pm logo

ச.வே. பஞ்சாட்சரம் எழுதிய
இணுவில் செகராசப்பிள்ளையார் பிள்ளைத் தமிழ்


iNuvil cekarAcap piLLaiyAr piLLaittamiz
by panjcATcaram
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Padmanabha Iyer of London, UK and Noolaham.org for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs, Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ச.வே. பஞ்சாட்சரம் எழுதிய
இணுவில் செகராசப்பிள்ளையார் பிள்ளைத் தமிழ்

Source:
இணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்
பாடியவர்: பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்
வெளியீடு: இளந்தொண்டர் சபை, கந்தசுவாமி கோவில், இணுவில்
செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்
-------------------

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மூத்த விரிவுரையாளர்
கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய மதிப்புரை


இலக்கிய வகைகள் என்றும் வளர்ந்து பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அதன் எண்ணிக்கைக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை வகுக்க முடியாதுள்ளது. காலந்தோறும் தோன்றி மறைந்தனவும் பண்டைக்காலத்தில் தோன்றி இடைக்காலத்திலும் பயின்று இன்றளவும் நிற்பனவும் இடைக்காலத்தில் எழுந்து தற்காலம் வரை வாழும் வகைகளும் காணப்படுகின்றன.

பிரபந்தங்கள், 96 என்னும் எண்ணம் பிரபந்த மரபியலிலேயே முதலில் அமைகிறது. பாட்டிலக்கணங்களையும், நிகண்டுகளையும், பிரபந்தங்களையும் இணைத்து நோக்கும்போது சுமார் 196 இலக்கிய வடி வங்கள் காணப்படுவதைப் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் ஆராய்ந்து வெளியிட்டருக்கிறார்.

நாட்டார் இலக்கியத்திலிருந்து ஏட்டிலக்கிய ஏற்றம் பெற்ற பல இலக்கிய வடிவங்களும் காணப் படுகின்றன. உதாரணமாக அம்மானை, ஊசல், வள்ளை, பந்தடி, கும்மி. சாழல், சுண்ணம், உந்தியார் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

தொல்காப்பியம் கூறும் "குழவி மருங்கிலும் கிளவதாகும்'' என்னும் சிறு விதையின் பெரு வளர்ச்சியாக வளர்ந்து பயன் தருவதே பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். *பிள்ளைத் தமிழ் இலக்கியம் நற்றாய், செவிலித்தாயர் முதலிய மகளிர் உரையாடுந் தமிழாதலின் இப்பாட்டு பிள்ளைத்தமிழ் என்னும் பெயரைப் பெறுவதாயிற்று என்றும் இப்பாட்டு வடமொழி முதலிய மொழிகளில் இன்மையாய்த் தமிழ் ஒன்றிற்கே சிறந்தமையால் 'தமிழ்' என்னும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராயிற்று எனவும் கருணாலய பாண்டியனார் கூறுவர். இதற்குப் பிள்ளைப் பாட்டு, பிள்ளைக்கவி என்ற பெயர்களுமுள.

பிள்ளைத் தமிழ் இலக்கணம்

பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாகப் பாவனை செய்து பத்துப் பிரிவுகளில் வைத்துப் பாடுதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். இவ்விலக்கியம் ஆண்மகனைக் குறித்ததாயின் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும், பெண்ணைப் பாடினால் பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் பெயர் பெறும், ஆண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை. தாலாட்டு, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை என்ற உறுப்புக்களை அமைத்துப் பாடுதல் மரபு. மேலே சுட்டிய பத்து உறுப்புக்களில் இறுதியிலுள்ள மூன்றுக்கும் பதிலாக அம்மானை, கழங்கு, ஊசல் என்ற உறுப்புக்களை அமைத்துப் பாடும் மரபு பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரியதாகும்
புலவன் தான் பாடவந்த பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாகப் பாவனை செய்து பாடும்போது அத்தலைவனது சாதனைக்குரிய பண்புகளும் ஆற்றலும் குழந்தைப் பருவத்திலேயே பொருந்தியிருந்தன எனப் பாவனை செய்து பாடுவதே பிள்ளைத் தமிழ் இலக்கிய நெறியாகும். பெரியோர் கருவிலே திருவுடையோராப் இருப்பர் என்பதும் பொது நியதி. இரு மாத காலம் முதல் நான்காம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் குழந்தையின் செயல்களைப் பத்து வகையாகப் பிரித்துப் பிள்ளைத்தமிழ் பாடப்படும். அப்பருவங்களின் விளக்கத்தை வருமாறு சுருக்கிக் கூறலாம்:

1. காப்புப் பருவம் - குழந்தையைக் காப்பாற்றும்படி தெய்வங்களை வேண்டல் (2 ஆம் மாதம்)
2. செங்கீரைப் பருவம் குழந்தை தவழ்ந்து இருகால்களையும் கைகளையும் அசைத்து ஆடுவதைப் பாடுதல் ( 5 ஆம் மாதம்)
3. தாலாட்டுப் பருவம் - தாய் குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடுதல் ( 8 ஆம் மாதம்)
4. சப்பாணிப் பருவம் - குழந்தை சப்பாணி கொட்டுதலைப் பாடுதல் ( 9 ஆம் மாதம் )
5. முத்தம் - குழந்தையை முத்தம் தருமாறு வேண்டுதல் (11 ஆம் மாதம் )
6. வாரானை - குழந்தையை அருகில் வருமாறு அழைப்பதாகப் பாடுதல் (12 ஆம் மாதம்)
7. அம்புலிப் பருவம் - குழந்தையோடு விளையாட வரும்படி அம்புலியை அழைத்தல் ( 18 ஆம் மாதம்)
8. சிற்றில் - சிற்றில் அமைத்து விளையாடும் பெண்கள் தமது சிற்றில்களைக் குழந்தை
சிதையாதிருக்கும்படி வேண்டல் ( 2 ஆம் ஆண்டு )
9. சிறுபறை - குழந்தையைச் சிறுபறை கொட்டுமாறு வேண்டுதல் { 3 ஆம் ஆண்டு ) 10. 10. சிறுதேர் - குழந்தையைச் சிறுதேர் உருட்டி விளையாடும்படி வேண்டுதல் (4 ஆம் ஆண்டு )

யாப்பு:- பிள்ளைத்தமிழ் பாடும்போது பொதுவாகப் பஃறொடை வெண்பா, அகவல் விருத்தம், கலிவிருத்தம் என்ற யாப்புகளில் பாடுவதே மரபாகும். எனினும் எமக்குக் கிடைத்துள்ள பின்ளைத்தமிழ் நூல்கள் அகவல் விருத்தப்பாக்களினாலேயே ஆக்கம் பெற்றுள்ளன.

ஈழத்தில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்

ஈழத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் இலக்கியங்களிலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் இறுதியில் வாழ்ந்த இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய 'இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழே' காலத்தால் முற்பட்டது என அறியக் கிடக்கின்றது. அதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டனவாக அறிகின்றோம். வசாவிளான் பிரான்ஸிஸ் பிள்ளை என்பவர் யேசுநாதர் மீது பாடிய 'பிள்ளைக்கவி', சிறுப்பிட்டி தா. அமிர்தலிங்கம்பிள்ளை பாடிய 'சாலை விநாயகர் பிள்ளைத்தமிழ், அச்சுவேலி அ. வைத்தியநாதச் செட்டியார் பாடிய 'அச்சுவேலி நெல்லியவோடை அம்பாள் பிள்ளைத்தமிழ்', நல்லூர் சி. அப்புக்குட்டியார் பாடிய 'நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்', வல்வை ச. வயித்திலிங்க பிள்ளை பாடிய 'செல்வச் சந்நிதிப் பிள்ளைத்தமிழ்' என்பனவே அவ்வைந்து பிள்ளைத்தமிழ் இலக்கியங்களாகும். இவை இன்று கிடைக்குமாறில்லை.

இந்நூற்றாண்டில் ஏற்பட்ட சைவசமய எழுச்சியும்' கோயில் புனருத்தாரண நடவடிக்கைகளும் தலபுராணங்கள் பலவற்றைத் தோற்றுவித்துள்ளன. அவ்வகையில் இற்றைவரை சுமார் இருபதுக்கும் மேற் பட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுந்துள்ளன. அவற்றை வருமாறு வகுத்துக் காட்டலாம்.

ஆண்பாற் பிள்ளைத் தமிழ்
1. பா. அருணாசலப்புலவர் - பிள்ளைத்தமிழ் (1867)
2. வட்டுக்கோட்டை - க. சிதம்பரநாதன் - கதிரைவேலர் பிள்ளைத் தமிழ்
3. சு. சின்னத்துரை பிள்ளைத்தமிழ் (1947)
4. சிவன்கருணாலய பாண்டியனார் - திருக்கதிர்காமப்பிள்ளைத் தமிழ் (1937)
5. பண்டிதர் மு. கந்தையா - மாவைப்பிள்ளைத்தமிழ் (1967)
6. பண்டிதர் வித்துவான் க. கி. நடராசன் - சுவாமி பிள்ளைத்தமிழ்
7. அருட்கவி சீ. வி நாசித்தம்பிப் புலவர் - காரை நகர் பயிரிக்கூடல் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி பிள்ளைத்தமிழ் (1987)
8. கவிமணி கிருஷ்ண தாசன் - சித்திரமுத்துப் பிள்ளைக்கவி (கிறீஸ்தவம்)
9. வ. கோவிந்தபிள்ளை - நல்லூர்க் கந்தன் பிள்ளைத்தமிழ்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்
1. அல்வாய் சின்னத்தம்பி உபாத்தியாயர் - அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மை பிள்ளைத்தமிழ்
2. கி. இ. சதாசிவம்பிள்ளை -- திருக்கேதீச்சரத்துக் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் (1976) 3. வ. சிவராசசிங்கம் - நயினை நாகபூசணியம்மை பிள்ளைத்தமிழ் (1977)
4. பண்டிதர் மு. கந்தையா - ஸ்ரீபுவனேஸ்வரி அம்மை பிள்ளைத்தமிழ் (1986)
உலகியல் சார்ந்த பிள்ளைத்தமிழ்
1. மு. கந்தையா - நாவலர் பிள்ளைத்தமிழ் (1979)
2. க. த. ஞானப்பிரகாசம் - பாரதி பிள்ளைத்தமிழ் (1983)
3. மு. செல்லையா - ஈழகேசரி பிள்ளைத் தமிழ்

இஸ்லாமிய பிள்ளைத்தமிழ்
1. அருள்வாக்கி அப்துல்காதிறுப்புலவர் - காரணப் பிள்ளைத்தமிழ்
2. தைக்காசாகிபு - ஒலியுல்லா பிள்ளைத் தமிழ்

பிள்ளை வடிவம் கொண்ட ஐங்கரப் பெருமான் மீதும், சரவணப்பொய்கையில் பாலனாய்த் தவழ்ந்த சண்முகப்பெருமான் மீதும், குழந்தை வடிவெடுத்த உமையம்மை மீதும் பிள்ளைத்தமிழ் பாடுதல் புலவர்களுக்குக் கைவந்த கலையாகக் காணப்படுகின்றது.

விநாயகர் வழிபாடு

இந்துக்கள் மத்தியில் விநாயகர் வழிபாடு சிறப்புற்று விளங்குகின்றது. தமது நாளாந்த வாழ்க்கையில் மேற்கொள்ளும் முயற்சிகள் இடையூறின்றி நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வழிபடப்படுவதே பிள்ளையார் வழிபாடாகும். இந்த அடிப்படையிலேயே பிள்ளையாருக்கு விக்ன விநாயகர் என்ற பெயரும் ஏற்படுவதாயிற்று. பிள்ளையார் அவதாரம் பற்றிய கதைகள் புராணங்களிற் கூறப்பட்டுள்ளன. சிவனது மூத்த குழந்தை பிள்ளையாராவர் ''பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்'' என்பது வெற்றி வேற்கை. பிள்ளையாரை வழிபட்டு வந்த ஒளவையார் ‘விநாயகர் அகவல்' பாடி மகிழ்ந்தார். தேவாரம் பாடிய சமய குரவர்களும், திருமூலரும் பிள்ளையாரைப் பாடியுள்ளனர். பிற்காலப் பிரபந்தங்களில் காப்புக்குரிய கடவுளாகப் பிள்ளையார் பாடப்பட்டுள்ளதோடு, தனித்தனிப் பிரபந்தங்களும் பிள்ளையார் மீது பாடப்பட்டுள்ளன.

ஈழத்திலுள்ள பிள்ளையார் தலங்களிலே மாமாங்கேஸ்வரப் பிள்ளையார், அரசகேசரிப் பிள்ளையார் கோயில்கள் வரலாற்றுப் பழமை மிக்கனவாகும். இந்தியாவில் சாளுக்கிய நாட்டில் பிரபலம் பெற்றிருந்த 'கணபதி' வழிபாடு வடநாடு நோக்கியும் தமிழகம் நோக்கியும் பரவுவதாயிற்று. பல்லவர் காலம் முதலாகத் தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாடு நிலைபெற்றிருந்தமைக்குச் சிற்பங்கள் சான்றாகின்றன. தமிழகத்தில் விநாயகர் பிரமச்சாரியாக விளங்க, வடநாட்டில் சித்தி, புத்தி என்ற இரு தேவியரோடு காணப்படுகின்றார்.
விநாயக வழிபாட்டில் சுக்கிரவாரம், சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம் என்பன மிகமுக்கியமானவையாகும். விநாயகருக்குரிய பூசைப் பொருட்களாக மோதகம் , அவல், அரிசிமா, கரும்பு, வில்வம், அறுகு, வாழைப்பழம், தேங்காய் என்பன படைக்கப்படுகின்றன. தேங்காய் உடைத்தல் விநாயகர் வழிபாட்டில் முதன்மையானதாகும். இதற்குச் சிவன் திரிபுரம் எரித்த கதையைத் தொடர்பு படுத்துவர். பிள்ளையார் தமது வலக்கொம்பை ஒடித்துக் கயமுகாசுரனை வதைத்து அடியவரைக் காப்பாற்றினார்.

விநாயக தோத்திரங்கள்

விநாயகரைப் பாடுவனவாகக் காயத்திரி மந்திரம், கணேச பஞ்சரத்தினம் விநாயக சகஸ்ரநாமம், வேழமுகம், விநாயகர் அஷ்டகம், விநாயக கவசம், விநாயகர் அகவல், விநாயகர் நான்மணிமாலை, விநாயகர் அனுபூதி, மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை, திருநாரையூர் விநாயகர் இரட்டைமணிமாலை, முதலிய இலக்கியங்கள் எழுந்துள்ளன. இவ்வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியதோர் இலக்கியமே பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் இணுவில் செகராசசேக ரப் பிள்ளையார் மீதுபாடிய 'பிள்ளைத்தமிழ்' பிரபந்தமாகும்.

பண்டிதர் ச. வே பஞ்சாட்சரம் அவர்கள் நாவலர் கல்விப் பாரம்பரியத்தில் வந்த தமிழ்ச்சீலர். சந்தக்கவி பாடவல்ல புலவர் பெருமகன் அண்மைக் காலமாக அன்னாரின் கவித்துவத்தை அகில இலங்கைக் கம்பன் கழகக் கவிதை அரங்குகளிலே கேட்டுச் சுவைத்த ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன். புலவர் பஞ்சாட்சரம் அவர்களின் இலக்கிய ஆக்கங்களில் இதுவரை ‘எழிலி,', 'தண்டலை', சின்னஞ்சிறு கதைகள்', 'இன் வானில் ' முக்கோட்டத் துதி', 'இணுவை முருகன் பிள்ளைத் தமிழ்' என்பன நூலாக வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது 'இணுவில் செகராசபிள்ளையார் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை வெளியிட்டிருத்தல் பாராட்டுக்குரியதாகும் தமிழ்க் கலாசார விடுதலை வேண்டி நிற்கும் இன்றைய இளைஞர்களால் இத்தகு நூல் வெளியிடப்படுதல் நல்லதோர் எதிர்காலத்தைக் காட்டுகின்றது.

தம் கவிதைத்திறத்தால் 'எழிலி' மூலம் சாகித்திய மண்டலப் பரிசபெற்ற கவிஞர் பஞ்சாட்சரம் அவர்கள் தம் மாணவர் குழாத்தைத் தமிழ் நெறியில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். சைவத்தைத் தூய்மை நெறியில் வளர்த்துப் பேணிய கிராமங்களில் இணுவில் சிறப்புப் பெறுவதாகும். இங்கு செகராச சேகரப் பிள்ளையார், பரராசசேகரப் பிள்ளையார், கருணாகரப்பிள்ளையார் என்ற பழமை மிக்க மூன்று பிள்ளையார் கோயில்களுள. அவற்றுள் செகராசசேகரப் பிள்ளையார் மீது பாடப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ். இத்தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன வென ஆன்றோர் கூறுவர். ஆரியச்சக்கரவர்த்திகளின் தமிழரசு வட இலங்கையில் நிலவியபோது சிங்கைச் செகராசசேகர மன்னனின் ஆணைப்படி இக்கோயில் கட்டப்பட்டதென அறியப்படுகிறது.

அண்மைக்கால அரசியற் கொடூரங்களாற் கோயில்களில் அகதிகளானோரின் எண்ணிக்கை அளவிடற்கரியது. அவர்களில் ஒருவராகிய பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்களுக்கு, இக்கோயிலும் புகலிடமாயிற்று.

பிள்ளையார் இவருக்குக் கனவில் தோன்றி இப்பிள்ளைத்தமிழைப் பாடவைத்தார் என்ற செய்தி அருள் செறிந்ததாகும். பத்துப்பருவம் 100 பாடல் கொண்டதாக இப்பிள்ளைத்தமிழ் விளங்குகின்றது 'காப்புப் பருவம் தொடங்குமுன் ' கணபதி காக்க' என்ற காப்புப் பாடற்பகுதியுமுள்ளது. காப்புப் பருவத்தில் சிவன், பார்வதி, கங்கை, கந்தன், விட்டுணு, பிரமன், வீரபத்திரர், இந்திரன் முதலிய தெய்வங்கள் துதிக்கப்படுகின்றன. அடுத்து செங்கீரைப்பருவம், அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளது. பிள்ளைத்தமிழிற் செங்கீரைப்பருவம் பாடுவது மிகவும் சிக்கலானது என்பர். ஆனால் பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள் பத்திச்சுவை ததும்ப இதனைப் பாடியிருத்தல் அவர் தம் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

‘நிறைவும் றருளுந் தாய்நெஞ்சே!
நிமலா ஆடுக செங்கீரை!
குறைகள் தீர்த்தென் நெஞ்சத்தைக்
குழைத்தாய் ஆடுக செங்கீரை!

எனவரும் பாடலடிகளின் மூலம் புலவரின் பக்தியுணர்வும் பாவனையும் வெளிப்படுகின்றன.
மூவேந்தர் நெறிவந்த செகராசசேகரன் எடுப்பித்த கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரை
'சேல்பு லிவில் சின்னச் செந்தமிழின் செகராசன்
கால்கொள் தளிவாழுங் கற்கண்டே' தாலேலோ!
எனப் பாடுதலும் நோக்கற்பாலதாகும்.

இலக்கிய கர்த்தா தான் வாழும் சமூகச் சூழலின் பல்வேறு நிலைப்பட்ட தாக்கங்களினாலும் தூண்டப் படுகின்றான்; அவற்றினால் உந்தப்பட்டே தனது ஆக்கங்களை வெளிப்படுத்துகின்றான்: பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களும் தம் சமகால அரசியல் அட்டகாசங்கள், கொடூரங்கள் என்பவற்றையும் பிள்ளைத் தமிழில் பாடத் தவறவில்லை என்பதை நூலோட்டத்திற் காணக்கூடியதாக இருக்கின்றது.

‘எடுத்தெறிந்தார் அந்நியர்கள்
எத்தனையோ உன் சிலைகள்!
இடித்தெறிந்தார் அந்நியர்கள்
எத்தனையோ இன்தளிகள்.’

எனவரும் பாடலடிகள் மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்நூலின் அட்டைப்படத்தினை விநாயகர் ஓவியம் அழகு செய்கிறது. நூலின் உள்ளே பத்துப் பருவங்களையும் விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ள வேல், பிஞ்சுக்கரங்கள், தொட்டில், சப்பாணி கொட்டும் கரங்கள், முத்தமிடும் இதழ்கள் தளர் நடைப் பாதங்கள், அப்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என் பனவும் பாடல்களுக்கு முன்னுரைபோல அமைகிறன.
நாவலர் வழித் தமிழ்ப் புலமையும் சாகித்திய மண்டலப் பரிசும் பெற்றுயர்ந்த பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களின் இந்த இரண்டாவது பிள்ளைத்தமிழில் புலமை மேலோங்கி நிற்கின்றது இந்நூலின் மூலம் பண்டிதர் அவர்களிடம் புராணக் கதைகளிலுள்ள ஈடுபாடும் அவற்றைக் கவிதையிலே தரும் கவிதாவுணர்வும், விநாயகப் பெருமான் மீதுள்ள பத்தி மேம்பாடும் நம்பிக்கையும் மிகுந்து காணப் படுகின்றன என்பது தெளிவாகும்.
இணுவில் தந்த பண்டிதர் புலவர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களுக்குத் தமிழ்த்தாயின் கடாட்சம், மேலும் பெருக வேண்டும் பழகு தமிழில் மேலும் பல நூல்கள் தரவேண்டும். ஈழத் தமிழ் மண்ணின் புகழ் மேலோங்கப் பாடவேண்டும். என வாழ்த்துகின்றேன்.

      கலாநிதி இ. பாலசுந்தரம்
      சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்,
5-9-1988       யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். -----------------------

முன்னுரை

சிவமயம்
ஓம் சரவணபவ குக

சஞ்சலங்களோடும் சபலங்களோடும் கவலைகளோடுங் கலக்கங்களோடும் தம் சூழலை நாடிப்புகும் மனங்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் வழங்கி இரட்சிக்கும் அருட்பொலிவுள்ள கோவில்கள் இன்று ஈழத்தில் மிகக்குறைவு. காரணம் இன்று பெரும்பாலான கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்கள் ஆகிவிட்டமை தான்.

அனைத்தும் ஆண்டவனே என்று இதயபூர்வமாக நம்பி, அவன் பணியே உயிர் மூச்சாகக் கொண்டொழுகி, அவனருளாலே கணந்தோறும் ஆனந்தம் அனுபவிக்கும் உத்தம குருக்கள்மார், தம் வறுமைபற்றிக் கவலைப்படாமல் ஆலய அருள் வளப்பொலிவே தியானமாகச் செயற்படும் ஆலய மணியங்கள், ஆண்டவன் அருட்பலமே உண்மையானபலம் என்ற நம்பிக்கையில் சொந்தவாழ்வில் இறையுவக்க உண்மை பேணி நடக்கும் உத்தம வழிபடுவோர், புகழ்பதவி ஆசைகள் கலவாது முழுக்க முழுக்க உள்ளன்பால் உருவான கட்டடங்கள் வாகனாதிகள், இதயங் கலந்த தேவார பாராயணங்கள் கூட்டுப் பிரார்த்தனைகள் என்பன அபூர்வமாக அமையப் பெற்ற சிறப்புள்ள சில அருளாலயங்களுள் ஒன்றுதான் இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் கோவில்.

ஆலயச் சூழலில் பிறந்து வளர்ந்து தென்னிந்தியாவிலும் மதிப்பும் வணக்கமும் பெற்று ஆன்மீக ஒளி பரப்பிய சண்முகஞ் சுவாமியார் வழிபட்டு முத்தியடைந்த தலம்-

சண்முகஞ் சுவாமிகள் உத்தம சீடர்களுள் ஒருவரும் ' பெரியண்ணன்' முதலான சீடர்களைத் தம் வாரிசுகளாக விட்டுச்சென்றவருமான தம்பிமுத்துச் சுவாமியார் வழிபட்டு முத்தியடைந்த தலம்.

ஆலய வாசலில் ஆச்சிரமம் அமைத்து உறைந்து அடித்தொண்டாற்றிச் சித்துக்கள் மலியப் பெற்ற கணபதிப்பிள்ளைச் சுவாமியார் வழிபட்டு முத்திபெற்ற தலம் இணுவைச் செகராசசேகர விநாயகன் ஆலயம். உலகப் பெருமதங்கள் அனைத்தும் ஒருமித்துப் போற்றும் தியான வழிபாடே இம்முனிவர்களின் பக்தி வெற்றிக்கும் ஏதுவாயிற்று.

இற்றைக்கு 700 ஆண்டுகளின் முன் சிங்கைச் செகராச மன்னனால் நாட்டப்பட்டு வழிபடப்பட்டதெனப்படும் இவ்வாலயம் அந்நிய ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஈழத்திலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ் சைவக்கல்வி கலாசாரங்களுக்குப் புத்துயிர் அளிக்கப் போராடிய தமிழ்ச்சிங்கம் ஆறுமுகநாவலரின் அணியிலே சேர்ந்து இற்றைக்கு 135 ஆண்டுகளுக்கு முன்னர் இணுவிலில் இவ்வாலயச் சூழலில் திண்ணைப் பள்ளி ஒன்று வைத்து நடத்திச் சைவப்பணியாற்றிய சுப்பிரமணியச் சட்டம்பியார் என்ற மகானின் பரம்பரையினர் திரு. சங்கரப்பிள்ளை சின்னத்துரை அவர்களால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

பகட்டிலும் படாடோபங்களிலும் முற்றாக மூழ்கிப் பாதை தவறி அலைகின்றனர் இன்றைய ஈழத்து இந்துக்கள் - தம்மைப்போலவே கடவுளும் இருப்பார் என்ற மாறாட்டத்தில் ஈழத்தின் ஏராளமான ஆலயங்களை இதுவரை வெறும் பகட்டுக்களின், வெளி வேஷங்களின் சூதாடு களங்களாக அலங்கோலப்படுத்தி வைத்துள்ள இந்த இந்துக்களின் புத்தி திருந்தவேண்டியோ இந்தச் சிறியவனின் புலமைக்கும் பணிவான பக்திக்கும் அங்கீகாரம் வழங்கும் பெருங்கருணைப் பெருக்காலோ, இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் எம் குலதெய்வமான இந்த விநாயகன் என் கனவில் வெளிப்பட்டு ஒரு கருணைக் கட்டளையைப் பிறப்பித்தான். அந்த நாட்களில் எம்பெருமானுக்கு ஒரு பிரபந்தம் பாடவேண்டும், தமிழிலக்கியப் பரப்பில் இதுவரை எழுந்துள்ள 96 சிற்றிலக்கிய வகைகளுள் அன்றி 97ஆவது வகையாகப் புதியதொரு இலக்கிய வடிவினைஅமைத்துப் பாடுவதே அந்தப் புதுமை காரணமாகவென்றாலும் இவ்வாலயக் கீர்த்தியை உலகறியச் செய்ய உகந்த வழியென நம்பினேன். இதே சிந்தனையாக நான் அலைந்துகொண்டிருக்கையில் ஓர் இரவு கனவில் இணுவைக் கந்தன் இளந்தொண்டர் சபை மடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். தன் பிரணவ ரூபப் பெரும் பொலிவோடு பிள்ளை விநாயகன் என்னெதிரில் நிற்கிறான். "நீ என் மீது பிள்ளைத்தமிழே பாடு,'' என்று கட்டளையிட்டு நான் மெய்சிலிர்த்து வீழ்ந்து வணங்கி ஏத்தமின்னென மறைந்து விடுகிறான்.

''நான் மகிழ்வதும், உள்ளம் நெகிழ்வதும், அருள் பொழிவதும் அடியவர்களின் உளப்பூர்வமான மெய்யன்பினால் மட்டுமே' என்று இந்தப் பெருங்கருணைச் செயல்மூலம் சொல்லாமற் சொல்லிவிட்டான் பிள்ளைப்பெருமான் என்பதே என் சிற்றறிவுக்கெட்டிய விளக்கமாகும். ''உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது'' என்றார் சுவாமி விபுலானந்த அடிகளும்.

எனவே இறைவிசுவாசிகளான நாம் நம் உள்ளக் கமலங்களைப் பரிசுத்தமாக்கி அவன் திருவடிகளில் சமர்ப்பிப்பதையே ஒரே நேர்த்திக்கடனாக மேலான திருப்பணியாகக் கொள்வோம்.

மேற்கொண்டு அவன் அவரவர்க்கு வெளிப்பட்டுப் பிறப்பிக்கும் கட்டளைகளை அவரவர் நிறைவேற்ற அவனே வேண்டிய வல்லமைகள் வழங்குவான். அவன். சிறியேனுக்கு இட்ட கட்டளை அவனருளாலே சில தினங்களில் பாட்டாகி சில வருடங்களில் நூலாகி நிறைவேறி இதோ அருள் உலாவை ஆரம்பித்துவிட்டது.

இவ்வாலயப் பஞ்சமுக விநாயகர் வாயிலில் தொங்கும் திரைச்சேலை வண்ணப்படம் இந்நூலின் அட்டையை அலங்கரிக்கிறது. இந்த எழிலோவியத்தைத் தீட்டிய ஓவியர் இணுவில் மேற்கு செல்வன் கிருஷ்ண பிள்ளை பிரபு. ஓவியரின் தந்தையும் வழிவழி அடியவருமான திரு. கா. கிருஷ்ணபிள்ளை என்னுங் கட்டடக் கலைஞர் இப்படத்தைப் புளொக்காக்குவித்து உபகரித்தார். இவ்வாலய அடியார்களான இணுவில் மேற்கு போட்டோ கனன் புகைப்படக் கலைஞர்கள்,
டென்சி புகைப்படக் கலைஞர்கள் புகைப்படங்கள் உதவினர்.

இந்நூலை யாழ்ப்பாணம் செட்டியார் அச்சகத்தினர் அழகுற அச்சிட்டுதவினர். இணுவில் கந்தசுவாமி கோவில் இளந்தொண்டர்சபை இதனை வெளியிடுகிறது. இந்நூல் விற்றுவரும் பணம் முழுவதும் எம்பெருமான் தேர்த்திருப்பணி முதற்கட்ட நிதியாக வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட சிவப்பணியாளருக்கும் இந்நூலை மனமுவந்து வாங்கிப் பொருளுணர்ந்து ஓதுவோர்க்கும் விநாயகக் கடவுளின் மேலான இன்னருள் கிட்டுவதாக,
வணக்கம்
இணுவில் மேற்கு,       அடியவன்
இலங்கை , 28-7 88       ச. வே, பஞ்சாட்சரம்
------------------------------

இணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்

உ : சிவமயம்
ஓம் சரவணபவ குக

கணபதி காக்க!

ஊறுபத்தி ஒருநெஞ்சால்
      உனைஏத்தி நின்ற எனை
வீறுபத்தி எண்நெஞ்சால்
      மிகுந்தேத்த வைத்தவனே!
கந்தன் இளந் தொண்டர்மடம்!
      கனவில் நான் இருக்கின்றேன்!
வந்தென்முன் நீ நிற்க
      வணங்கிவிழுந் தேத்துகிறேன்.

“பத்திகமழ் பசும் பிள்ளைத்
      தமிழொன்றே பாடென்மேல்!''
உத்தரவு போட்டங்கே
      ஒருநொடியில் மறைகின்றாய்!
பொங்கியெழும் ஆனந்தம்
      புல்லரிக்க மேனியெல்லாம்,
கங்கையெழக் கண்ணில் நீர்
      களித்தெங்கும் புரள்கின்றேன்!
இங்கிணுவைப் பொங்கமிழ்தாய்
      எழுந்தமுதல் உன்புகழை
தங்கநிகர் பாட்டுகளில்
      தமிழ்செய்யத் தக்கவலு
தந்தருள வேண்டும்!உன்
      சப்பைக்காற் கழலிணைகள்
வந்தொளிர வேண்டும்என்
      வன்மனமாஞ் சிறுகோவில்!
--------------

1. காப்புப் பருவம்

காண பத்தியக் களிநெ றிக்கிறை –
      ஆண வப்பிணிஅப்ப ழுக்கு கொல்
மாணி ஐங்கர வண்கு ழந்தையை –
      ஊணு றக்கமற் றுயிர்க ளுக்கருள்
ஆணெ றிக்கென அமைந்த அங்குச
      பாணி யாய்வரப் படைத்த ஓம்உரு
பேணு பிள்ளையை பிஞ்சினை - அரா
      பூணு மெஞ்சிவன் காக்க, காக்கவே!

பிரண வத்துதி பிள்ளை யாரினை
      சரவ ணஞ்சுடர் சண்மு கத்தனை
வரவ ழைத்த இம் மண்ட லத்தையே
      புரந்த ருள்புரி புனித பார்வதீ!
கரிமு கத்தவன் கருணை மிக்கவன்
      உருவு சின்னவன் ஒளிரு கீர்த்தியன்
கரியு ருக்கொள்ளும் கணங்க ளீசனை
      உருகி நின் றுடன் உவந்து காக்கவே!

அங்கை யாற்சிவன் அன்று தன்சடை
      தங்கு மாறுவை தண்பு னல்புரள்
கங்கை அம்மையே! கைலை யம்பொழில்
      அங்கு ரித்ததோர் அங்க னிக்குவை
ஐங்க ரத்தனை - அறிவுமின் பமும்
      இங்கெ மக்கிசைந் தினிது நல்கிடத்
தங்கு சற்குரு தனையுங் காக்கவே!
      மங்க லத்தனை மகிழ்ந்து காக்கவே!

தம்பி உள்ளவன் சண்டை அஞ்சிடான்!
      கொம்பு மின்னிடக் கூனி நீள்குழை
தும்பி நால்கரம் தொங்கும் அண்ணனை
      கம்ப மாமுகக் களிற்று வள்ளல்ஏ –
ரம்பன், அப்பமோ டவல்வி ரும்பியை
      நம்பு தேவரின் நலிவு நீக்குவேல்
நம்பி! கந்த நீ நாளுங் காக்கவே!

மட்டுண் வண் சிறை வண்டு பம்பிடும்
      கொட்டு மும்மதம் கொம்பு பொங்கிடும்
குட்டி யானையைக் கொண்ட சங்குடை.
      வட்ட நேமியான் வையங் காவலன்
விட்டு ணுக்கருங் கொண்டல் மேனியன்
      பட்டி டும்பழஞ் சாபப் பாம்புரு
கெட்டு மீண்டிடக் கிளர்ந்து காக்கவே!
      தொட்டி லைங்கரற் சூழ்ந்து காக்கவே!

பெருகிடல் பிழை பிரபஞ் சம்எலாம்
      தருப டைப்பினில் தவிரல் வேண்டியே
பிரண வப்பொருள் பெறுதல் வேண்டியே
      கருது கைதொழு கரங்க ளைந்தனை!
பிரம தேவனே! பிள்ளை யாரிவர்
      வருயு கக்கலி மம்மர் தீர்ந்திட
அருளும் அந்நிலை அடையும் மட்டுமே
      குருவி கொக்கிடைக் கூர்ந்து காக்கவே!

கயிலை யங்கிரிக் கண்ணு தல்தர
      ‘புயல்' எனப்புகுந் தயன்பு லத்திமிர்
இயல்பொ டுங்கிட இடர்பு ரிந்தவா!
      வயிர வாசெக ராச மன்னவன்
தயவு தண்ணளி சந்த தம்செய
      இயைய நாட்டிய இன்த ளித்திகழ்
கயமுகத் தருட் கைக்கு ழந்தையை
      நயமு றும்வகை நன்கு காக்கவே!

வீர பத்திரா! வீம்பி னுக்கெனத்
      தீர வேள்விசெய் தீயன் தக்கனை
கோர மாய்க்கொலை செய்த, கண்ணுதல்
      வீர மைந்தனே! வித்தை ஞானியை,
ஈர நெஞ்சினோ டிணுவை வந்துறை
      ஆர ணத்தனாம் அரிய பிள்ளையை,
வார ணத்திளங் கன்று வள்ளலை,
      நார ணற்கினி நறையை ஓம்பவே!

உலகு யாவையும் ஒருங்க லைத்திடும்
      கலக வல்லபக் கஜமு கன்றனை
எலிய தாக்கியே ஏறும் பாகனை
      குலவு கூருருப் பிரண வங்களில்
அலைசெ விக்குழ வைங்க ரத்தனாய்
      மலரு மீசனை, வான வர்க்கெலாம்
தலைவன் இந்திரன் சார்ந்து காக்கவே!
      கலியு கந்தொழக் கண்டு காக்கவே;

ஆதி யந்தமிழ்க் கடியி லக்கணம்
      ஓதி வைத்தநம் ஒண்ட மிழ்முனி
மேதை, வில்வலன் வாதா பியிணை
      வாதை யுற்றழி வித்த மாதவன்
வாதா பிநின்று வந்தெம் மூர்வரை
      சோதி வானுருச் சுடர்கொ ளுத்திடும்
வேத நாயகன் விண்ண வர்கண
      நாத வள்ளலை நயந்து காக்கவே;
------------

2. செங்கீரைப் பருவம்

"அடியாட் கள் தம் படைகொண்ட
      ஆண்டவன் மார்'செய் இடர்கொன்றுன்
அடியார் கூட்டங் காத்திடவே
      அங்குச பாசம் ஏந்தியவா!
நெடுமால் பாம்புச் சாபவுரு
      நீங்கி ஆலங் காட்டினிலே
படையல் பூசை தரஏற் றோய்!
      படியோர் பாவம் மார்கழியில்
அடையும் சட்டியிற் பூசைசெயின்
      அறுத்தின் பருளக் கேட்டவரம்
கொடையீந் தோனே! செகராசக்
      கோன்செய் கோயில் அமர்ந்தவனே!
கடமார் களிற்றுக் கணபதியே!
      களிப்போ டாடாய் செங்கீரை!
அடிமை ஆக்கி எமக்கெதுவும்
      அளிப்போய்! ஆடாய் செங்கீரை!

பறக்குங் காவடி, துள்ளாட்டம்
      பல்குங் காவடி, பாலமுதம்
நிறைக்குங் காவடி பிரதட்டை
      நிகழ்த்துங் காவடி தணல் பொங்கும்
தெறுந்தீ மிதிப்பு முதற்பத்தி
      சிறக்கும் வைராக் கியர்ஏத்தும்
கறந்த பால்வெண் தந்தமுகா!
      கையால் தம் தலை தமில்குட்ட
மறந்துன் தலையிற் குட்டவரும்
      மண், பெண், பொன்னில் குலைந்தவர்கள்
திறங்காண் செகரா சக்குருவே!
      சிறுதளி இணுவை மாமன்னா!
முறம்பயில் செவிகள் மொய்த்தலைய
      முக்கண! ஆடாய் செங்கீரை!
வறங்கெட மாரி வான் பொழிய
      மகிழ்ந்தெழுந் தாடாய் செங்கீரை!

ஒவ்வோர் உயிரும் பிறவிகளும்
      ஒவ்வோர் சோக காவியமே!
எவ்வெவ் விதமாஞ் சோதனைகள்!
      எவ்வெவ் விதமாந் தண்டனைகள்!
ஒவ்வா மலங்கள் மூன்றினையும்
      ஒடுக்கக் கோடி அடியுதைகள்!
அவ்வை தமக்கு முத்தமிழை
      அருளிக் கவிகள் பெற்றவனே!
வவ்வுங் கள்ளம் வரம் கேட்கும்
      மடமை தீண்டாத் தெளிவுடனே
செவ்வி தான நேர்வழியில்
      செல்வந் தேடும் வழி கேட்கும்
அவ்வூக் கத்தார் அண்டிணுவை
      அரசே! ஆடாய் செங்கீரை!
எவ்வேழ் பிறப்பில் வருநோய்க்கும்
      இன் மருந் தாடாய் செங்கீரை!

பொய்ம்மா மாலப் பத்தியினால்
      புவியை மருட்டிப் புன்நெறியிட்
டுய்ம்மா றழிக்கும் உளஞ்சிறவார்
      ஊழல் அணுகா நல்லிணுவைக்
கைம்மா வேந்தே! கைநான்கும்
      களிக்கும் மஞ்சம் தனிலூன்றி
நெய்ம்மா லிளக்கும் மோதகமும்
      நெருங்க ஆடாய் செங்கீரை!
மெய்ம்மா தவஞ்செய் பரிசுத்தம்
      விடியும் நெஞ்சுன் அடியர்க்குச்
செய்ம்மா தவனே! வாதாபித்
      திருநா டொருவிப் பரஞ்சோதி
வைவான் காஞ்சி புரத்த மர்ந்த
      வள்ளல் ஆடாய் செங்கீரை!
கைம்மா றெண்ணாக் கருணைமழைக்
      கணமே ஆடாய் செங்கீரை!

தாலிக ளேறி இன்பங்கள்
      தழையில் லறஞ்சேர் மணங்கோடி
காலமெ லாம்உன் மண்டபத்தில்
      கண்டருள் மகிழ்ந்தீ கணபதியே!
சோலிகள் தந்தெம் துணிவோட்டச்
      சூழ்ச்சிகள் செய்து களைத்தவரெம்
காலினை வாரித் தாம்வீழக்
      காட்டி நகைக்கும் கண்ணுதலே!
காலனைச் செல்வர் பிரபுகளாய்க்
      காலிரண் டீந்து விட்டுலகில்
வாலினை ஒட்ட நறுக்கிவிடும்
      மகிழ்விளை யாட்டுப் புரிபவனே!
பாலொடு தேனாய் அள்ளூறப்
      பாலக ஆடாய் செங்கீரை!
மூலவ! வேத முழுமுதலே!
      முத்தனே! ஆடாய் செங்கீரை!

கற்றார் காட்டும் வழிகாசு
      கடமை புரிந்தால் ஊரெல்லாம்
வற்றா இன்ப வளம் பல்கும்!
      வழமை இதனைப் புறந்தள்ளி
முற்றும் மாறாய் மூதறிஞர்
      மூடச் செல்வர் பின் சென்றே
அற்றார்! ''வால்கள்'' புற்றீசல்
      ஆய்ப்பொங் கிடர்கள் தாங்காமல்
ஒற்றைக் கொம்பா! உத்தமனே!
      ஒளித்தார் உமிக்குள், மூடைக்குள்!
அற்றை அசுரன் கஜமுகனை
      அழிக்கப் பிரண வத்தினிலே
சுற்றைச் சுடராய் உதித்தவனே
      கண்கள் நெஞ்சு குளிர்ந்திடவே
முற்றல் நிலவாம் முகந்தூக்கி
      முழந்தா ளாடாய் செங்கீரை!

இலட்சம் பணத்தைக் கோவிற்காய்
      இறைத்த வள்ளல் மார் - கள்ள
இலக்கை அடையக் கோவில்களில்
      இறைவன் ஏற்காச் செயல்தூண்டும்
மலட்டு நெஞ்சர் மடமையினால்
      வந்த துன்பம் பலநூறு!
உலக்கை கொண்டு கஜமுகனை
      ஒடுங்க வலிமை அடித்தவனே!
விலக்கி உலகூர்ப் பற்றென்னை
      மேன்மை உணர்வில் உய்த்தவனே!
நிலைக்கச் சாத் வீகக்குணமே
      நிமிடந் தொறுமென் நெஞ்செல்லாம்
நிலத்தில் அமர்ந்துன் நினைவூறும்
      நிலவுக் குளிர்ச்சி மாந்துகிறேன்!
கலைக்குள் இன்பக் கலையாக
      கஜனே ஆடுக செங்கீரை!

சுறவைப் பிடிக்கும் நோக்குடனே
      தூண்டில் முள்ளிலி றால்குத்தும்
பிறவி வணிகர் “மணியம்'' பேர்
      பிடிக்கக் கோவிற் பணிசெய்யும்
சிறுமை அணுகாப் பெருங்கீர்த்திச்
      செகரா சப்பிள் ளையாரே !
உறவு சுற்றம் நண்பரெலாம்
      ஒருவற் கிறைவன் தானென்னும்
மறுவில் உண்மை ஞானத்தை
      வழங்கி ஆண்ட பெருந்தகையே
சிறுவர் வெள்ளை உள்ளங்கள்
      சின்னக் கைகள் தொண்டினிலே
நிறைவுற் றருளுந் தாய்நெஞ்சே!
      நிமலா ஆடுக செங்கீரை!
குறைகள் தீர்த்தென் நெஞ்சத்தைக்
      குழைத்தாய் ஆடுக செங்கீரை!

"ஊசிக் காதுள் ஒட்டகங்கள்
      ஒருகால் நுழைதல் கூடிடினும்
காசுக்காரன் கடவுளடி
      காணல் தப்பியும் நடவாது'' –
ஏசுப் பெரியன் இயம்பியதாம்
      இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும்
நாசச் செல்வர் நடையின்று
      நமக்குள் ளேயும்! இந்த அமா
வாசை நெஞ்சர் மனமணுகா
      மண்ணும் விண்ணுந் தொழுங்கோயில்
வாச! கணப தீச்சரத்தில்
      வைத்தாய் தந்தை கோயில்!செக
ராசன் தொட்ட அருட்புனலே
      எழுந்திங் காடாய் செங்கீரை!
வாசப் பூக்கள் மண்டடியின்
      மன்னா ! ஆடாய் செங்கீரை!

உன்னை ஆண்டா னாய்ப் பெற்ற
      உண்மை அடிமைக் கழிவுண்டோ ?
உன்னை ஆண்டா னாய்ப்பெற்ற
      உண்மை அடிமைக் கிழிவுண்டோ ?
என்னைக் கொல்ல வந்தவரே
      இறந்தார் தமதே கைகளினால்!
என்னை வீழ்த்தத் திரண்டவரே
      இழிச்தார் இழந்தார் அழிந்தார்கள்!
இன்னும் இன்னும் உன்காலே
      இறுகப் பற்றி நின்றிடுவேன்!
பொன்னைத் தொழுதே உனைத்தொழுவோர்
      போலிப் பத்தி தனையெள்ளும்
முன்னைப் பழையா! கார்யானை
      முகத்தாய் ஆடாய் செங்கீரை !
தென்னங் காய்கள் சிதறுமொலித்
      திகழ்வாய் ஆடாய் செங்கீரை!
--------------------

3. தாலாட்டுப் பருவம்

தங்கத் தொட்டில் தண்டா மரைச்சேக்கை
      பொங்கும் நறும்பல் பூவின் பனியிதழ்கள்
நுங்கின் குளிர்ச்சி நோகா விதந்தாங்கும்
      அங்கம் அனைத்தும் அந்தண் ணிலாக்கதிரோ!
கொங்குந்தண் கதிருங் குழைந்து திரள்வடிவோ!
      சங்குத் தொடையோ! தந்தம் சமைசிலையோ!
எங்குஞ் சுற்றி ஏத்தும் இமையவர்சூழ்
      துங்கா! இணுவைத் தொல்தவமே! தாலேலோ!!

கனவில் வருவாய்! என் கற்கண்டுப் பாடல்
      புனைவில் வருவாய்! அறங்காக்கும் போரின்ப
முனைவில் வருவாய் முழுவேளை ஏத்தும்
      என் நினைவில் வருவாய்! நிமலா! நிறைஞானப்
பனுவல் பயில்வாய்! நிலவாய்க் குளிர்ந்திணுவைச்
      சுனையில் பூத்தசுடரே! சிவன் தேவர்
முனிவர் அண்டர் முதல்யா வருங்கண்கள்
      கனிய வுனையாட்டக் கண்வளராய் தாலேலோ!!

துண்டப் பிறைகள் சுடருந் திருத்தந்தம்
      கொண்டெங் குடிகள் காப்போனே! சக்தியுனைப்
பண்டோர் அசுரன் பண்டா சுரன்தன்னை
      மண்டமரில் வெல்ல வழிபட்ட நற்புகழ்போல்
அண்டுங் கீர்த்தி ஆயிரமாய்க் கொண்டவனே!
      வண்டு விழிகள் மயங்கும் அறிதுயிலில்
கண்டெம் பக்தி களிப்பவனே! தாலேலோ!
அண்டங்கட் கெல்லாம் ஆதியனே தாலேலோ!!

நம்பாவ நெஞ்சுள் நரி நாய்கள்! மத்தியிலும்
      வெம்பாவந் தீர்த்து விடிவீய நிற்பவனே!
நம்பன் மகனே! நாதப் பிரணவனே!
      இம்பர் வாழ்வில் எழில்கள் சுகபோகம்
உம்பர் வாழ்வில் ஒப்பில்லாப் பேரின்பம்
      நம்பித் தொழுவோர் நண்ண அருளும் ஏ
ரம்பா! எழிலா! எலிவா கனத்தோனே!
      கொம்பொன் றொடித்த குஞ்சரமே! தாலேலோ!

சீல மர நிழலின் தெய்வீகம் உணராத -
      ஆலயம் தம் உற்பத்தி அந்நிழலென் றறியாத
பாலைசெயும் தீயர் பரிவணுகா மேன்மையினால்
      சோலை வனம்வாழுஞ் ககமார் கணபதியே!
காலை பகல்மாலை கங்குல் தொறுமுன்றன்
      காலில் அமர்ந்தின்புண் காதல் கனிவிக்கும்
நாலும் எழில்வாயா! நல்லமுதே தாலேலோ!
      பாலினிலே ஆடும் பண்ணவனே! தாலேலோ!!

பால்விலை ஆபார்ப்போர் பன்னூற்றுக் கொருவர் தாம்!
      தோல்விலைபார்ப் போரின் தொகையோமிக! அதனால்
சால்புடைய வெல்லாம் சக்கை விலைக்கழியத்
      தோல்வியுறும் நல்ல தொண்டெல்லாம் இவ்வூரில்!
நூல்கள் சரைக்கு நூறுகிறாம் சதம்பத்து!
      நால்வேதத் தாரோ நரர்பூ சகரானார்!
சேல் புலிவில் சின்னச் செந்தமிழின் செகராசன்
      கால்கொள் தளி வாழுங் கற்கண்டே! தாலேலோ!!

மூன்று புரமெரிக்க முக்கண்ணன் போங்காலை
      ஆன்ற மகனாம் உன் அருள் பெற்றான் என்பார்கள்!
ஊன்றி உனையெண்ணும் உத்தமர்நெஞ் செல்லாமே
      தோன்றி இனிமைபல தூண்டச் செகராசக்
கோன்றன் கோவில் குடிகொண் டமர்வோனே!
      ஈன்றாள் பிரணவம் என்னும் பிடியானை
போன்றாள் - உமையாள் - பூந்தொட்டி லாட்டவெழுந்
      தேன்பா யிசைகேட்டுச் சிரித்துறங்கு தாலேலோ!


பொன்செல்வம் பூத்தார் போடும் எலும்புக்காய்
      பின்செல்லும் பேதைப் பாமரர்கள் இன்பஞ்செய்
உன்சொல்லைத் தட்டி உலுத்தர் வழிசென்று
      துன்பங்க ளேற்பார்! தொடரா திவர்போக்கை
இன்சொல்லால் ஏத்தும் என்றன் அரும்புதல்வர்
      உன்பக்தி மூழ்கி உன்சொல் வழிச் செல்லும்
நன்னம்பிக் கைநீ நல்க வரங்கேட்டேன்!
      அன்பர்க் கினியா! அள்ளமுதே! தாலேலோ!


நஞ்சுண்ட பண்டம் நக்கும் நாய் சாதல்போல்
      நஞ்சர்தம் சார்பால் நல்லோர்க்கு மேநாசம்!
வஞ்சப் பணஞ்செல் வழியெல்லாம் துன்ப எரி!
      நெஞ்சந் தெளிய நீணிலத்தார் கண்டார்கள்!
பஞ்சக் கரவா! பழந் தொல் பதியிணுவை
      மிஞ்சும் அருளே! மேவுன் அடியர்க்குக்
கஞ்சிக் கில்லாக் காலத்துங் கள்ளவழி
      அஞ்சும் புனிதம் அருள்பவனே! தாலேலோ!

எனையச் சுறுத்த ஏவிப் படைவிட்டோர்
      வினையின் பயனை விரைவில் படவைத்தாய்!
உனைநம்பி நின்றோர் உயிர்க்கும் பெருங்காப்பே!
      கனைகார்த் திகையில் காக்கும் பெருநோன்பில்
நினையும் வரங்கள் நிறைந்தீயுங் கற்பகமே!
      தினைமா விளக்கின் செம்மை நுகர்வோனே!
தனியோர் மரம்நீ தருவோய் பலதோப்பு!
      வினை கொல் சுடரே! வேழமுகா! தாலேலோ!
-------------

4. சப்பாணிப் பருவம்

குட்டக் குட்ட ஆசைக் குலங்கள்
      குனிந்து மூப்புவரை
பட்டுங் கெட்டும் பண்புற் றோங்காப்
      பாவப் புவிவாழ்வை
விட்டு வெறுவென் றான்மா சொலினும்
      வீரம் மனத்தில்லை!
மட்டுண் வண்டார் மலர்கள் வனஞ்சூழ்
      வண்ணச் சிறுகோயில்
கட்டுண் டுறையும் கருணைக் கடலே!
      கலைகள் மலியிணுவைத்
தொட்டில் நிலவே! தொழுங்கால் தண்ணீர்
      சோற்றை முதல் வேண்டேன்!
கட்டப் பஞ்சப் புலன்கள் வலுசேர்
      கருணை வரங் கேட்பேன்!
கொட்டுன் கைகள்! கொன்றென் பழிகள்
      கொட்டுக சப்பாணி!

‘பித்தன்' 'பேயன்' ஏச்சுப் பெற்றும்
      பீடை தீர்த்தருள்செய்
அத்தன் மைந்த! அண்ணல் கரியே!
      அடியேன் உயிர்வேண்டல்
சுத்தம்! இன்னும் சுத்தம்! ஆன்மா
      சுடரும் பெருஞ்சுத்தம்!
பித்தந் தெளியச் சித்தந் தெளியப்
      பிள்ளைத் தமிழ்பாட
வைத்த கருணை வண்ணம் மறவேன்.
      மனதில் வசந்தஞ்செய்
வித்தை புரிவாய்! வேகந் தீர்ப்பாய்!
      வெறுத்தேன் புகழென்றோ!
கொத்துக் கொத்தாய்க் கொட்டிய முத்தே!
      கொட்டுக சப்பாணி!
கொத்துக் கொத்தாய்க் குவிபூங் குன்றே!
      கொட்டுக சப்பாணி!

முப்படை தங்கள் மூப்பினில் செய்த
      மோசம் எனநழுவித்
தப்பிட எண்ணும் தரைஅர சர்போல்
      சறுக்கிட மாட்டாய் நீ!
அப்படை உன்றன் அங்குச பாசம்
      அழித்திடப் பழிமூடை,
அப்பநீ என்னை ஆண்டிட வேண்டும்!
      அமரிணு வைவேந்தே!
கொப்புநீ புளியங் கொப்பென நல்லோர்
      குவிந்துன் கால்பற்ற
வைப்பவ! எனையும் மலம்நலி வித்து
      வானிடம் தர வேண்டும்!
சப்பையங் கால்கள் சப்பணங் கொட்டித்
      தட்டுக சப்பாணி!
குப்பையின் நடுநான் குன்றி யென்றோங்கக்
      கொட்டுக சப்பாணி!

நோய்களின் கையில் நொந்த என் காலம்
      நூறுபல் லாயிரம்நாள்!
வாய்கிழி நூறு வாதுகளிட்டு
      மறைந்தன ஆயிரம்நாள்!
பேய்களை வாழ்த்திப் பாடிய பழியில்
      பிழைபடும் ஆயிரம்நாள்!
ஓய்வற ஊணுக் குழைத்தழி காலம்
      உறுபல வாயிரம்நாள்!
காய்வுறு முயிர்க்குக் களிவளங் கூட்டக்
      கால்கதி என்றடைந்தேன்!
காய்சின அசுரன் கஜமுக னடக்கிக்
      கனிந்திமை யோர்க்கருளீ!
தாய்மன இணுவைத் தண்ணளி ஈச
      தட்டுக சப்பாணி!
நோய்மலம் தீர்த்தென் நோபவம் போக்க
      நுனித்தடி சப்பாணி!

பெருமழை காற்றுப் பேயிடி மின்னல்
      பிய்த்திட இரவுபகல்
அரசடி தோறும் அமர்ந்தடி யார்க்கோ
      அரண்மனை அருஞ்சுசங்கள்
வரமருள் எளியோய்! வறியஇல் தன்னில்
      மகிழ்ந்திணுவை யுறையும்
கரிமுக அண்ணால்! கவின்மனை தோறும்
      கனிந்துனை முதலிருத்தும்
பெருமையுங் கொண்டாய்! பிள்ளையங் குருவே!
      பேதையெற் கிரங்கியிடர்
தருமலம் நீக்கித் தண்ணளி சேர்த்துச்
      சஞ்சலம் தீர்த்தருளி
வருதுயர்ப் பிறவி வளர்கதை முற்றி
      மகிழ்ந்தொலி சப்பாணி!
இருகரந் தூக்கி இன்னொலி கூட்டி
      இசைந்தொலி சப்பாணி!

அண்டர்கள் பூத அருங்கணத் தவர்கள்
      அரன்உமை அரிஅயனோ
டண்டிய சித்தர் அனையவிஞ் சையர்கள்
      அருந்தவ ரிசிமுனிவர்
தொண்டர்கள் சூழுஞ் சுடர்ச்சிறு கோயில்
      சுகித்துறை வேழமுகா!
பண்டையுன் சாபப் பங்கமுண் நிலவும்
      பலதொலை தூரநின்றும்
தண்டனை நீக்கந் தரவரங் கேட்கும்
      சால்புறுங் கணபதியே!
மண்டிய பாவ மலைபிடி மண்னாய்
      மாய்ந்திட எனக்கருளி
முண்டக மலரின் முத்தொளிர் கைகள்
      மோதுக சப்பாணி!
வண்டிசை பாடும் மதம்பொழி வேழம்
      மகிழ்ந்தொலி சப்பாணி!

''மடமிலை! வளர வளவிலை!'' என்று
      மண்டைகள் உடைப்பவரை
“இடமிலை வளர எழும்புமின் குடிகள்!''
      எனஇடர் செய்பவரை
அடியவராக அடைபழி இல்லா
      அருள்மிகு கணபதியே!
"புடமிடும் நெஞ்சாம் புனிதஇல் பலவாய்ப்
      பொலிந்திட நீர்திருந்தி
இடம்பல, நான்வாழ் இருப்பிடஞ் செய்மின்!''
      எனுமுன துளமறிந்தேன்:
கடமலி ஞானக் களிறுன கால்கள்
      காசினி ஆளல்சொல்லிக்
கொடைமலி கையால் குங்கும மேனி
      குழைந்தொலி சப்பாணி!
பொடிபட வினைகள் பொலிவுற இன்பம்
      போடுக சப்பாணி!

சூத்திர மாடு சுற்றிடு மாறு,
      சுந்தர அனுபவங்கள்
பூத்திட லின்றிப் போம்அவ நாளைப்
      பொன்செயும் வகையினிலே,
ஊத்தையர் வேட உலுத்தர்கள் சூழ்ச்சி
      உதவிடப் பலவழியில்
காத்திர உண்மை கணக்கில தெளிவாய்க்
      கண்டுயர்ந் தேன்! குடுமி
நாத்திகர், குறிவை நாடகக் குருக்கள்
      நஞ்சடி படுதலிலா
மூத்தவ் விணுவை முதல்தளி இறைவா!
      மொய்ம்புறச் சாத்விகமே
மாத்திரைப் பொழுதும் மனமுறங்கேனே!
      மகிழ்ந்தடி சப்பாணி!
கோத்துன கால்கள் குளிர்ந்தமர்ந் திங்கே
      கொட்டுக சப்பாணி!

அடிமுடி தேடி அலைந்துலைந் தகந்தை
      அடங்கிய அரிஅயன்கள்
அடிமைசெய் சிவனுக் கருமகிழ் மகனே!
      ஆள்வெறிச் சுயநலத்தால்
'அடிகொடி' பார்த்தே ஆலய நீதி
      அறைபவர் அணுகலிலா
நடுநிலை யாளர் நன்மனத் தொண்டர்
      நண்ணிடும் பதியரசே!
கடிகமழ் கொன்றைக் கருங்குரங் கின்வாற்
      காய்பல ஆடிணுவைக்
குடிலுறை குன்றக் குங்கும மே!நாள்
      கொள்பவர் சாணிமஞ்சள்
பொடியிலும் மண்ணின் பிடியிலுங் குந்தீ
      பூ, அறுகில் எழுவோய்!
படபட வென்றே பலதிசை அதிரப்
      பயிலுக சப்பாணி!

என்னுயிர்க் குயிரே! இன்கனிப் பிழிவே!
      இசைந்தொலி சப்பாணி!
தென்மொழித் தமிழின் தீஞ்சுவைப் பாட்டே!
      திகழ்ந்தொலி சப்பாணி!
மின்மருங் கடியார் மிகவலம் வருவோய்!
      விழைந்தொலி சப்பாணி!
பொன்பொலி கொன்றைப் பூம்பொழி லோனே!
      போடுக சப்பாணி!
மின்துடி காரின் மிகுமழை விரதம்
      விண்டொலி சப்பாணி!
என்புரு கருளின் இருபிறைத் தந்தீ
      எழுப்புக சப்பாணி!
மன்செக ராசன் வாஞ்ஞையில் வந்தோய்!
      மகிழ்ந்தொலி சப்பாணி!
துன்பமொன் றில்லாச் சுகமயஞ் சேர்க்கச்
      சுடர்ந்தடி சப்பாணி!
------------

5. முத்தப் பருவம்

இமயத்தில் பார தத்தை
      எழில்வல மருப்பி னாலே
அமைவுற எழுதி வைத்த
      அண்ணலே! வளர்ப்போம் சைவ
சமயம்என் பவர்பி ழைக்குஞ்
      'சந்தர்ப்பம்' வளர்க்கும் இற்றை
நமனுல கத்தில் உன்றன்
      நல்லருள் ஈட்டம் ஒன்றே
எமதுயிர் இலக்காய்க் கொண்டோம்.
      இணுவையில் முதல்நாட் டுண்டு
கமழ்வுறுங் கோயில் ஆர்ந்த
      கற்பகா! அண்டங் கோடி
சுமைமிகுஞ் சுடர்வ யிற்றோய்!
      தூயனே! அருள்வாய் முத்தம்!
இமைப்பறு நாட்டத் தேவர்
      ஏத்தவே அருள்வாய் முத்தம்!


ஒருமுகத் தோடுங் கைகள்
      ஓரைந்து கொண்டாய்! ஐந்து
திருமுகத் தோடும் பத்துத்
      திருக்கரம் மிகுவோய்! பண்டைச்
செருமுகத் தொற்றைக் கொம்பால்
      சிதைத்தவா அசுரன் தன்னை!
ஒருமுக மாக என்றன்
      உளமுடல் வாக்குன் பாதம்
கருதிடும் இன்ப நாளைக்
      கடிதினில் அருள் செய்வாயோ!
அரசனச் செகரா சன்றன்
      அங்கையால் நிறுவப் பட்டுப்
பெருகருள் புரியுஞ் சின்னப்
      பிள்ளையே! அருள்வாய் முத்தம்!
அருகமர் குடிகள் காக்கும்
      அண்ணலே! அருள்வாய் முத்தம்!

பொன்பொலிந் திலங்குங் கொன்றைப்
      பூமழைப் பொலிந்தி ருப்போய்!
அன்பரின் உள்ளப் பூக்கள்
      ஆயிரம் அடிகள் மொய்ப்போய்!
என்பணி வெற்றி எய்த
      இன்னருள் என்றும் செய்வோய்!
இன்சுவை மோத கங்கள்
      இடுநெய்யில் வதங்கும் ஓசை
உன்திருக் கோயில் பொங்க
      உவப்பவா! நகர்த்தி ருச்சி
நன்மலை உச்சி நண்ணி
      நாடுல கோம்பும் ஈசா!
என்மனம் நிறைக்கத் தாள்கள்
      ஈந்தவா! அருள்வாய் முத்தம்!
தென்றமிழ்ச் செகரா சன்றன்
      தெய்வமே! அருள்வாய் முத்தம்!

வெப்பினாற் பூம ரங்கள்
      வீந்தன! பூக்கள் இல்லை
அப்பெரு மான்பூ சைக்கென்
      றழுதஇந் திரன்க ளிக்க
ஒப்பரு மகத்தி யன்றன்
      ஒண்கமண் டலஞ்ச ரித்தோய்!
இப்புவிக் கீந்தோய் அந்நாள்
      எழில்விரி காவி ரித்தேன்;
சப்பையங் காலா! வள்ளி
      தழுவிடக் குகனை வைத்தோய்!
முப்புரி நூன்மார் பையா!
      மூர்ஷிகந் தன்னில் ஊர்ந்தோய்!
அப்பனே! இணுவை மூத்த
      ஐயனே! அருள்வாய் முத்தம்
கொப்புஉளம் ஆட்டும் ஆசைக்
      குரங்கிற அருள் வாய் முத்தம்!

தும்பிக்கை ஈசா! உன்றன்
      தும்பிக்கை மீதி லான
நம்பிக்கை ஒன்றே என்றன்
      நலந்தரு முதன்மைக் கையாம்!
வெம்பிக்கை கூப்பி உன்னை
      வேண்டிடும் துயரில் எல்லாம்
சம்புகு மாரா! வந்து
      சடுதியில் துன்பம் தீர்ப்பாய்!
தம்பழி தீர்க்க நிற்போர்
      தஞ்சமே! கைலா யத்தில்
நம்பனார் கோயில் முன்னால்
      நண்ணுவோய்! அடியார் குட்டிக்
கும்பிடுந் தோப்புக் கர்ணம்
      கொள்பவா! இளமைக் கோவே!
செம்பொனே! தாராய் முத்தம்!
      செகராச! தாராய் முத்தம்!
பேர் ஓட்டி மஞ்சம் பூசிப்
      'பெரும்பணி' செய்தோ ராலே
ஊர்பட்ட பாடே போதும்!
      ஒயிலொன்றும் வேண்டா மையா!
ஊர்விட்டே ஓடா திங்கே
      உவந்துநீ இருந்தாற் போதும்!
வேர் வெட்டி ஆளுக்காளிம்
      மேதைகள் புரியுஞ் சண்டை
மார்தட்டும் வீரம் உன்றன்
      மலிசுவை அருளாந் தேனில்
ஓர்சொட்டுஞ் சுவைக்கா மையால்!
      உத்தமா! கதிர்தீ திங்கள்
நேர்கண்கள் மூன்றாய்க் கொண்ட
      நித்தனே! இணுவைத் தாயே
கூர்கெட்டு மலங்கள் சாயக்
      குஞ்சரா அருள்வாய் முத்தம்!

வெள்ளிய திருநீற் றாலே
      மிளிர்கண்டி கைமா லையால்
ஒள்ளிய சைவம் முன்னோர்
      உயர்த்தினர்! இன்றோ இங்கே
கள்ளினால் சாரா யத்தின்
      கருணையால் சைவம் மீக்க
‘வள்ளல்கள்' புகுந்தார் ! இந்த
      மாண்பினார் கொம்பு டைத்துத்
தள்ளியே கலியு கத்தின்
      சன்னதம் அடக்கி யாண்ட
தெள்ளிய தர்மக் கோவே!
      திருமுறை கள்தொ குத்த
கள்ளமில் பக்தன் நம்பி
      களித்திட அமுது கொண்ட
வள்ளலே! அருள்வாய் முத்தம்!
      மழகளி றருள்வாய் முத்தம்!

அரசடி, ஆற்றின் ஓரம்
      ஆம்பல இடங்கள் தோறும்
பரிவுடன் அமர்ந்தே பக்தர்
      பாலிள நீரில் ஆடிப்
பெருவரம் அருளும் ஞானப்
      பிள்ளையே! அறுகம் புல்லைச்
சொருகிய சாணி தன்னில்
      தோன்றியும் அருள்செய் வோனே!
அருள்மொழி அவ்வை வேண்ட
      அளித்தவா முதுமைக் கோலம்!
பிரம்மரூ பம்மேற் பாதி!
      பிறபாதி மனித ரூபம்!
உருவமை வேழ வேந்தா!
      ஊர்முதற் கோயில் ஈசா!
கரிமுக! அருள்வாய் முத்தம்!
      கதிர்மதா! அருள்வாய் முத்தம்!

சக்கரம் திருமா லுக்கு!
      சால்வயி ரவற்குச் சூலம்!
ஒக்கவே முருக னுக்கு
      ஒருதனிச் கடர்வேல் போல
விக்கினங் களையும் நிற்கோ
      வீசுபா சாங்கு சங்கள்!
துக்கங்கள் துயரஞ் சூழில்
      தொல்லைகள் பிணிகள் சேரில்
உக்குநீர் விழிகள் வேண்ட
      ஓடிவந் தெம்மைக் காப்பாய்!
சர்க்கரை பருப்புத் தேனில்
      சமைத்தமோ தகத்தில் மோக!
முக்கணா! ஏழை யேற்கும்
      முனைந்தருள் புரிவாய் முத்தம்!
திக்கெலாம் வணங்குங் காப்பின்
      திண்ணியா! அருள்வாய் முத்தம்!

குலுங்கிடத் தொந்தி தொப்பை
      குழைந்திடச் செவியி ரண்டும்
இலங்கிடும் அணியங் கங்கள்
      எழில்பெறக் குலுங்கும் வண்ணம்
நலந்தரு நடனஞ் செய்தாய்!
      நகைத்த அச்சந்தி ரற்கும்
உலைந்துடல் தேயுஞ் சாபம்
      உறுத்தினை! நமைவ ருத்தும்
மலங்கெட இணுவை மண்ணில்
      வந்தநால் வாயின் ஈசா!
விலங்குகள் கொடுமைக் கஞ்சி
      வேற்றய லூர்கள் தோறும்
புலம்பெயர்ந் துறையும் பக்தர்
      புலன்தொறும் உறையும் ஐயா!
சிலந்திகள் வலையாய்ச் சூழ்ச்சி
      சிதைத் தெமக் கருள்வாய் முத்தம்.
-------

6. வருகைப் பருவம்

முத்தமிழில் முக்கனியில்
      மும்முரமாம் பித்துடையாய்!
வித்தைகளில் வேலைகளில்
      மேம்படுவோர் தொழுமிறைவா!
மத்தகமா மழகளிறே!
      வைத்தவுன்றன் பெயர்கொண்ட
சித்துமிகு செகராச
      சேகரன் மன்றங்களினால்
இத்தலைமு றைகலையில்
      எழுச்சிபெற வைத்தவனே!
பத்தர்தொழும் உன்னருளால்
      படைப்புமுதல் ஐந்தொழிலும்
ஒத்தியல ஒண்கரங்கள்
      ஓரைந்தாய்க் கொண்டவனே!
சத்தியத்தின் திருவுருவே!
      சகங்களிக்க வாராயோ!

தீரமிக்க துர்க்கைவெறிச்
      சனமகிடன் தனையழிக்க!
வீரபத்தி ரக்கடவுள்
      வீழ்த்தவெறித் தக்கனினை!
சூரபன்மன் ஆட்சி கொலச்
      சுடர்வேலன் எழில்முருகன்!
கூரகந்தை அயன் தலையைக்
      கொய்தடக்க வயிரவனார்!
ஊரைநகர் தம்மையெரி
      ஊட்டசுரர், அறநிழல்கள்
வேரையெரி செய்யசுரர்
      வீழ்த்தஎவர்த் தருவாயோ?
ஈரமற்ற கஜமுகனை
      இன்மருப்பால் ஒடுக்கவரு
வாரணமா முகத்தவனே
      மாண்குழவீ வாராயோ!

அழகுமயில் களுக்கிரங்க
      அடியாட்கள் தமக்கருள
பழித்துணைநண் பர்க்கிரங்கப்
      பந்தம்பிடிப் போர்க்கிரங்க
குழிபறிப்பு கொலைகடத்தல்
      கூத்துதவு வோர்க்கிரங்க
வளமிகுந்த வள்ளல்பலர்
      மலியுமிந்த தாட்களிலே
பழவினைகள் பயனொழிய
      பழியகலும் வழிதழுவ
அழுபவருக் கிரங்கவென
      ஐந்துகரன் நீயொருவன்!
எளிமைமனத் துறவிகளில்
      இனியஇசைத் தேன்மழையில்
வழியும்அருள் அன்னையரில்
      வாழ்பவனே! வந்தருளாய்!

எத்தர்சிலர் எமன்பாசம்
      எடுத்தணிந்து பூணூலாய்
எத்தனையோ சண்டைகளை
      இணுவிலிலே மூட்டிடினும்
மெத்தஉளர் என்போலும்
      மெய்ம்மைதிகழ் அந்தணரும்!
உத்தமநல் லடியவரே
      உமைக்காப்போம் அஞ்சல்என
நித்தமெமக் கருளுகின்ற
      நிறைநிலவுத் தாய்நிழலே!
பத்திமிகும் வேற்றூரின்
      பணிவுமனப் பூசகரின்
சுத்தஅருட் பூசைபெறும்
      துய்யவனே வாராயோ
முத்திநலம் நல்கிணுவை
      மூலிகையே வாராயோ!

எடுத்தெறிந்தார் அந்நியர்கள்
      எத்தனையோ உன்சிலைகள்!
இடித்தெறிந்தார் அந்நியர்கள்
      எத்தனையோ இன்தளிகள்!
விடுத்தனையோ அத்தனையும்
      மீண்டெழும்ப வைத்தவனே!
எடுத்தெறிந்தார் இடித்தெறிந்தார்
      இருந்தஇடம் தெரியவில்லை!
அடுத்தின்னும் எத்தனையோ
      அற்புதங்கள் இதுபோல
நடத்திடுவேன் என்பான்போல்
      நகைபூத்து நம்மிணுவை
இடுக்கணெலாம் தீர்த்தமர்ந்த
      என்குருவே வாராயோ!
ஒடுக்கமிலா ஓங்காரத்
      துள்ளொளியே வாராயோ!

"ஆமாங்க சாமி'' சொல்லும்
      அசல் எச்சில் கும்பல்களால்
சீமான்கள் பலரின்று
      சீ! அதுகள் ! ஆனார்கள்
நாமார்க்குங் குடியல்லோம்
      நல்லவைகள் சொலஅஞ்சோம்!
கோமான்நம் செகராசன்
      கோயிலிடங் கொண்டவனின்
தூமாக்கைத் துணைபெற்றோம்
      தொண்டர்நாம்! எனப்பாடும்
பாமார்க்கப் பணிகாக்கும்
      பண்ணவனே! போராடும்
நோமாற்றிச் சுகமீயும்
      நுண்ணருளே! வாராயோ!
ஓமோங்கும் பெருமானே
      ஒண்கனியே வாராயோ!

தந்திரமாய்க் கறைசேர்த்துச்
      சபைகூட்டிக் கரைசேர்க்கும்
விந்தைமிகும் வள்ளன்மை
      மேவாத சிறியர்நாம்!
நொந்தழுதோம் நூறுமுறை
      நுண்ணீயனுன் அடிகாண!
செந்தமிழாள் கோலோச்சத்
      திகழ்சிங்கை தனிலாண்டான்
தந்ததளி இணுவைமுதற்
      சாமியென வந்தவனே!
தந்தமுகச் சுந்தரனே!
      சார்ந்தழுவா னோர்க்குதவும்
திந்திமிதோம் திருநடனத்
      திகழ்சப்பைக் காலழகா!
வந்தருளாய் மண்டபத்தில்
      தாள் தொழநாம் வந்தருளாய்!

நிம்மதியும் ஆறுதலும்
      நிறைந்தஉருப் பார்த்தாலே
எம்மனங்கள் - சஞ்சலஞ்செய்
      இடரெல்லாம் போயகலும்!
அம்மம்ம என்னசுகம்!
      அஞ்சுவைகள்! ஆனந்தம்!
மும்மதத்து வேழமுகா!
      முக்காலம் உணர்ரிசிகள்
தம்மாலா னந்தந்தான்
      தழைக்கின்ற காலம்போய்
"அம்மா''என் றரையுண்ணும்
      'அரிசி'களால் ஊரழியும்
இம்மாயக் கலியினிலே
      எழில்ஞானம், உண்மைகளை
நம்மனையோர் நயந்தறிய
      நண்ணியிங்கு வாராயோ!

ஒடுங்கிஎலா முனைப்புகளும்
      உளமார நிரந்தரமாய்
அடங்கியுன்றன் அடியிலமர்
      அந்நெஞ்சின் துயர்துருவித்
தடங்கருணை யாற்போக்கித்
      தருபவனே போக்கியங்கள்!
நடமாடுஞ் சுமைதாங்கி
      நான்வந்துன் சரண்புக்க
அடிநாளில் எனக்குள்ளே
      ஆகிவளர் இன்னமுதே!
தடுமாறிநான் வியந்து
      தரிசிக்கத் தந்தவனே!
அடிநெஞ்சை அரித்ததுயர்
      அருள்நிலவால் தீர்த்தவனே!
நடம்போலும் அழகுநடை
      நடந்திங்கே வாராயோ!

நுனித்தறிய நுனித்தறிய
      நூறுசுகம் இன்பங்கள்
சனித்தெழும்பி ஆனந்தச்
      சன்னதங்கள் தருகின்ற
கனித்தஅருட் கணபதியே!
      காசினியில் உன்போல
இனித்தபொருள் கற்கண்டோ ?
      இன்கனிதேன் சருக்கரையோ?
பனித்தசடைப் பரன்மைந்த!
      பைந்தமிழச் செகராசன்
சுனைத்தமனப் பத்தியினால்
      தொட்டதளிச் செஞ்சுடரே!
வினைக்கடலாம் மேதினியர்
      வெம்முகங்கள் விழித்தபழி
இனிப்புரியோம்! எழில்முகவா!
      எமைப்பொறுத்து வாராயோ!
-------------

7. அம்புலிப் பருவம்

எங்களினை இன்புறுத்தும்
      எங்களிறை இன்புறுத்த
      இன்ப நிலா அம்புலிவா! வா!
அங்குசபா சம்நழுவ
      ஆயுதங்கள் அற்றவனாய்
      அன்புடனே அழைக்கின்றான் வா!
இங்கெமிணு வில்உயிர்கள்
      ஏத்துதளி மண்டபத்தில்
      ஏரபயக் கையசைத்தான் வா!
எங்களிறை நடமாட
      எள்ளியநீ நகையாட
      இட்டபழஞ் சாபம் மறப்பான்!
பொங்குசிவன் காதலினைப்
      பொருந்துவதில் சமமானீர்
      பொன்னிலவே ஆடிடவா வா!
பங்கவிருள் நீக்கியொளி
      பாய்ச்சி யுலகின்புறுத்தும்
      பண்பில் இறை சமனானாய் வா!
உங்களிரு வீர்வடிவும்
      உள்ளமெலாம் தண்மைதரும்
      ஒண்மைசமம் அம்புலிவா வா!
சங்கடங்கள் இல்லாமல்
      தந்தமுகன் கைதழுவிச்
      சால்மகிழ்வோ டாடிடவா! வா!

வானகத்து வீதியிலே
      மல்கொளியைப் பெய்துசெல்லும்
      வண்ணஎழில் அம்புலிவா! வா!
ஞானசித்து மேனியனாம்
      நங்களிறும் நீயுமுரு
      நண்ணெளிமையில் நிகர்க்கின்றீர்!
கூனுபிறை நீகொளுவாய்!
      கொம்பிலிரு பாதிபிறை
      கொண்டிடுவான் எங்களிறையும்!
வானவிளிம் பில்எழுகால்
      மஞ்சளுரு மன்னுவை நீ!
      மன்னுமிறை மஞ்சளுருவும்!
ஈனமுறத் தேய்ந்தலைய
      இட்டமுனைச் சாபமதால்
      எய்துகின்றாய் *மோதகம்நீயும்
தேனினிய சர்க்கரைவா
      சந்திகழ்பா சிப்பருப்பு
      சேருமோத கம் உடைத்தெங்கோ
தானதத்த தான தத்த
      சந்தநடம் ஆடி நீர்
      தக்கநந்தி தாளமிடுவான்!
ஆனதன்மை ஒற்றுமைகள்
      ஆர்ந்தஇரு வீர்மகிழ்ந்தே
      ஆடிடவா அம்புலிவா! வா!
*மோதும் அகம் = மோதகம்

மேலவன்நீ வானிலென்றும்!
      மேலவன்மண் விண்ணிலவன்
      மேன்மைசமம் கொண்டவர் நீங்கள்!
சாலுநண்டன் இந்திரற்குச்
      சந்திரன் நீ! தந்தமுகன்
      தானுமிந்தி ரற்கினியவன்!
மாலையொளிர் கின்றவன் நீ!
      வணங்கு மன்பர் சூட்டுமலர்
      மாலையிலொ ளிர்வன் ஐங்கரன்!
மேலும்பல்வி தங்களிலே
      வெண்ணிலவே கரிமுகனை
      மிகநிகர்த்தாய் ஆடிடவா! வா!
பாலெனவே பசியமணல்
      பளபளக்கும் சன்னிதியில்
      பண்ணவனோ டாடிடலாம்! வா!
சீலமிகு பாலகராம்
      சிறந்தஇளந் தலைமுறையின்
      சிறுகரங்கள் திகழ்த் திணுவைக்கண்
வேலவனண் டைமனையை
      விட்டுவந்து பங்குறவே
      மேவிவிளை யாடிடவா! வா;
பாலகர்தம் பண்ணிசைகள்
      பம்புமருள் மண்டபத்தில்
      பாடிமகிழ்ந் தாடிடலாம்! வா!

சேர்ந்து மகிழ் காதலர்க்குக்
      தேன்மழையாய் ஒளிபொழிவாய்
      தீய்த்திடுவாய் பிரிந்திருப்போரை!
சோர்ந்துபிரிந் திருக்குமந்தச்
      சோடிகளும் மணங்குலவிச்
      சுகிக்கஅருள் செய்யுமெங்கள் கோ!
ஊர்ந்திடற்கென் றொருவழியே
      உனக்குளதெம் ஆண்டவற்கோ
      உலகமெலாம் ஞானவுலாத்தான்!
நேர்ந்தபழிச் சாபம தால்
      நித்த நித்தம் தேய்ந்துவளர்
      நிம்மதியில் வாழ்வு படைத்தாய்!
சார்ந்துடல கோயிலொரே
      சமயம்முழு உருவுடனே
      தண்ணளிசெய் இன்பன் எங்கள்கோ!
ஆர்ந்தபல பேதமும்முள்!
      அத்தனையும் மறந்தெமய்யன்
      அன்பிலிணைந் தாட அழைத்தான்!
தீர்ந்துனது சாபமெலாம்
      சீரடையத் துண்ணெனவே
      தெண்ணிலவார் அம்புலிவா வா
கூர்ந்துகளி கண்குளிரக்
      கூத்திடல்நீர் காணவுளோம்
      கொஞ்சொளியார் அம்புலிவா வா!

கோயிலுனக் கில்லைவெள்ளைக்
      கொம்பனுக்கோ கோயில்பல!
      கொன்றை நிழற் கோயில் தனில்வா!
சாயலொளி பகலிழப்பாய்!
      சந்திரன் நீ! ஆனை முகன்
      தாங்குமொளி சந்ததமுந்தான்!
ஆயும்புவி மானிடவர்
      அமெரிக்கர் அறிந்திடவும்
      அடிதொடவும் எளிமையடைந்தாய்!
தூயசிந்தை ஞானியரும்
      தொன்மறையும் தேவருமே
      சொல்லரிய மருமமெங்கள் கோ!
ஆய்பல வேற்றுமைகள்
      அறிந்திருந்தும் அருள்மிகையால்
      அணைத்துவிளை யாட அழைத்தான்!
தேயமெலாம் ஒளிபொழிந்தும்
      தெரிந்தொரு நாள் விழவெடுக்கார்
      சிறுமையுன தொழிக்கநினைத்தான்!
காயுமுன தொளியிரவில்
      கள்வர்பயம் குறைக்குமந்தக்
      கருணைதனை நினைந்தழைத்தான் வா!
நாயகனஞ் செகராசன்
      நல்லசிங்கை நகரமர்ந்தோன்
      நாட்டுதளி அம்புலிவா! வா!


மோதகத்தோ டவல்பொரிகள்
      மூக்குவரை உண்டிடவே
      முக்கணிறை தந்தருள்வான்! வா!
ஆதரவாய் ஆடிடக்கால்
      அணைத்து விளையாடிடக்கை
      அருள் புரிவான் அம்புலிவா! வா!
மாதமுழு தும் உலவி
      மண்ணுலகக் காவல் செய்வோய்!
      வழங்குமிறை சம்பளமும்! வா!
ஆதியில் தான் ஆடநடம்
      அங்கமெல்லாம் துள்ள நகை
      யாடியடை சாபம் விலக்கிக்
காதலுடன் ஆவணியின்
      கண்சதுர்த்தி தனிலுனையும்
      கண்டுதொழில் புண்ணியமென்பான்!
நாதமுதல் 'ஓம்' ஒலியின்
      நாயகனாம் தந்தமுகன்
      நண்ணீணுவைக் கோயில் தனில் வா!
வேதியர்க்குங் கீதமன்றி
      வேதமன்றி வேடமன்றி
      வேண்டும்மனத் தூய்மையே என்போன்
பூதலம்மேல் கீழ்உலகிற்
      புண்ணியர்கள் நெஞ்சுருகப்
      புரியநடம் அம்புலிவா! வா!

தேய்ந்தருகித் திரும்பி வளர்
      சிறுமைதருஞ் சாபமதைத்
      தீர்த்துவிமோ சனந்தரல்கூடும்!
பாய்ந்துனையே தழுவவெனப்
      பரிதவிக்கும் பொங்கலைகள்
      பார்த்தடையும் உன்பயமுந்தான்
ஓய்ந்திடவே ஆழியுன
      துந்தல்விடு மாறருள்வான்
      ஒய்யெனவே அம்புலி வா! வா !
ஆய்ந்து தமிழ் நூல்பலவும்
      ஆக்கியெழில் நூல்பலவும்
      ஆன்றதமிழ் காத்துவளர்த்த
தீந்தமிழ்ச்சிங் கையரசர்
      திருவரிசை தனிலுதித்த
      செகராசன் மெய்த்தளியின்கண்
வாய்ந்தமனப் பக்தர் குழாம்
      மண்டியமர்ந் தேமகிழ
      வைக்கநடம் அம்புலி வா! வா!
தோய்ந்துமழைக் கார்த்திகையில்
      தொல்விரதம் பேணடியர்
      சொக்கநடம் புரிந்திடவா! வா!
தீந்திமிதோம் தாளமிடச்
      சேர்ந்துநந்தி மத்தளமும்
      செய்யநடம் அம்புலிவா! வா!

அடித்தொண்டர்க் கருளவென
      அசையாமல் குந்துவதால்
      அமைந்தஉவ மைத்தொடராகும்
பிடித்துவைத்த பிள்ளையெனும்
      பெரும்பட்டம் கொண்டவனாம்
      பேழைவயிற் றைந்துகரத்தோன்!
நடத்துதிரு விளையாடல்
      நர்த்தனங்கள் யாவுமிவன்
      நல்லடியர்க் காகப்புரிவோன்!
எடுத்தபணி இன்னிறவை
      எய்தஉல கோர்வணங்கும்
      எங்கள்குரு ஞானமுதல்வன்!
கொடுத்தமரி யாதையிலே
      குளிர்ந்துவர வில்லை யெனில்
      கூனுபிறை அம்புலி நீ ஆம்!
அடுத்து நடக்கும் உனக்கே
      ஆயிரமாம் விக்கினங்கள்!
      ஆடிடவா அம்புலிவா! வா!
ஒடித்தவொரு மருப்பதனால்
      உருப்பெரியன் கஜமுகனை
      ஒடுக்கியெலி வாகனங் கொண்டோன்!
விடுத்தஅழைப் பைமதித்து
      விண்துறந்து வந்திடுவாய்
      வெள்ளியஅம் புலி! உடனேவா!

பாபமெலாந் தீர்த்தடியர்
      பவநலிவைப் போக்குபவன்
      பாகனிலா ஆனை முதல்வன்!
சாபமெலாந் தீர்த்தருளிச்
      சர்ப்பவுரு நீங்கிடமால்
      தண்ணருள்செய் கண்ணுதல் மெய்யன்!
பாபுனையும் பாவலர்க்குப்
      பல்பரிசு தந்துதமிழ்
      பல்குவளம் உய்த்த சிங்கைதன்
கோபரவி வைத்ததளி
      கூடிமகிழ் ஆனைமுகக்
      கொண்டலுடன் ஆட இங்கேவா!
நீ பெரியன் என்றதிமிர்
      நெஞ்சிருக்கும் என்றிடிலோ
      நீறு நிலை இந்தநொடியே!
வா பெரியன்! தாகவிதை!
      வாழியெனக் கச்சியப்பன்
      மாண்கபிலர் அருணகிரியார்
பூ பொழியவ் வையடியர்ப்
      புகழ்ந்த சேக்கிழார் போன்றார்
      போற்று மிறை எங்கள் களிற்றோன்!
கோபமுற முன்குதித்துக்
      கோயிலிடை வந்திடு வாய்!
      கொங்கொளிசேர் அம்புலிவா! வா!

பட்டுநிலா! பவழ நிலா!
      பாவிலெல்லொம் ஒளிருநிலாப்
      பட்டமெலாம் பெற்ற அம்புலீ!
சுட்டபனம் பழம்போலத்
      தூயவொளி தான்கருகிச்
      சோர்ந்துவிழ முன்னம் வருவாய்!
மட்டவிழ்பூ மாலைகளை
      மலைமலையாய்ச் சூட்டடியார்
      மங்கலமாம் எங்களிறை! கால்
தொட்டெழுந்து சுந்தரமாய்த்
      துள்ளுநடம் ஆடுவதால்
      சொர்க்கசுகம் நண்ண வருவாய்!
கெட்டவர்கள் கிட்ட விடாக்
      கீதவொலித் தண்டையடிக்
      கீர்த்தியனோ டாடிட வா வா!
கொட்டமடங் கிடவசுரர்
      கும்பலழி வெங்கரியின்
      குட்டி துதிக் கை தழுவ வா!
கொட்டுமுழக் கோசை நடு
      கொஞ்சொலி யாழ் ஓசை யொடு
      கொள்கைநடம் ஆடிட வா வா!
பட்டழிந்த இலக்கண சுந்
      தரியவளின் பழங்கதையைப்
      பற்றியுணர்ந் தம்புலிவா! வா!
-------------

8. சிற்றில் பருவம்

வசையால் சோர்ந்தும் வாழ்த்தில் கொழுத்தும்
      வழியே தவறாத,
பசியால் நொந்தும், பணத்தால் மீந்தும்
      பாவம் நினையாத,
அசையா உறுதி அள்ளித் தந்த
      ஆனை முகவோனே!
நிசமாய் அறமே வெல்லும் ஈற்றில்!
      நில்லவ் வழியென் போய்!
இசைய என்றும் என்றும் வெற்றி
      ஈவோய் அறத்திற்கே!
திசைகள் தோறுஞ் சென்றுன் கோயில்
      திகழ்த்து செகராசன்
நசையோ டிணுவை நகரில் பண்டு
      நாட்டைங் கையோனே!
கசனுன் வீதி மணலில் கட்டெம்
      கவினில் சிதையேலே!

கொன்றை மரங்கள் குளிர்பூ நீழல்
      கொஞ்சும் உள்வீதி
ஒன்றும் பொலியும் ஒளியார் மணலில்
      உவகைச் சிறுபெண்கள்
துன்றிக் கூடிச் சொகுசாய்க் குந்திச்
      சுடருஞ் சிற்றில்கள்
ஒன்றாய்ப் பலவாய்ச் செய்தோம்! இங்கே
      ஓடி வருகின்ற
கன்றுக்களிறே! கஜமு கத்துக்
      கயமை அசுரனினை
அன்று சிதைத்தி வாறெஞ் சிற்றில்
      அழிக்கா தருள்செய்க!
வென்றிக் கரசே! வேழத் தெழிலா!
      மிதியேல்! சிதையேலே!
உன்றன் உண்மைத் தொண்டர் செய்த
      ஒள்ளில் சிதையேலே!

ஞானம் எங்கும் எங்கும் பரவ
      நாளும் அருள்வோனே!
ஈனத் துன்பம் துயரந் தீர்க்க
      ஏத்த அருள்வோனே!
கூனும் வயதில் கூட ஆசை
      குறையாச் சண்டாள
ஏனக் கூட்டம் போலேம் நாங்கள்!
      எப்பழி யுஞ்செய்யோம்!
நீநன் றென்ப மட்டும் செய்வோம்!
      நினைவோம்! பேசிடுவோம்!
வானும் மகிழத் தமிழன் ஆண்ட
      வளமார் யாழ்ப்பாணக்
கோனன் றமைத்த கோயில் இறையே!
      குழப்பேல் எஞ்சிற்றில்!
தேனும் பாகும் பருப்புந் தருவோம்!
      சிதையேல் எஞ்சிற்றில்!

பூவின் மிசைநற் பெற்றோர் தாமே
      புதல்வர்க் குலகென்ற
தாவில் ஞானக் கருத்தைத் தந்து
      தம்பி தனைவென்று
மாவின் கனியை வாங்கிக் கொண்ட
      மறைகள் கடந்தோனே!
யாவர் தமக்கும் தாய்தந் தையாம்
      ஐங்கை ஐயன்தான்
தேவன் உலகம், பெற்றோர் நமக்காய்த்
      தெளிந்த பெண்கள்நாம்!
கூவிப் பாடி உன்றன் புகழைக்
      கூடிக் குந்திப்பொன்
கோவில் வீதி மணலில் வைக்கும்
      குற்றில் குலையேலே!
சேவிப் புண்ணும் சிலம்புக்காலால்
      சிற்றில் சிதையேலே!

இருவர் சிவன்கள்! என்னும் வண்ணம்
      ஏற்றம் மிகுமீசா!
திருமால், பிரமா, தேவர், பூதர்
      சித்தர் யாவர்க்கும்
பெரியோய்! பிரமச் சாரி என்பர்!
      பெண்கள் இரண்டென்பர்!
ஒருபேச் சுரையோம் உன்னை இகழ்வாய்!
      உனையே தொழுகின்றோம்!
அரசன் தமிழன் ஆண்டி யானான்!
      ஆனால் அவன்வைத்த
அரசன் நீயோ என்றும் அரசன்!
      ஆளல் வேண்டுமெமை!
வருவோம் பூசை தோறும்! உன்றன்
      வாழ்த்துப் பாடிடுவோம்!
குருவே குலையேல் எங்கள் சிற்றில்
      குலையேல்! குலையேலே! !

மஞ்சம் இல்லை! கோபுர மில்லை
      வண்ணத் தேரில்லை!
கொஞ்சம் மிகவும் வாக னங்கள்!
      குளிர்பூங் காவில்லை!
விஞ்சும் பகட்டே இல்லை; அதுபோல்
      வேஷம் நடிப்பில்லை!
பஞ்சம் இல்லை பரியும் அருட்கு
      பக்தி தூய்மைக்கு!
நெஞ்சந் தூயர் நித்தத் தொண்டால்
      நிறைவு நிறைந்துண்டு!
தஞ்சம் தந்து காத்திங் கிணுவைத்
      தக்கோர்க் கருள்வோனே!
பிஞ்சுக் கரங்கள் பெருகுன் மணலில்
      பிள்ளை விளையாட்டாய்
கொஞ்சி வைக்கும் குற்றில் குலையேல்
      குற்றில் குலையேலே!

அற்றைக் கற்றை வேளா வேளை
      ஆற்றுக பசி! போதும்!
மற்றைச் செல்வம் மமதை செய்யும்
      மாய்க்கும் மதியோம்நாம்!
சற்றைப் பொழுதுஞ் சகத்தை மதியோம்
      தாழோம் என்போர்சார்
ஒற்றைக் கொம்பா பற்றுப் பற்றைகள்
      ஓங்கிய நெஞ்சேத்தாக்
கொற்றங் கொண்ட இணுவைக் கோவே!
      குழந்தைப் பெண்கள்நாம்
சிற்றில் செய்யத் தொடங்கும் போதே
      தேங்காய் உடைத்தேத்தாக்
குற்றங் குறைகள் பொறுத்தல் வேண்டும்
      குலையேல் நஞ்சிற்றில்!
செற்றங் கொள்ளேல் திருவைங்கரனே!
      சிதையேல் நஞ்சிற்றில்!

நீட்டுந் துவக்கின் நிரையுள் கூட
      நித்தம் திரிகின்றோம்!
காட்டுமிருகக் கால்கள் ஊடும்
      களிப்பாய் நுழைகின்றோம்!
சூட்டுத் தணலின் சுடரில் கூடச்
      சுகமாய் நடக்கின்றோம்!
ஊட்டுங் காக்கும் கரங்கள் ஓரைந்
      துண்டே துணைக்குஎன்றுன்
கோட்டந் தொழுவோர் கூறக்கேட்போம்
      குளிர்வோம் குகற்கண்ணா!
கூட்டுங் குவியல் மணலிற் குந்திக்
      கூடிச் சிறுமியர்கள்
நாட்டுஞ் சிற்றில் நம்பன் மைந்தா
      நலியச் சிதையேலே!
நாட்டைக் கொளுத்தா அதியுத்தமனே!
      நலியச் சிதையேலே!

உலக வாய்கள் தம்முள் அதிகம்
      ஊத்தைப் பொய்வாய்கள்!
உலாஞ் சொல்லும் புகழும் இகழ்வும்
      உண்மை அற்றவைகள்!
நிலவுச் சடையன் மைந்தன் நீசொல்
      நெறியில் வாழ்கூர்த்த
புலமை யுடையோர் போற்றித் தொழவே
      பொலிந்திவ் விணுவையிலே
நலஞ்செய் தமரும் நறியா! சிவனும்
      நாடித் தியானஞ்செய்
தலைமை இறைவா! பொழியும் மாரி
      சாடும் வெள்ளத்தில்
பொலியும் மணலில் பொய்யில் பெண்கள்
      பொருந்தி உன்வீதிப்
பலவாய்ச் செய்யும் சிற்றில் சிதையேல்
      பழையா சிதையேலே!

கொல்லும் பழியில் கூட்டும் புலவூண்
      கொள்ளூம் நாவிச்சை
செல்லும் வழியைச் சிக்கல் வழியாய்ச்
      சிதைக்குங் கள்ளிச்சை
இல்லா மேன்மை இயல்பை எம்முள்
      ஈந்து காப்பவனே!
எல்லாம் நம்நம் பரிபக் குவத்தின்
      ஏற்றம் அறிந்தேநீ
ஒல்லும் வழியில் உதவும் பலங்கள்!
      உரைப்பர் உன்னடியர்!
கல்லா நாமும் கருதில் உன்னைக்
      களிப்பை நல்கிணுவை
நல்லாய்! எங்கள் நயமில் சிற்றில்
      நலியச் சிதையேலே!
சல்லென் சிலம்புச் சப்பைக் காலால்
      சாமீ, சிதையேலே!
------------

9. சிறுபறைப் பருவம்

பொறை கனிந்த பொன்னுருவே! இணுவைப் பூமி
      பூத்தமுதல் இறைவடிவே! செகரா சன்தன்
இறைமுதலே! ஓமென்னும் ஒலியின் ரூபா!
      எண்ணில்லா அண்டங்கள் எழுந்த வித்தே!
மறைகட்கு முதல்வோனே! பறைகளுக்கும்
      மறைவோனே! மண்பக்தர் மனங்க ளென்னும்
துறைகட்குப் பெருநீரே! மனத்தில் மாசு
      துரந்திடலே முத்திக்கு மூலம் அன்றி
வெறும் போலிக் கிரியை ஆ சாரந் தம்மால்
      விடிவில்லை/ வேண்டும்மனத் தூய்மை மேலாய்!
பிறவிக்குள் சிறைபடவை பிழைகள் நீக்கிப்
      பேரின்ப முத்திநிலை காண்பீர்! என்று
பறைகொட்டிப் பிரசித்தம் போடும் பாங்கில்
      பண்ணவனே! தும்து மெனப் பறை முழக்காய்!
நிறைநிலவே! நெஞ்செல்லாம் இனிக்குந் தேனே
      நிம்மதியே! தும் துமெனப் பறைமுழக்காய்!

குருந்தமர நீழலிலே ஞானம் பெற்றார்
      குதிரை கொளச் சென்றமணி வாச கர்தாம்
இருந்த வெள்ளை அரசின் கீழ் ஞானம் பெற்றான்
      இளந்துறவி கௌதமனும்! ஆனால் இன்று
வரிந்தபனம் பாளையினால் ஞானம் பெற்ற
      மாமேதைக் கூட்டத்தோர் இறையேற்காமை
தெரிந்துமகங் காரத்தால் பழிகள் செய்து
      தீயுண்பார்! வெட்டுண்பார்! செல்வங்கெட்டே
திருந்திடுமெய் ஞானத்தைப் பெறுவார் உன்றன்
      சித்தத்தை அறிந்து நிதம் நடக்கும் பக்திப்
பெருந்திண்மை எமக்கீந்த பிள்ளைத் தேவே
      பெரும்பான்மை சொல்வ தெலாஞ் சரியென்றெண்ணி
வருந்து நிலை நாம் வீழா தருள்செய் தோனே!
      மனஞ்சிலிர்க்கும் நாதமணிக் கோபு ரத்தோய்!
மருந்தனைய அருளால்வல் வினைகள் தீர்க்கும்
      வைத்தியனே! வண்கையால் பறை முழக்காய்!

கவலைகளிற் கழிகின்ற கணமொவ் வொன்றும்
      காலன்கைப் பட்டழியுஞ் சாவுக் காலம்!
தவமுனைவில் சிவநினைவின் கழிம கிழ்வில்
      தழைக்கின்ற சிலநொடியே வாழ்வுக் காலம்!
அவலங்கள் கவலைகள் அலைக்குங் காலும்
      ஆனைமுகன் உன் நினைவில் மூழ்கி உள்ளம்
''இவை தூசு! இறைதீர்க்கும்” என்றிருக்க
      இடர்நீக்கி எனையாளும் இன்ப வேந்தே!
நவமணிகள் நன்னிதிகள் புகழ்போற் றல்கள்
      நயந்தினிக்கும் நிலையில்லா இன்பம் வேண்டேன்!
சிவனிருக்குங் கைலாயம் சிலநொ டிக்குள்
      திருக்கையால் ஔவையினை எடுத்து வைத்த
செவிபெரிய திருப்பிள்ளாய் திரள்பூங் கையால்
      சிறுபறையை எடுத்துஏத்தும் அடியர் பாவம்
துவைபடவே தும்தும் என முழக்காய் ஐயா!
      தூயதிருக் கையாலே முழக்காய் ஐயா!

பொன்பொருளில் மங்கைபுகழ் பதவி மீது
      போதைமிகும் பற்று தரும் துன்பம் உண்மை !
அன்பருளம் ஆளும்உன் கோவில் மீதாம்
      அப்பற்றுந் துன்பந்தரும் புதுமை கண்டேன்!
மின்பிரபை வீசுதிரு மேனி தாங்கும்
      விநாயகனே! இணுவிலுறை வேத வித்தே!
என்சிறிய இல்லத்தில் இருந்தே உன்னை
      ஏத்துமின்பம் பலகோடி எய்து விப்போய்!
முன்பு தவ முனிவரெலாந் தவத்தில் ஆழ்ந்தார்
      மூர்க்கமிகு யானை புலி கரடிசிங்கம்
என்பமலி வனங்களிலே! இடரே இல்லை!
      இன்றெம்மூர் களில் வாழும் கரடி சிங்கம்
மின்னலிடுந் திருநீற்றுக் குறிக ளோடும்
      வேதசிவா கமங்கற்ற பட்டத் தோடும்
புன்மதிகொண் டியற்றுகின்ற கொடுமை கோடி
      புனிதமிவர்க் கீந்துபறை முழக்காய் ஐயா!

காமமுதல் உட்பகைகள் ஆறும் வென்றால்
      காசினியில் வெளிப்பகைவர் அஞ்சித் தாழ்வர்!
ஆமையென ஐம்பொறிகள் அடக்கும் ஆற்றல்
      அமைந்தவர்க்குத் துன்பங்கள் தொலையும்! அந்தச்
சேமநிலை சித்திக்கும் வெற்றிக் கெல்லாம்
      செகராச சேகர நின் அருளே காலாம்!
மாமன் நெடு மாலவன் தன் நேமி மீட்கும்
      வண்ணம் நகைச் சுவைபுரிந்த விகடா! போலிச்
சாமிகளின் மாயவலை வீழா வண்ணம்
      சமயகுர வர்நெறிகள் சாரும் வண்ணம்
நாமமது சைவனெனக் கொண்டும், வாழ்வோ
      நாயனென வாழுநிலை சாரா வண்ணம்
ஓமெனுமப் பிரணவமாம் மூல நாதம்
      ஓங்கிடவே பறைமுழக்காய் ஐந்து கையா!
பாமரர் போல் நடக்கின்ற படித்தோர் தாமும்
      பண்புறவே பறைமுழக்காய் ஐந்து கையா!

பஞ்சகர்த்தா மாரில்லாப் புனிதத் தாலே
      பாவவழிப் பணங்குவியாப் புனிதத்தாலே
நெஞ்சு சுத்த மணியந்தன் காப்பினாலே
      நித்த நித்தம் பூசைபெறும் பிள்ளையாரே
மஞ்சுதவழ் மலைச்சாரல் வனங்கள் தோறும்
      வலிய தவம் இயற்றுமருள் முனிவர் மாரின்
நெஞ்சு தவழ் செஞ்சடையான் மைந்த! அந்த
      நீலமயில் வாகனத்தன் அண்ணா ! தெய்வக்
குஞ்சரமே! எவ்வெந்த வடிவில் என்னை
      கும்பிட்டா லும் அவ்வவ் வடிவில் தோன்றி
மிஞ்சருளைப் பொழிவெனென அருளி நின்ற
      மேலாம் ஓர் நாயகனில் விநாய கப்பேர்ப்
பஞ்சமுகா! பாவியர் நம் அகந்தை மூல
      ஆணவத்தீப் பாம் பொடுக்கும் இடியோ சையாய்
விஞ்சைமிகும் பறை கொட்டி விளையா டையா!
      வேதவொலிப் பறைகொட்டி விளையா டையா!

அன்னியர்கள் ஆட்சியிலே உன்றன் கோயில்
      அந்தமிமூர் தோறுமிடி யுண்ட வேளை
முன்னறிந்துன் அடியவர்கள் கிணற்றில் மண்ணில்
      மூடி வைக்க ஒளித்திருந்து நேரம் நண்ண
உன்னியெழுந் தாலயங்கள் மீண்டும் பூத்த
      உத்தமனே! அப்பொழுதும் இந்தக் கோயில்
தன்னிலசை யாதிருந்தாள் தலைமை மூர்த்தி!
      தந்தரிய நறும்பூசை கைகள் கூப்பிச்
சென்னிமிசைக் கொண்டடியார் ஏத்த அன்றும்
      திகழ்பருத்தி யடைப்பிருந்த தெய்வக் கோவே!
தின்னு மனத் துயரமெல்லாம் அடியர்க் கோட்டச்
      சிந்துரக்கைத் தலஞ்சிவக்கத் திகழும் மேனி
தன்னிலெலா அங்கமுமே தாளத் தாட
      தங்கிணுவைத் தளிகளிக்கப் பறை முழக்காய்
என்ன திருக் கோயிலிலும், முதல் வணக்கம்
      ஏற்றருள்வோய்! ஏந்து சிறு பறைமுழக்காய்!

தப்பாமற் பாவிகளைத் தடியும் உன்றன்
      சன்னதங்கள் அறியாமல் இற்றை நாளில்
துப்பாக்கிக் கூட்டங்கள் தூர்த்துன் கோயில்
      தூக்கியுனை எறிகின்றார் அயலில் பொங்கும்
உப் பாழிச் சமுத்திரங்கள்! உரம்பி ளக்க
      உரியதொரு நேரம்வரும் என்றிருப்போய்!
துப்பாருந் திருமேனி இணுவில் ஏத்தச்
      சுடர்ந்திருக்குங் கணபதியே நியாயஞ் சொல்லித்
தப்புகின்ற துணிவழியப் பாவங் கோடி
      தயங்காமல் புரிபவர்கள் எதிர்க்கும் எம்மை
அப்பப்பா பொய் வதந்திப் பிரசாரங்கள்
      ஆளேவும் இருட்டடிக்காம் முயற்சி 'பில்லி'
மப்பாளர் வழிமறிக்கும் தடித்த னத்தால்
      மடக்கவென முயல்வோர்கள் தோற்கும் வண்ணம்
எப்பாவச் சதியுமெமை அழிக்கா வண்ணம்
      இன்றுவரை காப்பவனே பறைமு ழக்காய்!

சிரங்குகடி புலைச்சிந்தைக் கல்வி பெற்றோர்
      திருட்டு வழிச் செல்வந்தர் கூட்டம் கோயில்
'திருந்த' வைக்கும் திருப்பணியில் துணை நின்றிட்ட
      தேகமெலாம் வயிறாகப் பெற்ற வர்க்கு
சிரந்தறித்த ஆடுகளின் ஊனைக் கள்ளை
      'ஜின்' பிராந்தி மதுவகையைத் தரங்கள் பார்த்தே
விருந்து வைக்கும் மேதினியில் வேண்டாம் செல்வம்!
      வேண்டியது நீ தெரிந்து தருவாய் என்று
வரம் வழுத்தி வேண்டுமெனைப் போனறோர்க்கெல்லாம்
      மனவடக்கப் பயிற்சிதரும் வறுமை தந்தும்
பெருங்களியார் கிளரான்ம இன்பந் தந்து
      பிறவியெனும் பிணிதீர்க்கும் மருந்தே! மாந்தர்
இரும்புமனங் கரையவரு எலிமே லோனே!
      எம்மிணுவைக் கோ! பறையை முழக்கி ஆடாய்!
சுரும் பிசைக்குந் தொல்பதியில் தும்பிக்கையா!
      துந்துமெனச் சிறுபறைமு ழக்கி ஆடாய்!

பாடென்றாய்! பாடுகிறேன்! ஐய! இந்தப்
      பாட்டெல்லாம் நீதந்த பாட்டு! சென்னி
சூடென்றாற் சூடேனோ உன்றன் கால்கள்?
      துயர் தீர்க்குந் திருவடியென் தலைமேல் வைத்தால்
ஆடென்னா தாடிடுவேன் ஆனந் தத்தால்!
      ஆரென்னிற் புண்ணியரே அப்பே றுற்றால்?
காடொன்றாம் உலகில் பேய் கரடி யாகக்
      காசாளர் கற்றோர்கள் இருந்தூர்த் தூய்மைக்
கேடெல்லாம் புரிந்தாலும் பொறுமை பூண்டு
      கீதஞ்சேர் செகராசன் கோயில் விட்டே
ஓடற்கே எண்ணாமல் இருத்தல் எல்லாம்
      ஓரைத்து விழுக்காடு மெய்ம்மைப் பக்தர்
ஏடொன்றும் பூசைக்காய் இரங்கி அன்றோ
      இச்செய்தி பரப்புதல்போல் பறைமுழக்காய்
கூடொன்றுட் குருவியெனச் சிறைப்பட்டின்னல்
      கூருயிர்நெஞ் சாறிடவே பறைமுழக்காய்.
*****
*****

This file was last updated on 27 May 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)