pm logo

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்


Sri civanjAnapAlaya tEcikar piLLaittamiz
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்
(பனுவல் திரட்டு )


Source:
1. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்.,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978.

2. நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இந்நூல் திருக்கயிலாய பரமபரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதின பரம்பரைத் தர்மகர்த்துவம் பதினெட்டாம் பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் வெளியிட்டருளியது
பதிப்பகம் : ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்,
சுபானு ௵, 1944, பதிப்புரிமை, விலை ரூ. 5.
------------

ஸ்ரீ சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் உள்ள 96 வகை நூல்களில் ஒன்று. அது குழந்தையாகப் பிறவாத சிவபிரானையொழித்து ஏனைய கடவுளர்கள்மீதும் பெரியோர்கள் மீதும் பாடப் பெறுவது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்னும் பத்துப் பருவங்கள் கொண்டது. பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு இறுதிப் பருவங்கள் மூன்றுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மனை, ஊசல் என்னும் பருவங்கள் அமைத்துப் பாடப்பெறும். இப்பிள்ளைத் தமிழ் துறவியின்மீது துறவியால் பாடப் பெற்றதாகலின் தத்துவப் பொருள்கள் அமையப் பெற்றது

காப்பு
அத்திமுகத் துத்தமனை
நித்தம்நினை சித்தமே.

1. காப்புப் பருவம்

திருமால்
திருமா மறையு மாகமமுந் தெருட்டு பொருளோர் முடிவாகத்
        தெளிவில் சமயர் தமின்முரணித் தியங்கி யபேதம் பேதமென
வருமால் வாத மயலொழிய மலர்வாய் மலரப் பெருங்கருணை
        வடிவாய் வந்த சிவஞான வள்ள லிணைத்தாண் மலர்க்காக்க
கருமா முடக்கொம் பொழுகமுதக் கதிர்வெண் டிங்கட் கண்ணிபுனை
        காலத் தவன்சே வடியிற்செங் கமல விழியொன் றிடந்தணிந்தும்
பொருமா மழவெள் விடையாகிப் பொறுத்துந் தொழும்பு தலைநின்ற
        பொன்னந் திருமார் புடைக்கமஞ்சூற் புயல்வண் ணத்தெம் பெருமானே. (1)

1. காப்புப் பருவம் (குழந்தையைக் காக்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுவது இப்பருவம்.)
1. தெருட்டு பொருள்-தெளிவிக்கும் பொருள். சமயர்-பல சமயத்தவர். முரணி-மாறுபட்டு. தியங்கி-மயங்கி. மால்வாதம்-மயக்கம் பொருந்திய சொற்போர். திங்கட்கண்ணி-திங்களாகிய மாலை. இடந்தணிந்து-தோண்டிச் சார்த்தி. பொரும்-போர் செய்கிற. மழவெள்விடை-இளமை தங்கிய வெள்ளிய காளை. தொழும்பு-தொண்டு. பொன்-திருமகள். கமம்சூல்-நிறைகருப்பம். புயல் வண்ணம்-முகில்நிறம்-
----------

மல்லிகார்ச்சுனேசுரர்
உடற்கு விளையுஞ் சூர்தாக்கு மொழித்தற் கரிய பலபிணியு
        முடற்று பசிநோய் முதலனவு முணர்வைப் பிணித்துப் பிறப்பெனுமாழ்
கடற்கு ளழுத்தி யுயிர்சிவத்திற் கலப்பைப் பிரித்து விடுமலமுங்
        கழலக் கருணை புரிந்தெம்மைக் காக்குஞ் சிவஞா னியைக்காக்க
முடக்கு மடிக ணிமிர்த்தெழுந்து முள்காந் திருந்து களஞ்சுருக்கி
        முழைவாய் பிளந்து செவிநிமிர்த்து முறுக்கி வெடிவால் சிறிதடித்து
விடக்கு விரும்பு புலிபாய விரையு முண்மா னுடைமதியம்
        வெருவுற் றகலும் பருப்பதமாம் விலங்கன் முக்கட் பெருமாளே. (2)

2., உடற்று-வருத்தும். பிணித்து-மயக்கிக் கட்டி. கழல-அகன்று நீங்க. முள்காந்திருந்து-மௌனமாக இருந்து. களஞ்சுருக்கி-கழுத்தைச் சுருக்கி. முழைவாய்-குகையைப் போன்ற வாய். விடக்கு-ஊன். உள் மானுடை மதியம்-உள்ளே மானையுடைய திங்கள். வெருவுற்று-அஞ்சி.
----------------

உமாதேவியார்
இளைக்கு மருங்கு லொருமடந்தைக் கெய்து தவள முகிற்கூந்த
        லிருஞ்சூன் முகிலி னிருள்படைப்ப விருண்ட வடியே னுளம்விளர்ப்பத்
திளைக்கு மலர்க்கட் கருணைமடை திறக்குங் குணப்பொற் குன்றையுயர்
        சிகர மயிலைச் சிவஞான தேவன் றனைநா டொறுங்காக்க
விளைக்குந் தவத்தாற் பால்தனக்கு விரும்பிக் கொடுத்த கொழுநன்மணி
        மிடறே போல வெனதுபுன்சொல் விடமுண் கின்ற திருச்செவியை
முளைக்குந் தரள நகைவாயான் முதிர்தீஞ் செய்யு ளமுதூட்ட
        முன்னம் பிள்ளைப் பெருமாளை முலைப்பா லூட்டு மொருதாயே. (3)

3. தவளமுகிற் கூந்தல்-வெண் முகிலைப் போன்ற கூந்தல். சூன்முகில்-நீருண்ட கரிய முகில். விளர்ப்ப-வெளுக்க. உயர் சிகரம்-உயர்ந்த முடி. மணிமிடறே போல-நீலமணி போன்ற கரிய கழுத்தைப் போல். தரளநகை-முத்தைப்போன்ற பற்கள்.
------------

விநாயகக்கடவுள்
நீர்வாழ் வரிச்செங் கயல்கவர நிற்குஞ் சிரல்வா ரிதிகலங்க
        நிலைபேர்ந் துலவுந் திமிங்கிலப்பேர் நெடுமீன் கவர்வா னிற்பதெனப்
பார்வாழ் மக்கட் பரப்பெல்லாம் பணிவேந் தாயின் மொழிப்படுசீர்
        பாடத் தொடங்கு மெனதிடத்தும் பழிப்பில் சிவஞா னியைக்காக்க
தார்வாழ் திருப்பொற் கோயிற்குத் தடமா மதிலிற் பொலிமார்பத்
        தனிவான் முகிலுஞ் சரோருகப்பொற் றவிசிற் பசும்பொற் குவடும்வான்
ஊர்வா ழரசு முனிவரரு மொருதஞ் செயற்குக் காப்பாக
        வுவந்து முதற்கட் பரவுபுக ழொருத்தன் முகத்தெம் பெருமாளே.        (4)

4. பார்வாழ்-உலகத்திலே வாழுகிற. மொழிப்படு-சொல்லில் அமைந்த. சரோருகம்-தாமரை. கயல் கவர-மீனைப்பற்ற. சிரல்-மீன் கொத்திப் பறவை. தவிசு.இருக்கை. ஒருத்தல்-யானை.
---------------

சுப்பிரமணியக்கடவுள்
பாயுங் கவனக் கடியமனப் பரிகா வாமற் கொடுவிடயப்
        பகைகா வாமற் பிறருரைக்கும் பழிகா வாம லிருதாளுந்
தேயும் படிசென் றிடையின்றிச் செல்வச் செருக்கர் கடைகாக்குஞ்
        சிறியேற் காக்குஞ் சிவஞான தேவன் றிருமே னியைக்காக்க
வாயும் மனமுந் தொடர்வரிதாய் வருதல் போத லிரவுபகல்
        வளர்தல் குறைதல் வெறுப்புவப்பு வறுமை செல்வ மிலாததனை
ஆயுந் தமிழக் குறு முனிவற் கறித லறித லிலாமைபோ
        யறிவே யாகி யுலகொழிய வருள்செய் சுடர்வேற் பெருமாளே.        (5)

5. பாயும்-பாய்ந்து செல்லும். கவனம்-போக்குவரவு. கடிய-விரைந்து செல்லுந் தன்மையுள்ள. மனப்பரி-மனமாகிய குதிரை. செருக்கர்-செருக்கையுடையவர்கள். கடை-கடைவாசல்.
-------------

அல்லமதேவர் - வேறு
அகரவுயி ரனையபரி பூரணத் தீர்த்தனை
        யடிநிழலி லடையுமெம தாருயிர்க் காப்பனை
நிகரிலல மயனையழி யாதமெய்க் கூத்தனை
        நிகழுமனு பவனையரு ளாளனைப் போற்றுதும்
நகரவர சிடையமரும் வாசனைக் காற்றெனும்
        நடையிரத மதனன்வலி வீயுமெய்க் காட்டனை
மகரமனை சுவறவெறி வேலுடைச் சூர்ப்பகை
        மயிலைமலை மருவுசிவ ஞானயைக் காக்கவே.        (6)

6. காப்பனை-காக்கின்றவனை. மதனன்வலி வீயும்-காமன் வலியழியும். மகரமனை-மகர மீன்கட்கு வீடாக விளங்குங்கடல். சூர்ப்பகை-முருகக் கடவுள்.
--------------

வசவதேவர் - வேறு
விழுப்பநிலை குறிகுணங்க ணாடிடா தென்றும்
        வேண்டுவன வேண்டியாங் களித்தரவே டத்தர்
குழுக்கடமக் கன்புசெய்நந் தலைச்சுமைவாங் குபுதான்
        கொண்டவனென் றரியசிவ ஞானியைக்காத் தளிக்க
விழிப்பினம தொருநாமம் புகல்பவரைப் பிறப்பி
        லெடுக்குநமக் கிஃதரிதன் றெனச்சென்று கடிது
வழுக்கிவிழு பவளையெடுத் தஞ்சலோம் பென்ற
        வசவதே சிகனெனுமெங் குடிமுழுதாள் பவனே.        (7)

7. விழுப்பநிலை-மேலாகிய நிலை. அரவேடத்தர்-சிவக்கோலம் பூண்டவர்கள். குழுக்கள்-கூட்டம். வாங்குபு-வாங்கும் பொருட்டு. அஞ்சல் ஒம்பு-அஞ்சுதலை விடு.
------------

தேவாரமருளிய மூவர்
கிளக்கிலா நாமணியி னாவே யாகக்
        கேட்கிலாக் காதூசி யின்கா தாக
வளர்க்குமா புகழுலகிற் பரப்பா நின்ற
        மயிலைவரைச் சிவஞான தேவற் காக்க
அளக்கிலாத் தமதுரைபூந் தொடைபு னைந்த
        வரசுபோன் றல்லனபுன் குறும்பு போலக்
கொளக்குறையாப் பெருஞ்செல்வ மெமக்கா ஞானக்
        கூத்தனுறு பதிகள்பல பாடியமூ வருமே.        (8)

8., கிளக்கிலா நா-பேசாதநா. கேட்கிலாக்காது-ஊசியின் காது. அளக்கிலா-அளக்க முடியாத. ஞானக்கூத்தன்-இறைவன்.
--------------

மாணிக்கவாசக சுவாமிகள்
அருந்தமிழ்நா டொருகோடி தவஞ்செயவந் ததிர்வெள்
        ளருவிதூங் குயர்மயிலை வரையினமர் விளக்கைப்
பரந்துபடு மிகுபாச ஞானமொடு மற்றைப்
        பசுஞானங் கடந்தசிவ ஞானியைக்காத் தளிக்க
விரிந்தமறை யொருநான்கு மெழுதுகில மெனவோர்
        வீறுடைப்பொற் கொன்றைபுனை விரிசடையோ னெழுதத்
திருந்துதமிழ்க் கோவையொரு நானூறு முரைத்த
        திருவாத வூரனெனுஞ் செழுமலர்க்கற் பகமே.        (9)

9. தூங்கு-இழிகின்ற. பரந்துபடு-பரவியுள்ள. எழுதுகிலம்-எழுதவில்லை. வீறுடை-பெருமையுடைய. கோவை-திருக்கோவையார்.
-------------

சென்னவசவ தேவர் - வேறு
அறிவுயிர் கரண முடலொடு பொறிகள்
        சிவமென வுதவு தானியைக் காத்தெமர்
வழிவழி யடிமை யெனவருள் புரியு
        மொருவனை யெமது பாவனைக் கேற்றிடு
மமுதினை மணியை யடியவ ருயிரை
        யுயர்சிவ சமய நாதனைப் பார்த்துறு
குறிகுண நிலைகள் குருசிவ சரணர்
        தமையிகழ் பவரை வேறெனத் தாக்கியை
வளர்தரு தனது குணவருள் கனலி
        னழல்புனன் மருவு மாறெனத் தாட்டுணை
குறுகிடு பவரை யடைவுற வுலகின்
        வருசென வசவ தேவனைப் போற்றுதும்
பொறியொரு புடையில் வளையொரு புடையி
        லிரவியி னிருளை நாமறத் தீர்த்தெரி
மணிமிளிர் திகிரி யொடுபல வணிகண்
        முடியொரு புடையி லாருயிர்க் காப்புறு
புயனிற வடிவ வரியொரு புடையில்
        விழவர வணையை வானுறத் தூக்குபு
மறிதிரை கதறு கடலிடை யுதறு
        பொறிமயில் கடவு வீரன்மெய்ச் சீர்த்தியன்
மலைமுனி முருக குருபர குமர
        சரவண பவவெ னாமிகப் போற்றிட
மறைமொழி யருள்செ யறுமுகன் மருவு
        மயிலைவ ருசிவ ஞானியைக் காக்கவே.        (10)

10.கரணம்-அந்தக் கரணம். பொறிகள்-ஐம்பொறிகள்.தாக்கியை-தாக்குபவனை அரியொரு புடையில் விழ-திருமால் ஒரு பக்கத்திலே விழ. அரவணை-பாம்புப் படுக்கை. தூக்குபு-தூக்கி.
-------------

2. செங்கீரப் பருவம்

துங்கவெம் புகர்முகக் களிநல்யா னையினதட்
        சுமையும் பெரும்புலிதருந்
துகிற்சுமையும் வெண்மருப் புச்சுமையு மிளையாது
        துள்ளியெழு சிறுகன்றுமான்
வெங்கனன் மழுச்சுமையும் வெண்முளரி மலர்வென்ற
        வெண்டலைச் சுமையுமணிகள்
வெயிலெறித் திருள்விழுங் கோரா யிரம்படம்
        விரிக்குமர வச்சுமையும்நீள்
அங்கம் புரண்டுவல மாலயம் புரியுமவ
        ரணியெனத் திரைகள்புரளு
மாயிரந் திருமுகக் கங்கையஞ் சுமையுமொழு
        கமுதகிர ணக்குழவிவெண்
திங்களஞ் சுமையினொடு போகட் டுலாவுமிறை
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.                (11)

11. துங்கம்-உயர்ச்சி. புகர் முகம்-புள்ளிகளையுடைய முகம். அதட்சுமை-தோற்சுமை. புலிதரும் துகில்-புலித்தோல். அரவச்சுமை-பாம்புச் சுமை. அங்கம் புரண்டு-உடலாற் புரளுதலைச் செய்து. அணி-வரிசை. திரைகள்-அலைகள். போகட்டு-போட்டுவிட்டு. திமிரமலம்-மலவிருள்.
--------------

வென்றிவிடை யினர்திருக் காமநா யகர்திரு
        விழாமுற்ற வருண்மாதவர்
வேறுவே றாயதிரு வேடத்தர் நீறுதிமிர்
        மேனியினர் வேணிமுடியர்
துன்றிழை மலிந்தகந் தைச்சுவலர் பட்டுமென்
        றூசுமணி யாரமணிவார்
சூலப் படைக்கலத் தினர்தனித் தவரருகு
        தோகையர்க ளோடுவருவார்
குன்றுறழ் பனைக்கைவெங் கரிசிவிகை யாதிமிசை
        கொள்பவ ரியந்தழங்கக்
கோடிநூ றாயிரவர் மகரா லயத்தொடிகல்
        கொண்டதோர் செயல தென்னச்
சென்றெதிர் முழங்குபொம் மையபட் டினச்செல்வ
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.        (12)

12. நீறுதிமிர்-திருநீற்றை மிகுதியாக அணிந்துள்ள. இயந்தழங்க-வாத்தியங்கள் ஒலிக்க. மகராலயம்-கடல்.
------------

ஒருவாறு மின்றியிது வென்றுணர வரியபர
        மொன்றிரண் டாகியவைமூ
வுருவாகி மூவிரண் டாறாறு வகையிரட்
        டுற்றநூற் றெட்டுவிரிவாய்
இருவாறு நின்றிலகி யிருநூறு தலையிட்ட
        வீரெட்டு மாறாறினவ்
வெண்பெற்ற வாறினவ் வாறுமூன் றினிலவை
        யிரண்டினி லிரண்டுமொன்றில்
மருவா வடங்கிநீ நானென்னு மயலின்றி
        மனவா சகங்கடந்து
வந்துகூ டுதலகற லின்றிநின் றிடுநிலையை
        மலரடி முடிக்களித்துத்
திருவாய் மலர்ந்தெனக் கொருமொழியி லருள்பவா
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.                (13)

13. இருவாறு-இரண்டுவகை. அகறல்-நீங்குதல்.
------------

பாவகப் படுபெரும் புகழிமய மலைபெறு
        பவானிவளர் திருமுலைத்தண்
பாலுண்டு தண்டையந் தாள்சிவந் திடவாதி
        பகவன்வியன் மார்பினுலவிப்
பூவகப் பள்ளியமர் தருபுங் கவன்றலை
        புண்படக் குட்டிநீடு
பொன்னங் குவட்டுமா யிருஞால முடிவைத்த
        புழையெயிற் றரவசைத்து
மாவலர்ச் செங்கைகொடு சிறுதே ருருட்டியுயர்
        வானவர்க் கிடர்விளைத்து
வலிகொண் டிருந்தவன் றிறலசுரர் தலைவெட்டி
        வட்டாடு மொருவெற்றிவேல்
சேவகப் பிள்ளைதுணை யாகவிளை யாடுவாய்
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.        (14)

14. பாவகப்படும்-பாட்டின் பொருளாய்ப்படும். பவானி-இறைவி. வியன் மார்பு-அகன்ற மார்பு. பூவகப்பள்ளியமர் தருபுங்கவன்-நான்முகன். பொன்னங்குவடு-மேருமலை. அரவசைத்து-ஆதிசேடனாகிய பாம்பை அசையச் செய்து. தளலைவெட்டி வட்டாடும் வேல்-என்றது அசுரர் தலைகளை வட்டாடு காய்கள்போல் உருண்டோட வெட்டும் வேலென்றவாறு.
-------------

பெருமுடக் கானிமிர்ந் ததுகூ னிமிர்ந்தது
        பிணிகள்பல பலபோயின
பிடித்திருந் தெவரானு மகலாது துயர்செய்த
        பேயகன் றிட்டதம்மா
அருமகப் பெற்றுவந் தனமிடி யகன்றன
        மகிலம் புரக்கவருமோ
ரரசெய்தி னஞ்சென்று வென்றெய்து தற்குமிக
        வரியபகை வென்றெய்தினம்
வருமடக் கொடிமாதர் கண்வலைப் பட்டதுயர்
        மாற்றவற நெறிகண்டனம்
மலமாயை கருமங்க ணிலைகண்டி லோமென்னு
        மக்களொலி விண்ணளப்பத்
திருமடத் தரசிருந் தருள்செயருள் விழியாள
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.        (15)

15. முடக்கால்-வளைந்த கால். மலமாயைகருமங்கள் நிலை கண்டிலோம்-மாயையை நீக்கி வீடுபேற்றினை யடைதற்குரிய செயல் வழிகளைக் கண்டோம் இல்லை.
-------------

மெய்தயங் கரிசனம் பூசிவெந் நீராட்டி
        விழியூதி மெய்துடைத்து
விரனிலந் தைவந் திடும்பொட்டின் மீதுலையின்
        வெண்ணீ றணிந்துவிழியில்
மைதயங் குறவெழுதி யியல்பாகு மக்கமணி
        வடமணிந் தம்பொனரைஞாண்
மணியரிக் கிண்கிணி சதங்கைபொற் றண்டைகள்
        வனைந்துபொற் றொட்டிலுய்த்தே
எய்தவந் துறுபெருஞ் செல்வமே யமையாத
        வின்சுவைத் தெள்ளமுதமே
யென்னுயிர்த் துணையாய மாணிக்க மதலையே
        யென்றுசீ ராட்டியன்பால்
செய்தவம் பெருகுமம் மவைவளர்க் குங்குழவி
        செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
        செங்கீரை யாடியருளே.        (16)

16. அரிசனம்-மஞ்சள் ; சந்தனமுமாம். தயங்குற-விளங்க. அக்கமணிவடம்-சிவ கண்மணிமாலை.
----------------

வேறு
முந்துதவு வார்களிடை யொன்றார்வங் கூர
        முந்தையினு மோர்பொருளை நின்றீகின் றாரில்
வந்துநிகழ் காருதவு றுங்காறங் காறு
        மண்டுதிரை யானிறைய வொண்காவின் றேறல்
கந்தமலர் வேனிலுமி ழுஞ்சீர்பொன் றாத
        கம்பரொரு மாவினுமை யுந்தாமுஞ் சார
நந்துநக ராளுமிறை செங்கோசெங் கீரை
        நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை. (17)
17. ஒன்று ஆர்வம் கூர-பொருந்திய அன்பு மிகுதிப்பட. தேறல்-தேன். பொன்றாத-கெடாத.
--------------

வஞ்சமல மாயைகரு மஞ்சார்வின் றோட
        மண்டுவிழி நீர்சொரிய நின்றேயன் பாகி
நெஞ்சுருகு வார்துணைவ செங்கோசெங் கீரை
        நின்றநிலை பேர்தலிலி செங்கோசெங் கீரை
விஞ்சுருவ மோடருவி ரண்டோடொன் பானும்
        வெம்புபரை யாதியும் கன்றாகும் போதம்
நஞ்சொருப மாவருளி செங்கோசெங் கீரை
        நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.        (18)

18. சார்வின்றோட-சார்தல் இல்லாமல் ஓட. நஞ்சொருபம்-நமது வடிவம்.
----------

பங்கயம் தேறிநற வுண்டேசங் கீத
        பண்கள்பல பாடியொழு குந்தாளொண் காவி
அங்குமுத மூசுபிண ரந்தாள்கொம் பூதி
        யம்பணில வாவியினும் வெஞ்சூல்கொண் டேகி
மங்குல்துயில் சோலையினு மங்கோடிங் கோடு
        வண்டுதிரி கீழ்நதியு ளின்கேளின் பூசை
நங்கைநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
        நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.        (19)

19. பங்கயம்-தாமரை. மங்குல்-துகில்.
-----------

கம்பநகர் வாழிறைவ செங்கோசெங் கீரை
        கங்கைசும வாதபர செங்கோசெங் கீரை
செம்பொன்முடி தாழ்சரண செங்கோசெங் கீரை
        செங்கைமணி நேர்தலைவ செங்கோசெங் கீரை
இம்பர்வரு மாரமுத செங்கோசெங் கீரை
        யெங்கண்மல நாசவொளி செங்கோசெங் கீரை
நம்புமடி யார்துணைவ செங்கோசெங் கீரை
        நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.        (20)

20. கங்கை சுமவாத-கங்கையைத் தாங்காத. இம்பர்-இவ்வுலகம்.
--------------

3. தாலப் பருவம்

ஆற்றற் பெரியோ ராற்றுவார்க்
        காற்றல் பசியை யாற்றுதலென்
றறைந்த மொழியைக் கடந்துசிவ
        னடியா ரெனுநல் விருந்தழைத்துச்
சோற்றுக் குவடு மொலைத்தசிறு
        தொல்லைப் பூத மொருகோடி.
தொலைத்தற் கரிய செஞ்சாலிச்
        சோறுங் கறியுங் கைகவிப்ப
ஊற்றற் கமைத்த பாறயிர்நெய்
        யுதிர்தீங் கனியு முறைமுறையே
யொழுகு பந்தி பலவிருத்தி
        யுவந்து படைத்துத் தீப்பசியை
மாற்றிப் பெருஞ்சீர் பெறுதற்கு
        வல்லாய் தாலோ தாலேலோ
மயிலை வரையிற் சிவஞான
        மணியே தாலோ தாலேலோ        (21)

21. “ஆற்றுவா ராற்றல்” என்னுங் குறள். குவடு-மலை, செஞ்சாலி-செந்நெல். சோற்றுக்குவடு-சோற்றாலாகிய பெருங்குவை. பந்தி-வரிசை.
--------------

அருவா யுருவா யவையன்றி
        யறிவாய் நிற்கு மவிர்சடிலத்
தண்ணல் பெருஞ்சீ ரிசைப்புலவ
        ரறைதல் பட்டாங் காதல்போல்
மருவார் மலர்த்தண் பொழின்மணிநீர்
        வாவி பசும்பொன் மதின்மாட
மணிமா ளிகைகோ புரநெடுந்தேர்
        மறுகு முதலா யினவற்றின்
பொருவா வளங்க ளிறும்பூது
        புகல்வார் புகலும் படியெல்லாம்
பொருளே யாகி யேனையபோற்
        புராண மலது மறைகூறுந்
திருவார் கச்சி நகரிடங்கொள்
        செல்வா தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
        தேவே தாலோ தாலேலோ.        (22)

22. அருவாய் உருவாய்-அருவமாயும், உருவமாயும். பட்டாங்கு-உள்ளவாறு ; புராணமலது மறைகூறும்-புராணங் கூறுதலேயன்றி மறைகளுங் கூறும். அவிர்சடிலம்-விளங்குகிற சடைமரு-மணம். பொருவாவளங்கள்-ஒப்பில்லாத சிறப்புக்கள். ஏனைய போல்-பிறவற்றைப்போல். திருவார்கச்சி-ஈண்டுப் புகழாகிய திருநிறை கச்சி என்பது பொருள்.
-----------

ஆர்க்கு மதுரச் சங்கமளித்
        தரவ மடுத்த பெருங்கங்கை
யாறு மடுத்துப் பிறைத்தோணி
        யமர்ந்து சடைச்செந் துகிப்படர்ந்து
பார்க்கு முமைகட் கயலுலவும்
        பழைய கருணைக் கடலகத்துப்
படிந்து பரக்கும் புறச்சமயப்
        பாம்பு பதைப்ப விடித்துமயல்
போக்கு மயிலை வரையிவர்ந்து
        பொருண்மா மாரி மிடிக்கோடை
பொன்றப் பொழிந்து புகழ்வெள்ளம்
        பொருப்பு வாளக் கரைவாவி
தேக்கு முகிலே யமுதேசெந்
        தேனே தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
        தேவே தாலோ தாலேலோ.        (23)

23. ஆர்க்கும்-ஒலிக்கும். அரவம்-ஒலி. உமைகட் கயல்-உமையம்மையின் கண்ணாகிய மீன். மயல்போக்கும்-மயக்கத்தை நீக்கும். பொன்ற-கெட.
--------------

முதையா மெமது மனப்புலத்தை
        மூடுங் காம வெகுளிவன
முற்றுங் கருணைத் தீக்கொளுவி
        முருக்கித் திருத்திச் செருக்கெனுமா
மதயா னையைவந் தழியாது
        மறிப்பப் பொறைவே லியுமமைத்து
வலியா சிவமந் திரப்படையால்
        வாய்ப்ப வுழுது சிவவிதையை
விதையா முளைப்பப் பிறதெய்வ
        விரவு களைகட் டறவளர்த்து
வீடாங் கனிகொள் பருவத்து
        விடயக் கரவர் புகுந்ததனைச்
சிதையா வண்ணங் காத்தளிக்குந்
        திறத்தாய் தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
        தேவே தாலோ தாலேலோ.        (24)

24. முதை-பழைய நிலம். வனம்-காடு. முருக்கி-அழித்து. பொறை-பொறுமை. கட்டு-களைந்து. வீடு-மோட்ச வீடு. விடயக்கரவர்-புலவஞ்சகர். சிதையா வண்ணம்-அழித்தொழிக்காதபடி.
-----------

வாங்கு சிறுவெண் மதிக்குழவி
        வயங்கு முடியு மகன்மாள
மலர்ந்த விழிசேர் திருநுதலு
        மதிநேர் சங்கக் குழைப்பணியே
தாங்கு செவியுங் கடற்காளந்
        தரித்த மிடறுங் கனன்மழுமான்
றயங்கு கரமுந் தனிக்கேழற்
        றடங்கோ டிமைக்குந் திருமார்பும்
ஓங்கு சிவவெம் புலியதளொன்
        றுடுத்த வரையு மான்மலர்க்க
ணுற்ற வடியு நினதுண்மை
        யுணரா வஞ்சஞ் செயக்கருணை
தேங்கும் விழிக ளேயதனைச்
        செய்யா தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
        தேவே தாலோ தாலேலோ.        (25)

25. மதிக்குழவி-பிறைத் திங்கள். வயங்கும்-விளங்கும். மதன்-காமன். கடற்காளம்-கடலில் தோன்றிய நஞ்சு மிடறு-கண்டம். கேழல்-பன்றி. தடங்கோடு-பெரிய கொம்பு. மால் மலர்க்கண்-திருமாலின் கண்ணாகிய தாமரை மலர்.
-------------

வேறு
மீனெ னப்பிறழ் மதர்நெடுங் கட்சிறு
        வின்னுதற் றுவர்வாயார்
வேட்கை நோய்தவிர்ப் பவர்க்குமட் புனலிடை
        வேறுசெய் தேறேபோல்
ஊனு யிர்க்கொரு பிரிவுதந் துதவுறு
        முத்தமா தாலேலோ
வுருவ மாகிவந் தென்கருங் கன்மன
        முருக்குவாய் தாலேலோ
வான ளக்குறுங் காலென வெய்திடும்
        வைந்நுதிக் கணையென்ன
வாரி யுட்புகுங் குடமென வுட்புற
        மருவிநின் றகலாமல்
நானி னைப்பரும் பரசிவத் துறவரு
        ணற்றவா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
        ஞானியே தாலேலோ. (26)

26. பிறழ்-புரளுகின்ற. மதர்நெடுங்கண்-களிப்புப் பொருந்திய நீண்ட விழிகள். துவர்-பவழம். தவிர்ப்பவர்க்கு-நீக்குபவர்கட்கு. உத்தமா-உத்தமனே! எய்திடும்-எய்யும். வைநுதி-கூரிய முனை. நகரி நாயக-நகர்கட்கெல்லாந் தலைமையாகிய.
-------------

பாரி னிற்பெருஞ் செல்வமுண் பவர்க்கெனப்
        பற்றிநின் றுண்ணாமற்
பனைப ழுத்ததற் கொக்குமூர் நடுநயப்
        பண்பினோன் றிருவென்னுஞ்
சீர் யற்படு மொழியெமக் கல்லது
        திருவுடை யோர்தம்மிற்
சிலர்க்கு ரைப்பது முகமனென் றுணர்த்துறு
        செய்கையொன் றுடையோனே
கூரி சைப்படா விவறன்மா லையனிடைக்
        குறுகுறா தீவோர்கட்
குறுகு வாரிற்சண் பகம்விடுத் தொள்வழைக்
        கொத்தில்வேள் சிலைவாங்கும்
நாரி மொய்த்தெழு மயிலைமால் வரைக்கொரு
        நாயகா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
        ஞானியே தாலேலோ.        (27)

27. பனைபழுத்ததற்கொக்கும் : “நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று” என வருந்திருக்குறளுக்கு மறுதலையாக, நயப்பண்பினோன் திரு, பலரும் பயன்கொள ஊர்நடுவே பனை பழுத்தாற் போல்வதென நயம்பட உரைத்தவாறாம். சீரியற்படுமொழி-சிறப்புப் பொருந்திய அருளுரை. முகமன்-உபசாரம். இவறன்மாலையன்-உலோபத் தனமுடையவன் வேள்சிலை வாங்கும் நாரி-மன்மதன் கருப்பு வில்லிற்பூட்டிய நாணியாகிய வண்டுகள்.
-------------

கல்லெ னத்திர டோட்புனை மீர்ந்தொடைக்
        காமவே ளுலகெல்லாங்
கவன்று தன்வலிக் குடைந்துதம் புறந்தரக்
        கண்டதோர் மிகுவீரன்
வில்லி யற்சுவைக் கரும்பும்வெம் பகழிகள்
        வீயும்விற் குழைநாரி
விளரி யங்குரற் சுரும்புமாய் முடிந்துற
        விளைத்தவோர் விறலாளா
சொல்லி சைப்படு சங்கவண் புலவர்தந்
        தூக்கொடு நிறைநிற்பச்
சொக்கர் கூடலிற் பொற்பல கையினிடாத்
        தூக்கினும் படியொக்கும்
நல்லி சைத்தமிழ் மாலைசூ டியபுகழ்
        நல்லவா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
        ஞானியே தாலேலோ                (28)

28. கவன்று-வருந்தி. புறம்-முதுகு. விறல்-வெற்றி. சங்கவண் புலவர்-பெருமை பொருந்திய சங்கப் புலவர்கள். தூக்கு-செய்யுள்.
-------------

வேறு
ஒருமா யையினுயிர் மாபரம் வேறா மாபோலு
        முதுபோ மெனினிலை பேதமெனாவோ தாவீயா
வருமா மறையுரை யாடலும் வேறா மான்மாவோ
        டருளார் பதியியல் பாயென வோதா மாறாவாய்
வருமா கமமுரை யாடலு மாரா யாராயே
        மலைவா துசெய்மய லாலுள மோவா நோவாவார்
செருமாய் வுறுமொரு வாசக தாலோ தாலேலோ
        சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.        (29)

29. உதுபோம் எனில்-இது நீங்குமென்றால். ஓதா வீயா-கூறியருள் செய்து. ஒவா-ஒழியாமல்.
-----------

நனவா வொருசிவ மோதிறை தாலோ தாலேலோ
        நவினா வலர்புகழ் மாலைய தாலோ தாலேலோ
கனவா வுலகுறு தேசிக தாலோ தாலேலோ
        கதிர்வே லவன்மயி லாசல தாலோ தாலேலோ
மனவா சகவினை மேவிலி தாலோ தாலேலோ
        மதனா டல்கொலடன் மாதவ தாலோ தாலேலோ
சினவா வருளித யாலய தாலோ தாலேலோ
        சிவஞா னியெனுயிர் நாயக தாலோ தாலேலோ.        (30)

30. நவில்- கூறப்பெறுகிற மனவாசக வினை-மன வாக்குச் செயல்கள். மேவிலி-அடையாதவன்.
-------------

4. சப்பாணிப் பருவம்

காளம் புரைந்தநெட் டுடலழற் கட்கொடிய
        காலன்வந் தான்வந்தனன்
கண்டவா றிஃதுரைத் தனமுரைத் தனமென்று
        கைதட்டி விடுவதென்ன
வேளம்பு தைத்தலறும் வன்னெஞ்ச ரிவ்வுலக
        மெய்யென்ப திலையென்பவர்
விரிசடைக் கடவுளடி யவர்வரவு கண்டுள்ள
        மிக்கெழு மகிழ்ச்சியென்ன
வாளம்பு யத்துணர்ப் பதமுக்க ணிறைபுக
        ழழித்தபுன் சமயமென்புள்
ளணிகடிவ தென்னமழ விடையொன் றுகைப்பவ
        னரியபுகழ் பாடியாடத்
தாளம் புடைப்பதற் கடியிட்ட தென்னநீ
        சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
        சப்பாணி கொட்டியருளே.        (31)

31. காளம்-நஞ்சு. புரைந்த-ஒப்பான. வேளம்பு-காமன் கணை. புள் அணி கடிவது என்ன-பறவைக் கூட்டத்தைத் துரத்துவது போல. விடையொன் றுகைப்பவன்-காளை யொன்றைச் செலுத்துபவன். அடியிட்டது-அடிப்படை செய்து வைத்தது.
-----------

மொண்டுபொய்ப் பொருளென்று பொருளையிர வலர்வரின்
        முத்திரைசெ யாமலுதவி
முழுமறைப் பொருளைமெய்ப் பொருளென்று தொண்டர்க்கு
        முத்திரைசெய் தீங்கருள்வது
விண்டுமது மடைதிறந் தொழுகுபைங் கொன்றைபுனை
        விரிசடைக் கற்றைநெற்றி
விழியுடை யவர்க்கலது குவியாத திலையென்று
        விரியாத தேதிலார்முன்
கொண்டவெம் பவநீறு படநீறு தன்னைக்
        கொடுப்பது நடுங்கவாவி
கொள்ளைகொண் டுண்ணவெம் பால்வருங் கொடியவெங்
        கூற்றைத் தடுப்பதாய
தண்டளிர் கவற்றுநின் கையினா லையநீ
        சப்பாணி கொட்டியருளே.
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
        சப்பாணி கொட்டியருளே.        (32)

32. மொண்டு-அள்ளி. முத்திரை செயாமல்-பாதுகாப்புச் செய்யாமல். பவம் நீறு பட-பிறவி அழிந்தொழிய. ஆவி-உயிர். கவற்றும்-வருத்தும்.
------------

உருக்கிளரும் வடிவென்று நிலையாத விடயத்தி
        லுழலும் புலன்களென்று
மொழிகின்ற புத்தியது தானென்றும் விரிவாகி
        யொன்றாய குணமதென்றும்
பரக்குமிவை யன்றன்று புருடனே யென்றுமுயர்
        பகுதியே யென்றுமதன்மேற்
பரவிந்து வென்றுமவை யன்றியே மனமொழி
        படாதவொரு பிரமமென்றும்
விரிக்கிலிது நிறைவென்று மணுவென்று மொன்றென்றும்
        வேறுபற் பலவென்றுமெய்
விளைவென்று மிலதென்று முயிரியல்பு பலசமயர்
        வேறுவே றாகவைத்துத்
தருக்கமிடு கலகமற வந்தகரு ணாகரா
        சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
        சப்பாணி கொட்டியருளே.        (33)

33. உருக்கிளரும்-வடிவம் விளங்கும். பரக்கும்-பரவும். மனமொழிபடாத-மனம் வாக்குக் காயங்கட்கு எட்டாத.
-----

மும்மைமல முங்கதிர்க் கற்றைவட் டப்பரிதி
        முன்னிருள்செய் தீரமதியின்
முழுநில வெறிக்கும்வெண் டிருநீறு ஞானமெனு
        மொய்குழலை மன்றல்புரிவார்
எம்மணிய தென்றுபுனை நன்முகக் கண்டியுட
        னிறைவனரு ளஞ்செழுத்து
மிலிங்காங்க சங்கசம ரசநிலைமை யிதுவென்ன
        விருளறவுணர்த்து குருவும்
மெய்ம்மையுணர் வொடுகலந் துற்றிருந் தங்கையில்
        வெளிப்பட்ட ஞானவடிவும்
விளங்குசர மும்புனித தீர்த்தசிவ சேடமும்
        மேலுலக வித்தென்றவை
தம்மையுல கினில்விளக் கியவந்த தேசிகா
        சப்பாணி கொட்டியருளே,
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
        சப்பாணி கொட்டியருளே.        (34)

34. ஈரமதி-குளிர்ந்த திங்கள். மொய் குழலை-பெண்ணை. மன்றல் புரிவார்-மணம் புரிவார். கண்டி-சிவகண்மணிமாலை.
---------------

உரைமன மிறந்தவொரு தனிநிலைமை யிதுவென்ன
        உள்ளபடி முனிவர்நால்வ
ருணர்ந்திட வணர்த்துதற் குற்றதவ யோகத்தி
        னொண்ணுதற் கண்டிறந்து
பொருமதனை வென்றனன் பரமனென் கின்றசிறு
        புகழன்றி யோகநிலைமை
பொன்றியங் கவன்வென்றி கொள்ளலாற் படுதோல்வி
        பொன்றலற வெய்தினனெனும்
வரைவில்சிறு மொழிபுகா தெண்ணிலோ ருணரவரு
        மறைமுடி வுணர்த்தி வெய்ய
மதனன்வந் தொருகணமு மெதிர்நிலா தொழுகுதவ
        மாயாத நிலையினுடனித்
தரையினிடை வந்தருளு மெம்பரம யோகியே
        சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
        சப்பாணி கொட்டியருளே.        (35)

35. பொருமதன்-போர் செய்த காமன். பொன்றி அங்கு அவன் வென்றி கொள்ளலால்-பரமனுடைய யோக நிலை முடிவுற்றபடியால் காமன் வென்றனன் என்க.
----------

வேறு
பெருவாழ் வுற்றிடு தீயர்செ ருக்குல கிற்கோரிற்
        பிழையாய் முற்றிடு மாறென நத்திட ருற்றாழ
விரைதேர் புட்குலம் வாயிரை யிட்டிரி யக்காவி
        யிதழ்சா யத்தடு மாறி வரிக்கயல் கெட்டோட
வெருவா மொய்த்திசை பாடளி மட்டுணல் விட்டேக
        விளையா டித்தட வாளை குதித்தெழு பொற்பாய
திருவார் கச்சியர் நாயக கொட்டுக சப்பாணி
        சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.        (36)

36. இரிய-அஞ்சியோட. இசைபாடு அணி-இசைபாடுகிற வண்டுக் கூட்டங்கள். மட்டுணல்-தேனுண்டல்.
-----------
குருநீ பத்தொடை யாளி யெதிர்த்த விறற்சூர
        குருமாள் வித்தவன் வாழ்மயி லைக்கிரி பொற்பார
வருநீர் மைக்கரு ணாகர கொட்டுக சப்பாணி
        மலமா யைப்பகை யானவ கொட்டுக சப்பாணி
கருநீர் மைத்திரு மாலடி யுய்க்குமெ னப்பூசு
        கவர்நா மக்குறி சேர்தரு நெற்றிது டைத்தீசர்
திருநீ றிட்டிடு மாதவ கொட்டுக சப்பாணி
        சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி. (37)

37. குரு-நிறம். நீபத்தொடை-கடப்பமாலை. மாயைப் பகையானவ-மாயைக்குப் பகையானவன்.
-----------

ஒருமா தர்ப்பிறை வாணுதன் மைக்கண் மலர்க்கோதை
        யுமைகா ணக்கம லாலய னொத்துற நற்றாளம்
வருமான் வத்திர னார்கொளு மத்தள முற்பேச
        மகிழ்வீ ணைத்தொழி லாரிசை யொத்திசை யப்பாட
இருமா தர்க்குயி ராமுரு கற்பெறு நிட்காம
        விறையா டப்புல வோர்புனை மெய்க்கவி தைப்பேர்கொள்
திருமா லைப்புய மாதவ கொட்டுக சப்பாணி
        சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி. (38)

38. இரு மாதர்க்கு-வள்ளி தெய்வயானை யென்னும் இருபெண்களுக்கு. நிட்காமவிறை - எத்தகைய அவாவுமற்ற பரமன்.
----------

எளியா ரைப்பெறின் மேனிப தைப்ப வலைத்தாவி
        யெதிர்வா ரைப்பெறி னோடு மறச்சிறி யர்ப்போல
ஒளியா முற்சிறு மீனெதி ரக்கவர் வுற்றாடி
        யுகள்சே லுற்றிட வாயிரை கக்குபு கொக்கோடும்
அளியார் மட்டலர் வாவியு டுத்தற நற்சாலை
        யழகார் கச்சிநி வாச கருத்தும ருட்பாடு
தெனியார் கட்கரு ணீர்மைய கொட்டுக சப்பாணி
        சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி. (39)

39. அலைத்து-வருத்தி. அறச் சிறியர்-மிகச் சிறியவர். கக்குபு-கக்கவிட்டு அளியார்-வண்டுகள் பொருந்திய. மட்டலர்-தேன்மலர்.
----------

புதையா மெய்ப்பொரு ளீகைய கொட்டுக சப்பாணி
        பொழில்சூழ் கச்சியின் வாழ்பவ கொட்டுக சப்பாணி
மதயா னைப்பொறி காவல கொட்டுக சப்பாணி
        மறைவாய் மைத்திரு வாசக கொட்டுக சப்பாணி
சுதையா மெய்ப்பொடி மேனிய கொட்டுக சப்பாணி
        தொழுவார் கட்கரு டேசிக கொட்டுக சப்பாணி
சிதையா நற்குண தாபத கொட்டுக சப்பாணி
        சிவஞா னிப்பெய ராண்முனி கொட்டுக சப்பாணி.        (40)

40. மெய்ப்பொருளீகைய-உண்மைப் பொருளைக் கொடுப்பவனே! மெய்ப்பொடி மேனிய-திருநீறு பூசிய உடலையுடையவனே. தாபதர்-முனிவர்.
-------------

5. முத்தப் பருவம

அருந்து மமுதி னினியதா யன்போ டளைந்து படிறிலதா
        யறைந்த மொழிதத் துவமசியி னன்றி மாறா வியல்பினதாய்ப்
பொருந்து மறையா முடம்பிற்குப் புக்க வுயிராய்ப் பவக்கடற்குப்
புணையாய்க் கயிலை வழித்துணையாய்ப் பொலிந்த திருவஞ் செழுத்தென்னும்
பரந்த புகழ்மந் திரவேந்து பவனி போதுந் திருமறுகாய்ப்
        பனிவெண் டிங்கட் சடைமுடியோன் படிவ முணர்த்தும் விளக்காகித்
திருந்து பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே
        திளைக்குங் கருணைச் சிவஞான தேவா முத்தந் தருகவே. (41)

41. படிறிலதாய்-பொய்யற்றதாய். தத்துவமசி-அது நீயேயாக விருக்கிறாய் என்னும் மறைமொழி. திருமறுகு-திருவீதி.
-----------

எல்லாத் தேவர் தமதுயிரு மிமைப்போ தினிலுண் கரியகடு
        வீன்ற வோதைக் கடன்முத்த மெனைத்தும் வேண்டே மெழின்மதவேள்
வில்லாய்க் கொலைசெய் தொழில்படைத்த வேழக் கரும்பின் வெண்முத்தம்
        விரும்பே மலர்ப்பூம் பொழிற்றிருநெல் வேலிப் பதியின் வேய்முத்தம்
அல்லாற் கருங்காட் டுயிரனைத்து மலமந் தழியக் கதழெரியை
        யாக்க நெடிய வேய்முத்த மணுகேஞ் சிறிது மருளின்மொழி
செல்லாப் பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே
        திளைக்குங் கருணைச் சிவஞான தேவாமுத்தந் தருகவே. (42)

42. கடுஈன்ற-நஞ்சைப் பெற்ற. ஒதைக் கடல்-ஒலி பொருந்திய கடல். வேழக்கரும்பு - மிகச் சிறந்த கரும்பு. வேய் முத்தம்-மூங்கில் முத்து. அலமந்தழிய-சுழன்று வருந்தியழிய. கதழ் எரி-விரைந்தெரியுந் தீ. மூங்கில்கள் ஒன்றொடொன்று தேய்படுவதால் காட்டுத்தீ யுண்டாகுமென்பர்.
-------------

களரின் முளைத்த செங்கரும்பு கண்ணாற் பயந்த விளங்குமரன்
        கதிர்கான் றெழுசெம் பரிதியுடல் கறுப்பச் சிவந்த சுடரிலைவேல்
தளிரி னியல்வென் றுலவுசிறு தவளை வாய்ச்சில் லரிக்குரற்பூஞ்
        சதங்கைச் செம்பொற் சிறுதண்டைத் தாளென் றலைமேல் வைத்தபிரான்
விளரி வரிவண் டிமிர்குவளை வியன்சீர்த் தணிகைக் கருங்கல்லின்
        மிசைப்பூப் பித்தா னெனக்கருதி வினையே னுள்ளக் கல்லிடைத்தாள்
முளரி மலர்கள் பூப்பித்த முதல்வா முத்தந் தருகவே
        முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே. (43)

43. கண்ணாற் பயந்த இளங்குமரன்-முருகக் கடவுள் இறைவனுடைய நுதல் விழியிற்றோன்றினராகலின் இவ்வாறு கூறினார். கதிர்கொன்று-ஒளியைக் கக்கி. பரிதி-கதிரவன். தளிரினியல்-தளிரின் தன்மை. விளரி-விளரிப்பண்பாடும்.
----------

கற்ற புலவர் மிகச்சிறந்து காட்டு மொன்றன் வளமெடுத்துக்
        கவியால் விரித்துப் புகன்றியம்பக் கருதி யதுபொற் குன்றநாண்
உற்ற மணிப்பொற் கோபுரமோ வொளிர்பொன் மாட மோமுகில்வந்
        துறங்கு மதிலோ மாளிகையோ வுலவு திருத்தேர் மறுகோசீர்
பெற்ற குடிகண் மனைவளமோ பிரச மலர்த்தண் டலையோநீர்
        பெருகு தடமோ வெனவிறைவி பிறங்கு கோயிற் றிசைபோல
முற்ற மயங்குஞ் சீர்க்காஞ்சி முதல்வா முத்தந் தருகவே
        முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே. (44)

44. பொன் குன்றம் நாண் உற்ற-மகா மேருமலை வெட்கத்தையடைந்த. பிரசமலர்-தேன் பொருந்திய மலர். பிறங்கு கோயில்-விளங்குகின்ற கோயில்.
----------

இணையி றிருவள் ளுவப்பெயர்கொ ளெம்மான் கரப்பா ரிரவன்மி
        னென்ன விரந்து மிரத்தக்கார்க் காணி னிரக்க வென்றுரைத்தும்
உணர்வு தெருள்வித் தமைகொண்டே யொருவர் தமையு மிவ்வளவு
        மொன்று மிரந்தா மல்லமியா முன்னை யின்றீங் கிரக்கின்றாம்
அணையு மவர்தம் முகக்குறிப்பா னறிந்தங் கவர்த மகம்விழைந்த
        வனைத்து மமுத முறழீர மளைந்த வின்சொ லுடனளிக்கும்
முணையில் கொடைச்சிந் தாமணியே முகிலே முத்தந் தருகவே
        முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.        (45)

45. முதலிரண்டடிகளில் இரண்டு திருக்குறள்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன. கரப்பார்-ஒளிப்பவர். இரத்தக்கார்-இரக்கத் தகுதியுடையவர்கள். தெருள்வித்தமை-தெளியச் செய்தமை. அகம்-உள்ளம். ஈரம் அளைந்த-அன்பு கலந்த. முணை-வெறுப்பு.
-----------------

வேறு
அதிர்செய் கடலகன் ஞால முடியர விற்கெலா
        மரசு நடுமுடி யீனு மெழுசுடர் வட்குமோர்
கதிர்கொள் புதுமணி கோடு கொடுமிடி யுற்றுளார்
        கடையு மணிகொடு வீசு மவரென நிற்றறீர்
துதியி லுடல்பொரு ளாவி கொடுதமி யற்குமா
        சுருதி முடிவுறு மாசில் பொருளுத வுற்றகூன்
மதியின் முடிமதி யாள பணிமணி முத்தமே
        மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.        (46)

46. வட்கும்-வெட்கும். கொடு மிடி-கொடிய வறுமை. கருதி முடிவுறு-வேதாந்தத்தில் பொருந்திய. ஆசில் பொருள்-குற்ற மற்ற மெய்ப்பொருள். பணிமணி-நாகரத்தினம்.
------------

கருவி யுடல்பொறி பூத முதலன முற்றுமே
        கழல்பு தனியறி வாகி யொருபிர மத்துநாம்
விரவி யதுவடி வாயி னமெனுமொர் சுட்டுமே
        விளிய வரவொடு சேற லருகயல் கொட்புறா
அருவ முருவமி லாத நிலையொர்க ணத்துளே
        யருளு மொருமொழி யாள திருவளர் கச்சியூர்
மருவு பெருகருள் வாரி பணிமணி முத்தமே
        மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.        (47)

47.கழல்பு-கழன்று. விரவி-கலந்து. அது வடிவாயினம்-பிரமவடிவானோம்.
--------------

நிறையு மருண்மழை மேக மெனவும றுப்புறா
        நிதிய வளையொடு தாம ரையெனவும் வற்றுறா
துறையு மலிதயை வாரி யெனவுநி னைப்பரா
        யுணர்வு தருகலை யோதி யுணர்வும யக்கிலார்
அறையு மொழிகொடு மேவி நினையிரந் துற்றுநா
        மலதுபிறர் தமை யாது மருவியி ரக்கிலேம்
மறையி னிலைதவிர் யோகி பணிமணி முத்தமே
        மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.        (48)

48. நிதியவளை-சங்கநிதி. தாமரை-பதுமநிதி. வற்றுறாது-வற்றாமல்.
----------

குதலை மொழிமருள் பேதை பிலநதி மட்டுவார்
        குவளை மதர்விழி மாலை மதியைம ருட்டுவாள்
நுதலை வழிபட வேகி மறியும்வி யப்பொடே
        நுவலி லளவில வாகும் வளமலி கச்சியாய்
திதலை முலைமட மாதர் கொடுமய லிற்படார்
        திகழு மனமுடை வாய்மை நெறியறி ஞர்க்கெலாம்
மதலை யெனவரு தூய பணிமணி முத்தமே
        மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே. (49)

49. பிலநதி-கம்பை. மதியை மருட்டு-திங்களை மருளச் செய்கிற. நுவலில்-கூறினால். திதலை-தேமல். மதலை-குழந்தை.
-----------

இயலு மொருகுட வானை யதனுளி ருக்கவா
        னெனவ றிவுறவு பாதி யறவறி வித்தல்போல்
உயலி லுடலிலுண் மேவு முயிர்பிர மத்தின்வே
        றொழிய வொருபொரு ளாகு மெனவறி வித்தவா
செயலொ டுரைமனம் யாவு மதியம ருட்டுமோர்
        திலக நுதலுமை பாகர் பணிசெய வுய்த்துவாழ்
மயலி லடியவர் நேச பணிமணி முத்தமே
        மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.        (50)

50. உயலில்-நீண்டு வாழ்தலில்லாத. மதியம் மருட்டும்-திங்களை மருளச் செய்யும். பணிசெய-திருப்பணிகளைச் செய்ய. மயல்இல்-மருட்சியில்லாத.
--------------

6. வாரனைப் பருவம்

நேரா வெமக்குக் கொடுத்தவுட னிலையா தழியும் பொருளாவி
        நெறியின் மயங்கித் தமவென்னு நினைவி னோரிங் கிவரென்றும்
தீரா வெகுளிக் கனற்கிவர்தஞ் சிந்தை முருட்டு விறகென்றுந்
        தீய காமக் கள்ளுண்டு செருக்கு களிய ரென்றுமருள்
கூரா தழுக்கா றெனுமளற்றுக் குழிவீழ் குருட ரிவரென்றுங்
        கொலையை யஞ்சா ரென்றுமுளங் கொண்டு தமியே மழைப்பவுநீ
வாரா தொழியல் பெருங்கருணை வடிவே வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (51)

51. தமவென்னும்-தம்முடையவென்னும். வெகுளிக் கனல்-சினத்தீ. முருட்டுவிறகு-காய்ந்த விறகு. அளற்றுக்குழி-சேற்றுக்குழி. வாராதொழியல்-வராமற் போகாதே.
------------

அணங்க வெம்மைப் பிடித்திருந்த வவாப்பே யகன்று குடிபோக
        வருள்செ யொருமந் திரவாதி யாகிப் பாச வல்லிருளைப்
பிணங்கு மொருசெஞ் சுடராகிப் பிறவிப் பிணிக்கு மருந்தாகிப்
        பிறந்த வன்புக் குழவிக்குப் பெற்ற தாயா யிடும்பைச்சே
றுணங்க வெழுசெங் கதிராகி யுழலுஞ் சமயக் கடாக்களிற்றை
        யுடற்று மரிமா னேறாகி யுவந்து தமியே நறுமலர்தூய்
வணங்க வொருதே வாய்க்கருணை வடிவே வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே. (52)

52. அணங்க-வருத்த. அவாப்பேய்-பேராசைப்பேய். இடும்பைச் சேறு உணங்க-துன்பமாகிய சேறு காய. கடாக்களிறு-ஆண் யானை. உடற்றும்-வருத்தும். அரிமான் ஏறு-ஆண் சிங்கம்.
--------------

பைந்தா துகுக்கு நறுங்கொன்றைப் பனிமா மலருங் குழவியிளம்
        பயில்வெண் மதியுந் துளையெயிற்றுப் பாம்புஞ் சுமக்கு மன்றுநீ
செந்தா மரைச்சே வடிநோவத் திரும்பித் திரும்பி யோரிரவிற்
        சேல்வென் றகன்ற வரிமதர்க்கட் சிலைக்கூன் புருவத் தரளநகை
நந்தா விளக்கின் றிருமனைக்கு நாவ னகரின் வன்றொண்டர்
        நடத்த வொருதூ தாளாகி நடந்த வுனக்கின் றடியேம்பால்
வந்தால் வருமோர் பழியுண்டோ மதுரக் கனியே வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (53)

53. உகுக்கும்-சிந்தும். நந்தா விளக்கு-நந்தா விளக்கைப் போன்ற பரவை நாச்சியார். நாவல் நகரின் வன்தொண்டர்-சுந்தரர்.
------------

முருந்தேர் நகையார் மயறுரக்கு முத்தே வருக பிறவிவன
        முரிக்குங் கருணைக் கடாக்களிறே முன்செய் தவத்தோர் தமக்குவரு
விருந்தே வருக தூண்டுசுடர் விளக்கே வருக சோதிமணி
        விழியே வருக பரமுணர்ந்து விளைக்குந் தவத்தோர் பானிறைய
இருந்தே கமழுந் தீங்கனியே யிறையே வருக புகழ்நிலா
        வெறிக்கு மறுவின் மதியமே யெமையா ளுடையாய் வருகவரு
மருந்தே வருக பெருங்கருணை வடிவே வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (54)

54. முருந்து-மயிலிறகின் அடி. மயல் துரக்கும்-மயக்கத்தைப் போக்கும். பரம் உணர்ந்து-பரம் பொருளை உணர்ந்து. அருமருந்து-அரிய அமுதம்.
----------

இரவின் முயல்வார் மிடியினா லிரங்கா வுளத்த னெனப்படுத
        லிருளாற் பகைஞ னெனப்படுத லிறவாக் கொடுந்தீ வினையினால்
பொருவில் கொலைஞ னெனப்படுதல் பொய்யாற் பொய்ய னெனப்படுதல்
        பொறாமை யதனா லிவனென்றும் பொறாமை யினன்கா ணெனப்படுதல்
வெருவு முடம்பி னிடும்பையினால் விளங்க வறியா னெனப்படுதல்
        வெகுளி யதனாற் றரியாத வெகுளி யினனா மெனப்படுதல்
மருவி யுலகில் வருங்கருணை வடிவே வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (55)

55. இரவு-இரத்தல். மிடி-வறுமை. வெருவும்-அஞ்சும். இடும்பை-துன்பம்.
--------

சுருளுங் குடரும் புழுமலமுஞ் சொரியு நீருங் கலந்துபுறந்
        தோன்றா வயிறும் வேறொருபாற் றோன்றி நரலை யெனுந்தசைதான்
திரளும் புன்மார் புறுமுலையுந் திமிரு நறுநாற் றப்பொருளாற்
        றீர்க்கு முடலைப் புலாலுடம்புஞ் செத்தாற் கிடந்து புறங்காட்டில்
புரளுந் தலையுங் கொடுநின்ற புன்மா தரைவா னமுதமே
        பொன்னங் கொடியே பசுங்கிளியே பூவாய் மயிலே யென்றென்று
மருளும் பெரும்பித் தொழியவரு மருந்தே வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (56)

56. சுருளுங்குடர்-சுருண்டுள்ள குடர். புறங்காடு-இடுகாடு. புன்மாதர்-இழிந்த மாதர்கள். பொன்னங்கொடி-பொற்கொடி.
------------

போற்ற வருக வடிமையேம் புகழ வருக நறியமலர்
        புனைய வருக வருண்மாரி பொழிய வருக வடிகடலை
ஏற்ற வருக மவுனமொழி யிசைப்ப வருக வெமதுளத்தி
        னிருப்ப வருக வறங்கடலை யெடுப்ப வருக நீற்றழகு
தோற்ற வருக வெங்கண்மய றுரப்ப வருக கொடுங்காமந்
        துடைப்ப வருக கூற்றுவலி தொலைப்ப வருக பிறவிநோய்
மாற்ற வருக வறிவுருவில் வைப்ப வருக வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.        (57)

57. அடிகள் தலையேற்ற-அடிகளைத் தலையிற்சூட. அறங்கள் தலையெடுப்ப-தருமங்கள் தலைதூக்க. துரப்ப-துரத்த.
------------

அற்றங் களையு நின்பெருஞ்சீ ரறைந்த செந்தா விவ்வுலகி
        லயலோர் மொழியு மறையாம லன்பா னின்பாற் பற்றுமுளம்
பற்றொன் றிங்கட் செயாமலுனைப் பார்த்த விழிகள் பிறபொருளைப்
        பாரா துன்சொற் கேட்டசெவி பயனில் பிறசொற் கேளாமல்
உற்றுன் றிருத்தாட் குற்றேவ லுஞற்று கரங்கள் பிறிதொன்றை
        யுஞற்றா துள்ள படிசுட்டா துன்னை யுணர்ந்த பேருணர்வு
மற்றொன் றினையிங் குணராமல் வந்த குரவா வருகவே
        மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே. (58)

58. அற்றம்-குற்றம். இங்கண்-இவ்வுலகில். உஞற்று கரங்கள்-செய்கிற கைகள்.
-------------

வேறு
முட்டு மார்புல னாய சேனைகண் முறியமான்
        முற்று நானெனும் வேழ மாய்வுற மனமென்மா
பட்டு வீழ்தர வாவி யாமர சுடையவே
        பற்றி ஞானநல் வாளி னாலொரு தமியனாய்
வெட்டு பாணிய னான லாலய லிலையெனா
        வெற்றி யாலறி வாகு மோர்நக ரிமையுளே
கட்டு மாறெதிர் மாறில் சேவகன் வருகவே
        கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.        (59)

59. முட்டும்-நெருக்கும். மால்முற்றும்-மயக்கம் பெருகும். வேழம்-யானை. நான்எனும் வேழம் : உருவகம். மனம் என்மா-மனம் என்ற விலங்கு. பாணியன்-கையை உடையவன். அயல்-வேறு.
---------

பற்றி லாவுணர் வாகி மாமன மருவியே
        பற்று வாள்விழி யாறு சேர்புகை தனில்வரா
உற்றி லாதமர் ஞான நாயகன் வருகவே
        யொப்பி லாவருண் மூல காரணன் வருகவே
முற்றி லாமுலை மாத ரால்வரு மயலறா
        முத்தி சேர்வுறு மாறு தீதறு துணிவுநூல்
கற்றி லாரறி யாத சீரியன் வருகவே
        கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.        (60)

60. பற்றிலா உணர்வு-பற்றற்ற அறிவு. முற்றிலா முலை-இளமுலை.
---------

வித்து வான்வர வால லாதொரு பிறிதினான்
        மிக்க வாழ்வுபெ றாத வாறென வடியரேம்
அத்து வாமுடி வான நீவரு வரவுதா
        னற்று வேறுள வேது வாலுள மகிழ்வுறேம்
முத்து வாளர வீனு மாமணி மிகுகுவான்
        முற்று மாமதி ஞாயி றாமெனு மயிலைவாழ்
கத்து வாதமி லாத போதகன் வருகவே
        கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.        (61)

61. வாள் அரவு ஈனும் மாமணி-ஒளி தங்கியபாம்பு அளிக்கும் சிறந்த மணி. குவால்-குவியல். கத்துவாதம்-வீணாகக் கூச்சலிடுகிற சொற்போர்.
--------------

7. அம்புலிப் பருவம்

இரவடைவை நீயிரவை யடையா னிவன்கலை
        யெண்ணிரண் டுடையையிவனெண்
ணெண்கலை கடந்தவன் மறுவுண் டுனக்கிவற்
        கில்லையா லோர்மறுவுநீ
மருவுமரை நாணிலவை யிவனென்று மழியாது
        வருபெரும் புகழ்நிலவினான்
வளர்குழவி யிற்றொழு வதற்குரியை நீயிவன்
        வணங்கியிட வென்றுமுரியான்
விரவுபெண் மயலுடைப் போகிநீ யிவன்மயலை
        மேவாத பரமயோகி
விடையுடைப் பாகன்முடி யிற்பொறையை நீயிவன்
        விளங்குதளிர் மென்கையில்விடா
தரவவணி யற்பொறுப் பவனாத லால்விரைந்
        தம்பிலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (62)

62. எண்ணிரண்டு-பதினாறு. எண்ணெண்கலை-அறுபத்து நான்கு கலை. மறு-குற்றம். மயலை-பெண் மோகத்தை. விடையுடைப்பாகன்-சிவபிரான். பொறையை-பொறுக்கப் பெறுதலையுடையை.
-------------

பையரவின் வெவ்விடப் பகுவாயி னிடைசென்று
        பட்டுனைப் போலநைந்து
பாதியுமை பங்கனை யிகழ்ந்தவவன் வேள்வியிற்
        பல்லொழிந் துழலுமந்த
வெய்யவன் றனையடைந் தென்பயன் மெய்குன்றி
        விரையவிங் கெய்தவரினீ
விரிசிறைய வாரணச் சினையென்ன வேநின்னை
        மிசையவரு பைங்கணரவம்
உய்யலற வோர்நிலச் சுமையரவை வாயலகி
        னோடிக் கவர்ந்தெடுத்தே
யுதறுமொரு தோகைமயி றனையேவ வேதனுக்
        கொருதுணைவ னாயமுருகற்
கையணிவ னுரைசெய்வ னாதலா லுளமகிழ்ந்
        தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (63)

63. பை-பாம்பின் படம். பகுவாய்-பிளவுபட்டவாய்.பட்டு-அகப்பட்டு. இகழ்ந்தவன்-தக்கன். வெய்யவன்-கதிரவன். விரிசிறைய-விரிந்த சிறகுகளையுடைய. வாரணச்சினை-கோழி முட்டை.
-----------

கரியவண் டிமிர்குவளை யிகலியங் கயல்வென்று
        காதளவு மோடிமீளுங்
கருநெடுங் கண்ணுடைய வொருமாது குழல்வெண்மை
        கருமைசெய் திடுமிவற்குத்
திரியநின் மெய்யினிடை வருகருமை யினைவெண்மை
        செய்வதரி தன்றுகண்டாய்
சிவமென்று முயிரென்றும் வேறுசெய் தகலாத
        திமிரமா மலமகன்றே
இரியவருள் குடியிருக் கின்றவிழி மலர்திறந்
        திணைமலர்ப் பதமுடியின்மே
லிருத்திமன மொழிகடந் துடனின்று குறிகுணழு
        மின்றியரு மறைதனக்கும்
அரியபொரு டனையளிக் கினுமளிக் குவன்விரைந்
        தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (64)

64. இமிர்-ஒலிக்கின்ற. இகலி-மாறுபட்டு. குழல் வெண்மை-கூந்தலின் நரை. கருமை செய்திடு-கருப்பாகச் செய்த. திமிரமா மலம்-மெய்யறிவை மறைக்கும் பெரிய ஆணவமலம். இரிய-ஓட.
------------

உந்துமா ரருள்பிறந் தெழுதரு மிவன்றிரு
        வுள்ளத்து முனிவில்லையென்
றுன்னல்சிறு விதிமகத் துறுமமரர் தம்மையு
        முன்றனையு மமர்குறித்து
வந்தமா மதனையுங் கண்புன றுளிப்பவே
        மனமுருகி மெய்யன்பினான்
மலர்கொண்டு பூசனை தொடங்குமொரு தொண்டன்மேல்
        வஞ்சினங் கொண்டுவெம்பிச்
சிந்துமா ரழல்விழிப் பணைமருப் பெருமையிற்
        சென்றகொடு மறலிதனையுஞ்
சிரமைந்தொ டைந்துடைய திரள்புயத் தெறுழ்வலித்
        தீயனையு முன்வெகுண்ட
அந்தவா சனையிருப் பினுமிருக் குங்கடிதி
        னம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (65)

65. உந்தும்-செலுத்தும். உன்னல்-எண்ணாதே. சிறுவிதி மகம்-தக்கன் வேள்வி. தொண்டன்-மார்க்கண்டன். எறுழ் வலித்தீயன்-மிகுந்த ஆற்றலையுடைய இராவணன்.
------------

நெடிமைகொண் டவிர்பவள வார்சடைக் கற்றையு
        நெளிதிரைக் கங்கைநதியு
நெட்டுடற் கட்செவிப் பணியுமத னைத்தெறு
        நெற்றிமிசை யொற்றைவிழியும்
கடிமைகொண் டிடுகவைக் கானெடும் பகடுந்து
        காளமே கம்புரையுமோர்
காலனுயிர் கொண்டசெங் கமலமல ரடியின்மால்
        கண்ணுநீ காணாமையால்
மடிமைகொண் டிங்கழைத் திடவுமொரு மனிததென
        வாரா திராதிகண்டாய்
வழங்குமுடல் பொருளாவி கைக்கொண்டு மருளாது
        மனிதரைத் தனதருளினால்
அடிமைகொண் டிடவந்த கள்ளவடி வினன்விரைந்
        தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (66)

66. நெட்டுடல்-நீண்டவுடல். மதனைத் தெறும்-காமனையழிக்கும். கடிமை-கடினத்தன்மை. காளமேகம்-நீருண்ட கரிய முகில். மடிமை-சோம்பற்றன்மை.
------------

நறியமலர் விழிசிவந் துனைவருக வென்றில
        னடந்ததங் ஙனமாயின்யா
நணுகவரு வாயென வழைத்தெதிர் விடுக்கில
        நாண்மலருன் முகமலர்ந்து
சிறியநகை யிளநில வெறிப்பவரு கென்றனன்
        செயற்கைவடி விதுவன்றுதன்
றிருமுடி யணிந்திஃ தியற்கைவடி வெனமனத்
        தெருள்விலார்த் தெருள் விக்கவோ
வறியவுரு வாமிரவி யெதிர்மழுக் குறுசிறுமை
        மாற்றியொளி பெறவைப்பவோ
மாசுட றுடைப்பவோ குறைதவிர்த் தருளவோ
        மனத்திவர் நினைத்தநினைவை
அறியகில மறியாமை யறவருளு குரவனுட
        னம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
        னம்புலீ யாடவாவே.        (67)

67. தெருள்விலார்-தெளிவில்லாதவர்கள். தெருள்விக்கவோ-தெளிவடையச்செய்யவோ. மழுக்குறு-மழுங்குதலடையச் செய்கிற. அறியகிலம்- அறியவில்லை.
-------

வேறு
ஏதி லார்களிகழ் காம நோயதுற வேற றங்கடை யுடையநா
        மேது போவதென வேயி ராதிமுன மீறில் வெம்பவ மருவுமோர்
தீ தி னானினிற நாம னாமொருவன் ஞானி யங்கழல் செறியவே
        தேறி நீவருதி யாலெ னாவினைக டீகொள் பஞ்சென வழியநால்
வேத மாமுடியி னோது மோர்பொருளை மேனி யிந்திய முதலவாய்
        மேவு பாதிகளை மோதி யோர்மொழியில் வேற றும்படி யுதவினான்
ஆத லாலிவனு மோகை யாலருளு மாட வம்புலி வருகவே
        யாசி லாதசிவ ஞான தேவனுட னாட வம்புலி வருகவே        (68)

68. ஏதிலார்கள்-யாதுந் தொடர்பில்லாதவர்கள். தீ கொள் பஞ்சு-தீயினாற் பற்றப்பட்ட பஞ்சு. ஓகை-உவகை.
------------

வெயிலி லங்கிழை மாத ராடவர் விரக மொன்றுறு மவரெலாம்
        விரியும் வெண்டிரை வேலை யூடெழ வெளிறும் வெங்கடு வெனவெழா
முயலி றந்தசை யாது தானுடன் முறுக வெந்துற வடலையான்
        முழுகும் வெங்கன லாகு மாலென முனிய வுன்றனை யகலெனா
தயர்வு ளந்தரு காம நோய்கன வினும டைந்திட வறிகிலா
        வமல நெஞ்சின னாத லாலிவன் வருக வென்றன னருவிதாழ்
மயிலை யங்கிரி யாளி யோடுற வருக வம்புலி வருகவே
        மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே. (69)

69. வெயில்இலங்கு இழை-ஒளி விளங்குகிற அணிகலன். விரகம்-காம நோய். வெங்கடு-கொடிய நஞ்சு. அமல நெஞ்சினன்-தூய மனமுடையவன்.
----------

முடிவ றுஞ்சக சீவ மாபர மெனம யங்குறு மயலெலா
        முகைநெ கிழ்ந்தளி பாடு மாலையின் முதிர்சி னங்கொளு மரவுபோல்
நெடிய வன்றறி காணு மோர்மக னெனவ ழிந்தொரு பிரமமா
        நிலையி னின்றிடு ஞானி யேவலி னொழுகி நின்றிடு மவர்கடாம்
ஒடிவ றும்பர போக மேவின ருணரு மங்கவர் நிலையிலே
        யுறுவர் பின்பென வேத மோதிடு முறையு ணர்ந்தனை யலைகொலோ
மடிவு றுஞ்சிவ யோகி யோடுற வருக வம்புலி வருகவே
        மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.        (70)

70. சகசீவம்-உலகுயிர். முகை நெகிழ்ந்துமொட்டு விரிந்து. ஒடிவறும்-கெடுதலில்லாத.
---------

அகல்வி சும்பெழு பாய பேரிருள் பருகு செங்கதிர் வருகெனா
        னமர ரென்றுயர் தேவர் தானவர் குரவர் தங்களை வருகெனான்
முகம லர்ந்துனை யாட நீயிவண் வருக வென்றன னவன்வரு
        முகிலு றங்குறு வான ளாவிய மயிலை யந்திரு மலையிலே
பகையெ னுங்கதிர் காலு மாமணி யரவ முண்டென வெருவனீ
        பரனொ டொன்றிய நாக மாலிவர் பறவை கண்டுளம் வெருவுமோ
மகிழ்வு கொண்டெமை யாளி யோடுற வருக வம்புலி வருகவே
        மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே. (71)

71. பாய பேரிருள்-பரவிய மிருந்த இருள். வருகஎனான்-வருக என்று கூறமாட்டான். அரவம்-பாம்பு வெருவல்-அஞ்சாதே.
-----------

8. சிற்றிப் பருவம்

கடியிற் சிலகஞ் சுகமனிதர் கல்வீழ் மணிநீர்க் குவளைமலர்க்
        கயத்துப் பாசி யெனவொதுங்கிக் கடிதின் முன்ன ரெனநெருங்கிப்
படியிற் பணியக் கிடையாமற் பாம்பின் றலையிற் பெருஞ்சுமையைப்
        பகைதீர்த் தொருசெங் கோலோச்சிப் பாது காக்கு முடிமன்னர்
தொடியிற் பொலிந்த கரங்கொண்டு துடைத்துத் துகடம் முடற் கணிந்து
        சுடர்மா மணிப்பொன் மகுடத்திற் சுமப்பச் சிறந்த நினதுதிரு
அடியிற் புழுதி படும்வண்ண மடியேஞ் சிற்றி லழியேலே
        யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே. (72)

72. கடியில்-சினந்தால். கஞ்சுக மனிதர்-மெய்ப்பை அணிந்த மக்கள். கயம்-குளம். கடிது-விரைவாக. படி-நிலம். தொடி-வளை; வீரவளை. துகள்-தூள். மகுடம்-முடி.
-----------

அழிக்க வுளத்துக் கொண்டனையே லடங்கா தெழும்வெங் கொடுஞ்சினத்தை
        யழிக்க கடலிற் பெருகியெழு மவாவை யழிக்க செருக்குளத்தை
அழிக்க விருளி னுய்த்திடுமோ ரழுக்கா றதனை மூலமற
        வழிக்க காமப் பெரும்பிணியை யழிக்க கொலையை யஞ்சாமை
அழிக்க வினைகண் மூன்றனையு மழிக்க வழியு முடம்பதனை
        யழியா தென்னுங் கருத்ததனை யழிக்க மூல மலவிருளை
அழிக்க புழுதி கொடுசமைத்த வடியேஞ் சிற்றி லழியேலே
        யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே. (73)

73. அழிக்க-துடைக்க; போக்க; கெடுக்க. இருள்-நிரயம். மூலம்-முதல்; வேர். மலவிருள்-ஆணவ மலவிருள். சமைத்த-செய்த.
----------

பழித்த வுலக முயிராதி பகவ னெனப்பே தித்தென்றும்
        பாழ்செய் மூல மலவிருளைப் பதத்தா லழிக்குஞ் செயலன்றிச்
சுழித்த கடலி லரவணையிற் றுயில்வோ னளித்த மலரயனாற்
        றோன்று முலக மழித்திடுமத் தொழிலும் புகழ்செய் யாததெனின்
இழித்த புன்சொற் புன்புலவ ரிசைத்துத் தாமே யழித்தலுறும்
        யாப்பே போல விழைத்தளவில் யாமே யழித்து விடுமிதனை
அழித்த னினக்குப் புகழ்தருமோ வடியேஞ் சிற்றி லழியேலே
        யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே. (74)

74. பழித்த-பழிக்கப்பட்ட. பேதித்து-மாறுபாட்டைச் செய்து. பதம்-திருவடி. அரவணை-பாம்புப்படுக்கை. யாப்பு-பாட்டு. இழைத்த அளவில-கட்டியவுடனே.
-------------

போக்கு வரவு குறிகுணங்கள் புணர்தல் பிரித லிரவுபகல்
        புறமுள் ளகன்ற நிரஞ்சனமாய்ப் புகறற் கரிய வவாச்சியமாய்
நீக்கு முருவக் கலையாகி நிறைந்த வநாதி யாதியாய்
        நிகரி லகர முதலனவாய் நின்று பலமந் திரமுநால்
வாக்கு மறையு மாகமமு மற்றுங் கலைகள் பற்பலவு
        மண்ணும் புனலுங் கதழெரியும் வளியும் விசும்பும் பேருலகும்
ஆக்கும் விளையாட் டுடைக்குரிசி லடியேஞ் சிற்றி லழியேலே
        யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே. (75)

75. நிரஞ்சனம்-மறைப்பற்றது. வாச்சியம்-வாசகத்தால் அறியப்பெறும் பொருள். நால்வாக்கு-நால்வகையாகப் பிரித்துக் கூறப்பெறும் வாக்கு. கதழ்எரி-விரைந்தெரியுந் தீ.
--------------

செங்கட் கமல மலர்த்தவிசிற் சிறந்து தனிவீற் றிருக்குமொரு
        திசைமா முகற்குத் தொழில்படைத்த றிகிரிப் படைவால் வளைசுமந்த
அங்கைக் கமல விழிக்கரிய வழகன் றனக்குத் தொழிலளித்த
        லழித்த லெமக்குத் தொழிலென்னி லடுபோர்ப் பனைக்கைக் களிற்றுரியும்
பைங்கட் பணியும் வேணிநெடும் பவளக் கொடியிற் றிரைதிரைத்துப்
        பாயுங் கங்கைப் பெயர்யாறும் பணியத் தகுகூன் முதுகமுத
திங்கட் கொழுந்துங் காட்டென்பேஞ் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே. (76)

76. திகிரிப்படை-உருளைப்படை. வால்வளை-வெண்சங்கு. அழகன்-திருமால். அடுபோர்-போர் புரிகிற. பனைக்கை-பனைமரத்தைப் போலுந் துதிக்கை.வேணி-சடை. திரை. திரைத்து-அலைவீசி.
-------------

கொந்தார் மலரு நறும்புகையுங் கொண்டு நினையாந் தொழத்தக்க
        குலதே வதையாய் வழிபட்டுக் குறித்துப் பணிதுஞ் செங்கரும்பே
நந்தா விளக்கே யமுதமே ஞான வடிவே நாயகமே
        நாடும் பொருளே யென்றென்று நாளு நினையே பாடுதும்யாம்
வந்தார் தமது பிணிதீர்க்கு மருந்தாய்ப் பணியு மரசர்முடி
        மணியா யெமக்கோர் பற்றாய வரிவண் டொழுகு மதுவுண்ணுஞ்
செந்தா மரைச்சே வடிநோவச் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
        சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே. (77)

77. கொந்து-கொத்து. பணிதும்-பணிகின்றோம். நந்தாவிளக்கு-ஒளி குறையாத விளக்கு. ஒழுகு-வரிசை.
----------

வேறு
இற்றைமணல் கோலியிழி சொற்பொருளை வாளா
        வெய்ப்பில்புல வோர்கவியெ னப்புகலு மாபோல்
உற்றொர்பெயர் கூறெமது சிற்றில்சிதை யேலே
        யுய்த்தமொழி யோவல வெமக்கிறைவ னீயே
மற்றுமொரு தேவுள வெனக்கருதி லேமான்
        மக்கள்பிணி யேயலது மற்றருள்செய் யாதே
செற்றறிகி லாவொருவ சிற்றில்சிதை யேலே
        சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே. (78)

78. மணல்கோலி-மணலை வளைத்து. பொருள்நயமில்லாத சொற்களைத் தொகுத்துச் சேர்த்து நுண்ணறிவிலார் செய்யுள் என்று கூறுமாறு போல, மணலைக் கூட்டி வரம்பு வகுத்துப் புனைந்த சிறு வீடு சிற்றில் என்று கூறப்படுகிறது. தே-தெய்வம். செற்று அறிகிலா-வருத்தியறியாத. ஒருவ-ஒப்பற்றவனே.
-------------

மெய்ப்படிம மேவியடி மைக்குரிமை யாராய்
        மெய்ச்செயலி லாதவரு நற்றவரெ னாவோர்
பொய்ப்பெயர்கொள் வாரெனினு மெய்ப்பெயர ராயே
        புக்குதவு நீயெமது சிற்றிலென வோர்பேர்
வைப்பவளி யாதிதையு மக்கடலை மீதே
        வைக்குமடி யாலிவண ழித்தலற மாமோ
செப்பரிய வாய்மையிறை சிற்றில்சிதை யேலே
        சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.        (79)

79. படிமம்-வடிவம். நற்றவர்-நல்ல தவத்தையுடையவர். புக்குதவும்-புகுந்து உதவி செய்யும்.
--------

ஒற்கவிர வோர்களிலெ னப்புகல்வ தேநீ
        யுற்றொருவர் பாலுமுளை வுற்றுரைசெய் யாதே
நிற்கநனி யீகைவினை பெற்றிடுகை யாலே
        நித்தமது கோறனினி யற்கைநின தார்சீர்
கற்குமடி யேமிரவ கற்றிலெனு மீதுங்
        கைத்தடியி னாலிவண ழித்தறகு மோகாண்
சிற்கனசி வானுபவ சிற்றில்சிதை யேலே
        சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே. (80)

80. ஒற்க இரவோர்-வறுமையை உடைய இரவலர்கள். ஈகை வினை-கொடுக்குஞ் செயல். சிற்கன-எல்லாவற்றையும் அறியும் பெருமை பொருந்திய.
---------

மொய்த்தபுழு வாகமுயிர் புத்திமன மாயா
        முற்றுமற வேமறைமு டிக்குமணி யாமா
தத்தொமசி யாகியப தப்பொருளி னாலே
        தக்கசிவ னீயெனவு ணர்த்தியது தானா
வைத்தநின தாள்படுமி துற்றடிமை யாவே
        மைக்கண்மணி யூடுபடு தற்குநிக ராமே
சித்திகள் வழாவொருவ சிற்றில்சிதை யேலே
        சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே. (81)

81. தத்தொமசி-அது நீயாகவிருக்கிறாய் என்னும் மகா வாக்கியப் பொருள். கண்மணி-சிவகண்மணி.
-------------

9. சிறுபறைப் பருவம்

குன்றவரி சிலைகொண்ட வெம்முடைய நல்லருட்
        குன்றமே தெய்வ மென்றுங்
குறுகுமவ னடியவர் குழாத்தினுட் புகுவதே
        கூறரிய வீட தென்றும்
மன்றுளுமை கண்குளிர நின்றுநட நவிலுமொரு
        வள்ளறிரு வஞ்செ ழுத்தே
மந்திரம தென்றும்விட யப்பகை பொறுப்பதே
        வலியென்று முள்ள படியே
நின்றுதனை மயலின்றி யுணர்கின்ற வுணர்வதே
        நிலையான வுணர்வ தென்று
நெஞ்சினிறை யழியவெகு ளிக்கடுங் கனலெழா
        நிலையதே தவம தென்றுஞ்
சென்றுவினை பொடியாக வருள்செயருண் மேகமே
        சிறுபறை முழக்கி யருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
        சிறுபறை முழக்கி யருளே.        (82)

82. குன்றம்-மலை. வரிசிலை-வரிந்து கட்டப்பட்ட வில். குழாம்-கூட்டம். மன்று-அம்பலம். விடயப் பகை-காமப்பகை. ஒறுப்பது-அடக்கி யொடுக்குவது. நெஞ்சின் நிறை-உள்ளத்தின் பக்குவத்தன்மை.
--------------

வந்துபிற கடவுளர்க டமையுரைத் துமைகாண
        மணிமன்று ணடமாடுமா
மணியையிகழ் பரசமய நிலைகுலைய வென்றறையும்
        வன்றிறற் பறைய தென்னச்
சிந்தைகவ ருந்துயர் விளைத்துவரு காமமொடு
        சினமென்னும் வெம்புலிக்குந்
தீராத வாணவப் பேரிருட் குந்தனி தெழிக்குநெய்
        தற்பறை யென
நந்தலரு மறிவென்னு மோரிளங் கன்னியை
        ஞானவடி வான பிரம
நன்மணம் புணர்கின்ற மங்கலப் பறையென்ன
        நற்றவக் குன்ற மேநீ
செந்தளிரி னெழில்வென்ற நின்றிருக் கையினாற்
        சிறுபறை முழக்கி யருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
        சிறுபறை முழக்கி யருளே.                (83)

83. நடமாடும்-திருக்கூத்தியற்றும். வன்திறல்-மிகுவலிமை. தெழிக்கும்-ஒலிக்கும். நந்தலருமறிவு-அஞ்ஞானத்தாற் கெடுதலிலாத மெய்யுணர்வு. செந்தளிர்-சிவந்த தளிர்.
-------------

கருவிளைக் கின்றசிற் சிலமொழி பகர்ந்துசில
        கடவுளரை யிறைவ ரென்று
கண்டியொடு வெளியதிரு நீறிழந் திருள்பருகு
        கனலுமுயர் வானகத்தின்
இருவிளக் குந்திகழும் விழியான வெம்மிறையை
        யிகழ்புறச் சமயர்தங்க
ளிருகவுளி னுங்கடிதி னறைவதென வெற்றிவே
        லிறைமயிலை வெற்பின்முடிமேல்
ஒருவிளக் கெனநின்று திகழ்பவா செம்மணிக
        ளொளிர்பணா முடியனந்த
வுரகமென் றிடுபெயர்த் தண்டின்மிசை நிலமென்னு
        மோரகலின் மெய்த்தபுகழாந்
திருவிளக் கிட்டுவைத் திடவல்ல வித்தகா
        சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
        சிறுபறை முழக்கியருளே.        (84)

84. கருவிளைக்கின்ற-பிறவியை உண்டாக்குகிற. கண்டி-சீவகண் மணிமாலை. வானகத்தின் இருவிளக்கு-பரிதிமதியாகிய இருசுடர். வெளிய-வெண்மையான. கவுள்-கன்னம். திகழ்பவர்-விளங்குபவனே! அனந்த உரகம்-ஆதிசேடனென்னும் பாம்பு. மெய்த்தபுகழ் - உண்மையாக விளங்கும் புகழ்.
----------------

வார்மணி முலைக்கருங் கயனெடுங் கட்பவள
        வாய்மலர்க் குழன்மங்கையர்
மலரடிக் கணிசிலம் பரிமணி முழக்கமும்
        மதமழை விடாதுசொரியுங்
கார்மணி முழக்கமுங் குணில்பொரு பெரும்பனைக்
        கடன்முழக் கமும்வீரர்தங்
கழலொலி முழக்கமுஞ் செங்குதலை வாய்மகார்
        கட்டுகிண் கிணிமுழக்குந்
தார்மணி முழக்கமொடு வருபரி முழக்கமுந்
        தருமசாலைகண் முழக்குஞ்
சதுர்மறை முழக்கமுஞ் செந்தமிழ் முழக்கமுந்
        தமனியத் திருமறுகுலாந்
தேர்மணி முழக்கமுங் கிளர்கச்சி நகராளி
        சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
        சிறுபறை முழக்கியருளே.        (85)

85. வார்-கச்சு. சிலம்பு அரி மணி-சிலம்பினுள் ஒலியுண்டாக இடப்படும் மாணிக்கமணி முதலியன. முழக்கம்-ஒலி. குணில்பொரு-தடியாலடித்து உண்டாக்கப் பெறுகிற. மாகார்-சிறுவர்கள். தமனியம்-பொன்.
-------------

நரம்புதிர மென்புதோன் மூளைதசை பலகூடி
        நரியுமடி செவியசுருள்வா
னாயுநெட் டலகுவிரி சிறகர்வன் கழுகுமிது
        நமதென்ன வந்தவுடலும்
நிரம்புதுயர் செய்தடங் காதுழன் றொழியாத
        நிரயத் தழுத்துபுலனு
நெறிமருண் டலமந்து திரிகின்ற புன்மனமு
        நில்லா தியங்குமுயிரும்
பரம்புபற் பலவாய குணமுமல னென்றுபோய்ப்
        பாசநிலை குலையநின்ற
படியிலெனை யறிதலே நினையறித லாகவிரு
        பதமுமென் முடியில்வைத்துத்
திரும்புத லிலாதவொரு பதமுதவு கொடையாளி
        சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
        சிறுபறை முழக்கியருளே.        (86)

86. மடிசெவி-மடிந்து தொங்குங்காது. நிரம்பு துயர்-மிகுந்த துன்பம். நெறி மருண்டு-வழிதவறி. அலமந்து-சுழன்று. திரும்புதல் இலாத பதம்-வீடுபேறு.
------------

வேறு
அரிமதர் மழைக்கண் வளர்வா ரவிரறன் மருட்டு குழல்வா
        னனிம தி கவற்று நுதல்வே யனவொளிர் மணித்தொ டியதோள்
வரியளி மிடிக்கு மிடியா மதுமடை திறக்கு மலர்வாண்
        மதிமுக மலர்க்கு முதம்வீழ் மணியிதழ் வளைத்த சிலைதாழ்
முரிபுருவ முத்து நகைநேர் முகிழ்முலை வளைக்கை மடவார்
        முதிர்படை யெழுச்சி மதவேண் முரசதிர் முழக்க மறவே
திரிவறு தவத்த ரசநீ சிறுபறை முழக்கி யருளே
        சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.        (87)

87. அரிமதர் மழைக்கண்-வரி பொருந்திய களிப்பினையுடைய குளிர்ந்த கண்கள். அறல் மருட்டு குழல்-கருமணலையும் மருளச் செய்கிற கூந்தல் வேய்-மூங்கில். முரி-வளைந்த. திரிவு அறு-மாறுபடுதலில்லாத.
-----------------

பழுதிறலை மைக்கு மணியே படுபறை முழக்கு மதுநீ
        பணியென வெனைத்து நினையேல் பனைபுரை புழைக்கை யுழல்வான்
மழைமத மொழுக்கு கவுணால் வளைபிறை மருப்பு வரைமேல்
        வருமரச னுக்கு நிறையா மதுவுறை பிலிற்று மளிவாய்
உழுமல ரயற்கு மலரா ளுயிரெனு மவற்கு மிறையா
        மொருமுத னடிக்கு வதனா லொருகுறை படைத்த துளதோ
செழுமுகில் கவற்று கொடையாய் சிறுபறை முழக்கி யருளே
        சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.        (88)

88. பனைபுரை புழைக்கை-பனைமரம் போன்ற துனையுடைய தும்பிக்கை. பிலிற்றும் - வெளிப்படுத்தும். எனைத்தும்-சிறிதும். உறை-துளி.
-----------

மறியும்வளி யைச்சு ழுனையாம் வழியுற வியக்கி மணியாழ்
        வளரிசை மடுக்க நினைவார் மனவிழைவி னெட்டு மடியாய்
எறியுநின் மலர்க்கை யதனா லெழுபறை முழக்க மடியே
        மிருசெவி மடுக்க விழைவே மிகல்கரி முறிக்க வளையா
முறியுமலர் மொய்த்த விணர்வீ முரலளி மறித்து மருளான்
        முறியிடை மறத்தி யர்கடாழ் முடிசெருகு கொத்தி னிடையே
செறியுமயி லைக்கி ரியுளாய் சிறுபறை முழக்கி யருளே
        சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே. (89)

89. வளி-காற்று. மடுக்க-நுகர்ந்து மகிழ-இணர்-பூங்கொத்து. முரல்-ஒலிக்கின்ற. முறியிடை-முறிந்து போகும்படியான இடை.
--------------

பகழிபுரை மைக்க ணளிவீழ் பனிமலர் முடித்த குழல்வார்
        படுமுகிழ் முலைத்தி ருவொடே பனிமதி நிறக்கொ டியனாள்
புகழ்வரை தவத்தின் வருமோர் புதல்விசெவி யிற்ப ருகுபால்
        புரையுமழ லைச்சொன் மணிவாய் புகலவவள் கட்கி னியனாய்
மகிழ்மக வினுக்க மையுமா மணியணி யுறுப்பு றவுலாய்
        வருமரு மகத்த னிமைபோ யொழியமணி முத்த ருவிதாழ்
திகழுமயி லைக்க ணுறுவாய் சிறுபறை முழக்கி யருளே
        சிவமுனிவ கச்சி நகராய் சிறுவறை முழக்கி யருளே.        (90)

90. பகழிபுரை-கணையை ஒத்த. மைக்கண்-மை தீட்டப்பெற்ற கண்.
------------

உரைசெயு மெவற்று மெனைநேர் வுறநகர் கனத்த திலையா
        லெனவுல கமிழ்த்து கடைநா ளொலிகடன் மிதக்கு நகர்வாழ்
அருள்வடிவ வொப்பி லுமையா ளணிமுலை கறக்கு மருளா
        ரமுதமுண மிக்க விழைவா லழுதகுழ விக்கு நிகராய்
வருநக ரனைத்தும் வனையா மழையிய முழக்கி யெதிர்வார்
        வரவர விருப்ப முறுமூர் தொறுமலி தவத்த ருடனே
திருவடி வருத்தி வருவாய் சிறுபறை முழக்கி யருளே
        சிவமுனிவ கச்சி நகராயய் சிறுபறை முழக்கி யருளே.        (91)

91. மிதக்கும் நகர்-சீகாழி. அமுத குழவி-திருஞான சம்பந்தர். மழை இயம்-மழையைப்போல் முழங்கும் ஒலிக்கருவி. எதிர்வார்-எதிர்கொள்வார். வருத்தி-வருந்துமாறு.
-------------

10. சிறுதேர்ப் பருவம்

அருவடிவ மாகிமன மொழிகடந் துயர்பிரம
        மங்கையினு நெஞ்சகத்து
மணுகிவன் சிறைக்கொடியி னிருவிழிக் கொருமணி
        யமர்ந்ததென நின்றநிலையைக்
குருவடிவு கொண்டுணர்த் துறுகுணக் குன்றமே
        கோடிமா தவர்குறுகியே
குற்றேவல் செய்தரு கிருந்துநின் றிருவுளக்
        குறிப்பின்வழி யொழுகிநிற்பக்
கருவடிவ நிலையென்றும் செய்யாத கொலைகளவு
        கட்காம மேபயிலும்வெங்
கயவர்தமை யுறவுகொண் டொழியாத வென்றனைக்
        கடிதினரு குறவழைத்துத்
திருவடிகள் புன்றலைக் கணிசெய்த வருளாள
        சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
        சிறுதே ருருட்டியருளே.        (92)

92. சிறைக்கொடி-சிறையினையுடைய காக்கை. புன்தலை-இழிந்ததலை.
------------

தகரமலர் வார்குழற் பவளவாய் மடமாதர்
        தடநெடுங் கண்களென்னத்
தாவுமறி கிடைகிடந் திடுபெருங் கொல்லையைத்
        தண்டிரை சுருட்டியெறியும்
மகரமனை யுண்டதிர்த் தெழுகமஞ் சூன்மழை
        மாரியென வந்துபிளிறும்
வளைமருப் புழல்செவிப் புகர்முகச் சிறுகணல்
        வலிவேழ மதநனைப்பப்
பகரலரு மெறுழ்வலிப் பிறைமருப் பொருகரும்
        பன்றியது கண்டுசெவ்விப்
பதமென்ன வுழவண்ட முகடுதொடு நெடியமுதிர்
        பணை தரள விதைவிதைக்குஞ்
சிகரமணி மயிலைமலை முருகனுட னமருமிறை
        சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
        சிறுதே ருருட்டியருளே.        (93)

93. தகரம்-மயிர்ச் சாந்து. மகரமனை-கடல். கமஞ்சூன் மழை-நிறை கருப்பங் கொண்ட முகில். புகர்முகம்-புள்ளிகளையுடைய முகம். எறுழ்வலி-மிகுந்த ஆற்றல்.
----------

யாவர்யா வருமெழுங் கனவிருள் விழுங்குமோ
        ரிரவியைத் தத்தமக்கிங்
கெதிரென்று புகல்கின்ற தென்னவிவ் வுலகில்வரும்
        யாவருந் தத்தமக்கு
மேவுமா ரருளுடைய னென்னவரு மவிரோதி
        விரிசுடர் விளக்கொன்றுதான்
விழையவொரு கம்பத்து மிசையிருந் தகமெலாம்
        விரிகதிர் பரப்புமதுபோல்
ஓவிலயா வண்புகழ்க் கதிரொளியை வெண்டிரைய
        வோதையங் கடலுடுத்த
வுலகெலா மொருமயிலை வரையிருந் தொளிர்விக்கு
        மொருவமா முதறடிந்த
தேவர்சே னாபதியொ டுற்றிருந் தெனையாளி
        சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
        சிறுதே ருருட்டியருளே.        (94)

94. கணவிருள்-பேரிருள். ஒவிலா-ஒழிதலில்லாத. மாமுதல் தடிந்த-மாமர வடிவமாக நின்ற சூரபன்மனைக்கொன்ற. கம்பம்-விளக்குத்தண்டு. அகமெலாம்-வீடு முழுவதும்.
------------

போரொன்று வஞ்சமன வெஞ்சொற் கொடுந்தகுவர்
        புரமொன் றிரண்டுமொருதன்
பொருவென்ற வஞ்செழுத் தோதுமவர் வினைநிலைமை
        போல்வதற் கேகுமருளால்
வாரொன்று குங்குமக் கொங்கையந் திருமாது
        மனையடைத் துந்திறந்தும்
வந்துலா வருமிரண் டாழியும் பொய்யாத
        வாய்மைநன் னெறியந்தணர்
நேரொன்று நெஞ்சவஞ் சாலைதனி லகலாது
        நிற்குமா வீரிரண்டு
நிரையிதழ்த் தாமரைத் தவிசினுறை யொருபாகு
        நிகழ்வுற்று மேவுறுபெருந்
தேரொன்று கொண்டவிறை யுளமகிழ வெம்மைய
        சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
        சிறுதே ருருட்டியருளே.        (95)

95. போர் ஒன்று-போர் செய்யுந் தன்மை பொருந்திய. கொடுந்தகுவர்-கொடிய அசுரர்.
----------

குன்றலரு மருளாள னென்றமொழி நிற்குறிக்
        கொண்டுசெல் கின்றதெனவுங்
குறித்தொருவர் பாலென்ற வளவிலம் மொழிசென்று
        கோவமுதி னேர்தலெனவும்
நன்றினிய பழமென்ற வளவினெட் டிலைவாழை
        நற்கனியி னெய்தலெனவு
நாடாரும் பிள்ளையென் கின்றமொழி யாண்மகவி
        னண்ணுமா றெனவுமீசன்
என்றளவின் விடமெழுந் திடநடு நடுங்கிநிலை
        யின்றியிரி தருதேவரை
யெய்தாமன் மணிகண் டனைப்பொருந் துதலெனவு
        மிவணகர மென்பதுதனைச்
சென்றடையு மொருபெருங் கச்சிநக ராளிநீ
        சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
        சிறுதே ருருட்டியருளே.        (96)

96. அருளாளன்-திருவருட் பெருக்கையுடையவன். நின்குறிக் கொண்டு செல்கின்றது-நினக்கே பொருந்துவதெனக் குறித்துக் கொண்டு நிற்கின்றதுஇரிதரு-அஞ்சியோடுகிற. மணிகண்டன்-நீலமணிபோன்ற கரிய கழுத்தையுடையவன்.
-----------

வேறு
கருத்திற் காண்குறு நாடிகண் மூன்றையுங்
        கண்டுநன் னடுநாடி
கலந்தி யங்குறு முயிர்க்கழி விலையெனக்
        காட்டிநோ யினர்நெஞ்சந்
திருத்திக் கைப்புவிட் டருமறைப் பாலொடு
        தீநிறப் பெருமுக்கட்
டீஞ்சு வைக்கனி தன்னையுட் கொள்கெனத்
        தெருட்டுபு முனங்கூட்டு
மருத்துப் பையினைச் சோதித்து வொண்பொடி
        மருந்தெடுத் துடல்பூசி
மணிய ணிந்தரு ளஞ்செழுத் தாகிய
        மந்திரம் பிறழாமல்
உரைத்திட் டோம்புறும் பவப்பிணி மருத்துவ
        னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
        னுருட்டுக சிறுதேரே.        (97)

97. நாடிகள் மூன்று-வாதநாடி, பித்த நாடி, சிலேத்தும நாடி. கைப்பு-கசப்பு. தெருட்டுபு - தெளிவித்து. ஒண்பொடி மருந்து-திருநீறு. மணி-சிவகண்மணி. ஓம்புறும் -பாதுகாக்கும்.
--------

வண்ட மிழ்ப்பெரும் புலவர்தஞ் செய்யுளின்
        வழுப்படாச் சொல்லோடும்
வழுவ மைத்தசொற் புணர்த்திடு மாறென
        வயங்கிள மதிசூடி
தொண்டு பட்டிடு மயறபு நன்னெறித்
        தொழும்பின ரொடுகூடச்
சுளிவு றாதடி யேன்றனைத் தழுவியே
        தொல்லிசைப் புலவோர்தம்
தண்ட மிழ்த்தொடை புணர்க்கிலா முழுவழுத்
        தாழ்ந்தபுன் சொற்போலச்
சங்க ரன்றிருத் தொண்டில்வேற் றுலகரைச்
        சார்வற வரைந்திட்ட
ஒண்ட ரைத்தனி முகமெனுங் கச்சிய
        னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
        னுருட்டுக சிறுதேரே.        (98)

98. மயல்தபு-மயலைப் போக்கிய. தொழும்பினர்-தொண்டர் சுளிவு-முகஞ்சுளித்தல். முழுவழுத் தாழ்ந்த-பெருந்தவறு மிகுந்த.
--------------

வம்பு லாமலர்ப் பொழிலிடை யுடைந்துகு
        மாங்கனிச் சாறோடும்
வண்டு ழுங்கடி மலர்முறுக் கவிழ்ந்துபெய்
        மதுப்பெயர்ப் பெருவெள்ளம்
அம்பொன் மாமணிப் பூணிள முகிண்முலை
        யரிமதர் மழைக்கட்கே
ழரிச்சி லம்படி மாதரோ டெழின்மத
        னாடுறு முதிர்வேனில்
பம்பு வான்றிரை யாணர்த்தண் புனலெனப்
        பாய்ந்துபா லியாற்றோடி
பரவை தன்கரு நிறந்திரிந் துப்பறப்
        பரந்துறும் விழவானும்
உம்பர் போற்றிசெய் காஞ்சிமா நகரின
        னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
        னுருட்டுக சிறுதேரே.        (99)

99. வம்பு-மணம். உகும்-வழியும். உழும்-கிண்டும். கேழ்அரிச்சிலம்பு-நிறம் பொருந்திய பருக்கைக்கல். பம்புவான் திரை-மிகுந்த நீர்த்திரை. பரவை-கடல். உம்பர்-தேவர்.
----------

திலக வாணுதற் பவளவாய் மலைமக
        டிரண்முலைத் தடந்தோயுஞ்
செஞ்ச டைப்பெரு மான்விளை யாட்டயர்
        செழுமலர்ப் பொழிற்கூடல்
பலகை மீதுமுன் னுயர்த்துள செந்தமிழ்ப்
        பழமலர்த் தொடைவீழ்ந்து
படிந்தெ ழாதிருந் துறுபொருட் சுவைநறாப்
        பருகுறு பெருங்கல்விப்
புலவர் தூய்மன மெனுங்களி வண்டினம்
        புக்கிருந் தொருங்குண்ணப்
புனைந்த விக்கொடுந் தமிழ்ப்புகர்ச் செம்மொழிப்
        புதுமலர்த் தொடையாரம்
உலகெ லாம்புகழ் திண்புயத் தணிபவ
        னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
        னுருட்டுக சிறுதேரே.        (100)

100.        விளையாட்டயர்-அறுபத்து மூன்று திருவிளையாடல்களைச் செய்தருளிய. பலகை-சங்கப்பலகை. சுவைநறா-சுவை பொருந்திய தேன்.புனைந்த-கட்டிய. தொடையாரம்-மாலையாகிய அணிகலம்.
-------------

வந்து நம்புகழ் பாடுநர் தமையெலா
        மருவுடம் பிறுதிக்கண்
மாசற் றெங்கணு நிறைசிவ மாக்கியே
        வைத்திடுஞ் செயலன்றி
நந்து கின்றவோர் பதத்தினுண் மறுமையி
        னணுகுறும் படியுய்த்த
னமக்க டாதென விம்மையே வண்டிமிர்
        நனைகவுட் பகையாற்றல்
சிந்தும் வன்மருப் பெறுழ்வலிப் புகர்முகச்
        சிறுவிழிப் பெருவேழச்
செல்வ விந்திர னாக்குத லுடையவண்
        செழுமணித் தரளங்கள்
உந்தும் வெள்ளரு வித்திரு மயிலைய
        னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
        னுருட்டுக சிறுதேரே.        (101)

101. நந்துகின்ற-கெடுகின்ற. நணுகுறும்படி-அடையுமாறு. வண்டு இமிர்-வண்டுகள் ஒலிக்கின்ற. நனைகவுள்-மதத்தால் நனைந்த கன்னம். பேருவேழம்-ஐராவத யானை.

சிவஞானபாலைய தேசிகர் பிள்ளைத்தமிழ் முற்றிற்று
----------------

This file was last updated on 10 Feb 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)