pm logo

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
ஸ்ரீ சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது
விளக்கக் குறிப்புரையுடன்


Sri civanjAnapAlaiya cuvAmikaL nenjcu viTu
by tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய
சிவஞானபாலைய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது
இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்


Source:
1. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் விளக்கக் குறிப்புரையுடன்.,
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978.

2. நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இந்நூல் திருக்கயிலாய பரமபரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதின பரம்பரைத் தர்மகர்த்துவம் பதினெட்டாம் பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் வெளியிட்டருளியது
பதிப்பகம் : ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்,
சுபானு ௵, 1944, பதிப்புரிமை, விலை ரூ. 5.
------------

தூது என்பது தமிழ் மொழியில் உள்ள தொண்ணூற்றாறு வகை நூல்களில் ஒன்றாம். ஒருவர் தம்முடைய எண்ணத்தைத் தம்முடைய பகைவர், நண்பர், காதலர் முதலானவர்களில் யாரேனும் ஒருவருக்கு மற்றொருவர் வாயிலாகத் தூது விடுவதாகும். அன்னம், மயில், கிளி, முகில், நாகணவாய்ப் பறவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்பன தூது விடுதற்குரியனவாகத் தமிழ் நூல்களிலே கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்நாளில் இவ்வெல்லையுங் கடந்து பணவிடு தூது, நெல்விது தூது, துகில்விடு தூது, துகில்விடு தூது, புகையிலை விடுதூது, மான்விடு தூது, காக்கைவிடு தூது முதலிய பலதூதுகள் தோன்றியுள்ளன. இத்தூது அடிகளார் சிவஞான பாலைய சுவாமிகள் என்னும் பெரியாரிடம் நெஞ்சத்தைத் தூதாக அனுப்பியதாகப் பாடியதாகும்.

காப்பு
நேரிசைவெண்பா

கைக்களிற்றை யன்றுரித்த கண்ணுதலோ னீன்றதனி
மெய்க்களிற்றை நெஞ்சமே மேல்கொண்டு புக்குருக்கி
மேவன்பாற் றூதாகு மேனிச் சிவஞான
தேவன்பாற் றூதாகச் செல்

நீர்கொண்டு தாளாலந் நீரைத்தீஞ் சாறென்று
பேர்கொண்டு வந்தாரப் பெய்கரும்பின் - ஏர்கொண்ட
பூமுடியா னீர்கொண்டு பொங்கு மருளென்று
நாமுடியால் வீழ்ந்திறைஞ்ச நல்குதரு - காமருதன்
தேசுணர்த்த வேண்டித்திரு மடிமேன் மேவிவாழ்
மாசுணத்தைத் தானொளித்த மாணிக்கம் - நேசித்துக்
கொள்ளு மடியார் குழாத்தினைத் தான் வஞ்சித்திங
கொள்ளும் விடங்கலவா விண்ணமுதந் - துள்ளும்

(காப்பு) மேல் கொண்டு-மேன்மையாகப் புகழ்ந்து போற்றிக் கொண்டு. புக்குருக்கி-புகுந்துருக்கி. 1.0-5.

ஒருமான் மழுவோ டொளித்தெமைமுன் பற்றும்       5
இருமா னொளிக்கவரு மெம்மான் - பெருமான்
உடுத்திருந்த வாசனையா லோங்குபுலித் தோன்மேல்
அடுத்திருந்து வாழு மரசு - தடுத்திருந்த
தொன்றென் றவித்தை யொழித்திட் டுடம்பினைநீ
அன்றென் றொழித்தெனைத்தா னாக்குவான் - நன்றென்று
பொன்னை நரர்க்குக் கொடுத்துநீர் போமென்று
தன்னை யெனக்கருளுந் தம்பிரான் - அன்னையென
உற்றா னமுதமே யொப்பா னருண்மேனி
பெற்றா னடியேன் பிழைபொறுப்பான் - கற்றார்

தொடுத்த தொடைக்கிசைந்த தோற்றத்தான் றன்னைக்       10
கொடுத்த கொடைக்குவந்த கோமான் - நடத்தலுறச்
செல்லுமணித் தேர்மீது செய்தமைத்த பாகன்போல்
இல்லு ளெமைவைத் தியக்குவான் - நல்ல
சுரர்மேன்மை யெங்கீழ்மை தோன்றா தொழிய
நரர்மேனி சாத்திவரு நம்பன் - தரைமேல்
மழுவேறு கையான் வரினுநீ றெள்ளுங்
கழுவே றிகளுந்தாழ் காலான் - புழுவேறும்
மென்பயிர் போல் வெய்ய விடயத் தரிப்புண்டு
துன்புறுவேற் குற்ற துணையானான் - என்பிலுயிர்

ஆக்கினான் போல வடியே னுளத்தன்புண்       15
டாக்கினான் மாறாத வானந்தந் - தேக்கினான்
நாதாந்தன் வீடுதவு ஞானவினோ தன்றெளிந்த
வேதாந்தன் கைம்மாறு வேண்டாதான் -போதாந்தன்
விண்ணோ ரமுதுண்ண வேண்டி விடமுண்ட
தண்ணா ரருள்சிறிது தானாக - எண்ணா
இறப்புக் கடிய விருவினையோ டெங்கள்
பிறப்புக் கடியப் பிறந்தான் - சிறப்பக்
கயிலைமலை மீதிருந்த காட்சிபோல் வந்து
மயிலைமலை மீதிருக்கும் வள்ளல் - பயில

நரனென் றிருந்தாலு ஞானமிலா தாரும்       20
பரனென் றறியப் படுவான் - ஒருநன்றில்
பாவிக் குதாசனர்க்குப் பத்தர்க்குச் சீடர்க்கு
மேவிக் கருணைபுரி மேன்மையான் - ஆவிக்குத்
தோன்றாத் துணையாகித் தோன்றுந் துணையுமாய்ச்
சான்றார்க் கருளுந் தகைமையான் - மூன்றால்
பெருக்கு மிருசமயம் பேதித் தறியா
திருக்கு நிலையி னிருப்பான் அரக்கன்
மலையா நிலையாகி மத்தாகி யாழி
அலையாத தாயளப்ப தன்றிச் - சிலையாய்ப்


6.5-10. ஒளித்து மறைத்து. தானாக்குவான்-தன்னைப்போல் செய்வான். நரர்க்கு-மனிதர்களுக்கு. 11.10-15. தொடை-மாலை. கழுவேறிகள்-சமணர்கள். 16.15-20 ஆக்கினான்-திருஞானசம்பந்தர். தேக்கினான் மிகுதிப்படச் செய்தான். தெளிந்த நன்கு தெளிவுபெற்ற. பிறப்புக்கடிய-பிறவியைச் சினந்தகற்ற. 21.20-25. ஒருநன்றுஇல்-சிறிது நன்மையும் இல்லாத. சான்றார்-சிறந்தவர். மூன்றால் பெருக்கும் இரு சமயம்-அறுவகைச் சமயம்.

பொறுப்ப திலதாய்ப் பொறையருவி தூங்கி       25
வறப்பினு நல்கும் வளத்தாய்ச் - சிறப்ப
அணியார் கொடையாகு மைந்தருநற் சிந்தா
மணியார் கருணை மலையாள் - கணியா
அறிவாங் குறிஞ்சியினின் றாங்கெழுந்து காமச்
செறிவாங் கொடும்பாலை தீர்த்து மறியாத
மாயையெனு முல்லை வளர்பசுக்கொண் டைவரெனும்
ஆய ருறுதொழிலை யாங்ககற்றிப் - பாய
விடய மெனுங்குளங்கள் வேறுவே றாகா
துடைய வுடைத்திட் டுளமென் - றடையு

மருத நிலநிறைந்து வாள்விழியா நெய்தல்       30
பெரிதுபெற வந்து பெருகிக் - கருதிலொரு
தானந்த லின்றித் தலம்விசும்பு போர்த்துவரும்
ஆனந்த மென்னுமலி யாற்றினான் - ஞானம்
பயனாக வோர்முப் பகுதியுயிர் வாழும்
நயனாகு மும்மாயை நாடன் - வியனாக
விள்ளல மன்பர் விடயக் கரவருறா
உள்ளமெனு நன்கமைந்த வூருடையான் - தெள்ளுதமிழ்ச்
சொல்லா மலரைச் சுவையா மதுவொழுகப்
புல்லா வழுச்சொலெனும் புன்மையெலாம் - இல்லாமல்

புன்புலவ ராங்குரங்கு போற்றாப் பெருமையுற       35
இன்புலவ ராஞ்சு ரும்பார்த் தீண்டிவர - அன்பெனுமோர்
வீடாத நார்கொண்டு மென்னா வெனுங்கரத்தால்
வாடா வகைபுனைபா மாலையான் - பீடார்
மலரா லயனார் மனச்சாலை நின்று
நலநா மணிவாய்த னண்ணி - நிலகை
வானிடையே யோடி வரையா வழகுடைத்தாய்த்
தானனுமா னிப்பினுயர் தன்மைததாய் - ஞான
நிறையா மரபு நிலைவழா தோங்கும்
மறையா மரியபரி மாவான் - குறையாத

26.25-30 வறப்பினும்-வறண்டாலும். வளத்தாய்-வள கையுடையதாய். ஐந்தரு-கற்பகதரு முதலியன. 31.30-35 தான் நந்தலின்றி-தான் கெடுதலில்லாமல். விடயக்கரவர்-சிற்றின்பப் பற்றுள்ள வஞ்சகர். புல்லா-பொருந்தாத. 36.35-40. வீடாத-கெடாத. மலராஅயனார்-நான்முகன். மரபுநிலை வழாது-மரபுநிலை தவறாமல். பரிமாவான்-தாங்குங் குதிரையை உடையான்.

தத்துவமாஞ் சேனை தனைத்துரந் திட்டாணவமாய்       40
வைத்த தளையின் வலியறுத்து - மெத்து
வினையாம் பணையொடித்து வீட்டியெழுந் தோடும்
மனமாம் பரிமாவை மாய்த்துத் - தனிமாரன்
கன்னன் முரித்துக் கருந்தோலாற் போர்த்திருந்த
துன்னுநின மென்புதசை சோரிகுடர் - என்ன
அளந்தறிவ வெல்லா மழிந்துபுறந் தோன்ற
விளங்கிழையார் தம்மை மிதித்துந் - துளங்கு
சமயமாம் பொய்க்குழியிற் சர்ர்ந்துவிழா தோடி
அமையார னந்தநீ ராடிச் - சுமையலா

வேதா கமமாம் விளங்குமணி தாங்கிவரும்       45
ஆதார மாஞான வானையான் - மாதேவன்
சங்கர னாதிபிறை தாணுவெனும் பேருடைய
சங்கரனே யாதி கருத்தாவாம் - அங்கணனை
ஏத்தி யடியி னிடந்து விழிக்கமலஞ்
சாத்தி முடிவணங்கிச் சக்கரமொன் - றீத்தருள்செய்
என்றுபெறு மான்முதலோ ரெல்லாம் பசுவென்று
மன்றமுறக் கடடுதரு மக்கொடியான் - என்றும்
அடியா தெழுமொலியா யானந்த மாகி
முடியாத நாத முரசான் - கடியார்மென்

சந்தமல ரோன்முதலோர் தங்களாற் றோற்றமுதல்       50
ஐந்தொழிலுஞ் செய்விக்கு மாணையான் - முந்து
தவஞான மில்லாதார் சாற்றினும்வீ டெய்துஞ்
சிவஞான தேவெனும்பேர்ச் செல்வன் - பவநாசன்
முன்னொருநாட் சாதனத்துண் முந்துதிரு வெண்ணீறு
மன்னு முயிரினுறு மாசொழிக்குந் - துன்னு
கலவையுடன் மாசாய்க் கழியுமெனக் கூறிய
புலவரினம் போற்றப் புனைந்து - பலவணிகள்
தாங்குமள வன்றித் தரும்பே றிலையென்றுந்
தீங்கி லிதையொருவன் றீண்டுறினும் - ஓங்கும்

உருத்திரனே யாவனென வோருருத்தி யாக்கம்       55
பொருத்த முறவுறுப்பிற் பூண்டு வருத்துகழை
விற்றோண் மதவேளை வெல்லுமடை யாளமெனக்
கற்றோய் துகின்மருங்கிற் காட்சிதரக் - கற்றோர்
அறியா வறிவாகு மானைமேல் கொண்டு
மறியா மனத்தை மறிப்பார் - உறியாய
தற்றுநிலம் வீழ்ந்ததுபோ லாசையற மெய்ச்சிவத்தின்
உற்றுவச மற்றிருக்கு முண்மையார் - முற்றும்
அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கும்
இழுக்கா வறமுடைய ரென்பார் - வழுக்கா


41.40-45. தத்துவமாஞ் சேனை-தத்துவப்படைகள். தளை-கட்டு. மாரன்கன்னல்-காமனுடைய கரும்பு வில். விளங்கிழையார்-பெண்கள். 46.45-50. இடந்து-தோண்டி. விழிக்கமலம்-கண்ணாகிய தாமரை. மல் முதலோர்-திருமால் முதலியவர்கள். மன்றமுற-அவைபொருந்த. கடி-மணம். 51.50-55. சந்தமலரோன்-நான்முகன் பவநாசன்-பிறவியைக் கெடுப்பவன். மாசு ஒழிக்கும்-கற்றத்தைப் போக்கும். கலவை-கலவைச் சந்தனம். மாசாய்-குற்றமாக. 56.55-60. கழை-கரும்பு கல்-காவிக்கல். துகில்-ஆடை. வசமற்றிருக்கும்-தம் வசமில்லாமலிருக்கும்.

மனைதுறந்தார் மாயை வலிதுறந்தார் பாவ       60
வினைதுறந்தார் போகம் விளைசிந் - தனைதுறந்தார்
வேண்டுதல் வேண்டாமை யில்லாதார் மெய்யன்பு
பூண்டு சிவனடியே பூசிப்பார் - மீண்டுபவம்
வாராவா றோர்வார் மறையுஞ் சிவாகமமும்
ஆராய்வா ராரா வனுபூதி சார்வாவார்
பொன்னுஞ் சிலையும் புகழும் பழியுமே
மன்னுங் குடிலுமணி மாளிகையும் - உன்னும்
படிவே றிலாதார் பகைநட் பிலாதார்
முடிவே லரசாய் முயல்வார் - கடிவேதும்

இல்லா திரப்பா ரிறையை நினைந்தொன்றுஞ்       65
சொல்லா திருப்பார் துதிசெய்வார் - வெல்லாத
ஐம்புலனும் வென்றா ரவற்றைத் தடாதுமனஞ்
செம்பொருளின் வைத்துச் செயல்செய்வார் - நம்பெருமான்
மேனியா மஞ்செழுத்தும் வேண்டி யெடுத்துரைப்பார்
மோனிகளாய் வீற்றிருந்து முன்னுவார் - மேனியெலாம்
பூசுவார் வெண்ணீறு புண்டரமே சாத்துவார்
தூசுளார் தூசு துறந்துளார் - ஆசையினால்
வேணி முடிப்பார் விரிப்பா ருலகியலை
நாணிநடப் பாருலகை நாணாதார் - பேணித்

தனதுபத மெத்திறத்துஞ் சாரு மடியார்       70
இனமருவி யெம்மருங்கு மீண்ட - மனுவுரையாத்
தன்பெயர்கொண் டார்வமொடு சாரும் புலவரிற்கால்
புன்புவியில் வையாப் புலவர்தாம் - வன்பவநோய்
மாற்றுமருந் தென்று வடிவிற் படத்துடையா
தேற்று மகிழவடி யின்றுகள்போய்ப் - போற்றுமிசை
விண்ணிற் புகவணைய மேவுதனை மாசகன்று
மண்ணிற் புகுமா மதியென்று - நண்ணிப்
பலவியமும் பொங்கிப் பரவையா யார்ப்ப
மலவலியை மாற்றுவான் வந்தான் - தொலைவில்

61.60-65. பவம்-பிறப்பு. ஒர்வார்-ஆராய்வார். பொன், கல், புகழ், பழி, குடில், மாளிகை எவற்றிற்கும் வேறுபாடு காணாதவர் என்க. 66.65-70. இறையை-இறைவனை வெல்லாத-வெல்லமுடியாத. தடாது-தடுக்காமல், மேனியாம்-உடலாகிய. மோனி-பேசா நிலையினர் முன்னுவார்-எண்ணுவார். 71.70-75. எத்திறத்தும்-எவ்வகையிலும். இனம்-கூட்டம். மருவி-பொருந்தி. ஈண்ட-நெருங்க. பலவியமும்-பலவகைப்பட்ட ஒலிக் கருவிகளும். பரவையாய்-கடல் முழக்கத்தைப்போல. ஆர்ப்ப-ஆரவாரிக்க மல வலி-ஆணவமலத்தின் திறல்.

முழங்கு மறையின் முடிந்த பொருளை       75
வழங்கு மருளுடையான் வந்தான் - விழுந்து
பரவு மடியார் பவப்பிணிக்குத் தானே
மருவு மருந்தனையான் வந்தான் - பொருவில்
மணிகண்ட னென்னுமொழி மாற்றியே யக்க
மணிகண்ட னென்னுமவன் வந்தான் - கணிகண்
டெயினர் மணமயர்வுற் றின்ப மருவும்
மயிலை மலையுடையான் வந்தான் - துயர்செய்
பொறிக்குஞ் சரமதனைப் போகாமற் றாளின்
மறிக்குஞ் சிவஞானி வந்தான் - எறிக்கும்

தினகரனா லாரழலாற் றிங்களாற் போகா       80
மனவிருளை நீக்குவான் வந்தான் - எனமுன்
பரிச்சின்ன ஞானம் பரியநார் காதில்
திருச்சின்ன வாரமுதந் தேக்க - விரித்துக்
கவிராயர் போற்றக் கவரிபல முத்திப்
புவிராய ரென்றி ட்டிப் போதத் - தவிராமல்
ஞாலவட்டந் தாங்குமொரு நாகத்தின் குட்டியென
ஆலவட்டம் பாங்கு ரசைந்துவரச் - சாலவட்ட
மாமதியாய் நன்கு வளர்ந்து துறந்தபிறை
காமருதன் வாழிடத்தைக் காண்பதற்குச் - சேர்முறைபோல்

வெள்ளை மணிக்கவிகை மேனிழற்ற வான்மழைபோல்       85
கொள்ளைமல ரன்பர் குழாம்பொழியக் - கிள்ளை
மொழியார் மயறூந்து முத்திபதத் தென்றும்
அழியாத வின்ப மருள்வாய் - பழியா
நடையா யுலகிறந்த ஞானோ தயாவெம்
உடையாய் புலன்கொ லுணர்வாம் - படையாய்
அணியே யமுதமே யாவியே சிந்தா
மணியே கருணை மலையே - பணியேறு
கோலங் கரந்துவந்த கோதிலாத் தேறலே
ஞாலம் புகுஞான ஞாயிறே - சீலங்கொள்


76.75-80. பொருவுஇல்-ஒப்புல்லாத. மணிகண்டன்-நீலமணி போன்ற கரிய கழுத்தையுடையவன். அக்க மணிகண்டன்-சிவ கண்மணியைக் கழுத்தில் அணிந்தவன். எயினர்-வேடர். மணமயர்வுற்று-மணஞ்செய்து. பொறிக்குஞ்சரம்-புலன்களாகிய யானைகள். மறிக்கும்-தடுக்கும். எறிக்கும்-கதிரைவீசூம். 81.80-85. தினகரன்-கதிரவன் ஆரழல்-மிகுந்த தீ மனவிருள்-அஞ்ஞானம். திருச்சின்னம்-அடையள ஒலிக் கருவிகள். முத்தி-வீடுபேறு. புவிராயர்-உலக அரசர்கள். ஞாலவட்டம்-உலகவட்டம். வட்டமாமதி-வட்ட வடிவம் பொருந்திய முழுத் திங்கள்.86.85-90. கவிகை-குடை. கொள்ளைமலர்-மிகுதியான மலர். மபன் துரந்து-காம மயக்கத்தைப் போக்கி. பழியா-பழிக்கப்படாத. பணியேறு-பாம்புகளணியப்பெற்ற கோலம்-வடிவம். கரந்துவந்த-மறைத்து வந்த. தேறல்-தேன்.

காவேயென் செல்வமே கண்ணே சிவஞானத்       90
தேவே யெனவந் தியர்துதிப்பப் - பூவேறு
கோனும் புரந்தரனுங் கொண்ட னிறத்தானும்
வானும் புகழ்பவனி வந்தருள - ஞானம்
பருவ வகையாற் பலபேதப் பட்டார்
தெருவின் மனமகிழ்ந்து சென்றார் - உருவிள்
ஒருதா னணிய வுரியனவா மென்னும்
பெரிதா மழுவும் பிறவுந் - தெரியாமல்
நீத்துப் பொதுவாகு நீறுதிரு மேனிகொடு
சாத்திப் பெருமைபெறுஞ் சங்கரனை - மூத்துத்

திருந்து நதிமுழுதுஞ் சென்றாடி னாலும்       95
அருந்து முணவுசரு காக்கி வருந்துறினும்
நீங்காத மும்மலமு நீக்கவருண் மேனிகொடு
நாங்காண வந்தருளு நாயகனை - ஓங்கார
நாத முறுபொருளாய் நாதாந்த நாடகனாய்
வேத முடிமணியாம் வித்தகனைச் - சாத
மருணா சகனை மயிலைமலைத் தேனைக்
கருணா லயனை யெதிர் கண்டார் - சரணார
விந்தந் தொழுவார் விழுவா ரிதுநமக்கு
முந்து தவத்தின் முதிர்வென்பார் - உந்தன்பின்

உள்ளந்தா ணின்றுச்சி காறுமுள மாயுருகி       100
வெள்ளமபாய் கண்ணராய் மெய்விதிர்ப்பார் - கொள்ளுங்
கலமென் றுகிலுதவிக் காவென்பா ரேனைப்
பலவும் பெறுமோர் பரிவிங் - கிலமடியேம்
எம்மை யெமக்கருளா யென்பா ரிறைவனே
இம்மை நினையணையோ மென்றாலும் - அம்மையினில்
யானென்று நீயென றிரண்டில்லை யென்னுமுறை
தானின் றனையணைவோஞ் சார்ந்தென்பார் - ஊனின்று
வாழ்ந்த தமையுமினி மாய்ந்தாலு நன்றென்பார்
வீழ்ந்துமொழி யொன்றுபெற வேண்டுவார் - சூழ்ந்த

91.90-95. கா-பொழில். வந்தயா புகழ்பாடுவோர். பூவேறுகோன்-நான்முகன். புரந்தரன்-இந்திரன். கொண்டல் நிறத்தான்-திருமால். வானும்-தேவர்களும். 96.95-100 திருந்துநதி-புனிதயாறுகள் சாதமருள்-பிறவிக்குக் காரணமான வடரீதவுணர்வு உந்து அன்பின்-மேற்செலுத்துகிற அன்பினாலே. உள்ளந்தாள்-காலன் அடிப்பாகம். உச்சி-தலை. 101.100-105. அம்மை-மறுபிறப்பு. மெய் விதிர்ப்பார்-உடல் நடுங்கு. வார்கள்.

திசையெலா நின்மெய்த் திகழ்வென்பா ரென்சொற்       105
கிசையலா மோவரசே யென்பார் - நசையினால்
யாம்புணர்ந் தின்ப மிவராற் பெறுவதலால்
தாம்புணர்ந் தின்புறார் தாமென்பார் - நாம்புணர்ந்தால்
நீங்குவது முண்டா நினையா திருந்தபடி
ஆங்குறுவ தேநல் லறிவென்பார் - நாங்கள்
கரவி லிவர்வடிவங் கண்டநாள் தொட்டிங்
கிரவு பகலில்லை யென்பார் - அரிதில்
பிறந்தபயன் மன்மதனாற் பேதுற்று வாளா
இறந்து படுவதோ வென்பார் - சிறந்த

சிலையோநின் னுள்ளஞ் சிவஞான தேவே       110
இலையோ கருணைதா னென்பார் - மலையோடு
மற்பொருதல் போல வலிந்துவரு கென்பார்நீ
எற்புணர்வ தென்னென் றிரங்குவார் - பொற்ப
அறவனே நின்னை யலதெண்ணோம் வானத்
திறைவனே வந்தாலு மென்பார் - துறவனே
மேவிலைமை நின்னை விகாரி யெனவுரைப்பார்
யாவருல கெங்கு மிலையென்பார் - பூவில்
இவரெலும்புந் தோலுமா யெய்தினா ராயின்
எவர்விரும்பி வேண்டுவா ரென்பார் - அவர் நெருங்கி

எய்த வுடன்வணங்கி யிவ்வா றடியேனுஞ்       115
செய்த தவங்கள் செலுத்தப்போய் ஐயன்
தொழும்பு மறந்தொழியாத் தொல்விசயன் வில்லின்
தழும்பு மறைந்த தலையும் - எழுந்துமதன்
வின்னியா சஞ்செய்முன் வென்றுபகை யின்மையால்
சன்னியா சஞ்செய்படைத் தண்ணுதலும் - மன்னிவாழ்
கேவலமென் கங்குல் கெடுக்குந் தொழிலொன்றில்
மேவலுற வொத்த விழியிரண்டும் - ஆவலொடு
நல்லவியல் கேளா நணுகுமிசை பாடுநரைச்
செல்ல விடுத்த திருச்செவியும் - வல்ல

106.05-110. நசை-விருப்பம். பேதுற்று-மயக்கத்தையடைந்து. சிலை-கல். 111.110-115. மற்பொருதல்-மற்போர் செய்தல். அறவன்-அறவடிவானவன். துறவன்-துறவையுடையவன். 116.115-120. தொழும்பு-தொண்டு. தொல்விசயன்-பழமையான அருச்சுனன். வில்நியாசம்-வில்லைத்தொடுத்தல்.

இயற்பகையை முன்ன மிரந்த மொழியை       120
அயர்த்த மலர்வா யழகும் - வியப்புறவவ்
வாலமுண்ட தென்ப தறையாம லிவ்வுலகம்
பாலருந்து மென்னப் படுமிடறும் - மேலுவந்து
நாமங்கை போற்றவுள நாணுந் தலைமாலை
போமங் கலமாம் புயமலையுஞ் - சேமங்கொள்
ஏனமருப் பில்லா திருப்பதுவு மோரழகென்
றூன மறத்திகழு மொண்மார்பும் - வானம்
வழுத்தம் புயமா மனையான் றலைக்குக்
கழுத்தென்ப தில்லாக் கரமும் - எழுத்தென்று

கொள்ளுங் கொடுவரித்தோல் கொள்ளாது நூல்வலியைக்       125
கொள்ளுந் துகிலுடுத்துக் கொண்மருங்கும் - உள்ளுமும்பர்
மன்னு முடிவெருவி வந்துழியிம் மன்பதைதஞ்
சென்னி படச்சிவக்குஞ் சித்தடியும் - என்னுடைய
கண்களிப்பக் கண்டுமிகக் காதலா னேனிந்த
மண்களிக்க வந்தசுவை வானமுதம் - பெண்களுக்கு
மாலா ரணனமரர் மாதவரிம் மானுடர்போல்
தோலாத வீர முடைத் தோற்றத்தான் - மேலாய
செங்கையமு தன்னான் சிவஞான தேசிகனெம்
பங்கமல மாயைப் பகையானான் - தங்கணல

ஊண்துறந்து சீர்சா லுடைதுறந்து செம்மணிப்பொன்       130
பூண்துறந்து கண்கள் புனல்சொரிய - ஆண்டடைந்து
நையு மவாநிற்க நாயேன்பாற் பொங்குமருள்
செய்து திருக்டைக்கண் சேர்த்தினான் - ஐயனைநான்
அன்று தொடங்கி யணைவான் விருப்புற்றேன்
என்றுணைநீ யன்றி யிலைநெஞ்சே - நன்றிபுரி
வேதா கமங்கள் விதிக்கும் விதியனைத்தும்
நீதான் புனிதமுற நேர்ந்தன்றோ - ஆதார
யோக மிருநான்கு முன்னைவய மாக்குவதற்
காக முயலுவன வல்லவோ - போகமுறு

121.120-125. ஏன மருப்பு-பன்றிக் கொம்பு. வழுத்து-போற்றுகிற. 126.125-130. கொடுவரித்தோல்-புலித்தோல். மருங்கு-பக்கம். மால்-திருமால். ஆசணன்-நான்முகன். அமரர்-தேவர். பங்கம்-பழுதுடைய. 131.130-135. புனல்-நீர். பூண்-அணிகலம்.


தன்மைக்குஞ் செய்யுந் தவத்திற்குங் கற்றறியும்       135
நன்மைக்கும் கொள்ளுமொரு நட்பிற்கும் - வன்மைக்கும்
ஈகைக்குந் தன்னை யிருந்தாங் குணர்ந்தடையும்
ஓசைக்கும் நீயே யுறுதுணைகாண் - போகத்தின்
நின்றாரை மெய்த்துறவி னிற்பிப்பா யத்துறவில்
சென்றாரை யில்லிற் செறிப்பிப்பாய் - குன்றா
அறத்தை மறமாக்க வம்புவியின் மிக்க
மறத்தை யறமாக்க வல்லாய் - நிறுத்தி
ஒடுக்குதலே முத்தி யுனைவிடயத் தோட
விடுக்குதலே பந்தமென மிக்காய் - அடக்குதலால்

நின்றாயே யாகிலொரு நீதான் புலன்பரந்து       140
சென்றாலு மெய்துவதோர் தீதுண்டோ - பொன்றாத
முத்தி யொருகணத்தின் முன்வர நீ வேண்டுவையேல்
இத்தனையும் நின்னா லிசைந்தனகாண் -சத்தியமாய்
ஏதேனு மேனி யெனக்கொண்டு வந்தருள
மாதே வனைநீ வருவிப்பாய் - தூதேவும்
நம்பிகர வுண்டவொரு நற்பனவப் பிள்ளைதனை
அம்புவியின் மீள வழைத்ததூஉம் எம்பெரிய
நாவிற் கரசு நடுக்கடலுட் கற்பெருந்தூண்
மேவிப் புணையா மிதந்ததூஉம் - பாவிற்கு

வல்ல வொருபுலவர் வல்லென்பு பெண்ணாகச்       145
செல்ல மயிலையிடைச் செய்ததூஉம் - தில்லையினில்
வாளா நெடுங்கண் மடவரலை நீலகண்டர்
சூளால் மனையுட் டுறந்ததூஉம் - தோளாத
முத்தனைய நன்மாதை முன்ன மியற்பகையார்
வித்தகனை நல்கி விடுத்ததூஉம் - புத்திரனைத்
தொண்ட ரறுத்தமலன் றொண்டர்போல் வந்திரப்பப்
பண்டு சமைத்துப் படைத்ததூஉம் மண்டிருளில்
முக்கணனார் செல்ல முளைவார மாறனார்
அக்கணமே செய்க்க ணடைந்ததூஉம் - புக்கரனார்

வேண்ட வரிந்துமகள் மென்கூந்தல் கஞ்சாறர்       150
ஆண்டு வணங்கி யளித்ததூஉம் - மூண்டமரின்
ஏற்றானை யீசனென வேனாதி நாதனார்
நீற்றா னினைந்துருகி நின்றதூஉம் - மாற்றானைக்
குத்தினா னென்று குறியாமல் மெய்ப்பொருளார்
தத்தனே காக்கவெனச் சாற்றியதூஉம் - மத்தவிபஞ்
சிந்த மலரைச் சிவகாமி யாண்டார்க்காய்
முந்தியெறி பத்தர் முனித்ததூஉம் - சுந்தரரைத்
தொண்டத் தொகைபெறூஉத் தொல்லுலக முய்யவிறன்
மிண்டத் தொழும்பர் வெகுண்டதூஉம் - மண்டபத்து

136.135-140. ஓகை - மகிழ்ச்சி போகத்தில்-உலக வாழ்வில். மிக்காய்-மிகுதியாக. 141.140-145. புலன்களிற் பரவி. பொன்றாத-கெடாத இசைந்தன-பொருந்துவன நம்பி-சுந்தரர். கர-முதலை. பனவப்பிள்ளை-பார்ப்பனச் சிறுவன். அம்புவி-உலகம். 146.145-150. வல்லவொரு புலவர்-திருஞான சம்பந்தர். மயிலை-மயிலாப்பூர். வாளாம்-வாளைப்போன்ற. மடவரல்-இளம் பெண். மனையுள் துறந்ததும்-இல்லத்துக்குள் இருந்து கொண்டே துறந்தொழுகியதும். தோளாத-துளைக்கப் பெறாத. வித்தகனை-வித்தகனாகிய சிவபெருமானுக்கு. அமலன்-சிவபிரான். மாறனார்-இணையான்குடிமாற நாயனார் செய்க்கண்-வயலிடத்து. புக்கு-புகுந்து. 151.150-155. கஞ்சாறர்-மானக்கஞ்சாறர். மாற்றான்-பகைவன். மத்த இயம்-மத்தகத்தை யுடைய யானை. தொழும்பர்-அடியார்.

நீலநக்கர் பாணருக்கு நேசித்து நல்யாக       155
சாலை யிடத்தைமுனந் தந்ததூஉம் - மாலயற்கும்
எட்டாற்கு வேண்டி யிருங்கலயர் குங்குலியம்
முட்டாமற் கொள்ள முயன்றதூஉம் - வட்டாடி
ஆக்கு பொருளை யரனடியார்க் கன்பினால்
மூர்க்க ருதவி முடித்ததூஉந் - தூக்குதலை
மீது பரனொளித்த வெண்கோ வணத்திற்காப்
போதவமர் நீதியார் புக்கதூஉம் - ஆதியுமை
பாக னடியவரைப் பண்டைநிலை யுன்னியதம்
தோகைகரங் கம்பர் துணித்ததூஉம் - சோகமறக்

கண்ணப்பர் மென்றசையைக் காளத்தி யார்தம்மை       160
உண்ணப்ப வென்றுமுன மூட்டியதூஉம் - வண்ணப்பொன்
மீனை யளக்கரிடை மிக்க வதிபத்தர்
மேனைமரு கற்கென்று விட்டதூஉம் - யானைமிசை
வந்தமலை நாட்டரசர் வண்ணானைத் தொண்டரெனப்
பந்தமறு மன்பாற் பணிந்ததூஉம் - கந்தைபரற்
கன்பி னுதவிலனென் றக்குறிப்புத் தொண்டர்தாம்
முன்புசிலை யோடுதலை மோதியதூஉம் - அன்புறுமோர்
தாட்புலியார் போற்றுதிருத் தாண்டவனெற் கொள்கிளையைக்
கோட்புலியார் நேசமறக் கொன்றதூஉம்-கேட்பிலிவை

எல்லாமு நின்ற னிசைவாற் புரிந்தனநீ       165
அல்லா தியற்றலற மன்றுகாண் - சொல்லாட
நின்பெருமை யாரறிவார் நீயென் னொடுகூடில்
என்பெருமை சொல்வாரு மில்லைகாண் - வன்புவியில்
நின்னைத் துணையல்லை நீயென்று நீங்கினால்
பிள்ளைத் துணையாகும் பேரில்லை - உன்னைத்
துணையாக் கொளற்குத் துணைநீ நினக்கிங்
கிணையாய்ப் பிறிதொன் றிலைகாண் - புணையாய்ப்
பிறப்புக் கடற்குப் பிடிக்கப் படுவாய்
மறப்புற் றதினழுத்த வல்லாய் - சிறப்பு

156.165-160. பாணர்-யாழ்ப்பாணர். முட்டாமல்-தட்டுப்படாமல். வட்டாடி-சூதாடி. தூக்குதுலை-தொங்கவிடப்பட்ட நிறைகோல். பண்டைநிலை-பழைய இல்லற நிலை. கம்பர்-கலிக்கம்ப நாயனார். தோகை-மயிலைப் போன்ற மனைவி. 161.160-165. அளக்கர்-கடல். மேனைமருகன்-இமாசல மன்னன் மனைவியாகிய மேனைக்கு மருமகன். மலைநாட்டரசர்-சேரமான் பெருமாள். கந்தை-கிழிந்த ஆடை. பரற்கு-சிவபிரானுக்கு. ஓர்-ஒப்பற்ற. தாட்புலியார்-புலிக்கால் முனிவர். தாண்டவன்-கூத்தப்பிரான். கிளை-சுற்றம். 166.165-170. இசைவு-உடன் பாடு. புணை-தெப்பம்.

விலங்கி னரர்தமக்கு மேவியது நின்னால்       170
இலங்கு முனிவரர்கட் கெல்லாம் - நலங்கொள்
பெருமை நினைத்துணைக்கொள் பெற்றியா லன்றோ
உரிமைநீ யன்றிவே றுண்டோ - அருமையென்ப
தில்லையுனக் கெவ்விடத்து மென்மனமே யாதலினால்
நல்ல பெரியசிவ ஞானிபால் - செல்லவுனை
வேண்டுவேன் தூதாக வேதக் கிளியைவிடில்
காண்ட லரிததனாற் கண்டாலு - மாண்டதுதான்
ஒன்றாக வோதா துரைக்கும் பலமயங்கச்
சென்றாலு நீயேதான் செல்லாமல் - நின்றாலும்

நீயே பிறிதில்லை நெஞ்சமே யெற்பயந்த       175
தாயே யவனிடங்கள் சாற்றக்கேள் - பேயேன்
எழுநகரி னுட்சிறந்த தென்பதலாற் சீர்மை
முழுது மியம்ப முடியா - தழகுறுவேல்
கந்தனுயர் கச்சிவளங் காற்கூ றளவுரைப்பன்
ஐந்துகரன் சொல்வ னரைக்கூறு - நந்தமரன்
கூறுடையா ளோர்முக்காற் கூறுரைப்பள் முற்றுமிள
ஏறுடையான் சொல்வ னெனவனந்தன் - வீறுடைய
நாவா யிரங்கொண்டு நானுரைத்தல் காற்கீழென்
றோவாத நாணாகி யோடியே - தாவாத

வேலையிடை வீழவவன் மேல்வீழ்ந்து துஞ்சினான்       180
போல வரிகிடப்பப் பொங்குபுகழ் - ஞாலமெலாம்
நண்ணவொரு காசி நடுமெய்ஞ் ஞகரமுறும்
எண்ண வரிய வெழினகரும் - மண்ணுலகில்
முன்னோர் தொடைப்பொருளை முற்றுங் கரந்துரைத்துப்
பின்னோ ரெமதென்னும் பெற்றிபோல் - அன்னோபின்
வந்திளைய காசி மரிப்பார்க்கு முத்திபதந்
தந்திடுவ னென்றுமிகு தன்செயலை - முந்துகொடு
சென்றுபர தேயத்திற் சேர்ந்திருப்பச் சீர்மலிந்து
மன்றன் மலரு மணியணியுந் - துன்றுநறும்

171.170-175. பெற்றி-பெருமை. 176.175-180. பயந்த-பெற்ற. அரன்கூறுடையாள்-உமாதேவி. அனந்தன்-ஆதிசேடன். வீறு-பெருமை ஓவாத-ஒழியாத. வேலை-கடல். துஞ்சினான்-செத்தான். 181.180-185. அரி-திருமால். முன்னோர் தொடைப் பொருள்-சான்றோர்களுடைய பாட்டின் பொருள். கரந்துரைத்து-ஒளித்துக்கூறி மரிப்பார்-இறப்பவர். மன்றல் மலர்-மணந்தங்கிய மலர்.

குங்குமமுஞ் சந்தனமுங் கோலம் பெறப்புனையா       185
அங்குருகு மேகலையு மாங்கொலிப்பத் - துங்கமுறு
நன்பதியைச் சேரவரு நங்கைபோற் சென்றுமலி
தன்பதியைச் சார்ந்தணைந்த தண்கங்கை - என்பதுதான்
புத்தா றெனத்தான் புராதனவா றென்னுமணி
முத்தா றுடுத்த முதுகிரியுஞ் - செய்கதாமம்
அன்னமாய் முற்றும் விளைய வளங்களெலாம்
துன்னுநாட் டிற்குச் சுவைவிளைய - மன்னுவேள்
மீதண்ட ரோடமர்ப்ப வெங்கணையும் வின்னாணும்
கோதண்ட மும்பொருந்திக் கொண்டே - வேதண்டம்

ஒப்ப வுயர்த்தவுய ருப்புக் குவான்மீது       190
வெப்ப மறுமதிய மெய்யுரிஞ்சத் - துப்புறுபுள்
உண்ணிலா வுண்ணா தொழிந்துமட வார்முறுவல்
வெண்ணிலா வுண்டு மிகவளரக் -கண்ணெலாம்
பூப்பட் டிருந்தாலும் பூம்பொய்கை நன்காய்ந்து
பாப்பட்ட சேடன் பணங்காட்ட - வாய்ப்புற்ற
கங்கையுடன் வந்தாரூர் கண்டுவரு வீரென்று
தங்குறுதன் மக்க டமைவிடுப்பத் - துங்கமுறும்
முத்தீ வளர்ப்பமறை முன்னோர் விருந்தினுக
ரத்தீ யவிப்ப வவர்மாதர் - கொத்தின்

கொடியனையார் கொம்மைமுலைக் குன்றே வருத்தத்       195
துடியிடையே நின்று துவள - நெடிய
கலவ மயிலிவருங் கந்தவேள் தேரே
உலவ நிலைபெயர்வுற் றோடப் - புலவர்
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்றென் - றுரைப்ாவில்
வைதலை யஞ்சி வளத்தா ரிரப்பவர்தாம்
எய்தலை நோக்கி யிருந்தவப் - பொய்தவிர
இல்லென் பதுமொருவ ரீயென் பதும்வினையாம்
சொல்லென்ப தின்றுபெயர்ச் சொல்லாக - நல்லவளம்

186.185-190. கோலம்பெற-அழகுண்டாக. புனையா - அணிந்து. குருகு-வளையல். நன்பதி-நல்ல கணவன். புத்தாறு-புதிய ஆறு. புராதனம்-பழமை. முதுகிரி-பழமலை. துன்னும்-பொருந்தும். அமர்ப்ப-போர் செய்ய. கோதண்டம்-வில். வேதண்டம்-மலை. குவால்-குவியல். 191.190-195. துப்புறுபுள்-சகோரப்பறவை. பணம்-படம். உகரத்தீ-வயிற்றுப்பசி. 196.195-200. கொம்மை-பருத்த. துடியிடை-உடுக்கையைப்போன்ற இடை துவள-அசைய. இரப்பாரை யென்பது முதல் அற்று என்பது வரை திருக்குறள். வளத்தார்-செல்வத்தையுடையவர்.

மிக்கெலா நாளும் விழவறா வீதியணி       200
திக்கெலா மேத்தமலி சேயூரும் - முக்கணனார்
மந்திர மொன்றா யிரமாய் வளர்ந்துபயன்
தந்திடு மொண்மயிலைத் தண்மலையும் - பந்தமறு
தன்னை மருவினரைத் தானாக்குந் தன்மையுடை
மன்னுசிவ ஞானி மருவிவாழ் - நன்னிலையால்
அம்ம பிரமபுர மாகும் பொருள்படவே
பொம்மபுர மென்னும் புகழ்ப்பதியும் - எம்மிறைவன்
வீற்றிருந்து வாழிடங்கண் மேவியிவற் றொன்றினுறும்
தேற்ற முணர்ந்துநீ செல்லுங்கால் - ஆற்றலுடன்

இல்லை யிறைவனாற் பூதமலா லிங்கென்று       205
சொல்லி யுனைமறித்துச் சூழ்ந்துதான் - நல்ல
அலகா யுதமெறித லாயுரைப்ப னந்த
உலகா யதனுரைகேட் டோடேல் - பலகாலும்
நாணேது மின்றிக் கருமமலா னானிறையைக்
காணே னெனுங்கரும காண்டியொடு - பூணேல்
நினையணு வாக்கு நியாய னுரையைத்
தினையள வாயினுநீ தேறேல் - பினைவருவை
சேடியனை நெஞ்சமே சேரவவன் றம்பியென
நாடி யொருசிறிதும் நண்ணுறேல் கூடியொரு

புத்திகண பங்கமெனப் புத்திகெட்ட புத்தனுரை       210
மெய்த்ததென நின்று விடாதிநீ - முத்திபெறு
தன்னை யணுவாக்கித் தாழ்பஞ்ச ராத்திரிதான்
என்ன சொலினு மிசைந்துறேல் - நின்னைக்
கெடுப்பதே யெண்ணிக் கெடும்யோ கிகளை
விடுப்பதே நன்றென்று மேவேல் - அடுப்பதெனாக்
கள்ளைக் குடித்துக் களிக்கின்ற வாமிமொழி
கொள்ளத் தகுவதெனக் கொண்டுறேல் - மெள்ளப்
பகுதி விகுதி பகுத்தறியின் முத்தி
தகுதியெனுஞ் சாங்கியனைச் சாரேல் - மிகுதிபெறும்

201.200-205. எலாநாளும்-எல்லா நாளும். சேயூரும்-காளையை நடத்தும். தானாக்குதல் - பொய்யறிவை யொழித்து மெய்யறிவைக் கொடுத்தல். 206.205-210. முதலிய அடிகளால் சமயவாதிகள் செய்தி உரைக்கப்படுகிறது. 211.210-215. மெய்த்தது-உண்மையானது. இசைந்துறேல்-ஒத்துக்கொள்ளாதே.

நஞ்சமார் கண்டனொடு நாரணனை யொப்பாக்கும்       215
பஞ்சமா பாதகரைப் பாராமல் - அஞ்சிநீ
சென்று திருமடத்தைச் சேர்ந்துகழு நீர்த்தடமாய்
நின்று நறியகழு நீர்பூப்பத் - துன்று
முகிலா யடைந்துபுகை மூன்றுலகுங் காக்க
நிகமா கமம்விதித்த நீதி - இகலாத
கோடிமறை யோர்நிறையக் கொள்ளுமுண வின்பயனை
நாடியிடும் பிச்சையா னல்குமொரு - கோடிசிவ
யோகிகட்குப் போன முவந்து சமைப்பாரைப்
போகிகட்குப் புற்றனைய பொற்சடைமேல் - மோகிகட்குப்

பூசனைக்கு வேண்டும் பொருளுதவு கின்றாரை       220
வாசமலர் கொய்து வருவாரைப் - பூசனைசெய்
கின்றாரை ஞானநூல் கேட்பாரை கைந்தோதா
நின்றாரை மேனியெலாம் நீறணிந்து - குன்றாத
கண்டி புனைந்து கமலா தனத்திருந்து
கொண்டு சிவனைக் குறிப்பாரைக் - கண்டுருகிப்
போற்றிவணங் காவுட் புகுந்து புரமெரித்த
சீற்ற மறந்ததெய்வ சிங்கத்தை - மாற்றலரும்
சீமானை யென்றுந் தெவிட்டாத தெள்ளமுதைக்
கோமானை ஞானக் குணக்குன்றைப்- பூமாரன்

வண்டு படாத மலரைநாஞ் செய்தவத்தால்       225
கண்டுகொளுந் தண்ணறும்பூங் கற்பகத்தை - மண்டலமும்
ஏனைப் புவனங்க ளெல்லாமும் வேண்டுபசுந்
தேனைச் சிவஞான தேசிகனை - நீநெக்
குருகியெதிர் கண்டுகொண்டே யோடிப் பெருமான்
திருவடியில் வீழ்ந்தன்பு தேங்கிப் - பருகமுதே
வேண்டுவார் வேண்டுவன வேண்டியவா றேயுதவும்
ஆண்டகையே யெங்க ளரசனே - நீண்டவொரு
தந்திதரு பச்சைபுனை தன்மையா னீண்டுபச்சைக்
கந்த மரபிலுறுங் காரணனே - பந்தமற

216.215-220. துன்று-பொருந்து. இகலாத-மாறுபடாத. போனம்-உணவு.221.220-225. கண்டி-சிவகண்மணிமாலை. கமலாதனம்-பதுமாசனம். பூமாரன்-காமன். 226.225-230. நெக்குருகி-நெகிழ்ந்துருகி. பச்சைக்கந்த மரபு-பச்சைக்கந்த தேசிகா மரபு.

ஆளாய வன்பர்க் கமரா பதம்போல       230
மீளாத வீடுதவும் வித்தகனே - வேளாணை
தள்ளு மடியார் தமக்குத் துணையாகக்
கொள்ளு மிருமலர்த்தாட் குஞ்சரமே - விள்ளலறப்
பத்திக் கடலுட் படிந்த வடியார்க்குத்
தித்திக்குங் கோதிலாத் தேற ல் - முத்திக்குச்
சாதியா லன்றுரிமை சாதனத்தா லென்றுண்மை
போதியா நல்குமொரு பொன்மலையே நீதியால்
வீடும் பொருளும் வெறுத்துமுத்தி வேண்டுவார்
தேடுஞ் சிவஞான தேசிகனே - பாடும்

பொருளே யெனவணங்கிப் போற்றிநின்று நின்பே       235
ரருளே துணைவே றறியேன் - தெருளே
நினது திருப்பவனி நேர்ந்தநாள் தொட்டுக்
கனலின் மெழுகாய்க் கரையும் - புனல்பெருகு
கண்ணொடு நின்றேங்குங் கங்குல் பகலின்றி
உண்ண வுடுக்க வுவப்பொழியும் - பண்ணொடு
பாடு நினைமெய் பதைக்க நினையெங்கும்
தேடு முருகுந் திகைத்தலறும் - வாடுமெனைப்
பாரானோ வென்னும் பரம சிவஞானி
வாரானோ வென்னும் வழிபார்க்கும் -ஓரானோ

என்னோ யெனப்புலம்பு மென்னைநின்பாற் றூதாக       240
அன்னோ பலசெய் தஞரெய்துந் - தன்னோர்
உடம்பும் பொறையா யொழிப்பக் கருதுங்
குடும்பம் பகையாகக் கொள்ளும் - அடங்க
ஒருபூ தருமில்லா துற்ற விடத்தே
வருபூ ரணமா மருவி - ஒருபோதும்
வேறிலா தொப்ப விரும்புறுமவ் வென்னுயிரை
மாறிலா ஞான மணிவிளக்கே - ஈறிலாச்
செல்வமே யெங்கள் சிவஞான தேவனே
கல்விகொடு காணாத காட்சியே - புல்லுவாய்

புல்லு மளவு முனைவிட்டுப் போவதுநான்       245
இல்லை யிறைவனே யென்றநீ - தொல்லை
விடய நினைந்தகன்று மீளாம னில்லா
துடைய மலவிருளை யோட்டுஞ் - சுடரை
மரமும் நிழலும் போன் மாழையும்பூ ணும்போல்
இருமை யபேதமென்ப தென்றும் - பரமுயிர்கள்
வேறென்றும் வேறல்ல வென்றும் விளம்புதலால்
வீறொன்றும் தாதான் மியமென்றும் - மாறின்று
சாமி யடிமையெனுஞ் சம்பந்த மென்றுமுளம்
வேமிகலை யோர்மொழியில் வீப்பானைத் - தோமில்
250. உலகிற் கிறைவ னுபாதான மென்றும்
231.230-235. தேறல்-தேன். வீடும்-இல்லமும். 236.235-240. புனல் - நீர். கங்குல்-இரவு. உவப்பு-மகிழ்ச்சி. ஒரனோ-உணரானோ. 241.240-245. அஞர்-துன்பம். புல்லுவாய்-தழுவுவாய். 246.245-250. வீறு-பெருமை. வேம்-வேகும். வீப்பான்-அழிப்பவன். தோமில்-குற்றமற்ற.

இலகுற்ற நன்னிமித்த மென்றும் - நிலவுற்ற       250
ஆவி யணுவென்று மன்று நிறைவென்றும்
மேவிய மாயைதான் மித்தையென்றும் - ஓவிலது
நித்திய மென்றும் நிகழ்த்தி மயங்கும்போர்
அத்தனையுந் தீர்த்த வருளானைப் பத்தரிடை
உள்ள படிதோற்று முண்மை யுடையானைத்
தெள்ளுஞ் சிவஞான தேசிகனை - விள்ளலறப்
பற்றி யடியேன் படுமிப் பெருந்துயரம்
முற்று மறிந்துசெல முன்னுநீ - எற்றுதிரை
வேலையுல கெல்லாம் வியக்குஞ் சிவஞானி       255
மாலைமன மேவாங்கி வா.

251.250-255. பத்தர்-அன்பர். எற்று திரை-எடுத்தெறியும் அலை.
----------------

This file was last updated on 12 Feb. 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)