pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 6
தூத்துக்குடி பாகம் பிரியாவம்மை பிள்ளைத்தமிழ்


tUttukkuTi pAkam piriyAvammai piLLaittamiz
(piLLaittamiz kottu - part 6)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 6
தூத்துக்குடி பாகம் பிரியாவம்மை
பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------

"முத்துப் பிறப்பதொரு தென்கடலிலே'' என்று பாரதியும், - பாண்டி நாடு முத்துடைத்து" என்று ஒளவையாரும், “தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்'' (பட் - பாலை. 189) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாராட்டக் காரணமாயுள்ளது தூத்துக்குடியே. ரோம் நாட்டின் இராணியான கிளாடியஸின் மனைவி பாண்டி நாட்டின் முத்தின்மீது மிக்க மோகங் கொண்டிருந்தாளாம். இத்தகை நகரில் கோயில் கொண்டுள்ளவரே பாகம்பிரியாவம்மை.

ஈசுவரர் பெயர்:-"சங்கரரா மீசுர ரிசையைப் பழிச்சுதும்.” (539) “முன்னதாய் நின்ற சிவ சங்கரேசுரர் தழைய” (633) என்பதால் ஈசுவரர் பெயர் சங்கரேசுவரர் என்று தெரிகிறது.

தலவிநாயகர்: -"கருணைசெய் சுந்தர பாண்டியச் சுடரைத் துதிப்பாம்....'' (540), ''சிந்துரச் சுந்தரப் பாண்டியக் களிறோடு ...” (638) என்பதனால் சுந்தரப் பாண்டிப் பிள்ளையார் என்று தெரிகிறது.

ஐயனர் பெயர்:- "தையல் மருவு பச்சைமுகிலையன்...'' என்பதால் பச்சைப் பெருமாள் ஐயனார் என்பது போதருகிறது.

தீர்த்தம்:- “திரைசெயா மகோததித் தீர்த்தமும்” (638) என்பதால் மகோததியே (கடலே) தீர்த்தமென விளங்குகிறது.

முதல் பாட்டில் ''தளவாம்பல்' என்பதைத் தளவு + ஆம்பன் எனப் பிரித்துத் தளவு என்பது முல்லை மலர்போன்ற பற்களையும் ஆம்பல் என்பது அல்லி மலர்போன்ற வாயினையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ''காம்பும் குழையும்" என்பது பிரதி செய்தவர் "கோம் -பும் குழையும்'' என எழுதியிருந்ததனை மோனை, பொருள் ஆகியவற்றிற்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. இதனாலேயே போலும் என உரையில் கூறப்பட்டது. இவ்வாசிரியர் உபய, உப என்பவைகளை உபைய, உபை என்றே ஆண்டுள்ளனர். 2-வது பாட்டில் "முண்டக வேதாமறை" என்றிருக்கலாம்.

தூத்துக்குடி நகரண்மையில் கடல் திரை செயாதென்பது அக -நானூற்றில் “கொடுந்திமிற் பரதவர் வேட்டம்" என்று தொடங்கும் பாட்டில், “வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிடும் பெளவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீழலாம் போல ஒலியவிந்தன்று இவ்வழுங்கலூரே.'' (70) என வருதல் காரணமாயுள்ளது. இதில் பாண்டியருக்குரியதாய்த் திருவணைக் கரையினருகில் முழங்கு மியல்பினவான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுற்றம் என்பது தூத்துக்குடியைக் குறிப்பித்தல் காண்க. 549, 587-ஆம் பாட்டுக்களில் இச்செய்தியைக் காணலாம்.

''வாயிற்குள்ளகப்பட்ட தண்ணீர் விடம் ... மந்திரம் படிக்க” (608) என்ற அடியின் கருத்து ''வல்லரவுங் கேட்கு மந்திரங் களிக்கின்றோயை யடுக்கு...'' (நிங். பட. 59.) என்ற கம்பராமாயணப் பாடலை ஒத்துளது காண்க. நீராடற் பருவத்தில் தாமிரபர்ணியையும் அம் மையையும் சமப்படுத்திக் கூறி நீர் விளையாடுக என்பது புதிய அம்சம். 536- ஆம் பாட்டில் “சித்தம் பலத்திலெதிர் வாதாடி'' என்பதும் “போராடும் விழியாட வரனாட வாதாடி....'' 637- என்பதும் ஒத்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் "ஏன் கருடா சுகமா'' ''சிவனே யெனக்கிடந்த" என்ற வழக்குகளைத் தக்கவா றமைத்துள்ளார்.

"தத்துந் தாங்க முழங்காவுன்'' என்ற பாட்டில் முத்தெடுக்கும் பல கருவிகளும், தரம்பிரிக்கும் பல கருவிகளும் சரிவர அறியச் சாத்தியப் படாததால் குறிப்புரையில் விளக்க முடியவில்லை. 628-ஆம் பாட்டில் "நடுவுயர் முதுகொரு கமடமென திகழ் அமடம்" என வருவது யாதெனக் காணவியலவில்லை. இது கர்ப்பங்கொண்ட சங்குகளா யிருக்கலா மென்பது தஞ்சைவாணன் கோவை 104-ஆம் பாட்டாலறியலாம். பிரதி செய்தவர் சரிவரக் கவனியாததால் நேர்ந்த பிழை இது.

தூத்துக்குடி பாண்டிய நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் துறைமுக நகரம். இவ்விடத்தில் அரசியலாரால் முத்துக்கள் இப்போதும் எடுக்கப்படுகின்றன. இதன் பழைய பெயர் திருமந்திரநகர் என்பதாம். இந்நகர் வளமிக்க தென்பதை 567, 568, 584-ஆம் பாட்டுக்களில் கூறி ( எழுபனையோடலை குய்வரு மில்லாத தன்றி மற்றில்லாத தொன்றில்லை யெல்லாச் சிறப்பு முண்டு,'' என்று - முடிக்கிறார்.

இந்நூலின் ஆசிரியர் யாவர் என விளங்காவிடினும் சிற்சில குறிப்புக்கள் கிடைக்கின்றன. 573-ஆம் பாடலினின்று அம்மைக்கு ஆசிரியர் தொண்டரென்றும், பேபரக்குடியென்பது அவர் குடிப்பெயர் என்றும், தலைமுறை தலைமுறையாக அம்மை தன் திருமுன் வித்துவானா யிருக்க வேண்டுமென்று கூறியதாயும் புலவரைத் தன் கோயிலிலேயே அம்மை குடியேற்றுவித்தார் எனவும், 594-ஆம் பாடலினின்று ஆசிரியர்க்கு மதுரமான வாக்கைப் பாட அம்மை அருள் புரிந்தார் என்றும், அவரது பாமாலையை அம்மை சூடின நன்மையால் புத்திர, பெளத்திர பாக்கியங்கள் தர வேண்டுமென்று ஆசிரியர் கேட்டதாகவும் தெரிகிறது. இப்பிள்ளைத் தமிழ் அக்காலத்தில் மிகவும் உயர்ந்த நிலை பெற்று விளங்கியது என்பது "... உபையர்த்தமும் தோன்றநின்ற இக்கவி பொருட்கிடம் பெற்றதால் ...'' (633) என்பதாலறியலாம். ஆசிரியர் தன்னை அம்மை அருளுடன் ஆட்கொண்டனர் என்பதனை, "கண்ணர் துணை யென்னை யருளன்னை ...'' (631) "எணான்கறம் வளர்த்தெனை வளர்த்த." (632) “சொந்தமா யெனையாள் கிருபாலியே...” (577) "எனை ஆண்ட ருளுஞ் சக்கரியே ....'' (583) என்ற அடிகளால் உணரலாம். முருகன் மீது காப்பில் நீண்ட பாட்டியற்றியதோடு செங்கீரையிலொரு நீண்ட பாட்டும் 592, 615- பாட்டுக்களில் அவரைப்பற்றியும் கூறியிருப்பதால் முருகன் மீதும் மிக்க ஈடுபாடுடையர் என அறியலாம்.

காப்புப் பருவத்தில், "திருமாலரனே ... கடவுளரே.'', ''அவருள் காப்பின்னாகும்.'' "அவன்றான் ... னென்ப" என்ற பன்னிரு பாட்டியற் சூத்திரங்கள் உள்ளன.

இப்பிள்ளைத்தமிழ் எட்டையாபுரம் மகாராஜா சமஸ்தானத்திற்குரிய ஓலைச் சுவடியினின்று 1924- 25-இல் பிரதி செய்து வைத்த மூவருடக் காடலாக்கு 590 (b) எண்ணுள்ள காகிதப் பிரதியினின்று வெளியிடப்படுகிறது. அக்காலத்தில் சரிபார்த்தலில்லாததால் சில அடிகள் விடுபட்டும் சில பொருள் புரிந்துகொள்ளாமல் எழுதியுமுள்ளதால் தவறுகள் இவ்வச்சுப் பிரதியிலும் நேர்ந்திருக்கலாம். படிப்பவர்கள் திருத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

திருமந்திர நகரமாகிய தூத்துக்குடி
பாகம்பிரியாவம்மைப் பிள்ளைத்தமிழ்
காப்புப் பருவம்

வேறு
திருமால்
538. கார்கொண் டகன்று கன்னங்கறே
      ரென்னத் திரண்டு சுருண்டகுழற்
காடுந் திலக பங்கயமுங்
      காம்புங் குழையுங் கழுநீரும்
பார்கொண் டலராக் குமிழ்தளவாம்
      பலும்பூத் துளம்பூத் தலர்ந்துபச்சைப்
பசேலென் றிருந்த கற்பகப்பூம்
      பாகம் பிரியா டனைக்காக்க
பேர்கொண் டிருந்த வகலிகைகல்
      லுருவாக் குபைய தாமரையும்
பிரமன் செனித்த தாமரையும்
      பிள்ளைப் பிராட்டி தாமரையுஞ்
சீர்கொண் டிருந்த நயனமெனச்
      செக்கச் சிவந்த தாமரையுஞ்
செங்கைப் பருவத் தாமரையுஞ்
      செழித்த சொரூபக் கரும்புயலே. (1)

வேறு
சங்கரராமீசுவரர்
539. மந்திரவாழ் வானவர் வடதிக் கிருப்பவர்
      வங்கணரா லாசனக் கனகச் சதுர்ப்புய
மந்தரரே றேறிய பவனிச் சிறப்பினர்
      மன்றினில்வா தாடிய சிரமப் பதத்தினர்
சந்திரகலா மாலையர் கயிலைப் பொருப்பினர்
      தண்கெழுபா கீரதி தலைவைத் திருப்பவர்
சங்கொருகா தாடிட விசையைத் தரிப்பவர்
      சங்கரரா மீசுரரிசையைப் பழிச்சுதும்
முந்தியவே தாகமக் கவுணியக் குலப்பயிர்
      முன்பதினா றாயிர மதுரைத் திருக்கடை
முண்டகவே காமறை யெனவுச் சரித்து
      முரண்கழுமே லேறிட வமணைச் செயித்தருள்
பைந்தமிழா காரசண் முகனுக் கிதத்தொடு
      பைந்தனமீ தூறிய வமுதைப் புகட்டிய
பைங்கொடியாள் பாகமி னிசையைப் படிப்படி
      பண்புடனே பாடுமிப் பனுவற் றழைக்கவே. (2)

வேறு
சுந்தரபாண்டியப் பிள்ளையார்
540. கொந்தவிழ் பூந்தொடைப் பரனைக் கவளக்
      கொழுங்கனி தாங்குகைத் தலனைத் திகழொரு
கொம்பினை யூன்றுகைத் தலனைக் கயிறு
      கொடும்புரி பூண்டகைத் தலனைப் பருமித்
தொந்தியு மைந்துகைத் தலனைப் பிரபை
      தொகங்குச மேந்துகைத் தலனைக் கவுண்மத
தும்பி முகாம்புயத் தரசைக் கருணைசெய்
      சுந்தர பாண்டியச் சுடரைத் துதிப்பாம்
மந்திர பூந்திருப் பதியிற் சரவண
      மைந்தனை யீன்றிடப் பருவக் குளிர்பனி
மஞ்சமர் காஞ்சனத் திமையக் கிரிதரு
      மங்கல நாண்கழுத் தமுதக் களிமயில்
சந்திர காந்தியிற் கதிர்விட் டிளவெயில்
      தங்கொளி கானல்போற் பரசுக் கரதல
சங்கணி பூங்குழை கருணை பொருந்திய
      சங்கரர் தோய்ந்தவுத் தமியைப் புகழவே. (3)

முருகன்
541. மகரமெறி திரைகதறு கடலிடை கவடுபடு
      சினைசெல்ல நட்சத்திர
மலர்வதென மலர்மலரு மலர்தலை கவிழுமா
      மரமல்ல நிர்ப்பாக்கிய
மரமிதென வரிபிரமர் முதலியவர் பிரமைகொள
      வரும்வல்ல மைச்சூர்க்குல
மறுகமக பதிகிருபை பெறவிமை யவர்க
      ணிலைபெற வெள்ளிவெற்பாற்

பகரகுக ரறுகரமு முடையபொரு ளெனமகுட
      கணபணகல் லுதிர்த்தாக்கிரம்
கொடியவுர கமுமுடல் நெறுநெறு நெறென
      வதிரதிசை செல்லவற்றாக்
கடல்குமுற மடமடென நடனமிடு மயிலின்வரு
      குறவள்ளி கற்பாற்புணர்
குமரகுரு பரமுருக சரவணவு தையவறு
      முகச்செல்வ னைப்போற்றுதும்

நிகரில்பரு மிதசிகர கொடுமுடி ககனவெளி
      முகடுள் ளுறத்தாக்கிட
நெடியவெதி ரகில்பிரம தருமகிழ சுரர்கடரு
      மலர்சில்லெ னப்பூத்தொளி
நிலவுமட வியுளதிக பரகதி யணையகுறு
      முனிசெய்த வத்தாச்சிரம
நிறையுமுயர் தவமுனிவர் செயசெய செயென
      வுலவியநல் (ல) சற்பாத்திர

தகரநற வுமிழ்பொதிய மலைகுமு குமெனுமரு
      விகள்கல் லெனப்பாற்கடல்
சரிவதென வருபொருநை வரநதி பருகிவளை
      யுமிழ்வெள்ளை முத்தாய்த்திகழ்
தரளமணி யொடுசகல வளமுமுள சகரபிர
      புடர்கல்லு மைக்கார்க்கட
றவழுமலை யொலிதவிரு முயர்துறை நகரில்வரு
      மலைவல்லி யைக்காக்கவே. (4)

வேறு
திருமகள்
542. வளைவாய்ப் புளிமேல் விரும்பாது
      மண்பிட் டருந்தா திளமுலையின்
மணிக்கண் கறுத்தி டாதுதிரு
      மழலைச் செவ்வாய் வெளிறாது
திளையாச் சூற்கொள் ளாதுபசே
      லென்ற நரம்பெ ழாதுதவஞ்
செய்து திருப்பாற் கடல்பயந்த
      செந்தா மரைப்பெண் சரண்பணிவாம்
அளைவாய் மடுத்த கள்வாயு
      மசோதை தயிர்மத் தெடுத்தடிப்ப
வாவா வென்று குழைபிடித்தே
      யங்காந் தழுத முகிற்கிளைய
பிளவாக் கிடந்துட் குழைந்தெழுவெண்
      பிள்ளை மதிவாணுதற்சிறுபெண்
பிள்ளை பாகம் பிரியாண்மேற்
      பிள்ளைக் கவிதை தழைகவே. (5)

கலைமகள்
543. குடிலி னுறியைப் பிடித்துரலிற்
      குந்திக் கால்வைத் தெக்கிமுகங்
கோட்டிக் கடைக்கண் போட்டிடையர்
      கும்பத் ததியைக் குடித்துவிடும்
நெடுநீ லனுக்கோ ரிளையநெடு
      நீலி பாகம் பிரியாத
நிமலி மோகம் பிரியாது
      நிலைக்கு நிறுத்துந் தமிழ்காக்க
முடிவின் முனையின் முனைக்கழுத்தின்
      முடித்த பிறைக்கூ னிருகோட்டின்
முனையுஞ் சூல முதற்றேவ
      ரெனத்தான் கவின் முடிகவிக்கும்
படிக நிறத்தி படிகவடம்
      படிக படாம்பூம் பைந்தனத்தி
படிக வருண பதுமகெற்ப
      பரிபூ ரணத்தி பாரதியே. (6)

சத்தமாதர்கள்
544. தழையுங் கடுக்கைப் பூவும்பிஞ்சு
      மதியுங் காயுஞ் சர்ப்பமும்வெண்
டரங்க மெறிகங் கையங்கனியுந்
      தரித்த சடிலப் பெம்மான்பாற்
பழையபுரத்தி பார்பாத்தி
      பண்ணம் பணத்தி யெண்குணத்தி
பாகம் பிரியாப் பராசத்தி
      பனுவற் றழைக்கும் படிகாக்க
மழவஞ் சிறையோ திமம்விடைமா
      யூரமுவண மதயானை
மகிட மலகை மறைவில்வேல்
      வண்சக் கரம்வச் சிரமேர்சூல்
குழையந் தணியே யுருத்திரையே
      குமரி நாரா யணியேசற்
குணவிந் திரையே வராகியே
      குலசா முண்டி தேவியே. (7)

ஆதித்த சந்திரர்
545. கம்ப மடுகிம் புரிக்கோட்டுக்
      கலுழிப் பெருக்காக் கவுட்சுவட்டிற்
கரைக்குக் கரைக்குக் கரைக்குமதங்
      கடைக்கா லூழிப் பெருக்கெடுத்துப்
பம்பு களிற்றுத் தலைமகனைப்
      பயந்து சுரந்து முலைகொடுத்த
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியா டனைக்காக்க
வெம்பி ரானுக் கிடக்கண்ணே
      யிடக்கண் ணினுக்கு வலக்கண்ணே
யெழிற்செங் கதிரே வெண்கதிரே
      யிரவுக் கரசே பகற்கரசே
மொய்ம்பு படைத்த முன்னாளே
      முன்னாளினுக்குப் பின்னாளே
முளரிக் கதவ மடைப்பவனே
      முளரிக் கதவந் திறப்பவனே. (8)

பச்சைப் பெருமாளையனார்
546. வளையுஞ் சந்திர கலைதரித்து
      மலைகார் முகத்துக் காயெடுத்து
வளர்ந்த நாகா லயத்திருந்த
      மகத்தர்ங் கடவு ளிருவருக்குந்
தளைய சைத்திய சன்னதியன்
      றவபூ ரணைபுட் கலையான
தையன் மருவு பச்சைமுகி
      லையன் சரணந் துதிசெய்வாம்
பனக சடிலர் பனகபவுத்
      திரத்தர் பனகக் கதிர்க்குழையர்
பனக கரகங் கணர்பனகக்
      கழலர் பனக சருவாங்கர்
சனக சனகா தியர்க்குமறை
      யறியத் திருவாய் மலர்ந்தசிவ
னாகம் பிரியா ளருட்பாகம்
      பிரியாள் கவிதை தழைகவே. (9)

வயிரவர்
547. கைம்மாத் தருமா லுக்கிளையாள்
      கைம்மாத் தருமா நச்சினவக்
கடுக்கந் தரத்தர் நச்சினவக்
      கடுக்கந் தரத்த ரிடத்திருந்த
வம்மா வம்மா வம்மாவென்
      றருமா மறைமா தவம்புரியு
மரியாள் பாகம் பிரியாண்மே
      லருமைப் பிள்ளைத் தமிழ்தழையத்
தம்மா கிருதி யறியாத
      சகள வடிவாய்த் திகம்பரராய்த்
தண்டா யுதத்த ராயினிதா
      பதத்த ராணீத் தராயப்பெரிது
மிம்மா நிலத்தி லிடுபிச்சை
      யேந்து கபால ராயெகின
மேறி யெகின மேறியெனத்
      திரிவாய் கிருபை புரிவாயே. (10)

வேறு
முப்பத்து மூவர்
548. சோதி விட்டுக் குலாவு
      சூரிய வட்டப் பிரகாசத்
தோகை முத்துக் குமார
      சுவாமி யப்பற்கு மேனியொர்
பாதி பச்சைச் சரீர
      பாக மிச்சித்த தூய
பரவி கற்பத்தி னூறு
      பாட விரட்சிக்க வேண்டுமே
யாதி வத்துக்க ளான
      யார ணத்துக்கு மேலை
யாதி பத்தியத்த ராய
      வாக மத்துச் சொரூப(மார்)
சீத சொர்க்கத் துளார்கள்
      தேடு முற்பத்தி யாய
சீவ ரத்னப் பிரகாச
      தேவர் முப்பத்து மூவரே. (11)
________________________________

செங்கீரைப் பருவம்

549. கருமந்தி யுங்கருங் கவியும்வெள் ளைப்பெருங்
      கவியுங் கருங்கரடியுங்
கடல் கொண் டெனவகண்ட படை கொண்டு
      காகுத்த ராகுத்தனா (நடை கொண்ட
ரொருமந்திர மனுமன்றன் முனியம்ப மண்குயவ
      ரொப்பமிடு மொலியொடும்பச்
சோலையொலி யுந்திரையின் வேலையொலி யும்பெரி
      தொலிப்பவை மறைப்பவதனால்
வருமந்த முகில்செங்கை யமையென் றமைப்பமண்
      மனையோசை பனையோசையு
மாறிட்ட வன்றைக்கு மின்றைக்கு மாருதியும்
      வாரிதியும் வாய்புதைக்குந்
திருமந்திர நகர்வந்த வருமந்த செல்வியே
      செங்கீரை யாடியருளே
தேகநீணாகபூ ணாகனார் பாகமே
      செங்கீரை யாடியருளே. (1)

550. இமையகிரி யுதவவரு வரிசைமர கதவல்லி
      யென்னுடைய விதையவல்லி
யிமையவர் வணங்கரிய வுலகினர் வணங்கரிய
      வீசுபரி பரமேசுபரி
யமையமை பசுந்தோளி லணியரவ கங்கணி
      யமிர்தகிருபை பேரறங்கணி
யருணைமங் கலைகமலை யந்தரி நிரந்தரிசி
      வாகம் நிறைந்தசைவ
சமையநெறி சமையவரு பீதாம் பரீசதி
      தருந்தாண்ட வாடம்பரி
சாந்தருக ணீகுஞ்ச ரந்தருபெண் ணீர்மையஞ்
      சக்கரி யஞ்சக்கரி
சிமையமுடி நிழனிலவ திருமந்திர முறைசெல்வி
      செங்கீரை யாடியருளே
தேகநீ ணாகபூ ணாகனார் பாகமே
      செங்கீரை யாடியருளே. (2)

வேறு
551. இருமந் தரகிரி நிகர்பைந் தனம
      தசைந்தா லந்தோசீ
ரிடையிங் கிறுமிறு மிறுமென் றரிபெய்
      சிலம்போர் பண்பாட
மருவுங் குழைவிழி யுருவஞ் சனவிழி
      யிரண்டாம் வண்டாட
மலரங் கனையுன தடிகும் பிடவுண்
      மகிழ்ந்தே வந்தார்பார்
தருமந் தழையவெவ் வுயிருந் தழைய
      விரிந்தா ரும்பூமி
சகளங் களுமுள் வளமுந் தழைய
      வயஞ்சே ருந்தேவ
திருமந் திரநகர் வருமந் தரியுமை
      செங்கோ செங்கீரை
சிவசங்கரர் புணர் சிவசங்கரிபரை
      செங்கோ செங்கீரை (3)

552. உலகந் தழையுமெவ் வுயிருந் திரிபுரை
      யிங்கோ வங்கோநீ
யுலகொன் றிடவுயர் பதினெண் கணமுத
      லுன்கோ லங்காண
விலகுஞ் சதுர்மறை யவனுங் குலிசனு
      மண்டா னுண்டானு
மெவருஞ் சயசய வெனவுன் சந்நிதி
      நிறைந்தே நின்றார்பா
ரலகம் பெனவிரு புறமும் புரள
      வசைந்தா டுந்தோடு
மடரும் படைவிழி யுருவங் குமுத
      நறும்பூ மின்போலார்
திலகந் தருமுக மலர்மந் திரவுமை
      செங்கோ செங்கீரை
சிவசங்கரர் புணர் சிவசங் கரிபரை
      செங்கோ செங்கீரை. (4)

வேறு
553. சாத்த சமுத்திர மொத்து மிகுத்த
      தடாகங் கணபண சேடன் சிகைகீ ழுஞ்சூரியன் போலே
சக்கர வட்ட மெனக்கதிர் விட்டொளி
      தாவுஞ் சரவண வாசம் பெறுதே வென்றீ சன்றானே
முத்தி கொடுக்க மறுக்க முளைத்திடு
      முடென்றே மின்மக வானும் பருளா ருவந்தே கொண்டாட
முக்கண ருக்கு மறைப்பிர ணவப்பொருண்
      மோசங் கெடவும் தேசஞ் செய்துபூ வின்பால் வந்தாய்நீ
அர்த்த முரைத்திலை முட்ட னெனப்பிர
      மாவின் றிருமுடி மேலஞ் சிடவோ ரஞ்சா றெஞ்சாதே
யாத்த திருக்கை வழக்க மளித்துல
      காதி யந்தமும் வலமா கும்பவுரி கொண்டா டுந்தேவ
சித்திர மயிற்பரி வைத்த பரப்பிரம
தீபந் தனையருள் கூரங் கனையே       செங்கோ செங்கீரை
செப்பரு முத்தொடு தத்து சிறுத்திரை
சேர்மந் திரமுறை பாகம் பிரியாள்       செங்கோ செங்கீரை. (5)

வேறு
554. வயன்மண்ட லத்தோடு வருங்கரிய மேதிதாழ்
      மடுவூ டுழக்கவெடிபோய்
வாளைகமு கம்பாளை யம்பூ விரித்திரண்
      மழைத்துவலை யிற்சிதறமைப்
புயன்மண்ட லத்தூடு வெள்ளிதுள் ளிப்புகுவ
      போலக்கிழித்து மேற்போய்ப்
பொழியுமழை வெள்ளப் பெருக்கிற் செருக்கிப்
      புரண்டெழு கயற்பிரகாசங்
கயன்மண் டலத்தினுக் கயன்மண்ட லத்திலொரு
      கயன் மண்ட லந்தானெனக்
கருந்துகில் பொதிந்திட்ட மின்மினி யெனத்திகழ்
      கடற்றிரை முகட்டிலுதையும்
செயமண்ட லாதித்த னிகர்மந்திர முறைசெல்வி
      செங்கீரை யாடியருளே
தெரியாத சிவனிடம் பிரியாத பாகமே
      செங்கீரை யாடியருளே. (6)

555. எங்கணு நிறைந்தருண விளவெயி லெறிக்குமிமை
      யாசல மனைக்கிழத்தி
யிச்சித் தெடுத்துமுகம் வைத்துச்சி மோந்தருமை
      யிட்டுமடி மீதிருத்திச்
சங்கையொடு பட்டாடை மடிநனைத் திடமஞ்
      சனம்பொலிந் தொளிர்குங்குமச்
சாந்தந் திமிர்ந்துட னலங்கிட்டு நெற்றியிற்
      சாத்துவெண் ணீறுதொட்டிட்
டங்கயற் கண்ணுக்கு மையிட்டு மட்டில்சரு
      வாங்கபூ டணமுமிட்டோ
ரணிநிலக் காப்புமிட் டணிகளப பைந்தனத்
      தமுதூட்டி யன்புபூட்டிச்
செங்கையந் தொட்டில்வைத் தாட்டுமொரு பெண்பிள்ளை
      செங்கீரை யாடியருளே
தெரியாத சிவனிடம் பிரியாத பாகமே
      செங்கீரை யாடியருளே. (7)

556. அத்தம் பலத்திரி புரத்தொன்றி லுறைவாண
      னைமுகக் குடமுழாவு
மச்சுத னிடக்கையு நாளவட் டத்தனலர்
      தாளவட் டமுமிரட்டச்
சத்தம் பலத்திக் கொலிப்பத் தடக்கையாழ்
      தும்புருவும் நாரதனுமோர்
சத்தசுர மொத்திசைப் பத்திரி புராந்தகத்
      தாண்டவா டம்பரனொடும்
பத்தம் பலத்தினிற் படுபாதி யாமம்
      பலத்தினின் மிகுத்தபூசா
பலத்தைப் படைத்துநால் வேதத்தி னுக்குமுன்
      னம்பலம் பொன்னம்பலச்
சித்தம் பலத்திலெதிர் வாதாடி விளையாடி
      செங்கீரை யாடியருளே
தெரியாத சிவனிடம் பிரியாத பாகமே
      செங்கீரை யாடியருளே. (8)

557. பாதமெல் லனிச்சமல ராடவதி சீதளப்
      பச்சிளங் கதலியாடப்
பச்சிள நரம்பினா லிலையாட வளைதங்கு
      பச்சையில் மூங்கிலாடத்
தாதளவு பரிமளக் காந்தோ டசைந்துமாந்
      தளிராட வணிபூடணத்
தாலியைம் படைதழுவு சங்கர சமந்தமணி
      நாகிளங் கமுகமாடக்
கோதிலா தவருமித ழிலவாட வெண்டளவு
      குமுதமலர் கூடவாடக்
குமிழாட வள்ளையங் கொடியாட நீடுகொப்
      புங்குழையு மாடமீறு
சீதள செழுந்திலக செங்கமல மாடநீ
      செங்கீரை யாடியருளே
தெரியாத சிவனிடம் பிரியாத பாகமே
      செங்கீரை யாடியருளே. (9)

558. கயத்தம்ப மாமகர சாகரப் பிரளயங்
      கரைத்தும் பத்ததும்பிக்
கம்பித் தெழும்பித் தரங்கமா டக்கண
      பணாடவிப் பாம்பாடநின்
மயத்தம்ப மூதண்ட கோளமா டப்புவன
      வட்டமா டத்தரணிசூழ்
வட்டப் பொருப்பாட மற்றைப் பொருப்பாட
      மண்டலாதி யந்தமாடப்
புயத்தம்ப மாசுணப் பூடணமு மாடப்
      புராந்தகன் கூடியாடப்
பூங்கயிலை யாடவிமை யாசலமு மாடநின்
      பூச்சக்கர வாளமாடச்
செயத்தம்ப மேருகிரி யாடவிளை யாடுநீ
      செங்கீரை யாடியருளே
தெரியாத சிவனிடம் பிரியாத பாகமே
      செங்கீரை யாடியருளே. (10)
________________________

தாலப்பருவம்

559. முந்தை ரகுபதி யடிபர வியமணி
      முடிவருணன் வந்தான்
மூவுல குஞ்செலும் வாயுவும் வந்தான்
      முக்கணர் துணைவந்தா
ரிந்திரன் வந்தா னங்கியும் வந்தான்
      யமனிரு தியும் வந்தா
னெழுதிக் கிறைவரு மொருதிக் கிலையென்
      றிங்கே வந்தார்கா
ணந்தணி யுங்குழை நம்பர் சடைப்பிறை
      நாப்பண் மணிப்படமா
நாகந் தலைவைத் தெனவொரு கொம்பி
      னடுக்கை தடக்கையிடுந்
தந்தி பயந்தருண் மந்திர வந்தரி
      தாலோ தாலேலோ
சங்கர சம்பொரு பங்கம ரம்பிகை
      தாலோ தாலேலோ. (1)

560. பைந்தார் தங்கிய சொருகமை குழலி
      பைஞ்சிறை மயினிழலி
பதிவிரத கருணி மரகத வருணி
      பானல மனையகணி
கொந்தார் வாகைச் சூலினி மாலினி
      கோமளை யாமளைசற்
குணமிகு ரஞ்சகி யஞ்சுகி யென்றே
      கும்பிடு வார்கண்முனே
வந்தா னந்தக் காட்சி கொடுத்துநல்
      வாகன மாதியுமா
மணியணி பூடண வாதியு நாடொறும்
      வர்த்திக் கும்பவுசுஞ்
சந்தா னந்தா னுந்தரு மம்பிகை
      தாலோ தாலேலோ
சங்கர சம்பொரு பங்கம ரம்பிகை
      தாலோ தாலேலோ. (2)

561. கந்தனை யுதவுங் கற்பக மேகற்
      பகமே பொற்பகமே
கனியே யினிய கரும்பே கொம்பே
      கருணா லயமயமே
பந்தன வெண்பாற் கடலமு தேமுப்
      பாலே வடிதேனே
பச்சிள மயிலே பச்சைக் கொடியே
      பச்சை யிளம்பிடியே
வந்தனை கூறுங் கோமே தகமே
      மணிவயி டூரியமே
மரகத மேநல் வலம்புரி முத்தே
      மாணிக் கக்கொத்தே
சந்தன மேபைந் தனமே யனமே
      தாலோ தாலேலோ
சங்கர சம்பொரு பங்கம ரம்பிகை
      தாலோ தாலேலோ. (3)

வேறு
562. அஞ்சு கரப்பிளை யாறுதலைப்பிளை
      யாணே பேறாமே
யந்தவ யிற்றையோர் போது நிரப்பிடி
      லால்போல் வாடாதேர்
பஞ்ச முனக்கென் பார முலைக்குட
      மோபா லாறாமே
பண்டிப சித்தழு தாலெனை வெற்பிறை
      பாரார் பாராரே
கஞ்ச மலர்க்கண னாலு முகத்தனும்
      காவா ணாடானோர்
கண்கள் களித்திட வேதரி சித்தவர்
      காறா னேறாநீ
தஞ்ச மெனச்சொலி மேனை வளர்த்தவ
      டாலோ தாலேலோ
சங்கரர் பக்கலில் வாழ்பசலைப்பிளை
      தாலோ தாலேலோ. (4)

563. மண்டமர் முப்புர முன்பு சிரித்திட
      மாறா மாறேவேள்
வந்த சிறப்பெதிர் கண்பட வெற்றுரு
      வாமா றேகூர்வோர்
கண்டு சிரித்திடி னுஞ்சரீ ரத்தளிர்
      கார்போ லோயாமே
கண்பட மற்றவர் சிந்தை நினைத்தென
      வேதோ மாலோக
முண்டு படிப்படி கொஞ்சி லுனக்கோர்க
      ணேறோ நாவேறோ
வொன்று மிலைத்தின மின்சொல் படிப்பினை
      பேசாய் பேசாயோ
தண்டரளத்திரு மந்த்ர நகர்க்கொரு
      தாலோ தாலேலோ
சங்கரர் பக்க லிருந்த கிளிப்பிளை
      தாலோ தாலேலோ. (5)

564. உன்கை சுவைப்பது கொங்கை சுரப்புறு
      பால்போ லூறாதோ
உண்டி சுருக்கிய பண்டி பசித்தழின்
      மேனா தேவீயர்
மின்கவ லைப்படு மென்பது சற்றுமெ
      ணாதே போவானேன்
விம்ப விதழ்க்கனி கம்பித மிட்டெதிர்
      பேசாய் பேசாயோ
முன்கம லத்தனை யுந்தி படைத்த
      முனோனா லேகாணா
முண்டக பொற்பத முன்பதம் பொற்பென
      மோகா திநால்வே
தன்கை யெடுத்தெதிர் கும்பிடு தற்பரை
      தாலோ தாலேலோ
சங்கரர் பக்க லிருந்த கிளிப்பிளை
      தாலோ தாலேலோ. (6)

வேறு
565. பாரம் புயங்கச் சதுர்ப்புயனும்
      பவள நயனப் பங்கயனும்
பரத்திற் கரசத் தெண்கயனும்
      பருமத் தடக்கை வெண்கயனு
மாரும் பவளத் திகழ்க்கனிவாய்
      அரசே திருவாய் மலர்வாயென்
றருத்தி யிருத்தி யுரைத்தனர்நீ
      யஞ்சொற் குதலை மொழியாயோ
வூரும் பனிரண் டருக்கருமற்
      றுளவச் சுவினி யிருவரும்பத்
தொருவ ருருத்திர கடவுளரு
      முதிக்கு மட்ட வசுக்களொடுந்
தேருந் திருமந் திரநகரச்
      செல்வி தாலோ தாலேலோ
சிவனார் பாகம் பிரியாத
      செல்வி தாலோ தாலேலோ. (7)

566. காதுக் கினிதுன் மழலையஞ்சொற்
      கண்ணுக் கினிதுன் காட்சியின்பங்
கனிவாய்க் கினிதாய்க் கவுணெரித்துக்
      கன்னந் தனைமுத் துவதின்பம்
வேதச் சொருபி யுன்னைமடி
      மேல்வைத் திருப்ப துடற்கின்ப
மெச்சி யுனதுச் சியைமோந்து
      வியத்த னாசிக் கினிதின்பம்
பேதைக் கினியைம் பொறிக்கின்பம்
      பிள்ளைக் கனியன் றியுமுண்டோ
பெரிய விமயக் கிரியருள்பெண்
      பிள்ளாய் குதலை விள்ளாயோ
சீதக் காயம் பூவருணச்
      செல்வி தாலோ தாலேலோ
சிவனார் பாகம் பிரியாத
      செல்வி தாலோ தாலேலோ. (8)

வேறு
567. செங்கா வித்தட மும்கம லத்தட
      முங்குமு தத்தடமுஞ்
சேலூ டுஞ்சிறு காலூ டுந்திகழ்
      தேரார் தெருவூடும்
பொங்கா டரவ நிதம்ப நுளைச்சியர்
      புகுசிறு குடிலூடும்
புட்டிலி னூடும் கட்டிலி னூடும்
      புளினத் திடரூடும்
கங்கூ டுங்கட லூடுங் கப்பலி
      னூடுந் திரையூடுங்
கழிசுழி யூடும் கன்னிகை மார்கா
      லூடுங் கரமூடுஞ்
சங்கூ டாடும் மந்திர நகராய்
      தாலோ தாலேலோ
சங்கர சம்பொரு பங்கம ரம்பிகை
      தாலோ தாலேலோ.       (9)

568. தெண்டிரை கொஞ்சு தடங்கரை தனிலுந்
      தேசிகர் தங்கைமடிச்
சீலையி லுங்கா சுப்பை யிலுங்தர்ப்
      பையிலுங் குப்பையிலு
மண்டப மாளிகை யிலுமனை வளைமதி
      றனிலும் வழிதனிலுந்
சிறுகுழி தனிலும் நறும்புன றனிலும்
      மணறரு கிணறினிலும்
பண்டக சாலையி னும்பர மங்கையர்
      கொங்கை யினுங்கையினும்
பணியணி பவளத் திடையினும் வாசற்
      படியினும் முடியினும்
வெண் டண்டரளந்திகழ் மந்திர நகராய்
      தாலோ தாலேலோ
சங்கர சம்பொரு பங்கம ரம்பிகை
      தாலோ தாலேலோ.       (10)
------------------------

சப்பாணிப் பருவம்

569. எத்திசை வரைக்குமிறை பெற்றமகு டக்குடுமி
      யிமையா சலக்குரிசில்தம்
இதய கமலங்களி சிறப்பவுங் கற்புடை
      யிலக்கண விளக்கமான
சித்திர நிகர்த்தசொரு பப்பருவ விற்புருவ
      திலகமதி முகமேனையுந்
திருமனங் குளிரவுங் கண்குளிர வும்பதும்
      செந்திரு மனங்குளிரவு
முத்திள நகைச்சனகி கர்த்தனமை யச்சொன்ன
      முகூர்த்தநல் விசேடத்தினான்
மூதண்ட கோளமுஞ் சந்திரசூரியருமறை
      மொழியுமொரு நிலைதவறினுந்
தத்திய கடற்றிரை முழக்கா நகர்க்கிறைவி
      சப்பாணி கொட்டியருளே
சங்கரே சுரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (1)

570. இட்டகல நெல்லல்ல முக்குறுணி நெல்லல்ல
      விருநாழி நெற்கொண்டுசிற்
றெறும்புகடை யானைமுத லெண்பத்து நான்குநூ
      றாயிரஞ் சீவனுக்கு
மட்டகல முட்டாது முப்பத் திரண்டறம்
      வளர்த்துமிச் சம்பிடித்து
மாலையிட் டுக்கைப் பிடித்தவென் னையற்கு
      மணவறைப் பந்தலின்கீழ்க்
கட்டுகம் பற்றுமிரு கால்கூப்பி நின்றுமே
      கலைக்கலை யொதுக்கிவெட்கிக்
கடைக்க ணிட்டுத்தலை கவிழ்ந்துட் குழைந்துமுன்
      கைச்சரி சிலம்பப்புதுச்
சட்டுகம் பற்றியமுக திட்டசெங் கைகொடொரு
சப்பாணி கொட்டியருளே
சங்கரே கரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (2)

571. மலையெடுத் துக்குடை யெனக்கவித் துச்சொரிகன்
      மாரியுந் தாங்குபூவை
வண்ணனைக் கமலமலர்க் கண்ணனைப் பெரிதுதம்
      மையனென வளர்தையலார்
சிலைவிடுத் திடுநுதற் றிருமுகத் திலகசிவ
      காமியபி ராமிவாமி
செல்விமலை வல்லிகுல தெய்வமென நல்லவுரை
      செய்திதழி னல்லவில்வ
விலையெடுத் தறுகெடுத் தலரெடுத் தாசித்து
      மிச்சித்து மர்ச்சித்திடா
வெக்காலு முக்கா லுனைக்கா றுதித்தே
      யிருப்போர் தனைப்பூவின்மேற்
றலையெடுத் திடவனுக் கிரகம்வைத் தருள்சத்தி
      சப்பாணி கொட்டியருளே
சங்கரே சுரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (3)

572. அகலமுறு பூச்சக்கர வாளகிரி முழுதுமுனக்
      காலயப் பத்தியுடுவி
னாதியந் தமுமுனது பைந்தனத் தணியுமுத்
      தாரமா லிகைவிளங்கு
பகலவனு மமுதகதி ரவனு முனதுபைய
      பைங்குழை யணிகுதம்பை
பாரவட் டப்பொருப் பத்தனையு முன்கையிற்
      பந்தொடு கழங்கம்மனை
செகதலச் சேடனும் வாசுகியு முன்கையிற்
      சில்லரிப் பணச்சிலம்பெத்
தேசகா லமுமழி விலாவலைத் துவான்பிர
      சித்தியே சிவசத்தியே
சகலகலை வல்லியே யிமையமலை வல்லியே
      சப்பாணி கொட்டியருளே
சங்கரே சுரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (4)

573. கன்னலம் பாகெனப் பாலெனத் தேனெனக்
      கடவுளர் கடைந்தவின்பாற்
கடலிற் பிறந்தநற் றெள்ளமு தென்னவண்
      கவிதைபொழி கவிவாணரிற்
றொன்முறைத் தன்னமை தொண்டனென் றுந்தொண்ட
      ரிற்கொத்தொ டடிமையென்றுந்
தொண்டரிற் கொத்தொடடி மைத்திறத் திற்பெயர்
      சுமந்தநற் குடியிதென்றும்
பின்னமில் லாதநம் பேபரக் குடிதனிற்
      பிள்ளைதலை முறைநமக்குப்
பெற்றிசேர் சந்நிதியில் வித்துவா னென்றுமென்
      பேர்சொல்லி யழைத்துத்திருச்
சன்னதி தனிற்குடி யிருத்திரட் சித்ததாய்
      சப்பாணி கொட்டியருளே
சங்கரே சுரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (5)

வேறு
574. மரகத வருணனு மருமறை வருணனு
      மத்தள கைத்தாளம்
வரன்முறை சுருதியி னொலிசெய விகசித
      பற்ப மலர்த்தேவி
யிருவரு மருவு கின்னர மிசைப்ப
      முருக்க மலர்ப்போலு
மிரதியு மதியொடு பரிதியு மகிழ்வர
      தீர்த்த மிடத்தானே
பரகதி யுனதுசன் னிதியென விமையவர்
      பட்டு விரித்தார்கள்
பதிவிர தம்முள மகளிர்கள் குரவை
      முழக்கின ரிப்போது
குரைகட றிரைதவிர் துறைநக ருறையுமை
      கொட்டுக சப்பாணி
குமரனை யுதவிய தமருக கரதலி
      கொட்டுக சப்பாணி. (6)

575. சருவமு முழுதுஞ் சிவமய மெவையுஞ்
      சத்தி படைத்தாலே
சகலமு நிலையும் பெறுமல தணுவுஞ்
      சற்றசை யப்போமோ
கிருபைசெய் திடிலிங் கறமொடு பொருளின்
      பத்தி ரடப்பாது
கெதியுன தடியென் றுயர்கதி யவருங்
      கெச்சித மிட்டார்கள்
முறைமுறை புகலும் பரதமுன் மொழியுஞ்
      சச்ச புடத்தாள
முதலரு முன்தங் கையிலன வரதஞ்
      செப்புவ ரெப்போதுங்
குறைவரு வளமந் திரநக ருறைமின்
      கொட்டுக சப்பாணி
குழையொரு விழியம் பிகையன வரதங்
      கொட்டுக சப்பாணி. (7)

வேறு
576. வானம்பிரி யாத்தேவ லோகந்தனி லாத்தான
      கற்பகா டவிக்குளரசாய்
வாழிந்திர னார்க்கெழி லானந்தகன் மேற்றான
      வெட்டான திக்கிலுறைவோர்
ஞானம்பிரி யாத்தூய பாதந்தலை மேற்சூடி
      நற்றாயெனச் சுருதியா
னாலங்கமும் வாய்ப்பாட மாய்வந்தன வார்த்தார்கள்
      சற்றேகடைக்க ணருள்பார்
சேனம்பிரி யாச்சூல பேரம்ப லக்கூத்தா
      பரசித்தா வெனக்கருணைமா
றேடும்பொரு ளாய்த்தேவர் பாடும்பொரு ளாய்ப்பார
      வெற்பாலயங் கயிலைவாழ்
தானம் பிரியாத்தேவர் பாகம்பிரி யாத்தேவி
      சப்பாணி கொட்டியருளே
தாய்வந்தது போற்பேதை பால்வந்தரு ளார்த்தார்கை
      சப்பாணி கொட்டியருளே. (8)

வேறு
577. சொந்தமா யெனையாள் கிருபாலியே சூலியே
      தொத்தார மலர்க்குழலியே
துங்கமுறு வாலைமா லினிமனோன் மணியான
      சொற்காதி பத்திமயிலே
சிந்துரா னன்வேத சீலரை வேலரைச்
      சேயென வளித்தவனமே
செங்கையா லறமோ ரெணாலுமென் மேலுமே
      செட்டாய் வளர்த்தவமுதே
கந்தமார் கைலாச வாசமே நேசமே
      கற்பா லயக்கனகமே
கஞ்சநான் முகமாய னாருமே கூறுமே
      கர்த்தரா கப்பிரமமே
சந்திரசே கரநீல கோலமே போலமே
      சப்பாணி கொட்டியருளே
சங்கரே சுரர்வாம பாகமே பாகமே
      சப்பாணி கொட்டியருளே. (9)

வேறு
578. இருசெங்கையு முலாவு கடகஞ் சரிகலீ
      ரெனத்தான் முழக்கமிகவே
யிலகைம்படை யுமார்பு துவளுஞ் சவடியூடு
      ரத்னாதி யிட்டொளிரவே
பொருசெங் கயல்குலாவி வருரெண்டு குழையூடு
      பொற்றோடு மொத்தசையவே
புயமும்பொன் னரிமாலை சிறுகொண்டை யும்விலாச
      கொப்போடு சுட்டிபொரவே
வருசெம்பொன் மலைராச னிதயங்களி கொள்மேனை
      மட்டா மிலக்குமிலதாய்
மகிழ்வும் பெருகநீத னளியும் பெருகநீடு
      வச்சிரா யுதத்தின்முடிதாழ்
தருசங் கரசுவாமி தமணங் கரசுவாமி
      சப்பாணி கொட்டியருளே
தருமந்திர மதான திருமந்திர கல்யாணி
      சப்பாணி கொட்டியருளே. (10)
------------------------------

முத்தப்பருவம்

579. மக்கட் கெளிதாய்ச் சொலற்கரிதாய்
      மகத்தாய் செகத்தாய்க் கபிடேகம்
வைத்த மகுடக் கைலாச
      வரைக்கே கிடைக்கும் அலை(து)வாயப்
பக்கத் திருக்கு நீயெனுமோர்
      பசுங்கொம் பிடத்தி னன்றிமற்றோர்
பசுங்கொம் பிடத்துப் பூம்பிஞ்சாய்ப்
      பசுங்கா யாகித் தூங்காது
செக்கச் சிவந்த விழிக்கருணைத்
      தேனூற் றிருந்து கனிகனிந்து
சிந்தித் திருக்கு மடியர்சிந்தை
      தித்தித் திருக்கும் படிபழுத்த
முக்கட் கனிக்கு மோகனமா
      முத்தே முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே. (1)

580. வெருக்கொண் டுனது குழற்குடைந்து
      வில்லும் பொழியு மம்பினொடும்
விண்மேற் செல்லுங் கொண்மூவின்
      விளைமுத் தமுமுண் டுன்கழுத்தின்
உருக்கொண் டிருக்கப் பயந்துகட
      லொளிக்கும் வளைமுத் துண்டுனதாட்
குடைந்த பதும முத்தமுண்டு
      னுபைய தடந்தோட் கொதுங்கிவனத்
திருக்குங் கிளைக்கு முத்தமுண்டு
      நின்சொற் கிடைந்து வேலியையிட்
டிருக்குங் கழைக்கு முத்தமுண்டு
      ரெங்கெங் கணுமுத் துண்டிதழ்வாய்
முருக்க மலர்க்கு ளிருக்குமுத்த
      முண்டோ முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே. (2)

581. தத்துந் தரங்க முழங்காவுன்
      சன்னிதானச் சமுத்திர முத்தம்
தனக்குத் தானேர் வடிவாணி
      யுண்மைக் காணி சிவப்பாணி
குத்துண் கழுநீ ரிருப்புக்குட்
      கழிப்புக் கழிப்புக் கையேறல்
குறுக லாணிக் குறுகல்வரை
      கழிவு குறுகல் செந்நீர்சப்
பத்தி சமதா யங்கழிவு
      சமதா யம்பாற் சங்குவெள்ளை
பருவண் டியிலே தரம்பிரிப்பர்
      பாரு வதிநின் செங்கனிவாய்
முத்தந் தனக்குத் தரம்பிரிக்க
      முற்றா முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே. (3)

582. நத்து நிலவுச லஞ்சலநாக
      ணவாய் படைத்த வலம்புரிநல்
கியமுத் தினுக்கு விலையுண்டு
      நாகிளம்பூம் பாளை முருக்கவிழ்பூ
கத்தின் மிடற்றி னிடத்தபழுக்
      காய்முத் தினுக்கு விலையுண்டுபூங்
கழைமுத் தினுக்கு விலையுண்டு
      கண்முத் தினுக்கு விலையுண்டோர்
மெத்த முகின்முத் தினுக்குவிலை
      யுண்டு கமல விகசிதப்பூ
விளைமுத் தினுக்கு விலையுண்டு
      விரும்பி யெவரும் விலைமதியா
முத்த முனது செங்கனிவாய்
      முத்தே முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே. (3)

583. மலர்க்கா வோங்கும் வானத்தே
      மறுகூ டொதுங்கும் வானத்தே
மறைபே சுமுத்த ராசியே
      மணல்வீ சுமுத்த ராசியே
நிலைவீ டருகுங் கற்பகமே
      நெறிவீட் டிருக்குங் கற்பகமே
நியமர் பகரு மந்திரமே
      நிலவு நகர மந்திரமே
இலக்கா கியசங் கரன்சகியே
      யெழுதா வேத ரஞ்சகியே
யெனையாண் டருளுஞ் சக்கரியே
      யிமையோர் வணங்குஞ் சக்கரியே
முலைக்கோ மளையே யாமளையே
      முறுவன் முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே. (4)

584. மதிமண் டலநேர் மனைகளெல்லா
      மாடகூட வுப்பரிக்கை
மணலில் விரவிக் கிடப்பதெல்லாம்
      வயங்குங் கதிர்வெண் டரளமணி
யெதிர்சொல் லாவொவ் வொருவர்கள்
      பாக்கிய தேவேந் திரபாக்கியம்
வாழ்ந்தி ருக்கு மகளிரெல்லா
      மருந்த திக்கு நிகர்மகளிர்
கதிர்போல் வழங்குகா சும்வெள்ளிக்
      காசுந் தங்கக் காசுமுற்றங்
கையாற் றெளிக்கு நீருங்கம
      கமெனக் கமழ்பன் னீர்வளமை
முதிர்மந் திரமா நகர்வாழ்வே
      முறுவன் முத்தந் தருகவே
முழுமா மறைதேர் பாகமே
      முத்தே முத்தந் தருகவே (5)

வேறு
585. ததிகுடிக்குந் திருமுகிற்குஞ்
      சதுர்முகற்குங் கருதுமோர்
சதுர்மறைக்குந் தனிமுதற்சங்
      கரரிடத்தன் புடையபார்
பதிதளிர்க்கும் பதிவிரதைப்பெண்
      பணிலமொய்க்குங் கரையிலே
படர்சிறுத்தெண் டிரைகடற்றண்
      பதியின்முத்தென் றுரைசெய்தே
துதிசெயச்சிந் தையைநினைத்துந்
      தொழுமவர்க் கம்புவியிலே
சுகமளித்திங் கனுபவிக்குந்
      துறைகொடுத்துஞ் சரணமே
கெதியெனத்தந் தருடுறைப்பெண்
      கிருபைமுத்தந் தருகவே
கிளிமொழிப்பங் கயமுகப்பைங்
      கெவுரிமுத்தந் தருகவே. (6)

586. தெரியு முத்துஞ் சொரியினத்துந்
      திரியுமுப்பின் கடலிலே
சிகர வெற்பின் றரளநிச்சந்
      தழன்மடுக்குங் குழலிலே
கரிய மைக்கொண் டலில்விளைக்குங்
      ககனமுத்தந் தருகவே
கழையின் முத்தங் கர(ட)டுமுத்தங்
      கமலமுத்தந் தருகவே
பரிமி தத்திண் கரிமருப்பின்
      பரியமுத்தஞ் சரவையே
பவள முத்தெங் குளதிகழ்ச்செம்
      பவளமுத்திங் கருமையே
கிரிய ளிக்குஞ் சிறுதுரைப்பெண்
      கிருபை முத்தந் தருகவே
கிளிமொ ழிப்பங் கயமுகப்பைங்
      கவுரிமுத்தந் தருகவே. (8)

வேறு
587. கழையிலுங் கழையிலுங் கண்பட்ட முத்தைக்
      கடைக்கணிட் டும்பார்க்கிலோங்
கார்வண்ண ரகுபதி கரத்தா,லமைத்தவிக்
      கடலகட் டிப்பிமுத்தும்
விழைவுறோங் குப்பையி லொதுக்குவோங் காலான்
      மிதித்துத் துவைத்துவருவோ
மிதிபட்ட முத்தினைத் தொட்டிட்ட செங்கையும்
      விளக்குவோம் பன்னீரைவிட்
டெழுமுழக் கவுண்மதத் தயிரா வதப்பூ
      ணிருப்பிடு மருப்பின்முத்து
மெத்தனைக் குள்ளே யென்மதிப் போம்பின்னை
      யெந்தமுத் தினைமதிப்போந்
தழைமலர்த் தொடைச்சொரு கணிகுழற் பாகமே
      தவளநகை முத்தமருளே
தாரமலை முத்தர்புணர் தாரமலை முத்தமே
      தவளநகை முத்தமருளே. (9)

588. மேலைத் தவத்தர்க் கிருப்பிட மெனுஞ்சொர்க்க
      வீட்டினிலு முத்தமில்லை
வேழத்தி னுக்குமுனை நீடுமிரு கோடுதொறும்
      வெண்டரள முத்தமில்லைச்
சேலுற் பவித்தமைக் கெற்போ தரத்தெழு
      திரைகடலு முத்தமில்லைச்
செந்நெற் கதிர்தோறுங் கன்னற் கணுத்தோறும்
      தேயத்தின் முத்தமில்லைப்
பாலொத்த செந்தமிழ்ப் பிள்ளைக் கவிக்குளொன்
      பதுநிலமு முத்தமில்லைப்
பானிலா வுமிழ்வெண் மணற்றிடரி னெய்தற்
      பரப்புப் பொருப்பாகுமித்
தாலத்தின் முத்துண்டுன் வாய்முத்து முண்டு
      தவளநகை முத்தமருளே
தாரமலை முத்தர்புணர் தாரமலை முத்தமே
      தவளநகை முத்தமருளே. (10)
-------------------------------------

வருகைப்பருவம்

589. கணிலுங் காணக் கிட்டாவக்
      கரைக்குக் கரைக்குச் செலப்பிரளயக்
கட்டாய்த் தரங்கஞ் சுருட்டியமைக்
      கடலிற் கிடக்குங் கப்பல்பட
கணியம் பிடித்த கம்பாக
      மதனிற் பிணித்து விட்டநங்கூ
ரத்தை மகர மிரையெனவா
      யதக்கி யிழுப்பக் கலந்துரப்போர்
தணியுந் தடத்துட் டடக்கரிதந்
      தடக்கை பிடித்துக் கராமிழுப்பச்
சலித்திட் டழைக்குங் குரலெனவே
      சத்திக் கபயமென் றோலமிடும்
பணிலங் கரைபோய்த் திரியுமந்திர
      பதிமா நிதிமான் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (1)

590. மச்சத் துறையா யிரத்தொரெட்டு
      மாற்றா மேருப் பொருப்பாகி
மற்றைப் பொருப்பு மடங்குமிம
      வான்கைக் கடங்கா மார்படங்காக்
கச்சுக் கடங்காக் கனத்த தனங்
      கனிவாய்க் கடங்கா மற்றொர்முலைக்
காம்பைக் கரத்தா னெருடிபணிக்
      கடைவா யிருபா லொழுக்கியபான்
மிச்சிற் பெருகிச் சயிக்கியமாய்
      மின்னுந் தளிர்ப்பூந் துகினனைப்ப
விளையாட் டயர்ந்து மேனைமடி
      மேல்வீற் றிருந்து முலைகுடிக்கும்
பச்சைக் குழந்தை பருவமந்திர
      பதிமா நிதிமான் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (2)

591. காது தடவும் விழியுங்கம
      கமெனக் கமழுங் குமிழுமிதழ்க்
கவிருந் தவிரா வதனசந்திர
      காந்தி யணங்குன் றிருமேனிச்
சோதி யெழுந்து கொழுந்துவிட்டுத்
      தொடர்ந்து படர்ந்து நடந்துலகைச்
சுற்றும் புணரி முற்றும்வளர்ந்
      தோங்கிப் பரந்த கடன்மடுக்குஞ்
சாதி யெழுமா முகிலுமுகிற்
      றாரை மழைவீ ழகிலமகி
தலமும் பச்சைப் படுத்திவிஷ்ணு
      சருவாங் கமும்கொண் டையர்படுப்
பாதி சரீரத் தினும்படர்ந்த
      பச்சைக் குழந்தாய் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (3)

592. மேகஞ் சுரந்து பரந்தன்ன
      மேனிக் கொடுஞ்சூர்க் குலமிடுக்கண்
விளைக்க வெறிமத் தெறிதயிரின்
      வெருவிக் கயிலைப் பொருப்பினரு
காக நிறைந்தென் னையாவுன்
      னபயம் அபய மெனுமமரர்க்
கிரங்கி யபய வத்தமளித்
      தைம்மு கத்தொ டதோமுகமுந்
தேக மாறு மாய்ப்பிறந்து
      சிறந்து சரவணை யிற்கிடந்த
சிறுவன் றனைச்சென் றெடுத்தொன்றாய்ச்
      சேர்த்து முலைப்பால் கொடுத்துவிடைப்
பாகன் கரத்தி லளித்தமந்திரப்
      பதிமா நிதிமான் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (4)

593. வாயிற் புவன வட்டமிட்டு
      மடுத்தும் வயிறு நிறையாமல்
வைத்த பாலுந் தயிருநெய்யு
      மருட்டுந் திருட்டுக் குணம்படைத்துக்
கோயிற் சிறப்பென் றாயர்சிறு
      குடிலிற் சிறந்தோங் கருச்சுனத்துக்
கூடு தவழ்ந்து விழிகடொறுங்
      குடிகொண் டிருந்தோ ரடிச்சம்பிர
தாயத் தொடுபூ வளந்துநின்று
      தமிழ்ப்பின் நடந்து மதகரிநேர்ந்
தழைக்கச் சக்கர மெடுத்தோடித்
      தசத்தி னூறு முடிபடைத்த
பாயிற் சிவனே யெனக்கிடந்த
      பரனுக் கிளையாள் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (5)

594. யோக்கிய சிவாக்கியா னச்சுடரி
      னொன்றாய் வியாபித் தவள்வருக
யோகத் தியான மௌனிகடம்
      உள்ளத் திருக்கு முமைவருக
வாக்கு முலகத் தறம்வளர்த்த
      வன்னை வருக மணிச்சதங்கை
யம்பொற் சிலம்பு புலம்பவசைந்
      தாடி வருக வெனைமதுர
வாக்கி யெனவுண் டாக்கியென்பா
      மாலை யடிசூ டினள்வருக
மாலை யடிசூ டினவரத்தால்
      வங்கிச் பாரம் பரியபுத்திர
பாக்கிய மெனக்குத் தரவருக
      பவுசுந் தருக வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (6)

595. வச்சிரக் குதம்பை யிடவருக
      மணிக்கொப் பணிய வருகவுச்சி
மகுட மணிமாம் பழக்கொண்டை
      வனைய வருக மணிவணன்றங்
கச்சி வருக திருவரைஞாண்
      கட்ட வருக கைக்குரத்னக்
கடக மிடுக வருகதிருக்
      கழுத்துக் கணியா பரணாதி
செச்சை புனைய வருகமுலைத்
      திருப்பால் பருகி யிடவருக
செங்கா வியங்கட் கஞ்சனமுந்
      தீட்ட வருக விமையகிரிப்
பச்சைப் பசலைப் பெண்வருக
      பாதஞ் சேப்ப வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (7)

596. கெண்டைக் கணைக்காற் கிறுகிடக்கிண்
      கிணியுஞ் சிலம்பு மினிப்பூட்டேன்
கிண்ணத் தமுது மூட்டேன்சங்
      கெடுத்துப் பிடித்துப் பால்புகட்டேன்
கண்ட சரமு மைம்படையுங்
      கட்டேன் ரத்னக் கடகமிடேன்
கண்ணுக் கெழுதஞ் சனமுந்தொடேன்
      கமல முகம்பார்த் தினிப்பகரேன்
கொண்டைக் கிணங்கச் சுடிகையிடேன்
      குமிழ்மூக் கினுக்குத் தழுக்கணியேன்
கொடுங்கை யணைத்து முலையுங்கொடேன்
      கொப்புங் குழையுங் குழைக்கணியேன்
பண்டைச் சதுர்மா மறைக்குமெட்டாப்
      பச்சைக் குழந்தாய் வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (8)

597. செய்ய பவளச் செழுங்கொத்தே
      முத்தே சீவ ரத்தினமே
சிந்தா மணியே மரகதமே
      திகழும் வைடூ ரியமணியே
துய்ய பதும ராகமே
      சுடர்விட் டொளிர்கோ மேதகமே
சோதி வயிர மேநீலச்
      சுடர்விட் டெரிக்கு மிளமணியே
சைவ மணியே பெண்மணியே
      தயங்கு மினிய பொன்மணியே
தாயே வருக வருகவென்றாற்
      சதங்கை சிலம்பப் புலம்பவென்முன்
பைய நடந்து வராதபரா
      முகமேன் வருக வருகவே
பாகம் பிரியாள் சங்கரனார்
      பாகம் பிரியாள் வருகவே. (9)

வேறு
598. மரகத வருணன் வடிவுடை யிமைய
      மலைமகள் வருக வருகவே
மதர்விழி மகர குழைவிழி யுருவ
      மயிலியல் வருக வருகவே
சுரர்முதன் முனிவர் முடிமிசை யிருகை
      தொழுதனர் வருக வருகவே
துடியிடை துவள மணியணி மகுட
      சுடர்விட வருக வருகவே
பரிபுர சரண விகசித கமல
      பகவதி வருக வருகவே
பருவத வரசி மகிழ்வுற வுரைசெய்
      பணிமொழி வருக வருகவே
திரிபுரை கௌரி பயிரவி குமரி
      தினகரி வருக வருகவே
திரையொலி தவிரு முத்தியி னகரி
      திருவுள மகிழ வருகவே. (10)
------------------------------------

அம்புலிப் பருவம்

(சாமம்)
599. பாகமென் னும்படி யிருப்பைநீ யிவளையும்
      பாகமென வேயுரைப்பார்
பானல முனக்குங்கை வாரமிவ ளுக்குமோ
      பானலங் கைவாரமாம்
நாகபூ ணர்க்குரித் தாகுநீ யிவளுமோ
      நாகபூ (க)ணர்க்குரித்தா
நற்கலை நிரம்பிநிற் குமுனக் கிவளுக்கு
      நற்கலை நிரம்பிநிற்கு
மேகமாய் நீயுமலை யிற்பிறந் தாயிவளு
      மேகமலை யிற்பிறந்தா
ளிருவர்குண முங்குறியு மொன்றிவ ளுடன்சரி.
      யிருந்து விளையாடலாமே
யாகம மியம்புதிரு மந்திரநக ரம்பிகையொ
      டம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (1)

600. உலோகாதி யந்தமும் வளைந்தவுத திப்பிரளய
      முண்டெழு முகிற்பரந்த
வுறுபுன றதும்பிளம் பாசடையும் வெண்முகில்
      செம்முகில் விரிந்தநுரையும்
மேகோ பவித்தெழுந் திடையிடை மறிந்தமீன்
      கணமெலாம் மீன்கணமு
மங்கெங்கு முகம்வைத்த கங்கையுங் காலுமீ
      தண்டபித் திகைகூலமும்
வாகா யிருந்தபுய லென்னும்வண் டூதமக
      ரந்தபரி வேடமிட்டு
வாசப்பிர காசம்வீ சப்பிரச வமுதகலை
      வார்ந்தொழுக வாய்ந்தலர்ந்த
வாகாய வாவியம் புயமென் றழைத்தவளொ
      டம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (2)

(பேதம்)
601. பூச்சக்கிர வட்டத் தெறித்தபதி னாறுகலை
      பூத்திருப் பனவுனக்குப்
பூச்சக்கிர வட்டசட் கோண முக்கோணம்
      பொருந்தெணெண் கலையிவட்கு
மாச்சற பிறப்புட னிறப்பும்வளர் வுந்தேய்வு
      மதிதொறும் வருமுனக்கு
மட்டிலக் கற்றதொரு கற்பகா லமுமாய்
      விலாக்கர்த் தவியமிவட்கு
பேச்சுக் கடங்காத வொருகணஞ் சூழ்ந்தே
      பிரகாசித் திடுமுனக்குப்
பேரண்ட பதினெண் கணங்களுஞ் சூழ்ந்துமே
      பின்செலு மிவட்குமந்திரத்
தாச்சிக்கு நீதாழ்ச்சி யல்லவோ வலியவந்
      தம்புலீ யாடவாவே
யழியாத பொருள் பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (3)
-
602. உதையமன மத்தமன மெனரெண்டு மனமுண்
      டுனக்கிவட் கேகமனமே
யுன்னுடைய வுள்ளங் களங்கமுண் டிவளுளத்
      தொருகளங் கமுமில்லையால்
சிதையுமுன் மானநிலை நில்லா திவட்குச்
      சிதைந்திடா நிற்குமானந்
தேய்ந்துமாய்ந் திடுமெய் யுனக்கிவட் கெத்தேச
      காலமுந் தேய்வில்லையா
லிதயமகிழ் சிவனிடம் சேர்ந்துசடை வாயுறுவை
      யிவள்சேர்ந்து வாழ்ந்திருப்ப
ளிரவுக்கு நீபுறப் படுவையிவ ளுலகெலா
      மீன்றினிது ரட்சைபுரிவ
ளதிகமிவ ளாகையா லுன்னையு மிரட்சிப்ப
      ளம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (4)

(தானம்)
603. முகமோ ரிரண்டுமூன் றுடையெம் பிரான்சடை
      முடிக்கிடை கிடந்தநச்சு
மூச்சுவிட் டுடலநெளி முடவுட் படச்சிகையின்
      மூதரா வென்னகருடா
சுகமோ வெனக்கேட்ட செய்திநீ யறியாது
      சொன்னபா சுரமல்லவே
தொல்லைமலை பெற்றவெம் பெருமாட்டி மடியில்வந்
      தினிதாக விளையாடினால்
செகமேழு மொக்கச் சுமக்கும் பணாமகுடச்
      சேடனுக் கொப்பமைக்குஞ்
சிகாரதன ராகுத் தனைத்தட்டி வினவவுஞ்
      சீத்துவ முனக்குண்டுவா
னகமூடு தாரா கணத்துடு விளையாடு
      மம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (5)

604. மைம்முகடு மட்டுமண விட்டவெண் சுதைமாட
      மணிவெயி லெறித்தலாலும்
வண்டலிடு வெண்மணற் கிடையிடை கிடந்துமணி
      முத்தொளி விரித்தலாலும்
பொம்மென முழக்கம் பெறுங்கயத் தலையிற்
      புரண்டலையி லாவிக்கரை
புக்கிடம் புரிவலம் புரிதினஞ் சொரிநித்தி
      லப்பிரபை புகுதலாலு
மிம்மந்தி ரத்திரு நகர்க்கெல்லி யும்பகலு
      மிவையென் றுரைக்கவரிதா
லிங்குவந் தாலுனக் குள்ளக் களங்கமுத
      லில்லைக் களங்கமணுகா
வம்மைதன் சன்னி தானம்பெற் றிருந்துநீ
      யம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (6)

605. பெரும்புவன வட்டம்வளை பூச்சக்கி ரவாளப்
      பிறங்கலி னடங்குமண்டப்
பித்திகையு மெத்திகையு முத்திகை படுத்திப்
      புறப்படு சலப்பிரபாகக்
கருங்கடலை யுந்தன்வாய் திறவாத வண்ணம்வாய்
      கட்டுமந் திரமிவட்குக்
கைவந்த துன்றனக் கையுற விலாதபடி
      கண்காண வொப்பிக்கவோ
விருந்தவூர்க் கடலையுந் தெற்கொடு வடக்குமோர்
      யோசனை விலாசநீள
மென்றும்வாய் திறவாமல் வாய்கட்டி விட்டதா
      லென்றும்வாய் திறவாதுனை
யருந்துமிரா குத்தனையும் வாய்கட்டி விடுவணீ
      யம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (7)

(தண்டம்)
606. மிருகா பதிச்சிங்க வேறெனத் தக்கனையும்
      வீழ்த்தியே சிரமரிந்து
வேள்வியை யழித்ததிக விக்கினே சுரர்தொந்தி
      மேல்வயிற் றைக்கிழித்துப்
பருகா ரழற்கடவு ளைக்கர மொடித்துதைய
      பரிதியைப் பற்றகர்த்துப்
பாதத்தி னாலுன்னை யுந்தேய்த்த ரணவீர
      பத்திரன் மிகுத்தெழுசினந்
திருகா வழற்பொறி தெறிப்பக் குறித்தகீழ்த்
      திசைநோக்கி வண்டுறுக்கித்
திருமந்திர ரகசியத் தலத்தினுக் காட்சி
      தேவாலயத் தீசானதிக்
கருகாக வாய்த்த மாய்நின்ற தறிகிலா
      யம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (8)

607. மழைத்தடங் கொடுமுடி மணிக்ககன முகடுருவ
      மந்தர நிறுத்திநெற்றி
வட்டச் சிகாரதன பட்டத்து நெட்டுடல்
      வாசுகி தனைப்பிடித்துக்
குழைத்துப் பிணித்துத் தடத்திருப் பாற்கடற்
      குண்டகழி யகடுடைப்படக்
குமைத்துத் திருத்திடுந் திமில்கு மிலத்துனைக்
      கூடக் கலக்கிவாட்டுந்
தழைத்ததுள வப்படலை மின்னுசொர் னப்படாந்
      தாங்குபங் கயலோசனன்
தங்கைகண் டாயவன் சற்றே யறிந்தாற்
      சகிக்கலன் வலக்கைநீட்டி
யழைத்தவுடன் வந்தாற் பிழைத்தனை பிழைத்தனைநீ
      யம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (9)

608. முடிக்கண் பணச்சிகை மணித்தலையி னெட்டுடன்
      முடக்கிப் படுத்தபகுவாய்
மூதரா வுன்னைக் கடுப்பட வடுப்பட
      முழுவதும் விழுங்கிவிட்டால்
குடிக்கிற் குடித்திடுங் கொப்புளிக் கிற்கொப்பு
      ளித்திடு மதற்குவாயிற்
குள்ளகப் பட்ட தண் ணீர்விடந் தலையினிற்
      கொள்ளா திருக்கமந்திரம்
படிக்கக் கருத்துன் னுளத்தடைந் தாலிருப்
      பதுமந்திர பீடமிவள்பாற்
படிமந்திர மிந்தப் பதிக்கலான் மற்றைப்
      பதிக்குமந் திரமில்லையால்
அடைக்கல மெனச்சொல் லுனக்குமோ ரிடுக்கணிலை
      யம்புலீ யாடவாவே
யழியாத பொருள்பாகம் பிரியாத கௌரியுட
      னம்புலீ யாடவாவே. (10)
-----------------------------

அம்மானைப் பருவம்

609. வெம்புலியு மெண்குமடன் மேவுகடு வாயோடி
      மடங்கலு மடங்கலேறு
மிருகாதி நரகாதி புகுதாது காப்பதூஉம்
      விரதமென வனவரதமும்
பைம்புலி னிதழ்கறிக் கும்படி பிரக்கினை
      படைத்துப் பிறங்குஞானப்
பைஞ்சுட ரெறிக்குமிமை யாசல மனைக்குரிய
      பன்னிதுடை மஞ்சநீங்கி
யும்பலிப முங்கயந் தலையும்விளை யாடிமுன்
      னுலாவியநி லாவின்முற்றத்
துல்லாச மாகவுன் னுதையமண் டலமிழிந்
      தொக்கவே விளையாடுதற்
கம்புலீ வாவென் றழைத்தகை சிவப்பநீ
      யம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (1)

610. பொய்ம்மானை யம்மானோர் பொன்மா னெனப்பூம்
      பொகுட்டுறை பிராட்டிகாட்டப்
போர்புரி தடக்கைதனில் வார்சிலை யெடுத்துப்
      பினேகுவோன் றாரைவார்க்க
விம்மானை யேத்துந்தி யங்கமல கர்ப்போம்
      தயசதுர் மறைத்திருமுகத்
தெழில்காட்டு பரமேட்டி மறைநெறி வழாமலே
      யிருமணச் சடங்கியற்றக்
கைம்மானை வைத்துநின் கைப்பிடித் திட்டநங்
      கண்ணுதற் பெம்மானைநீ
கல்யாணப் பந்தரின் மணக்கோல மெல்லக்
      கடைக்கணின் மகிழ்ந்துநோக்கு
மம்மானை யருடம்விழி யம்மானை யிடைதுவள
      வம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (2)

611. பிடிக்குமணி யம்மனை யெடுத்தெறி யும்விசையிற்
      பிறங்குதா ராகணத்தைப்
பிடுங்கித் தடங்ககன முகடுதட வித்திரும்
      பித்தடங் கைகடங்கு
முடுக்குழு விதம்மனை விதுவுயர்வ திதுதாழ்வ
      திதுதீர்வ தெனத்தெளிவுறா
தொக்கப் பிடித்திருந் தண்ணாந்து விளையாட
      வுதிர்பட்ட வுடுவம்மனை
படிக்குட் கிடப்பதனை முத்தொடு பொருக்கியம்
      பங்கேருகத் தணங்கும்
படிகத் துருப்படு மணங்குமம் படர்முலைப்
      பாரத் தணைத்தருகுநின்
றடிக்கடி யெடுத்துக்கை நீட்ட வவதானமா
      யம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (3)

612. மட்டான தில்லாத பூச்சக்கிர வாளமு
      மற்றப் பெரும்புவனமு
மாதிரமு மேகமுதன் மண்டலாதி யந்தமும்
      வழங்குஞ் சராசரமுநீ
கட்டாய் நடத்தின படிக்கே நடக்குநின்
      கைபார்த் திருக்குமெவையுங்
கண்ணுதற் பெருமானு நின்னருள் படைத்தலது
      கர்த்தவிய நடத்துதற்கே
யொட்டாதுன் னுடையசெய லம்மனைக ளங்காடி
      லுன்னிழலு மொக்கவாடு
முலகமுத லாடுநீ யாடினா லென்பதற்
      கொருவரைக் கேட்பதென்னோ
வட்டாவ தானமாய்க் கட்டாணி முத்தேபொன்
      னம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (4)

613. பூட்டுங் கலன்கலின் கலினெனப் பொற்சரி
      புலம்பச் சிலம்பலம்பப்
பொருகயற் கண்ணிணைக ளாடாம லம்மனை
      பிடித்தாடு முன்சித்திரஞ்
சூட்டும் பணாமுடிச் சேடன் சிகாமணிச்
      சுடிகைதனை யாட்டும்வட்டச்
சுற்றுத்தி காந்தப் பொருப்பெட்டு மொக்கத்
      துளங்கக் கழங்கினாட்டு
நீட்டுந் தடக்கைப் பொருப்பெட்டு முட்டுநா
      னிலவலய முற்றுமாட்டு
நீற்றொளி பழுத்தழ கெறிக்கு மென்னைய
      னிலாத்தவழ் சடாமுடியை
யாட்டுமுன் செங்கைவித் தாரத்தை யாரறிவ
      ரம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (5)

614. முகிலாண்ட மண்டலத் தப்பால் விளக்கொளி
      முளைத்தனைய நட்சத்திர
முறைமுறை யெறிந்தவம் மனைவான் முகட்டினிற்
      பதிந்ததென மானுமன்றே
னகிலாண்ட செங்கையை யடைந்திடு முகிழ்த்ததின்
      நாற்பெருங் கதிதனிற்போய்
நற்பெரும் பதவியைப் பெற்றுமெய்ஞ் ஞானத்தி
      னாற்சுட ரெறித்தலேய்க்குந்
துகிலாண்ட கொடியிடைச் சிவகாமி யென்றுனைச்
      சேவடி யடைந்தபேரே
சொர்க்கத் திருப்பருன் செங்கையை யடைந்தபேர்
      சொர்க்கத் திருப்பதரிதோ
வகிலாண்ட வல்லியே யெனையாண்ட செல்வியே
      யம்மானை யாடியருளே
யம்மானை யறியாத பெண்ணான பாகமே
      யம்மானை யாடியருளே. (6)

வேறு
615. சாடுந் தரங்க மிரங்கிய சத்த
      சமுத்திர முவட்டெறியத்
தலையுறு மண்டல மிட்டெழு நெட்டுடல்
      சருவமு மண்டலமிட்
டூடு பிலத்தி னொளித்திடும் விடமுட
      வுட்பட சேடனைநீ
டுச்சி பிளக்கப் பற்றி வளைத்தல
      குதறிக் கதறமுறித்
தீடு செலுத்திக் கக்கு மிரத்த
      மெடுக்கக் கொத்தியெடுத்
திருசிறை பட்டதி லண்ட கடாகமு
      மிடிபட மடமடென
வாடு மயிற்பெரு மானை யளித்தவ
      ளாடுக வம்மனையே
யாள்பர மன்மனை யாளெனு மெம்மனை
      யாடுக வம்மனையே. (8)

616. பாடும் பயிரவி கோடி வராளி
      பந்து முகாரிமுதற்
பண்ணுட னேயுன் சன்னிதி பாடிய
      பாடினி பாரதிபோல்
தோடங் குழைநேர் வைத்தமை நல்யாழ்
      சுருதிசெய் கீர்த்தனமுந்
தோத்திர முஞ்செய வாத்திய மும்பர்
      தொனிக்கப் பாற்கடலா
மாடந் தனிலுறை மரகத வண்ணனை
      மார்பி னணங்கரசே
யாது புரிந்துபொன் னம்மனை யாடிட
      வம்மி னெனச்சென்றா
ளாடம் பரியுமை பாகம் பிரியா
      ளாடுக வம்மனையே
யாள்பர மன்மனை யாளெனு மெம்மனை
      யாடுக வம்மனையே. (8)

617. முதிருல குக்குடை யாடை யெனத்திகழ்
      முந்நீ ரெழுகடலுண்
மோது தடங்கரை யிற்றிரை தத்தி
      முழக்கா மைக்கடலின்
மதியுவ மான விடம்புரி யிப்பி
      வலம்புரி தினம்விளைய
மாசறு தூய மணற்றிட ரெங்கு
      மணித்தர ளத்திரளுந்
துதிபுரி சுற்றுக் கொவ்வொரு யோசனை
      தூரத் துட்குயவர்
சுள்ளை யொடுஞ்சர்ச் சரைய பனைத்தொகை
      துன்னா தலினாலு
மதிசய மாகிய மந்திர நகரா
      யாடுக வம்மனையே
யாள்பர மன்மனை யாளெனு மெம்மனை
      யாடுக வம்மனையே. (9)

618. கரவலை யொலியும் புளினத் திடர்படு
      கம்புளி னத்தொலியுங்
கப்ப லிடும்பட கொப்ப மிடும்பல
      கைத்தறை கட்டொலியுஞ்
சுரிவளை யோடு வலம்புரி யொலியுந்
      தரளத் தரந்தெரியத்
தட்டிய முத்துப் பெட்டியி னொலியுந்
      தருலோ கமுமணவத்
திரையொலி தினசரி சிறிது மிலாமந்
      திரநகர் துவளுமிடைச்
சிறியா டடமுலை பெரியாள் கரியா
      டிருமறை தேடுவதற்
கரியாள் பாகம் பிரியா வரியா
      ளாடுக வம்மனையே
யாள்பர மன்மனை யாளெனு மெம்மனை
      யாடுக வம்மனையே. (10)
--------------------------------

நீராடற்பருவம்

619. துள்ளும் பொருங்கய லிரண்டரு கினும்புரள்
      துணைவிழிப் படையைமானுஞ்
சுழித்துச் சுழித்துச் சுழிக்குமூ ழுந்தியஞ்
      சுழிபோலு நீரின்வழியே
கொள்ளுங் கருஞ்சை வலக்கொத் திதழ்ச்சொரு
      கொந்தளப் பந்திநிகருங்
குளிர்ந்த துமிழுமுத்து நிலவொத் தழகெறித்த
      குமுதகுறு மூரனேருந்
தெள்ளுந் திரைக்கரம் வளைக்கர மெடுத்துனைச்
      சீக்கிர மழைத்தலேய்க்குந்
தென்பொதிய வரைபெருகு பொருநையம் நதியுனது
      சேடியரி லொருவர்பொருவும்
வெள்ளஞ் சிலம்புகொ டீரர்மனை யாட்டிபுது
      வெள்ளநீ ராடியருளே
விரிவான பொருள்பாகம் பிரியாத தேவிபுது
      வெள்ளநீ ராடியருளே. (1)

620. வடதிசையி லுயர்சிகர மஞ்சினந் துஞ்சிமைய
      வரையிடம் நீபிறந்தாய்
வழுவிலாத் தென்றிசையின் மஞ்சுதுஞ் சிமையமா
      மலையிட மிவள் பிறந்தாள்
சுடர்விடுஞ் செஞ்சுட ரிடம்புகிற் சுத்தக்
      கறுப்பா யிருக்குமிவளு
[*]…………………………………….
மடறங்கு மாறுமுக முந்தோன்ற வந்துல
      களித்தனை நீயுமிவளு
மடறங்கு மாறுமுக முந்தோன்ற வந்துல
      களித்திடுவ ளாகையாலே
மிடறங்கு தாம்பிரபரு ணியுமுனக் குவமைபுது
      வெள்ளநீ ராடியருளே
விரிவான பொருள் பாகம் பிரியாத தேவிபுது
      வெள்ளநீ ராடியருளே. (2)

[*] பிரதி செய்யும் போது பாதி அடி விடுபட்டுளது.

621. தென்னன் றமிழ்க்கும்ப தெற்போத யத்தகத்
      தியாசாகை யாரம்பமாய்த்
தேங்கருவி தூங்குதாம் பிரபருணி மின்னுதிரு
      முகம்வைத்த வெம்மருங்கும்
கன்னலுஞ் செந்நெலுஞ் சாகமும் பூகமுங்
      கதலியும் பலாவுமாவுங்
கமலமுங் குமுதமுந் தளவமுந் துளவமுங்
      கருதரிய மற்றையெல்லா
மன்னையுன் றிருவடிவ தென்னவும் பச்சைப்
      பசேலென்றோ ரழகெறிக்கு
மாதலால் நீயிந்நீ ராடிவிளை யாடினா
      லச்சுத ரெனச்சொல்பச்சை
மின்னுமே னியுமதிக பச்சையா கும்புதிய
      வெள்ளநீ ராடியருளே
விரிவான பொருள் பாகம் பிரியாத தேவிபுது
      வெள்ளநீ ராடியருளே. (3)

622. வளர்வளர் வாலைப் பிராயத்தி லேசெம்பொன்
      மலையரையன் மனையாட்டிதன்
மடிமேற் கிடந்துநீ செங்கீரை யாடியுண்
      மகிழ்ந்துவிளை யாடுதலினுங்
களபதன பாரஞ் சுமந்தொசிந் திறுமிடைக்
      கைத்தாயர் பொற்றானையொக்
கலையிருந் தெண்ணோடெண் கலைதெரிந் தம்புலி
      காட்டிவிளை யாடுதலினு
மளகபா ரக்கமல முத்திலக நளினமனை
      யாரெனுந் தோழியரொடு
மம்மானை விளையாடி யாடுதலி னும்பொருறை
      யாறெனும் பிரபாகநீர்
விளையாட லேயதிக விளையாட லம்மைபுது
      வெள்ள நீ ராடியருளே
விரிவான பொருள்பாகம் பிரியாத தேவிபுது
      வெள்ளநீ ராடியருளே. (4)

623. வள்ளஞ் சிறந்தமுலை மார்பி லணியாடுமின்
      மருங்கின்மே கலையதாடும்
வராற்கிணை கணைக்காலி னிற்றண்டை கிண்கிணி
      வளைந்தொளிர் சிலம்புபாடு
மள்ளருஞ் சந்தனக் கலவையுங் குங்குமமு
      மரகதத் தினுந்திமிர்ந்த
வங்கத்து பாங்கமும் பிரத்தி யாங்கமுங்கூட
      வாடிவிளை யாடுமன்றோ
துள்ளும் பசுந்தகட் டாரலுகள் பொருநையந்
      துறைநீரில் நீயாடினாற்
சுந்தரக் குழையிற் குதம்பையா டுந்துணைக்
      கையில்வளை வந்தியாடும்
மெள்ளவே கங்கைநதி துள்ளவே பொங்குபுது
      வெள்ளநீ ராடியருளே
விரிவான பொருள்பாகம் பிரியாத தேவிபுது
      வெள்ளநீ ராடியருளே. (5)

வேறு
624. திகழுந் தாம்பிர பரணியெனுஞ்
      செலப்பிர பாகமீன் ராசிகளுங்
செல்லுங் கமட ராசிகளுங்
      திரையூ டெழுந்து விளையாட
விகழாப் பொருநை நதிபாகீ
      ரதிக்குப் பிரதி பிம்பநதி
யிதுவே புண்ணிய வரநதிபார்க்
      கிதுவே பாவ நாசமுமென்
றுகளு மீன வவதார
      முங்கூர் மாவ தாரமுமா
யொருமித் தெடுத்தச் சுதன்றீர்த்த
      மாடி விளையா டுதன்மானப்
புகழுந் திருமந் திரநகராய்
      புதுநீ ராடி யருளுகவே
புராரி பாகம் பிரியாதாய்
      புதுநீ ராடி யருளுகவே. (6)

625. உகட்டுஞ் சகட்டை யுதைசரண
      உகள பதும நயனபட
வுரக சயனர்ச கோதரியே
      யுலகின் றருள்சங் கரியேவான்
முகட்டை யணவ பொதியவரை
      முடிதா ழருவிப் பொருநையொரு
முகமாச் சக்கிர வாளகிரி
      முழுதும் வளையுங் கடன்மடுத்த
தகட்டின் பசும்பொன் மலையரசி
      தங்கக் கொடுங்கைக் குள்ளாயுன்
றன்னை மடிமேல் வைத்தணைத்துச்
      சங்க முகத்தால் வடித்திடுபால்
புகட்டல் கடுப்ப வெழும்பொருநைப்
      புதுநீ ராடி யருளுகவே
புராரி பாகம் பிரியாதாய்
      புதுநீ ராடி யருளுகவே. (7)

626. தத்தாழ் திரைக்கார்க் கடன்முகட்டுச்
      சகத்திற் கதிர்ச்சூர் யோதயமுஞ்
சந்திரோ தயமும் விசும்பனைத்துந்
      தயங்குந் தாரா கணராசிக்
கொத்தோ தையமு முதித்தமுதற்
      குணதிக் குதித்துப் பொதியவரைக்
குடுமி கடக்கும் வரையும்வளங்
      கொடுக்குந் தாம்பிர பன்னிதனிற்
சுத்தா கிருதித் தேசுடைத்தாய்த்
      தோன்றும் பிரதி பிம்பமெல்லாந்
தூய நதியிற் றோய்ந்துதோய்ந்து
      தொக்க பதவி பெறன்மானப்
புத்தா ரமிர்தப் படிவமே
      புதுநீ ராடி யருளுகவே
புராரி பாகம் பிரியாதாய்
      புதுநீ ராடி யருளுகவே. (8)

வேறு
627. காந்தட் செங்கையின் மாந்தளிர் விரல்வெண்
      கமலப் பெருமாட்டி
கைவிரை வாகச் செவ்வரி சிதறுண்
      கண்ணெழு தஞ்சனமுஞ்
சாந்தொடு குங்கு மங்கொடு மேனைத்
      தாய ரணிந்தநுத
றானென வில்லைச் சேர்த்திய வதனந்
      தீட்டிய சிந்துரமுங்
கூந்தலி லம்புய மங்கை முடித்தலர்
      கொத்துச்சர மும்வளங்
கொண்டிரு கரையும் வண்ட லிடத்திடர்
      குவிதல் கமகமெனப்
பூந்திரை வந்தபி டேகம் புரியப்
      புதுநீ ராடுகவே
புவனீ சுவரியே ஜெகதீ சுவரியே
      புதுநீ ராடுகவே.       (9)

628. நளிகண் புனனிறை கடலக ழத்தடு
      படுக்கி யமுக்கியெழு
நடுவுயர் முதுகொரு கமட மெனத்திக
      ழமடங்கரு விம்மித்
துளிசிந் தியதிரை புரளுவ பிரளயத்
      தூடுருவித் துருவிச்
சூன்முதிர் வயிறுளை பக்குழை யக்கரை
      தோறுங் கரையேறி
வெளிவந் தரிது தவழ்ந்து தவழ்ந்துகை
      வெட்டாற் றாழ்குழியாய்
வெட்டிய திற்சொரி முட்டைக ளிட்டதை
      மீட்டு நிரப்பியவெண்
புளின் மெனத்திகழ் திருமந் திரவுமை
      புதுநீ ராடுகவே
புவனீ சுவரியே ஜெக தீசுவரியே
      புதுநீ ராடுகவே.       (10)
-----------------------------

பொன்னூசற்பருவம்

629. அண்டமுக டணவுகதி ரிளநில வெறித்தபடி
      கக்காலின் மிசைமரகதத்
தால்விட்ட மிட்டதிற் றரளவட நாட்டி
      யதோதாரை மாரியுமிழுங்
கொண்டலை நிகர்ப்பநீ னிறமணிப் பலகையைக்
      கொழுவிப் படாம்விரித்துக்
கொழுமலர் பரப்பமளி யிற்புகுந் தாடுமுன்
      கோலமிரு காலுநிலவத்
துண்டவெண் டூணத்தி னுட்பசுந் துளவமா
      றோன்றுவது மானுமொன்றிற்
றுழாய்முகில் சகோதரி யெனப்பின் னுதிக்குமுன்
      றோற்றமும் பொருவுமருண
புண்டரிக பைஞ்சுனையின் மந்திரநகர் வந்தவுமை
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடிவரு கோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (1)

630. முருகுவிரி மகரந்த முடிவிளை வுறுநறா
      முட்டிமட்டி தழ்விம்மிநாண்
முகைப்பிணி முருக்கவிழு மம்புயா சனமகுட
      முடியணங் காசிரிவரு
மொருகினரு கிருபுறமு நின்றிளந் தென்றன்மண்
      டுபையசா மரையிரட்ட
வூருவசி யரம்பைமே னகைதிலோத் தமையினோ
      டுயருமிந்தி ராணிரதியு
மருணகிர ணப்பிரபை விரியக் கருப்பூர
      வாலத்தி யேந்திநிற்ப
வாட்சியுன் சந்நிதா னம்விழி கொளாதைய
      னதிசயித் ததிசயித்துப்
பொருபுன லடக்குஞ் சிரக்கம்ப முஞ்செயப்
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (2)

631. கயன்மீன மண்டலம் முத்தணி படங்கிட்ட
      கல்யாண பந்தரேய்ப்பக்
ககனவெளி முகடுதொடு பொன்னூச லாடிடக்
      கட்டுபொற் றட்டாடவே
வயல்வண்ண மண்டலம் பூமண்ட லாதியந்
      தமுமுழுது மாடுமவடா
னசையாம லணுமுதலு மசையாது வென்பதற்
      கையமிலை யென்றல்காட்டு
முயல்வண்ண மண்டல மதிச்சடா மணிமகுட
      முத்தர்மனை யாட்டியெம்மை
முற்றும் ரட்சித்தசீ மாட்டிகோ மாட்டியெம்
      பெருமாட்டி நம்பிராட்டி
புயல்வண்ண நிகர்கண்ணர் துணையென்னை யருளன்னை
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (3)

632. எண்ணரிய விண்ணவ ரியம்பரிய கன்னிகை
      யரம்பையரனந்தகோடி
யிந்திராணி யுருவசிதி லோத்தமைநன் மேனகையோ
      டியாவரு மிறைஞ்சிநிற்ப
நண்ணரிய பொன்னூச லிற்கொழுவு பொற்பலகை
      நாப்பணீ வீற்றிருத்தல்
நக்ஷத்திர ராசிபுடை சூழநடு வுதையமா
      னகையினிள மதிகடுப்பக்
கண்ணுத லளந்திட்ட விருநாழி நெற்கொண்டு
      கைக்கரித் தலைமகனையுங்
கைப்பிள்ளை யானசண் முகனையும் வளர்த்தெணான்
      கறம்வளர்த் தெனைவளர்த்த
புண்ணியபதி சுகுணபதி விரகநிறை பார்பதீ
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (4)

633. அக்கரத் தாற்பெரிது ரூபி கரித்தலா
      லழகியபதச் சுவட்டா
லறிவா கரர்க்கெலாம் வெளியாகி யெளிதினுபை
      யத்தமுந் தோன்றநின்ற
விக்கவி பொருட்கிடம் பெற்றதாற் பாகமென்
      றெவர்களு மெடுத்தோதலா
லென்பனுவ லுன்பிரதி பிம்பமிவை சந்தேக
      மில்லையென் றமிழ்தழைக்கப்
பைக்கணா டவிவிடப் பாந்தளங் குழுவினைப்
      பாரமணி வலையமேயொப்
பாக்கிமுக் கவரயிற் படைசுமந் தமைதேரப்
      புறத்தசைந் திட்டகுவிவாய்ப்
பொக்கண விபூதிபுனை முக்கணர் மனைக்குரியள்
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (5)

634. கயத்தம்ப மாமகர சாகரப் பிரளயங்
      கரைத்தும் பத்ததும்பக்
கட்டமை மரக்கல நடுக்குழி நிறுத்திமன்
      காலாற்றி னிற்பிணித்துச்
செயத்தம்ப மென்னத் தொகும்பாய் மரத்தொகுதி
      யுச்சியிற் சேர்ந்துகைதைச்
செங்கா லனத்திரள்கள் கம்பமசை யுந்தோறும்
      சிறைவிரித் தசைகுவதெலாம்
கயத்தம்ப மென்னக்கயிற்று லிதத்தொடுசூழ்ப்
      பிணித்தகழை மேற்றூய்நிறக்
கஞ்சுகம் போர்த்தவே மும்பர்தந் தொழில் செய்வ
      தேய்க்குமந் தரபுயத்தம்
புயத்தம் புயத்தன் றுதிக்கும் கிருபைக்கரசி
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (6)

635. சங்குமிழு முத்தும் வலம்புரியின் முத்தும்
      சலஞ்சலங் கான்றமுத்தும்
தகடுபடு மிப்பிரை யுமிழ்முத்து மற்றைத்
      தலத்துள்ள வாடவர்க்கு
மங்கையர் களுக்குங் கழுத்தணியு மாகிநீள்
      வார்குழைக் கணியுமாகி
மார்பினுங் காதினுங் கொத்துமுத் துச்சரம
      தாகக் கிடந்தடிபடு
மிங்குள்ள வாடவர்கண் மங்கையர்கள் காலினான்
      மிதிபடுந் துவைபடுமதா
லெத்தேச முந்தனக் கொப்பிலா மந்திரநக
      ரிதுகைலை வாசமென்றே
பொங்குமறை யபிராமி கலைவாமி சிவகாமி
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (7)

636. வல்லோர் மதித்திடும் வயிடூரிய முண்டுகோ
      மேதகம் புட்பராக
மாணிக்க நீலமர கதமுண்டு வயிரமொடு
      முத்துண்டு பவளமுண்டு
சொல்லாலு மட்டிலாப் பஞ்சலோ கமுமுண்டு
      தூயரச வர்க்கமுண்டு
சுகமாட கூடமுப் பரிகையுண் டெண்ணான்கு
      சுகிர்தம் தொகுத்தறம்வளர்த்
தெல்லாரை யுங்காக்கும் நீயுண்டெ னையனுண்
      டெழுபனையோ டலைகுய்வரு
மில்லாத தன்றிமற் றில்லாத தொன்றில்லை
      யெல்லாச் சிறப்புமுண்டு
பொல்லாத வில்லாத மந்திரநகர் வந்தவுமை
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (8)

637. சீராடு பங்கயச் சீறடித் தண்டைகிண்
      கிணிசிலம் பாடநளினத்
திவ்வியபீ தாம்பரக் கொய்சகமு மாடச்
      சிரோரத்ன பணிதியாடத்
தாராடு மேகலா பாரமா டப்பொன்னுத்
      தரிகவுல் லாசமாடத்
தமனியக் குடமெனத் தனமாட ரத்தினத்
      தமைத்தபொற் கச்சுமாட
வேராட முன்கைவளை யூடாட வச்சிரத்
      திணங்குகைச் சரியுமாட
விவையுமொரு பொன்னூச லென்னவிரு குழையாட
      விலகுமதி முறுவலாடப்
போராடும் விழியாட வரனாட வாதாடிப்
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (9)

638. சரசுவதியென் னாவினின் றுரைசெய்பிள் ளைத்தமிழ்
      தழையவ ழகியதிருச்
சந்நிதா னந்தழைய முன்னிதாய் நின்றசிவ
      சங்கரே சுரர்தழையவெண்
டிரைசெயா தென்றும்வாய் பொத்திய மகோத்தித்
      தீர்த்தமுந் தழையமகுடச்
சிந்துரச் சுந்தரப் பாண்டியக் களிறோடு
      செந்திலா னுந்தழையவிண்
டுரைசெயா வேதமுந் தழையச் சிவக்கியான
      வுற்பத்தி யுந்தழையவே
வுலகமுந் தழையமும் மாரியுந் தழையவெவ்
      வுயிர்களுந் தழையமதிதோய்
புரிசைதிகழ் மந்திரநகர் வரிசையொடு தழையநீ
      பொன்னூச லாடியருளே
புனலாடி விளையாடி வருகோல பாகமே
      பொன்னூச லாடியருளே. (10)
--------------------------------
திருமந்திர நகரமாகிய தூத்துக்குடியிலெழுந்தருளியுள்ள
பாகம்பிரியாவம்மைப் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
----------------------------------------------

திருமந்திர நகரமாகிய தூத்துக்குடி
பாகம்பிரியாவம்மைப் பிள்ளைத்தமிழ் குறிப்புரை

----
காப்புப் பருவம்

538. குழற்காடு - உருவகம்; அலராக்குமிழ் தளவ ஆம்பலும் பூத்து - மலராத குமிழம்பூவும் வெண்மையான அல்லி மலரும் மலர்ந்து; (குமிழம்பூ மூக்கிற்கும், வெள்ளையாம்பல் நகைக்கு முவமை). அலராக் குமிழ் - குறிப்புச்சொல்; உளம் பூத்தலர்ந்து - மனமகிழ்ந்து; கல் அகலிகை யுருவாக்கு உபைய தாமரை - கல்லை அகலிகையாக உருவாக்கின இரண்டு பாததாமரையும் (இராமாவதாரத்தில்; பிள்ளைப் பிராட்டி - இளமைத் தன்மை வாய்ந்த இலக்குமி; நயனம் - கண், இப்பாட்டில் திருமாலின் கால்கள், உந்தி, மார்பு, கண், கை முதலிய உறுப்புக்களுக்குத் தாமரை உவமையாகக் கூறப்பட்டிருப்பது காண்க. காம்பு என்பது இங்கு மூங்கிலையொத்த தோள்களைக் காட்டும் போலும். (1)

539. மந்திரவாழ்வு ஆனவர் - வேதாங்க செல்வத்தையுடையவர்; வடதிக்கிருப்பவர் வங்கணர் - வடக்குத் திக்கிலிருக்கும் குபேரனுக்கு உற்ற தோழர்; ஆல் ஆசனக் கனகச் சதுர்ப்புய மந்தரர் ஏறு ஏறிய பவனிச் சிறப்பினர் - ஆலிலையை ஆசனமாகக் கொண்ட அழகிய நான்கு புயங்களான மலையையுடைய திருமாலான எருதில் ஏறிய உலாச் சிறப்பையுடையவர்; மன்று - அம்பலம்; சந்திரகலா - சந்திரகலை; தண்கெழு பாகீரதி - குளிர்ச்சி பொருந்திய கங்கை; சங்கு - குண்டலம்; இசையைத் தரிப்பவர் - சிவபெருமான் குண்டலத்தில் இரு கந்தருவர் எப்போதும் யாழ் மீட்டி இசைப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இங்ஙனம் கூறப்பட்டுள்ளது. இசை - புகழ்; கவுணியக் குலப்பயிர் - கௌணியக் குலத்தில் தோன்றிய; முரண் கழுமேலேறிட அமணைச் செயித்தருள் - மாறுபட்ட கழுவில் ஏறிடுமாறு சமணரைச் செயித்தருளின; பைந்தமிழாகார - பசிய தமிழின் உறைவிடமான; இதம் - இன்பம்; அமுது - பால்; இங்குச் சண்முகன் என்பது முருகனே சம்பந்தராகப் பிறந்தார் என்னும் சைவபுராண வழக்கினை யொட்டி சம்பந்தரைக் குறிக்கிறது போலும். (2)

540. கொந்தவிழ் பூந்தொடை - பூங்கொத்துக்களின்று மலர்ந்த பூவினாலாகிய மாலை; பரனை - மேலானவனை; கவளக் கொழுங்கனி - உணவாகிய கொழுவிய பழம்; கைத்தலன் - கையிடத்தை யுடையவன்; பருமி - பருத்து; பிரபைதொகு அங்குசம் - ஒளி சேர்ந்த அங்குசமெனு மாயுதம்; கவுள்மத தும்பிமுக அம்புயத்தரசு - மதச்சுவட்டையுடைய யானை முகமாகிய தாமரைக்கு அரசு; மந்திர பூந்திருப்பதி - மந்திரம் எனும் அழகிய பெருமைவாய்ந்த நகர்; சரவண மைந்தன் - சரவணப் பொய்கையிலுதித்த முருகன்; குளிர்பனி மஞ்சு அமர் காஞ்சனத்து இமையக்கிரி - குளிர்கின்ற பனியடர்ந்த சிகரங்கள் பொருந்திய வெண் பொன் படர்ந்த இமயமலை. மங்கல நாண் கழுத்து அமுதம் - தாலியைக் கழுத்திலேயுடைய அமுத மொத்தவள்; சந்திரகாந்தியில் கதிர்விட்டு இளவெயில் தங்கொளி கானல் போல் - சந்திரகாந்தியைப் போன்று கிரணம் வீசி இளவெயில் தங்கும் பிரகாசமான வெப்பம் போல்; பரசு கரதல - மழுவைக் கையில் தரித்த. (3)

541. மகரமேறி - சுறாமீன்களை வீசும்; கவடு படு சினை - கப்புகள் பொருந்திய கிளை; நட்சத்திர மலர்வதென மலர் மலரும் - நட்சத்திரங்கள் மலர்வதைப்போன்று பூக்கள் பூத்துள்ள; மலர்தலை - பரந்த; பிரமைகொள் - மயக்கம் கொள்ள; மகபதி கிருபை பெற - இந்திரன் கிருபை பெறவும்; இமையவர்கள் நிலைபெற - தேவர்கள் நிலைபெறவும். வல்லமைச் சூர்க்குல மறுக - வல்லமையையுடைய சூரபத்மனது குலம் வருந்த; மகுட கண பணகல் உதிர்த்து ஆக்கிரம் கொடிய உரகம் - தலையினின்று கூட்டமான பட மாணிக்கங்களை உதிர்த்து சினந்தெழும் கொடிய பாம்பு; சரவண உதைய - சரவணப் பொய்கையினின்று தோன்றிய; கொடுமுடி - உச்சி; சிகரக் கொடுமுடி - ஒரு பொருட் பன் மொழி; ககனம் - ஆகாயம்; நெடிய வெதிர் அகில் பிரமதரு - நீண்ட மூங்கில், அகில் மரம், கடவுள் தன்மையுடைய கற்பகமரம்; சுரர்கள் தருமலர் சில்லெனப் பூத்து - தேவர்களுலக மரங்கள் பூக்களைச் சில்லென்றிருக்கப் பூத்து; ஒளி நிலவும் அடவியுளது - பிரகாசம் வீசும் காடு உளது; இகபர கதியணைய குறுமுனி செய் தவத்தாச்சிரமம் நிறையு முயர்தவ முனிவர் - இவ்வுலக, மேலுலக இன்பங்களையடைய அகத்தியர் செய்த தவத்திற்கான ஆச்சிரமத்தில் நிறைந்த உயர்ந்த தவத்தையுடைய முனிவர்; தகரம் நறவு உமிழ் - தகர மரங்கள் வாசனை வீசும்; குமுகுமெனு- இரட்டைக் கிளவி, சகர பிரபுதர் கல்லும் மைக்கார்க்கடல் - சகரவரசன் பிள்ளைகள் கல்லிய கருமைபொருந்திய கடல்; பிரபுத்தன் - யௌவனப் பருவ மடைந்தவன்; இங்குப் பிரபுதர் என்பது பிரட்டர் எனப்பாட்டில் நின்று தொகுத்தல் விகாரம் பெற்றது; பொருகை - தாம்பிரபர்ணி; வளை - சங்கு; தரள மணி - முத்துமணி; மைக்கார்க்கடல் தவழும் துறை நகர், அலையொலி தவிரும் துறைநகர் - என்று கூட்டுக; துறை - கடற்றுறை; மலைவல்லி - மலையில் தோன்றிய பார்வதி (இமயமலையரசனுக்கு); சூரபத்மன்:- முருகன் விடுத்த வேலாயுதத்தைக் கண்டு உலகங்களையெல்லாம் அழித்துப் பிறகு இவ்வேற் படையையழிக்கிறேன் என்று எண்ணினான். கடல் நடுவிடம் சென்று தீயைப் போன்ற தளிர்களையும், புகையைப் போன்ற இலைகளையும் பொன் போலப் பூங்கொத்துகளையும் வெளிப்படுத்தி, மரகதமணி போலக் காய்த்து, மாணிக்கம் போலப் பழுத்து, முகில்களைப் போலக் கிளைகளைப் போக்கி மிகவும் உயர்ந்து நூறாயிரம் யோசனை அகன்ற அரையினை யுடைய ஒரு பெரிய மாமர வடிவமாக நின்றான். தன் வடிவத்தையசைத்தான். அதனால் நிலவுலகங்கள் இடிந்து சரிந்தன. உலகப் பொருள்கள் நிலை தடுமாறின. வேற்படை சினத்துடன் சென்று தாக்கி யழித்தது. (4)

542. வளைவாய் புளிமேல் விரும்பாது - வளைந்த பக்கத்தையுடைய புளியம் பழத்தின் மேல் விரும்பாமல்; நான்கு மாதத்திய கர்ப்பிணிப் பெண்கள் புளிப்புடைய பொருள்கள் மேல் விரும்பியுண்ண முயல்வர் ; மண்பிட்டு அருந்தாது - மண்ணைப் பிட்டுச் சாப்பிடாமல்; கர்ப்பிணிகளில் சிலர் சுவரிலுள்ள மண்ணைப் பிட்டுச் சாப்பிடுவதை யாவரும் கண்டிருக்கலாம்; இளமுலையின் மணிக்கண் கறுத்திடாது - இளைய முலையின் நுனியிடம் கருமையுறாது; கர்ப்பங் கொண்டவர்கட்கு மூன்றாம் மாதம் முலை நுனிகறுக்கும், திருமழலைச் செவ்வாய் வெளிறாது - அழகிய மழலை மொழி பேசும் சிவந்த வாய் முதலியன வெளுப்பு நிறம் அடையாமல்; இஃதும் மூன்றாம் மாதமே நிகழும் (முகமெலாம் வெளுத்தல் இயல்பு); திளையாச் சூல் கொள்ளாது - நிறைந்து கர்ப்பங் கொள்ளாது; பசேலென்ற நரம்பெழாது - முலைமீது பசேலென்ற நரம்பு எழாமல்; பயந்த - பெற்ற, செந்தாமரைப் பெண் - இலக்குமி; சரண் - பாதம்; அளைவாய் மடுத்த - வெண்ணெயை வாயினால் உண்ட; கள்வாய் - எச்சில் ஒழுகும் வாய்; அங்காந்து - வாய் திறந்து; அழுத முகில் - அழுத திருமால் (கண்ணாவ தாரத்தில்); பிளவாக் கிடந்து உட்குழைந்து எழு வெண்பிள்ளை மதிவாள் நுதல் சிறு பெண்பிள்ளை - பிளந்து கிடந்து உள் வளைந்து எழுகின்ற வெண்மை நிறம் பொருந்திய இளைய சந்திரனைப் போன்ற ஒளிவாய்ந்த நெற்றியையுடைய சிறிய பெண்பிள்ளை; பிளவா, திளையா என்பன செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் செய்து எனத் திரிந்தன இங்ஙனம் வருவதைப் பிரபுலிங்க லீலையிலும் காணலாம். மோகினியின் கருப்ப காலக் குறியை வருணிக்கும் புலவர்,

''முத்தணி கொங்கை முகங்கள் கறுத்தாண்
மெய்த்திரு மேனி விளர்த்து நரம்பு
பைத்தன மீது பரப்ப விருந்தாள்
பொய்த்துயில் கொண்டு புளிக்கு முவந்தாள்."

என்பதனால் அறிக. மச்சபுராணத்தில் வடமலையப்ப பிள்ளையன் தாரகாசுரன் உற்பத்தியின் போது வச்சிராங்கன் மனைவிக்கு உண்டான கருப்பக்குறிகளை,

"குவிமுலைக் கண்கறுப்பக் கொடிபசு நரம்பு தோன்ற
கவரிதழ் வெளுப்பச் சாம்பல் கரியமண் புளிவேட் டுண்டு
புவியினிற் காணுந்தோறு பொருந்துமா லுதரம் விம்ம
வவிரொளி வார்ங்கணைப்பெண் ணாயிரம் வருடம் போக்கி.''

என்பதனால் காண்க. (5)

543. குடிலின் உறி - வீட்டிலுள்ள தயிர் உறி; எக்கி - எட்டுவதற்காக கால் பெருவிரலால் நிலத்தை ஊன்றி நிமிர்ந்து; குந்தி - உட்கார்ந்து; முகங்கோட்டி - முகம் சுளித்து; இடையர் கும்பத் ததி - இடையர்களது குடத்திலுள்ள தயிர்; நீலன் - கருநிறமான திருமால்; நீலி - கருநிறமுள்ளவள்; முடிவின் முனையின் முனைக்கழுத்தின் முடித்த பிறை - முடிவில்லாத முனையில் முனைக்கழுத்தில் தரித்த பிறைச்சந்திரன்; பிறைக்கூன் - வளைந்த பிறைச்சந்திரன்; இரு கோட்டின் முனையும் - இரு பக்கங்களின் முனையும்; சூல தேவர் முதல் - சூலாயுதத்தைக் கையிலேயுடைய சிவபெருமான் முதல்; கவின முடிகவிக்கும் அழகிய முடியணியும்; படிகம் - வெண்மை; வடம் - மாலை; படாம் - உடை; தனத்தி - முலைகளை யுடையவள்; படிக வருண பதும கற்ப - வெள்ளை நிறமான தாமரையில் தங்குபவளான; பரிபூரணத்தி எங்கும் நிறைந்தவள்; பாரதி - சரசுவதி. (6)

544. கடுக்கை - கொன்றை; பிஞ்சுமதி - பிறைச்சந்திரன்; காயுஞ் சர்ப்பம் - கோபித்துச் சீறும் பாம்பு; வெண் தரங்கம் - வெண்மையான அலை; கங்கை அம்கனி - கங்கையாகிய அழகிய பெண்; கன்னி என்பதன் தொகுத்தல் கனி; சடிலம் - சடை; பார்பாத்தி - பூமியையே வீடாகவுடையவள்; பண் அம் பணத்தி - தகுதியான மிக்க பாக்கிய முடையவள்; பணம் - பாக்கியம்; பண் - தகுதி; எண்குணத்தி - எட்டுக் குணங்களை யுடையவள், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல் முதலியன; மழவஞ்சிறை ஓதிமம் - இளைய அழகிய சிறகுடைய அன்னம்; விடை - எருது; மாயூரம் - மயில்; உவணம் - கருடன்; மகிடம் - எருமை; அலகை - பேய்; மறை - வேதம்; ஏர் - கலப்பை, ஆகுபெயர்; சூல் - சூலம், கடைக்குறை; குழை அந்தணியே - இரங்கும் அபிராமியே, வினைத்தொகை; அந்தணி - பிராமணி; உருத்திரை - மகேச்வரி; குமரி - கௌமாரி; சற்குண இந்திரை - நற்குணமுள்ள இந்திராணி, சாமுண்டி - மாகாளி; பாட்டிலுள்ள வாகனம், ஆயுதங்களைச் சப்தமாதர்கட்கு முறையே கொள்க. அந்தணியே, உருத்திரையே முதலியவைகளிலுள்ள ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. (7)

545. கம்பம் அடு - கட்டுத்தறியை முறிக்கும்; கிம்புரிக் கோட்டு - கிம்புரிப் பூண் கட்டிய தந்தம்; கலுழி - கலங்கல் நீர்; கவுட் சுவடு - மதச் சுவடு, கலுழி பெருக்காத கவுட்சுவட்டில் மதம் பெருக்கும் எனக் கொள்க; பெருக்கா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; மதம் - மதநீர்; கடைக்கால் ஊழிப்பெருக்கு - யுகமுடிவில் நேரும் ஊழி வெள்ளம்; பெருக்கெடுத்துப் பம்பு - வெள்ளமெடுத்து மேன்மேல் பெருகும்; களிற்றுத் தலைமகன் - யானைத் தலையையுடைய விநாயகன்; சூரிய சந்திரர் சிவபிரானுக்கு வலக்கண்ணாகவும் இடக்கண்ணாகவும் உள்ளனர்; செங்கதிர் - சூரியன்; வெண்கதிர் - சந்திரன்; மொய்ம்பு - வலிமை; முளரி - தாமரை ; கதவமடைப்பவன் - சந்திரன். (8)

546. சந்திரகலை தரித்து என்பது சிவனைக் குறித்தது; மலைகார் முகம் - போர் செய்யும் வில்; நாகாலயம் - ஆதிசேடனாகிய படுக்கை; சந்திரகலை தரித்திருந்த கடவுள், (சிவன்) நாகாலயத்திருந்த கடவுள் (திருமால்) இருவருக்கும் பிறந்தவர் ஐயனார். தாருகவன முனிவர்களின் பத்தினிகளின் கற்பு நிலையைச் சோதிக்கச் சிவன் பிக்ஷாடனர் உருக்கொண்டு சென்றும் திருமால் முனிவர்களின் தவநிலையைச் சோதிக்க மோகினி உருக்கொண்டும் சென்றும் அறிந்தபின் இருவரும் கூடப் பிறந்தவரே ஐயனார். அரிகரபுத்திரர் என்றும் பெயர். தளை அசைத்திய சன்னதியன் - காற்சிலம்பையணிந்த சன்னிதானத்தையுடையவன்; தவ பூரணை புட்கலை ஆன தையல் - தவத்தையுடைய பூரணை என்பவளும், புட்கலை யென்பவளுமான பெண்கள்; இவர்களிருவரும் ஐயனார் தேவியர்; பனகம் பாம்பு; சடிலம் - சடை; பனக பவுத்திரத்தர் - பாம்பாகிய மோதிரத்தை யுடையவர்; பனகக்கதிர்க் குழையர் - பாம்பாகிய குண்டலமுடையவர். இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பனக் கர கங்கணர் - பாம்பாகிய கைக் கங்கணத்தையுடையவர்; பனகக் கழலர் - பாம்பாகிய வீரக்கழலைத் தரித்தவர்; பனக சருவாங்கர் - பாம்புகளையே எல்லா உறுப்புக்களிலுமுடையவர்; சனக சனகாதியர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வர்க்கும் தக்ஷிணாமூர்த்தி வடிவமாய்க் கல்லால மரத்தின் நிழலிலிருந்து உபதேசஞ் செய்தார் சிவன்; ஆகம் - உடல். (9)

547. கைம்மாத் தரும் மாலுக்கிளையாள் - தும்பிக்கையையுடைய கசேந்திரன் எனும் யானையைக் காப்பாற்றித் தந்த விஷ்ணுவுக்குத் தங்கை; கடுக் கந்தரத்தர் - விஷமுண்ட கழுத்தையுடையவர்; (இம்முதலடியில் மூலப்பிரதியைப் பார்த்தெழுதும்போதே தவறு நேர்ந்திருக்கும் போலும்); அம்மா அம்மா அம்மா - அடுக்குத் தொடர்; தம் ஆகிருதி - தம் வடிவு; சகளம் - சடத்துவம்; திகம்பரர் - நிருவாணிகள்; தண்டாயுதத்தராய் - தண்டம் செய்யும் ஆயுதத்தை யுடையவராய்; இனிதாபதத்தர் - இனிய தவவொழுக்கத்தை யுடையவராயும்; கபாலராய் - கபாலத்தையுடையவராய்; எகினம் - நாய்; திரிபவர் - வயிரவர்; வயிரவர்:- பிரமனது தலையைக் கிள்ளியெறிந்தவர். சிவ மூர்த்தியின் ஏவலால் உலகர் பொருட்டு 12-வருடம் பிரமகத்தி ஏற்றுப் பிரம கபாலம் கொண்டு பிச்சை யேற்றவர். (10)

548. தோகை - மயில் தோகை; முத்துக்குமார சுவாமி அப்பன் - முருகன் தந்தையான சிவபெருமான்; மேனி - உடல்; பாகம் - பாகமுடையவளான பார்வதி; தூய பர விகற்பத்தின் நூறு பாடல் - நல்ல மேலான பல சந்தமான விதங்களினால் பாடிய நூறு பாடல்; ஆதிவத்து - முதல் வஸ்து; ஆரணம் - வேதம்; மேலை ஆதி பத்தியத்தர் - மேல் நாட்டில் (சுவர்க்கம்) அதிகார முடையவர்; ஆகமத்துச் சொரூபம் ஆர ஆகம் உருவம் பொருந்த; சீதம் - குளிர்ச்சி; சொர்க்கத் துளார்கள் தேடும் உற்பத்தியாய சீவரத்தினப் பிரகாச தேவர் - சொர்க்கத்துள்ளவர்கள் தேடித் தோன்றின 'சீவரத்தினம்" போன்ற பிரகாச முடையவர்கள் ஆகிய தேவர். (11)
--------------------
செங்கீரைப்பருவம்

549. மந்தி - பெண் குரங்கு; கருங்கவி - கரிய ஆண் குரங்கு; வெள்ளைப் பெருங்கவி - வெண்மை நிறமுடைய குரங்கு, இஃது சுக்கிரீவனைக் குறிக்கலாம்; கருங்கரடி- கரிய ஜாம்புவந்தன் என்ற கரடி; கடல் கொண்டேன் அகண்ட படை - கடல் கொண்டதைப் போன்று அகண்ட சேனை; காகுத்தர் - இராமர்; ஆகுத்தன் - உயிர்க்குறுதி செய்பவன், இஃது இலக்குமணனைக் குறித்தது; ஒரு மந்திரம் அனுமன்றன் முன் இயம்ப - ஒரு யோசனையை அனுமன் முன்சொல்ல; மண்குயவர் ஒப்பமிடும் ஒலியொடும் பச்சோலை யொலி என்று பிரிக்க; சோலையொலி சோலைகளிலுள்ள பறவைகளின் சப்தம்; திரையின் வேலையொலி - சமுத்திர அலைகளாலுண்டாகும் ஒலி; பெரிது ஒலிப்பவை - பெரிதும் ஒலிக்கும் அச்சப்தங்கள்; மறைப்ப - கேட்கவொட்டாமல் தடை செய்ய; வருமந்த முகில் செங்கையமை என்று அமைப்ப - வருகின்ற அந்த இராமன் தன் சிவந்த கைகளால் அடங்கு என்று சொல்லிக் கைகளையசைக்க; மண்மனை யோசை - மண்ணினால் கட்டிய சிற்றில்களின் ஓசை; பனையோசை - பனைமரங்களிலுள்ள அன்றில் முதலிய பறவைகளின் ஒசை; மாறிட்ட அன்றைக்கும் இன்றைக்கும் மாருதியும் வாரிதியும் வாய் புதைக்கும் - மாறியடங்கின அப்போதும் இப்போதும் அநுமனும் கடலும் வாய் மூடிக்கொள்ளும்; அருமந்த செல்வி, அருமந்த - மரூஉ மொழி; தேக நீள் நாக பூண் ஆகனார் - நீண்ட நாகத்தின் உடலை ஆபரணமாகப்பெற்ற மார்பை உடைய சிவன்; இராமன் வானரப்படைகளோடு இராவணனை வெல்லச் சென்றபோது கடலின் துறை முற்றத்தில் ஓர் ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து இரகசியம் பேச நினைத்தபோது அதன் மேலுள்ள பறவைகள் ஓவென்று இரைச்சலிட அதைக் கண்ட இராமன் செங்கையினா லடங்குக என்று காட்ட யாவையும் அடங்கியது அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுளது காண்க. 'வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல் வீழாலம்போல ஒலியவிந்தன்று இவ்வழுங் கலூரே.” (அகம்70.) (1)

550. உதவவரு - பெற்ற; இதயவல்லி - மனதில் பொருந்திய கொடி போன்; அமை அமை பசுந்தோளி - மூங்கில் போன்று அமைந்த பசுமையான தோள்களையுடையவளே; அணி அரவ கங்கணி - அணிந்த பாம்பாகிய கங்கணத்தையுடையவளே; அமிர்த கிருபை பொங்கு அம் கணி - கருணை அமிர்தம் மிகும் அழகிய கண்களையுடையவளே; அருணை மங்கலை - அருணாசலத்தில் இருக்கும் பார்வதியே; சமயநெறி சமையவரு - மத வழிகள் பக்குவமடையவரும்; பீதாம்பரீ - பீதாம்பரத்தையுடையவளே; சதிதரும் தாண்டவ ஆடு அம்பரி - தாளத்திற்கு ஏற்ப நடனமாடும் பார்வதி; சரம் தரு கணீ - அம்பினையொத்துத் தருகின்ற கண்களையுடையவளே; அஞ்சு அக்கரி - ஐந்து அக்ஷரத்தை யுடையவளே, (பஞ்சாக்ஷர மந்திரம்); அம் சக்கரி - அழகிய சக்கரப்படையுடையவளே; சிமையமுடி நிழல் நிலவ உச்சியில் அணியும் கிரீடத்தின் ஒளி பரவ. (2)

551. இருமந்தர........ ஓர் பண்பாட - இரண்டு மந்தரமலையையொத்த தனங்கள் அசைந்தால் அந்தோ! சிறப்புப் பொருந்திய இடை இங்கு முறிந்துவிடும் என்று அறிந்து போட்ட சிலம்புகள் ஒப்பற்ற இசையைக் சப்திக்க; இவ்வடியின் கருத்தை "அனிச்சப் பூ கால்களையாப் பெய்தாள் நுசுப்பிற்கு, நல்ல படாஅ பறை," என்ற குறளை நோக்கியறிக; குழைமருவும் விழி எனப் பிரித்துக் கூட்டுக. குண்டலத்தைப் பொருந்தும் பரந்த கண் எனப் பொருள் கொள்க. உரு அஞ்சன விழி - நிறமமைந்த மை தீட்டிய கண்கள்; மலர் அங்கனை உனது அடி கும்பிட எனப் பிரிக்க, இங்கு அங்கனை என்றது திருமகளைக் குறித்தது, கலைமகளையும் குறிக்கலாம்; உள் - மனம்; பூமி சகளங்களும் - பூமியில் உள்ள எல்லா உடல்களும் (உயிர்களும்); பரை - காளி. (3)

552. உலகு ஒன்றிட - உலகமக்கள் ஒன்று சேர; கோலம் - அழகு; சதுர் மறையவன் - பிரமன்; குலிசன் - வச்சிரப்படையையுடைய இந்திரன்; மண்தானுண்டான் - திருமால்; அலகு அம்பு என இருபுறமும் - கூர்மையான அம்புக் கூட்டம் போன்று இரண்டு பக்கங் களிலும்; தோடு - குண்டலம்; அடரும் படைவிழி - கொல்லும் வேலாயுதம் போன்ற விழி; உருவம் குமுத நறும்பூ என்று பொருள் கொள்க; திலகம் - பொட்டு. (4)

553. கணபண சேடன் - கூட்டமான படங்களையுடைய ஆதிசேடன்; சிகை - முடி; சக்கர வட்டமென - சக்கராயுத ஒளிபோன்று; சூரியன் போலே, சக்கர வட்டம் போலே உள்ள ஒளிமிக்க சரவணப் பொய்கை என்க; சத்த சமுத்திர மொத்து மிகுத்த தடாகம் போன்ற பொய்கை என்க; சேடன் சிகை கீழும் என்பதனால் அப்பொய்கையின் ஆழத்தைக் கூறினார். முத்தி சரவண வாசம் பெறுதேவு என்று ஈசன் தானே கொடுக்க மறுக்க என்று பிரிக்க; சரவணவாசம் பெறு தேவு - முருகன்; முளைத்திடும் உடு என்றே - தோன்றிய நட்சத்திரம் என்று நினைத்து; மின் மகவான் உம்பருளார் உவந்தே கொண்டாட - பிரகாசிக்கும் இந்திரனும் தேவர்களும் மகிழ்ந்து கொண்டாடித் துதிக்க முக்கணர் - சிவன்; பூவின்பால் வந்தாய் நீ அர்த்தம் உரைத்திலை முட்டனென - தாமரை மலரிலே தோன்றினவனான நீ பிரணவப் பொருளுக்கு அருத்தம் கூறவில்லை முட்டாளென்று; முட்டன் - மூடன்; பிரமாவின் திருமுடிமேல் அஞ்சிட ஓர் அஞ்சு ஆறு எஞ்சாதே யாத்த திருக்கை வழக்கம் அளித்து - பிரமாவின் தலையில் அவன் பயப்பட ஐந்தாறுக்குக் குறையாமல் குட்டி; பவுரி - ஓர் கூத்து; பவுரி கொண்டாடும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை; மயிற்பரி - மயில் வாகனம்; பரப்பிரமதீபம் - முருகன்; அருள்கூர் அங்கனையே - பெற்ற பெண்ணே; முருகன் கைலையில் இருக்கும்போது அங்கு நான்முகன் வரவும் அவன் செருக்குடன் போதலைக் கண்டு அவனை வரவழைத்து வேதத்தைச் சொல்லச் சொன்னார். அவன் இருக்கு வேதத்தின் முதலில் "ஓம்" என்று தொடங்கி சொல்லினான். முருகன் அவனை மேலே சொல்லவொட்டாமல் நிறுத்தி "ஓம்" என்ற பிரணவத்திற்குப் பொருள் வினவினார். அவன் தெரியாது விழிக்கவும் அவனது நான்கு தலைகளிலும் குட்டிக் கந்தமாதன மலையில் சிறைப்படுத்தித் தானே படைத்தல் தொழில் செய்தார். பின்பு திருமால், சிவபெருமான் ஆகியோர் வேண்டுதலின் சிறையினின்று விட்டுச் சிவனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்துச் “சுவாமிநாதன்” என்ற பெயர் பெற்றார். (5)

554. வயல் மண்டலத்தோடு வரும் கரிய மேதி - வயல் தொகுதி வழியாக வரும் கரிய எருமை; தாழ் மடுவூடு உழக்க - தாழ்ந்த மடு வினிடையில் கலக்க; வெடிபோய் - சிதறி; வாளை - வாளைமீன்கள்; கமுகம் பாளை - பாக்கு மரத்தின் பாளை; அம்பூ விரித்திரள் மழைத் துவலையில் சிதற - அழகிய பூ விரிதற்கான திரண்ட மழைத்துளியைப் போல சிதற; மைப்புயன் மண்டலம் - கரிய மேக மண்டலம்; கயல் மண்டலத்தினுக்கு அயல் மண்டலத்திலொரு கயல் மண்டலந் தானென - நட்சத்திர மண்டலத்தினுக்கு வெளியேயுள்ள மண்டலத்தில் ஒப்பற்ற கயல் மீன்களின் மண்டலம் என்று சொல்லுமாறு; முதலிலுள்ள கயல், மீன் என்ற பொருளில் விண்மீன் (நட்சத்திரம்) எனக்கொள்க; கருங் துகில் பொதிந்திட்ட மின்மினி - கரிய துணியால் மூடிய மின்மினிப் பூச்சி; செய ஆதித்த மண்டலம் நிகர் - சிவந்த சூரிய மண்டலத்தைப் போன்று; செய்ய என்பது செய எனத்தொக்கது; செய - வெற்றி என்ற பொருளிலும் கூறலாம். வயல் தொகுதிகளின் வழியாகவரும் எருமைகள் தாழ்ந்த (ஆழ்ந்த) மடுவினிடையில் கலக்க சிதறி வாளை மீன்கள் பாக்குமரப் பாளையிலுள்ள பூக்கள் விரிவதற்கான திரண்ட மழைத் துளியைப்போலச் சிதற மேகமண்டலத்தினிடையில் வெள்ளித்துண்டுகள் துள்ளிப் புகுவனபோல அம்மேகத்தைக் கிழித்து, மேற்சென்று, பொழிகின்ற மழையினால் உண்டாகிய வெள்ளப்பெருக்குப் போன்று பெருமிதத்துடன் புரண்டெழுகின்ற கயல் மீன்களின் ஒளி நட்சத்திர மண்டலத்திற்கும் அப்பாற்பட்ட மண்டலத்தில் ஒப்பற்ற கயல் மீன்களின் மண்டலமுண்டென்று சொல்லும்படி கரிய துணிமூடிய மின்மினிப் பூச்சியென்று விளங்கும் கடலலைகள் கரை ஓரத்தில் அடிக்கும் சிவந்த சூரிய மண்டலத்தைப்போன்ற மந்திர நகர் எனப்பொருள் கொள்க. சிறிய அலைகள் உண்டு என்பதை மின்மினிப் பூச்சிப்போல என்பதால் குறிப்பித்தாராயிற்று. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டுச் சிறிது ஒளிர்வதால் (அதுவும் கரிய துணியில் மூடினது அவ்வொளி இன்னும் குறைவதால்) அவ்வுவமை பொருந்தியது. (6)

555. அருணம் - சிவப்பு; இமையாசல மனைக்கிழத்தி - மேனை; (இமைய + அசலம்), அசலம் - மலை; இச்சித்து - விரும்பி; சங்கையொடு - சங்கினால் என்று கருவிப் பொருள் கொள்ளலாம்; மஞ்சனம் பொலிந்து - முழுகி, குங்குமச்சாந்தம் - குங்குமச்சேறு; திமிர்ந்து - பூசி; உடல் நலங்கிட்டு - உடலுக்கு நலங்கிட்டு; நெற்றியிற் சாத்து - நெற்றியிலிடும்; அம் கயல் கண்ணுக்கு - அழகிய கயல் மீன் போன்ற கண்ணுக்கு; மட்டில் சருவாங்க பூடணம் இட்டு - அளவில்லாது எல்லா உறுப்புக்களும் ஆபரணங்கள் அணிந்து, நிலக்காப்பு - மண்ணைக் குழைத்துப் பொட்டிடல்; களபாப் பைந்தனத்து அமுதம் ஊட்டி - கலவைச் சாந்து பூசிய முலையினின்றும் பால் கொடுத்து; தெரியாத - ஆராயாத; தெரியாத சிவன் என்பது ஆராயாமல் பத்மாசுரனுக்கு (பஸ்மாசுரன்) யார் தலையில் கைவைத்தாலும் அவர் எரிந்துவிட வரம் கொடுத்துப் பின் அவனே பரீட்சிக்க சிவன் தலையில் கை வைக்க வர அகப்பட்டு விழித்ததால் இது கூறியிருக்கலாம். (7)

556. அத்த அம்பலத் திரிபுரத்து ஒன்றில் உறை - பொன்மயமான மேலிடத்தையுடைய மூன்று புரங்களான ஒன்றில் தங்கும்; வாணன் - பாணாசுரன். இவன் கண்ணனால் இரண்டு கைகள் தவிர மற்ற 998- கைகளும் அறுப்புண்டவன். இவனே கடைசியில் சிவபூசாபலத்தால் திருக்கைலையடைந்து குடமுழா முழக்கத் திருப்பணி செய்து வரலானான். அச்சுதன் - திருமால்; இடக்கை - இடக்கையென்ற வாத்தியம்; நாளவட்டத்தன் - பிரமன்; அலர்தாள் வட்டம் - மலர் போன்ற தாளமாகிய வட்டத்தை; இரட்ட - அசைக்க; சத்தம் பல திக்கு ஒலிப்ப - இசை பலதிக்கிலும் ஒலியைச் செய்ய; தும்புருவும் நாரதனும்:- இவர்கள் யாழ் வசிப்பதில் திறமை பெற்றவர்கள்; சத்த சுரம் - ஏழுசுரம்; திரிபுராந்தகத் தாண்டவம் - திரிபுரம் எரியும் போது சிவபெருமான் ஆடிய தாண்டவம்; திரிபுரம் + அந்தகன் - திரிபுராந்தகன்; அந்தகன் - யமன்; பத்து அம்பலத்தினில் படுபாதியாம் அம்பலத்தினில் - பத்துச் சபைகளில் சரிபாதியான ஐந்து சபைகளில்; பூசாபலம் - புண்ணியம்; சித்தம்பலம் - சிற்றம்பலம்; ஐந்து சபைகள்: சிற்றம்பலம், பொன்னம்பலம், ஆடலம்பலம், பேரம்பலம், அரசம்பலம் ஆகியன. (8)

557. பாதமெல் அனிச்ச மலர் - பாதமாகிய மெல்லிய அனிச்சப்பூ; பச்சிளங் கதலி - இளைய வாழை, தொடைக்கு உவமவாகுபெயர்; ஆலிலை - ஆலிலை போன்ற வயிறு; வளை தங்கு பச்சையிள மூங்கில் - தோள்வளை தங்கும் பசுமையான இளைய மூங்கில் (தோளுக்கு ஆகு பெயர்); தாதளவு பரிமளக் காந்து - மகரந்தம் பொருந்திய மணமுள்ள நாந்தட்ட (கைகட்கு ஆகுபெயர்); மாந்தளிர் - மாந்தளிரைப்போன்ற உடல்; அணிபூடணத்தாலி ஐம்படை தழுவு - அணியும் ஆபரணமான ஐம்படைத்தாலியைத் தழுவியுள்ள; சங்கர சமந்த மணி நாகு இளங் கமுகம் ஆட - கலந்துள்ள ஸ்மந்தகமணி பதித்த ஆபரணமணிந்த மிக்க இளைய கமுகமர மொத்த கழுத்து ஆட; வெண்டளவு குமுத மலர் - வெண்மையான முல்லையும் (பற்கள் ) குமுதமலரும் (வாய்); குமிழ் - குமிழம்பூ, (மூக்கு); வள்ளையங்கொடி - அழகிய கொடியிலுள்ள வள்ளைப்பூ (காது); கொப்பு - காதிலணியும் ஆபரணம்; குழை - குண்டலம்; மீறு செழுந்திலக சீதள செங்கமலம் - செழுமையான பொட்டையிட்ட அதிக குளிர்ச்சியான தாமரையொத்த; கோதிலாத அரும் இதழ் இலவு ஆட குற்றமற்ற அரிய பூவின் இதழ்களைப் போன்றும் இலவம் பஞ்சுபோன்று முள்ள கால்கள் ஆட (9)

558. கயத்தம்ப மாமகர சாகரம் - ஆழமான நீர் நிலையிலுடைய பெரிய சுறாமீன்கள் வசிக்கும் சமுத்திரம்; கம்பித்து - நடுங்கச் செய்து; தரங்கம் - அலை; கண பணாடவிப் பாம்பாட - கூட்டமான படங்களுள்ள ஆதிசேடனாகிய பாம்பு ஆட; நின்மயத் தம்ப - நின்மயமான நிலையுள்ள; அண்டகோளம் - ஆகாயவுலகம்; (கோளம் - உருண்டை வடிவம்); புவன வட்டம் - பூமியின் சுற்று; வட்டப் பொருப்பு - சக்கரவாளமலை; பொருப்பு - மலை; மண்டல ஆதியந்தம் - மண்டலங்களின் முதலும் கடைசியும் ஆட; மாசுணப் பூடணம் - பாம்பாகிய ஆபரணம்; புராந்தகன் - சிவன்; பூச்சக்கர வாளம் - அழகிய சக்கரவாள மலை. (10)
-------------------------------
தாலப்பருவம்

559. ரகுபதி - இராமன்; வருணன் இராமன் அடி பரவினது சேதுவுக்கு அணை கட்டும் போதாகும்; வருணன் வாராததால் கோபித்து அம்பை எடுக்க வருணன் பயந்து சரணம் அடைந்தான். முக்கணர் - சிவன்; சிவனது துணைவன் - குபேரன்; அங்கி - அக்கினி; சிவன் நீங்கின மற்ற எழுவரையும் கூறினர்; நந்து அணியுங் குழை நம்பர் - சங்கா பரணமும், குண்டலமுமணியும் சிவன்; நாப்பண் - மத்தி; மணிப் படமா நாகம் - மாணிக்கமுடைய படம் பெற்ற பெரிய பாம்பு; ஒரு கொம்பின் நடுக்கை தடக்கையிடும் - ஒரு கொம்பினைப் பெற்ற பெரிய தும்பிக்கையினால் நடுக்கத்துடன் தடவும்; தந்தி - விநாயகன். (1)

560. சொருகமை குழலி - வாரிச் சொருகுமாறு அமைந்த கூந்தலையுடையவளே; மயில் நிழலி - மயில் போன்ற சாயலொளியுடையவள்; கருணி - கருணையையுடையவள்; மரகத வருணி - பச்சை நிறத்தவள்; பானலம் அனைய கணி - நீலோற்பல மொத்த கண்ணையுடையவள்; கொந்தார் வாகைச் சூலினி - பூங்கொத்துக்கள் நிரம்பிய வெற்றி யையுடைய சூலாயுதத்தையுடையவள்; சற்குண மிகு ரஞ்சகி எனப் பிரிக்க. வந்து ஆனந்தக் காட்சி கொடுத்து என்று பிரிக்க; பூடணம் ஆதி - ஆபரணம் முதலியன; வர்த்திக்கும் பவுசு - இருக்கும் அழகு; சந் தானம் - மக்கள் பேறு. (2)

561. பொற்பு அகம் - அழகிய (நல்ல) மனத்தையுடையவள்; கருணை + ஆலயம் - கருணாலயம் - (ஆலயம் - இருப்பிடம்); பந்தனம் வெண்பாற்கடலமுதே - காவலைச் செய்யும் வெள்ளிய பாற்கடலில் தோன்றிய அமுதமே; வடிதேன் - வடித்த தேன்; வந்தனை - வணக்கம்; சந்தனமே, பைந்தனமே, அனமே எனப் பிரிக்க; அன்னம் என்பதன் தொகுத்தல் அனம். (3)

562. அஞ்சு கரப்பிளை - விநாயகன்; பிள்ளை என்பதன் தொகுத்தல் பிளை; ஆறு தலைப்பிளை - ஆறு தலையையுடைய முருகன்; பேறாமே - பெறுதலில்லாமல்; ஆல் - ஆலிலை; பண்டி - வயிறு; வெற்பு இறை - சிவன்; என்னை என்ற வினாவின் தொகுத்தல் எனை; வாடாதோ - ஓகாரம் ஐயப்பொருள்; பாராரே - ஏகாரம் எதிர்மறை; பாராரே இதிலுள்ள இரு எதிர்மறைகள் ஒருடன்பாட்டைக் குறித்தது. பார்ப்பார் என்று பொருள்; கஞ்சமலர்க்கணன் - திருமால்; நாலுமுகத்தன் - பிரமன்; காவாழ் நாடு ஆனோர் - கற்பகச் சோலையையுடைய சுவர்க்கலோகத்தில் வாழும் தேவர்கள்; வாழ்நாடு - வாணாடு என்றா யிற்று; கண்கள் களித்திடவே தரிசித்தவர் கால் தான் ஏறா என்று பிரிக்க; கால் - ஏழாம் வேற்றுமையுருபு; ஏறா - அடையா; மேனை - இமயமலையரசன் மனைவி; விநாயகனையும், முருகனையும் போன்று ஆண் பிள்ளையைப் பெறாமல் அந்த வயிற்றை ஒரு சமயம் கருப்பத்தால் நிரப்பினால் ஆலிலைபோன்று வயிறு வாடும் என்று நினைத்தாயா? பாலுக்காக பஞ்சம் உண்டென்று நினைத்தாயோ? உனக்கு எப்படி வரும்? கனமான முலைகளாகிய குடங்களே பாலாறாகுமே. அப்படியும் மிஞ்சி, குழந்தை வயிறு பசித்தழுதால் என்ன? சிவன் பாராமலிருந்து விடுவாரா (முன் உபமன்யு முனிவர்க்குப் பாற்கடலை வரவழைத்து ஊட்டியது காண்க); திருமால், பிரமன், இந்திரன் முதலியவர் தரிசிக்க அவர்களிடம் செல்லாமல் மேனையிடம் சென்று அவளால் வளர்க்கப்பட்டவளே என்று பொருள் கூறுக. (4)

563. மாறு ஆம் ஆறு - பகை கெடும் வண்ணமே; வேள் - மன்மதன்; கண்பட நெருப்புக் கண்ணைக் காட்ட; வெற்றுரு ஆம் ஆறு. வடிவமின்றி யிருந்த விதமே; கூர்வோர் - மிகுதியானவர் (உரிச்சொல், வினையாலணையும் பெயர், கூர் பகுதி); சரீரத்தளிர் - சரீரமாகிய மாந்தளிர்; கார்போல் ஓயாமே - மேகம் போல் கறுத்துத் தளர்ச்சியுறாமல்; மால் ஓகம் - மயக்கத்தின் பெருக்கு; மாலோகம் - மிகுதி; கண்பட -. திருஷ்டிப்பட; கண்ணேறு - திருஷ்டி தோஷம்; நாவேறு - நாவால் வருந்தோஷம்; தினம் இன்சொல் படிப்பினை பேசாய் பேசாயோ - தினம் இனிய சொல்லான கற்றுக்கொடுத்ததைப் பேசமாட்டாயோ; ஒரு - எண்ணலளவையாகுபெயர்; பேசாயோ - இதில் இரு எதிர்மறைகள் ஒருடன்பாட்டைக் காட்டிற்று; முப்புரங்களை நீ சிரித் தழித்ததைப் போன்று மிகுதியானவர் கண்டு சிரித்தாலும் உனது சரீரமாகிய தளிர் மேகம் போன்று கறுக்காமலும் மன்மதன் நெற்றிக் கண்பட்டு எரிந்து உருவமில்லாமற் போனது போல மிகுதியானவர் கண்ணால் நோக்கின திருஷ்டி தோஷமும் மற்றுமவர்கள் மனதில் நினைத்ததைப் போன்று கொடிய செய்கை மிகுதியும் உண்டோ உனது அழகைப் பருகி படிப்படியாகக் கொஞ்சிக் குலாவினாலும் உனக்குக் கண் திருஷ்டி தோஷமோ, நாவினால் வரும் தோஷமோ ஒன்றுமில்லை என்று பொருள் கொள்க. உண்டு என்பதில் ஏதோ என்பதின் ஓகாரத்தைப் பிரித்துச் சேர்க்க. (5)

564. குழந்தைகள் விரலை வாயில் வைத்துச் சுவைப்பதனால் ''உன் கை சுவைப்பது............ஊறாதோ'' என்றார். பண்டி - வயிறு, பண்டி பசித்து அழின் என்று பிரிக்க; மேனா தேவியார் - மேனை; மின் - மின்னல் போன்ற குழந்தை; எண்ணாது என்பது எணாதே என்று தொக்கது; விம்பர் கனி இதழ் - கோவைக் கனி போன்ற உதட்டையுடையவள் (உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை); கம்பிதம் - நடுக்கம்; முன் - முன்காலத்தில்; கமலத்தனை உந்தி படைத்த முனோனாலே காணா - பிரமனைக் கொப்பூழ்த் தாமரையில் படைத்த உனக்கு முன்னவனான திருமாலால் காணமுடியாத, முனோன் - தொகுத்தல் விகாரம், முன்னோன் - பெரிய சகோதரன்; முண்டக பொற்பதம் - தாமரை போன்ற அழகிய பாதம்; தற்பரை - பார்வதி; மோகாதி நால்வேதன் - மூன்று குற்றங்களையுடைய பிரமன்; முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம். (6)

565. பாரம் புயங்கம் சதுர்ப்புயன் - கனத்த பாம்புகளைக் கையில் கங்கணமாக வுடைய சிவபெருமான்; பவள நயனப் பங்கயன் - பவளம் போன்று சிவந்த கண்களாகிய தாமரையை யுடைய திருமால்; பெளத்திர கரகத்து எண்கயனும் - சுத்தமான கமண்டலத்தையுடைய பிரமன், கையன் - கயன், போலி; பருமத்தடக்கை வெண்கயன் - விநாயகர் போலும்; ஆரும் பவளத்திதழ்க் கனிவாய் - பொருந்திய பவளம் போன்ற உதடுகளையுடைய கனிந்த வாய்; திருவாய் மலர்வாய் - பேசுவாய்; அருத்தி - உணவிட்டு; குதலை - மழலை; ஊரும் பனிரண்டு அருக்கர் வானில் ஊர்ந்து செல்லும் பன்னிரண்டு சூரியர்; அச்சுவினி - அசுவினித்தேவர்; உருத்திரர் பதினொருவர் ஆதலால் புத்தொருவர் உருத்திரர் என்றார்; அட்டவசுக்கள் - எட்டு வசுக்கள்; இப்பாட்டில் முப்பத்து மூன்று தேவர்களைக் கூறியிருப்பது காண்க. (7)

566. "காதுக்கினிதுன் ...... சொல்" என்றவடியைக் குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொற்கேளாதவர்.'' என்ற குறளுடன் ஒப்பு நோக்குக; ''கண்ணுக்கினிதுன்.....யின்பம்" என்ற வடியை "குழவி தளர்நடையைக் காண்டல் இனிதே ...'' என்ற (இனியவை நாற்பது) பாட்டுடன் ஒப்பிடுக. கவுள் - கதுப்பு; முத்துவது - முத்தமிடுவது; வியத்தல் நாசிக்கு இனிது இன்பம் என்று பிரிக்க, நாசி - மூக்கு; பேதைக்கு இனி ஐம்பொறிக்கு இன்பம் பிள்ளைக் கனியன்றியும் உண்டோ - பேதையர்கட்கு இனிய மெய், வாய், கண் மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளுக்கும் இன்பந் தருவது பிள்ளையாகிய பழம் தவிர வேறு உண்டோ; காயாம்பூ வருணச் செல்வி - காயம் பூவின் நிறம் போன்ற செல்வி. (8)

567. காவித்தடம் - நீலோற்பல மலரையுடைய குளம்; குமுதம் - அல்லி; சேலூடும் சிறுகால் ஊடும் - சேல்மீன்கள் தங்கும் சிறிய வாய்க்காலினிடையிலும்; திகழ்தேர் ஆர் தெருவூடும் - பிள்ளைகள் இழுத்து வரும் விளங்கும் சிறுதேர்களைப் பொருந்திய தெருக்களினிடையிலும்; பொங்கு ஆடு அரவ நிதம்ப நுளைச்சியர் - கோபித்து ஆடுகின்ற பாம்புப்படம் போன்ற நிதம்பத்தையுடைய நெய்தல் நிலப் பெண்கள்; குடில் - குடிசை; புட்டில் - இறைகூடை; புளினத்திடர் - ஆற்றிடைத்திட்டு; கங்கு - வயலின் வரம்பு; திரை - அலை; காவி மலர்க்குளம், தாமரைக்குளம், அல்லிக்குளம், சேல்மீன்கள் திரியும் சிறுவாய்க்கால், சிறுதேர்கள் பொருந்திய தெருக்கள், நெய்தனிலப் பெண்களின் வீடு, இறைகூடை, கட்டில், ஆற்றிடைத்திட்டு, வயல்கள், கடல், கப்பல், அலை, மிக்க நீர்ச்சுழி, பெண்களின் கால்கள், கைகள் ஆகிய இவ்விடங்களினிடையில் சங்குகள் திரியும் மந்திர நகர் என அந்நகருக்குச் சிறப்புக் கூறுக. ஊடாடும் - திரியும். (9)

568. தெண்டிரை கொஞ்சு தடங்கரை - தெளிந்த அலைகள் வீசும் பெரிய கடற்கரை, தேசிகர் தம் கைமடிச்சீலை - ஞானக்குரவர்களின் சிறிய ஆசார வஸ்திரத்திலும்; தம் அசைநிலை; காசுப்பை - விபூதிப்பை; மனை வளை மதில் தனிலும் வீட்டிற்காக வளைக்கப்பட்ட மதிலகத்தும்; பண்டகசாலை - களஞ்சியம்; பர மங்கையர் கொங்கையினும் - தாசிகளின் முலைமீதும் (முத்தாரமாயிருந்ததால் கூறினார்); கையினும் என்றது பிறர் முத்தைப் பணத்திற்குப் பதில் கொடுத்து விட்டு, வேசிகளிடம் செல்வதால் ஆகும்; கடற்கரையிலும், ஞானக்குரவர்களின் துணியிலும், விபூதிப் பையிலும், தர்ப்பையிலும், குப்பைகளிலும், மண்டபம், மாளிகைகளிலும், வீட்டிற்காக வளைக்கப்பட்ட மதிலகத்தும், வழியிலும், சிறிய பள்ளங்களிலும், நீரிலும், தோண்டத் தோண்ட மணலைத்தருகின்ற கிணற்றிலும் (கடற்கரைப் புறமான நகராகவே இங்ஙனம் கூறினர்), களஞ்சியத்திலும், வேசிகளின் முலைகள் மீதும், கைகளிலும், பவளத்தாலாகிய ஆபரணமணியும் இடுப்பிலும், வாயிற்படியிலும், தலையிலும் முத்துக்கள் விளங்கும் மந்திர நகர் என நகருக்கு ஏற்றம் கொடுக்க. (10)
---------------------------
சப்பாணிப் பருவம்

569. குடுமி - சிகரம்; குரிசில் - ஆண்மக்களிற் சிறந்தோன்; இதய கமலம் - உருவகம்; களிசிறப்ப - மகிழ்ச்சி மிக; சொருபம் - வடிவம்; மதிமுக மேனை - சந்திரனையொத்த முகத்தையுடைய இமயமலையரசன் மனைவி; பதும செந்திரு - தாமரை மலரிலிருக்கும் இலக்குமி; முத்து இளநகைச் சனகி கர்த்தன் - முத்துப்போன்ற அழகிய பற்களையுடைய சீதையின் தலைவனான இராமன்; அமையச் சொன்ன - அடங்குக என்று கூறின; மறைமொழி - வேதமொழி; தத்திய கடல் திரை. முழக்கா நகர் - தவழ்ந்த கடலின் அலைகள் சப்தியாத நகரம்; முழக்கா நகர் - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இவ்வரலாறு 549. ஆம்பாட்டின் குறிப்பில் காண்க. (1)

570. மட்டகல முட்டாது - அறத்தின் முதலிலிருந்த அளவு நீங்க, (32 தருமத்தில்) குறையாது; மிச்சம் - மீதி; மாலையிட்டுக் கைப்பிடித்த என் ஐயற்கு எனப் பிரிக்க; ஐயன் - தலைவன், இங்குச் சிவனைக் காட்டிற்று; கால் கூப்பி - காலைக்குவித்து; கலைக்கலை -அடுக்குத்தொடர்; கடைக்கண் இட்டுத் தலைகவிழ்ந்து உள் குழைந்து முன்கைச்சரி சிலம்ப என்று பிரிக்க; கைச்சரி சிலம்ப - கைவளையல் சப்திக்க; சட்டுகம் - அகப்பை; அமுதிட்ட – உணவிட்ட (2)

571. மலை - கோவர்த்தன மலை; சொரிகல் மாரி - வினைத்தொகை; பூவை வண்ணன் - காயாம்பூ போன்ற நிறத்தன் (கண்ணன்); தம் ஐயனென - தமது தலைவன் என்று; சிலைவிடுத்திடும் நுதல் - மன்மதனும் நாணி வில்லைக் கீழே போட்டு விடும்படியான நெற்றி; இதழின் நல்ல வில்வ இலை எடுத்து அறுகு எடுத்து அலர் எடுத்து ஆசித்து எனப் பிரிக்க; ஆசித்து - ஆசைப்பட்டு; இதழின் - கொன்றை மலரைக் காட்டிலும், அறுகு - அறுகம் புல்; முக்கால் - மூன்று போது; உனைக்கால் துதித்தேயிருப்போர் - உனை என்பது வேற்றுமை மயக்கம், பூவின் மேல் தலையெடுத்திட - பூமியின்மேல் பிறக்குமாறு; அனுக்கிரகம் - கருணை; கண்ணனை வளர்த்த பெண்கள் அவன் தங்கையான உமையையும் வளர்த்துப் பூசிக்க அவர்களைப் பூமியின் மேல் செழிக்குமாறு கருணை செய்த சாத்தி என்று பொருள் கொள்க; பூமியே மோட்சம் கொடுக்க வல்லவுலகமாதலின் பூவின் மேற்றலை யெடுத்திட வென்றார். (3)

572. உனக்கு ஆலயம் பத்தி என்று பிரிக்க; பத்தி - வரிசை; உடுவின் ஆதியந்தம் - நட்சத்திரங்களின் முதலும் முடிவும்; மாலிகை - மாலை; பகலவன் - சூரியன்; அமுத கதிரவன் - சந்திரன்; உனது உபைய குழை - உனது இரண்டு குண்டலம்; அணி குதம்பை - அணிகின்ற காதணி; பார வட்டப் பொருப்பு - பூமியினுடைய சுற்றுமலைகள்; பார - இதில் 'அ' ஆறாம் வேற்றுமையுருபு; சில்லரிப் பணச் சிலம்பு - பரல்களையுடைய பருத்த சிலம்புகள்; அழிவிலா அலைத்து - அழிவிலாமல் வருத்தி; வான் பிரசித்தியே - உயர்ந்து பிரசித்தமாயிருப்பவளே; சக்கரவாளகிரியே உனக்கு ஆலயவரிசை, நட்சத்திரங்களே முத்தாரமாகிய மாலை, சூரியனும் சந்திரனுமே குண்டலங்களும் காதணியும், பூமியிலுள்ள மலைகள் யாவும் உனது கையில் பந்தும், கழங்கும், அம்மனைக் காய்களும், ஆதிசேடனும் வாசுகியுமே உன் கையிற் பரல்களையுடைய பருத்த சிலம்புகள் எனப் பொருள் கொள்க. (4)

573. கன்னல் அம் பாகென - கரும்புச் சாற்றினின்று எடுத்த அழகிய வெல்லப் பாகுபோல; கடவுளர் - தேவர்; தெள் அமுது - தெளிந்த தேவாமுதம்; கவிவாணரில் - கவிவாணரைப்போல; வாழ்நர் என்பதன் மரூஉ வாணர்; தொன்முறைத் தன்னமைத் தொண்டனென்றும் - பழைய காலத்தினின்று தனக்கு அமைந்த அடியனென்றும், தொண்டரின் கொத்தொடு அடிமையென்றும் - அடியார் கூட்டத்தோடு அடிமை என்றும்; குடி - குடும்பம்; பேபரம் என்பது ஆசிரியர் குடிப்பெயர் போலும். பெற்றிசேர் - நல் தன்மையமைந்த; சந்நிதி - தேவிக்கு முன்புறம்; சன்னதி - கோவில்; இப்பாட்டால் இந்நூலாசிரியர் வரலாறு சிறிது தெரிகிறது. பாகைப் போன்றும் தேனைப்போன்றும் அமுதம் போன்றும் பாட்டுப் பாடும் புலவர்களைப்போல பழைய காலத்தினின்றும் தனக்கு (உமை தனக்கு அமைந்த அடியனென்றும், அடியர் கூட்டத்தோடு அடிமையென்றும் அடியார்களது திறத்தின் அடிமைத் திறத்தில் நல்லது செய்து புகழ் அமைந்த நற்குடியென்றும், குற்றங்களில்லாத எமது பேபரம் குடும்பத்தில் சந்ததி முறையில் எமக்கு நற்றன்மையமைந்த உமது திருமுன் ‘வித்துவான்' என்றும் எனது பேரைச் சொல்லிக் கூப்பிட்டும், உமது திருக்கோயிலிலேயே குடியேற்றுவித்தும் இரட்சித்த தாய் என்று பொருள் கொள்க. பாகம்பிரியாவம்மை இவ்வாசிரியரைத் தனக்கு அமைந்த அடியவனென்றும், அடியார்கட்கு ஒத்து நடப்பதுடன் அடிமை வேலைகள் செய்வதில் புகழமைந்த குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் குற்றமில்லாத அவரது 'பேபரம்’ என்ற குடும்பத்தில் பரம்பரையாகத் தனக்கு வித்துவானாக இருக்க வேண்டுமென்றும் கூறினதோடு அம்மை தன் திருமுன் ஆசிரியரது பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கோவிலிலேயே குடியேறும்படி செய்தும் இரட்சித்தாள் என்பன விளங்குகின்றன காண்க. (5)

574. மரகத வருணன் - பச்சைநிறத்தன், (திருமால்); அருமறை வருணன் - பிரமன்; வால்முறை - வரலாற்றோடும் கூடிய முறைமை; சுருதியின் - வேதத்தைப்போன்று; விகசித பற்ப மலர்த் தேவியிருவர் - மலர்ந்த தாமரை மலரில் இருக்கும் கலைமகள், திருமகள் என்ற இருவர்; முருக்க மலர்போலும் இரதி - முருக்கம்பூப்போன்ற நிறமுடைய இரதி; மகிழ்வர தீர்த்தமிட - மகிழ்ந்து நீ வருவதற்குத் தண்ணீர் தெளிக்க; உனது சன்னிதி தானே பரகதி என - உனது கோயிலே மோட்சம் என்று; இமையவர் பட்டு விரித்தார்கள் - தேவர்கள் பட்டுத் துணியை விரித்தார்கள்; பெரியோர், கடவுளர், அரசர் உலாச்செல்லும் போது உயர்வு கருதி பட்டுத்துணியைக் கீழிட்டு அதன் மீது சிவிகை முதலானதில் செல்வர்; பதிவிரதம் உள மகளிர் - கற்பையுடைய பெண்கள்; குரவை - பெண்கள் கைக்கோத்தாடும் கூத்து; குரைகடல் திரைதவிர் - சப்திக்கும் கடலலை நீங்கின; குமரன் முருகன்; தமருகம் - உடுக்கை; கின்னரம் - ஓர்யாழ். (6)

575. சத்தி படைத்தாலே சகலமும் நிலையும் பெறுமலது அணுவும் சற்று அசையப் போமோ எனப்பிரிக்க; பெறுமலது - பெறுமேயல்லாது; கிருபை செய்திடில் இங்கு அறமொடு பொருள், இன்பம் திரள் தப்பாது கதி உனது அடி என்று - கருணை புரிந்தால் இங்கு அறத்தொடு பொருளும் இன்பமுமாகிய கூட்டங்கள் தவறாது உனது பாதமே அடைக்கலம் என்று; உயர்கதியவர் - சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்கள், கெச்சிதம் - முழக்கம்; முறைமுறை புகலும் புரதம் முறையாகக் கூறும் பரதசாஸ்திரம் ; சச்சபுடத்தாள் - பஞ்சதாளத்திலொன்றான சச்சபுடத்தை நடிக்கும் பாதத்தையுடையவளே; முதலர் - முதற்றேவர்கள்; அனவரதம் - தினம்; உறை மின் - வினைத் தொகை; குழையொரு விழி யம்பிகை - குழைந்து (இரங்கி) நோக்கும் ஒப்பற்ற கண்களையுடைய அம்பிகையே. (7)

576. பிரியாத் தேவலோகம், பிரியா - ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம்; ஆத்தானம் - உயர்ந்த இடம்; கற்பக அடவி - கற்பக மரஞ் சூழ்ந்த சோலை; வாழ் இந்திரன் - வினைத்தொகை; எழிலான் அந்தகன் மேற்றான - அழகினையுடைய யமனை மேற்கொண்ட; எட்டான திக்கில் உறைவோர் - அஷ்டதிக்குப் பாலகர்; நன்மை + தாய் = நற்றாய்; சுருதியால் நால் அங்கமும் வாய்ப்பாடமாய் வந்தன ஆர்த்தார்கள் - வேதத்தின்படி நான்கு உபநிடதமும் பாடி ஆரவாரித்தனர்; சேனம் பிரியாச்சூல - மாமிசத்திற்காக பருந்து நீங்காத சூலத்தையுடைய; சித்தனாக வந்து மதுரையில் விளையாடியதால் 'பாசித்தா' என்றார். கருணை மால் தேடும் பொருளாய் - கருணையையுடைய திருமால் தேடத்தகும் பொருளாக; பாரவெற்பு ஆலயம் கயிலை - கனமான மலையையே கோயிலாகக் கொண்ட கயிலை; கயிலை வாழ் தானம் பிரியாத்தேவர் - கயிலையில் வாழ்கின்ற இடத்தைப் பிரியாத சிவன்; பேதைபால் வந்து அருள் ஆர்த்து ஆர் கை - பேதையேனிடம் வந்து அருள்புரிதலைப் பொருந்திய கை. (8)

577. தொத்தாரம் - பூங்கொத்துக்கள் பொருந்திய மாலை; துங்கம் - பரிசுத்தம்; வாலை, மாலினி, மனோன்மணி - பார்வதியின் பெயர்கள்; சொற்கு ஆதிபத்தி மயிலே - சொற்களுக்கு உரிமையுடையவளான மயில் போன்றவளே; சிந்துரானன் வேதசீலர் - யானைமுகமுடைய விநாயகன்; வேலர் - முருகன்; அனமே - அன்னப்பறவையை யொப்பவளே; அறம் ஓர் எணாலும் - ஒப்பற்ற தருமம் முப்பத்திரண்டும் (எண் + நாலு ); செட்டு - சிக்கனம்; கந்தம் - வாசனை; கற்பு + ஆலயம் - கற்பாலயம்; கஞ்ச நான்முகன் - தாமரைமலரில் தோன்றிய பிரமன்; மாயனார் - திருமால்; கர்த்தர் - தலைவர்; பிரமனும் மாயனாரும் கர்த்தராகக் கூறும் என்று பொருள் கொள்க; பிரமமே சந்திரசேகர - கடவுளான சந்திரனைத் தரித்த சிவபெருமான்; நீலகோலமே - போலமே - கருநிறம் போன்ற அம்மே; அமே - அம்மே என்பதன் தொகுத்தல்; பிரமம் - 317-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. (9)

578. கடகம் சரி கலீரென - கடகமும் வளையும் கலீரென்று; சவடி ஓராபரணம்; ரத்னாதி - இரத்தினமிழைத்த ஆபரணம் முதலியன; கயல் - கயல்மீனை யொத்த கண்கள்; கண்கள் காதுவரை நீண்டிருந்ததால் "குலாவி வரு குழை" என்றார். பொன்தோடு - அழகிய தோடென்னு மாபரணம்; பொன்னரிமாலை - ஓர் ஆபரணம்; கொண்டை - கூந்தல் அலங்காரம் ஐந்தில் ஒன்று ; விலாசக் கொப்பு - அழகிய கொப்பெனும் காதாபரணம்; சுட்டி - நெற்றிச் சுட்டி; பொர - போர் செய்ய; மட்டாம் இலக்குமிலதாய் - அளவான ஒரு குறியிடம் இன்றி; நீதன் அளியும் பெருக - நீதிமானான சிவன் உன்னிடம் அன்பு அதி கரிக்க; வச்சிராயுதத்தன் - இந்திரன்; முடிதாழ்தரு - தலைவணங்கும்; சங்கர சுவாமிதம் அணங்கு, அரசு, வாமி என்று பிரித்து, சங்கரசுவாமி தம் அணங்கு, சங்கரசுவாமி தம் அரசு, சங்கரசுவாமி தம் வாமி என்று கூட்டுக; தருமந்திரமது ஆன - மாங்களாலும் வீடுகளாலுமான; வாமி - இடப்பாகத்தையுடையவள்; மேனை எல்லையில்லாமல் மகிழ்ச்சியடையவும், சிவன் உன்னிடம் அன்பு பெருகவும், இந்திரனும் முடிவணங்கும் சிவனின் இடப்பக்கத்திலுடையவளே சப்பாணி கொட்டுக என்று பொருள் கொள்க. (10)
----------------------------
முத்தப்பருவம்

579. செகத்தாய்க்கு - உலக மாதாவுக்கு; மக்கள் கேட்பதற்கு எளிதாயும், சொல்லுவதற்கு முடியாததாயும், மிகப் பெருமை பெற்ற தாய் உலகமாதாவுக்கு அபிடேகக்கிரீடம் வைத்தது போன்ற சிகரங்களையுடைய கைலாசமலையில் இருப்பவளும் கடலின் பக்கத்தில் இருப்பவளுமான நீ (தூத்துக்குடி கடற்கரையிலுள்ளது காண்க) ஒப்பற்ற பசுமையான கொம்பு போன்ற மேனை என்பவளிடம் இல்லாமல், மற்றோர் பசுங் கொம்பிடமான சிவபெருமானிடம் இருந்து அழகிய பிஞ்சாகவும், பசுங் காயாகவும், தூங்காது சிவந்த கண்களின் கருணைத்தேன் சுரந்து, பழம் பழுத்து எப்போதும் நினைத்திருக்கும் அடியர் மனம் இனிக்குமாறு (களிக்குமாறு) பழுத்த மூன்று கண்களையுடைய கனியான சிவபெருமானுக்கு இன்பத்தை மிகுவிக்கும் முத்தையொத்தவளே முத்தம் தருக எனப் பொருள் கொள்க. (1)

580. வெருக்கொண்டு - அஞ்சி; உனது குழற்கு உடைந்து வில்லும் பொழியும் அம்பினொடும் விண்மேற் செல்லும் கொண்மூ - உனது கூந்தலுக்குத் தோற்று இந்திர வில்லிட்டுப் பொழியும் மழையொடும் ஆகாயத்திற் செல்லும் மேகம்; அம்பு - நீர்; உரு - வடிவம்; வளை - சங்கு; உனதாட்கு உடைந்த பதுமம் - உன்னுடைய பாதங்களுக்குத் தோற்ற தாமரை; உன – ‘அ' உருபு, ஆறாம் வேற்றுமைப் பன்மை; உபைய தடந்தோள் - இரண்டு பெரிய தோள்கள்; கிளை - மூங்கில்; நின் சொற்கு இடைந்து - உனது சொல்லுக்குப் பின்னிட்டு; கழை - கரும்பு; ஊர் எங்கு எங்கணும் முத்துண்டு என்று பிரிக்க; இதழ் வாய் முருக்க மலர்க்குள் இருக்கும் முத்தம் - இதழ்பொருந்திய வாயான முருக்கம் பூவிலிருக்கும் முத்தம்; இப்பாட்டில் அம்மையது பல உறுப்புக்கட்குள்ள உவமானப் பொருள்கள் தோற்றுச் சென்று முத்துக்களை ஈனுவதாயிருக்க இதழாகிய முருக்கம்பூவும் முத்தைக் கொடுக்கின்றது என்னுமாறு முத்தம் கொடுப்பாயாக என்கிறார்.

"தந்தி வராக மருப்பிப்பி பூகந் தனிக்கதலி
நந்து சலஞ்சல மீன் றலை கொக்கு நளின மின்னார்
கந்தரஞ் சாலி கழைகன்ன லாவின்பல் கட்செவிகா
ரிந்து வுடும்புக ராமுத்த மீனு மிருபதுமே.” என்ற பாட்டை நோக்குக. (2)

581. தத்துந் தரங்கம் முழங்காவுன் சன்னிதானம் - மேல்வரும் அலை முழங்காத உன் கோயில்; இப்பாட்டில் முத்துக்களை எடுத்துத் தரம்பிரித்தல் கூறப்படுகிறது. சமுத்திர முத்தத்திற்குத் தரம் பிரித்தல் உண்டு. உன்வாய் முத்தத்திற்குத் தரம் பிரித்தலுளதோ என்கிறார். சப்பத்தி - தட்டை முத்து; இதற்குபயோகிக்கும் கருவிகளின் பெயர் வந்திருத்தல் காண்க. (3)

582. நத்து - சங்கு; நிலவு - சந்திரன்; சலஞ்சலம் - ஓர்வகைச் சங்கு, (வலம்புரி யாயிரஞ் சூழ்ந்த சங்கு); நாகு அணவாய்ப் படைத்த வலம்புரி - சங்குகள் சேர்ந்துண்டான வலம்புரிச் சங்கு; ஆயிரஞ் சங்குகள் சேர்ந்தது இடம்புரி. இடம்புரியாயிரம் சேர்ந்தது வலம்புரிச் சங்கு; நாகிளம் பூம்பாளை முருக்கவிழ் பூகத்தின் மிடற்றினிடத்த பழுக்காய் முத்தினுக்கு - மிக்க இளமையான பாளையையுடைய மலரும் பாக்குமரத்தின் நுனியிலுள்ள பாக்கிலுள்ள முத்தினுக்கு; பூங்கழை - அழகிய கரும்பு; கண் - மூங்கில்; ஓர் மெத்த முகில் முத்தினுக்கு - ஒப்பற்ற மென்மையான மேகத்தினின்று பிறந்த முத்துக்கு; கமல விகசிதப்பூ - மலர்ந்த தாமரைப்பூ. (4)

583. மலர்க்காவோங்கும் வானம் - மலர்களையுடைய சோலை ஒங்கும் ஆகாயம்; மறுகூடு ஒதுங்கும் வான் அத் தேம் மறை - தெருக்களின் இடையில் ஒதுங்கும் அந்நேரத்திலும் உயர்ந்த அத்தகைய இனிய வேதங்கள்; மறைபேசும் முத்தர் ஆசியே -வேதங்களையோதும் ஞானிகளின் தாயே; 'ஆச்சி' என்பது ஆசி என நின்றது; மணல் வீசும் முத்தம் ராசியே - மணலில் அலைகள் வீசும் முத்துக்களின் கூட்டம்; நிலை வீடு அருகுங் கற்பகமே - நிலைத்த மோட்சத்தைக் கிட்டச்செய்யும் கற்பக மொத்தவளே; நெறி வீட்டு இருக்குங் கற்பகம் உயர்ந்த நெறிப்படியமைந்த கோயிலிலுள்ள கற்பகமொத்தவளே; நியமர் பகரு மந்திரமே - முனிவர் துதிக்கும் மந்திரப்பொருளே; நிலவு நகர மந்திரமே - மந்திர நகரில் தங்குபவளே; இலக்காகிய சங்கரன் சகியே - குறியிடமான லிங்கவடிவமாகிய சிவன் பாகமாக உள்ளவளே; எழுதா வேத ரஞ்சகியே - எழுதாத வேதத்தின் இன்பப் பொருளே; எனை ஆண்டருளுஞ் சக்கரியே - என்னை அடிமைகொண்ட சக்கரப்படை யுடையவளே; இமையோர் வணங்கு அஞ்சு அக்கரியே - தேவர்கள் வணங்கும் பஞ்சாட்சர மந்திரப் பொருளே; முலைக்கோமளையே - முலைகளையுடைய அழகையுடையவளே; முறுவல் முத்தம் - புன்சிரிப்பை யுடைய முத்தம் (5)

584. மதிமண்டல நேர்மனைகளெல்லாம் மாடகூட வுப்பரிக்கை சந்திரமண்டலத்தைப் பொருந்திய வீடுகளெல்லாம் மெத்தைகளும் கூடங்களு முள்ள மாடி வீடுகள்; விரவி - கலந்து; வயங்குங் கதிர் வெண் தரள மணி - விளங்கும் ஒளியையுடைய வெள்ளிய முத்துமணி; தேவேந்திர பாக்கியம் - தேவேந்திரன் அனுபவிப்பதைப்போன்ற செல்வம்; அருந்ததி - வசிஷ்டர் மனைவி; கதிர் - சூரியன்; வழங்கு - கொடுக்கின்ற; வழங்கு காசும் வெள்ளிக்காசும் தங்கக் காசும் - இரவலருக்குக் கொடுக்கின்ற காசுகள் வெள்ளிக்காசும் தங்கக்காசும்; உற்று அங்கையால் தெளிக்கும் நீரும் கமகமெனக் கமழ் பன்னீர் - அடைந்து உள்ளங்கையால் தெருவில் தெளிக்கப்படுகின்ற நீரும் 'கமகம' வென்று வாசனை வீசும் பன்னீராகும். (6)

585. ததிகுடிக்கும் திரு முகில் - தயிரைக் குடிக்கும் திருமால்; சதுர்முகன் - பிரமன்; திருமாலுக்கும் பிரமனுக்கும் வேதத்திற்கும் ஒப்பற்ற முதல்வரான சங்கரர் என்க. அவரிடத்து அன்புடைய பார்பதி (பார்வதி) என்க. தளிர்க்கும் பதிவிரதைப் பெண் - செழித்த கற்புடையவள்; பணில மொய்க்குங் கரையிலே படர் சிறுத்தெண்டிரை கடல் தண்பதியின் முத்து என்று உரைசெய்து துதிசெய - சங்குகள் மொய்க்குங் கரையிலே வரும் சிறிய அலைகளையுடைய கடல் சூழ்ந்த அழகிய நகரின் முத்தை யொத்தவளே என்று சொல்லித் துதித்து; தொழுமவர் - வினையாலணையும் பெயர்; சரணம் - பாதம்; தந்தருள் துரைப்பெண் - கொடுக்கும் உயர்ந்த பெண்ணே. (7)

586. உப்பின் கடலிலே தெரியும் முத்தும் சொரியின் நத்தும் திரியும் - உப்பையுடைய கடலிலே ஆய்ந்தெடுத்த முத்தும், சுழல்கின்ற சங்கும் திரியும். எனவே அது உகந்ததல்ல). சிகர வெற்பின் தரளம் நிச்சம் தழல் மடுக்கும் - சிகரமுடைய மலையில் மூங்கிலிடம் உண்டான முத்துக்கள் நிச்சயம் அக்கினியால் உண்ணப்படும்; கரியமைக் கொண்டலில் குழலில் விளைக்கும் ககன முத்தம் - மிகக் கருமையான மேகத்தைக் காட்டிலும் கரிய கூந்தலில் உண்டாகும் பொன்மயமான முத்து; கழை - மூங்கில், இங்கு அம்மையின் தோள்களைக் காட்டிற்று; கரடம் - யானைமத்தகம், இங்கு அம்மையின் தனங்களைக் காட்டியது. கமலம் - தாமரை, இங்கு அம்மையின் முகத்தைக் காட்டியது; பரிமிதத் திண்கரி மருப்பின் பரிய முத்தம் சரவையே - எல்லையற்ற மிக்க வலியுள்ள யானைத் தந்தத்தினின்று உண்டாகும் முத்தம் அற்பமானது; பவளமுத்து எங்கு உள - பவளமும் முத்தும் எங்குமுள; செம்பவளமுத்து இங்கு அருமையே - சிவந்த பவளத்தினின்று முத்தம் தோன்றுவது அருமையேயாகும் (சிவந்த பவளம் போன்ற வாயினின்று முத்தம் கொடுப்பதால் இங்ஙனம் கூறினர்); கிரியளிக்கும் சிறு துரைப் பெண் - இமயமலையைப் பாதுகாக்கும் பருவதராசனுக்குப் பெண்ணே; கடலில் ஆய்ந்தெடுந்த முத்துக்கள் உப்பினையுடையதாதலால் நன்மையமைந்ததல்ல. மலையில் மூங்கிலில் உண்டாகும் முத்தும் நெருப்பால் உண்ணப்படும். அதுவும் நன்றல்ல; யானைத் தந்தத்திலுண்டான முத்தம் அற்பமானது; மிக்க கரிய மேகத்தைப்போன்ற கூந்தலில் உண்டாகும் முத்தம் தருக கழையையொத்த தோளிலுண்டாகும் முத்தம் தருக; யானை மத்தகம் போன்ற தனத்திலுண்டாகும் முத்தம் தருக; கமலம் போன்ற முகத்தில் முத்தம் தருக. பவளமும் முத்தும் எங்குமுண்டானாலும் சிவந்த பவளம் போன்ற வாயினின்று முத்தம் பெறுவது அருமையாகிறது; எனவே பருவதராசன் புத்திரியே முத்தம் தருக எனப் பொருள் கொள்க. யானை ஒன்றோடொன்று சண்டை யிடும் போது தந்தத்தில் தீப்பற்றி முத்துத் தீய்ந்து போவதால் அற்பமானது என்றார். (8)

587. கழையிலும் கழையிலும் கண்பட்ட முத்து - மூங்கிலிலும் கரும்பிலும் உண்டான முத்து, கார்வண்ண ரகுபதி கரத்தாலமைத்த இக்கடல் அகட்டு இப்பி முத்தும் - கருநிறமான இராமன் கரத்தால் அடங்குக என்று அசைத்துக் காட்டிய இந்தக் கடலினுள் உள்ள சங்கின் முத்தும்; செங்கையும் பன்னீரை விட்டு விளக்குவோம் - சிவந்த கைகளைப் பன்னீரால் கழுவுவோம்; எழுமுழக் கவுள் மதத்து அயிராவதப் பூண் இருப்பிடு மருப்பின் முத்து - ஏழு முழமுடைய மதச்சுவட்டைப் பெற்ற அயிராவதம் என்ற யானையின் கிம்புரியிட்ட தந்தத்தின் முத்து; இருப்பும் - இரும்பு என்பதன் வலித்தல்; எத்தனைக்குள்ளேயென மதிப்போம் - உன்னுடைய முத்தத்தை நினைக்க எவ்வளவில் ஒரு பாகமெனக் கருதுவோம்; தழைமலர்த் தொடைச் சொருகு அணிகுழல் - தழைத்த பூ மாலை சொருகி அணிந்த கூந்தல். (9)

588. மேலைத் தவத்தர்க்கு இருப்பிடமெனும் சொர்க்க வீட்டினிலு முத்தமில்லை - மேன்மையான முனிவர்கட்கு இருப்பிடமான சொர்க்கலோகத்திலும் முத்தம் (முத்தியுலகம்) இல்லை; வேழம் - யானை; முனை நீடும் இரு கோடுதொறும் - முனைவளர்ந்து நீண்டு கொண்டே செல்லும் தந்தந்தோறும். சேல் உற்பவித்த கற்ப உதரத்தெழு திரை கடலும் - சேல் மீன்கள் தோன்றிய தேவலோகத்தின் நடுவிடம் வரை எழும்பும் அலையையுடைய கடலிட முழுவதும்; செந்நெல் - சாலி நெல்; கன்னல் - கரும்பு; பால் ஒத்த செந்தமிழ்ப் பிள்ளைக்கவிக்குள் ஒன்பது நிலமும் முத்தம் இல்லை - பால்போன்றினிய செந்தமிழின் பிள்ளைக் கவிக்குள் இப்பருவந் தவிர மற்ற ஒன்பது இடத்திலும் முத்தம் (முத்தப் பருவமென்ற ஒன்று) இல்லை; பால் நிலாவுமிழ் வெண்மணல் திடரில் நெய்தற் பரப்புப் பொருப்பாகும் இத்தலத்தில் முத்துண்டு - பால் போன்ற நிலவு ஒளி வெள்ளிய மணல் திட்டில் வீசும் நெய்தல் நிலமான மணல் சூழ்ந்த இடம் மலைபோன்றாகும் இவ்விடத்தில் முத்துக்கள் உண்டு; இவ்விடம் என்பது தூத்துக்குடி; உன் வாய் முத்தும் உண்டு - உன்வாயினால் கொடுக்கும் முத்தமும் உண்டு; தார் மலை முத்தர் - மாலையணியும் சிவபெருமான்; தார் அமலை - மாலை சூடிய பார்வதியே; அமலை - பார்வதி. (10)
---------------------------------
வருகைப் பருவம்

589. கண்ணிலும் காணக்கிட்டாத தூரத்திலுள்ள அக்கடற்கரைகட்குச் செல்லும் யுகப்பிரளயம் போன்று சேர்ந்த அலை மடங்கிய கரிய கடலில் இருக்கும் கப்பல்கள், படகுகள் இவற்றின் முற்பக்கத்தில் தாங்கிய கப்பற் கயிற்றில் கட்டிவிட்ட நங்கூரத்தைச் சுறா மீன்கள் இரையென நினைத்து வாயில் அதக்கி இழுப்பக் கப்பலைச் செலுத்தும் மாலுமிகள், அலை அடங்கின நீர்நிலையில் பெரிய கசேந்திரன் என்ற யானை தனது நீண்ட துதிக்கையால் பிடித்துத் தன் காலைப் பிடித்த முதலையை இழுக்கக் கடைசியில் முடியாது "ஆதிமூலமே'' என்று அழைக்கும் குரல் போன்று "பார்வதியே! அபயம்" என்று ஓலமிடும் மந்திர நகரில் உறைபவளே, எனப் பொருள் கொள்க. கண்ணிலும் என்பது கணிலும் எனத் தொக்கது; கரைக்குக் கரைக்கு - அடுக்குத் தொடர்; கப்பல் படகு - உம்மைத்தொகை. அணியம் - கப்பல்களின் முற்பக்கம்; கம்பாகம் - கப்பற் கட்டும் கயிறு; பணிலம் - சங்கு. (1)

590. மச்சு அத்து உறை ஆயிரத்தோ ரெட்டும் ஆற்றா மேருப் பொருப்பு - மேல் நிலைகளான எல்லைகள் தங்கும் 1008- சிகரங்களையும் தாங்காமல் மூன்றை இழந்த மேருமலை; மச்சு - மேல்நிலை; அத்து - எல்லை; மேருமலை ஆயிரம் சிகரங்களை யுடையதென்றும் 1008 - சிகரம் உடையது என்றும் கூறுப. இவைகளில் ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் பலங்காட்டும் போட்டி உண்டானபோது வாயு மூன்று சிகரங்களை அடித்துச் சென்று கடலில் தள்ளினான். மேருப்பொருப்பாகிய தனம், மற்றைப் பொருப்பும் அடங்குதனம், இமவான் கைக்கு அடங்காத தனம், மார்பு அடங்காத தனம் என்று முலைகட்குப் பெருமை கொடுக்க; அடங்கு தனம் - வினைத்தொகை; இமவான் - பருவசன் தராண்; பொருப்பு - மலை; கரத்தால் நெருடி - கைகளால் தடவி; கடைவாய் இருபால் ஒழுக்கியபால் - வாய் ஓரத்தின் இருபக்கங்களிலும் ஒழுக்கிய முலைப்பால்; மிச்சில் - மிகுதி; சயிக்கியமாய் மின்னுந் தளிர்ப் பூந்துகில் நனைப்ப - மென்மையாய்ப் பிரகாசிக்கும் இலைத்தளிரையொத்த அழகிய ஆடையை நனைக்கவும்; பச்சைக் குழந்தை - இளங்குழந்தை. (2)

591. காது தடவும் விழி - காதளவு பரந்த கண்; கமகமென - இரட்டைக்கிளவி; கமகமெனக் கமழும் குமிழும் இதழ்க் கவிருந்தவிரா வதன சந்திரகாந்தி அணங்கு உன் திருமேனி - கமகமவென வாசனை வீசும் குமிழம் பூவும் (மூக்கு) உதடுகளாகிய முண் முருக்கம் பூவும் நீங்காத முகமாகிய சந்திர ஒளியையுடைய பெண்ணே, உன் உடலின்; உலகைச் சுற்றும் புணரி முற்றும் வளர்ந்து ஓங்கிப் பரந்த கடல் மடுக்கும் - உலகைச் சூழ்ந்த கடல் முழுதும் வளர்ந்து உயர்ந்து கடல் நீரையும் குடிக்கும்; கடலைக் குடிக்கும் சாதியெழு மாமுகில் என்க. மேகம் கடல் நீரைக் குடித்தலால் கூறினார். சாதியெழு மாமுகிலும் முகில் தாரை மழைவீழ் அகிலம் மகிதலமும் பச்சைப் படுத்தி - இனமான ஏழுவகை மேகக் கூட்டங்களையும், மேகத்தினின்று மழைத்துளி வீழும் எல்லா பூமியையும் பச்சைநிறமாகச் செய்து; விஷ்ணு சருவாங்கமும் கொண்டு - திருமாலின் எல்லா உறுப்புக்களிலுள்ள பச்சை நிறத்தைத்தான் அபகரித்துக்கொண்டு; ஐயர் படுப்பாதி சரீரம் - சிவபெருமானது சரிபாதியான உடலிலும்; பச்சைக்குழந்தை - பச்சை நிறம் பொருந்திய குழந்தை; உமாதேவியின் உடலின் பச்சைநிற மெழுந்து வளர்ந்து கடல் நீரைக்குடிக்கும் ஏழுவகை மேகக் கூட்டங்களையும், பூமியையும், பச்சை நிறமாகச் செய்து சிவபெருமானின் பாதி சரீரத்தினும் பச்சை நிறமாக்கினது; அத்தகைய குழந்தையே வருக எனப் பொருள் கொள்க. (3)

592. மேகம் சுரந்து பரந்தன்ன மேனி - கருமேகம் பெருகிப் பரந்ததைப் போன்ற கறுத்த உடல்; சூர்க்குலம் - சூரபதுமன் குலத்தைச் சேர்ந்த அரக்கர்; இடுக்கண் - துன்பம்; எறி மத்து எறிதயிரின் - வீசும் மத்தினால் கடையப்பட்ட தயிரைப்போல; வெருவி- கோபித்து; என் ஐயா - எனது தலைவ; அமரர் - தேவர்; அபய அஸ்தம் - 538-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. ஐம்முகத்தோடு அதோமுகமும் - இயற்கையான ஐந்து முகத்தோடு கீழ் முகமும் ஆக (ஆக ஆறுமுகங்களாயிற்று); அசுர குலத்தினால் பயந்த தேவர் கைலையையடைந்து சூரபதுமனால் நேர்ந்த துன்பங்களைக் கூறி முறையிட சிவபெருமான் அவர்கட்கு அபயமளித்து ஆறுமுகமாகி ஆறுமுகத்தின் நெற்றிக்கண்ணினின்றும் பிறந்த ஆறு தீப்பொறிகளை அக்கினியும், வாயுவும் சென்று சரவணப் பொய்கையிலிட அப்பொறி ஆறு குழந்தைகளாய்ப் பிறந்து கார்த்திகைப் பெண்கள் பாலூட்டச் சிறந்து சரவணைப் பொய்கையிலிருக்க அக்குழந்தைகளைப் பார்வதி சென்று ஒருசேர எடுக்க ஆறுமுகம், பன்னிரு கரமும் ஓருடலுமாக முலைப்பால் கொடுத்துச் சிவபெருமானிடம் விட்ட மந்திரநகரில் வசிப்பவளே, என்று பொருள் கொள்க. (4)

593. வாயில் புவன வட்டமிட்டு மடுத்தும் - உலகச் சுற்றுக்களை வாயிலிட்டு விழுங்கியும்; மருட்டுந் திருட்டுக் குணம் - மயக்கும் திருடுகின்ற குணம்; கோயிற் சிறப்பென்று ஆயர் சிறுகுடிலில் - கோயிலையொத்த சிறப்பென்று இடையர் வீட்டில்; அருச்சுனத்துக்கு ஊடு தவழ்ந்து - இரண்டு மருத மரங்களினிடையில் தவழ்ந்து சென்று; இது யசோதை உாலில் கண்ணனைக் கட்டின் போது கண்ணன் தவழ்ந்து சென்று மருத மரமாயிருந்த வித்தியாதரர்களது சாபத்தைப் போக்கினார். அருச்சுனம் - மருதமரம்; விழிகள்தொறு குடிகொண்டிருந்து என்று பிரிக்க; ஓர் அடி சம்பிரதாயத்தொடு பூ அளந்து நின்று - ஒரு பாதத்தினால் பூமியை முறைமைப்படி (திருவிக்கிரம அவதாரத்தில்) அளந்து நின்று; தமிழ்ப்பின் நடந்து - காஞ்சிபுரத்தில் சோழனது வெறுப்பால் கணிகண்ணர் தன் குருவான திருப்பாணாழ்வாரிடம் கூறி அந்நகரைவிட்டு நீங்க, திருப்பாணாழ்வாரும் பெரு மாளிடம்
"கணிகண்ண ன் ..........................பாய்சுருட்டிக் கொள்.''
என்று பாடப் பெருமாளும் நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு மூவரும் ஓரூரில் தங்கினர். அதுசமயம் பல்லவன் கோயிலில் சுவாமியில்லாமையையறிந்து தங்கியிருக்கும் பக்கத்தூருக்குச் சென்று மன்னிக்க வேண்டவும் ஆழ்வார் முன்பு பாடியபடியே பாடிக் கடைசியில் "பைந்நாகப்பாய் விரித்துக்கொள்'', எனப் பழையபடி, காஞ்சி சென்று சேர்ந்தனர். மதகரி - கசேந்திரன் என்ற யானை; தசத்தின் நூறு முடி படைத்த பாயில் சிவனேயெனக் கிடந்த பரன் - ஆயிரந் தலைகளையுடைய ஆதிசேடனாகிய பாயில் ஒன்றுமற்று பள்ளிகொண்ட திருமால்; தசம் - பத்து; பத்து நூறு - ஆயிரம்; சிவனேயெனக் கிடந்தான் என்பது ஒன்றுமற்று இருக்கும் நிலைக்குக் கூறும் உலக வழக்கு. (5)

594. யோக்கிய சிவாக்கியானச்சுடரின் ஒன்றாய் வியாபித்தவள் - நல்ல சிவஞானச் சுடரில் ஒன்றாய்க் கலந்தவள்; யோகத்தியான மௌனிகள் தம் உள்ளத்திருக்கும் உமை - யோகமும் தியானமும் செய்யும் ஞானிகளது மனத்திலிருக்கும் பார்வதியே; ஆக்கும் உலகம் - உன்னால் உண்டாக்கப்பட்ட உலகம்; அறம் வளர்த்த அன்னை-32- தருமங்களையும் வளர்த்ததால் இவ்வாறு கூறினார். எனை மதுரவாக்கியென உண்டாக்கி - என்னை இனிய வாக்கினை யுடையவனென்று சொல்லுமாறு உண்டாக்கச் செய்து; என் பாமாலை அடி சூடினள் - எனது பாட்டுக்களாலாகிய மாலையைப் பாதத்தில் சூடியவளே; வங்கிச பாரம்பரிய புத்திர பாக்கியம் - வமிச பரம்பரையில் மக்கட்செல்வம்; பவுசு - வாழ்வு. (6)

595. மகுடம் வனைய, மாம்பழக் கொண்டை வனைய வருக... என்று பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்க; மணிவணன் தங்கச்சி - திருமாலின் தங்கை; ‘தங்கை' தங்கச்சி என மருவியது; அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு; கைக்கு ரத்ன கடகம் இடுக வருக - கைகளுக்கு இரத்தினத்தாலான கடகமெனுமாபரணமணிய வருக; ஆபரண + ஆதி - ஆபரணாதி; செச்சை - வெட்சிமலர்; செங்காவியம் கட்கு அஞ்சன முந்தீட்ட வருக - காவி மலரையொத்த கண்களுக்கு மை தீட்டுவதற்கு வருக; பாதஞ்சேப்ப - பாதம் நடத்தலால் சிவக்குமாறு; மாம்பழக் கொண்டை - கூந்தலைக் கொண்டை போடும் வகைகளிலொன்று. மாம்பழக்கட்டு என்பது புடவை உடுக்கும் வகையிலொன்றாகும். இங்ஙனமே மேற்கூறிய கொண்டையும். (7)

596. கெண்டைக் கணைக்கால் - கெண்டைமீன் போன்ற கணைக்கால்; கிறுகிட - தடுமாற; கிண்கிணி - ஓர் வகைக் காலாபரணம்; அமுது - உணவு; கண்டசரம் - கழுத்திலணியும் ஓராபரணம்; அஞ்சனம் - மை; கொண்டை - தலையின் உச்சிக் கொண்டை; சுடிகை - நெற்றிச்சுட்டி; குமிழ் மூக்கு - குமிழம் பூ போன்ற மூக்கு; தழுக்கு - செழிப்பு, இங்குச் செழித்த மூக்குத்தியைக் காட்டியது. கொடுங்கை - வளைந்த கை; கொப்பும் குழையுங் குழைக்கணியேன் - கொப்பும், குண்டலமும் காதிற்கு அணிய மாட்டேன்; குழை - காது; (உ.ம்.) "ஊசலுற்றவர் குழைக் குடைந்திடுதலால்" (கந்தபு. திருநாட்டு 44). (8)

597. செய்ய - சிவந்த; புலம்ப - ஒலிக்க; பைய - மெதுவாக; வராத பராமுகம் ஏன் எனப்பிரிக்க. (9)

598. மரகத வருண வடிவுடை இமைய மலைமகள் - பச்சை நிறஉருவுடைய இமயமலையரசனின் மகளே; மதர்விழி மகர குழை விழி யுருவ - மதர்த்த கண்கள் போர் செய்யும் சுறாமீன்போன்ற வடிவுடைய குண்டலத்தின்மீது கண்களின் பார்வை ஊடுருவிச்செல்ல; சுரர் - தேவர்; முடி - தலை; துடியிடை - உடுக்கை போன்ற இடை; மகுடம் - கிரீடம்; பரிபுர சரண - சிலம்புகளையணிந்த பாதத்தையுடையவளே; விகசித கமலம் - மலர்ந்த தாமரை; உததி - கடல்; திரிபுரை முதலிய ஐந்து பேர்களும் சத்தியைக் குறிப்பன. (10)
----------------------------
அம்புலிப்பருவம்

599.
சந்திரன் பாகம்பிரியா அம்மை
1. சிவனுடைய ஒருபாகம் (பகுதி) போன்று தலையில் இருப்பான். பாதிபாகம் பெற்றதால் இளைப் பாகம் என்று சொல்லுவார்கள்.
2. குவளை மலரைச் சந்திரனால் மலரவும் அடக்கவும் முடியும், கைவாரம் கொள்ளல் - கூத்தை அடக்குதல். குவளை இவளுக்குக் கையில் அழகுத் தன்மையுடையதாயிருக்கும்.
3. நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவபெருமானுக்கு உரித்தானவன். இவளும் நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவபெருமானுக்கு உரித்தானவள்.
4. நல்லகலை (16- கலைகள் நிரம்பி) நிற்பான். இவளும் நல்லகலை (படிப்பு) நிரம்பி நிற்பாள்.
5. ஒப்பற்றவனாய் நீயுமலையில் (நீயும் அலையில் என்று பிரிக்க; அலை என்பது பாற்கடலைக் குறித்தது) பிறந்தாய். இவளும் மேகமலையில் (மேகம் சூழ்ந்த இமயமலையில்) பிறந்தாள்.

நிற்கு மேகமாய் நீயுமலையிற் பிறந்தாய் இவளு மேகமலையிற் பிறந்தாள் என்ற இந்த அடி இருவருக்கும் சொல்லில் ஒத்திருத்தல் காண்க. (1)

600. உலகத்தின் முதலும் முடிவும் சுற்றிய கடலின் வெள்ளத்தை உண்டெழுந்த மேகம்போன்று பரந்த நீர்ததும்பும் இளைய பசிய இலையும், வெண்மேகம், செம்மேகம் போன்று விரிந்துள்ள நுரையும் சேர்ந்து எழுந்தவைகளின் மத்தியில் தடைப்பட்ட மீன்களின் கூட்டமெல்லாம் நட்சத்திரங்களின் கூட்டம் போன்றும் அங்கங்கு இடம் கொண்டுள்ள நீரும், மீது ஒளிவிடும் ஆகாயமே சுவராக உள்ள கரைகளும் அழகாயுள்ள மேகமென்னும் வண்டுகள் ஊத மகரந்தப் பொடிகளால் சுற்றிய பரிவேடமிட்டு வாசனையும் பிரகாசமும் வீச தேனாகிய அமுதகலை ஒழுக பொருந்தி அலர்ந்த ஆகாயமாகிய குளத்தில் தாமரை மலர்போன்று உள்ளவனே என்று கூப்பிட்ட அம்மையோடு ஆட வா என்று பொருள் கொள்க. இப்பாட்டில் ஆகாயமே குளமாகவும், நட்சத்திரங்கள் குளத்திலுள்ள மீன்களாகவும், ஆகாயச்சுவர் கரைகளாகவும், நீருள்ள மேகம் நீர்ததும்பும் பசிய இலையாகவும், வெண் மேகமும் செம்மேகமும் நுரைகளாகவும், மேகம் வண்டுகளாகவும், பரிவேடம் மகரந்தப் பொடியாகவும், அமுதங் கொடுக்கும் சந்திர கலைகள் தேனாகவும், சந்திரன் தாமரை மலராகவும் கூறப்பட்டு சந்திரன் சூழ்நிலையும் அம்மை சூழ்நிலையும் ஒத்திருத்தல் காண்க. உறுபுனல் ததும்பு இளம் பாசடை எனப்பிரிக்க. ஏகோபவித்து - சேர்ந்து; பித்திகை - சுவர்; கூலம் - கரை; வாகு - அழகு; பிரசம் - தேன்; வார்ந்து ஒழுக - ஒருபொருட் பன்மொழி; வார்ந்து - ஒழுகி; வாவி - குளம். (2)

601.
சந்திரன் பாகம்பிரியா அம்மை
1. அழகிய சக்கர வட்டம் போன்றதில் ஒளி வீசிய பதினாறு கலைகள் உண்டு. அழகிய சக்கர வட்ட அறுகோண முக்கோணம் பொருந்தும் 64 கலைகள் இவளிடம் உள்ளன.
2. சாவருத்தமற்ற பிறப்பும் இறப்பும் வளர்வும் தேய்வும் மாதந்தோறும் வரும், மாச்சற - மாய்ச்சு அற, சாவருத்தம் நீங்கின எல்லையும் குறியும் இல்லாததொரு கற்பகாலமும் ஆராய்வின்றிச் செய்யத் தக்கதையுடையவள்; கர்த்தவியம் - செய்யத்தக்கது.
3. சொல்லுக் கடங்காத ஒப்பற்ற நட்சத்திரக் கூட்டங்கள் சூழ்ந்து பிரகாசிப்பான். பெரிய ஆகாயத்தினுள் பதினெட்டுக் கணங்களும் சூழ்ந்து பின் வரச் செல்லுவாள்.

முக்கோணம் என்பதனைச் 318-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. மந்திரத்து ஆச்சி - திருமந்திர நகரில் எழுந்தருளியுள்ள தாய். (3)
------------
602.
சந்திரன் பாகம்பிரியா அம்மை
1. உதையமனம் (உதயமாதல்) அத்த மனம் (மறைதல்) என்று இரண்டு மனமுண்டு. இவளுக்கு ஒரே மனம் தான் உண்டு.
2. மனதில் களங்கமுண்டு. இவள் மனதில் எவ்வித களங்கமும் இல்லை
3. உனது பெருமை நிலை நில்லாது சிதைந்தது. (மானம் - பெருமை) சந்திரன் கலைகள் தேய்ந்து குறையச் சாபம் கொடுத்ததைப் பற்றிக் கூறினர். இவளது பெருந்தன்மை அழியாது நிலைத்து நிற்கும்.
4. தேய்ந்தழியும் உடல் உண்டு. இவட்கு எத்தேச காலமும் அழிவில்லை.
5. மனமகிழ்கின்ற சிவனிடம் சேர்ந்து சடையினிடம் தங்குவை. இவள் எப்போதும் பாதிபாகமாய்ச் சேர்ந்து வசிப்பாள்.
6. இரவுக்குப் (யாசித்தற்கு) புறப்படுவான். இராத்திரியில் என்ற பொருள் வரும்போது இரவுக்கு வேற்றுமை மயக்கம்; யாசித்தல் சிவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி தக்கன் சாபம்போது யாசித்ததைக் காட்டும். இவள் உலகெலாம் பெற்று இனிது காப்பாற்றுவாள்.

(4)
-----------------
603. முகம் ஓரிரண்டு மூன்றுடை எம்பிரான் - ஐந்து முகமுடைய சிவபெருமான்; (ஓரிரண்டு மூன்று - ஐந்து); முடிக்கிடைகிடந்த நச்சு மூச்சுவிட்டு உடலம் நெளி முடவுட் படச்சிகையின் மூதரா - முடியினிடையிருந்த விஷமூச்சு விட்டு உடல் நெளிகின்ற சுருண்ட சடையில் இருக்கும் பாம்பு; அரா - கடைக்குறைந்து நீண்டது; பாசுரம் - வாசகநடை; சேடனுக்கு ஒப்பமைக்குஞ் சிகா ரதன ராகுத்தனை - ஆதிசேடனுக் கொப்பான தலையில் மாணிக்கமுடைய இராகு என்ற பாம்புவை; சீத்துவம் - திறம்; தாராகணம் - நட்சத்திரம்; திருமால் சிவனைச் சேவிக்கக் கைலாயம் சென்றபோது கருட வாகனத்தில் சென்று பின் தரிசிக்க, கருடன் அங்கு வர சிவன் முடியிலிருந்த நாகம் "கருடா சுகமோ'' என்று கேட்டதாம். நாகத்திற்குப் பகையாகிய கருடனிடம் சிவனின் சடையிடமிருக்கும் தைரியத்தால் கேட்டது; எனவே சந்திரன் சிவனின் பாதிபாகமான பார்வதியிடம் வந்து விளையாடினால் யாரையும் தட்டிப் பேசலாம். இராகுவையும் அடக்கலாம் என்று கூறுகிறார். இங்ஙனம் நன்னெறியில்,

“மெலியோர் வலிய விரவலரை யஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - வலிய
கடவுளவிர் சடைமேற் கட்செவி யஞ்சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.''

என்று வரும் பாட்டை ஓர்ந்துணர்க. இதற்குப் பின் வருமாறும் வேறு ஒருவிதமாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் ஆதிசேடன் என்னும் பாம்புக்கும் கருடனுக்கும் பகைமை ஏற்பட்டுப் போரிடத் தொடங்கினர். கருடனுக்குப் பயந்த ஆதிசேடன் பல இடங்களுக்கும் சென்று ஓடித் திரிந்து கடைசியில் சிறுபுலியூர்த்தலத்திற்கு ஓடி வந்து புஷ்கரிணிக் கரையில் பெருமானைக் குறித்துத் தவஞ் செய்தான். இவ்வாறு தவஞ்செய்யும் ஆதிசேடனுக்கிரங்கி அங்குக் கோயில் கொண்டுள்ள கிருபாசமுத்திரப் பெருமான் காட்சிகொடுத்து அபயந்தந்து அவனைத் திருவணையாகக் கொண்டு பாலசயனமாய்ச் சயனித்தருளினார். ஆதிசேடனும் புஜங்க சயனமாகிப் பயமற்றிருந்தான். கருடனும் ஆதிசேடனைப் பலவிடங்களில் தேடிக் காணாமல் இத்தலத்திற்கு வந்து அனந்தன் நிலையைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் பெருமாளை வணங்கி நின்றான் ; அப்போது "கருடா! சுகமா'' என்று கேட்க, கருடன் "இருக்குமிடத்திலிருந்தால் சுகம்தான்" என்று விடை கூறிப் பெருமாளின் திருவருள் பெற்றுச் சென்றான். அனந்தன் தவஞ் செய்ததால் அங்குள்ள புஷ்கரிணி தீர்த்தத்திற்கு “அனந்த புஷ்கரிணி" என்று பெயருண்டாயிற்று; இவ்வாறு பிரம்மாண்ட புராணத்தில் 4-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுளது. சிறுபுலியூர் தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் மாங்குடி இரயில்வே நிலையத்திற் கருகிலுள்ளது. (5)

604. மைம்முகடு மட்டும் அணவு இட்ட வெண் சுதை மாட மணி வெயில் எறித்தலாலும் - கரிய மேகமண்டலம் வரை அண்ணாந்துள்ள (உயர்ந்துள்ள) வெள்ளிய சுண்ணாம்பு பூசிய மாடங்களில் மாணிக்க மணியின் ஒளியாகிய வெயில் வீசுவதாலும்; வண்டலிடு வெண் மணல் - அலைகளால் குப்பைகளிடப்பட்ட வெள்ளிய மணல்; மணிமுத்து என்பதை முத்துமணி என மாறுக; பொம்மென - ஒலிக்குறிப்பிடைச் சொல்; முழக்கம் பெறுங் கயத்தலையிற் புரண்டு அலையில் ஆவிக்கரை புக்க இடம்புரி வலம்புரி தினஞ்சொரி நித்திலப் பிரபை - சப்தம் கொடுக்கும் குளங்களின் இடங்களில் புரண்டு அலையினால் குளக்கரையடைந்த இடம்புரிச் சங்கும் வலம்புரிச் சங்கும் தினம் சொரிகின்ற முத்தின் ஒளியும்; எல்லி - இரவு; உள்ளக் களங்கம் முதல் இல்லை - மனக்களங்கம் ஆதியாகக் கொண்டன இல்லை. (6)

605. பெரும்புவன வட்டம் வளை பூச் சக்கிரவாளப் பிறங்கலின் அடங்கும் அண்டப் பித்திகையும் எத்திகையும் முத்திகை (முற்றுகை) படுத்திப் புறப்படும் செலப்பிரபாகக் கருங்கடல் - பெரிய உலகச் சுற்றைச் சூழ்ந்த அழகிய சக்கரவாள மலையில் அடங்கும் ஆகாயமாகிய சுவரையும் எந்தத் திசைகளையும் முற்றுகையிட்டுப் புறப்படும் சலப்பிரவாகத்தையுடைய கரியகடல்; தன் வாய் திறவாத வண்ணம் - அலைகள் அடித்து ஒலிக்காதவாறு; இவட்குக் கைவந்தது - இவளுக்குச் சித்தி பெற்றது; உனக்கு ஐயறவு இலாதபடி கண்காண ஒப்பிக்கவோ - உனக்குச் சந்தேகமிலாதபடி பிரத்தியட்சமாகக் காணுமாறு செய்து காட்டவோ; யோசனை-617-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. உனை அருந்தும் இராகுத்தனையும் என்றும் வாய்திறவாது வாய் கட்டிவிடுவாள் எனப் பிரிக்க; இராகு - சந்திரனை விழுங்கும் பாம்பு. (7)

606. மிருகாபதிச் சிங்க ஏறு எனத் தக்கன் - மிருகங்களுக்குத் தலைமையான ஆண் சிங்கம் போன்ற பலம் படைத்த தக்ஷன்; விக்கினேசுரர் - விநாயகர்; பருகு + ஆர் + அழல் கடவுள் - எல்லாவற்றையும் உண்ணும் அரிய அக்கினி தேவன்; உதைய பரிதி - உதைய சூரியன்; பல் தகர்த்து - பல்லை உடைத்து: உன்னை - சந்திரனாகிய உன்னை; மிகுத் தெழு சினம் திருகா அழல் பொறி தெறிப்பக் குறித்த கீழ்த்திசை நோக்கி வண்டு உறுக்கித் திருமந்திர ரகசியத் தலத்தினுக்கு ஆட்சி தேவாலயத்து ஈசான திக்கு அருகாக ஆயத்தமாய் நின்றது அறிகிலாய் - மிக்கெழுகின்ற கோபம் முறுக்கி தீப்பொறி சிதற உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கி அம்பை நாணியில் உறுக்கித் திருமந்திர தலத்தினுக்கு மேன்மையான கோயிலில் வடமேற்கு மூலையில் அருகாக சகல தயாரிப்புக்களுடன் நின்றதை அறியவில்லையா? வீரபத்திரன்:-65-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. (8)

607. மழைத்தடங் கொடுமுடி மணிக்ககன முகடு உருவ மந்தரம் நிறுத்தி - மேகங்கள் தங்கும் சிகரத்தையுடைய அழகிய ஆகாய உச்சியை உருவும்படியான மந்தரமலையை மத்தாக நிறுத்தி; நெற்றி வட்டச் சிகாரதன பட்டத்து நெட்டுடல் வாசுகிதனைப் பிடித்துக் குழைத்துப் பிணித்து - நெற்றிச் சுற்றில் உயர்ந்த மாணிக்கமான பட்டத்தையும் நீண்ட உடலையுமுடைய வாசுகி எனும் பாம்பைப் பிடித்து வளையச் செய்து மந்தர மலையில் கட்டி; தடத் திருப்பாற்கடல் குண்டு அகழி அகடு உடைபடக் குமைத்து - பெரிய திருப்பாற்கடலின் ஆழமான நீர்நிலையின் மத்தியபாகம் உடைபடுமாறு கடைதலால் சோர்வடையச் செய்து; திமிலகுமிலம் - இரைச்சல்; திமிலகுமிலத்து உனை என்று பிரிக்க; தழைத்த துளவப் படலை மின்னு சொர்னப் படாம் தாங்கு பங்கயலோசனன் தங்கை - தழைத்த துளவ மாலை மின்னுகின்ற பொன் பட்டாடைகளைத் தாங்கும் திருமாலின் தங்கை; கண்டாய் - முன்னிலையசை; சந்திரன் திருப்பாற்கடல் கடையும் போது தறியாக இருந்ததால் இங்ஙன் கூறினர். (9)

608. முடிக்கண் பணச்சிகை மணித்தலையின் நெட்டுடல் முடக்கிப் படுத்த பகுவாய் மூதரா - முடியினிடம் பட உச்சி பொருந்திய மாணிக்கமுடைய தலையின் நீண்ட உடலை வளைத்துப் படுத்த பிளந்த வாயையுடைய இராகு (கேது)வெனும் பாம்பு; கடுப்பட - விஷம் படுமாறு; வாயிற்கு உள்ளகப்பட்ட தண்ணீர் விடம் தலையினிற் கொள்ளாதிருக்க மந்திரம் படிக்கக் கருத்து உன் உளத்து அடைந்தால் - அப்பாம்பின் வாயினுக்கு உள் அகப்பட்ட தண்ணீர் தலையினில் விடமாக மாறாதிருப்பதற்கு மந்திரம் படிக்குமாறு எண்ணம் உன் மனதில் அடைந்தால் ; இருப்பது மந்திரபீடம் இவள் பாற்படி - இவ்வம்மை தங்கியிருப்பது மந்திர நகரெனும் இடமாகவே இவளிடம் படித்தறி; இந்தப் பதிக்கலால் மற்றைப் பதிக்கு மந்திரமில்லை - இந்த நகருக்கு அல்லாமல் மற்றைய நகர்களுக்கு மந்திரநகர் என்று பெயரில்லை; அடைக்கலமெனச் சொல் உனக்குமோர் இடுக்கண் இலை - சரண மென்று சொல் உனக்கு எத்தகைய துன்பமுமில்லை. (10)
----------------------------
அம்மானைப்பருவம்

609. வெம்புலியும் எண்கும் மடன் மேவு கடுவாய் ஓடி மடங்கலும் - கொடிய புலியும் கரடியும் அறியாமையையுடைய புலிக்குடத்தியும் ஓடி மடங்குதலடையவும்; மடங்கலேறு மிருகாதி நாகாதி புகு தாது - ஆண் சிங்கம் முதலிய மிருக வகைகளும், பாம்பு வகைகளும் அடைந்து துன்புறுத்தாது; அனவரதமும் பைம்புலின் இதழ் கறிக்கும்படி பிரக்கினை படைத்து - தினமும் பசிய புல்லினால் உதடு கறிக்கும்படி உணர்ச்சியை உண்டாக்கி; பிறங்கு ஞானப் பைஞ்சுடர் எறிக்கும் இமையாசல மனைக்குரிய பன்னி - விளங்கும் ஞானத்தின் பசுமையான ஒளிவீசும் இமயமலை வீட்டுக்குரிய மனைவியான மேனை; துடை மஞ்சம் நீங்கி - துடையாகிய கட்டிலை விட்டு நீங்கி, உம்பல் இபம் - எருது, யானை இவைகளின்மீதும்; கயந்தலை - நீர் நிலை; நிலாவின் முற்றம் - மாளிகையின் மேல்பாகமான சந்திர காந்தக்கல் பதித்த இடம். (1)

610. பொய்ம்மானை அம்மான் ஓர் பொன்மானெனப் பூம்பொகுட்டு உறை பிராட்டி காட்ட - இராவணனால் வஞ்சகமாக வந்த மானை (மாரீசன்) அந்த மான் ஓர் பொன் மானென்று தாமரைப் பூவில் தங்கும் சீதை காட்ட; போர்புரி தடக்கைதனில் வார்சிலை யெடுத்துப் பின் ஏகுவோன் தாரை வார்க்க - போர் புரிகின்ற விசாலம்பொருந்திய கையில் நீண்ட வில்லெடுத்துப் பின் செல்லும் திருமால் தாரை வார்க்கவும்; இம்மானை ஏத்து உந்தி அங்கமல கர்ப்போதய சதுர்மறைத் திருமுகத்து எழில் காட்டும் பரமேட்டி- இந்தப் பெண்ணான பாகம்பிரியாவம்மையைத் துதிக்கும் நாபித்தாமரையின் கர்ப்பத்தினின்று உதித்த நான்கு வேதங்களான திருமுகத்தின் அழகைக் காட்டும் பிரமன்; மறை நெறி - வேதநெறி; இருமணம் - பெரிய திருக்கல்யாணம்; கைம்மானை வைத்து நின் கைப் பிடித்திட்ட - கையிலுள்ள மானைக் கீழே வைத்து விட்டு உனது, கையைப் பிடித்த; கண்ணுதற் பெம்மான் - நெற்றிக் கண்ணையுடைய தலைவன்; கடைக்கணின் - கண்ணின் கடைப் பார்வையால்; நோக்கும் அம்மானையருள் தம் விழியம்மானை - பார்க்கும். அழகிய மானையொத்த அருள் கூர்கின்ற கண்களையுடைய அம்மையே; இறுதியிலுள்ள அம்மானை என்பது அம்மனை என்பதன் நீட்டல்; (அம்மனை - தாய்); இதனைப்போன்று கலிங்கத்துப் பரணியின் "புயல் வண்ணன் புனல் வார்க்கப் பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை, செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்," என்ற பாட்டிலும் வந்துள்ளமை காண்க. இங்கு மானை என்ற சொல் திருப்பித்திருப்பி வரப்பாடியது காண்க. (2)

611. மணியம்மனை - முத்தினாலாகிய அம்மனை; பிறங்கு தாரா கணம் - விளங்கும் நட்சத்திரக் கூட்டம்; தடம் ககனமுகடு தடவித் திரும்பித் தடம் கைகள் தங்கும் - விசாலமான ஆகாயவுச்சியைத் தடவித் திரும்பி நீண்ட கைகளில் தங்கும்; உடுக்குழுவு இது அம்மனை இது உயர்வது இது தாழ்வது இது தீர்வதெனத் தெளிவுறா என்று பிரிக்க; படி - பூமி; பங்கேருகத்து அணங்கு - தாமரையிலிருக்கும் இலக்குமி; படிகத்து உருப்படும் அணங்கும் கண்ணாடி யொத்த வெண்மையான வடிவத்தையுடைய சரஸ்வதியும், பிடிக்கின்ற முத்து அம்மனைகளை யெடுத்து வீசும் வேகத்தில் விளங்கும் நட்சத்திரக் கூட்டத்தைப் பிடுங்கி, விசாலமான ஆகாய உச்சிவரை தடவித் திரும்பிப் பெரிய கைகளில் தங்கும் நட்சத்திரக்கூட்டமிது, அம்மானைக்காய் இது, இது உயர்ந்தது, இது தாழ்ந்தது எனவே நீக்கத்தக்கது என மனம் தெளிவடையாமல் உடுக்கூட்டத்தையும், அம்மனையையும் சேரப்பிடித்திருந்து அண்ணாந்து விளையாடவும் அதனால் உதிர்ந்த நட்சத்திரங்களும் அம்மனையிலுள்ள முத்தும் பூமியிலிருக்க முத்தோடு நட்சத்திரங்களையும் பொருக்கித் திருமகளும், கலைமகளும் தங்களது மார்பின் மீது அணைத்துக் கொண்டு அருகில் வந்து, நின்று அடிக்கடி யெடுத்துக் கைநீட்ட நிதானமாய் அம்மானையாடுவாயாக என் முடிக்க. அவதானம் - நிதானம். (3)

612. மட்டு - அளவு; சக்கரவாளம் - சக்கரவாளமலை; மற்று அப்பெரும் புவனமும் எனப்பிரிக்க; மாதிரம் - திக்கு; மேகமுதல் மண்டலாதியந்தம் - மேக மண்டலம் முதல் சந்திர மண்டலம், சூரிய மண்டலம் முதலியவும் இறுதி மண்டலங்களும்; சரம் + அசரம் - சராசரம்; கட்டாய் நடத்தினபடி - ஆணையாய் நடத்தினபடி; நின்கை பார்த்திருக்கும் - உனது உதவியையே பார்த்திருக்கும்; கண்ணுதற் பெருமான் - நெற்றிக் கண்ணையுடைய சிவன்; நின்னருள் படைத்தலது கர்த்தவிய நடத்துதற்கே ஒட்டாது - உன்னுடைய அருள் கிடைக் காமல் செய்யத்தக்கது செய்ய முடியாது; உன்னுடைய செயல் அம்மனைகள் அங்கு ஆடில் உன்னிழலும் ஒக்க ஆடும் நீயாடினால் உலக முதல் ஆடும் - உன்னுடைய செயல் யாது எனின் அம்மனைகளை அங்கு ஆடினால் உன்னிழலும் ஒருசேர ஆடும், நீயாடினால் உலகத்திலுள்ள உயிருள்ளன, உயிரற்றன எல்லாமாடும்; அட்டாவதானமாய் - ஒரே வேளையி லெட்டுக் காரியத்தைச் சிந்திப்பவளாய். (4)

613. பூட்டும்கலன் - பூட்டுமாபரணம்; பொற்சரி - பொன்வளை; புலம்ப - ஒலிக்க; சிலம்பு அலம்ப - சிலம்பு ஒலிக்க; பொருகயற் கண்ணிணைகள் ஆடாமல் அம்மனை பிடித்தாடுமுன் சித்திரஞ் சூட்டும் பணா முடிச்சேடன் சிகாமணிச் சுடிகை தனை ஆட்டும் - போர்செய்கின்ற கயல்மீன் போன்ற இருகண்கள் ஆடாமல் அம்மனையைப் பிடித்து ஆடுமுன் சிறந்த அழகு வாய்ந்த படங்களைப் பெற்ற தலையையுடைய ஆதிசேடனது மாணிக்கமுடைய உச்சியையாட்டும்; வட்டச்சுற்று உததி காந்தப் பொருப்பெட்டும் ஒக்கத் துளங்கக் கழங்கின் ஆட்டும் - வட்டமாகச் சூழ்ந்த கடல் காந்தவும் எட்டு மலைகளும் ஒருசேர அசைய கழற்சிக்காய் எறிவதால் ஆட்டும்; நீட்டும் தடக்கைப் பொருப்பெட்டும் முட்டும் நானில வலயம் முற்றும் ஆட்டும் - நீட்டும் தும்பிக்கையைப் பெற்ற மலைபோன்ற யானைகளெட்டும் தாங்கும் பூமிமுழுவதையும் ஆட்டும்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நால்வகை நிலங்களாதலால் 'நானிலம்' என்றார். நீற்று ஒளி பழுத்து அழகு எறிக்கும் என் ஐயன் நிலாத்தவழ் சடாமுடியை ஆட்டும் - திருநீற்றின் ஒளிமிக்கு அழகு வீசும் சிவனது நிலவு விளங்கும் சடாமுடியை யாட்டும்; வித்தாரம் - திறம்; அம்மை அம்மனை பிடித்தாடுமுன் ஆதிசேடனது சுடிகையை யாட்டும், கடல் காந்த, எட்டு மலைகளும் அசைய ஆட்டும், யானைகளால் தாங்கப்படும் பூமியை யாட்டும், சிவனது சடாமுடியை யாட்டும், இத்தகைய திறம் படைத்த உனது செங்கையின் திறமையை யார் தான் அறிவார் என்று பொருள் கொள்க. (5)

614. முகில் ஆண்ட மண்டலத்தப்பால் விளக்கொளி முளைத்தனைய நட்சத்திரம் முறை முறை எறிந்த அம்மனை வான் முகட்டில் பதிந்ததென மானுமன்றே - மேகம் நிரம்பிய மண்டலத்திற்கப்பால் முறைமுறையாக எறிந்த அம்மனை சென்று ஆகாயத் துச்சியில் பதிந்து விளக்கொளி முளைத்தது போன்று ஒத்திருக்குமல்லவா; நகில் ஆண்ட செங்கையை யடைந்திடு முகிழ்த்ததின் நாற்பெருங்கதி தனிற்போய் நற்பெரும் பதவியைப் பெற்று மெய்ஞ்ஞானத்தினாற் சுடர் எறித்தல் ஏய்க்கும் - முலைகளையொத்த அம்மனையையாளும் கைகளை அவை அடைந்திட்டுக் குவியும்போது நால்வகைப் பிறவியில் சென்று நல்ல பதவியைப் பெற்று மெய்ஞ்ஞானத்தினாற் ஒளிவிடுவதை யொத்திருக்கும்; செம்மை + அடி - சேவடி; சொர்க்கம்-மேலுலகம். (6)

615. தரங்கம் இரங்கிய - அலைகளொலிக்கும்; சத்த சமுத்திரம் உவட்டு எறிய - ஏழு சமுத்திரங்களும் பெருக்கெடுத்து வீச; தலையுறு மண்டலம் இட்டு எழு நெட்டுடல் சருவமும் மண்டலமிட்டு ஊடு பிலத்தின் ஒளித்திடும் விடம் முடவுட்பட சேடனை - தலையிலே தாங்கின பூமியைக் கீழேபோட்டு விட்டு எழுந்து நீண்ட உடல் பூராவையும் வட்டமாகச் சுற்றி இடையிலேயுள்ள பிலத்துவாரத்தில் ஒளித்திடும் விடமுடைய வளைந்த ஆதிசேடனை; நீடு உச்சி பிளக்கப் பற்றி வளைத்து அலகு உதறிக் கதற முறித்து ஈடு செலுத்திக் கக்கும் இரத்தம் எடுக்கக் கொத்தியெடுத்து - நீண்ட தலையைப் பிளக்கப் பிடித்து வளைத்து, அலகினால் உதறி, சேடன் கதறுமாறு முறித்துத் தன் வலிமையைச் செலுத்தி அதனால் கக்குமிரத்தத்தை யெடுப்பதற்குக் கொத்தவும்; இருசிறை பட்டதில் அண்ட கடாகமும் இடிபட மடமடென ஆடுமயில் பெருமான் - இரண்டு சிறகுகளின் காற்று பட்டதினால் பூமி, ஆகாயம் முதலியன சரியவும் மடமடவென்று ஆடச்செய்கின்ற மயிலை வாகனமாகக் கொண்ட முருகனை; ஆள் பரமன் - என்னையாள்கின்ற பரமன், வினைத்தொகை. (7)

616. பயிரவி, வராளி, முகாரி முதலியன சங்கீத வகைகள்; பாடினி பாரதி - விறலியாகிய சரஸ்வதி; தோடு அங்குழை நேர் வைத்தமை நல்யாழ் சுருதி செய் கீர்த்தனம் - காதணியான அழகிய குண்டலத்தில் பாடும் கந்தருவர் பாட்டுப்போன்று வைத்தமைந்த நல்லயாழின் வேதக் கீர்த்தனங்களும்; பாரதிபோல் உம்பர் தொனிக்க என இயைக்க. பாற்கடலாம் மாடந்தனில் உறையும் மரகத வண்ணன் - பாற்கடலாகிய வீட்டில் வாழும் திருமால்; மார்பின் அணங்கு அரசு - மார்பில் வீற்றிருக்கும் பெண்களுக்குக்கெல்லாம் தலைவி; வம்மின் - ஏவலொருமை வினைமுற்று. (8)

617. முதிர் உலகுக்கு உடையாடையெனத் திகழ் முந்நீர் எழுகடல் உள் மோது தடங்கரையில் திரைதத்தி முழக்கா மைக்கடல் - உலகுக்குடைய வாடையென விளங்கும் மூன்று தன்மைகளையுடைய பழைய ஏழு கடல்களும் உள்ளே மோதுகின்ற பெரிய கரையில் அலைகள் தத்தி முழக்காத கரியகடல், மதியுவமான இடம்புரியிப்பி - சந்திரனை உவமானமாகச் சொல்கின்ற இடம்புரிச்சங்கு; மணல் + திடர் - மணற்றிடர், தரளம் - முத்து; துதிபுரி சுற்றுக்கு ஒவ்வொரு யோசனை தூரத்துள் குயவர் சுள்ளையொடும் சர்ச்சரைய பனைத்தொகை துன்னாதலினாலும் அதிசயமாகிய மந்திரம் - துதிபுரிகின்ற சுற்று வட்டாரத்தில் நாற்பது மைல் தூரத்தில் குயவர் சூளைகளும் சருக்கரையையுடைய பனைமரங்களின் தொகைகளும் அடையாததால் அதிசயமாகிய மந்திர நகர்; பனைமரத்தினின்று வெல்லம், கற்கண்டு முதலியன எடுத்தலால் சர்ச்சரைய பனைத்தொகை யென்றார். யோசனை - நான்கு குரோசங் கொண்டது என்றும் கூறுவர். குரோசம் 10,000 முழங்கொண்டது. (9)

618. கரம் அலையொலியும் - கைபோன்ற அலைகளின் ஒலியும்; கம்பராமாயணம் குகப் படலத்தில் சீதை நீராடும்போது கங்கை தன் அலைகளாகிய கையினால் தாயைப்போன்று நீராட்டினாள் என வருதல் காண்க. புளினம் திடர்படு கம்புள் இனம் - மணற்றிட்டில் உள்ள நீர்க் கோழிக் கூட்டம்; கப்பல் இடும் படகு ஒப்பமிடும் பலகைத் தறை கட்டு ஒலியும் என்று பிரிக்க; தறை - ஆணி முதலியன அடிக்கும் சப்தம்; சரிவளை - சரியும் வளையல்; தரளத் தரம் தெரிய தட்டிய முத்துப் பெட்டியின் ஒலியும் - முத்துக்களின் வகைகளை யாராய்வதற்குத் தட்டிய முத்துப் பெட்டிகளின் சப்தமும்; தருலோகமும் அணவ - கற்பகத் தருவுள்ள தேவலோகத்தையும் எட்ட; இடைச் சிறியாள் தடமுலைப் பெரியாள் கரியாள் திருமறை தேடுவதற்கு அரியாள் என்று பிரிக்க; சிறியாள், பெரியாள்-முரண்டொடை; கரியாள்-நீல நிறத்தை யுடையவள். (10)
--------------------------------------
நீராடற்பருவம்

619. துள்ளும் பொருங்கயல் இரண்டு அருகினும் புரள் துணை விழிப்படையை மானும் - துள்ளும், போர்செய்கின்ற கயல் மீன்கள் இரண்டு அருகில் புரள்கின்ற இரண்டு விழிகளாகிய வேற்படையை யொத்திருக்கும்; சுழித்துச் சுழித்துச் சுழிக்கும் ஊழ் உந்தியஞ் சுழி போலும் - மிக்க சுழிகளையுடைய மலர்ந்த கொப்பூழ் அழகிய சுழியை ஒத்திருக்கும்; நீரின் வழியே கொள்ளும் கருஞ் சைவலக் கொத்து இதழ்ச் சொரு கொந்தளப் பந்தி நிகரும் - நீரின் வழியே கொள்ளும் கரிய பாசிக்கூட்டம் பூவணிந்த கூந்தல் தொகுதியை ஒத்திருக்கும்; குளிர்ந்தது உமிழும் முத்து நிலவொத்து அழகு எறித்த குமுத குறு மூரல் நேரும் - குளிர்ச்சியை வெளிவிடும் முத்து சந்திர நிலவைப் போன்று அழகு வீசிய குமுதவாயின் புன்சிரிப்பைப் போன்றிருக்கும்; தெள்ளும் திரைக்கரம் வளைக்கரம் எடுத்துனைச் சீக்கிரம் அழைத்தல் ஏய்க்கும் - தெளிந்த அலையாகிய கைகள், வளையலையுடைய கை தூக்கி உன்னைச் சீக்கிரம் வாவென்று அழைப்பதை ஒத்திருக்கும்; பொருநை - தாம்பிரபர்ணி; வெள்ளஞ் சிலம்பு கொள் தீரர் - கங்கை வெள்ள ஒலியைச் சடையில் கொண்ட தீரமுடைய சிவன். (1)

620.
தாமிரபர்ணி பாகம்பிரியா அம்மை
1. குற்றமில்லாத தென் திசையில் மேகம் தங்கும் பனி மூடிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்தாள். வடக்குத் திக்கில் உயர்ந்த சிகரமுடைய மேகம் தங்கும் இமயமலையிடம் பிறந்தாள்.
2. (மூலம் விடுபட்டது).
வலிமையுடன் பலவகை மாறுபாடுகளினால் வழி மாறித் தோன்ற வந்து உலகளித் திடுவாள்
ஒளிவிடும் சிவந்த சிவனிடம் புகுந்தால் இவள் கறுப்பாயிருப்பாள்.
வலிமை தங்கு ஆறுமுகமும் ஓருடலும் தோன்ற முருகனை யளித்து உலகைப் பாதுகாத்தாள்

(2)
---------------
621. மூல ஓலைப் பிரதி கிடைக்காமல் பிரதி செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதியே இருத்தலால் முதல் இருவரிகளின் பொருள் அறிய முடியவில்லை. சாகம் - தேக்கமரம்; பூகம் - பாக்கு மரம்; தளவம் - முல்லை; துளவம் - துளசி; ஆதலால் நீ இந்நீராடி விளை யாடினால் - என்று பிரிக்க; அச்சுதரெனச் சொல் - திருமால் என்று சொல்லுமாறு. (3)

622. வாலைப்பிராயம் - இளமைப்பருவம்; செம்பொன் மலையரையன் மனையாட்டி - இமயமலையரசன் மனைவியான மேனை; உள் மகிழ்ந்து - மனம் மகிழ்ந்து; விளையாடுதலினும் - விளையாடுவதைக் காட்டிலும்; களப தனபாரஞ் சுமந்து ஒசிந்து இறும் இடைக்கைத் தாயர் - வாசனைச் சாந்து பூசிய முலைகளாகிய பாரத்தைச் சுமந்து அசைந்து அதனால் ஒடியும் இடையையுடைய செவிலித்தாயர்; பொன் - தானை ஒக்கலை இருந்து எண்ணோடு எண்கலை தெரிந்து அம்புலி காட்டி விளையாடுதலினும் - அழகிய உடையணிந்துள்ள இடுப்பிலிருந்து 64 கலைகளையும் தெரிந்து சந்திரனைக் காட்டி விளையாடுவதைக் காட்டிலும்; இன் - ஐந்தாம் வேற்றுமை உறழ்பொருவு; அளகபாரக் கமல முத்து இலக நளின மனையாரெனும் தோழியர் - கூந்தலின் பாரமும் தாமரையி னின்று பிறந்த முத்தின் மாலையும் விளங்கத் திருமகளோ என்னும் தோழிகள்; பிரபாகம் - பிரவாகம். (4)

623. வள்ளம் சிறந்த முலைமார்பில் அணியாடும் - கிண்ணம் போன்று சிறந்த முலைகளையுடைய மார்பில் ஆபரணம் ஆடும்; மின் மருங்கின் மேகலையது ஆடும் - மின்னல் போன்ற இடுப்பில் மேகலாபரணம் ஆடும்; வராற்கு இணை கணைக்காலினில் - வரால்மீனையொத்த கணைக்காலில்; அங்கத்து உபாங்கமும் - அங்கத்துச் சார்புறுப்பும்; பிரத்தியங்கம் - மூக்கு முதலிய உறுப்புக்கள்; துள்ளும் பசுந்தகட்டு ஆரல் உகள் பொருநை - பசுந்தகட்டைப்போன்ற ஆரல் மீன்கள் துள்ளிக் குதிக்கின்ற தாமிரபரணி; உகள் - குதி. (5)

624. கமடம் - ஆமை; இகழாப் பொருநை நதி பாகீரதிக்குப் பிரதிபிம்ப நதி - இகழப்படாத தாமிரபர்ணி கங்கைக்குப் பிரதி பிம்பமான நதியாகும். (பிரதிபிம்பம் - அதேவடிவு); பார்க்கு இதுவே பாவநாசமும் என்று - பூமியிலுள்ள உயிர்கட்கு இதுவே பாவங்களை நாசஞ்செய்வது என்று நினைத்து; தாமிரபரணியில் சலப்(ஜலப்) பிரவாகத்தில் மீன் கூட்டங்களும், ஆமைக் கூட்டங்களும் அலையில் எழுந்து விளையாடுவது குதிக்கும் மீன் அவதாரத்தையும், கூர்ம (ஆமை) அவதாரத்தையும் ஒருசேர எடுத்துப் பொருநைநதி கங்கைக்கு பிரதிபிம்பமாகிய நதியென்றும் புண்ணிய நதியென்றும், பூமியிலுள்ள உயிர்கட்குப் பாவத்தை நாசம் செய்யும் நதி யென்றும் எண்ணி திருமால் தீர்த்தமாடி விளையாடுவதை யொப்பப் புகழ்ந்துரைக்கும் திருமந்திர நகர் என்று பொருள் கொள்க; புராரி - சிவன்; பிரியாதாய் - பிரியாதவளே; பிரி+ ஆ+த்+ ஆய் என்று பிரிக்க; ஆ எதிர்மறை யிடைநிலை; த் எழுத துப்பேறு; ஆய் முன்னிலை விகுதி. (6)

625. உகட்டும் சகட்டை உதை சரண உகள பதும் நயன பட வுரக சயனர் - குதித்து வரும் சக்கர வண்டியை (சகடாசூரன் என்பவனை) உதைத்த பாதமும், இரண்டு தாமரையொத்த கண்களும், படமுடைய பாம்பாகிய சயனத்தையுமுடைய திருமால்; பொதியவரை - பொதிய மலை; கடல் மடுத்த - கடலில் கலந்த; பசும்பொன் மலையரசி - இமயமலைக்கு அரசியே; தங்கக் கொடுங்கைக்கு உள்ளாய் - தங்க மயமான வீட்டினுள்ளாய்; கொடுங்கை - வீட்டின் ஒருறுப்பு, இங்கு வீட்டைக் குறித்ததால் ஆகுபெயர். சங்க முகத்தால் - சங்குப் பாலடையினிடமாக. (7)

626. தத்தாழ் திரைக்கார்க் கடல் முகட்டுச் சகத்தில் கதிர்ச் சூர்யோதயம் - தத்தும் ஆழ்ந்த அலையையுடைய கரிய கடலின் ஓரத்தில் உலகினருக்காக வரும் கிரணத்தையுடைய சூரிய உதயமும்; 'விசும்பனைத்தும் தயங்கும் தாராகண ராசிக் கொத்து உதையமும் - ஆகாயம் பூராவும் விளங்கும் நட்சத்திரக் கூட்டத்தின் உதயமும்; உதித்த முதல் குணதிக்கு உதித்துப் பொதியவரைக் குடுமி கடக்கும் வரையும் வளம் கொடுக்கும் தாம்பிரபன்னி - தோன்றிய முதன்மையான கிழக்குத் திக்கிலுதித்துப் பொதிய மலைச் சிகரங்களைக் கடக்கும் வரையும் வளம் கொடுக்கின்ற தாம்பிரபர்ணி; சுத்த ஆகிருதித் தேசு உடைத்தாய் - மாசின்மையான வடிவுடன் ஒளி உடைத்தாக; சூரியோதயம், சந்திரோதயம், நட்சத்திர உதயம் ஆகியன தாம்பிரபர்ணியில் சுத்தவடிவோடு ஒளிபெற்றுத் தோன்றும் பிரதிபிம்பங்கள் எல்லாம் பரிசுத்தமான நதியில் மூழ்கி மூழ்கி சேர்ந்த பதவிகளைப் பெறுவதை ஒத்திருக்கும்படியான புதுநீர் எனப் பொருள் கொள்க. (8)

627. காந்தள் செங்கையின் மாந்தளிர் விரல் வெண்கமலப் பெருமாட்டி - காந்தள் மலர்போலும் சிவந்த கையும் மாந்தளிர்போலும் விரலுமுடைய வெள்ளைத் தாமரையிலிருக்கும் சரசுவதி; கை விரைவாகச் செவ்வரி - சிதறு உண்கண் எழுது அஞ்சனமும் - கைவேகமாக சிவந்த கோடுகள் சிதறினாற்போலிருக்க மையுண்ட கண்ணில் எழுதுகின்ற அஞ்சனமும்; நுதல் தானென வில்லைச் சேர்த்திய வதனந்தீட்டிய சிந்துரம் - நெற்றியென்றறிய வில்லொத்த புருவம் சேர்ந்த முகத்தில் தீட்டிய பொட்டும்; கூந்தலில் அம்புய மங்கை முடித்தலர் கொத்துச் சரமும் - திருமகள் கூந்தலில் முடித்த மலரும், “கொத்து சரப்பளி'' எனும் ஆபரணமும்; வளங்கொண்டு இரு கரையும் வண்டலிடத் திடர்குவிதல் கமகமெனப் பூந்திரை - வளப்பம் கொண்டு இரண்டு கரைகளிலும் வண்டலிடவும் மணல் திட்டுக் குவிந்து கமகமவெனும் வாசனை வீசும் பூக்களையுடைய அலைகள்; அம்புய மங்கை திருமகள். (9)

628. நளிகண் புனல் நிறை கடல் அகழத் தடுப்படுக்கி யமுக்கியெழு நடுவுயர் முதுகு ஒரு கமடமெனத் திகழ் - குளிர்ந்த இடமான நீர் நிறைந்த கடலைத் தோண்ட தடைப்பட்டு அழுந்தி யெழுந்திருக்கின்ற நடுப்பாகம் உயர்ந்த முதுகையுடைய ஒப்பற்ற ஆமைபோன்று விளங்கும்; துளிசிந்திய திரைபுரளுவ பிரளயத்து ஊடுருவித் துருவி - துளிகளை வீசும் அலைகள் புரளும் பிரளயம் போன்ற நீரின் மத்தியில் சென்று தேடி; சூன்முதிர் வயிறு உளையக் குழையக் கரைதோறும் கரையேறி - கருப்பம் முதிர்ந்த வயிறு பிரசவ வேதனையால் வருத்த மெலிந்து கரையிடமெல்லாம் ஏறி; அரிது தவழ்ந்து - தவழ முடியாமல் தவழ்ந்து; கைவெட்டால் தாழ்குழியாய் வெட்டியதில் சொரி முட்டைகளிட்டதை மீட்டு நிரப்பிய வெண்புளினமென - கைவெட்டு எனும் கருவியால் தாழ்ந்த குழியாக வெட்டியதில் சொரிந்த முட்டைகள் இட்டதை மறுபடி அக்குழிகளை நிரப்பிய வெள்ளிய மணல் போன்று. (10)
--------------------------------
பொன்னூசற்பருவம்

629. அண்டமுகடு அணவு கதிர் இளநிலவு எறித்த படிகக் காலின்மிசை மரகதத்தால் விட்டமிட்டு - ஆகாய உச்சியையும் தொடும் கிரணமாகிய இளைய நிலவை வீசிய படிகக் காலின்மீது மரகதக் கல்லால் உத்திரமிட்டு; தரளவடம் - முத்தினாலாகிய கயிறு; அதோ தாரை மாரியுமிழும் கொண்டலை நிகர்ப்ப - கீழ்தாரையாகப் பெய்யும் மழையை வெளிப்படுத்தும் மேகத்தை ஒத்த; நீல்நிற மணிப்பலகை - நீலநிறமான அழகிய பலகை; கொழுவி - மேன்மை பொருந்தச் செய்து; படாம் விரித்து - ஆடையை விரித்து; மலர் பரப்பு அமளி - மலர்பரப்பின மெத்தை; உன் கோலம் இருகாலும் நிலவ - உன்னழகு இருதடவை அதிகமாக விளங்க; துண்ட வெண் தூணத்தினுள் பசுந்துளவ மால் தோன்றுவது மானும் - ஒருபிரிவான வெள்ளிய தூணில் பசுந்துளப மாலையையுடைய திருமால் தோன்றுவதை யொத்திருக்கும்; ஒன்றில் துழாய் முகில் சகோதரியெனப் பின் உதிக்கும் உன் தோற்றமும் பொருவும் - மற்றொரு பிரிவில் திருமாலின் சகோதரியென்று பின்பு உதித்த உன் அழகை ஒத்திருக்கும் ; அருண புண்டரிகம் - செந்தாமரை. (1)

630. முருகு விரி மகரந்த முடி விளைவுறு நறா முட்டி மட்டிதழ் விம்மி நாள் முகைப் பிணி முருக்கவிழும் அம்புய ஆசனம் மகுட முடி அணங்கு - வாசனை விரிந்த மகரந்தப் பொடிகள், நுனியில் விளைகின்ற தேன் முட்டி அத்தேன் பொருந்திய இதழ் விம்முதலடைந்து அன்று விட்ட அரும்பு மலரும் தாமரையை ஆசனமாகக் கொண்டுள்ள கிரீடத்தைத் தலையிற் சூடிய இலக்குமி; ஆசிரி வரும் - அவளைச் சார்ந்தவரும், ஆசிரி தம் - சார்ந்திருக்கை; ஒருநின் அருகு - ஒப்பற்ற உனது அருகாக; இளந்தென்றல் மண்டு உபைய சாமரையிரட்ட - இளைய தென்றற்காற்று நெருங்கி இரு சாமரைகளை வீச; "ஊருவசி .............. ஏந்தி நிற்ப" - ஊர்வசி, மேனகை, அரம்பை, திலோத்தமை, இந்திராணி, இரதி ஆகியோர் சிவந்த கிரண ஒளி திகழ கருப்பூர ஆலாத்தி ஏந்தி நிற்கவும்; ஆட்சி உன் சந்நிதானம் விழி கொளாது ஐயன் அதிசயித்து எனப் பிரிக்க; ஐயன் - சிவன்; பொருபுனல் அடக்குஞ் சிரக்கம்பமும் செய - மோதுகின்ற கங்கை நீரைத் தலையிலே அடக்கும் சிரத்தினால் ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்க. (2)

631. கயல் மீன மண்டலம் முத்து அணி படங்கு இட்ட கல்யாண பந்தர் ஏய்ப்ப - கயல் மீன் போன்ற நட்சத்திர மண்டலம் முத்தினால் அணிந்த கூரையிட்ட கல்யாண பந்தலை ஒத்திருக்க; ககன வெளி ஆகாய வெளி; கட்டு பொன் தட்டு ஆடவே - ஒன்றின் மேலொன்றாகக் கட்டப்பட்ட அழகிய உலகத் தட்டுக்கள் ஆட; அயல் வண்ண மண்டலம் வெளியேயுள்ள நிறம் பொருந்திய நட்சத்திர மண்டலம்; பூமண்டலாதி - யந்தமும் முழுதும் ஆடும் அவள் தான் அசையாமல் அணுமுதலும் அசையாது என்று பிரிக்க; ஐயம் - சந்தேகம்; முயல் வண்ண மண்டல மதிச் சடாமணி மகுட முத்தர் மனையாட்டி - களங்கமாகிய கருநிற மண்டலத்தையுடைய சந்திரனையணிந்த சடையாகிய அழகிய மகுடம் உள்ள சிவன் மனைவி புயல் வண்ணம் - மேககிறம்; துணை - சகோதரி. (3)

632. எண்ணரிய - கணக்கில்லாத; இயம்பரிய - சொல்ல முடியாத, அனந்தம் - பல; அரம்பையர் கன்னிகை - தேவப் பெண்கள், மேனகையோடு + யாவரும் என்று பிரிக்க; பலகை நாப்பண் நீ வீற்றிருத்தல் என்று பிரிக்க; கைக்கரித் தலைமகன் - தும்பிக்கையும் யானைத் தலையும் உடைய விநாயகன்; எணான்கு அறம் - 32- தருமம்; பல தேவப்பெண்களும் ஊர்வசி, திலோத்தமை, மேனகை முதலியவர்கள் வணங்க நீ ஊஞ்சலில் வீற்றிருப்பது நட்சத்திரக் கூட்டம் பக்கத்தில் சூழ நடுவிலிருக்கும் சந்திரனைப் போன்றிருக்க என்று பொருள் கொள்க. உதயமான் நகையின் இளமதி கடுப்ப - தோன்றுகின்ற களங்கத்தின் ஒளியினையுடைய இளைய சந்திரனை ஒத்திருக்கும்; விரகம் - ஆசை. (4)

633. அக்கரத்தால் பெரிது ரூபிகரித்தலால் அழகிய பதச்சுவட்டால் அறிவாகரர்க் கெலாம் வெளியாகி எளிதின் உபை அர்த்தமும் தோன்ற நின்ற இக்கவி - எழுத்துக்களால் பெரிதாயும் ருசுப்படுத்தலாலழகிய பதமாகிய அடையாளங்களால் அறிவாளர்கட்கெலாம் வெளிப்படையாகி சுலபத்தில் இரு அருத்தங்களும் தோன்ற நின்ற இப்பிள்ளைக்கவி, பொருட்கு இடம் - மதிப்புக்கு இடம்; பனுவல் - பாட்டு; பைக்கணாடவி விடப் பாந்தளங் குழுவினைப் பாரமணி வலையமே யொப்பாக்கி - பசுமையான கண்களின் தொகுதியும் விடமுடைய பாம்பாகிய கூட்டத்தைக் கனமான மாணிக்க வலையம் போன்றாக்கி; முக்கவர் அயில் படை சுமந்து - மூன்றாகப் பிரிந்த கூர்மையான சூலாயுதத்தைத் தாங்கி; அமைதேர - அம்மை தெளிவடைதற்காக; புறத்தசைந்திட்ட குவிவாய்ப் பொக்கண விபூதி புனை முக்கணர் - உடலில் கட்டிய குவிந்த வாயையுடைய ஒருவகைப் பைதனில் உள்ள விபூதியை யணியும் சிவ பெருமான். (5)

634. கயத்தம்ப மாமகர சாகரப் பிரளயம் - ஆழமான நிலையில் பெரிய சுறாமீன்களையுடைய கடல் வெள்ளம்; கட்டமை மரக்கலம் நடுக்குழி நிறுத்தி மன் - கட்டியமைந்த கப்பலை நடுவிடத்தில் நிலைபெற நிறுத்தி; கால் ஆற்றினில் பிணித்து - தூண்களிற் கட்டி; கால் - தூண்; செயத்தம்பமென்னத் தொகும் பாய்மரத் தொகுதி யுச்சியில் சேர்ந்து - வெற்றிக் கம்பமெனச் சேரும் பாய்மரத் தொகுதியுச்சியிற் சேர்ந்து, கைதைச் செங்கால் அனத் திரள்கள் - தாழையில் இருக்கின்ற சிவந்த கால்களையுடைய அன்னப் பட்சிகளின் கூட்டங்கள்; கயத்தம்பம் - பெரிய கம்பம்; கழை - மூங்கில்; தூய்நிறக் கஞ்சுகம் - தூய நிறத்தையுடைய சட்டை, வேழம்பர் - கழைக் கூத்தாடிகள்; கடலில் புயல் காற்றினால் கரை ததும்ப கப்பல்களை நடுவில் நிறுத்தி நங்கூரம் பாய்ச்ச தாழையிலுள்ள சிவந்த கால்களை யுடைய அன்னத் திரள்கள் வெற்றிக் கம்பம் போன்று சேரும் பாய்மரத் தொகுதியின் உச்சியில் சேர்ந்து கம்பம் காற்றினால் அசையும் போதெல்லாம் சிறகுகள் விரித்து அசைப்பது பெரிய கம்பம் போன்று கயிற்றாலிதத்தொடு சுற்றிக் கட்டிய மூங்கில் மேல் நல்ல நிறச் சட்டை போர்த்துக் கழைக்கூத்தாடிகள் தங்கள் வித்தைகள் செய்வதை யொத்திருக்கும். (6)

635. கான்ற உமிழ்ந்த; தகடுபடு மிப்பி இரையுமிழ் முத்தும் - தகடுபோன்று பொருந்திய இப்பி சப்தித்து உமிழ்ந்த முத்தும்; கழுத்தணி - கழுத்திலணியு மாபரணம்; துவைப்படும் - மிதிபடும். (7)

636. சுகமாட - இன்ப மனுபவிக்க; சுகிர்தம் - நல்லறம்; எனையன் - எனது தலைவன் (சிவன்); எழு பனையோடு அலைகுய் வரும் இல்லாததன்றி என்று பிரிக்க; குய் - புகை ; ஏழு பனைமரம் உயரத்துடன் அலைகள் புகை போன்று வருவதைப் பெற்றிருத்தல் இல்லாமல்; பொல்லாத வில்லாத மந்திர நகர் - தீமையற்ற மந்திரநகர்; மற்றில்லாத தொன்றில்லை யென்பதால் அலை என்பது ஒன்றுதான் ஆங்கில்லை; மற்ற எல்லாச் சிறப்பும் ஆங்குண்டு என்க. (8)

637. கொய்சகம் - அரையில் உடுக்கும் சீலையில் கொய்துவிடும் தலைப்பு; சிரோ ரத்தினம் - நாகரத்தினம்; பணிதி - ஆபரணம்; தாராடு மேகலாபாரம் ஆட - மாலையசையும் மாதர் இடைக்கட்டு ஆட; பொன் உத்தரிகம் - பொன்னாலான உத்தரீயம் (போர்வை); தமனியம் - பொன்; வேராட - வேர்வை நீர் சொரிய; வளை - வளையல்; கைச்சரி - கைவளை; முறுவல் - புன்சிரிப்பு; அரன் - சிவன்; அரனாட வாதாடி - சிவன் நடுங்க வாதிட்டு. (9)

638. சந்நிதானம் - கோவில்; வெண்திரை செயாது என்றும் வாய் பொத்திய மகா உததித்தீர்த்தம் - வெள்ளிய அலை செய்யாமல் அடக்கிய பெரிய கடலாகிய தீர்த்தம்; சிந்துரச் சுந்தரப் பாண்டியக் களிறு - யானைமுகமுடைய சுந்தரப் பாண்டிப் பிள்ளையார்; செந்திலான் - முருகன்; விண்டு - சொல்லி; மும்மாரி - மூன்று மழை; புரிசை - மதில். (10)

திருமந்திர நகரமாகிய தூத்துக்குடியி லெழுந்தருளியுள்ள
பாகம்பிரியாவம்மைப் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.

-------------

This file was last updated on 24 Jan. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)