அருணாசலக் கவிராயர் எழுதிய
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
cEtu parvatavartiniyammai piLLaittamiz
by aruNAcalak kavirAyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Roja Muthiah Research Library for providing a scanned PDF of this work.
We sincerely thank Dr. Meenakshi Balaganesh of Bangalorer, India for her assistance in the prepartion of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அருணாசலக் கவிராயர் எழுதிய
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
Source:
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
அருணாசலக்கவிராயர், M. R, 1852-1939
விவேகபாநுப் பிரஸ், 1906
Roja Muthiah Research Library
------------
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்.
இஃது இராமேசுரம் திருப்பணி ஆனரரி ஏஜண்டு
கண்டனூர் ஸ்ரீமாந் நா. பெ. நா. மு. முத்துராமையா அவர்கள்
விருப்பத்தின்படி சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான்
ஸ்ரீமத் மு. ரா. அருணாசலக்கவிராயரவர்களால் இயற்றப் பெற்றது.
மதுரை: விவேகபாநுப்பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது.
(முதற்பதிப்பு) , இதன்விலை அணா 4.
Copyright Registered. 1906
-------
உ : சிவமயம்.
முகவுரை.
பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளையின் பருவச் செயல்களைப்பற்றிக் கூறும் தமிழ் என விரியும். இப்பிள்ளைத்தமிழ், முன்னோர் வகுத்த தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். ஆசிரியர் தொல்காப்பியனார், இப்பிரபந்தவிலக்கணங்கள் இன்னின்னவெனக் கூறினரில்லையாயினும், “விருந்தேதானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" (தொல் - பொரு, செய்யுளியல் ......) என்பதனால், இவற்றை ‘விருந்து' என்னும் பகுதியுள் அடக்கிக்கூறினார். விருந்து - புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரப் பாடுவது. இவற்றுட் பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைப்பாட்டு, பெண்பாற் பிள்ளைப்பாட்டு என இருவகைப்படும். இப்பாட்டுத் தாதியர் கூற்றாகப் பாடுவதென்றார் திராவிட மகாபாஷியகர்த்தராகிய சிவஞானயோகிகள்: தந்தை, தாய், பாட்டன், பாட்டி கூற்றாகப் பாடுவதென்பாருமுளர். ஆண்பாற்கு;- காப்புடன் செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில்சிதைத்தல், சிறுபறைமுழக்கல், சிறு தேருருட்டல் எனப் பத்துப்பருவங்களும், பெண்பாற்கு:-- மேற்கூறியவற்றில் இறுதியினின்ற சிற்றில் முதலிய மூன்றும் நீக்கி, அவ்விடத்தில் அம்மானை, நீராடல், ஊசல் என்னும் மூன்றையுஞ் சேர்த்துப் பத்துப் பருவங்களுங் கூறுவர்.
இவற்றுள் 1. காப்பாவது, திருமால், சிவபிரான், விநாயகர், முருகக்கடவுள், பிரமன், இந்திரன், இந்திரை, சரசுவதி, சத்தமாதர், முப்பத்துமூவர் - என்றிக் கடவுளரை, பிள்ளையைக் காக்கும் பொருட்டு வேண்டிப்பாடுவது. உமாதேவி முதலியோரைப் பற்றிய பிள்ளைப்பாட்டில் மேலேகூறிய கடவுளர் சிலரைக் குறைத்துங் கூட்டியுங் கூறுவதுண்டு.
2. செங்கீரைப்பருவம்:-- அஃதாவது, பிள்ளைகள் ஒரு காலை முடக்கி ஒருகாலை நீட்டி இருகைகளையும் நிலத்திலூன்றித் தலை நிமிர்த்து முகமசைத்தாடும் நிலை.
3. தாலப்பருவம்:- அஃதாவது, பிள்ளைகளைத் தொட்டிலிற்கிடத்தி மாதர் நாவசைத்துப்பாடும் நிலை. தால் - நா.
4. சப்பாணிப்பருவம்;- அஃதாவது, கையுடனே கை சேர்த்துக் கொட்டும் நிலை.
5. முத்தப்பருவம்:- அஃதாவது, பிள்ளையினது வாய்முத்தத்தை விரும்பிக்கூறும் நிலை.
6. வருகைப்பருவம்:- குழந்தையை, நடந்து வருக என்று அழைக்கும் நிலை.
7. அம்புலிப்பருவம்;- அஃதாவது, பாட்டுடைப்பிள்ளையுடன் விளையாடவரும்படி மாதர் அப்பிள்ளையை ஒக்கலையிலிருத்தி வைத்துக்கொண்டு சந்திரனைச் சாம பேத தான தண்டங்களாற் கூறியழைக்கும் நிலை.
8. சிறுபறைப்பருவம்:- அஃதாவது, பாட்டுடைக் குழவியைச் சிறுபறை கொட்டும்படி வேண்டும் நிலை.
9. சிற்றிற்பருவம்:- அஃதாவது, சிற்றிலிழைக்கும் சிறுமியர் தஞ்சிற்றிலைச் சிதைக்கவேண்டாவென்று பாட்டுடைக்குழவியை வேண்டும் நிலை.
10. சிறுதேர்ப்பருவம்:- அஃதாது, பாட்டுடைக்குழவியைச் சிறுதேருருட்டும்படி வேண்டும் நிலை.
இவற்றுள்ளே, ஆண்பாற் பிள்ளைத்தமிழ்க்கே சிறந்த இறுதி மூன்று பருவங்களுக்கும் பிரதியாகப் பெண்பாற் பிள்ளைத்தமிழ்க்குக் கூறப்படும் அம்மானை நீராடல் ஊசல் என்னும் மூன்றனுள்; .
8. அம்மானைப்பருவம்:- அஃதாவது, அப்பெண்பிள்ளை பலநிற வம்மனையை யெடுத்து மாறிமாறியெறிந்தாடலைக் கூறும் நிலை.
9. நீராடற்பருவம்:- அஃதாவது, புதிய வெள்ளநீராடுதலைக் கூறும் நிலை.
10. ஊசற்பருவம்:- அஃதாவது, பொன்மணிகளாற் செய்யப்பட்ட ஊசலினிருந்து மகிழ்ந்து விளையாடலைக்கூறும் நிலை.
இப்பருவங்களுள் முதலதாகிய காப்பு; பிள்ளை பிறந்த மூன்றாமாதம் வரை கூறப்படும். ஏனைய ஒன்பது பருவங்களும் அம்மூன்றா மாதந்தொடங்கி, 5, 7, 10, 11, 13, 15, 17, 19, 21- இவ்வொற்றை யெண்கொண்ட மாதங்களில் முறையே கூறப்படுவன என்றும், மூன்று, ஐந்து, ஏழு ஆண்டுவரையும் சொல்லுதலுங் கொள்வர் என்றும் பன்னிருபாட்டியலிற் கூறுவர். இவற்றுட் பன்னிருபாட்டியலிலே, ஆண்பாற்குப் பதினாறு வயதுவரையும் பெண்பாற்குப் பூப்புநிகழுமளவும் பிள்ளைப்பருவங் கொள்ளலுமுண்டென்று சொல்லப் பட்டுள்ளது. மேற்கூறிய பருவங்களிற் சில குறைத்துங் கூட்டியும் பண்டையோர் கொண்டனரென்பதும் முன்னூல்களாற் றெரியவருகின்றது. பிங்கலந்தையில் அடியில்வரும் சூத்திரத்தால் இதனைக் கண்டு கொள்க.
"பிள்ளைப் பாட்டுத் தெள்ளிதிற் கிளப்பிற், றிங்க ளிரண்டிற் றெய்வங் காக்கென, இன்றமிழ்ப் புலவரியம்பிய காப்பும், ஐந்தாந் திங்களிற் செங்கீரை யாடலும், ஆறாந் திங்களிற் கூறுதல் கற்றலோ, டேழாந் திங்களி னின்னமு தூட்டலும், எட்டாந் திங்களி னியற்றா லாட்டலும், ஒன்பதாந் திங்களி லுயர்சப் பாணியும், பத்தினோ டொன்றின் முத்தங் கூறலும், ஆண்டு வரையி னீண்டுவரு கென்றலும், மதியீ ரொன்பதின் மதியை யழைத்தலும், இரண்டா மாண்டிற் சிறுபறை கொட்டலும், மூன்றா மாண்டிற் சிற்றில் சிதைத்தலும், நான்கா மாண்டிற் சிறுதே ருருட்டலும், பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற், கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென், றின்னவை பிறவு மாகு மவற்றுள், முன்னர் மொழிந்த வொழிந்தவற் றோடும், பெற்ற ஆண்பாற் பிள்ளைப் பாட்டாம், முன்னுறக் கிளந்த ஆண்டினாள்வரை, இசைத்த பாடலிருப்பாற்கு முரித்தே '' .
''பேணுஞ் சிறப்பிற் பெண்மக வாயின், மூன்றா மாண்டிற் குழமண மொழிதலும்; ஐந்தின் முதலா வொன்பதின்காறும், ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும், பனிநீர் தோய்தலும் பாவை யாடலும், அம்மனை கழங்கு பந்தடித் தாடலும், சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலு, மூசலாடலு மென்றிவை யுள்ளிட்டுப், பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,'' எனக் கண்டுகொள்க. முன்னூல்களில் இவ்வாறு பருவங்களும், காலஅளவும் பலவேறுவகையாகக் காணப்படுவனவாயினும், மேற்கூறிய பத்துப்பருவமுமே இக்காலத்தாராற் பெரிதும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டவை. இவைகள் பிள்ளைத்தமிழின் பொதுவிலக்கணங்கள்,
தேவை யென்னுந் திருவிராமேச்சரத்தில் திருக்கோயில் கொண்டருளும் அருட்பரஞ்சோதியாகிய இராமநாதமூர்த்தியின் மகிமையையும் அக்கடவுளது அருட்சத்தியாயெழுந்தருளியுள்ள பர்வதவர்த்தனியம்மையின் மகிமையையும் இவ்வுலகம் நன்கறியும். இப்புண்ணிய தலத்தின் தேவஸ்தான விசாரணை கர்த்தாவும், தேவிகோட்டை ஜமீந்தாரும், சங்கீத சாஹித்ய விற்பன்னரும், செல்வச்சிறப்புக்குத் தக்க நற்குணங்கள் பலவும் அமைந்தவரும், பெரும்புகழ் வள்ளலுமாகிய ஸ்ரீமாந்- அள. அரு. ராம. அருணாசலஞ்செட்டியாரவர்களைத் தமிழர் பலரும் அறிவர். இப்பிரபு சிகாமணியவர்களின் விருப்பத்தின்படி இவ்விராமேசுரந் திருப்பணி ஆனரரி ஏஜண்டாகவிருந்து நவநிலைக்கோபுர முதலிய பல்பெரும்பணிகளைச் சில்பொழுதில் முடித்தவரும் சிற்ப நூலாராய்ச்சியும் சாஸ்திரவாராய்ச்சியும், பெரிதும் வாய்ந்தவரும் வைதிக ஒழுக்க மாட்சியாளருமாகிய கண்டனூர் ஸ்ரீமத்- நா.பெ. நா. மு. முத்துராமையா அவர்கள் மேற்படி திருப்பணிவேலையை நடாத்திவருங்காலையில் மேலே கூறிய ஸ்ரீமான்: அருணாசலஞ் செட்டியாரவர்கட்குப் புண்ணிய குமாரனுதிக்க அனுக்கிரகித் தருளும்படி பர்வதவர்த்தனியம்மைமீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடுவிக்க நினைந்து சேற்றூர்ச் சம்ஸ்தான வித்துவானும், வரன்முறையாகத் தமிழுணர்ந்தவரும் கவிபாடுந் திறமை நன்குபெற்றவரும் ஆகிய ஸ்ரீமத்- மு. ரா. அருணாசலக்கவிராயரவர்களுக்கு அறிவித்தனர். கவிராயரவர்களும் மிகமகிழ்ந்து அம்பிகையின் திருவருளைச் சிந்தித்துப் பெண்பாற்பிள்ளைத் தமிழின் இலக்கண நிரம்பவும், சொற்சுவை பொருட்சுவை நிறையவும், உருக்கநயம் செழிக்கவும், அத்தலபுராணக்கதைகள் பெரும்பாலன வெளிப்படவும் இப்பிள்ளைத்தமிழை இனிது பாடிமுடித்தனர். அங்கனம் முடித்தவுடனே அருணாசலஞ்செட்டியாரவர்கள் நற்றவப்பலனும், முத்துராமையா அவர்கள் உத்தமசிந்திதவலியும், அருணாசலக்கவிராயரவர்களின் வாக்குவிசேடமும், பர்வதவர்த்தனியம்மையின் திருவருளும் கைகூட ஜமீந்தார் செட்டியாரவர்கட்கு அருமருந்தன்ன ஆண்மகவு உதித்தது.
அதுகண்டு யாவரும் பெருமகிழ்ச்சியுற்றனர். செட்டியாரவர்கள் பிள்ளைத்தமிழைப் பர்வதவர்த்தனியம்மை சந்நிதியிலே யரங்கேற்றுவித்து கவிராயர் அவர்கட்கு நன்கு சம்மானமளித்தனர்.
இந்நூலின் முதலதாகிய காப்புப்பருவம் முதற்செய்யுளின் உலகமலி என்னு முதற்சீரானது
"தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் றீரைந்தின் றன்மையினைச்
செப்புவதா முன்மொழியின் சீர்."
என்னும் விதிப்படி மங்கலப்பொருத்தமும் வகையுளிசேர்தலாதி யீறுதிரிதலிறுதியான குற்றங்களின்மையாகிய சொற்பொருத்தமும், ஐந்தெழுத்தாகிய எழுத்துப்பொருத்தமும், அரசனாகிய தானப்பொருத்தமும், பொதுவகையாற் பெண்பாற்பொருத்தமும், அமுதமாகிய உணாப்பொருத்தமும், அந்தணராகிய சாதிப்பொருத்தமும், பூராடமாகிய நக்ஷத்திரப் பொருத்தமும், தேவகதிப் பொருத்தமும், திங்களாகிய கணப்பொருத்தமுமாகிய பத்துப்பொருத்தமுங் கொண்டுள்ளது.
பிறவும் இந்நூலின் ஆங்காங்குள்ள நயங்கள் பலவும் காண்பார் வியந்து பாராட்டத்தக்கனவேயாம்,
இங்ஙனம்
கவிராஜ நெல்லையப்பபிள்ளை,
திருநெல்வேலி.
--------------------------
சாற்றுக்கவிகள்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் சேதுபதி செந்தமிழ்க்கலாசாலை
உபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ சுந்தரேசுவர ஐயர் அவர்கள் இயற்றியவை.
சிலைவளர்திண் புயன்றேவை வாழருணா சலவணிக
செல்வக் கோமான்
கலைவளர்புத் திரப்பேறுற் றவனியின்மே லெக்காளுங்
களிப்பாய் வாழ
அலைவளர்தண் கடல்சுலவுஞ் சேதுரா மேசுரத்தி
லரன்பா கஞ்சேர்
மலைவளர்கா தலித்தாய்மே லொருபிள்ளைத் தமிழ்க்கவிதை
வழுத்தும் வண்ணம். (1)
அத்தகுதாய் திருக்கோயிற் றிருப்பணிகள் விருப்பமுட
னமைப்போன் பூதி
மெய்த்தகுகண் டிகைபுனைவோன் கல்வியறி வொழுக்கமெலா
மேவப் பெற்றோ
னுத்தமசற் குணன்றமிழுக் குபகாரி பிறர்க்குமஃ
துபதே சிப்போன்
முத்தமிழ்தேர் கண்டனூர் முத்துரா மன்விரும்ப
மொழிந்தான் மன்னோ. (2)
அன்னவன்றென் சேறைமன்ன னவைப்புலவர் தமிற்றலைவ
னறிவான் மிக்க
பொன்னவனா மிரமசா மிக்கவிஞ னரியதவப்
புதல்வ னானோன்
பன்னவருந் தமிழ்க்கந்த சாமிசுப்ர மண்யனிரு
பாவல் லோர்க்கும்
முன்னவனென் னுயிர்த்தோழன் முத்தமிழு நிரம்பவரன்
முறையிற் கற்றோன். (3)
பவம்பெற்றார் காணாத பரமனடி யருச்சனை சொற்
பாட்டே யென்று
சிவம்பெற்ற வுள்ளமொடு தினந்துதிப்போன் பரங்கிரிவாழ்
சேய்க்குஞ் சேறைத்
தவம்பெற்ற நாயகிக்கு மகிழ்சிறப்ப விருபிள்ளைத்
தமிழ்முன் செய்து
நவம்பெற்ற தமிழ்ச்சங்கப் புலவனரு ணாசலப்பேர்
நாவல் லோனே. (4)
----------
திருவாவடுதுறையா தினத்து வித்துவானும் மதுரைத் தமிழ்ச்
சங்கத்துச் சைவநூற் பரிசோதகரும் ஆகிய ஸ்ரீமத்
சே. ரா. சுப்பிரமணியக் கவிராயரவர்களியற்றிய செய்யுட்கள்.
உலகினிலெவ் வகையரே யாயிடினுந் தனதுபொரு
ளுதவி கொள்ளா
ரிலரெனவூ ருணிநீர்போ லிருநிதியும் பெருக்கியவ
னெம்மைப் போலப்
பலர்புகழுந் தேவைநகர் வாழுமரு ணாசலவேள்
பகர்சந் தான
நலமுறவே தழைத்தோங்கத் திருவிரா மேச்சுரமா
நற்ற லத்தில். (1)
மலைவளர்கா தலியுமைமேன் மதுபருக்கம் வாய்க்கொள்வார்
மகிழு மாபோ
லிலகுசெவி வாய்க்கொள்வா ரருந்திடப்பிள் ளைத்தமிழொன்
றிசைத்தா னெங்கள்
குலகுருவாந் துறைசைநம சிவாயதே சிகனருள்போற்
குலவுங் கல்வி
யலகிலா துறவமைசேற் றூரருணா சலக்கவிஞ
னறிஞ ரேறே. (2)
-----------------------
ஸ்ரீவில்லிபுத்தூர்த்தாலூகா குன்னூர்ப்பெரியவீடு வித்துவான் ஸ்ரீமத்
குமாரசுவாமி முதலியாரவர்களியற்றியவை.
திருவதன தனைநிகருஞ் செல்வவென்றே வரும்புகழுந்
தீரன் கற்ப
தருவதனை நிகர்கண்ட னூர்முத்து ராமவள்ளற்
சரதன் வேட்ப
வொருவதன மைந்தாக வுறுமிரா மேசரிடத்
துறையென் றாயாம்
பருவதவர்த் தனியம்மை மீதுபிள்ளைத் தமிழென்னும்
பனுவ றன்னை. (1)
மாமுத்தி யானமிசை வருஞான சம்பந்த
வள்ள லென்னத்
தேமுத்தி யானங்கள் செறிந்திலங்கி யோங்குபெருஞ்
சிறப்பு வாய்ந்த
கோமுத்தி யாணமசி வாயதே சிகவரசற்
குருபா னூலெல்
லாமுத்தி யாக்கேட்டுள் ளையமறக் கற்றுணர்ந்த
வதுல னம்மா. (2)
சித்தசனை யொத்தவெழிற் சீதரன்சுப் பிரமணிய
செல்வன் றன்னைச்
சுத்தவித ரணசுமுக சுகமதுர கவிசொல்கந்த
சுவாமி யென்னு
முத்தமனைச் சோதரரா வுறப்பெற்றோ னெனையுமவ்வா
றுளத்துட் கொண்ட
வித்தகனெத் தகையோரும் புகழருணா சலக்கவியாம்
விவேக மிக்கோன். (3)
காத்திரமிங் கெடுத்ததனா லாயபெரும் பயனுறவே
கருதி மேலாஞ்
சாத்திரத்தின் கருத்தினோ டரியபெருங் கற்பனையுந்
தழுவி யாருந்
தோத்திரஞ்செய் யும்படிசொற் சுவையொடும்பா டியிராமேச்
சுரமென் றோதுங்
கேத்திரத்தவ் வம்பிகைசந் நிதியிலரங் கேற்றியுள்ளக்
கிளர்ச்சி மேவி. (4)
சேதுபதி யெனும்ராம நாதரோ ரைந்துகரச்
செம்மல் செவ்வேள்
கோதுபதி யாதமா தவராஞ்ச னேயரெனக்
கூறு மின்னோர்
மீதுபதி கப்பாவெப் பாவினுமே லாகவதி
விவேக ரன்றி
யோதுபதி தருங்கூட வுவந்துகேட் டுணர்ந்துயுமா
றுரைத்தான் மன்னோ. (5)
-------------------
தென்காசித் தாலூகா வெள்ளகால் ஸ்ரீமாந்
வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்களியற்றியவை.
ஒருவரிரு நீர்முத்தாற் றிடுபொருளா ரூர்க்குளத்தி
லுற்ற வாறே
பெருகுகங்கை மூழ்குபலம் பல்லோரு மெத்தலத்தே
பெறுவா ரந்தத்
திருவிரா மேசுரத்தீ சர்க்குயிரே யாதலன்றித்
தேக மும்மா
மருவிவலப் பாகமமர் பருவதவர்த் தனியம்மை
மலர்த்தாண் மீதே. (1)
செய்யபிள்ளைக் கவிமாலை புனைகென நாட்டுக்கோட்டைச்
செட்டி மார்கண்
மையறுநற் குலம்விளங்கக் கண்டனூர் துலங்கவரு
வள்ள லந்தச்
சைவதலத் *தளிக்கீழைக் கோபுரங் கட்டியபரம
தருமன் வேதத்
தெய்துமுடி புணர்முத்து ராமநா மக்குரிசி
லிசைத்தா னாக. (2)
சேதுபுரா ணக்கருத்துச் செறிதரநற் பத்திரசஞ்
சிறப்ப வந்நூ
லோதியந்த வம்மையின்சந் நிதியில்விசு வாவசுவென்
றோங்கு மாண்டி
லேதமிலா மாசிமதிவருஞ் சிவராத் திரியிலரங்
கேற்றி னானாற்
றீதறுசேற் றூரருணா சலக்கவிரா யத்திருப்பேர்ச்
சீரி யோனே. (3)
(*தளி – கோவில்.)
அத்தியின்றே கத்தோல்போர்த் திமிரா மேச்சுரரின்
ளருளா லோங்கு
பத்தியின்றே னொழுகுறச்செய் பருவதவர்த் தனிபிள்ளைப்
பாவைப் பார்த்தோர்
முத்தியின்றே பெற்றேம்யா மதனிலுறு நயமொன்று
முற்றக் கூறச்
சத்தியின்றே யென்னிலத னருமையினைத் தமியேனோ
சாற்று கேனே. (4)
------------------
சீகாழி ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதராகிய திருவாவடுதுறை ஆதீனம்
ஸ்ரீமத் பொன்னோதுவாரவர்கள் இயற்றிய ஆசிரியப்பா
திருவளர் சேதுவிற் சிவன்வலப் பாலமர்
பருவத வர்த்தனி பகருமம் மையின்மேற்
சேதுமான் மியஞ்சிற் சிலவிடத் தமையவும்
தீதில்சொன் னயமொடு சேர்பொரு ணன்னய
மாரவு மியாவரு மறிவுறு மெளிமை
சேரவு மன்பாற் செந்தமிழா லொரு
பிள்ளைத் தமிழினைப் பீடுறு புலவர்
கொள்ளைகொண் டிடவே குலவு மைக்கறைக்
கண்டனூ ராகிய கண்டனூ ரதனிற்
சண்டனூர் சார்தராச் சால்பொடு வாழ்வோன்
முத்துரா மன்னென மொழியுநா மத்தோன்
மெத்துசெல் வித்தினான் மேன்மைசேர் வணிகன்
மற்றவா ணிகரெலாம் வாணிக மீங்கிவன்
பெற்றது போலநாம் பெற்றிலோ மென்றெணப்
பாடுவித் திடுதலே படுதலில் வாணிகங்
கூடுமென் றுட்டுகாடு கூறக் கூறினன்
சீருறு பாண்டிய தேச மதனி
லேருறு முகவூரெ னும்பதி யுதித்தோ
னன்றுற் பவித்திருந் தழிந்தமுச் சங்கமு
மின்று*தான் றோன்றுதற் கிடங்கொடுத் தனபோ
லஞ்சாஞ் சங்கமொன் றணுகற் கிடங்கொடா
தெஞ்சா தென்று மிலங்கிடு நான்காஞ்
செந்தமிழ்ச் சங்கஞ் சேர்ந்துமா மதுரையிற்
சுந்தர முறவே துலங்கரு ணாசல
நாமம் புனைந்த நாவ லோனே;
(* தானென்றது நான்காஞ்சங்கம்)
-------------------------
மதுரை விவேகபாநுப்பத்திராதிபர் மகா-- -ஸ்ரீ எம். ஆர். கந்தசாமிக்கவிராயரவர்களியற்றிய
சிறப்புப்பாயிரம்.
பூமகளென் பதைவிளக்கப் பூமகளா வந்துதித்த
பொற்பூங் கொம்பாங்
காமருசீ தையைமணந்த தாசரதி யரக்கரமர்
கடந்து மீண்டு
தோமகலச் சிவபூசை செயுஞ்சேது மான்மியத்தைச்
சொல்லா ருண்டோ
நாமலிசீ ரத்தலத்துப் பருவதவர்த் தனியம்மை
நற்றாள் போற்றி. (1)
எண்ணிரண்டு பேறுமொருங் கெய்தினோன் கருணைகுடி
யிருத்தற் கென்றே
கண்ணிரண்டும் பாரதிக்கே யகக்கண்ணு மினிதமைத்தோன்
கனக நாட்டோர்
விண்ணிரண்டு போன்மெனக்கண் டையுறுந்தே வைப்பதியில்
மேவி யிந்த
மண்ணிரண்டு நிதிக்கிழவ னெனும்ராம் சாமிவள்ளல்
மைந்த னானோன். (2)
சங்கீதப் பெருங்கடலுட் சாகித்யப் புணைசெலுத்துந்
தக்கோன் மேன்மைச்
சிங்காச னாதிபர்க்குஞ் செயிர்துடைத்து நிதியளிக்குஞ்
செல்வன் பூத்த
பங்கேரு கானனத்தான் கற்பகமாங் கரதலத்தான்
பாவல் லோர்கள்
எங்கோனென் றெடுத்திசைக்குங் கீர்த்தியரு ணாசலப்பே
ரேந்த லானோன். (3)
கல்வியறி வூகமிகு சொக்கலிங்க மகாராஜ
கனபூ மானைப்
பல்வகையா லுலகுபுகழ் வெள்ளையபூ பதியையன்பு
பாரித் தியாரும்
நல்விரத னுயர்சரத னென்னுநா ராயணப்பேர்
நாட்டுங் கோவைத்
தொல்வலிமை மிகப்படைத்த சோதரராக் கொண்டுநலந்
துலங்க வாழ்வோன். (4)
திக்கொருநான் கையும்புரக்குந் திறமிகுமிந் நால்வருறு
சிறப்பு நோக்கின்
மிக்கவலித் தசரதனே ராமசுவா மிக்கோவாய்
மேவி யன்பு
தொக்கிருந்து நானிலங்காப் பதற்கென்றே யிந்நான்கு
சுதரை யீன்று
தக்கபுகழ் மகிழ்படைத்தான் றவவலியா லெனக்கருதுந்
தரணீ மன்னோ. (5)
திருக்கானப் பேர்க்கோ விற்றிருப் பணியுங்
கும்பாபி ஷேகமாதி
மருக்காலு மலர்மலிதெப் போற்சவமும் விதிமுறையில்
வயங்கச் செய்து
தருக்காணும் லவணபுர விநாயகர்க்குத் திருப்பணியுஞ்
சத்தி ரஞ்செய்
துருக்கார்வத் துடனிரா மேச்சுரத்துத் திருப்பணியு
மொளிரச் செய்தே. (6)
வானவர்தம் மூரிலிருந் திழிந்தேறுஞ் சோபான
வடிவாம் வாயிற்
மானமிக மருவியுயர் கோபுரமு மினி தமைத்த
தரும சீல
னானநய சுகுணமலி யவ்வருணா சலவேளுக்
கார்வங் கூரத்
தேனமர் வாய் மகப்பேறு கிடைப்பதற்கு நட்பியல்பாற்
சிந்தை கொண்டே, (7)
மற்றொருதாய் வயிற்றினிடை வந்துபிள்ளைத் தமிழினிமேல்
வழுத்தா வண்ணஞ்
சொற்றகுபிள் ளைத்தமிழப் பருவதவர்த் தனித்தாய்மேற்
சொல்வா யென்னக்
கற்றுணர்மூ தறிவுடையான் வேதாந்த சித்தாந்தக்
கடலுட் டோய்ந்து
முற்றுசிவ ஞானமணி கைக்கொண்டோன் சிற்பவிதி
முழுதுந் தேர்ந்தோன். (8)
கண்டனூர் வாழுமுத்து ராமலிங்க பூமனுளங்
களித்துக் கூறக்
கொண்டெனக்குங் கல்விவல்லோர் குழாத்தினுக்கு முன்னவனாக்
குலவு மேன்மைத்
தண்டமிழ்நா வலனருணா சலக்கவிஞன் பத்திரசந்
ததும்பச் சொற்றான்
றெண்டிரைசூ ழுஞ்சேது பருவதவர்த் தனிமகிழ்ச்சி
சிறப்ப மன்னோ. (9)
பருவதவர்த் தனியருளே யெங்களரு ணாசலபூ
பாலற் கின்ப
மருவவளர் சந்ததியா வந்ததியா வருமுளத்து
மகிழ்ந்தார் கற்ப
தருவனையா னத்தமிழை யரங்கேற்றி யச்சேற்றித்
தரணிக் கெல்லாந்
திருவமுது போலுதவிச் சிறப்பித்தான் பலநலமுஞ்
செழிக்கத் தானே. (10)
முற்றிற்று.
--------------
இராமேசுரம் திருப்பணி ஆனரரி ஏஜண்டும் இந்நூல்
பாடுவித்தவரும் ஆகிய கண்டனூர்ஸ்ரீமத் நா. பெ. நா. மு. முத்துராமையா
அவர்களியற்றிய அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
சீர்மலிதண் பரவையொலி முழங்குமிரா மேச்சுரத்தித்
செழிக்கு முல்லைத்
தார்மலியும் பருவதவர்த் தனியம்மை யார்பிள்ளைத்
தமிழைப் பாவல்
லார்மலியும் தேவைநகர் வாழருணா சலச்செட்டி
பார்க்குச் சேய்நற்
பார்மலி வுண்டாகச்சேற் றாரருணா சலக்கவிஞன்
பாடி னானே.
--------------------
சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்.
உ - சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
விநாயகக்கடவுள்.
சீரேறு வேதாகமப் பெருங் கோயிலுட்
சிவதத்துவத் தின்முடியாஞ்
சிங்கா தனத்தின்மேல் வீற்றிருந் தின்னருட்
செங்கோல் செலுத்துதன்னை
யேரேறு ஞானவிழி கொண்டுபிர ணவவாயி
லெய்தியுள் ளெட்டிநோக்கு
மியாவர்க்கு மின்முக மலர்ந்தருளு மும்பலா
மெம்பிரா னைத்துதிப்பாங்
காரேறு நிறவரக் கரைவென் றிராகவன்
கைதொழப் பிரமகத்தி
கடிதினி லகற்றிய விராமே சுரத்தினிற்
கண்கண்ட தெய்வமாகிப்
பேரேறு நற்றவர் தொழும்பர்வத வர்த்தனிப்
பெருமாட்டி யருள்பிறங்கும்
பிள்ளைத் தமிழ்க்கவிதை யுள்ளக்க ளிப்பினொடு
பெரிதா வளர்ந்துவரவே.
-------------------------------------
1. காப்புப் பருவம்..
திருமால் துதி.
உலகமலியுங் குணநிதிச் செழியன் வேள்வியை
யுவந்திலக் குமியைமுன்ன
மொருபுதல்வி யாகவர விட்டுப்பின் வந்தவளை
யுற்றொளிர்க ரம்பிடிக்க
விலகியவண் மீண்டுதன் றந்தைபா லேயது
விளம்பவவன் மேவிநாணான்
மெய்பிணித் துக்கொண்டு போந்திரா மேசர்க்கு
மேற்றிசையில் வீற்றிருப்பப்
பலகவலை யெய்துசிறை யிட்டவுட னுண்மையப்
பாண்டியன் சொப்பனத்திற்
பகர்ந்தருளி நற்சேது மாதவப் பேர்கொண்ட
பைந்துழா யண்ணல்காக்க
இலகுபே ரெழின்மணிகள் பலபதித் திடுமாட
மியையிரா மேசுரத்தி
லிதமெய்த் தவத்தபரு வதவர்த்த னிப்பெணர
செனுநற் பிராட்டிதனையே.
திருச்சிற்றம்பலம்.
(1)
-------------------
சிவபெருமான்.
வேறு
அகில சராசர மாகிய வுயிர்க
ளனைத்து மநாதியிலே
யாக்குதன் முதலிய வைந்து கிருத்திய
மவயவ மறிவிக்கப்
பகிர்முக மாகவெழுந்தெதிர் நின்றருள் பதியப்
பொதி பொன்னம்
பலமிசை நடமிடு சின்மய வுருவப்
பரமனை வந்திப்பா
மகிதல மதிலுயர் கயிலையு மேருவு
மானுமெ னுங்கந்த
மாதன முன்றியு னருள்வடி வெய்திய
மலைவளர் காதலியைச்
சகியென வலைமகள் கலைமகள் சூழத்
தங்கிய தலைமகளைச்
சகலமு முதவிய தாயைக் களிமகிழ்
தந்துபு ரந்திடவே.
திருச்சிற்றம்பலம்.
(2)
----------------------
விநாயகர்.
வேறு.
கரியவா ணவமாயை கன்மமெனு மொருபெருங்
காட்டினை யழித்துவெண்மைக்
கலைநிலா வீசுமதி மண்டலப் பெருவெளிக்
ககனத்து லாவிமேன்மே
லுரிய பேரன்பர்தற் போதக் கரும்பினை
யொடித்துண்டு ளூற்றிருந்தே
யூறிச் சுரந்தருண் மதம்பொழியு மைங்கரத்
தொருகொம் பொருத்தல்காக்க
அரியயன் றேவர்சொரி வெண்மலர்க் குவியல்க
ளனந்தவெண் கயிலையென்ன
லாயசீர் தருமிரா மேசுரம் பணிகின்ற
வர்க்கிந்த வுலகிலரசும்
பெரியவானர சுமொரு பொருளென்ன மதியாத
பேரின்ப வாழ்வுகல்கும்
பிரியா நலத்தமலை வளர்கா தலிப்பெயர்
பிறங்குபெரு மாட்டிதனையே. (3)
----------------------
முருகக்கடவுள்.
நற்கோ டிரிந்திட்ட காலத்தினுந் தனது
நாமமா மாறெழுத்துண்
ணவிலுமொரெ ழுத்தையொரு தரமாயி னுஞ்சற்று
நாவுச் சரித்தநல்லோர்
முற்கோடி வந்துண் ணினைத்தவை முடித்தருளு
முகமாறு கொண்டமுதலை
முருகனைத் திருமாது மருகனைச் சிந்தித்து
முந்தித் துதித்துநிற்பாம்
விற்கோடி தீர்த்தத்தி லாடுவார் பாவங்கள்
வேரறப்போக்கி மேன்மேல்
வெண்டிரைக் கைகளாற் செம்மணியும் வெண்மணியும்
வீசியெழு பரவையென்றுந்
தற்கோடி நின்றுதிசை நான்கினுங் காத்திடத்
தகுமிரா மேசுரத்திற்
றலையாய தெய்வமலை வளர்காத லியையமலை
தன்னைப் புரக்கவென்றே. (4)
------------------------
பிரமதேவர்.
வேறு.
உயிர்க ளியற்றுங் கன்மவகுப் புணர்ந்து
வேவ்வே றுடல்கரண
முலகம் போகம் படைத்துதவு முந்தி
மலரி னுதித்தவனைப்
பயிலு மொருநான் மறையவனைப் பதுமத்
திருந்த பண்ணவனைப்
பரவிப் பணிவாங் கடற்கரையின் பாங்க
ராமைப் பருமுதுகிற்
றுயில்செ யலவன் வெயில் காயூந்தூவி
ராமே சுரத்தில்வந்து
சுத்த விரத தவந்தானந் தொடங்கு
வாருக் கிம்மையிலே
மயிலைநிகர் சாயற் பெண்ணு மகவுந்தனமும்
வர வுதவும்
வளமார் கருணை நிறை யுமலைவளர்கா
தலியைக் காப்பதற்கே. (5)
-------------------
தேவேந்திரன்.
வேறு.
புதியமுத்த மமைதருமீ ரிருமருப்போர் மலையிற்
போற்றிசெயும் புலவர்பலர் நாற்றிசையுஞ் சூழ
நிதியமுற்ற வானுலகு நிலவியற்பே ரரசை
நீட்டியிரு கையொன்று கூட்டிவணங் கிடுவாந்
துதிமுழக்க மிகுபதியா மிஃதெனப் பாவலவர்
தோத்திரஞ்செய் திடுமிரா மேச்சுரங்கை தொழுவார்
மதியினிற்கு மலைவளர்கா தலியினைப்பா டுவர்க்கு
வரந்தருசிந் தா மணியைப் புரந்தருளும் பொருட்டே. (6)
--------------
இலக்குமி.
வேறு.
புலவிப் போரி லொருகலகம்
புரிந்து மாலைப்புறத் தகற்றிப்
போந்து தநுக்கோடி யிற்பண்டு
பொருநைத் துறைவன் புதல்வியாய்
நிலவிப் பயிலும் போதுதனை
நீங்கல் பொறாம னேடியுயர்
நெடுங்கா வடியொன் றேந்தியந்த
நெடுமால் சேதுநீ ணகரிற்
சுலவித் திரிந்து மலர்கொய்தன்
றொடித்தோள் பற்றத்தோ ழியர்கள்
சூழ நின்ற திருமகளைத்
தொழுவா மிராமேசுர மென்னுந்
தலவித் தகியை மலைவளர்கா
தலியை யிராமே சரைமணந்த
தையற் றெய்வ நாயகியாந்
தாயைத் தினங்காத் தற்பொருட்டே. (7)
-----------------
சரசுவதி.
வேறு.
சகலவே தாகமபு ராணவிதி காசந்
தழைந்திடத் தக்க தெய்வந்
தானாகி யைந்தொழிலி னாதித் தொழிற்குயர்
சகாயநற் சத்தி யாகி
யகலாது தன்கணவ னாவிற்சு வைக்குமின்
னமுதாகி வைகி யன்பர்க்
காசுமுத வியகவிகள் பாடும் படிக்கரு
ளளித்தவளை யஞ்ச விப்பாந்
துகளாய கொலைகளவு கட்காம் முழுதுந்
தொலைக்கும்வலி தொன்று தொட்டுத்
தொகுமிர மேசுரம் புகுமிரா மேசர்தந்
துணையடி கைதொழுது தன்னைப்
புகலா மெனச்சொல்வர் புலையரே யாயினும்
புத்தேளி ராக வருளே
புரிகாத லியையுமலை வளர்கா தலியையுவகை
பூத்தினிது காக்க வென்றே. (8)
---------------------
சத்தமாதர்.
வேறு.
உருவ நிறத்தணி வெள்ளைக் கமலத்
துறலடி மாமே லுறைதரு மானார்
பெருவி டையைச்சிறு புள்ளைச் சிகியைப்
பிரியமொ டூர்வா ரரிமிசை போவார்
*தருவிதி யைச்செறு வள்ளைக் குழையைச்
சமர்செய்கண் மாதா மிவரெழு மாதர்
பருவத வர்த்தனி தன்னைப் புரவு
பயில்வரி ராமே சுரரரு ளாலே. (9)
*தருவிதி - தக்கன்.
----------------------
முப்பத்து முக்கோடி தேவர்.
வேறு.
நிலவுலக வைப்பினின் மலரிலை யெடுத்துயர்
நேயமலி சித்தத்து வப்போடு பூசனை
நிதநித மியற்றுநர் மலரிலை யிருப்பினை
நீடுபெற முற்றக் கொடுத்தாளு மாதுமை
மலமிகு பவப்பிணி யலகறு மெமைத்தெறு
மாயவினை யைச்செற்று நட்பாக நாடொறு
மறைமுழுது மெய்த்துணர் வரியபத பத்மநன்
மாமலர் கலக்கச்செய் நற்றாய் தயாகரி
பலபல மதத்தினு மிலகிய வருட்சிவை
பாவலவர் மெய்த்துத் தனைப்பாடு மாகவி
பரிமள மணத்தொடு விரிமல ரெனப்புனை
பாசொளிய மெய்ச்சத்தி யப்பாவி யாமத
கலகமறு முத்தர்கள் பலருளமு நித்திய
காணியென வைத்துக் களித்தாடு சேதுவுங்
கலவுசிவ பத்தினி குலபர்வத வர்த்தனி
காவலவர் முப்பத்து முக்கோடி தேவரே. (10)
காப்புப்பருவம் முற்றிற்று.
---------------------
2. செங்கீரைப்பருவம்.
நீர்கொண்ட மழைவளம் பொழிசெழிய னாட்டிலொரு
நிலையினிற் கின்றசீர்த்தி
நிகழ்கந்த மாதன மலைச்செழுஞ் சாரலி
னெடுங்கார் நிறத்திராமன்
வார்கொண்ட பூண்முலைச் சானகி யருச்சித்த
மணலிலிங் கத்தையாங்கு
மன்னுதன் பெயர்முன்னர் வந்திடத் தாபித்து
வைத்துமா பூசைசெய்து
பேர்கொண்ட தன்னையினி வந்துபற் றாவிதம்
பிரமகத் தியையகற்றும்
பீடுறு மிராமே சுரத்தில்வரு மன்பர்தம்
பிறவிப் பிணிக்கருந்துஞ்
சீர்கொண்ட மாமருந் தாய்நின்ற பெண்ணரசி
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (1)
சுத்தகங் கையினைத் தெரிந்தெடுத் துக்கட்டு
தூயகா வடியையன்பாற்
றோளிற் சுமந்துகா சியினின்று வருகின்ற
தொண்டர்தந் தொகுதிபலவு
நித்தலு மிராமலிங் கத்தினுக் கபிடேக
நிகழ்வித்து நின்றுவாழ்த்தி
நேர்தொழு மிராமே சுரத்திற் றிருக்கோயி
னிலைகொண் டிருந்தநிமலா
யித்தலம் போலுமுயர் தலமில்லை யென்னல்போ
லினியநின் வதனமதிய
மிருபா லசைத்தசைத் திதுமனோ ரஞ்சித
மெனக்காகு மென்னல்போலச்
சித்தமகிழ் தரமிகவு மேல்கீ ழசைத்துநீ
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (2)
கருமுகின் முழக்கமுங் கறையடி முழக்கமுங்
கடலெழு முழக்கமுஞ்செங்
கைகுவிக் குந்தொண்டர் வாய்த்துதி முழக்கமுங்
கதிர்மணி கொழிக்கும்வெண்மை
யருவியின் முழக்கமுந் தீர்த்தங்க ளிற்படிந்
தாடுவர் முழக்கமுஞ்சேர்ந்
ததுவிது வெனச்சுட்டி யறியப் படாப்பிரம
மனையதா யேகமாகும்
தருவளம் பொலிகந்த மாதனச் சாரலிற்
றங்கிய விராமநாதர்
தம்மையுந் தன்னையுந் தொழுபவர்க் கிம்மையிற்
சகலசம் பத்துநல்குந்
திருமலி யிராமே சுரத்திற் பசுங்கிள்ளை
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (3)
மந்தமா ருதமொரு புறத்தினி லுலாவான்
மலர்மண மலிந்தபொழிலின்
மயில்களுங் குயில்களுங் கிளிகளும் வண்டுகளு
மருவுபண் பாடியாடுங்
கந்தமா தனமதை நினைக்கினுங் காணினுங்
கண்களைக் கொண்டிராமன்
கட்டுதிரு வணையெனுஞ் சேதுத் தநுக்கோடி
கண்டு கடலாடினாலு
மெந்தமா பாதகமு மெட்டுணையு மில்லாம
லெட்கடங் காததூர
மேகிடச் செயுமிரா மேசுரத் துன்பணி
யியற்றுமெந் துயரமெல்லாஞ்
சிந்தமா தரசியாய் முந்தநேர் வந்தநீ
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (4)
அண்டமெட் டும்புகழ்ச் சேதுவிற் சங்கற்ப
மாற்றியுண் மூழ்கிமறைதே
சந்தணர்க் குரியதா னங்கொடுத்துத் தர்ப்ப
ணஞ்செய்த மைந்தமட்டும்
பிண்டமிட் டுப்பிதிர் சிராத்தஞ்செய் வார்பெறும்
பேறிவள வென்றனந்தன்
பேசற்கு முடியாது கேட்டமட் டன்றிது
பிரத்தியக் கத்தில்யாரும்
கண்டமட் டாமெனு மிராமே சுரத்தினிற்
கலைகள்பல கற்றுணர்ந்தோர்
கருதிய வரந்தருங் கந்தமா தனமலைக்
கற்பகம் பெற்றகனியே
தெண்டனிட் டடிதொழு மெமக்கருள் சுரக்குநீ
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (5)
தறிபோல வசையாது சடமிருந் திடவதிற்
சாரும் புலன்கணான்குந்
தந்தொழி லிழந்திடக் *காமமுதன் மூன்றையும்
தாக்கித் தனித்திரண்டு
நெறியேகும் வளியைத் தடுத்துநடு நெறியலே
நேர்செல விடுத்துயர்ந்த
ஞேயசமு கத்தினைத் தரிசிக்கு மானந்த
நிட்டையி னிலைத்திருந்து
குறியோடு குணமுங் கடந்தசிவ ஞானிகள்
குழாங்கொடு நெருங்குதவமே
குடிகொண்ட கந்தமா தனமுறுஞ் சேதுநற்
கோயிலிற் கடல்கொழிக்குஞ்
செறிவேய் பசுங்கதிர் திரண்டிடுந் தெய்வமணி
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (6)
*காமமுதன் மூன்று - காமம், வெகுளி, மயக்கம்.
தன்னையறி வென்றுமவ் வறிவிலா னந்தமே
தனியா யிருந்தசிவமாந்
தானென்று மனைநேர் தரிசிக்க வொட்டாது
தனைமறைத் ததனையேதான்
முன்னையுறு பாசமென் றுந்திரி பதார்த்தநிலை
முழுதுமுணர் முத்தர்பல்லோர்
மோனநிலை யிற்றிறம் பதமொய்த் தமர்கின்ற
முதுகந்த மாதனத்தின்
அன்னைசா னகிகணவ னாகிய விராகவ
னருச்சிக்கு மவ்விசங்கத்
தநுமன்வால் சுற்றிய தழும்புமூன் றென்றுமுள
தாயவற் புதமமைந்த
தென்னைவா னோங்கிய விராமே சுரத்தினிற்
செங்கீரை யாடியருளே
சிற்பரம யப்பர்வத வர்த்தனியெ னச்சொன்மயில்
செங்கீரை யாடியருளே. (7)
வேறு.
நெறிசுரி கருமுகி லனையமலர்க்குழ
னீளிரு புறமாட
நிலவிய சுட்டியொ டிலகிய பிறைநிகர்
நெற்றி யசைந்தாட
வறியவர் பெறுமொரு நிதியென வருணிறை
மலர்விழி மணியாட
மணநுகர் குணமறி நாசியு மதிலிடு
வண்டர ளமுமாடச்
சிறியவ ருரைசெயு முறை முழுவதுமுட்
செறியிரு செவியாடச்
சேது விராமே சுரமொடு பேசுந்
திருவாய் மலராட
வறிவினி லறிதரு குறிகுண மகல்பவ
ளாடுக செங்கீரை
யலைவளர் வாள்விழி மலைவளர் காதலி
யாடுக செங்கீரை. (8)
மாவுயர் கதலி பலாவி னறுங்கனி
வண்டே னொன்றாகி
மற்றை யொராறிங் கெற்றுக் கெனநனி
வந்தே யங்கோடி
மேவு மணற்கே ணிகணிறை சேது
வியன் றீரந்தேடி
மிகவளர் கந்த மாதன முந்துவர்
மென்றா ளின்றூளி
யேவுக வெங்களை யெப்பணி யுஞ்செய
வென்றே யெம்போல்வ
ரெண்ணிலர் குழுமு மிராமே சுரமுறு
மெந்தா யிங்கேறு
சேவுயர் கொடியுடை யாருள மகிழ்பவள்
செங்கோ செங்கீரை
சிலைதளர் வாணுதன் மலைவளர் காதலி
செங்கோ செங்கீரை. (9)
நகரமு மகரமு முடைபட வந்தரு
ணங்கா யென்றோதி
நாடியி ராமே சுரநக ரெய்திய
நந்தா யன்பாளர்
சகரவி கரமுற வகர வுருப்பெறு
தண்டே னும்பாலுஞ்
சமமெனு மொழிபகர் சங்கரி யம்பிகை
சங்கே யும்பாணி
நிகர்கரு நிறமறி கடலுறு சேதுவி
னின்றே நண்பாக
நிலையுறு தானம் வழங்கியுண் மூழ்குநர்
நெஞ்சா ருஞ்சூலி
சிகரிக ளுயரிய கோயிலி னமர்பவள்
செங்கோ செங்கீரை
சிலைதளர் வாணுதன் மலைவளர் காதலி
செங்கோ செங்கீரை. (10)
இரண்டாவது செங்கீரைப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 2-க்குச் செய்யுள் (20)
-----------------------------
3. தாலப்பருவம்.
ஓரு மொருமூ வகைத்தமிழு
முதிக்கும் பொதிய மலையுமுத்த
முள்ளே விளையும் பொருநைநதி
யுஞ்சீ ருயர்பாண் டியனாடுங்
கூரு நதியீ ராயிரவெண்
கொம்பார் தெய்வக் குஞ்சரமுங்
குலவு சரியா தியநாற்கால்
கொண்ட வேதக் குதிரையும்பூத்
தேரு மிராமே சுரநகருந்
திருந்து மிடபஞ் செறிகொடியுந்
திகழ்வே தாந்த நாதமெனச்
செப்பு முரசுஞ் செழுங்கொன்றைத்
தாருந் தசாங்க மாக்கொண்ட
தாயே தாலோ தாலேலோ
தருவ தமையும் பருவதவர்த்
தனியே தாலோ தாலேலோ. (1)
ஓங்குஞ் சேது வெழுநூற்றோ
டொருமுப் பதியோ சனைதூர
முளதிச் சேது மூலதல
மொளிருந் தருப்ப சயனமதன்
பாங்கு பல்லா யிரந்தீர்த்தம்
பயிலு மவற்றைப் பகுத்துணர்ந்து
பகர்வ தரிது தநுக்கோடி
படிந்தா லப்பற் பலதீர்த்தக்
தீங்கு தீர மூழ்குபலன்
சேரத் திரட்டி நல்கியருள்
செயுமி ராமே சுரத்திலருட்
செங்கோல் செலுத்திச் சீர்த்திகனி
தாங்குந் தெய்வப் பெண்ணரசாந்
தலைவி தாலோ தாலேலோ
தருவ தமையும் பருவதவர்த்
தனியே தாலோ தாலேலோ. (2)
உருவ நோக்கி யிகழற்க
வொருவர் தமையு மெனவுயர்ந்தோ
ருரைக்கு முரைக்கோ ரிலக்கியமா
வோங்கு நறுந்தீஞ் சுவையுடைத்தாய்ப்
பருக வூறுஞ் சிற்றூ றல்
படுநீர்க் கேணி பாங்கரெலாம்
பயிலும் பெரிய கடற்கரைக்கட்
பதியுஞ் சேதுப் பதியென்னுந்
திருவி ராமே சுரத்திலமர்
தெய்வக் கொழுந்தே சிவபெருமான்
சிந்தை யினிற்றீட் டியவுயிர்ச்சித்
திரமே தேவ ராதியர்தஞ்
சருவ பாவ விமோசனஞ்செய்
தாயே தாலோ தாலேலோ
தருவ தமையும் பருவதவர்த்
தனியே தாலோ தாலேலோ. (3)
மணித்தொட் டிலினிற் கிடந்தின்னு
மறையுங் காணா மலரடியின்
வண்மைப் பெரிய விரல்சுவைத்து
வாய்விட் டழுமுன் வந்தெடுத்துப்
பிணித்துக் கிடந்த முலைதிறந்து
பிசைந்து நிலத்தோர் பீர்விட்டுப்
பின்னர்ப் பணிலத் துண்ணிறையப்
பெய்த தீம்பால் பிறங்குசெவ்வா
யணித்திற் கொடுபோ யலகுநெறித்
தருந்தப் புகட்டி முத்தமிட்டெடம்
மாவி யனையா யெனமேனை
யருமை பாராட் டிப்பசியைத்
தணிக்கத் தகுரா மேசுரத்தின்
றலைவி தாலோ தாலேலோ
தருவ தமையும் பருவதவர்த்
தனியே தாலோ தாலேலோ. (4)
பண்முத் தமிழாற் பிரபந்தம்
பாடி யுயர்ந்த பாவலவர்
பலருங் கேட்க வரங்கேற்றிப்
படிக்குஞ் சேதுப் பதியொன்றே
யொண்முத் திக்கு வழிகாட்டு
முயர்த்த தலமா மென்றுமுர
சொலிக்கு மொலியு மணமுரசோ
டொண்சங் கொலிக்கு மொலியும்வெள்
வண்முத் தீனுங் கடலொலியு
மலியும் வீதி வாய்ப்பவனி
மணஞ்செய் மலர்மா லிகையும்பொன்
மணிமா லைகளும் வனைந்துவருந்
தண்முத் தரும்பும் பவளவாய்த்
தாயே தாலோ தாலேலோ
தருவ தமையும் பருவதவர்த்
தனியே தாலோ தாலேலோ. (5)
வேறு.
இம்மையு மறுமையும் வேண்டுப
வர்க்கரு ளெம்பெரு மானார்தம்
மிருவிழி களிலொரு விழியெதிர்
குவியா வியல்பிற் றாதலினாற்
செம்மை நிரம்பிய நின்றிரு
முகமுயர் தெய்வத் தன்மைதிகழ்
செந்தா மரையென வாய்விழி
யந்தச் செந்தா மரைபூத்த
கொம்மை யமைந்தமர் நீலோற்
பலமுங் குமுதமு மேயென்னக்
குலவும் பச்சைச் சிறிய
குழந்தாய் கோதறு சேதுவினிற்
றம்மை யுணர்ந்தவர் தாமாகியதாய்
தாலோ தாலேலோ
சருவ சகத்தருள் பருவதவர்த்தனி
தாலோ தாலேலோ. (6)
உளமல ரதிலுள் ளூறி யுவட்டா
வொண்சுவை மிகுதேனே
யுள்ள வினிக்குந் தெள்ளமு தேபத
முற்ற நறும்பாகே
களவியன் மலவிருண் முழுதற வருமதி
காலை யிளங்கதிரே
கண்மணி யேயுயர் பெண்மணி யேயருள்
கனிதரு கற்பகமே
யிளவெயின் மணியெறி கடல்வளை சேது
விராமே சுரமெய்தி
யெமைவழி யடிமைகொ ளெந்தை மணஞ்செ
யிளம்பொன் னெழின்மலரே
தளரிடை யனநடை யுடைமட மயிலே
தாலோ தாலேலோ
சருவ சகத்தருள் பருவதவர்த்தனி
தாலோ தாலேலோ. (7)
இந்தப் பரவணி செஞ்சடை யிறைவனை
யிரவிற் சந்தேக
வேவிய துங்கன லிடைவே வாம
லிருந்தது நீரிலெதிர்
முந்தச் சென்றது மொருமழ மகவை
முதலையின் வாய்நின்று
முன்ன ரழைத்ததும் வாரியி லொருகன்
முடுக வியக்கியது
மெந்தத் தேவரு முடியா திதுவென
வென்பைப் பெண்ணாக
வெழுவித் ததுமினி யெவ்வற் புதமு
மியற்ற விருப்பதுமாஞ்
சந்தச் செந்தமிழ் வளர்சே துவிலமர்
தருவே தாலேலோ
சருவ சகத்தருள் பருவதவர்த்தனி
தாலோ தாலேலோ. (8)
வஞ்சகர் நெஞ்சினி லொருபொழு தாயினு
மருவாய் தாலேலோ
மாமா யையினை யகன்றார் விழியெதிர்
வருவாய் தாலேலோ
தஞ்ச மெனப்பிர மன்மால் செயுமஞ்
சலியாய் தாலேலோ
தராதல முழுதுங் காத்தருள் புரியச்
சலியாய் தாலேலோ
எஞ்சலி லகில சராசர மீன்ற
விருந்தாய் தாலேலோ
இராமே சுரநக ரெந்தை வலத்தி
லிருந்தாய் தாலேலோ
கஞ்ச மலர்த்திரு வாணி துதித்திடு
காதலி தாலேலோ
கலாபே தங்கள் கடந்திடு மலைவளர்
காதலி தாலேலோ. (9)
வேறு.
கூறு தமிழுணர் வித்தகி தாலோ தாலேலோ
கூடு பசிய நிறக்கிளி தாலோ தாலேலோ
ஊறு புதுமது ரக்கனி தாலோ தாலேலோ
ஓது மறையரு ளுத்தமி தாலோ தாலேலோ
ஆறு சமய விளக்கொளி தாலோ தாலேலோ
ஆனை மருவு மடப்பிடி தாலோ தாலேலோ
தேறு மதிமிகு பத்தினி தாலோ தாலேலோ
சேது பருவத வர்த்தனி தாலோ தாலேலோ. (10)
மூன்றாவது தாலப்பருவம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் (30)
----------------------------
4. சப்பாணிப்பருவம்.
இராகவன் பூசித்த வைங்கரக் கடவுளா
மிபமுகத் தெம்பிரானா
ரிலவண புரத்திற் றிருக்கோயில் கொண்டிருந்
தெதிர்வந் திறைஞ்சியென்றும்
விராவுமன் பர்க்கெலா மிடையூறு சிறிதேனு
மேவா விதங்கருத்தில்
வேண்டிய வரங்கொடுத் தின்னருள் சுரந்திட
விளங்குமான் மியமலிந்த
புராதன மிகுஞ்சேது தீரத்தி லெண்ணிலாப்
புலவரே கவிகளாகிப்
பூசைசெ யிராமே சுரத்திறையை மருவிப்பல்
புவனப் பரப்பிலுள்ள
சராசர மனைத்துந் தரும்பச் சிளங்கிள்ளை
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (1)
திருவணை யிராகவன் வகுக்கத் தொடங்கி முன்
சிலையொன்ப தங்கையேந்திச்
செறிவுற நிறுத்தலா லவ்விடந் தன்னையே
திகழ்சேது மூலமென்று
மருவுநவ பாஷாண மென்றுஞ்சொல் வாரங்கு
வந்துகட லாடியதன்மேல்
வலியசக் கரதீர்த்த மாடியன் புற்றிரா
மனைவணக் கம்புரிந்தே
யருமையா கியதர்ப்ப சயநத்தை யுங்கண்ட
வர்க்களவில் பாவமெல்லா
மரித்துப் பெரும்பிணி யகற்றிவீ டுங்கொடுத்
தருள்செயு மிராமநாதர்
தருவள ரிராமே சுரந்தரு கருங்குயில்
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (2)
உத்தம மிகுந்தமலை யத்துவச பாண்டியற்
கொருபெரும் புதல்வியாகி
யொளிருநவ மணிமகுட முடிபுனைந் துலகெலா
மோராழி செலவுருட்டி
முத்தமிழ் நடஞ்செயும் பொதிகைமலை தன்மரபின்
மூலமலை யாயிருக்க
முன்பெற்ற வரசியா மன்னைநின் றிருமுன்னர்
மும்முறை பணிந்தெழுந்து
சித்தமகி ழன்பர்க்கு நன்மக வளித்தருள்
செய்திடுமி ராமநாதர்
தேவியா யாவியா யைந்தொழிற் குத்துணைச்
சிற்சத்தி யாய்ச்சிறந்து
சத்தமரி ராமே சுரத்திலுறு மம்மைநீ
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (3)
*ஒன்றுசேர்க் கும்பெரும் பொருளெனப் பிறவுமோ
ரொண்பொருள் விளக்குகின்ற
வுயர்கந்த மாதனச் சாரலிற் பன்மணி
யொதுக்குவா ரிதியுலாய்ச்சூழ்
துன்றுசீர் பெறுமிரா மேசுரங் கைதொழுது
துதிபல புகன்று சேதுத்
தூயசீர் பாடினா லளகேச னிகரெனத்
தொகுபெருஞ் செல்வம்வாழ்நா
ளென்றுமே காலவரை யறையின்றி யருள்புரி
யிராகவன் பூசைசெய்யு
மீசன்மலர் வாசன் றொழுபரம தேசனா
மென்றிடு மிராமநாதன்
றன்றுணைவி யாய்வருஞ் சிற்சுகோ தயவாரி
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (4)
*ஒன்று சேர்த்தல் - கந்தம்; பெரும்பொருள் - மாதனம்;
எனவே- கந்தமாதன மென்பதாயிற்று.
புண்ணிய மெனும்பகுதி முப்பத் திரண்டும்
புரிந்திடு சிறப்புமுயர்பூம்
புகலியிலொர் பூசுரன் மழவிளம் பிள்ளையைப்
பொய்கையிற் கண்டுபுனித
முண்ணிலவு சிவஞான வமுதமுங் கொங்கைநின்
றொழுகுபா லுங்கலந்தே
யுண்ணுமா றின்னருள் சுரந்துதவும் வண்மையு
மொள்வளைக ளாலொருத்தன்
றிண்ணிய புயக்குவடு பத்திலும் வடுப்படச்
செய்யும்வன் றிறலுமிக்க
செங்கையம் பங்கையங் கொண்டுநீ செழுமதித்
தெண்ணிலா முற்றமாடந்
தண்ணிய வளம்பொலி யிராமே சுரத்தன்னை
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (5)
தெய்வமட மங்கையர்கள் கற்பகப் பூமாரி
சேவித்து நின்றுகொட்டச்
செறியுநின் றோழியர்கள் சூழ்ந்துநின் றிருவுளந்
தேர்ந்திருகை கொட்டநாமு
முய்வமென் றிந்திரை வாணிச்சி வாய்த்துதியி
வுலகெலாங் கொட்டமேன்மே
லுயரிரா மேசுரமு வந்தநின் கோயிலி
னொருங்குபே ரிகைகள்கொட்டக்
கைவருஞ் சேமக் கலங்கண்மட மெங்கணுங்
காலந் தெரிந்துகொட்டக்
காமியங் கருதா திறைஞ்சியா னந்தநீர்
கண்ணின்று மன்பர்கொட்டச்
சைவநெறி தழையவருண் மழைபொழி பசுங்கொண்
சப்பாணி கொட்டியருளே
சற்சனர் தொழும்பர்வத வர்த்தனி மகிழ்ந்தினிய
சப்பாணி கொட்டியருளே. (6)
வேறு.
மோது கருங்கடல் வெண்டிரை வீசிய
முழுமணி முத்தங்கண்
மொய்த்திருள் பருகிள நிலவு பொழிந்து
முயங்கி வயங்கிடவு
மீது தெரிந்தெதிர் தேடி வரும்பரி
செனவெள் வளையினமெங்
கெங்குந் திரிதிரு வீதியில் வருவா
ரிணையடி நோவாமற்
றாது மணங்கமழ் புன்னைகள் சொரிமலர்
தமனிய முறும்வெள்ளித்
தகடென மிளிரு மிராமே சுரமுறை
தாயே யிமயமலைக்
கோது தவிர்ந்திடு மன்னவன் மதலாய்
கொட்டுக சப்பாணி
குலமலி தருமுயர் மலைவளர் காதலி
கொட்டுக சப்பாணி. (7)
நஞ்சினை யுண்டவர் துஞ்சில ரென்பது
நாடெங் குந்தெரிய
நகைவா யமுதஞ் சிறிதுளி ராம
நாதர் தமக்குதவும்
வஞ்சி யிளஞ்சிறு கொடியே பிடியே
மானே தேனேபொன்
மல்கு மிராமே சுரமுறு கந்த
மாதன வரையிலம
ரஞ்சினை யாறினை வென்றவ ரறிவினி
லறிவாய் நின்றொளிரு
மருமறை முடிவே யருவுரு வடிவே
யழகிய பொன்மாலை
கொஞ்சிய மகவாய் வந்தருள் குயிலே
கொட்டுக சப்பாணி
குலமலி தருமுயர் மலைவளர் காதலி
கொட்டுக சப்பாணி. (8)
மதிமர பினிலொரு மகளாய் வருகினை
மருவு கொடிக்கயலை
வளர்தரு மினமென மதிலின் மதின்மேன்
மாடத் துச்சியினி
லதிபொரு ளளவுசெய் திடகிறு வியமணி
யமைபொற் கலசத்தி
லண்டமு மெண்டிசை யுங்கண் டெண்ணிட
வகலமு நீளமுமே
துதிபெற மிகுகோபு ரநவ நிலையிற்
சூளிகை மாளிகையிற்
றோரண மறுகில் வாரிதி வெண்டிரை
தூவுங் கயல்கண்மிகக்
குதிகொ ளிராமே சுரநகர் மாதுமை
கொட்டுக சப்பாணி
குலமலி தருமுயர் மலைவளர் காதலி
கொட்டுக சப்பாணி. (9)
வேறு.
ஓவிய மேநடை கற்றெதிர் வந்திடி லொப்போத
லுற்றிடு சேது நகர்ப்பெரு மாட்டி யுரத்தோடு
மேவிய வேதன் முதற்பல விண்ணமர் மெய்த்தேவர்
வெருவி விடத்தின் மெலிந்தடி தொழுது மிகத்தாழ
வாவி யளித்திடு மிறையுட னீமகி ழப்பாடு
மடியவ ராமெமை வரதமொ டபய மளித்தாளக்
கூவிய தெனவளை முரலக் கொட்டுக சப்பாணி
குற்றமில் பருவத வர்த்தனி கொட்டுக சப்பாணி. (10)
நான்காவது சப்பாணிப்பருவம் முற்றிற்று.
ஆகச் செய்யுள் 40.
------------------
5. முத்தப்பருவம்.
கதலி யுடும்புத் தலைகொக்குக்
கமலஞ் சாலி கமுகுபுயல்
கயல்வேய் கேழற் கொம்புசங்கு
கரும்பு கரிக்கோ டாதிபல
வுதவு முத்த மிறுகன்முத
லுரைக்குக் குற்றம் பலவுடைத்தீ
தொன்றோ விலைப்பட் டூரெங்கு
முலாவித் திரியு முதைவிரும்பே
மிதமார் மலர்கள் பலதூவி
யிலிங்க மாநின் னிறைவர்தமை
யிராமே சுரத்திற் கண்டிறைஞ்சி
யேத்தி நின்னை யெங்களுக்குச்
சதநீ யென்பார்க் கருள்செயுநின்
றமிழ்வாய் முத்தந் தருகவே
தலைவ ரிடமார் மலைவளர்கா
தலியே முத்தந் தருகவே. (1)
முடிதொட் டமர ருலகளக்கு
மூங்கின் முத்த மிப்பிமுத்த
மொய்ம்பார் யானை மருப்புமுத்த
முதிரும் பன்றிக் கொம்புமுத்தம்
வெடிபட் டறுபட் டொடிபட்டு
மேனி வெளுத்துக் கீழ்வீழ்ந்து
மிகநா ணுட்கொண் டிருந்ததெவர்
விரித்துச் சொல்லார் பகுத்தறியார்
தொடிதொட் டொளிர்கை யரமகளிர்
சூழி ராமே சுரத்தமுதே
தொழுவார் வறுமைக் கலியிருளைத்
தொலைக்குஞ் சுடரே நீருண்டு
தடிபட் டொளிர்கார்க் குழலாய்நின்
றமிழ்வாய் முத்தந் தருகவே
தலைவ ரிடமார் மலைவளர்கா
தலியே முத்தந் தருகவே. (2)
கால முணர்ந்து தாயாரு
கணைக்கால் கிடத்தி நறுங்கலவை
கமழு மஞ்சட் காப்பணிந்து
காயு மிளவெந் நீராட்டி
நீல விழிக்கண் ணீருந்தி
நெஞ்சோ டணைத்து நெற்றியில்வெண்
ணீறிட் டதன்மேற் றிகழ்சாந்த
நிகழ்பொட் டிட்டு நேர்நோக்கிக்
கோல முலைப்பா லூட்டியருள்
குலவு மயிலே குயிலேயெங்
குறைபா டகற்ற வந்தருளுங்
குழந்தா யென்றுட் கொள்ளுமன்பு
சால விராமே சுரத்தில்வளர்
தாயே முத்தந் தருகவே
தலைவ நிடமார் மலைவளர்கா
தலியே முத்தந் தருகவே. (3)
மேக மருவு முத்தெனக்கார்
மேய குழலிற் றொங்கலிடும்
வெண்ணித் திலக்கோ வைச்சரமு
மின்பாய் சுட்டி யணிநுதலாம்
பாக மதியு மணிக்குழைகள்
பதியுஞ் செவியு மதையெதிர்த்துப்
பார்க்குங் கருணை பொழிவிழியும்
பயிலு மூக்கி னணிமணியு
மேக போக மாயிருக்கு
மிராம நாத ருளமகிழு
மிராமே சுரத்திற் காணுமன்ப
ரிடையூ றொன்று மெய்தாமற்
றாக சோகந் தவிர்த்திடுநின்
றமிழ்வாய் முத்தந் தருகவே
தவத்தோர் பரவும் பருவதவர்த்
தனித்தாய் முத்தந் தருகவே. (4)
பாண்டி நாட்டி லரசுரிமை
பதியும் பொதிய மலைபோலப்
பதியுஞ் சேது பதிக்கண்ணே
பயிலுங் கந்த மாதனவெற்
பீண்டி வருமுன் றிலின்விளையா
டிளமா மயிலே யெந்தாயே
யெல்லாப் பவமு மரிக்குமிட
மிராமே சுரம்போ லெங்குமிலைத்
தீண்டி னாலுங் கண்டாலுக்
தீங்கு தவிர்க்குந் தீர்த்தமிந்தச்
சேது போலும் யாண்டுமிலைத்
தெளிந்தேஞ் சென்மப் பௌவமினித்
தாண்டி வீடு பெறவருளுந்
தாயே முத்தந் தருகவே
தவத்தோர் பரவும் பருவதவர்த்
தனித்தாய் முத்தந் தருகவே. (5)
வேறு
பற்றெலாம் விட்டேக வுருவாய பிரமநிலை
பாவனா தீதமெய்திப்
பார்க்கின்ற சிவயோக முனிவர்பல் லாயிரவர்
பயில்கந்த மாதனத்தின்
சுற்றெலாந் தீர்த்தமு மிலிங்கமும் தொண்டர்பலர்
தூயபூ சனையியற்றத்
தொக்கமண மிக்கநந் தனவனமு மிளநீர்
தொகுந்தென்னை யுந்துலங்கு
நற்றெலா முலையினர்க ளாடலும் பாடலு
நவிற்றிரா மேசுரத்தி
னாமமொரு காற்சொலிற் சேமநிதி யரசுவாழ்
நாண்மகப் பேறுநல்குங்
கற்றெலா முணர்பவர்கள் காண்கின்ற காட்சியின்
கனிவாயின் முத்தமருளே
கலையாதி யீயுமலை வளர்காத லீயுனது
கனிவாயின் முத்தமருளே. (6)
அரிசனம் பூசிநா டகநடிப் பார்போல
வாயினுஞ் சேதுதீர்த்த
மாடுவா மெனவந்து மூழ்கியொரு நாளேனு
மகலா திருந்துநின்னைத்
தரிசனஞ் செய்வரே லதிவிரத தபசெபந்
தானந்தி யானமேரமஞ்
சாரசுவ மேதமுத லியாகஞ் செயும்பலன்
றருமிதொன் றோசகத்தில்
விரிசன சமூகத்தி லிணையிலாப் பெருவாழ்வும்
விண்ணுலக வாழ்வுமதன்மேல்
வீட்டுவாழ் வுந்தரு மிராமே சுரத்தினில்
விரும்புமடி யேங்கள்வினையின்
கரிசனந் தமுமறப் புரிபெருங் கருணைநின்
கனிவாயின் முத்தமருளே
கலையாதி யீயுமலை வளர்காத லீயுனது.
கனிவாயின் முத்தமருளே. (7)
குருபத்தி னியைமருவு பாவமுந் தந்தைதாய்
குழவியந் தணர்களிவரைக்
கொலைசெயும் பாவமு மிதற்குநிகர் மற்றைக்
கொடும்பாவ முந்தவிர்க்க
விருபத்து மூன்றுதீர்த் தத்தினும் படியவேண்
டுவதிலை யிவற்றுளேயொன்
றெதிலேனு மொருமுறை படிந்துமூழ் கிற்போது
மெனுமிரா மேசுரத்திற்
சொருபத்தி னிலையினைச் சுழுமுனையின் வழிசென்று
தூயமதி மண்டலத்திற்
றுவாதசாந் தச்சிதா காசத்தி லறியவெதிர்
தோன்றுமொரு பெரியதுணையே
கருபத்தில் வந்தவன் செய்சேது காக்குநின்
கனிவாயின் முத்தமருளே
கலையாதி யீயுமலை வளர்காத லீயுனது
கனிவாயின் முத்தமருளே. (8)
வேறு.
படிமே லுயரிய தமிழால் வழிபடு
பத்தர் தமக்கெளிதே
பயிலா ணவமல வலிபோய் நிலைகுலை
பட்டொழி யச்செயுநீ
யடியே மையுமொரு பொருளா வருள்புரி
யக்கரு தித்தனியே
யணுவா யினுமினி யகலா தெதிருற
லற்புத மித்தரைமேன்
மிடியா லுழல்பவர் தொழுதா லவர்துயர்
விட்டக லக்கடிதே
விலகா நிதிதன தனைநே ரிவரென
மெத்த வளிப்பவளே
முடிசூ டியசிவ பெருமான் மகிழ்மயின்
முத்த மளித்தருளே
முதுசே துவின்மலை வளர்கா தலிமலர்
முத்த மளித்தருளே. (9)
வழுவா வறமவ ளவுமே வளர
வளர்த்த மடப்பிடியே
மறையா கமமுணர் பெரியோ ருளமுற
வைத்த விளக்கொளியே
தொழுவார் பவமுழு வதுநீ றெழவெதிர்
சுட்ட சுடர்க்கதிரே
துறைதோ றிலகிய நிறைவே நிருமலர்
துய்த்த சுவைக்கனியே
யழுமா கவுணியர் பசிபோ மமுத
மளித்த தனக்கிளியே
யடியார் குறைநனி பெரிதா யினுநினை
வற்ற வருட்கடலே
முழுமா தவர்பலர் தொழுமா மடமயின்
முத்த மளித்தருளே
முதுசே துவின்மலை வளர்கா தலிமலர்
முத்த மளித்தருளே. (10)
ஐந்தாவது முத்தப்பருவ முற்றிற்று.
ஆகப்பருவம் 5-க்குச் செய்யுள் (50).
---------------------------
6. வருகைப் பருவம்.
தேவகம் மியனுமிது செய்தவ னெனக்குச்
சிறந்தவ னெனக்களிப்பச்
சிற்பநூல் விதிமுறை திறம்பாது நவவாயில்
செறியச்செய் சிகரிதூவி
மேவரிய மண்டபந் திருமதில் விளங்குமணி
மேடைகட மேயகுன்ற
மிக்கசித் திரமெழுது மாடங்கள் பொற்கலசம்
விரவுமேன் முகடுவேய்ந்தங்
கேவரும் வியப்பெய்து கூடங்கள் வளமிகு
மிராமே சுரத்திலெய்தி
யிராமநா தற்குநிற் குங்கங்கை யபிடேக
மின்புற வியற்றுவித்தோர்
பாவமுழு தையுமரித் திட்டகா மியமுதவு
பச்சைக் குழந்தைவருக
பதமுத்தி யீயும்பர் வதவர்த்த னீயும்பர்
பரவுற்ற நீவருகவே. (1)
இடையாய நட்பினர்க் குவமான மாகிய
விலாங்கலியு மிழிவுமிகவு
மெய்துகடை யாயநட் பாளர்க்கு நேர்கமுகு
மெற்குநிக ரில்லையென்னத்
தடையாது மிலையென்று தானே தனக்குச்
சமானமாய்த் தலையெடுத்துத்
தலையாய நட்பினரை யொத்துமேல் வளர்பெண்ணை
தருவெனத் தனையடைந்தார்க்
கடையாதி பலனரு ளிடங்கள்பல சூழ்வந்
தடுக்கமுத் தங்களலையா
லன்பிற் கொடுத்திடுஞ் சேதிரா மேசுர
மதைப்பணிந் தவரையயனார்
படையா திருக்கவிச் சென்மசா பல்லியம்
பலிதஞ்செ யன்னைவருக
பதமுத்தி யீயும்பர் வதவர்த்த னீயும்பர்
பரவுற்ற நீவருகவே (2)
ஆணிப்பொ னம்பலத் தற்புத நடங்காணு
மன்னையே யடிமைசெய்யு
மவர்தமை யிராமே சுரத்திலா ளரசியே
யாசைப் பெருக்கமதனாற்
காணிக்கை யாகநின் கணவர்க் குயர்ந்தபொற்
காசுதரு வாருமந்தக்
காசினா லர்ச்சனைசெய் வாரும்வட காசியிற்
கங்கைகா வடியிலேற்றிப்
பேணிச் சுமந்துவரு வாருநின் புகழினைப்
பேசத் தொடங்குபெரியோர்
பிறருநின் பேரழகு கண்டுதரி சிக்கமுன்
பின்வரப் பெரிதுவந்து
பாணித்தல் செய்யாது புன்முறுவல் பூத்துப்
பரிந்துநேர் வருகவருக
பதமுத்தி யீயும்பர் வதவர்த்த னீயும்பர்
பரவுற்ற நீவருகவே. (3)
வேறு.
பேதை மார்பற் பலபருவப்
பெற்றிக் கேற்ற தனம்போலப்
பெருத்துஞ் சிறுத்துங் குரும்பைபிஞ்சு
பெருங்காய் முதற்பல் பேர்கொண்ட
கோதை யொருவு மிளநீரின்
குலைகள் சுமந்து குளிர்தென்னை
குலவி ராமே சுரமென்று
கூறு வார்கேட் பார்க்கியம
வாதை தவிர்க்குஞ் சஞ்சீவி
மருந்தே புதிதாய் வருவிருந்தே
மதியுண் மதியே மரகதமே
மலையத் துவச மன்னவனாந்
தாதை வளர்த்த தவமகவாந்
தாயே வருக வருகவே
தனியே கனியே பருவதவர்த்
தனியே வருக வருகவே. (4)
பரிதி பரிகா லுடைதென்னம்
பழத்தி னமுதுங் கழிக்கரையுட்
படுங்கார்ப் புன்னை மலர்த்தேனும்
பலவா றோடிப் பாய்ந்திடலும்
பிரிவின் மூல மலமகலப்
பிறங்கு முயிர்போ லுவரென்ற
பெயரு மாறி மதுரமிகப்
பெற்ற கடலே பேரகழாச்
சுரிகொள் வளைகள் பெரும்புகழாத்
துலங்கத் தோன்று திசைநான்குஞ்
சூழி ராமே சுரத்தருட்பால்
சுரக்குந் தெய்வச் சுரபியே
சரிக ளொடுநூ புரஞ்சிலம்பத்
தமியே மெதிரே வருகவே
தனியே கனியே பருவதவர்த்
தனியே வருக வருகவே. (5)
அழைத்தே நின்னை யாசையினா
லழகுக் கழகு செய்துபார்ப்
பவர்போற் கலவை நறும்பனிநீ
ராட்டி யாடை புனைந்தவனி
யிழைத்தே கண்ணே றெய்தாம
லியங்கு திலக மிட்டணிக
ளிளமைப் பருவந் தனக்கேற்ப
வெல்லாந் திருத்தி யெழில்விழிக்குக்
குழைத்தே கருமை யெழுதியருள்
கொழிக்குங் கோலங் காண்பதற்கே
குலவி ராமே சுரத்திலமர்
குளிர்பூங் கொம்பே கோகிலமே
தழைத்தே மாந்தண் பூந்தேனே
தாயே வருக வருகவே
தனியே கனியே பருவதவர்த்
தனியே வருக வருகவே. (6)
கானற்குழி யிற்கமழ் நெய்தல்
கரைமே லூருங் குடவளையுட்
கால்சாய்ந் துகுத்தபூஞ் செழுந்தேன்
கைதை மலரிற் கலந்திருக்குங்
கூனற் குருகு பேடையொடு
குஞ்சுக் கூட்டித் தானுநனி
குடித்த வெறியிற் கடலலையிற்
குதித்துக் கயலைக்கொத் தியெழீஇத்
தூநற் புளின மிசையனந்தந்
தொகுமி ராமே சுரத்திலமர்
சுவைப்பைங் கரும்பே கடைபடாத்
தூய வமுதே யறம்வளர்த்த
தானச் செழுங்கை மலரனமே
தாயே வருக வருகவே
தனியே கனியே பருவதவர்த்
தனியே வருக வருகவே. (7)
சென்மக் கடலைக் கடத்தியுயிர்த்
திரள்கண் முத்திக் கரைசேரச்
செயுநின் றுணைத்தாட் கலம்போலச்
செறியு மாந்த ரவரவர்செய்
கன்மத் துறையிற் சேரநெடுங்
கரிய கடலைக் கடத்துமரக்
கலங்கள் கோடிக் கணக்கின் மேற்
கரையி னருகு காணவரும்
பன்மற் கடங்கணடந் தேகும்
படிசெய் சேதுபதியி லெங்கள்
பண்டை வினையின் பற்றறுத்த
பாவாய் பூவாய் காவாய்முன்
றன்மத் துறையின் முறைகாட்டுக்
தாயே வருக வருகவே
சலியா தருளு மலைவளர்கா
தலியே வருக வருகவே. (8)
அருவே யுருவே யருவுருவே
யருளே பொருளே யன்பரகத்
தகலா திருக்கும் பேரொளியே
யகிலாண் டமும்வந் தடங்குமொரு
கருவே பழங்கற் பனைகாலங்
கடந்த முதலே யத்துவிதக்
கலப்புந் துவிதப் பிரிவுமாய்க்
காண்பார் காணப் படுங்காட்சித்
திருவே பிள்ளைப் பேராசை
தீர்க்க வந்த செல்வமே
திகழி ராமே சுரத்திலமர்
தெய்வப் பெண்கள் சிகாமணியே
தருவே யுயர்சிந் தாமணியே
தாயே வருக வருகவே
சலியா தருளு மலைவளர்கா
தலியே வருக வருகவே. (9)
வரும்பே ரின்பத் துறைகொழிக்கு
மணியே வருக சிவானந்த
வடிவே வருக வுயிர்மலநோய்
மாற்று மருந்தே வருகபசுங்
கரும்பே வருக வெங்களிரு
கண்ணே வருக கண்மணியுட்
கலந்த பாவாய் வருகசிவங்
கமழ்தேன் கலந்துட் களித்தருந்துஞ்
சுரும்பே வருக முத்திநெறித்
துணையே வருக பவந்தொலைக்குஞ்
சுடரே வருக தொண்டர்குழாந்
தொகுமி ராமே சுரத்திலுறை
தருந்தேங் கனியே வருகவுயர்
தாயே வருக வருகவே
சலியா தருளு மலைவளர்கா
தலியே வருக வருகவே. (10)
வருகைப்பருவ முற்றிற்று.
ஆகப்பருவம் 6-க்குச் செய்யுள் (60).
--------------------------------
7. அம்புலிப் பருவம்.
மல்குமுயர் வானசம் பந்தரமு தங்கடைய
மன்னுமொரு தம்ப மாகி
வந்துநின் றருளலாற் சாரங்க முட்கொண்டு
வைகலா லோங்கு மலைமுன்
னல்குமிசை யாற்கற்க டகமுன்கை வசமருவு
நட்பினான் மெய்த்த வளமார்
நன்மையா லுயர்தரு மிராமே சுரத்தினை
நயந்தம ரிராம நாதர்
பில்குகரு ணைப்பிழம் பாயெங்க ளன்னையாம்
பெருமாட்டி தனைநி கர்ப்பாய்
பெரியமதி யேயாங்கள் சொல்லுவ துனக்குநனி
பெரியமதி யாநினைக்கண்
டல்குதலி லாவனச மலர்நிகர் முகத்திவளொ
டம்புலீ யாடவாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாடவாவே. (1)
கதியுதவு மாகாய மெய்தலாற் காவியங்
கண்மருவு பொருளா தலாற்
கந்தமா தனமுறத் தக்கமா தரையுட்
கலத்தலாற் கருணை யொளியாற்
அதிதரு கிரேதா யுகத்திலே ஞானநற்
சோதிவடி வாய தற்பின்
றுறுதிரே தாயுகத் தில்வேத வுருவாய்த்
துவாபர யுகத்தி லுயரு
மதியினில் வருஞ்சிவ சொரூபமாய்க் கலியுக
மதிற்சேது வடிவு பெற்று
மகிதலங் கொண்டாடு மான்மியம் வளர்ந்துவர
வதியிரா மேசு ரத்தி
லதிசமா னம்பெறுவை யெங்கள்பெரு மாட்டியுட
னம்புலீ யாடவாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (2)
ஒருகோண சக்கர முனக்குண்டு நாற்பதோ
டொருமூன்று தொக்க கோண
முள்ளசக் கரமிவட் குண்டுபதி னாறுகலை
யுண்டுனக் குயரு மருளால்
வருகோ ணமக்கறச் செயுமிவட் காயிரம்
வண்கலைக ளுண்டுனக் கோர்
மண்டலந் தானுண்டி ராமே சுரம்போலு
மண்டலம் பலவி வட்குண்
டிருகோ ணயந்துறுங் கருணைபொழி யுங்கண்
ணிராமநா தர்க்கு மனைவி
யெனுமகா தேவிக்கு நீகுறைந் தனையெனற்
கெள்ளளவு மைய மிலையா
லருகோண னடிதொழுங் கந்தமா தனவெற்பி
லம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (3)
சிவபிரான் முடியினீ துவிதமா கிக்கலந்
திடுவைதிரு மேனி தன்னிற்
செம்பாதி யத்துவித மாகிக் கலப்பளிவள்
செங்கதிர்ச் செல்வ னொருவற்
குவகையுற நீகொடுத் தவைமுழுதும் வாங்குவா
யுலகிற் பலர்க்கு முதவு
மொண்பொருள்க ளிற்சிறிதும் வாங்கிலா ளிவளென்னி
லுயர்வுனக் குள்ள தோகாண்
டவமிகு மிராமே சுரத்தினிற் கந்தமா
தனமலைச் சார லெய்தித்
தநுக்கோடி யாடிய மநுக்கோடி யாயினுந்
தகுமுத்தி சார நல்கி
யவனவள தாயெங்கு நிறைபூர ணப்பொருளொ
டம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (4)
உனக்குமிவ ளுக்குமெத் தனையோ பலப்பல
வுறும்பேத மவையு ளின்ன
மொன்றுமட் டுஞ்சொல்வ நின்றுநீ சிறிதுகே
ளுருவமில் லாத வொருவன்
றனக்குநீ வசையுறக் குடையாகி யிரவிலே
தங்குவாய் தவனன் வெப்பந்
தணிக்கவறி யாயிவள் சராசரங் கட்கெலாந்
தண்ணளிக் குடையி னாலே
மனக்குமய லேசெயும் பிறவிவெப் பந்தணிய
மாற்றியெக் கால முஞ்சீர்
வதிதரு மிராமே சுரத்திலடி நீழலும்
வழங்கியிசை வாய்ந் திருப்ப
ளனக்குழு நடைக்கருகு வருமெங்க ளம்மையுட
னம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண் மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (5)
எப்போது நிலைநிற்க முப்பத் திரண்டற
மியற்றினா ளிவளி டத்தி
லெவ்வெவர் விரும்புமுயர் தானமெல் லாமுள்ள
திதுநிற்க விவளை யன்பான்
முப்போது மடிதொழுது பெற்றவரு ளன்பர்பலர்
முதுசேது மார்க்க முழுது
மொய்த்திடச் செய்தபல சத்திரத் துட்புகினு
முன்றோன்று *மன்ன தான
மொப்போது மாறின்றி நிற்குவேண் டியவெலா
மோகையுட னீகை புரிவ
ளொருகாலி ராமே சுரத்துக்கு வருதியெனி
லுண்மையுணர் வாயு ணர்ந்தோ
ரப்போது மறிவதற் கரிதா யிருந்தவளொ
டம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (6)
*அன்ன தானம் - அத்தன்மையான பலவகைப்பட்ட தானங்கள்.
வெஞ்சினத் தாலிவள் விழித்தீயின் வருகன்னி
வேள்விக் களம் புகுந்து
வெய்யதக் கன்றலை தனைத்தடிந் தோரிரவி
விழியைப் பறித்து வேறோர்
செஞ்சுடர்க் கதிரவன் பல்லைத் தகர்த்தங்கி
செங்கர மறுத்து வாணி
செய்யகா தொடுமூக்கி னைக்கொய்து நின்னையுந்
தேய்த்துவான் றேவர் பலரும்
பஞ்சினைப் போலப் பறந்தோடு மாசெயப்
பட்டபா டன்ற றிந்தும்
பராமுகஞ் செய்வதழ கன்றிரா மேசுரம்
பதியாக வைகி யென்று
மஞ்சினர்க் கபயங் கொடுத்தருளு மம்மையுட
னம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (7)
ஒருத்தியா மிவளென்று நினையற்க விவண்மைந்த
ரோரிருவ ருளர வர்க்கு
ளொருவனொரு கொம்பினாற் கயமுகா சுரன்வலியை
யுடலொடு பிளந்தெ றிந்தான்
விருத்தியா மாயிரத் தெட்டண்ட வாழ்வையும்
வீணே யிழக்க வொருவன்
வேலினாற் சூரபன் மாவினை வகிர்ந்தனன்
வீடுவிழை வார்க்கு ஞானத்
திருத்தியா கந்தரு மிராமே சுரத்திற்
செழுங்கடைக் கண்கள் சிறிது
சேந்திடிற் பாந்தளொன் றிவள்கணவர் முடிநின்று
தேடிவந் துனைவி ழுங்கு
மருத்தியொடு நீயதன் முன்னரெம் மன்னையுட
னம்புலீ யாட வாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாட வாவே. (8)
நின்றந்தை யெனுமிரா மன்பிரம கத்திதனை
நீக்கியரு ணிமலன்யாவன்
னேயமிகு மிவள்கணவ னன்றோ நினாதுடலி
னிற்கறையி னோடுநீங்கா
வன்றந்த கயரோக மாற்றுவது மிகவெளிது
வருதியென் றருகழைத்தால்
வாரா திருப்பருனை யன்றியொரு வருமில்லை
வளர்கந்த மாதனத்தின்
குன்றர் தனைக்கண்டு சேதுநீ ராடியெதிர்
கும்பிட்டு நிற்பருள்ளங்
குறித்தது முடித்திடு மிராமே சுரத்திலிவள்
குணமெலா முணர்மறைச்சேய்க்
கன்றத்தண் வாவியிற் பால்கறந் தருள்பவளொ
டம்புலீ யாடவாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாடவாவே. (9)
சங்கங்கள் வெண்மணற் றுறைதொறுஞ் சொரிதருந்
தண்ணிலா முத்துமருகே
தங்குநெய் தற்பரப் பெங்கும்வயி ரச்சிறிய
தகடென விளங்குமுப்பும்
வங்கங்கள் மலைபோல நிற்குங் கடற்றிரை
வழங்குமா ணிக்கமணியும்
வானுற நிவந்திடுங் குவியல்கள் சேதுபடு
வளர்கந்த மாதனத்தை
யிங்கன்பு கொடுவந்து பிறமலைகள் காணற்
கிருந்ததொப் பென்னலாகு
மிரமே சுரத்தினைச் சூழுமலர் வாவியு
மிளம்பொழில் வளங்களுங்கண்
டங்கங்கு களிகூர லாகுமெம் மம்மையுட
னம்புலீ யாடவாவே
யலையார் கயற்கண்மலை வளர்கா தலிப்பெணுட
னம்புலீ யாடவாவே. (10)
ஏழாவது அம்புலிப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 7-க்குச் செய்யுள் (70)
--------------------
8. அம்மானைப்பருவம்.
புன்னையங் கானலிற் பன்மலர் சொரிந்து நனி
பொதியும்வெண் புளினமன்பிற்
புரந்தர னருச்சனைசெய் வெள்ளியங் கிரியெனப்
பொலியுஞ் சிறப்புமிக்க
தென்னையங் காய்கள்பல சேதுமுத லியசெழுந்
தீர்த்தங்க ளாடிவந்து
சிவபூசை செய்பவர்க் குபயோக மாகச்
செறிந்திடு சிறப்புமொருகாற்
றன்னையங் கார்நினைக் கினுமிட்ட சித்திதரு
தண்கந்த மாதனத்தின்
றகுசிறப் புங்கண்டு மகிழிரா மேசுரந்
தனிலறந் தழையநிற்கு
மன்னையன் பாகவெண் டரளவம் மனையெடுத்
தம்மானை யாடியருளே
யருளே யுருக்கொண்மலை வளர்கா தலிப்பெண்மயி
லம்மானை யாடியருளே. (1)
நல்லொழுக்கத்திற் சிறந்தமறை யவர்கையி
னன்பொருட் டானநல்கி
நகுசேது மூழ்குவார் சிவநிந்தை குருநிந்தை
நாடொறு நயந்தபொல்லாப்
புல்லொழுக் கினராயி னுஞ்சுட்ட பொன்னெனப்
புனிதரா தற்குயர்ந்த
போதந் தருங்கந்த மாதனச் சாரலிற்
பொருவரு மகிழ்ச்சிபூப்ப
வில்லொழுக் கத்தினுந் துறவொழுக் கத்தினு
மிருப்பர்வீ டெய்துதற்கோ
ரேணியென வருமிரா மேசுரங் காணியென
வென்றென்றும் வீற்றிருக்கு
மல்லொழுக் கியகுழற் பெண்ணணக் கரசிநீ
யம்மானை யாடியருளே
யருளே யுருக்கொண்மலை வளர்கா தலிப்பெண்மயி
லம்மானை யாடியருளே. (2)
காதலுறு மந்நலார் கற்பினா லாறிலொரு
கடமைகைக் கொண்டுவையங்
காவல்புரி மன்னர்செங் கோலினா லந்தணர்
கதிக்குமறை வேள்விகளினான்
மாதமும் மாரிதவ றாதுபெய வெவ்வளனு
மலிதலான் மாந்தரெல்லாம்
வறுமையொரு சிறிதுமறி யாமலவ ரவர்தங்கண்
மரபின்முறை வழுவிலாரென்
றோதலுறு திருவிரா மேசுரந் தனில்வளரு
முனதுபுன் முறுவலொக்கு
மொண்டரள முழுதுந் திரட்டியே வேறுவே
றுண்டைசெய் தோச்சல்போலு
மாதலா லெம்மானை யாட்டுநீ யத்தரள
வம்மானை யாடியருளே
யருளே யுருக்கொண்மலை வளர்கா தலிப்பெண்மயி
லம்மானை யாடியருளே. (3)
தெளிவைத் தருந்தெண் ணிலாமுற்ற மேடையிற்
சித்திரத் திற்சிறப்பத்
தீட்டுமட மாதரும் வீட்டுமட மாதருந்
தெளியா துளந்திகைத்துக்
களிவைத்த காதலுறு காளைய ரிமைப்பினாற்
கண்ணியிற் கமழ்செழுந்தேன்
கசியுநுண் டுளிதுளித் திடுதலாற் புடைபெயர்தல்
காணலாற் கனியுமினிய
கிளிவைத்த தீஞ்சொற் கிளர்ச்சியா னாணமீக்
கிளர்தரத் தேர்ந்துநேரே
கிட்டியெட் டித்தழுவி முத்தமிடு தேவையிற்
கெழுமுமா கீர்த்திமல்கு
மளிவைத்த கட்கருணை காட்டுநீ மாணிக்க
வம்மானை யாடியருளே
யருளே யுருக்கொண்மலை வளர்கா தலிப் பெண்மயி -
லம்மானை யாடியருளே. (4)
இராமலிங் கத்தையும் மனுமலிங் கத்தையும்
மிவ்விரண் டிற்குமுன்னே
*யிருமுனிவர் பூசைசெ **யிரண்டுலிங் கத்தையு
மிராமே சுரத்திலெய்தி
நிராமய பரம்பர நிரஞ்சன நிராலம்ப
நித்தபரி சுத்தமுத்த
நிரதிசய சச்சிதா னந்ததுரி யாதீத
நின்மல வெனத்துதிக்க
வராமலங் கங்கிருந் தாயினு மனத்தாலும்
வாக்காலு மெண்ணிவாழ்த்து
வார்கொடிய பாவநோய் வறுமையென் னுங்கரிய
வயிரநிறை வன்மரத்தை
யராமரம் போலும்விழி யன்னைபசு மரகதக்
தம்மானை யாடியருளே
யருளே யுருக்கொண்மலை வளர்கா தலிப்பெண்மயி
லம்மானை யாடியருளே. (5)
வேறு.
எயிலையும் வாரிதி யெனுமக ழினையு
மெதிர்ந்தறி வாரெவரு
மிவளவு தானென முடியா வளமி
கிராமே சுரமெய்திப்
பயிலுயர் சேது புராணஞ் சிறிது
படிப்பவர் கேட்பவர்தம்
பாவம் போகும் படிசெய்து முடிவிற்
பரமப தந்தருநீ
கயிலையு மேருவு மேல்கீழ் போய்வரு
காட்சிக டுத்திட்வெண்
கதிர்மணி யம்மனை பொன்னிய லம்மனை
கைக்கம லத்திலெடுத்
தயிலையு நிகர்விழி யருள்பொழி பசுமயி
லாடுக வம்மனையே
யருமை மிகுத்திடு பருவத வர்த்தனி
யாடுக வம்மனையே. (6)
*இருமுனிவர் – கௌதமர், அகத்தியர்.
**இரண்டு. இலிங்கம் - அத்திரபூர்வ மகாதேவர்.
செறிநரை திரைபிணி மூப்புத் தீரச்
செய்திடு முயர்சருவ
தீர்த்தம் படியிலி தார்க்குத் தெரியுந்
தெரியுமெ னாவந்து
வறிதக லாது பலன்பெற் றேசெலு
மான்மியம் வாய்ந்தவள
மலியு மிராமே சுரமுறு கோயிலின்
வந்தெதிர் வந்தித்துப்
பிறிவறு வானவர் விண்ணிற் பெயர்தல்
பெயர்ந்துபின் மீளுதலாம்
பெற்றி நிகர்ப்பப் பொன்னம் மனைபல
பிரியமொ டங்கையெடுத்
தறிவினி லறிபவ ருள்ளூ றியவமு
தாடுக வம்மனையே
யருமை மிகுத்திடு பருவத வர்த்தனி
யாடுக வம்மனையே. (7)
தினையள வாயினு மெய்யன் புடனே
சிவனடி யார்தம்மைச்
சேதுக் கரையின் மயேசுர பூசை
சிறப்பச் செய்தனரேற்
பனையள வாகப் பலனடை யும்படி
பாக்கிய சாலிகளாய்ப்
பயிலச் செய்யு மிராமே சுரமுறு
பைம்பொற் கோகிலமே
வினையறு முயிர்பல விண்ணிற் போதலும்
வினையின் சேடமதை
மீள நுகர்ந்திட வருதலு மொப்பென
வெகுவித வம்மனைக
ளனைவரும் விழிகளி கொள்ள வெடுத்தினி
தாடுக வம்மனையே
யருமை மிகுத்திடு பருவத வர்த்தனி
யாடுக வம்மனையே. (8)
கச்சார் முலையினர் மூழ்குங் கலவை
கலந்திடு நீர்சேதுக்
கடனீ ரூடு புலான்மண நீக்கிக்
கமழும் படிகலவும்
பொச்சா வாமை நிரம்பிய தொண்டர்செய்
புண்ணிய மீதென்னப்
பொலியு மிராமே சுரபுர மருவிய
பொன்னம் பூம்பாவா
யிச்சா ஞானக் கிரியா சத்திக
ளெனுமூ வேவலரை
யெங்கெங் கும்போய் வரவிடு மாறென
வியலம் மனைகளெடுத்
தச்சா னகிகண வன்றொழு மிறைமுன்
னாடுக வம்மனையே
யருமை மிகுத்திடு பருவத வர்த்தனி
யாடுக வம்மனையே. (9)
ஏயின பணிசெயு மெம்போ லிகளுக்
கிஃதோர் புதையலெனு
மிராமே சுரநக ரிற்பல தொண்ட
ரியற்று திருப்பணியின்
கோயிலி னினையெதிர் கும்பிட வேனுங்
குளிர்கால் வீசுதநுக்
கோடி முதற்பல தீர்த்தம் படிதல்
குறித்தே னுஞ்சேது
வாயிய லரசுறு மன்னர்செய் மூன்றா
வதுபிர காரத்தின்
*மண்டப வளநனி கண்டிட வேனுமுண்
மனமகிழ் தரவருவா
ராயின வர்க்கெளி தினிலருள் புரிநீ
யாடுக வம்மனையே
யருமை மிகுத்திடு பருவத வர்த்தனி
யாடுக வம்மனையே. (10)
*மண்டபம் - சொக்கட்டான்சாரி மண்டபம்.
எட்டாவது அம்மானைப்பருவ முற்றிற்று.
ஆகப்பருவம் 8-க்குச் செய்யுள் (80).
-----------------------
9. நீராடற்பருவம்
நானிலம் புகழ்கந்த மாதனந் தனிலேயி
ராமன்வந் தன்றிராம
நாதரைப் பூசைசெய் தற்காக வவரருகி
னற்றநுக் கோடிகொண்டு
மானிலங் கீறலுங் கங்கையதன் வழியாக
வந்துபின் கோடிதீர்த்த
மன்பெய ரடைந்துபடி வார்க்கெலா முத்தியை
வழங்குமான் மியமலிந்த
தேனிலங் கியமலர்க் காவிரா மேசுரஞ்
சிவபுர மெனச்சிறந்த
சின்மயா னந்தவடி வாயிருந் தருள்செயுஞ்
செல்வியே தேவர்வைகு
மேனிலங் கீழுற வுயர்ந்தபொதி கைப்பொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே. (1)
தராதலத் திற்சிறப் புறுமிரா மேசுரந்
தன்னைநிகர் தலமுமுத்தி
தருகந்த மாதனம் போன்மலையு மில்லெனத்
தங்குசெழி யன்றனாட்டி
விராவணற் கொன்றபழி தீரவுங் கஞ்சனை
யிறந்திடச் செய்தபழிபோ
யேகவுங் கோடிதீர்த் தம்படிந் தாடிய
விராகவன் கண்ணனென்பார்
பராவநற் கருணைசெ யிராமநா தரின்வலப்
பாலிருந் தருள்கொழிக்கும்
பச்சைப் பசுங்கிளி நினாதுயிர்ப் பாங்கியர்கள்
பலர்சூழ வந்துதென்றல்
விராவுநற் பொதியையி லிருந்தெழும் பொருநைநதி
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே. (2)
தரைபடு மரங்கள்கற் பகமாக வெண்மணல்க
டகுமிலிங் கங்களாகச்
சஞ்சரிக் கின்றமா னிடர்தேவ ராகத்
தகுங்கந்த மாதனத்தி
விரைபடுஞ் சேதுத் தநுக்கோடி விண்கங்கை
யெனவுய ரிராமலிங்க
மெம்பிரா னெனமகி ழிராமே சுரந்தன்னி
லீன்றதா யாயநீயிங்
கரைபடு மகிற்சந்த னங்களுங் குங்குமமு
மளவளாய் மிருகமதமு
மரியநறு மணமலியு மலர்களுங் கொண்டுவரு
மடியரே மனையதாகி
விரைபடுந் தென்றல்வரு மலயநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ளநீ ராடியருளே. (3)
செய்ந்நன்றி கொன்றபா வந்தவிர்த் திடுசங்க
தீர்த்தநற் சீதைகற்பின்
றிறமறி வறுத்துமக் கினிதீர்த்த மறுபட்ட
செங்கையுங் காலும்வளர
வுய்ந்நன்றி செய்தமுனி தீர்த்தஞ் சிவார்ச்சனைக்
குபயோக மாவுஞற்ற
லுற்றுவறு மைப்பிணி யகற்றிலக் குமிதீர்த்த
முயர்கால வயிரவர்க்குப்
பெய்த்தன் தவிர்பிரம கத்தியகல் வித்தவொரு
பெரியசிவ தீர்த்தமென்றும்
பெயராவி ரமே சுரத்துன தருட்டிறம்
பேசுவார் மாசுபிரிய
மெய்ந்நன்றி யருளுநீ பொதியைநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ள நீ ராடியருளே. (4)
குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவங்
குறைசெய்த சீதைகுண்டங்
கோடிவே தப்பிரா மணர்தமைக் கொல்கொலை
குறைத்திடும் பிரமகுண்ட
மன்றிரா மன்பணி யிலிங்கத்தை யீர்த்துவா
லற்றுவிழ வநுமன்வீழு
மவ்விடத் தூற்றெடுத் தாடுவர் மகப்பெறுத
லடைவிக்கு மநுமகுண்ட
மென் றினைய தீர்த்தங்க ளாடுவா ரெண்ணியாங்
கெப்பலனு மென்றுநல்கு
மிராமே சுரத்தினி லிராமநா தர்க்கரு
கிருந்தரு ளிளம்பெண்மயிலே
வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
வெள்ளநீ ராடியருளே
மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
வெள்ள நீ ராடியருளே. (5)
வேறு.
அருகி லுயர்நா ரணமுனிவ
னரியயோ கஞ்செய் துமுத்தி
யடையச் செய்யு மான்மியஞ்சா
ரமுத தீர்த்த மன்புமிக
மருவி மூழ்கு வார்க்கரசும்
வாழ்வு முதலா மங்கலங்கள்
வழங்கல் செயுமங் கலதீர்த்தம்
வலிய வரக்கர் வதஞ்செய்த
செருவி ராமன் செஞ்சடையிற்
றெறித்த விரத்தந் தீர்த்தசடா
தீர்த்த மலிரா மேசுரத்திற்
றித்தித் திருக்குத் தெள்ளமுதே
பொருவில் பாண்டிப் பொருநைநதிப்
புதுநீ ராடி யருளுகவே
புகழ்ப்பர் வதவர்த் தனியனமே
புது நீராடி யருளுகவே. (6)
சகலா கமசாத் திரபலிதஞ்
சரியை யாதி தவப்பேறு
தருமி ராம தீர்த்தமொடு
தங்கு கோடி சனனமெடுத்
தகலா தியற்றும் பாவமெலா
மரிக்கும் பாவ நாசமென
லாய தீர்த்தந் தனங்கனம்வா
கனம்புத் திரப்பே றளித்தருளுஞ்
சுகமா ரிலக்கு மணதீர்த்தந்
தொகுமி ராமே சுரமென்று
சொன்னா ரேனு மவர்வறுமைத்
துயரக் கடலிற் சுழலாதோர்
புகலா யிருக்கு நீபொருநைப்
புதுநீ ராடி யருளுகவே
புகழ்ப்பர் வதவர்த் தனியனமே
புதுநீ ராடி யருளுகவே. (7)
ஏந்த லிராம நாதரொடு
மிருந்து நீயிங் கெமைப்புரக்கு
மிராமே சுரத்தி னின்றிருத்தா
ளிறைஞ்சும் பரவ ரேந்திழையார்
தாந்தந் தவள முத்தளந்து
தந்து சாலி தனையளந்து
சதாவாங் குவது போலுயர்வு
தாழ்வு சிறிதுங் கருதாது
கூந்த லியற்கை மணங்கொடுத்துக்
குளிர்சந் தனமுங் குங்குமமுங்
குலவுஞ் செயற்கை மணங்கொண்டு
குடைந்து குடைந்து மகிழ்கூர்ந்து
பூந்தண் பொருநைத் தெய்வநதிப்
புதுநீ ராடி யருளுகவே
புகழ்ப்பர் வதவர்த் தனியனமே
புதுநீ ராடி யருளுகவே. (8)
வேறு.
அரிய புரூரவ வரசன் சாப
மகற்றிய வுயர்சாத்தி
யாமிர்த தீர்த்த மகத்திய தீர்த்தம்
மலகை பிடித்தயர்விற்
றிரிய வுறுந்துயர் தீர்வே தாள
தீர்த்த முதற்பலவாந்
தீர்த்தமு மூழ்குவர் சென்மந் தோறுஞ்
செய்திடு பவமெல்லா
மிரிய வகற்றிப் பரகதி நல்கு
மிராமே சுரமெய்து
மெந்தா யிந்திரை யாதி யரம்பைய
ரேயின் பணியன்பிற்
புரிய நெருங்கினர் விரிவுறு பொருநைப்
புதுநீ ராடுகவே
புலவரை யாதரி மலைவளர் காதலி
புதுநீ ராடுகவே. (9)
சென்ம மெடுத்த பலன்றரு கங்கை
செறிகயை யமுனையெனத்
திகழு மிராமே சுரமுத் தீர்த்தஞ்
சேர விருந்தாலுந்
தொன்மல மாசிருள் கழுவக் கருணைத்
தூய செழுங்கடலுட்
டோய்த்துத் தோய்த்துயிர் முழுதையு மிகுபரி
சுத்த மியற்றிடுநீ
நின்மர பினர்கள் வளர்த்த பசுந்தமிழ்
நிலவித் தோன்றியசீர்
நிகழும் பொதியையி னின்று பிறந்திடு
நேய நினைந்தேனும்
பொன்மலர் பலவெதிர் கொடுவரு பொருநைப்
புதுநீ ராடுகவே
புலவரை யாதரி மலைவளர் காதலி
புதுநீ ராடுகவே. (10)
ஒன்பதாவது நீராடற் பருவம் முற்றிற்று;
ஆகப்பருவம் 9-க்குச்செய்யுள் (90)
---------------------
10. ஊசற்பருவம்.
ஆன்மதத் துவம்வித்தி யாதத்து வத்தின்மே
லாயுவமை யற்றுநின்ற
வரியசிவ தத்துவா தீதசிங் காதனத்
தானந்த வடிவமுற்று
நான்மறப் பெய்தியவர் ஞானவிழி யாலெதிர்
நயந்துதரி சிக்கவைகு
நங்கையெனி னுங்கொண்ட கோலந் தனக்கியைய
நாடக நடிக்கிலன்றோ
மேன்மதிப் பாதலான் மேனைதன் புதல்வியென
வெளிவந்த நீவியக்கும்
வெண்கயிலை வந்துநின் கேள்வரைத் தரிசித்து
விண்மே லெழுந்துசேறல்
போன்மதிற் றலையுய ரிராமே சுரத்தினிற்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (1)
எழின்மிகும் பவளச் செழுங்காலின் மேலிட்
டிருக்குமணி வயிரவிட்டத்
திளநிலவு காலும்வெண் டரளவடம் யாத்திட்
டிருங்கதிர்க் கிரணமேபோல்
வழியுமது மலர்கள்பல கோவையிட் டென்னநவ
மணிகளிற் செய்தபலகை
மாமுடியி னாப்பணொரு பச்சைப் பசுங்கிள்ளை
வதிதல்போன் மனமகிழ்ந்து
செழியன்மக ளாயவன் செய்தவத் தால்வந்த
சிற்சத்தி நீயிருந்து
சேவிக்கும் யாங்களிரு கண்பெற்ற பேறுறத்
தெரிசனந் தந்துதேவர்
பொழியுமலர் நிறையிரா மேசுரத் திற்செழும்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (2)
அற்பமரு நங்கணவர் தலையிற் சுமந்தலுத்
தாரென்ன வதனைமாற்று
வாமென் றெடுத்துமா முகில்களைச் சேரவொன்
றாக்கிநீ நினதுதலையிற்
பற்பலரு மறியச் சுமத்தல்போன் மென்னுமைம்
பாலுமத னருகுநாளும்
பயிலும்வெண் பிறையனைய நுதலுமதி வதனமும்
பார்க்குமொரு பார்வையாலே
சிற்பரம ருக்குமயல் செய்யுமிரு கண்களுஞ்
சேவைசெய் சேடியர்க்குந்
தேவர்முதல் யாவர்க்கும் விழிகவர் வனப்பிற்
சிறந்தவிம் மிதம்விளைக்கப்
பொற்பம ரிராமே சுரத்தினி லிருந்துநீ
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே (3)
கட்கடை கொழிக்குநின் கருணைவெள் ளத்தினிற்
காலந் தெரிந்துதோயுங்
கடவுட் குழாத்தினுட் பாலுட் புகுந்திடுங்
கங்கடுப் பக்கலந்தே
யெட்கடையி னளவும்வில காதுநின் றுன்பணி
யியற்றுமடி யேங்களைக்கண்
டிவரருக ரல்லரென நீர்பிரித் திடுமன்ன
மென்னப் பிரித்திடாம
லுட்கசியு மன்புசிறி தாயினும் வைத்துநீ
யொண்முறுவல் பூத்துவந்தங்
கொவ்வொரண் டங்களுந் தூங்கியவி ராட்புருட
னொத்துவா னூர்ந்துலாவும்
புட்களி குடம்பைசெறி புன்னைமலி சேதுவிற்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (4)
நிலவுமிழு மறுவற்ற திட்பஞ் செறிந்திலகு
நெடுவயிர நிரைகள்சூழ
நிறுவியதன் மத்தியிற் பச்சைச் செழுங்கதிர்
நிரம்புநன் னீலமணிகள்
பலபதித் ததனடுச் சேயொளி பரப்புமுயர்
பரியமா மணிபதித்த
பலகையி லிவர்ந்துநீ வீற்றிருந் தருளுவது
பாலாழி யூடுபடரு
மிலகுபா சடைநடு மலர்ந்தசெந் தாமரையி
னிணையிலாப் பசியவெகினத்
திளம்பிள்ளை யொன்றிருந் தானிகர்த் திடுமென
விலக்கிய விலக்கணந்தேர்
புலவர்புக லத்திருவி ராமே சுரத்தினிற்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (5)
தேவார திருவாச கந்தெரிந் தோதுவார்
செஞ்சொலுஞ் சிவபிரானார்
திருவாய் மலர்ந்தருளு மறைமந்தி ரங்களுஞ்
செறியுநஞ் செவிகளுக்கு
நாவார நிகரென்று கவிவாணர் சொற்றதனை
நம்பியஞ் சாதுசற்று
நாணாது கண்டவர் நகைப்பரென் றெண்ணாது
நம்முன்னர் நணுகியதுவென்
றோவாத வெகுளிமீக் கிளர்தர வொறுத்தல்போ
லும்பர்முனி வோர்தவஞ்செய்
தொருசிறிது முணராத சீரடியி னான்மதித்
துவகையுட னுள்ளிருந்து
பூவார மணமலி யிராமே சுரத்தினிற்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (6)
உரமடங்கலுமுற்ற நரமடங் கலையன்
றொறுத்தபெரு மான்றனுளமா
மூசலி லிருந்துவிளை யாடிச் சிதாகாச
வுருவா யிருக்குமொருநீ
யரமடந் தையர்களொரு புறநின்று கைகொட்டி
யானந்த நடனமாட
வரியமே னகையுருப் பசியாதி யரிவைய
ரனந்தவிசை பாடியாட
வரமடங் கலுமின்று பெறுவதற் கிதுசமயம்
வாய்த்ததென் றஞ்சலித்து
வாயார வாழ்த்திவிழி யாரநேர் தரிசித்து
வண்சேது வைகுமிந்தப்
புரமடங் கலும்வந்து புடைசூழ வளர்செழும்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (7)
வாணியிந் திரைமணி வடந்தொட் டசைக்க*வரி
மனைவிசா மரையிரட்ட
மாமுனிவர் பன்னியர்க ணீடூழி பல்லாண்டு
மங்கலம் பாடிவாழ்த்தக்
காணிய வரும்பிரம னிந்திரன் முதற்றேவர்
கைகுவித் தஞ்சலிப்பக்
கருணைநோக் கமயங் குறித்தேவல் செய்யுங்
கருத்தினர்கை கட்டிநிற்பத்
தாணிழ லடைந்திரண் டறுகலப் பெய்திடச்
சமரச சுபாவநிலையிற்
றங்குமா தவர்மருவு கந்தமா தனமலைச்
சச்சிதா னந்தவடிவம்
பூணிய லிராமே சுரத்திறைவர் மகிழநீ
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (8)
*அரி - இந்திரன்.
எதிலாயி னுஞ்சோர்வி லாதமெய் யன்பருக்
கெளிதினின் னருளளிக்கு
மிராமே சுரத்திலுறு முனதுபிள் ளைத்தமிழை
யெழுதினோ ரெழுதுவித்தோர்
துதியாக நாளும் படித்தவர்கள் கேட்டவர்கள்
சொற்பொரு ளுணர்ந்துபாடச்
சொன்னவர்க ளாயுளுஞ் செல்வமுங் கல்வியுந்
தூயபே ரறிவுறுஞ்சந்
ததியாதி யாஞ்சகல சம்பத்து மெய்தித்
தழைந்துநீ டூழிவாழச்
சாதுசங் கங்கள்வீ டெய்துதற் கிதுபெருஞ்
சாதனம தாகவென்றும்
புதிதா யிலங்குநவ மணிகளாற் செய்செழும்
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே (9)
வேதநெறி சைவநெறி மேன்மேல் வளர்ந்தோங்க
மெய்ப்பத்தி நெறிவிளங்க
வெண்ணீறு கண்டிகை யெழுத்தைந்து செபதவம்
விரதந் தியானம்வாழச்
சீதமிகு சேதிரா மேசுரமு மெண்மூன்று
தீர்த்தமு மவற்றுண்மூழ்கித்
திளைக்கின்ற மாந்தரு மிராமநா தருமவர்
திருப்பணியு மதுசெய்வாரு
மாதமும் மாரியுஞ் சேதுமன் னவரரசும்
வளர்கந்த மாதனத்தின்
வைகிய சராசரமு நீயுநின் றிருவருளும்
வாழவடி யார்கள்வாழப்
பூதமைந் திரவிமதி யுயிரா யிருக்குநீ
பொன்னூச லாடியருளே
புனிதப் படுத்துபரு வதவர்த் தனிப்பெண்மயில்
பொன்னூச லாடியருளே. (10)
பத்தாவது ஊசற்பருவ முற்றிற்று,
ஆகப்பருவம் 10-க்குச் செய்யுள் 100. காப்புச்செய்யுள் 1. ஆக 101
பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
-------------------
இந்நூலாசிரியரியற்றிய தோத்திரச்செய்யுட்கள்.
உப்பூர்விநாயகர்.
அப்பூருஞ் செஞ்சடையா ரளித்தபிர ணவப்பொருளை
யடியார்க் கெல்லாம்
வெப்பூரும் பிறவிநோய் மாற்றுமோ ரருமருந்தை
வியாசர் வாக்காற்
செப்பூரும் பாரதத்தை மேருவிற்றீட் டியதேவைச்
சேது செய்ய
வுப்பூரி லிராகவன்பூ சித்தகண பதியையன்பி
னுளங்கொள் வோமே. (1)
மேலைக்கோபுரவாயில் முருகக்கடவுள்.
வேலைக்கோ கனகமலர்த் திருக்கரங்கொண்
டசுரர்கிளை வேர றுத்துப்
பாலைக்கோ கிலத்தைநிகர் பனிமொழிவள் ளியை
மணந்து பரவுஞ் சேது
மேலைக்கோ புரவாயி லமர்ந்தவனை
வணங்குவார் வெய்ய கால
னோலைக்கோர் பயமுமின்றி யுயர்ந்தசிவ
பதத்திலென்று முறுவர் மாதோ. (2)
வெயிலேறு மணிப்புயங்க ளோராறுங் கருணைபொழி
விழியீ ராறும்
அயிலேறு கரதலமு மபயவர தாம்புயமு
மமையப் பெற்றுக்
குயிலேறும் பொழிற்சேது மேலைக்கோ புரவாயில்
குடியாக் கொண்ட
மயிலேறுங் குமரகுரு பரனிருசெந் தாமரைத்தாள்
வணக்கஞ் செய்வாம். (3)
இராமநாதர்.
கங்கைநீ ரேற்றுடலங் குளிர்பொறுக்க முடியாத
கருத்தீ தென்ன
அங்கையா லுரித்தபுலித் தோலுமியா னைத்தோலு
மமையப் போர்த்து
மங்கையா மலைவளர்கா தலிகாண நளனென்பான்
வரைகள் வாங்கிச்
செங்கையாற் செயிராம சேதுவில்வாழ் சிவபிரான்
றிருத்தாள் போற்றி. (4)
சடையிலமு தந்துளிக்கு மதிபுனைந்துந் திருமேனித்
தழலின் வெம்மை
யடையவுநீங் காமையினாற் கடற்குளிர்காற் றவாவிவந்தாங்
கமர்தல் போலக்
கொடையிலுய ரிராமசே துக்கரைவாய்த் திருக்கோயில்
கொண்டு வைகி
விடையிலெழுந் தருட்காட்சி கொடுத்தருளெம் முடையானை
விரும்பி வாழ்வாம். (5)
பொன்பூத்த செழுங்கொன்றை மாலையொடு வெள்ளெருக்கம்
பூவுந் தாங்கு
மின்பூத்த சடைமுடியெம் பெருமானம் மூவர்தமிழ்
மெய்ப்பா வோடு
தென்பூத்த சேதுரா மேச்சுரத்திற் பிறவடியார்
செப்பும் பாவுந்
தன்பூத்த கருணையினா லேற்றருளு மெனநினைந்தஞ்
சலிசெய் வோமே, (6)
அருவிலொரு நான்குமா யுருவிலொரு நான்குமா
யமைந்த தன்றி
யுருவருவி லொன்றென்னுஞ் சதாசிவமா மிலிங்கவுரு
வுற்றுப் பின்னர்த்
திருவிரா மேசரெனச் சிறப்புப்பே ரொன்றெய்திச்
சேது தன்னிற்
பருவதவர்த் தனிமணந்த நாயகனாம் பரம்பரனைப்
பணிதல் செய்வாம். (7)
பந்தமா னதுதொலையப் பழவடியார் பணிந்தெழுந்து
பலங்கைக் கொள்ளுங்
கந்தமா தனமலையின் கற்பகத்தைக் கருணைமதங்
கவிழ்க்கு மொற்றைத்
தந்தமா முகன் றனைமுன் றந்தமா முகமைந்து
தாங்குந் தேவை
யெந்தமா பாவமும்போக் கிராமநா தரைநெஞ்சு
ளிறைஞ்சி வாழ்வாம். (8)
சேதுமாதவர்.
தழையுமலர்ப் பொழிலிரா மேசுரத்திற் றன்னடியார்
தனக்குச் செய்த
பிழையனைத்துப் பொறுத்தருளித் தான்செய்த சேதுவினைப்
பேணிக் காக்க
விழையுநினைப் பொடுசேது மாதவப்பேர் கொண்டென்றும்
வீற்றி ருந்த
மழைநிறத்துத் திருமேனிப் பெருமானைக் கைகுவித்து
வணங்கி வாழ்வாம். (9)
அநுமார்.
கவியிலுயர் கம்பன்போ லெழுபதுவெள் ளங்கொண்ட
கவிகட் கெல்லாம்
புவியிலுயர் வுற்றிரா கவன்றூதா யிலங்கையிற்போய்ப்
பொருது மீண்டு
குவிகையொடு காசியிற்சென் றிறைஞ்சியிரு சிவலிங்கங்
கொணர்ந்து தாபித்
தவிரிரா மேச்சுரத்தி லமரனும கவியிருசீ
ரடிகள் போற்றி. (10)
----------
தோத்திரப்பாக்கள் முற்றியன.
திருச்சிற்றம்பலம்.
----------------------------------------
This file was last updated on 15 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)