கார்மேகக் கவிஞர் இயற்றிய
கொங்கு மண்டல சதகம்
konku maNTala catakam
of kArmEkak kavinjar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கார்மேகக் கவிஞர் இயற்றிய
கொங்கு மண்டல சதகம் - மூலமும் உரையும்
பாயிரம்
அறுசீரடியாசிரிய விருத்தம்
1. காப்பு
பூமலி செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி
நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்
கோமலி யுருவ முன்று கூறிருதிணைபொ ருந்தித்
தேமலி மருப்பொன்றேந்து தேவனைப் பணிகு வேமால்
(கருத்துரை) நல்ல மனமுடையார் தொடங்கிய செயல்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்கியும், அச்சமான கொடிய உள்ளத்தினர் ஆசை கொள்ளுந் தொழில்களுக்குத் தடையுண்டாக்கியும், மேன்மையுள்ள (பூதக்கால் - தெய்வ உடல் - யானைத்தலை) மூவகை வடிவில் (அஃறிணை - உயிர்திணை) இருதிணை பொருந்தி ஒற்றைக் கொம்பராக விளங்கும் மூத்த பிள்ளையாரை வணங்குவாம் என்பதாம்.
2. அவையடக்கம்
கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்
மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீருமோராதேன்
திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம் மண்டலத்தின்
அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கிலறிஞ ரிகழாரே,
(க-ரை) சமுத்திரம் வளைந்த விரிந்த பூமியிலுள்ள, கண்டங்கள் தீவுகள் முதலிய பிரிவுகளை, நிற்குஞ் சுவரில் கோடிட்டு எழுதிக் களிக்கின்ற அறியாச் சிறுவர்களைப் போலக் கொங்கு மண்டலத்தின் வளமும் சிறப்பும் அறியாதவனாகிய எளியேன் (அவற்றை) நன்றாகக்கேட்டுப் பார்த்துச் சொல்லவல்லார்முன் அக்கொங்கு மண்டலத்தின் முறையான கதைகளடங்கிய சதகம் என்னும் பிரபந்தத்தை இயற்றுவேனேல் (அதைத்) தவறு என்று விவேகிகள் இகழமாட்டார்கள் என்பதாம்.
3. ஆக்கியோன்
திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்
வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்
வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ்நின்ற
கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே.
(க-ரை) வரியையுடைய குயில்கள் கூவுகின்ற அசோகினடியில் மூன்று குடைகள் நிழலைச்செய்ய வீற்றிருந்தருளும் அருக தேவனைச் சிந்தியாநின்ற கார்மேகக் கவிஞன், கொங்கு மண்டலத்தின் சிறந்த சரிதங்களைத் தெரிந்து கொள்வாருக்கு வருத்தம் நேராதபடி எளிதாகக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலைச் சொன்னான் என்பதாம்.
பாயிர முற்றிற்று.
--------------
நூல்
கட்டளைக்கலித்துறை
1. நாடு
பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்
நற்பய னுற்றுச் சுகித்திடு மென்ன நவிற்றுபழஞ்
சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு
வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.
(க-ரை) பொலிவு மிகுந்த "கொங்குநாடு செழித்தால் இப்புவியிலுள்ள எந்தநாடும் நல்ல பலனைப் பெற்றுச் சுகம் அடையு" மென்று சொல்கின்ற பழமொழிக்கு இணங்க மாடுகன்றுகள் விருத்தி கொண்டது கொங்குமண்டலம் என்பதாம்.
2. எல்லை
மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே,
(க-ரை) கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலமென்பதாம்.
3. இணை நாடு
நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம்பொருந்தத்
தோலா மொழிக டிகழ்நா வலர்கள் சுகம்பொருந்த
நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்
மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே
(க-ரை) பலகலைக் கடலையுண்டு சுவையுடைத்தாய்த் தோல்வி பெறாது பேசவல்ல நாவலர்கள் எந்நாளும் இன்பம் நிறைந்து வாழும் இருபத்திநான்கு நாடுகளிலும் அவற்றைச் சூழ்ந்த இணைநாடுகளிலும் முருகவேள் கோயிலும், திருமால் கோயிலும், சிவாலயங்களும் நிறைந்துள்ளது, கொங்கு மண்டலம் என்பதாம்.
4. தலம்
செஞ்சொற் கரைசை திருவானீ கூடல் திருமுருகர்
தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே
வெஞ்சனற் கூடல்செங் குன்றூரறப்பள்ளி வெண்ணெய் மலை
மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே.
(க-ரை) திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி, அவிநாசி, *பேரூர், குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அறப்பள்ளி, வெண்ணெய் மலை, பேரூர் முதலிய திருப்பதிகள் சேர்வது கொங்குமண்டலம் என்பதாம்.
5. மலை
கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்
வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய் மலை
அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யரவகிரி
வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே.
(க-ரை) கொல்லிமலை - வைகைப் பொன்மலை - அலைவாய் மலை - பழநி மலை - பொன்னூதி மலை - கொங்கணவர் மலை சேர்வராயன் மலை - ஓதியூர் மலை வராக மலை - தலைமலை - வெண்ணெய் மலை. சென்னி மலை - கஞ்சமலை - வெள்ளிமலை - நாககிரி - ஆனை மலை சூழ்வது கொங்குமண்டலம் என்பதாம்.
(க-ரை) கொல்லிமலை - வைகைப் பொன்மலை - அலைவாய் மலை - பழநி மலை - பொன்னூதி மலை - கொங்கணவர் மலை சேர்வராயன் மலை - ஓதியூர் மலை வராக மலை - தலைமலை - வெண்ணெய் மலை. சென்னி மலை - கஞ்சமலை - வெள்ளிமலை - நாககிரி - ஆனை மலை சூழ்வது கொங்குமண்டலம் என்பதாம்.
6. நதி
திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி
தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்
குருமணி பாலை நதிவாழை +காரி குடவனதி
வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) திருமணிமுத்தாறு - தொப்பையாறு - பவானியாறு - செய்யாறு - நொய்யலாறு - ஆம்பிராவதி - நள்ளாறு - சண்முக நதி - பாலையாறு - வாழையாறு +பாரத்துவாசநதி - குடவனாறு - சண்பக நதி - சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.
7. குடிவளம்
நீடுந் தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்
சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்
கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து
மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.
(க-ரை) சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர் மூவர்க்கு மகுடஞ் சூடும் பெருமையை அடைந்து, எல்லா உயிர்க்கும் உழவுத்தொழிலாற் பல உணவுப்பொருள்களை யுண்டாக்கி ஊட்டி வளர்க்கும், வேளாண்மைக்குடிச் சிறப்புற்றுப் பசு முதலியன நன்கு வளர்ச்சியுறுவது கொங்குமண்டலம் என்பதாம்.
8. காவிரி உற்பத்தி
சீரார் வளவ னிலம்புன னாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள்கொங்கு மண்டலமே
(க-ரை) சோழமண்டலம் நீர்ப்பாசனமாகவுங், கங்கைநதி தனது பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி அந்தக் காவேரி அகத்திய முனிவர் கைக்கரகத்திருந்து தரையில் விழுதற்கு முதலில் இடங்கொடுத் துதவியது கொங்கு மண்டலம் என்பதாம்.
9. ஆனைமுகனைத் தொழுவோர் குட்டிக்கொள்ளல்
ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து
செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற்
றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு
மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே.
(க-ரை) விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக்கொள்ளுங் கொள்கையானது, முதலில் உண்டான இடமான கொங்கு மண்டலம் என்பதாம்.
10. வெஞ்சமாக் கூடல்
கிழவே தியவடி வாகி விருத்தையைக் கிட்டியென்றன்
அழகாகு மக்க ளடகுகொண் டம்பொ னருடியேன்றேற்
றெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு
மழுவேந்தியவிகிர்தேசுரன் வாழ்கொங்கு மண்டலமே
(க-ரை) சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பொன் கொடுக்க வேண்டுமென்பது கொண்டு, மூத்தபிள்ளையார் முதலிய திருக்குமாரர்களை ஈடுவைத்துப் பொருள் பெற்று ஈந்த விக்ருதேசுரர் விளங்கும் வெஞ்சமாக் கூடலும், கொங்கு மண்டலம் என்பதாம்.
11. திரு ஆநிலை
வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை
சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்க நீ
ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ
வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) பசுபதி ஈச்சுரரைப் பூசித்துக் கடல் சூழ்ந்த பூமியையும் மற்றுமுள்ள அண்டங்களையும் பிரமனைப்போற் படைத்தற் றொழிலைப் பூண்ட காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர் - அது உள்ளது கொங்கு மண்டலம் என்பதாம்.
12. திருப்பாண்டிக் கொடுமுடி
நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப்பூத்
தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்
முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்
வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே
(க-ரை) பூச்சாத்த முடியாதவாறு உயர்ந்துள்ள சிவலிங்கப் பெருமானது திருமுடியானது, குறுகிய வடிவுள்ள அகத்தியர் கைப் பிடியிலடங்கப் பூமியுள் தாழ்ந்த மகுடேசுரர், எழுந்தருளியுள்ள கறையூர் (திருப்பாண்டிக் கொடுமுடி) இருப்பது கொங்கு மண்டலம் என்பதாம்.
13. திருச்செங்கோடு அர்த்தநாரீச்சுரர்
நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) கடல்சூழ்ந்த இவ்வுலகத்தில் உமாதேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீசுவரர் என்ன ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலம் என்பதாம்.
14. வானிகூடல் திருநண்ணாவூர்
காலி லரவ மிருசுட ரைப்பற்றுங் காலத்திலே
மேலுல கம்பெறு வோர்புனல் மூழ்க விரும்ப துவுங்
கோல மிகுந்தப வானீயும் பொன்னியுங் கூடுதுறை
வாலிப காசிநண் ணாவூர் பயில்கொங்கு மண்டலமே.
(க-ரை) பொன்னுலகத்தைப் பெற விரும்புகின்ற சீலர்கள், சூரிய சந்திர கிரகண காலங்களில் பவாநி நதி காவேரியுடன் கலக்குகிறதான கூடுதுறையில் முழுகுகிறார்கள். அந்த வாலிப காசியான திருநண்ணாவூர் உள்ளது கொங்கு மண்டலம் என்பதாம்.
15. திருமுருகன் பூண்டி
கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற் றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) பரவை யாரின் காதலாற் பொருளாசை கொண்ட சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் பதிகங் கேட்க விரும்பிய திரு மூருகன் பூண்டி எம்பெருமான், நாயனாரின் திருக்கூட்டத்தார்கள் சுமந்து கொண்டு போகும் பொன் முடிப்புகளைப் பறித்துக்கொண்டதும் கொங்கு மண்டலம் என்பதாம்.
16. அவிநாசி
பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) பிள்ளையைக் கொண்டு வாவென்று சுந்தரமூர்த்தி பதிகம் பாட விழுங்கிய பிள்ளையைக் குளக்கரையில் முதலை உமிழ்ந்த அவிநாசியையுடையது கொங்கு மண்டலம் என்பதாம்.
17. பேரூர்த் தாண்டவ மூர்த்தி
பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொது நடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே.
(க-ரை) கோமுனி பட்டிமுனி காண, மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் நடனஞ் செய்தது மேலைச் சிதம்பரமான பேரூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
18. பட்டிப்பெருமான் பள்ளனானது
கடுவாள் விழியிணை யாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே.
(க-ரை) சுந்தரர் பாடிவருவார், கொடுக்கப் பொன்னிலையே என்று ஒளித்தார் போலப் பட்டிப்பெருமானார் பள்ளவடிவு கொண்ட பேரூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
19. நந்திக்கு மறுமுகம் வளர்ந்தது
நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்தி சொலப்
பிறைமுடி வேணியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்
குறைபட வெட்டி விழுமுக நந்திசெல் கொள்கையினால்
மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சுந்தரமூர்த்தி நாயனார் வருவதைத் தெரிந்து (பள்ள வடிவாக) வயலில் ஒளிந்திருந்ததை நந்திகேசுரர் காட்டச், சினந்த பட்டீசப்பெருமான் திருக்கையிற் கொண்ட மண்வெட்டியால் வெட்டிய முகம் மறுபடி வளர்ந்த பேரூர் கொங்கு மண்டலம் என்பதாம்.
20. அகத்திய முனி
வாதாபி வில்வல னான துணைவர் மடியவிசை
தீதாற வேகும்ப சம்பவ னன்று சிவக்குறிகண்
டேதாளி லர்ச்சனை செய்து தொடர்பவ மேகமகிழ்
மாதா மதர்நிறை சூழ்தான முங்கொங்கு மண்டலமே
(க-ரை) வாதாபி வில்வல னென்னும் இரண்டு அசுரர்களும் மடியச் செய்த பாவம் நீங்கும் பொருட்டு அகத்திய முனிவர் சிவலிங்க பூசை செய்தது கொங்கு மண்டலம் என்பதாம்.
21. துடியலூர் - சுந்தரருக்கு விருந்து செய்தது
வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியளங்
காட்டு முருங்கை யிலைகாய் நெய் பெய்து கறி சமைத்துப்
பாட்டு முழக்குவன் றொண்டருக் கன்னம் படைத்து நரை
மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) வழி தெரியாது மயங்கும் ஆளுடைய நம்பிக்கு, வேட வடிவு கொண்டு வழி கூட்டி வந்து, காட்டு முருங்கையிலை காய் கறியுமாக்கி விருந்து செய்த விருந்தீசுரர் விளங்குத் துடியலூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
22. பழநி
தீத்திகழ் மேனி சிவன்கையில லோர்கனி தேவர்மெச்சி
ஏத்திய நாரதர் நல்கக்கண் டேயிப மாமுகத்து
மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி
வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே
(க-ரை) நாரதமுனிவர், சிவபெருமான் றிருவடியில் ஒரு மாம்பழத்தை வைத்து வணங்கினர். அதனை விநாயகக் கடவுள் பெற்றுக் கொண்டனர். சினங்கொண்ட குமாரக் கடவுளைத் திருத்திப் பழம் நீ என்று சொன்னதுங் கொங்குமண்டலம் என்பதாம்.
23. இடும்பன்
அலைகொண்ட பாற்கடற் சற்ப சயனத் தரியயனுந்
தலைகொண்டி ரைஞ்சும் பதாம்புயத் தாருக்குச் சற்குருவாய்
நிலைகொண் டிருக்குஞ்செவ் வேளுக் கிடும்பன் முனீண்டசிவ
மலைகொண்டு வந்ததும் வைகாவூர் சூழ் கொங்குமண்டலமே.
(க-ரை) மால்அயன் வணங்கும் பரமசிவத்துக்குச் சற்குருவான, திருவாவினன்குடி முருகவேளுக்கு இடும்பன் சிவமலை கொண்டு வந்து வைத்ததுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
24. மொக்கணீசுரர்
ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சிவதரிசன வழிபாடு செய்யும் ஒரு வணிகன் குடக் கோட்டூருக்கு வந்து, ஆடை தோய்த்து ஸ்நானஞ் செய்து நியம முடித்து வருதல் கண்ட யோசனையுள்ளமற்றொருவன், குதிரைக்குக் கொள்கட்டும் பையை மணலில் நட்டுவைத்து (பூமாலை போட்டு அலங்கரித்து, இதோ சிவலிங்கமென்றான்; அன்பன் வணங்கினான். அது சிவலிங்கப் பெருமானாயிற்று. அக்குடக் கோட்டூரும் கொங்கு மண்டலம் என்பதாம்.
25. கொல்லிப் பாவை
தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்
பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை
வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) மன்மதனும் மயங்கத்தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப் பாவை விளங்கும் கொங்கு மண்டலம் என்பதாம்.
26. கொல்லி மலை
முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரக்
கொத்தீட் டியபுதுப் பூத்தேனு முறுங் குறிஞ்சி யின்றேன்
வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்க மண்டலமே.
(க-ரை) தேவர் முதலிய மற்றெல்லோரும் ஆசை கொள்ளத் தக்க பூத்தேன் சொரிந்தள்ள கொல்லி மலையுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
27. எறிபத்தர்
நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்
புதுமாலை கட்டுஞ் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்
மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி
மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) கரூர்ப் பசுபதி ஈசுரருக்காக மாலை கட்டுந்திருத் தொண்டினைக் கொண்ட சிவாகாமி யாண்டார் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்த யானையைக் கொன்று பின்பு எழுப்பியதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
28. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்.
நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே
புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை
குலவு மதுரைத் தமிழா சிரியர் செங் குன்றூர் கிழார்
வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) பூவுலகத்திற் பல கலை ஞானங்களில் சிறந்த புலவர் திருவள்ளுவர் என்று வெண்பாக் கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
29. கனகசபையாக்கப் பொன் கொடுத்தது
பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே.
(க-ரை) பரமசிவமானவர் ஆநந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரததைக் கனகசபையாகச் செய்ய வேண்டிய தங்கம் அவ்வளவையும், தன்னிடத்து விளைந்த பொன்னையே கொடுத்து, அரசனும் வியக்கப் புகழடைந்தது கொங்கு மண்டலம் என்பதாம்.
30. கம்பர்
கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச் செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) "கன்னியழிந்தனள்" என்றத் தொடக்கத்துப் பாட்டைக் கம்பர் பாடும்படி செய்த, கங்கா குலத்தவர்கள் வசிப்பது கொங்கு மண்டலம் என்பதாம்.
31. கொங்குப் புலவர் சபை
வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயு முரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) குலோத்துங்க சோழன் சாசனப்படிக்குண்டான, கலியாண வரியை, ஐந்து பிரிவினையுடைய புலவர் வகுப்பினரில் தகுதி வாய்ந்தவர்கள் இவர்களென்று பொறுக்கி எடுத்து உரிமை தரும், கொங்குப் புலவர் சங்கங்கூடுந் திருச்செங்கோடு கொங்கு மண்டலம் என்பதாம்.
32. ஆட்கொண்டான்
துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து
பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னுமப் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்
மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்கு மண்டலமே.
(க-ரை) வேதப்பொருள்களுள்ளமைந்தமையால் ஐந்தாம் வேதமென பாராட்டுகின்ற பாரதக் கதையைத் தமிழில் வில்லிப் புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
33. கரிகாலன்
நீரமை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்
பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி
ஏருறு சிங்கா தனமேறக் கையா லெடுத்துமத
வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சோழ மண்டலத்தை ஆண்ட வேந்தருள்ளே திறமை வாய்ந்த கரிகாற்சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்காதன மேற்ற யானை எடுத்துப் போனதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
34. கரூர்ச்சித்தர்
வாய்த்தம் பலவெச்சி லாலட்ட பந்தன மாண்புறமீன்
காய்த்து மரஞ்சொரி யச்செய்து பத்தி கனிந்து செந்தேன்
தோய்த்த திருவிசைப் பாப்பா டொருசித்தர் தோன்றிவர
வாய்த்த கருவூர்ப் பதிசேர்வ துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தம்பல எச்சிலால் அட்டபந்தனம் இறுகவும், மரம் மீன் காய்த்துச் சொரியவும், பத்தி கனிந்த திருவிசைப்பா ஓதி யருளிய (கரூர்ச்) சித்தர் பிறத்தற்கு வாய்ப்புற்ற கருவூர் சேர்வதுவுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
35. கஞ்சமலைச் சித்தர்
பஞ்சமுகத்தி லுதித்திடு மாகம பரகமெலாஞ்
செஞ்சொற் றிருமந் திருமுரை மூலர் திருமரபிற்
கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்
மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சதாசிவ மூர்த்தியின் றிருமுகத்தினின்று தோன்றிய ஆகமங்களின் ரசமாகத் திருமந்திர மருளிய திருமூல நாயனார் பரம்பரையான கஞ்சமலைச் சித்தர் வாழ்வதும் ரசம் முக்கரணிகள் வளர்துவமான கஞ்சமலையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
36. போகநாதர் புலிப்பாணி
யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக்கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே.
(க-ரை) யோகம் வைத்தியம் ரசவாதம் நீண்ட ஆயுளைப் பெறுங் காயகற்பம் அட்டமாசித்தி முதலியவைகளைக் கூறிய போகநாதர், புலிப்பாணி முதலிய பெரியோர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலம் என்பதாம்.
37. கொங்கணச் சித்தர்
தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்
சாற்றுட னாக ரசங்கத் தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து
மாற்றுரை கண்டது பொன்னூதி யூர்கொங்கு மண்டலமே.
(க-ரை) செம்பு முதலிய லோகங்களுடன் பச்சிலைச்சாறு, ரச கந்தக முதலியன சேர்த்துப் பொன் செய்து மாற்றுக்காணும் கொங்கணச்சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
38. இடைஞானி
ஒருவிதையைத்தட்டு மாயர் மதலை யுவமையிலா
அரியஞானங் கொளச் சென்னியிற் செந்நீ ரருவியெனச்
சொரியநின் றன்னான் றனையாண்ட முக்கட் சுயம்பு வென்று
மருவி வளர்தென் கரைநாடு சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) ஒரு விதையை வைத்துச் சிறு கல்லால் தட்டிய இடைச் சிறுவன், மெய்ஞ்ஞானத்தைப் பெறுமாறு அடிக்கல்லாக நின்ற தமது திருமுடியினின்றும் இரத்தம் வடியக்காட்டி, அருள் புரிந்த அப்பிரமேயர் வீற்றிருக்கும் தென்கரை நாடும் கொங்கு மண்டலம் என்பதாம்.
39. முத்தரசர்
சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.
(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.
40. கோசர்
பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்கொங்கு மண்டலமே
(க-ரை) தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனதுடையவர்களுமாகிய கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.
41. குமணன்
நாட்டினைத் தம்பி கொளக்காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத் தோர்புல வன்வேண்ட வென்றலை பற்றியறுத்
தீட்டியென் றம்பி யிடத்தீயிற் கோடிபொ னெய்து மென்று
வாட்டங் கைத்தரு மக்குமணன் கொங்கு மண்டலமே.
(க-ரை) நாட்டைத் தம்பி வசம் விட்டுக் காட்டிற் சென்றுள்ள காலத்து ஒரு புலவன் பாடிப் பரிசு கேட்க, என் தலையை அறுத்துத் தம்பியிடம் கொடுத்தால் கோடி பொன் கொடுப்பன் என்று தன் வாளாயுதத்தைக் கொடுத்த குமணனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
42. அதிகமான்
சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொ லௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) நெடுநாள் வாழும்படி செய்யும் அருநெல்லிக் கனியை ஒளவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து நட்டு உற்பத்தி செய்தவன் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய மலையரணை யுடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
43. ஓரி
வினரயார் தொடையணி மூவேந்த ராசை மிகுந்துநச்சத்
தரைமீ தெலாவள முஞ்செறி கொல்லித் தடவரையாள்
துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரந்து செம்பொன்
வரையா தளித்தநல் லோரிவள்ளல் கொங்கு மண்டலமே.
(க-ரை) தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொளத்தக்க எல்லா வளப்பமும் பொருந்திய கொல்லி மலைக்கு வேந்தாய், அல்லும் பகலும் ஓயாது தமிழுக்குக் கொடுப்போனான ஓரி என்னும் வள்ளலுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
44. வையாவிக் கோப்பெரும்பேகன்
கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்க மருள்
செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்
வையாவிக் கோப்பேரும் பேகனெனும்பெரு வள்ளறங்கு
வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே.
(க-ரை) காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு ஆற்றாது ஞடுங்குகிறதென்று நினைந்து, தான் மேலே போர்த்திருந்த உயர்ந்த ஆடையை அதன் மேற் சாத்திய, வையாவிக்கோப் பெரும்பேகன் வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்கு மண்டலம் என்பதாம்.
45. அசதி
தெய்விக மான தமிழ்ப்புல வோர்கள் தினமுளங்கொள்
பொய்தீ ருரையெம் பிராட்டியா ரௌவை புனைந்துபுகழ்
செய்கோவை யேற்ற திறலோ னசதி செழித்துவளர்
மைதாழ் பொழிறிக ழைவேலி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தெய்வத் தமிழ்ப்புலவர்கள் சிந்திக்கும் ஒளவையாரால் கோவையென்னும் பிரபந்தத்தைப் பாடக்கேட்ட அசதி யென்னும் உபகாரி வசித்த ஐவேலியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
46. சீயகங்கன்
சொல்காப் பியத்தின் குண்தோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை
யொல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த
வல்கா வலன்சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே.
(க-ரை) தமிழ்க் காப்பியங்களின் ஒப்பு தப்புகளைத் தெரிந்து கொள்வதற்குத் தொல்காப்பியம் என்னும் இலக்கணம் விரிந்து கிடக்கின்றன. அதனைத் தொகை வகை விரியால் சுருக்கி விளக்கி உலக உபகாரமாக ஒருநூல் செய்தருளுக என்று பவணந்தி முனிவரைக் கேட்டுக் கொண்ட சீயகங்கன் என்னும் அரசனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
47. பவணந்தி முனிவர்
கங்கக் குரிசி லுவக்கநன் னூலைக் கனிந்துபுகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே
(க-ரை) சீயகங்க அரசன் மனமுவக்குமாறு, நன்னூல் என்னும் இலக்கண நூலைப்புகன்ற தமிழ்ப்புலமை நிரம்பிய பவணந்தி முனிவர் பிறந்து வளர்ந்தது குறுப்பி நாட்டில் ஆதிநாத தீர்த்தங்கரர் விளங்குதலான சனகாபுரம் (சீனாபுரம்) கொங்கு மண்டலம் என்பதாம்.
48. நளிர் சுரம் நீங்கியது
திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின
பெருக்காக "வல்வினைக் கிவ்வினை யாமெனப்" பீடுபெறத்
திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேய
முற்றும் வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சீகாழிப் பிள்ளையாராகிய சம்பந்தமூர்த்தி நாயனார் திருச்செங்கோடு என வழங்குந் திருக்கொடி மாடச் செங்குன்றூர்க்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியபோழுது நளிர்சுரம் அடியார்களையும் தீண்டவே "அவ்வினைக் கிவ்வினையாம்" என்ற தொடக்கத்ததான தேவாரப் பதிகத்தைப் பாடி அவ்வூரே அன்றி அந்நாடு முற்றிலும் அவ்விஷ நோய்தீரும்படி ஓதப்பெற்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.
49. சிவப்பிரகாசர்
பண்பார் சிவப்பிர காசனைத் துட்டர் பழிக்கவவர்
கண்பார்க்க 'வில்லார் பொதுச்சபை யின்வித்த கா'வென்வோர்
வெண்பா சொலக்கல் லிடபங் கடலையை மென்று தின்னும்
வெண்பா வலர்வரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே
(க-ரை) சிவப்பிரகாசரை அறிவிலாப் பொல்லார் பழித்தார்கள். அவர்கள் நேரிற் பார்த்திருக்கவே "வில்லார் பொதுச்சபையின் வித்தகா" என்றவெண்பாவை ஓதியருளக், கல் இடபமானது எழுந்து, வைத்த கடலையை மென்றுதின்ற மகிமை பெற்ற திருச்செங்கோடு கொங்கு மண்டலம் என்பதாம்.
50. வேலவன் மேய்ப்போனாக வந்தது
பெருமை மிகு"மர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்
வரவு படம்விரித் தடாததென்" னென்றகத்துனுமோர்
கருவி வெருக்கொள வாமேய்ப் பவனாக் கனிந்துதிரு
மருகன் மயில்கொத்து மென்றெனச் சொல்கொங்கு மண்டலமே
(க-ரை) இது நாகமலையானால் இந்த நாகம் படத்தை விரித்து ஆடாமலிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று, அகங்காரங் கொண்டுவந்த புலவன் திடுக்கிடும்படி (செங்கோட்டு வேலவர்) மாடு மேய்ப்போனாக நின்று, இலக்குமியின் மருமகனாகிய முருகக்கடவுளினது வாகனமாகிய மயில் மலையின் பேரிலிருப்பதால் கொத்தி விடுமென்று பயந்து ஆடாமலிருக்கிறது என்று விடையளித்ததும் கொங்குமண்டலம் என்பதாம்.
51. ஆணூர்ச்சர்க்கரை
திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்
விருத்தமுட னன்னை மேலேறத் தாய்வெகு ளாமலெனைப்
பொருத்த முடன் பத்து மாதஞ் சுமந்து பொறை யுயிர்த்தாய்
வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே.
(க-ரை) பெருகிய புகழ்பெற்ற ஆணூர்ச் சர்க்கரை என்பான் தாயார் அன்னம் பரிமாற உணவருந்தும் புலவோர்களில் ஒருவன். அவ்வன்னை முதுகின் மீதேறினான். இக்கொடிய செய்கைக் காற்றாததாய் தன்பிள்ளை முகநோக்க, பிள்ளை, அம்மா! என்னை பத்துமாதஞ் சுமந்திருந்த தாங்கள் இப்புலவரைச் சிறிது நேரஞ் சுமக்கலாகாதா? எனக் கூறிய சர்க்கரையென்பானும் கொங்கு மண்டலம் என்பதாம்.
52.ஆணூர்ச் சர்க்கரை காய்ச்சிய நெய்யிற் கையிட்டுச் சத்தியஞ் செய்தல்
முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்ன நின்றே
யிகழ்ந்தே னிலையைய வென்று சுடுநெ யினிற்கை யைவிட்
டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி யுவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ்பெறு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தன்னை இகழ்ந்ததாகக் கேள்வியுற்று முகம் வாடிச் சென்ற வீரபத்திரன் என்னும் ஏகாலியர் குலத்துதித்த புலவனைப் பின் தொடர்ந்துபோய் மறித்து நின்று உம்மை இகழவில்லையென்று கொதிநெய்யிற் கையைவிட்டுச் சத்தியஞ் செய்து, அப்புலவன் எச்சில் வாயைக் கழுவி அப்புலவனை மகிழ்வித்த சர்க்கரை யென்னும் உபகாரியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
53. சவுக்கடி பெற்றது.
மீறு முலகிலெட் டுத்திக்குஞ் சொட்டையில் வெல்ல வல்லோன்
கூறுந்தென் காரையிற் சர்க்கரை வேந்தன் கொழுந் தமிழாற்
பேறும் புகழும் பெறவேண்டி நாவலன் பெற்றகையான்
மாறுஞ் சவுக்கடி பெற்றது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) எட்டுத் திக்குகளில் உள்ளாரையுஞ் சொட்டை யென்னும் ஆயுதத்தால் வெற்றி கொள்ளும் ஆற்றலுடையவனும் ஒரு புலவன் சவுக்காலடிக்கப் பொறுத்தவனுந் தென்றிசையில் விளங்குங் காரையூர்ச் சர்க்கரை யென்னுந் தலைவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
54. சூரிய காங்கேயன்
வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து
நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்
கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட
வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தமிழ் நாட்டு மூன்று மன்னர்களையுந் திகிலடையும் படி செய்ய வல்ல ஆறகழூர் வாணனைப் பிடித்து, பாண்டியன் முன்னம் நிறுத்திய சூரியனும் கொங்கு மண்டலம் என்பதாம்.
55. ஆதிசைவர்கள்
குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு
நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு
வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.
(க-ரை) குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில், அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும் பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது கொங்கு மண்டலம் என்பதாம்.
56. பூந்துறை - குப்பிச்சி
தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்
வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்
டேசற் படுமசமாவினை யாட்டி யெவருமெச்ச
மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) விஜய நகரத்து அரண்மனை வாயிற் காவலனைக் குப்புறவிழ அடித்து வீழ்த்தி, அரண்மனையுட் புகுந்து அரசனைக் கண்டு மசக்குதிரை ஏறி ஆட்டிப் பூந்துறை நாட்டதிகாரம் பெற்ற குப்பிச்சியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
57. சர்க்கரை, சோழனை வெருட்டியது.
பொருனையும் பொன்னியு மோங்கிப் பெருகிப் பொசிந்து மிகப்
பெருமை யுறுகொங்கிற் சென்னி யிடர்செயப் பெருஞ்செழியன்
அருமை யுளத்தெரிந் தன்னோன் மூதுகிட் டகலவிசை
வரும முறுகாரை மன்றாடி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) வளமை மிகுந்த கொங்கு மண்டலத்திற் சோழன் பல தீங்குகள் செய்ய நோக்கிய, பாண்டியனுடைய கருத்தை அறிந்து சோழ அரசன் முதுகிட்டோடும்படி செய்துஓட்டிய காரையூர் மன்றாடி யென்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
58. அகளங்கன்
கருவித் தடிப்படி யாதம ராற்றிடு கம்பணனைச்
செருவிற் படவென்ற தீரனை நோக்கியச் செம்பியனுஞ்
சுரிகைப் படையினில் வல்லோ னகளங்கச் சோழனென
வருபட்ட மீயப் பெறுராசை யோன்கொங்கு மண்டலமே
(க-ரை) கீழ்ப்படிதலில்லாத கம்பணனென்பவனைப் போர் முகத்தில் வென்ற வலியோனைச் சோழ வேந்தன் பார்த்து, சுரிகை யென்னும் ஆயுத வித்தையில் வல்ல அகளங்கச் சோழன் என்னும் பட்டப் பெயர் கொடுக்கப் பெற்ற ராசிபுரத் தலைவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
59. கோபண மன்றாடி
தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே
(க-ரை) பாண்டி மண்டலத்திற் சிங்களர் புகுந்து வருத்துதலைத் தடுக்கப் பாண்டியனுக்கு இயலாத காலத்தில், வலிய சேனையை நடத்தி அச்சிங்களர் திரும்பி யோடச் செய்தவனுங் களந்தையென்னும் பதிக்குத் தலைவனும், பூவலனென்னும் குடிப் பிறப்பனனுமான கோப்பணன் என்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
60. வேதாந்த தேசிகர்
படிபுகழ் தேசிகர் கச்சியி னொந்து பகரவொண்ணா
வடகொங்கு வானி நதிதீரச் சத்திய மங்கலத்திற்
குடிபுகுந் தாய்ந்து பரமத பங்கங் குலவுவொண்ணூல்
வடிதமி ழாற்சொலத் தேறிய துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) உலகம் புகழுமாறு காஞ்சிபுர நகரத்தில் அவதரித்துப் பின் மனவருத்தங்கொண்டு பவானிநதி தீரத்துள்ள சத்திய மங்கலத்திற் குடியேறிப் பரமத பங்கம் என்னும் ஒள்ளியநூல் கூறுதற்கு விளக்கமுற்றது கொங்கு மண்டலம் என்பதாம்.
61. இளங்கோவடிகள்
உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்
இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்
கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்
வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே.
(க-ரை) மனச்சான்றுக்கு வழுவிலாது நடக்கும் சேரன் செங் குட்டுவனது ஒப்பற்ற துணைவனான இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரமென்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளுந் திருச்செங்கோடு என்னுந் திருப்பதியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
62. கபில தேவர்
செய்தவ மோங்கிய சீரார் கபிலநற் றேவரன்பிற்
பெய்த வமுத சுவைகொ ளந்தாதியிற் பீடுபெறச்
செய்தவ மாச்சிவன் மேயசெங் குன்றூர் செபிக்குமெனு
மைதவ ழப்பதி யோங்குவ துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) தவப்பேற்றினையுடைய கபிலதேவ நாயனார் திருவாய் மலர்ந்தருளிய அமுது பொதிந்த, சிவபெருமான் றிருவத் தாதியினுள்ளே சிவன்மேய செங்குன்றூர் எனக் கூறிய திருச் செங்கோடுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
63. சித்தன் வாழ்வு
நெல்லுங் கரும்புங் கமுகும் பலன்றர நேர்பருவச்
செல்லம் பரத்திதிசைப் துப்பொழிந் தோங்கிடு சித்தனல்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியிடைத் தென்ன வெலாக்கலையும்
வல்லதனியௌவை கூறிய துங்கொங்கு மண்டலமே
(க-ரை) பருவகாலத்து இடியோடு கூடிய மழைபெய்வதால் நெல்லுங் கரும்புஞ் செழித்து வளருகின்ற வளத்ததான சித்தன் வாழ்வு* என்னும் திருவாவினன் குடிப்பதியில், வீடுகள் தோறும் மூன்று அக்கினி** மாறாது இருக்கிறது என ஒளவை கூறியதுங் கொங்கு மண்டலமென்பதாம்.
64. நல்லதம்பிக் காங்கேயன்
அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்
எம்பெருமானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்
நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப்புய னல்லயனுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்திலுதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும் கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த நல்லதம்பிக் காங்கேயனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
65. பூங்கோதையார்
குறுமுனி நேர்தமி ழாழியுண் வாணர் குழாம் வியப்ப
அறிவி லிளைஞரே யாண்மக்க ளென்ன வறுதியிட்ட
சிறிய விடைச்சியெம் பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்க கிரிசேர் வதுகொங்கு மண்டலமே.
(க-ரை) தமிழ்க்கடலையுண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு அறிவிலிளைஞரே ஆண்மக்கள் என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழுஞ் சங்ககிரியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
66. சம்பந்தச் சர்க்கரை - தமிழ்ப்புலவனுக்குத் தாலியைக் கொடுத்தது
சங்க கிரிதுரு கத்திற் சிறையினிற் சார்ந்திடுநாள்
சங்கையி லாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்க ணிருந்துத னில்லாள் கழுத்தி லணிந்திருக்கும்
மங்க லியந்தனைப் பெற்றளித் தான்கொங்கு மண்டலமே.
(க-ரை) சங்ககிரித்துருகத்தில் அரசாங்கச் சிறையில் இருக்கும் பொழுது, ஒரு புலவன் வந்து தமிழ் பாடினான். (வேறொன்றுங் கொடுக்க இயலாமையால்) தன் மனையாட்டி அணிந்திருந்த திருமங்கலியத்தை வாங்கி அப்புலவனுக்குக் கொடுத்த சர்க்கரையுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
67. ஒருபுலவன் ஆணூாக்காமிண்டனை விற்க விலை கூறியது
கொடையிற் பெரியோ யுடனே யெனக்குக் கொடாமையினாற்
கடையிற் பெறநினை விற்றென் கலியைக் கழிப்பனென
மடியைப் பிடித்திழுத் தேவிலை கூறிய வாணன்மிடி
வடியப் பொருடந்த காமிண்டனுங் கொங்கு மண்டலமே.
(க-ரை) ஈகையிற் சிறந்தோனே, கேட்டபொழுதே நீ பொருள் உதவாமையால், உன்னைக் கடைத்தெருவில் விலைகூறி விற்பேன் வாவென மடி பிடித்திழுத்த புலவனது வறுமை போகும்படி பொன்னுதவிய காமிண்டனுங் கொங்குமண்டலம் என்பதாம்.
68. இராமநுஜர், கொங்குப் பிராட்டியார்
சிவனே பரம்பிறி தில்லையெ னாதாற் சிரந்துணிக்க
உவந்தனன் சோழ னெனமறு வேடமா யோடிவந்து
கவன்றிடி ராமா நுஜன்றனைத் தேற்றியுங் காத்தளித்த
மவனகைக் கொங்குப் பிராட்டிய ருங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சிவபெருமானே பரம் (துரியமூர்த்தி) வேறு இல்லை? எனக்கையெழுத்துப் போடாவிடின் சோழன் கழுத்தை வெட்விடுவானென்று, பயந்து வெளியேறி வந்த ராமாநுஜரது பயத்தை நீக்கி, ஊண் உடை முதலிய ஆதரவு செய்த கொங்குப் பிராட்டியாருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
69. விருத்தன் குமரனானது
உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்
தலையின் மயிருங் கருக்கக்கண் டேயவன் சற்குருவும்
நிலையுடன் கக்குவித் துண்டடைந் தானன் னெறியிற் கஞ்ச
மலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) உலைவைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் (உருவமாறிவிட்டதால்) சீடனது முன்னுருத் தெரியாது நரைதிரை மாறியிருக்கக் கண்ட அவனது சற்குரு. தன் சீடனருந்தியிருந்த உணவைக் கக்கச்செய்து, அதனையுண்டு பாலனான,* கஞ்சமலையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
70. காளிங்கராயன்
காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ
மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) காவேரி நதியுடன் கூடுகின்ற பவானியாற்றை அணைகட்டிப் பாசனஞ்செய்து வடிநீர் காஞ்சியாற்றில் விழும்படி உபகரித்த வெற்றியாளனான காளிங்கராயன் என்பவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
71. தொண்டை மான்.
பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிறல் காட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருந் துரைத்தனமு
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) முன் பகையாளிகள் பஞ்சாகப் பறக்கும்படி வென்ற வீரனை நோக்கித் தனது மாலையும் தொண்டை மானென்னுந் தனது பெயரும் விருதாகக் கொடுக்கப்பெற்றவன் வாழ்கின்றதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
72. மும்முடிப் பல்லவராயன்
திரிபுவ னச்சக்கர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்
செருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்து
விருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றே
வருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்னுஞ் சோழ வேந்தன். மேற்கொண்டுள்ள போரில் சேனாபதியாகப் படையைச் செலுத்தி வெற்றி கொண்டு திரும்பினமையால் மும்முடிப் பல்லவன் என்ற பட்டத்தைப் பெற்றவன் வாழ்கின்ற சிங்கை (காங்கேய) நகரமுங் கொங்குமண்டலம் என்பதாம்.
73. பல்லவராயன் சிறுவன்
சங்கிராம சோழன் மரகத முத்தொடு தங்கிரதஞ்
சிங்கையிற் பல்லவன் செல்வனுக் கீயச் சிறுவன்மனம்
புங்கம தாகச் சிறுதே ருருட்டிப் புலவனுக்கு
மங்கள மேவிக் கொடுத்தவன் னான்கொங்கு மண்டலமே.
(க-ரை) மணிபதித்த சிறுவண்டியைச் சங்கிராம சோழன் என்பவன், அன்புகொண்டு சிங்கை (காங்கேயம்) மும்முடிப் பல்லவராயனது சிறுவனுக்கு கொடுத்தனன். அதனை உருட்டி விளையாடுஞ் சிறுவனிடம் ஒரு புலவன் சென்று கேட்கக் கொடுத்த குழந்தையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
74. முதலிக்காமிண்டன்
புதுமைப் படைவேட் டுவர்சூழத் தாரா புரத்துடனே
சதுர மிகுபடை யாற்சம ராற்றிச் சயம்பெறவே
முதலிக்கா மிண்ட னெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை
மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங் கொங்கு மண்டலமே.
(க-ரை) தாராபுரத்து எதிர்த்த பகைவரை, வேட்டுவப் படையையும் சேர்த்துக் கொண்டு போய்த் துரத்தி வென்ற திறமையைக் கண்டு, விஜய நகர கிருஷ்ணராயர், முதலிக் காமிண்டன் என விருதுப் பெயர் கொடுக்கப் பெற்ற பருத்திப்பள்ளிச் செல்லனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
75. காடையூர்க் காங்கேயன்
காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து
மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல்- வேப்பமலர்த்
தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்து பெற்று
மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே.
(க-ரை) சேடர் குலத்தலைவன் மகள், நட்ட கழுவிற் சத்தியஞ் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகமணிந்த இளமையனான காங்கேயனை ஈன்று பெரும் புகழ் பெற்றவளுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
76. கட்டி முதலி
கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன்னீர்
வற்றா துயரட்ட கோணக் குளமும் வகுத்ததன்றிச்
சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்
மற்றார்க் கிலையெனக் கொள்கட்டி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சிற்பநூற் புலவர்கள் வியப்புறத்தக்க கற்பணிக் கோயிலும், எண்கோணமான குளமும் செய்ததல்லாது, சதுரங்கம். வில் - மீன் - புலி முதலிய விருதுக் கொடிகளைஞ் சிறப்பாகக் கொண்ட கட்டி முதலியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
77. அன்னத்தியாகி
பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்
கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங்
களித்தமுதிட் டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்
வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) உண்ணுதற்குத் தண்ணீரு மகப்படாத பஞ்சகாலத்திற் பாண்டியன் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ்ப் பெயர்பெற்ற வேலன் என்பவனது முளசை நகருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
78. காழிப்புலவன்
பரந்த கடலுல கெல்லா மறியப் பரமசிவ
னிரந்தர மாயருள் சண்முக வேலனன் னேயத்தினாற்
புரந்தரன் போற்றும் நெருவூரிற் காழிப் புலவன்பட்ட
மரந்தழை யக்கவி பாடிய துங்கொங்கு மண்டலமே
(க-ரை) சுப்பிரமணியர் அருளைக் கொண்டு நெருவூரிற் பட்ட மரத்தைத் துளிர்விட்டுத் தழைக்கும்படி தமிழ்க்கவி பாடிய காளிப் புலவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
79. அல்லாளன் இளையான்
வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர்
வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) வடதிசையினின்று வந்த காவிரி நீரைக் கொங்கு நாட்டினும் பாசனமாகும்படி வாய்க்காலாகப் பிரித்த வல்லாள இளையான் வாழ்கின்ற வடகரை ஆற்றூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.
80. அதியேந்திர விஷ்ணுக்ரஹம் - நாமக்கல்
புதிதாய் மலையைக் குடைந்துநற் சிற்பப் புலவரைக்கொண்
டிதிகாச மானகதையைச் செதுக்குவித் திம்பர்மகிழ்ந்
ததியேந்த்ர விஷ்ணுக் கிரகமென்றேத்த வமைத்தவனாம்
மதியூகி யான வதிகனும் வாழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) சிற்ப சாஸ்திரிகளைக் கொண்டு மலையைக் குடைந்து பழங் கதைகளான பிரதிமைகளைச் செதுக்கி அதியேந்திர விஷ்ணுக்கிரஹம் என்று ஆலயத்துக்குப் பெயர் கொடுத்த அதியன் வாழ்வதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
81. நெற்போர் வேவப்பாடியது
போயா தரவுட னெற்போர் கிடந்திடப் புற்றிரைச்சற்
றீயார வெந்து பொடிபட வென்றன்று செந்தமிழால்
ஓயாத வாக்கிதென் மங்கைச் சுவாமியென் றோர்புலவன்
வாயார வங்கதம் பாடின துங்கொங்கு மண்டலமே
(க-ரை) விஜய மங்கலம் சுவாமிநாதப் புலவன், புற்றிரைச்சலுக்குப் போய் அங்கிருந்த நெற்போர் சாம்பலாகுமாறு வசை பாடியதுங் கொங்குமண்டலம் என்பதாம்.
82. விஜயமங்கலம் உலகுடையான்
சொல்லிக் கனைய வகத்துறைக் கோவை சொனபுலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை வீரனுலகுடை வீரனமர்
மல்லர்க் கினிய குறும்பணை நீள் கொங்கு மண்டலமே
(க-ரை) இனிமையான அகத்துறைக் கோவை பாடிய புலவனுடைய பல்லக்குச் சுமந்து வயனிலமும் பொருளும் பரிசு கொடுத்தவனான படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்புநாடு சூழ்ந்தது கொங்க மண்டலம் என்பதாம்.
83. பூந்துறை வாரணவாசி
வாரண வாகன னோவென மன்னர் மனமதிக்குங்
காரண வான்வணங் காமுடிக் கட்டி கனத்தபடை
பூரண வாகினி யுஞ்சிரத் தாழப்பொருது வென்ற
வாரண வாசி வளர்பூந் துறைகொங்கு மண்டலமே
(க-ரை) வேந்தர்கள்; இவன் தேவேந்திரனோ வென்று மதிக்குங் காரணம் பெற்றவனான வணங்காமுடிக் கட்டி முதலியும், தகுதிவாய்ந்த அவன் முழுப் படைத் தொகையும் தலை கவிழுமாறு போர் செய்து வென்ற வாரணவாசி யென்பவன் வசித்துள்ள பூத்துறையுங் கொங்குமண்டலம் என்பதாம்.
84. பயறு மிளகானது
அணித்திகழ் சேர்தென் கரைநாட்டி லப்பிர மேயருக்கு
பணித்தொழி லான தளர்ச்சியி னால்வெறுப் பாயொர்செட்டி
எணித்தொலை யாத மிளகைப் பயறென வெம்பெருமான்
மணிப்பய றாக்கின தும்புகழ் சேர்கொங்கு மண்டலமே
(க-ரை) தென்கரை நாட்டில் எழுந்தருளிய அப்பிரமேயருக்கு மிளகைப் பயறென ஒரு செட்டி பொய் சொன்னவாறே அம்மிளகு பயறானதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
85. இம்முடி மசக்காளி மன்றாடி
நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை
யெல்லாஞ் சொலிநிலை நில்லாமற் பல்லக் கிரவை பற்றிச்
சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி
வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டுள்ள சர்க்கார் சாமக்குளம் = கோயிற்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப்போரில் நிற்கவில்லையென்று பல்லக்குஞ் சன்மானப் பொருள்களையும் பற்றிக்கொண்டு, மற்றை உள்ளவற்றை மூட்டை கட்டிப் படிக்காசுப் புலவர் சுமந்து நடந்து போகும்படி ஊரைவிட்டகற்றிய கவிசொல்லுந் திறமுடைய வருங்கொங்கு மண்டலம் என்பதாம்.
86. இம்முடிச் சோழி யாண்டான்
பாயு மணைநிற்க வேண்டி மகளைப் பலிகொடுத்துந்
தோயுந் திருப்புக் கொளிக்கோயிற் கற்பணித் தொண்டுமிசை
ஆயும் பொருளந்தை யிம்மூடிச் சோழியாண் டானளியின்
மாயன் வடபரி சாரநா டுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) நொய்யல் ஆற்றின் அணை அடிக்கடி உடைந்து போகாது நிலைத்திருக்கக் கருதித் தான்பெற்ற மகளைப் பலிகொடுத்தும், அவிநாசி ஈசுரர் கோவிலில் கல்வேலையும் பிற திருத்தொண்டும் செய்த பொருளந்தை குலத்துவந்த இம்முடிச் சோழியாண்டானது உரிமையான வடபரிசார நாடுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
87. உத்தமச் சோழன்
இத்தரை மீதினிற் சேனா பதியா யிருந்து வெற்றி
யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்
உத்தமச் சோழனென் றன்பாத் தரப்பெறு மோங்குபட்ட
வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) இவ்வுலகத்திற் சேனாபதியாக இருந்து சென்ற போர்களில் வெற்றிபெற்று வருவதைக் கண்ட உத்தமச் சோழன் என்னும் அரசன், தன் பெயரான உத்தமச் சோழன் என்னும் பெயரைப் பட்டப் பெயராகக் கொடுக்கப்பெற்று (சர்க்கரை) வாழும் ஆணூர் கொங்குமண்டலம் என்பதாம்.
88. ஆகவ ராமன்
ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்
கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே
வேப்பலர் மாலையு மீனப் பாதாகை விருதுமற்றும்
வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே.
(க-ரை) ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த பாண்டியன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும். வேப்பமாலையும், மீனக்கொடியும் இன்னுந் தனக்குள்ள விருதுகளையும் மகிழ்ந்து அளிக்க ஏற்றுக்கொண்ட சூரியகாங்கேயனும் கொங்கு மண்டலம் என்பதாம்.
89. கொங்குக்குயவன்
கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு
மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்
பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட
மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) கரிகாலச் சோழன் மகளுக்கு நேர்ந்த பெரிய வலிப்பு நோயை, ஒரு குலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச் சுட, அவ்வலிப்பு நோய் தீர்ந்ததுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
90. விசுவகன்மியர் சாசனம்
இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக்கொள்ள விரண்டுசங்கு
விருப்புற்ற வாழ்விலுஞ் சாவிலு மூத வெளிநடை காற்
செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்களென்னவச் செம்பியனால்
வரைப்பத் திரம்பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே.
(க-ரை) குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும், நன்மை தீமைகளில் இரட்டைச்சங்கு ஊதவும், வெளியில் போகும்போது காலுக்குச் செருப்புப் போட்டுக் கொண்டும் போகலாமென்றும் இராஜகட்டளை பெற்ற கம்மாளரிருப்பதுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
91. காங்கேயன்
அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்
நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே
இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி னிசைத்தகலை
வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே
(க-ரை) தமிழிலக்கியங் கற்றவர்கள் எளிதிற் பாடஞ் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும்படி உரிச்சொல் நிகண்டு என வெண்பாவாற் செய்துதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங் கொங்கு மண்டலமும் என்பதாம்.
92. மருத்துவி
குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொருநல்
லிறைமக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர்
துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றிவளர்
மறைவழி தேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) நிறைந்த வெள்ளமுற்ற ஆற்றினை அடுத்த காந்தபுரத்தை ஆளும் வேந்தன், பெண் கருப்ப வேதனையுற்றுக் கருவு யிர்த்தற்கியலாது துன்புறுவதைக் கண்டு வயற்றைப் பீறிக் குழந்தையை எடுத்துச் சந்தோஷமுறச் செய்த மருத்துவி பிறந்து வளர்ந்த நறையூர் நாடு சூழ்ந்தது கொங்குமண்டலம் என்பதாம்.
93. செய்யான் பல்லவராயன்
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.
(க-ரை) போஜள வீர புஜபலனென்னும் அரசனது சேனையைச் செலுத்தி, அவனது பகைவனை வென்றபடியால் "பல்லவராயன்" என்று பட்டங் கொடுக்கப்பெற்ற வேட்டுவச் செய்யானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
94. வேணாவுடையான்
கொற்றையில் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்
பெற்றதன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற
உற்றுள ராயர்பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த
மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) கொற்றவனூரில் எழுந்தருளிய அப்பிரமேய ஈசுரர் தேர் ஓடும்படி தன் பிள்ளையை வெட்டிப் பலி கொடுக்கக் கண்டராயர். இந்தத் தீரச் செயலுக்கு வியந்து சிம்மாதனத்து வைக்கப் பெற்ற வேணாடன் வாழ்வது கொங்கு மண்டலம் என்பதாம்.
95. அடியார்க்கு நல்லார்
குருவை யுணர்ந்த விளங்கோ வடிகளுட் கொண்டு சொன்ன
தருவை நிகருஞ் சிலப்பதி காரத் தனித்தமிழுக்
கருமை யுரைசெ யடியார்க்கு நல்லா ரவதரித்து
வருமைப் பொழினிரம் பைப்பதி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சற்குரு (தீர்த்தங்கரர்) நிலையை நன்குணர்ந்து துறந்த இளங்கோவடிகள் (சாத்தனராற்) கேள்வியுற்ற கதையைக் கருத்திற்கொண்டு விரும்பிக் கேட்டவற்றைத் தரும் தருவைப்போல எல்லாப் பொருளையும் தன்னுளடக்கியுள்ள சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற முத்தமிழ் நூலுக்கு அருமையான உரை கண்டருளிய அடியார்க்கு நல்லார் அவதரித்து வந்த நிரம்பை யென்னும் நகரமுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
96. வாணராயன்
தொங்கவைத் துள்ள பனையேட்டில் வாயிற் சொலாதெழூதி
யங்குவைத் தாலதிற் கண்டதை யன்பி னரிதினல்கி
யிங்குமற் றும்வரு வீர்புல வீரென் றிசைபவள
வங்கிசத் தார்வாண ராயனும் வாழ்கொங்கு மண்டலமே.
(க-ரை) வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் தொங்கவிட்டு, வேண்டிவற்றை வாயாற் சொல்லாமல் எழுதிவிட அதிற் குறித்தவற்றை வந்த புலவருக்கு உதவி, மறுபடியும் வர வேண்டுமென்று உபசரிக்கும் பவள குலத்தவனான வாணராயனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
97. முட்டை என்ற முருகவேளும் பொய்யா மொழிப்புலவரும்
முட்டையென் பேர்சுரம் போக்கா வொருபா மொழியெனக்கேட்
டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்
சுட்டழகில்லையீ தென்று விழுந்த துளியென்றுநன்
மட்டவிழ் தார்முரு கோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே.
(க-ரை) முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு கவி கூறுவாயாக என்றதில் மகிழ்ந்து, பொய்யா மொழி என்னும் புலவன் பொன்போலு மென்ற முதலையுடைய வெண்பாக் கூறுதலும், இது அழகில்லை என்று குறித்து விழுந்த துளியென்ற ஒரு கவியை முருகவேள் பாடியது கொங்குமண்டலம் என்பதாம்.
98. பாரியூர், செட்டி பிள்ளையப்பன்
கலியின் மெலிந்து புகல்கவிக் கீயக் கயிலின்மையால்
புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை
மலிய வெடுத்துப் புலவனுக் கீந்த வடகரையான்
வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே.
(க-ரை) வறுமையால் தளர்வுகொண்டு கூறிய பாட்டுக் கேட்டுக் கொடுத்தற்குப் (பொருள்) கையிலில்லாததால் புலிவாழிடத்திற் புகவே, அவ்விடத்துத் திருடர்கள் பங்கிட்ட பொற்குவியலைப் பெற்றுப் பெருக்கமாகக் கவிபாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டிபிள்ளான் என்பவனுங் கொங்குமண்டலம் என்பதாம்.
99. கொங்குவேளிர்
நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக் கொண்டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே.
இது உதயணன் கதை என்றும் பெருங்கதையென்றுங் கூறும் கொங்கு வேண்மாக்கதை அரங்கேற்றிய சரிதம் என்று மாத்திரம் விளங்குகிறது. மற்றை விவரம் நன்கு விளங்காமையால் உரை எழுதவும் இயலவில்லை.
100. அவநிதன்
தவநித நோற்கு மறவாணர் மேவத் தழைகுடிகள்
தவநிதி யோங்கத் தரியலர் தாழ நலம் பொருந்தி
அவநித னாதியரசர் வடக்கு மடங்க மணி
மவுலி தரித்துப் புகழ்நீண் டதுகொங்கு மண்டலமே
(க-ரை) நாளுந் தவம்புரியும் புண்ணியவான்கள் பொருந்த வளர்ச்சியுற்றுக் குடிகள் நவநிதி பொருந்தப் பகைவர் வணங்க இன்பமோங்க அவநிதன் முதலிய அரசர்கள் வடநாட்டையும் வென்று மகுடம் புனைந்து அரசு புரிந்து புகழ்கொண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.
கொங்கு மண்டல சதகம் முற்றிற்று
-------------
This file was last updated on 24 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)