pm logo

சிவகாமியின் செல்வன்
சாவி (எஸ். விஸ்வநாதன்)
(காமராஜரின் அரசியல் வாழ்க்கை)

civakAmiyin celvan
by cAvi (S. Viswanathan)
(essays - political history of Kamaraj)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவகாமியின் செல்வன்
(காமராஜரின் அரசியல் வாழ்க்கை)
சாவி (எஸ். விஸ்வநாதன்)

Source:
சாவி (எஸ். விஸ்வநாதன்)
(சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை )
மோனா பப்ளிகேஷன்ஸ்
ஏ. ஐ. 113, இரண்டாவது தெரு, அண்ணா நகர், சென்னை - 600040.
நான்காம் பதிப்பு ஜனவரி 1990
விலை ரூபாய் 16-00
அச்சிட்டோர் : திருமலை ஆப்செட் பிரிண்டர்ஸ் சென்னை - 29.
-------------

அத்தியாயம் 1

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் டில்லிக்குப் போயிருந்த போது காமராஜ் டில்லியில் முகாம்" போட்டிருந்தார். அவரைப் பற்றி வேறொரு வாரப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கியிருந்தேன். காமராஜ் அச்சமயம் முதலமைச்சர் பதவியில் இல்லை. ஆனால் "காமராஜ் திட்டம்" காரணமாக நேருஜி , லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது.

டி.டி.கே. அதுல்ய கோஷ், எஸ். கே. பாட்டீல் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.

டி.டி. கே. இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுலய கோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. காமராஜ் கர்ம வீரர் என்றும், தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்ராஸ் ஸ்டேட் ரொம்ப காமராஜ்யமா யிருக்கிறதென்றும் அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

டில்லியில் காமராஜின் - அன்றாட அலுவல்களைப் போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன். நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர். காமராஜ் போகும் இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றி நானும், நடராஜனும் போய்க் கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில் காமராஜின் "வலது கரம்" என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும், கூடவே எங்களையும் அழைத்திருந்தார். அன்று நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் போது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது.

அன்று காலை ஒன்பது மணிக்கு நேரு வீட்டில் காமராஜ் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது. காமராஜுக்கு அது தெரியாது. கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத்திருந்தார்கள். அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று நேரு வீட்டிலிருந்து ராஜகோபாலனை இந்திரா காந்தி டெலிபோனில் அழைத்து, "காமராஜ் அங்கே இருக்கிறாரா? ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கிறதே! இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள். நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்கிறாரே!" என்றார்.

ராஜகோபாலன் இந்தச் செய்தியைக் காமராஜிடம் சொன்ன போது அவர் பதறிப் போனார். "நேற்று என்னிடம் பத்தரை மணிக்குக் கூட்டம் என்றுதானே சொன்னார்கள். ஒன்பது மணிக்கு மாற்றிய செய்தி எனக்குத் தெரியாதே? சரி சரி, வண்டியை எடுக்கச் சொல்லு!" என்று வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தார்.

"நேருஜியையும், மற்றவர்களையும் வீணாகக் காக்க வைத்து விட்டோமே! தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக் கொள்வாரோ?" என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன.

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை. ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமராஜைக் காரில் ஏற்றி விட்டார்.

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை. காமராஜுடன் போக வேண்டியதுதானா, இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம். காமராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல்லாம் தீன்மூர்த்தி பவனிலேயே இருந்தது.

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயிருந்தன. பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை.

கார் போய்க் கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகளையெல் லாம் மூடிக் கொண்டோம். நடராஜன் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நானும், காமராஜும் பின் சீட்டில் உட் கார்ந்தோம். ஒரே மௌனம்.

ஏற்கனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண் டிருந்தது.

இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில் ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது. நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சங்கூடப் பொருத்த மில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக்குள் ஏறிவிட்டோம். கொட்டுகிற மழையில் எங்களை நடு ரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை. நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாத நிலை.

இதுதான் அவருக்குக் கோபம்.

திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார்.

"உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? இப்போது எதற்குக் காரில் ஏறினாய்? காமிராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?"

நாங்கள் நடுநடுங்கிப் போனோம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜை இப்படி ஒரு எக்கச்சக்கமான நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன். கார் போய்க் கொண்டே இருந்தது. சட்டென்று காமராஜ், "அதோ , அதோ நிறுத்து!" என்றார். அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது. எங்களைக் கண நேரத்தில் அங்கே இறக்கிவிட்டு அந்த டாக்ஸியில் ஏறிக் கொள்ளும்படிச் சொன்னார்.

நடராஜனும், நானும் "தப்பினோம், பிழைத்தோம்" என்று பாய்ந்து ஓடி அதில் ஏறிக் கொண்டோம். நடராஜனுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம் போலிருக்கிறது. காமராஜ் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் என்னைத் திட்டினால் தான் எனக்குத் திருப்தி. அவரிடம் திட்டு வாங்குவதிலுள்ள மகிழ்ச்சி எனக்கு வேறு எதிலுமில்லை!" என்று ஜாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அன்று பகல் பன்னிரண்டரை மணிக்கு மொரார்ஜி தேசாய், ஜகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் வஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டிக் கூட்டம் ஒன்று இருந்தது. நானும், நடராஜனும் அங்கே போய்க் காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களிருவரையும் பார்த்து விட்டுச் சிரித்துக் கொண்டே, "என்ன இங்கே வந்திருக்கிறீர்களா? சரி. இங்கேயே உட்கார்ந்திருங்கள். இதோ வந்து விடுகிறேன்" என்று ரொம்ப சாந்தமாகச் சொல்லி விட்டுப் போனார்.

"இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப் பட்டையாக மாறியிருக்கிறார்?" என்று வியந்தேன் நான்.

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது. ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன்.

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தர்ம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கிய போது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடிலுள்ள இல்லத்தில் சந்தித்தேன்.

"என்ன... வாங்க... என்ன சங்கதி? சொல்லுங்க !" என்றார்.

"தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும்" என்றேன்.

" வேண்டாம். அது எதுக்கு?" என்று மொட்டையாகப் பதில் சொல்லி மறுத்து விட்டார்.

"தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும். காங்கிரசின் சரித்திரம் இருக்கும்" என்று வாதாடி, வற்புறுத்தினேன்.

"வேண்டுமானால் நீங்க பயாக்ரபியா எழுதுங்க. எனக்கு ஆட்சேபமில்லை" என்றார்.

"நான் எழுதுவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும். தங்களை அடிக்கடி வந்து தொந்தரவு செய்வேன்" என்றேன்.

"வாங்க..... வாங்க..." என்றார்.

"சொல்றீங்களா? " என்று கேட்டேன்.

"சொல்றேன்னேன்" என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப் பட்டுப் போய் விட்டார்!

நான் விடவில்லை : டில்லிக்குப் போய் அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவுமே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

"புவனேசுவர் காங்கிரசிற்குப் பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே. அதற்கு முன்னால் நேருஜியைத் தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா? நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னாரா?" என்று என் முதல் கேள்வியைத் தொடங்கினேன்.

"புவனேசுவருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ; சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது. நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான். மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட்டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது. அப்புறம் அவரால் விமான கூடத்துக்குக் காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது. அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலி காப்டரில் போய், அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானார். அதற்குப் பிறகு நானும், சாஸ்திரியும் விசாகப் பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட் டார். நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன்.

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். மந்திரி பதவியிலிருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னைக் கலந்தாலோசித்தார். அப்போது வேறு சில மந்திரிகளும் (காமராஜ் திட்டத்தின் கீழ் ) விலகியிருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது. நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன்.

"இந்திராவைப் பற்றிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" எனக் கூறி விட்டார். நேரு.

பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நேரு அப்போது சொன்னது என் மனத்திலேயே இருந்து கொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா காந்தி மந்திரியாக வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக்குமோ , என்னவோ? அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. நானாகவே அப்படி இருக்கலாமோ என்று ஊகித்துக் கொண்டேன்."

"நேரு இறக்கும் போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தீர்களா?"

"இல்லை. சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியிலிருந்து லால் பகதூர் சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள். எழுந்து போய்ப் பேசினேன். நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வரும்படி சாஸ்திரி என்னிடம் சொன்னார். நான் அடுத்த விமானத்தைப் பிடித்து டில்லிக்குப் பறந்தேன். போகும் போது விமானத்திலேயே பகல் இரண்டு மணிக்கு நேரு இறந்து விட்டார்" என்று செய்தி சொன்னார்கள். நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்குள்ளாகவே பிரஸிடண்ட் ராதாகிருஷ்ணன் நந்தாவைத் தாற்காலிகப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஜி. ராஜகோபாலனும், வேறு சில நண்பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள்.

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேச வில்லை. அப்புறந்தான் எல்லாத் தலைவர்களையும், மந்திரிகளையும், பார்லிமெண்ட் மெம்பர்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசினேன். என் மனத்தில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல வில்லை. தாம் பிரதமராக வரவேண்டுமென்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது. அவரிடமும் நான் பேசினேன். "எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டு மென்று சொல்கிறார்கள். ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது" என்றேன். அவர், இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு, என் பேச்சை ஒப்புக் கொண்டு விட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பது எளிதாயிற்று.

பார்லிமெண்டரி காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் இரண்டாம் தேதி. பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது. பார்லிமெண்ட் மெம்பர்கள், முதலமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும் தூதுவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள் அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்திருந்தார்கள்.

"நேருஜியைப் போன்ற ஒரு தலைவர் இனிக் கிடைப்பது அசாத்தியம். இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது. கூட்டாகப் பொறுப் பேற்று, கூட்டுத் தலைமையின் கீழ், கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும். கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். நேருஜி நமது மாபெருந் தலைவராயிருந்ததால், அவரிடமிருந்த நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள். இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள்" என்றேன்."

" சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியைப் பிரதமராக்கியதும் தாங்கள்தானே?" என்று கேட்டேன்.

"ஆமாம். நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்க மாட்டார்" என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன். அது ஒரு கதை ; அப்புறம் சொல்கிறேன்" என்றார்.
-------------
அத்தியாயம் 2


டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரேதமாக ஒரே தமாஷும் , வேடிக்கையுந்தான்!

சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, "ஹோ ஹோ" என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்குச் சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை. அந்தச் சிரிப்பிலே கேலி இருந்தது. ஐய, இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் இருந்தது

சிறிது நேரம் சிரித்து ஓய்ந்த பிறகு, அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவங்களும் சரியில்லையேன்னேன், எந்தச் சமயத்தில் எதைப் பேசுவது. எதைப் பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே? வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே!" என்று மீண்டும் சிரிக்கிறார்.

"ஜனசங்கம், சுதந்திரா இந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேரும் முயற்சிக்கு என்ன தடங்கல்?" என்று நான் கேட்ட போது. "நான் என்ன செய்யட்டும்? குஜராத்தும், மைசூரும் ஒத்துவர மாட்டேங்குதே? அவங்க ஊர்ப் பிரச்னை அவங்களுக்கு. அவசரப்பட்டாலும் சில - காரியங்கள் கெட்டுப் போகுமே!

எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித் தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக் கூடாதேங்கறதுதான்.

"சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க. அப்படின்னா அது ஆபத்தில்லையா? அந்தப் பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்."

"இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?"

"அவங்க ப்ரோ இந்திரா. அந்த அம்மாவுக்குப் பதவி தான் முக்கியம்."

"நீங்கதானே அவங்களைப் பிரதமராப் போட்டீங்க? இப்ப நீங்களே வருத்தப்-படறீங்களே!"

"நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப் பட்டிருப்பாங்க. நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வைச்சுடுவாங்க போலிருக்கே!" கோபமும், எரிச்சலும் வருகின்றன அவருக்கு. பேச்சிலே ஒரு வேகம். தவிப்பு.....

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையைத் தடவிக் கொள்கிறார். சட்டையின் விளிம்பைச் சுருக்கிச் சுருக்கி மேலே தோள்பட்டை வரை தூக்கிக் கொண்டு போய்ச் சேர்க்கிறார். "உம், இருக்கட்டும்" என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.

"எனக்கு ஒண்ணுமில்லே ; இந்தத் தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு. நான் என்ன செய்வேன்?"

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு, "உம், சரி, பார்ப்பம்" என்று அழுத்தமாகச் சொல்லி விட்டுக் குழந்தை போல் சிரிக்கிறார். எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்தி ஜியின் கபடமற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்தச் சிரிப்பு.

"சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்குச் சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக் கல்லே? நீங்களே வந்திருந்தால் இப்போது இந்தச் சங்கடங்க ளெல்லாம் இருந்திருக்காதே?"

"வாஸ்தவந்தான். வேறு யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவி யாயிருக்கலாம். அவங்க தப்புச் செய்தாலும் தட்டிக் கேட்கலாம். நாமே போய்ப் பதவியிலே உட்கார்ந்து கிட்டா சரியாயிருக்குமா? அப்பவே காரியக் கமிட்டி அங்கத்தினர்களில் பெரும்பாலோரும், ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுக்கிட் டாங்க. அடுத்தாப்பலே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வரப் போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளை யெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியிலே போய் உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்குக் கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?"

"இந்திரா காந்தியை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? அந்த விவரத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?"

நேருவுக்குப் பிறகு நமக்கு மிஞ்சியிருந்த ஒரே தலைவர் சாஸ்திரிதான். நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன. சாஸ்திரி ரொம்ப சாது. காந்தீயவாதி. நேர்மையானவர். எளிய சுபாவம். அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்த போது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்தச் செய்தியைக் கேட்ட போது ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியல்லே. நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல் , பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட் டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார், காங்கிரசைக் கலைச் சுடலாமனு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே. இப்போதுதான் புரியுது. அப்பவே கலைச்சிருந்தா இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும். அது நாட்டுக்கும் நல்ல தாயிருந்திருக்கும்.

சாஸ்திரியின் காரியங்களெல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க, தான் பிரதமரா வரமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு.

எப்படி இருக்கு நிலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவாப் பேச்சை ஆரம்பிச்சாங்க. என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லல்லே.

நீங்க பேசாமல் வீட்டிலே போய் உட்காருங்க, நான் கூப்பிட்டனுப்பிச்சா அப்ப வாங்க; அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும், எதுவும் பேசாதீங்க : உங்ககிட்டே யாராவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரஸிடெண்டைப் போய்க் கேளுங்கன்னு சொல்லி அனுப்பிச் சுடுங்கன்னேன்.

"அடுத்தாப்பலே பத்திரிகைக்காரங்க போய் அந்த அம்மாவைக் கேட்டப்போ, எனக்கு ஒண்ணும் தெரியாது. காமராஜ் என்னைப் பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கச் சொல்லி விட்டார். அவரைப் போய்க் கேளுங்க"ன்னு பதில் சொல்லியிருக்காங்க. அது பேப்பர்லே கூட வந்ததா ஞாபகம்" என்றார்.

"இந்திராவைப் போடலாம்னு ஏன் நினைச்சீங்க? மொரார்ஜி தேசாயே வந்திருக்கலாமே?" என்றேன்.

"நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை. அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க. காரியக் கமிட்டி அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க. எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக் கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாமனு ஓர் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே காட்டிக்கல்லே. இந்திராவை ரொம்பப் பேர் வேண்டாமனு சொன்னாங்க. ஆனாலும் அவங்களோடெல்லாம் நான் ரொம்ப நேரம் "டிஸ்கஸ்" பண்ணினேன். அப்புறம் அவங்க அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க. ஆனால் மொரார்ஜி ரொம்பப் பிடிவாதமா இருந்தாரு. எம்.பிக்களுக்கெல்லாம் லெட்டர் எழுதினார். நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக் கிட்டேன். அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார். வேறு வழியில்லாமல் மறுநாள் பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம். இந்திராவுக்குத்தான் மெஜாரிடி கிடைச்சுது."

"சரி, இந்திராவைப் பிரதமராக்கினீங்களே, அதுக்கப் புறம் முக்கியமான பிரச்னைகளில் உங்களைக் கலந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க?

"ஆமாம், கலந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னைக் கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க. திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப மெட்ராஸிலே இருந்தேன். இந்திரா காந்தி எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச் சொன்னாங்க. நானும் போனேன். என் கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க.

"அப்படிச் செய்யக் கூடாது. ரொம்பத் தப்பு. வெளி நாட்டு வியாபாரம் கெட்டுப் போகும். வெளிநாட்டிலே கோடி கோடியாக் கடன் வாங்கியிருக்கோம். அதை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டி வரும். டிவேல்யுவேஷன் அவசியந்தான்னு நினைச்சா அதைப் பற்றிப் பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப் படாதீங்க. ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்....."

"அதுக்கு என்ன சொன்னாங்க?"

"இல்லே, காபினெட் மெம்பர்ஸ் ஒத்துக்கிட்டாங்கண்ணு சொன்னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது. எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ணுங்கன்னு சொன்னேன். என் பேச்சைக் கேட்கல்லே. அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது. நாட்டை இவங்ககிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டது..."

"ஏன், நீங்க அப்புறம் கூப்பிட்டுக் கேட்கிறதுதானே?"

"கேட்டேன். டிவேல்யுவேஷன் மேட்டரைப் பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியல்லே, ரகசியமாச் செய்ய வேண்டிய காரியம் அது. இது இன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே இதைப் பத்தி விவாதிச்சோம், என்ன லாபம்? காரிய கமிட்டியிலே இதைத் திருத்த முடியுமா? கண்டிக்கத் தான் முடியும். கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு? எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது? அன்றைக்குத்தான் எனக்குக் கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துன்னு நினைச்சேன். நான் என்ன செஞ்சுத் தொலைப்பேன்னேன்...!"

சிரிப்பு.... பலத்த சிரிப்பு! எக்காளச் சிரிப்பு! தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு... அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.

"பார்ப்பம். பொறுமையாயிருந்துதான் காரியத்தைச் சாதிக்கணும்" மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார். பிடரியைத் தேய்க்கிறார். தவிக்கிறார்.... ! மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு.
----------------
அத்தியாயம் 3


அந்தக் காலத்தில் சத்தியமூர்த்திக்கும். காமராஜிற்கும் ஏற்பட்டிருந்த அன்புக்கும், பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பைச் சொல்லிவிட முடியாது. காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் பொதுவான நிலை அதுவல்ல ; காமராஜே சிற்சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்த துண்டு. சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர். ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர். அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர். அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜிற்கே உண்டு. அது மட்டுமல்ல, சத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார்.

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சாத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரங்களிலெல்லாம் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் தம்முடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும், திசை தப்பிப் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறிய தில்லை. ஒரு சின்ன உதாரணம் :

1940 -ஆம் ஆண்டில் சத்தியமூர்த்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார். மேயர் என்ற முறையில் திரு. சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அச்சமயம் திரு. காமராஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதை மறந்து விட்டுச் சத்தியமூர்த்தி பூண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய தவறு என்று காமராஜ் கருதினார். சத்தியமூர்த்தி தம்முடைய தலைவர் என்பதற்காகக் காமராஜ் அவர் செய்த தவற்றைக் கண்டிக்கத் தவறவில்லை. சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து, "காங்கிரஸ் மேலிடத்தில் இம்மாதிரி ஒரு கட்டுப்பாடு இருக்கும் போது தாங்கள் அதை மீறி வெள்ளைக்காரர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டது பெரிய தவறு இல்லையா?" என்று கேட்டார்.

"ஆமாம் ; அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்? நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன்" என்றார் சத்தியமூர்த்தி.

"செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார் காமராஜ்

"காமராஜா இப்படிக் கேட்கிறார்?" என்று ஒரு கணம் சத்தியமூர்த்திக்கு ஒன்றும் விளங்கவில்லை : வேறு வழியில்லாமல் ஒரு காகிதத்தை எடுத்துத் தாம் செய்தது தவறுதான் என்று எழுதி மன்னிப்புக் கோரிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் காமராஜ் இந்தத் தகவலை என்னிடம் கூறிய போது, "அப்புறம் என்ன செய்தீர்கள்?" என்று நான் கேட் டேன்.

"இதைப் பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்று என்னைக் கேட்டார்கள். "மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன்" என்று அவர்களிடம் சொன்னேன்" என்றார் காமராஜ். "சரி, அந்தக் கடிதம் இப்போது எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்ட போது, "வீட்டில் தான் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும். தேடிப் பார்க்கணும்" என்றார்.

"சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாகச் சந்தித்தது எப்போது? ஞாபகத்தில் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"1919-இல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத் தில் பேசுவதற்காக வந்திருந்தார். அப்போது நான் ஒரு சாதாரணத் தொண்டன். அவரோடு அப்போது பேசவே முடியவில்லை. அப்புறம் நாலு வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1923 - ஆம் ஆண்டில், திரு. சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்யா பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா? அப்ப அந்தக் கட்சியின் கொள்கை பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமய்யர் இல்லத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்போது அவர் இல்லை. நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். சத்தியமூர்த்தி சுயராஜ்யா கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார். காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்யா கட்சியின் கொள்கை. அதுதான் சாத்திய மூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது. அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் பிரவேசத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தார்கள். நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக் கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு நேர வேலை ஆயிற்று.

அந்தக் காலத்தில் திரு. ஏ. ரங்கசாமி அய்யங்கார், திரு. எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்பப் பிரபலமாயிருந்தாங்க. காரணம் திரு. ரங்கசாமி அய்யங்காருக்குச் சொந்தத்தில் பத்திரிகை இருந்தது. அதனால் அவர் பிரபலமடைவது சுலபமாயிருந்தது. திரு. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல்லே.

முன்னுக்கு வந்த போது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்து கொண்டே இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி, பதவி என்று வரும் போது மட்டும் அதைத் தாமே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராயிருந்தார்.

திரு. சத்தியமூர்த்திக்குப் பதவி மீது ஆசையில்லை என்பது இதற்கு அர்த்தமில்லை. அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும். சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமற் போய் விட்டன. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது. மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போய் விட்டது.

1937-இல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்களே எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதற்குக் காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு ஒழிவில்லாமல், இராப் பகலாகக் காரிலேயே சுற்றுப்பயணம் செய்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்தது தான். அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும். அந்தச் சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகியிருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. ராஜாஜி முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண் டார். சத்தியமூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை. கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் மந்திரிகள் போர்ப் பட்டியல் வந்த போது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது! பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி! அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

"எந்தப் போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலீஸாரைக் கதர் குல்லாய்க் குச் சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார். பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களைக் காங்கிரஸ்காரர்களுக்குச் சலாம் போட வும் வைத்தார். ஆனால் அந்தப் போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போட வில்லை. அந்த கௌரவத்தைச் சாத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தந்தான்.

உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் தேசபக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது சிறையிலுள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், திரு. சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக்க வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும், மாகாண காங்கிரஸ் கமிட்டித் தேர்தலும் நடைபெற்றன. திரு. சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவைத் தெரிவித்த போது அவர் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்திய மூர்த்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்குக் காரணம். சத்திய மூர்த்தி அப்போது தலைமைப் பதவியை ராஜாஜிக்கு விட் டுக் கொடுத்தது மட்டுமின்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936 - இல் பொதுத் தேர்தல் வந்த போது. தேர்தல் பிரசாரத்துக்காகச் சத்தியமூர்த்தி அவர்களும், நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தோம். அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. திரு. குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதைக் காங்கிரஸ் கட்சியில் பெருவாரியானவர்கள் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்த ஏற்பாடு செய்தனர். இந்த பிரச்னையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்குப் புறப்பட்டு வரும்படி தலைவர் சத்தியமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர். அதைக் கண்ட சத்தியமூர்த்தி என்னைப் பார்த்து. "குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே! அவர் போட்டியிடவில்லையென்றால் பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா? நீ என்ன சொல்கிறாய்? ராஜாவுக்குத் தந்தி கொடுத்து. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லலாமா? என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராயிருப்பது தான் நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆகையால் "நாம் இருவரும் மதுரைக்குச் சென்று ராஜாவையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம்" என்று யோசனை கூறினேன். ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்து விடக் கூடிய காரியமல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது. தலைவரும், நானும் மதுரைக்குப் புறப் பட்டுச் சென்று, கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். திரு. சத்தியமூர்த்தி அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து, "என்னிடம் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறதா?" என்று கேட்டார். "இருக்கிறது" என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், "இப்படிச் சொன்னால் போதாது. மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால்தான் நம்புவேன்" என்றார்.

அவர் கேட்டுக் கொண்டபடியே எல்லோரும் உறுதி அளித்தனர். அதன் பிறகே அவர், "உங்களுக்கு எந்தவித அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் குமாரசாமி ராஜாவையே நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம்" என்றார்.

திரு. சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமி ராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்திய மூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

வல்லபாய் படேலும், அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. சத்தியமூர்த்திக்கு அப்போது உடல் நிலை சரியில்லாமலிருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை. அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கும், அவர் மகளுக்கும் கீழ். பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள். அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்குக் கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாணக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்திய மூர்த்தியும் போட்டியிட்டாங்க இல்லையா? அந்தப் போட்டி யில் வகுப்பு வாதம் காரணமாகத் திரு. சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்றிரவு என்னைப் பார்த்து, காமராஜ், அடுத்த வருஷம் உன்னைதான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி. நீ தலைவனாக இரு. நான் உனக்குக் காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன்" என்றார்.

அதற்கு "இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த் துக் கள்ளலாம்" என்று நான் பதில் கூறினேன்.

'அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன். இந்த முடிவு நிச்சயமானதுதான்' என்று உறுதியாகக் கூறிய சத்தியமூர்த்தி அவர்கள், தாம் கூறியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார். பலத்த போட்டி இருந்தபோதிலும் சத்தியமூர்த்தியின் தலைமையில், ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது. அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னைப் பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றார் காமராஜ்.

"அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார்?" என்று கேட்டேன்.

"ஆமாம், அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்" என்றார் காமராஜ்.
----------
அத்தியாயம் 4


திரு. சத்தியமூர்த்தி 1936 - இல் மாகாணக் காங்கிரஸ் சுமிட்டியின் தலைவராயிருந்த போது அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றினார். நேருஜி தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்தச் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர். காமராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போது தான்.

அதற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய் விட்டது. சத்தியமூர்த்தி தலைவராக வருவதற்கு ராஜாஜியே பக்க பலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடிய வில்லை. காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்குக் காரணம். சத்தியமூர்த்தி இதை நன்றாகப் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்குத் தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு. 1940 - இல் காமராஜைப் போட்டியிடச் செய்தார்.

அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்வதற்காக முத்துரங்க முதலியார். அவிநாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் போய்ப் பார்த்துப் பேசினார்கள். அவர்களிடம்
ராஜாஜி தம் கருத்து என்ன என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வரமுடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ? தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது, "சி.பி. சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே!" என்ற யோசனையை வெளியிட்டார் ராஜாஜி. அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார் அதற்கு ராஜாஜி என்ன பதில் கூறினார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவைத் தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி.

இதற்குள் காமராஜும் அவரைச் சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார். அவர் காமராஜை அழைத்து, "சி.பி. சுப்பையாவைப் போடும்படி ராஜாஜி சொல்கிறார்; நானும் சரி என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார்.

"நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுப்பையா நிற்பதில் எனக்கு இஷ்டமில்லை: சுப்பையாவுக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் எனக்குச் சம்மதந்தான். இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன்" என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார் காமராஜ்.

சத்தியமூர்த்தியால் அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை, சரி, உன் இஷ்டப்படியே செய்" என்று கூறிவிட்டார். எனவே காமராஜும், அவருக்கு எதிராக சி.பி. சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று. அந்தத் தேர்தலில் சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும். காமராஜுக்கு 103 வோட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவியேற்றார். தலைவர் காமராஜுக்குக் காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த ஆண்டில்தான்.

1919இல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரணத் தொண்டனாக விருதுநகரிலிருந்து புறப்பட்ட காமராஜ் இருபது ஆண்டுகள் கழித்துக் காங்கிரஸ் தலைவராக வந்தது காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.

காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை. நியாயம். நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது. நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு
அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.

ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்த போது, டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்குக் காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம்முடைய கம்யூனிஸக் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார். அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜ மன்னார் அவர்களும் மோகன் குமார மங்கலத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்குச் சிபாரிசுக் குறிப்புடன் ஃபைலை அனுப்பி வைத்தார். காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான். ஆனாலும் தாம் இந்தச் சிபாரிசை ஏற்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம். அத்துடன் திரு. மோகன் குமார மங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு - கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை. முதலமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கும் நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. அப்பொழுது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார். குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான ஃபைல் பந்த்திடம் போயிற்று. பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும். ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்துச் சொல்வதற்கு முன்னால் பந்த் காமராஜை நேரில் சந்தித்துப் பேச விரும்பினார். அப்போழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.

"கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை. நியாயம் கெட்டுப் போகும்" என்று தம் கருத்தை எடுத்துச் சொன்னார் காமராஜ். பந்த்துக்கும் அது சரியாகவே பட்டது. இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜைப் பார்த்துப் பேசினார். காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுத்துச் சொன்னார்.

"சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது; அட்வொகேட் - ஜெனரலாகப் போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று மேலிடத்தில் கேட்ட போது, "எனக்கு அதில் ஆட்சேபமில்லை" என்றார் காமராஜ்.

"அட்வொகேட் ஜெனரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா?" என்று திருப்பிக் கேட்டார்கள்.

"சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லாவற்றையுமே அட்வொகேட் - ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டும் என்பது கிடையாது. வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம். அந்த உரிமை சர்க்காரிடந்தானே இருக்கிறது? எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிச் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே!" என்றார் காமராஜ்.

திரு. மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ, அல்லது அட்வொகேட் - ஜெனரலாக வருவதிலோ காமராஜுக்குச் சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது. ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்குப் பட்டதை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தபோது அதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிறதல்லவா?

1940 ஆம் ஆண்டு தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்க விருந்தது. அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக் கொள்ளலாமா, வேண்டாமா என்று குழப்பம் இருந் திருக்க வேண்டும். சில பெருந்தலைவர்களை அணுகி "துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா?" என்று யோசனை கேட்டார். "தாராளமாக ஒப்புக் கொள்ளுங் கள்" என்று கூறினார்கள் சிலர். யார் என்ன சொன்னபோதிலும் சத்தியமூர்த்தி காமராஜைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. "காமராஜ்! இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார்.

"இப்பொழுது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்றுக் கொள்வது எனக்குச் சரியாகப் படவில்லை. காரணம், இப் பொழுது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி. இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்தச் சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்குப் பெருமையாயிருக் கலாம்" என்றார் காமராஜ்.

"இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல் லையே?" என்றார் சத்தியமூர்த்தி.

"இருக்கலாம். ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே! அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது. அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்தத் துணைவேந்தர் பதவியை ஏற்றுக் கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது?" என்று கேட்டார் காமராஜ்.

இதற்குப் பிறகுதான் சத்தியமூர்த்தி அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டார்.

காமராஜிடம் இதைப் பற்றி நான் விசாரித்தபோது அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும். சத்தியமூர்த்தியை நினைத்துக் கொண்டு ஒரு முறை பலமாக சிரித்தார் அவர். "ஐயோ பாவம், சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது. சின்னச் சின்ன பதவி என்றால் கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அதுமேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம். பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன்" என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.
---------------
அத்தியாயம் 5


"நீங்கள் 1940இல் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்ப மாயிற்று? அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்? எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?" என்று காமராஜைக் கேட்டேன்.

"நான் சத்தியாக்கிரகம் செய்யவில்லை. அதற்குள்ளாகவே போலீசார் என்னைப் பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்.... காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது
வயது நிபந்தனை. எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்களின் லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்க் கொண்டிருந்தேன். என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்...."

"எந்த நாகராஜன்? அந்தக் காலத்தில் நாகராஜன் என்பவர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும், சொல்வார்களே, அந்த நாகராஜனா?"

"அதெல்லாம் சும்மாப் பேச்சு. என்னோடு அவர் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை முதல் முதல் "இந்தியா" பத்திரிகை ஆபீசிலோ, அல்லது வேறு எங்கேயோ சந்தித்தேன். அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன். அதனால் நானும் அவரும் சில விஷயங்களைச் சேர்த்து ஆலோசிப்பதும் உண்டு. அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா, என்ன?" என்றார் காமராஜ்.

"தங்களை எதற்குப் பந்தோபஸ்துக் கைதியாக்கி வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள்?"

"அதுவா? அப்ப மெட்ராஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். யுத்த நிதிக்குப் பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துகிட்டிருந்தான். நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராப் போய் யுத்த நிதிக்குப் பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன். அதனாலே ஹோப்புக்குப் பணம் வசூலாகல்லே. இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு. காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்புக் கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான்...."

"ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ணச் சொன்னார்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?"

"அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார். நல்ல மனுஷன். தேச பக்தி உள்ளவர். தேச பக்தர்களுக் கெல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார். அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சூப்பரின்டென்ட்டா மாத்திட்டாங்க. போற வழியிலே அவர் விருதுநகரிலே இறங்கி, என் வீட்டுக்குப் போய் என் தாயாரைப் பார்த்துப் பேசிவிட்டு, அம்மா! என்னையும் உங்க மகன்னு நினைச்சுக்குங்கம்மான்னு சொல்லிவிட்டுப் போனாராம். அப்புறந்தான் எனக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரிஞ்சுது...."

"ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி சத்தியாக்கிரகம் செய்யணுமனு உங்ககிட்ட வந்தாரா?"

"ஆமாம், வந்தாரே! நல்லா ஞாபகம் இருக்குதே? வாசன் கூட அவருக்குச் சத்தியாக்கிரகம் செய்யப் பர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக ஞாபகம்..."

"கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?"

"நல்ல எழுத்தாளர். அந்தக் காலத்திலே திரு. வி. கலியாணசுந்தர முதலியார் "நவசக்தி"ன்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார். அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன். தேனியோ, தமிழ்த் தேனீயோ - ஏதோ ஒரு பேர்லே எழுதுவார். ரொம்பத் தெளிவா, வேடிக்கையா எழுதுவாக. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையங்க-மெல்லாம் காங் கிரசுக்குப் பெரிய பலம் தேடிக் கொடுத்தது. ஏ.என். சிவராமன் கூட என்னோடு ஜெயில்லே இருந்தவர்தான். 1930இல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ண சாமி, வெங்கட்ராமன் எல்லாரும் ஒரு பக்கம் ; லாகூர் வழக் கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம். சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளை-யெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார். பாமரர்களை விடப் படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க. சொக்கலிங்கமும் கல்கியும் பாமரர்களுக்கும் புரியும்படி எழுதுவாங்க..."

"பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா?"ன்னு தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே ; அப்ப கல்கி தங்களை ரொம்பத் தாக்கி எழுதினாரே, அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?"

"அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினாலே அப்படி எழுதினாருங்கிறதை விட ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம். எப்படி எழுதினாலும் ரொம்பத் தெளிவான எழுத்து. காங்கிரஸை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.....

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்குமிடத்தில் தான் அப்ப காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது. அது முப்பது வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு. அப்ப காங்கிரஸ் கட்டட நிதிக்குப் பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். மொத்தம் அறுபது எழுபதாயிரம் ரூபாய் சேர்த்து வெச்சிருந்தேன். தேனாம்பேட்டையிலே இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட் இந்து சீனிவாசனுக்குச் சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரஸ்லே ரொம்பப் பற்றுதல். அது பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்ஷன்லே எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்குக் கொடுத்துடறேன்னு சொன்னார். ஆனால், அதை வாங்கறதுக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் குறைஞ்சது. வாசனைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிப் பதினைந்தாயிரம் கடனாக் கேட்டேன். காதும் காதும் வெச்சாப்பலே உடனே ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்துட்டார். அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்தக் கடனைத் திருப்பி கொடுத்துட்டேன்."

"அவரை ஏன் எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே?"

"அவரை எலெக்ஷன்லே நிற்கச் சொல்லிப் பலமுறை கேட்டுக்கிட்டேன். அவர்தான் பிடிவாதமா முடியாதுன்னுட்டார். கடைசியாக வற்புறுத்தி ராஜ்ய சபாவுக்குப் போட்டோம்."

"பாதுகாப்புக் கைதியாக எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க?"

"நாற்பத்தொண்ணு நவம்பர்லே வெளியே வந்துட்டேன். மாத்தம் எத்தனை மாசம்னு கவனத்திலே இல்லே."

" உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாகத் தர்ந்தெடுத்தது அப்பதானே?"

"ஆமாமாம், நான் ஜெயிலிலிருந்து வந்ததும் விருதுநகர் போனேன். நான் சிறையிலே இருந்தபோது என்னைச் சேர்மனாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. நான் போனதும் என்னைக் கூப்பிட்டுச் சேர்மன் நாற்காலியிலே உட்காரச் சொன்னாங்க. நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு சேர்மன் பதவி எனக்கு வேண்டாம். பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும். சேர்மன் வேலை சரியாச் செய்ய முடியாது. எப்பவுமே கட்சி வேலை செய்வதில்தான் பிரியம். இந்தக் கௌரவத்தை எனக்குக் கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி"ன்னு சொல்லி ராஜிநாமா எழுதிக் கொடுத்து விட்டு எழுந்து வந்துட்டேன்...."

"ஒரு நாள் கூட பதவியிலே இல்லையா?"

"கொஞ்ச நேரந்தான் இருந்தேன். எனக்குப் பார்ட்டி முக்கியமா, பதவி முக்கியமா?"

"சத்தியமூர்த்தி உங்களோடு சிறையிலே இருந்திருக்காரா?"

"அம்ரோட்டி. ஜெயில்லே இருந்தார். நாற்பத்திரண்டு ஆகஸ்ட் போராட்டத்திலே அவரை கைது பண்ணி அமராவதிக்குக் கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை எல்லோரும் அங்கே போய்ச் சேர்ந்தோம். சத்தியமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். அவரைப் பார்க்கணுமனா ஜெயில்லே விடமாட்டாங்க. அதுக்காக ஏதாவது ஒரு வியாதியைச் சொல்லிகிட்டு அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம். என்ன செய்யறது? ஏதோ சொல்லிட்டுப் போய் சத்தியமூர்த்தியைப் பார்த்துட்டு வருவோம். அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கிடந்தார். வெயில் தாங்காது. ரொம்பக் கடுமை. மண்டை வெடிச்சிடும்போல இருக்கும். நானும் அண்ணாமலைப் பிள்ளையும் தொட்டியிலே தண்ணியை நிரப்பி விட்டு ராத்திரியெல்லாம் தொட்டித் தண்ணியிலேயே உட்கார்ந்துக்கிட்டிருப்போம். அண்ணாமலைப் பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்..."

"அவர் நல்லாப் பாடுவாரா?"

"சுமாராப் பாடுவாரு. ஏதாவது லாவணி கீவணி பாடிக்கிட்டிருப்பார். நான் கேட்டுக்கிட்டிருப்பேன். என்ன செய்யறது? ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?"

பாவம் சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா என்று எண்ணிக் கொண்டேன் நான்.
---------------
அத்தியாயம் 6


ஆகஸ்ட போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த கிரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள். அந்தத் தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார். இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதனால் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைத் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது. இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.

ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது. காந்திஜி, சர்தார் படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவத்சலம் முதலானோர் பம்பாய்க்குப் போயிருந்தார்கள்.

"வெள்ளையரே, வெளியேறுங்கள்!" என்று பிரிட்டிஷ் ஆட் சியை எதிர்த்து மகாத்மா குரல் கொடுத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான்; மறுநாளே மகாத்மா காந்தி, நேருஜி போன்ற பெருந் தலைவர்களெல்லாம் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டார்கள். இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலைத் தயாரித்துத் தயாராக வைத்திருந்தது.

பம்பாய்க் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்குத் திரும்புவதற்குள்ளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்து போன சாத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

"உங்களை எப்ப கைது செய்தாங்க?" என்று காமராஜைக் கேட்டேன்.

"நான் முத்துரங்க முதலியார், பக்தவத்சலம், கோபால் ரெட்டி, எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம். எனக்கு ஒரு சந்தேகம், வழியிலேயே எங்காவது என்னைப் பிடிச்சிடு வாங்களோன்னு. ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணுங்கிறதைப் பற்றி அங்கங்கே உள்ளூர்க் காங்கிரஸ்காரங்ககிட்டே பேசிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ளே ”அரெஸ்ட்" ஆயிடக் கூடாதுங்கிறது என்னுடைய பிளான்.

சஞ்சீவ ரெட்டியோடு குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு இரண்டொரு நாள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டுக்கிட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன். ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியைப் பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க, அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு....

”சரி, நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடறேன்னு சஞ்சீவ ரெட்டி கிட்டே சொல்லிட்டு, அரக்கோணம் வரை வந்துட்டேன். அரக்கோணத்திலே எட்டிப் பார்த்தா, பிளாட்பாரம் பூரா ஒரே போலீஸாயிருந்தது. வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன். நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே. அவங்க லிஸ்ட்லே என் பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியல்லே. மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய் ஒரு வண்டியைப் பிடிச்சு, சோளங்கிபுரம் போயிட்டேன்."

"அங்கே எதுக்குப் போனீங்க?"

"அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். பழைய காங்கிரஸ்காரர். அவருக்கு இரண்டு பிள்ளைங்க. ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திக்கிட்டிருக்காரனு கேள்வி.

தேவராஜய்யங்கார் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு, கார் மூலமா அன்றைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன். ராத்திரி பத்து மணி இருக்கும். கலியாணராமய்யர் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். அவர் கதவைத் திறக்கல்லே. அவருக்குப் பயம், போலீஸார் தன்னைக் கைது செய்ய வந்திருப்பாங்களோன்னு. என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். அந்த நேரத்தில் என்னைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமாய்ப் போய் விட்டது.

”சரி, நீங்க இங்கே தங்கினால் ஆபத்து. போலிஸார் கண்டு பிடித்து விடுவார்கள். வாங்க இன்னொரு இடம் இருக்குன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல் தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்கிட்டுப் போனார். அது ஒரு முஸ்லிம் நண்பருக்குச் சொந்தம்.
அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்துத் தூங்கினேன். மறுநாள் பகல்லே கலியாண-ராமய்யரிடம் பேசிக்கிட்டிருக் கிறப்போ கொஞ்ச தூரத்தில் யாரோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் வர்ற மாதிரி தெரிஞ்சுது.

சப் இன்ஸ்பெக்டரைக் கண்டதும் கலியாணராமய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.

"சரி, கைது செய்யத்தான் வர்றாங்க. இனி தப்ப முடியாது. இப்ப என்ன செய்யலாம்" என்று என்னைக் கேட்டார்.

வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நான் உள்ளே போய்ப் படுத்துக்கிட்டேன்.

சப் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த இடம் போதாது. அவ்வளவு வசதியாயும் இல்லை. டி. எஸ். பி. வாறார். அவர் தங்கறதுக்கு இந்த இடம் சரியாயிருக்குமான்னு பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்புறந்தான் கலியாணராமய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலையே நானும் கலியாணராமய்யரும் கண்ண மங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம். அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீஸார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம். அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டேன். மதுரையிலே குமாரசாமி ராஜாவைப் பார்த்துப் பேசினேன். அப்ப அவர் ஜில்லா போர்ட் பிரசிடெண்டாயிருந்தார். ஆனா மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே.

மதுரையிலே என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமதாதபுரம் போயிட்டு, அங்கிருந்து விருதுநகருக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டு, கடைசியாக மெட்ராசுக்குப் போயிடலாம்னு நினைச்சேன்.

இதுக்கு இடையிலே போலீஸ்காரங்க அரியலூருக்குப் போய் என்னைத் தேடிக்கிட்டிருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு. நான் எப்படியும் அங்கே வருவேன், பிடிச்சுடலாமனு போலீஸார் அங்கே போய் உஷாரா காத்துக் கிட்டிருந்தாங்க. நான் எல்லா இடத்துக்கும் போயிட்டுக் கடைசியாக விருது நகருக்குப் பக்கத்திலே இருந்த ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ராமசந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்குப் போனேன். "

"வண்டியிலே எதுக்குப் போனீங்க?"

"விருதுநகரிலே எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்தத் தெரு வழியா நடந்து போனா போலீஸார் பார்த்துட மாட்டாங்களா? அதனாலே வண்டியிலே போனேன்."

"அம்மாவைப் பார்த்தீங்களா?"

"ஆமாம்; ராத்திரி வீட்டிலேதான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் எட்டி விட்டது. சரி, இனி மெட்ராஸ் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. அதனாலே நான் வீட்டிலேதான் இருக்கேன். அரெஸ்ட் செய்யறதாயிருந்தால் செய்துக்கலாம்னு போலீஸ் ஸ்டேஷ னுக்குச் சொல்லி அனுப்பிட்டேன்."

"எழுத்தச்சன்னு ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான் உங்களை அரெஸ்ட் செய்தார் இல்லையா?"

"ஆமாம். அவர்கூடச் சொன்னார். வேணும்னா நீங்க இன்னும் சில நாள்கூட வெளியே இருக்கலாம். போலீஸ் உங்களைத் தேடிக்கிட்டு அரியலூர் போயிருக்குதுன்னு. நான் தான் என் வேலையெல்லாம் முடிஞ்சுட்டுது. இனிமேல் வெளியே இருந்து ஒண்ணும் செய்ய முடியாது. உள்ளே போவதுதான் சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிட்டாங்க."

"ஜெயில்லேருந்து எப்ப வெளியே வந்தீங்க."

"மூணு வருஷம் கழிச்சு 1945 ஜூலையில் வந்தேன்."

”அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பிரஸிடெண்டா?"

"ஆமாம். எல்லாருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரஸுக்குச் சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க. ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலமா வளர்ந்து விட்டது."

" காந்திஜ தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்துட்டுப் போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் "கிளிக்" என்று சொன்னாரே, அது அப்பத்தானே?"

"ஆமாம்; ஹரிஜன் பத்திரிகையிலே அப்படி எழுதினார். நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படிச் சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய் உட்கார்ந்துக்கிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே. அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல்லே. இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன். 1945-இல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது. மைனாரிட்டி வகுப்பிலேருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன் தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம். கிறிஸ்துவராயும் இருக்கிறார். படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.

அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல். அவருக்குப் பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.

அவருக்கு உடல் நலம் சரியில்லை. அவர் வேண்டாம்னு நான் சொன்னேன்.

என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார். அவருக்கு லெப்ரஸி இருக்குதுன்னு சொன்னேன். படேல் நம்பல்லே; நான் பிடிவாதமாயிருந்தேன். நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா ”செக் பண்ணிக்கலாம்"னு சொன்னேன். அப்புறம் தான் மாசிலாமணி பேர் அடிப்பட்டுப் போச்சு. அம்மு சுவாமி நாதனை போட் டாங்க. என்னைப் படேல் நேரில் வரச் சொல்லிப் போன் பண்ணினார். நான் அப்ப பம்பாயில்தான் இருந்தேன். லிஸ்ட்டை முடிவு செய்யுங்க. அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன் னு சொல்லி விட்டேன்."
-------------
அத்தியாயம் 7


இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கியிருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்குத் தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் போலீசாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள். ராஜாஜி, சர். என். கோபாலசுவாமி ஐயங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணா போன்ற ஒரு சில முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது. ஆனாலும் அவருக்கு எந்த விவரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்குப் போய் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்கப் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்குக் கிட்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்; அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனைக் கண்டுபிடித்து ஆக வேண்டும். இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்தச் சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிகை நிருபருமான திரு கணபதி அங்கே வந்து சேர்ந்தார். மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கப் போகிறார் என்கிற இரகசியம் பத்திரிகைக்காரர் என்ற முறையில் அவருக்குத் தெரிந்திருந்தது. கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையோடு கொண்டு போயிருந்த பெரிய மாலையைப் போட்டு அவரை வரவேற்றார்.

இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், மகாத்மாஜி பழனிக்கும் மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாகச் சென்றார்.

அந்தப் பயணத்தின் போது ராஜாஜியும் மகாத்மாவுக்குத் துணையாகச் சென்றிருந்தார் ; காமராஜும் போயிருந்தார். காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிகச் செல்வாக்கு இருந்த கரரணத்தினாலே என்னவோ, காமராஜ் அந்தப் பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில் கூட ராஜாஜிக்கும், காந்திஜிக்கும் தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். காந்திஜியும் ராஜாஜியும் பழனி மலைப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே போய்க் கொண்டிருந்தார். பத்திரிகைக்காரன் என்ற முறையில் நானும் போயிருந்தேன். அப்போது ராஜாஜி காமராஜரைக் காட்டி, "இவர்தான் காமராஜ், காங்கிரஸ் பிரசிடெண்ட்" என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

காந்திஜி , "எனக்குத் தெரியுமே!" என்று பதில் கூறினார்.

மதுரைக்கும், பழனிக்கும் போய் வந்த பிறகுதான் காந்திஜி "கிளிக்" (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவைக் குறிப்பிட்டார். காந்திஜி தங்களைப் பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும், அவரைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராகப் பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காமராஜ் மகாத்மாஜியைக் கண்டிக்கும் முறையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு :

"ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள மகாத்மாவின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். சட்டப்படி காரியக் கமிட்டியை அமைத்தது நான்தான். ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும். சென்னையிலும் தமிழ் நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன். எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருந்தேன். காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர். தமிழ் நாட்டுக் காங்கிரஸ் விவகாரங்கள் பற்றிக் காந்திஜி இங்கிருந்த போது எங்களிடம் எதுவும் பேசவில்லை. அங்கே போனபின் ”கும்பல்" என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திரப் போராட் டத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதைத் தவிர, அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது. என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத் திட்டத்தில் எந்தவிதப் பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின், பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜிநாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இந்தச் சண்டை முழுவதும் சட்டசபைத் திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி. எஸ். அவிநாசிலிங்கம், சி. என். முத்துரங்க முதலியார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார். ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதினர். ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிகக் குறுகியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்கி அவர்கள் போர்டில் இருக்கச் சம்மதித்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை நான் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இருபது ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி. அவரிடம் என் பக்தி இன்றும் எள்ளளவும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே என்ற காரணத்தால் தான் நான். ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளேன். மாகாண போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளைச் செய்தாலும் அவற்றை நான் மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகின்றேன்."

காமராஜின் அறிக்கையைப் படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார். "கிளிக்" என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடைபெறவிருந்த அசெம்பிளித் தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை. பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்து கொண்ட ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு விலகிக் கொண்டார்.

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர். அவரைக் குறித்துத் தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல. இவ்விஷயத்தில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்."

காந்திஜி நாயுடுவுக்கு உடனே பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்துக் கொள்கிறேன். இந்தத் தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை" என்பதே அந்தப் பதில்.

ராஜாஜியை ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாகக் காந்திஜி எழுதியதும் தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது. ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகா நாட்டில் ராஜாஜி பாகிஸ்தான் பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்குச் சாதகமாகப் பதினைந்து வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்றுப் போயிற்று. இதனால் ராஜாஜி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி யிலிருந்தும் காரியக் கமிட்டியிலிருந்தும் ராஜிநாமா செய்து விட்டுத் தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைச் சுதந்திரமாக நின்று நடத்தினார். ராஜாஜியின் இந்தப் போக்கு தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை; அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.

இந்தச் சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார். காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜிநாமா செய்து விட வேண்டு மென்பதே அந்த யோசனை. காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜிநாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கினார் ராஜாஜி. இவையெல்லாந்தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியின் மீது கோபம் உண்டாகக் காரணங்களாயின.

இதைத் தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி "கிளிக்" என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.
----------
அத்தியாயம் 8


ஆகஸ்ட் இயக்கத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற பெரிய தேர்தல் 1946 இல் தான். இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு எல்லா மாகாணங்களிலும் மாபெரும் வெற்றி கிட்டியது. அப்போது நம்முடன் கேரளாவும், ஆந்திராவும் சேர்ந்திருந்தன.

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காமராஜ் சாத்தூர் - அருப்புக் கோட்டைத் தொகுதியில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 165 சீட்டுக்கள் கிடைத்திருந்ததால் மந்திரி சபை அமைக்கக் கூடிய ஒரே மெஜாரிட்டி கட்சி அதுவாகத்தான் இருந்தது.

அடுத்தாற்போல் யாரைச் சட்டசபைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது, யாரை முதலமைச்சராக்குவது என்ற பிரச்னை காங்கிரஸ் மேலிடத்தில் எழுந்தது. அப்போது அபுல்கலாம் ஆஸாத் காங்கிரஸ் தலைவராயிருந்தார். வல்லபாய் படேல் மத்தியப் பார்லிமெண்டரி போர்ட் சேர்மனாக இருந்தார்.

மற்ற மாநிலங்களிலெல்லாம் யார் முதன் மந்திரி என்ற பிரச்னைக்கே இடமில்லாமல் போய்விட்டது. காரணம், 1937ஆம் ஆண்டில் யார் முதலமைச்சராயிருந்தார்களோ அவர்களே 1946லும் முதல் மந்திரியாக வந்தார்கள்.

உ.பி.யில் பந்த்தும், பம்பாயில் பி.ஜி. கேரும், மத்தியப் பிரதேசத்தில் சுக்லாவும், பீகாரில் கிருஷ்ண சின்ஹாவும் பழைய படியே முதலமைச்சர்களானார்கள். சென்னை மாகாணத்தில் மட்டும் பழைய முதன் மந்திரியான ராஜாஜி முதல் மந்திரியாக வர முடியவில்லை. துரதிருஷ்டவசமாக அச்சமயம் ராஜாஜி காங்கிரசிலிருந்தே விலகியிருந்தபடியால் யாரை முதல் மந்திரியாகப் போடுவது என்ற பிரச்னை மேலிடத்துக்கு ஏற்பட்டது.

காந்திஜி, ஆஸாத் போன்ற தலைவர்கள் ராஜாஜியே முதல் மந்திரியாக வர வேண்டும் என்றும் அவருடைய சேவையைச் சென்னை மாகாணம் இழந்து விடக்கூடாது என்றும் விரும்பினார்கள். காரியக் கமிட்டியிலும் அம்மாதிரி ஒரு தீர்மானத்தைப் போட்டு, சென்னைச் சட்டசபைக் கட்சிக்கு அனுப்பி வைத்தார்கள். காங்கிரஸ் தலைவர் அபுல்காம் ஆஸாதும், காந்திஜியும், காங்கிரஸ் மேலிடமும் ராஜாஜி முதல் மந்திரியாக வருவதை விரும்பிய போதிலும், சென்னைச் சட்டசபை காங்கிரஸ் கட்சி அவர்கள் விருப்பத்தை ஏற்க வில்லை.

"அப்படியானால் சட்டசபைக் கட்சித் தலைமைக்கு யாரைப் போடலாம் என்பதற்கு. பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அந்தப் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறோம்" என்று மேலிடம் கூறியது. அதற்கும் சென்னைச் சட்டசபைக் கட்சி ஒப்புக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரகாசம், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாதவமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ் மூவரும் டில்லிக்குப் புறப்பட்டுச் சென்று காந்திஜி. படேல், ஆஸாத் மூவரையும் சந்தித்துப் பேசினார்கள். பட்டாபி சீதாராமய்யா, ராஜாஜி, காளா வெங்கடராவ், கோபால் ரெட்டி போன்ற தலைவர்களும் அப்போது டில்லியில் இருந்தார்கள்.

காந்திஜி, ஆஸாத், படேல் மூவருமே ராஜாஜிதான் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அவர்கள் காமராஜை அழைத்துப் பேசும்போது, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

"எங்களுக்குள் இப்போது எந்தவித வேற்றுமையுமில்லை. ஆந்திரா, தமிழ்நாடு பேதமுமில்லை. ஆகையால் நமக்குள் யாரை வேண்டுமானாலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம்" என்று கூறினார் காமராஜ்.

காந்திஜிக்குப் பிரகாசத்தைப் போடுவதில் விருப்பமில்லை. பொதுமக்கள் கொடுத்த பணமுடிப்பைப் பிரகாசம் தம் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்ற அதிருப்தி மகாத்மாவுக்கு இருந்தது.

காந்திஜியின் கருத்துக்கு விரோதமாகப் பிரகாசத்தைப் போடுவதில் காமராஜுக்கு இஷ்டமில்லை. அப்படியானால் மிஞ்சியிருப்பவர்கள் ராஜாஜியும் பட்டாபி சீதாராமய்யாவும் தான்.

"பட்டாபி. ராஜாஜி , பிரகாசம் மூவருமே சேர்ந்து மந்திரி சபை அமைத்தால் என்ன?" என்று கேட்டார் ஆஸாத். பட்டாபி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மறுநாள் மகாத்மா பட்டாபியைச் சந்தித்துப் பேசிய போது, "சென்னைக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி ராஜாஜியைத் தலைவராகத் தேர்ந்தெடுக்குமா?" என்று கேட்டார்.

"சந்தேகந்தான்!" என்றார் பட்டாபி.

"அப்படியானால் உங்களைத் தேர்ந்தெடுக்கட்டுமா?" என்று கேட்டார் காந்திஜி.

" அதைக் காமராஜிடந்தான் கேட்க வேண்டும்," என்று கூறினார் பட்டாபி.

மகாத்மாஜி காமராஜரைச் சந்தித்துப் பேசியபோது, "சரி, ராஜாஜி தலைவராக வருவதில் கஷ்டம் இருந்தால் வேண்டாம். பட்டாபி வர முடியுமா?" என்று கேட்டார்.

"ராஜாஜி ஒத்துழைத்தால் இது சாத்தியமாகலாம்" என்று கூறினார் காமராஜ்.

"நான் ராஜாஜியைப் பார்த்துப் பேசி ஒத்துழைக்கச் சொல்கிறேன்" என்றார் காந்திஜி. ராஜாஜி எதையுமே விரும்பாததால் தலைமைப் போட்டியிலிருந்தே விலகிக் கொண்டார்.
இந்த சமயத்தில் பிரகாசம் மேலிடத்தாரிடம் தம் பெயரைச் சொல்லுமாறு காமராஜரிடம் கேட்டுக் கொண்டார்.

"மேலிடத்தாரிடம் பேசும்போது நீங்கள் சும்மாவே உட்கார்ந்திருக்கிறீர்கள், அப்புறம் என்னிடம் வந்து உங்கள் பெயரைச் சொல்லி வற்புறுத்துகிறீர்களே! நீங்களேதான் சொல்லுங்களேன்!" என்று கடிந்து கொண்டார் காமராஜ்.

இதற்குள், "நீங்கள் ராஜாஜியை ஆதரித்தால் உங்களுக்கு மந்திரிப் பதவி கிடைக்கும்"
என்று யாரோ பிரகாசத்திடம் சொல்லியிருக்கிறார்கள். பிரகாசத்துக்கு மந்திரிப் பதவியின் மேல் ஆசை. அதனால், "சரி, ராஜாஜியை ஆதரிக்கிறேன்" என்று டில்லியில் கூறிவிட்டுச் சென்னை வருவதற்குள் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார். பிரச்னை இவ்வாறு குழம்பி போகவே, "உங்கள் இஷ்டப்படி செய்து கொள்ளுங்கள்" என்று மேலிடத்தார் சும்மா இருந்து விட்டார்கள்.

சென்னைக்கு வந்ததும் பிரகாசம் சட்டசபைக் கட்சித் தலைமைக்குத் தாம் போட்டியிடப் போவதாகக் கூறினார். காந்திஜி சொன்ன பிறகு பிரகாசத்தை ஆதரிக்கக் காமராஜின் மனம் இடம் தரவில்லை. எனவே பிரகாசத்துக்குப் போட்டியாக முத்துரங்க முதலியாரைக் கட்சித் தலைமைக்குப் போட்டியிடச் செய்தார். இந்த போட்டியில் ராஜாஜி கோஷ்டியினர் நடுநிலைமை வகித்தனர். இதனால் பிரகாசமே வெற்றி பெறும் படியாயிற்று.

காமராஜுக்கு இதில் வருத்தமோ, அதிருப்தியோ கிடையாது. "பிரகாசத்தோடு ஒத்துழைக்க வேண்டாம் என்று காமராஜரிடம் சிலர் யோசனை கூறினார்கள்.

"சட்ட ரீதியாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு பிரகாசத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பது முறையல்ல" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் காமராஜ். ஆயினும் பிரகாசம் மட்டும் காமராஜ் பேச்சைக் கேட்காமலேயே காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். மந்திரி சபையில் மாதவ மேனனைச் சேர்த்துக் கொள்ளுமாறு காமராஜ் பிரகாசத்திடம் கூறினார். ஆனால் பிரகாசம் அப்படிச் செய்யாமல் ராகவ மேனனைப் போட்டுக் கொண்டார். காமராஜ் நினைத்திருந்தால் தாமே அப்போது மந்திரியாக இருக்க முடியும். பதவிக்கு அவர் ஆசைப்படவில்லை. பதவி ஆசை இல்லாதவர் யாருக்கும், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை அல்லவா? மனத்தில் நியாயம் என்று பட்டதை யாரிடமும் அஞ்சாமல் எடுத்துச் சொல்லலாமல்லவா? அந்த உறுதி காமராஜுக்கு மட்டுமே இருந்தது.

இதற்குப் பிறகு கொஞ்ச காலத்துக்குள்ளாகவே பிரகாசம் மந்திரி சபை ஆட்டம் கண்டு விட்டது. அவரைப் பிடிக்காத சிலருக்கு எதிராகக் கையெழுத்துக்கள் சேகரித்து அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தார்கள் காமராஜக்கு இதில் இஷ்டமில்லை. இன்னும் சில நாட்களில் சட்டசபைக் கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேண்டுமானால் பிரகாசத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைப் போட்டுக் கொள்ளலாம். அதற்குள் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் எதற்கு" என்பது காமராஜின் எண்ணம்.

அப்போது டில்லியில் அரசியல் நிர்ணயச் சபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நாலு இடங்களுக்குமாகச் சேர்ந்து சுமார் நாற்பத்தெட்டு அங்கத்தினர்கள் அ.தி. சபையில் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு நாள் இடைக்காலச் சர்க்காரில் மந்திரியாக இருந்த ராஜாஜியின் வீட்டில் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.

"வரும் சட்டசபையில் கட்சித் தலைமைத் தேர்தலின் போது பிரகாசத்தை நீக்கிவிட்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது. வரப்போகும் புதிய தலைவர், தேவைப்பட்டால் தகுதி உள்ள ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது" என்பதே அந்தத் தீர்மானம். இப்படி ஒரு தீர்மானத்தை எழுதி, அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்கள்.

ஆனாலும் பிரகாசம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்பதில் சிலர் திவிரமாக இருந்ததால் அவர்களுடைய விருப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதென்று முடிவாயிற்று. இதற்கிடையில், "கொஞ்சம் பொறுங்கள், நான் வந்து சமரசம் செய்து வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு ஆசாரிய கிருபளானி சென்னைக்குப் பறந்து வந்தார்.

நிலைமை முற்றிப்போகவே, "நான் முதன் மந்திரியாக இருந்தால் போதும்; என் மந்திரி சபையில் யாரை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளுங்கள்" என்று பிரகாசம் கூறினார். காமராஜரிடம் வந்து, "நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ அவர்களை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றார்.

"இப்போது அதுவல்ல பிரச்னை. உங்களை நீக்கிவிட்டு வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று கூடியிருக்கிறோம். இந்தச் சமயத்தில் எங்களுக்கு வேண்டிய ஆட்களை மந்திரி சபையில் போடுவதாகப் பேரம் பேசுகிறீர்களே. முதலில் நீங்கள் வெளியேறுங்கள். அப்புறந்தான் மற்றச் சங்கதி!" என்றார் காமராஜ்.

இப்படித் துணிந்து சொல்லும் தைரியம் அப்போது காமராஜுக்கு மட்டுமே இருந்தது. காரணம், அவர் எப்போதும் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் இருந்ததுதான்.
----------------
அத்தியாயம் 9


"பிரகாசம் தம்முடைய மந்திரி சபையில் மாதவ மேனனை மந்திரியாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால்தான் காமராஜுக்குப் பிரகாசத்தின் மீது கோபம்" என்று பலர் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல : பிரகாசத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காகச் சிலர் அப்போது முனைந்து வேலை செய்தபோது காமராஜ் அவர்களைத் தடுத்து. "அப்படிச் செய்யக் கூடாது. பிரகாசத்தைப் பிடிக்கவில்லை என்றால். அடுத்தாற்போல் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைக்குக் தேர்தல் நடக்கப் போகிறது. அப்போது வேறொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போகிறது" என்று கூறியது தான் உண்மை.

அவர் சொன்னபடியே 1947 ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைமைத் தேர்தலில் பிரகாசத்துக்குப் பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்தக் காலத்தில் சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். எனவே 1948ல் நடைபெற்ற தேர்தலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு எதிராக பிரகாசம் மீண்டும் போட்டியிட்டார். அப்போதும் பிரகாசத்தால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் ஆந்திராவைச் சேர்ந்த காளா வேங்கடராவ், சஞ்சீவ ரெட்டி போன்றவர்களே பிரகாசத்துக்கு எதிராக வேலை செய்தார்கள்.

அதற்கடுத்தாற்போல் தேர்தல் நடந்தபோது ஓமந்தூர் ரெட்டியாருக்கு எதிராக டாக்டர் சுப்பராயனை நிறுத்தி வைத்தார்கள். இதற்குள் ஓமந்தூர் ரெட்டியார். ஆட்சி மீது சில காங்கிரஸ் காரர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. காரணம், ரெட்டி யார் ரொம்பக் கண்டிப்புக்காரர். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரிடம் போய் எவ்விதச் சலுகையும் பெற்றுவிட முடியாது. எனவே, ரெட்டியார் மீது சில காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் இருந்ததில் என்ன வியப்பு?

தலைவர் தேர்தலில் தோற்றுப் போன பிரகாசம் கோஷ்டியும் ராஜாஜி கோஷ்டியும் ஒன்று சேர்ந்து டாக்டர் சுப்பராயனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருந்தது. எனவே, சலுகை பெற முடியாத காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்போடு இவர்களுடைய எதிர்ப்பு சேர்ந்துக் கொள்ளவே ஓமந்தூர் ரெட்டியார் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று.

ரெட்டியாரிடம் சிலர் இதை எடுத்துச் சொன்ன போது, "ரொம்ப சரி, நான் தலைவர் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளத் தயார். அப்படியானால் எனக்குப் பதில் யாரைப் போடப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

"பக்தவத்சலத்தைப் போடலாம்" என்று சிலர் சொன்னார்கள்.

"பக்தவத்சலம் வேண்டாம், அவருக்குப் பதிலாகக் குமாரசாமி ராஜாவைப் போடுவதாயிருந்தால் நான் விலகிக் கொள்கிறேன்" என்றார் ரெட்டியார்.

காமராஜுக்கு இதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. பக்தவத்சலந்தான் வர வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு இல்லை.

குமாரசாமி ராஜாவுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாதததால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் போய் இதைப் பற்றிச் சொன்ன போது அவர் வியப்பில் ஆழ்ந்து போனார்.

ஓமந்தூர் ரெட்டியாரிடம் சலுகை பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் காமராஜிடம் போய் ரெட்டியாரைப் பற்றிப் பலவாறு புகார் செய்தபோதும் அவர் வாயை திறக்க வில்லை. பிரகாசம் தம் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காகவும் காமராஜ் கோபப்படவில்லை.

பக்தவத்சலத்தைக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப் போவதாகச் சொன்ன போது ராமசாமி ரெட்டியார் , "அவர் வேண்டாம், குமாரசாமி ராஜாவைப் போடுங்கள்" என்று சொன்னதையும் காமராஜ் ஆட்சேபிக்கவில்லை. முதலில் பக்தவத்சலத்தைத் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும் கடைசி நிமிடத்தில் அதை மாற்றிக் கொண்டு குமாரசாமி ராஜாவுக்காக வேலை செய்து ராஜாவை வெற்றி பெறச் செய்தார்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது?

காமராஜுக்குச் சொந்த முறையில் யாரிடமும் விருப்பு வெறுப்புக் கிடையாது என்பதைத்தானே!

1949-ல் அமைந்த குமாரசாமி ராஜா மந்திரி சபை 1952- இல் பொதுத் தேர்தல் நடந்து முடியும் வரை நீடித்தது.

சென்னையில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதிலும் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதிலும் காமராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ அந்த அளவுக்கு மத்தியில் நேரு ஆட்சிக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டுமென்பதில் இருந்தது.

அகில இந்தியக் காங்கிரஸ் விவகாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு காமராஜுக்கு முதன் முதல் 1931-இல் கிடைத்தது. அந்தத் தொடர்பு இன்று வரை நீடித்திருக்கிறது. அது மட்டுமல்ல; காங்கிரஸ் மேலிடத்திலும், காந்திஜி, நேரு. படேல், ஆஸாத் போன்ற பெருந் தலைவர்களிடத்திலும் காமராஜின் செல்வாக்கு அபரிமிதமாகப் பெருகியது.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் செல்லும் பெருமை அதற்குமுன் திரு. எஸ். சீனிவாசய்யங்கார், ராஜாஜி ஆகியோருக்கு மட்டுமே இருந்தது. அவர்கள் இருவருக்குப் பிறகு அந்தப் பெருமையை அடைந்தவர் காமராஜ்தான். நேருவின் தலைமையிலும், அவருடைய ஆட்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் காமராஜ். இதனால் நேருவுக்கு விரோதமான சக்தி எதுவாயிருப்பினும் அதை உடைத்தெறிய அவர் தயங்கியதே இல்லை.

1948-ஆம் ஆண்டு இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள். பட்டாபி சீதாராமய்யா ஏற்கனவே ஒருமுறை அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அந்தத் தோல்வியை குறித்து மகாத்மா, பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று கூறியது சரித்திர முக்கியத்துவம் பெற்றது. மீண்டும் பட்டாபி தாண்டனுடன் போட்டியிட்டபோது அவரை வெற்றி அடையச் செய்வதில் காமராஜ் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

அச்சமயம் நேருஜியின் மந்திரி சபையின் கொள்கைகளைக் குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலாயிருந்தது. இதனால் தாண்டன் வெற்றியைக் காமராஜ் விரும்பவில்லை. தாண்டன் வெற்றி பெற்றால் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும் நேருஜிக்கும் இடையே ஒற்றுமை இராது. தகராறுகள் வளரும். இதனால் நேருஜி பிரதமர் பதவியிலிருந்தே விலகக்கூடும். இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேருஜியின் மந்திரி சபைக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக் கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்குப் பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம்" என்று எண்ணினார் காமராஜ். அதனால் பட்டாபிக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாகப் பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிட்டியது. ஆந்திராவில் கூடப் பட்டாபிக்கு அவ்வளவு ஆதரவு கிட்டவில்லை.

கடைசியாகத் தலைவர் தேர்தலில் வோட்டுக்களை எண்ணிப் பார்த்தபோது பட்டாபிக்கே வெற்றி கிட்டியது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்கப் பாடுபட்டவர் காமராஜ் தான் என்பதை நேருஜி புரிந்து கொண்டார். காமராஜின் சக்தி எத்தகையது என்பதை அவர் அறிந்து கொண்டதும் அப்போதுதான். அதற்குப் பிறகு காமராஜின் பெருமையை அவர் உணர்ந்தது ஆவடி காங்கிரசின் போது. இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாகக் காமராஜ் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அச்சமயம் படேல் காமராஜைப் பார்த்து, "உங்களுக்கு என் மீது என்ன கோபம்?" என்று கேட்டார்.

"உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?" என்றார் காமராஜ்.

"பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?"

"தமிழ்நாட்டில் பட்டாபிக்கு ஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!" என்றார் காமராஜ்.

அப்புறம் 1950-இல் தாண்டன் காங்கிரஸ் தலைவரான போது காமராஜ் எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடக்கத் தொடங்கின. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருவுக்குத் திருப்தியாக இல்லை. அதை மாற்றியமைக்கும்படி அவர் தாண்டனிடம் கூறினார். தாண்டன் அதற்கு இணங்க மறுத்தார். அதனால் நேருஜி காரியக் கமிட்டியிலிருந்தே விலகும்படி நேர்ந்தது.
--------------
அத்தியாயம் 10


"பன்னிரண்டு ஆண்டுக் காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தொடர்ந்து இருப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 1940 - இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமராஜ் 1952 வரை மீண்டும் மீண்டும் தேர்தல் நடந்த போதெல்லாம் அவரே தலைவராகிக் கொண்டிருந்தார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்குள்ள செல்வாக்கும் சக்தியும் அத்தகையவையாயிருந்தன. ”காமராஜ்" என்ற மாபெருஞ் சக்தியைத் தமிழ்நாட்டில் யாரும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பிரகாசம், ராஜாஜி, சி.பி. சுப்பையா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ம.பொ.சி. - எல்லோருமே ஒவ்வொரு சமயங்களில் காமராஜுக்கு எதிராக நின்று வேலை செய்தவர்கள் தாம். அவர்களுடைய எதிர்ப்புக்களாலும், போட்டிகளாலும், ராஜ் தந்திரங்களாலும் காமராஜ் என்னும் இமயத்தை அசைக்க முடியவில்லை. மக்களின் ஆதரவும், காங்கிரஸ் ஊழியர்களின் பக்கபலமும் காமராஜுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வந்தன ; இருந்து வருகின்றன.

1946-இல் ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமைக்கு நடைபெற்ற தேர்தலில் காமராஜுக்கு எதிராகத் திரு. சா. கணேசனை நிறுத்தி வைத்தார்கள். இவரைப் போட்டியிடச் செய்வதற்கு முன்னால் முத்துராமலிங்கத் தேவரைப் போட்டியிடச் செய்தால் காமராஜ் நிச்சயம் தோற்றுப் போவார் என்று சிலர் அப்போது எண்ணினார்கள். தேவர் அதற்கு இணங்க மறுத்து விட்டதால் சா. கணேசன் என்று முடிவாயிற்று. ஏற்கெனவே திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற ராஜாஜி எதிர்ப்பு மகாநாட்டில் சா. கணேசன் கலந்து கொண்டார். ஆனாலும் அவர் காமராஜுக்கு எதிராகப் போட்டியிட முன்வந்தபோது பலருக்கு ஆச்சரிய மாகவே இருந்தது.

அந்தத் தேர்தலில் காமராஜுக்கு 152 வோட்டுகளும், சா. கணேசனுக்கு 90 வோட்டுக்களுமே கிடைத்தன. இதற்குப் பிறகு 1948- இல் நடைபெற்ற தலைவர் தேர்தலில் காமராஜை எதிர்த்துப் போட்டியிடும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. ஆகவே, காமராஜே காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1950 - இல் மீண்டும் தலைமைப் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது கோயமுத்தூர் சி.பி. சுப்பையா, காமராஜை எதிர்த்து நின்றார். அப்போதும் காமராஜே வெற்றி பெற்றார். சுப்பையாவுக்கு 99 வோட்டுகளும், காமராஜுக்கு 155 வோட்டுகளும் கிடைத்தன.

அச்சமயம் ராஜாஜி டில்லியில் மந்திரியாக இருந்தார். காமராஜ் டில்லிக்குப் போகும் போதெல்லாம் ராஜாஜியைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, "இந்த முறை சி.பி. சுப்பையா தான் தமிழ்நாடு காங்கிரஸ் பிரஸிடெண்டாக வரட்டுமே" - என்று காமராஜிடம் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் ராஜாஜி.

"பேஷாக வரட்டுமே எனக்கு ஆட்சேபம் இல்லை" என்று சொல்லிவிட்டு வந்தார் காமராஜ்.

ஆனால் காமராஜை அவருடைய நண்பர்கள் விடவில்லை. காமராஜே தான் தலைவராக வர வேண்டும் என்றும், தேர்தலில் - போட்டியிட வேண்டுமென்றும் கட்டாயப்-படுத்தினார்கள். நண் பர்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ள முடியாத ஒரு நிர்ப்பந்த நிலை காமராஜுக்கு ஏற்பட்டதால், சுப்பையாவுடன் போட்டியிட வேண்டிய தர்ம சங்கடம் அவருக்கு ஏற்பட்டது.

கடைசியாக 1952- இல் பொது தேர்தல் நடந்தபோது அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் காமராஜ் தம்முடைய தலைமை பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனால் அதே ஆண்டு இறுதியில் தலைவர் தேர்தல் நடந்தபோது காமராஜே மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த இடைக்காலத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ் தலைவராக இருந்தார். சுப்பராயன் காங்கிரஸ் தலைவரானதற்கும் காமராஜேதான் வேலை செய்தார்.

"என்னுடைய தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயம் பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது நான் தான். ஆகவே நான் ராஜிநாமா செய்து விட்டு வேறொரு வரைத் தலைவராக்குவதுதான் முறை" என்று கூறி, டாக்டர் சுப்பராயனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு; பொதுத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சி ராஜாஜியின் தலைமையில் மந்திரிசபை அமைக்க முடிவு செய்திருந்ததால், அவருடன் இணங்கி வேலை செய்யக்கூடிய ஒருவரையே காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினார். அதனாலேயே சுப்பராயன் தலைவரானதும், அவருக்கு உதவியாகக் காங்கிரஸ் வேலைகளைத் தாமே கவனித் துக் கொள்ளவும் செய்தார்.

அது மட்டுமல்ல, அப்போதிருந்த நெருக்கடியான நிலையில் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் நல்ல முறையில் ஆட்சி செலுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தார். காமராஜ். "ராஜாஜி முதலமைச்சராக வர வேண்டும்" என்பதில் காமராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ, அந்த அளவு ராஜாஜிக்கு உற்ற ஓர் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்பதிலும் இருந்தது.

இதற்குப் பிறகுதான் அடியோடு முறிந்து போயிருந்த காமராஜ் - ராஜாஜி உறவு கொஞ்சங் கொஞ்சமாகச் சீரடைந்து வலுப்பெறத் தொடங்கியது. ராஜாஜி முதலமைச்சரான பிறகு
காமராஜைப் பாராட்டி ஒரு முறை பேசினார் : "காங்கிரஸ் அலுவல்களைக் காமராஜே கவனித்துக் கொள்கிறவரை எனக்கு அதைப்பற்றிய கவலை இல்லை. அதைப் போலவே நான் முதலமைச்சராக இருக்கிறவரை இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தைப் பற்றிய கவலையும் காமராஜுக்கு இருக்காது."

இதே மாதிரியான ஒரு நிலைதான் புருஷோத்தமதாஸ் தாண்டன் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டி யிட்டபோதும் ஏற்பட்டது. அப்போதும் நேருஜி பிரதமராக இருக்கும்போது, அவருடன் ஒத்துப் போகிற ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினார். ஏனெனில், தாண்டன் நேருஜியின் கொள்கைகளை ஆதரிக்காதவர். அதனால் அவருடைய தலைமை ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த காமராஜ், பட்டாபி சீதாராமய்யாவின் நிலைமைக்காகப் பாடுபட்டார். காமராஜ் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் காரணமாகவே பட்டாபி அப்போது வெற்றி பெற்றார்.

ஆனாலும் 1950 - ஆம் ஆண்டு நாஸிக்கில் மீண்டும் தலைவர் தேர்தல் நடந்த போது தாண்டன் வெற்றி பெற்று விட்டார். அவருக்கும் நேருஜிக்கும் ஒத்து வரவில்லை. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருஜிக்குத் திருப்திகரமாக இல்லை. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நேருஜி கேட்டுக் கொண்டும் தாண்டன் அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதனால் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து நேருஜி விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது.

1951 செப்டம்பரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாலேயே நேருஜி காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நேருஜி இல்லாத கமிட்டி நாட்டுக்கு நல்வழி காட்ட முடியாது என்றும், நேருவின் தலைமை அவசியம் என்றும் காமராஜ் கருதினார். அதனால் நேருஜிக்கு ஆதரவாக வேலை செய்யத் தொடங்கினார். அதன் பயனாக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் நேருவுக்கு ஆதரவு அதிகமாகப் பெருகியுள்ளதை அறிந்த தாண்டன் தம் முடைய பிரசிடெண்ட் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, "காரியக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று நேருஜி கூறுகிறார். இதற்கு நேரு கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது" என்றார்.

இதனால் நேருஜிக்கும், தாண்டனுக்கும் ஏற்பட இருந்த தகராறுகளெல்லாம் அடிபட்டுப் போயின. தேர்தல் நடைபெறப் போகும் நேரத்தில், காங்கிரஸ் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே தகராறுகள் வளர்ந்து கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. காமராஜ் இதனை முற்றும் உணர்ந்திருந்ததால்தான் நேருவுக்கு ஆதரவு தேடுவதற்காகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் முனைந்து வேலை செய்தார். அவர் அன்று செய்த வேலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, நம் நாட்டுக்குக் காமராஜ் செய்த தொண்டுகளிலேயே மிகச் சிறந்ததுமாகும்.
-----------
அத்தியாயம் 11


மரவக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து தம்பிக் கோட்டை என்னும் ஊருக்கு ஐந்தாறு மைல் தூரம் இருக்கலாம்.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜ் அந்தப் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டே ஊர் ஊராகச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்.

மரவக்காட்டில் கூட்டம் தொடங்கியபோது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த ஊர்க் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, அப்புறம் தம்பிக் கோட்டைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும். தம்பிக் கோட்டைக்குச் செல்லும் பாதையில் காமராஜைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிக் காமராஜ் முன்னொரு முறை என்னிடம் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது என் நினைவில் இருந்தது. "அந்த மரவக்காட்டு நிகழ்ச்சியைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டதும் காமராஜ் சிரித்துக் கொண்டே, "ஆமாம், மரவக்காட்டிலே நான் பேசிக் கிட்டிருக்கேன். ஒரு பஸ் டிரைவர் மேடை மேலே ஏறி வந்து என் காதோடு உங்களை வழியில் மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீங்க ராத்திரி அந்தப் பக்கம் போகாதீங்கன்னாரு. ஆகட்டும். பார்க்கலாம்னு அவர்கிட்டே சொல்லி அனுப்பிச்சுட்டு. கூட்டத்திலிருந்த ஜனங்களைப் பார்த்து, "யாரோ தம்பிக்கோட்டைக்குப் போற வழியிலே என்னை மடக்கி அடிக்கப் போறாங்களாம். அடிக்கட்டுமே பார்க்கலாம்! இவங்களுக்குப் பயந்து கூட்டத்துக்குப் போகாமல் இருந்துட முடியுமா, என்ன? நான் காரிலே போகப் போறதில்லே, நடந்தேதான் போகப் போறேன். தம்பிக்கோட்டை வரைக்கும் நீங்களும் கூட்டமா என் கூடவே வாங்க, அவங்க யாருங்கிறதைப் பார்த்துடலாம்"னு பேசினேன். அவ்வளவு தான்; அவ்வளவு பேரும், "காமராஜுக்கு ஜே!"ன்னு சொல்லிக் கொண்டு கூட்டமா என் கூடவே நடந்து வர ஆரம்பிச் சுட்டாங்க. பாதி வழியிலே சாலைக்குக் குறுக்கே கட்டை - போட்டுக் கட்டி வச்சிட்டுப் பக்கத்திலே பதுங்கி நின்னு கவனிச்சுக்கிட்டிருந்தாங்க. எங்களைக் கண்டதும் ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டாங்க!" என்றார் காமராஜ்.

காமராஜ் அதிகம் படித்தவரல்ல; ஆங்கில மொழியிலும் அவரால் சரளமாகப் பேசவோ, எழுதவோ முடியாது. இந்தி மொழியும் சுமாராகத்தான் தெரியும். ஆனால் "ஒரு நாட்டை ஆளுவதற்கு மொழிப் புலமை முக்கியமல்ல" என்பதை நிரூபித்துக் காட்டியவர் காமராஜ். 1954ஆம் ஆண்டில் காமராஜ் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக வந்தார். பிறகு ஒன்பது வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராகவே இருந்தார். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் சென்னை ராஜ்யம் மற்ற மாநிலங்கள் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட ராஜ்யம் என்ற புகழைப் பெற்றது. பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும் எல்லா மாநிலங்களையும் மிஞ்சி நின்றது. காமராஜின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி அளிக்கப்பட்டது. மக்களின் அறியாமை இருளை போக்கக் கல்விக் கூடங்களைத் திறந்ததைப் போலவே கிராமங்களைச் சூழ்ந்திருந்த இருளைப் போக்க மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் காமராஜின் ஆட்சியில்தான்.

காமராஜ் பூகோளம் படிக்கவில்லைதான். ஆனாலும் இந்த மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் அவர் பல முறை சென்றிருக்கிறார். இந்த மாநிலத்திலுள்ள ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள், சாலைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் கால் வைக்காத கிராமமோ, தொழிற்சாலையோ நம் ராஜ்யத்தில் வெகு அபூர்வமாகத்தான் இருக்கும்.

காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் இரண்டாண்டுக் காலம் ராஜாஜி இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஏற்று ஒப்புயர்வற்ற முறையில் ஆட்சி நடத்தினார். ராஜாஜியின் ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமென்று காமராஜ் அப்போது விரும்பினார். அச்சமயம் ராஜாஜி இந்த மாநிலத்திலுள்ள குழந்தைகள் எல்லோரும் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் முறையில் ஆரம்பக் கல்வித் திட்டம் என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைக் காங்கிரசில் உள்ளவர்கள் ”குலக்கல்வித் திட்டம்" என்று குறை கூறி எதிர்த்தார்கள். ராஜாஜி அவர்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. தம்முடைய மந்திரி சபையில் கல்வி மந்திரியாக இருந்தவரிடம் இத்திட்டம் பற்றிக் கலந்து ஆலோசிக்கவுமில்லை, சட்டசபைக் காங்கிரஸ் கட்சி யிடமும் கலக்கவில்லை. இதை-யெல்லாம் எடுத்துச் சொல்லி ராஜாஜி மீது எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.

"சங்கரும் ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடுமுன் மற்றவர்களிடம் கலந்து கொண்டா செய்தார்கள்?" என்று ராஜாஜி அவர்களைத் திருப்பிக் கேட்டார். எதிர்ப்பைக் கண்டு எப்போதுமே அஞ்சாத ராஜாஜி இந்த முறையும் தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார். இதனால் எதிர்ப்பு மேலும் பலமாயிற்று. அதைத் தொடர்ந்து ராஜாஜியின் பிடிவாதமும் அதிகமாயிற்று.

சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்லாம் அதை வோட்டுக்கு விடாமலே ஒத்தி வைத்துக் கொண்டிருந்தவர் காமராஜ்தான்.

ராஜாஜியின் ஆரம்பக் கல்வித் திட்டம் காமராஜுக்குப் பிடித்திருந்ததோ இல்லையோ, ராஜாஜியின் ஆட்சி அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் ராஜாஜியின் சேவையை அவர் பெரிதும் விரும்பினார். அதனாலேயே அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்லாம் அதை வோட்டுக்கு விடாமலே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்புறம் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் ஆந்திர மாகாணம் பிரிந்துவிட்டதால் சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக்குப் புதுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கிளர்ச்சி தோன்றியது. "தலைவர் தேர்தல் நடந்தால் ராஜாஜியை வேண்டாம் என்று எண்ணுபவர்கள் அப்போது வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டுமே" என்பது தான் காமராஜின் எண்ணம்.

இந்தச் சமயம் ராஜாஜி, காமராஜ் இருவரையும் டில்லிக்கு அழைத்துப் பேசினார் நேருஜி. ராஜாஜியே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நேருஜி அறிக்கை வெளியிட்டார். நேருஜி கூறிவிட்டதால் இனி எதிர்ப்பு இருக்காது என்றே பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. ராஜாஜிக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரண்டு கோஷ்டியார் வேலை செய்து கையெழுத்து வாங்கினார்கள். "இதெல்லாம் எதற்கு? நானே விலகிக் கொள்கிறேன். கல்வித் திட்டத்தின் மீது வோட்டெடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று ராஜாஜி கூறினார்.

அடுத்த சில நாட்களுக்குள் தமக்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆகையால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாகவும் ராஜாஜி அறிக்கை வெளியிட்டார்.

1954ஆம் வருடம் மார்ச்சு மாதம் 25ஆம் தேதி ராஜாஜி சட்ட சபைக்கு வந்து தாம் விலகப் போகும் செய்தியை அறிவித்தார்.

பிறகு நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் காமராஜும், சி. சுப்பிரமணியமும் போட்டி-யிட்டார்கள். காமராஜுக்கு 93 வோட்டுக்களும் சுப்பிரமணியத்துக்கு 41 வோட்டுக்களும் கிடைத்தன.

காமராஜ் அமைத்த எட்டுப்பேர் மந்திரி சபையில் சி. சுப்பிரமணியத்தையும் சேர்த்துக் கொண்டது காமராஜின் பெருந் தன்மையைக் காட்டியது. சி. சுப்பிரமணியமும் காமராஜுடன் சேர்ந்து சிறந்த முறையில் பணியாற்றியது அவருடைய உயர்ந்த குணத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.
-----------
அத்தியாயம் 12


ராஜாஜி 1954-இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்த போது, ”அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவியைத் திறம்பட வகிக்கும் தகுதியும், ஆற்றலும் உள்ள தலைவர் யார்?" என்ற கேள்வி தமிழ் நாட்டில் எழுந்தது. சி. சுப்பிரமணியம், டாக்டர் சுப்பராயன், ஷெட்டி - இவர்கள் பெயர் அடிபட்டன.

காமராஜ் அப்போதுதான் தம்முடைய மலேயா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ் நாட்டுக்குத் திரும்பி யிருந்தார்.

அவருடைய எண்ணமெல்லாம் கட்சி வேலையிலேயே இருந்து வந்ததால், நல்ல முறையில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு மந்திரி சபையை அமைத்து விட்டு, அந்த மந்திரி சபைக்குப் பக்கபலமாகத் தாம் வெளியிலிருந்த படியே வேலை செய்யலாம் என்றுதான் நினைத்தார். அடுத்த மந்திரி சபை அமைப்புப் பற்றி ராஜாஜியைக் கலந்து ஆலோசித்தார்.
"இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வரை இப்போதுள்ள மந்திரி சபையே தொடர்ந்து நடக்கட்டும். அடுத்தாற் போல் பட்ஜெட் கூட்டம் வருகிறது. அது முடிந்தபின் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தலாம்" என்று கூறினார் ராஜாஜி.

"ரொம்ப சரி; அதுவரை பக்தவத்சலம், சுப்பிரமணியம், ஷெட்டி - இந்த மூவரில் ஒருவரே முதலமைச்சராயிருக்கட் டும்" என்றார் காமராஜ்.

கட்சிக் கூட்டம் நடந்த போது சி. சுப்பிரமணியத்தின் பெயரை ராஜாஜி பிரேரேபித்தார். ஆனால் பட்ஜெட் கூட் டம் வரை இது இடைக்கால ஏற்பாடுதான் என்பதை அவர் சொல்லவில்லை. காமராஜ் எழுந்து "இந்த ஏற்பாட்டை இரண்டு மாதங்களுக்குத்தான் ஒப்புக்கொள்ள முடியும். அப்புறம் தலைவர் தேர்தலை நடத்தி ஆக வேண்டும்" என்றார்.

ராஜாஜி கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆட்சேபித்தார்கள். இரு கட்சிகளுக்கிடையே எந்தச் சமரசமும் ஏற்பட வில்லை. இதனால் தேர்தலை உடனே நடத்தி விடுவதென்று காமராஜ் முடிவு செய்தார்.

சி. சுப்பிரமணியந்தான் முதலமைச்சராக வருவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இதற்குக் காரணம் ராஜாஜி மந்திரி சபையில் அவருக்கு அடுத்தபடியாகச் சுறுசுறுப்போடு இயங்கியவர் சி. சுப்பிரமணியந்தான். அத்துடன் ராஜாஜியின் அன்பும், ஆதரவும் இவருக்கு இருந்தன. அந்த மந்திரி சபையில் ”பாபுல"ராக இருந்தவரும் சி.எஸ். தான். எனவே அவருக்குத்தான் அடுத்த மாலை என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

இதற்கிடையில் காமராஜின் நண்பர்கள் அவரையே தேர்தலுக்கு நிற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். சி. எஸ். ஸின் தலைமையை விரும்பாதவர்கள் ஷெட்டியின் பெயரைச் சொன்னார்கள். சிலர் சுப்பராயனை நிறுத்தலாம் என்றார்கள். கடைசியாக எந்தச் சமரசமும் ஏற்படாததால் காமராஜும், சி. எஸ்ஸுமே போட்டியிட்டனர்.

போட்டியில் காமராஜுக்கே அதிக வோட்டுகள் கிடைத்து வெற்றி அடைந்த போதிலும் தாமே முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்தப் பதவியை இதற்கு முன்பே அடைந்திருக்கலாமே!

கட்சித் தலைவராக மட்டும் இருந்து கொண்டு முதலமைச்சராக வேறொருவரை நியமித்து ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்றுதான் முதலில் காமராஜ் எண்ணினார். டில்லிக்குப்
போய் தம்முடைய கருத்தை மேலிடத்திலும் சொல்லிப் பார்த்தார். ஆனால் கட்சித் தலைவரேதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அதற்குச் சம்மதம் இல்லை என்றால் முதலமைச்சராக வரக்கூடிய வேறொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று மேலிடத்தார் உறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

சென்னைக்குத் திரும்பி வந்த காமராஜ் தம்முடைய நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார்.

"மறுபடியும் தலைவர் தேர்தல் நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. தாங்களே முதலமைச்சராயிருப்பதுதான் சரி" என்று அவருடைய நண்பர்கள் கூறி விட்டார்கள்.

"அப்படியானால் ஒரு நிபந்தனை" என்றார் காமராஜ்.

”என்ன அது?" என்று கேட்டார்கள் நண்பர்கள்.

"நான் அமைக்கப் போகும் மந்திரி சபையில் என் இஷ்டப்படிதான் மந்திரிகளைச் சேர்த்துக் கொள்வேன். அவரைப் போடு. இவரைப் போடு" என்று யாரும் சொல்லக் கூடாது. சம்மதமா?" என்று காமராஜ் கேட்டார்.

"தங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள். தாங்களே முதலமைச்சராக வருவதுதான் முக்கியம்" என்றார்கள் நண்பர்கள். காமராஜ் மந்திரி சபையில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்கள் யாருக்குமே இடமிருக்காது என்று எல்லோரும் அப்போது எதிர்பார்த்தார்கள்.

காமராஜ் முதலமைச்சராக வந்ததும் தமது மந்திரி சபையில் எட்டுப் பேர்தான் இருப்பார்கள் என்று அறிவித்தார். அந்த எட்டுப் பேரில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள் என்றார்.

அதே மாதிரி ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டியில் தீவிரமாக இருந்த ஒருவரையும் தம்முடைய மந்திரி சபையில் அவர் சேர்த்துக் கொண்டார்.

காங்கிரஸை எதிர்த்து வந்த திரு. எஸ். ராமசாமி படையாச்சியையும் அவர் மந்திரியாக்கினார். இப்படி எல்லோரையும் திருப்திபடுத்தும் வகையில் மந்திரி சபை அமைத்தது அவருடைய திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.

காமராஜ் முதலமைச்சரானதும் சட்டசபை விவகாரங்களில் அதிகமாக ஈடுபடாமல், அசெம்பெளியில் சி. சுப்பிரமணியம் அவர்களையும், மேல் சபையில் திரு. பக்தவத்சலம்
அவர்களையும் முக்கியப் பங்கெடுக்கச் செய்தார்.

காமராஜ் ஒன்பது ஆண்டுக் காலம் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் சட்டசபையில் அவர் எழுந்து பேசியது ஐந்தாறு சந்தர்ப்பங்களுக்கு மேல் இராது. இதனால் அவருக்குச் சட்டசபை விவகாரங்களில் அனுபவமோ , ஆற்றலோ இல்லை என்று சொல்லிவிட முடி யாது. எல்லாப் பிரச்னைகளிலும் உள்ள சிக்கல்களையும், அவற்றுக்கு மாற்று என்ன என்பதையும் அவர் தெரிந்து வைத்துக் கொண்டுதான் சபைக்கு வருவார். ஆனாலும் பதில் சொல்லும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்ளாமல் சட்ட ஞானமும், வாதிக்கும் திறமையும் பெற்ற வழக்கறிஞர்களான சி. சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களையும் பிரகாசிக்கச் செய்தார்.

சர்க்கார் இயந்திரங்கள் சரிவர இயங்குவதிலும் சிவப்பு நாடா முறையை மாற்றிக் காரியங்கள் வேகமாக நடை பெறச் செய்வதிலும் காமராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொண்டார். சர்க்கார் அதிகாரிகள் சட் டத்தை எடுத்துச் சொல்லிக் காரியங்கள் வேகமாக நடப்ப தற்கு முட்டுக்கட்டை போடும் போதெல்லாம். "மக்களுக்காகச் சட்டமே தவிரச் சட்டத்துக்காக மக்கள் இல்லை" என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, சட்டத்தில் முரண்பாடு இருந்தால் அதை மாற்றுவதற்கு முற்பட்டார்.

ஒரு சமயம் முதலமைச்சர் காமராஜ் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த போது அப்பளம் தயாரிப்பவர்கள் சிலர் அவரிடம் கூட்டமாக வந்து, அப்பளத்துக்கு மட்டும் ஆறு பெர்ஸண்ட் விற்பனை வரி போடுகிறீர்களே, மற்ற உணவுப் பண்டங்களுக்-கெல்லாம் இரண்டு பெர்ஸெண்டதானே? இது என்ன நியாயம் என்று கேட்டார்கள்.

"அப்படியா சங்கதி ? நான் சென்னைக்குப் போனதும் இது பற்றி விசாரிக்கிறேன்" என்று அவர்களுக்குப் பதில் கூறி விட்டு வந்தார்.

சென்னைக்குத் திரும்பியதும் சம்பந்தப்பட்ட மந்திரியையும், அதிகாரிகளையும் கூப்பிட்டு விசாரித்தார்.

"ஆமாம், பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களுக்கு ஆறு பொஸெண்ட் விற்பனை வரி என்று சட்டம் இருக்கிறது" என்றார்கள் அதிகாரிகள்.

"பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் என்று சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது வேறு வகை உணவுப் பண்டங்களுக்குத்தான். அப்பளம் அதில் சேராது" என்று விளக்கினார் காமராஜ்.

அப்புறந்தான் அதிகாரிகளுக்கு விஷயம் புரிந்தது
---------------
அத்தியாயம் 13


காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றதால் அவருடைய வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அதே ”முக்கால் கை"க் கதர்ச் சட்டைதான்; அதே பழைய வீடுதான் ; அதே எளிய வாழ்க்கைதான். கைக்கு ஒரு "ரிஸ்ட் வாட்ச்" வாங்கிக் கொண்டாரா? கிடையாது. சட்டைப் பை பெரியதாக இருக்கிறதே, அதில் ஒரு மணிபாஸ் வைத்துக் கொண்டாரா? கிடையாது. போகட்டும், ஒரு பௌண்டன் பேனா? மூச்!

"இப்படிக் கைக்கடிகாரங்கூட இல்லாமல் இருக்கிறீர்களே. எப்போதாவது நேரம் தெரிய வேண்டுமானால் என்ன செய்வீர் கள்?" என்று அவரிடம் கேட்டேன்.

"கடிகாரம் எதுக்கு? யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க" என்று பதில் கூறினார் காமராஜ்.

"முதல் மந்திரியாக இருந்தீர்களே, சம்பளம் வாங்கினீர்களே, அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன்.

"காங்கிரஸ் வேலையாக டில்லிக்குப் போய் வந்தால் நானே தான் பிளேன் டிக்கட் வாங்கிக் கொள்வேன். தாயாருக்கு மாதம் நூறு, நூற்றைம்பது ரூபாய் செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் ஏது என்னிடம் பணம்?"

காமராஜ் திட்டத்தைச் செயலில் நிறைவேற்றிய போது அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் அல்லவா? அப்போது ஒரு முறை அவருடன் டில்லிக்குப் போயிருந்தேன். பிரயாணத்தின் போது அவரைக் கேட்டேன்.

"இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன? எதற்காகப் பதவியிலிருந்து விலகினீர்கள்?"

"காங்கிரஸ்காரர்கள் பலருக்குப் பதவி மேலே ஆசை வந்துட்டுது. உயர்ந்த பதவியில் இருக்கிறவர்களைப் பார்த் துத் தாமும் ஒரு மந்திரியா வரணும்னு அவங்க நினைக்கிறாங்க. பதவிங்கிறது மக்களுக்குச் சேவை செய்யறதுக்குத் தான் என்கிறதை மறந்துடறாங்க. இதனாலே காங்கிரஸ் கட்சி வேலை சரியா நடக்காமல் போயிடுது. கட்சிக்கும், மக்களுக் கும் சரியான தொடர்பு இல்லாமல் போயிடுது. நேருஜியிடம் இதை பற்றிப் பேசறப்போ , சில பேர் பதவியி லிருந்து விலகிக் கட்சி வேலை செய்யணும்னு சொன்னேன். அவருக்கு என் திட்டம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எதுக்கும் ஒரு ”பெர்ஸ்பெக்டிவ்" வேணுமில்லையா? நாமே பதவியிலே உட்கார்ந்துகிட்டிருந்தா நாம் செய்யறது சரியா, தப்பாங் கிறது நமக்குச் சரியாப் புரியாது. அதனாலே பதவியிலிருந்து விலகிப் போய்ப் பார்த்தால்தான் சரியான "பெர்ஸ்பெக்டிவ்"வா இருக்கும்னு தோணிச்சு. கோபுரத்தின் உள்ளே இருந்து அதை அண்ணாந்து பார்க்கிறதை விட, வெளியே போய்த் தூர நின்னு பார்த்தால் ”கரெக்ட் பெர்ஸ் பெக்டிவ்" கிடைக்கும் இல்லையா? அதுக்காகத்தான் ராஜி நாமா செய்தேன்.

என் திட்டத்தைப் பற்றி 1963 ஆகஸ்ட்லே காங்கிரஸ் காரியக் கமிட்டியிலே நேருஜி எடுத்துச் சொல்லி அங்கீகாரம் வாங்கினார். அதுக்குத்தான் ”காமராஜ் திட்டம்னு" பேர் வந்தது. அப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் டில்லி மந்திரி சபையிலேருந்து ஆறு காபினெட் மந்திரிகளும், ராஜ்ய மந்திரி சபைகளிலிருந்து ஆறு முதல் மந்திரிகளும் ஆக மொத்தம் பன்னிரண்டு பேர் ராஜிநாமா செய்தோம்."

"பதவியிலிருக்கிறப்போ உங்களைப் பல பேர் வந்து சலுகை கேட்டிருப்பாங்களே. அவங்களுக்கெல்லாம் ஏதாவது செய்தீங்களா?"

"எங்கிட்டே எல்லாரும் வருவாங்க. பேசுவாங்க. சலுகை கேட்பாங்க. நானும் செய்வேன். ஊருக்குப் பொதுவான, மக்களுக்குப் பொதுவான சலுகையாய் இருந்தால் செய்வேன். சொந்த முறையில் சலுகை கேட்டால் எப்படிச் செய்ய முடியும்? எனக்கு எவ்வளவு வேண்டியவங்களாயிருந்தாலும் நியாயமில்லாத முறையில் கேட்டால், அது முறையில்லே, முடியாது"ன்னுதான் பதில் சொல்லி அனுப்புவேன். அப்புறமும் அவங்க தயங்கித் தயங்கி நேரத்தை வீண் பண்ணாங்கன்னா மணியடிச்சு அடுத்தவங்களை உள்ளே வரச் சொல்லுவேன்.... வேறே என்ன செய்யறது?"

"காமராஜ் நம்மிடம் இவ்வளவு அன்பாகப் பேசுகிறாரே. இவ்வளவு நட்போடு பழகுகிறாரே, அவரிடம், சமயம் பார்த்து சொந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்" என்று யாராவது எண்ணினால் நிச்சயம் அவர்கள் ஏமாந்து தான் போவார்கள். காமராஜை யாரும், எந்தச் சமயத்திலும் ஏமாற்றிவிட முடியாது.

அவருக்கு நாடு, சுதந்திரம், மக்களுடைய நல்வாழ்வு - இவற்றில் தான் எப்போதும் அக்கறை. முதல் மந்திரியாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் சிந்தனையும், செயலும் மக்களுக்குத் தொண்டு செய்வதில் தான். முதலமைச்சராகப் பதவி வகித்த போது எதையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து, பிரச்னைகளின் தன்மைகளை நுட்பமாகப் புரிந்து கொண்ட பிறகுதான் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்குவார். மேலெழுந்தவாரியாகப் பார்த்து முடிவு செய்வதென்பதோ, அவசரப்பட்டு முடிவு எடுப்பதோ அவர் அகராதியில் கிடையாது.

ஒரு சமயம் பஸ் முதலாளிகள் சிலர் கும்பலாக வந்து "பஸ் விடும் தொழிலில் அதிக லாபம் இல்லை, நஷ்டந்தான் அதிகம். வரியைக் குறைக்க வேண்டும்" என்று சொன்ன போது, "ரொம்ப சரி. நஷ்டம் என்று சொல்கிறீர்கள்; ஒப்புக் கொள்கிறேன். அப்படியானால் எதற்காக மேலும் மேலும் ரூட் கேட்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? நஷ்டத்தில் நடக்கும் தொழிலுக்கு இவ்வளவு போட்டி எதற்கு? என்று பதில் கேள்வி போட்டுப் பிரச்னையின் மென்னியைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினார். அவ்வளவுதான். வந்தவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறித் திரும்பிப் போய் விட்டார்கள்.

இன்னொரு சமயம் கோயமுத்தூரில் மருத்துவக் கல்லூரி ஒன்று திறக்க வேண்டும் என்றும், அதற்காகக் கோவையைச் சேர்ந்த சில பணக்காரர்கள் இருபது லட்சம் ரூபாய் நன்கொடை தருவதற்குத் தயாராயிருப்பதாகவும் ஒரு குழுவினர் வந்து கோரிக்கை விடுத்தனர்.

"இந்தத் திட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு பணம் செலவாகும்?" என்று காமராஜ் கேட்டார்.

"ஒரு கோடி ரூபாய் ஆகும். மிச்சப் பணத்தைச் சென்னைச் சர்க்கார் கொடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தை இருபது லட்சம் நன்கொடை கொடுப்பவர்கள் ஏற்று நடத்துவார்கள். சுகாதார மந்திரிகூட இந்தத் திட்டத்தை அங்கீகரித்து விட்டார்" என்றார்கள் வந்தவர்கள்.
"ரொம்ப சரி, சர்க்காரிடமிருந்து எண்பது லட்சம் ரூபாய் எதிர்பார்க்கிறீர்கள், இல்லையா?" என்று கேட்டார் காமராஜ்.

"ஆமாம்."

"எண்பது லட்சம் கொடுக்கக்கூடிய சர்க்காரால் இன்னும் ஓர் இருபது லட்சமும் சேர்த்து ஒரு கோடியாகவே கொடுக்க முடியாதா?

"முடியும்."

"அப்படின்னா ஒரு கோடியைச் சர்க்காரே போட்டுச் சர்க்கார் கல்லூரியாகவே அதை நடத்திடலாமே! நீங்க எதுக்கு நிர்வாகம் செய்யணும்? இது என்ன நியாயம்? உங்க வீட்டுக்கு வர விருந்தாளி உங்க வீட்டுச் செலவிலே பத்திலே ஒரு பங்கு செலவழிக்கிறதா வெச்சுக்குவோம். அவன் உங்க பணத்தை யெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டு நிர்வாகத்தைத் தானே நடத்தற்தாகச் சொன்னால் அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா?" என்று கேட்டார்.

அவ்வளவுதான், அப்புறம் அந்தத் திட்டத்தைப் பற்றி யாருமே மூச்சு விடவில்லை.

காமராஜ் முதன் முதல் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற போது அவர் சென்னைச் சட்டசபையில் அங்கத்தினராக இல்லை. டில்லி பாராளுமன்ற மெம்பராகத் தான் இருந்தார். மந்திரியாக வருகிறவர்கள் சட்டசபை அங்கத்தினராக இல்லையெனில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று அசெம்பிளி அங்கத் தினராக வரவேண்டும் என்பது விதி. மேல்சபை மெம்பராக வருவது சுலபம். ஆனால் அது ஜனநாயக முறைக்கு அவ்வளவு பொருத்தம் ஆகாது. அசெம்பிளித் தேர்தலில் தான் மக்களின் நேரடியான கருத்தை அறிந்து கொள்ள முடியும். ஜனநாயகத்தில் அசைக்க முடியாத பற்றுதலும், நம்பிக்கையும் கொண்ட காமராஜ் அசெம்பிளி தேர்தலில் நின்று வெற்றி பெறவே விரும்பினார். அப்படியானால் எந்தத் தொகுதியில் நிற்பது? விருது நகர் அவர் சொந்த ஊர். அங்கே நின்று வெற்றி பெறுவதுதான் வழக்கம். இம்முறை அம்மாதிரி நிற்பதென்றால் ஏற்கெனவே அங்கு எம்.எல்.ஏ ஆக உள்ள ஒருவரை விலகிக் கொள்ளச் செய்ய வேண்டும். அதைவிட வேறு எங்காவது காலியாகும் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறுவதையே காமராஜ் விரும்பினார். குடியாத்தம் தொகுதியில் ஒரு ஸ்தானம் காலியாயிருந்ததால் அங்கே வந்து நிற்கும்படி அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் காமராஜைக் கேட்டுக் கொண்டார்கள். காமராஜ் ”சரி" என்றார். வேறொரு தொகுதியில் போய் நிற்பதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். காமராஜ் அதற்குத் துணிந்தார்.

குடியாத்தம் தேர்தலின் போது தமிழ் நாட்டின் கவனம் முழுதும் அங்கேதான் இருந்தது. தமிழ் நாட்டின் காங்கிரஸ் பிரசாரகர்கள் எல்லாரும் குடியாத்தத்தில் போய் முகாம் போட்டார்கள். திராவிடக் கட்சியும், முஸ்லிம் லீக்கும் காமராஜுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தன. முடிவு? - காமராஜே வெற்றி பெற்றார்.

இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் மக்களின் சேவைக்காகவே அந்தப் பதவியை வகித்தார். சொந்தத்தில் ஒரு வீடு கட்டிக் கொண்டாரா? கார் வாங்கிக் கொண்டாரா? கைக்கடிகாரம் உண்டா? பேனா உண்டா? பாங்கில் பணம் போட்டு வைத்தாரா? முதலமைச்சராகும் முன்பு எப்படி எளிய வாழ்க்கை நடத்தி வந்தாரோ அப்படியே தான் அணுவளவும் மாறாமல் இன்றளவும் வாழ்ந்து வருகிறார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகப் பாடுபட்டு வரும் காமராஜ் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எப்போதுமே எண்ணியதில்லை.
----------
அத்தியாயம் 14


வரலாறு கண்டிராத வகையில், நேருஜியே கண்டு வியக்கும் வண்ணம் 1955-இல் நடைபெற்றது ஆவடி காங்கிரஸ். இந்த மாபெரும் மாநாட்டின் வெற்றிக்கு மூலகாரண புருஷராயிருந்தவர் திரு. காமராஜ்.

இதற்கு முன்னால் டாக்டர் அன்ஸாரி தலைமையில் 1927-ல் சென்னை எழும்பூர் ஸ்பர்டாங்க் மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.

அந்தக் காலத்தில் எழும்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு மூலக்காரண புருஷராக விளங்கியவர் திரு. எஸ். சீனிவாசய்யங்கார். அவருடைய மகளே தற்போது ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தின் தலைவியாக உள்ள திருமதி அம்புஜம்மாள்.

ஆவடி காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருக்கும் கௌரவத்தைத் திருமதி அம்புஜம்மாளுக்கு அளித்ததன் மூலம் திரு. எஸ். சீனிவாசய்யங்காரை நினைவு கூர்ந்து பெருமைப்படுத்தினார் காமராஜ். அதைப் போலவே தம்முடைய அரசியல் குருவான திரு. எஸ். சத்தியமூர்த்தியின் ஞாபகார்த்தமாக ஆவடி காங்கிரஸ் நடைபெற்ற இடத்துக்கு "சத்தியமூர்த்தி நகர்" என்று பெயர் சூட்டினார்.

ஆவடி காங்கிரஸில்தான் புகழ் பெற்ற ”சோஷலிஸப் பாணி சமுதாயம்" என்ற கவர்ச்சியான சொற்றொடர் பிறந்தது.

அந்த மாநாட்டின் கோலாகலமான ஏற்பாடுகளைக் கண்டு வியந்த நேருஜி, "இந்த மாநாட்டின் இத்தனை சிறப்புக்களுக்கும் காரணம், முதலமைச்சர் காமராஜ் நின்ற இடத்தில் ஒரு நிமிஷங் கூட நிற்காமல் இங்குமங்கும் ஓடியாடி, எல்லாக் காரியங்களையும் தாமே கவனித்ததுதான்!" என்று பாராட்டிப் பேசியதை இதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

காமராஜை 1936 ஆம் ஆண்டிலிருந்தே நேருஜி அறிவார். அந்த ஆண்டு நேருஜி காங்கிரஸ் தலைவராக சென்னை மாகாணத்தில் சுற்றுப் பயணம் செய்த போது திரு. சத்தியமூர்த்தியும் காமராஜும் அவருடன் பயணம் செய்தார்கள். 1949 -லிருந்து காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர் என்ற முறையில் நேருஜியை அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு காமராஜு க்குக் கிட்டியது. நாளடைவில் நேருஜியின் மதிப்பில் காமராஜ் உயர்ந்து கொண்டே போனார். ஆவடி காங்கிரஸின் போது காமராஜின் உண்மையான மதிப்பு, சக்தி, ஆற்றல், செல்வாக்கு எல்லாமே எவ்வளவு பெரியவை என்பதை நேருஜி நன்கு புரிந்து கொண்டார்.

ஆவடி காங்கிரஸைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நேருஜி தம்மைப் பணித்தபோது காமராஜ் தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவராக மட்டுமே இருந்தார். ஆவடியில் மாநாடு நடைபெறுவதற்குள் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார்.

நேருஜியின் உள்ளத்தில் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டிருந்த காமராஜின் பெருமை, திறமை ஆகியவை யெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டுத் தம்மைப் போன்ற மூத்த தலைவர்களெல்லாம் கட்சி வேலையில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்த போது எவரெஸ்ட் அளவுக்கு உயர்ந்து விட்டது. அதுவரை தமிழ்நாட்டுத் தலைவராக மட்டுமே இருந்து வந்த சிவகாமியின் செல்வர் காமராஜ் திட்டத்துக்குப் பின்னர் அகில இந்தியத் தலைவராக மாறும் அளவுக்கு உயர்ந்து விட்டார்

"நேருவுக்குப் பிறகு யார்?" என்ற கேள்வி இந்தச் சமயத்தில்தான் எழுந்தது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் இந்தக் கேள்வி எழுந்த போதெல்லாம், "இது பற்றிக் காமராஜ் என்ன நினைக்கிறார்?" என்ற கேள்வியும் அத்துடன் எழுந்தது. சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, அதுல்யகோஷ், காமராஜ் ஆக நால்வரும் திருப்பதியில் கூடிச் சாமி கும்பிட்ட பிறகு அந்தப் புண்ணிய ஸ்தலத்திலேயே நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்தத் திருப்பதி சந்திப்புத்தான் இந்திய நாட்டின் அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தி விட்டது. இதுவே பின்னாப் பத்திரிகைக்காரர்களால் ஸிண்டிகேட் மீட்டிங் என்று வருணிக்கப்பட்டது. இந்த ஸிண்டிகேட்தான் நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியைத் தலைவராக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த நால்வருக்குள் திருப்பதியில் எழுந்த இரண்டு முக்கிய கேள்விகள் என்ன தெரியுமா?

1. நேருவுக்குப் பிறகு யார்?
2. அடுத்த காங்கிரஸ் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது?

திரு. சஞ்சீவய்யா அப்போது காங்கிரஸ் தலைவராயிருந் தார். அவருக்குப் பிறகு. வரப்போகும் தலைவர் தேர்தலில் போட்டி எதுவும் இருக்கக்கூடாது. அதற்கு ஏற்ற தலைவர் காமராஜா? அதுல்யகோஷா?

இது இரண்டாவது கேள்வியைத் தொடர்ந்து எழுந்த கேள்வி.

புது டில்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கு விடை கிடைத்தது. "காமராஜ்தான் அடுத்த காங்கிரஸ் தலைவராக வேண்டும்" என்று நேருஜி தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். அவருடைய விருப்பப்படி காமராஜையே அடுத்த தலைவராகத் தேர்ந் தெடுப்பதென்று முடிவாயிற்று. இது காமராஜுக்குத் தெரியாது.
இது சம்பந்தமான பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தபோது நான் டில்லிக்குப் போயிருந்தேன். காமராஜுடன் சில நாட்கள் மெட்ராஸ் ஹவுஸில் தங்கியிருந்தேன். அச்சமயம் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்பது பற்றி எல்லாப் பத்திரிகைகளிலும் ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. நாட்டு மக்களும் யார் தலைவர் என்பதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.

ஒருநாள் காமராஜ் அன்றைய காலைப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, "காங்கிரசின் அடுத்த தலைவராகச் சாஸ்திரியைப் போடலாமே?" என்றேன் நான்.

"போடலாம். ஆனால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறாரே, என்ன செய்ய? மறுபடியும் அவரைப் பார்த்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யணும்" என்றார் காமராஜ்.

காலையில் டிபன் சாப்பிடும் போது இந்தப் பேச்சு நடந்தது. பகல் உணவுக்குக் காமராஜ் நேருஜியின் இல்லத்திலிருந்து மெட்ராஸ் ஹவுஸிற்குத் திரும்ப வந்தார்.

அதற்குள் காமராஜ்தான் அடுத்த தலைவர் என்று தீர்மானமாகி விட்டது.

"என்ன இப்படி...." என்று நான் இழுத்தேன்.

“எனக்கு ஒன்றும் தெரியாது. சஞ்சீவ ரெட்டியும் அதுல்ய கோஷும் சேர்ந்து காதைக் கடிச்சுக்கிட்டிருந்தாங்க. திடீர்னு நேரு என் பேரைச் சொன்னார். எல்லாரும் கையைத் தூக்கிட் டாங்க. நான் என்ன செய்வேன்?" என்றார் காமராஜ்,

”இதைப் பற்றி நேருஜி உங்களிடம் ஒண்ணுமே சொல்ல வில்லையா?"

"அஞ்சாறு மாசத்துக்கு முன்னாலே அவர் என்னை ஹைதராபாத்திலே சந்திச்சப்போ அதைப் பற்றி பிரஸ்தாபிச்சார். நான், "வேண்டாம், அவ்வளவு பெரிய பாரத்தை என் தலை மீது வைக்காதீங்கன்னு சொன்னேன். அதோடு நான் முதலமைச்சர் பதவியை ராஜிநாமாச் செய்ததே தமிழ் நாட்டில் கட்சி வேலை செய்யணுங்கிறதுக்குத் தான்னும் சொன்னேன். அப்ப சும்மா இருந்துட்டார். அது அவர் மனசிலேயே இருந்திருக்கும் போல இருக்கு. இப்ப திடீர்னு இப்படி செஞ்சுட்டார்."

காமராஜே தலைமைப் பதவிக்கு ஏற்றவர் என்று நேருஜி முடிவு செய்ததற்கு என்ன காரணம்? ஒன்றா. இரண்டா, எத்தனையோ காரணங்கள் :

1. காமராஜ் திட்டத்துக்குப் பிறகு அவருடைய புகழ் நாட்டு மக்களிடையே இரட்டிப்பாகப் பெருகியிருந்தது.
2. பதவி மீது அவருக்குத் துளியும் பற்றுதல் இல்லை என்பது.
3. முதலமைச்சர் என்ற முறையில் சென்னை ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஒன்பதாண்டுக் காலம் மிகச் சிறப்பாக, துல்ய மாக நடத்தி வந்தது.
4. காங்கிரஸ் தலைமைப் பதவிக்குப் போட்டியின்றித் தேர்ந் தெடுக்கப்படக் கூடிய தகுதி அவர் ஒருவருக்கே இருந்தது.
5. தமக்குப் பிறகு காங்கிரஸ் ஸ்தாபனத்தை நல்ல முறை யில் நடத்திச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்று நேருஜி எண்ணியது.

அடுத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் என்று அறிவிக்கப்பட்டதும் தமிழ் மக்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

புவனேசுவர் காங்கிரஸ் மாநாட்டில் கூடிய ஆயிரக்கணக் கான தமிழ் மக்களே அதற்குச் சான்று.

1926 - இல் கௌஹாதி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் திரு. எஸ். சீனிவாசய்யங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பின் தமிழ் நாட்டிலிருந்து காமராஜே அந்த மாபெரும் பதவியை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புவனேசுவரில் கூடிய மாநாட்டில் காமராஜ் தம்முடைய தலைமைப் பேருரையைத் தமிழிலேயே நிகழ்த்தினார். கருத்து மிக்க அந்தச் சொற்பொழிவைத் தமிழிலேயே காமராஜ் படிக்கக் கேட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது போல் ஆகி விட்டது அச்சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அதுதான் அந்த மாநாட்டுக்கு வந்திருந்த நேருஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அது காரணமாக அவர் மாநாட்டுப் பந்தலுக்கு வர முடியாமல் அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அதைக் கண்ட லட்சோபலட்சம் மக்கள் சோகத் துடன் திரும்பிச் சென்ற காட்சி என் மனக் கண்முன் இன்னமும் அப்படியே நிழலாடிக் கொண்டிருக்கிறது.
-------------
அத்தியாயம் 15


காமராஜை சந்தித்துப் பேசுவதற்காக நான் டில்லியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது. அநேகமாகத் தினமும் அவர் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் பழம் பெருந் தலைவர்களைப் பற்றி அவர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், "ராமசாமி நாயக்கரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன்

"சின்னப் பையனாக இருந்தபோதே நான் அவரைப் பார்த்திருக்கேன். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. நேரடியாத் தொடர்பும் கிடையாது. விருதுநகருக்கு வருவார், பார்த்திருக்கேன். ரொம்ப ஸின்ஸியர் ஆசாமி. சரியோ தப்போ. தைரியமாகச் சொல்லுவார். செய்வார். ஐம்பத் திரண்டிலே ராஜாஜியை சப்போர்ட் பண்ணினார். அப்ப தி.மு.க. பிரிஞ்சுட்டாங்க. நாய்க்கர் பரவாயில்லே, சப் போர்ட் பண்றாரு. தி.மு.க. தான் ஆதரவு கொடுப்பது கிடையாது என்று ராஜாஜியே என்னிடம் சொல்லியிருக்கார்."

"உங்களைக் கூட அவர் குடியாத்தம் தேர்தலின் போது சப்போர்ட் பண்ணினாரே! உங்க ஆட்சியை அசல் தமிழன் ஆட்சி" என்று அவர் சொன்னார், இல்லையா?"

"ஆமாம்; அவருக்கு அப்போ டி. எம். கே. மேலே கோபம். என்னை ஆதரிச்சதுக்கு அதுவும் ஒரு காரணம்."

"நீங்க பதவியிலிருந்தப்போ அவர் எப்பவாவது உங்களிடம் சிபாரிசுக்கு யாரையாவது அனுப்பியிருக்காரா?"

"கிடையாது."

"அவரைத் தனியாச் சந்திச்சுப் பேசியிருக்கீங்களா?"

"ஒரு முறை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எதுக்கோ போயிருந்தேன். அப்ப அவரும் அங்கே படுத்திருந்தார். உடல் நலம் பற்றி விசாரிச்சுட்டு வந்தேன் ; அவ்வளவுதான்."

"எஸ். சீனிவாசய்யங்காரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"அடாடா! எப்பேர்ப்பட்ட லீடர்!" என்று கூறிய காமராஜ் உணர்ச்சி வசப்பட்டவராய் இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி, "ஆகா!" என்று சூள் கொட்டி வியப்பொலிகளை உதிர்த்து விட்டுச் சொன்னார்.

"அந்த காலத்திலே சுபாஷ் போஸ், சீனிவாசய்யங்கார், நேரு - இவங்க ஆரம்பிச்ச ”இந்தியா லீக்" கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நானும் அதை ஆதரிச்சேன். ஆனா எந்தக் கொள்கையும் காந்திஜியை எதிர்க்க வந்தால் அதோடு சேர எனக்கு மனம் வராது. அது என்னால் முடியவும் முடியாது..."

"1929-இல் காங்கிரஸிலிருந்து விலகி விட்டார் சீனிவாசய் யங்கார். அவரை மறுபடியும் காங்கிரசுக்குள்ளே கொண்டு வரணும்னு அபேதவாதிகள் சிலர் முயற்சி பண்ணாங்க. நான் அதுக்கு ஒத்துழைச்சா, அய்யங்கார் மறுபடியும் காங்கிரஸ் பிரசிடெண்டா வந்துடலாம்னு சொன்னாங்க. அவரே என் கிட்டே வந்து பேசினார்.

நான் கேட்டேன், ”நீங்க காங்கிரசுக்குள்ளே வந்து என்ன செய்ய போறீங்க”ன்னு. காந்தியை எதிர்ப்பேன்னு சொன்னார். அது எனக்குப் பிடிக்கல்லே. காந்தியை எதிர்க்கிறதுங்கிறது நடக்காத காரியம், அதுக்கு நான் உடன்பட மாட்டேன்"னு சொல்லி அனுப்பிச்சுட்டேன்."

"நேரு - படேல் இவங்க ரெண்டு பேருக்குள்ளே அடிக்கடி தகராறு நடக்குமாமே; அது உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு என்ன காரணம்?" என்று காமராஜிடம் கேட்டேன்.

"ஜெலசிதான் காரணம். காந்தி இருக்கிற போதே அவங் களுக்குள்ளே இந்த ட்ரபிள் ஆரம்பமாயிட்டுது. அப்ப வல்ல பாய், ராஜாஜி. ராஜன் பாபு, பஜாஜ், இன்னும் ஒருத்தர் ஆக அஞ்சு பேர் - அவங்களைப் பஞ்சபாண்டவங்கன்னு சொல்லு வாங்க. அஞ்சாவது ஆள் யாருன்னு ஞாபகத்துக்கு வரல்லே..."

"கிருபளானியா?"

"ஊஹும், வேறு யாரோ ஒருத்தர் - சட்டுனு ஞாபகத்துக்கு வரலே. அவங்க அஞ்சு பேரும் காந்திஜி பாலிஸியை அப்படியே பின்பத்தறவங்க. நேரு அப்படி இல்லை. இளைஞர்களைத் திருப்பி ஒரு ”லீடர்ஷிப் பீல்ட்" பண்ணிக்கிட்டு வந்தார். 1930-இல் அவர் காங்கிரஸ் தலைவர். முப்பத்திரண்டிலே ஜெயிலுக்குப் போனார். முப்பத்தஞ்சிலேயும் போய் வந்தார். அந்த வருஷத்தில் லக்னோ காங்கிரஸ் தலைவராக ஆனார். அவர் இரண்டாவது தடவையாகத் தலைவராய் வரக் கூடாதுன்னு சிலர் சொல்லிப் பார்த்தாங்க. காந்திஜி கேட்கல்லே.

நேருஜி தம்முடைய தாயார், தந்தை, மனைவி எல்லாரையும் இழந்து விட்டிருந்த சமயம் அது. அப்பவே அவர் முற் போக்குவாதி. இப்ப அவர் மகளும் தன்னை முற்போக்குவா தின்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்காங்க. இது வேறே... அது கிடக்கட்டும். 1920-லே கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு செட் காந்தியைச் சுத்திச் சுத்தி வந்தாங்க. அதே மாதிரி 1930 இலே வந்த ஒரு செட் நேருவைச் சுத்தினாங்க (மேஹராலி. ஜயப்பிரகாஷ் போன்றவர்கள் அப்பவே நேரு பலத்தை வல்லபாய் உடைக்கப் பார்த்தார். காந்திஜி விடல்லே. யுத்தம் ஆரம்பிச்சவுடன் வல்லபாயின் கை ஓங்கி விட்டது. இளைஞர்கள் கூட அவர் பக்கம் சேர்ந்துட்டாங்க.

47 - இல் சுதந்திரம் வந்தது. நேருஜி பிரதமரானார். வல்லபாயைக் கண்ட்ரோல் பண்ண நினைச்சார். முடியல்லே. தகராறு வளர்ந்துக்கிட்டே இருந்தது. இவங்களைச் சமரசம் பண்ணி வைக்கிறதே காந்திஜிக்கு வேலையாப் போச்சு. தினம் சாயங் காலம் பிரலா மாளிகையிலே இவங்க ரெண்டு பேரையும் கூட்டி வச்சு அவர் சமரசம் பண்ணி வைப்பார். அதுக்கு முன்னாடி 120 வயசு வரை வாழ்வேன்னு காந்திஜி சொல்லிக் கொண்டிருந்தாரா? அப்புறம் செத்துப் போனா தேவலாம்னு கூடச் சொல்ல ஆரம்பிச்சுட்டார்.... சரி ; நேரமாகிறது: லோக சபாவுக்குப் போகணும். ராத்திரிக்கு மறுபடியும் பார்க்கலாமே!" என்று எழுந்தார் காமராஜ்.

"லோக் சபாவிலே இன்றைக்கு அப்படி என்ன முக்கியம்?" என்று கேட்டேன்.

"அங்கே பதவிக்காக அப்படியும். இப்படியுமா இருக்கும் சிலர் என்னைச் சந்தித்துப் பேசணும்னு நினைக்கிறாங்க. அவங்க என் வீட்டுக்கு வரமுடியாது. அப்படிப்-பட்டவங்களும் என்னைப் பார்த்துப் பேச நான் சந்தர்ப்பம் கொடுக்க வேண் டாமா? அதுக்குச் சரியான இடம் லோக் சபா லௌஞ்சுதான். அந்த இடத்திலேதான் யார் வேணாலும், யாரை வேணாலும் பொதுவா சந்திச்சுப் பேசலாம்" என்று அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டே எழுந்தார் காமராஜ். நான் புன்னகையுடன் விடை கொடுத்தேன்.
-----------
அத்தியாயம் 16


டில்லியில் இன்னொரு நாள். பக்தர்கள் பகவானைச் சிக்கெனப் பிடித்தது போல நானும் காமராஜைச் "சிக்"கெனப் பிடித்துக் கொண்டு, "போன தேர்தல்லே காங்கிரஸ் தோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்று கேட்டேன்.

"சரியான வாரிசு இல்லே. அரிசி கிடைக்கல்லே. காங்கிரஸுக்குள் பூசல், பொறாமை வளர்ந்துட்டுது."

”அடுத்த தேர்தல்லே காங்கிரஸுக்கு எத்தனை கூட கிடைக்கும்?"

"நூற்றைம்பது ஸீட் விண்டிகேட் காங்கிரஸுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரசாரம் போதாது. இன்னும் நல்லா செய்யணும்."

”நிலப் பட்டா செய்யறது பற்றி உங்க கருத்து என்ன?"

"ஊரிலே தனியா நிலம் இருந்தா எல்லாக் கட்சியும் சேர்ந்து நிலமில்லாதவங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு லிஸ்ட் போட்டு. ஆளுக்கு இவ்வளவு நிலங்கிற லிஸ்ட்டைச் சர்க்காருக்கு அனுப்பினா பட்டா போட்டுக் கொடுக்கலாம்."

"பணக்காரங்க ரொம்பப் பேருக்கு நிலத்தைக் கொடுத்துட் டாங்களாமே?"

"கொடுக்கல்லே ; அவங்களே எடுத்துக்கிட்டாங்க.... நிலத்துக்கு உச்ச வரம்பு இங்கே பதினைந்து ஏக்கர்னு வெச்சிருக்காங்க. கேரளாவிலேயும் பதினைந்து ஏக்கானு வெச்சிருக்காங்க. இது சரியில்லே. கேரளாவிலே ஐந்து ஏக்கர் நிலம் இருந்தா இங்கே அது பதினைந்து ஏக்கர் நிலத்துக்குச் சமம். அப்படி வித்தியாசம் இருக்கச்சே, இங்கே, அங்கே ரெண்டு இடத்திலேயும் பதினைந்து ஏக்கர் ஸீலிங் என்பது எப்படிச் சரியாகும்?"

"அதை விடுங்க. ஒரு தமிழர் இந்த நாட்டின் பிரதம மந்திரியா வர முடியுமா?"

"முடியும். ஆனா இப்ப முடியாது; அதுக்குச் சரியான சூழ்நிலை இல்லை. நான் காங்கிரஸ் பிரஸிடெண்ட்டா இருக்கக் கூடாதுன்னு இந்திரா காந்தி நினைச்சாங்க. மொரார்ஜி தேசாயும் நினைச்சார். இதிலே அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு!"

"ஜனநாயகத்துக்கு ஆபத்து, இந்தியாவுக்கு ஆபத்து - இந்த இரண்டிலிருந்தும் தேசத்தைக் காப்பாத்தணும்னு சொல்றீங்களே, அந்த ஆபத்து எப்படி, எந்த உருவிலே வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

"இந்த நாட்டிலே பிரதமரை விலைக்கு வாங்கலாம். ஜன நாயகத்தையும் விலைக்கு வாங்கலாங்கிற நிலைமை இப்போ வந்துகிட்டிருக்கு. இதைவிட நம்ம நாட்டுக்கு வேறே என்ன ஆபத்து வேணும்? மருந்து கண்ட்ரோல், சிமெண்ட் கண்ட் ரோல் - இந்த ரெண்டிலேயும் ரொம்ப ஊழல் நடக்கிறது. லட்சம் லட்சமாப் பணம் புரளுது. ஏராளமான வெளிநாட்டுப் பணம் நம்ம நாட்டிலே நடமாடுது. இந்தப் பணமெல்லாம் நம்ம அரசியலைப் பாழடிக்காதா? இந்த மாதிரி அந்நிய நாட் டுப் பணம் நம்மை ஆட்டிப் படைச்சா நம்ம நாடு ”வீக்"காகத் தான் போகும். ரஷ்யப் பணம், அமெரிக்கப் பணம் ரெண்டுமே தப்புதான். இதனாலே நம்ம சுதந்திரமே போயிடுமே! இன்றைய அரசியல்லே முதல் இடம் பணத்துக்குத்தான்னு ஆயிட்டுது. அதுக்கு அப்புறந்தான் ஜாதி மத்தது எல்லாம். கம்யூனிஸ்ட் கட்சிங்க வேறே, இதிலே வலது கம்யூனிஸ்ட்டால்தான் ஆபத்து அதிகம்னு நான் நினைக்கிறேன். அவங்களுக்குத்தான் ரஷ்யப் பணம் ரொம்பக் கிடைக்குது. அது நம் நாட்டை ரொம்பக் கெடுக்குது. இதைக் கவர்ன்மெண்ட் பார்த்துச் சீக்கிரமா நிறுத்தணும், நமக்கு இதெல்லாம் தெரியுது. ஆனா நாம் என்ன செய்ய முடியும்? அயல் நாடுகளுக்கு இங்கே எதுக்குத் தனியா ஒரு வர்த்தக அதிகாரி? ரஷ்யாதான் எல்லாமே அரசாங்க வழியா நடக்கணும்னு சொல்லுதே, அவங்க மட்டும் இங்கே நடத்தற சில சாமான்கள் வியாபாரத்தை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் வழியா நடத்தக் கூடாதா? தனிப்பட்ட ஆளுங்களுக்கு ஏன் கொடுக்கணும்? கம்யூனிஸ்ட் பலம் அதிகமானால் இந்திரா கேபினெட்லே கீ பொஸிஷனையெல்லாம் கம்யூனிஸ்ட் எடுத்துக்குவானே....? அப்புறம் சிமெண்ட் கண்ட்ரோல் இருந்தப்போ சிமெண்ட் தெற்கே இருந்து வடக்கே போய்க்கிட்டு இருந்தது. ரயில் சார்ஜ் அரசாங்கம் கொடுத்தது. இதனாலே அங்கே இருக்கறவங்களுக்கு அதிக லாபம் சம்பாதிக்க முடியல்லே. பணம் கொடுத்து டி கண்ட்ரோல் பண்ண வச்சாங்க. வடக்கே சிமெண்ட்டுக்கு ஷார்ட்டேஜ் வந்தது. நல்ல லாபம் சம்பாதிச்சாங்க.

மருந்து விலைக் குறைப்பும் அப்படித்தான். அவசியமான மருந்து விலை ஏறிப் போச்சு ; தேவையில்லாத மருந்துகள் விலை மட்டும் குறைஞ்சுது. இதிலே யாருக்கு லாபம்? மருந்துக் கம்பெனிக்காரர்களே பணம் கொடுத்து செய்த வேலை இது. இந்தப் பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியணும்..... இதையெல்லாம் எப்படித் தடுக்கிறது? எல்லாரும் ஒண்ணு சேரணும். இந்த ஆபத்தையெல்லாம் எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்யணும். பத்திரிகைகளெல்லாம் இந்திரா காந்தியை சப் போர்ட் பண்ணுது. ரேடியோ அவங்க கையிலே இருக்குது. பிரஸ் இருக்குது. பிறகு எப்படி பப்ளிக் ஒபினியன் உருவாகும்?

”நாம் எவ்வளவு பேசினாத்தான் என்ன? ஆயிரம் பேர் கேட்பாங்க, அவ்வளவுதான். அதுவே பேப்பர்லே வந்தா லட்சம் பேர் படிப்பாங்க. பேப்பர்லே வந்ததை வெச்சுக்கிட்டு அப்புறம் பத்து லட்சம் பேர் பேசுவாங்க. நாம் பேசறது பேப்பர்லே வராட்டா எப்படி?"

பத்திரிகைகளின் சக்தியைப் பற்றிக் காமராஜ் இப்படிச் சொன்னதும் நானும் ஒரு ”பத்திரிகையாளன்" என்ற முறையில் என் உள்ளம் பெருமிதத்தால் நிறைந்தது. அடுத்த கேள்வியை நான் போடுவதற்குள், "தலைவர் இருக்கிறாரா? என்று கேட்டுக் கொண்டே யாரோ ஒரு பிரமுகர் உள்ளே வரவே, "இதோ வந்து விட்டேன்!" என்று காமராஜ் எழுந்தார். வந்தவர் யார்? என்று நான் கவனிப்பதற்குள் இருவரும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வெளியே நடந்தார்கள்.

எப்படியிருக்கும் எனக்கு? - நல்ல ஒரு துப்பறியும் கதையின் கடைசிக் கட்டத்திலுள்ள துப்புத் துலங்கும் அத்தியாயத்தைப் பரபரப்புடன் படித்துக் கொண்டிருக்கும் போது. யாரோ வந்து என் கையிலிருந்த புத்தகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விட்டது போல் இருந்தது.
---------------
அத்தியாயம் 17


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் விருது நகருக்குச் சென்று காமராஜின் தாயார் சிவகாமி அம்மாளைப் பார்த்துப் பேசி விட்டு வந்தேன். அப்போது பேச்சுக்குப் பேச்சு ”காமராஜ் திருமணம் செய்து கொள்ளவில்லையே" என்ற குறையை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

"உங்க மகனைப் பற்றி நாடே பெருமைப்படுதே, அதற்காக நீங்க சந்தோஷப்படுவீங்களா ! கலியாணம் செய்து கொள்ள வில்லையே என்று இப்படிக் குறைப்படுவீங்களா?" என்றேன் நான்.

"நாட்டுக்கு ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளைதானே? எனக்குக் குறை இருக்காதாய்யா?" என்றார் அவர்.

"வேறு ஏதாவது குறை உண்டா உங்களுக்கு" என்று கேட்டேன்.

"இங்கே வந்தால் ஒரு நிமிஷம் நிற்கமாட்டானயா உள்ளே நுழையற போதே, என்னம்மா சௌக்கியமா?"ம்பான். அப்படிக் கேட்டுக்கிட்டே உள்ளே வருவானா? வந்த சுவட்டோடே, அப்படியே தெருப் பக்கமாகத் திரும்பி நடந்துகிட்டே நான் வரேம்மான்னு போயிடுவான். என் மகனை இந்த நாட்டுக்கு உழைக்க ஒப்படைச்சுட்டேன். சின்ன வயசிலேருந்தே அவன் வீடு தங்கினதில்லை. அவனுக்கு ஒரு கலியாணத்தைச் செஞ்சு கண்ணாலே பார்த்துடணுமனு நானும் எவ்வளவோ பாடு பட்டுப் பார்த்தேன். முடியலே. அதுதான் குறை!"

”உங்கள் செலவுக்குப் பணம் அனுப்புகிறாரா?

"அனுப்பறான். அவனே அனுப்ப மாட்டான் ; தனுஷ்கோடி நாடார் மூலமாத்தான் அனுப்புவான். அவர் நூறு ரூபா அனுப்புவார். இங்கே நாலு பேர் உட்கார்ந்து சாப்பிடணுமே! இந்த விலைவாசியிலே நூறு ரூபா பத்துமா? நீங்களே சொல்லுங்க."

"மெட்ராசுக்குப் போய் மகன்கிட்டேயே இருந்துடுங்களேன்..."

"நல்லா இருக்க விடுவானே...? ஆவடி காங்கிரஸின் போது போனேன். ரெண்டு நாள் தங்க விடலே. ஊரைச் சுற்றிக் காட்ட ஏற்பாடு பண்ணான் ; பார்த்தேன். "எல்லாம் பார்த்தாச்சு இல்லையா? புறப்படு விருது நகருக்குன்னு ரயிலேற்றி விட்டுட்டான். நான் சொன்ன பேச்சைக் கேக்கற பிள்ளையார் அவன்? காமராசான்னு நாடே அவனைத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுது. அதுலே எனக்கு சந்தோசந்தான். இருந்தாலும்..."

"சின்ன வயசிலே அவரை நீங்க பள்ளிக்கூடத்திலே படிக்க வெச்சு வீட்டிலேயே மடக்கிப் போட்டு வளர்த்திருக்கணும்."

" நல்லாத் தங்குவானே வீட்டிலே! மதுரை உண்டா, மன்னார்குடி உண்டான்னு ஓடிக்கிட்டே இருப்பான். கொஞ்சம் அரிசியும், படி நெய்யும் கொடுத்துப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வாத்தியாரு கூட வச்சோம். படிச்சானா? இல்லே! இந்த நாட் டிலே படிக்காத பிள்ளைங்களே இருக்கக் கூடாதுன்னு இப்ப சொல்றான். ஊர் ஊராப் பள்ளிக்கூடம் கட்டிப் பிள்ளைங்களைப் படிக்க வைக்கறான்."

சிறு வயதிலேயே வீட்டை மறந்து நாட்டுக்கு உழைப்பதிலேயே நாட்டம் கொண்ட காமராஜ் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழு நேரக் காங்கிரஸ் ஊழியராகவே மாறி விட்டார். உத்தியோகம், திருமணம் - இவ்விரண்டும் தம்முடைய போக்குக்கு ஒத்து வராது என்று முடிவு செய்த அவர், அவை பற்றிய சிந்தனைக்கே இடம் தருவதில்லை. யாராவது அந்தப் பேச்சை எடுத்தாலும், "அதெல்லாம் எதுக்கு....? ம்... அப்புறம்?" என்று பேச்சை மாற்றி விடுவார்.

விடுதலைப் போராட்டங்களில் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு முன்னால் சில நாட்கள் அவர் இன்ஷரென்ஸ் ஏஜண்டாயிருந் தார். ஆனால், அந்த வேலையை அவர் வெகு சீக்கிரத்திலேயே விட்டு விட்டார். பணம் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்ட மில்லை. ”அரசியல் வேலையே தம்முடைய வேலை, தேச நலனே தம்முடைய நலன்" என்று கருதி ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்குச் செல்வதையே தொழிலாகக் கொண்டார்.

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இந்த நாட்டில் பல லட்சம் மக்கள் சிறைக்குச் செல்லத் தயாராயிருந்தார்கள். அப்போது சிறைச்சாலைகள் நிரம்பிப் போதுமான இடமின்மையால் பிரிட்டிஷ் சர்க்கார் பலரைக் கைது செய்யாமலே விட்டு வைத்திருந்தது. இந்த நிலையில் சிறைக்குப் போகவும், விடுதலை இயக்கத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் தொண்டர்கள் நாடெங்கும் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் காமராஜும் ஒருவர். இந்தச் சமயம் பார்த்துக் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விடவே, பலர் உற்சாகம் இழந்து விட்டார்கள். ராமநாதபுரம் ஜில்லாவில் இரண்டே பேர்தான் கைதானார்கள். காமராஜ் கைதாகவில்லை.

போராட்டம் நின்று விட்டதால் ஊழியர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதற்காக அங்கங்கே கள்ளுக் கடை மறியல் செய்யத் தொடங்கினார்கள். காந்திஜியின் நிர்மாணத் திட்டப் பணிகளில் அதுவும் ஒன்று. இந்த மறியல் வேலையினால் தொண்டர்களுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மதுரை நகரந்தான் கள்ளுக்கடை மறியலில் முன்னணியில் நின்றது. காங்கிரஸ்காரர்களை மறியல் செய்யும் இடங்களுக்குச் சென்று கைது செய்வதைவிட ஒரே இடத்தில் அவர்கள் எல்லாரையும் மொத்தமாக மடக்கிப் பிடித்துக் கொண்டு போய் விடுவது நல்லது என்று எண்ணினார்கள் மதுரைப் போலீசார். இதற்காகக் காங்கிரஸ் அலுவலகத்துக்கே சென்று அங்கிருந்த காங்கிரஸ்காரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். போலீசார் போன சமயத்தில் காமராஜ் காங்கிரஸ் அலுவலகத்தில் இல்லை, சில நிமிடங்களுக்கு முன்னால் தான் அவர் வெளியே போய் இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது எல்லாக் காங்கிரஸ்காரர்களையும் போலீசார் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்பதை அறிந்து அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

பிறகு, "நாகபுரிக் கொடிப் போராட்டம்" என்ற பெயரில் ஓர் இயக்கம் நடைபெற்றது. அங்கே ஒரு குறிப்பிட்ட தெரு வழியாகத் தேசியக் கொடியைப் பிடித்துச் செல்லக் கூடாது என்று போலீசார் தடை உத்தரவு போட்டதன் விளைவாக எழுந்த போராட்டம் இது.

ஒத்துழையாமை இயக்கம் நின்று போன ஏக்கத்தில் சோர்வடைந்து போயிருந்த காங்கிரஸ்காரர்களுக்கும், காமராஜுக்கும் நாகபுரிக் கொடிப் போர் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத் தையும் உண்டாக்கியது. நாட்டின் எல்லா இடங்களிலிருந்து தொண்டர்கள் நாகபுரியை நோக்கிப் புறப்பட்டார்கள். காமராஜ் சும்மா இருப்பாரா? பலரைச் சேர்த்து நாகபுரிக்கு அனுப்பி வைத்தார். அடுத்தாற் போல் இன்னொரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தாமும் புறப்பட திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இதற்குள் நாகபுரிப் போராட்டத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதால் அப்போதும் காமராஜுக்குச் சிறை செல்லும் வாய்ப்பு கிட்டாமலே போய் விட்டது.

பின்னர், ஜெனரல் அவாரி என்ற தேசபக்தர் நாகபுரியில் வாள் போராட்டம் ஒன்றை நடத்தினார். தெருவில் வாள் எடுத்துப் போக அனுமதி வேண்டும் என்று சட்டத்தை மீறுவதே அதன் நோக்கம். அதே மாதிரிப் போராட்டம் ஒன்றை மதுரையிலும் நடத்த வேண்டுமென்று காங்கிரஸார் தீர்மானித்தார்கள் 1927 -ஆம் ஆண்டில் தேசபக்தர் சோமயாஜுலு தலைமையில் பட்டாக் கத்திகள் தாங்கி ஊர்வலமாகச் சென்றார்கள். இந்த இயக்கத்திற்குக் காமராஜ்தான் ஐந்து பட்டாக் கத்திகள் தயார் செய்து கொடுத்தார். இப்போதும் போலீசார் இவர்களில் யாரையுமே கைது செய்யாமல் விட்டு விட்டார்கள். காரணம், அப்போதைய சட்ட மந்திரியான சி.பி. ராமசாமி ஐயர் செய்த சூழ்ச்சிதான். மதுரையில் யாரையும் கைது செய்ய அவர் விரும்பவில்லை. கைது செய்தால் அந்த இயக்கத்துக்கு வலு ஏற்பட்டு விடும் என்பதற்காக அவர், ”தெருவில் பட்டாக் கத்தி எடுத்துச் செல்ல மலபாரில் மட்டும் தான் அனுமதி பெற வேண்டும். மற்ற இடங்களுக்கு அனுமதி தேவையில்லை" என்று கூறி விட்டார். அதனால் அந்த இயக்கம் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போயிற்று.

இதற்கு அடுத்த போராட்டம் சென்னையில் நடந்தது. மவுண்ட்ரோடிலுள்ள நீல் என்ற வெள்ளைக்காரன் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்த சத்தியாக்கிரகப் போராட்டம் அது. 1857 - ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதலாவது சுதந்திர யுத்தத்தில் ஜெனரல் நீல் என்பவன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். அந்தக் கொடியவனுக்கு மவுண்ட்ரோடில் சிலை ஒரு கேடா? ”அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட வேண்டும்" என்று கொதித்து எழுந்தார்கள் பலர். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்தவர்களில் பெரும்பாலோர் தண்டனை பெற்றுச் சிறைக்கும் போய் விட்டார்கள். எஞ்சியிருந்தவர்கள் காமராஜும் இன்னும் சிலருந்தான். காமராஜ் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த விரும்பினார். மகாத்மா காந்திஜியிடம் சென்று விஷயத்தை விளக்கினார். மகாத்மாவும் ”நீலன் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதுதான்" என்று கூறி, அந்த இயக்கத் துக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து விட்டார். ஆயினும் "நீலன் சிலை ஒழிப்பு இயக்கம்" தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதே சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கும் வேலை வந்து விட்டதால், அந்தச் சிலை எதிர்ப்பு இயக்கத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி ஆகி விட்டது. இவ்வளவு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டும் சிறைக்குப் போகா மலே தப்பித்துக் கொண்டிருந்த காமராஜ் கடைசியாக 1930 ஆம் ஆண்டில்தான் சிறைத் தண்டனை பெற்றார்.
--------------
அத்தியாயம் 18


காந்தி மகான் 1930 ஏப்ரலில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காகத் தண்டி யாத்திரை புறப்பட்டார். காந்திஜியைப் போலவே ராஜாஜியும் திருச்சியிலிருந்து சில சத்தியாகிரகிகளை அழைத்துக் கொண்டு வேதாரண்யத்துக்கு உப்பு காய்ச்சப் புறப்பட்டார். நாடெங்கும் உப்பு சத்தியாக்கிரக இயக்கம் பெரும் எழுச்சியை உண்டாக்கியது. ஆயிரமாயிரம் தேசபக்தர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்தார்கள்.

காமராஜும் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அது வரை பல போராட்டங்கள், இயக்கங்கள், கிளர்ச்சிகளில் தீவிரப் பங்கு கொண்டு வேலை செய்து வந்த காமராஜைச் சும்மா விட்டு வைத்திருந்த போலீசார் அவர் உப்பு சத்தியாக்கிரகம் செய்த உடனே கைது செய்து இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

காமராஜ் சிறைக்குச் செல்வதில் அவருடைய குடும்பத்தினருக்குத் துளியும் விருப்பமில்லை. ”காங்கிரஸ் வேலைகளில் ஈடுபட வேண்டாம். சிறைக்குப் போக நேரிடும்" என்று அவர்கள் அவரை ஏற்கெனவே எச்சரித்திருந்தார்கள். அவர்கள் பேச்செல்லாம் காமராஜ் காதிலேயே விழவில்லை.

உப்பு சத்தியாக்கிரகம் செய்து காமராஜ் ”இரண்டு வருடச் சிறை வாசம் பெற்று விட்டார்" என்ற செய்தியைக் கேட்டதும் அவருடைய பாட்டி திருமதி பார்வதி அம்மாள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அந்த அதிர்ச்சி காரணமாக அவர் தம் சுய நினைவை இழந்ததுடன் பேசும் சக்தியையும் இழந்து விட்டார்.

பேரன் காமராஜிடம் பார்வதி அம்மாள் வைத்திருந்த அளவற்ற அன்பே இதற்குக் காரணம். தமக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விட்டதால், குடும்ப வழி அற்றுவிடக் கூடாதே என்பதற்காகக் காமராஜின் தந்தையை அவர் தத்து எடுத்துக் கொண்டார். தம்முடைய தத்துப் பிள்ளைக்குப் பிறந்த அருமைச் செல்வன் திருமணம் செய்து கொள்வான், குடும்பம் பெருகும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை சிதறும் வகையில் காமராஜ் சிறை சென்ற அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; மூர்ச்சையுற்றுப் படுத்த படுக்கையாகி விட்டார்.

காமராஜுக்கு இந்தச் செய்தியைச் சொல்வதற்காக அவருடைய உறவினர்களான துரைசாமி நாடாரும், தனுஷ்கோடி நாடாரும் பெல்லாரி சிறைக்குச் சென்றார்கள். அவர்களைக் கண் டதும், "எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார் காமராஜ்.

"உன்னைப் பாட்டியார் பார்க்க வேண்டுமாம். படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். பரோலில் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். அதற்கான உத்தரவு கூட வாங்கி விட்டோம்" என்றார்கள் வந்தவர்கள்.

"நான் வர முடியாது. பரோலில் சென்று வருபவர்கள் யோக்கியப் பொறுப்பானவர்கள் என்ற நற்சாட்சிப் பத்திரம் கேட்பார்கள் சிறை அதிகாரிகள். அம்மாதிரி செய்வது என் கொள்கைக்கு விரோதமானது" என்று கூறி, வந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார் காமராஜ்.

பின்னர், ஓராண்டுக் காலம் கழித்து காந்தி இர்வின் உடன் படிக்கை ஏற்பட்டதால் சிறையிலிருந்தவர்களெல்லாம் விடுதலை செய்யப் பட்டார்கள். அவர்களுடன் காமராஜும் வெளியே வந்தார். விடுதலை பெற்றதும் பாட்டியைப் பார்க்க விருது நகருக்கு விரைந்தார். பேரனைக் காண அதுவரை உயிரை வைத்துக் கொண்டிருந்த பார்வதி அம்மையார் காமராஜைக் கண்ட பிறகே கண்களை மூடினார்.

1931-இல் மகாத்மா காந்தி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருக்கும், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் அங்கு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தைகளால் பலன் எதுவும் கிட்டவில்லை. அதுமட்டுமல்ல. மகாத்மாஜி லண்டனில் இருந்த போதே காங் கிரசை "நசுக்கும் வேலைகளில் இங்குள்ள பிரிட்டிஷ் சர்க்கார் ஈடுபட்டு விட்டது. காந்திஜி திரும்பி வந்ததும் காங்கிரஸ்காரர் களைப் பிரிட்டிஷார் சிறையில் தள்ளினார்கள். காமராஜ் மீது ஜாமீன் வழக்குத் தொடுத்தார்கள்.
காங்கிரஸ்காரர்கள் ஜாமீன் கொடுப்பது. வழக்கமில்லையாகையால் காமராஜ் அதற்கு மறுத்து விட்டார். இதனால் ஒரு வருட காலம் அவர் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது.

காமராஜைக் கைது செய்து வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் வேலூரிலும், கடலூரிலும்தான் அரசியல் கைதிகளை வைத்திருப்பது வழக்கம். பயங்கரச் சதி வழக்குகளில் ஈடுபட்ட சில கைதிகளும் இந்தப் பந்தோபஸ்து கைதிகளுடன் அப்போது சேர்த்து வைக்கப் பட்டிருந்தார்கள். இதனால் அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த அரசியல் கைதிகளுடன் பழகும் வாய்ப்பு எல்லாக் கைதிகளுக்கும் கிட்டியது. இந்தக் கூட்டுச் சிறை வாழ்க்கையின் பயனாக பின்னால் இந்தியா வெங்கும் பல சதியாலோசனை வழக்குகள் தோன்றின.

வேலூர்ச் சிறையில் அச்சமயம் பகத்சிங் வழக்கில் சம்பந்தப்பட்ட ஜயதேவ் கப்பூர், கமல்நாத் திவாரி முதலியவர்கள் இருந்தார்கள். சிறைச்சாலையில் எல்லாருடனும் சுமுகமாகப் பழகும் சுபாவம் காமராஜுக்கு உண்டு. அரசியல் கொள்கையில் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடன் கலந்து பழகக் காமராஜ் தயங்க மாட்டார்.

இதன் விளைவாக 1933-இல் சென்னைச் சதியாலோசனை வழக்கு என்ற ஒன்று ஏற்பட்டது. அதற்கு ”சர்வ மாகாணச் சதியாலோசனை" என்று பெயரிட்டார்கள். வேலூர்ச் சிறையில் இருந்த எல்லா மாகாணத் தலைவர்களையும் அதில் சேர்த்தார்கள்.
அந்த வழக்கின் விசாரணையின் போது ”சதியாலோசனைக் காரர்களுக்கு வேண்டிய ஆயுதங்களுக்குக் காமராஜ் பணம் கொடுத்தார்" என்று அப்ரூவர் சொன்னார். ஆனாலும் போதிய ருசு இல்லை என்பதால் காமராஜைக் கைது செய்யவில்லை.

"வேறு எந்த வழியாகச் சிறைக்குப் போகலாம்? என்ன கிளர்ச்சி செய்யலாம்?" என்று காமராஜ் யோசித்துக் கொண் டிருந்தபோது விருது நகரப் போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு போய் ஒரு வழக்கைத் தொடுத்தார்கள். "விருது நகர் தபாலாபீஸ் மீதும், ஸ்ரீவில்லிபுத்தூர்ப் போலீஸ் ஸ்டேஷன் மீதும் காமராஜ் வெடிகுண்டை வீசினார்" என்பது அந்த வழக்கு. மதுரை தேச பக்தரும் வக்கீலுமான திரு. ஜார்ஜ் ஜோசப் எதிரிகளுக்காக வழக்கை நடத்திப் போலீஸ் ஜோடனைகளைத் தகர்த்தெறிந்தார். இதன் பயனாகக் காமராஜ் அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்.

அந்தக் காலத்தில் காமராஜுக்கு உற்ற துணைவர்களாயிருந்து உதவி செய்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் முத்தசாமி; மற்றவர் தங்கப்ப நாடார். முத்துசாமியும் காமராஜும் இரட்டையர் போல் வாழ்ந்து வந்தார்கள். காங்கிரஸ் வேலைகளை இருவரும் சேர்ந்தே செய்தார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து அவர்கள் இருந்ததேயில்லை. தங்கப்ப நாடார் காமராஜின் பொது வேலைகளுக்கு வேண்டிய பண உதவிகளைச் செய்து வந்தார், மிளகாய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனாலும் காலணா செலவழிப்பதாயிருந்தாலும் கணக்குப் பார்த்தே செலவழிப்பார். ஒரு சமயம் அவர் சந்தைக்குப் போயிருந்தார். வீடு திரும்ப வண்டி வாடகை கொடுக்க வேண்டாமென்பதற் காக அவர் கொளுத்தும் வெயிலில் நடந்தே வருவதென்று முடிவு செய்தார். எதிர்பாராத விதமாக, வரும் வழியில் வெயில் தாங்காமல் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். அவ்வளவு சிக்கனமானவர் காமராஜின் பொது வேலைகளுக்கு மட்டும் தாராளமாகப் பணங் கொடுத்து வந்தது அவருடைய தேச பக்தியை மட்டும் காட்டுவதாயில்லை : காமராஜ் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் காட்டுவதா-யிருந்தது.

1942 இயக்கத்தில் கைதான காமராஜை வட நாட்டுச் சிறைச்சாலைக்கு கொண்டு போகப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தங்கப்ப நாடார் சென்னைக்கு விரைந்து சென்று ஒரு நண்பரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து, "இதை எப்படியாவது காமராஜிடம் சேர்த்து விடுங்கள். போகிற இடங்களில் எப்படி இருக்குமோ?" என்றாராம்.
-------------
அத்தியாயம் 19


இந்திய வரலாற்றில் எத்தனையோ ஊர்களும் நகரங்களும் அழியாத இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாகப் பங்களூரும் ஆகிவிட்டது. ”காங்கிரஸ்" என்ற மாபெரும் ஸ்தாபனத்தை உடைத்த, அல்லது உடைவதற்குக் காரணமாயிருந்த பெருமை அதைச் சேர்ந்தது தானே?

1969 இல் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் பங்களூரில் நடந்தது. அப்போது அங்கே என்ன நடந்ததென்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயந்தான். காங்கிரஸ் ஹைகமாண்டில் ஏதோ கசமுச என்பதை பின்னால் இந்திரா காந்தி பங்களூரில் பத்திரிகை நிருபர் கூட்டத்தில் பொரிந்து தள்ளியதிலிருந்து அனைவரும் அறிந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னணி பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் காமராஜைக் கேட்டேன். அவர் சொன்னார்:

"பங்களூர்க் கூட்டத்திற்கு முதல் நாள் இந்திராகாந்தி வரவில்லை. இரண்டாவது நாள்தான் வந்தாங்க. வரும் போதே ஏதோ சில தீர்மானங்களைத் தயார் செஞ்சுகிட்டு வந்தாங்க."

"ஸ்ட்ரே தாட்ஸா?"

"ஆமா, ஸ்ட்ரே தாட்ஸ் தான். பங்களூர்க் கூட்டத்திலே யாரை ஜனாதிபதியா நிறுத்தறது என்கிறதை நிச்சயிக்கத் திட்டம் போட்டிருந்தோம்”.

சஞ்சீவ ரெட்டியிடம் பிரசிடெண்டாக இருக்க உங்களுக்குச் சம்மதமா? என்று முதலில் கேட்டது இந்திராகாந்தி தான். அவரும் ஆட்சேபம் இல்லை என்று சொல்லி விட் டார். நான் தடை செய்வேனோ என்று அவருக்குப் பயம். சஞ்சீவ ரெட்டியைச் சந்திக்கிறதுக்கு முன்னால் இந்திராகாந்தி என்னிடம் யோசனை கேட்டாங்க. எனக்கு என்னவோ கிரியை பிரசிடெண்டாப் போட இஷ்டமில்லை. அதற்கான காரணங்களை விளக்கினேன். ஏன், ஜகஜீவன்ராமைப் போடலாமேன்னேன். "இல்லை, அவர் காபினெட்லே இருக்கணும்"னு இந்திராகாந்தி சொன்னாங்க. மொரார்ஜியைப் போடலாமனு நினைச்சேன்; அவரைப் பற்றி ஒரு புகார். அதாவது சில முற்போக்குச் சட்டங்களுக்கு அவர் உற்சாகமாக ஆதரவு தருவதில்லை என்று புகார். இது ஆதாரமில்லாத புகார் என்றாலும் பரவலாக இருந்தது. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்திராகாந்தி என்னிடம் ”சஞ்சீவ ரெட்டியைப் போடலாமா?" என்று கேட்டாங்க. செய்யுங்கன்னேன்.

நான் திருப்பதிக்கு டில்லியிலிருந்து பிளேன்ல வரேன் - ரெட்டியும் அதே பிளேன்ல வந்தார். விமானத்திலே சந்திச்சோம். "இந்திரா காந்தி என்னை ஜனாதிபதியா நிற்கச் சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க?" அப்படின்னு கேட்டாரு. நான் மொரார்ஜியை ஸப்போர்ட் பண்ணுவேன்னு அவருக்குச் சந்தேகம். விஷயம் என்ன தெரியுமா? மொரார்ஜியை நான் ஆதரிக்கத் தயாராக இருந்தாலும் அவர் நிற்கத் தயாராக இல்லையே! நான் ஜனாதிபதியாக நிற்க மாட்டேன். வேணும்னா இந்திரா காந்தியை நிற்கச் சொல்லுங்க"ன்னு அவர் சொல்லி விட்டார். இந்த பேக் ரவுண்டு சஞ்சீவ ரெட்டிக்குத் தெரியாது. அதனால் அவருக்கு என் மேல் சந்தேகம். நான் சிரிச்சுக்கிட்டே எனக்குச் சம்மதம்"னு சொன்னேன். அத்துடன், அந்த அம்மாவை நம்பாதீங்க. ஜாக்கிரதை-யாயிருங்க"ன்னும் சொல்லி வச்சேன்...."

ஏன் இப்படிச் சொன்னார் காமராஜ்? 1967 தேர்தலுக்குப் பிறகு மந்திரி சபையில் இந்திரா காந்தி கடைசி வரையில் சஞ்சீவ ரெட்டியைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்திரா காந்திக்கு அவரை என்னவோ பிடிக்கவில்லை. அப்புறம் சபா நாயகராக அவரை நிற்கச் சொன்னார்கள். அதனால் தான் அந்த அம்மாவை நம்பாதீங்க" என்று காமராஜ் சொல்லி வைத்தார்.

"யாரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய இந்தப் பேச்சு வார்த்தைகள் நடந்த ஓரிரு தினங்களில் சஞ்சீவ ரெட்டி பார்லிமெண்ட் குழுவினருடன் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று விட்டார். நாம்தான் அடுத்த ஜனாதிபதி என்று அவர் அப்போதே நிச்சயம் செய்து கொண்டு விட்டார். பங்களூர்க் கூட்டத்திலும் அவரையே தேர்ந்தெடுக்கத் தயாராக இருந்தோம். இது ஒரு ஃபார்மாலிடிதான். ஆனால் அன்றைய தினம் என்ன நடந்தது தெரியுமா ? பகல் பன்னிரண்டு மணிக்குக் கூட்டம். பத்து மணிக்கு ஜகஜீவன்ராம் என்னிடம் வந்தார். "என்னை ஜனாதிபதி பதவிக்கு நிற்கச் சொல்றாங்க இந்திரா காந்தி" அப்படின்னு சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியமாப் போயிடிச்சு. முன்னால் ஜகஜவன்ராமைப் போடலாம்னு நான் சொன்ன போது, காபினெட்டில் அவர் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது" என்கிற மாதிரி சொன்னவங்க. இப்போ ஏன் ஒரேயடியாக மாறிட்டாங்கன்னு எனக்கும் புரியலே. "ரெட்டியைப் போடறதுன்னு பேச்சாச்சே. அவரை ஏன் மாத்தணும்?"னு கேட்டேன். அவர் பேசாம இருந்தார். சரி, சவான் என்ன சொல்றார்? ன்னு கேட்டேன். அவர் என்னை ஸப்போர்ட் செய்யறாராம்" என்றார் ஜகஜீவன்ராம். சரி, மீட்டிங்கில் எல்லாம் விவரமாகப் போகி கொள்ளலாம்"னு சொல்லி அனுப்பிவிட்டேன்.

மீட்டிங்கில் இந்த விஷயம் ஆலோசனைக்கு வந்தது. சஞ்சீவ ரெட்டியை நிறுத்தி வைக்கலாம் னு பட்டீல் சொன்னார். ஜகஜீவன்ராமைப் போடணும்னு இந்திரா காந்தி சொன்னாங்க."

"வோட்டு எடுக்கப்பட்டதா?”

"வோட்டு எடுக்கிற வழக்கம் இல்லை. மெஜாரிட்டி சம்மதிச்சு ஏகோபித்த தீர்மானம் போடறதுதான் வழக்கம். பக்ருதீன் அகமதும் இந்திரா காந்தியும் ஜகஜீவன்ராமைப் போடலாம் என்றார்கள். சவானோ சஞ்சீவ ரெட்டியை ஆதரித்தார். ஆக, மெஜாரிட்டி சஞ்சீவரெட்டிக்கு என்றாகி விட்டது. மறுநாள் பத்திரிகைகளிலும் செய்தி வெளியாயிற்று. இந்திரா காந்திக்கு ஒரே கோபம், முக்கியமாக சவானின் மேல் தான் கோபம், கடைசி நிமிஷத்தில் அவர் மாறி விட்டார் என்று. அதனால் இந்திரா காந்தி டில்லிக்கு வந்ததும் முதலில் அவரை நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். சரியான காரணம் கிடைக்கவில்லை. அடுத்தாற்போல் அந்தக் கோபம் மொரார்ஜி மேல் திரும்பியது. முற்போக்குச் சட்டங்களுக்கு உதவிப் பிரதமரான மொரார்ஜி முழு மனத்துடன் ஆதரவு தர மாட்டார் என்ற கற்பனைக் குற்றச்சாட்டைக் கொண்டு அவரை ”டிஸ்மிஸ்" செய்தார். ”போர்ட்ஃபோலியோ" எடுத்துட்டாங் கன்னா ஏறக்குறைய டிஸ்மிஸ் தானே? ஒரு டெபுடி பிரைம் மினிஸ்டரை இவ்வளவு கேவலமா நடத்தினதிலே எனக்கு ரொம்ப வருத்தம். இந்திரா காந்தி அத்துடன் திருப்தி அடையவில்லை, மேலே மேலே ஏதேதோ செய்து கிட்டே போனாங்க. அதனால் பின்னாலே நடந்தவை எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பாளி!" என்றார் காமராஜ்.
--------------
அத்தியாயம் 20


எட்டு வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் ராஜாஜியைச் சந்தித்தார் காமராஜ். இது பத்திரிகைகளில் பெரிய சேதியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. விசேஷப் புகைப்படங்கள் வேறு எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

இதற்குச் சில நாட்களுக்கு முன்னால் காமராஜுடன் பேசிக் கொண்டிருந்த போது, "ராஜாஜி இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதை ஆதரிக்கிறாரே, உங்களிருவருக்கும் பல விஷயங்களில் கருத்து ஒற்றுமை காணப்படுகிறதே, நீங்கள் ராஜாஜியைப் பார்த்துப் பேசினீர்களா?" என்று கேட்டேன்.

"நான் அவரை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவருடைய அறிக்கைகளையும், பேச்சுக்களையும் கவனமாகப் படிச்சிக்கிட்டு வர்றேன். அவர் சொல்கிற விஷயங்களில் நியாயம் இருக்கிறது. நான் சொல்லுகிற கருத்துக்களை அவர் ஏத்துக்கிற மாதிரி படுது. போகட்டும்.... இப்போ நான் அவரைப் பார்த்தா, பத்திரிகைகாரங்க ஏதேதோ கற்பனை பண்ணி எழுதி விடுவாங்க. இதனால் காரியம் பாதகமாப் போயிட்டாலும் போயிடும். சரியான சமயத்தில் அவரைப் பார்க்கணும்னு நெனைச்சுகிட்டு இருக்கேன்" என்றார்.

”ராஜாஜிக்கும், காமராஜுக்கும் விரோதம். அதனால்தான் 1954-இல் அவரை ராஜிநாமாச் செய்ய வைத்து விட்டுக் காமராஜே முதலமைச்சர் ஆனார்" என்று ஒரு பேச்சு இருக்கிறதல்லவா? - அதைப் பற்றியும் கேட்டேன். "அதெல்லாம் ஆதார மற்றது" என்றார் காமராஜ். அப்போது நடந்தது இதுதானாம் :

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது காமராஜ் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ராஜாஜிக்கு எதிராகக் ”கையெழுத்து வேட்டை" ஆடிக் கொண்டிருந்தார்கள். காமராஜ் ஊர் திரும்பிய சமயம் ராஜாஜி ராஜிநாமா செய்து விட்டார். அவருடைய ராஜிநாமாவுக்குக் காரண மாயிருந்தவர்கள் காமராஜ் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். "ஒரு நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் தலைமை ஏற்கிறேன்" என்று சொன்னார் காமராஜ். அவர்கள் ”சரி" என்று கூறி, அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

"நான் என்ன செய்தேன், தெரியுமா? ராஜாஜி மந்திரி சபையில் இருந்தவர்களை அப்படியே மந்திரிங்களா வச்சுக்கிட்டேன். எனக்குப் பதவி, உனக்குப் பதவி என்று யாரையும் வரவிடவில்லை. மந்திரி சபை அமைப்பதில் யாரும் குறுக்கிடக் கூடாது" என்பதுதான் என் கண்டிஷன். ராஜாஜியின் மேல் எனக்கு விரோதம் என்பது உண்மையாக இருந்தால் அவர் வைத்திருந்த மந்திரிகளை நான் எடுத்துக்கிட்டிருப்பேனா...? ராஜாஜி செய்த ஒரு சில காரியங்கள், பல எம்.எல்.ஏ.க்களுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் உண்மையே தவிர, எனக்கு அவர் மேல் கோபம் எதுவும் கிடையாது" என்றார் காமராஜ்.

"அது சரி, இப்போது உங்களுக்கு இந்திரா காந்தியின் மேல் கோபம் என்கிறார்களே?"

"கோபம் ஒன்றும் இல்லை; கொள்கைகள் சிலவற்றில் மன வேற்றுமை இருந்தது.... முக்கியமாக ரூபாய் மதிப்பைக் குறைத்தது தவறு என்பது என் கருத்து. திடீரென்று யாரையும் கலந்தாலோசிக்காமல் அதை அவங்க செய்துட்டாங்க. "என்னம்மா, இப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டிங்களே?"ன்னு கேட் டேன். அதுக்கு அந்த அம்மா என்ன சொன்னாங்க, தெரியுமா? இதெல்லாம் ரகசியமாகச் செய்ய வேண்டிய காரியம். எல்லாரையும் கலந்து செய்யணுமின்னா வெளியே பரவி விடும்" - அப்படின்னு சொன்னாங்க. இது எனக்குத் தெரியாத சமாசாரமா? அவங்க சொன்ன காரணம் சப்பைக்கட்டு மாதிரி பட்டுது. அப்பவே எனக்குத் தோணிடுச்சு..."

காமராஜ் முடிக்கவில்லை; ”பாங்குகளைத் தேசிய மயமாக்கியது சரியான காரியந்தானே?" என்று கேட்டேன்.

காமராஜ் விளக்கினார்.

"பாங்குகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்பது எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்ததுதான். மொரார்ஜி தேசாய் இதற்கு ஆதரவு தரமாட்டார் என்று இந்திரா காந்தி கருதினார். மந்திரி சபைக் கூட்டத்தில் முடிவெடுங்கள். அதை நிறைவேற்ற வேண்டியது நிதி அமைச்சரின் பொறுப்பு. மந்திரி சபையின் முடிவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவரே விலகித்தானே ஆக வேண்டும்?" என்றேன். இந்திரா காந்தி அப்படி எதுவும் செய்யவில்லை. மொரார்ஜி தடையாக இருப்பார் என்று தாமே முடிவெடுத்து அவருடைய இலாகாவை எடுத்துக் கொண்டார். ஒரு நாட்டின் உதவிப் பிரதமரை இப்படியா அலட்சியமாக நடத்துவது? தாம் கோபத்தில் அப்படிச் செய்யவில்லை என்று காண்பிக்கவோ என்னவோ, அவசர அவசரமாகப் பாங்குகளைத் தேசிய மயமாக்கினார். ஆக, இது எந்தச் சமயத்தில், எந்த உள்நோக்குடன் செய்யப்பட்டது என்பதே கேள்வி. நான் சொன்னபடி காபினெட்டில் முடிவெடுத்தாங்களா? மொரார்ஜி மாட்டேன்" என்று குறுக்கே நின்றாரா? இல்லையே... ! இப்படி அவசர அவசரமாச் செய்தாங்க..... ஆரம்பத்திலே பூக்கடைக்காரருக்கும், பட்டாணிக் கடைக்காரருக்கும் கடன் கொடுக்கிறாங்கன்னு பிரபலப்படுத்திட்டாங்க..... இப்போ என்ன ஆச்சு? ஒரு வருஷம் ஆச்சு , ஃபாலோ அப்! காரியம் சரியாச் செய்யலையே...! கடனும் சுலபமாக் கிடைக்கலையாம் ; செக்யூரிட்டி கேட்கிறாங்களாம். இதையெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்னா பாங்குகளைத் தேசிய மயமாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்குப் பின்னே மொரார்ஜிக்குப் பிற்போக்குவாதின்னு பட்டம் கட்டணும் என்பதுதானே ஐடியாவா இருந்திருக்குன்னேன்!"

சவான் பங்களூரில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக இருந்து, பின்னால் இந்திரா காந்தியின் பக்கம் சென்று விட்டாரல்லவா? - அதைப் பற்றியும் காமராஜைக் கேட்டேன்.

"சவானுக்கு அவங்க செய்தது சரியில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் தைரியமில்லே - என்னவோ மராட்டா என்கிறார். வீர சிவாஜி மாநிலம் என்கிறார். பயப்படறாரே! நான் என்ன செய்வேன்னேன்? அவர் ரிஸ்க் எடுக்கப் பயப்படறாரு!" என்றார் காமராஜ்.

"அவர் பிரதமராக வருவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே?"

"ஆமாம், இருக்கத்தான் இருந்தது. இப்போது இல்லாவிடினும் 1972-க்குப் பிறகு அந்த வாய்ப்பு அவருக்கு வந்தே இருக்கும். அவரது பயந்த சுபாவமே அந்த வாய்ப்புகளை வர விடாமல் செய்து விட்டது. அடுத்த தேர்தலுக்குப் பிறகு சவான் பிரதம மந்திரியாக வருவதில் மொரார்ஜிக்கும் ஆட் சேபம் இருக்க முடியாது. ஆனால் இன்றுள்ள நிலைமை அந்த வாய்ப்புக்களை மாற்றி விட்டன. இப்ப அதைப் பற்றிப் பேசற திலே என்ன லாபம்?" என்றார் காமராஜ்.
-------------------
அத்தியாயம் 21


காங்கிரஸ் மகாசபைக்குக் காமராஜ் தலைவரானது தொண்டர்களுக்கெல்லாம் அளவற்ற உற்சாகத்தைத் தந்தது. சாதாரணத் தொண்டராகத் தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய காமராஜ் , மகாசபையின் தலைவர் பதவிக்கு உயர்ந்தது மட்டு மல்ல அவர்களுடைய உற்சாகத்துக்குக் காரணம், தொண்டனுக்கும் மேலே உயர வாய்ப்புகளும், வழிகளும் காங்கிரஸில் உள்ளன என்பதும் காரணமாகும்.

”காமராஜ் திட்டம்" என்ற தம் திட்டத்தைத் தாமே ஏற்று அவர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். ஆனாலும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டி வந்தது.
சூழ்நிலை அப்பதவியை அவர் மேல் சுமத்தி விட்டது.

பதவியை நாடிப் போவது என்பது காமராஜுக்குத் தெரியாத வித்தை. அவருடைய சரித்திரமே அதற்குச் சான்று. அதன்படி பதவிதான் அவரை எப்போதும் துரத்திக் கொண்டு வந் துள்ளது.

"தலைவர் பதவியை எனக்குக் கொடுக்காதீங்கன்னு சொன்னேன், யாரும் கேட்கலை. எலெக்ஷனுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முந்தி நேரு என்னிடம் தலைவராக இருக்கும்படி சொன்னார். பெரிய பொறுப்பாச்சேன்னேன். எத்தனையோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி வருமேன்னேன். முதலமைச்சர் வேலையை விட்டது, தமிழ் நாட்டிலே கட்சியைப் பலப்படுத்தற எண்ணத் தோடுதானே, மறுபடியும் பதவியை ஏத்துக்கிடறது எப்படின்னேன். அப்போ நேரு என் பேச்சைக் கேட்டுக்கிட்டார் ; மேலே என்னை வற்புறுத்தலை. பின்னால் நிலைமைகள் மாறிப் போய் விட்டன" என்றார் காமராஜ்.

இது முழுக்க முழுக்க உண்மை. சின்ன மந்திரி சபையை வைத்துக் கொண்டு குழப்பம், பிளவு எதுவுமின்றிச் சீரான ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வந்தவர் காமராஜ். அவரே கட்சிக்காகப் பதவியை விட்டது அவருடைய மதிப்பை அகில இந்திய அளவில் உயர்த்தி விட்டது. அவருடைய புகழ் பெற்ற "காமராஜ் திட்ட”த்தைத் தக்க சமயத்தில் கொண்டு வரப்பட்ட "பெனிசிலின் சிகிச்சை" என்று மக்கள் நினைத்தனர். ஆகவே, அவரையே தலைவராகப் போட முடிவெடுத்தது காங்கிரஸ் மகாசபை.

காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த சில ஆண்டுகள் மறக்க முடியாத ஆண்டுகள். அப்போது இந்திய வரலாற்றில் அவருடைய அரிய செயல்கள் பல இடம் பெற்றன.

காமராஜின் அகில இந்தியச் செல்வாக்கைக் கண்டு வெளி நாட்டினரும் வியந்தனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் காமராஜைத் தங்கள் நாட்டிற்கு அழைத்தன.

ஒரு கட்சித் தலைவரை ரஷ்ய அரசு அழைத்தது அதுதான் முதல் தடவை. கட்சி என்றால் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி என்பதை இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்களுடைய அழைப்புக்களைக் காமராஜ் ஏற்றார். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் பூசல் போன்ற காரணங்களால் அவர் அப்போது நாட்டை விட்டு வெளியே போக இயலவில்லை. அந்தப் பூசலை ஓரளவு சமரசமாகத் தீர்த்து வைக்கக் கோஸிஜின் முயற்சி எடுத்துக் கொண்டார். அதன் பயனாகத் தாஷ்கண்ட் ஒப்பந்தம் ஏற்பட்டது. துரதிர்ஷ்ட வசமாக லால் பகதூர் சாஸ்திரி அங்கே மரணம் அடைந்ததும் அவருடைய சடலத்துடன் டில்லி வந்த கோஸிஜின், மறுபடியும் காமராஜைத் தம் நாட்டிற்கு வருமாறு அழைத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் காமராஜ் ரஷ்யா செல்லத் திட்ட மிட்டார். ஒரு கட்சித் தலைவர் இப்படி வெளிநாட்டினர் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்ற சர்ச்சை அப்போது எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் திரு. ஆர். வேங்கடராமனுடன் அவர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்தார். அத்துடன் யூகோஸ்லேவியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் விஜயம் செய்தார்.

காமராஜை ரஷ்ய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். அங்கே ரஷ்ய பார்லிமெண்ட் தலைவரின் விருந்தினராகக் காமராஜ் இருந்தார்.

காமராஜின் எளிமை ரஷ்ய மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதே நான்கு முழ வேட்டி: முக்கால் கைச் சட்டை; மேல் துண்டு. கிரெம்ளினில் கோஸிஜினுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய போதும் அதே உடைதான். அங்குள்ள தொழிற்சாலைகளையும், மற்ற இடங்களையும் பார்க்கச் சென்ற போதும் அதே உடைதான்.

சோவியத் பத்திரிகைகள் வேறு காமராஜ் விஜயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதின. இந்தியத் துணைக் கண்டத்தில் காமராஜ் ஒரு முக்கியப் புள்ளி என்பதை ரஷ்யாவும், ரஷ்யப் பத்திரிகைகளும் உணர்ந்திருந்ததே அதற்குக் காரணம். ரஷ்யாவுக்குப் பிறகு வேறு பல நாடுகளுக்கும் காமராஜ் சென்று திரும்பினார்.

ரஷ்யாவுக்குச் சென்றதால் கம்யூனிஸ்டுகளின் பக்கம் சாய்ந்து விடுவார் என்று ஒரு பேச்சு அப்போது இருந்தது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தியாவின் நடுநிலைக் கொள் கைக்கு ரஷ்யாவினால் ஊன்று நேராது என்பதைக் காமராஜ் கண்டார். நாம் ராணுவக் கூட்டு எதிலும் சேராததை ரஷ்யா பாராட்டுகிறது என்பதையும் அவர் அறிந்தார்.

ரஷ்யாவில் எந்தப் பொருளையும் காமராஜ் வாங்கவில்லை. பரிசுகளையும் அன்பளிப்புகளையுங்கூட அவர் தம்முடன் எடுத்து வரவில்லை. அன்றும், இன்றும் தமக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாத பெருந்தலைவர் காமராஜ்.

ரஷ்ய விஜயத்திற்குப் பிறகு அவர் அமெரிக்கா போகத் திட்டமிட்டார். பல காரணங்களால் அது தள்ளிப் போடப் பட்டு விட்டது. அதற்குள் அவருடைய காங்கிரஸ் தலைவர் பதவிக் காலமும் முடிவுற்றது. அவருக்குப் பின் திரு. நிஜலிங்கப்பா காங்கிரஸ் தலைவரானார்.

"ஆமாம்; நிஜலிங்கப்பா பெயர் பத்திரிகைகளில் வந்த போது, "அவர் என் கேண்டிடேட்" என்று நீங்கள் சொன்னதாக ஒரு செய்தி வந்ததே, அதன் பின்னணி என்ன?" என்று கேட்டேன்.

"அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் பிரசிடெண்டா யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தது. யார் யார் பெயரை எல்லாமோ யோசனை செய்தோம். எனக்கு மோகன்லால் சுகாதியாவைப் போடலாம்னு எண்ணம். இந்திரா காந்தியிடம் சொன்னேன். இந்த யோசனைகள் நடந்து கொண்டிருக்கிறபோது டில்லிக்கு ஏதோ வேலையாக வந்திருந்தார் நிஜலிங்கப்பா. அவர் அப்போது மைசூர் முதல் மந்திரியாக இருந்தார்.

ராத்திரி பத்து மணி வரைக்கும் இந்திரா காந்தி, நான், மற்ற எல்லாரும் அடுத்த தலைவரைப் பற்றிப் பேசி முடிவெடுக்காமல் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். அப்புறம் இந்திரா காந்தி நிஜலிங்கப்பாவைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க. அவர் சம்மதம்னு சொன்னாலும் "காமராஜைக் கேட்கணுமே" என்று சொல்லியிருக்கார். இல்லை, நீங்க சரின்னு சொல்லுங்க. அவரைக் காலையில் கேட்டுக் கொள்ளலாம்" என்று இந்திரா காந்தி சொல்லிட்டாங்க. அப்போது மணி 11, 12 இருக்கும்.

காலையில் எழுந்து பேப்பரைப் பார்க்கிறேன். அடுத்த தலைவர் நிஜலிங்கப்பா!ன்னு போட்டிருந்தது. ராத்திரி அவர் கிட்டே சம்மதத்தை வாங்கிக்கிட்டு உடனே பேப்பருக்கு நியூஸ் கொடுத்துட்டாங்க. நிஜலிங்கப்பா பேப்பரைப் பார்த்ததும் என்னடா இது?ன்னு ஆச்சரியப்பட்டார். நேராக என் வீட்டுக்கு வந்தார். அப்பதான் நான் ஷேவ் பண்ணிக்கிட்டிருக்கேன். அவர் விஷயத்தைச் சொன்னார். "நீங்க பிரசிடெண்டாக வருவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாதுன்னு அவரிடம் சொன்னேன். உடனே பேப்பருக்கு அறிக்கை கொடுத்தேன், அவர் என் கேண்டிடேட் என்று..."

நிஜலிங்கப்பாவுக்கும், காமராஜுக்கும் இடையே மனக் கசப்பை ஏற்படுத்த வேண்டும் என்றோ என்னவோ, இரவோடு இரவாக அவருடைய சம்மதம் பெற்றுப் பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுத்து விட்டார் இந்திரா காந்தி. ஆனால் காமராஜிடம் அவருடைய சூழ்ச்சி பலிக்கவில்லை! நிஜலிங்கப்பாவைத் தாம் ஆதரிப்பதாக உடனே அறிக்கை விட்டு விட்டார்.

அன்று எந்த நோக்கத்துடன் நிஜலிங்கப்பாவை ”என் கேண் டிடேட்" என்று காமராஜ் கூறினாரோ, பின்னால் ஏற்பட்ட பல பெரும் பிரச்னைகளின் போதும், சூறாவளிகளின் போதும் அவருடைய ஆதரவு நிஜலிங்கப்பாவிற்குப் பூரணமாக இருந்தது. காமராஜின் துணை இல்லாதிருந்தால் நிஜலிங்கப்பா அவ்வளவு துணிவான காரியங்கள் பலவற்றைச் செய்திருப்பாரா என்பது சந்தேகந்தான்.
------------
காமராஜுடன் ஒரு நாள்


இரண்டு மாதங்களுக்கு முன் திரு. காமராஜ் அவர்களைச் சந்திக்க நான் டில்லிக்குப் போயிருந்த போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டில்லியில் சந்தித்தேன். அப்போது முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியிலிருந்து விலகி விட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார்.

அன்று மாலை திரு. லால்பகதூர் சாஸ்திரி காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸுக்கு வந்திருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த ரிஸப்ஷன் ஆபீஸர் திரு. தீனதயாளைக் கண்டதும் அவர், "காமராஜைப் பழையபடியே கவனித்துக் கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறையில் தானே இறக்கியிருக்கிறீர்கள்? உபசரிப்பில் ஒன்றும் குறைவில்லையே!" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.

காமராஜ் பதவியிலிருந்து விலகி விட்டதால் எங்கே அவரைச் சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால் உண்மையில் காமராஜுக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபசாரம் நடந்து கொண்டிருந்தது.

மறுநாள் காலை. நான் மெதுவாகக் காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும். "என்....ன...? வாங்க..." என்று புன்முறுவலோடு அழைத்தார் அவர்.

"விசிட்டர்கள்" அதிகமில்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அகில இந் தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்பது பற்றிப் பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வெளி யாகியிருந்தன, காமராஜரும் அப்போது அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.

"லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டு விடலாமே...?" என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன்.

"ஆமாம் ; போட்டு விடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம் (நாங்கள் என்பது திரு. சஞ்சீவ ரெட்டியையும், திரு. அதுல்ய கோஷையும் சேர்த்துச் சொன்னது). சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால் அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியைச் சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண் டும் என்றார்.

ஆனால் மறுநாள் காலைப் பத்திரிகைகளைப் புரட்டிய போது தலைமைப் பதவிக்குக் காமராஜையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்ட போது எனக்கு வியப்புத் தாங்க வில்லை.

"என்ன இப்படி ஆகி விட்டது?" என்று திரு. காமராஜிடம் கேட்டேன்.

"எனக்கு ஒன்றுமே தெரியாது. காரியக் கமிட்டிக் கூட்டத் தில் அதுல்ய கோஷம், சஞ்சீவ ரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்" என்றார் அவர்.

”எப்படி இருந்தாலும் நல்ல முடிவு" என்று கூறி என் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண் டேன். வாசல் வராந்தாவுக்கு வந்த போது, தலைவர்களும் மந்திரிகளும், எம்.பி.க்களும் பெருங்கூட்டமாக மலர் மாலைகள், பழத் தட்டுகள் சகிதம் காத்திருந்தனர்.

"பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவி அவரைத் தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்து விட்டன. ஆனாலும் அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்த போது, பதவியை விட்ட போது, பதவி அவரைத் தேடி வந்துள்ள போது - ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்" என்றார் திரு. தீனதயாள்.

திரு. காமராஜ் முதலமைச்சராக இருந்த போது ஒரு சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் நானும் போயிருந்தேன். காரிலேயே கிராமம் கிராமமாகச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி விட்டுக் கடைசியாக இரவு பன்னிரண்டு மணிக்கு முசாபரி பங்களா ஒன்றில் தங்கினார். அங்கே படுக்கப் போகுமுன். "சரி, நான் தூங்கப் போகிறேன். என்னைச் சரியாக ஆறு மணிக்கு எழுப்பி விடுங்க" என்று கூறிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண் டார். உடனே அங்கிருந்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த அறையின் கதவை வெளிப் பக்கம் பூட்டிக் கொண்டார்கள்! எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. " எதற்காக வெளியே பூட்டி விடுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

"காமராஜ் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தூங்கி விட்டால் குறித்த நேரத்தில் அவரை எப்படி எழுப்ப முடியும்? அதற்காகத்தான் வெளியே பூட்டிக் கொள்கிறோம் ! ஆறு மணிக்குக் கதவைத் திறந்து நாங்கள் எழுப்பி விடுவோம்" என்று பதில் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வரவே, "இங்கே மெட்ராஸ் ஹவுஸில் என்ன செய்கிறீர்கள்?" என்று திரு. தீனதயாளை விசாரித்தேன்.

"இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு படுக்கப் போவதற்கு மணி பன்னிரண்டு ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை. இரவு அவர் படுத்துக் கொண்டதும் நான் கதவைச் சாத்திக் கொண்டு வந்து விடுவேன். காலையில் இத்தனை மணிக்குக் காப்பியுடன் எழுப்ப வேண்டும் என்பார். அவர் தூங்கும் போது எத்தனை முறை குரல் கொடுத்தாலும் எழுந்திருக்க மாட் டார். கையினால் மெதுவாகத் தொட்டால் போதும், உடனே எழுந்து விடுவார்."

" என்ன புத்தகங்கள் படிக்கிறார்?" என்று கேட்டேன்.

"தமிழ்ப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதையும் கவனித்திருக்கிறேன். ஆனால் அவை என்னென்ன புத்தகங்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியாது. பெட்டிக்குள் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். அவ்வளவுதான் தெரியும்..."

அவை என்ன புத்தகங்கள் என்பதை எப்படியாவது தெரிந்து கொண்டுவிட வேண்டு மென்ற ஆவல் அதிகரித்தது.

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களைச் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டு, வலது கையை முதுகுப் பக்கமாகச் செலுத்தி இடது தோளைத் தேய்த்தபடியே பத்திரிகை படிப்பதில் சுவாரசியமாக ஈடுபட் டிருந்தார்.

மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

"பத்திரிகைகளில் அரசியல் செய்தி மட்டும் தான் படிப்பீர்களா? அல்லது..."

"எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்னை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையுந்தான் பார்ப்பேன், தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின் விசிறியை நிறுத்தி விட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படுக்கை அறை, படுக்கை அறையை ஒட்டினாற் போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. சாதாரணமாக ”விஸிடர்கள்" யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படுவ தில்லை. அந்தச் சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கண்ணோட்டமிட்டேன்.

"என்ன... என்ன பாக்கறீங்க?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

"ஒன்றுமில்லை; தங்களைக் கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை" என்றேன்.

"ஓ, தாராளமா இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க" என்று கூறிக் கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழை வைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன் :

INSIDE AFRICA - by John Gunther
ENDS AND MEANS - by Aldous Huxley,
TIME MAGAZINE
NEWS WEEK.!
சிந்தனைச் செல்வம் வி.ச. காண்டேகர்

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காதது போல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை

”இன்ஸைட் ஆப்பிரிக்காவைப் பற்றி இவருக்கு என்ன கவலை? இன்ஸைட் இந்தியா"வைப் பற்றி இவர் படுகிற கவலை போதாதா?" என்று எண்ணிக் கொண்டேன். யார் கண்டார்கள்? இந்தப் பொல்லாத மனிதர் அகில இந்தியாவுக்கும் ஒரு "காமராஜ் திட்டம்" கொண்டு வந்தது போல் ஆப்பிரிக்கா தேசத்துக்கும் இன்னொரு திட்டம் வைத்திருக்கிறாரோ என்னவோ ?

அடுத்தாற் போல் பெட்டியிலிருந்து ஷேவிங் ஸெட்டை எடுத்துக் கண்ணாடி முன் வைத்துக் கொண்டார். அந்த நித்தியக் கடமை முடிந்ததும். தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார். அங்கு ஏற்கெனவே பல சட்டைகள் இம்மாதிரி மடித்து வைக் கப்பட்டிருந்தன.

"ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?"

"இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

" பனியன் போட்டுக் கொள்ள மாட்டீர்களா " என்று நான் கேட்கவில்லை. அவர் பனியன் போட்டுக் கொள்ளுவதில்லை என்பது தெரிந்த விஷயந்தானே?

"குளிர்ந்த தண்ணீரில் தான் குளிப்பீர்களோ?"

"ஆமாம்; பெரும்பாலும் பச்சைத் தண்ணீரில்தான். ரொம்ப குளிராயிருந்தால் தான் வெந்நீரில் குளிப்பேன்..."

"எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டா?"

"கிடையாது. அந்த வழக்கமில்லை..."

"தீயாவளியன்று?..."

"அன்று கூடக் கிடையாது."

"தீபாவளியன்று..." என்று நான் அடுத்த கேள்வியை ஆரம்பித்தேன். அதை முடிப்பதற்குள்ளாகவே அவர் "ஆமாம் ; புதுவேட்டி கட்டிக் கொள்வேன்.... என்று கேள்வியை முன்கூட்டியே எதிர்பார்த்தவர் போல் சட்டென்று பதில் கூறிவிட்டார்.

"குளிர் காலத்தில் டில்லியில் இருக்கும் போது கம்பனிச் சட்டை கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வீர்களா?"

"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ள படியே தான். எப்பவாவது தேவையானால் பிளானல் சால்வை போட்டுக் கொள்வேன்..."

"இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே? இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதில்லையா?"

"கிடையாது."

"தலைவலி வருவதுண்டா ?"

"வந்ததில்லை”.

"அதற்கு என்ன காரணம்?"

"நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காப்பி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதினொரு மணிக்குள் சாப்பிடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காப்பி, இரவு இட்லியும், சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம். கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்யும் நாட்களில் சில சமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக வெறும் மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று தோணும். ஆனால் எனக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர் சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டுக் கஷ்டப்படுத்தி விடுவாங்க. என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாகச் சாப்பாடே வேண்டாமென்று சொல்லிப் பட்டினி போட்டு விடுவேன். இதனால் உடல் நலம் கெட்டுப் போவதில்லை."

"தாங்கள் கை கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே ஏன்?"

"அதெல்லாம் எதுக்கு ! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும் போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன டைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்" என்றார்.

அன்று நண்பர் ஜி. ராஜகோபாலன் வீட்டில் காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. பொங்கல், வடை, தோசை, இட்லி, சாம்பார், சட்னி இவ்வளவும் தயாரித்து வைத்திருந்தார்கள்.

திரு. காமராஜ் மேஜை முன் உட்கார்ந்து மேல் நாட்டுப் பாணியில் கைக்குட்டைப் பிரித்து மடி மீது பரப்பிக் கொண்டு ”ஃபோர்க் ஸ்பூன்" இவ்விரண்டு உதவியாலும் தோசை, இட்லி முதலியவற்றை மிக லாவகமாகவும் வேகமாகவும் எடுத்து, கீழே சிந்தாமல் சாப்பிட்டார்.

"தங்களுக்கு ரொம்பப் பிடித்த சிற்றுண்டி எது?" என்று கேட்டேன்.

அதற்கு அவர் பதில் கூறுமுன் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் "இட்லியும், தேங்காய்ச் சட்னியும் தான்" என்றார்.

"ஆமாம்" என்று அதைப் புன்சிரிப்புடன் ஆமோதித்தார் திரு. காமராஜ்.

"சாப்பாத்தி போட்டால் சாப்பிடுவீர்களா?"

”சாப்பிடுவேன்."

"நாடகம், சினிமா பார்ப்பதில் விருப்பம் உண்டா ? என்னென்ன படம் பார்த்திருக்கிறீர்கள்?"

"ரொம்பப் பார்த்ததில்லை. அதற்கெல்லாம் நேரம் ஏது? ஏதோ இரண்டொரு படங்கள் பார்த்திருக்கிறேன். ஒளவையார் படம் பார்த்திருக்கிறேன். துண்டு துண்டாக நியூஸ் ரீல், பிரசாரப் படம் இப்படிப் பார்த்திருக்கிறேன்."

"தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?"

"சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவியெல்லாம் சுலபமாகச் செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில் தான் சிக்கலெல் லாம் இருக்கும். அவர்களே வக்கீலிடம் கேட்டுக் கொண்டு வந்து இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நான் ஆகட்டும், பார்க்கலாம்" என்பேன். யாருக்காவது இரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லையென்றால் தானே கோபம் வருகிறது? ஆகையால், எல்லோருக்குமே சமமாக இருந்து விடுவேன் யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமா வாங்கியிருப்பான். நீ வாங்கியிருக்கும் மார்க்கை விடக் குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல் என்பேன். அப்படி இருக்காது. ஒரு வேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம் ஆமாம்! நீ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக் கொள்வேன். அவன், அதிலேயே திருப்தி அடைந்து போய்விடுவான்!"

"தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமோ!”

"எனக்கு அலுப்பே கிடையாது; அவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இதில் எனக்குள்ள சங்கடம், பத்திரிகை படிக்க நேரமில்லாமல் போய் விடுவது தான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். "விஸிட்டர்"களால் அது தடைப்பட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்க தயார்" என்றார்.

அன்றிரவு மணி பன்னிரண்டு இருக்கும். காமராஜ் கட்டி லில் படுத்தவாறே மிகச் சுவாரசியமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்த்தேன். வேறொன்றும் இல்லை; கம்ப ராமாயணம்.
----------------
டில்லியில் காமராஜ்


டில்லியில் சாணக்கியபுரியில் ஓர் அழகிய இல்லம். "மெட்ராஸ் ஹவுஸ்" என்பது அதன் பெயர்.

காலை ஏழரை மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை அந்த இல்லத்தைத் தேடிப் பல ராஜ்யங்களைச் சேர்ந்த மந்திரிகளும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் வந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த படா படா ஆத்மிகளெல்லாம் எதற்காகக் காத்திருக்கிறார்கள்? இவ்வளவு பேரும் அவரிடம் என்னத்தைச் சொல்லப் போகிறார்கள்? இவர்களுக்கெல்லாம் அவர் என்ன பதில் கூறப் போகிறார் என்ற வியப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

மணி எட்டு இருக்கலாம். குஜராத் முதலமைச்சர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா புன்சிரிப்புடன் அந்த இல்லத்தின் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து திரு. காமராஜும் கீழே இறங்கி வந்து. அவரை வழி அனுப்பி வைக்கிறார்.

வராந்தாவில் காத்திருப்பவர்களில் இடது கையில் பாண்டேஜ் கட்டுடன் காணப்பட்டவரும் ஒருவர்.

அவரை அணுகி, "தங்கள் பெயர் என்ன?" என்று விசாரித்தேன்.

"ராம்பியரா!" என்றார் அவர்.

"எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?"

"பஞ்சாபிலிருந்து."

"ஏன்?"

"பஞ்சாப் முதல் மந்திரி கெய்ரோனின் ஆட்கள் என்னைத் தாக்கி என் கையை உடைத்து விட்டார்கள். நான் ஒரு எம்.எல்.ஏ..."

”நம் ஊரில் கை உடைந்தால் புத்தூருக்கல்லவா போவார்கள்? இவர் பாவம், இங்கே வந்திருக்கிறாரே?" என்று எண்ணிக் கொண்டேன்.

"இங்கே ஏன் வந்திருக்கிறீர்கள்?"

"காமராஜைப் பார்த்து, நடந்த விவரங்களை நேரில் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான். அவரிடம் சொல்லி விட்டால் என் மனதுக்குச் சாந்தி ஏற்படும்" என்றார்.

திரு. ராம்பியாராவைத் தவிரப் பஞ்சாபிலிருந்து இன்னும் ஏழெட்டுப் பேர் திரு. காமராஜைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களில் சிலர், முதன் மந்திரி கெய்ரோனுக்குச் சாதகமானவர்கள். சிலர் கெய்ரோன் ஆட்சியை பிடிக்காதவர்கள்.

திரு. காமராஜ் அவர்களைக் கும்பலாகச் சேர்த்துப் பார்க்க வில்லை. முதலில், சமீபத்தில் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விட்ட தாபராசிங்கையும், கை உடைந்த ராம்பியா ராவையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பின்னர், திரு. கெய்ரோனுக்குச் சாதகமானவர்களையும், அப்புறம் அல்லாதவர்களையும் வரச் சொன்னார். எல்லோருக்கும் ஐந்து நிமிஷ நேரம்தான் பேட்டி.

திரு. காமராஜ் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொன்னாரோ, என்ன மந்திரம் போட்டாரோ? மேலே சென்றவர்கள் அத்தனை பேரும் திருப்தியுடன் திரும்பி வந்தார்கள்.

அப்புறம், உ.பி: முதல் மந்திரி சி.பி. குப்தா வந்திருந்தார். "நீங்கள் அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருங்கள்" என்று மதராஸ் ஹவுஸ் ஆபீஸர் திரு. தீனதயாள் என்னிடம் சொன்னார். நான் யார் என்பதை அறிந்து கொண்ட திரு. குப்தா என்னைக் கேட்ட முதல் கேள்வி இது தான்:

"காமராஜ் தமிழில் தான் பேசுவாரா?"

"இல்லை; ஆங்கிலத்தில் பேசுவார். தாங்களும் அவரிடம் ஆங்கிலத்திலேயே பேசலாம். தாங்கள் கூறுவதை யெல்லாம் அவர் நன்கு புரிந்து கொள்வார். உங்களுக்குத் தேவையான பதில்களையும் ஆங்கிலத்திலேயே சொல்வார்" என்றேன் நான்.

"நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. காமராஜ் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிராமவாசியா?”

"விருதுநகர் என்ற ஊரில் பிறந்தார். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர்."

"நானும் உங்கள் காமராஜைப் போல் கலியாணமாகாதவன் தான். எனக்கு வயது அறுபத்திரண்டாகிறது" என்றார் திரு. குப்தா.

அப்போது அங்கே வந்த திரு. தீனதயாள், ”தங்களைக் காமராஜ் அழைக்கிறார்" என்று கூறவே, திரு. குப்தா ”பைல்" கட்டுடன் மாடிக்கு ஏறிச் சென்றார்.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் காமராஜும் அவரும் கீழே இறங்கி வந்தார்கள். குப்தா காரில் ஏறிக் கொண்டார்.

காமராஜ் அவரை வழி அனுப்பி விட்டு இந்தப் பக்கம் திரும்பினார். என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், "என்ன?" என்று நாவில் ஓர் அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

"ஒன்றுமில்லை...." என்றேன் நான்.

"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்து விடுகிறேன். நேருஜியின் வீட்டில் ஒரு மீட்டிங்... நீங்க நான் வந்தப்புறம் என்னுடனேயே சாப்பிடலாம்" என்றார்.

அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் "அசோக் மேத்தாவுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமாம். எப்போது சந்தித்துப் பேசலாம் என்று கேட்கிறார்?" என்றார் தீனதயாள்.

"பிரதம மந்திரி வீட்டுக்கு வருவார் இல்லையா?"

"ஆமாம்."

"அங்கேயே பார்த்து விடுகிறேனே" என்று சொல்லிய படியே போய்க் காரில் ஏறிக் கொண்டார். அவர் திரும்பி வரும் போது மணி ஒன்றே கால் !

"என்ன... ஏதாவது விசேஷம் உண்டா ? டெலிபோன் வந்ததா?”.... என்று வழக்கப்படி கேட்டுக் கொண்டே வந்தார்.

"இப்போது நந்தா வருகிறார். தங்களைப் பார்க்க வேண்டுமாம்!"

" என்னவாம்? என்ன வேணுங்கிறார்?"

திரு. காமராஜின் முகத்தில் பசியும், களைப்பும் தெரிகின்றன.

நந்தா வந்ததும் அவருடன் பேசி முடிப்பதற்குள் மணி ஒன்றே முக்கால் ஆகி விட்டது. அவரை வழி அனுப்பி விட்டுச் சாப்பிட உட்காரும் போது ஒன்று ஐம்பது ! மேசையில் சாப்பாடு தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவரைக் கண்டதும் நான் எழுந்து நின்றேன்.

"நீங்க உட்காருங்க" என்று என்னை அமரச் சொல்லி விட்டுத் தாமும் உட்கார்ந்தார்.

கொஞ்சம் சாப்பிட்ட பிறகு பேச்சுக் கொடுக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டு கவளம் சாப்பிட்ட பிறகு பேச்சைத் தொடங்கினேன்.

"மக்கள் மனம் வைத்தால் லஞ்ச ஊழலை ஆறே மாதத்தில் அடியோடு ஒழித்து விடலாம் என்று மொரார்ஜி தேசாய் கூறுகிறாரே....?" என்றேன்.

"அதெப்படி? ஜனங்களேதான் லஞ்சம் கொடுக்கிறார்கள். குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் அரை ரூபாய், ஒரு ரூபாய் வாங்குவதைப் பெரிய குற்றமாகச் சொல்ல முடியாது."

"தேவைக்கு வேண்டிய சம்பளம் பெறுகிறவர்களும், வாழ்க்கை வசதி உள்ளவர்களும் லஞ்சம் வாங்காமல் இருக்கலா மல்லவா?"

"தேவைக்கு எது அளவுங்கறேன்? வாழ்க்கை வசதிக்கு எல்லை ஏதுங்கறேன்? அப்புறம் கார் வாங்கணும், வீடு வாங்கணும். ஆசை உள்ள வரைக்கும் தேவை என்பது இருந்து கிட்டேதான் இருக்கும்."

"சில மந்திரிகள் பதவியிலிருந்து விலகுவதால் அடுத்தாற் போல் வரும் மந்திரிகள் ஏற்கெனவே உள்ள கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்றி அமைக்க நேரிடுகிறதே...."

"மாத்தட்டுமேங்கறேன். திட்டம், கொள்கையெல்லாம் மக்களுக்காகவா? மந்திரிகளுக்காகவா? மக்களுக்குப் பிடிக்காத கொள்கை , திட்டம் எதுவாயிருந்தாலும் மாத்தறதிலே என்ன தப்புங்கிறேன்?" என்று கூறியபடியே எழுந்தார்.

பார்லிமெண்டரி போர்டு கூட்டத்துக்குப் போய் விட்டு இரவு ஏழேகால் மணிக்குத்தான் திரும்பி வந்தார். அப்போது தம்முடன் திரு. அசோக் மேத்தாவையும் காரில் அழைத்து வந்திருந்தார்.

"என்ன?" என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்த திரு. காமராஜ், திரு. அசோக் மேத்தாவின் பக்கம் திரும்பி, "கமான், விஷல் கோ அப்ஸ்டோஸ்" என்றார்.

இருவரும் மேலே போய் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும், நண்பர்கள் சிலரும் கீழே பூந்தோட்டத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அந்த அரை மணி நேரமும் என் கவனம் முழுவதும் மேல் மாடியில் அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே இருந்தது.

திரு. காமராஜ் குரல்தான் ஓங்கியிருந்தது. அதுவும் அவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. என்ன பேசுகிறார் என்கிற விஷயந்தான் புரியவில்லை. கடைசியில் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். திரு. அசோக் மேத்தா காரில் ஏறிச் சென்றதும் திரு. காமராஜ் தம்முடைய வழக்கப்படி, "என்...ன?" என்றார்.

அந்த என்....ன? என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. பதிலை அவரும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு அலுவல் முடிந்து இன்னொரு அலுவலுக்குத் தயாராகும் போது அவர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி அது.

அன்றிரவு திரு. டி.டி. கே. வீட்டில் அவருக்குச் சாப்பாடு. பத்தே நிமிடங்களில் குளித்து வேறு சட்டை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டார். போகும் போது ”ராஜு (திரு. ஜி. ராஜகோபாலன், எம்.பி.) நான் இன்றிரவு பத்து மணிக்குச் சாஸ்திரியைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்!" என்றார்.

இரவு ஒன்பதரை மணி இருக்கும். திரு. ராஜகோபாலன், நடராஜன் முதலிய நண்பர்களுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று "ராஜு! இருபத்து நாலாந் தேதி என்ன கிழமை?" என்று விசாரித்தார்.

”செவ்வாய்க்கிழமை" என்றார் ராஜு

"அன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு?"

"மூணு - நாலரை."

"மெட்ராஸுக்கு டெலிபோன் போட்டுக் கூட்டத்தை மாலை ஆறு மணிக்குப் போடச் சொல்லி விடு." (காங்கிரஸ் சட்ட சபைத் தலைமைப் பதவிக்காகக் கூட்டப்படும் கூட்டம் அது.)

"ஏன்? சாப்பிட்ட பிறகு ராகு காலமாயிருந்தால் பரவா யில்லை என்பார்கள்" என்றார் ராஜு

"இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு மாற்று வைத்திருப்பாங்க நம்மவங்க. அது கிடக்கட்டும்; கூட்டத்தை ஆறு மணிக்கே நடத்தி விடலாம். முன்னாடி நாலு மணிக்கோ, ஐந்து மணிக்கோ கூட்டம் போட்டால் யாராவது ரெண்டு பேர் ராகுகாலம் என்பாங்க. அப்புறம் மாத்தணும். அப்படிச் சொல்றதுக்கும் இடம் வைக்காம முன்னாடியே செய்துட்டா நல்லதில்லையா?"

காலையில் ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டுப் பத்திரிகைகளைப் படித்து முடித்ததும் அவரைத் தேடி வரும் பல தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். டி.டி.கே., லால்பகதூர் சாஸ்திரி, நேருஜி இம்மூவரையும் தவிர அநேகமாக எல்லோரும் இவரைத் தேடி வருகிறார்கள். இவர்களைச் சந்திப்பதைத் தவிர, லஞ்ச ஒழிப்புக் கமிட்டிக் கூட்டம், தேசியப் பாதுகாப் புக் கமிட்டிக் கூட்டம், பார்லிமெண்டரி போர்ட் மீட்டிங் என்று தினமும் மூன்று, நாலு மீட்டிங்குகளுக்குப் போய் வந்தார்.

சென்னைக்குப் புறப்படும் முதல் நாள் இரவு. "காலையில் விமானத்துக்குப் புறப்பட வேண்டும். நீங்களும் - என்னுடன் தானே வருகிறீர்கள்? என் பக்கத்திலே ஸீட் ரிசர்வ் செய்து விட்டார்களா? விசாரித்தீர்களா?" என்று கேட்டார்.

”ஆமாம்" என்றேன்.

"சரி, பின்னே காலையிலே புறப்படத் தயாராயிருங்க..."

காலையில், ஐந்தரைக்குள்ளாகவே விமானக் கூடம் போய்ச் சேர்ந்தோம்.

"விமானம் பழுது பார்க்கப்படுகிறது. ஆகையால் புறப்படுவதற்கு ஒன்றேகால் மணி நேரம் தாமதமாகும்" என்று ஒலிபரப் பப்பட்டது.

அந்த ஒன்றேகால் மணி நேரத்தில், காலைப் பத்திரிகைகள் எத்தனை உண்டோ அவ்வளவையும் படித்துத் தீர்த்தார். கடைசியில் விமானம் புறப்பட்டது.

அவரை என்னென்னவோ கேள்விகள் கேட்க வேண்டு மென்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. விமானத்தில் உட்கார்ந்ததும் ஏர்ஹோஸ்ட் டஸ் வந்து பஞ்சும், பெப்பர்மிண்ட்டும் கொடுத்து விட்டுப் போனாள். திரு. காமராஜ் பெப்பர்மிண்ட் ஒன்றை மட்டும் எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டார். உடனே பத்திரிகை படிக்கத் தொடங்கி விட்டார். நான் அவரையே கவனித்த வண்ணம் வாய் மூடி மௌனியாக உட்கார்ந்திருந்தேன். பத்திரிகைகளை யெல்லாம் படித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

அவர் படித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். அரை மணி நேரம் உறங்கியவர், சட்டென்று கண் விழித்துக் கொண்டு, "என்...ன?" என்றார்.

"உங்கள் மனத்தில் காமராஜ் திட்டம் எப்போது உதயமா யிற்று? எப்படி உதயமாயிற்று?" என்று கேட்டேன்.

ரொம்ப நாளாகவே இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் சர்க்காரையும், பதவியையுமே சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பியாக வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் பதவியிலிருந்து விலகி வெளியே வந்தால்தான் சர்க்காரிலும், பதவியிலும் உள்ள கவர்ச்சி குறையும். காங்கிரசில் புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும். முதலில் சென்னையில் நான் மட்டும் பதவியிலிருந்து விலகி மற்ற ராஜ்யங்களுக்கு வழி காட்டலாமா என்று எண்ணினேன். பல பேரிடம் என் திட்டத்தைப் பற்றிக் கூறி ஆலோசித்தேன். டில்லிக்குப் போயிருந்த போது நேருஜியிடமும் சொன்னேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அதைப் பற்றி சர்ச்சை செய்ய வேண்டும் என்றார். ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசினோம். அதன் பயனாகவே இது அகில இந்தியத் திட்டமாக உருவாயிற்று. இதுதான் என் திட்டம் உருவான கதை" என்றார்.

"பதவியிலிருந்து விலகுவதால் தங்களுக்குத் திடீரென்று ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படாதோ?"

"எனக்கென்ன அசௌகரியம்? வீடு சர்க்கார் கொடுத்த தில்லை. காரும் என்னுடைய சொந்தக் கார்தான். வீட்டு வாடகையும், வரியும் போக எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதில், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்காக டில்லிக்குப் போனால், விமான டிக்கட் அறுநூறு ரூபாய் செலவழிந்து விடும். போக நானூறு ரூபாய் மிஞ்சும். என் துணிமணிச் செலவு, தாயாருக்கு அனுப்பும் பணம் போக மிச்சப் பணத்தை ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம் கட்டி விடுகிறேன். இனிமேல் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போனால் என்னால் விமான டிக்கெட் வாங்க முடியாது. காங்கிரஸ் ஸ்தாபனந்தான் வாங்கித்தர வேண்டும். முதல் மந்திரி என்பதற்காக நான் எங்கே போனாலும், வந்தாலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து நிற்பார்கள். இனி அவர்கள் வரமாட்டார்கள். நான் பதவியை விடுவதால் ஏற்படக் கூடிய வித்தியாசம் இவ்வளவுதான்" என்றார்.

"திரு. பக்தவத்சலம் அவர்களுக்கு இனி வேலை அதிகமாகி விடாதா? அவருக்கு உதவியாக மேற்கொண்டு புதிய மந்திரிகள் யாராவது நியமிக்கப் படுவார்களா?”

"இராது, ஆர். வி. இருக்கிறார். கக்கன் இருக்கிறார். ராமையா இருக்கிறார். இவர்களெல்லாம் பழைய மந்திரிகள். திறமைசாலிகள். அனுபவசாலிகள். புதிய மந்திரி என்றால் உடனே நீ நான்" என்ற போட்டி ஏற்பட்டு விடும். அதிலிருந்து பல சங்கடங்கள் எழும். ஆதலால் மந்திரி சபையில் மாற்றமே இருக்காது. வேண்டுமானால் காரியதரிசிகளை நியமித்துக் கொள் ளலாமே? மந்திரிகள் எதற்கு?" என்றார்.

மணி ஒன்று. விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது.

"இன்றைக்கு ஏன் தெரியுமா விமானம் இவ்வளவு லேட்டாகப் புறப்பட்டது? நாலைந்து நாட்களுக்கு முன் ஆக்ராவுக்கருகில் விமான விபத்து ஏற்பட்டதல்லவா? அதனால் இப்போது உஷாராகப் பழுது பார்க்கிறாங்க என்று நினைக்கிறேன்" என்று
கூறியபடியே, பெல்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டார். கண்ணாடி வழியாகக் கீழே பார்த்தபடியே உட்கார்ந்திருந்தவர், "அதோ பார்த்தீர்களா , பெரம்பூர் ரயில்வே ஒர்க் ஷாப்" என்றார்.

நான் எட்டிப் பார்த்தேன். அதற்குள் அது மறைந்து போய் விட்டது.

"அதோ பாருங்கள் சைதாப்பேட்டை பிரிட்ஜ். சலவைத் தொழிலாளிங்க துணி துவைத்துக் கொண்டிருக்கிறாங்க" என்றார்.

"ஆமாம்; அதோ பாருங்க, என்னுடைய சட்டைகூட அங்கே தெரிகிறது" என்று சொல்ல எண்ணினேன். ஆனால் சொல்லவில்லை.

இதற்குள் விமானம் கீழே இறங்கி விட்டது. விமானத்திலிருந்து இறங்கியதும், "என்....ன?" என்றார் என்னைப் பார்த்து. நான் அடுத்த அலுவலை கவனிக்கச் செல்கிறேன். வரட்டுமா? என்பதுதான் அதன் பொருள்.

----- முற்றும் ---------


This file was last updated on 26 October 2020.
Feel free to send the corrections to the webmaster.