pm logo

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 7
சிவானந்தன் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


civAnantan piLLaittamiz
(piLLaittamiz kottu - part 7)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation
of the soft copy of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பிள்ளைத் தமிழ்க் கொத்து - பாகம் 7
சிவானந்தன் பிள்ளைத்தமிழ் (குறிப்புரையுடன்)


Source:
பிள்ளைத் தமிழ்க் கொத்து (குறிப்புரையுடன்)
PILLAI-T-TAMIL-K-KOTTU (WITH NOTES)
Edited by T. CHANDRASEKHARAN. M.A., L.T.,
Curator, Government Oriental Manuscripts Library, Madras
AND THE STAFF OF THE LIBRARY
Under the orders of the Government of Madras
1956, Price Rs. 9-0-0.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 50
------------
இது ஓர் சீடர் தன் குருவின் மீது பாடிய ஞான மார்க்கமான பிள்ளைத்தமிழாகும். சிவானந்தன் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரையொன்று அடையார் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையத்திலுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுளது "திருவாரூர் திருப்பரவையம்மை பேரில் துதித்த சிவானந்தமான பிள்ளைத்தமிழின் குறிப்புரையென விளங்குகிறது.

காப்புப்பருவ முதற்கவி திருவெண்ணெய் நல்லூரில் கோயில் கொண்ட பொல்லா விநாயகரைத் துதித்த காரணத்தால் இந்நூலாசிரியர் திருவெண்ணெய் நல்லூரில் பிறந்தவரோ என ஐயமேற்படுகிறது. சீகாழிச் சட்டைநாதப் பெருமானைத் துதித்திருப்பதும் நோக்கத்தக்கது. பாடப்பட்டோர் (சிவானந்தன்) "அசுத்த மில்லாத விடமாம் ஆரூர் நிலத்தினில்' என்பதால் திருவாரூரில் உள்ளவரென்பது தெரிகிறது. மற்றும் இவர் தத்தாத்திரையர் மரபில் வந்ததாக 642-ஆம் பாட்டு கூறுகிறது.

தாலப்பருவம் 1-4-பாட்டுக்களில் ஆறாதாரங்களும் மதிமண்டலம் பிரமரந்திரம் ஆகியன விளங்கக் கூறி ஆண்டுள்ள யானைமுகன், வல்லபை, - பிரமன், வாணி முதலிய அவ்வவ்வாதாரத்துக் குடையவர் பாட்டுப் பாட ''நீ தொட்டிலில் கண்வளர்வாயாக'' என்கிறார். இந்நூலாசிரியர் முதற்கண் பெண்களின் மையலில் மயங்கிப் பின்னரே ஆட்கொள்ளப்பட்டதாக 652, 659 பாட்டுக்களில் கூறுகின்றனர். சேக்கிழார் பிள்ளைத்தமிழ் போன்று பத்துவித முத்தி வகைகளைக் கூறி அவைகள், “பழிசேர் முத்தியாதலால் அருளொடு புணர்ந்த முத்தியைக் கொடுத்தருள்'' என்னும் முத்தப்பருவச் செய்யுள் கழிபேரின்பம் பயப்பது. “வெறு நுண்மணலிற் செய்தொழிலாம் மிகவுஞ் சிறியோம் பலர்கூடி விளையாட்டிடத்தைக் கலைப்பதெங்கள் விதியோவுந்தன் விளையாட்டோ'' என்னும் சிறுமியர் சொற்கள் கல்மனத்தாரையும் இளக்கும் தன்மையது. இவ்வாசிரியர் மனம், சில என்பவைகளை மனது, சிலது என்கின்றனர். இதன்கண் சைவசித்தாந்தக் கருத்துக்கள் மிக்கு இதற்கு முன்பு இத்தகைய பிள்ளைத்தமிழ் இல்லையெனச் செய்துவிடுகிறது.

இப்பிள்ளைத்தமிழில் உள்ள சித்தாந்த கருத்துள்ள செய்யுட்கட்கு பொருள் கூறின உயர் திருவாளர். ச. சச்சிதானந்தம்பிள்ளை பி.ஏ, எல்.டி., ஓய்வுபெற்ற ஜில்லா கல்வி அதிகாரி அவர்கட்கும், திருவாளர். டாக்டர். மொ, அ. துரை அரங்சாமி M.A., M.O.L. Ph. D. சீனியர் லெக்சரர்; சென்னைப் பல்கலைக் கழகம் அவர்கட்கும், மற்ற சில செய்யுட்குப் பொருள் கூறின திருவாளர். பண்டித வித்துவான். பு. ரா. புருடோத்தம நாயுடு; ஜூனியர் லெக்சரர்; சென்னைப் பல்கலைக் கழகம் அவர்கட்கும், சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் முதல் 4-பாட்டிற்கு உரை கூறிய திருவாளர். வித்வான். முதுபெரும் புலவர், சித்தாந்த ரத்நாகரம். முத்து. சு. மாணிக்கவாசக முதலியார், தலைவர் (Principal), தருபுர ஆதீனக் கீழ்த்திசைக் கல்லூரி அவர்கட்கும் என் நன்றி உரித்தாகும்.

இப்பிள்ளை த்தமிழ் மூவருடக் காடலாக்கு 2676-ஆம் எண் ஒலைச் சுவடியினின்று வெளியிடப்படுகிறது. இது 1951-52-இல் தென்னாற்காடு மாவட்டம் குமரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஷண்முகம் அவர்களால் நன்கொடை யளிக்கப்பட்டதாகும்.

இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் 4-வது பிள்ளைத்தமிழ் தவிர மற்றவைகள் ஒவ்வொரு பிரதியினின்று வெளியிடப்படுவதாலும் அவ்வேடுகளில் பெரும்பாலும் பிழைகள் மிக்கனவாதலாலும் மூலத்தில் பிழையாயுள்ளவைகள் குறிப்புரையில் திருத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. அவைகளின்படி மூலத்தைத் திருத்தம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (உ-ம்) இலைகொணறும் பூவதில் (458), சேலெனக் கறுவிக்கண் (486), தோய (285) போன்றன இலைகொ ணறும் பூந்தில; செலெனக் கறுவிக்கண, தேய என முறையே குறிப்புரையில் காட்டப்பட்டுள்ளன காண்க.

இப்பதிப்பில் காணப்படும் தவறுகள் மறதி முதலியவற்றால் நேர்ந்தன என்றெண்ணிப் பொறுத்துக்கொண்டு இதில் விளங்காத இடங்களை அறிவிக்குமாறு அறிஞர்களை வேண்டுகிறேன்.

இப்பிள்ளைத்தமிழ்க் கொத்தினைச் சிறப்பான முறையில் அச்சிடுவதற்கு மூலப்பிரதியினின்று பெயர்த்தெழுதியும் குறிப்புரையெழுதியும் தந்த வித்துவான். திரு. இ. பா. வேணுகோபால் அவர்கட்கும், மற்றும் வித்துவான். திரு வி. ஸ்ரீ. கிருஷ்ணன், புலவர் திரு. மு. பசுபதி ஆகியோருக்கும் என் நன்றியுரித்து.

இந்நூலை நன்கு அச்சியற்றித்தந்த இரத்தினம் அச்சகத்தினருக்கும் என் நன்றியுரித்து.

சென்னை, 12-2-56.       தி. சந்திரசேகரன்.
_____________________________________

சிவானந்தன் பிள்ளைத் தமிழ்


பொல்லாவிநாயகர் துதி
639. சுடரொளி விளக்காய் நிறைந்த பரிபூரணச்
      சோதியா னந்தவாரி
சொல்லுக்கு மனதுக்கு மெட்டாத நித்திய
      சொரூபமெய்க் கடவுளெழில்சேர்
வடவிருக் கந்தழையு நீழலி லிருந்துநால்
      வர்க்கருள் புரிந்தபரமர்
மகிழுற நினைந்தகில மதிலடிமை யோர்முத்தி
      வழியே தொடர்ந்தருளிலே
திடமுற விளங்கவுஞ் சகளவுரு வங்கொண்ட
      தேசிகத் தலைவனான
சிவானந்த ஞானச்சி ரோமணிக் கன்பினாற்
      செல்வநற் றமிழ்சொல்லவே
கடகய முகத்தனை நிறைதரு வயிற்றனைக்
      கையைந் தனைக்கருணைசேர்
கதியரு ளருட்டுறை பொல்லா விநாயகன்
      கழலிணைப் பணிதல்செய்வாம்.
----------

காப்புப் பருவம்

திருமால்
640. சீர்பூத்த பவளவுரு விற்பச்சை யொருபுறஞ்
      சேர்ந்தொருமை யாய்விளங்கச்
செழும்புன லிளம்பிறை பணாடவிக் கொன்றையுஞ்
      செஞ்சடையில் வைத்த முதல்வன்
பேர்பூத்த மகிதலந் தன்னிலரு ளுருவமாய்ப்
      பேரருள் விளக்கவந்த
பெருமைதரு மினியமெய்ஞ் ஞானச் சிவானந்த
      பெம்மான் றனைப்புரக்க
தார்பூத்த களபவிள வனமுலைக் கன்னிதாட்
      டாமரைச் செல்விகேள்வன்
சருவவுயிர் கட்குந் திதித்தொழி னடாத்துந்
      தயாநிதி யரன்றனக்குக்
கார்பூத்த சூகரம தாகியடி தேடியுங்
      கண்ணருச் சித்துமேறா
கச்சுமந்துங் கிரிகை யைச்செய்து மன்புதவு
      கருணைப் பசுங்கொண்டலே.       (1)

குருலிங்கசங்கமர்
641. திருவேட மதுபுனைந் தொளிர்சா தனத்துடன்
      றிருவெண்ணீ றும்புனைந்து
திகழ்தரு பதமதிற் பாதுகை யிலங்கநற்
      றிருமேனி கொண்டுலகினிற்
குருவேட மாகவே வந்தருளு முத்தமன்
      குறைவற்ற பரிபூரணன்
கோதின்மெய்ஞ் ஞானத்தின் மணிசிவா னந்த
      கோமான் றனைப்புரக்க
உருவேட மருவேட முருவருவ வேடத்தி
      லொன்றிலொப் புவமையில்லா
னுயர்தூல சூக்கும் காரணமாய் விளங்குமெழி
      லுண்மைநற் றன்மையுதவுந்
தருவேட மாமன்பர் காண்கி லஞ்ஞானந்
      தவிர்க்குமெய்ப் பொருளிரக்கந்
தரும்பொருள் பரம்பொரு ளரும்பொருட் குருலிங்க
      சங்கமப் பொருள்கடானே.       (2)

வேறு
பஞ்சாட்சர மந்திரம்
642. பரிபூ ரணமே வுருவாகி
      பார்மீ துறுந்தத் தாத்திரையர்
பரமானந்த தீர்த்த ருயர்
      பரமா னந்த யோகியுட
னருளா னந்தன் சிவப்பிரகா
      சனுஞ்சிற் சட்டை நாதனுமா
யரங்கி லடியேற் காகவரு
      மருட்சி வானந் தனைக்காக்க
விரிவாஞ் சமைய மதுகடந்து
      வேதாந் தத்தின் முடிவாக
விளங்கும் பொருளாய் மெய்யடியார்
      வினாவி லுணர்த்து முணர்வாகிப்
பருவா தீதத் துறந்தொளிரும்
      பரம ரகசிய மாமந்திரம்
பவமாம் வினைக்கோர் மருந்தான
      பஞ்சாக் கரமந் திரந்தானே.       (3)

சிவபெருமான்
643. மத்தமறு கும்புனல் பணத்தரவை யுஞ்சடையில்
      வைத்துமகி ழும்பரமனா ரங்கறை மிடற்றரெழிலார்
மட்டுலவு மம்புய மலர்ப்பத மிலங்கிவரு
      மைக்கணுமை பங்கனரு ளானந்தநட னத்தர்மதமா
ரத்தியுரி யம்பர நுதற்கண னருந்தவரவர்க்
      கருள்புரிந்து மகிழ்வாய் நின்றமுத னற்கருணை
யானற்புத நிரந்தரன் மலர்க்கணை யனங்கனை
      யளித்தருளு மின்பநெடுமா லங்கமல னுக்குமரிதான
சித்தமல பந்தமதி லுற்றுமர ணஞ்செனன
      மிக்கவள ரும்புவியி லேதங்குசக லர்க்குமருளார்
சிற்றறி வொழிந்தினிய முத்தியி லடைந்திடுக
      சித்திதர வந்தருள்ஞா னந்திகழு முத்தினினிதாய்ப்
பத்திசெயு மன்பர்கள் கருத்திலுறை யுங்கடவு
      ணித்தியன் விளங்குகுரு நாதன்றமி யனுக்கெளியாய்ப்
பற்பல விதம்பெறு மனத்தினை யொழுங்கது
      படுத்தியரு டந்திடுசி வானந்த னையளித்தருளவே. (4)

உமை
644. கமலமுகினி காளி கடிமிரள்
      கமலவிழி மகாசுந்தரி கோட்டினேர்
கனகவரை முகடினை கொடிகள்தரு
      களபமுலை யினாள்பஞ்ச வட்டாக்கரி
நிமலாய மணிசடில ரிடமதி
      னிலைகொணி மலியாடம் பரிசீர்த்திசேர்
நிலவுமதி முககெவுரி யகநெக
      நெகவுமுருகு சீரன்ப ருட்டொத்துமோர்
விமலியுயர் மலையரைய னருள்சுதை
      வினைகளகல வேயங்கை யைக்கூப்பியே
விதிதிகிரி கரனமரர் முனிபர
      வியபயி ரவிபாதந் தனைப்போற்றுவா
மெமதுமன மதிலுவகை தருவரு
      ளினியவுரு வமாய்வந்த மெய்க்கீர்த்தியா
னிலகுமக மணிதகைகொள் குருமணி
      யிறைவனெழில் சிவானந்த னைக்காக்கவே. (5)

கணபதி
645. பார்தங்கிய வன்பர் மனத்தினி
      லேதங்கிய வெம்பிற வித்துயர்
      பாசங்க டவிர்ந்தொளி யுற்றமெய்
      நேசந்தருமி ன்பரு ளொக்குமு
பாயங்கொள வன்புவி ழித்துறு
      காயந்தனி லும்பரி சித்ததி
      பாகின்றரு பண்சொ லுரைத்தினி
      தாகும்பொருள் சிந்தைநி னைத்தெழில்
சீர்தங்கிய வம்பரன் மெய்த்தவ
      நூலுந்தர லங்கமி ருக்குமி
      யோகம் புரிகின்ற வவுத்திரி
      சேரிந்த விதங்களி யத்துப
தேசஞ்செய வந்தம கத்துவ
      ஞானந் திறமென் றறிவித்திடு
      தேனின்சுவை யின்பமி குத்தசி
      வானந்தனை யென்றும ளித்திட
வார்தங்கிய கொங்கைம தத்தெழு
      சூர்மங்கை யிடந்தனில் வைத்தம
      ணாளன்றளி ரைந்துக்க ரத்தினர்
      மாதம்பிகை மைந்த னிருத்தனை
மாகம்புவியென்றுது தித்தினி
      தாயம்பு வலம்புரி யக்கர
      மாவின்கனி கொண்ட மகிழ்ச்சியன்
      மேரின்புற மெங்குமெ ழுத்தெழுத்
தேர்தங்கிய கொம்புமி கக்கனி
      பாசம்புனை யங்குச முற்றக
      ணேசந்திகழ் தொந்திவ யிற்றினர்
      பாதந்தொழு மன்பர கத்தினி
லேதங்க ளகன்றிட நற்றய
      வாகும்படி நின்றிடு முக்கண
      னீதிங்கு மியம்புத லொப்பறு
      நாதன்றெரு டந்தி முகத்தனே.       (6)

முருகன்
646. பன்னகம் புனைகையாற் பன்னகம் புனைகையாற்
      பதமலரி டாமல்செய்தேன்
பத்தியி லகந்தனிற் பத்தியி லகந்தனிற்
      பலகேள்வி யாலுளைந்தே
னென்னகண் டிதமாகு மென்னகண் டிதமாகு
      மிறைசுகந் தன்னைநாட
வேழையின் மேலருளை யேழையின் மேலருள்
      சிவானந் தனைப்புரக்க
பொன்னகை யுறாக்கதிகொள் பொன்னகை யுறாக்கதிகொள்
      புகழ்மருகன் மஞ்ஞையூர்தி
போதங் கடந்தவன் போதங் கடந்தவன்
      புனிதமெய்ஞ் ஞானனடியார்
தென்னகந் தனிலுறுந் தென்னகந் தனிலுறுஞ்
      சிறக்குறு முனிக்காரியன்
சேவற் கொடிக்கிறைவர் சேவற் கொடிக்கிறைவர்
      தேவர்சே னைக்கதிபனே.       (7)

சட்டைநாதப்பெருமாள்
647. விரித்த சடையும் நுதல்விழியும்
      விழிக ளிரண்டு மணிக்குழையு
மிளிர கோர வியலுமெழின்
      மேனிச் சிவப்பும் பசுங்கவசந்
தரித்த வடிவும் புரிநூலும்
      தலைமா லிகையும் நிருவாணத்
தகையுங் கதைச்சின் மயக்கரமுந்
      தரும்பொற் சிறுகிண் கிணியுடனே
யரற்றும் வீர கிண்கிணியும்
      மரவத் தரைநாண் குஞ்சிதத்தோ
டமரும் பதத்தோன் சீர்காழிக்
      கதிபன் றனையே மிகப்பணிவாந்
திருத்த மணியாந் திருவருளின்
      வடிவாய்த் திகழும் குணமலையைத்
தேர்ந்த ஞானச்சி வானந்தத்
      திறனைப் பரிவாய்ப் புரக்கவென்றே.       (8)

சரசுவதி
648. பவளக் கனிவாய் மலர்விழியும்
      பதும முகமும் பிறைச்சடையும்
பணிலக் களமும் கழைத்தோளும்
      படிக மணிபோன் றக்கரமும்
கவுளக் கயக்கோட் டிளமுலையுங்
      கதிர்வெண் கலையுந் துடியிடையுங்
கமலப் பதமுஞ் சசியொளிசேர்
      கருணைக் கடலாந் திருவுருவாய்
தவளக் கமலந் தனின்மிகவீற்
      றிருக்கும் வடிவைச் சதுமுகத்தோன்
றன்கா தலியைச் சகலகலைக்
      குரிய கலைவா ணியைப்பணிவாந்
திவளக் கதியாந் திருவருளி
      லணுக்க ளுவந்தின் புறவுருவாஞ்
சிவானந் தனைநா டொறும்போற்றல்
      செய்யும் பனுவற் றழைத்திடவே.       (9)

அடியார்கள்
649. திருவா சகக்கடவு ளப்பர்சம் பந்தரும்
      திருநா வலஞ்சுந்தரர்
திருமூலர் பட்டணத் திறைவருங் கடுவெளிச்
      சித்தர்சித் தம்பலவருந்
தருவாச மாரருட் டுறைமேவு மெய்கண்ட
      தம்பிரா னருணந்தியுந்
தகையுமா பதியுநக் கீரர்சிவ வாக்கியர்
      தயவுகண் ணுடையவள்ளல்
மருவாச கங்கடந் தொளிர்தருங் குகைநமசி
      வாயர்கண் ணப்பனருளே
மருவுவள் ளுவர்துங்க வவ்வையிவர் முதலாக
      வருமுயர் மகத்தோர்களே
யுருவாச மினிவரா மற்காக்க வன்பருக்
      கோருருவ மாகவந்த
வுத்தமனை யானந்த நித்தியசி வானந்த
      வுண்மையை யளித்தருளவே.       (10)
---------------------------------

செங்கீரைப்பருவம்.

650. திருநுதலில் வெண்பொடி பரந்தாட நற்கருணை
      சேர்விழியி லமுதமாட
திகழ்தருங் குழையுடன் பவளவா யினிலுதவு
      திருமந்த காசமாட
மருமமதி லணியலா பரணமுஞ் சிவன்விழியின்
      மணிகடா வடமுமாட
மருவுசிறு கிண்கிணி கலீரெனவு மொலிகொண்டு
      வளமைதரு மரையிலாட
அருணவம் புயமதனி லினியகர தலமதனி
      லஞ்சலுடன் வரதமாட
வடியர்பர வுஞ்சரண மீதிற் சதங்கையுடன்
      அம்பொற் சிலம்புமாடத்
தெருள்வரு மடிமையர்கண் மனதுவகை யாடவே
      செங்கீரை யாடியருளே
சிவானந்த நாதாத வானந்த நீதனே
      செங்கீரை யாடியருளே.       (1)

651. பலவிதமும் நோய்கொண்ட வெளியனுக் கஃதறப்
      பரிவா யெழுந்துவந்து
பக்குவத் துடனழைத் துயர்மூன்று நாடியும்
      பாத்திரண் டையுமடக்கி
யிலகுமொரு நாடியி னிறுத்திவிழி நோக்கியிங்
      கிந்நோய்க டீர்க்கலாமென்
றேந்துகைப் பையவிழ்த் தினியவெண் பொடியவிழ்த
      மீந்துகர மிட்டிதற்கு
நிலையுறும் பத்தியந் தனதுபா தோதக
      நிவேத்திய மதன்றிவேறாம்
நியமமா காதுந்த னுறுதியெந் தன்வழியில்
      நில்லென்று வினைகடீர்க்கத்
திலதமா யொருவயித் தியனாக வந்தவன்
      செங்கீரை யாடியருளே
சிவானந்த நாதாத வானந்த நீதனே
      செங்கீரை யாடியருளே.       (2)

652. பாசமெனு மடவியி னுழைந்தொருமை யின்றியப்
      பஞ்சவிந் திரியவேடர்
பக்கமதின் மருவுமென் னைப்பிரித் தாளப்
      பரிந்துவகை யாகயினிதா
யோசைநுக ருங்குழைக் கின்பமரு வச்சிவ
      னுண்மைமொழி பேசவாயு
முடலமது புளகமுற வினியபரி சனையுதவு
      மொளிமலர்க் கரமிரண்டு
மாசறுங் கட்புனல் காண்டல்கொண் டின்பமுற
      வாய்த்தசங் கமவேடமும்
வாய்க்குணர்வு தீர்த்தப்பிர சாதமும் நாசிக்கு
      வாசமர விந்தபதமாய்த்
தேசுலவு முழைகாட்டி யுழையைப் பிடிப்பதாய்த்
      தேசிகத் திருமேனியாஞ்
சிவானந்த நாதாத வானந்த நீதனே
      செங்கீரை யாடியருளே.       (3)

653. அருளாள னாகியே விளைவுசெய வேயுவக்
      தசுத்தமில் லாதவிடமா
மாரூர் நிலத்தினி லுன்னியுழ வைப்புரிந்
      தறிவுதனை யேவிதைத்து
மருளான விருமாயை கன்மந் திரோதமிருண்
      மருவியச் சிற்றறிவெனும்
வகைகொளுங் களையைப் பிடுங்கி யப்பயிர்தன்னை
      வாடாம லேவளர்த்து
பருவமுற் றிலகவுந் தனதெனக் கிருபையாய்ப்
      பார்த்துநன் றாய்விளக்கிப்
பலன்றருவ தென்றெனப் பகர்வுகொண் டுள்ளம்
      பழுத்தபின் பதனையினிதாய்த்
தெரிவரிய பெருவீடு சேர்க்கின்ற வல்லவா
      செங்கீரை யாடியருளே
சிவானந்த நாதாத வானந்த நீதனே
      செங்கீரை யாடியருளே.             (4)

654. உலகதனி லுயிரினம வத்தையது தீர்ந்திட
      வுதித்துதைய மாகவந்து
மொளியுணர் வரியதா மிருடனை விலக்குமோ
      ருண்மையாய்ப் புன்மையான
பலவொளியின் மிகுதியை விழுங்கி யெங்கெங்கும்
      பரந்தப்பிர காசமாகிப்
பகலிரவு மின்றியச் சுடரதாய்ச் செங்கதிர்
      பரப்பிவரு மேனியாகி
அலகிலுயிர் கட்குவித மகிதமுங் காயு
      மருணன்றன் வலவனாகி
யந்தரத் தினினின் றிழிந்துமன முருகுவா
      ரம்புயம் பூரிக்கவும்
திலதமென வருபருதி யெனவருந் தேசிகன்
      செங்கீரை யாடியருளே
சிவானந்த நாதாத வானந்த நீதனே
      செங்கீரை யாடியருளே.             (5)

வேறு
655. திணை நீர் நல்வளி வெளியா யொலியுணர்
      செவிதோல் விழியாகிச்
சிங்குவை யுடனா கியுமா யொலிபரி
      சமுமுரு வாயிரத
மணமது வாய்வாக் கடியுங் கரமும்
      வருபா யுருகுதமாய்
மனமும் புத்தியு மாங்கா ரத்துடன்
      மகிழ்சித் தமுமாகி
யிணைதரு முக்கா லமதாய் நியதியு
      மெழில்கலை வித்தையுமா
யிராகம் புருடனு மாயையு மாயீ
      தேழும தாயடிமைக்
கணிதரு மலரடி தருமிறை வாநீ
      யாடுக செங்கீரை
யானந்த மானசி வானந்த தேவே
      யாடுக செங்கீரை.             (6)

656. தவமிகு சிவதத் துவமாய்ப் பிரேரந்
      தனையுத வாதாகித்
தகமைய தாயா றாறுந் தொழில்கொண்
      டசையத் தாரகமாய்
நவவடி வாய்த்தனு கரணபு வனபோ
      கமுமது நல்கியதாய்
நல்வினை தீவினை யுளதாய் தன்னால்
      நானா பேதமுமாய்ப்
பவமறுத் துதவு முடிவாய்க் கேவல
      பான்மைய தாய்நிலையாய்ப்
பகர்தரு மிலகு திரோதா யிக்கிரு
      பையதா யருள்வடிவா
யவநிதி யறவருந் தவநிதி யேயென்னை
      யாளும் மெய்வடிவே
யானந்த மானசி வானந்த தேவே
      யாடுக செங்கீரை.             (7)

657. மருவி யருட்கே வலமதி னிலைபெறு
      முயிர்தனுக் காதரவே
வரச்செயு மிச்சா சத்திய தாயிருண்
      மலமது நீங்கிடவே
தருமிகு கிரியா சத்திய தாயிரு
      டன்னை யகன்றறிவின்
றன்மை யெனச்செயு ஞானா சத்திய
      தாய்நல் லறிவாகிப்
பரவறி வும்பா சத்த றிவுமில்
      லாநிலை யுயிரறியப்
பரையா கிப்பர தரிசன மாய்ப்பர
      யோகம் போகமதா
யருளா யருணிலை தருமென் னிறையே
      யாடுக செங்கீரை
யானந் தமானசி வானந்த தேவே
      யாடுக செங்கீரை.             (8)

வேறு
658. ஓதும்பு ராணங்க ளோதேன் மன்பா தந்தேடே
      னோரன்பர் பாறங்கி யோரே னந்தோ வந்தோலே
யேதுஞ்?செ யேனென்று மேயா னிங்கே வந்தோனே
      யீதங்கின் மேனின்ற வாழ்வீ தென்றே யன்பாக
பாதங்க ளேதந்து நீதா னஞ்சே லென்றானே
      பாரிங்க ணேவந்து ரூபாய் நின்றே கொண்டானே
வேதங்க ளீறின்க ணாவா ரன்போ யின்பாக
      மேவுஞ்சி வானந்த நாதா செங்கோ செங்கீரை. (9)

659. பேருங்க னூரின்றி யானே யென்பா லின்பாகி
      பேருங்க ணூர்கொண்டு தானே வந்தான் முன்பாக
பேரின்ப மாயெங்கு மாயே கண்டே கொண்டேனே
      பேதங்க டானொன்று மாகா தென்றே யுண்டேனே
சேருந்த வானந்தர் மேலா யென்பா லன்பாகி
      தேனின்ப னேயுந்த னாலே யன்றோ வெங்கோவே
யாருந்தொ ழாநின்ற பாதா செங்கோ செங்கீரை
      யாவுஞ்சி வானந்த நாதா செங்கோ செங்கீரை (10)
----------------------------------------

தாலப்பருவம்

660. முதலா கியவா தாரமெனு
      மூலாதார வீடதனில்
மூதோங் காரக் கால்நிறுத்தி
      மூன்று கோணந் தொட்டிலதா
யதினா லிதழக் கானான்கு
      மமைத்தே யிடைபிங் கலையதனை
யசையக் கயிறாய் மிகத்தூக்கி
      யானை முகவன் வல்லபையுஞ்
சதிராஞ் சுவாதிட் டானமதிற்
      சதுர்கோ ணம்பொன் னிறமாறு
தளமா றெழுத்தும் நகாரத்திற்
      சதுமா முகன்வா ணியும்பாடப்
பதியாய் விளங்கி யாங்குறையும்
      பரிபூ ரணனே தாலேலோ
பகர்வுக் கரியசி வானந்த
      பரனே தாலோ தாலேலோ.      (1)

661. மணிபூ ரகத்திற் றவளநிற
      மதியின் பாதி கோணமதில்
வளரு மிதழீ ரைந்துமிக
      மருவு மெழுத்தீ ரைந்தினிதா
யணிசேர் மகரத் தினில் விளங்கு
      மரியு மலர்மா துவுங்கூட
வப்பாற் றிகழ்ந்தவ னாகதத்தி
      லமைந்த மூன்று கோணமதிற்
றணலாம் புகழபன் னிரண்டிதழுஞ
      சார்ந்த பனிரெண் டெழுத்துமதிற்
றகமைக் சிகரத் துருத்திரனுந்
      தண்டா மரைத்தா ளுருத்திரையும்
குணமாம் புகழ்தா லுரைபாடக்
      குலவுங் கருணைக் கடலமுதே
குருமா மணியேசி வானந்த
      கோவே தாலோ தாலேலோ.       (2)

662. நீல நிறமாம் விசுத்தியினி
      னிகழு மாறு கோணமதில்
நிறைந்த பதினா றிதழதனி
      னிற்கு மெழுத்தெண் ணிரண்டாகி
மேலின் மருவும்வ காரத்தின்
      மேவும் கருணைப் பதியான
மிக்கம யேசன்ம னோன்மணியும்
      விருப்ப மிசைந்தே தால்பாடத்
தூல மகன்ற வாக்கினையிற்
      றூம நிறமாம் வட்டமதிற்
றுகடீ ரெழுத்தோர் மூன்றதனிற்
      றுலங்கிய கர்த்த னுக்கிரக
வேலை நடத்துஞ் சதாசிவனு
      மின்னார் பரையுந் தனிவாழ்த்த
விளங்கும் பொருளேசி வானந்த
      விமலா தாலோ தாலேலோ       (3)

663. பொறியும் புலனுங் கறங்கெனச்சூழ்
      புரியுங் கரணங் குணங்களுடன்
புகழ்சேர் விந்து நாதமுமைம்
      பூதா திகளோ டிவையாகு
நெறியா தார மதுகடந்த
      நிலவு மதிமண் டலந்தனிலே
நின்ற வமுதந் தனைத்தேக்கி
      நிறையா யிரத்தெட் டருங்கமலத்
துறைவாய் மகிழ்ந்து விளையாட
      வயர்சேர் பரனாத விந்து
முரையா துரைக்குந் தால்பாட
      வொன்றா யிரண்டாய் மூன்றாடித்
திறமா யிருபத் தஞ்சாடித்
      திகழு முப்பத்தஞ் சாடியிதைத்
தேர்ந்தே யாடுஞ்சி வானந்த
      தேவே தாலோ தாலேலோ.       (4)

664. தந்தை யனையாய் வந்துசிவ
      சட்டை நாதக் குருபரன்றான்
தத்தாத் திரையர் திருவருட்சந்
      ததியை விளக்க வென்னருளில்
வந்த வருமைக் கொழுந்தேமெய்
      வளர்கண் மணியே யாதார
மருவுஞ் செல்வ முனக்கேனோ
      மகிழ்சேர் செல்வ மிருக்கவென்றே
சிந்தை மகிழ விழிதுலக்கித்
      திகழா னந்த வெள்ளமதிற்
சேர முழுக்கிட் டின்பமழைத்
      தேக்கிச் சுகமாய்ச் சுகவடிவுக்
கந்த மதில்தா லாட்டல்செய்யு
      மதீதப் பொருளே தாலேலோ
வடிமைக் கிரங்கி வந்தசிவா
      னந்தா தாலோ தாலேலோ.       (5)

வேறு
665. அகமா மணியே யெந்தைப் பதியே யேகா னேகா
      வருமா மறைதே டுஞ்சிற் பரனே நாதா போதா
ககனா திகளியா வுஞ்சுத் தமதீ றேவாழ் வோனே
      கருணா கரனே யந்தக் கதிகா ணார்கா ணாதார்
சுகவா ரியினீ றின்கட் பெற்றுய் தாதா வாயோர்
      துணையாய் வருமா னந்தப் பொருளே மாதே வாநீ
தகவே யெனையா ளும்பொற் பதனே ஞானா வோதா
      தவமா னசிவா னந்தக் கடல்தா லோதா லேலோ. (6)

666. குழையோ டமரா குங்கட் கடையா மோரார் வாரூர்
      குடமா கியவீர் கொங்கைப் புனைமா னார்மா லாலே
விழைவாய் வெகுநா ளங்குற் றதில்வீ ணாய்வீழ் வேனே
      மிகவே தயவா யிந்தப் புவிமீ தேயா சானா
யெழுமான் விழிபோ னின்றப் படிப்பார் பார்வா வாநீ
      யெனவே யெனையா ளுந்தற் பரதே வாகோ மானே
தழையார் நிழலா லின்பக் கலிறா னேதா னாய்மா
      தவமா னசிவா னந்தக் கடல்தா லோதா லேலோ. (7)

667. வினையால் வெகுதே கம்பே தத்தி னால்மா மாயா
      மிளிரா னவினோ தம்பத் திமெய்யா காபூ வாழ்வோ
சனையா லிருடான் முந்தத் தடுமா றாமான் மாவாய்ச்
      சகமீ திலனே கந்தத் தினிறா னேயா வேனே
நினையா நினைவா லந்தத் துயர்நீ ளாகா தாயோர்
      நிலையா கியபே ரின்பத் துறைநீ டாம்வீ டார்சீர்
தனைநா யெளியே னும்பெற் றிடவே தானாள் வோனே
      தவமா னசிவா னந்தக் கடல்தா லோதா லேலோ. (8)


வேறு
668. சித்திப் பொருளே முத்தர் மனத்தினு
      டித்திக்குங் கனியே
தேனே ஞானா தீதக் கதியே
      திவ்விய வற்புதமே
முத்திக் கரசே மெய்த்தவ மேமுழு
      முதலே நிர்மலமே
மூதறி வான மகத்துவ மேமுடி
      யாத நிரந்தரமே
பத்திக் கடலா கியவித் தகனே
      பசுபதியே நிதியே
பந்த மறுத்தெனை யாளு மகண்ட
      பரஞ்சுட ரேமலையே
புத்திக் கமுதே நித்திய மேபரி
      பூரண தாலேலோ
பொற்பத னான சிவானந் தாசிவ
      போகா தாலேலோ.             (9)

669. என்னைத் தானாட் கொள்ள நினைத்திடு
      மிதையா தாலேலோ
வென்னைப் போலரு ளுருவாய் வருமிங்
      கிதனே தாலேலோ
வென்னை மயக்கிய மாயை யகற்றிடு
      மிறைவா தாலேலோ
வென்னைச் சுழல்புரி வினையை யொழித்திடு
      மினிதா தாலேலோ
என்னைப் போல்வரு மிருளை விலக்கு
      மிரவியே தாலேலோ
வென்னைத் துல்லிய மாக விளக்கிடு
      மெந்தாய் தாலேலோ
வென்னைப் போலரு டன்னை யளித்திடு
      மின்பே தாலேலோ
வென்னைத் தானெனு மெங்கள் சிவானந்
      தேசா தாலேலோ.             (10)
------------------------------------

சப்பாணிப் பருவம்

670. கன்மம் பொசிப்பிக்கும் நால்வகை யோனியிற்
      கருவென வனாதிகொண்டு
கருதரிய வெழுவகைத் தோற்றமாய்ச் சகளநிட்
      களமெனும் னேகவுருவாய்
வன்மமு வஞ்சனைகண் மீறியும் புலையாதி
      மாபாதகங்கள் செய்து
வளர்நன்மை யுஞ்சிலது செய்துமொரு நன்மையால்
      வருமரியதா மானிடச்
சென்மமது வாயதின் மூடர்சில துஞ்செம்மை
      சிலதுமதி லூழிகாலஞ்
சிவபுண்ணி யங்களைச் செய்துநல் லன்புறுந்
      தேகமென வருமன்பரைத்
தன்மைபெற வாவென் றழைக்கின்ற கைகளாற்
      சப்பாணி கொட்டியருளே
தானந்த மாகியசி வானந்த நாதனே
      சப்பாணி கொட்டியருளே.      (1)

671. பரவிநுகர் சரகமென வருகின்ற வாபாச
      பலவழியி னின்றமனதைப்
பார்த்துநன் மார்க்கமாய் நிற்கவருள் செய்துநற்
      பருவனென வாக்கியேயிங்
கிருமென விருத்திவளர் சமைய்தீட்சை கள்செய்
      திருக்கின்ற யோகவகையை
யின்னபடி யின்னதா மித்தகைமை யாகவிரு
      மென்றுகாண் பித்துமிகவாம்
விரிவுதனை நீங்கியே மனதுகுவி யத்தகும்
      மெய்ம்மையாஞ் சாக்கிரத்தின்
மெலிந்த நிலைதனி னோக்காமல் நோக்கென்று
      மெய்ஞ்ஞான மாகும்வழியைத்
தருசமக் குறிதனைக் காட்டிடுங் கைகளாற்
      சப்பாணி கொட்டியருளே
தானந்த மாகியசி வானந்த நாதனே
      சப்பாணி கொட்டியருளே.       (2)

672. திகழ்தருங் கயிலாய பூதரந் தன்னிற்
      செழித்தகல் லாலநிழற்கீழ்
தெட்சணா மூர்த்தமாய் நின்றருளி யாங்குற்ற
      செப்பரிய மாதவத்தோர்
புகழ்தருஞ் சனகர்முதல் நால்வர்க்கு மருளினைப்
      புகட்டியா கமநெறியினைப்
போதித்து மேலான வீடுதவு சிவஞான
      போதமன் றருள்செய்யவே
மகிழ்தருந் தொண்டுசெய் தளவற்ற பேரின்ப
      வாரிபெறு மாங்கவர்க்கு
மாசற்ற முத்தியின் பெருமையைக் காண்கவே
      வாக்கிறந் ததுவொன்றுதான்
றகவுமுத் திரைகொண்ட சின்மயக் கைகளாற்
      சப்பாணி கொட்டியருளே
தானந்த மாகியசி வானந்த நாதனே
      சப்பாணி கொட்டியருளே.       (3)

673. வருகின்ற வாறுசமை யங்கணெறி முற்றிலும்
      மறுத்தே பகுத்தநன்னூன்
மருவியிடு முட்சமைய வேதாந்த நிலைதனை
      வாதித்து வென்றநன்னூ
லிருள்கின்ற மலமாயை மாமாயை கன்மமுயி
      ரேடணை வகுத்துச்சொன்னூ
லெழில்மந்தி ரம்பத மெழுத்தும் புறந்தத்து
      வங்கலை யிதாறினப்பா
லொருகின்ற பரவசஞ் செய்விக்கு ஞானநூ
      லுயர்பெருமை கொண்டமுன்னூ
லுணர்கின்ற வனுபோக சாட்சியா யன்பருக்
      குண்மையைத் தேர்ந்துதெளியத்
தருகின்ற சிவஞான போதநூ லுறுகையால்
      சப்பாணி கொட்டியருளே
தானந்த மாகியசி வானந்த நாதனே
      சப்பாணி கொட்டியருளே.       (4)

674. அவஞான மதுதீரும் வறுமைபல நீங்கியே
      அஷ்டபாக் கியமுநல்கு
மாயுளா ரோக்கியமும் புத்திர சம்பத்துட
      னளவிலா வாழ்வுந்தரும்
பவஞான மதினிலினி வாராம லேகிருபை
      பாலிக்கும் மெய்ஞ்ஞானமாம்
பகர்வரிய குருலிங்க சங்கமந் தனிலினிய
      பத்தியாம் புத்தியுண்டாம்
சிவஞான சித்திதரு மிகுவின்ப மாகியே
      சிவயோக மாகுமென்றே
தேடிவரு மன்பருக் காசீர் வதித்துமணி
      திகழுமிரு முத்திரையினாற்
றவஞான மானவெண் ணீறளித் திடுகையாற்
      சப்பாணி கொட்டியருளே
தானந்த மாகியசி வானந்த நாதனே
      சப்பாணி கொட்டியருளே.       (5)

வேறு
675. மனமய மதனிற் பிறிவர விருண்மா
      மலவாணம் பொலிய
மட்டறு சஞ்சித மாருத மதனால்
      வருவினை யலைவீச
வினமுறு மாயையி னுரைசெய வலமந்
      தெழுந்து மயக்குறவு
மிகலுறு மும்மல வயமா யுள்ள
      வியற்கை யறிந்திலதா
யெனதெனு மென்கை யென்கா லென்று
      மிருந்தே னறிவின்றி
யின்ப மிகுத்தசி வந்தனில் வந்தெளி
      யேனை மிகத்தெருளி
குனிபுரு வக்கரை நடுவினில் நின்றே
      கோதிற் றெளிவுதருங்
குருமணி யானசி வானந்த நாதா
      கொட்டுக சப்பாணி.       (6)

676. ஆகமி தென்று முயிரிது வென்று
      மருளிது தானென்று
மறியவு மறியா மையையுடை யேனுக்
      கருடிக ழப்பெறவே
யாகம் புரியக் கல்லு மிரும்பு
      மெழுக்கணை யதுபோல
வரம்பையில் விறகிற் கரியிற் பஞ்சினி
      லனலேற் றிடுநெறியாய்
மாகதி தரவரு பருவ மதாகிய
      மந்தமு மந்ததர
மகிழ்தீ விரதீ விரதர மெனுநால்
      வகைசத் தினியீறிற்
கோக னகப்பத மேதரு முதல்வா
      கொட்டுக சப்பாணி
குருமணி யானசி வானந்த நாதா
      கொட்டுக சப்பாணி.       (7)

677. ஒன்றென நின்றது வேபொரு ளாமென
      வுணர்தரு நெஞ்சரையவ்
வொன்றிற் பகர்வுசெய் திறையிது வென்று
      முயிரிது தானென்று
மொன்றை யறிந்திலை நின்றனை பாசத்
      தொருமைய தாய்முதலாய்
யொன்று மிரண்டும் தன்றி யுணர்த்திடு
      முட்பொரு ணித்தியமாய்
நின்றிடு பொருளா முகமை யெழுத்துக்
      கவ்வுயிர் நிறைவதுபோ
னின்மல மதனிற் றெளிவுற வுதவிய
      நிதியே மகிழ்செல்வக்
குன்றென வருமெய்த் தவனே பரனே
      கொட்டுக சப்பாணி
குருமணி யானசி வானந்த நாதா
      கொட்டுக சப்பாணி.       (8)

வேறு
678. மாதவ மார்கின்ற மேலோர் பக்கலி லொக்காமன்
      மாமய லேகொண்ட மானார் மைக்கண் மருட்காகி
சாதியி லேநின்று மாகா தக்குழுவுக்கான
      சாதக னாய்வந்த நாயே னுக்கு விருப்பாகி
பூதல மேவந்து காணா துற்ற வருட்சார
      போகம தேதந்து தானே சித்தி யளித்தேநல்
லாதர வாய்நின்ற தேவா முத்தியின் வித்தான
      வாதி சிவானந்த நாதா கொட்டுக சப்பாணி. (9)

679. பூரண னேயென்று நாவா ரச்சொ லுரைப்பார்கள்
      போத மதாமன் பின்மீதே மிக்க வுரித்தான
காரண மாய்நின்று தானே யுட்கு ளுதித்தாளி
      காவல னேயுந்த னாளா யொத்த மகத்தோர்கள்
சீருணர் வேயின்ப மேமா நித்திய பொருட்டான
      தேசிக னேயெந்தையேதீ தற்றிடு கற்றாவே
யாரண னார்விண்டு காணா துற்ற வருட்டேவ
      வாதி சிவானந்த நாதா கொட்டுக சப்பாணி. (10)
---------------------------------

முத்தப் பருவம்

680. உருவா யருவா யுருவருவா
      யொன்று மிலாத பரஞ்சோதி
யுலகந் தனில்வந் தருள்ஞான
      ஒளிவா ளேந்தி யடியவரை
யிருளார்ந் திருக்கு மருட்காட்டை
      யழித்துக் கழிப்பித் திருவினையி
னினைந்தே மேடு பள்ளமதை
      நிரவி யினிமேன் முளையாமல்
விரையா கியசஞ் சிதமதனைத்
      தகித்துத் திறந்த வெளியாக்கி
விளங்கித் திகழ்ந்த சிவபுரத்தின்
      மிக வீற்றிருக்கக் குடியேற்று
மருவே மருவி னுள்ளமுதே
      மணிவாய் முத்தந் தருகவே
மன்னே ஞானச்சி வானந்த
      மணியே முத்தந் தருகவே.       (1)

681. பவவா ருதியில் விழுந்துமருட்
      படமா ருதத்தாற் கலக்குண்டு
பகர்நல் வினைதீ வினையலையி
      னெறியாற் பட்டு மொத்துண்டு
மவமாஞ் சென்ன மரணமெனும்
      பிசலான் மிகவும் மலைவாகி
யாசை மடுவ தனின்மூழ்கி
      யழகாம் மாதர் புணர்ச்சுழலாற்
றவமே தின்றிப் பற்றின்றித்
      தயங்கு மெளியே னுய்யுமதாய்
தயவு மிகுந்தே யஞ்செழுத்தாந்
      தப்ப முதவிக் கரையேற்றும்
மவுனா தீதத் தனிப்பொருளே
      மணிவாய் முத்தந் தருகவே
மன்னே ஞானச்சி வானந்த
      மணியே முத்தந் தருகவே.       (2)

682. நிட்டை யிருந்து மாணாக்க
      னனுபோ கத்தில் நேருறையும்
நித்திய மான பொருளதனை
      நிலைக்க நிறுத்தி யதற்கொவ்வ
திட்டாந் திரங்க ளந்தந்த
      நிலைக டனக்குத் திறமாகத்
தெளிவா யெடுத்து மிகக்காட்டித்
      திடமே யுறவே முன்னோர்கள்
கட்டா யுரைத்த நன்னூலிற்
      கட்டற் றிருக்கும் பொருட்காட்சி
காட்டச் சுருதி முதன்மூன்றுங்
      கரியே படுத்திக் கருதுகின்ற
மட்டார் மலரின் பவளவொளிர்
      மணிவாய் முத்தந் தருகவே
மன்னே ஞானச்சி வானந்த
      மணியே முத்தந் தருகவே.       (3)

683. மறைவா மிருளும் பாகமதாய்
      மருள்வல் வினையுஞ் சரியொப்பாய்
மந்த முதன் மூன் றினுக்குமப்பால்
      வருசத் தினிபா தத்தினிலை
நெறியாய் வரவே வழிப்படுத்தி
      நேச மறிந்து நேசமதாய்
நின்ற பருவந் தனைநோக்கித்
      திரோதந் திரும்ப நீர்காட்டுங்
குறியி லிருந்தே யவநோக்கிக்
      குறித்த நிலையில் வரும்பொருளைக்
கூற வினிதா யதைவினவிக்
      கோதிற் பொருண்மெய்ப் பொருளென்றே
திறமாய்த் தெரிய வெடுத்துரைக்குந்
      திருவாய் முத்தந் தருகவே
தெள்ளா ரமுதச் சிவானந்தத்
      தேவே முத்தந் தருகவே.       (4)

684. செம்புக் கிசைந்த உயிர்க்குடிரைக்
      களிம்புக் கிசைந்த விருளதனைத்
திகழப் புளிநேர் பல்குருவாற்
      செப்பு முரைகேட் டுவகையதாய்
நம்பி விளக்க விளக்கவொளி
      நணுகும் ஞாங்கர் போன் மறையு
ஞான மீதன் றெனத்தேறி
      நாடி யுனையே யடைந்தவர்க்குத்
தெம்பு மருவக் கிருபையினால்
      துல்லிய மாக்கித் திருவாக்காந்
திவ்விய வேதி யீந்திரண்டுங்
      கழித்துத் திகழ்ந்த பொருளென்றே
யம்பொன் னான வருளாக்கு
      மையா முத்தந் தருகவே
வடிமைக் கிரங்குஞ் சிவானந்த
      வமுதே முத்தந் தருகவே.      (5)

வேறு
685. கன்னர்முத் தந்தனிமை மாதருக் காகாது
      கந்தர்ப்பன் வில்லங்கமாங்
கதலிமுத் தம்புகல வினிதுறைப் படைகொண்டு
      கடிதருங் குலைகளுண்டாம்
பன்னகந் தருமுத்த மாலத்தி லுறைதலால்
      பழுத்தின் றலைவலித்தல்
பங்கையவெண் முத்தமது சேறடைந் திடுதலாற்
      பகையாது மிறவலதுகாண்
சென்னெலின் கதிரின்வரு முத்தமது பொற்களஞ்
      செய்யுந் தலைக்குனித்தல்
தெரிவையர்க் களமதி லுதித்தமுத் தம்புணர்வு
      செய்திடுங் கொடியதாகு
மன்னநின் முத்தந் தனக்கு நிகராகுமோ
      மணிவாயின் முத்தமருளே
மாசற்ற சோதிச்சி வானந்த நாதனே
      மணிவாயின் முத்தமருளே       (6)

686. புணரிதனில் வருமுத்த மலையுய்த் திடுந்திறம்
      போதாது நிலையில்லைகாண்
பூர்ணசந் திரனருண் முத்தங் களங்கமது
      பூதியம் விருத்தமாகுங்
கணுவினைந் திடுபசுங் கழையுதவு முத்தமது
      காண்கின்ற சாரமில்லையடி
கார்முத்த மதுசிந்தி விடுமே லிடித்திடுங்
      கயமணிமத் தத்திருக்கும்
பணிலமுமுழ் முத்தமது தசையிலுறு மீதன்றிப்
      பங்கமுங் கூனதாகும்
பாணியத் துறுகயலின் முத்தமது நன்றன்று
      பார்க்கில் புலாலென்பர்காண்
மணிகளிது நன்றன்று நன்றாகு முனதுதிரு
      மணிவாயின் முத்தமருளே
மாசற்ற சோதிச்சி வானந்த நாதனே
      மணிவாயின் முத்தமருளே.       (9)

687. பாவையர்ப் புணர்வுகொண் டின்பந் தனைப்பெறுதல்
      பஞ்சவிந் திரிய நீங்கல்
பகர்ந்துமுக் குணமதை யடக்கலிரு வகையெனப்
      பரவிவரு வினைகள்கெடுதன்
மேவவிரு டருகின்ற மலமறுத லினிதான
      விக்கிரக நித்தமுடனே
விவேகந் தனைப்பெறுத லுயிர்கெடுத லெட்டென
      விளக்குநற் சித்திபெறுத
லாவலசை வத்துறுதி பாடாண மாகலீ
      தையிரண் டானமுத்தி
யதுபழிப் புறுமுத்தி யென்றுமுன் னோர்மொழிவ
      ராகையா லதுவிரும்பே
மாவியது மும்மல மகன்றுதிற மாமினிய
      வருளொடு புணர்ந்தமுத்தி
யளித்தருள்சி வானந்த நாதனே யெளியனுக்
      கருண்மருவு முத்தியருளே.       (8)

வேறு
688. சதுமுக னெடுமா லுக்கரி தாய
      தனிமெய்ப் பொருளதனைத்
தரணியி லருளுரு வாய்வந் திலகிய
      சத்திய நன்மனதாய்
துதிசெயு மன்பர்க் கொருமைய தாகித்
      துகளறு மலபந்தத்
தொடரை யறுத்துச் சுயபடி கந்தரு
      துல்லிய மாமறிவுக்
கதிசெய மாக நிறைந்திடு மின்ப
      மளித்து மிகத்தெளிய
வங்கையி னெல்லிக் கனியென வறியவு
      மறிவிக் கும்பொருளே
முதுமறையின் பொருண் முடிவே வடிவே
      முத்த மளித்தருளே
மோனந் தமானசி வானந்த நாதா
      முத்த மளித்தருளே.             (9)

689. என்னுள் விளங்கி யெழுந்து விரிந்தொளி
      ரெங்கெங் குளதாகி
யென்னுள மதனைத் தன்னுள் வசப்பட
      வினிதா கச்செய்து
மன்னிய பின்னில் வின்கதிர் ஞாயிறில்
      வருநற் கதிரதனின்
மருவிய வாறு புனலினி லொவ்வல்
      வணம் துறையுநெறிபோ
லன்னிய மாமெனை யன்நிய மாக
      வளிக்கு மரும்பொருளே
யகரத் துயிரென வுயிருக் குணர்வே
      யருளுக் கொருவித்தே
முன்னவ னேமுழு மாமணி யேதிரு
      முத்த மளித்தருளே
மோனந் தமான சிவானந்த நாதா
      முத்த மளித்தருளே.             (10)
------------------------------------

வருகைப் பருவம்

690. நிலவு மதியத் தெழினுதலில்
      நிறையுந் திருவெண் ணீறிலங்க
நிதியம் பரவும் குழைக்கிசைந்து
      நிகழும் பசுங்குண் டலமசையர்
குலவுங் கருணைக் கடனோக்கங்
      கூரு மலர்க்கண் களிகூரக்
குமிழ்க்கீ ழணிச்செந் துவர்வாயிற்
      கொழிக்குந் தரள மென்நகைப்ப
பலவம் பணிகள் செறிந்தொளிரும்
      பரந்த மருமத் திடைமருவும்
பரமன் மணித்தா வடமாடப்
      பாங்கா ரரையின் மணியொலித்தே
யிலகும் பதத்தில் சிலம்பலம்ப
      யினிதாங் கடவுள் வருகவே
யென்னைப் புரக்குஞ் சிவானந்த
      விறைவன் வருக வருகவே.      (1)

691. கன்னற் கினிய பொருளுரைக்குங்
      கடவு ளருநூ லினைப்பகர்ந்து
கருத்திற் புகட்டித் திறத்தவெழிற்
      கனக்கோ தண்டத் திடையினில்நின்
றுன்னிப் புணர்ந்தங் கருட்குருவென்
      றுரைத்த விதியும் வழுவாம
லுடற்குட் டூண்டா மற்றூண்ட
      வுணர்ந்த வுணரும் பொருள்விளக்கி
மன்னிச் சிறப்புற் றிருக்குமெய்க்கண்
      வடிவாய்த் திகழ்ந்து திருவருளான்
மகிழ்ந்தங் குணர்த்தும் பொருட்டிகழ்ந்து
      மாளாச் செல்வந் தனிலிருப்பை
யென்னச் சகலர்க் கருள்வடிவா
      யெடுத்து வருமிங் கிதன்வருக
வேழைக் கிரங்குஞ் சிவானந்த
      விறைவன் வருக வருகவே.       (2)

692. முடங்குந் தரங்கஞ் செறிந்தொலிகண்
      முழக்கும் பரவைச் செழும்புனலை
மொண்டே புயல்விண் ணிடையெழும்பி
      முழுதும் பரவித் தடம்புவியி
னிடங்கண் டழைத்துப் பயிர்விளக்கு
      மெண்பத் தொருநான் குயிர்விளங்க
விவ்வா றதுபோ லவ்வுலகி
      லிருக்குஞ் சகலர்க் குய்யுமதாய்
திடங்கொட் குருவாய் வந்திழிந்து
      வப்பே றுதிக்க வருட்கடலின்
றிறமே யெடுத்து மிகக்காட்டித்
      திவ்விய ஞானப் பயிர்விளைத்து
நடங்கண் டுவப்பக் கதியளிக்கு
      ஞானா தீதன் வருகவே
நவிலற் கரிதாஞ் சிவானந்த
      நாதன் வருக வருகவே.       (3)

693. ஐந்தாய்த் தொடர்ந்த மலம்பதினெட்
      டவத்தை யதுவு மறக்கடந்தே
யணுவை விளக்கி யெமக்கினிய
      வன்பா யளிப்ப தறமென்று
மைந்தா மிகவு நாமிரக்கம்
      வைத்தே யுனக்கு மகிழ்ந்தளித்த
மாசற் றிருக்குந் திருவருளே
      மன்னும் பொருடா னிவையென்றும்
வந்தார்ந் துறையும் பொருளதனான்
      மருவத் தருவ தின்பமென்றும்
வழங்கு மிதுமூன் றையுந்தெளிந்து
      மறைப்பு நினைப்பில் வீடென்றுந்
தந்தே யன்பர் தனையளிக்க
      தரையில் வருமம் பரன்வருக
தண்மைக் கடலாஞ் சிவானந்தச்
      சதுரன் வருக வருகவே.       (4)

694. தாலந் தழும்பே றிடத்துதியேன்
      சரணம் பணியே னடியாரைத்
தறிகட் குழுவின் றலைமையனாய்ச்
      சகல பருவத் துழல்வேனை
ஞாலந் தனில்வந் தினிதான
      ஞானத் திறத்தே சிகனாகி
ஞாங்க ரழைத்து மிகநோக்கி
      நன்மார்க் கங்கள் வரும்பொருட்டாய்த்
தூலந் தனிற்சங் கமரூபந்
      துலங்கக் காட்டிக் கண்டிணங்கச்
சூக்குமந் தனிற்றன் றிருவாக்காற்
      றுகடீர்ந் தறிய வறிவித்து
மேலங் கியற்றுன் றிருவருளால்
      வீடுற் றுணர வுணர்த்தியிந்த
விதமா யளிக்குஞ் சிவானந்த
      விமலன் வருக வருகவே.       (5)

வேறு
695. செகத்துக்கினிய முதல்வன் வருக
      தேவருக் குணர்வரிதன் வருக
செப்புமறையின் முடிவன் வருக
      தெருளுமறிவுக் கறிவன் வருக
வகத்துக்கொளிசெய் தருள்வன் வருக
      வாகமப்பொரு டலைவன் வருக
வன்பின் நிறைந்தவின்பன் வருக
      வசலமான நித்தியன் வருக
மிகுத்தகருணை வாரி வருக
      விளங்கியசெழுஞ் சோதி வருக
மெய்யை விளக்குந் துய்யன் வருக
      விமலவமுதக் கடவுள் வருக
மகத்துவக்குரு மணியும் வருக
      மணிவிழிக்கொளி தருவன் வருக
மன்னு ஞானச்சி வானந்த
      நாதன் வருக வருகவே.       (6)

696. அகரமெனவு முயிருக் குயிர
      தாகிய வரும்பொருளும் வருக
வாசொடுசெய் வினைக ளுயிர்கட்
      கறிந்துநடத்து மண்ணல் வருக
சிகரவடிவ நிமலன் வருக
      தேவதேவ பரமன் வருக
தேர்ந்தஞானச் செல்வன் வருக
      தெளிந்தவமுதப் புணரி வருக
பகர்வுக்கரிய தொருவன் வருக
      பத்தர்பணியு முத்தன் வருக
பாவகங்கடந் தவனும் வருக
      பந்தமறுக்கு மெந்தை வருக
நிகரிலாத வமலன் வருக
      நேயந்தனினின் றவனும் வருக
நித்திய ஞானச் சிவானந்த
      நிதியும் வருக வருகவே.       (7)

697. குறியுங்குணமுள் ளவனும் வருக
      குறியுங்குணமில் லானும் வருக
கோதிலாத மூர்த்தி வருக
      குறைவிலாத நிறைவன் வருக
பிறிவில்லாத போத வுயிரைப்
      பிரித்தருளிய மெய்யன் வருக
பேரானந்தக் கனியும் வருக
      பெம்மானெம்பி ரானும் வருக
வறிவுக்கரிய சோதி வருக
      வகண்டிதபூ ரணனும் வருக
வயத்துளினுறை யுதித்து வரியி
      னடங்கெனுமுல குணர்வன் வருக
பொறிபுலன் றிரையிருளொ ழித்தருள்
      புரியுந் தபனன் வருகவே
புனித மானச்சி வானந்த
      போதன் வருக வருகவே.       (8)

வேறு
698. மாயன் சரோருக வாசன் சுராதிபர்
      வாழும் பராபர மணுக
மாகங்க டேடியும் லோகங்க டேடியு
      மாகங்க ணாடியு மரிதாம்
நாயன்ற னோர்கையின் மாறுஞ் செயலிறை
      ஞானங்க டேறில னிருளா
னானென்ப தாயுறை வேனிந்த மாநில
      னாடுந் தியானம துடையே
னேயம் புகேனிரு தாளுந் தொழேன்விழி
      நீருந்தரே னின்று மனதாய்
நீடும்பல காலமு மேயிந்த வாறுடை
      நீதன்றன் மேனிமிகு தயவாய்
தாயன்ப தாயினி தாமின்ப மாரரு
      டானிங்க னேதர வுருவாந்
தானந்த மீதினி லானந்த மானசி
      வானந்த நாதன் வருகவே.       (9)

699. பாரம்பு தேயுவும் வாய்வம்ப ராதிகள்
      பரவுங் கலாதி குணமீதின்
பாலின் பிரேரம தாமைந்து மேயுறு
      பாசங்க ளீதெனு மிதனீர்
சேரும் புலாதிக ளோடுங் குலாவல்செ
      யாகின்ற தாமுயி ரெனவுந்
தீதின்றி யேயிதி லாடும் பராபர
      தேவன் புராதன மெனவு
மோரிந்த மூவினை யோரும் பின்னாடு
      முபாயங்க ளான வொருமையா
லோதங்க சேதன மீதென்று சேதன
      மீதென்று நீயறி யெனவே
சாருந் தபோதனர் தேறுஞ் சொலேசொல்
      தாமிங்க னேவரு மணியே
தானந்த மீதினி லானந்த மானசி
      வானந்த நாதன் வருகவே.       (10)
-------------------------------------

அம்புலிப்பருவம்

(சாமம்)
700. மனமகிழ்ந் தொருமையாய்ப் பரிவுடன் புகழ்மருவு
      மாசில்சோ தியைமருவலால்
வளர்குருவ தாகிநன் மதியாகையா னிறைய
      வருமம் பரத்துறைதலா
லனைவருங் கண்டுவகை கொண்டுறைய வேவரு
      மகநிலவு மணியாகையா
லமுதமது தருகையாற் சுடரொடு கலந்ததா
      லரனருட் கண்ணாகையால்
நினைவிலெவர் கட்குமிகு தண்மைதர லால்நல்ல
      நெறியுள்ள வடிவாகையான்
நேசத்தி லுந்தனுக் கிவனுக்கு நிகரான
      நேசனியா வருமில்லைகா
ணனுதினந் தொண்டர்வந் தடிப்பரவு மையனுட
      னம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (1)

701. விரியுமண் டத்திலு முரியபிண் டத்திலு
      மிகுதெரி சனங்காட்டுவாய்
மிளிரதனைத் தெரியவொட் டாமலே துன்னுமிருள்
      வேலையை விலக்கியிடுவாய்
தெரியவந் திலகுவா யன்றியெந் நாடொறுஞ்
      சிறியதாய்ப் பெரியதாவாய்த்
தேர்ந்துதேர்ந் தினியபரி பூரணம தாகுவாய்
      திருநீற்றின் மேனியாவாய்ப்
பரிவுடன் கலையினை யுகந்து மத்தந்தனைப்
      பரிசிப்பை யாதலாலே
பார்க்கிலுன் செயலிவன் செயலா யிருந்ததாற்
      பகர்விலா துவகையாவா
னரியபொரு ளுருவெடுத் தருளவரு மையனுட
      னம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (2)

702. கடலதனில் வருவைநீ சட்டைநா தய்யனருட்
      கடலதனில் வந்தவனிவன்
காணுறிற் குவளைமுகை விகசிப்பை யிவனன்பர்
      கட்குவளை விகசிப்பவன்
படருமொரு சுடரதா குவையிவனு மெங்கினும்
      படருமொரு சுடரதாவான்
பாவையர்ப் புணர்விலின் பருள்வா யருபுணர்வு
      பசுவினுக் கின்பமருள்வான்
கடிகமல விரிவை குவிப்பைநீ யிவனிதைய
      கமலவிரி வைக்குவிப்பான்
கருதுமுன துண்மையு மிவனுண் மையும்பகர்வு
      காண்கிலொரு தன்மைபெறலா
லடிமையர்க டேரும்வகை யாகவரு மையனுட
      னம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (3)

(பேதம்)
703. குறைவுநிறை வுள்ளவுரு வாகுவா யிவனுமொரு
      குறைவிலா நிறைவுபெற்றோன்
குருநிந்தை யுள்ளநீ யிவனுமோ மெய்யருட்
      குருவழியி னின்றமுதல்வன்
றுறையுநின் வடிவமுந் தோன்றவரு வாயிவன்
      றோன்றாத் துணையாகுவான்
சொல்லுறுங் கண்டிதம் பெறுவைநீ யிவனுமோ
      சொல்லுறு மகண்டிதனுமாம்
வறுமைதனை யெண்வீ டிருந்தருள்வை யருள்வனிவன்
      வாழ்வையெண் ணரியவீட்டில்
வளமிலாக் கர்க்கடக வீட்டிறைவ நீயிவன்
      மகிழ்ஞான வீட்டிறைவனா
மறிவரிய பொருளிவ னுந்தனுக் கதிகமா
      மம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (4)

704. இரவிலமு தந்தருவ தன்றியிர வும்பகலு
      மிடையறா வமுதமருளா
யிருதன்மை யைக்கடந் தொருதன்மை யைப்புணர்ந்
      தெஞ்ஞான்று முறைவதறியாய்
விரியுமோ ரண்டத்து ளொளிபெறுவை யாங்கதின்
      மேலுறும் பேரொளிபெறா
மிளிராவி நாண்மறைந் திடுவையெவை யாலுமறை
      வில்லாத விமலனாகாய்
வரவுபோக் கும்புணர்வி லுலைவதன் றிப்புணர்வு
      வரவுபோக் கின்றிநிலையாய்
மாசறு முடற்களங்கம் பெறுவை மாசற்ற
      மானிட(ர்)க ளங்கமாகா
யருமையா மெந்தையுடன் நின்னைநிக ரென்பதா
      லடியவர் குழாங்களிப்பா
ரானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (5)

(தானம்)
705. செங்கண்மா லும்பிரம னுங்கணா டியுமிக்க
      தேடியும் பாதமறியார்
திகழவுன் மேறயவ தாகவுந் தனைநெடுஞ்
      சிரமீத ணிந்துகொண்டான்
தங்கணா குஞ்சுடர்கண் மூன்றிலுந் தனைநன்மை
      தருமருட் கண்ணாக்கினான்
சந்திரசே கரனென நின்பெயர் விளங்கவும்
      தானே தரித்துவந்தான்
றிங்கணா ளின்விரத மென்னுதா மென்றதைச்
      செய்பவர்க் கருளளித்தான்
தேர்ந்தறிவ திவ்வுதவி யார்க்குதவி னானவன்
      றிருமேனி யாகவிந்த
வங்கண்மா நிலமதனில் வந்தவென் னையனுட
      னம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (6)

706. முன்புநின் நாரியர்க் காகவன் மாலிவெகு
      முனிவுகொண் டமர்புரிந்தே
மோதிடும் போதுவந் தெதிர்சென்று நின்னையுயிர்
      மூழ்காம லாண்டுகொண்டான்
பின்புமாங் கவரிட்ட சாபத்தை நீக்கிநற்
      பிரகாச மாக்கிவைத்தான்
பேரின்றி நீபெற்ற பிள்ளையைப் புதனெனப்
      பிரிவில்கிர கத்தில்வைத்தான்
மின்பாவு மழலுரு வளர்த்திடும் போதுன்னை
      மெலியாமல் தண்மைதந்தான்
மேலிந்த வுதவிக்கு வுனையவர்க் கீந்தாலு
      மேவுகை மாறாகுமோ
அன்புவைத் தின்பமுறு மெந்தையுடன் நீமகிழ்ந்
      தம்புலீ யாடவாவே
ஆனந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (7)

(தண்டம்)
707. அனல்விழி கொடுமனத் தயிலியற் றிடுமொழிய
      ராக்கதர் பதிக்கியஞ்சி
யகநகரின் வழிபுக வொதுங்கினா யாங்குனை
      யதோகதியில் விழமிதித்தான்
புனல்மிகுத் திசையொலித் தலையெறிப் பரவையிற்
      புகழநின் னொடுபிறந்த
பொல்லாத நஞ்சினைக் கண்டத்தி லேகரும்
      புகர்தர வருந்தினானுன்
றனைவிதித் திடுமலர்ச் சதுமுகப் பிரமனைத்
      தலையறுத் தனன்முன்னாலே
சங்கரிக் குந்தொழிற் கொண்டவ னிவன்செய்தி
      தானறிந் துணர்வதிலையோ
வனனீயக் கடவுணித் தியனவர்க் கடிமையர்க்
      கம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (8)

708. உருவிலிக் கரதலத் தினிலுனைப் புகழவைத்
      தொளிர்குடை பிடிக்குமவனை
யுடலமது பொடிபட விழித்தெரித் தனனவனி
      லுன்னெறி யுயர்ச்சியாமோ
விருள்விழிக் கதிருதித் துனதுநற் கதிருதிப்
      பெழிலினை விழுங்குமவனை
யெயிறினை யடித்துதிர்த் தினதறிய வில்லையோ
      விதுவன்றி யுன்னையன்னா
டிருமலிப் பதமதாற் றரையினிற் றுகளெனத்
      தேய்த்ததுவு நினைவில்லையோ
சிந்தைதனி லிதையறிந் தெண்ணிவின வுங்கடவுள்
      செய்கையள வில்லையுருவோ
டருவிலிப் பரமனுல கினில்வந் தழைத்தன
      னம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (9)

709. ஈசனற் சிரமுறைவ னென்றாணு வங்கொண்
      டிராதே யவன்றன்மகிமைக்
கிணையுறா தொன்றுமுரை யறிவரிய பொருளென்
      றிருக்குமுறை யிடுவதெண்ணித்
தேசிகன் குறிவிழியி னின்றொருமை யாகவும்
      தெருள்வையா லுந்தனுக்குத்
திருவருள் பொருந்திவள ரானந்த வாரியிற்
      சேர்ந்துவகை யாகவினிதாய்
நேசமதில் நின்றவின் பம்பெறுவை சன்மார்க்க
      நெறியாவை யுன்களங்க
நிட்களங் கம்பெறுவை தொண்டர்தன் குழுவினொடு
      நிலையாக வாழ்வுபெறுவா
யாசறுத் திடவரும் பதிஞான தேசிகனொ
      டம்புலீ யாடவாவே
யானந்த மாகியசி வானந்த நாதனுட
      னம்புலீ யாடவாவே.       (10)
------------------------------------------

சிற்றில் பருவம்

710. அழுக்கைத் திரட்டும் புழுக்குரம்பை
      யதனி லழுந்திக் கிடந்துழன்றே
யாதார மும்வே றில்லாம
      லலையு மவரை யவருளக்கண்
விழிக்க விழித்து மலம்போக்கி
      விளங்க வருளின் வழிப்படுத்தி
மேலா கியபே ரின்பமதை
      மிகவுந் தேக்கிச் சுகமாக்கிப்
பழுக்கச் செய்து சுகமுடிவிற்
      பழுத்த நிலையை யுரையுணர்வாற்
பகர்வுக் கரிய நிட்டையிதா
      மெனமா ணார்க்குப் பதஞ்சூட்டும்
செழிக்குங் கமல மலர்ப்பதத்தாற்
      சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தேர்ந்த ஞானச் சிவானந்த
      தேவே சிற்றில் சிதையேலே.       (1)

711. தறுகண் மாலி யுரமன்றே
      சதுமா முகவன் சிரமன்றே
தக்கன் வேள்விச் சசியன்றே
      தழைக்கு மடியார் வினையன்றே
நெறிகொ ளடியா லடைப்பதற்கு
      நெடுவா சலுஞ்சோ றிடுமடமு
நிலவுங் கூடஞ் சிறுவீடு
      நேராஞ் சமைய லறையிதெலாம்
வெறுநுண் மணலிற் செய்தெழிலாம்
      மிகவுஞ் சிறியோம் பலர்கூடி
விளையாட் டிடத்தைக் கலைப்பதெங்கள்
      விதியோ வுந்தன் விளையாட்டோ
திறமே யுணர்வே யரும்பொருளே
      சிற்றில் சிதையேற் சிதையேலே
தேர்ந்த ஞானச் சிவானந்த
      தேவா சிற்றில் சிதையேலே.       (2)

712. அகத்திற் கருதுந் திறமறியோ
      மடிகள் பணியோஞ் சிவநேசத்
தருமை யறியோங் குறிக்கணுகோ
      மருநூ லுரைக்கும் வகைதெரியோந்
தொகுத்துச் சரிதைக் கிசைந்தியற்றோந்
      தொன்மை யறியோம் புதிதறியோந்
தோன்று முதலின் பருவமுறோந்
      தொழும்பிற் கலவோ மரற்கன்பு
மிகுத்துத் துதியோ மறியாமை
      மேவுஞ் சிறியோங் குழாத்தணுகி
மிளிராங் காட்சி செய்துவந்தால்
      விளங்குன் னடியார் நகையாரோ
செகத்திற் குருவாய் வரும்புனிதச்
      செல்வா சிற்றில் சிதையேலே
தேர்ந்த ஞானச் சிவானந்த
      தேவா சிற்றில் சிதையேலே.       (3)

713. உடற் பாண்டத்தி லுயிர்ப்பாலை
      யுளக்க ணெரியா லேவெதுப்பி
யுறையும் பெருஞ்சஞ் சிதச்சலத்தை
      யொடுக்கிக் குறியின் புரையையிட்டவ்
விடைக்கோ ருறுதித் தயிராக்கி
      ஞானத் தெழின்மத் தாற்கடைந்து
மிருண்மும் மலத்தின் மோரகற்றி
      யிதனைப் புளிப்பென் றேவெறுப்பித்
தடுத்தே யிருக்குந் திருவருளா
      மளையைத் திரட்டி யவ்வளையை
யன்பா லுருக்கித் திகட்டாத
      வரும்பே ரின்ப நெய்யாக்கித்
திடப்பே றளிக்குந் தெளிவேநற்
      றேனே சிற்றில் சிதையேலே
தேர்ந்த ஞானச் சிவானந்த
      தேவா சிற்றில் சிதையேலே.       (4)

714. எழுத்திற் கலந்தே யகரமந்த
      யெழுத்தாய் விளங்குந் தனைக்காட்டா
தெழுத்திற் கலவா துறிற்றலையி
      லியற்கை விளங்கு மிரண்டுருவாய்த்
தழைத்துத் திகழ்ந்த வெழுத்தவையிற்
      சாத்தா தெழுதா விறையெழுத்துத்
தானங் குணர்த்த விரண்டினமுஞ்
      சாத்த வெழுத வருமிவைபோ
லழைத்துச் சிறியேன் றனைக்கரண
      மடையா திருந்து பொதுவினினி
லணுவைப் பெறுவா யதைப்பகர
      வருளைப் பெறுவை யெனப்புகட்டுஞ்
செழித்துச் சிவந்த மலர்ப்பதத்தே
      சிகனே சிற்றிற் சிதையேலே
தேர்ந்த ஞானச் சிவானந்த
      தேவா சிற்றில் சிதையேலே.       (5)

வேறு
715. இருளார் கின்ற புலனோ ரைந்துக்
      கினிதா யொத்துப் புவிமீதி
லெழிலாய் வந்துப் பலநாள் நின்றுற்
      றிடுமியான் முத்திக் குளனாக
வுருவாய் வந்து திறமா யின்புற்
      றுளமே நிற்பித் தருள்வாரி
யுறவே தந்த குருவே யன்பர்க்
      குணர்வே நற்சத் தியமான
பொருளே துங்கக் கடலே யெந்தைப்
      புனிதா சித்திக் கரசேமெய்ப்
புகழே யுன்பொற் பதமே நம்பிப்
      புணர்வோர் புத்திக் கமுதேயோ
தெருளா மின்பச் சுகமே யிந்தச்
      சிறியார் சிற்றில் சிதையேலே
சிவநே யம்பெற் றசிவா னந்தத்
      திறனே சிற்றில் சிதையேலே.       (6)

716. பணையோ கொங்கைக் குவடா மங்கைப்
      பரிவா சைக்குட் புணர்வாகிப்
பலனார் கின்ற பொருளி யாதென்றும்
      பகரா மற்கற் றலைவேனை
யணிசே ரிந்தப் புவிமீ தஞ்சக்
      கரஞா னசிற் குருவாகி
யவஞா னம்பெற் றறவே கண்டொத்
      தருளாய் நிற்கத் தருவோனே
குணமே தின்றிக் குலமே தின்றிக்
      குறிதா னற்றப் பெருவாழ்விற்
குறைவே யின்றிப் பரமாய் நின்றக்
      கொழுமா சித்திப் பெருமானே
திணைமீ துன்பொற் பதமே நம்பித்
      திகழ்வோஞ் சிற்றில் சிதையேலே
சிவநே யம்பெற் றசிவா னந்தத்
      திறனே சிற்றில் சிதையேலே.       (7)

717. அகமீ துன்றன் பதமே கொண்டுற்
      றயரா நிற்கத் தொழுவார்க
ளமுதா முன்பொற் றிருகா மஞ்சொற்
      கடைவார் பத்திக் கினிதாவார்
புகழ்வா ரெந்தைத் தலைவா வென்று
      பொதுவா யுட்குட் களிகூர்வார்
புளகா னந்தப் பொருளே கண்டு
      புணர்வார் சித்தத் துறவோர்வார்
நிகழ்வா ரின்பத் துறைவா ரிந்தத்
      திறமாய் நின்றொத் திடுவார்முன்
நிசியூர் கின்ற களவார் நெஞ்சத்
      தினர்போ லுற்றுத் திரிவேனோ
திகழ்வா யெந்தற் கினிதே தந்தச்
      சிறியேன் சிற்றில் சிதையேலே
சிவநே யம்பெற் றசிவா னந்தத்
      திறனே சிற்றில் சிதையேலே.       (8)

வேறு
718. பஞ்ச மலத்தி னிலும்பதி னெட்டி
      னவத்தையி லும்பழகிப்
பலநா ளுழல்வேற் கெளிவந் தருளிப்
      பரிவா யளவிலதாஞ்
சஞ்சித வினையை யருட்கண் கொண்டு
      தகித்து மெடுத்தவினை
தன்னை யதற்குள் போகத் திலதின்
      றன்மை யொழித்ததின்மேன்
மிஞ்சிய வினையை யினித்தொட ராமல்
      விலக்கி யருட்டுறையான்
மிளிர்தரு மென்னைத் தனதென் றருளிய
      மெய்ப்பொரு ளேவிமலா
செஞ்சர ணப்பர னேகரு ணாகர
      சிற்றில் சிதையேலே
தேவசி வானந் தக்கட லேயெஞ்
      சிற்றில் சிதையேலே.       (9)

719. உன்மய மென்றெவை யுஞ்சிவ னூலறி
      வோரு முரைக்குமதை
யுணரா மற்றிரை யாகிய விருளா
      லுணர்விலி மனதாகி
யென்மய மென்றுயர் சஞ்சித மதனி
      லிருந்தனு பவமீறி
பிறப்பு முதிப்பு மிகுத்து வருத்த
      வதின்நா ளுழல்வேனைத்
தன்மய மாக வளித்திட வுலகிற்
      றானரு ளுருவாகிச்
சருவிய மும்மல மதனை யறுத்தொளி
      தருமவ் வுளமதனிற்
சின்மய மான தயாபர நாதா
      சிற்றில் சிதையேலே
தேவசி வானந் தக்கட லேயெஞ்
      சிற்றில் சிதையேலே.       (10)
----------------------------

சிறுபறைப்பருவம்

720. கரமது குவித்துநின் றுருகியர கரவெனக்
      கருதுவர் முழக்கவொருபாற்
கருத்தினி லுவந்துநைந் துருகிசிவ சிவவெனக்
      கழறுவர் முழக்கவொருபா
லுரமதிற் கையிணைத் தினியதோத் திரமதை
      யுரைப்பவர் முழக்கவொருபா
லுரியமெய்ஞ் ஞானனூ றனைவிருப் புடன்விரித்
      தோதுவர் முழக்கவொருபால்
பரமதில் வசப்படுந் தன்மையர் களிப்புடன்
      பயில்வது முழக்கவொருபாற்
பத்தியுட னேவந்து பொருடனை மகிழ்ந்துகேட்
      பவர்குழு முழக்க வொருபாற்
சிரமதிற் கைக்குவித் தவர்முறை முழக்கநீ
      சிறுபறை முழக்கியருளே
திடமுறவென் னுளமதிற் நடமிடுசி வானந்த
      சிறுபறை முழக்கியருளே.       (1)

721. அருட்டிற மெடுத்திறைவ னூல்வழியி னாடியென
      தாசறுந் திருமொழியினா
லறையுமெய்ப் பொருளையிரு கரமது குவித்துவந்
      தலையுறும் பலபேதமாம்
பொருட்டிற மகற்றிநற் றிறமுற தருஞ்செவிப்
      புலன்வழியி னின்றுகேட்டுப்
புகழுமுட் கரணத்தி னாலுன்னி யுன்னலைப்
      பூண்டுசிந் தித்தல்செய்து
மருட்டிற மிருட்டிற மொழித்தவறி வாலதனை
      மகிழுறத் தெளிதலாக்கி
வருமறி விழந்தறி வற்றுநிட் டையைப்பெறுதன்
      மாணாக்கர் செய்தியென்னுந்
தெருட்டிற மகத்துவ மிகுத்திடு சிகாமணி
      சிறுபறை முழக்கியருளே
திடமுறவென் னுளமதனில் நடமிடுசி வானந்த
      சிறுபறை முழக்கியருளே.      (2)

722. எனதுமனை யென்றுமென் கைகால்க ளென்மக்க
      ளென்சுற்ற மென்றிருந்தா
யிந்திரியம் புலன்வளியு முப்பதந் தக்கரண
      மீரிரண் டுள்ளமொன்றும்
நனவதனி னின்றிடும் போதுமுன் னிந்திரியம்
      நனவினிற் பத்துநிற்க
நாலைந்து மைந்துடன் கனவதா யுள்ளமுயிர்
      நற்சித்த முஞ்சுழுத்தி
யுனவரிய துரியத்தி லுளமுயி ரிரண்டுமுள
      மொன்று துரியாதீதமா
யுற்றிடும் போதுனக் கார்வந் துணர்த்தின
      ருமாதர வறிந்தேயினிச்
செனனமதில் வாராம லுய்யென்ற தேசிகா
      சிறுபறை முழக்கியருளே
திடமுறவென் னுளமதனில் நடமிடுசி வானந்த
      சிறுபறை முழக்கியருளே.       (3)

723. கீழா லவத்தையி லிழிந்தருண் மிகுத்திடுங்
      கேவலத் தினிலழுந்திக்
கிடக்கின்ற வணுவினுக் குனதுபரி பூரணக்
      கிருபையா லன்னபடியே
தாழாம லாதரவு செய்துசூக் குமமாதி
      தனைவிருப் புடனெழுப்பித்
தத்துவக் குழுவினை யுயிர்ப்புற நடத்திநற்
      சகலமதி லேயழைத்தே
யாழாத சாக்கிரந் தனிலெனை நிறுத்தியங்
      காரணங் கலைகள்சமைய
மியாவையு முணர்ந்துவரு முப்பொருட் செய்தியென்
      றறிவிக்கும் ஞானவடிவே
சீழா(டா)க்கண் முறைமுறை பணிந்திடு பதாம்புயா
      சிறுபறை முழக்கியருளே
திடமுறவென் னுளமதனில் நடமிடுசி வானந்த
      சிறுபறை முழக்கியருளே.       (4)

724. சன்மார்க்க மானமெய்ஞ் ஞானமது பெற்றிடத்
      தமியா யுனைத்துதிக்கத்
தகைமையுடன் நீமகிழ்ந் தெனையழைத் தினியகுறி
      தன்னையறி விக்கவினவி
நன்மார்க்க மெனவுறுதி யாகநின் றக்குறியின்
      நாடிடும் போதுமாயை
நண்ணியித மகிதமா யெங்குங் கலந்துநா
      னாபேத மாய்மயக்கப்
பன்மார்க்க மாகியினி யெங்கறிவ தென்னப்
      பகுப்புட னிருந்தநிலையிற்
பராமரித் தேமறிப் பார்வையா யென்றுநற்
      படிகமெனு மெனைவிளக்கிச்
சின்மார்க்க மானதிரு வருளுதவு முதல்வனே
      சிறுபறை முழக்கியருளே
திடமுறவென் னுளமதனில் நடமிடுசி வானந்த
      சிறுபறை முழக்கியருளே.       (5)

வேறு
725. கருக குழுவின் குணமறிதற்
      காட்டுந் தொழிலின் திறமறிதற்
கருது மிதனை யன்னியமாய்க்
      காண்ட லெனவு மாங்கதின்மேன்
மருவிப் புணர்ந்த விருளைவகை
      வகையா யுணர்த லதைநீங்கி
வளமாய் முழுதுந் தானறிவின்
      வடிவாய்த் திகழ்த லெனையுணர்த்து
மொருவ னுளதென் றறிதலிதை
      யுணரக் கருவிக் கான்மாவுக்
குருவெங் காட்சிச் சுத்தியுமென்
      றுரைப்ப ரினிதா யென்றுலகிற்
றெரியும் படிவந் தெனக்கருளுந்
      தேவா முழக்குஞ் சிறுபறையே
தேர்ந்த ஞானச்சி வானந்தச்
      செல்வா முழக்குஞ் சிறுபறையே.       (6)

726. வாக்கு மனதுக் கரிதான
      வடிவா யுயிருக் குணர்வாகி
மன்னும் பொருளாய் முழுதுமதின்
      மயமாய்க் காண்ட லிதைத்தெளிந்து
போக்கும் வரவும் புணர்வுமில்லாப்
      புனிதன் றொழிலைந் தினையுமெங்கும்
பொருந்த வறிய விரண்டறவே
      புணர்ந்து மிகுஞ்சிற் பரமதனில்
வாக்கி லியம்பு மிதுமூன்று
      மண்ண லுருவந் தெரிசனமு
மலையுந் தகையோ கமுமாமென்
      றறையும் பதியே யெனக்கின்பம்
தேக்கும் பொருளே யருளுருவே
      தேவே முழக்குஞ் சிறுபறையே
தேர்ந்த ஞானச்சி வானந்தச்
      செல்வா முழக்குஞ் சிறுபறையே.       (7)

727. நினைப்பு மறப்பு மிரண்டுமிலா
      நிட்டை யதுவா யுடலுயிரு
நிதியு மரற்கே யெமக்கென்கொ
      லென்றே நிலையில் வழுவாம
லனைத்து மவன்றன் போகமதே
      யல்லால் வேறொன் றில்லையென
வைய மகற்றிற் றுய்யமதா
      யனலி லிருந்த படியிருந்தே
கனத்த வுடல மெடுத்தபடி
      கண்டு பொசிக்கச் சிவபோகங்
காட்டும் பொசிப்பி லிதமகிதங்
      கமழ்த லுனக்கில் பிறற்கென்றே
செனித்து மிறக்கா வழியருளுந்
      தேவா முழக்குஞ் சிறுபறையே
தேர்ந்த ஞானச்சி வானந்தச்
      செல்வா முழக்குஞ் சிறுபறையே.      (8)

728. விரதந் தவங்க ளாச்சிரமம்
      விளங்கு மியாக மதுதீர்த்த
மேவுந் தானந் தியானகன்மம்
      விரிவாஞ் சாந்தி மிகுசீலம்
புரியுந் திறவா ருஞ்சுவர்க்கம்
      புகுந்து மிகவுந் திரும்பியிந்தப்
புவியிற் பிறந்து வருவரென்று
      புகலு மிதுவல் லாலரன்றன்
சரியைக் கவன்ற னுலகிருப்பார்
      சாத்துங் கிரியைக் கருகிருப்பார்
தகையோ கத்துக் குருவாவர்
      தவமாங் குருவா லிறைஞானந்
தெருளச் சிவமா மென்றுலகிற்
      றெரிப்பாய் முழக்குஞ் சிறுபறையே
தேர்ந்த ஞானச்சி வானந்தச்
      செல்வா முழக்குஞ் சிறுபறையே.       (9)

729. உன்னற் கரியான் நீயுலகி
      லுருவாய் வந்திங் கறைகூவி
யுளவா யென்னை யாட்கொண்டே
      யுண்மை யளித்த திறமதுதான்
கன்னற் சுவையோ பாகுடன்கற்
      கண்டின் சுவையோ வதிரசசக்
கரையின் சுவையோ பழுத்திடுமுக்
      கனியின் சுவையோ பயன்சுவையோ
வென்னு ளுதித்தே யெனைவிழுங்கி
      யிருக்குஞ் சுவையின் றிறமதனை
யின்ன தினிய திப்படியென்
      றியம்ப வொண்ணா தென்கோவே
தின்னத் திகட்டா தருஞ்சுவையே
      தேனே முழக்குஞ் சிறுபறையே
தேர்ந்த ஞானச்சி வானந்தச்
      செல்வா முழக்குஞ் சிறுபறையே.       (10)
--------------------------------

சிறுதேர்ப் பருவம்

730. பாராதி யைந்தையும் பாரா யிணக்கியிரு
      பத்தஞ்சு கூறுமதின்மேற்
பரப்பியந் தக்கரண நாலையுந் திகிரியாய்ப்
      பாய்ச்சியைம் புலனோவியஞ்
சேராமல் வளிகளீ ரைந்துமுரு வாணியாய்த்
      தொளைகொணா டியிலிருத்தித்
தோத்திராதி தனினாலு வழியாய் விடுத்துநற்
      றொக்குவின் சேலையிட்டுக்
காரான முக்குண மங்கண மதாயலங்
      காரநற் கால்கலாதி
கருதரிய சூக்குமாதி நாதமுஞ் சிகரமாய்க்
      கவித்திடுங் குடைவிந்துவாய்ச்
சீராக வேயமைத் துலகினிற் பலபலச்
      சிறுதேர் நடத்தியருளே
தேனின்ப மாகியசி வானந்த நாதனே
      சிறுதேர் நடத்தியருளே.       (1)

731. காயா மரத்தினைத் தேரா யமைத்தகங்
      களிகொளந் தந்தநிலையிற்
கமலமுத லைவருந் தொழிலினை நடத்தமுன்
      கட்டுந் துரங்கம்வினையாஞ்
சாயாம லுற்றரு டிரோதாயி சத்திரத
      சாரதி யெனத்துலங்கச்
சாருமா மாயைரச வர்க்கமுங் கதலிகே
      தனமாய் விளங்கவினிதா
யாயாத சத்திக ணெருங்கவங் கருளினை
      யகண்டநற் றீபமாக்கி
யான்மாவை மந்திரிய தாகமுன் னிட்டுநீ
      யண்ணலென வீற்றிருந்து
சேயெனை யிப்புவியி லாளவரு மையனே
      சிறுதேர் நடத்தியருளே
தேனின்ப மாகியசி வானந்த நாதனே
      சிறுதேர் நடத்தியருளே.       (2)

732. மூலத்தி னிலைதனி லிருந்தெழுந் தோமென
      முனைந்துநாற் கோணநகரின்
முடிக்கிமதி யின்பாதி கோணத்தில் வந்துயரு
      முக்கோண மீதிலேற்றிக்
காலுற்ற வறுகோண வீதியி னடத்தியது
      கண்டுவட் டத்திலினிதாய்க்
கடுகவு நடத்தியாங் கதுக்கடந் திவ்வாறு
      காட்சியாம் வீதிவிட்டு
மேலுற்ற வமுதமாஞ் சந்திரமண் டலமதனில்
      மிகவுற நடத்தியப்பால்
விளங்கிவரு மாயிரத் தெட்டிதழ தாகிவளர்
      மென்கமல மேவிவிரதஞ்
சீலத்தை நீங்கியப் பெருவெளியி லேமிகச்
      சிறுதேர் நடத்தியருளே
தேனின்ப மாகியசி வானந்த நாதனே
      சிறுதேர் நடத்தியருளே.       (3)

733. மகரமெனு மருடருஞ் சுத்தமு மசுத்தமா
      மாயைவல் வினையிரண்டும்
மன்னுமிரு ளானமல வீதியை விடுத்துமதி
      வளர்திரோ தாயியான
நகரமது தன்னைத் திருப்பிமுன் மலமதனி
      னாடாமல் யகரமென்னு
நல்லறிவு நீக்கவங் கங்குமே போகாமல்
      நண்ணரிய பொதுவாகியே
வகரவரு ளாலதனுள் வந்ததும் போனது
      மன்னிநிலை யானதுமெலா
மனமறிய வறிவித்து மாசிற் றெளிந்ததனில்
      வருமின்ப வாருதியெனுஞ்
சிகரநிலை சாயாம லினிதுறக் கருணையாய்ச்
      சிறுதேர் நடத்தியருளே
தேனின்ப மாகியசி வானந்த நாதனே
      சிறுதேர் நடத்தியருளே.      (4)

734. பூதநிலை யும்பொறி புலன்கணிலை யுஞ்சுழற்
      புரியுநாற் கரணநிலையும்
போதமற விட்டுமுக் குணநிலையும் விட்டுநற்
      புகழ்சுத்த நிலையும்விட்டே
யோதுமைந் தானவிந் நிலையினை விடுத்திரு
      ளுதிக்குநிலை தன்னைவிட்டே
யுற்றகே வலநிலையும் விட்டுசத் சத்தான
      உயிர்நிலையி லேநிறுத்தித்
தீதறக் காட்டினது கண்டுவந் தன்பினாற்
      றேர்ந்துவரு மின்பநிலையிற்
றிகழ்தர நடத்தியாங் ககன்மகிழ்ந் தேசுகத்
      திவ்வியவீ தியினடத்திச்
சேதனம் தானவம் முடிவினில் நிலைத்திடச்
      சிறுதேர் நடத்தியருளே
தேனின்ப மாகியசி வானந்த நாதனே
      சிறுதேர் நடத்தியருளே.       (5)

வேறு
735. மதத்தாற் குலத்தான் மானத்தான்
      மானார் மருட்டார் போகத்தான்
மயங்கு மெளியேன் முன்னுருவாய்
      வந்தே விளங்கிக் கைகாட்டும்
விதத்தா லதனைக் கழிப்பித்து
      விவேகஞ் செறியக் குறிப்பளித்து
வேறா யணுவை வெளிப்படுத்தி
      விமலம் பெறுதற் குன்போதம்
பதைத்தா லதுவுந் தோன்றாது
      பதைப்பற் றிருக்கிற் றோன்றுமெனப்
பரிவா யறிவுக் கறிவாகிப்
      பசுபா சத்தின் துருசதனைச்
சிதைத்தே யரும்பொற் பதஞ்சேர்க்குந்
      தேனே நடத்துஞ் சிறுதேரே
சித்தாந் தக்கண் சிவானந்தத்
      தேவா நடத்துஞ் சிறுதேரே.       (6)

736. நீயாய்ப் புணர நிலையகலும்
      நிலைதான் புணர் வென்றாக
நிகழ்த்து மிரண்டுந் தான்கடந்த
      நிலையா யிருந்தே யதுவுனக்குட்
டாயா யுணர்த்தும் பொருட்டிகழுந்
      தன்மைக் குவமை யாதென்னிற்
றவிக்குஞ் சிதடற் காதித்தன்
      றழைத்த வொளியு மிருளாமே
யாயா மொருவ னுளதாகி
      யருங்கட் படல மகற்றிடும்போ
தகன்ற வொளியைக் கலந்ததுவு
      மார்தான் கலப்பித் தாரென்றே
சேயே னிருளைக் கடிந்தருளைத்
      தெரிப்பாய் நடத்துஞ் சிறுதேரே
சித்தாந் தக்கண் சிவானந்தத்
      தேவா நடத்துஞ் சிறுதேரே.       (7)

737. பூவின் வாசங் கனியிரதம்
      புகலும் வீணைக் கெழினாதம்
புனலிற் காட்டத் தினிலனலும்
      போலங் கடைவர் சிவப்பேறி
லாவி னேசத் தகமதலைக்
      கணையாய் விரும்புந் தலம்போலு
மன்பர் தமக்கு மெவ்வுயிர்க்கு
      மடியார் தமக்கு மிரங்குவர்வெண்
சேவி லூர்தி யடிஞானந்
      தெருளுந் தீர வரிதுவன்றிச்
சித்தந் திரும்பும் வழிதிரும்பிற்
      சிவம தகலா ரென்றுணர்த்துந்
தேவ தேவப் பரஞ்சுடரே
      செல்வா நடத்துஞ் சிறுதேரே
சித்தாந் தக்கண் சிவானந்தத்
      தேவா நடத்துஞ் சிறுதேரே.       (8)

738. விரிவா யிருக்கு மலபந்த
      வெம்மைத் துயரை வேரறுத்து
விளங்கு மடியாருடன் கலந்து
      மெய்தா னரும்பி விதிர்விதிர்த்தே
யரிதாங் குருவுஞ் சிவலிங்க
      மாசற் றிலங்குஞ் சங்கமத்தை
யரனா மென்று தொழுதிறைஞ்சி
      யார்க்கும் நாமே லானோமென்
றுருவா யருவா யல்லாத
      வுண்மைக் கடவு ளடியாருக்
குரைக்குந் தொழும்பர்க் கடிதொழும்ப
      னென்றே யுள்ளன் புறத்திகழ்ந்து
திரிவார் ஞானத் திறவரென்னுஞ்
      செல்வா நடத்துஞ் சிறுதேரே
சித்தாந் தக்கண் சிவானந்தத்
      தேவா நடத்துஞ் சிறுதேரே.       (9)

739. சாருந் திருமால் விதிக்கரிதாய்த்
      தருஞ்சித் தாந்தச் சிரோமணியாந்
தத்தாத் திரையர் மரபில்வருஞ்
      சட்டை நாதன் றிருவருளி
லூரும் பேரு முருவுமில்லா
      னூரும் பேரு முருவுகொண்டென்
னூரும் பேரு முருவழித்தே
      யுள்ளம் புகுந்து மலம்போக்கி
வாரு மினிநீ யென்றழைத்து
      மன்னுமறிவை யறிவித்து
வந்த வறிவை மாறாமன்
      மாற்றிச் சிவப்பே றன்றளிக்குஞ்
சீருஞ் சிறப்புந் தருஞானச்
      செல்வா நடத்துஞ் சிறுதேரே
சித்தாந் தக்கண் சிவானந்தத்
      தேவா நடத்துஞ் சிறுதேரே.       (10)

சிவானந்தன் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
------------------------------------------------------

சிவானந்தன் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை

639. வாரி - கடல்; வடவிருக்கம் - ஆலமரம், வட விருக்ஷம் என்னும் வடமொழி வடவிருக்கம் என வட சொல்லாயிற்று; நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வர்; சிவபெருமான் கல்லால மரத்தின் நீழலிலிருந்து தக்ஷிணாமூர்த்தி வடிவமாய் மேற்கூறிய நால்வர்க்கும் உபதேசித்தார். அகிலம் - பூமி; அடி மையோர் - அடியவர்; சகள வடிவம் - சடத்துவ வடிவம்; தேசிகத் தலைவன் - குருமூர்த்தி; கடகயமுகத்தன் - மதநீர் பாயும் யானை முகமுடைய விநாயகன்; கையைந்தனை - ஐந்து கைகளையுடையவனை, ''ஐந்து கரமும் அங்குச பாசமும்” என வருதல் காண்க; அருட்டுறை - திருவெண்ணெய் நல்லூர்; கதி - மோட்சம்; இங்குள்ள விநாயகர் பெயர் "பொல்லா விநாயகர்" என்பது.

காப்புப் பருவம்
640. சீர்பூத்த பவளவுருவில் பச்சையொருபுறஞ் சேர்ந்தொருமையாய் விளங்க - சிறப்புப்பொருந்திய பவளவுருவம் போன்ற சிவந்த நிறமமைந்த சிவனது வடிவத்தில் பச்சைநிறமமைந்த பார்வதி ஒரு பக்கத்தில் சேர்ந்து ஒரு சேர விளங்க; பாதிபாகத்தைப் பார்வதிக்குக் கொடுத்ததால் இங்ஙனம் கூறினர். செழும்புனல் - கங்கை; பண + அடவி-படங்களையுடைய பாம்புக் கூட்டங்கள்; மகிதலம் - பூமி; தார் பூத்த களப விள வனமுலைக் கன்னி தாட்டாமரைச்செல்வி கேள்வன் - மாலையணிந்த வாசனைச் சாந்து பூசிய இளைய அழகிய தனத்தையுடைய பெண்ணான தாமரையில் வாழும் இலக்குமிக்குக் கணவன் (திருமால்); திதி - காப்பாற்றுதல்; அரன் - சிவன்; கார்பூத்த சூகரம் - கருநிறமமைந்த பன்றி; அடி - பாதம்; கார்பூத்த சூகரமது ஆகி அடிதேடியது:- பிரமனும் விஷ்ணுவும் தங்களில் யார் பெரியவர் என்னும் வாதம் எழுந்து சிவனைக் கேட்க அவர் அண்ணாமலையிலுள்ள தன் வடிவத்தின் அடியையாவது முடியையாவது யார் பார்த்து வருகிறார்களோ அவர்களே பெரியர் என்று கூற அங்ஙனமே பிரமன் அன்னப்பறவை வடிவாகி மேலே முடியைக் காணப் பறந்தும், திருமால் பன்றியாகி அடியைக்காணப் பூமியைத் தோண்டியும் சென்றனர். திருமாலால் முடியாமல் திரும்ப பிரமனோ "கண்டேன்" என்று பொய் கூறினன். கண் அருச்சித்தது:- சிவபெருமானைப் பூசிக்கும் போது ஒரு மலர் குறைய அப்போது தம் கண்ணைப் பிடுங்கி அருச்சித்தார். ஏறாகச் சுமந்தது:- திரிபுரசங்கார காலத்தில் விஷ்ணு தான் சிவபெருமானைச் சுமக்க எண்ணி எருதாக நின்றார். அவர்மீது சிவபெருமான் ஏறியருளினார், (சிவபுராணம்); கிரிகையைச் செய்தது:- இராமபிரான் (விஷ்ணுவின் அவதாரம்) சேதுவில் சிவலிங்கம் ஏற்படுத்திப் பூசை செய்தது காண்க. கிரிகை செய்தலாவது - சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபடுகை (சி. போ. பாட்டு 359); அரன் தனக்கு அன்புதவு கொண்டல் சிவானந்தப் பெம்மான்தனைப் புரக்க என்று வினைமுடிபு கொள்க. (1)

641. ஒளிர்சாதனம் - பிரகாசிக்கும் உருத்திராக்கம்; பதம் - பாதம்; பாதுகை - பாதரட்சை; உருவேடம் அருவேடம் உருவருவ வேடம் இவை முறையே தூலசரீரம், சூக்கும சரீரம், காரண சரீரம் என்று பெயர் பெறும். இவைகளது உண்மையின் நல்ல குணங்களைப் போதிப்பதற்கு உண்டாக்கப்பட்ட உருவத்தையுடைய அடியவர்; தூலசரீரம்:- பஞ்சபூதங்கள் கூடிப் பரிணமித்த உடம்பு; சூக்கும உடம்பு:- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் சேர்ந்து ஆன்மாக்கள் உலக போகங்களை அனுபவித்தற்குக் கருவியாக நின்று மரண காலத்தில் ஸ்தூல உடம்பை விட்டுப் பிரியும் அரூப உடம்புக்குச் சூக்கும் உடம்பு என்று பெயர். காரண சரீரம்:- ஆனந்த மயகோசம் (வேடதாரி சுபாவம்) ஐந்து வகை சரீரத்தில் கஞ்சுகசரீரம், குணசரீரம் நீக்கி இங்குக் கூறினர். குருலிங்க சங்கமப் பொருள்கள் - குரு, சிவலிங்கம், அடியார் கூட்டங்கள்.             (2)

642. பரிபூரணம் - கடவுள்; தத்தாத்திரையர்:- அத்திரி ரிஷியின் புத்திரர். அத்திரி ரிஷிக்கு அநசூயையிடம் அவதரித்து யோகத்திருக்க விரும்பியபோது இருடிச் சிறுவர் விடாது பின்பற்றுவதை யெண்ணி இவர்களை விட்டுத் தனித்திருக்க 100-வருடம் சலத்தில் யோகம் செய்து கொண்டிருந்து அம்மடுவினின்றும் வெளிவருகையில் சிறுவர் விடாதது எண்ணி ஒரு அழகுள்ள பெண்ணுடன் வந்தனர். அதைக் கண்ட முனிச்சிறுவர் அவரிடம் வெறுப்புக் கொள்ளாதிருக்கவும் முனிவர் கள்ளருந்தல் முதலிய பஞ்சமா பாதகஞ்செய்து வெறித்திருப்பவராய் அவர்கட்குக் காட்ட இருடிச்சிறுவர் நீங்கினர். இலக்குமியை அசுரரிடத்திருந்து நீங்கச் செய்து தேவருக்கு வெற்றி தேடியவர். அத்திரி தவஞ் செய்கையில் விஷ்ணு தரிசனந் தந்து தம்மை அவருக்குத் தத்தஞ் செய்ததால் இப்பெயர் பெற்றார். சிவானந்தர் இவரது கோத்திரம் போலும். சட்டைநாதர் வரலாற்றைத் தாலப் பருவம் ஐந்தாம் பாட்டின் குறிப்பில் காண்க. சமையம் - மதம்; பருவ அதீதம் துறந்து ஒளிரும் - காலமாகிய உயர்ந்த நிலையையும் கடந்து பிரகாசிக்கும்; பவம் - பாவம்; பஞ்சாக்கரம்- "ஓம் நமசிவாய" என்பது; பரமானந்த தீர்த்தர்:- இவர் சாலிவாகன சகம் 1049-இல் பிலவங்க வருடம் பிறந்தவர். தேவர்கள், கலியில் தெய்வபக்தி குறைதல் நோக்கி விஷ்ணுவைப் பிரார்த்திக்க விஷ்ணு வாயுவினவதாரமாய் இவரைப் பூமியில் ‘உடுபி' எனும் ரஜிதபீடபுரத்தை யடுத்த சிவரூப்யமென்னும் கிராமத்திலிருந்த மத்யகேஹ பட்டாசார்யாருக்கு மகவாய்த் தோன்றச் செய்தார். முதலில் இவர் பெயர் வாசுதேவா சாரியார் என்பது. அச்சுத பிரேக்ஷதீர்த்தர் பிரம மீமாம்சசாத்திர விருத்தியின் பொருட்டுப் பூர்ண பிரஞ்ஞாசாரியரை நியமிக்கக் கருதிச் சங்காபிஷேகஞ் செய்து 'ஆதந்ததீர்த்தர்' என்ற நாமங்கொடுத்தனர். இவர் செய்த அற்புதங்கள் பல.       (3)

643. மத்தமறுகும் புனல் - மிகுந்து சுழலும் கங்கை; பணத்தரவு - படங்களையுடைய பாம்புகள்; அங்கறை மிடற்றர் - அழகிய நஞ்சக்கறை பிடித்த கழுத்தையுடையவர்; மட்டுலவும் அம்புய மலர்ப்பதம் இலங்கிவரு மைக்கணுமை பங்கன் - தேன் தங்கும் தாமரை மலரைப் போன்ற பாதம் விளங்கும் மை பூசிய கண்களையுடைய உமாதேவியைப் பக்கத்திலேயுடையவர்; அருள் ஆனந்த நடனத்தர் - அருள்கின்ற இன்ப நடனத்தைச் செய்பவர்; மதம் ஆர் அத்தியுரி அம்பர நுதற் கணன் - மதம் பொருந்திய யானைத் தோலாகிய உடையையுடைய நெற்றிக்கண்ணன்; அம்பரம் - சீலை; அருந்தவர் அவர்க்கு அருள் புரிந்து மகிழ்வாய் நின்ற முதல், நற்கருணையான், அற்புத நிரந்தரன் என்று பிரிக்க; மலர்க்கணை யனங்கனை யளித்தருளும் இன்ப நெடுமால் மலர்களை அம்பாகவுடைய மன்மதனைப் பெற்ற திருமால்; அங்கமலன் - பிரமன்; மருளார் சிற்றறிவு - மயக்க மிகுந்த சிற்றறிவு; அருள் + தந்திடு - அருடந்திடு; சித்தம் மலம்பந்தம் - மனக்குற்றங்களாகிய கட்டுக்கள்; கடவுளான நித்தியன் விளங்கும் குருநாதனான, திக்கற்றவனுக்கு எளிமையானவாய்ப் பற்பல விதம் செல்லும் மனத்தை ஒழுங்குப்படுத்தி அருளைத் தந்த சிவானந்தனைப் பாதுகாப்பாயாக என்று முடிக்க. (4)

644. கமலமுகினி - தாமரை போன்ற முகத்தையுடையவள்; கடி மிரள் கமல விழி மகாசுந்தரி - விரைந்து மிரள்கின்ற தாமரை போன்ற கண்களையுடைய மிக்க அழகு வாய்ந்தவள்; கோட்டின் ஏர் கனகவரை முகடினைக் கொடிகள் தரு களப முலையினாள் - சிகரங்களால் அழகு வாய்ந்த மேரு மலைச்சிகரத்தைப் போன்று ஒரு கொடியினிடம் பெற்ற கலவைச் சாந்து பூசிய இரு முலைகளையுடையவள்; பஞ்ச அட்ட அக்கரி - ஐந்து, எட்டு எழுத்துக்களையுடையவள், 307 -ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. நிமலாய மணிசடிலர் இடமதனில் நிலைகொள் நிமலி - அழுக்கின் மையையுடைய அழகிய சடையையுடையவர் இடம் தங்கும் குற்றமற்றவள்; ஆடு அம்பரி - ஆடுகின்ற மேலிடத்தை யுடையவள்; அகம் - மனம்; சீர் அன்பர் உள் தொத்துமோர் விமலி எனப் பிரிக்க; உள் தொத்தும் - மனதில் தாவும்; மலையரையன் அருள் சுதை - இமயமலையரசன் பெற்ற புதல்வி; வினைகளகலவே - தீயவினைகள் நீங்க; விதி திகிரிகரன் அமரர் முனி பாவிய பயிரவி - பிரமன், சக்கர மேந்திய திருமால், தேவர், முனிவர் துதித்த உமாதேவி; அருள் இனிய உருவமாய் வந்த மெய்க்கீர்த்தியான் இலகும் அகம் அணி தகைகொள் குரு மணியிறைவன் எழில் சிவானந்தன் - அருளின் இனியவடிவமாய் வந்த உண்மைக் கீர்த்தியால் விளங்கும் மனதில் அணிந்து கொள்ளத்தக்க தகுதி கொண்ட உயர்ந்த குருவாகிய, கடவுளான அழகுமிகும் சிவானந்தன்.       (5)

645. பார்தங்கிய அன்பர் - பூமியிலுள்ள அடியர்; பிறவித்துயர் - பிறவியினாலாகிய துன்பம்; பாசங்கள் தவிர்ந்து ................................... ............ சிந்தை நினைத்து - ஆசையை நீக்கிப் பிரகாசமடைந்த உண்மை நண்புள்ள இன்பத்தைத் தருபவரைப் போலும் உபாயங் கொள்வதற்கு அன்பு பெருகி உடலிலும் ஸ்பரிசம் செய்து வெல்லப்பாகு போன்று இன்பந்தரும் இசையோடு கூடிய சொல்லைச் சொல்லி நன்மையமைந்த பொருளை மனதில் நினைத்து; இவ்வடியால் மனம், வாக்கு, காயம் ஆகிய வற்றின் தொழில் கூறினார்; சீர்தங்கிய அம்பரன் மெய்த்தவ நூலுந் தரல் அங்கமிருக்கும் யோகம் புரிகின்ற அவுத்திரிசேர் இந்தவிதங்கள் - சிறப்புப் பொருந்திய கடவுளின் உண்மை சேர்ந்த தவ நூல்படி அஷ்டாங்கயோகம் செய்கின்ற அவுத்திரி தீட்சை முதலிய இந்தவிதங்கள்; இயற்று - செய்து; அளித்திட - காப்பாற்ற; வார் தாங்கிய கொங்கை மதத்தெழு சூர்மங்கை இடந்தனில் வைத்த மணாளன் தளிர் ஐந்து கரத்தினர் - கச்சுப் பொருந்திய தனங்கள் களித்து எழும்புகின்ற தெய்வப் பெண்ணாகிய பார்வதியை இடப்பக்கத்தில் வைத்த சிவபெருமானிடமிருந்து தளிர்த்த ஐந்து கைகளையுடையவர்; மாது அம்பிகை மைந்தன் - பார்வதியின் மைந்தன் ; நிருத்தனை மாகம் புவியென்று துதித்து இனிதாய் அம்பூவலம்புரியக் கரமாவின்கனி கொண்ட மகிழ்ச்சியன் - நடனமாடும் சிவபெருமானை ஆகாயமும் பூமியும் இவரேயென்று துதித்து மகிழ்ச்சியாய் அழகிய பூமியை வலமாகச் சுற்ற அதனால் கையில் மாம்பழத்தைக் கொண்ட மகிழ்ச்சியை யுடையவன்; மேருவின்புறம் தொந்தி ...வயிற்றினர் - மேருமலையின் பக்கங்களிலெல்லாம் பாரதத்திற்கான சுலோக எழுத்துக்களை எழுதப்படுவதால் . அழகு நிரம்பிய தந்தமும், மிகுந்த மாம்பழமும் பாசமும், அழகு நிரம்புகின்ற அங்குசமும் பொருந்த கணேசனாகத் திகழ்கின்ற தொந்தி வயிற்றை யுடையவர், இங்கு மேருவின் எனற்பாலது செய்யுள் நோக்கி 'மேரின்” எனத் தொக்கது. ஏதங்கள் - குற்றங்கள்; முக்கணன். விநாயகருக்குப் பெயர்; தெருள் தந்தி முகத்தன் - தெளிவையுடைய யானை முகத்தையுடையவன்; ஈது இங்கு இயம்புதல் ஒப்பறு நாதன் - இதனை இவ்விடத்தில் சொல்லுதலில் இணையில்லாத தலைவன்.       (6)

646. பல் நகம் புனைகையால் - பல நகங்களால் அழகு தருகின்ற கைகளால்; பன்னகம் புனைகையான் - பாம்பைத் தரிக்கும் சிவபெருமான்; பத்தி இலகம் தனில் - பத்தி விளங்கும் பெருமானிடத்தில்; பத்தி இல் அகந்தனில் - பத்தியில்லாத மனத்தில்; உளைந்தேன் - வருந்தினேன்; என்ன கண்டிதமாகும் என் அகண்டிதமாகும் இறை - எது கண்டிதமாகவும் எது அகண்டிதமாகவும் உள்ளதோ அக்கடவுள்; ஏழையின் மேல் அருள் ஐ - எளியவர்களின்மீது அருள் கொண்ட தலைவன்; ஏழையின் மேலருள் - இவ்வறியாமையையுடைய என்மீதும் அருளின; பொன் நகையுறாக்கதிகொள் - இலக்குமி மகிழ்ந்து மார்பின்மீது தங்கும்; உறா - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம் செய்து எனத் திரிந்தது; பொன் அகை உறாக் கதிகொள் - சுவர்க்கலோகம் வருந்தாதவாறு உபேந்திரனாகச் சென்று நிலை கொண்ட; புகழ் மருகன் - புகழ்ந்து பேசப்படும் திருமாலின் மருகன். மஞ்ஞையூர்தி - மயில் வாகனன்; போதம் கடந்தவன் - அறிவிற்கு மப்பாற் பட்டவன்; போதங்கள் தந்தவன் - அறிவினை உலகக்தாருக்கு ஊட்டினவன். (முருகன் தமிழ்ச்சங்கப் புலவராயிருந்தமை காண்க). தென் அகந்தனில் உறும் - பாரத நாட்டின் தெற்கின் கணுள்ள இடமான தமிழ்நாட்டிலடையும், (முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாவதை ஓர்க); தென் அகம் தனில் உறும் - அழகிய மனத்தில் அடையும்; சிறக்குறு முனிக்காரியன் - சிறப்புப் பெற்ற அகத்திய முனிவர்க்குத் தமிழறிவுறுத்திய வேலையைச் செய்தவன்; காரியம் என்பதினின்று காரியன் என்ற குறிப்பு வினைமுற்றாயிற்று. சேவல் கொடிக்கு இறைவர் - சேவற்கொடியை யுடைய தலைவன்; சேவல் கொள் திக்கு இறைவர் தேவர் சேனைக்கு அதிபனே - காவலைக் கொண்ட அட்டதிக்குத் தலைவர்களாகிய தேவர்களது சேனைக்குத் தலைவனான முருகன்.       (7)

647. நுதல் விழியும் விழிகளிரண்டும் என்பதனால் மூன்று கண்களாயிற்று; மணிக்குழை - மாணிக்கக் குண்டலங்கள்; எழில் மேனிச் சிவப்பும் - அழகிய உடலின் சிவந்த நிறம்; புரி நூல் - பூணூல்; தலை மாலிகை - தலையிற் சூடிய மாலை; கதைச் சின்மயக்கரம் - தண்டாயுதமும், ஞான மயத்தை உபதேசித்தலுமுடைய கை; அரற்றும் ஒலிக்கும்; கிண்கிணி - சிலம்பு; வீர கிண்கிணி - வீரக்கழல்; அரவத்து அரை நாண் - பாம்பாகிய அரை ஞாணினையும்; குஞ்சிதத்தோடு அமரும்பதத்தோன் - வளைவாக உட்கார்ந்து உள்ள பாதத்தையுடையவன்; குணமலை - "குணமென்னும் குன்றேறி நின்றார்'' என்றார் வள்ளுவர். சின்மயக்கரம் - சனகர் முதலியவர்க்கு உபதேசித்த நிலை யாகும்.                   (8)

648. பவளக் கனிவாய் - பவளமும் கோவைக்கனியும் போன்று சிவந்த உதடுள்ள வாய்; பதும முகம் - தாமரை மலரையொத்த முகம்; பிறைச் சடையும் - சந்திரபிறையெனு மாபரணம் தரித்த பின்னல் மயிரும்; பணிலக் களமும் - சங்கு போன்ற கழுத்தும்; கழைத்தோள் - மூங்கில் போன்ற தோள்; படிகமணி போன்றக் கரமும் - படிக மணிபோலுள்ள கைகளும்; போன்றக்' என சந்த நோக்கி மிக்கது; கவுளக் கயக்கோட்டு இளமுலை - மதச்சுவட்டையுடைய யானைத் தந்தத்தைப் போன்ற இளைய முலை; கதிர் வெண்கலையும் - சூரியனைப் போன்ற வெண்மையான உடை; சசி - சந்திரன்; தவளக்கமலம் - வெண் தாமரை; சதுமுகத்தோன் - பிரமன்; திவளல் - மெலிதல்; அணுக்கள் - ஆன்மாக்கள்; பனுவல் - பிரபந்தம்; நாடொறும் - நாள் தோறும்.       (9)

649. திருவாசகக் கடவுள் - மாணிக்கவாசகர்; அப்பர் - திருநாவுக்கரசர்; திருநாவலஞ் சுந்தரர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்; பட்டணத்திறைவர் - பட்டினத்தடிகள்; திருமூலர்:- திருக்கைலை மலையில் நந்திதேவர் அருள் பெற்ற சித்தர்; பூமியில் அகத்திய முனிவருடனிருக்க எண்ணி ஆகாய மார்க்கமாக வருகையில் திருவாவடுதுறை யண்டையில் மூலன் என்ற இடையன் இறக்கப் பசுக்கள் அவனை நீங்காதிருப்பதைக் கண்டு அவனுடலில் புக்கனர். இவரே திருமந்திரம் இயற்றினார். மெய்கண்ட தம்பிரான்:- சிவஞானபோதமியற்றியவர். இவர் வரலாறு 45-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. தருவாசம் ஆர் அருள் துறைமேவு - பஞ்ச தருவின் கீழ் வசித்தல் போன்று பொருந்திய திருவெண்ணெய் நல்லூரையடையும்; அருணந்தி:- இவர் நடுநாட்டில் பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள திருத்துறையூரில் 13-வது நூற்றாண்டில் பிறந்தவர். மெய்கண்டதேவர் அருளிய சிவஞானபோதம் என்னும் முதனூலுக்கு உரையாகச் செய்யுளில் பாடினார். இது சிவஞான சித்தியார் என்று வழங்கும். தகை உமாபதி :- தகுதி பொருந்திய உமாபதி சிவாசாரியார்; மருவாசகங் கடந்து ஒளிர் தரும் - குற்றமும், பேச்சும் கடந்து பிரகாசிக்கும்; மகத்தோர் - மகிமையுற்றவர். நக்கீரர் - கடைச்சங்க காலப் புலவர்கட்குத் தலைவராயிருந்தவர்; திருமுருகாற்றுப்படை, கைலைபாதி காளத்தி பாதி முதலியன பாடியுள்ளார். பட்டணத்திறைவர்:- சிவமூர்த்தி பல தலங்களுக்குக் குபேரனுடன் செல்ல குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் விருப்பமிக்கான். அதைக்கண்ட சிவன் 'இங்குப் பிறக்க' என்ற சாபப்படி சிவநேயகுப்தருக்கும் அவர் மனைவிக்கும் மகவாய்த் தோன்றினான்; சுவேதாரண்யர் என்ற பெயருடன் விளங்கினார். சிவகலை யென்பவளை 16. வயதில் மணம்புரிந்தார். இவர் பல விளையாடல்கள் நிகழ்த்தி யிறுதியில் திருவொற்றியூரில் சிவமானார். இவர் கோயினான்மணிமாலை, திருக் கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை முதலியன இயற்றியுள்ளார். அருளே மருவு வள்ளுவர் - அருள் பொருந்திய திருவள்ளுவர்; துங்க அவ்வை - பரிசுத்தம் பொருந்திய அவ்வை; கடுவெளிச் சித்தர்:- ஒரு சித்தர் இவர் தம் ஆன்மானுபவத்தைப் பிறருமறிந்து அவ்வழி நடந்து சீர்பெறப் பிரபஞ்சத்தைச் சுத்த வெளியென்று கண்டு இப்பெயர் அடைந்தவர்போல் தெரிகிறது. இவர் செய்த நூல் கடுவெளிச் சித்தர் பாடல். சித்தம்பலவர் - இவர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் என்ற நூலுக்குக் கருத்துரைச் சூத்திரம் செய்தார். உமாபதி சிவாசாரியார்: இவர் சோழநாட்டில் திருப்புலியூரில் சைவ வேதியர் குலத்திலவதரித்தவர். மறைஞான சம்பந்தர் இவரது பரிபாகமறிந்து சிவஞான போதத்தையுபதேசித்தனர். இவர் கோயிற்புராணம், திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் நாயனார் புராணம் முதலியன செய்துள்ளார். சிவவாக்கியர்:- இவர் தமிழில் தம் பெயரால் சிவவாக்கியம் என்ற நூல் செய்தவர். இவர் பூமியில் பிறக்கையில் ‘சிவா' என்று சொல்லிக் கொண்டு விழுந்தபடியால் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது. கண்ணுடைய வள்ளல் :- திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்றவர். இவர் செய்த நூல் ஒழிவிலொடுக்கம், மாயாப் பிரலாபம். குகை நமசிவாயர் :- இவர் திருவண்ணாமலையில் ஒரு குகையில் நிஷ்டை செய்து கொண்டிருந்த சித்தர். இவர் குகையிலிருந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் அம்மலையில் தூங்கும் ஊஞ்சலிட்டு அதில் சயனித்து நிஷ்டை புரிந்துவந்தனர். இவர் மாணாக்கர் குருநமசிவாயர்; இவர் செய்த நூல் அருணகிரியந்தாதி. கண்ணப்பர்:- அறுபத்து மூன்று நாயன்மார்களிலொருவர். வேடுவர்; காளத்தி மலையில் முத்தி பெற்றவர். வள்ளுவர், அவ்வை இவர்களைப் பற்றியது அறிந்த விஷயமேயாகும். உருவாசம் இனி வராமல் காக்க - உருவத்துடன் வாழும் வாழ்க்கையினி வாராமல் காப்பதற்கு.    ; (10)
---------------------------
செங்கீரைப்பருவம்

650. வெண்பொடி - விபூதி; முத்தம் - முத்துப்போன்ற ஆனந்தக் கண்ணீர்; மந்தகாசம் - புன்சிரிப்பு; மருமம் - மார்பு; அணியல் - மாலை; சிவன் விழியின் மணிகள் தாவடமும் - சிவனது நெற்றிக் கண்ணைப்போன்று பிரகாசமிக்க முத்தினாலாகிய கழுத்தணி மாலை; இன் - ஐந்தாம் வேற்றுமை உவமப் பொருவு; அரையிலாட - இடுப்பில் அசைய; அருண அம்புயமதனில் இனிய கரதலமதனில் - சிவந்த தாமரையைக் காட்டிலும் இனிய கையிடத்தில்; அஞ்சலுடன் வரதம் - அபயமுடன் வரதமும், இதன் விரிவை 537-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. சரணம் - பாதம்; தெருளவரும் அடிமையர்கள் - மனந்தெளிவடைய வரும் அடியார்கள்; தவ + ஆனந்தன் - தவானந்தன்; நீதன் - நீதியையுடையவன். (1)

651. அஃது அற - அந்நோய் நீங்க; பரிவாய் - இரக்கமாய், உயர் மூன்று நாடி - இடைகலை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகள்; பாத்து - பகுத்து; இரண்டையும் - இடைகலை, பிங்கலையாகிய இரண்டையும்; ஒரு நாடி - சுழிமுனையெனும் ஒப்பற்ற நாடி; விழி நோக்கி - மூக்கின் மத்திய பாகத்தில் விழி மத்திய பாகத்தில் விழி முகமாகச் செலுத்தி; ஏந்து கைப்பையவிழ்த்து இனிய வெண்பொடி யவிழ்தம் - தாங்கிய சிறிய விபூதிப்பையை அவிழ்த்து இனிய விபூதியாகிய அமிர்தத்தை; ஈந்து கரம் இட்டு இதற்கு நிலையுறும் பத்தியம் தனது பாத உதகம் நிவேத்தியம் - கொடுத்துக் கையிலிட்டு இதற்கு நிலையுறும் பத்தியமாவது தனது (சிவானந்தனது ) பாத நீராகிய நிவேத்தியமேயாகும்; வேறாம் நியமமாகாது உந்தன் உறுதி யெந்தன் வழியில் நில்லென்று - வேறாகிய ஒழுக்கம் கூடாது உனது மனவுறுதியோடு எனது வழியில் நட என்று கூறி; வினைகள் தீர்க்கத் திலதமாய் ஒரு வயித்தியனாக - தீவினைகள் நீங்க நெற்றித் திலகம் போன்று ஒப்பற்ற வைத்தியனாக. (2)

652. பாசமெனு மடவி - ஆசையென்கின்ற காடு, உருவகம்; ஒருமையின்றி - மனமொருமிக்கையில்லாமல்; பஞ்ச இந்திரிய வேடர் - உருவகம்; ஓசை நுகரும் குழைக்கு இன்பம் மருவச் சிவன் உண்மை மொழி பேசுவாயும் - ஓசையை யனுபவிக்கும் குண்டலமணிந்த காதிற்கு இன்பமடைய சிவனது உண்மை விளக்கங்களைப் பேசுகின்ற வாயும்; உடலமது புளகமுற இனிய பரிசனையுதவும் ஒளிமலர்க் கரமிரண்டும் - உடல் புளகாங்கிதமடைய இனிய ஸ்பரிசத்தையுதவும் பிரகாசம் பொருந்திய தாமரை மலர் போன்ற கைகளிரண்டும்; மாசறுங் கண் புனல் காண்டல் கொண்டு இன்பமுற வாய்த்த சங்கம் வேடம் - குற்றமற்ற கண்களினின்று ஆனந்த நீர் காண்பதைக் கொண்டு இன்பமுறப் பொருந்திய அடியார் வேடமும்; வாய்க்கு உணர்வு தீர்த்தப் பிரசாதமும் - வாயினுக்கு நன்கு சுவையுணர்வுள்ளது குருவான சிவானந்தனது பாத தீர்த்தமாகிய பிரசாதமும்; நாசிக்கு வாசம் அரவிந்த பதம் மூக்குக்கு வாசனையுடைய தாமரை போன்ற பாதம்; தேசுலவும் உழை காட்டி உழையைப் பிடிப்பதாய் - ஒளிவாய்ந்த மானைக்காட்டி மானைப் பிடிப்பது போல. (3)

653. உவந்து அசுத்தமில்லாத இடமாம் ஆரூர் நிலத்தினில் என்று பிரிக்க, மருளான இருமாயை கன்மம் திரோதம் இருள் மருவிய சிற்றறிவு எனும் வகை கொளும் களையைப் பிடுங்கி - மயக்கம் பொருந்திய சுத்தமாயை, அசுத்தமாயை என்ற இரண்டும், சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்ற மூவகைக் கன்மமும், மறைக்கும் இருள் பொருந்திய சிற்றறிவு என்ற வகை கொண்ட களையைப் பிடுங்கி; வாடுதல் - தளர்தல்; நன்றாய் விளக்கி - நன்றாய்ச் செழிக்குமாறு செய்து; பலன் தருவது என்று எனப் பகர்வு கொண்டு உள்ளம் பழுத்த பின்பு அதனையினிதாய்த் தெரிவரிய பெருவீடு சேர்க்கின்ற பலன் தருவது என்றைக்கோ என்று உணர்த்துதல் கொண்டு மனமாகிய கதிர்கள் பழுத்த பிறகு அவைகளை மகிழ்வுடன் ஆராய்தற்கரிய பெரிய வீட்டில் (மோட்ச வீட்டில் சேர்க்கின்ற வல்லவனே; ஆரூர் நிலத்தினில் உழவைச் செய்து அறிவாகிய விதையை விதைத்து மயக்கங்கொண்ட இரண்டு பெரிய மாயைகள், மூன்று கன்மங்கள், மறைக்கும் திரோதமலம் பொருந்திய சிற்றறிவு என்ற வகைகளைக் கொண்ட களைகளைப் பிடுங்கி அப்பயிரைத் தளராமல் வளர்த்துக் காலத்தில் நன்கு விளங்கத் தன்னுடையதென்று கருணையுடன் கவனித்து நன்றாய்ச் செழிக்கச் செய்து பலன் கொடுப்பது என்றோ என்று, உணர்த்துதல் கொண்டு மனமாகிய கதிர்கள் பழுத்த பின்பு அவைகளை மகிழ்வுடன் ஆராய்வதற்கரிய பெரிய வீட்டில் சேர்க்கின்ற வல்லவனே என்று பொருள் கொள்க. (4)

654. உயிரினம் அவத்தை - உயிர்கள் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்று 'ஐந்து அவத்தைகளையடையும்; உணர்வரியதாம் இருள்தனை விலக்கும் ஓர் உண்மையாய் என்று பிரிக்க; பகல் இரவும் இன்றிய சுடாதாய் - பகலும் இரவுமில்லாத ஒளியை யுடையதாகி; அலகிலுயிர் - அளவில்லாத உயிர்; இதம் அகிதமும். காயும் அருணன் - இன்பத்துடனும் துன்பத்துடனும் காயும் சூரியன்; வலவன் - தேர்ப்பாகன்; அந்தரத்தினில் நின்று இழிந்து மனம் உருகுவார் அம்புயம் பூரிக்கவும்- ஆகாயத்தினின்று இறங்கிய சூரிய கதிர்க்காக மனம் உருகும் தாமரைமலர்கள் மலர்ந்து களிக்கவும்; பருதி - சூரியன்; திலதம் - பொட்டு.   (5)

655. திணை - பூமி; வளி - காற்று; வெளி - ஆகாயம்; மேற்கூறிய அடியால் பஞ்ச பூதங்களை யுணர்த்தினார். ஒலியுணர் செவி - சப்தத்தையறிகின்ற காது; தோல் - மெய்; விழி - கண்கள்; சிங்குவை - நாக்கு; இவ்வடியால் ஞானேந்திரியங்களைக் கூறினர். "ஒலி பரிசமும் உருவாய், இரத, மணமதுவாய்” என்ற அடியால் சூக்கும பூதங்களான நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்பனவற்றைக் கூறினார். "வாக்கு, அடியும், கரமும்.........குதமாய்”. இவ்வடியால் வாக்கு, கைகள், பாயுரு, பாதம், உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்களைக் கூறினார். பாயுரு - அப்புவினிடமாக நின்று மலசலத்தைக் கழிக்கும். உபத்தம் - குதம்; மனமும் புத்தியும் ஆங்காரத்துடன் மகிழ்சித்தமுமாகி. மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவைகளாகி; மேற்கூறிய பஞ்சபூதம் 5; ஞானேந்திரியம் 5, சூக்கும பூதம் 5, கன்மேந்திரியம் 5, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன 4, ஆக 24-உம் ஆன்மாவுடைய கருவிகள்; அகங்காரம் - 1. தைசத அகங்காரம். 2. வைகாரிக அகங்காரம். 3. சாத்துவிக அகங்காரம் என்று வகைப்படும். தைசத அகங்காரத்தில் தன்மாத்திரைகளும், வைகாரிக அகங்காரத்தில் கன்மேந்திரியங்களும், சாத்துவிக அகங்காரத்தில் ஞானேந்திரியம் ஐந்தோடு மனம் ஒன்றும் தோன்றும். இணைதரு முக்காலமதாய் நியதியும் எழில்கலை வித்தையுமாய் இராகம் புருடனும் மாயையுமாய் - இவ்வடியால் மூன்று காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை ஆகிய ஏழு வித்தியா தத்துவங்களைக் குறித்தார். இப்பாட்டில் 36-தத்துவங்களில் ஆன்ம தத்துவங்களையும் வித்தியா தத்துவங்களையும் குறித்தார். அடிமைக்கு அணிதரும் மலரடி தரும் இறைவா என்று பிரிக்க. (6)

656. சிவதத்துவம் - சிவனுக்கிடம், நாதமென்று பெயர். பிரேரம் - தொழில் படுத்தல். தவமிகுந்த சிவதத்துவமாய் சத்தியினியக்கத்தை உதவாததாய் தகுதியையுடையதாய் 36- தத்துவங்களைச் சேர்ந்து தாங்குவதாய் ஒன்பது வடிவாய் (உருவம் 4, அருவம் 4, அரு வுருவம் 1) உடல், அந்தக்கரணங்கள், பூமி, போகங்கள் ஆகியவைகளை நல்கியதாய் புண்ணிய பாபங்களைப் பெற்ற தாய், தன்னுடைய வினையினாலேயே பலபேதங்களாய்ப் பாவங்களை நீக்கி உதவுகின்ற முடிவானவனாய்த் தனித்தன்மையையுடையவனாய் நிலையானவனாய் கூறும் மறைத்தலும், கருணை செய்தலுமான அருள்வடிவானவனாய் வீணான செல்வத்தை நீக்குதற்கு வந்த தவச்செல்வத்தை யுடையவனே என்று பொருள் கொள்க. பவம் - பாவம்; திரோதம் - மறைத்தல்; நவவடிவின் விரிவை 69-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. (7)

657. உயிர்கள் கேவலம், சகலம், சுத்தம் என்று மூன்று காரணவத்தைகளும் அவற்றின் உட்பிரிவாகிய பதினைந்து காரியாவத்தைகளும் உள்ளனவாதலால் 'கேவலமதில் நிலைபெறுமுயிர்' என்றார்; இருள் தன்னை அகன்று அறிவின் என்று பிரிக்க. பரம் + அறிவு - பரத்தையறியும் அறிவு; இது பரவறிவு என நின்றது; இதில் இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானாசத்தி, பராசத்தி ஆகிய சத்திகளின் விரிவைக் காண்க; பரயோகம் - பரனையறியும் யோகம்; இறை - தலைவன். கேவலமதில் நிலைபெறுமுயிர்க்கு ஆதரவுவரச் செய்வது இச்சாசத்தியாகவும், அவ்வுயிர்கட்கு இருளாகிய மலம் நீங்கத் தருவது கிரியாசத்தியாகவும் இருளை நீங்கி அறிவின் தன்மையாகச் செய்வது ஞானாசத்தியாகவும் கூறினமை காண்க. பரை - பரரூபம்; பரரூபம் : சடசித்துக்களாகிய தாவர சங்கமங்களுக்கெல்லாம் தான் வேற்றநின்று பெருமை பொருந்திய காருண்ய சத்தியே தனக்குத் திருமேனியாகி ஆணவமலஞ் சகசமாயிருக்கப்பட்ட ஆன்மாக்கள் பாக பேதங்களைத் திருவுள்ளத்தடைந்து தனதிச்சா ஞானக்கிரியையின் செய்தியாகிய மாயா தத்துவங்களினால் சிருட்டித்தும், திதித்தும், சங்கரித்தும் மலபாக வாழ்விலேயிந்தக் தத்துவங்கள் வேறாம்படிக்குச் சத்திநிபாதத்தை விளைவித்துச் சத்திநிபாதத்தின் வழியிலே புறம்பே கட்புலனுக்குத் தோன்ற மானிடச்சட்டை சர்த்தி எழுந்தருளி வந்து தான் வேற்ற நிற்கிற முறைமையைத் தருகின்றவன் ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவிற்கறிவாயிருக்கிற முதல்வனேயென்று பிரதிக்கினை, ஏது, திருட்டாந்தங்களினாலே மயக்க விகற்பமறத் தன்னறிவிலே விளங்கக் கண்டு நின்ற அவதரம்; பரிதரிசனம் :- ஆன்மாவென்பது எவ்விடத்திலுந் தோன்றாமலெனதென்றும் யானென்றும் நின்ற அசத்திய போதம் நீங்கத் தேசிக மூர்த்தியினுடைய அனுக்கிரக ஞானம் பிரகாசித்து நின்ற அவதரம் முதல்வனுடைய பாதம் என்றும், தன்னையுணர்த்தும் பகுதியாகத் தாக்குவதான விடய போகங்களை அவன், அவள், அது வாய் நோக்குமிடமெல்லா மவனுடைய அனுக்கிரகத்தையே கண்டனுபவிக்கும் அவதரம் முதல்வனுடைய திருமுகம் என்றும், அந்த அனுக்கிரகத்திலே தற்செயல் தோன்றாமல் பரவசப்படும் அவதரம் முதல்வனுடைய திருமுடியாமென்று மறிந்து இந்த வுண்மையினைச் சந்தேக விகற்பமற வுள்ளபடி விசாரித்துத் தேர்ந்து இதுவல்லாமற் சத்தியமாயுள்ள பொருள் வேறேயு மொன்றில்லையென்று தெளிந்து, எனது யானென்னும் விகற்பமாகிய பிருதிவி முதல் நாதமீறாகச் சொல்லப்பட்ட சகலாவத்தையிலும் பொருந்தாமல் இந்தக் கருவிகள் நீங்கினால் தனக்குள்ள சகசநிலையாகிய கேவலாவத்தையிலும் பொருந்தாமல் இந்தக் கேவல சகலமிரண்டும் நீங்கினவிடத்து விளங்குவதான போத பூரணமாகிய அகம் பிரம ஞானத்திலும் பொருந்தாமல் தேசிக மூர்த்தியினுடைய செய்தியாய் அறிதற்கரிதாகிய மேலான பூரண வின்பந் தோன்றாமல் ஏகதேச வியாபாரமாகிய தனுகரணாதி இன்பமே தோன்ற அந்த வின்பங்களையே மெய்யென்றனுபவித்து நின்ற முறைமை போலத் தனுகரணாதியின்ப மெவ்விடத்திலும் தோன்றாமல் பூரணவின்பத் தொடர்ச்சியாகிய தேசிகமூர்த்தத்தி னனுக்கிரக ஞானத்தினை யெவ்விடத்திலும் கண்டனுபவிக்கும் அவதரம். பரயோகம் :- சடசித்துக் களிரண்டினு நின்று விளங்குவதாகிய இதாகி தங்களுக்கேற்ற சத்தாதி விடயங்களிலே யெந்த விடயங்கள் வந்து தாக்கினாலும், அந்த விடயங்களை யெதிரிட்டுப் பார்த்து இவை மாயாகாரியமான தனுகரணபுவன போகங்களினுடைய விகற்பமென்றும் இந்த விடயங்களினின்றும் விளங்குவதாகிய இதாகிதங்கள் கன்மத்தினது விகற்பமென்றுங் கண்டு தனக்கெனச் சற்றும் செய்தியில்லாத சடரூபமாகையினாலே தானாகச் செய்திடவறியாது அந்த விடயங்களை யதுவதுவாகப் புசிக்குமான்மாவை நித்தியனாய்ப் பூரணனாயறிவாயிருந்தாலும் தானாக வொன்றையு மறிதற்கறிவில்லை யென்னு முறைமையை யுள்ளபடி தரிசித்து அந்த அருளினது நிறைவெல்லாந் தனது வடிவாகவுடைய பூரணவின்பமெனக் கண்டித்துக் குருமூர்த்தமா யெழுந்தருளி மானிடச் சட்டை தரித்து வந்துபதேசித்த வனுக்கிரகத்தை யுள்ளபடி தரிசித்து இவ்விடத்திலே வந்து பொருந்தப்பட்ட சத்தாதி விடயங்களை யெல்லாம் அந்த வனுக்கிரகத்தினாலே பொருந்திப் பார்த்து இந்த விடய போகங்களின் வழித்தாய்த் தீவினையைச் செய்விக்கிறதும் அனுக்கிரகமாகிய திருவருள் தானே இந்த நன்மை தீமைகளையறியும் படிக்குப் புசிப்பாகி வந்த விடய பேதங்கட்கும் அவ்வனுக்கிரகமாகிய அருள் தானே யென்றுள்ளபடி தரிசித்து இந்த முறைமையே யன்றிச் சித்தாகிய ஆன்மவர்க்கத்திற்கும் சடமாகிய பாச சாலங்கட்கும் ஒன்றை யொன்றறியவும் ஒன்றையொன்று பொருந்தவும் ஒரு சற்றுஞ் செயலில்லையென்னு முறைமையை யுள்ளபடி தரிசித்து அந்தப் பொருளோ டிசைவதாகிய அவதரம். பரபோகம் :- எத்தகைய தொழில்களைச் செய்தாலும் தற்செய லெவ்விடத்திலும் தோன்றாம லனுக்கிரகமாகிய அருணிறைவிலே வேற்றநிற்கில் அந்த அருளுக்கு முதன்மையாகிய நேயம் அவனதறிவு பூரணமெல்லாம் தனது வடிவாகக் கொண்டு தானந்த அறிவு பூரணத்திற் கெல்லா முயிராய் இவனதறிவு தொழிலாகிய இந்திரிய போகங்களாய் வரும் புசிப்புத் தொழிலும் தனது புசிப்புஞ் தொழிலுமாகவே புசித்துத் தொழிற்படும் நானாவிதமாகிய போகங்களை யெல்லாம் இவனுக்குத் தனது பூரண வின்பமாகிய நேய வடிவமாகவே காட்டி இவனதறிவு பூரணமெல்லாந் தனதின்பப் பூரணமாகவும் தனதின்பப் பூரணமெல்லாம் இவனதறிவு பூரமாகவும் வேற்றத்தோன்றி நின்று தனதின்ப நிறைவெல்லாம் இவனது அனுபோக பூரணத்தை யமிழ்த்தி நிற்குமவதரம். (8)

658. ஓதும் புராணங்கள் ஓதேன் மன் பாதந்தேடேன் ஓர் அன்பர்பால் தங்கி ஒரேன் - என்று பிரிக்க; மன்பாதம் - நிலைத்துள்ள பாதம்; ஒரேன் - பல விடயங்களைச் சிந்திக்கவில்லை; ஈது அங்கின் மேல் நின்ற - இது நெருப்பின் மேல் நின்ற, அங்கியின் என்பதன் தொகுத்தல் அங்கின்; பாதங்களே தந்து நீ தான் அஞ்சேல் என்றான் பாதங்களை நினைக்கச் செய்து. ' நீ பயப்படாதே' என்று கூறினன்; ரூபாய் - உருவமாய்; வேதங்கள் ஈறின் கணாவார் அன்பே - வேதங்களின் ஈற்றிடமுள்ள அடியார்களின் அன்பனே; இன்பாக மேவும் இன்பமாய் அடியார் மனதில் மேவும்.       (9)

659. பேருங் கணூரின்றி யானே என்பால் - பெயரும், இடமான ஊரு மில்லாதவனான என்னிடம்; இன்றியான் - வினையாலணையும் பெயர்; பேரின்பமாய் கண்டுகொண்டேன் - எங்குமாய்க் கண்டுகொண்டேன் என்று கூட்டுக; பேதங்கள் தானொன்று மாகாதென்றே என்று பிரிக்க; இக்குறிப்பின் 739 பாட்டில் இதன் விவரம் காண்க. சேருந்தவானந்தர் மேலாய் என்பால் அன்பாகி - உன்னையடையும் தபசிகளைக் காட்டிலும் மேலாய் என்னிடம் அன்புடையவனாகி (10)
-----------------------
தாலப்பருவம்

660. முதலாகிய ஆதாரம்:- ஆறு ஆதாரங்களில் முதல் ஆதாரம் மூலாதாரம் என்று கூறப்படும். வம், சம், ஷம், ஸம் என்ற நான்கு எழுத்துடன் கூடிய நான்கு தளமுடைய கமலம் வீணா தண்டத்தின் அடிப்பாகத்திலுள்ளது. சித்தலக்ஷிமி, வல்லபை என்ற இரண்டு சத்திகளுடன் கணபதி வீற்றிருக்கிறார். இதில் முக்கோணமான வடிவத்தின் மேல் கணபதி மேற்கூறியவாறு உள்ளார்; இடைகலை, பிங்கலை - முறையே இடப்பக்கமாய் மூச்சுவிடுவது, வலப்பக்கமாய் மூச்சு விடுவது. இது பின்னும் இவ்வாறும் கூறப்படுகிறது. காலெலும்பு இரண்டும் கதிரெலும்பும் கூடிய இடம் குய்யம்; குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவே குண்டலிவட்டமாய் அந்த வட்டத்துக்கு நடுவே திரிகோணமாய் அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நாலிதழுடைய ஒரு புட்பம் வட்டமாய்க் கடப்பம்பூ போன்றிருக்கும். அந்தப் புட்பத்துக்கு நடுவில் ஓங்காரவெழுத்து நிற்கும். அந்த ஓங்காரத்திற்கு நடுவில் விக்கினேஸ்வரனும் பச்சை நிறமுள்ள வல்லபைச் சத்தியும் எழுந்தருளியிருப்பார்கள் . மாணிக்க நிறம். சுவாதிஷ்டானம் - இது ஆறாதாரங்களில் இரண்டாவது ; ‘பம்' முதல் ‘லம்' வரையிலுள்ள ஆறு எழுத்துடன் கூடிய ஆறு தளமுடைய கமலம், கசேரு தண்டத்தின் அடிப்பாகத்திற்குக் கொஞ்சம் மேல் பாகத்திலுள்ளது. சாவித்ரி, காயத்ரி என்ற இரு சத்திகளுடன் பிரமன் வீற்றிருக்கிறார். இது மேலும் கீழ்வருமாறும் கூறப்படுகிறது. மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடைக்கு மேலிருப்பதாகும். நாற்சதுரமும் அச்சதுரத்தின் நடுவே ஆறிதழ்களையுடைய ஒரு புட்பவடிவமும் அதன் மத்தியிலே லிங்கபீடமும் வீணாத்தண்டினடியுமா யிலங்கி அதனடு மத்தியிலே நகார எழுத்து நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரமாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள். இது பிருதிவியின் கூறாகும். செம்பொன்னிறம்; சதுர்கோணம் - நான்கு கோணமமைந்த சதுரம்; பகர் வுக்கரிய - சொல்லுதற்கரிய; மேற்கூறியவைகளால் பாட்டின் பொருள் விளங்குதல் காண்க. (1)

661. மணிபூரகம் :- இது ஆறாதாரத்தில் மூன்றாவது ‘டம்' முதல் 'பம்' வரையிலுள்ள பத்து எழுத்துக்களுடன் கூடிய பத்துத் தளமுடைய கமலம். கொப்பூழ் (தொப்புள்) பிரதேசத்திலுள்ளது; பூமிதேவி, இலக்குமி என்ற இரு சத்திகளுடன் விஷ்ணு வீற்றிருக் சிறார், இது மேலும் கீழ்வருமாறு கூறப்படுகிறது. சுவாதிட்டானத்துக்கு எட்டு விரற்கடை பிரமாணத்துக்கு மேலிருப்பது மணிபூரகமாகும். இது கோழிமுட்டைபோல 1008- நரம்பு நாடிகளும் சூழ நாடிக்கெல்லாம் வேருள்ளது. இதை உள்ளறிவுள்ளோர் உந்திக் கமலமென்று சொல்வர். இது தொப்புளுக்கு நேரில் அப்பு ஸ்தானத்தில் ஏழாம் பிறைக்கிணங்கி யிருக்குமாம். இதன் நடுவே பத்து இதழையுடைய ஒரு புஷ்பம் வட்டமாயிருக்கும். அப்புஷ்பத்தின் நடுவே மகார வெழுத்து நிற்கும். அந்த மகாரத்திற்கு நடுவில் மகாவிஷ்ணுவும் இலக்குமியும் எழுந்தருளியிருப்பர். மரகத நிறமுள்ளது. அனாகதம் - இது ஆறாதாரத்தில் நான்காவது. 'கம்' முதல் 'டம்' வரையிலுள்ள பன்னிரண்டு தளமுடைய கமலம். இருதயத்திலுள்ளது; கௌரி, அம்பிகை என்ற இரு சத்திகளுடன் உருத்திரன் வீற்றிருக்கிறார். இது கீழ்வருமாறும் கூறப்பட்டுள்ளது. மணிபூரகத்திற்குமேல் 10-விரற்கடை பிரமாணமுள்ள இடத்திற்கு மேல் உள்ளது. இது இருதய கமலமாம். தேயு ஸ்தானத்தில் முக்கோணமாயிருக்கும். அந்த முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டி தழையுடைய ஒரு புட்பம் வட்டமாயிருக்கும். அந்தப் புட்பத்தினடுவில் சிகாரவெழுத்து நிற்கும். அந்தச் சிகாரத்தினடுவில் உருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பர். அக்கினி நிறமுடையது. தவள நிறம் - வெண்ணிறம்; அரி - திருமால்; மலர்மாது - இலக்குமி; அப்பால் திகழ்ந்த அனாகதம் என்று பிரிக்க; தண் தாமரைத்தாள் உருத்திரை - குளிர்ந்த தாமரை போன்ற பாதமுடைய உருத்திரை; புகழ் தாலுரை - வினைத் தொகை, புகழ்ந்த தாலாட்டுப் பாட்டு என்க. (2)

662. விசுத்தி:- இது ஆறாதாரத்தி லொன்று. 'அம்' முதல் அ: (விஸர்க்கம்) வரையிலுள்ள பதினாறு எழுத்துக்களுடன் கூடிய 16- தளமுடைய கமலம். தாலுவின் அடிப்பாகத்திலுள்ளது. இதில் உன்மனி, வாக்வாதினி என்ற இரு சக்திகளுடன் மகேச்வரன் வீற்றிருக்கிறார். இது மேலும் இவ்வாறு கூறப்படுகிறது. அனாகதத்திற்குப் பத்து விரற்கடை பிரமாணமுள்ள இடத்துக்கு மேலுள்ளது. இது கண்ட ஸ்தானத்திலே வாயுஸ்தானத்திலுள்ளது. அறுகோணமாயிருக்கும். அந்த அறுகோணத்தின் நடுவில் பதினாறிதழையுடைய ஒரு புட்பம் வட்டமாயிருக்கும். அந்தப் புட்பத்தினடுவே வகாரவெழுத்து நிற்கும். அந்த வகாரத்தினடுவில் மகேஸ்வரனும் மகேஸ்வரியுமிருப்பர். கரு நிறத்தையுடையது. (மேகநிறம்); ஆக்கினை அல்லது ஆக்ஞை: இது ஆறாதாரத்திலொன்று; 'ஹம்', 'க்ஷம்' என்ற இரு அக்ஷரங்களுடன் இரண்டு தளங்களையுடையது. புருவமத்தியிலுள்ளது. இதில் மனோன்மணி, தர்மசக்தி என்ற இரு சக்திகளுடன் சதாசிவன் குருவடிவமாக வீற்றிருக்கிறார். இந்த ஆறு ஆதாரங்களையும் திருமந்திரத்தில் கூறிய வாறு காண்க:

''நாலும் இரு மூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங்
காலங்கண் டானடி காணலு மாமே."

மற்றுமிது 662 – ஆம் பாட்டாகிய இதற்கு மாறுபாடாகக் காணப்படுகிறது. கீழ்வருமாறே பாட்டிலுமுள்ளது. விசுத்திக்கு 12-விரற்கடை பிரமாணமுள்ள இடத்துக்குமேல் ஆக்ஞை லலாட பீடத்திலுள்ளது. வீணாத்தண்டின் முடியுமாய் ஊடுருவி பொன் போன்ற வடிவமுற்று நிற்கும். நெற்றிப் புருவத்தின் வெளியாய் ஆகாச ஸ்தானத்தில் மூன்றி தழையுடைய ஒரு புட்பத்தினடுவே யகார வெழுத்தோடிணங்கி நிற்கும். அந்த யகாரத்திற்கு நடுவில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளியிருப்பர். மேகநிறத்தையுடையது (படிக நிறம்); இந்த ஆறு ஆதாரங்களும் அவ்வவ்விடத்தில் தோன்றுவது போலிருக்கும். துலங்கிய கர்த்தன் உக்கிரக வேலை நடத்தும் சதாசிவன் என்று பிரிக்க; புரை - சத்தி; துகள் தீர் எழுத்து - குற்றம் நீங்கிய எழுத்து. (3)

663. மதிமண்டலம் அல்லது சந்திரமண்டலம்:- மூலாதாரம் தொடங்கி ஒவ்வோரெழுத்தை முன்னிட்டுக்கொண்டு சிரசு நடுவே கோடி சூரியர் உதயமானாற்போலப் பிரகாசிக்கும். இந்த அமிர்தகலை அக்கினி மண்டலத்தை நோக்கி ஜோதியாயிருக்கும். இதை அமிர்தகலை யென்றும் சொல்வதுண்டு. அமுர்தம் மேல்நோக்கி அக்கினி கீழ்நோக்கிச் சரியாய் நிற்கும். இதற்கு நடுவில் பராசக்தி எழுந்தருளியிருப்பாள். பிரம்ம ரந்திரம்:- புருவமத்தியின் மேல் ஆயிரம் தளமுடைய கமலம் பிரமரந்திர ஸ்தானத்திலுள்ளது. அதில் பராசத்தியுடன் பரமசிவன் வீற்றிருக்கிறார். ஆறு ஆதாரத்தையும் கடந்தது இது. 'பொறியும் புலனும்..... . ஆதாரம்' - ஐம்பொறியும், ஐம்புலனும், காற்றாடி போன்று சுற்றும் மனமுதலிய அந்தக்கரணங்களும், மூன்று குணங் களும் புகழமைந்த விந்து, நாதமும், ஐம்பெரும் பூதங்களுமாகிய இவற்றோடு இவற்றாலமைந்த முறைமையான ஆறு ஆதாரங்களையும்; தேக்கி - நிறைத்து; உரையாது உரைக்கும் தால் - பேச்சையும் கடந்து சொல்லும் தால் பாட்டு; ஒன்றாய் - சிவத்துவமாய்ச் செயலற்ற நிலையாய்; இரண்டாய் - சிவம், சக்தி என்ற இரண்டு நிலையாய், மூன்று ஆடி - அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளிலும் ஆடி; இருபத்தஞ்சு ஆடி - இருபத்தைந்து வடிவங்களாக ஆடி, மகேச்வரனுக்கு இருபத்தைந்து வடிவங்கள்; முப்பத்தஞ்சு ஆடி - நாதம் நீங்கிய முப்பத்தைந்து தத்துவங்களிலும் நிறைந்து ஆட்டி. (4)

664. தகப்பனை யொத்தவனாய் வந்து சிவசட்டைநாதனும், குருபரனான தத்தாத்திரையர் திருவருளின் சந்ததியை விளக்குவதற்கு எனது அருளில் உதித்த அருமைக் கொழுந்தை யொத்தவனே உண்மைத் தத்துவம் வளர்கின்ற கண்மணியை யொத்தவனே மகிழ்ச்சியமைந்த செல்வம் இருக்க ஆறு ஆதாரங்கள் பொருந்திய செல்வம் உனக்கு எதற்கு? என்று கூறி மனமகிழக் கண்ணைத் துடைத்து விளங்கும் ஆனந்த வெள்ளத்தில் பொருந்த முழுகி இன்ப மழையை நிறைத்து இன்பமாய் இன்பவடிவாகிய அணுத்திரளில் தாலாட்டல் செய்யும் எல்லாவற்றையும் கடந்த பொருளாயுள்ளவனே என்று பொருள் கொள்க. கந்தம் - அணுத்திரள்; அதீதம் - எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது; விழி துலக்குதல் - கண்களைத் துடைத்தல்; சட்டை நாதன் - இவர் சீர்காழியில் இருந்து வாதுளாகமத்தின் ஞானபாகத்தைச் சதாசிவரூபம் எனத் திரட்டிய சைவர். இப்பாட்டில் கூறப்படுவது இவராக விருக்கலாம்.   (5)

665. ஏகன் - ஒப்பற்றவன் (அ) தனித்தவன்; அநேகன் - பல வுருவங்களுடையவன்; ஏகாநேகா - ஏக + அநேகா. ககனாதிகள் யாவும் சுத்தமது ஈறே - ஆகாய முதலிய பஞ்சபூதங்களிலும் உண்மையாய் ஈறு முதல் எங்கும் வாழ்பவனே; கருணாகரன் - கருணைக்கு உறைவிடமானவன்; காணார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்; சுகவாரியின் ஈறின்கண் பெற்றுய் தாதாவாய் - ஆனந்தக்கடலின் இறுதியிடமும் பெற்றுய்கின்ற கொடை வள்ளலாய்; ஓதா தவம் - சொல்ல முடியாத புகழ் வாய்ந்த தவம் (6)

666. குழையோடு அமராகுங் கண் கடையாம் ஓரார் வார் ஊர் குடமாகிய ஈர் கொங்கைப் புனைமானார் மாலாலே - காதிலுள்ள குண்டலத்தோடு மாறுபடும் கண் கடையை யுடைய ஒப்பற்றுப் பொருந்திய கச்சுள்ள குடமாகிய இரண்டு முலைகளைத் தாங்கி நிற்கும் பெண்களது ஆசையினாலே; வீழ்வாய் - விருப்பமாய்; வெகுநாள் அங்குற்று அதில் வீணாய் வீழ்வேனே - அதிக நாள் பெண்களிடமடைந்து அதில் வீணாய் வீழ்பவனாகிய என்னை; இந்தப் புவிமீதே ஆசானாய் என்று பிரிக்க; எழு மான் விழிபோல் நின்று அப்படி பார், பார்வா வாநீ யென என்று பிரிக்க; பார்வா - பார்ப்பதற்குவா; கோமான் - தலைவன், இதில் மான் சாரியை; தழைஆர் நிழல் ஆலின் பக்கலில் தானே தானாய் மாதவமான சிவானந்தக் கடல் என்று பிரிக்க; ஆல் - ஆலமரம். (7)

667. வினையால் வெகுதேகம் பேதத்தினாலே மாமாயா மிளிரான வினோதம் பத்தி - நல்வினை தீவினைகளால் வரும் உடல் பல பேதங்களையுடைய கொடிய மாயைகளினால் விளங்கும் தீயவைகள் அடைந்து; மெய்யாகா பூ வாழ்வு ஓசனையால் இருள்தான் முந்தத் தடுமாறா ஆன்மாவாய் - பொய்த் தோற்றமுடைய பூமியின் வாழ்வின் முயற்சியில் பாபமானது முற்பட அதனால் தடுமாறாத ஆத்மாவாய்; சக மீதில் அனேகம் தத்தினில் - பூமியில் அனேக ஆபத்துக்களில்; அந்தத் துயர் நீளாய் ஆகாதாய் ஓர் நிலையாகிய பேரின்பம் என்று பிரிக்க; நாய் எளியேன் - நாய்போன்ற எளியவன்; தான் ஆள்வோனே எனப் பிரிக்க.             (8)

668. முத்தர் - முத்தியை விரும்பும் ஞானிகள்; தேனே ஞான அதீதக்கதியே என்று பிரிக்க; அதீதம் - எட்டாதது; பந்தம் - ஆசை; நித்தியம் - அழிவற்றது.   (9)

669. என்னைத்தான் - தான் அசைநிலை; இங்கிதன் - இன்ப மிக்கவன்; சுழல்புரி - அலைக்கழித்த; இரவி - சூரியன்; துல்லியம் - பிரகாசம்; அருள் தன்னை யளித்திடு என்று பிரிக்க; என்னைத் தானெனும் - என்னுடைய பொருளென்று சொல்லாமல் இறைவன் தனது என்று கூறும்; "யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்.'' என்ற குறளை ஓர்க. (10)
----------------------------
சப்பாணிப் பருவம்

670. கன்மம் பொசிப்பிக்கும் நால்வகை யோனியில் - கன்மங்களைத் தக்கவாறு நீக்கும் கருப்பையில் தோன்றுவன, முட்டையில் தோன்றுவன, விதை வேர் முதலியவைகளில் தோன்றுவன, வேர்வை யிற்றோன்றுவன ஆகிய நான்கு இடங்களில்; சகளம் - உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றுநிலை; நிஷ்களம் - மனம் வாக்குக்கு எட்டாத நிலை, இங்கு உரு என்பதை நிலை எனக் கொள்க. வன்மம் - பகை; புலையாதி மாபாதகங்கள் - பிராணிகளைக் கொன்று மாமிசம் புசித்தல், கள் குடித்தல், சூதாடுதல் முதலிய பஞ்சமா பாதகங்கள் செய்தும்; நன்மையால் வரும் அரியதா மானிட - "அரிதரிது மானிட ராதல் அரிது" என்ற ஒளவை வாக்கை உணர்க. சென்மம் அதுவாய் அதில் மூடர் சிலதும் செம்மை சிலதும் என்று பிரிக்க; மூடர் சிலதும் செம்மை சிலதும் - மூடர் சிலரும் செம்மையான அறிவு வாய்ந்தவர் சிலரும், அதில் - அம்மானிடப் பிறவியில். (1)

671. பரவி நுகர் சரகமென - பறத்தலைச் செய்து ஒரு பூவிலிருந்து ஒரு பூவிற்குச் சென்று உண்ணும் தேனீக்களைப்போல, மனம் அலைவதற்குத் தேனீக்கள் பூவினின்று பூவுக்கு அலைவதை உவமை கூறினார். நற்பருவனென ஆக்கி - நல்ல பக்குவத்தை யுடையவனாகச் செய்து; இங்கு இருமென இருத்தி என்று பிரிக்க, சமைய தீட்சைகள் - திருவருணோக்கம், பரிசம், வாக்கு, பாவனை, சாத்திரம், யோகம், ஒளத்திரி முதலிய உண்டு. யோகவகை- இது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நிலைகளில் மூன்றாவது; மனது குவியத்தரும் சாக்கிரம்:- இது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் எனும் ஐந்தவத்தைகளில் முதலாவது. சமக்குறி:- இது சின்மய முத்திரையாக இருக்கலாம். பதியாகிய கட்டைவிரலும், பசுவாகிய ஆள் காட்டி விரலும் கூடுவதாயிருக்கலாம். மெய்ஞ்ஞானமாகும் வழியைத் தரு கைகள், சமக்குறி காட்டுங் கைகள் எனக் கூட்டுக. (2)

672. பூதரம் - மலை; தெட்சணமூர்த்தம் - தக்ஷிணாமூர்த்தி வடிவமாய்; சிவஞானபோதம் அன்று அருள் செய்யவே என்று பிரிக்க; சனகர் முதல் நால்வர்க்கும் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வர்; பேரின்ப வாரி- பேரின்பமாகிய கடல்; மாசற்ற முத்தியின் ................ சின்மயக் கைகளால் - குற்றமற்ற முத்தியின் பெருமையைக் காண்பதற்காக வாக்குக் கடந்த ஒன்றான தகுதியான சின்மய முத்திரையைக் கொண்டுள்ள ஞானம் போதிக்கும் கைகளால்; தட்சிணாமூர்த்தி பேசாமல் கைகளின் சின்மய முத்திரையாலேயே அனுபவ மூலமாகப் போதித்தார். எனவே "வாக்கிறந்தது'' என்று கூறப்பட்டது.   (3)

673. ஆறு சமயங்கள் - உலோகாயதம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்; இவை புறச்சமயம் எனப் படும். மருவியிடு முட்சமையம் - சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வாமம், வைரவம் என்ற ஆறு; "எழில் மந்திரம், பதம், எழுத்தும், புறம், தத்துவம், கலை இது ஆறின் அப்பால் ஒருகின்ற பரவசம் செய்விக்கும் ஞான நூல்'' என்று பிரிக்க. இப்பாட்டில் சிவஞான போதத்தைப் பற்றிய பெருமை கூறப்பட்டுளது. ஏடணை:- இது அர்த்தவேடணை, புத்திரவேடணை, உலகேடணை என்று மூவகைப்படும்; ஏடணை-பிணக்கு; அர்த்தம் - பொருள். (4)

674. அவஞானம் - பயனின்மையாகிய அறிவு ; வறுமை - தரித்திரம் ; அஷ்டபாக்கியம்-எட்டுவித செல்வம் ; பவஞானம் - பிறவியாகிய ஞானம்; குருலிங்க சங்கமந் தனிலினிய பத்தியாம் - குருபத்தி, --இலிங்கபத்தி, சங்கம பத்தி என்று பிரித்துச் சேர்க்க; சங்கமர் . அடியர் ; இருமுத்திரை - சின்முத்திரை, அபயமுத்திரை என்பன. வெண்ணீறு-விபூதி; தான் அந்தமாகிய சிவானந்த நாதனே - தானே ஈறு முதலுமாகிய சிவானந்த நாதனே, இங்குக் கடவுளின் தன்மை அடியவருக்கேற்றி யுரைக்கப்பட்டது. (5)

675. மனமயம் - மனமாகிய இடம்; இருள்மா மலம் ஆணம் பொலிய - இருள் மிகுந்த குற்றமான ஆணவம் விளங்க; சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்ற மூன்றும் தீவினைக்குக் காரணமாயுள்ளன; * சஞ்சித மாருதம் - சஞ்சி தமாகிய புயற்காற்று ; வினையலை - வினையாகிய அலைகள் ; அலமந்தெழுந்து - சுழன்று ; மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம் என்பன ; எனதெனும், என்கை, என்காலென்றும் அறிவின்றி இருந்தேன் என்று கூட்டுக. இன்பம் மிகுத்து அகிலந்தனில் வந்து என்க. (6)

676. ஆகம் - உடல்; அறியாமையை யுடையேனுக்கு அருள் திகழப்பெறவே என்று பிரிக்க; கல்லும், இரும்பும், மெழுக்கும், அணையுமது போலவும் அரம்பையில் விறகில், கரியில், பஞ்சினில் அனலேற்றிடு நெறியாய் மாகதி தரவரு பருவமதாகிய மந்தமும், மந்த தரம், மகிழ் தீவிரம், தீவிரதரம் எனும் நால்வகை என்று பிரிக்க; அணை - பஞ்சு; அரம்பை - வாழை; மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்று நால்வகை வேகங்கள். கோகனகப் பதம் - தாமரை போன்ற பாதம்; அரம்பையில் நெருப்பு ஏற்றிடுவதுபோல மந்தமும், விறகில் அனலேற்றிடுவதுபோல் மந்ததரமும், கரியில் நெருப்பு ஏற்றிடுவதுபோல தீவிரமும், பஞ்சினில் நெருப்பேற்றுவது போல தீவிரதரமும் உள்ளன. மந்தம் - நமக்குப் பேறாயுள்ளவொரு பதியுண்டென்று அறிவு எழுந்திருப்பது. அது வாழைத்தண்டிலே நெருப்புப் பற்றினாற்போலும், மந்ததரம்:- அப்பதியை யடைவதற்கு வழியெப்படி யென்றாராய்கை; அது விறகிலே நெருப்புப் பற்றினாற்போலும்; தீவிரம்:- அப்படி யாராய்ந்தறிந்த பதியை யடைவதற்குப் பிரபஞ்சத்தை வெறுத்துப் புளியம்பழமும் அதனோடும் போல் நிற்றல்; அது கரியில் நெருப்புப் பற்றினாற்போலும்; தீவிரதரம்:-பிரபஞ்சத்தை முற்றத் துறந்து ஆசாரியனே பொருளெனக் கண்டு வழிபடுகை; அது பஞ்சில நெருப்புப் பற்றினாற்போலும். சத்தினி:- சத்தினிபாதம்; சத்தினி பாதத்தின் நால்வகைப் பிரிவின் கடைசியில் பதம் தரும் எனக் கூட்டுக.       (7)

677. ஒன்றே பொருளென்று அறியும் மனமுடையவர்களை அவ்வொன்றில் உணர்த்திக் கடவுளிது வென்றும் உயிர் இது என்றும் உள்ள ஒப்பற்ற விஷயத்தை அறிந்துகொள்ளவில்லை; பாசத்தில் மன ஒருமைப்பட்டு நின்றனை, சிவதத்துவமாய் ஒன்றும், சிவம், சத்தி என்ற இரண்டுமாய் அதுவல்லாமல் அறிவித்திடும் உட்பொருள் அழியாமல் நின்றிடு பொருளுக்கு இடமான ஐந்து எழுத்துக்களுக்கு (பஞ்சாட்சர மந்திரம்) உயிர் புண்ணியத்தால் நிறைவது போல் அழுக்கின்மையில் தெளிவுறச்செய்த செல்வமே மகிழ் செல்வக் குன்று போன்று வரும் தவத்தை யுடையவனே! சப்பாணி கொட்டுக என்று பொருள் கொள்க. (8)

678. மாதவம் - சிறந்த தவம்; மேலோர் - முனிவர்; மேலோர் பக்கலில் ஒக்காமல் - மேலோரிடம் சேராமல்; மாமயலே கொண்ட மானார் மைக்கண் மருட்காகி - மிகுந்த மயல் கொண்ட மானையொத்த பெண்களது கண்களின் நோக்கு மயக்கிலே பொருந்தி; மாகாதக் குழு - மிக்க கொலைபாதகங்களைச் செய்யும் கூட்டம்; சாதகன் - சாதகமாய் இருப்பவன்; போகமதே அருள் சாரதந்து எனப் பிரித்துக் கூட்டுக; நாயேனுக்கு - நாய் போன்ற அடியேனுக்கு. (9)

679. பூரணன் - ஞானத்தால் நிறைந்தவன்; தானே உட்குள் உதித்து ஆளி - தானே மனத்திற்குள் தோன்றி ஆட்கொள்வாய்; காவலனே - விளி; உந்தன் ஆளாய் - உமது அடியவராய்; "சீருணர்வே, இன்பமே, மாநித்திய பொருட்டான தேசிகனே, எந்தையே, தீதற்றிடு கற்றாவே" என்று பிரிக்க; கற்றா - கன்றையுடைய பசு போன்றவனே; ஆரணனார் விண்டு - பிரமனும் திருமாலும்; இங்குக் குருவைச் சிவமாகவே பாவிக்கிறார். (10)
----------------------------
முத்தப்பருவம்

680. உருவாய், அருவாய், உருவருவாய், ஒன்றுமில்லாத பரஞ்சோதி எனப் பிரிக்க; ஞான ஒளிவாள் - உருவகம்; மருள் காடு - உருவகம், மயக்கமாகிய காடு என்று பொருள்; இருவினை - புண்ணிய, பாபம்; விரை - விதை; சஞ்சிதம் - மூன்று கர்ம வினைகளில் ஒன்று; மன்னே - தலைவனே; மருவே - மருவுதலைப் பொருந்தியவனே. (1)

681. பவவாருதி - பிறப்பாகிய கடல்; மருள்பட மாருதம் - மயக்கமாகிய புயற்காற்று; நல்வினை தீவினை யலை - உருவகம்; மொத்துண்டும் - தாக்குண்டும்; அவமாம் - வீணாகிய; பிசல் - பெருங்காற்று; மலைவு - மயக்கம்; ஆசை மடு - உருவகம்; மடு - ஆழமான நீர்நிலை; அழகாம் மாதர் புணர்ச் சுழலால் - அழகாகிய மாதரது புணர்ச் சியாகிய நீர்ச்சுழற்சியால்; "தவம் ஏது இன்றிப் பற்றின்றித் தயங்குபு எளியேன் உய்யுமதாய்" என்று பிரிக்க. தப்பம் - தெப்பம்; மவுன + அதீதம் - மவுனாதீதம். (2)

682. நேர் உறையும் - நேரில் தங்கும்; அதற்கு ஒவ்வ - அதற்குத் தக; திட்டாந்திரங்கள் - பிரத்தியட்சப் பிரமாணம்; சுருதி முதல் மூன்றும் கரியே படுத்தி - வேதங்களில் முதல் மூன்றையும் சாட்சியாக்கி; மட்டார் மலரின் பவள வொளிர் மணிவாய் - தேன் நிரம்பிய தாமரை மலரைப்போன்ற சிவந்து பிரகாசிக்கும் அழகிய வாய். (3)

683. மறைவாம் இருளும்................ஒப்பாய் - மறைக்கும் இருளும் பக்குவப்பட்ட மருண்ட வல்வினையும் சரிபாகமாய் இருப்பின்; சத்தினிபாதம் - ஆன்மாவினது ஞானத்தைத் தடுக்கு மாணவ மலசத்தி நழுவு மவசரத்திலே முற்பிற் பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது நித்திய ஞானக் கிரியைகளை விளக்குவது. அது மந்தம் முதலிய நான்குவகை. மந்தம் முதல் மூன்று - மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்பன. இதன் விரிவை 676-ஆம் பாட்டில் காண்க. திரோதம் - மறைத்தல்; கோது - குற்றம்; இங்குக் குறியென்பது சின்முத்திரை; தெள் ஆர் அமுதம் - தெளிந்த அரிய அமுதம். (4)

684. செம்புக்கு இசைந்த உயிர்க்குள் திரைக்களிம்புக்கு இசைந்த இருள் அதனை - செம்புக்கு ஒப்புமை கூற இசைந்த உயிர்க்குள் மிக்கு எழும் பாசையாகிய களிம்புக்கு ஒப்புமை சொல்லும் மலமாகிய அதனை; திகழப் புளி நேர் பல் குருவால் - பிரகாசிக்குமாறு புளியையொத்த பல ஆசிரியரால், (பலகுரு - உபதேசகுரு, தீக்ஷாகுரு போன்றவர்); இரண்டும் கழித்து - நணுகுவதையும், மறைவதையும் போக்கி; தெம்பு மருவ - சந்தோஷம் பெருக; துல்லியமாக்கி - விளங்குமாறு செய்து; வேதி - ரசகுளிகை; செம்புக்கு ஒப்புமை கூறும் உயிர்க்குள் மிக்கெழுந்த களிம்புக்கு ஒப்புமை கூறும் மலத்தைப் போக்கிப் பிரகாசிக்குமாறு செய்யும் புளியையொத்த பலவகை ஆசிரியர்களால் சொல்லப்படும் உபதேசங்களைக் கேட்டுச் சந்தோஷமாய் அவர் பேச்சை நம்பி அதனைத் துலக்கத்துலக்க ஒளி அடையும்படியானதும் வந்தவிதம்போலவே மறையும்படி யானதுமான ஞானம் ஈது அல்ல என்று தெளிவடைந்து ஆராய்ந்து உன்னை யடைந்தவர்க்குச் சந்தோஷம் பெருகக் கருணையால் விளங்குமாறு (பிரகாசிக்குமாறு செய்து திருவுபதேசமாகிய அற்புதமான இரசகுளிகையைக் கொடுத்து ஒளி அடைதலும் மறைதலுமாகிய இரண்டும் போக்கி விளங்கும் பொருளான பொன்னாகிய அருளைச் செய்யும் சிவானந்தா என்று பொருள் கொள்க. செம்பில் களிம்பு ஏறுவது போல உயிரில் மலம் ஏறும் என்றும் அக்களிம்பைப் புளியினால் தேய்த்து விளக்கினால் அப்பொழுது ஒளியுடையதாகவும் பின்பு மங்குவதாவதும் போல பல ஆசிரியர்களின் உபதேச மொழிகள் அச்சமயம் இன்பம் மிகுவித்தாலும் பின்பு பழைய நிலையே ஆகும் என்றும் அத்தகைய உபதேச ஞானம் இதுவல்ல எனத் தெளிவடைந்து சிவானந்தனை அடைந்தவர்க்கு உபதேசமாகிய அற்புதமாகிய இரச குளிகையைக்கொடுத்து அச்செம்பு போன்ற உயிரைப் பொன்னாகிய அருளாகச் செய்பவன் என்றும் விளங்குதல் காண்க. செம்பு இரசகுளிகையால் பொன்னான பிறகு என்றும் களிம்பேறாமல் பிரகாசித்தல் காண்க. அத்தகைய அருள் ஞானம் கொடுப்பவன் சிவானந்தன்.             (5)

685. கன்னர் முத்தம் - கரும்பினின்றுண்டான முத்தம்; தனிமை மாதருக்காகாது - கணவனை விட்டுப் பிரிந்த பெண்களுக்கு ஆகாது; கஷ்டப்படுத்தும்; கந்தர்ப்பன் வில் அங்கமாம் - (ஏனெனில்) மன்மதனது வில்லாகிய உறுப்பாகும்; கதலி முத்தம் - வாழையினின்றுண்டான முத்து; புகல இனி - சொல்வதற்கு இனிமையுடைய; துறைப்படை கொண்டு கடிதரும் குலைகள் உண்டாம் - வழியாகிய ஆயுதங் கொண்டு நீக்கும் குலைகளுண்டாம், வாழை குலை தள்ளின பிறகு வளராது; குலையும் தள்ளாது; வெட்டிவிடுவர். ஆதலால் இங்ஙனம் கூறினர்; பன்னகம் தரு முத்தம் - பாம்பினின்றுண்டான முத்து; ஆலத்தில் உறைதலால் விஷத்தில் தங்குதலால்; பழுத்து இன் தலைவலித்தல் - முதிர்ந்த பின் இனிய தலைவலித்தலை யுடையதாகும். பாம்பினிடம் முத்து எடுப்பதா யிருந்தால் உபத்திரவம் செய்து எடுப்பதால் இங்ஙனம் கூறினர் போலும். பங்கைய வெண்முத்தம் - தாமரையினின்று தோன்றிய முத்து; பகையாதும் இற அலது - பகையாவும் அழிய உள்ளதாயில்லை செந்நெலின் கதிரின் வரு முத்தம் - சாலி நெல்லில் தோன்றிய முத்து; பொற்களஞ் செய்யும் - அழகிய களங்களில் உண்டாதலைச் செய்யும்; களம் - நெல் முதலியவைகளைப் பிரிக்க தரையில் சுத்தம் செய்யுமிடம்; தெரிவையர்க் களமதில் உதித்த முத்து - பெண்களின் கழுத்தில் தோன்றிய முத்து; புணர்வு செய்திடும் கொடியது - சேர்க்கை செய்யும் கொடுமையையுடையது; மன்ன நின் முத்தந் தனக்கு நிகராகுமோ - தலைவு - உனது முத்தத்திற்கு ஒப்பாகுமோ, இங்கு முத்தம் என்பது முத்தி கொடுத்தலைக் குறித்தது. ''பனிமதி கதலி மேகம் பைந்தொடிக் கழுத்தாவின் பல், தனியானை யேனக்கொம்பு தடங்கரா வுடும்பு கொக்கு, வினையராச் சலஞ்சலந்தந் திப்பிமீன் மூங்கில் பூகம், நினைசெந்நெல் கரும்பு கஞ்சம் நிகழிரு பதின்முத் தாகும்.'' என்ற பாட்டை ஓர்க. அன்ன நின் முத்தந் தனக்கு என்றும் பிரிக்கலாம். அன்ன - அவைகளைப் போன்றன. (6)

686. புணரிதனில் வரு முத்தம் அலையுய்த்திடுந் திறம் போதாது - கடலில் உண்டான முத்து அலைகளால் சேர்க்குந் திறம் போதாது; பூர்ண சந்திரன் அருள் முத்தம் களங்கமது பூதியம் விருத்தமாகும் - பூரண சந்திரனின்று தோன்றிய முத்து களங்கமது உடலில் நிறைந்து வேறுபடும்; கணுவினைந்திடு பசுங் கழையுதவும் முத்தமது காண்கின்ற சாரமில்லை - கணுக்களோடு நைந்திடும் கரும்பினின்றுண்டான முத்து சொல்லுகின்ற சாரமற்றதாகும், கரும்பினின்று சாரைப் பிழிதலின் இங்ஙனம் கூறினர்; இது மூங்கிலுக்கும் சிலேடையாகப் படுதல் காண்க. கார் முத்தமது சிந்திவிடும் - மேகத்தினின்று தோன்றிய முத்தம் பூமியில் சிந்திவிடும்; மேல் இடித்திடும் கயமணி மத்தத்து இருக்கும் - மேலுமிடிப்பது போன்ற பிளிறலைச் செய்யும் யானையின் முத்தம் மதநீரில் இருக்கும்; பணிலம் மகிழ் முத்தமது தசையிலுறும் ஈதன்றி பங்கமும் கூனதாகும் - சங்கினின்று தோன்றிய முத்து தசையில் பொருந்தியிருக்கும், இதுவல்லாமல் அதன் துண்டுகளும் வளைவு பொருந்தியிருக்கும். பாணியத்துறு கயலின் முத்தமது நன்று அன்று பார்க்கில் புலால் என்பர் - நீரில் உற்ற மீனிடத்தினின்று தோன்றிய முத்து நன்றல்லதல்ல, ஆராய்ந்தால் மாமிசம் என்று கூறுவர்; மணிகள் - முத்துக்கள்.       (7)

687. பாவையர் - பெண்கள்; இன்பம் - சிற்றின்பம்; மாதர்கள் தோள் புணர்தலே முத்தியென்று உலகாயதர் கூறுவதும், உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானமெனும் ஐந்து கந்தமும் கெடுதலே முத்தியெனப் புத்தரில் சவுத்திராந்திகன் கூறு வதும், மூன்று பேத குணங்களும் கெடுகையே முத்தியெனச் சமணரில் நிகண்டவாதி கூறுவதும், பஞ்சபூதம் காலம், திக்கு, ஆன்மா, மனமென்னு மொன்பது திரவியங்களின் பொதுவியல்பு வேற்றியல்புகளையறியும் ஞானத்தாற் கன்மம் நசிப்பதுவே முத்தியென வைசேடிகர் கூறுவதும், பாசம் நீங்கவே சிவத்துவாபியத்தி விளங்கும் அதன் மேல் முதல்வன் பிரேரகனல்லன் பாச நீக்கமே முத்தியென அருவ சமவாத சைவர் கூறுவதும், சாரூபம் பெற்று அத்திரட்சியினிருப்பதே முத்தி இயன மாயாவாதிகள் கூறுவதும், உயிர் கெட்டுச் சிவத்தோ டொன்றாவதுவே முத்தியெனப் பரிணாமவாத சைவர் கூறுவதும், அட்டமா சித்தியை யடைவதே முத்தியென மானிடச் சித்தர்களாற் கூறப்படுவதும், நித்திரை செய்வோர் ஒன்றுமறியாத முறைமைபோற் கேவலத்தை யடைவதே முத்தியெனப் பாடாணவாத சைவர் கூறுவதும் ஆகிய சமயவாதிகள் முத்திகளெல்லாம் செனன மரண துன்பத்துக் கேதுவாகிய முத்தியாம். மும்மலங்களும் நீங்கி ஆன்மாச் சிவ வியாபகத்துள் ஞாயிற்றினொளியி னடங்கிய நட்சத்திரம் போல்
அடங்குவதே சுத்தாத்துவித முத்தியாம்.

“அரிவையரின் புறுமுத்தி கந்தமைந்தும்
      அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடுமுத்தி மலம்போம் முத்தி
      விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
      பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி
திரிமலமும் அகலவுயிர் அருள்சேர் முத்தி
      திகழ்முத்தி யி துமுத்தித் திறத்த தாமே.''
            (சிவப்பிரகாசம் 50.)

எட்டென விளங்கு நற்சித்தி - அட்டமாசித்திகள்; ஐயிரண்டான - பத்துவித முத்திகள். பஞ்சகந்தம்:- (1) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, கடினம், கந்தம், இரதம், வன்னம், என்னும் எட்டினாகும் உருவக் கந்தம் (2) குசலா வேதனையாகிய சுகவறிவு, அகுசலா வேதனை யாகிய துக்கவறிவு, குசலாகுசல வேதனையாகிய சுகதுக்கவறிவு என்னும் மூன்றானாகும் வேதனைக் கந்தம். (3) சுரோத்திரம், துவக்கு, சக்ஷ சிங்கவை, ஆக்கிராணம், மனம் என்னும் ஆறானாகும் குறிப்புக் கந்தம். (4) பத்துவகைப் புண்ணியம், பத்துவகைப் பாவம் என்னும் இவ்விருப்பதானாகும் பாவனைக்கந்தம். (5) சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், உத்தி என்னும் ஆறானாகும் விஞ்ஞானக் கந்தம் என்பனவாம்.       (8)

688. சதுமுகன் நெடுமால் - பிரமன், விஷ்ணு; தாணி - பூமி; துகள் - குற்றம்; பந்தம் - கட்டுக்கள்; அங்கையின் நெல்லிக்கனியென - உள்ளங்கையில் வைத்த நெல்லிக்கனி போன்று இங்ஙனம் வைத்துப் பார்க்கும்போதுதான் நெல்லிக்கனியின் உள்ளும் புறம்பும் ஒருசேரத் தெரியும்; மோனம் - மௌனம்; அறிவுக்கு அதிசயமாக நிறைந்திடு என்று பிரிக்க, (9)

689. தன் என்பது சிவானந்தனைக் குறித்தது; மன்னிய பின்நிலவின் கதிர் ஞாயிறில் வருநற் கதிரதனில் மருவியவாறு - நிலைபெற்ற நிலவின் கிரணம் சூரியனின் கிரணத்தில் கலந்து விடும் விதம்; புனலினில் ஒவ்வல் வணமது உறையும் நெறிபோல் - நீரில் ஒத்துள்ள விதமாகிய அது தங்கும் நெறிபோல; அகரத்துயிரென - "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு." என்ற குறளை நோக்குக ; அகரத்துயிர் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. (10)
-------------------------------
வருகைப் பருவம்

690. நிலவு மதியத்து எழில் நுதலில் - நிலவு வீசும் சந்திரன் போன்ற அழகுவாய்ந்த நெற்றியில்; குழை - குண்டலம், தானியாகு பெயராய்க் காதை யுணர்த்திற்று; கருணைக்கடல் - உருவகம்; நோக்கம் கூரும் - நோக்கம் மிகும்; கூர் - உரிச்சொல்; குமிழ்க் கீழ் அணிச் செந்துவர் வாயில் - குமிழம் பூ போன்ற மூக்கின் கீழுள்ள அழகிய சிவந்த பவளம் போன்ற வாயில்; தரளம் - முத்து; நகைப்ப - சிரிக்க; பல அம்பணிகள் செறிந்து - பல அழகிய ஆபரணங்கள் நெருங்கி, மருமம் - மார்பு; தாவடம் - கழுத்தணிமாலை; அரை - இடுப்பு ; அலம்ப - ஒலிக்க. (1)

691. கன்னற்கினிய - கரும்பைக் காட்டிலும் இனிய; கோதண்டம் - புருவமத்தி; கோதண்டத்து இடையினில் நின்று என்று பிரிக்க; உன்னி - ஆராய்ந்து; உடற்குள் தூண்டாமல் தூண்ட உணர்ந்த என்று பிரிக்க; மன்னி- நிலைபெற்று; மெய்க்கண் - உண்மையினிடம்; பொருள் திகழ்ந்து பொருள் விளக்குவதால் விளங்கி; சகலர் - ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலமுமுடையவர் இங்ஙனம் கூறப்படுவார். இவர்கட்குப் பரசரீர மூன்று, சூக்கும சரீரமொன்று, தூலசரீரமொன்று; பிரமவிஷ்ணு முதல் பிபீலிகை யீறாகவுள்ளவர். கலாதிகளினால் முற்றும் கட்டுப்படுகிறபடியால் சகலரெனப்படுவர். (2)

692. முடங்குந் தரங்கம் - மடங்கும் அலை; புவி - பூமி; எண்பத்தொரு நான்கு உயிர் - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமுள்ள உயிர்; சகலர்க்கு - முற்பாட்டில் இதன் பொருள் காண்க; அருட்கடல், ஞானப்பயிர் ஆகியன உருவகங்கள்; நடம் - நடனம்; உவப்ப - மகிழ; நவிலல் - சொல்லல்; திடங்கொள் குரு , என்று பிரிக்க; ஞான + அதீதன் – ஞானாதீதன் (3)

693. ஐந்தாய்த் தொடர்ந்த மலம் பதினெட்டு அவத்தையதுவும் அறக்கடந்து - சாக்கிரம், சொப்பனம் சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்று தொடர்ந்த ஐந்தவத்தைகளோடு கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று காரணாவத்தைகளும் அவற்றின் உட்பிரிவாகிய 15- காரியாவத்தைகளும் சேர்ந்த பதினெட்டு அவத்தைகளையும் ஆணவம், திரோதம், மாயாகாரணம், கன்மம், மாயேயம் என்ற 5- மலங்களையும் முழுதும் கடந்து; எமக்கு இனிய அன்பாய் அளிப்பது அறமென்றும் - எமக்கு இனிய அன்பாய்க் கொடுப்பது தருமமென்றும்; திருவருளே மன்னும் பொருள் இவைதான் என்றும் - திருவருளே நிலைத்த செல்வமாகும் இவையே என்றும்; பதினெட்டு அவத்தைகளை முழுதும் கடந்து ஆன்மாவை விளக்கி இனிய அன்பாய் அளிப்பது அறமென்றும் திருவருளே மன்னும் பொருள் இவைதான் என்றும் வந்தார்ந்துறையும் பொருளதனால் மருவத்தருவது இன்பம் என்றும் வழங்குமிது மூன்றையுந் தெளிந்து மறைப்பு நினைப்பில் வீடு என்றும் தந்தே அன்பர்தனை அளிக்கத் தரையில் வரும் அம்பரன் என்று இயைக்க. இப்பாட்டில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன யாவை எனக் கூறப்பட்டிருத்தல் காண்க. மருவத்தருவது - பொருந்த உண்டாவது; ஆணவமலம்:- அறியாமை மிகவுண்டாம்படி ஆன்மாக் கடோறுஞ் சகசமாயனாதியாயிருக்கும்; திரோதமலம் :- இந்த ஆணவ மலத்தோடு கூடி நின்று அது பக்குவமாமளவு மான்மாவை மறைத்து அந்த மலத்தைப் பாகம் வருவிக்கும். மாயாகாரண மலம்:- ஆன்மாக்களுக்குத் தனுவாதிகளைக் கொடுத்து மயக்கத்தைச் செய்யும்; கன்மமலம்: - ஆன்மாக்கடோறும் விரிந்தனுபவமாய் நிற்கும்; மாயேய மலம்:- ஆன்மாக்களின் சுகதுக்க விளைவு கட்கெல்லாம் இடமாய் நின்று அவற்றின் அறிவு, இச்சை, செயல்களை ஏகதேசப்படுத்தும் மாய காரியம் (4)

694. தாலம் தழும்பு ஏறிடத் துதியேன் - நாக்குத் தழும்பு ஏறிடுமாறு துதிக்கவில்லை; சரணம் - பாதம்; அடியாரைச் சரணம் பணியேன் என்க; அடியாரை - வேற்றுமை மயக்கம்; தறிகண் குழுவின் - கட்டுத் தறியினிடமுள்ள யானைகளின் கூட்டத்தைப் போல; ஞாலம் - பூமி; ஞாங்கர் - பக்கம்; தூலம் - ஸ்தூலம், பஞ்சபூத காரியமான தேகம்; சங்கம ரூபம் - அடியார் வடிவம்; சூக்குமந்தனில் தன் திருவாக்கால் துகள் தீர்ந்தறிய வறிவித்து என்று பிரிக்க; வீடு உற்று உணர - மோட்சத்தைப் பல வழிகளால் மனத்திலுற்று அறிய. (5)

695. செகம் - பூமி; அகம் - மனம்; அன்பின் நிறைந்த என்க; அசலமான - மலையை யொத்த; மணிவிழிக்கு ஒளிதருவன் என்று பிரிக்க; தருவன் - வினையாலணையும் பெயர். (6)

696. ‘அகரமெனவு' மென 689-ஆம் பாட்டில் கூறியது காண்க. ஆசொடு - குற்றங்களுடன்; புணரி - கடல்; பாவகம் - இயல்பு; அமலன் - குற்றமற்றவன்; நேயந்தனில் நின்றவன் - அன்பில் பொருந்தியவன்; நிதி - செல்வம்.       (7)

697. கோதிலாத - குற்றமில்லாத; போதவுயிர் - ஞானமிகுந்த உயிர்; பிரிவில்லாத என்பது எதுகைக்காக வல்லினமாயிற்று; அறிவுக்கரிய - அறிவினால் காணமுடியாத; பொறிபுலன் திரையிருள் ஒழித்தருள் - பொறிபுலனாகிய சுருங்கிய இருளை நீக்குகின்ற; திரையிருள் - வினைத்தொகை; தபனன் - சூரியன்.       (8)

698. மாயன் - திருமால்; சரோருக வர்சன் - பிரமன்; சுர + அதிபர் = சுராதிபர், தேவருக்குத் தலைவர், இந்திரர்; பராபரம் - கடவுள், இங்குச் சிவனைக் குறித்தது; அணுக - அடைய; மாகங்கள் - ஆகாய உலகங்கள்; லோகம் - பூலோகம் முதலியன; மாகங்கள் நாடி யும் - யாகங்களைத் தேடிச் செய்தும்; நாயன்றன் - நாயை யொத்தவனாகிய நான்; ஓர்கையின் - ஆராயுமிடத்து; இறை ஞானம் - கடவுளைப்பற்றிய ஞானம்; மாறும் செயல் - பலவிதமான வேறுபாடான இறைவனது செயல்கள்; ஞானங்கள் இருளான் தேறிலன் என இயைக்க; நான் என்பதாய் உறைவேன் என்று பிரிக்க; இந்த மாநிலன் நாடும் தியானமது உடையேன் என்று பிரிக்க; நிலன் - கடைப்போலி; நேயம் புகேன் இருதாளும் தொழேன் - அன்பு வழியில் செல்லவில்லை, அடியாரது இருபாதங்களையும் தொழவில்லை; விழி நீரருந்தரேன் - கண்ணீரும் ஒழுக விடவில்லை; இந்த ஆறு உடை - இந்தவிதமுடைய வனாகிய எனக்கு; நீதன் தன் மேன்மிகு தயவாய் தாய் அன்பதாய் இனிதாம் இன்பம் ஆர் அருள் தான் இங்கனே தர உருவாம் என்று பிரிக்க; தாய் அன்பதாய் - தாய் அன்பு போன்றதாய்; தான் அந்த மீதினில் - தான் எல்லாவற்றையும் கடந்த நிலையில். (9)

699. பார் அம்பு தேயுவும் வாய்வு அம்பர ஆதிகள் - பூமி, நீர், அக்கினி, காற்று, ஆகாயம், முதலிய ஐம்பெரும் பூதங்கள்; ஐந்துமேயுறு பாசங்கள் - ஆணவம், கன்மம், திரோதம், மாயை, மாயேயம் என்பன; குலாவல் செயா நின்ற - சேர்கின்ற; மூவினையோர் - சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்ற மூன்று வினையை யுடையவர்; 'ஓது அங்கு அசேதனம் ஈது என்று. சேதனம் ஈது என்று' என்று பிரிக்க; சேதனம் - அறிவுள்ளது; தேறும் சொலே சொல - தெளிவடையும் சொற்களைச் சொல்ல; பிரேரம் - தூண்டுவது. (10)
---------------------------------
அம்புலிப்பருவம்

700. சந்திரன் மேற்செல்லும்போது:- மனமகிழ்ந்து ஒருமையாய்ப் பரிவுடன் புகழ்மருவு மாசில் சோதியை மருவலால் - மனம் களித்துத் தனித்ததாய் அன்புடன் புகழ் பொருந்திய குற்றமற்ற சிவபெருமானைச் (சடையிடம்) சேர்வதால்; வளர்கு உருவதாகி நன்மதி ஆகையால் - வளர்கின்ற வடிவத்தைப் பெற்றுப் பூரண சந்திரன் ஆவதால்; நிறையவரும் அம்பரத்து உறைதலால் - நிறைந்துள்ள ஆகாயத்தில் தங்குவதால்; அனை வரும் கண்டு உவகைகொண்டு, உறையவே வரும் அகநிலவு மணியாகையால் - எல்லோரும் கண்டு சந்தோஷம் கொண்டு தங்க வரும் உள் தங்கும் முத்துக்களை யுடையது ஆகையால்; அமுதமது தருகையால் - தேவர்கட்கு முதல் 16-நாளும் பிதிரருக்கு மிகுந்த 16-நாளும் அமுதம் கொடுப்பதால்; சுடரொடு கலந்ததால் - தனிமை மகளிரைச் சுடுமாறு நெருப்பொடு கலந்ததால், சூரியனோடு கலந்ததால் என்றும் கூறலாம். அரன் அருட்கண்ணாகையால் - சிவபெருமானது இருகண்களில் இடப்பக்கக் கண்ணாவதால்; நினைவில் எவர்கட்கு மிகுதண்மை தரலால் - நினைவுலகத்தில் யாவருக்கும் மிகுந்த குளிர்ச்சியைத் தருதலால்; நல்ல நெறியுள்ள வடிவு ஆகையால் - நல்ல வட்டமான நெறி யுள்ள வடிவம் ஆகையால். சிவானந்தன் மேற்செல்லும்போது: மனமகிழ்ந்து ஒருமையாய்ப் பரிவுடன் புகழ்மருவு மாசில் சோதியை மருவலால் - மனம் மகிழ்ந்து ஒரு நிலையாய் நின்று பக்தியுடன் புகழ் நிரம்பிய குற்றமற்ற சோதிமயமான கடவுள் நிலையைச் சேரலால்; வளர் குருவதாகி நன்மதி யாகையால் - மிக்க ஆசிரியனாகி நல்ல புத்தி படைத்திருப்பதால்; நிறையவரும் அம்பரத்து உறைதலால் - சேர வருகின்ற அழகிய கடவுளிடம் மனம் தங்குதலால்; அனைவரும் கண்டு உவகை கொண்டு உறையவே வரும் அகநிலவும் மணியாகையால் - பூமியிலுள்ள எல்லோரும் கண்டு மகிழ்ச்சி கொண்டு தன்னிடம் தங்கிப் படிக்கவரும் மனத்தில் மாணிக்கம் போன்ற சித்தாந்தங்களின் ஒளி வீசுபவனாதலால்; அமுதமது தருகையால் - தனது பாத தீர்த்தமாகிய அமுதத்தைக் கொடுப்பதால்; சுடரொடு கலந்ததால் - யோகாக்கினியோடு சேர்ந்ததால்; அரன் அருட்கண் ஆகையால் - சிவனது அருட்கண் போன்று போற்றப்படுவனாதலால்; நினைவி லெவர்கட்கு மிகு தண்மை தரலால் - உண்மையில் பூமியில் உள்ள யாவருக்கும் குளிர்ந்த அருளைக் கொடுப்பதால், நல்ல நெறியுள்ள வடிவாகையால் - துறவற நெறியிலுள்ள அடியவருருவ மாகையால்; நேசத்தில் உந்தனுக்கு இவனுக்கு நிகரான நேசன் யாவருமில்லை காண் என்று பிரிக்க; காண் - முன்னிலை யசை. (1)

701. சந்திரன் மேல் செல்லும்போது :- விரியு மண்டத்திலும் உரிய பிண்டத்திலும் மிகு தெரிசனங் காட்டுவாய் - பரந்த ஆகாயத்திலும் அதற்குரிய பூமியிலும் விளங்குவாய்; மிளிர் அதனைத் தெரிய வொட்டாமலே துன்னும் இருள் வேலையை விலக்கியிடுவாய் - ஒளியைத் தெரியவொட்டாமல் சேரும் இருட்கடலை விலக்குவாய்; தெரிய வந்து இலகுவாய் - எல்லோரும் பார்க்குமாறு ஆகாயத்தில் வந்து விளங்குவாய்; நாள்தொறும் சிறியதாய்ப் பெரியதாவாய் - தினமும் சிறுத்தும் பெருத்தும் விளங்குவாய்; தேர்ந்து தேர்ந்து இனிய பரிபூரணமதாகுவாய் - கன்னிப் பெண்களால் ஆராயப்பட்டு இனிய கடவு ளாக்கப்படுவாய், கன்னிப்பெண்கள் நல்ல கணவனையடைய வேண்டுமென்று "பிறை தொழும் வழக்கம்" பற்றி இவ்வாறு கூறினார்; திருநீற்றின் மேனியாவாய் - விபூதி போன்று வெண்மையான உடலையுடையவனாவாய்; பரிவுடன் கலையினை உகந்து மத்தந்தனைப் பரிசிப்பை - அன்புடன் கலைகளை (வளரும் பங்கு, தேயும் பங்கு) விரும்பி யளிப்பாய்; சிவானந்தனுக்குச் செல்லும்போது :- பரந்த உலகத்திலும் உடலிலும் மிகுந்த உண்மை நிலையைக் காட்டுவான் என்றும் ஞானவொளியைத் தெரியவொட்டாமல் அடையும் அஞ்ஞானக் கடலை விலக்கி விடுவான் என்றும், எல்லோரும் கடவுளை அறியுமாறு பூமியில் பிறந்து விளங்கச் செய்வான் என்றும், அணுவின் சூட்சுமத்தையும் விரிவையும் அறிந்தவன் என்றும் ஆராய்ந்து இனிய கடவுள் போன்று விளங்குவான் என்றும், விபூதியை உடலில் பூசி விபூதி வடிவமாயேயிருப்பன் என்றும் அன்புடன் பலவகைக் கலைக்கியானங்களை விரும்பி யனுபவிப்பவன் என்றும் பொருள் கொள்க; பகர்விலாது உவகை - சொல்லமுடியாது மகிழ்ச்சி; அரிய பொருள் உரு எடுத்து அருள வரும் ஐயனுடன் என்று பிரிக்க. "அண்டத்திலுள்ளது பிண்டத்திலே" என்றபடி முதலடிக்கு ஆகாயத்திலுள்ள சூரியன், சந்திரன், புதன் முதலிய கிரகங்கள் கருப்பத்திலிருந்து பிறக்கும் குழவிகட்கும் கிரக நிலையா யமைந்திருப்பதனைக் கூறலாம்.       (2)

702.
சந்திரன் சிவானந்தன்
1. பாற்கடலில் பிறந்தவன். சட்டைநாதய்யன் அருட்கடலில் வந்தவன்.
2. ஆராயுமிடத்து குவளை மொட்டுக்களை மலரச் செய்வான். இவன் அன்பர்களது கண்ணாகிய குவளை மலரை மலர்விப்பவன்.
3. சூரியனால் சேர்ந்த ஒளியுடைய தாவான். எங்கும் செல்லுமொரு ஞான ஒளியுடையவனாவான்.
4. பெண்கள் சேர்க்கையில் சந்திரனிருந்து இன்பத்தைக் கொடுப்பான். அரிதாக வாய்த்த ஆன்மாவுக்கு இன்பத்தை யளிப்பான்.
5. வாசனையுடைய தாமரை மலரின் மலர்ச்சியைக் குவித்துவிடுவான். இவன் மனத் தாமரையின் மலர்ச்சியைக் குவிப்பான்.

பகர்வு காண்கில் - சொல்லி யாராய்ந்தால்; அடிமையர்கள் தேரும் வகையாக வரும் ஐயனுடன் என்று பிரிக்க; தேரும் வகை - தெளிவடையும் வகை; "கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம் ..........'' என்ற தாயுமானவர் பாட்டில் "சிந்தையே யடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது" என்றாராதலால் "இதய கமல விரிவைக் குவிப்பான்' என்றார். சட்டைநாதன் வரலாற்றைத் 664-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க.       (3)

703.
சந்திரன் சிவானந்தன்
1. குறைந்தும் நிறைந்துமுள்ள கலைகளைப் பெற்ற வடிவமாவான். ஒப்பற்றுக் குறையாமல் எல்லாக் கலைகளையும் பெற்றவன்.
2. குருபத்தினியான தாரையைச் சேர்ந்து வியாழனால் நிந்தை பெற்றவன். உண்மையுணர்த்தும் குரு வழியில் நின்ற முதல்வனாவான்,
3. நீர்த்துறையினிடத்தும் தன் வடிவம் தோன்ற உதிப்பான். இவன் அஞ்ஞானிகளால் காணப்படாது உதவியாக விளங்குவான்.
4. கூறுதலடைந்த துண்டிப்பைப் பெறுவான்; (தக்கன் சாபத்தால் கலைகள் குறைவதை நோக்கி). இவனோ கூறுதல் பெற்ற முழுமையும் நிறைந்தவனாவான்.
5. தரித்திரத்தை எட்டுராசி வீட்டிலிருந்து ஜாதகர்க்குக் கொடுப்பான். இவன் நினைத்தற்குமரிய வீட்டில் (மோட்சத்தில்) வாழ்வைக் கொடுப்பவன்.
6. வளமில்லாத கர்க்கடகமென்ற இராசி வீட்டிற்குத் தலைவன். இவன் மகிழும் ஞானவீட்டிற்குத் தலைவன்.

(4)
704.
சந்திரன் சிவானந்தன்
1. இரவில் மட்டும் அமுதந்தருவானே யல்லாமல் இரவும் பகலும் நீங்காத அமுதத்தைக் கொடுக்கமாட்டான். இரவும்பகலும் இடையறாத ஞான வமிர்தத்தைக் கொடுப்பவன்.
2. வளர்தலும் தேய்தலுமாகிய இரண்டு தன்மைகளைக் கடந்து ஒரே குணமான வளர்தல் மட்டும் அடைந்து எக்காலத்தும் தங்குவது அறியான். சிவம், சத்தி என்ற இரு தத்துவங்களைக் கடந்து ஒரு தன்மையான சாயுச்யம் என்ற பதவியைப் பெறுவான்.
3. பரந்த ஆகாயத்துள் பிரகாச மடைவான். அதன் மேல் அடையும் மிகுந்த ஒளி பெற மாட்டான். இவனோ எங்கும் மிகுந்த ஞானவொளி மிகுவான்.
4. விளங்கும் பாம்பினால் (ராகு, கேது) மறைக்கப் படுவான். இவனோ எவையாலும் மறையாது குற்றமற்றவன் ஆவான்.
5. வருதலும் போதலும், சேர்வதில் கஷ்டப்படுதலு மல்லாமல் நிலைத்திருப்பதில்லை. இவன் அங்ஙனமின்றி நிலைத் திருப்பான்.
6. குற்றமற்ற உடலில் களங்கமடைவான்; குற்றமற்ற மனிதர்களின் உடலாகப் பிறக்க மாட்டான். (மானிடர்கள் அங்கமாகாய் எனப் பிரிக்க ) களங்கமடையாது மானிட வகுப்பில் பிறந்தவன். ''அங்கண்விசும்பில் அகல் நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் 'அஃதாற்றார் தெருமந்து தேய்வார் ஒரு மாசுறின்.'' என்ற நாலடிச் செய்யுளைக் காண்க.

எந்தையுடன் நின்னை நிகரென்பது அருமையாம் என்பதால் அடியவர் குழாம் களிப்பர் என்று பிரிக்க. அருமை இன்மை மேல் நின்றது. (5)

705. சிவந்த தாமரைபோலும் கண்களையுடைய திருமாலும் பிரமனும் கண்களால் ஆராய்ந்தும் மிகுந்து தேடியும் சிவனது பாதமோ முடியோ அறியாதவராய் விளங்க உன் மேல் தயவுண்டாக உனை நீண்ட தலையில் அணிந்து கொண்டான். தனது கண்களாகும் மூன்றினில் உனை நன்மைதரு அருள் கண்ணாக இடப்புறத்தில் செய்தான். சந்திரசேகரன் என்று உன்னுடைய பெயர் தனக்கு விளங்குமாறு தானே தரித்துவந்தான். திங்கள் கிழமையில் விரத மனுட்டித்தவர்களுக்கு (சோமவார விரதம்) அருள் செய்தான். (திங்கள் - சந்திரன்). ஆராய்ந்து அறிவதாகிய இவ்வுதவியை உன்னையன்றி யாருக்குச் செய்தான். அவனது உடலே போன்று வந்த எனது தலைவனுடன் சந்திரனே ஆட வருவாய் என்று பொருள் கொள்க. இப்பாட்டுக்கெல்லாம் சிவனடியாரைச் சிவனாகவே பாவிக்கும் கருத்தினைக் காண்க. (6)

706. வனமாலி - திருமால்; சந்திரன் பிரகஸ்பதி மனைவி தாரையைக் கவர்ந்தபோது இந்திரன் தாரையை விடுமாறு சந்திரனிடம் தூதுவனையனுப்பிக் கூற மதியாததால் சண்டை செய்ய எழுந்தான். அதுபோது சந்திரனுக்குச் சுக்கிரன் தான் படைத்துணை செய்வதாக வாக்களித்து அசுரப்படைகளை யனுப்பினான். தேவப்படைக்கு திருமால் உதவியாக இருந்து சண்டை செய்தார். சண்டையின் கோரத்தை நோக்கி பிரமன் சந்திரனை நோக்கி "குருபத்தினியைக் கொடுத்துவிடு இல்லையாயின் விஷ்ணுவைக் கொண்டு உன்னை நாசஞ்செய்து விடுவேனென்று கூறியும் சுக்கிரனை நோக்கி "பிறன் மனை நயந்தவனுக்கா உதவி செய்வது? உன்னையும் நாசம் செய்வேன்'' என இடித்துக் கூறியதாலும் சுக்கிரன் தன் படைத்துணையை நிறுத்தவே சந்திரனும் தாரையை யனுப்பிவிட்டான். (தேவி பாகவதம்). இங்குச் சிவனாகக் கூறியுள்ளது காண்க. பிரகஸ்பதி சந்திரனுக்குக் கயரோகம் (கலை சிறிது சிறிது குறைய) அடையச் சாபமளித்தார்; பிரகாசமாக்கி வைத்தல் - சிவன் சந்திரனைச் சடையிலணிந்து வளர்வதும் தேய்வதுமாகச் செய்தல்; பேர் - பெயர் என்பதன் மரூஉ; புதன் - இவன் வியாழன் தேவியாகிய தாரையிடம் சந்திரனுக்கு உதித்தவன்; பிரகஸ்பதியும் சந்திரனும் இன்னானுக்குப் பிறந்தவன் என்று அறியாது வாதாடுகையில் தாயை நோக்கி உண்மைகூறச் சொன்னவன்; இவன் சிவனைக் குறித்த தவத்தால் கிரகபதம் பெற்றான். பிரகஸ்பதியும் சந்திரனும் வாதிடும் போது பிரமன் இரகசியத்தில் தாரையைக் கேட்டு உண்மையறிந்து புதனைச் சந்திரனுக்குக் கொடுத்தனன்; மின்பரவு அழல் உரு வளர்த்திடும் போது உன்னை மெலியாமல் தண்மை தந்தான் - பிரகாசம் வீசும் நெருப்பு வடிவமாக வளர்த்திடும்போது உன்னை மெலிவுறாமல் செய்ய உனக்குக் குளிர்ச்சியைக் கொடுத்தான். சிவன் திருவண்ணாமலையில் அக்கினி வடிவமாக இருப்பதைக் காண்க. இப்பாட்டிலும் சிவானந்தனைச் சிவனாகவே பாவித்திருத்தல் காண்க. (7)

707. நெருப்பைக் கக்கும் கண்களும் கொடுமை பொருந்திய மனமும் வேல் படையை யொத்த தன்மையுள்ள மொழியுமுள்ள இராட்சதர் பதியான இலங்கா நகரத்தில் பயந்து நகரின் உட்புற வழியில் செல்ல வொதுங்கினவனான வுன்னை அதோகதியில் விழுமாறு சிவனம் சமான வீரபத்திரன் தக்க யாகத்தில் காலால் மிதித்தான். நீர் மிகுத்து இசைபோன்று ஒலித்து அலைவீசும் பாற்கடலில் புகழுமாறு நின்னுடன் பிறந்த எல்லோரையும் கொல்ல வல்ல ஆலகால விஷத்தைக் கழுத்திலே கரிய கறை உண்டாகுமாறு குடித்தான். உனைப் படைக்கும் தாமரை மலரிலுள்ள நான்கு முகங்களையுடைய பிரமனை முன்னால் வைரவனாகித் தலையறுத்தான். அழிக்குந் தொழிலை மேற்கொண்டவன் இவன். எனவே இவன் செய்தியை அறிந்து உணரவில்லையா. அத்தகைய இயல்புடைய அழிவற்ற கடவுளுக்கு அடிமையரான சிவானந்தனுடன் அம்புலீயே ஆடவா எனப் பொருள் கொள்க. புகர் - கறை; அயில் இயற்று இடு மொழி எனப் பிரிக்க; "அனன் இயக் கடவுள் நித்தியன் அவர்களுக்கு அடிமையாக்கு அம்புலி ஆடவா" எனப் பிரிக்க. அனன் - அன்னன் என்பதன் தொகுத்தல் விகாரம். அடிமையர்க்கு - வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருளில் மயங்கியது. (8)

708. உருவமில்லாதவனான மன்மதன் தனது கையிடத்தில் உன்னைப் புகழுமாறு வைத்துப் பிரகாசமான குடை பிடிக்கும் அத்தகையவனை (மன்மதனுக்குக் குடை, சந்திரன் ஆவன்) உடல் பொடியாமாறு நெற்றிக் கண்ணை விழித்து எரியச் செய்தான்; எனவே அவனைக் காட்டிலும் (மன்மதனைக் குறித்தது) உனது ஒழுக்கம், வீரம் முதலிய நெறி உயர்ச்சியுடையதாமோ நீ இருண்டுவிடுமாறு விழிக்கிரணங்கள் உண்டாக உதித்து உனது நற்கிரணங்களின் உதிப்பின் அழகை விழுங்குகின்ற சூரியனைப் பற்களை படித்து உதிர்த்தன நிகழ்ச்சியை யறியவில்லையா ? இதுவல்லாமல் உன்னைத் தக்கன் யாகம் அழித்தபோது பெருமை மிகுந்த பாதத்தால் தரையினில் சிறு தும்பு போன்று வீரபத்திரன் (சிவனம்சம்) தேய்த்ததுவும் நினைவு இல்லையா? மனதில் இதையறிந்து நினைத்துக் கேட்டாராயும் கடவுளின் செய்கையறியக் கணக்கில்லை. அரிய மேருமலையை வில்லாகவுடைய பரமனான சிவானந்தன் உலகினில் தோன்றி அழைத்தனன். ஆதலின் சந்திரனே! ஆடவா என்று பொருள் கொள்க. வில்லி, விலி எனத் தொக்கது. எயிறு - பல். (9)

709. சிவபெருமானது சடையையுடைய தலையில் தங்குபவன் என்று கர்வங்கொண்டு வாராமல் இருக்காதே. அவனது மகிமைக்கு ஒன்றும் சமமாகாது. கூறி அறிய முடியாத பொருளென்று இருக்கு வேதம் முறையிடுவது நினைத்துக் குரு நடத்தும் வழியில் நின்று மனவொருமையாகத் தெளிவடைவாயானால் உனக்குத் திருவருள் பொருந்தி மிகுந்த ஆனந்தக்கடலில் சேர்ந்து சந்தோஷமாக இனிமையுடனும் அன்புடனும் பொருந்திய பேரின்பம் அடைவாய்; சன்மார்க்க நெறியில் ஒழுகுவாய் (துன்மார்க்கமாய் குருபத்தினியைச் சேர்ந்ததை நினைத்து இங்ஙனம் கூறினார்); உனது களங்கம் நிஷ்களங்கம் (களங்கம் ஒன்றுமில்லாதது) ஆக அடைவாய்; அடியார் கூட்டத்தோடு நிலையாக செல்வம் அடைவாய்; எனவே குற்ற மறுத்திட வந்த பதியை யறியும் ஞானகுருவான சிவானந்தனுடன் அம்புலியே ஆட வருவாய் என்று பொருள் கொள்க. சேர்ந்து உவகையாக என்று பிரிக்க. (10)
----------------------------------
சிற்றில் பருவம்

710. அழுக்கை - பாவங்களை; குரம்பை - உடல்; புழுக்குரம்பை என்றார் அதன்கண் பல புழுக்கள் தங்கி வாழ்தல்பற்றி; உளக்கண் விழிக்க - அவரது மனத்தில் ஞானக்கண் விழிக்குமாறு செய்து; மலம் - குற்றம்; தேக்கி - நிறைத்து; உரை உணர்வால் பகர்வுக்கரிய நிட்டை யிதாமென மாணார்க்கு - சொற்களின் அறிவினால் வெளிப்படுத்த முடியாத நிட்டையிது தானென்று மாணாக்கர்கட்கு; பதம் - பாதம்; நிட்டை - மௌனமாய்த் தியான மிருத்தல். (1)

711. தறுகண் - வலிமை; மாலியின் வரலாற்றை 172-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க. கயமாமுகவன்:-இவன் ஒரு சமயம் உமை இருக்கும் மண்டபத்தைப் பெயர்க்கத் தொடங்க, அதுபோது உமை சிவனிடம் முறையிடலும் சிவபிரான் சூலத்தால் அவனைக் குத்திக் கொன்று அவன் தோலை அரைக்கசைத்தார், (விநாயக புராணம்); தக்கன் வேள்விச் சசியன்றே - தக்கன் வேள்வியில் சிவபெருமான் அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால் தேய்த்ததால் "சசியன்றே” என்று சிறுமியர் கூறினர். தழைக்கும் அடியார் வினையன்றே - அடியாரது தழைக்கும் பாப வினைகளைக் கெடுப்பதால் "அடி யார் வினையன்றே' என்று சிற்றிலைக் கலைக்க வந்தவரைப்பார்த்துச் சிறுமியர் கூறினர். "அடைப்பதற்கு நெடுவாசலும் சோறு இடுமடமும் நிலவும் கூடம் சிறுவீடு நேராம் சமையலறையிது எல்லாம் வெறு நுண்மணலில் மிகவும் சிறியோம் பலர் கூடிச் செய்த எழில் மிகுந்த விளையாட்டிடத்தை நெறிகொள் அடியால் கலைப்பது எங்கள் விதியோ - என்று இயைக்க, சிறுவீடு நேராம் சமையலறை - சிறு வீட்டிற்கு ஒப்பான சமையலறை; நெறி கொள் அடி - நன்னெறி கொண்ட பாதம். (2)

712. அகத்தில் கருதும் திறமறியோம் - மனத்தில் நினைக்கும் (இறைவனது) திறத்தை யறியவில்லை; அடிகள் - பாதங்கள்; சிவன் நேசத்து அருமை யறியோம் - சிவனிடமும் சிவனடியாரிடமும் பக்தி செலுத்தும் அருமையை யறியவில்லை. குறிக்கு அணுகோம் - சிவன் குறியுள்ள இடத்தை அடையோம் (சிவன் குறி - இலிங்கம்) குறிக்கு - வேற்றுமை மயக்கம்; அருநூல் உரைக்கும் வகை தெரியோம் - அரிய சிவஞானபோதம், தேவாரம் ஆகியவைகள் சொல்லும் விதங்களை அறியவில்லை; தொகுத்துச் சரிதைக்கு இசைந்து இயற்றோம் - சேர்த்து வரலாற்றுக்குத் தக்கவாறு நூல்கள் செய்யவில்லை; தொன்மை - பழமை வரலாறுகள்; தோன்றும் முதலின் பருவம் உறோம் - உதிக்கும் ஒப்பற்ற முதற்கடவுளின் காலத்தை யறியும் திறமையடையோம்; தொழும்பில் - அடிமைத் திறத்தில்; அரற்கு அன்பு மிகுத்துத் துதியோம் - சிவனிடம் அன்பு மிகுத்துத் துதிக்கவில்லை; அரற்கு - வேற்றுமை மயக்கம்; குழாம் - கூட்டம்; மிளிராம் காட்சி - ஒளிமிக்க காட்சி; அதாவது நேரில் வருதல். (3)

713. உடலாகிய பாத்திரத்தில் உயிராகிய பாலை வார்த்து மனக்கண்ணாகிய நெருப்பாலே வெப்பமுறச் செய்து தங்கும் மிகுந்த சஞ்சித கர்மமாகிய நீரைக் குறைத்து மறையச் செய்து சிவ அடையாளமாகிய புரையையிட்டு அவ்விடத்திற்கு ஒப்பற்ற உறுதியாகிய தயிராகச் செய்து ஞானமாகிய அழகிய மத்தினால் கடைந்து மயக்கம் செய்யும் மூன்று மலமாகிய மோரை நீக்கி இம்மோரைப் புளிப்பு என்று வெறுத்துப் பக்கத்திலேயிருக்கும் திருவருளாகிய வெண்ணெயைத் திரட்டி அவ்வெண்ணெயை அன்பினாலுருகச் செய்து தெவிட்டாத அரிய பேரின்பமாகிய நெய்யாகச் செய்து அழியாத வீட்டுச் செல்வத்தையளிக்கும் தெளிவே என்று பொருள் கொள்க. உடற்பாண்டம், உயிர்ப் பாலை உளக்கணெரி ................ முதலியன உருவகங்கள்; அளை - வெண்ணெய். (4)

714. அகரம் அந்த எழுத்திற் கலந்தே எழுத்தாய் விளங்கும் தனைக் காட்டாது - அ என்ற எழுத்து அத்தகைய உயிரெழுத்துக்களோடு கலந்தே அவ்வெழுத்தாய் விளங்கும் தன்னைக் காண்பிக்காது; எழுத்திற் கலவாதுறில் தலையில் இயற்கை விளங்கும் - அவ்வுயிரெழுத்துக்களோடு கலக்காவிட்டால் தலைமையற்ற தன் தன்மை விளங்கும்; இரண்டுருவாய் தழைத்துத் திகழ்ந்த எழுத்து - இரண்டு வடிவமாய்த் தழைத்துத் திகழ்ந்த எழுத்து, உயிர்மெய் எழுத்து; அவையில் சாத்தாதெழுதா இறை எழுத்து - அவ்வுயிர்மெய்களில் வேறொன்றினோடு சார்த்தி எழுதப்படாத அகர எழுத்து; தான் அங்கு உணர்த்த இரண்டு இனமும் சாத்த எழுத வரும் - அகரமானது அங்கு நின்று உணர்த்த மற்ற உயிரினமும், மெய்யினமும் சார்த்தவும் எழுதவும் வரும். அகரம் மற்ற ஆ, இ, ஈ முதலிய 11-உயிர்களையும் இயக்க உடனாயும், அகரம் தனித்து வரும்போது ஒன்றாயும், மெய்களோடு சேர்ந்து வரும்போது வேறாயும் வரும். இப்பாட்டு,
"அவனே தானே யாகிய வந்நெறி
ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.''
என்ற சிவஞான போதத்தை நினைப்பூட்டுகிறது. சிறியேன்றனை அழைத்துக் கரணம் அடையாதிருந்து பொதுவினில் நில் அணுவைப் பெறுவாய் என்று பிரித்துக் கூட்டுக. அணு - சூட்சுமம்; நில் அணு - வினைத்தொகை; "அகரவுயி ரெழுத்தனைத்துமாகி வேறாயமர்ந்ததென வகிலாண்ட மனைத்துமாகிப், பகர்வன வெல்லாமாகி யல்லதாகிப் பர மாகிச் சொல்லரிய பான்மையாகித், துகளறு சங்கற்பவிகற் பங்களெல்லாந் தோயாத வறிவாகிச் சுத்தமாகி, நிகரில் பசுபதியான பொருளை நாடி நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்." என்ற தாய மானவர் பாடலை ஓர்ந்துணர்க.       (5)

715. இருள் மிகுகின்ற ஐம்புலன்களுக்கு இனிதாய்ப் பொருந்திப் பூமியில் அழகுடன் வந்து பலநாள் பூமியிலே நின்று துன்பத்தை யனுபவிக்கும் யான் முத்திக்குத் தகுதியாக உருவத்துடன் வந்து இன்பின் திறமாய் மனத்தை ஒரு வழியில் நிற்பித்து அருட்கடலை அடையவே தந்த குருவே, அன்பரின் அறிவே, உண்மைப் பொருளே, பரிசுத்தக் கடலே, என் தந்தையாகிய புனிதனே, எண்வகை சித்திகளுக்கும் தலைவனே, உண்மைப் புகழே, உன் அழகிய பாதமே நம்பித் தியானிப்பவர் புத்திக்கு அமுதம் ஒத்தவனே - என்று பொருள் கொள்க; தெருள் - தெளிவடை. (6)

716. பணை - பருமை; கொங்கைக் குவடாம் மங்கை - தனமாகிய மலைகளையுடைய பெண்; பரிவு ஆசை - மிக்க ஆசை; பலன் ஆர்கின்ற பொருள் - பலன் மிகுந்துள்ள பொருள்; பகராமல் கற்று அலைவேனை என்று பிரிக்க; அலைவேன் - வினையாலணையும் பெயர்; அஞ்சு அக்கர ஞான - பஞ்சாட்சர மந்திரத்தை யுபதேசிக்கும் ஞானமுடைய; பரம் - மேலானவன்; அவஞானம் - வீணான ஞானங்கள்; ஞானம் - அறிவு; திணை - பூமி; சிவன் நேயம் பெற்ற சிவானந்தத் திறனே - சிவனிடம் அன்பு பெற்ற சிவானந்தனாகிய திறமை மிக்கவனே; குண மேதின்றி............வாழ்வில்,
''சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
      தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம்
      மாதேவர்க்கு ஏகாந்த ரல்லராகில்
அங்கமெலாம் குறைந்தழுகும் தொழுநோயராய்
      ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில்
      அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே.''
என்ற தேவாரத்தை ஒப்பிடுக.       (7)

717. அகம் - மனம்; பதமே கொண்டு உற்று அயரா நிற்கத் தொழுவார்கள் - பாதமே மனதில் கொண்டு சோர்வடையாமல் வணங்குவார்கள்; அமுதாம் உன் பொன் திருகாமஞ் சொற்கு அடைவார் பத்திக்கு இனிதாவார் - அமுதத்தை யொத்த உனது மிக்க அழகிய அன்பு மிகுவிக்கும் சொல்லுக்காக வந்து பொருந்தி பக்தியால் இனிமையடைவர்; அடைவார் - முற்றெச்சம்; எந்தைத் தலைவாவென்று புகழ்வார் என்று இயைக்க; உட்குள் - மனத்திற்குள்; சித்தம் - மனம்; ஓர் வார் - ஆராய்ந்துணர்வர்; நிசியூர்கின்ற களவு ஆர் நெஞ்சத்தினர் - நடு இரவில் செல்கின்ற களவுபொருந்திய மனத்தையுடையவர்; திகழ்வாய் எந்தற்கு - விளங்குபவனாகிய நீ எனக்கு; அகமீது உன்தன் பதமே கொண்டு அயரா நிற்கத் தொழுவார்கள், அமுதாம் சொற்காக அடைந்து பத்திக்கினிதாவார், தலைவாவென்று களிகூர்வார் சித்தத் துறவோர்வார்............இத்திறமாய் நின்றொத்திடுவார் முன் களவார் நெஞ்சத்தினர்போல் உற்றுத் திரிவேனோ எந்தற்கு இனிதே தந்த திகழ்வாய் சிறியேன் சிற்றில் சிதையேலே என்று இயைத்துப் பொருள் கொள்க. தொழுவார், இனிதாவார் முதலியன வினையாலணையும் பெயர்கள்.   (8)

718. பஞ்சமலம் - ஆணவமலம், காமியம், மாயை, திரோதானம், மகாமாயை (அ) மாயேயம் என்பன. பதினெட்டவத்தைகளின் விரிவை 693-வது பாட்டின் குறிப்பிற் காண்க. பலநாள் உழல்வேற்கு - பல நாளாகக் கஷ்டப்படுபவனாகிய எனக்கு; எளிவந்து அருளி - மனமிரங்கி வந்து அருள் செய்து; சஞ்சிதவினை:- அநாதி தொட்டு சனனங்கள் தோறும் ஆர்ச்சித்த வினை புசித்து விஞ்சியதாகிய மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்ற ஆறு அத்துவாக்களிலும் கட்டுப்பட்டிருக்கிற புண்ணிய பாவங்களாயிருக்கும், எடுத்தவினை:- பிராரத்தம். பிராரத்தம் - இந்தச் சஞ்சிதத்திற் சிறிது புசிக்கப் பாகப்பட்ட வினை ஒரு சரீரத்தை யெடுப்பித்துச் சாதியாயுள்ள போகங்களைக் கொடுக்கும். களஞ்சியத்திலிருந்து தானியத்தை யெடுத்தனுபவித்தல் போலும். மிஞ்சியவினை :- ஆகாமியமாகும். பிராரத்தம் புசிக்குமிடத்து வந்தேறுகிற புண்ணிய பாவங்களாயிருக்கும்.       (9)

719. "சிவன் நூல் அறிவோர் எவையும் உன்மயம் என்று உரைக்குமதை உணராமல் திரையாகிய இருளால் உணர்விலி மனதாகி என் மயம் என்று" என்று பிரித்து இயைக்க; உதிப்பு - பிறப்பு; திரை - அலை; அதில் நாள் உழல்வேனை - அதில் நாளும் கஷ்டப்படு மென்னை; உலகில் தான் அருள் உருவாகி - என்று பிரிக்க, சருவியமும் மலம் - தாக்கிய மூன்று மலங்கள்; அறுத்து ஒளிதரும் அவ்வுள மதனில் என்று பிரிக்க. (10)
-------------------------------
சிறுபறைப் பருவம்

720. உரம் - மார்பு; மெய்ஞ்ஞான நூல்தனை விருப்புடன் விரித்து ஓதுவர் - எனப் பிரிக்க; பொருள் தனை - பொருடனை. (1)

721. அருள் திறம் மேற்கொண்டு கடவுளது இயல்பை யறிவிக்கும் நூல் வழியில் ஆராய்ந்து எனது குற்றமற்ற மொழியினால் கூறும் உண்மைப் பொருளை இருகைகளையும் குவித்துப் போற்றி சந்தோஷித்துப் பல மாறுபாடுகளைக்கொண்ட பொருளின் திறங்களையகற்றி நல்திறமுற்ற அரிய காதுப்புலனின் மூலமாகக் கேட்டுப் புகழும் மனத்தினால் நினைத்து, நினைத்தலைப் பூண்டு சிந்தித்தல் செய்து மயக்கத்திறம், அஞ்ஞானத்திறம் நீக்கிய அறிவால் கேட்டவைகளைத் தெளிவடையச் செய்து வரும் அறிவை இழந்து அறிவற்று நிட்டையைப் பெறுவது மாணாக்கர் செய்தி என்று கூறும் தெளிவுத் திறமான பெருமை அதிகரிக்கும் இரத்தினமே என்று பொருள் கொள்க. ஞான நூல்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்ற நான்கும் 'உண்மை ஞானங்கள். "பொருள் திறம் அகற்றி நல் திறமுற்று அருஞ் செவிப்புலன் வழியினின்று" - என்று பிரிக்க; மருள் திறம் இருள் திறம் ஒழித்த என்று பிரிக்க; உன்னல் - நினைத்தல்; இப்பாட்டில் மாணாக்கர் செய்தி யாவை எனக் கூறப்பட்டுள.       (2)

722. நனவு அதனில் நின்றிடும்போது - இது சாக்கிரம் என்று கூறப்படும். கேவலத்தின் காரியமாகிய கீழாலவஸ்தை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என 5- வகைப்படும். சாக்கிரம் - தத்துவம் 36-இல் சிவதத்துவம் ஐந்து, புருடன் நீங்கலாகக் கலாதிகள் 6, பூதம் 5, ஆக 16- கருவியும் நீங்கி நின்ற கருவிகள் இருபதும் புறக்கருவியறுப்பதில் வாயுக்கள் பத்தும், வசனாதிகள் ஐந்தும் ஆகிய முப்பத்தைந்துடனே லலாடஸ்தானத்திலே நின்று கண்டு கேட்டு உண்டு உயிர்ப்பது நீங்கி மயக்கத்தைப் பொருந்தி அறிகருவிகளையும் செலுத்துங் கருவிகளையும் கைவிட்டு நிற்கின்ற அவதரம், (அவசரம்); இந்திரியம் - ஞானேந்திரிய மைந்தும் கன்மேந்திரிய மைந்தும் காட்டிற்று; வளி - பிராணன், அபானன், வியானன் முதலிய 10 வாயுக்கள். அந்தக்கரணம் ஈரிரண்டு - மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்ற நான்கு; உள்ளம் - இங்குப் புருடனைக் காட்டுகிறது போலும்; கனவு அல்லது சொப்பனம்:- ஞானேந்திரியங்களைந்தும், கன்மேந்திரியங்களைந்தும் ஆகிய பத்தும் லலாடஸ்தானத்திலே நிற்க மற்ற 25- கருவிகளுடனே கண்டஸ்தானத்திலே நின்று சூக்கும தேகத்தாற் பயன்கொண்டு அசீவனமாக நின்ற அவதரம்; நனவினிற் பத்து நிற்க-சாக்கிரத்தில் பத்தான கன்மேந்திரியமும், ஞானேந்திரிமும் நீங்க; நாலைந்தும் ஐந்து - 25; சுழுத்தி :- பிராணவாயு நீங்கலாக வாயுக்களொன்பதும், சித்தம் நீங்கலாக அந்தக்கரணம் மூன்றும், சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும் ஆக 22-உம் கண்ட ஸ்தானத்திலே நிற்க சித்தமும், பிராணவாயுவும், புருடனும் ஆகிய மூன்று கருவிகளுடனே ஒன்றுந் தெரியாது நின்ற அவதரம். துரியம் - சித்தமொன்றும் இருதயத்தில் நிற்கப் பிராணவாயுவும் புருடனும் நாபித்தானத்திலே ஒன்றுமற நின்ற அவதரம். துரியாதீதம்: பிராணவாயுவொன்றும் நாபியில் நிற்க புருடனொன்றும் மூலாதாரத்திலே அதீதமாய்க்கருவிகளொன்று மின்றிக் கேவலஸ்தனாய் நிற்பது. உனக்கு ஆர் வந்து உணர்த்தினர் உம் ஆதரவு அறிந்தே என்று பிரிக்க. (3)

723. கீழாலவத்தை:- இது கேவலாவத்தையின் காரியம். சாக்கிரம், சொப்பனம் முதலிய 5-வகைப்படும். இதன் விரிவை முற்பாட்டின் குறிப்பில் காண்க. கேவலம்: - இது கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று அவத்தைகளிலொன்று. ஆன்மா தத்துவங்க ளொன்றையுங் கூடாதிருப்பது. சர்வசங்கார காலத்து ஆன்மாக்கள் சுத்தமாயா காரணத்தினாலே யொடுங்கிச் சிருட்டிகாலமளவும் ஆணவ மலத்தான் மறைப்புண்டு கலையாதி தத்துவங்களோடுங் கூடாமல் யாதொரு நினைவுமின்றி யிருப்பது. இது கண்ணானது இரவின் இருளில் ஒளி கெடாமல் விழித்திருப்பது போலும். அணு - ஆன்மா; சூக்குமமாதி - சூக்குமம், கஞ்சுகம் முதலிய சரீரங்கள்; சகலம் இது மூன்றவத்தைகளிலொன்று. சிருட்டி தொடங்கிச் சர்வசங்காரமளவும் ஆன்மாக்கள் தத்துவம் முப்பத்தாறோடு கூடி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதங்களிலும் பிறந்திறந்துழல்வது. இது இரவின் இருளிலழுந்திக் கிடந்த கண் விளக்கினாலே இருள் நீங்கிப் பல பதார்த்தங்களைக் காண்டல்போலும். சாக்கிரம் முற்பாட்டில் காண்க. கலைகள்:- நிவர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்பன. ஆரணம் - வேதம்; சீடாக்கள் முறையென்பது சீழாக்கள் முறையென்று எதுகை நோக்கி வந்தது. சீடர்கள் என்பது பொருள். பத + அம்புயம் - பதாம்புயம். (4)

724. சன்மார்க்கம்:- சன்மார்க்கம், சகமார்க்கம், புத்திர மார்க்கம், தாசமார்க்கம் என்ற நான்கில் ஒன்று. இவைகளை ஞானம், யோகம், கிரியை, சரியை யென்றுஞ் சொல்வர். வேதங்கள், சாத்திரங்கள் இவை பலவும் கற்றுணர்ந்து புறச்சமயங்களில் பலவாகச் சொல்லப்பட்டிருக்கிற யாவையும் பூர்வபட்சஞ்செய்து மேலான பதிபசு பாசமாகிய ஞானத்தால் ஞாதுரு, ஞான, ஞேயங்கள் பொருந்தா வண்ணம் பதியோடு இரண்டறக் கலக்கத்தக்க ஞானத்தைப் பெறுவது. குறி - அடையாளம்; நானாபேதமாய் - பலவிதமாய்; பன்மார்க்கம் - பலவழி; பராமரித்து - பாதுகாத்து; மறி - மான்குட்டி; சின்மார்க்கம் - ஞானமார்க்கம்; தமியாய் - தனித்தவனாய். (5)

725. குழுவின் குணமறிதல் - உடலினது கூட்டத்தின் குணத்தையறிவதும்; காட்டும் தொழிலின் திறமறிதல் - தொழிற் படுத்தும் தொழிற் பண்பின் திறத்தையறிதலும்; கருதும் இதனை யன்னியமாய்க் காண்டல் - நினைக்கும் இவ்வுடல், ஆத்மா ஆகிய இதனை வேறாகக் காணுதல்; ஆங்கதின் மேல் மருவிப்புணர்ந்த இருள் - இது சூனியம் எனப்படும். தேகம் நானோவென்னில் தேகம் நீயன்று. அஃதெப்படி நானன்றெனில், என்னுடைய தேகமென்று உன்னால் அறியப்படுகையினாலும், தேகம் பஞ்சபூதத்தின் கூறாகையாலும், தேகம் உனக்கு அநித்தியமாகையினாலும் தேகம் நீயன்று. இந்திரியம் நானோவென்னில் இந்திரியமும் நீயன்று. இங்ஙனம் பார்த்துக் கொண்டே சென்றால் இறுதியில் இருள் என்ற சூனியம் கிடைக்கும். இங்ஙனம் சூனியம் வரை வகைவகையாகப் பிரித்து உணர்ந்து அதை நீங்கி நோக்கின் ஞான வடிவாய்த் திகழ்தல் உண்டாகும். ஒருவன் - இங்குக் குருவினைக் காட்டிற்று. இங்ஙனமுள்ளதை யுணர ஆன்மாவுக்கு கருவிக்காக உருவெங்காட்சிச் சுத்தியுமென்று இனிதாயுரைப்பர் என்று விரித்துக் கூட்டிக்கொள்க. காட்சி - பிரத்தியட்சக் காட்சி, அனுமானக் காட்சி முதலியன. சுத்தி - பஞ்சசுத்தி; (1) பூதசுத்தி:- முப்பத்தாறு தத்துவங்கள் நாமல்ல, அவையாவுஞ்சடம்; அவையுந்தானாகக் மாட்டாவென அறிகை, (2) ஆன்மசுத்தி; அப்படியறிவது திருவருளாலன்றி ஆன்மபோதத்தா லல்லவென அறிகை. (3) திரவியசுத்தி:- ஆன்மபோதத்தாற்றானே யறிகைக்குச் சேட்டை யில்லையென்று கண்டது கொண்டே ஆன்மாவுக்கு அறிவில்லையென வறிந்து கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிவதெல்லாம் திருவரு ளென் வறிகை. (4) மந்திரசுத்தி:- ஐந்தெழுத்தைச் சிகாரமுதலாக மாறி அதன் உண்மையை விசாரித்தறிகை. (5)இலிங்கசுத்தி:- பதியெங்கும் பூரணமாய்ப் பசுபாசங்களிரண்டினும் பிரிவற நின்று அவற்றைச் சேட்டிப்பித்து நின்ற தன்மையை யறிந்து அத்தகைய சிவம் இலிங்கத் தினுமெழுந்தருளி யிருக்குமென வறிகை.      (6)

726. வாக்குமனதுக்கரிதான - மனம், பேச்சு இவைகளைக் கடந்த அருமையான; மன்னும் - நிலைத்துத் தங்கும்; போக்கும் - போதலும்; புணர்வு - சேர்க்கை; தொழில் ஐந்து - சிருட்டி, திதி சங்காரம், மறைப்பு, அனுக்கிரகம் என்பன; இரண்டு அற - இரண்டு என்ற தன்மை நீங்க அதாவது ஒரே தன்மையாய்; அறையும் - சொல்லும்; தேக்கும் - நிறைக்கும். (7)

727. நினைப்பும் மறப்பும் இரண்டுமிலா நிட்டையதுவாய் - நினைத்தலும் மறத்தலுமாகிய இரண்டுமில்லாத நிட்டைமயமாகி; 'உடல் உயிரும் ......................... இல்லையென" - உடலும் உயிரும் பொருளும் சிவனுக்கே எமக்கு எதற்கு என்ற நிலையில் தவறாமல் அனைத்தும் அவனது இன்பமேயல்லாமல் வேறொன்று இல்லையென்று; வையம் அகற்றில் துய்யம் அதாய் - பூமியின் பற்றைவிட்டால் சுத்தமானவனாய்; பொசிக்க - கெட; புசிப்பில் பொசிப்பில் என நின்றது; சிவபோகம்:- சிவத்தோடிரண்டறச் சிவானந்தத்தைப் புசித்துவருதல். இதமகிதம் - இன்பதுன்பம்; செனித்தும் இறக்காவழி - பிறந்தும் சாகாத வழியை. (8)

728. “விரதம் தவங்கள்...............புகலும் இது வல்லால்”. நோன்பு புரிதல், தவம் செய்தல், ஆச்சிரம வாசம் செய்தல், யாகம் செய்தல், தீர்த்தமாடல், தானஞ்செய்தல், தியானஞ்செய்தல், பலவித காரியங்கள் செய்தல், சாந்தமாயிருத்தல், மிகுந்த ஒழுக்க முடனிருத்தல் ஆகியன செய்யும் திறமையுடையவரும் சுவர்க்கம் சென்று பின் திரும்பி இப்பூமியிலேயே பிறந்து வருவரென்று சொல்லும் இதுவன்றி; அரன்றன் சரியைக்கு அவன்றன் உலகு இருப்பார். சிவனிடத்துள்ள சரியையால் சிவனது உலகத்திலிருப்பார்கள். சரியை:- தேகத்தினைச் சிவார்ப்பிதஞ் செய்தல். அதாவது புறத் தொழின் மாத்திரையானே முதல்வனுடைய உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு. சரியையால் ‘சாலோகம்' என்ற பதவியடைவர்; "சாத்தும் கிரியைக்கு அருகிருப்பார்” - செய்யும் கிரியைகளினாலே அக்கடவுளின் அருகிலிருப்பார். இது ' சாமீபம்' என்ற பதவியாகும். கிரியை:- இந்திரியங்களைச் சிவார்ப்பிதஞ் செய்தல். அதாவது புறத்தொழின் அகத்தொழின் மாத்திரையானே முதல்வனுடைய அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு; தகை யோகத்துக்கு உருவாவார் - தகுதியுடைய யோக சாதனத்தால் கடவுளின் வடிவையடைவர். இது சாரூபமெனப்படும் முத்தி. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியோர் இம்முத்தி பெற்றனர். யோகம்:- கரணங்களைச் சிவார்ப்பிதஞ் செய்தல், அதாவது அகத்தொழின் மாத்திரையானே முதல்வனுடைய அருவத்திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு; தவமாம் குருவால் இறைஞானம் தெருளச் சிவமாம் - தவத்தையுடைய குருவினால் கடவுளைப் பற்றிய ஞானத்தைத் தெளிவடைய கற்பிக்கச் சிவமாவார். இது சாயுச்சியம் என்று கூறப்படும். ஞானம்:- ஆன்மாவாகிய தன்னைச் சிவார்ப்பிதஞ் செய்தல். அதாவது புறத்தொழில் அகத்தொழிலிரண்டுமின்றி அறிவுத்தொழின் மாத்திரையானே உருவம், அருவுருவம், அருவம் என்னும் முத்திறத் திருமேனி கடந்த அகண்டாகார நித்ய வியாபகச் சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நின்ற முதல்வனிடத்துச் செய்யும் வழிபாடு ஞானம்; இந்நால்வகையான சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பன சாதனங்கள். இவை சரியையில் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் போன்று ஒவ்வொன்றும் நான்காக 16-வகைப்படும்.       (9)

729. உன்னற்கு - நினைப்பதற்கு; அறைகூவி - உரத்துக் கூப்பிட்டு; அதிரச சக்கரையின் சுவையோ - மிக்க இனிமையையுடைய சர்க்கரையின் சுவையோ; பயன் - பால்; கோவே - தலைவனே. (10)
--------------------------------
சிறுதேர்ப் பருவம்

730. பார்ஆதி ஐந்து - நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பன; பாராய் இணக்கி - வண்டிப் பாராய் செய்து; இருபத்தஞ்சு கூறு - பிருதிவியின் கூறு 5, அப்புவின் கூறு 5, தேயுவின் கூறு 5, வாயுவின் கூறு 5, ஆகாயத்தின் கூறு 5, ஆக இவ்விருபத்தைந்து கூறுகளையும் அப்பாரின்மேல் பரப்பி, பிருதிவியின் கூறு 5:- மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை. 2. அப்புவின் கூறு 5:- நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை; 3. தேயுவின் கூறு:- ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல்; 4. வாயுவின் கூறு - ஓடல், நடத்தல், இருத்தல், கிடத்தல், நிற்றல்; 5. ஆகாயத்தின் கூறு 5:- குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சர்யம்; அந்தக்கரண நாலையுந் திகிரியாய்ப் பாய்ச்சி - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களையும் சக்கரமாய்ச் சேர்த்து; ஐம்புலன் ஓவியம் சேராமல் - ஐம்புலன்களாகிய (மெய், வாய், கண், மூக்கு, செவி) சித்திரம் சேராமல்; வளிகள் ஈரைந்தும் உருவாணியாய்த் தொளை கொள் தச நாடியில் இருத்தி - பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற பத்துக் காற்றுக்களையும் மெலிந்த கடையாணியாய் துவாரமுள்ள நாடியில் தங்கச் செய்து; தோத்திராதி தனில் நாலுவழியாய் விடுத்து - தோத்திரங்களால் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய வாக்கின் 4- பாகங்களால் செலுத்தி; நல் தொக்குவின் சேலையிட்டு நல்ல உடலினால் சீலைகளை நிரப்பி; சீலை - சித்திரமெழுதிய துணி; காரான முக்குணம் அங்கணமதாய் - மூன்று குணங்களான சத்துவம், இராசசம், தாமதம் இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட இடமாய்; அலங்கார நற்கால் கலாதி - கலையாதிகள் (பஞ்சகலைகள்) அழகு பொருந்திய நல்ல தூண்களாகவும்; கருதரிய சூக்குமம் ஆதி நாதமும் சிகரமாய் - நினைத்தற்குமரிய சூக்குமம் முதலிய நாத தத்துவங்களும் சிகரமாவும்; கவித்திடும் குடை விந்துவாய் - விந்து தத்துவமே தேர்மேலே கவித்துள்ள குடையாகவும்; நாதம் - சிவதத்துவம்; ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்தத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம்; விந்து - சத்திதத்துவம். அத்த தத்துவங்களுளொன்றாய்ச் சிவனது கிரியாசக்திக்கு இடமாய்ச் சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி; தச நாடிகளாவன:- இடைகலை, பிங்கலை, சுமுமுனை, காந்தாரி , அத்தி, சிகுவை, அலம்புடை, புருஷன், குகு, சங்குனி என்பன. (1)

731. காயாமரத்தினைத் தேராய் அமைத்து - காயாமரத்தைத் தேராக அமைத்து; அகம் களிகொள் அந்தந்த நிலையில் - மனம் சந்தோஷிக்குமந்தந்த நிலையில்; கமலமுதலைவர் - தாமரையில் தோன்றின பிரமன் முதலாகக் கொண்ட திருமால், உருத்திரன், ஈசன், மகேசன் ஆகிய ஐவர்; முன்கட்டும் துரங்கம் வினையாம் தேரின் முன்னே கட்டிய குதிரைகள் நல்வினை தீவினைகளாகும்; சாயாமல் உற்று அருள் திரோதாயி சத்தி - தளராமலடைந்து அருள்செய்கின்ற திரோதாயி சத்தியானவள்; திரோதாயி - மறைப்பு: திரோதாயி சத்தி இரதசாரதி என்று பிரிக்க; இகரம் தொகுத்தல்; சாருமா மாயை ரசவர்க்கமும் கதலிகேதனமாய் - சாருமாமாயை கதலியாய் ரசவர்க்கம் கேதனமாய் என்று நிரனிரையாகக் கொள்க. கதலி - வாழைமரங்கள். கேதனம் - கொடி. வாழைமரமும் கொடிகளும் தேரில் கட்டப்பட்டிருத்த லியல்பு; ரசவர்க்கம்:- சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற தன்மாத்திரைகள் 5. மாயை - அசுத்தமாயை, சுத்தமாயை என்ற இரண்டு; ஆயாத சத்திகள் நெருங்க அங்கு அருளினை அகண்ட நல் தீபமாக்கி - ஆய்தலில்லாத சத்திகள் பல நெருங்க அருளினையங்குப் பரந்த நல்ல விளக்காக்கி; ஆன்மாவை மந்திரியதாக - ஆத்மாவை மந்திரியாகச் செய்து. (2)

732. மூலத்தின் நிலை தனில் இருந்து எழுந்து ஓம் என முனைந்து நாற்கோண நகரின் முடிக்கி - இது மூலாதாரத்தையும் சுவாதிஷ்டானத்தையும் குறிக்கிறது. இதை 660-ஆம் பாட்டில் காண்க. முடிக்கி - விரைந்து செலுத்தி; மதியின் பாதி கோணத்தில் வந்து உயரும் முக்கோண மீதிலேற்றி - இது மணிபூரகமும் அனாகதமும் ஆகிய இரண்டைக் குறிக்கிறது; இதனை 661-ஆம் பாட்டில் காண்க. கால் உற்ற அறுகோண வீதியில் நடத்தியது கண்டு வட்டத்திலினிதாய் கடுகவும் நடத்தி - இதனால் விசுத்தி, ஆக்ஞை என்ற இரு ஆதாரங்களைக் குறித்தார். இதை 662-வது பாட்டில் காண்க. கடுக - விரைவாக; சந்திரமண்டலம்:- இதன்விரிவை 663-ஆம் பாட்டிற் காண்க. ஆயிரத் தெட்டிதழதாகி வளர்மென் கமலம் - பிரம்மரந்திரம். இதன் விரிவை 663-ஆம் பாட்டின் குறிப்பில் காண்க; சீலம் - ஒழுக்கம்; வெளி - ஆகாயம்; கால் - ஒளிவீசுதல்.       (3)

733. மயக்கத்தைத் தரும் சுத்தமும் அசுத்தமுமாகிய மாயையும், நல்வினை, தீவினையாகிய யிரண்டும் பொருந்தும் இருளான மகர மென்னும் எழுத்தால் கூறப்பட்ட ஆணவ மலமாகிய வீதியை விடுத்து அறிவு வளரும் மறைத்தலான நகரம் அவ்வாத்மாவைத் திருப்பி யகர மென்னும் நல்லறிவு முன்சென்ற மல (வீதியினில்) த்தினில் நாடாமல் அவ்வெண்ணத்தை நீக்க அங்கங்கு அலைந்து ஓட்டிச் செல்லாமல் அடைதற்கருமையான பொதுவான வகரமென்னும் எழுத்தால் குறிப்பிடப்பட்ட அருளால் அதனுள் வந்ததும் போனதும் மிக்கு நிலைபெற்றதுமான எல்லாம் மனத்தில் பதியுமாறு அறிவித்துக் குற்றமில்லாமல் தெளிவடையச்செய்து அவ்வருளில் சிகரமென்னும் எழுத்தால் கூறப்பட்ட சிவனை யடையும் நிலையில் மாறுபடாமல் சந்தோஷமடையக் கருணை கொண்டு சிறுதேர் நடத்துவாயாக என்று பொருள் கொள்க. நல்வினையும் பிறப்பிற்கேதுவாகலின் வல்வினையெனப் பட்டது; திரோதாயி மற்றவைகளை மறைத்துக் கடவுளையறியும் அறிவை வளரச் செய்வது. இப்பாட்டில் 'நமசிவாய' என்பதன் ஒவ்வோரெழுத்தின் பொருள் கூறப்பட்டிருத்தல் காண்க. சிகரவெழுத்தாகிய சிவனையடைய வகர எழுத்தாகிய அருள் வேண்டும் என்றார்.       (4)

734. பூதநிலை - ஐம்பெரும் பூதநிலை; பொறி புலன்கள் நிலையும் என்று பிரிக்க; சுழல் புரியும் நாற்கரண நிலை - சுழலச்செய்யும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கரணங்களின் நிலையும்; போதம் - ஞானம்; முக்குணம் - சத்துவம், இராசசம், தாமதம் என்பன; சுத்த நிலை :- ஆன்மாக்கள் கேவல சகலப்பட்டுப் பிறந்திறந்து திரியுமவ சரத்து அவர்கட்கு இருவினையொப்பும், சத்திநிபாதமும் குருவருளும் ஞான சாதனமும், மும்மலக் கழிவும், வாதனை நீக்கமும், ஞானப் பெருக்கமும் முறையே உண்டாகப்பெற்றுத் திருவருளைக் கூடுவது; இது இரவில் இருளோடும் விளக்கோடும் கூடியிருந்த கண்ணானது ஆதித்தனுதயஞ் செய்தவிடத்து அதன் கிரணத்தாலாதித்தனைக் காண்டல்போலும்; ஐந்தானநிலை - பூதநிலை, முக்குணநிலை, சுத்தநிலை முதலியன; இருள் - மலம்; கேவல நிலை:- இதன் விவரம் 723-வது பாட்டின் குறிப்பில் காண்க. சத்சத்து - நிலைத்த சத்து; தேர்ந்து - ஆய்ந்துணர்ந்து; ஆங்கு - அசை நிலை; அகன் - கடைப்போலி, மனம் என்பது பொருள்; சேதனம் - அறிவு.       (5)

735. மானார் மருட்டார் போகம் - பெண்களின் மயக்கம் பொருந்திய போகம்; விவேகம் - புத்தி; கை காட்டும் விதம் - சின்முத்திரையினால் விளக்குவது; அணு - ஆன்மா; விமலம் - குற்றமற்றநிலை; பதைத்தால் - மிகுந்து அவசரப்பட்டால்; பசு சீவனுடைய உடல்; துருசு - குற்றம்; பாசம் - ஆசை. (6)

736. நீயாய் கடவுளையுடைய முயன்றால் அந்நிலை நிலைத்துநில்லாமல் அகன்றுவிடும் என்பதும் அந்நிலை தானாக வந்து உன்னை யடைதல் என்று சொல்லுவதுமாக நிகழ்த்துகின்ற இரண்டையுந் தானே கடந்த நிலையாக இருந்தே அது உனக்குள் தாயாக உணர்த்தும் பொருளாக விளங்கும்; அத்தன்மைக்கு உவமை யாது என்றால் கஷ்டப்படுகின்ற குருடனுக்குச் சூரியன் மிக்க ஒளியும் தெரியாமல் இருளாவது போன்றிருக்கும்; ஆய்ந்ததை உடைய கண் வைத்தியன் ஒருவன் உண்டாகி வந்து அரிய கண்ணின் திரையை யகற்றிடும் போது பரந்த சூரிய ஒளியை அக்கண்களின் ஒளி கலந்துள்ள அத்தகைய செயலை யார்தான் கலக்கச் செய்தார் என்பதைப்போல குழவியாகிய என்னுடைய மலமாகிய இருளை ஒட்டி அருளைத் தெளிவடையச் செய்பவனே சிறுதேர் ஓட்டுக என்று பொருள் கொள்க. கண் வைத்தியன் சிவானந்தனுக் கும், சூரியன் கடவுளுக்கும், கண்கள் இந்நூல் ஆசிரியர்க்கும் உவமையாக வந்தன. தானாக முயற்சித்தாலும் கடவுளைக் காண முடியாது; அப்படிக் கண்டாலும் சிறிது நேரமே நிலைக்கும்; அல்லது அக்கடவுள் நிலை தானாகவே தன்னை வந்து அடைதல் என்று சொல்லுதலும் உண்டு. இவ்விரண்டு முறையையும் கடந்ததே தாயாய் உணர்த்தும் பொருளாகும். எனவே கடவுளை யடைதற்குக் குருவொருவர் அவசியமாக வேண்டும் என்பது அறியப்படுகிறது (7)

737. வீணைக்கு எழில் நாதம் என்க. காட்டத்தினில் அனல் - விறகில் தீ; இம் முதலடியால் சாயுச்சிய பதவியைக் குறித்தார். நேசத்து அக மதலைக்கு அனையாய் விரும்புந்தலம் - மனத்தில் அன்பையுடைய ஞானசம்பந்தருக்குச் அன்னையாய் விரும்பிவருகின்ற சீகாழி; வெண் சேவில் ஊர்தி - வெள்ளிய எருது வாகனத்தையுடைய சிவபெருமான்; சித்தம் - மனம்; சிவப்பேறில் - சிவனுடைய பேரின்பமாகிய செல்வத்தில்; பேறு - செல்வம்; சிவமது அகலார் என்று பிரிக்க.       (8)

738. மலபந்தம் - குற்றமாகிய கட்டுக்கள்; மெய் - உடல்; விதிர் விதிர்த்து-நடுநடுங்கி; குருவையும், சிவலிங்கத்தையும், குற்றமற்ற சிவனடியார் கூட்டத்தையும் சிவனேயென்று வணங்கித் துதித்து யார்க்கும் நாமே மேலானவனென்று, வடிவமாயும் வடிவமற்று மில்லாத கடவுளின் மெய்யடியாருக்கும் அவர்களுக்குக் குற்றேவல் செய்பவர். கட்கும் பாதத்தாலிட்ட வேலைகளைச் செய்பவனாக மனமன்புற விளங்கித் திரிபவர்கள் ஞானத்திறத்தை யுடையவரென்று கூறும் செல்வனே என்று பொருள் கொள்க. (9)

739. விதி - பிரமன்; 'வாரும் இனி' என்று பிரிக்க; பக்குவர்க்கு அனுக்கிரகிக்கு முறை:- மலபரிபாகம் வந்தவிடத்து இருவினை யொப்புப் பிறக்கும்; அப்பொழுது முன் செய்த சிவபுண்ணியம் வந்தெய்த அப்பரமசிவம் மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல ஞானாசாரிய மூர்த்தமாய் மான், மழு, காளகண்டம், திரிநேத்திர மொழித்து மானிடச்சட்டை சாத்தி, இவனது ஊரும், பேரும், உருவும் ஒழிக்க வேண்டி, ஊரும், பேரும் உருவுங்கொண்டெழுந்தருளி மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் எனும் சத்தினிபாதத் தன்மை யுணர்ந்து சமய தீக்ஷை பண்ணிச் சரியை யனுட்டிப்பித்து விசேஷ தீக்ஷைசெய்து கிரியா யோகங்களை அனுட்டிப்பித்து நிருவாண தீக்ஷை பண்ணி ஞானமனுக்கிரகித்து மலமாயாதி கன்மங்களை நீக்கி மோட்சத்தைக் கொடுக்கும். (10)

சிவானந்தன் பிள்ளைத்தமிழ்க் குறிப்புரை முற்றிற்று.
--------------------------


This file was last updated on 25 Jan. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)