பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 2
2. வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
vakuntanAtan piLLaittamiz
(piLLaittamiz kottu - part 2)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 2
2. வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)
Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------
இப்பிள்ளைத் தமிழ் வைணவ விஷயமாக அமைந்ததாகும். இது பாண்டிய நாட்டிலுள்ள ‘திருவைகுந்தம்' என்ற நகரின்கண் எழுந்தருளியுள்ள திருவைகுந்த நாதனைப் பற்றியதாகும். இவ்விடத்தில் தான் இந்திரனும், பிருது சக்கரவர்த்தியும் தரிசனம் பெற்றனர். இதில் காப்புப் பருவமென்பது தெய்வ வணக்கமெனக் கூறியிருப்பதும், பன்னிரு ஆழ்வார்களைக் காவற் கடவுளராகக் கூறியிருப்பதும் புதிய அம்சங்கள். இப்பாடல்கள் எளிமை மிக்கனவாய் சாதாரண மக்கட்கும் விளங்கும் வகையில் பாடப் பட்டுள்ளது போற்றத் தக்கதொரு அம்சம்.
புலவர் தம் வழுதி நாட்டைப் பற்றி உயர்வு நவிற்சிபடக் கூறியுள்ளது அவர்தம் பேருணர்வைப் புலப்படுத்துகின்றது. மதமிக்க யானையொன்று பலவின் கனியின் சுளையைத் தேனில் தோய்த்துப் பெண் யானைக்குத் தந்து மகிழ்வதும், மேகமுழங்க அதனைச் சிங்கம் யானை பிளிறியதென்று நினைத்து அச்சப்தம் வந்தவிடத்துக் குதிக்க அங்குள்ள மலைப்பாம்பு தானிருந்த விடத்திற்கே இரை வந்ததென நினைத்து மகிழ்வதுமான குறிஞ்சிநில வளனும், ஆகாயத்தையே மூடி வளரும் வாழையின் பழத்தை மணம் வீசும் புதிய தேனில் தோய்த்துக் கடுவன், மந்திக்கு அளிப்பதும், சோலையில் வசிக்கும் மைனாவினிசையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தாமரையில் வாழும் ஆணன்னம் தன் பெடையைத் தழுவிக்கொண்டு தூங்கும் அத்தகை நீர்நிலையருகு உள்ள தாழையைக் கண்டு கொக்கெனக் கருதி வாளைமீன் நீரினின்று துள்ள மாங்கனிகளில் பட்டுச் சாறாகிய தேன் வெள்ளம் பெருகுவதும், தன் மந்திக்கு ஆண் குரங்கு பலா, மா, வாழை ஆகியவற்றின் கனிகளையறுத்துக் கொடுக்க அவைகட்குரிய உழவர்கள் அவைகளை யதட்ட அவை அவ்விடத்தை விட்டு நகர மறுத்துப் பழங்களையே வீசும் கருவிகளாகக் கொண்டு அவ்வுழவர்மீது வீசுவதும் போன்ற மருதநில வளனும் பயிலுந்தோறெல்லாம் நனிபேரின்பம் பயவாநிற்கின்றது.
“தும்பிமுரல் சோலை சூழ் பலவினிடை" (பா-102).
''வஞ்சியிடை பஞ்சினடி மிஞ்சுமெழில் மங்கையுடன்'' (பா-151).
“இந்து நுதனந்துமிட றுந்துமுலை செந்துவ ரிதழ்க்கவுரி' (பா 182)
என்பனவற்றில் யாப்பமைதியும் எழிலும் என்னே நலம் பெற்றுள்ளன!
''............ யெதிர்த்த வரக்கர் தமைச் செயித்த வுவப்போ வுருக்குமணி தனத்தில் முயங்குங் கெருவிதமோ ..........'' என்று சிறுமிகள் சிற்றிலழிக்கவந்த வைகுந்தநாதனைப் பார்த்துக் கூறுவது பிள்ளைமைப் பருவ எண்ணங்களை வடித்துக் காட்டுகிறது. மற்றுந் தாங்கள் பகைவரல்ல என்பதை “நிதிபோல் மகவைப் பெற்றெடுத்து நின்பேர் புனைவே னெனக் கருதி'' என்பதில் காட்டுகின்றனர். ''பேணுஞ்சிறப்பிற் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழமணம் மொழிதலும்." என்ற பிங். சூத்திரத்தால் மகவைப் பெறுதல், குழமணம் இவைகளின் விவரம் காண்க.
"மேதிபடி வாவியிடை ................ சூழ்கழனியும்" என்ற அடி கள் "மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால் சொரியும் ............'' என்ற கம்பர் பாடிய தனிச் செய்யுளையும் "சூழ மேதி யிறங்கும் துறையிற் சொரியும் பாலைப் பருகிய வாளை ...'' என்ற குற்றாலக் குறவஞ்சிப்பாட்டையும் நினைப்பூட்டுகின்றன.
இவ்வாசிரியர் அரக்கர்களின் இழிவைப் புலப்படுத்துவதில் கம்பருக் கிளைத்தவரல்லர். ''செகதல மருவிய வுயிர்களை வேரொடு தின்றிடு மறவுரவோர் சிகையெரி பங்கினர் புகைசொரி கண்ணினர் செல்லென வார்ப்புடையோர் அகமொடு வஞ்சனை கொலைபுரி வன்றொழி லடல்செறி நடலை விறல் ஆண்மை பொருந்திய நீல நிறத்தினர்........'' (191) "அல்லைப்பழித்த நிறத்தரக்கர் ............'' (176), “தழலெறி யெனும் பங்கியிருள் செறியு மேனிநிமிர் தானவர்....” (170), என்பனவற்றின் கருத்துக்கள், "வன்கண் வஞ்சனை யரக்கரித் துணைப்பகல் வையார் தின்பர் ...'' (காட்சி பட. 16), "........ ஆலமே உருவு கொண்டனைய மேனியர் வாலமே தரித்தவன் வெருவும் வண்மையர்.'' (கா.பட 58.), "அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினனிவளைப் பிளந்து தின்பேனென் ...'' (நிந். பட. 61.), "........ யன்று நான் வஞ்சஞ் செய்ததாரெனக் கமரினேர்வார்." (நிந். பட 66.), என்ற கம்பராமாயணம் பாட்டுக்களில் வந்துள்ளன காண்க.
166-ஆவது பாட்டில் முத்தினை யன்னங்கள் தமது முட்டைகளெனக் கருதி யடைகாத்தல் "குடவளை துறைதொறு முடுநிரை யெனவிரி குளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை குலவிய படர்சிறை மடவன மொடுசில குருகுகள் சினையொ டணைத்துத் துயின்றிடு ...." (குமர குரு. பிரபந்தம் 604) என்பதிலும் காணலாம். 132- ஆம் பாட்டில் “பணியைப் பழித்த வேள்மனை" என்பது அல்குலுக்கு வருதல் போன்று "எல்லைப் படாத வளமேறு மிந்திரன் மேனியெங்கு மரன்மனையை வைத்தும்" (பா. 78) என்று வருவதும் காண்க. இங்கு மாரன் என்பது மரன் எனத் தொக்கது. முத்தப்பருவத்தில் பாண்டவர் வனமுறையும் நாளில் திரௌபதி வேண்டிய மாங்கனியை அருச்சுனன் அறுத்துத் தந்ததாகப் பாகவதமும் நெல்லிக்கனியெனப் பாரதமும் கூறுகின்றன. இதற்கேற்ப மூலம், குறிப்புரை இவைகளை ஏற்றவாறு கொள்க.
அம்புலிப்பருவம் சாம, பேத, தான, தண்டம் என்ற முறையில் அமையாது தான, தண்டம் என்ற முறைகளே காணப்படுகின்றன. முத்தப்பருவத்தில் 9- பாட்டுகளே காணப்படுகின்றன. இதனை எழுதிய ஒரே ஓலைச்சுவடியில் ரகர றகர பேதங்களின்றி ஒரே ரகர ' மாக இருத்தலாலும் ளகரம், மகரம் ஆகிய இரண்டற்குமே ழகரம் உபயோகிப்பதாலும் பிழைகள் நேர்ந்திருக்கின்றன. அவைகள் பின்னர் வைணவ மதப்புத்தகங்கள் உதவியால் திருத்தப் பட்டுள்ளன. இங்ஙனம் நேர்ந்த பிழையிலொன்று நாவீறன் எனற்பாலது நாவீரன் என்பது. மற்றும் பிழை திருத்தத்தில் திருத்தியுள்ள நங்கை சேய் என்பதற்கு உடைய நங்கை மகனார் நம்மாழ்வார் என்றும் மூட்சுக்கள் என்பதற்கு முமூட்சுக்களின் முதற்குறை யெனவும் பூவையொளி என்பதற்குக் காயாம்பூவின் ஒளிபோன்ற எனவும் குறிப்புரையில் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். செம்பொன்னின் இன்பநிறை (102) யென்பதற்கு இலக்குமியின் கணவனான திருமால் நிறைந்த என்று பொருள் கொள்ளல் நன்று.
இத்தகை அரிய நூலின் ஆசிரியர் பெயர் தெரிய முடியாதிருப்பது தமிழரின் தவப்பேறின்மையே. இவர் சாந்தூரில் வதிந்த பெரியநம்பி என்பாரின் சீடர் எனவும் அவரே "சம்ஸ்காரமும்" செய்வித்தார் என்பதையும் "எந்தனிரு புயமதில் சங்காழி தனையணிந் திம்மையினும் மறுமைதனிலும், ஏழேழ் பிறப்பினும் உவந்து விலைகொண்டு மகிழிறையவன் பெரிய நம்பி...'' (112), "எங்கள் குடி வழியடிமை கொண்டு மகிழ் சாந்தூர னிணைமலர்த் தாள்கள் வாழி," என்ற பாடல்களாலறியலாம். இவர் பாண்டிய நாட்டினர் என நாட்டைப் புகழ்வதால் விளங்குகிறது.
இப்பிள்ளைத்தமிழ் மூவருடக் காடலாக்கு 441-ஆம் எண்ணினின்று வெளியிடப் பெறுகிறது. இது 1920-21 இல் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்புவய்யங்கார் அவர்களால் நன்கொடை யளிக்கப்பட்டதாகும்.
------------------------------
வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
தெய்வ வணக்கம்
நம்மாழ்வார்
102. செம்பொன்னி னின்பநிறை சதுமறை பழுத்தொழுகு
தெள்ளமுத சாரமென்னுந்
திவ்வியப்பிர பந்தநா லாயிரமு நாதமுனி
தேறவருள் செய்துகந்து
தம்புகழ் விரித்ததைக் கண்டுல கெலாந்தொழத்
தகைமேவு குருகைதன்னிற்
தயவுட னுதித்தமகிழ் மாறனாம் வீரனிரு
சரணமல ரடிபணிகுவாம்
தும்பிமுரல் சோலைசூழ் பலவினிடை முதிர்கனிச்
சுளைநறவு தோய்த்துமதமா
தொடர்பிடிக் குதவிமகிழ் திருவழுதி நாடனுயர்
தூயபிர மன்வணங்கும்
நம்பரன் வைகுந்த நாதன்மணி வண்ணன்மால்
நவநீதசோ ரன்மாயன்
நாரணன் சீர்பரவு பிள்ளைத் தமிழ்க்கவிதை
நவிலுமென் சொற்றழையவே. (1)
சரசுவதி
103. முப்பரஞ் சோதிதனை மூர்த்திதிரு நாபிதன்
முளரிவந் தவதரித்த
முனிவனின் புறநாவி லுறைவாணி கலைமாது
முத்தர்புகழ் காயத்திரி
செப்பரிய பனுவலாழ் உளாள் பூர வாகினி
செழுந்தமிழ்க் குதவிசெய்யுஞ்
செல்விபா ரதியுலக மாதாவெனுந் தேவி
செம்பொற்பா தம்பணிகுவாம்
மைப்புயல் முழங்கவரி யிபமென்று குதிபாயும்
மலையரவு களிகூர்ந்திடும்
மகிமைபெறு தென்வழுதி நாடனென குலமுழுதும்
மனதுகந் தடிமைகொள்ளும்
அப்பன் வேங் கடவாணன் வைகுந்தை நாதனிணை
யடியேத்துப் பிள்ளைக்கவிக்
கைந்திலக் கணமுமத னுட்பொருளும் திகழ்ந்
தமைந்தெனது சொற்றழையவே. (2)
ஆண்டாள்
104. அண்டர்தவ வேதியர்கள் பூசுரர்கள் மன்னர்கள்
அனைவரு மிறைஞ்சியேத்தும்
அம்புவி புகழ்ப்புதுவை மேவியுரை பட்டர்கோ
னருமைமக ளெனவுதித்து
வண்டுளப மணியரங் கேசர்மகிழ் பாமாலை
வாய்மலர்ந் தருளியினிய
மதுவொழுகு பூமாலை சூடிக் கொடுத்தசெக
மாதாவி னடிபரவுவாம்
கொண்டல்கடல் மொண்டுமலை சென்றுபொழி கின்ற
குடவளைக் குலம தெனொடும் [புனல்
குஞ்சரக் கோடுசா தகில்கனக முத்தங்
கொழித்துலவு பொருநைநதி
தண்டுறை வளம்பெருகு தென்றிருவை குந்தைநகர்
தன்னில்வளர் எங்கள்பெருமான்
சலசையணி மார்ப னிசைபரவுபிள் ளைக்கவிதை
சாற்றுமென் சொற்றழையவே. (3)
பொய்கையாழ்வார்
105. செய்யதே மாப்பலா வரம்பைமுத லியகனித்
தேனுமலர் பொழியுநறவுஞ்
சேர்ந்துசெந் நெல்கழனி பாய்ந்துபைங் கூழ்வளர்
திருக்கச்சி தனிலுதித்தோன்
வைய்யகத் தகழிமிசை வார்கடலை நெய்யிட்டு
மார்த்தாண்ட தீபமேத்தி
மங்கலச் சொன்மாலை செங்கண்மால் கழல்புனையு
மறைமுனிப் பதந்துதிப்பாம்
துய்ய கமலத்தன் வந்தடிதொழுது சுருதிமுறை
சொல்லியா ராதனைசெய்
சுகமுனியை நிகர்பரம பாகவதர் பல்லாண்டு
துங்கமுட னோதிநிற்பப்
பையரவின் விடமுண்ட பண்ணவர் முதற்கடவுள்
தரைமீ திறைஞ்சியேத்த
பாவாணர் புகழுந்தென் வைகுந்தை நாதனிசை
பகருமென் சொற்றழையவே. (4)
பூதத்தாழ்வார்
106. ஓம்நமோ நாராயண வென்று நாமத்தை
யுச்சரித் துள்ளங்களிப்
புறுமன்பு தகழியினி லார்வநெய் பெருகுவென்
புருகுநெஞ் சிடுதிரியென
ஞானதீ பச்சுட ரெடுத்தா தரித்தமுனி
நற்சரணி தம்பரவுவாம்
நறைவண்டு குழல் மொய்ப்ப வதுபொறா திடைதுவளு
நடைகண்டு பிடியொதுங்கும்
மானனையர் வேல்விழியர் மையல்கொள் வனப்புநிறை
மைந்தர்பொருள் மேலாசையால்
மருவிப் பிரிந்தவரை வரவுகண் டுள்ளமகிழ்
மாதர்முக முறுவலெனவே
கானமர் செழுங்கமல முல்லைமல ரெங்குமலி
காவுசூழ் திருவைகுந்தைக்
கள்ளப்பிரான் சரிதை யின்புற்று நவிலுமென்
கவிதையின் சொற்றழையவே. (5)
பேயாழ்வார்
107. திருவும்பொன் மேனியு மருக்கனிற முஞ்செவ்வி
திகழாழி யுஞ்சங்கமுஞ்
சிந்தையுட் கண்டுவந் தேத்தியந் தாதிமொழி
செய்துமகிழ் பரமயோகி
தருவன மலிந்தளிக ளிசைபாட மஞ்ஞையத்
தண்டலைகண் மீதிலாடுந்
தண்கமல வாவிசூழ் மயிலைப் பிரான்தமிழ்
தவமுனிவ னினிதுகாக்க
பருவமுகில் சொரியுமிரு நிதியும்நவ மணிகளும்
பணிலம துயிர்த்தமுத்தும்
பகலொளி பரப்புந்தென் வைகுந்தை நகர்மேவும்
பண்ணவன் வேதனாலுங்
கருதரிய முத்திக்கு வித்தான தேவனைக்
கருணைபொழி புண்டரீகக்
கண்ணனைப் பொற்பூவை வண்ணனைப் புகழுமென்
கவிதையின் சொற்றழையவே. (6)
திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார்
108. நான்முகனை நாரா யணன்படைத் ததுவுமந்
நான்முகன் றன்முகமதாய்
நக்கனையளித் ததுவும் மிக்கான தேவனந்
நாரண னென்பதனையும்
மானிலத் தோரறிய வோதவென் றின்பமொடு
மழிசைவந் தவதரித்தோன்
மதிலரங்கத் துறையு மமலனைக் கண்டகண்
மற்றொன்று காணாதெனக்
கானிசை பொருந்துகவி யீரைந் துரைத்துமால்
கழலிணை புனைந்துமகிழ்வோன்
கனகமணி யாரத்தை யன்பாக வாரென்று
கட்செவி தனிற்கையிடுந்
தென்முரலு மாலையணி சேரர்கோ னிம்மூவர்
சேவடிப் போதுபணிவாந்
தென்வைகுந் தைக்கள்வர் தன்புகழ் விரிக்குமென்
செந்தமிழ்ப் பாத்தழையவே. (7)
பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்
109. ஈரேழ் பெரும்புவன மெங்குநிறை கின்றதோ
ரீசநா ரணனென்பதை
யிருக்குமறை யோதியுந் தெரியாத நுட்பொருளை
இவ்வுலகு ளோரறியவே
வீரநெடு வன்றிறல்கள் சேர்வழுதி மன்னவன்
வியப்புறக் கிழியறுத்து
மேன்மைதிகழ் பல்லாண்டு பாடிமகிழ் பட்டர்கோன்
மெய்ப்பதப் போதுகளையும்
சீர்கொண்ட திருமாலை யாலரங் கேசனே
தெய்வமென் றறிவையுணருஞ்
செல்வனிரு கழலிணையு முன்னிமுடி சூடியனு
தினமுமஞ் சலிசெய்குவாம்
பாரதிக் கிறைவனா ராதனைசெய் தடிதொழும்
பங்கேருகக் கண்ணனைப்
பார்புகழ்தென் வைகுந்தை மேவியுறை மாயனைப்
பகருமென் சொற்றழையவே. (8)
திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார்
110. மன்னுயிர்க ளுய்யவே தத்தினுறை நுட்பொருளை
வாய்த்ததிரு வாய்மொழியென
மாறன் பணித்ததற் காறங்க முரைசெய்ய
வையகத் தவதரித்தோன்
பன்னுமுத் தமிழினால் நாற்கவிதை யுரைசெய்து
பரமனடி கண்டுவந்த
பரகாலன் மங்கைதிரு மணவாள னிருசரண
பங்கேருகப் போதையும்
நன்னெறியி லுய்ப்பதற் கின்னிலந் தனில்வந்த
நாவீர னேயலாது
நான்வேறு தெய்வங்க ளறியே னெனுங்கவிதை
நாட்டிமகிழ் மதுரகவியின்
பொன்னெழில் பொருந்துகழ றன்னையு நிதந்தொழுது
புங்கமுட னேதுதிப்பாம்
பொங்குபுகழ் வைகுந்தைத் தங்கியுறை கள்வனைப்
புகலுமென் சொற்றழையவே. (9)
இராமானுசர்
111. செகமீது சேதனர்க ளுய்ந்துகரை யேறிடச்
செவ்விபெறு ரகசியத்தைச்
செப்பிநா ராயணன் பரனெனக் காட்டியே
தெளிவித்த கருணைவள்ளல்
இகபர மிரண்டினுங் கதியுதவு மாறனடி
யிணைமலரின் வாழுமன்பன்
இன்பநிறை பூதூரில் வந்துமகி ழெதிராச
னிருசரணிதம் பரவுவாம்
ககனத்தை முடிவளர் காதலியின் கனிதனைக்
கமழ்புதிய நறவுதோய்த்துக்
கடுவன் முசுவுக்குதவு நாடனெழி லைந்தருக்
காமன்வந் தேவணங்கும்
புகழ்மருவு வைகுந்தை நாதனிசை போற்றுநற்
பொலிவுமிகு செந்தமிழ்க்குப்
பொருந்துமீ ரைந்தழகு மேய்ந்துமன தின்புறப்
புகலுமென் சொற்றழையவே.
(10)
பெரியநம்பி, மணவாளமுனி
112. சந்தனக் காவுதிகழ் செம்பதும் வாவிசூழ்
சாந்தூரி லவதரித்தோன்
தண்குருகை மேவும்ப ராங்குசன் வியந்ததொரு
தாசனெனு நாமமுறுவோன்
எந்தனிரு புயமதிற் சங்காழி தனையணிந்
திம்மையினு மறுமைதனிலும்
ஏழேழ் பிறப்பினு முவந்துவிலை கொண்டுமகி
ழிறையவன் பெரியநம்பி
கந்தமரு வுஞ்சரண பங்கயப் போதையுங்
கருதுததி யார்க்குமுத்தி
காட்டுமண வாளமுனி தாட்டுணை யிரண்டையுங்
கவினுட னிதம்பணிகுவாஞ்
செந்திரு மடந்தையருள் சந்தத நிறைந்துலவு
தென்வைகுந் தைக்கள்வனைத்
தேவாதி தேவனெனு மூவர்க்கு முதல்வனைச்
செப்புமென் சொற்றழையவே. (11)
---------------
செங்கீரைப்பருவம்
113. பூமாது கருணைபொழி சீர்மருவு வயிணவர்கள்
புனிதமறை யோதி நிற்பப்
போதக முகக்கடவுள் ஆறுமுகன் மாதவர்கள்
புத்தேளி ரனைவருடனே
காமாரி வந்தடி பணிந்துமன தார்வமொடு
கைதொழுது புடைநெருங்கக்
கஞ்சமல ராசனன் வணங்கியெப் பொழுதினுங்
கருதியா ராதனைசெயக்
கோமா னெனுந்தலைவர் பாவாணர் சூழ்ந்துகவி
கொண்டுநின் கழலிலணியக்
குவளைவிரி மலரதனை நிகருமிரு விழிகொண்ட
கோசலை பெறுங்கண்மணியே
தேமாவெனுஞ் சொல்மொழி மாமேவு மணிவண்ண
செங்கீரை யாடியருளே
தென் திருவை குந்தைநகர் நின்றுநித மகிழ்கள்வ
செங்கீரை யாடியருளே. (1)
114. ஆவுரு வமைந்துபுவி மாதுதவ மேகருதி
அன்புட னியற்றுமந்நாள்
அருள்கொண் டளித்தவர் பாலனஞ் செய்வதற்
கவதரித் தோங்குபொழுதிற்
பூவைமொழி யைப்பொருவு மேனியெழிலுங் கமலை
பொற்பிலகு மணிமார்பமும்
புரிசங்கு நேமிகதை வாடனுவோ டைம்படை
பொறித்தவொரு நான்குகரமுங்
கோவையின் கனிநிகர்செவ் வாயுமிரு காதிலணி
குண்டலமு மந்தகாசக்
குறுமுறுவ லும்பதும விழியுமணி மகுடமுங்
குல்லைமல ருங்கணுற்றுத்
தேவகி யுகந்துபுகழ் தேவாதி தேவனே
செங்கீரை யாடியருளே
தென்றிருவை குந்தைநகர் நின்றுநித மகிழ்கள்வ
செங்கீரை யாடியருளே. (2)
115. மேதினிப் பாரமது தீரமன தெண்ணிநீ
மேவுபா லாழிநீங்கி
மேதாவி யானவசு தேவர்க்கு மகனாகி
மெல்லியல் கோதையென்னும்
மாதுமுலை யுண்டுகளி கூர்ந்துசக டாசூரன்
மாய்ந்துவிழ வேயுதைத்து
மங்கையென வந்ததொரு பேய்ச்சி யுயிர்கொண்டநிற
மாமணி பொற்கொண்டலே
காதுவேற் கண்ணினார் பாதநூ புரவொலிகள்
கருதியின மென்றுசெல்லக்
காமுறுந் திருவழுதி நாடகங் குலநாதர்
கங்கைநதி யொழுகுபாதச்
சீதரா மலரின்வரு கோதைபுகழ் மணவாள
செங்கீரை யாடியருளே
தென்றிருவை குந்தைநகர் நின்றுநித மகிழ்கள்வ
செங்கீரை யாடியருளே. (3)
116. நந்தன்மனை வந்துகுடி கொண்டுவிளை யாடவந்
நாகணை துறந்துபாடி
நகர்மேவி யெண்ணிரண் டாயிரந் தொகைகொண்ட
நங்கைகோ வியர்களென்னும்
யிந்துநுத லார்களுறை சேரியிட மெங்குநீ
யேய்ந்தகோ லங்கள்தம்மை
யிசைபயிலு மகரயாழ் நாரதன் கண்டடி
யிறைஞ்சவருள் செய்தமுகிலே
சந்தகிற் பீலிநவ மணிக ளங்காடியின்
றன்மையென் றதிசயிப்பச்
சலஞ்சல நிறைந்துதிகழ் பொருநைமா நதிவளத்
தகைமருவு வழுதிநாட
சிந்துரத் திலதமணி யிந்திரைதன் மணவாள
செங்கீரை யாடியருளே
தென்றிருவை குந்தைநகர் நின்றுநித மகிழ்கள்வ
செங்கீரை யாடியருளே. (4)
117. காவிலுறை பூவையிசை கேட்டுக் களிப்புடன்
கமலமதில் வாழுமன்னங்
கருதுதன் பெடைதனை முயங்கிமன தின்பமொடு
கண்படைபொருந்து மெழில்சேர்
வாவியரு குற்றுவளர் கேதகை குரண்டமென
வாளைபுன லூடொழிக்கும்
மாங்கனி பிதிர்ந்தொழுகு சாறுநற வும்பெருகு
மகிமைபெறு வழுதிநாட
மேவுசமர் மீதிரத மேல்வரு கிரீடிக்கு
மெய்ப்பொரு ளுரைத்தமுகிலே
மேலான பலகோடி யண்டப் பரப்பினுள்
வேதன்பு ராரிமுதலாந்
தேவர்க்கு மமுதின்வரு தேவிக்கு மணவாள
செங்கீரை யாடியருளே
தென் திருவை குந்தைநகர் நின்றுநித மகிழ்கள்வ
செங்கீரை யாடியருளே. (5)
வேறு
118. காவுறை மந்தி யருந்திட முக்கனி
கடுவ னளிப்பதனைக்
கண்டிடு மள்ள ருரற்ற மறுத்தது
கனிகொடு விட்டெறியும்
பூவிரி வாவியோர் சாகர மெனமுகில்
புனலை நுகர்ந்துடனே
பொன்னெழில் முத்தொடு சோனை வழங்கு
பொலன்றிகழ் வளநாட
தாவர சங்கம தெங்கும் நிறைந்த
தயாபர நற்பொருளே
சங்கரனுக் குயர் கங்கை கொடுத்த
சரோருக பொற்சரணா
தேவர் தொழுங்கரு ணாநிதி ரகுபதி
செங்கோ செங்கீரை
தேனிசை துளவணி வானிள வரசே
செங்கோ செங்கீரை. (6)
119. ஆத வனைத்தொடு நீண்மதி லும்புய
லண்ணிய சோலைகளும்
அம்பவ ளக்கொடி போலிள மங்கைய
ராட லரங்குகளும்
போத முரைத்திடு நங்குர வோர்கள்
பொருந்துநன் மாளிகையும்
பொற்றொடி மெல்லியர் வதுவை யுமேவிய
புனிதநகர்க் கிறைவ
மாது துரோபதி மாயவ னேயென்
வன்றுயர் களையெனலும்
மன்னவை முன்னவள் கூறை யறாவகை
வரம தளித்தருளும்
சீத மறைப்பொருள் மீதுறை கனியே
செங்கோ செங்கீரை
தேனிசை துளவணி வானிள வரசே
செங்கோ செங்கீரை. (7)
-
120. பூவல யத்துள காவலர் விப்பிரர்
புகலரு மாமறையோர்
புங்கவ ரன்பொடு நின்விளை யாடல்
புகழ்ந்து பணிந்திடவே
மாவிரி பூநற வுண்டு களிப்பொடு
வண்டுக ளிசைபாடும்
மஞ்ஞைகள் தோகை விரித்து மதர்ப்பொடு
மாடம் தனிலாடுங்
காவுறை யோதிம மங்கையர் மென்னடை
கண்டு நிதந்தொடருங்
கதலி நெருங்கிய முளரி வளஞ்செறி
கவின்மிகு வளநாட
தேவகி மணிவயி றாவல்கொள் களிறே
செங்கோ செங்கீரை
தேனிசை துளவணி வானிள வரசே
செங்கோ செங்கீரை. (8)
-
121. மங்கையர் கொங்கை சுமக்கரி தாய்மிக
மறுகுறு நுண்ணிடையை
வாளரியா மென வேழ மருண்டு
வெகுண்டு மறைந்துறையும்
பொங்கரின் மீது தவழ்ந்திடு திங்கள்
புடைக்கு மிறாலருவி
பொற்புறு சோலை வளர்க்கு நலந்திகழ்
பொதிய மலைக்கிறைவ
கங்கை தரித்தவ னங்கையில் வைத்த
கபால நிறைந்திடவே
கருணை யுடன்பலி யன்று கொடுத்தருள்
கஞ்ச மலர்க் கரனே
செங்கமலத்திரு மேவுமின் னமுதே
செங்கோ செங்கீரை
தேனிசை துளவணி வானிள வரசே
செங்கோ செங்கீரை. (9)
122. அங்கண் விசும்புறை தேவர் தபோதன
ரனைவரு மடிபரவி
யன்புட னின்றிரு லீலை தனைக்கண்
டகமது களிகூரப்
புங்க முடன் புன லூருச் சியுந்திகழ்
பூழ்தி கடுக்கையிளம்
புல்லோ டெருக்கலர் சங்கு மணித்திரள்
புனைசிவ சம்புவெனுஞ்
சங்கர னைப்பெறு பங்கய னைத்தரு
தாமோ தரமுகிலே
தனிமதி வெண்குடை யுவணநெ டுங்கொடி
தம்மி லிசைந்துவரச்
செங்கைகொ ளைம்படை தங்கிய மாநிதி
செங்கோ செங்கீரை
தேனிசை துளவணி வானிள வரசே
செங்கோ செங்கீரை. (10)
-------------------------------
தாலப்பருவம்
123. மதியை நிகர்த்த திருநுதலிற்
மருப்போற் சாந்துத் திலதமிட்டு
வதியுங் களப முலைமடவார்
வாழு மணிமா ளிகைச்சிறப்பும்
உதய கிரணன் வலஞ்சூழ
வோங்கும் பொன்மா மேருகிரி
யொத்த நெடுந்தோ ணிவகுப்பும்
உயரும் புரவித் திரட்செறிவும்
முதிய தவத்தோ ருபயமறை
மொழியுங் கழகச் சாலைகளும்
முகில்போ லொலிக்கு மாய்ச்சியரும்
முயற்சி யிருத்தும் பதிக்கரசே
கதிரோன் குலத்தி லுதித்த செழுங்
கனியே தாலோ தாலேலோ
கற்றோர் துதிக்கும் வைகுந்தைக்
கனியே தாலோ தாலேலோ. (1)
124. சங்கத் தமரர்க் கிடையூறு
தவிர்க்கச் சலதி தனைமறந்து
சரையு வெனுமா நதித்துறைவன்
றனக்கு மகனென் றுதித்திடுநாள்
எங்க ளமுதே கண்மணியே
யிரவி குலத்துக் கொளிவிளக்கே
இருமைப் பயனுந் தருநிதியே
யிமையோர் தவமே யிளங்களிறே
வங்கக் கடல்சூழ் புவித்தலைவர்
மதலாயெனக் கோசலை மடமான்
மகிழ்வுற் றிருத்தும் பொன்னூசல்
மருவித் துயிலும் மணிவண்ணா
பங்கே ருகனும் பசுபதியும்
பணியும் பரனே தாலேலோ
பதின்மர் பரவும் வைகுந்தைப்
பதிவா முரசே தாலேலோ. (2)
-
125. முல்லை முறுவல் பவளவிதழ்
முளரி வதனங் குரும்பைமுலை
மூரிக் குழலார் நடைநிகர்த்த
முகில்போல் மருவும் பிடிக்குழுவுஞ்
செல்லின் முழக்க மெனவார்ப்புஞ்
சினமும் பொருந்து மதவேழத்
திரளுஞ் செறிந்த நெடுஞ்சோலை
திகழும் பதிவா ழிளவரசே
வில்லை வளைத்துக் காத்துநின்ற
விசையன் றுயரந் துடைப்பதற்காய்
விளங்கு மறையோன் மைந்தர்களை
விருப்போ டளித்த பெருமானே
குல்லை நறுந்தா ரணிநீலக்
குன்றே தாலோ தாலேலோ
கோக நகைவாழ் வைகுந்தைக்
கோவே தாலோ தாலேலோ. (3)
126. கலைசேர் சசியைப் பொருவுமுகங்
கனியைக் கடுக்கு மினியமொழி
காவி மலரைச் செறுத்தவிழி
கணிகை மடவார் காப்பேந்த
மலைபோற் புயத்து வயவேந்தர்
வணங்கி நெருங்கக் குருகையர்கோன்
வழங்குந் திருவாய் மொழிப்பிரபந்தம்
மறையோர் நவில வாச்சியங்கள்
அலைபோ லொலிப்பச் சதுர்வேத
மார்ப்பக் கொடிகள் புடைதயங்க
அமரர் கரங்கள் குவிப்பவிழா
வணியும் பதிவா ழிளவரசே
சிலைவா ணுதற்கோ சலைதவத்தின்
றிருவே தாலோ தாலேலோ
செம்பொன் மதில் சூழ் வைகுந்தைத்
தேவே தாலோ தாலேலோ. (4)
127. இசையுந் திருவும் பெரும்படையு
மேய்ந்த மனக்கம் பீரமுடன்
இரைக்குங் கடலை யுடுத்தபுவி
யெங்குந் தனிச்செங் கோல்செலுத்தி
அசையாப் புகழ்பெற் றரசாளு
மண்ணல் தனக்கு மகவெனவே
அயோத்தி நகர்வந் துதித்திடுநா
ளன்னை யெனுஞ்சிற் றவைமனையில்
வசையார் கூனி கூன்புடைக்க
வரிவில் வளைத்துண் டையைத்தெறித்து
மகிழ்வோ டிருந்து மனமுவக்கு
மணியே அமரர் தொழுங்கள்வ
திசையா னனத்தோன் றினம்பணியுஞ்
செல்வக் கொழுந்தே தாலேலோ
செம்பொன் மதில் சூழ் வைகுந்தைத்
தேவே தாலோ தாலேலோ. (5)
128. தண்டா மரைப்பூந் தவிசுறைவோன்
தருக்கா வலனு மைக்கதிபன்
சயிலந் துளைக்கவயில் துரந்தோன்
றபனன் சசியைங் கரன்முதலோர்
கொண்டாட் டங்கொண் டுளங்குளிர்ந்து
குனித்துத் தொழக்கோ வியருடனே
குடையும் புனலில் விளையாடுங்
கோவே யாயர் குலதிலகா
வண்டார் குழற்சத் தியபாமை
மார்பந் தழுவு மணவாளா
மருவுஞ் சீவகோ டியெல்லா
மகிழ்வோ டுன்றன் வயிற்றடக்கிப்
பண்டா லிலையிற் கண்டுயிலும்
பரமா தாலோ தாலேலோ
பதின்மர் பரவும் வைகுந்தைப்
பதிவா முரசே தாலேலோ (6)
129. செய்ய திருவாய் பாடிநகர்ச்
சிறுவர் தம்மோ டருங்கானஞ்
சென்று பசுவி னிரைமேய்த்துச்
சின்னா ளாடற் புரிந்ததற்பின்
வெய்யஞ் சமர தனிற்பருதி
வெயிலை யாழி கொடுமறைத்து
விசைய னுயிரைக் காத்தளித்து
விளங்குங் கருணா நிதிக்கடலே
துய்ய தவத்தோ ருளத்துமறைச்
சிரத்துத் தொழும்பும் பூண்டகுலத்
தொண்ட ரிடத்து மாறன்மொழி
சொல்லுந் தலத்து மயனாலு
மெய்தற் கரியபெரும் பூதத்து
மிருக்கும் பொருளே தாலேலோ
இருக்கு முழங்கும் வைகுந்தைக்
கினிதா மமுதே தாலேலோ. (7)
130. படவா ளரவம் பூங்கதலி
பசுந்தேன் குமுதஞ் செப்பனவே
பகரு நிதம்பங் குறங்கிசைவாய்
பருத்த தனஞ்சேர் எழிலாயர்
மடவார் கூறைதனைக் கவர்ந்து
வளருங் குருந்த மரத்தேறி
வாழ்த்துங் குரவை தனைக்கேட்டு
மகிழ்வுற் றிருக்கும் மணிவண்ணா
வடபத் திரமுங் புளிங்குடியு
மதில்சூ ழரங்க மாநகரும்
மறையோர் புகழும் வெண்மைநிற
மதியை நிகர்த்த திருப்பாலின்
கடலும் பொருந்திக் கண்டுயிலுங்
கருமா முகிலே தாலேலோ
கற்றோர் துதிக்கும் வைகுந்தைக்
கனியே தாலோ தாலேலோ. (8)
131. பச்சை பொருந்துங் குழன்மடவார்
படிந்த புனற்போற் விரிதிரையின்
பரவைப் புலவுதனை நீக்கிப்
பகருஞ் சாந்தங் கமழ்நாடர்
கொச்சை யாயர் குடில் வளர்ந்து
கோவி னிரையைக் காப்பதற்குக்
குன்ற மெடுத்து மழைதடுத்த
குழகா நந்தன் பெறுந்தவமே
பிச்சி தவனம் செறிமுட்டம்
பேரை குறுங்கை யிடபகிரி
பீடு கொழிக்குஞ் சேடமலை
பெரியோர் வழுத்தும் நெடுந்துவரை
கச்சிப் பதியுநின் றுவக்கும்
கனகாம் பரனே தாலேலோ
கற்றோர் துதிக்கும் வைகுந்தைக்
கள்வா தாலோ தாலேலோ. (9)
132. பஞ்சை நிகர்க்குந் தளிரடியும்
பணியைப் பழித்த வேள்மனையும்
படையைத் துரத்து மயில்விழியும்
பகரு மெழிற்கோ சலைமடமான்
நெஞ்ச மகிழுந் தவக்களிறே
நித்தர் பரவு மெய்த்தவமே
நேமி நடத்தும் தசரதன்ற
னிதியே நாளு முளங்கருதி
வஞ்ச மறலி யணுகாமல்
மயக்கு மிதர சமையநெடு
வாத ரிடத்தில் சேராமல்
வரமு மதியுந் தருங்கள்வா
கஞ்ச மலராள் தனமுயங்குங்
கருமா முகிலே தாலேலோ
கற்றோர் துதிக்கும் வைகுந்தைக்
கனியே தாலோ தாலேலோ. (10)
--------------------------
சப்பாணிப் பருவம்
133. நங்கைபெறு மாறனிசை போற்றியுயர் பாகவதர்
நவிலும்பிர பந்தமொருபால்
நாவலர்கள் பாவினிசை வேதவொலி மாதர்சதி
நடனங்கள் புரிவதொருபால்
பங்கயன் முதற்கடவுள் சங்கந் திரண்டடி
பணிந்துகை குவிப்பதொருபால்
பாராளு மன்னவர்க ளோர்பால் வணங்கமகிழ்
பைந்துழா யணியுமுகிலே
மங்கைகோ சலையினிரு கொங்கைவழி பாலுண்டு
மதிவதன் நோக்கியவடன்
மடிமீ திருந்தன்ப ருளமேவி விளையாட
வருமர கதக்குன்றமே
சங்கர னுவந்துபுகழ் செங்கமலை மணவாள
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே. (1)
134. நக்கனவன் மக்களனல் வெற்புமுது கிட்டுவழி
நண்ணமன தெண்ணியோடி
நாற்றிசையும் முட்டியினி யாற்றலரி தெனவெண்ணி
நாரணா சரணமிருநால்
அக்கரத் துறைமூல காரணா சரணமறை
யாரணா சரணமெனவே
யன்புடன் வழுத்தவா ணன்பிழை பொறுத்துமகி
ழச்சுதா பச்சைமாலே
யிக்குமொழி மாதர்மனை சிக்கமுறு வெண்டயி
ரெடுத்துணவு கொண்டசோதை
யிருகண் கழிக்கவவ ளொக்கலை மருங்கி
லிருந்துலவு செங்கனகமே
தக்கதுரு வாசன்மேற் சக்கர நடாத்துமுகில்
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந்தைச் சோர
சப்பாணி கொட்டியருளே. (2)
135. பூமன்னர் திறையிடச் சோம வெற்றிக்குடை
பொருந்தமா கதர்களேத்தப்
பூசுரர்க ளாசிசொல் வேசையர்கள் சாமரை
புரட்டவரி யாசனத்திற்
காமனெழில் கொண்டதென மேவியுல காண்டகளை
கண்ணனே மித்தசரதன்
காமுற் றியற்றுபெரு வேள்விப் பயன்பெறக்
கருதிவந் தருளுநிதியே
வாமமே கலையணியு மாதுகோ சலையிரு
மலர்க்கரங் கொண்டெடுத்து
மஞ்சுதிகழ் பொன்மேனி நீராட்டி முத்தமிட
மகிழுங் குணக்குன்றமே
தாமரைப் போதிலுறை மாமருவு மணிவண்ண
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (3)
136. அந்தணர்கள் விண்ணவர்கள் வன்றுயர் தவிர்க்கநீ
ளலைமோது திரைவீசுபால்
அம்பரத் துயிலமர்ந் திம்பரிற் புகழ்திரு
வயோத்திமா நகர்வந்தநாட்
பந்துமுலை யிந்துநுத லிந்திரை யெனத்திகழ்
பசுந்தொடி புனைகைகேசி
பரதனிப் பாராள நீயடவி செல்லென்று
பார்த்திப னுரைத்ததெனலுஞ்
சிந்தையுள் மகிழ்ந்தனுச னொடுமிதிலைக் கண்வரு
செல்வியொடு நகர்கடந்து
தெண்டக வனத்துமுத் தண்டின ரருஞ்சாலை
சென்றுமரு வுங்கொண்டலே
தந்தைமொழி கடவாத சுந்தரக் கடவுளே
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (4)
137. மாசற்ற வெண்ணிறப் பாற்கடலி னடுவிலொரு
மரகத கிரிபோலுநீ
வனமாலை சூடியிரு மாதரடி வருடமலர்
விழியினி துயின்றமுகிலே
யீசர்க்கு முளரியிதழ் வாசர்க்கு மெட்டா
திருக்காதி யந்தநடுவும்
எம்மைவிலை கொள்ளுமறை யோகிரா மானுசனை
யேத்துநல் லோரிடத்துந்
தேசுபெற விளையாடி யானந்த நிர்த்தனஞ்
செய்யும் பரஞ்சோதியே
செகமீ தரக்கர்குல மடிவிப்ப தற்கென்று
சிலையேந்தி மகிழ்சிங்கமே
தாசரதி காகுத்தகோ சலைபெறுங் கண்மணி
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (5)
138. மதிவதன முறுவலும் காவிநிகர் மேனியு
மட்டுநிறை குல்லைமலரும்
மலைபொருவு தோள்களுஞ் சிலைநுதற் சுட்டியு
மார்பிலகு கனகவடமும்
புதியநற வெனவொழுகு கனிவாயி னூறலும்
புங்கமுங் கண்டசோதை
புளகித் தெடுத்துச்சி மோந்துகாப் பிட்டு மகிழ்
போதமெய்ஞ் ஞானரசமே
கதிபெறு வதற்குதவு மிருமறையி லுற்றபொருள்
காட்டுமண வாளமுனிவன்
கழலிணை பணிந்துபழ வினையற்று முத்திநெறி
கருதுபா கவதரென்னுந்
ததியருள முறைகின்ற பதின்மர்தொழு மணிவண்ண
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே. (6)
139. மூலமறை யோதுபா வத்துநிலை தெரியவென
முனிபிருகு சென்றுமருவி
முளரிமலர் பொருவுநின் மார்பத் துதைக்கவு
முனியாது செங்கரத்தாற்
காலினைத் தடவியவன் மாலினை யகற்றியெக்
காலுநித் தியனென்பதைக்
கருதியடி தொழவவர்க் கருளுமா மணிவண்ண
கஞ்சனுயிர் கொண்டகளிறே
சீலக் குணத்துவசு தேவன் றனக்குரிய
தேவகிதன் மனதின்புறச்
சிறுவரறு வரையுமொரு நொடியிற் கொணர்ந்துதவு
சிங்கமே யமரரேறே
தாலப் பெருந்துவச மாலிவென் றண்ணலே
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (7)
140. வம்பவிழ் மலர்க்குழ லசோதையில் வளர்ந்தாயர்
மகவினுட னாத்துரத்தி
வசுக்கொடு விளங்கனி யெறிந்துவிழ வதுகண்டு
வுற்றுமகி ழும்பரமனே
அம்பரத் துறையமர ரிம்பரின் மனுத்தலைவ
ரனைவர்க்கு மிடர்செய்திடும்
அசுரப் பருத்திப் பொதிக்கொரு நெருப்பாக
வவனிவரு பிரகலாதனின்
கம்பலை யுறாதுமன தின்பங் குளிர்ந்துனது
கழலிணை வழுத்தவவனாற்
காட்டுந் தலந்தோறு முதிக்கவுள் ளங்கொண்டு
கனகனை வதைக்குமன்னாள்
தம்பத்து வந்துபே ரின்பங் கொடுத்தமுகில்
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (8)
141. சீதச் செழுங்கமல வாவிக்கு ளொருமுதலை
செய்யவேதி யனையீர்க்கச்
சிலைவளைத் தம்முதலை தனைவென்று புகழ்பெற்ற
திறல்விசையன் முதலைவரும்
மாதர்க்கு ளெழின்மிக்க கோதற்ற கற்புடைய
மடமங்கை பாஞ்சாலியும்
மனதுகந் தடிபணிய அவர்மனங் களிகூர
மறைமுனிவர் தேவர்பிறரும்
நீதத் துடன்பரவு பாதஞ் சிவப்பெய்த
நெடுநகர்த் தூதுசெலுநாள்
நேசமுறு விதுரன்மனை நண்ணியமு துண்டுமகிழ்
நிமலா பரஞ்சோதியே
தாதவிழ் மலர்க்குழ லசோதைபெறு சிங்கமே
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைச்சோர
சப்பாணி கொட்டியருளே. (9)
142. தினகர னுதித்ததென மணியழுத் துங்கனக
சிங்கா சனத்திருந்து
செங்கோல் செலுத்திமகு டாதிபதி தசரதன்
செய்யுமுற் பயனினாலும்
மனநல முறும்பெரிய தவவிரத வேதியர்கள்
வானவர்கள் வேண்டலாலும்
மாயவினை வஞ்சனைசெ யுங்கொடிய நிருதர்களை
மடிவிப்பதற் குன்னியும்
நனிமிகு கருங்குழலி கவுசலைதன் மகவென்று
நண்ணிவன் மேவுமந்நாள்
நற்றவன் பன்னியன சூயையிரு கையினான்
கையணி யணிந்துவந்த
சனகியுடன் மருவியனு தினமுமகிழ் காகுத்த
சப்பாணி கொட்டியருளே
தருமலர்க் காவுசூழ் திருவைகுந் தைக்கடவுள்
சப்பாணி கொட்டியருளே. (10)
----------------------------------
முத்தப்பருவம்
143. சித்தர்புகழ் கேசவா நாரணா மாதவா
சீர்மருவு கோவிந்தனே
திகிரியணி விண்டுவே மதுசூ தனாநெடிய
திருவிக்கிர மாவாமனா
அத்திமரு விக்கண்வளர் சீதரா தொண்டருக்
கருள்புரியு மிருடிகேசா
அயனைப் பெறும்பதும நாபதா மோதரா
அகிலகா ரணவென்னவே
கொத்தவிழ் மலர்க்குழ லசோதைபனி மொழியினாற்
கூவிமடி மீதுவைத்துக்
கொஞ்சிமுலை யூட்டிநீ ராட்டிமகிழ் வதுகண்டு
குறுமுறுவல் கொள்ளுமணியே
பத்தருடன் விளையாடு நித்தமுகில் வண்ணநீ
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (1)
-
144. துட்டவல் லசுரர்களை யட்டல்புரி நேமியும்
சுரிசங்க மும்பாயலுந்
துன்னுமிளை யோர்களென நண்ணிவரு வோமென்று
சுரர்களுக் கபையநல்கி
யிட்டமொழி யெண்ணியே வட்டைநிகர் கொங்கைதிக
ழேந்திழை யெனுங்கவுசலை
யினிதுவகை கொள்ளவவள் திருவயி றுதித்துமகி
ழிறைவனே யெம்பிரானே
மட்டவிழ் நறும்போதை விட்டுச் செழுங்குல்லை
மருவிக் குழந்தையாகி
மல்லிவள நாட்டினுயர் வில்லிபுத் தூர்வந்த
மாதினுக் கொருதந்தையாம்
பட்டர்கோ னடிகள்பணி சிட்டருள மேவுமுகில்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (2)
145. நீர்த்தரங் கப்புணரி சூழ்புவியி லைவர்க்கு
நிற்கவோ ரடியுங்கொடேன்
நீதூது வந்ததிற் பயனில்லை யென்றரவ
நெடியகே தனனிசைப்பப்
போர்த்தொழில் நடத்திச் சயத்திர தனைக்கொலப்
புங்கமுறு கணைவாங்கவே
போகின்ற வழியிலுன் பாதமணி மலருமுன்
புண்டரிக னால்விளக்குந்
தீர்த்தமுஞ் சிரசிலிட் டகமகிழ் கிரீசனைச்
செய்யவிசை யன்கணுற்றுச்
செப்புமவ் வரனுக்கு மீசனீ யென்றுணர்வு
தெளியவரு ளும்பரமனே
பார்த்தசா ரதியென்ற சீர்த்திபெறு கண்ணநின்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந்தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (3)
146. சங்கையில் லாதகலை கற்றவே தியர்களும்
தன்னைவந் தடிவணங்குந்
தவநெறி புரிந்துனது வரவுகண் டுள்ளமகிழ்
சவரிபூ சனையுகந்து
துங்கமுள மாருதி வணங்க அவனுக்கருள்
சுரந்துவள சோலைநண்ணி
சுக்கிரீ வனுக்கபுய மிக்குற வளித்தவன்
துயர்துடைத் திடவெண்ணியே
செங்கைவரி வில்வளைத் தொருபகழி கொண்டடற்
றிறல்வாலி தனைமடித்துத்
தினகரன் மகற்குமகு டங்கவித் தாட்கொண்ட
சிங்கமே யங்கணரசே
பங்கய மலர்க்கண்வரு மங்கையுறை மார்பநின்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (4)
147. குடவளை யடற்றிகிரி கொண்டகை யிரண்டினுங்
கோல்குழ லெடுத்தடவியிற்
கோவினிரை பின்சென்று மாயவிளை யாட்டினது
கோலங்கள் காணவென்றே
மடல்விரிந் துங்கமல மலருறை யயன்கருதி
வசுவினை மறைக்கவதுபோல்
மறுபடியமைத் தவைகள் மனைமருவ வுய்த்துமகிழ்
மதிவதன மதிசூதனா
கடகரி நெருக்கமென வுறுமிரு ளகற்றவரு
கதிரவன் வயப்புரவியைக்
கட்டலிட வான்முகடு முட்டிவளர் சோலைசூழ்
கானகத் தொருமடுவினிற்
படவரவி னுச்சிமிசை நடனமிடு பொற்சரண
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (5)
148. வார்கெழுமும் கொம்மைமுலை யேர்திக ழுமைக்கதிபன்
வாணியிறை யும்பர்தலைவன்
வாதநெடு வாருதி வசுக்களன லதுக்கதிபன்
வந்துலவு மிந்தாதவன்
சூர்பகை தடிந்தகுக வேழசுரர் முதற்கடவுள்
துய்யமறை யோர்தவத்தோர்
துன்புற்று நைந்துருகி முறையிட்டு வந்துனது
துணையடி வழுத்தியேத்த
நீரிலொரு கேழலென மேவியவ ணுற்றெவரு
நிகரிலாப் பொற்கண்ணனை
நெஞ்சைப் பிளந்துயிரை மறலிக் களித்தவுடன்
நீண்டதிண் மருப்பினிடையே
பார்மகளை வைத்துமகிழ் சீர்பெறு வராகநின்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (6).
149. நச்சர வெனப்பொலி யிராவண னிலங்கைமா
நகரினிற் சிறையிருந்த
நங்கையன லமுங்கிவர நம்பிமுனி வைக்கண்ட
நானில நடுக்கமுறவே
வச்சிர கரத்தலைவன் முச்சிகை யயிற்கடவுள்
வானவர்கள் புண்டரீகன்
வந்துநீ முந்துமறை யோதுபர னிவளுலக
மாதாவெனத் தெரிகிலாக்
கொச்சைமதி யுற்றநிரு தக்கிளை யெனுங்கடல்
குறைத்தெமது துன்பநீக்குங்
கொண்டலே யிக்கத மினித்தவி ரெனக்கரங்
கூப்பிமகி ழுஞ்சிங்கமே
பச்சைமலை யென்னவொளி ரச்சுத மனுத்தலைவ
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (7)
150. விரதமறை யோரும்பர் மருவுசித் திரகூட
மேவியிளை யோனமைத்த
மேலான பரமபத மாலினிலை கடலென
விளம்புபன் னகசாலையின்
மருவார் குழற்சனகி யருகே யிருப்பமன
மகிழ்வோடு விளையாடுநாள்
மணிமுடி கவித்துன்னை யரியணையில் வைத்தடி
வணங்கவென் றேகைகேசி
தருபுதல்வன் வருவதனை யமர்பொரு வதற்கென்று
தம்பிமுனி வுடனெழுந்து
தாரணி படைப்புணரி நீறெழ மடிக்கவிடை
தரவேணு மென்றுகழறப்
பரதன்வரு கோலத்தை வரதபா ரென்ற முகில்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (8)
151. வஞ்சியிடை பஞ்சினடி மிஞ்சுமெழில் மங்கையுடன்
மருவுபாண் டவருமேகி
வனமுறையு நாளிருடி யுணவுக் குதவிசெயு
மாமீது முதிர்பழத்தை
விஞ்சைநெறி கற்றவிறல் விசையனொரு கணையேவி
விழவுமற் றதனையறிந்து
மிக்கமறை யோன்வெகுளு மென்றமொழி கேட்டவுடன்
வெருவியுன் னடிபணியவே
அஞ்சல்மி னெனப்புகன் றவரவர்க ளுற்றமன
தாசையினை யறையுமெனலும்
ஆதிமுத லீறுவரை சொற்றபொழு தத்தருவி
லக்கனி பொருந்தவருளிப்
பஞ்சவர் சகாயனென மிஞ்சுபுகழ் பெற்றமுகில்
பவளவாய் முத்தமருளே
பன்னுமறை யோர்தொழுந் தென்வைகுந் தைக்கள்வ
பவளவாய் முத்தமருளே. (9)
------------------------------
வாரானைப்பருவம்
152. நிறையுங் கலைகள் மருவுஞ் சசியை
நிகர்த்த வதனன் வருகவே
நிருதன் சாபந் துடைத்து மகிழும்
நிமலன் வருக வருகவே
நறைவண் டுளபமாலை யணியு
நம்பன் வருக வருகவே
நாரிபாகன் வேத னெவர்க்கு
நாதன் வருக வருகவே
உரியில் வெண்ணெய் திருடியுண்ட
வுதரன் வருக வருகவே
உரல்பின் றொடரத் தவழுங்கனக
வோங்கல் வருக வருகவே
மறைகள் பரவு முபயசரண
மாயன் வருக வருகவே
வாசங் கமழுந்திரு வைகுந்தை
வரதன் வருக வருகவே. (1)
153. பாணி யமர்ந்த வேணி யுங்கா
பால முமுழுச் சூலமும்
பணியுங் கடுக்கை மாலை யுமழுப்
பரசுந் தரித்த கடவுளைப்
பேணித் தவசு புரியு மசுரன்
பீடு மகிழ்ந்து கொடுவரப்
பெருமை தெரிய வவன்பின் றொடரப்
பிழைக்கு மிடங்க ணாடியே
சேணிற் றிரிந்து சிவனுக் கபயஞ்
சிறப்புற் றளித்தவ் வசுரனைச்
சிதைத்துத் துயரந் துடைத்து நிவந்த
சீத ரபரஞ் சோதியே
வாணிக் கிறைவன் பூணும் பொற்பதன்
மாயன் வருக வருகவே
வாசங் கமழுந் திருவை குந்தை
வரதன் வருக வருகவே. (2)
154. சீதத் திவலை துளிக்கு மகரஞ்
செறிந்த கடலி னடுவினிற்
றேவ ராலு மேவ வரிய
தென்னி லங்கை தன்னிலே
பூத மைந்து வேத நான்கு
புவன மூன்று விண்ணினிற்
பொருந்து கின்ற சுடரி ரண்டு
போத மொன்றிவ் வனைத்தையுந்
தாத விழ்ந்த பூவி யந்து
தங்கு கின்ற வயனையுந்
தந்த வன்னை சனகி யான
தைய லைக்கண் டேனென
வரத மைந்தன் வந்து ரைக்க
மகிழு மாயன் வருகவே
வாசங் கமழுந் திருவை குந்தை
வரதன் வருக வருகவே. (3)
வேறு
155. முதியோ ரருந்தவர்கள் கதிசேர் நங்கைசெய
மொழியும்பிர பந்தமென்னும்
முன்னூலை யனுதினமு மேத்தியவ் வழிநின்ற
மூடசிக் களேயலாது
நதியார் செழுஞ்சடிலன் விதியோன் முதற்கடவுள்
நண்ணுதற் கெட்டாததாய்
நவிலுதற் கரிதான பரமபத நாதாநீ
நானிலம் புகழ்வைகுந்தைப்
பதிமேவி யர்ச்சாவ தாரமென வந்ததைப்
பாரோ ரறிந்துய்ந்திடப்
பழமறையி லோதுதிரு மந்திரத் துட்பொருள்
பகர்ந்துவெளி யிட்டசீமான்
எதிராச னடிபரவு மதியோர்க ளுளமருவும்
எங்கள்கண் ணன்வருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (4)
156. வன்புல நடத்துகரு மேந்திரிய மைந்துடன்
மருவுஞானேந் திரியமைந்து
மடங்காத விடயங்க ளீரைந்தினைச் சேர்ந்து
வளர்கின்ற கரணநான்கு
சொன்னவோ ரிருபத்து நான்கைப் பொருந்தித்
துலங்குஞ் சடத்தினுள்ளே
சோதிமய மாகவுறை யாதது நீயென்று
சுருதிசொலு மெட்டெழுத்தின்
சின்மயப் பொருளோதி யுலகைத் திருத்திமகிழ்
தேசிகன் பெரியநம்பி
சேவடி துதித்துத் தொழும்பரம பாகவதர்
சிந்தைமலர் மேவியென்றும்
இன்பமொடு விளையாடு மிறைவமா தவகண்ண
வெம்பெரும நீவருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (5)
157. கருமுகில் முழக்கமென வருமிரத வோசையுங்
கடலெனத் திகழ்தானையுங்
ககனகோ ளங்கள் முதல் வெடிப்பட வுரற்றுநெடு
கைம்மதம் பொழிவேழமும்
பருதிவா னவன்வயப் புரவியை நிகர்த்தளவில்
பல்குதிரை யின்றிரள்களும்
பருவரை யொத்தபுய வீரரு நெருங்கியெதிர்
பாரதப்போர் தன்னிலே
யருதியுட னுன்னடி பணிந்துமகிழ் பாண்டவர்க்
காருயிர்த் தரிக்கவுன்னி
யம்பவள வாயில்வெண் சங்குவைத் தூதியவ்
வமராரைச் செயித்தமாலே
யிருநா லெழுத்திலுறை திருமா லசோதைதரு
மிருகண்ணின் மணிவருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (6)
158. கொங்குகமழ் கோதைமலர் தங்குநற வுண்டுகளி
கொண்டுலவு வண்டுமுரலுங்
கோகில நவிற்றுமிசை பாகினை யியைந்தமொழி
கோகனக மான்பொருட்டுக்
கங்குல்பக லற்றொளி பரப்புக்க னத்திலுறு
கற்பகக் காவைமருவிக் கந்தமலி கின்றதரு
வொன்றினை யெடுக்கவது
கண்டகா வலர்கள்சூழ்ந்து
சங்கையற வந்தமர் புரிந்தவர்கள் சாய்ந்திடச்
சங்கினோ தையைமுழக்கித்
தளமுகை நிறைந்துவரி பாரிசா தத்தினைத்
தரைமீது கொணருமுகிலே
யெங்கள்குடி முழுவதும் புங்கமுடன் விலைகொள்ளு
மீசநா ரணன்வருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (7)
159. ஓராழி பூணிரத மேலே யுலகிருளை
யோட்டுமார்த் தாண்டகிரணத்
தொளிபரவு புவிமுழுது மரசினை நடத்தியுய
ருத்தான பாதனென்னுந்
தாரார்புயத் தண்ணல் சீர்திகழ் மனைக்கிறைவி
சாற்றிய கடுஞ்சொல்லினாற்
றாமரை நிகர்த்தவிழி நீர்பொழிய நெஞ்சினிற்
சலங்கொண்டு கானமருவி
நாராயணன் பரம னீராறு நாமமே
நன்மைதரு மென்றுதுருவன்
நவிலுந் தவங்கருதி யகமகிழ்ந் தன்புபுரி
நம்பனே புருடோத்தமா
ஈரேழு புவியினையு மோர்பொழுதி னுண்டுமி
ழிருக்குமுதல் வன்வருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (8)
160. சீர்மருவு வெண்கயிலை மேவிவல முஞ்செய்து
தினமும் பணிந்துவருவோன்
செருச்செய வெதிர்த்தவர் வலத்திலொரு பாகமது
சேர்வர முற்றதிறலோன்
நீர்கெழு பெரும்பரவை யேழுமது சூழ்புவிக
ளேழுநெடு மலைகளேழும்
நீலமுகில் ஏழுமிவை போலுட லமைந்துரு
நிவந்தபுய வீரமுடையான்
பாரில்வளர் பூதங்க ளைந்தினையு மிகல் செயும்
பண்புபெற் றுயர்வாலியாம்
பருவரை தனைக்கொல்ல விவனே தெனக்கருது
பருதிமகன் மையலறவே
யேருலவு பகழிகொண் டோரேழு மரத்தினையு
மெய்தரா கவன் வருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (9)
161. குயினறவு கற்கண்டு பாகுகனி யாளெனக்
கூறிய மிடற்றினிசையுங்
குவளைகரு வண்டுகயல் இயல்பகழி யாமெனக்
கூர்விழியு நீர்மருவிய
புயலெனத் திரளளக பந்தி யுங்கனகப்
பொருப்பைநிக ரிருகொங்கையும்
புண்டரிக வதனமும் புன்முறு வலுங்கொண்ட
பொற்பில கசோதைகுளிர
அயனரன் முதற்கடவு ளண்டகோ டிகள்பல
வனைத்துமுத ரத்தினுள்ளே
யடங்குவதை யம்மா தினுக்குமுன் காட்டியவ
ளகமகிழ வைத்தமணியே
யியல்கொண்ட வயிணவர்கள் பயிலுபய வேதமுத
லெம்பெரும நீவருகவே
யிந்திரர்க் கருள்புரியு மெந்தைவா னிளவரச
னிருடிகேசன் வருகவே. (10)
-----------------------------
அம்புலிப்பருவம்
(தானம்)
162. தெண்டிரையி லுற்பவித் தும்பொன் மகமேருவைத்
தினமுநீ வலமாகவே
திகைத்துத் திரிந்ததிலு நீங்காத முயன்மறுத்
தீரவோ ருபாயமதுகேள்
கெண்டைவிழி மாதர்குழல் கண்டுதம ரென்றுளக்
கெருவமுற் றனவரதமுங்
கேகய நடம்புரிதல் பார்த்துவந் தாசையாற்
கெம்பீர மோடெழுந்து
கொண்டல்கள் முழங்கிநெடு மாமலை யிதாமெனக்
குலவுமெழில் மாடமேவிக்
கோமள மதாகநற் சங்குநிதி தரளங்கள்
குவியவள மதுசுரக்கும்
அண்டர்மனை சென்றுததி யுண்டமணி வண்ணனுட
னம்புலீ யாடவாவே
அல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுடன்
அம்புலீ யாடவாவே. (1)
163. உம்பர்தேர் இரவியின் புரவிதன் னயர்வினுக்
குரியநிழ லுதவியாற்றும்
உயர்மரச் சோலைசூ ழிந்நகர்ப் பொன்னனா
ருந்தனைப் பார்த்துநாளுஞ்
செம்பவள வாயினொளி காலிட நகைத்துச்
சிரிப்பதற் கஞ்சியேகிச்
செய்யதவழ் வேள்வியா லுதித்தும் பயோததி
செழிக்கக் கடைந்தவன்னாள்
தம்பமென வேநின்று மிமையவர் குழாத்தினொடு
தண்ணமுத முண்டுமகலாச்
சாரமர பக்கமுறு தேய்தல்தீர்த் தருள்செயுந்
தகைபெறச் சமயமிதுகேள்
அம்புவி புகழ்ந்துதொழு நம்பரந் தாமனுட
னம்புலீ யாடவாவே
அல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (2)
164. எஞ்சலில் லாதபட வரவினது நிழலினா
லிதையமது வாட்டமுற்றே
யெண்ணிப் புலர்ந்துமன துட்குதல் தவிர்ந்துநீ
இன்பமோ டுச்சிதமதாய்
மிஞ்சுபுகழ் கொண்டுனது தண்ணளி பரப்பியே
மேக்குற் றுயர்ச்சியாகி
மிக்கான வேதியர்கள் தேவர்கள் துதித்திடு
மேன்மைபெற வேண்டிலிதுகேள்
குஞ்சர மிளைத்தாதி மூலமென் றோலமிடு
குரலுக் கிரங்கியன்னாட்
குவலையத் தெவருநின் றதிசெயித் தேற்றிடக்
குருமணிப் புள்ளிலேறி
அஞ்சலென வந்துதவு செஞ்சக் கரத்துட
னம்புலீ யாடவாவே
யல்லி மகிழ் வைகுந்தை வல்லி மண வாளனுட
னம்புலீ யாடவாவே. (3)
165. காதுதோய்ந் தேகுமிழ் மறித்திட வுலாவிமிளிர்
கண்ணைத னினமெனத்தேன்
கண்டணுகி யிடைபொறா தெனவுருகு மெழில்மேவு
கன்னியர்கள் தொழுமுன்றனைக்
கோதைகமழ் மாதர்தங் கொழுநர்பிரி காலையில்
கொடியதழ லெனவீசிடுங்
குறைநீங்கி யனுதினந் தண்மதி யெனப்பொருவு
குணமருவு சமையமிதுகேள்
சீதமலர் பொழிநறவு கனிகள்பிதிர் சாரொடும்
சேர்ந்துமத கூடுபாயும்
திருவழுதி நாடனெனக் குலமதனை விலைகொண்ட
செங்கமலை வாழுமார்பன்
ஆதிமறை தேடரிய சோதிரகு நாதனுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (4)
-
166. மன்னுமெழி லம்பிகையை வாமமதில் வைத்துலவு
வர்தனது சென்னிமேவி
வாழ்ந்தாலு நீங்காத வன்பகை தவிர்த்தருளி
வானவர்கள் கண்டு வாழ்த்த
தென்னிலங் காபுரியி லுன்னொளி செலுத்திடச்
செய்ததை வியந்துன்னிநீ
செங்கமல வாவியரு கூர்வளைக ளீனுநிலை
செவ்விமிகு தரளந்தனைக்
கன்னல்செறி காவில்வாழ் குருகுதன் சினையெனக்
கருதியே யடைகிடக்குங்
கவின்மிகுந் தோங்குபுகழ் திருவழுதி நாடனுயர்
கமலாசனன் பரவிடும்
அன்னவுரு வாகிமறை சொன்னநங் கண்ணனுட
னம்புலீ யாடவாவே
அல்லி மகிழ் வைகுந்தை வல்லி மண வாளனுட
னம்புலீ யாடவாவே. (5)
167. பரவைசூ ழுலகினை விழுங்குசெங் கதிரவன்
பண்புபெறு பொழியுமழலைப்
பணிநிலவு வீசிவெப் பாற்றியுஞ் சமர்முகப்
பாசறையில் வாகைசூடி
வருமிளைஞர் புயமதில் தனமுயங் கப்புணரு
மாதருக் கமுதாகவே
வளமைபெற் றும்பயிர்க் குறுதுயர மின்றியே
வளரும் படிக்குதவியும்
இருவிருளை யோட்டியுந் தகைபெற்ற வுன்னையே
எம்பிரான் கூவவாரா
திருப்பது பெரும்புகழ்க் கொக்குமோ வாதலா
லெழிலா ரசோதைமகவாம்
அரவினணை மருவியுறை பரமபத நாதனுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (6)
168. பார்புகழு மாதவர்கள் தேடரியப் பொற்பதப்
பரமனென் றுணருந்ததி
பாண்டனுக் குயர்கதி கொடுத்துமிரு கண்டமுனி
பாலர்க்கு நெறியுதவியும்
மாரன்மனை யாளைநகு மெழில்பொருவு பாஞ்சாலி
மருமருவு குழல்முடிக்க
மாற்றலரை வென்றுமகிழ் எம்பிரான் கூவநீ
வந்திடி லுனக்கென்றுமே
சீர்திகழு மீர்முறை சோடச நிறைந்தகலை
சேரவருள் செயுமாதலாற்
செம்பவள முல்லைமலர் வாய்முறுவல் என்னுமத்
தேவகிபெறும் புதல்வனாம்
ஆரமொடு மாமகளை மார்பிலணி கண்ணனுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (7)
169. பூரணக் குடமெனப் பொலியும் பயோதரப்
பொற்பில கசோதைமகவாம்
புங்கவ னுனக்கு வருந்துதல் தவிர்த்துப்
பொருந்துகலை யீவதற்குக்
காரணஞ் சோலைசெறி நீர்பெருகு வாவிநிறை
கஞ்சமல ரென்னவொளிரும்
கரதலங் கொண்டுமதி வாவென் றழைத்திடக்
கருதிவா ராததென்னோ
வாரணத் துரிவையினை மேனியிற் போர்த்தசிவன்
வாணியிறை யும்பர்தலைவன்
வந்தடி தொழக்கருணை யுந்தும் பிரான்கமலை
வாழுமணி மார்பனெங்கோன்
ஆரணத் துறையுமிந் நாரணக் கடவுளுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே (8)
(தண்டம்)
170. பழமறை தொழும்பரம புருடனென் றறியாது
பண்டுசிசு பாலனென்பான்
பகர்கின்ற விசையினுக் ககமுன்னி யவனுடல்
பதைத்துவிழ வேவிடுத்துந்
தழலெரி யெனும்பங்கி யிருள்செறியு மேனிநிமிர்
தானவர்கள் கிளைமுழுவதுந்
தரைப்பட மடித்ததுவு மோர்திகிரி செங்கரந்
தனிலிருப் பதையறிந்தும்
மழவிடை யெனத்திகழும் மாயனுனை வாவென்று
வாயிதழ் மலர்ந்துகூவ
வாரா திருக்கிலக் கூராழி விடுவனென
மனதெண்ணி யிந்நேரமே
அழகுபெறும் செங்கமலை யுளமருவு கள்வனுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (9)
(தானம்)
171. சென்னெலங் கழனிவள நாடனென் கோன்மலர்த்
திசைமுகன் வணங்குதேவன்
தேவகி பெறும்புதல்வன் வாவென் றழைத்திடச்
சீருடன் விரைந்துவந்தால்
முன்னைநீ செய்தவினை யால்வருந் துயரெலா
முற்றவு மகற்றிநாளும்
முழுமதி யெனப்பொருவ வரமீவ னீதன்றி
முவுல கினுஞ்செலுத்தத்
துன்னுகிர ணங்கள்செறி செங்கதிர்கள் எங்கினும்
தோன்றிய தெனத்திகழ்வுறுந்
தூய்தான நித்திய விபூதியினு முன்னொளி
துலங்கவருள் செயுமாதலால்
அன்னைதிரு மாதினுள மன்னுநங் கண்ணனுட
னம்புலீ யாடவாவே
யல்லிமகிழ் வைகுந்தை வல்லிமண வாளனுட
னம்புலீ யாடவாவே. (10)
---------------
சிற்றில் பருவம்
172. வானோர் குழுவு மவர்க்கிறையு
மதிசே கரனுந் திசைமுகனும்
மலரா லருச்சித் தடிவணங்கி
மாலே கள்வ னெனத்துதித்து
மேனா ளுனைவந் திரந்ததற்காய்
விறல்சேர் மாலி சுமாலிதனை
மேவி யமர்செய் திடக்கருதி
விளங்குங் கருடப் புள்ளேறித்
தானே யெதிர்த்த வரக்கர்தம்மைச்
செயித்த வுவப்போ வுருக்குமணி
தனத்தில் முயங்குங் கெருவிதமோ
தகைந்து விளையாட் டழிக்கின்றாய்
கானார் கமல மான்வருடுங்
கழலாற் சிற்றில் சிதையேலே
கந்தங் கமழும் வைகுந்தைக்
கனியே சிற்றில் சிதையேலே. (1)
173. வடம்பூண் முலையு நுடங்கிடையு
மதிபோல் முகமுஞ் செங்காந்தள்
மலரைப் பொருவுங் கரதலத்தில்
வதிந்த விழியாங் கயல்விழியும்
படமா மெனச்சொற் றடிதடமும்
பாகு போன்ற பனிமொழியும்
பருவ முகில்நேர் குழலுமெனப்
பகரு மெழிலும் பயிர்ப்புநிறை
மடவார் நதியின் கரையருகே
மணலைக் குவித்து மனமுவந்து
வனைந்த விளையாட் டிதைமருவி
மாலே யழித்தல் வழக்கன்று
கடல்சூழ் புவியோர் தினம்பணியும்
காலாற் சிற்றில் சிதையேலே
கந்தங் கமழும் வைகுந்தைக்
கனியே சிற்றில் சிதையேலே. (2)
174. முருக்கின் மலர்போ லிதழ்க்கனிவாய்
முல்லை முறுவ லாய்ச்சியிரு
முலையி னமுதந் தனையூட்டி
முகத்தோ டணைத்து முத்தமிட்டுப்
புரியு மரைநாண் காப்பணிந்து
பொலன்றா திரைத்துத் தாலாட்டும்
பொன்னூ சலிற்கண் வளராமற்
புனிற்றா நிரைபின் போகாமல்
அரியின் குரல்நேர் மொழிமடவா
ரறியாப் பேதை மதியாலே
யமைக்கு மழகார் மாளிகையை
யழிக்கக் கணக்கோ வனுதினமுங்
கருதுந் தவத்தோர் சிரம்பணியுங்
கழலாற் சிற்றில் சிதையேலே
கந்தங் கமழும் வைகுந்தைக்
கனியே சிற்றில் சிதையேலே. (3)
175. வண்டோ கயலோ மரைப்போதோ
வாளோ கணையோ அயில்வேலோ
மானோ விடமோ நறுங்குவளை
மலரோ வெனச்சொ லிருவிழியும்
பண்டோ விசையும் பொருந்துமெழில்
பாவை மடவார் பலர்கூடிப்
பணிக்கு மணலின் விளையாட்டைப்
பரமா வழித்தா லுன்னழகுக்
குண்டோ பெருமை யன்னாளி
லுளத்தே குறித்து மதியாமல்
ஒருபோ தினிலுங் கருதாம
லுலவித் திரிந்த பாமரனாங்
கண்டா கர்ணற்குக் கதியளித்த
கண்ணா சிற்றில் சிதையேலே
கந்தங் கமழும் வைகுந்தைக்
கனியே சிற்றில் சிதையேலே. (4)
176. அல்லைப் பழித்த நிறத்தரக்க
ரடங்க மடியக் கணையேவி
அமரர் துயரந் தனை துடைத்த
வடங்காக் களிப்போ மழுராமன்
வில்லை வளைத்த பெருந்திறலோ
விரும்பு மறையேர் னுளமுவப்ப
வேண்டும் பசுவி னிரையளித்த
மேன்மைப் புகழோ பழவடியார்
தொல்லை வினைகட் டறுக்குமனத்
துணிவோ திரையார் பொருநைநதித்
துறையின் மடவார் விளையாட்டைத்
துதைப்பே னெனுஞ்சொற் குறிப்பறியேன்
கல்லை யுருவாக் குங்கமலக்
காலாற் சிற்றில் சிதையேலே
கந்தங் கமழும் வைகுந்தைக்
கள்வா சிற்றில் சிதையேலே. (5)
177. மானேர் விழிக்கஞ் சனமெழுதி
வதியும் பிறையை நிகர்நுதற்கு
மறுப்போற் சாந்துத் திலதமிட்டு
வயங்குங் கனகச் செம்பெனலாய்த்
தானே வளரு மிளமுலைக்குச்
சந்தங் கமழுஞ் சேறணிந்து
தபனன் வருதேர்ப் புரையல்குற்
றடத்தை மறைத்துக் கலையணிந்து
நானஞ் செறிந்த குழன்மடவார்
நளினம் பொருந்து நதிக்கரையில்
நனிமா டங்க ளமைத்ததனை
நண்ணி யுதைத்த லுனக்கழகோ
தேனார் துளவத் தார்மார்பா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செகத்தோர் பரவும் வைகுந்தைத்
தேவே சிற்றில் சிதையேலே. (6)
-
178. நுகருஞ் சுதையுந் தேனுவையு
நுவலுஞ் சசியுங் கற்பகமும்
நோன்பு புரியிந் திரர்க்குதவி
நோதல் தவிர்த்த பெருமானே
மகர நெடுங்கண் விதுவதன
மடவார் பொருநைத் தடமருவி
மணலைக் குவித்து மணிமுறத்தில்
வாரிப்பர லையறக் கொழித்து
நிகரில் கனக மரகதமு
நிவந்த மலரு மதினணிந்து
நிதிபோல் மகவைப் பெற்றெடுத்து
நின்பேர் புனைவே னெனக்கருதிச்
சிகரி யமைத்துக் கரங்கூப்புஞ்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செகத்தோர் பரவும் வைகுந்தைத்
தேவே சிற்றில் சிதையேலே. (7)
179. நிவந்து பணைத்து முலைமடவார்
நேசத்துட னுண்மணற் கொணர்ந்து
நெடிய மாட மெனவனைந்து
நின்னைப் பணிமா ளிகைகண்டாய்
பவள விதழுங் குறுநகையும்
பங்கேரு கம்போ லிருவிழியும்
படைத்த கமலை யடிவருடும்
பனித்தா ளிதனி லுறுத்தாமல்
உவரித் திரைசூழ் புவியனைத்து
மும்பர் கணமு மவர்க்கிறையும்
உயர்மா தவரு மைங்கரனு
முடுவின் பதியு குகவேடன்
சிவனு மயனும் தொழுங்கழலாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செகத்தோர் பரவும் வைகுந்தைத்
தேவே சிற்றில் சிதையேலே. (8)
180. அனம் போன் மடவார் நதிக்கரையி
னருகே மணற்கொண் டாடரங்கும்
அழகார் மதில் சூழ் வேதிகையு
மமைத்து மலரா லருச்சனைசெய்
துனையே தொழுதாட் செய்வோமற்
றொன்றுங் கருதோ மெனவுளத்தில்
உன்னிப் பணிமா ளிகையிதனை
யுதைத்தல் பெருமைக் கழகன்றே
வனையும் பாசந் தனைத்துறந்த
மதியோர் கதிசேர் வதற்குரிய
மறையின் பொருளைத் தமிழ்விரித்த
மாறன் றிருவாய் மொழியுரைத்துத்
தினமுங் கருதுஞ் சேவடியாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செகத்தோர் பரவும் வைகுந்தைத்
தேவே சிற்றில் சிதையேலே. (9)
-
181. கரைக்கு ளடங்காப் பெருவெள்ளக்
கடலி னடுவோர் கருமலையிற்
கமலம் பூத்த தெனத்திகழுங்
கவின்கண் டரனா ரிறைஞ்சுதற்குப்
பொருந்தும் போத விழியளித்த
புனிதா மனுவின் குலதிலகா
பொன்மா மேருக் கிணையாதி
புடைத்துப் பணைக்கு மிருதனமும்
மருவார் குழலுஞ் செவ்விதழு
மன்னு மடவார் நதிக்கரையில்
வளமாளிகைசெய் தலங்கரித்துன்
வனப்பே கருதி யாசித்துச்
சிரத்தா லிறைஞ்சித் தினம்பணியுஞ்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செகத்தோர் பரவும் வைகுந்தைத்
தேவே சிற்றில் சிதையேலே. (10)
---------------------------
சிறுபறைப் பருவம்
182. இந்துநுத னந்துமிட றுந்துமுலை செந்துவ
ரிதழ்க்கவுரி யென்னுமயிலின்
இன்பமுறு சங்கரனு மீரேழு பெரும்புவியை
யீன்றமலர் தந்தவயனும்
தந்திமுக னுங்குகனு மிந்திரன் முதற்றலைவர்
தாபதர்க ளமரருடனுன்
சன்னிதி நெருங்கியவர் தன்னிரு கரங்கொண்டு
தலைமிசை குவித்துமகிழ
மந்தரக் கிரியுநெடு விந்தமலை யுந்திகழும்
மருவுபுய வீரமுடையான்
வஞ்சனைக் கஞ்சனெனு நஞ்சினு மிகுங்கொடிய
மடநெஞ்சன் மனைவாயிலிற்
சிந்துரக் களிறட்ட நந்தனருள் பாலநீ
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னுநங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (1).
183. நத்தைநிகர் கண்டமுந் தத்தைமொழி யுஞ்செய்ய
நளினமென மருவுகரமும்
நறைமலர்க் கோதையுந் திகழெழி லசோதையெனு
நங்கைமடி மீதுவைத்துக்
கொத்தலரு மல்லியிரு வாட்சிசிறு செண்பகங்
குல்லைமறு முல்லையுடனே
கொங்குவிரி பிச்சிகழு நீர்முகை குருக்கத்தி
கொண்டணிய மகிழ்கண்ணனே
நித்தனீ மற்றெவையு நினதே யெனக்கருதி
நெஞ்சிலறி வுற்றெனதெனும்
நெடிதான மமதையாங் காரத்தை விட்டுமன
நேசமொடு பணிசெய்யவே
சித்துனக் குரியதெனும் முத்தருள நிறைகள்வ
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னுநங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (2)
184. மரையோ மருண்டவிழி நறவைப் பொருந்துமொழி
மருவார் செறிந்தகுழலாம்
மலையைச் செறுக்குமுலை சிலையைக் கடிந்தநுதல்
மதியைப் பழிக்குமுகமா
மிரதிக்கு வருகணவன் உருவொத் தியைந்தவிடை
யிரதத்தை யேயல்குலாம்
யெழில்மே வசோதைதிரு மனைமேவி விளையாடி
யின்புற் றிருக்குமன்னாட்
புரையுற்ற மடநெஞ்ச வஞ்சனைக் கஞ்சன்விடு
போர்மல்லர் தமைமடித்துப்
புங்கமுட னகமகிழு மிங்கித குணாளனே
புனிதமறை யோர்க்குமுதலே
திரைமோது முத்தமிரு கரைசேர் நதித்துறைவ
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னுநங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (3)
185. மலைபோல் வயங்குநெடு புயவீர மண்டுதிறல்
வானரப் படைதிரட்டி
மணியோர் திரைக்கடலி னருகே யிருப்பதனை
மருவுவீ டணனறிந்து
கலையோது மறையவ ரருந்தவர்கள் விப்பிரர்கள்
ககனமுறை வோர்புவியுளோர்
கருதியடி தொழுகின்ற மாதுசானகியின்மேற்
காதலைத் தவிர்தியென்றே
யலைவிலா நற்புத்தி சொல்லினுங் கேளா
தகந்திகழு நிருதர்கோவை
யறவிட்டு வந்துனைப் பணியுமவ் வீடணர்க்
கபையங் கொடுத்தகளிறே
சிலைபொருவு நுதலிகவு சலைமகிழு மேகமே
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னு நங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (4)
186. இக்குவலயத் திருளை யப்புற மகற்றவோ
ரிரதமிசை வருமிரவியை
யின்சுவை யுறுங்கனிய தாமென மனங்கருதி
யிருவிசும் பூடுபாய்ந்துந்
தக்கமுனி யோகியர்கள் பூசுரர்கள் விப்பிரர்கள்
சாற்றுமறை யின்பொருள்முதல்
தருநவ வியாகரண சகலகலை யினையுமத்
தபனன் முன் நடந்துகற்றும்
மிக்கான புகழ்பெற்ற மாருதி தனக்குவர
மேன்மையுட னீந்தமுகிலே
விண்ணவரு மம்புயனு மாதவனு மைங்கரனு
மேருவில் வளைத்தசிவனும்
திக்கதிப ரும்புவியின் மக்களு மிறைஞ்சுமுதல்
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னு நங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (5)
187. பாதிமதி வேணியரன் வாழ்கிரியை வேரொடு
பறித்ததிரு தாதிபதியின்
பத்துமுடி வைத்ததலை அற்றுவிழ வுற்றமரர்
பக்தியோ டிறைஞ்சுபரமா
மேதிபடி வாவியிடை மோதுகயல் கன்றென
விருப்பொடு சுரந்தொழுகுபால்
வேகமுட னோடுந்தி யாமென விரைந்துவயல்
மேவிவளர் சூழ்கழனியுஞ்
சூதமர மீதுதளிர் கோதுகுயில் கூவியது
துப்பினிதழ் இந்துவதனத்
தோகைய ரெனக்கருதி யாடவர் வியந்துமருள்
சோலையு நிறைந்தமிதிலைச்
சீதைபுது வைக்கண்வரு கோதையிரு வர்க்கிறைவ
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னுநங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (6)
188. சண்டவே கம்பவனன் மண்டிமா மேருமுடி
சாய்த்தபே ரோசையெனவுந்
தராபதியர் பாசறையில் வாகைபுனை வெற்றியைச்
சாற்றுமணி முரசமெனவும்
மண்டல நிறைந்தபுகழ் கொண்டமுதல் வள்ளியோர்
வாயில்கடை முன்றிலெங்கும்
மனமொடு வந்துநிதி தருகுவோ மென்றுரை
வழங்குபே ரிகையென்னவுங்
கொண்டல்க ளொலிப்பதென் றெண்டிசைக டோறுமயில்
கொண்டாடி நடனமிடவுங்
குணபா லுறுங்கிழவன் விரைவோடு பவனிவரு
குஞ்சரக் குமுறலெனவுங்
தெண்டிரையி னார்ப்பெனக் கண்டவர் வியக்கவுஞ்
சிறுபறை முழக்கியருளே
சென்னல்சூழ் வைகுந்தை மன்னுநங் குலநாத
சிறுபறை முழக்கியருளே. (7)
வேறு
189. அடலுறு புயவலி கொண்டிடு மாபெலி
யன்போ டளித்தபுனல்
அங்கை விழாமுன் னடைத்திட வுன்னியோ
ரளியென வருபுகரின்
கடைசிறு வரிபொரு நெடுவிழி திகழுறு
கருமணி யைச்சிதறிக்
கணமென வுரைநவில் பொழுதி லிருபுவி
கால்கொ டளந்தவனே
படைபொரு சிலைநுதல் துடியிடை யெனவரு
பாவை யசோதைதரும்
பால னெனுந்திரு நாம மணிந்தகோ
பாலனெனும் பொருளே
குடவளை யாழி தரித்த கரங்கொடு
கொட்டுக சிறுபறையே
கோகனகத்துறை மாமகிழ் கள்வா
கொட்டுக சிறுபறையே. (8)
190. இங்கித நயமுறு லீலை விரும்பிய
இடைதுவள் மங்கையரும்
இரதி முயங்கிய கணவ னெனத்திக
ழெழிலுறு மைந்தர்களுங்
கங்குலி லன்பொடு செய்கல வித்தொழில்
கருதி யுவப்புடனே
கார்தவ ழரமிய மீதி னிருந்து
கரங்கொடி யாழ்நெருடிச்
செங்கனி வாயிதழ் கொண்டு நவின்றிடு
சில்லிசை கேட்டசுணந்
தினமு நெருங்கிய நவமணி மேடை
சிறந்த நகர்க்கதிப
கொங்கவிழ் கோதை யசோதைதன் னமுதே
கொட்டுக சிறுபறையே
கோக னகத்துறை மாமகிழ் கள்வா
கொட்டுக சிறுபறையே. (9)
191. செகதல மருவிய வுயிர்களை வேரொடு
தின்றிடு மறவுரவோர்
சிகையெரி பங்கினர் புகைசொரி கண்ணினர்
செல்லென வார்ப்புடையோர்
அகமொடு வஞ்சனை கொலைபுரி வன்றொழி
லடல்செறி நடலைவிறல்
ஆண்மை பொருந்திய நீல நிறத்தினர்
அரக்கரை வென்றிடவே
ககனமு றமரர்கள் மனநினை வின்படி
கானக மேவிடுநாள்
கங்கை நதிக்கரை யின்க ணெதிர்ந்திரு
கழலிணை யடிபரவுங்
குகனுட னன்புசெ யிகலரி யேறே
கொட்டுக சிறுபறையே
கோக னகத்துறை மாமகிழ் கள்வா
கொட்டுக சிறுபறையே. (10)
---------------------------
சிறுதேர்ப் பருவம்
192. பாவாரு மின்சொன்மொழி எழில்மா தசோதைதரு
பாலனென் றவதரித்துப்
பாண்டவர்கள் தூதனெனு நீண்டபுகழ் கொண்டுலவு
பரவாசு தேவகண்ண
தாவாத புயவலி பெறுந்திரி புரத்தவுணர்
சண்டவே கத்தினோடுஞ்
சகலபுவ னமுமுற நலிவுசெய் திடுங்கொடியர்
தங்களை மடிப்பதற்காய்
ஆவாகி வில்லின்விடு மேவாகி யுள்ளத்
தமர்ந்துறையு மீசனாகி
யவ்வமர் முடிக்கப் புராந்தக னெனும்பேரை
யரனுக் களித்தருளிய
தேவாதி தேவனெனு மூவர் முதற்றலைவ
சிறுதே ருருட்டியருளே
சீதரதென் வைகுந்தை நாதகோ பாலநீ
சிறுதே ருருட்டியருளே. (1)
193. சுந்தர மடந்தைபுவி மானிவர்க ளிருவரும்
துணையடிப் போதுவருடத்
துய்யபாற் கடல்நடுவி லறிதுயி லமர்ந்தது
துறந்துமட மாதசோதை
தந்தசே யெனவந்து கலைபயிலு நாளின்மறை
தனையுரைசெய் வித்தகுரவன்
தக்கணைக் காகவவன் மகவினைக் கடல்சென்று
தகைபெற்ற முன்னுருவுடன்
அந்தணர்க் கீந்துமன வன்றுயர் துடைத்தருளு
மண்ணலே நீலமுகிலே
அனுதினமு நின்னடி பணிந்துனது நாமத்தை
யன்புடன் வழுத்தியேத்தச்
செந்தமிழ் எனக்குதவு பைந்துளப மார்பநீ
சிறுதேருருட்டியருளே
சீதரதென் வைகுந்தை நாதகோ பாலநீ
சிறுதே ருருட்டியருளே. (2)
194. உருத்திரர்க ளாதவர்கள் வசுக்களசு வனியென்னு
மோதுமுப் பத்துமூவர்
உவந்துதொழு மம்பொற் றுவாரகையி லின்பமோ
டுருக்குமணி மாதினுடனே
மருக்கமழு மலரணை யிருந்துவிளை யாடுநாள்
மனதன் புடன்குசேலன்
வந்துதவு மவலினை யொருக்கா லருந்தியே
வடதிசைக் கதிபனிகராய்ப்
பெருநிதி பெறக்கருணை யருளியவன் வறுமையைப்
பெயர்வித்த கற்பதருவே
பீதக மணித்திரள்கள் போதுதிரை கரைமருவு
பெட்புமிகு பொருநைநதிசூழ்
திருவழுதி வளநாட கருடன்மிசை வருகண்ண
சிறுதே ருருட்டியருளே
சீதரதென் வைகுந்தை நாதகோ பாலநீ
சிறுதே ருருட்டியருளே. (3)
195. குந்திபெறு மைந்தர்களி லிந்திரன் மகன்சமர்
குறித்திரத மீதுநிற்பக்
குணபா லெழுந்துவரு கதிரோ னுவந்துதரு
கொடைமிக்க திறல்மன்னன்முன்
முந்தைமறை யோனுரு வெடுத்தவ னிடஞ்சென்று
மூவுலகு மிசைநிற்கவே
முற்செய்த நற்பய னனைத்தையுங் கைக்கொண்ட
மூவர் முதற்கடவுளே
யிந்துலவு செஞ்சடையு மைந்துமுக முந்திகழு
மீசன்மல ராசனன்முத
லெவ்வுயிரி னுள்ளுமுறை யாதிபரன் நீயே
யெனக்கருதி யறிவையுணர்வோர்
சிந்தைகுடி கொண்டுமகிழ் எந்தைகோ விந்தநீ
சிறுதே ருருட்டியருளே
சீதரதென் வைகுந்தை நாதகோ பாலநீ
சிறுதே ருருட்டியருளே. (4)
196. கஞ்சமலர் மேவுமிறை செங்கதி ருடுக்கள்சசி
கங்கைசடை வைத்தகடவுள்
ககனமுறு தேவர்முத லனைவரையு மோர்பொழுது
கம்பலைசெய் வித்தமுனிவன்
விஞ்சைமறை யாகம முதற்கலைகள் சொற்றமுறை
வேள்விசெய வுற்றபகலில்
முடுக்குடைய தாடகையை வீழ்த்திச் சுவாகுவினை
விண்ணுலக மீதிலேற்றி
வஞ்சனைக் கொடியமா ரீசனைக் கடலினுண்
மறைந்திடும் படிவிரட்டி
மதில்சூழு மிதிலைப் பதிக்கரசன் மாளிகையில்
வருசனகி தன்பொருட்டுச்
செஞ்சிலை வளைத்தந்த வஞ்சிகைப் பிடித்தநிதி
சிறுதே ருருட்டியருளே
சீதைபுகழ் வைகுந்தை நாதரகு வீரநீ
சிறுதே ருருட்டியருளே. (5)
197. துய்யமறை யோர்மருவு பஞ்சவடி தன்னிலே
தோன்றிமறை யாகிநாளுன்
றுணைவியைப் பிரிவுசெய வுன்னிவரு நிருதியைத்
துங்கமுள தம்பிகண்டு
நெய்ந்நிண நிறைந்தவுடை வாளுருவி யவளுடைய
நெடியகா திதழினுடனே
நிமிர்கொங்கை நாசியிவை தனையரிய வக்கொடிய
நீலிசூர்ப்ப நகையலறியே
அய்யகோ வென்றலறி யிட்டடி பணிந்தவளை
யன்னைநீ யார்கொலுரையென்
றம்பவள வாயினிற் புன்முறுவல் கொண்டருளி
யகமகிழு மொருசிங்கமே
செய்யவளை மார்பிலணி துய்யமணி வண்ணநீ
சிறுதே ருருட்டியருளே
சீதைபுகழ் வைகுந்தை நாதரகு வீரநீ
சிறுதே ருருட்டியருளே. (6)
198. கலைமதி நுதற்சனகி சிறையுறை யிலங்கைநகர்
காணமுந் நீரரசனைக்
கருதியுவ சித்ததிலு மதியா திருந்ததைக்
கண்டுகணை யொன்றேவவே
மலையைநிகர் புயவருணன் உள்நொந்து நைந்துருகி
வாடியிரு கண்பனித்து
வந்தடி விழக்கருணை யுந்திய பகழியினை
மருவுகாந் தாரதீவிற்
கொலைநடலை வஞ்சனை செயுங்கொடிய நிருதரின்
குலமறுத் திடவிடுத்துக்
கோளரி யெனப்பொருவு மாருதி முதற்றலைவர்
கொண்டுதவு குன்றமென்னுஞ்
சிலைகொண்டு கடலினை யடைத்துமகிழ் காகுத்த
சிறுதே ருருட்டியருளே
சீதைபுகழ் வைகுந்தை நாதரகு வீரநீ
சிறுதே ருருட்டியருளே. (7)
199. கார்நிறக் கோதையும் மதிபொருவு வதனமுங்
கச்சடங் காததனமுங்
கமலவிழி யுங்கொண்ட சனகியுந் தம்பியுங்
கதிரவன் பெறுமதலையும்
ஏருலவு வானரத் தலைவருஞ் சேனையு
மிலங்கையர சன்றனுடனே
யெதிபரத் துவனுறையு மினிதான சாலையினில்
எய்தியவ னாலமைத்த
வார்சுவையி னொட்டிசில போனக முணக்கருதி
வாய்மடுத் துற்றபொழுதில்
வந்துதொழு மாருதியை யெந்தனுட னுண்ணநீ
வாவென் றழைத்துமகிழும்
சீர்மருவு தாரணி யிராகவ கோவிந்தநீ
சிறுதே ருருட்டியருளே
சீதைபுகழ் வைகுந்தை நாதரகு வீரநீ
சிறுதே ருருட்டியருளே. (8)
வேறு
200. மாகத் தமரும் புத்தேளிர்
மறையோர் தவத்தோர் தமைக்காத்து
மகிழ்வோ டிருத்தக் கருத்திலுன்னி
மனுவின் குலத்தி லவதரித்து
யூகப் படைகொண் டணைதிருத்தி
யுவரிக் கடலப் புறமெய்தி
இலங்கணி காக்கு மதிலிலங்கை
யுறையு மரக்கர் தமைமடித்து
வேக முடன்புட் பகமெய்தி
மிதிலை மடமான் றன்னுடனே
மேவிப் பதிவந் தரசுரிமை
விருப்புற் றளிக்குங் காகுத்தன்
கோக நகைக்கு மம்புவிக்குங்
கொழுநன் தடந்தே ருருட்டுகவே
குருகை முனிபணி வைகுந்தை
குட்டந் தடந்தே ருருட்டுகவே. (9)
201. பகலோன் கிரண மெனத்திகழும்
பச்சைக் கொடிஞ்சி யுருளமைத்துப்
பகரு மறையோர் நான்கினையும்
பரியா யிணைத்துப் பழவடியார்
நிகர்க்குந் ததிய ருளமலரை
நெடிய கயிறாய் வடம்பூட்டி
நேசத் துடனே பிடித்திறைஞ்ச
நிமலா சரண மெனக்கருதி
யகமும் புறமுங் களிப்புடனே
யன்பாற் பணிந்து பங்கயனார்
ஆரா தனைசெய் துவந்தேத்த
வானோர் தொழுது மனமகிழச்
செகத்தோர் செறிந்து கரங்குவிப்ப
செம்பொற் றடந்தே ருருட்டுகவே
திருமா துறையும் வைகுந்தைச்
செல்வன் தடந்தே ருருட்டுகவே. (10)
வாழி
202. திசைமுகன் வணங்குதென் வைகுந்தை நாதனிரு
சேவடிப் போதுவாழி
செங்கமல மாதுநீ ளாபுவி தேவியர்
சேனேச னிவர்கள் வாழி
இசைமருவு தமிழ்வேத நவிலுநா வீரன்முத
லீரைந்து பேர்கள்வாழி
யெங்கள்குடி வழியடிமை கொண்டுமகிழ் சாந்தூர
னிணைமலர்த் தாள்கள்வாழி
யசைவிலா நற்பொருளை வெளியிட்ட பூதூர
னம்பொற் பதங்கள்வாழி
யரிதான முத்திக்கு வித்தான நஞ்சீய
ரழகுபெறு கழல்கள்வாழி
வசையற்ற நோன்புபுரி மாதவர்கள் பூசுரர்கள்
மன்னவர் மனுக்கள்வாழி
மன்னுமணி வண்ணனிசை பன்னுபிள் ளைத்தமிழ்
வழங்குசெந் தமிழ்வாழியே.
(வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.)
---------------------
வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் - குறிப்புரை
-------
தெய்வ வணக்கம்
102. செம்பொன்னின் - சிவந்த பொன்னைக் காட்டிலும்; சதுமறை - நான்கு வேதங்கள்; தேற - தெளிவடைய; குருகை - திருக்குருகூர்; மாறன் - நம்மாழ்வார்; சரணமலர் - பாதமாகிய மலர் (உருவகம்); தும்பி - வண்டுகள்; பலவு - பலாமரம்; மதமா - மதம் பொருந்திய யானை; பிடி - பெண் யானை; மாறனார் காரியாருக்கும், உடைய நங்கையார்க்கும் மகனாகத் திருக்குருகூரில் பிறந்தவர். (1)
103. நாபி தன் முளரி - உந்திக் கமலம்; வாணி, கலைமாது, காயத்திரி, பூரவாகினி பாரதி, உலகமாதா. இவைகள் சரசுவதியின் பெயர்கள்; முனிவன் - பிரமன்; பனுவல் - நூல்; மைப்புயல் - கருமையான மேகங்கள்; அரி - சிங்கம்; இபம் - யானை; மலையரவு - மலைப்பாம்பு; வேங்கட வாணன் - திருவேங்கட மலையில் வாழ்ந்திருப்பவன்; ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன; மேகம் இடி இடிக்க அதை யானை பிளிறியதென்று சிங்கம் மலையின்மீது குதித்தலைச் செய்யும்; அங்கிருக்கும் மலைப்பாம்பு தானிருந்த இடத்திற்கே இரைக்கான சிங்கம் வந்ததென்று களித்தலைச் செய்யும். அத்தகைய மலை சூழ்ந்த தென்வழுதி நாடன் என்க. வாழ்நன் என்பதன் மரூஉ வாணன். (2)
194. அண்டர் - தேவர்; தவவேதியர்கள் - தவம் செய்யும் முனிவர்கள்; பூசுரர்கள் -பூமிக்குத் தேவர்கள் என்று சொல்லப்படும் பிராம்மணர்கள்; புதுவை - வில்லிபுத்தூர்; பட்டர்கோன் - பெரியாழ்வார்; அருமை மகள் - ஆண்டாள்; ஆண்டாள் வில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசி மலரில் தோன்றினாள். அவளைப் பெரியாழ்வார் கண்டெடுத்து வளர்த்தார். பெரியாழ்வார் கட்டிவைத்த மாலையைத் தான் சூடி அழகு பார்த்துப் பின் வைப்பது வழக்கம். ஒருநாள் இதைக் கண்டு அவர் மனங்கடிந்து மாலை சாத்தவில்லை. அன்று கனவில் ஆழ்வாரிடம் பெருமாள் அதனையே கொணரக் கூறினர். சூடிக்கொடுத்த செகமாதா - ஆண்டாள்; கொண்டல் - மேகம்; மொண்டு - முகந்து (மரூஉமொழி); குடவளை - குடம் போன்ற சங்குகள்; குலம் - கூட்டம்; பொருநை நதி. தாமிரபரணி; குஞ்சரக்கோடு - யானைத்தந்தம்; சாது அகில் - மேன்மையான அகில் எனும் வாசனைப்பொருள்; சலசை – இலக்குமி. (3)
105. தேமா - தேன் போன்று இனிய பழங்களைத் தரும் மாமரம்; அரம்பை - வாழை; நறவு - தேன்; பைங்கூழ் - பசிய பயிர்; வையகத் தகழி - பூமியாகிய அகல்; வார் - நீண்ட; மார்த்தாண்ட தீபம் - சூரியனாகிய விளக்கு; துய்ய கமலத்தன் - பிரமன்; சுருதி – வேதம்; சுகமுனி, வியாசர் மகன்; பிறந்தபோதே துறவியானார்; துங்கம் - பரிசுத்தம்; பையரவின் விடமுண்ட பண்ணவர் முதற்கடவுள் - படமுடைய வாசுகியினால் எழுந்த ஆலகால விஷத்தைச் சாப்பிட்ட தேவர்களின் முதன்மையான கடவுளான சிவபெருமான்; பாவாணர் - பாட்டுப்பாடி வாழ்பவர்; திருக்கச்சி தனில் உதித்தோன் - பொய்கை ஆழ்வார்; கச்சி - காஞ்சிபுரம்; பொய்கையாழ்வார் “வையந்தகழியா, வார்கடலே நெய்யாக'' என்ற பாட்டைப் பாடியவர். இது நூறு பாடல்களையுடைய முதற்றிரு வந்தாதியாகும். (4)
106. அன்பு தகழி - அன்பாகிய அகல்; என்புருகு நெஞ்சு இடுதிரி - எலும்பும் உருகும்படியான இரக்க மனமாகிய திரி என்க; சரணிதம் - சரண் + நிதம் - பாதங்களைத் தினமும்; நறை வண்டு - தேனைக் குடிக்கும் வண்டு; குழல் - கூந்தல்; பிடி - பெண் யானை; வனப்பு – அழகு; முறுவல் - புன்சிரிப்பு; கானமர் - காட்டில் பொருந்திய; காவு - சோலை; எடுத்தாதரித்த முனி - பூதத்தாழ்வார்; தேனைக் குடிக்கும் வண்டுகள் கூந்தலில் மொய்த்துக்கொள்ள அப்பாரம் பொறாது இடை துவளும்படியான நடையைப் பார்த்து பெண்யானையும் வெட்கப்பட்டு ஒருபுறமாகச் செல்லும் அத்தகைய மானை ஒத்தவர்களும் வேல் போன்ற விழியை உடையவர்களுமாகிய பெண்களின் மீது காதல் கொண்ட அழகு நிறைந்த வீரமுடைய ஆண்மக்கள் பொருள்மேல் எழுந்த ஆசையினால் தலைவியைக் கூடிப் பிரிந்துசென்று திரும்பி வருதலைக் கண்டு மனமகிழ்கின்ற தலைவியரின் முகத்தில் தோன்றும் புன்சிரிப்பைப் போன்று காட்டில் பொருந்திய செந்தாமரையும், முல்லை மலரும், எங்கும் மிகுந்த சோலை சூழ்ந்த வைகுந்தை நகர் என்க. அன்பாகிய அகலில் ஆர்வமாகிய நெய்யை விட்டு என்புருகும் மனம் திரியாகவும் ஞானத்தையே விளக்காகவும் ஏற்றியதாகப் பாடிய முனிவர் பூதத்தாழ்வார்; "அன்பே தகழியா' என்ற பாட்டை முதலாகக் கொண்ட இரண்டாந் திருவந்தாதியைப் பாடினார். (5)
107. அருக்கன் - சூரியன்; மேனியுடல் - செவ்வியழகு; ஆழி - சக்கரம்; அந்தாதி - மூன்றாந் திருவந்தாதி; மயிலைப்பிரான் - பேயாழ்வார்; இவர் திருமயிலையில் பிறந்தவர்; "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்'' என்று தொடங்கும் மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்; தண்டலைகள் - சோலைகள்; தருவனம் - மரங்கள் சூழ்ந்த காடு; அளிகள் - வண்டுகள்; மஞ்ஞை - மயில்; வாவி - குளம்; பருவ முகில் - பருவகாலத்தில் வந்து மழையைக் கொடுக்கின்ற மேகங்கள்; இரு நிதி - சங்கநிதி, பதுமநிதி; நவமணிகள் - ஒன்பது வகை இரத்தினங்கள்; பணிலம் - சங்குகள்; பண்ணவன் - சிவபெருமான்; வேதன் - பிரமன்; புண்டரீகக் கண்ணன் - தாமரைபோன்ற கண்ணையுடையவன்; பொற் பூவை - இலக்குமி; வைகுந்தை நகர் மேவும் தேவன், முத்திக்கு வித்தான தேவன் என்று கூட்டிப் பொருள் கொள்க; மயிலை - மயிலாப்பூர், சென்னையின் ஓர் பகுதி. (6)
108. நக்கன் - சிவபெருமான்; மழிசைவந் தவதரித்தோன் - திருமழிசை ஆழ்வார்; கவி ஈரைந்து உரைத்து மால் கழலிணைப் புனைந்து மகிழ்வோன் - திருப்பாணாழ்வார்; கட்செவி - பாம்பு; சேரர்கோன் - குலசேகர ஆழ்வார்; சேவடி - சிவந்த பாதங்கள்; திருமழிசை என்ற ஊரில் பார்க்கவருக்கும், கனகவதியாருக்கும் திருமழிசையாழ்வார் குமாரராகத் தோன்றினார். இவர் "நான்முகனை நாராயணன் படைத்தான்'' என்று தொடங்கும் நான்முகன் திருவந்தாதியை இயற்றினார். திருச்சந்த விருத்தம் என்பதனையும் பாடினார். திருப்பாணாழ்வார்: இவர் சோழநாட்டில் உறையூரில் நெற்பயிர்க் கதிரில் குழந்தையாக இருந்தார். பாணர் குலத்தானால் வளர்க்கப்பட்டுப் "பாணர்'' என்ற பெயர் பெற்றார். இவர் அமலனாதிபிரான் என்ற பிரபந்தம் பாடியுள்ளார். திருவஞ்சைக்களத்தில் திடவரதன் என்பவருக்குக் குலசேகர ஆழ்வார் மகனாகப்பிறந்தார். ஒருசமயம் மந்திரிகள் இவருக்கு வைஷ்ணவபக்தி மிகுந்திருந்ததைக் கண்டு அடியார் மேல் வெறுப்பு உண்டாக்க நினைத்துத் திருவாராதன பெருமாளுடைய ஆபரணத்தை மறைத்து, அடியார்களைச் சுட்ட, அரசர் வைணவர் எடுக்கவில்லையெனப் பாம்பின் குடத்தில் கையை வைக்க பாம்பு கையை முத்தமிட்டது. (7)
109. ஈரேழ் பெரும் புவனம் - பதினான்கு உலகங்கள்; வழுதி மன்னவன் - பாண்டியன்; பட்டர்கோன் - பெரியாழ்வார்; அரங்கேசனே தெய்வம் என்று உணரும் செல்வன் - தொண்டாடிப் பொடியாழ்வார்; உன்னி - நினைத்து; அஞ்சலி - வணக்கம்; பாரதிக்கு இறைவன் - பிரமன்; பங்கேருகம் - தாமரை; பெரியாழ்வார்:- இவர் வில்லிபுத்தூரில் ஒரு புரச்சூட வைணவருக்குப் புத்திரராய்த் தோன்றினார். இவர் பெருமாளுக்கு மாலைதொடுத்துச் சாத்தி வரும்போது ‘வல்லபதேவன்' என்ற பாண்டிய அரசன் பொற்கிழி கட்ட அதையறுத்து "விசிட்டாத்துவைதம்" என்பதை ஸ்தாபித்தார். வல்லப தேவன் பெரியாழ்வாரைப் பணிந்து அனுக்கிரகம் பெற்றான். இவர் பாடியவை ''பெரியாழ்வார் திருமொழி" என வழங்கும். தொண்டரடிப்பொடியாழ்வார்:- இவர் திருமண்டங்குடியில் ஒரு புரச்சூட வைணவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருவரங்கத்திலிருக்கும் பெருமானுக்குத் திருமாலைகளை அணியும் கைங்கர்யம் செய்து கொண்டு வந்தவர். இவர் பாடியன திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்பன. (8)
110. மன்னுயிர்கள் உய்ய - நிலைபெற்ற உயிர்கள் பிழைக்க; மாறன் - நம்மாழ்வார்; ஆறு அங்கம் - சிட்சை, கற்பம், வியாகரணம், நிறுத்தம், சந்தோ விசிதம், சோதிடம் போன்று உள்ள பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல்; நாற்கவிதை - ஆசுகவி, வித்தாரகவி, மதுரகவி, சித்திரகவி என்பன; பரகாலன் - திருமங்கையாழ்வார். வையகத்தவதரித்தோன் - திருமங்கையாழ்வார். திருமங்கையாழ்வார்: இவர் சோழநாட்டில் ஆலி நாட்டின் கண் திருக்குறையலூரில் ஆலிநாடர் என்பாருக்கும் வல்லித்திரு என்பாருக்கும் மகனாகத் தோன்றினார். இவர் குமுதவல்லி எனும் மங்கையை மணந்து ஆயிர வைணவருக்குத் தினமும் அமுதிட்டவர். இவர் பாடியன ஆறங்கங்களெனப்படும். மதுரகவியாழ்வார்:- இவர் திருக்கோளூரில் ஒரு புரச்சூட வைணவ பிராம்மணருக்குக் குமாரராய்ப் பிறந்தவர். ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்ற பிரபந்தத்தை எழுதியுள்ளார். இவர் நம்மாழ்வாரின் சீடர். நம்மாழ்வாரைப் புகழ்ந்துள்ளவர். கழல் - கழலணிந்த பாதம் (தானியாகு பெயர்); நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்மறைகளை அருளினர். இவற்றை முறையே இருக்கு வேதசாரம், யசுர் வேத சாரம், அதர்வண வேதசாரம், சாமவேதசாரம் என்றும் கூறுவர். திருமணவாளன் என்பது அரங்கநாதருக்குப் பெயர். இங்கு மங்கைதிருமணவாளன் என்பது குமுதவல்லியின் கணவன் என்ற பொருளில் கொள்ளலாம் போலும். அங்ஙனம் கொள்ளின் இத்தொடர் திரு மங்கையாழ்வாரைக் குறிக்கிறது. (9)
111. சேதனர்கள் - அறிவுடையோர்கள்; கருணைவள்ளல் - கருணையையுடைய வள்ளலான இராமனுசன்; எதிராசன் - இராமானுசாச்சாரியார்; பூதூர் - ஸ்ரீபெரும்பூதூர்; ககனம் - ஆகாயம்; கதலி - வாழை; கடுவன் - ஆண்குரங்கு; முசு - குரங்கில் ஒரு சாதி; ஐந்தருக்கா - ஐந்து தருக்களையுடைய சோலை; மன் - அதற்குரிய மன்னனான இந்திரன்; ஈரைந்து அழகு ஏய்ந்தும் - பத்துவித அழகுகளும் பொருந்திச், சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலியன பத்துவித அழகுகள்; ஆகாயத்தின் உச்சிவரை வளர்கின்ற வாழையின் பழத்தைப் புதிய தேனில் தோய்த்து ஆண் குரங்கு, பெண் குரங்கிற்குக் கொடுக்கும் நாட்டை உடையவனும் அழகிய கற்பகம், பாரிஜாதம் முதலிய ஐந்தருச் சோலைகளையுடைய அரசனுமான இந்திரனும் வந்து வணங்கும் புகழ் நிரம்பிய நாட்டில், வைகுந்தை நகரில் வாழ்பவன் என்க. இராமானுசர் திருக்கோட்டியூர் நம்பியிடம் தெரிந்த இரகசியங்களைச் சௌமிய நாராயணப் பெருமாள் கோபுரத்தின் மீதிலிருந்து எல்லோருக்கும் பயன்பட வெளி யிட்டார். (10)
112. சந்தனக்காவு - சந்தனச் சோலை; செம்பதும வாவி - சிவந்த தாமரையுள்ள குளம்; சாந்தூரில் அவதரித்தோன் - இவர் கீழ்க்கூறும் பெரிய நம்பியாக இருக்கலாம். பெரிய நம்பி - திருவரங்கத்தில் திருக்கோட்டியூர் நம்பிக்குப் பின் பிறந்தவர்; பெருமாள் நியமனத்தால் இளையாழ்வாரைக் காணவருகையில் மதுராந்தகத்தில் இளையாழ்வாரைக் கண்டு பஞ்ச சமஸ்காரம் செய்து சிலநாள் அவருடனிருந்து திருநாட்டிற்கு எழுந்தருளியவர். ததியர் - பக்குவமானவர்கள்; மணவாள முனி:- இவர் பாண்டிய நாட்டில் ‘சிக்கில்கிடாரம்' என்னும் கிராமத்தில் "திருமான் மனத்த அண்ணர்'' என்பவருக்குக் குமாரராய்ப் பிறந்தார். தாள் + துணை - தாட்டுணை; பராங்குசன் - நம்மாழ்வாருக்கு ஒரு பெயர். இவர் தம்முடைய அருளிச்செயல்கள் ஆகிய அங்குசத்தால் பரமனாகிய களிறு தம் வசமாம்படிச் செய்ததால் இப்பெயர் பெற்றனர் என்பர். சந்தனச்சோலை விளங்கும் செந்தாமரை மலர்களையுடைய குளங்கள் சூழ்ந்த சாந்தூரில் பிறந்தவனும் குருகூரில் பிறந்த நம்மாழ்வார். வியப்படையும்படியான தாசனென்ற பெயரையுடையவனும் இந்நூலாசிரியர் புயத்தில் சங்கினையும், சக்கரத்தையுமுடைய குறியை வைத்து இப்பிறப்பு, மறுபிறப்பு, ஏழேழ் பிறப்பிலும் மகிழ்ந்து ஆட்கொண்டு மனமகிழ்கின்ற குருவான பெரியநம்பியின் வாசனை பொருந்திய பாதமாகிய தாமரைகளையும் நினைக்கின்ற தத்துவம் நிறைந்த பக்குவமுடையவர்க்கு முத்தியைக் காட்டும் மணவாள மாமுனிவரின் பாதங்களிரண்டையும் அடக்கமாகிய அழகுடன் பணிவோம். இங்கு நூலாசிரியரின் குருவைப்பற்றிய வணக்கங் கூறப்பட்டது. மற்றபடி விரிவான விஷயங்கள் அறிய முடியவில்லை; ததியர் - வைணவ அடியாரைக் குறிக்கும் வழக்கு. (11)
செங்கீரைப்பருவம்
113. பூமாது - இலக்குமி; போதக முகக் கடவுள் - வினாயகர்; புத்தேளிர் - தேவர்; காமாரி - சிவபெருமான்; கஞ்சமலராசனன் - பிரமன், பாவாணர் புலவர். (1)
114. ஆ - பசு; புவிமாது - பூமிதேவி; பாலனம் - பாதுகாப்பு; பூவை - மைனா; மணி - கௌஸ்துபமணி; கமலை - இலக்குமி; நேமி - சக்கரம்; வாள் + தனு எனப் பிரிக்க; மந்தகாசக் குறுமுறுவல் - புன்னகை (மீமிசைக்கிளவி); குல்லை - துளசி; பூவை மொழியைப் பொருவும் மேனியெழில் - மைனாவின் மொழியை ஒத்திருக்கும் குரலமைந்த உடலின் அழகு. (2)
115. மேதினி - பூமி; பாலாழி - பாற்கடல்; மெல்லியல் கோதை - யசோதை; பேய்ச்சி - பூதகி; கொண்டல் - மேகம் போன்ற நிறத்தவன், உவமவாகு பெயர். காதுவேற் கண்ணினார் - காதுவரை நீண்டு செல்லும் வேல் போன்ற கண்ணையுடையவர்; கண்ணினார் - குறிப்பு வினையாலணையும் பெயர்; மலரின் வருகோதை - இலக்குமி; கங்கை நதியொழுகினது. - திருவிக்கிரமாவதார காலத்தில், பிரமன் மேலெழும்பிய பாதத்தைப் பூசித்த தீர்த்தம் கங்கா நதியாயிற்று. (3)
116. நாகணை - ஆதிசேட சயனம்; பாடி - ஆயர்பாடி; எண்ணிரண்டாயிரம் - பதினாறாயிரம்; இந்துநுதலார் - பிறைச்சந்திரன் போன்ற நெற்றியுடைய பெண்கள்; சேரி - சேர்ந்திருக்குமிடம்; இறைஞ்சா - துதிக்க; பீலி - மயிற்பீலி; அங்காடி - கடைத்தெரு; சலஞ்சலம் - ஒரு வித உயர்ந்த சங்கு; பொருநை - தாமிரபரணி; வழுதிநாட - பாண்டிய நாட; சிந்துரத்திலதம் - சிவந்த பொட்டு; இந்திரை - இலக்குமி; சந்தனம், அகில், மயில் தோகை, நவரத்தினங்கள் கூடிய கடைத்தெரு; வினையொத்த தன்மையோ வென்று அதிசயிக்குமாறு சலஞ்சலமென்ற சங்குகள் விளங்கும் தாமிரபர்ணி நதி என்க. (4)
117. பூவை - நாகணவாய்ப்புள் (மைனா), கண்படை பொருந்தும் தூங்கும்; கேதகை - தாழை; குரண்டம் - கொக்கு; வாளை - வாளை மீன்; நறவு - தேன்; கிரீடி - அருச்சுனன்; புராரி - சிவன்; வேதன் - பிரமன்; அமுதின் வருதேவி - இலக்குமி; சோலையிலிருக்கும் மைனா பாட அதைக் கேட்டுத் தாமரையில் வாழுமன்னப்பறவை தனது பெண்ணன்னத்தைத் தழுவி மனதின்பமொடு தூங்கவும் அத்தகைய அழகு மிகுந்த குளமருகில் வளர்கின்ற தாழையைக் கொக்கு என்று கருதி வாளைமீன்கள் நீரினின்று நீங்கவும் மாம்பழத்தினின்று பிதிர்ந்தொழுகும் சாறும் தேனும் பெருகவுமுள்ள பாண்டிய நாடு என்க. கிரீடிக்கு மெய்ப்பொருளுரைத்தது - முதல் நாள் யுத்தத்தில் பகவத்கீதை யுபதேசித்ததாகும். (5)
118. மந்தி - பெண்குரங்கு; கடுவன் - ஆண்குரங்கு; மள்ளர் - மருதநில மக்கள்; உரற்ற - அதட்ட, சாகரம் - கடல்; சோனை - மழை; சரோருக பொற்சரண் - தாமரை போன்ற அழகிய பாதம்; துளவு – துளபமாலை; வானிளவரசே - உபேந்திரனாக நின்றதைக் காட்டியது; சோலைகளிலுள்ள பெண்குரங்கு புசிக்குமாறு பலா, வாழை, மா ஆகிய மூன்று கனிகளை ஆண்குரங்கு கொடுக்க அதைக் கண்ட மருதநில மக்கள் அதட்ட அவர்கட்கு இடங்கொடாது மறுத்து அக்கனிகளையே கொண்டு அவர்கள் மீது விட்டெறிவதும், பூக்கள் விரிந்த குளங்கள் கடல் போன்றிருக்க மேகங்கள் நீரை முகந்து அழகிய முத்துக்களோடு மழையைப் பொழிவதும் உள்ள வளநாடு என்க; மேகம் முத்தீனும் பொருள்களில் ஒன்று. இரகுபதி - இரகுவம்சத்தில் இராமனாக அவதரித்துச் சிறந்ததால் இங்ஙனம் கூறினர். "சங்கரனுக்........... சரணா" - திருவிக்கிரமாவதாரத்தில் பாதம் பிரமலோகஞ் செல்ல அவ்விடம் பிரமன் பூசித்த சலம் பூமியில் வந்து பூமி முழுகுமென்று உருத்திரனைத் தடுத்துச் சடையில் தாங்கக் கட்டளையிட்டார். (6)
119. ஆதவன் - சூரியன்; புயல் - மேகம்; ஆடல் அரங்குகள் - நடன சாலைகள்; போதம் - ஞானம்; வதுவை - திருமணம்; கூறை - உடை; சீதம் - படிப்பவர்க்குக் குளிர்ச்சி தரும். (7)
120. காவலர் - அரசர்; விப்பிரர் - பிராமணர்; மாமறையோர் - பெருமை பொருந்திய வேதமோதும் முனிவர்; புங்கவர் - தேவர்; மாவிரிபூ - மகரந்தத் துகள் விரிந்துள்ள பூ; மஞ்ஞை - மயில்; மாடம் - மெத்தை; ஓதிமம் - அன்னம்; முளரி - தாமரை; வயிறு + ஆவல் - என்க. (8)
121. மறுகு - தெரு; வாளரி - வாள் போன்ற நகங்களுடைய சிங்கம்; பொங்கர் - சோலை; இறால் அருவி - இறால் மீன்களையுடைய அருவி; அகம் + கை - அங்கை; பெண்கள் தங்களது தனங்களைச் சுமக்க முடியாமல் நுண்ணிய இடையுடனே தெருவிலடைய அவ்விடையைச் சிங்கமென்று நினைத்து யானை மயங்கி, கோபித்து மறைந்து வசிக்கும் சோலையின் மீது தவழும் சந்திரனைத் தன் அலைகளாலே வருத்தும் அத்தகைய இறால் மீன்களையுடைய அருவிகளின் அழகு மிகுந்த சோலைகளையுடைய பொதியமலைக் கிறைவன் என்க; ‘கங்கை தரித்தவன் ........ கரனே’ - சிவபெருமான் பிரமன் தலையை நகத்தால் கிள்ளிவிட அது அவர் கையிலேயே ஒட்டிக்கொண்டு வருத்தத்தைக் கொடுக்க அப்போது இலக்குமி பிச்சையிடப் பிரம கபாலம் நீங்கும்படியும், தாம் தமது தொடையைக் கீறி யிரத்தமிடப் பிரம கபாலம் வெடிக்கவும், அதுவன்றித் தமது நெற்றியின் வியர்வையை யக்கபாலம் நிறையவிட அது பொடியாகவும் செய்தார். (9)
122. அங்கண் விசும்பு - அழகிய இடமகன்ற ஆகாய உலகம்; களி கூர - மகிழ்ச்சிமிக; புனலூர் உச்சி - கங்கையணிந்த சடைமுடி; பூழ்தி - எலும்பு மாலை, கடுக்கை - கொன்றை; பங்கயன் - பிரமன ; உவணம் - கருடன்; "சங்கரனைப் ............ முகில்" : - திருப்பாற்கடலில் ஆதிசேடன்மீது யோகநித்திரை புரிந்து தமது திருநாபியில் உலகச் சிருட்டியின் பொருட்டுப் பிரமனைப் படைத்து அப்பிரமனுடைய நெற்றியினிடம் உருத்திரனைப் படைத்தார். (10)
தாலப்பருவம்
123. களபம் - கலவைச் சாந்து; தோணி - ஓடம்; உபயம் - இரண்டு; கதிரோன் குலத்திலுதித்து - தசரதன் மகனாகப் பிறந்து; முயற்சியிருத்தும் பதி - தயிர்க் கடைதல், வெண்ணெயுருக்குதல் போன்ற பலவகை முயற்சிகளையுடைய ஆயர்பாடி; ஆய்ச்சியரும் என்பதிலுள்ள எச்சவும்மை மற்றவர்களையும் காட்டியது. (1)
124. சங்கத்தமரர் - கூட்டமாகிய தேவர்; சலதி - பாற்கடல்; சரையுவெனு மாந்தித்துறைவன் - அயோத்தி சக்கரவர்த்தி, தசரதன்; வங்கம் - கப்பல்; மதலை - குழந்தை; பசுபதி - சிவபெருமான்; பதின்மர் - ஆழ்வார்களில் ஆண்டாள், மதுரகவி நீக்கிய பத்துப்பேர். (2)
125. குரும்பை - தென்னங் குரும்பை; மூரி - பெருமை; முகில்போல் மருவும் பிடி - மேகம் போன்ற பெண் யானை; செல் - இடி; மதவேழம் - ஆண் யானை; கோகநகை - இலக்குமி; "வில்லை ........ ...... பெருமானே'':- ஓர் பிராமணன் மனைவிக்குப், பிறந்தவுடனே குழந்தைகளிறந்துவிட அருச்சுனன் அதை இயமன் வாராது தடுக்க வில்லை வளைத்துக் காத்து நின்றனன். அப்போதும் குழந்தை இறந்து பிறந்தது. பின் கண்ணன் வைகுந்தத்திலிருந்த பிராம்மணக் குழந்தைகளை யருச்சுனனுடனே சென்று மீட்டுப் பிராமணர்க் களித்தனர். (3)
126. சசி - சந்திரன்; காவி - குவளை; வயவேந்தர் - வீரமுடைய அரசர்; குருகையர் கோன் - நம்மாழ்வார்; சிலைவாள் நுதல் கோசலை - வில்போன்று ஒளிவாய்ந்த நெற்றியுடைய கோசலை; கணிகை மட வார் - தேவதாசிகள். (4)
127. ஏய்ந்த - பொருந்திய; அண்ணல் - பெருமை பொருந்திய தசரதன்; சிற்றவை - சிறிய தாய் கைகேயி; திசை யான்னத்தோன் - பிரமன்; "சிற்றவை மனை ............. மணியே" - இராமர் சிறிய வயதில் கைகேயியின் தோழியாகிய கூனி (மந்தரை)யின் கூனைக் குறிபார்த்துத் தன் வில்லில் மண்ணுண்டையை வைத்தடிப்பார். அவள் துக்கிக்க இராமர் மனங்களிப்புறுவார். திசை + ஆனனன் - திசைமுகன். (5)
128. தவிசுறைவோன் - பிரமன்; தருக்காவலன் - இந்திரன்; உமைக்கதிபன் - சிவபெருமான்; அயில் துரந்தோன் - வேலை விட்ட முருகன்; தபனன் - சூரியன்; சசி - சந்திரன்; ஐங்கரன் - விநாயகன்; குனித்து - வளைந்து; புனல் - (யமுனா நதியின்) நீர்; ஆயர் - இடையர்; வண்டார் குழல் - பூவின் தேனுக்காக வண்டுகள் நிரம்பிய கூந்தல்; கோவியருடனே புனலில் விளையாடுவது:- சலக்கிரீடை செய்தது; பண்டாலிலையிற் கண்டுயில்வது :- பிரளய காலத்தில் திருமால் உலகங்களை யெல்லாமுண்டு ஆலிலையில் யோக நித்திரை செய்வார். நீர் வற்றிய பின் பழையபடி உமிழ்ந்து பிரமனைச் சிருட்டித்து ஏற்படுத்துவார். (6)
129. பருதி - சூரியன்; ஆழி - சக்கரம்; தொழும்பு - அடிமை; மாறன் - நம்மாழ்வார்; அயன் - பிரமன்; பூதம் - ஐம்பெரும் பூதங்கள்; இருக்கு - ஓர் வேதம்; "வெய்ய சமரங்............... கருணா நிதிக் கடல்" - அபிமன்யுவைக் கொன்ற சயத்திரதனை "நாளை பகலோன் மறையு முன்பு கொல்லாது விடேன் ; அப்படித் தவறின் தீப் புகுந்து மாய்வேன்'' என்று சபதஞ் செய்த அருச்சுனன் உயிரைக் காப்பாற்ற எண்ணிய கண்ணன், சக்கரத்தை விட்டுச் சூரியனை மறைத்து தீப்புக நினைத்த அருச்சுனனைக் காண எதிரில் வந்த சயத்திரதனைக் கொல்ல எண்ணிச் சக்கரத்தை நீக்கவும் சூரியன் பிரகாசித்தது. உடனே அருச்சுனன் கணையேவிச் சயத்திரதன் தலையைக் கொய்தான். (7)
130. படம் பொருந்திய பாம்பு போன்ற நிதம்பம், வாழை யொத்த தொடை, குமுத மலர்போன்ற வாய், செப்புக் குடமொத்த தனம் என்று நிரனிறை யாக்குக; பூங்கதலி - அழகிய வாழை; குறங்கு - தொடை; ஆயர் மடவார் - கோவியர்கள்; கூறை - சேலை; குரவை - கைக்கோத்து வாழ்த்தியாடுவது; வடப்பத்திரம் - வடவேங்கடமலை, புளிங்குடி - பாண்டி நாட்டுத் திருப்பதிகளிலொன்று; பெருமான் பெயர் - காசினி வேந்தன்; பிராட்டியின் பெயர் - மலர் மகள் நாயகி. (8)
131. பச்சை இளமை, பரவைப் புலவு - கடலினிட முண்டான மீனின் புலால் நாற்றம், சாந்தம் - சந்தனம்; குழகன் - அழகுடைய வன், பிச்சி - ஓர் மல்லிகைச் செடி, தவனம் - மருக்கொழுந்து; செறி + முட்டு + அம் + பேரை - செறிந்து முட்டுகின்ற அழகிய தென் பேரை என்க; பெருமான் பெயர் மகரநெடுங்குழைக்காதர். பீடு - பெருமை; இடபமலை - திருமாலிருஞ் சோலை; துவரை - துவாரகை; கச்சிப்பதி - காஞ்சீபுரம்; சேடமலை - திருவேங்கடம்; குறுங்கை - திருக்குறுங்குடி; பெருமான் பெயர் வைஷ்ணவ நம்பி; பிராட்டியின் பெயர் குறுங்குடி வல்லி நாயகி; கோவினிரை - பசுக்கூட்டம். (9)
132. பணி - படம்; வேள்மனை - மன்மதனுறைவிடம் (நிதம்பம்); பஞ்சு - செம்பஞ்சு; தளிரடி - இலைத்தளிர் போன்ற பாதம்; அயில் - வேல்; நித்தர் - கடவுளர்; நேமி - ஆக்ஞா சக்கரம்; நிதி – செல்வம்; மறலி - யமன்; சமையம் - மதம் (போலி); வாதர் - தர்க்கம் செய்பவர்; கஞ்சமலராள் - இலக்குமி; நாளும் + உளம்+ கருதி என்க. உளம் - மனம். (10)
சப்பாணிப் பருவம்
133. மாறன் - நம்மாழ்வார்; நவிலும் – சொல்லும்; நாவலர் புலவர்; சதி நடனம் - தாளத்தோ டொத்த நடனம்; பங்கயன் - பிரமன்; கடவுள் சங்கம் - கடவுளரின் கூட்டம்; பைந்துழாய் - பசிய துளப மாலை; அவள் + தன் = அவடன்; செங்கமலை - செந்தாமரையிலுள்ள இலக்குமி; தரு - மரம். (1)
134. நக்கன் - சிவபெருமான்; அவன் மக்கள் - முருகன், வினாயகன்; வளி - காற்று; இருநால் அக்கரம் - எட்டு அக்ஷரம், அதாவது அஷ்டாக்ஷரம் எனப்படும் நாராயண மந்திரம்; வாணன் - வாணாசுரன்; இக்கு - கரும்பு; சிக்கம் - உறி; ஒக்கலை - இடுப்பு; "நக்கனவன் ..... ......... மகிழச்சுதா'':- பலியின் குமாரனான பாணாசுரன் சிவபிரானை நோக்கித் தவஞ்செய்து தன் நகர்க்குக் காவலாயிருக்க சிவனையும், அவன் மக்களையும் பெற்றான்; அவன் மகள் உஷை கனவிற்கண்ட அநிருத்தனைத் தோழியால் வருவித்துக் களவிற் புணர்ச்சியிலீடுபடவும் வாணனறிந்து அநிருத்தனைச் சிறையிலிட்டனன். தன்பேரன் சிறையிலிருப்பதை நாரதராலறிந்த கண்ணன் பாணாசுரன் மீது யுத்தத்திற்குச் சென்று சிவன், முருகன், வினாயகன் ஆகியோரைப் புறங்காட்டச் செய்து வாணாசுரனுடைய 2- கரங்களைத் தவிர மிகுதி கைகளையறுத்தார். பின் பாணாசுரன் அநிருத்தனையும், உஷையையும் கண்ணனிடம் சேர்த்துப் பிழை பொறுக்க வேண்ட அவ்வாறே செய்தார். துருவாசன் மேற் சக்கரம் நடத்தியது:- அம்பரீஷனை ஏகாதசி விரதபங்கம் செய்ய வேண்டுமென்று வந்த துருவாசன் மமதை கெடுமாறு சக்கரத்தால் துரத்துவித்துப் பின் அம்பரீஷனால் மன்னிக்குமாறு செய்தார். (2)
135. திறை - கப்பம்; சோம வெற்றிக்குடை - சந்திரவட்டக் குடை; மாகதர் - இருந்தேத்துவோர்; பூசுரர் - பிராமணர்; வேசையர் - தேவதாசிகள்; களைகண்ணன் நேமித் தசரதன் - பிள்ளையில்லையென்ற துக்கத்தையுடையவனும் ஆஞ்ஞா சக்கரத்தை யுடையவனுமான தசரதன்; காமுற்றியற்று பெருவேள்வி - புத்திர காமேட்டி யாகம்; வாம் மேகலை - அழகான மேகலாபரணம்; தாமரைப்போதிலுறை மா - இலக்குமி. (3)
136. பால் அம்பரம் - பாற்கடல்; இம்பர் - இவ்வுலகம்; இந்திரை - இலக்குமி; பார்த்திபன் - அரசன் (தசரதன்); அனுசன் - தம்பி (இலக்குமணன்); மிதிலைக்கண் வரு செல்வி - சீதை; தெண்டகவனம் - தண்டகாரண்யம்; முத்தண்டின ரருஞ்சாலை - முனிவரது பன்னகசாலைகள்; சுந்தரம் - அழகு. (4)
137. வனமாலை - துளசிமாலை; இருமாதர் - பூதேவி, இலக்குமி; முளரியிதழ் வாசர் - பிரமன்; இருக்கு + ஆதி + அந்தம் + நடுவு என்க; இருக்கு - நால்வகை வேதத்தில் ஒன்று; இராமானுசன் - இராமானுசாச்சாரியார்; தாசரதி - தசரதனுக்கு மகன், தத்திதாந்த நாமம். (5)
138. மதிவதனம் - சந்திரனைப் போன்ற முகம்; காவி - கருங்கு வளை; மேனி - உடல்; மட்டு - தேன்; கன்கவடம் - பொன் மாலை; ஊறல் - எச்சிலொழுகை; புங்கம் - உயர்ச்சி; பழவினை - பழைய தீவினைகள்; ததியர் - தத்துவம் நிறைந்தவர்; மணவாளமுனிவன் - இவர் பாண்டி நாட்டில் சிக்கில் கிடாரமென்னும் ஊரில் "திருமான் மனத்த அண்ணர்'' என்பாருக்கு மகனாக உதித்தவர். திருவரங்கநாதரிடம் பக்தி பூண்டவர். (6)
139. பாவத்துநிலை - தன்மைகளின் நிலை; மால் - மயக்கம்; கஞ்சன் கம்சன்; நித்தியன் - அழிவில்லாதவன்; தாலப் பெருந்துவசம் - பனைக்கொடி; மாலி - மாலியவான், விஷ்ணுசக்கரத்தால் கொலையுண்டவன்; சீதையை விட்டுவிட இராவணனுக்குப் புத்தி கூறினான்; சீலக்குணம் - ஒழுக்கம்; 'மூலமறை..............மணிவண்ண’ - பிருகு முனிவர் சத்துவதேவரை அறியும்படி பிரமன், உருத்திரன், திருமால் இவர்களிடஞ் சென்று அவர்களைக் கோபமூட்டினர். அதனால் பிரமனும் உருத்திரனும் கோபித்தனர். இவர் உருத்திரனை இலிங்கமாக மாறும்படியும், பிரமனுக்குக் கோயில் இல்லாதிருக்கவும் சாபந் தந்து திருமாலிடஞ் சென்று ஓர் உதை கொடுத்தார். திருமால் உதைத்த காலைப் பிடித்து உபசரித்ததால் இவரே சத்துவமூர்த்தி யென்றறிந்து துதித்தார். 'சீலக் குணத்து ................. சிங்கம்’ - தேவகி வேண்ட கருவிலுதித்த அறுவரையும் தேவகிக்குக் காட்டி அவருக்குத் திவ்யதேக மளித்தார். (7)
140. வம்பு அவிழ் - புதுமையாக மலர்ந்த; ஆ - பசு; வசு - பசுங்கன்று; அம்பரம் - மேலுலகம்; அமரர் இம்பரின் மனுத்தலைவர் தேவர்கட்கும், இவ்வுலகத்தின் மனுச்சக்கரவர்த்தி போன்ற அரசர்கட்கும்; பிரகலாதன் + நின் + கம்பலையுறாது - பிரகலாதன் உன்னால் துன்பமடையாமல்; இப்பாட்டில் அசுரர்களைப் பருத்திப் பொதியாகவும் பிரகலாதனை நெருப்பாகவும் உருவகித்திருத்தல் காண்க; வழுத்த - துதிக்க; கனகன் - இரண்யன்; தம்பம் - தூண்; வசுக் கொடு விளங்கனி யெறிந்தது - கம்சனேவலால் கன்றுருவடைந்து வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றார். (8)
141. சீதம்-குளிர்ச்சி; வேதியன் - துரோணாசாரி; சிலை - வில்; கோது - குற்றம்; நீதம் - நன்னெறி; உகந்து - மகிழ்ந்து; நெடுநகர் - அத்தினாபுரி; சோர - கள்வ; விதுரன் - துரியோதனன் சிற்றப்பன். (9)
142. தினகரன் - சூரியன்; கனகம் - பொன்; நிருதர் - அசுரர்; பன்னி - பத்தினி; நற்றவன் - அத்திரி முனிவர்; அனசூயை கையணியணிந்தது - ஸ்ரீராமன் தண்டகவனத்துக்குச் சீதாபிராட்டியுடன் சென்று அத்திரி ஆச்சிரமத்தில் தங்க இவள் பிராட்டிக்கு வழியில் நீக்கம் வாராது மங்கல அணி அணிந்து வேண்டிய தருமங் கூறியனுப்பினாள். (10)
முத்தப்பருவம்
143. திகிரி சக்கரம்; விண்டு - விஷ்ணு; அத்தி - கடல்; பதுமனாப, தாமோதரா என்று பிரிக்க . (1)
144. அட்டல் - கொல்லல்; சுரி - வளைந்துள்ள; சக்கரமும் சங்கும் ஆதிசேடனாகிய படுக்கையும் தம்பியராக வந்து பிறப்பர் என்று தேவர்களிடம் கூறினார். அங்ஙனமே, தான் இராமனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்துருக்கனாகவும், ஆதிசேடன் இலக்குவனாகவும் பிறந்தனர். வட்டை நிகர் கொங்கை - புலியினது உடல்வரி போன்று சந்தனக் குழம்பால் எழுதப்பட்ட கொங்கை; ஏந்திழை - பெண்; நறும்போது - தாமரைமலர்; குல்லை - துளசி; வில்லிபுத்தூர் வந்த மாது - ஆண்டாள்; பட்டர்கோன் - பெரியாழ்வார். (2)
145. தரங்கம் - அலை; புணரி - கடல்; அரவ நெடிய கேதனன், பாம்புக்கொடியை யுடைய துரியோதனன்; புங்கம் - அம்புக்குதை; கிரீசன் - சிவன்; அரன் - சிவன்; ஈசன் - தலைவன்; பார்த்தசாரதி - பார்த்தனுக்குத் தேர்ச்சாரதி; "சயத்திரதனைக் கொல........... அருளும் பரமனே”. அருச்சுனன் மகனான அபிமன்யுவைச் சயத்திரதன் வஞ்சனையினால் கொல்ல, அருச்சுனன் தன் சபதப்படிச் சயித்திரதனைக் கொல்வதற்கு, அஸ்திரம் வாங்குவதற்குக் கைலாயம் சென்றனன். வழியில் சிவபெருமானைப் பூசிக்கும் நேரம் வர அருச்சுனன் கண்ணனைச் சிவபெருமானாக நினைத்துப் பூசித்து நித்திரை செய்து கண்ணனுடன் திருக்கயிலையை அடைந்து கண்ணன்மேற் சாத்திய மலர்கள் சிவபெருமான் மீதிருக்கக் கண்டும் முன்பு அக்கண்ணன் காலைக் கழுவின கங்காதீர்த்தம், சிவபெருமான் சிரசில் இருக்கக் கண்டும் கண்ணனே தலைவன் என்று அருச்சுனன் தெளிந்தான். (3)
146. சவரி - ஒரு வேடுவச்சி; மாருதி - அனுமன்; வரிவில், வரிந்து கட்டிய வில் என்க. (4)
147. குடவளை - குடம் போன்ற சங்கு; அடல் திகிரி - கொல்லுகின்ற சக்கரம்; கோல்குழல் - மூங்கிலினால் செய்த புள்ளாங்குழல்; வசு - பசுங்கன்று; வயப்புரவி - வெற்றி மிகுந்த குதிரைகள்; ஒரு மடுவினில் பட அரவு - களிங்கம் என்ற மடுவிலிருந்த காளிங்கன் - என்ற பாம்பு; "மடல் விரிந்தும்................மதிசூதனா" - ஒரு சமயம் கண்ணன் மாடுகள் மேய்க்கையில் பசுக்கள், பசுங்கன்றுகள், ஆயச் சிறுவர்கள் எல்லோரையும் பிரமன் மறைத்துவிடக் கண்ணனே பசுவாகவும் பசுங்கன்றுகளாகவும், ஆயச்சிறுவர்களாகவும் ஆகிப் பழையபடியே செய்ய, பிரமன் வெட்கி எல்லோரையும் கொண்டுவந்து விட்டு மன்னிப்புக் கேட்டான். மதம் பொருந்திய யானைகளின் நெருக்கமோ என்று சொல்லும்படியான இருளை நீக்க வருகின்ற சூரியனது குதிரைகளைக் கட்டும்படியான ஆகாயமளவு உயர்ந்த சோலை சூழ்ந்த காட்டிலிருக்கும்படியான ஒரு மடு என்க. (5)
148. வார் - கச்சு; கொம்மை - திரட்சி; கெழுமும் - பொருந்திய, ஏர்திகழ் உமைக்கதிபன் - அழகு மிகுந்த பார்வதிக்குத் தலைவன் (சிவபெருமான்) வாணி இறை - பிரமன்; உம்பர். தலைவன் - இந்திரன்; வாதம் - காற்று; நெடு வாருதி - நீண்ட கடலுக்கிறைவன் (வருணன்); வசுக்கள் - அஷ்ட வசுக்கள்; அனலதுக்கதிபன் - அக்கினி; இந்து - சந்திரன்; ஆதவன் - சூரியன்; சூர் பகை தடிந்த குகன் - சூரபதுமனாகிய பகையைக் கொன்ற சுப்பிரமணியன்; வேழம் - வினாயகன்; சுரர் - தேவர்; கேழல் - பன்றி; பொற் கண்ணன் - இரண்யாக்கதன்; மறலி - இயமன்; மருப்பு – தந்தம். இப்பாட்டு இரண்யாக்கதனைக் கொல்ல வராகவதாரம் எடுத்ததைச் சொல்கிறது. (6)
149. நச்சரவு - விடமுடைய பாம்பு; முனிவு - வெறுப்பு, நங்கை - சீதை; நம்பி - இராமன்; வச்சிரகரத் தலைவன் - இந்திரன்; முச்சிகையயிற் கடவுள் - சிவன்; வானவர் - தேவர்; புண்டரீகன் - தாமரையிலுள்ள பிரமன்; நிருதக்கிளை - அசுரரது சுற்றம்; கதம் - கோபம்; கொச்சைமதி - இழிவான புத்தி; இப்பாட்டு சீதை இராமனுக்குத் தன் கற்பின் உண்மையை வெளிப்படுத்த அக்கினியில் மூழ்கினதைக் காட்டுகிறது. (7)
150. உம்பர் - தேவர்; இளையோன் - இலக்குமணன்; பரமபதம், ஆலின் இலை, கடல் எனப் பிரிக்க; மருவார்குழல் - வாசனை பொருந்திய கூந்தல்; அரியணை - சிங்காதனம்; கைகேசிதரு புதல்வன் - பரதன்; அமர் - சண்டை; முனிவு - கோபம்; படைப்புணரி - சேனையாகிய கடல்; நீறெழ - சாம்பலாக; இளையோனமைத்த பன்னக சாலையில் இராமன் சனகியுடனிருந்த போது தமையனான இராமனுக்கு முடிசூட்டி மகிழ வரும் பரதனைச் சண்டை செய்ய வருகிறானென்று இலக்குமணன் கோபித்துப் பரதனோடு சண்டை செய்து படைகளைச் சாம்பலாகச் செய்ய விடைகேட்டான். இராமன் இலக்குமணனுக்கு அவனது தவக்கோலத்தைக் காட்டித் தெளிவுப்படுத்தினான். (8)
151. மங்கை - திரௌபதி; மரமீது முதிர்பழம் - நெல்லிக்கனி; விஞ்சை-வித்தை; விறல் - திறமை; அறை - சொல், ஏவல்வினை; அமித்திர முனிவர் பொருட்டுப் பழுக்கும் நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுக்க திரௌபதி அருச்சுனனைக்கேட்டு அங்ஙனமே அவன் செய்யப்பின் அது இன்னார் பொருட்டென அறிந்து ஐவர் கண்ணனை வேண்டிப் பொருந்துவிக்கத் தங்களது கருத்துக்களையும், பாஞ்சாலியின் கருத்தையும் கூறிப் பொருந்தச் செய்தனர். அத்தருவில் அக்கனி பொருந்த என்க. தரு - மரம்; விழவும் + அற்று + அதனையறிந்து என்க. அற்று விழவும் அதனை யறிந்து என்க. (9)
வாரானைப்பருவம்
152. நிருதன் - விராதனெனு மரக்கன்; நாரிபாகன் - சிவபெருமான்; உதரன் - வயிற்றையுடையவன்; கனகவோங்கல் - பொன்மலை; உபயசரண் - இருபாதங்கள். (1)
153. பாணி - கை; வேணி - சடை; கடுக்கை - கொன்றை; தவசு புரியு மசுரன் - பதுமாசுரன்; சேண் - தூரம்; பதுமாசுரனை விருகாசுரன் என்பர்; விருகாசுரன் எவர்சிரத்தில் தன் கையை வைக்கினும் அவர் எரிய வரம் பெற்று அதைச் சோதிக்கத் தம்மிடம் திரும்பியவனைத் தீக்கண்ணால் எரிக்காது ஐவேலங்காயில் மறைந்து விஷ்ணுமூர்த்தியை யேவிக் கொலை புரிந்தார். (2)
154. மகரம் - சுறாமீன்; மேவ - அடைய; ஐம்பெரும் பூதங்களையும், நான்கு வேதங்களையும், மூன்று உலகங்களையும் சூரியன், சந்திரர்களையும், அறிவையும், மகரந்தம் செறிந்த தாமரைப் பூவில் வியந்து தங்குகின்ற பிரம்மனையும் படைத்த தாயாகிய சானகி என்க. வாத மைந்தன் - அனுமான். (3)
155. கதிசேர் - மோட்சத்தையடையும்; நங்கை - ஆண்டாள்; நதியார் செழுஞ்சடிலன் - கங்கை நதியைத் தாங்கிய சடையையுடைய சிவபெருமான்; விதியோன் - பிரமன்; அர்ச்சாவதாரம் - எல்லோருக்கும் பயன்படும் கடவுளுருவமாயிருத்தல்; மூடசிக்கள் - அற்ப அறிவுள்ள குற்றம் நிறைந்தவர்; எதிராசன் - இராமானுசர். (4)
156. (1) கன்மேந்திரியங்கள் ஐந்து:-1. உபத்தம் 2. கைகள் 3. வாக்கு 4. வாயு 5. பாதம் என்பன. (2) ஞானேந்திரியங்கள் ஐந்து - 1. மூக்கு 2. நாக்கு 3. கண் 4. மெய் 5. செவி என்பன. (3) விடையங்கள் ஈரைந்து:-3. பிருதிவி (மண்) 2. அப்பு (நீர்) 3. தேயு (நெருப்பு) 4. வாயு 5. ஆகாசம் (இவை பஞ்ச பூதங்கள்) என்பன 6. நாற்றம் 7. சுவை 8. ஒளி 9. ஊறு 10. ஓசை (இவை சூக்கும பூதங்கள்) என்பன. (4) அந்தக்கரணம் நான்கு:- 1. மனம் 2. அகங்காரம் 3. புத்தி 4. சித்தம் என்பன. சடம் - உடல்; சுருதி - வேதம்; பெரிய நம்பி - பெரிய திருமலை நம்பி போலும். திருப்பதியில் வாழ்ந்தவர். கோவிந்த பட்டரை வைணவராக்கினர். இந்திரபதவி பெறுபவர் பலராகலின் இந்திரர் எனக் கூறினர். எட்டெழுத்து - அஷ்டாக்ஷர மந்திரம். (5)
157. கருமுகில் முழக்கம் - மேகத்தின் இடி; தானை - சேனை; ககன கோளம் - ஆகாயமாகிய உருண்டை; உரற்றும் - பிளிறும்; நெடு கை - நீண்ட துதிக்கை; பருதிவானவன் - சூரியதேவன்; இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பருவரை - பருத்தமலை; அருதியுடன் - முழு அன்புடன்; பாரதயுத்தத்தில் அபிமன்யு தன் தந்தைக்குத் தான் யுத்தத்தில் ஆபத்திலிருப்பதாகத் தெரிவிக்க சங்க முழக்க அது கேளாவண்ணம் கண்ணன் தன்வாயில் பாஞ்சசன்னியத்தை வைத்து முழக்கினார். (அ) துரோணர் இறக்குமாறு தருமரை "அசுவத்தாமா அதா குஞ்சரம்" என்று கூறச்செய்யும் போது குஞ்சரம் என்ற வார்த்தையின்போது சங்கத்தை முழக்கினார். (6)
158. கொங்கு - வாசனை; நறவு - தேன்; கோகிலம் - குயில்; கோகனக மான் சத்தியபாமை; கங்குல் - இரவு; ககனம் - சுவர்க்கலோகம்; கந்தமலிகின்ற தரு - பாரிசாதம்; சங்கினோதை - பாஞ்சசன்னிய முழக்கம்; தளமுகை - இதழ் கூடிய மொட்டு; புங்கம் - உயர்ச்சி. (7)
159. மார்த்தாண்டன் - சூரியன்; உத்தானபாதன்:- சுவாயம்பு மனுவிற்குச் சதரூபியிடமுதித்த இரண்டாங் குமரன்; இவனுக்குச் சுநீதி, சுருசி என இரண்டு பாரியைகள்; இவ்விருவரில் சுருசியிடத்தில் அரசன் ஆசைவைத்துச் சுநீதியையும் அவள் குமாரனையும் அலட்சியம் செய்ய சுநீதி குமாரன் துருவன், தாய் தந்தையரை விட்டுத் தவமேற் கொண்டு காசிப ராச்சிரம மடைந்து, உபதேசம் பெற்று, விஷ்ணுவையெண்ணித் தவமியற்றித் துருவபதம் பெற்றனன். தார் - மாலை; மனைக்கிறைவி - அரண்மனைக்கிறைவியாகிய சுருசி; சலம் - வைராக்கியம்; கானம் – காடு; ஈராறு நாமம் - துவாதசநாமம்; நாராயணன் - நாரம் + அயனன்; நாரம் - சித் + அசித்; அயனம் - இரண்டிற்கும் இருப்பிடமாக உள்ளது. சித் - ஆத்மா; அசித் - மெய்; அயனம் – உயிர். (8)
160. சிறப்புப் பொருந்திய வெள்ளிய கைலைமலையை அடைந்து வலம் செய்து சிவனைப் பணிபவனும், சண்டையில் நேர்முகமாக எதிர்த்தவரின் வலப்பாகத்தின் பலம் தன்னிடமடைய வரம் பெற்றவனும், சமுத்திரங்களேழும், ஏழு உலகங்களும், மலைகள் ஏழும், மேகங்கள் ஏழும் போன்று உடல் கட்டமைந்த வீரமுடையவனும், ஐம்பெரும் பூதங்களையும் வருத்தும் குணமமைந்தவனுமாகிய வாலி என்க; ஏது - வழி; பருதி மகன் - சுக்கிரீவன்; மையல் - மயக்கம்; ஏர் - அழகு; பகழி - அம்பு; எய்த ராகவன் என்க; சுக்கிரீவன், இராமன் வாலியை வெல்வனோ, மாட்டானோ என்றறிய "ஏழு மராமரங்களையும் ஓரம்பினால் எய்க” என அங்ஙனமே எய்து சந்தேகத்தைப் போக்கினான். (9)
161. குயில் + நறவு எனப்பிரிக்க, பாகு - வெல்லப்பாகு; கனி - கனிரசம்; நறவு - தேன்; குயில் - ஓர் பறவை; மிடற்றினிசை - கழுத்தினின்று வரும் சங்கீதம்; குவளையோ, கருவண்டோ, கயலோ, இயல்பான அம்போ என்னும்படியான விழி என்க. நீர் மருவிய புயல் - கருக்கொண்ட கருமேகம்; அளகபந்தி - கூந்தற்றொகுதி; கனகப்பொருப்பு - மேருமலை; அயனரன் - பிரமனும், சிவனும்; உதரம் - வயிறு; கண்ணனும், பலராமனும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில் கண்ணன் மண்ணைத்தின்ன, அதைக்கண்டு பலராமர் யசோதையிடம் சொல்ல அவள் கண்ணனைக் கேட்க, வாயைத்திறந்து அயனரன், அண்ட கோடிகள் ஆகியவற்றைக் காட்டினர். (10)
அம்புலிப் பருவம்
162. தெண்டிரை - தெளிந்த அலைகளையுடைய பாற்கடல்; முயல் மறு - களங்கம்; கேகயம் - மயில்; கோமளம் - அழகு; தாளம் - முத்து; அண்டர்மனை - ஆயர்வீடு; ததி - தயிர்; கெண்டைமீன் விழி போன்ற விழியுடைய மாதர்களின் கூந்தலைக் கண்டு தம்மவரென்று கருவங் கொண்டு தினமும் மயில் நடனமாட அதைப்பார்த்து ஆசையுடன் எழுந்து மேகங்கள் இடித்து நீண்ட மலையோவென்று அழகுமிக்க மெத்தைகளையடைந்து அழகாக சங்குநிதியையும் முத்துக்களையும் பெய்து வளத்தைப் பெருக்கும்படியான ஆயர் வீடு என்க. (1)
163. உம்பர் - மேலுலகம்; இரவி - சூரியன்; அயர்வு - களைப்பு, பொன்னனார் - பெண்கள்; காலிட - வெளிப்பட; பயோத்தி - பாற்கடல்; தம்பம் - தூண்; வேள்வி - யாகம்; சார் + அமர + பக்கம் என்க. சார்ந்த அமரபட்சம் என்று பொருள் கொள்க. (2)
164. அரவு - கேது எனும் பாம்பு; இதயம் - மனம்; உட்குதல் - அச்சம்; உச்சிதம் - இன்பம்; மேக்குற்று - மேலே பொருந்தி; குஞ்சரம் - கஜேந்திரன்; குருமணிப்புள் - கருடன்; செஞ்சக்கரத்துடன் - செம்மையான 'சக்கரப்படையை யுடையவனிடம்; சக்கரம் - தானியாகு பெயர்; குவலயம் - பூமி; கசேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொள்ள "ஆதிமூலமே" என்று யானை கூற திருமால் ஓடிவந்து சக்கரத்தால் முதலையைத் துணித்து யானையைக் காப்பாற்றினார். (3)
165. குமிழ் - குமிழம்பூபோன்ற மூக்கு; இடைபொழுது - இடுப்பு பொறுக்காது; எழில் - அழகு; கன்னியர்கள் – தொழுதல் - கணவனை விரும்பி மணமாகாத பெண்கள் பிறையைத் தொழுதல் வழக்கம்; தழல் - நெருப்பு; நறவு - தேன்; மதகு + ஊடு - நீர் மதகின் வழியாக. (4)
166. வாமம் - இடப்பாகம்; வைத்துலவுவர் - சிவபெருமான்; நீங்காத + வன்பகை என்க; தாமரைகள் சூழ்ந்த குளங்களின் அருகில் ஊறுகின்ற சங்குகள் ஈன்ற அழகுமிக்க முத்துக்களைக் கரும்புகள் மிகுந்துள்ள சோலையில் வாழும் நாரை தனது முட்டை என்று நினைத்து அடைகாக்கும் அழகுமிக்க பாண்டிய நாடு என்க; கமலாசனன் - நான்முகன்; "தென் இலங்காபுரி ............. நீ'' - இலங்கையில் இராவணன் சூரியனை வரவொட்டாமல் தடுத்தான். அதனால் சந்திரனும் பயந்தான். பின் இராமன் இராவணனைக் கொன்று சந்திரனையும் சூரியனையும் நன்கு பிரகாசிக்கச் செய்தான். (5)
167. பரவை சூழ் உலகு - கடல் சூழ்ந்த உலகம்; வெப்பாற்றியும் - வெப்பத்தைத் தணித்தும்; பாசறை - யுத்தத்தின் போது சேனைகள் தங்குமிடம்; வாகை - வெற்றிமாலை; அரவின் அணை - ஆதிசேடனாகிய படுக்கை; கடல் சூழ்ந்த உலகத்தைச் சூரியன் தனது அழலை வீச, நிலவுவீசி வெப்பத்தைத் தணித்தும் சண்டையில் வெற்றி பெற்று வரும் வீரர்களின் தோளைத் தழுவும் பெண்களுக்கு அமுதம் போன்று வளமை பெற்றும் பயிர்கள் துன்பமில்லாமல் நன்கு வளரும்படி உதவியும் கரிய இருளை ஒட்டியும் ஆகிய தகுதிகளைப் பெற்ற சந்திரனாகிய உன்னை என்று முடிக்க. (6)
168. மாரன் மனையாள் - மன்மதன் மனைவியான இரதி; மிருகண்ட முனி பாலர் - மார்க்கண்டேயர்; ஆரம் - மாலை; சோடசம் - பதினாறு; மாமகள் - இலக்குமி; ததிபாண்டுரங்கன்:- இவன் ஒரு இடையன்; கண்ணன் இவனிடம் ஒரு நாடகமாக அடைக்கலம் புக இந்த இடையன் இவரைத் தயிர்ப்பானையால் மறைத்தனன். பிறகு கிருஷ்ணமூர்த்தி தம்மை விடைகேட்க இடையன் "எனக்கு மோட்சம்தரின் விடுவேன்'' என அவ்வகை வரங்கொடுக்கப் பெற்றான். மார்க்கண்டேயர்:- கண்ணனைச் சிவபூசைக்குக் காரணம் வினவி அவரால் முதற்பொருள் அறிந்தார். (7)
169. பயோதரம் - தனம்; புங்கவன் - கடவுள்; கார்+அணம்+ சோலை - மேகங்கள் சூழ்ந்த சோலை; கஞ்சமலரென்ன வொளிரும் கரதலம் - தாமரை மலரைப்போன்று பிரகாசிக்கும் கைகள்; வாரணத் துரிவை - யானையின் தோல்; உந்தும் - அதிகமாகும். (8)
170. அகமுன்னி - மனதில் நினைத்து; விசை - வேகம்; தழல் எரி எனும் பங்கி - நெருப்புப் போன்ற சிவந்தமயிர்; தானவர்கள் - இராட்சதர்கள்; மழவிடை-இளமையான காளை; கூராழி - கூர்மை பொருந்திய சக்கரம். (9)
171. சென்னல் - தேன்கெண்டை மீன்கள்; என்கோன் - எனது தலைவன்; நித்தியவிபூதி - திருமாலின் பரமபதம். (10)
சிற்றில் பருவம்
172. மதிசேகரன் - சிவன்; திசைமுகன் - பிரமன்; கமலமான் - இலக்குமி; கந்தம் - வாசனை; கழல் - பாதம் (தானியாகு பெயர்); மாலி:- இவன் சுகேசன் குமாரன். பிரம்மனை நோக்கித் தவம் செய்து உலகமெல்லாம் தன் ஒரு குடைக்கீழ் அடங்க வரம் பெற்றவன். கடைசியாக விஷ்ணு சக்கரத்தால் கொல்லப்பட்டவன். சுமாலி - இவன் பாதளத்தில் இருந்த அரசன். இவனைத் தாடகை புத்திரர்களாகிய சுபாகு, மாரீசன் அடைக்கலமாக அடைந்தனர். இவனும் கடைசியில் விஷ்ணு சக்கரத்தால் கொல்லப்பட்டான். உருக்குமணி:- பீஷ்மகன் குமாரி. தமையனாகிய உருக்குமி, தன்னைச் சிசுபாலனுக்கு மணப்பிக்க இருந்ததை ஒரு பிராமணர் மூலமாய்க் கண்ணனுக்கு அறிவித்துக் கௌரி பூசை என்ற காரணத்தைக் கொண்டு சென்று அங்கிருந்து கண்ணனுடன் தேரிலேறித் துவாரகை சென்றாள். (1)
173. நுடங்கிடை - துவளுமிடை; அடிதடம் - நிதம்பம்; பயிர்ப்பு பெண்டிர்க்குரிய நால்வகைக் குணத்திலொன்று. (2)
174. முருக்கின் மலர் - முருக்கமரத்தின் மலர்; இதழ் - உதடு; கனி - கோவைப்பழம்; ஆய்ச்சி - யசோதை; புனிற்றா - கன்றுகளை ஈன்ற பசு; அரி - கிளி; பொலன்றாது - பொற்றுகள்கள். (3)
175. மரைப்போது - தாமரைமலர் (முதற்குறை விகாரம்); பரமா - எல்லாருக்கும் மேலான விஷ்ணுவே; கண்டாகர்ணன்:- குபேரன் ஏவலாளிகளில் ஒருவன். பைசாச உருகொண்டவன். இவன் தன்னிடமிருந்த சூலத்தால் மனிதரை வதைத்துச் சிவனுக்கு நிவேதனஞ்செய்து தான் உண்டு சிவனை முக்தி வேண்ட, அவர் விஷ்ணுவைக் கேள் என அப்படியே விஷ்ணுவைத் துதித்து அவரால் உபதேசிக்கப் பெற்றுத் தானேயன்றித் தன் தம்பியும் முக்திபெற வரம்பெற்றான். (4)
176. அல் - இருள்; மழுராமன் - பரசுராமன்; திரையார் பொருகை நதி - அலைகளோடு கூடிய தாமிரபரணி; துதைப்பேன் - நெருங்குவேன்; "விரும்பு மறையோன் ........... புகழோன்'':- இராமர் கொடை செய்வதைக்கண்ட பிராம்மணனொருவன் தனக்குப் பசுக்கள் வேண்டுமென்று கூற அவன் விருப்பத்தைக் கேட்டு அங்ஙனமே செய்க எனலும் தன் கையிலிருந்த கோலை வீசி அதனுள் அடங்கிய பசுக்கூட்டத்தைக் கொண்டான். "வினைகட்டு அறுக்கும் மனத்துணிவு'' என்று பிரிக்க. கல்லை உருவாக்கினது:- இராமாவதாரத்தில் கல்லாயிருந்த அகலிகையைப் பெண்ணாக்கியது. (5)
177. அஞ்சனம் - மை; நுதல் - நெற்றி; மறு - மச்சம்; கனகச்செம்பு - பொன்னால் செய்த செப்புக்குடங்கள்; சந்தங் கமழும் சேறு - வாசனை வீசும் கலவைச் சாந்து; தபனன் - சூரியன்; தேர்ப்புரையல்குல் - தேரையொத்த அல்குல்; நானம் - வாசனை; நளினம் - தாமரை போன்ற பாதங்கள்; நனி மாடங்கள் - மிகுதியான மாடங்கள் உள்ள வீடு; துளபத் தார் - துளபமாலை. (6)
178. சுதை - அமிர்தம்; தேனு - காமதேனு ; சசி - இந்திராணி; நோன்பு புரி இந்திரர் - தவவிரதங்களைச் செய்கின்ற இந்திரர்கள்; மகர நெடுங்கண் - சுறாமீன் போன்ற கண்கள்; விதுவதனம் - சந்திரன் போன்ற முகம்; மணி முறம் - அழகிய முறம்; பரல் - மணலின் பருக்கைக்கல்; அறக்கொழித்து - முழுதுங்கொழித்து; சிகரியமைத்து - கோபுரம் போன்று அமைத்து; சிறுமிகள் மணலைக்குவித்து அதிலுள்ள பருக்கைக் கற்களை முறத்தால் கொழித்தெடுத்துப் பொன்னையும், மரகதத்தையும், மலரையும் அதிலணிந்து செல்வத்தைப் போன்று விளையாட்டில் குழந்தை பெற்றெடுத்து உன்னுடைய பெயரை இடுவேன் என்று நினைத்துக் கோபுரமமைத்துக் கரங்கூப்பித் தொழுபவர்கள் என்க. இங்கு நிதிபோல் மகவைப் பெற்றெடுத்தலாவது:- சிறுமிகள் விளையாட்டிலேயே கற்களைத் தங்கள் பிள்ளைகளாகப் பாவனை செய்வது. பரலைக்கொழிக்கும்போதே பொன்னும் மரகதமும் கிடைத்தன என்க. (7)
179. நிவந்து பணைத்து - நெருங்கிப் பருத்து; நின்னைப் பணி மாளிகை - உன்னைப் பணிவதற்கான கோயில்; கமலை - திருமகள்; பனித்தாள் - குளிர்ச்சி பொருந்திய பாதம்; உவரித் திரைசூழ் - கடல் அலை சூழ்ந்த; அவர்க்கு இறை - இந்திரன்; ஐங்கரன் - விநாயகர்; உடுவின்பதி - சந்திரன்; குகவேடன் - குகனாகிய வேடன் (இரு பெயரொட்டுப் பண்புத்தொகை) (8)
180. அனம்போன் மடவார் - அன்னம்போன்ற அழகிய பெண்கள்; ஆடு அரங்கு - ஆடுகின்ற இடம்; வேதிகை - திண்ணை; வனையும் பாசம் - கட்டுப்படுத்தும் பாசம்; மறை - வேதம்; மாறன் - நம்மாழ்வார்; செம்மை அடி - சேவடி. (9)
181. கவின் - அழகு; அரன் - சிவன்; புடைத்துப் பணைக்கும் - இடமகன்று பருக்கும்; வனப்பு - அழகு; சிரம் - தலை; “அரனார் ...... ..... திலகா”:- திருமால் தாமரை மலர்களைக் கொண்டு சிவனைப் பூசிக்க, அம்மலரில் ஒன்றைச் சிவன் குறைக்கத், தமது கண்ணைப்பிடுங்கி அர்ச்சித்தார். அதனால் களிப்படைந்த சிவன் சக்கரத்தை அளித்தார். (10)
சிறுபறைப்பருவம்
182. நந்துமிடறு - சங்குபோன்ற கழுத்து; உந்துமுலை - முன்னோக்கி வருகின்ற தனம்; செந்துவரிதழ் - சிவந்த பவளம் போன்ற உதடு; கவுரி என்னும் மயில் - பார்வதியாகிய மயில் (உருவகம்); தந்தி முகன் - வினாயகன்; குகன் - சுப்பிரமணியன்; தாபதர்கள் - முனிவர்கள்; கஞ்சன் - கம்சன்; மடநெஞ்சன் - மடமைத்தன்மையோடு கூடிய நெஞ்சுடையவன்; சிந்துரக்களிறு - செந்திலகமணிந்த குவலயாபீடம் என்னும் கம்சனது யானை ; அட்ட - கொன்ற. (1)
183. நத்தை நிகர் கண்டம் - சங்கையொத்த கழுத்து; தத்தை மொழி - கிளிமொழி; செய்ய நளினமென மருவு கரம் - செந்தாமரை போன்று பொருந்திய கை; கோதை - மாலை; பிச்சி - ஓர் மல்லிகைப்பூ; கழுநீர் - செங்கழுநீர்ப்பூ; முகை குருகு - அரும்புகளையுடைய குருக்கத்திப்பூ; நித்தன் - அழிவில்லாதவன்; முத்தர் - முக்தியடையும்
ஞானமுடையவர். (2)
184. மரை - ஒருவகை மான்; நறவைப் பொருந்து மொழி - தேனைப்போன்ற மொழி; மலையைச் செறுக்கும் - மலையையே மூழ்கச் செய்யும்; சிலையைக் கடிந்த நுதல் - வில்லை வென்று ஓட்டிய நெற்றி; இரதிக்கு வருகணவன் உருவொத்தியைந்த இடை - இரதிக்குக் கணவனாகிய மன்மதனைப்போன்ற இடுப்பு; மன்மதன் பிறர் கண்ணுக்குக் காணப்படாமல் அருவமாயிருத்தலின் பெண்களினிடையும் அது போன்று இருத்தலால் உவமை கூறினார். புரையுற்ற - குற்றம் நிரம்பிய. (3)
185. மண்டு திறல் - நெருங்கின வலிமை; விப்பிரர்கள் - பிராம்மணர்கள்; ககனமுறைவோர் - தேவர்கள்; நிருதர் கோ - இராவணன்; வேதம் ஓதுகின்ற வேதியர், தவமுனிவர்கள், தேவர்கள், பூமியிலுள்ள மனிதர்கள் ஆகியோர் பணிகின்ற சானகி என்க; நுதலி - நெற்றியை உடையவள் (குறிப்பு வினையாலணையும் பெயர்) (4)
186. குவலயம் - பூமி; அப்புறமகற்ற - அப்பக்கம் அகன்று போமாறு; இரவி- சூரியன்; மாருதி - அனுமான்; அம்புயன் - பிரம்மன்; திக்கதிபன் - அஷ்டதிக்குப் பாலகர்கள்; அனுமான் பிறந்தபோதே உதிக்கும் சூரியனைச் சிவந்த பழமென நினைத்து ஆகாயத்தில் பாய்ந்தவர். மற்றும் வேதத்தின் பொருளைச் சூரியன் செல்லும்போதே நடந்து கற்றவர். இத்தகைய புகழ்பெற்ற மாருதி என்க. (5)
187. பாதிமதி வேணியரன் - பிறைச்சந்திரனைத் தரித்த சடையை உடைய சிவன்; மேதி பணி வாவி - எருமைகள் மூழ்கும் குளம்; சூத மரம் - மாமரம்; கோதை இருவர் - பூமிதேவி, இலக்குமி; எருமைகள் படிகின்ற குளத்தில் கயல்கள் அதன் மடியை முட்ட கன்றென்று நினைத்து - விருப்பத்தோடு சுரக்கின்ற பால்கள் வேகமுடன் நதி போன்று ஓடி வயலிடம் சேர்ந்து பயிர்களை வளர்க்கின்ற அத்தகைய கழனிகளும், மாமர மீது உள்ள தளிரைக் கோதி உண்கின்ற குயில்கள் கூவியதைப் பவளம் போன்ற உதடுகளையும் சந்திரன் போன்ற முகத்தையுமுடைய பெண்கள் என்று நினைத்து ஆண்மக்கள் ஆச்சரியத்தோடு மருண்டு பார்க்கும் சோலையும் நிறைந்த மிதிலைப் பட்டணத்தில் தோன்றிய சீதை என்க . (6)
188. விரைந்த வேகத்தோடு வாயுபகவான் நெருங்கி மேருவின் சிகரங்களைச் சாய்த்த பெரிய ஓசைபோன்றும் தரைக்குத் தலைவர்களகிய மன்னர்கள் போர்க்களத்தில் வெற்றிமாலை சூடியதைத் தெரிவிக்கின்ற முரசவாத்திய ஒலி போன்றும் பூமியில் புகழ்கொண்ட கொடை யாளர்கள் "வருகிறவர்களுக்குச் செல்வங்களைக் கொடுப்போம்," என்று கூறுவதற்கான தியாக, முரசத்தின் ஒலிபோன்றும் மேகங்களின் ஒலியோ என்று எங்குமுள்ள மயில்கள் நடனமிடும் கிழக்குத்திக்கின் தலைவனாகிய இந்திரன் உலாவருகின்ற ஐராவதம் என்ற யானையின் பிளிறல் போன்றும் கடலின் சப்தமோ என்று பார்த்தவர்கள் வியக்கவும் சிறுபறை முழக்குவாயாக என்று முடிக்க. "சண்டவேகம் ............... ஓசை'' - வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் ஒருகால் யார் பலவான் என்று வாக்குவாதம் வந்துவிட, சபதப்படி ஆதிசேடன் மேருமலையைக் கௌவிக்கொள்ள வாயு மலையின் சிகரத்தைப் பெயர்த்துக் கடலில் போட்டான். ஐராவதம் என்ற யானையின் ஒலியை மயில்கள் மேகங்களின் ஒலியெனக் கருதி நடனமாடின என்க. (7)
189. அளி - வண்டு; புகர் - சுக்கிரன், (அசுரகுரு); கணம் - வினாடி; இருபுவி - பூமி, மேலுலகம்; அசுரசக்கரவர்த்தி மகாபலி, வாமனனாக வந்த விஷ்ணுவுக்கு அவன் கேட்டவாறு மூவடிமண் கொடுக்கச் சம்மதித்துத் தாரை வார்க்கவும் தாரைவார்க்கும் கெண்டிகையில் சுக்கிரன் வண்டாகித் தடுத்தார். கையில் தண்ணீர் விழாமல் போகவே, வாமனனான விஷ்ணு ஒரு குச்சி எடுத்துக் குத்த, சுக்கிரன் ஒரு கண் குருடானான். (8)
190. கங்குல் - இரவு; கார்தவழ் அரமியம் - மேகங்கள் தவழப் பெற்ற வீட்டின் மேல் உலாவும் வெளி; கரங்கொடு யாழ் வருடி - கைகளைக்கொண்டு யாழின் தந்தியைத் தடவி; கரங்கொடி யாழ் (குற்றியலிகரம்); சில்லிசை - மெல்லிய இசை; அசுணம் - இசை கேட்கும் ஓர் பறவை; இன்னாவிசைகேட்கின் உயிர்விடும். (9)
191. மறவுரவோர் - பாபத்தையே வலிமையாக உடையவர்கள்; சிகையெரி பங்கினர் - நெருப்பெனச் சிவந்த மயிரை உடையவர்கள்; செல்லென ஆர்ப்புடையோர் - இடிபோன்று சப்திப்பவர்; நடலை - வஞ்சனை; ககனமுறு அமரர்கள் - ஆகாயத்தில் பொருந்திய தேவர்கள்; குகன் - ஓர் வேடன்; இராமருடன் நட்புப் பூண்டவன். (10)
சிறுதேர்ப்பருவம்
192. பாவாரும் - வெல்லப்பாகு போன்று பொருந்திய; சண்ட வேகம் - மிக்க வேகம்; வில்லின் விடும் ஏ ஆகி - வில்லிலே விடும் அம்பாகி; புராந்தகன் - புர + அந்தகன், புரங்களுக்கு யமன் என்று பொருள்; இது சிவனுக்குப் பெயர். ஆவாகி - எருதுவாக ஆகி; சிவபெருமானை எருதாக ஆகித் தாங்கினர் திருமால். (1)
193. சுந்தர மடந்தை - இலக்குமி; புவிமான் - பூமிதேவி; துணையடிப்போது - இரண்டு பாதங்களாகிய மலர்கள்; மடமாது அசோதை - மடமைக் குணமுள்ள மாதான யசோதை; தக்கணை - தட்சணை; "கலை பயிலு நாளின் ............. நீலமுகிலே”:- சாந்தீப முனிவரிடத்துக் கண்ணன் கல்விகற்று அந்த ஆசிரியருக்குக் குருதட்சணையாக, பிரயாகை தீர்த்தத்திற்குச் சென்று இறந்த குமாரனை, வருணனால் அறிந்து 'பஞ்சசன்' என்பவனைக் கடலில் சென்று வதைத்து இவன் உடலினாகிய 'பாஞ்சசன்னியம்' என்னும் சங்கைக் கைக்கொண்டு யமபுரம் சென்று ஆச்சாரியார் புத்திரனை மீட்டுக் கொடுத்தார். (2)
194. உருத்திரர்கள் 11, சூரியர்கள் 12, வசுக்கள் 8, அசுவனி தேவர்கள் 4, ஆக 33-தேவர்கள். மருக்கமழும் - வாசனை வீசும்; வட திசைக்கதிபன் - குபேரன்; பீதகம் - பொன்; குசேலன் - துவாரகைக்கு வந்தபோது அவன் கொடுத்த அவலினைக் கண்ணன் உண்ணும் போது குசேலனுக்குச் செல்வம் உண்டாக வேண்டுமென்று நினைக்க அங்ஙனமே ஆயிற்று. (3)
195. இந்திரன் மகன் - அர்ச்சுனன்; குணபால் - கிழக்குப்பக்கம்; கொடைமிக்க திறல் மன்னன் - கன்னன்; மிசை - மீது; 17-ஆம் நாள் யுத்தத்தில் அர்ச்சுனன் விடும் சரங்களால் கன்னன் சோர்ந்து கிடக்க அப்போது அவன் செய்த தருமமெல்லாம் திரண்டு தருமதேவதையாகி அர்ச்சுனன் விடும் பாணங்களையெல்லாம் விழுங்கக் கண்ணன் பிராம்மணனாகிச் சென்று கன்னனிடமிருந்து, தருமங்களையெல்லாம் தானமாகப் பெற்றார். (4)
196. செங்கதி ருடுக்கள் - சிவந்த கிரணங்களை வீசும் நட்சத்திரங்களின் தலைவனாகிய சந்திரன்; கம்பலை - நடுக்கம்; முனிவன் - விசுவாமித்திரன்; வஞ்சி கைப்பிடித்த நிதி - வஞ்சிக் கொடி போன்ற சீதாபிராட்டியின் கையைப் பிடித்த செல்வமே; தாடகை :- இவள் ஓர் அரக்கி. இவள் மக்கள் சுபாகு, மாரீசன் என்பவர்கள். (5)
197. நிருதி - அரக்கியான சூர்ப்பனகை; தம்பி - இலக்குமணன் மறையாகி - வேறு உருவங்கொண்டு; நெய் நிணம் - எண்ணெயும் கொழுப்பும்; நெடிய காது இதழ் - நீண்ட காதும் உதடும்; நாசி – மூக்கு; செய்யவள் - இலக்குமி; கோதாவரி நதி தீரத்தில் பஞ்சவடி என்ற இடத்தில் சூர்ப்பனகை வேறுருவம் எடுத்து இராமனின் துணைவியான சீதையைத் தூக்கிச்செல்ல நினைக்க இலக்குமணன் உடைவாளினால் அவளது காது, உதடு, தனம், மூக்கு இவைகளை அரிந்துவிட அவள் ஓவென்று அலறி இராமன் முன் பணிய, இராமன், "தாயே, நீ யார்?" என்று கேட்டான். (6)
198. முந்நீர் அரசன் - கடலுக்கு அரசனான வருணன்; உவசித்தது உபாசனை செய்தது; கணை - அக்கினிக்கணை; பனித்து - நீர் சொரிந்து; நடலை - பொய்; கோளரி - கொல்லும் கொள்கையுடைய சிங்கம்; குன்றம் என்னும் சிலை- மலையாகிய கற்கள்; இராமன் சீதையை மீட்க இலங்கை செல்ல வேண்டியிருந்தது: அதனால் கடலைக் கடக்க அணை கட்ட வேண்டி வருணனை எண்ணி ஏழுநாள் சர சயனத்திருக்கவும் அவன் வாராததால் கோபித்துப் பாணத்தை எடுக்க வருணன் பயந்து ஒரு மணிமாலை கொண்டு வந்து சரணடைய இராமர் தான் எடுத்த அம்பிற்கு இலக்கு யாதென்று கேட்டு அவன் சொற்படி மருக்காந்தாரத் தீவிலுள்ள இராக்கதர் மேல் ஏவிக் கொலை புரிந்தார். (7)
199. கார்நிறக்கோதை - மேகம் போன்ற கூந்தல்; தம்பி - இலக்குமணன்; கதிரவன் பெருமதலை - சுக்கிரீவன்; ஏர் - அழகு; இலங்கை அரசன் - விபீஷணன்; எதி பரத்துவன் - துறவியான பரத்துவாச முனிவர்; ஆர் சுவை - பொருந்திய சுவை; போனகம் - உணவு; மாருதி - அனுமான்; பரத்துவாசர் ஆசிரமத்தில் இராமர் வந்தபோது பதினான்கு வருடங்களும் முடிய பரதன் தன் சபதப்படி தீயில் விழுவான் என்று அனுமனை அயோத்திக்கு அனுப்புவிக்க அவர் சென்று செய்திகூறிச் சாப்பிடுவதற்குள் வந்துவிட்டார். அப்போது இராமர் அனுமனையும் உடன் வைத்துக்கொண்டு உண்டார். (8)
200. மாகத் தமரும் புத்தேளிர் - ஆகாயத்திலுள்ள தேவர்கள்; யூகம் - படை வகுப்பு; இதை வியூகம் என்பர்; அணை திருத்தி - அணைகட்டி (சேது பந்தனம்); இலங்கணி:- இலங்கையைக் காத்திருந்து அனுமன் வந்த காலத்துத் தடைசெய்து அவனாலறையுண்டிறந்த அரக்கி; புட்பகம் - புட்பக விமானம்; பதி - அயோத்தி நகரம்; மிதிலை மடமான் - சீதை; குருகை முனிவன் - நம்மாழ்வார்; குட்டந்தடந்தேர் - சிறிய விசாலமான தேர். (9)
201. கொடிஞ்சி - தேர்மொட்டு; உருள் சக்கரம்; மறை வேதங்கள்; பரி - குதிரை; ததியருள மலர் - வைணவ அடியாரின் மனமாகிய பூ; ஆராதனை செய்து உவந்து ஏத்த எனப்பிரிக்க; சூரியன் கிரணமோ என்று விளங்கும் மரகதத்தைத் தேர் மொட்டோடு கூடிய தேராக அமைத்து வேதங்கள் நான்கையும் குதிரைகளாகச் சேர்த்து, அடியார்களது மனமாகிய மலரை நீண்ட தேர் வடமாகப் பூட்டி அன்போடு அக்கயிற்றைப் பிடித்துத் துதிக்க என்று பொருள் கொள்க. (10)
வாழி
------
202. சேனேசன் - இவர் வைணவ ஆச்சாரியார். திருமகளுக்கு அடுத்தபடியாகக் கூறப்படுவர்; இவர் விஷ்வக்ஸேனர் எனப்படுவர். இவர் வரலாற்றை இராகவர் பிள்ளைத்தமிழ் தாலப்பருவம் 6-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. சாந்தூரன் - பெரிய நம்பி யாயிருக்க வேண்டும். காப்புப்பருவம் கடைசிப் பாட்டின் குறிப்பில் காண்க. பூதூரன் - இராமானுசர்; இசை - புகழ்; வசை - இகழ்; நாவீரன் முதலீரைந்து பேர்கள்:- மதுரகவியாழ்வார், ஆண்டாள் நீங்கிய பதின்மர்; நாவீரன் - நம்மாழ்வார். நஞ்சீயர்:- இவர் திருநாராயணபுரத்தில் 4214 கலிக்குமேல் விஜய வருடம் பிறந்தார். பட்டர் திருவடி சம்பந்தி; இவர் வேதாந்தி என முதலில் நாமம் பெற்று இருக்கையில் வாத பிக்ஷைக்கு வந்த பட்டரால் செயிக்கப்பெற்றுச் சிலநாளிருந்து பிக்ஷைக்கு வந்த ஸ்ரீ வைஷ்ணவருக்குப் பிக்ஷையிட மறுத்த தேவியை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்துப் பெண்சாதிக்களித்துக் குருதக்ஷணை கொண்டு யதியாச்ரமம் அடைந்து ஆசாரியரைக் காணப்போகையில் பட்டர், ‘நம் ஜீயர் வந்தார்' என அன்று முதல் இவர்க்கு நஞ்சீயர் எனப்பெயருண்டாயிற்று. இவர்க்கு ஸ்ரீ ரங்கநாதரென்பது தாசிய நாமம் (இயற்பெயர்)
(வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று).
------------------
This file was last updated on 19 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)