pm logo

நாராயணபாரதியார் இயற்றிய
கோவிந்த சதகம்
(பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 7)


kOvinta catakam
of nArAyaNa pAratiyAR
(catakat tiraTTu - part 7)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

நாராயணபாரதியார் இயற்றிய
கோவிந்த சதகம்
பன்னிரு சதகத்திரட்டு - பாகம் 7

Source:
பல வித்துவான்கள் இயற்றிய
பன்னிரு சதகத் திராட்டு
இதனுள் பன்னிரண்டு சதகங்கள் அடங்கியுள்ளன
வல்லை பாலசுப்ரமணியம் அவர்களால் பரிசோதிக்கப் பெற்றது
பதிப்பிடம் பி. இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ், சென்னை -1
பதிப்புரிமை, விலை ரூ. 6.00
முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1948
-----------
நாராயணபாரதியார் இயற்றிய கோவிந்த சதகம்.
இஃது மகாவித்வான் காஞ்சீபுரம் - இராமசாமி நாயுடு அவர்களால் பார்வையிடப்பெற்றது.
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,
87, தம்புசெட்டி வீதி, சென்னை.
[2-வது பதிப்பு]
1917, விலை பை 9
-------------
ஸ்ரீராமஜயம்.

காப்பு

கட்டளைக்கலித்துறைகள்.
மாவேழங்கூப்பிடவந்தாயுலகவழக்கச்சொல்லென்
பாவேறயானுனக்கோர்சதகஞ்சொலப்பாரதியென்
நாவேறவாழ்த்துகின்றேனுனைக்காத்தருணான்முகற்கும்
கோவேசக்ராயுதனேயச்சுதாநந்தகோவிந்தனே.

நூல்.

படிக்கரச விருந்தாற் குடிக்குச் சேதமில்லை.

செடிக்கொருவேங்கைகுடிகொண்டகாடெனத்தேசத்திலே
அடிக்கொருதீம்புசெய்வாரைத்துரந்தரசாளவிந்தப்
படிக்கொருமன்னனுண்டானாலுழுதுபயிரிடுமக்
குடிக்கொருசேதமுண்டோவச்சுதாநந்தகோவிந்தனே.         (1)

கொட்டினுற் றேள் கொட்டாவிட்டாற் பிள்ளைப்பூச்சி.

கட்டாண்மைவேந்தர்பொறுமைபெண்ணாதவன்கண்ணரடி
பட்டாலல்லாமல்வணங்கார்விடமுட்படாமற்சும்மாத்
தொட்டாலதுபிள்ளைப்பூச்சியென்பார்முட்சுறுக்கெனவே
கொட்டாமற்றேளென்பசோவச்சுதாநந்தகோவிந்தனே.         (2)

புண்ணிலே கோலிட்டது போல.

பாலிட்டதாகியநீர்போற்கலந்துபகருங்கல்வி
நூலிட்டகேள்விக்குள்ளாவர்நல்லோரிருநூறுதரம்
மேலிட்டபுத்திசொன்னாலுங்கயவர்க்குவெந்தபுண்ணிற்
கோலிட்டவாறோக்குமேயச்சுதாநந்தகோவிந்தனே.         (3)

முழக்கட்டி பேர்க்கிற பன்றிக்குக் கொழுக்கட்டி விட்டது போல.

கழுக்கட்டியேற்றினுங்காசொன்றிலையெனக்கைவிரித்தே,
மழுக்கட்டியேந்தவல்லாரையுத்யோகத்தில்மன்னர்வைத்தல்,
முழுக்கட்டிபேர்த்துக்கிழங்குண்ணும்பன்றியின்மூஞ்சியிலே,
கொழுக்கட்டிவிட்டதன்றோவச்சு தாநந்தகோவிந்தனே.         (4)

காலத்துக்குத் தக்க கோலம்.

நீலங்கவர்விடப்பாம்பைப்பிடாரனியமிக்கவே
ஆலங்கரந் திட்டெலியுடன்வாழுமரசர்க்கஞ்சிக்
காலங்கருதிவலியாரெளியரைக்காண்கிலனு
கூலரைப்போலிருப்பாரச்சு தாநந்த கோவிந்தனே.         (5)

குட்டிக்கரணம் போட்டாலுங் கொடுக்கிற தரிது.

தடுப்பார்புலியையும்பாம்பையும்வாய்கட்டித்தாங்கிக்கையால் எடுப்பார்மழுவைத்தண்ணீர்மேனடப்பரெவருமெய்ச்ச
அடுப்பார்சபையினினூற்றெட்டடிக்கம்பத்தாடுவர்பொன்
கொடுப்பாரரியர்கண்டாயச்சுதாநந்தகோவிந்தனே.         (6)

அயன் கணக்கு ஆருக்கும் தப்பாது.

ஆலிக்கவாழ்ந்துண்டிருந்தாலும்யார்க்குமயன் வகுத்த
சோலிக்கணக்கின்படிதப்புமோதொழுவார்க்குமுத்தி
பாலிக்கும்வெள்ளிமலையான்பிரம்படிபட்டுப்பிட்டின்
கூலிக்குமண்சுமந்தானச்சு தாநந்தகோவிந்தனே.         (7)

கொடுத்தார் குறைவராது.

எடுத்தாலுமூறுமிறைத்தாலுமூறுமிடைநடுவே
மடுத்தால்மறிபடுமோமணற்கேணித்தண்ணீரதுபோல்
அடுத்தாரைவாழ்விக்கக்கல்வியுண்டானவான்புடனே
கொடுத்தாற்குறைவரு மோவச்சுதாநந்தகோவிந்தனே.         (8)

குளத்துக்கு மழை குந்தாணிபோற் பெய்யுமா?

எந்தாயெனச்சென்றிரப்பவர்க்கீபவசெள்ளளவு
தந்தாலும்போதுமிகழவொண்ணாதெங்குஞ்சஞ்சரித்து
வந்தார்பருகுங்குளத்துக்குப்பெய்யுமழைத்துளிகள்
குந்தாணிபோற்பெய்யுமோவச்சுதாநந்தகோவிந்தனே.         (9)

கோடாலிக் காம்பு குலத்துக் கீனம்.

பீடார்குலத்தினிலாகாதபிள்ளைதற்பெற்றெடுத்தோர்
வாடாதுவாடக்குலநாசமாக்கிடுமற்றதுதான்
தாடாண்மையாளர்கைக்குள்ளாய்த்தருக்குலஞ்சாயவெட்டும்
கோடாலிக்காம்பல்லவோவச்சுதாநந்தகோவிந்தனே.         (10)

அரைக் காசுக்குப்போன கப்பு ஆயிரங் கொடுத்தாலும் வராது.
எடுத்தாலும்பிச்சையமுதுநன்றேயில்லையாகிலுயிர்
விடுத்தாலும்வாசிநட்பில்லார்மனையில்விருந்தெனப்போய்
அடுத்தாவதேதரைக்காசுக்குப்போனகற்பாயிரம்பொன்
கொடுத்தாலுந்தான்வருமோவச்சுதாநந்த கோவிந்தனே.         (11)

பொல்லாக் குணத்துக்கு நல்ல மருந்துண்டோ?

உணத்தக்கநன்மருந்தாற்பிணிபோமென்றுலகிலுள்ளோர்
பணத்துக்குக்கொண்டுபரிகரிப்பார்விடம் பாய்ந்துசெத்த
பிணத்துக்கும் பச்சிலையுண்டு புல்லோர்க்குப்பிறக்கும்பொல்லாக்
குணத்துக்குநன்மருந்தேதச்சுதாநந்த கோவிந்தனே.         (12)

கவி கொண்டார்க்குங் கீர்த்தி கலைப்பார்க்குங் கீர்த்தியா?

மலைப்பாற்குறு முனிபோலும் புலவர்வடித்ததமிழ்,
விலைப்பாற்படுத்திற்கொள்வார்க்குண்டுகீர்த்திவிதண்டைசெய்து,
கலைப்பார்க்கும்போய்கொண்டநாய்களைப்போர்பல்லைக்காட்டிநின்று,
குலைப்பார்க்குங்கீர்த்தியுண்டோவச்சு தாநந்தகோவிந்தனே.         (13)

வென்னாட்டிமேற் சன்னதம் வந்தால் விழத்து விழந்து கும்பிட வேண்டும்.

எள்ளாடும்வாணியர்செக்கடித்துண்டிடுமீனரென்று
விள்ளாரவர்க்குப்பவிஷுவந்தானிதம்வேலை செய்யத்
தள்ளாதடிப்படும் வெள்ளாட்டி மேற்சன்ன தங்கும்பிடு
கொள்ளாமற்போவதுண்டோவச்சுதாநந்த கோவிந்தனே.         (14)

கெடுப்பாரைத் தெய்வங் கெடுக்கும், கொடுப்பாரைத் தடுக்கலாகாது.

உடுப்பாருண் பார்தமைப் போனினை யாதொரு வன் பிழைப்பைக்,
கெடுப்பாரைத் தெய்வங் கெடுக்குமென் றேசொல்லக் கேட்டிருந்தும்,
விடுப்பாரன் றேபுல்லர் துர்க்குண முற்றும் விதரணத்தார்,
கொடுப்பார் தமைத்தடுப் பாரச்சு தாநந்த கோவிந்தனே.         (15)

தோட்டத்து நரி கூட்டத்திலே வராது.

நாட்டம்பணத்தில்வைக்குங்கள்ளலோபர் நன்னாவலர்கள்
ஈட்டந்தனைக்கண்டுகிட்டுவரோவிரைதேடிமனைத்
தோட்டம்புகுநரியஞ்சாமனெஞ்சந்துணிந்துசந்தைக்
கூட்டந்தனில்வருமோவச்சுதாநந்த கோவிந்தனே.         (16)

நாய்வாலைக் குணக்கெடுக்க ஆராலாகும்?

இணக்காதிரார்வல்லிரும்பொடிந்தால்வைத்திருதலையும்
வணக்காதிரார்வின்னிமிர்ந்ததென்றாற்புல்லர்மாறுபடும்
பிணக்கார்தடுப்பவர்நாய்வாலைநீளப்பிடித்திழுத்துக்
குணக்காரெடுக்கவல்லாரச்சுதாநந்தகோவிந்தனே.         (17)

குளப்படி நீரிறைத்தாற் கடற்பள்ளம் நிரம்புமா?

இறைமுறையேழைக்குடிகளைநோவச்செய்தேபசும்பொன்
அறையிடும்பொக்கசந்தானிரம்பாதரசர்க்கியல்போ
நிறைகடற்கென்னகுறைவோகுளப்படி நீரிறைத்துக்
குறைவறச்செய்பவராரச்சுதாநந்த கோவிந்தனே.         (18 )

எருதீன்றதென்றும் கொட்டாயிற் கட்டென்பவருண்டு.

கிட்டியொருவன் றலைக்குளிரத்னங்கிளைத்ததென்றால்
வெட்டிவெளிசெய்யவேணுமென்றேவிரும்பார்பெரியோர்
எட்டினைமாத்திரம்புத்தியில்லாரெருதின்றதென்றாற்
கொட்டிலுட்கட்டுமென்பாரச்சுதாநந்த கோவிந்தனே.         (19)

முத்து குலத்தார் பெருமைப்படும், மூடர் குலத்தாற் பெருமைப்படார்.

சலத்தால்விளைகின்றசிப்பியின்வாய்முத்தைத்தற்குலந்தான்
சொலத்தானெவருமிகழார்விரும்பித் தொகுத்தணிவார்
அலத்தாமதவறிவீனர் செனனமதாகியநற்
குலத்தாற்பெருமைபெறாரச்சுதாநந்தகோவிந்தனே.         (20)

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தது போலாம்.

களிப்பாற்றுரைகளறிவீனரைக்கைப்பிடித்துச்செல்வம்
அளிப்பாரெனிற்பின்னகைக்கிடமாமென்றுமாவதில்லை
வெளிப்பாற்றிரிகின்றநாயானதைநடுவீட்டுக்குள்ளே
குளிப்பாட்டிவைத்ததொப்பாமச்சு தாநந்தகோளிந்தனே.         (21)

ஆண்டி கையில் அகப்பட்ட குரங்காய் அலைவார்.

வரங்காதலிக்குந்தவ முடையோர்வங்கணமெவர்க்கும்
உரங்காணுநன்மைபெறலாங்கயவருடன் கலந்தால்
அரங்காஞ்சபையிற்சடையாண்டிகையிலகப்பட்டதோர்
குரங்காயலைவர்கண்டாயச்சுதாநந்த கோவிந்தனே.         (22 )

வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?

செம்பிடுமேனியுருக்கொண்டதெய்வத்தைத்தெண்டமிட்டு
நம்பிடவேண்டும் பதம் பெறலா நம்பினோர்க்குதவா
வம்பிடும்லோபத்துரைத்தனப்பேய்களை மன்ன்ரென்று
கும்பிடவுந்தகுமோவச்சு தாநந்தகோவிந்தனே.         (23)

குருவிக்கூட்டைக் கோலாலே குலைப்பார்களா?

சோட்டைப்புனைந்துரண்வேட்டையாடுந்துரைகடங்கள்
நாட்டைப்புரப்பதுஞாயங்கெடுப்பதுஞாயமன்றே
வீட்டுக்குணம்பியடைக்கலச்சிட்டுவெண்முட்டையிடும்
கூட்டைக்குலைப்பர்களோவச்சு தாநந்தகோவிந்தனே.         (24)

பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்கவேண்டுமா?

சடத்துக்கழகென்பர்தான்கற்றகல்விதகும தல்லால்
இடத்தக்கபூஷணந்தானணியாவிடிலேசுவரோ
புடத்துட்படத்தங்கக்கட்டியுருக்கிப்புதுக்கியபொற்
குடத்துக்குப்பொட்டழகேனச்சுதாநந்த கோவிந்தனே.         (25)

படியாள்வார் நீதிதக்பிற் குடியாரிருப்பார் தவலயத்தில்?

படியாளுமன்னர்மனுநீதிதப்பும்படி நடந்தால்
விடியாதுநாடுமழைபொழியாதுவிளைவுகுன்றும்
பொடியாம்பசும் புன்னெருப்பெழக்காயுமப்பூமிதனிற்
குடியாரிருக்கவல்லாரச்சு தாநந்தகோவிந்தனே.         (26)

கோவுக்கழகு செங்கோல்

பாவுக்கழகுபொருட்சுவைசொற்சுவை பன்மலர்ப்பூங்
காவுக்கழகுமயிலுங்குயிலுங்கண்டாய்கமலப்
பூவுக்கழகுமணமுந்திருவும்புவிபுரக்கும்
கோவுக்கழகுசெங்கோலச்சு தாநந்தகோவிந்தனே.         (27 )

கட்டுப்பட்டாலும் மோதிரக்கையாற் கட்டுப்பட வேண்டும்.

மட்டுப்படாதவ நுமாரசோகவனமழித்துக்,
கட்டுப்பட்டாரிந்த்ரசித்தன்கையாற்கர்த்தன்காரியத்தால்,
முட்டுப்பட்டாலுஞ் செயங்கொள்வராகிற்பொன்மோதிரக்கைக்
குட்டுப்பட்டாற்குறைவோவச்சுதாநந்த கோவிந்தனே.         (28)

திக்குவிசயங் கொள்பவனுக்கும் செயாபசெயகாலந் தெரியாது.

இயல்புடன்றிக்குவிசயங்கொள் வேந்தரென்றாலும்பய்க்
செயம் வருங்காலந்தெரிபவரார் திருவந்திறமும்
புயபெலமுன்னின்றவோவிக்ரமாதித்தன் போர்பொரப்போ
குயவன்கையான்மடிந்தானச்சு தானந்தகோவிந்தனே.         (29)

பாலைப் புகட்டுவாள் பாக்கியத்தையும் புகட்டுவாளோ?

சலிக்கக்கணக்கென்னதான்பெற்றபிள்ளைக்குத்தாய்முலைப்பால்
ஒலிக்கக்கனிந்தழவூட்டிவளர்ப்பள்பின்னூழ்வினையால்
பலிக்குட்படிலன்னையென்செய்வள்பாக்கியம் பாலடையில்
குலுக்கிப்புகட்டுவளோவச்சு தாநந்தகோவிந்தனே.         (30)

எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமைவிடார்.

சொல்லைப்புரட்டுங்கொடுங்கோன்மணியத்தர்தோஷமெண்ணார்
கல்லற்படுத்திக்குடிகளை நோவக்கணக்கெழுதி
எல்லைக்குளாநிலப் பாழ்படினும் பிடித்தேருழுத
கொல்லைக்கடமைவிடாரச்சுதாநந்த கோவிந்தனே.         (31)

கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றே விடியும் ?

இட்டுநோற்றுப்பிறந்தாற்செல்வமுற்றுமிடாதவிதி
பட்டுநூற்றுக்கிருந்தேயுழைத்தாலும்பவிஷெய்துமோ
விட்டுநோக்குங்கப்பலோடியுமேவிடியாமளையிற்
கொட்டைநூற்றோவிடியுமச்சுதாநந்த கோவிந்தனே.         (32)

மானுக் கொரு புள்ளி யேறினாலென்ன குறைந்தாலென்ன?

நிறைந்தேவருங்கப்பலாயிரந்தம்மினின்றோர்கப்பல் தான்,
மறைந்தேதிகைதப்பிற் றாழ்வென்றெண்ணார்வர்த்தகர்கள்வனத்,
துறைந்தேவளர்புள்ளிமானுக்குடம்பினிலோர்புள்ளி
குறைந்தேதல்லான்மிகுந்தேதச்சுதாநந்தகோ விந்தனே.         (33)

கங்கா நதியில் முழகினாலும் காக்கை அன்னம் ஆமா?

ஒளித்தாலுந்துர்க்குணம்போமோகுருவுபதேசமந்த்ரம்
அளித்தாலும்புல்லர்நல்லோராவரோசென்றடுத்தடுத்துக்
களித்தாயிரந்தரங்காகமுழுகிக்கங்காநதியிற்
குளித்தாலுமன்னமொவ்வாதச்சுதாநந்த கோவிந்தனே.         (34)

கொல்லை பாழானாலும் குருவிக்கிரை பஞ்சமா?

தருவிற்பனமன்னர்கையிளைத்தாலென்ன தம்மைநம்பி
மருவித்திரியுஞ்சனங்கள் பசிகொண்டுவாட்டமெய்தார்
பருவக்குறிப்பின்றிச்சாவிபட்டாலும்பயிர்க்கொல்லையிற்
குருவிக்கிரைபஞ்சமோவச்சு தாநந்த கோவிந்தனே.         (35 )

இராவுத்தனைத் தள்ளின குதிரை தழியும் பறித்ததுபோல.

மொழியின்படி நடவாடன்கணவனை மோசஞ்செய்து
பழியுஞ்சுமக்கும்படி செய்தனம்பப்படர்விசிகம்
பொழியுஞ்சமரிடைராவுத்தனைத் தள்ளிப்போட்டசுவம்
குழியும்பறித்ததொப்பாமச்சுதாநந்த கோவிந்தனே.         (36)

கொடிக்குக் காய் கனமா?

அடித்தமுதூட்டிவளர்த்திடுந்தாய்தன்னகமெலிவாய்
மிடித்திடினும்பெற்றபிள்ளைகளைக்கைவிடநினையாள்
பொடித்தெழும்பிஞ்சு திரளாயும்பாரம் பொறுக்கும்படர்
கொடிக்கென்னகாய்கன மோவச்சுதாநந்தகோவிந்தனே.         (37)

நெருப்பு சிறிதென்று மூன்றனையில் முடியலாமா?

தண்டாரணியும்மரசிளம்பாலகர் தம்மையெதிர்
கண்டாலிளையரென்றெண்ணவொண்ணாது கண்டாரெவரும்
அண்டாநெருப்பைச்சிறிதென்று முன்றானையின் முடிந்து
கொண்டாலது கடுங்காணச்சுதாநந்தகோவிந்தனே         (38)

மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்கவேண்டுமா?

பிஞ்சுப்பருவமுலைவிலைப்பெண்கள்பெறும்பொருட்கா
வஞ்சிக்கும் வித்தைகுலவித்தைதானேவருமவர்க்கு
விஞ்சுக்குளப்புனனீச்சுப்பழக்குவித்தாரெவர்மீன்
குஞ்சுக்குத்தற்குணங்காணச்சுதாநந்தகோவிந்தனே.         (39)

நீஞ்ச வறியாதவனை ஆறிழத்துக் கொண்டுபோம்.

விடுபோர்முகத்தில் நகைப்பாரெனச்சுத்தவீரர்சண்டை
இடுபோதொளித்துப்பிழையாமலாண்மையிலார்மதிகெட்
டடுபோரினிற்புகினீஞ்சறியான்றனையாறிழுத்துக்
கொடுபோனவாறொக்குமேயச்சுதாநந்தகோவிந்தனே.         (40)

முற்ற நனைந்தார்க்குக் குளிரில்லை.

தளிரேயனைய மெய்ப்பெண்டீர்கணவன்றனையிகழ்ந்து
வெளியே புறப்பட்டுக்கற்பழிந்தாற்பின்னை வெட்கமென்னை
நளிரேதரும்புனறோய்ந்துடம்பெங்குநனைந்தவர்க்குக்
குளிரேதப்பாலென்பரேயச்சுதாநந்தகோவிந்தனே.         (41)

நூற்றுக் கிருப்பலர்க் கைம்பதிற் சாவில்லை நூற்றுக் கிருந்தாலும் கூற்றுக் கீரை

சோற்றுக்கடன் கொண்டிருக்குஞ்சரீரந்தொலையுநில்லா
தாற்றுப்புனலிற்குமிழியைப் போலென்றழுங்கிலென்னாம்
நூற்றுக்கிருப்பவர்க்கைம்பதிற்சாவில்லை நூற்றுக்கப்பால்
கூற்றுக்கிரையென்பரேயச்சு தாந்தகோவிந்தனே.         (42)

நன்றி செய்த கீரியைக் கொன்ற பழங் கதைபோல்.

நன்றி செய்தாரென்றறியாமற்றீங்குநமக்குச் செய்தா
ரென்றுசெருக்கவொண்ணாது குழந்தையிளந்தசையைத்
தின்றெதிர்வந்தது கீரியென்றந்தணன்றேவி முன்னாள்
கொன்றபழங்கதையாமச்சு தாநந்தகோவிந்தனே.         (43)

கரையான் புற்றில் அரவங் குடிகொண்டதுபோல்

அடிகொண் டளந்திட்டுக் கோட்டை யாண்செய்தென் னாண்மையில்லார்,
கெடிகொண்ட வேந்தர்கைக் கொள்வா ரவரைப்பின் கிட்டவொட்டார்,
படிகொண்ட மண்ணிற் கரையா னிடும் புற்றிற் பாம்புவந்து,
குடிகொண் டிருப்பது வாமச்சு தாநந்த கோவிந்தனே.         (44)

பன்றிக்குட்டிக் கொருசந்தியேன்?

தெட்டிப்பறிக்கின்ற வேசியர் வீட்டிற்றிரிந்தலையு
மட்டிக்குக்குலாமருக்காசாரமேன்றெய்வவந்தனையேன்
பட்டிக்கொதுங்கியடிபடு மூர்க்கரும்பன்றியிட்ட
குட்டிக்கொருசந்தியேனச்சு தாநந்த கோவிந்தனே.         (45)

அற்பருக்குப் பவிஷவந்தால் அர்த்தராத்திரியிலுங் குடைபிடிக்கச் சொல்வார்.

நடைகற்கு முன்னங்கொடைகற்ற பேர்க்குநடக்கைவந்தாற்
புடையுற்றெவருந்து திக்கவணங்கிப்புகழ் பெறுவார்
அடையற்பருக்குப்பவிஷுவந்தாலர்த்தராத்ரியினுங்
குடையைப் பிடியென்பர்காணச்சு தாநந்தகோவிந்தனே.         (46)

பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டவன் பேயன்.

கண்டனுக்கேற்றவளாக்குலமானுஷிக்கற்பினளாத்
தெண்டனைக்கஞ்சிநடப்பவளாமணஞ் செய்வதல்லாற்
பிண்ட முந்துண்டமுநேர்ந்தேபிடாரியைப்பெண்டுவைத்துக்
கொண்டவன் பேபனன் றோவச்சு தாநந்தகோவிந்தனே.         (47)

கொழுமீதி கொள்ளும் குடிச் செல்வமே செல்வம்.

பொடிச்செல்வம் யாசகச்செல்வம் கொடுமைப் பொருட்செல்வமோர்,
நொடிச்செல்வ மீதலில் லாச்செல்வம் விண்செல்வ நூற்றுக்குமே,
மிடிச்செல்வ மின்றிச் சுகசீவி யாக்கொழு மீதிகொள்ளும்,
குடிச்செல்வ மேசெல்வங் காணச்சு தாநந்த கோவிந்தனே.         (48)

கசக்கி முகாலாகாது.

வண்டானதுமெள்ளப்பூமணங்கொள்ளும்வகையதுபோற்
பெண்டாசையுள்ளவர்காமசம்போகம் பெறுவதல்லாற்
கண்டாதரவின்மலரெடுத்தேகசக்கிம்முகர்ந்து
கொண்டான் மணந்தரு மோவச்சு தாநந்த கோவிந்தனே.         (49)

தானே கனியாத காய் தடி கொண்டடித்தாற் கனியாது.

அண்டினர்க்கீபவர்தாமோதருவதல்லா திரப்போர்
தெண்டனைக்காகக் கொடுப்பதுண்டோசெழுங்காய்மரத்திற்
கண்டிடிற்றானேகனியாத முன்கனியத்தடிகைக்
கொண்டடித்தாற்கனியாதச்சுதாநந்தகோவிந்தனே.         (50)

கிளியை வளர்த்துப் பூனைகையிற் கொடுப்பாருண்டா?

விடுப்பார் பிழைக்கும் வழியினல்லோரன்றி வேறுபடக்
கெடுப்பார்வசஞ்செய்வரோ நம்பினோரைக்கிளிப்பிள்ளையை
எடுப்பார்கையாரவளர்ப்பதல்லாலெட்டிப் பூனைகையிற்
கொடுப்பாருலகிலுண்டோவச்சுதாநந்த கோவிந்தனே.         (51)

எய்தவனிருக்க அம்பை நோகலாமா?

உண்டானகுற்றஞ்சகியாமல்வேந்தனுத்தாரமிட்டால்,
திண்டாடத்தெண்டனைசெய்வார்க்குக்குற்றமுந்தெண்டமுமோ,
அண்டாமல் விற்பிடித்தெய்தோனிருக்கக்கண்டம்பைநொந்து,
கொண்டாலவ்வம் பென்செயுமச்சுதாநந்தகோவிந்தனே.         (52)

ஒரு புத்திரனும் குருபுத்திரனாகான்.

வருபுத்ரவாஞ்சையிற்றெய்வத்தை வாழ்த்தி வணங்கிவரந்
தருபுத்ரனைப் பெறிற்காவடிகட்டித்தன்றாய்தந்தையை
ஒருபுத்ரனேனுஞ்சுமந்ததுண்டோவுலகம் புகழக்
குருபுத்ரனே சுமந்தானச்சுதாநந்த கோவிந்தனே.         (53)

கொக்கரிப்பார்க்கா சொர்க்கம் தீயில் குதிப்பவர்க் கல்லவோ சொர்க்கம்.

கதிப்பா டைத்துங்குதிரையும் யானையுங் காற்பலமும்,
மதிப்பா லிகல்சுத்த வீரர்க்குச் சொர்க்கம் வருவது போல்,
துதிப்பார்க்குங் கொக்கரிப் பார்க்கு முண் டோ துணிந் தேநெருப்பிற்,
குதிப்பா ளொருத்திக்கன் றோவச்சு தாநந்த கோவிந்தனே.         (54)

பரத்தைக்குக் கொடுக்கும் பணயத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலங்கெடுவாளா?

மிடியிற்கொடுமைக்கிரப்பதல்லாற்குலமேன்மைகுன்றப்
படியிற்பசும்பொன்றரிற்கொள்வரோபரிவாற் பெரியோர்
கொடிய பரத்தையர்க்குக் கொடுக்கும் பணயங்கொளென்றாற்
குடியிற்பெண் வாங்குவளோவச்சுதாநந்தகோவிந்தனே.         (55)

கொடுங்கோல் அரசர்க்கழ்க் குடியிருக்கலாகாது.

திறமுஞ்செங்கோலுமுளமன்னர் நாட்டிற்சிந்தாகுலந் தீர்ந்
துறவுங்குடிசதமென்றிருப்பார்பயிரிட்டுண்பர்காண்
அறவுங் கொடுமை செயுமன்னர்சீமைக்குள்ளாமிருப்புக்
குறவன்குடியிருப்பேயச்சுதாநந்தகோவிந்தனே.         (56)

நல்லவர் கண்ணிப்பட்ட நாகழஞ் சாகாது.

பல்லால்விடங்கக்குதாகந் திகைத்துப் பயந்தொதுங்கி
நல்லார் கண்காணவந்தா லுங்கொல்லார் கண்ணலார்வரினும்
பொல்லாதவரிவரென்னார் மனம் பொறுத்தேயவரைக்
கொல்லாமற்றாங்குவர்காணச்சுதாநந்தகோவிந்தனே.         (57)

புலையனுக்கு வாக்கு சுத்தியும் ஆனையுமில்லை.

செல்வாய்ப் படும்பனை யேட்டெழு தாமறைச் செம் மொழி போற்,
சொல்வார் சொ னம்பத் தகுவதல் லாமற் சொல்லைப்புரட்டும்,
வல்வாய்ப் புலையர்சொ னம்புவ ரோ நித மாடு தின்னக்,
கொல்வார்க்கொ ராணையுண் டோவச்சு தாநந்த கோவிந்தனே.         (58)

பளங்காட்டி லிருந்து கொண்டு பாலைக்குடித்தாலும் கள்ளென்பார்கள்.

மிடித்தாலுமெத்தப்பசித்தாலுநல்லவர் மேரை தப்பி போய்க்
வடித்தாயிரந்தரங்கட்குடிப்பார்மனைவாசல் புகார்
படித்தார்கள்கள்ளிறக்கும்பனங்காட்டினிற்பால் கொண்டு
குடித்தாலுங்கள்ளென்பரேயச்சுதாநந்தகோவிந்தனே.         (59)

பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னது. கொள்ளி கொண்டு தலை சொறிந்து கொள்ளார்.

தெள்ளார முதக்கடற்கரையெட்டிச்செழுங்கனியைப்
புள்ளான துபசி கூர்ந்தாலுமேபுசியா துகண்டாய்
தள்ளாது கொள்ளிகொண்டே தினவென்று தலை சொறிந்து
கொள்ளாரெவருஞ்சொன்னேனச்சு தாநந்தகோவிந்தனே.         (60)

பூவிற்குங் கடையிலே புல்லு விற்பதுபோல

தேறியமானுஷ்ய முள்ளோர் பெருமைசிறுமைப்பட
மாறியவீனவிருத்திக்குள்ளாய் கன்று வாழ்வரென்றால்.
வீறியபூமலர்விற்குங்கடையிற் புல்விற்கவிலை
கூறியவாறொக்கு மேயச்சு தாநந்தகோவிந்தனே.         (61)

தங்குமஞ் சுமந்த கழுதை மணமறியாது.

தமத்தினொளி செய்யும் பொற்பூஷணங்கடலைச்சுமையாய்ச்
சுமத்தலுமாதர்க்கழகோகணவற்றொழாதிருந்தால்
கமத்திற்பொதிச்சுமையாய்ச்சுமந்தாலென்கழுதையுங்குங்
குமத்தின்மணங்கொள்ளுமோவச்சு தாநந்தகோவிந்தனே.        (62)

பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?

நிறையாயரசன்றயவு செய்தாற்கலி நீங்கியிளம்
பிறையாவளர்ந்து நிரம்பு நல்வாழ்வு பிரியப்பட்டு
புறையால் விளங்கும் பிர்ம்மாநினைந்தால்வர்த்திக்கும் வயது
குறையாதெனச்சொல்வரேயச்சுதாநந்த கோவிந்தனே.         (63)

தம்மினத் தம்மைத் தாங்கும். முலை சரிந்தால் வயிறு தாங்கும்.

தம்மினமானவர்கையிளைத்தேசரணென்றடைந்தால்
வம்மினென்றாதரிக்கத்தகுந்தள்ளவழக்கல்லவே
விம்முமென் கொங்கைசரிந்தேவயிற்றில்விழியது தாங்
கும்மெனச்சொல்லுவரேயச்சு தாநந்தகோவிந்தனே.         (64)

கழுதைக்கு விரிகட்டினதினாலே குதிரையாமா?

சதிசெய்யு நீலியைப்பெண்ணென்று கொள்ளிற் தனது கெடு மதிய
துவாமவண்மேற்குறையில்லவையாளிவிட்டால்
கதிபெறவேநடவாவிரி கட்டுங்கழுதையைநற்
குதிரையென்றேற்றங்கொள்ளாரச்சுதாநந்தகோவிந்தனே.         (65)

ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்.

பெண்டகுமில்லவள்வந்தமுகுர்த்தம் பெருகுஞ்செல்வம்
உண்டவள்வாழுமனையிலெந்தாளு முடுக்கை பொற்பூண்
பண்டமிலையெனிற்பானைபிடித்தவள் பாக்கியமேர்
கொண்டவனென்ன செய்வானச்சுதாநந்தகோவிந்தனே.         (66)

உடும்பு போனாலும் போகட்டும் கையைவிட்டாற் போதும்.

அடும்பழிகாரனை வெட்டாமல் மன்னித்தனுப்பிவிட்டால்
தொடும்பழிபேசவழக்குமுண்டோதொடர்ந்தேபிடித்த
உடும்பது போயினும் போகட்டுங்கைவிடென்றுண்மை சொல்வோர்
கொடும் பழி யேன்சுமப்பாரச்சுதாநந்த கோவிந்தனே.         (67)

கரும்பு ருசியென்று வேரோடோ பிடுங்கலாகாது.

வள்ளலெனத்தருந்தாதாவென்றே தினம்வந்துவந்து
கள்ளமனத்திற்பொருள்கேட்கொணாது கண்டாய் திரளா
யுள்ள கரும்பு தித்திப்பெனவேருடனேபிடுங்கிக்
கொள்ள நினைப்பர்களோவச்சுதாநந்தகோவிந்தனே.         (68 )

அழிந்த நந்தவனத்திலே அசுவ மேய்த்தென்ன கழதை மேய்ந்தென்ன?

விதி முறை நீதி செங்கோல் கெடத்தேசமெலிந்தலைய
மதிலரண் செய்தலெவர்க்காகநந்தவனமழிந்தால்
எதிரெதிரோடிக்கழுதைகள் மேயிலென்னேற்றந்தரும்
குதிரைகள் மேய்ந்திடிலென்னச்சுதாநந்தகோவிந்தனே.         (69)

ஆடு கொழுக்கிறது இடையனுக்கு லாபம்.

செழித்திடுஞ்செல்விபிறந்தகம் போய்த்திரும்பாமையினால்
கழுத்திடு தாலிகையாற்கட்டினோன்பலகாலும் வந்தே பாகாது.
அழைத்திடக்கூட்டிவிடாரேலிடையனுக்காடு நன்றாய்க்
கொழுத்தலிலாபமன்றோவச்சு தாநந்த கோவிந்தனே.         (70)

பன்றியின் பின்போன பசுக்கன்றும் மலந் தின்னும்.

பன்றியுடனுறவாகப்பழகினும்பாற்பசுவின்
கன்று மலத்தைப்புசிக்குமென்பாரக்கதையதுபோல
சென்று றவாடிக்கயவர்பின்னே திரிந்தாலறிவு
குன்றும்வசைக்கிடமாமச்சு தாநந்தகோவிந்தனே.         (71)

கொள்ளைக்குப் போனாலுங் கூட்டாகாது.

தேட்டாளர் தம்மிச்சையாய்த்தேடுவர் பொருள்தேடும்வழி
காட்டாரெவர்க்கும்பின் வில்லங்கமாகுமெனக்கதவு
பூட்டாத பொக்கசவீட்டினிற் கொள்ளைக்குப் போய்ப்புகினும்
கூட்டாகுமோவென்பரேயச்சுதாநந்தகோவிந்தனே.         (72)

ஆனை கட்டச் சங்கிலி தானே யெடுத்துக் கொடுக்கும்.
தொடுத்திடுமூழ்வினைபோகாதெவர்க்குந்தொடருமுற்றும்
இடுக்கண் வருமது தன்னால் வருங்குற்றமென்பர் தன்னைத்
தடுத்துத்தன்காலிலிடநிகளந்தனைத்தானெடுத்துக்
கொடுத்திடும்யானைகண்டாயச்சு தாநந்தகோவிந்தனே.        (73)

தளத்தைக் கலக்கிப் பருந்துக் கிரையிட்டதுபோல்.

தளத்தைக்கண்டஞ்சிக்குறுமன்னர்கப்பந்தரக்கொள்வர் போர்க்,
களத்துட்படவவர் சீமையை வேந்தர்கைக்கொண் டழித்தல்,
விளர்த்திட்டமீன்களைக்காகம்பருந்துவிருந்துணவே,
குளத்தைக்கலக்கிய தாமச்சு தாநந்தகோவிந்தனே.         (74)

தோட்டிபோ லுழைக்கவேண்டும் துரைபோற் சுகிக்கவேண்டும்.

தோட்டியைப் போலுழைப்பார் பொருடேடிச்சுகிப்பதல்லாற்
பூட்டியறைக்குட்புதைத்துவைத்தாற்புசியாரெவர்க்கோ
கட்டிடத்தேன்பலபூவினிற் சென்று சென்றீயெடுத்துக்
கூட்டியிழப்பது வாமச்சுதாநந்தகோவிந்தனே.         (75)

துங்கனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்.

சற்சனராயுறவுற்றாரைப் பேணித்தவத்தியல்பாய்
நற்சனனங்களெடுத்தாரைமெச்சுவர்நாணமில்லாத்
துற்சனப்பிள்ளைகட்கூரார் சொல்வார் புத்தியென்றுல கோர்
குற்சிதஞ்சொல்வர்மெய்யேயச்சு தாநந்தகோவிந்தனே.         (76)

வயிற்றைப் பீறிக் காட்டினாலும் மகேந்திரசாலம் என்பார்.

தேறியநெஞ்சிற்பரிசுத்தனென்று தெளிந்திடினும்
மாறியவன்கண்ணருண்மை கொள்ளாரொருவன்வயிற்றைப்
பீறிமுன் காட்டினுமாகேந்திரசாலப்பிரமையென்றே
கூறியலைப்பர்கள் காணச்சு தாநந்தகோவிந்தனே.         (77)

கோழி கூப்பிட்டு விடிகிறபொழுது தக்கல் தரைத்தா விடியும்?

நிரைத்தோனியிட்ட திரைப்பாண்டின் மேலிட்டநித்ரைகொளுந்
தரைத்தோகையர்வந்தெழுப்புந்தபனன் சமயமறிந்
திரைத்தோவெனக்குக் கிடங்கூப்பிடாமலிரவிடைநாய்
குரைத்தோ விடியுமென்பாரச்சுதாநந்தகோவிந்தனே.         (78)

உயர உயாப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

தருவையொப்பாமைந்தருவென்பரோவுத்தம் புருஷன்
உருவையொப்பாருத்தமராவரோகுணமொப்பதல்லால்
கருவியொப்பாயுயாப்பறந்தாலுங்கருடனுக்கூர்க்
குருவியொப்பாமென்பரோவச்சு தாநந்த கோவிந்தனே.         (79)

ஐங்காதம் போனாலும் அகப்பை விலை அரைக்காசுதான்.

ஐங்காதம் போயுமகப்பைவிலையரைக்காசென்பர்காண்
எங்காகிலும் பணமிட்டுக்கொள்ளாரறிவீனர் சென்றால்
சிங்காரமான பொற்பூஷணமாடை தியாகம் பெறார்
கொங்கார் துள பத்தனேயச்சுதாநந்தகோவிந்தனே.         (80)

மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர் ?

மழைக்குத் தண்ணீர்மொண்டுவார்ப்பவராரிந்தவையகத் தோர்,
பிழைக்கப் பொழிவது தற்குணங்காண்பெறும் பேற் றினுக்காய்,
அழைக்கக்கசேந்திரன் மூலமென்றன்ற தினன்பி னுளம்,
குழைக்கக்கராவரிந்தாயச்சுதாநந்தகோவிந்தனே.         (81)

நரிவால் பற்றி நதி கடக்கலாகாது.

திண்டாட வெட்டும் பண்களத்திற்செயங்கொள்ளும் வலி
கண்டாலெதிர்நிற்பர்கூளப்படையைக்கைக்கொண்டு புகார்
அண்டாத வெள்ளத்திலோடங்கொளாமலடு நரிவால்
கொண்டாறு தாண்டுவரோவச்சுதாநந்தகோவிந்தனே         (82)

குடியிருக்கிற வீட்டிலே கொள்ளி வைத்தாற்போல.

நள்ளிருட்போதில்விளக்கிட்டதாநல்லவரிருந்தால்
தெள்ளியசீர்பெறும் வீட்டுக்கழகென்பர்தீம்பர்வந்தால்
தள்ளிவிடாமற்குடிவைத்துக்கொள்ளிற்றமதிறப்பிற்
கொள்ளிவைத்துக்கொண்டதாமச்சு தாநந்தகோவிந்தனே.         (83)

தலைவன் நிற்கத் தண்டு நிற்கும். தலைவன் மயங்கச் சர்வம் மயங்கும்.

பொரக்கத்திகட்டிக்கொண்டேதுரையானவன் போர்முகத்தில்
வரக்கொக்கரித்தெழுஞ்சேனையஞ்சாது வரும் விசயம்
அரக்கர்க்கிராமனெதிர்நிற்கலங்கையழித்ததன்று
குரக்குப் படையல்லவோவச்சுதாநந்த கோவிந்தனே.         (84)

குழந்தையுந் தெய்வழங் கொண்டாடின இடத்திலே.

அண்டாரெவருங்குணவீனர் செல்வர்களாயிருந்தும்
கண்டாதரவினழைத்தால் வருவர்கரிசினம
துண்டாய்க்குழந்தையுந்தெய்வமுதித்தமுறவு செய்து
கொண்டாடமுன்னிற்குமேயச்சுதாநந்தகோவிந்தனே.         (85)

கோணக்கொம்பேறி யென்ன குதிரையேறியென்ன,
வீணர்க்குங் கீர்த்திக்கும் மெத்தவுந் தூரம்.

பூணத்தகும் புகழ்ப்பூஷணங்கொள்ளப் பொருளுதவா
வீணர்க்குங்கீர்த்திக்குமெத்தவுந்தூரமிகுஞ் செல்வராய்க்
காணத்தையுண் ணுங்கு திரையிலேறிற்கவிக்குலம் போற்
கோணக்கொம்பேறிலென்னாமச்சு தாநந்தகோவிந்தனே.         (86)

பன்றிக்குட்டி பருத்த யானைக்குட்டியாமா ?

வெஞ்சரக்குப்பை தொடுத்தெய்யவே வெற்றிராகவன்கைச்
செஞ்சரத்துக்கிணையாமென்பரோவிட்டதீனிதின்று
சஞ்சரிக்கும் பன்றிக்குட்டிகடாமதத்தாரைபொங்கும்
குஞ்சரக்கன்றுக்கொவ்வாவச்சுதாநந்தகோவிந்தனே.         (87)

தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றற் பாவமில்லை.

ஆறியவெஞ்சினத்தீமுளச்செய்யினரசர் கொல்வார்
தேறியநெஞ்சன்றனைக்கொல்லவந்தசினப்பசுவை
மாறிடக்கொன்றிடிற்பாவமிலையென் றுவையகத்தோர்
கூறிய வார்த்தை பொய்யோவச்சுதாநந்தகோவிந்தனே.         (88)

செம்பாலடித்த காசுங் கொடார்.

வம்பாவசைக்கவி நூறு சொன்னாலும் வைதாலுமெண்ணார்
தம்பாடுசொல்லிவழிவிடுவார்கடனப்புலையர்
செம்பாகடித்திடுங்காசுங்கொடார் செய்யரோகு திரைக்
கொம்பாகிலுங் கொடுப்பாரச்சுதாநந்தகோவிந்தனே.         (89)

பொருளும் போகழங் கூடவரா.

சூடவராதிட்டபொற்பூஷணங்கடுரையெனக்கொண்
டாடவராதுசதுரங்கசேனையுமாண்மையும் போம்
ஓடவராதெமதூதர்வந்தாலுள்ள ரொக்கமுந்தன்
கூடவராதென்றெண்ணாரச்சு தாநந்த கோவிந்தனே.         (90)

இயல்பாய் மணமில்லாத சந்தனக்கட்டை யிழைத்தாலுங் குழைத்தாலு மணக்காது.

அழைத்தாயிரந்தரம் புத்தி சொன்னாலடங்காதவம்பர்
தழைத்தாலுமென்னவர் கெட்டாலுமென்கந்தமற்றகுற்
டிழைத்தாயிரந்தரஞ்சாணையிற்சுற்றியெடுத்து நன்னீர்க்
குழைத்தாலும் வாசந்தராதச்சுதாநந்தகோவிந்தனே.         (91)

கூடியிருந்து குலாவவார் வீட்டில் ஓடியுண்ணுங் கூழுமீனிதே.

சூழாதுவண்டினஞ்செண்பகப்பூவைத்தொடாதுவெறும்
பாழானநத்தத்தெருக்கீன்றபூமணம்பற்றிப்புல்லும்
தாழாதுநட்பினுறவுகொண்டாடத்தக்கார்மனையில்
கூழாகிலுமினிதேயச்சுதாநந்தகோவிந்தனே.         (92)

ஆயிரம் பசுக்களி லொருபசு வுதைத்துக் கொண்டால் என்ன?

தண்டாதருள்செயுந்தாதாக்களிலொருத்தன் மறுத்தல்
கண்டாலதுகொண்டுதாழ்வல்லவேகலியாலிரப்போர்க்
குண்டானபால்கறக்கும்பசுவாயிரத்தொன்றுதைத்துக்
கொண்டாற்குறையென்பரோவச்சு தாநந்தகோவிந்தனே.         (93)

இறந்தவன் பிள்ளை இருந்தவ னடைக்கலம்

இடைப்படச்செத்தவன் பிள்ளை நன்றாகவிருந்தவன்கை
அடைக்கலமென் றுலகஞ்சொலுமேயது போற்றமியேன்
மிடைப்படப்பார்த்திருந்தாற்றகுமோபசுமேய்த்தவந்தாள்
குடைக்குவடேந்தினையேயச்சு தாநந்தகோவிந்தனே.         (94)

கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

வணங்காருன்பாதங்கள்வாழ்த்தாருன்னாமங்கள்வாழ்த் திரித்தம்,
இணங்காரறிவற்றபுல்லர்நல்லோர்தம்மியற்கைகுன்றார்,
கணங்காணுங்கட்டிக்கரும்புதின்பார்க்குக்கசப்பது வாய்க் ,
குணங்காண்கரும்பதென்னாரச்சு தாநந்தகோவிந்தனே .         (95)

நடந்தார்க்கு நாடெங்குழறவு, கிடந்தார்க்குப் பாயேயுறவு.

நடந்தார்க்குநாடெங்கு நல்லுறவாகுநடையொழிந்து
கிடந்தார்க்குப்பாயலுறவன்றியென்னென்று கேட்பவரார்
இடந்தாவெனக்குன்பதமேகதிசிற்றிடைச்சியர்பாற்
குடந்தாவியமுகுந்தாவச்சுதாநந்தகோவிந்தனே .         (96)

கரும்பு தின்னக் கூலி கொடுப்பார்களா?

வாலியைக் கொன்று சுக்ரீவனைப்பட்டத்தில் வைத்து முந்நீர்
வேலி கடந்திலங்கை வீட்ணனைவிளங்கவைத்தாய்
காலியை மேய்த்துள்ள பால் குடித்தாய் நற்கரும்பு தின்னக்
கூலி கொடுப்பவராரச்சுதாநந்தகோவிந்தனே.         (97)

வல்லார் இளைத்தால் வந்திளைப்பாறு மென்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.

வல்லாரமர் செய்துகையிளைத்தாலவர்வம்மினெனச்
சொல்லா திராரிளைப்பாறுமென்பார்சுத்தவீரர்படை
எல்லாமிழந்துநிராயுதனாய்நின்றராவணனைக்
கொல்லாது விட்டனையேயச்சு தாநந்தகோவிந்தனே.         (98)

வஞ்சகர்க்கேத்தனை வாஞ்சையாய் நடக்கினும் நெஞ்சகந்தன்னில் நேசங் கொள்ளார்.

நெஞ்சாரவஞ்சகர்க்கெத்தனை செய்யினுநேசங்கொள்ளார்
அஞ்சாயன் மென்குயின் முட்டையைத் தன் முட்டையாமென்றெண்ணி
எஞ்சாதடைகிடந்துங்கருங்காகமிகல்விளைக்கக்
குஞ்சாகிப்பூங்குயிலாமச்சுதாநந்த கோவிந்தனே.         (99)

மஞ்சனந்தேடிமலர்தேடியுன்னைவணங்கப்பெற்றேன்
நெஞ்சகந்தன்னினினைக்கப்பெற்றேனினையாவிடினும்
அஞ்சலன்றென்னவுனக்கேபரமடலாழிகொண்டு
குஞ்சரங்காத்தவனேயச்சு தாநந்தகோவிந்தனே .         (100)

தேனேயெனுமொழிமானார்கலவியிற்சேர்ந்துறினும்
தானேயெனக்குன்பதந்தருவாயன்றுசானகிக்கா
மானேயெனவந்தமாரீசன்மேற்செலவாளிதொட்ட
கோனேசக்ராயுதனேயச்சுதாநந்த கோவிந்தனே.         (101)

முந்தச்செனனத்தில்யான்செய்தபூசைமுயற்சியிற்கோ
விந்தச்சதகம்விண்ணப்பஞ்செய்தேனென்வினை தொலைத்தேன்
இந்தச்செனனத்திற்றுன்பப்படாமலிருந்திடவை
குந்தப்பதவிபெற்றேனச்சு தாநந்தகோவிந்தனே.         (102)

கோவிந்தசதகம் முற்றிற்று.
-------------------

This file was last updated on 27 March 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)