pm logo

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்


tiruccentil nirOTTaka yamakavantAti
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு -3


Source:
1. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்.,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978.

2. நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இந்நூல் திருக்கலியாய பரம்பரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதின பரம்பரைத் தர்மகர்த்துவம் பதினெட்டாம் பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் வெளியிட்டருளியது
பதிப்பகம் : ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்
சுபானு ௵, 1944, பதிப்புரிமை
விலை ரூ. 5.
------------

அந்தாதி யாவது ஒரு பாட்டினுடைய அந்தம் அடுத்த பாடலுக்கு ஆதியாகவருமாறு பாடுவதாகும். இவ்வந்தாதி வெண்பாவா லாயினுங் கட்டளைக் கலித்துறையாலாயினும் பாடப்பெறும். வெண்பாவாற் பாடப் பெறுவது வெண்பாவந்தாதி யெனவுங் கட்டளைக்கலித்துறையாற் பாடப்பெறுவது கலித்துறையந்தாதியெனவும் வழங்கும். முப்பதுபாடல்களினாலும் நூறுபாடல்களினாலும் அந்தாதிபாடப்பெறும். நிரோட்டகயமகவந்தாதி என்பது நிரோட்டகமும் யமகமுமாகப் பாடப்பெறும். நிரோட்டகமாவது இதழ்முயற்சியாற் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வராமற்பாடப்படுவது. யமகமாவது அடி முதலெழுத்தோடு இரண்டெழுத்துமுதற் பத்தெழுத்திறுதியாக ஓரடிபோலவே நான்கடியும் பாடப்பெறுவது. முப்பது பாடல்களாலாகிய இக்கலித்துறையந்தாதி திருச்செந்தூரில் எழுந்தருளிய முருகப்பெருமான் மீது பெருந் தமிழ்ப் புலவர்களும் வியக்குமாறு அருந்திறலைக்காட்டிப் பாடப்பட்டுள்ளது. இந் நூல்கற்பவர்கட்குக் கழி பேருவகை யளிப்பதாகும்.

காப்பு
கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்பது முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.
கொக்குரு-மாமரவடிவம். செற்ற-கொன்ற. அருணன்-கதிரவன். முற்ற-முடிய. அருள்நனை-அருள்வெள்ளமானது நனைக்கப்பெற்ற. நிரோட்டக யமக வந்தாதி-நிரோட்டகமும் யமகமுமாகப் பாடப்பெறும் அந்தாதி. நிரோட்டகமாவது இதழ்முயற்சியாற் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வராமற் பாடப்பெறுவது, யமகமாவது அடிமுத லெழுத்தோடு இரண்டெழுத்து முதற்பத்தெழுத் தீறாக ஓரடி போல நான்கடியும் பாடப்பெறுவது. இக்காப்புச் செய்யுள் நிரோட்டகமுமன்று யமகமுமன்று.
----------
நூல்
யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. (1)

1. யானைக்கண் தங்குஅரி-இந்திரன். ஐக்கண்டம்-அழகையுடைய கழுத்து. தகைஆன்-பெருமை தங்கிய இடபம். ஈநல்இசையான்-பிரணவப் பொருளைக் கூறிய பெருமை யுடையவன்.

தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. (2)

2. தினகரன் நந்த-கதிரவன் ஒளிகுன்றுமாறு. அடற்சீர் அயில் ஏந்தின கரன்-வலிமை பொருந்திய சிறப்பாகிய வேற்படையைத் தாங்கின கையை உடையவர். அந்தகன்-நமன். செற்ற-அழித்த. நகர் அனந்தன்-அசைகின்ற ஆதிசேடன். நடனர்-அம்பலவாணர்.
---------
சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையியைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. (3)

3. சிந்தனை-எண்ணம். அகம் கசிந்து-மனம் நெகிழ்ந்து. அனை-அன்னை, தாய். தரைஅளித்தாள்-உலகத்தைப் பெற்றவள். இரந்த சிந்தன்-யாசித்த குறள்வடிவத் திருமால். அளியால் சிந்து அனையாய்-அருளால் கடலைப் போன்றவரே. கத்த-தலைவனே.
---------
தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. (4)

4. தனம்-கொங்கை. நாரியர்-பெண்கள். அந்தரம்-விண். கேதனம்-கொடி. அரங்கு ஆட-அவையில் நடிக்க. செய்-வயல். நத்து-சங்கு. அலம் கார் அதராய்-கலப்பைச்சாலில் நிற்கின்ற நீரின் வழியாக. கார் அனையான்-திருமால். அயன்-நான்முகன்.
---------
தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. (5)

5. தங்கம்-பொன்போன்ற நிறத்தையுடைய தேமல். அம் தனங்கள்-அழகிய பொருள்கள். காதம்-காததொலை. கந்தம்-மணம். அங்கம் நிகர் செக்கர்-உடலைப் போன்ற செவ்வானம். சஞ்சலம்-துன்பம்.
---------
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே. (6)

6. சலம் தரம் நாகம் தரித்தார்-கங்கையையும் தலைமாலையையும் பாம்பையும் அணிந்தவர். தாதன்-மார்க்கண்டன். சஞ்சலம்தர-துன்பத்தைக் கொடுக்க. நாகம்-யானை. தண்டன்-நமன். சலந்தரன் ஆகம்-சலந்தரன் என்பவனுடைய உடல். நச்சலம்-விரும்பினோமில்லை.
-----------
சாரங்கஞ் சங்கரி கட்சிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்
சாராங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா
சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே. (7)

7. சாரங்கம்-மான். சங்கரி-இறைவி. சாரங்கம்-சார்ங்கம் என்னும் வில். தாங்கினன்சேய்-காமன். சார் அங்கம்-பொருந்தியஉடல். சங்கரியா-கொன்று. ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை.
---------
தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை
தந்தனஞ் சங்கை யலரென்செய் யாடங்கச் சற்சனர்நித்
தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித்
தந்தனஞ் சங்கை யநக னிளையனற் றாடரற்கே. (8)

8. சங்கை அணிகரர்-வளையலையணிந்த கையை உடைய பெண்கள். தடங்கண்-விசாலமானகண். அலைதந்தனம்-அலைந்தோம். செய்யாள்-திருமகள். சங்கை அகல் ஐயம் நீங்கிய. தனித்தந்தன்-ஒற்றைக் கொம்பை யுடையவன். அருகன்-தீவினையற்றவன்.
---------
தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந்
தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந்
தரங்கனந் தார நகரீசர் சேய்கிரித் தையலர்க்கந்
தரங்கனந் தாரள கஞ்சிற் றிடைசல சங்கண்களே. (9)

9. தரங்கம்-அலை. நந்து-சங்கு. ஆரல்-மதில். நிரந்தரம்-எக்காலத்தும்: தாரகம்-பிரமவடிவம். அந்தரம் நந்தார்-அந்தரங்கத்திலே கெடுதலின்றி விளங்குகின்றவர். சேய் கிரித்தையலர்-முருகனுடைய மலையில் இருக்கும் பெண். தார் அளகம் கனம்-மாலையை அணிந்த கூந்தல் முகிலைப் போலும். சிற்றிடை அந்தரம்-சிறிய இடை விண்ணைப் போன்றது. சலசம்-தாமரை.
---------
சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ்
சங்கங் களங்கர நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற்
சங்கங் களங்க னியைநிகர் தண்ட தரற்கினிய
சங்கங் களங்க ரெனநின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே. (10)

10. சங்கங்கள்-சங்குகள். நஞ்சம்-நஞ்சு. கம்-தலை. களம்-கழுத்து. கரம்-கை. நண்-பொருந்திய. சற்சங்கம் சார்ந்தனம்-நல்லகூட்டத்தைச் சேர்ந்தோம். தண்டதரன்-இயமன். களங்கர்-குற்றத்தையுடையவர்.
---------
கரத்தரிக் கங்கணங் கட்டர னார்தந்த கந்தாழ
கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெங் காங்கெயர்சா
கரத்தரிக் கங்கணங் கட்கய னார்க்கெழிற் காசணிசே
கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே. (11)

11. அரிக்கங்கணம்கட்டு-பாம்பாகிய காப்பைக் கட்டிய. அத்தர்-தந்தை. இக்கு-கரும்பு. அங்கணம்-சேறு. காங்கேயர்முருகர். சாகரத்து அரி-பாற்கடலில் எழுந்தருளிய திருமால். எழில் காசு அணி-அழகிய மணிகளால் அழகுசெய்யப்பட்ட. சேகரத்துஅரி-முடியை உடைய இந்திரன். அணங்கு-வருத்தம். கைச்சத்தி தாங்கினர்-கையில் வேற்படையை ஏந்தினார்.

---------
சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற்
சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே
சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் றந்தகதிர்ச்
சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரனே. (12)

12. சத்திக்கர-வலிமையுடைய முதலை, அகச்சேய்-வயிற்றில் இருந்த பிள்ளை. சத்திக்கு அரத்தன்-உமாதேவிக்குச் செந்நிறமாக விளங்குபவன். நகச்சிலையாளி-மகாமேருமலையை வில்லாக ஆண்டவர்: நேசத்து இக்கர் அத்தன்-அன்பினைக் கருப்பு வில்லிலே வைத்த காமனுக்குத் தந்தை. அகத்து இயைந்து ஏத்து-மனம் பொருந்தப் போற்றுகிற. கதிர்ச்சத்தி-ஒளியையுடைய வேற்படை.
---------
சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே
சரிதங்கை யாரக் கரிடத்தி னார்தந்த தண்செந்தினே
சரிதங்கை யாரக் கணத்தின்னல் கைத்தல் சரதந்தஞ்சீர்ச்
சரிதங்கை யாரக் கசிந்திசைக் கின்ற தகையினர்க்கே. (13)

13. சரி-வளையல். ஆரக்கலன்-முத்துமாலையாகிய அணிகலன். நரகேசரி தங்கையார்-மனிதமடங்கலாகத் தூணில் தோன்றிய திருமாலின் தங்கையார். அக்கர்-சங்குமணியை அணிந்த பரமசிவன். இதம்கையார்-இன்பத்தை வெறாது செய்வார். இன்னல் கைத்தல் சரதம்-துன்பத்தை வெறுத் தொழித்தல் உண்மை. கைஆர-ஒழுக்கம் பொருந்தும்படி. அன்பினையுடையவர்கட்கு முருகக்கடவுள் இன்பினைச் செய்தல் உண்மை என்று கூட்டுக.
---------
இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்மை யீரிரண்டா
யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதளை
யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே. (14)

14. இன்அந்தி-இனிதாகிய செவ்வானம். அங்கி-தீ. நிகர்த்த-ஒத்த. செங்கேழன்-செந்நிறத்தையுடையவன். ஆய்இல்நந்தி-மாதாவை யில்லாத நந்தி. அம்கிரி-அழகிய மகாமேருமலை கஞ்சம் சேர்-தாமரையை அடைகின்ற. தளையின்நந்தி-பாசத்தினால் வருந்தி:
---------
தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந்
தனக்கடங் காதிழி தந்திக் கிளையன் றளிரெழிற்சந்
தனக்கடங் காநிறை செந்திலி னற்சேய் சயிலநங்கை
தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றரணியிலே. (15)

15. எயில் செற்ற-மும்மதில்களையும் அழித்த. கங்காளன்-முழு வெலும்பையுடையவன். கடம்-மதம். தந்திக்கு-ஆனை முகக் கடவுளுக்கு. சந்தனக்கடம்-சந்தன மரக்காடு. கா-பூஞ்சோலை. சயில நங்கை-மலையிலிருக்கும் பெண். தனக்கடம் காணின்-கொங்கைகளாகிய குடங்களைக் கண்டால். தரணியில் நச்சார் இலை-உலகில் விரும்பாதவர்கள் இலர்.
---------
தரணி யனைய நிறத்தண்ண லாரிரந் தன்றளந்த
தரணி யனைய னிறைஞ்சயி லார்நற் றனிச்சிலையாந்
தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந்
தரணி யனையனெஞ் சேயலர்த் தாள்கட ரித்திறைஞ்சே. (16)

16. தரணி அனைய-கதிரவனைப் போன்ற. தரணியன்-திருமால். அயன்-நான்முகன். ஐஅநகன்-அழகனையுடைய மலரகிதர். அணி அல்-அழகிய அரண்.
---------
தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந்
தரித்தனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந்
தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா
ததிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே. (17)

17. தரிக்க-அணிய. நந்து-வளர்தலையடைந்த. அம்கலை-அழகிய திங்கட்கலை. கைக்கனல் சங்கரன்-கையிலே தீயை உடைய சிவபிரான். அக்கரி-உமாதேவி. அனந்தம்-முடிவில்லாத. இக்கு-கரும்பு. தளை ஆதரிக்க-மாலையை விரும்ப. கலைநீத்து-ஆடையைப் போக்கி. கரச்சங்கங்கள்-கைவளையல்கள். ---------
சங்கரி யக்க நிகர்த்தநின் றாதை ததையதென்னச்
சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானனகஞ்
சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சரணத்தினாற்
சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே. (18)

18. சங்கரி அக்கம்-உமாதேவியின் கண். சங்கு அரி-சங்கையுடைய திருமால். சரணத்தினால் சங்கரி-அடிகளினால் கொன்றருள். எற்செறி-என்னிடத்தே வந்து சேருகின்ற.
---------
தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேய்ந்
தகர னலங்க னளினா தனத்தினன் றாழளகந்
தகர னலங்க டரநின்ற சத்தியன் றாளெனினந்
தகர னலங்கனன் றாலெனச் சீறிட தக்கரன்றே. (19)

19. தகரன்-ஆட்டு ஊர்தியை உடையவன். நிறத்தான்-அழகையுடையவன். நளினாதனத்தினன்-தாமரையை இருக்கையாகவுடைய நான்முகன். அளகம்-கூந்தல். தகரநலம்-மயிர்ச் சாந்தாலாகிய இன்பம். சத்தியன்-கிரியாசத்தியாகிய தெய்வானையம்மையை உடையவன். அனலம்-வடவைத் தீ.
---------
தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந்
தக்க னகத்தி கிரிக்கர னாக்கங்க டந்தளிக்கத்
தக்க னகத்தி யளையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந்
தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே. (20)

20. அகத்தின்அடல்-ஆணவத்தினது வலிமை. சந்தக் கனகத் திகிரிக்கரன்-அழகிய பொன் மயமான உருளைப்படையை ஏந்தியகையை உடைய திருமால். தந்து அளிக்கத் தக்கள்-கொடுத்துக் காப்பாற்றக் கூடியவர். நகு-விளங்கு கின்ற. தினகரன்-கதிரவன்.
---------
சந்தத்த னத்திக டந்திறத் தாசை தலத்தினிச்சை
சந்தத்த னத்தி னசைதீ ரடியன் றனதிலிற்சேர்
சந்தத்த னத்தி யதளான் றனய தடக்கயல்கஞ்
சந்தத்த னத்தி னினங்கீ ழிழிசெந்திற் றங்கினற்கே. (21)

21. சந்தத் தனத்திகள்-சந்தனத்தை அணிந்த கொங்கைகளையுடைய பெண்கள். தலத்தின் இச்சை-மண்ணாசை. சந்தத் தனத்தின்நசை-அழகிய பொன்னாசை. அடியன்-சுந்தரமூர்த்திகள். சந்து-தூது. அத்தி அதளான்-யானைத்தோலையுடையவன். தடக்கயல்-பெரியகயல் மீன்கள். முருகப் பெருமானே எனக்கு மூவாசையையும் போக்கியருளும் எனக் கூட்டுக.
---------
தங்கச் சினகர நேராக் கலந்திச் சகநிறைந்தார்
தங்கச் சினகர நேயர் தனயன் றனக்கினிதாந்
தங்கச் சினகர நீள்செந்தி னாட்டிற் றனகரிதந்
தங்கச் சினகர நற்கன னென்னங்க டையலர்க்கே. (22)

22. அச்சு-உயிர் எழுத்து. கச்சிநகரம்-காஞ்சி மாநகர். தங்கச் சினகரம்-பொன்னாலாகிய கோயில். கரிதந்தத்தனம்-யானைக் கோட்டைப் போன்ற கொங்கை. கச்சில் நகர-கச்சிலிருந்து பிதுங்குதலுக்கு. நற்கனன்-நல்லகனம். இது செவிலி தலைவியினிடத்து ஐயங் கொண்டு பாங்கியை வினாவல்.
---------
அலரிந னந்தலை யாழிகண் டாங்குச் சிகியினிடை
யலரின னந்த நிகரயி லான்செந்தி லாயிழையை
யலரின னந்த நினைநிலந் தேர்ந்ததற் கன்றயலா
ரலரின னந்தஞ் சொலற்கிட னாநெஞ் சழிகின்றதே. (23)

23. அலரி-கதிரவன். நனந்தலை-நடுவிடம். ஆழி-கடல். சிகியினிடை-மயிலூர்தியில். அலர் இனன்-விளங்குந்தலைவன். அயிலான்-வேற்படையை உடையவன். செந்தில் ஆயிழை-திருச்செந்தூரில் இருக்கும் பெண். ஐஅலர்-ஐந்துமலர்க் கணைகள். இனல்நந்த-துன்பங்கெட. அலரின் அனந்தம். பழிமொழிகளிற்பல, இஃது அலரறி வுறுத்தல்.
---------
தேயத் தியங்கி யலகி றலங்களிற் சென்றடிகள்
தேயத் தியங்கி யலைய றிடங்கதி சேர்தலறைந்
தேயத்தி யங்கின நித்திலந் தானெறி செந்திலடைந்
தேயத்தி யங்கி தரித்தான் றனயற் றெரிசிக்கினே. (24)

24. இயங்கி-சென்று. அலகில்-கணக்கில்லாத. தியங்கி-மயங்கி. அறைந்து-ஆரவாரித்து. அத்தி-கடல். இனம்நித்திலம்-கூட்டமாகிய முத்துக்கள். ஏய்-அங்குபொருந்திய. அத்தி அங்கி தரித்தான்-எலும்பையும் தீயையும் அணிந்தவன்.
---------
சிக்கத் தனங்க டிறக்கின்ற கன்னியர் சிந்தைகணே
சிக்கத் தனங்க ளளித்தழிந் தேற்கெழிற் செந்திறரி
சிக்கத் தனங்க ழலையேத்த நல்கினன் சீர்நிறைகா
சிக்கத் தனங்க ளகிலேசன் றந்த திறற்கந்தனே. (25)

25. சிக்க-தம்மிடத்தில் அகப்பட. நேசிக்க-விரும்ப. கழலை ஏத்த-திருவடிகளைப் போற்ற. அகிலேசன்-விசுவநாதன்.
---------
கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே
கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே. (26)

26. கந்தரம்-முழை. கால்நந்த-கால்வருந்த. கந்தரம்-முகில்-அளகம்-கூந்தல்.சனனம் கடந்திலர்-பிறப்பைப் போக்காதவர்கள்.
---------
கடனந்தி னாகத் தகளாடை யாயெனைக் காக்கனிற்கே
கடனந்தி நாணிறத் தாயென நாரணன் கண்டிறைஞ்செங்
கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே
கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றதே. (27)

27. கடம்நந்து இல்-மதங்கெடுதலில்லாத. நாகம்-யானை. அதள்-தோல். அந்தி நாள்- செக்கர் வானம். காரிகை-பெண். கடல் நந்தின் நாயகன்-கடலில் தோன்றிய சங்குகளுடைய தலைமையாகிய வலம்புரி. கலிக்கின்றது-ஒலிக்கின்றது.
---------
கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற்கந் தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (28)

28. கணக்காகம்-கூட்டமான காகங்கள். கண்ணி-எண்ணி. எய்த்தேன்-இளைத்தேன். அக்கு ஆகனார்-எலும்பு மாலையை அணிந்த உடலையுடையவர்.
---------
காதலை யானின் றனக்காக் கினனினிக் காயந்தந்தே
காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங்
காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக்
காதலை யானின்ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே. (29)

29. காயம் தந்து காதல்-உடலைக் கொடுத்துக் கொல்லாதீர். ஐயான்-சூக்குமரூபி. கண்ணி அரா-பாம்பாகிய மாலை.
---------
காயங் கலைய நலியந் தகனணை காலஞ்செய்ய
காயங் கலையத ளானில நீரழல் காற்றெழிலா
காயங் கலைய னலரிசித் தாயினன் காதலழ
காயங் கலையதி ருஞ்செந்தி லாயென்க கன்றனெஞ்சே. (30)

30. காயம் கலைய-உடல்நீங்க. நலி-வருந்துகின்ற, செய்ய காயம்-சிவந்த தழும்பு. கலைஅதளான்-கலைமானினது தோலையுடையவன். கன்றல்-வருந்தாதொழி. அலை அதிரும்-அலைகள் ஒலிக்கும்.
--------------------

Version 2
Source:
திருக்கைலாசப் பரம்பரைப் பொம்மையபாளையம் சிவஞானபாலைய
தேசிகராதீனத்து நல்லாற்றூர் அல்லது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
அருளிச்செய்த சோணசைலமாவல முதலிய பிரபந்தங்கள்
(திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதி).

இவை, ௸ ஆதினத்துச் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகளால்
பரிசோதிக்கப்பட்டு தாயாறு ஞானசுந்தரஐயராலும்
பாளையம் சோமசுந்தர செட்டியாராலும்
சென்னை : மிமோரியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன.
பார்த்திப ௵ ஆவணி ௴ (1945).
----------------
உ - கணபதி துணை.
சிவசண்முகன்றுணை.

திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதி.
மூலமும் உரையும்.

காப்பு.
கொற்றவருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்றவருணனை யன்ன செவ்வேற்படைச்செந்திலர்க்கு
முற்றவருணனையந்தாதியென்று முதிர்மதம் பேர்
பெற்றவருணனையானனத்தாதியைப்பேசுவனே.

(இதனது பதப்பொருள்.) அன்று கொற்ற வருணனை நின்று உழக்கிய கொக்குருவைச் செற்ற- (யுத்தஞ்செய்த) அக்காலத்து வெற்றியையுடைய சமுத்திர ராசனை (க்கடலிடத்தே) நின்று கலக்கிய மாமர வடிவாகிய சூரபத்மனைக் கொன்ற, -அருணனை அன்ன செவ்வேற்படைச் செந்திலர்க்கு - சூரியனைப் போன்ற சிவந்த வேலாயுதத்தையுடைய திருச்செந்தூரில் வாழும் முருகக்கடவுளுக்கு, வருணனை அந்தாதி முற்ற - (நான் பாடத்தொடங்கும்) வர்ணனையுடைய இந்நிரோட்டக யமக வந்தாதியானது (இடையூறின்றி) முடியும் பொருட்டு, - என்றும் முதிர் மதப்பேர் பெற்ற அருள் நனை - எக்காலத்தும் முதிர்ந்த மதநீரென்று (உலகத்தார் சொல்லும்) பெயரைப் படைத்த அருள் வெள்ளமானது தோன்றி நனைக்கப்பெற்ற, - ஆனனத்து ஆதியைப் பேசுவன் - யானை முகத்தையுடைய கணபதியை (யான்) துதிப்பேன். -என்றவாறு. ஏ - ஈற்ற சை. அந்தாதியானது முடியும் பொருட்டுக் கணபதியைத்துதிப்பேனெனக்கூட்டுக.

நிரோட்டகயமகவந்தாதி - நிரோட்ட கமும் யமகமுமாகப் பாடப்படும் அந்தாதி. நிரோட்டகமாவது இதழ் முயற்சியாற் பிறக்கும் மெய்யும் உயிரும் உயிர்மெய்யும் வராமற் பாடப்படுவது. யமகமாவது அடி முதலெழுத்தோடு இரண்டெழுத்து முதற் பத்தெழுத்தீறாக ஓரடி போல நான்கடியும் பாடப்படுவது. இப்பிரபந்தத்தின் முதலிலே தனித்து நிற்கும் இக்காப்புச்செய்யுள் நிரோட்டகமுமன்று, யமக முமன்று, திருக்கெனக் கண்டுகொள்க. திருக்காவது அடிமுதலெழுத் தொழித்து இரண்டெழுத்து முதற் பன்னிரண்டெழு த்தீறாக ஓரடி போல நான்கடியும் பாடப்படுவது.
------------------

யானைக்கண்டங்கரி சென்றேத்தெழிற் செந்திலின்றடைந்தே
யானைக்கண்டங்கரி யற்கங்கயிலையையேத்ததகை.
யானைக்கண்டங்கரி சேரெண்டிக்காக்கினற்கீநலிசை
யானைக்கண்டங்கரி தாகியசீர்க்கதியெய்தினனே. 1

(இ-ள்.) யானைக்கண் தங்கு அரி சென்று ஏத்து எழிற் செந்தில் இன்று அடைந்து - வெள்ளை யானையின் மேல் இருக்கின்ற இந்திரன் போய்த் துதிக்கும் அழகினையுடைய திருச்செந்தூரை இன்றைக்குச் சேர்ந்து ,-யான் நான்,- ஐக்கண்டம் கரி, யற்கு அழகையுடைய கழுத்துக்கரிதாகப் பெற்றவரும், - அம் கயிலையை ஏத்த தகை ஆன் ஐக்கு - அழகிய கைலாசகிரியைப் போன்ற பெருமையையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட கடவுளும், - அண்டம் கரி சேர் எண்டிக்கு ஆக்கினற்கு அண்டங்களையும் அட்டகஜங்கள் பொருந்திய அட்ட திக்குகளையும் சிருட்டித்தவருமாகிய பரமசிவனுக்கு, -ஈ நல் இசையானைக் கண்டு - பிரணவப்பொருளை உபதேசித்தருளிய நன்மையாகிய கீர்த்தியையுடைய சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்து, அங்கு அரிதாகிய சீர்க்கதி எய்தினன் - அவ்விடத்தே (யாவர்க்குங் கிடைத்தற்கு) அரிதாகிய சிறப்பையுடைய மோக்ஷத்தை யடைந்தேன். எ-று.
நான் சுப்பிரமணிய சுவாமியை த்தரிசித்து மோக்ஷத்தை யடைந்தேனெனக் கூட்டுக. (1)
-----------------

தினகரனந்த நனியிலங்காநின்றசெய்ய நற்செந்
தினகரனந்த நிதியாயினனடற்சீநயிலேந்
தினகரனந்த கனைச்செற்றதாளர் திகழ்கனகா
தினகரனந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2

(இ-ள்.) தினகரன் நந்த நனி இலங்காநின்ற செய்ய நற்செந் தில்நகரன் - சூரியன் ஒளிகுன்றும்படி மிகப் பிரகாசிக்கின்ற செவ்வையாகிய நல்ல திருச்செந்திலென்னும் நகரத்தையுடை யவரும், --நந்தம் நிதியாயினன் நம்முடைய செல்வமாயின வரும், - அடற் சீர் அழில் ஏந்தின கரன்-வலிமையையுடைய சிறப்பாகிய வேலாயுதத்தைத் தரித்த கையை யுடையவரும், - அந்தகனைச் செற்ற தாளர் திகழ் கன காதில் நகர் அன ந்தன் நடனர் தனயன்- இயமனை வதைத்த பாதங்களையுடைய வராகியும் விளங்குகின்ற பாரத்தையுடைய செவிகளிலே அசைகின்ற அனந்தனாகிய குண்டலத்தையுடைய நடேசராகியு மிருக்கின்ற பரமசிவனுடைய குமாரருமாகிய முருகக்கட வுளானவர்; - என் சிந்தையன் - என்மனத்தின் கண் இருக்கின்றனர். எ - று. (2)
--------------------

சிந்தனையாகத்திசையந்தணர்க்கிறைசேரகங்க
சிந்தனையாகத்தரையளித்தாடரைசென்றிரந்த
சிந்தனையாகத்திடையியைந்தான்றந்தசேயளியாற்
சிந்தனையாகத்தநற்செந்திலாய் நினைச்சேர்ந்தனனே. 3

(இ-ள்.) சிந்தனை யாகத்து இசை அந்தணர்க்கு இறை - தங்கள் மனமானது வேள்வியின் கண்ணே பொருந்தப்பெற்ற பிராமணர்கட்குத் தலைவரே,- சேர் அகம் கசிந்து அனையாகத் தரை அளித்தாள் - பொருந்திய மனங்கசிந்து மாதாவாக இப்பூமியைப்பெற்ற உமாதேவியையும்,- சென்று தரை இரந்த சிந் தனை - (மாவலிச்சக்கிரவர்த்தியிடத்திலே) போய்ப் பூமியை யாசித்த வாமன ரூபத்தை யுடைய விஷ்ணு மூர்த்தியையும், -ஆகத்திடை இயைந்தான் தந்த சேய் - தமது திருமேனியிலே (இடப்பாதியும் வலப்பாதியுமாகக்) கொண்ட பரமசிவன் பெற்ற குமாரரோ, -அளியால் சிந்து அனையா - கிருபையினாலே சமுத்திரத்தைப் போன்றவரே,-கத்த- கருத்தாவே,- நற்செந்தி லாய்- நன்மையாகிய திருச்செந்தூரையுடையவரோ,- நினைச் சேர்ந்தனன்-உம்மை (யான் வந்து) அடைந்தேன். எ-று.
என்னைக் காத்தருளுமென்பது எஞ்சி நின்றது. அன்னை நின்னை என்பன அனை நினை என இடைக்குறைந்து நின்றன. (3)
----------------

தனத்தலங்காரநிறை நாரியரந்தரத்தசைகே
தனத்தலங்கார நிகழரங்காடச்செய்தன்னினயத்
தனத்தலங்காரதராயியங்கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங்காரனையானயனேத்திடத்தங்கினனே. 4

(இ-ள்.) தனத்து அலங்கு ஆரம் நிறை நாரியர் முலைகளினிட த்து ஒளிர்கின்ற முத்து மாலைகள் நிறையப்பெற்ற பெண்கள்,-- அந்தாத்து அசை கேதனத்து அலங்காரம் நிகழ் அரங்கு ஆட ஆகாயத்திலே அசைகின்ற கொடிகளையுடைய அழத விளங்குகின்ற சபையின் கண்ணே நடிக்கவும், - செய்தன்னின் நயத்த நத்து அலம் கார் அதராய் இயங்கத்தக்க தண் செந்தில் கந்தன் - வயல்களிலே சுகத்தையுடையனவாகிய சங்குகள் கலப்பைச்சாலிலே நிற்கின்ற சலமானது வழியாக அதிலூர்ந்து செல்லவுந்தக்க குளிர்ச்சியையடைய திருச்செந்தூரில்வாழும் கந்தசுவாமியானவர், - அத்தலம் காரனையான் அயன் ஏத் திடத் தங்கினன் - அந்தஸ்தலத்தினிடத்தே மேகம்போலும் விஷ்ணுமூர்த்தியும் பிரமதேவருந் துதிக்க இருந்தருளினார். எ-று. அலம் ஆகுபெயர். (4)
-------------

தங்கந்தனங்களடையத்தனியெனைத்தள்ளியங்கே
தங்கந்தனங்கடாச்சென்றனரறிந்தாரிலைகா
தங்கந்தனங்களலர்காக்கணாரெழிற்றண் செந்திலார்
தங்கந்தனங்கநிகர்செக்கர்செய்சஞ்சலத்தினையே. 5

(இ-ள்.) தனங்கள் தங்கம் அடையத் தனி எனைத்தள்ளி - என் முலைகள் பொன்போலும் தேமலைப்பொருந்தத் தனியாக என்னை இவ்விடத்திலே விட்டுப் பிரிந்து, -அங்கே தங்கு அம் தனங்கள் தரச்சென்றனர். (தாம்போன) அவ்விடத்தில் இருக்கின்ற அழகிய திரவியங்களைக் கொண்டு வரும்பொருட்டுப் போன என்னுடைய நாயகர், - காதம் கந்தம் கள் அலர் காக்கண் ஆர் எழில் தண் நம் செந்திலார்தம் கந்தன் -ஓர் காத தூரம் மணம் வீசுகின்ற தேன் பொருந்திய பூக்கள் நந்தன வனங்களிலே நிறைந்திருக்கப் பெற்ற அழகையும் குளிர்ச்சியையுமுடைய நமது திருச்செந்தூரில் வசிக்கின்றவர்களுடைய கந்தசுவாமியினது, - அங்கம் நிகர் செக்கர் செய் சஞ்சலத்தினை அறிந்தாரிலை - திருமேனியைப்போலும் இச்செவ்வானம் எனக்குச் செய்கின்ற துக்கத்தை உணர்ந்தாரில்லை. எ-று. (தலைவன் பிரிந்துழித் தலைவி மாலைப்பொழுதுகண்டிரங்கல்.) (5)
-------------

சலந்தரனாகந்தரித்தார்தந்தாதன்றன திடைச்சஞ்
சலந்தரனாகந்தரை நடந்தாலெனச்சார்ந்த தண்டன்
சலந்தரனாகந்தளரச்செற்றார் தனயன்றலநச்
சலந்தரனாகந்தனக்கிறைசேர் செந்திற் சார்ந்திடற்கே. 6

(இ-ள்.) சலம் தரம் நாகம் தரித்தார்- கங்கையையுந் தலைமாலையையும் சர்ப்பத்தையும் தரித்தவரும், - தம் தாதன்றன திடைச் சஞ்சலம் தர - தம்முடைய அடியாராகிய மார்க்கண்டே யரிடத்திலே துக்கத்தைக் கொடுக்கும் பொருட்டு, - நாகம்தரை நடந்த. லெனச்சார்ந்த தண்டன் - யானையானது பூமியிலே நடந்தாற்போலச்சேர்ந்த இயமனையும், - சலந்தரன் ஆகம் தளரச் செற்றார் தனயன்- சலந்தரனையும் உடலஞ்சோரும்படி கொன்றவருமாகிய பரமசிவனுடைய குமாரராகியும், - தரம் நாகந்தனக்கு இறை சேர் செந்தில் தலம் சார்ந்திடற்கு ந ச்சலம் - மேன்மையையுடைய மலைகளுக்குத் தலைவராகியுமிருக்கின்ற முருகக்கடவுள் வீற்றிருக்குந் திருச்செந்தூராகிய தலத்தையடைதற்கு யாம் விரும்பினோமில்லை. எ-று. (6)
-------------

சாரங்கஞ்சங்கரிகட்கிச்சித்தேய்ந்தகைச்சங்கரனார்
சாரங்கஞ்சங்கரிதாஞ்சக்கரங்கையிற்றாங்கினன் சேய்
சாரங்கஞ்சங்கரியா நண்ணினர்க்கந்தத்தந்திரத்தா
சாரங்கஞ்சங்கரிதேயெனச்செய்நின் சரணடந்ததே. 7

(இ-ள்.) சாரங்கம் சங்கரி கட்கு இச்சித்து ஏய்ந்தகைச்சங்க ரனார்-மானானது உமாதேவியினது கண்ணின தழகுக்கு விரும்பி வந்திருந்தாற்போலப் பொருந்திய கையையுடைய சங்கரரும், - சாரங்கம் சங்கு அரிதாம் சக்கரம் கையில் தாங்கினன் சேய் சார் அங்கம் சங்கரியா நண்ணினர்க்கு- சார்ங்கமென்னும் வில்லையும் சங்கையும் அரிதாகிய சக்கரத்தையும் கையிலே தரித்த விஷ்ணுமூர்த்தியுடைய புதல்வனாகிய மன்மதனுடைய பொருந்திய உடலத்தைக்கொன்று (முன்போலயோகத்து) இருந்தவருமாகிய பரமசிவனுக்கு,- அந்தத் தந்திரத்து ஆசாரம் வேதத்தின் முடிவாகிய சைவாகமத்தினது சீலத்தை,-கஞ்சம் கரிதேயெனச் செய் நின் சரண் தந்தது - செந்தாமரை மலரும் கரிதென்று சொல்லும்படி செய்கின்ற உம்முடைய பாதம் கொடுத்தது. எ-று. இரண்டாமடியிலே சார்ங்கமென்பது எதுகை நோக்கிச் சாரங்கமென ஓரகாம் விரியப்பெற்று நின்றது. (7)
-------------

தந்தனஞ்சங்கையணிகரர்சேர்க்கத்தடங்கணலை
தந்தனஞ்சங்கையலரென் செய்யாடங்கச்சற்சனர்நித்
தந்தனஞ்சங்கையகலறத்தீசெந்திற்சார்கதனித்
தந்தனஞ்சங்கைய நகனிளையனற்றாடரற்கே. 8

(இ-ள்.) சங்கை அணி கார் தம் தனம் சேர்க்கத் தடங்கண் அலை தந்தனம் - சங்குவளையலையணிந்த கையினை யுடைய பெண்கள் தங்கள் முலைகளிலே புணர்க்க அவர்களுடைய விசாலமாகிய கண்களினாலே யாம் அலைந்தோம்: -சம் கை - (இனி அவர்களோட்னுபவிக்குஞ் சுகத்தை நீ வெறுத்துவிடு;- அலர் என்- (இதனாலுண்டாகும்) பழிமொழி நமக்கு ஏன்? - செய் யாள் தங்கச் சற்சனர் நித்தம் தனம் சங்கை அகல் அறத்து ஈ- இலக்குமி வசிக்கச் சன்மார்க்கமுடைய சனங்களுக்கு எப்பொழுதுந் திரவியங்களை ஐயம் நீங்கிய தருமநெறியிலே கொடு: - தனித் தந்தன் அஞ்சு அங்கை அநகன் இளையன் நற்றாள் தரற்குச் செந்தில் சார்க - ஒற்றைக் கொம்பினையுடையவரும் ஐந்தாகிய அழகிய கையையுடைய பாவமில்லாதவருமாகிய விநாயகக் கடவுளுடைய தம்பியாராகிய சுப்பிரமணிய சுவாமியானவர் தம்முடைய நன்மையாகிய பாதங்களை நமக்குத் தரும்பொருட்டு அவர் வீற்றிருக்குந் திருச்செந்தூரை அடை. எ - று. (8)
------------

தரங்கனந்தாரனனியேற்றெழிற்செந்திற்றந்தை நிரந்
தரங்கனந்தாரகநாடினென் றேநினைசத்தியரந்
தரங்கனந்தார நகரீசர்சேய்கிரித்தையலர்க்கந்
தரங்கலந்தாரளகஞ்சிற்றிடைசலசய்கண்களே. 9

(இ-ள்.) தரங்கம் நந்து ஆரல் நனி ஏற்று எழிற்செந்தில் தந்தை- கடற்றிரைகள் சங்குகளை மதிலின்மேலே மிக ஏற்றுகின்ற அழகையுடைய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பிதாவாகியும், - நிரந்தரம் தாரகம் நாடின் கனம் என்று நினை சத்தியர் அந்தரங்கம் நந்தார் - எக்காலத்தும் பிரமஸ் வரூபத்தை விசாரிக்கில் நமக்கு மேன்மையாகுமென்று நினைக்கின்ற மெய்ஞ்ஞானிகளுடைய அந்தரங்கத்திலே கெடுதலின்றி விளங்குகின்றவரும்,- அநகர் ஈசர்-ஆணவமில்லாதவருமாகிய பரமசிவனுடைய,- சேய் கிரித் தையலர்க்கு- குமாரராகியு மிருக்கின்ற முருகக் கடவுளுடைய மலையிலிருக்கும் பெண்ணுக்கு.- தார் அளகம் கனம் - மாலையையுடைய அளகமானது மேகத்தைப் போலும்;-சிற்றிடை அந்தரம் - சிறுமையாகிய இடையானது ஆகாயத்தைப் போலும்;- கண்கள் சலசம் கண்களானவை செந்தாமரைமலரைப் போலும். எ-று. தலைவியின தவயவம் புகழ்தல். (9)
-------------

சங்கங்களங்கழனிக்கரைசேர்செந்திற்றங்கின நஞ்
ங்கங்களங்கரநண்ண ரன் சேயெய்தச்சார்ந்தனஞ்சற்
சங்கங்களங்கனியை நிகர்தண்டதாற்கினிய
சங்கங்களங்கரென நின்றயாங்கணெஞ்சக்கரைந்தே. 10

(இ-ள்.) சங்கங்கள் அம் கழனிக்கரை சேர் செந்தில் தங்கி னம் - சங்குகள் அழகையுடைய வயல்களினது கரைகளிலே பொருந்திய திருச்செந்தூரின் கண் இருந்தனம்; -நஞ்சம் கம் களம் கரம் நண் அரன் சேய் எய்த - நஞ்சும் தலையும் கழுத்திலுங் கையிலும் இருக்கப்பெற்ற பரமசிவனுடைய குமாரராகிய முருகக்கடவுளை அடையும் பொருட்டு, - சற்சங்கம் சார்ந்தனம்- சற்சங்கத்தைச் சேர்ந்தோம்;-களங்கனியை நிகர் தண்டதரற்கு இனி அசங்கம். களாப்பழத்தைப் போலும் நிறத்தையுடைய இயமனுக்கு இனி அஞ்சோம்;-களங்களான நின்ற யாங்கள் நெஞ்சம் கரைந்து - குற்றத்தையுடைவர்களாய் நின்ற நாங்கள் மனம் உருகி. எ-று. நாங்கள் மனமுருகி இருந்தன மெனக் கூட்டுக. (க0)
---------------

கரத்தரிக்கங்கணங்கட்டரனார் தந்தகந்தாழ
கரத்தீரிக்கங்கணங்கண்ட செய்ச்செந்திலெங்காங்கெயர்சா
கரத்தரிக்கங்கணங்கட்கய்னார்க்கெழிற்காசணிசே
கரத்தரிக்கங்கணங்கற்றிடத்தாங்கினர்கைச்சாத்தியே. 11

(இ-ள்.) கரத்து அரிக் கங்கணம் கட்டு அரனார் தந்த கந்தர் கையிலே சர்ப்பமாகிய கடகத்தைக் கட்டிய பரமசிவன் பெற்ற கந்தசுவாமியும், - அழகர்- அழகையுடையவரும், -அத்தர் - பிதாவும்,- இக்கு அங்கணம் கண்ட செய்ச் செந்தில் எங் காங்கெயர்- கரும்புகள் சேற்றினிடத்து உண்டாகப்பெற்ற வயல்களையுடைய திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற நம்முடைய காங்கேயருமாகிய முருகக் கடவுளானவர், - சாகரத்து அரிக்கு- திருப்பாற்கடலிலே நித்திரை செய்கின்ற விஷ்ணுமூர்த்திக்கும், அம் கணங்கட்கு-அழகிய (தேவர் முதலிய) கணங்களுக்கும், - அயனார்க்கு - பிரமதேவருக்கும், - எழிற்காசு அணி சேகரத்து அரிக்கு அழகையுடைய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட முடியையுடைய இந்திரனுக்கும், - அங்கு அணங்கு அற்றிட - அவ்விடத்தே (சூரன் முதலிய அசுரர்களாலுண்டாகிய) வருத்தம் நீங்கும் பொருட்டு, - கைச் சத்தி தாங்கினர் -- கையின் கண்ணே வேலாயுதத்தைத் தரித்தருளினார். எ-று. காங்கேயரென்பது காங்கெயரெனக் குறுக்கல் விகாரம் பெற்று நின்றது. (11)
----------------

சத்திக்கரத்தனகச்சேயங்கத்தினைத்தந்தனனற்
சத்திக்கரத்தனகச்சிலையாளிதன்றாளிணை நே
சத்திக்கரத்தனகத்தியைந்தேத்தரன்றந்தகதிர்ச்
சத்திச்காத்தனக செந்திலாய் நின் சரண்சரணே. 12

(இ-ள்.) சத்திக் கரத்தன் அகச் சேய் அங்கத்தினைத் தந்தன ன்-வலிமையையுடைய முதலையினது வயிற்றினுள்ளே புகுந்த பிராமணப்பிள்ளையினுடைய உடம்பை (சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருப்பதிகத்தின் பொருட்டு) அழைத்துக்கொடுத்தவரும்,-நல் சத்திக்கு அரத்தன் - நன்மையாகிய உமாதேவிக்கு நேர்பாதியாயின வரும், நகச்சிலை ஆளி - மகாமேருமலையை வில்லாக ஆண்டவரும்,- தன் தாளிணை - தம்முடைய இரண்டுபாதங்களையும், - நேசத்து இக்கர் அத்தன் அகத்து இயைந்து ஏத்து அரன் தந்த அன்பினைக் கருப்புவில்லையுடைய மன்மதனுக்குப் பிதாவாகிய விஷ்ணுமூர்த்தி மனசிலே பொருந்தித் துதிக்கின்ற சங்கார கர்த்தாவுமாகிய பரமசிவன் பெற்ற,-கதிர்ச் சத்திக் காத்து அனக- கிரணத்தையுடைய வேலாயுதத்தைத் தரித்த கையினையுடைய மலமுத்தரோ,- செந்திலாய். திருச்செந்தூரையுடையவரே,- நின் சரணே சரண் - உம்முடைய பாதங்களே எனக்குப் புகலிடம். எ-று. ஏழாவது செய்யுளில் சார்ங்கமென்பது போலவே, இச்செய்யுளின் இரண்டா மடியிலுள்ள அர்த்தன் என்பதும் அரத்தனென ஒரு அகரம் விரியப்பெற்று நின்றது. (12)
----------------

சரிதங்கையாரக்கலன்றந்தனந்தரித்தார் நர்கே
சரிதங்கையாரக்கரிடத்தினார் தந்த தண்செந்தினே
சரிதங்கையாரக்கணத்தின்னல்கைத்தல் சரதந்தஞ்சீர்ச்
சரிதங்கையாரக்கசிந்திசைக்கின்ற தகையினர்க்கே. 13

(இ-ள்.) சரி தம் கை ஆரக் கலன் தம் தனம் தரித்தார் நர கேசரி தங்கையார் அக்கர் இடத்தினார் தந்த - வளையலைத் தமது கையிலும் முத்து மாலையாகிய ஆபரணத்தைத் தமது முலையிலும் தரித்தவரும் நரசிங்கவுருவங்கொண்ட விஷ்ணுமூர்த்தியினுடைய தங்கையாரும் சங்குமணியை அணிந்த பரமசிவனது வாமபாகத்தை யுடையவருமாகிய உமாதேவியார் பெற்ற, - தண் செந்தில் நேசர் - குளிர்ச்சியையுடைய திருச்செந்தூரில் விருப்பத்தையுடைய முருகக்கடவுள்,- இத ம் கையார் - இன்பத்தை வெறாது செய்வார்;- அக்கணத்து இன்னல் கைத்தல் சரதம் - அந்தக்கணத்திலே துன்பத்தை வெறுத்தொழித்தல் சத்தியம்; - தம் சீர்ச்சரிதம் கை ஆரக் கசிந்து இசைக்கின்ற தகையினர்க்கு - தமது சிறப்பையுடைய சரித்திரத்தை ஒழுக்கம் பொருந்தும்படி மனங்கசிந்து சொல்கின்ற அன்பினையுடையவர்களுக்கு. எ-று. முருகக் கடவுள் அன்பினையுடையவர்களுக்கு இன்பத்தைச் செய்வார் துன்பத்தையொழித்தல் சாத்தியமெனக்கூட்டுக. (13)
-----------

இனனந்தியங்கிநிகர்த்தசெங்கேழன்கையீரிரண்டா
யினனந்தியங்கிரியைச்சிலையாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தியங்கியிருங்கஞ்சஞ்சேர் செந்திலெந்தைதளை
யினனந்தியங்கிசையக்கதியீந்தனனென் றனக்கே. 14

(இ.ள்.) இனன் அந்தி அங்கி நிகர்த்த செங்சேழன் - சூரியனையும் செவ்வானத்தையும் அக்கினியையும் போன்ற செந்திறத்தையுடையவரும், -கை ஈரிரண்டு ஆயினன் - திருக்கரங்கள் நான்காகப் பெற்றவரும், - நந்தி-மந்தியென்னுந் திருநாமத்தையுடையவரும்,-அம் கிரியைச் சிலையாக்கிதன் சேய்- அழகையுடைய மகாமேருமலையை வில்லாக்கிக் கொண்டவரு மாகிய பரமசிவனுடைய குமாரராகியும்,- எழிற் செய் இன ம் நந்து இயங்கி இரும் கஞ்சம் சேர் செந்தில் எந்தை- அழகைப்பொருந்திய வயல்களிலே கூட்டமாகச் சங்குகள் ஊர்ந்து சென்று பெருமையாகிய தாமரைகளிலே பொருந்தியிருக்கப் பெற்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் நமது பிதாவாகியும் விளங்குகின்ற முருகக்கடவுளானவர், - தளை இனல் நந்தி அங்கு இசைய - பாசத்தினது துக்கத்தாற் கெட்டுலைந்து அங்தஸ்தலத்தின் கண்ணே சோ, - என்றனக்குக் கதி ஈந்தனன் - எனக்கு மோக்ஷத்தைத் தந்தருளினார். எ-று. நான்காமடியிலே இன்னல் என்பது இனல் என இடைக்குறைந்து நின்றது. இச்செய்யுளை (இன்னந்தியங்கி) எனப் பாடமோதி அதற்கி) யையப் பொருள் கொள்ளுதலும் வழக்கம். (14)
-----------------

தனக்கடங்காரெயில்செற்றகங்காளன் றனயனங்கந்
தனக்கடங்காதிழி தந்திக்கிளையன்றளிமொழிற்சந்
தனக்கடங்காநிறைசெந்திலினற்சேய்சயில நங்கை
தனக்கடங்காணினச்சாரிலையண்ணறாணியிலே. 15

(இ-ள்.) தனக்கு அடங்கார் எயில் செற்ற கங்காளன் தன யன் - தமக்கு அமையாத அசுரீர்களுடைய மும்மதில்களையும்
அழித்த முழுவெலும்பையணிந்த பரமசிவனுடைய குமாரரும், -அம் கந்தன் - அழகைப்பொருந்திய கந்தசுவாமியும், அக்கடம் காது இழி தந்திக்கு இளையன் - அந்த மதமானது காதினின்றும் சொரிகின்ற யானையாகிய விநாயகக்கடவுளுக்குத் தம்பியும், - தளிர் எழிற் சந்தனக் கடம் கா நிறை செந்தி லில் நற்சேய் - தளிர்களைப் பொருந்திய அழகையுடைய சந்த பனமரங்களின் காடுகளும் பூஞ்சோலைகளும் நிறையப்பெற்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் நல்ல இளையோருமாகிய சுப்பிரமணிய சுவாமியினது, - சயில நங்கை தனக்கடம் காணி ன்- மலையிலிருக்கின்ற பெண்ணினுடைய தனமாகிய குடங்களைக் காண்பாராயின்,- அண்ணல் தரணியில் நச்சார் இலை தலைவனே, இப்பூமியின் கண்ணே விரும்பாதாரில்லை. எ - று. (பாங்கன் தலைவியை வியத்தல்.) (15)
---------------

தரணியனைய நிறத்தண்ணலாரிரந்தன்றளந்த
தரணியனையனிறைஞ்சயிலார் நற்றனிச்சிலையார்
தரணியனையனகனணையந்தரிதந்திடுகந்
தரணியனையனெஞ்சேயலர்த்தாள் கடரித்திறைஞ்சே. 16

(இ-ள்.) தரணி அனைய நிறத்து அண்ணலார் - சூரியனைப்போன்ற நிறத்தையுடைய பெருமையிற் சிறந்தவராகியும், - அன்று இரந்து அளந்த தரணியன் அயன் இறைஞ்சு அயிலார் - அக்காலத்து யாசித்து அளக்கப்பட்ட பூமியையுடைய விஷ்ணு மூர்த்தியும் பிரமதேவரும் வணங்குகின்ற வேலாயுதத்தை யுடையவராகியும் , -நல் தனிச் சிலையாம் தரணியன் ஐ அனக ன் அணை அந்தரி தந்திடு கந்தர்-நல்ல ஒப்பில்லாத வில்லாகிய மலையையுடைய வரும் அழகினையுடைய மலரகிதருமாகிய பரமசிவனைச்சேர்ந்த உமாதேவி பெற்றருளிய கந்தசுவாமியாகியு மிருக்கின்ற முருகக்கடவுளே, - அணி அல் - (நமக்குப்) பெருமைபொருந்திய அரணாயிருக்கின்றார்;- நெஞ்சே நையல் - மனமே, நீ வருந்தாதே;-அலர்த் தாள்கள் தரித்து இறைஞ்சு அவருடைய செந்தாமரைமலர்போலுந் திருவடிகளைத் தாங்கி வணங்கு. எ-று. அல்லென்பது மதிலுக்குப் பெயராமாறு "இரவு மிருளு மிரும்பின் பெயரு- மெயிலு மிரவியு மல்லென லாகும்" என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்தாலுணர்க. (16)
----------------

தரிக்கனந்தங்கலை நீள்சடைக்கைக்கனற்சங்கானந்
தரிக்கனந்தங்கலை நீதிகள் சாற்றரன்றந்தபற்கந்
தரிக்கனந்தங்கலை நீர்ச்செய்க்கணாஞ்செந்திலார்தளையா
தரிக்க னந்தங்கலை நீத்திழந்தேங்கரச்சங்கங்களே. 17

(இ.ள்.) தரிக்க நந்து அம் கலை நீள் சடைக் கைக்கனற் சங் கரன் - தன்னைச் சூடிக்கொண்ட மாத்திரத்தில் ஆக்கம் பெற்ற அழகிய சந்திரகலையையுடைய நீண்ட சடையையும் கையிலே பொருந்திய அக்கினியையுமுடைய சங்கரரும்,-அந்தரி க்கு அனந்தம் கலை நீதிகள் சாற்று அரன் - உமாதேவிக்கு முடிவில்லாத சாஸ்திர மார்க்கங்களை உபதேசித்த சங்கார கர்த்தாவுமாகிய பரமசிவன், - தந்த நற் கந்தர் - பெற்ற நன்மையையுடைய கந்தசுவாமியாகியும், -இக்கு அனம் தங் கு அலை நீர்ச் செய்க்கண் ஆம் செந்திலார் - கரும்புகளானவை அன்னங்கள் இருக்கின்ற அலையையுடைய ஜலம் பொருந்திய வயல்களிலே உண்டாகப்பெற்ற திருச்செந்தூரையுடை யவராகியு மிருக்கின்ற முருகக் கடவுளுடைய, - தளை ஆதரிக் க- மாலையை விரும்பின மாத்திரத்தில், -நந்தம் கலை நீத்துக் கரச் சங்கங்கள் இழந்தேம் - நம்முடைய வஸ்திரத்தை நீங்கிக் கையிலிருந்த சங்க வளையல்களையும் இழந்தனம். எ-று. (முருகக்கடவுள் பவனி வருதல் கண்டு மால்கொண்டு வஸ்திரமும் வளையலு மிழந்து நின்ற மகளீர் சொல்லியது.) (17)
-------------------

சங்கரியக்கநிகர்த்தநின்றாதைதகையதென்னச்
சங்கரியக்கரிறைஞ்செழிற்செந்திற் சடானனகஞ்
சங்கரியக்கதிர்தானிசைகின்ற சரணத்தினாற்
சங்கரியக்கணத்தேயெற்செறியந்தகற்சினந்தே. 18

(இ-ள்.) சங்கரி அக்கம் நிகர்த்த நின் தாதை தகையது என்ன - உமாதேவியுடைய கண்ணைப் போன்ற உம்முடைய பிதாவாகிய பரமசிவனது செய்கையைப்போல, - சங்கு அரி யக்கர் இறைஞ்சு எழிற்செந்திற் சடானன - சங்கையுடைய விஷ்ணு மூர்த்தியும் இயக்கர்களும் வணங்குகின்ற அழகையுடைய திருச்செந்தூரில் வாழும் ஆறு திருமுகங்களையுடையவரோ, -கஞ்சம் கரியக் கதிர் இசைகின்ற சரணத்தினால் சங் கரி - தாமரை மலரும் கருகும்படியாக ஒளி பொருந்துகின்ற உம்முடைய பாதத்தினாற் கொன்றருளும், -அக்கணத்தே எற்செறி அந்தகற் சினந்து - அந்தக்கணத்தே என்னைச் சேரும் இயமனைக் கோபித்து. எ - று. இயமனைக் கோபித்துக் கொன்றருளுமெனக் கூட்டுக. தான் அசை. (18)
-----------------

தகரனலங்கநிறைநிறத்தான் செந்திற்றந்தைசங்கேய்ந்
தகானலங்கனளினாதனத்தினன்றாழள கந்
தகரனலங்கடரநின்ற சத்தியன்றாளெனினந்
தகரனலங்களன்றாலெனச்சீறிடத்தக்கரன்றே. 19

(இ-ள்.) தகரன் - மேடவாகனத்தை யுடையவராகியும், நல் அங்கம் நிறை நிறத்தான் - நன்மையாகிய திருமேனியிலே நிறைந்த வண்ணத்தையுடையவராகியும், - செந்தில் தந்தை - திருச்செந்தூரில் வாழும் பிதாவாகியும், --சங்கு ஏய்ந் தகரன் அலங்கல் நளினாதனத்தினன் தாழ் - சங்கு பொருந்திய கையையுடைய விஷ்ணுமூர்த்தியும் மாலையை யணிந்த தாமரையாசனத்தினையுடைய பிரமதேவரும் வணங்குகின்ற, அளகம் தகா நலங்கள் தர நின்ற சத்தியன் - அளகமானது மயிர்ச்சாந்தாலாகிய இன்பத்தைத் தரும்படி நின்ற கிரியா சத்தியாகிய தெய்வயானையையுடையவராகியு மிருக்கின்ற கந்தசுவாமியினுடைய, - தாள் எனின் - பாதமென்பேனாயின்,- அந்தகர் அனலம் கனன்றாலெனச் சீறிடத் தக்கரன்று. யமனார் வடவாமுகாக்கினி சுவாலித்தாற்போலக் கோபித்த ற்குத் தக்கவரல்லர். எ-று. (19)
----------------

தக்கனகத்தினடறணித்தானயன்றன் கதிசந்
தக்கனகத்திகிரிக்கரனாக்கங்கடந்தளிக்கத்
தக்கன கத்தியனை யாளியென்னெஞ்சதாஞ்சலசந்
தக்கனகத்தினகரன்றன் செந்திலைச் சந்திக்கினே. 20

(இ-ள்.) தக்கன் அகத்தின் அடல் தணித்தான் (கதி) - தக்கனுடைய அகங்காரத்தினது வலிமையை அடக்கிய உருத்திர மூர்த்தியினுடைய பதத்தையும், - அயன்றன் கதி - பிரமனுடைய பதத்தையும், -சந்தக் கனகத் திகிரித் கரன் ஆக்கங்கள் - அழகினையுடைய பொன்மயமாகிய சக்கரத்தைத் தரித்த கையையுடைய விஷ்ணுவினது செல்வத்தையும், - தந்து அளிக்கத் தக்கன் - தந்து காக்கத்தக்கவர், - அகத்தியனை ஆளி - அகஸ்திய மகாமுனிவரை ஆண்டருளினவரும், - என் நெஞ் சதாம் சலசம் தக்கன் நகு அத்தினகரன் - என்னிதயமாகிய தாமரை மலருக்கு அன்பராகி விளங்குகின்ற அந்த ஞான சூரியருமாகிய முருகக் கடவுளானவர்,- தன் செந்திலைச் சந்திக் கின் - தம்முடைய திருச்செந்தூரைச் சந்திக்கில். எ-று. முருகக் கடவுளானவர் தம்முடைய திருச்செந்தூரைச் சந்திக்கில் உருத்திரமூர்த்தியினுடைய பதத்தையும் பிரமனுடைய பதத்தையும் விஷ்ணுவினுடைய செல்வத்தையும் தந்து காக்கத்தக் கவரெனக் கூட்டுக. (20)
----------------

சந்தத்தனத்திகடந் திறத்தாசைதலத்தினிச்சை
சந்தத்தனத்தினசைதீரடியன்றன திலிற்சேர்
சந்தத்தனத்திய தளான்றன யதடக்கயல்கஞ்
சந்தத்தனத்தினினங்கீழிழிசெந்திற்றங்கினற்கே, 21

(இ-ள்.) சந்தத் தனத்திகள் தம் திறத்து ஆசை - சந்தனத் தையணிந்த தனத்தையுடைய பெண்களது காரணத்தாலாகிய ஆசையையும், - தலத்தின் இச்சை மண்ணில் வைக்கப்படும் ஆசையையும்,-சந்தத் தனத்தின் நசை தீர் - அழகையுடைய பொன்னிலேறும் ஆசையையும் தீர்த்தருளும்; -அடிய ன்றனது இல் இல் சந்து சேர் அத்தன் அத்தி அதளான் தன ய- தமதடியாராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடைய மனைவியாகிய பரவையினது வீட்டிலே தூதாகச் சென்ற பிதாவும் யானையினது தோலையுடையவருமாகிய பரமசிவனுடைய குமாரரோ,- தடக்கயல் கஞ்சம் தத்த நத்தினினம் கீழ் இழி செந்தி ல் தங்கினற்கு - பெரிய கயன் மச்சங்கள் தாமரை மலரிலே பாய (அதின் மேற்றுயின் ந)சங்குக் கூட்டங்கள் கீழேயிறங்கப்பெற்ற உம்முடைய திருச்செந்தூரிலே வந்து வசித்த எனக்கு. எ-று. பரமசிவனுடைய குமாரரே எனக்குப் பெண்களது காரணத்தாலாகிய ஆசையையும் மண்ணில் வைக்கப்படுமாசையையும் பொன்னிலேறுமாசையையும் தீர்த்தருளுமெனக் கூட்டுக. (21)
--------------

தங்கச்சினகரநேராக்கலந்திச்சக நிறைந்தார்
தங்கக் சினகரநேயர்தனயன்றனக்கினிதாந்
தங்கச்சினகர நீள் செந்தினாட்டிற்றனகரிதந்
தங்கச்சினகரநற்கனனென்னங்கடையலர்க்கே. 22

(இ-ள்.) தங்கு அச்சின் அகரம் நேராக் கலந்து இச்சகம் நிறைந்தார் - பொருந்திய உயிரெழுத்துக்களுக்குள்ளே அகரமாகிய அக்கரத்தைப்போன்று உயிர்கள் தோறும் பொருந்தி இவ் வுலகத்திலே வியாபித்தவரும், - தம் கச்சி நகரம் நேயர் - தம்முடைய காஞ்சீபுரத்தில் விருப்பத்தையுடையவருமாகிய பரமசிவனுடைய, - தனயன்றனக்கு இனிதாம்- குமாரராகிய முருகக் கடவுளுக்கு இனியதாகிய , - தங்கச்சினகரம் நீள் செ ந்தில் நாட்டில் - பொன்னாலாகிய கோயிலானது உயர்ந்திருக்கப்பெற்ற திருச்செந்தூரைத் தன்னிடத்துடைய நாட்டின்கண்ணே , - கரி தந்தத் தனம் கச்சில் நகர நற்கனன் என் நங் கள் தையலர்க்கு- யானையினது கோட்டைப்போலும் தனங்கள் கச்சுள்ளே நின்றும் பிதுங்குதற்கு நல்ல கனம் யாதுகாரணத்தால் உண்டாயது எங்களுடைய பெண்ணுக்கு? எ-று. பாங்கியே நீ சொல்லென்பது எஞ்சி நின்றது. (செவிலி தலை வியினது முலையிறுமாப்பைக் கண்டு ஐயுற்றுப் பாங்கியை வினாவல்.) (22)
--------------

அலரி நன்ந்தலையாழிகண்டாங்குச்சிகியினிடை
யலரினனந்தநிகரயிலான் செந்திலாயிழையை
யலரினனந்தநினை நிலந்தேர்ந்ததற்கன்றயலா
ரலரினனந்தஞ்சொலற்கிடனாநெஞ்சழிகின்றதே. 23

(இ-ள்.) ஆழி நனந்தலை அலரி கண்டாங்கு - சமுத்திரத்தின து நடுவிலே சூரியன் தோன்றினாற்போல, -சிகியினிடை அ லர் இனன் - மயில்வாகனத்திலே விளங்குகின்ற தலைவரும், அந்தம் நிகர் அயிலான் - அழகிய ஒளிபொருந்திய வேலாயுதத்தையுடையவருமாகிய முருகக் கடவுளது,- செந்தில் ஆயி ழை - திருச்செந்தூரிலிருக்கும் பெண்ணுக்கு, - ஐயலர் இனல் நந்த நினை நிலம் தேர்ந்ததற்கு- ஐந்து புஷ்ப பாணங்களாலாகிய துன்பங்கெடும்படி உன்னை இந்நாட்டின் கண்ணே தேடியதற்கு, - அன்று அயலார் அலரின் அனந்தம் சொலற்கு இடனா நெஞ்சு அழிகின்றது - அந்நாளிலே அயலவர்கள் பழி மொழியாக அளவில்லாத வார்த்தைகளைப் பேசுதலுக்கு இடமாக மனம் வருந்துகின்றது. எ-று. அலரறிவுறுத்தல். (23)
-------------

தேயத்தியங்கியலகிறலங்களிற் சென்றடிக
டேயத்தியங்கியலையறிடங்கதிசேர்தலறைந்
தேயத்தியங்கின நித்திலந்தானெறிசெந்திலடைந்
தேயத்தியங்கி தரித்தான் றனயற்றெரிசிக்கினே. 24

(இ-ள்.) தேயத்து இயங்கி அலகில் தலங்களில் சென்று அடிகள் தேயத் தியங்கி அலையல் - தேசங்கள் தோறுஞ் சஞ்சரித்து அளவில்லாத க்ஷேத்திரங்களிலே போய்க் கால்கள் தேயும்படி தியங்கி அலையாதே, -கதி சேர்தல் திடம் - மோக்ஷத்தை அடைதல் நிச்சயம்: - அறைர்து அத்தி அங்கு இனம் நி த்திலம் எறி செந்தில் அடைந்து- ஆரவாரித்துச் சமுத்திரமானது அவ்விடத்திற் கூட்டமாகிய முத்துக்களைக் கரையிலெறியப்பெற்ற திருச்செந்தூரைச் சேர்ந்து, -ஏய் அத்தி அங்கி தரித்தான் தனயன் தெரிசிக்கின் - அவ்விடத்திலிருக்கின்ற எலும்பையும் அக்கினியையும் தரித்த பரமசிவனுடைய குமாரராகிய முருகக் கடவுளைத் தரிசிக்கில். எ-று. முருகக்கடவுளைத் தரிசிக்கில் மோக்ஷத்தையடைதல் நிச்சயமெனக் கூட கே. மூன்றாமடியின் முதலிலிருக்கும் ஏகாரம் அசைநிலை. (24)
---------------

சிக்கத்தனங்கடிறக்கின்றகன்னியர்சிந்தைகனே
சிக்கத்தனங்களளித்தழிந்தேற்கெழிற் செந்திறரி
சிக்கத்தனங்கழலையேத்தநல்கினன் சீர்நிறைகா
சிக்கத்தனங்களகிலே சன்றந்ததிறற் கந்தனே. 25

(இ-ள்.) சிக்கத் தனங்கள் திறக்கின்ற கன்னியர் சிந்தைகள் நேசிக்க - கண்டவர்கள் தங்களிடத்தில் அகப்படும்படி முலைகளைத் திறவாநின்ற பெண்களுடைய மனம் விரும்பும் பொருட்டு,- தனங்கள் அளித்து அழிந்தேற்கு - திரவியங்களை அவர்களுக்குக் கொடுத்துக் கெட்டவனாகிய எனக்கு, - எழிற்செ ந்தில் தரிசிக்க - அழகையுடைய திருச்செந்தூரைத் தரிசிப்பதற்கும், - தன் அம் கழலை ஏத்த - தம்முடைய அழகிய பாதத்தைத் துதிப்பதற்கும், நல்கினன் - அருள் செய்தார்,- சீர் நிறை காசிக்கத்தன் நங்கள் அகிலேசன் தந்த திறற்கந்தன் - சிறப்புப் பொருந்திய காசியில் வீற்றிருக்கும் கருத்தாவாகிய எங்கள் விசுவநாதசுவாமி பெற்ற வலிமையையுடைய கந்த சுவாமியானவர். எ - று. கந்தசுவாமியானவர் எனக்குத் திருச்செந்தூரைத் தரிசிப்பதற்கும் தம்முடைய பாதத்தைத் துதிப்பதற்கும் அருள் செய்தாரெனக் கூட்டுக. (25 )
--------------

கந்தரங்கானந்தனிற்சென்றடங்கிலென்காசிக்கநே
கந்தரங்கானக்தநண்ணிலென் கன்னியர்கட்டளக
தந்தரங்கானந்தநின் றாடெழிற்செந்திற்கண்டிறைஞ்சிக்
கந்தரங்கானந்த நல்கச்சனனங்கடந்திலரே. 26

(இ-ள்.) கந்தரம் கானந்தனில் சென்று அடங்கில் என் முழையிலும் காட்டிலும் போய்ப் புலனொடுங்க இருந்ததனாற் பயன் யாது?- காசிக்கு அநேகந்தரம் கால் நந்த நண்ணில் என் - காசிக்கு அநேகமுறை கால்கள் வருந்தும்படி போன தினாற் பயன் யாது?-- கன்னியர் கந்தரம் கட்டு அளகம் கான் நந்த நின்று ஆடு எழிற்செந்தில் கண்டு இறைஞ்சி - பெண்கள் மேகம்போலும் நிறத்தையுடைய கட்டப்பட்ட அளகத்திலே வாசம் மிக நின்று நடிக்கின்ற அழகையுடைய திருச்செந்தூரைத் தரிசித்து வணங்கி, - கந்தர் அங்கு ஆனந்தம் நல்க - முருகக்கடவுள் அவ்விடத்திற் சிவானந்தத்தை அருள, - சனனம் கடந்திலர் - அதனாலே தங்கள் பிறவியை நீங்காதவர்கள். எ-று. சிவானந்தம்போற் கர்மயோகங்கள் பயன்படாவென்பது கருத்து. (26)
-----------

கடனந்தினாகத்ததளாடையாயெனைக்காக்கனிற்கே
கடனந்திநானிறத்தாயென நாரணன் கண்டிறைஞ்செங்
கடனந்திநாதன்றன யாற்செந்திலிற்காரிகையே
கடனந்தினாய கங்காதலர்தேரிற்கலிக்கின்றதே. 27

(இ-ள்.) கடம் நந்து இல் நாகத்து அதள் ஆடையாய் - மத ங் கெடுதலில்லாத யானையினது தோலாகிய வஸ்திரத்தையுடையவரே,- எனைக் காக்கல் நிற்கே கடன் - அடியேனை இரக்ஷித்தல் உமக்கே கடனாம், - அந்தி நாண் நிறத்தாய் என - செக்கர்மேகம் நாணத்தக்க செந்நிறத்தையுடையவரே என்று, -நாரணன் கண்டு இறைஞ்சு எங்கள் தம் நந்திநாதன் தனயன் - விஷ்ணுமூர்த்தி தரிசித்து வணங்குகின்ற எங்களுடைய நந்தியென்னும் பெயரைப் பொருந்திய பரமசிவனுடை ய குமாரராகிய முருகக்கடவுளது, - நற்செந்திலில் காரிகை யே -நன்மையாகிய திருச்செந்தூரிலிருக்கும் பெண்ணே, கடல் நந்தின் நாயகம் காதலர் தேரில் கலிக்கின்றது- சமுத்திரத்திலே தோன்றிய சங்குகளுடைய நாயகமாகிய வலம் புரி உன்னுடைய தலைவரினது தேரிலே சந்திக்கின்றது. எ-று. (பாங்கி வலம்புரிகேட்டுத் தலைவனது வரவறிவுறுத்தல்.) (27)
---------------

கணக்காக நாய்கடின் காயநிலையெனக்கண்ணியென்ன
கணக்காக நானலைந்தெய்த்தேனெழிற்செந்திற்கந்தநெற்றிக்
கணக்காகனார் தந்த நின்றனையேயினிக்காதலினாற்
கணக்காகனா நிகர்த்தேயழியங்கத்தின் காதலற்றே. 28

(இ-ள்.) கணக்காகம் நாய்கள் தின் காயம் நிலையெனக் கண்ணி - கூட்டமாகிய காகங்களும் நாய்களும் உண்கின்ற சரீரத்தை நித்தியுமென்று நினைத்து, - என்ன கணக்கு ஆக நான் அலைந்து எய்த்தேன் - என்ன தாற்பரியத்தின் பொருட்டு யான் அலைந்து இளைத்தேன்?- எழிற்செந்தில் கந்த - அழகையுடைய திருச்செந்தூரில் வீற்றிருக்குங் கந்தசுவாமீ, நெற்றிக்கண் அக்கு ஆகனார் தந்த நின்றனையே - நெற்றிக்கண்ணையும் எலும்பு மணியைத் தரித்த திருமேனியையுமுடைய பரமசிவன் பெற்ற உம்மையே,- இனிக் காதலினால் கணக் கா - இனி விருப்பத்தினாலே தியானிக்கும் பொருட்டு (இடையூறு வராமற்) காத்தருளும், -கனா நிகர்த்து அழி அங்கத்தின் காதல் அற்று.- சொப்பனத்தைப்போன்று அழிகின்ற சரீரத்தில் வைத்த விருப்பம் நீங்கி. எ-று. கண்ண என்றது கண என இடைக்குறைந்து நின்றது. சரீரத்தில் வைத்த விருப்பம் நீங்கி உம்மையே தியானிக்கும் பொருட்டுக் காத்தருளு மெனக் கூட்டுக. (28)
--------------

காதலையானின் றனக்காக்கினனினிக்காயந்தந்தே
காதலையானின் றனக்காரணனடிக்கஞ்சங்கணீங்
காதலையானின் றகங்கரைந்தேத்தரன் கண்ணியராக்
காதலையானின்ற சங்கரன்சேய்செந்திற்காங்கெயனே. 29

(இ-ள்.) காதலை யான் நின்றனக்கு ஆக்கினன் - விருப்பத்தை நான் உம்மேல் வைத்தேன் ;- இனிக் காயம் தந்து காதல்-இனிச் சரீரத்தைப் படைத்துக் கொல்லாதொழியும். -- ஐ யான் - சூக்குமரூபியும் , - இன் தனம் காரணன் - இனிமையாகி ய அருட்செல்வத்துக்குக் காரணரும், அடிக் கஞ்சங்கள் நீ ங்காது அலையான் நின்று அகம் கரைந்து ஏத்து அரன்- தம்முடைய பாதமாகிய தாமரை மலர்களை நீங்காமல் திருப்பாற்கடலிலே நித்திரை செய்யும் விஷ்ணுமூர்த்தி முன்னின்று மனம் உருகித் துதிக்கப்பெற்ற சங்காரகர்த்தாவும், - கண்ணி அ ராக் காது அலையாநின்ற சங்கரன் சேய் - மாலையாகச் சர்ப்பம் காதுகளிலே அசைகின்ற சுகஞ்செய்பவருமாகிய பரம சிவனுடைய குமாரரே, - செந்தில் காங்கெயனே - திருச்செந்தூரிலிருக்கின்ற கங்கா புத்திரரே. எ-று. சனன மரண துக்கங்களை நீக்கி நித்திய பேரின்பமயமாகிய மோக்ஷத்தைத் தந்தருளும் என்பது கருத்து. (29)
-----------------

காயங்கலைய நலியந்தகனணைகாலஞ்செய்ய
காயங்கலைய தளானில நீரழல்காற்றெழிலா
காயங்கலையனலரிசித்தாயினன் காதலழ
காயங்கலைய திருஞ்செந்திலாயென் ககன்றனெஞ்சே. 30

(இ-ள்.) காயம் கலைய நலி அந்தகன் அணை காலம்- சரீரம் நீங்கும்படி வருத்துகின்ற இயமன் வருங்காலத்திலே, - செ ய்ய காயம் கலை அதளான் - (சாக்கிய நாயனாரெறிந்த செங்க ல்லாலாகிய) சிவந்த தழும்பையும் கலைமானினது தோலையுமுடையவராகியும், - நிலம் நீர் அழல் காற்று எழில் ஆகாயம் க லையன் அலரி சித்து ஆயினன் - பிருதிவியும் அப்புவும் தேயுவும் வாயுவும் அழகையுடைய ஆகாசமும் சந்திரனும் சூரியனும் ஆன்மாவும் ஆயினவராகியுமிருக்கின்ற பரமசிவனுடைய, காதல் அழகு ஆய் - குமாரராகிய முருகக் கடவுளினது திருவுருவத்தைத் தியானி; - அங்கு அலை அதிரும், செந்திலாய் என்க - அவ்விடத்தே சமுத்திரம் ஒலிக்கின்ற திருச்செந்தூரையுடையவரே என்று சொல்லு; - கன்றல் நெஞ்சே - வருந்தாதொழி என் மனமே. எ - று. என்மனமே இயமன் வருங்காலத்திலே வருந்தாதொழி முருகக்கடவுளினது திருவுருவத்தைத் தியானி திருச்செந்தூரையுடையவரே என்று சொல்லு எனக் கூட்டுக. சரோந்தியத்திலே மனமானது எப்பொருளிலே சிந்தனை வைத்ததோ அப்பொருளே கைகூடும் என் பது சாஸ்திரசித்தம். ஆதலால், இப்படி உணர்த்தியருளினார்.
எக்காலத்திலும் இடைவிடாமல் வைத்த சிந்தனை எதுவோ அதுவே சரீராந்தியத்திலும் வருவது ஆகையால், முருகக்கடவுளைத் தியானித்தலை எக்காலத்திலும் இடைவிடாது செய்தாலொழியச் சரீராந்தியத்திலே செய்தல் கூடாது எனவும் அதனால் எப்பொழுதும் தியானிக்கவேண்டும் எனவும் அறிந்து கொள்க. (10)

திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதியுரை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்
------------

சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்கள்

சோணசைல மாலை PM830
நால்வர் நான்மணி மாலை PM138, PM831
நிரோட்டக யமகவந்தாதி PM832
பழமலையந்தாதி PM306
பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை PM298
திருவெங்கைக் கோவை PM833
திருவெங்கைக் கலம்பகம் PM834
திருவெங்கை மான்மியம்
திருவெங்கையுலா
திருவெங்கை யலங்காரம் (இன்று கிடைக்கப்பெறவில்லை)
இட்டலிங்க அபிடேக மாலை PM436
இட்டலிங்க வகவல்
இட்டலிங்க நெடுங்கழிநெடில் PM436
இட்டலிங்க குறுங்கழிநெடில் PM436
இட்ட லிங்க அபிடேக மாலை
சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதூது
சிவஞானபாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி
சிவஞானபாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கூவப் புராணம்
பிரபுலிங்கலீலை
நன்னெறி PM139
நிரஞ்சன மாலை PM436
கைத்தல மாலை PM436
சிவநாம மகிமை PM436
தருக்க பரிபாஷை
சதமணிமாலை
சித்தாந்த சிகாமணி
வேதாந்த சூடாமணி
ஏசுமத நிராகரணம்
சிவப்பிரகாச விகாசம்
இயேசுமத நிராகரணம்
தலவெண்பா (இன்று கிடைக்கப்பெறவில்லை)
------------------

This file was last updated on 8 Feb. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)