண்கொண்டு வாழ்தேவர்
      சிரசுநாண் கொண்டுகுனியத்
துறைகொண்ட பொறிபுல னடக்கிமன் மதனையும்
      தோல்விகண் டவனிருப்பைச்
சூறைகொண் டிடவுமதை யோவைகொண்டே யெவருந்
      தொழும்பிரம சாரியென்றே
விறல்கொண்ட கொன்றைமலர் வாகைகொண் டணிவெற்றி
      வீரவிக்கிர மன்வருகவே
மிகுமரும் பாத்தைபுரி வளர்பெருங் கீர்த்திபுனை
      வேதகண பதிவருகவே.       (2)

54. ஆயிரங் கோடிகடல் வெள்ளப் பெருக்குமுள்
      ளடிநனைத் திடவுமுடியா
வடல்கொண்ட சூரனவன் குடல்கொண்டு வருசேனை
      யசுரர்வெள் ளம்பெருகுநாட்
காயிருந் துணைவீரர் கணமுமீ ராயிரங்
      கனவெள்ள மும்பெருகியுங்
கைவேல் விடுத்துமுனை செயவேல னுள்ளங்
      கலங்கிய பெருங்களத்தே
போயொருங் கேபிரம சாரியாய் மாயையைப்
      புனைதுடையி லேயிருத்திப்
பூநிகர் துதிக்கையவள் பூவினில் விடுத்துப்
      பொருங்கரு வழுத்திமேனாள்
மேயதம் பிக்குமுன் புக்குவிசை யந்தந்த
      வீரவிக்கிர மன்வருகவே
மிகுமரும் பாத்தைபுரி வளர்பெருங் கீர்த்திபுனை
      வேதகண பதிவருகவே.       (3)

55. கூறுபுகழ் புனைகாழி ஞானசம் பந்தனார்
      கூடன்மிசை யமணழித்துக்
கூனல்பெறு மாறன்முன் மீனமுறு வாதுபுரி
      குண்டர்விண் டிடவழுதநீ
ரூறுநதி வைகையிடை நீறுநிலை பெறுகவென
      வோதியிடு மேடுவிடலா
லுயர்நீரி னெதிரோட வியலேடு கொள்வனென்
      றோடிய வமைச்சனுக்கும்
பேறுபெற வெய்தாது செல்லவொரு பூவணப்
      பிள்ளையாய் வெள்ளவலையிற்
பேரேடு தனைவாங்கி நீரோடு மளிக்கப்
      பெரும்புகலி மாமுனிவனால்
வீறுதமிழ் கொண்டுபுனை மாறுநிக ரில்லாத
      வீரவிக்கிர மன்வருகவே
மிகுமரும் பாத்தைபுரி வளர்பெருங் கீர்த்திபுனை
      வேதகண பதிவருகவே.       (4)

56. வைத்தலை நெடும்பகழி வரிசிலைச் சென்னிமுதன்
      மண்டலத் தவருமேனாண்
மாமூவர் தேவார வைப்பையறி யாதுமன
      மங்கியிட வண்குரவனாய்க்
கைத்துணைச் சிறுவனிடு பூசைக்கு நேசித்த
      கருணையா லவன்வினாவக்
கன்னலொடு பயறுகனி யன்னமுத லானவை
      கனிந்தமுது செயும்வேளையில்
துய்த்தலை நிறுத்தியிவ் வழிகண்டு கொள்ளென்று
      சொல்லியொரு நாரையூரிற்
றுகளிலா வெண்ணீறு மைந்தெழுத் தும்புவி
      துலங்கமுன் விரலைநீட்டி
மெய்த்தமி ழளித்திடுங் கருணா கரச்செல்வ
      வீரவிக்கிர மன்வருகவே
மிகுமரும் பாத்தைபுரி வளர்பெருங் கீர்த்திபுனை
      வேதகண பதிவருகவே.       (5)

வேறு
57. அகனீர் வேலை கடந்தோடி
      யலையாக் கும்ப மாணையினா
லடங்கா நாகம் வீணையினா
      லசையாத் தந்தி நிறுத்துரைத்துப்
பகரா துயர்ந்த மாதங்கம்
      பறவாத் தும்பி காயாத
பருங்கோட் டத்தி மாதர்முலை
      படியாக் களபம் படியில்விலை
நிகழா வொருசிந் துரந்தலத்தி
      னிறுவாக் கம்ப மருங்குளத்தி
னேரா வாம்பல் வடுக்கள்பட
      நெருங்கா விளமா வென்றுபல
புகழா லுயரு மரும்பாத்தை
      புரிவாழ் களிறே வருகவே
பொருள்சேர் வேத வினாயகமாம்
      புனிதா வருக வருகவே.       (6)

58. துதிதோள் சுமுக னேகதந்தன்
      துலங்கு கபிலன் கசகர்ணன்
சொல்லு மிலம்போ தரன்விகடன்
      தொகும்விக் கினரா சன்புகழா
லதிவி னாய கன்றூம
      கேது வுடனே கெணாதியக்க
னருள்சேர் பால சந்திரன்றா
      ரணிசூழ் வக்கிர துண்டனுயர்
மதிசெய் சூர்ப்ப கர்ணனே
      ரம்பன் கந்தன் மந்திரத்தால்
வணங்கும் பூர்வ சகாயனென
      வளரீ ரெட்டுப் பெரும்பெயரும்
பொதியுஞ் சிறந்த வரும்பாத்தைப்
      புரிவாழ் களிறே வருகவே
பொருள்சேர் வேத வினாயகமாம்
      புனிதா வருக வருகவே.       (7)

59. அலரி துளசி மருதெருக்கோ
      டறுகு கையாந் தகரைமுள்ளி
யரசு பச்சை நாயுருவி
      யணிசேர் நாவ லெலுமிச்சை
யிலகு நொச்சில் சாதிப்பூ
      யிலுப்பை வன்னி யூமத்தை
யிலந்தை தேவ தாருவுட
      னெழில்மா தளைவிட் டுணுகாந்தி
குலவு மிருபத் தொன்றான
      குணபத் திரங்கள் பலசாத்திக்
குட்டிக் கொடுதாள் பணிசெய்வோர்
      குறித்த கருமந் தருவோனே
புலவ ரேத்து மரும்பாத்தை
      புரிவாழ் களிறே வருகவே
பொருள்சேர் வேத வினாயகமாம்
      புனிதா வருக வருகவே.       (8)

60. சுழலும் பிறப்பி லருவருத்து
      நிலையு நிலையா மையுமுணர்ந்தோர்
துகளில் போது கருத்தென்னுந்
      துய்ய தறியி னிடைக்கட்டுண்
டழிவி லாத மறைகூடத்
      தணைந்து சுருங்கா நிறையன்பா
மந்தண் கவள மடுத்தடியா
      ரார்வ மெனும்பே ரளிசுழல
விழும மான கருணைமத
      வெள்ளங் கொழித்து வினைப்புனத்தை
வேரோ டெறிந்து மெய்ஞ்ஞான
      வெளியி லுலவித் தெளியுமருள்
பொழியுஞ் செழித்த வரும்பாத்தை
      புரிவாழ் களிறே வருகவே
பொருள்சேர் வேத வினாயகமாம்
      புனிதா வருக வருகவே.       (9)

61. அந்தி யிளவெண் பிறைக்கொழுந்து
      மலர்பூங் கொன்றை நறுந்தொடையு
மருமா மணிப்பொற் கரநான்கு
      மலங்கும் பவளச் சடாடவியு
நிந்தை யகல்பா சமுமழுவு
      நீளு மரவ மணிக்கலனு
நிறத்தி னுயரு மணிமருப்பு
      நிலவு குலத்தின் மலர்விழியுஞ்
சந்த மமரும் புரிநூலுந்
      தலைவன் றனைப்போ னிலைபெற்றுத்
தரணி தனில்வந் தனை புரிவார்
      தமது குலதெய் வதமாகிப்
புந்தி மகிழு மரும்பாத்தைப்
      புரிவாழ் களிறே வருகவே
பொருள்சேர் வேத வினாயகமாம்
      னிதா வருக வருகவே.       (10)
_________________________

7. அம்புலிப் பருவம்

(சாமம்)
62. வட்டமதி வேணிய னிடக்கண்வா லாலுருவின்
      மடமானை வைத்திடுதலான்
மன்னுயிர்களுக் கருமருந்தா தலான்முழு
      மதிக்கடவு ளெனநிலவலா
லிட்டகண பதியென் றிருத்தலாற் பைங்கொடி
      யினக்குவளை மலர்விக்கையா
லெவ்வமர ரும்பரவு தெய்வவரை யதனைவல
      மிட்டுவரு பலனெய்தலாற்
சுட்டிய பெரும்புவியி லனைவர்க்கு மேலாய்த்
      துலங்கலால் மந்தாகினிச்
சுரநதி கண்ணோடி வருதலா லுனையொத்த
      துணையிவ னெனக்கருதிநீ
ளட்டதிசை யுந்தொழு மரும்பாத்தை புரியரசோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (1)

63. தண்டா மரைத்திரள் குவிக்கிலிவ னன்பர்கைத்
      தாமரைகுவிக் கவறிவான்
தாரைக ளொழுக்கில்வரு வாயென்னி லிவன்மத்த
      தாரைகளொழுக் கில்வருவான்
மண்டாறு தலைபடைத் தாயென்னி லுற்றதுணை
      வளராறு தலைபடைத்தான்
வாரிக் கருந்தலை விடாயென்னி லிவனுமணி
      வாரிக்கருந் தலைவிடான்
பண்டாய பாரிடஞ் சூழுவா யெனிலிவன்
      பாரிடஞ் சூழவருவான்
பகரிலுன் செயலுமெங் கடவுளின் செயலுமிப்
      படிகண்டு முடிகொண்டுவா
னண்டாதி பதிதொழு மரும்பாத்தை புரியரசோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (2)

(பேதம்)
64. காதிக்கொ லூரகத்தை யஞ்சுவா யிவனுரக
      கங்கணம் புனையவஞ்சான்
கலைகளீ ரெட்டனறி யில்லையிவ னவஞ்ஞான
      கலைகள்வெகு கோடியுடையான்
சோதிக்கி லுடலிற் களங்கமுள் ளாயிவன்
      சொல்லிற் களங்கமுள்ளான்
சுற்றிவலம் வருகுவாய் நீயிவன் புவியெலாஞ்
      சுற்றிவலம் வரவருகுவா
னோதிக் கிளர்ந்தநா ளொன்றில்மறை வாயிவ
      னொருக்காலு மறையவறியா
னொருமுறைப்பி லல்லவா யிரமுறை யினும்பார்க்கி
      னுன்னிலிவ னதிகமென்றே
யாதிக்க மிகுமரும் பாத்தைபுரி மழகளிறோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகு வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (3)

(தானம்)
65. முன்புததி யமுதுண்டு நரைதிரை களைந்திட்ட
      முப்பத்து மூன்று கோடி
முதலான தேவருஞ் சிதைவாகி யகிலாண்ட
      முற்றுங்கலைந் தலைப்படும்
பின்புமெழில் குன்றாத பிள்ளையா ரெனவரும்
      பிள்ளையிவ னருள்கிடைத்தால்
பெருகியுஞ் சிறுகியுந் திரியாது வாழலாம்
      பேர்தூம கேதுவெனலால்
துன்புபுரி கேதுவா விடையூறு நீங்கித்
      துலங்கலா மின்னமொருபேர்
சொல்வால சந்திரனென் றெல்லோரு மேத்தலாற்
      றுணையுனக் கிவனென்னவே
யன்புநிறை தருமரும் பாத்தைபுரி மழகளிறோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (4)

66. ஒளியூறு மாவணித் திங்கட் சதுர்த்தியினி
      லுலகுளோர் புரியும்விரதத்
துறுகனிகள் கடலைபய னோடியல் பொரியமுதுண்
      டுரத்துப் பெருத்தவுதரங்
களியூறு முக்கட் பிரானைவந் திக்குமக்
      காலையிற் கால்மேலுறக்
கண்டுநீ நகைபுரிந் துண்ட சாபமுமுன்
      கருத்தறியு மிளையவீரன்
துளியூறு மமுதந் துளிப்பவிரு கால்கொண்டு
      துவையவிட் டதுமுனக்கே
தோற்றுமத னாலிவனை யேற்றிரவு கோடியேற்
      சுகமலாற் பயமில்லையென்
றளியூறு வருமரும் பாத்தைபுரி மழகளிறோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.      (5)

67. கவடுற்ற மருதமர மிருவற்கு முன்பெற்ற
      கனகசாப மதுநீக்கியுங்
கற்போலு மரிவைபெறு சொற்சாப நீக்கியுங்
      கனகமதில் மிதுலைமேவுந்
தவமிக்க சனகனிடு சாபநீக்கி யுமுமை
      சபித்தசா பந்தொலைக்கச்
சற்றும் வகையறியாது நெட்டர வமாகத்
      தவித்ததிரு மாலுமேனா
ளிவன்முக்கிய தெரிசனத் தாற்சாப மாறியே
      யினிதுவாழ்ந் தனனாதலா
லிவனிட்ட சாபமொடு குருவிட்ட சாபமு
      மிரண்டும்விட மேன்மைபெறுவா
யவனிக்குண் மிகுமரும் பாத்தைபுரி முதல்வனுட
      னம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (6)

68. வருநெலிரு நாழியால் முப்பத் திரண்டறம்
      வளர்க்கவல் லமையுள்ளவள்
மகுணன்முன் னுண்டிட்ட வாலகாலந் தன்னை
      மன்னுமமு தாய்ச்செய்தவள்
பரவுமொரு புலவற்கு நின்னையு முவாவினிற்
      பண்பொடு வரச்செய்தவள்
பகர்பிரம னாதிநால் வகைமுதல்வ ரொடுவீன்ற
      பரமிதிரு வயிறுவாய்த்த
யிருமக னெனச்சொல்லு மொருமகன் விளையாட
      யினிதழைத் தனன்வருதியே
லேறிய களங்கமது தீரும்வகை யுமையம்மை
      யேயருள்வ ளாதலாலே
யருளினிது தருமரும் பாத்தைபுரி முதல்வனுட
      னம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (7)

69. பாருக்கு மிப்பார் படைத்தவற் கும்பார்
      படைத்தனை முன்புதவுமோர்
பங்கயக் கண்ணற்கு மக்கண்ணர் தமையுதவு
      பகரறு முருத்திரற்குஞ்
சீருற்ற ருத்திரரை யுதவு மீசற்குமச்
      செம்மைபெறு மீசனையருள்
திகழ்சதா சிவனுக்கு மச்சதா சிவமருவு
      திகழுமொரு விந்துவுக்கும்
பேருற்ற விந்துவருள் நாதத் தினுக்குமப்
      பேர்பெரிய நாதமுறையும்
பிரணவப் பொருளுக்கு முறைதிறம் பாதுவரு
      பிள்ளையிவ னாதலாலே
யாரத் தடம்பெறு மரும்பாத்தை புரிமுதலோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியாகும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (8)

70. வந்தனைசெய் தேற்றுவோ ரிந்திராதி போகமும்
      மதனசுந் தரதேகமும்
மதிகதிர்கண் மாறியும் மாறாத கீர்த்தியும்
      வழுவாத சுபவார்த்தையும்
செந்தமிழின் வளமைபெறு கல்வியுங் குறையாத
      செல்வமும் புகழட்டமா
சித்தியுஞ் சிவஞான பத்தியும் பத்தியாற்
      சேருமுத் தியுமெய்தலால்
எந்தநிலை யும்பொருவி லெந்தவலி யும்பெற
      விரங்குமிவ னருள்கிடைத்தா
லிகபர மிரண்டுக்கு முறுதியா மெனவெண்ணி
      யெண்ணில்விண் ணவர்களுடனே
யந்தணர்க டொழவரு மரும்பாத்தைப் புரியரசோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியென்னும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (9)

(தண்டம்)
71. வேதக் குலம்புகழு மாதிபரஞ் சோதி
      வித்தகன் சத்தியுடனே
மேவுறு புணர்ச்சியினின் மாவடு நிகர்த்தவிழி
      மெல்லடியி னொல்லொலிதரும்
பாதச் சிலம்பில்வரு நவவீர ரண்டமொடு
      பகிரண்ட முதலியாவும்
பத்திப் பிடுங்கியவை வைத்துப் பதித்திடப்
      பராக்கிரம ரவர்களுக்
கேதப் படாத்துணைவன் நின்னையொரு பொருளாக
      வினிதழைத் தனன்வராயே
லிவன்மனது தான்பொறுத் திடினுமவர் தான்பொறா
      ரென்றெண்ணி யாறிரண்டா
மாதித்தர் தொழவரும் அரும்பாத்தை புரியரசோ
      டம்புலீ யாடவாவே
யாதிகண பதியென்னும் வேதகண பதியினுட
      னம்புலீ யாடவாவே.       (10)
_____________________________

8. சிறுபறைப் பருவம்

72. வெங்கட் பணிப்பார் நெடுநிலங் களைநூறி
      விசையமங் கலமுழக்க
விண்ணவரும் வருதிசைப் பண்ணவரு மிகல்வென்ற
      வீரதுந் துமிமுழக்கத்
துங்கப் பெருந்தா மரைக்கோயில் மாமியார்
      சோபனத் துதிமுழக்கத்
தும்புருவு நாரதரு மணிவீணை யமுதெனச்
      சுருதியின் னிசைமுழக்கப்
பங்கப் படாதபழ மறையெலா மிடர்தீர்ந்து
      பாவினின் றெதிர்முழக்கப்
பலகோடி வல்லசுரர் வலியும்போய் நெஞ்சினிற்
      படபடென் றெதிர்முழக்கத்
திங்கட் கொழுந்தணி யரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவு வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (1)

73. வில்லார் நுதற்பேதை யுமையம்மை செம்மாந்த
      வியன்முலைத் துணையைநோக்கி
வித்தகம் புனையெனது மத்தக மெனத்தனி
      மிடுக்குறு தடக்கைநீட்டிக்
கல்லாரும் நெற்றிமிசை தடவரலு மெம்பிரான்
      கவினொழுகு பவளவேணிக்
காணிக் கிடந்தமல ரோனொற்றை வெண்டலை
      கழிந்தா னொழிந்தகொள்ளைப்
பல்லாடு நகைகண்டு நீயெனை நகைத்தியால்
      பண்டுநகை செய்துபழிகூர்
பாதிமதி யுடனிருந் தீதறி கிலாயெனப்
      பாலகல் சோலைதோறுஞ்
செல்லாடல் கொண்டிடு மரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (2)

74. கோட்டுஞ் சிலைக்காம னெந்தைதிரு நுதல்விழிக்
      கொந்தழலில் வெந்தசாம்பற்
குவியலைச் சிவகணத் தொருவனுரு வாக்கவுங்
      கோரவா காரத்துடன்
காட்டுங் கொடுந்தொழிற் பண்டா சுரப்பெயர்
      கலந்தவுண னாகிமலையக்
கவுமாரி கைவிறலின் வலிபோ யுடைந்தவன்
      கடவுளேந் திரம்வைத்தநாள்
பூட்டும் பணித்தொடை யொருத்தனருள் கொண்டத்தை
      பூமியில் மிதித்தழித்துப்
பொருநிருத னுடலையுந் தரைமிசை புரட்டியெப்
      புவனத்து மெய்க்கீர்த்தியைத்
தீட்டுங் கிருபாகர வரும்பாத்தை புரிமுதல்வ
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண் பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (3)


75. பொருதிரைப் பேராழி நெடுமுகட் டொருவரை
      பொருத்திமா சுணமிறுக்கிப்
புருகூத னிருவகைத் திறலாரோ டும்பண்டு
      புடைநின்று கடையவுன்சீ
ரருளது பெறாமையா லாலம் பிறக்கவன்
      றலம்வந்து சுலவும்வெண்பா
லலைநுரை தனைப்பிடித் துனதுவடி வாக்கியங்
      காராத னாதிசெய்யப்
பெருமணியு மிருநிதியு முயர்தருவு மமுதும்
      பிறக்கப் பிறந்தவெள்ளைப்
பிள்ளையா ரெனவலஞ் சுழிதன்னி லெழில்மன்னு
      பேர்பெறுஞ் செல்வநாளும்
திருவிளங் குலவிய வரும்பாத்தை புரிமுதல்வ
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (4)

76. வேணிக் கலாமதி மணக்குங் கணத்திரள்
      விதிர்ந்தன வுதிர்ந்திடாமல்
வீரந் தழைந்தமுக வாரம் பொருந்துதிசை
      வேழங் கலங்குறாமல்
காணிற் கிளர்ந்தமும் மதமழையை நிகர்மழைகள்
      கருவது கலைந்திடாமற்
காதல்புரி நன்மாமன் மேதகைய நாகணைக்
      கண்டுயி லொழிந்திடாமற்
பூணிற் சிறந்தபணி யினமசனி யேறெனப்
      பொறிமணி யுகுத்திடாமற்
புண்டரிக மலரன்ன தண்டடக் கைவிரல்
      பொருத்தியின் றொலிமிகுத்தச்
சேணிற் கனம்பெறு மரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (5)

77. ஏர்மலர் பொழில்வளர் திருக்கோவ லூரகத்
      தேரண்ட முனிவன்யாகத்
தெழுகின்ற பச்சைப் பசும்பரித் தெய்வீக
      னியல்மண முடிக்குமவ்வை
பேர்நிருபர் மூவர்க்கு மணவோலை யெழுதப்
      பிறங்கெழுத் திடுகணக்கப்
பிள்ளையா னென்றவர்க் குள்ளவா றெழுதியொரு
      பெண்ணைக்கு மோலைபோக்கி
பார்மருவு மொருமணப் பந்தரிற் பலகோடி
      யாசனஞ் சூழிருப்பப்
பாரியங் கவையினொடு சங்கவையு மணமாலை
      பாரிக்க வைத்தகளிறே
சீர்மண மியற்றிய வரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (6)

78. மல்லற் செழுங்கொன்றை மாலைசூ டிக்கொரு
      மருங்கிலே பெண்ணைவைத்தும்
வளர்வேணி முடியிலணி குளிர்வீசு தெண்டிரை
      மடந்தையை யெடுத்துவித்தும்
குல்லைப் பசுந்துழாய் மாலுக்கு மார்பிலே
      கோதைதனை யேற்றுவித்தும்
கோகனக வயனுக்கு நாவிலே பாவுணர்
      கொழுங்கொடியை நாட்டுவித்தும்
எல்லைப் படாதவள மேறுமிந் திரன்மேனி
      யெங்குமரன் மனையைவைத்து
மெவ்வெவ ரையும் பொருது வெல்லுமத னன்கையி
      லெடுத்துப் பிடித்தசிலையைச்
செல்லக் குறித்திடு மரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவும் வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (7)

79. பொன்னிலத் தரமாத ரின்னிசை முழக்கிடப்
      புலவர்முப் பத்துமூவர்
புகர்மதக் கிருமுகா விசையிப வாவென்று
      புகலுமென் றொனிமுழக்கக்
கன்னல்மொழி மடவார்கள் முன்னர்நட மிடுகின்ற
      காலில்நூ புரமுழக்க
காட்டமும் மதக்களி யானைமன் னவர்கள்
      கருதுதோத் திரமுழக்க
வின்னிலத் தினிலுள்ள தேவாலை யங்கடொறு
      மெழில்செய்வாச் சியமுழக்க
வெம்பிரான் மதலைவிளை யாடலிது வென்றெவரு
      மேத்துநன் மொழிமுழக்க
செந்நெல்விளை தருமரும் பாத்தைபுரி வருமரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவு வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (8)

80. தாதைதரு கனியேந்து நான்மறைக் கையினாற்
      றடவரையி லெழுதுகையாற்
றவளநில வொழுகிடப் பவளமணி முடியினிற்
      சந்திரனை வைத்தகையால்
ஆதரவி லீரேழு புவனமெல் லாம்பெற்ற
      அன்னைமுலை யுண்டகையா
லசுரப் படைக்கஞ்சு மமரர்தம் படைகளுக்
      கபையம் புரிந்தகையால்
போதமலி யவ்வையார் மணவோலை யெழுதப்
      புகுந்துகொண் டாடுகையாற்
பொன்னாற்றி லிடபொருள் நன்மாத் துரைத்துமுன்
      புலவனுக் கீந்தகையால்
சீதவயல் மிகுமரும் பாத்தைபுரி வருமரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவு வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (9)

81. வயமேறு படையிலே யேறினுங் கடலிலே
      வங்கமேறிச் செல்லினும்
வாதம் படிக்கினுங் கீதந் தொடுக்கினு
      மருந்தொன் றருந்தியிடினும்
பயமேவு மரசர்தம் சபையேறி கவிதைகள்
      பன்னினும் புகுநுண்ணினும்
படர்காண் டடக்கினுங் கரவோர் வளைக்கினும்
      பல்வேறு பதியெய்தினுஞ்
சுயமாக வெவ்வேறு தொழில்செய்ய நாடினுந்
      துணையென்ன வொருகணத்திற்
சுற்றிவலம் வந்துகுட் டிக்கொண்ட வடியவர்
      தொடுத்தபடி நிறைவேறிடச்
செயமே யளித்திடு மரும்பாத்தை புரியரசு
      சிறுபறை முழக்கியருளே
தேவகண பதிபரவு வேதகண பதியினிய
      சிறுபறை முழக்கியருளே.       (10)
______________________________

9. சிற்றில் பருவம்

82. கூற்று நெளியப் பதமுகைத்த
      கோதை பாக னாதியராற்
குறையா விடையூறு களனைத்துங்
      குறைப்பா னறைத்தா மரைத்தாளிற்
போற்றும் புலவர் மகுடமொடு
      மகுட நெருங்கிச் சன்னிதிமுன்
பொற்றூள் கொடுத்த முடியிலிந்தப்
      புவித்தூள் கொடுத்தல் திருவுளமோ
வூற்று மொளிவெண் கோட்டொடெம்மா
      னுரத்தி லேனக் கோட்டையிசைத்
துவவு மதிலென் றுவமையில்லா
      வுருவி லேறிப் பலவிளையாட்
டாற்றும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்பதிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே. (1)

83. முருகு விரியு நறுங்குஞ்சி
      முடித்துத் திலக நுதல்விரித்து
மூரற் குறுவெண் ணிலவரும்ப
      முத்த முகந்து மழலையந்தேன்
பருகி மணிமுன் றிலின்புறத்தே
      படியே நீனற் கொடியாடல்
பயில விடுத்த வியல்யாங்கள்
      படைத்த சிறுவீ டுடைப்பதற்கோ
வுருவு மனையிங் கிதைமிதித்தா
      லுன்சே வடிக்கண் மணியுறுத்த
வுமையாள் இருகண் மணியுறுத்து
      முடையாய் தகுமோ வடியார்க்கே
யருளும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்பதிவா
      மதிபா சிற்றிற் சிதையேலே.       (2)

84. மிடல்சேர்ந் திடுபோர் மத்தனென்று
      மிகுத்த பேழை வயிற்றனென்றும்
வெருவ வளர்வேற் றுருவனென்றும்
      மேக்கு வாயி னமுக்கனென்று
முடல்சேர் நாகத் தொடையனென்று
      முரைத்து ளோமோ தெருப்புறத்தே
யுறுபே தையர்சிற் றிலைவாளா
      வொழித்தா லுனக்கே பழிப்பாமால்
தொடர்சே ரண்டப் பரப்பனைத்துந்
      துடைக்கு மொருவ னிடத்தில்வந்த
தோற்ற மிதுவோ போற்றியென்று
      தொழுவார் துயரங் கழுவிவிடும்
யடல்சேர் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்பதிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (3)

85. தென்னாட் டரசன் மலையினிடத்
      திருவாய் வளர்ந்த வப்போதும்
திரைநீர் வலையன் மகளாகச்
      செனித்த போதும் வரைக்கெல்லாம்
மன்னே யெனுமன் னவன்மகளாய்
      வளர்ந்த போது மொருதக்கன்
மகளாய் வளர்ந்த போதுமுமை
      வல்லி தனக்கு மணமாலை
முன்னே யரிய பரஞ்சுடரா
      முதல்வன் சூட்ட வுன்வடிவை
முறையா லமைத்துப் புகழ்நின்ற
      முடியா முதலே யன்பர்தமக்
கன்னே வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்பதிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (4)

86. சேரற் கிறைவன் வாம்பரிமேற்
      சென்று கயிலை புகுமுன்னே
சிந்தை யுருகிப் பைந்தமிழ்நூல்
      செப்பி வழுத்து மப்பொழுது
வீரத் துதிக்கை கொண்டேந்தி
      மேனி மெலிந்தவ் வையார்க்கு
மேல்வீ டளித்தாய் சிறுமியர்க்கிவ்
      வீடு மளிக்க வேண்டாமோ
வாரத் துயிராம் பயிர் தழைப்ப
      வரக்க ரெனும்பொற் களையெறிந்து
மாறாக் கருணை மழைபொழிந்து
      வைக றோறும் வளர்த்தளிக்கும்
பாரப் புயலே வேதவினா
      யகனே சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்புரிவா
      ழதிபா சிற்றிற் சிதையலே.       (5)

87. ஏரா வதுவை விதிமுடியா
      தெண்ணில் காலம் பலகடந்து
மின்னம் பிரம சாரியென்றே
      யிசைத்தோ மல்லால் வல்லசுரப்
பாரா வாரத் திரளெல்லாம்
      படிய மாயை யாழ்வயிற்றிற்
பணைக்கை நீட்டி வினைபுரிந்த
      பான்மை யறியப் பகர்ந்தேமோ
தீரா வினைகள் பலதீர்க்கும்
      தெய்வ மருந்தே புலனடக்கிச்
செயலற் றுணரா துணர்ந்தவர்தம்
      சிந்தைக் கடலி லூற்றெடுக்கும்
ஆரா வமுதே வேதவினா
      யகனே சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்புரிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (6)

88. கரும்புங் கனிந்த விளாங்கனியுங்
      கதலிக் கனியும் வெண்ணாவற்
கனியு மிளநீ ருஞ்சூதக்
      கனியும் பலவின் கொழுங்கனியும்
விரும்பும் பயறு மதிரசமும்
      வீறும் வடையு மோதகமும்
வேறு பலவும் யாங்கள்வைத்து
      வினவ வளிக்கா தொளித்தனமோ
பொருந்து மிளையார் பலர்கூடிப்
      புனையுஞ் சிறுவீட் டினையுனது
பொற்றாள் வருந்தச் சிதைப்பதுதான்
      பொருளோ வருளை யடியார்பால்
அரும்பும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும் பாத்தைப் புரிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (7)

89. பண்டுந் துணையா முருகனிகழ்
      பரவை யேழுக் கப்புறமும்
பாரா ளசுரன் கிளைகளொடும்
      பயின்ற மலையோ நன்மாமன்
விண்டு பொருத வரக்கனுறை
      வேலை யிலங்கைப் பெரும்பதியோ
மேனா ளுனது தாதையுடன்
      வெகுண்டா ரிருந்த திரிபுரமோ
மண்டும் வலியா லங்கவனை
      மறந்தோ னிழைத்த பேர்மகமோ
மடவோஞ் சிறுவீட் டினையழித்தல்
      மாண்போ காண்போ ருளக்கமலத்
தண்டும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்புரிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (8)

90. மறுவொன் றில்லா முழுமதியே
      மதியை யளிக்குங் குணநிதியே
மணியே வேத முடிக்கணியே
      வளர்வித் தகமே போதகமே
யுறுமன் பிலர்தம் மனத்திருளே
      யுணர்வி னுயர்ந்தோ ரகப்பொருளே
யுலையா மலையே சிவகலையே
      யுறுதித் துணையே மறைக்கணையே
துறவ ருயிரே யருட்பயிரே
      தூய வரமே தரும்பரமே
சோதி வடிவே பொருண்முடிவே
      துரியங் கடந்த வெறுவெளிக்கே
யறியும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்புரிவா
      ழதிபா சிற்றிற் சிதையேலே.       (9)

91. பணியுந் தலையும் பலகலையும்
      படிக்கும் திறமும் திருவடியைப்
பார்க்கும் விழியுஞ் சுபக்கீதம்
      பருகுஞ் செவியும் பருகியதில்
துணியுங் கருத்தும் வலம்வந்து
      செலவுங் காலும் பலகாலுந்
துதிக்கும் வாயுங் காமாதி
      துன்ப விடையூ றுகளெல்லாந்
தணியுங் குணமு மெய்ஞ்ஞானத்
      தவமே பொருளென் றறிவுணர்வுஞ்
சாரும் படியார் களுக்கருளும்
      தலைவா கடுக்கைப் பசுந்தெரிய
லணியும் வேத வினாயகனே
      யடியேஞ் சிற்றிற் சிதையேலே
யரசே யரும்பாத் தைப்புரிவா
      ழமுதே சிற்றிற் சிதையேலே.       (10)
__________________________

10. சிறுதேர்ப் பருவம்

92. வண்டேரில் வருபரிதி நிலைதேர வளகேசன்
      வைத்ததே ரேறநேராய்
வருதேரி ராவணன் பொருதே ருடன்சாய
      வானவர்க் கிறைவனேவும்
விண்டேரி லேறியிகல் வென்றுமா தரசியொடு
      மீமையிரு தேரிநான
வேத்திமக னும்வீர கத்திவிட வேமணி
      வியன்றே ரிறங்கிமணிநூற்
பண்டேர் வனத்தினிற் பணியுநா ளப்போ
      படைத்தவ னிடுக்கணீக்கிப்
பைந்தொடியு மிளவலும் படைஞருங் கவிகளும்
      பணைமதி லயோத்திசேரத்
திண்டேரி லுய்த்திடு மரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (1)

93. கொய்தினை யடுக்கத்து மடநடைக் குறமங்கை
      கொங்கையை விழைந்தவேலன்
குரலகவ கிளிப்புறத் தெறிகவ ணெறிந்துமெதிர்
      கூவிளி யெடுத்திசைத்துங்
கைவிரல் வருந்தக் கிழங்கோடு நறுங்கனிகள்
      காட்டியும் பாராட்டியுங்
கட்கடைக் கருணைதனி வேட்கடையு மெய்தாது
      கவலைகூர் தருமந்தநாள்
மைவரையி லருவியென மதவருவி பாயநெடு
      வால்விசைத் ததிரவோடி
மலையானை யெனவந்து முலையானை யன்னவன்
      மணித்தோ ளிடத்தழுந்தச்
செய்துமண நல்கிய வரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (2)

94. பிஞ்சுமதி மிளிர்கின்ற பவளச் சடாடவிப்
      பெருமானு முலகமெல்லாம்
பெற்றுமெழில் குன்றாத பேதைப் பிராட்டியும்
      பெருகுகவ றாடலுன்னி
விஞ்சுமணி மாயவன் வென்றிதோல் வைகணி
      விளம்புகென வைத்தாடுநாள்
விடையூர்தி குறிகண்டு பொய்யுரை யவன்கூற
      மெல்லியல் வெகுண்டமுனிவால்
நஞ்சுறு குருட்டரவ ராகக் கிடக்கின்ற
      காரணற் காரருளினால்
நாகணைப் பள்ளிமிசை நளினமலர் மங்கையொடும்
      நண்ணும்வகை யெண்ணில்வனசச்
செஞ்சரண முத்தீய வரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதே ருருட்டியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதே ருருட்டியருளே. (3)

95. பொன்னியல் கடுக்கையா னுதவுசிவ லிங்கமது
      போரிலங் கேசனேந்திப்
பொருதென் றிசைகடுக்க வருகின்ற வழியினிற்
      புலவரா குலமுடிப்பான்
வன்னியென நேர்சென்று மற்றதைத் தாங்கியவன்
      வாய்கழீஇ வருமுன்முக்கால்
வருகென விளித்ததைப் பெருநில மிருத்தலால்
      மற்றவன் வெகுண்டு தனது
கன்னிகர் தடக்கையால் விட்டெறிந் தவனிடுங்
      கைக்குட்டு மாறுமங்கை
காதுபிடி வந்தனையு மாதிமுத லானகோ
      கருணமேற் கொண்டவுணர்கோன்
சென்னியை வணக்கிய வரும்பாத்தை புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (4)

96. சொர்க்கமுத லருளுமிரு சரணபங் கயமலர்
      துதித்துபூ பங்குணர்ந்து
தோலா துளத்திற் தியானத் திறைஞ்சிமெய்த்
      தொண்டுகொண் டுருகுமன்பர்
விக்கின மகற்றியவர் பங்கினி லிருந்தருள்
      விளங்கிடக் கருணையுதவி
விளையாடு கவுண்மதப் புகர்முகச் சிறுநயன
      வேழத் தனிக்கடவுளே
யிக்கிறை யுடற்பொடி படுத்திய நுதற்கண
      ரிடத்துமை யளித்தமகவே
யேரம்ப வாரம்ப வெறிதரங் கத்துவ
      ரிருங்கடற் பூதலமொடெண்
திக்குமிசை பெறுமரும் பாத்தைபுரி வருமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (5)

97. ஊனே றுடற்சுமை யெடுத்தெடுத் தொழியா
      துலைப்புறும் பிறவியெனுமோ
ரோதக் கடற்படிந் துலைவுறா தடியவர்க்
      குனதுதாள் மலரளித்து
மீனேறு கட்கமலை நாதன்வே தன்பதமு
      மிக்கநின் றந்தைபதமு
மேவும்படிக் கன்பின் விக்கின மகற்றியரன்
      வேதாந்த முடிவிளக்கே
வானேறு சினையேறி மந்திக் குலங்களால்
      மலர்நெக்கு முட்கனியின்வாய்
மதுரச் செழுந்தேறல் வெள்ளப் பெருங்காலில்
      மலரிலறு கால்வழிக்குக்
தேனேறும் வயலரும் பாத்தைமா நகரிறைவ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய் வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (6)

98. கால்பாய நெடும்புவியின் வெவ்வேறு கடவுளர்
      கலந்தபைய வரதமென்னுங்
கைக்காட்டி வெவ்வேறு வினைசெய வருத்துங்
      கலக்கத் திளைப்புறாமே
நூல்பாயு மதியோடு நொடிப்பொழுதும் வந்திக்கும்
      நுண்ணறிவி னடியவர்க்கே
நோயு மிடையூறுங் களைந்துபர கதிகாட்டு
      நூபுரச் சரணவயலின்
பால்பா யகற்புனற் கரைமீது கமுகம்
      பழக்குலை யுகுத்தபைங்காய்
பங்கயக் கையிலுறு கழங்கெனப் புவிமகள்
      பரிக்கவிரை வோடெழும்பிச்
சேல்பாய வளமிகு மரும்பாத்தைப் புரியதிப
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (7)

99. கரைசே ரரும்பிறவி வாரிக்கு மதலையுங்
      கனவிரு ளுக்கிரவியுங்
கரைபிணி களுக்கரு மருந்தும் வறுமைப்பெருங்
      காலத்துக் கானமழையும்
வரையேறு முத்திக் கபாடந் திறப்பதற்
      கொருகாலு மிம்மைமறுமைக்
குறுதிக ளளிப்பதற் கொருகுருவு மென்கின்ற
      வுத்தமா வைத்துநெடுநாள்
புரைசேர் மதன்கையிற் கிடைவாளி கழுவிப்
      புதுக்கியெதிர் நீட்டியதெனப்
புண்டரிக வலையினிடை நீலமுகை செய்யவப்
      பொழுதுகரு மகனிலைசெயும்
திரைநீர் வளம்பெறு மரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (8)

100. உருமணிச் சுடிகையும் புனை நுதலு முக்கண்ணு
      மொருகொம்பு மிருசெவிகளு
முறுபுயமு மம்புயக் கரமுந் துதிக்கையு
      முதரமும் செவ்வதரமும்
மருவுபுரி நூலும்நிறை மார்பமுந் திருநாவி
      வட்டமு மகன்றவிடையும்
வல்லபை யிலங்கிய பொலன் துடையு மென்கமல
      மலரடியு மணிச்சிலம்பும்
அருள்பொழியு முகநகையு மபையவர தமுமழுவு
      மடுபாச முந்தேசுசேர்
ஆகுவா கனமுந்தி யானமே செயுமவர்க்
      காருயிர்த் துணைவனான
திருவளம் பெருகிய வரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (9)

101. கயமாமுகத் தசுரன் வயமான படையெலாங்
      கைத்துணையி னெட்டுயிர்ப்பாற்
ககனமுக டுங்கடலும் வரைவீசி யங்கைப்
      படையெலா முந்துரந்தும்
பயமான தின்றிவரு நிருதனுயிர் சிதறிடப்
      பணைமருப் பொன்றைவாங்கிப்
படையை வழங்கியவ னுடல்வீ றழித்தலின்
      பாலனென வாலெடுத்து
புயல்போலு மூடிகத் துருவா யெதிர்ந்திடப்
      பொள்ளெனத் துள்ளியேறிப்
புவனமுழு துஞ்சூழ்ந்து பவனிவரல் கண்டமரர்
      பூமழை பொழிந்துவாழ்த்தச்
செயவகை படைத்திடு மரும்பாத்தைப் புரிமுதல்வ
      சிறுதேர் நடத்தியருளே
சிந்தைசெய வரும்வேத தந்தியெனு மொருநாத
      சிறுதேர் நடத்தியருளே.       (10)
-----------
(அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.)

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் - குறிப்புரை

காப்புப் பருவம்
1. பொற்குவடு - அழகிய சிகரம்; இமையாசலம் - இமயமலை; கடகளிறு - சிவபெருமான்; ஐங்கரன் - வினாயகர்; கணிபூத்த - அளவு மிகுந்த; கறங்குதெண்டிரை - ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடல்; மீமிசை - ஒருபொருட் பன்மொழி; பணிபூத்து - ஆபரணங்கள் மிகுந்து; மான்மதம் - கஸ்தூரி; படீரம் - சந்தனம்; பங்கயச்செல்வி - இலக்குமி; பச்சைப் பசுங்கொண்டல் - திருமால்; (1)

2. ஆடகமாமலை - மேருமலை (ஆடகம் - பொன்); மூரி - பெருமை; ஆரண கோடியை நேர்பெறக் கோத்தவர் - வேதங்களின் தொகுதியை அழகுபெற அணிந்தவர்; ஆல்+அடி+மாதவர் - ஆலமரத்தின் கீழிருந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் முனிவர்கள்; காதலைத்தீர்த்தவர் - சிவன் தக்ஷிணாமூர்த்தி வடிவமாயிருந்து உபதேசித்தமையைக் குறிக்கிறது; ஆர் அமுது ஊறல் அருமதி - அரிய அமிர்தத்தைச் சுரந்து கொடுக்கின்ற சந்திரன். இவனுடைய அமிர்தத்தைத் தேவர்கள் முதற் பதினைந்து நாள் அருந்துவர்; மதிக்கீற்றவர் - கீற்று மதியவர் என்று பொருள் கொள்க (இலக்கணப் போலி); மூன்றாம் பிறைச்சந்திரனை உடையவர் என்று பொருள்; நாடிய பாணி - தேடி வந்த கங்கை நீர்; வேணி - சடை; பகீரதன் தவத்தால் கீழே விழும் கங்கையைச் சிவன் தன் சடையில் தாங்கி ஒரு துளி எடுத்துவிட அது பெருகி ஆறானது; நாவலன் ஏவியர் வேலையைப் பார்த்தவர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவையாரிடம் தூது ஏவிய வேலையைச் செய்தவர்; நாயகி - பார்வதி; வேத வியாதன் - வேத வியாச முனிவர்; கோட்டொரு பாரிசம் - தந்தங்களின் ஒரு பக்கத்தால்; தாக்கனை - பலமானவனை; வீடருள் சீலன் - மோட் சத்தைக் கொடுக்கும் ஒழுக்கமுடையவன்; ஓர் முனைக்கோட்டன் - ஒரேமுனையில் தந்தத்தை உடையவன்; வாருதிபோல் மத்ததீர்த்தன் - கடலைப்போல மதசலத்தை உடைய கடவுள்; மூடிக வாகனம் - பெருச்சாளி வாகனம்; (2)

3. கேதகை - தாழை; தோயாதெவையும் தோய்ந்த - எப்பொருள்களிலும் தோயாது காணப்படுகிற; புழைக்கை - துளையை யுடையகை; எப்பொருள்களிலும் காணப்படாமல் காணப்படுகின்ற சிவபெருமான் தரிக்கின்ற இளஞ்சந்திரனைக் கண்டு கடவுளர் தரிக்காத தாழைமலரோ என்று சந்தேகித்து எனது தந்தை இத்தாழை மலரைத் தரிக்குமோ என்று சடைக்காட்டுள் சென்று அறிந்து வரும் யானை முகத்துடைய வேதவிநாயகன் என்க; புத்தேள் - தேவர்; எண்ணான்கு தர்மம் - முப்பத்திரண்டு தருமம்; ஐந்தொழில் - சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என்பன; (திரோபவம் - மறைத்தல்) ஒயா - தவறாத; தனுவாதி - உடலோடு கூடிய உயிர்கள் முதலியன; ஒன்றாம் முதல் - சிவபெருமான்; ஒன்றாகி உறையும் - பாதி பாகத்தைக்கொண்டு தங்கும்; பச்சைப் பசுங்கொடி - பார்வதி. (3)

4. தவளச்சரோருகம் வெண்டாமரை; வாழ்தருமகள் - வாழ்ந்து வருதலையுடைய சரஸ்வதி; சித்தசன் மனையகம் வாழ்தருமகள் - மன்மதன் வீட்டில் வாழ்ந்து வரும் இரதி தேவி; இலக்குமிக்குப் பிரமனும், முற்பிறப்பில் மன்மதனாயிருந்த பிருத்யும்னனும் மக்களாகத் தோன்றியதால் அவர்களுடைய மனைவியர் முறையே சரசுவதியும், இரதியும் மருமகளிர் ஆயினர். கண்ணனுக்கும், உருக்குமணிக்கும் பிறந்தவனே பிரத்தியும்னன். ஒரு மகளைப் புனைதுடையிலே யிருத்தி - ஒப்பற்ற மகளான வல்லபையை அழகிய துடையிலே வைத்து; அசத்து முகத்து மகட்கு உறுதுணையைப் பொருதரு துணை - ஆட்டு முகத்தையுடைய தக்கன்மகளான தாக்ஷாயணிக்குற்ற கணவனான சிவனையும் பேச்சில் போர்செய்து பின்னிடவல்ல முருகன்; துணை மகிழ - சகோதரனான சுப்பிரமணியர் மகிழ; குறமகள் - வள்ளி; பொருமகபதி மகள் - போர் செய்யவல்ல தேவேந்திரன்மகள் தெய்வயானை; மகபதி - இந்திரன் ; அருட்போதனை - அருளைப் போதிப்பவனை. (4)

5. மாமேவு - பெருமை பொருந்திய; மழை - மேகம்; வதன படாம் - முகபடாம்; படாம் - சீலை; போதகம் - யானை ; இங்கு வினாயகனைக் குறித்தது; காமேவும் - காத்தல் பொருந்திய; மதி - புத்தி; தேமேவும் - தேவர்கள் பொருந்திய; ஒளியின் - ஒளியைக் காட்டிலும்; செங்கமலத்தவன் - பிரமன்; வெண்கமலக்கொடி . சரசுவதி. (5)

6. வளமேவு திரைகடல் - வளம் பொருந்திய பாற்கடல்; ஆலந்தளிர் - ஆலிலை; மால் - திருமால்; மழை - மேகம்; உந்தி. கொப்பூழ்; மட்டு - தேன்; மட்டிலே தளமேவு நளினமலர் - பூ இதழ்களில் தேன் பொருந்திய தாமரை மலர்; அளியூறு கணபதி - மத சலத்திற்காக வண்டுகள் அடைகின்ற கணபதி; மானம் பெருக்கும் நீள் ஒளியூறு கணபதி - பெருமை அதிகரிக்கும் நீண்ட பிரகாசம் வாய்ந்த கணபதி. (6)

7. உறைதரும் - தங்கும்; மலர் நெடும் பாற்கடல் - விரிந்த நீண்ட பாற்கடல்; மாநிறம் - கருமை நிறம்; ஆகம் - உடல்; வலி யொடுங்காக் களிறு - ஐராவதம்; முனை ஒடுங்காப்படை - வச்சிராயுதம்; மாமழை வாகனம் - பெருமை பொருந்திய மேகவாகனம்; வாழ்வு - ஐந்தருவின் வாழ்க்கை; அலர்மணம் தேக்கிய - மலர்களின் வாசனை நிறைந்த; நறுந்தோப்பு - ஐந்தரு நிறைந்த தோப்பு; அமரர்தம் பார்த்திபன் - தேவர்களின் தலைவனான இந்திரன்; பலர் தரும் தோத்திரன் - பலரும் துதிக்கும்படியானவன்; மலைபொருங் காத்திரன் - மலையிடமும் போர்செய்யும்படியான உடலை உடையவன். நார் அணிவார் அணி பொன் ஆகம் - நாரினால் அழகியதாகச் செய்த கச்சினை அணிந்த அழகிய மார்பு; துணைநெடுங் கோட்டுமுலை- இரண்டான நீண்ட யானைத் தந்தங் களைப்போன்ற தனங்கள்; புரக்க - காக்க; தாட்டிகளை அளியொடுங் காப்பவர் - நீக்குதற்கரிய அகந்தைகளைக் களைந்து அன்போடு பாதுகாப்பவர்; தாட்டிகம் என்பது தாட்டி என்று நின்றது. களை காப்பவர் எனக்கூட்டி வினைத்தொகையாக்குக. (7)
8. கோகனக வாசமலர் மனையிற் செழித்தவள் - தாமரை மலராகிய வீட்டில் உள்ளவளான, அபிராமி; கோலமகமேருகிரி வளையப் பிடித்தவள், மகேஸ்வரி; கோரமுள சூரர்முடி சிதறத் துணித்தவள் - கோரமுள்ள சூரன் தலையைச் சிதறும்படி வெட்டியவள், கௌமாரி; கோதிலொளி தாவுமுரு மணியைத் தரித்தவள் - குற்றமற்ற ஒளிகள் தாவும் நிறமமைந்த கௌஸ்துபமணியைத் தரித்தவள், நாராயணி; ஆகவலி - உடல்வலி; புவியைப் பெயர்த்தவள் - வராகி; ஆடல்புரி மாமலைகள் அமரப்பணித்தவள் - சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த மலைகளை ஒரே இடத்தில் இருக்கச் செய்தவள், இந்திராணி; ஆகாயமீதில் விதி கலையைப் பறித்தவள் - ஆகாயத்தில் விதிக்கப்பட்டு உலவுகின்ற சந்திரனைப் பறித்து அணிந்தவள், காளி; வாகு - வாகு வலயம்; அரவப்புயத்தோன் - பாம்புகளையுடைய புயத்தை உடையவன்; மாசு - குற்றம்; நூபுரம் - காற்சிலம்பு; இதழி - கொன்றை; ஏகமயில் - ஒற்றைமயில்; விக்கிரமத்தன் - பராக்கிராமத்தை உடையவன்; ஏதம் - குற்றம்; (ஈண்டு கணவரது செயல்கள் மனைவிகட்கும் கூறப்பட்டன). (8)

9. கணையைந்து - தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம் ஆகிய ஐந்து பூக்களாகிய அம்புகள்; கரிதாக - கருகிப்போமாறு; மாரன் - மன்மதன்; கையின் மலர், பாதமலர் - உருவகம்; கன்னி - உமாதேவி; சிவனை உமாதேவியின்மேல் விருப்பங்கொள்ளச் செய்து தவத்தைக் கெடுப்பதற்கு மாரன் ஐங்கணைகளையெய்ய, சிவன் நெற்றிக் கண்ணைக் காட்டவும் மன்மதன் எரிந்தான். அப்போது அக்கணை எங்கும் அணுகாது உள்ள கன்னி என்க; துணைவெங் கருங்கோட்டு மயிடம் - இரண்டு கொடிய கரிய கொம்புகளை உடைய எருமை முகமுள்ள அசுரன்; ஆதிசுந்தரி - துர்க்கை; அணைகொண்ட நதி - கங்கா நதி; வான்மதி - உயர்ந்த சந்திரன்; வாளரவு - ஒளிவாய்ந்த பட முடைய பாம்பு; அணியத்தர் - அணிந்துள்ள சிவபெருமான்; வதனத்து அணியும் அதி நதி என்க; மதசலத்தைக் குறித்தது; அதிநதி - கங்கையையும் குறிக்கும்; வெண்கோட்டிளம் பிறை - வெண்மையான தந்தம் போன்ற இளம்பிறைச் சந்திரன்; நல்லாவம் - பாம்பு; திணை செந்தமிழ் - ஐந்து நிலங்களைக்கொண்ட செந்தமிழ்ப்பாட்டுகள்; சீத கணபதி - வாசனை நீரினால் அபிஷேகிக்கப்படும் கணபதி, சிவபெருமானையொத்து விநாயகனும் பிறைச்சந்திரன், கங்கை, பாம்பு முதலியன அணிந்திருத்தல் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் வடிவத்தில் காணலாம். (9)

10. வேதை - வேதனை அல்லது துன்பம்; பிணி - நோய்; வேளின் இடர் - மன்மதனால் வரும் காமத் துன்பம்; கொடியதொரு நாளின் இடர் - கொடிய நாட்களினால் வரும் துன்பம்; அடறவரு கோளின் இடர் - துன்புறுத்த வருகின்ற கிரகங்களின் துன்பம்; பக்கிட்டு - திடுக்கிட்டு; இருவினை - நல்வினை, தீவினை, இவையிரண்டுமே பிறப்பைக் கொடுக்குமாதலால் "ஏதமுறு” என்றார்; வாதம் இரு பரசமயம் - தர்க்கத்திற்குப் பொருந்திய இரண்டு பிற மதங்கள்; சிவ சமயம் - சிவமதம்; வைப்பு - பொக்கிஷம்; தடவிகடன் - மிகவும் சாமர்த்தியன்; கெசமுகன் - யானைமுகன்; வனப்பு - அழகு; ஆறிருவர் - பன் னிரண்டு பேராகிய சூரியர்கள்; பதினொருவர் - பதினொரு உருத்திரர்கள்; நாலிருவர் - எட்டு வசுக்கள்; இருவர் - இரண்டு மருத்துவர்கள்; இவர்கள் வகைக்கு ஒவ்வொரு கோடியாக முப்பத்து மூன்று கோடி தேவர்களாவார்கள். (10)

11. புரையிருள் - மிகுந்த இருள்; படலம் - தொகுதி; பருதி - சூரியன்; வளர்கதி பரப்பும் முழுமணி - மிக்க கிரணங்களைப் பரப்புகின்ற முத்துக்கள்; வாருதி - கடல்; சூரியனையொத்து ஒளிவீசும் முத்துக்களையுடைய கடல் என்க; மன்பதை வாருதி நீராடுவான் அண்டரிய வன்புலத்தேழு சிறுகற் கொண்டு அலங்கும்: ஒலி வெண் திரையின் வாய் அங்கை தனிலே கொண்டு அளிக்கும் ஆங்கு அதனைக் கடுக்கு மன்றோ - உலகத்துயிர்கள் கடல் நீரில்மூழ்க, அடைதற்கரிய வலிய குறிஞ்சியிடத்திலேயுள்ள ஏழு சிறிய கற்களைச் சப்திக்கும் ஒலி கொண்ட வெள்ளிய அலையிடம் கையில் கொண்டுவந்து கொடுக்கும் அதனை ஒத்திருக்குமல்லவா; பல கலைகளும் படித்த மேலோர்களின் கவியைக் கொண்டிடும் கணபதி என் புன்கவியையும் கொள்வது மக்கள், முத்துக்கள் பல உள்ள கடலில் மூழ்க ஏழு சிறிய கற்களைக் கடலில் போட்டு நீராடுவதை ஒத்திருக்கும்; பண்டைமறை ஒரு நாலு - ஒப்பற்ற பழைய வேதங்கள் நான்கு; ஆறு நூல் - ஆறு வேத அங்கங்கள்; பனுவல் நாலேழு - இருபத்தெட்டு ஆகமங்கள்; எண்ணென் பல கலைக்கியானம் - அறுபத்து நான்கு வகைகளின் கலைகளின் அறிவு; படித்து அடி வழுத்த - படித்துப் பாதத்தைத் துதிக்குமாறு; வடசொல் - சமஸ்கிருதம்; தென்சொல் - தமிழ்; செஞ்சொல் - செம்மை வாய்ந்த சொல்; கடலில் நீராடுவோர் ஏதாவது கடலில் போட்டே நீராடுவர். கடல் விநாயகருக்கும், முத்து முதலிய மணிகள் மேலோர் சொற்கட்கும் குறிஞ்சி நிலக்கற்கள் ஆசிரியர் சொற்கட்கும் உவமை. (11)
----------------------------------------
செங்கீரைப்பருவம்.
12. துகில்கொண்டு நீவி - வஸ்திரங்கொண்டு துடைத்து; வண் காப்புமிட்டு - வளமை பொருந்திய நிலத்தின் மண் குழைத்திட்டு. ஆரம் - முத்துமாலை, பகல் - சூரியன், ஆகுபெயர்; நாணரை - இலக்கணப்போலி, அரை நாண் என்க; பதநூபுரம் - காலில் சிலம்பு; வரித்து - கட்டி; இதமுறு - இன்பமுற்று; கும்பப் படாமுலை - குடம் போன்ற பட்டுடையணிந்த தனம்; தரளம் - முத்து; காவி - நீலோற்பலமலர்; விழிக்காவி - உருவகம். (1)
13. பூவை அயிராணி - பெண்ணாகிய இந்திராணி; கேள்வன் - கணவன், இங்கு இந்திரனைக்குறித்தது; வீணைப்புண்ணியன் - நாரதர்; பொதியன் - அகத்தியன்; கடம் - குடம்; காகம் கவிழ்ந்தாடும் நதி - காவேரி; காழி - சீர்காழி; மூவகைத்தமிழ் ஆட - மூன்றுவகைத் தமிழையும் அறிந்த அகத்திய முனிவன் ஓடிவர; முன்கு ஆக்கை - முன்னிருந்த உடல்; நகையாட்டி - சிரித்தலைச் செய்து; சீர்காழியில் சூரபதுமனுக்குப் பயந்து, இந்திரன் மூங்கிலில் ஒளித்திருந்து, சிவபூசை செய்ய நந்தவனம் வைத்து, அது உலர்ந்ததனால் அதைச் செழிப்பிக்க, அகத்தியரிடம் காவிரி இருப்பதை நாரதரால் உணர்ந்து, வினாயகரை வேண்ட அவர் குடத்திலிருந்த காவிரியைக் காக உருக்கொண்டு கவிழ்த்துப் பின் சிறுவனாகி ஓடவும் அவரைத் துரத்திக்கொண்டு அகத்தியர் ஓடிக் குட்ட தன்னுடைய சுய உரு காட்டவும் தானே குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இங்கு " ஆட” என்ற சொல் பல பொருள்களில் வந்துள்ளதைக் காண்க. (2)


14. குன்றாடும் திசையானை - குன்றையொத்த திக்கு யானைகள்; கவுள் - மதச்சுவடு; குழிகள் மேடாட - குழிகள் மேடாகவும்; குளி ராழி - குளிர்ந்த சமுத்திரம்; கன்றாடுகை யன்னை - மிகக் கோபங் கொண்ட பார்வதி; இளையாளை உன்னி - இளையவளான கங்கைநதி ஆடுவதை நினைத்து; உடன் உதித்தோன் - கூடப்பிறந்தவனாகிய முருகன்; விண்ணரமகளிர் - ஆகாயத்திலிருக்கும் தேவ மகளிர்; மகவான் - இந்திரன்; செருக்காட - கர்வத்தினால் மகிழ; ஆயிரம் முடிச் சேடன் - ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடன்; துகள் - புழுதி; வால் எடுத்து அவுணர் ஏக்கமாட - பயத்தினால் முகம் வெளுத்து அசுரர்கள் துன்பப்பட; மூடிகம் - பெருச்சாளி. (3)
15. நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி நல்லமத்திமை வைகரி நாலெழுத்துக்கும் - நாதமாகிய அறிவிடத்தில் எழுந்த பொருளாகிய சூக்குமையோடு பைசந்தி, நல்ல மத்திமை, வைகரி என்ற நான்கு வாக்குகட்கும்; வெகு நூல் எழுத்து - அதிகமான புத்தகங்களிலுள்ள எழுத்துக்கள்; முது நான்மறை எழுத்து - பழைய நான்கு வேதங்களின் எழுத்து; கோதற்ற வடமொழியோடு ஒன்பதிற்றிரு வகைக் குறியெழுத்துக்கும் - குற்றமற்ற சமஸ்கிருதத்தோடு, பதினெட்டு வகை நிலத்தில் வழங்கும் அடையாள எழுத்துக்கும்; அப்பால் மேற்பட்ட; எழுத்தாளி - எழுத்தையாள்பவன்; மேலாம் போதம் - மேலான ஞானம்; புந்தி - புத்தி (மனம்); நண்ணரிய - அடைதற்கரிய; தீதற்ற இசை - குற்றமற்ற புகழ்; பரம்பொருள் - மேலான பொருள்; நாதத்தலத்திலெழு பறை:--சூக்குமையெனும் வாக்கு நாபியை இடமாகக்கொண்டு நாதமாகிய அறிவுதானே வடிவாக வரும். பைசந்தி:- இதற்குத்தானம் உந்தியும், வடிவு பிராணவாயுவுமாம். இது அக்ஷரசுவரூபம் தோன்றாதபடி நினைவு மாத்திரமாய் நிற்கும். மத்திமை:- இது நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அக்ஷர சுவரூபத்தை யொழுங்குபட நிறுத்திச் செவிக்குக் கேளாமல் உள்ளறிவுமாய் நிற்கும். வைகரி:- இதனிடம் நாக்கினடியாம். இது செவிப் புலனாம்படி வசனிக்கும். ஒன்பதிற்றிருவகை நிலம்:-- தமிழும் அதனோடு சேர்ந்த பதினேழு நிலமும்; பதினேழ் நிலமாவன; “சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம், கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலிங்கம் கலிங்கம் வங்கம், கங்க மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம், தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே” என்ற செய்யுளிற்காண்க. விநாயகன் ஓங்கார வடிவமாயுள்ளதன் விவரிப்பை அம்புலிப்பருவம் 8-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. (15)

16. தேசிகர் - குரு; தாரணி - பூமி; வழுத்தும் - துதிக்கும்; கௌவை - ஒலி; கால் பெயர்த்திடுதல் - நீங்குதல்; நீலமணி கொண்ட மைக்கண்டன் - சிவபெருமான்; மைவைத்த வரையென்ன ஓரானை யென - கருமை பொருந்திய மலைபோன்று ஒப்பற்ற யானையாக வந்து; வாரணம் - யானை; தெய்வத்தமிழ் - தேவாரத்தைக் குறித்தது; சைவ மதத்தின் குரவரான பூமியிலுள்ளார் துதிக்கும் ஞானசம்பந்தர், சுந்தரர், நாவரசர் ஆகிய மூவரும் திருக்கடவூரை மிதிப்பதற்குப் பயந்து ஒலியுள்ள வேகமிக்க நீருடைய காவேரி நதி சுற்றிய அவ்வூரையடையாமல் நீங்கும்போது சிவபெருமான் அருள் பெற்று வலிமிக்க கரிய மலை போன்ற யானையென வந்து அவர்களைக் கோயில் வழியேயொதுக்கிக் கொண்டுவந்து அவர்கள் கோயிலின் அருகில் வரவும் யானை கோயிலுட் புகுந்து மறைந்ததைக் கண்டு ஒப்பற்ற வஞ்சகமுடைய யானை என்று புகழ்ந்த தேவாரப் பாட்டைக் கொள்ளும் அரும்பாத்தைப்புரி முதல் வா என்று பொருள் கொள்க. இதனைத் தேவாரத்தில்,
“வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை யுள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானை கண்டீர் கடவூரரே"
என்று நாவரசர் பாடியதில் காண்க. அப்பர் - திருநாவுக்கரசர்; கவ்வை - ஒலி; கடவூர் - திருக்கடையூர்; மைக்கண்டன் - சிவபெருமான்; வலிசால் - வலிமிக்க; ஆனை - மரூஉ மொழி; கள்ள வாரணம் - மாறுருவம் கொண்ட யானை. (5)

17. நகைச்சிறு துவரொளி - சிரித்தலின் செவ்வொளி; தனி மணிவடம் - ஒப்பற்ற முத்துமாலை; குழையாடிய செவி - குண்டலங்கள் ஆடப்பெற்ற காது; சிவனது இரண்டு விழிகளான சூரியசந்திரர்கள் வினாயகனைக் காணுவதற்குப் பரத்தலைச் செய்ய அத்தகைய பொன்மயமான உடல் ஆடிட செங்கீரையாடுக என முடிக்க; மனோகரன் - அழகை உடையவன். (6)
18. இமையோர்கள் - தேவர்கள்; அயன் அரி - பிரம்மனும் திருமாலும்; அலரிட்டு - மலரிட்டு வணங்கி; தோப்புக்கண்டம் - இக்காலத்தில் தோப்புக்கரணம் என வழங்குகிறது; கன்னியராடுகிறார் - பெண்கள் நடனமாடுகிறார்; கந்தருவப்புலவோர் - இசைப்பாட்டை உடைய அறிஞர்; பந்தி - வரிசை; கடைத்தலை - வாயிற்படி; துவாரபாலகர் - வாயில் காப்பவர்கள்; (7)

19. மாவடு நேர்விழி - மாங்காயைப்பிளந்தால் அதில் ஒருபாதியை ஒத்தவிழி; வார்கடல் - நீண்டகடல்; மூவேழுபேர் - முதல் ஏழு வள்ளல்கள், இடை ஏழு வள்ளல்கள், கடை ஏழு வள்ளல்கள்; தியாகம் - கொடை; வசந்தன் - மன்மதனுக்கு ஒருபெயர்; சிகாமணி - ஒருவகை ரத்தினம்; ஈரடி - இரண்டு பாதங்கள்; சீதம் - குளிர்ச்சி ; இப்பாட்டு,
“போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம் -
தோற்றியார் கண்ணெல்லாம் தொண்டேபோல் - ஆற்றிப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு."
என்ற பாட்டை நினைவு படுத்துகிறது. (8)

20. ஆர்கடல் - சப்திக்கின்ற பாற்கடல்; நாகணை - ஆதிசேடனாகிய படுக்கை; உறங்காநின்றோன் - உறங்குகின்ற திருமால்; ஆடு அளி - பூவினின்று பூவுக்குச் செல்லும் வண்டுகள்; ஏடு - புறவிதழ்; தாமரை கொண்டாள்கின்றோன் - பிரமன்; ஏர்கொள் - அழகு மிகுந்த; இருந்தாளுங்கோன் - இந்திரன்; சபாபதி - சபையின் தலைவன்; வாழ்வினும் - வாழ்வைக்காட்டிலும்; மேதகு - மேன்மை பொருந்திய; அருள் எந்தாய் - வினைத்தொகை; அருளுகின்ற எனது தந்தையே என்று பொருள். எம்+ தந்தை = எந்தை - மரூஉ மொழி; சந்தாரும் - சந்தனம் பூசிய; வார்கெழு - கச்சுப்பொருந்திய; உமையவள் புணர்கின்றோன் - சிவன்; உலாவரும் - உலவிவரும்; நந்தாத சீர் - கெடாத புகழ். (20)

21. மாறு அடு - பகையைக் கொல்லுகின்ற; இணை - இரண்டு; மாதிரம் - திக்கு; மகாதொனி - மிக்க சப்தம்; மேகபதம் - மேக மண்டலம்; விண்டோட - பலபிரிவுகளாகச் சிதற; மின் போல் - மின்னல் போன்று; ஏ திலர் வேதை - பகைவரால் ஏற்படும் துன்பம்; அகோர மதாசல - கொடுமையுள்ள மதசலத்தை உடையவனே; முரண் தோள் - வலிமிக்கதோள்; ஊறு ஒலிசூழ் அடவான் நல்வேணியலங்காரம் - மிக்க ஒலி சூழ்ந்திருக்கின்ற ஓடும் கங்கையை யணிந்த அழகிய சடையலங்காரம் ; வான் - என்றது மழையைக் காட்டும் சொல்லாகலின் இங்குக் கங்கையைக் காட்டிற்று. விநாயகர் கங்கையை யணிதலின் இவ்வணம் கூறினர். ஓடு மகாசல நாம கணேசன் - ஓடுகின்ற மதசலத்தை யுடைய புகழ்வாய்ந்த கணபதி; முரண் +தோள் - வலிமிக்க தோள்; கணபதி சந்திரனை அணிதலின் "சீத நிலாவணி" யென்றார். (10)
-----------------------------------------------------
தாலப்பருவம்

22. பளிக்கு மணிமேனி - கண்ணாடிபோல் அழகிய உடல்; பவளக்கொடி யன்னவர் - பவளக்கொடியை யொத்த பெண்கள்; வரியளி - வரிகளோடு கூடிய வண்டு; ஊடி - பிணங்கி; பெடையளி - பெண் வண்டு; ஒளிக்கும் - மறையும்; இந்து - பச்சைக்கற்பூரம்; பண்டு - பழைய; மிக்க அழகையுடைய பெண்களது கூந்தலில் பாடிய ஆண் வண்டோடு பிணங்கிப்பறந்த பெண் வண்டு மலரையுடைய அவ்வனத்தில் மறைந்துகொள்ளும். அங்கு வந்து விளையாடுகின்ற பெண்கள் ஓங்கியடித்ததால் மகரந்தங்கள் தாக்க, வாசனையுடைய தேனை வெளி விட்டு வாசனை வீசும் அக்கொம்பு அசைவதால் மயங்கி வெருண்டு அந்தப் பெண் வண்டுகள் முன்பிருந்த ஆண் வண்டுகளைச் சேர்ந்து சுகமளிக்கும் அரும்பாத்தைப் பதி என்க. நறைத்தேன் உமிழ்ந்து பரிமளிக்கும் என்று பிரிக்க. (1)

23. சுறவு - சுறாமீன்; மூரி - பெரிய; புணை - தெப்பம்; நீளும் பரவைத் தடங்காதில் நெடுங்கால் ஈட்டி - நீண்ட சமுத்திரம் போன்ற விசாலமான செவியில் நீண்டகாலமாக அம்மந்திரத்தை ஒலித்தலால் சேர்த்து; நலியும் - வருத்தும்; பிறவிக்கடல், மோகச்சுறவு, துக்க சுகங்களெனும் வலை முதலியன உருவகங்கள். (2)
24. தனி வெள்ளேறு உடையன் - ஒப்பற்ற வெண்மையான இட பத்தை வாகனமாக உடையவன் (சிவபெருமான்); எயில் மூன்று அடுநாள் - திரிபுரங்களை அழிக்கும் நாளில்; சகடு - தேர்ச்கக்கரம்; ஈராறாகி - பன்னிரண்டு சுக்கலாகி; பிறிதொன்று - மற்றொரு தேர்ச்சக்கரம்; ஈரெட்டாகி - பதினாறு சுக்கலாகி; கணை - அம்பு; நாண் - வில் நாண்; சிலை - வில்; துரங்கம் - குதிரை; சிவமூர்த்தி திரிபுரம் எரிக்கத் தொடங்கிய காலத்தில் வினாயகரைத் துதிக்காததால் அச்சு, சக்கரங்கள் முதலியன அழிவுற்றதெனவும் பூசித்த பிறகு இரதம் செம்மையுற்றுகின்றதெனவும் புராணங்கள் கூறுகின்றன. தரியார் - பகைவர்; அங்ஙனம் அச்சு முறிந்தவிடம் அச்சிறுபாக்கம் என வழங்கப்படுகிறது (செங்கற்பட்டு மாவட்டம்.) (3)

25. களபப்பனிச்செப்பு - கலவைச் சாந்தோடு கூடிய குளிர்ந்த குடம்; பதுமமுகை - தாமரை அரும்பு; களியானை - மதயானை; பணைத்து - பருத்து; மருப்பு - தந்தம்; நித்திலம் - முத்துமாலை; சந்தம் - சந்தனம்; முகிழ் முலையார் - அரும்பு போன்ற முலையுடையவர்; மேனிலை - மேல் மாடம்; தண்ணங்கதிர்சேர் வெண்மதி - குளிர்ந்த அழகிய கிரணங்கள் சேர்ந்த வெண்மையான சந்திரன்; மறு - களங்கம்; கொழுநர் - கணவர்; தேனிறால் - தேன்கூடு; மைந்தர் - வீரமிக்க கணவர்; அந்தி - மாலைக்காலம்; பந்தும் குடமும் தாமரை அரும்பும் யானையின் தந்தமும் எதிரிட்டுப் புறங்கொடுத்தோட அவ்வளவு பருத்து முத்துமாலையணிந்து சந்தன வாசனைவீசும் தனத்தையுடைய பெண்கள் நடனமாடும் மேல்மாடத்தின்மீது சந்திரன் பிரகாசிக்க அவனுடைய களங்கத்தை யறியாமல் தங்களை வந்து தழுவும் கணவர்களின் பாதம் வணங்கி சந்திரனைப்பார்த்து, “இதோ தேன்கூடு ஒன்றிருக்கிறது; இதை எடுத்துப் பிழிந்து வடித்துக் கொடுங்கள்,” என்று வணங்கவும் கணவர்கள் மகிழ்ச்சி மிகுந்து அங்ஙனம் எடுக்க ஆடுகின்ற அந்திக் காலத்தையுடைய அரும்பாத்தைப் பதி என்க. (4)

26. காலன் - எமன்; காமன் - மன்மதன்; கடிந்த - வென்று ஓட்டிய; மயல் - மயக்கம்; மணிப்பணிகள் - முத்தாபரணங்கள்; ஆழி - சக்கரம்; பொதும்பர் - சோலை; முழவு - குடமுழா; கயல்மீன், அம்பு, விரகடலில் தோன்றிய ஆலகால விஷம், எமனுடைய வேல், கருவிளை மலர், மன்மதனது அம்புகள் ஆகியவற்றை வென்று ஒட்டிய காதுவரை நீண்ட கண்களையுடைய பெண்கள் ஆசைமயக்கத்தில் கணவன் செய்த பிழைக்காக அவர்களிடமிருந்து பிடுங்கியெறிந்த முத்தாபரணங்கள் சிறு பிள்ளைகள் சிறிய தேரைத் தள்ளிச்செல்ல அதனுடைய சக்கரம் செல்லும் வழியைத் தடுக்கவும் மேல்மாடத்தில் மேக வெளிக்குமப்பால் கொடிக் கூட்டங்கள் சென்று சூரியனது தேர்ச்சக்கரத்தின் வழியைத் தடுக்கவும் அழகிய வீதிகளில் குடமுழாவென்ற வாத்தியத்தின் ஒலிக்கு, சோலை தோறும் மயில்களிக்கவும் உள்ள அரும்பாத்தைப் பதி என்க. (5)

27. வீழி - திருவீழி மிழலை; மேருவரைச் சிலையான் - மேரு மலையை வில்லாக உடைய சிவபெருமான்; வீறு - பெருமை; சுடராழி; பிரகாசம் மிகுந்த சக்கரம்; பாழியுடை - அகன்ற; பாணி - கை; மூரல் - புன்சிரிப்பு; மகாபலி - மிகுந்த பலத்தையுடையவன்; தாழி. சால்; தாதை - தந்தை; திருவீழிமிழலையில் திருமால் தாமரை கொண்டு சிவபெருமானைப் பூசிக்கையில் அம்மலரில் ஒன்றைக் குறைக்கத், தமது கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்ததால் களிப்படைந்து தாமரைக் கண்ணனென்ற பெயரையும் சக்கரத்தையும் கொடுத்தார். இச்சக்கரத்தைப் பெற்று மீளுகையில் அதனைப் பூமியிலிட்டு வணங்கினர். அதனை வினாயகர் கௌவிக்கொள்ள விஷ்ணு பிரார்த்திக்க சிவமூர்த்தி அவரைக் களிப்புறச் செய்து பெறுக என்றபடியால் அவர்முன் கோணங்கிக் கூத்தாடி அவர் சிரிக்க விழுந்த சக்கரத்தைப் பெற்றார். குறியா - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத்திரிந்தது; மாயன் - திருமால்; மற்றும் இக்கதை கீழ்க்கண்டவாறும் கூறப்படுகிறது :-வீரபத்திரர் தக்கனைத் தலைநீங்கத் தாக்கிய காலத்துத் திருமால் எறிந்த சக்கிராயுதத்தை அவர் அணிந்த சிரமாலையில் ஒன்று கவ்வியது. அதைப் பெறும்படி திருமால் கொங்கணிக் கூத்தாடினர். இதைக்கண்டு நகைத்த சிரத்தின் வாயினின்று சக்கரம் விழக்கண்ட விநாயகர், அதனை எடுத்துக் கொண்டு அக்கூத்தைத் தம்முன்னும் ஆடப்பணித்துக் களிப்படைந்து சக்கரம் தந்தனர். இவ்வகை, சக்கரத்தின் பொருட்டு விகடம் செய்ததால் விகடச்சக்கர விநாயகர் எனப்பெயர் பெற்றார் (காஞ்சிப்புராணம்). (6)

28. கருங்குழல்வல்லி - கரிய கூந்தலையுடைய கொடிபோன்ற தமயந்தி; வலாரி - இந்திரன்; திருநள்ளாறு - இது சோழ நாட்டில் காவிரியின் தென் கரையிலுள்ள ஓர் தலம். பெருமான் பெயர் தர்ப்பாரண்யேச்சுவரர், தேவி பெயர் போகமார்த்த பூண்முலையம்மை. இங்கு நளன் தன் கலி நீங்குவதற்காகப் பூசித்தான். இப்பொழுது இது ஒரு இரயில்வே நிலையமாக இருக்கிறது. காரைக்காலிலிருந்து மூன்றுமைல்; கொடுங்கலி - கொடுமைமிகுந்த சனிபகவான்; கந்தம் - வாசனை; காசினி - பூமி; திரு - செல்வம். (7)

29. அண்டிய தம்பி நெடும்பெயர் - சுப்பிரமணியர்; துணையாகிய நின்பெயர் - கணபதி; மூதறிவு - மிகுந்த அறிவு; தேசிகர் - குரு; இருமுது குரவர்கள் - தாய்தந்தையர்; இப்பாட்டு இந்நூலாசிரியரைப் பற்றியதாகத் தெரிகிறது. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு என்றும் அவர்களின் பெயர் கணபதி, சுப்பிரமணியன் என்றும் (அல்லது அதற் கேற்ற பெயராகவும் இருக்கலாம்) அவர்களை வினாயகரே வளர்த்தனர் என்றும் கணபதியே குருவாக வந்தார் என்றும் நெஞ்சில் நினைத்தவைகளைக் கொடுத்தார் என்றும் ஐம்பெருங்குரவர்களாய் உள்ளார் என்றும் தெரிகிறது. (8)

30. போரேறே - போரில் ஆண்சிங்கத்தை ஒத்தவனே; மாகாயா சிறந்த காயாம்பூ நிறத்தையொத்தவனே. பசாசம் - பேய்; ஆகாரா - யானை யடையாளத்தை யுடையவனே; ஆகாரம் - அடையாளம்; வாணர் - வாழ்நர் என்பதன் மருவு; தாது - மகரந்தம்; மீதலம் - வானுலகம். முனோர் - தொகுத்தல் விகாரம். (9)

31. அம்மனை - தாய்; குலுங்குசிலம்பு - வினைத்தொகை; இரைய சப்திக்க; தொத்து - சார்ந்த; தொங்கல் - மாலை; கைத்துணை - இரண்டு கைகள்; தத்தடி இட்டு - தத்தி, தத்திக்காலடி வைத்து; பண்டி - வயிறு. (10)
----------------------------------------------
சப்பாணிப்பருவம் br>
32. கொத்துவிரி - தொகுதியாக விரிந்த; உரகம் - ஆதிசேடனாகிய பாம்பு; குட்டம் அளறு இட்டு - சிறியதாகி சேறுபடிந்து; குடுமி - சிகரம்; மூதண்டகூடம் - பழைய உலகத்தின் வீடுகள்; இங்கு வீடுகள் ஆகுபெயராய் அங்குள்ள மக்களை உணர்த்தியது; துத்திமுடி - பொறிகளை உடைய தலைகள்; அரவமோரெட்டு - எட்டுத்திக்கு நாகங்கள், இவைகள் பூமியைத் தாங்குவன; முடக்கெயிற்றுச்சூரன் - வளைந்த பற்களையுடைய அசுரன் (சூரபத்மன்) அண்டப்பித்தி பொதிர் எறிய - ஆகாயமாகிய சுவர் நடுக்கங்கொண்டு நட்சத்திரங்களை வீச; நிருதப் படை - இராக்கதப் படைகள்; உயிர்க்கொட்டி நிற்ப - அவர்களுடைய உயிர் நடுக்கத்தால் பறையடித்ததுபோல அடிக்க; கலாபம் - தோகை; பிரசண்டம் - வலிமை; சத்திதரன் - வேலைக் கையிலே உடையவன் (முருகன்); இதில் முருகனைச் சிறப்பித்து அவற்கு "முன் வரும் அரும்பாத்தைப் புரிமுதல்வ" எனக் கூறப்பட்டது காண்க. (1)

33. பனிகொண்ட திங்கள் - குளிர்ச்சியையுடைய சந்திரன்; கண்ணி - தலைக்கணியும் மாலை; திங்களங்கண்ணி - உம்மைத்தொகை; பவளவேணியன்-பவளம்போன்ற சிவந்த சடையை உடையவன் (சிவன்); பரிசுளோர் - தன்மையுள்ளோர்; கனி - மாங்கனி; உன்னையல்லால் ..........எந்தையே முந்தினேன் - உன்னையல்லால் வேறு உலகு ஏது வேறு உயிர் ஏது என்று கூறிச் சுற்றிச் சிவனாகிய எனது தந்தையே முந்திக்கொண்டேன் எனப்பொருள் கொள்க; “ஆல்" அசைநிலை; கடவுள் மாங்கனி - தெய்வத்தன்மையுடைய மாம்பழம்; ஒரு சமயம் கைலாயத்திற்கு நாரதர் தெய்வத்தன்மையுடைய மாம்பழத்தோடுவந்து சிவனிடம் தர அவர் தன் இருபிள்ளைகளையும் பார்த்து யார் இந்தப் பகற்பொழுதிற்குள் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களே பெறலாம் என முருகன் மயில்வாகனமேறிச்செல்ல, அவர் வருவதற்குள் வினாயகர் தம் தாய் தந்தையரைச் சுற்றி “நீவீரே எல்லாவுலகும் எல்லா உயிர்களும்” என்றுகூறி மாம்பழத்தை வாங்கி வாயில் வைத்தார். வந்த முருகர் கோபித்துப் பழனி மலைக்குச் சென்றுவிட்டார். பின் தாய்தந்தையர் சென்று “பழம் நீ'' என்றுகூறிச் சமாதானஞ் செய்தனர். (2)
34. மாதவர் - முனிவர்; வியாதமுனி - வேத வியாசர்; ஐந்தாம் மறை - ஐந்தாம் வேதமாகிய பாரதம்; அறிவான் - வினையெச்சம்; ஆடகச்சிகரம் - பொற்சிகரம்; தேமருவும் - தெய்வத்தன்மை பொருந்தும்; மைதீர் எழுத்து - குற்றம் நீங்கிய எழுத்து; தவராசர் - முனிவர்கள்; வேதவியாசர் பாரதத்தை வடமொழியில் கூற வினாயகன் தன் தந்த மொன்றால் மேருமலையில் எழுதினார். கவித்தொகை இலக்கத்துக்கு மேலும் இருபத்தையாயிரத்தினையும் - கவித்தொகை இலட்சத்து இருபத்தைந்தாயிரத்தையும்; வியாசபாரதம் 1,25,000 - சுலோகங்களாகும். (3)

35. தரங்கம் - அலை; கரா - முதலை; துடியடி - துடிக்கின்ற பாதம், வினைத்தொகை; கடாக்களிறு - மதத்தையுடைய ஆண் யானை (கஜேந்திரன்); கா - காத்தலைச்செய் (ஏவல் வினை); கமலை - இலக்குமி; கட்செவிக் கடவுள் - பாம்புகளின் தலைவன், (ஆதிசேடன்); பொருங்கருடத்துரங்கம் - போர் செய்யவல்ல கருடவாகனம்; சுபம் - நன்மை; இந்திரத்தூய்மன் என்னும் அரசன் சாபத்தால் யானையாகி அவ்வியானை முதலையால் இழுக்கப்பட கடைசியில் 'ஆதிமூலமே' என்று கூவி முறையிட்டது. அது கேட்ட திருமால் கருடன் மீதேறி வந்து முதலையைக் கொன்று காப்பாற்றினார். மருகன் - மருமகன்; திருமாலினுடைய பெண்களான மோதை, பிரமோதை, சுமதை, சுந்தரி முதலியவரை வினாயகர் மணந்ததால் மருமகன் என்று கூறப்பட்டார். (4)

36. நால்வகைப் பிறப்பு - கருப்பையில் தோன்றுவது, முட்டையில் தோன்றுவது, விதை, வேர் முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவது, வேர்வையிற்றோன்றுவது என்பன. ஏழுவகைத் தோற்றம் - தேவர், மனிதர், நீர்வாழ்வன, விலங்கு, ஊர்வன, பறவை, தாவாம்; தண்டாமை - நீங்காமை; எண்பத்து நாலிலக்கம் யோனி - எண்பத்தினான்கு லக்ஷம் யோனி பேதங்கள்; தனு - உடல்; கரணம் - இந்திரியம்; பாதுகாத்திட உதவ வௌவகை செலுத்தி - பாதுகாத்திடவுதவுதற்காக அவைகளை நீங்குமாறு செலுத்தி; மூவினை - சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்பவைகளால் வரும் கர்மம்; தண் + தாமம் - தண்டாமம்; தாமம் - மார்பிலணியும் மாலை; மூவினை, (1) தெய்வத்தால் வருவது, மழை, இடிபோன்றன, (2) தன்னால் வருவது, நோய்கள் முதலியன, (3) பிறவுயிர்களால் வருவன, விலங்கு முதலியவற்றால் நேருக் துன்பம்; இங்ஙனமாகவும் கூறலாம். (5)

37. நந்து அணிமால் - சங்கைத் தரிக்கின்ற திருமால்; நச்சரவத்தரசன் - ஆதிசேடன்; அந்தி நிறத்தரனார் - செந்நிறம் பொருந்திய சிவன்; அங்குசபாசம் உவந்து அணி எனப் பிரிக்க; நால்வாய் - தொங்குகின்ற வாய்; கொந்து இதழித் தொடை - கொத்துகளாக வுடைய கொன்றை மாலை. (6)

38. மதாணிகள் பல கொட்ட - பதக்கங்கள் பலபோட; வானவர் கோனுறு தரு - தேவேந்திரன் உலகத்திலுள்ள கற்பகமரம்; மலை கொட்ட - மலைபோன்று கொட்டிப் படைக்க, வினையுவமத் தொகை; பூவையர் - பெண்கள்; முழவு - குடமுழா என்னும் வாத்தியம். இப் பாட்டில் கொட்ட என்ற சொற்கள் பல பொருளில் வந்துள்ளன காண்க; கயாதரன்:- மரகதமுனிவர் ' என்பவருக்கும் 'விநதை' என்ற அரக்கிக்கும் பிறந்தவன். அவர்கள் யானை உருக்கொண்டு புணர்ந்ததால் யானைமுகத்துடன் தோன்றினான். பிறகு சிவமூர்த்தியை எண்ணித் தவம் புரிந்து பலவரங்கள் பெற்று அரசாண்டு தேவரை வருத்தவும் கடைசியில் வினாயகர் தன் தந்தத்தால் போழ்ந்தனர். வரத்தின் பலத்தால் பெருச்சாளியாகி வினாயகருக்கு வாகனமானான். (7)

39. பெட்டகம் - பெட்டி; மணி - முத்துக்கள்; பேரும் முனைப் படை - போர்முனையில் விட்டோடும் சேனைகள்; பேர்தல் - விட்டோடல்; பிறையெயிறுகள் - பிறைபோன்ற வளைந்த கோரைப்பற்கள்; வாசிகள் - குதிரைகள்; தோதகம் - அலங்கோலம்; கட்டு அறவிட்ட - அம்புக்கட்டுகளை முழுதும் விட்ட; மூசுகளம் - நெருங்கின போர்க்களம் ; கூளிகள் - பேய்கள்; கொட்டம் - கர்வம். (8)

40. வார்சடை யண்ணல் - நீண்ட சடையுடைய சிவன்; பங்கைய லோசன புங்கவன் - தாமரைக் கண்ணன் என்கிற திருமால்; கமலாசனம் மேவிய தந்தை - பிரமன்; வெட்சி - இது ஒருவித மலர், பகைவரது பசுநிரையைக் கவர்தற்கு உரியமாலை; படர் - துன்பம்; குனித்து - அசைத்து; இடபவாகனம், கருடவாகனம், அன்னவாகனம், மயில் வாகனம், சூரிய சந்திரர் வாகனங்கள்; மற்ற தேவர்களின் வாகனம் ஆகியவை பின்னே வர வினாபகர் தன்வாகனமாகிய பெருச்சாளியை முன்னே செலுத்துகிறார்; இனிப்படர் நீங்கிய இரவிகள் சந்திரர் ஏறிய வாகனம் - துன்பம் நீங்குதற்காக வந்த சூரியர்களும் சந்திரர்களும் ஏறிய வாகனம். (9)

41. வாருதிபால் - பாற்கடலினிடம்; தானவர் - அசுரர்; சேணினார் - ஆகாயத்திலுள்ள தேவர்கள்; மழுபாணி காரணர் - மழுவைக் கையிலேயுடைய கடவுள் (சிவன்); கட்டாணி காரணி - பலசாலியாகிய பார்வதி; கோடு - தந்தம்; வெற்புஏணி - மலையை நிலைபெறச் செய்து; பலம் - பலன், இறுதிப்போலி; மிடற்று அமை - கழுத்திலேயே அடக்கிய; அமைகட்டாணி - வினைத்தொகை. (10)
----------------------------------------------------
முத்தப்பருவம்
42. கொன்றைக் கோதை - கொன்றைமாலை; வரிவண்டு குலவா அலம்பு - இரேகைகளையுடைய வண்டுகள் சேர்ந்து ஒலிக்கும்; கோதைப் பெருமான் சிவபெருமான்; கோதை - உமாதேவி; குரை வெள்ளருவி - சப்திக்கின்ற வெண்மையான அருவிகளையுடைய; பிடி - பெண் யானை; தேறல் - தேன்; ஒவ்வாது - பொருந்தாது; இலகு ஓங்காரத்தினிற் பிடியும் களிறும்:- இவ்வடிவமாக இருப்பதை அம்புலிப்பருவம் எட்டாவது பாட்டின் குறிப்பில் காண்க. குலவா, உலவா - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத் திரிந்தது. வேத ஆகமக் கடலில் உலவா ஊறிக் கிளர்ந்ததேறல் எனக்கூட்டுக; உமை இடை மேல் ஏறு அங்கு உகந்தே மாற்றரிய உலவா வேத ஆகமக்கடலின் ஊறிக் கிளர்ந்த என்று பிரிக்க. (1)

43. அலையார்வேணி - அலைகளோடு கூடிய கங்கை நதி பொருந்திய சடை, அலை - சினையாகுபெயர்; நேயம் - அன்பு; துரிய நிலை : ஆன்மா உந்திப்பிரதேசத்தில் பிராணனோடு இலயித்து நிற்கத் தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்மா நிலை. சாக்கிரம், சொப்பனம், சுழியம், துரியம், துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகளில் நான் காவது. (2)

44. திருநாளைப் போவார் - ஆதனூரில் புலையர் குலத்தில் அவதரித்து நந்தனார் எனத் திருநாமம் பெற்றவர்; திறம்பும் கறங்கு - மாறுபடும் காற்றாடி; புலியூர் - சிதம்பரம்; ஆதரம் சேர் - கடவுளிடம் அன்புசேர்ந்த; புங்கூர் - திருப்புங்கூர்; இது காவிரியின் வடகரையிலுள்ளது. அழியாத மயக்கமாகிய இரு வினையினால் மாறுபடும் காற்றாடிபோற் சுழன்று பிறவிக்கடலில் அமிழாமல் தெளிவடைந்த உணர்ச்சியால் உலகியற்கை நீங்கி கடவுளிடம் அன்புசேர்ந்த நந்தனார் சிதம்பரம் சேர்வாரென்று வெளியில் கண்டு சென்று அவர் வருகின்ற நாளை அருச்சகன் கனவில் சொல்லியும் வற்றாத வளமிகுந்த திருப்புன்கூரில் மகிழ்ச்சிகொண்டு எல்லோரும் குளமமைப்பதற்கு முயல, ஒப்பற்ற ஐந்துருவாகி ஆட்களின் வேலைக்குள்ள கூலியைப் பங்கிட்ட ஒப்பற்ற வாயையுடையவனே, அரும்பாத்தைப்பதியில் வாழும் குழந்தையே, முத்தந்தருக என்று பொருள் கொள்க. பெரியபுராணத்தில் நந்தனார் திருப்புன்கூரில் உள்ள ஒரு பள்ளத்தைக்கண்டு பெரிய குளமாக வெட்டியதாக வரலாறுளது. (3)

45. வெண்காடு - திருவெண்காடு, சீர்காழிக்குத் தென்கிழக்கில் ஏழு மைலில் உள்ளது; பழுத்த மதியார் - சிவன்; திருப்பெண்ணாகடத்தில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்த அச்சுதகளப்பாளர் என்பவர் நாடோறும் புத்திரப்பேறு வேண்டித் தம் குலகுரு வாகிய ‘சகலாகம' பண்டிதரை வணங்கிக் கூற அவர் சம்பந்தர் அருளிச்செய்த திருமுறையில் கயிறு சாத்திப் பார்க்க “பேயடையா பிரிவெய்தும்... ....... தோயாவார் தீவினையே" என்னும் திருப்பதிகமுதிக்க அதன் பொருளை ஆசிரியராலறிந்து வெண்காடு (சுவேதாரண்யம்) சென்று ‘முக்குள' நீர் மூழ்கிச் சிவபூசை செய்து வருகையில் சிவபெருமான் ஒருநாள் கனவின்கண் எழுந்தருளி “உனக்கு மகவைத் தருகிறோ" மென்று கூறி மறைந்தனர். பின் தம்மூருக்குத் திரும்பிய சில மாதங்களில் அவர் காதலியாரிடத்துக் குழந்தை பிறந்தது. குழந்தைக்குச் "சுவேதனப் பெருமாள்” என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பின் வெண்ணெய்நல்லூரிலிருந்த காங்கேய பூபதியிடத்தில் வளர்ந்துவந்தார். மணலில் சிவலிங்கம் செய்து விளையாடுவதைக் கண்ட அவ்வழியே வந்தபரஞ்சோதிமுனிவர் சிவஞான போதத்தையருளி 'தமிழிற்செய்க' எனக் கட்டளையிட்டனர். இவர் 5-வயதில், திருவெண்ணெய்நல்லூர் பொல்லாப் பிள்ளையாரிடம் வேத சிவாகமங்களைப் பயின்று சிவஞான போதத்திற்குப் பொல்லாப் பிள்ளையார் அருளிச்செய்த சூர்ணிகையைக் கொண்டு தமிழில் சிவஞானபோதமும் அதற்கு வார்த்திக உரையுமியற்றினர். இவ்வகை இவர் பிள்ளையாரிடம் கற்றுவருவதை யுணராது "ஐயோ இப்பிள்ளை ஊமையாய் இருக்கிறதே” என்று விசனப்பட்டனர். ஒருநாள் பிள்ளையாருக்குப் பூசைசெய்யும் ‘சிவத்துவசர்' கோயிலுள் சந்தடி கேட்கவே போய்ப் பார்த்தார். ஊமைக்குழந்தையோ பிள்ளையாரிடம் தடை, விடைகளோடு சாஸ்திர பாடம் கேட்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து ஊரிலும், அப்பிள்ளையின் பெற்றோரிடத்தும் தெரிவித்தார். பெற்றோரோ தாங்களே பிள்ளையாரிடம் வேண்டிக் குழந்தை பேச அருள்பெற்று வந்தனர். இவரே மெய்கண்டதேவர். (4)

46. அன்னம் - அன்னப்பறவை; அகிலேசன் - காசித் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்குப் பெயர்; வன்னி - நெருப்பு; அரசு செய்துவரு “திவோதானன்” என்று பிரிக்க; திவோதானன்: ஒரு கற்பத்தில் உலகமழிந்தது. அக்காலத்தில் இரிபுவைப் பிரமன் நோக்கி "நீ உலகத்தை யாளுக. உனக்குச் சேஷன் மோகினியைப் பாரியையாக்குவான். தேவர்கள் வேண்டிய கொடுப்பர். அதனாலுனக்குத் திவோதானன் என்ற பெயர் உண்டாகும்," என்றனன். அவ்வகை திவோதானன் தேவரை மதியாது அரசாட்சி செய்ய தேவர் பொறாமை கொண்டு இவன் தவத்திற்குக் காரணமான அக்கினியைக் கிரகிக்க அரசன் எல்லாவிடத்தும் நிறைந்து சலியாதிருக்கச் சிவமூர்த்தி இவன் நிலையை மாற்ற யோகினிகள், கணபதி, பிரமன் ஆகிய வரை ஏவிக் கலக்கினர். அவர்களால் முடியாமை கண்ட திருமால் பௌத்தமதம் போதித்துச் சனங்களை மயக்கியது கண்ட அரசன் காசியில் சிவப்பிரதிட்டை செய்து பூசித்து முத்தியடைந்தான். திவோதானன் வன்னியெனப் போந்தனன் என்று கூட்டுக. விநாயகர் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கனவில் கூறி காசித்தலத்தை மீண்டு வரச்செய்தார் என்று பொருள் கூறுக. திவோதானன் காசியில் சிவப்பிரதிட்டை செய்து துதித்ததால் இங்ஙனம் கூறினார். (5)
47. பருதி - சூரியன்; குருசில் - ஆண்மக்களில் சிறந்தவன்; கனகம் - பொன் போன்றவன்; மாவின்வகிர் - மாவடு; பரவை - கடல் போன்றவன்; மாயன் - திருமால்; வேள்வியவர் - பிராமணர்; தாவில் கெடுதலில்லாத. (6)

48. மீனம் - மீன்; முடைநாறும் - புலால் நாற்றம் வீசும்; மறிகடல் - அலை மடங்குகின்ற கடல்; வீறுகழை - பெரிய கரும்புகள்; வான்கருவி - மேகம் கறுத்து; தானம் - இடம்; கமுகு - பாக்கு மரம்; சடையனை மகிழும் முத்தம் - சிவபெருமானை மகிழ்விக்கத்தரும் முத்தம்; புவியெலாம் வாழவருளிய முத்தம், ஏழை திருவுள மலரும் முத்தம் எனக்கூட்டுக; தானம் - மதம்; கடலிலிருந்து உண்டாகின்ற முத்தையும், கரும்பினின்று உண்டாகின்ற முத்தையும், மேகத்தினின்றும் உண்டாகின்ற முத்தையும் உயர்ந்த தன்மை என்று நினைக்காமல், சிவபெருமானை மகிழ்விக்கும் முத்தத்தையும், உலகினரை வாழ்விக்கும் அன்பையும் மதமொழுகுகின்ற உன்னுடைய வாயினால் மிகுந்த சுவையுள்ள முத்தத்தையும் கொடுப்பாயாக; கருவிவான் ஈனம்உறு பல தானம் மிசைவிழ இறையும் முத்தும் - வான்கறுத்துப் பெறுதலடைந்து பல இடங்களின் மீது விழுமாறு சிந்துகின்ற முத்தும்; கமுகிலே யேறுபட வடிசாறும் ஒழி வழியிழியும் முத்தும் - பாக்குமாத் திலே ஏறுதலடைய அதனால் வடிந்த சாறு நீங்கியவிடத்து இறங்கும் முத்தும். (7)
49. அறிதுயில் - யோக நித்திரை; பைந்துளவன் - பசிய துளப மாலையுள்ள திருமால்; கோலமலி இமையோர் - அழகு மிகுந்த தேவர்; பைந்தரு - கற்பகம் முதலிய மரங்கள்; கோதையுமைபுணர் ஆதி - பெண்ணாகிய உமையைச் சேரும் முதன்மையான சிவபெரு மானே; நீலம் - கறுப்பு; நெடுமலைப் பெண்கொடி - நீண்ட இமய மலை அரசன் புத்திரி; அணி ஆலம் இலை - அழகிய ஆலிலை. (8)

50. கூளி - பேய்கள்; குறளிகள் - இரண்டடி உயரமுள்ள பூதங்கள்; அலகை - பேயின் ஒரு சாதி; முட்டு - துன்பம்; முது கதிர் ஆதிகிரகம் - பழமையான சூரியன் முதற்கொண்டுள்ள நவக்கிரகங்கள்; அடல் - பகை; படர் - துன்பம்; கொடும் நடக்கும் - கொடுமைகளை உண்டாக்கும்; மதி - புத்தி; நினை தருவோர் - நினைப்பவர், வினையாலணையும் பெயர்; சாடி - மோதியழித்து; ஞான தினகர - ஞான சூரியனே. (9)
51. ஏல - இசைவாக; தரு - மரம்; தாலம் - நாக்கு; பிரபையுமாய் - ஒளியாய். (10)
--------------------------------
வருகைப்பருவம்
*****
52. தொங்கற்பெரும் சுடிகை - மாலை சூடிய மயிர்முடி; ஆடகம் - பொன்; சுட்டி - நெற்றியிலணியும் சுட்டி என்னும் அணி; சன்ன வீரம் - ஒரு வென்றிமாலை "பொங்கிய சன்னவீரம் தயங்க''; (பெரிய புராணம் கண்ணப்ப-59) அழைத்த எனது - அழைத்தெனது, அகரம் தொக்கது; கரடம் - யானை மதம். (1)

53. கறைகொண்ட - குற்றத்தையே கொண்ட; காலர் என்று - காலதூதர் எனத் தன்னை நினைக்க; கடவுளரில் - தேவர்களைக் காட்டிலும்; கால் ஊதி - தென்றல் காற்றாகிய தேரை ஊர்ந்துகொண்டு; மென்பூச்சிறை கொண்ட கணை - மெல்லிய பூக்களைக் காவலாகக் கொண்ட அம்பு; நாணியளி கொண்டு - நாணியாகிய வண்டுகள் கொண்டு; பூஞ்சிலை -- பூவினாலாகிய வில்; காமநூலென்னும் பூ விசேடம் காமனுக்கு வில்லாமென்று தமிழ் நூலிலும் மந்மத தந்த்ரமென்னும் புஷ்பம் மன்மதனுக்கு வில்லாமென்று வட நூலிலும் கூறுமாறு உணர்க. வேள் - மன்மதன்; தெரிவைமார் கொங்கையையரண் கொண்டு வாழ்தேவர் சிரசு நாண் கொண்டு குனிய - பெண்களின் தனத்தையே பாதுகாப்பாகக் கொண்டு வாழும் தேவர்கள் தங்கள் தலைகளை வெட்கத்தால் தாழ்த்த; அரண் - பாதுகாப்பு; சூறை - கொள்ளை; ஓவை - ஒழிதல்; வாகை - வெற்றி; பிரமசாரி - விநாயகர் “தாயைப்போல தாரம் வேண்டும்'' என்று கேட்டு அங்ஙனம் கிடைக்காததால் பிரம்மசாரியாகவே உள்ளார் என்று உலகர் கூறுகிறார்கள். (2)

54. ஆயிரங்கோடி கடல் வெள்ளமும் சேர்ந்து பாதங்களை நனைக்கவும் முடியாத வலிமை கொண்ட சூரபதுமன் அவன் தாயாரின் குடலிடமிருந்து கொண்டு வருகின்ற அசுரர் சேனை வெள்ளம் பெருகுகின்றபோது, கோபித்துப் போர்செய்யும் உதவி வீரர் விநாடிதோறும் இரண்டாயிரம் வெள்ளம் பெருக முருகன் தன் கையிலுள்ள வேலாயுதத்தை விடுத்துப் போர் செய்ய கலங்கியபோது அப்போர்க்களத்தே பிரம்மசாரியாய்ச் சென்று மாயை என்னுமவளைத் தனது அழகிய துடையிலே வைத்துப் பூவையொத்த துதிக்கையை அவள் அல்குலில் செலுத்திப் பொருந்துதலுண்டான கருப்பப்பையை யழுத்திக் கருவை எடுத்துப் போட்டுத் தம்பிக்கு வெற்றி தந்த பலவானே வருக எனப் பொருள் கொள்க. கணம் - விநாடி; வேலன் - முருகன்; காய் இருந்துணை வீரர் - கோபிக்கும் கொடிய உதவி வீரர்; இக்கதையைச் சிற்றில் பருவம் 6-வது பாட்டில் காண்க. (3)

55. காழி - சீர்காழி; கூடல் - மதுரை; அமண் - சமணர்; குண்டர் - சமணர்கள்; விண்டிட - சிதைந்து ஓட; நீரூறு நதி - நீர் சுரக்கின்ற ஆறு; அமைச்சன் - கூன் பாண்டியன் மந்திரி குலச்சிறையார்; புகலிமா முனிவன் - ஞானசம்பந்தன்; சொல்லப்படுகின்ற புகழ் வாய்ந்த சீகாழியில் பிறந்த ஞானசம்பந்தர் மதுரையில் சமணரையழித்துக் கூன் பொருந்திய பாண்டியன் முன் மீன் பொருந்திய புனலில் வாதம் புரிந்த சமணர் சிதைந்து ஓட, அவ்வழுத நீரினால் சுரக்கின்ற நதியான வைகையிடத்தில் விபூதியையுடைய சைவமதம் நிலைபெறுகவெனும் ஓதின ஏட்டை விடுதலும் அது நீரின் எதிரோட நல்லியல்பமைந்த அவ்வேட்டைக் கொள்வேனென்று ஓடிய குலச்சிறையாருக்கும் அதைப் பெறச் செய்யாது நீரிலே செல்லவிட்டு மதுரைக்கருகிலிருக்கும் பூவணம் என்ற ஊரின் ஒரு பிள்ளையாய் வந்து வெள்ளத்தின் அலையில் பெருமை பொருந்திய அவ்வேட்டை எடுத்து நீருடன் (ஈரத்தோடு) கொடுக்க பெருமை பொருந்திய சீகாழிப் பிராமணரான ஞான சம்பந்தரால் பெருமை பொருந்திய தேவாரம் பாடப்பெற்ற வீரவிக்ரமனே வருக எனப் பொருள் கொள்க. இவ்வரலாறு திருவிளையாடலில் சிவன் அவ்வேட்டை மறைத்துப் பின்பு துதிக்கக் கொடுத்தனர் என்றுளது. (4)

56. பைத்தலை - கூர்மையான முனை; பகழி - அம்பு; சென்னி - சோழன்; மா மூவர் தேவார வைப்பு - பெருமை பொருந்திய சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்பவரின் தேவார பொக்கிஷங்கள்; சிறுவன் - நம்பியாண்டார் நம்பிகள்; துய்த்தல் - உண்ணுதல்; ஐந்தெழுத்து - பஞ்சாட்சரம்; நம்பியாண்டார் நம்பி :- திருநாரையூரிலே சிவவேதியர் குலத்தில் பிறந்தவர். இவர் தந்தையார் வேற்றூருக்குப் போயிருந்தபோது தாய், பிள்ளையாரைப் பூசிக்க, அன்னம், பழம் முதலியவை கொடுத்தனுப்பினார். அவ்வண்ணமே ‘நம்பி' சென்று பூசித்துப் பிள்ளையார் சந்நிதியில் அன்னம் முதலிய படைத்துப் புசிக்க வேண்ட அவர் புசிக்காதிருந்ததால் தமது தலையைக் கல்மேல் மோத இருக்கையில் பிள்ளையார் தடுத்து அமுது செய்தனர். பின்னும் நம்பி “காலதாமதம் ஆயிற்று; உபாத்தியாயர் தண்டிப்பார்; கல்வி கற்றுக்கொடு" என வேண்ட, வினாயகர் உண்பதையும் நிறுத்திப் பல கலைகளையும் கற்றுக் கொடுத்தார். இதைக் கேட்ட இராஜராஜ சோழன் நம்பிகளை வணங்கி பிள்ளையாருக்கு மிகுந்த பூசை செய்வித்து மூவர் தேவாரத் திருமுறைகள் இருக்குமிடம் அறிய விரும்பி வினாயகரைக் கேட்கும்படி வேண்டினர். நம்பியார் வினாயகரைக் கேட்டுத் தில்லையில் மேற்குக் கோபுரத்தையடுத்த திருமதிலில் சேமித்திருப்பதாகக் கூறினார். இப்பிள்ளையாருக்குப் “பொல்லாப் பிள்ளையார்" என்று பெயர். (பொள்ளா - செதுக்குதல் இல்லாத; பொள்ளா என்பது பொல்லா என மரீஇயிற்று) (5)

57. அகல் நீர்வேலை - அகன்ற நீருள்ள சமுத்திரம்; அலையாக் கும்பம் - யானை; அலையும் கும்பம் - செல்வக் குவியல்; ஆணையினாலடங்கா நாகம் - மதயானை; ஆணையினாலடங்கும் நாகம் - பாம்பு; வீணையினாலசையாத் தந்தி - யானை; வீணையினாலசையும் தந்தி - வீணையின் கம்பி; பகராதுயர்ந்த மாதங்கம் - யானை; பகருகின்ற உயர்ந்த மா தங்கம் - தங்க உலோகப் பொருள்; பறவாத் தும்பி - யானை; பறக்கும் தும்பி - ஓர் வண்டு; காயாத பருங்கோட்டத்தி - யானை; காயும் பெரிய கிளைகளையுடைய அத்தி - அத்திமரம்; மாதர் முலை படியாக் களபம் - யானை; மாதர் முலை படியும் களபம் - ஓர் வாசனைச் சாந்து; படியில் விலை நிகழா ஒரு சிந்துரம் - யானை; படியில் விலை நிகழும் ஒரு சிந்துரம் - பொட்டு; தலத்தில் நிறுவாக் கம்பம் - யானை; தலத்தில் நிறுவும் கம்பம். தூண்; அருங்குளத்தில் நேரா ஆம்பல் - யானை; அருங்குளத்தில் நேரும் ஆம்பல் - அல்லி மலர்; வடுக்கள் பட நெருங்கா இளமா - யானை; வடுக்கள் பட நெருங்கும் இளமா - மாமரம்; இவைகளெல்லாம் குறிப்புச் சொற்கள். (6)
58. 1. சுமுகன், 2. ஏகதந்தன், 3. கபிலன், 4. கசகர்ணன், 5. இலம்போதரன், 6. விகடன், 7. விக்கினராசன், 8. அதி வினாயகன், 9. தூமகேது, 10. பாலசந்திரன், 11. வக்கிரதுண்டன், 12. பூர்வசகாயன், 13. கெணாதியக்கன், 14. ஏரம்பன், 15. சூர்ப்ப கர்ணர், 16. ஸ்கந்த பூர்வர் என்ற பெயர்கள் வினாயகருக்குப் பெயர்களாம். ஏரம்பன்: உருத்திரருடைய சமீபத்திலிருப்பவன், அடியாரை வளர்விப்பவன். கணாதிபர் என்பது அதிவினாயகர் என்றும் கணாதியக்ஷர் என்பது கணாதியக்கன் என்றும், கஜாநநர் என்பது பூர்வசகாயன் என்றும் கூறப்பட்டுள்ளன காண்க. வக்கிரதுண்டர்:- பிரமசுரன் குமரனான துராசரன் தவம்புரிந்து சர்வசித்திபெற்று பிரமன், விஷ்ணு முதலியோர் உலகங்களை வென்று ஆங்காங்கு ஒரு அசுரரை நியமித்துக் கொடுங்கோன்மை செய்து வருகையில் மந்திரிகள் இவனை நோக்கி உனக்குப் பயந்து தேவர் காசியை யடைந்தனர் எனக்கேட்டுப் படைகொண்டு செல்லவும் தேவர் சக்தியை வேண்ட சக்தி ஐந்து திருமுகமும் பத்துத் திருக்கரத்துடனுமிருந்து தன் முகத்தில் வக்கிரதுண்ட விநாயகரைத் தோற்றுவித்து அசுரனைத் தொலைத்தாள். இவர் அசுரனைக் காலில் மிதித்து எந்நாளுமிருக்க வரம் அளித்தார். தூமகேது:- தூமசுரன் என்னும் அசுரனைப் புகை யெழுப்பிக் கொன்றதால் இப்பெயர்' அடைந்தார். சுமுதைக்கும் மாதவ ராசனுக்கும் மகனாகத் தோன்றினார். பாலசந்திரர்:- சிறுபிள்ளையாய்ச் சென்று அனலாசுரனை விழுங்கி அவன் வெப்பத்தைச் சகித்துச் சந்திரனைப்போலக் குளிர்ந்திருந்தமையாலும் மாதவராசனும் சுமுதையும் காட்டில் தனித்திருந்து துன்பப்படுகையில் அவர்கட்குக் குழந்தையுருவாய்க் காட்சி தந்து துன்பம் நீக்கியதாலும் இப்பெயர் பெற்றார். விக்கினராசர்:- இவர் வரேணியராசன் தேவி புட்பகை யென்பவள் கருவுயிர்த்த காலையில் அப்புத்திரனை மறைத்து யானைமுகத்துடன் தாம் குழந்தை உருக்கொண்டு இருந்தனர். அரசன் கண்டு காட்டில் இட்டு வரக் கட்டளையிட்டான். அவ்வகை ஏவலர் குழந்தையைப் பராசுவ முனிவர் ஆச்சிரமத்தினருகு வைத்துவிட்டு வர முனிவர் கண்டு வளர்த்து வந்தனர். இவ்வகை யிருக்கையில் பெருச்சாளி உருக்கொண்ட கிரவுஞ்சன் வினாயகரிருக்கும் ஆச்சிரமத்திடை வந்து முனிவர்களைத் தொந்தரைபுரிய அவனை வாகனமாகக் கொண்டு வலியடக்கி, இருடிகள் வேண்டுகோளால் காலரூபி என்று மறுபெயர் பெற்ற விக்னனை வலியடக்கி அவன் வேண்டிக்கொள்ள உயிருடன் விட்டு விக்னராசர் எனப் பெயரடைந்தார். விகடன் (அ) விகடசக்கர விநாயகர்:- வீரபத்திரர் தக்கனைத் தலைநீங்கத் தாக்கிய காலத்தில் திருமால் எறிந்த சக்கராயுதத்தை அவர் அணிந்த சிரமாலையில் ஒன்று கவ்வியது. அதைப் பெறுமாறு திருமால் கொங்கணிக் கூத்தாடினர். இதைக் கண்டு நகைத்த சிரத்தின் வாயினின்றும் சக்கரம் விழக்கண்ட விநாயகர், அதனை எடுத்துக்கொண்டு அக்கூத்தைத் தம் முன்னும் ஆடப்பணித்துக் களிப்படைந்து சக்கரம் தந்தனர். இவ்வகை சக்கரத்தின் பொருட்டு விகடஞ் செய்ததால் ‘விகடசக்கர விநாயகர்' என்ற பெயருண்டாயிற்று. ஏகதந்தன்:- ஒரே கொம்பைப் பெற்றிருப்பதால் இப்பெயர் உண்டாயிற்று. ஒரு கொம்பை ஒடித்து மேருமலையில் பாரதம் எழுதினார். அதிவிநாயகர்:- தன்னை வணங்கினவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும் அவ்வகை வணங்காதவர்க்கு விக்கினத்தைத் தருபவரும் தனக்குமேல் நாயகரிலாதவருமாதலால் இப்பெயர் வந்தது. இலம்போதரன்:- முன் வந்திருக்கும் பெருவயிற்றால் இப்பெயர் பெற்றார். (7)

59. மருது - மருதமரவிலை; கையாந்தகரை - கரிசிலாங்கண்ணி; சாதிப்பூ - சாதிபத்திரி (அ) சாதிப் பன்னம்; பச்சை - மாசிப்பத்திரி, இது தமிழில் மாசிப்பச்சை எனவழங்கும். இது ஒரு பூண்டுவகையைச் சேர்ந்தது. இருபத்தொரு பத்திரங்களாவன:- 1. அலரி, 2. துளசி, 3. மருதமரவிலை, 4. எருக்கு, 5. அறுகம்புல், 6. கரிசிலாங் கண்ணி, 7. முள்ளி, 3. அரசமரவிலை, 9. மாசிப்பச்சை, 10. நாயுருவி, 11.அழகுசேர்ந்த நாவல்மரவிலை, 12. எலுமிச்சைமரவிலை, 13. நொச்சில், 14. சாதிப்பூ, 15. இலுப்பைமரவிலை, 16. வன்னிமரவிலை, 17. ஊமத்தையிலை, 18. இலந்தைமரவிலை, 19. தேவதாருமரவிலை, 20. அழகிய மாதுளையிலை, 21. விட்டுணுகாந்தியிலை. குட்டிக்கொடு - குட்டிக்கொண்டு; தாள் - பாதம். (8)

60. துகள் - குற்றம்; துய்ய தறி - தூய்மையான தூண்; மறை கூடம் - வேதமாகிய வீடு; அன்பாம் அந்தண் கவளம் - அன்பு என்னும் அழகிய உணவுருண்டை; மடுத்து - உண்டு; அளி - வண்டு; புனம் - வயல்; வெளி - ஆகாயம்; கருத்தென்னும் துய்யதறி, மறைக் கூடம், அன்பாம் அந்தண்கவளம், ஆர்வமெனும் பேரளி, கருணைமத வெள்ளம், வினைப்புனம், மெய்ஞ்ஞான வெளி ஆகியவை உருவகங்கள்; மாறிமாறி வருகின்ற பிறப்பில் வெறுப்புற்று நிலையாமையை உணர்ந்த சான்றோர்கள் குற்றமற்ற சமயத்தில் மோட்சக் கருத்து என்கின்ற தூய்மையான தூணில் கட்டப்பட்டு அழிவில்லாத வேதமாகிய வீட்டையடைந்து சுருங்காமல் மிகுந்த அன்பாகிய அழகிய உணவுருண்டையை உண்டு அடியார்களின் ஆசை என்னும் பெரிய வண்டுகள் சுழலுமாறு சிறந்த கருணை என்னும் மதவெள்ளம் ஓடி தீவினையாகிய வயலை அடியோடு அழித்து மெய்ஞ்ஞானமாகிய ஆகாயத்தில் உலவித், தெளிகின்ற அருள்மழை பொழியும் செழித்த அரும்பாத்தை நகர் என்க. (9)

61. அலங்கும் - ஒலி செய்யும்; புரி நூல் - பூணூல்; பாசம் - அங்குசபாசம்; புந்தி - புத்தி இங்கு மனதைக் குறித்தது. இப்பாட்டில் வினாயகர் சிவனைப்போன்றுள்ள நிலை கூறப்படுகின்றது. அந்தி நேரத்தில் தோன்றும் இளைய வெண்பிறையையும், மலர்ந்த அழகிய கொன்றைமாலையையும், அரிய அழகிய கரங்கள் நான்கும், விளங்கும் பவளம் போன்ற சிவந்த சடையாகிய காடும், பழிப்பில்லாத அங்குச பாசமும், மழுவாயுதமும், நீண்ட பாம்பாகிய ஆபரணமும், உயர்ந்த நிறம் பொருந்திய அழகிய தந்தமும், விளங்கும் மலர்ந்த விழியும் சந்தனம் பூசிய மார்பில் தங்கும் பூணூலும் சிவபெருமானைப் போலப் பெற்றுப் பூமியில் துதிப்பவர்கட்குக் குலதெய்வமாகி மனமகிழும் அரும்பாத்தைப்பதிவாழ் விநாயகனே வருக எனப் பொருள் கொள்க. (10)
-----------------------------------------------------------
அம்புலிப்பருவம்
*****
62. இப்பாட்டு சந்திரனுக்கும் கணபதிக்கும் சிலேடையாகக் கூறப்படுகிறது. சந்திரன் மேல் செல்லுமிடத்து: வட்டமதிவேணியன் இடக்கண் - வட்டமாகிய சந்திரனைச் சடையிலுள்ள சிவபெருமானது இடப்பக்கமுள்ள கண்ணாய் உள்ளான்; வாலாலுருவின் மடமானை வைத்திடுதல்- வெண்மையான உருவத்தையுடைய விரும்பப்படாத களங் கத்தைக் கொண்டிருத்தல்; மன்னுயிர்களுக்கு அருமருந்து - நிலைபெற்ற உயிர்களுக்கு அமிர்தம் (சந்திரனுடைய கலையை முதற் பதினைந்து நாள் தேவர் அருந்துவர், மற்றவற்றைத் தென்புலத்தார் அருந்துவர். எனவே இங்ஙனம் கூறினார்). முழுமதிக்கடவுள் - பூர்ணசந்திரன், இது பௌர்ணமிதினம் நிகழும்; இட்ட கணபதியென்று இருத்தலால் - ஆகாயத்திலிட்ட நட்சத்திர கூட்டங்களுக்குத் தலைவனென்று இருப்பதால்; பைங்கொடி யினக்குவளை மலர்விக்கை - பசிய கொடிக்கூட்டத்திலிருக்கும் நீலோற்பல மலர்களை மலரச்செய்தல். (சந்திர கிரணங்களால்தான் குவளைப்போது விரியும்); எவ்வமரரும் பரவு தெய்வவரை யதனை வலமிட்டுவரு பலன் எய்தல் - எத்தகைய தேவரும் துதிக்கும்படியான மேருமலையைச் சுற்றிவரும் பலனை அடைதல். (சூரியனும் சந்திரனும் மேருமலையைச் சுற்றி வருகிறார்கள் என்பது புராண வரலாறு); புவியில் அனைவர்க்கும் மேலாய்த் துலங்கல் - பூமியிலுள்ள மனிதர் எல்லோருக்கும் உயரத்திலுள்ள ஆகாயத்தில் பிரகாசித்தல்; மந்தாகினி சுரநதி கண்ணோடி வருதலால் - கங்கை நதியிருக்கும் சிவபெருமான் சடையினிடம் தக்ஷன் சாபத்தால் பயந்து ஓடிவந்து அவரால் தாங்கப்படுதல்; கணபதி மேல் செல்லுமிடத்து:- வட்டமதி வேணியன் - வட்டமாகிய சந்திரனைச் சடையிலே உடையவனாய்; இடக்கண் வாலாலுருவின் மடமானை வைத்திடுதலான் - இடப்புறம் வெள்ளிய ஆபரணங்களையணிந்த இளையமான் போன்ற 'வல்லபை' என்பவளை வைத்திடுவதால்; மன்னுயிர்களுக் கருமருந்தாதல் - நிலைபெற்ற உயிர்களுக்குத் தேவாமிர்தத்தை ஒத்து விரும்பிப் பூசிக்கப்படுதல், அங்ஙனம் பூசிப்பதால் தேவாமிர்தம் போன்று இன்னல்களை நீக்குவதால் வினாயகர் அருமருந்து எனப்பட்டார்; அமிர்தம் - நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு ஆகியவைகளை நீக்கக்கூடியது; முழும் அதிக்கடவுள் - உலக முழுமைக்கும் முதன்மையான கடவுள் (யாதொரு காரியம் எடுத்தாலும் வினாயகரைக் கும்பிட்ட பிறகு தொடங்குவது வழக்கம்.); இட்டகணபதி - வணங்குபவர்களுக்கு இஷ்ட சித்தியைக் கொடுக்கும் கணபதி என்ற பெயர் உடையவர்; பைங்கொடி யினக்குவளை மலர்விக்கை - பசுமையான கொடியிலுள்ள கூட்டமான குவளை மலர்போன்ற கண்களுக்கு விநாயகன் தரிசனம் தந்து மலரச்செய்தல்; எவ்வமரரும் பரவும் தெய்வ வரையதனை வலமிட்டு வருபலன் எய்தல் - எத்தேவரும் துதிக்கும் மேருமலையைச் சுற்றி வருபலனைத் தன் தந்தை, தாயையே சுற்றி அடைதல்; பெரும்புவியிலனைவர்க்கும் மேலாய்த் துலங்கல் - பூமியிலுள்ள எல்லோருக்கும் மேலான கடவுளாக விளங்குதல். மந்தாகினிச் சுரநதி கண் ஓடி வருதல் - ஆகாய கங்கை சடையினிடம் ஓடிவந்து தங்குதல். (விநாயகர் சிவனம்சமாதலால் இங்ஙனம் கூறலாகும்.) (1)
63.
சந்திரன் கணபதி
1. குளிர்ந்த தாமரை மலர்களின்
கூட்டத்தைக் குவித்து விடுவான்.
அடியார்களது கைகளாகிய தாமரையைக்
குவித்துக் கும்பிடும்படிச் செய்வான்.
2. மழைத்தாரைகள் பெய்கையில்
நடு நடுவில் தோன்றுவான்.
மதநீர்த் தாரைகள் ஒழுக வருவான்.
3. மண்டாறு தலை பறித்தாய்.
நெருங்கின கங்கையாறு உள்ள சிவபெருமான்
தலையிலே இருக்கச் சம்பாதித்துக் கொண்டான்.
உற்ற துணைவளர் ஆறுதலை படைத்தான் -
மிகுந்த சகோதரனான சுப்பிரமண்யன் மிகுதியான
ஆறு தலைகளைக் கொண்டுள்ளான்.
4. வாரிக் கருந்தலைவிடாய் - செல்லும் வழியில் கரியதலையுடைய
கேதுவால் விழுங்குவதினின்றும் விடுவித்துக் கொள்ள மாட்டான்,
இவனும் மணிவாரிக் கருந்தலை விடான்-
இவனும் முத்து விளை தலையுடைய கரிய யானைத் தலையை விடமாட்டான் (வாரி – விளைவு.)
5. பழைய பூமியினிடத்தை தன்
ஒளிக்கதிர்களால் சூழுவான்.
பாரிலுள்ள மக்கள் தான் இருக்குமிடத்தை
வலமாகச் சுற்றி வரும்படித் தங்குவான். (2)

64. .
சந்திரன் கணபதி
1. சீறிக் கொல்லுகின்ற பாம்பான
கேதுவைக் கண்டு அஞ்சுவான்.
பாம்பிலானாகிய கங்கணத்தை
அணிவதற்கு அஞ்சமாட்டான்.
2. பதினாறு கலைகளினால்
எப்போதும் பிரகாசிப்பதை அறியவில்லை.
புதிய ஞானமாகிய கலைகளை அதிக மாக உடையவன். (கலை - படிப்பு.)
(கலை - சந்திரன் வளரும் பங்கும் தேயும் பங்கும்.)
3. சோதித்தால் உடலின் களங்கத்தைப் பெற்றிருக்கிறான்.
ஈசுவரனிடம் கூறிய சொல்லைக் வகைகளையுண்டு பிதிர் வாக்கியத்தைப்
பரிபாலனம் செய்யாததால் சொல்லிற்
தக்கன் யாகத்தை யழிக்கிறேனென்று
காப்பாற்றாமல் தக்கனிட்ட பலகார
களங்கமுள்ளவனானான்.
4. மேரு மலையைச்சுற்றி வலம் வருவான். பூமியிலுள்ள மனிதர்களெல்லாம்
இவனைச்சுற்றி வலம்வரத் தங்குவான்.
5. எல்லோராலும் சொல்லப்பட்ட
அமாவாசை நாளில் மறைவான்.
ஒரு தடவை கூட மறைவதற்கு அறியமாட்டான்.
முறைப்பு - முறை; மழகளிறு - இளமையான யானை. (3)

65. ததியமுது - பாற்கடலில் தோன்றிய - அமிர்தம்; தேவர்கள் சிதைவாகி அகிலாண்ட முற்றும் கலைந்து அலைபட்டது - பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றிய போதாகும். பிள்ளையார் இது இயற்பெயராக பிள்ளையாரையும் குறிப்பு வினையாலணையும் பெயராக பிள்ளைமைத்தன்மை உடையவனையும் குறிக்கும். பிள்ளைமை+ஆர் + பிள்ளையார்; பெருகி வாழ்வது - வளர்பிறை; சிறுகி வாழ்வது - தேய்பிறை; துன்பு புரிகேது - பகைகொண்டு விழுங்குகின்ற கேது எனும் பாம்பு; தூமகேது - வினாயகருக்சூ ஓர் பெயர்; வாலச்சந்திரன் (அ) பாலச் சந்திரன் என்பதும் வினாயகருக்கு ஒரு பெயர்; சந்திரனுக்குச் செல்லும்போது வெண்மையான சந்திரன் என்றும் இளைய சந்திரன் என்றும் பொருள் கொள்ளலாம். பேர் - மரூஉமொழி. (4)

66. ஆவணித்திங்கள் - ஆவணிமாதம்; பயன் - பால்; உரத்து. வலிமை கொண்டு; உதரம் - வயிறு; முக்கண் பிரான் - வினாயகன்; இளைய வீரன் - வீரபத்திரன்; துவைய விட்டது - தேய்ப்புண்டது; உனக்கே தோற்றும் - உனக்கே தெரியும்; ஏற்று இரவு - அடைந்து கெஞ்சி; கோடியேல் - கொள்வாயானால்; சந்திரன் வினாயகரது பெருத்த வயிற்றைக் கண்டு நகைத்ததால் வினாயகரால் ஒளி இழக்கவும் சண்டாளத்துவம் பெறவும் சாபம் பெற்று மீண்டும் அவரால் அச்சாபம் வருடத்திற்கு ஒருநாளில் அடைய வரம் பெற்றான். அது ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தி ஆகும். இக்காலத்தில் சந்திரனைக் கண்டோர் சண்டாளத்துவம் அடைவர். ஆகவே அது நீங்க கணபதியைப் பூசித்து இஷ்டசித்தி பெறுவார்கள். சுகமலால் பயமில்லை என்று பிரிக்க. இளையவீரன்:- தக்ஷயாகத்தில் வீரபத்திரன் எல்லோரையும் அழிக்கும்போது சந்திரனும் வீரபத்திரரால் தேய்ப்புண்டு அனுக்கிரகம் பெற்றான். இவர் ஆயிரந்தலையும் இரண்டாயிரம் கையும் மூவாயிரம் கண்ணுமுடையவர். துளியூறும் அமுதந் துளிப்ப என்றார் வீரபத்திரரின் கால் தேய்ப்பினால் அமுதங் கக்கியது நோக்கி. (5)

67. கவடு - கிளை; அரிவை - பெண், இங்கு அகலிகையைக் குறித்தது; சனகனிடு சாபம் - சனகனிட்ட வில்; நீக்கியும் - ஒடித்து அழித்தும்; “கவடுற்ற..........................சாபமது நீக்கி”:- திருமால் கண்ணவதா ரத்தில் யசோதையால் இடுப்பில் உரலுடன் கட்டப்பட அதனோடு தவழ்ந்து சென்று மருதமரங்களை விழச் செய்தார். அதிலிருந்து நளகூபரன், மணிக்கிரீவன் என்பவர்கள் தோன்றி கண்ணனை வணங்கிச் சென்றனர். "கற்போலும்.......................... நீக்கியும்":- இந்திரன் கௌதமரை வஞ்சகமாக ஸ்நானத்திற்கு வெளியேயனுப்பிவிட்டுத் தான் அவர்போல் உருவம் எடுத்துச் சென்று அவர் மனைவி அகலிகையைக் கூடினான். முனிவர் ஞான திருஷ்டியால் அறிந்து வீட்டிற்கு வர இந்திரன் பூனையாக ஓடவும் அவனுக்குத் தேகமெல்லாம் ஆயிரம் யோனிகள் ஆகக்கடவது என்ற சாபமும் அகலிகையைக் கல்லாய்ப் போமாறு சாபமுங் கொடுத்தார். பின் அகலிகை வணங்க இராமர் செல்லும்போது அவர் பாதம் பட்டதும் சாப நீக்கம் ஆகும் என்று கூறினார். சனகனிடு சாபம்:- சீதை திருமண நிமித்தமாக சிவதனுசை இராமர் வளைக்கவஅது இரண்டாக ஒடிந்துவிட்டது. பின் சீதையை மணம் புரிந்தார். எனவே அவ்வில்லை ஒடித்து நீக்கினார். சாபம் - வில், கோபித்துச் சொல்லும் சொல், சொல்லொற்றுமை குறித்துச் சொன்னார்; உமை சபித்த சாபம் :- சிவமூர்த்தியும் உமையும் சொக்கட்டான் ஆடுகையில் திருமால் மத்தியஸ்தராய் இருந்தார். அப்போது உமை செயிக்கையில் சிவன் வென்றார் எனப் பொய்ச்சாட்சி கூறி உமையால் மலைப் பாம்பாயிருக்கச் சபிக்கப்பட்டுப் பாலைவனத்திலிருந்து கணபதியால் சாபநீக்கமடைந்தார். இவனிட்ட சாபம்:- முற்செய்யுளில் காண்க. குருவிட்ட சாபம்:- குருவாகிய பிரகஸ்பதியின் மனைவி தாரையைச் சேர்ந்ததால் கயரோகி ஆகுமாறு சபித்தார். இரண்டும் விட - இரண்டும் நீங்கிவிடுவதால். (6)
68. மகுணன் - மகிழ்நன் என்பதின் திரிபு, கணவன் என்று பொருள்; பரவுமொரு புலவர் - அபிராமிபட்டர்; உவா - இங்கு அமாவாசையைக் குறிக்கும்; இரு மகன் - பெரிய மகன், இங்கு மூத்த மகனைக் காட்டுகிறது; "வருநெல்......................வல்லமையுள்ளவள்”:-பார்வதி பிராட்டியார் சிவபிரானை “நோக்கி நான் அறம் வளர்க்க வேண்டு"மென சிவபிரான் இரு நாழி நெல்லளித்து இதைப் பூலோகத்தில் கொண்டு சென்று உழவுத் தொழிலால் பெருக்குக என அவ்வாறே கங்கை நாட்டு உழவர்பால் நெல்லளித்து விருத்தி செய்யச் செய்து காஞ்சியையடைந்து தவஞ் செய்து நெற்கொண்டு உழவால் அதைப் பெருக்கியறம் வளர்த்தனள்.பரவு மொரு புலவர்க்கு ...........பண்பொடு வரச் செய்தாள்”:-சோழ நாட்டுத் திருக்கடையூரிலிருந்த அபிராமி பட்டர் தம் குலதெய்வமாகிய தேவியினிடத்து நீங்காப் பக்தியுடையவராய் இருந்தார். ஒருநாள் இவர் கோவிலிலிருக்கும்போது தஞ்சையையாண்ட சரபோஜி மன்னன் "தையமாவாசைக்"குக் கடலாடக் காவிரிப்பூம்பட்டினம் வந்தான். வழியிலிருந்த "திருக்கடவூர் நாதரைத்" தரிசிக்கவெண்ணி கோயிலுள் புகுந்தான். அபிராமி பட்டர் அம்மையின் சன்னிதியில் யோகத்திலிருந்தனர். தன்னை மதிக்காதிருந்த இவரை அரசன் யார் என வினவ, பொறாமை கொண்ட அந்தணர்கள் “இவர் வாம மார்க்கத்தினர். மது மயக்கத்தால் மயங்கியிருக்கின்றார்” என்றார்கள். மன்னன் அதனை நம்பாது அவரிடம், "இன்று என்ன திதி? எவ்வளவு நாழிகை இருக்கிறது?” என்று கேட்டான். பட்டருடைய காதில் அரைகுறையாகப் படவும் கடவுளிடம் ஞாபகம் சென்றதாலும், “இன்று சுத்த பௌர்ணமி யாயிற்றே'' யென்றார். பின்பு பட்டர் உண்மையுணர்ந்தார். அப்போது அரசன் பட்டரை நோக்கி “இன்று பௌர்ணமி யில்லையாயின் உம்மைத் தண்டனை செய்வேன்” என்று சினந்து சென்றான். பட்டர் “எல்லாம். அவள் செயல்" என்று எண்ணி “உதிக்கின்ற” என்று தொடங்கி எழுபத்தெட்டுப் பாட்டுப் பாடினார். மாலையாயிற்று. எழுபத்தொன்பதாம் பாடலான “விழிக்கே அருளுண்டு” என்று பாடவும் தேவி தனது தோட்டினைக் கழற்றி வானமண்டலத்தில் வீசி நிலவொளி யுண்டாக்கி யோக நித்திரையிலிருக்கும் பட்டரையெழுப்பிக் காட்டினாள். அரசனும் மன்னிப்புக் கேட்டான். (7)

69. பார் படைத்தவர் - பிரம்மன்; பார் படைத்தனை முன்பு உதவுமோர் பங்கயக் கண்ணன் - பிரம்மனைப் பெற்ற ஒப்பற்ற திருமால்; அக்கண்ணர் தமையுதவு பகரறு முருத்திரர் - அத்'திருமாலைப் பெற்ற சொல்லமுடியாத புகழ்வாய்ந்த உருத்திரர்; நாதத்தினின்று விந்துவும், விந்துவினின்று சதாசிவனும், சதாசிவனிடமிருந்து ஈசனும், ஈசனிடமிருந்து உருத்திரர்களும், உருத்திரர்களிடமிருந்து திருமாலும், திருமாலிடமிருந்து பிரமனும் பெறப்படுகின்றார்கள் என்பது சைவ சித்தாந்தம். அந்நாதம் பிரணவப் பொருளாய் வரும் என்றும் அப்பிரணவப் பொருளாய் விநாயகன் தங்குகின்றான் என்றும் கூறுகிறார். கடவுளின் திருவுருவங்கள் அரூபம், ரூபா ரூபம், ரூபம் என்ற மூன்று. அவர் அரூபியாயிருக்கும்போது சிவம், சக்தி, நாதம், விந்து என நான்கு பெயர் பெறுவர். அவர் ரூபா ரூபியாயிருக்கும்போது சதாசிவம் எனப் பெயர்பெறுவர். அவர் ரூபியாயிருக்கும்போது மகேசன், உருத்திரன், மால், அயன் எனப் பெயர் பெறுவர். “சிவம் சக்தி நாதம் விந்து சதாசிவன் திகழு மீசன், உவந்தருள் உருத்திரன் தான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்ப், பவந்தரும் அருவம் நாலிங்கு உருவம் நாலுபயம் ஒன்றாய், நவந்தரு பேதம் ஏகநாதனே கடிப்பன் என்பர்” (சிவஞானசித்தியார்) பிரணவப் பொருளுக்கு........... பிள்ளை :- எல்லாம் வல்ல பரம்பொருளிடமிருந்து முதலாவது உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமேயாகும். அந்த ' ஓம்' என்னும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவமாம். இறைவனிடமிருந்து முதற்கண் தோன்றியது ஒங்காரப் பிரணவமேயாகையால் இவர், ‘பிரணவ கணபதி' யென்றும் 'ஓங்கார ரூபன்' என்றும் அழைக்கப்படுகிறார். ஒடிந்த கொம்பு 'ஓ' என்ற எழுத்தின் ‘சுழி'யிருக்குமிடம். இவ்வெழுத்து இங்கிருந்து தொடங்கி வலக்கை வழியாகக் கிரீடத்தைச் சுற்றி, இடக்கை பாசம் வரையில் வந்து, திரும்பி வளைந்து, நெற்றிப் பொட்டு வரையிற் போய்த் துதிக்கை வழியாகக் கீழிடக்கை வந்து கால் வரை இறங்கும். இடக்கையும் மோதகமும் ‘ம்' என்பதைக் குறிக்கின்றது. ஆகையால் விநாயகர் திருவுருவம் ஓங்கார சொரூபமேயாகும். ஆரத்தடம் பெரும் அரும்பாத்தை - பொருந்திய மிக்க பெருமை பொருந்திய அரும்பாத்தை நகர் என்க. (8)

70. வந்தனை செய்து ஏற்றுவோர் எனப் பிரிக்க; மதன சுந்தர தேகம் - மன்மதனைப் போன்று அழகிய உடம்பு; மதிகதிர்கள் - சந்திர -சூரியர்கள்; "மதிகதிர்கள்.................. கீர்த்தியும்” :-- சந்திரசூரியர் மாறினாலும் எப்போதும் மாறுபடாத கீர்த்தியும்; அட்டமாசித்தி - அணிமா, மகிமா முதலிய எட்டு ஆகும்; எண்ணில் - கணக்கில்லாத. (9)

71. பராக்கிரம் ஆவர் அவர்களுக்கு என்று பிரிக்க; நவ வீரர்: உமாதேவியாரின் காற்சிலம்பினின்று சிந்திய மணிகளில் பிறந்த பெண்களைச் சிவமூர்த்தி விருப்பால் நோக்கக் கருப்பெற்று ஒன்பது வீரர்களைப் பெற்றனர். இவர்கள் முருகனுக்குத் துணையாயிருப்பவர். இவர்களில் முதல்வர் வீரவாகு தேவர். ஏதப்படாத் துணைவன் - குற்றமற்ற சகோதரன்; அவர் தான் பொறார் என்பதிலுள்ள அவர் என்பது சுட்டாக நவ வீரரைக் குறித்தது. ஆறிரண்டாம் ஆதித்தர் - பன்னிரண்டு சூரியர். (10)
------------------------------------------------------------
சிறு பறைப் பருவம்

72. வெங்கள் பணிப்பார் - போர்க்களத்தில் எதிரிகளைத் தாழ்த்துவார்; வெங்களம் என்பது வெங்கள் என நின்றது "ஒரு மொழி மூவழிக் குறைதலும் அனைத்தே" என்ற விதியினால்; விசையமங்கலம் - வெற்றியைக் குறித்த மங்கல முரசு; திசைப்பண்ணவர் - திக்குப்பாலகர்களாகிய தேவர்; இகல் - பகை; தாமரைக்கோயில் மாமியார் - இலக்குமி, மாமியார் என்றது விஷ்ணுவின் பெண்களான மோதை, பிரமோதை முதலிய பெண்களை மணந்ததாலாகும்; சுருதி - வேதம்; தேவகணபதி - இந்திரன்; கணம் - கூட்டம்; நெடுநிலங்களை நூறி - நீண்ட பூமியையழித்து; துந்துமி - துந்துபி எனும் பேரிகை; தும்புரு, நாரதர் இருவரும் யாழ் வாசிப்பதில் வல்லவர்; திங்கட் கொழுந்து - பிறைச்சந்திரன். (1)

73. வில்லார் நுதல் - வில்போன்று பொருந்திய நெற்றி; செம்மாந்த - ஏறிட்ட; தடக்கை - பெரிய தும்பிக்கை; கல்லாரும் நெற்றி மிசை - மலையைப்போன்று பொருந்திய தனநுனியின் மீது; பவளவேணிக் காணிக்கிடந்த மலரோன் ஒற்றை வெண்டலை கழிந்தோன் - பவளநிறமான சடையைப் பார்த்துக்கொண்டிருந்த மலரிலுள்ள ஒற்றைத் தலையை இழந்தவனாகிய பிரமன், ஒழிந்த கொள்ளை - நீங்கிய பலர்; பல்லாடு நகை - பல்லால் சப்தம் செய்தாடும்படியான சிரிப்பு; செல் - மேகம்; விநாயகர் இவ்வாறு தும்பிக்கையால் தடவுவதைக் கண்டு பிரமன் ஒழிந்த சந்திரன் சிரிப்பதைக் கண்டு "நீ யென்னைப் பார்த்துச் சிரித்ததால் பிறைச்சந்திரனாயிருந்து தீமையை யறிவா” யென்று கூறின - இடமகன்ற சோலைதோறும் மேகங்கள் சஞ்சரிக்கும் அரும்பாத்தைப் பதியிலுள்ள தலைவ சிறுபறை முழக்குக என்று பொருள் கொள்க. பால்+ அகல்+சோலை - இடமகன்ற சோலை. (2)

74. கோட்டுஞ்சிலை - வளைக்கும் வில்; பண்டாசுரன் :-மன்மதனிறந்த சாம்பலை ஊடல்கொண்ட பார்வதி நோக்க அதிலிருந்து இவ்வசுரன் பிறந்து உயிர்களின் சுக்கில சோணிதங்களை யுண்டு வருத்தி வருகையில் தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி இவ்வசுரனைப் பிராட்டியை ஏவிக் கொல்வித்தனர்; கௌமாரி - பார்வதி; இப்பாட்டில் மன்மதன் சாம்பலைச் சிவகணத்தொருவன் நோக்கி யுருவாக்கவும் அது பண்டாசுரன் என்ற பெயர்கொண்டு சிவனோடு சண்டையிட பார்வதியினால் தோற்று வலியிழந்து தெய்வத்தன்மையுடைய எதிரிகளைக் கொல்லும் இயந்திரம் ஒன்று அவன் வைத்துக்கொண்டிருந்தபோது வினாயகர் சிவபெருமான் அருள்கொண்டு அந்த இயந்திரத்தைப் பூமியில் விழச்செய்து அழித்துப் போர்செய்த அசுரனையும் கொன்றார் என்று கூறப்பட்டுள்ளது. கோர ஆகாரம் - கோர வடிவம்; உடைந்தவன் - தோற்றவன்; கைவிறலின் - தொழில் திறமையால்; பணித் தொடை ஒருத்தன் - பாம்பை மாலையாகக் கொண்ட சிவபிரான். (3)

75. கிருபாகரன் - கருணையுள்ளவன்; பொருதிரைப் பேராழி - மோதுகின்ற அலைகளையுடைய பாற்கடல்; நெடுமுகட்டொருவரை - நீண்ட சிகரங்களையுடைய ஒப்பற்ற மந்தரமலை; மாசுணம் இறுக்கி - வாசுகி என்ற பாம்பைக் கட்டி; புருகூதன் - இந்திரன்; இருவகைத் திரளார் - தேவர், அசுரர் என்பவர்கள்; புடை - பக்கம்; ஆலம் - ஆல கால விஷம்; பிறக்க + அவன் - பிறக்கவன்; அகரம் தொக்கது; சுலவும் வெண் பாலலை நுரை - சுழலும் வெள்ளிய பால்போன்ற அலைகளாலுண்டாகிய நுரை; உனது வடிவு ஆக்கி அங்கு ஆராதனை ஆதி - என்று பிரிக்க; பெருமணி - சிந்தாமணி; இருநிதி - சங்கநிதி, பதுமநிதி; உயர் தரு - கற்பக விருட்சம்; அமுது - தேவாமிர்தம்; வலஞ்சுழி : திருவலஞ்சுழி என்னும் சிவத்தலம். கும்பகோணத்திற்கு மேற்கே நாலுமைல் தூரத்திலுள்ளது. இங்குள்ள பிள்ளையார் பெயர் வெள்ளைப் பிள்ளையார். இத்தலத்து பூசிக்கப்பட்ட கணபதி இந்திரனால் பூசிக்கப்பட்ட கணபதி. அவன் மீண்டும் எடுக்க வாராது அழுந்தி இருக்கின்றனர். (4)

76. வேணிக்கலாமதி மணக்குங் கணத்திரள் - சடையில் பிறையோடு கூடிய உருத்திரக் கூட்டங்கள்; விதிர்ந்தன - நடுங்கின; முகவாரம் பொருந்து திசை வேடம் - முகத்தில் மாலைகள் பொருந்தும் எட்டுத்திக்கு யானைகள்; மும்மத மழையை நிகர் மழைகள் - யானையின் மூன்றுமத சலத்தை யொத்த மழையைப் பெய்யும் மேகங்கள்; கரு - கர்ப்பம்; காதல்புரி நன் மாமன் - ஆசைகொண்ட மாமனான திருமால்; நாகணை - ஆதிசேடனாகிய படுக்கை; கண் துயில் எனப் பிரிக்க; பூணிற் சிறந்த பணியினம் - சிவபெருமான் முதலியவர்கள் பூணுவதற்குச் சிறந்த பாம்புக்கூட்டங்கள்; அசனியேறு - ஆண் இடி; பொறிமணி யுகுத்திடாமல் - படப்பொறியிலுள்ள மாணிக்கத்தைச் சிந்தாமல், இடி இடித்தால் பாம்புகள் நடுங்கும்; புண்டரிக மலர் - தாமரை மலர்; சேணில் கணம்பெறும் அரும்பாத்தை - ஆகாயத்தின் மீதுள்ள மேகங்கள் தன்மீது படும்படி அவ்வளவு உயரமுடைய மாட மாளிகையுடைய அரும்பாத்தை நகர். (5)

77. ஏர்மலர் - அழகிய மலர்; தெய்வீக மகாராஜன்:- இவன் திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு நடுநாட்டையாண்ட அரசருள் ஒருவன். ஏரண்ட முனிவன் என்பவன் செய்த யாகத்தினின்று எழுந்த தெய்வீகக் குதிரையையுடையவன். சாபமடைந்த பர்வதராஜன், குக முனிவர் யாகத்தில் பிறந்து தெய்வீக அரசன் என்று பெயர் பெற்றான். இவனுக்கு ஔவையார் பாரியின் பெண்களாகிய அங்கவை, சங்கவை என்பவர்களை மணம் செய்வித்தார். அப்போது தெய்வீகராசன் தமிழ்நாட்டு மூவேந்தரும் வரவேண்டுமென்று சொல்ல ஔவையார் வினாயகரைத் தியானித்து, அவரால் மூவருக்கும் திருமுகம் எழுதியனுப்பி மூவரையும் வரச்செய்தார். அரசர் மூவரும் வந்து ஒளவையை நோக்கிச் செய்தியறிந்து எதிரிலிருந்த பனந்துண்டம் தளிர்த்துப் பழுக்குமாயின் இப்பெண்களைத் தெய்வீகராசனுக்கு மணப்பிக்கலாமென அவ்வாறே ஔவை பனந்துண்டை நோக்கி “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும், மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே........... பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே” என்று சொல்ல அது பழுத்துக் கனி தந்தது. பின்பு மூவரும் ஒத்துக்கொள்ள தெய்வீகராசனுக்கு இருவரையும் மணஞ்செய்வித்தார். திருக் கோவிலூர்:-இப்போது தென்னாற்காடு ஜில்லாவில், தாலுக்காவின் தலைநகராக உள்ளது. பசும்பரித் தெய்வீகன்:- பச்சைக் குதிரையையுடைய தெய்வீகன்; ஔவை:- கடைச்சங்கக் காலத்திலிருந்த பெண் புலவர்; பேர் நிருபர் மூவர்:- தமிழ்நாட்டு மூவேந்தர் ; பிறங்கு எழுத்திடு - விளங்கும்படியான எழுத்துக்களை எழுதும்; கணக்கப்பிள்ளை யான் என்று அவர்க்கு - என்று பிரிக்க. அவர்க்கு என்ற சுட்டு மூவேந்தரைக் குறித்தது; ஒரு பெண்ணைக்கும் ஓலை போக்கி - ஒரு பனந்துண்டத்திற்கு ஓலை, கனி முதலியன வரச்செய்து, ஓலை என்பது உபலக்ஷணமாய், காய்கனிகளைக் காட்டியது; பாரியங்கவை - பாரிக்குப் பெண்ணான அங்கவை; பாரி:- இவன் கடைச்சங்ககால வள்ளல்களில் ஒருவன். இவனை வஞ்சனையால் மூவேந்தரும் கொன்றனர். கபிலர் இவன் பெண்களை அழைத்துச்சென்று பலரிடம் மணம் செய்யக் கேட்டும் ஒத்துக்கொள்ளாது போகவே திருக்கோவிலூரில் பார்ப்பனரிடம், அடைக்கலமாக விட்டுவிட்டு இறந்தார். பின்னர் ஔவை தெய்வீகனுக்கு அவர்களை மணம் முடித்தார். (6)

78. மல்லல் செழுங் கொன்றைமாலை சூடி - வளப்பமான செழித்த கொன்றை மாலையைச் சூடினவன் (சிவபெருமான்); ஒரு மருங்கிலே பெண் - ஒப்பற்ற இடப்பக்கத்திலே உமாதேவி; தெண்டிரை மடந்தை - கங்காதேவி; கோதை - இங்கு இலக்குமியைக் குறிக்கும்; பாவுணர் கொழுங்கொடி - சரஸ்வதி; குல்லை - துளசி, குல்லைப் பசுந்துழாய் என்றது - ஒரு பொருட் பன்மொழி; மதனன் - மன்மதன்; மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லின் திறமையால் சிவபெருமானுக்குத் தன் வலியைக் காட்ட ஒரு பக்கத்திலே உமாதேவியை வைக்கும்படிச் செய்தும் தலையிலே கங்கையை எடுக்கும்படிச் செய்தும், திருமாலுக்குத் தன் வலியைக் காட்ட மார்பிலே இலக்குமியை ஏறும்படிச் செய்தும், பிரம்மனுக்குத் தன் வலியைக் காட்டின அளவில் அவன் நாவிலே சரசுவதியை வைக்கும்படிச் செய்தும், இந்திரனுக்குத் தன் வலிமையைக் காட்டியபோது உடல் பூராவும் யோனிகள் வரச்செய்தும் இன்னும் மற்றவர்களுக்கும் தன் வலியைக் காட்டி வெல்லும்படியானவன் என்க. செல்லக் குறித்திடும் - அழியுமாறு நினைக்கும்; யானைக் குக் கரும்பு உணவாதலால் அதையும் விநாயகர் அருந்தி அழித்தார். 3-ஆம் பாட்டு ஒற்றுமை காண்க (பி-லி-லீலை). (7)

79. பொன்னிலத்தரமாதர் - சொர்க்கலோகத்திலுள்ள தேவப் பெண்கள்; புலவர் - தேவர்; புகர்மதக் கிருமுகா - கருநிற மமைந்த மதநீர் பாயும் கரியமுகத்தை யுடையவனே; விசையி பவா - வெற்றி யுண்டாகுக, விஜயிபவா என்பதன் வடசொல்; மென்மை +தொனி - மென்றொனி; கன்னல் மொழி - கரும்பு போன்ற இனியமொழி, உவமத்தொகை; காட்ட மும்மதக் களியானை மன்னவர் - காட்டகத்தினுடைய மும்மத யானைகளை யடக்கும் மன்னர்கள்; இ + நிலம் - இந் நிலம்; எதுகை நோக்கி றன்னகர மாயிற்று; (8)
80. தாதைதரு கனி - தந்தையாகிய சிவபெருமான் தன்னை வலம் வந்த வினாயகருக்குக் கொடுத்த மாம்பழம், வினாயகர் படிவத்தில் இப்பொழுதும் ஒரு கையில் மாம்பழம் இருப்பதைக் காண்க; தடவரையில் எழுது கையால் - பெரிய மேரு மலையில் வியாசர் சொல்லிய பாரதத்தைத் தன் கொம்பை எடுத்து எழுதிய கையால்; எழுது கை - வினைத்தொகை; தவள நிலவு - வெண்மையான நிலவு; போத மலி - ஞானமிகுந்த; அபயம் - தஞ்சம்; ஔவையார் வரலாறு இப் பருவத்தின் ஆறாம் பாட்டில் காண்க. "பொன் ஆற்றிலிட.......... ஈந்த கை”:- சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமுதுகுன்றடைந்து சிவபெரு மானைப் பொன்வேண்டி அங்ஙனம் பெற்று அதில் சிறிது வெட்டி வைத்துக் கொண்டு மணிமுத்தா நதியில் இட்டு இதைத் திருவாரூர் குளத்தில் தரவேண்டுமென்று வேண்டி அங்கிருந்து நீங்கி திருவாரூரை அடைந்து பரவையாருடன் குளத்தில் வந்து தேடுகையில் பொன் அகப்படாமல் போகவே பரவையார் "ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடுகிறீரோ" என்று பரிகாசம் செய்ய, பதிகம் ஓதி அப்பொன்னையடைந்து தான் வெட்டி வைத்த பொன்னிற்கும் அதற்கும் மாத்துக் குறைவதைக் கண்டு வருந்த வினாயகர் வணிகனாக வந்து மாத்துரைத்துக் காட்டி நல்ல பொன் என்றார். இவ்விநாயகர் “மாற்றுரை காட்டிய விநாயகர்” எனப் பேர் பெறுவர். ஆறு - மணி முத்தாநதி; புலவன் - சுந்தர மூர்த்தி சுவாமிகள். (9)

81. வயமேறு படையிலே ஏறினும் - வலிபொருந்திய சேனையினிடத்து அரசர்கள் முன்னேறிச் செல்லுமிடத்தும்; வங்கம் - கப்பல்; கீதம் - செய்யுள்; வாதம் - தர்க்கம்; பயம் மேவு - நன்மையமைந்த; பன்னினும் - சொன்னாலும்; புகுநுண்ணினும் -ஆயுளடைதற்கு முயற்சித்தாலும்; கரவோர் - வஞ்சகர்; படர்காண்டு அடக்கினும் - நிறைந்த துன்பம் தன்னைத் தளரச் செய்தாலும், (காண்டு - துன்பம்). (10)
-------------------------------------------------------------------
சிற்றில் பருவம்
82. கூற்று - எமன்; பதமுகைத்த - பாதத்தால் விழும்படிச் செலுத்திய; கோதை பாகன் - சிவபெருமான்; ஆதியரால் - முதலியவர்களால்; குறைப்பான் - நீக்குவதற்காக; நறைத் தாமரைத் தாளில் போற்றும் புலவர் - வாசனையுடைய தாமரைத் தண்டில் தன்னைப் பாதுகாத்துக் கொண்ட இந்திரர்கள்; மகாபலிக்குப் பயந்து இந்திரன் அனேக காலம் தாமரைத் தண்டில் ஒளித்திருந்தான்; அசுவமேத யாகஞ் செய்துவரும் இந்திரர்கள் பலராதலின் “மகுடமொடு மகுட" மென் றார்; "ஊற்றும் ..... வேத விநாயகனே”:- ஒளிமிகும் வெள்ளிய தந்தத்தோடு எனது தலைவன் மார்பிலே உள்ள பன்றியின் கொம்பை இசைத்துச் சந்தோஷிக்கும் மதிலென்று உவமையில்லா அவ்வடிவ மார்பிலேறிப் பல விளையாட்டுச் செய்த வேதவினாயகனே; உரத்தில் எனக் கோட்டை:- வராக உருக்கொண்ட திருமாலின் கர்வமடக்க அதன் கொம்பையொடித்து மார்பில் அணிந்தார் சிவன். எனக் கோடு - பன்றியின் கொம்பு. (1)

83. முருகு - வாசனை; குஞ்சி - மயிர்; மூரல் - பல்; உருவு மனை - அழகிய வடிவமமைந்த வீடு; உன் சேவடிக்கண் - உனது சிவந்த பாதத்தினிடம்; மணி - முத்துக்கள்; இரு கண்மணி - இரண்டு கண்களிலுள்ள மணி; முன்றிலின் புறத்தே படி ஏறு ஈன் நல் கொடியாடல் பயில விடுத்த இயல் யாங்கள் - வாசலின் பக்கத்தே படிந்து ஏறுதற்கு ஈன்ற நல்ல கொடி ஆடுதற்குப் பழக விடுத்த தன்மையைப் போன்ற நாங்கள். (2)

84. மிடல் - வலிமை; போர் மத்தன் - போர் செய்வதில் களிப்புள்ளவன்; பேழை வயிற்றன் - பெட்டி போன்ற வயிறுடையவன்; ஔவையார் இயற்றிய ‘சீதக்களபம்' என்று தொடங்கும் செய்யுளில் “பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்” என்று வருவதைக் காண்க; மேக்கு வாய் - மேன்மை பொருந்திய வாய்; அமுக்கன் - இரகசியத்தை மறைத்து வைப்பவன் (கோட்சொல்லி); வெருவ - பயப்பட; வேற்றுருவன் - மேலே இருப்பது விலங்குருவமும் கீழேயிருப்பது மனிதவுருவமும் ஆதலால் “வேற்றுருவன்'' எனப்பட்டார்; முடல்சேர் நாகத்தொடையன் - வளைவு பொருந்திய பாம்பை மாலையாக உடையவன்; வாளாவொழித்தால் - சும்மா அழித்தால்; துடைக்கும் ஒருவன் - அழிக்கின்ற சிவபெருமான். (3)

85. தென்னாட்டரசன் மனையில் - தென்னாடான பாண்டிய நாட்டரசன் மலையத்துவசன் வீட்டில்; திருவாய் வளர்ந்த அப்போது - தடாதகைப் பிராட்டியாராய்ப் பிறந்து சுந்தரபாண்டியரை மணஞ் செய்தபோது; வலையன் மகளாக - சிவபெருமான் சாபத்தால் செம்படவன் புத்திரியாக; வரைக்கெல்லாம் மன்னே யெனும் மன்னவன் - பருவத ராசன்; மகளாய் வளர்ந்தது - உமாதேவி எனப் பெயர் கொண்டு பிறந்து வளர்ந்தது; தக்கன் மகளாய் வளர்ந்தது - தவத்தினால் தக்கனுக்கு மகளாகத் தோன்றி தாக்ஷாயணி என்ற பெயருடன் வளர்ந்தது; இப்பாட்டில் மணம் செய்யுமுன் கணபதியை யாவரும் தொழுவாராதலின் சிவபெருமான் தன் மணத்தின்போதும் வினாயகரை வணங்கினர் என்க; அன்னே - அன்னையே, விளி. (4)

86. சேரர்க்கிறைவன் - சேரமான் பெருமாள் நாயனார்; வாம்பரி - வாவும்பரி, தாவுங்குதிரை; மெலிந்தவ்வையார்க்கு – மெலிந்த + அவ்வையார்க்கு என்று பிரிக்க, அகரம் தொக்கது; வாரத்துயிர் - அன்புடைய உயிர்; வைகல்தோறும் - தினந்தோறும்; பாரப்புயலே - கருக்கொண்ட மேகமே; “சேரர்க் கிறைவன்............மேல் வீடளித்தாய்”:-ஔவையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் கைலைக்குச் செல்ல விரும்பி வினாயகரை விரைந்து பூசித்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவகணங்கள் எதிர்கொள்ள வெள்ளையானை மீது ஏறிச் சென்றனர். சுந்தர மூர்த்தி சுவாமிகள் சேரமானை மனதில் நினைக்க சேரமான் அறிந்து தன் குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓதி ஆகாயத்திலெழுப்பி சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பிரதக்ஷணம் செய்து அவரை வணங்கி இருவரும் கைலை சென்றனர். வினாயகர், இச்செய்தியால் பரபரப்படைந்த அவ்வையை நோக்கி, "அவர்கட்கு முன்னே சேர்க்கிறேன் நிதானமாகப் பூசிக்க” என்று சொல்ல அங்ஙனமே "சீதக்களபம்” என்னும் வினாயகரகவல் பாடித் துதிசெய்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன் வினாயகர் தும்பிக்கையால் எடுத்துவிடக் கைலையை அடைந்தார். இப்பாட்டில் “உடல் மெலிந்த அவ்வையாருக்கு மேன்மையான வீட்டைக் கொடுத்தாய்; அழகுடைய எங்களுக்கு இந்தச் சிறிய வீட்டையும் கொடுக்காமல் கலைக்கிறாயே" என்று சமத்காரமாகக் கூறப்பட்டுள்ளமை காண்க. (5)

87. ஏரா - பொருந்தாத; வதுவை - மணம்; இசைத்தோம் - சொன்னோம்; பாரா வாரம் - கடல்; பணைக்கை - பருத்த துதிக்கை; சிந்தைக் கடல்-உருவகம்; பான்மை-தன்மை; தெய்வ மருந்து-அமுதம்; ஊற்றெடுக்கும் - சுரக்கும்; ஆழ் வயிறு - வினைத்தொகை; உணராது உணர்ந்தவர் - முனிவர்; ஆராவமுது - தெவிட்டாதவமிர்தம்; பொருந்தாத கலியாணத்திற்கு விதி கூட்டாது கணக்கில்லாத காலம் கடந்தும் இன்னும் பிரம்மசாரியாயிருக்கிறாயென்று சொன்னோமோ தவிர அசுரக்கூட்டமெல்லாம் பொருந்திய மாயையின் ஆழ்ந்த வயிற்றில் சேர பருத்த துதிக்கை நீட்டிக் கருவையழித்த செய்கையின் தன்மையைச் சொன்னோமோ, என்னவே வேதவினாயகன் பிரம்மச்சாரியல்ல, முன்னமே ஒரு பெண்ணைத் தொட்டவன் ஆயிற்று என்ற கருத்துத் தொனித்ததால் கோபங்கொண்ட விநாயகர் கலைத்தார். “தாயைப் போன்று தாரம் வேண்டு”மெனப் பலநாள் நோற்றும் கிடைக்காததால் பிரமசாரியாகவே இன்னும் உள்ளார் எனக் கூறப்படுவதை இப்பாட்டால் சிறுமியர் மறுத்தல் காண்க. பாராவாரத்......... பான்மை:- முருகன் சூரபதுமனோடு சண்டையிடும்போது பகலில் அசுரர்கள் முருகனால் இறக்க சூரனின் தாய் மாயை இரவில் அசுரர்களைப் பெற்றுப் போருக்கு விட முருகனால் சண்டைசெய்ய இயலாதாயிற்று. இதுவரையில் விநாயகனை நினைக்காத முருகன் இப்போது நினைக்க அவர் தம்பியிடம் 'அஞ்சேல்' என்று கூறி இரவு சென்று ‘மாயை' யின் வயிற்றிலிருந்த கருவைத் தும்பிக்கையால் எடுத்துவிட்டார். பின்பு அசுரர்கள் உண்டாகாது போகவே முருகன் எளிதில் வென்றார். (விநாயக புராணம்) (6)

88. கதலிக்கனி - வாழைப்பழம்; சூதக்கனி - மாம்பழம்; வீறும் வடை - பெருமை பொருந்திய வடை; மோதகம் - அப்பம்; வினவ அளிக்காது ஒளித்தனமோ - நீவிர் கேட்கக் கொடுக்காது மறைத்து விட்டோமோ; இளையார் - இளைய பெண்கள். (7)

89. முருகனிகழ் அசுரன், பரவையேழுக் கப்புறமும் பாராள் அசுரன் என்று பிரித்துக் கூட்டுக. பரவை யேழு - ஏழு கடல்கள்; பாராளசுரன் - பூமியை யாண்ட தாருகாசுரன்; பயின்ற மலை - கிரவுஞ்ச மலை; விண்டு பொருத வரக்கன் - விஷ்ணுவுடன் போர் செய்த இராக்கதனான இராவணன்; வேலை யிலங்கைப் பதி - கடலால் சூழப்பட்ட இலங்கை நகரம்; வெகுண்டார் - மாறு கொண்ட திரிபுர அரக்கர்கள் ; தாதை - தந்தையான சிவன்; மண்டும் - நெருங்கின; அவனை மறந்தோன் - அச் சிவபெருமானை யாககர்த்தா வாக்காது செருக்கினால் மறந்த தக்கன்; மகம் - யாகம்; மடவோம் - மடமைத் தன்மையையுடைய எங்கள்; பண்பினடியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர்; உளக் கமலம் - மனமாகிய தாமரை; உருவகம்; அண்டும் - சேரும்; தாருகாசுரன்:- இவன் சூரபதுமன் சகோதரன். இவன் பட்டணம் மாயாபுரம். முருகனால் இவனும் இவன் மலையான கிரவுஞ்சமும் வெல்லப்பட்டன. (8)

90. மறு - களங்கம்; வளர் வித்தகம் - வளரும் ஞான வடிவம்; போதகம் - யானை; உலையா மலை - அசையாத மலை; மறைக்கு அணையே - வேதத்துக்கு இருப்பிடமே; துறவர் - துறந்த முனிவர்; தூய வரமே தரும் பரம் - தூய வரங்களைத் தரும் மேலானவன்; துரியம்:-- இந்நூலில் முத்தப் பருவம் 2-வது பாட்டில் காண்க. (9)

91. செலவும் - செல்லவும்; படியார் - குணமுடையவர்; கடுக்கை - கொன்றை. (10)
-----------------------------------------------------------------------------
சிறுதேர்ப் பருவம்

92. வளப்பம் பொருந்திய ஒற்றைச் சக்கர தேரில் வரும் சூரியன் நிலையை நிச்சயிக்க குபேரன் வைத்த தேரிலேற நேராய் வரும் இராவணனுடன் போர் செய்கின்ற தேர் அழிய அழகிய தேவர்கட்குத் தலைவனான இந்திரன் அனுப்பின ஆகாயத்திலெழும்பும் தேரில் ஏறி பகையை வென்று மாதரசியான சீதையொடும் புஷ்பக விமானத்திலேறிப் போகும்போது தடையினால் அவ்விமான மிறங்கவும் அப்போது அப்பழைய வனத்தினில் விநாயகரை இராமர் பணியும்போது அத்துன்பத்தை நீக்கிச் சீதையும், இலக்குமணனும், சேனைத் தலைவரும், குரங்குகளும் பருத்தமதில் சூழ்ந்த அயோத்தியில் சேரத் திண்ணியதேரி லுய்த்த அரும்பாத்தைப் புரிமுதல்வா எனப் பொருள் கொள்க. அளகேசன் - குபேரன்; இடுக்கண் - துன்பம்; கவி - குரங்கு. (1)
93. கொய்தினை அடுக்கம் - கொய்கின்ற தினைப்புனம் உள்ள மலைப்பக்கம்; குற மங்கை - வள்ளி; கவண் - தினையைத் தின்ன வரும் பறவைகளை ஒட்டும் கருவி, இதில் கல்லை வைத்து அடிப்பர்; கிழங்கு - வள்ளிக்கிழங்கு; கண்கடை - கட்கடை; வேள் கடை - மன்மதனது கடைக்கண் பார்வை; கவலை கூர் தரும் - கவலை மிகும்; கண் கடைக் கருணையும் வேள் கடையும் எய்தாது என்று பொருள் கொள்க; மை வரை - கரிய மலை; விசைத்து - வீசி; மலையானை - போர் புரிகின்ற யானை என்று வினைத்தொகையாகவும், மலையில் வாழும் யானை என ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகவும் கொள்ளலாம்; மைவரை - யானைக்கு உவமை, அதிலுள்ள அருவியின் பெருக்கு மதநீரின் பெருக்குக்கு உவமை. இங்குள்ள அருவி, நிறம்பற்றிய உவமையல்ல; முலை யானை - இரண்டு முலைகளாகிய யானையையுடைய வள்ளி; அன்னவன் மணித்தோளிடம் - அத்தகைய முருகனது அழகிய தோளிடம்; இது யானையாக வந்து வள்ளியைப் பயங்காட்டி தன் தம்பியின் மணத்திற்குச் சம்மதிக்க வைத்ததைக் காட்டுகிறது; ஏகதந்தன் என வினாயகருக்கு ஒரு பெயரிருப்பதால் "தந்தி எனும் ஒரு நாத" என்று கூறினார். (2)

94. பிஞ்சுமதி - இளைய சந்திரன்; சடாடவி - சடையாகிய அடவி, உருவகம் (அடவி - காடு); உலகமெல்லாம் பெற்றும் எழில் குன்றாத பேதைப் பிராட்டி - இவ்வடியில் மற்றவர்களெல்லாம் ஓரிரு மக்களைப் பெற்றவுடனே கிழவிபோன்று ஆகிவிடுகின்றனர். ஆனால் நம் பிராட்டியோ உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் பெற்றும் அழகு குறையாத பேதைப் பருவமுள்ள பெண்ணாக இருக்கிறார் என்ற நயம் தோன்றுவது காண்க. பிராட்டி - பார்வதி; கவறு - சொக்கட்டான்; விஞ்சு மணி மாயவன் - அழகு மிகுந்த கௌத்துபமணி யணிந்த திருமால்; கணி விளம்புக - கணக்கிட்டுச் சொல்லுக; மெல்லியல் - பார்வதி; முனிவு - கோபம்; நஞ்சுறு குருட்டாவு - விஷமமைந்த குருடான பாம்பு; கார ணற்கு ஆர் அருளினால் - எனப் பிரிக்க; காரணன் - இங்கு விஷ்ணுவைக் காட்டும்; நளினமலர் மங்கை - தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் இலக்குமி; இதிலுள்ள கதையை அம்புலிப்பருவம் ஆறாம் பாட்டில் காண்க. குருட்டு அரவர் ஆக என்று பிரிக்க. அரவர் - பாம்பாயுள்ளவர்; எண்ணில் வனசச் செஞ்சரணம் - கணக்கற்ற தாமரைபோன்ற சிவந்த பாதங்கள். தாமரை முத்துக் கொடுத்தல் பற்றிச் “சரணம் முத்தீய" என்றார். (3)

95. கடுக்கையான் - சிவபெருமான்; இலங்கேசன் - இலங்கைக்குத் தலைவனான இராவணன்; புலவராகுலம் முடிப்பான் - தேவர்களது துன்பத்தை நீக்குவதற்கு; வன்னி என நேர்ச் சென்று - நெருப்பைப்போன்று விரைந்து அவன் எதிரில் சென்று கல் நிகர் தடக்கை. மலையை யொத்த பெரிய தும்பிக்கை; வாய் கழீஇ வருமுன் - இடக்கரடக்கல்; முக்கால் - மூன்று தடவை; அவுணர்கோன் - இராவணன்; சென்னி - தலை; “பொன்னியல்..... ........புரி முதல்வ”:- இலங்கையழியாதிருக்க சிவபெருமானை நோக்கி இராவணன் தவம் செய்தான். அவர் தரிசனம் தந்து அவன் விருப்பப்படி ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து அசுத்தத்துடன் தொடலாகாது, இலங்கை போமளவும் பூமி யில் வைக்கக்கூடாதெனச் சொல்லக் கேட்டு அதனைப் பெற்று இலங்கைக்கு வந்து கொண்டிருந்தான். இதனையறிந்த தேவர் இவன் இலங்கையில் இம் மூர்த்தியைக் கொண்டு போனால் இவன் அரசு அழியாதாகையால் தக்க ஆலோசனை செய்து, வினாயகரிடம் குறை கூறி வருணனை ஏவி வயிற்றில் சிறுநீர் சுரக்கச் செய்தனர். அதனால் இராவணனுக்குச் சிறுநீரின் உபத்திரவம் அதிகமாயிற்று. அச்சமயத்தில் வினாயகர் ஓர் பிரம்மசாரியாய் எதிர்வரக் கண்டு “நான் கைகால் சுத்தி செய்து வருமளவும் நீர் இச்சிவலிங்கத்தைப் பிடியும்" என வேண்டினன். சிறுவனாக வந்த வினாயகரோ இராவணனை நோக்கிச் “சிறுவனாதலால் என்னால் தாங்கமுடியாது; மூன்று தரம் கூப்பிடுவதற்குள் வந்து விடவேண்டும்” என்று கூறிச் சிறிது நேரத்திற்குள் அவனையழைத்து அவன் வாராமையால் பூமியில் வைத்துவிட்டார். அவன் “ஏன் கீழே வைத்தாய்?” என்று கேட்க, “இதன் வலிமை என்னால் பொறுக்க முடியவில்லை" யென்றார். இராவணன் தன் ஆற்றல் முழுவதையும் சிவலிங்கத்திடம் செலுத்தித் தூக்கியும் சிவலிங்கம் சற்றேனும் பெயராது பசுவின் காதுபோல் குழைந்தது. இந்தச் சிவலிங்கம் பசுவின் காது போல் குழைந்ததுபற்றி அந்தத் தலத்திற்குக் கோகர்ணம் எனப் பெயராயிற்று. (கோ - பசு; கர்ணம் - காது); பின்பு இராவணன் பிரம்மசாரியிடம் கோபங் கொண்டு ஓடிப் பிரம்மசாரியைக் குட்ட வினாயக மூர்த்தியாகி இவனைத் தமது துதிக்கையால் செண்டாடினார். இராவணன் வலியொடுங்கி வேண்ட கருணை புரிந்தார்; அங்கை காது பிடி வந்தனை - அழகிய கையினால் காதைப் பிடித்துத் தோப்புக்கண்டம் போடுதல்; வருக என விளித்து அதைப் பெருநிலம் இருத்தலால் - வருக என்று கூப்பிட்டு (வாராததால்) அச்சிவலிங்கத்தை அகன்ற நிலத்தில் வைத்துவிட்டதனால்; மற்று - அசைநிலை; அவன் வெகுண்டு - இராவணன் கோபித்துக் குட்ட; அவனிடும் கைக்குட்டு மாறும் - அவன் தனக்குச் செய்த குட்டுக்கு மாறாக தானே கைகளால் குட்டிக் கொண்டு செய்வதையும். (4)

96. தோலாது - சமம் குறையாது; பூபங்கு - பூமியின்கூறுகளையறிந்து; விக்கினம் - குறை; கவுள் மதம் - மதநீர் பாயும் சுவட்டை உடையது; சிறு நயனம் - சிறிய கண்கள்; இக்கு இறை - கரும்பு வில்லுக்குத் தலைவன் (மன்மதன்); இக்கு - கரும்பு; நுதற்கணர் - நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான்; ஏரம்பன் - வினாயகர் பெயர்களில் ஒன்று; ஆரம்ப - எல்லாத் தொழில்களின் ஆரம்பத்திலும் துதிக்கப்படுபவனே; எறிதரங்கத்து உவர் இருங்கடல் பூதலம் - வீசும் அலை களையுடைய உப்புத் தன்மையுள்ள கரியகடல் சூழ்ந்த பூமி; இசை - புகழ்; சிந்தை செயவரும் - மகிழ்ச்சி யுண்டாக்க வரும். (5)

97. ஊனேறு உடல் - மாமிசம் பொருந்திய உடல்; உலைப் புறும் - மனதைக்குலைக்கும் ; மீனேறு கண் கமலை நாதன் - மீன் போன் றுள்ள கண்களையுடைய இலக்குமியின் கணவன் (திருமால்); வேதன் பதம் - பிரம்மாவின் சத்திய உலகம்; நின் தந்தை பதம் - உன்னுடைய தந்தையான சிவபெருமானின் கைலாய உலகம்; அரன் வேதாந்தம் - சிவனைத் துதிக்கும் வேதங்கள்; மந்தி - பெண் குரங்கு; மலர் நெக்கு - விரிந்து நெகிழ்ந்து; முட்கனி - பலாப்பழம்; மதுரச் செழுந்தேறல் - இனிய செழித்த தேன்; அறுகால் - வண்டு; வழிக்கும் - வடியச் செய்யும்; ஆகாயத்தையளாவிய கிளைகளில் ஏறிப் பெண்குரங்குகள் விரித்து, நெகிழ்த்திய பலாப்பழத்தினிடமிருந்து இனிய செழித்த தேன் வெள்ளமான பெரிய கால்வாயில், பூக்களிலிருந்து வண்டுகளால் வடிக்கப்படும் தேனும் சேர்ந்து பாய்ந்து உயர்வைச் செய்யும் வயல்கள் சூழ்ந்த அரும்பாத்தை நகர் என்க. (6)

98. கால் பாய - கால்கள் நிலத்தில் பற்றுதல்; அபயக்கை, வரதக்கை என்பதன் விரிவைத் திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் 10-வது பருவம் கடைசி பாட்டின் குறிப்புரையில் காண்க. நூல்பாயும் மதி - பல புத்தகங்களைப் படித்ததினால் விரிந்த புத்தி; நூபுரச் சரண - பாதத் தண்டைகளையுடைய கால்களையுடையவனே; வயலின்பால் - வயலினிடம்; கமுகம் பழக்குலை - பாக்கு மரத்தின் பழக்குலை; கழங்கு - கழற்காய்; வயலினிடம் பாயும் அகன்ற நீர்க்கரையின்மீது பாக்கு மரத்தின் குலையிலிருந்து வீழ்ந்த காயைத் தாமரைபோன்ற கையில் அடைந்த கழற்காயைப்போல பூமாதேவி தாங்க, சேல் மீன்கள் ஏதோ இரை விழுந்ததென்று வேகத்தோடு யெழும்பிப் பாய, அத்தகைய வளமிகுந்த அரும்பாத்தைப் பதி என்க; பூமியை மகளாக உருவகப் படுத்திப் பூமியில் விழுந்த பாக்குக்காயை அவளது தாமரைபோன்ற கையிலுற்ற கழங்கென உவமிக்கிறார். தேவர்கட்குப் பூமியில் கால்கள் பரவாதிருந்தும் விநாயகரைத் தரிசிக்க வந்து கலந்தனர். “கண்ணி மைத்தலான் அடிகள் காசினியில் தோய்தலான், வண்ணமலர் மாலை வாடு தலான் ..........." என்ற நள வெண்பாவை நோக்குக. (7)

99. கரைசேர் அரும்பிறவி வாரி - பேரின்பக் கரையைச் சேர்தற்கு முடியாத பிறவிக்கடல்; இரவி - சூரியன்; கரை பிணி - மனதை யுருக்கும் நோய்; வாரிக்கும் மதலை - கடலுக்கான மரக்கலம்; ஆன மழை - பருவகாலத்தில் பெய்யும் மழை; வறுமைக்காலம் - பஞ்சக் காலம்; வரையேறு முத்தி - எல்லையற்ற மோட்சம்; கபாடம் - கதவு; ஒருகாலும் - ஒப்பற்ற காற்றும்; நெடுநாள் வைத்துப் புரைசேர் மதன் கையிற் கிடைவாளி கழுவிப் புதுக்கி எதிர் நீட்டியதென - நீண்டநாள் ஓரிடத்தில் வைத்துக் குற்றம் (அழுக்குச்) சேர்ந்த மன்மதன் கையில் கிடைத்த அம்பைக் கழுவிப் புதுமை செய்து எதிர் நீட்டியது போல; புண்டரிக வுலையினிடை நீலமுகை செய்ய அப்பொழுது கருமகன் நிலை செய்யும் திரை நீர் - தாமரையாகிய உலைக்களத்தினிடையில் (கருமான் பட்டடை) நீல நிறமான மொக்கு இட அப்பொழுது கருமான் நிலைபோன்று செய்யும் அலைகளையுடைய நீர்; கரு மகன் - கருமான்; மன்மதன் கையிலுள்ள அம்பைக் கழுவிப் புதுமை செய்து நீட்டியது போல தாமரையாகிய உலைக்களத்தின் மத்தியில் நீல நிறமான அரும்பு தோன்றியது. அப்போதுள்ள நிலை கருமான் தாமரையாகிய உலைக்களத்தில் நீல முகையாகிய அம்பைச் செய்வது போன்று விளங்கியது. அத்தகைய அலைநீர் சூழ்ந்து வளம் பெறும் அரும்பாத்தைப் பதி என்க. திரைநீர் கருமானுக்கும், புண்டரிகம் அவன் பட்டடைக்கும், நீலமுகை அவன் செய்த அம்புக்கும் உருவகித்தல் காண்க; உத்தமா – விளி. (8)

100. உருமணிச் சுடிகை - நிறமமைந்த அழகிய நெற்றிச் சுட்டியெனும் ஆபரணம், சுடிகை என்பதிலுள்ள உம்மை எச்ச உம்மையாக மற்ற ஆபரணங்களையும் காட்டியது. செவ்வதரம் - சிவந்த உதடு; திரு நாவி வட்டம் - அழகிய வட்டமான கொப்பூழ்; இடை - இடுப்பு; வல்லபை:- மரீசி முனிவர் ஸ்நானத்திற்குச் சென்றபோது அத் தடாகத்து இருந்த தாமரை ஒன்றில் குழந்தையிருந்தது. முனிவர் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து தம் மனைவி தேவவல்லியிடம் கொடுத்து வளர்த்து வல்லபை என்று பெயரிட்டனர். இவள் வளர்ந்து தவமியற்றி வருகையில் விநாயகமூர்த்தி வேதியர் உருக்கொண்டு இவளிடம் வந்து வசிக்கப் பார்த்தனர்; கலங்கவில்லை. பின் தம் சுய உருக்காட்டி மணஞ்செய்து கொண்டனர். பொலன் துடை - அழகிய துடை எனும் உறுப்பு; அடு பாசம் - வருத்தும் பாசம்; தேசு சேர் - ஒளியமைந்த; “தியானமே செயுமவர்க்கு ஆருயிர்த் துணைவன்'' எனப் பிரிக்க. (9)

101. கயம் - யானை; அங்கைப்படை - அழகிய கையிலுள்ள ஆயுதங்கள்; துரந்தும் - விட்டும்; பணை மருப்பு - பருத்த தந்தம்; வாங்கி - ஒடித்து எடுத்து; மூடிகம் - பெருச்சாளி; பொள்ளென - இசைக்குறிப்பிடைச் சொல்; கயமுகாசூரன் வரலாற்றைச் சப்பாணிப் பருவத்தில் 7-வது பாட்டின் குறிப்பில் காண்க. நெட்டுயிர்ப்பு - நீண்ட பெருமூச்சு; ககன முகடு - ஆகாயத்தின் உச்சி; கயமுகாசுரனது சேனையை யெல்லாம் விநாயகர் தனது நீண்ட மூச்சினால் ஆகாயத்தின் உச்சி, கடலிடம் ஆகியவைகளிடம் செலுத்தித், தன்னிடமுள்ள ஆயுதங்களெல்லாம் நீங்கியும் பயமில்லாமல், எதிர்த்து வந்த அசுரனுயிர் அழிய, பருத்த தந்தத்தை ஒடித்தெடுத்து அவ்வாயுதத்தை வீசி அவனுடலைக் கெடுக்க, அவ்வசுரன் பாலனென்று விநாயகரை நினைத்து வாலுடன் கூடிய மேகம் போன்ற பெருச்சாளி உருவாக எதிர்க்கவும், விரைந்து ஏறி அதன் மீதமர்ந்து பூமியைச் சுற்றி வந்தார். (10)
-

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.


This file was last updated on 19 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)