pm logo

தாலாட்டு பாடல்கள் 3
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது


kumara tAlATTu, citamparat tAlATTu
& maturai mInATciyamman tAlATTu
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தாலாட்டு பாடல்கள் 3 ( குமரதாலாட்டு,
சிதம்பரத்தாலாட்டு & மதுரை மீனாட்சியம்மன் தாலாட்டு)
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது

Source:
நற்கீரதேவர் அருளிச்செய்த குமரதாலாட்டு, சிதம்பரத்தாலாட்டு & மதுரை மீனாட்சியம்மன் தாலாட்டு
திருப்போரூர் டி. கோபால் நாயகர் அவர்களாற்றமது
மதராஸ், என். சி. கோள்டன் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
1914.
17-18 காளத்தியப்ப முதலிவீதி மதராஸ் என். சி.
----------

1. நற்கீரதேவர் அருளிச்செய்த குமரதாலாட்டு.

உ : கடவுள் துணை.

காப்பு.
குமராவுனைத்தொழுதேன் குன்றெரிந்தவேள் முருகா
அமராவதிகாக்கு மாறிரண்டுதோளானே.       1

ஆறிரண்டுகைதலத்தா லசுரர்தங்கைசேனையெல்லாம்
வேறிரண்டுகூறாக வேல்விடுத்துவந்தோனே.       2

குயிற்கூவமயிலாடக் கோயிற்றிருச்சங்கூத
ஒயிலானமயிலேறி யுலகாளவந்தோனே.       3

இரண்டு மலை திரண்டுருள விருகையிலும் வேல்வாங்கி
இரண்டுமலைநாலாக வெழுந்தருளிவந்தவனே.       4

பச்சைமயிலேறி பழத்திற்கொருநொடியில்
செச்சைமுழங்கத்தேயம் வலம்வந்தவனே.       5

தேவாதிதேவன் திருச்செவியிலந்நாளில்
மூவாதமந்திரத்தை மொழிந்தபிராநீயலவோ.       6

தெள்ளிமணல் கொழிக்குஞ் செந்திற்பதிதனிலே
வள்ளிமயங்கமயிலேறி வந்தவனே.       7

நினைத்தவிடந்தோறு நீலமயிலேறி வந்து
மனத்திற்கவலையெல்லா மாற்றுப் பெருமானே.       8

என்றுமிளையானே யீராறுதோளானே
அன்றசுரர்வேர்களைய யம்புவியில்வந்தவனே.       9

பொல்லாதநாயடியேன் புன்தலைமேற்பாதம்வைத்தே
எல்லாருங்காண வெழுந்தருளிவந்தவனே.       10

தேன்மருவுஞ்சோலை தென்னருணைமாநகரில்
வானவர்கள்வந்துதொழ வரமளித்துநின்றவனே.       11

வருணமயிலேறி வள்ளியம்மைதன்னுடனே
அருணகிரிகோழாத்தி லஞ்சலென்றேநின்றவனே.       12

வம்பலருஞ்சோலை வயற்றணிகைமா நகரில்
கும்பமுலைவெள்ளி குறமகட்குவாய்த்தவனே.       13

ஏழையடியார்க ளெப்போதழைத்தாலும்
வாழிமயிலேறிவந்து வினைதீர்த்தவனே.       14

மாற்றான்படைநடுங்க வாழுமயிலேறிவந்து
கூற்றாகச்சேனையெல்லாங் கொன்றுவெற்றிபெற்றவனே.       15

வாரப்பெருமுலையாள் வள்ளியம்மைதன்னுடனே
வீரத்திருப்பதியாம் வேங்கடத்திநின்றவனே.       16

முன்னைப்பிறப்பருக்க முற்காலஞ்செட்டியென்று
பின்னைமறைக்குப் பிரணவமாய்வந்தவனே.       17

வேங்கைமரமாகி மெல்லியற்குத்தானிழலாய்
ஓங்கிவளர்ந்தெழுந்தே உதவிசெய்யவந்தவனே.       18

காலிற்சிறு சதங்கைகட்டவொண்ணாக்காலமதில்
பாலித்தவெண்ணீரும் பரப்பியபாலகனே.       19

சிவனார் திருமகனே செப்புமறுமுகனே
கவனரதமேறிவருங் கதிர்காமவேலவனே.       20

ஆணிப்பொன்மேனியா னகங்களிக்கவந்நாளில்
மாணிக்கவல்லிமகிழ்வான்பொருளைச்சொன்னவனே       21

கைத்துவசமசைய காலசையவேலசைய
முத்துவடமசைய முன்வந்துநின்றவனே.       22

நீலக்கடன்மேனி நெடுமாரன் முருகோனே
சாலவுலகனைத்துஞ் சாற்றும்பெருமானே.       23

துள்ளுமயிலேறித் தொலையாதசூரர்களைக்
கொள்ளை கொள்ளவந்த கொற்றமிகும் வேலவனே.       24

வெள்ளிமயிலேறி வேல்வாங்கிவெற்றிகொண்ட
அள்ளித்தீருறேணிந்த வாறுமுகத்தரசே.       25

செங்காட்டினின்றே சிறுத்தொண்டன் தன்மகனை
மங்காமற்காத்தளித்த வள்ளன்மகனாரே.       26

வெள்ளியிருங்கொம்புடைய வேழத்தின் பின்பிறந்து
வள்ளிதனைமணந்து வானமயிலில்வந்தவனே.       27

பொன்றுமவுணர் புரமூன்றும்வெந்துவிழ
அன்றுநகை செய்த வரனார்திருமகனே.       28

சங்கமிகுந்துலவுஞ் சரவணையில்வந்துதித்து
மங்கையுமைதனக்கு வாய்த்தமகனாரே.       29

வேலப்புனத்திருந்து வேடர்தமைகாத்தருளிக்
கோலக்குறமாது கொங்கைகளிற்சேர்ந்தவனே.       30

கண்ணிரண்டுநீர்சொரியக் கைகுவித்துநின்றவர்க்கு
எண்ணரியநற்பதவியீ கைந்துநின்றவனே.       31

மூவர்மேழமுனிவர்க ளந்தணர்மகிழத்
தேவர்சிறைமீட்ட சேவகனு நீயலவோ.       32

மன்று தோறாடுவள்ளல் மனங்களிக்கக்
குன்றுதோறாடுங் குமரகுரு நீயலவோ.       33

வீறுசரவணையில் விளங்குமறுபிள்ளைகளாய்
கூறுபடவேவளர்ந்த குமாரதேவயேலவோ.       34

தாருகாசூரனுடல் தாரணியிலேவிழுக
கூறுடையவேல்விடுத்த கொற்றவனுநீயாமே.       35

அண்டங்குலுங்க வாழியேழுங்கலங்க
திண்டிறல்சேர்கொக்கைவென்ற சேவகனுநீயாமே.       36

உண்ணாமுலைப்பாலை யுண்ணாமல்வாங்கியுண்ட
அண்ணாமலைமகனே யாறுமுகவேலோனே.       37

வையாபுரியானே வாழ்மயிலைவெற்பரனே
ஐயாபழனிமலை யாளுமுருகோனே.       38

மூவர் முனிவர் முப்பத்து முக்கோடி
தேவர்புகழுந் தெய்வசிகாமணியே.       39

வேதப்பொருளே விளக்கேநல்விண்மணியே
போதப்பொருளே புலவர்சிரோமணியே.       40

கண்ணே கரும்பே கற்பகமேகண்மணியே
விண்ணாரமுதே யிளங்குமயில்வீரோனே.       41

பூவின்மணமே பொன்னே புகழொளியே
தேவின் முதற்றேவே தேவர்சேனாதிபதியே.       42

பாலிற்சுவையே பகாரியமுக்கனியே
கோலவுமைக்கினிய கொற்றவனே சண்முகனே.       43

கந்தர்தாலாட்டைக் கற்றோருங்கேட்டோரும்
இந்திரனைப்போலவினி தூழி வாழ்ந்திருப்பார்.       44

நற்கீரதேவர் நயந்துரைத்த வாய்மொழிக்கே
எக்காலங்குற்றமில்லை யென்பார்கள் கற்றோரே.       45

நற்கீரதேவர் அருளிச்செய்த குமரதாலாட்டு முற்றிற்று.
---------------
கணபதி துணை.

2. சிதம்பரத்தாலாட்டு.

விநாயகர்-காப்பு.
வெண்பா.
சீராருந்தில்லைச் சிதம்பரரைத்தாலாட்ட
ஏரார்சிவகாமி யீன்றெடுத்த - பேரான
கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே மெய்ப்பொருளே
வந்துவரந் தந்தருளுவாய்

தாலாட்டு.

சிந்தை மகிழச் சிதம்பரரைத்தாலாட்ட
கந்தருக்குமுன்பிறந்த கற்பகமே முன்னடவாய் (1)

தானந்தழைக்கத் தரணியுள்ளோரீடேற
ஆனந்தத்தாண்டவமாய் ஆடுஞ்சிதம்பரனோ. (2)

மங்கைசிவகாமி சுந்தரியாள்மாதேவி
அங்கைய முதளிக்க ஆனமிர்தங்கொண்டானோ (3)

நால்வேதங்கோபுரமாய் நாட்டியபஞ்சாக்கரத்தில்
ஆலேசிவாலயமாய் ஆடுஞ்சிதம்பரனோ. (4)

வெண்ணிலவேவெண்மதியே வெண்குடையேதில்லைவரும்
அண்ணலுடன்கூடிவிளை யாடவாவம்புலியே. (5)

நாகப்பணிபூண்டு நாகங்கரத்துடித்தி
நாகமலர்முடித்து நடிக்குஞ்சிதம்பரனோ. (6)

தேடியதோர் நான்மறையும் தேவர்களுமீடேற
ஆடியுடன்கூடிவிளை யாடவாவம்புலியே. (7)

பொன்னம்பலத்தே புகுந்து விளையாடிவர
இன்னம் விளையாட வாரீரிளம்பிறையே. (8)

வட்டப்பூச்சாத்தி வயிரமுடன் கோடுசுத்தி
இட்டசிங்காதனத்தே யேர்க்கயிருந்தானோ. (9)

கல்லைச்சிலையாக்கிக் கடியபுரமெரித்த
தில்லைச்சிதம்பரனோ சிவகாமிநாயகனோ. (10)

தழலேந்துஞ்சங்கரனோ தாணுவோதாண்டவமோ
கழலேகதியென்று காட்டுசிதம்பரனோ (11)

வாளுடைய கண்ணாள் வலவன் திருமகளார்
ஆளுடையநாயகிக்கி அன்பானநாயகனோ. (12)

நீங்காதவாரு நிரம்பியதோர்நிர்மலத்தே
ஓங்காரந்தன்னில் வொதிங்கியவுத்தமனோ. (13)

சுந்தரன் சம்பந்தன் துதிக்கின்றசொற்கேட்டு
சிந்தைமகிழத் திருக்கண்மலர்ந்தானோ. (14)

ஓருருவாயாதியா யுகந்துவருங்காலத்தே
நீருருவாய்நின்றருளும் நிர்மலனைச்சொன்னாரோ. (15)

வானவர்களெல்லோரும் வந்து தொழவம்பலத்தே
ஆனந்தமாகினின்று ஆடுஞ்சிதம்பரனோ. (16)

கங்கைமலர்மங்கை கமலமலர்பொற்பாதம்
செங்கைவருடத் திருக்கண்மலர்ந்தானோ. (17)

மண்ணுலகும்விண்ணுலகும் வானோரும்வந்துதொழ
அண்ணம்பலத்தாடும் அனவரதத்தாண்டவனோ. (18)

அன்றிருவர்தேட அழலுருவாய்நின்றருளி
மன்றுள்நடமாடும் மயேஸ்வரனைச்சொன்னாரோ. (19)

தேவாதிதேவனோ தில்லைச்சிதம்பரனோ
வாயிரத்தொருவர் ஆனமுழுமுதலோ. (20)

பாலனெனுமார்க்கண்டன் பத்திதனைக்கண்டந்த
காலன் றனையுதைத்து கால்கள் சிவந்தானோ. (21)

பல்லாக்குச்சூழ்ந்த பரமசிவநன்னாட்டில்
எல்லாருங்காண யீசனெழுந்தானோ. (22)

எத்திசையுமெங்கும் ஏழைபங்கனென்றுசொல்லி
முத்தமிழோர்வந்துதொழ முத்தியளித்தானோ. (23)

விண்ணிலுள்ள தேவர்களும் விஞ்சயர்களெல்லோரும்
மண்ணிலுள்ளோரீடேற மன்றுண்டிருந்தானோ, (24)

தில்லைமன்றுளாடி திரிபுரத்தைநீறாக்கி
அல்லல்பிறப்பறுக்கும் அனவரதத்தாண்டவனோ (25)

புழுகொழுகுமேனியனோ புலித்தோலுடையானோ
அழகுதில்லையம்பலத்தில் ஆடுஞ்சிதம்பரனோ (26)

தில்லைச்சிதம்பரனோ சிவகாமிராயகனோ
தொல்லைப்பிறப்பறுக்கும் சோதிதனைச்சொன்னாரோ.(27)

ஈரேழுலகிலுள்ளோ ரெல்லோருமீடேற
காலெடுத்து நின்றாடுங் கனகசபாபதியோ. (28)

உம்பர்பெருமானோ உமையாள் தன்னாயகனோ
செம்பொன்மணிமன்றுள் ஆடுஞ்சிதம்பரனோ. (29)

அரிபிரமர்தேவர்களும் அரியாதமுப்புரத்தை
சிரித்தெரித்தசேவகனோ தில்லைச்சிதம்பரனோ. (30)

அன்புற்றசோதியாய் அரியபரவைக்குச்
செம்பொற்றாள்தாழச் சென்றசிதம்பரனோ. (31)

செய்யவயல்சூழ் தில்லைச்சிதம்பரத்துள்
அய்யன்மலர்த்தாள் தூக்கி ஆடுஞ்சிதம்பரனோ. (32)

ஆணிப்பொன்னம்பலமும் அன்னை சிவகாமியுடன்
மாணிக்கமுதலியின்றன் மனோன்மணியுந்தான் வாழி. (33)

சிற்றம்பலவாழ்க சிவகாமித்தான்வாழ்க
மற்றுமிராஜரத்னம் மறையோருந்தான்வாழ்க. (34)

சிதம்பரத்தாலாட்டு முற்றிற்று
----------

3. மதுரை மீனாட்சியம்மன் தாலாட்டு.

உ: பராசத்தி துணை.

தென்கூட லங்கயற்கண் தெள்ளமுதைத்தாலாட்ட
மின்கோட்டுசித்தி விநாயகன்றாள் காப்பாமே.

முன்னாள் மனிதர் முனிவர்களுமீடேறத்
தென்னன்மகடாகவந்த செல்வியெனச்சொன்னாரோ.

மலையத்துவச வழுதிமா வேள்விதனிற்
சிலைநுதற்பெண்ணாகவந்த தேவியெனச்சொன்னாரோ,

பாலவயதிற் பாண்டியநன்னாட்டை
மாலை முடிசூடி வாழ்விக்கவந்தவளோ.

ஈன்றாதரிக்கு மியற்கையாற் றென்மதுரைத்
தோன்றல் மகளாகியிந்த தொல்லுலகையாண்டவளே.

அன்னிய தேசத் தரசரெலாங் கப்பமிடக்
கன்னியரசாயுலகைக் காவல் புரிந்தவளோ.

தேவர்க்கரசைச் செயித்து பலநிதியுங்
காவளங்களெல்லாங் கைப்பற்றிவந்தவளோ

திக்குவிஜயஞ் செலுத்தித்திசையேழும்
ஒக்கவணம், உயர் திறை கொணர்ந்தவளோ

வெள்ளிமலை சென்று விடையோனைக்கண்டவுடன்
வெள்கித்தலை குனிந்த மீனாம்பிகைதானோ.

எந்தைசுந்தரேஸ்வரர்முன்னிசைந்த படியேயவர்தன்
சிந்தைமகிழ்ந்துமணஞ் செய்துகொண்ட பெண்ணரசோ.

தாயார்தன்மூழ்கச் சத்தசமுத்திரத்தை
நாயகர் பாற்சொல்லி நகரிற்வரச்செய்தவளோ

தாயாருடன்மூழ்கத் தந்தையைவிமானமுடன்
சேயுலகைவிட்டுத் திரும்பிவரச்செய்தவளோ

பொன்வாலை தன் மகளாய்ப் புகழ்மாலை பூண்டினிய
சொன்மாலைமெய்யடியார் சூட்டப்புனைந்தவளோ

இக்குவலயத்தை யிகலின்றியாள்வதற்கே
யுக்ரகுமாரனென உயர்குகனைத்தந்தவளோ

தேவர்முனிவரொடு சித்தர் வித்தியாதரரும்
ஆவலுடன் பணியு மம்மையிவள் தானோ.

குரகத ஆனனத்தாள் கூடப்பிறந்தசெழும்
மரகதவல்லியென வந்துதித்தவா ரமுதோ.

மன்னுஞ்சராசரங்கள் வரம்பின்றிப்பெற்றளித்தும்
எந்தாளுங்கன்னியென விருக்குமிளங்கொடியோ

துடியாரிடையாளோ சுகத்தின்மொழியாளோ
அடியார் வினையகற்று மருள்நிறைந்தகண்ணாளோ

நாமகளைத்தேவர் நாட்டுக்குயர் மகளை
மாமகளையேவல்கொளும் வழுதி திருமகளோ.
போந்தவுயிர்க்கெல்லாந்தாம்பொதுவென்பதையுணர்த்த
சாந்த நாரைக்கு முத்திதந்தோனைசார்ந்தவளோ

சருவவுயிரைந்தெழுத்தை சாற்றுவது நீதியென்றோ
கருங்குருவிக்குபதேசங் கற்பிக்கச்சொன்ன வளோ.

எல்லாவுயிர்க்குந்தா யென்றுமறைவோலமிட
கல்லாள் பொன்மாலை நன்மகளாய்வந்தவளோ.

வந்தவளோகாழிநகர் வள்ளலுக்குஞானமுதம்
தந்தவளோவேதத் தலையின்னடிப்பவளோ.

பச்சைக்கிளியோ படர்ந்தசுடரொளியோ
நச்சரவம்பூண்டபர னாரிடத்தடர்ந்தவளோ.

கண்ணின் மணியோ கற்பகத்தின் செந்தேனோ
வண்ணக்குயிலோ மாதங்கள் மாதரசோ.

பொன்னிவள நாடன் புகழ்மலைய நாட்டரசன்
இன்னும்பலபோகடொழ விருந்தரசுசெய்தவளோ.

கல்லானைத்தானருந்தக் கரும்பளித்தவல்லாந்தன்
வல்லசித்தர் தன்னை மணம்புணர்ந்துகொண்டவளோ.

அந்தணர்கள் போற்று மாரணத்தின் மெய்ப்பொருளோ
பந்தவினையகற்றும் பரமதயாநிதியோ

பொய்யரும்மெய்யன்ப ரகம்போந்து குடிகொண்டவளஞ்
செய்சூழ்மதுரைநகர் சிறக்கவந்தபேரரசோ.

ஆளியின் வாகனமீ தமர்ந்தேவருபவளோ
காளிதாசர்க்கருளும் கருணைச்செழுங்கடலோ.

இப்புவியில் மீனாட்சி யின் பேரில்தாலாட்டை
முப்பதுங்கற்றவர்கள் மூவுலகையாள்வாரே.

மீனாட்சியம்மன் தாலாட்டு முற்றிற்று.
-------------

பராசத்தி துணை.

4. மதுரை மீனாட்சியம்மன் ஊஞ்சற்பாட்டு


பசும்பொன்னின்குவியல்களை யுலகிற்காய்ச்சிப்
      பக்குவக்கட்டளை யிலிட்டுச்செங்கலாக்கித்
தசும்புநிகர் முத்தினத்தைச் சுண்ணஞ்செய்து
      சமைத்ததொருவிசித்ரப்பொன் மண்டபத்தில்
விசும்பிலுளவிஸ்வகர்மா நிர்மித்திட்ட
      விளங்குநவமணியூசல் மிசைவிண்ணோரும்
வசம்புரியொண்ணாவுமையே யாடீரூசல்
      மதுரைமீனாட் சியம்மை யாடீரூசல்.       (1)

வேலைசெய்த வயிரமணித் தூண்கணாட்டி
      விலைபெற்ற மாணிக்கச் சட்டமாட்டிக்
கோலமரகதப்பலகை கொண்டு பூட்டித்
      குடங்கை நவமணிகளினால் வயங்கத்தீட்டிச்
சாலவேபருமுத்தின் சரங்கள் சூட்டி
      தமனியச்சங்கிலி வடந்தொட்டறமாதாட்ட
மாலைமனோன்மணி யெந்தாயா டீரூசல்
      மதுரைமீனாட் சியம்மை யாடீரூசல்.       (2)

விண்ணுலகமாதர் வந்து புட்பஞ்சூட்ட
      விஞ்சையர்கண் லடமரதர் வீணைமீட்டக்
கண்ணிபுனைபுலோமிசை காளாஞ்சி நீட்டக்
      காசினியின்மாதர்பல வினோதங்காட்டப்
பண்ணரிய பலவாத்ய கோஷ்டமீட்டப்
      பாமாதும்பூமாதும் வடந்தொட்டாட்ட
வண்ண மரகதவல்லி யாடீரூசல்
      மதுரைமீனாட் சியம்மை யாடிரூசல்.       (3)

அலைகடல் சூழ்புவியரசர் தம்மின்மூன்றெண்
      ணரசருக்குள் சிறந்துசிவ தொண்டுபூண்டு
கலைமதியின்மரபில்வந்த வேந்தருக்குள்
      கலைபயின்று முடிபுனைந்து உலகின்மீது
கலியிருளைப்பகையிருளைக் களைந்துநாளும்
      கற்பகக்காவிந்திரனே யுவமைகூறும்
மலையரசன்றவ மணித்தாயாடீ ரூசல்
      மதுரைமீனாட் சியம்மை யாடீரூசல்.       (4)

திங்களிடமுதித்ததோ ருயர்ந்த முத்துஞ்
      சிந்துரத்தினி டத்துதித்த ஆணிமுத்தும்
நங்கையரகண்கண்டத்தி லுதித்தமுத்தும்
      நாகத்திளிடமுதிற்து வயங்குமுத்துஞ்
செங்கரும்பினிடமுதித்துச் சிறந்தழுத்துஞ்
      சேர்ந்தவிடம் லமதிபோற் றுலங்கமரர்பில்
மங்களஞ்சேர் பெண்ணரசியாடீரூசல்
      மதுரை மீனாட்சியம்மை யாடீரூசல்.       (5)

பட்டிசைந்தயிடைதனி லொட்யாணமின்ன
      பானுநிகர் வயிர மூக்குத்திமின்ன
மட்டில்லா விலையுயர்ந்த பணிகள் துன்ன
      மாணிக்கவோலை காதணிகள் சொர்னக்
கட்டிசைந்த கைவளையுங் கொலுசுமோங்கக்
      கண்டவர்கள் துயர்பாசக் கட்டு நீங்க
மட்டுவார் குழலுமையே யாடீ ரூசல்
      மதுரைமீளைட்சியம்மை யாடீரூசல்.       (6)

பாரதிநல்யாழ்மீட்டிப் பாடத்தேவப்
      பரத்தையர் கால்வரும் பரதப்படியேயாட
தீரமுடன் மூவாசை துரந்தோர்வந்து
      திருக்கோலங்கண் டானந்தங்கொண்டாட
வாரணிந்தகுவிமுலைக்காந் தருவமாதர்
      வணங்கிநின்றேவல் செய்ய வைம்ஞான
வாரிதியே மறைப்பொருளே யாடீரூசல்.
      மதுரைமீனாட்சியம்மை யாடீரூசல்.       (7)

மூவுலகத்துயிரனைத்தும் ஈன்றெந்நாளும்
      முற்றாதகுயர்ச்சிறு பெண் ணாக்கிகூடற்
காவலன்றன்மகளாகி ராஜநீதி
      காட்டிடவேமுடிபுனைந்து கடுநீகைவேணித்
தேவனை நன்மணம்புரிந்தே யில்லறத்தின்
      செயலிதுவென்றுலகத்தோர் தேரச்செய்த
மாவுலகாற்றாயே பாடீரூசல்
      மதுரை மீனாட்சியம்மை யாடீரூசல்,       (8)

வாசமலர்கலவைமண மெங்கும்வீச
      வண்ணலட்சங்கன்னியர்கள் மருங்கேசூழ
ஆசின்மறைமுடிமேவுஞ் சுயம்பிரகாச
      வரும்பொருளே யெனவேதன்மாலோர்பேச
பாசயமனெப்பொழுதுங் கண்டுகூச
      பழவடியாருள மலரிற் பதியும்நேச
மாசில்லாவருட்கடலே யாடீரூசல்
      மதுரைமீனாட்சியம்மை யாடீரூசல்.       (9)

வேதாகமங்களைகள் விண்ணும்வாழ்க
      விபுதர்முனிகணங்களுடன் விரிஞ்சன் வாழ்க
நாதாந்தங்கடந்துநின்ற சோதிவாழ்க
      நானிலஞ்சேர் சிவனடியார் கூட்டம்வாழ்க
ஆதாரம் நீயென்று பாதம்போற்றும்
      அடியார்க்குக்கிருபை செய்ய வரனோடென்று
வாதாடும்பசுங்கிள்ளை யாடீரூசல்
      மதுரைமீனாட்சியம்மை யாடீரூசல்.       (10)

மதுரைமீனாட்சியம்மன் ஊஞ்சற்பாட்டு முற்றிற்று.

This file was last updated on 19 May 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)