pm logo

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 10
காகபுசுண்டர் ஞானம், அகஸ்தியர் ஞானம், உரோம ரிஷி ஞானம்,
வால்மீகர் சூத்திர ஞானம் & சுப்பிரமணியர் ஞானம்,


kAkapucuNTar njAnam, akattiyar njAnam, urOma rishi njAnam
vAlmIkar cUttira njAnam & cuppiramaNiyar njAnam
(cittar pATalkaL - part 10)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சித்தர் பாடல்கள் தொகுப்பு - 10
சித்தர்களின் ஞானம் ஐந்து : காகபுசுண்டர் ஞானம், அகஸ்தியர் ஞானம்,
உரோம ரிஷி ஞானம், வால்மீகர் சூத்திர ஞானம் & சுப்பிரமணியர் ஞானம்

Source:
1. பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
வா. சரவணமுத்துப்பிள்ளை
சென்னை B. இரத்தின நாயகர் ஸன்ஸ், 1954.
2. சித்தர் பாடல்கள் - பெரிய ஞானக்கோவை
பதிப்பாசிரியர் : சி.எஸ். முருகேசன்
2004. சங்கர் பதிப்பகம், சென்னை.
----------

1. காகபுசுண்டர் ஞானம்

காப்பு

எண்சீர் விருத்தம்

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
      தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
      பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
      மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
      சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே. 1

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
      ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
      நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
      வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
      காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே. 2

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
      பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
      திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
      அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
      விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே. 3


காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
      கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
      பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
      விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
      சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே. 4

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
      தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
      மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
      புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
      வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே. 5

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
      கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
      அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
      வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
      நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே. 6

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
      காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
      தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
      தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
      அண்டமடா அனந்தனந்த மான வாறே. 7

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
      வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
      கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
      வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
      நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. 8

பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
      பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
      அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
      கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
      வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே. 9

கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
      கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
      நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
      வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
      சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 10

பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
      பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
      நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
      மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
      கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே. 11


போமடா முன்சொன்ன நரம்பி னூடே
      பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
      அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
      நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
      உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே. 12

பாரான சாகரமே அண்ட வுச்சி
      பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
      சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
      விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
      கூறாத அட்சரத்தின் குறியைக் காணே. 13

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
      கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
      சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
      வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
      குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே. 14

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
      மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
      தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
      பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
      ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே. 15

தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால்
      சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்.
      உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந்
      திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங்
      கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 16

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
      பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
      என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
      கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்
      மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17

பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
      பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக
      அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
      நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே
      விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18

காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு
      காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
தோணாமல் நானலைந்து சிறிது காலம்
      துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான்
      நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
      கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 19


இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக
      சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும்
      நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப்
      பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா!
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்
      காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20

விளையாடிப் போதமய மாக வுந்தான்
      வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
      நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாம லாரொருவ ருறவு மற்றே
      ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
      மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 21

நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
      நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
      மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
      திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
      வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 22

பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
      பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
      வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
      செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே
      கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 23

தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
      தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
      உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
      வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
      கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 24

பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
      பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
      அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
      சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
      வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 25

அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
      அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
      பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
      விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
      கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே. 26

தாமென்ற உலகத்தில் மனித ரோடே
      சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
      ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
      ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
      காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. 27


விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
      வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு
      மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்;
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
      அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
      கபடமற்ற தேகமடா கண்டு பாரே. 28

கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
      கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால்
      தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்
தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா
      தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு
விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும்
      வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. 29

பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர்
      பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா!
ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது
      அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்;
நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்
      நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்
      வேறில்லாக் கனிதனையு முண்க லாமே. 30

உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே
      உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந்
திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி
      தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா!
தங்கலாந் தேகமது அறியா மற்றான்
      சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
      பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. 31

ஒன்றான பிரமமே வெவ்வே றாக
      உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு;
நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு
      ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு;
குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு;
      குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு
நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற
      நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. 32

நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக
      நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்!
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்
      பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே
      கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்;
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்
      கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே. 33

குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
      கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான்
      அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
      வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப்
      பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே. 34

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி;
      பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்;
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
      ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்;
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு;
      நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு;
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
      விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே. 35

வானென்ற அண்டமதிற் சென்று புக்கு
      வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு
தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்
      தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக்
கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்
      கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு
தேனென்ற சித்தமே புத்தி யாகத்
      தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. 36

பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது
      பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ்
சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள்
      செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய்
காரண்ட லலாடக்கண் திறந்த போது
      கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்;
வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்
      மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. 37

கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக்
      கூத்தாடித் திரியாமற் கவன மாகப்
பாடுது பலநூலைப் படித்தி டாமற்
      பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே
      அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்
      வாடாத தீபத்தை யறிந்து பாரே. 38

பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்
      பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்
வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி
      விராட பிரம மொன்றியா யிருக்கும் போது
சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே?
      சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே?
கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே?
      குருபரனே! இந்தவகை கூறு வீரே. 39

கூறுகிறே னென்மகனே வாசி நாதா
      குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
      சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று
      விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
      கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே. 40

கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும்
      கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில்
      ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்.
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
      வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச்
      சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே. 41

பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
      பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
      திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
      கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
      வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே. 42

பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
      பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல்
      அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்;
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
      நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
      வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே. 43


இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
      என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
      ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
      புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
      வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. 44

பாரப்பா இப்படியே அனந்த காலம்
      பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்;
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
      அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும்
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
      விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
      திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே. 45

பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
      பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
      நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
      சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
      வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே. 46

வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
      வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
      கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
      நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
      வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே; 47

கேளப்பா இப்படியே பிரள யந்தான்
      கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
      அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்;
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்;
      நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூப மானேன்
      வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. 48

பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
      பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
      ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
      வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
      காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. 49

காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு
      காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
      வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்;
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
      மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தா னண்ட மேவி
      நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50

மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
      மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
      சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
      பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
      ஏகபர மானதொரு லிங்கந் தானே. 51


தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
      தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
      குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
      மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
      தேனுக்குந் தேவனா யிருக்க லாமே. 52

இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
      ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
      பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
      குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
      செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே. 53

தானவனே யென்குருவே புசுண்ட நாதா
      தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
      துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
      குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
      சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே. 54

சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
      சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
      புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
      மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
      வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே. 55

ஆச்சென்ற அபுரூப மான போதே
      அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
      முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
      கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
      நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே. 56

மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
      மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
      இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
      கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
      சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே. 57

இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
      ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
      உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
      வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
      குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே. 58

பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
      பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
      திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
      கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
      வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே. 59


வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு;
      மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி
      உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்;
மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று
      மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தியென் றிதற்கு நாமம்
      கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே. 60

தானென்ற பலரூப மதிகங் காணுந்
      தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
      உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
      தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
      குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே. 61

நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
      நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
      சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
      மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
      ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. 62

ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
      அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
      பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
      காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
      வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே. 63


போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
      புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
      அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
      நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
      வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே. 64

பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
      பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
      ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
      நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
      விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே. 65

காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
      கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
      சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
      வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
      நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. 66

நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
      நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
      குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
      வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
      கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி. 67


அறியாத பாவிக்கு ஞான மேது?
      ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
      பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
      வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
      கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே. 68

குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
      கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
      தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
      குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
      பராபரையுங் கைவசமே யாகு வாளே. 69

ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
      அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
      இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
      புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
      வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே. 70

பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
      பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
      அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
      நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
      விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே. 71

சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
      சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
      வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
      ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
      சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு. 72

வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
      வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
      தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
      உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
      சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே. 73

பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
      பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
      அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
      நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
      வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே. 74

ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
      அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
      வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
      முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
      இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே. 75


பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
      புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
      அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
      உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
      பாலகனே சவாதோடு புனுகு சேரே. 76

சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
      தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
      அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
      நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
      வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே. 77

வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
      வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
      திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
      நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
      வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே. 78

பாரடா பரப்பிரமத் தூடே சென்று
      பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
      நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
      குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
      வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே. 79
-----------

2. அகஸ்தியர் ஞானம் - 9

ஞானம் - 1

எண்சீர் விருத்தம்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
      சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
      பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
      பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
      சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே. 1

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
      மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
      காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
      பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
      என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே. 2

பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
      பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
      வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
      தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
      ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே! 3

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
      உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
      பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
      தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
      வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே. 4

தானென்ற தானேதா னொன்றே தெய்வம்
      தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
      நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா
      கோடானு கோடியிலே யொருவ னுண்டு,
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும்
      என்மக்காள் நிலைநிற்க மோட்சந் தானே. 5

மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு
      முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள்கேளு
      எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு;
பேச்சலது மாய்கையப்பா வொன்று மில்லை
      பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்;
கூச்சலது பாளையந்தான் போகும் போது
      கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே. 6

மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்
      மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்;
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
      வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்;
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
      வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே;
ஆச்சப்பா கருவுதனில் அமைந்தாற் போலாம்
      அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே; 7

பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
      படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி;
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
      வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு;
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
      ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
      குணவியவா னானக்காற் சத்திய மாமே. 8

சத்தியமே வேணுமடா மனித னானால்
      சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே;
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு
      நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே;
புத்திகெட்டுத் திரியாதே; பொய்சொல் லாதே
      புண்ணியத்தை மறவாதே; பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கி யாதே
      கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே. 9

ஞானம் - 2

காப்பு

அறுசீர் விருத்தம்
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.       1

உயர் ஞானம்

எண்சீர் விருத்தம்
உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
      உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
      பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;       1

திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே. 2

தனி ஞானம்

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
      உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
      விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
      பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
      கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே; 3

விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
      விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
      ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
      சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
      மூலமதை யறியாட்டால் மூலம் பாரே. 4

மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
      முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
      சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
      செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
      நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே. 5


ஞானம் - 3

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
      பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
      ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
      கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து
      தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.       1

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
      மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
      நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
      அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
      தளமான தீயில்விழத் தயங்கி னாரே; 2

தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
      சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
      மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
      இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
      மாட்டினார் சிவனாருத் தரவினாலே. 3

உத்தார மிப்படியே புராணங் காட்டி
      உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
      கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
      சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
      பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே. 4

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
      பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
      நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
      நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
      பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே. 5

கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
      கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
      அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
      உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
      சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே! 6

ஞானம் - 4

எண்சீர் விருத்தம்

பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
      பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
      கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
      மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
      வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.             1

ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
      அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
      முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
      பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
      வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே. 2

தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
      தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
      தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
      ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
      நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே. 3

பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
      பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
      உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
      தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
      உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே. 4

பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
      பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
      தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
      வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
      நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே. 5

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
      காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
      விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
      குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
      நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே; 6

ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
      உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
      வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
      தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
      அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே. 7

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
      பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
      கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
      தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
      சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே. 8

ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு
      உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி
      நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
      பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்;
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா
      தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே. 9

உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே
      உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே;
பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
      பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
      நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
      தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே! 10

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
      வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
      தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
      பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
      கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே. 11

உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
      உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
      உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
      உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
      உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே. 12

பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
      பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
      விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
      மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
      பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே. 13

கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
      காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
      மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
      சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
      தாயான வத்துவென்றும் பதியின் பேரே. 14

பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
      பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
      பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
      சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
      நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்; 15

பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
      பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
      விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
      காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
      சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே. 16

ஞானம் - 5

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
      கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
      சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
      நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
      துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.                   1

கூடப்பா துரியமென்ற வாலை வீடு
      கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
      நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
      ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
      செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே. 2

ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்;
      அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
      உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்;
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு;
      மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்;
      பாடினேன் வேதாந்தம் பாடினேனே. 3

பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்;
      பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்;
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்;
      நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்;
      நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்;
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்
      ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே. 4

ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே
      உத்தமனே சீருண்டே வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
      ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே
      ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு;
தோணிபோற் காணுமடா அந்த வீடு;
      சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே. 5

துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
      துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
      அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
      ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
      நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே. 6

சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா
      சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்;
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்;
      அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி;
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்;
      ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று;
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா!
      நாதர்களி லிதையாரும் பாடார் காணே! 7

காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக்
      கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்;
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும்
      பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும்
      அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்;
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்;
      ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே. 8

உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி
      ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி
      அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்;
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி;
      கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு;
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு
      தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே. 9

மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற
      மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா
      உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே
      அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்;
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்
      திருநடனங் காணமுத்தி சித்தியாமே. 10

ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே
      இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு
      வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்
      தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்
      சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே. 11

ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே
      எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே
      அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்;
      விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி;
      திருநடனங் காணமுத்தி சித்தி யாமே. 12

குருவாக உமைபாக னெனக்குத் தந்த
      கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்
      பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்
      அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்
      ஆகாயம் நின்றநிலை அறியலாமே. 13
---------------

3. உரோம ரிஷி ஞானம்

எண்சீர் விருத்தம்

மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
      முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
      வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;

காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
      கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
      நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. 1

கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
      கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
      வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
      ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
      பேரின்ப முத்திவழி பேசுவேனே. 2

பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
      பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
      நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
      காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
      சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. 3

வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
      வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
      உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
      சார்வான பதினாறில் மெள்ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
      எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. 4

பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
      பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
      நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
      குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
      அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே. 5

அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
      ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
      பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
      உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
      மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே. 6

மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
      வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
      நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
      கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
      குறையாமற் சரபீங் கூட்டித் தீரே. 7

கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
      குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
      கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
      மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
      தணலான ருத்திரனுந் தணலு மாமே. 8

தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
      சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
      மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்
கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
      காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
      பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? 9

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
      சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
      மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
      சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
      பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 10

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
      முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
      வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
      காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
      சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 11

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
      சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
      அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
      பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
      வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. 12

ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
      உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
      டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்
போமென்று போனதனால் நாள்கு றைந்து
      போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
      தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே? 13
--------------

4 . வால்மீகர் சூத்திர ஞானம்

இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
      எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
      ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
      சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
      வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே. 1

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;
      வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
      செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்;
      நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
      தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே. 2

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
      அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
      பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
      மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
      சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. 3

ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
      அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
      உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
      வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
      காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. 4

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
      தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
      தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்;
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
      பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
      காரணத்தை யறியாத கசடர் தானே; 5

தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
      சடைபுலித்தோல் காசாயம் தாவ டம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
      உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;
      திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
      காரணத்தை யறியாமல் கதறு வாரே. 6

கதறுகின்ற பேர்களையா கோடா கோடி;
      காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்
      பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!
உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளே
      உதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;
சிதறுகின்ற பேர்களைப்போல் சிதறி டாமல்
      சிவசக்தி வரும்போதே தன்னில் நில்லே. 7

நில்லென்ற பெரியோர்கள் பாஷை யாலே
      நீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்
வல்லமையைச் சாத்திரங்க ளிருமூன் றாக
      வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
      கட்டினா ரவரவர்கள் பாஷையாலே;
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
      தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே. 8

தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்
      தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;
ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;
      உலகத்தி லவரவர்கள் பாஷை வேணும்;
மானென்ற சிவகாமி சிவனுங் கூடி
      மாமுனிர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;
தேனென்ற சிவகாமி யருளி னாலே
      திரட்டினார் வெகுகோடி தேச பாஷை 9

தேசத்தின் பாஷைதனை யறிந்தி டாமல்
      தெளிவாகத் தாமுரைப்பார் பாஷை பார்த்தோர்;
ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;
      ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்;
வாசிதனை யறியாத சண்டி மாண்பர்
      வார்த்தையினால் மருட்டிவைப்பர் வகையி லாமல்;
நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்
      நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே. 10

சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்
      திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
      சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
      அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
      நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். 11

நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
      நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
      தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
      வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
      நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே. 12

காணரிதே யெவராலு மிருசு வாசம்;
      காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
      பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
      காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
      சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா. 13

சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
      சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
      சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
      காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
      ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே. 14

காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
      காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
      என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
      அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
      சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. 15

தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
      தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
      வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
      சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
      குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே. 16
--------------

சுப்பிரமணியர் ஞானம்


காப்பு

ஒழியாத சுழுமுனையி லொடுங்கி நல்ல
      உற்றகலை வாசிசிவ யோகத் தேகி
வழியான துறையறிந்து மவுனங் கொண்டு மகத்தான
      அண்ட வரை முடிமேற் சென்று
தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு தெளிந்துமன
      அறிவாலே தன்னைக் கண்டு
வெளியான பரவெளியில் வாச மாகி
      வேதாந்த சத்திசிவ ஆகி காப்பே.       1

நூல்

1. ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
      அருவுருவாய் நின்றபர சிவமு மாகிச்
சோதியென்ற சிவனிடமாய்ச் சத்தி யாகித்
      தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி
நீதியென்ற அறிவதனால் தானாய் நின்று
      நிறைந்தபரி பூரணநிட் களமு மாகிச்
சாதியென்ற சத்திசிவ மருள்தன் னாலே
      சண்முகனுங் கணபதியுந் தா முண்டாச்சே.       1

உண்டான சத்திசிவம் ஏக மாகி உளங்கனிந்து
      பூரணமாய் நிற்கும் போது
குண்டான மாங்கனியைக் கையில் வாங்கிக் குமரனுடன்
      கணபதியைக் குணமாய்ப் பார்த்து
நன்றாகக் கிரிவலமாய் வந்த போக்கு நல்லகனி
      தானீவோம் என்று சொன்னார்:
பயன்றான கனியறிந்து குமரன் றானும் பாய்ந்துமயி
      லேறிகிரி வலஞ்சென்றானே.       2

சென்றபின்பு கணபதியும் ஆலோ சித்துத்
      தீர்க்கமுள்ள மேருகிரி நீர்தா மென்று
கண்டவுடன் சிவனுமையாள் பாதந் தன்னைக்
      கருத்துடனே சுற்றிவந்து கனியை வாங்கிக்
கொண்டந்த சிவனுமையைத் தியானஞ் செய்து
குறியறிந்து நெறி தமக்குள் திருவைப் போற்றித்
தின்றுருசி கண்டறிந்து நிற்கும் போது தீர்க்கமுள்ள
கணபதியை வாவென் றாரே.       3

வாவென்றே எடுத்தணைத்தங் கருட்பாலீந்து
      மகத்தான ஐவருக்கும் பீடமாகி
ஆவென்று மூலமதற் கரசாய் நின்றே
      ஐந்தெழுத்திற் குயிரான ஆதி யாகிக்
கூவென்ற சத்துசித்த சுத்த மாகிக் குவிந்தெழுந்த
      வாதிகுரு தேசி யாகிப்
பூவென்ற வாயிரத்தெண் மலருக் குள்ளே
      பொருந்திமன அறிவாலே யிருந்து வாழே.       4

இருந்துவா ழென்றுரைத்த வேளை தன்னில்
      ஏகாந்த மயில்வீர னெதிரில் வந்தே
அருந்தவமாய் நின்றநிலை தன்னைப் பார்த்தே
      அருமையுள்ள கண்மணியே வா வென் றேதான்
வருந்தியே மாங்கனியொன் றீந்து. நல்ல மகத்தான
      அண்டரண்ட வரைகள் சுற்றித்
திருந்தியே தீர்க்காயுள் பெற்று வாழ்ந்து தீர்க்கமுடன்
      மலைக்கரசா யிருந்து வாழே.       5

6. வாழென்று சொன்னவுடன் மயில்வீ ரன்தான்
      மகத்தான சிவசத்திபத மேற்கொண்டே
ஆவென்று மயிலேறிக் கயிலா சத்தை
      ஆவலுடன் சுற்றிவரும் போதி லேதான்
சூழென்றே இமயகிரி வடபா கத்திற் சுத்த
      சித்த மானதபோதனர்கள் கண்டு
தாள்பணிந்து வணக்கமதாய் நிற்கும் போது
      தபோதனர்கள் ரிடிகளுமே தாம்வந் தாரே.       6

வந்தவரைத் தான்பார்த்து வரையில் நிற்க
      மகத்தான சற்குருவென் றடிபணிந்தே
இந்தமலைச் சாரலிலே வெகுநா ளாக இன்பமுடன்
      தவஞ்செய்து வாழ்ந்தோமையா!
அந்தரமாய் ராட்சதர்கள் அண்டி வந்தே
      அலங்கோலஞ் செய்துமே துரத்துகின்றார்!
சுந்தரமாயிருந்து தவங் காவாய்! என்று சுத்த
சித்தமாய்த் தவத்தைக் தொடங்கி னாரே.       7

தொடங்கிமன மடங்கிநிலை தன்னைக் காத்துச்
      சுத்தமுடன் நின்றுவிளை யாடும் போதில்
அடங்கிமன மடங்காத அசுரர் தாமும் அஞ்சாமல்
      அழும்புசெய்யு மகத்தைப் பார்த்துத்
திடங்கொண்டு மயிலேறிச் செவ்வேல் கொண்டு
      சிவந்துவரும் அசுரர்கிளை மாளவென்று
படங்குவித்து வேல்முனையைத் தியானம் பண்ணிப்
      பாயவிட அசுரர்கிளை பறந்து போச்சே!       8

பறந்துபோய்ப் பலவிதமாய் ரூபங் கொண்டு
      பந்திபந்தி யாங் அசுரர் பறந்து வந்தார்;
சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத்
      தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே
அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம்
      அரூபமெனுங் காரணமாய் ரூபங் கொண்டு
நிரந்தரமாய் வந்தபொலா அசுரர் தம்மை நிர்த்தூளி
      செய்துதவம் நிலைகொண்டானே.       9

நிலைகொண்டு நின்றசெயங் கொண்டு சிந்தை
      நேர்மையுடன் தவஞ்செய்யு முனிவர் கண்டு
கலைகொண்டு மனந்தெளிந்து மகிழ்ச்சி யாகிக்
      கானமயில் வீரனடி கருதிப் போற்றித்
தலைகொண்டு தாள்பணிந்தே அருட்கண் பெற்றுத்
      தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து
சிலைகொண்டு நின்றவடி வேலன் தன்னைத்
      தெரிசித்தே அவரவர்கள் பதிசென் றாரே.       10

பதிதேடி யவரர்கள் செல்லும் போது பத்தியுள்ள
      அகத்தியமா முனிவன் வந்து
விதியறிந்தே அசுரர்கிளை மாள வென்று
      வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக்
கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக் கிருபையுள்ள
      காரணமாம் ரூபங் கொண்டு
சதியறிந்து சங்காரஞ் செய்தா யையா சண்முகமே
      என்குருவே! சரணந்தானே.       11

சரணமென்றே அகத்தியமா முனியைப் பார்த்துச்
      சண்முகமாய் நின்றவடி வேலன் தானும்
திரணமதாய்த் தானறிந்து, நீ யார்? என்னைத்
      திருவடியைப் பூசை செய்யுஞ் சேயன் என்றார்:
கரணமந்தக் கரணமதாய் வந்த தேதோ?
      கருணையுடன் வா என்று கடாட்சம் நல்கி
தருணமறிந் துதவுவது தருமமென்று சங்கையுடன்
      தான் வந்த வகைசொல்வாயே?       12

சொல்லென்று மயில்வீ ரன் கேட்க வந்த சோதிமய
      மான அகத்தியர் தாம் சொல்வார்:
சல்லென்று வந்தபொலா அசுரர் தம்மைச் சண்முகமாய்
      நின்றவடி வேலுங்கொண்டு
செல்லென்று சங்காரஞ் செய்தா யந்தத்
      திருவுருவாய் நின்றகா ரணத்தைக் காட்டி
உள்ளென்ற ஆகார தூல சூட்சம் உண்மையென்
      றகாரணமு ரை செய்வாயே.       13

உரைசெய்வா யென்றுசொன்ன வுறுதி கேட்டே
      உண்மையென்று மயில்வீரன் உறுதியாகி
நிரைசெய்தே எக்கியங்கள் தாமுண் டாக்கி
      நேமமுடன் அகத்தியமா முனிவா என்றே
அரையறிந்தே அருகிருத்தி ஓம் குண்டம்
      ஆதியென்ற மந்திரத்தி லங்கி யாக்கிப்
புரையறிந்து மந்திரங்கள் செபிக்கும்போது
      பூரணமாய்க் கும்பமதில் தானுண் டாச்சே.       14

உண்டான பூரணமாய்க் கும்பம் வாங்கி
      உண்மையென்ற மாமுனிக்கே அபிடே கித்து
நன்றான நவக்கிரக மொன்ப துக்கும் நலமான
      அனுக்கிரக நிலையுங் காட்டிக்
குன்றான அனுக்கிர வாசல் காணக் குவிந்துமன
      அறிவதனால் விண்ணென் றூணே.       15

வின்னென்று விசையுடனே முனைநா வுள்ளே
      மெய்ஞ்ஞான வாசலது திறக்கு மப்போ
கன்னென்ற கபாடவழிக் குள்ளே நின்று
      கலையறிந்து வாசியினால் கமலம் நோக்கி
உன்னென்று மூலமதில் வங்கென பூரி உறுதியென்ற
      சமாதியிலே சிங்கென் ரேசி
என்றென்று மிப்படியே கொண்டு நின்றால்
      ஏகமுள்ள தசதீட்சை யுண்மை கேளே.       16

உண்மையுடன் சுழுமுனையில் விண்ணென்
      றூணி உறுதியுடன் ஆராத தீட்சை கேளு.
நன்மையுடன் ஓங்- ரீங்- அங் -உங்கெண் றோதி
      நாட்டமுடன் பதினாறாம் உருவே செய்தால்
தண்மையுடன் கணபதியும் பிரகா சிப்பார்
      தானமென்ற சுழுமுனையில் தன்னைப் பார்த்து
நுண்மையுடன் ஓம்நமசி வாய மென்றால்
      நோக்குமுன்னே பிரமந்தரி சனமுமாமே.       17

ஆமப்பா நமசிவா யநம வென்றே
      அதன்பின்வய நமசிவய நமசி யென்று
தாமப்பா தலைகாலால் மாறிக் கொண்டு
      சங்கையுடன் கால்தலையால் மாறிக் கொள்ளு
ஆமப்பா நமசிவய சிவயநம வென்றும்
      அதன்பிறகு சிவயநம சிவநம வென்றும்;
ஓமப்பா நமசிவய வென்று மாற உண்மையென்ற
      ஆதாரஞ் சித்தி யாமே.       18

சித்தமுட னைந்தெழுத்தை மைந்தா! நீயும்
      செம்மையுடன் தலைகால்கால் தலையாய் மாறச்
சுத்தமுடன் ஆதரதே வதைகள் வந்து
      சொன்னபடி யிருதயத்தில் சுகமாய் நின்று
பத்தியுட னிப்படியே தியானம் பண்ணிப்
      பதிவாக விபூதியையுந் தளமாய்ப் பூசி
நித்தியமு மிப்படியே செய்து நின்றால்
      நிலையில்லாத் தூலசடம் நிலைக்கும் பாரே.       19

பாரப்பா கலையறிந்து நிலையில் நின்று
      பத்தியுட னாதர சூட்சங் கேளு;
நேரப்பா ஓம்கிலிஅங் கென்றென் றோது
      நிலையறிந்தே அங்கிலிநங் கென்றென் றோது
காரப்பா வங்கிலிசிங் கென்றென் றோது கருணையுடன்
      சிங்கிலிவங் கென்றென்றோது
சாரப்பா வங்கிலியங் கென்றென் றோது சலுதியாம்
      அங்கிலி மங் கென்றென் றோதே.       20

ஓதியபின் வங்கிலிசிங் கென்றென் றோது
      உண்மையுடன் அங்கிலிசிங் கென்றேன் றோது
நீதியுடன் அங்கிலிமங் கென்றென் றோது நிலையறிந்து
      மங்கிலிரீங் கென்றென் றோதே
ஆதியுடன் ரீங்கிலிஓ மென்றென்றோது அப்பனே
      தலைகாலாய் மாறி யோது
சோதியுடன் சுழுமுனையில் மனக்கண் சார்த்திக்
      சுத்தமுடன் விபூதியைநீ தரித்துக் கொள்ளே.       21

கொள்ளப்பா விபூதியைநீ தரித்துக் கொண்டு
      கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு
சொல்லப்பா ஓங்கிலிரீங் கென்றென் றோது
      சுத்தமுடன் ரீங்கிலிமங் கென்றென் றோது
வில்லப்பா மங்கிலிசிங் கென்றென் றோது
      விவரமதாய்த் தோற்றுமடா செய்கை யாவும்;
உள்ளப்பா மங்கிலிங் கென்றென் றோது
      உத்தமனே சிங்கிலி மங் கென்றென் றோதே.       22

ஓதியபின் வங்கிலிசிங் கென்றென் றோது
      வுத்தமனே சிங்கிலிமங் கென்றென் றோது
நீதியுடன் மங்கிலிநங் கென்றென் றோது நிலையறிந்து
      நங்கிலியங் கென்றென் றோதே
சோதியுடன் மங்கிலிஓ மென்றென் றோது
      சுத்தமுடன் ஈராறு தவமுஞ் சித்தி
வீதியென்ற ஆதார மேலா தாரம் விண்ணடங்கிக்
      கண்ணடங்கி மேவி நில்லே.       23

நில்லப்பா கண்ணடங்கி விண்ணென் றூணி
      நிலையறிந்து பிராணாயஞ் செய்தால் மைந்தா!
கல்லப்பா தேகமது கால னேது? காலனென்னும்
      வியாதியெல்லாங் காணா தோடும்
உள்ளப்பா வாசியது முறுதி யாகும் ஓதுகின்ற
      மந்திரமுஞ் சித்தி யாகும்;
சொல்லப்பா தூலமுடன் சூட்சஞ் சொன்னேன்
      துலங்கிநின்ற தூலத்தின் சுருங்கங் கேளே.       24

சுருக்கமுடன் ஆதார தூல சூட்சஞ் சொன்னபடி
      பிராணாயஞ் செய்து கொண்டே
உருக்கமுடன் செபதபங்கள் பூசையாலும்
      உண்மையா யுனக்குள்ளே கண்டு தேறிப்
பெருக்கமுடன் தானிருந்து சீவான் மாவே
      பிரணவமாய் நின்றபரம் நீரு மாகி
நெருங்கியந்த அண்டவெளிக் குள்ளே சென்று
      நேமமுடன் பிராணாயம் நினைவாய்ச் செய்யே.       25

செய்யப்பா பிராணாயம் நினைவாய்ச் செய்யச்
      சிவசிவா கருமானஞ் செப்பக் கேளு;
பொய்யப்பா போகாது பிராண வாயு பொருந்திநின்று
      விளையாடும் புதுமை கேளு:
பையப்பா சுழுமுனையில் விண்ணென் றூணிப்
      பதியாக மூலமதில் வங்கென் பூரி
மெய்யப்பா சுழுனையில்சிங் கென்று ரேசி
      வேகமுடன் கண்டம் அங் கென்று கும்பே.       26

அங்கென்று கண்டமதில் கும்பித் தேதான்
      அசையாது வாசிதிரு வாசிதானும்
செங்கமல மானசுழி பிண்டத் தேறும்
      திரும்பியந்தப் பிண்டமதில் சென்று வாழும்
சங்கையுடன் தன்னகத்தில் தானே தானாய்த்
      தன்மையுடன் நின்றுவிளை யாடும் வாசி
மங்களமாய்ச் சுழுனையிலே விண்ணென் றூணி
      மார்க்கமுடன் இகபரமா யிருந்து காணே       27.

காணவே சத்தியவள் தியானம் கேளு
      கருவாகச் சொல்லுகிறேன் கருத்தாய்க் கேளு;
பூணவே யுரைத்திடுவாய் அங்சிங் கென்று
      புத்தியுடன் பதினாறு வுருவே செய்து
தோணவே விபூதிதூ ளிதமே பூசிச் சுத்தமுடன்
      பராசக்தி நிர்த்தஞ் செய்வாள்;
ஊனவே யிப்படியே தியானம் பண்ணி
      உண்மையுடன் பிராணாய வுறுதி பாரே.       28

உறுதியுள்ள அகத்தியமா முனியே! கேளாய்;
      உண்மையுள்ள சத்தியைநீ தியானம் பண்ணிப்
பருதிமதி சுடரொளிபோல பஞ்ச கர்த்தாள்
      பதியறிந்து பிராணாயம் பதிவாய்ச் செய்து
சுருதிபொரு ளானதொரு பொதிகை மேவிச்
      சுகசீவ பிராணகலை வாசியேறிக்
கருதிமன மொன்றாகிச் சுழியில் நின்று
      கலக்கமற்ற அமிர்தபானங் கைக் கொள்ளே!       29

பானமென்ற மதியமிர்த பானங் கொள்ளப்
      பரபிரம மானசுழி வழியுங் காட்டித்
தானமென்ற ஆதார மேலா தாரந் தனையறியும்
      பிராணாயச் சங்கை சொல்லி
ஞானமென்ற நிலைகாட்டி மூலங்காட்டி நாதாந்த
      ஆறுமுக நிலையங் காட்டி
மோனமென்ற வடிவேலின் முனையுங் காட்டி
      முனையறிந்து கலைநிறுத்தி முடிமேல் நில்லே.       30

நில்லப்பா சதுரகிரி முடியிற் சென்று
      நிலையான பொதிகையிலே வாசமாகி
உள்ளப்பா தானாகி விண்ணென் றூணி
      உன்மனத்தில் நினைத்ததொரு மந்த்ரந் தன்னைச்
சொல்லப்பா தியானமுடன் செபிக்கும் போது
      சுத்தமுடன் சித்திக்கும் சும்மா நின்று
செல்லப்பா அட்டாங்க யோகத் தேகிச் சிவாயகுரு
      பாதமதில் தெளிவாய் நில்லே.       31

தெளிவான தெளிவதனால் தன்னைக் கண்டு
      தீர்க்கமுட னிருந்துதவஞ் செய்ய வென்றும்
அழியாத அனுக்கிரக வரமு மீந்தே ஆர்வமுடன்
      மயில்வீரன் வடிவேல் கொண்டே
அழியாத அண்டவரை முடிமேற் சென்றே
      அட்டகிரி பாவதத்திற் கரசுமாகி
ஒழிவாகி அண்டவெளி யெங்குந் தானாய்
      ஓங்கார வடிவேலை யுவந்தான் முற்றே.       32
----------------------

This file was last updated on 10 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)