துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
வாழ்க்கை வரலாறும் அவரது நூல்கள்களும்
Life History and literary works of
tuRaimangkalam civapirakAca cuvAmikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
வாழ்க்கை வரலாறும் அவரது நூல்கள்களும்
Source:
நல்லாற்றூர் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
இந்நூல் திருக்கயிலாய பரமபரை பொம்மைய பாளையம் பெரியமடம்
திருமயிலம் தேவத்தான ஆதின பரம்பரைத் தர்மகர்த்துவம் பதினெட்டாம் பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள் வெளியிட்டருளியது
பதிப்பகம் : ஸ்ரீ ஷண்முகா அச்சுக்கூடம், திருப்பாதிரிப்புலியூர்,
சுபானு ௵, 1944, பதிப்புரிமை, விலை ரூ. 5.
------------
சிவப்பிரகாச சுவாமிகள் வரலாறு.
சிவசண்முகன்றுணை
சிவப்பிரகாசசுவாமிகள் முதலிய மூவருமருளிய பிரபந்தங்கள்
இருபத்தெண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
தெருள்சிவப்பிரகாசவடிகளருளிய நூல்கள் சீர்ச்சோணசைல மாலை,
செந்திலந்தாதிவெங்கைக்கோவை வெங்கைக்கலம்பகம் வெங்கையினுலா,
செப்பரிய வெங்கையினலங்காரமே சிவப்பிரகாச நல்விகாசஞ்,
சேர் தர்க்கபரிபாஷைநால்வர் நான்மணிமாலை திரிபில் சதமணிமாலையே,
- யருளுறுஞ்சிவ ஞானிநெஞ்சுவிடுதூது தாலாட்டு பிள்ளைத்தமிழ்கலம்,
பகமொடும் பள்ளியெழுச்சி கூவப்புராணம் பிரபுலிங்கலீலை,
யமையும் வேதாந்த சூடாமணி சித்தாந்தசிகாமணி நல்பழமலையினந்,
தாதிபிக்ஷாடன நவமணிமாலையுட னறைகொச் சகக்கலிப்பா,
- மருளதனை மாற்று பெரியம்மைக்கலித்துறைவளர் நெடுவிருத்தம்யேசு,
மதராகாண நன்னெறியோடு சிவநாமமகிமை தலவெண்பாமுறை,
வதியிஷ்டலிங்கவபிஷேகமாலையு நெடுங்கழி நெடில்குறுங்கழிநெடில்,
மாநிரஞ்சனமாலைகைத்தலமாலையாமற்று வேலையர் நூல்கள்,
- வெருளில் கைத்தலமாலைநல்லூர்ப்புராணமலர் விரிபாரிசாதலீலை,
வீரசிங்காதனபுராண மயிலாசலவிரட்டைமணி மாலையொடுலா,
மிளிர் குகைநமச்சிவாயர்லீலை கருணைப்பிரகாசர் நூலிஷ்டலிங்க,
விதியகவல்சீகாளத்திப்புராணந்தனை விரித்தனரிம் மூவருமரோ.
ஆக-42.
சிவசண்முகன்றுணை
ஸ்ரீ சிவஞான பாலய தேசிகர் திருவடி வாழ்க
கடல் சூழ்ந்த இப்பூவுலகத்திலே, முற்காலத்திலே, வேதாகமங்கள் மறைய, இல்லற முதலிய நல்லறநெறிகள் குறைய, சமண முதலிய புறச்சமயங்கள் நிறைய, சைவசமயமும் அதற்குரிய விபூதி உருத்திராக்ஷசா தனங்களும் நாடோறுந் தேய்ந்தன. அதுகண்டு, சித்தர்களும் இருடிகளும் ஒருங்கு சேர்ந்து, திருக்கைலையிற்சென்று, திருநந்திதேவானுமதி பெற்று, சந்நிதியையடைந்து, சிவபெருமானைத் தரிசித்து, கைகளைச் சிரமேற்குவித்துத் தோத்திரஞ் செய்து நின்றார்கள். அப்பொழுது, சிவபெருமான் அவர் மீது கருணைகூர்ந்து, 'அன்பர்களே! உங்களுக்கு யாதுகுறை?” என்று வினாவியருள; அச்சித்தர் முதலியவர்கள் அடியற்ற மரம்போலே நிலத்திலே வீழ்ந்து நமஸ்கரித்து, எழுந்து நின்று, 'எம்பெருமானே! பூமியிலே வேத சிவாகமங்களிற் கூறப்படும் சைவசமயந் தழைக்கவும் சமண முதலிய புறச்சமயங்கள் நசிக்கவும் திருவருள் செய்யவேண்டும்." எனப் பிரார்த்தித்து, அங்கனமே அனுக்கிரகிக்கப் பெற்று, தங்கள் தங்களிடத்தைச் சார்ந்து, சைவ சமயந்தழைத் தோங்குங் காலத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதுநிற்க,
உலகமாதாவாகிய உமாதேவியார் ஒருநாள், நீர்விளையாடலை விரும்பி, திருக்கைலாச மலையின் ஓர் பக்கத்தில் சண்பக முதலிய மாங்களடர்ந்த ஒர் சோலையையும் அதன் நடுவே நாற்புறமும் கோப்பு வாய்ந்த ஓர் தடாகத்தையும் சிருட்டித்து, கணநாதராகிய சங்கு கன்னரையழைத்து, "யாம் நீபாடி வரும்வரையில் ஒருவரையும் உள்ளே விடாதொழிக.” என வற்புறுத்தி ஆஞ்ஞாபித்து, அவரை வாயிற் காவலராக நிறுத்தி, சாஸ்வதி இலக்குமி முதலிய தெய்வப் பெண்களோடு பாங்கியரும் புடை சூழத் தடாகத்திலிறங்கி நீர்விளையாடு கையில், திருக்கைலாச மலைச்சாரலிலுள்ள சிறப்புக்களைக் கண்ணுற்று அங்கெழுந்தருளிய சிவபெருமான், சோலையையும் அதனடுவிலுள்ள தடாகத்தையுங் கண்டு அதிசயித்து அத்தடாகத்தின் வாயிலை யடைந்து, அங்குநின்ற சங்குகன்னர் ஒன்றும் விண்ணப்பம் செய்யாது அஞ்சிவாளா நின்றமையால் உள்ளே செல்ல; நீர்விளையாடிக் கொண்டிருந்த உமாதேவியார் கண்டு வெள்கி, தெய்வ மகளிரோடும் ஓர் பக்கத்தி லொளித்தனர் எம்பெருமான் அதை உற்றுணர்ந்து விரைந்து வாயிலையடைந்து, சங்குகன்னரை நோக்கி, ''உமையினது நீர்விளையாடலை நமக்கு உணர்த்தாத குற்றத்தால் நீ பூமியிலே மனிதப் பிறப்பை அடைவாயாக." என்று சபிக்க; அதுகேட்ட சங்குகன்னர் மனங்கலங்கி, சிவபெருமானுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, ''எம்பெருமான்றந்த இச்சாபம் நீங்கு நாள் எந்நாள்' என்று பிரார்த்தித்தனர். உடனே கடவுள் கிருபைகூர்ந்து, ''நீ பூமியிலே பிறந்து வேத சிவாகமங்களை விளக்கி, சைவசமயத்தை விருத்தி செய்து, எப்பொழுது நமது குமாரனாகிய சுப்பிரமணிய னோடெதிர்த்து யுத்தஞ் செய்வாயோ அப்பொழுதே இச்சாபம் தீங்கி, சின்னாளிலே நம்முருவத்தையும் பெறுவாய்.'' என்று அநுக்கிரகித்தனர்.
பின்பு சங்குகன்னர் பூமியிலே யோனிவாய்ப்பட்டுப் பிறவாது சிவந்த சடையையும், குண்டலம் பொருந்திய காதையும், கல்லாடை யோடு விபூதிருத்திராக்ஷம் சிவலிங்கம் விளங்கும் உறுப்புக்களையும் சின்முத்திரையோடு கூடிய வலக்காத்தையும், விபூதிப் பையையும் மாத்திரைக் கோலையும் தாங்கிய இடக்கரத்தையும், லங்கோடு கௌபீனம் பொருந்திய திருவரையையும், திருப்புன்முறுவலோடு கூடிச் சிவாகமத்தை யுபதேசித்தருளும் செவ்வாயையும், அஞ்செழுத்தை அகலாதுச்சரிக்கும் நாவையும் பெற்று, பத்து வயதோடு விளங்கும் மானுடத்திருமேனி தாங்கி, ஞான சூரியன் போல மயூரா சலத்துக்குச் சமீபமாகக் கீழைச்சமுத்திரத்திலேயே யுதித்து, அந்தச் சமுத்திரதீரத்திலே ஓராச்சிரமங்கண்டு, அதில் சில சித்துக்கள் விளங்க சிவயோக சமாதியோடு எழுந்தருளியிருந்து கொண்டு, தம்மிடத்து அன்புபூண்டடைந்த சித்தர் முதலிய அடியவர்களுக்கு வேதாகமங்களிற் கூறப்படும் ஞானசித்திகளை யுபதேசித்து, சிலகாலம் வீற்றிருந்து, பின்பு பெருமுக்கல்மலை முதலிய பலமலைகளினும் வனங்களினுஞ்சென்று, அங்குள்ள சித்தர் முதலானோர்க்கும் அநுக்கிரகித்து, அச்சமுத்திர தீரத்திலுள்ள ஆச்சிரமத்திலே மீளவும் வந்திருந்தார். பாலவயதோடு சமுத்திரத்தில் திருவவதாரஞ் செய்து சித்திகளில் வல்லராயிருந்தமையால், இவருக்குப் ’பால சித்தர்ல் என்னுன் திருநாம முண்டாயிற்று.
இவ்வாறு பாலசித்தர் அவ்வாச்சிரமத்தில் வீற்றிருக்கு நாளில் ஒருநாள், சிவபெருமானது ஆஞ்ஞையின்படி திரிலோகங்களிலும் சஞ்சரிக்கின்ற நாரதமுனிவர் சித்தரிடம்வந்து அவராந் செய்யப் பட்ட உபசாரத்தைப்பெற்று மகிழ்ந்து, அவரைநோக்கி, “இவ்வாச் சிரமத்திற்கு மேற்றிசையிலே மயூராசலமென்று ஓர் திவ்ய ஷேத்திர மிருக்கின்றது; அது தன்னையடைந்தவர்கள் வேண்டியவரங்களை வேண்டியவாறே பெறும்படி மயூரமானது மலையுருக்கொண்டு முருகக்கடவுளை வழிபட்டு வாகனமாகப் பெற்றது'' என்று குறிப் பால் வினக்க, சித்தர் ”அச்சரித்திரத்தை விரித்துரைத்தல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர். முனிவர் “முன்னே முருகக் கடவுளது வேலாயுதத்தினாற் கிழிக்கப்பட்டு யுத்தத்திலே மயிலுருக் கொண்ட சூரனானவன், பின்னே ஞானத்தையடைந்து, அக் கடவுளை வணங்கிநின்று ’சுவாமீ! அடியேனை வாகனமாகக் கொண்' டருளவேண்டும்.'' எனப் பிரார்த்திக்க; கடவுள் “ நீ இப்பிறப்பிற் செய்த பாவங்கள் ஒழியும் வண்ணம் தொண்டைநாட்டிலே பெண்ணை நதிக்கும் மாவிந்திய பர்வதத்திற்கும் நடுவிலுள்ள பூமியிலே தவஞ்செய்து சுத்தனானபின் நாம் அவ்வாறே கொண்டருள்வோம்" என்று ஆஞ்ஞாபித்தனர்.
அதனால், அவன் அவ்விடஞ்சென்று, மயில்வடிவாயமைந்த மலைரூபமாயிருந்து, முருகக் கடவுளைக்குறித்து ஒருவருஷந் தவஞ்செய்ய; எம்பிரான் எழுந்தருளிவந்து அவனை வாகன மாகக் கொண்டருளி, இன்னும் வேண்டும்வரம் கேளென்று கட்டளையிட்டனர். உடனே சூரன் பணிந்து, “அடியேனை வாகனமாகக் கொண்டதன்றியும் இம்மலை என்னுடைய அம்சத்தால் மயூராசலமென , வழங்கவும் இதில் தேவரீர் எந்நாளும் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கவும் வேண்டும்.'' என்று வேண்டிக் கொள்ள, கடவுள் “இம்மலையின்கண்ணே பாலசித்தன் என்பவன் சிவபெருமானாற் றனக்குக் கிடைத்த சாபத்தை நீக்கிக்கொள்ளுமாறு. நம்மைக்குறித்துத் தவஞ்செய்வான்; யாம் அவனுக்கு அநுக்கிரகிக்க வேண்டி இம்மலையின்கண்ணே வந்து, அன்று முதல் எந்நாளும் நீக்கமின்றி வீற்றிருப்போம்.'' என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆகையால் அதனையடைந்து அருந்தவமியற்றில் எண்ணிய கருமம் எளிதிற்கைகூடும்." என்றுணர்த்தி விடைபெற்றுக்கொண்டு சென்றனர்.
அப்பொழுதே மயூராசலத்தையடைந்து, அம்மலையினுச்சியிலேறி அங்குள்ள சுனையில் , ஸ்நானஞ்செய்து, விபூதிருத்திராக்ஷம் தரித்து சிவபூசைமுடித்து, பத்மாசனமாக இருந்து, முருகக்கடவுளைக் குறித்து முப்பத்தைந்து வருஷம் தவயோகமும், பின் பஞ்சாக்கினி மத்தியிலிருந்து சிலகாலங் கடுத்தவமும் புரிந்தும், கடவுள் பிரசன்ன மாகாமையினால், அவருடைய தேவிமார்களைக் குறித்துப் பலநாள் தவஞ்செய்தார். அக்காலத்தில், வள்ளிநாயகி முருகக்கடவுளை நோக்கி, 'தம்மைக்குறித்து நெடுங்காலமாகத் தவஞ்செய்கின்ற பாலசித்தனிடம் சென்று அநுக்கிரகிக்கவேண்டும்." எனப்பிரார்த்தி க்க; கடவுள் வள்ளிநாயகியைப்பார்த்து, ''அப்பாலசித்தன் சிவாப பாதியாதலால் அவனுக்கு அருள் பாலித்தல் முறையன்று." எனக் கட்டளையிட்டும் மேலு மேலும் தேவியார் வேண்டல்கண்டு முனி ந்து, ''பெண்ணே ! நீ சிவாபராதியிடத்தில் இசக்கம் வைத்திருக்கின்ற யாகலின் நமதருகில் நில்லாது அகலுதி." என்று மேல் விளைவை நோக்கி மறுத்தருளினார். உடனே, தேவிமாளிருவரும் சித்த கன்னிகைகளாக வடிவங்கொண்டு சித்தருக்கு முன்வந்துநிற்க; அது கண்ட சித்தர் முருகக்கடவுளுடைய தேவிமார்களே நம்மையாட் கொள்ள இவ்வுருக்கொண்டு எழுத்தருளினாரெனத் துணிந்து உபசரித்து, சீயிர்யாவிர்? இங்கு வந்த காரணம் யாது?" என்று வினாவினர். அக்கன்னியர்கள் “இவ்விடத்தில் சித்தர்கள் இருப்பதை யறிந்து நாமும் வசிக்க விரும்பி வந்தேம்; நீர் எங்களைப் புத்திரிகளா கப்பாவித்து ஆதரிக்கவேண்டும்.'' என்று கூறி, அதற்கு அச்சித்தர் மனமகிழ்ந்து உடன்பட்டமை கண்டு, தேவதச்சனால் அம்மலையின் மேல் ஒரு மாளிகை சிருட்டிப்பித்து, அதிலே தாம் வீற்றிருந்து கொண்டு "யாவர்வரினும் உள்ளே விடவேண்டுவதில்லை.'' என்று சித்தரை வாயிற்காவலராக நிறுத்தி, அவரால் தினமுங் கொடுக்கப் பட்ட காய் கனி கிழங்கு முதலியவைகளை உண்டு வந்தார்கள்,
தேவிமார் இங்ஙனயிருக்கு நாட்களில், ஒருமாள் முருகக் கடவுள் திருவுளங்கலங்கி இவர்களை எங்குந்தேடி இளைத்தவர் போல நடித்துக்கொண்டு மயூராசலத்தையடைந்து, அம்மலையின்
மேலேறி, அதன் மேல் அதிவிசித்திரமாக நவமணிகளால் அமைக்கப் பட்டிருக்கும் மாளிகையை உற்றுநோக்கி, அதனுள்ளே சென்று தேவிமார்களைப் பார்க்க வேண்டுமென்னும் ஆசையால் ஓர் அரச குமார வடிவங்கொண்டு, கையிலே வேல் வாள் வில் முதலியவற்றை யேந்தி அம்மாளிகையின் வாயிலிலே நுழையப்போக; அத்தருணத்தில், காவலராக நின்ற சித்தர் சிவபிரான்றந்த சாப சம்பந்தத்தால் அவரை முருகக்கடவுளெனத் துணியாது, “இராஜகுமாரனே! இம் மாளிகையில் சித்த கன்னியர்கள் வசிக்கிறார்கள் : நீயோ யுத்தசந்தத் கயை வந்திருக்கின்றாய்: நின்னோடெதிர்ச் சமர்புரிவார் இங்கொரு வருமில்லை: அன்றியும் மநுநீதியறிந்த அரசர்களுக்கு ஒத்தவரசர்களோடன்றிச் சித்தர் முதலியவர்களோடு யுத்தஞ்செய்வதும் அற மன்று: ஆகையால், இதைவிட்டுப் போவதே தகுதி.'' என்றார். இவ்வாறுரைத்தும், கேளாது கடவுள் உள்ளே செல்லத் துணிதலைச் சித்தாறிந்து, உள்ளேயிருக்கும் தேவிமார்களைத் தியானித்து, அவர்களால் அத்திரசத்திர வித்தையுபதேசத்தோடு ஆயுதங்களையும் தேர் முதலியவற்றையும் சிருட்டித்தருளப் பெற்று அவர்கள் கிருபையால் முருகக்கடவுளோடெதிர்த்து, அவரால் விடப்பட்ட ஆயுதங்களனைத்தையும் தடுத்தமையேயன்றி, அவர் விடுத்த வேலா யுதத்தையும் தேவிமார் தியான பலத்தால் கைப்பற்றினர். அக்காலையில், கடவுள் மிகுதியும் கோபமுடையவர் போல வில்யுத்தத்தை விடுத்து, மல்லயுத்தந்தொடங்கிச் சித்தரது மார்பிலேயறைந்து கீழேதள்ளி, எலும்புகளொடியும் வண்ணம் குற்ற; அதனால், சித்தர் மிகவும் சோபத்தையடைந்தும், கடவுளைப் பரிசிக்கப் பெற்றதால் விரைவில் வருத்தம் நீங்கி, இவர் முருகக் கடவுளேயென்று உணர்ந்தெழுந்து நமஸ்கரித்துத் துதித்து, ”சுவாமீ! அடியேன் செய்த இக் குற்றத்தைப் பொறுத்து, சாபத்தையும் நீக்கியருளல் வேண்டும்.'' என்று பிரார்த்தித்தார்.
முருகக்கடவுளும் அவ்வாறேயருள் செய்து உள்ளேயெழுந் தருளிச் சிங்காசனத்திலே வதிந்திருக்க; உடனே சித்தரும் தேவிமார்களை யலங்கரிப்பித்து அழைத்துவந்து அவர்களோடும் வணங்கி நின்று, "அடியேன் புத்திரிகளாகப் பாவிக்கப்பட்ட இக்கன்னியர்களைத் தேவரீர் திருமணமுடித்து இத்தலத்திலேயே எந்நாளும் வீற்றிருந்தருளல் வேண்டும்'' என்று வேலாயுதத்தையும் சந்நிதியில் வைத்து விண்ணப்பித்தார். கடவுளும் அதற்கியைந்து, சிவபெருமான் உமாதேவியாரோடும் கணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானிக்க; எம்பிரானும் அவ்வாறே தேவியாரோடு மெழுந்தருளி மயன் வகுத்த மணமண்டபத்திலே வீற்றிருந்தார். முருகக்கடவுள் சிவபெருமானுடைய ஆஞ்ஞையால் பிரமதேவர் திருமணச்சடங்கு நடத்த, சித்தர் தத்த நீர்வார்க்க, கன்னியரிருவரையுந் திருமணம் புரிந்தார். அவ்வமையத்தில் சிவபெருமான் சித்தரை நோக்கி , “நம்முடைய சாபத்தினின்று நீங்கிய நீ இந்த ஸ்தலத்தில் நமது குமாரனாகிய சுப்பிரமணியனோடு இன்னும் ஐந்நூறு வருடமிருந்து உலகத்தில் சைவசமயத்தை விருத்தி செய்து பின் நம்மிடத்திற் கலப்பாயாக." என்று கட்டளையிட்டு, தமது திருவருட்குறியாகிய ஓர் சிவலிங்கமும் அங்கே தோன்றும்படி அநுக்கிரகித்து எழுந்தருளினார்.
அவ்வாறே சித்தர் முருகக்கடவுளோடு மயூராசலத்திலிருக்கும் போது, ஒரு நால் கடவுள் சித்தரைநோக்கி, “நீ நம்பெருமான் ஆக்கினைப்படியே பூமியிற்சென்று பக்குவர்களுக்கு ஞானோ பதேசஞ்செய்து வரக்கடவை.'' என்று கட்டளையிட்டு, முத்துச் சிவிகை முதலியவற்றையுங் கொடுத்து அனுப்பியருள; சித்தர் சிவிகையிலேறி, அடியார் கூட்டத்தோடும் பல தேசங்களினுஞ் சென்று, அங்கங்குள்ள அன்பர்களுக்கு வேதாகமங்களினுயர்ச்சியையும், அவற்றிற் கூறப்படும் சைவசமயத்தி னருமையையும்,
அதற்குரிய விபூதிருத்திராக்ஷ பஞ்சாக்ஷரங்களின் பெருமைகளையும், இவற்றைக் கைக்கொண்டு சிவபெருமானை வழிபட்டாலன்றி முத்திப் பேறில்லை யென்பதையும் உபதேசித்து, தம்முடைய ஆச்சிரமத்தை யடைந்து அங்கே பிரசன்னராகவிளங்கும் முருகக் கடவுளை நமஸ்கரித்து நின்றனர். சிவஞானத்தை யாவருக்கும் உபதேசித்து வந்தமையாற் சித்தருக்கு ’சிவஞான பாலசித்தர்’ என்னுந் திருநாமமுண்டாயிற்று. அவ்வேளையில், எம்பிரான் சித்தரைநோக்கி, ”வேண்டியவரங்களைப் பெற்றுக்கொள்.” என்று கட்டளையிட; சிவஞானபாலசித்தர் நமஸ்கரித்துநின்று, "ஐயனே! அடியேனாலுண்டாக்கப்பட்ட - இந்தமடத்திலே, அடியேனுடைய சீடன் ஆசாரிய பிடேகம் பெற்று மாணாக்கர்களுக்கு ஞானோப தேசம்புரிந்து கொண்டு விளக்கும்படி தேவரீருடைய திருவருளைப் பதிவித்தல் வேண்டும்.” என்று விண்ணப்பஞ்செய்துகொண்டனர்.
முருகக்கடவுள், இதற்கு முன்னே [1]பச்சைக்சந்த தேசிகர் மரபிலே புத்திரப்பேறில்லாமல் வருந்திய அம்மவையென்பவள் பெருமுக்கன் மலையையடைந்து பாலசித்தர் திருவுளப்பாங்கின் படியே தினந்தோறும் திருவமுது கொள்ளும்படி சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து கொடுத்துக் கொண்டிருக்க, ஒருநாள் தயைகூர்ந்து அப்பாலசித்தாளித்த பாற்பிரசாத சேடத்தாலுதித்து அருகே தொண்டு பூண்டொழுகி நிற்கும் புதல்வரையழைத்து, சந்நியாசாச் சிரமந்தந்து, ஆசாரியாபிடேகமும் ஞானோபதேசமும் புரிந்து தமது அம்சத்திலே ஓரம்சம் அவரிடத்திலேயே பதியும்படி செய்து, “நீ பாலையுணவாகக்கொண்டு சீடபரம்பரையோடு சிவஞான தேசிகனென வாழ்வாயாக.'' என்று அநுக்கிரகித்து, மடத்திலிருத்திப் பின்பு சித்தரை நோக்கி, [2]பிரமநிலையுணர்ந்த நீ பாலவயதோடும் சித்தனாகத் தங்கியிருந்தமையால் இவ்வாச்சிரமத்திற்கு [3] பிரமபுர மெனவும் பாலசித்தர் மடமெனவும் பெயர் வழங்குக.'' என்று திருவாய்மலர்ந்து, அவருடன் மயூராசலத்தையடைந்து, முன்னர் சூரனுக்கருளிய வரத்தின்படியே தமது தேவிமார்களோடும் வீற்றிருந்தருளினார். சித்தரும் அம்மலையிலே சிலகாலமிருந்து மிதுன மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரத்திலே அம்முருகக் கடவுளுடைய சந்நிதிக்குத் தென் பக்கத்தில் விளங்கும் சிவலிங்கமய மாயினார்.
---
[1] இவ்வாசிரியர் கன்னட தேயத்திலே யவதரித்து, மல்லிகார்ச்சுன பருப்பதத்திலே சிலகாலர் தவம்புரிந்து, சிவானுக்கிரகம் பெற்று, பின்னர் தென்றிசை நோக்கி வருங்கால் வழியிலே, சோமேசர் கட்டமுதளிக்க வுண்டு, மலையனூரையடைந்து, அங்கே சலத்திற்பதிந்து கிடந்த மரகதக் கடகமானது தானே வந்து தமது திருமேனியிலே பச்சையொளி பரப்பிப் பிரகாசிக்கும்படி அற்புதங் காட்டியருளி அது கண்ட அரசனால் யானை முதலிய பல விருதுகளும் தந்து உபசரிக்கப்பெற்று, சிதம்பரத்தையடைந்து தெய்வீகமுற்று விளங்கியிருந்தவர்.
[2] பிரம்புரம் என்பது பொம்மபுரமென்றாகி பொம்மையபாளை யமென மருவிற்று.
[3] இச்சரித்திரவிரிவை மயூராசலபுராணத்துட் காண்க.
சிவஞானதேசிகர் அதுகண்டு அற்புதமுடையராய்ப் பலவாறு துதித்து, முருகக் கடவுளுக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும் நித்திய நைமித்திகங்களைக் காலந்தோறும் வழுவாமல் நடத்திக்கொண்டு மயூராசலத்திலும் பொம்மபுரத்திலும் சிலகாலமிருந்தனர். பின்பு காஞ்சீபுரத்தையடைந்து, ஏகாம்பரநாதரைத் தரிசித்து, அன்பர்கட்கு அருள் பாலித்து இருக்கும் பொழுது, விஷந்தீண்டியிறந்த ஒருவனை அன்பர் வேண்டுகோளின்படி உயிர்ப்பித்து, அவ்விடத்திலே எக்காலமும் விஷவாதனையில்லா திருக்கவும் அநுக்கிரகித்தனர். அதுகேட்டு அந்நாட்டையாளும் நபாபு வென்பவன், தன் மனைவிக்கு நேரிட்டிருக்கும் கொடிய சூலை நோயைத் தணிப்பித்துக் கொள்ளும்
உத்தேசமுடையவனாய்ச் சந்நிதியையடைந்து வணங்கி விண்ணப்பஞ் செய்துகொள்ள; அவனை நோக்கி, ''ஏகாம்பரநாதர் சந்நிதி முதலியவற்றில் உன்னாற் குறைக்கப்பட்ட நித்திய நைமித்திகங்களை முன் போல நடத்துவையாயின் இந்நோய் நீங்கும்." என்று கட்டளை யிட்டு, விபூதியால் அந்நோயைத் தணித்து, ஆலயங்கட்கு முன்னை யினுமதிகமாக நிபந்தனைகளை நடத்துவித்து, அங்கே அவனால் விளை நிலமுதலியவை விடுத்துக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்தில், அடியார்களால் மகேசுரபூசை முதலியவற்றை நடத்திக்கொண்டு எழுந்தருளியிருந்தனர்.
சிலநாட்சென்றபின் அங்ககன்று, வழியிலுள்ள தலங்களைத் தரிசித்துக்கொண்டு [4] செய்யூரையடைந்து, அங்கே வேளாளரிற் சிலர் பரிசோதனையினிமித்தம் ஓர்புதுக்குடத்தில் நிறைத்து மறைத்துக் கொண்டுவந்த வெண் மணலைச் சருக்கரையாக்கி, யாவருக்கு மளித்து, அவர்களால் நிலமுதலியவை விடுத்துக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்தில் வதிந்திருந்து, பின்பு தக்ஷிணயாத்திரையை விரும்பி, சிதம்பரத்தையடைந்து, ஸ்ரீ நடேசப்பெருமானைக் காலந்தோறும் தரிசித்துக்கொண்டு சில தினம் வசித்து நீங்கி, இடையிலுள்ள தலங்களையும் தரிசித்து, மதுரையையடைந்து, சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு தங்கியிருந்தனர். அக்காலையில், தையல்வேலை செய்பவ னொருவன் புதல்வற்பேற்றை விரும்பி அது காரணமாக மீனாட்சி யம்மையின் சந்நிதியிற் கட்டுதற்கு அறுபத்து நான்கு திருவிளை யாடல்களையும் நெடுங்காலமாகத் தையலாற் சித்திரித்த ஒரு அரிய படாத்தை அந்த அம்பிகையின் கட்டளைப்படியே, சிவஞான தேசிகர் சந்நிதியில் வைத்து, மனைவியுடன் வணங்கி விண்ணப்பஞ்செய்து கொள்ள; உடனே அச்சித்திர படாத்தை நோக்கித் திருவுள மகிழ்ந்து அவ்விருவருக்கும் மூப்பைய கற்றி, இளமையைத்தந்து, புத்திரப் பேற்றையுமளித்து, அத்தலத்தினீங்கி, மற்றைய தலங்களையுந் தரிசித்து விருத்தாசலத்தை யடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு சிலநாள் வாசஞ்செய்து, பொம்மபுரியைச் சேர்ந்து, தெய்வீக சித்தியோடு விளங்கியிருந்தார்.
[4] சேயூரென்பது செய்யூரென வழங்குகின்றது.
இங்ஙனம் விளங்கு நாட்களில், ஜீவகருணையால். அநேகருக்கு விபூதியளித்துக் கூன் குருடு முடமுதலிய அங்கவீனங்களையும் குடர்நோய் வெப்பு நோய் காசமுதலிய கொடிய வியாதிகளையும், மாந்திரிகர்களால் நீங்காது வருத்திநின்ற வலிய பேய் முதலிய வற்றையும் நீக்கியருளினார். இவற்றை, அடுத்த கூனிமேட்டி லிருந்த ஓர் மாந்திரிகன் கண்டு, பொறாமை கொண்டு செஞ்சியை யடைந்து, திரியம்பக மகாராஜாவைக்கண்டு, “ஐயா! தங்களாளுகை யிலமைந்த பொம்மபுரத்திலிருக்கும் சிவஞான தேசிகரென்பவர் மிகவும் சித்துடையவர்போல நடித்துச் சனங்களை வஞ்சிக்கின்றனர்: ஆகையால் அவரைப் பரீக்ஷித்து நமது நாட்டை விட்டகற்றுவதே தகுதி.'' என்றனன். அதுகேட்ட அரசன் உடனே இளமை தொடுத்து நரைமுதிர்ந்த கூந்தலையுடைய தன்பெண்ணையும் அழைத்துக்கொண்டுவந்து சிவஞான தேசிகரையடைந்து, தன் கருத்தை அச்சத்தோடு விண்ணப்பஞ்செய்துகொள்ள; அப்பொழுதே திருநீற்றினால் அந்நரையை மாற்றுவித்தருளினார். அதுகண்ட மாந்திரிகன் இவரை ஓர்வகையாகமருட்டி ஊரை விட்டகற்றவேண்டுமென்னும் உத்தேசங்கொண்டு, அரசரைநோக்கி "எங்களிருவருள் கடலினுள்ளே மூழ்கிக் கரையேறுபவர்களே சித்தியில் வல்லவர்கள்.'' என்று வீண்வாதஞ்செய்ய; அரசர் ஞானதேசிகா நுமதிபெற்று, அவர்களோடு தோணியேறிச்சென்று, அவ் விருவரும் கடலினுள்ளே மூழ்கியவுடன் கரையையடைந்து, அதற்கு முன்னமே அங்குவந்து வீற்றிருக்கும் ஞானதேசிகரைக் கண்டு அதிசயித்துவணங்கி, அம்மாந்திரிகன் ஒருமீனால் விழுங்கப் பட்டதை அவ்வாசிரியராற் கேள்வியுற்று, மனம் வருந்தி, “ஐயனே தேவரீருக்கு அபராதியாகிய அம்மாந்திரிகனை மீன்வாயினின்றும் வரவழைத்தருளல்வேண்டும்." எனப் பிரார்த்தித்தார். அவ்வரசர் வேண்டுகோளின்படியே அவனை யுயிர்ப்பித்து, நல்லறிவு போதித்து அடிமையாக்கிக் கொண்டருளினர்.
அப்பொழுது, அரசர் மனமகிழ்ந்து பொம்மபுரத்திலே ஒரு பெரிய திருமடங்கட்டுவித்து, அதிலே எவர்கள் எப்பொருளை விரும்பினும் ஈதற்கு வேண்டும் சீலகிராமங்களைச் சர்வமானிய மாகச் சிலாசாசனமெழதி நியமித்து விட்டு யானை முதலிய பற்பல விருதுகளையுங் காணிக்கையாகக் கொண்டு, ஞானதேசிகர் சந்நிதியை யடைந்து, “எம்பெருமானே! இவற்றை அங்கீகரித்து அடியேங்களைச் சந்ததிபரம்பரையாக ஆட்கொண்டருள்வதுமல்லாமல் இப்பொழுது அடியேனுக்கு மிகுதியும் சத்துருக்களாயுள்ளவர்களை வெல்லும் ஆற்றலையும் தந்தளித்தல் வேண்டும்." என வணங்கிப் பிரார்த்திக்க; தேசிகர் அவ்வாறே வென்று அரசாளும்படி ஆசீர்வதித்துத் திருநீறளித்து [5]அணுக்கத் தொண்டராகக்கொண்டு அவரால் சில திவ்விய தலங்களில் அடியவர்கள் ஆராதனையின் பொருட்டுத் திருமடங்கட்டுவித்து, மயூராசலத்திலும் பொம்ம புரத்திலும் முருகக் கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் அடியவர் பூசை முதலியவற்றிற்கும் வேண்டும் நிபந்தனைகளை யேற்படுத்தி யருளினார். அன்றியும், நடுநாட்டிலே சிலபாகத்தை யாண்டு கொண்டிருந்த சிதம்பரபூபதியென்பவர், தமதரசுரிமையை வேற்றாசன் கவர்ந்துகொண்டமையால், ஒருவகைவெறுப்புத்தோன்றி, இனி, பிக்ஷையெடுத்துண்டு பெரியோர் பணியியற்றியுய்தலே தகுதி யெனத் துணிந்து, பொம்மபுரத்தையடைந்து, இயன்ற பணிகளை இயற்றிக்கொண்டிருக்க; ஒருதினம் தேசிகர் திருவருள் கூர்ந்து அவர் பக்கத்திலிருந்த சிலசேனைகளைக் கொண்டே பகைவனை வென்று அரசாளும்படி யாசீர்வதித்துத் திருநீறளித்து, இவரையும் அடிமையாகக்கொண்டு, தாம் தம்மையடைந்த மாணாக்கர்களுக்கு ஞானோபதேசம் புரிந்து கொண்டு சிவயோக சமாதியில் வீற்றிருந் தருளினார்.
[5] அணுக்கம் -சமீபம்
இதுநிற்க,
காஞ்சீபுரத்திலே, ஏறக்குறைய இருநூற்றெண்பதுவருடங்களுக்கு முன் தொண்டைமண்டல வேளாளர்க்குத் தீக்ஷாகுருவாகக் தமாரசுவாமிதேசிகர் என்பவர் ஒருவரிருந்தார். அவர், திருக்கார்த்திகைத் தரிசனத்திற்காகத் திருவண்ணாமலை யாத்திரைக்குப் புறப்பட்டு, ஒருநாள் வழியில், ஒரு நந்தனவனத்திற்றங்கிச் சிவபூசை முடித்து, அன்று சாயங்காலமே தாங்குறித்த அத்தலத்தையடைந்து அங்குள்ள ஈசானிய தீர்த்தத்திலே அநுட்டானஞ் செய்துகொண்டு, "பூசைப் [6] பேடகம் எங்கே?" என்று பரிசனர்களிடத்து வினாவ; அவர்கள், பகலிலே தங்கியிருந்த இடத்தில்வைத்து மறந்து வந்ததாக அச்சத்தோடு விண்ணப்பஞ் செய்தனர்.
[6] பெட்டகம் என்பதும் வழக்கம்.
அது கேட்டு, மன மிகக் கலக்கமுற்று, அப்பரிசனர்களைப் பகற்றங்கியிருந்த நந்தனவனம் வரையும் பரிசோதித்துவரும்படி அனுப்பிவிட்டுத் தாம் ஓரிடத்திற் போய், நம்முடைய ஆன்மார்த்தமாகிய உடையவரை விட்டுப் பிரியும்படி நேரிட்டதே! என்னும் வருத்தத்தால் அன்றிரவு முழுதும் நித்திரையின்றிச் சிவத்தியானஞ்செய்து கொண்டிருந்தனர். அத் தருணத்தில், அவரது சிவபுண்ணிய முதிர்ச்சியினாலே திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், ஓர் சங்கமத் திருவுருவங்கொண்டு, அவரிடத்திற் கெழுந்தருளி, தம்மெதிர்வந்து தமக்கு நிகழ்ந்த ஆபத்தைத் தெரிவித்து அன்பொடு வணங்கி நின்ற அவர்மீது கிருபா நோக்கஞ்செய்து, “நீர் அங்கம் வேறு இலிங்கம் வேறாக இருந்தமையால் இவ்வாறு பிரியும்படி நேரிட்டது: இலிங்காங்க சம்பந்தியாயிருந்தால் இவ்வண்ணம் நேரிடுதலியலாது: உமது பூசைப்பேடகம் நாளையு தயத்தில் வந்துசேரும்: நீர் இதுமுதல் இலிங்க தாரணஞ்செய்து கொள்ளும்" என்று அநுக்கிரகிக்க; அவர் இச்செய்கை தமதுசீடர் பந்துக்கள் முதலானவர்களுக்கு விரோதமாக இருக்கும் என்பதை விண்ணப்பித்து நின்றனர். அதுகேட்ட சிவபெருமான், ''அந்தச் சீடர் முதலியோராற் பெறப்படும் பயன் சிறிதுமில்லை: நமது கட்டளைப்படி நீர் சிவலிங்க தாரணஞ் செய்து கொண்டால் உமக்கு மூன்று புத்திரர்களும் ஒருபுத்திரியும் பிறப்பார்கள்: அவர்களால் இம்மை மறுமை யின் பங்களும் முத்தியுஞ் சித்திக்கும். ஆதலால், இவ்வாலயத்திற்குத் தெற்கு வீதியிலுள்ள மடத்திலிருக்கும் குருதேவரிடத்திலே தாரண தீக்ஷை செய்து கொள்ளும்'' என்று வற்புறுத்தி ஆஞ்ஞாபித்து, வீரசைவ சமயா சார நெறிகளையும் போதித்து, அவ்வாறே குருதேவருக்குங் கட்டளையிட்டு மறைந்தருளினார்.
மறுநாட்காலையில், சிவபெருமானது திருவாக்கின்படியே பூசைப்பேடகம் வரப்பெற்று, ஸ்ரீகுருதேவரா லனுப்பப்பட்ட அடியார்களோடு மடாலயத்தையடைந்து, குருதேவரைத் தரிசித்து அவராலே தாரண தீக்ஷை செய்யப்பெற்றுத் திருக்கார்த்திகைத் திருவிழா நிறைவேறியபின் குருதேவரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு, காஞ்சீபுரத்துக்கு வந்து, தமது அநுட்டானப்படியே சீடர்களுக்குந் தாரண தீக்ஷை செய்துகொண்டிருக்க; அக்காலத்திலே. அவருக்கு அண்ணாமலையார் அநுக்கிரகித்தபடியே மூன்று புத்திரர்களும் ஒருபுத்திரியும் அவதரித்தார்கள். தந்தையராகிய குமாரசுவாமி தேசிகர், களிகூர்ந்து அவர்களுக்கு, முறையே சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம், ஞானம்பிகை என்று நாம கரணந்தரித்து, முதன் மூவரும் கல்வியிற்பயின்று வருங்காலத்தில் சிவலிங்கவயிக்கியமாயினார்.
பின்பு மூத்தவராகிய சிவப்பிரகாச சுவாமிகள், தமது சகோதார் முதலியவர்களோடு திருவண்ணாமலைக்குப்போய்க் குருதேவரைத் தரிசித்து, அங்கே வாசஞ்செய்து கொண்டு, தமது கல்வி முயற்சியிற்றளராது வாழும் நாள்களுள் ஒரு நாள், அந்தச் சோணசைலத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வரும்போதே ’சோணசைலமாலை’யெனப்பெயரிய நூறு செய்யுள்களால் அதனைத் தோத்திரம் பண்ணினார். பின்னும் பேரிலக்கணங்களைப் பெரிதுங் கற்கவிரும்பி, தமது சகோதரர்களுடனே தக்ஷிணதேசத்திற்குப் பிரயாணமுற்று. வாலிகண்டபுரத்திற்குத் தென்பாகத்திலுள்ள துறைமங்கலம் என்னும் நகரத்தைச்சார்ந்த ஒரு நந்தவனத்தில், சிவபூசை செய்துகொண்டிருந்தனர். அக்காலத்தில், அக்கிராமாதி பதியும் சிவலிங்க தாரியாயும் குருலிங்க சங்கமபத்தியிற் சிறப்புற்ற வராயும் விளங்கிய அண்ணாமலை ரெட்டியாரென்பவர் சிவப்பிரகாச சுவாமிகள் வரவைக்கேள்வியுற்று, அங்கடைந்து தரிசித்தமாத்திரத் தில், அவரிடத்தே அநுக்கிரகம் பெறவிரும்பி அடிமைபூண்டு, "சுவாமி ! தேவரீர் இவ்விடத்தில வாசஞ் செய்தருளவேண்டும்.'' என்று பிரார்த்தித்து அவரை உடன்படுத்தி, தங்கள் குருவாகிய சென்னவசவையர் மடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடங்கட்டி, அதில் சுவாமிகளை எழுந்தருள்வித்து [7]அகோராத்திரம் பிரிவின்றி அணுக்கத் தொண்டராயமர்ந்திருக்க; சிவப்பிரகாசசுவாமிகள், அவருக்குச் சன்மார்க்கங்களைப் போதித்துக்கொண்டு, இரண்டு வருஷம் வரையில் அங்கே எழுந்தருளியிருந்தார்.
---
[7] அகோராத்திரம் - பகலிரவு.
அதன்பின்பு தாங்கொண்ட கருத்தை நிறைவேற்ற விரும்பி, தக்ஷிணதேசத்திற்குச் செல்லல் வேண்டுமென்பதை அவருக்கறி வுறுத்தித் திருநெல்வேலினை யடைந்து, தாமிரபரணி நதிதீரத்தி லிருக்கின்ற சிந்துபூந்துறையில் தருமபுரவாதீனத்து வெள்ளியம்
பலவாணசுவாமிகள் இலக்கண விலக்கியங்களில் அதிவல்லவர்களாய் இருக்கின்றார்கள் என்பதைக் கேள்வியுற்று, அவ்விடத்திற்சென்று சுவாமிகளைக்கண்டு, தாம் இலக்கணங் கற்கவேண்டி வந்தமையைத் தெரிவித்துக்கொண்டனர். அச்சுவாமிகள், சுவாமிகளுடைய இலக்கியப்பயிற்சியை அறிதற்பொருட்டு, “கு, என்பதை முதற்கொண்டு ஊருடையான், என்பதை இடைப்பெய்து கு, என்பதையே, ஈற்றினுங்கொண்டு முடியும்படி ஒருவெண்பாப்பாடுக.'' என்று கூற, சுவாமிகள்,
''தடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லை தோன் மேற்கொள்ள
லூருடையா னென்னு முலகு."
என்னும் வெண்பாவைத் திருவாய் மலர்ந்தருளினார். மேலைவெண்பாவினுள் வடக்கோடு தேருடையான் என்று அமைத்தமையை அச்சுவாமிகள் வியந்து பாராட்டி, சுவாமிகளைத் தழுவித் தம்மரு கிருத்திச், சுவாமிகள் சகோதரர்களாகிய வேலைய சுவாமிகள் கருணைப்பிரகாச சுவாமிகள் என்னும் இருவருக்கும் ஒருபக்ஷத்துள் பஞ்சலக்ஷணங்களையும் பாடஞ்சொல்லி முடித்தார். அதுகண்ட சிவப்பிரகாச சுவாமிகள் பேருவகையுற்று, அண்ணாமலை ரெட்டியா ரென்பவர் தங்களுக்கு வழிச்செலவிற்குபகரித்த முந்நூறு பொன்னையும் குருதக்ஷணையாக வைத்து உபசரிக்க; அச்சுவாமிகள், “இது நமக்கு வேண்டுவதில்லை: தூஷித்தலையே இயல்பாகக்கொண்டு திருச்செந்தூரில் வசிக்கும் தமிழ்ப்புலவரொருவரைத் தங்கள் முன்னிலையில் வெற்றிகொண்டு அவர்வந்து நம்மை வணங்கும்படி செய்தலே குருதக்ஷணையாகும்." என்று மறுத்தருளினார்.
அவர் கருத்தறிந்த சுவாமிகள் அதற்குடன் பட்டு, அவர் மாணாக்கரோடும் திருச்செந்தூருக்குப்போய், முருகக்கடவுளைத் தரிசனஞ் செய்து பிரதக்ஷிணம் வரும்போது, அச்சுவாமிகளாற் சுட்டப்பட்ட தமிழ்ப்புலவர், எதிர்ப்பட்டுச் சிவப்பிரகாச சுவாமிகளை யாவரென்று அவருடன் வந்த மாணாக்கரிடத்திற்றானே வினாவி, மேற்படி சுவாமி களிடத்திற் பாடங்கேட்ட சுவாமிகள் என்பதை அறிந்து கொண்டு அவர்களைத் தமது வழக்கப்படியே தூஷிக்கத்தலைப்பட்டார். அப்பொழுது சுவாமிகளுக்கும் புலவருக்குங் கலக நேரிட; புலவர், சுவாமிகளை நூதனவகையாற்பாடி வெற்றி பெறுவோமெனத் துணிந்து, "நாமிருவரும் ’நீரோட்ட கயமகம்’ பாடுவோம்: முன்னர்ப்பாடி முடித்தவருக்கு அஃதியலாதார் அடிமையாவோம்.'' என்று வாக்குத்தத்தஞ்செய்தார். சுவாமிகள், தங்கருத்து நிறைவேறுதற்கு வாயில் இதுவே என்று கருதி அதற்கிசைந்தருளி, அவரோடு பாடத்தொடங்கி உடனே, அத்தலத்து முருகக்கடவுண் மீது நிரோட்டகயமக வந்தாதித்தொடையாக முப்பது கட்டளைக் கலித்துறைபாடி முடித்தருளினார். அதுகண்டபுலவர், தாம் ஒரு செய்யுளேனும் பாடிமுடியாமையை யுணர்ந்து, சுவாமிகளுடைய திருவடிகளை வணங்கி, "அடிமையாயினேன்.'' என்று விண்ணப்பஞ் செய்ய; சுவாமிகள், தமதடிமையாயமைந்த அப்புலவரை ஆதீனத் திற்கழைத்துவந்து அச்சுவாமிகளுக்கு அடிமையாக்கி விட்டார். அச்சுவாமிகள் திருவுள மகிழ்ந்து, சிவப்பிரகாச சுவாமிகளைப்பார்த்து ''தாங்கள் பாடிய செய்யுளில் சிவபிரானுக்குரிய தலம் சிதம்பரமே யெனச்சுட்டிக் குறிப்பால் விளக்கினமையால் அத்தலத்திலே சிலகாலம் வாசஞ்செய்தருளுக.'' என்று விடைகொடுத்தனுப்பி யருளினார்.
சுவாமிகள் அவ்விடத்தினின்றும் நீங்கி, சிவஸ்தலங்கடோறுஞ் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, துறைமங்கலத்தைச் சார்ந்து, முன்போலவே அண்ணாமலை ரெட்டியா ரென்பவருக்குத் திருவருள் பாலித்து, அவரது வேண்டுகோளின்படி அவராளுகையிலமைந்த வாலிகண்டபுரத்தின் வட மேற்பாகத்துள்ள திருவெங்கை மாநகாத்திலே, தம்பொருட்டு அவராற் கட்டப்பட்ட திருமடத்தில் வீற்றிருந்து கொண்டு, அத்தலத்திலுள்ள பழமலைநாதர் மீது திரு வெங்கைக்கோவை, திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கை யுலா திருவெங்கையலங்காரம் என்னும் நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார்.
அக்காலத்தில் ஒருநாள், அவ்வூர்ப்பிடாரியாரது உற்சவ இரதத்தால், அடியார்க்குபயோகமாகத் திருமடத்தெதிரி லிருந்த முருங்கைமரம் அழிந்தமைகண்டு,
திருந்துதமி ழிலக்கணவைந் திணைக்கோவை
விருத்தகிரிச் செல்வற் கோதும்
பெருந்தகைமை யுடையம்யாம் விடுமோலை
வெங்கைநகர்ப் பிடாரி காண்க
விரும்புவியி லொருமுருங்கைக் கொம்பொடியா
மற்காத்திங் கிருக்கு நீநம்
முருங்கைதனை வேரோமிங் களைந்தனையென்
றலுனக்கு முறைய தாமோ.
என்னும் திருவிருத்தத்தை அருளியமாத்திரத்தே, அவ்விரதம் அழிந்தொழிய; தாம் சிலகாலமங்கிருந்து, துறைமங்கலத்தை யடைந்தருளினார்.
அக்காலத்திலே, அண்ணாமலை ரெட்டியாரென்பவர், சுவாமிகளை ”தேவரீர் விவாகம் செய்துகொள்ளவேண்டும்.'' என்று பிரார்த்திக்க, சுவாமிகள் :
"சேய்கொண்டா நங்கமலச் செம்மலுட னேயரவப்
பாய்கொண்டா னும்பரவும் பட்டீச் சுரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலா நூறுவய தள விருந்து
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே.',
எனவும், -
"நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த
பெரியோர்க ணிமலன் றளைக்
கிட்டையிலே தொடுத்துழத்தி பெறுமளவும்
பெரியசுகங் கிடைக்குங் காம
வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு
மணம் பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்துநடுக் கட்டையிலே
கிடத்துமட்டுங் கவலை தானே.''
எனவும்,
விடையளித்தருளினார். சுவாமிகள் கருத்துணர்ந்து, பின்பு வேலைய சுவாமிகளைப் பிரார்த்திக்க; அவர், சிவப்பிரகாச சுவாமிகளுடைய கட்டளை எவ்வாறாமோ என்னுங் கருத்தால் உடன்படல் மறுத்த லென்னும் இரண்டுமின்றி மௌனராயிருந்தனர். பின்னர் யாத்திரையினின்றும் வந்த கருணைப்பிரகாச சுவாமிகளிடத்தில் தமது வேண்டுகோளை விண்ணப்பஞ் செய்தமாத்திரத்தில், அவர் அதற்குத்தரமாக,
நாணி யென்பதை நாரியென் றுரைத்திடு நசையால்
வேணு வானது வளைந்துபோய்ப் புகுந்தது வென்றற்
காண லாவதோ நருவமெய்ந் நாரியைக் கண்டாற்
பூணு வார்மயல் காளைய ரென்பதும் புதிதோ.''
என்னும் கலித்துறையைப்பாடித் தமது கருத்தை உள்ளபடி தெரிவித்தார்.
சிவப்பிரகாசசுவாமிகள், தம்பின்னோராகிய இருவர் கருத்தையும் உணர்ந்து, அவர்களுக்குத் தாம் துறவறம் பூண்டமையைத் தெரிவித்து மணம்புரிவித்து அத்தருணத்திலே யாவரும் பேரு வகையுறும்படி விநோதமாக,
ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடமங்கை
யாரென்ன வுமை வினவவு பா
மன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைகொழித்
தழகொழுகு தண்புன லேனத்
துய்யவொளி யானனங் கரியவிழி காதுவாய்
தோயத்தி லுண்டோ வெனச்
சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை
தூயசெங் குமுத மென்னப்
பொய்யென நினைத்துநற் கொங்கையுங் கூந்தலும்
புனலினிடை யுண்டோ வெனப்
புற்புதஞ் சைவலம தெனவே மறுத்துப்
புகன்றிடுதி நங்கா யெனத்
தையலவ ளேனென்ன நாணொடு வணங்கியென்
றன்பிழை பொறுத்தி டென்றே
சங்கர னுரைத்திடத் திருவுள மகிழ்ந்தசிவ
சங்கரி யுமைக் காக்கவே.
எனவும்,
அரனவ னிடத்திலே யைங்கரன் வந்துதா
னையவென் செவியைமிகவு
மறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவு
மத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில்
விளங்குகண் ணெண்ணினனென
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து நீ யப்படி பா
விகடமேன் செய்தாயென
மருவுமென் கைந்நீள முழமளந் தானென்ன
மயிலவ னகைத்துநிற்க
மலையரைய னுதவவரு முமையவளை நோக்கிநின்
மைந்தரைப் பாராயெனக்
கருதரிய கடலாடை யுலகுபல வண்டங்
கருப்பமாப் பெற்றகன்னி
கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்
களிப்புட னுமைக்காக்கவே.
எனவும்,
அம்பிகை யரன்றன்னை நோக்கியுன் னாபரண
மரவமென வுமையை நோக்கி
யரியரவ சயனத்தை யரவுருவ மானத்தை
யறியாய் கொல் சிறிதுமென்ன
நம்பிமனை தொறுமிரந் துணுமாண்டி நீயென்ன
நான்றாத னறிவேனென
நவையுறும் பொய்புகன் றீரெனப் பாரத
நடந்ததே கரியாமென
வெம்பியொரு வன்பிரம் பாலடித் தானென
விளங்கிழை யொருத்திதாம்பால்
வீசினது சொல்லென்ன வெண்னா யிரம் பெண் கண்
மிகுகற்பை நீக்கினையெனப்
பம்புகற் பினிலோ ரிரட்டிப்பு நீக்கினது
பதறாம னீகேளெனப்
பரமருட னிவ்வாறு விளையாடு பச்சைப்
பசுங்கொடி யுமைக்காக்கவே.
எனவும்,
அச்சுத னளிப்பனில முமதுநே யன்வித்தை
யருளுவன் பலபத்திர
னலமுதவு வன்சமன் பகடீவ னந்தமக்
கானதோ ரெருதுமுண்டே
மாயாமய முச்சிர வயிற்படை யினைக்கொழுவ தாக்குவோ
மொய்ம்புட னிழுத்திறுக்க
முந்திய வடக்கயிற் றுடன்மற்று நமதன்பர்
முன்போ யிரந்துகொள்வோ
மிச்சையுடை நம திளைய தனையனா கியகந்த
னினிமையொடு மாடுமேய்ப்ப
னினியுழுது பயிரிடுத னன்றுநன் றிதைவிட்
டிரந் துண்ப தீனமெனவே
கச்சுமுலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக்
கைக்கொண் டுளத்திலிதுநற்
காரிய மெனக்கருதி மெத்தக் களித்திடுங்
கண்ணுத லுமைக்காக்கவே.
எனவும்,
கவுரிகம லாயர னிரந்தசோ றுணவெனக்
கமலைமண் கண்டே னெனக்
காளையொன் றேயரற் கெனமாடு மேய்த்ததைக்
கட்டிடைய னாரோ வெனச்
சிவனொருவர் தூதென்ன வத்தூது சென்ற கதை
செப்பிலொரு பாரத மெனச்
சேரோடு திருடினா னரனெனக் கட்டுண்ட
செய் திநா மறிவோ மென
வவையினட மாடினானரனென்ன வவ்வாட
லரவமறி யாதோவென
வாலமதை யுண்டன னரனென்ன மண்ணுண்ட
வதனையறி யோமோவென
விவரமொடு மலைமகளு மலர்மகளு மிவ்வாறு
விளையாடு மிவர்கடுணையா
மேவிவரு புத்திரமித் திரகளத் திரருடன்
மேன்மேலு மிகவாழியே.
எனவும், சிலசெய்யுள்களால் ஆசீர்வதித்தருளினார்.
பின்பு தம்மிடத்தன்பு பூண்ட அண்ணாமலை ரெட்டியாரோடு சிதம்பரத்திற்கு எழுந்தருளி, அங்கே ஒரு திருமடங்கட்டுவித்து அதில் வீற்றிருந்து, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, சிவப்பிரகாசவிகாசம் தருக்கபரிபாஷை, சதமணிமாலை. நால்வர் நான் மணிமாலை என்னும் பிரபந்தங்களைச் செய்தருளி, அத்தலத்தை அருமையாக நீங்கி, பிறதலங்களையும் வணங்கி, திருக்காட்டுப் பள்ளியை யடைந்து, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு தங்கி யிருந்தனர். அங்கிருக்கும் போது, கல்வியறிவிற்சிறந்த ஒரு பெண் வீதியினிடத்தே உப்புவிற்றலைக் கண்டு, இரக்கமுற்றுத் திருநோக்க தீக்ஷை செய்து அவளது நல்லூழையும் பரிபக்குவத்தையும் உணர்ந்து, அவளுடைய புலமையைப் பிறர்க்குப்புலப்படுத்தத் திருவுளங் கொண்டு,
"நிறைய வுளதோ வெளிதோ கொளுவேம்
பிறையை முடிக்கணிந்த பெம்மா-
னுறையுந் திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
கிருக்காட்டுப் பள்ளி யெமக்கு.''
என்னும் வெண்பாவைத் திருவாய்மலர்ந்தருளிய மாத்திரத்தே; அப்பெண்;
"தென்னோங்கு தில்லைச் சிவப்பிரகா சப்பெருமான்
பொன்னேங்கு சேவடியைப் போற்றினோ-மன்னோன்
றிருக்கூட்ட மத்தனைக்குந் தெண்டனிட்டோந் தீராக்
கருக்கூட்டம் போக்கினோங் காண்.''
என்னும் வெண்பாவைப் பாடிக்கொண்டு, தரிசனவேதியினெதிர்ப் பட்ட இரும்புபோல மனமுருகி மிக்க விரைவொடு விழுந்து நமஸ்கரித்தெழுந்து கூப்பிய கரத்தினளாய் நிற்க; அப்பெண்ணிற்கு உண்மை ஞானமுண்டாகும்படி கிருபாநோக்கஞ் செய்தருளினார்.
அதன்பின் காஞ்சீபுரத்தைத் தரிசிக்கவிரும்பி அண்ணாமலை ரெட்டியாரோடும் பிரயாணப்பட்டு வரும்போது, வழியிலே சாந்தலிங்க சுவாமிகளைக்கண்டு, கலந்து களிகூர்ந்தபின் அவரை நோக்கித் "தாங்கள் பேரூரென்னுந் திவ்விய தலத்தினின்றும் எதையுத் தேசித்து எழுந்தருளியது.'' என்று வினவ; அவர், ''சிவஞான பாலைய தேசிகரைத் தரிசித்தல் வேண்டுமென்னும் பெருங்காதலால் வந்தேன்.'' என்றுரைத்தருளினர். பின்னர், இருவரும் பேருவகை யுற்றுப் பொம்மையபாளையத்துக்குச் சமீபமாகிய புத்துப்பட்டு என்னும் நகரத்தை யடைந்தவுடன், சாந்தலிங்க சுவாமிகள் சுவாமிகளை நோக்கி, "நாமிருவரும் சிவஞானபாலைய தேசிகரைத் தரிசிக்க வேண்டியிருப்பதால் அவர்கண்மீது சிலதோத்திரங்கள் பாடுக.'' என்று பிரார்த்திக்க, சுவாமிகள், ''நாம் நாஸ்துதி பண்ணுகிற தேயில்லை.'' என்று மறுத்துவிட்டு, சாந்தலிங்க சுவாமிகளோடு அவ் வூரிலுள்ள ஐயனார் கோயிலின் புறம்பில் அன்றிரவு துயில் கொண்டார். அப்பொழுது, முருகக்கடவுள் மயில்வாகனாரூடராய் எழுந்தருளி ஒருபாத்திரத்தில் விடுபுஷ்பங்களைவைத்து இவற்றை மாலையாகத்தொடுத்து நமக்கு அணியக்கடவாய்." என்று திருவாய் மலர்ந்து மறைந்ததாகக் கனவுகண்டு, சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தெரிவிக்க; அவர், “சிவஞானபாலைய தேசிகர் முருகக்கடவுளிடத்து அதிபத்திமைபூண்ட உள்ளத்தோடு விளங்கியிருந்ததால் அது பற்றியே அக்கடவுள் தங்களுக்குச் சொப்பனத்தில் அத்தேசிகர் மகிமையை இவ்வாறாகப் புலப்படுத்தினார்.'' என்று வலியுறுத்தினார். அத்தேசிகர்மீது தாலாட்டு நெஞ்சுவிடு தூது என்னும் பிரபந்தங் களைப்பாடி, சந்நிதானத்திலே அரங்கேற்றி, ஞானோபதேசம் பெற்று அந்த ஞானாசாரியாது கட்டளைப்படியே தமது தங்கையாகிய ஞானாம் பிகையைச் [8] சாந்தலிங்க சுவாமிகளுக்கு விவாகஞ்செய்து கொடுத்துவிட்டு, தம்மை நெடுநாளாகப் பிரியாது அத்தியந்த அன்புடையராய் உடன்றொடர்ந்துவந்த அண்ணாமலை ரெட்டி யாரைத் துறைமங்கலத்துக்குப் போகும்படி ஆஞ்ஞாபித்து, ஞானாசாரியரைத் தரிசித்துக்கொண்டு, அவ்விடத்திற்றானே இருந்தார்.
------
[8] சாந்தலிங்கசுவாமிகள் பின்னர்த் துறவுபெற்றவர்.
சிலகாலஞ்சென்றபின் ஞானாசாரியரிடத்தே விடைபெற்றுக் காஞ்சீபுரத்தையடைந்து, சுவாமி தரிசனஞ்செய்து அங்கிருக்கும் பொழுது, நிஜகுணயோகி யென்பவராற் கன்னட பாஷையிற் செய்யப்பட்டிருந்த விவேகசிந்தாமணியின் ஓர்பாகமாகிய வேதாந்தபரிச் சேதத்துக்கு ’வேதாந்த சூடாமணி’ யெனப் பெயர் தந்து அதனையும் இரேணுகரென்னுங் கணத்தலைவரால் அகத்திய மகாமுனிவருக்கு உபதேசிகப்பட்ட சித்தாந்த சிகாமணியையும், பிரபுதேவர் சரித்திரமாகிய பிரபுலிங்கலீலையையும் தமிழிற் பாடியருளி, ஞானாசாரியரைத் தரிசிக்க வேண்டுமென்னும் பேராசையால் அவர்மீது திருப் பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்னும் இரண்டு பிரபந்தங்களையுஞ் செய்து கொண்டு, அங்ககன்று இடையிலுள்ள தலங்களைத் தரிசித்துக் கூவமென்னுந் தலத்தையடைந்து, அங்குள்ள வேளாளர்கள் முதலியோர் வேண்டுகோளின்படி திருக்கூவப்புராணம்பாடி அரங்கேற்றி, ஞானாசாரியரையடைந்து தரிசனஞ் செய்து, மேற் சொல்லிய பிரபந்தங்களனைத்தையும் சந்நிதியிலாங் கேற்றி, உடன் வசித்திருந்தனர். அந்நாளிலே ஒரு நாள், சாயங்காலம் அநுட்டான முடித்துக்கொண்டு ஞானாசாரியரிடத்துத் தாம் ஏகாந்த மாயிருந்து ஷடுஸ்தல இலிங்கா நுபவ முதலியவற்றை ஆராய்ந்து கொண்டு இன்புறும்பொழுது, எதிரெழுந்த சந்திரோதயத்தைக் கண்டு ,
"கடன் முரச மார்ப்பக் கதிர்க்கயிற்றா லேறி
யடைமதி விண்கழைநின் றாடக் -
கொடைமருவு மெங்கள் சிவஞான வேந்த
லிறைத்தமணி தங்கியவே தாரகைக டாம்.''
என்னும் வெண்பாவை அருளிச்செய்தனர்.
பின்னர் ஞானாசாரியா நுக்கிரகித்தபடியே விருத்தகிரியை யடைந்து, பழமலைநாதரையும் பெரியநாயகியம்மையாரையுந் தரிசித்து வணங்கி, அவ்விடத்திலே தம்பொருட்டு ஒரு திருமடமமைத்து எதிர்கொண்டு வணங்கி நிற்கும் சிதம்பர பூபதியைச் சிறப்பித்து,
"வெங்கைப் பழமலை யார்மீது கோவை வியந்துரைக்கு
மெங்கட் கினிய சிவஞான தேவ னிசைவுகொடு
திங்கட் பவனி யிருகான் முதுகுன்றர் சேர்மறுகின்
மங்குற் சிதம்பர பூபதி நல்கு மடமிதுவே."
என்னும் கட்டளைக்கலித்துறையைப் பாடியருளி, அத்திருமடத் தடைந்து வீற்றிருந்து, பழமலையந்தாதி, பிக்ஷாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரியவிருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக்கலித் துறை என்னும் பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளினார். ஒருநாள் மணிமுத்தநதியிலே ஸ்நானஞ்செய்து வரும்பொழுது, அதனருகிலிருந்த மாஞ்சோலையின் புறத்து வறிதே விழுந்து கிடந்த மாங்கனியைக்கண்டு, இது சிவலிங்கப் பெருமானுக்கு நைவேத்தியத்திற்கு உபகரணமாகுமென்று கருதியெடுக்க; அதுகண்ட அச் சோலைக்காவலாளன், மகிமையறியாது மடிபிடித்திழுத்து மனவருத்தஞ் செய்தனன். சுவாமிகள், அவன் சிவாபராதியாயிருத்தலின் அவனைத் தண்டித்துச் சுத்தனாக்கத் திருவுளங்கொண்டு,
"அடுத்துவருந் தொண்டனுக்காக வந்தகனைத் தாளா
லடர்த்ததுவுஞ் சத்தியமே யானா-லெடுத்ததொரு
மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி
சாங்கனிக்கா தித்தன்வரத் தான்."
என்னும் வெண்பாவைப்பாடி, சூரியனுதயமானவுடன் உயிர்துறக்கும்படி செய்து, நற்கதியிலடைவித்தருளினார்.
இங்ஙனம் இருக்கு நாளிலே, சிவஞான தேசிகர் தமக்கு ஐந்நூறு வயது பூர்த்தி பாயினமையால், உலகின் கணிருத்தலில் உவர்ப்புத் தோன்றி, அப்பொழுது சகலபற்றுக்களையும் ஒழித்து விளங்கும் சிவப்பிரகாச சுவாமிகளுடைய சித்தவிரத்தியைத் தாமறிந்திருப்பதால், பரிபக்குவராகிய வேறோர் மாணாக்கருக்கு ஆசாரியாபிடேகஞ் செய்து, ஞானோபதேசம் புரிந்து, அவரைத் தமக்குப் பதிலாக தியமித்து விட்டு, வைகாசி மாதத்தில் பெளர்ணிமைத் திதி யோடுகூடிய விசாக நக்ஷத்திரத்திலே, சிவயோக சமாதியிற்கூடி, சித்தியால் திருமேனியை விபூதிமயமாக்கியொடுக்கி, தாம் இஷ்ட லிங்கபரசிவத்திலே கலந்தருளினார்.
இதனையறிந்த சிவப்பிரகாச சுவாமிகள் மனங்கலங்கி, பொம்மபுரத்தையடைந்து, ஆசிரிய ரொடுங்கிய குகையுட் சென்று, அடியற்றமரம்போல விழுந்து பலமுறை நமஸ்கரித்துத் துதித்து ''கருணாநிதியே! இக்கடையேனையும் விரைவிலே திருவடியிற் சேர்த்தருளுக.'' என்று பிரார்த்தித்து, தாமியற்றிய கலம்பகத்தையுஞ் சந்நிதியிலரங்கேற்றி, அக் குகையுள்ளே ஞானாசாரியரைப் பாவனாரூபமாக வழிபட்டுக் கொண்டு, மூன்றாம் பட்டத்துச் சுவாமிகளோடு தங்கியிருந்தனர். ஒருநாள் தனிமையாய்ச் சமுத்திர தீரத்தையடைந்து அங்குள்ள நறுமணற் பாப்பிலே தாமெழுதிய நன்னெறிவெண்பா நாற்பதையும் எழுதி வரும்படி தம்பின்னோராகிய கருணைப்பிரகாசசுவாமிகளுக்குக் கட்டளையிட்டு, ஞானாசாரியரிடத்தே விடைபெற்றுக்கொண்டு திருப்பதிகம் பெற்ற திருத்தலங்கடோறும் யாத்திரை புரிந்து வந்தனர். அக்காலத்திலே, அகராதிசெய்த வீரமாமுனிவ ரென்பவர் எதிர்ப்பட்டு யேசு மதமாகிய தங்கொள்கையை நாட்டுதற்பொருட்டுத் தருக்கஞ் செய்ய; உடனே அக்கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணமெனப்பெயரிய ஓர் நூலை அருளிச்செய்து, ஒவ்வொரு தலங்களையும் இவ்விரண்டு வெண்பாக்களாற் றோத்திரஞ்செய்து முடித்து, நல்லாற்றூரை யடைந்து, ஞானாசாரியரது திருமடத்தில் வீற்றிருந்தார்.
இவரிடத்து விடைபெற்றுச்சென்ற கருணைப்பிரகா சசுவாமிகள், இஷ்டலிங்கவகவல் பாடிமுடித்து, சீகாளத்திப்புராணத்தைப் பாடத்தொடங்கிச் சீகாளத்திச் சருக்கம்வரையும் தமிழில் மொழிபெயர்த்தருளி, திருவெங்கைமாநகரத்தில், பதினெட்டாம் வயதில், சிவலிங்கவைக்கிய மாயினார். அதனை யறிந்த சிவப்பிரகாச சுவாமிகள் அவ்விடத்தேசென்று,
"முன்னமொரு தமிழ்ப்புலவன் றனையுண்டு
கண்டசுவை முதிர்ச்சி யாலே
தன்னியலை முழுதுமுரைத் தமையாமுன்
னினைக்கவர்ந்து தடங்காளத்தி
மன்னவனுண் டானெனது மாதவத்தின்
வலிதீர மண்ணின் மீதே
யென்னுடன்வந் தவதரித்த விளங்கருணைப்
பிரகாச னென்னுங் கோவே''
என்னும் விருத்தத்தைப்பாடிநிற்க; வேலையசுவாமிகள்,
"ஆண்ட தனா லெனையொவ்வாய் வித்தையினிற்
றமையனினு மதிக மென்றே
பூண்டவுல கதனினுள்ளோர் புகல்வது கேட்
டிருந்துமென்ன புதுமை தானோ
காண்டகுகண் மணியோல் லிளங்கருனைப்
பிரகாசக் காளாய் நீதான்
மாண்டனையென் றறிந்திருந்து முயிர் தரித்தேன்
யானுமிகு வன்னெஞ் சேனே.''
என்னும் விருத்தத்தைப்பாடித் திக்கித்துக்கொண்டு, சுவாமிகளைப் பிரியலாற்றது வருந்தி நின்றனர். அவரை ஒருவாறு தேற்றி நிறுத்திவிட்டு, தாம் நல்லாற்றூரையடைந்து, திருமடத்திலிருந்து கொண்டு, சிவநாம மகிமையும், இஷ்டலிங்கப் பெருமான் மீது அபிஷேகமாலையும், நெடுங்கழி நெடிலும், குறுங்கழிநெடிலும் நிரஞ்சனமாலையும், கைத்தலமாலையும், சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கழம் செய்தருளி, சிவாநு பவச்செல்வராய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, முப்பத்திரண்டாம் வயதில் கன்னி மதியில், பௌர்ணிமைத்திதியில், இஷ்டலிங்க பரசிவத்திற் கலந்தருளினார்.
அப்பொழுது, வேலையசுவாமிகள்,
''அல்லிமலர்ப் பண்ணவனு மாராய்ந் தறிகவிதை
சொல்லு மிருவரிடைத் தோன்றியயான் முல்லை
யரும்பிற் பொலியு மணிமுறுவ னல்லாய் -
கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்."
என்னும் வெண்பாவைப்பாடி அளவிடப்படாத அருந்துயர்க் கடலின்மூழ்கி, ஒருவாறு தெளிந்து, சிவப்பிரகாச சுவாமிகளது சமாதி தரிசனஞ் செய்துகொண்டு, அவ்விடத்தினின்றும் நீங்கி, நல்லூர்ப் புராணம், இஷ்டலிங்கக்கைத்தலமாலை, கும்பகோணச் சாரங்க தேவர் சரித்திரமாகிய வீரசிங்காதனபுராணம், குகை நமச்சிவாய தேசிகர் சரித்திரமாகிய நமச்சிவாயலீலை, கிருஷ்ணசரித்திரமாகிய பாரிசாதலீலை, மயிலத்திரட்டைமணிமாலை, மயிலத்துலா என் னும் பிரபந்தங்களைச் செய்தருளி, சீகாளத்திப் புராணத்தையு முடித்து, பெருமத்தூர் மடத்தில், எழுபத்திரண்டாம் வயதில் சிவலிங்க வைக்கியமாயினார்.
சிவப்பிரகாச சுவாமிகள் வாழ்க்கை வரலாறு முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.
--------------------
2. சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்கள் - முகவுரை
உ
குகமயம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருவடி வாழ்க
விநாயகர் துதி '
'எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போ தகத்தின் கழல் ''
முருகன் துதி
வளர் செழுங் குருதிச் சூட்டு வாரணம் வலனுயர்த்த
வொளிகெழு பரிதி வைவே லொருபெருங் கருணைழர்த்தி,
களிமகிழ் சிறந்து தான் வாழ் கற்களி னொருகல் லென்றோ
வளியவென் மனத்தி னுள்ளு மகன்றில னிருக்கு மன்னோ.
குரு
கண்டே னறிவெனு மொண்சுட ரேற்றிக் கருத்தகன் மெய்த்
தண்டேயு மன்பு நெய்பெய்து பொய்வாதந் தடுத்தொளிரக்
கொண்டே மலவிரு ளெல்லாந் துரந்தெங் குடிமுழுதுந்
தொண்டே யெனுமெய்ச் சிவஞான தேவன் றுணையடியே.
சிவப்பிரகாசர்
புனையெழில் வடிவி னாளோர் பொதுமகட் கண்ட மைந்தர்
மனமெனப் புலவர் நெஞ்சம் மருளுநின் தமிழ்ப்பா மாலை
சினவிடை யவர்க்கே சாத்தும் சிவப்பிரகாச னென்னும்
முனைவனெம் அடிகள் பாத முளரிகள் சென்னி சேர்ப்பாம்.
தெண்கடல் வளாகம் பொதுமையின்றி வெண்குடை நிழற்றிய புரவலரும் போற்ற வாழ்ந்தவர் புலவர் பெருமக்களாவர் என்பது, புலவர் பாடாதொழிக என்நிலவரை என்பது போன்ற பண்டைத்தண்டமிழ்த் தீஞ்சுவைப் பாக்களின் சொற்றொடரினாலும், முரசு கட்டிலேறிய புலவரை விசிறி கொண்டு வீசியமன்னர் முதலியோர் வரலாற்றானும் அறியக்கிடக்கின்றது.
காப்பனகாத்துக் கடிவன கடிந்து மக்கள் வாழ்வான் வேண்டி, அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளை உணர்த்துவனவாய பாக்களையோ சரித நிகழ்ச்சியையோ கூறிப் புலவர் அறிவுறுத்துவர். இங்ஙனம் புலவர் உள்ளத்துணின்றும் ‘தோன்றிய நுண்ணிய கருத்துக்களோடு கூறப்பட்ட செய்யுட்களின் தொகுதிதாமே நூல்களாம். இத்தகையனவாய நூல்கள் வேதாந்தம், சித்தாத்தாந்தம், காப்பியம், தொல்காப்பியர் கூறிய விருந்தென்பதன் பாற்பட்ட தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களெனப் பலபகுதியினவாய் விரிந்து கிடப்பனவாகும்.
இவ்வழியிலே, முற்காலத்துள்ள புலவர்களிற் பலர் சிற்சில நூல்களையே செய்துள்ளாராயினும் துறைமங்கலம் அல்லது நல்லாற்றூரின்கண் வாழ்ந்திருந்தவரும், ஸ்ரீமத் ஞான இராஜதானியான இனாம் பொம்மையபாளையம் திருக்கைலாய பரம்பரைப் பெரியமடம் சிவகஞ்சி மயூராசல நிவாச யதீச்சுரகர்த்தரான மயிலம் தேவத்தான ஆதீன பரம்பரைத் தர்மகர்த்தத்துவம் இனாந்தார் ஸ்ரீலஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகளின் சீடருமான அருள்மிகு சிவப்பிரகாசசுவாமிகள் மேற்கூறப்பட்ட பல்வகை நூல்களையும் செய்து உலகத்திற்கு உதவியுள்ளார்கள். அவை வருமாறு.
(1) சோணசைலமாலை :- இந்நூல் சுவாமிகள் தம் சகோதரர்களோடு திருவண்ணாமலைக்குச் சென்று மலையை வலம் வரும் பொழுது அப்பெருமான் மேற் பாடியது.
(2) திருச்செந்திலந்தாதி :- சிந்துபூந்துறை வெள்ளியம்பலத் தம்பிரான் கட்டளையின்படி கல்வியிற் செருக்குற்ற ஒரு புலவனை வெல்லும் பொருட்டுத் திருச்செந்தூரில் முருகனருளால் நிரோட்டக யமகமாக இந்நூலைப்பாடினார்.
(3) திருவெங்கைக்கோவை :- இக்கோவை மிகவும் நயமிக்கதாகப் புலவர்களால் எண்ணப்படுவது. சிந்தாமணி, மணிமேகலை திருக்கோவை முதலிய நூல்கள் இந்நூலில் மிகவும் பாரட்டப்படு கின்றன.
(4) திருவெங்கைக் கலம்பகம் :- பொருள் விளங்காச் செய்யுட்கள் இதனுள் சில இருக்கின்றன. திருக்குறளின் இரண்டு அடிகளை ஒத்தது இறைவனது திருவடிகள் என்று இதனில் திருக்குறளைப் பாராட்டுமுறை வேறு எந்த நூலுள்ளும் காணமுடியாத தொன்று.
(5) திருவெங்கையுலா :- இந்நூலுள் அண்ணாமலை ரெட்டியாரைச் சிறப்பிக்குமிடம், மணிமுத்தாநதியைப் பற்றிப் புகழுமிடம் முதலியன மிகவும் பாராட்டத் தக்கனவாகும். மாதர்களது அழகினைப் புகழுமிடங்கள் பிரபுலிங்கலீலை கூறுகின்றதை ஒத்துள்ளன. இவைகள் மிகவும் பாராட்டப்படுவனவாகும்.
(6) திருவெங்கை யலங்காரம் :- திருவெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம் இந்நான்கு நூல்களும் இவரை ஆதரித்துவந்த அண்ணாமலை ரெட்டியார் வேண்டுகோட்கு இணங்கி, திருச்சி ஜில்லா பொம்பலூர் தாலூகா வெங்கனூரிலிருக்குங்காலத்துப் பாடப்பட்டவை. இவற்றுள் திருவெங்கையலங்காரம் நாளதுவரை கிடைத்திலது.
(7) சிவப்பிரகாசவிகாசம் :- இது சைவசித்தாந்தக் கருத்தினை விளக்கமாக அறிவிப்பது.
(8) தருக்கபரிபாஷை :- இது தருக்கசாத்திரங் கற்பவர்கட்கு ஆரம்ப நூலாகச் செய்யப்பட்டது.
(9) நால்வர் நான்மணிமாலை :- இது சைவசமய குரவர் நால்வரையும் அவர்களது திருமுறைகளையும் பாராட்டுகின்ற அரிய நூல், தேவார திருவாசகங்களுக்கு இந்நூலைப் பாயிரமென்று கூறலாம். இந்நூலைப் போற்றாதார் இல்லை. இதனைப் பெரிய புராண சாரம் என்பர் அறிஞர்.
(10) சதமணிமாலை :- இது சைவசித்தாந்தக் கருத்துக்களை வடமொழி ஆகமச் சூத்திரங்கள் கூறுகின்றபடி தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவதாகும்.
(11) சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது :-- இவர் சாந்தலிங்க சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்கித் தனது குருநாதனைக் காணச் சென்றபோது இந்நூலைப் பாடி வணங்கினார். இந்நூலுள் தசாங்கமும் புறச்சமய கண்டனமும் - மிக அழகாகக் கூறப்பட்டுள்ளன.
(12) சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு :- இது குருநாதன்மேற் பாடப்பட்டது. சடுத்தல முதலிய வீரசைவ சித்தாந்தத்தைக் கண்ணாடிபோற் றெளிவு பெறக் காட்டுவது.
(13) சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் :- இது குருநாதன் மேற் பாடப்பட்ட நூல். மணியினது நாவும், ஊசியினது காதும் முறையே தனது குருநாதனின் புகழைப் பேசாதது. கேளாதது என்று கூறுகின்றார். தான் குருநாதனிடத்திற் பெற்ற உபதேசங்களையும் அட்டாவாணத்தையும் இதணிற் கூறுகின்றார்.
(14) சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம் : - இதுவும் குருநாதனின் மேற் பாடப்பட்டதே. இலக்கணவுவமை, தருக்க நூல் முதலியவற்றைக் குறித்து இதனுட் பாடியிருக்கும் நயம் பாராட் டத்தக்கது.
(15) சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளியெழச்சி : இது நான்கு பாட்டுகளை யுடையது.
(16) கூவப்புராணம் :- திருவிற்கோலம் என்னும் க்ஷேத்திரத்திற்குச் சுவாமிகள் சென்றிருந்தகாலத்து அவ்வூரார் வேண்டு கோட்கிணங்கி இந்நூல் பாடப்பட்டது.
(17) பிரபுலிங்கலீலை :- இது கன்னடத்தினின்று மொழி பெயர்க்கப்பட்ட நூல். அல்லமதேவனின் விளையாட்டைச் கூறுவது. கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்வது. சொல்லணி பொருளணி நிறைந்தது. இந்நூலைப் பாராட்டாத புலவர்கள் ஒருவருமிரார்.
(18) வேதாந்த சூடாமணி :- இந்நூல் வேதாந்த மதத்தைச் சார்ந்த அனைவரும் பாராயணம் செய்யும் பெருமை யுடையது.
(19) சித்தாந்த சிகாமணி :- இது வடமொழி சித்தாந்த சிகாமனியினின்றும் தமிழ்மொழியில் 880 செய்யுளாகப் பாடப்பட் டிருக்கிறது. இது வீரசைவசித்தாந்தத்தை நன்கு அறிவிப்பது.
(20) பழமலை அந்தாதி :
(21) பிக்ஷாடன நவமணிமாலை :- சிவபெருமான் தாருக வனத்து மகரிஷிகளின் பத்தினிகள் வாழுமிடத்துப் பிக்ஷாடண வடிவத்தோடு சென்று அவர்களோடுரையாடியதை மிக அழகாக விளக்குகின்ற நூல் இது.
(22) பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை :-
(23) பெரியநாயகியம்மை நெடுவிருத்தம் :- இந்நூல்கள் திருமுதுகுன்றத்தின்கண் சுவாமிகள் தங்கியிருந்த காலத்துப் பாடப்பட்டவை.
(24) இயேசுமத நிராகாணம் :- ஐரோப்பியராகிய வீரமா முனிவர் சிவப்பிரகாச சுவாமிகளைச் சந்தித்த காலத்துச் சைவ தூஷணமாகச் சில வார்த்தைகள் கூற அதனை மறுத்து இந்நூல் செய்தனர் என்ப. கொலைமறுத்தல் என்னும் நூலில் அருண்மிகு சிதம்பரசுவாமிகள் உரையில் மேற்கோளாக மூன்று செய்யுட்கள் இந்நூலினின்றும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இச்செய்யுட்கள் தவிர இந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறவில்லை. இந்நூல் அச்சாகியிருந்தும் வெளிவராது மறைத்து விட்டனர் போலும்!
(25) நன்னெறி :- இந்நூல் இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் முறையில் நாற்பது வெண்பாக்களால் ஆனது. பொம்மையபாளையம் சமுத்திரக்கரையில் மணலின் மேல் இந்நூலைச் சுவாமிகள் எழுதினதாகவும் அதனைப் பார்த்து அவர்கள் தம்பி ஏட்டிலெழுதியதாகவும் கர்ணபரம்பரைச் செய்தி வழங்குகிறது. கடலின் பெருமை இதனுள் அதிகமும் கூறப்படுகின்றது.
(26) சிவநாமமகிமை :
(27) தலவெண்பா :- இந்நூல் கிடைக்கப்பெறவில்லை.
(28) இட்டலிங்க அபிடேகமாலை :
(29) நெடுங்கழிநெடில் :
(30) குறுங்கழிநெடில் :
(31) நிரஞ்சனமாலை:
(32) கைத்தலமாலை :- இந்நூல்கள் இட்டலிங்க பூஜை செய்யுங் காலத்துத் தோத்திர ரூபமாகப் பாடப்பட்டவை. 21 தீக்ஷாமுறைகளும் இறைவன் தன்மையும் வீரசைவ சமயக் கருத்துக்களும் இதனில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.
சீகாளத்திப்புராணம் இடைப்பகுதி :- முற்பகுதி பாடிய கருணைப்பிரகாசர் மறைந்தமையான், இடைப்பகுதியை இவர்கள் பாடினார்கள். இந்நூலுள் “புணர்ச்சி பழகுதல் வேண்டா '' என்னும் திருக்குறளை எடுத்தாளும் நயம் பாராட்டத்தக்கது.
இவரது நூலை இதுவரை வெளியிட்டவர்கள்
(1) பிரமபுரம் திருக்கயிலாய பரம்பரைப் பெரியமடத்துச் சீடராகிய பெருமத்தூர் திரு சபாபதி அய்யர் என்பார், நெஞ்சுவிடு தூது, தாலாட்டு, பிள்ளைத்தமிழ், கலம்பகம், பள்ளி யெழுச்சி என்ற ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
(2) இம்மடத்துச் சீடராகிய சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகள் பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் குறிப்போடு வெளியிட்டுள்ளார்கள். இதற்கு உடனிருந்து உதவியவர்கள் காயாறு ஞானசுந்தரய்யாவர்களும் காணியம்பாக்கம் முருகேச முதலியாரவர்களும் ஆவார்கள்.
(3) சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார் இரண்டு முறை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் வெளியிட்டுள்ளார்கள்.
(4) திரு. கோ. வடிவேலு செட்டியாரவர்கள் வேதாந்த சூடாமணிக்கு உரையெழுதித் தாம் கண்ட உரையோடு வெளியிட்டுள்ளார்கள்.
(5) திரு நாகி செட்டியாரவர்கள் சித்தாந்த சிகாமணிக்கு அரிய உரை யெழுதித் தமது குருபசவ அண் கோ கம்பெனியின் மூலமாய் வெளியிட்டுள்ளார்கள். -
(6) சரணர், சரவணப்பெருமாளையர், பார்த்தசாரதி அய்யங்கார் முதலிய பலராலும் பிரபுலிங்க லீலை அச்சிடப் பட்டுள்ளது.
(7) விசாகப்பெருமாளையர் பிரபுலிங்கலீலை வசவண்ணர் கதி வரையிலும் உரையெழுதி வெளியிட்டுள்ளார்கள்.
(8) ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் பிரபுலிங்கலீலை முழு நூலுக்கும் உரை யிட்டுள்ளார்கள்.
(9) காஞ்சி மகாவித்துவான் இராம நந்த யோகிகள் திருவெங்கைக்கோவைக்கு உரையெழுதி மதராஸ் ரிப்பன் பிரஸ்ஸில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
(10) இன்னும்பலர் சுவாமிகள் செய்த நூல்கள் ஒவ்வொன்றைத் தனித்தனியே யெழுதி வெளியிட்டுள்ளார்கள்.
(11) குகையூர் சித்தநாதேச்சுர ஆதீனம் பட்டத்துப் பெரியசாமி ஐயர் குமாரரும், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரித் துணைத் தலைவருமாகிய திரு அடிகளாசிரியர் சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம் ஆகிய இரண்டு நூல்களையும் அரிதிற்றேடிப் பெருமுயற்சியால் இம்மடத் தின் வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். அவற்றுள் சிவப்பிரகாச விகாசம் முற்றும் கிடைக்கவில்லை.
கிடைத்த வரையிலும் திருத்த முறப் பதிப்பிக்க அவர்களடைந்த இன்னல்கள் எழுதவொண்ணா. வெளிவந்துள்ள விகாசத்திற்கு இவர்கள் எழுதிய குறிப்புரை தனி நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் இவரது நூல்கள் பலராலும் வெளியிடப்பட்டிருந்தும், இப்பொழுது இம்மடத்துத் தலைவர்களாக எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மகா சந்நிதானம் ஒவ்வொரு ஆண்டுக் குருபூஜையின்போதும் தனித் தனி நூல்களாக வெளியிட்டு இலவசமாக உதவி வந்தார்களாயினும், எல்லா நூல்களையும் ஒரே புத்தகமாகக் காணவேண்டும் என்னும் விருப்பத்தோடு நல்லாற்றூர் 'சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்'' என்னும் பெயரோடு இந்நூலை - இதுபோது வெளியிடலானார்கள். இவரது நூல்களுள் சிலவற்றிற்கு இம்மடத்துச் சிஷ்யரான சிதம்பரம் ஈசான்யமடம் இராமலிங்க சுவாமிகள் எழுதிய குறிப்புரையும் இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நூலாசிரியரைப் பற்றிப் பிறர் கூறுவன :--
"அற்புதகற்பனை பொற்பலங்காரம் சொற்சுவை,
பொருட்சுவையிற் பொலிந்துாங்கும்
முப்பானிரு நூல் பொற்புற வியற்றி
மகிதலத் தென்றும் புகழுடல் நிறீ இய
சிவப்பிரகாசத்தவப் பெருந்தகை என்'
--- திருப்போரூர் மகா சந்நிதானம் திருமழிசை சிவப்பிரகாசசுவாமிகள்
"கற்பனையலங்காரக் கவினொளிரக்கற் கண்டுகனிதேனென்னப்
பொற்பமைநற்கவி சொல்சிவப்பிரகாச முனிவனர்''
---- பூவை கலியாணசுந்தர முதலியார்.
''தெய்வ வாக்கியன் அருந் துறைமங்கல சிவப்பிரகாசதேவன்"
---- ஈர்க்காடு ரத்தினவேலு முதலியார்.
"தவம் பழுத்த துறவுடையான் தமிழ்பழுத்தவுளமுடையான் தாரணிக்கே
சிவம் பழுத்த உண்மையினைப்பத்தி நயம்பல நாட்டித் தெளிவு கூட்டி
நவம் பழுத்த தமிழ் நூல்கள் நல்கு சிவப்பிரகாச நற்றவத்தோன்''
--- கா. நமசிவாயமுதலியார்.
"ஊன்பிலிற்று மெழின் மடவார் மயலனைத்து
மொருங்கவித்த வுரவோன் ஞானக்
கான்பிலிற்றுங் கவிமாரி பொழியவருதமிழெழிலி
கவின்ற தொப்பான்
நல்லாற்றூரியற்றுமொரு தவப்பிழம்பாயு
தித்திடுமந்நாவலோன்''
----சே. சிவஞானம்பிள்ளை.
“ஆலங்காரி சார்வ பௌமரான சிவப்பிரகாசமுனிவர்"
---- திருபண்டித நாராயணையங்கார் செந்தமிழ்ப்பத்திரிகை மதுரை.
இன்னும் சிறுவர்கள் முதல் புலவர்வரைப் பலரும் விரும்பிக்கற்றற்குரிய நூல்களாக இவரியற்றிய நூல்கள் விளங்கு கின்றனவாகலின் இந்நூல்கள் தமிழர்களொவ்வொருவராலும் போற்றற்குரியனவாகுமென்பதை யனைவரும் உணர்வார்களாக. இஃதறியாது ஒருசிலர் சிவப்பிரகாசசுவாமிகள் ஐக்கியவாத சமயத் தவராதலின் இவரது நூல்களைப் படித்தல் சால்புடைத்தன்றென்று கூறுவர். ஐக்கியவாத சமயத்திற்குக் கூறிய இலக்கணம் இவருடைய நூலுள் எங்கு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் எவரேனும் கூறுவாராயின் அஃது நன்றாகும். அங்ஙனமின்றி யாரோ ஒருவர் ஆராயாது வீரசைவமென்பது ஐக்கியவாத சமயமாகும் என்று கூறிய கூற்றை வைத்துக்கொண்டு பிற்பட்ட பலரும் இவரது நூல்களை ஐக்கியவாதசமய நூல்களென்று கூறிவருவதும் வெளியிடுவதும் சிறிதும் பொருத்தமில்லை யென்று அறிஞர்களதனை விடுப்பார்களாக!
இவரது நூல்களில் இயேசுமத நிராகரணம், திருவெங்கை யலங்காரம், தலவெண்பா , சிவப்பிரகாச விகாசத்தில் சில பகுதி இவைகள் கிடைக்கப்பெறாதன. இந்நூல்களை அன்பர்களெவரேனு மிருந்து கொடுப்பார்களாயின் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிட அநுகூலமாயிருக்கும்.
இந்நூலை இயன்றவரை பிழை நீக்கி வெளியிடுவதற்கு எனது நண்பரும் இம்மடத்து வித்துவானுமாகிய மஞ்சக்குப்பம் தமிழ்ப் பண்டிதர் திருவாளர் வித்துவான் ஆத்திரேயன் ஸ்ரீநிவாஸாசாரியாரவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சி பாராட் டத்தக்கதேயாம். அன்றியும், அச்சிட்டு தவிய 'ஸ்ரீ ஷண்முகா பிரிண்டிங் ' அவர்களுக்கும் நன்றியறிதலுடையேம்.
நிற்க, தற்போது காகிதமகப்படா முட்டுப் பாட்டினால் இந்நூலுள் செய்யக்கருதிய செப்பமனைத்தும் செய்து முடிக்க இயன்றிலது. அடுத்த பதிப்பில் அன்னவை நன்னயம் பெற அமையலாகும்.
இம்மடத்தின் கண் 18-ஆவது குருமூர்த்தியாய் எழுந்தருளியிருந்து, நமது நாட்டிற்கே வழிகாட்டியாகத் தமிழ்க் கல்லூரியைக்கண்டும் தமிழ் நூல்களை வெளியிட்டும், தமிழையும் சமயத்தையும் வளர்த்தும் வரும் பரமாசாரிய மூர்த்திகளாகிய 18ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் இத்தகைச் சிறப்பொடு திறன் பெற்றுப் பன்னாள் வாழவேண்டுமாகத் திருவார் முருகனையும் ஆதிகுருமூர்த்தி யையும் இறைஞ்சுவதே நமது கடமையாகும்.
இந்நூலைக் கண்ணுறும் அறிஞர்கள் இதனுள் காணப்படும் குறைகளைத் தெரிவிப்பாராயின் அடுத்த பதிப்பில் திருத்தமுற வெளியிடச் செய்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இங்ஙனம்,
S. துரைசாமி அய்யர்,
தலைவர், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி
மயிலம்.
-----------------