pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 5
புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ்


putuvai tiripuracuntari piLLaittamiz
(piLLaittamiz kottu - part 5)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 5
புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------
சமீபத்தில் தாயகத்தோடிணைந்த புதுச்சேரியையறியாதார் ஒருவருமிலர். இந்நகரினருகில் பெண்ணையாறும் வராகியாறும் செல்கின்றன: வராகியாறு செஞ்சிமலையில் உற்பத்தியாகிறது. பாரதியார் போன்றவர் வாழ்ந்து வந்த இந்நகரில் சைவ மதத்தினரான முத்துக்குமரர் என்பவர் இப்பிள்ளைத்தமிழைச் சொற்சுவை, பொருட்சுவைபட யாத்துள்ளனர். இப்பிள்ளைத்தமிழின் பெருமையை இதற்குச் சிறப்புப்பாயிரங் கொடுத்த 11- புலவர்களின் வாக்கினாலறியலாகும். விரிவாக ஆசிரியர் வரலாறு அறியமுடிய வில்லை.

முதற்கண்ணுள்ள துதி மணக்குள விநாயகரைப் பற்றியது. இது துதியாக இருப்பினும் காப்புப்பருவத்தி லிணைத்து விட்டிருப்பதால் அங்ஙனமே அச்சிடப்பட்டுளது. ட்யூப்ளேவுக்குப் பின் வந்த கவர்னரொருவர் இவ்விநாயகரைக் கடலில் எறிய உத்தர விட்டாராம். அன்று இரவில் விநாயகர் தான் கடலில் மிதந்து வருவதாகவும் எடுத்துக் கோயிலில் வைக்குமாறும் கவர்னரின் கனவில் ஆக்ஞாபித்தார். கவர்னர் அங்ஙனமே செய்தாராம். அவர் வெள்ளைக்காரத் தெருவில் இன்றும் அவர்களால் போற்றப்பட உள்ளனர்.

இடம், ஈசுவரர் பெயர்:- இங்குள்ள இடம் வேதவனம் என்பதும் சிவபெருமான் பெயர் 'வேதபுரிநாதர்' என்பதும் “வேதவன மான தல நீடெழில்செய் கோயிலுறை வேதபுரி நாதர் பதம்........) (439) “ஆரணவன முறை திரிபுரசுந்தரி.......” (440) என்றபாடல் களினின்று போதருகின்றன. தலவிநாயகர்:- தலவிநாயகர் வேதவிநாயகர் என்பது "மேவுற நிலைபெறு சினகர நின்றருள் வேத விநாயகனே'' (440) என்பதினின்று வெளிப்படுகிறது.
சிற்றில் கட்டுதலிலேயே பந்தாடுமாறும் அம்மானை யாடுமாறும் கூறி இரண்டினையும் இவ்வொன்றிலடக்கினர். இத்தலத்திற்குத் தலபுராணம் ஒன்றுளது என்பது 409, 504-ஆம் பாட்டுக்களா லறியலாம். சிறுவீடு கட்டுவதில் பாவையாடுக என்று கூறியது சங்ககாலத்துமுண்டு என்பதனை "அலவனாட்டியும் உரவுத்திரையுழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு” [பட் - பாலை. 101-102) என்பதாலறியலாம். 481-ஆம் பாட்டில் "பச்சைமணி ......... முத்தாஞ்சனம் பண்புட னெடுத்தலொக்கும்'' என்பதில் அஞ்சனம் ஆலத்தியைக் குறித்தல் போன்று ''பவமறுஞ் சீயசாத மந்திரத்தால் பளித நீராஞ்சனம் சுற்றி..........” (விநா. பு.) என்று வருவது காண்க. 520, 400-ஆம் பாட்டுக்களில் அம்மையின் அழகிற்குத் தோற்று அன்னம், குயில், மயில் முதலியன ஓடுவது “திண்சிலை புருவமாக................. போவன போன்ற மஞ்ஞை பண்சிலம் பளிகளார்ப்ப நாணினாற் பறந்த போன்ற..............'' [பூக்கொய். 4.) என்ற கம்பராமாயணப் பாடலை யொத்திருப்பது காண்க. 511-ஆம் பாட்டில் ''ஓவாத பேரண்ட மானதே சிற்றிலா" என்ற பாட்டு "வையகமெல்லா முரலதாக மாமேரு வென்னு முலக்கை நாட்டி...'' என்ற திருவாசகத்தை யொத்துளது.

தமிழன்பு:- இவ்வாசிரியர் தமிழ் மொழியினை மிகச் சிறப்பாகக் கொள்கின்றனர். நாவினியன் மேவு தமிழ்மாறன் (439), கலைஞர் தமிழ் கொண்டு......கந்தனை (441), செந்தமிழ்க் குரியானை (443), செல்வத் தமிழ்ப் பாண்டிநாடாள (450), சுவையாரும் முத்தமிழ்ப் பாவலர் (471), தெளிதமிழ் ஒண்புதுவை (516) என்றும் கூறுவனவற்றை நோக்குக. இவற்றிற்கு மேலாக நம்மைத் தமிழ்ச் சிற்றிலுக்கே அழைத்துச் செல்கிறார். எழுத்துக்களைச் சேறாகச் செய்கிறார். மொழியாக்கத்தைச் செங்கல்லாக்குகிறார். ஆஹா! எவ்வளவு இனிதின் தமிழிலக்கணத்தையே சிற்றிலாகக் கட்டி விளையாடச் சொல்கின்றார் நம்புலவர்.
பாட்டுக்களினும் தலைப்புக்களினும் உயர்திணை முன் வல்லினம் மிக்கிருப்பதால் "சிலவிகாரமாம் உயர்திணை'' என்ற விதிப்படியிருக்கலாம் என நினைத்துத் தில்லைச் சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ், புதுவைத் திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ், பாகம் பிரியாவம்மைப் பிள்ளைத்தமிழ் என வல்லினம் மிக்குப் போட்டிருப்பது ஆசிரியர் கொள்கையை மாற்றக் கூடாது என்ற காரணத்தாலேதான்.
இப்பிள்ளைத்தமிழ் டிஸ்கிருப்டிவ் காடலாக்கு 326-ஆம் எண்ணுள்ள ஓலைச் சுவடியினின்று வெளியிடப்படுகிறது.
_____________________________

புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ்

சிறப்புப்பாயிரம்

1. தாண்டவராயக்கவிராசர்
      வெண்பா
426. ஒப்பின் முதல்விக் குவப்புற முத்துக்கும
ரப்பன்சொன் முற்பிர பந்தத்தை - நப்பெருந்த
கைத்தமி ழென்பர் கலைஞ ரிஃதுபிள்
ளைத்தமி ழென்ப ரலர்.      (1)

2. இராமசந்திரக் கவிராயர்
427. உண்ணாது சுரந்தபெருந் தனத்தமுதந் தமிழ்பாட
      வொருவற் கீந்தாள்
பண்ணார்முத் துக்குமரவேள் செய்பிள்ளைத் தமிழமுதம்
      பரிந்துட் கொண்டாள்
தண்ணார்வெண் மதிதவழு மணிமாடத் தென்புதுவைத்
      தன்னின் மேவு
கண்ணான திரிபுரைக்கிங் கெதில்விருப்பம் புலவோரே
      கழறு வீரே.      (2)

3. நயினியப்ப கவிராயர்
428. சீர்பூத்த சைவாக மப்பொரு ளுணர்ந்தவன்
      றிரிபதகைக் குலசேகரன்
றிகழ்தொண்டை நாட்டினுயர் புதுவையம் பதியில்வரு
      செல்வமுத் துக்குமரமால்
பார்பூத்த செந்தமிழ்ப் பாற்கடலின் மதியாய
      பசியபொற் றம்பநிறுவிப்
பகரரிய திருநாவின் மத்திசைத் தன்பெனும்
      பாசமா ரத்தைமதித்துத்
தார்பூத்த வேணியீச் சுரர்வேத புரிநாதர்
      தமதுவா மத்திருக்குந்
தையல்திரி புரசவுந் தரவல்லி யுமைமீது
      சாற்றுபிள் ளைக்கவியெனு
மேர்பூத்த தெள்ளமு தெடுத்துத் திரட்டிநல்
      லிசைகொண்மாந் தர்கள்யாவரு
மிகபர மிரண்டினு மகிழ்வுபெற் றுய்யவவ
      ரின்செவிக் கூட்டினானே.       (3)

4. வீராசாமி முதலியார்
429. கற்கண்டைச் சருக்கரையைப் பாகைத் தேனைக்
      கதலிபலா மாவெனுமுக் கனியை வென்ற
சொற்கொண்ட வொருபிள்ளைத் தமிழை யன்பாற்
      சூடினான் புதுவைதிரி புரைக்கு மேரு
விற்கொண்ட பரமனருள் பெற்று வாழும்
      விற்பனன் முத்துக்குமர வேளின் சீர்த்தி
யெற்கொண்டு மேர்சொலத்தான் சேட னாலு
      மிசையாமற் றலையசைத்தா னென்னுங் காலை. (4)

5. வெங்கடாசல முதலியார்
      கலித்துறை
430. வெள்ளச் சடாடவி வேத புரீசனை மேவிவளர்
கிள்ளைத் திரிபுர சுந்தரி மீது கிளர்புதுவை
வள்ளற் குணாலையன் முத்துக்குமார வரோதை யன்சொற்
பிள்ளைத் தமிழை முதலித் தமிழெனப் பேசுவரே. (5)

6. சாம்புசிவக் கவிராயர்
431. சொன்னோக்கி பொருணோக்கித் தொடை நோக்கி நடை நோக்கித்
      துகடீர் மானின்
மென்னோக்கி யாம்பனுவன் மாதுவெள்கி யயனாவில்
      மேவி னாளாற்
பொன்னோக்கி மகிழ்புதுவை வாழ்முத்துக் குமரப்ப
      பூப னானோன்
றன்னோக்கிற் செய்ததிரிபுரை யுமையாட் கினியபிள்ளைத்
      தமிழின் மாதோ.     

7. கூனி போகு ராமசாமி
      வெண்பா
432. முத்துக் குமாரனெனு மூதறிஞன் வேதபுரி
யத்தற் கிடமமர்ந்த வம்மைக்குப் - புத்தமுதாம்
பிள்ளைத் தமிழுரைத்த பெற்றியை யென்சொல்லுகேன்
வெள்ளத் தமியேன் விரித்து.       (6)

8. அருணாசலவுபாத்தியாயர்
      கலித்துறை
433. சத்துக் குணத்தருள் வேத புரீசர் தமதிடப்பாற்
சுத்தக் குலத்தவர் போற்றுந் திரிபுர சுந்தரிமேற்
பத்திக் கணியி தெனப்பா வலர்சொலப் பண்டமிழ்தேர்
முத்துக் குமாரன் முதற்பிர பந்த மொழிந்தனனே. (7)

9. இராமானு சக்கவிராயர்
      வெண்பா
434. வித்துக்கு முன்புதுவை வேதபுரீ சர்மனைமேன்
முத்துக் குமாரன் மொழிந்தது தான் - வித்தைக்குள்
வெள்ளத் தமிழர் விரிஞ்சன்னி தேரும்
பிள்ளைத் தமிழெனவே பேசு.       (8)

10. வாலை தாசன்
435. சீருலவு செந்தமிழ்ப் பாவாணர் தங்களிரு
      செவிகளுக் கினியவமுதாந்
திடமேவு மைம்புலன் வழிச்செலா வடியர்பாற்
      றேக்கரிய வானந்தமாம்
பாருலவு துறவற நெறிச்செல்வோர் தம்முழைப்
      பரபோத மாமுயர்ந்த
பண்பிலகு மில்லறத் தோர்கட் கெலாந்தரும்
      பைந்தருவோ ரைந்தாமெழில்
பேருலவு சிவயோக சித்தர்பாற் சித்தெலாம்
      பெய்திடு பெருங்குளிகையாம்
பிதற்றுபுன் பாவலர் செருக்கறுக் குந்திறற்
      பேசரிய கூர்வாள தாங்
காருலவு சோலைசூழ் புதுவைமுத் துக்குமர
      கவிராச னுள்ளன்புடன்
கௌரிதிரி புரைமீ துரைத்திடும் பிள்ளைநற்
      கவியெனும் பிரபந்தமே.       (9)

11. இதுவும் வீராசாமி முதலியார்
436. புதுவை முத்துக் குமார தொண்டன்றனைப்
      போலோர் கவிமதுரம் பொழியப் பாடுஞ்
சதுரருண்டோ வெனவிரிஞ்சன் வினவினான் சேடன்நான்
      தானென் றானோர்
பதமெனினுந் தோற்றாமன் மால்கொண்டு கடல் வீழ்ந்தான்
      பதுமன் சீறி
மதமுறுநா வைப்பிளந்து காதறுத்து மண்சுமக்க
      வைத்திட் டானே      (10)
---------------

காப்புப் பருவம்

விநாயகர்
437. திருமருவு தம்பிரான் றோழன் முக்கட்சிவன்
      றெய்வத் தலங்கடோறுஞ்
சீர்கொள்பதி கம்பாடு செயலினாற் பெறுபொரு
      டிரட்டிமுத் தாற்றினிதி(லி)ட
வருமைதிக ழாரூர்க் குளத்தெழுபொன் மாத்துரை
      தளவிடும் வணிகனாவந்
தருள்செய்து வேதவன மாமணக் குளமேவு
      மைங்கரப் பிள்ளைகாப்பாம்
பெருமைமிகு மால்வெள் விடைக்கலங் காரனைப்
      பிரியாதிருக்கு முமையைப்
பேசரிய பச்சைப் பசுங்கிளி யைஞானப்
      பிராட்டியைச் சிவதானியைத்
தருமநிறை செல்வியைத் திரிபுர சவுந்தரித்
      தாயைமற் றொப்பின்மணியைத்
தமியேன் குறித்துப் புகன்றிடும் பிள்ளைத்
      தமிழ்க்கவிதை முற்றுதற்கே.       (1)

திருமால்
438. நீர்கொண்ட வேணிப் பிரான்பவள மேனியொடு
      நீலமணி வடிவமின்ன
நிழல்விரி கொழுங்கிரண மாணிக்க நீள்சுட்டி
      நித்தில வடங்கடிகழச்
சீர்கொண்ட முறுவலிள நிலவொழுக வின்னருட்
      டேன்விழிக் குவளைபொழியத்
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரியெனுந்
      தேவியை யுவந்துகாக்க
தார்கொண்ட பைந்துழாய் முடிமீ தணிந்துபஞ்
      சாயுதங் கைத்தலத்திற்
றாங்கியம் போருக மடந்தையை யுரந்தனிற்
      சந்ததமு நீங்காமல்வைத்
தேர்கொண்ட வெண்டிரைக் கடலிடை யனந்தன்மீ
      தினிதாக வறிதுயிலமர்ந்
திலகுபல் லாயிரக் கோடியண் டங்களு
      மின்புறக் காக்குமுகிலே.       (2)

சிவபெருமான்
439. வானவர் பராவுபுரு கூதனெடு நாண்முயலு
      மாதவமுனா வகலு மறையைக் கொடுத்தவர்
வாசமல ரான்முறை வழாதுவழி பாடுபுரி
      வார்சிலை கொடாசாதிப் பெயரைத் தரித்தவர்
மீனமுயர் கேதனம் நேர்பவன தாகநுதன்
      மேலுறு கணாரழலி னெரியச் சினத்தவர்
வேதவன மானதல நீடெழில்செய் கோயிலுறை
      வேதபுரி நாதர்பத மிதயத் திருத்துதும்
ஞானநிறை மோனசிவ யோகநெறி யோர்மனதி
      னாடொறு முலாவுமிரு நளினப் பதத்தியை
நாவினியன் மேவுதமிழ் மாறன்மக ளாயரசு
      நாடியபி டேகமுறு மகுடச் சிரத்தியை
மானமயி லூருமுரு கேசெனொடு காழிவரு
      மாமதலை தானுகரு மமுதத் தனத்தியை
மாசிலடி யார்வினைக டீரவர மேயுதவு
      வாமியபி ராமிதிரி புரையைப் புரக்கவே.       (3)

வேத விநாயகர்
440. தாரணி தனிலெதிர் மகிட னெடுந்தலை
      சாடிய தரணிமலி
தாயென வனுதின மனமுரு கன்பர்
      சகாயி தயாவதனி
யாரண வனமுறை திரிபுர சுந்தரி
      யாயிவ ராகிபரை
யாரியை யுமைதனை யினிது புரந்திட
      வாசில்வி யாதர்மொழி
பாரத மலைமிசை யெழுதி விளங்கொரு
      பாரிய கோடுமுயர்
பானுவி னொளிகெட வெயில்விரி யங்குச்
      பாசமும் வாளவுண
வீரரு முதுகிட வடுதிற லுங்கட
      மீறுக யானனமு
மேவுற நிலைபெறு சினகர நின்றருள்
      வேதவி நாயகனே.      (4)

முருகக் கடவுள்
441. மகபதி பெறுந்தனய னொடுவிணோர்க் குறுபார
      வன்சிறைத் தீர்த்தருள்செவேள்
வரியளி முரன்றுபய னறியதே மலர்நீப
      மஞ்சரித் தோட்குழகநீள்
ககனமுல வஞ்சிறகி, னெகினவா கனமூருஞ்
      கஞ்சனைத் தாக்கிமுனிசெய்
கலைஞர்தமிழ் கொண்டுபுகழ் புதுவைமா நகர்மேவு
      கந்தனைப் போற்றுதுமரோ
பகரரிய தண்டைமணி யரவமோ லிடுபாத
      பங்கயப் பார்ப்பதிமனோ
பவனையடு சங்கரனை நிதமுமே யகலாத
      பண்புடைப் பாக்கியநலாள்
செகமுதவு நங்கையரு ணயனிமா தரிசூரி
      செங்கையுட் டார்க்கிளியினா
டிரிபுர சவுந்தரமி னெனுமனோன் மணியைச்சீர்
      திகழ்ந்திடக் காத்தருள்கவே.       (5)

பிரமதேவன்
442. மேனிலத் தமரர்முனி வர்பரவு கலைமகளை
      மேன்மையுட னாவின்வைத்து
மேதினி முதற்புவனம் யாவுமெவ் வுயிர்களும்
      விழைந்தாதியிற் படைத்துத்
தேனிருஞ் சிறையளி யருந்தி மகிழ்தெய்வச்
      செழுங்கமல மீதிருக்குந்
திசைமுகக் கடவுளிரு பதமலரை யனுதினஞ்
      செங்கைகூப் பிப்பணிகுவாம்
வேனிலா திபமார னாயுதச் சாலையின்
      விளங்குதண் பூம்பொழில்களும்
வெண்சங் குயிர்த்தமுத் தின்நிலவி னாம்பலி
      விரியுநீர்ச் செந்நெல்வயலும்
பானிறத் தூவியன முலவுமலர் வாவியும்
      பலவளங் களும் நிறைந்து
பாங்கர்சூழ் புதுவைவரு திரிபுராம் பிகையெனும்
      பரதேவியைக் காக்கவே.       (6)

வைரவர்
443. விண்ட லஞ்செவி டுறவொ லித்திடும்
      வீர வெண்டையத் தாளினான்
வேத னொண்சிரக் கலமி லங்கிட
      மேவு தாமரைக் கையினான்
திண்டி றற்பெரும் பகைஞ ருட்கிடச்
      சினவு ஞாளிவெஞ் சேனையான்
செந்தமிழ்க்குரி யானை வயிரவத்
      தேவ னைப்பணிந் தேத்துவாம்
மண்ட லந்தனை யவாவி யுண்டருண்
      மாலு டன்வருந் தோகையை
வண்மை சேருமுப் பானி ரண்டறம்
      வளர்த்தி டும்பர தேவியை
யெண்டி சைக்கணின் றடியர் போற்றிடு
      மீச னன்புறு வாமியை
யெழின்மி கும்புது வையிலு றைந்திடு
      மெம்பி ராட்டியைக் காக்கவே.       (7)

திருமகள்
444. நதிபதிகளி லதிமகிமை நிறைசுவைப் பாற்கடல்
      நடுவுளமு தமொடுபுவ னமகிழ்பெறத் தோற்றிமெய்
நடைகொளமரர் தமையரசு திருவுறப் பார்த்தெழில்
      நணுகுமணி வணனைமருவி யுலகினைக் காத்துமன்
கதியையடி யவர்கள்பெறு நன்முறையருட் காட்டியெண்
      கணனுமிரதி பதிதனையு மகரெனப் பழுத்துநன்
கவிதைமல ரையரிதனது புயமதிற் சூட்டிமென்
      கனகமுளரி மிசையுறையு மயிலினைப் போற்றுதும்
மதியினளிசெ யொளிர்வதன நிமலியைப்பாட் டளிவதியு
      மலரினறை கமழு மளகியைத் தீட்டரு
மறைகள்புக ழுபயகம லசரணியைப் போர்க்கெதிர்
      மகிடனெடுமு டியையிடறு சமரியைச் சேட்பொலி
பொதியமுனி தமிழினிசை கொள்கௌரியைப் பூத்திகழ்
      பொருவிலப யமொடுவரத கரமினைச் சீற்றமில்
புனிதமுறு தவருமெவ ருமினிதுளத் தேத்திய
      புதுவையமல னிடம்நிலவு குயிலினைக் காக்கவே. (8)

கலைமகள்
445. துதியார்ந் திலங்குகலை மகளெனப் பெயர்கொண்டு
      தூயபடிக மாலைவீணை
சுருதிநூற் புத்தகங் கரமேந்தி யெண்கண்
      டுளங்குமொரு வனைமணந்து
விதியா கமங்களுணர் பாவாணர் நாவினவர்
      மேன்மைபெற வேநடிக்கும்
வெண்கமல நாயகி மணிச்சிலம் பணிபாத
      மென்மலரை முடிதரிப்பாம்
மதியா தவன்காலை மாலையெனு மிருபோது
      மாறாது வந்துவந்து
மாவளங் காணல்போன் மீதுலவு முயர்புரிசை
      மன்னுபுது வாபுரிதனில்
நதியார் நறுங்கொன்றை முடிவிளங் கிடவுளம்
      நயந்தவரு ளாகரன்பால்
நண்ணியெண் ணான்கறமோ டுயிர்பல வளர்க்குமொரு
      நங்கையைக் காக்கவென்றே.      (9)

சத்தமாதர்கள்
446. மறைவில்வே லாழிபடை வாள்வச்சி ரஞ்சூல
      வண்படை தரித்தனம்விடை
மயில்கருட னடுசிங்கம் யானைபே யிவையூர்ந்து
      வருபிரா மணிகருணைகொண்
டுறுமயேச் வரிகௌ மாரிநா ராயணி
      வராகியிந்தி ராணிவிசய
மோங்குகங் காளியென் றுரைசத்த மாதாக்க
      ளுபையதா ளைப்பணிகுவாம்
சுறவமெறி திரையகடு கிழியவரு நீத்தந்
      துளங்கிடு பெண்ணைநதியும்
தூயமா தவமுனிவர் செய்மகச் சூழலும்
      சுரரா லயங்கள்பலவும்
நறியபூம் பொழில்களும் வயல்வளங் களுமல்க
      நன்மைதிகழ் தொண்டைநாட்டின்
நாவமிகும் புதுவையுறை திரிபுராம் பிகையென்னும்
      நங்கையைக் காக்கவென்றே.       (10)

முப்பத்து மூவர்
447. நன்மைதிக ழெல்லைமா காளிபத் திரகாளி
      நாடருங் காடுகாளி
நவசத்தி பஞ்சசத் திகளொடு பராசத்தி
      நாமமுறு தீர்த்தசத்தி
வன்மைமிகு சிவபூத கணர்வீர பத்திரர்
      வயங்கொளரி கரபுத்திரர்
மாதிரத் தலைவர்மதி யாதித்த ருடனுருத்
      திரர்மருத் துவர்வசுக்கள்
தன்மநெறி சேர்பெருந் தொகையமர ரரமகளிர்
      தண்டீசர் நந்தீச்சுரர்
சரணபங் கயமலரை மறவாம லன்பினொடு
      சந்ததமும் வந்தனைசெய்வாம்
பொன்மதிற் சிகரகோ புரமிலங் கிடுவேத
      புரமேவு சிவனிடப்பாற்
பொருந்துதிரி புரசவுந் தரவல்லி யுமைதனைப்
      புறங்காத்து நிற்கவென்றே.       (11)
------------------------

செங்கீரைப்பருவம்

448. பைவைத்த மணிமுடிக ளோராயிரங் கொண்டு
      பாந்தளா சேந்துபுவனப்
பல்லுயிர் களுந்தழைத் தோங்கியெஞ் ஞான்றுமே
      பண்பினொடு தலையெடுக்க
மெய்வைத்த வேதனண் டங்களைச் சிட்டிக்கு
      மேன்மையொடு தலையெடுக்க
விரிதிரைக் கடல்வண னவற்றினைக் காத்தருளும்
      வெற்றியொடு தலையெடுக்கக்
கைவைத்த மான்மழுப் படையாள னிவைகண்டு
      காதலொடு தலையெடுக்கக்
கருணையொடு மெள்ளக் கவிழ்ந்திருகை யூன்றிமென்
      கமலமுக மேறெடுத்துத்
தெய்வத்தமிழ்ப் புலவர் போற்றுதரு மச்செல்வி
      செங்கீரை யாடியருளே
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரவல்லி
      செங்கீரை யாடியருளே.       (1)

449. துங்கமிகு செம்மணி பதித்தபொற் பந்திலகு
      சூழியக் கொண்டையாடச்
சோடச கலாமதியி னொளிர்வச் சிரச்சுட்டி
      சுந்தர நுதற்கணாடப்
பைங்கதி ரெறிக்குமர கதமணித் தொங்கலிரு
      பார்வையுறு செவியினாடப்
பன்னக விரத்தினக் கடக்கே யூரமென்
      பாணியில் விளங்கியாடப்
பொங்குதண் சுடருமிழு முத்தார மார்பிற்
      புரண்டசைந் தொலிசெய்தாடப்
பொற்பிலகு சிற்றடியின் மொய்த்தகிண் கிணிநூ
      புரந்தண்டை கொஞ்சியாடச்
செங்கமல வல்லிகலை வல்லிதுதி மலைவல்லி
      செங்கீரை யாடியருளே
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரவல்லி
      செங்கீரை யாடியருளே.       (2)

450 வல்விற் றடக்கைவீ ராதிபரு மின்னிலகு
      வயவாள்விடா மறவரும்
வண்கொல்ல னுலையிற் சிவந்துதோய்ந் திலைகொணெடு
      வடிவேற்படைத் தலைவரும்
வெல்வகை யறிந்துபகை சாயமுன் பாய்புரவி
      மீதோங்கு விறலாளரும்
வெஞ்சம ருழக்குமும் மதமீறு கூர்ங்கோட்டு
      வெற்றியா னைப்படைஞருஞ்
சொல்வயம் பெறுமேக மண்டலந் தாவியுயர்
      சுடர்மணித் தேராளருஞ்
சூழ்மன்னர் மந்திரிபிர தானிமுதல் யாவரும்
      தொழுதுநின் னேவல்கேட்பச்
செல்வத்தமிழ்ப் பாண்டி நாடாள வருநங்கை
      செங்கீரை யாடியருளே
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரவல்லி
      செங்கீரை யாடியருளே.       (3)

451. தண்டரள மணியுயிர்த் திடுமிப்பி யாயிரக்
      தான்சூழ வீற்றிருக்குந்
தகைசே ரிடம்புரிச் சங்கமச் சங்கஞ்
      சகச்சிரஞ் சூழவரசு
கொண்டிடை யிருக்கும் வலம்புரிச் சங்கமது
      கூறுமுன் றொகைசூழ்தரக்
கொற்றமோ டிருக்குஞ் சலஞ்சலச் சங்கமக்
      கூட்டங்கள் சூழநாப்பண்
வெண்டிங்க ளோவெனும் பாஞ்சசன் னியச்சங்க
      மேவிய தெனச்சிறந்த
மெல்லியர்கள் சதகோடி புடைசூழ நடுவினிது
      வீற்றிருந் தருள்கௌரியே
தெண்டிரைக் கடலுலகி னெவ்வுயிரு மோங்கநீ
      செங்கீரை யாடியருளே
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரவல்லி
      செங்கீரை யாடியருளே.       (4)

452. நான்குதிக் குந்தலை திறம்பவொன் றொன்றாக
      நாட்டியும் பகலைத்தரும்
ஞாயிறு குடக்கினிலு மதிவடக் கதனிலும்
      நயந்துதித் தெழவகுத்து
மீன்குதிக் குஞ்சத்த சாகரமு நிலைவிட்டு
      வெவ்வேறதா மாற்றியும்
மேருவைப் பம்பர மதாச்சுழற் றியுமெட்டு
      வெற்புமிட மறவிதித்தும்
மூன்குதிக் கும்வச்சிரப் படையன் அனீகமோ
      டுருத்தெதிர்த்துப் பொருதபோ
தொருநொடியி லாங்கவனை மாயத்தெ ழுப்பியு
      முவகையுற்ற விளையாடல்செய்
தென்குதிக் குங்கடம் பனையருள் பசுங்குழவி
      செங்கீரை யாடியருளே
தென்புதுவை மருவுதிரி புரசவுந் தரவல்லி
      செங்கீரை யாடியருளே.       (5)

வேறு
453. நவமிகு தெண்பனி மலையுத வந்தனி
      நங்காய் கங்காளி
நதிபதி தந்திடு மமுதினு மின்சொல்
      நலங்கூ ருந்தேவி
தவமுறு மந்தணர் துதியை மகிழ்ந்தருள்
      தந்தோய் செந்தேனே
தளையவிழ் சண்பக மகிழ்தள வங்கமழ்
      தண்டார் வண்டோதி
பவமக லும்படி யடியவர் கும்பிடு
      பண்பார் வண்பாவை
பணமணி யொண்டொடி விரலணி சங்கெறி
      பந்தாரும் பாணி
சிவபர மன்றன் னிடமுறு மம்பிகை
      செங்கோ செங்கீரை
செகமுழு துந்தரு திரிபுர சுந்தரி
      செங்கோ செங்கீரை.       (6)

454. கனகொலை வஞ்சகர் வெருவுறு சங்கரி
      கண்பா ரென்றேநின்
கமல பதங்கரு துவர்முன் வரும்பரை
      கண்டோ பண்பாடு
மனமுறு பண்டிதர் புகழு நிரந்தரி
      வண்கா வொண்கூடல்
வழுதி செயுந்தவ மருவு துரந்தரி
      மன்பார் கொண்டாடு
மனநடை யிந்திரை கலைமகள் கங்கை
      யகங்கூ ரன்பாகி
யனுதின மும்பணி செயமகி ழம்பிகை
      யஞ்சீர் குன்றாத
தினகர னென்றியன் மணிதிகழ் குண்டலி
      செங்கோ செங்கீரை
செகமுழு துந்தரு திரிபுர சுந்தரி
      செங்கோ செங்கீரை.       (7)

455. மருவகுள ந்தம நகநற வஞ்செழு
      மந்தா ரஞ்சாதி
வழைகமழ் சண்பக மலரி புருண்டி
      மணங்கால் செங்கோடு
குருகுசெ வந்திம தலையல ரஞ்சனி
      கொந்தார் மஞ்சாடி
குழையொளிர் குங்கும மயிலை குருந்தொடு
      கொங்கார் சிந்தூரம்
விரவிய நந்தன வனமுட னம்புய
      மென்ற தொண்போது
விரிகுமு தந்திகழ் தடமரு தந்தரு
      விஞ்சே ரெஞ்சாத
திருவள மொன்றிய புதுவை வரும்பரை
      செங்கோ செங்கீரை
செகமுழு துந்தரு திரிபுர சுந்தரி
      செங்கோ செங்கீரை.       (8)

456. மேலிமை யோர்கள் பராவிய வாமனர்
      வீறு பரந்தாமர்
வேணுவை நாதமொ டூதுசெவ் வாயினர்
      வீடுத வுந்தேவர்
காலிபி னாயர் சிறாருட னேகினர்
      கார்புரை யுந்தேகர்
காமனை வேதனை யேயருள் சீதரர்
      கானுல வந்தாளர்
வாலிபி னோனுற வாகு மிராகவர்
      வான்வை குந்தேசர்
மாபது மாதன மாதுறை மார்பினர்
      மாமணி யொண்பூணர்
ஆலிலை மீதுறை மாயவர் சோதரி
      யாடுக செங்கீரை
யாய்புகழ் சேர்புது வாபுரி நாயகி
      யாடுக செங்கீரை.      (9)

457. வேதியர் மாமுனி வோர்கள்செய் மாதவு
      வேள்வி முடிந்தேற
வீறுட னேதுதி தேவர்கள் பூசை
      விழாநித முண்டாக
வோதரு மேலவர் நூனெறி நீதி
      யுலாவு திறன்கூர
வோதிம நேர்நடை யார்நிறை யான்மிகு
      மோகை நலஞ்சார
மாதிக மாகரி தேர்படை வீரர்
      வழாவி சயந்தாவ
மாநில மீதற நீடழ காம்கவி
      வாணர் குலந்தேற
வாதி மனோன்மணி யேபரை யேயினி
      தாடுக செங்கீரை
யாய்புகழ் சேர்புது வாபுரி நாயகி
      யாடுக செங்கீரை.       (10)
----------------------

தாலப்பருவம்

458. இலைகொ ணறும்பூ வதில்நெய்கொண்
      டெழிலார் தலையுச் சியிலிட்டே
யினியமண மஞ்சட் பொடியு
      மிளம்பச் சறுகு முறத்திமிர்ந்து
நிலைசெய் தெய்வக் கங்கைநன்னீர்
      நிறைபொற் கும்ப முகந்தாட்டி
நிலவி னொளிர்பூந் துகில்தன்னா
      னீரம் புலர மெய்துவட்டிச்
சிலையொண் ணுதலிற் காப்பணிந்து
      திருக்கண் மலர்க்கஞ் சனந்தீட்டிச்
செம்பட் டணிவேய்ந் தயினிநீர்
      சிறக்கச் சுழற்றி யிமையமலைத்
தலைவன் மனைவி சீராட்டுந்
      சத்தி தாலோ தாலேலோ
தாயே புதுவைத் திரிபுரசுந்
      தரியே தாலோ தாலேலோ       (1)

459. பழைய வேதங் காலாகப்
      பகரா கமமேற் பரப்பாகப்
பதினெண் புராணங் கொடுங்கையதாப்
      பலவாங் கலைநல் விதானமதா
வழுவி றத்து வங்கயிறா
      மருவு ஞான மெல்லணையா
வனைபே ரின்பத் தொட்டின்மிசை
      வளருங் கருணைப் பசுந்திருவே
முழுமெய் யன்பிற் சிவபூசை
      முயலு மிடையிற் கம்பைநதி
முடுகக் கண்டுட் கலங்காது
      முதல்வன் றன்னை வளைக்கையுறத்
தழுவிக் குறிவைத் திடுகும்பத்
      தனத்தாய் தாலோ தாலேலோ
தாயே புதுவைத் திரிபுரசுந்
      தரியே தாலோ தாலேலோ.       (2)

460. பூமங் கையும்பார் மகளுமிரு
      புறநின் றணிகொள் வடம்பற்றப்
புகல வரிய திருநாமம்
      புகழ்ந்து கலைமா திசைபாட
நேமங் கொடுதெய் வக்கங்கை
      நிழல்கால் செய்வட்டந் தாங்க
நிகரில் கவரி சசியேந்த
      நிருத்தம் புரிய வரம்பையர்க
ளேமங் கொளுமா தவமடவா
      ரினிதிற் சுபமங் கலங்கூற
வெழின்மா ணிக்கத் தொட்டிலில்வீற்
      றிருக்கும் பரையே பரிமளப்பூந்
தாமங் கமழு நறுமலர்க்குந்
      தளத்தாய் தாலோ தாலேலோ
தாயே புதுவைத் திரிபுரசுந்
      தரியே தாலோ தாலேலோ.       (3)

461. வண்ணங் கரிய மாலயனு
      மறையுந் தேடற் கரியவனாம்
வயங்கு திருநீற் றொளிபூத்த
      வன்னி வடிவாங் கயிலாய
னெண்ணந் திகழ்மீன் வலையனா
      யிடையிற் கச்சையொடு சுரிகை
யிசையக் கட்டி நெய்தலணிந்
      தினிதா வந்து நந்தியெனுந்
திண்ணம் பெறுநீள் கொடுஞ்சுறவைத்
      தியங்க வலைக்குட் படுத்தித்தெண்
டிரையா மனைக்கு ளுன்னைமணஞ்
      செய்ய வளர்மெய் யன்புமிகுந்
தண்ணந் துறைவன் றவத்திலவ
      தரித்தாய் தாலோ தாலேலோ
தாயே புதுவைத் திரிபுரசுந்
      தரியே தாலோ தாலேலோ.       (4)

462. பந்த பாசத் தொடரறுத்த
      படிவர் செயுநற் றவப்பேறே
பரிந்துன் றிருப்பா தம்பணிவோர்
      பழநொய் கோடைக் கலர்ப்பொழிலே
யெந்த நாளுந் தேனிப்போ
      ரிதய கமலத் துறைதேனே
யினிய புகழைப் பாடுமவ
      ரிடரா மிருணீத் தருளொளியே
சிந்தை யுறப்பூ சனைபுரிவோர்
      சென்மக் கடலிற் கெழிற்புணையே
தேறு மெய்ஞ்ஞா னச்செல்வர்
      சேருமுத்திக் கொருவழியே
தந்த னொடுகந் தனையளித்த
      சத்தி தாலோ தாலேலோ
தாயே புதுவைத் திரிபுரசுந்
      தரியே தாலோ தாலேலோ.       (5)

வேறு
463. மஞ்சக மிகுகளி கொண்டுல வியமா காவூடே
      மண்டிய பலபல வின்கனி வழிதே னாறாயே
விஞ்சல வுழுநாகை கண்டிடு நெறிகால் வாயோடா
      மின்கதி ருறுசெநெ லம்பணை பதனினீப் ரேபோல்பா
யெஞ்சலில் புதிய வளந்தரு மெழின்மா றாநீள்சீ
      ரென்றுநிறை புதுவை வந்தருண் மயிலே மேலானோ
ரஞ்சலி செய்மகி ழுஞ்சிவ பரையே தாலேலோ
      அந்தரி திரிபுர சுந்தரி யுமையே தாலேலோ. (6)

464. மண்டிய களைகடி யுங்கடை சியர்வாய் மாறாதே
      மங்கல நிறைகுமு தந்திகழ் விழிதூ நீரூடே
கண்டிடு கருநெய்த லென்றெணி யளிகேர் டாகோடி
      கஞ்ச வதனமுற வந்தல மரலா றாளாதே
யொண்டிரு விரல்கொ டெறிந்திட வுமவா வோடாதே
      னுண்டிட மறிதரு நந்தலில் வயல்பால் சூழ்சீரே
யண்டிய புதுவை யமர்ந்தருள் குயிலே தாலேலோ
      அந்தரி திரிபுர சுந்தரி யுமையே தாலேலோ. (7)

465. மணிமுடி யரசர்க ணிதமனு முறைதவ றாகாமே
      மண்டல முறுதரு மங்களி னிலைபாழ் போகாமே
துணிவொடு புலவர்கள் கலைபயி லறிவது மாறாமே
      தொண்டர்கண் முன்நமன் வந்தட லுடனே சீறாமே
பணிவுறு தகுதியர் தமதுற வனுதின மோவாமே
      பண்புயர் சிவசம யம்புற நெறியே தாவாமே
அணிநல னெறிமிகு புதுவையில் வளர்கிளி தாலேலோ
      அந்தரி திரிபுர சுந்தரி யுமையே தாலேலோ. (8)

466. பூவணி புழுகு சவாதொடு கலவைக டானோர்பால்
      பொங்கொளி பொலனணி கண்டிகை நகுகாழ் தானோர்பால்
தீவுக ளுறுகல மேல்வரு பல்பொரு டானோர்பால்
      செம்பொனு மிரசித முங்குல வுகுவா றானோர்பால்
மாவய மதகரி வாகன முதலிய தானோர்பான்
      மங்கல முடனிறை யும்பல வளமே நீள்சீரா
ராவண முறுபுது வாபுரி வளர்கொடி தாலேலோ
      அந்தரி திரிபுர சுந்தரி யுமையே தாலேலோ. (9)
-
467. தளவத் திளமுகை யெனவொத் தருணகை யார்மானே
      சந்தத மிறையவர் பங்கினு ளினிதா வாழ்மாதே
முளரிக் கணனொடு வருமுத் தமிகா காபாலி
      மொய்ம்புட னெதிர்மகி டன்றிற லறவே காய்சூலி
யுளமிக் களியொடுன் நளினப் பதமற வாதார்பா
      லும்ப ருலகசுக மிம்பர்பெற வருள்செய் மாதாவே
யளகைக் குவமைசொல் புதுவைத் தலைமக டாலேலோ
      அந்தரி திரிபுர சுந்தரி யுமையே தாலேலோ. (10)
----------------------------

சப்பாணிப் பருவம்

468. வெண்டா மரைச்செல்வி யொடுகழங் கம்மனைகள்
      விளையாடு செங்கையினால்
வீறுற்ற முத்தேவ ருக்குமுத் தொழில்காட்டி
      மேன்மைதரு செங்கையினாற்
றொண்டா னவர்க்கதிக பாக்கிய முவந்தருள்செய்
      சூடகச் செங்கையினாற்
சோதிவெயில் விரிபூவிலைச்சூல மேந்துமிகு
      சுந்தரச் செங்கையினால்
பண்டாவு மென்மொழி மிழற்றுபைங் கிளிகுலவு
      பண்புற்ற செங்கையினாற்
பச்சைமயில் வாகனக் கடவுளை யெடுத்தருமை
      பாராட்டு செங்கையினாற்
றண்டாது கமழ்காந்த ளொத்தசெங் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
சதுர்வேத மெய்த்தலைவி புதுவா புரிக்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே.       (1)
      -----------------------------------
469. அங்கணுல கோங்கிலங் கையுமயேந்திரமுமணு
      வாமென விகழ்ந்தேயுயர்ந்
தந்தரம் புவனிபா தலமென்னு மூன்றிடத்
      தருமையாச் செம்பொன்னினுந்
துங்கமிகு வெண்பொன் னினும்கருங் பொன்னினுஞ்
      சூழ்மதி லுடனிலங்கித்
தூவியம் பறவைபோ லெங்கும்பறந் துலவு
      தோலாத வலிபடைத்துப்
பொங்கமொ டெழுந்துவிண் ணாடாதி நாட்டின்மேற்
      பொள்ளென விறங்கிவதைசெய்
புரமூன்று மப்புரத்த சுரரு மொருங்கறப்
      புன்முறுவ றந்திட்டமா
தங்கமலை வில்லிகைப் பற்றுசெங் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
சதுர்வேத மெய்த்தலைவி புதுவா புரிக்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே.       (2)

470. அருமறைக ளாகம புராணசாத் திரநீதி
      யாதிபல கலையுமோங்க
வந்தணர்கள் பூவேந்தர் வசியர் சூத்திரர்தமக்
      காமுறை வழாமலோங்க
கருமவினை யால்வந்த வறுமையுற் றார்க்குமெக்
      காலுநிறை செல்வமோங்கக்
காசினி யுளோர்க்கலங் காரசுக போகமெய்க்
      கட்டழகு முதலவோங்கப்
பெருமைமிகு வேதன்மா தவன்முதலி னோர்போற்றும்
      பெம்மா னெனுங்கணவனும்
பெட்புற்று நாடோறுந் தனதக மகிழ்ந்திடப்
      பெருகுமிரு நாழிநெல்லாற்
றருமமெண் ணான்கும் புரிந்தசெங் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
சதுர்வேத மெய்த்தலைவி புதுவா புரிக்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே.       (3)

471. நவமேவு புவனியிற் பருவமா றாமல்விண்
      ணணுகுமுகின் மாரிகொட்ட
நகுமணி குயிற்றுமுடி மன்னர்மனு நூன்முறை
      நயந்துள மகிழ்ந்துகொட்டச்
சுவையாரு முத்தமிழ்ப் பாவலர்சொன் மாலைநற்
      றூயமு திசைந்துகொட்டச்
சுருதிலயை நீங்காத மாடகநல்லி யாழிசை
      துலங்குகந் தருவர்கொட்டச்
சிவநேசர் தேவாரம் வாசகத் தேறலைத்
      திருவாய் மலர்ந்துகொட்டத்
தேவரோ டரம்பையர்க ளுன்றெரி சனம்செய்து
      தினமுமென் மலர்கள்கொட்டத்
தவயோகர் கைக்கொட்ட நினதுசெங் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
சதுர்வேத மெய்த்தலைவி புதுவா புரிக்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே.       (4)

472. கமலமலர் வீட்டுலவு நான்முகக் கடவுளைக்
      கட்பொறி கலங்கமோதிக்
கடியசிறை தனில்வைத்த வோராறு முகமிலகு
      கவினிளஞ் சிங்கத்தையு
மமரர்கள் பணிந்தேத்து மைந்துகைத் தலமோ
      ரடற்கோட்டு வேழத்தையு
மன்புட னளித்துவகை கூர்ந்தினிய வருள்பொழியு
      மஞ்சனமலர்க் கண்மானே
இமமோடு கருங்கங்குல் குடிவாங்கி யோடவா
      ளேந்தாயிரங் கரங்கொண்
டெழுமிளம் பருதிகோ டிகள்சூழ்ந்த வெனவெயி
      லெறித்தசெம் மணியிழைத்த
தமனியக் கங்கண மிலங்குசெங் கையினாற்
      சப்பாணி கொட்டியருளே
சதுர்வேத மெய்த்தலைவி புதுவா புரிக்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே.       (5)

473. நிலவுதரு வெண்முத்து மாரமும் பைம்பொன்னு
      நிரைதிரைக் கைவரன்றி
நீணிலத் திலகுமுயிர் யாவுமமு தென்னவரு
      நிறைநீர்ப் பினாகநதிபு
மலகுறு செழுஞ்சாலி முதிரைகழை வாழைதெங்
      காதிய வளங்களெவையு
மரிதான விரதசிவ தவமிகுந் தக்கோரு
      மாலையங் களும்விழாவும்
பலபொருள் விளங்குகடை வீதியும் நீதியும்
      பாடலொடு நடமாடலும்
பங்கயத் திருமாது நீங்காத செல்வம்
      படைத்தவரு நற்றருமமுங்
குலவிவளர் தொண்டைநாட் டுயர்புதுவை விமலியே
      கொட்டியருள் சப்பாணியே
குறைமதி முடித்தசிவ னிடமருவு சத்தியுமை
      கொட்டியருள் சப்பாணியே.       (6)

474. ஏலமுறு பூங்குழற் றெய்வமட வார்முகத்
      தெழில்கவர்ந் தரணைநாடி
யெய்தியது போல்நீ ளகழிக்குண் முகையவிழ்த்
      திலகுசெங் கமலமலரின்
மேலமரும் வெள்ளன்ன மாழிபுனற் றோய்ந்துதாழ்
      விரிசிறைப் பாசிபோர்த்து
வீறுற்று மீதெழக் கண்டுகன் னங்கரிய
      வெற்றனமதென் றெண்ணியே
சீலமுயர் பெட்டன் மருண்டல்ல லுறுபோது
      சித்தங்கலங் கிடலெனாச்
சிறகுதறி முன்வடிவு காட்டியுள் ளன்புடன்
      சேர்ந்தணைந் துவகைகூருங்
கோலமலி வளமிகும் புதுவைவரு பைங்கிள்ளை
      கொட்டியருள் சப்பாணியே
குறைமதி முடித்தசிவ னிடமருவு சத்தியுமை
      கொட்டியருள் சப்பாணியே.       (7)

475. நற்றகமை பெறுமஞ்சு தவழ்நெடுஞ் சாலேகம்
      நாடுமைக் கண்களாக
நந்தாத பொற்கபா டங்குலவு பெருவாயில்
      நறைகொளிதழ் வாயதாக
மற்றொப்பின் மேனிலைக் கோபுரஞ் சிந்துரம்
      வயங்குநன் னெற்றியாக
வண்சிகர முறுமணிக் கொடிகள்பைந் தேனொழுகு
      மருமலர்க் கூந்தலாகக்
கற்றவர்கள் புகழுயி லுறுப்புமுத் தணியிலகு
      கவினிளங் கொங்கையாகக்
கமலத்து நீரகழி யாடையாப் பெற்றிடுங்
      கனகமதி லென்னுமெழிலார்
கொற்றமகள் சூழ்ந்தோங்க வளர்புதுவை வருகௌரி
      கொட்டியருள் சப்பாணியே
குறைமதி முடித்தசிவ னிடமருவு சத்தியுமை
      கொட்டியருள் சப்பாணியே.       (8)

வேறு
476. கமகம வெனமண மிகுமலர் புனைகுழல்
      கற்புயர் பொற்பூவை
கருதினர் நலனுற வினிதருள் பெருகு
      கடைக்கண் மலர்த்தோகை
திமிதிமி யெனவன வரதமு நடமிடு
      சிற்பரன் மெய்த்தேவி
செகமரு ளறுதவ ருளமகிழ் கொடுதெரி
      சித்திடு முச்சூலி
நமிநம வெனவடி யவரதி துதிசெயு
      நற்குண மிக்காயி
நதிபதி மிசைதுயில் பவனிளை யவளெனு
      நச்சரவப் பூணி
குமுகுமு வெனமுர சதிர்புது வையமலி
      கொட்டுக சப்பாணி
கொடியிடை யழகிய வடியுறு திரிபுரை
      கொட்டுக சப்பாணி.       (9)

477. உரைபெறு தவமுயன் மலையரை யனிட
      முதித்த வருட்கோதை
யுலகினி லெவர்களு மெழுதரு சுருதியி
      னுட்பொரு ளுக்காதி
நிரைநிரை யமரர்க டொழவர முதவிய
      நித்திய நிட்சேபி
நிலைதவ றியதன பதிவிழி மறைய
      நினைத்த சினச்சூரி
தரைமக ளொடுதிரு மகள்கலை மகள்புகழ்
      தத்துவ மெய்ச்சோதி
தகைநில வியசிவ சமைய நெறிகளுணர்
      தக்கவ ருக்காவி
குரைகடல் விரிதுறை திகழ்புது வையமலி
      கொட்டுக சப்பாணி
கொடியிடை யழகிய வடிவுறு திரிபுரை
      கொட்டுக சப்பாணி.       (10)
------------------------------------

முத்தப் பருவம்

478. அரிபுரந் தரனயன் முதலினோர் தேடுதற்
      கரியதொரு வேயின்முத்த
மாசையொடு நன்மணஞ் செய்திடந் தரமேவி
      யருள்கூர்ந்த பச்சைமணியே
எரிபுர வலன்றாங்க வருமையாச் சரவணத்
      திடையவ தரித்தசிங்க
மினிதா மடித்தலந் தனிலேறி விளையாடு
      மெழில்கண் டுவந்தபிடியே
பரிபுரங் கொஞ்சிட நடந்துகளி னத்துமேற்
      பரிவுற் றிருக்குமன்னம்
பன்முறை வணங்கியிரு கைகூப்பி யன்புடன்
      பரவமகிழ் தெய்வமயிலே
திரிபுர சவுந்தரா நந்தியே நினதுவாய்ச்
      செங்குமுத முத்தமருளே
செங்கண்மா றங்கையெனு மங்களா கரநங்கை
      செங்குமுத முத்தமருளே.       (1)

479. மூவாறெ னுந்தரும நூலினுக் கரசியே
      முத்திக்கு நற்றுணைவியே
மூடிகப் பாகன்ம கஞ்சிதைத் தோனெந்தை
      முருகனின் னோர்க்கன்னையே
பாவாண ரென்றும் புகழ்ந்திடுஞ் செல்வியே
      பத்தருக் கனுகூலியே
பகருமுது மறைமுடியி னடமிடுஞ் சத்தியே
      பஞ்சாட் சரக்கௌரியே
தாவாத பச்சிளங் தெய்வமா னேயிமைய
      சயிலத் தனிப்புதல்வியே
சதகோடி பானுவினு மொளிமிகுஞ் சோதியே
      சட்சமைய பரிபாலியே
தேவாதி தேவனுக் குந்தலைவி யேநினது
      செங்குமுத முத்தமருளே
செங்கண்மா றங்கையெனு மங்களா கரநங்கை
      செங்குமுத முத்தமருளே.       (2)

480. பொன்பயின் றுந்தாது விரிசெழும் பங்கயப்
      போதீன்ற முத்தமரிதோ
புவிமடந் தைக்குடைய தாகுமுந் நீருட்
      பொதிந்திலகு முத்தமரிதோ
மின்பிறழ்ந் திடுநெடிய வாகாய மீதுலவு
      மேகத்தின் முத்தமரிதோ
வெஞ்சின மிகுந்தமும் மதயானை வெண்கோட்டின்
      மேவுவெண் முத்தமரிதோ
மன்பெறு பசுங்கதிர்க் குலைநீடு செந்நெலின்
      மருவுமணி முத்தமரிதோ
மாரவேள் கைச்சிலை யெனுஞ்செங் கரும்புதரு
      வண்மையுறு முத்தமரிதோ
தென்புதுவை வருகௌரி யேயருமை பெறுமுனது
      செங்குமுத முத்தமருளே
செங்கண்மா றங்கையெனு மங்களா கரநங்கை
      செங்குமுத முத்தமருளே.       (3)

481. எழுபசும் புரவியீர்க் கின்றவோ ராழியோ
      டிலங்கிய மணிப்போதிகை
யேந்தெழிற் காற்கொடிஞ் சிப்பொலன் றேரிடை
      யியங்குமா தித்தெனொளியான்
முழுநிறச் சேயிதழ் முறுக்கவிழ்ந் தூற்றுநறை
      முளரிப்பொகுட் டணைமிசை
மொய்சிறை யிளம்பெடையோ டகமகிழ்வு கூரன்ன
      மோகமுறு மணமியற்றப்
பழுதில்பூந் திவலைகொடு பாசடைக ளசைதரற்
      பாய்புனற் றடமடந்தை
பச்சைமணி யின்கலத் திலகுமுத் தாஞ்சனம்
      பணிபுட னெடுத்தலொக்குஞ்
செழுவளந் திகழ்புதுவை வருதயா பரைநினது
      செங்குமுத முத்தமருளே
செங்கண்மா றங்கையெனு மங்களா கரநங்கை
      செங்குமுத முத்தமருளே.       (4)

482. விகடமிகு தறுகட் கடாமொழுகு கரடதட
      வெண்மருப்பி யானையோதை
வெங்கலினம் வாய்மணிக் காற்கவரி யசையுநுதல்
      வேகங்கொள் புரவியோதை
சகமதிர வுலவுபொற் றிண்டிறற் சகடமுரு
      டரவுற்ற தேரினோதை
சிந்ததமு நீங்காத வேதமுத லியகலைக
      டருகல்வி யூரியோதை
புகலரிய திருவிழாக் கலியாண முரசொடு
      பொலிந்தசங் கீதவோதை
பூசுர ரருந்தவர்க ளுவகைபெற வன்னம்
      புசித்திட வழைக்குமோதை
திகழுமணி வீதிசெறி புதுவைவரு தேவியின்
      செங்குமுத முத்தமருளே
செங்கண்மா றங்கையெனு மங்களா கரநங்கை
      செங்குமுத முத்தமருளே.       (5)

வேறு
483. நேச மிகுநற் றொண்டானோர்
      நெஞ்சி லுறைபஞ் சிறையனமே
நிதமும் போற்றுங் கவிவாணர்
      நினைத்த தருளுங் கற்பகமே
பேச வரிய தவமுனிவர்
      பிழையின் மௌனத் துள்ளொளியே
பிறையைத் தரித்தோ னிடப்பாகம்
      பிரியா திருக்கு மரகதமே
பூசி னறுந்தா தாடளியார்
      பொங்கு மலர்ப்பூங் குழன்மயிலே
புவன மெல்லா மொருங்கீன்ற
      பொய்யாக் கருணைக் கன்னிகையே
மாசி லெழிற்கற் பணங்கரசே
      மணிவாய் முத்தந் தருவாயே
மன்னு புதுவைத் திரிபுரையே
      மணிவாய் முத்தந் தருவாயே.       (6)

484. உள்ளே யுயிரே யுயிர்க்குயிரே
      யுணர்வே யுணர்தற் கரும்பொருளே
யுளமே யுள்ளத் தொளிரொளியே
      யுறவே யடியேற் கொருதுணையே
தானே தானா யவதரித்த
      தாயே தவமே தவப்பயனே
தனமே நிலமே தண்புனலே
      தழலே வளியே தனிவெளியே
தேனே சுவையே தெள்ளமுதே
      திருவே யருவே தீங்கரும்பே
செயமே நயமே செம்மணியே
      திறமே யறமே செழும்பிடியே
மானே குயிலே மடமயிலே
      மணிவாய் முத்தந் தருவாயே
மன்னு புதுவைத் திரிபுரையே
      மணிவாய் முத்தந் தருவாயே.       (7)

485. பதும நாபன் சோதரியே
      பத்தர்க் கருளு மாதரியே
பனிமை யுலவு மலைமகளே
      பாய்வெள் விடையோன் மணமகளே
சதுர் வேதந்தே டரியமின்னே
      தமியேன் றுதிக்கும் பசும்பொன்னே
தண்டா ரிதழி வேய்ந்தவளே
      தாரு கனைமுன் காய்ந்தவளே
முதுமை யிளமையி லாவடிவே.
      மூலா தாரப் பொருண்முடிவே
மோட்ச முதவு காரணியே
      மோனங் கடந்த பூரணியே
மதுர மிகுமென் மொழியுமையே
      மணிவாய் முத்தந் தருவாயே
மன்னு புதுவைத் திரிபுரையே
      மணிவாய் முத்தந் தருவாயே       (8)

வேறு
486. மத்த கெசத்தை வெறுத்தணி மொய்த்து
      மதர்த்த தனத்தெழிலாய்
மைப்புய லைச்சே லெனக்கறு விக்கண்
      மணக்கு மலர்க்குழலாய்
தத்தையி லச்சை யுறப்பெரு மைக்கு
      தலைச்சொ லுரைக்குநலாய்
தப்பி லயிற்படை யைச்சின விச்சுகிர்
      தத்தய வுற்றகணாய்
சுத்த வளைக்கிழி விட்டு மணிக்குழை
      துற்றொளிர் பொற்செவியாய்
சுப்பிர நற்றா ளத்தை வெருட்டு
      சுடர்த்த ணகைப்பொலிவாய்
முத்த ரகப்பது மத்துறை வித்தகி
      முத்த மளித்தருளே
முப்புவி சொற்புது வைப்பதி யுத்தமி
      முத்த மளித்தருளே.      (9)

487 முச்சிக ரப்படை யைக்கை தரித்தவண்
      முத்த மளித்தருளே
முப்புர மெய்க்க நகைத்தெரி யிட்டவண்
      முத்த மளித்தருளே
முச்செயன் முற்ற வருட்க ணடத்துவண்
      முத்த மளித்தருளே
முப்பக வர்க்குயர் வெற்றி யளித்தவண்
      முத்த மளித்தருளே
முச்சுத ரைப்பரி வுற்று விதித்தவண்
      முத்த மளித்தருளே
முப்பகை யற்றவ ருட்டெளி வுற்றவண்
      முத்த மளித்தருளே
முச்சுட ரைக்க ணெனக்கொ டுதித்தவண்
      முத்த மளித்தருளே
முப்புவி சொற்புது வைப்பதி யுத்தமி
      முத்த மளித்தருளே.      (10)
------------------------------------

வருகைப் பருவம்

488. மைதவழு மணிநெடுஞ் சிகரமா ளிகையின்கண்
      மனையறம் பூண்டதற்பின்
மாறாத விருவினை தொலைத்தைம் புலன்வென்று
      வன்பகையொ ராறுமாற்றிக்
கைதவ மிகுந்தவிழி மடமாதர் சுகமாதி
      கைவிட் டுடற்றுகுளிர்நோய்
கடும்பசி பொறுத்துமெய்ப் பொருளையுட் கருதிவெங்
      கானத்து மலையிடத்து
மெய்தியரி தானமர வுரியுடுத் தைந்தென்னு
      மெரியிடைத் தர்ப்பாசனத்
திருந்துகொண் டட்டாங்க நிட்டைநிலை பெறும்யோக
      மினிதுபல நாண்முயன்று
செய்தவ முயர்ந்திலகு மாதவர் நிதம்பரவு
      சிவதுரந் தரிவருகவே
சீதவன மாலிபுகழ் வேதவன நாதர்மகிழ்
      திரிபுராம் பிகைவருகவே.       (1)

489. மகபதி மணந்தமக ணதிபதி பயந்தமகண்
      மலரயன் விழைந்தருண்மகள்
வண்மைதிகழ் விசையமகள் தண்மைகொள் சகச்சிரமுக
      மந்தா கினிப்பெயர்மகள்
ககனமுறு கற்புமகள் பொறைகொள்சீ ரவனிமகள்
      கடவுள்குஞ் சரியெனுமகள்
கவினாறு மிரதிமகண் முதலான வரமகளிர்
      கைதொழ வரந்தருமகள்
இகபர சகாயமகள் பசியவடி வானமக
      ளிமையமலை பெற்றிடுமக
ளீசனிடம் நேசமகள் மாசின்மன வாசமக
      ளெண்ணான் கறம்புரிமகள்
செகமுதவு கருணைமக ளறிவரிய தலைமைமகள்
      செழியர்கோன் மகள்வருகவே
சீதவன மாலிபுகழ் வேதவன நாதர்மகிழ்
      திரிபுராம் பிகைவருகவே.      (2)

490. மஞ்சுகுடி கொண்டதக ரங்கமழ் கருங்கூந்தன்
      மதுமலர்த் தொடையலாட
வண்டிலக நுதலிலொளிர் வச்சிரச் சுட்டியு
      மணிப்பட்ட முந்துலங்க
வெஞ்சுத லிலாவெழிற் செவியிடை மணித்தொங்க
      லேந்துபொற் குழைவிளங்க
வேடவிழ் நறுங்காந்த ளொத்தசெங்கரமீ
      திசைத்தகங் கணமிலங்க
அஞ்சனங் குலவுவிழி யருள்பெருக வுரமதனி
      லவிர்தரள மாலையசைய
வணிதிகழு முதரபந் தனமுடன் கிரணமணி
      யார்ந்தமே கலைவயங்க
செஞ்சரோ ருகமென மலர்ச்சரண் கிண்கிணி
      சிலம்போசை தரவருகவே
சீதவன மாலிபுகழ் வேதவன நாதர்மகிழ்
      திரிபுராம் பிகைவருகவே.       (3)

491. அரனிடத் தவள்வருக புரமெரித் தவள்வருக
      வருள்பரா சத்திவருக
வறம்வளர்த் தவள்வருக திறமிகுத் தவள்வருக
      வமரர்பணி கௌரிவருக
பரமசுந் தரிவருக வுரககங் கணிவருக
      பகருமுக் கண்ணிவருக
பரவுமுத் தமிவருக சயிலபுத் திரிவருக
      பரிமளக் குழலிவருக
வரமுதவு பரைவருக சுருதிபுக ழுமை வருக
      மகிடசங் காரிவருக
வடிவழகி வருகவடி யவர்கடுதி நிதிவருக
      மதுரையா ளரசிவருக
திரள்கலைவல் லவிவருக சமரபயி ரவிவருக
      சிங்கவா கனிவருகவே
சீதவன மாலிபுகழ் வேதவன நாதர்மகிழ்
      திரிபுராம் பிகைவருகவே.       (4)

492. கயங்கொண்ட திசையெட்டு மூன்றுலக முந்தனது
      கட்டளைக் குள்ளடங்கக்
கதிர்செய்மணி முடிவேய்ந்து சிறுவிதி யெனத்திகழ்
      கவின்பெயர் படைத்ததக்கன்
நயங்கொண்ட வருள்பரா சத்தியுனை மதியாத
      நவையிருள் மனத்தெழுதலால்
நாளுமெதி ரெவருமில ரெனுமாண வங்கொண்டு
      ஞானமூர்த் தியைவெறுத்துப்
பயங்கொண்ட சங்கேந்தி யயனாதி யோர்க்கவீர்ப்
      பாகம்பகுப் பனென்றுட்
பரிவினொடு புரிமகமு மவனு மத்தேவரும்
      படருறச் செருமலைந்து
செயங்கொண்ட வீரபத் திரனையருள் கண்ணுதற்
      செல்வியெனு முமைவருகவே
சீதவன மாலிபுகழ் வேதவன நாதர்மகிழ்
      திரிபுராம் பிகைவருகவே      (5)

வேறு
493. வண்ண மிகுபூங் கதலிகளும்
      வாசம் வீசும் மலர்த்திரளும்
மதுரந் தருதே மாவினமும்
      வளர்தீஞ் சுவையா லைக்கரும்புந்
திண்ணம் பெறுதெங் கின்றொகையுஞ்
      செழுங்கொத் திலகி யுயர்கமுகுஞ்
சிறைவண் டுலவு மலர்க்காவுந்
      தேனார் செந்தா மரைத்தடமு
மெண்ண முறுசெஞ் சாலிகளு
      மெழின்முத் துயிர்க்குஞ் சங்குகளு
மிரைதேர் குருகு மனக்குழுவு
      மெங்கும் நிறைந்து பெருவளங்கொள்
தண்ணம் பழனந் திகழ்புதுவைத்
      தாயே வருக வருகவே
தவத்தோர் போற்றுந் திரிபுரசுந்
      தரியே வருக வருகவே.       (6)
-
494. குலவு செழுங்குங் குமமிளகு
      கோட்ட மகிறக் கோலமுதற்
கூறும லையிற் படுபொருளுங்
      கொழுந்தே னாவி மயிற்பீலி
யிலகு மிறாலி யரக்காதி
      யியங்குங் கானி லுறுபொருளும்
யானை பித்தன் கருங்குரங்கோ
      டிறைகண் ணாடி நகர்ப்பொருளும்
பலனொண் வாழை செந்நெல்சிறு
      பயறிக் கிளநீர் முதனாட்டிற்
படுநற் பொருளுஞ் சங்குப்பு
      பவள மொடுஒக் கொலைமுத்தார்
சலதிப் பொருளு நிறைபுதுவைத்
      தாயே வருக வருகவே
தவத்தோர் போற்றுந் திரிபுரசுந்
      தரியே வருக வருகவே.       (7)

495. நானா கலைவல் லோர்கணித
      நாடிப் புகழுந் துரந்தரியே
நகுமா மணிப்பஃ றலையநந்த
      னாக மிலங்கு கங்கணியே
மேனாட் டமர ராதிபதி
      மெச்சிப் பணியுஞ் சங்கரியே
வேதா கமங்க டேடரிய
      மென்சொற் குதலை யஞ்சுகமே
தேனா ரளகத் தரம்பையர்கள்
      சிந்தித் துவக்கு மங்கலையே
தேவ தேவனிடப்பாகம்
      செழித்து வாழு மம்பிகையே
தானா பரணர் மிகும் புதுவைத்
      தாயே வருக வருகவே
தவத்தோர் போற்றுந் திரிபுரசுந்
      தரியே வருக வருகவே.       (8)

வேறு
496. சதுமு கன்றிரு மகனி தம்பணி
      தலைவி யந்தரி வருகவே
தமிய னெஞ்சுறு துயர்க ளைந்தருள்
      தருது ரந்தரி வருகவே
பதும மென்பத நினையு மன்பர்கள்
      பவப யங்கரி வருகவே
பகர ருஞ்சிறு முறுவல் கொண்டடு
      பகைவெல் சங்கரி வருகவே
மதுமி குந்திடு மலர்ந றுந்தொடை
      வனைய லங்கரி வருகவே
மகர மொண்கடல் விடமி லங்கிய
      மணிகொள் கந்தரி வருகவே
பொதுவி லிங்கித முடன டம்புரி
      புனித சுந்தரி வருகவே
புதுவை யம்பதி நிலைபெ றுந்திரி
      புரச வுந்தரி வருகவே.       (9)

497. பருவ மங்குல்பெய் துலக மின்புறு
      பயிர்த ழைந்திட வருகவே
பணியு மென்றனை யிடர்செய் வன்பிணி
      பலவு மங்கிட வருகவே
மருவ ருந்தவ முனிவ ரந்தணர்
      மகிமை தங்கிட வருகவே
மதிமி குங்கவி வலர்சொல் செந்தமிழ்
      வளநி றைந்திட வருகவே
உருகு மன்பொடு பரவு தொண்டர்க
      ளுளமு வந்திட வருகவே
யுலவு மன்பதை வறுமை கொண்டுழ
      லுறுகண் நைந்திட வருகவே
பொருநர் சந்தத முறைக லங்கொடு
      புவிபு ரந்திட வருகவே
புதுவை யம்பதி நிலைபெறுந்திரி
      புரச வுந்தரி வருகவே.       (10)
--------------------------------

அம்புலிப் பருவம்

(சாமம்)
498. தங்கமக மேருவெனு மொப்பற்ற மலைதனைச்
      சந்ததமும் வலங்கொள்வைநீ
தையலிவ ளம்மலையை முப்புர மழித்தநாட்
      டனுவென வலங்கொண்டனள்
துங்கமிகு திருநீ றிலங்குகட வுட்கொளி
      துளங்கிடக் கண்ணாயினை
தோகையிவ ளக்கடவு ளைப்பிரிவி லாமலெழில்
      தோன்றிடக் கண்ணாயினள்
மங்கல முறுந்தடத் தளியிசைகொ ணறைபெருகு
      வனசம் வெறுத்திடுவைநீ
மங்கையிவண் மெய்யன்பி லாதமூ டர்களிதைய
      வனசம் வெறுத்திடுவள்காண்
அங்கணுல கருளுமையு நீயுநிக ராதலா
      லம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (1)
-
499. இயமமுத லட்டாங்க யோகத்தி னிலைமைபெறு
      மிருடியத் திரிதன்மகன்நீ
யிவளுமோ விண்ணள வுயர்ந்துமேம் பாடுபெறு
      மிமையவத் திரிதன்மகளாம்
வயமிகுங் கதிகொள்பைம் புரவியேழ் பூண்டதேர்
      வாளரிக் குற்றதுணைநீ
வனிதையிவ ளிரணிய னுரத்தைப் பிளக்குமுகிர்
      வாளரிக் குற்றதுணையாம்
கயமருவி யிதழ்முறுக் கவிழாம்ப லுக்குநீ
      காதலன் பாரதத்தைக்
கனகமலை யிற்பொறித் திடுமாம்ப லுக்கிவள்
      காதலன் யாமதிக்கி
லயர்விலுறை யொப்புமையின் வருகவென வழைத்தன
      ளம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (2)

500. நிறைமதி யெனப்பெயர் படைத்தனை பெருங்கருணை
      நிறைமதி படைத்தனளிவள்
நீயாதி சடிலமீ துலவுவை யிவள்வேத
      நீள்சடில மீதுலவுவாள்
பொறையின்மே லாவைநீ யடியர்தம் பிழையெணாப்
      பொறையின்மே லாகுவளிவள்
புலவனைத் தந்தைநீ கலைகள்பல வுணர்கின்ற
      புலவனைத் தந்தனளிவள்
குறைவிலா நுந்தமக் குள்ளசெய னாடிற்
      குணங்குறிநீ காத்திடுதலாற்
கூடிவிளை யாடநல மாமினிச் சொல்வதென்
      கோகனக மலரோன்பணிந்
தறைதுதிகொள் நூபுரப் பொற்பதச் செல்வியுட
      னம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (3)

(பேதம்)
501. கதிரவன் றனதுவெயின் முனமொளி மழுங்கும்வெண்
      கலைதரித் தனையாயிரங்
கதிரவர்க டம்மினு மிலங்குமா ணிக்கமே
      கலைதரித் தனளிவளுமே
விதியையருண் மாலுறங் குஞ்சயன மானபால்
      வெள்ளத்துள் நீயுதித்தாய்
மெய்ஞ்ஞானி யர்க்குவீ டுதவுஞ் சிவாநந்த
      வெள்ளத் துதித்தனளிவள்
சதிமுதல் மூவொன்ப தெனுமரிவை யர்க்கினிய
      தலைவன்நீ யாமவர்தொழுஞ்
சலசநா யகிமுதற் றெய்வமட வார்க்கெலாங்
      தலைவியிவ ளாமதிக்கி
லதிகமா மிவளுனக் காதலான் மகிமையுட
      னம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (4)
-
502. மழைத்துளி யுகுத்தார்த் தகன்றவான் மீதுலவு
      மங்குலி னொடுங்குமுன்மெய்
மங்கையிவ டன்பசிய மெய்யொளியி னாற்கரிய
      மங்குலை யொடுங்கவைத்தாள்
தழைத்திடு கரும்பேந்து முருவிலா னுக்குநீ
      சத்திர மெனப்பொலிந்தாய்
சத்தியிவ டானுருப் பெறுமுயிர்க ளயிலன்ன
      சத்திர மனந்தம்வைத்தாள்
பிழைத்திடற் கெளியவிட வாயரவி னுக்குளம்
      பேதுற வெருண்டோடுவை
பேரரவை யணியெனப் பூண்டன ளிவட்குநீ
      பேதமா யினுமன்பினா
லழைத்தன ளிளம்பொற் பசுந்தோகை யாதலா
      லம்புலீ யாடவாவே
யானிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (5)

503. முன்னகைத் திகலரூ ரட்டநா ளிறைவனான்
      முறிப்பட்ட தேர்ச்சில்லிநீ
மூடிகப் பாகனிடு சாபமா றாதுகூன்
      முதுகுற்ற கயரோகிநீ
பன்னகக் கோள்கொடிய விடவாயி னாலுண்டு
      பார்த்துமிழ்ந் திடுமெச்சில்நீ
பாகீ ரதிச்சக் களத்திதலை வாசற்
      பரிந்துறைகு ருத்துரோகிநீ
மின்னனார் வீதியிற் கூடியெரு விட்டெறிய
      மேவுசிறு மதியானநீ
மேம்பா டிலாதவுனைப் பொருளா யழைக்குமிவள்
      மேன்மைசொல வரிதாதலா
லன்னவயல் சூழ்புதுவை வருபரா சத்தியுட
      னம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (6)

(தானம்)
504. வானாடர் பதிதவ முயன்றுகௌ தமர்சாப
      மாற்றிவே தம்பெற்றது
மௌனயோ கம்புரிந் தந்தரங் கப்பூசை
      மலரயன் றான்பெற்றது
மேனா ளுருத்திராக் கம்பூண்டு நணுகுற்ற
      மேதாதி கதிபெற்றது
மேவிரா மன்சிவார்ச் சனைசெய்து பாசுபத
      விசிகநண் பொடுபெற்றதுங்
கோனான வந்தகா சுரனங்கி தேவலன்
      கூறுமுப்புர ராதியோர்
குறைவில்சீர் பெற்றதுவு மித்தலத் ததேநீ
      குறித்தணுகி லுன்குறைதவிர்ந்
தானாத செல்வங் களிப்போடு பெற்றுயர்வை
      யம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (7)

505. விடங்கொதிக் குந்துளை யெயிற்றுவா ளரவம்
      விழுங்காம லொருமையுற்று
மெய்ப்பரன் சடைமீது கூடிவிளை யாடிட
      விரும்பியே யுனைவைத்தனள்
இடங்கொதிக் குந்தக்கன் வேள்வியிற் காலினாற்
      றேய்ப்புண் டழிந்தவுன்னைச்
செங்கதிர்க் கெதிராக வெண்கதி ரெனச்சொலச்
      சேணிடை விளங்கவைத்தாள்
மடங்கொதிக் குந்தகை யிராவணன் றனதூருள்
      வரவஞ்சி யகலுமுன்னை
மாயவ னெனுந்தமைய னாலவ் விலங்கைதனின்
      மானமொடு வரவைத்தன
ளடங்கொதிக் கும்புத்தி விட்டடை வதேநன்மை
      யம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (8)

(தண்டம்)
506. நவமேவு கருணையுடன் வாவென் றழைத்திடவும்
      நணுகாதிருத் தல்கண்டால்
நம்மன்னைக் கும்பகைசெய் தனையென்று வேழமுக
      நாதன்முன மிட்டசாபம்
தவிரா திருக்கமே லுஞ்சினந் தனனென்ன
      தான்செய்வ னோகாலினாற்
றக்கன்யா கத்துனைத் தேய்த்தவன் சீறிற்
      நடுப்பவர்கள் யாவர் நீயுற்
பவமாகும் வேலைதனில் வேலைவிட் டோன்கடும்
      பகைகொண் டுறுக்கிலண்ட
பகிரண்ட மதனினும் பாதுகாப் பவரில்லை
      பல்விதத் திலுமுன்றனக்
கவமானம் வருமாகி லெவருனை மதிப்பர்கா
      ணம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (9)

507. நம்பியிவள் பக்கநீ வாரா திருப்பையேல்
      நமன்வீழ முனமுதைத்த
நளினத் திருப்பாத முண்டுவே ளைக்காய்ந்த
      நயனமொன் றுண்டுநாளும்
மும்பருக்குத் துன்பம் வருவித்த முப்புர
      மொருங்கெரிசெய் நகையுண்டுமா
லுந்தியி லுதித்தவன் மகுடச் சிரங்கொய்த
      வுகிருண் டிலங்கையாண்ட
கம்பத்தன் மலைவெடிப் பிற்கிடந் தலறக்
      கனன்றூன்று விரலுண்டடுங்
களிறுண்டு புலியுண்டு சிங்கமுண் டழல்விடக்
      கட்செவியு முண்டுபகைகொண்
டம்பரத் தினிலுனைப் பம்பரம் காட்டுமு
      னம்புலீ யாடவாவே
யரனிடங் குலவுதிரி புரசவுந் தரியுட
      னம்புலீ யாடவாவே.       (10)
---------------------------------

சிற்றில் பருவம்

608. பொன்புற மிலங்குநெடு வட்டவா ளக்குன்று
      புரிசையா கத்திளைந்தப்
புறக்கடற் கோட்டைசூ ழகழியாத் திசைகள்கோ
      புரநீடு வாயிலாக
மன்புகழ்கொ ளட்டகுல கிரிகள்கொத் தளமதா
      மாதிரத் தலைவருடனே
மருவுதெய் வச்சேனை யம்மதிற் பொறியாக
      மாமேரு கொடிமரமதா
வன்புதிக ழாகாய கங்கைவெண் கொடியா
      வகன்றபல தீவுமனையா
வாருயிர்க் குடியேறி யிகபர சுகங்கடமை
      யறநெறிப் படியூட்டியாள்
தென்புதுவை வேதபுரி நாதர்வா மத்தரசி
      சிறுவீடு கட்டியருளே
சித்திதரு திரிபுர சவுந்தரா நந்தியே
      சிறுவீடு கட்டியருளே.       (1)

509. முந்தெழுத் தாயபொற் சேற்றினான் மொழியாக்க
      முற்றநற் கல்லியற்றி
முப்புணர் பைச்சுவ ரெழுப்பிப் பெயர்ச்சொல்வினை
      மொழிகளைத் தூணிறுத்தி
யந்தமுள் சாரியைப் போதிகைய தாக்கியுரு
      பவையுத்தி ரம்பாய்ச்சிநே
ராகுமெச் சங்கொடுங் கைவைத்து மேற்கருத்
      தாவைவளை யாபரப்பிச்
சந்தமுற் றாணிதைத் தைம்பாலோ டிட்டியற்
      சார்ந்தகோ ளெட்டுமறையாத்
தடுத்துமுத் தகமுதல் சித்தரித் திருபொருட்
      டகைவிளக் கிட்டியற்றுஞ்
செந்தமி ழிலக்கண மனைக்குள்விளை யாடுமுமை
      சிறுவீடு கட்டியருளே
சித்திதரு திரிபுர சவுந்தரா நந்தியே
      சிறுவீடு கட்டியருளே.       (2)

510. முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
      மூரிவெள் விடையவர்க்கு
முந்நீர் நிறங்கொண்டு மண்ணுண்டு விண்ணீண்ட
      முண்டகக் கண்ணருக்குஞ்
சுத்தவே தத்தலைமை யுற்றோ திமத்திற்
      றுலங்கியுல கீன்றவர்க்குந்
தோன்றுமுப் பத்துமுக் கோடிதே வர்கள்பரவு
      சுடர்வச்சி ராயுதர்க்கும்
வித்தகமெய்ஞ் ஞானநிறை மோனமா தவருக்கும்
      மேலான சித்தருக்கும்
மெய்யன்பு மிகுதொண்ட ருக்குமன மொருமித்த
      விதரணர்க ளாதியோர்க்குஞ்
சித்தமகி ழற்புதப் பதவிதந் தருளம்மை
      சிறுவீடு கட்டியருளே
சித்திதரு திரிபுர சவுந்தரா நந்தியே
      சிறுவீடு கட்டியருளே.       (3)

511. ஓவாத பேரண்ட மானதே சிற்றிலா
      வுலகமே யுரலதாக
வோங்குபொன் மலையுலைக் கையதாக மன்னுயிர்க
      ளுற்றதண் டூலமாகத்
தாவாமூ தண்டந் தடாவெள்ள நீரினுலை
      சயிலமவிர் கரகத்திசை
தாங்கடுப் பாவுலவை யூதுகுழ லாவடவை
      தான்மூட்டு தீயதாகக்
கோவாதி பதவிபல கழிவகையோ டப்பமாக்
      கொழுமண மிகச்சமைத்துன்
கொண்க னுக்கற்புதஞ் செய்தவைகள் பண்டுபோற்
      குலவவைத் துவகைகூருந்
தேவாதி பன்றொழு திறைஞ்சுபர தேவியே
      சிறுவீடு கட்டியருளே
சித்திதரு திரிபுர சவுந்தரா நந்தியே
      சிறுவீடு கட்டியருளே.       (4)

512. பங்கையச் செல்விவாக் கின்செல்வி பூங்கற்
      பகச்செல்வி முதலதெய்வப்
பாங்கியர்க ளொடுகூடி வண்டலாட் டயர்போது
      பரமேச னைப்புகழ்ந்து
மங்கல மிகுந்திடுஞ் சுபசோ பனப்பாடன்
      மனமுவப் பொடுபாடியு
மாங்குயி லினங்கண்மரு ளுற்றிடக் கின்னரியின்
      மன்னிசை வடித்தொலித்துந்
துங்கமுறு பஞ்சரப் பூவைகிளி நாணத்
      துலங்கின் சொலாற்கொஞ்சியுந்
தோலாத பரிகாச வகைபுரிந் துந்தூய
      சுவைநறுந் தேன்றுளிக்குஞ்
செங்குமுத வாயினாற் குதலைமொழி யாடுமுமை
      சிறுவீடு கட்டியருளே
சித்திதரு திரிபுர சவுந்தரா நந்தியே
      சிறுவீடு கட்டியருளே.       (5)

வேறு
513. அம்பைப் பொருதஞ் சனமணி வரிவிழி
      யருளொ டுவந்தாட
வாலி தரும்புயல் வெளிறக் கருமைகொ
      ளளக மசைந்தாட
வம்பைக் கிழிதந் திறுமாந் தொளிரின்
      வனமுலை யணியாட
வனச மபயமெய் தத்திகழ் செங்கை
      மணிப்பைந் தொடியாட
வும்பர் பயிலர மகளிர்க ணாக
      வுலோக மடந்தையரோ
டுலவிக் குலவித் திசைதிசை தோறு
      முவப்பி னெறிந்தெழிலார்
செம்பொற் பந்தினி தாடு, மனோன்மணி
      சிற்றி லிழைத்தருளே
செல்வப் புதுவைத் திரிபுர சுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (6)

514. எழுவகை யுற்பவ மெண்பா னானூ
      றாயிர மெனுமலகா
ரின்னுயி ரானபல் பாவை களுக்கெழி
      லிளமை வளர்ச்சிகுணம்
பழுதகல் கல்வி களிப்புச் செல்வம்
      பரிவொடு சுகமுதலப்
பாலித் துண்ணின் றாட்டி நடத்தும்
      பார்வதி யேவானார்
முழுமதி யெனவிரி கதிரில் நிலவுமிழ்
      முத்தின் பாவைநிற
முதிர்மர கதமணி யுறுமைம் பாவை
      முழங்கெரி யெனவொளிர்செய்
செழுமணி திகழ்பொற் பாவை விளங்கச்
      சிற்றி லிழைத்தருளே
செல்வப் புதுவைத் திரிபுர சுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (7)

515. குலமணி திகழ்பொற் சுட்டியு மிட்ட
      குதம்பையு நிகநிகெனக்
கோமே தகமூக் குத்தியும் வயிரக்
      கொப்புந் தகதகெனத்
தொலைவற வொளிர்மா ணிக்கப் பணியுந்
      தொடியுங் கலகலெனச்
சோதிகொள் பொற்புறு மேகலை யும்பொற்
      றூசும் பளபளென
விலையின் மணித்தண் டையுநூ புரமும்
      விரவிக் கிணுகிணென்
மென்மொழி யுங்குர லின்னிசை யுங்கவின்
      மேவிக் குலுகுலெனச்
சிலதிய ருடனம் மனையா டும்பரை
      சிற்றி லிழைத்தருளே
செல்வப் புதுவைத் திரிபுர சுந்தரி
      சிற்றி லிழைத்தருளே.       (8)

516. அளிகுல வுங்கட நதிபாய் கவுளா
      ரத்திமுகற் கனையே
யனுதின மன்பர்க ளுளமீ துறைநீ
      டற்புதமெய்க் கனியே
வெளிபவ னந்தழ னிலநீர் வடிவாம்
      வித்தகி தற்பரையே
விரைக மழைந்தரு நிழல்வா ழிமையோர்
      மெச்சு புகழ்க்கிளியே
யொளிகிளர் சிந்துர வெழில்சேர் நுதலா
      ரொப்பறு கொற்றவையே
யுயர்பர மன்றனை யகலா தருள்கூ
      ருத்தமி பொற்கொடியே
தெளிதமி ழொண்புது வையின்மே வுமையே
      சிற்றி லிழைத்தருளே
திரிபுர சுந்தரி யெனுமா தரியே
      சிற்றி லிழைத்தருளே.       (9)

517. திருவல வன்பரி வுறுசோ தரியே
      சிற்றி லிழைத்தருளே
திரிபுவ னந்துதி செயுநா ரணியே
      சிற்றி லிழைத்தருளே
திருவல ரின்பத யுகநா யகியே
      சிற்றி லிழைத்தருளே
திரிபுடை வஞ்சரு ளணுகா மயிலே
      சிற்றி லிழைத்தருளே
திருவர மன்பொடு தருகா ரணியே
      சிற்றி லிழைத்தருளே
திரிபுரை சங்கரி சிவையா மளையே
      சிற்றி லிழைத்தருளே
திருவரு டந்தெளி யனையா ளுமையே
      சிற்றி லிழைத்தருளே
திரிபுர சுந்தரி யெனுமா தரியே
      சிற்றி லிழைத்தருளே.       (10)
----------------------------------

நீராடற்பருவம்

518. மணமிகு மலர்தா தளைந்துதே னுண்டளிகள்
      மகிழ்நறும் பூந்தார்க்குழல்
வரைநின் றுயர்ந்துவா னெறிசென்று முந்நீரை
      வாரியுணு மேகமெனவே
குணமுறு மணிக்கச்சு வீக்கியா ரருளமுது
      கொண்டோங்கி வளரலர்முலை
கொற்றத் துழாய்மௌலி பண்டு பாற்கடலிற்
      குறித்திட்ட சயிலமெனவே
வணரிருங் கன்னற் சிலைப்புருவ மைவிழி
      வளைச்செவி பிறங்குவதனம்
வண்மைதிகழ் விண்மீன் கணஞ்சூழ வுலவுமுயல்
      மறுவற்ற மதியமெனவே
புணரிநிக ரப்பெரு வராகநதி குலவநீ
      புதியநீ ராடியருளே
புகழ்மிகுங் கௌரிதிரி புரசவுந் தரிநிமலி
      புதியநீ ராடியருளே.       (1)

519. செங்கய லொடுங்கண்கள் சைவல மொடுங்கூந்தல்
      சேதாம்பன் மலரொடும்வாய்
திருமுத் தொடுந்தந்தம் வள்ளையொடு வார்காது
      செம்பவள மொடுமெல்லிதழ்ச்
சங்கமொடு மிடறுதண் குமிழியொடு மலர்முலை
      தாவியகெளிற் றொடும்விரல்
சலச்சுழி யொடுங்கொப்புள் கொடியோடு மருங்குநீள்
      சர்ப்பபட மொடுநிதம்ப
மங்கலவ னொடுமுழந் தாளுலவு சினைவரா
      லதனொடுந் திரள்கணைக்கா
லாமையொடு நன்புறங் கால்கமல மலரொடு
      மலத்தகப் பதமமர்செயப்
பொங்குதெண் டிரையேறி வராகமா நதிமருவு
      புதியநீ ராடியருளே
புகழ்மிகுங் கௌரிதிரி புரசவுந் தரிநிமலி
      புதியநீ ராடியருளே.       (2)

520. இலங்குமர கதமணிச் சோதியிற் பசியநின்
      னெழிலுருச் சாயலைக்கண்
டேமுற்று வாயரவ மாறாது தோகைமயி
      லிளமரச் சோலையடையக்
குலங்கொண்டு சூழர மடந்தையரோ டளவளாய்க்
      கூறுமொழி மழலைகண்டு
குயில்பசுங் கிளிபூவை நாணிநீள் வாழைக்
      கொழுங்குருத் திடையொளிக்க
நலங்கிளர் சிலம்புதண் டைகள்கொஞ்சி டுந்தெய்வ
      நளினத்திருத் தாளின்மென்
னடைகண்டு வெட்கிமெய் வெறிற்றன்னம் பேட்டோடு
      நடுங்கிப் பரந்துபாறப்
பொலங்குவட் டருவிமுத் தெறிதிரை வராகநதி
      புதியநீ ராடியருளே
புகழ்மிகுங் கௌரிதிரி புரசவுந் தரிநிமலி
      புதியநீ ராடியருளே.       (3)

521. ஏந்திதழ் முறுக்கவிழ்ந் தூறுதேன் பில்குவா
      ரிசமென்னு மாமுகமலர்ந்
திளநிலாக் கதிர்கண் வந்திடு கருங்குவளை
      யெனுமைக்க ணாரநோக்கி
நீந்துதற் கரியபுன லிடையுலவு பல்பறவை
      நீளோதை யாமின்சொலால்
நித்தியகல் லியாணபர தேவியே வருகவென
      நேயமுட னேயுபசரித்
தாந்துதிகள் செய்துவெண் ணித்திலச் சங்கங்க
      ளார்ந்தெழுந் தெறிதிரையெனு
மம்பொன் மணித்தொடிக் காந்தட் கரங்கொண்
      டழைத்துறவு புரியுமெழிலார்
பூந்துறை குலாவிய வராகமா நதிமேவு
      புதியநீ ராடியருளே
புகழ்மிகுங் கௌரிதிரி புரசவுந் தரிநிமலி
      புதியநீ ராடியருளே.       (4)

522. காஞ்சனத் தொளியோடு பிறங்குமா ணிக்கக்
      கலாபம்விரி சிகைபருமமின்
காஞ்சிமா மேகலா பரணங்க ளம்பொற்
      கலிங்கமீ தரவஞ்செய
வாஞ்சர மணிப்பணிகள் கொங்கைக் குவட்டிழியு
      மருவியி னசைந்தொலிக்க
வளவிட் டுரைத்திடற் கொவ்வா துயர்ந்தமாத்
      தாடகத் தொடிகளார்ப்ப
நாஞ்சொலிப் பணிதெய்வ மணம்வீசு தேனொழுகு
      நளினத் திருப்பதத்தில்
நன்கமர்ந் தெழில்கொள்சில் லரிவிளங் குந்தண்டை
      நவமணிக் கிண்கிணியுடன்
பூஞ்சிலம் போலிட வராகமா நதிபெருகு
      புதியநீ ராடியருளே
புகழ்மிகுங் கௌரிதிரி புரசவுந் தரிநிமலி,
      புதியநீ ராடியருளே.       (5)

வேறு
523. கலைபல வும்பரி வுளர்மகிழ் பெறவருள்
      கலைமி னெனுஞ்சகியும்
கனசெல் வம்பழ வடியார்க் குதவுங்
      கமலையெனும் பெயர்கொள்
சிலைநுதல் குமுதச் செவ்விதழ் தெய்வச்
      சேடியு மணிமகுடத்
தேவர்க ளதிபதி மேவிய பொற்புறு
      சீரயி ராணியெனு
நிலைபெறு சிலதியு மரமக ளிர்களெனு
      நிறைமிகு மிகுளையரும்
நீதி யுடன் பொற்பாதந் தொழுதுபின்
      நின்றிரு புடைசூழ
வலையெறி பெண்ணை நதித்துறை யினிதா
      யாடுக புதுநீரே
யாரணி சிவபரி பூரணி திரிபுரை
      யாடுக புதுநீரே.       (6)

524. குமுத விதழ்க்கரு மைக்க ணரம்பையர்
      கோடா கோடியர்பொன்
கொல்ல னியற்று மணிச்சி விறிக்கைக்
      கொண்டொரு வர்க்கொருவர்
கமழ்தரு மதுவுமிழ் மலரோ தியினுங்
      கலைமதி வதனத்துங்
காழுறு முத்து வடக்கொங் கையினுங்
      கவினிடை யுடைமீது
மிமையள வுஞ்சலி யாதெதி ரெதிர்நின்
      றிமிழ்நறு நீர்தூவ
வெய்த்துச் சிலர்பின் னிட்டோ டுதல்கண்
      டிளநகை தருமயிலே
யமிழ்த மிதெனவரு பெண்ணை நதித்துறை
      யாடுக புதுநீரே
யாரணி சிவபரி பூரணி திரிபுரை
      யாடுக புதுநீரே.       (7)

525. ஈர மலர்க்கா விற்பந் தாடியு
      மின்னிசை பாடியுநல்
லெழில்கொள் மணிச்செய் குன்றுக டோறு
      மிவர்ந்துல வியுமிக்க
சீரமை பொற்பா வைக்கு மணங்கள்
      செழிப்புட னேசெய்துந்
தேமலர் கொய்துங் குரவை புரிந்துஞ்
      சேடிய ரொடுகூடி
வார முடன்பொன் னம்மனை யாடியும்
      வரிவளைக் கைக்கொட்டி
மகிழ்வொடு கொம்மை யடித்தும் நடித்தும்
      வண்டல்செய் தருளுமையே
யார நிறைந்திடு பெண்ணை நதித் துறை
      யாடுக புது நீரே
யாரணி சிவபரி பூரணி திரிபுரை
      யாடுக புதுநீரே.       (8)

526. குவடுயர் மந்தர மலைவி லுவந்தவர்
      கொடியா மேறுடையார்
கொழுமண மொன்றிய விதழி புனைந்தவர்
      குளிர்நீ ரார்சடையார்
தவமிகு மந்தண ரிதய மகிழ்ந்தவர்
      தமியே னாடரனார்
சபையி னடம்பல புரியரு ளங்கணர்
      சமமீ றாதியிலார்
பவள நிறங்கிளர் வடிவுறு புங்கவர்
      பணியார் பாலணுகார்
பகைஞர் புரம்பொடி படநகு சங்கரர்
      பரிவார் காதலியே
புவன துரந்தரி மணிதிகழ் கந்தரி
      புதுநீ ராடுகவே
புதுவை நிரந்தரி திரிபுர சுந்தரி
      புதுநீ ராடுகவே.       (9)

527. புலமை மிகுங்கலை வலர்புக ழம்பிகை
      புதுநீ ராடுகவே
பொதிய முவந்திடு முனிபர வும்பரை
      புதுநீ ராடுகவே
புலவு கமழ்ந்தொளி ரயிலவ னன்பனை
      புதுநீ ராடுகவே
பொடியணி சங்கர னருகில் விளங்குமை
      புதுநீ ராடுகவே
புலனழி சண்டனை யுதைதரு சங்கரி
      புதுநீ ராடுகவே
புதுமது வுண்டளி யிசைபயில் குந்தளி
      புதுநீ ராடுகவே
புலவர் வணங்கிய கணபண கங்கணி
      புதுநீ ராடுகவே
புதுவை நிரந்தரி திரிபுர சுந்தரி
      புதுநீ ராடுகவே.       (10)
----------------------------------

பொன்னூசற்பருவம்

528. ஓங்குவே தாந்தசித் தாந்தமெனு நன்மாத்
      துயர்ந்தபொற் றம்பங்களா
வோதரிய நாதாந்த மெனுமொண் செழுங்கிரண
      மொளிர்வயிர விட்டமாகப்
பாங்குபெறு மெய்ஞ்ஞான முயர்வெண் ணிலாக்கதிர்கள்
      பாய்முத்து வடமதாகப்
பரவுதொண் டர்களிதைய நளினமலர் செஞ்சுடர்ப்
      பதுமரா கப்பலகையா
வாங்கலை மகட்சேடி யருகிருந் தின்னிசைக
      ளார்ந்தநின் புகழ்படிக்க
வம்புயத் திலகிலக் குமியெண் மருங்கையி
      லட்டமங் கலமேந்திடப்
பூங்குழற் பசியமெய்த் திரிபுரா நந்தியே
      பொன்னூச லாடியருளே
புதுவைவே தபுரீச ரிடமுலாவு பவானி
      பொன்னூச லாடியருளே.       (1)

529. கற்பகப் பூங்கா வனத்துநறு நீழலிற்
      கடவுளர் வணங்கியேத்தக்
கனகா தனத்துவீற் றிடுவேந்த னாயிரங்
      கண்மலர் களித்துநோக்க
நற்பதும மாமலர்ப் பீடத் திருந்துலகை
      நல்குந் திறத்தையுடையா
னான்குவத னத்துவா யானுமெழு தாமறை
      நவின்றுதுதி செய்துநிற்க
வற்புதம் பெறுமுயிர்கள் யாவையும் பாதுகாத்
      தாழியிற் பள்ளிகொண்டோ
னானந்த மாகியா டுங்குடக் கூத்தினொடு
      மகமிக மலர்ந்துவக்கப்
பொற்பிலகு தெய்வப் பொலன்றூவி யன்னமே
      பொன்னூச லாடியருளே
புதுவைவே தபுரீச ரிடமுலாவு பவானி
      பொன்னூச லாடியருளே.       (2)

530. மட்டுலவு நறுமலர்த் தாமரைச் சிற்றடியின்
      மன்னுகிண் கிணியசையவே
மதுரச் செழுங்கரும் பனையதோள் வலையமொடு
      வச்சிரத் தொடியசையவே
இட்டிடைச் செம்பொற் படர்த்தோடு மணிச்சுட
      ரிமைக்குமே கலையசையவே
யிளவெயி லெறித்திடு மணிப்பிறை வடத்தினோ
      டேகாச மொத்தசையவே
கட்டுறு மணிக்கச் சிலங்கு தனமீதுதண்
      கதிர்முத்து வடமசையவே
கவினொழுகு செவியிலணி மாமணித் தொங்கலொடு
      கமழ்குழற் றொடையசையவே
பொட்டிலகு சிலைநுதற் சுட்டிமுன் னசையவே
      பொன்னூச லாடியருளே
புதுவைவே தபுரீச ரிடமுலாவு பவானி
      பொன்னூச லாடியருளே.       (3)

531. கயலார் நறுஞ்சர வணப்பொய்கை தனில்வந்து
      கார்த்திகைப் பாலருந்திக்
கருதுமுப் பத்துமுக் கோடிதெய் வச்சேனை
      காவல னெனப்பொலிந்து
வயலார் தடங்கமல முறைநான் முகன்றன்னை
      வன்சிறைக் குகையிலிட்டு
மாமேரு விற்கையை யன்செவி தனக்கினிய
      மந்திரமும் தேசஞ்செய்து
செயலார் கொடுஞ்சூர பதுமனா தியபகைஞர்
      சிதறவேற் படைவிடுத்துச்
செங்கடம் பணிவேய்ந்து மயிலூர்ந்து சேவற்
      செயக்கொடி யுயர்த்துவக்கும்
புயலார் மலைக்கிழ வனைப்பெற்ற குமரியே
      பொன்னூச லாடியருளே
புதுவைவே தபுரீச ரிடமுலாவு பவானி
      பொன்னூச லாடியருளே.       (4)

532. மலிவுற்ற செந்தமிழ்ப் பாண்டிநாட் டுயரால
      வாயினுஞ் சிரகிரியினும்
வானோங்கு காவையினு மருணா சலத்தினும்
      வாரணா சித்தலத்தும்
நலிவுற் றிடாதசீ காழியினு மையாற்று
      நவில்சிதா காயத்தினும்
நாகையினு மாரூரி னுங்காஞ்சி தன்னினு
      நள்ளாற்று மருதூரினு
மெலிவுற்ற தொண்டரைக் கரையேற்று மூரினும்
      வேளூரி னுஞ்சிறந்த
வில்லையம் பதியினுங் காளத்தி தன்னினு
      மேவுமற் றுளதலத்தும்
பொலிவுற் றமர்ந்தருளு மொருபெருந் தேவியே
      பொன்னூச லாடியருளே
புதுவைவே தபுரீச ரிடமுலாவு பவானி
      பொன்னூச லாடியருளே.       (5)

வேறு
533. வரையு றுங்கலவ மயிலி னின்றருள்சு
      வாமி யாடமிகுசீர்
மருவு முந்துருவி னிபமு கன்றினம
      றாம லாடவினிதா
தரையை யீன்றமுகி லுவண னொண்பிடரி
      தாவி யாடவெழிலார்
சதுமு கன்பொருவில் சிறைவி கங்கமிசைச்
      சால்பி னாடமகவா
னிரைத ரங்கமெறி கடல்ப யந்தகளி
      றேறி யாடவிடைமே
லெவருமஞ் சலிசெய் திடவ ரம்புரியு
      மீச னாடமறைநூ
லுறைத ரும்புதுவை வருது ரந்தரிபொன்
      னூச லாடியருளே
யுளமகிழ்ந் துதிரி புரச வுந்தரிபொன்
      னூச லாடியருளே.       (6)

534. அலகி றந்ததவ முனிவர் கண்டுவகை
      யாடி யோதுகதியே
யசர முஞ்சரமு மினிது தந்துபுவ
      னாதி யாயவொளியே
யிலகுவிஞ் சையர்க ளனுதி னம்புகழு
      மீடிலாத பரையே
யிகல்செ யும்பழைய வினைக ணீங்கவெளி
      யேனை யாளுமுமையே
சொலவருஞ் சுருதி முறையி டும்பசிய
      சோதி நீடுமணியே
சுபநலம் பெருகு புதுவை யின்கண்வரு
      சூலி வாமநிதியே
யுலகிறைஞ் சுபய பதநி ரந்தரிபொன்
      னூச லாடியருளே
யுளமகிழ்ந் துதிரி புரச வுந்தரிபொன்
      னூச லாடியருளே.       (7)

535. குழைபொ லந்தருவி னுலவ ரம்பையர்கள்
      கூறொ ணாதநலமே
குலவும்விஞ் சையர்த மெழில்கொ ளங்கனையர்
      கோதி னாகவுலகார்
மழையி னுங்கரிய குழன்ம டந்தையர்கள்
      வாரி சூழுநிலமென்
மருவி யென்றுநிறை பெருகு மங்கையர்கள்
      வாழி வாழியெனவே
விழையு மன்பினொடு துதிசெ யுங்கௌரி
      வீறு சேரிதழிபால்
விதுவொ டும்பனக நதிமி லைந்தமுடி
      வேணி மேவுமிறையோ
னுழையி லங்குமர கதமெய் யம்பிகைபொன்
      னூசலாடி யருளே
யுளமகிழ்ந் துதிரி புரசவுந் தரிபொன்
      னூசலாடி யருளே.       (8)

வேறு
536. நிருபர்க ளனுதின மனுமுறை யின்படி
      நீடிரை மண்ணாள
நிலைபுயன் மதிதொறு மினிது பொழிந்திட
      நீர்மலி மும்மாரி
யிருநிதி நிறைபுனல் வயல்வள மெங்கணு
      மேருற வெந்நாளு
மிருடிக டவநிலை பெறமிகு தொண்டர்க
      ளேணுற மெய்ஞ்ஞான
மருவிய கலைவலர் கவிதை புனைந்திட
      மாமுதிர் சொன்னாடி
மகிதல மதிலக முறுநிறை பொங்கிட
      வாழ்மயி லன்னார்க
ளருமறை புகழ்புது வையினுறை யம்பிகை
      யாடுக பொன்னூசல்
அரகர சிவசிவ திரிபுர சுந்தரி
      யாடுக பொன்னூசல்.       (9)

537. அமுதினு முதிர்சுவை தருமொழி மங்கலை
      யாடுக பொன்னூச
லடியவ ரிடர்கெட வரமுத வும்பரை
      யாடுக பொன்னூச
லமுதர்கள் பரவிய பதமல ரம்பிகை
      யாடுக பொன்னூசல்
லபய வரதகர தலமுறு சங்கரி
      யாடுக பொன்னூச
லமலை விமலைசிவை கௌரி யலங்கரி
      யாடுக பொன்னூச
லருள்செய் தெனதுதுதி மகிழு நிரந்தரி
      யாடுக பொன்னூச
லமல னொடுவிடையி னிலகு துரந்தரி
      யாடுக பொன்னூச
லரகர சிவசிவ திரிபுர சுந்தரி
      யாடுக பொன்னூசல்.       (10)

திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் முற்றிற்று
--------------------

புதுவை திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை

சிறப்புப்பாயிரம்
426. முதல்விக்கு + உவப்புற என்க. கலைஞர், பிரபந்தத்தை நப்பெருந்தகைத் தமிழென்பர் இஃது பிள்ளைத் தமிழென்பரலர் எனக் கூட்டுக (1)

427. உண்ணாது சுரந்த பெருந்தனத்து அமுதம் - குழந்தை உண்ணாமலே பெருகிய பெருமை பொருந்திய முலைப்பாலமிர்தம்; ஒருவன் - திருஞான சம்பந்தப் பெருமான்; தமிழ் - தேவாரம்; தனத்தமுதம் கொடுத்துத் தமிழமுதம் உண்ணுதலினும் தனத்தமுதம் கொடுக்காமலே தமிழமுதம் உண்பது விருப்பமாதலின் "திரிபுரைக்கு இங்கு எதில் விருப்பம்'' என்று கூறிச் சம்பந்தப் பெருமானைக் காட்டிலும் உயர்வாக்கினார். உலக மக்கள் தன்னிடமிருந்து ஒன்று கொடுத்து அதற்குப் பிரதியாக வேறொன்று பெறுதலினும் யாதொன்றும் கொடாமலே ஒன்று பெறுவதனை மேலாக மதித்து விரும்பிப் பெறுவராதலால் இங்ஙனம் கூறினர். ''செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்றலரிது'' என்ற குறள் காண்க. கண்ணான திரிபுரை கண்போன்று முக்கியமானவளான திரிபுரசுந்தரி; சக்தியே மும்மூர்த்திகளையும் தொழிற்படுத்துகின்றாள் என்னும் தேவிபாகவதக் கருத்துப்படி கூறினார். "கண்ணிற் சிறந்தவுறுப்பில்லை'' என்றார் பிறரும். (2)

428. திரிபாதகை - கங்கை; வேணி - சடை; அத்தை - அதனை; அதனை என்பது அத்தை எனக் கொச்சையாகியது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடல் கடைந்தபோது சந்திரனை அடை தூணாகவும் மந்தரமலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்து முதலில் விஷம் பெற்றுப் பின்னரே அமிர்தம் பெற்றனர். அவ்வமிர்தத்தைத் தேவர்கள் மட்டுமே அசுரர் பயம் நீங்குவதற்காக இகசுகம் கருதியே திருமாலினால் வஞ்சனை புரிவித்துச் சாப்பிட்டனர். இருகூட்டத்தாருக்குப் பதில் முத்துக்குமரன் என்ற இப்புலவர் மட்டுமே செந்தமிழாகிய பாற்கடலில் புத்தி என்ற தூணை நிறுத்தி, நாவாகிய மத்தினால், அன்பெனும் கயிறுகொண்டு அப்பாற்கடலைக் கடைந்து முதற்கண்ணே பிள்ளைத்தமிழ் என்ற அமுதத்தையெடுத்துப் பூமியிலுள்ள மனிதர் எல்லோருக்கும், இவ்வுலகம் மேலுலகம் ஆகிய இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைய உண்பித்தார் என்பதால் எத்தகைய உயர்வை ஆசிரியர்க்குத் தருகின்றார் என்பதை உணர்க. செந்தமிழ்ப் பாற்கடல், மதியாய தம்பம், நாவின் மத்து, அன்பெனும் பாசம் ஆகியன உருவகங்கள்; மதித்து - கடைந்து. (3)

429. கதலி - வாழை; எற்கொண்டு - என்னை முதலாகக்கொண்டு; ஏர் - அழகு; ஆதிசேடன் இரண்டாயிர நாவு படைத்தவனாதலின் "சேடனாலு மிசையாமல் தலையசைத்தான்'' என்றார். மேருவில் கொண்ட பரமன் - சிவபெருமான்; விற்பனன் – புலவர் (4)

430. வெள்ள + சடை + அடவி - கங்கை வெள்ளத்தை அடக்கிய சடையாகிய காடு; சடை அடவி என உருவகித்தார். குண + ஆலையன் - குணாலையன், வடமொழிப் புணர்ச்சி, தீர்க்கசந்தி, குணத்தையே கோயிலாகக் கொண்டவன் எனப்பொருள். வர + உதயன் - வரோதயன், வரத்தினால் உதித்தவன், வடமொழிப் புணர்ச்சி, குணசந்தி; கிள்ளைத் திரிபுரசுந்தரி - கிளியைக் கையிலேயுடைய திரிபுரசுந்தரி, கிள்ளை - கிளி, திரிசொல் (5)

431. தொடை - யாப்பிலக்கண உறுப்புக்களில் ஒன்று, மோனைத் தொடை, இயைபுத் தொடை, முரண்டொடை முதலியன காண்க; துகள் தீர்மானின் மென்நோக்கியாம் பனுவல் மாது - குற்றம் நீங்கின பெண்மானையொத்த மருண்ட கண் பார்வையையுடையவளான சரசுவதி; அயன் - பிரமன்; பொன்நோக்கி மகிழ் புதுவை - இலக்குமி கடாட்சத்தால் யாவரும் மகிழ்கின்ற புதுவை நகர்; பூபன் - தலைவன்; தன் நோக்கில் - தன் கல்வி நோக்கினால்; மாது + ஓ - அசைநிலைகள். (6)

432. அத்தன் - தலைவன்; இங்குள்ள சிவபெருமான் பெயர் வேதபுரியீசுவரர்; முதுமை + அறிஞன், புதுமை + அமுது என்பன ஈறுபோதல் என்ற விதி நோக்கி மூதறிஞன், புத்தமுது என்றாயின. வெள்ளத்தமியேன் - கள்ளமற்ற உள்ளமுடையவனான தனித்த நான்; பெற்றி - தன்மை; சொல்லுகேன் - சொல் +உ+க்+ஏன், உ - சாரியை, க் - எதிர்கால இடைநிலை. (7)

433. சத்துக்குணம் - சத்துவக்குணம், இது முக்குணங்களிலொன்று; சுத்தக் குலத்தவர் - திரிகரண சுத்தியுள்ள பிராமணர், இது உபலட்சணத்தால் மற்ற குலத்தாரையும் பெறவைத்தது. பாவலர் - பாட்டுப் பாடுவதில் வல்ல புலவர்; தேர் முத்துக்குமரன் - வினைத்தொகை; முதற் பிரபந்தம் - முதன்மையாகிய பிரபந்தத்தில் ஒன்றாகிய பிள்ளைத் தமிழ்.   (8)

434. வித்துக்கு முன் புதுவை - மோட்ச வித்துக்கு முதன்மையில் நிற்கும் புதுவை நகர்; மனை - மனைவி (திரிபுரசுந்தரி); விரிஞ்சன்னி - விரிஞ்சு உன்னி என்பது இங்ஙனமிருக்கலாம் போலும், விரிவை நினைத்து என்று பொருள். வெள்ளத்தமிழர் - கள்ளமில்லா உள்ள முடைய தமிழர்; தேரும் – ஆராயும் (9)

435. பாவாணர் - பாட்டுக்களால் தங்கள் வாழ்க்கையை நடத்துபவர் - வாழ்நர் என்பதன் மரூஉ வாணர். செலா - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத்திரிந்து நின்றது. தேக்கரிய - நிறைக்க முடியாத; பரபோதம் - மேலான அறிவு; பைந்தருவோர் ஐந்து - கற்பகம், பாரிசாதம், மந்தாரம், அரிமந்தாரம், சந்தானம் என்ற ஐந்து மரங்கள்; குளிகை - ரசவாதஞ் செய்யும் ஓர் கருவி; முத்துக்குமரன் உரைத்திடும் பிரபந்தம் பாவாணர் செவிகளுக்கு இனிய அமுதாம், புலனை அடக்கும் அடியார்கட்கு நிறைக்க முடியாத ஆனந்தமாம், துறவற நெறிச் செல்லும் ஞானிகட்கு மேலான போதமாம், இல்லறத்தவர்கட்கு கேட்டவற்றை எல்லாந்தரும் கற்பகம் முதலிய தருக்களாம், சிவயோக சித்தர்கட்கு இரசவாதம் செய்யும் குளிகையாம், அற்ப அறிவுடைய புலவர்களின் கர்வத்தை அறுத்தொழிக்கின்ற கூர்மையான வாளாயுதமாம் எனப் பொருள் கொள்க. (10)

436. சதுரர் - திறமைசாலி; விரிஞ்சன் - பிரமன்; சேடன் - ஆதிசேடன், இவனைக் கலைகளில் வல்லவன் என்பர். பிரமன், முத்துக்குமரனைப்போல மதுரகவி பாடுகின்ற திறமைசாலி உண்டோவென்று கேட்க ஆதிசேடன் நானே என்று மார் தட்டினான்; அங்ஙனம் மார் தட்டியும் ஓர் பதமாவது தெரியாமல் மயக்கங்கொண்டு கடலில் வீழ்ந்தான். பிரமன் கோபித்துக் கர்வம் பேசிய நாவை இரண்டாகப் பிளந்து காதினையும் அறுத்து பூமியையும் சுமக்கவைத்தான் என முத்துக்குமரன் என்ற இந்நூலின் புலவரை யேற்றித் தற்குறிப்பேற்றவணி விளங்கப் பாடியுள்ளார். (11)
--------------
காப்புப் பருவம்

437. தம்பிரான் தோழன் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்; பதிகம் - பத்துப்பாட்டு; முத்தாறு - மணிமுத்தாநதி; ஆரூர் - திருவாரூர்; மாத்துரைத் தளவிடல் - உயர்ந்த பொன்னா என்றறிய மாத்துப்போட்டுப் பார்த்து மதிப்பிடுதல்; மாற்றுரைத்த விநாயகர்:- சுந்தரர் திருமுதுகுன்றமடைந்து பொன் வேண்டி பன்னீராயிரம் பொன் பெற்று மணிமுத்தாநதியில் இட்டு இதைத் திருவாரூர்க் குளத்தில் தரவேண்டுமென வேண்டி திருவாரூர் அடைந்து பரவையாருடன் கமலாலய தீர்த்தக்கரையில் வந்து பார்த்தும் பொன் அகப்படாது, பதிகமோதி, எடுத்த பொன்னைக்கண்டு, மாற்றில் ஐயமுறவே, இங்குள்ள விநாயகர் வணிகவுருவம் எடுத்து வந்து மாற்றுரைத்துக் காட்டி நல்ல பொன்னென நிரூபித்தார். இதனால் இவருக்கு "மாற்றுரை காட்டிய விநாயகர்" எனப் பெயர் வந்தது (தியாக - கட-6) மால் வெள்விடை - திருமாலாகிய வெள்ளை எருது; தானி - இடத்திலுள்ளவள்; வேதவனமாம் மணக்குளம் மேவும் ஐங்கரப் பிள்ளையெனக் குளத்தங்கரைப் பிள்ளையார்க்கு வணக்கம் முதற் கூறினார் (1)

438. நித்திலவடங்கள் திகழ - முத்துமாலை விளங்க; முறுவல் - புன்சிரிப்பு; அருள்தேன் விழிக்குவளை - உருவகம், அருளாகிய தேன் விழியாகிய குவளை மலரினின்று பொழிய; பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம் கதை, கோதண்டம், வாள்; அம்போருக மடந்தை - தாமரையில் வசிக்கும் இலக்குமி; உரம் – மார்பு; வெண் திரைக்கடல் - பாற்கடல்; அனந்தன் - ஆதிசேடன்; அறிதுயில் - யோகநித்திரை; முகில் - மேகநிறம் போன்ற திருமால், உவமையாகு பெயர் (2)

439. பராவு புருகூதன் - துதிக்கப்படும் இந்திரன் (யாகத்திலழைக்கப்படுபவன்); உனா - உன்னி (நினைத்து), செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத்திரிந்தது. உன்னா - உனா, தொகுத்தல் விகாரம்; மீனமுயர் கேதனம் நேர்பவன் - மன்மதன்; கேதனம் - கொடி, சுறாமீன் கொடி மன்தனுக்குரியது; நுதன் மேல் உறுகண் ஆர் அழல் - நெற்றிக் கண்ணில் பொருந்திய அக்கினி; நாள்தொறும் - நாடொறும்; நளினப்பதத்தி - தாமரை மலரைப் போன்ற பாதமுடையவள்; மாறன் - சவுந்தர பாண்டியன்; மாறன்மகள் - தடாதகைப்பிராட்டி; மான - பெருமை பொருந்திய; காழிவரு மாமதலை - ஞானசம்பந்தர்; நுகரும் - அனுபவிக்கும்; வாமி - வாமபாகத்தையுடையவள்; வினைகள் தீர வரமே உதவு வாமி எனப் பிரிக்க. இந்திரனுக்கு வேதத்தைத் தந்ததும் பிரமன் வழிபாடு செய்ததும் 504-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. வாசமலரான் - பிரமன். (3)

440. மகிடன் - எருமையினது முகம், வால், கொம்பு இவைகள் பொருந்திய அசுரன்; இவன் ரம்பனென்னும் அசுரனுக்கும் ஓர் எருமைக்கும் பிறந்தவன்; இவன் பிரமனைக்குறித்துத் தவஞ்செய்து பெண்கள் தவிர மற்றவர்களால் வெல்லப்படா வரம் வாங்கி தேவர்களை அடக்கித் துன்புறுத்துகையில் சத்தி காளி உருக்கொண்டு வந்து கொன்றனள். உருகு அன்பர் - வினைத்தொகை; தயாவதனி - தயைநிறைந்த முகத்தை யுடையவள்; ஆரணவனம் - வேதவனம், இவ்வம்மை கோயில் கொண்டுள்ள இடம் வேதவனம் என்று பெயர். ஆசு இல் வியாதர் மொழி - குற்றமற்ற வியாசமுனிவர் மொழிந்த; பாரிய - பருத்த, பரிய என்பதன் நீட்டல் விகாரம்; பானு - சூரியன்; அங்குசபாசம் - யானைத்தோட்டியாகிய ஆயுதம்; வாள் அவுண வீரர்-வாளாயுதத்தையுடைய இராக்கத வீரர்; கடம் மீறு கய ஆனனம் - மதநீரை மீறிப்பொழிகின்ற யானைமுகம்; சினகரம் - கோயில்; முதற்கண் கூறிய விநாயகர் துதி குளத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகரைக் கூறவே இது கோயிலில் எழுந்தருளியுள்ள வேத விநாயகரைக் கூறியதாயிற்று. எனவே இரண்டு விநாயகர் வணக்கம் செய்யப்பட்டது. (4)

441. மகபதி பெறுந்தனயன் - இந்திரன் மகனான சயந்தன்; - நீபமஞ்சரி - கடப்பமாலை; ககனம் உலவு அம் சிறகின் எகினவாகனம் - ஆகாயத்தில் உலவுகின்ற அழகிய சிறகுகளையுடைய அன்னவாகனம்; கஞ்சன் - தாமரைமலரிலுள்ள பிரமன். முனிசெய் - கோபித்து: முனிசெய் தாக்கி என்க; பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாமையால் பிரமனைக் கோபித்துக் குட்டிச் சிறை வைத்தனன் முருகன். அரவம் ஒலிடு பாத பங்கயப் பார்ப்பதி - சப்தம் ஒலிக்கின்ற பாத தாமரைகளையுடைய பார்வதி; மனோபவன் - மன்மதன், இவன் நெற்றிக்கண்ணால் எரிந்தது காண்க. அருள் + நயனி- அருள்மிகுந்த கடைக்கண் பார்வையுடையவள்; மாதரி, சூரி - காளியின் பெயர்கள். (5)

442. இருஞ்சிறை அளி தேன் அருந்தி மகிழ் தெய்வச் செழுங்கமலம் என்க; இருஞ்சிறை அளி - கரிய சிறகுகளையுடைய வண்டுகள்: பிரமன் வீற்றிருத்தலால் தெய்வச் செழுங்கமலம் என்றார். திசை முகக் கடவுள் - ஒவ்வொரு திசையை நோக்கியும் ஒவ்வொரு தலை பிரமனுக்கு உண்டாதலால் இங்ஙனம் கூறினர். வேனில் + அதிபன். வேனிலாதிபன் என்பது நீட்டல் விகாரம் கொண்டது. மாரன் ஆயுதச் சாலையின் மன்மதனது தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம் முதலிய ஆயுதங்கள் உள்ள இடத்தைப்போல; வெண்சங்கு... வயலும் - வெள்ளிய சங்கங்கள் ஈன்ற முத்துக்களைப் போல சந்திரன் நிலவினால் அல்லி இதழ்கள் விரியப் பெற்ற நீர் நிரம்பிய சாலி நெல் விளையும் வயல்களும்; முத்தின் - உவமப் பொருவு; பால்நிறத் தூவி அனம் உலவு மலர் வாவி - பால்போன்ற வெண்மை நிறமான மெல்லிய சிறகுகளையுடைய அன்னப் பறவைகள் உலாவப்பெற்ற மலர்களையுடைய குளம்; அனம் - தொகுத்தல் விகாரம். பாங்கர் - பக்கங்கள்; புதுவையின் பக்கங்களில் பூம்பொழில்களும், செந்நெல் வயல்களும், வாவிகளும், மற்ற பல வளங்களும் நிரம்பியிருந்தன என்க.   (6)

443. விண் தலம் செவிடு உற என்க. வீரவெண்டையம் - வீரத்திற்கறிகுறியான சிறு மணிகள் நிறைந்த வீரகண்டாமணி; 'நானே பெரியன்" என்று அகங்காரங்கொண்ட பிரமன் நடுச்சிரசை நகத்தால் கொய்து அதனைக் கபாலமாகக் கொண்டு பிச்சையேற்றவன் வைரவன். 'எனவே "வேதன் ...........கையினான்" என்றார். சினவு ஞாளி - கோபங்கொண்ட நாய்கள்; மண்டலந்தனை.......... மாலுடன் வருங் தோகை - பிரளயகாலத்தில் பூமியையெல்லாம் உண்டு ஆலிலைமீது யோகநித்திரை செய்யும் திருமாலுடன் பிறந்த திரிபுரசுந்தரி; "வண்மை சேரு............ தேவி '-377-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. (7)

444. நதிபதி - கடல்; பாற்கடலில் தோன்றிய அமுதத்தோடு இலக்குமியும் தோன்றினவளாதலால் “பாற்கடல் நடுவுள் அமுதமொடு புவன மகிழ்பெறத் தோற்றி" என்றார். அமரர் தமையரசு திருவுறப் பார்த்து என்றார் முன்பு துருவாசர் சாபத்தால் இலக்குமி கடாட்சம் நீங்கியதால்; அரசு திருவுறப் பார்த்தலாவது - இழந்த இந்திரனது அரசாட்சியை மறுபடியும் பெறவைத்தல். நையாண்டிப் புலவர் பாடிய "மேலாடையின்றிச் சபை புகுந்தால்" என்ற பாட்டில் "நுவல் பாற்கடலோ மாலா னவரணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே ஆலால மீந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே'' என்று கூறியதற்கேற்ப "எழில் நணுகு மணிவணன்'' என வருகிறது காண்க. மன்கதியை - நிலைத்த மோட்சப் பேற்றை; எண்கணன் - பிரமன்; இரதிபதி - மன்மதன், இவன் கண்ணாவதாரத்தில் உருக்குமணிக்கு மகனாக "பிரத்தியும்னன்'' என்ற பெயரினனாகத் தோன்றியது காண்க. அரி - திருமால்; கனகமுளரி - பொன்மயமான தாமரை; மயில் - உவமவாகுபெயர். மதியினளிசெய் ஒளிர்வதன நிமலி - சந்திரனைப்போன்று குளிர்ச்சி செய்யும் பிரகாசம் வாய்ந்த முகத்தையுடைய குற்றமற்றவள்; பாட்டு அளிவதியும் - பாட்டுப் பாடுதலையுடைய வண்டுகள் தங்கும்; நறை கமழும் அளகி - வாசனைவீசும் கூந்தலையுடையவள்; தீட்டு அருமறைகள் புகழ் உபயகமல சரணி - எழுத முடியாத வேதங்கள் புகழும் தாமரை மலர்போன்ற இருபாதங்களை யுடையவள், இதனாலேயே வேதத்திற்கு "எழுதாக்கிளவி'' என வழங்குகிறது. மகிடன் வரலாறு 440-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. சேண்பொலி பொதிய முனி - ஆகாயத்தைத் தொட்டு விளங்கும் சிகரங்களையுடைய பொதிய மலையில் வாழும் அகத்திய முனிவன்; சேண் பொலி- தூரத்திலும் தன்னிடம் அகத்திய முனி இருப்பதால் புகழ் கொண்டு பிரகாசிக்கும் என்ற பொருளும் கொள்ளலாம். பூத்திகழ் பொருவில் கரம், அபயமொடு வரதம் திகழ் கரம் எனப் பிரித்துத் தனித்தனி கூட்டுக. அபய, வரதக்கரங்களின் விரிவை 537-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. சீற்றமில் புனித முறுதவர் - கோபக் குணமில்லாத தூய்மையுடைய தவசிகள்; அமலன் - குற்றமற்ற சிவபெருமான். (8)

445. எண்கண் துளங்கு மொருவன் - நான்கு தலைகளுக்கும் எட்டுக் கண்களாதலால் பிரமனை இச்சொற்களால் குறித்தார். பாவாணர் நாவில் நடிப்பதாவது -அவர்கள் விரும்பிய வண்ணம் ஆசுகவியாகப் பாடச் செய்தல். மதி ஆதவன் - சந்திரனும் சூரியனும், உம்மைத்தொகை. புரிசை - மதில்; உளம் நயந்த அருள் ஆகரன் என்க; ஆகரம் -உறைவிடம். ஞானசம்பந்தரும் “உள்ளம் கவர் கள்வன்'' என்றார்; எண்ணான்கு அறம் - முப்பத்திரண்டு தருமம். நதி...........விளங்கிட - கங்கை நதியும், வாசனையுடைய கொன்றை மலரும் சடையில் விளங்கிட; சூரியனும் சந்திரனும் முறையே காலை மாலைகளாகிய இரு காலங்களிலும் மிக்க வளங்களைத் காண்பதைப்போன்று இடையறாது வந்து உயர்ந்த மதில்மீது உலாவுதலைப் பொருந்திய புதுவை நகர் என்க. இதனால் புதுவை நகரின் மதில் வளத்தை உயர்வு நவிற்சிபடக் கூறுகின்றனர். (9)

446. மறையாயுதம், அன்னவாகனம் உடையவள் - அபிராமி (பிராமணி, பிராம்மி); வில் ஆயுதம், இடபவாகனம் உடையவள் - மயேச்வரி; வேல்படை, மயில்வாகனம் உடையவள் - கௌமாரி; சக்கரப்படை, கருடவாகனம் உடையவள் - நாராயணி; வாள் படை, சிங்கவாகனம் உடையவள் - வராகி; வச்சிரப்படை, யானைவாகனமுடையவள் - இந்திராணி; சூலப்படை, பேய்வாகனமுடையவள் - காளி; ஆக இவர்கள் ஏழு பேரும் சப்த மாதர்கள். மகிடனைக் கொல்லும்போது அவ்வக் கடவுளது சத்திகளும் தேவியோடு கூட வந்ததாகத் தேவி பாகவதம் கூறுகிறது. முதற்கண் கூறிய பிராம்மி பிரமனிடமிருந்தும் மயேச்வரி ஈச்வரனிடமிருந்தும், கௌமாரி முருகனிடமிருந்தும், நாராயணி திருமாலினிடமிருந்தும் இங்ஙனமே மற்ற தேவர்களிடமிருந்தும் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சிவபுராணத்தில் அந்தகாசுரனைக் கொல்லும்போது இவ்வாறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இப்பாட்டில் ஆயுதங்கள் வாகனம் ஆகியவைகளை மாதர்கட்கு நிரனிறையாகக் கொள்க. சுறவம் எறி திரை அகடு கிழிய............. பெண்ணை நதி - சுறாமீன்களை வீசி கடலின் நடுவிடமும் பிளக்குமாறு வருகின்ற வெள்ளம் விளங்கும் தென்பெண்ணை நதி; மகச் சூழல் - யாகங்கள் செய்யுமிடங்கள்; சுரர் - சுரை (அமுதம்) உண்டவராதலால் தேவர்க்குச் சுரர் என்ற காரணப்பெயர் உண்டாயிற்று; நாவம் - புதுமை, நவம் என்பதன் நீட்டல்; அடு சிங்கம் - வினைத்தொகை, அடு-கொல்; தரித்து + அனம் எனப்பிரிக்க, அனம் - அன்னம் என்பதன் தொகுத்தல். (10)

447. எல்லைமாகாளி - எல்லை காக்கும் பெருமை பொருந்திய காளி; பத்திரகாளி - துர்க்காதேவி, வீரபத்திரருடன் தக்கயாகம் அழிக்க தாக்ஷாயணியால் சிருட்டித்து அனுப்புவிக்கப்பட்டவள். காடு காளி - காட்டில் வாசம் செய்தற்குரியவள்; நவசத்தி 316-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. பஞ்சசத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி, சிற்சத்தி, ஞானசத்தி, திரோதாசத்தி ஆகியோர். 'பராசத்தி சிவத்தோடு அபின்னையாயிருப்பவர். வயம் கொள் அரிகரபுத்திரர் - வீரம் கொண்ட, அரியாகிய மோகினிக்கும், அரனான பிக்ஷாடனருக்கும் பிறந்தவர். இவர் அரகர புத்திரர், ஐயனார், சாத்தனார் என்றழைக்கப்படுவர். "மாதிரத்தலைவர்......... வசுக்கள்'' இவர்கள் விரிவால் வரும் முப்பத்து முக்கோடி தேவர்களை 10-ஆம் பாட்டின் குறிப்பாலுணர்க. அரமகளிர் - தேவப்பெண்கள், தண்டீசர் - சண்டேசுவர நாயனார். (11)
----------------------
செங்கீரைப் பருவம்

448. பை - படம்; பாந்தள் அரசு - பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன்; வேதன் - பிரமன். கடல் வணன் - கடல்போலும் நிறமுடைய திருமால். கைவைத்த மான் மழுப்படையாளன் - மானையும் மழுவையும் இரு கைகளிலும் வைத்துள்ள சிவன். (1)

449. துங்கம் - பரிசுத்தம்; பந்து இலகு சூழியக்கொண்டை - பந்து போன்று விளங்கும் உச்சியையுடைய கொண்டை; சோடச கலா மதியின் - பதினாறு கலைகளையுடைய சந்திரனைக் காட்டிலும்; மதியின் - உறழ் பொருவு; பசுமை + கதிர் - பைங்கதிர்; மரகதமணித் தொங்கல் - மரகதமணியாலியன்ற காதணி; இருபார்வை யுறுசெவி - இரண்டு கண்களும் நெருக்கித்தாக்கும் காதுகள்; பன்னக இரத்தினம் - பாம்பி னின்று கிடைத்த மாணிக்கம்; பாணி - கை; முத்தாரம் நிலவைப் போன்று ஒளி வீசுமாதலால் "தண்சுடர் உமிழ்" என்றார்; சிறுமை+ அடி - சிற்றடி; கிண்கிணி, நூபுரம், தண்டை ஆகியன காலுக்கணியும் ஆபரணங்கள்; மலைவல்லி - மலையில் பிறந்த கொடிபோன்றவள். (2)

450. வீர + அதிபர் - வீராதிபர், வடமொழிப் புணர்ச்சி, தீர்க்க சந்தி; வயவாள் விடாத மறவர் - வீரமிக்க வாளினை இறப்பினும் விடாத மறக்குடியிற் பிறந்தவர்; இலைகொள் நெடு வடிவேல் படை - இலை போன்று கொண்ட நீண்ட வடித்த வேலாயுதம்; பாய்புரவி - வினைத் தொகை; சொல்வயம் பெறு - புகழ்ந்து கூறுமாறு வீரம் பெற்ற; பிரதானி - அதிகாரிகள்; இப்பாட்டினால் வில், வாள், வேல் கொண்டுள்ள காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கு படைகளும் சூழ்ந்த அரசர், மந்திரி, சேனாதிபதி ஆகியோர் வணங்கி ஏவல் கேட்கப் பாண்டி நாட்டை யாண்ட தடாதகைப் பிராட்டியின் வல்லபங் கூறியதாயிற்று. (3)

451. இப்பியாயிரஞ் சூழ வீற்றிருப்பது இடம்புரிச்சங்கம்; இடம்புரிச்சங்கம் ஆயிரஞ் சூழ வீற்றிருப்பது வலம்புரிச்சங்கம்; வலம்புரிச் சங்கமாயிரஞ்சூழ வீற்றிருப்பது சலஞ்சலம்; சலஞ்சலசூழ நடுவிலிருப்பது பாஞ்ச சன்னியம். இப்பி - சங்கம்; சகச்சிரம் - ஆயிரம்; நாப் பண் - இடை; சதம் - நூறு; வலம்புரிச்சங்கம் - வலப்பக்கம் சுழிந்திருக்கும் சங்கம்; இடம்புரிச்சங்கம் - இடப்பக்கம் சுழிந்திருக்கும் சங்கம்; பாஞ்ச சன்னியச் சங்கம் மேவியது போன்று சிறந்த பெண்கள் நூறு கோடி பேர் சூழ நடுவிலிருப்பவள் கௌரியென்க. (4)

452. குடக்கு - மேற்கு; மீன்குதிக்கும் சத்த சாகரம் - மீன்கள் குதிக்கின்ற ஏழு சமுத்திரங்கள்; வெற்பு - மலை; வச்சிரப்படையன் - இந்திரன்; அனீகம் - சேனை; உருத்து - கோபித்து; தென் + குதிக்கும் - அழகாக விளையாடும்; கடம்பன் - முருகன்; கடம்பனை யருள் பசுங்குழவி என்பதில் அமைந்துள்ள நயம் காண்க; இப்பாட்டின் வரலாற்றை 385-ஆம் பாட்டின் குறிப்பினால் அறிக (5)

453. தெண் பனிமலை- இமயமலை; கங்காளி- கங்காளமுடையவள்; நதிபதி தந்திடும்முதினும் - பாற்கடல் கொடுத்த அமுதத்தைக் காட்டிலும்; ஓதி - கூந்தலை யுடையவள்; தளவம் - முல்லை; வண்பாவை - வண்மைத் தன்மையுடைய பொம்மை போன்றவள்; பாவை - உவமையாகுபெயர்; பணமணி ஒண்தொடி - பாம்புகளின் மாணிக்கத்தால் ஆகிய ஒள்ளிய வளையல்; பாணி - கைகளையுடையவள்; பந்தாரும் - பந்துபோன்று மெல்லிய. (6)

454. வெருவுறு - பயப்படத்தக்க; பரை - காளி; வண்கா - வளப்பும் பொருந்திய சோலைகள் சூழ்ந்த; வழுதி - சவுந்தர பாண்டியன்; மன்பார். - நிலைத்த பூமியிலுள்ள உயிர்கள்; பார் - இடவாகு பெயர்; அனநடை இந்திரை - அன்ன நடைபோன்ற நடையுள்ள திருமகள்; அகங்கூர , மனதில் மிக்க; தினகரன் - சூரியன். (7)

455. மரு வகுளம் - வாசனையுடைய மகிழமரம்; தமநகம் - மருக்கொழுந்து; நறவம் - அனிச்ச மரம்; வழை - சுரபுன்னை மரம்; சண்பகம் + அலரி என்க, அலரி - அலரிச்செடி; புருண்டி - மல்லிகை; மணங்கால் செங்கோடு - வாசனையைப் பரப்பும் செருந்தி மரம்; குருகு - குருக்கத்தி மரம்; மதலை - கொன்றை மரம்; அலர் அஞ்சனி - மலர்களையுடைய காயாமரம்; செவந்தி - கொடிப்பாலை; இது சிவந்தி என வழங்கும்; கொந்து + ஆர் + மஞ்சாடி - கொத்துக்கள் நிரம்பிய மஞ்சாடி மரம்; குழையொளிர் குங்குமம் - குழை போன்று பிரகாசிக்கும் குங்கும மரம்; மயிலை - இருவாட்சி மரம்; குருந்து - குருந்தமரம்; கொங்கார் சிந்தூரம் - மகரந்தப்பொடி நிரம்பிய வெட்சிச் செடி; அம் புயம் + மென் + தாது + ஒண்மை + போது - தாமரையின் மெல்லிய மகரந்தங்கள் பிரகாசிக்கு மலர்; குமுதந் திகழ்தடம் - குமுத மலர் விளங்கும் குளங்கள் சூழ்ந்த; தரு விஞ்சி ஏர் எஞ்சாத - மரங்கள் மிகுந்து அழகு குறையாத; மகிழமரம், குருக்கத்திமரம், குங்கும மரம் முதலிய கலந்த நந்தன வனத்தோடு தாமரையின் மகரந்தம் அல்லி மலரில் பிரகாசிக்கும் குளங்கள் சூழ்ந்த மருதநிலம் தருகின்ற அழகு குறையாத வளம் சேர்ந்த புதுவை நகர் என முடிக்க. தாமரை சூரியனால் மலர்வது, குமுதம் சந்திரனால் மலர்வது; இங்குத் தாமரையின் மகரந்தம் அல்லி மலரில் பிரகாசிக்கும் என்றது அல்லி மலர் அங்குள்ள முத்தின் நிலவினால் மலர்வதைக் குறித்தாகும். (8)

456. வாமனர் - மாபலியிடம் தானம் வாங்கிய திருமாலவதாரங் களிலொன்று; வேணு - புல்லாங்குழல்; வீறு - பெர; காலிபின் ஆயர் சிறாருடன் ஏகினர் - பசுக்கூட்டங்களின் பின்பு இடைச் சிறுவர்களுடன் சென்றவர்; கார் புரையும் - மேகத்தை ஒத்த; காமன் - மன்மதன்; கான் உலவு அம் தாளர் - காட்டிலே உலவின அழகிய பாதத்தை யுடையவர்; வாலி பினோன் - சுக்கிரீபன்; பதுமாதன மாது - தாமரையாசனத்தில் வீற்றிருக்கும் இலக்குமி; மாமணி - கௌஸ்துபமணி; வான் வைகுந்த ஈசர் - உயர்ந்த வைகுந்தத்திலிருக்கும் திருமால்; பதும ஆதன மாது - தாமரை யாசனத்திலுள்ள இலக்குமி. (9)

457. ஓதரு - சொல்லுதற்கரிய; ஓதிம நேர் நடையார் - அன்னம் போன்ற நடையுடைய பெண்கள்; நிறை - கற்பு; ஓகை - சந்தோஷம்; மாதிகம் - குதிரை; மாதிக ...........வீரர் - இவ்வடியால் நாற்படையைக் குறித்தார், புரை - மேலானவள்; ஆய்புகழ் – வினைத்தொகை. (10)
-------------
தாலப்பருவம்

458. திலநெய் - (நல்ல) எண்ணெய்; திமிர்ந்து - பூசி; நிறை பொற்கும்பம் - நிறைந்த பொன் குடங்கள்; நிலவின் ஒளிர் - நிலவுபோன்று பிரகாசிக்கும்; ஆட்டி - நீராட்டி; நிலவின் ...... துவட்டி - நிலவொளிபோன்ற பூப்போன்று மெல்லிய வஸ்திரத்தால் ஈரம் உலர உடலைத் துடைத்து, நிலவின்-5-ஆம் வேற்றுமை உவமப்பொருவு; சிலை ஒண்ணுதலிற் காப்பு - வில்போன்ற பிரகாசமான நெற்றியில் நிலக்காப்பு; அஞ்சனம் - மை; அயினிநீர் - சோறு கலந்த ஆலத்தி நீர் ; இமயமலைத் தலைவன் மனைவி - மேனை (1)

459. கால் - தூண்; பகர் ஆகமம்-சொல்லப்படுகின்ற 28-ஆகமங்கள்; கொடுங்கை - வெளிப்பக்கம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு; பலவாங் கலை - 64-கலைகள்; விதானம் - மேற்கட்டி; வழுவில் தத்துவம் கயிறா - குற்றமற்ற 96-தத்துவங்கள் கயிறாகவும்; மருவுஞானம் மெல்லணை - பொருந்திய ஞானமே மெல்லிய படுக்கை. வனை - அழகுமிகுந்த; முழு மெய்யன்பில் ........... தனத்தாய்:- காஞ்சிபுரத்தில் அம்மை சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்போது சிவபெருமான் தவத்தைக் கலைக்க கம்பாநதியாக வர அம்மை பயந்து தான் பூசித்த சிவலிங்கத்தையே தழுவினாள். அப்போது சிவபெருமான் அம்மையின் தனங்களின் சுவடும் வளைகளின் தழும்பும்படக் காட்டினார். இது காஞ்சி புராணத்தில் தழுவக் குழைந்திட்ட படலத்தில் வந்துள்ளது. கும்பத் தனத்தாய் -குடம் போன்ற தனங்களையுடையவள். நான்கு வேதங்களும் தூணாகவும், 28-ஆகமங்கள் மேற்பரப்பாகவும், 18-புராணங்கள் கொடுங்கையாகவும், 64-கலைகள் மேற்கட்டியாகவும், 96-தத்துவங்கள் கயிறாகவும், ஞானமே மெல்லிய படுக்கையாகவும், மகிழ்வு தரும் பேரின்பமே தொட்டிலாகவும் கொண்டு அதன்மீது கண்வளரும் பசுந்திருவே என்க. (2)

460. பூமங்கை - திருமகள்; பார்மகள் - பூமிதேவி, இவர்களிருவரும் திருமாலின் தேவியர்; வடம் - கயிறு; கலைமாது - சரசுவதி; நேமம் - அன்பு; நிழல் கால்செய்வட்டம், ஒளிவிடும் ஆலவட்டம்; கவரி சசி ஏந்த - கவரியை இந்திராணி ஏந்த; நிருத்தம் - நடனம்; அரம்பையர்கள் - தேவப் பெண்கள்; ஏமம் - பாதுகாவல்; மாதவ மடவார் - முனிபத்தினிகள்; தாமம் -மாலை; தளத்தாய் பாதத்தையுடையவள். (3)

461. கரியமால் அயன் - கருநிறமுள்ள திருமாலும் பிரமனும்; மால், அயன் அடிமுடி காணத் தேடியது திருவண்ணாமலையில்; வன்னிவடிவு - நெருப்புவடிவு; வயங்கு - விளங்கு; சுரிகை - உடைவாள்; நெய்தல் - நெய்தற்பூ; தியங்க - சோர; தண்ணந்துறைவன் - குளிர்ந்த அழகிய கடற்றுறையை யுடையவன்; எண்ணம் திகழ்மீன் ......... அவதரித்தாய் - சிவபெருமான் கூறிய வேதத்தின் உட்பொருளைப் பார்வதி பராமுகமாகக் கேட்கச் சிவபெருமான் கோபம் கொண்டு "செம்படவர் மகளாகக் கடவாய்'' என்று சாபமிட்டார். பின் அம்மை வேண்ட 'நீ வளரும்போது நானே வந்து மணத்தை முடிக்கின்றேன்'' என்றும் கூறினர். பின் விநாயகப்பெருமான் உள்ளே வந்து சுவடிகளையெல்லாம் தன் தும்பிக்கையால் வீசியெறிய, சிவபெருமான் ''விநாயகரை எவ்வாறு உள்ளேயனுப்பினாய்" என்று நந்தியைக் கோபித்துச் சுறாமீனாகுமாறு சாபமிட்டனர். பார்வதியும் செம்படவர் வகுப்பில் பிறந்து வளர்ந்து பருவப்பெண்ணானாள். நந்தி சுறாமீனானார். அச்சுறா மீன் கடலில் படகையும் தோணிகளையும் கப்பல்களையும் நாசம்செய்தது. செம்படவர் குலத்தில் பிறந்த பார்வதியின் தகப்பனான செம்படவன் அச்சுறாமீனைப் பிடிக்க முடியாமல் "அதை யார் பிடித்து வருகிறார்களோ அவர்களுக்கே என் பெண்ணைக் கொடுப்பேன்" என்று தெரியப்படுத்தினான். அதைக்கருதி சிவபெருமான் செம்படவனாகி வந்து நந்தியாகிய சுறாமீனைப் பிடித்து அம்மையைக் கலியாணம் செய்து கொண்டார். (4)

462. படிவர் - முனிவர்; நொய்கோடை - மிருதுவான கோடைக்காலம் (இளவேனில்), கோடைக்கு அலர் பொழில் என்க. அலர் பொழில் - மலரையுடைய சோலை (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை); தேனிப்போர் - தியானிப்போரின் மரூஉமொழி அல்லது தேன் போன்ற இனிமையுடையவர் என்றும் கொள்ளலாம். தேனிப்போர் என்பது "தேனித்திருமினோ" என்ற நாலாயிரச் செய்யுளை நோக்க இப்பொருளும் கொள்ளலாம்; இடராம் இருள் - உருவகம்; எழில்புணை - அழகிய தெப்பம்; தேறு - தெளிந்த; தந்தன்-விநாயகன். (5)

463. மஞ்சு - மேகம்; அகமிகு களி கொண்டு - மனதில் மிகுந்த சந்தோஷங் கொண்டு; மாகா - பெரிய சோலை; மண்டிய - நெருங்கிய; பல பலவின்கனி வழிதேன் - பல பலாப்பழங்களிலிருந்து வழிந்த தேன்; விஞ்சல - மிகாமல்; நாகை கண்டிடு - வெற்றிலைக் கொடிக்காக ஏற்படுத்திய; விஞ்சல உழும் கால்வாய், நாகை கண்டிடு கால்வாய் எனக் கூட்டுக. மின்கதிர் ஊறு - ஒளிவாய்ந்த கதிர்களை ஈனும்; செந்நெல் - சம்பாநெல்; அம்பணை - அழகிய வயல்; மேகங்கள் சஞ்சரிக்கின்ற சோலையில் உள்ள பலாப்பழத்தினின்று வழிந்த தேன் ஆறாக ஓடி மிகாமல் உழுத வெற்றிலைக்காக ஏற்படுத்திய வழியான கால்வாய் மூலம் ஓடி சம்பாநெல் விளைகின்ற வயல்களில் நீர் போலப் பாய்ந்து புதிய வளந்தருகின்ற சிறப்புடைய புதுவை என்க; அஞ்சலி செய் - வணங்கும். (6)

464. மண்டிய களை கடியும் - நெருங்கிய களைகளை நீக்கும்; கடைசியர் - மருதநிலப் பெண்கள்; குமுதம் திகழ்வழி தூநீர் ஊடே - குமுதம் போன்று விளங்கும் கண்களினின்று துளிக்கும் கண்ணீர் மத்தியில்; அளி - வண்டு; கஞ்சவதனம் - தாமரைபோன்ற முகம்; வந்தலமர வந்து சுழல; அலமரலால் + தாளாதே என்க. நந்தலில் - குறையாத; வயலில் களைகளை நீக்கும் மருதநிலப் பெண்களின் வாயினின்று வரும் நீரும் குமுத மலரொத்த கண்களினின்று வரும் நீரும் கலந்து அவர்கள் முகத்தைக் கருநெய்தற் பூப்போன்று காட்டவும் அதைக்கண்டு வண்டுகள் மயக்கங்கொண்டு வந்து சுழல அவர்கள் தாளாமல் தங்களுடைய விரல்களைக் கொண்டு வீசவும் அவ்வண்டுகள் தேன் உண்ணும் ஆசை நீங்காமல் மறுபடியும் வரும் அத்தகைய வயல்கள் சூழ்ந்த புதுவை என்க. (7)

465. நமன் - எமன்; ஓவாமல் - நீங்காமல். (8)

466. கண்டிகை - பதக்கம்; காழ் - மணிவடம்; கலம் - கப்பல்: இரசிதம் - வெள்ளி; குவால் - குவியல்; நிரையும் - வரிசைப்படும்; நீள்சீர் ஆர் ஆவணம் - நீண்ட சிறப்புப் பொருந்திய கடைத்தெரு. (9)

467. தளவத்திளமுகை - முல்லையின் இளைய அரும்பு; அருள் நகை யார் மானே - அருளை உடைய (பற்களினால்) சிரித்தலைச் செய்யும் சிவபெருமானின் மனைவியே; முளரிக்கணன் - தாமரைபோன்ற கண்களையுடையவன், திருமால்; காபாலி - சிவனிடம் உடையவள்; காய் - கோபிக்கும்; மொய்ம்பு - வலிமை; நளினப்பதம் - தாமரைபோன்ற பாதம்; உம்பர் உலகசுகம் - தேவவுலக இன்பங்கள்; இம்பர் - இவ்வுலக மக்கள்; அளகை-குபேரன் தலைநகர்; அந்தரி - பிரமத்தைத் தரித்தவள் (10)

சப்பாணிப் பருவம்

468. வெண்டாமரைச் செல்வி - கலைம; முத்தேவர் - அயன் அரி, அரன்; சூடகம் - வளையல்; சுந்தரம் - அழகு; பணிதாவும் மென் மொழி - இசை பரவும்படியான மெல்லியமொழி; மிழற்றும் - சொல்லும், மயில்வாகனக் கடவுள் - சுப்பிரமணியர்; தண் தாது கமழ் காந்தள் - குளிர்ந்த மகரந்தங்களை உடைய வாசனை வீசும் காந்தட்பூ. (1)

469. அங்கணுலகு - அழகிய இடமகன்ற உலகம்; இலங்கை திரிகூட மலையின் உச்சியில் ஏற்பட்ட எழு நூறு யோசனை பரப்புள்ள தீவு; மயேந்திரம் - இது ஒரு மலை, அநுமன் இலங்கைக்குப் பாயவும் சம்பாதி இறகு தீயந்து விழவும் இடமானது; தூவி - மெல்லிய சிறகுகள்; தோலாத - அழியாத; "அங்கண் உலகு...மா தங்கமலைவில்லி” தாரகாசூரன் குமாரராகிய வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் இவர்கள் மூவரும் சிவபூஜை பலத்தினால் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளைப் பெற்று, அக்கோட்டைகளுடன் பறந்து சென்று தேவர்களை வருத்தினர். கடைசியாக சிவபெருமான் அவர்கள் இறுமாப்பைக் கெடுக்க மேருவை வில்லாகவும், பிரம்மனைச் சாரதியாகவும், விஷ்ணுவைப் பாணமாகவும் கொண்டு எதிர்த்தார். அச்சமயத்தில் சிரிப்புத் தோன்றவும் அச்சிரிப்பினால் திரிபுரம் எரிந்தது. பொள்ளென - விரைவுக் குறிப்பிடைச் சொல், வில்லி - வில்லையுடைய சிவபெருமான். (2)

470. வழாமல் - தவறாமல்; பெட்பு - அன்பு; தருமமெண்ணான்கும் - முப்பத்திரண்டு தருமமும்; வைசியர் - வசியர் என முதற் போலியாகியது. காசினி - பூமி; பரசுராமர் இறுதியில் காசிபர்க்குப் பூமியைத் தானங் கொடுத்ததால் காசினி என்ற பேர்பெற்றது. (3)

471. பருவம் மாறாமல் - பருவகாலம் தவறாமல்; முகில் - மேகம்; நகுமணி - ஒளிவிடும் இரத்தினங்கள்; குயிற்று - செய்த; நல் தூய அமுது - நல்ல பரிசுத்தம் பொருந்திய தேவாமுதம்; லயை - தாளப்பிரமாணம் பத்தினுளொன்று, அஃது இசையினிகழும் காலம்; சுருதி - வேதம்; மாடகம் - முறுக்காணி; துலங்கு - விளங்கும்; கந்தருவர் - அசுவதரன், கம்பளன் ஆகியோர் ; தேறல் - தேன். (4)

472. கட்பொறி - கண்ணாகிய பொறி, இருபெயரொட்டுப் பண்புத்தொகை; அடல் கோட்டு வேழம் - வலிபொருந்திய தந்தங்களை உடைய யானைமுகக் கடவுள், (விநாயகன்); கவின் இளமை சிங்கம் - அழகுபொருந்திய சுப்பிரமணியக் கடவுள், இங்கு, மான் ஒன்று சிங்கத்தையும், யானையையும் ஈன்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நயம் உணர்ந்து இன்புறத்தக்கது. அஞ்சனம் மலர்க்கண் மான் - மை பூசிய மலர் போன்ற கண்களையுடைய திரிபுரை; இமம் - பனி; கங்குல் - இரவு; குடிவாங்கி ஓட - புறங்காட்டி ஓட; வாள் ஏந்து ஆயிரம் கரம்கொண்டு வாள் ஏந்தினதுபோன்ற பல கிரணங்களாகிய கைகளைக் கொண்டு - தமனியக் கங்கணம் - பொன்னால் ஆன கங்கணம்; வாள் ஏந்தினது போன்ற ஆயிரம் கரம் கொண்டு எழும் இளைய சூரியன் கோடிகள் சூழ்ந்தது போன்று ஒளிவிடும் இரத்தினமிழைத்த பொன்னால் ஆன கங்கணம் என்க. (5)

473. நிரைதிரைக்கை - வரிசையாக உள்ள அலைகளை உடைய கை; வரன்றி - வாரி; பினாகநதி - தென்பெண்ணையாறு, பாலாற்றுக்கும், செய்யாற்றுக்கும் நடுவிலிருத்தலால் வெண்ணெய் நதி என்றும் சொல்லுவார்கள்; அலகுறு செழுஞ்சாலி - அளவில்லாத செழித்த சாலி நெற்பயிர்; முதிரை - அவரை, துவரை முதலியன; கழை - கரும்பு; தெங்கு - தென்னை; ஆலையம் - போலி; குறைமதி - பிறைச் சந்திரன். (6)

474. ஏலம் - மயிற்சாந்து; பூங்குழல் - பூவையுடைய கூந்தல்; அரண் - பாதுகாப்பு; கோலம் - அழகு; சிறை - சிறகு. தெய்வ லோகத்திலிருக்கும் அன்னங்கள் அங்குள்ள தெய்வ மடந்தையரின் முகத்தழகைக் கவர்ந்து அங்கு நிற்கலாகாதெனப் பாதுகாப்பான இடத்தை நாடி புதுவையின் அகழியிலிருக்கும் மொட்டு அவிழ்ந்த தாமரை மலரில் வெள்ளன்னம் உட்காரவும் அப்பூ ஆழ்ந்து நீரில் தோய்ந்து அதனுடைய சிறகுகள் பாசி ஏறவும் அதனால் அன்னம் மேல் எழுந்து பறந்தபோது கரிய அன்னமாக மாறினதை எண்ணி அதனுடைய பெண் அன்னம் தன் ஆண் அன்னம் இல்லையே என்று துன்பப்படும்போது அவ்வாணன்னம் "மனங்கலங்காதே" என்று தன் பெண்ணன்னத்திற்குச் சிறகை உதறிப் பழைய வடிவைக் காட்டி அன்போடு சேர்ந்தணைந்து களிப்புக்கொள்ளும் அழகு மிகுந்த புதுவை என்க. (7)

475. மஞ்சுதவழ் - மேகங்கள் தவழும்; சாலேகம் – சன்னல்; நந்தாத - கெடாத, கபாடம் - கதவு; நறைகொள் இதழ் - வாசனை மிகுந்த முருக்கம் பூப்போன்ற உதடு; சிந்துரம் - சிவந்த பொட்டு; வண்சிகா முறுமணிக் கொடி - வளவிய ஆகாய சிகரத்தையே அடையும் அழகிய கொடிகள்; மேகம் தவழும் சன்னல்களே கரிய கண்களாகவும் கதவுகள் பொருந்திய பெரிய வாயிற்படி உதடுகள் பொருந்திய வாயாகவும், ஒப்பில்லாத உயர்ந்த கோபுரம் திலகம் விளங்கும் நல்ல நெற்றியாகவும், அழகிய கொடிகள் பசியதேன் ஒழுகுகின்ற மலரையணிந்த கூந்தலாகவும், கற்றவர்கள் புகழும் மதிலுறுப்புக்கள் முத்தாரம் விளங்கும் அழகிய தனங்களாகவும், தாமரைபொருந்திய நீர்சூழ்ந்த அகழி ஆடையாகவும், பொன்மதிலே பெண் உருவமாகவும் கொண்டு வெற்றித்திரு விளங்குகின்ற புதுவை நகர் என நகருக்கு ஏற்றம் கொடுத்து அந்நகரில் வந்தவளே சப்பாணி கொட்டுக என்க. (8)

476. மிகு+ ஆயி = மிக்காயி; நதிபதி - பாற்கடல்; துயில்பவன், திருமால்; நச்சரவம் - விஷமுடைய பாம்பு; செகம் மருள் அறு தவர் - பூமியின் மயக்கம் அற்ற தபசிகள். (9)

477. நிட்சேபி - புதை பொருளே; நித்தியம் - அழிவில்லாதது; ஆவி - உயிர்போன்றவள்; தனபதி.......................சினச்சூரி; குணதத்தனென முதல் பிறவியில் வேள்வி தத்தனுக்குப் பிறந்து சிவராத்திரியில் சிவன் கோயிலில் களவாடவெண்ணிச் செல்லக் கொலையுண்டு மறுசன்மத்தில் அருந்தமன் புதல்வனாக தமன் எனப் பிறந்து, சிவனைக் குறித்துத் தவம்புரிய சிவன் வெளிப்படவும், உம்மைக் காணக் கண் வேண்டு மென்றனன். அவ்வகையருள அருகிருந்த பிராட்டியைக் கண்டு மோகித்ததால் கண் மறைய மீண்டும் துதித்துப் பொற்கண்ணனாகவும் அளகைக்கு அரசனாகவும், அரனுக்குத் தோழனாகவும் ஆகிக் குபேரன் எனப் பெயர் பெற்றான். கு+பேரன் - குற்சிதமான உடலை யுடையவன்; தனபதி - குபேரன். (10)
----------------------------------
முத்தப் பருவம்

418. வேயின் முத்தம் - சிவபெருமான். இதன் வரலாறு 369-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. பச்சைமணி என்றார் - பார்வதி பச்சை நிறம் பொருந்தியதால்; எரிபுரவலன் - அக்கினி; சரவணத்திடை அவுதரித்த சிங்கம் - சுப்பிரமணியன்; பரிபுரம் - சிலம்பு; நளினத்துமேற் பரிவுற்றிருக்கும் அன்னம் - தாமரையின் மேல் அன்புடன் வீற்றிருக்கும் திருமகள்; பரவ - துதிக்க; சவுந்தர + ஆநந்தி = சவுந்தராநந்தி; மால் + தங்கை = மாறங்கை. மங்கள் + ஆகாம் - மங்களத்தை உறைவிடமாகக் கொண்டவள். (1)

479. மூவாறு எனும் தரும் நூல் - பதினெண் புராணம்; மூடிகப் பாகன் - விநாயகன்; மகஞ்சிதைத்தோன் - வீரபத்திரன்; பாவாணர் - புலவர்; இமையசயிலம் - இமயமலை; சதகோடி பானுவின் - நூறுகோடி சூரியர்களைக் காட்டிலும்; சட்சமையம் - ஆறுமதங்கள்   (2)

480. பொன்பயின்றும் ...... முத்தம் - இலக்குமி வீற்றிருந்தும் மகரந்தங்கள் விரிந்த செழுமையான தாமரைப்பூ ஈன்ற முத்துக்கள்; புவிமடந்தைக்கு உடையது ஆகும் முந்நீருள் பொதிந்திலகு முத்தம் - பூமாதேவிக்கு ஆடையாக ஆகும் மூன்று தன்மைகளையுடைய கடலில் அடங்கி விளங்கும் முத்துக்கள்; மின் பிறழ்ந்திடு..... மேகத்தின் முத்தம் - மின்னல் ஒளிர்கின்ற நீண்ட ஆகாயத்தின் மீது உலவும் மேகத்தினின்று பெற்ற முத்துக்கள்; வெஞ்சினம் மிகுந்த........ முத்தம் - கொடிய கோபம் மிகுந்த மூன்று மதமுள்ள யானையினது வெள்ளிய தந்தத்தினின்று பொருந்தும் வெள்ளிய முத்துக்கள்; மன்பெறு ......... முத்தம் - பெருமை பெற்ற பசிய கதிர்க்குலைகளோடு நீண்ட சாலி நெல்லில் பொருந்திய முத்துக்கள்; மாரவேள் ...... முத்தம் - மன்மதன் கையிலுள்ள வில் என்று சொல்லத்தகும் கரும்புகள் தந்த வண்மை பெற்ற முத்துக்கள்; "சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவி கார் இந்து வுடும்பு கரா முத்தமீனும்” என்ற இரத்தினச் சுருக்கத்தால் முத்துப் பிறக்குமிடங்கள் அறிக. மேலான இலக்குமி தங்கியிருந்தும் அப்பங்கயப் போதினின்று முத்தம் பெறுவது அரிதல்ல. பூமிதேவிக்கு உடையாக ஆகும் கடலில் அடங்கி விளங்கும் முத்தமும் பெறுவதற்கு அரிதல்ல. எதிரிகளைத் தாக்கும் மின்னல் விளங்கினும் மேகத்தினின்று முத்தம் பெறுவது அரிய காரியமல்ல. மனிதரைக் கொல்லத்தக்க கொடிய கோபம் மிகுந்த மூன்று மதமும் பெருக்கும் யானைக் கோட்டிடமிருந்து முத்தம் பெறுவதும் எளிதான செயலே. 'நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்" என்பது போன்று பெருமை தங்கிய பசிய கதிர்களையுடைய நீண்ட சாலி நெல்லினின்று முத்தம் பெறுவதும் மிக எளிதே. கண்டாரைக் காம மயக்கத்திற் படுத்தும் மன்மதன் கையிலுள்ள வில்லாகிய கரும்பு தந்த முத்தத்தைப் பெறுவதும் எளிதே. ஆனால் புதுவை வரு கௌரியே உனது சிவந்த குமுதமலர்போன்ற வாயினிடமுள்ள முத்தம் அருமையேயாகும். அவ்வருமையான முத்தத்தைத் தருவாயாக என்கிறார். தென் புதுவை - அழகுமிக்க புதுவை; மும்மதம் - கன்ன மதம், கபோல மதம், பீச மதம் என்பன; அரிதோ - ஓகாரம் எதிர் மறைப் பொருள். (3)

481. ஓராழி - ஒற்றைச் சக்கரம்; மணிப்போதிகை - அழகிய சுமையடைக் கட்டை; கால் கொடிஞ்சி - தூண்களையுடைய தேர்மொட்டு; ஆதித்தன் - சூரியன்; சூரியன் ஏழு பச்சைக் குதிரைகள் இழுக்கின்ற ஒற்றைச் சக்கரமுடைய தேரில் வருவான். நறை - தேன்; முளரிப் பொகுட்டணை - தாமரைக் கொட்டையாகிய படுக்கை; மொய்சிறை - நெருங்கிய சிறகுகள்; பாசடைகள் - பசிய இலைகள்; அஞ்சனம் எடுத்தல் - குற்றத்தைப் போக்க ஆலத்தி சுற்றுதல்; சூரியனால் தாமரைப்போது மலர்ந்து, அதனின்று தேன் தாமரைப் பொகுட்டில் ஊற்ற, அதன் மீது பெண் அன்னத்தோடு ஆண் அன்னம் மகிழ்ச்சி மிகுந்து காதலித்துத் திருமணத்தைச் செய்ய, அங்கிருக்கும் பசிய இலைகள் தன்மீதுள்ள நீர்த்திவலைகளோடு அசைவது நீர் மடந்தை மரகத மணியினால் செய்த தட்டில் முத்துக்களை நிரப்பிக் குற்றத்தைப் போக்க ஆலத்தி எடுத்தலை ஒத்திருக்கு மத்தகைய வளப்பம் பொருந்திய புதுவை என்க.      (4)

482. விகடமிகு - குறும்புத்தனங்கள் (துஷ்டவேலைகள்) மிகுந்த; தறுகண் - வலிமை; கடாம் - மதநீர்; கரடம் - மதம் பாயும் சுவடு; ஓதை - சப்தம்; கலினம் - கடிவாளம்; மணிக்கால் - சதங்கை கட்டிய கால்; கவரி அசையும் நுதல் - சாமரை போன்ற கருவி யசையும் நெற்றி; பொன் திண்திறல் சகடம் - அழகிய வலிய சக்கரம்; உருள் தரவுற்ற - உருளுவதால் உண்டாகிய; கல்வியூரி - கழகம்; பூசுரர் - பூமியிலுள்ள தேவர்கள், (அந்தணர்); யானைகளின் ஓசையும், குதிரைகளின் ஓசையும், தேரின் ஓசையும், கல்விக் கழகங்களின் ஓசையும், திருவிழா, கலியாணம் ஆகியவற்றிற்கு அடிக்கும் முரசவாத்தியத்தோடு சங்கீதவோசையும், பிராமணர், தவமுனிவர் ஆகியோர் திருப்தியுற சாப்பிடக் கூப்பிடுமோசையும் விளங்கும் வீதிகள் நெருங்கிய புதுவை என்க. (5)

483. நல்தொண்டு ஆனோர் - அடியவர்; பஞ்சிறை அனமே - மதர்த்த சிறகுகளையுடைய அன்னமே, பைஞ்சிறை என்பதன் போலி பஞ்சிறை; பஞ்சு + சிறை என்று பிரித்துப் பஞ்சுபோன்ற சிறகுகளையுடைய என்னலுமாம். இங்கு ‘சு' தொகுத்தல், அனம் தொகுத்தல்; கற்பகம் - கற்பகத்தரு, இது நினைத்ததைத் தரும் ஐந்து தருக்களி லொன்று; பிழை இல் மௌனம் என்க; பிறையைத் தரித்தோன் - சிவன்; தாது ஆடு அளியார் - மகரந்தப் பொடியில் திளைக்கும் வண்டுகள். இங்குப் புவனமெல்லாம் ஒருங்கீன்ற கன்னிகையே என்பதிலுள்ள நயம் காண்க. கன்னிகை மணமாகாதவள்; மாசு இல் எழில் கற்பு அணங்கு அரசே - குற்றமற்ற அழகுடன் கற்பும் கூடிய தெய்வப் பெண்களின் தலைவியே (6)

484. தனம் - பொருள்; தீங்கரும்பு - இனிய கரும்பு; தானே தானாயவதரித்த என்பதில் "சர்வம் சத்திமயம்'' என்ற விளக்கம் தெரிகிறது; பிடி - பெண்யானை. (7)

485. பதுமநாபன் - திருமால்; பனிமை உலவும் மலைமகள் - இமய மலையரசனுக்கு மகளாகப் பிறந்தவள் (பார்வதி); தமியேன் - திக்கற்றவனாகிய நான்; தண்டாரிதழி - தண்மை + தார் + இதழி, குளிர்ந்த கொன்றைமாலை; தாருகனை முன் காய்ந்தவள்: - தாருகாசூரனால் துன்பமடைந்த தேவர் பெண்களுருக்கொண்டு சிவமூர்த்தியை அடைந்து தமது குறைகளைக் கூறினர். பெண்ணால் அன்றி வேறு எவராலும் இறவாத தாருகனை வெல்ல சிவபெருமான் சத்திக்குக் கட்டளையிட்டார். அப்போது தேவியின் ஒருகலை சிவமூர்த்தியின் விஷக்கறை படிந்து நெருப்புக் கண்ணில் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து வந்ததால் காளி எனப்பெயரடைந்தது; இவ்வகைப் பிறந்த காளி தனது கோபாக்கினியினால் தாருகனைச் சாம்பராக்கினாள். பூரணி - நிறைவுள்ளவள்; மதுரம் - இனிமை; மூலாதாரம் சிவானந்தன் பிள்ளைத்தமிழ் தாலப்பருவம் 1-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க (8)

486. மத்த தனம் - யானை மத்தகம் போன்ற தனம். “மத்த கெசத்தை வெறுத்து அணிமொய்த்து மதர்த்த தனத்து எழிலாய்" மத்தகம் பொருந்திய யானையை உவமையாகாததால் வெறுத்து ஆபரணங்கள் நெருங்கி மேலெழும்பிய தனங்களின் அழகுடையவளே; “மைப்புயலைச் செலெனக்கறுவிக் கணமணக்கும் மலர்க்குழலாய்" - கரியமேகத்தைச் செல்வாயாக என்று கோபித்து வாசனைக் கலவைகளின் மணம் வீசும் மலர் பொருந்திய கூந்தலையுடையவளே; "தத்தை இலச்சையுறப் பெருமைக் குதலைச்சொல் உரைக்கும் நலாய்' - கிளியும் வெட்கமடையும்படி பெருமை பொருந்திய குதலைச் சொற்களைச் சொல்லும் பெண்ணே; "தப்பு இல் அயில் படையைச் சினவிச் சுகிர்தத் தயவுற்ற கணாய்” -கொல்லுவதில் தப்பாத வேல்படையை உவமையாகாததால் கோபித்து இன்பமும் தயவும் பொருந்திய கண்களையுடையவளே; சுத்த வளைக்கு இழிவிட்டு மணிக்குழை துற்று ஒளிர் பொன் செவியாய் - நல்ல வள்ளைப் பூவிற்கு இழிவைத் தந்து (உவமையில்) மாணிக்கக் குண்டலம் நெருங்கிப் பிரகாசிக்கும் அழகிய காதுகளையுடையவளே; வளை - வள்ளையின் தொகுத்தல் விகாரம். சுப்பிர நல் தரளம் - வெண்மையான நல்ல முத்து சுடர் தண் நகை - ஒளிவிடும் ஈரப் பசுமையுள்ள பற்கள்; முத்தர் அகப்பதுமம் - முத்தியடையும் முனிவர்களின் மனமாகிய தாமரை; வித்தகி - ஞானமுடையவள். (9)

487. முச்சிகரப்படை - சூலப்படை; முச்செயல் முற்ற அருட்கண் நடத்துவள் - ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற மூன்று செயல்களும் முடிய அருட்கண் கொண்டு நடத்துபவளே. முப்பகவர் - மூன்று மூர்த்திகள்; பகவர் - கடவுளர்; முச்சுதர் - விநாயகர், வீரபத்திரர், முருகர்; முப்பகை - மண், பெண், பொன் என்ற ஆசைகள்; முச்சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி; இங்கு முப்புரம் எரித்தது, மூன்று சுடர்களைக் கண்களாகக் கொண்டது சிவனுடையதாயினும் ஒற்றுமை பற்றி அம்மை மேலேற்றிச் சொல்லப்பட்டது (அ) தேவி பாகவதக் கருத்துப் படியும் அம்மைக்கே கொள்ளலாம். (10)
---------------------------------------
வருகைப்பருவம்

488. மை - மேகம்; மனையறம் - இல்லறம்; மாறாத இருவினை - நீங்காது மறுபடி மறுபடி வந்து தன் பயனைத்தரும் புண்ணியபாபம்; இருவினை தொலைத்து என்றார் மேல்வரும் உண்மை விளைவை நோக்கி; இருவினையில் புண்ணியம் பிறவியைத்தருதலின் அதனையும் தொலைத்து எனக்கூறினார். வன்பகை ஓர் ஆறு- காமம், குரோதம், மோகம், லோபம் மதம், மாச்சரியம் என்பன. மாற்றி - கெடுத்து; கைதவம் - வஞ்சனை; உடற்றும் - வருத்தும்; மெய்ப்பொருள் - கடவுள்; ஐந்து என்னும் எரி - நான்கு திசைப் பக்கங்களில் நான்கு தீக்குழிகளும், மேலே சூரியன் ஒன்றும் ஆக ஐந்து; இப்பாட்டு வானப்பிரஸ்தாச்சிரமத்தைப்பற்றிச் சொல்கிறது. வீட்டில் மனைவியோடு இல்லறம் நடாத்திய பிறகு முதிர்ந்த வயதில் மாறாது வரும் நல்வினை தீவினைகளை நீக்கி ஐம்புலன்களையும் வென்று கொடிய ஆறு பகையையும் கெடுத்து வஞ்சனை மிகுந்த கண்களையுடைய இளைய பெண்களின் சுகங்களை நீக்கி வருத்துகின்ற குளிர், நோய், கடும்பசி இவைகளைப் பொறுத்துக் கடவுளை மனதில் கருதி கொடிய காட்டிலும் மலையிலும் அடைந்து மரவுரி உடுத்தி நான்கு திசைகளில் தீ வளர்த்தி மேலே சூரியன் ஒரு தீயாக ஐந்தீ மத்தியில் தர்ப்பாசனத்திலிருந்து அட்டாங்க யோகங்கள், நிட்டை இவைகளைப் பலநாள் முயன்று தவம்புரிகின்ற முனிவர்கள். தினமும் துதிக்கும் திரிபுரசுந்தரியே என்று முடிக்க. " நீர் பலகால் மூழ்கி நிலத்தசைஇ தோல் உடீஇ............... வானகத்துய்க்கும் வழி." என்ற புறப்பொருள் வெண்பா மாலைப் பாட்டை நோக்குக. (1)

489. மகபதி மணந்த மகள் - இந்திராணி; நதிபதி பயந்த மகள் - திருமகள்; மலாயன் விழைந்தருள் மகள் - சரசுவதி; விசைய மகள் - விசய இலக்குமி; சகச்சிரமுக - ஆயிரமுகங்களை உடைய; மந்தாகினி - கங்கை; ககனமுறு கற்பு மகள் - ஆகாய வாணி; பொறைகொள் சீர் அவனி மகள் - பொறுத்தலைக் கொண்ட சிறப்புடைய பூமிதேவி; கடவுள் குஞ்சரி எனும் மகள் - தெய்வயானை; கவினாரும் இரதி மகள் - அழகுடைய இரதி தேவியாகிய பெண். இரதி மகள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; அரமகளிர் - தேவப் பெண்டிர்; மாசில் மன வாசமகள் - குற்றமற்ற மனதில் தங்கியிருக்கும் மகள்; செழியர்கோன் - பாண்டிய அரசன்; வன மாலி - திருமால்; வேதவன நாதர் - வேதவனத்தில் எழுந்தருளியுள்ள சிவன்; வரந்தரு மகள் முதல் செழியர்கோன் மகள் வரை திரிபுரையைக் குறிக்கின்றன. (2)

490. மஞ்சு - மேகம்; தகரம் - வாசனைப் பண்டத்தைத் தரும் ஓர் மரம்; மதுமலர்-தேனையுடைய மலர்; வண்திலகம் நுதலில் - வளப்பம் பொருந்திய பொட்டு நெற்றியில்; சுட்டி - நெற்றியில் தொங்கும் ஓர் ஆபரணம், மணிப்பட்டம் - அழகிய நெற்றிப் பட்டம்; எஞ்சுதல் இலா குறையாத; மணித்தொங்கல் - மாணிக்கத்தாலாகிய காதணி; ஏடு அவிழ் நறுங்காந்தள் ஒத்த - இதழ் மலர்ந்த வாசனை வீசும் காந்தப் பூப்போன்ற; அஞ்சனம் - மை; உரம் - மார்பு; அவிர் தரள மாலை - விளங்கும் முத்து மாலை; உதர பந்தனம் - அரைப்பட்டிகை; கிரணம் மணி ஆர்ந்த மேகலை - ஒளிக்கிரணங்களை வீசும் முத்துக்கள் பதித்த மேகலாபரணம்; மலர் செஞ்சரோருகமென சரண் கிண்கிணி என்று பிரித்துக் கூட்டுக. மலர் செஞ்சரோருகம் - மலர்ந்த செந்தாமரை, வினைத்தொகை. (3)

491. உரகம் - பாம்பு; சைலம் - மலை; பரிமளக் குழலி வாசனை வீசும் கூந்தலையுடையவள்; சுருதி - வேதம்; அடியவர்கள் துதிநிதி - அடியவர்கள் துதிக்கும் செல்வமே; சமர பயிரவி - போரில் அச்சம் கொடுப்பவள்; சிங்கவாகினி - சிங்கத்தை வாகனமாகக் கொண்டது சும்ப நிசும்பர்களைக் கொன்ற போதும் இன்னும் பிற காலங்களிலுமாம். (4)

492. கயம் - யானை; மூன்று உலகம் - சொர்க்க, மத்திய, பாதளம்; சிறுவிதி - தக்கன்; நவப்பிரம்மாக்களில் ஒருவனானதால் 'சிறுவிதி' எனப் பெயர்பெற்றான். நயங்கொண்ட அருள் பராசத்தியுனை - விரும்பித் தகப்பனாராக ஏற்றுக்கொண்ட அருளையுடைய பராசத்தியாகிய உன்னை; ஞானமூர்த்தி - சிவபெருமான்; சங்கேந்தி - திருமால்; உள்பரிவு - மனவன்பு; மகம் - யாகம்; படருற - அழிய; இப் பாட்டில் தக்கனது யாக அழிவு கூறப்படுகிறது. இவன் சிவமூர்த்தியை வேண்டித் தவஞ்செய்து உமையைத் தன் மகளாக அடைந்து சிவபெருமானை மருமகனாக்கிக் கொண்டான். மருமகனைக் காணவேண்டி கைலைக்குச் செல்ல, பூத கணங்களால் தடைப்பட்டுக் கோபங்கொண்டு சிவபெருமானை நீக்கி, திருமாலை யாகத் தலைவனாகக் கொண்டு வேள்வி செய்தான். இதைக்காண தாட்சாயணி வந்தாள். தக்கன் அம்மையை உபசரிக்காதிருக்கக் கோபங்கொண்டு வீரபத்திரனைச் சிவபெருமானைக் கொண்டு சிருட்டித்து அனுப்பி யாகத்தை அழித்துவரச் செய்தாள். வீரபத்திரன் தக்கனைக் கொன்றும் மற்ற தேவர்களையும் சின்னாபின்னஞ் செய்தும் யாகத்தை அழித்தான். தக்கன் தலையைப் பூதம் விழுங்கினதால் பிரமன் அவனை எழுப்ப வேண்டியதன்படி ஆட்டுத்தலையைப் பொருத்திச் சிவபெருமான் எழுப்பினார். (5)

493. பூங்கதலி - அழகிய வாழை; தேமா - தேன்போல் இனிய பழந்தரும் மாமரங்கள்; தெங்கு - தென்னைமரம்; திண்ணம் - வலிமை; கமுகு - பாக்கு மரம்; தடம் - குளம்; கா - சோலை; முத்து உயிர்க்கும் - முத்துக்களை ஈனும்; குருகு - நாரை; அனக்குழுவு - அன்னக் கூட்டம், தொகுத்தல் விகாரம்; தண் அம் பழனம் - குளிர்ந்த அழகிய வயல்கள், இதில் அம் சாரியை.

494. கோட்டம் - ஒரு வாசனைப் பண்டம், “கொடிச்சியரிடித்த சுண்ணங் குங்குமங் கோட்ட மேலம்" (இராமா. ஆற்றுப் 13); அகில் ஓர் வாசனைப்பொருள்; இப்பெயருடைய மரத்தினின்று கிடைப்பது. தக்கோலம் - சிறு நாவற்பூ; நாவி - கத்தூரி, மயிற்பீலி - மயில் தோகை. இலகும் இறாலி - விளங்கும் இறால், இறால் என்பது இறாலி என மரீயது; இறை - அரசன்; ஒக்கொலை - அம்பர், இதனைச் சிந்தாமணியில் "ஓர்க்கோலை'' என்பர். இக்கு - கரும்பு; சலதி - கடல்; குங்குமம், மிளகு, கோஷ்டம், அகில், தக்கோலம் ஆகிய மலைபடு பொருள்களும், தேன், நாவி, மயிற்பீலி, இறால், அரக்கு ஆகிய காடுபடு பொருள்களும், யானை, பித்தன், கருங்குரங்கு, வேந்தன், கண்ணாடி ஆகிய நகர் படுபொருள்களும், வாழை, செந்நெல், சிறுபயறு, கரும்பு, இளநீர் ஆகிய நாடுபடு பொருள்களும், சங்கு, உப்பு, பவளம், ஒக்கோலை, முத்து ஆகிய கடல்படு பொருள்களும் நிறைந்துள்ள புதுவையின்கண் கோயில் கொண்டுள்ள தாயே வருக எனப்பொருள் கொள்க. (7)

495. நானாகலை வல்லோர்கள் நிதம் நாடிப் புகழும் துரந்தரி எனப் பிரிக்க. கலைவல்லோர்கள் - வினையாலணையும் பெயர். நகுமாமணி பல்தலை அனந்தன் - அஞ்சத்தக்க, மாணிக்கங்களையுடைய பல தலைகளையுடைய ஆதிசேடன்; அனந்தன் நாகம் - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை; அமராதிபதி - இந்திரன்; அதிபதி என்பதின் நீட்டல் விகாரம் ஆதிபதி; மென்சொல் குதலை அம்சுகம் - மெல்லிய சொற்களான குதலைச் சொற்களைப் பேசும் அழகிய கிளி; தேனாரளகம். தேன் பொருத்திய மலர்களை அணிந்த கூந்தல்; அரம்பையர்கள் - தேவப் பெண்கள்; தான ஆபரணர் - தருமத்தையே ஆபரணமாக உடையவர்கள்.   (8)

496. திருமகன் - திருவுக்குத் தலைவன், திருமால்; பதும மென்பதம் - தாமரைபோன்ற மெல்லிய பாதம்; பவபயங்கரி - பாவத்திற்குப் பயத்தைச் செய்பவள் பகரருஞ்....... சங்கரி - திரிபுரம் எரித்தது காண்க; மது - தேன்; மலர் நறுந்தொடை - மலராகிய வாசனை வீசும் மாலை; மகரம் ஒண்கடல் விடம் - மகரமீன் (சுறாமீன்) உலாவும் பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிஷம்; கந்தரி - கழுத்தை உடையவள்; பொதுவில் இங்கிதமுடன் - மன்றத்தில் இனிமையோடு; காளிக்கும் சிவனுக்கும் நடனம் புரிவதில் போட்டிவர சிவன் குண்டலம் நடனத்தில் கீழேவிழ யாருமறியாது எடுத்துப் போட்டுக்கொண்டு காளியை வென்றார். இப் பாட்டில் திரிபுரம் எரித்ததும் விடமுண்டதும் ஒற்றுமை பற்றிப் பார்வதிக்கும் கூறப்பட்டன. (9)

497. மங்குல் - மேகம், இது மழைக்கு ஆகுபெயராக நின்றது; இடர் - துன்பம்; மங்கிட - கெட; பிணி - நோய்; மருவருந்தவம் என்றார் "தவமும் தவமுடையார்க்காகும் அவம் அதனை அஃதிலார் மேற் கொள்வது." என்னும் கருத்துப்படி; உருகும் அன்பு என்க; மன்பதை உலகத்திலுள்ள உயிர்கள்; உழல் உறுகண் நைந்திட - வருந்தும் துன்பமழிய; பொருநர் - அரசர்; புரந்திட - காப்பாற்ற. (10)
-----------------------------------------
அம்புலிப் பருவம்

498.
சந்திரன் திரிபுரசுந்தரி
1. மேருமலையைத் தினமும் வலம் சுற்றி வருவான். மேருமலையைத் திரிபுரங்களை அழித்தபோது வில்லாக எடுத்து வலம் (வெற்றி) கொண்டாள்.
2. சிவபெருமானுக்கு ஒளிவிளங்கும் இடக்கண்ணாக ஆனான். அக்கடவுளைப் பிரியாமல் அழகு தோன்றுகின்ற இடக்கண் (இடப்பக்கத்தினிடம்) ஆயினாள்.
3. குளத்தில் வண்டுகளிசை கொண்டு தேன் பெருகும் வனசம் (தாமரை) வெறுத்திடுவான். (இவன் தோன்றியதும் தாமரை குவிவதால்) உண்மையன்பு இல்லாத மூடர்களின் மனமான வனசத்தை (தாமரை) வெறுத்திடுவாள்.
அம்கண் உலகு அருள் உமை - அழகிய இடமகன்ற உலகைப் படைக்கும் உமாதேவி. (1)
------------------
499.
சந்திரன் திரிபுரசுந்தரி
1. இயமம், நியமம் முதலிய அட் டாங்கயோக நிலைமையடைந்த முனிவரான அத்திரி தன் (அத்திரி என்ற முனிவன்) மகன். விண்ணளவு உயர்ந்து உயர்வு பெற்ற இமய அத்திரி (இமயமலை) பெற்ற மகள் (அத்திரி - மலை).
2. வெற்றி மிகுந்த பச்சைக் குதிரைகள் ஏழுகட்டிய தேரை உடைய வாளரிக்கு (ஒளி பொருந்திய சூரியனுக்கு) உற்ற துணைவன். இரணியனது மார்பினைப் பிளக்கும்< நகத்தைக் கொண்டுள்ள வாளரிக்கு (நரசிங்கமான திருமாலுக்கு) உற்ற துணைவி (சகோதரி) யாவாள்.
3. நீர் நிலையை யடைந்து, இதழை மலரச் செய்யும் ஆம்பலுக்குக் (அல்லி மலருக்கு) காதலன், (சந்திரன் கிரணங்களால், அல்லி மலர்வதால் இங்ஙனம் கூறினர்). பாரதத்தை மேருமலையில் தன் கொம்பினால் எழுதும் ஆம்பலுக்கு (விநாயகப்பெருமானுக்கு) ஆசையுடையவள்.

இங்கு அம்மைக்குக் காதலன் என்ற குறிப்பு வினைமுற்றைத் தந்தது. "அண்ணாமலையான்" என்று தொடங்கும் திருவெம்பாவையில் ''பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்'' என்று கூறுவதால். யாம் மதிக்கில் அயர்விலுறை - நாங்கள் யோசிக்குமிடத்துச் சந்தேகமில்லாமல் தங்கும். அத்திரி தன் மகன் - அத்திரி மகாமுனிவருக்கும் அனசூயைக்கும் சந்திரன், துர்வாசன், தத்தாத்திரேயன் என்ற மூவர் பிறந்தவர். இச்சந்திரனே உலகிற்கு வெளிச்சம் தருபவன். ஆதியில் விஷ்ணுவின் இருதயத்தினின்றும் சந்திரன் தோன்றினன். அவனுக்கு இரண்டு உருவங்கள். அவற்றுள் ஒன்று சிவனுக்குத் தலையணியாகியது; மற்றொன்று உலகத்திற்கு வெளிச்சந்தருவது; மற்றும் பாற்கடல் கடையும்போது சந்திரன் தோன்றினன். (விஷ்ணுபுராணம்) (2)

500.
சந்திரன் திரிபுரசுந்தரி
1. நிறைமதி (கலைகள் நிறைந்த சந்திரன்) எனப் பெயர் படைத்தனள். பெரிய கருணை நிறைமதி (கருணை நிறைந்த புத்தி) படைத்தான்.
2. சிவபெருமான் சடில மீது (சடையில்) உலவுவான். வேதமாகிய நீண்ட சடிலமீது (குதிரைமீது) உலாவுவாள். (சிவன் வாதவூரடிகணிமித்தம் குதிரை கொணர்ந்தபோது, தான் வேதக்குதிரை மீது வந்தார்).
3. பொறையின் மேல் (மலையின் மேல்) ஆவான் (உண்டாவான்). "மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத், தலை மிசைக்கொண்டகுடையர் ...'' என்ற நாலடியார்ச் செய்யுளைக் காண்க. அடியார்களுடைய பிமைகளை எண்ணி பொறையின் மேல் (பொறுத்தலின்மேல்) இருப்பாள். (எணா - செய்யா எ.வா. வினையெச்சம் செய்து எனத்திரிந்தது).
4. புலவனை (புதனை) உலகினுக்குத் தந்தவன். சந்திரனுக்கும் பிரகஸ்பதி மனைவி தாரைக்கும் பிறந்தவன் புதன்; இவன் சந்திரனுக்கு மகனென்பதைப் பிரமன் தாரையிடம் கேட்டு உண்மை தெரிவித்தார்). கலைகள் பல உணர்கின்ற புலவனைப் (சுப்பிரமணியனை) பெற்றவள். (முருகன் தலைச்சங்கம், இடைச்சங்கத்திலும் புலவராக இருந்ததாலும் முருகன், தமிழ்க் கடவுளாகையாலும் இங்ஙன் கூறினர்).

குணம் குறி - குணமும், செய்கையும், உம்மைத்தொகை, முதலடி குணத்திற்கும், மற்ற மூன்றடிகளும் செய்கைக்கும் கூறப்பட்டுள்ளன. காத்திடுதல் - குறிக்கோளாகக் கொண்டு தன்னிடம் தங்கியிருக்கச் செய்தல்; கோகனக மலரோன் பணிந்து அறை துதி கொள் நூபுரம் பொற்பதச் செல்வி - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் பணிந்து கூறும் துதிகளைக் கொண்ட சிலம்பணிந்த அழகிய பாதமுடைய செல்வி. (3)

501.
சந்திரன் திரிபுரசுந்தரி
1. கதிரவன் (சூரியன்) உடைய வெய்யில் முன் ஒளி குறையும் வெண்கலை (வெண்மையான பதினாறு கலைகளை)த் தரித்தான். ஆயிரம் கதிரவர்களைக் (சூரியன்) காட்டிலும் ஒளி விளங்கும் மாணிக்க மேகலை (மாணிக்கத் தாலாகிய மேகலை) தரித்தாள்.
2. பிரம்மனை அருளின திருமால் உறங்கும் பால் வெள்ளத்துள் (பாற்கடலில்) உதித்தவன். உண்மையான ஞானிகளுக்கு மோட்சமாகிய வீட்டைக் கொடுக்கும் சிவானந்த வெள்ளத்துள் உதித்தவள்.
3. உரோகிணி முதல் இருபத்தேழு பெண்களுக்கும் இனிய தலைவன் (கணவன்); (சதி - உரோகிணி). நாங்களும், அவ்விருபத்தேழு பெண் முதல் அரமகளிரெல்லாம் தொழும் இலக்குமி முதல் தெய்வ மடந்தையர்க்கெல்லாம் தலைவியாவள்.

இப்பாட்டில் கதிரவன் முன் ஒளி மழுங்கும் வெள்ளிய கலை தரித்தவள் என்பதால் சந்திரனுக்குத் தாழ்வும் ஆயிரம் சூரியர்களைக் காட்டிலும் ஒளி விளங்கும் மாணிக்க மேகலை தரித்தனள் என்பதால் பார்வதிக்கு உயர்வும் திருமால் தூங்கும் பாற்கடலில் உதித்தவன் என்பதால் இவனும் சோம்பலுடையவன் என்ற தாழ்வும், ஞானமுள்ள யோகிகளுக்கு மோட்சமாகிய வீட்டைக் கொடுக்கும் சிவானந்த வெள்ளம் என்பதால் பார்வதிக்கு உயர்வும் உரோகிணி முதல் இருபத்தேழு பெண்களுக்கே இவன் தலைவன் என்பதால் தாழ்வும், இலக்குமி முதல் உள்ள தெய்வ மடந்தையர்க்கு எல்லாம் தலைவி என்பதனால் பார்வதிக்கு உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளமை காண்க.      (4)

502.
சந்திரன் திரிபுரசுந்தரி
1. மழைத்துளி சிந்தி இடி இடித்துச் சப்திக்கும் அகன்ற வானத்தில் உலவும் மேகத்தில் சரீரத்தை மறைத்துக் கொள்வான். மங்குலின் உன் மெய் ஒடுங்கும் எனப் பிரித்துச் சேர்க்க. இவள் தனது பச்சை நிறமான உடலின் ஒளியினால் கரிய மேகத்தை ஒடுக்கினாள்.
2. கரும்பேந்துகின்ற உருவிலானுக்குச் (மன்மதனுக்குச்) சத்திரமாக (குடையாக) ப் பொலிந்தான். இவள் உருவை உடைய உயிர்கள் உண்ணுகின்ற அன்னத்திற்கான சாத்திரம் (சோறு போடும் சாலைகள்) பல வைத்தாள்.
3. பிழைப்பதற்காக எளிய இராகுவெனும் பாம்புக்கு மனம் அஞ்சி வெருண்டோடுவான். பெரிய பாம்பைக் கங்கணவணியாக இவள் பூண்டவள்.

விட வாயரவு - இராகு, கேதுக்களில் ஒன்று.       (5)

503. முன் இகலர் ஊர் நகைத்து அட்டநாள் இறைவனால் முறி பட்ட தேர்ச்சில்லி - முற்காலத்தில் பகைவராகிய திரிபுராதிகளின் முப்புரங்களை சிரித்து அழித்த நாளில் இறைவனான சிவபெருமானால் முறிபட்ட தேர்ச்சக்கரமானவன்; திரிபுர சங்காரத்தின்போது தேவர்கள் கர்வங்கொள்ளவே அதையடக்கச் சிவன் தேரையூன்ற அச்சு முதலியன முறிந்தன; இதுவே அச்சிறுபாக்கம் என்ற தலம். விநாயகரைப் பூசியாததால் முறிந்தது என்றும் புராணம் கூறும். திரிபுரம் எரித்த போது தேவர்கள் சிவனிடம் கொணர்ந்த தேருக்குச் சூரியசந்திரர் சக்கரங்களாயினமை நோக்கி இவ்வாறு கூறினர். மூடிகப்பாகன் இடு சாபம் மாறாது கூன் முதுகு உற்ற கயரோகி - விநாயகன் இட்ட சாபம் நீங்காமல் வளைந்த முதுகையடைந்த க்ஷயரோகியானவன்; கோள் பன்னகக் கொடிய ...... எச்சில் - கிரகமாகிய இராகுவெனும் பாம்பினது கொடிய விஷவாயினால் உண்டு பார்த்து உமிழ்ந்திடுகின்ற எச்சிலாவன்; பாகீரதிச் சக்களத்தி......... குருத்துரோகி - கங்கையாகிய, அம்மையின் சக்களத்தியின் தலைவாசலில் அன்புடன் தங்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரையை அபகரித்துத் துரோகம் செய்தவன். மின்னனார் ..... மதி - பெண்கள் வீதியில் கூடி எருவிட்டு வீசப் பொருந்தும் சிறு பிறைச்சந்திரன் ஆனவன்; விநாயகன் சாபம் கொடுத்த வரலாறு: நாரதர் சிவன் முன்னிலையில் கொண்டு வந்த மாங்கனியைப் பிரமன் முருகனுக்குக் கொடுக்கவேண்டுமென்று சொல்ல கணபதி அவரைக் கோபித்தார். சந்திரன் அது போழ்து விநாயகரைக் கண்டு நகைத்தான். விநாயகர் கோபமுற்றுச் சந்திரனை ஒளி இழக்கவும் சண்டாளத்துவம் பெறவும் சபித்தார். மீண்டும் அவன் வேண்ட, அவரால் அச்சாபம் வருடத்திற்கு ஒரு நாளில் அடைய வரம் பெற்றான். கயரோகி:- தக்கன் பெண்கள் இருபத்தெழுவரை மணந்து அவர்களிடம் ஒரேமாதிரி ஆசை வைக்காமல் கார்த்திகை, உரோகிணி இவர்களிடம் மாத்திரம் அன்பு வைத்ததால் மற்ற பெண்கள் தந்தையிடம் குறை கூற தக்கன் நாள்தோறும் ஒவ்வொரு கலை தேயவும், கயரோகம் அடையவும் சாபம் தந்தான். பாம்பு உண்டு உமிழ்வது:- தேவாமுதம் உண்ணும்போது இராகு, கேது என்ற அசுரர்கள் தேவவுருக்கொண்டு வந்து உண்ண அவர்களைச் சூரியசந்திரர் மோகினி உருக்கொண்ட திருமாலுக்குக் காட்டினமையின் அவரால் பகைமை கொண்டு மாறிமாறி விழுங்கப் பெறுவர். குருத்துரோகி:- பிரகஸ்பதியிடம் கல்வி கற்கும் போது, பிரகஸ்பதியின் மனைவியாகிய தாரையைப் புணர்ந்தவன். அப்போது புதன்பிறந்தான். எரு விட்டெறிதல்:- கன்னியர்கள் நல்ல கணவனை அடைய பிறையைத் தொழுவது வழக்கம். அதுபோழ்து எரு விட் டெறிந்து வழிபடுவர். கோவை நூல், குற்றாலக் குறவஞ்சி இவைகளில் இவ்வரலாறு காணலாம். சிறுமதி - பிறைச்சந்திரன்; பாகீரதி - கங்கை; பகீரதன் கங்கையைக் கொணர்ந்ததால் இப்பெயர் உண்டாயிற்று. பாகீரதிச் சக்களத்தி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இப்பாட்டில் சந்திரனது தாழ்வையெல்லாம் எடுத்துக் கூறி அம்மையின் உயர்வை உய்த்துணர வைப்பதால் பேதம் தொனிக்கிறது. உதாரணமாக ''பன்னகக்.... எச்சில் நீ" என்பதற்குப் "பதஞ்சலியெனும் பெரிய பாம்பினை யெடுத்து நம் பாவை திரு முன் வைத்திடும்" என்ற சிவ. பிள்ளைத்தமிழால் உயர்வு விளங்கும். இங்ஙனமே மற்றவை காண்க. (6)

504. வானாடர் பதி - இந்திரன்; கௌதமர் சாபம்:- இந்திரன் கௌதமர் மனைவியாகிய அகலிகையிடத்து ஆசையுற்றவனாய் அவரை ஸ்நானத்திற்குப் போக நடு ராத்திரியில் சேவலாகிக் கூவி எழுப்பி அவர் சென்ற பின்பு அவரைப்போல் உருவெடுத்துச்சென்று அவர் மனைவியுடன் புணர்ந்து முனிவரிடம் அகப்பட்டு அநேகம் யோனிகள் தேகத்தில் உண்டாகவும் ஆண்குறி நீங்கவும் சாபம் பெற்றான். அந்த நாணத்தினால் தாமரைத்தண்டில் நெடுநாள் ஒளிந்திருந்தான். இந்திரன் இத்தலத்தில் பூசித்ததால் அச்சாபம் நீங்கி வேதமும் பெற்றான். இவ்வரலாறு இத்தல புராணத்திலுள்ளது போலும். கீழ் வரும் வரலாறுகளும் இங்ஙனமே கொள்க. மௌனயோகம்.......... பெற்றது :- பிரமன் மௌனமாக அட்டாங்க யோகங்களைப் பயின்று அந்தரங்கப் பூசை விதிகளைக் கற்றனன். மேனாள் உருத்திராக்கம்....... மேதாதி கதி பெற்றது - முன்னொரு நாளில் உருத்திராட்சம் அணிந்து இத்தலத்தை யடைந்த மேதாதி என்பவன் மோட்சமடைந்தான். மேவு இராமன் சிவ அர்ச்சனை செய்து பாசுபதம் விசிகம் நண்பொடு பெற்றது - இத் தலத்தை அடைந்த தசரதராமன் சிவனைக் குறித்து வழிபாடியற்றி பாசுபதமாகிய அம்பை நட்புத்தன்மையில் பெற்றான். மேவு இராமன். வினைத்தொகை; பாசுபத விசிகம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. நண்பொடு என்பது இராமர் திருமாலமிசமாதல் குறித்து. அந்தகாசுரன் - சிவபெருமான் கண்களைப் பிராட்டியார் விநோதமாக மூடியபோது உண்டான அச்சத்தால் தேகத்தில் வேர்வை உண்டாயிற்று. அவ்வேர் வையானது இறைவன் நெற்றிக்கண்ணால் சூடுண்டு, மூடிய விரலிலேயே ஒரு கர்ப்பம் உண்டாயிற்று. அவ்வகைக் கருவில் அசுர உருவமாக ஒருவன் கோரத்துடன் பிறந்தான். இவன் பிறவிக் குருடனாகத் தோன்றியதால் அந்தகன் எனப் பெயருற்றான். இவன் இரண்யாக்கதனுக்குச் சிவபெருமானால் கொடுக்கப்பட்டுப் பிரம்மதேவரைக் குறித்துத் தவம் செய்து ஒருவராலும் செயிக்கப்படாத வன்மையும் கண்களும் பெற்றான். பின் பார்வதிதேவியைக் கண்டு மோகித்துச் சிவபெருமான் மீது யுத்தத்திற்கு வர அவரது சூலத்தால் குத்தப்பெற்று அச்சூலத்தின் மேல் பலநாள் உலர்ந்திருந்து சிவபெருமானைத் துதித்ததால் கருணை பெற்றுச் சிவகணத்தவனாயினான். அங்கி - அக்கினி தேவன்; தேவலன் - அட்டவசுக்களில் ஒருவனான பரத்தியூஷன் குமாரன் போலும்; ஆனாத - நீங்காத; முப்புரர் - வித்துன் மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்பவர். (7)

505. துளை எயிறு - துளையை உடைய பல்; வாளரவம் - ஒளியை உடைய பாம்பு; திடம் கொதிக்கும் தக்கன் - வலிமை மிகுந்த தக்கன்; சந்திரன் காலினால் தேய்ப்புண்டது:- தக்க யாகத்தில் வீரபத்திரரால் தேய்ப்புண்டு பின் அனுக்கிரகம் பெற்றான். செங்கதிர் - சூரியன்; சேணிடை - ஆகாயத்தினிடம்; மடம் கொதிக்கும் தகை இராவணன் - அறியாமை மிக்குள்ள தகுதிவாய்ந்த இராவணன்; மாயவனெனும் தமையனால் இலங்கையில் வரவைத்தது :- இராவணன் இலங்கையை ஆண்டு கொண்டிருந்தபோது சூரியனைத் தன் ஊருக்கு வரவொட்டாமல் தடுத்தும் அவனோடு மற்ற கிரகங்களையும் தன் ஆசனத்திற்குப் படியாக இட்டும் கொடுமைப்படுத்தினான். இராமர் இராவணனைக் கொன்று பழையபடி செய்தார். இங்கு இராவணன் சூரியனை மட்டும் வரவொட்டாமல் தடுத்ததனால் சந்திரனும் பயந்தான். கிரகங்களைப் படிகளாக இட்டது பண்டைக் கதைகளாக முதியோர் கூறுகின்றனர். அடம் கொதிக்கும் புத்தி - அடமிகுந்த புத்தி. (8)

506. நவமேவு - புதுமை பொருந்திய; நணுகாதிருத்தல் கண்டால் நம் அன்னைக்கும் பகை செய்தனை - அடையாதிருப்பதைப் பார்த்தால் நம் தாயான பார்வதிக்கும் பகை விளைவித்தாய்; வேழமுக நாதன் - விநாயகர்; தவிராதிருக்க - நீங்காதிருக்க; மேலும் சினந்தனன் என்ன தான் செய்வானோ எனப்பிரிக்க. இதில் வரும் ஓகார இடைச்சொல் சிறுபான்மையாக வரும் ஐயப்பொருளது. தக்கன் யாகத்துனைக் காலினால் தேய்த்தவன் - வீரபத்திரன்; நீ உற்பவமாகும் வேலைதனில் வேலை விட்டோன் - நீ பிறக்கும் பாற்கடலில் வேலைச் செலுத்தியவனான முருகன். சூரபதுமன் மாமரமாக கடல் நடுவண் நின்று துன்பஞ் செய்ய அதுபோது வேலைச் செலுத்தியழித்தான். ஒற்றுமை பற்றி பாற்கடலெனக் கூறினர். உறுக்கில் - பறுமுறுத்தினால்; பார்வதி கூப்பிடவும் வராதிருப்பதால் பார்வதிக்கும் பகைவனானாய் என்று விநாயகன் முன்னம் உனக்குச் சாபம் கொடுத்தது நீங்காதிருக்க மேலும் கோபித்து என்னதான் செய்வானோ, தக்கன் யாகத்தில் உனைத்தேய்த்த வீரபத்திரன் மறுபடியும் கோபிப்பான்; நீ இவர்களுக் கெல்லாம் பயந்து நீ பிறந்த கடலில் போய் ஒளித்தாலும் முருகன் மிக்க பகை கொண்டு, வேலாயுதத்தை விட்டு நீர் சுவறச் செய்து பயமுறுத்தினால் எந்த உலகத்திலும் உன்னைப் பாதுகாப்பவர் இல்லை எனப் பொருள் கொள்க. (9)

507. நமன் - யமன்; இவனை உதைத்திட்டது. திருக்கடவூரில் மார்க்கண்டருக்காக; நளினத் திருப்பாதம் - உவமைத் தொகை; வேள் - மன்மதன்; நயனம் - கண்; உம்பர் - தேவர்; கம்பத்தன் - தலை பத்தினையுடைய இராவணன்; உந்தியில் உதித்தவன் - பிரமன்; இப்பாட்டில் சிவபெருமானுடைய செயல்கள் பார்வதிக்கு ஏற்றிக் கூறப்பட்டுள்ளன. மார்க்கண்டனுக்காக எமனைக் கீழே விழ உதைத்த கால்கள், மன்மதன் எரியுமாறு கோபித்த நெற்றிக்கண், திரிபுரத்தை எரித்தழித்த புன்சிரிப்பு, பிரமனுடைய தலையைக் கொய்த நகம், இராவணன் கைலை மலையைத் தூக்கும் போது கோபித்து அவன் கீழே கிடந்து அலறுமாறு அழுத்திய கால் விரல், தாருகாவனத்து இருடிகள் விட்ட யானை, புலி, பாம்பு இவைகளை வென்ற திறமை, நரசிங்கத்தின் வலிமையை அடக்கச் சரப மூர்த்தியானது ஆகியன சிவபெருமானுக்கு உடைமையாதல் காண்க. அம்பரம் - ஆகாயம்; கட்செவி - பாம்பு; பம்பரம் காட்டுதல் - கலங்கவைத்தல், கம்பத்தன் மலை வெடிப்பிற் கிடந்தலறினது - இராவணன் புட்பகவிமானம் செலுத்திச் செல்கையில் கைலைமலைவர அதற்குமேல் செல்லாமல் நின்றது. நந்தி சிவபெருமான் இருக்கையெனக் கூறவும் இராவணன் அவரைக் 'குரங்குமுகா'' என இகழ அவர் குரங்குகளாலேயே உன் ஊர் நாசமாகுக எனச்சாபம் கொடுக்கப் பின் இராவணன் கைலையைப் பெயர்க்கத் தொடங்கினான். கைலை அசைய பார்வதி நடுங்கிச் சிவனையணைக்க அவர் உணர்ந்து கால் விரலாலழுத்த உள்ளே அழுந்தி திக்குமுக்காடினான். பின் நாரதருபதேசப்படி தலையொன்றும் கையொன்றும் அறுத்து வீணை வடிவாக்கிச் சாமவேதம் பாடி உய்வும், வரமும் பெற்றனன். திரிபுரவரலாறு 469 ஆம் பாட்டின் குறிப்பிலும், பிரமன் தலையைக் கொய்த வயிரவர் பிறப்பை 355-ஆம் பாட்டின் குறிப்பிலும் காண்க. தாருகாவனத்து இருடிகள் சிவனை மதியாமையால் அவர்கள் செருக்கையடக்கத் தான் பிக்ஷாடனராகவும் திருமால் மோகினியாகவும் வடிவு கொண்டு செல்ல அப்போது முனிபத்தினிகள் சிவனைக் காதலித்துக் கற்புநிலை தவறவும், முனிவர்கள் மோகினியைக் காதலித்து தவநிலை மாறவும் செய்தார். முனிபத்னிகளின் கற்பு கெட்டதை நோக்கிய முனிவர்கள் ஆபிசாரயாகஞ் செய்து அதினின்று வந்த யானை, புலி, பாம்பு, மான், முயலகன் ஆகிய ஏவினர். யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியும், புலியைக் கொன்று அதன் தோலை உடையாக உடுத்தியும், பாம்புகளை ஆபரணமாகக் கொண்டும், மானை இடக்கையிலும், முயலகனாகிய பூதனை அடக்கிக் காலின் கீழும் வைத்து விளங்கினர். சிங்கம் - இரணியனைக் கொன்ற நரசிங்கத்திருவுரு அவனது இரத்தத்தைக் குடித்து வெறி கொண்டு ஆட பிரகலாதனையனுப்பியும் இலக்குமியை முன்புறம் நிறுத்தியும் கோபம் தணியாது கொடுந்தொழில் புரிந்ததால் தேவர் சிவனை வேண்ட அவர் சரபப்புள் வடிவங் கொண்டு வந்து சிங்கத்தைத் தாக்கி அதன் தோலை உரித்துப் போர்த்தினார். பிருகு முனிவர் சாபப்படி திருமால் பத்து அவதாரங்கள் எடுக்க, அது போது முன்பு சிவார்ச்சனை செய்ததால் சிவன் கொடுத்த வரத்தின்படி முதலைந்தவதாரங்களில் சிட்சித்தும் மற்ற ஐந்து அவதாரங்களில் இரட்சித்தும் காத்தார். (10)
-------------------------------------

சிற்றில் பருவம்

508. வட்ட வாளக்குன்று - சக்கரவாள மலை; புரிசை - மதில்; திளைந்த - நெருங்கின; புறக்கடல் கோட்டை சூழ். அகழியா - பெரும் புறக்கடல் கோட்டையைச் சூழ்ந்த அகழியாக; அட்டகுல கிரிகள் - எட்டு மலைகள், (இமயம், மந்தாம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்); கொத்தளம் - அரண்; மாதிரத் தலைவர் - எட்டுத்திக்குப் பாலகர்கள்; தென்புதுவை - அழகிய புதுவை; வாமம் - இடப்பாகம்; சக்கரவாள கிரியே மதிலாகவும், நெருங்கிய பெரும்புறக் கடலே கோட்டை சூழ்ந்த அகழியாகவும், திசைகள் அரண்மனை வாயில்களாகவும், நிலைத்த புகழ் கொண்ட எட்டு மலைகள் அரண்களாகவும், எட்டுத்திக்குப் பாலகர்களுடன் கூடிய தேவசேனைகள் அம்மதிலின் இயந்திரங்களாகவும், மகாமேரு மலை கொடி மரமாகவும், ஆகாயகங்கை வெண்மையான கொடியாகவும், பல தீவுகள் வீடுகளாகவும், அவ்வீடுகளில் அரிய மனித உயிர்கள் குடியேறி இகபரசுகங்கள் தம்மை தரும நெறிப்படி கொடுத்து அரசாளுகின்ற அழகிய புதுவையில் வேதபுரி நாதர் இடப்பாகத்தில் விளங்கும் அரசியே சிறுவீடு கட்டுவாயாக என்று முடிக்க. (1)

509. முந்து எழுத்து - முதன்மையான எழுத்தாகிய உயிரெழுத்தும் மெய்யெழுத்தும், "உயிருமுடம்புமா முப்பது முதலே" என்பது ந. சூத்திரம். மொழியாக்கமுற்ற நல் கல் - இந்த முப்பது எழுத்துக்களினின்று உயிர்மெய்யும் மற்றைச் சார்பெழுத்துக்களும் உண்டாகி மொழி அமையப் பெறுதலைக் காண்க. எனவே மொழி ஆக்கமுற்ற நல் கல் என்றார். முப்புணர்பு - உயிரீற்றுப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, உருபு புணர்ச்சி; அந்தமுள் சாரியை போதிகைய தாக்கி - அழகு உள்ள பகுபத உறுப்பிலக்கணத்துள் ஒன்றான சாரியை என்பதைச் சுமையடைக் கட்டையாகச் செய்து; 'பகுதி விகுதியிடை நிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை...'' என்பது ந. சூத்திரம். உருபு - வேற்றுமையுருபுகள், ''பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி யென்றாகு மவற்றின் பெயர் முறை" என்பது ந. சூத்திரம்; மற்றும் போல, புரைய போன்ற உவமவுருபுகளையும் கூறலாம். எச்சம் - பத்து எச்சங்கள், “பெயர்வினை உம்மை சொற்பிரிப்பென ஒழியிசை எதிர் மறை இசையெனுஞ் சொல்லொழி பொன்பதும் குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும்" என்ற ந. சூத்திர மூலம் உய்த்துணர்க. கொடுங்கை - வெளிப்பக்கம் வளைந்துள்ள ஓர் உறுப்பு; மேல் கருத்தாவை - அதன் மீது முதல் வேற்றுமைக் கருத்தா, மூன்றாம் வேற்றுமைக் கருத்தாக்களை; (இவை ஏவுதற்கருத்தா, இயற்றுதற் கருத்தா என இருவகைப் படும்). "மூன்றா வதனுரு பாலா னோடொடு கருவி கருத்தா உடனிகழ் வதன் பொருள்'' என்ற ந. சூத்திரம் காண்க. சந்தம் முற்றும் ஆணி தைத்து - சந்த விருத்தப் பாட்டுக்களை முழுதும் ஆணிகளாக்கித் தைத்து; ஐம்பால் ஓடு இட்டு - ஆண்பால், பெண்பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் என்ற 5-பால்களை ஓடுகளாக வேய்ந்து; இயல் சார்ந்த கோள் எட்டும் அறையாத்தடுத்து - செய்யுளின் தன்மையைச் சார்ந்த பொருள்கோள் எட்டும் அறைகளாகத் தடுத்து, ''யாற்று நீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண், தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டு கூட்டு, அடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே.'' என்பது காண்க; முத்தக முதல் சித்தரித்து - செய்யுளின் வகைகளான முத்தகம், குளகம், தொகை, தொடர்நிலை என்ற நான்குவகைகளால் அலங்கரித்து, "செய்யுளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகங் குளகம் தொகை தொடர் நிலையென, எத்திறத்தினவு மீரிரண்டாகும்,'' என்பது தண்டியலங்காரம்; இருபொருள் தகை விளக்கிட்டு - செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை வகைகளால் தகுதியுற்ற விளக்கு ஏற்றி; "ஒரு வகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி தெரிவுதர வருவது சிலேடையாகும்" என்பது தண்டியலங்காரம். முதன்மையான முதலெழுத்துக்களாகிய சேற்றினால் மொழி அமையப் பட்ட நல்ல செங்கற்கள் செய்து மூன்று புணர்ச்சியினால் சுவர்வைத்து, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவைகளைத் தூணாக நிறுத்தி, பதத்திற்கு அழகைத்தரும் சாரியை என்பதைப் போதிகையாகச் செய்து, வேற்றுமையுருபு, உவமவுருபு முதலியவைகளை உத்திரமாகப் புகுத்தி, வரிசையாக உள்ள 10-வித எச்சங்களையும் கொடுங்கையாக வைத்து, மூன்றாம் வேற்றுமைக் கர்த்தா முதலியவைகளைச் சிறு உத்திரமாகச் செய்து, சந்த விருத்தப் பாட்டுக்களால் முழுதும் ஆணியினால் தைத்து, ஐம்பால் (அல்) ஐந்து இலக்கணப் பகுதிகளை ஓடாக இட்டு, பொருள்கோள் எட்டினையும் அறைகளாகத் தடுத்து, நான்கு செய்யுள் வகையினால் சித்தரித்து, இரு பொருள்படும் சிலேடை என்னும் விளக்கேற்றி அமைக்கும் செந்தமிழ் இலக்கணமாகிய வீட்டினுள் விளையாடும் அம்மையே சிறுவீடு கட்டியருள் என்க . (2)

510. பொடி - சாம்பற்பொடி; விடையவர் - சிவன்; மூரி - பெருமை; முந்நீர் - கடல், ஆற்று நீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்ற மூன்று நீர் கொண்டதால் கடலுக்கு முந்நீர் என்றும் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையதால் கடலுக்கு முந்நீர் என்றும் பெயருண்டாயிற்று என்பர்; முந்நீர்நிறம் கொண்டு மண் உண்டு விண் நீண்ட முண்டகம் கண்ணர் - கடல் நிறம் போன்று நீலநிறம் கொண்டு உலகங்களை யெல்லாம் யுகப்பிரளயத்தின்போது உண்டு மாபலியிடம் தானம் வாங்கி, யளக்க திருவிக்கிரமாவதாரம் கொண்டு ஆகாயமளவு காலை உயர்த்திய தாமரை போன்ற கண்களையுடைய திருமால்; முண்டகம் - தாமரை ; சுத்த............ ஈன்றவர் - பரிசுத்தமான நலந்தரும் வேதங்கட்குத் தலைமையடைந்து அன்ன வாகனத்தில் விளங்கி உலகைப் படைக்கும் பிரமன்; வச்சிராயுதர் - இந்திரன்; வித்ததகம் - ஞானம்; மோனம் - மௌனம் என்பதன் மரூஉ; விதரணர்கள் - விவேகமுள்ளவர்கள். (3)

511. ஓவாத - நீங்காத, இறந்தும் பிறந்தும் உயிர்கள் மாறி மாறி வருவதால் "ஓவாத" என்றார். மன் உயிர் - நிலைத்த உயிர்; தண்டுலம் - அரிசி, பாட்டில் நீட்டல் விகாரம்; தாவா முதுமை அண்டம் தடா - அழியாத பழைய உலகம் பானையாகவும்; சயிலம் - மலை; உலவை - காற்று; வடவை - வடவா முகாக்கினி; கோ ஆதி பதவி - அரச பதவி முதற்கொண்டு மற்ற பதவிகள்; கழி வகையோடு - உருசி மிக்க விதத்தால்; கழி - உரிச்சொல்; கொண்கன் - கணவன்; குலவ - சேர; கூர் - உரிச்சொல்: தேவாதிபன் - இந்திரன்; நீங்காத பெரிய ஆகாயமே சிறிய வீடாகவும், இப்பூமியே உரலாகவும், உயர்ந்த மேருமலையே உலக்கையாகவும், உலகத்திலுள்ள நிலைத்த உயிர்கள் அரிசியாகவும், பழைய உலகம் பானையாகவும், கடல் நீரே உலையாகவும், மலைகளே அடுப்பாகவும் காற்று ஊதுகுழலாகவும், வடவாமுகாக்கினி தீயாகவும், அரச பதவி முதலியன உருசி மிக்க விதத்தால் அப்பமாகவும் மிகுந்த மணத்தோடு சமைத்து உன் கணவனான சிவபெருமானுக்கு அற்புதம் செய்து காட்டி மீண்டும் அவைகளை முன்னிருந்தது போன்று நிலை பெறச்செய்து சந்தோஷமிகும் இந்திரன் வணங்கிப் போற்றும் தேவி என்க. (4)

512. பங்கையச் செல்வி - திருமகள்; வாக்கின் செல்வி - கலைமகள்; பூங்கற்பகச்செல்வி - இந்திராணி; வண்டலாட்டு - மகளிர் விளையாடும் ஒரு ஆட்டம்; கின்னரியின் மன்னிசை - ஓர்வகை யாழினால் பெருமை தங்கிய இசையை; பஞ்சரப் பூவை - கூட்டிலுள்ள மைனா; பூவை கிளி - உம்மைத்தொகை. தோலாத - நியாயத்தில் தோற்காத; குமுதவாய் - உவமைத்தொகை. குதலைமொழி - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. (5)

513. அம்பைப் பொருது அஞ்சனம் அணி வரிவிழி - ஆயுதமான அம்புடன் போர் செய்து தோற்கடித்து மையணிந்த நீண்ட கண்கள்; ஆலி தரும் புயல் - மழைத்துளியைத் தரும் மேகம்; அளகம் - கூந்தல்; வம்பைக் கிழிதந்து - கச்சினைக் கிழித்து; இறுமாந் தொளிர் - ஏறிட்டிருக்கும்; வனசம் அபயமெய்த - தாமரை அபயமென்று அடைய; மணிப் பைந்தொடி - மாணிக்க வளையல்; உம்பர் பயில் அர மகளிர்கள் - மேலுலகத்தில் வசிக்கும் தேவப்பெண்கள்; அம்மை தேவப்பெண்கள், நாக உலகப்பெண்கள் ஆகியவரோடு பந்தாடுபவள் என்க. (6)

514. எழுவகை உற்பவம் - ஏழு வகைப் பிறப்பு; எண்பான் நானூறு ஆயிரம் எனும் அலகு - எண்பத்தினான்கு நூறாயிரம் யோனி பேதம் என்ற அளவு; ஐம்பாவை - அழகிய பொம்மை; பாலித்து, அருளி; உள் நின்று ஆட்டி - உள்ளே இருந்து கொண்டே சூத்திரப் பாவைபோல ஆட்டி, ''வானாகி மண்ணாகி....'' என்ற மணிவாசகர் பாட்டில் "கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை" என வருவது நோக்கத்தக்கது. "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்றார் நாவரசரும், ஏழு வகைப்பிறப்பும் 84 நூறாயிரம் யோனியுமான அளவு கொண்ட இனிய உயிர்களான பல பொம்மைகளுக்கு அழகு, இளமைத் தன்மை, வளர்ச்சி, குணம், குற்றமகற்றுகின்ற கல்வி, மகிழ்ச்சி, செல்வம், இரக்கத்தோடு தரும் சுகவாழ்வு முதற் கொண்டவைகளை அருளி அவ்வுயிர்களின் உள் நின்று ஆட்டிச் செயல் புரியும் பார்வதியே, ஆகாயத்தில் பொருந்திய பூரண சந்திரன் போன்று விரிந்த கிரணங்களுள்ள தண்ணொளி வீசும் முத்தினால் செய்த பொம்மையையும், பச்சைநிற மிகுந்துள்ள மரகத மணியினால் செய்தலைப் பெற்ற அழகிய பொம்மையையும், சப்திக்கும் தீயைப் போன்று பிரகாசம் வீசும் மாணிக்கத்தினால் விளங்கும் அழகிய பொம்மையையும் வைத்து அழகு விளங்கச் சிற்றில் கட்டுவாயாக என்க.  (7)

515. குதம்பை: ஓர் வகை காதணி; தொலைவு அற - தன் பிரகாசத்தால் தூரம் என்பது நீங்க; பொன் தூசு - பொன்னாலாகிய ஆடை; விலையில்: மணித் தண்டை - விலை மதிக்கமுடியாத மாணிக்கப் பரல் கொண்ட தண்டை; நூபுரம் - சிலம்பு; சிலதியர்-தோழியர். (8)

516. அளி குலவும் கடநதி - வண்டுகள் வாசனைக்காகச் சேரும் மதமாகிய ஆறு; கவுளார் அத்தி முகன் - மதச்சுவடு பொருந்திய ஆனை முகன்; அனை தொகுத்தல் விகாரம்; வெளி, பவனம், தழல், நிலம், நீர் வடிவாம் - இவ்வடியில் ஐம்பெரும் பூதங்களாக அம்மை இருத்தல் காண்க. தற்பரை - பார்வதி; விரை கமழ் ஐந்தரு - வாசனை வீசும் கற்பகம் முதலிய ஐந்து மாங்கள்; இமையோர் - தேவர்கள்; சிந்து எழில்சேர் நுதல் ஆர் - பொட்டுடன் கூடிய அழகுசேர்ந்த நெற்றி பொருந்திய. (9)

517. வலவன் - திருமால்; திரிபுவனம் - மூன்று உலகங்கள்; திரு அலரின் பதயுக நாயகி - அழகிய தாமரைப் பூப்போன்ற இரண்டு பாதங்களையுடைய தலைவி; திரிபுடை வஞ்சர் - திரித்துப் பேசும் வஞ்சகர்கள்; சிவை, யாமளை, சங்கரி என்பன காளியின் வேறு பெயர்கள், திருவருள் தந்து எளியனை ஆள் உமையே (10)
--------------------------------

நீராடற்பருவம்

518. மணமிகு மலர் தாது அளைந்து தேன் உண்டு அளிகள் மகிழ் நறும் பூ தார் குழல் - வாசனை மிகும் மலரில் மகரந்தப் பொடியைப் பூசி தேனையுண்டு வண்டுகள் மகிழும் நறுமண மிக்க மலர்மாலை சூடியுள்ள கூந்தலானது, வரைநின்று உயர்ந்து வான் நெறி சென்று முந் நீரை வாரி உணும் மேகமென - மலையினின்று உயர்ந்து ஆகாய வழி சென்று கடல் நீரை வாரிக் குடிக்கும் மேகம்போன்று; குணமுறு மணிக்கச்சு வீக்கி ஆர் அருள் அமுதுகொண்டு ஓங்கி வளர் அலர் முலை - அழகிய முத்தினாலாகிய கச்சினால் இறுக்கிக் கட்டி அருமையாகக் கொடுக்கும் அமுதத்தை (பாலை) க்கொண்டு ஏறிட்டு வளரும் பூவரும் பையொத்த முலை, (அருமையாக அமுதங்கொடுத்தது சம்பந்தப் பெரு மானுக்காகும்). கொற்றத் துழாய் மௌலி பண்டு பாற்கடலில் குறித்திட்ட சயிலமென - வெற்றியுடைய துளபமாலை யணிந்த கிரீடமுடைய திருமால் முற்காலத்தில் தேவர்களுக்குப் பாற்கடல் கடையுமாறு குறிப்பிட்டுக் கூறிய மந்தரமலை போன்று; வணர் இரும் கன்னல் சிலைப் புருவம் மைவிழி வளைச்செவி பிறங்கு வதனம் - வளைவுபொருந்திய பெருமை மிக்க கரும்பு வில்போன்ற புருவமும், மை தீட்டிய கண் களும், வள்ளைப் பூப்போன்ற காதுகளும் விளங்கும் முகம்; வண்மை திகழ் விண்மீன் கணஞ்சூழ் உலவும் முயல் மறு அற்ற மதியம் என. அழகு விளங்கும் நட்சத்திரக் கூட்டஞ் சூழ உலவுகின்ற முயற்கறை நீங்கிய பூரண சந்திரன் போன்று; புணரி நிகர்ப்பெரு வராகநதி - சமுத்திரமொத்த பெரிய வராகநதி; வராகநதி:- இது கோலாசல மலை யென்னும் தென் ஆற்காடு ஜில்லாவிலுள்ள செஞ்சி மலையில் உற்பத்தியாகும் ஓர் சிற்றாறு. குழல் மேகமென, முலை சயிலமென; வதனம் மதியமென நீராடியருள் என முடிக்க. (1)

519. சைவலம் - பாசி; சேதாம்பல் - செம்மையான அல்லி மலர்; தந்தம் - பல; வள்ளை - ஓர் கொடியில் உண்டாகும் பூ; வார் - நீண்ட; இதழ் - உதடு; மிடறு - கழுத்து; கெளிறு - ஓர் வகை மீன்; சலச்சுழி - நீர்ச்சுழி; கொடி - நீரிலுள்ள தாமரைக் கொடி, அல்லிக் கொடி, வள்ளைக்கொடி போன்றன; மருங்கு - இடை; சர்ப்ப படம் - பாம்பின் படம், சர்ப்பம், வடசொல், தத்பவம்; குமிழி - நீர்க்குமிழி; நிதம்பம் - அல்குல்; அலவன் - ந; சினைவரால் - கர்ப்பங்கொண்டுள்ள வரால்மீன்; அலத்தகப் பதம் - செம்பஞ்சுக் குழம்பூட்டப்பட்ட பாதம். இப்பாட்டில் நீராடல் பருவத்திற்கேற்ப அம்மையின் உறுப் புக்களுக்கு நீர்படு பொருள்களையே உவமை கூறின திறம் உணரத் தக்கது. கயல்மீன், பாசி, அல்லிமலர் முதலியவற்றோடு கண்கள், கூந்தல், வாய் முதலியன உவமையாகா மாட்டா என்று எதிர்த்துப்போர் செய்யத் தெளிந்த அலைகளை வீசும் வராக நதியில் நீராடுவாயாக என முடிக்க. (2)

520. இலங்கு மரகதமணிச் சோதியிற் பசிய - விளங்கும் மரகத மணியின் ஒளியைக்காட்டிலும் பச்சை நிறமான; ஏமுற்று - மயங்கி; வாயரவம் மாறாது - வாயினால் சப்தம் செய்யாது; குலம் - கூட்டம்; அர மடந்தையர் - தேவப்பெண்கள்; மழலை - குதலைப் பேச்சு; வெளிற்றன்னம் - வெண்மையான அன்னம்; பேட்டோடு - பெண் அன்னத்தோடு; பரந்துபாற - மூலைக்கொன்றாகப் பரவினாற்போல் பறக்க; குவட்டு அருவி முத்து - மலையில் மூங்கில்களினின்று சிதறி அருவி மூலம் வரும் முத்து. (3)

521. ஏந்து இதழ் முறுக்கு அவிழ்ந்து ஊறு தேன் பில்கு வாரிசம் - தாங்கிய இதழ்களைக் கொண்ட மொக்கு மலர்ந்து சுரக்கின்ற தேன் கொப்பளிக்கும் தாமரை; மைக்கணார - கரிய கண்களால் முழுதும்; ஓதை - சப்தம்; காந்தள் கரம் - காந்தட் பூப்போன்ற கை, உவமைத்தொகை; நேயம் - அன்பு; வெண்நித்திலம் - வெண்மையான முத்துக்கள்; இப்பாட்டில் வராகநதியை மகளாக அதனிடமுள்ள பொருள்களைக் கொண்டு உருவகப்படுத்திக் காட்டுகிறார். தாமரை மலராகிய முகம் மலர்ந்து, இளைய நிலவின் கிரணம் கண்டு மகிழும் கருங்குவளைப் பூக்களாகிய கரிய கண்களால் முழுதும் அன்புகனியப் பார்த்து, நீந்துவதற்கு அரிதான ஆழமுள்ள நீரில் உலவும் பல பறவைகள் தங்கள் நீண்ட சப்தமாகிய இன்சொல்லினால் “அழியாத புதுமையான பரதேவியே வருக," வென்று அன்புடனே உபசரித்துத் தகுதியுடைய துதிகள் செய்து, வெண்மையான முத்துக்களையுடைய சங்கங்கள் சப்தித்து எழுந்து, வீசும் அலைகளாகிய அழகிய பொன், முத்து ஆகியவைகளால் செய்த வளையலணிந்த காந்தள் பூப்போன்ற கையினால் அழைத்து உறவு புரியும் அழகு மிக்க பூக்கள் மிக்க நீர்த்துறை கூடிய வராக மாநதியில் நீராடுவாயாக என முடிக்க. இப்பாட்டில் விருந்தோம்பும் குணத்தை எடுத்துக் காட்டியுள்ளார். தாமரை மலர்ந்திருப்பது தூரத்தே கண்ட விருந்தினனை மலர்ந்த முகத்தோடு பார்த்தல் போன்றும், குவளை மலர்கள் அதனால் நண்ணிய வழி அன்பு கனியப் பார்த்தல்போன்றும், பறவைகள் ஒலி வீட்டில் அடைந்த விருந்தினனைக் கண்டு இன்சொல் பேசுவதனையும் குறிப்பித்தார். இது ''முகத்தா னமர்ந்தினிய நோக்கி அகத்தானாம் இன்சொ லினதேயறம்," என்ற குறளைக் குறிப்பிக்கிறது. ''மோப்பக் குழையு மனிச்சம் முகந் திரிந்து நோக்கக் குழையும் விருந்து,'' என்ற பாட்டினையும் அப்பாட்டின் பரிமேலழகர் உரையையும் நோக்குக. சங்கங்கள் சப்தித்தலும் திரைக்கைக் காட்டி அழைத்தலும் “இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப........'' என்ற பாட்டை நினைவுபடுத்துகிறது. (4)

522. காஞ்சனம் - பொன்; பிறங்கும் - மாறுபடும்; கலாபம் - பதினாறு கோவையுள்ள மணிவடம்; சிகை - தலை அணிகலம்; காஞ்சி - எண்கோவை மணி; பருமம் - மூவாறு கோவை மணியணி; மேகலாபர ணம் - மாதர் இடையில் கட்டும் ஒருவகை ஆபரணம்; கலிங்கம் மீது அரவம் செய் - உடை மீது சப்தத்தைச் செய்ய; வாம் சரம் அணிப் பணிகள் எனப்பிரிக்க; வாமம் - அழகு, இது 'வாம்' என கடைக் குறைந்தது. கொங்கைக் குவடு - உருவகம்; குவடு - மலை; அருவியின் - அருவியைப்போல; இன், ஐந்தாம் வேற்றுமை உவமப்பொருவு; உயர்ந்த மாத்து ஆடகம் தொடி - உயர்ந்த மாற்றுள்ள பொன்னாலாகிய வளை; நாமம் + சொலிப்பு + அணி - கீர்த்தியால் பிரகாசம் மிகுந்து அழகிய; நாமம் - நாம் எனத்தொக்கது; பதத்தின் + நன்கு + அமர்ந்து + எழில்கொள் = பாதத்தில் நன்கு பொருந்தி அழகுள்ள; அரி - பரல்; நவமணி - நவரத்தினம்; பூஞ்சிலம்பு ஓலிட - அழகிய சிலம்பு சப்திக்க. (5)

523. கலைமின் - கலைமகள்; கமலை - திருமகள்; தேவர்களதிபதி - இந்திரன்; அயிராணி - இந்திராணி; சிலதி - தோழி; இகுளையர் - பணிப் பெண்கள்; புடை - பக்கம். (6)

524. மணிச்சிவிறி - அழகிய நீர் விடுந் துருத்தி; பொன் கொல்லன் - தட்டான்; கமழ்தரு மதுவுமிழ் மலர் ஓதி - வாசனை வீசும் தேன் சிந்தும் மலரணிந்த கூந்தல்; காழ் உறு முத்து - ஒளிபொருந்திய முத்து; கவின் இடை உடை - அழகு மிக்க இடுப்பு ஆடை; இமிழ் - ஒலிக்கும்; எய்த்து - இளைத்து. (7)

525. ஈரமலர்க்கா - குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலை; மணிச் செய் குன்று - இரத்தினங்களால் செய்யப்பட்ட செயற்கை மலை; குரவை - பெண்கள் கைக்கோர்த்து ஆடும் ஒரு கூத்து; வாரம் - அன்பு; கொம்மை - கும்மி; வண்டல் - மகளிர் விளையாட்டு; ஆரம் – முத்து. (8)

526. குவடு உயர் மந்தர மலைவில் உவந்தவர் - சிகரங்கள் உயர்ந்த மந்தரமலையாகிய வில்லைக் களிப்போடு திரிபுராதியரை எரிக்க ஏற்றுக் கொண்டவர்; கொடியாம் ஏறு உடையார் - எருதுக் கொடியை உடையவர்; மந்தரம் மேருமலைக்கு மகனானதால் ஒற்றுமை பற்றிக் கூறப்பட்டது. இதழி - கொன்றை; குளிர் நீர் ஆர்சடையார் - கங்கை பொருந்திய சடையுடையவர்; தமியேன் ஆடு அரனார் - திக்கற்றவனாகிய என் உள்ளத்தில் நடனம் ஆடுகின்ற சிவன்; அம்கணர் - அழகிய கண்களை உடையவர் (சிவன்); சமம் ஈறு ஆதி இலார் - ஒப்பு முடிவு முதலில்லாதவர்; பவள நிறங்கிளர் வடிவுறு புங்கவர் என்றதால் சிவனது செந்நிறம் குறிக்கப்பட்டது; பணியார் பால் - தன்னை வணங்காதவரிடம்; பகைஞர் புரம் - திரிபுரம்; நகு - சிரிக்கும்; மணி திகழ் கந்தரி - நீலமணி போன்று விளங்கும் கழுத்தை உடையவள். (9)

527. கலைவலர் - புலவர்கள்; பொதிய முவந்திடும் முனி - அகத்தியர்; புலவு கமழ்ந்தொளிர் அயிலவன் - புலால் மணம் வீசி ஒளிரும் வேலினைடைய முருகன்; அன்பு அனை - அன்பை உடைய தாய், அனை தொகுத்தல் விகாரம்; பொடி - சாம்பற்பொடி; சண்டன் - எமன்; குந்தளி - கூந்தலை உடையவள்; கணபணி கங்கணி - கூட்டமான பாம்புகளைக் கங்கணமாக உடையவள். (10)
------------------------------

பொன்னூசற்பருவம்

528. நன்மாத் துயர்ந்த பொன் தம்பங்கள் - நல்ல மாற்றுயர்ந்த பொன்னாலாகிய கம்பங்கள்; முத்து வடம் - முத்துக்கள் நிறைந்த கயிறு; பலகையா ஆம் என்க; கலைமகள் சேடி - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; அம்புயத்து இலகு இலக்குமி எனப்பிரிக்க; அம்புயம் - தாமரை; அட்டமங்கலம் - கண்ணாடி, நிறைகுடம், கொடி, சாமரை, தோட்டி, முரசு, விளக்கு, இணைக்கயல் ஆகியன; பவானி - பவனுடைய மனைவி, (உமையின் பெயர்); வேதாந்த, சித்தாந்தங்கள் கம்பங்களாகவும், நாதாந்தம் வயிரவிட்டமாகவும், ஞானம் முத்துக்கள் பதித்த கயிறாகவும், அடியவரின் மனமெனும் தாமரை ஒளியுள்ள பதுமராகப் பலகையாகவும், கலைமகளாகிய சேடி பக்கத்திலிருந்து புகழைச் சொல்ல, எட்டு இலக்குமிகளும் அஷ்டமங்கலமேந்த, நீ ஊசல் ஆடுக என முடிக்க. "வேதாந்த சிந்தாந்தமெனு " மென்பது 'வேதாந்த சித்தாந்தங்கள்'' என்றிருப்பின் நன்ற (1)

529. கடவுளர் - தேவர்; கனக + ஆதனம் - பொன்மயமான ஆசனம்; வேந்தன் - இந்திரன்; பீடம் - ஆசனம்; உலகை நல்குந் திறத்தையுடையான் - பிரமன்; வதனம் - முகம்; எழுதா மறை - வேதம்; ஆழி - பாற்கடல்; குடக்கூத்து - அநிருத்தனை வாணன் சிறையிலிட்ட காலத்தில் அவ்வாணாசுரன் பட்டணத்தில் கண்ணன் லோகத்தாலும், மண்ணாலுஞ் செய்த குடங்கொண்டாடிய கூத்து; அகம் மிக மலர்ந்து உவக்க என்று பிரிக்க; பொலன்றூவி - பொன் மயமான சிறகு. (2)

530. மட்டு - தேன்; மதுரச் செழுங்கரும்பு அனைய தோள் வலையம் - இனிய செழித்த கரும்பை யொத்த தோளில் அணியும் வாகு வலையமெனு மாபரணம். தோடு - ஓர் காதணி; ஏகாசம் - போர்வை; கச்சு இலங்கு தனம் என்று பிரிக்க; மாமணித் தொங்கல் - முத்தலாகிய செவிப்பூமாலை; கமழ் குழல் தொடை யசைய - வாசனை வீசும் கூந்தலின் மாலையசைய; சிலை நுதல் - வில் போன்ற நெற்றி. (3)

531. கயல் மீன்கள் பொருந்திய சரவணப் பொய்கையில் அக்கினியினால் கொணரப்பட்டுக் கார்த்திகைப் பெண்கள் அறுவரின் பாலைக்குடித்து, முப்பத்து மூன்று கோடி தேவச் சேனைகளுக்கு அதிபதியாகி, பிரணவ மந்திரம் தெரியாத நான்முகனைக் குட்டிக் கந்தமாதனச் சிறையில் வைத்துச் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்துக் கொடுஞ் செயல்களைச் செய்யும் சூரபதுமன், சிங்கமுகன் முதலியவர்களை அழிக்க வேலாயுதம் விடுத்துக், கடப்ப மலர்மாலை அணிந்து, மயிலை வாகனமாக ஊர்ந்து, சேவற்கொடி உயர்த்திச் சந்தோஷிக்கின்ற முருகனைப் பெற்றவள் என முடிக்க. தந்தையாகிய சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரம் உபதேசித்ததால் ‘சுவாமி நாதன்' என்று பெயர் வந்தது. இப்பாட்டில் "கிழவனைப் பெற்ற குமரி'' என்பதில் உள்ள நயத்தைக் காண்க. மாமேரு வில் கை ஐயன் - உயர்ந்த மேருமலையை வில்லாகக் கையில் கொண்ட தலைவன், சிவபெருமான், புயல் ஆர் மலைக்கிழவன் - மேகம் பொருந்திய மலைக்கு உரிமையுடையவன். கிழவன் - உரிமை உடையவன், கிழவன் என்பதில் கிழமை பகுதி.(4)

532. ஆலவாய் - மதுரை; சிரகிரி - திருசிராமலை, இது பூர்வத்தில் திரிசிரனாலாளப் பட்டது. ''சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்தகுருவே.'' என்பது தாயுமானவர் வாக்கு. சு பெயர் - தாயுமானவர். தே. பெயர் - மட்டுவார் குழலி; வான் ஓங்கு காவை - ஆகாயமளவு உயர்ந்துள்ள மாட மாளிகைகளுடைய காவியேச்சுரம், இது சிவத் தலங்கள் ஆயிரத் தெட்டனு ளொன்று. அருணாசலம் - திருவண்ணாமலை; வாரணாசி - காசி; நலிவு உற்றிடாத சீகாழி - துன்பமடைவிக்காத சீர்காழிப்பதி. இது சிதம்பர மருகிலுள்ளது. சிதாகாயம் - சிதம்பாம்; சித் - ஞானம்; ஐயாறு. திருவையாறு; நாகை - திருநாகேசுவரம், சுவாமி பெயர் செண்பகாரண்யேச்வரர், தேவி பெயர் குன்றை முலை நாயகி; ஆரூர் - திருவாரூர்; காஞ்சி - காஞ்சிபுரம், தொண்டை நாட்டுப்பதி; நள்ளாறு. திருநள்ளாறு; நளன் வழிப்பட்டுக்கலி நீங்கிய இடம். மருதூர் - திருவிடை மருதூர், சிவபெருமான் தம்மசைவே உலகத்தியக்கம் என்பதைத் தாமே உலகமென வெண்ணியிருந்த பிராட்டிக்குக் காட்டும் வகை ஒரு கணம் அசைவற்றிருந்து உயிர்களியங்காமை காட்டி உருத்திரர்களால் உலகசிருட்டியைச் செய்வித்துப் பின் பிரமன், விஷ்ணுக்களைப் படைத்த தலம், சு. பெயர் - மருதப்பர். தே. பெயர் - நன்முலை நாயகி; மெலிவுற்ற தொண்டரைக் கரையேற்றும் ஊர் - திருவிளநகர். பூசைக்குத் திருப்பள்ளித் தாமங் கொண்டு ஆற்றிலிறங்கிய "அருள் வித்தனை" வெள்ள மீர்த்துச் செல்லவும் திருப்பூக்கூடையை விடாத உறுதியெண்ணி, யவனைக் கரையேற்றி ஞானமுபதேசித்த தலம். சு. பெயர் - துறைகாட்டும் வள்ளல். தே. பெயர் - காம்பன்ன தோளியம்மை. வேளூர் - வைத்தீசுவரன் கோயில். இது திருப்புள்ளிருக்கு வேளூர் எனவும் கூறப்படும். சடாயு, சம்பாதி என்ற கழுகுகள், இருக்கு வேதம், முருகன் ஆகியவர் பூசித்த தலமானமையின் இப்பெயர் பெற்றது. சு. பெயர் - வைத்தியநாதர்; தே. பெயர் - தையனாயகி. திருக்கீழ் வேளூரையும் (சோழநாடு) குறிக்கலாம்; வில்லையம்பதி: தொண்டை நாட்டில் புதுவைக் கருகிலிருக்கும் சிவத்தலம். பிரமன் வில்வவனம் உண்டாக்கிச் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தமையின் வில்வவனமென்று திருநாமம் உண்டாகிப் பின் தருமபாலன் என்ற சோழன் இவ்வூரைச் சீர்திருத்த வில்வ நல்லூரென்னும் பெயர் வழங்கியது. வில்வவனமென்பது வில்லவனமாகி அது மருவி வில்லையாயிற்று. இது தேவாரத்தில் வரும் வில்வேச்சுரமென்னும் வைப்புத் தலமாகும். இப்போது வில்லியனூர் என வழங்குகிறது. சுவாமி பெயர் காமேசுவரர். தே.பெயர் கோகிலாம்பிகை. காளத்தி:- சீகளாத்தி; சீ, காளம், அத்தி மூன்றும் (சிலந்தி, பாம்பு, யானை) பூசித்து முத்தி பெற்ற தலம். தொண்டை நாட்டுத்தலம். கண்ணப்பர் முத்தி பெற்ற தலம். மற்றுள தலம் - திருக்கோவலூர், மாயவரம், தருமபுரம், திருப்புன் கூர் முதலியன. (5)

533. மயிலின் நின்றருள் சுவாமி - முருகன்; மருவும் உந்துருவின் இபமுகன் - வாகனமாகப் பொருந்தும் பெருச்சாளியையுடைய யானை முகனான - விநாயகன். தினம் அறாமல் - ஒரு நாளும் நீங்காமல்; தரையை ஈன்ற முகில் உவணன் ஒண்பிடரி தாவியாட - பூமியைப் பிரமனைக் கொண்டு படைத்திட்ட மேக நிறம் பெற்ற திருமால் கருடனின் கழுத்தைப் பிடித்தாடவும்; பொருவில் சிறை விகங்கம் மிசை - ஒப்பில்லாத சிறகுகளையுடைய அன்ன வாகனமீது; மகவான் - இந்திரன்; கடல் பயந்த களிறு - ஐராவதம்; அஞ்சலி செய்திட- வணங்க; முருகன் மயில் மீது ஏறி ஆட, விநாயகன் பெருச்சாளி மீது ஏறி ஆட, திருமால் கருடன்மீது ஏறி ஆட, பிரமன் அன்ன வாகனத்தின் மீது ஏறி ஆட, இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி ஆட, ஈசன் இடபவாகனத்தின் மீது ஏறி ஆட, நீயும் பொன்னூசலில் ஆடுவாயாக என முடிக்க. திருமாலைத் தரையை ஈன்றவன் என்றார் பிரளய காலத்தில் உலகங்களை உண்டு, துயின்று மறுபடி உமிழ்வதால். (6)

534. அசரம் - நிலை பொருள்; சரம் - இயங்கு பொருள்; விஞ்சையர்கள் - வித்தியாதரர்கள்; சூலி - சூலத்தையுடையவள்; வாமநிதியே - இடப்பாகத்தைப் பெற்ற செல்வியே; களங்கம் - குற்றம்; வினை களங்கம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; எளியேன் - எளியவனாகிய என்னை; உபயபதம் - இரண்டு பாதங்கள். (7)

535. கூறொணாத - சொல்ல முடியாத; அங்கனையர் - பெண்கள்; கோதில் நாக உலகார் - குற்றமற்ற நாக உலகத்தில் பொருந்தியவர்; மழை - மேகம்; வாரி - கடல்; நிறை - கற்பு; விழை - விருப்பம்; வீறு சேரிதழி - பெருமை நிறைந்த கொன்றை மலர்; விது-சந்திரன்; பனகம் - பாம்பு; நதி - கங்கை; வேணி - சடை; இறையோன் உழை இலங்கு மரகத மெய் அம்பிகை எனப் பிரிக்க; உழை - இடம்; மெய் - உடல் .       (8)

536. நீள் திரை மண்ணாள - நீண்ட அலைகளோடு கூடிய கடல் சூழ்ந்த பூமியை ஆள; புயல் - மேகம்; மதி - மாதம்; நீர்மலி - நீர் மிகுந்த; எங்கணும் + ஏர் + உற-எங்கும் அழகு பொருந்த; ஏண் உற - பெருமை பொருந்த; மகிதலம் திலகமுறு நிறை பொங்கிட வாழ் மயில் - பூமிக்கே பொட்டுப்போன்ற கற்பு மிகுந்திட வாழும் மயிலையொத்த பெண்கள், மயில் - உவமையாகுபெயர்.      (9)

537. அமுதர்கள் - வானோர்கள்; அபய வரத காதலம் - அபய கரம், வரதகரம் என்பன. கையின் ஐந்து விரல்களும், மேல் நோக்கி "நிமிர்ந்து நிற்பது பயப்படாதே' என்று சொல்லி அபயம் தருவதைக் காட்டுவதாகி அபய அஸ்தம் என்றும், ஐந்து விரல்களும் கீழ்நோக்கி நிற்பது வேண்டும் வரத்தைத் தருவதைக் காட்டுவதாகி வரத அஸ்தம் என்றும் பெயர் பெறும்; அமலன் - சிவபெருமான்.      (10)

புதுவைத் திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.
------

This file was last updated on 24 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)