pm logo

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 8
பாம்பாட்டிச் சித்தர், சங்கிலிச் சித்தர் &
திரிகோணச் சித்தர் பாடல்கள்


songs of pAmpATTic cittar, cangkilic cittar & tirikONac cittar
(cittar pATalkaL - part 8)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 8

Source:
1. பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
வா. சரவணமுத்துப்பிள்ளை
சென்னை B. இரத்தின நாயகர் ஸன்ஸ், 1954.
2. சித்தர் பாடல்கள் - பெரிய ஞானக்கோவை
பதிப்பாசிரியர் : சி.எஸ். முருகேசன்
2004. சங்கர் பதிப்பகம், சென்னை.
----------

1. பாம்பாட்டிச் சித்தர் பாடல்


கடவுள் வணக்கம்

கண்ணிகள்

தெளிந்து தெளிந்துதெளிந் தாடுபாம்பே - சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே - சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. 1

நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. 2

பொன்னிலொளி போலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின் மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின் றாடுபாம்பே. 3

எள்ளிலெண்ணெய் போலவுயி ரெங்கு நிறைந்த
ஈசன் பதவாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கிய டங்கித்தெளிந் தாடு பாம்பே. 4

அண்டபிண்டந் தந்த வெங்கள் ஆதிதேவனை
அகலாம மேலநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே. 5

சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்
தொழுதழு தலற்றிற் தொந்தோந்தோ மெனவே
நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி யாடு பாம்பே. 6

அருவாயும் உருவாயும் அந்தியாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயுங் குருவாயும் சீவனாயும்
செறிந்தவஸ் துவைப்போற்றி யாடு பாம்பே. 7

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே. 8

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே. 9

குரு வணக்கம்

சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப்
போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே. 10

பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே. 11

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த
மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே. 12

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. 13

அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே. 14

காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்
தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்
துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே. 15

கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே. 16

அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே. 17

கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே. 18

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது
மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின்
மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே. 19

பாம்பினது சிறப்பு

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே. 20

வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே
மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே
தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
தலையெடுத் தேவிளையாடு பாம்பே. 21

குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே. 22

மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
கண்ணேசெவி யாகக்கொண்டாய் ஆடு பாம்பே. 23

சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்
சங்கரனுக் காபரணந் தானுமாகினாய்
மந்திரத்திற் கடங்கினாய் மண்டல மிட்டாய்
வளைந்து வளைந்துநின் றாடு பாம்பே. 24

சித்தர் வல்லபங் கூறல்

எட்டுநாகந் தம்மைக்கையா லெடுத்தேயாட்டுவோம்
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கடங் காதபாம்பைக் கட்டி விடுவோம்
கடுவிஷத் தன்னைக்கக்கி யாடு பாம்பே. 25

ஆதிசேடன் ஆயிகினுமெம் மங்கையி னாலே
ஆட்டிவிடு வோமெங்கள் ஆக்கினைக்குள்ளே
நீதியோடங்கியே நின்றிடச் செய்வோம்
நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே. 26

தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்
துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்
ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே. 27

எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம்
ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்
மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்புநீ நின் றாடுபாம்பே. 28

மண்டலமுற் றுங்கையால் மறைத்து விடுவோம்
வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம்
தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்
தோன்றலுக்கு முன்பு நின் றாடாய் பாம்பே. 29

மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கிவருவோம்
முந்நீருள் இருப்பினு மூச்ச டக்குவோம்
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
தார்வேந்தன் முன்புநீ நின் றாடு பாம்பே. 30

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே. 31

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே. 32

அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்
அதற்குமே லொருகலை யான தறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்
மன்னனே யாசானென் றாடு பாம்பே. 33

சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே. 34

சித்தர் சம்வாதம்

வாசுகியை ஒருபக்கம் மன்னநிறுத்தி
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனைத் தன்றிக்கிற் சேர்த்துச்
செய்யபது மனைக்கொள் சித்த னாரே. 35

அனந்தனை யொருபக்க மாக நிறுத்தி
அதன்பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்
கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்
கடுஞ்சங்க பாலனைத்தான் சித்த னாரே. 36

அட்டதிக்குஞ் சக்கரங் களாகக் கீறி
அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்
திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்
சித்தந்தடு மாறாதீர் சித்த னாரே. 37

அட்டதிக்குஞ் சக்கரங்க ளமைத்து விட்டோம்
அவ்வவற்றிற் சக்கரங்க ளமைத்து விட்டோம்
எட்டுநாக மிருக்கின்ற இடத்தில் விட்டோம்
இனியென்ன செய்வம்சொல்லும் சித்த னாரே. 38

நடுவாக ஆதிசேடன் றன்னைநாட்டும்
நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
கடுவிஷங் கக்கவேயக் கட்செ விகளைக்
கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே. 39

பொருளாசை விலக்கல்

நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே. 40

யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய்
யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி
நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே. 41

மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்
ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம்
அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே. 42

மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. 43

மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர்
அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே. 44

பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள்
வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே. 45

முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும்
முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே. 46

வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில்
சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே. 47

மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையே
தக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத்
தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே. 48

கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே. 49

பெண்ணாசை விலக்கல்

வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே. 50

செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே. 51

வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே. 52

மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்
கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே. 53

சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே. 54

நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே. 55

மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே. 56

மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே. 57

பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே. 58

மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே. 59

சரீரத்தின் குணம்

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே. 60

இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச் சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே. 61

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேரறியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்த போது
பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே. 62

சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால்
நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும்
நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே. 63

நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே. 64

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோ
கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே. 65

காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும்
கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும்
வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே
வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே. 66

பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி
பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே
ஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்தி
எரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே. 67

மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித்
திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே. 68

தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே. 69

அகப்பற்று நீக்கல்

தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே. 70

கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம்
கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத்
தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே. 71

சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவே
சுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்று
நில்லுமன மேநீபர நின்ம லத்திலே
நின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே. 72

சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல்
தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின்
சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே
தானடக்க வேணுமென் றாடாய் பாம்பே. 73

எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல்
எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும்
கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவே
கட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே. 74

கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்
சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே. 75

கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தை
கூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண்
தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச்
சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே. 76

நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம்
நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதே
சந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே. 77

மனமென்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே. 78

ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே. 79

காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம்
கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே. 80

தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு
வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து
வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே. 81

தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே. 82

ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய்
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே. 83

நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே
பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே. 84

ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும்
அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால
ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே. 85

வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்
திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே. 86

மாசில்கதி வளையிலே மண்டல மிட்டே
மதியான பெரும்பட மடலை விரித்தே
ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை
அடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே. 87

காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே. 88

எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. 89

சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல்
சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்
அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே. 90

காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக்
காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே. 91

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. 92

திரளான போரிலூசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு வையர் செயலால்
ஆனந்தங் கொண்டோமென் றாடாய் பாம்பே. 93

ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே. 94

தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே. 95

பாலிற்சுவை போலுமெங்கும் பாய்ந்த வொளியைப்
பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலே
காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு
களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. 96

தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்
தேகபந்தம் கொண்டனமித் தேச வாழ்வினை
ஓக்காளமென் றெண்ணிமிகு மோகை யுடனீ
உள்ளந் தெளிந்துநின் றாடாய் பாம்பே. 97

சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே. 98

சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே யல்லாதுசற் சாதுக் களுக்கோ
சிமயத்தி லேறினபேர் சித்த மாறுமோ
சித்தர்சித் தாந்தந்தேர்ந் தாடாய் பாம்பே. 99

பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே. 100

மூலவேர றிந்துகொண்டால் மூன்று லகமும்
முன்பாகவே கண்டுநித்ய முத்தி சேரலாம்
சாலவேர றிந்ததாலே தான்பய னுண்டோ
சகத்தைப்பொய் யென்றுதெளிந் தாடாய் பாம்பே. 101

சகத்தனாதி யென்றிடாது தான னாதியார்
சமைந்ததென் றுரைப்பார்கள் சத்தை யறியார்
மகத்துவ நிலைகற்ப வன்மை யல்லாது
மற்றும் வன்மை யில்லையேயென் றாடாய் பாம்பே. 102

ஆயிரத்தெட்டி தழ்வீட்டி லமர்ந்த சித்தன்
அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்
காயமில்லா தோங்கிவளர் காரணச் சித்தன்
கண்ணுளொளி யாயினானென் றாடாய் பாம்பே. 103

நாற்பத்துமுக் கோணநிலை நாப்ப ணதாக
நாடுமக்க ரச்சொரூப நாய கன்தனை
மேற்படுத்திக் கொண்டாலந்த மேலு லகெலாம்
மெல்லடிக்குத் தொண்டேயாமென் றாடாய் பாம்பே. 104

கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே
கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்
கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே. 105

ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடுமொருவன்
அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு
வேறுபட்டால் அவன்றனை மீட்ட லரிதே
மேவிமுன்னே விடாதுகொண் டாடாய் பாம்பே. 106

எண்ணரிய புண்ணியங்கள் எல்லாஞ் செய்துமென்
ஏகனடி நெஞ்சமதி லெண்ணா விடிலே
பண்ணரிய தவப்பயன் பத்தி யில்லையேற்
பாழ்படு மென்றுதுணிந் தாடாய் பாம்பே. 107

எவ்வுலகுஞ் சொந்தமதாய் எய்தும் பயனென்
எங்களாதி பதாம்புயம் எண்ணாக் காலையில்
இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று
எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே. 108

மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே. 109

பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே. 110

இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்
எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்
வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே. 111

எண்சீர் விருத்தம்

ஆகார முதலிலே பாம்ப தாக
      ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
      ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
      சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
      மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே. 112

தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
      தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
      மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
      அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
      இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே. 113

களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே
      கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி
      அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி
      வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்
      சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே. 114

உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
      உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
      வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
      கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
      சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே. 115

ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
      உள்ளும் புறம்பையு மறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே
      ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்கால மில்லாமற் தாணு வோடே
      சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்
தூங்காமல் தூங்கியே சுக மடைந்து
      தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே. 116

விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
      வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்
      காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
      சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்
      ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே. 117

காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
      கருணைக் கடலிலே தியங்க விட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
      நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னி லேறி
      மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆயத் துறைகடந் தப்பாற் பாழின்
      ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 118

மூலத் தலத்திலே நின்ற கருத்தை
      முற்றுஞ் சுழுமுனை தன்னி லூடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
      வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாய்க் கருணை யதனால்
      பரகதி ஞானசொ ரூபமாகி
ஆலச் சயனத்து மாலுட னின்றே
      ஆனந்தஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 119

புலனைந்து வீதியில் வையாளி பாயும்
      புரவி யெனுமனதை ஒருமைப் படுத்தி
மலபுந்த வுலகங் கடந்த தாலே
      மன்னுகுரு பாதத்தி னிலையை நாடித்
தலமைந்து பூலோகங் கடந்த தாலே
      சந்திர மண்டலமுங் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
      ஆனந்த மாகிநின் றாடாய் பாம்பே. 120

குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்
      குறியான ஞானந்துப் பாக்கியாக்கி
அருளென்னும் அருளையே உண்டை யாக்கி
      ஆனந்த மாகவே அதைக்க டந்தே
மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு
      வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
      பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே. 121

கன்னான் குகையிலே கான்ம றிப்போம்
      கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்
      கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்
      மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
      பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 122

சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
      சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
      வேண்டாத மனையினி லுறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
      சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்
ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்
      அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே. 123

நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து
      நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி
விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து
      விண்ணின் வழியிலே மேவி யாடிப்
பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்
      பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்
திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்
      சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே. 124

ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்
      உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
      மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
      மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்
பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்
      பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே. 125

ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
      அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின்மேல் விட்டே யாட்டுவோம்
      மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
      நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்
      யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே. 126

வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்
      மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்
      நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
      கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்
      ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே. 127

சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்
      சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்
      பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்
      உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்
பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்
      பதனம் பதனமென் றாடாய் பாம்பே. 128

மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
      மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
      வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
      பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
      சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே. 129
--------------

2. சங்கிலிச் சித்தர் பாடல்

கும்மி

மூலக்க ணேசன் அடிபோற்றி       எங்கும்
முச்சுட ராகிய சிற்பரத்தில்
வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை
மனத்திற் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே. 1

எங்கள் குருவாம் திருமூலர்       பாதம்
எப்போதும் போற்றித் துதித்தோன்
சங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின்
தாளைப் பணிவாய் ஆனந்தப் பெண்ணே. 2

ஓங்கார வட்டம் உடலாச்சு       பின்னும்
ஊமை எழுத்தே உயிராச்சு
ரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை
நீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே 3

அகாரம் உகாரத் துடன்பொருந்த       அது
யகார மானது அறிந்துகொண்டு
சிகார மான தெளிவினி லேநின்று
தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே 4

பஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர்       இகப்
பற்றினைச் சற்றும் நினைப்பாரோ
சஞ்சலம் இல்லாது யோக வழியதைத்
தானறிந்துய்வாயா ஆனந்தப் பெண்ணே 5

தவ நிலையை அறிந்தோர்க்கு       ஞானந்
தன்னால் தெரியும் எனவேதான்
நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை
நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே. 6

வாசி நிலையை அறிந்துகொண்டால்       தவம்
வாச்சுது என்றே மனது கந்து
தேசி எனும்பரி மீதேறி நாட்டம்
செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே. 7

நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள்       வாசி
நாட்டம் விடார்கள் ஒருக்காலும்
உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை
உற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே. 8

மாலுந் திருவும் வசித்திருக்கும்       இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே. 9

எந்தெந்தப் பூசை புரிந்தாலும்       பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும்
சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன்
சீர்பாதம் அல்லோவா ஆனந்தப் பெண்ணே. 10

தானே தானாக நிறைந்து நின்ற       சிவ
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நான் என்று அறிந் துக்கொண்டு பர
நாட்டம் அறிவாய் ஆனந்தப் பெண்ணே. 11

வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு       முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே. 12

சரியை கிரியை கடந்தாலும்       யோகம்
சாதித்து நின்றருள் பெற்றாலும்
உரிய ஞானவி சர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயனின்று ஆனந்தப் பெண்ணே. 13

தன்னைஇன் னானெனத் தான்தெரிந்தால்       பின்னும்
தற்பர னைப் பார்க்க வேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே. 14

எண்சாண் உடம்பும் இதுதாண்டி       எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்
தலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே. 15

அஞ்சுபேர் கூடி அரசாள       ஒரு
ஆனந்தக் கட்டடங்கட்டி வைத்த
செஞ்சிக் கோட்டையைக் கண்டிதுதானெனத்
தெரிந்துக் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே. 16

ஊத்தைச் சடலம் இதுதாண்டி       நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்
பேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே. 17

ஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள்       என்தன்
ஆப்பனும் என்னை வளர்த்துவிட்டார்
வேத்தாள் என்று நினையாமல் இதன்
விபரங் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே. 18

இந்தச் சடலம் பெரிதென       எண்ணியான்
இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே. 19

மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்       னோடுபின்
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே. 20

எல்லா பொருள்களும் எங்கிருந்து       வந்த
என்றுநான் உற்றிதைப் பார்க்கையிலே
நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்றுபின்
நன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே 21

செத்தபின் கொண்டே சமாதிசெய்து       அப்பால்
சிலநாள்கள் கழித்தந்த மண்ணெடுத்து
உய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப்பின்
உலகோர்க்குதவு ஆனந்தப் பெண்ணே. 22

சகல பொருள்களும் மண்ணாய்       இருப்பதைச்
சற்று நிதானித்துப் பார்க்கையிலே
பகவான் அங்கங்குஎள் ளெண்ணெய்யைப் போலவே
பற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே. 23

மண்ணில் பிறந்தது அழிந்துவிடும்       பார்த்து
வைத்த பொருளும் அழிந்துவிடும்
கண்ணினில் காண்பது அழிந்து விடுமென்று
கண்டறிந்து கொள் ஆனந்தப் பெண்ணே. 24

பெற்ற தாய் தந்தை சதமாமோ?       உடல்
பிறப்புச் சுற்றஞ் சதமாமோ?
மற்றுஉள் ளோர்கள் சதமாமோ கொண்ட
மனைவி சதமாமோவாய் ஆனந்தப் பெண்ணே. 25

யாரார் இருந்துஞ் சதமலவே       நம
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவர் சதமிலை என்பதை
உற்றுநீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே. 26

இந்த வழியைத் தெரிந்துகொண்டே       இவ்
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தம தாகஎன் பாட்டன் போகரிஷி
சொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே. 27

வழி தெரியாது அலைந்தோர்கள்       இந்த
மாநிலந் தன்னில் கோடானகோடி
சுழிமுனை தன்னைத்தெரிந்து கொண்டால்பின்
சுகவழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே. 28

ஆசைஒ ழிந்தருள் ஞானம்கண்டு       வீண்
ஆண்மையைத் தான்சுட் டறுத்து த்தள்ளி
பாசத்தை விட்டுநீ யோகத்தைச் செய்திந்தப்
பாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே. 29

இரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து       நீ
ஏக வெளியையும் கண்டறிந்த
விரைவாய் இந்த விதத்தெரிந்தால் இம்
மேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே 30

பெற்றதாய் தந்தை இருந்தால் என்       கொண்ட
பெண்டீர் பிள்ளை இருந்தால் என்
நற்தவஞ் செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம்சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே. 31

தீர்த்தம் ஆடிக் குளித்தாலும்       பல
தேவா லயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனஞ் செய்தாலும் நாலாம்
மோனம் உண் டோசொல் ஆனந்தப் பெண்ணே. 32

காடு மலைகள் அலைந்தாலும்
கன்மானுட் டானம் புரிந்தாலும்
ஓடுஞ்சித் தத்தை நிறுத்தார்க்குப் பர
உற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே. 33

மாயா உலக மயக்கத்தையும்       நல்ல
வஞ்சியர் மீதுற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே. 34

நாலாவகைக் கலைகள்       அறிந்தாலும்
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறு வார்கள் ஆனந்தப் பெண்ணே. 35

சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு       நற்
தவயோகஞ் செய்துஅங்கு இருக்கையிலே
சங்கிலிச் சித்தனென்று என்பாட்டன் வந்து
சாற்றைத்தெரியும் ஆனந்தப் பெண்ணே. 36
-------------

3. திரிகோணச் சித்தர் பாடல்

கலிவெண்பா

சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும்       நவநீத 1

பொன்பூத்த நீலப் புயல்வண்ண னும் பொறிவாய்
மின்பூத்த நான்முகனும் வேதாவும்       தென்பூத்த 2

செக்கச் சடையானும் தேசுபெற வேயுருவாய்
ஒக்கத் தனிவந்து உதித்தபிரான்       தர்க்கமிடும் 3

வேதமுஞ் சாத்திரமும் வேண்டும் பலசமயம்
பேதமும் காணாப் பெருஞ்சமயம்       நாதத்தில் 4

ஓசை அடங்க ஒளியம் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன்       பூசைபுரி 5

தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி
விண்ட நறைக்கமல மெல்லடியான்       எண்டிக்கும் 6

சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதமையான்       ஆதி 7

முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளியொளியாஞ் சென்மம்       சதகோடி 8

சத்தியும் மந்திரமும் தானாகப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன்       சுத்திய 9

செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார்
நெஞ்சடையான் பிஞ்சு நிலாச்சுடையான் நஞ்சார்ந்த 10

      கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான்       முண்டகச்செம் 11

போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் 12

      சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன்       துரியத்தில் 13

தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்       சாத்தரிய 14

முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமு முண்டாகி
எக்குணமுந் தானாய் இருந்தருள்வோன்       அக்கரமாம் 15

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க்       கொஞ்சப் 16

பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன்       இருளாத 17

காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்குருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி       ஆட்சி 18

இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கடலுடையோன்       விடையேறும் 19

பாசன் குடிலைப் பராசத்தி வீட்டிலுறை
ஏகன் பிறப்புறப்பு ஒன்று இல்லாதான்       யோகன் 20

சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான்       பொறிகலந்த 21

பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதிமணி மண்டத்தான்       நேசத்தான் 22

பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி யுளந்தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன்       ஐயன் 23

உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்த கன மாயன்       குருவாகித் 24

தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே       சாத்தரிய 25

மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன்       தேனடர்ந்த 26

செங்கமலத் தோற்கரிய தேவன் அடியவர்கள்
அங்கலமத் தேயுறையும் ஆனந்தன்       எங்கள் குரு 27

நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கு மெங்கள்குரு ஆனந்தன்       பூசிக்கும் 28

பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்குந் தானே கடவுளாய்       பன்மலைக்கும் 29

எட்டாய்ச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டான ஓங்கார வன்மலையான்       கட்டாகத் 30

தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே
ஆடுஞ் சிவகருணை ஆற்றினான்       நாடுதவம் 31

பண்ணும் அடியார் பழவினைபோய்ப் பாதமலர்
நண்ணும் மொழியிற் பேரின்பம் நாட்டினான்       எண்ணும்நிறை 32

கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயா புரிநகரான்       அற்பவிசை 33

வண்டு தொடாமல் மதுஒழுகி வாய்ந்தாறைக்
கொண்டு மணத்த குண்மலையான்       துண்டத் 34

துரமே கரமாய் ஒருநாளும் ஓயாச்
சரமே முழங்கும் தவத்தோன்       கரமெடுக்கும் 35

தொண்டர் பலபகையைச் சூறைகொள வேணும் எனக்
கொண்டதவ வேடக் கொடியினான்       சண்டமிகும் 37

சமையப் பகைதுடைத்துச் சாதிமுறை எல்லாம்
குமைய மிதித்துக் குளப்பி       அமையாத 38

ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே       காணத் 39

துடர்ந்த கிளைநிகழச் சூரைபட வீசி
அடர்ந்தமக வாகைக்கு அடங்காப்       படர்ந்ததெரு 40

வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப்
பூதிப் பொடி அணிந்து பொய்மிதித்துக்       காதிச் 41

சினக்குறும்பை வாரிச் சிதறித் திரட்டி
மனக்குறும்பைப் பற்றி வனைத்து       உனக்கென்கென் 42

ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனைப் பாய்ந்து துரத்தியே       தாதுசெறி 43

அஞ்ஞான மோகம் அறுக்கு அனுபோக
மெய்ஞ்ஞான மோனமத வேளத்தான்       பைநாகம் 44

நெட்டுடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக்
கட்டும் இசைக்கும் கடிவாளந்       தொட்டுத் 45

திசைவாயு என்னுஞ் சின்னூல் அகப்பட்டுக்
குசையால் இறுக்கிக் குணப்படுத்தி       அசையா 46

மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த
சினமென்னும் அங்கவடி சேர்த்துக்       கனமான 47

நாகபந்தஞ் சாரி நடைதுலுக்குத் தூவான
மாகமுற விட்டுள் ளடக்கியே       சோகப் 48

புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியுட்ட ஐம்பொறியைத் தாண்டித்       துரியத்தில் 49

ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து
வாடியிடும் நாடி வரம்பு அழித்து       ஆடியிடும் 50

தொண்டுபுரி அன்பர் தொடநரகில் வீழாமல்
மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான்       கண்டுதொழும் 51

தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப்
பின்னாணை இல்லாத பெற்றியான்       எந்நாளும் 52

மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து
சீறாத மோனச் சிவயோகி       நேராக 53

ஆண்டகுரு சிற்றம் பலவன் அடிஅருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான்       பூண்டசிவ 54

வேடத்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல
பீடத்தான் ஞானப் பிரகாசன்       ஆடில் 55

பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான்பேர் இல்லான்       துரியா 56

தீதம் கடந்து திகழம் பரங்கடந்து
போதம் கடந்துநின்ற பொற்பதத்தான்       சீதம் 57

கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த
வருணன் ஆனந்த மழைமேகம்       அருணப் 58

பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான்       இறவாத 59

மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைபொருளாய்க் கொண்ட கருணையான்       துய்க்கும் 60

உடல்பொருள் ஆவி யுதகத்தாற் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன்       இடைபிங் 61

கலைசுழினைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலை களவு தீர்த்தகு டோரி       அலையாமல் 62

ஆட்கொண்ட சித்தம் பலவ அடிக்கமலத்
தாட்கொண்ட தொண்டர்தனக்கு அடியேன்       ஆட்கொண்ட 63

தூர்த்தன் இவ னென்பர் சொல்லத் துயருழைந்து
பார்த்தவிடம் எல்லாம் பகையாகி       வேர்த்துக் 64

கலங்கி விதிவிதித்துக் கண்ணீர்ஒழுக
மலங்கிக் குருநாட்டில் வந்தேன்       துலங்குமெனக் 65

காயா புரிநகரைக் கண்ணுற்றேன் அவ் ஊரில்
போய் ஆதரித்துப் பொருந்தினேன்       மாயாத 66

மாது சிவானந்த வல்லி எனப் பேரிட்டாள்
ஓதுதிரி கோணவல்லி யூதார்       ஆதரவாய் 67

கொஞ்சி வளர்த்த குடிலை மகள்தனையே
மிஞ்சுசிலம் பத்தொழிற்கு விட்டாளே       ரஞ்சிதமாய் 68

கால்மாறி யாடக் கலாதி கரணவித
மேல்மாறிச் சுத்தி விளையாட       நூல்மாறிக் 69

கைலாகு பாயக் கலந்து பலசமய
மெய்லாகு தாவிஅதன் மேல்மிதிக்கப்       பையப் 70

பரதத் தொழிலும் பலகோடி வேத
கரதத் தொழிலும் தொகுத்து       விரதவுரை 71

தென்னூல் வடநூலைத் தேர்ந்து பலகோடி
முந்நூனூறுந் தானே மொழிந்திட்டாள்       இந்நிலத்தில் 72

ஆடப் பதுமைதனை ஆட்டிவிக்க அப்பதுமை
பாடத் தொழிலும் பலகற்றாள்       நாடறிந்த 73

வம்பி திரிகோண வல்லி வடகிரியைக்
கெம்பீரம் எல்லாங் கிரிகித்தேன்       அம்புவியில் 74

மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து
தன்னை அறிந்த தளதளத்தாள்.       பொன்னனையாள் 75

பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முதுகிழவி       தொக்கறுத்து 76

மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப்
பொன்னே உறுதியுள்ள புத்திகேள்       பன்னரிய 77

வேத புராணர் வெறும்பிலுக்காய் உன்கமலப்
பாதம் பணிவர்முகம் பாராதே       நாதத் 78

துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சத்தே
தெரியநின்று பின்னை உள்ளே சென்று       அரிதாகச் 79

சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப்
போற்றுவார் அங்கவர்பின் போகாதே       ஏற்றும் 80

அவலக் கிரியை அசடர் உருனை மேவக்
கவலைப் படுவார் கடத்திச்       சிவயோக 81

ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள்       ஆதி 82

தவஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச்       சிவபொருளைத் 83

தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே       கோடாத 84

சாத்திரத் தூரித்தர்தமைச் சாராதே தக்கமிடும்
கோத்திரப் பஞ்சியளைக் கூடாதே       சூத்திரப் 85

பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய்
மெய்வீணர் ஆசை விரும்பாதே       கையோகக் 86

காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல்கற்ற
வாமத்தார் பால்மனது வையாதே       நாமமிட்டுப் 87

பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால்
நெஞ்செரியத் தள்ளிவிடு       நில்லாமல் 88


சித்தக் கெருவியிடம் செல்லாதே சீலமதக்
கொத்தவன்தன் னாசை குறியாதே       பற்றற்ற 89

மோனக் குறும்பரசர் மோகித்தால் நீஅவருக்கு
ஆன படியே அழைத்துவிடு       ஞானப் 90

பொருள்தேடும் வல்லாரைப் போற்றிப் பொருந்தி
அருளோடு நீசென்றிடு 91
-----------

This file was last updated on 10 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)