கிருஷ்ண பிள்ளை எழுதிய
போற்றித் திரு அகவல்
ஞானசிகாமணி உரையுடன்
pORRit tiruakaval
of kirushNa piLLai
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கிருஷ்ண பிள்ளை எழுதிய போற்றித் திரு அகவல்
தொகுப்பாசிரியர் ஞானசிகாமணி உரையுடன்
Source:
போற்றித் திரு அகவல்
கிறித்தவக் கம்பர் எ . ஆ. கிருஷ்ண பிள்ளை
உரையாசிரியர் வி. ஞானசிகாமணி, எம்.ஏ., பிஎச்.டி. டிப். தெலு.
வேதாகம மாணவர் பதிப்பகம்.
7, அங்காடித் தெரு சென்னை 600023, தமிழ் நாடு
முதற் பதிப்பு 1977, உரிமை பதிவு
விலை ரூ. 3 - 00
நற்செய்தி அச்சகம் 7. அங்காடித் தெரு, அயன்புரம், சென்னை 600023.
-----------
படையல்
டாக்டர் சந்திரன் டி. எஸ். தேவநேசன் அவர்கட்கு
கவிஞரின் 150 ஆவது ஆண்டு நிறைவு நினைவு வெளியீடு
கடவுள் என் இருதயத்தைத்
திறந்தார்; அவரைத் துதிக்க
என் வாயைத் திறந்தேன்.''
--- எ . ஆ. கிருஷ்ண பிள்ளை
---
எ. ஆ. கிருஷ்ண பிள்ளை
தோற்றம் : 23-4-1827 மறைவு: 3-2-1900 திருமுழுக்கு : 18-4-1858
---------------
பதிப்பாசிரியர் குறிப்பு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் கிருஷ்ண பிள்ளையின் நூல்களை, பிஎச்.டி. பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து வந்தபோது (1969-74) இந்த அகவற்பா எனக்குக் கிட்டியது. ஆராய்ச்சி செய்வதற்கு எனக்கு வாய்ப்பளித்த சென்னைப் பல்கலைக்கழகத்தினருக்கு என்றும் நன்றியுடையேன். என் ஆராய்ச்சியினை மேற்பார்வையிட்டு வழிகாட்டிய காலஞ்சென்ற என் பேராசிரியர் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனார் அவர்களை இந்நேரத்தில் நன்றியுடன் நினைக்கிறேன்.
நான் இந்த அகவலை விளங்கிக்கொள்ள மேற்கொண்ட முயற்சியின் விளைவே இந்த உரை. அகவலைக் கற்க விரும்பு வோருக்கு இது துணைபுரியும் என்று நம்புகிறேன். கடவுளைப் போற்றி வாழும் வாழ்க்கைக்கு அகவற்பா மிகவும் துணையாக இருக்கும். அகவல் யாப்பில் கவிஞர் பாடியது இஃது ஒன்றே.
நண்பர் அருள்திரு ஜான்சன் ஞானாபரணம் அவர்கள்[1] "போற்றித் திரு அகவல்'' என்னும் தலைப்பிற்குப் பதிலாக 'இரட்சணிய அகவல்' என்று தலைப்பிட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறியதற்குக் காரணம், கிருஷ்ண பிள்ளையின் ஏனைய நூல்கள் இரட்சணியம்' என்னும் அடைமொழியுடன் இருப்பதுவே. ஆனால், அகவலின் பொருட் போக்குப் போற்றிப் பண்புடையதாகப் போற்றி அடிகளுடன் முடிவதால் 'போற்றித் திரு அகவல்' என்னும் பெயர் பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதினேன்.
---
[1]. இவர் சுவீடன் நாட்டிலுள்ள உப்சாலா பல்கலைக் கழகத்தில் கிருஷ்ண
பிள்ளையின் இறையியல் என்னும் பொருள் பற்றித் தமது பிஎச்.டி. பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்துவருகிறார்.
"போற்றித் திரு அகவல்'' என்னும் தலைப்பின் கீழ் உள்ள செய்தியில் இது மேலும் விளக்கம் பெறுகிறது. இரட்சணிய மனோகரத்தில், போற்றித் திருவிருத்தங்கள்' என்னும் தலைப்பிலேயே ஒரு பதிகம் இருப்பது ஈண்டு நினைக்கத்தக்கது.
என் வேண்டுகோளுக்கிணங்கி 86 வயதினரான மறைத் திரு. எம்மான்ஸ் இ. உவைட் (Emmons E. White) அவர்கள் முன்னுரை நல்கியமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைப் பல்கலைக்கழத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப்பிரிவின் விரிவுரையாளர் புலவர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் அன்புடன் அணிந்துரை நல்கியமைக்கு அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.
இரட்சணிய யாத்திரிக நிலையம். வீ. ஞானசிகாமணி
23-4-1977,
புலவரின் 151வது பிறந்த நாள்.
--------
முன்னுரை
Emmons E. White
669, Hrrison Avenue,
Claremont, California, U.S.A.
சிறந்த தமிழ்க் கிறிஸ்தவப் புலவர் என்றி ஆல்பிரட் கிருஷ்ண பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு, இதுவரையில் அறியப்படாமல் இருந்த 'போற்றித் திருஅகவல்' என்னும் பாடலை டாக்டர் வீ. ஞானசிகாமணி கண்டெடுத்திருக்கிறார். இந்தப் பாடல் இவருக்குக் கிடைத்த வரலாறு முதலிய செய்திகளுடன் பாடலின் கையெழுத்துப் படியையும் அச்சிட்டு, ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும் உபயோகமுள்ள விளக்கவுரைகளும் எழுதிப் புலவருடைய வாழ்க்கைக் குறிப்புடன் ஒரு சிறு நூலாக வெளியிடுகிறார். இதற்கு என்னை முன்னுரை எழுதுமாறு அவர் கேட்டபோது நான் அதனை எனக்குக் கொடுத்த கவுரவமாகக் கருதி நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் ஒப்புக்கொண்டேன்.
நான் தென்னிந்தியாவில் 40 ஆண்டுகளாகக் கிறிஸ்தவ மிஷனரியாகத் தொண்டு செய்திருக்கிறேன். அக்காலத்தில் சிறந்த தமிழிலக்கியங்கள் சிலவற்றைப் படித்து, தமிழ்
மக்களின் ஞானம்' (The wisdom of the Tamil people) என்னும் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறேன். தமிழ் நாட்டில் மிஷனரி ஊழியம் செய்து வந்த போது மகாவித்துவான் கிருஷ்ண பிள்ளை அவர்களின் இரட்சணிய யாத்திரிகம் , இரட்சணிய மனோகரம் ஆகிய நூல்களைப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவற்றிலிருந்து சில பாடல்களை நான் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறேன். திருச்சபைகளிலும் இந்திய மக்கள் மத்தியிலும் நான் காலட்சேபங்கள் செய்திருக்கிறேன். அப்பொழுது கிருஷ்ண பிள்ளையின் பாடல்களை இந்திய நாட்டு ராகத்தில் பாடுவேன். காலட்சேபத்தை முடிக்கும்போது இரட்சணிய மனோகரத்திலிருந்து பொருத்தமான சில பாடல்களை அவைகளுக்குரிய இராகத்துடன் பாடுவேன். அது மக்கள் உள்ளத்தை அதிகமாகக் கவர்ந்து விடும்.
இந்தப் புஸ்தகத்தில் உள்ள அகவல் பாட்டில் 53 கண்ணிகள் இருக்கின்றன. இவைகள் ஒவ்வொன்றும், ஆத்துமாக்களை நித்திய ஆக்கினையிலிருந்து இரட்சித்து, கிறிஸ்துவிலுள்ள நித்திய வாழ்வினைப் பெறும்படிக்குத் தமது குமாரனை அனுப்பிய கடவுளைப் போற்றிப் பாடுகின்றன. காணாமற்போன ஆடு கண்டுபிடிக்கப்பட்டது போலக் கண்டுபிடிக்கப்பட்ட இப்பாடல் சிறந்த பக்தி இலக்கிய வரிசையில் நிற்கும் தகுதியுடையது. இதில் இறையியல் கருத்துகள் அதிகம் இருக்கின்றன. இவை வேதவசனங்களின் ஆதாரங்களுடன் உரையில் விளக்கப்படு கின்றன.
பல இந்திய நண்பர்களும் கிறிஸ்தவர்களும் மற்றவர்களும் இதனை வாங்கிக் கற்பார்கள் என்று நம்புகிறேன். இதனைப் படிக்கும் போது அவர்கள் ஆவியில் உற்சாகமும் ஆனந்தமும் அடைவார்கள். மேலும் கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்த நூலை அவர்களுடைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். கர்த்தர் இந்நூலினை ஆசீர்வதித்து, அவரது மகிமைக்கென்று உபயோகிப்பாராக.
(Sd) எம்மான்ஸ் இ. உவைட்
------------
அணிந்துரை
புலவர் மு. சண்முகம் பிள்ளை
விரிவுரையாளர் , திருக்குறள் ஆராய்ச்சித் துறை
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
'போற்றி' என்பது ஒருவரைப் புகழ்ந்து போற்றும் உரையாகும். 'பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி!' என மாதவி கோவலனுக்கு எழுதிய முடங்கலில் சுட்டியுள்ளதாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். (சிலப். 13:92). இப்போற்றி என்பது பக்தி இலக்கிய காலத்தில் இறைவனை வணங்கும் ஒரு வணக்க மொழியாகப் பல இடங்களிலும் பக்தர்களால் பேசப்பட்டு வந்துள்ளது; 'காக்க' என்றும் இச் சொல் பொருள்படும். 'வணக்கம்' அல்லது 'காக்க' என்னும் பொருளில் போற்றி என்பது தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளிலும் பக்தி நெறிக் காவியங்களிலும் வழங்கப் படுதல் காணலாம்.
தனித்தனியாய் அமைந்த தெய்வத்துதிப் பாடல்களில் போற்றி, போற்றி எனப் பாடியவர்களும் உள்ளனர். திருநாவுக்கரசர் பாடிய ' போற்றித் திருத்தாண்டகம்' இதற்குத் தக்க சான்றாம். திருவாசகத்தில் 'போற்றி' என இறைவனைப் போற்றிய அகவல் 'போற்றித் திரு அகவல்' என வழங்கப் படுகிறது. போற்றித் திருவாசகங்களும் சில உள. பெரிய புராணம் கந்தபுராணம் முதலிய காவியங்களிலும் மற்றும் தல புராணங்களிலும் போற்றிப் பாடல்களும் காணப்படுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் செய்த சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று 'போற்றிப் பஃறொடை' என்பது இவ்வாறாகத் தெய்வம் பற்றிய பாடல் முறைகளுள் போற்றி என்பது பலராலும் பெரிதும் போற்றப்பெற்றது என்பது தெளிவாம்.
தமிழ் இலக்கிய மரபுகளில் நன்கு தோய்ந்த கவிஞர் கிருஷ்ண பிள்ளையும் தாம் பாடிய இரட்சணிய யாத்திரிகத்தில் போற்றி விருத்தங்கள் பலவற்றை இடையிடையே ஏற்ற இடங் களில் தந்துள்ளார்.
மன்னர சுரிமை முறை நிறீஇக் குடிமை
வளந்தரு மகிபனே போற்றி!
அன்னை போற் கசிந்துந் தந்தை போற் கடிந்தும்
ஆம்பரி சுணர்த்தினாய் போற்றி!
நன்னெறி யிகந்த மன்னரைச் செகுத்து
நலம்புனை நம்பனே போற்றி!
செந்நெறி சென்றார்க் குறுதுணையாய
திரியேக தெய்வமே போற்றி!
இது தேவாரத்துள் வரும் போற்றித் துதிகளை ஒத்துள்ளது.
பன்னரும் மகிமை யோடு பண்ணவர் பரவி யேத்த
உன்னரும் பரமா காயத் துச்சிவீற்றிருந்தாய் போற்றி!
புன்னரர் பொருட்டுப் பாவப் புலையுல கத்து மேவிக்
கன்னியா ஓதித்தாய் போற்றி ! கருணைவா ரிதியே போற்றி!
பொங்கு நீ ருலகுக் கெல்லாம் புண்ணியம் பொலியப் பாவ
சங்கடந் தொலைய நாளும் தனியறம் தழைப்ப வேத
மங்கல வோசை மல்க வானவர் மகிழ மீட்டும்
இங்குயிர்த் தெழுந்தி ரக்ஷை யீட்டிய வெந்தாய் போற்றி!
இவை திருவாசகப் போற்றிப் பாசுரங்களின் போக்கை நினை வூட்டுகின்றன.
கிறிஸ்தவக் கம்பர் எனப் புவி புகழும் கவிஞர் கிருஷ்ண பிள்ளை நூல்களைத் தம் கலாநிதி ஆராய்ச்சிப் பட்டத்திற்குப் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் திரு. வீ. ஞானசிகாமணி. கவிஞரின் நூல்களை இவர் தேடிய போது இதுவரையில் அச்சில் வெளிவாராதிருந்த கவிஞர் பாடிய அகவற்பா ஒன்றினைக் கண்டெடுத்தார். இஃது இவருக்குக் கிட்டிய ஓர் அரும்புதையலே. கவிஞர் கிருஷ்ண பிள்ளை பாடிய பாவகைகளுள் அகவலால் இயன்றது இந்த ஒரு பாடலேதான்.
மேலும், இந்தப் பாடல் முடிவுற்றதா? கவிஞர் மேலும் இதனை விரித்துப்பாட எண்ணியிருந்தாரா? என்னும் ஐயங்களை யெல்லாம் பதிப்பாசிரியர் தம் உரையில் நன்கு விளக்கியுள்ளார். அகவல் கிடைத்த வரலாறு, 'போற்றித் திரு அகவல்' என்னும் தலைப்புகளில் இவர் எழுதியுள்ள செய்திகள் இந்நூலின் பொது அமைப்பினையும் சிறப்பினையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
கவிஞர் கிருஷ்ண பிள்ளை தந்துள்ள அகவற்பா 53 கண்ணிகள் - அதாவது 106 அடிகளில் அமைந்துள்ளது. இவற்றுள் 39 ஆம் கண்ணியில், அதாவது 77 ஆம் அடியில் போற்றி தொடங்குகிறது. எனவே, இறுதிப்பகுதி 15 கண்ணிகள் - 30 அடிகளும் போற்றி-மாலையாகும். பாடலின் இறுதியமைப்பு போற்றி என அமைவதாலும், மிகுதியான அடிகள் போற்றி பற்றியவையாதலாலும் இதற்குப் 'போற்றித் திரு அகவல்' எனப் பதிப்பாசிரியர் பெயர் சூட்டியுள்ளார். இவ்வாறு பெயர் சூட்ட இவரை ஊக்கியது மாணிக்கவாசகரின் திருவாசகத்துள் வரும் 'போற்றித் திரு அகவலே.' கவிஞர் கிருஷ்ண பிள்ளைக்குப் போற்றி பாட உணர்வு தந்தது மாணிக்கவாசகரின் வாக்காகவே இருக்கலாம். ஏறத்தாழ இந்த அகவல் மாணிக்கவாசகரின் 'போற்றித் திரு அகவலின்' அச்சில் வார்த்தது போல உள்ளது என்னலாம்.
தாம் பாடிய அகவலில் கவிஞர் கிருஷ்ண பிள்ளை அகில காரண ஆண்டவரின் திருப்புகழை முதலில் உரைத்து (1-11), அடுத்துக் குமாரதேவனாம் இயேசுபெருமானையும் (12-14), தூய ஆவியையும் (15-17) போற்றியுள்ளார். இதன்பின் விண்ணுலகத்தில் மாட்சி பெற்று விளங்கும் கிருபாசனமூர்த்தியின் (28-38) மகிமையை விளக்கி அம்மூர்த்தியின் தெய்விக நலங்களைப் போற்றி செய்கின்றார் (39-53).
இந்த அகவலில் கடவுளின் திருவாக்காகிய வேதப்பொருளையும் கவிஞர் கிருஷ்ண பிள்ளை அங்கங்கே சுட்டிச் செல்லுகின்றார். உரையாசிரியராகிய டாக்டர் வீ. ஞானசிகாமணி விவிலியத்தில் தோய்ந்து தெளிந்த உள்ளத்தவராதலின் அங்கங்கே உரிய இடங்களில் கவிஞர் கருதிய வேத வசனங்களையும் எடுத்துத் தந்துள்ளார். மற்றும் தம் தமிழ்ப்புலமைத் தோன்றக் கவிஞர் வாக்குடன் ஒத்து விளங்கும் முந்திய புலவர்களின் வாக்குகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். இவையெல்லாம் இவர்தம் விரிவுரையுள் காணலாகும்.
பாடற்பொருளைப் பொழிப்புரையாக நன்கு விளக்கி, விரிவுரையில் பொருத்தமான விளக்கங்களும் தந்திருப்பதனால் போற்றித் திருஅகவலின் பொருள் நுட்பம் நன்கு புலனாகிறது.
பதிப்புத் துறையில் டாக்டர் வீ. ஞானசிகாமணியின் முதல் முயற்சி இது. தாம் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட நூலக் கற்பார் எளிதில் புரிந்து அனுபவிக்கும் வகையில் பொழிப்புரை, விரிவுரை, நூலைப்பற்றிய குறிப்புக்கள் முதலியவற்றை ஏற்ற முறையில் அமைத்து வெளியிட்டுள்ளமை போற்றத்தக்கது. கவிஞர் கையெழுத்துப்படியையும் பட அச்சில் வார்த்து இந்நூலில் சேர்த்திருப்பது தனிச்சிறப்பாகும்.
இது போன்றே கவிஞர் கிருஷ்ண பிள்ளையின் பிற நூல்களையும் முழுமையாய்த் திட்டமிட்ட உரைவிளக்கங்களுடனும் ஒப்புமை முதலிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் இவர் பதிப்பித்தால் கவிஞரின் நூல்கள் தமிழுலகில் நன்கு பரவ வழியாகும். இப்பெருமுயற்சியிலும் இவர் ஈடுபடுவாராக.
சென்னை - 5
25-11-16 மு. சண்முகம் பிள்ளை
-----------
கவியரசரின் வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு : ஏப்பிரல் 23, 1827. (கொல்லம் 1003, சித்திரைத் திங்கள் 12ஆம் நாள்).
பெற்றோர் : தந்தை : சங்கரநாராயணர்; தாய் : தெய்வ நாயகிம்மையார்.
குலம் : வேளாளர் சமயம் : வைணவம்
பிறப்பிடம் : கரையிருப்பு, திருநெல்வேலி மாவட்டம்.
திருமணம் : 14ஆம் வயதில் 9 வயதுள்ள முத்தம்மாள் என்ற சிறுமியைத் திருமணம் செய்வித்தனர்.
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தல் : தமது பதினெட்டாம் வயதில் நல்லூர்க் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்.
பாளையங்கோட்டை : 1845-ல் பாளையங்கோட்டையில் குடி புகுந்தார் . - இக் காலத்தில் தமிழ்ப் புலமை மிகுதியும் பெற்றார். திருப்பாற்கடனாத கவிராயரிடம் பயின்றார்.
தமிழாசிரியர் : 1853-ல் சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழாசிரியரானார். பேராயர் டாக்டர் கால்டுவெல் இவரை இப்பணியில் அமர்த்தினார்.
சென்னையில் : சாயர்புரத்தில் பணியாற்றி வந்தபோது இரட்சகரால் தடுத்தாட்-கொள்ளப்பெற்று திருமுழுக்குப் பெறுவதற்காக 1857-ல் சென்னை வந்தார். தினவர்த்தமானி' துணையாசிரியராயும், மாநில உயர் நிலைப் பள்ளித் துணைத் தமிழ்ப் பண்டிதராயும் சிலகாலம் பணியாற்றினார். ஆங்கிலத் தமிழ் அகராதித் தொகுப்பாளரான பீட்டர் பெர்சிவல் ஐயர் அவர்களின் கீழ் இங்குப் பணியாற்றிய போது அவருக்குத் தமிழாசிரியராயும் இருந்தார்.
திருமுழுக்கு : 1858, ஏப்ரல் 18ஆம் நாள் தமது முப்பதாம் அகவையில் மயிலாப்பூரில் உள்ள 'தூய தாமசு திருச்சபை யில் திருமுழுக்குப் பெற்றார். இது முதல் என்றி ஆல்பிரடு கிருஷ்ண பிள்ளை என்று அழைக்கப்பட்டார். H. A. கிருஷ்ண பிள்ளை என்பது பெருவழக்கு.
மீண்டும் பாளையங்கோட்டையில் : சென்னையில் திருமுழுக்குப்பெற்ற பின்னர் கிருஷ்ண பிள்ளை பாளையங்கோட்டை திரும்பினார். குடும்பத்தினரும் கிறிஸ்தவராயினர். இவருடைய தம்பி முத்தையா பிள்ளை இவருக்கு முன்னதாகவே கிறிஸ்தவராயினார். 1864-1875 சாயர்புரம் கல்விச் சாலையில் மீண்டும் கிருஷ்ண பிள்ளை பணியாற்றினார்-1865-ல் வேதமாணிக்க நாடார் இயற்றிய 'வேதப் பொருள் அம்மானை' என்னும் நூலைப் பதிப்பித்தார். 1876-ல் பாளையங்கோட்டை திருச்சபை திருத்தொண்டர் கழகத் தினர் (C.M.S. College) கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரானார். இக்காலத்தில் கிருஷ்ண பிள்ளையும் குற்றாலத்திற்கு அருகில் ஒரு காப்பித்தோட்டம் அமைத்தார்.
திருவனந்தபுரத்தில் : 1886-ல் திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரானார். இக் காலத்தில் மனோன்மணீயம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இங்கு தத்துவப் பேராசிரியராய் விளங்கினார். சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் இயற்றி வந்த இதே காலத்தில் கிருஷ்ண பிள்ளையும் இரட்சணிய யாத்திரிகம் இயற்றி வந்தார் என்பது குறிக்கத்தக்கது.
குலசேகரன்பட்டினம் : 1890ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தை விட்டு இப்பட்டினம் வந்து 1891 வரையில் உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டார். இலக்கியத் திருத்தொண்டர் : 1892--1900 (வாழ் நாள் இறுதி வரை) கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் ஆசிரியராய்த் தொண்டாற்றினார். இக்காலத்தில் இவருடைய நூல்கள் பலவும் வெளிவந்தன.
மறைவு : 3-2-1900.
சம காலப் புலவர்கள் : வேதநாயக சாத்திரியார் (கி. பி. 1774-1864); வேதநாயகம் பிள்ளை (கி. பி. 1826-1889) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (கி. பி. 1815 1876); பேராசிரியர் ராய்பகதூர் சுந்தரம் பிள்ளை (கி. பி. 1855 - 1897).
கிருஷ்ண பிள்ளையின் நூல்கள்
பதிப்பு : 'வேதப்பொருள் அம்மானை ,' 'பரதகண்ட புராதனம்' முதலியவை. 'பரதகண்ட புராதனம்' என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் கால்டுவெல் ஐயர்.
தொகுப்பு : 'காவிய தரும சங்கிரகம்.''
இயற்றிய நூல்கள் :
உரைநடை : 'இலக்கண சூடாமணி' (1883) - 'தாம் கிறிஸ்தவரான வரலாறு' (1893) - இஃது இதுகாறும் தமிழில் அச்சிடப்படவில்லை. இப்பொழுது அச்சில் இருக்கிறது. என்னால் அச்சிடப்பட்டு வரும் இந்நூல் அண்மையில் வெளி வரும் நிலையில் உள்ளது. இரட்சணிய சமய நிர்ணயம்' (1898).
செய்யுள் : 'இரட்சணிய யாத்திரிகம்' (1894); 'இரட்சணிய மனோகரம்' (1899); போற்றித் திரு அகவல்' (1884).
கிட்டாத நூல்கள் – [இரட்சணியக் குறள் ,' 'இரட்சணிய பால போதனை'.
----------
அகவல் கிடைத்த வரலாறு
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் மேற் பார்வையில் ஆராய்ச்சி மாணவனாய்ப் பணியாற்றிய போது (1969-1974) கிருஷ்ண பிள்ளையின் நூல்கள், அவரைப்பற்றிய செய்திகள் முதலானவற்றைத் திரட்ட, அவர் வாழ்ந்த பாளையங்கோட்டை முதலான இடங்களுக்கு மும்முறை சென்றேன். 1893-ல் கிருஷ்ண பிள்ளை குற்றாலத்திலிருந்து இலக்கியப்பணி புரிந்துள்ளார். எனவே, 1972-ல் ஒருமுறை குற்றாலத்துக்குச் சென்றேன். அங்குள்ள [கிறிஸ்து குல ஆசிரமத்தில்' சில நல்ல குறிப்புகள் கிடைத்தன. 'காவிய தரும சங்கிரகம்' என்னும் ஒரு பன்னூற்றிரட்டு நூலைக் கிருஷ்ண பிள்ளை தொகுத்திருந்தார். இந்த நூலை மூன்றாண்டுகளாகத் தேடி வந்தேன். இந்த ஆசிரமத்தில் அழிப்பதற்காக ஓரிடத்தில் சேர்க்கப்பட்டிருந்த பழைய புத்தகக் குப்பையில் இந்தப் பன்னூற்றிரட்டுக் கிடைத்தது. இஃது எனக்குக் குப்பையில் கிடைத்த மாணிக்கமாயிற்று.
குற்றாலத்திலிருந்தபோது, வடார்க்காடு மாவட்டத்திலுள்ள கிறிஸ்து குல ஆசிரமத்திற்கும் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து அவ்வாசிரமத்தாருக்கு எழுதியபோது, அவர்கள் கிருஷ்ண பிள்ளையின் பாடல்கள் எழுதப்பெற்ற மிகப் பழைய சுவடி ஒன்று இருப்பதாக அறிவித்தார்கள். அதனைச் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. பொன்னு ஆ. சத்திய சாட்சி அவர்கள் வாயிலாகப் பெற்றேன். கிருஷ்ண பிள்ளையைப் பற்றிய செய்திகள் வேறு தங்களிடம் இல்லை என்றும் திருப்பத்தூர் ஆசிரமத்தார் எழுதிவிட்டனர்.
கையெழுத்துச் சுவடி 1884-க்கு முன்னர் எழுதப்பட்டது. கிருஷ்ண பிள்ளை முதன் முதல் இரட்சணிய யாத்திரிகம் இயற்றிய கையெழுத்துச் சுவடிகளில் இஃது ஒன்று. இரட்சணிய யாத்திரிகத்தின் முதல் இரு காண்டங்களின் பெரும் பகுதிப் பாடல்கள் இதில் எழுதப் பட்டுள்ளன. இப் பாடல்கள் புலவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப் பட்டவை. இதனை ஆராய்ந்தபோது இவ் அகவல் கிட்டியது.
-------------
போற்றித் திருஅகவல்
கையெழுத்துச் சுவடியில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு 'அகவல்' என்பதே. ஆனால், பாடற்பொருளின் போக்கு, இது 'போற்றித் திருஅகவல்' என்ற தலைப்பிற்கு ஏற்ப அமைந்துள்ளமையால், இத்தலைப்புக் கொடுக்கப்பெற்றது.
தேவாரப் பதிக அமைப்பினைப் பின்பற்றிப் பல தேவாரங்களைக் கிருஷ்ண பிள்ளை இரட்சணிய யாத்திரிகத்தில் பாடியுள்ளார். திருவாசகப் பாடல் போக்கிலும் இரட்சணிய மனோகரத்தில் பல பதிகங்கள் இருக்கின்றன. மனோகரத்தில் உள்ள போற்றித் திருவிருத்தங்கள், கையடைப் பதிகம், விசு வாசக் காட்சி முதலான பதிகங்கள் திருவாசகத்தின் தாக்குறவைக் காட்டுபவை.
எனினும், அகவல் யாப்பில் இவரால் இயற்றப்பட்ட பக்திப் பாடல் எதுவும் அச்சில் வரவில்லை. திருவாசகத்தின் அகவல் முறையில் பக்திப் பாடல்கள் பாட வேண்டும் என்ற எழுச்சி இவருக்கு இருந்திருத்தல் வேண்டும். அதன் விளை வாகவே இந்தப் போற்றித் திரு அகவல் தோன்றியது எனலாம். இப்பாடல் பொருளை நோக்கும் பொழுது திரு வாசகத்தின் நான்கு திரு அகவல்களின் சாரத்தையும் ஒரே அகவலாகவே பாட முயன்றிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. பாடல் முற்றுப்பெறாவிட்டாலும் பாடலின் போக்கு இதனை நமக்கு உணர்த்துகிறது.
போற்றி என்பது அகவலில் தொடங்கி விட்டதனால் இன்னும் சில போற்றி அடிகளைப் பாடியிருத்தல் கூடும். பாடலின் பெரும்பகுதியும் இதில் நெருங்கி வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
மொத்தம் 106 அடிகளில் 66 (1-33) அடிகளை ஒரு சமயத்திலும். 40 (34-53) அடிகளைப் பிறிதொரு சமயத்திலும் பாடியிருக்கலாம். இரு வேறுமையில் இப்பகுதிகளை எழுதி யிருப்பதே இவ்வாறு எண்ணத் தூண்டுகிறது. தொடர்ந்து பாடவேண்டும் என்ற உணர்வில் எழுதியிருக்கிறார், ஆனால் முற்றுப்பெறவில்லை போலும்.
பாடல் வடிவத்திலே இன்னும் சில அடிகளோ, பல அடிகளோ பாடியிருக்கலாம் என்னும் ஏற்றக்குறை இருப்பினும் பொருள் அமைப்பில் முழுமை இருக்கிறது. பாடற் பொருளின் பெரும்பான்மைப் பண்பு நோக்கி: அகில காரண ஆண்ட வர் (1-11); குமாரக் கடவுள் (12-14); பரிசுத்த ஆவியாகிய கடவுள் (15-27); கிருபாசன மூர்த்தியின் மகிமை (28-38); அவருடைய தெய்விக நலன்கள் (39-53) எனப் பகுத்துத் தலைப்பிட்டுள்ளேன்.
கடவுள் தம்மைத்தாமே மனிதனுக்கு வேதத்தில் வெளிப் படுத்திய வகையிலே இந்த அகவலின் பொருளோட்டம் அமைந்துள்ளது. பழைய ஏற்பாடு முழுவதிலும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை நாம் விளக்கமாய் அறிகிறோம். புதிய ஏற்பாட்டின் முதன் நான்கு நற்செய்தி ஆகமங்களிலும் கடவுள், பாவத்தில் மடியும் மனிதனுக்கு மீட்பளிக்க மனிதனான வரலாற்றினை அறிகிறோம். அடுத்து நடபடிகள் ஆகமம் முதல பரிசுத்த ஆவியானவரின் அருட்செயல்களைத் தெளிவாய் அறி கிறோம். இறுதி வெளிப்படுத்தல் ஆகமத்திலே மண்ணவர் விண்ணவராகும் புதுமை மாற்றமும், பாவமும் பழையனவும் கழிந்து நிலையாய்ப் புதியன புகுதலின் உச்ச நிலையினையும் காண்கிறோம். எனினும் தொடக்க முதலே வேதத்தில் திரியேகக் கடவுளை அறிகிறோம். ஆதியாகமத்திலேயே திருமைந்தரையும் பரிசுத்த ஆவியானவரையும் குறிப்பால் காணலாம். (ஆதி. 1:26; 3:15; யோவான் 1:1-3; ஏசாயா 9:6). கடவள் ஒருவரே. மனிதனுக்கு அவர் கிருபையாய்த் தம்மைத் தாமே வெளிப்படுத்தியதில் நமது நன்மையையும் விளக்கத்தையும் கருதிய அவர் சுருதி வாக்கியங்களில் மூவராய் நமக்கு வெளிப்பட்டுள்ளார், (எபி. 1:1-3; யோவான் 16:13-16). நாம் இதனை விசுவாசத்தால் அறிந்து அனுபவிக்கிறோம். இது குறித்து உரையிலும் விளக்கம் காணலாம்.
கடவுள் மூவராய்த் தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்திய நிலை, அவர்தம் மங்கள குணங்கள், மாண்புகள், வல்லமைகள் அருட் பாலிப்புகள், மனிதனுடைய வீழ்ச்சி, மீட்சி, மாட்சி, மண்ணிலே கடவுள் துதி, மண்ணவரும் விண்ணரும் இணைந்து கடவுளைப் போற்றுதல், விண்ணிலே கடவுளைப் போற்றுதல், மண்ணவன் விண்ணவனாகி விண்ணவருடன் கடவுளைப் போற்றுதல் இன்ன பல கருத்துகளை அமைத்துப் புலவர் இத் திருஅகவலைப் பாடியுள்ளார். கிறிஸ்தவர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் இதனைப் படித்துத் தியானித்தல் மட்டுமன்றி மனப்பாடம் செய்தும் ஓதுங்கால் கடவுளைப் போற்றி வாழும் அறிவிலும் அனுபவத்திலும் வளர்ந்து இகபர ஆசிகளையும் நன்மைகளையும் பெறலாம்.
அகவலுக்கு அடிதோறும் எண் கொடுப்பது இயல்பு. ஆனால், இவர் இரண்டு அடிகளில் ஒரே எதுகை அமைந்திருப் பதனால் இரண்டு அடிகளுக்கும் சேர்த்து ஓர் எண் கொடுத்திருக்கிறார் எனலாம்.
திருவாசகப் போற்றித் திருஅகவலின் போற்றிப் பகுதிகளும் ஈரடி ஓரெதுகை அமைப்புடையனவாயிருத்தல் நோக்கத் தக்கது. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய 'அருட் பெருஞ்ஜோதி அகவல்' முற்றும் ஈரடி ஓரெதுகை யுடைய கண்ணியமைப்பில் உள்ளது. இராமலிங்க அடிகளின் அருட்பெருஞ்ஜோதி அகவல்போல இந்த போற்றித் திரு அகவலிலும் முற்றும் ஈரடிக் கண்ணியமைப்புக் காணப்படுகிறது தோத்திரத்தில் வரும் அகவல்கள் இம்முறை பெற்றிருப்பது மணிவாசகர் தொடக்கமாக வரும் ஒரு மரபு என்பது நன்கு விளக்கமாகிறது. தமிழ் மரபில் திளைத்த கிருஷ்ண பிள்ளையும் மரபு வழியே தம் அகவலை அருளியிருக்கிறார் என்பது தெளிவு.
மொத்தம் 106 அடிகளில் ஓர் இடத்தில் (25) ஓர் எழுத்தை வேண்டா என்று அடித்திருக்கிறார் . 51-ல் ஓர் எழுத்தை வரிபிளந்து எழுதியிருக்கிறார். பாட்டில் வேறு அடித்தல் திருத்தல் இல்லை. இஃது இவருடைய கவிபாடும் ஆற்றலைத் தெளிவாகக் காட்டுகிறது.
இவர் தம் கையெழுத்து மிகத் தெளிவாக அமைந்திருக்கிறது. அடிகள் கோணாமல் நேர் நேராகச் சம இடைவெளியுடன் முத்துக்கோத்தாற்போல் உள்ளன. கறுப்பு மையில் உள்ள இவர் எழுத்து அச்செழுத்துப்போலவே தோற்ற மளிக்கிறது. புலவர் பெருமானின் கையெழுத்துப்படி பட அச்சில் வார்த்து இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 17ஆம் கண்ணி எதிர்ப் பக்கத்தில் தனியாய் எழுதப்பட்டுள்ளதால் பட அச்சில் அமையவில்லை. கையெழுத்துப்படி பட அச்சில் அமைத்துப் பதிப்பித்திருப்பது இப்பதிப்பிற்குரிய ஒரு தனிச் சிறப்பாகும்.
----------
போற்றித் திருஅகவல்
உலகெலாம் பரவு மொருதனி முதலாய்,
அலகிடற் கரிதாய், அகிலா ரணமாய், 1
ஒப்பற உயர்ந்த வொருதிரி யேக
மெய்ப்பரம் பொருளாய் , விமல வித்தகமாய், 2
அநாதி நித்தியமாய், அகளங்க விபுவாய்,
மநாதிகட் கெட்டா மௌன நன் னிலையாய், 3
போக்கு வரவு பொருந்தா தெவற்றொடும்
தாக்காது நின்ற தனியேக பரமாய், 4
முப்பொழு திகந்து முன்னுற வனைத்தும்
தப்பிலா துணரும் சர்வஞா னத்தொடு 5
திருவுளம் நினைத்த செயலெலா முடிக்கும்
பெருமைசே ராற்றல் பிறங்கிய சித்தாய், 6
வெஞ்சுடர் கோடி விரிந்தென மகிமைச்
செஞ்சுடர் விரிக்கும் தேஜோ மயமாய், 7
ஆழமும் நீளமும் அகலமு மினையவென்
றூழிநின் றளப்பினு முறைவிட வரிய! 8
கருணை யாறன் பின் கடல்புக மண்டி
அருணனி கதித்த அலைகிளர்ந் தெழும்பி, 9
பாராதி யண்டப் பரப்பெலாம் புதைத்த
பேரா னந்த பிரளயா கரமாய், 10
சங்கற்ப மாத்திரம் ஜகமெலாம் சிருஷ்டித்
தங்கவை புரக்கும் அருட்குண நிதியாய் 11
சற்பனை யாலே வீற்பன மிழந்து
கற்பனை கடந்த துற்பவந் தொலைய, 12
அருளுரு வாகி யிருளுறு மவித்தை
மருளற வொழித்துத், தெருளுறத் தெருட்டி, 13
இத்தரா தலத்துக்கு ரக்ஷணை யமைத்துப்
புத்துயி ரளிக்கும் புண்ணிய மூர்த்தமாய், 14
துன்னெறி யாய பன்னெறி யொழுகும்
புன்னெறி மாக்களை நன்னெறிப் படுத்தி, 15
பரிதியென் றொளிரும் சுருதியஞ் சுடரை
இருதயத் தேற்றி யொருதலை யாக (த்), 16
தீதிலா நித்திய ஜீவ பரியந்தம்
பாதுகாத் தளிக்கும் பலித்திராத் துமமாய், 17
இந்நிலை யறியா வேழை மாக்கள்
பன்னிய தெய்வப் பதர்பே லாது 18
காம வெகுளி மயக்கங் கடிந்து,
தீமையை முருக்கிச் செம்மையைப் பெருக்கி, 19
நேமியைப் புரக்கும் நீதாதி பதியாய,
நாம ரூப ரஹிதா விகாரியாய், 20
சர்வோத் கிருஷ்ட சர்வபரி பூரண
சர்வா திக்க சச்சிதா னந்தமாய், 21
துன்னிய பௌதிகத் தோற்றமும் ஒடுக்கமும்
மன்னிய சீலமும் வடிவுமென் றினைய 22
ஆதி யமைப்பி லணுபிச காமலெப்
போதுமோர் படித்தாய்ப் புரையற வொழுகலில் 23
ஜெகத்சர் வங்களுந் திவ்வியமங் களகுண
மகத்துவம் விளக்கி வரன்முறை வணங்க, 24
பாவசா கரத்தில் படருறீ யமிழ்ந்த
ஜீவகோ டிகள் புனர் ஜென்மமா யுய்ய(க்), 25
கடைக்கணித் தருளிய கருணையை உன்னி,
மடக்கொடி சீயோன் மகளுளங் கசிந்து, 26
காலையும் மாலையும் கைகுவித் திறைஞ்சிச்,
சீலமொடு போற்றி, ஜெயஜெய ஜெயவென, 27
கற்றறிந் தடங்கிக் கருதிமுப் பகையை
முற்ற முனிந்த முதுதவ முநிவரும் 28
எல்லாக் கனமும், எல்லா மகிமையும்,
எல்லாப் புகழும், எல்லாத் துதியும், 29
எல்லாம் வல்ல எந்தா யுனக்கென்
றல்லாய்ப் பகலாய் அனவரத மும்தொழ(ப்), 30
பானுமின் மினியெனப் பரந்தொளி கிளர்ந்த
வானக வாணரும் மாபெருந் தூதரும் 31
ஒருவா அன்பொடு வந்துசந் நிதியில்
திருவோ லக்கமாய்ச் சேவித் திறைஞ்சி, 32
அதிபாரி சுத்தர் ! அதிபாரி சுத்தர் !
அதிபாரி சுத்தர் என் றகமகிழ்ந் தேத்த 33
முறைமுறை அந்தரத் துந்துமி முழங்கத்,
துறைதொறுந் துறைதொறுஞ் சுருதியின் னிசையெழ, 34
சங்கீத கானந் தலைத்தலை மயங்க,
மங்கல வாழ்த்தொலி வயின்றொறு மலிய, 35
சத்தியங் கதிக்கத், தருமந் தழைக்க ,
நித்திய சுகிர்த நீணில மல்க, 36
விண்ணு மண்ணும் விருப்புடன் போற்றிக் ,
கண்ணு மனமுங் கருத்துங் களிக்க (க்), 37
கருதரும் பரமா காயத் தும்பர்
ஒருகிரு பாசனத் துவப்புடன் வீற்றிருந்(து). 38
இலங்கிய பேரரு ளெந்தாய் போற்றி!
நலங்கொளும் பரம நாயகா போற்றி! 39
ஒன்று மூன் றாய வொருவா போற்றி
என்றென்று மாறா இறைவனே போற்றி 40
சர்வ லோக சரணியா போற்றி!
சர்வ ஜீவ தயாபரா போற்றி! 41
அன்புரு வாய அப்பனே போற்றி!
மன்பதைக் கிரங்கிய வரதனே போற்றி 42
தேவ தேவ ஜெகோவா போற்றி!
மூவா ஏக முதலே போற்றி! 43
முந்தா ரண நூலில் மொழிவிளக் கொளிரும்
சிந்தா சனத்திற் றிகழ்வாய் போற்றி ! 44
இனிவருங் கோப மெமைத்தகிக் காமல்
தனியொரு மகவைத் தந்தாய் போற்றி 45
பழுதிலா வேத பாரமார்த்தி கத்தை
வழிவழி காதது வகுத்தாய் போற்றி! 46
மெய்யருள் வேத விழுச்சுடர் கொளுத்திப்
பொய்யிருள் கடியும் புராதனா போற்றி! 47
ஆவது கருதா அறிவின மாக்கள்
சாவது கருதாத் தக்கோய் போற்றி! 48
தீவினை யென்னுஞ் சிறையிடைப் பட்டோர்
வீவினை விலக்கி மீட்டாய் போற்றி! 49
பொய்வழி யுழனற புலையரே முய்ய
மெய்வழி காட்டிய வித்தகா , போற்றி! 50
இடர்க்கட லமிழந்த வேழையே முய்ய.
அடைக்கல மாய அப்பனே போற்றி! 51
தீதணு காமல் ஜீவகோ டிகளைப்
பாதுகாத் தளிக்கும் பரமனே போற்றி! 52
நாயினுங் கடையாய் நன்றி கொன் றேற்குத்
தாயினு மினிய தற்பரா போற்றி! 53
----------
போற்றித் திரு அகவல்
எ. ஆ. கிருஷ்ண பிள்ளை
அகில காரண ஆண்டவர்
1. உலகெலாம் பரவு மொருதனி முதலாய்
அலகிடற் கரிதாய், அகலகா ரணமாய்,
பொழிப்புரை : உலகம் எங்கிலும் பரவி விளங்குகின்ற ஒப்பில்லாத, தனியேக பரம்பொருளானவரும், முதன்மையானவரும், அளந்து அறிய இயலாதவரும், எல்லாவற்றிற்கும் காரணமானவரும் ஆகிய (கடவுள்).
விளக்கவுரை : உலகெலாம் பரவும் : உலகெலாம் பரவும் என்பதற்கு உலகத்தார் எல்லாரும் துதிக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். கடவுள் எங்கும் நிறைந்தவர். ”வானம் அவருக்குச் சிங்காசனம், பூமி அவருக்குப் பாத படி'' என்று திருவசனம் கூறுகிறது (அப். 7:49). ஒ.நோ. “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும். நீர் அங்கேயும் இருக்கிறீர்'' சங். 139:7-8. இரட்சணிய யாத்திரிகமும், இவ்வாறே தொடங்குகிறது :
''உலகம் யாவும் புரந்தரு ளுன்னதர்'' - வர. ப. 1.
பெருங் காப்பியங்களான பெரிய புராணமும், கம்பராமாயணமும் 'உலகு' என்றே தொடங்குவது ஈண்டுக் கருதற்பாலது:
''உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்'' - பெரிய புராணம், பாயிரம் - 1
''உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'' - கம்பராமாயணம், பாயிரம் - 1.
ஒரு தனி முதலாய் : தோற்ற நாசம் இல்லாதவர். எல்லாவற்றிற்கும் முதன்மையானவர். அநாதியாய் என்றென்றும் உள்ளவர் (ஏசா. 40:28). ஒ.நோ. ''நாள் உண்டா காததற்கு முன்னும் நானே இருக்கிறேன்'' (ஏசா. 43:13); "இருக்கிறவராக இருக்கிறேன்,'" "இருக்கிறேன் என்பவர்'' (யாத். 3:14).
அலகிடற்கரிதாய் : மனித மனத்தினால் அளந்தறிய இயலாதவர். ஒ.நோ. ஏசா. 40:13, 14. அவரை மனிதருக்கு வெளிப்படுத்தும் வேதமுங்கூட மனிதன் இகத்திலும் பரத்திலும் நன்மை பெறுவதற்கு ஏதுவாக எந்த அளவுக்கு அவன் அவரை அறிந்துகொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கே வெளிப்படுத்தியுள்ளது என்பதே அமையும். அவர் படைத்த வானத்தையே இந்த விஞ்ஞான யுகத்திலும் மனிதனால் அலகிடக்கூடவில்லை என்றால் அவரை எப்படி அவனால் அளவிட்டறிய இயலும்?
---
2. ஒப்பற உயர்ந்த வொருதிரி யேக
மெய்ப்பரம் பொருளாய், விமல வித்தகமாய்,
தமக்கு ஒப்புமைப் படுத்திக் கூறக்கூடிய வேறு யாரும் எதுவும் இல்லாத நிலையில் உயர்ந்து, ஒரு திரியேகராகவும், உண்மையான பரம் பொருளாயும், பரிசுத்த ஞானமாயும் விளங்கும் (கடவுள்).
ஒப்பற உயர்ந்த : தமக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவர். ''தனக்குவமை இல்லாதவன்'' (குறள். 7). ''இப்படியிருக்க என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்கு வீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்'' (ஏசா. 40:25).
ஒரு திரியேக : இது கடவுளுடைய மும்மையில் ஒருமைக் குணத்தையும் ஒருமையில் மும்மைக் குணத்தையும் குறித்துக் காட்டுகிறது. கடவுள் மூவராகவும் (பிதா, திருமைந்தர், பரிசுத்த ஆவி, மத். 28:19) அதே நேரத்தில் ஒருவராகவும் இருக்கும் இப்பண்பு மனித அறிவின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது. இதனை நாம் நம்பிக்கையால் மட்டுமே அறிய இயலும். இஃது ஓர் ஆண் மகன் திருமணத்திற்கு முன்னர் பெற்றோருக்கு மகனாகவும், திருமணத்திற்கும் பின்னர் ஒருத்திக்குக் கணவனாகவும், பிள்ளைப் பேறு கிடைத்த பின்னர் தந்தையாகவும் உறவு மாறுவதைப் போன்ற பண்பினதாக அமையலாம் என்று கருதலாம்.
பிதாவைத் தமக்குக் காட்டும்படி பிலிப்பு இயேசு பெருமா னிடம் வேண்டுதல் செய்தபோது, அவர்,
"பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
"நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்கள் என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்.
''நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை நம்புங்கள்'' (யோவன் 14:9-11) என்று கூறினார்.
அடுத்து இதே அதிகாரத்தில் இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிப் பேசியபோது, ''சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
"அவர் (பரிசுத்த ஆவியானவர்) என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். "பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்'' (யோவான் 16:13-15) என்று கூறியுள்ளார்.
இங்கே நமக்குக் கடவுளின் திரியேகப் பண்பு தெளி வாதலைக் காண்கிறோம்.
நாம் இந்த ஊன் உடலில் வாழும் காலம் வரைக்கும் அறிவு பூர்வமாக இதனை அறிந்துகொள்ள முடியாது. இப்பொழுது விசுவாசத்தினால் ஒப்புக்கொள்ள வேண்டியது. நாம் ஆன்ம சரீரம் பெறும் போது இந்த உண்மை நமக்குப் பகலாக விளங்கும்.
பின்வரும் இரட்சணிய யாத்திரிகப் பாடல்கள் இங்கு ஒப்பிட்டு உன்னத்தக்கன :
“ஒன்றிலே மூன்றாய், மூன்றும்
ஒன்றதாய், உலப்பி லாதாய்,
நின்றுல கனைத்தும் தூய
நினைவுமாத் திரையில் தந்து,
நன்றென உவந்து, இரக்ஷை
நல்குமெய்ஞ் ஞானா னந்தக்
குன்றினை அகத்துத் தாங்கி,
சிந்தனை கூடி வாழ்வாம்.'' - பாயிரம் - 2.
''தந்தை யாகி, உலகனைத்தும்
தந்து, மநுக்கள் தமைப்புரக்க
மைந்த னாகிப் புனிதாவி
வடிவாய் ஞான வரமருளிப்
பந்த மறநின்று இலங்குதிரி
யேகபரமன் பதாம் புஜத்தைச்
சிந்தை யாரத் தொழுதேத்தச்
சேர வாரும் ஜெகத்தீரே'' - இரட்சணிய நவநீதப் படலம் 1.
மேலும் காண்க : இரட்சணிய மனோகரம் : சந்நிதி முறை: யேசு நாயக சுவாமி-10. கிருஷ்ண பிள்ளை தமது ’இரட்சணிய சமய நிர்ணயம்' என்னும் நூலில் எழுதியுள்ள பின்வரும் கருத்தும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
''திரியேக தேவன் என்ற இந்தத் திருநாமம் மனிதர் மனதுக்கும் புத்திக்கும் எட்டாத பரம இரகசியமானது. ஆயினும் மனதுக்காவது புத்திக்காவது விரோதமானதன்று. மெய்ச் சுருதியில் கடவுளைத் தனியேக வஸ்து வென்றும், அந்த வஸ்துவே மூன்று தத்துவங்களுள்ள ஒரு பொருளென்றும், அந்தத் தத்துவங்கள் தம்மில் நிருவிகற்பாயுள்ள ஏகவஸ்துவே என்றும், ஆதலால் தேவன் ஒருவரேயன்றி மூவரல்லர் என்றும், திரித்துவராய மூவரில் ஒருவர் முந்தினவருமல்லர் பிந்தினவருமல்லர், ஒருவரிலொருவர் பெரியவருமல்லர் சிறியவருமல்லர், மூவரும் சமநித்தியரும் சரிசமானருமாம் என்றும் வெளிப் பட்டிருக்கிறது. ஆதலில் அவ்வாறு விசுவாசித்து வழி பட்டு ஈடேற்றத்துக்கு அருகராக முயல வேண்டுவதே மனிதர் கடமை.'' இ . ச . நி. பக். 161-162.
3. அநாதி நித்தியமாய், அகளங்க விபுவாய்,
மநாதிகட் கெட்டா மௌனநன் னிலையாய்,
என்றென்றும் நிலைபேறுடையவராய், குற்றமற்று எங்கும் வியாபகமுள்ளவராய், மனம் வாக்கு காயம் முதலாய புலனுணர்வுகளுக்கு எட்டாத மௌன நன்னிலையினராய் விளங்குகிறார் (கடவுள்).
மநாதிகட் கெட்டா: மனித மனத்தின் அறிவுத் திறனால் அறிய இயலாதவர்; ஆனால், அவர் தாமே நமக்கு வெளிப் படுத்த நாம் அவரை அறியலாம். வேதாகமத்தில் தேவன் தம்மைத்தாமே மனிதனுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஏசா. 40:28-''பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன்.....'' சங்.90:2-''நீரே அநாதி யாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.'' மேலும் காண்க : யோவான் 3:16; எபி. 1:1,2; 2:3-4; ஏசா. 46:10.
------
4. போக்கு வரவு பொருந்தா தெவற்றொடும்
தாக்காது நின்ற தனியேக பரமாய்,
இறப்பும் பிறப்பும் அடையாமல் எதனையும் பற்றி யிராமல் நிற்கும் ஒப்பற்ற ஒரு தனிப் பரம்பொரு ளாய் விளங்குபவர் (கடவுள்).
பரம்பொருளாகிய கடவுள் தம்மில் தமக்கு இறப்போ, பிறப்போ இல்லாதவர்; மற்றொன்றைப் பற்றிக்கொண்டு நிலைத்து இருக்க வேண்டும் என்னும் சார்பு இல்லாது தானாக என்றும் தனித்து ஒரே பரம்பொருளாய் விளங்குபவர் என்பதாம். ஒ.நோ. ஏசா. 43:13; யாத். 4:14.
பிறப்பு, இறப்பு இல்லாதவர் என்பது தம்மில் தமக்குப் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதாம். இது, கடவுள் மக்களை மீட்பதற்காக மனுப் பிறப்பெடுத்தார், மனிதர்களை மீட்பதற்காகத் தம் உயிரைச் சிலுவையில் ஈந்தார் , மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்னும் உலக வரலாற்று உண்மைகளுடன் முரண்பட்டதன்று.
போக்கு வரவு : ஒ.நோ.
"போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே!''
- திருவாசகம், சிவபுராணம்.
"போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் இல்லாத ஒன்று ......' --கந்தரலங்காரம்.
"அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே'' --சிவஞானபோதம், இரண்டாம் நூற்பா.
தனியேக பரமாய் - ஒப்பற்ற ஒரு தனிப் பரம்பொருளாய். ஒ. நோ.--''யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?'' ஏசா. 46:5.
''முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை .'' ஏசா. 46:9.
--------
5. முப்பொழு திகந்து முன்னுற வனைத்தும்
தப்பிலா துணரும் சர்வஞா னத்தொடு
இறப்பு , நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தையும் கடந்து எல்லாவற்றையும் முன்னதாகவே தவறு இல்லாமல் முழுவதும் அறியும் முற்றறிவு (பெற்றவர் கடவுள்).
காலம் என்பது மனிதப் படைப்பின் விளைவால் உண்டான ஒன்றாகவே இருக்கிறது. (காண்க . ஆதி. 1;2.) காலத்தை முன்பும் பின்பும் கடந்து அறியும் முற்றறிவினர் கடவுள். நித்தியத்திலிருந்து மனிதப் படைப்பில் தோன்றிய காலம் கடவுள் திருமைந்தரின் இரண்டாம் வருகையில் முடிந்து நித்தியத்தில் நுழையும். அப்பொழுது எல்லாம் புதிதாகும்; பழையன எல்லாம் ஒழிந்துவிடும். ஒ.நோ. “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற் கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறி விக்கிறேன் ......'' ஏசா. 46:10. கடவுள் எல்லாம் அறிந்தவர்.
-------
6. திருவுளம் நினைத்த செயலெலா முடிக்கும்
பெருமைசே ராற்றல் பிறங்கிய சித்தாய்,
தமது திருவுளத்தில் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும், செய்து முடிக்கும் பெருமை நிறைந்த வல்லமையுள்ள சித்துப்பொருளாய் விளங்குகிறார் (கடவுள்).
கடவுளின் படைப்பு வல்லமை இதிலே கூறப்படுகிறது. கிருஷ்ண பிள்ளை இரட்சணிய யாத்திரிகத்தில், ”சொல் லொன்றால் அனைத்துலகும் தோற்றுவித்தாய்'' என்றும், இரட்ணிய மனோகரத்தில், ''நினைத்தது முடிக்கின்ற சர்வசாமர்த்தியமுள நிருமலச் சித்து' என்றும் பாடுகிஞர். ''நீர் சொல்ல ஆகும்; கட்டளையிட நிற்கும்'' என்பது திரு வசனம். மேலும் காண்க : ''என் ஆலோசனை நிலை நிற்கும்; எனக்குச் சித்தமானவைகளை யெல்லாம் செய்வேன்,'' ஏசா. 46:10. ஒ.நோ. சங். 33:6; 21 ஆம் கண்ணி.
-----
7. வெஞ்சுடர் கோடி விரிந்தென மகிமைச்
செஞ்சுடர் விரிக்கும் தேஜோ மயமாய்,
ஒரு கோடி கதிரவனுடைய ஒளிக் கற்றைகள் விரிந்தது போன்ற மகிமையுடைய தீச்சுடர் பரப்பும் ஒளிமயமாய் விளங்குகிறார் (கடவுள்)
தேஜோ மயமாய் : ''தேவன் ஒளியாயிருக்கிறார்.'' (1 யோ. 1:5). கடவுள் 'சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணு கிறவர்.'' (I தீமோ. 6:16). கடவுள் ஒளியை ஆடையாய் அணிந்திருக்கிறவர் என்றும் விவரிக்கப் பட்டுள்ளார். சங். 104:2. ''நான் உலகத்துக்கு ஒளியாக வந்தேன்'' என்று இயேசுபெருமான் கூறியுள்ளார். யோவான் 12:46. மேலும் காண்க : வெளி. 10:1; 4:3; 9:17,18; 11:5; 14:14; 15:2-8.
----------
8. ஆழமும் நீளமும் அகலமு மினையவென்
றூழிநின் றளப்பினு முறையிட வரிய
ஊழி ஊழி காலமாக நின்று கடவுளின் இருப்பிடத்தின் ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும் அளந்தாலும் அறிய இயலாது.
திருவசனம், ”இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே'' (II நாளா. 6:18) என்றும், ''கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் : வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி; நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?'' (ஏசா. 66:1) என்றும் கூறுகின்ற து. ஒ. நோ. எபே. 3:18:19.
விண்வெளி விஞ்ஞானம் பல புதுமைகளைக் கண்டு வரும் இந்நாள்களில் ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் (கிட்டத்தட்ட 120 ஆண்டுகள்) விண்வெளிக் கப்பலில் பயணஞ் செய்து கொண்டிருந்தாலும் அதன் எல்லையைக் காணமுடியாது என்று கூறுவதை நாம் அறிகிறோம். எனவே எங்கும் நிறைந்துள்ள கடவுளின் இருப்பிடத்தை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க இயலாது; ஆனால் மனித மனத்தால் - பக்தியால் , அன்பால் விசுவாசித்தால் அவரை அறியலாம். அவரை நமக்குள் கோயில் கொண்டிருக்கச் செய்யலாம். (1கொரி 3:16,17).
''ஆக்கம், அளவு இறுதி இல்லாய்!'' - திருவாசகம். சிவபுராணம் (ஒப்புமை)
----------
9. கருணை யாறன் பின் கடல்புக மண்டி,
அருணனி கதித்த அலைகிளர்ந் தெழும்பி,
(அத்தகைய கடவுளின் - கண்ணி , 8) கருணையாகிய ஆறு, (அவரது) அன்புக் கடலில் கலந்து அருள் மிகுதியும் நிறைந்த அலைகளாக எழும்பி(யது)
கருணை --ஆறு; அன்பு - கடல்; அருள் - அலை என்றவாறு உருவகம் செய்கிறார்.
கடவுளாகிய கருணை, அன்புக் கடலாகிய தேவ குமாரன் வழியாக வந்து அருளைப் பொழிந்தது; அருள் பொழிந்தது என்பதனைப் பரிசுத்த ஆவியானவரின் வருகையுடனும் இணைக்கலாம். (ஒ.நோ. யோவான் 16:7).
கருணை- இரக்கம் (mercy). ”ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும் சத்தியமுமுள்ள தேவன்.'' (சங். 86:15).
”கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கின்றனவே.'' (சங். 25:6). ''அவருடைய இரக்கம் மகா பெரியது'' (II சா. 24:14).
கிருஷ்ண பிள்ளை, கடவுளை, ”நீதி இரக்க சமரசர்" என்று கூறுகிறார். பின்வரும் இரட்சணிய யாத்திரிகப் பாடலையும் காண்க:
"கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற
தற்பர நீதி பொங்கித் தழலெழச் சினவி நீட
அற்புதக் கருணை பொங்கி யாரழ லவிக்க நாடப்
பொற்புறு குமரன் நேர்ந்து நடுவராய்ப் புகல லுற்றார்.''
-- இ . யா . ஆதிபருவம், இராஜதுரோகப் படலம், 8.
-----------
10. பாராதி யண்டப் பரப்பெலாம் புதைத்த
பேரா னந்த பிரளயா கரமாய்,
(அவ்வாறு எழும்பிய அருள் அலைகள்) பேரானந்தப் (பேரின்பப்) பெருவெள்ளமாகி உலகப் பரப்பு எல்லா வற்றையும் புதைத்து (நிரப்பியது).
8, 9, 10 கண்ணிகளின் பொருளை இணைத்துப் பார்க்க வேண்டும். ஆழ, நீள, அகல, உயரங்களை அளந்தறிய முடியாதவராகிய கடவுளின் கருணை அவரது அன்புக் கடலில் கலந்து அருள் செறிந்த அலைகளாக எழும்பிப் பேரானந்தப் பேரின்ப வெள்ளப் பெருக்கெடுத்து உலகப் பரப்பு எல்லாவற்றையும் புதைத்தது என்பதாம். மனிதனால் தன்னறிவின் துணைகொண்டு அவரை முற்றிலும் தானாக அறிய இயலாது என்றாலும், கடவுள் தமது அன்பால், மனிதன் அவரை எப்பொழுதும் எங்கும் எந்நிலையிலும் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக எங்கும் நிறைந்திருக்கிறார். எனவே, அவரை எனக்குத் தெரியாது; என்னால் அவரை அறிய முடியவில்லை என்று சொல்ல இயலாது என்பதாம்.
அன்பு: ''தேவன் அன்பாயிருக்கிறார்'' (1 யோவான் 4:8). அன்பே கடவுள் என்பதன்று. கடவுள் உலக மக்கள் மீது கொண்டுள்ள கடலனைய அன்பினைத் தமது திருப்புதல்வ ராகிய இயேசுவை உலக மீட்பராக அனுப்பியதால் வெளிப்படுத்தியுள்ளார். காண்க யோவான் 3:16; 1 யோவான் 4:9. கடவுள் மாந்தர் மீது கொண்டுள்ள அன்பை வள்ளுவர் வாக்கில், ''அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்'' என்று காண்கிறோம். அன்பு கொடுக்கும் பண்பினது. மனுக்குலம் பாவத்தினால் மீறுதலுக்கு உட்பட்டிருந்த போதிலும் கடவுள் தமது அன்பை அடைத்து வைக்க இயலாதவராய் அவரே நம்மீது முதலில் அன்புகொண்டார். ''ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் உயிரைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.'' (யோவான் 15:13). இயேசு அதனைச் செய்தார். அள வின்மை நோக்கி அன்பு 'கடல்' என உருவகம் செய்யப் பட்டுள்ளது. ஒ.நோ. I கொரி. 13:13, ''இப்பொழுது விசு வாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.'' கிருஷ்ண பிள்ளை, ''அன்பே உருவாகிய ஆரணனே'' என்று இரட்சணிய மனோகரத்தில் பாடுகிறார்.
அருள் : ''அருள் என்னும் அன்பு ஈன் குழவி' என்பது திருவள்ளுவம். 'அருள் அதனைப் பெறுபவரின் தகுதி பாராது வழங்கப் பெறுவது.'' ''கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின" (யோவான். 1:17) என்பது கடவுளின் திருவாக்கு. கடவுள் அடக்கி வைக்க இயலாத தமது அன்பின் விளைவால் திருமைந்தரை உலகிற்கு ஈந்தார். தெய்வமகன் வழியாக அருள் மக்களுக்குக் கிட்டியுள்ளது. "கிருபையினாலே விசு வாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம்'' என்கிறது திருவசனம். கடவுளின் இந்த அருள் பாலிப்பு எல்லா நாட்டவருக்கும் உண்டு. நற்செய்தியின் வாயிலாக இறை வனுடைய அருள்பாலிப்பு எங்கும் பரவி எல்லாவற்றையும் ஆட்கொள்ளுகிறது. கிருஷ்ண பிள்ளை பின்வருமாறு பாடுகிறார் :
''உன்ஆர் அருள் ஒன்று அடியேற்கு உளதேல்
என்னால் அடையாப் பயன்யாது கொலாம்
இன்னே திருவுள் ளம் இரங் குதியேல்
பொன்னா டுதொழும் குணபூ தரனே!'' - இ. ம. குமாராநுபூதி - 13
''புண்ணியன் கிருபை யேயாய்ப் பொலிந்தது ஜீவவாரி''
- இ. யா. பர . ப .-6.
-------
11. சங்கற்ப மாத்திரம் ஐகமெலாம் சிருஷ்டித்
தங்கவை புரக்கும் அருட்குண நிதியாய்,
நினைத்த அளவில் உலகங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி, அவ்வாறு உண்டாக்கிய உலகங்களை எல்லாம் காத்துப் பராமரிக்கும் அருட்குண நிதியாய் (விளங்குகின்றார்).
6வது கண்ணியை இதனுடன் ஒப்பிட்டுக் காண்க.
''நினைத்தது முடிக்கின்ற சர்வசா மர்த்தியமுள்
நிருமலச் சித்தை .......'' - இ . . : சந்நிதிமுறை -1.
"கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனை யும் உண்டாக்கப்பட்டன.'' -- சங். 33:6.
-----------
குமாரதேவன்
12. கற்பனை யாலே விற்பன மிழந்து
கற்பனை கடந்த துற்பவந் தொலைய,
(தீயவனின்) வஞ்சனையால் நல்லறிவினை இழந்து, கடவுள் அருளிய கட்டளையை மீறிய துன்மார்க்கத்தால் விளைந்த பாவம், பிறப்பு நீங்குவதற்கு.
கடவுள் முதல் மாந்தருக்கு அருளிச் செய்த கட்டளை, அவர்களைச் சாத்தான் வஞ்சித்த விதம், அதனால் மனுக்குலத்திற்கு விளைந்த தீமை முதலியவற்றின் வரலாற்றினை அறிவதற்கு ஆதியாகமம் 2, 3, அதிகாரங்களைப் படிக்க.
----------
13. அருளுரு வாகி யிருளுறு மவித்தை
மருளற வொழித்துத், தெருளுறத் தெருட்டி,
அருள் வடிவான தேவ குமாரனாகி (உலகில் அவதரித்து) அஞ்ஞானமாகிய இருளை மயக்கமற நீக்கி அழித்து உலகத்தைத் தெளிவாக அறிவுறுத்தி அருளினார்.
அருளுரு: கடவுள் மனிதனை மீட்க மனிதனான வரலாறு இதனால் அறியப்படுகிறது. 'கிருபையும் (அருளும்) சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது'' என்பது திருவாக்கு . கடவுள் மனித உடல் எடுக்கவில்லை என்றால் மக்களுக்குக் கடவுள் அருள் கிட்டியிருக்க முடியாது; அஞ் ஞானம் அழிந்திருக்க முடியாது: மெய்யறிவின் தெளிவு கிட்டியிருக்காது. அருள் பாலிப்பு இல்லை என்றால் மீட்பும் இல்லை. மீட்பு கடவுள் அருளும் ஈவு. ''இயற்கை அரசி லிருந்து அருள் அரசின் வழியாக நாம் மகிமை அரசுக்குள்
நுழைகிறோம்.''
-------------
14. இத்தரா தலத்துக்கு ரக்ஷணை யமைத்துப்
புத்துயி ரளிக்கும் புண்ணிய மூர்த்தமாய்,
இந்த உலகத்திற்கு (உலக மக்களுக்கு) மீட்பு வழியினை ஏற்பாடு செய்து புத்துயிர் அளிக்கும் புண்ணிய உருவினராய்,
புத்துயிர் : ''ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிய படைப்பாய் இருக்கிறான்'' என்பது திருவாக்கு. மீறுதலுக்கு உட்பட்ட ஆன்மா மாயைக்கும் அழிவுக்கும் ஆட்பட்டது. ஆன்மா தேவமைந்தர் வழியாக மீட்பு பெறும் போது புத்துயிர் பெற்று மாயையை விலக்கி நீடுவாழ்வு பெறுகிறது என்பதாம்.
12-14 கண்ணிகளில் கடவுள் திருமைந்தர் வழியாக மக்களுக்கு அருளிய மீட்பு கூறப்பட்டது. கடவுள் மக்களை மீட்க மனிதனானார் என்பதும் கூறப்பட்டது.
------------
பரிசுத்த ஆவி
15. துன்னெறி யாய பன்னெறி யொழுகும்
புன்னெறி மாக்களை நன்னெறிப் படுத்தி,
கெடு நெறிகளாகிய பல நெறிகளில் வாழும் இழிந்த வழி செல்லும் மக்களை நல்ல நெறிக்குக் கொண்டு வந்து,
நன்னெறிப் படுத்தி: பரிசுத்த ஆவியானவர் மக்கள் உள்ளங்களில் திருவசனத்தின் வாயிலாக அருட்செயல் புரிந்து அவர்கள் செல்லும் தீயவழிகளை அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் மனத்தைத் திருத்தி அவர்களை நலவழிப்படுத்துகிறார்.
--------
16. பரிதியென் றொளிரும் சுருதியஞ் சுடரை
இருதயத் தேற்றி யொருதலை யாக (த்),
(பரிசுத்த ஆவியானவர்) மக்களுடைய இதயங்களில் சூரியனைப்போல ஒளிவிடும் வேதத்தின் ஒளியை ஏற்றி அவர்களைத் (திருநெறியில்) ஒருமுகப்படுத்தி (நடத்துகிறார்)
சுருதியஞ் சுடர் : சுருதி - வேதம். 'வேதமே வெளிச்சம்'' என்பது திருவசனம். பரிசுத்த ஆவியானவர் இதயங்களில் திருவசனத்தின் மூலம் வேதத்தின் ஒளியை ஏற்றுகிறார். ஒ.நோ. ''உமது வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமா-யிருக்கிறது.'' சங். 119:105.
---------
17. தீதிலா நித்ய ஜீவ பரியந்தம்
பாதுகாத் தளிக்கும் பவித்திராத் துமமாய்,
தீமை அணுகாமல் நிலையான உயிர்வாழ்வு (பெறும்) வரையில் எக்காலத்திலும் பாதுகாத்து (ஆன்மாக்களைக் கடவுளிடம்) சேர்ப்பிக்கும் பரிசுத்த ஆவியாய்,
பாதுகாத்தளிக்கும் : ஒ.நோ. 1 கொரி. 3:16,17; II கொரி. 6:20; எபே. 1:13-14; யோவான் 14:16. பரிசுத்த ஆவியானவர் உள்ளங்களில் குற்றத்தை உணர்த்தி நல்வழிப் படுத்துவதுடன் (காண்க யோவான் 16:8; அப். 2:37,38) மக்கள் உள்ளங்களில் திருக்கோயில் கொண்டு அவர்களுக்குப் போதித்து ( யோவான் 2:27) அவர்களை இவ்வுலக வாழ்வில் தேற்றித் தீயவனின் தாக்குதல்களின் போது ஏற்ற வேளையில் அவர்களுக்கு உதவித் திருநெறி வழுவாது காக்கிறார். இத்தகைய பாதுகாப்பு ஆன்மாக்களுக்கு இவ் வுலகில் உயிர் வாழும் காலம் வரைக்கும் இன்றியமையாத தாகும்.
பவித்திராத்துமமாய்: கடவுள் பரிசுத்தமான ஆவியாயிருக்கிறார். ஒ.நோ. ''தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மை யோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்.'' யோவான் 4:24.
15,16,17 ஆகிய மூன்று கண்ணிகளிலும் பரிசுத்த ஆவியின் அருட்செயல் கூறப்பட்டது. அதாவது, பரிசுத்த ஆவியானவராகிய கடவுள் மீட்புத் திருநெறியில் மக்களை ஆற்றுப் படுத்திக் காப்பது பேசப்பட்டது.
-----------
18. இந்நிலை யறியா வேழை மாக்கள்
பன்னிய தெய்வப் பதர்போ லாது,
இந்த நிலையினைப் பகுத்தறியாத மக்கள் கடவுள் சொன்ன பதரைப் போன்றவர்கள்.
மாக்கள் : பகுத்தறிவின்மையால் மாக்கள் என்றார். ''தெய்வம் பன்னிய பதர் போலாது'' என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். இதிலே கோதுமை மணி, பதர் பற்றிய உவமை பொதிந்துள்ளது. காண்க. மத். 3:12; லூக்.3:17. கோதுமைமணி கடவுள் நெறி ஒழுகும் மக்களுக்கு உவமை.
----------
19. காம வெகுளி மயக்கங் கடிந்து,
தீமையை முருக்கிச் செம்மையைப் பெருக்கி,
காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங் களையும் போக்கித் தீமையை அழித்து நன்மையை வளர்த்து.
ஒ.நோ .
''காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்' (குறள் 360)
மேலும் காண்க. 1 யோவான் 2:16-''ஏனெனில், மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.''
-----------
20. நேமியைப் புரக்கும் நீதாதி பதியாய்,
நாம ரூப ரஹிதா விகாரியாய்,
உலகத்தைக் காக்கும் நீதிபதியாய் , பேரும் உருவும் இல்லாதவராய் , வேறுபாடற்றவராய் (விளங்குகிறார்).
நீதாதிபதியாய்: கடவுள் நீதியுள்ளவர். அவர் நீதியாய் உலகை ஆண்டு வருகின்றார். 'கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.'' சங். 116:137.
நாமம்: மோசே முனிவர் கடவுளிடம் அவருடைய திருநாமத்தைக் கேட்டபொழுது, அவர்: "இருக்கிறவராக இருக் கிறேன்...... இருக்கிறேன் என்பவர்'' என்று கூறியுள்ளமை (யாத். 3:14) இங்கும் ஒப்பிட்டுக் காணத்தக்கது.
உரு: 'தேவன் ஆவியாயிருக்கிறார்'' என்று திருவாக்கு கூறுகிறது.
ரஹிதா விகாரி--ரஹித அவிகாரி; ரஹிதம் - இல்லாமை;
அவிகாரி - வேறுபாடற்றவர். நாம ரூப ரஹிதம் - பேரும் உருவும் இன்மை.
---------
21. சர்வோத் கிருஷ்ட சர்வபரி பூரண
சர்வா திக்க சச்சிதா னந்தமாய்,
எல்லாவற்றிற்கும் மேன்மையான, முற்றும் நிறைந்த, எல்லாவற்றையும் ஆளும் உரிமையுள்ள சச்சிதானந்தமாய் (விளங்குகிறார்)
’சச்சிதானந்தமாய் : சத்து--சித்து - ஆனந்தம் :
உண்மை - அறிவு - மகிழ்ச்சி (ஆனந்தம்). ஒ. நோ.
'சத்தாய் நிஷ் களமாயொரு சாமியமும் மிலதாய்ச்
சித்தாயா னந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே'' இ. ம. 20:1.
-------------
22. துன்னிய பௌதிகத் தோற்றமும் ஒடுக்கமும்
மன்னிய சீலமும் வடிவுமென் றினைய
காணப்படுகின்ற உலகத்தின் தோற்றம், முடிவு, நிலைபேறுடைய ஒழுக்கம், உருவம் முதலிய இவை போல்வன (எல்லாம்).
---------
23. ஆதி யமைப்பி லணுபிச காமலெப்
போதுமோர் படித்தாய்ப் புரையற வொழுகலில்,
தொடக்கத்திலே அவை அமைக்கப்பட்ட நிலையிலிருந்து ஓர் அணுவும் தவறாமல் எப்பொழுதும் ஒரே நிலையாய்க் குற்றம் இல்லாமல் ஒழுகுவதில்,
-------------
24. ஜெகத்சர் வங்களுந் திவ்வியமங் களகுண
மகத்துவம் விளக்கி வரன்முறை வணங்க,
சருவ உலகங்களும் (கடவுளின்) உயர்ந்த பாக்கியம் நிறைந்த மகிமையான குணங்களை விளக்கிக் கூறி முறைப்படி (அவரை) வணங்குகின்றனர்).
மகத்துவம் விளக்கி : கடவுளின் அருங்குணங்களையும், மேன்மையான செயல்களையும் விவரிந்து அவரை வணங்கு தல் மரபு. காண்க : சங். 136.
-----------
25. பாவசா கரத்தில் படருறீ யமிழ்ந்த
ஜீவகோ டிகள் புனர் ஜென்மமா யுய்ய(க்),
பாவக் கடலில் துன்பமுற்று அமிழ்ந்துள்ள கோடிக்கணக்கான மன்பதைகள் மறுபிறப்பு அடைந்து மீட்புப் பெறுவதற்கு,
கடவுள் இருவகைப் பிறப்புகளை உலக மக்களுக்கு நிய மித்துள்ளார் . ''மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்; ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்'' (யோவான் 3:6).
முதல் பிறப்பு : ''மாம்சத்தினால் பிறப்பது.'' இஃது ஆண் பெண் இவர்களின் வித்தால் உடலில் எடுக்கும் மனிதப் பிறப்பு.
இரண்டாம் பிறப்பு : இஃது ஆவியினால் பிறப்பது.'' இது திருவசனமாகிய வித்தின் வழியாக பரிசுத்த ஆவியானவர் மக்கள் மனத்தில் அருட்செயல் புரிவதால் உண்டாகும் பிறப்பு . நம்பிக்கை, மனந்திரும்புதல், அறிக்கை செய்தல், திருமுழுக்குப் பெறல் என்னும் படிகளில் இந்த மறுபிறப்பு உண்டாகிறது. (ஒ.நோ . மாற்கு 16:16; அப். 2:38; 17:30,31; ரோமர் 10:17; மத். 10:32,33; அப். 8:36-37; பேதுரு 3:21; தீத்து 3:5).
"இயேசு அவனுக்கு மறுமொழியாக : ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய அரசைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன் என்றார்.'' நம் இயேசு பெருமான் நிக்கொதேமுவுடன் பேசும்போது: “ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் உதவனுடைய அரசில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய் யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.'' யோவான் 3:3,5.
புனர்ஜென்மம் : மறுபிறப்பு, புதுப் பிறப்பு. (1 கொரி. 5:17; ரோமர் 6:3,11).
--------
26. கடைக்கணித் தருளிய கருணையை உன்னி,
மடக்கொடி சீயோன் மகளுளங் கசிந்து.
மக்கள் மீட்புப் பெறுவதற்குக் கடன் காடாட்சித்து அருளிய கருணையை நினைந்து சீயோன் மண வாட்டியாகிய (திருச்சபை) உளமுருகி,
சீயோன் மகள் : சீயோன் என்பது எருசலேமுக்கு வழங்கப் பெறும் இன்னொரு பெயர் . விண்ணுலகமும் சீயோன் என்று குறிக்கப்படுகிறது. 'சீயோன் குமார்த்தி' என்பது இஸ்ரவேல் மக்களையும் குறித்துக்காட்டுவதாகும். 'மடக் கொடி சீயோன் மகள்' என்றது திருச்சபையைக் குறிப்பதாகும். திருச்சபை மணவாட்டி என்றும் கிறிஸ்து மணவாளன் என்றும் திருவசனங்களில் குறிக்கப்படுகின்றனர். தனி ஆன்மாவும் மணவாட்டி (கற்புடைய கன்னி) என்று பக்திப் பெருக்கில் வழங்கப்பட்டுள்ளது. பக்தி நெறியில் உள்ள 'நாயகன் நாயகி பாவம்' இங்கு ஒப்பிடத்தக்கது. (சகரி. 9.9; எசா. 60:14; மத். 25:1-13; II கொரி. 11:2; வெளி. 11:4).
இரட்சணிய யாத்திரிகத்திலே தர்மசேத்திரப் படலத்தில் 43-71 பாடல்களில் தன் ஆன்ம நாயகராகிய கடவுளை அடைய விரும்பும் ஆன்மா கடவுள் காதலுற்றுப் பிரலாபப் படுதலைக் காணலாம். இப் பாடல்கள் 'ஆன்மப் பிரலாம்' என்னும் தலைப்பில் இரட்சணிய மனோகரத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. பின்வரும் பாடலில் சீயோன் மகளின் மன உருக்கத்தைக் காணலாம்:
''உம்பர் மேயசீ யோன்மலை யுன்னத கீதம்
பம்ப வேதிய னகத்துறை யாத்துமப் பன்னி
எம்பி ராணநே சரைத்தலைக் கூடு நா ளெது வென்
றைம்பு லன்களு மயங்கிமெய் யவசமுற் றயர்ந்தாள்.''
----------
27. காலையும் மாலையும் கைகுவித் திறைஞ்சிச்,
சீலமொடு போற்றி, ஐெயஜெய ஜெயவென,
காலை, மாலை ஆகிய இருவேளையும் கைகுவித்துக் கடவுளை வணங்கி வேண்டுதல் செய்து, வெற்றி உண்டாகுக! வெற்றி உண்டாகுக! என நல்லொழுக்கத்துடன் போற்றி 26,27 கண்ணிகளில் உலகில் திருச்சபையாகியக் கிறிஸ்துவின் மணவாட்டி அவரை ஆராதித்து வழிபடுதலைக் கூறியுள்ளமை காண்கிறோம்.
------------
கிருபாசன மூர்த்தி
28. கற்றறிந் தடங்கிக் கருதிமுப் பகையை
முற்ற முனிந்த முதுதவ முநிவரும்
கடவுள் அறிவு நிறைந்து, ஆன்மிக வாழ்க்கை அனுபவத்தால் முதிர்ந்து, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முப்பகையையும் முற்றிலுமாக வென்று அழித்த முதிர்ந்த தவநிலையினை-யுடையவருமாகிய பரிசுத்தவான்களும்,
முப்பகை : காமம், வெகுள், மயக்கம். 1 யோவான் 2:156-ல் கண்களின் இச்சை, உடலின் இச்சை, வாழ்க்கையின் பெருமை ஆகிய இவை பரிசுத்தமான ஆன்மிக வாழ்க்கைக்கு விரோதமான மூன்று பகையாக இருப்பதைக் காண்கிறோம். இவற்றை வெறுத்துத் துறந்தவர்களே உண்மையான இறையன்பு பூண்ட பக்தர்களாகத் திகழ முடியும். ஒ.நோ.
’ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழுமூரே" - புறம் 191.
‘மொழிந்தன ராசிகள் முப்பகை வென்றார்' - கம்ப. கார்முகப் படலம் 26.
----------
29. எல்லாக் கனமும், எல்லா மகிமையும்,
எல்லாப் புகழும், எல்லாத் துதியும்,
கடவுளுக்கே - எல்லாக் கனமும், மகிமையும், புகழும் துதியும் உண்டாகுக.
இத்துதி பரிசுத்தவான்கள் பூமியில் ஒன்றுகூடி ஆராதிக்கும் போதும், விண்ணுலகில் தூதர்களாலும் பரிசுத்தவான்களாலும் உண்டாகிறது. (அப். 2:42; எபி. 10:25; வெளி. 4:11).
அவர்கள் தங்கள் பொன்முடிகளை எடுத்து அரியணை முன் வைத்து, ’எங்கள் ஆண்டவரே! எங்கள் இறைவனே! மகிமை யும் மாட்சியும் வல்லமையும் பெறத்தக்கவர் நீரே! ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே! அனைத்தும் உண்டானது உம் விருப்பத்தாலே. உம் விருப்பத்தாலே எல்லாம் படைக்கப்பட்டன.’ வெளி. 4:11. (க. மொ).
-----------
30. எல்லாம் வல்ல எந்தா யுனக்கென்
றல்லாய்ப் பகலாய் அனவரத மும்தொழ (ப்),
எல்லா வல்லமையும் உள்ள எங்கள் தந்தையே உம்மை இரவு பகல் எல்லா நேரத்திலும் தொழுது கொள்ளவும்.
ஒப்புமை :
''அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்'' - (கம்பர் வாக்கு)
----------
31. பானுமின் மினியெனப் பரந்தொளி கிளர்ந்த
வானக வாணரும் மாபெருந் தூதரும்
ஞாயிற்றின் ஒளிக் கிரணங்களைப்போலப் பரந்து ஒளிரும் விண்ணுலக வாசிகளும் தலைமைத் தூதர்களும்.
வான........ தூதரும்: இருபத்து நான்கு மூப்பர் முதலானோர் . வெளி 19:1-6; 4:1,11.
----------
32. ஒருவா அன்பொடு வந்துசந் நிதியில்
திருவோ லக்கமாய்ச் சேவித் திறைஞ்சி,
நீங்காத அன்புடன் கடவுளின் திருவாட்சி முன்னர் வந்து அவருக்குச் சேவை புரிந்து, வணங்கி, வேண்டுதல் செய்து,
-------
33. அதிபாரி சுத்தர் ! அதிபாரி சுத்தர் !
அதிபாரி சுத்தர் என் றகமகிழ்ந் தேத்த
மகா பரிசுத்தர், மகா பரிசுத்தர், மகா பரிசுத்தர் என்று அகமகிழ்ந்து போற்றி.
ஒ.நோ. வெளி 4:8-''............. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.''
ஒப்புமை :
''பொதிரேறவி சும்பு நிறைந்தபுத் தேளி ராவார்
அதிபாரிசுத் தபரி சுத்தரென் றார்ப்ப ரிக்கத்
துதிதோத்திர கீதம லிந்திசை துன்னி யோங்கப்
பதிதோறண வும் மறை வாணர்பல் லாண்டு கூற'
- இ.யா. அரசியற்படலம், 11.
------------
34. முறைமுறை அந்தரத் துந்துமி முழங்கத்,
துறைதொறுந் துறைதொறுஞ் சுருதியின்னி சையெழ,
முறைமுறையாக விண்ணகப் பெருமுரசு முழங்க, ஆங்காங்கே ஒவ்வொரு துறையிலும் வேதம் ஓதுதலினால் உண்டாகும் இசை எழ.
----------
35. சங்கீத கானந் தலைத்தலை மயங்க ,
மங்கல வாழ்த்தொலி வயின் நெறு மலிய,
இடந்தொறும் சங்கீத இசை கலக்க, எல்லா இடங்களிலும் மங்கல வாழ்த்து ஒலி மிக,
------------
36. சத்தியங் கதிக்கத், தருமந் தழைக்க,
நித்திய சுகிர்த நீணில மல்க ,
சத்தியம் ஓங்க , அறம் பெருக , அழிவில்லாத பேரின்பம் நாட்டில் உண்டாக.
------
37. விண்ணு மண்ணும் விருப்புடன் போற்றிக்
கண்ணு மனமுங் கருத்துங் களிக்க (க்),
விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் விரும்பிப் போற்றிக் கண்ணும் மனமும் கருத்தும் களிகூர,
-----
38. கருதரும் பரமா காயத் தும்பர்
ஒருகிரு பாசனத் துவப்புடன் வீற்றிருந்(து),
கருதுவதற்கு அருமையான விண்ணுலகத்தின் மேல் ஒப்பற்ற திருவருட்பீடத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருந்து.
-------------
போற்றி மாலை (தெய்விக நலன்கள்)
39. இலங்கிய பேரரு ளெந்தாய் போற்றி!
நலங்கொளும் பரம நாயகா போற்றி!
விளங்குகின்ற பேரருள் நிறைந்த எங்கள் தந்தையே உம்மைப் போற்றுகிறோம் ! நன்மையே புரியும் மேலான எங்கள் தலைவரே உம்மைப் போற்றுகிறோம் !
----------
40. ஒன்று முன் நய வொருவா போற்றி!
என்றென்று மாறு இறைவனே போற்றி!
ஒருமையில் மூவராகிய ஒருவரே உம்மைப் போற்றுகிறோம் ! என்றென்றும் மாறாமல் இருக்கும் எங்கள் இறைவனே உம்மைப் போற்றுகிறோம்!
ஒன்று மூன்றும் ஒருவா : இங்கே கடவுளின் திரியேகப் பண்பு கூறப்படுகிறது. ஒருவராகிய கடவுள் தம்மைத்தாம் மனுக்குலத்துக்கு வெளிப்படுத்தியதில் மும்மை நிலையில் திருத்தந்தையாகவும், திருக்குமாரராகவும், பரிசுத்த ஆவி யாகவும் விளங்கி, அதே நேரத்தில் மூன்று கடவுளர்கள் என்று இல்லாமல் ஒரே கடவுளாகவும் விளங்குபவர். மேலும் 2ஆம் கண்ணியின் விளக்கவுரையையும் காண்க
-----------
41. சர்வ லோக சரணியா போற்றி!
சர்வ ஜீவ தயாபரா போற்றி!
எல்லா உலகங்களுக்கும் அடைக்கலமானவரே உம்மைப் போற்றுகிறோம்? எல்லா உயிர்கள் மீதும் கருணை பாராட்டுகிறவரே உம்மைப் போற்றுகிறோம் !
சர்வலோக சரணியன் : கடவுள் எல்லா உலகங்களுக்கும் அடைக்கலமாயிருக்கின்றார். காண்க. சங். 59:9; II சாமு. 50 22:3; சங். 94:22. சத்துரு தாக்கும் போதும் சோதிக்கும் போது கர்த்தர் தம்மை நம்பின பிள்ளைகளுக்கு அரணான அடைக்கலமாயிருந்து அவர்களைக் காக்கிறார்.
-------
42. அன்புரு வாய அப்பனே போற்றி!
மன்பதைக் கிரங்கிய வரதனே போற்றி!
அன்பே வடிவான எங்கள் அப்பனே உம்மைப் போற்றுகிறோம்! மாந்தருக்கு இரங்கி வரம் அருளுபவரே உம்மைப் போற்றுகிறோம் !
வரதன்: அப். 2:38; யாக். 1:5 காண்க .
---------
43. தேவ தேவ ஐெகோவா போற்றி!
மூவா ஏக முதலே போற்றி!
தேவாதி தேவனாகிய யெகோவாவே உம்மைப் போற்றுகிறோம் ! மூப்பு இல்லாத தனிமுதற் கடவுளே உம்மைப் போற்றுகிறோம்.
ஐெகோவா: 'எப்பொழுதும் இருக்கிறவர்'. முழுமுதற் கடவுள்.
---------
44. முந்தா ரணநூலில் மொழிவிளக் கொளிரும்
சிந்தா சனத்திற் றிகழ்வாய் போற்றி!
முற்பட்ட வேதத்தில் மொழியின் வாயிலாக விளங்கு பவரே, மனமாகிய ஆசனத்தில் அமர்ந்து வீற்றிருப்பவரே உம்மைப் போற்றுகிறோம்!
முந்தாரண நூல் : முற்பட்ட வேதம், பழைய ஏற்பாடு.
சிந்தாசனத்தில் திகழ்வாய்: பக்தர்களின் உடல் கடவுளின் திருக்கோயில். பரிசுத்த ஆவியானவர் அவர்களில் தங்கி வாழ்கிறார். ([ கொரி. 3:16,17.) வேத மொழியின் வாயிலாக வெளிப்படும் கடவுளில் நம்பிக்கை பூண்டு அவரது திருவுளச் சித்தத்தின்படி வாழ்கின்ற பக்தர்கள் மனத்தில் கடவுள் குடி கொண்டு அவர்களின் மனத்தைத் தமது ஆசனமாய்க் கொண்டுள்ளார்.
------
45. இனிவருங் கோப மெமைத்தகிக் காமல்
தனியொரு மகவைத் தந்தாய் போற்றி!
இனிமேல் வரப்போகும் பெரிய நடுத்தீர்ப்பு நாளில் கடவுளின் நீதியான கோபத்தினால் எம்மை (எங்களுடைய மீறுதல்களினிமித்தம்) எரிக்காமல் காப்பதற்கு உம்முடைய ஒப்பற்ற திருப்புதல்வராகிய இயேசு கிறிஸ்துவை (எங்களுக்கு) அருளிச் செய்தவரே உம்மைப் போற்றுகிறோம் !
இங்கே இறுதி நடுத்தீர்ப்பு நாளில் வெளிப்பட இருக்கும் கடவுளின் நீதியுள்ள கோபத்தைக் கூறுகிறார் புலவர். (1 பேதுரு 3:10-14; வெளி 21). மக்கள் நீடுவாழ்வு பெற்றுப் பேரின்ப வாழ்க்கை நலம் எய்துவதற்காகக் கடவுள் திருவுளச்சித்தங்கொண்டு அருளிய கட்டளைகளை மீறி வாழ்ந்ததினால் கடவுளின் நீதியான கோபாக்கினைக்கு ஆட் பட்டு நித்திய அழிவுக்கு இலக்காயினர். ஆனால், கடவுள் தமது அன்பின் மிகுதியால் தமது ஒப்பற்ற திருப்புதல்வராகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். அவர் மக்களின் பாவத்திற்குப் பிராயச்சித்தப் பலியாகி கடவுளின் நீதியுள்ள கோபாக்கினைக்குக் கழுவாய்த் தேடினார். பாவத்தின் சம்பளத்தைச் செலுத்தினார். அவரில் நம்பிக்கை வைப்போருக்குக் கடவுள் தமது திருமைந்தர் வாயிலாக மீட்பினைக் கட்டளை-யிட்டருளினார் என்பதாம். ஒ.நோ. வெளி 21:8; 20:18-21; மத்.25; ரோமர் 6:23.
---------
46. பழுதிலா வேத பாரமார்த்தி கத்தை
வழிவழி காத்து வகுத்தாய் போற்றி!
குற்றமற்ற முடிவான உண்மையாகிய வேதத்தை வகுத்து வெளிப்படுத்திக் காலா-காலமாய்க் காத்து வந்தவரே உம்மைப் போற்றுகிறோம்!
கடவுள், வேதத்தின் இரு பெரும் பகுதிகளாகிய பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வெளிப்படுத்தலை அருள் புரிந்துள்ளார். புதிய ஏற்பாடு அவருடைய இறுதி வெளிப்பாடு. முடிவான சத்தியத்தை வெளிப்படுத்தும் வேதம் குற்றமற்றது. இதனை அழிப்பதற்காய்ச் சாத்தான் செய்த சதித்திட்டங்கள் எண்ணிலடங்கா . உலகில் வேறு எந்த ஒரு நூலையும் அழிப்பதற்கு அவ்வளவு முயற்சியும் திட்டங்களும் உண்டானதில்லை. ஆனால், எல்லாம் வல்ல கடவுள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தகர்த்து எரிந்து வேதத்தைக் காத்து, இன்றைக்கு அது மனுக்குலத்தை ஒளிதந்து மெய்வாழ்வில் நடத்துமாறு அருள்புரிந்து வருகிறார் என்பதாம்.
---------
47. மெய்யருள் வேத விழுச்சுடர் கொளுத்திப்
பொய்யிருள் கடியும் புராதனா போற்றி!
பழம்பொருளாய் விளங்கும் கடவுளே , உண்மையான அருள் வேதத்தின் மேன்மைமிக்க ஒளியை (மக்கள் உள்ளங்களில்) ஏற்றி, பொய்யான இருளைக் கடிந்து கொள்பவரே உம்மைப் போற்றுகிறோம் !
இயேசுவானவர் தம்மை உலகத்தின் ஒளி என்று கூறியுள்ளார். வேதத்தின் உண்மையான ஒளியாகவும் விளங்குபவர் அவரே! மக்களுடைய வாழ்க்கையிலே அவர்களுக்கு அவர் சொந்த இரட்சகராகும்போது உலகத்தின் ஒளியாகிய கடவுள் (யோவான் 8:12) மக்கள் உள்ளங்களில் இருக்கும் பொய்யிருளைப் போக்கிப் பரிசுத்தமாக்கி ஒளிபெறச் செய்கிறார். மக்களையும் உலகத்திற்கு அவர் வாயிலாக ஒளி யாக்குகிறார். ''நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'' (மத். 5:14). காண்க. சங். 119:105; ஏசாயா 60:19.
--------
48. ஆவது கருதா அறிவின் மாக்கள்
சாவது கருதாத் தக்கோய்
போற்றித் திருஅகவல் மேல் விளையப் போவதை எண்ணிப் பார்க்காத அறிவில்லாத மக்கள் அழிவதை விரும்பாதவாரே, உம்மைப் போற்றுகிறோம்!
ஒ.நோ. I பேதுரு 3:4; எசே. 18:20-24.
------------
49. தீவினை யென்னுஞ் சிறையிடைப் பட்டோர்
வீவினை விலக்கி மீட்டாய் போற்றி!
தீவினையாகிய சிறையிலகப்பட்டு அழிவுக்குட் பட்டிருந்த மக்களை விடுவித்தவரே உம்மைப் போற்றுகிறோம்! தீவினை என்னும் சிறை : பரத்திலிருந்து வருவதெல்லாம் நன்மையே. நன்மையே புரிந்து கடவுளுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்காகவே கடவுள் மனிதனைப் படைத்தார். ஆனால், மனிதன் கீழ்ப்படியாமையினாலே தீவினை புரிந்தான். நிலையான நன்மையின் ஐக்கியத்திலிருந்து பிரிக்கப்பட்டான். நன்மையை வெறுத்துத் தீமையைச் செய்ததனால் தீவினைக்கு அடிமைப்பட்டான். நல்வினையே செய்துவந்த காலை மனிதன் கடவுளுக்கு ஆட்பட்டிருந்தான். நீடுவாழ்வு அதன் இயல்பான இலக்காக இருந்தது. ஆனால், தீவினைக்கு உட்பட்ட போது தங்கள் உடலிலும் அதில் வாழும் ஆத்துமாவிலும் தீவினைக்குச் சிறைப்பட்டனர். இவ்வாறு சாத்தானின் தந்திரமான தீவினை வலையில் மக்கள் சிறைப்பட்டனர். மக்கள் தீவினையில் விழுவதற்குக் கடவுள் காரணர் அல்லர். இவர் களால் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள இயலாமற் போனது. கடவுளால் தான் இத் தீவினையினின்று மக்களை விடுவித்து மீட்க முடியும். கடவுள் தமது பரிசுத்தமான திருமைந்தருடைய வாழ்வில் தீவினையைச் சிறைசெய்து சிலுவையில் அதனை வென்று மக்களுக்குத் தீவினை சிறையிலிருந்து விடுதலை தந்தார். (யோவான். 8:32-36).
-----------
50. பொய்வழி யுழன்ற புலையரே முய்ய
மெய்வழி காட்டிய வித்தகா , போற்றி!
பொய்யான வழியில் வாழ்ந்துகொண்டிருந்த கீழ் மக்களாகிய நாங்கள் பிழைக்குமாறு, எங்களுக்கு மெய்வழியாகிய கிறிஸ்து திருநெறிக் காட்டிய ஞானியே உம்மை வணங்குகிறோம்!
----------
51. இடர்க்கட லமிழ்ந்த வேழையே முய்ய
அடைக்கல மாய அப்பனே போற்றி!
துன்பக் கடலில் அமிழ்ந்துகொண்டிருந்த ஏழை களாகிய நாங்கள் வாழ்வு பெறுவதற்காக எங் களுக்கு அடைக்கலமான எங்கள் அப்பனே, உம்மைப் போற்றுகிறோம்!
காண்க 41ஆம் கண்ணி விளக்கவுரை.
இடர்க்கடல்: நன்மையை மறந்து துறந்து தீவினை வயப்பட்ட மக்கள் துன்பத்திற்குள்ளாயினர். இத் துன்பம் மிகுதியானது. எனவே கடல் என்று உருவகம் செய்யப்பெற்றது. மக்கள் இத் துன்பத்தில் அமிழ்ந்து பேரின்பத்தை இழந்து தவிக்கின்றனர். நடுக்கடலில் உயிருடன் போராடித் தவிக்கும் ஒருவனுக்கு ஓர் உயிர்காப்புப் படகு கிட்டுமானால் அது அவன் உயிருக்கு - வாழ்வுக்கு எவ்வளவு அடைக்கலமாய் இருக்குமோ அப்படிப்போல இத் துன்பக் கடலாகிய உலகில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலமாய்- உயிர்ப் பாடகாய் அமைந்து பேரின்பக் கடலின் கரையைச் சேர்க்கிறார். அப்பனே : ''அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவி காரத்தின் ஆவியை' அவருடைய பிள்ளைகளுக்குக் கடவுள் அருளிச் செய்துள்ளார்.
---------
52. தீதணு காமல் ஜீவகோ டிகளைப்
பாதுகாத் தளிக்கும் பரமனே போற்றி!
உயிர்களுக்குத் தீமை அணுகாமல் பாதுகாத்து வாழ்வளிக்கும் எங்கள் பரமனே, உம்மைப் போற்றுகிறோம்.
---------
53. நாயினுங் கடையாய் நன்றிகொன் றேற்குத்
தாயினு மினிய தற்பரா போற்றி!
எனக்குச் செய்த நன்றியை மறந்து வாழ்ந்த நாயினும் கீழானவனாகிய எனக்குப் பெற்ற தாயினும் இனியவராய் என்னைக் காக்கும் பரம் பொருளே, உம்மைப் போற்றுகிறோம் !
நாயினுங்கடையேன் : நன்றியுடைமைக்கு எடுத்துக்காட்டு நாய். ஆனால், நான் கடவுள் செய்த நன்றியை மறந்து வாழ்ந்ததனால் நாயினும் கடையவனாயினேன் என்கிறார் புலவர். பக்தர்கள் கடவுள் திருமுன்னர் தங்களை நாயினும் கடையானவர்களாய்த் தாழ்த்திக் கொள்வது மரபு.
(ஒப்புமை)
''நாயின் கடையாய்க் கடந்த அடியேற்குத்
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!'' - திருவாசகம், சிவபுராணம்.
"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (கு. 110).
தாயினும் இனிய தற்பரன் : கடவுள் பெற்ற தாயினும் இனியர். ''தாய் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.'' ஏசா. 49:15. மேலும் காண்க. சங்.27:10.
----------
This file was last updated on 5 May 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)