pm logo

வத்ஸலாவின் வாழ்க்கை (சிறுகதைகள்)
சாவி (எஸ். விஸ்வநாதன்)


vatsalAvin vAzkkai (short stories
by cAvi (S. Viswanathan)
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வத்ஸலாவின் வாழ்க்கை (சிறுகதைகள்)
சாவி (எஸ். விஸ்வநாதன்)

Source:
வத்ஸலாவின் வாழ்க்கை
சாவி (எஸ். விஸ்வநாதன்)
வாடாமலர் பதிப்பகம்
Commercial Printing & Publishing House,
6, Armenian Street, Madras 1
-------------------

சமர்ப்பணம்
எழுத்துலகத்துக்கு என்னைக் காந்த சக்திபோல் கவர்ந்திழுத்த கல்கி ஆசிரியர் ஸ்ரீ ரா . கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு.
------------

பொருளடக்கம்

முன்னுரை

1947-ம் வருஷம் ஜனவரி மாதம். கல்கி காரியாலயத்தில் என் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.

''ஆசிரியர் கூப்பிடுகிறார்!" என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான்.

பேனாவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன்.

ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். "நவகாளிக்குப் போய் வருகிறீரா?” என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டார்.

நவகாளியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அப்போது என்ன நடந்து கொண்டிருந்ததென்று தெரியுமல்லவா? மனிதர்கள் அங்கே யமகிங்கராகளாய் மாறியிருந்தார்கள். வகுப்பு வெறி என்னும் பேய் பயங்கரத் தாண்டவம் புரிந்து கொண்டிருந்தது.

இருண்ட கீழ் வங்காளத்தில் காந்தி மகாத்மா அன்பென்னும் தீபத்தைக் கையிலேந்தி தன்னந்தனியாகக் கால் நடைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

இத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்குத் தான். ஆசிரியர் ”என்னைப் போய் வருகிறாயா?” என்று கேட்டார்.

காரியம் சிரமசாத்தியமாகத் தோன்றிய போதிலும் நான் சற்றும் யோசிக்காமல் ”போய் வருகிறேன்'' என்று திடமாகப் பதில் கூறினேன்.

ஏனெனில், நவகாளிக்குப் போய்வருவதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை எனக்கு முன்பே ஆசிரியர் நன்கு யோசித்திருக்க வேண்டும். தம்முடைய தீர்ந்த யோசனைக்குப் பிறகே ஆசிரியர் அந்தக் காரியத்தை என்னிடம் சொல்லி யிருக்க வேண்டும். எனவே, நான் வேறு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? கட்டளையைச் சட்டென்று ஒப்புக் கொண்டேன்.

சில தினங்களில், பத்திரமாகவே நவகாளியைச் சுற்றிப் பார்த்து விட்டு காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தேன்.

காரியம் சற்று சிரமமாகத் தோன்றிய போதிலும் இதை நான் என்னுடைய வாழ்நாளில் கிடைத்தற்கரிய ஒரு பேரதிருஷ்டமென்றே எண்ணினேன். மற்ற யாருக்கும் கிட்டாத பாக்கியமாகவே கருதினேன்.

காந்தி மகாத்மாவின் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த நவகாவி யாத்திரையில் அடியேனும் கலந்து கொண்டேன் என்பதை இப்போது நினைத்தாலும் என் தோள்கள் பூரிக்கின்றன.

நவகாளியிலும், வழிப்பிரயாணத்தின் போதும் பல அதிசயங்களையும், பயங்கர சம்பவங்களையும் நேருக்கு நேர் கண்டேன். எத்தனையோ அதிசயங்களில், வயது சென்ற மாது ஒருவள் காந்தி மகான் காலில் விழுந்து கதறிய பரிதாப சம்பவமும் ஒன்று. அந்த வயோதிக மாது கூறிய உருக்கமான வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைதான் " வத்ஸபையின் வாழ்க்கை.'' இந்தக் கதையுடன் இன்னும் சில கதைகளும் இப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் சில கதைகள் கல்கி' பத்திரிகையிலும், சில வேறு பத்திரிகைகளிலும் வெளியானவை.

26-8-49, மாம்பலம் சாவி.
------------------

1. வத்ஸலையின் வாழ்க்கை

பத்மா நதியின் பளிங்கு போன்ற நீரோட்டத்தில் சந்திரிகையின் பிரதிபிம்பம் ஸ்வச்சமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆடி அசைந்து சென்று கொண்டிருந்த கப்பலின் அடித்தளத்திலிருந்த கீழ் வகுப்புப் பிரயாணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் தளத்தில் இருந்த மேல் வகுப்புப் பிரயாணிகளும் சுக நித்திரையிலாழ்ந் திருந்தார்கள். கப்பல் பிரயாணிகளின் வசதிக்காகக் கப்பலுக்குள்ளேயே அமைக்கப் பட்டிருந்த தேநீர்க்கடையிலிருந்து மட்டும் அவ்வப்போது சிறிது சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 'கரம்சா’வைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஆற்றும் சப்தமும் அலுமினிய ஸ்பூனால் ’கடக் கடக்' கென்று சுழற்றும் ஓசையும், இடையிடையே ஹிந்துஸ்தானி பாஷை யில் "ஏக் ஆனா, சாடே தீன் ஆனா" போன்ற வியாபார சம்பந்தமான வார்த்தைகளும் வந்து கொண்டிருந்தன. மற்றப்படி வேறு எங்கிருந்தும் எவ்வித மான சப்தமும் கிடையாது.

அந்த நிசப்தமான நள்ளிரவில் மேற்படி கப்ப லில் பிரயாணம் செய்து கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மேல் வகுப்பு அறை ஒன்றில் எப்படியோ இடம் பிடித்து நவகாளியிலிருந்து கல்கத்தாவை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் கப்பல் பிரயாணம் புதிது. கப்பல் வாசனையை நான் அதுவரை அனுபவித்த தில்லை. குப்பை கூளங்களின் துர்க்கந்தமும் 'சா'க்கடையிலிருந்து வந்த மாமிச வாசனையும் சேர்ந்து குடலைப் புரட்டி எடுத்தது. இந்த அருவருப்பான சூழ்நிலையில் எனக்குச் சற்றும் தூக்கம் வரவில்லை. எனவே, வெளித்தாழ்வாரத்திற்கு எழுந்து சென்று சற்று நேரம் தளத்தின் கைப்பிடிக் கம்பிகளைப் பிடித்தவாறு, நீல வானத்தின் அழகையும், சந்திரிகையின் குளிர்ந்த கிரணங்களையும் அனுபவிக்க விரும்பினேன்.

அறைக் கதவைத் திறந்து கொண்டு மேற்குப் பக்கத்தில் இருந்த தாழ்வாரத்திற்குச் 'சென்றேன். மேற்குத் தாழ்வாரம் சற்று ஒதுக்குப் புறமாகவும் ஜன நடமாட்டமில்லாத இடமாகவும் இருந்தது. மேற்படி தாழ்வாரத்தை அடைந்த போது, எனக்கு முன்பாகவே ஒரு பெண் உருவம் அங்கே நின்று கொண்டிருந்தது. பால்போல் வீசிக் கொண்டிருந்த நிலவொளியில் அந்த உருவத்தின் சௌந்தர்யத்தைக் கண்டபோது சட்டென்று ஒரு கணம் பிரமிப்புற்றேன். உடையெல்லாம் நனைந்து உடலெல்லாம் நனைந்து காணப்பட்ட அந்த ஸ்திரீ உருவத்தைக் கண்டதும், ஜலமோகினி என்று அடிக் கடி கேள்விப்படுகிறோமே, ஒருவேளை அந்த ஜல மோகினிதான். இப்படி இந்த வழியாக 'ஜலத்தி லிருந்து ஏறிக் கப்பலுக்குள் வருகிறாளோ என்று ஐயுற்றேன்.

பிறகு என்னை நானே திடப்படுத்திக் கொண்டு, மெதுவாக அந்த மோகினியின் அருகில் சென்று நின்றேன். அவள் உடல் வெட வெட வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அது பயத்தினாலா, குளிரினாலா என்று கண்டு பிடிக்க முடியவில்லை. முகம் முழுதும் ஒரே ஜலமாயிருந்ததால் அவள் அழுகிறாளா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ள இயலவில்லை. சட்டென்று ஓடிப்போய் ஒரு துணியைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். அவள் அதைப் பெற்றுக் கொண்டு அருகிலிருந்த ஸ்நான அறைக்குள் சென்று உடம்பைத் துவட்டிக் கொண்டு வந்தாள். வந்தவள் என்னைக் கை ஜாடை காண்பித்து அங்கே இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு நான் படுத்திருந்த அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள்.

அப்படிச் சென்றவள் ஐந்து நிமிஷ நேரத்துக்கெல்லாம் வேறொரு புடவையுடன் வெளியே வந்தாள். அதுவரை அவளை ஜலமோகினி என்று எண்ணிக் கொண்டிருந்த நான் மேற்படி எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவளும் நம்முடன் இந்தக் கப்பலில் பிரயாணம் செய்யும் ஒரு பெண்தான் என்பது நிச்சயமாயிற்று.
அந்தப் பெண் நேராக வந்து என் எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். பெண்களுடைய துணிச்சலுக்குச் சிறந்த உதாரணம் வேண்டுமானால் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிடலாம். இல்லையென்றால் அந்த அர்த்த ராத்திரி சமயத்தில் கப்பலில் தனியான இடத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத என்னிடம் அவள் அத்தனை துணிச்சலுடன் வரக் காரணமென்ன? எதற்காக அவள் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? ஒரு வேளை... விவரம் தெரியாமல் திகைப்புற்று உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து அவள், "தயவு செய்து தாங்கள் என்னை இப்போது ஒன்றும் கேட்காதீர்கள்... என் கணவர் அதோ அந்த அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார். நான் போகிறேன். நாளைக்கு நாம் சந்திக்கலாம்'' என்று கூறியவாறு பரபரப்புடன் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

அந்தப் பெண் அழகான தமிழ் பேசியதைக் கேட்டதும் என் ஆச்சரியம் அளவு கடந்து போயிற்று. தமிழ் பேசும் இந்தப் பெண் இந்தக் கப்பலில் ஏன் பிரயாணம் செய்ய வேண்டும்? என்னத்திற்காக அர்த்த ராத்திரியிலே ஜலத்தில் மூழ்க வேண்டும்? ஏதோ, மனத் துயரம் தாங்காமல் உயிரை வெறுத்துக் கப்பலிலிருந்து ஜலத்தில் குதித்திருக்கிறாள். பின்னர் உயிர் மீது ஆசை தோன்றி எப்படியோ தப்பித்து மறுபடியும் கப்பல் ஏறியிருக்கிறாள். இம்மாதிரி சந்தேகங்களும் சமாதானங்களும் என் மண்டையைச் சுற்றி வட்ட மிட்டன.

நீல வானத்தையும், பூர்ண சந்திரனையும் சற்று நேரம் வெறிக்கப் பார்த்து விட்டு என் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டேன் ஏற்கெனவே தூக்கமின்றி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த நான் அன்றைய இரவை எப்படிக் கழித்திருப் பேன் என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
---------------------------
2.

மறு நாள் பொழுது விடிந்ததும் நான் முதல் காரியமாக அடுத்த அறையைப் பார்க்க விரும்பினேன். அடுத்த அறை பொழுது விடிந்து வெகு நேரம் வரை சாற்றியே கிடந்தது: அந்த இளம் பெண்ணைக் - காண்பதில் கூட எனக்கு சிரத்தை இருக்கவில்லை. அவள் ’கணவன்' என்று குறிப்பிட்ட பேர்வழி யார் என்று தெரிந்து கொள்ளவே ரொம்பவும் ஆசைப்பட்டேன்

மணி எட்டடித்து கப்பலுக்குள்ளெல்லாம் சுரீரென்று வெயில் அடித்த பிறகு தான் அந்தப் பேர்வழி வெளியே எழுந்து வந்தான். வாலிபப் பிராயம் படைத்தவனா யிருந்தும் முகத்தில் அழகு இல்லை... பார்வையிலும் வசீகரம் இல்லை. நிறம் நல்ல கறுப்பு. தமிழ் பாஷை தெரியாது. அவன் வங்காளிக்காரன் என்பது பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. கணவன் என்று குறிப்பிட் டுச் சொன்னது இவன் தானா என்று கூடச் சந்தேகம் தோன்றி விட்டது. நல்ல வேளையாகச் சற்று சாந்த சுபாவம் உடையவனாக இருந்தான். குழாயடிக்கு எழுந்து போனவன் திரும்பி வர அரை மணி நேரம் ஆயிற்று. அந்த அரை மணி நேரத்தில் அந்தப் பெண்ணை முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். அவளும் என்னை அடிக்கடி பார்ப்பதும், பிறகு லஜ்ஜையுடன் தலையைக் குனிந்து கொள்ளுவதுமாக இருந்தாள். நடுநிசி சம்பவத்தை நினைத்தே அவள் அவ்வாறு லஜ்ஜைப் பட்டிருக்க வேண்டும்.

அப்புறம் பொழுது சாய்வதற்குள் அந்த தம்பதிகளைப் பலமுறை சந்தித்தேன். கப்பல் ஓட்டலில் நான் உட்கார்ந்து சாப்பிட்ட மேஜைக்கு எதிர் மேஜையில் தான் அவர்களும் சாப்பிட்டார்கள் - இம்மாதிரி இரண்டு வேளைச் சாப்பாட்டின் போதும் ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக அவர்களுடன் நெருங்கிப் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் மட்டும் என்னைப் பார்த்த போதெல்லாம் புன்சிரிப்புச் சிரித்து என் சினேகத்தை விரும்புவதாகக் காட்டிக் கொண்டான். நான் தமிழ் பேசுபவன் என்பதை எப்படியோ அறிந்து கொண்டு, தன் மனைவியிடம் நான் பேசவேண்டும் என்று விரும்பினான். ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. நாங்களாகவே விரும்பிய காரியத்தை அவனும் விரும்பி செய்யச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையா யிற்று! அப்புறம் கேட்பானேன்? அவளும் நானும் அடிக்கடி சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். அதுமுதல் அவள் தன்னுடைய பூர்வோத்தரங்களைச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரத்திலிருந்து அவள் பெயர் வத்ஸலை என்பதும், கல்கத்தா யூனிவர்ஸிடியில் பி. ஏ. டிகிரி பெற்றவள் என்பதும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் என்பதும், தகப்பனாருடைய உத்தியோகத்தின் பொருட்டு, கீழ் வங்காளத்துக்குக் குடிபோனவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதெல்லாம் கூட எனக்கு ஆச்சரியமாயில்லை. இந்த அழகிய பெண்ணுக்கும் அந்தக் குரூபிக்கும் எப்படிக் காதல் பிறந்து கலியாணமும் நடந்தது? இதுதான் எனக்கு விந்தையிலும் விந்தையாகத் தோன்றியது. உலகத்திலே எத்தனையோ அதிசய சம்பவங்கள் நிகழ்வதும், அதற்கெல்லாம் காரணம் உண்டு என்பதும் எனக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனாலும் இத்தனை சௌந்தர்யம் வாய்ந்த ஒரு பெண், பாஷை தெரியாத ஒரு வங்காளிக்காரனை அதிலும் இத்தனை அவலட்சணமானவனை எப்படிக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாள் என்பதே பெரும் ஆச்சரியமா யிருந்தது.
இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு சீக்கிரமாக அவளைக் கேட்டு விடவும் எனக்குத் தைரியம் பிறக்கவில்லை.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நாங்கள் மூவரும் சேர்ந்தே சென்றோம். நான் சாப்பிட்ட ரொட்டி, பழங்களுக்கு அவனே பணம் கொடுத்தான். அத்துடன் அவனாகவே என்னைப் பார்த்து, "எங்கே போய் வருகிறீர்கள்?" என்று புன்சிரிப்புடன் அபூர்வமாய் ஒரு கேள்வியைக் கேட்டான்.

'' நவகாளியில் மகாத்மாஜியின் அஹிம்சா யாத்திரையில் கலந்து கொண்டு விட்டுத் திரும்புகிறேன். நான் ஒரு பத்திரிகைப் பிரதிநிதி" என்று பதில் கூறினேன்.
மகாத்மாவின் பெயரைச் சொல்லக் கேட்டதும் அவன் என்னிடம் பிரத்தியேக மதிப்பும் மரியாதையும் காட்டத் தொடங்கினான்.

வத்ஸலையும் நானும் அடிக்கடி கூடிப் பேசுதையும் அந்த ஆசாமி தப்பர்த்தம் செய்து கொள்ள வில்லை. அவனுக்குத் தமிழ் பாஷையும் தெரியா தாகையால், நாங்கள் இருவம் என்ன பேசுகிறோம், எதைக் குறித்துப் பேசுகிறோம் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. எனவே, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்ளுவதில் எந்த வித இடையூறும் இருக்கவில்லை.
--------------
3.

”கல்கத்தாவில் பாலிகஞ்சில் எங்களுக்குச் சொந்தமாக பங்களா இருக்கிறது. தாங்களும் அங்கே வந்து தங்கிப் போகலாமே'' என்று என்னைக் கேட்டுக் கொண்டாள்.

"நான் ஏற்கெனவே இன்னொரு தென்னிந்தியருடைய பங்களாவில் தங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். பங்களா ரோஷ் பிஹாரி அவென்யூ' வில் இருக்கிறது. ஆனாலும், தாங்கள் விரும்பினால் தங்கள் வீட்டுக்கு ஒரு தடவை வருகிறேன். தங்கள் கணவருக்கு ஆட்சேபம் இருக்குமோ?'' என்று கேட்டேன். - வத்ஸலை சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுடைய கணவரின் நல்ல சுபாவத்தை நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது.

" என் கணவரைப் பற்றித் தங்களுக்கு ஒன் றும் தெரியாது. உலகத்தில் அவரை விட நல்ல சுபாவம் படைத்தவரைக் காண்பது அரிது " என்றாள்.

வத்ஸலையின் வார்த்தையில் உண்மை யில்லாம லில்லை. அவனுக்கு அழகு தான் இல்லையே தவிர குணத்தில் தங்கக் கம்பியா யிருந்தான். ஒரு வேளை அவனுடைய குணத்திற்காகவே வத்ஸலை அவனை மணந்திருப்பாளோ என்றுகூடத் தோன்றியது.

"உன் கணவருக்கு கல்கத்தாவில் என்ன வேலை?'' என்று வத்ஸலையை விசாரித்தேன்.

"ஷேர் மார்க்கெட் முதலாளி. இப்போது வியாபாரம் சற்று மந்தம், கல்கத்தாவில் விபின் சந்திரர் என்றால் ஷேர் மார்க்கட்டே நிமிர்ந்து நிற்கும். அத்தனை செல்வாக்கும் சாமர்த்தியமும் வாய்ந்தவர். என் புருஷர் " என்று பெருமையுடன் கூறினாள் வத்ஸலை.

"இவரைத் தங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று கையோடு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.

வத்ஸலை சற்றுத் தயங்கினாள்.

"அதோ என் கணவர் குழாயடியிலிருந்து வருகிறார். ஆச்சு , கப்பலும் கரை சேரப் போகிறது. அங்கிருந்து ரயில் ஏறி கல்கத்தா போய்ச் சேர வேண்டும். இன்று நாலு மணிக்கெல்லாம் ஊர் போய்ச் சேர்ந்து விடுவோம்” என்றாள்.

அவள் சொன்னபடியே கல்கத்தாவை அடை யும் போது சரியாக மணி நாலு ஆயிற்று. ஸ்டேஷ னில் வத்ஸலையிடமும், அவள் கணவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ராஷ்பிஹாரி அவென்யூவுக்கு டாக்ஸி பிடிக்கப்போனேன். அந்தச்சமயம் வத்ஸலை தன் கணவனிடம் காதோடு ஏதோ சொன்னாள்.

இதற்குள் விபின் சந்திரர் என்னிடம் வந்து தம்முடைய கார் வந்திருப்பதாகவும் அதில் என்னை நான் போக வேண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விடுவதாகவும் கூறினார். அப்படியே என்னைக் காரில் ஏற்றிக் கொண்டு போய் நான் சேர வேண்டிய இடத்தில் விட்டுச் சென்றார்கள்.

அன்றைய தினமெல்லாம் எனக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை. வத்ஸலை யின் அதிசய வாழ்க்கையைப் பற்றியும், அவளுடைய கணவனைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். இந்த வங்காளிக் காரனுக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணுக்கும் எப்படிக் காதல் ஏற்பட்டது? எப்படிக் கலியாணம் நடந்தது என்ற பழைய சிந்த னையே மறுபடியும் மறுபடியும் தோன்றியது.

மறு நாள் மாலை மூன்று மணி சுமாருக்கு முதல் நாள் என்னைக் கொண்டு விட்ட கார் வாசலில் வந்து நின்றது. அதே டிரைவர் தான் இருந்தான். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை என்னிடம் கொண்டு வந்து நீட்டினான். ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். அது வருமாறு:

''அன்புள்ள .......

தங்களைச் சந்தித்தது முதல் இதுவரை தங்களிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசப் பல தடவை முயற்சித்தேன். ஏனோ தடைப்பட்டு விட் டது. என் கணவர் நேற்றிரவு புது டில்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். டிரங்க் டெலிபோனில் வியாபார விஷயமாகச் செய்தி வந்தது. அவர் கல்கத்தா வர இன்னும் நாலு தினங்கள் செல்லும். தாங்கள் அவசியம் இங்கே புறப்பட்டு வந்தால் இங்கேயே இரண்டு தினங்கள் தங்கிப் பிறகு போகலாம். நவகாளி ஜில்லாவில் தாங்கள் கண்ட அதிசயத்தையும் எனக்குச் சொல்லலாம்.

இப்படிக்கு
வத்ஸலை.''

கடிதத்தைப் படித்துவிட்டு வத்ஸலை அனுப்பிய காரிலேயே புறப்பட்டுச் சென்றேன். கார் பாலி கஞ்சிலுள்ள ஒரு பெரிய பங்களாவின் வாசலில் போய் நின்றது. வத்ஸலை எனக்காக வாசலிலேயே தயாராய்க் காத்துக்கொண்டிருந்தாள். நான் காரை விட்டு இறங்கியதும் நேராக மேல் மாடிக்குச் சென்று அங்கிருந்து மூன்றாவது மாடியை அடைந்தோம். படிக்கட்டின் பிரதான வாசல்படி யெல்லாம் விபின் சந்திரருடைய பல விதமான போட்டோக்கள் மாட்டி வைக்கப் பட்டிருந்தன. வத்ஸலையின் கான்வ கேஷன்' போட்டோவும் இன்னொரு இடத்தில் இருந் தது. எல்லாப் போட்டோக்-களையும் ஒரு தடவை சுற்றி வந்து பார்த்தேன்.

வத்ஸலை ஒரு நாற்காலியைக் காட்டி என்னை உட்காரச் சொன்னாள். 'சப்ராஸி’ பீங்கான் கோப்பை ஒன்றில் டீ கொண்டு வந்து கொடுத்தான். உபசாரங்கள் முடிந்ததும் வத்ஸலை சாவகாசமாக உட் கார்ந்து பேச ஆரம்பித்தாள். முதலில் என் நவகாளி யாத்திரையைப் பற்றிச் சொல்லும்படி ஆசையுடன் கேட்டுக் கொண்டாள்.
------------
4.

"நவகாளியில் கேள்விப்பட்ட ஒரு துயரமான சம்பவம் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?'' என்று கேட் டேன்.

"சொல்லுங்களேன் '' என்று ஆவலுடன் கேட்கலானாள். நான் சொல்ல ஆரம்பித்தேன்:

"தர்மாபூரில் மகாத்மாஜி தங்கியிருந்த சமயம் ஒரு நாள் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங் கிருந்தோ விருத்தாப்பிய தசையை அடைந்த ஸ்திரீ ஒருத்தி மகாத்மாஜியைத் தேடி வந்தாள். வந்தவள் மகாத்மாஜியின் குடிசைக்குள் நுழைந்து நவகாளியில் நடந்த அட்டூழியங்கள் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களைக் கண்ணீர் உகுத்தவாறு கூறினாள். மகாத்மாஜியும் அவளுக்கு ஆறுதல் கூறி, யாருக்கோ கடிதமும் எழுதிக்கொடுத்தார். பாவம்! அந்தக் கிழவிக்குக் கணவன் இல்லையாம். இரண்டே பெண்கள் தானாம். அந்த இரண்டு பெண்களும் நாலைந்து மாதங்களுக்கு முன்னால் தர்மாபூருக்கு வந்து அவளுடன் தங்கியிருந்த சமயம் நவகாளியில் பயங்கரப் படுகொலைகள், தீ வைத்தல், சூறையாடல், கற்பழித்தல் முதலிய அட்டூழியங்கள் ஆரம்பமாகி ஜில்லா பூராவும் காட்டுத் தீ போல் பரவிற்றாம்.

யாரோ சில காலிக் கூட்டத்தினர் திடீரென்று அந்தக் கிழவியின் இல்லத்தையும் படையெடுத்துச் சூறையாடினார்களாம். கிழவியின் குமாரிகள் இருவரையும் கற்பழிக்க எண்ணியே அவர்கள் வந்திருக்க வேண்டுமென்பதை அறிந்த அந்தப் பெண்கள் இருவரும் தோட்டத்துப் பக்கமாகக் கதவைத் திறந்து கொண்டு கரிய இருட்டில் கல்லும் முள்ளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசங்களைக் கடந்து ஓடி விட்டார்களாம். பெண்களைக் காணாத காலிக் கூட்டத்தினர். கிழவியை நையப் புடைத்து. விட்டுப் போய் விட்டார்களாம். தப்பி ஓடிச் சென்ற பெண்களில் ஒருத்தி அடுத்த கிராமத்தில் இருந்த ஒரு தனிகர் வீட்டில் சரண்புகுந்து தன்னைக் காலிக் கூட்டத்தினர். துரத்தி வருவதாகவும், ஆகையால் தனக்கு அபயம் அளித்துக் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாளாம். கொள்ளைக் கூட்டத்தாருக்கு அஞ்சிய மேற்படி தனிகர் குடும்பத்தினர் அவளுக்குத் தஞ்சம் அளிக்க மறுத்து விட்டார்களாம். இருந்தாலும் அந்தப் பெண் பிடிவாதமாகத் தானாகவே அறைக்குள் நுழைந்து உள்பக்கம் கதவைத் தாளிட்டுக் கொண்டாளாம்.

மறு நாள் காலை அவள் எப்படிச் சென்றாள், எங்கே சென்றாள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லையாம். தப்பிச் சென்ற இன்னொரு பெண் என்ன ஆனாள் என்பதும் யாருக்கும் தெரியவில்லையாம். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்து அந்த இரண்டு பெண்களும் காலிக் கூட்டத்தினர் கையில் சிக்கி இருப்பதாகக் கிழவிக்குத் தகவல் கிடைத்ததாம். எனவே, பெண்கள் காலிக் கூட்டத்தாரிடையேதான் இருக்க வேண்டுமென்று கிழவி உறுதியுடன் நம்பினாள் . தனக்கு உள்ள இரண்டே கண்மணிகளான இரண்டு பெண்களையும் தன்னிடம் சேர்க்க வேண்டுமென்றே கிழவி மகாத்மாஜியிடம் கண்ணீர் சிந்தியவாறு முறையிட்டுக் கொண்டாள். கிழவியின் துயரக் கதையைக் கேட்ட காந்திஜியும் அப்போது வங்காளப் பிரதமராயிருந்த ஜனாப் சுஹரவர்த்திக்கு இது விஷயமாக ஒரு கடிதம் எழுதித் தந்தார். கிழவி அதைப் பெற்றுக் கொண்டு மன ஆறுதலுடன் சென்றாள் " என்று முடித்தேன்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த வத்ஸ்லையின் முகத்தில் அவ்வப்போது அதிசயமான பாவங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. கண்களில் நீர் பொங்கிப் பிரவகித்தது. சிற்சில சமயம் தலையைத் தன் இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். ஒரு வேளை வத்ஸலையின் இளகிய மனம் இதற்குக் காரணமா-யிருக்குமோ என்று யோசித்தேன். இல்லை ; ஒரு வேளை அந்தக் கிழவியின் பெண்களில் வத்ஸலையும் ஒருத்தியாயிருப்பாளோ என்ற சந்தேகம் மறுகணம் ஏற்பட்டது. தனிகர் வீட்டில் சரண் புகுந்த பெண் இவளாயிருக்கலாமோ, மறு நாள் பொழுது விடிந்ததும் இந்த வீட்டு வங்காளிக்காரனிடம் ஓடி வந்திருப்பாளோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது. இதையெல்லாம் நினைக்கப் போக கிழவி தமிழ் நாட்டு ஸ்திரீ போல் உடை உடுத்தியிருந்த ஞாபகமும் வந்தது.

வத்ஸலை என்னைப் பார்த்து விசித்தவளாய் ''அந்த மூதாட்டி இப்போது எங்கே போயிருப்பாள்?" என்று பரபரப்புடன் விசாரித்தாள். வத்ஸலையின் பரபரப்பிலிருந்து நான் ஊகித்தது சரி என்பது ஊர்ஜிதமாயிற்று. எனவே, வத்ஸலையைப் பார்த்து தைரியமாக ஒரு கேள்வி - கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கேட்டும் விட்டேன்.

"தாங்கள் அந்தக் கிழவியின் புத்திரிகளில் ஒருத்தி தானே?"

வத்ஸலை தலையை அசைத்து அங்கீகரித்தாள். அதற்குப் பிறகு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆ.தியோடந்தமாகத் தன் விருத்தாந்தங்களையும், அந்தரங்கங்களையும் மனம் விட்டுச் சொல்லத் தொடங்கினாள்.
----------------
5.

"நான் தமிழ் நாட்டுப் பெண். என்னுடைய தகப்பனார் இறந்து விட்டார். வயது சென்ற தாயாரும் ஒரே ஒரு சகோதரியும் தான் இருக்கிறார்கள். தகப்பனார் நவகாளி பாங்கி ஒன்றில் உதவி மானேஜராக இருந்தார். முன்னூறு ரூபாய் சம்பளத்தில், என் தமக்கைக்குக் கலியாணம் செய்தார். என்னை பி. ஏ. வரை படிக்க வைத்தார். நான் கல்கத்தாவில் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது மாமாவும் இறந்து விட்டார். தகப்பனார் அதற்கும் மூன்று வருஷங்களுக்கு முன்பாகவே இறந்து விட்டார். தர்மாபூரில் என் தகப்பனாருக்குக் கொஞ்சம் நிலபுலன்களும், வீடு வாசலும் இருந்தன. எங்களுக்குத் தமிழ் நாடு தான் பூர்வகுடி என்றாலும், இங்கே நவகாளிக்குக் குடியேறி ஐம்பது வருஷங்களுக்கு மேலாகி விட்டன், என் தகப்பனார் இங்கேயே உத்தியோகம் செய்து இங்கேயே வாழ்க்கையை நடத்தி முடித்து விட்டார். தாயாருக்கு வயதாகி விட்டதால், தர்மா பூரிலேயே என் தகப்பனார் விட்டுப் போன சொத்து சுதந்திரங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

சென்ற டிஸம்பர் மாதத்தில் நான் என் தாயாரைப் பார்க்க தர்மாபூருக்குச் சென்றிருந்தேன். அப்போது என் சகோதரியும் அவள் புருஷன் வீட்டிலிருந்து அங்கே வந்திருந்தாள். இந்த சமயத்தில் தான் திடீரென்று நவகாளியில் கலகம் மூண்டு எங்கள் குடும்பம் இத்தகைய கதிக்கு உள்ளாயிற்று" என்று கூறி வத்ஸலை தேம்பித் தேம்பி அழுதாள். வத்ஸலையின் துயரத்தை மாற்ற விரும்பிய நான் "விபின் சந்திரரைத் தாங்கள் மணந்தது எப்படி?'' என்று இடையில் கேட்டு வைத்தேன்.

”நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்த சமயம் என்னை ஒரு மாணவன் காதலித்தான். அதன் காரணமாக நான் வீட்டிலிருந்து காலேஜுக்குச் செல்லும்போதும், காலேஜிலிருந்து வீட் டுக்குத் திரும்பி வரும்போதும் என்னைப் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருந்தான். அவன் பெயர் இப்போது எனக்கு ஞாபகமில்லை. விபின் சந்திரரை விட நல்ல கறுப்பு. அவனை எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. அவனைத் துச்சமாக நினைத்துத் திரும்பியும் பார்க்க மாட்டேன்.. இதற்காக அவன் பலயுக்திகளைக் கையாண்டு என்னுடைய காதலைப் பெற விரும்பினான். நான் எதற்கும் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கலாசாலைக்குப் போகும் போதும். வரும்போதும் அவனைப் பார்க்கா மல் செல்ல முடிவதில்லை. எவ்வளவு தூரம் நான் அவனை வெறுக்கிறேன் என்பதை அவனுக்குப் பல முறை ஜாடைமாடையாகவும் ஸ்பஷ்டமாகவும் காட்டினேன். ஆனாலும் அவன் தன்னுடைய முயற்சியைச் சிறிதும் விடவில்லை. அவனிடமிருந்து தப்புவதற்கு மார்க்கம் காணாமல் அவனை மனமாரச் சபித்தேன். மூன்றாவது கண் இருந்தால் எரித்தும் விட்டிருப்பேன்.

இதே சமயத்தில் என்னை இன்னொரு காலேஜ் மாணவரும். அந்தரங்கமாகக் காதலித்துக் கொண்டிருந்தார். அவர் என்னைக் காதலிக்கிறார் என்னும் இரகசியத்தை எனக்குத் தெரியாமலேயே அத்தனை பத்திரமாகக் காப்பாற்றி வந்தார். அவர் தான் இந்த விபின் சந்திரர். இவரும் என்னுடன் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தவர் தான். மற்றொரு மாணவன் என்னைக் காதலிக்கிறான் என்பதும் இவருக்குத் தெரிந்திருந்தது. எங்களுடைய காலேஜ் படிப்பெல்லாம் முடிந்தது. விபின் சந்திரர் டாக்டர் தொழிலுக்குச் சிறிது காலம் படித்தார். நான் வீட்டோடு இருந்தேன். என்னைப் பகிரங்கமாகக் காதலித்த இன்னொரு மாணாக்கன் மட்டும் எனக்கு விடாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே யிருந்தான். அவன் தொந்தரவிலிருந்து விடுபட எதையும் செய்யத் தயாராயிருந்தேன். இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் விபின் சந்திரர் என்னைத் தனியாக ஓரிடத்தில் சந்தித்தார். இவரைப் பார்த்தபோது எனக்கு விஷயம் விளங்கி விட்டது. இவரை நான் ஏற்கெனவே பல தடவை பார்த்திருந்த போதிலும் இம்மாதிரி எண்ணம் வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வில்லை. சரி; மற்றொரு தொந்தரவு வந்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். என்னைத் தனியாகச் சந்தித்த விபின் சந்திரர், "உன்னிடம் ஒரு உண்மையைக் கூற வேண்டும்; அதற்காகவே வந்தேன்'' என்று பீடிகை போட்டார்.

அவர் சொல்லப் போகும் விஷயத்தை எதிர் பார்த்தவள் போல, "என்ன விஷயம்?'' என்று அலட்சியமாகக் கேட்டேன்.

"உனக்கு இதுவரை தொந்தரவு கொடுத் துக் கொண்டிருந்த அந்த மாணாக்கன் இறந்து விட்டான். அவன் என்னுடைய நண்பன் தான். நான் தான் கொன்று விட்டேன்'' என்றார். விபின் சந்திரர் இதைக் கூறிய போது என்தேகம் ஒரு கணம் பயத்தினால் நடுங்கியது. அவர் பேச்சை என்னால் நம்ப முடியவில்லை.

"வாஸ்தவமாகவா?" என்று கேட்டேன்.

"ஆமாம்; சத்தியமாகக் கொன்று விட்டேன். நீ இனி நிம்மதியாக வாழலாம். நான் டாக்டர் தொழிலுக்குப் படித்தேனல்லவா? அப்போது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அவனுக்கு 'ஸொபோரோபிக்' என்ற மருந்தை உணவில் அதிகப் படியாகக் கலந்து கொடுத்து விட்டேன். அவன் தூக்கத்தில் இறந்து போனான். ஒருவருக்கும் ஒரு விதமான சந்தேகமும் ஏற்படவில்லை" என்று கூறிப் பத்திரிகையில் அவன் இறந்து போன செய்தியையும் எடுத்துக் காட்டினார்.

இந்த பயங்கர நிகழ்ச்சியை விபின் சந்திரர் வாயால் சொல்லக் கேட்டதும் முதலில் எனக்கு அவர் மீது அருவருப்பே தோன்றியது. அந்த மாணாக்கனைக் கொன்று விட்டால் என்னுடைய காதலைப் பெறலாம் என்ற சுயநல நோக்கத்துட னேயே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருக் கிறார் என்பதை அறிந்தபோது விபின் சந்திரர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. –

விபின் சந்திரர் என்னை இது காலம் வரை அந்தரங்கமாகக் காதலித்து வந்ததாகவும், அவருடைய காதலுக்குப் போட்டியாக இருந்த மாணாக்கனைக் கொன்ற பிறகே இந்த விஷயத்தை என்னிடம் வெளிப்படுத்துவது என்று தீர்மானம் செய்திருந்ததாகவும் கூறினார். இந்தக் கடும் சித்தக்காரரின் எண்ணத்துக்கு விரோதமாக நான் அபிப்ராயம் தெரிவித்தால் இவரால் எனக்கே தீங்கு நேரிடும் என்பதை உணர்ந்தேன். அத்துடன் என்னுடைய பருவமும் அழகும் சேர்ந்து என்னைப் பல தொல்லைகளுக்கு உட்படுத்தின. வாலிபர்களும், வயது வந்தவர்களும் என்னை வெறிக்கப் பார்ப்ப தும், காதலிப்பதும் அதன் காரணமாகத் தொந்தரவு கொடுப்பதும் தினசரி அலுவலாய்ப் போய் விட்டன. என்னுடைய வாழ்க்கையில், இதனால் அமைதியின்றி அல்லல்பட நேர்ந்தது.

யாராவது மனதுக்குப் பிடித்த ஓர் ஆண்மகனைத் தேர்ந் தெடுத்து மணம் செய்து கொண்டாலன்றி இதற்கு விமோசனம் இல்லை என்று எண்ணினேன். ஆனால், என்னுடைய காதலைப் பெறுதற்குகுந்த புருஷனைத் தேடிப் பிடிப்பது அத்தனை சுலப மாயில்லை. அத்துடன் இந்தக் கல்நெஞ்சக்காரரு டைய எண்ணத்துக்கு விரோதமாகக் காரியம் செய்வதற்கும் திடமில்லை. அப்படிச் செய்வது எனக்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சினேன். எனவே, வேறொருவனை மணம் புரிந்து ஆயுள் முழுதும் அவஸ்தைப் படுவதைக் காட்டிலும் விபின் சந்திரரையே மணந்து நிம்மதியாகக் காலத்தைக் கழித்துவிடத் தீர்மானித்தேன். விபின் சந்திரர் அப்போது டாக்டர் தொழில் செய்யவில்லை. ஷேர் மார்க்கெட்டில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார். நல்ல சொத்து இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார். அவருக்கு நான் இல்லாத குறை தான் பெரும் குறை என்றும், தம்முடைய வாழ்க் கையின் லட்சியமே என்னை மணப்பது ஒன்றுதான் என்றும் கூறினார். எனவே, விபின் சந்திரரையே மணப்பதென்று முடிவு செய்தேன். பிறகு இருவரும் மணம் புரிந்தோம். எங்கள் வாழ்க்கையும் இன்பகரமாகவே நடந்து வந்தது. விபின் சந்திரரைப் பற்றி நான் கொண்டிருந்த எண்ணமெல்லாம் முற்றிலும் தவறு என்பதைப் பின்னால் தான் உணர்ந்தேன். அவருக்கு அழகில்லை யென்றாலும் குணத்தில் தங்கக் கம்பியாயிருந்தார்.

நான் மணம் புரிந்த சில வருஷங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய தாயாரைப் பார்க்க தர்மாபூர் சென்றிருந்தேன். இந்த சமயத்தில் தான் நவகாளியில் பயங்கர வகுப்பு வெறி மூண்டது. என் தாயார் மகாத்மாஜியிடம் கூறிய சம்பவங்களும் அப்போது நடந்தவைதான்'' என்று கூறி முடித்தாள்.
----------------
6.

வத்ஸலை சொன்ன வரலாறு ஒரு கதை போலிருந்தது.

"அப்படியானால் தனிகர் வீட்டில் மறைந்து மறு நாள் தப்பி ஓடிய பெண் நீ தானே?'' என்று கேட்டேன்.

"இல்லை, இல்லை; அது என் சகோதரி. இப்போது சௌக்யமாக இருக்கிறாள். அவளைத் தான் நானும் என் கணவரும் போய்ப் பார்த்து விட்டு வருகிறோம். அவள் எப்படியோ தப்பித்து ஷோனாய் முரி என்ற ஊரில் தன் கணவருடன் சௌக்யமாக வாழ்ந்து வருகிறாள்'' என்றாள்.

வத்ஸலையைப் பார்த்து "நீ ஏன் இதுவரை உன்னுடைய தாயாரைப் போய்ப் பார்க்கவில்லை?”என்று கேட்டேன்.

"தர்மா பூருக்குச் செல்ல பயந்து கொண்டே தாயாரைப் பார்க்காமல் இருக்கிறேன். காரணம் தர்மாபூரில் இன்னும் கலவரம் அடங்கவில்லை. வயது சென்ற தாயாரை நினைத்தே அன்று - கப்பலில் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தேன். அவளை இனி உயிருடன் காண்பது ஏது? இதற்குள் காலிக் கூட்டத்தார் கொன்று போட்டிருப்பார்கள் என்று தீர்மானித்துக் கொண்டேன். என் ஆறாத்துயரத்தை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ள விருப்பமின் றியே நதியில் மூழ்கி உயிரை விடும் பொருட்டு மேல் தளத்திலிருந்து குதித்தேன். எப்படியோ ஆயுள் பலம் கெட்டியாக இருந்ததால் உயிர் மேல் ஆசை தோன்றி, நதியில் குதித்தவள் சட்டென்று கப்பலைப் பிடித்துக் கொண்டு ஏறி, யாருக்கும் தெரியாமல் எங்கிருந்து குதித்தேனோ அந்த இடத்துக்கே வந்து நின்று விட்டேன். அப்போதுதான் தாங்கள் அந்தப் பக்கம் வந்தீர்கள்'' என்றாள்.

வத்ஸலை சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டு வந்த எனக்கு மேலும் இரண்டொரு சந்தேகங்கள் தோன்றவே சில கேள்விகள் கேட்டேன் : "வத்ஸலை! உன் தாயார் இறந்து போயிருப்பாள். என்று நீயாகவே எப்படி முடிவு செய்து விட்டாய்?''

"சம்பவம் நடந்து இரண்டு மாதங்களாகியும் என் தாயாரைப் பற்றி எந்த விதமான தகவலும் தெரியவில்லை. ஆகையால் காலிக் கூட்டத்தாரால் கொல்லப் பட்டிருப்பாள் என்று முடிவுக்கு வந்தேன். தாங்கள் என் தாயாரை மகாத்மாஜியிடம் பார்த்ததாகச் சொல்லுவதிலிருந்து இதுவரை அவளைக் காலிக் கூட்டத்தார் பிடித்து வைத்திருந்தார்கள் என்று ஏற்படுகிறது'' என்றாள்.

"வத்ஸலை! உன் தாயார் ஏன் உன்னை இந்த இடத்தில் வந்து பார்த்திருக்கக் கூடாது?'' என்று கேட்டேன்.

" பார்வையிழந்த என் தாயாருக்கு இந்த கல்கத்தா பட்டணம் எந்த திக்கில் இருக்கிறது என்றே தெரியாது. அப்படியிருக்க அவள் என்னை எங்கே போய்த் தேடி அலைவாள்? காந்தி மகாத்மாவே என் தாயார் இருந்த ஊருக்கு விஜயம் செய்ததால் அங்கே அவரைக் கண்டு முறையிட்டுக் கொண்டிருக்கிறாள் '' என்றாள்.

வத்ஸலை சொல்லியது வாஸ்தவம் என்றே பட்டது.

வத்ஸலையின் வாழ்க்கையைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்து கொண்ட பிறகு வத்ஸலைக்காக ஓர் உபகாரம் செய்ய வேண்டும் என்று என் உள் ஆவல் எழுந்தது. அடுத்த மூன்று தினங்களுக்குள் அதைப் பூர்த்தி செய்தேன். தர்மாபூருக்கு உடனே புறப்பட்டுச் சென்று வத்ஸலையின் தாயாரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து வத்ஸலையிடம் சேர்த்தேன். கன்றின் குரல் கேட்டுக் கனிந்து வரும் பசுபோல் வத்ஸலையின் தாயார் ஓடி வந்து மகளைக் கட்டிக் கொண்ட காட்சியை என்றென்றும் மறக்க முடியாது.

மறுதினம் வத்ஸலையின் கணவரும் ஊரிலிருந்து திரும்பி வந்து விட்டார். அன்றைய தினம் வத்ஸலை யின் பங்களாவில் எனக்கு ரஸகுல்லாவுடன் கூடிய விருந்து உபசாரம் நடைபெற்றது என்று சொல்லவும் வேண்டுமா?
----------------

2. வெண்ணிலவில் நடந்தது

சில வருஷங்களுக்கு முன்னால் சென்னை ஹைகோர்ட்டில் நடந்த பிரபல மோசடி வழக்கைப் பற்றி நேயர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அந்தப் பிரசித்த வழக்கில் ஜூரிகளாய் அமர்ந்து அபிப்பிராயம் தெரிவித்த ஒன்பது பிரபலஸ்தர்களில் ஸ்ரீமான் கோசல்ராமும் ஒருவர். ஸ்ரீ கோசல்ராம் நேற்று முன் தினம் என்னுடைய ஜாகையைத் தேடி வந்திருந்தார். சில அச்சடித்த தாள்களையும் கையோடு கொண்டு வந்திருந்தார். அந்தத் தாளைப் பார்த்ததுமே எனக்கு விஷயம் விளங்கி விட்டது!

நகர சபைத் தேர்தலுக்கு ஸ்ரீ கோசல்ராம் ஓர் அபேட்சகராய் நிற்கிறார் என்கிற விஷயம் அவருடைய உள்ளங் கையிலிருந்த நோட்டீஸ் நெல்லிக்கனியைப் போல் விளக்கிற்று!

"வாருங்கள், உட்காருங்கள் ; ஏது இவ்வளவு தூரம்?'' என்று வந்தவரை உபசரித்தேன்.

"விசேஷம் ஒன்றுமில்லை. இந்த டிவிஷனில் தாங்கள்தான் எனக்கு பக்க பலமாக இருந்து வேலை செய்ய வேண்டும்?'' என்று கேட்டுக் கொண் டார்.

"ரொம்ப சரி; ஆனால் இந்த டிவிஷன் வாசி கள் பொல்லாதவர்களாயிற்றே! தங்களை எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்பார்களே!'' என்றேன்.

''எதற்காகவா? நன்றாய்க் கேட்டீர்கள்? நான் இந்த டிவிஷனுக்கு கௌன்ஸிலராக வந்ததும் முதல் காரியமாக இந்த டிவிஷனை சொர்க்கமாக்கி விடமாட்டேனா?''

"அப்புறம்........."

"ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்? என் வார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"பேஷாக உண்டு; ஆனால், போன தேர்தலின் போது கூட இந்த டிவிஷன் கௌன்ஸிலர் இப்படித் தான் சொல்லி விட்டுப் போனார். அப்புறம் அந்த மகானுபாவர் இந்தப் பக்கம் தலைகாட்ட வில்லை. இதெல்லாம் எனக்குத் தெரியாததும் அல்ல. 'கலியாணப் பொய்' என்பதைப் போல் 'எலெக்ஷன் பொய்' என்பதும் சகஜமான விஷயம் என்பதை நான் அறிவேன். அதனால் தான்..." என்றேன்.

"அப்படியில்லை; ஐயா! மற்றவர்களைப் போல் மனச்சாட்சிக்கு அஞ்சாதவன் நான் அல்ல.......'' -- என்று உறுதி கூறினார் கோசல்ராம்.

''அப்படியா? மனச்சாட்சிக்கு பயந்து தாங்கள் அப்படி என்னத்தைச் செய்து விட்டீர்கள்?" என்று கேட்டேன். அவ்வளவு தான்; ஸ்ரீ கோசல்ராம் ஒரு பெரிய கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்தக் கதையை இங்கே பெயரையும் சம்பவங் களையும் மட்டும் சற்று முன் பின்னாக மாற்றி அமைத்து என்னுடைய சொந்த பாணியில் எழுதி யிருக்கிறேன். கதையைப் படித்து முடித்ததும் கோசல்ராம் தம்முடைய மனச்சாட்சிப்படி நடந்து கொண்டாரா இல்லையா என்பதை நேயர்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.
# #

இரவு சுமார் பத்து மணியிருக்கும். வட்ட வடிவான வானத்துச் சந்திரன் தன்னுடைய பால் போன்ற அமுத நிலவைப் பூமியில் வர்ஷித்துக் கொண்டிருந்தான். பூந்தமல்லி ஹைரோடு, சர்க்கார் பஸ்களின் ஓட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற சமயம். அங்கங்கே ஓரிரண்டு பங்களாக்களில் மட்டும் மின்சார விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது.
நேயர்கள் தயவு செய்து பூந்தமல்லிச் சாலையி லிருந்து வடக்குப் பக்கம் புரசை-வாக்கத்தை நோக் கிப் பிரிந்து செல்லும் பாதையின் மீது தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் நமது கதாநாயகர் ஸ்ரீ வேதநாயகம் இப்போது மேற்படி ரஸ்தாவில் தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

ஆறு வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவித்த பிறகு, இன்று விடுதலை பெற்றுத் தம்முடைய சொந்த வீட்டை நோக்கிச் செல்கிறார்.

'நல்லவர்களுக்கு இது காலமில்லை என்று கூறுவது ஸ்ரீ வேதநாயகம் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிருந்தது. அவர் நல்லவராகப் பிறந்ததாலேயே தான் ஆறு வருஷ காலம் கடும் சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதாயிற்று. அந்தக் கதையைத்தான் இங்கே சொல்லப் போகிறேன், கேளுங்கள் :

ஸ்ரீவேதநாயகத்துடன் பால்யம் முதல் சேர்ந்து படித்த ஒரு நண்பன், பின்னால் இவருடன் சேர்ந்தே வியாபாரம் செய்தான். சாது மனிதரான வேத நாயகம் அந்த நண்பனைக் கடைசி வரையில் நம்பி மோசம் போனார். அவனுடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்தியதின் பலனாகக் கடைசியில் ஒரு மோசடி வழக்கில் அகப்பட்டுக் கொண்டார். வழக்கு விசாரணைக்கு வந்த சமயம் அந்தக் கடும் சித்தம் படைத்த கிராதகன் வேதநாயகத்தை வம்பில் இழுத்துவிட்டு விட்டான். அவன் மட்டும் மனம் வைத்திருந்தால் வேதநாயகத்தின் மீது குற்றமில்லை என்று ருசுப்பித்திருக்கலாம். ஆனால், அந்த இரக்கமற்றவன் கோர்ட்டில் விசாரணை நடந்தவரை வாயைத் திறக்கவேயில்லை. அவன் மட்டும் வாயைத் திறந்து உண்மையைச் சொல்லியிருந்தால் வேதநாயகம் அனுபவித்த ஆறு வருஷ சிறைவாசத்தை அவனல்லவா அனுபவித்திருக்க வேண்டும்? அதற்கு அஞ்சியே அந்தக் கிராதகன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம் தன்னுடைய தடித்த உதடுகளை மடித்துக் கொண்டு பொம்மை போல் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

சரி; அதோ, நமது கதாநாயகர் வெகு தூரம் போய் விட்டார். அவரைப் பின் தொடர்ந்து பார்க்கலாம். பூந்தமல்லிச் சாலைக்கும், புரசைவாக்கத்துக்கும் மத்தியில் உள்ள ஒரு விசாலமான பங்களாவுக்குச் சற்று தூரத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. ஸ்ரீ வேதநாயகம் அந்த மரத்தடியில் போய் நின்று கொண்டார்.

ஆறு வருஷம் சிறை வாழ்க்கை காரணமாக அவர் மனோபலம் குறையவில்லை என்றாலும், தேக பலம் வெகுவாகக் குறைத்து விட்டது. அவருடைய உடையெல்லாம் பாழ்பட்ட தோற்றம் அளித்தன.

ஆலமரத்தடியில் நின்ற வண்ணம் வேதநாயம் அருகாமையில் தெரிந்த தம்முடைய பங்களாவை ஆவல் நிறைந்த கண்களுடன் நோக்கினார். ஆம்; அந்த பங்களா அவருடையது தான். பங்களாவின் தோற்றம் அவருக்குப் பரம வேதனையை உண்டாகிற்று .

தம்முடைய கேவலமான ஆடைகளையும், அந்த பங்களாவின் கம்பீரமான தோற்றத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார். பங்களாவின் மேல் மாடியில் இருந்த முகப்பு அறையிலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்த அறைக்குள்ளே இருந்த கட்டிலின் மீது வேதநாய கத்தின் மனைவி சோகத்துடன் படுத்திருந்தாள். அந்த திக்கற்ற ஸ்திரீயின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

வேதநாயகம் ஒரு கணம் தமது மண்டையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மனைவி, தன்னை இந்தக் கோலத்தில் இந்த சமயத்தில் இங்கே பார்க்க நேர்ந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? சிறைக்குப் போய் வந்தவன் என்பதற்காகக் கேவலமாக நினைப்பாளோ?

வேதநாயகத்தின் நெஞ்சிலும் வயிற்றிலும் சங்கடமும் பசியும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருந்தன .

காலையில் விடுதலை பெற்றவர் பகல் ஒரு மணி சுமாருக்கு ஏதோ கொஞ்சம் ஆகாரம் சாப்பிட்டார். அப்புறம் இதுவரை ஒன்றும் சாப்பிடவே யில்லை.

அடுத்தபடியாக, வேதநாயகத்துக்குத் தம்முடைய மகள் ரஞ்சனியின் ஞாபகம் வந்தது. குழந்தை ரஞ்சனிக்கு இப்போது இருபது வயது இருக்கலாம். தான் சிறை சென்ற போது ரஞ்சனி விவரம் தெரியாத சிறுமியா யிருந்தாள். இப்போது வயது வந்த யுவதியா யிருப்பாள் ரஞ்சனி தன்னைப் பற்றித் தாயாரிடம் விசாரித்திருப்பாள். தாயார் என்ன பதில் சொன்னாளோ?

இவ்வாறெல்லாம் மாறி, மாறி நினைத்து வெட்கப்பட்டார் வேதநாயகம். பிறகு மனதைத் தேற்றிக் கொண்டார். தம் சொந்த வீட்டுக்குள் நுழைவதற்கு ஏன் இத்தனை லஞ்ஜைப்பட வேண்டும்?....

இதற்குள் சாலைப் பக்கம் மோட்டார் சைகிள் ஒன்று வரும் சப்தம் கேட்டது.

அப்போ தெல்லாம் சென்னை நகரத்தில் இராக் காலத்தில் திருடர்கள் கிலி அதிகமாயிருந்ததால் கீழ்ப் பாக்கம் ஸி.ஐ.டி. போலீஸ்காரர் ஒருவர் ரோந்து போய்க் கொண்டிருந்தார். தமது மோட்டார் சைகிளின் பயங்கர அலறலைக் கேட்டு விட்டுத் திருடர்கள் சிதறி ஓடிப்போய் விடுவார்கள் என்பது அந்த ஸி.ஐ.டி. யின் திடமான அபிப்பிராயம்!

மோட்டார் சைகிளின் ஓசையைக் கேட்ட வேதநாயகத்தின் மனம் பீதியினால் துணுக்குற்றது. ஒரு வேளை அந்தப் போலீஸ்காரன் தன்னை இந்தக் கோலத்தில் பார்த்து விட்டு, திருடன் என்று பிடித்துக் கொண்டு போனாலும் கேள்வி முறை கிடையாது. அப்புறம் மறுபடியும் இந்த ஜன்மத்தில் மனைவியையும் மகளையும் கண்ணால் கூடப் பார்க்க முடியாது என்று பயந்தவராய் சட்டென்று ஆலமரத்துக்குப் பின்னால் நிழலோடு நிழலாக ஒட்டி நின்றார். நல்லவேளை! மோட்டார் சைகிள் வேகமாகப் பறந்து மறைந்தது.

வேதநாயகம் பெருமூச்சு விட்டுத் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். திருடனைப் போல் இப்படியெல்லாம் ஏன் பயந்து நடுங்க வேண்டும்? பகிரங்கமாகத் தம் சொந்த வீட்டுக்குள் நுழைய இத்தனை தயக்கம் என்னத்திற்கு?

இந்தக் காரியம் செய்வதற்கு இடையூறாக ஒரே ஒரு எண்ணம் தான் குறுக்கிட்டது. அது வேறு ஒன்றுமில்லை; தன் மீது அகாரணமாகப் பழிசுமத்தி மோசடி வழக்கில் மாட்டி வைத்துச் சிறைக்கு அனுப்பிய அந்தக் கொலைபாதகனை வஞ்சம் தீர்க்க எண்ணியது தான்.

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது அந்தப் பாதகன் வாய்மூடி மௌனியாக உட்கார்ந்திருந்தானல்லவா? அவன் தொண்டையி ஒரு வார்த்தை கூட அல்லவா கிளம்பவில்லை. அவனைத் தேடிப்பிடித்து அவனுடைய அதே தொண்டையைத் தம்முடைய சொந்தக் கைகளாலேயே திருகிப் போட வேண்டுமென்று பதை பதைத்தார்.

ஆனாலும், அப்படிச் செய்வதற்கு முன்னால் தம்முடைய சொந்த வீட்டையும், மனைவியையும் கண்ணுக்குக் கண்ணான ரஞ்சனியையும் ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட விரும்பினார்.

வீட்டுக்குள் தைரியமாகச் சென்று பார்ப்பதற்கு முன்னால், முதல் காரியமாக அந்தக் கிராதகனைக் கொன்று விட்டே வரவேண்டு மென்று அவர் கைகள் துடியாய்த் துடித்தன.

அதே உள்ளத்தில் இன்னொரு எண்ணமும் தோன்றி முதலில் எழுந்த கொடூர எண்ணத்தைச் சவுக்கடி கொடுத்து அடக்கியது. இத்தகைய மனப்போராட்டத்துடன் வேத நாயகம் இன்னது செய்வதென்று புரியாமல் சாலை யோரத்து ஆலமரத்துக் கடியிலேயே வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

வேதநாயகத்தின் கண்கள் எதேச்சையாகச் சாலையிருந்த திக்கை நோக்கியது. ஆகா ! இது என்ன ஆச்சரியம்!

வேதநாயகம் யாரைப் பற்றி இத்தனை நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்தாரோ, அந்த மகாபாதகன் யாரோ ஒரு பெண்ணுடன் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தான். ஆகா ! இத்தனை நேரத்தில் எங்கே செல்கிறான்? பக்கத்தில் அவனுடன் குதூகலமாகச் சிரித்துக் கொண்டும் சல்லாபித்துக் கொண்டும் செல்லும் பெண்மணி யார்? அந்தப் பெண்ணின் முகத்தில் இளமையும் அழகும் பொலிவுற்று விளங்கியது. சிரிக்கும் போது அவளுடைய வெண்ணிறப் பற்கள் சந்திர வெளிச்சத்தில் முத்துப் போல் பிரகாசித்தான். ஒரு வேளை ரஞ்சனியா யிருக்குமோ? இந்த எண்ணம் வேதநாயகத்தின் உள்ளத்தில் எழுந்தபோது, அவரைச் சுற்றிலும் எங்கெங்கும் அந்தகாரம் சூழ்ந்தது. பின்னர் ஆயிர மாயிரம் நட்சத்திரங்கள் அவர் தலையைச் சுற்றிக் கிளம்பி மின்மினிப் பூச்சிகளைப் போல் பறந்து உதிர்ந்தன. ஐயோ ! என்னுடைய மகள் ரஞ்சனியா இப்படிச் செய்கிறாள்? அடி பாவி! என்னுடைய ஜன்ம சத்துரு வான கிராதகனிடமா சிநேகம் கொண்டிருக்கிறாய்? வேதநாயகத்துக்கு அப்படியே ரஞ்சனி மீது பாய்ந்து அவளுடைய தொண்டையைத் திருகலாமா என்று தோன்றியது. ஆனால், அப்படிச் செய்ய வில்லை. இன்னும் சற்றுப் பொறுத்து மேலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினார்.

அவர் நினைத்தபடியே அவள் ரஞ்சனிதான். அந்தப் படு பாதகனோடு வேதநாயகத்தின் வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள். ஆகா ! எத்தனை நெஞ்சழுத்தம்?. இருவரும் வீட்டுக்குள் நுழைந்து பின் கட்டுப் பக்கம் சென்று விட்டார்கள்.

வேதநாயகம் திகைப்பினாலும் குரோதத்தினாலும் உணர்ச்சி வசமானார். அவருடைய தேகம் 'வெடவெட' வென்று நடுங்கியது. ஒரு வேளை தன்னுடைய மனைவியும் இந்தக் காரியத்திற்கு உடந்தை யாயிருப்பாளா? தான் சிறைக்குச் சென்று விட்ட பிறகு, அந்த மோசக்காரன் இவர்களைத் தன்னுடைய மாய வலையில் சிக்க வைத்து விட்டானோ?

வேதநாயகத்தின் மனம் பற்பல விதமாகச் சிந்தித்தன. கடைசியாகத் தம் மனதைத் திடப்படுத்திக் கொண்டவராய், வீட்டுப் பக்கம் பரபரப் போடு நடந்து சென்றார். காம்பவுண்டுக்குள்ளே நுழைந்து நேராக மாடிப்படிகளைக் கடந்து மச்சுக்குள் சென்றார். மச்சின் முகப்பு அறையில் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல்கள் மெல்லிய நீல நிறத் திரையினால் மறைக்கப் பட்டிருந் தன. மெல்லிய திரையானதால், அறைக்குள்ளே கட்டிலின் மீது தம்முடைய மனைவி படுத்துக் கொண்டிருப்பது நிழல் சித்திரம் போல் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. வேதநாயகம் தைரியமாக அறைக் கதவைத் தட்டினார்.

'யார் அங்கே ?........'' என்று அவருடைய மனைவி இரைந்து கேட்டாள்.

வேதநாயகம் தாழ்ந்த குரலில் "நான் தான்!'' என்று கூறித் தம்முடைய பெயரையும் லஜ்ஜையுடன் உச்சரித்தார். சட்டென்று கதவு திறக்கப் பட்டது. ஆனால், வேதநாயகத்தை அந்தப் பரிதாப கரமான தோற்றத்தில் கண்டதும் அவர் மனைவி, "ஐயோ; இப்போது இந்த வேளையில் எப்படி வந்தீர்கள்? ஒரு வேளை சிறையிலிருந்து தப்பி வந்து விட்டீர்களா?'' என்று முகத்தில் ஆச்சரியமும் பயமும் தோன்றக் கேட்டாள்.

"இல்லை, நியாயமாகத்தான் வெளியே வந்திருக்கிறேன்'' என்று வேதநாயகம் கூறிக்கொண்டிருக்கும் போதே கீழிருந்து, ரஞ்சனி, 'அம்மா, அம்மா!' என்று பலமாகக் கூப்பிடும் சப்தம் கேட் டது. அந்தக் குரலில் அடுத்தபடியாக ஏதோ ஒரு பெரும் அதிசயம் நிகழப் போகிறது என்பதை வேத நாயகத்தினால் ஊகிக்க முடிந்தது. வேதநாயகம் எதிர் பார்த்தபடி அந்த அதிசயம் அப்போதே நிகழ்ந்தது.

என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளு முன்னால் நேயர்கள் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

உத்தம குணம் படைத்த ஸ்ரீ வேதநாயகம் எவ்வித சம்பந்தமுமில்லாமல் சிறை தண்டனை அடைந்ததும் அவருடைய குடும்பம் நிர்க்கதிக்குள் ளாயிற்று.

ஸ்ரீ வேதநாயகத்தின் மனைவி தன் கணவனுக்கு நேர்ந்த துர்க்கதியை நினைத்து ஒவ்வொரு தினமும் கட்டிலில் படுத்தவண்ணம் கண்ணீர் உகுத்தாள். கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் அவள் அனுபவித்த கஷ்டங்களை இங்கே விவரித்து எழுதுவது சாத்தியமல்ல. இத்தனை கஷ்டங்களுக் கிடை யிலும் ஸ்ரீமதி வேதநாயகம் ரஞ்சனியைப் படிக்க வைத்து 'நர்ஸ்' தொழிலுக்கு அனுப்பினாள்.

ரஞ்சனி தக்க பிராயமடைந்தும் தந்தையைப் பற்றியும், தந்தைக்கு நேர்ந்த துன்பத்தைக் குறித்தும் தாயார் மூலம் அறிந்து கொண்டாள்.

தந்தைக்கு நேர்ந்த எதிர்பாராத சிறைவாசத்தின் காரணத்தை அறிந்த போது ரஞ்சனியின் இருதயம் விம்மி வெடித்து விடும் போலிருந்தது. தந்தையை மோசடி வழக்கில் மாட்டி வைத்த அந்தச் சண்டாளனை பழிக்குப் பழி வாங்க அவள் அக்கணமே கங்கணம் கட்டிக் கொண்டாள். எனவே, அந்த மோசக்காரனை எங்கே சந்திப்பது, எப்படிப் பழி வாங்குவது என்பதைப் பற்றியே அன்று முதல் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவனை வஞ்சகமாகச் சிநேகம் செய்து கொள்வதன் மூலம் தான் தன்னுடைய எண்ணம் கைகூடும் என்பதும் அவளுக்குத் தெரிந்தது . ரஞ்சனியின் கவர்ச்சி மிகுந்த தோற்றம் அவளுடைய இந்த எண்ணத்துக்குப் பெரிதும் ஒத்தாசையாக இருந் தது.

ரஞ்சனி ராயபுரம் சர்க்கார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் தொழில் புரிந்து கொண்டிருந்தாள். தூய்மையான வெள்ளை உடையில் அவள் 'டியூடி'க்கு வரும் போது தெய்வலோகக் கன்னிகை ஒருவளே நர்ஸ் உடையில் வருவதாகப் பலரும் எண்ணினார்கள்.

ரஞ்சனியின் காதலுக்குப் பாத்திரமான டாக்டர் ரகுநாதன் என்பவரும் அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்து கொண்டிருந்தார். சென்ற மகா யுத்தத்தில் யுத்த களத்தில் சேவை செய்து கேப்டன் பட்டமும் பெற்றிருந்தார்.

ரஞ்சனிக்கென்றே பிறந்தவரோ என்று வியக்கும்படி ஆகிருதியும் அழகும் பொருந்தி கம்பீரமாய் விளங்கினார்.

கேப்டன் ரகுநாதனும் ரஞ்சனியும் முதன் முதலாகச் சந்தித்தபோது கண்களால் பேசிக் கொண்டார்கள். பிறகு புன் சிரிப்பின் மூலம் தங்களுடைய அந்தரங்கக் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்..

கடைசியில், இருவரும் பகிரங்கமாகவே டியூடிக்கு வருவதும், மணி ஐந்தடித்தால் காரில் வெளியே புறப்பட்டுச் செல்வதும் சகஜமாயிற்று.
# #

ஒரு நாள் மேற்படி ஆஸ்பத்திரிக்கு பிரமுகர் ஒரு வரை 'ஸ்ட்ரெக்ச'ரில் போட்டுக் கொண்டு வந்தார்கள். ஏதோ கார் விபத்தென்றும் பலமாக அடிபட்டிருக்கிறதென்றும் சொன்னார்கள். கேப்டன் ரகுநாதன் இம்மாதிரி கேஸுகளில் அநுபவம் மிகுந்தவர் ஆகையால் இந்தக் கேஸை அவரே நேரில் கவனிக்கும்படி ஆயிற்று.

அடிபட்ட மனிதரைக் கவனித்த ரஞ்சனியின் தேகம் பயங்கரமாக மாறியது. ஒரு தடவை அவள் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

ரஞ்சனியைத் திகைப்படையச் செய்த அந்த மனிதர் யார் என்பதை இதற்குள் நேயர்கள் ஊகித்திருக்கலாம். ஆமாம்; வேதநாயகத்தைச் சிறைக்கு அனுப்பிய மோசக்காரன் தான். கடவுளுக்கே அவன் செய்த அக்கிரமம் பொறுக்கவில்லை போலும்!

இல்லை யென்றால் இத்தகைய விபத்தில் அவனைச் சிக்க வைத்து ரஞ்சனி இருந்த ஆஸ்பத்திரி யில் கொண்டு வந்து ஒப்படைப்பானேன்?

சிறிது சிறிதாகப் பிரக்ஞை தெளிந்த மனிதன் தன் கூரிய கண்களால் ரஞ்சனியை ஒரு தடவை பார்த்தான். தன் உடம்பு வலியெல்லாம் அந்த க்ஷணம் எங்கே போயிற்று என்பது அவனுக்கே ஆச்சரியமாயிருத்தது. "ஆகா! நான் எப்படிப்பட்ட பேரதிருஷ்டக் காரன்? இத்தகைய காந்தர்வப் பெண்ணிடம் சிகித்சை செய்து கொள்ள மோட்டார் விபத்தில் தானா மாட்டிக்கொள்ளலாம்? ஆகாய விமானத்திலிருந்தபடியே பூமியில் குதிக்கலாமே!'' என்று எண்ணினான்.

ரஞ்சனி அந்த மனிதரை இதற்கு முன் நேரில் சந்தித்ததில்லை. கண்ணால் பார்த்ததும் கிடையாது.

தன் பங்களாவில் மாட்டி வைத்திருந்த புகைப்படங்களில், அப்பாவும் இந்த அயோக்கியனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட 'போட்டோ' ஒன்றும் இருந்தது. அந்தப் படத்தை அவள் அடிக்கடி எரிச்சலுடன் பார்த்துப் பெருமூச்செறிந்திருக்கிறாள்.

எனவே, இப்போது ஆஸ்பத்திரியில் அவனைப் பார்த்ததும் அவன் யார் என்பதைப்பற்றி அவளுக்குத் துளியும் சந்தேகம் ஏற்படவில்லை. சிங்கத்தின் கூண்டுக்குள்ளே இறைச்சி வந்து விழும்போது அந் தக் கொடிய மிருகம் அதை எப்படி வரவேற்குமோ, அதே உணர்ச்சியுடன் ரஞ்சனி அந்த மனிதனைப் பார்த்துப் பற்களைக் கடித்துக் கொண்டாள்..

சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியை விட்டுப் பிரிவதற்குள்ளாக ரஞ்சனி தன் நய வஞ்சக வலையை அவன் மீது வீசிப் படிப்படியாக வெற்றியும் பெற்றாள். வேதநாயகத்தின் மகள் தான் ரஞ்சனி என்று அவனுக்குத் தெரிந்த போது முதலில் சற்றுத் திகைப் பாயிருந்தது. பிறகு ரஞ்சனியாகவே தன்னிடம் அன்பு பாராட்டுவதால் கவலையில்லை என்று எண்ணினான்.

இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் ரஞ்சனி அவனிடம் தனிமையாகச் சந்தித்துப் பேசினாள். பேச்சின் முடிவில் அன்றிரவு அவன் ஒன்பதரை மணிக்கு அதே ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்க வேண்டு மென்றும் தான் ஆஸ்பத்திரி 'டியூடி' முடிந்து வெளியே வந்ததும் இருவரும் தன் வீட்டுக்குப் போகலாமென்றும் சொல்லி வைத்திருந்தாள்.

அன்று பூர்ண சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்த வெண்ணிலவில் ரஞ்சனியும் கிராதகனும் தங்கள் ஏற்பாட்டின்படி சந்தித்துக் கொண்டனர். பிறகு, இருவரும் ரஞ்சனியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்தக் காட்சியை வேதநாயகம் ஆலமரத்தடியில் நின்று கவனித்ததையும், அதற்குப் பிறகு நடந்த விவரங்களையும் நேயர்கள் அறிவார்கள்.

கீழேயிருந்து '' அம்மா! அம்மா!" என்ற ரஞ்சனியின் குரல் கேட்டதும், வேதநாயகத்தின்
மனைவி கணவனோடு ஏதோ இரகசியமாகச் சில வார்த்தைகள் கூறிவிட்டு அவசரமாகக் கீழே இறங்கிச் சென்றாள். வேதநாயகமும் சிறிது நேரம் கழிந்த பிறகு கீழே இறங்கிப் போனார்.

கீழே பின் கட்டு அறை ஒன்றில் மெதுவாகப் பேச்சுக் குரல் கேட்டது. வேதநாயகம் அங்கே சென்று பார்த்தார். அந்த அறைக் கதவுகள் உள்பக்கம் தாளிடப் பட்டிருந்தன. அறைக்குள்ளே சுவரில் மாட்டியிருந்த விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. மத்தியிலிருந்த விசாலமான மேஜையைச் சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த நாற்காலிகள் ஒன்றில் கிராதகன் உட் கார்ந்திருந்தான். எதிரில் ரஞ்சனி வலது கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தாள். ஸ்ரீமதி வேதநாயகம் அறைக்குள் இன்னொரு பக்கம் நின்று கொண்டிருந்தாள். கிராதகனுடைய முகம் பேயடித்த மாதிரி பயங்கரமாக மாறி யிருந்தது.

ரஞ்சனி, தன் இடது கையிலிருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் நீட்டி அதைப் படிக்கச் சொன்னாள். கிராதகன் துப்பாக்கி முனையைத் தன் கண்களால் பார்த்துக் கொண்டே, மெதுவாகக் கைகளை நீட்டிக் காகிதத்தை வாங்கிப் படிக்க ஆரம் பித்தான். இவ்வளவையும் ஸ்ரீ வேதநாயகம் அறைக்கு வெளியே நின்ற வண்ணம் திறவுகோல் துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கிராதகன் படித்த கடிதம் வருமாறு:

"ஆறு வருஷங்களுக்கு முன்னால் ஹைகோர்ட்டில் நடை பெற்ற மோசடி வழக்கில் சிறைவாச தண்டனை பெற்ற வேத நாயகம் உண்மையில் குற்றவாளி அல்ல. மேற்படி மோசடி வழக்குக்கும் வேதநாயகத்துக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. வஞ்சக எண்ணத்துடன் நான் அவரை வேண்டுமென்றே அந்த வழக்கில் மாட்டி வைத்தேன். உண்மையில் மோசம் செய்தது நான் தான். இதற்காக நான் எத்தகைய தண்டனையையும் அனுபவிக்கத் தயார். வேதநாயகம் நிரபராதி .
இப்படிக்கு
......................''

பிறகு, ரஞ்சனி கிராதகனைப் பார்த்து அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படி பெண் சிங்கம் போல் உறுமினாள். சர்க்கஸ் கூண்டில் அகப்பட்ட ஆடு போல் விழித்துக் கொண்டிருந்த கிராதகன் ரஞ்சனி காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். அப்போது அந்த அறையில் பயங்கர நிசப்தம் நிலவியது.

இத்தனை நேரமும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வேதநாயகத்தின் மனைவி அறைக் கதவைத் திறந்து வெளியே நின்று கொண்டிருந்த தன் கணவனை உள்ளே அழைத்தாள்.

வேதநாயகம் அறைக்குள் பிரவேசித்தபோது ஒரு கணம் ரஞ்சனியும் அந்தப் படு மோசக்காரனும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

அந்த நேரத்தில் திடீரென்று வேதநாயகத்தைக் கண்டதும் கிராதகனுடைய ஹிருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது. ரஞ்சனிக்கு தன் தகப்பனார் அந்த நேரத்தில் அங்கு வந்து நிற்பது சொப்பனத்தில் காண்பது போல் இருந்தது.

கனவு அல்ல உண்மைதான் என்று அறிந்ததும், ரஞ்சனி அந்தக் கடிதத்தைத் தகப்பனாரிடம் நீட்டி " அப்பா ! நீ இனி இவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதோ பார் கடி தத்தை !" என்று கூறிக் கடிதத்தை நீட்டினாள்.

ஸ்ரீ வேதநாயகம் கடிதத்தையும், ரஞ்சனியை யும் ஒரு தடவை மாறி மாறிப் பார்த்து விட்டுத் தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார்.

" ரஞ்சனி! நம்முடைய விதிக்கு இவன் என்ன செய்வான்? இவனை நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் தீர்ப்புக் கொடுக்க வேண்டியவர் கடவுள் தான். இவனை நாம் விட்டு விடுவோம்'' என்று கூறி, கிராதகன் எழுதிக் கொடுத்த அந்தக் கடிதத்தைச் சுவரில் மாட்டியிருந்த விளக்கின் மீது தூக்கிப் பிடித்தார். அந்தக் கடிதம் அடுத்த கணமே தீக்கிரையாயிற்று.

வேதநாயகம் கடிதத்தைத் தீயிலிட்டபோது ரஞ்சனி ''இது என்ன ? அப்பாவுக்குப் பைத் தியம் பிடித்து விட்டதா?' என்று எண்ணினாள்.

"அப்பா! இவனை இப்படி இலேசில் விட்டுவிட்டால் இவன் சும்மா இருக்க மாட்டான். பின்னால் மறுபடியும் நமக்கே கெடுதல் செய்வான் '' என்றாள்.

வேதநாயகம் ரஞ்சனி கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிராதகனை மன்னித்து வெளியே போகச் சொன்னார். பெரும் விபத்திலிருந்து தப்பிய அந்தப் படுமோசக்காரன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று வேதநாயகம் பங்களாவை விட்டுப் பர பரப்புடன் வெளியேறினான். ரஞ்சனிக்கு இதைக் கண்ட போது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

கிராதகன் காம்பவுண்டைக் கடந்து சிறிது தூரம் சென்றானோ இல்லையோ, ஆலமரத்துக்குப் பின்னால் ஏதோ ஓர் உருவம் பதுங்கி மறைவதைக் கண்டான். அடுத்த நிமிஷம் சட்டென்று துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம் ! கிராதகன் அடியற்ற மரம் போல் கீழே சாய்ந்தான்.
# #

இது வரை கதையைச் சொல்லிக் கொண்டே வந்த ஸ்ரீ கோசல்ராம் இந்த இடத்துக்கு வந்ததும் கதையை நிறுத்தினார்.

"சரியான இடத்தில் கதையை நிறுத்தி விட்டீர்களே ? அப்புறம் என்ன ஆயிற்று? கிராதகனைச் சுட்டது யார்?'' என்று ஆவலுடன் கேட்டேன்.

"என்ன ஆயிற்று? மறுபடியும் வேதநாயகம் கைதியானார். விடுதலை பெற்ற வேதநாயகம் பழைய விரோதத்தின் காரணமாகவே கிராதகனைக் கொலை செய்திருக்க வேண்டு மென்று போலீஸ் தரப்பில் வாதாடினார்கள். மேலும், வேதநாயகத்தின் வீட்டு வாசலிலேயே கொலை நடந்திருப்பதால் வேதநாயகம் தான் குற்றவாளி என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.

நீதிபதியின் தீர்ப்புக்கு முன்னால் ஜூரர்களின் அபிப்ராயம் கோரப்பட்டது. ஒன்பது ஜூரர்களும் ஓர் அறைக்குள் அந்தரங்கமாக ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள். அந்த ஒன்பது ஜூரர்களில் அடியேனும் ஒருவன். மற்ற எட்டு ஜூரர்களும் வேதநாயகம்தான் குற்றவாளி என்று முடிவு செய்தார்கள். என் மனச்சாட்சி மட்டும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே, நான் இதர ஜூரர் களுடன் தர்க்கம் செய்தேன்.

"கொலை நடந்தது வேதநாயகத்தின் வீட்டு வாசலில் என்பதற்காக வேதநாயகத்தைக் குற்றவாளி என்று கூறிவிட முடியுமா? கொலை நடந்த சமயம் யாரும் நேரில் பார்க்காதபோது வேதநாயகம் தான் குற்றவாளி என்று எப்படிக் கூறுவது? ஆகையால், அவர் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல " என்று வாதாடினேன்.

மற்ற ஜூரிகள் என் வாதத்தை ஒப்புக் கொண்ட போதிலும் என் அபிப்பிராயத்துக்கு இணங்கி வரவில்லை.

"ஜூரர்கள் ஒரு முகமான அபிப்பிராயத்துக்கு வரவில்லை யென்றால், அபிப்பிராய ஒற்றுமை ஏற்படுகிறவரை அவர்களில் யாரும் அறையை விட்டு வெளியே போகக் கூடாது " என்பது கோர்ட் விதிகளில் ஒன்று.

எனவே, நான் மட்டும் தனிப்பட்ட அபிப்பிராயம் கூறுவதால் பிரயோசனமில்லை என்று தெரிந்ததும் நானாகவே மற்ற ஜூரர்களுடன் ஒத்துப் போய்விட்டேன்.

வழக்கு முடிந்து தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

"வேதநாயகம் குற்றவாளிதான்; ஆனாலும் சரியான ருசு இல்லை என்ற காரணத்துக்காக மரண தண்டனைக்குப் பதில் ஜன்மதண்டனை விதிக்கிறேன்'' என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

எனவே, வேதநாயகம் ஆயுள் தண்டனை பெற்று மறுபடியும் சிறை சென்றார் என்று கதையை முடித்தார் கோசல்ராம்.

"கோசல்ராம்! அப்புறம் வேதநாயகத்தின் குடும்பம் என்ன ஆயிற்று? உண்மையாகவே கிராதகனைக் கொன்றது யார்? தாங்கள் மட்டும் ஏன் வேதநாயகம் குற்றவாளி அல்ல என்று வாதாடினீர்கள்?" என்று கேட்டேன்.

கோசல்ராம் சொன்ன பதில் என்னைத் திடுக் கிடச் செய்தது.

"ஏன் என்றா கேட்டீர்கள்? கிராதகனைச் சுட்டுக் கொன்றது நான்தான். வேதநாயகமோ ரஞ்சனியோ ஒரு பாவத்தையும் அறியார்கள்" என்றார் கோசல்ராம் ..

''என்ன? தாங்களா !..... ஐயா, கொஞ்சம் இருங்கள். என் தலை சுற்றுகிறது. தாங்கள் எதற்காகக் கொலை செய்தீர்கள்? அப்புறம் தாங்களே எப்படி இந்த வழக்கில் ஜூரியாய் அமர்ந்தீர்கள்? மிஸ்டர் கோசல்ராம்! இதெல்லாம் எனக்கு ஒரே திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது........ இன்னும் கொஞ்ச நேரம் போனால் செத்துப்போன கிராதகனுடைய ஆவி. தாங்கள் தான் என்று கூடச் சொல்வீர்கள் போல் இருக்கிறதே! அப்புறம் கேப்டன் ரகுநாதனும் தாங்களே தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள். ஐயா! தயவு செய்து கொஞ்சம் விவரமாகவும் நிதானமாகவும் சொல்ல வேணும் '' என்று கேட்டுக் கொண்டேன்.

கோசல்ராம் பிறகு என் காதோடு இரகசியமாகச் சொன்ன விவரம் வருமாறு:-

''ரஞ்சனி அன்று கிராதகனைத் தன் பங்களாவுக்கு வஞ்சகமாக அழைத்துச் சென்றாளல்லவா? அதற்கு முன்னால் இந்த விஷயத்தை அவள் கேப்டன் ரகுநாதனிடம் இரகசியமாகச் சொல்லி, அவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் வாங்கி வைத்திருந்தார். ரஞ்சனியிட மிருந்து இந்த விவரத்தை அறிந்த ரகுநாதன் அவளுக்குத் தெரியாமலேயே அன்றிரவு ஆலமரத்தடியில் போய்ப் பதுங்கிக் கொண்டிருந்தான்,

கிராதகன் ரஞ்சனி வீட்டிலிருந்து தனிமையாக வெளி வருவதைக் கண்டதும் ரகுநாதன் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்று விட்டான் .

ரகுநாதன் செய்த கொலைக் குற்றம் வேதநாயகத்தின் தலையில் சுமந்தது. எனவே வேதநாயகம் ஆயுள் தண்டனை அனுபவிக்கும்படி ஆயிற்று."

கோசல்ராம் மேற்கண்ட விவரத்தைச் சொல்லி முடித்ததும் "இதெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? சற்று முன் தாங்கள் தான் கிராதகனைக் கொன்றது என்று சொன்னீர்களே?" என்று அவரைக் கேட்டேன்.

''எப்படியா? நான் தான் அந்த கேப்டன் ரகுநாதன். ரஞ்சனியை மனப்பூர்வமாகக் காதலித்தவன் நான் தான். வேதநாயகத்தின் குடும்பத்தைக் கெடுத்த கிராதகனைச் சும்மா விட்டால் பின்னால் அவனால் ரஞ்சனிக்கு ஆபத்து நேரும் என்று எண்ணியே அவனைச் சுட்டுத் தீர்த்தேன். அதே வழக்கில் ஜூரியாய் அமரும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. கோர்ட்டில் மனச்சாட்சி குறுக்கிட்ட தால் வேதநாயகம் குற்றவாளி அல்ல வென்று ஜூரர்களுடன் வாதாடினேன். அவ்வளவுதான் விஷயம் '' என்றார்.

"கோசல்ராம் ! தாங்கள் தான் கேப்டன் ரகுநாதன் என்றால் பெயரை எப்போது மாற்றிக் கொண்டீர்கள்?'' என்று கடைசி சந்தேகத்தைக் கேட்டேன்.

"சமீபத்தில் தான்; வைத்தியத்தொழிலிலிருந்து இப்போது 'ரிடைய' ராகி விட்டேன்.''

"கோசல்ராம்'' என்ற பெயரில் ஒரு இங்கிலீஷ் மருந்துக் கடை ஆரம்பித்து நடத்துகிறேன். அது முதல் என் பெயரும் கோசல்ராம் என்றே மாறி விட்டது. இந்தப் பிரபலமான பெயரை வைத்தே இப்போது முனிசிபல் தேர்தலில் போட்டி போடுகிறேன்'' என்று கூறினார்.

"ஐயா! தயவு செய்து இன்னும் சில விவரங் களைக் கூற வேண்டும். இப்போது ரஞ்சனி எங்கே இருக்கிறாள் ? ரஞ்சனியின் தாயார் உயிரோடு இருக்கிறாளா?'' என்று கேட்டேன்.

"ரஞ்சனி இப்போது என்னோடுதான் இருக்கிறாள். அவள் தாயார் தகப்பனார் எல்லோரும் சௌக்யம் தான். தகப்பனார் விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார்'' என்றார் கோசல்ராம்.

" என்ன விடுதலையாகி விட்டாரா? இதற்குள்ளாகவா? அதெப்படி?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஆமாம் ; முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது மாகாண சர்க்கார் சில குறிப்பிட்ட கைதிகளை விடுதலை செய்தார்கள் அல்லவா? அவர்களில் ஸ்ரீ வேதநாயகமும் ஒருவர்" என்றும் கதையைச் சுபமாக முடித்தார் கோசல்ராம்.
-----------------

3. வீண் வதந்தி

இந்த யுத்த காலத்தில் எத்தனையோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் சென்னைப் பட்டணத்தில் எழும்பூர் 'ஸ்பர்டாங்க்' ரோடிலிருந்த ஒரு வீடு ஒன்றரை வருஷ காலமாகப் பூட்டிக் கிடந்ததும் ஒன்றாகும். குடியிருக்க வீடு கிடைக்குமா என்று எத்தனையோ பேர் திண்டாடித் தெருவில் நிற்கும் இந்த நாளில் மேற்படி வீட்டுக்கு யாருமே குடிவராமல் இருந்தது பெரிய ஆச்சரியமே யல்லவா? இதற்குக் காரணம் ஒரு மர்மமாகவே இருந்தது. எத்தனையோ பேர் மேற்படி வீட்டைப் பார்க்க வருவதும் கட்டிடத்தின் அமைப்பையும், அதைச் சுற்றியிருந்த தோட்டத்தின் அழகையும் கண்டு மயங்கிப் போவதும், கடைசியில் ஏதோ ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டு, ''நமக்கு வேண்டாம் இந்த வீடு என்று சொல்லிவிட்டுப் போவதும் வழக்கமாயிருந்தது.

வீடு பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. சிமெண்டு கட்டிடம். கட்டிடத்தைச் சுற்றிப் பெரிய காம்பவுண்டு; காம்பவுண்டுக்குள்ளிருந்த வேப்ப மரங்களும், புஷ்பச் செடிகளும் முல்லைக் கொடிகளும் நந்தவனம் போல் காட்சி யளித்தன.

இந்த வீட்டுக்கு எதிரில் கூப்பிடு தூரத்தில் இன்னொரு வீடு இருந்தது. அதில் குடியிருந்தவர்களுக்குக் கூட இந்த வீட்டைப் பற்றிய மர்மம் வெகு நாள் வரை இன்னதென்று விளங்கவில்லை. அந்த எதிர்வீட்டுக் குடும்பத்தில் வயது வந்த பெண்கள் மூவரும், ஒரு சிறு பெண்ணும், அவர்களுடைய தாய் தகப்பனும் இருந்தார்கள்.
# #

ஒரு நாள் சாயந்திரம் திடுதிப்பென்று, பூட்டியிருந்த வீட்டு வாசலில் ஒரு 'டாக்ஸி' வந்து நின்றது. எதிர் வீட்டில் கார் வந்து நிற்பதைக் கண்ட அந்தச் சிறு பெண் பத்மா ஆச்சரியம் தாங்காமல் தன் வீட்டுக்குள் ஓடிப்போய், "அம்மா, அக்கா, எதிர் வீட்டுக்கு யாரோ வந்திருக்கா!'' என்று கண்களை அகல விழித்துக் கூறினாள்.

"எதிர் வீட்டுக்கா?'' என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்டுக் கொண்டே பத்மாவின் தாயாரும் சகோதரிகளும் சமையல் கட்டிலிருந்து ரேழி அறை ஜன்னல் பக்கம் ஓடி வந்து எதிர் வீட்டைக் கூர்ந்து கவனித்தார்கள்.

'டாக்ஸி 'யிலிருந்து இளம் தம்பதிகள் இருவர் இறங்கிச் சென்றார்கள். அவர்கள் பின்னோடு ஒரு பெட்டி; ஒரு படுக்கை, ரயில் கூஜா, பழக்கூடை இன்னும் சில வெள்ளிப்பாத்திரங்கள் எல்லாம் கீழே எடுத்து வைக்கப்பட்டன. டாக்ஸியிலிருந்து இறங்கிய வாலிபன் நாகரிமாக இருந்தான். மணிபர்ஸைத் திறந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து உரைவரிடம் கொடுத்தான். இதற்குள் அவனுடன் வத்திருந்த யுவதி வீட்டுக் கதவைத் திறந்தாள்.

ஜன்னலருகில் நின்றபடியே இதை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சகோதரிகள், வந்தவள் கட்டிக் கொண்டிருந்த புடவையின் கலர், கையில் எத்தனை வளை, தலை வகிடு நேரா கோணலா, காலில் அணிந்திருந்தது ஸ்லிப்பரா, பூட்ஸா முதலிய நுணுக்கமான அத்தனை விவரங்களையும் அதற்குள் பார்த்து வைத்துக் கொண்டார்கள். டாக்ஸியிலிருந்து இறங்கிய சாமான்கள் என்னென்ன என்பதை ஒரு சகோதரி ஜாபிதா போட்டு வைத்துக் கொண்டாள். பழக்கூடையில் என்ன இருக்கலாம் என்று பத்மா யோசித்தாள். ஒன்றரை வருஷ காலமாய்ப் பூட்டிக் கிடந்த அந்த வீட்டைப் பற்றின மர்மமே சரியாய் விளங்காம லிருக்கும் போது, இந்தப் புதுத் தம்பதிகள் அதற்குக் குடி வந்திருக்கிற விஷயம் மேலும் அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று.

பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்தனை நாளாக அவள் தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய், அம்மா கொடுக்கும் காப்பியை அருந்தி விட்டு எதிர் வீட்டுத் தோட்டத்தில் போய் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந்தாள். அந்தத் தோட்டத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த பசும் புற்களின் மீது படுத்துக் கொண்டே வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றும் வரை விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பி வருவாள். ஒரு நாள் அவளுடைய தாயார் "அடி பத்மா, இனி நீ எதிர் வீட்டுத் தோட்டத்துக்கு விளையாடப் போனால் விளக்கு வைப்பதற்குள் திரும்பி வந்து விட வேண்டும்; தெரியுமா? அந்த வீட்டில் பிசாசு இருக்கிறதாம்'' என்று பயமுறுத்தி வைத்திருந்தாள். அது முதல் பத்மா பிசாசுக்குப் பயந்து கொண்டு மஞ்சள் வெயில் மறையு முன்பே வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவாள்.

இப்படி இருக்கும் போது திடீரென்று அந்தப் பிசாசு இருக்கிற இடத்துக்கு யாரோ இளம் தம்பதிகள் குடி வந்த விஷயம் பத்மாவின் களங்க மற்ற இளம் மனதை என்னமோ செய்து கொண்டிருந்தது.
# #

மணி ஒன்பது அடித்து வெகு நேரம் வரை பத்மாவின் சதோதரிகளுக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. ஜன்னலை விட்டு நகராமல் எதிர் வீட்டு விவகாரங்களையே சினிமா பார்ப்பது போல் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு நாளாய் அந்தகாரத்தில் கிடந்த அந்த வீடு இன்று மின்சார வெளிச்சத்தினால் பிரகாசமாய்க் காட்சி அளித்தது. வாசல் ஜன்னல்கள் இரண்டும் திரை போட்டு மூடியிருந்ததால் தம்பதிகளின் நடவடிக்கைகளைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இருந்தாலும் மெல்லிய திரைக்குப் பின்னால் அவ்விருவரு டைய நிழல் அடிக்கடி தென்பட்டன. அதற்கு மேல் சகோதரிகளால் ஒன்றும் கவனிக்க முடியவில்லை.

மறுநாள் சகோதரிகள் பொழுது புலர்வதற் குள்ளாக எழுந்திருந்து எதிர் வீட்டை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். பத்மாவுக்கு வந்திருப்பவர் களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஆனால், அம்மா அந்த வீட்டுப் பக்கம் இனி காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தாள். "அம்மாவுக்குத் தெரியாமல் எப்படிப் போவது? போனால் அம்மா கோபித்துக் கொள்வாளோ" என்று பயந்தாள். காலை மணி ஏழரை இருக்கும். மொட்டை மாடி மீது இருந்த கம்பிக் கொடியில் முதல் நாள் காரில் வந்த யுவதி உடுத்திக் கொண்டிருந்த மேக வர்ணப் பட்டுப் புடவை காயப் போட்டிருந்தது. இதை சகோதரிகள் மூவரும் கவனித்தனர். ஆனால் அந்த யுவதியை மட்டும் கண்ணில் காணவே யில்லை.

புதுத் தம்பதிகள் குடி வந்து வாரம் ஒன்று ஆகியும் அவர்களைப் பற்றிய விவரம் சகோதரிகளுக்கும் அவள் தயாருக்கும் தெரியவே யில்லை. பார்ப்பதற்கு நாகரிகத் தோற்றம் கொண்ட அவர்கள் கொஞ்சம் பணமுள்ளவர்கள் என்றும் தோன்றியது. அந்த யுவதி பட்டுப் புடவையைத் தவிர்த்து வேறு புடவை கட்டுவதில்லை என்பது தினம் ஒரு பட்டுப் புடவையாக மொட்டை மாடிக் கொடியில் உலர்ந்து கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. ஆனால், அந்தஸ்தான வாழ்க்கை நடத்தும் அந்த இளம் தம்பதிகள் வீட்டு வேலை செய்ய ஒரு வேலைக்காரியை அமர்த்திக் கொள்ளாததேன்? எல்லா வேலைகளையும் அவனே அல்லவா செய்து கொண்டிருக்கிறான்? சில சமயம் அவனே மேல் மாடியில் புடவைகளைக் கொண்டு போய் உலர்த்துவான். அக்கம்பக்கத்திலிருந்து யாராவது கவனிப்பார்களே என்ற சங்கோசமில்லாமல் துடைப்பத்தை வைத்துக் கொண்டு வாசல் வராந்தாவைப் பெருக்குவான். விறகுக் கட்டைகளை ஏதோ புஷ்பங்களை வாரிச் செல்வது போல் நினைத்துக் கொண்டு பெருமையோடு எடுத்துப் போவான்.

சகோதரிகளுடைய ஆச்சரியத்துக்கு இதெல்லாம் மேலும் மேலும் உரம் போட்டது போல் இருந்தது. அந்த யுவதி வாசல் பக்கம் வருவாளா, அல் லது ஜன்னல் பக்கமாவது வந்து எட்டிப் பார்ப்பாளா என்று சதா எதிர்வீட்டை கவனிப்பதிலேயே அவர்கள் பொழுதை வீணாக்கினார்கள். ஊரிலிருந்து வந்த அன்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றவளை அப்புறம் கண்ணால் காண்பதே அரிதாகி விட்டது. இதில் ஏதேனும் இரகசியம் இருக்குமோ? எல்லாம் ஒரே மூடு மந்திரமாக இருக்கிறதே என்று சகோதரிகளும் அவர்களுடைய தாயாரும் வியந்தனர். தங்கள் வீட்டுக்குப் பால் கொடுக்கும். அதே பால்காரிதான் அவர்களுடைய வீட்டுக்கும் வாடிக்கை வைத்துக் கொண்டிருந்தாள். எனவே, சகோதரிகள் பால்காரி மூலம் விவரம் அறிய முயற்சி தொடங்கினர். பால்காரிக்கும் ஏற்கெனவே அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை யிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த யுவதியின் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள்.

ஒரு நாள் பால்காரி சகோதரிகளிடம் வந்து, தினமும் அந்த அம்மாள். காலையில் எருமைப் பாலும் சாயந்திரம் பசும்பாலும் வாங்குவதாகச் சேதி சொன்னாள். இந்த விவரத்துக்கு மேல் பால் காரியால் ஒன்றும் கூற முடியவில்லை. இதிலிருந்து சகோதரிகள் என்னத்தை ஊகித்தறிவது?

"எந்த ஊர் என்று கேட்டாயோ?'' என்று பத்மாவின் தாயார் ஆவலோடு விசாரித்தாள்.

"திருச்சினாப்பள்ளியாம்!' என்று பால்காரி பதில் கூறினாள்.

"அவளுக்குத் தாயார், தகப்பனார் இருக்கிறார்களா ?''

'அது எனக்குத் தெரியாதம்மா; கேட்டால் ஒன்றும் பதிலே பேசுவதில்லை. பேச்சு ரொம்ப ரொம்பக் கணக்காயிருக்கு'' என்றாள் பால்காரி.

நாளடைவில் எதிர் வீட்டுத் தம்பதிகளின் மீது பத்மாவின் தாயாருக்குச் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அதற்குத் தகுந்தாற்போல் இவளுடைய காதில் பராபரியாய் ஒரு சேதியும் விழுந்தது. அந்தச் சேதி இதுதான் :

"திருச்சினாப்பள்ளியில் ரங்கசாமி ஐயங்கார் என்றொரு ரிடயர்டு வக்கீல் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண்கள். இரண்டு பெண்களும் காலேஜில் படித்தவர்கள். அந்தப் பெண்களில் ஒருவள் தான் இப்போது எதிர் வீட்டுக்குக் குடி வந்திருக்கிறாள். இவள் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த போது ஒருவனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். அவனையேதான் - கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் பிடி வாதம் பிடித்தாள். குலம் கோத்திரம் சரியாயில்லாதலால் அதற்கு இவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. கடைசியாக இவள் ஒரு நாள் அவனுடன் புறப்பட்டு ஓடிவந்து விட்டாள். அதற்கப்புறம் இவர்களுடைய அப்பாவும் அம்மாவும் இவளுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு 'இனி இவள் முகத்தில் விழிப்பதில்லை' என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அதனால் தான் இவள் அவனுடன் புறப்பட்டு கண்ணுக்கு மறைவாய் வந்து காலம் கழிக்கிறாள். அவனுக்கு ரேஸ் பைத்தியம், குடிப் பழக்கம் எல்லாம் உண்டு.''

இந்தச் சேதியை பத்மாவின் தாயாருக்கு அடுத்த தெருவிலிருக்கும் அவளுடைய சிநேகிதை சொன்னாளாம். அந்தச் சேதியை பத்மாவின் தாயார் தன்னுடைய பெண்களிடம் வந்து அஞ்சல் செய்தாள்.

"ஓகோ! அதனால் தான் அவள் அப்படி வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு அஞ்ஞாத வாசம் செய்கிறாளா? என்னடியம்மா என்று பார்த்தேன்!'' என்றாள் ஒரு சகோதரி.

"சரிதான்; இருக்கும், இருக்கும். அவன் ரேஸுக்குத்தான் போகிறான். ரேஸ் நடக்கும் தினங்களிலெல்லாம் அவன் ஒழுங்காக டிரஸ் செய்து கொண்டு வெளியே கிளம்பும் போதே எனக்குச் சந்தேகம் தான்" என்றாள் இன்னொருவள்.

"அப்படியானால் மற்ற நாட்களிலெல்லாம் அவன் எங்கே போகிறான்?'' என்று கேட்டாள் ஒருத்தி.

"அதுவா? குடிக்கப் போவான். இல்லாவிட் டால், எங்கேயாவது போய் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருப்பான். யார் கண்டார்கள் ?'' என்று மற்றொறாவள் பதில் கூறினாள்.

"ஆமாம்; உங்க அப்பா கூட அவனை ஒரு நாள் கிளப்பில் கண்டாராம். சற்று நேரம் அவனும் இவரும் உற்றுப் பார்த்துக் கொண்டார்களாம். ஆனால், ஒன்றும் பேசவில்லையாம் '' என்றாள் தாயார்.

"நீ சொன்ன கதை நிஜமாய்த்தான் இருக்கும் அம்மா! அவள் அவனை இழுத்துக் கொண்டு வந்தவள் தான் '' என்று மூன்று சகோதரிகளும் ஏகமனதாக முடிவுக்கு வந்து தங்கள் சந்தேகத்துக்கு ஒரு முத்தாய்ப்பு, வைத்தார்கள்.
# #

பத்து வயதுகூட நிரம்பாத பத்மாவுக்குத் தன்னுடைய தாயாரும் சகோதரிகளும் பேசிக் கொண்ட விஷயம் இன்னதென்றே விளங்கவில்லை. அவள் உலகம் அறியாதவள் தானே? ஆனால், இவர்களெல்லாம் எதிர் வீட்டு மாமிப் பற்றி ஏதோ ஏளனமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று மட்டும் தெரிந்து கொண்டாள்.

எப்படியாவது அவளுக்கு எதிர் வீட்டுக்குப் போய் அந்த மாமியுடன் பேசிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டுக்குப் போனாள். வாசல் கதவருகில் போய் நின்றுகொண்டு கதவைத் தட்டலாமா என்று யோசித்தாள். மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது. இரண்டு தடவை மெதுவாகத் தட்டினாள். உள்ளே யிருந்து அவள் வந்தாள். வந்தவள் முத்துப் போன்ற தன் பற்களைக் காட்டிச் சிரித்து விட்டு குழந்தை பத்மாவின் கன்னத்தைக் கிள்ளி, "உள்ளே வா !'' என்று அன்போடு அழைத்தாள். பத்மாவுக்கு லஜ்ஜை வந்து முகத்தைக் கவ்விக் கொண்டது. அந்த மாமியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. திரும்பி ஓட்டமாய் ஓடியே வந்து விட்டாள். அப்புறம் இரண்டு மூன்று தடவை அடுத்தடுத்துப் போனாள். அவளும் பத்மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பார்த்தாள். பத்மா வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது குழந்தையிடம் ஏதாவது திண்பண்டம் கொடுத்தனுப்புவாள். அதையெல்லாம் பத்மா பாதி வழியிலேயே தீர்த்து விட்டு வந்து விடுவாள். வீட்டுக்கு எடுத்து வந்தால் அம்மா கோபிப்பாள் என்ற பயம்தான்.

பத்மாவுக்கு ஒரு நாள் அந்த [மாமி 'யைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலிருந்தது. அந்தக் கேள்வியை கேட்டே விட்டாள்.

"மாமி! உங்க அப்பா, அம்மா எங்கே? வரமாட்டாளா?'' –

”வருவாளே!''

"எப்ப வருவா?''

'' இன்றைக்குக் கூட வரலாம்.'' யாரிடமும் அதிகம் பேசாத அந்த யுவதிக்கு பத்மாவிடம் பேசுவதில் மட்டும் தனிப்பட்ட உற்சாகம் இருந்தது.

அந்த அதிசய வீடு ரயில்வே லயனுக்குச் சமீபம் இருந்ததால் ஒவ்வொரு நாளும் போட் மெயில். வரும்போது அதை உற்றுக் கவனிப்பாள் அந்த யுவதி. ''ரயிலில் யாரைப் பார்க்கிறீர்கள் மாமி?'' என்று பத்மா கேட்டால் "என் அப்பா அம்மா வருவாளா என்றுதான் பார்க்கிறேன் '' என்று பதில் கூறுவாள்.

அம்மாவுக்குத் தெரியாமல் பத்மா எதிர் வீட்டுக்குப் போய் வருவதை அவளுடைய சகோதரிகள் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். பத்மாவின் மூலம் எதிர் வீட்டு விஷயங்களை கிரகிப்பதற்கு அது ஒத்தாசையா யிருந்ததால் அவர்கள் இதை அம்மாவிடம் சொல்லவில்லை. ஆறு மாத காலமாகியும், அந்த எதிர் வீட்டு யுவதியை அவளுடைய தாயாரோ தகப்பனாரோ யாருமே வந்து பார்க்கவில்லை. இதனால் அந்த யுவதியின் பேரிலிருந்த அவப் பெயர் ஊர்ஜிதமாகி, மேற்படி வதந்தி காற்று வாக்காகப் பரவ ஆரம்பித்தது.

அன்று வெள்ளிக்கிழமை. பத்மா அவர்கள் வீட்டுக்குப் போயிருந்த சமயம் கர்ப்பிணியா யிருந்த மாமிக்கு 'வலி' கண்டிருந்தது. துணைக்கு ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய புருஷனும் கிளப்புக்குச் சீட்டாடப் போயிருந்தான். பத்மா ஒன்றும் புரியாதவளாய் சிறிது நேரம் தவித்து விட்டு, பிறகு தெருக் கோடியிலிருந்த கிளப்புக்கு ஓட்டமும் நடையுமாய்ப் போய் அவனிடம் விஷயத்தைக் கூறினாள். சீட்டை அப்படியே போட்டு விட்டு எழுந்து வந்த அவன் கையோடு ஒரு நர்ஸைக் கூட்டிக் கொண்டு வந்தான். சாயந்திரம் மாமிக்குப் 'பேபி' பிறந்த சேதி பத்மாவின் வீட்டுக்குத்தான் முதலில் எட்டியது. மறுநாள் யாருமே எதிர் பாராத விதமாய் மற்றொரு சம்பவம் நடந்தது. அது எதிர் வீட்டுக்கு. அந்தப் பெண்ணினுடைய தாயார், தகப்பனார் வந்திருந்தது தான். அதைக் கண்ட பத்மாவின் தாயாருக்கும் சகோதரிகளுக்கும் திகைப்பா யிருந்தது.

"ஏதோ மாதிரி சொல்லிக் கொண்டார்களே? பின் எப்படி இவர்கள் வந்தார்கள்?'' என்று யோசித்தார்கள். அன்று சாயந்திரமே இவர்களுடைய சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் எதிர் வீட்டுப் பெண்ணைப் பற்றிய வீண் வதந்திக்கும் ஒரு. முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

அந்தப் பெண்ணினுடைய தகப்பனார் பத்மாவின் தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவராம். பால் யத்தில் இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்களாம். பத்மாவின் தகப்பனார் அவருடைய தலையைக் கண்டு விட்டு, "அடேடே' என்று சொல்லிக் கொண்டே ஓடினார். போய் விசாரித்ததில் அந்தப் பெண் அவருடைய மூத்த பெண் என்றும், அவளுடைய புருஷன் ரேஸ் கோர்ஸில் 150 ரூபாய் சம்பளத்தில் வேலையிலிருப்பதாகவும், இத்தனை நாள் அவளுடைய தகப்பனாரும் தாயாரும் பூனாவில் இருந்த தங்கள் இரண்டாவது பெண் வீட்டிற்குப் போயிருந்ததாகவும், அந்தப் பூனா பெண்ணினுடைய பிரசவத்துக்கு ஒத்தாசையாயிருந்து விட்டு, பிரசவம் முடிந்து இப்போதுதான் மூத்த பெண்ணிடம் வந்ததாகவும் விவரம் தெரிந்தது. இந்தச் சங்கதிகள் அவ்வளவையும் பத்மாவின் தகப்பனார் தம் வீட்டுக்கு வந்து மனைவியிடமும் பெண்களிடமும் சாங்கோபாங்கமாய்க் கூறி முடித்தார்.

"அப்படியா!'' என்று எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர்.

" ஐயோ பாவம், வீணாகப் பழி சுமத்திக் கேலி செய்து கொண்டிருந்தோமே" என்றாள் ஒருவள்.

" அப்படியானால் இந்த வதந்தி. எப்படி வந்தது?'' என்று கேட்டாள் இன்னொருவள்.

" அம்மாதிரி வேறு யாராவது ஒரு பெண் இருந்திருக்கலாம். அந்தக் கதையை இவள் மீது யாராவது சுமத்தி யிருக்கலாம் " என்று கூறினார். தகப்பனார் .

”பின் ஏன் அவள் ஒருவரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே புகுந்து கொண்டிருந்தாள்? ஏன் வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை?'' என்று மற்றொரு சகோதரி இன்னொரு சந்தே கத்தை எழுப்பினாள்.

"அதுவா? அவளுடைய புருஷனுக்கு 'ரேள் கோர்ஸில் உத்தியோகமானதால் சென்னைக்கு ரேஸ் வந்ததும் அவனையும் இங்கு மாற்றி யிருந்தார்களாம். சென்னையில் வீடு கிடைப்பது துர்லபமா யிருந்ததால் இந்த வீட்டை அமர்த்திக் கொண்டானாம். ஆனால் இந்த வீட்டில் பேய் பிசாசு' என்று ஒரு வதந்தி பரவியிருந்ததால் அதைத் தன் மனைவியிடம் சொன்னால் எங்கே பயப்படுவாளோ என்று நினைத்தே அவளை யாரிடமும் பேசக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தானாம். அவள் யாரிடமாவது பேசினால் யாராவது வீட்டைப் பற்றி அவளிடம் பிரஸ்தாபிக்க நேரிடலாம். கர்ப்பிணி யான அவள் யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு அந்த வீட்டில் குடியிருக்கப் பயப் படலாம். வீடு கிடைப்பது அரிதாயிருக்கும் இந் நாளில் இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு எங்கு அவஸ்தைப்படுவது என்று எண்ணியே அப்படிக் கட்டுத் திட்டம் செய்து வேலைக்காரிகூட இல்லாமல் வைத்திருந்தானாம். அவனுக்கு இந்தப் பேய் பிசாசுகளில் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாதாம். அதனாலேயேதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டானாம். இதற்காகவே வேலைக்காரி செய்ய வேண்டிய வேலைகளை யெல்லாம் கூட தானே செய்து கொண்டிருந்தானாம்' என்று சந்தேகங்களைத் தெளியச் செய்தார் தகப்பனார்.

இதைக் கேட்டு பத்மாவின் தாயாரும், சகோதரிகளும் தங்களுடைய தவறான அபிப்ராயத்துக்காக மிகவும் வருத்தப்பட்டனர். வீணான வதந்தியை நம்பி அந்தக் களங்கமற்ற இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் மாசு கற்பித்த பெருங் குற்றத்தை நினைத்து உள்ளூர மனம் புழுங்கினார்கள். அடுத்த வாரமே அந்தத் தம்பதிகள் ரேஸ் கோர்ஸ்' முடிந்து ஊட்டிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அந்த வீட்டைப் பற்றிப் பரவியிருந்த வீண் வதந்தியும் அத்தோடு மறைந்தது. வேறு யாரோ புதுக் குடியும் வந்து விட்டனர்.
----------------

4. எதிர்பாராதது

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . " ’எனக்கென்னத்திற்கு நகை?' என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!

அவளுடைய தாயார் இறந்து மூன்று வருஷங்கள் ஆகின்றன. இப்போது அவளுக்கு வயது ஒன்பது. தகப்பனார் வேலைக்குப் போய் விட்டால் அவளுக்குத் துணையாக வீட்டில் யாருமே கிடையாது. அப்பா திரும்பி வரும் வரை அவள் தன்னந் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு வருஷம் சென்றதும் அப்பா மறுமணம் செய்து கொண்டார். சூடாமணி என்ற பதினெட்டு வயது இளம் பெண் ஒருத்தி அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வசீகரமான தோற்றம். எப்போதும் சிரித்த முகம் ; குளுமையான பேச்சு.

சூடாமணி வந்த பிறகு ஜயந்தியின் வாழக்கையில் புது உற்சாகம் பிறந்தது.

அவர்களிருவரும் ஒருவரை யொருவர் அன்பு டன் நேசிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட வாத்சல்யமானது வளர் பிறை போல் வளர்ந்து, தேய் பிறைபோல் தேயாமல், பூர்ண சந்திரிகையாகவே நின்று விட்டது. அவர்களிருவரையும் பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரிகளைப் போல் காணப்பட்டனர்.

அவர்களிருவருடைய அந்நியோன்ய வாழ்க்கையைக் கண்ட ஜயந்தியின் தகப்பனார் தம்முடைய துக்கத்தையும் ஏழ்மையையும் மறந்தார்.

ஜயந்தியின் குதூகலம் நிறைந்த வாழ்க்கை யில் மறுபடியும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது.

இரண்டொரு வருஷங்களுக் கெல்லாம் சூடாமணி கர்ப்பிணியானாள். பத்தாவது மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்த அவள் தன்னுடைய கண்களை சாசுவதமாக மூடிக்கொண்டாள். அவள் தன்னுடைய அந்திய காலத்தில் ''ஜயந்தி! இந்தக் குழந்தையை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். நீதான் இவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவளை நான் எப்படி அன்புடன் வளர்ப் பேனோ அதே மாதிரி வளர்க்க வேண்டும். இவளுக் குச் சூடாமணி என்றே பெயர் வைத்து விடு. அப் போது தான் உனக்கு என்னுடைய ஞாபகமும் இருந்து கொண்டிருக்கும்" என்று கூறின போது ஜயந்தியின் கன்னத்தில் கண்ணீர் பெருகியது.
# #

சில தினங்களுக் கெல்லாம் அடுத்த வீட்டுக்கு வாசுதேவன் என்று ஒரு பையன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட் டான். ஜயந்தியின் அடுத்த வீட்டில் தான் - அவனுடைய மாமா வசித்து வந்தார். வாசுதேவனுடைய மாமா தமக்குக் குழந்தைகள் இல்லாத குறையை வாசுதேவனை வளர்ப்பதன் மூலம் போக்கிக் கொண்டார்.

வாசுதேவன் அடிக்கொரு தடவை ஜயந்தியின் வீட்டுக்கு வந்து போனான். வந்து, சிறு குழந்தையான சூடிக்கு விளையாட்டுக் காட்டுவான் ; தொட் டிலில் போட்டு ஆட்டுவான். கையில் எடுத்துக் கொஞ்சுவான்.

ஜயந்தியின் தகப்பனாருக்கு அந்தப் பையனிடம் தனிப்பட்ட அன்பு இருந்தது. "ஐயோ பாவம்! தாயில்லாப் பையன் '' என்று அந்தப் பையன் மீது கருணை காட்டுவார்.

வாசுதேவனுக்குப் பதினைந்து வயதானதும் அவனுடைய மாமா அவனை டாக்டர் படிப்புக்காக வெளியூருக்கு அனுப்பிவிட்டார். எனவே அதற்குப் பிறகு அவனால் ஜயந்தியை அடிக்கடி பார்க்க முடிய வில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவான். மறு நாளே திரும்பிப் போய் விடுவான். இப்படி இரண்டு மூன்று வருஷங்கள் கழிந்தன.

வரவர வாசுதேவனுடைய நடையுடை பாவனை சுளில் மாறுதல் காணப்பட்டது.

ஜயந்தியும் திடீரென்று தோற்றத்தில் வெகுவாக மாறிப்போயிருந்தாள். வாசுதேவன் ஒரு நாள் அவளை அகஸ்மாத்தாகக் கண்டபோது யாரோ ஒரு புதிய ஸ்திரீயைக் காண்பதாகவே நினைத்தான்.

"ஜயந்தி! என்ன இது, உன்னை அடையாளமே தெரியவில்லையே? இப்படி ஒரேயடியாய் மாறி விட்டாயே !" என்று கேட்டான்.

ஜயந்தி தனக்கே உரித்தான விசேஷப் புன்னகையுடன், தலை குனிந்து கொண்டாள். மறுபடியும் அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தபோது வாசுதேவன் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் மறு படியும் சந்திப்பதற்குள் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகள் கழிந்து விட்டன.

வாசுதேவன் தன்னுடைய டாக்டர் படிப்பு முடிந்ததும் கராச்சியில் யுத்த இலாகாவில் உத்தி யோகம் செய்து கொண்டிருந்தான்.
# #

ஜயந்தியின் உதவி அவளுடைய தகப்பனாருக்கு அத்தியாவசியமாயிருந்தது. ஜயந்தியோ அவள் தகப்பனாரோ அவளுடைய விவாகத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவும் இல்லை; கவலைப் படவும் இல்லை. குடும்பத்தின் பிற்கால வாழ்க்கையைக் குறித்தும் யோசிக்கவில்லை.

சின்னஞ் சிறு சூடியும் கவலையற்று விளையா டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் தாயாரின் கண்களைப் போலவே அழகாயிருந்தன. ஜயந்தியின் தகப்பனார். குழந்தை சூடியைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைந்தார்.

இந்த இன்பத்தில் தம்முடைய துக்கத்தை மறந்தார். தமக்குக் கடவுள் அளித்திருக்கும் இந்தச் சின்னஞ் சிறு செல்வமே போதும் என்று எண்ணித் திருப்தி அடைந்தார்.

ஜயந்தி மட்டும் அடிக்கடி வாசுதேவனை அந்த ரங்கத்தில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கடைசியில் ஒரு நாள் வாசுதேவன் வந்தான். வந்தவன் ஓரிரு தினங்களுக் கெல்லாம் திரும்பிப் போக வேண்டும் என்று கூறினான். இதைக் கேட் டதும் ஜயந்திக்குக் கோபம் கோபமாய் வந்தது.
# #

வஸந்த காலத்தின் சௌந்தர்யத்தினால் பூமாதேவி புது அலங்காரம் பெற்று விளங்கினாள். பசும்புல் நிறைந்த தரைகளில் அங்கங்கே பூத்திருந்த சிறு சிறு வெண்ணிறப் பூக்கள் நீல வானத்தில் ஒளிரும் நக்ஷத்திரங்களைப் போல் காட்சி அளித்தன.

திடீரென்று ஒரு நாள் மறுபடியும் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி வாசுதேவன் வந்து சேர்ந்தான். அப்போது ஜயந்தியின் கோபமெல்லாம் இன்ப வேதனையாக மாறியது.
வாசுதேவன் சிறிது நேரத்திற் கெல்லாம் ஜயந்தியைப் பார்ப்பதற்காக ஆவலோடு வந்தான்.

ஜயந்தியினுடைய தோற்றத்தில் முன்னைவிட அதிக வித்தியாசம் காணப்பட்டது.
ஜயந்தி, அவளுடைய தகப்பனார், வாசுதேவன் மூவரும் சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த சமயம் வெளியே சென்றிருந்த சூடி உள்ளே ஓடி வந்தாள்.

வாசுதேவனைக் கண்ட சூடாமணி ஒரு கணம் செயலற்று நின்றாள். வாசுதேவன் அவளை ஆவலுடன் நோக்கினான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்த வண்ணம் உள்ளே சென்று விட்டாள்.

சூடாமணியின் மீது ஜயந்திக்குச் சிறிது சந்தேகம் தோன்றியது. சூடியின் அழகில் வாசுதேவன் மயங்கிப் போயிருக்கிறான் என்பதை வெகு சீக்கிரம் அறிந்து கொண்டாள் ஜயந்தி. வாசுதேவன் மீது என்றைக்கு மில்லாத கோபம் பொங்கி வந்தது. வாசுதேவனுக்கும் சூடிக்கும் சிநேகம் வளர்ந்து கொண்டே போயிற்று. இதுவரை வாசுதேவன் தன் மீது வைத்திருந்த அன்பெல்லாம் வெறும் பாசாங்குதானா ? வாசுதேவனுக்காகத்தான் இத் தனை காலம் காத்திருந்ததெல்லாம் வீண் தானா? தன்னை விட சூடாமணி எந்த விதத்தில் அழகி?

ஜயந்தியின் இருதயத்தில் பெரிய கொந்த ளிப்பு ஏற்பட்டது. கள்ளங் கபடமற்ற சூடாமணி ஒரு நாள் ஜயந்தியின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டுவிட்டு "அம்மா ! ஏன் உன்னுடைய கண்கள் இத்தனை சிவப்பா யிருக்கின்றன?'' என்று கவலை யுடன் கேட்டாள்.

ஜயந்தி ஏதோ பதில் கூறி மழுப்பி விட்டாள். சூடாமணி. இதை உண்மை யென்று நம்பினாள்.

வாசுதேவன் உண்மையில் யாரை அதிகமாக நேசிக்கிறான் என்பதை ஒருவராலும் ஊகித்தறிய முடியவில்லை.

கடைசியில் ஜயந்தியின் குழப்பம் ஒருவாறு தீர்ந்தது. அவளுடைய சிற்றன்னை இறக்கும் சமயம் குழந்தையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அவளுடைய இருதயத்தில் எதிரொலி செய்தன.

"ஜயந்தி, இந்தக் குழந்தையை நான் எத்தனை அன்பாக வளர்ப்பேனே, அவ்வாறே நீயும் காப்பாற்ற வேண்டும்.''

ஜயந்திக்கு இந்த வார்த்தைகள் ஞாபகம் வந்ததும் சூடியின் மீதிருந்த கோபமும் வருத்தமும் மறைந்து அன்பும் ஆசையும் தோன்றின.

அதே சமயத்தில் உள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சூடாமணி தன்னுடைய தவறான செய்கையைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் தாயைப் போல் இருந்து வரும் ஜயந்தியின் மீது அவளுக்கு அளவிலாத அனுதாபமும் வாஞ்சையும் ஏற்பட்டது. அவளுடைய விருப்பத்துக்கு மாறாகத்தான் வாசுதேவனுடன் பழகு வதை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

உடனே, வாசுதேவனிடம் சென்றாள். சூடாமணியைக் கண்டதும் அவன் "எங்கே வந்தாய்?'' என்று கேட்டான்.

சூடாமணி தான் வந்த விவரத்தைச் சொல்லி தன்னை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று வாசுதேவனை வேண்டிக் கொண்டாள்.

"மறந்து விட்டு என்ன செய்ய வேண்டும் ?" என்று கேட்டான் வாசுதேவன்.

"ஜயந்தியை மணந்து கொள்ள வேண்டும் '' என்றாள் சூடி.

"உன்னை மறப்பது; ஜயந்தியை மணப்பது; இரண்டுமே நடக்காத காரியம் !" என்றான் வாசுதேவன். சூடாமணி பதில் பேசத் தெரியாமல் திகைத்தாள்.

அவள் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்துக் கெல்லாம் வாசுதேவனைத் தேடி ஜயந்தி வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் என்றைக்கும் இல் லாத சோகம் குடி கொண்டிருந்தது. வாசுதேவன் ஜயந்தியைக் கண்டதும் 'நீ வந்திருக்கிற காரியம் எனக்குத் தெரியும்'' என்றான்.

ஜயந்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்ன தெரியும்?'' என்று கேட்டாள்.

"உன்னை மறந்துவிட்டு சூடாமணியை மணக்க வேண்டும் என்று கேட்கத்தானே வந்திருக்கிறாய்?'' என்று கேட்டான்.

தன் மனதிலுள்ளதை வாசுதேவன் எப்படியோ அறிந்து கொண்டது அவளுக்கு ஆச்சரியத் திலும் ஆச்சரியமாயிருந்தது.

"ஆமாம்; அதற்காகவேதான் வந்தேன். என் பேச்சைத் தட்டக் கூடாது!'' என்றாள் ஜயந்தி.

" அது முடியாத காரியம் ; உன்னை மறப்பதோ சூடியை மணப்பதோ இரண்டுமே என்னால் ஆகாத காரியம்" என்றான்.
# #

சில தினங்கள் சென்றதும் வாசுதேவனுடைய இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. வாசு தேவன் அவர்களிரண்டு பேரையும் மணக்கவில்லை; மறக்கவுமில்லை. அவன் அவர்களிருவர் மீதும் வைத் திருந்த அன்பு என்றென்றைக்கும் மறக்க முடியாத சகோதர அன்பாகும். அந்த அன்புக்குப் பங்கம் வராமல் அவன் தன்னுடைய மாமா நிச்சயம் செய்து வைத்த வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டான்.
-----------------

5. ரகசியக் கடிதம்

டாக்டர் அருங்குணம் வைத்தியத் தொழிலில் ஈடுபட்டு முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட் டன.

அருங்குணம் இதற்குள்ளாக எவ்வளவோ கேஸுகளைப் பார்த்திருக்கிறார். எத்தனையோ வியாதியஸ்தர்களைக் கண்டிருக்கிறார். எத்தனையோ புதுப்புது வியாதிகளுக்கு மருந்து கொடுத்திருக்கிறார். எத்தனையோ பேர்களை மோட்ச லோகத்துக்கும் அனுப்பி யிருக்கிறார்! ஆனாலும் அன்று காலையில் வந்த அதிசயமான கேஸைப்போல் அவர் முன்பின் கண்டதில்லை. அருங்குணம் அன்று படுக்கையை விட்டு எழுந்திருக்கு முன்பே யாரோ வாசலில் கதவைத் ’தடார், தடீர்' என்று தட்டும் சத்தம் கேட்டது. வேறொரு டாக்டராயிருந்தால் அப்படிக் கதவைத் தட்டியவருடைய மண்டையைப் பிளந்து உடனே கட்டுப் போட்டும் அனுப்பியிருப்பார். ஆனால் அருங்குணத்தின் அருமையான குணங்களில் பொறுமைக் குணம் தலை தூக்கி நின்றது. நிதானமாக எழுந்து போய் வாசல் கதவைத் திறந்தார். வெளியே ஒரு இளம் வாலிபன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்திலே பரபரப்பும் பீதியும் காணப்பட்டன. பார்த்தால் வியாதிக்காரனைப் போல் தோன்றவில்லை. ஆனால் முழங்கை வரை கட்டுப் போட்டுக் கழுத்திலே சேர்த்துக் கட்டி வைத்திருந்தான்.

பார்வைக்கு லட்சணமாயும் பெருந்தன்மையாகவும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையைப் போலும் காணப்பட்டான்.

"யாரப்பா நீ?" என்று கேட்டார் டாக்டர்.

"டாக்டர்! இதோ பாருங்கள் ! என் ஊர் பேர் முதலிய விவரங்களைச் சொல்லுவதற்கு முன்னால் என் வியாதியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அதற்குச் சிகிச்சை செய்த பிறகு என் விவரங்களைச் சாவகாசமாகச் சொல்லிக் கொள்ளலாம். இந்த வலது கையிலே மணிக்கட்டுக்கு மேல் எப்போதும் நெருப்பு மாதிரி எரிகிறது. ஆனால் அது என்ன வியாதி என்று மட்டும் தெரியவில்லை. தூங்கி ஒரு வாரம் ஆகிறது; அவஸ்தை பிராணாவஸ்தையா யிருக்கிறது. நிமிஷத்துக்கு நிமிஷம் வலி அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் ஆபரேஷன் செய்யாவிட்டால் என் பாடு ஆபத்தாய் முடியும். தாங்கள் தயவு செய்து உடனே இதைக் கவனிக்க வேண் டும்" என்று பதறினான் வாலிபன்.

டாக்டர் சற்றுத் தயங்கிவிட்டு வாலிபன் கையிலிருந்த கட்டை அவிழ்க்கலானார்.

"டாக்டர் ஸார்! கட்டைப் பிரித்தீர்களானால் ஆச்சரியமாயிருக்கும். காயம் ஒன்றும் கண்ணுக்குப் புலப்படாது'' என்று கூறினான் வாலிபன்.

கட்டைப் பிரித்துப் பார்த்தபோது வாலிபன் சொன்னபடி காயம், அடி ஒன்றையுமே காணோம். "எங்கே வலிக்கிறது?'' என்று கேட்டார் டாக்டர்.

"மணிக்கட்டுக்கு மேலே!'' என்று சொல்லி இடது கை ஆள் காட்டி விரலால் வலிக்கும் இடத் தைச் சுட்டிக் காட்டினான்.

டாக்டர் அழுத்திப் பார்த்தார். வாலிபன் "ஐயோ!" என்று அலறினான்.

"ஒன்றும் தெரியவில்லையே; இடது கையைப் போலத்தானே இருக்கிறது? நரம்பிலும் கோளாறு இல்லை'' என்று சொல்லிவிட்டு 'டெம்பரேச’ரைப் பார்த்தார். 'நார்மலி’ல் தான் இருந்தது.

ஆனால், வாலிபன் மட்டும் துடித்துக் கொண்டிருந்தான்.

அருங்குணம், பையனுக்கு மூளைக் கோளாறு ஏதாவது இருக்குமோ என்று சந்தேகித்தார்.

இதற்குள் வாலிபன் , "ஸார்! என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணாதீர்கள். என்னால் வாஸ்தவமாகவே வலியைப் பொறுக்க முடியவில்லை. எனக்கு வலி இருப்பது உண்மைதான். சட்டென்று ஆபரேஷன் செய்துவிடுங்கள் டாக்டர்!'' என்று பல்லைக் கடித்துக் கொண்டு குமுறினான்.

"வியாதி இன்னதென்று பிடிபடாமல் ஆபரேஷன் செய்தால் என்னை யாராவது பைத்தியம் " என்று சொல்லுவார்கள்; தயவு செய்து தாங்கள் போய் வாருங்கள்!'' என்று கூறினார் டாக்டர்.

வாலிபன் சட்டைப் பையிலிருந்து பச்சை நோட்டுகளாக ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.

அவன் அந்த இடத்தை விட்டுப் போவதாயிருந்தால் டாக்டரே அவனுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். வாலிபன் விடுவதாயில்லை. அருங்குணம் வேறு வழியின்றி அவன் சொன்ன இடத்தில் ஆபரேஷன் செய்து முடித்தார்.

''இப்போது வலி எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார்.

வாலிபன் போன உயிர் திரும்பி வந்ததுபோல் முகமலர்ச்சியுடன், "வலி அடியோடு போய்விட்டது, டாக்டர்!" என்றான். டாக்டரால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி அபூர்வக் கேஸை அவர் தமது ஆயுளில் பார்த்ததில்லை.

ஒரு வாரம் சென்றது. மறுபடியும் அந்த வாலிபன் டாக்டரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தான்.

"இப்போது எப்படி இருக்கிறது. வலி?'' என்று கேட்டார் டாக்டர்.

"மறுபடியும் அதே இடத்தில் முன்னைவிட அதிகமாய் வலிக்கிறது. எனவே, இப்போது தாங்கள் செய்ய வேண்டியது இன்னொரு ஆபரேஷன் தான். முன் தடவை மேலோடு செய்து விட்டீர்கள். அதனால் தான் வலி புனர்ஜன்மம் எடுத்து விட்டது. இந்தத் தடவை ஆழச் செய்து விடுங்கள். குணமாகி விடும்" என்றான்.

வியாதியஸ்தனே தனக்கு ஆபரேஷன் செய்யும் முறை சொல்லிக் கொடுப்பது அருங்குணத் துக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை. இருந்தாலும் கோபம் கொள்ளாமல் 'ஆகட்டும்' என்று சொல்லி இரண்டாம் முறையாக ஆபரேஷன் செய்து அனுப்பினார்.

டாக்டரிடம் இந்தத் தடவை வாலிபன் விடை பெற்றுக்கொண்டு போகும் போது சந்தோஷமாகச் செல்ல வில்லை; அவன் முகத்திலே ஆழ்ந்த சோகம் காணப்பட்டது.
டாக்டர் இந்த அபூர்வ அதிசய வியாதியைப் பற்றிப் பல டாக்டர்களிடம் பிரஸ்தாபித்து விவரம் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் சொன்னார்கள். ஆனால், ஒருவராலும் நிச்சய மாக இன்னதென்று நிர்ணயித்துக் கூற முடிய வில்லை. அந்த விதத்தில் அருங்குணத்துக்குத் திருப்தி தான். தன்னைவிட எந்த டாக்டரும் கெட்டிக்காரன் அல்ல என்று ஏற்பட்டதல்லவா?

ஒரு மாதம் சென்றது; வாலிபன் திரும்பி வரவில்லை. பல மாதங்கள் கழிந்தன; வாலிபன் வரவே யில்லை. ஆனால், ஒரு நாள் அவனுக்குப் பதிலாக அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

சுவரின் மீது 'ரகசியம்' என்று சிவப்பு மசியில் எழுதியிருந்தது. அருங்குணம் கவரைப் பிரித்துப் படித்தார். அந்த ரகசியக் கடிதம் வருமாறு:

அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,
இந்தக் கடிதம் ரொம்பவும் ரகசியமானது. இதை நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் நம் இரண்டு பேருடைய கவலையும் தீரவேண்டும் என்பது தான். என் நூதன வியாதியின் மூலகாரணத்தைத் தாங்கள் தெரிந்து கொண்டால் தங்களுடைய கவலை தீர்ந்து போகும். இரண்டாவதாக வெகு காலமாக என்னுடைய ஹிருதய அந்தரங்கத்தில் அமுங்கிக் கிடந்த ஓர் இரசியத்தை யாரிடமாவது வெளிப் படுத்தவில்லை என்றால் என் மண்டை வெடித்து விடும் போல் தோன்றுகிறது. ஆகையால் தங்களிடமே அதைச் சொல்லி விடுகிறேன்.

ஆறு மாதத்துக்கு முன்னால் நான் ரொம்பவும் குதூகலமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். என்னை விட உற்சாக புருஷனைத் தாங்கள் அப்போது கண்டிருக்க முடியாது. செல்வத்தில் பிறந்தவனாதலால் எனக்கு எந்தவிதமான குறையும் இருக்க வில்லை. ஒரு வருஷத்துக்கு முன்னால் எனக்குக் கலியாணம் ஆயிற்று. அது காதல் மணம். மெடிகல் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்ணை நான் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டேன். காதல் என்றால் பரஸ்பரக் காதல் தான். அவளுடன் மற்றொரு பெண்ணும் காலேஜில் வாசித்துக் கொண் டிருந்தாள். இவளும் அவளும் அத்யந்த சிநேகம் பூண்டு இணை பிரியாமல் இருந்து வந்தார்கள். காலேஜுக்குப் போகும்போதும் வரும்போதும் இருவரும் சேர்ந்து தான் போவார்கள் ; வருவார்கள். நான் அவளைக் கலியாணம் செய்து கொண்ட பிறகும்' கூட அவர்களுடைய சிநேகம் குறையவில்லை.

ஆறு மாத காலம் எங்களுடைய வாழ்க்கை மிகவும் இன்பகரமாக நடந்தது. அந்த இன்பம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சமய சந்தர்ப்ப மறிந்து பிரியமான வார்த்தைகள் பேசி மேலும் மேலும் வாழ்க்கைக்கு மெருகு கொடுத்தாள். அவளுடைய குணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. கள்ளங் கபடமற்ற இளங் குழந்தை உள்ளம் படைத்தவளாயிருந்தாள். எனக்காக உயிர்த் தியாகமும் செய்யச் சித்தமா யிருந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர் யாரும் கிடையாது. இந்தப் பரந்த உலகத்தில் காலேஜில் வாசிக்கும் அவளுடைய தோழியும் நானும் தான் அவளுக்குக் கதி.

நிஷ்கபடமான அவளிடம் சந்தேகத்துக்குரிய ஒரு விஷயமும் இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை ; அடிக்கடி அவள் தன் பெட்டிக்குள்ளே எதையோ வைப்பதும், பிறகு அதைப் பத்திரமாகப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொள்ளுவதும் தான் அது. எனக்கு இது மிகவும் ஆச்சரியமா யிருந்தது. '' அப்படி என்னதான் இரகசிய மிருக்கும்?'' என்று அறிந்து கொள்ள என் மனம் துடித்தது.

ஒரு நாள் அவள் தன் சிநேகிதியைப் பார்க்கச் சென்றிருந்த போது வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு அந்தப் பெட்டியைத் திறக்கப் பல மாறு சாவிகள் போட்டுப் பார்த்தேன். பெட்டி திறந்து கொண்டது. துணிமணிகளுக் கெல்லாம் கீழே பரப்பப்பட்டிருந்த காகிதத்துக்கும் அடியில் அந்த இரகசியும் அகப்பட்டது. பத்துப் பதினைந்து கடிதங்களை ஒரு உறையில் போட்டு ரிப்பன் ஒன்றினால் கட்டி வைத்திருந்தது. அவற்றைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தோரணையில் ஆரம்பித்திருந்தது. எல்லாம் காதல் கடிதங்கள் ! இரகசியக் கடிதங்கள் ! ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வரும்போது என் இருதயம் விம்மி வெடித்து விடும் போல் இருந்தது. தலையிலே யாரோ நெருப்பை அள்ளிப் போடுவது போலும் இருந்தது. எல்லாவற்றையும் படித்து முடித்ததும் அப்படியே பத்திரமாகக் கட்டிப் பழையபடியே வைத்துப் பூட்டி விட்டேன். சாயந்திரம் அவள் திரும்பி வந்தாள்.

என் இருதயத்திலே. பொங்கிக் கொண்டிருந்த கோபம் கட்டுங் கடங்காமல் - நெருப் பத்தணலாக மாறி. வெளியே வந்து விடும்போல் இருக்குது. அவ்வளவையும் அடக்கிக் கொண்டேன். அந்தக் கப்படக்காரி, மோசக்காரி ஒன்றுமே அறியாதவள் போல் பச்சைக் குழந்தை மாதிரி கொஞ்சிப் பேசினாள். நானும் என் அந்தரங்கத்தில் குமுறிக் கொண்டிருந்த புயலை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரவு சாப்பிட்டு முடிந்ததும் ஏதோ படிப்பதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். அவள் படுக்கையில் வந்து படுத்துக் கண்ணயர்ந்தாள். எங்கிருந்தோ வந்த தைரியத்தையும் வலிவையும் உபயோகித்து அவள் மென்னியைப் பிடித்து அப்படியே திருகி விட்டேன். அப்போது கூட அவள் வாயைத் திறக்கவில்லை. என்னைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் அவளுடைய ஜீவன் போய்விட்டது. அவளுடைய தேகத்திலிருந்து தெறித்த ஒரு துளி இரத்தம் என் தை மீது விழுந்தது. இது நடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அவளுக்கு உற்றார் உறவினர் ஒருவருமே கிடையாதாகையால் அவள் மரணத்தைப் பற்றி யாருமே கவலை கொள்ளவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த சமயம் அவளுடைய தோழி ஊருக்குப் போயிருந்தாள். ஆறு மாதம் கழித்துச் சமீபத்தில் தான் திரும்பி வந்தாள். என் மனைவி ஏதோ வியாதி காரணமாக இறந்து போனதாக அவளிடம் கூறி விட்டேன். அவள் அடைந்த வருத்தம் கொஞ்ச நஞ்சமில்லை. சிறிது நேரம் அழுது புலம்பிய பிறகு ஒரு அதிர் வெடியைத் தூக்கி என் தலை மீது போட்டாள்.

''தங்களிடம் ஒரு ரகசியம் கூற வேண்டும்" என்று ஆரம்பித்தாள் . " என்ன?' என்று ஆவலுடன் கேட்டேன்.

"தங்கள் மனைவியிடம் நான் சில இரகசியக் கடிதங்களைக் கொடுத்து அவளைப் பத்திரமாக வைத்திருக்கும்படிச் சொல்லியிருந்தேன். அவள் என் அந்தரங்கத் தோழியானதால் அவளிடம் கொடுத்து வைத்தேன். அதெல்லாம் எனக்கு வந்த காதல் கடிதங்கள். என் புருஷனுக்குத் தெரிந்தால் விபரீதமாக முடியும் என்று நினைத்து அவளிடம் கொடுத்து வைத்தேன். அவற்றைத் தயவு செய்து என்னிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்" என்றாள்.

என் தலை பம்பரத்தைப் போல் சுழன்றது. இத்தகைய ஒரு பேரிடி என் தலையில் விழும் என்று நான் சொப்பனத்திலும் கருதவில்லை.

டாக்டர் ! அன்று முதல் நான் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்ச மல்ல.

இந்த விஷயத்தை என் மனைவியின் சிநேகிதியிடமிருந்து கேள்விப்பட்டது முதல் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாயிற்று. என் மனைவியின் தேகத்திலிருந்து தெறித்த ஒரு துளி ரத்தம், என் கை மீது பட்டதென்று சொன்னேனல்லவா? அந்த ரத்தத் துளிபட்ட இடத்தில் தான் வலி தாங்காமல் பிராணாவஸ்தைப் படுகிறேன். இதுதான் என்னுடைய வியா திக்கு மூலகாரணம். உண்மையில் இந்த வியாதி இன்னும் சொஸ்த மாகவில்லை. இது ஆபரேஷனுக்குச் சொஸ்தமாகக் கூடிய வியாதியுமில்லை. மனப் பிராக்தியின் காரணமாக நீடித்து நிலைத்து விட்ட அபூர்வ வியாதி இது. இதைப் பற்றி வர்ணிக்க என்னால் இயலவில்லை. சில சமயம் சில பேருக்கு நெற்றிக் கண் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு புருவங்களுக்கு மிடையே ஒரு விசித்திரமான வேதனை தோன்றும். அந்த இடத்தில் ஏதோ செய்யும். இதை வியாதி என்று சொல்ல முடியுமா? அந்த மாதிரி ஒரு விசித்திரமான, இனம் கண்டு பிடிக்க இயலாத வியாதிதான் என்னுடையதும். டாக்டர்! எனக்கு நானே அறியாமையினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படுத்திக் கொண்ட இந்த அவஸ்தைக்குப் பரிகாரம் உண்டு. அது, ஒன்றுமறியாத அந்த இளம் பெண் இருக்குமிடத்தை நானும் அடைவது தான். அங்கே போய் அவளிடம் மன்னிப்புக் கேட் டுக் கொள்வதுதான். அதற்குப் பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும். வியாதியும் சொஸ்தமாகும். ஆத்மாவும் சாந்தியடையும். டாக்டர்! தாங்கள் செய்த உதவிக்கு ரொம்ப ரொம்ப வந்தனங்கள். விடை பெற்றுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
..............
-------------------------


This file was last updated on 29 Oct 2020.
Feel free to send the corrections to the webmaster.