துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம்
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
Sri civanjAnapAlaya tEcikar kalampakam
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம்
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
(பனுவல் திரட்டு )
Source:
1. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்.,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978.
2. நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இந்நூல் திருக்கயிலாய பரமபரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதின பரம்பரைத் தர்மகர்த்துவம் பதினெட்டாம் பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் வெளியிட்டருளியது
பதிப்பகம் : ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்,
சுபானு ௵, 1944, பதிப்புரிமை, விலை ரூ. 5.
------------
ஸ்ரீ சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம்.
கணபதி துணை.
ஸ்ரீ சிவஞானபாலைய தேசிகர் திருவடி வாழ்க.
காப்பு.
நேரிசை வெண்பா.
சித்தி தருங் கச்சிச் சிவஞான தேசிகன்மேற்
பத்தி தரும் பல்வகைய பாட்டுதவு- மத்தி
யலங்கலா வானை யடுத்தபிடி யீன்ற
விலங்கலா வானை விரைந்து.
மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.
நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கயிலைக் கிரியாகப்
பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக்
காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப்
பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக
ஞாலத்த களிறனைத்து நகைமணிப்பாம் பிறையாக
வாலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய்!.
(இது ஆறடித்தரவு.)
தன்னிலையு மெதிர்காட்டாத் தமமாகு மாணவநோய்
நின்னையல தெஞ்ஞான்று நீங்குவது தானன்றே
துன்னிருள்வாய் முழங்கு திரைச் சுருட்டுகடன் முகட்டெழுந்த
மன்னுகதி ராலன்றி மற்றொன்றான் மாயுமோ.
தத்துவமாந் திரையெழுந்த தனிமாயப் பெருங்கடலுன்
மெய்த்ததாட் புணையன்றி வேறொன்றாற் கடப்பரிதே
மைத்திரைவார் கடலியன்ற மரக்கலங்கொண் டன் றுபோ
யித்தரைவாழ் மனிதர்கடந் தேறுவதற் கொன் றுண்டோ .
பழியிலா வறங்கள் பல பயின்றாலு முன்றிருவாய்
மொழியினா வன்றிவான் முத்திநிலை கிடையாதே
விழியினா லலதுலகின் மேவுமுருப் பிறிதுபொறி
விழியினா லெதிர்காணு மனிதர்தா முளர்கொலோ.
[இவை மூன்றும் நான்கடித்தாழிசை.]
கொடுமிடி கெடவடு கொடைபடு நடையினை
சடையொடு நதிபணி தவழ்மதி யொருவினை.
மறையறை முறையற மறமற வருளினை
பொறிநெறி மறுகுறு புலனிலை யலகிலை.
யரிகரி பகையிகு மணிமணி மயிலையை
வரியரி மதர்விழி மலைமக ணகரினை.
(இவை மூன்றும் ஈரடியராகம்.)
முன்னாளி லொருஞான முளையயின்ற வாரமுத
மெந்நாளு முண்கின்றா யாரேநின் னளவறிவார்.
நவத்தமிழ்வே தம்புகலு நன்மொழியிங் குண்பை பெறத்
தவத்தொடுதா னஞ்செயுமோர் தன்மையுனக் கல துண்டோ .
மெய்யிலே பொய்தோன்றி மெய்யாக மயக்குறுமப்
பொய்யிலே பொய்தோன்றப் புகலுமுனைப் புகல்வார்யார்.
இருப்பம்பு பட்டுருவ வெய்தாலும் தளராமற்
கருப்பம்பு படாவண்ணம் காப்பவர்க்குத் துணை நீயே.
கருமேனி யொழிந்தடியேங் கதிகாண நீயருளாற்
றிருமேனி கொண்டிருந்து செய்ந்நன்றி மறப்பேமோ.
தவப்பிணிக்கு மூலமலந் தான்மூல மாய்க்கிளைக்கும்
பவப்பிணிக்கு மருந்துனது பார்வையே தானன்றோ.
(இவையாறும் ஈரடித்தாழிசை)
வாத மாற்று நீ, போத் மாற்று நீ,
வாய்மை யாக்கு நீ, தீமை போக்கு நீ.
[இவை நான்கும் முச்சீரோரடி யம்போதரங்கம்.]
வசைகெடுத்தனை, யிசைகொ டுத்தனை,
செயலொ ழித்தனை, மயல ழித்தனை,
யறம்வி ரித்தனை, மறமி ரித்தனை,
விழைவ அத்தனை, பிழைபொ றுத்தனை,
(இவையெட்டும் இருசீரோரடி யம்போதரங்கம்.)
எனவாங்கு -(இது தனிச்சொல்.)
நாவலர் புகழ்சிவ ஞான தேசிக
வெவ்வ மகன்ற சைவ நாயக
நின்னடிக் கமல நெஞ்சுற விருத்தி
நறுமலர் தூவி நாடொறும் பரவு தூஉஞ்
செல்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்குங்
காதிற் றீம்பால் கமர்கவிழ்த் தாங்கு
பாப்பல பன்முறை பர்டிநின்னைப்
பாடா மாந்தர் பக்கற்
கூடா வடியரிற் கூட்டுக வெனவே.
இது ஒன்பதடி நேரிசை யாசிரியச்சுரிதகம். (1)
நேரிசை வெண்பா.
வேவ பலரும் விழிகரந்த நின்னைமதன்
றேவ சிவஞான தேசிகா- மேவிலனென்
னுள்ள மறிந்த வொருநின் றிருமேனிக்
கள்ள மறிந்தனனென் கண்டு. 2
கட்டளைக்கலித்துறை.
கண்டே னறிவெனு மொண்சுட ரேற்றிக் கருத்தகன்மெய்த்
தண்டேயு மன்புநெய் பெய்து பொய் வாதந் தடுத்தொளிரக்
கொண்டே மலவிரு ளெல்லாந் துரந்தெங் குடிமுழுதுந்
தொண்டே யெனுமெய்ச் சிவஞான தேவன் றுணையடியே. 3
பதினான்கு சீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.
அடிமலர் சிவப்ப நடந்துள முனிந்த
வணங்கினைக் கூட்டுதல் வேண்டா
வடியனேன் றமிழ்க்குக் கலந்துட னிருந்த
வரிவையைப் பிரிவுசெய் திடுக
மிடிமலி வறிய செங்கல் பொன்னாக்கி
வியப்புற வுதவுதல் வேண்டா
வெந்தெரி பசும்பொன் செங்கலாக் குகரீ
வேறுனை வேண்டுவ திலையே
பொடிமறை தழல்போ லிருந்துல கினர்கட்
புலப்படா னுயர்சிவ ஞானி
புவியிலென் றிருப்ப வனையன்யா னென்று
பொங்கொளி யிரவிபோற் றோன்றிக்
கடிநக ரெவற்றுஞ் சிறந்தபொற் புரிசைக்
காஞ்சியிற் போந்தகற் பகமே
கதிர்மணி வரன்றி யருவிவந் திழியுங்
கயிலைநேர் மயிலைகா வலனே. 4
எழுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.
வலந்திரி கதிர்கா ணுலகின ரெல்லாம்
வந்துகேட் பனவிலை யெனாத
நலந்தரு மொரும் தமியனேன் கேட்ப
நானல திலையெனத் திருவாய்
மலர்ந்துரை செய்த தென் கொலோ வறியேன்
மயிலைமால் வரைமணி விளக்கே
புலந்தெறு வீரர் பெருமவென் றிறைஞ்சிப்
புகழ்சிவ ஞானதே சிகனே. 5
கலி விருத்தம்.
சிகரியி னெழுதின மணியின் றேர்ப்பரிக்
கிகலிர வுளதுகொ லிருவி னைத்தொடர்
நிகரறு நினையடை நிலையி னோர்க்கிலை
நகரியி னமர்சிவ ஞான தேவனே. 6
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.
தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு மற்றை போரு
மேவரு நிலைய ராக வினையினேற் கருள்பு ரிந்தான்
மூவரு மிறைஞ்சு ஞான முதல்வனொண் மயிலை மேவி
யாவரும் விழையும் வான மிலான் புலம் பொழியு மாறே. 7
மேற்படி வேறு.
மாறு செயுமைம் புலக்கணமே
குணமே மயக்கு மாயையே
வேறு செயுமா ணவமலமே
வினையே நுந்தம் விறல்காட்டித்
தேறு செயுநஞ் சிவஞான
தேவ னெதிர்நான் செல்வதன் முன்
கூறு செயுநீர் செய்பவெலா
மென்பாற் செய்து கொள்ளீரே. 8
மேற்படி வேறு.
கொள்ளும் வன்பவப் பிணியின ராகிய
குவலயத் தவரெல்லா
மெள்ளும் வெந்துயர்ப் பவப்பிணி மருத்துவ
னெனப்படு சிவஞான்
வள்ளல் வந்துவண் மயிலை மேல் வாழ்தலை
மணிவிளக் கெனக்கண்டு
முள்ள நைந்துசென் றுரைக்கில ரென்கொலோ
வுண்டுடுத் துழல்வாரே. 9
மறம். பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரியவிருத்தம்.
வாரா யரசன் றூதனென
வந்த வொருவ யாமகந்தை
மலையை யுடைக்குஞ் சிவஞான
வள்ளன் மயிலைக் குறவர்
ணேரா ரெங்கள் குலமகளை
யின்று கேட்ப நினைவிடுத்த
விறைவன் றிருக்காளத்தியிடை
யெங்கண் மிச்சின் மிசை 'தவனாற்
சீரா ரெயிறு தரளமெனச்
சிதற வடிபட் டுழல்கின்றோன்
சிறிய குலத்திற் பிறந்தவனோ
செந்தாண் மலராற் றேய்ப்புண்டு
பாரா ரறிய வுடல்குன்றிப்
பகற்போ தெல்லாம் புறப்படான்
பழைய குடியிற் பிறந்தவனோ
பகரா யுள்ளம் வெருவேலே. 10
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
வேலுடையா னொடுமயிலை மலைமேவு
சிவஞானி வினைக டீர்க்குங்
காலுடையான் புகழோடு வெள்ளிமலை
நிறைநிற்பக் கனம்போ தாமற்
பாலுடையான் மிசைவைக்கப் பட்டததன்
மேல்வைத்தோன் பால்வெண் ணீற்றுத்
தோலுடையா னவன் மீது வைத்ததன்றோ
விளமதியஞ் சொல்லுங் காலே. 11
கலி நிலைத்துறை.
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதி
லாலம் போல்வெங் காலனு மந்தோ வணுகுற்றான்
சீலங் கேண்மி னொய்யென வேநஞ் சிவஞானி
கோலங் காணுங் கொள்கை கருத்திற் குறியீரே. 12
கலி விருத்தம்.
குறியுமிலை வடிவுமிலை குணமுமிலை யுரையாடவோர்
பொறியுமிலை மனமுமிலை புலனுமிலை யரிதா கநீ
செறியும் வகை யருள்செய்பொருள் சிவசமய குல தீபமாய்
மறியுமளி மலர்முது மயிலைவரு சிவஞானியே. 13
நேரிசை வெண்பா.
ஞானிபெய ரேதேனு நன்மைதரு மென்னவுஞ்செம்
மேனிபுகல் வேதம் விதித்தபெய--ரான
சிவஞானி நாமஞ் சிவஞானி யென்னா
னவஞானி யென்ப வவன் 14
கட்டளைக்கலித்துறை.
அவனோ விவனென் றெனையாளு மண்ண லடியவர் தம்
பவநோ யகற்றுஞ் சிவஞான தேசிகன் பாரில்வருஞ்
சிவனோ விவனென் றுலகமெ லாந்தொழுந் தெய்வமன்றி
யெவனோ தமிய னிதயா லயத்தி லிருப்பவனே. 15
கலி விருத்தம்.
இருந்து மேனியோ டிம்மை மறுமையிற்
பொருந்து போகம் புரிசிவ ஞானிநீ
விரும்பு வார்கட் கெனக்கருண் மெய்விழைந்
தருந்து மாசை யிலாமையி லாசையே. 16
மடக்கு. அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.
ஆசை தன தாண் மூட்டினா னடித்திட் டமுத மூட்டினான்
பாச விருளை யகற்றினான் பதிசே ரறிவை யகற்றினான்
றேசு மலியு மாகத்தன் சிவஞா னிப்பேர் மாகத்த
னேச மருவி மறியாரே நிரயத் துயர மறியாரே. 17
கட்டளைக்கலித்துறை.
மறிமறைத் தாலு மழுமறைத் தாலு மணிமிடற்றின்
குறிமறைத் தாலு மதிமறைத் தாலுமென் கொன்றைமலர்
வெறிமறைத் தாலு மறிவே னுனை மதன் மேற்பகைமை
நெறிபாறைத் தாயிலை யேசிவ ஞான நெடுந்தகையே. 18
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
நெடுபடைக்கட் குடவளை சென் றடைப்பவிள
வரானுழைந்து நீர்செலுத்துந்
தடமுடைத்தண் பணைமருதக் கச்சிநகர்ச்
சிவஞானத் தம்பிரானே
படமுடிப்பார் மிசைநினது புகழ்பாடிப் பன் மலர் தூய்ப்
பணிகின் றேற்குக்
குடமுடைத்தா லெனப்பாசங் கெடுப்பதல்லா
லெனக்கு நீ கொடுப்பதென்னே. 19
நேரிசை வெண்பா.
என்ன தவவுதவி யீதென் றுணர்கிலேன்
மன்னுசிவ ஞானமுனி வந்துற்றான்- றன்னைநிகர்
மாசங் கெடுக்கு மலர்த்தடஞ்சூழ் கச்சியிலெம்
பாசங் கெடுக்கும் படி. 20
கட்டளைக்கலித்துறை.
படிக்குப் பெருஞ்செல்வ மாஞ்சிவ
ஞானிமெய்ப் பத்தர்மணி
முடிக்குப் பெருஞ்செல்வ மாம்பதத்
தானொடு முன்னியெங்கண்
மிடிக்குப் பெருஞ்செல்வ மென்றில
ரேதரை வேந்தரொடெங்
குடிக்குப் பெருஞ்செல்வ மென்றுசென்
றோதுறுங் கோளர்களே. 21
கலி விருத்தம்.
கோள்வலி செய்வதென் கொடிய வாகிய
நாள்வலி செய்வதெனம்மைக் கூற்றெனு
மாள்வலி செய்வதெனமுது பானிதன்
றாள்வலி யவைகொலுந் தண்டு தொண்டரே. 22
அம்மானை. மடக்கு. கலித்தாழிசை.
தொண்டர்நெஞ்ச வஞ்சந் தொலைக்குஞ் சிவஞானி
யண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணல்கா ணம்மானை
யண்டரஞ்சும் வெள்ளிமலை யண்ணலே யாமாகிற்
கண்டநஞ்சங் கண்டில நங் கண்ணினா லம்மானை
காணோ மயிலைவரைக் கண்டக்கா லம்மானை. 23
கலி விருத்தம்.
அம்மா சிவஞா னியடிக் கமல
மும்மா யை கடந் துமுயங் குமது
சும்மா தலைமீ துசுமத் தினனாற்
கைம்மா றுளதோ கடையே னிடையே. 24
நேரிசை வெண்பா.
இடையினமே போல விரண்டறமு மல்லா
நடையினமே நாமயிலை ஞானி-புடையினமே
சார்வாகா தோடித் தடுமாறு கின்றமையாற்
றீர்வாசா மாயைச் செயல். 25
காலம். எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
செயலெலா மறமாகச் செய்யுங்காலந்
திகழ்வெலாம் பொய்யாகத் திகழுங்கால
மயலெலா முறவாகி யமையுங்கால
மறிவெலாந் தனையறிய வணையுங்கால
மயலெலா மொழிந்துபர வசமாங்கால
மனமெலாம் பேரன்பு மயமாங்கால
மியலெலாம் பிறப்பொழிய வெடுக்குங்கால
மெங்கள் சிவ ஞானியருளிசையுங்காலம். 26
கட்டளைக்கலித்துறை
காலுண்டு வாழு முனிவரு முள்ளங் கலங்குகஞ்ச்
மேலுண்டு நஞ்சைய னாம்பழி மாறவெல் வீரவளை
மாலுண்டு டுமிழு முலகமெ லாஞ்சொன் மயிலைவெற்பிற்
பாலுண்டு பாலைய னென்றிருந் தாய்கொலெம் பாலையனே. 27
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
ஐய மயிலைச் சிவஞானி யந்தோ நம்மாற் செயப்பட்ட
வுய்ய வரிய பாதகங்கட் கொழிக்கு முபாய மிலையென்று
நையு மனிதர் நினது திரு நாமத்தெழுவா யெழுத்திரண்டும்
பைய வொருகா லியம்பியுய்யப் பற்றார் துயரி னுற்றாரே. 28
கலி விருத்தம்
உற்பவ நிற்ப தொடுக்க மளிக்குஞ்
சிற்பரன் மெய்ச்சிவ ஞானி திருக்கை
நற்பிர சாத மலர்ப்பத நம்பாற்
சொற்பெறு மூவர் தொழிற்புண் ராவே. 29
கட்டளைக்கலித்துறை.
வேதந் தெளிந்தநின் செவ்வாய் மொழிநின் விரைமலர்ப்பூம்
பாதம் படுதுக ளெங்குல தேவதை பார்வையெங்கள்
சாதங் களையு மருந்து நின் னாமந் தனிக்குடிலை
நாதன் கயிலை சிவஞானி நீயமர் நல்லிடமே. 30
அறுசீர்க் கழிநெடிலடி சிரிய விருத்தம்.
நல்ல புலவர் பழிச்சுசிவஞானி
யெனுமோர் நாமமுறு
மல்லன் மயிலை மலையனைவே
றொருவனாக மதிக்கிலேன்
மெல்ல வொருபூ வீசு தன்முன்
வேளை யெரித்த தான் வெகுளி
யில்ல னெனினும் பொறையுளன்போற்
றோன்றா னெனினும் யான்றானே. 31
நேரிசை வெண்பா.
யானென தென்னு மிவைகழன்று வந்து சிவ
ஞான குருவை நணுகிலா-மானுடர் தம்
பொல்லாப் பிறவிநோய் போமோ வரினுநிலத்
தெல்லாக் கடவுளரு மின்று. 32
வண்டுவிடுதூது. இன்னிசைக்கொச்சகக்கலிப்பா.
இன்றுபிழை யொன்று மியற்றா வெனைமுனிந்து
நின்று சிறிதுமரு ணெஞ்சுறா வின்மதனைக்
கொன்று விடி லில்லைக் கொலைப்பாவ மென்றளிகாள்
சென்றுபுக லீர்நஞ் சிவஞான தேசிகர்க்கே. 33
கலி விருத்தம்
கேடு தீர்மயி லைக்கிரி ஞானியைத்
தேடு வார்சிலர் செய்யுங் கருமியை
நாடு வார்பலர் நன்மணி யோ கடைக்
கோடு வீழ்மணி யோபலர் கொள்வதே. 34
சித்து. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கொள்ளிபோன் மணித்தலைகா கங்கிடக்கு
மயிலைமலைக் குகையில் வாழுந்
தெள்ளுவா னமுதனைய சிவஞானி
பதம்பரவுஞ் சித்தர் நாங்கா
ணள்ளியோர் பிடிசோறு தரிற்பத்தா
நாமுனக்கிங் கைய மின்றி
வெள்ளிதான் வருவதன் முன் பொன்னாக்கு
வோமிதுநம் வித்தை தானே. 35
நேரிசை வெண்பா.
வித்தை சிவஞானி வித்தையே காண்பவெலா
மித்தையென நின்று விளம்பியே-சத்தியமாய்
நாட்டினானீதானு நானே யெனப்புகன்று
காட்டினான் றன்னையே காண். 36
ஊசல், எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
காண்டகைய விமிழிசைவெள் ளருவி தூங்குங்
கவின் மயிலைச் சிவஞான தேவன் கூறு
மாண்டகுநன் மொழிகேளா வாவி பாவ
வல்வினையு நல்வினையு நின்று தள்ள
மீண்டு துயர் நிரயமொடு துறக்க மேவி
மெலிவதிவ்வா றெனத்திரிந்து காட்டல் போலத்
தூண்டுசுடர் விளக்கனையீ ரிரும ருங்குந்
தோழியர்க ணின்றாட்ட வாடீ ரூசல். 37
தாழிசை.
ஊசலாடுறு நெஞ்சொடும்பிட
ருற்றவெற்றிகொள் காலனை
யுணர்ந்திலேன்பய மற்றுவேண்டிய
துண்டுடுத்துழன் றொண்மலர்
வாசமார்குழல் மாதரார்செயு
மாலின்மூழ்கின னத்துயர்
மாறுமாறுநி னைந்திலேனெரி
வாய்தலிற்படு மனையின்வாய்
தூசுலாமணை மீதுவாள்விழி
துஞ்சவீழ்பவர் போலவே
தொண்டர்தந்துயர் கண்டிராதுது
டைக்குறுஞ் சிவஞானி நீ
யாசு தீரருண் மிகுதிகாணிய
வஞ்சலென்றருள் செய்தியேர்
வருண் மறைத்துவிடுத்தியோசொ
லறிந்திலேன் றிரு வுள்ளமே. 38
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
உள்ள தன் பொருள ளிக்கு முயர்சிவ ஞான தேவன்
றெள்ளும்வண் புகழுங் காமற் றெறுபிர தாப முந்தரம்
வெள்ளை நன் மதியுஞ் செங்கேழ் வெய்யவன் றானு மாகி
யெள்ளவந் தெதிர்வ துண்டோ வெனவெழுந் துலாவு மன்றே. 39
மேற்படி வேறு.
அன்றெடுத்து மலைகுழைத்துப் புரமெரித்த
புகழல்லா லளற்றாழ் வேனை
நின்றெடுத்து மனங்குழைத்து வினையிரித்த
நின்புகழை நிகழ்த்தல் செய்யார்
குன்றெடுத்த புகழிருப்பச் சிறுசிலையொன்
றெடுத்தபுகழ் கூறல் போன்மான்
கன்றெடுத்த கரமறைத்துச் சிவஞானிப்
பெயர்படைத்த கருணைக் குன்றே. 40
தவம். கட்டளைக்கலித்துறை.
குன்றா மறையுள் விபூதியென் றேசொலுங் கூற்றினுக்குப்
பொன்றாத செல்வ மெனப்பொருள் கூறும்வன் பூசுரருந்
தன்றா மரைமலர்க் கைந்நீறு சாற்றத் தவம் புரிவ
ரென்றா லெவர்சிவ ஞானிதன் மேன்மை யிசைப்பவரே. 41
புயவகுப்பு.
இசைபோகி மாழ்கமத னம்பைக் கடிந்தன
விளநாக வீருரியொ டென்பைத் துரந்தன
வசைபோகு மாரநிகர் கண்டிக் கிசைந்தன
மகபேரு வாதிவரை யஞ்சக் கிளர்ந்தன
நசைபோகு மாதவர்க டுன்பைத் துரந்தன
நயநீறு தேய்வையென விஞ்சத் திமிர்ந்தன
திசைபோகு தூய தமிழ் தங்கப் புனைந்தன
சிவஞான தேசிகர் தம் வென்றிப் புயங்களே. 42
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
புயன்மறையா மயிலைமலைச் சிவஞானி நீயேயெம்
பொருளிற் கொண்ட
செயன்மறையா விளவேறு கரந்தவன்யா னலனென்னிற்
றெளியச் சொல்வேம்
அயன்மறையா நின்னடிகண் டனமார வாரங்க
ளாகா துன்றன்
இயன்மறையா துரைசெய்தி செய்திலையே லலர்தூற்ற
விளைக்கி லேமே. (43)
மேற்படி வேறு
இளைக்கு மிடியற் குறபொருளா மிறைவற் கரசாங் கூற்றுவனை
விளிக்கும் பிணிக்கு மருந்தாகும் விடத்திற் கருஞ்சீர்க் கலுழனாம்
வளைக்கும் பகைக்குப் படையாகு மலடர்க் கரிய மகவாகுந்
திளைக்குங் கருணைச் சிவஞான தேவன் றிருக்கைத் திருநீறே. (44)
நேரிசைவெண்பா
நீறுவாய் கோலநினை நெஞ்சமே நெஞ்சமவற்
கூறுநா வேமாற்றங் கூறுநா - பாறுவீழ்
வேல்பிடிக்குஞ் செவ்வேள் வியன்மயிலை ஞானிமலர்க்
கால்பிடிக்குங் கைகளே கை. (45)
நேரிசையாசிரியப்பா
கைகமழ் நறிய கறியொடு படூஉம்
மென்மைவெள் ளடிசி லின்மை மாந்தி
விலைவரம் பறியா மென்றுகி லின்மை
நாடொறு முடுத்து நகைமணிப் பசும்பொற்
பூண்டன தின்மை காண்டகப் புனைந்து 5.
திண்குற டுரிஞ்சுஞ் செழுஞ்சாந் தின்மை
பூசிப் பொன்மலி புரிசை மாடத்
தின்மையின் மலர்ப்பூம் பள்ளி யின்மையிற்
கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தொடி
இளமுலை மாத ரின்மையொடு தழீஇ 10
வாழா நின்றநின் வண்புகழ் பாடும்
நல்லிசைப் புலவர் நற்பொரு ளின்மை
கண்டது பொறாது கவலைகூர்ந் தழிக்கும்
நின்னை யென்னோ நிலமிசை மாந்தர்
அழுக்கா றிலனென வழுக்கா தறைகுவர் 15
தவப்பல விடர்செய் பவப்பிணி மருத்துவ
கலங்குறு தன்மைப் புலந்தெறு வீர
அடியார் கொள்ள மிடியாச் செல்வ
நானிலம் புகழ்சிவ ஞான தேவ
அடியே மருளா தறிதரக் கூறுதி 20
என்றவன் றனையே யாம்வினா யறிகுதும்
நங்கண் களிப்ப நண்ணு மாயின்
அணியென விறங்குவெள் ளருவி
மணிமலி மயிலை மலைகிழ வோனே. (46)
கட்டளைக்கலித்துறை.
கிழவி யெனுமிக் கிரிராச கன்னிகை கெண்டையங்க
ணழவி மலனைத் தழுமூ ரமர்ந்த வமுதமுனி
தொழவி கலமி லுயர்ஞானங் கூறுஞ் சுடரிலைவேற்
குழவி தனினு முனையே விரும்புங் குடமுனியே. 47
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
குடக்கெனப் படாக் குணக்குங் குணக்கெனப் படாக்குடக்கும்
வடக்கெனப் படாத தெற்குத் தெற்கெனப் படாவ டக்கு
நடக்குமெய்ப் புகழ்மா கச்சி நகர்ச்சிவ ஞான தேவே
படைக்குமப் பெரியோன் றன்னைப் பரவுவார் பரவுவாரே. 48
பன்னிரு சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
பரம யோகி யென்றுடம்பிற்
பாதி யொருத்தி கொளக்கொடுத்துப்
பகர்வுற்றறநன் மகனையடும்
பாதகத்திற் குடன்படுத்தித்
தருமி தானென் றெருதேறிச்
சாந்த னென்று பு: மெரித்துத்
தம்பி ரானென் றொருவற்குச்
சந்து மகளிர் பானடந்து
பெருமை யாள னென்று போய்ப்
பேய்ச்கூத் தாடிச் சின்மயனாம்
பெயர்பெற் றவையி னம்பியாற்
பித்த னாகிப் புனிதனெனாச்
சிரமு மாலை யென்புமரீஇத்
திரிந்த முரண்கொள் செயலெல்லாந்
தீர்வான் வந்த சிவஞான
தேவற் கிலையொப் பாவாரே. 49
பதினான்கு சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
வாரியங் கரையீர் வாளிலைக் கைதை
மலரெனத் தோன்றுவர் சிலர்தா
மதுரவீர்ங் கரும்பின் மலரெனச் சிலர் தாம்
வருவர் நீ கற்பக மலர்போற்
காரியங் களத்த னடஞ்செய்தா மரையின்
கழலொலி யாவுமூர் போகி
கண்களாற் கண்டு கேட்குமூர்ப் பச்சைக்
கந்தமா முனிகரத் துதித்தாய்
வேரியங் கமலத் தாளிழை மருங்குன்
மெல்லியற் பெண்ணொரு
கம்ப மேவுற விருமா தங்கமுங் கட்டி
விடாதயர் நகர்கணாயகமும்
பாரினன் முகமா மிக்கரை முனிந்த
பரன்றிரு வக்கரை நகரும்
பயிலிட மெனக்கொண் மயிலைவா ழமுத
பானமார் ஞானமா தவனே. 50
கட்டளைக்கலித்துறை
தடங்கட னீர் முகந் தாங்குப் பொழியினுந் தண் விசும்பு
நெடுங்கட னீர்மை பெறல்போல வேதங்க ணீறுதொட்டு
நடுங்கிடு மாறில் சிவஞான தேசிக னல்கினுமோர்
படங்கிடை ஞால முடையார் பெறுகுவர் பாக்கியமே. 51
எண்சீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
பாக்கியமும் பாலுமுமை புகட்டியமெய்ஞ் ஞானப்
பாலனீயளவிறந்த சிவபெருமர் னடியார்க்
காக்கியிடல் கருதியே யுருத்திரபல் கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ வெனத்தன்
அக்கினிடை யுரைசெய்தா னென்றேயென் றனக்குத்
தோன்றுகின்ற துலகில்வே றொருவரிலா மையினாற்
சீர்க்கவிஞர் புகழ்மயிலை மால்வரையின் விளக்கே
சிவஞான தேவனெனச் சிறந்தவருட் கடலே. 52
நேரிசை வெண்பா.
கடலுலக மேத்துங் கருணை மலை மாயை
நடலை தபுமயிலை ஞானி-விடலரிய
நல்லினத்தை நண்ணா நணுகுமுட லாமுதலூர்
மெல்லினத்து ளா திகிலை மெய். 53
களி. எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
மெய்த்தவறு சமயங்கட் கிறைவ னாகி
விளங்குசிவ ஞானகுரு வாய மென்னுஞ்
சத்திசம யத்தினுக்குக் கள்ளு மூனுந்
தகுமெனமான் மதுகைவிடா னாகி நின்றான்
புத்தலரி பயன் கரகங் கொண்டு வந்தான்
புராரியுழை யைங்கரன்பே ரெலிகைக் கொண்டார்
நெய்த்தவடி வேன் முருகன் சேவல் கொண்டா
னிலவினனோர் முயன்முழுதும் விழுங்கி னானே. 54
தழை. கலிநிலைத்துறை.
விழுங்குவள் போலது கொண்டற லோ தியின் மேல்வைத்தா
எழுந்துற வாள் விழி யொத்தின டேமொழி யன்பாநின்
செழுந்தழை பட்டது நஞ்சிவ ஞானி திருத்தாள்கள்
பழம்படு நெஞ்சுடை யார்கரம் வந்து படும்பாடே. 55
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
பாடு வாரிசை யறியு மியாவுமூர் பணியு நல்லிய லம்பலத் துனின்
நாடு வாரறி வார்கொ லோ வறி யார்கொ லோவெனப்
பாடு வார்கொளத் தோடு வார்செவி நல்கி னானுயர் சூலி நஞ்சிவஞானி நீபடை
வீடு வார்செவி யாக நல்கினை விலகி நல்லியற் புலவர் கொள்ளவே. 56
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
கொள்ளு முண்டி பகுத்துண்டு பெருஞ்சீர் கொண்டானின்குரவன்
கள்ளும் வண்டு மருமலர்ப்பூம் புலியூர்ப் பச்சைக் கந்தமுனி
தெள்ளு மிருஞ்சீர் நீபகுத்திட் டுண்ணா துற்றாய் சிவஞானி
துள்ளு மருந்தா யினுங்கன்று சொல்லா ரோசொ னல்லாரே. 57
கட்டளைக்கலித்துறை
நல்லா ரவன் சொல்வ தெல்லாம் பொய் யென்பவர் நன்மையிலாப்
பொல்லா ரவனைமெய் யாளனென் பார்மெய்ப் பொருளுணர்ந்த
வல்லார் மயிலைச் சிவஞானி யைச்சொல வாய்திறவார்
கல்லா ரவனியல் சொல்வமென் றேபல கற்றவரே. 58
கலி விருத்தம்.
கற்றுவேத முற்றுமாயை கழலுமீச னேபதி
சொற்றசைவர் கட்கெனச்சொல் சொல்லுமாவி யேபர
முற்றும்வைதி கர்க்கெனச்சொன் மொழியுமாறு மாறுநா
முற்றமயிலை ஞானதேவ னெருசொ லுண்மை சொல்லவே. 59
தாழிசை.
சொல்லருங்கயி லைத்தணந்தனை துன்னு நீவிட குணமுமூர்
சுடல்செய்சாபமு மின்றியேசம னோக்கமெய்தினை தோலுடை
பல்லெலும்பணி கோலமோவினை பாதியாணெனன் மாறினை
பணிகள்யாவுமு றாதகன் றனை பாணிசென்னிசு மக்கிலை
வில்லிருந்தத ழும்பொழிந்தனை மீளநஞ்சமி ரிந்தனை விரைந்துசோறிடு
மனையை நல்கென வேண்டுமாறு மறந்தனை
கொல்லிரும்பர சினைவிடுத்தனை குரைவிலாமதி மேவினை
கோதறுஞ்சிவ ஞானியேயருள் கூருஞானவி நோதனே. 60
கட்டளைக்கலித்துறை.
வினையே னெனினுங் கொடியே னெனினும் விதிவிலக்கு
நினையே னெனினு மியானே யறங்களி னின்றுடையே
னனையே யனைய சிவஞான தேவ னருண்மிகுதி
யெனையே யடைதலி னாலைய மேது மிதற்கிலையே, 61
நேரிசை வெண்பா.
இல்லாமை யில்லாமை யெய்தலா நூன் முழுதுங்
கல்லாமை கல்லாமை கற்கலாம் -வல்லான்
சிவஞான தேவன் றிருவடியைப் போற்றத்
தவஞான முண்டாயிற் றான் 62
வஞ்சித்துறை.
தானி யேசிவ,
ஞானி யேயெனான்
மேனி யோடபி,
மானி யாகுமே. 63
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
மேவரு மெய்ச்சிவ ஞானி திருப்புகழ்
மேன்மை யிசைத்திடுநாண்
மாவுரகர்க்கிறை தானொளிர் பைத்தலை
மாண வசைக்கும தாற்
பூவசை வுற்றிடு மாலென மட்டவிழ்
பூமிசை யுற்றிடுவான்
பாவின் வியப்புறு மேரு முதற்கிரி
பார மியற்றினனே. 64
நேரிசை யாசிரியப்பா.
பாரார் விசும்புளார் பாதாளத் தார்பரவுஞ்
சீரார் சிவஞான தேசிகா-தீரா
வறவா நினைக்கி னடியேன் பொருட்டுப்
பிறவா நினக்குப் பிறப்பு. 65
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
பிறந்தான் மேலு மிடிதீர்நோய்
தீரென் றெமைப்பின் றொடர்வனென
வறிந்தாய் போலுஞ் செம்பவளத்
திருவாய் மலர்ந்தென் னகந்திருத்தி
யிறந்தார் ஞால மிசைப்பிறவா
முதுகுன் றகலா தெனைவைத்தாய்
சிறந்தார் வாய்மைச் சிவஞானிப்
பேரோய் தீராச் சீரோயே. 66
நேரிசை யாசிரியப்பா.
சீர்வளர் குவவுத் திண்டோண் மாருதி
யுயிர்தரு மருந்தொன் றுறுதற் பொருட்டு
முழுமணி கொழிக்கு முகங்கவி ழருவிக்
குன்றமொன் றெடுத்த கொள்கை போலச்
சொற்றிறம் விரித்த சுடர்மணிச் செழுஞ்சூட் 5
டுரக வேந்த னொருதலை தரிப்பக்
காதல் கூர்ந்து கண்ணகன் ஞால
முச்சிக் கொண்ட கச்சிப் பதியு
மெறும்பியுயிர் நீங்கி லெறும் பியீருரி
போர்த்துப் போகும் புராதன மலையு 10
மான்பாற் கன்றி யளவில் பல் கறிக்கு
மின் சுவை விளையு மென் சே யூருங்
கயிலைபோற் சிறந்த மயிலைமால் வரையு
மிடங்கொண் டிருந்த வெங்க ணாயக
னரன்றிருத் தொண்டர்க் கன்னை போல்வான் 15
புகழுநர்க் கடங்காப் புகழுடைப் பெருந்தகை
யுலகா யதனுக் கிலகா யுதமா
யணுமத மோரணு வாகத் துரந்து
விசேட மதத்தின் விசேட நீக்கிக்
காலவா திக்கோர் கால னாகக் 20
குருமத நொய்தெனக் கூறி மாற்றிப்
பஞ்ச ராத்திரிக் கஞ்சு பகலாய்ச்
சைவப் பயிர்க்குத் தண்முகி லானோ
னாந்தொழ வருள்சிவ ஞான தேவன்
சமய வாதிக டம்மத நிறுவத் 25
தகர்போல் வாதிற் றாக்குத னோக்கிச்
சிரித்துளங் களிக்குஞ் சிவாநு பூதியின்
மாண்டிட வெம்மை வைத்தனன்
வேண்டிய செய்கவவ் வீணர் தாமே. 67
பிச்சியார். கலிநிலைத்துறை.
தாமே மனிதர் தமதா மயிலைத் தனிஞானி
பூமேன் பனிதக் கோல மடைந்து புறப்பட்டான்
மாமேன் மையரா கியமா தவர் தவம் வௌவற்குக்
கோமே தகமே நீதவ வேடங் கொண்டாயே. 68
அறு சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
கொண்டசிலை மரமுதலா யின தமைத்தாஞ்
சிவமெனவே குறிக்க மாட்டா
ரண்டர்முத லாயினோர் பாவிக்கப்
படுடயிலை யமர்ந்திட் டெம்மைத்
தொண்டுகொளுஞ் சிவஞானி தனைத்தானே
சிவோகமெனத் துணிந்து கொண்டு
பண்டைநரர் பவமுழுதுந் தொலைத்திடுவ
னியாரதிகம் பார்த்திடீரே. 69 17
பாண். நேரிசை வெண்பா.
பார்த்திடுவ னீலகண்ட பாணனா ராக நினைத்
தீர்த்தன் சிவஞான தேசிகன்சீ-ரேத்திவரிற்
பாணா நினைச்சாதி பாராட்டு வேன் பிறர்சீர்
நாணா துரைத்துறலா னான். 70
கட்டளைக் கலித்துறை.
நானே சசிவன் னனிற்பெரி யேனவன் ஞானிதனைத்
தானே யடைந்தில னான்றிருக் காஞ்சியிற் றண்மலர்ப்பூந்
தேனே யனைய சிவஞான தேவனைச் சேர்ந்திமைப்பி
லூனே யுயிரே யெனுமிவை வேறுபட் டுய்ந்தனனே. 71
நேரிசை வெண்பா.
உன்னைச் சிறையிட் டுளானெஞ் சிவஞானி
தன்னைப் பணிவினவித் தான் செய்வ-னென்னைப்
படைப்பேன் கிடைப்பேனென் றெண்ணாதே பாழி
யடைப்பேன் கமலா லயா. 72
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
ஆலய மெனக்கொண் டெம்மனத் தமர்ந்த
வருட்சிவ ஞான தே சிகவெம்
பாலைய மலர்க்கண் ணிரண்டுடை யாய்க்குப்
பார்வை மூன் றுளனெனப் படுவோன்
மேலவ னென்னி லவற்குநா லிருகண்
விண்ணவ னுயர்ந்தவ னவற்குச்
சாலவு மதிக னாவனா யிரங்கட்
டவளமார் கவளவா ரணனே. 73
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
வார ணாசி சிதம்பர மங்கல மாதை வீழிபுகார்
சீரணாமலை யம்பர் வலஞ்சுழி சேது மாதவனூ
ரார ணாடவி நின்பத பங்கய மாகும் வேற்றியே
நார ணாதி வணங்கு மருஞ்சிவ ஞான தேசிகனே. 74
தாழிசை.
தேசுலாவுமணி நாகமீரமதி
தேய்வகன் றுவளர் மோவெனா
வாசையோடமரும் வேணிநாதனரு
ளாளனெந்தைபுகழ் காழிவாழ்
பாசநாசனெனு ஞானமாமதலை
பாடவென்புமக ளாகுநான்
மாசிலாதசிவ ஞானிசீர்பரவ
மாதரென்புவடி வாவரே. 75
மதங்கு. மேற்படி வேறு.
ஆகுமேயிவள் வலிபிறர்க் காவிபோமுடல் போலவே
மோக மாதரின் மாறிய முதல்வனஞ்சிவ ஞானிசீர்
பாகு போன்மொழி யான்மிகப் பாடியாடிம தங்கிதான்
சோகமேதுமின் முனிவர் தந் துறவு கொள்ளை கொள் கிற்பளே. 76
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
பகலாவெழுத் தைந்தேவடி வாகுஞ்சிவ ஞானி
பாற்போகுவ னென்றேநினை வுற்றேனது பொழுதே
புகலாசையி ரும்பேயினிப் போவேனெனப் போய்த்தாற்
புணர்மூலம லப்பேயவற் கண்டேகுவ னென்றே
யகலாமைய கன்றேயக லாநின்றது. மெல்ல
வாகத்தின் வினைப்பேயவற் கண்டுஞ்சில நாணா
னிகலாமையி ருந்தேகுவ னெனநின்றது மாயை
யெனும் பேயதனோடேகுவ னெனதைந்ததி ரந்தே. 77
வஞ்சி விருத்தம்.
இரந்து நிற்றலி லாமையுங்
கரந்து நிற்றல்க லாமையும்
பொருந்து நிற்புகழ் வேனியான்
றிருந்து மெய்ச்சிவ ஞானியே. 78
நேரிசை வெண்பா.
ஞானியஞ் ஞானியெனல் ஞானசம் பந்தனெனுந்
தானிமணப் பந்தற்குத் தப்பியுழன்-மானுடர்கா
ணில்லாமல் வம்மினோ நின்றசிவ ஞானிபத
மெல்லாம் வழங்குகின்றா னின்று. 79
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
இன் றுவர்வாய் மகளிர்மய லுறாதென்று
மெனைத் தடுத்தா ளிசையக் கொண்டாய்
வென்றிமலி துறவியா தலினீயம்
மாதொருபால் விழைந்து வைத்தோன்
முன்றமர்செய் மணம் விலக்கி வலிந்தாட்கொண்
டிருமாதர் மோக வேலை
யன்றமிழ நம்பியைச்செய் தனன் சிவஞா
னிப்பெரும்பே ரடைந்துளோயே. 80
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
அடையாத புல்ல ரினமோ டிணங்க
வடியேனை விட்ட வெரருநீ
கிடையாத நின்னை யுறுமன்பர் தங்கள்
கிளையோ டிணங்க வருள்வாய்
திடையாக நாளி னடியான் முனிந்த
சிவஞான தேவ மதியைச்
சடையா லணிந்த வவன் வேறி யார்கொ
றலைவா வெனக்கு மொழியே . 81
கட்டளைக்கலித்துறை.
எனக்குப் பிறப்பில்லை யென்றே
கனன்மழு வேந்துவன்யா
னினக்குக் கருணையென் மேற்றா
தலினின் னிலைமை கண்டே
யெனக்குப் பிறப்புண்டென் பார்சிவ
ஞானி யிரு நிலத்தி
எனினக்குப் பிறப்புண்டென் பாரல
ரோவவர் நிந்தை செய்தே. 82
சம்பிரதம். எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
நிந்தையறும் படிமுழுது மளப்பம் வாங்கி
நெடுவரையொன் றெடுப்பமெழு கடலை யள்ளிச்
சிந்துவமல் லியினலரி யாக்க வல்லோஞ்
செய்குவமென் றயன் போனாற் றிசையும் பாரேந்
தந்தையினு மினியசிவ ஞான தேவன்
றன் கருணை கொண்டெளிதிற் றருக்கர் கூறு
மைந்தணுவி லோரணுவு ளண்ட முண்ட
வம்புகொளுஞ் சம்புவைநா மடக்கு வோமே. 83
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
அடங்க வெலும்புந் தோலுமா
யருவ ருத்திட் டுமிழ்கின்ற
வுடம்பை நானென் றிருந்தேனை
யொழிவில் கருணைச் சிவஞானி
கடந்த பிரம நீயெனவே
கழற்கா லென்புன் றலை வைத்தான்
முடங்கு சுருள்வா னாய்க்கொருபொன்
முடிசூட்டினனெம் பெருமானே. 84
தரவுகொச்சகக்கலிப்பா.
பெருமானே சிவஞானிப் பெயருடையோய் நினதருளால்
வருமான்மா பரமுத்தி மருவுதலே யியல்பாகும்
பரமான்மா வுரைசெய்யப் படுகாசி முதலன தாந்
தருமா றோ ருபசாரந் தருவதுநிற் கிடைத்திடினே. 85
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
கிடைப்பரிய நீதுறந்த கங்கை திருப்
பாற்கடலாய்க் கிடந்த தாங்குச்
சடைப்பழகு மனந்தனத னொடுபோகச்
சயனமெனச் சார்ந்தான் பாயன்
படப்பணியை நீங்குதலால் வளர்ந்து போ
யிற்றுமதி பாணி பானை
விடுப்பவத னுடல்பு குந்த தரியசிவ
ஞானியென விளங்கு வோயே.
கட்டளைக்கலித்துறை.
விளங்காத வண்ணம் பிறர் தீங் கடக்கி விரித்துநன்மை
யுளங்காதல் செய்துரைப் பார்கூ அதற்கிங் கொருகடுகி
னிளங்கா ழளவு நலமில னாகிய வென்னையென்னோ
துளங்கா தருளச் சிவஞான தேவன் றொடங்கினனே. 87
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
தொடங்கியா யிரநாவால் யோக மெல்லாஞ்
சொல்லினு நீ போகியெனப் படுவாய் மண்ணை
விடும்பரிசு நினக்கில்லை பணம்போ மாயின்
வீந்திடுவை விரைகமழ்மென் மலர்க்கட் பெம்மான்
முடங்குறினு நினைவிடுமோ வளியுள் வாங்கு
முயற்சியால் யோகியெனப் படாய னந்தா
வடைந்தசிவ ஞானியெனும் பரம யோகி
யல்லைகாண் சொற்சொலவே வல்லை நீயே. 88
நேரிசை வெண்பா .
நீயிருப்பப் புன்பொருட்கு நீசர்ப் புகழ்வாருக்
தூய்திருப்ப ஆன் விரும்பித் துய்ப்பாரு-நாயிருத்தல்
போலிருந்து நீணரகிற் போய்விழுவா ரேமயிலை
மேலிருந்து வாழ்முனிவா மேல். 89
கட்டளைக்கலித்துறை.
மேலுக்கு நீவரம் பாயினை கூறில் வியனுலகிற்
கீழுக்கு நான்வரம் டாயினன் மேலெனக் கீழினுக்கு
மேலுக்கு நாப்பணின் றார்கீ ழெனச்சொல மேவுவர்காண்
கீழுக்கு நாடரி தாஞ்சீர் மயிலைக் கிரிமுனியே. 90
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
முனிப்புலி தொழுசிதம் பரங்கண் ணுற்றவர்
முழைப்புலி முழங்குமவ் வருணை யங்கிரி
நினைப்பவ ரமலவா ரூர்ப்பி றப்பவர்
நிகழ்த்துறு காசியிற் சென்றி றப்பவர்
தனிப்பெரு முத்தியை யடைவர் தாங்களே
தலைப்படு குவருயர் பதமுன் கச்சியை
யுனைப்பெயர் பகர்பவர் கேட்கின் றாரொடு
முரைப்பரும் புகழ்ச்சிவ ஞான தேவனே. 91
கைக்கிளை மருட்பா.
தேவென் றறிந்தோஞ் சிவஞான தேசிகனை
யோவென் றொழுகுமருட் கண்களான்-மாவென்
றிமைக்கும் விழியா லிவளை
யிமைக்கு வணங்கல ளென்றறிந் தோமே. 92
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
அறிவதை யறிந்தார் மூவ ரறுமுகக் குரவன் றன்பான்
முறைவரு வருண முற்று முக்கணான் குருவென் றன்பு
செறிகிலன் மலய வெற்புச் செஞ்சடை முனிவன் யாக்கை
குறியவன் குறுகி லானெங் கோன்சிவ ஞானிதானே. 93
கலம்பகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
வாழ்த்து.
அருள்பொழி விழிகள் வாழி யறம்பகர் பவளம் வாழி
யிருள்புரை தமியே னுள்ளத் தெழுந்துபே சொளியாய் நின்ற
குருபரன் காஞ்சி வாஞ்சை கொள்சிவ ஞான தேவன்
றிருவடி வாழி யன்னான் றிருப்புகழ் வாழி வாழி.
ஸ்ரீ சிவஞான பாலைய தேசிகர் திருவடி வாழ்க.
கலம்பகத்தின் குறிப்புரை
செய்யுள் (46) * இப்பிரபந்தம் ஆசிரிய ரயிக்கமுற்ற பின்னர் அருளிச் செய்ததாகலின்
“நங்கண் களிப்ப நண்ணுமாயின் யாம் வினா யறிகுதும் "
என்று ஆற்றாமையால் விதந்துரைக்கப்பட்டது.
கலம்பகம் முற்றிற்று.
----------
சிவஞானபாலைய தேசிகர் கலம்பகம்
கருப்பக்கிளர் சு, அ, இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரை
(சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு)
1. எவ்வம்-துன்பம். கமர்-நிலத்தின் வெடிப்பு.
2. வேவ மலரும் விழி-நெற்றிக் கண். கரந்த-மறைத்த.
3. பொய்வாதம்-பொருளற்ற சொற்போர். துரந்து-போக்கி.
4. வெந்தெரி பசும்பொன் செங்கலாக்குக-ஒளியுள்ள பசிய பொன்னைச் செங்கல்போல் நோக்கும் தன்மை எனக்குண்டாகுமாறு உளத்தைப் பண்படுத்துக. பொடிமறை தழல்-நீறுபூத்த நெருப்பு.
5. வலந்திரி கதிர்-வலமாகச் சுற்று தலைச் செய்யுங் கதிரவன். நானலது இலை-என்னையல்லாது பிறிதொன்றுமில்லை யென்று மெய்யறிவைப் போதித்தவாறு; இதனால் ஆசிரியர் தாம் மெய்யறிவு பெற்றமையைப் புலப்படுத்தினார். புலம்தெறு-ஐம்புலன்களை வென்ற.
6. இருவினைத் தொடர்-பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய நல்வினை தீவினையாகியவைகளின் தொடர்ச்சிகள். நிகர் அறு-மெய்யறிவினால் இணையற்ற.
7. மேவரு நிலையராக-அடையமுடியாத தன்மையை உடையவர்களாக. விழையும்-விரும்பும்.
8. குணமே மயக்கு மாயையே-நற்குணங்களை மயங்கச் செய்கிற மாயையே. கூறு செயும்-எல்லாவற்றையுங் குறைத்தழிக்கும்.
9. பவப்பிணியினர்-பிறவி நோயை உடையவர்கள் எள்ளும்-இகழும். உள்ளம் நைந்து-மனம் இளகி.
10. மிச்சில் மிசைந்தவன்-எச்சியை உண்டவன். எயிறு-பல். தரளம்-முத்து. வெருவேல்-அஞ்சாதே.
11. வேலுடையானொடு-முருகக் கடவுளோடு. கனம் போதாமல்-புகழோடு சரியாக நிற்பதற்குப் பாரம் சரியில்லாமல்.
12. காலம் போயிற்று-வாணாள் முடிந்தது. அஞ்சனம் அன்ன கடா-எருமைக் கடா. ஆலம்-நஞ்சு. ஒய்யென-விரைவாக. கோலம்-திருவடிவம்.
13. செறியும் வகை-பொருந்துமாறு. மறியும் அளி-சுற்றித் திரியும் வண்டுகள். மலர் முரலும்-மலரில் ஒலிக்கும்.
14. சிவஞானி-சிவபிரானது மெய்மைத் தன்மையை உணர்ந்தவன். அவஞானி-எதற்கும் பயன்படாத வீணான அறிவையுடையவன்.
15. பாரில் வரும்-உலகில் மனித வடிவு கொண்டு வந்த. எவனோ-வேறு யாவனோ?
16.பொருந்து போகம்-அமைந்துள்ள பயன்கள். மெய்விழைந்து-உண்மைப் பொருளை விரும்பி.
17. அகற்றினான்-நீங்கச் செய்தான். அகற்றினான்-விரி வடையச் செய்தான். தேசு-ஒளி. ஆகத்தன்-உடலையுடையவன். மாகத்தன்-சிறந்த தலைவன். நிரயத்துயரம்-நரகத்துன்பம்.
18. மறி-மான். மிடற்றின்குறி-கண்டத்தில் அமைந்த நஞ்சுக் கறை. வெறி-மணம். பகைமை நெறி-பகையாந்தன்மையை. நெடுந்தகை-மிகுந்த பெருமையுடையவன்.
19. குடவளை-குடம்போன்ற சங்கு. படமுடிப் பார் மிசை-ஆதிசேடப் பாம்பின் முடிமீதுள்ள உலகத்தின்கண்.
20. என்ன தவ உதவி-எக் காலத்திலே செய்த தவத்தின் பலன். மாசு அங்கு எடுக்கும்-குற்றத்தை அவ்விடத்திலே நீக்கும்.
21. படிக்கு-உலகத்துக்கு. மிடிக்கு-வறுமைக்கு. தரைவேந்தர்-உலக மன்னர்கள். கோளர்கள்-இழிந்தகுணமுடையவர்கள்.
22. கோள்-ஒன்பான் வகைக் கோள்கள். வலி-துன்பம். தாள் வலி-திருவடியின் ஆற்றல்.
23. அண்டர்-தேவர்கள். கண்ட நஞ்சம்-கழுத்திலுள்ள நஞ்சுக் கறை.
24. மும்மாயை-ஆணவம், மாயை, காமியம். சுமத்தினன்-வைத்தருளினான்.
25. இரண்டறம்-இல்லறம், துறவறம். சார்வாகாது-செல்லாமல். தீர்வு-முடிவு.
26. அயல்எலாம்-பக்கத்தில் உள்ளவர்களெல்லாரும். பரவசம்-பரத்தின் தன்மையைப் பெற்று நிற்குந்தன்மை.
27. காலுண்டு-காற்றைப் புசித்து. வளைமால்-சங்கினையுடைய திருமால். சொல்-புகழ்ந்து கூறும்.
28. உய்ய அரிய-பிழைப்பதற்கருமையான. எழுவாய் எழுத்திரண்டு-சிவ என்பது. சிவ என்று ஒருமுறை கூறினும் எத்தகைய தீவினைகளும் ஒழிந்துபோகுமென்பது சிவாகம நூற்றுணிபு. பைய-மெள்ள. பற்றார்-பிடிக்கமாட்டார்கள்.
29. உற்பவம்-தோற்றம். ஒடுக்கம்-மறைவு. சொற்பெறு-புகழ்ச் சொல்லைப் பெறுகிற.
30. வேதம் தெளிந்த-மறைப் பொருள்களைத் தெளிவாக உணர்ந்த. துகள்-தூள். சாதங்களையும்-பிறப்புக்களைப் போக்கும்.
31. பழிச்சு-போற்றுகிற. மல்லல்-வளப்பம் பொருந்திய. ஒரு பூ வீசுதல் முன்-ஒரு மலர்க்கணையைச் செலுத்துவதற்கு முன்.
32. கழன்று-நீங்கி. நணுகிலா-நண்ணாத.
33. முனிந்து நின்று-சினந்து. அளிகாள்-வண்டுகளே!
34. கேடுதீர்-தீமையில்லாத.
35. தெள்ளுவான் அமுதனைய-தெளிந்த அமுதத்தைப் போன்ற. அள்ளி ஒரு பிடி சோறு தந்தால், அதற்குமாறாகப் பத்து மடங்கு பயன் சேர வெள்ளியைக் காண்பதன் முன் பொன்னாமாறு செய்து தருவோம், என்பது பின்னிரண்டடிகளின் பொருள். வெள்ளி-வெள்ளிக்கிழமை; பொன்-வியாழக்கிழமை.
36. மிந்தை-பொய்
37. இமிழ்இசை வெள்ளருவி-இனிய இசைபோல் ஒலிக்கும் வெள்ளிய அருவி. தூங்கும்-இழியும். மாண்தகு-மாட்சிமைப்பட்ட. ஆவி-உயிர். இருமருங்கும்-இரண்டு பக்கங்களினும்.
38. ஊசல் ஆடுறும்-ஊஞ்சல்போல ஆடுகின்ற. மாலின் மூழ்கி-காம மயக்கத்தில் ஆழ்ந்து. ஆசுதீர்-குற்றத்தைப் போக்குகிற.
39. தெள்ளும்-தெளிந்த. வண்புகழும்-பெரும் புகழும். தெறு-வெல்லுகிற. பிரதாபமும்-பெரும்புகழும்.
40. அளற்றாழ்வேனை- துன்பக்கடலில் ஆழுகின்றஎன்னை. வினையிரித்த-வினையைப் போக்கியமான்கன்று எடுத்த கரம்-மானை யேந்திய கை.
41. குன்றாமறை-பெருமையுடைய நான்மறை. பொன்றாத-கெடாத.
42. மதனம்பு-காமன்கணை. நாக ஈருரி-யானைத்தோல். துரந்தன-நீக்கி விட்டன. வசைபோகும்-வசைநீங்கிய. கண்டி-சிவமணிக் கண்டிகை. கிளர்ந்தன-மேலாக எழுந்தன. நசைபோகும்-ஆசைவிட்ட. திமிர்ந்தன-பூசின.
43. கரந்தவன்-மறைத்தவன். ஆரவாரம்-பெருமித தடக்கை.
44. மிடியற்கு-வறுமை யுடையவர்கட்கு. விளிக்கும்-அழைக்கும்.கலுழன்-கருடன்.
45. நீறுவாய்-திருநீறு பொருந்திய. பாறு-பருந்து.
46. நறிய-நல்ல. படூஉம்-பொருந்தும். பொற்பூண்-பொன்னாலாகிய அணிகலம். அழுக்காறு-பிறராக்கங்கண்டு பொறாமை. வழுக்காது-தவறாது. தவப்பல-மிகப்பல. மிடியா-குறைவுபடாத.
47. கிரிராச கன்னிகை-மலையரையன் மகளாகிய உமாதேவி அமுதமுனி-சிவஞான பாலையர். சுடரிலை வேற்குழவி-முருகக் கடவுள். குடமுனி-அகத்தியன்.
48. குடக்கு-மேற்கு. குணக்கு-கிழக்கு.
49. ஒருத்தி-உமையவள். சந்து-தூது. மகளிர்-பரவை நாச்சியார். நம்பி-சுந்தரர். மரீஇ-பொருந்தி. முரண்கொள் செயல்-மாறுபட்ட செய்கை.
50. வாரியங்கரை-கடற்கரை. வாள் இலை-வாளைப் போன்றஇலை. கைதை-தாழை. வேரியங்கமலம்-தேன்பொருந்திய தாமரை.
51. தடங்கடல்-பெரிய கடல்.
52. மெய்ஞ்ஞானப்பாலன்-திருஞானசம்பந்தர். அட்டிட்டல்-சமைத்து உணவளித்தல். தூக்கு-திருமயிலைத் தேவாரப்பாடல்.
53. மாயை நடலை-மாயையின் பொய்ம்மைத் தன்மை. தபு-கெடுக்கும்.
54. மெய்த்த-உண்மையாகிய. புராரி-சிவன். உழை-மான். நிலவினன்-திங்கள்.
55. அறலோதி-கருமணல் போன்ற கூந்தல். வாள்விழி ஒத்தினள்-வாளைப்போன்ற கண்களிலே ஒற்றிக்கொண்டாள்.
56. நல்இயல்-நல்ல தன்மையுடைய. சூலி-சூலப்படையை உடையவன்.
57. உண்டி-உணவு. கள்-தேன். பகுத்திட்டு-பங்கு செய்து.
58. அவன் இயல்-அவனுடைய இயல்பை.
59. மாயை கழலும்-மாயை நீங்கும்.
60. சமன் நோக்கம்-சமமான பார்வை.ஓவினை-விட்டொழித்தாய். பணிகள்-பரம்பணிகள். பாணி-கங்கை. பரசு-மழு. குறைவிலா மதி-பேரறிவு. கோது அறும்-குற்றம் இல்லாத.
61. வினையேன்-தீவினையேன். விதி விலக்கு-விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும். அனை-தாய்.
62. இல்லாமை இல்லாமை-வறுமையில்லாமை.
63. மேனி-உடல். அபிமானி-பற்றுடையவன்.
64. திருப்புகழ்-சீர்த்தி. உரகர்க்கிறை-ஆதி சேடன். பைத்தலை-படத்தையுடைய தலை. மாண-மிகவும். பூ-நிலம். பூமிசையுற்றிடுவான்-நான்முகன்.
65. பாரார்-உலகத்தவர். விசும் புளார்-விண்ணுலகத்தவர்.
66. மிடிதீர்-வறுமையைப் போக்கு. முதுகுன்று-பழமலை.
67. குவவு-திரண்ட. மாருதி-அநுமான். எறும்பி-யானை. அரன்-சிவன்.
68. பூமேல்-உலகத்தில். மாமேன்மை-சிறந்த பெருமை. வௌவல்-பற்றுதல்.
69. அண்டர்-தேவர். பாவிக்கப்படும்-போற்றப்படும். பண்டைநரர்-நெடுங்காலமாகப் பிறவியையடைந்து வருந்தும் மனிதர்கள். பவம்-பிறப்பு.
70. தீர்த்தன்-மேன்மையை உடையவன். ஏத்திவரில்-போற்றிவந்தால்.
71. சசிவன்னன்-விருத்தாசல புராணத்திற் கூறப்படும் ஒருவன். இவன் பல தீமைகளைச் செய்து வெண்ணிற நோயை அடைந்தபடியால் சசிவன்னன் என்று பெயர் பெற்றான். இவனை இவன்தந்தை மானந்திபராயணர் என்னும் பெரியவரிடங்கொண்டு போய்த் தீவினையைப் போக்கி மெய்யறிவுபெறச் செய்தான்.
72. சிறையிட்டுளான்-படைக்க முடியாதபடி தடைசெய்துள்ளான். கமலாலயா-நான்முகனே!
73. பார்வை மூன்றுளன்-சிவபிரான். நாலிருகண்விண்ணவன்-நான்முகன். தவளம்-வெண்மை.
வாரணன்-தேவேந்திரன்.
74. வாரணாசி-காசி. மாதை-திருவாமாத்தூர். வீழி-திருவீழிமிழலை. புகார்-காவிரிப்பூம்பட்டினம். அம்பர்-திருவம்பர். ஆரணாடவி-மறைக்காடு.
75. மதிதேய்வு அகன்று-திங்கள் தேய்தல் நீங்கி. காழி-சீகாழி. ஞானமாமதலை-திருஞானசம்பந்தர். மாதர் என்பு வடிவாவர் ; என்பது மாதர்களை என்பு போல் வெறுத் தொதுக்கத்தக்க மெய்யறிவு உண்டாகு மென்றபடி.
76. மாறிய-மாறுபட்ட. பாகு-இனிமை பொருந்திய வெல்லப்பாகு.
77. பகலா-பகுத்தலில்லாத. ஆசைஇரும்பேய்-ஆசையாகிய பெரிய பேய். மூலமலப் பேய்-அஞ்ஞானம். ஆகம்-உடல்.
78. கரந்து நிற்றல்-மறைந்திருத்தல்.
79. மணப் பந்தர்க்குத் தப்பி-திருஞானசம்பந்தருடைய திருமண விழாவில் வீடுபேற்றையடைவதற்குத் தவறி. உழல்-பிறப்பிறப்பில் உழலுகின்ற. வம்மின்-வருவீர்களாக. 80. துவர்வாய்-பவழம் போன்ற வாய். வென்றிமலி-வெற்றி மிகுந்த. தமர்-உறவினர். மணம் விலக்கி-சுந்தரர் திருமணத்தைத் தடுத்து. இருமாதர்-பரவையார், சங்கிலியார். மோகவேலை-காமக்கடல்.
81. கிடையாத-அடைதற்கரிய.
82. என்மேற்று-என்மேலது.
83. படி-உலகம் அளப்பம்-அளவு செய்வோம். அலரி-கதிரவன். அயன்-நான்முகன். தருக்கர்-தருக்கநூலார். அண்டம் உண்ட அம்பு-திருமால். சம்பு-சிவபிரான்.
84. கடந்த பிரமம்-எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பிரமம். கழற்கால்-வீரக்கழல் அணிந்த திருவடி. முடங்கு சுருள்வால்-வளைந்து சுருண்ட வால்.
85. பரமுத்தி-மேலான வீடுபேறு. உபசாரம்-வழிபாடு.
86. அனந்தன்-ஆதிசேடன். சயனம்-படுக்கை. படப்பணி-படத்தையுடைய பாம்பு. பாணிமானை-கையிலுள்ள மானை.
87. விளங்காத வண்ணம்-மேற்படாதவாறு. துளங்காது-நடுங்காமல்.
88. போகி-போகத்தையுடையவன்; பாம்பு. மண்ணைவிடும் பரிசு-உலகத்தை விட்டு நீங்குந் தன்மை. பணம்-படம். வீந்திடுவாய்-இறந்து போவாய். முடங்குறினும்-முடங்கிக் கிடந்தாலும். வளி-காற்று.
89. புன்பொருள்-இழிந்த பொருள். நீசர்-நல்லியல்பில்லாதவர்கள். தூய்து-தூய்மையானவைகள்.
90. மேலுக்கு-மேன்மைக்கு. கீழுக்கு-கீழாந்தன்மைக்கு. நாப்பண்-நடு.
(வாழ்த்து) பவளம்-பவளம் போன்ற வாய். இருள்புரை-இருளை நிகர்த்த. வாஞ்சை-விருப்பம்.
91. முனிப்புலி-வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவர். முழைப்புலி-குகையில் இருக்கும் புலி. கண்ணுற்றவர்-தொழுதவர்.அமலவாரூர்-தூய்மை மிக்க திருவாரூர். தலைப்படுகுவர்-அடைவர்.
92. அணங்கு அலள்-தெய்வப்பெண் அல்லள்.
93. செறிகிலன்-பொருந்தவில்லை. மலய வெற்பு-பொதிய மலை. யாக்கை-உடல். குறியவன்-குறுகப்பெற்றவன்.
---------------------
This file was last updated on 7 Feb. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)