காஞ்சிபுரம் மாத்ரு பூதையரவர்கள் இயற்றிய
நந்தமண்டல சதகம் (உரையுடன்)
nanta maNTala catakam
of kAnci mAtrupUtaiyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காஞ்சிபுரம் மாத்ரு பூதையரவர்கள் இயற்றிய
நந்தமண்டல சதகம் (உரையுடன்)
Source:
நந்தமண்டல சதகம்
காஞ்சிபுரம் : மாத்ரு பூதையரவர்கள் இயற்றியது.
இதற்கு பி. எ . பட்டம் பெற்ற தோட்டக்காடு : இராமகிருஷ்ண பிள்ளையவர்கள்
வேண்டுகோளின்படி வேலூர் : அமெரிகன்மிஷன் பாலிகாபாடசாலைத் தமிழ்ப்புலவரும்,
கோல புத்தகாசிரியருமாகிய பிரமபுரி: ப. திருவேங்கடம்பிள்ளை யவர்களால் உரை செய்யப்பட்டு,
செங்கல்பட்டுஜில்லா ரெயில்வே டிராவலிங்போலீஸ் ஆபிஸர் கா. இராமாநுஜம்
பிள்ளை யவர்களால், சென்னை - சூளை : தொண்டை மண்டலம் அச்சுயந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.
1894. - 1895.
[ஜயவருடம் தைமாதம்.] Registered Copyright.
-------------------
ஸ்ரீநந்தநந்தனாய நம:
சாத்து கவிகள்.
1. புரசை அஷ்டாவதானம் சபாபதிமுதலியார் மாணாக்கர்
திரு. சின்னசாமிப்பிள்ளை அவர்களியற்றிய
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
பண்டுபயோ ததிகடைந்து பண்ணவருக் கமுதம்
பகிர்ந்ததிரு மாலுலகிற் கண்ணனென வுதித்த
அண்டர்குல மான்மியத்தைக் கண்ணபிரான் றாதை
யரும்பெயரால் நந்தமண் டலசதக மெனுநூல்
எண்டகுமா துருபூத வேந்தல் தமிழ்ப் பாவி
லிசைத்தனனன் னதற்குரைசெய் தச்சிலினி தமைத்தான்
கொண்டல் தவழ் சோலை நனி பிரமபுர நகரான்
குவலயமேத் துந்திருவேங் கடக்குரிசில் மாதோ.
------------
2. ௸ முதலியார் மாணாக்கர் திருமயிலை. சண்முகம் பிள்ளையவர்களியற்றிய
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.
அந்த மண்டலத் தவன்றனக் கிளையவ னாளரி யுறைகின்ற
சொந்த மண்டல மீதெனச் செந்தமி ழோர்சொலு நெறியோர்ந்து
நந்த மண்டல சதகமா மாதுரு பூதநா வலனோத
இந்த மண்டலஞ் சொலத்திரு வேங்கடக் கவியுரை யிசைத்தானே.
---------
3. திரு. சிவாநந்த சாகர யோகீச்வரர் மாணாக்கருள் ஒருவரும்,
சென்னை திருவல்லிக்கேணி ஆரியன்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதரும் ஆகிய
திருவத்துறை. ஆ. சேதுராமபாரதியாரவர்கள் இயற்றியது.
இந்திரன் முதலாத் தேவருமயனு மெய்துதற் கரியமா மாயன்
வந்தொருமகவாய் வளர்ந்திடவளர்த்த வயங்குசீர் யாதவர்ப் புகழ்ந்த
சந்தமார் நந்த மண்டல சதகந் தனக்குரை நன்கியற் றினனால்
நந்தலில் புலவ ரவையமர் திருவேங் கடமெனு நாவலன் றானே.
---------
4. தசாவதானம் பேறை செகநாதப்பிள்ளை யவர்களியற்றிய
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
விதியாதவன் போன்ற மாதுருபூதப்பெயர்கொள் வேள்வியாளன்
றுதியாதவக்குலத்தார் வதிருந்த மண்டலச்சீர் தொகுத்தான் மீத்தா
மதியாதவன்பினொடு கவியுரை காட்டச்சினிடை வகுத்தான் புன்மை
வதியாதவன் மாதைத் திருவேங்கடத்தமிழ்நா வலவனம்மா.
-----------
5. அஷ்டாவதானம் பூவை. கலியாணசுந்தர முதலியாரவர்கள் இயற்றிய
பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
கோவலர்த மகிமையினைக் குவலயமெ லாந்தேர்ந்து குலவி நாளுங்
குறித்தோதும் விதரண நற் சீர்த்திகளை யேதிரட்டிக் குலவொழுக்கக்
கூயலர்கண் மிகமெச்சப் பத்தியங்க டோறுநயங் கொழிக்க முன்னோர்
கூறியதொர் நந்தமண் டலசதக வருமையினைக் குறிப்பினாய்ந்தே
போவலரு மேதுதிருட் டாந்தமேற் கோள்களுட னுலவுகாதை
யுற்றபெரும் விருத்தியுரை யொன்றியற்றிப் பிரசுரித்தானுண்மைமிக்கப்
பாவலர்கள் புகழ்ந்தேத்தச் செந்தமிழி லேவல்ல பண்புவாய்ந்த
பகர்பிரமபுரித்திருவேங் கடப்புலவனெனப்பெயர்கொள் பான்மையோனே.
------------
6. காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் கல்விச்சாலைத் தமிழ்ப்பண்டிதர்
தி. சு. வேலுசாமிப்பிள்ளை யவர்களியற்றிய எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
சீர்மலிநந்த மண்டல சதகஞ் செய்தனன்மாதர்பூ தையன்
ஏர்மலியந்நூற் கியலுறவுரையொன் றியற்றினனவனெவ னென்னில்
கார்மலி பிரம் புரியுறைசீர்த்திக் கவின்றிருவேங்கடப் புலவன்
பார்மலியண்டர் தங்குலம்விளங்கப் பதுமைகேளெனவுதித் தவனே.
-------------
7. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபத் தெரு மணிகண்டமுதலியார்
குமாரர் முத்தமிழ்க்கவி திருவேங்கடமுதலியா ரவர்களியற்றியது.
மாதர் பூதையன் வனைநந்தமண்டல மாசதகக்
காதரவின்னோ ரருமுரை செய்தா னணிதருசீர்க்
கோதில் பிரம புரித்திருவேங்கடக் கூரறிஞன்
யாதவன்றன் குல மென்னிலவிர்யா தவகுலமே.
-------------
8. காஞ்சிபுரத்தைச் சார்ந்த பல்லவபுரம் புராணிகர்
சோணாசலமுதலியா ரவர்கள் இயற்றியது.
கந்தமண் டலமுழுதுங் கமழ்பொழில்சூழ் பிரமபுரிக் கண்ணின் மேவும்
இந்தமண் டலங்கொள்கலை தேர் திருவேங் கடப்புலவ னினிதாமென்ன
நந்தமண் டலசதக வுரை வரைந்தா னதனையதி னாமந்தேர்ந்தோர்
எந்தமண் டலத்தினருந் தந்தமண் டலப்புகழா யேற்றுக்கொள்வார்.
------------
9. வேலூர் மலை மருந்தையர் குமாரர் அச்சாபீஸ்
காளத்திஐயர் அவர்களியற்றியது
சீர்பூத்தபிரமபுரி யாதவர்தங் குலந்தழைத்துச் சிறப்புற்றோங்க
நீர்பூத்தபரசுடையோ னுருவமேதன்னுருவாய் நிலத்தின் மேவும்
ஏர்பூத்ததிருவேங் கடப்புலவன் கவிஞரெலா மினியதென்னப்
பார்பூத்தவெழினந்த மண்டலத்தின் சதகவுரை பகர்ந்திட்டானே.
------
10. திருவையாறு முத்துச்சாமிபாரதியா ரவர்களியற்றிய
அறுசீர்க்கழிநெடிலடி லாசிரியவிருத்தம்.
பொலமன்னுகுன்றுகுடையாவெடுத்துக் கோக்குலத்தைப் புரந்தமாலை வலமன்னுசந்ததியாவளர்த்தருள்கோ வசியர்குலவளங்கொள் சீர்த்தி
பலமன்னுநந்தமண்டலசதகத் துறுபொருளைப்பலருந்தேர்வான்
நலமன்னு பொழிப்புரை செய்தருள்கவென நனியெவருநயந்து வேண்ட (1)
மன்னியபல்லுயிர்களெலாமின்பமுறத் திருவினொடுவனத்துழாய்மால்
துன்னி வளர்பதிகளிருபானிரண்டு நிலவுமெழிற்றொண்டைநாட்டில்
பொன்னகரிற்பொலிபிரம புரிதனிற்பாற் கடன்மதிபோற்புவனமேத்தப்
பன்னமுதர்குலப்பரசுராமமுகி லியற்றுதவப்பயனாற்றோன்றி. (2)
அற்பினொடுபன்னூலுங்கரிசுதபக் கற்றுணர் நுண்ணறிவுமேலாம்
விற்பனவி நயநிபுணம்பொறையொழுக்க மொப்புரவுமிக்கசீலம்
நற்குணமும் பெருகு திருவேங்கடநா வலவனந்நூ னயங்களெல்லாம்
பற்பலருமெளிதுணரவரைந்தளவி லாதபுகழ்படைத்தான் மன்னோ . (3)
-------------
11. தவசிகிராமம் ஆயுள்வேத பண்டிதரும், ஸ்ரீமகாபாரத பிரசங்கருமாகிய
வி. இ. அரங்கசாமிபிள்ளை யவர்களியற்றிய வண்ணச்சந்த விருத்தம்.
சுந்தரமிலகிய வந்தரதேவாகள் சிந்தைகளித்துணவெண்
கதையினையுதவிய திரைசெறிசிந்துடை சூழ்தரு காசினியில்
செந்திருமருவிய நந்தமண்டலசத கந்தாக்கினியவுரை
செப்பினனற்பிர மாபுரியுறையா தவகுல மதில்வருவோன்
அந்தமில்பலகா வியமுதல்கலைகளை யாய்ந்திடுமிகுசீலன்
அழகியமுலைவன மாலையுரத்தி லணிந்திடுநற்குணவான்
நந்தலிலறிஞர்பு கழ்ந்திடுதிருவேங் கடமெனுமொருநாமன்
நானிலமதிலழி யாப்புகழோங்கி நலம் பெறநாட்டினனே.
---------------
12. பிரமபுரி. பரமபாகவதராகிய குப்பையப்பிள்ளையவர்கள் குமாரரும்,
இந்நூல் உரையாசிரியர் மாணாக்கருமாகிய க. கந்தசாமிபிள்ளையவர்களியற்றிய
கட்டளைக்கலித்துறை.
மானந்தகோபன் மகவாயவாயர் வளநகரா
மானந்தமண்டலத் தோர்சதகத்தி னுரைவரைந்தான்
மானந்தயை பொறை வாய்மையுளான் பிர மாபுரபூ
மானந்த நந்த குலத்திருவேங்கட மாகவியே.
---------
13. சென்னை கோமளீச்வரன் பேட்டை இராமாநுஜநாயகரவர்கள்
மாணாக்கரு ளொருவராகிய கொ. வடிவேலு செட்டியாரவர்கள் இயற்றிய
விருத்தம்,
கார்வளர்காஞ்சி மாத்ருபூதையன் கவின்பெறு நாற்கவிப் புலவன்
மாவளர் நந்த மண்டலசதகம் வானவர்மகிழ்வுறப் புனைந்தான்
தூவளர்பிரம புரந்தனிலுதித்தோன் றோமில்யாதவகுல திலகன்
பேர்வளர் திருவேங் கடப்புலவன்றான் பெட்புற வுரையியற்றினனால்.
------------
14. சென்னை பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் ம. கிருஷ்ணசாமி
முதலியாரவர்கள் மாணாக்கர் ஆரணி. சென்னகேசவுலு நாயுடவர்கள்
இயற்றிய விருத்தம்.
சீர்வளர்காஞ்சி மாத்ருபூதையர் செந்தமிழ்க்கவியினாற் செய்த
ஏர்வளர்நந்த மண்டலசதகத் தினுக்குரையாதவ குலத்திற்
பேர்வளர்பிரம புரந்தனிற்சனித்தோன் பெருங்கவி காப்பியங்கற்றோன்
நார்வளர் திருவேங் கடவபிதான னயமுடன் செய்தளித்தனனே.
-------------
15. திரு. முத்துச்சாமிபாரதியார் குமாரர் நமசிவாய ஆசாரியரவர்களியற்றிய
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
யாதவர்குலச்சீரனைத்தையுந் திரட்டி யருந்தமிழ்ப் பாவினமாக
மாதுர்பூதைய னியற்றிய நந்த மண்டல சதகத்தின் பொருளைப்
பூதலத்தெவரு மெளிதினன்குணரப் பொழிப்புரை செய்தனன் புலவோர்
காதலிற்பரவு மியற்றமிழ்த் திருவேங் கடமெனும் பெயர்கொணாவலனே.
-------------------
16. வளவனூர் குமாரபுரியில் வசிக்கும் பொய்கைபாக்கம் அப்பாசாமி
உபாத்தியாயரவர்கள் இயற்றியது.
மாதவன்கருணை வானவன்புயலை மானும்வண்ணனலர் மாதுக்கண்
மால்கொளும்பழைய மால்சிறுத்தவிடை வாயிடைச்சியர்கள் வாழ்மனைச்
சீதவெண்ணெயுணு மாயனற்கமல சேவடித்துணையை சேவைசெய்
தேவரும்புகழ்கொள் பிரமமாபுரியில் தேசுறும்பரசு ராமவேள்
காதலன்சொல்திரு வேங்கடக்குயில்க வின்றமிழ்க்கடலை மாந்தியே
கழறுநந்தமண் டலமதிற்பெயக் கண்டு நற்புலவர் விண்டலம்
போதமண்டலையில் கொண்டுபாதலம் போகிபோயிடச் சதகநூல்
போதவேவுரை விரித்ததேமுகில் பெருக்கெனப்பு கல்வர் புலவரே.
---------------
17. பிரமபுரி உபாத்தியாயர் பொ. நாராயணசாமிபிள்ளை யவர்களியற்றியது.
செம்பிரம் ரங்கள் விருந் துண்ணுமலர்ப் பண்ணவன்றன் றிருப்பேராற்செ
யம்பிரம புரியினன்மா நந்தமண் டலசதகத் தருத்தந்தன்னை
நம்பிரம ணானந்தச் சீரனந்தனேயிணையா நவின்றிட்டானால்
சம்பிரமத் தமிழறியு மொரு திருவேங் கடப்பெயர்கொள் சதுரன்றானே.
-----------
18. தவசி . வீராசாமிமுதலியார் புத்திரரும், ஷையூர் வித்வான்
இ. அரங்கசாமிபிள்ளையவர்கள் மாணாக்கருமாகிய கிருஷ்ணசாமி
முதலியாரவர்களியற்றிய நேரிசை வெண்பா.
செந்தமிழில் வல்ல திருவேங் கடப்புலவன்
சந்தமிகு மாதுருபூ தையன் மகிழ்ந் -- துந்து புகழ்
நந்தமண்ட லச்சீர் நவில் சதகத் திற்குரைபே
ரந்தமொடு செய்தருளி னான்.
சாத்து கவிகள் முற்றிற்று.
-----------------------
அச்சிட்டு வருங்கால் கிடைத்த சாத்துக்கவிகள்.
19. திருவோத்தூரிலிருக்கும் மலையாளம், சிவஞான சுவாமிகளது
பாதசேகரராகிய பானுகவி அவர்களியற்றியது.
இந்தமண் டலத்தினுள்ளா ரெல்லாரும் போற்றுமெழிற் புலமை மிக்க
நந்தமண் டலசதக மாதுருபூ தையனன்கு நவின்றா னத்தை
விந்தைபெறு பொழிப்புரையுங் காதைகளு நனிவிளக்கி வியப்பி னீந்தான்
நந்தலில் சீர்ப் பிரமபுரி வாழ் திருவேங் கடமென்னு நாவ லோனே.
----------
20. கூடலூர்தாலூக்கா கரையேறவிட்டவர் குப்பத்திலிருக்கும் விருத்தாசலம்
தாலூக்கா தாசில்தார் பு. வேங்கடசாமிபிள்ளை யவர்களியற்றிய
ஆசிரியவிருத்தம்.
உலகெலாம்புரக்கு மொருதனி முதல்வ னுவகையோடுற்பவித் திட்ட
திலகமாநந்த மண்டலசதகஞ் சீர் மயூராபுரி சிறக்கப்
பலகலையோர்ந்த மாதுருபூதன் பண்டைநாள்வேங்கடா சலமால்
அலகிலாத்தவத்தா லன்புகூர்ந்தளித்தா னருமறையங்கம்வே றென்னே. (1)
என்னுடைப்பெருமா னென்றனித்தந்தை யிசைநலமுற்றுமாய் வந்த
பொன்னுடைப்பிரம புரியுறைமகிபன் புகழ் திருவேங்கடப் புலவன்
சொன்னயத்தோடு பொருணலந்தோன்ற துளக்கமில் யதுகுலம் பொலிய
முன்னவர்யாருஞ் சொற்றிலரென்னா முழுமுதல் பொழிப்புரை மொழிந்தான். (2)
தானுறு கொள்கை யறிகுதலரிதாந் தகைவொடுக்கவிஞர் நோக் கறிந்தே
வானுருமுகில்போல் மாதலம் வாழ வழங்கினனிப்பெரும் பணிக்கு
தேனுரு பி.ஏ. பட்டமும் பெற்று சீரை கோர்ட்டினிலுத்தி யோக
கோனொரு துணை தோ. ராமகிருட்டினமால் கூறுதல் சேடற்கு மரிதே. (3)
சாத்து கவிகள் முற்றிற்று.
--------------------
ஸ்ரீ ஸ்ரீ கோபகோபீச்வராய நம:
முகவுரை.
இந்நூல் நில மகள் நுதலிற்றீட்டிய திலகம் போன்றதும், காசி முதலிய முத்திநகரங்க ளேழனுள் மிகச் சிறப்புற்றோங்கியதும், நூற்றெட்டுத் திருப்பதிகளாகிய திவ்யதேசங்களுளொன்றாய் விள ங்குவதுமாகிய ஸ்ரீ காஞ்சி மாநகரத்தில் வைதிகப்பிராம்மண குலத்தில் திருவவதரித்து இயலிசை நாடகமென்னு முத்தமிழிலும், வைதிக லௌகிக ஒழுக்கங்களிலும் குறைபாடின்றி விளங்கும் பிர்ம்மஸ்ரீ மாதுருபூதையரவர்களால் சுமார் (220) வருடங்களுக்கு முன் செய்யப்பட்டுத் திருமயிலை - இராமசந்திரப்பிள்ளை குமாரர் வேங்கடாசலப்பிள்ளையவர்கள் நன்முயற்சியால் அரங்கேற்றுவிக்கப் பட்டது.
மேலும், இந்தந்த மண்டலம் கோகுலம், பிருந்தாவனம், அருச்சுனநிலையம், சூரசேனம், இரேவதிவெற்பு, யமுனாந்தி, கோபிகாபுரம், கோவர்த்தனம், புஷ்பநாமகிரி, மதுராபுரி முத லிய பல நகரங்களைத் தன்னிடத்திற் கொண்டிருப்பது மன்றி நந்தகோபனென்னும் ஓர் யாதவசிரேஷ்டர் சகடால் னென்னும் மந்திரியோடிருந்து அரசாட்சி புரிந்த இரண்டாயிரத்தைந்நூறு வீதிகளையும், ஐந்துலட்சம் வீடுகளையுமுடைய திருவாய்ப்பாடியையும் தலை நகரமாகப் பெற்றது.
இதனுள் நம் பூலோக சரஸ்வதியாகிய ஒளவையாலும், மற்றும் பற்பல கவிஞர்களாலு மியற்றப் பட்ட அசதிக்கோவை, நல்லான் கோவை, தியாகர்கோவை முதலிய பற்பல பிரபந்தங்களைப் பெற்றவர்களும், ஏககாலத்தில் தங்கத்தாலமைத்த கொம்பும் குளம்புமுடைய இருபதினாயிரம் பாற் பசுக்களை வைதிகப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்தவர்களும், காஞ்சிபுரம் - வரதராஜப்பெருமாள் சந்நிதி, மதில், மண்டபம், கோபுரம், தடாகம் முதலிய திருப்பணிகள் முற்றுவித்தவர்களும், மூவெழு வள்ளல்களில் ஒருவராகியும், முல்லைக்கொடிக்குத் தானூர்ந்து வருந் தேரினைத்தியாகமாகக் கொடுத்தவருமாகிய பாரி என்னும் வள்ளலைத் தங்கள் குலத்தினராகப் பெற்றவரு மாகிய யாதவகுல சிரேட்டர்களின் தசாங்க முதலியவைகளையும், மற்றும் அவர்களது எண்ணிறந்த கீர்த்திகளையும் எடுத்துக்கூறப் பட்டது.
இந் நந்தமண்டலசதகம் அரிய செய்யுள் நடையாக இருந்தமையாலும், நம்மவருட் கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்குப் பயன்படாதிருந்தமை கருதி யாவரும் அதனைக்கற்றுப் பொருளுணருமாறு அதற்கோர் பொழிப்புரை எழுத நினைத்து என்னிடத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கவனித்தபோது அது முழுவதும் பிழைகளாயும், அநேகம் பாடல்களில் அடி, தொடை, மோனை முதலியவை யொவ்வாமலு மிருந்தபடியால், வேறு பிரதிகள் தேடத்துடங்கி வேலூர், கும்பகோணம், சென்னை முதலிய பல விடங்களிற் போய்ப் பொருள் விரையஞ் செய்து தேடியும் பிரதி கள் நேரிடாம லதற்காக நெடுநாளுழன்று வருகையில் அடியிற் கண்ட விடங்களிலிருந்து சில பிரதிகள் கிடைத்தன.
அவைகளுள் சில இராமபாணங்களாற் பட்சிக்கப்பட்டும், சில அரை குறையாகவும் கழிய , நின்ற பிரதிகளும் என் சொந்த பிரதியைப் போலவே அடிகள் விடுபட்டும் பாட பேதப்பட்டுங் கிடந்தமையின் அவைகளையெல்லாம் ஒருவாறு என் புல்லறிவிற் கெட்டியபடி நூலாசிரியர் கருத்து மாறாதவண்ணந் திருத்தி சற்றேறக்குறையச் சுத்தப் பிரதியாகச் செய்து அதற்குமேல் உரையெழுதத் தொடங்கினேன். அவ்வாறெழுதிவருங்கால் இடையிடையே தோன்றிய சரித்திரம், சம்பிரதாயம், மேற்கோள் முதலியவற்றிற்காக நான் எடுத்துக்கொண்ட பிரயாசையும், விரையமும் முன்னிலு மதிக மாகவே யிருந்தன. ஆயினும், எடுத்த விஷயத்தை எவ்வகையினும் பூர்த்தி செய்விக்க வேண்டுமென்னும் அவாவினாலவற்றை யோர் பொருட்டாக மதியாது மற்றும் அதற்கு வேண்டிய சுருதி ஸ்மிருதி புராணம், இதிகாச முதலிய மேற்கோள்களுடன் எழுதி முடித்துப் பின்னர் அச்சிற் பதிப்பித்தனன் . இதனைக் கண்ணுறும் கல்விமான்க ளனைவரும் சொற்குற்றம் பொருட்குற்றங்களையும், மற்றும் பாடபேதங்களையும், சம்பிரதாய வழுக்களையும் புறங்கூ றாது அடியேனுக்குத் தெரிவிப்பர்களாயின், அவர்களுக்கு நன்றி யறிந்த வந்தனஞ் செய்வதோடு அவற்றையுஞ் சேர்த்து மறுபதிப்பில் வெளியிடச் சித்தமாயிருக்கிறேன்.
-----------
புத்தகங்கள் கொடுத்த உபகாரிகள்.
1. சித்தாத்தூர் ஸ்ரீமான் அரங்கப்பிள்ளையவர்கள்.
2. எருமையூர் ஸ்ரீமான் கோபாலகிருஷ்ணபிள்ளையவர்கள்.
3. சென்னை ஜன்ஜாமாருதம் தி. கொத்தவால் இராஜகோபாலபிள்ளையவர்கள்.
4. சூரை கோதண்டராமபிள்ளையவர்கள்.
இங்ஙனம் , வே. ப. திருவேங்கடம் பிள்ளை.
---------------------
ஸ்ரீ நந்தநந்தனாய நம:
நந்தமண்டல சதகம்
அவதாரிகை.
1. "நந்தமண்டலம்" என்னுஞ் சொற்றொடர் அப்பு மண்டலம், பிருத்வி மண்டலம், வாய்வு மண்டலம், தேயுமண்டலம் என்பவை போன்று ஸ்ரீ நந்தகோபர் தோன்றிய ''யதுவமிசப்" பரப்பைக் குறிக்காநின்றது. அப்பு பிருத்வி வாய்வாதி யைம்பூதங்களின் விஸ்தீரணம் எப்படி அளப்பரியதா யிருக்கின்றனவோ அப்படியே இந் நந்தவமிசமும் அளவிட வொண்ணாதனவாக விராநின்றதென்பது மேலைய மகுடத்தின் திரண்ட பொருளென்க.
2. இதுநிற்க, இந்நூல் அவதரித்தமைக்குக் காரணம் : இந்நூலாசிரியர் ஸ்ரீ மாத்ருபூதையரென்னும் பிராஹ்மணோத்தமர் நந்தகோபர் தொடக்கமான யதுகுலச்சீமான்கள் விடயமாய்த் தாம் செவியுற்ற கண்ணுற்ற வியப்பைப் பயப்பனவான அருநற்குண நற்செயல்களேயாம். இக்கவிஞ்ஞர் அதிருஷ்டவசம் இவர் கவிதையைச் சத்கரிக்கத்தக்க ஓர் யாதவப்பிரபுவும் அப்போது தடஸ்த ராயிருந்தனர். இற்றைக்குச் சுமார் இருநூற்றிருபதாண்டுகளுக்கு முன்னர் "மயூரபுரி " யென்னும் திருமயிலை மாநகரந்தன்னில் அரசு செலுத்திக்கொண்டிருந்த ஸ்ரீவேங்கடாசலப்பிள்ளையென்னு மன்னவரே யன்னவரென்க. இந்நூலாசிரியர் அவ்யாதவபூபதியின் ஸமஸ்தானத்தில் தம் பிரபந்தத்தை யரங்கேற்றியடைந்த பற்பல பரிசுகளைத் தம் பாயிரத்தில் விரித்துக் கூறியுள்ளார். அங்ஙனங் கண்டுகொள்க.
3. இஃதிப்படியிருக்க, இந்நூலுக்கும், குலமான்மியங் கூறும் மற்றப் பன்னூல்களுக்குமுள்ள வாசி யாதெனில் - மற்ற நூல்கள் அவ்வக்குலத்தவர் தாமே தங்குலத்திற்கு மான்மியங் கற்பிப்பான் புலவரையடுத்து இயற்றுவித்துக் கொண்டனவாய்நிற்க இந்நூலோ இப்புலவர் தாம் ஓதிய நூற்களனைத்திலும் மேலெழத்தோன்றிய யதுகுலச்செல்வர் தம் குணாதிசயங்களுக்குத் தோற்றுத் தாமே விரும்பிப் பாடினதொன்றாய்க் காண்டலேயாம். மாத்ருபூதையர் தம் சதகப் பிரதி செய்யுளுக்கும் பிரஸித்தமான பல தமிழ்க்காவி யங்களிலிருந்து மேற்கோளாதாரம் காட்டியிருத்தலே இவ்வுண்மைக்குப் போதுமான சான்றென்க. யாம் இவ்வாறு துணிபுடன் கூறவந்தது குலாபிமானத்தாலும், தற்புகழ்ச்சி விருப்பாலு மன்று ; இந்நூலுடைத்தலைவராம் யாதவர் மான்மியம் தமிழ் நாட்டு நூல்களோடு நிற்காது. ஆஸேதுஸீதாசல பரியந்தமான அங்கவங்க கலிங்காதி ஐம்பத்தாறு தேசங்களில் வழங்கும் ஸமஸ் கிருதாதி பதினெண்பாஷாக் கிரந்தங்களிலும் விஸ்தரித்துக்கூறு மாற்றாலென்க.
4. நூலின் பண்பும், ஆசிரியர் பண்பும், தலைவர் பண்பும் ஒரு சிறிது கூறினாம். இனி நூலுரையாசிரியர் பண்பு கூறுவாம். யது குலதிலகராம் இவ் வுரையாசிரியர் ஸ்ரீமான் பிரமபுரி திருவேங்கடம்பிள்ளை யவர்கள் ஓர் பாரம்பரிய வித்துவான். தாம் யாது குலத்திற் பிறந்த கடமைக்கும், பலகலை பயின்ற கடமைக்கும் தம் மரபினர்க்கு இப்பேருதவியைப் புரியலாயினர். இப்புலவர் தாம் மாணாக்கரா யிருந்தகாலத்தும், ஆசிரியரா யிருந்தகாலத்தும் இச் செந்தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்குத் தங் கல்வி, அறிவு, ஒழுக்கங்களா லியற்றிய விந்தை நல்லுதவிகள் அந்தமில்லன. இவரியற்றிய ''கோலப்புத்தகம், கோவைசிய ப்ரபாவமாலை, வேலூர் கோட்டைச் சரித்திரம்” முதலிய அரிய நூல்களே இதற்கு அத்தாட்சிகளாம். இவை யோர்புறமிருக்க, இப்புண்ணியசீலர் மேலைய சதகத்தில் நூலாசிரியர் மேற்கோளாகக் கோலியெடுத்த பற்பல செய்யுள்கள் அவ்வந்நூல்களில் உள்ளனவாவென்று ஆராய்ந்தறியுமாறு இத் தென்தேயத்தின் கண்ணதாய பலவூர்களில் பலரிடத்து ஏட்டிலும், அச்சிலும் மறைந்து கிடக்கும் நூல்களியாவற்றையும் தேடிப்பிடிக்க, ''மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்" என்பதற் கினமாய் மெய்வருத்தம், பொருட்செலவு முதலியன வொன்றையும் நோக்காது, சுமார் (15) பதினையாண்டு அஹோராத்திரம்பட்ட தோர்பாடு வியப்புறத்தக்கதொன்றாம்! அவ்வண்ணமே இச்சதகத்தைச் சுத்தப்ரதியாகப் பதிப்பித்தற்கும், அதில் ஆங்காங்கு கூறப் படும் பூர்வீகருடைய சரித்திர ஐதிஹ்யங்களை (துரபிமானிகளைப் போல் தற்சிருஷ்டியாய்க் கற்பிக்கப்புகாமல்) உள்ளது உள்ளபடி உரைக்க வேண்டுமென்கிற தூயவெண்ணத்தினால் அவ்வவ்வூரிலுள்ள சாஸனாதிகளைக் கொண்டு நேரில் பரிசோதித்துத் திரட்டிய இவர் ஊக்கம் இன்னும் வியக்கற்பாலதாம் ! பதினைந்து தினங்களில் பாரகாவிய முடித்துப் பன்னிரண்டாண்டு அரங்கேற்றலுக்கலைந்த கவிச்சக்கிரவர்த்தி ஸ்ரீமத் கம்பநாடர் படியாயன்றோ விருக்கிறது இவர் படியும்?
5. ''கணக்கன் கணக்கறிவான், தன் கணக்கைத் தானறியான்" என்பதற் கிலக்கியமாய் புறச்சாதியரோடும், புறச்சம்பிகளோடும் பழகி , ஸ்வஜாதி ஸ்வ மதங்களின் அருமை பெருமைகளை யறியாத நங்காலத்தவருக்கும், பிற்காலத்தவருக்கும் இந்நூல் நல்லுணர் வளிக்கும் பான்மையினதாதலின், இதனை நம்மவரனைவரும் குல தனம் போல் போற்றி வாசித்தொழுகுவாராகில், அதுவே இந் நூலை வெளியிட்டவர்க்கு அன்னவர் செய்யுங் கைம்மாறாகவிருக் குமென்பது திண்ணம். அதையே யாமும் ஸ்விநயமாய் வேண்டு கின்றனம். சுபம்! சுபம்.!
இங்ஙனம் :
சென்னை தி. கொ. முத்துகிருஷ்ணபிள்ளை.
-------------------------------
ஸ்ரீராமஜெயம்.
சிறப்புப்பாயிரம்.
புரசை, அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் மாணாக்கரும்,
சென்னைத் தொண்டைமண்டலம் ஆங்கிலோ வெர்னாதலர் கல்விச்சாலைத்
தமிழ்த் தலைமைப் பண்டிதருமாகிய திருமழிசை . சிவப்பிரகாசையரவர்கள்
இயற்றிய அறுசீர்க்கழினெடிலடி யாசிரியவிருத்தம்.
நிலம்பூத்த புகழ்மலிசெஞ் சூட்டரவி னறிதுயில் கூர் நெடுமா லன்பி
னலம்பூத்த திருவருள்செய் தளிகளிரு பதிற்றிரண்டு நாளு மோங்கப்
பலம்பூத்த குடம்புரையுஞ் செருத்தலான் சொரியவரும் பாலி சூழ்ந்த
புலம்பூத்த வெழிற்றொண்டை நாட்டிலகுந் திருக்காஞ்சி புரநி வாசன். (1)
மறையவர்தங் குல திலகன் முத்தமிழி னியலுணர்ந்தோன் மாட்சி மிக்கோன்,
குறையறுசீர் மாதுருபூ தையனிருஞ் சிறையவளிக் குழாங் குடைந்து,
நறையொழுக்குந் திருத்துவத் தளவலர்மா லிகைபுனைந்த நந்த கோபன்,
முறையடுத்த வரசியல்செய் நந்தமண் டலத்துறையு முல்லை யாளர். (2)
தரித்தபெருஞ் சீர்த்தியெலா நனி திரட்டித் தமிழ்ப்பாவாற் சமைத்த செந்நெற்,
பரித்தவயல் வளம்பொலியு நந்தமண் டலசதகம் பலரு மேற்க,
விரித்துரை செய் தளிக்கவெனச் சென்னை நகர் ஹைகோர்ட்டில் வியக்க யாரும்,
வரித்தவெழில் டிரான் சிலேட்ட ருத்தியோக சித்திநிலை வாய்ந்த வள்ளல். (3)
மாதவன்ற னடிபரவு மிராமகிருஷ்ணேந்திரனன் பின் வலிந்து கேட் கப்,
போதவிர்பூம் பொழிற்சுலவுந் திருவோத்தூர்க்கைங்கடிகைப் புறத்துக்
சீதமல ரய்ன்பழிச்சும் பிரமபுரத் துறுங்கோவை சியோத்த மன் சொன்,
மேதகுசீர்ப் பரசுரா மக்குரிசிலாற்று தவம் விளக்க வந்தோன். (4)
தன்னிகர்வே லூரமெரிக் கன்மிஷன்கல் விச்சாலைத் தமிழ்ப்பாண் டித்ய ,
மன்னியமுத் தமிழ்க்கவிதைத் திருவேங்க டப்புலவன் வயங்கம் நூலிற்,
றுன்னுகர லிகிதவழுச் சொற்பொருட்சோர் வகற்றிநனிச் சுத்த மாக்கிப்,
பன்னுநவ ரசவலங் காரநயம் விரவுறச்செந் தமிழ்ப்பா வல்லோர். (5)
சிரந்துளக்கி நனிவியக்கப் பொழிப்புரைசெய் தாங்காங்குச் சிறந்த நூலிற்
பரந்தபல மேற்கோள்க ளெடுத்துக்காட் டுடனமைத்துப் பரிவி னோடு
நிரந்தரமா யிவ்வுலகி லவ்வொன்றே யாயிரமாய் நிகழ வெண்ணித்
திரம் பெறுமா றழகினேழு தாவெழுத்தின் விளக்கிமிகு சிறப்புற்றானால். (6)
------------------
ஸ்ரீ நந்தகோபப்ரியாத்மஜாய நம:
திருமால்.
கண்ண கன்றநற் கடல்வளை யுலகெலா மீன்று
வண்ண முற்றவா லிலையினின் மகவுரு வாகி
யெண்ணி றந்தபே ரருளினா வினிதுகாத் தருளு
மண்ணன் மாதவன் பதயுக மலர்சிரத் தணிவாம்.
அஷ்டலட்சுமி.
சித்திர விழிகாளிந்தி சீருருக் குமணிதேவி
சத்தியை மித்ரவிந்தை சாம்பவதித்தாயோடு
பத்திரை சத்யபாமை பகரிலக் கணையின் னோரை
நித்திய மாறாவன் பி னெஞ்சினி லிருத்தி வாழ்வாம்.
கருடாழ்வார்.
செம்பொருளே நன்மைதரு செல்வமே செங்கணெடும்
எம்பெருமா னேறு மெழிற்பரியே - யும்பரெலாம்
போற்றும் புகழுடைய புண்ணியனே புள்ளரசே
தோற்றியருள் யாங்கள் தொழற்கு.
ஆஞ்சனேயர்.
ஆயுள் புத்தி யடல்கதி யீபவன்
தாயுந் தந்தை தமர்குரு வானவன்
ஏயும் பேரெழி லஞ்சனை யீன்றருள்
வாயு புத்திரன் பாதம்வ ணங்குவாம்.
நம்மாழ்வார்
படகோபன கச்சாயியும் பழமாமறைச் சுவையை
விடகோபனு வற்செந்தமிழ் வேதத்தினின் மகிழக்
குடகோபல திசையும் புகழ் குருகாபுரி வருமெஞ்
சடகோபன டித்தாமரை தலைமேலணி வாமே.
ஸரஸ்வதி
பூவில் விண்ணிற் புணரியிற் கல்லினின்
மேவு வோர்புகழ் வெண்கம லாய்வரன் றேவி
யேயமு தேகலைச் செல்வியே
நாவிருந்துந லம்பல நல்குவாய்.
------------
அவையடக்கம்.
திருவளரு முலகினிலைந் திலக்கணமோ
டிலக்கியங்கள் தெளிந்தோ ராய
பொருவிலுரை யாசிரியர் திறங்களெலாநனியோங்கிப்
பொலியும் வண்ணங்
குருவருளாற் பன்னூலு முணர்மாத்ரு
பூதையனாங் குணவான் செய்த
மருவியசீர் நந்தமண் டலசதகத் தினுக்குரையான்
வரைந்தேன் மன்னோ .
----------
நூலாசிரியர் இயற்றியது.
தலைமைபெறுங்கோபாலர் திருநந்தமண்டலத்தின் சதகமன்பின்
நிலைமைபெறவரங்கேற்றிப் பரிசிலருட்புகழுலகினிலவலாலே
சிலை மதன்காவியுமயன் பொற்கமலமுமாறுளவமுமே தேடலுற்றார்
மலைமகளைக்கலை மகளென் றையுற்றான் வடகயிலை வாணன்றானே.
இயலிசைச்செந்திருநந்த மண்டலத்தின் சதகமரங் கேற்றுவித்து
நயமுடன் பொன்னாயிரமும் பரிசிலளித்தான்மயிலை நகரின் மேவுந்
தயரதனீன் றருள்ராமன் றனக்கிணையாமிராமசந்திரன் றந்தபாலன்
புயசயிலன் புகழ்க்கடலன் பொற்கருடத்து சன்புவியைப் புரப்போன்றானே.
தங்கவஜ்ரக்கடகரத்நப் பதக்கந்தந்தான்
சரிகையங்கியிழைத்திடுநற் சால்வைதந்தான்
செங்கயல்பாய் நீர்வளநன் னில முந்தந்தான்
சீர்தந்தானேர்தந்தான் சிவிகைதந்தான்
அங்கலினப்புரவிதந்தான் சதகங்கொண்டே யாயிரம்
பொன்பரிசு தந்தான் மயிலைமேவும்
துங்க வேங்கடாசலவே ளென்னதந்தான்
சொல்லுமென்பார்க்கொத்தனை பொன் சொல்லுவேனே.
தாதவிழ்பூந்துளவணிமால் புதல்வனெனவ-
வதரித்த தன்மையோர்ந்து
காதலுடன் வளர்த்தநந்தன் மரபுள்ளோர்
தம்புகழ்பாற் கடல் போலென்று
மேதினியிலே விளங்க மயிலை
வேங்கடாசலவேள் விருப்பமாகி
யோதுகின்ற சொற்படியே நந்தமண்டல
சதக முரைக்கின்றேனே.
பாரதம், அச்வமேதபருவம், வேள்விச்சருக்கம்.
கோவினைப்புரத்த லருந்தன மீட்டல்
குவலயம் வளம்படத் திருத்தல்
மேவுமுத்தொழிலு மியற்றி மெய்ப்பொருளை
வேதியர்பாவலோர் மீட்டும்
ஏவலோரிளைத்தோ ரெவருமெய்திடத்தந்
திசைபெறுவசியர் வந்தடைந்தார்
தாவியகருட கேதனத்தேர்மேல்
தந்திமேல்வாசிமேற் றருக்கால்.
பாரதம், கபிலை மகிமையுரைத்த சருக்கம்.
பசுவினவையறு முணவுநடையுடை யனவுமொருவழி படுகினும்
இசையுமிரு செவி விழிகண் முலைகளு மிருகுரமுமிரு நாசியும்
அசைவில் கருநிற முளது கபிலைக ளதனினொருதிற மணுகினும்
வசையில் கபிலைய தெனவுமிசையுணர் வரதமுனிவரர் பலருமே.
--------------
ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணாய நம:
நந்தமண்டல சதகம்.
காப்பு.
தண்டலை சூழுமுல்லைத் தரணியென் றுரைக்குநந்த
மண்டல சதகந்தன்னை மதுரச்செந் தமிழாற் கூற
வெண்டிரைக் கடலிற் சேடன் மேற்றுயில் திருமாலன்பர்
பண்டைநான் மறைதேராழ்வார் பதின் மருங் காப்புத்தானே.
(இதன்பொருள்) வெண்மையாகிய அலைகளையுடைய திருப் பாற்கடலின்கண் ஆதிசேடன் மீது அறிதுயிலமர்ந்த செங்கண்மா லின் தாஸர்களும், பழமையாகிய நான்கு வேதங்களின் பொருள்களைத் தெளிந்துணர்ந்தவருமான ஆழ்வார் பதின்மரும் பொழில் சூழ்ந்த முல்லை நிலமென்று எடுத்தோதத்தக்க நந்தமண்டலத்தி னது பெருமையைக் குறிக்கும் சதகமாகிய இப்பிரபந்தத்தை இனிய செவ்விய தமிழ் மொழியால் யான் கூறுதற்குக் காப்பாக நின்றருள் செய்வார்கள் என்றவாறு.
பின் இரண்டடிகளுக்கு அறிதுயில மரும் திருமாலும் அத் திருமாலினது தாஸர்களாகிய ஆழ்வார் பதின்மரும் காப்பாக நின்றருள்வார்கள் எனினு மமையும்.
பதின்மராவார். பொய்கையாழ்வார். குலசேகராழ்வார். பூதத்தாழ்வார்.
பெரியாழ்வார். பேயாழ்வார். தொண்டரடிப்பொடியாழ்வார். திருமழிசையாழ்வார். திருப்பாணாழ்வார். நம்மாழ்வார். திருமங்கையாழ்வார். மதுரகவியாழ்வார்.
ஆண்டாள் . இவ்விருவருடன் பன்னிருவர்.
நூல்.
கட்டளைக் கலித்துறை.
சீர்மேவு செந்தமிழ்ச் சொற்சேர் நிகண்டிற் சிறந்தமுல்லைத்
தார்மேவுகோவர்த் தனர்கோவலரிப்பர் தாமெனமுப்
பேர்மேவுகோவசி யர்க்கிடமானது பேருலகில்
வார்மேவுபைம்பொற் பிருந்தாவன நந்த மண்டலமே.
(இதன்பொருள்) சிறப்பு பொருந்திய செவ்விய தமிழ்ச் சொற்களா லமைந்த நிகண்டின் கண்ணே எடுத்துக் கூறப்பட்ட மேன்மையான முல்லை மலராற் றொடுக்கப்பட்ட மாலையைத் தரி த்த கோவர்த்தனர் , கோவலர், இப்பர் என்னு மூன்று பெயரை வகித்த கோவைசியர்களுக் கிடமாயுள்ளது. பெருமை வாய்ந்த உலகத்து நெடிய புகழமைந்த பசும்பொன்னைப்போ லுயர்வாகக் கொள்ளும் பிருந்தாவனத்தை யுடைய நந்தமண்டல மாகும் என்ற வாறு.
(1)
உதாரணம்.
மண்டல புருடன், நிகண்டு.
இளங்கோக்கண் மன்னர் பின்ன ரிப்பரெட்டியர் காராளர்
வளம் பெறுவாழ் வேளாளர் வசியர்தம் பொதுப்பேராறாங்
கிளந்தகோக் காத்தன் மற்றுங் கிளர்பொரு ளீட்டலேரை
விளங்கவே யுழலான் மூன்று குலம்பெறும் வேறு சொல்வாம்,
-------------
வந்தகோவலருடன் கோவர்த்தனரிப்பர் முப்பேர்
முந்து கோவசிய ரென்று மொழிந்திடும் வணிகர் நாய்கர்
தந்த நூற் பரதர் முப்பேர் தனவசி யர்க்கே சாற்றும்
முந்துபூவசியர் முப்பே ருழவர் மேழியர் வேளாளர். (2)
பிங்கலந்தை நிகண்டு
(வைசியர் பொதுப்பெயர் )
773ம் - சூ. தாளாளரிப்பர் தருமக்கிழவர்
வேளாளரிளங்கோக்கள்
வைசியர் பொதுப்பெயர்.
(கோவைசியர் பெயர் )
775 - சூ. ஒருகுலனாகித் தொழில் வேறு படுதலிற்
தொழிறொறும் பகர்ந்த தொல் பெயர் கூறிற்
கோவல ரிப்பர் கோவர்த்தன ரெனச்
சீரிய பிறவுங் கோவைசியர்க்கே .
---------------
சந்திரமண்டலஞ் சூரிய மண்டலந் தாருநின்ற
இந்திரமண்டல மெம்மண்டலமு மிதற்கிணையோ
செந்திருமான் முன்பு கோபாலர்தாமகிழ்ச் சேயரென
வந்தமுதுண்டிரு நாடான துநந்த மண்டலமே. (2)
(இ-ள்) திருமால்-முற்காலத்தில் கோபாலர்கள் தம் சேயெ என்று மகிழ்ந்து கொண்டாடும்படி திருவவதாரஞ் செய்து பா லுண்டருளிய அழகிய நாடானது இந்நந்தமண்டல மாகும். இம் மண்டலத்திற்குச் சந்திரலோகமும், சூரியலோகமும், பஞ்சதருக் கள் நிலைபெற்றுப் பயனைக் கொடுக்கும் இந்திரலோகமும், மற்ற எவ்வகையான லோகங்களும் ஒப்பாகுந் தகுதியுடையனவாமோ? எ - று. (2)
உ-ம். பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயம்.
வட்டுடைச் செருகு முல்லையங்குழலவ் வயிற்றிடைத் திகழ வார் கோடுங்,
கட்டெழிற் கோலுங் கைம்முதலணைத்துக் கனிய முதிடக்கரத் தேந்தி,
விட்டொளிர் பசும்பொன் னாழிமெல் விரலின் மிசைவதற் குரியன தாங்கி,
யிட்டபூந்தவிசி னினிது நின் றயின்றா னிமையவர் குழாத்தவி நுகர்வோன்.
தங்குமாப் பொருளுந் தருமமுந் துணையாத் தம்பகைப்புலன் களைந் தடக்கும், பொங்குமாதவமு ஞானமும் புணர்ந்தோ ரியா வர்க்கும் புகலிடமான, செங்கண்மால் பிறந்தாண் டளப்பருங்கா லந் திருவின் வீற் றிருந்தன ரென்றால், அங்கண்மா ஞாலத் தந்நக ரொக்கு நன்னக ரமரர் நாட்டியாதோ.
---------------------
எண்டருபற்ப லகிலாண்டகோடி யெழில் வயிற்றுட்
கொண்டருள் கண்ணன் றிருநாபியம்புயங் கோயிலெனப்
பண்டுறைநான்முக னன்பாக முன்னம் படைத்திடும்.
மண்டலத்தைந்து நிலத்தோர் நிலநந்த மண்டலமே. (3)
(இ-ள்) யாவராலு மதிக்கத்தக்க பலபலவாகிய அகிலாண்ட கோடிகளையெல்லாம் அழகிய திருவயிற்றுட் கொண்டருளிய திரு மாலினது திருவுந்தித் தாமரையே திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய நான்கு முகத்தினையுடைய பிரமதேவன் முந்தி விருப்பத்தோடு சிருஷ்டித்த இவ்வுலகத்தில் ஐவகை நிலத்தினுள் ஓர் நிலமாக அமைந்துள்ளது நந்தமண்டலமாகும் எ-று. (3)
உ-ம். பொருளதிகாரம் அகப்பொருள் விளக்கம் அகத்திணையியல்.
-
குறிஞ்சிப்பாலை முல்லை மருத நெய்தலைந்திணைக்
கெய்திய பெயரே.
--------------
அருளுருவாகிய கோபாலர்வாழ்மனை யைந்திலக்கந்
தெருவிரண்டாயிரத் தைஞ்னூறு மந்தையிற் சேரிளமைப்
பருவமுறுங்கன் றுடன் பாற்கபிலைப் பசுவனந்த
மருவுவளந்திக ழாய்ப்பாடிதானந்த மண்டலமே. (4)
(இ-ள்). கருணையே ஓர் உருவமெடுத்து வந்ததென்று சொல் லத்தக்க உதாரத்துவமுடைய கோபாலர்கள் வசிக்கின்ற ஐந்துல க்ஷந் திருமாளிகைகளும் இரண்டாயிரத்தைஞ்நூறென்னும் தொகை கொண்ட திருவீதிகளும் மந்தையினிடத்துச் சேரும் இள மைப் பருவமுற்ற கன்றுகளோடு கூடிய பாலைத் தரும் அனந்தம் கபிலைப்பசுக்களும் பொருந்தி விளங்காநின்ற வளங்கள் அமைந்த திருவாய்ப்பாடி யென்னும் கோகுலமும் நந்த மண்டல மாகும் எ-று. (4)
உ-ம். ஹரிவமிசம்
மஞ்சிலக்காகிய கரத்தர் மாமதிப்
பிஞ்சிலக்காகிய குணத்தர் பெட்புறும்
பஞ்சிலக்காம்பதம் பொதுவர் பண்புவீ
டஞ்சிலக்கந்தொகை யமைந்த தாழியாய்.
ஆயர்தம் மறுகுதா னன்ன பாடியி
லாயிர மிரண்டொடைஞ் ஏறதாகுமா
லாயிரங் கண்ணனை நோக்கிலைம்பதி
னாயிரம்விழிகடான் வேண்டுமாழியாய்.
---------------
தசாங்கம்.
கோவர்த்தனம்யமு னாநதி கோகுலங் கூறுபுகழ்
மேவக்கருடக் கொடியேற்று பேரிகை மென்றளவப்
பூவெற்றி வேழங் கவனப்பரியொளிர் பொற்கமல
மாவுற்றமார்பர் சொல் லேவலுள்ளார் நந்த மண்டலமே. (5)
(இ-ள்) கோவர்த்த னமாகிய (மலையும் ) யமுனையாகிய நதி யும்) கோகுல மாகிய (நகரமும்) கூறுகின்ற புகழ்மேவிய அழகிய கருடனாகிய (த்வஜமும்) அடிக்கப்படுகின்ற (முரசமும்) மெல்லிய முல்லையாகிய (மாலையும்) வெற்றி விளங்குகின்ற (கஜமும்) விரைந்து செல்லப்பட்ட (பரிமாவும்) பிரகாசிக்கின்ற பொற்றாமரைமலரில் விளங்கும் இலக்ஷ்மி பிராட்டி மேவிய மார்பையுடைய ஸ்ரீக்ருஷ்ண மூர்த்தியின் சொல்லாகிய (ஏவலும்) ஆகிய தசாங்கங்களையுடைய யாதவர்கள் வாழும் இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (5)
இச்செய்யுள் இறுதியிலுள்ள நந்தமண்டலம் என்பதே நாடா தலின், தசாங்கத்துள் நாடொழிந்த ஒன்பது அங்கங்களையே கூறினர்.
---------------
முகமருப்பிந்திரன் கண்பா நுவேதன் முசுப்பிடைமால்
தகுபிறக்கீச னுமைமுலைவாணிதன் கோமயம்பொன்
றொகுமயிர்தேவர் வயிறங்கிமேதை சொலுமுண்மைவான்
மகிழ்புண்யமாகுங் கபிலையுள்ளார் நந்த மண்டலமே. (6)
(இ-ள்) முகமும், கொம்புமாகிய இவற்றில் இந்திரனும், கண் களினிடத்துச் சூரியனும், [$]இமிலினிடத்துப் பிரமனும், இடையி னிடத்துத் திருமாலும், அவ் அவயவங்களுக்குத்தக்க பிட்டபாகத் தில் சிவபிரானும், உமாதேவியாருமாகிய இருவரும், முலைகளினி டத்துக் கலைமகளும், கோமயத்தில் திருமகளும், நெருங்கிய உரோமங்களினிடத்துத் தேவர்களும், வயிற்றினிடத்து அக்கினி யும், மேதையினிடத்து மேம்படுத்துக்கூறும் உண்மையும், வாலி னிடத்து விரும்பி மகிழத்தக்க தருமமும் விளங்கிய கபிலைப் பசுக்களையுடைய கோபாலர்களது இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (6)
--
[$]இமில் - கொண்டை .
உ-ம் பாரதம், அனுசாசநிக பருவம், கன்னிகாதானவரன் மகிமை யுரைத்த சருக்கம்.
ஆனனந்தாலுகொம் பதனி லிந்திரன்
றானுயர் நாசியில் வாயுதாள்களின்
மோனமாமியக்கர் கோன் முசுப்பில் வேதிய
னேனைய கண்களி னிரவி யெய்துமே.
பிட்டபாகஞ்சடைப் பிரானுந் தேவியும்
வட்டமா ருதரமே கனலின் வானவ
னிட்டமா மிடையினி லிருக்கு மாழியான்
றிட்ட நெஞ்சினிற்பக னென்னுந் தெய்வதம்.
உதிரமே சந்திரன் மேதையுண்மையா
மதிதரு முலைகளே வாணி கோசலந்
துதிதரு கீர்த்திகோ மயஞ்சுலக்குமி
மதியு மவ்வானெனின் வகுப்ப தென்கொலோ.
----------------
சொல்லைப்பொருளைத் தொகுத்த தொல்காப்பியச் சூத்திரத்தின்
[#]முல்லைக்கருப்பொரு ளீரோழினிற்சொன் முதற்கடவுள்
குல்லைப்புயத்தர்பஞ் சாயுதர்கஞ்சனைக் குஞ்சரத்தை
மல்லைச்செயித்த திருமால்பதிநந்த மண்டலமே. (7)
(இ-ள்) சொல்லிலக்கணத்தையும், பொருளிலக்கணத்தை யும் தொகுத்துக் கூறிய தொல்காப்பியச்சூத்திரத்துள் ஐவகைப் பட்ட நிலங்களுள் பதினான்கு கருப்பொருள்களையுடைய முல் லைநிலத்துக்குரிய முதன்மைக் கடவுளாகிய எம்பிரானும், திருத்து ழாய் மாலையை யணிந்த புஜங்களையுடையவரும், சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் பஞ்சாயுதங்களைத் தரித்தவரும், கம் ஸனையும், குவலயாபீடமென்னும் மத்தகஜத்தையும், மல்லர்களை யும் ஜெயித்தவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணபகவானுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (7)
----
[#] முல்லைக்கருப்பொருள் முராரி தெய்வமே
தொல்லைக்குறும்பொறை நாடன்றோன்றல்
மடியாக்கற்பின் மனைவிகிழத்தி
இடையரிடைச்சிய ராயராய்ச்சியர்
கானவாரண மான் முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப்பிடவங்
கொன்றைகாயா மன்றலங்குருந்தந்
தாற்றுக்கதிர்வரகு சாமைமுதிரை
யேற்றுப்பறை முல்லை யாழ்சாதாரி
சாமைவரகு தரமுடன் விதைத்த
லவைகளைகட்ட லரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றைத் தீங்குழலூதன்
மூவினமேய்த்தல் சேவினந்தழுவல்
குரவையாடல் குளித்தல் கான்யாறே.
உ-ம். தொல்காப்பியச்சூத்திரம்.
மாயோன் மேய காடுறையுலகமுஞ்
சேயோன் மேய மைவரையுலகமும்
வேந்தன் மேய தீம்புனலுலகமும்
வருணன் மேய பெருமணலுலகமும்
முல்லை குறிஞ்சி மருதநெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே.
-------------
கன்மழைதாங்கக் குடையாமலையொன்று கஞ்சமலர்
நன்முகமாயிர மாயனைக்காட்டு நதியுமொன்று
பொன்னிறக்குற்ற கருடனுண்டாமணிப் பொய்கையொன்று
மன்னிவைமூன்று சிறப்புளதாநந்த மண்டலமே. (8)
(இ-ள்) இந்திரன் ஏவலாற் பெய்த கன்மழையைத் தடுத் தற்குக் காரணமான குடையாகிய கோவர்த்தன மென்னும் ஓர் மலையும், செந்தாமரை மலர்போலும் அதிமநோஹாமான திருமு கத்தையுடைய ஆயிரம் திருமாலின் திருவுருவங்களை அக்குரூரருக் குக் காட்டிய யமுனையென்னும் ஓர் நதியும், பொன்னினது நிறத்திற்கொப்பான தேஜஸுடைய கலுழன் நீங்கா துறையும் முத்துக்களைக் கொழிக்கும் ஓர்தடாகமும் ஆகிய இம்மூன்று சிறந்த பொருளையும் உடையது நந்தமண்டல மாகும் எ-று. (8)
உ-ம். பாகவதம், அக்குரூரன் வந்த அத்தியாயம்.
தூம்புடை யெயிற்றவி சுடிகைப்பாழிவாய்ப்
பாம்பின் வெம்பஃறலை பனிப்பவாடிநின்
றாம்பலந் தீங்குழ லிசைக்கு மண்ணலைப்
பூம்புனற் குடைகுவான் புனலுட் கண்டனன்.
அரவின்மேலாடிய அத்தியாயம்.
இருஞ்சிறைக்கருளன் மீனம் கெறிதலு மெறியலென்றோ
பருந்தவன் சபித்தலாலே யாங்கணவந் தணுகானாகப்
பொருந்தினன் யமுனையாற்றுப் பூந்தடமென்று சாவா
மருந்தினு மமிழ்தமூற மாதவன் வகுத்தான் மன்னோ .
-------------------
வீசுங்கதிரவன் கற்பயிராக்கினி மின்சுதன்மெய்
பேசுந் தயாகரன் வைவச்சுதமனுப் பின்னையென்றே
தேசம் புகழ வரும்யமுனாத்தி தீர்ந்தன்னில்
வாசஞ்செயுஞ்சற் குணசீலர்வாழ்நந்த மண்டலமே. (9)
(இ-ள்) விசுகின்ற ஆயிரங் கானங்களையுடைய சூரியனும், அவனது கற்பிற்குரிய அயிரக்கின் கம்மவாபியம், ஆகிய இவர்களுக்குப் புதல்வனான மெய்ம்மையே கூறுகின்ற கருணைக் கிடமாகிய வைவச்சுதமநுவுக்குப்பின் பிறந்தா ளென்று உலகத்தா ரெல்லாம் புகழும்படிக்கு வந்த யமுனாநதியின் கரைக்கண்ணே வாசஞ்செய்கின்ற நற்குணமும், நல்லொழுக்கமும் உடைய கோ பாலர்களுக் கிடமாயுள்ளதும் நந்தமண்டலமாகும் எ-று. (9)
உ-ம். அரிவமிசம்.
தினகரன்றனைச் சேரயிராக்கினி
வனிதையே மனு வைவச்சுதன்றனை
யனுசியென்ன வமுனையை யன்புடன்
புனிதமாயுயிர்த் தாண்மணிப் பூணினாள்.
----------------
ஆனிரையோசையும் பால் சொரியோசையு மாயர்பைந்தார்த்
தேனிரையோசையும் வெண்டயிர்மத்தொடு செங்கைவளை
தானிரையோசையும் வேய்ங்குழலோசையுந் தாரணியில்
வானிரையோசையின் மிக்க தன்றோநந்த மண்டலமே. (10)
(இ-ள்) பசுக்கூட்டத்தினது முழக்கமும், அவ்வானிரைகறக் கப்புகும் ஆயர்கள் தாங்கிய கலசத்திடத்துப் பாலைப் பொழிவதா லுண்டான ஓசையும், ஆயர்கள் தரித்த அன்றலர்ந்த முல்லைத்தா ரிடத்துத் தேனைப் பருகும்படி வந்து தங்கிய வண்டினங்களின் ரீங்காரமும், வெண்மையாகிய தயிரினிடத்துப் புகுந்து அத்தயி ரைக் கலக்கும் மத்தினது முழக்கத்தோடு தயிர்கடையாநின்ற ஆய்மகளிர் சிவந்தகைகளின் கண்ணே அணிந்த வளையல்கள் ஒலிக் கும் ஆரவாரமும், கோவலர்கள் ஆனிரையைக்கூட்டுதற்குக் குறிக் கும் புள்ளாங்குழலினது இனிய ஓசையும், ஆகிய இவ்வொலி இம் மகிதலத்து மேகத்தினது வரிசையினின்றும் உண்டான இடியோ சையைக் காட்டிலும் மிகுந்தொலித்தற்கிடமானதும் நந்தமண்ட லமாகும் எ - று. (10)
---------------
பழுதிலருந்தமிழ்ச் சங்கப்புலவர்தம் பாலிற் சென்றே
யெழுதவரிய கவிபாடியுமெண்ணிலனெனச்செல
பொழுதினவரொடு மீசர்பின் செல்லப் புலவருடன்
வழுதி சென்றேத்து மிடைக்காடர்வாழ்ந்த மண்டலமே. (11)
(இ-ள்) குற்றமில்லாத அருந்தமிழை ஆராய்ந்துணர்ந்த சங்கப்புலவர்களிடத்து இடைக்காடர் சென்று, பிறரால் எழு தற்கரிய பாடல்களைப் பாடி, அப்பாட்டுகளைப் பாண்டியன் பொ றாமையால் மதித்திலன் என்று பிணங்கிச் செல்லும் பொழுது அவரோடு சங்கத்தலைவரான சிவபெருமானும் பின் செல்லவும், தன்னுடனிருந்த புலவர்களோடு அப்பாண்டியன் திடுக்கிட்டுச்செ ன்று துதிக்கப் பெற்ற அவ்விடைக்காடர்க் கிடமானதும் நந்தமண் டலமாகும் எ-று. (11)
உ-ம். இடைக்காடர் பாடியது.
ஆற்றங் கரையி னருகிருக்கு மாமரத்தில்
காக்கை யிருந்து கஃகஃகெனக் - காக்கைதனை
எய்யக்கோ லில்லாம லிச்சிச் செனவெய்தான்
வய்யக்கோனார் தன் மகன்.
----------------
பாவேந்தர் போற்றுந் தமிழவ்வைபாடப் பனந்துண்டந்தான்
பூவேந்திக்காய்த்துப் பழுத்துப்பங்கிட்ட புதுமைகண்டே
மூவேந்தர்வாழ்த்திநல் லச்சுதமிட்ட முறைமை பெற்ற
மாவேந்து பூங்குழன் மாதர்க்கிடந்த மண்டலமே. (12)
(இ-ள்) கவிவாணர்கள் பரவுகின்ற தமிழுணர்ந்த ஒளவை யார் தம் கருத்துக்கிணங்க உதவி புரிந்த ஆயப்பெண்களாகிய "அங் கவை " "சங்கவை” யென்பவர்கள் மனமகிழும்படி ஓர் பாசுரம் பாடியதனால் அவர்களுடைய வீட்டின் முற்றத்தில் தறிக்கப்பட்டுக் கிடந்த பனந்துண்டம் தழைத்துப்பூத்துக் காய்த்துப் பழுத்துச் சேரசோழபாண்டியரென்னும் மூவேந்தர்கட்கும் பங்காக மூன்று பழங்களைத் தந்த அதிசயத்தைக்கண்டு, அம்மூவரசரும் வாழ்த்தி, நன்மையாகிய அட்சதை யிடப்பெற்ற முறைமை யமைந்த பெரு மை பொருந்திய பூமாலை யணிந்த கூந்தலை யுடைய அவ்வாயர் பெண்களுக்கியமானதும் நந்தமண்டலமாகும் எ - று. (12 )
உ-ம். ஒளவையார் அருந்தமிழ்
திங்கட்குடையுடைச் சேரனுஞ்சோழனுந் தென்னவனு
மங்கைக்கறுகிட வந்து நின்றார் மணப் பந்தரிலே
நுங்குக்கண் முற்றி யடிக்கண்கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.
--------------
காவிந்திரனிரை மீட்டருள் சேவகன் காதனண்பன்
பூவிந்திரனிறை செலவப்பது முகப் பூபற்கின்பக்
கோவிந்தையேழ் செம்பொற் பாவையீராயிரங் கோவு நல்கு
மாவிந்தத் திண்புயக் கோவிந்தாவாழ்ந்த மண்டலமே. (13)
(இ-ள்) கற்பகச் சோலையை யுடைய இந்திரனை யொப்பவனும், வேடர் ஐம்பத்தாறாயிரவரால் கவர்ந்து கொள்ளப்பட்ட நிரையை மீட்டருளிய சேவகனுமாகிய சீவக்குமரனிடத்துக் காத லமைந்த நண்பனான பூலோக இந்திரன் போல நிறைந்த செல் வங்களை யுடைய பதுமுகனுக்குக் "கோவிந்தை" யென்னும் தம் கன்னிகையையும், அக்கன்னிகைக்கு ஸ்திரீதனமாக செம்பொற் பாவை ஏழையும், பசு இரண்டாயிரத்தையும் கொடுத்தவனும், பெருமையையுடைய விந்தமென்னும் மலை போலும், திண்ணியதோள் களைப் பெற்றவனுமாகிய நந்தகோன் முதலிய கோவிந்தர்களுக்கிட மானதும் நந்தமண்டலமாகும் எ-று. (13)
உ-ம். ஜீவகசிந்தாமணி - கோவிந்தையாரிலம்பகம்
ஏறங்கோண்முழங்கவாய கெடுத்துக்கொண் டேகிமூதூர்ச்
சாறெங்குமயரப்புக்கு நந்தகோன் றன்கையேந்தி
வீறுயர்கலசநன்னீர் சொரிந்தனன் வீரனேற்றான்
பாறுகொள்பருதிவைவேற் பதுமுக குமரற்கென்றே.
நலத்தகையவட்குநாகா னாயிரத்திரட்டி நன்பொ
னிலக்கணப்பாவையேழுங் கொடுத்தனன் போகவிப்பா
லலைத்தது காமன்சேனை யருநுனை யம்புமூழ்க
முலைக்குவட் டிடைப்பட்டாற்றான் முத்துக்கமுயங்கினானே.
-----------------
காசிமடுவின் மறைக்கிழவோன் விழக் கண்டுமையாள்
தேசுறுவிப்பிரியாயெடுப்பீர்சுத்த தேகரென
ஆசுமனத்த ரயலஞ்சி நிற்க வகந்துணிந்து
மாசிலனென்றறிந் தேயெடுத்தோனந்த மண்டலமே. (14)
(இ-ள்) வாரணாசிக்கண் உள்ள தடாகத்தினிடத்து ஓரந்த ணன் வீழ்ந்ததைப் பார்த்து பார்ப்பதி தேவியார் அழகுற்ற பார்ப் பனக் கன்னிகையி னுருவ மெடுத்துத் தூய்மையாகிய சரீரத்தை யுடையவர் இவ்வந்தணனை யெடுப்பாராக வென்று கூறக் குற்ற மமைந்த மனமுடைய பலர் அயலிடத்து அஞ்சி வாளாவிருக்க மனந் துணிவுற்று யான் குற்றமில்லேன் என நன்கறிந்து அவ்வந் தணனை எடுத்தவனாகிய யாதவனுக்குரிய இடமும் நந்தமண்டல மாகும் எ-று. (14)
உ-ம். காசிகாண்ட ம்.
சீதமடுக்குள் மீதொருவிப்பிர தேகவிருத்தன் விழ
மாதுமைவிப்பிரி யாகிவினைத்தெறு வார்களெடுப்பிரென
வோதநடப்பவர் யாரு நடுக்குற வோர்தொறுவன் விசுவ
நாதனிடத்துள வாதரவத்தினை நாடியெடுத்தனனே.
---------------
சிலையொத்தவாணுதற் பொன்னியலைக்கவி செப்பிய சொல்
நிலைமத்தின் முன் சென் றரசற்கறிவிக்க நின்றபொழு
தலையொத்தளையின் றுமிதந்தெறிக்குமென் றன்று சொன்ன
மலையொத்தகொங்கைமங் கைக்கிடங்காணந்த மண்டலமே. (15)
(இ-ள்) வில்லையொக்கும் ஒளி பொருந்திய புருவத்தையும் வெண்பொன் போலும் நிறத்தையுமுடைய சரஸ்வதிதேவியார் கம்பநாட்டாழ்வாரின் நாவினிடத்திருந்து அழகாகக் கூறிய பாசு ரத்தில் சொல்லிய துமிதமென்னுஞ் சொல் இராமாயணத்தைப் பாடுவித்த சோழமகாராஜனுக்கு உலகவழக்கில் உண்டென்று அக்கம்பநாடர் அறிவித்தகாலை தயிர்கடையும் நிலைமத்தின் முன் னே சென்று நின்ற போது அலைபோன்று தயிர்த்துமிதம் தெறிக்கு மென்று அக்காலத்துச் சொன்னவளும், மலையோ டொப்பிட்டுக் கூறும் தனங்களையுடையவளுமாகிய ஆபமங்கைக்கு இடமான தும் நந்த மண்டலமாகும் எ - று
உ-ம். இராமாயணம், உயுத்த காண்டம் சேதுபந்தனப்படலம்.
குமுதனிட்ட குலவரை கூத்தரில்
திமிதமிட்டுத் திரையுந் திரைக்கடற்
றுமிதமூர்புக வானவர் துள்ளினா
ரமுதமின்னு மெழுமெனு மாசையால்.
----------------
தருங்காமதேனு நிகரானபோசன் றரணிதனை
யொருங்காக நல்கச்சு லோகஞ்சொன்னோனை யொரு நொடியிற்
பெருங்காவியஞ்சொ னிபுணனைப்பாரப்ர சங்கனென
வருங்காளிதாசனை முன்வளர்த்தோர் நந்த மண்டலமே. (16)
(இ-ள்) வேண்டுவார் வேண்டுவனவற்றை வேண்டியாங்குத் தருகின்ற காமதேனு வென்னும் பசுவை நிகர்த்த போஜராஜன் தன்னா லாளப்படும் பூமி முழுதும் , ஒரு சேரக்கொடுக்கும்படி வட மொழியில் சுலோகம் செய்தோனும், ஒரு நொடிப்பொழுதில் பாரகாவியங்களையும் பண்ணத்தக்க சதுரத்தன்மையுடையவனும், பிரசங்கிப்பதில் சிறந்தவன் எனக் கூறப்படுவோனும் ஆகிய காளி தாசனை. அக்காளியினிடத்து வரம் பெறுதற்கு முந்தி விரும்புவன கொடுத்து வளர்த்தவர்க் கிடமானதும் நந்தமண்டலமாகும் எ - று
--------------
துதிகோகுலம்பிருந் தாவன நல்லர்ச் சுனநிலையப்
பதிசூரசேனமி ரேவதிவெற்புப் பயில்யமுனா
நதிகோபிகாபுரங் கோவர்த்தனம்புட்ப நாமகிரி
மதுராபுரியினு மால் வாழ்வது நந்த மண்டலமே. (17)
(இ-ள்) கொண்டாடத்தக்க கோகுலமும், பிருந்தாவனமும், நன்மையைத் தருகின்ற அருச்சுனநிலையப்பதியும், சூரசேனமும், இரேவதி வெற்பும், யாவரும் புகழ்கின்ற யமுனாந்தியும், கோபிகா புரமும், கோவர்த்த னமும், புஷ்பநாமகிரியும், மதுராபுரியும், இன்னும் திருமால் வாழ்தற்குரிய பலவிடங்களும் நந்தமண்டலமாகும் எ - று. (17)
----------------
ஐவேலசதி யிரவினிலவ்வைக் கமுதளித்து
மெய்வேதம் போனிற்குங் கோவை கொண்டோன்புவி மீதிற்றவஞ்
செய்வோர் தனிலும் பசுக்காவன்மிக்கெனச் செய்யுமன்பன்
தைவலைவண்ணன் சதியுடன் வாழ்நந்த மண்டலமே. (18)
(இ-ள்) இராக்காலத்து ஆதரிப்பாரின்றி வந்த ஒளவையாருக் குப் பொன்னிலையில் உணவளித்து உண்மையாகிய மறைபோல அழியாது நிலைபெற்ற அசதிக்கோவை யென்னும் பிரபந்தத்தை அந்த ஒளவையினிடத்து ஏற்றுக்கொண்டவனான அழகிய வேற் படையையுடைய அசதிப்பிள்ளை யென்பவனும், இவ்வுலகத்துத் தவஞ்செய்வோரது நன்மையைக்காட்டிலும் ஆவைக் காத்தோம் பல் மிக்கதென்று செய்கின்ற அன்பையுடைய கருங்கடல் போலும், திருமேனியையுடைய ஸ்ரீ மகாவிஷ்ணுவும் திருமகளோடு வாழ்தற்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (18 )
உ-ம். ஒளவையார் அசதிக்கோவை
அற்றாங்குவேற்கரத் தைவேலசதி யணிவரை மேன்
முற்றாமுகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவரிட்டமுங் கைப்பொருள்கள்
அற்றாரிளமையும் போலே கொதிக்கு மருஞ்சுரமே.
---------------
அடகென்று சொல்லி பமுதமுன்னிட்டவ ணங்கின் செங்கைக்
கடகஞ் செறியு மெனும் பாடல் கொண்ட கனபுகழ்தான்
குடகங்குணகடல் வேங்கட வெற்புக் குமரிமட்டோ
வடகங்கைமேரு வரை சென்றது நந்த மணடலமே. (19)
(இ-ள்) கீரை பென்று கூறி சாவாமைக்குக் காரணமாகிய அமிரதததை எதிரிற் கொண்டுவந்து படைத்த அங்கவை சங் கவை யென்னும் ஆபப் பெண்களினுடைய செங்கைக்கண்ணே மணிக்கடகஞ் செறியும் என்னும் பாடலை ஒளவையினிடத்து அப்பெண்கள் ஏற்றுக்கொண்ட பெரும்புகழ் மேற்கில் குடகநா டும், கிழக்கில் கடலும், வடக்கில் திருவேங்கடமலையும், தெற்கில் குமரியுமாகிய எல்லையை யுடைய இத்தமிழ் நாட்டளவோ சென் றது. வடக்கின் கண்ணுள்ள மேருமலையும் கங்காநதியுமாகிய எல்லைவரையும் பரவுதற்குக் காரணமா யிருக்கின்றது நந்தமண்டல மாகும் எ-று. (19)
உ-ம். ஒளவையார் அருந்தமிழ்.
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
நெய்தான் பசந்து நிறஞ்சிவந்து - வெய்தாய்
அடகென்று சொல்லி யமுத மளித்தாளே
கடகஞ் செறியுமவள் கைக்கு.
--------------------
*நாற்கவிபாடும் புலவோர்வழிதப்பி நாஞ்செழியன
பாற்செலநல்கும் பரிசிலிற்பாதியுன் பங்கெனவென்
மேற்றமிழ் சொல்லுமென் றேயவர் செய்யுள்விரும்பிக்கொண்டே
மார்க்கமியம்பிய சுந்தரக்கோனந்த மண்டலமே. (20)
----------
[*] நாற்கவியாவன : - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி
(இ-ள்) நான்குவகையான கவிகளையும் பாடவல்ல புலவோர் தாம் செல்லக் கருதிய பாண்டியனது நகரத்திற்குப் போகும் வழிதப்பி அங்கு நின்ற சுந்தரக்கோன் என்னும் பெயருடையவ னைக் கண்டு அவ்வழியைக்காட்டின் நாம் பாண்டியன்பாற் செல் வதனால் அவன் கொடுக்கும் பரிசிலாகிய பொருள்களில் பாதிப் பொருள் உன் பங்காக்குவேம் என்று சொல்ல, எனக்குப் பொரு ளில் விருப்பமில்லை ; என்மேல் தமிழ்பாடுமென்று சொல்லித் தம் மீது அவர் பாடிய பாடல்களை விரும்பி ஏற்றுக்கொண்டு வழிகாட் டிய அச்சுந்தரக்கோனுக்கிடமானதும் நந்தமண்டலமாகும் எ - று.
உ-ம். மதுரைப்புராணம்.
பெரும் பொருளிலாசையிலை பேர்பெரிய சொக்கக்கோன்
பரிந்துள நுங்கவிதைகளிற் பண்புடையவென்றன் மேல்
திருந்த நவின்றிடுவீரேற் சேர்ந்தவழியானு மக்குப்
பொருந்தவுரை செய்வனெனப் புலவர்களுமியைந்தனரால்.
---------------
பாலும் பழமும் புசித்துப்ரபஞ்சத்திற் பற்றின்றி மேன்
மேலுந்திருப்பணி செய்யந்தகற்கு விழியருள் செய்
தேலும் புகழ்மலை வையாபுரியி லிருக்குந்திரு
மாலுடன் பொட்டொந்த மண்டலமே. (21)
(இ-ள்) .......... ........... புசித்து உலகவாழ்க்கையில் ஆசை யின்றி மேன்மேலும் திருப்பணி செய்ததனால் பெருமாள் என்னும் பெயரையுடைய கண்ணில்லாத யாதவனுக்கு இரண்டு விழி யும் தெரியச்செய்த புகழ்பொருந்திய மலைவையாபுரி யென்னும் பதியிலிருக்கும் திருமாலுடன் வார்த்தை கூறிய அப்பெருமா ளென்பானுக் கிடமானதும் நந்தமண்டலமாகும் எ-று. (உக) உ-ம். பிரசன்ன வேங்கடேசர் சந்நிதானமாகிய மலைவையாவூரிற் காண்க.
------------------
சந்தித்தவைவர் சபையினிற் கண்ணனைத் தாழ்வெனவே
நிந்தித்த துட்டச் சிசுபாலன்றன்றலை நேமியினாற்
சிந்தித்தவிடு பொடியானதாலிவர் தெய்வகுலம்
வந்திப்பவரை யரசாக்குவார் நந்த மண்டலமே. (22)
(இ-ள்) இராஜசூயமென்னும் யாகமண்டபத்தில் பலவரசர் களோடு கூடியிருந்த பாண்டவர்களாகிய தருமநந்தனன் முதலிய ஐவர்களுடைய சபைக்கண் கண்ணபிரானை இடைக்குலத்துப் பிறந்தமையால் தாழ்வுடையானெனப்பழித்த கொடிய சிசுபால னது முடி சக்கரத்தாற் சிதறுண்டு தவிடுபோற் பொடியான கார ணத்தால் மேலாகிய தெய்வத்தன்மை யளிக்கும் குலமாக எண்ணி வந்திப்பாரை அரசராகப்பண்ண வல்ல அக்கண்ணனுக் குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (22)
உ-ம். பாகவதம், சிசுபாலனைக் கொன்ற அத்தியாயம்.
நெடுமறைக் கிழவர்வைக நீணில வலயங்காக்கு
முடிகெழு வேந்தர்வைக முற்பட வழிபாடாற்றல்
படுநிரை புரப்பாற்கே கொல் பார்த்திவன் செயனன்றென்னா
விடு சுடர் முறுவனாற வெகுண்டன னெழுந்து நின்றான்.
--------------
செந்நெல்வயல் புடை சூழ்காஞ்சிமேவுந் திருவரதர்
சொன்னவரை நிகர் கோபுரமண்டபஞ் சுற்று மதில்
அன்ன நிறைமலர் வாவிமற்றியாவுமன் பாயமைத்த
மன்னர் புகழ்க்க நகராயர்தாநந்த மண்டலமே. (23)
(இ-ள்) செந்நெல் விளையத்தக்க கழனிகளால் நாற்புறமுஞ் சூழப்பட்ட காஞ்சிபுரமென்னுந் திருப்பதியில் எழுந்தருளிய வர தராஜப்பெருமாளுக்குப் பொன் மலையை நிகர்க்கும் கோபுரங்க ளும், பல பகுதிப்பட்ட மண்டபங்களும், சூழ்ந்துள்ள மதில்க ளும், அன்னப்பறவை நிறைந்த மலர்களையுடைய தடாகங்களும் மற்றவைகளும், அன்போடு திருப்பணி செய்வித்த அரசர்களாலும், புகழ்கின்ற கநகராயபிள்ளைக்குரிய க்ஷேத்திரமும் நந்தமண்டலமாகும் எ-று.
உ-ம். காஞ்சி வரதராஜப்பெருமாள் சந்நிதியில் திருப்பணி - கனகராயப்பிள்ளை கைங்கரியம் காண்க.
----------------
தெரிதமிழாகிய பாகவதந்தனிற் செப்புகின்ற
அரிதன் சரித்திரத் தோர்கதையோர்கவி யாகுமெனப்
பெரியவர்யாவருங் கொண்டாடிமெச்செம் பிரான் சதகம்
வரிசையுடன் சொன்ன கோபாலர்தாநந்த மண்டலமே. (24)
(இ-ள்) பல பாஷைகளிலுஞ் சிறந்ததென்று ஆன்றோரால் தெரிந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பாஷையினாலாகிய பாகவதத்திற் கூறிய விஷ்ணுவின் சரித்திரத்தமைந்த ஒவ்வொருகதை ஒவ் வொருகவியினும் அடங்குமென்று பெருமை யுடையோர் யாவ ரும் பாராட்டி வியக்கத்தக்க எம்பிரான் சதகமென்னும் பிரபந் தத்தை முறைமைப்படப்பாடிய கோபாலகிருஷ்ணதாஸர் என்ப வர்க்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று.
(உச) உ-ம். கோபாலகிருஷ்ணதாவரியற்றிய எம்பிரான் சதகம்.
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல் போற்று
மரிபத்தன் கோபால கிர்ஷ்ண னன்பால்
கேழ்வியாற் றன தறிவின் மிகுதியாலுங்
கிருபைகூர் குருகடாக்ஷத்தினாலும்
தாழ்விலா வெம்பிரான் சதகந்தன்னைச்
சாற்றினான் போற்றியன்ப ரேத்தும் வண்ணங்
கேழ்வியா லநுதினமுங் கீர்த்திப்பார்கள்
கிளர் விண்டு வைகுந்தத் துளராய்வாழ்வார்.
--------------
தனங்கொடுத்தோனு மணி கொடுத்தோனுந் தமிழ் சொலவ்வைக்
கனங்கொடுத்தோனும் புவி கொடுத்தோனுநல் லந்தணர்க்கா
வினங்கொடுத்தோனும் பரிமளசந்தன மீந்தவட்கெவ்
வனங்கொடுத்தோனு மனைவரும் வாழ்நந்த மண்டலமே. (25)
(இ-ள்) வரப்பட்ட வித்துவான்களுக்குப் புறஞ்செல்லாது பொருள் கொடுத்தோனாகிய வசாரத ஆனந்தரங்கப்பிள்ளை யென் பவனும், திருமாலின் செவிக்குக் குண்டலமும், செங்கைக்குக் கங்கணமும் அணிந்தோனாகிய பாயகனென்பவனும், தமிழ் மொ ழியை யுணர்ந்த ஒளவையாருக்கு அன்னமளித்தவனாகிய அசதிப் பிள்ளை என்பவனும், வீரராகவப் பெருமாளுக்கு நிலமுதலிய கொடுத்தோனாகிய மயிலை வேங்கடாசலப்பிள்ளை என்ப வனும், திருமாலுதித்தகாலத்து இருபதினாயிரம் பசுவினங்களைக் கொடுத்தோனாகிய நந்தகோபனும், நல்ல மணமுடைய சந்தனக்கு ழம்பைக் கொடுத்தவளாகிய முதிய கூனிக்கு மங்கைப்பருவ மளி - த்த ஸ்ரீ கிருஷ்ணதேவரும், சிறந்த மற்றக் கொடையாளிகளும் வாழுமிடம் நந்தமண்டலமாகும் எ - று. (25)
ஆமையொத்தைந்து மகத்துளடக்கு மருந்தவத்தோர்
ஏமுறுங்கங்கை யிடைமூழ்கமீன்வலை யீர்ப்பச்சிக்கிப்
பாமரன்கைக்கொள விற்றிடென்றேவப் பசுவளித்து
மாமுனிவன் சிறை மீட்டவர்வாழ்தந்த மண்டலமே. (26)
(இ-ள்) ஆமைபோல மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் பஞ்சேந்திரியங்களையும் தம்முளடக்கி அரிய தவத் தைச் செய்யாநின்ற ஒர் முனிவரர் இன்ப மிகுதற்குக் காரண மான கங்கையாற்றிடை மூழ்கித் தவஞ்செய்ய ஓர் பரதவன் மீனைப் பிடிக்கும் வலையை வீசி இழுக்க அதிலகப்பட்டு அவ்வலைஞன் கைக்கொண்டதனால் தம்மை விலைசெய்யென்று கட்டளை செய்ய, அப்படியே விற்றபொழுது பசுக்களைக் கொடுத்துப் பெ ருமையையுடைய முனிவரது சிறையை மீட்டவர்க்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (26)
உ-ம். பாரதம், அநுசாசநிகபருவம், கன்னிகாதான வரன் மகிமையுரைத்தசருக்கம்.
தன்விலை தந்ததா மென்று சாற்றலு
மன்வலிமிக்குயர் பசுவழங்கினான்
புனவலிவலைஞரும் போற்றிக்கைக் கொளா
முன்வினை நன்மையான் மொழியலாயினார்.
------------
பூதலமீதிற் புரவலர் கேட்கப் புராணங்களிற்
சூதர் வியாசர் சுகரோமபாதர்முன் சொல்லுமுயர்
யாதவகோத்திரத் தாரெந்தநாளு மிருக்குமிட
மாதளைகூவிளந் தாதகி சூழ்ந்த மண்டலமே. (27)
(இ-ள்) பூவுலகத்தைப் பரிபாலனஞ்செய்த அரசர்கள் கேட் கும்படி புராணங்களிற் சூதர், வியாசர், சுகர் , உரோமபாதர் முத லியவர்களால் முதன்மையாகச் சொல்லப்பட்ட மேன்மை பெர ருந்திய யாதவகுலத்தார் எக்காலத்தும் வசிக்குமிடம் மாதளை , வில்வம், ஆத்தி முதலிய விருக்ஷங்கள் சிறந்து சூழ்ந்த நந்தமண்ட லமாகும் எ - று. (27)
-----------
வெண்ணெய் திருடத் ததிபாண்டன் வீட்டினுண்
கண்ணைத்தெரியச்செய் தோர்சாடியிற்புகுங் கண்ணனைக்கண்
டுண்மையுடனந்தச் சாடியை மூடிக்கொண் டொண்சரண்சேர்
வண்மைவரந்தனைப் பெற்றவன் வாழ்நந்த மண்டலமே. (28)
(இ-ள்) வெண்ணெயைத் திருடுதற்பொருட்டுத் ததிபாண்ட னது வீட்டிற் சென்று விழியற்றவனாகிய அவனுக்கு இரண்டு விழி களும் தெரியப்பண்ணி ஓர் பாண்டத்துள் புகுந்த கண்ணபிரானை அவன் கண்டு பரமபதத்தையும் கொடுக்க வல்லானிவனே யென்னும் மெய்யன்புடனே அப்பாண்டத்தை மூடிக்கொண்டு அழகை யுடைய அக்கண்ணனது திருவடியிற் சேரும் வளப்பமாகிய வரத் தையும் பெற்றுக்கொண்ட அத்ததிபாண்டன் வாழ்ந்திருந்ததும் நந்தமண்டலமாகும் எ-று.
உ-ம். எம்பிரான் சதகம்.
திண்ணமுடன் கோபாலர் மனையில் வெண்ணெய்த்
திருடுகையில் கண்டவர்கள் துரத்தும் போது
கண்ணிலாத்ததிபாண்டன் மனையுட்புக்குக்
கண்கொடுத்தோர் சாடியிற்புக் கொளித்துக் கொள்ளப்
புண்ணிகராங்கண் வேண்டேன் கதிதாவல்லாற்
போகவிடேனெனச்சாடி மூடிக்கொள்ள
வெண்ணரிய பரமபத மவனுக்கீந்தா
யிறைவா நாராயணனே யெம்பிரானே.
---------------
புகாதே வெளியின் முகுந்தனை நெஞ்சுட் பொருந்தவுன்னி
யுகாதேகளத்தென் னுடன் சேர்ந்தவர் தமை யுய்வியென்ற
சகாதேவன் கோலெடுத் தான் மேய்த்தகீர்த்தி தனை மருவு
மகாதேவவங்கிசர் கோபாலர்வாழ்நந்த மண்டலமே. (29)
(இ-ள்) கண்ணனைப் புறத்துச்சொல்லாமல் தம் மனதிலே பொருந்தும்படி தியானித்துப் போர்க்களத்தில் இறவாமல் என்னு டன் சேர்ந்தவர்களைப் பிழைப்பிப்பாய் என்று வரம் பெற்ற சகாதே வன் கோலை யெடுத்துப் பசுக்களை மேய்த்ததனாலுண்டான புக ழை யடைந்த பெருமை பொருந்திய தெய்வ வமிசத்தாராகிய கோபாலர்களுக்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ - று. (29)
-------------
ஞாலத்திற்பாரியுங் காரியுஞ்சேரனு நல்லவது
கூலத்தினாற்செய்த நன்றி மனதிற் குறித்தவ்வையார்
நீலச்சிற்றாடைக்கு நேரெனும்பாட னெடிய திரு
மாலொத்துலகினி னின்றதுதாநந்த மண்டலமே. (30)
(இ-ள்) உலகத்தினிடத்துச் சுருமபுண்ணும்படி நறிய பூத் தேனைத் துளிக்கும் சுரபுன்னையை யுடைத்தாகிய நெடிய வழியினின்ற சிறிய பூக்களையுடைய முல்லைக்கொடி தடுத்தற்கு அது விரும்பினதாகக்கருதி பெரிய தேரைக் கொடுத்த மிகுதியான வெள்ளிய அருவிகள் பாயும் பக்கத்தினையுடைய பறம்பென்னும் மலைக்கரசனாகிய யாதவகுலத்துப்பிறந்த பாரியென்னும் வள்ள லும், காரியென்னும் வள்ளலும், சேரராஜனும் நன்மையை யுடைய அனுகூலத்தோடு செய்த உதவியை உள்ளத் தெண்ணி ஒளவையார் (நீலச்சிற்றாடைக்கு நேர் ) என்று பாடிய பாடல் நெடிய திருமால் போன்று ஓங்கி நிற்றற்கிடமானதும் நந்தமண் டலமாகும் எ - று. (30)
உ-ம். ஒளவையார் அருந்தமிழ்.
பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரியன் றீந்த களைக் கொட்டும் - சேரமான்
வாரா யெனவழைத்த வார்த்தையு மிம்மூன்று
நீலச்சிற் றாடைக்கு நேர்.
----------------
எல்லா வளமுந் தரச்சோழநாட்டையிந் நாற்புறத்தோர்
சொல்லானடத்திக் கிளைவாழவந்த துரந்தரிகன்
நல்லான்றன் கோவை யரங்கேற்றுவித்துப் பொன் னல்கித்தமிழ்
வல்லார் புகழ்சிங்கந் தித்தியப்பன்னந்த மண்டலமே. (31)
(இ-ள்) எல்லா வளப்பத்தினையுங் கொடுக்கும் சோழநாட் டின் நாற்புறத்துள்ளோரையும் தன் மொழியால் நல்ல நடையிலே செலுத்தி உறவினரோடு வாழும்படிக்குவந்த பெருமை யுடைய வனும் நல்லான் கோவை யென்னும் பிரபந்தத்தை அரங்கேற்று தற்கு வேண்டிய பொருளையும் கொடுத்துத் தமிழில் வல்ல புலவ ரால் புகழப்பட்ட சிங்கத்தை யொப்பவனும் ஆகிய தித்தியப்பக் கோன் வாழும் இடமும் நந்த மண்டல மாகும் எ-று. (31)
---------------
பொன்னேரியிற்புற் றிலான் பால் சொரியும் புதுமைகண்ட
பின்னேரிபோற்பல காவடிப்பாலைப் பெருகப்பெய்து
கன்னேர்குடைசெய் கரிக்ருஷ்ணமாலுருக் காணச்செய்து
மன்னேர்புகழ் கொண்ட வாய்ப்பாடியார் நந்த மண்டலமே. (32)
(இ-ள்) பொன்னேரி யென்னும் ஊரில் ஓர் புற்றினிடத்து ஒரு பசு தானே சென்று பாலைப்பொழிந்த புதிய செய்கையைக் கண்ட பின்னர் ஏரிபோல் பல காவடியிற் கொண்டு போன பாலை யும் மிகுதியாகச் சொரிந்து கோவர்த்தனமாகிய பர்வதத்தை ஒழு ங்கான குடையாகச் செய்த கரிகிருஷ்ணப்பெருமாளுடைய திரு வுருவத்தை வெளிப்படுத்தி நிலைபெற்ற அழகிய புகழைக் கொண்ட ஆய்ப்பாடியாருக்குரிய இடமும் நந்தமண்டல மாகும் எ-று. (32)
உ-ம். திருவாய்ப்பாடி புராணம், பிரசன்ன சருக்கம்.
வந்தபாலைவை கானதர் புற்றிடைப்
புந்தியார்ந்தபி டேகம்புரிந்தபி
னெந்தைமாய னெழில் மலர்க்கையினா
னுந்துகோனிலத் தூன்றி விளங்கினான்.
------------------
குணங்கார்முகினிகர் கோபாலர் வேற்றுக் குலத்தர் சொல்ல
இணங்கார்கைவந்தனஞ் செய்வதற்கேயிது வேனெனிலோ
அணங்காருமார்பனைப் பெற்றதினாலண்ட ராதலினால்
வணங்காததெய்வக் குலங்காணவர் நந்த மண்டலமே. (33)
(இ-ள்) சூற்கொண்ட மேகத்தின் நன்மையை யொத்த கொடையையுடைய யாதவர்களை அவரின் வேறாகிய குலத்தார் வணங்குவீரென்று கூறவும், கரங்களால் அஞ்சலி செய்வதற் கும் இவர் இணங்கார் ; இஃதேனெனில், திருமகள் தங்கிய மார் பையுடைய திருமாலைப் பெற்றதினாலும், அண்டரென்னும் பெய ரையுடையராதலினாலும், பிறரை வணங்காத தெய்வகுலத்தாரா கிய அவ் யாதவர்க்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ-று. (33)
உ-ம். ஒளவையார் அருந்தமிழ்.
மெய்வந்த கோவலர் தங்குலத்தாரை வெறுங்குலத்தோர்
கைவந்தனஞ்சொலின் வாய் வெந்திடுமந்தக் காரணங்கேள்
ஐவந்த வேள்வியி லைவர்க்குந் தெய்வமு மாகிநின்ற
தெய்வம் பிறந்த குலங்காணுநந்தன் றிருக்குலமே.
--------------
விசாகரைப் போலத் தமிழ் சொற்றியாகர் விளம்பியசத்
தசாகரமான பொருட்கோவை கொண்டுசத் தாங்க நல்கி
நிசாகரன் வெண்ணில வொப்பப்புகழை நிலை நிறுத்தும்
வசாரதவானந் தரங்கனும் வாழ்நந்த மண்டலமே. (34)
(இ-ள்) விசாகநாளில் அவதரித்த சண்முகனைப்போல் தமிழ் சொல்ல வல்ல தியாகராயப்புலவர் கூறிய எழுகடல்போ லும் பொருள்பரத்தலையுடைய கோவை யென்னும் பிரபந்தத்தை ஏற்றுக்கொண்டு ஏழுவகைப்பட்ட உயர்ந்த பொருள்களையும் அவருக்குக் கொடுத்து சந்திரனுடைய வெள்ளிய கிரணம் போல் தம் புகழை உலகத்தில் நிலையாக நிறுத்தின வசாரதமென்னுங் குடிப்பெயரையுடைய ஆனந்தரங்கப்பிள்ளை வாழ்தற்குரிய இட மும் நந்த மண்ட லமாகும் எ-று. (34)
----------------
பகுக்கின்ற முக்கனிப் பூமியிற்சற்கரைப் பந்தரிலே
யுகுக்கின்றதேன் மழைக் கொப்பாப்பெரிய ருளமகிழத்
தொகுக்குமதுர வரிசதகந்தனைச் சொற்றமிழால்
வகுக்குந் திருவ முடையானும் வாழ்ந்த மண்டலமே. (35)
(இ-ள்) வாழை, மா, பலா வென்று மூன்றாகப் பகுக்கும் முக்கனியாலாகிய பூமியில் சர்க்கரையாலிடப்படும் பந்தரில் பெய் யுந் தேன் மழைக்கொப்பாகப் பெரியோரது மனமகிழும்படி இனி மையைத் தருகிற அரிசதகமென்னும் நூலினை உயர்வாகச் சொல்லப்படுகின்ற தமிழாற்பாடிய செல்வமுடைய கோபால கிருஷ்ணதாசர்க்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ - று. (35)
---------------
அன்னைக்கமுத குடத்தைக்கொணர்ந்தளித் தன்றிசைத்த
சொன்னிற்கமாலுக்கும் வாகனமாகித் தொழுமடியார்
முன்னுற்றுவேண்டுங் கருமங்கள்யாவையு முற்றச்செம்பொன்
வன்னக்கருடக் கொடியுடையார் நந்த மண்டலமே. (36)
(இ-ள்) அன்னையாகிய வினதையினது அடிமை யொழிதற் பொருட்டு அமிர்தகடத்தைக் கொண்டுவந்து கொடுத்து அவ்வ மிர்தம் கொணர்ந்தகாலத்துத் தாம் கூறிய சொல் அழியாது நிற் கத் திருமாலுக்கும் வாகன மாகித் தன்னைத் தொழும் தாஸர்கள் முன்னே சென்று அவர்கள் வேண்டிய காரியங்கள் எல்லாவற்றை யும் முற்றச் செய்தருளுகின்ற செம்பொன்போலு நிறமுடைய பெரிய திருவடியாகிய கொடியைப் பெற்ற கோபாலருக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (36)
--------------
ஆபால் சொரிபண்ணை சூழ் பொன்னி நாட்டினை யாளவந்த
பூபாலர் தம்மிற் புராந்தகச்சோழனைப் பூருவத்திற்
கோபாலரான குணத்தைவிடாரென்று கூறும் வெண்பா
மாபாலருமறி வாரவர்வாழ்நந்த மண்டலமே. (37)
(இ-ள்) பசுக்கள் பாலைப்பொழிகின்ற வயல்களாற் சூழப் பட்ட சோணாட்டையாள வந்த அரசர்களுள் புராந்தகச்சோழனை இவன் "கோலெடுத்துக் கோத்துரத்துங் கோகநகச் செங்கைவடி வேலெடுத்துங் கோத்துரத்தல் விட்டிலன் " ஆகலான் முன்னர்த் திருமாலாகிய யாதவரான தன்மையை அரசர்கள் விட்டொழி யார் என்று ஒளவையார் சிறப்பித்துக்கூறிய வெண்பாவின் பொ ருளை அழகிய குழந்தைப் பருவமுடையாரும் அறிவார்கள் ; அங் ஙனம் கூறப்படும் யாதவருக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (37)
உ-ம். ஒளவையார் அருந்தமிழ்.
கோலெடுத்துக் கோத்துரத்துங் கோகநகச் செங்கைவடி
வேலெடுத்துங் கோத்துரத்தல் விட்டிலனே - சீலமிகு
பூபால ரானாலும் போமோ புராந்தகற்குக்
கோபாலரான குணம்.
------------------------
உரம் பெற்றதேவர் சுரநாரதர் முத லோர்கள் வெற்றிச்
சரம் பெற்றவிற்படை வேற்படைவாட்படைத் தானைக்கஞ்சாத்
திரம் பெற்றுவாழ்க வெனத்திருமான் முனஞ் செப்பியமெய்
வரம் பெற்றுயர் திரு வாய்ப்பாடிவாழ்நந்த மண்டலமே. (38)
(இ-ள்) வலியையுடைய கடவுளராலும் தெய்வத்தன்மை யடைந்த நாரதர் முதலிய இருடிகளாலும் தரப்பட்ட வெற்றி யைக் கொடுக்கும் அஸ்திரங்களைப் பெற்ற விற்படை, வேற்படை வாட்படை முதலியவற்றையுடைய சேனைகளுக்கஞ்சாது நிலை பெற்று வாழ்கவென்று முன்னர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியானவர் கூறிய உண்மையான வரம் பெற்றோங்கிய திருவாய்ப்பாடியும் நந் தமண்ட லமாகும் எ-று.
உ-ம். எம்பிரான் சதகம்.
நந்தகோபாலனுறுந் திருவாய்ப்பாடி
நகர்மீதிற்படையெடுத்து மண்டலீகா
வந்திடிலப்பகைவரெல்லா மடிவரென்றே
வரங்கொடுத்துப்பின்னகரங் கட்டுவித்தாய்
அந்தவரத்தாற்கஞ்சன் வரவே பஞ்சி
யசுராகளிற்பலரைவிடுத் துன்னைக் கொல்கைக்
கெந்தவகை தொடுத்தாலுஞ் செயித்தனேக
விராக்கதரைவதைத்தனைபே யெம்பிரானே
---------------
காலுக்கிசைந்த செம் பொன்னாற்குளம்புங் கவின் பெறக்கூா
மேலுற்ற கொம்பிற்பொற் குப்பியும் பெய்துநல விப்பிரர்க்குச்
சாலுற்ற கோக்களிருபதினா பிரந் தான் விஜய
மாலுற் செய்த போதளித்தோர் நந்த மண்டலமே. (39)
(இ-ள்) காலுக்குத் தகுதியான செம்பொன்னாற் செய்த குளம்பும், அழகுண்டாகக் கூர்மையான நுனியுடைய கொம்பிற் கணிந்த பொற்குப்பியும் பூட்டிப் பால் நிறைந்த இரு பிரம் பசுக்களை வெற்றி பெற்ற திருமால் கிருஷ்ணாவதாரஞ் செய்த போது நன்மை பொருந்திய அந்தணர்களுக்குத் தானஞ் செய் தோனாகிய நந்தகோபனுக்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ - று. (39)
உ - ம . பாகவதம் , கண்ண னுற்பவமுரைத்தவத்தியாயம்
சொரிதருபாலின துள்ளுகன்றின
புரையறு பசும்பொனாற் புனையப்பட்டன
விருபதினாயிர மிளநல்லானுவந்
தருமறைபவர்க்கவா வடங்கநல்கினான்
----------------
சகத்தாயமாதவ ரெல்லாம் புகழ்முல்லைத் தார்முகுந்தன்
இகத்தாயர் வீட்டில் வளர்ந்தானிளங்கன் றினந்தின மேய்த்
தகத்தாயபால் வெண் டயிர்நவநீத மருந்தியதான்
மகத்தாய நற்றவஞ் செய்ததன்றோந்த மண்டலமே. (40)
(இ - ள்) இவ்வுலகத்துண்டான தவமுடையோ ரனைவரும் புகழ்கின்ற முல்லை மலர்மாலை யணிந்த முகுந்தன் இவண் ஆயரு டைய மனையில் வளர்ந்து பசுக்களோடு இளங்கன்றினது இனத்தை யும் நாடோறுமேய்த்து அவ் ஆபர்கள் கிரகத்திலுண்டாகிய வெள் ளிய ஆன்பால், தயிர், வெண்ணெய் இவற்றை அமுது செய்த கார ணத்தால் பெரிதாகிய தவத்தையுடைபதும் நந்தமண்டலமாகும் (40)
-------------
பாற்கடன் முன்னங் கடைந்ததனிற்றன் படிவமுகில்
போற்கண்ணிற்றோன்றித் திருமாலழைக்கவப் போது செங்கை
மேற்கரகந்தண்டு கொண்டு முந்நூலுர மேவிய சன்
மார்க்கமுடன்வந் தருளன்பர்வாழ்ந்த மண்டலமே. (41)
(இ-ள்) முற்காலத்துத் திருப்பாற்கடலைக்கடைந்து அதில் தன் னுடைய நிறத்தைக் காட்டும் மேகத்தைப் போலக் கண்ணுக் கெதிரே தோன்றித் திருமால் கூப்பிட அப்போது சிவந்த கைக ளில் தண்டு, கமண்டலத்தைத் தாங்கி மார்பின் கண்ணே உபவீ தம் பொருந்திய சன்மார்க்கத்தோடு வந்தருளிய அன்பினருடைய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (41)
உ - ம் ஹரிவமிசம்.
அழைத்தலுமொருகைதண்டு கமண்டலமொருகையாக
மழைப்புயன்மின்னல் போல மார்பி னூலிலங்கத்தோன்றி
யிழைப்புயவமரரெல்லா மன்பனென்றேத்தவந்தான்
றழைக்கடநான்மருப்பு வெண்பகடதனைத்தந்த
-------------------
பணஞ்செய்தவல்குன் மலை செய்த கொங்கைப் பதுமமலர்க்
கணஞ்செய்தகால்கை முகம் விழியாளதி கற்பெனுமோர்
குணஞ்செய்தசிந்தை யரம்பையைத் தேவர் குழா மகிழ
மணஞ்செய்தமேன்மைப் புகழாயன்வாழ்நந்த மண்டலமே. (42)
(இ-ள்) பாம்பின் படம் போன்ற அல்குலும், மலைகள் போன்ற கொங்கைகளும், தாமரைமலரின் றொகுதி போன்ற கால்களும், கைகளும், முகமும், விழிகளும் ஆகிய இவற்றை யுடையவளும், சிறந்த கற்பென்கிற ஒப்பற்ற குணமமைந்த மனத்தையுமுடைய அரம்பைபைத் தேவர் கூட்டம் மகிழும் வண்ணம் மணம்புரிந்த மேன்மையும், புகழும் பெற்ற யாதவகுலத்திற் பிறந்த ஸ்ரீ கிருஷ் ணபகவானுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (42)
உ-ம். அரிவம்சம்
தருக்களைந்தொட ரம்பையர் தம்மையும்
பொருப்பறுத்தவன் பாலிற்பொதுமையாய்
விருப்பினீந்து விளங்கிய வன்பனுக்
கருட்பொதிந்தொ ரரம்பைம் ணஞ் செய்தே.
-------------
தண்கா நிழலில் வளர்தேவர்பாரிற் றபோதனர்கள்
எண்காதல்யாவையு மீந்தும்மிடத்தென்று மெய்துமென
வொண்கார்முகில்வண்ண மாலாரமுதி னுடன் பிறந்த
வண்காமதேனுவை நல்கப் பெற்றோர் நந்த மண்டலமே. (43)
(இ-ள்) குளிர்ந்த கற்பகச்சோலையினது நிழலினிடத்து வளர் கின்ற தேவர்களும், பூமியிலுள்ள தபோதனர்களும் மதிக்கத்தக்க விரும்பிய எல்லாப் பொருள்களையும் கொடுத்து உம்மிடத்திலே யே எப்போழ்தும் இக்காமதேனு தங்கியிருக்குமென்று ஒள்ளிய கரிய முகில்போலும் நிறத்தையுடைய திருமால் அமிர்தத்தோடு பிறந்த உதாரகுணமுடைய காமதேனுவைக் கொடுக்கப்பெற்றவ ராகிய யாதவர்க்குரிய விடமும் நந்த மண்டலமாகும் எ - று. (43)
உ-ம். ஹரிவமிசம்.
அனபாதன்னிடத் தேனும்மராவாழ
நன்புலத்தினு நற்றவாபாலினு
முன்பினேகி யவாதொழின் முற்றியே
நின்புலத்தினி லெய்து நிலைமையே.
--------------------
நாவேழனை மநு வேந்தற்கருளன்ப னற்றவத்தால்
பூவேழ்புரக்கப் பிறந்தவந்நாட் செய்த புண்ணியத்தான்
மூவேழ்சகத்திர நான் குதலைமுறை முற்றிய பின்
மாவேழரசர் புகழ்நாந்தகன்வளர் மண்டலமே. (44)
(இ-ள்) மனுவேந்தனுக்கு ஏழுநாக்களையுடைய அக்கினியை வேள்வி முதலியவற்றிற் குபயோகமாகத் தந்த வாணனென்பவன் நன்மையாகிய தவத்தால் ஏழு தீவுகளையும் காக்கும்படிப் பிறந்த அந்நாளிற் செய்த தருமத்தினாலே இருபத்தோராயிரத்து நான்கு தலைமுறை முடிந்தபிறகு பெருமை பொருந்திய சப்ததீவின்க ணுள்ள அரசாகளும் புகழும்படிததோன்றிய நாந்தகன் வாழிட மும் நந்தமண்டலமாகும் எ-று. (44 )
உ-ம். ஹரிவமிசம்
அருளுற்றவாணன் பின்னாற்றலைமுறை யவனிதன்னி
லிருபத்தோராயிரத்து நான்குமே விலங்குமாரன்
சொருபத்திலதிகமான நாந்தகனென்றோர் தோன்றல்
வருகத்தானுலகமெல்லா மதியெனவளர்ந்ததன்றே.
-----------------
ஆன்மறையோர்க்கிந் திரன் கண்ணனென்று பொன் னமபுயம்வாழ்
கோனுபதேசப் படிப்பட்டங்கட்டிப்பின் கோவிந்தனீ
தானெனப்பேரிட்டு நற்காமதேனுவுந் தாருநிழல்
வானவர்கோனுந் துதிசெய்யிடந்சத மண்டலம். (45)
(இ-ள்) பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் தலைவன் கண் ணனே யென்று அழகிய தாமரைமலரில் வாழ்கின்ற பிரமன் உப தேசித்தபடி நன்மைபையுடைய காமதேனு வென்னும் கோவும், பஞ்சதருக்களின் நிழவில் இருக்கும் இந்திரனும், ஸ்ரீகிருஷ்ண மூர்த்தியை நீதான் கோவிந்தன் எனப் பெயரிட்டுப் பட்டங் கட்டிப் புகழந்த இடமும் நந்தமண்டல மாகும் எ-று. (45)
உ-ம். பாகவதம், கோவர்த்தனமெடுத்த அத்தியாயம்.
நாவந்தமாதுபுணா நான் மறையோனையுந்திப்
பூவந்தளித்தோற்கொரு பொன்னெடுங்குன்றமேந்தி
யாவந்தளிக்குமட லாழியஞ்செங்கையாற்குக்
கோவிந்தனென்றோர் பெயர் கூறினன் கொற்றவேந்தன்.
--------------
சதுர் மறையோது மணமெட்டிற் சேவைத் தழுவினற்குப்
பதுமமலர்த்திரு வன்னமின்னாரைப் பரிந்தளித்து
விதிமுறையானிரை சீதன நல்கும் விவேகற்கிடம்
மதிதிகழ்மாடமு மேடையுஞ்சூழ்நந்த மண்டலமே. (46)
(இ-ள்) நான்மறையுட் கூறும் பிரமம் முதலிய எட்டு மணத் துக்குரிய தொழிலினுள்ளே விடைகளைத் தழுவுதலாகிய தொழி லைச் செய்த ஸ்ரீகிருஷ்ணமூர்த்திக்கு தாமரைமலர்க்கண் விளங்கிய திருமகளையொத்த மின்னலுக்கொப்பான பின்னைப்பிராட்டியை அன்போடு கொடுத்து விதித்த முறைப்படி பசுக்கூட்டங்களையும் சீதனமாகத் தந்த பேரறிவையுடைய கோசலநாட்டுக் கதிபனான நக்கின சித்தென்னும் கோவலன் வாழ்தற்குரிய இடமும், சந்திரன் தவழ்கின்ற வெண்மை பொருந்திய மாடங்களும், மேடைகளும் சூழ்ந்த நந்த மண்டலமாகும் எ-று.
உ-ம். பாகவதம், சத்தியை மணம் புரியத்தியாயம்.
வெண்டயிருறைத்த காரிரும்பித்தை விரைகமழ் முல்லையம் பசுந்தார், அண்டர்தங்கொழுந்து தெண்டிரைப் பிறந்த வாரமுதன் னவஞ்சாயற் , பண்டருமழலைப் பவளவாயணங்கின் பணையிளவன முலை தழுவக், கொண்டலினோரே ழுருவுகொண்டோரேழ் கொல் சினவிடைதழ் இயின்னால்.
----------------
சாலப்பொருட்கட னீந்தோன் மறுமையிற றாவென்றவன
சீலத்தருமஞ் செயக்கண்டு வெட்டிக்கல் செய்திடத் தீர்த்
தேலப்பெரியார் குளத்தின் முசல மிடமிதக்க
வாலிட்டெறிந்தப் புனலுண் பசுநந்த மண்டலமே. (47)
(இ-ள்) மிகுதியான பொருள் கடன் கொடுத்த ஒருவன் மறு மையிற் றாவென்று சொல்லிவிட்டுக் கடன் வாங்கினவன் நன்மையையுடைய தருமத்தைச் செய்யக்கண்டு கூறிய மொழி தப்பி அத்தருமம் தன்னதென்று கல்வெட்டி நாட்டப் பெரியோர்கள் அவ்விருவர் வழக்கையும் தீர்த்து அதற்குப் பொருந்தக் குளத்தி னிடத்து முசலங்களையிட ஒன்று மிதந்ததனால் அதனை வாலால் கரையில் எடுத்தெறிந்து தண்ணீர் குடித்து வழக்கறுத்த பசுவுக்கு ரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (47)
-----------------
வரலாறு.
மிகுதியும் பொருட்கடன் கொடுத்த ஒருவன் தான் கொ டுத்த பொருளை மறுபிறப்பில் தாவென்று கூறிவிட்டுத் தன்னி டத்துக் கடனாகப் பொருள் வாங்கினோன் நன்மையான குளம் வெட்டுதலாகிய தருமத்தைச் செய்யப்பார்த்து அக்குளக்கரை யில் தன் பெயரால் ஓர் கல் வெட்டி நாட்டக் குளம் வெட்டினவன் அந்த அநீதியைப் பெரியோரிடத்துத் தெரிவிக்துக் கொண்டதனால் அவர்கள் கடன் கொடுத்தோனும், கடன் வாங்கிக்குளம் வெட்டி னவனும் ஆகிய இருவரையும் வருவித்து நீங்களிருவரும் இரண்டு உலக்கைகளைக் கொண்டுவந்து இக்குளத்திலிட , மிதந்த வுலக் கைக்குரியோன் இக்குளத்திற்குரியவ னாவான் ; அமிழ்ந்த உலக் கைக்குரியவன் இக்குளத்திற் குரியவனல்லன் என்று தீர்மானிக் கத் தங்கள் மொழிக்கு அவர்கள் இயைந்தபடியால் அக்குளத்தில் அப்படியே இரண்டு முசலங்களை இடுவிக்கக் கடன் பெற்றவனது உலக்கை மாத்திரம் இலேசாகி மிதந்து கொண்டிருந்ததனால் அப் பொழுது அவ்விடத்துத் தண்ணீர் குடிக்க வந்து உண்மை விளங் கும்படித் தன் வாலால் மிதந்த உலக்கையைக் கரையிலெடுத்தெ றிந்து அந்தப்புனலை உண்டு வழக்கைத் தீர்த்த பசுவுக்குரிய இட மும் நந்தமண்டலமாகும் எ - று.
-------------
மெய்பாடியவவ்வை மூவேந்தர் மெச்ச விருந்திடுநாள்
நெய்பாறயிர்வெண்ணெ யாறுதரமுகி னீணிதிய
மொய்பாரினிற் பெய்யச் செய்த கல்யாணம் வெண் முல்லை நகை
மைபாவியவிழி யங்கவைவாழ்ந்த மண்டலமே. (48)
(இ-ள்) தனது கலியாணத்தில் விருந்திட்டகாலத்து சேர சோழ பாண்டியரென்னு மூவேந்தரும் மெச்சும்படி பெண்ணை யாறானது நெய், பால், தயிர், வெண்ணெய் இவற்றைத் தரும் படிக்கும், மேகங்கள் மிகுந்த பொன்மழையை செல்வம் நிறைந்த பூமியினிடத்துப் பெய்யும் படிக்கும், உண்மையே பாடும் ஒளவை யாரால் செய்வித்த வெள்ளிய முல்லையரும்பையொத்த பற்களை யும், அஞ்சனமெழுதப்பெற்ற கண்களையுமுடைய அங்கவை என்
னும் ஆய்மகளுடைய வாழ்வும் நந்தமண்டலமாகும் எ - று. (48)
உ-ம். ஒளவையார் பாடியது.
முத்தெறியும் பெண்ணை முதுநீ ரது தவிர்த்து
தத்திவரு நெய்பா றலைப்பெய்து - குத்திச் செருமலை
தெய் வீகன் றிருக்கோவ லூர்க்கு
வருமளவுங் கொண்டோடி வா.
கருணையா லிந்தக் கடலுலகந் தாங்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
நன்மாரி கார்கொண்ட நன்னீரதுதவிர்த்து
பொன்மாரியாகப் பொழி.
--------------
என்னாடு சீதனம் வேண்டுமென்றவ்வை யினிதுரைப்ப
மின்னாடு கேட்கச் சுரப்பாடு நல்கென்று மீனவன்றன்
றென்னாடு கொண்ட குடநாட்டுச்சேரன்முன் சென்றுரைப்ப
மன்னாடு தந்த செம் பொன்னாடுளார் நந்த மண்டலமே. (49)
(இ-ள்) ஒளவை பார் எத்தன்மையான நாடு நினக்குச் சீதன மாக வேண்டுமென்று விருப்பத்தோடு கேட்க, மின்னலையொத்த அங்கவையென்பவள் ஆடு வேண்டுமென்றுரைப்பப் பின்னர் ஒள வையார் பாண்டியனுடைய தென்னாட்டை தன்னடிக்கீழ்ப்படுத்தி ஆண்ட குடகநாட்டுக் கரசனாகிய சேரராஜனிடத்துச் சென்று அங்கவைக்கு ஸ்ரீதனம் கொடுப்பதற்குப் பாலாடு கொடுவென்று கேட்டதனால், வெற்றியையுடைய அச்சேரராஜன் தந்த செம் பொன்னாற்செய்த ஆட்டினை தங்களுக்குரிய பொருளாகக் கொண் டவர்கள் வாழிடமும் நந்தமண்டலமாகும் எ - று. (49)
உ-ம். ஒளவையார் பாடிய அருந்தமிழ்.
சிரப்பான் மணிமுடிச் சேரமான் றன்னை
சுரப்பாடி யான் கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவரென்பெறினுங் கொள்வர்
கொடுப்பவர் தாமறிவார் தன்கொடையின் சீர்.
--------------------
கானத்தின் மேயும் பொழுதோர் புலிகிட்டக் கண்டு கன்றை
யானுற்று மீள்குவ னென்றேகிப்பானல்கி யேமுனின்ற
தானத்திற் செலகின்ற மெய்பான் மகிழ்வுற்றுத் தான் விடுத்த
மானக்கபிலை தனையுடையார் நந்த மண்டலமே. (50)
(இ-ள்) தான் காட்டில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு புலி தன்னைக் கொல்ல அணுக, அதைக்கண்டு யான் எனது இளங்கன்றை அடைந்து பின்பு உனக்கு ஆகாரமா கும்படித் திரும்பி வருவேன் என்று மொழிந்துத் தன்னுடைய கன் றினிடத்துச் சென்று பாலூட்டி அக்கன்றுக்குப் புத்தியைச் சொ ல்லி முன்னம் நின்றவிடத்தில் குறுக, உண்மைச்செயலால் மகிழ் ந்து அப்புலியால் விடுக்கப்பட்ட பெருமையையுடைய கபிலைக்கு ரிய யாதவர்களிடமும் நந்தமண்டலமாகும் எ-று. - (50)
உ-ம். கபிலைவாசகத்திற் காண்க.
நற்றாமரைக்கயஞ் சேரன்னம் போற்றம்மை நாடிவருங்
கற்றார்க்கருணடுக் காட்டுத்தியாகி பொற் காவெனப்பேர்
பெற்றாரெண்ணான்கு தருமமெந்நாளும் பிறங்கச் செயும்
வற்றாதபாக்கியர் கோவலர்வாழ் நந்த மண்டலமே. (51)
(இ-ள்) நன்மையாகிய தாமரைத் தடாகத்தைத் தேடிச்செல் லும் அன்னப்பறவை போலத் தங்களையே நாடி வருகின்ற புலவர் களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுக்கும் நடுக்காட்டுத் தியாகி என்னப்படுவாரும், பொன்னாலாகிய கற்பகாடவியைப் போல ஈகைப்புகழை அடைந்தவரும், முப்பத்திரண்டு தருமங்க ளையும் எக்காலத்தும் விளங்கும்படி செய்தற்குக்காரணமான கெ டாத செல்வத்தை உடையவருமாகிய கோவலர்களுக்குரிய இட மும் நந்தமண்டலமாகும் எ - று. (51)
------------------
ஒன்றிய செய்யு ளியல் காரிகையி னுதாரணமா
மென்று பெரிய ரெடுத்தோதகவ லின மதனிற்
கன்றுகுணிலென் றெழுவாயிற்றோன்றுங் கவிதைகொண்டோன்
மன்றல் கமழ்முல்லைத் தண்டலை சூழ்நந்த மண்டலமே. (52)
(இ-ள்) நான்கு கூறாக அமைந்த செய்யுளிலக்கணத்தை உணர்த்தும் காரிகையின் உதாரணமாகும் என்று பெரியோரெடுத் தோதின அகவற்பாவினத்தில் ''கன்றுகுணிலென்று" முதற்கண் தோன்றிய கவியை ஏற்றுக்கொண்டவரிடமும் மணங்கமழ்கின்ற முல்லை நிலமாகிய சோலை சூழ்ந்த நந்த மண்டலமாகும் எ - று. (52)
உ-ம். அமுதசாகரர், யாப்பருங்கலக்காரிகை.
கன்றுகுணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்று நம்மானுள் வருமேலவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோதோழீ,
பாம்புகயிறாக் கடல் கடைந்தமாயவன்
ஈங்கு நம்மானுள் வருமேலவன்வாயில்
ஆம்பலந்தீங்குழல் கேளாமோதோழீ,
கொல்லையஞ்சாரற் குருந்தொசித்தமாயவன்
எலலிநம்மானுள் வருமேலவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோதோழீ.
------------------
கனிவாங்கக்கணண னரிசிகொண்டே கதித் தேயொழுக்கி
நனிபேதை முன்வந்து நிற்கநறுங்கனி நலகுதலால
இனிதாங்கனிமுத்து மாணிக்கமாகவு மிச்சையன்றி
மனுநீதியாலவட் கீந்தவர் வாழ்ந்த மண்டலமே. (53)
(இ-ள்) புசிக்கவிரும்பிப் பழம்வாங்குதற்பொருட்டுக் கண்ண பிரான் தன் கையினிடத்து அரிசிகொண்டு விரைந்து சென்று அவ்வரிசியைக் கீழே சிந்திப்போகட்டு மிக்க பேதைமையுடைய கனிவிற்பவள் முன்பாக வெறுங்கையோடு வந்து நிற்க, அவள் நல்ல மதுரத்தையுடைய பழத்தைக் கொடுத்த காரணத்தால கூடைக் கண்ணுள்ள இனிய சுவைபைப் பெற்ற பழங்கள் எல்லாம் முத்து. மாணிக்கம் முதலிய நவமணிகளாகவும் அவள் அஞ்சி இச்செய்தி யைத் தெரிவிக்க அப்பொருள்களினிடத்து விருப்பமின்றி மனுநூ லின்படி அக்கனி விற்பவளுக்கே கொடுத்துவிட்ட நந்தகோபனது இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (53)
உ-ம். எம்பிரான் சதகம்
குறைச்சலறக்கனிக்கரிசி யள்ளிமூடிக்
குதித்து வர மோதிரத்தின் வழியாச் சிந்தி
முறத்திலிட வெறுங்கையாத் திகைத்து நிற்க
முகம்பார்த்துத் தின்கனியிட்டப்பர்வென்னில்
நிறத்தநவமணிகள்கனி விற்பாள் கூடை
நிறைய வளஞ்சிருந்த கோபனென்ன
மிறைக்குரைக்கி லுனது சொம்மேகொடுபோவம்மே
யென்றுரைக்கப்பண்ணினையே யெம்பிரானே.
---------------
வெயிற்றீர்ந்தகானத்தி னீர் புல்லுள்தல மேவித்தங்க
ளுயிர்க்கோருயிர்தெய்வ ரூபமுமாமென் றுளத்திலன்பாய்
குயிற் போலவேய்ங்குழ னாதமுழக்கிக் குலவு நெடு
மயிற்பீலியாற்பசு மேய்த்தவர் வாழ்ந்த மண்டலமே. (54)
(இ-ள்) சூரியனது கிரணம் இலை நெருக்கத்தால் புகுதலொ ழிந்த காட்டினிடத்துத் தண்ணீரும் புல்லும் உள்ள விடத்தை யடைந்து, தங்கள் உயிர்க்குயிர்போல்வனவும், தெய்வம் உறை யும் உறுப்புக்கள் உடையனவும் ஆமென்றெண்ணி மனத்தினிடத் தன்பாய்க் குயிலோசை போலும் இனிய புள்ளாங்குழலினுடைய ஓசைபை முழக்கி விளங்குகின்ற நெடிய மபிற்பீலியால் பசுவி னங்களை மேய்த்த யாதவரதிடமும் நந்த மண்டலமாகும் எ-று. ()
உ-ம். அரிவமிசம்.
அன்ன துநிற்கவன்பன் கேகயப்பீலியாலே
மன்னியசுரபிமேய்த்து வளமுடனிருக்கு நாளிற்
றுன்னியவாணனென்றோர் சுதனெயதவதனின் பின்னா
நன்னலப்பாதலத்திற் சேர்ந்தனனவைகடீர்ந்தோன்.
--------------
சசிதரனிந்திர னான்முகன் வாழத் தனிநெடுமால்
நிசிசரர் கொட்ட மடக்குதற்காகவிந் நீணிலத்திற்
சுசிதனங்கோகுலத் தாயர்குலமென்று தோன்றப்பெற்ற
வசுதரையானவ சோதைக் கிடநந்த மண்டலமே. (55)
(இ-ள்) இளம்பிறையைச் சடையில் தரித்த சிவபிரானும், இந்திரனும், பிரமனும் ஆகிய இவர்கள் இடரொழிந்து வாழும்படி ஒப்பற்ற நெடுமால் அசுரர்களது தீச்செய்கைகளை அடக்குதற் காக இந்த நெடிய பூமியில் கன்றோடு கூடிய ஆனிரையையுடைய ஆபர துகுலம் சுசியையுடையதென்றெண்ணி திருவவதாரஞ்செய் தற்குக் காரணமான ஓர் வசுவின் தேவியாகிய "தரா" என்பவள் வந்துற்பவித்த அசோதைப்பிராட்டியாருக்குரிய இடமும் நந்த மணடலமாகும் எ-று. (55)
உ-ம். மஹாபாகவதம், கண்ணன் திருவவதாரப்படலம்.
ஆயகாலையி னட்டவசுக்களிற்
அயனானது ரோணனுக்கும் மவன்
சாய்விலாக்கற்பி னாடரைத் தேவிக்கு
மேபவன் புகழ் வேதனியம்புவான்.
மாதவன்வசு தேவன மதலையாப்ப
பூதலத்தினுதிக்கும் புதல்வனா
யாதலானந்த கோபனசோதை பாட
போதுமிந்நிலத் தென்றனன் புங்கவன்.
----------------------
திலகத்திருநுதன் மன்னாளுரோகணி சேயனன் ஊற்
பலகற்றறிந்த பரந்தாமன் மிக்க பராக்கிரமன்
உலகைப்ரதக்கணஞ் செய்தவன் கண்ணனுடன் பிறந்த
வலபத்ரராம னெனுஞ்சிங்கம் வாழ்நந்த மண்டலமே. (56)
(இ-ள்) திலகமிட்ட அழகிய நெற்றியையும், மின் போலும், தேக காந்தியையும் உடையவராகிய உரோகணி தேவியாரது புத்திரரும், நன்மையாகிய பல நூல்களைக் கற்றுணர்ந்த ஸ்ரீபாந்தா
மரும், மிகுந்த வீரத்தனத்தையுடையவரும், பூப்பிரதக்ஷணஞ் செய்தவரும் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியுடன் பிறந்தவருமாகிய பலபத் திரராமனென்னும் திருநாமத்தையுடைய சிங்கம் போல்வாரது வாழிடமும் நந்தமண்டலமாகும் எ-று. (56)
உ-ம். பாகவதம், சகடமுதைத்தவத்தியாயம்.
நிறைவுற்றதிங்கணிலத்தூடெழனேரமும்மை
மறுவற்ற காட்சி மறையோன்வரக்கண்டுநன்னர்
நறையுற்றபூமென் கரங்கூப்பிய நந்தகோபன்
சிறுவர்க்குநாமம் புனைவாயெனச்செப்பினானால்.
மடல் சேர்கழுநீர் மலர்வாட்கணுரோணி செம்மல்
சுடர்கான் மதியிற் சுடர்கின்றதொர்தோற்றமேய
வடலேறனையாற் ககன் ஞாலமனைத்துமேத்த
மிடல் கூரிராம னெனநாமம்விளம்பினானே.
----------------
பாலுத்திக்கு நிகர்புகழ் செல்வம் படைப்பெருக்கஞ்
சால்புநண்பெய்துஞ் சகலகலாப்பிர சங்கசிங்க
[$]னாலரண் சூழுஞ்செங் கற்பட்டதிபனெண் ணான் கெனுமூர்
மாலெனக்காத்தருள் சேஷாத்திரிநந்த மண்டலமே. (57)
-------------
[$] நீரரண் , நிலவரண் , காட்டரண் , மலையாண். அரண் = காவல்
(இ-ள்) திருப்பாற்கடலுக்கு நிகரான புகழும் செல்வமும் சேனைப்பெருக்கமும், சான்றாண்மையும், நண்பும் ஆகிய எல்லாக் கலைகளையும் பிரசங்கிக்கவல்ல சிங்கம் போல்பவனும், நால்வகையான அரண் சூழ்ந்த செங்கற்பட்டென்னும் நகரத்தை யாள்பவனும், முப்பத்திரண்டு ஊர்களை ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல இரட்சிப்பவனும் ஆகிய சேஷாத்திரிப்பிள்ளை யென்பவருக் குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (57)
--------------
சக்கரம்போல்வர தாபயங்காட்டிச் சமைத்திருந்தே
யக்கிரமஞ்செய் கதிர்திங்கள் சேய்புத னந்தணன்வெண்
சுக்கிரன்மந்த னிருகோட்கமுதிடத் தூங்குமெல்லை
வக்கிரந்தீர்த்து மழை பெய்வித்தோர் நந்த மண்டலமே. (58)
(இ-ள்) வரதாபயங்களை இரண்டு கையினிடத்துக் காட்டிச் சக்கரம் போல வட்டமாகச் சமைந்திருந்து மழை பெய்வியாது அனியாயஞ்செய்த சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோட்களுக்கும் அமுதிட்டு அக்காரணத்தால் அந்த நவக்கிரகங்கள் தூங்குங் காலத்தில் அவற்றது வக்கிரத்தை யொழித்து மழை பெய்வித்தோராகிய இடைக்காடர்க்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (58)
----------------
பாலைக்கறந்திரு பாண்டத்தில்வாரத்துநற் பண்புடனே
சாலக்கிராமமிட டூராவதுநன்றது தானறிந்தே
யேலுற்றமச்ச முடனத்திமூர்த்தி யெனவிஜய
மாலுற்பவத்திரு நாமஞ் சொல்வோரநந்த மண்டலமே. (59)
(இ-ள்) ஆன்பாலைக் கறந்து பெரிய பாண்டத்திற் பெய்து நன்மைப்பண்போடு, சாலக்கிராமத்தை அப்பாலில் இட்டு அது நன்றாக ஊர்ந்து செல்வதனால் பொருந்தியுள்ள அதன் தன்மைகளை அறிந்து இது மச்சமூர்த்தி, இதுஹுரசாகரமூர்த்தி முதலிய மூர்த்திகளும் அடையும் என்று வெற்றியை உண்டாக்குகிற ஸ்ரீவாசுதேவனது திருநாமத்தை நிச்சயித்துச் சொல்லப்பட்ட கோபாலர்கள் வாழுமிடமும நந்த மண்டலமாகும் எ-று. (59)
-------------
அரிச்சித்தர்தமமை யருச்சித்தவாற்றி யாதவாமா
தரிச்சித்தனரென வெண்ணும் பொய்ச்சங்கை தவிரந்திடவே
பரிச்சித்தினாலவர் கற்பறிவித்திடும் பண்புபெற்ற
வரிச்சித்திரவிழி மின்னார்கள்வாழ்நந்த மண்டலமே. (60)
(இ-ள்) அரிச்சித்தரென்னும் ஆன்றோரைத் தம்மனைவியாகள் பூசித்த தன்மை அறியாத ஆடவர்கள் தங்கள் மனைவியராகிய மாதர்கள் அவ்வரிச்சித்தரை விரும்பிக் கூடினாரென்றெண்ணிய பொய்மையான ஐயம் ஒழியும்படி பரிட்சித்தென்னும் அரசனால் அவ்வாடவர்களுக்குத் தங்கள் கற்பை அறிவித்திட்ட உத்தம குணங்களைபபெற்ற அழகிய இரேகை அமைந்த விழிகளையுடைய அவ் ஆயமாதர்கள் வாழுமிடமும் நந்தமண்டலமாகும் எ-று. (60)
----------------
எய்விற்கணைக்கட சமன்றேவிநெஞ்சத் திருந்தவன்னி
தெய்வச்செயலின் வெளிவந்துட லஞ் சிதைவுற்றதா
லுய்விக்குமவேள்விக்கு வேண்டுமென்றேயோரந் தரணிதனில
வைவச்சுதனுக் கருளன்பர்வாழ்ந்த மண்டலமே. (61)
(இ-ள்) எய்கின்ற வில்லிற் பூட்டும் கணைபோலும் கண்களையுடைய இயமனது மனைவியினுடைய நெஞ்சின் கண்மறைந்திருந்த அக்கினிதேவன் தெய்வச்செயலால் வெளிப்பட்டுவந்து உடலம் சிதைந்த காரணத்தால் இவ்வக்கினி பாவத்தினின்றும் பிழைப்பிக்கும் யாகத்திற்கு வேண்டுமென்று எண்ணி அரணிகடைதலினாலே வைவச்சுதமனுவுக்குக் கொடுத்த அன்பினையுடையவர் வாழிடமும் நந்த மண்டலமாகும் எ - று. (61)
-------------
காசினிவாழ்த்துங் கனயோகனானிரை காத்தருள்வோன்
பேசிடுமவாய்மையிற் சத்பவரிச்சந்திரன் பேரறிஞர்
பூசுரர்செந்தமிழ் வாணாக்கருள்சற் புருடன் வந்த
வாசியிற்றாண்டவ ராயனுமவாழ்ந்த மண்டலமே. (62)
(இ-ள்) உலகத்தோர் புகழும் மிக்க செல்வமுடையவனும், பசுநிரையைக் காத்தவனும், மேலாகக்கூறும் சாத்தியத்தில் உண்மையே பேசும் அரிச்சந்திரன் போன்றவனும், பெரிய அறிவினை யுடையவரும், பூதேவர்களாகிய அந்தணர்களும், செவ்விய தமிழ்ப் புலவோர்களுமாகிய இவர்கள் வேண்டியபடி அளிக்கும். சற்புருஷனாகிய வந்தவாசியென்னும் நகரத்துதித்த தாண்டவராயக்கோனுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ-று. (62)
-------------
மந்திரயூகி யறிவினிற்சேடன் வடிவின்மத
னிந்திரபோக னிதியிற்குபோ னிரவலர்க்கோ
ரைந்தருவாகுஞ்சொல் வாக்கிலரிச்சநத்ர னாகுமென
வந்தருளானந் தாங்கனும் வாழ்ந்த மண்டலமே. (63)
(இ-ள்) ஆராய்வதில் அமைச்சரை பொய்யானவனும், கல்வியறிவில் ஆதிசேடனை யொப்பானவனும், வடிவழகில் மன்மதனை யொப்பானவனும், போகத்தில் இந்திரனை யொத்தவனும், நிதியில் குபேரனை யொத்தவனும், இரவலர்க்குக்கொடுத்தலில் ஒப்பற்ற கற்பகமுதலிய பஞ்சதருக்களை யொப்பானவனும், சொல்லுகின்ற சத்தியவாக்கில் அரிச்சந்திரனை யொப்பானவனும், என்று யாவராலும் புகழும்படி காத்தருளிட ஆனந்தரங்கனென்னும் பிரபுவுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (63)
-----------------
வாமனன்செம்மலர்த் தாளையொப்பாநெடு வானளக்குங்
காமலர்த்தேன்சிறு முல்லைக்குப்பாய்ச்சுயர் கற்பின்மின்னார்
தாமரைச்செங்கையி னாற்கனிமாறத் தரளரத்த
மாமணிநல்கிய மைந்தரும் வாழ்ந்த மண்டலமே. (64)
(இ-ள்) வாமனாவதாரமாகிய திருமாலின் செந்தாமரைமலர் போலும் திருவடியை யொத்துப் பரந்த ஆகாயத்தை அளந்தசோலையிற் பூத்த மலர்களினின்று பெருகும் தேனைச்சிறிய முல்லைக்கொடிக்குப் பாய்ச்சுகின்ற உயர்ந்த கற்பினையுடைய ஓர் மாதானவள் தம்முடைய தாமரைப்பூவை ஒக்கும் கையினால் தாம் விற்றற்குக் கொண்டுவந்த பழத்தைக் கொடுக்க அங்ஙனம் கூடையிலிருந்த மற்றைக் கனிகளைக் கொடுப்பதற்கு மாறாக முத்தாகிய இரத்தினமும் பெருமை பொருந்திய மற்றைக் கனிகளுமாகச் செய்தருளிய ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்தற்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (64)
------------------
அருமறைநான்முகன் மாலரன்விண்ணி னமரரிந்த்ரன்
பெருமகிழ்வெய்தவிப் பாகம் பெறவிப் பிரர் முனிவோர்
கருதுபயன்பெற வேள்விசெய்வுப காரஞ்செய்ய
வருமுதற்காரணத் தேனுவுள்ளார்ந்த மண்டலமே. (65)
(இ-ள்) எழுதற்கரிய மறைகளையுணர்ந்த பிரமனும், திருமாலும், சிவபெருமானும், விண்ணிலுள்ள தேவர்களும், அவர்களுக்குத் தலைவனாகிய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் பெருத்த மகிழ்ச்சி எய்துதற்குக் காரணமான அவிற்பாகம் பெறும்படிக்கும், பிராமணர்களும், முனிவர்களும் அடையக்கருதிய பயனை அடையும்படிக்கும், வேள்வி செய்தற்கு உபகாரம் பண்ணவந்த முதன்மையாகிய பசுவையுடைய கோவலர்கள் வாழும் இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (65)
உ-ம். பாரதம் , அநுசாசநிகபருவம் - கன்னிகாதான வரன் மகிமையுரைத்தசருக்கம்.
மகங்களு மோமமு மங்கிவானவன்
சுகங்களும மரர்தந் தேசுந்தூபவ
ரகங்களுந் தென்புலத் தவர்களின்பமு
மிதந்திடாவேலினா யாவுங்கோவினால்.
----------------
சல்லடந்தொட்டுத் துவராடைக்கச்சை தனையிறுக்கி
நல்வலயப்புயங் கொட்டிக்கனைத்து நகைத்துநும்மை
வெல்குவம்யாமென்று வாய்மதம் பேசி வெகுண்டுவரு
மல்லரைவென்ற திறலாயர்வாழ்ந்த மண்டலமே. (66)
(இ-ள்) சல்லடமென்னும் உடையைத் தரித்து அதின்மீது செந்நிறம் ஊட்டிய கச்சை இறுக்கிக்கட்டி நல்ல தோள்வலயம் பூண்ட புயத்தைக் கையாலே கொட்டி ஆரவாரித்துக் கோபச் சிரிப்புச் சிரித்து நுங்களை யாம் செயிப்போம் என்று மதங்கொண்டவார்த்தை கூறி கோபித்து வந்த மல்லர்களை வென்ற வலிய கண்ணபிரான் வாழ்கின்ற இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (66)
உ-ம். ஹரிவமிசம்.
அழைத்தலு மொருகைதண்டு கமண்டல மொருகையாக
மழைப்புயன் மின்னல் போல மார்பினூ லிலங்கத்தோன்றி
யிழைப்புய வமரரெல்லா மன்பனென் றேத்தவந்தான்
றழைக்கட நான் மருப்பு வெண்பகட்டதனைத்தந்த.
------------------
செஞ்சிச்செயசிங்க ராசாதிராசன்றன் சித்தமெச்ச
விஞ்சைப்ரதானிக்கஞ் செய்தெட்டுத்திக்கும் விசயஞ் செய்து
பஞ்சத்துமன்னம் பகர்ந்திட்டுயர் புகழ் பாரிற்பெற்ற
மஞ்சொக்குஞ்செங்கைத் திருவேங்கடநந்த மண்டலமே. (67)
(இ-ள்) செஞ்சிக்கண் உள்ள பலவகைப்படும் வித்தைகளும் கைவந்த செயசிங்கன் என்னும் பெயருள்ள அரசர்க்கரசன் உள்ளமுவக்கும்படி பிரதானித்துவம் செய்து அஷ்ட திக்கிலுள்ளாரையும் வெற்றிகொண்டு பஞ்சம் வந்த காலத்தும் யாவருக்கும் உண்டியை இனியமொழிபகர்ந்து கொடுத்து உயர்ந்த புகழை இவ்வுலகத்திற் பெற்ற மேகம்போலும் சிவந்த கைகளையுடைய திருவேங்கடப்பிள்ளை வாழுமிடமும் நந்தமண்டலமாகும் எ-று. (67)
----------------
அன்றுதளிர்த்திடு மூலிகைகாட்ட வறிந்து மக
கன்றுறச்செய்ததில் வீழ்த்துந்தவனை நனிவிழச்செய்
தொன்று பொன்னாக வதைச் செஞ்சிமன்னற் குவந்து நல்கும்
வன்றிறன் மாதவக் கோன்வாழ்ந்தது நந்த மண்டலமே. (68)
(இ-ள்) ஒரு முனிவன் வனத்தில் பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாதவக்கோனால் அன்று தளிர்த்தான் மூலிகையைத் தெரிந்து அதனடியில் நன்மை பொருந்த யாகம் செய்து அந்த யாகாக்கினியில் அக்கோனைத் தள்ள அவன் தப்பித்து முனிவனை விழச்செய்து அம்முனிவன் உடலம் வெட்ட வெட்டப் பழையபடி வளருகின்ற தங்கவடிவமாக அவ்விக்கிரகத்தின் உறுப்புக்களை வெட்டி விலை செய்த பொருள்களால் வாழ்ந்திருந்ததைக் கேள்வியுற்ற அரசன் அவ்விக்கிரகத்தின் மேல் விருப்பமுற்றிருப்பதை அறிந்து மகிழ்ந்து அந்த விக்கிரகத்தைக் கொடுத்த மாதவக் கோன் வாழ்ந்திருக்குமிடமும் நந்த மண்டலமாகும் எ-று. (68 )
-------------
அற்புரு கோக்குல நோய் தீர்த்திடற்குமிக் காவலுடன்
பொற்புறுப்பால் பெருகச்செய்திடற்குமிப் பூவினிதங்
கற்று மலட்டுப் பசுக்கள் கன்றீனவுங் கற்றுணர்ந்த
மற்பெறுதோளுடைக் கோவலர்வாழ்ந்த மண்டலமே. (69)
(இ-ள்) இந்தப் பூமியினிடத்து மிகுந்த ஆசையுடனே அன்புருவமாகிய பசுக்கூட்டங்களைக் காப்பதற்குக் கோமகத்துவ நூலிற் கூறியபடி வேண்டிய இதங்களைத் தெரிந்து கொண்டு அப்பசுக்களுக்கு நேரிடும் வியாதிகளைத் தீர்ப்பதற்கும், பாலற்ற கோக்களுக்கு அழகு பொருந்திர பால் பெருகும்படிச் செய்வதற்கும், காலந் தவறாமல் மலட்டுப் பசுக்கள் கன்றீனுவதற்கும் ஆகவேண்டியவைகளைக் கற்றுணர்ந்த வலிமை பொருந்திய தோள்களையுடைய கோவைசியர்கள் வாழ்ந்திருக்குமிடமும் நந்த மண்டலமாகும் எ - று. (69)
--------------
சாற்றியயா தவந் தண்ணீர் குடித்தபின் சங்குடித்தும்
போற்றும் வைக்கோன்முதற் புற்களையுண்டபின் றாம்புசித்துக்
தோற்றுமினத்தொடு நித்திரை போயபின் றுஞ்சலுமா
மாற்றருமன்புடை படைகள் வாழ்ந்த மண்டலமே. (70)
(இ-ள்) வேதாகமங்களில் மேன்மையாக எடுத்துச் சொல்லப் பட்ட பசுக்குலங்கள் தாகமுதலிய தாபநீங்கும்படித் தண்ணீர் குடித்தபின் தாம் குடித்தாலும், பாதுகாத்தற்குரிய வைக்கோல் புற்கள் முதலிய ஆகாரங்களையுண்ட பின்பு தாம் புசித்தலும், காணத் தக்க தங்கள் தங்களினத்துடனே படுத்து நித்திரை செய்த பின்பு தாம் நித்திரை செய்தலும் ஆகிய நீங்காத அன்பையுடைய கோபாலர்கள் வாழ்ந்திருக்குமிடமும் நந்தமண்டலமாகும் எ - று. (70)
-------------
தேவர்க்கதிபதி யெண்ணாதுதங்க டிருமைந்தனாங்
காவற்கடவுள் சொல் புத்தியைக்கைக் கொண்டு கார்படியுங்
கோவர்த்தன வெற்பைப் பூசித்தெவருங் குலவச்செய்த
மாவெற்றித்திண்புயக் கோவலர்வாழ்ந்த மண்டலமே. (71)
(இ-ள்), தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரனை மதியாது தம் மரபில் வந்த திருக்குமாரராகிய இருக்குந் தொழிலையுடைய கடவுளாகிய திருமால் சொல்லிய புத்தியைக் கைக்கொண்டு மேகங்கள் தங்குதற்கிடமான கோவர்த்தனகிரியை யாவரும் பூசித்து விளங்கச் செய்த மிக்க வெற்றியைத் தரும் திண்ணிய தோள்களையுடைய கோபாலருக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ-று. (71)
உ-ம். பாகவதம், கோவர்த்தனமெடுத்த அத்தியாயம்.
செழுமறையவரொடு செம்மலானினம்
விழைதருமுணவெலாம் வெறுப்பநல்கிடாம்
பொழிமழை தவழுநம் பொன்னங்குன்றினை
வழிபடலினிதென வள்ளல் கூறினான்.
திருத்துயில் பெற்றவச் செம்பொன் மார்பினா
னுரைத்தவாறேமன னுவந்துநந்தகோன்
அருச்சனை புரிந்தன னருவி மாலை தாழ்
பொருப்பினைவெண்டிரைப் புவிகளிக்கவே.
-------------------
தில்லையிற்கோவிந்தர் சித்த மகிழத் திருமடமவ்
வெல்லையிற்கட்டுவித் தந்தமைாதவர் யாவருக்க
முல்லையிற்றூய வரும்பெனப்பாலுடன் மூரனல்கும்
வல்லவராகிய கோபாலர்வாழ்ந்த மண்டலமே. (72)
(இ-ள்) கோவிந்தராசப்பெருமாள் எழுந்தருளிய சிதம்பரத்தில் அழகிய மடாலயம் கட்டுவித்து, அதில் மறையவர்கட்கும், தவத்தோர்க்கும், ஏனைய குலத்தார்க்கும் சித்த மகிழும்படி வெள்ளிய முல்லையரும்பு போலும் பாற்சோறு முதலிய உணவுகளைக் கொடுப்பித்த வல்லவர்களான கோபாலர்கள் வாழும் இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (72)
------------
அஞ்சொற்கிளிமொழி மின்னாளசோதை யகமகிழக்
கொஞ்சித்திருமுலைப் பாலுண்டு நித்திரை கொள்பொழுது
கஞ்சச்சரணத் தனி நூபுரங்கள் கலீரெனவே
வஞ்சச்சகட்டை யுதைத்தவர் வாழ்நந்த மண்டலமே. (73)
(இ-ள்) அழகிய வார்த்தையைப் பேசும் கிளிபோலும், இனிய மொழியையுடைய மின்னாளாகிய அசோதை மனமகிழும்படி மழலை வார்த்தையைச் சொல்லி அவளது திருமுலைப்பாலையுண்டு கண் வளர்கின்ற தருணத்தில் வந்த வஞ்சனையையுடைய சகடவடிவங் கொண்ட அசுரனைக் கமலமலர்போலும் தாள்களில் அணிந்த ஒப்பற்ற சிலம்புகள் கலீரென்று ஒலிக்கும்படி உதைத்தவராகிய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி வாழ்கின்ற இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (73)
உ-ம். பாகவதம், சகடமுதைத்த அத்தியாயம்.
சிறந்த மூன்றாந்திங்களின் வாய்ச் செந்தாமரைக்கட்பசுங்குழவி
பிறந்த திருநாள்விழாவயர்ந்து பிள்ளைப்பிறைவாணுதலன்னை
யுறைந்தகாலைப்பசித்தழுதங் கொண்பொன்னடித்தாமரை நீட்ட
மறிந்துக் கடம் வீற்றாகி மண்மேலதிர்ந்து வீழ்ந்ததால்.
---------------
இருநிதிவேந்தன் சுதர்தமமாதரொ டெய்திமிக்கா
மொருந்தியின்கட் களித்தாடலான் முனி வுற்றிகழ்ந்த
திருமுனி நாரதர் சொற்படியிப்புவி சேர்ந்து நின்ற
மருதிடைச்சென்று கதியளித்தோர் நந்த மண்டலமே. (74)
(இ-ள்) மிகுந்த செல்வங்களையுடைய குபேரனது புதல்வராகிய நளகூபரமணிக்கிரீவர்கள் தங்கள் மாதர்களோடு வளமிகுந்த ஒரு நதியின் கட்சென்று காமக்களிப்போடு நீர் விளையாடுதலால் கோபித்திகழ்ந்த தவத்தினது அழகையுடைய நாரதமுனிவரர் சபித்த வண்ணம் இப்பூமியைச் சேர்ந்து நின்ற மருதமரங்களாகிய அந் நளகூபரமணிக்கிரீவரிடையில் புகுந்து அவர்களுக்குப் பழய நிலையை அளித்த திருமாலுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று.
உ-ம். பாகவதம், மருதிடைத்தவழ்ந்த அத்தியாயம்.
உரலொடுந்தனித் தவழ்தரு புயர்வெளி யளந்த
விரிதடஞ்சினை புணர்மரு தொசிந்துவேர் பறியா
வரைவிழுந்தென வீழ்ந்தவம் மருதுரு வெடுத்தோர்
பரவியோகினர் பசுந்துழாய்ப் பரனடி பணிந்தே.
--------------
கலைமுதிராமதி போனான்கு கோட்டுக் கடாக்களிற்றின்
றலைவனையேத்தி வணங்காமையானிரை தான் மயங்கி
யுலைமெழுகாகிநெஞ் சஞ்சக்கன் மாரி யுறுவித்தநாண்
மலைகுடையாகப் பிடித்தவர் வாழ்நந்த மண்டலமே. (75)
(இ-ள்) இளம்பிறை போலும் நான்கு கொம்புகளையுடைய ஐராவதமாகிய மதங்கொண்ட யானையினது தலைவனான இந்திரனை ஆயர்கள் துதித்து வணங்காமையால் பசுநிரைகள் மயங்கி கொல்லனது உலையிலிட்ட மெழுகைப்போல உருகி மனம் அஞ்சும்படிக்கு அவ்விந்திரன் கல்மழை பெய்வித்தபோழ்து கோவர்த்தன மென்னும் கிரியை அம்மழையைத் தடுத்தற்குரிய குடையாகப் பிடித்துக் காத்தருளிய ஸ்ரீ கிருஷ்ணதேவன் வாழுமிடமும் நந்த மண்டலமாகும் எ-று. (75)
உ-ம். பாகவதம், கோவர்த்தனமெடுத்த அத்தியாயம்
காவற்றொழில்பூண் டுலகேழையுங் காக்கவந்தோன்
ஆவுக்கிடரொன் றணுகாவகை யாழிமேய்ந்த
தூவற்கருங்கார் சொரிகின்றவம் மாரிகாத்தான்
கோவத்தன மோர் குடையாமெனக் கொண்டு நின்றே.
------------------
பேர்பெற்றபூதனை யாமோரணங்கிந்தப் பேருலகிற்
சீருற்றகோகுலத் தெய்திக்கபடஞ் செயவறிந்து
பாரத்தடமுலைப் பாலோடுயிருண்டப் பாவை நெடு
மார்பிற்றவழ்ந்து விளையாடினோர் நந்த மண்டலமே. (76)
(இ-ள்) கொடிய செய்கை செய்ததில் கீர்த்திபெற்ற பூதனை யென்கின்ற வருத்தத்தைச் செய்யப்பட்ட ஓர் அரக்கி இந்தப் பெரிய உலகில் சிறப்புப் பெற்ற கோகுலநகரத்தை யடைந்து கொல்லுதற்குரிய கபடச் செய்கையைச் செய்ய அதனை அறிந்து அப்பூதனை யினது பருத்தமலைபோலும் தனத்தின்கண் உள்ள பாலோடு அவள் உயிரையும் உண்டு அவளுடைய விசாலமாகிய மார்பின் கண்ணே தவழ்ந்து விளையாடிய ஸ்ரீ கிருஷ்ணபகவானுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ-று. (76)
உ-ம். பாகவதம், பூதனை வீடுபெற்ற அத்தியாயம்.
அறிந்துநகையாடிமுலை யங்கைகொடுபற்றி
மறங்குலவுவஞ்சமகண் மாமுலைமணிக்கண்
டிறந்தொழுகுபாலினொடு செய்ய தளிரென்னப்
பிறங்குகனிவாய்முகில் பிழிந்துயிர் குடித்தான்.
---------------
கந்தமலரயன் கோபாலர்சேயரைக் கன்றுகளை
யந்தரசாலஞ்செய் வோர்தமைப்போன் மறைத் தானதனாற்
றந்தமனைதொறுங் கோபாலரானினந் தந்தருளு
மைந்தருடன்கன்றுந் தாமாகினோர் நந்த மண்டலமே. (77)
(இ-ள்) நல்ல மணம் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் அந்தரத்தில் இந்திரசாலம் பண்ணுவோரைப்போல கோவிந்தருடைய பிள்ளைகளையும், கன்றுகளையும், ஆவினங்களையும் ஓர்காலத்து மறைத்தான்; அதனால் அப்பொழுது ஆயர்களுடைய இல்லங்கடோறும் அவர்கள் கவற்சியுறாதபடி ஆனினங்களும், அவற்றைத் தந்தருளும் பிள்ளைகளும், கன்றுகளும் தாமே யாயினவராகிய யாதவர்களுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (77)
உ-ம். பாகவதம், மலரவன் சிறார்க்கன்றுகவர்ந்த அத்தியாயம்.
களிச்சுரும்பரற்று வெள்ளி வெண்டோட்டுக்
கள்ளவிழ்முளரி வீற்றிருக்கும்,
பளிக்கொளியுருவிற் பவளவாய்ப்பச்சைப்பசுங்கிளி
மழலையாள் கொழுநன்,
ஒளித்தனனென்ப துணர்ந்துபாரேழு முந்
திநாண் மலரிடைக் காட்டி,
யளித்தழிப்பவன்றா னாயர்தஞ்சிறாரு
மானிளங்கன்று மாயினனால்.
----------
ஆரணத்தந்த மறியாததாள ரணி மகர
தோரணத்தந்த மதுரையிற் சென்று முன் துற்கை சொன்ன
காரணத்தந்தம ரென்றறியாவஞ்சக் கஞ்சன்விட்ட
வாரணத்தந்த மொசித்தார்க்கிடநந்த மண்டலமே. (78)
(இ-ள்) வேதசிரசுகளாகிய உபநிடதங்களுமுணராத பாதங்களையுடையவரும் ஒழுங்குபட மகர தோரணங்கட்டிய அழகினையுடைய மதுரையிற் சென்று முன் துற்கை புகன்ற காரணத்தால் அழகிய உறவினர் என்றறியாத கபடச்செயலையுடைய கஞ்சனேவிய குவலயா பீடமென்னும் யானையினது தந்தங்களை முறித்தவருமாகிய ஸ்ரீகிருஷ்ணபகவானுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று (78)
உ-ம் பாகவதம், கஞ்சனைக்கொன்ற அத்தியாயம்.
ஏடவிழ்ந்தபூந் துழாய்முகி லித்திறன்களிற்றோ
டாடி மண்மிசை வீழ்த்தின னழிபெருங்குருதி
மோடு கொண்டவம் மும்மதக் கலுழியிற் பெருகி
யோடவங்கைபா லொளிறுவெண் மணி மருப்பொசித்தான்.
--------------
முந்தியவேதமு மெண்ணெண்கலைகளு மூதறிவாற்
சிந்தை மகிழப் படிப்பித்தவற்குமுன் றெட்சணையாப்
பைந்திரை வேலையி னந்தகன் கொண்ட பசுங்குதலை
மைந்தனைமீளக் கொடுத்தவர் வாழ்ந்த மண்டலமே. (79)
(இ-ள்) நூல்களினுள்ளே முதன்மையாக எடுத்தோதப்பட்ட வேதங்களும் அறுபத்துநான்கு கலைகளும் முதிர்ந்த அறிவினால் உள்ள மகிழ்ச்சியுறப் படிப்பித்த ஆசிரியராகிய சாந்தீபமுனிவருக்குக் கொடுக்கும் தட்சணையாகக் குளிர்ந்த அலைகளையுடைய கடலினிடத்தில் இயமனால் கவர்ந்து கொள்ளப்பட்ட இனிய மழலை மொழியையுடைய அவ்வாசானது குமாரனை மீளவும் வருவித்துக்கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணசுவாமிக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (79)
உ-ம். பாகவதம், குரவன்மைந்தற்கொணர்ந்த அத்தியாயம்
வெருவுற்றகூற்றம் விரைவோடெதிர் வந்திறைஞ்சி
வரவுற்றதென்கொ லெனவேத்தலும் வந்தவண்ணந்
தெரிவுற்றதாக்கிச் சிறுவற்றர வொல்லை மீளாக்
குரவற்பணிந்து குமரன்றனைக் கொள்கவென்றான்.
----------
வீசுந்திரைக்கட லொப்பான காளிந்தி வெம்மடுவிற்
றேசுறுநீலக் கிரியிணையாகித் தினகரன் போற்
காசணிசூட்டுத் துளை முள்ளெயிற்று தீக் காளியனா
மாசுணமீது நடித்தார்க்கிடநாத மண்டலமே. (80)
(இ-ள்) எறிகின்ற அலைகளையுடைய கடலை நிகர்த்த காளிந்தி யென்னும் கொடுமையான மடுவின்கண்ணே தங்கிய ஞாயிறு போன்ற மணியை யுடைய சூட்டினையும் துளையினையுடைய முட் போலும் கூரிய பற்களையும் உடைய கொடிய காளிங்கனாகிய பாம்பினது முதுகினிடத்து ஒளியுற்ற நீல மலைபோனின்று நடனஞ் செய்த திருமாலுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (80)
உ-ம். பாகவதம், அரவின் மேலாடிய அத்தியாயம்.
காடுகொண்டெழு பணாமணித்திரள்கள் கக்கு செக்கரொளி சுற்றியோ,
பாடுசெக்கரொளி வீசுகற்கள் பல பட்டழுந்தியெழில் கன்றியோ,
சூடுதார் மகுட கோடிமேல மரர் சூடு சேவடி செவப்ப நின்,
றாடல்வாளாவி னுச்சிநின்று நட மாடினான் மறைகள் பாடினான்.
-----------------
தண்ணறுஞ்சாந்தம் பனிநீரளாவித் தமனியப்பொற்
கிண்ணநிறைய வளித்ததனானற் கிருபை செய்து
விண்ணகமாதிவ ளென்னவனப்பு மிகப்பொருந்த
வண்ண மடந்தைமுக் கூனிமிர்த்தார் நந்த மண்டலமே. (81)
(இ-ள்) கூனியாகிய வண்ணப்பெண் தனக்குத் தண்ணிய நன் மணமுள்ள சந்தனத்தைப் பனி நீரோடு கலந்து பொன்னாற் செய்த அழகிய கிண்ண நிறையக் கொடுத்ததனால் நன்மையாகிய கருணை செய்து மிகுந்த அழகைப் பொருந்துதலால் சுவர்க்கத்துள்ள அரம்பையாகிய பெண்ணேயிவள் என்று கண்டோர் புகழும்படி அவள் அடைந்திருந்த மூவகைக் கூனையும் நிமிரப்பண்ணிய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (81)
உ-ம். பாகவதம் , மதுரைகண்ட வத்தியாயம்
சேவடி சிலம்படி மிதிப்பவிறைசெங்கை
பாவையனையாளணரி பற்றினனெடுப்ப
மூவகைய கூனொருவி மூவுலகின் மாதர்
மேவரிய செல்வியின் விளங்கினள் சிறந்தே.
----------
முத்தநகையன்னை பாலூட்டித்தன்றிரு முன்றில் வைக்கக்
கத்தனிவனென் றறியாமலேசுழற் காற்றுவந்து
வொத்தங்கையாலெடுத் தந்தரத்தே கொண் டுயர்திருணா
வத்தன் கழுத்தை நெரித்திட்டவர் நந்த மண்டலமே. (82)
(இ - ள்) முத்துகளைப் போன்ற பற்களையுடைய தம் அன்னையார் பாலூட்டி அழகிய முன்றிலின்கண்ணேவிட இவர் எவ்வகைத் தேவர்க்கும் முதல்வனென்று அறியாமல் சூறைக்காற்றாக வந்து பொருந்தி குடங்கையாற்றாங்கி ஆகாயத்தே கொண்டுயர்ந்த திருணாவத்தன் என்னும் அசுரனது கழுத்தை நெரித்திட்டவராகிய திருமால் வாழுமிடமும் நந்தமண்டலமாகும் எ-று. (82)
உ-ம். பாகவதம், சகடமுதைத்த அத்தியாயம்
சுழிக்குங்கடுங்கா லெறிகின்ற தூளிப்படலத் திடை மறை யக்
குழைக்கும் பசும்பொற் கொம்பனையாள் குழவிகாணாள் குழை வெய்த,
வழுத்தற்கரிய மறைமுதலை வவ்விக்கொடுபோம் வாளவு ணன்,
கழுத்து நெரியக் கண்பிதுங்கிக் கன்மேற்கவிழ்ந்து வீழ்ந்திறந்தான்.
------------
தன்றுணைத்தோழருடன் கன்றுமேய்த்துத்தண் ணீர்த்தவிப்பா
லின்றுணர்ப்பைங்குர வின்கீழ்த்தனித்தங் கிருத்தல் கண்டே
மென்றலைச்செங்கபல் போலத்தனைமுன் விழுங்கிக்கக்கும்
வன்றிறற்பன் கொக்கின் வாய்கிழித்தார் நந்த மண்டலமே. (83)
(இ-ள்) தனக்குத் துணையாய தோழரோடு சென்று ஆன்கன்றுகளை மேய்த்துத் தண்ணீர் விடாயால் குளிர்ந்த நீர்த்துறைக்கண் நின்ற இனிய மணமுள்ள பூங்கொத்துகளையுடைய பசிய குரா மரத்தின் கீழ் தனித்திருத்தலைப் பார்த்து மென்மையாகிய தலையையுடைய செவ்விய கயலைவிழுங்குதல் போலத் தம்மை விழுங்க அழல்போல் மிடற்றிற் சுட்டமையால் பின்னர்க்கக்கிய மிக்க வலியையுடைய புல்லிய பகாசூரனாகிய கொக்கினது வாயைக் கிழித்தவராகிய ஸ்ரீ கிருஷ்ணதேவருக்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ - று. (அங)
உ-ம். பாகவதம், பிருந்தாவனமடைந்த அத்தியாயம்.
புழுங்குஞ்சின முதிர்வுற்றடு புள்ளாகியொ ரவுணன்
விழுங்கும் பொழு தழலாமென மிடறிற்சுட வுமிழாக்
கொழுந்தண்டுள வணிமாயனைக் குத்தற்கெழ நெடுமால்
செழும்பங்கய மலரங்கையிற் றீவாய்கிழித் தனனால்.
---------------
ஆயர்க்கமுத மரக்கர்க்கு வெவ்விட மாயுதித்துச்
சேயொத்திருந்து தவழ்ந்திடும் போது செகம்புகழுந்
தாயச்சமெய்தி யிருவிழிபொத்தச்செந் தண்பவள
வாயிற்புவனங்கள் காட்டினர்வாழ்தந்த மண்டலமே. (84)
(இ-ள்) கோவலர்களுக்கு ஆக்கத்தைச் செய்யும் அமிழ்தம் போலவும், அரக்கர்கட்கு அழிவைச்செய்யும் கொடிய விடத்தைப்போலவும் அவதரித்துப் பரம்பொருளாகிய தாம் குழந்தையையொத்திருந்து தவழ்ந்து சென்றபோழ்து உலகத்துள்ளோராற் புகழப்படும் அசோதையாகிய தாய் அச்சமுற்று இருகண்களையும் மூடிக்கொள்ளும்படி செம்மையாகிய குளிர்ச்சியமைந்த பவளத்தையொத்த தமது வாயினிடத்து எல்லாப் புவனங்களையும் தோற் றுவித்தவராகிய திருமாலுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (84)
உ-ம். பாகவதம், சகடமுதைத்த அத்தியாயம்
பூவைப்புதுமா மலர்போலெழில் பூத்ததோன்ற
லாவித்தகாலைத் துவர்வாயிடை யாழிஞால
மேவித்திகழுந் திறனோக்கி வியக்கு மன்னை
காவித்திருமா மலரன்ன தன் கண்புதைத்தாள்.
-------------
காசினிமீதுநின் றந்தரந்தாவிக் கனன்றிருதாள்
வீசியிடிக்குர லார்ப்பமுழக்கி விரைந்து வருங்
கேசியெனும் பெயர்த் துட்டவவுணன் கிளைக்கும் விஞ்சை
வாசியுடலங் கிழித்தவர் வாழ்ந்த மண்டலமே. (85)
(இ-ள்) நிலத்தின்கண்ணே நின்று வானின் கண்ணேதாவிக் கோபித்து இரண்டடிகளையும் வீசி இடியோசைபோலும் ஒலிக்க ஆரவாரித்துத் தம்மைக்கொல்லும்படி விரைந்துவந்த கேசியென் னும் பெயரினையுடைய கொடிய அவுணனாகிய பலவகையாகத் தோன்றும் பெருகிய விஞ்சையையுடைய குதிரையினது உடலைப் பிளவுபடச் செய்தவராகிய திருநாதனுக்குரியவிடமும் நந்தமண்டலமாகும் எ - று. (85)
உ-ம் பாகவதம், நாரதர் கஞ்சனோடுரைத்த அத்தியாயம்.
விழுங்குவான் போலச்சால விரிந்த தீவாயினூடு
பிழிந்து பேயாவியுண்டோன் பிறங்குபொற்றொடிக்கைநீட்டி
வழிந்தழ கொழுகுசெங்கை வளர்த்தனன் வளர்ப்பவாகங்
கிழிந்துவாம்புரவியாய கேசிமாண்டுயிர் நீத்தானால்.
-------------
உளங்கனியாவிறல் வற்சாசுரன்வஞ்ச முன்னிக்கருங்
களங்கனிமேனி மறைத்தான் கன்றாய்வரக் கண்டெடுத்து
விளங்கனிசிந்த மரத்தெறிந்தே வென்ற வெற்றிப்பைந்தேன்
வளங்கனியம்புயச் செங்கரத்தார் நந்த மண்டலமே. (86)
(இ-ள்) மனமிளகாத வலியையுடைய வற்சாசுரன் கபடத்தை எண்ணிக்கரிய களங்கனிபோலும் தன்னுடம்பை மறைத்து ஓரான் கன்றாய் வடிவெடுத்து வருதலைக்கண்டு அவ்வான்கன்றை யெடுத்துப் பக்கத்தில் நின்ற விளாமரத்தினிடத்தில் பழம் உதிரும்படி எறிந்து செயித்த விறலையுடைய குளிர்ந்த தேனாகிய வளப்ப முதிர்ந்த தாமரை மலர்போலும் செழுமையாகிய கரத்தையுடைய திருமாலுக்குரிய விடமும் நந்தமண்டலமாகும் எ-று. (86)
உ-ம், பாகவதம், பிருந்தாவனமடைந்த அத்தியாயம்.
வளர்கன்றின துருவாயொரு வைவேற்கொலையவுணன்
றளவம்படர் தண்கானகந் தலைப்பெய்தமையறிந்தான்
றுளவம்புனை விரிதாரவன் றுணைவற்கறிவுறுத்தான் விளவின்கனியுதிரும்படிவிரைவிற்கொடெறிந்தான்.
--------------
பணிமொழிக்கோவியர் நெஞ்சந்திடுக்கிடப் பானிலவிற்
றுணிவுடன்வந்து துரந்தேபிடிக்குந் துணர்மலர்த்தார்
திணிவரைத்தோள்சங்க சூடனை வென்று சிரத்திருந்த
மணிகொணர்ந்தேதமை யற்களித்தோர்நந்த மண்டலமே. (87)
(இ-ள்) கற்கண்டின் சுவையையும் தாழ்க்கும் இனிய மொழி யையுடைய தம்மைச் சூழநின்ற கோவியர்களுடைய மனம் அச்ச முறும்படி பால்போலும், வெள்ளிய நிலவில் ஊக்கத்தோடு வந்து தம்மைத் துரத்திப் பிடித்த கொத்தாகிய மலரால் தொடுத்த மாலையையுடைய இறுகின மலைபோலும் புயத்தைக் கொண்ட சங்கசூடனை மார்பிடத்து மோதி வென்று அவனது சிரத்திலிருந்த செந்நிறம் பொருந்திய மாணிக்கத்தைக்கொணர்ந்து தன் தமைய னாருக்களித்த திருமாலுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (87)
உ-ம். பாகவதம், சங்கசூடனைக்கொன்ற அத்தியாயம்.
மின்றிகழ்ந்த கரு மேக நிறத்தோன்
சென்றெதிர்ந்துவிழி சென்றழல்கால
நின்ற தீயவ னிறத்தினிலெற்றிக்
கொன்று சென்னிமணி கொண்டனன் மாதோ.
----------
பானீயநாதன் கனன்மதிவாயு பருதியமர்
கோநீர்மயம்பயம் வெண்டயிர்நெய்யெனக் கூறிவற்றைத்
தானே கொடுத்தின் புறச்செய்பசுக்களைத் தண்ணருளால்
வானோருமேத்த வளர்ப்பவர்வாழ்நந்த மண்டலமே. (88)
(இ-ள்) கோசலத்தினிடத்து வருணனும், கோமயத்தினிடத்து அக்கினியும், பாலினிடத்துச் சந்திரனும், வெண்மையாகிய தயிரினிடத்து வாயுவும், நெய்யினிடத்துச் சூரியனும் பொருந்தி யிருப்பதாகச் சுருதிகளில் சொல்லப்பட்ட பஞ்சகவ்வியத்தைத் தன்னிடத்தினின்றும் உலகத்தாருக்குக் கொடுத்து சகலத்தையும் பரிசுத்தப்படுத்தி யாவரும் இன்பத்தை யடையும்படிச் செய்கின்ற பசுக்கூட்டங்களைத் தேவர் முதலிய யாவருங்கொண்டாட அன்புடனே காப்பவர்களாகிய யாதவர்களுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ-று. (88)
---------------
துணிவாயெதிரெதி ராக்குஞ்சரமிசைத் தோன்றுறுபே
ரணியாரொருவ ரொருவர் முகந்தெரி யாதவண்ணம்
எணியே நடுவிற் பொருளிடுமிப்பர்க ளென்றுரை செய்
மணியாரிடபக் கொடியினர்வாழ்நந்த மண்டலமே. (89)
(இ-ள்) தைரியத்துடனே எதிரெதிராக மதயானையின் பிடரியில் ஏறி விளங்காநின்ற பேரழகு பொருந்திய ஒருவர் முகத்தை ஒருவர் அறியாதிருக்கும்படி எண்ணி அவ்விருவர் மத்தியில் விசேஷ திரவியங்களைக் கொடுத்தருள்கின்ற இப்பர்களென்று ஆன்றோர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட ஓசையையுடைய மணியணிந்த இடபக் கொடியினையுடையவர் வாழும் இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (89)
உ-ம் சீவசமபோதனை, ஆறாவது உலோகாதிகாரம், 42-இஃது எதிர்நிரனிறை.
இப்பர் சவிப்பர் பெருங்குடி வாணிகரென்
றொப்புடைய மூவ ருரைக்குங்கால் - தப்பில்
மிதியடியே சானமிசை நோக்கினர்கள் காணா
நிதியுடைய ராவர் நிலத்து.
----------------
தூயசங்கேந்துசெங் கைக்குத் தொடியுஞ் சுருதிமொழி
மேயபைங்காதிற் கணிகுண்டலமும் விரைந்தளித்த
பாயகனுக்கின்ப சாரூபமுத்தி பரிந்தளித்து
மாயாம்பந்தப் பவநீக்கினோர் நந்த மண்டலமே. (90)
(இ-ள்) வெண்மையாகிய பாஞ்சசன்னியமென்னும் சங்கத்தைத் தாங்கின சிவந்த கைகட்குத் தொடிகளையும், ஆழ்வார்களோதிய தமிழ் வேதந்தை மகிழ்ச்சியுடனே கேட்டருளிய பசிய காதுகளுக்கு அழகிய குண்டலங்களையும் விரைந்து கொடுத்த பாயகனென்பவனுக்கு இன்பமயமான சாரூபமுத்தியை அன்போடளித்துப் பொய்யோடு கலத்தலையுடைய பிறவியை நீக்கின ஸ்ரீ கிருஷ்ணதேவருக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (90)
----------
ஆமாலை நீத்துவந் தாமாலையைப்புரந் தம் மதுரைக்
கேமாலைக்காலத்தி லேகியபோதி னிறைஞ்சிச்செந்தேன்
பூமாலை நல்குஞ் சுதாமன்றனக்கிந்த்ர போகநல்கி
மாமாலை நீக்கியன் பீந்தார்வளர் நந்த மண்டலமே. (91)
(இ-ள்) திருப்பாற்கடலின்கண் தாம் பள்ளி கொண்ட வடபத்திரத்தைவிட்டு ஆவினங்களைக் காத்து அழகிய மதுரையில் மாலைக்காலத்துச் சென்றபோழ்து தம்மை வணங்கிச் செம்மையாகிய மதுவைத்துளிக்கும் பூமாலையைத் தந்த சுதாமனென்பவனுக்கு இந்திரபோகங்களையும் கொடுத்துப் பெரிய மயக்கத்தையும் ஒழித்துத் தமது அன்பையும் அளித்தவராகிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (91)
உ-ம். பாகவதம் , மதுரைகண்ட அத்தியாயம்.
விழைவதென்னென வெந்திறல் பழுத்தகூ ராழி
யுழவநின்கழ லுளங்கனிந்துருகுபே ரன்பு
தழையநல்கெனத் தாமரைக்கண்ணருள் பெருகிப்
பொழியுங்கார்முகில் பூந்தொடையளித்தவற் களித்தான்.
----------
அணிதிகழ்காளிந்தி மித்திரவிந்தைமின் னாள் பத்திரை
திணிபணைத்தோளி னிலக்கணைகோசல தேசச்சாத்தி
பணிமொழிசாம்ப வதியுடனே சத்ய பாமைருக்கு
மணியெண்மரையு மணம்புரிந்தோர் நந்த மண்டலமே. (92)
(இ-ள்) அழகு விளங்குகின்ற (காளிந்தி) மின்னையொப்பவளாகிய (மித்திரவிந்தை) (பத்திரை) வலிய மூங்கிலையொத்த புயத்தினையுடைய (இலக்கணை) கோசலதேசத்திற் பிறந்த ([*]சத்தி) அமிழ்தமும் தான் சுவையால் ஒப்பாகாமைபற்றிப் பணிகின்ற மொழியையுடைய (சாம்பவதி) (சத்தியபாமை) (உருக்குமணி தேவி) என்னும் இவ் வஷ்டமகிஷிகளையும் மணம் புணர்ந்தோராகிய திருமாலுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ-று. (92)
----
[*] நப்பின்னைப்பிராட்டியார்.
உ-ம். பாகவதம் , ருக்மணி மணத்திறமுரைத்த வத்தியாயம்.
வேழநகர் மன்னர் முதல் வெண்டிரையுடுத்த
வேழிரு நிலத்தரசர் யாவருமிறுப்ப
வாழிநெடு வானவர் வழுத்த மணிவண்ண
னாழிதரு மின்னமுத மன்னவளைவேட்டான்.
----------
உரம் பெறுமன்னவர் செங்கோல் செழித்தலு மொண்பயிர்கள்
தரம்பெறவோங்கலும் வாணிபநாளுந் தழைத்திடலுந்
திரம் பெறுபூவி லறங்கள் பெருகவுஞ் செய்தொறுவர்
வரம்பெறுகோவின முள்ளார்கள் வாழ்நந்த மண்டலமே. (93)
(இ-ள்) சத்துருக்களை ஜெயித்துச் செங்கோன்முறை வழுவாது அரசாட்சி செய்கின்ற வலிமையுடைய மன்னவர்களது ஆக்கினையால் உலகத்தில் நீதிமார்க்கங்கள் செழித்திருப்பதும், இப் பூமியினிடத்து ஆத்மகோடிகளுக்கு ஜீவாதாரமாகிய ஒள்ளிய பயிர்கள் நன்மையுடனே பக்குவமாக விருத்தியடைதலும், தன தானியம் இரத்தினங்கள் முதலாகிய பலவித வியாபாரங்கள் எந் நாளுந் தழைக்கவும், நிலைபெற்ற பயனைத் தருகின்ற முப்பத்திரண்டு தருமங்கள் பெருகவும் செய்யத்தக்க வரங்களைப் பெற்ற பசுக்கூட்டங்களையுடைய யாதவர்கள் வாழ்ந்திருப்பதும் நந்தமண்டலமாகும் எ - று. (93)
--------------
முல்லைச்சிறானொரு வன்மதினின்று முன் னேசரிந்த
கல்லைப்பிடுங்கியுள் ளேதங்குபேழையின் காஞ்சனத்தை
எல்லைக்குள் யாருரி யாரெனத்தேர்ந்தவற் கின்பமுற
வல்லையிலீந்தருட் கோதண்டன் வாழ்நந்த மண்டலமே. (94)
(இ-ள்) முல்லை நிலத்திற்குரிய யாதவகுலத்திற் பிறந்த கோதண்டனென்னும் பெயரையுடைய ஒரு சிறுவன் ஓர் நகரத்தின் மதிளின் மேலேறி விளையாடிக் கொண்டிருக்கையில் தனக்கு முன்னே அம்மதிலினின்றுஞ் சரிந்திருந்த கற்களைப் பிடுங்கிப்பார்க்க அதற்குள்ளிருந்த பெட்டியில் அடங்கிய திரவியங்களைக் கண்டு அந்தகரத்தின் எல்லைக்குள் அதற்குரியவர்கள் யாரென்று ஆராய்ந்தறிந்து அப்பொருளுக்குடையவன் இன்பத்தையடையும்படி மன மகிழ்ச்சியுடனே அத்திரவியங்களை வலியக்கொடுத்தவராகிய தருமசிந்தையுடைய கோதண்டக்கோன் வாழ்ந்திருந்ததும் நந்த மண்டலமாகும் எ - று. (94)
----------
அயனைப் பெற்றோனை வளர்த்தவராக்களை யாண்டளிப்போர்
பயனளிப்போர்ததி யீவோர்கள் தக்கிரம் பாலிப்பவர்
நயமுறவன்பி னவநீதமாச்சிய நன்கருள்வோர்
வயமுறமுல்லை யணியண்டர்வாழ்ந்த மண்டலமே. (95)
(இ-ள்) திருவுந்திக்கமலத்தில் பிரமதேவனைத் தோற்றியருளிய ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியைத் தாயைப்போல் வளர்த்தவரும், பசுக் குலங்களை நாடோறும் ஆதரித்துக் காக்கப்பட்டவரும், இனிமையான சுகத்தைத் தருகின்ற அமிர்தத்தை அபிஷேகாராதனை முதலியவற்றிற்குக் கொடுப்பவரும், வலிமை செய்கின்ற தயிரைக் கொடுப்பவரும், தாகமுதலியவற்றிற் குபயோகமாகச் சிரமத்தை நீக்கப்பட்ட மோரைக் கொடுப்பவரும், மிகுந்த அன்போடு எம்பெருமானாகிய ஸ்ரீ கண்ணபிரானும் விரும்பியுண்டருளிய வெண்ணெயையும், யாகமுதலியவற்றிற்குரிய நல்லறிவைத் தருகின்ற நெய்யையும் நயம் பொருந்திய சொற்களோடு இன்பமுண்டாகக் கொடுப்பவரும் ஆகிய வெற்றிபெற்ற முல்லை மலர் மாலையணிந்த அண்டர்கள் வாழ்ந்திருப்பதும் நந்த மண்டலமாகும் எ-று. (95)
-----------
பாறேனெனுமொழிப் பூமாதைமார்பிற் பரிந்துவைத்துஞ்
சேறாவியவிழி மின்னார்களெண்மரைச் சேர்ந்தும்பதி
னாறாயிரமட வார்தமைநாளு மகத்துளின்ப
மாறாமன்மேவு மணவாளர் வாழ்நந்த மண்டலமே. (96)
(இ-ள்) பாலும் தேனும் போலும் இனிக்கின்ற மொழியை யுடைய மலர்மகளைத் தம்மார்பில் விரும்பி வைத்துக்கொண்டும், சேலைப்போலும் தாவிச்செல்லுகின்ற விழிகளையுடைய மின்னற் கொடியை ஒப்பவர்களாகிய ருக்குமணி முதலிய எண்மரைக்கூடி யும், அவ்வளவிலமையாது கோவியர்களாகிய பதினாறாயிர மடவார்களையும் நாடோறும் மனத்தினிடத்து இன்பம் ஒழியாமல் கூடிய மணவாளராகிய திருமாலுக்குரிய இடமும் நந்த மண்டலமாகும் எ - று. (96)
உ-ம். பாகவதம், நரகாசுரனைக் கொன்ற அத்தியாயம்.
உருவம்பதினா றாயிரங்கொண் டொற்றைத்திகிரி நெடுமாயன்
குரவங்கமழ்ந்து நெறிந்துக்கடை குழைந்து முருகு கூட்டுண்டு
வரிவண்டுறையுங் கருங்கூந்தன் மானார்பதினாறாயிரவர்
திருவமணமோர் காலையினிற் சிறப்பவினிது புரிந்தனனால்.
------------
ஒருகாமதேனு முளம்வெட்கச்சோமனு மொப்பலவாத்
தருவார் திருவல்லிக் கேணித்தலத்தன்ன தானஞ்செய்யு
முருகார்மலர்த்தடஞ் சூழ்சாலைப்பாக்க முதல்வனென
வருவீரராகவ மால்வாழிடநந்த மண்டலமே. (97)
(இ-ள்) வசிட்டமுனிவருடைய ஆச்சிரமத்தில் வந்த நால்வகைப் படையினையுடைய கௌசிகனென்னும் அரசனுக்கும், அப் படைகட்கும் அறுவகைப்பட்ட உணவைத்தந்த ஒப்பற்ற காமதேனுவும், தேவர்களுக்குத் தம்மிடத்துள்ள அமிர்தத்தை ஊட்டும் சந்திரனும் ஒவ்வாதனவாகி மனதில் வெட்கமுறும்படி பல்வகைப் பட்ட தருக்கள் நிறைந்த திருவல்லிக்கேணியாகிய திருப்பதியில் அன்னதானஞ் செய்துவந்த மணநிறைந்த மலர்களையுடைய தடாகங்களாற் சூழப்பட்ட சாலைப் பாக்கமென்னும் ஊருக்குத் தலைவனாகிய வீரராகவனென்று சொல்லப்பட்ட பெருமையையுடையோன் வாழ்ந்திருக்கும் இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (97)
------
இருநிலவண்டம் பிரமாண்டகோடி யிறைஞ்சுபொற்றாட்
டிருவெவ்வளூரர்க்குத் தேரோடும் வீதியிற் செம்பொனின் மேற்
பருமணிவைத்திழைத் தாற்போற்கருங்கற் பதித்தன்புற
வருவீரராகவ வள்ளற்கிடந்த மண்டலமே. (98)
(இ-ள்) பெரிய நிலமுதலியவற்றிற் கிடமான ஆகாயத்திலுள்ள பிரமாண்ட கோடிகளில் நிறைந்திருக்கின்ற சகல ஜீவர்களும் வணங்குகின்ற அழகிய திருவடிகளையுடைய திருவெவ்வளூரி லெழுந்தருளிய ஸ்ரீ வீரராகவப்பெருமாளுக்குத் தோ செல்லும் வீதியில் செம்மையாகிய பொன்னில் பருத்த இரத்தினங்களை வைத்திழைத்தாற்போலக் கருங்கல் பதிப்பித்து அக்கடவுளிடத்து அன்பு மிகுந்த வீரராகவப் பிள்ளையாகிய கொடையாளனுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும். எ - று. (98)
-------
இயலிசைவாணர்கட் கன்னமுஞ்சொன்னமு மீந்துலகி
லுயர்புகழ்மேவ வகவிலையேறச்செய் யுத்தமன்கார
பயிலெயிற்கோபுர மண்டபமேடைபண் போடுறு தென்
மயிலையில் வாழ்வேங் கடாசலவேணந்த மண்டலமே. (99)
(இ-ள்) இலக்கணத்தோடமைந்த இசைப்புலவர்கட்கு உண்டியும் பொருளுங்கொடுத்ததனால உலகினிடத்துயர்ந்த புகழ் தன்னையடையவும் தானிய விலை ஏறவும் செய்த உத்தம குணமுடையவனாகிய முகில் தங்கிய மதிலோடு சேர்ந்த கோபுரங்களும், மண்டபங்களும், மேடைகளும் சிற்ப நூலின்பண்போடு விளங்கிய அழகிய திருமயிலையென்னும் பதியில் வாழும் வேங்கடாசல வேளுக்குரிய இடமும் நந்தமண்டலமாகும் எ - று. (99)
---------
காழ்த்தசிலைப்புய மூவேந்தர் தங்கள் கனகமுடி
தாழ்த்துவணங்குஞ் சரணவ்வையங்கவை சங்கவைதங்
கேழ்த்துங்கக் கொங்கைக டோய்ந்தின்பநாளுங் கிளைக்கவென்று
வாழ்த்து மென்பாக்கொள் மருக்கொள்வர் தாநந்த மண்டலமே. (100)
(இ-ள்) வலிமுதிர்ந்த வில்லைத் தாங்கிய புயங்களையுடைய சேர-சோழ பாண்டியர் என்னும் மூவரசர்களும் தங்களுடைய பொற்கிரீடம் அணிந்த முடியைத் தாழ்த்து வணங்கும் கழல்களை யுடைய ஒளவையார் அங்கவை சங்கவை என்னும் இரண்டு ஆய் மகளிர்களது ஒளிபொருந்திய உயர்ந்த தனங்களைத் தழுவி எந்நாளும் இன்பம் பெருகுகவென்று தெய்வீகராஜனை வாழ்த்திய மெல்லோசையையுடைய செய்யுளாகிய மலரினது மணத்தைக் கொண்டவராகிய ஆயர்கள் வாழுமிடமும் நந்தமண்டலமாகும் எ-று. (100)
உ-ம். ஒளவையார் பாடியது.
ஆயன் பதியி லரன்பதிவந் துற்றளக
மாயன துங்கருவியானாலும் - தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனீ
யின்று போ லென்று மிரு .
-----------
பால்கனிதேனெனச் சங்கீதநாடொறும் பாடித்தன்னைக்
கோலிவந்தேபுகழ் மாதுருபூதையன் கொள்கைகண்டே
சால்சிறப்பானல்கி யைஞ்நூறு பொன்கையிற் றான் கொடுத்த
மால் வேங்கடாசல மன்னற் கிடந்த மண்டலமே. (101)
(இ-ள்) இனிமையால் பாலும் பழமும் தேனும் ஒக்குமென்று சொல்லும்படி இசையைத் தினந்தோறும் பாடித் தன்னைச் சூழ்ந்து வந்து புகழ்ந்த மாத்ருபூதையரது கருத்தைத் தெரிந்து கொண்டு மிக்க சிறப்பையுடைய பசுக்களையும் கொடுத்து அவ்வளவிலொழியாது ஐஞ்நூறு பொன்னையும் கையிலிந்தவராகிய பெருமை பொருந்திய வேங்கடாசலப்பிள்ளையென்னும் செம்மலினுடைய இடமும் நந்தமண்டலமாகும் எ-று. (101)
--------
பார்வாழி வாழிநல் லாவின மந்தணர் பார்த்திபர்கள்
கார்வாழி வாழி வசியர்கள் மூவர் கவின் சதுர்த்தர்
ஏர்வாழி வாழி தருமஞ்செய் வோர்களிசைபடைத்தோர்
சீர்வாழி வாழி செயநந்த மண்டலச் செந்தமிழே. (102)
(இ-ள்) விசாலமுள்ள பூமிப்பிராட்டி வாழ்க, நன்மையைத் தருகின்ற பாற்பெருக்கமுடைய பசுக்கூட்டங்களும் - பிரம்மகியான நிறைந்த பிராம்மணர்களும் - உலகாளும் அரசர்களும் வாழ்க, உலகத்திற்குத் துணைக்காரணமாகிய கரிய மேகங்கள் வாழ்க, கோவை சியர் - பூவைசியர் - தனவைசியர் என்னும் மூவர்கள் வாழ்க , அழகின்மிகுந்த சூத்திரர்களும் அவர்களுக்குரிய கலப்பையென்னும் கருவியும் வாழ்க, பஞ்சகாலத்துந் தருமஞ்செய்கின்றவர்கள் வாழ்க, கீர்த்தி பெற்றவர்களுடைய பல செல்வங்களும் வாழ்க, ஜெயம்பெற்ற செந்தமிழ்ச் சொற்களையுடைய நந்தமண்டல சதகம் வாழ்க எ-று.
நந்தமண்டல சதகம் மூலமும் - உரையும் முற்றுப்பெற்றது.
--------------
This file was last updated on 20 May 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)