pm logo

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
குறிஞ்சித் திட்டு


kuRinjcit tiTTu (poems)
by pAratitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குறிஞ்சித் திட்டு ‌
பாவேந்தர் பாரதிதாசன்


Source:
குறிஞ்சித் திட்டு
பாரதிதாசன்
பாரி நிலையம், 184 பிராட்வே, சென்னை 600 108
முதற் பதிப்பு ஆகஸ்ட் 1958, ஐந்தாம் பதிப்பு 1985
பதிப்பு உரிமையுடையது
விலை ரூ 18.00
பதிப்பு மாருதி பிரஸ், 173, பீட்டர்ஸ் ரோடு, சென்னை 600 014
---------

ஆசிரியர் முன்னுரை

குறிஞ்சித் திட்டை நான் இரண்டாண்டுகளுக்கு முன் துவக்கி முக்காற் பகுதியை முடித்தேன். ஒன்றரை ஆண்டு கழிந்தபின், எனக்குக் குறிஞ்சித் திட்டு முடிவு பெறாமலிருப்பது நினைவுறுத்தப் பட்டது. மற்றமுள்ள கால் பகுதியை முடிக்க நான் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது.

எழுதிக்கொண்டே போனதை இடையில் மறந்துவிட்டுப் பின்பு தொடர்ந்தெழுதுவதென்பது முடியாத செய்தி என்பதை நான் இதிற்றான் கண்டேன். என் இளங்கவிஞர்கட்டு நான் இதைக் கூறி வைத்தேன்.

எழுதிவிட்ட முக்காற் பகுதியை நூறு முறை படித்தும், விட்ட இடத்திலிருந்து - ஓட்டம் குறையாமல் - சுவை மட்டுப் படாமல் தொடர முடியவேயில்லை. இத்தனைக்கும் இந்நூலைப் பெரிதும் உவமை சிறக்க எழுதி வரவுமில்லை. ஒருவாறு நூலை முடித்தேன்; பாரி நிலையத்திற் கொடுத்தேன், விரைவில் வெளியிட்டமைக்கு நிலையமுடையார்க்கு என் நன்றியுரியது.

பிழை இருக்கலாம். அழகு குறையலாம் - பொறுத்து - ஆதரவு தரத் தமிழர்களை வேண்டுகின்றேன்.

புதுச்சேரி, 2 ஆகஸ்ட் 1958       பாரதிதாசன்

-----------
குறிஞ்சித் திட்டு
கதை உறுப்பினர்

திரைய மன்னன் குறிஞ்சி திட்டின் அரசன்
மல்லிகை குறிஞ்சித் திட்டின் அரசி
தாமரை மல்லிகையின் தோழி
அறிவழகன் அமைச்சன்
சேந்தன் படைத் தலைவன்
செழியன் சேந்தனின் தோழன்
நெடுமாறன், வேலன் மக்கள் தலைவர்கள்
திண்ணன் மல்லிகையின் அண்ணன்; விளாமாவட்டத்தின் சிற்றரசன்
இளந்திரையன் திரைய மன்னனின் மகன், விளாமாவட்டத்தில்
திண்ணனிடம் போர்ப் பயிற்சி கருதித் தங்கியிருப்பவன்
சில்லிமூக்கன் அரண்மனையின் தலைமைப் பணியாள்
தங்கவேல் பணியாளின் மகன்
விநோதை மன்னனால் அழைத்து வரப்பட்டவள்
அம்புயம், மடத்தலைவர், சிவாநந்தர்,
திருமாலடியார், சிவசம்பந்நர்.
விநோதையுடன் வந்தவர்கள்
மற்றும் நாட்டு மக்கள் தொழிலாளிகள் முதலியவர்கள்
----------------------

குறிஞ்சித் திட்டு
பிரிவு -- 1


இப்பகுதியில், குறிஞ்சித் திட்டு என்பது என்ன ? அதன் தன்மை என்ன?
மக்கள் நிலை,என்ன ? வாழ்க்கை எப்படி ? என்பவைகள் உயிரோவியமாகின்றன.

( அறுசீர் விருத்தம் )

கடல்கொண்ட குமரி நாட்டில்
கடல் கொள்ளாக் “குறிஞ்சித்திட்டு."
மிடல்கொண்டும், வேறு நாட்டார்
நெருங்கவே விடாமை கொண்டும்.
நடல்கொண்டும், விளைச்சல் கொண்டும்
நலங்கொண்டும், மகிழ்ச்சி கொண்டும்,
இடல்கொண்டும், அறமே கொண்டும்,
எல்லாங்கொண்டு திகழ்ந்ததங்கே.

மிடல் - வலிவு, இடல் - ஈதல்
------------

பிறர் நாட்டைப் பிடித்துத் தாமே
பிழைக்கும்தீ யார்வி ழிக்கு
மறைவாக நடுக்க டற்கண்
மற்றிந்தக் குறிஞ்சி நாட்டை
நிறைநாட்கள் வாழும் வண்ணம்
நிறுவினாள் இயற்கை அன்னை
குறைவின்றித் தொன்மை போல
வாய்ந்தது குறிஞ்சித்திட்டு.

நடுக்கடற்கண் - நடுக்கடலில்
-------------

மதமில்லை குறிஞ்சித் திட்டில்
மதம்பெற்ற சாதி யில்லை!
இதுபொருள் என்று தச்சர்
ஈந்திட்ட உருவங் காட்டி
மதிமாய்க்கும் கோயி லில்லை!
ஆதலால் மக்கள் நெஞ்சில்
கொதிப்பில்லை; பொதுப் பணத்தைக்
கொள்ளைகொள்ளுவது மில்லை.

இது பொருள் - இது கடவுள்
-----------

வேற்றுவர் படைஎ டுப்பு
விளைந்ததே இல்லை அங்கே!
மாற்றுவோம் தமிழ் ஒழுக்கம்
எனப்பிறர் வந்த தில்லை
ஏற்பவர் வந்த தில்லை;
இருப்பவர் ஆதலாலே!
சீற்றமே எவர்க்கும் இல்லை.
சிரிப்பிலா முகங்கள் இல்லை.

இருப்பவர் - செல்வர், சீற்றம் - எரிச்சல்
-----------
பிறர் நாட்டை எதிர்பார்க் கின்ற
பி்ற்போக்கு நிலை இல்லை.
பிறர் நாட்டைத் தாய்நா டென்பார்
உள்நாட்டில் பிழைப்ப தில்லை.
பிறமொழி தமிழிற் சேர்க்கும்
பேடிகள் நுழைந்த தில்லை.
அறமுதல் நான்கு கூறும்
தமிழ்முறை அலால்வேறில்லை.

அறமுதல் - அறம், பொருள், இன்பம், வீடு; தமிழ் மறை - தமிழ் வேதம்
-----------

ஏழாயி ரங்கல் என்று
பரந்தநல் குமரி நாட்டைப்
பாழாக்கி விழுங்கித் தீர்த்த
பழங்கடல் வெள்ளம் இந்த
வாழாது வாழ்கு றிஞ்சி
மண்ணினை நடுவில் விட்டுச்
சூழாது சூழ்ந்து சுற்றுக்
காவல்செய் திருந்ததன்றோ!

கல் -மைல்
--------

நடுலினில் நூறு கற்கள்
பரப்புள்ள நற்கு றிஞ்சி
படைகொண்டு வருவார் தம்மால்
பழிவாங்கப் படுவ தில்லை.
படைகொண்டு வருவார் வந்தால்
பாங்கெலாம் சுழல்கள் காண்பார்
அடியொடு மாள வேண்டும்
சுழல்களால் அடியில் மூழ்கி.

குறிஞ்சிமேல் படைகொண்டு வந்தால், பக்கங்களில் இருக்கும் கடற் சூழல்களில் சிக்கி மூழ்கவேண்டும்.
------------

அயல்நாட்டார் குறிஞ்சித் திட்டை
அறியார்கள் அதுபோல் இத்தத்
துயரிலாக் குறிஞ்சி நாடும்
நம்நாட்டைத் துறந்து வேறோர்
புயல்நிகர் நாட்டு மண்ணைப்
போய்மிதித் ததுவும் இல்லை.
நயனுற ஆண்ட மன்னர்
நாலாயிரத்தார் ஆவர்.

குறிஞ்சி நாடு - குறிஞ்சி நாட்டு மக்கள்
-----------

எவர்படை எடுப்பும் இன்றி
இயற்கையால் வளர்ச்சி பெற்ற
நவையிலாக் குறிஞ்சித் திட்டு
நற்றமிழ் வளர்ச்சி பெற்றும்
கவிஞர்கள் பலரைப் பெற்றும்
கைத்தொழில் வளர்ச்சி பெற்றும்
குவிபுதுத் தொழில் கலைகள்
கொளப்பெற்றும் வந்ததாகும்,

நவை - குற்றம்
-----------

இத்தனை பன்னூற் றாண்டாய்
இத்தனை மன்ன ரால்எள்
ளத்தனை குறைவி லாமல்
இயன்றஇக் குறிஞ்சி நாட்டில்
முத்தமிழ் நெறிபி ழைக்கும்
முட்டாளாய்த் 'திரைய மன்னன்'
தொத்தினான் ஆட்சி தன்னில்!
துயர்ந்தது குறிஞ்சிநாடே.

இயன்ற - நடந்துவந்த; பிழைக்கும் - தவறுகின்ற; தொத்தினான் - தொத்திக் கொண்டான்.
----------

பிரிவு -- 2

வழக்கத்துக்கு மாறாக அயல்நாடு சென்ற திரைய மன்னனைத் துறைமுகத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் குடிகள், அமைச்சர், படைத்தலைவன், அலுவலகத்தினர்

அகவல்

குறிஞ்சித் திட்டின் துறை முகத்தில்
குடிகளிற் பல்லோர் கூடி யிருந்தனர்.
அறிவழ கன்எனும் அமைச்சன் இருந்தான்
செழும்படைத் தலைவன் சேந்தன் இருந்தான்
அலுவ லகத்தினர் பலபேர் இருந்தனர்.
---

காலைக் கதிரவன் கடல்அ லைகளில்
மேலெல்லாம் ஏற்றும் மெருகின் அசைவையும்
அவர்கள் கண்கள் அடைய வில்லை.
நீர்ப்ப ரப்பின் ஆர்ப்பும் அவர்களின்
காது பருகக் கருத வில்லை.
அயல்நாடு சென்றதம் அரசர் திரையனார்
வருவதோர் கப்பல் வந்திடு கின்றதா?
என்று கடல்மேல் இறைந்தன கண்கள்!

ஏமாந்து போகவே எண்ணிலா முகங்கள்
இரங்கின; சேந்தன் இயம்பு கின்றான்:
'அரசர் அயல்நாடு சென்றார் நாட்கள்
ஐம்பதும் ஆயின அன்புறு குடிகள்,
நாடொறும் கடற்கரை நண்ணி அரசர்
வரவுபார்த் துப்பார்த்து இரவு திரும்புவர்.
தாயை இழந்த கன்றுகள் தம்மை
ஒத்தனர் அவர்கள்! உள்ளம் ஒடிந்தனர்.

நண்ணி - அடைந்து
-----------

இரண்டாண் டாக மழையே இல்லை.
விளைச்சல் குறைந்தது. விலை ஏறியது.
கட்டா தென்று கதறு கின்ற
தொழிலா ளர்க்கெலாம் வழிசெய வேண்டும்
நெய்யும் தொழிலும் நின்றது; நற்பயிர்
செய்யும் தொழிலும் சிதைந்தது பல்பொறி
படைக்கும் தொழிலும் பறந்தது; மலைக்கல்
உடைக்கும் தொழிலும் ஓய்ந்தது; மன்னர்
மறக்கத் தகாத இவற்றை மறந்தார்.

பல்பொறி - பலவகை இயந்திரங்கள்
-----

பிறநாட் டாரின் உறவையோ வரவையோ
நஞ்சென வெறுப்பவர் நம்நாட்டு மக்கள்
அயல்நா டுகளை அண்டி அவற்றை
நயந்து பிரிவினை நாடகம் நடத்தி
ஆளுவோர் காலடி நக்கி அதன்மேல்
தம்மொழி புகுத்திச் செம்மை ஒழித்து
விபூடணர் இருந்தால் வேண்டிக் கூட்டி

இரண்டுபடு நாட்டின் தலையில் ஏறிச்
சுரண்டும் தலைவர் தொல்லுல கிற்பல!
சுரண்டும் நாடுகள் தொல்லுல கிற்பலர்!
பிறரை ஆள்வதைப் பெரும்படை உள்ளதை
வல்லர சென்று வாழ்த்துவார் அவர்கள்
மூன்று சந்தையில் முடிச்சவிழ்த் தவனைத்
தக்கவன் என்று சாற்றுவார் போலும்.

எந்நாட் டுக்குநம் ஏந்தல் சென்றாரோ?
அந்நாட்டுத் தொடர்புநம் அரசனை அடைந்ததோ?
அதனால் அவர்கள் நம் அருமை நாட்டில்
காலடி வைத்துக் கலகம் விளைப்பரோ!

ஏந்தல் - அரசன்
-----------

குமரிக் கடலில் இக்குறிஞ்சி நாட்டை
அயலார் அண்டா திருக்கும் வண்ணம்
கடற்சுழல் பலப்பல காத்து வருவதை
நாம்பெற்ற பேறென நவில வேண்டும்
நம்கடல் கடக்க நாமே அறிவோம்
பிறர்அறி யாரிது பெரும்பேறன்றோ?
மன்னர் அடிக்கடி மறுபுலம் செல்வதால்
செழித்த குறிஞ்சித் திட்டுக்கு வரும்வழி

அயலார் அறிந்து கொள்ளவுங் கூடுமே!
இன்றும் வராதநல் மன்னர் மற்றொரு
நாட்டிலோர் மூலையில் நல்லுரு மாற்றி
வருந்தத் தானே வேண்டும்? வாழ்வில்
துன்ப நிழலையும் சுவைத்தறி யாத
அரசர்க் கிந்த அல்லல்ஏன்? என்று
சேந்தன் உரைக்கையில் சேர்ந்த அக்குடிகளின்
கண்ணீர் மற்றொரு கடலைச் செய்தது.

மறுபுலம் - அயல் நாடு.
----------

அழுத படியே அமைச்சன் உரைப்பான்;
"மன்னன் திரையன் மக்கள் கருத்துக்கு
மாற்ற மாக மறுநாடு பல்முறை
சென்றுவந் துள்ளான்! மூன்னாண்ட மன்னர்
எவரும் பிறநாட்டுக் கேகிய தில்லை.
இவன்தந் தைக்கும் இவன்பாட்ட னுக்கும்
அமைச்சன் நான்! அவர்கள் நல்லவர்;
அவர்வழி வந்த அரசன் இப்படி!
மன்னனின் தவறுகள் என்னால் நேர்ந்தன
என்று நானிலம் இயம்புமே! இதனை
எண்ணுந் தோறும் என்னுளம் துடிக்கும்.

நானிலம் - உலகம்

மன்னி மல்லிகை நாள்தொறும் கடற்கரை
வந்துவந்து பின்னர் வாரா மைக்கு
நொந்து நொந்து நோயுற் றதனால்
இன்று வரவும் இயலாமை உற்றார்."

மன்னன் என்பதன் பெண்பால் மன்னி; அரசி என்பது பொருள்.

என்று முதிய அமைச்சன் இயம்பவே.
உடல்கு லுங்க அழுதனர் உள்ளவர்!
கடலும் கதறி அழுதது! அப்போது
வண்ணம் பலப்பல ஆக வானில்
புறாக்கள் பறந்தன கண்டார் பல்லோர்
'புறாக்கள் புறாக்கள்' என்று
சிறாரொடு பிறரும் செப்பிஆர்த்தனரே.

சிறார் - சிறுவர்கள்
-----------

பிரிவு -- 3

தாழப் பறந்து வந்த புறாக்களைச் சேந்தன் ஏன் என்று குரல் கொடுக்க, அவை அவன் காலடியில் சூழ்ந்துகொண்டன. புறா ஒன்றின் காலில் கட்டப்பட்டிருந்த அஞ்சலால் கப்பல் வரும் செய்தி தெரிகிறது.

( அறுசீர் விருத்தம் )

வானத்துக் கடலை நீந்தி
மணற்கரை அடைந்து தங்கள்
ஊனக்கண் ணால்கு றிஞ்சி
யூர்நோக்கி அறிவி னாலே
தீனிநா டோறும் போடும்
சேந்தனை நோக்கச், சேந்தன்.
ஏன் என்றான் புறாக்கள் எல்லாம்
இணைந்தன இணை அடிக்கீழ்!

இணைந்தன - வந்து கூடின. இணையடிக்கீழ் - இரண்டு காலடி யண்டை.
-------

'அன்பரீர் குறிஞ்சித் திட்டை
அடைந்ததென் கப்பல்' -- என்ற
பொன்னான அஞ்சல் தன்னைப்
புறாக்காலில் பெற்றான் சேந்தன்!
இன்பத்துக் களவும் உண்டோ
இவ்வுரை கேட்டார்க் கெல்லாம்!
'மன்னனைப் பெற்றோம் எல்லாம்
வரப்பெற்றோம்' என ஆர்த்தார்கள்.

ஆர்த்தல் - மகிழ்ந்து கூவுதல்
-----------

பிரிவு -- 4

கப்பல் வந்தது. அக் கப்பலிலிருந்து அரசன் வந்திறங்கினான். அரசனோடு பலர் வந்திறங்கினார்கள்.

( அறுசீர் விருத்தம் )

தோன்றிற்றுக் கப்பல்! உள்ள
தோணிகள் நிறையப் பல்லோர்
ஏன்றநல் லுடைக ளோடும்
இறங்கினர்; கரைக்கு வந்தார்!
கோன்வரக் கண்டார் மக்கள்
கொள்ளாத மகிழ்ச்சி கொண்டார்.
"ஏன் பிறர்? இவர்கள் யாவர்?"
என்றனர் பிறரைக் கண்டே.

ஏன்ற- தகுந்த, கோன் - அரசன்
-------

முறுக்கேறும் மீசை யோடும்
முத்தேறும் தலைக்கட் டோடும்
நிறுக்காமல் தங்கம் கொண்டு
நிறுவிய படிவம் போன்ற
செறுக்கான ஓர்இளைஞன்
திரையனின் முதுகில் தன்னை
மறைத்தானாய் நடந்து வந்தான்
மற்றுமோர் இளைஞனோடே.

இரண்டு இளைஞர்கள் திரையன் முதுகில் ஒளிந்தபடி வருகின்றார்கள்.
-------

சிவாநந்தர் சிவசம் பந்தர்
சிவகிரிப் புகையி லைமேல்
அவாநந்தும் வாயராகி
அடைப்பைகொள் கையராகிப்
பவாநந்தர் கடையில் விற்கும்
பட்டணம் பொடிய ராகி
இவாநம்ப வாளா இல்லே
அவாளார்என் றங்கு வந்தார்.

அவா நந்தும் - ஆசை பெருகும், அடைப்பை - வெற்றிலை பாக்குப் பை.
-------

நெற்றியில் மார்பில் தோளில்
நெடுங்கழுத் திற்சுண் ணாம்பு
பற்றிடப் பூசிச் செம்மண்
கோடுகள் பாய்ச்சி மூளை
அற்றான்போல் வான்ப ருந்தை
அரிகரீ என்றண் ணாந்து
மற்றுமோர் பேதை நானும்
மனிதன்தான் என்று வந்தான்.

வான் பருந்து - மேலே பறக்கும் கழுகு.
-------

பனம்பூவின் சுமைபோல் மேலே
பழுமயிர்க் கற்றை தூக்கி
இனம்சேரக் கொட்டை மாலை
எழிற்சாம்பல் மேல ணிந்து
முழந்தொங்குந் தாடி மீசை
முழக்காதில் வளையம் தோன்ற
மனிதன்நான் அல்லன் என்றோர்
மடத்தம்பிரானார் வந்தார்.
-------------

பிரிவு -- 5

கப்பலினின்று இறங்கி வந்த மன்னன், எதிர்கொண்டழைக்க வந்திருந்த அமைச்சன் முதலியவர்களை நலம் கேட்க, அவரவர்கள் வருந்தத் தக்க விடை கூறுகின்றார்கள்.

அறுசீர் விருத்தம்

அமைச்சனை நோக்கி மன்னன்,
"அனைவரும் நலமா?" என்றான்.
அமைச்சன், "நம் தொழிலா ளர்கள்
அழுகின்றார என்று ரைத்தான்.
"இமைப்பினில் தீர்ப்பேன்; நாட்டில்
மழை உண்டா?" என்றான் வேந்தன்.
"அமிழ்தொரு துளியும் இல்லை"
என்றனன்; அறைவான் பின்னும்;

அமிழ்து - மழை. அறைவான் - சொல்லுவான்.
-------

"அயல் நாடு சென்ற தொன்றே
அடுக்காத செயல்; அதன்மேல்
செயல்நாடி வாழ்கி லாத
திராவிட நாடு செல்ல
முயன்றனை! அந்த நாட்டின்
முற்றிய முடிச்சு மாறிப்
பயல்களை உடனழைத்து
வந்தது பழுதே" என்றான்.

பழுது - குற்றம்
-------

அமைச்சனிவ் வாறு கூறக்
கெஞ்சின அரசன் கண்கள்!
"நமக்கெலாம் நலமே அந்த
நல்லவர் வருகையாலே!
தமிழுக்கும் திருத்தம் நேரும்
தமிழ்ச்சான்றோர் வருகை யாலே!
அமிழ்திணை நஞ்சென் னாதீர்
அமைச்சரே" என்றான் மன்னன்.

"அழுகையைச் சிரிப்பாக் கிற்று
நின்சொற்கள் அரசே, செத்த
கழுதைகள் நிலந்திருத்தா!
கள்ளிகள் ஊர்திருத்தா!
விழற்காடு நீர்திருந்தா
குழவியும் திருந்தி வாழும்
குறிஞ்சியைத் திருத்தல் உண்டா?

குழவி - குழந்தை
-------

"தமைஎலாம் உணர்ந்தோர் என்று
சாற்றுமிக் குள்ளர் வந்து
நமைஎலாம் திருத்துதற்கு
நம்மிடம் என்ன உண்டு?
சமம்யாரும் என்கின்றோம்நாம்
நாமிதைத் திருத்தி விட்டால்
நமதடி நண்ணி னோர்க்கு
நாமடி யார்கள் அன்றோ?

நம்மிடம் என்ன உண்டு - நம்மிடம் என்ன குறைகள் இருக்கின்றன.
எல்லாரும் சமம் என்று நாம் சொல்லுகிறோம். அவர்கள் அதைத் திருத்திவிட்டால், அதாவது மாற்றித் தொலைத்துவிட்டால், நம் அடியை நத்திய அவர்கட்கு நாம் அடிமையாக வேண்டியது தான் என்பது கருத்து.
-------

"அன்பினால் தன்தோ ளின்கண்
ஆழ்வார்கள் வாழ்வா ரென்னும்
வன்பனுக் கடியார் வந்து
திருத்தஇங் கென்ன உண்டு?
இன்பொருள் ஒன்றே என்போம்
இதையவர் திருத்தி விட்டால்
அன்றொடு நாம்அன்னாரின்
அடியார்க்கும் அடியாரன்றோ?

தன் தோளில் வந்து படிகின்ற கோபிகைகள் வாழ்வார்கள் என்று வன்பனாகிய கண்ணனுக்கு அடியார் இங்கு வந்து நமைத் திருத்த நம்மிடம் என்ன குறை இருக்கிறது.
நாம், இதன் பொருள் - அதாவது இனிமையாகிய கடவுள்... ஒன்றுதான் என்கிறோம்- அதையும் அவர்கள் மாற்றிவிட்டால், அவர்கட்கு நாம் அடிமையாகிப் பல தெய்வங்களை வணங்குவோராகிவிட வேண்டியது தான் என்பது கருத்து.
-------

"கெடானையும் கெடுப்பான் கையில்
கிட்டானைத் தொலைக்கச் செய்வான்;
அடாதன செயமுற் கூட்டி
அதிகாரி அடியில் வீழ்வான்;
கடாவெட்டி விழாத்தொ டங்கக்
கட்டளை இடுவான்; மக்கள்
இடருற வடமொ ழிக்கே
இடந்தந்து தமிழைக் கொல்வான்!

திருநெறி வகுக்க வேண்டிச்
சிவன்பணித் தானாம்! இந்த
ஒருநரி இங்கு வந்து
திருத்திட என்ன உண்டு?
இருள்நீங்கக் கல்வி வேண்டும்
எனும்கொள்கை இங்கே உண்டு.
திருத்திட்டால் மகவைக் கொன்றே
சிறுதொண்டர் ஆவோம் அன்றோ?"

மகவு - பிள்ளை
-------

எனச்சொல்லி முடித்தான்! - ஆங்கே
இதுகேட்ட திரைய மன்னன்,
"இனிஒன்றும் பேச வேண்டாம்;
என்தந்தை தந்தை தந்தை
இவாக்குநீர் அமைச்ச ராகி
இருந்தனிர் ஆத லாலே
சினமதை அடக்கிக் கொண்டேன்.
செல்லுக" என்று சொன்னான்;

"மாந்தர்கள் அமைதியாக
வாழுகின் றாரா?" என்று
சேந்தனை மன்னன் கேட்டான்.
"சிவக்கின்றார் நெஞ்ச மெல்லாம்!
ஆந்தைக்கண் அவர்க ளின்கண்!
வேந்தரே, அவர்கள் தொல்லை
விலக்குக!" என்றான் சேந்தன்.

ஆந்தைக் கண் - விழிக்கும் கண்
-------

"ஆகட்டும என்று சொல்லி,
வந்தவர் அனைவ ரோடும்
வாகிட்ட என்று கூறி,
"வந்திட்ட வண்டி ஏறிப்
போகட்டும் தரும் இல்லம
எனக்கூறிப் போனான் வேந்தன்
வாய்கட்டி மனத்துள் திட்டிச்
சென்றனர் மக்கள் யாரும்.
---------

பிரிவு -- 6

மன்னன் உடன் வந்தவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு தரும இல்லம் நோக்கிப் போகின்றான். வழியில் தான் இருக்கிறது அரண்மனை. அரண்மனையில் அரசி மல்லிகையின் தோழியாகிய தாமரை, அரசன் நேரே அரண்மனைக்கு வருவான் என்று எண்ணி எதிர்பார்த்திருக்கிறாள்.

(அறுசீர் விருத்தம்)

பறந்துகொண்டிருந்தாள் தோழி
மன்னவன் வரவு பார்த்தே
இறந்தாள் போல் இருப்பாளான
அரசிமல்லிகையி டம்போய்ப்,
"பிறந்தாற்போல இதோவந் திட்டார்
செத்தாராகியபி ரானார்!
வறண்டநெஞ்சால்அத்தானை
வரவேற்று மகிழ்க!" என்பாள்.

தெருப்புறம் விரைவாள் வேந்தர்
தென்னண்டைத் தெருக்க டக்க
ஒருநொடி போதும் அன்னை
உடைபூண வேண்டும் என்று
விருப்புடன் மகளிர் இல்லம்
ஓடுவாள்; விரைவில் மீள்வாள்;
மரத்திரு கிளைக்கு மாறும்
மணிச்சிட்டே ஆனாள் தோழி.

"வரட்டும்அவ் வஞ்ச நெஞ்சர்!
வரவேற்கு மோஎன் தோள்கள்?
ஒருபேச்சுப் பேசு மோஇவ்
வொண்டொடி செவ்வாம் பல்வாய்?
சிரிக்கட்டும், கெஞ்சி டட்டும்!
செந்தமிழ்க் காதற் பாட்டை
வருத்தட்டும்! எனைப்பன் னாட்கள்
மறந்தாரை நானா ஏற்பேன்?"
-------

எனமன்னி கூந்தல் நீவி
எதிரிற்கண் ணாடி பார்த்துக்
கனியிதழ் கடையில் மின்னும்
குறுநகை தனைம றைத்துப்
புனையணி உடைதி ருத்திப்
புதுநிலா முகில்விட்டாற்போல்
தனிவந்து தன்கண் ணாளன்
தாண்டும்முற் கட்டில் நின்றாள்.

நீவி - கோதி, புனைஅணி - புனைந்த நகை. முகில் - மேகம், அரசி அரசன் வரும் முன்கட்டில்வந்து நிற்கிறாள் என்பது கருத்து. -------

முற்கட்டில் நின்ற மன்னி
முகம்வாடி அங்கு வந்த
"விற்புரு வம்சேர் கண்கள்
மின்னிடை கன்னற் பேச்சுப்
பொற்புறு தோழி, உன்றன்
பூரிப்புக் குறைந்த தென்ன?
பிற்போக்கு நேர்ந்த துண்டோ?
ஆகையால் பேசிடாயோ?

பொற்பு - அழகு -------

"மன்னவர் வருகின் றாரா?
வரவில்லை யோடி?" என்றாள்.
"அன்னையே மன்னர் தாமும்
அயலாரும் வந்த வண்டி
நன்னீரில் குருகு போல
நம்மனைப் பாங்கில் வந்து
வன்குரற் கழுதை யாகி
வடபுறம் மறைந்த" தென்றாள்.
குருகு - அன்னம். வன்குரற் கழுதையாகி என்றது வன்குரலுடைய கழுதைபோல் ஓசை எழுப்பியதை அந்த வண்டி பொறி இயக்க வண்டி (அதாவது கார்) -------

தோழிதா மரைஇவ் வாறு
சொன்னது கேட்ட மன்னி,
"பாழாயிற் றவரைப் பார்க்கப்
பறந்தஎன் ஆசை! என்னை
வாழத்தான் வைத்தா ரா?என்
மதிப்பைத்தான் காத்திட்டாரா?
ஆழிசூழ் உலகில் எங்கே
அடுக்குமிக் கொடுமைக் கூத்தே?
-------

"அரண்மனை தனைத் தாண்டிற்றா
அவர் வண்டி? உள்ளே மன்னர்
இருந்தாரா? பார்த்தா யாநீ?
என்னை ஈ தென்ன?" என்றே,
அரசிதன் மகளிர் இல்லம்
அடைந்தனள்! குறிஞ்சி நாட்டார்
அரசர் ஏன் தரும இல்லம்
அடைந்தாரென் றுள்ளம் நைந்தார்.

மகளிர் இல்லம் - பெண்கல் வாழும் அரண்மனையின் ஒரு பகுதி. -------

----------------

பிரிவு -- 7

(அரசனும் அரசனுடன் வந்த அயலாரும் தரும இல்லத்தில் இன்ன செய்கிறார்கள் என்பது.)

தருமஇல் லத்தைச் சார்ந்த
தனியொரு மலர்வனத்துள்
திரையனும் கூட வந்த
சிறுவனும் மேடை ஒன்றில்
இரண்டுடல் ஒன்றாய்த் தோன்ற
இணைப்புறக் குந்தி மாலைப்
பருவத்தில் தோய்ந்தாராகிப்
பருவுடல் காணார் ஆனார்.

"நாவலந் தீவின் தென்பால்
நன்றான சென்னை விட்டு
யாவரும் காணா வண்ணம்
இரவினில் படகில் ஏறி
நாவாயை நடுக்கடற்கண்
நாம்பெற்றே அதைச்செ லுத்திக்
கூவெனச் குயில்கள் கூவும்
குறிஞ்சி்த்திட்டடைந்தோம் இன்றே!

"மூன்றுநாட் கப்பலோட்டம்
மூட்டிய உடலின் நோயை
வான்தொடும் பச்சைப் பந்தர்
மலர்வனம் தீர்த்த" தென்று
தேன் சுவை மொழியான் அந்தச்
செம்மலும் உரைத்தான்! மன்னன்.
"மான்விழி யாளே" என்று
வாய்ப்பேச்சுத் தொடங்கலுற்றான்.

"பெண்ணென்றே என்னை நீங்கள்
பேச்சிலும் குறிக்க வேண்டாம்.
நண்ணும்ஆண் உடையை நீக்கி
நானொரு பெண்ணே என்னும்
உண்மையை வெளிப்ப டுத்த
ஒண்ணுமோ? துறைமுகத்தில்
கண்ணெதிர் கண்டேன் நாட்டார்
காட்டிய உள்ளப் பாங்கை.

"அயலார் வருகை ஓர் 'தீ'
அதிலும்ஓர் பெண்ணை மன்னர்
மயலாகிக் கொணர்ந்தார் என்ற
மறைவுமே தெரிந்தால். அத்தீ
புயலோடு கலந்த தாகிப்
புரட்சியைச் செய்தல் திண்ணம்.
வெயில் கண்டேன் அமைச்சன் சொல்லில்!
வேல்காணேன் வேந்தர் கையில்.

"ஏசினான் அமைச்சன் எம்மை
எதிரினில் இருந்தீர் நீவிர்!
கூசினீர் இல்லை, தேளின்
கொடுக்கினை நசுக்க வில்லை;
ஆசைக்கு முடிசு மந்தீர்,
ஆட்சியை அவன்பால் தந்தீர்;
வீசிடும் வாள்சு மந்தீர்,
வெட்டுவோன் அமைச்சன் போலும்!"

என்றனள் விநோதை! மன்னன்
எழுந்தனன் தன்தோள் தட்டிக்
"குன்றாத சுவைக்கரும்பே
குறுக்கிட்டு நம்மின்பத்தை
என்றேனும் தடுப்பாராயின்.
அன்றேநான் அவரை மாய்ப்பேன்
அழகியே இன்னும் கேட்பாய்.

"நாவலந் தீவி லேதென்
நாட்டிலே சென்னை என்னும்
மேவிய நகரிலேஅவ்
விரிகடற் கரையி லேஇ
ராவிலே பகலைச் செய்யும்
இன்முழு நிலவி லேபூங்
காவிலே மயிலே போல்என்
கண்ணிலே அழகைச் செய்தாய்.

"உனைக்கூட்டி வந்த நற்சி
வானந்தர் சிவசம் பந்தர்
எனைக்காட்டித் தொலைவில் நின்றார்,
நீவந்தென் எதிரில் நின்றாய்
'தினைக்காட்டுக் கிளியே' என்றேன்,
தோளிலே வந்து சாய்ந்தாய்;
பனைக்காட்டில் இணைந்த அன்றில்
பறவைகள் ஆனோம் நாமே!

"இன்றைக்குப் பெற்ற இன்பம்
என்றைக்கும் பெறுதல் வேண்டும்
நன்றொத்து வாழ வேண்டும்
'நாம்'" என்றாய் வினோதா; நானோ,
'என்சொத்து நின்சொத்' தென்றேன்;
'என்னுயிர் நின்ன' தென்றேன்;
'என்னுடல் நின்ன' தென்றேன்;
என்னுளம் உனக்கே தந்தேன்!

"உனக்கொரு தீமை நேர்ந்தால்
உயிர்தந்து காப்பேன்! மண்ணில்
எனக்குநான் வாழ வில்லை
இங்குனக் கேவாழ் கின்றேன்;
நினைக்காதே எனக்கெதிர்ப்பு.
நினைப்பவர் எவரு மில்லை;
பனிகண்டால் நடுங்கும் அந்தப்
படுகிழம் சொல்எண்ணாதே!

"என்னாசை தான்இந் நாட்டின்
எல்லாரின் ஆசை யாகும்."
தின்னத்தெ விட்டா இன்பத்
தேன்அளாம் தினையின் மாவே!
உன்னைத்தான் நான்வியந்தேன்;
ஊரினர் இதைஅறிந்தால்,
என்எண்ணம் ஆதரிப்பார்;
எந்நாளும் தொழுவார் உன்னை!

"அமைச்சன்சொல் அறிவி லான்சொல்;
ஆயினும் விடேன்அன் னோனை!
நமக்கன்றோ குறிஞ்சி நாடு!
நமக்கன்றோ குறிஞ்சிச் செல்வம்!
சுமைக்கும்அக் கழுதை கட்கும்
தொடர்பில்லை; அதுபோல் நாட்டார்
தமக்கும்இந் நாட்டின் செல்வம்
தனக்குமோர் தொடர்பு மில்லை.

"என்விருப் பந்தான் சட்டம்;
என்அடி மைகள் மக்கள்!
பொன்னேநான் இதனை எல்லாம்
எதற்காகப் புகன்றே னென்றால்,
உன்னைநீ ஆணுடைக்குள்
புகுத்தினாய்; ஒளியைச் சேற்றில்
மன்னிடைச் செய்தாய்! அஞ்சேல்.
மாசிலா நிலவாய் நேர்நில்.'

"தலைக் கட்டை நீக்கு! கூந்தல்
சரிக்கட்டு! மீசை தன்னை
விலக்கிட்டு மேல்கீழ்ச் சட்டை
மறைப்பிட்டதைவெருட்டு!
நலக்கிட்ட உட்பட்டாடை
திருத்திட்டுக் காதல் சேர்த்துக்
கலக்கிட்ட இதழின் சாற்றை
பசிக்கிட்டு களிப்பிற் கூட்டு."

சொன்னான்இவ் வாறு மன்னன்
தோகைதான் நாணிக் கோணிப்
புல்லிதழ் விலக ஆங்கே
பொன்னிதழ் காட்டி டும்செவ்
வல்லிஆ கின்றாள்! ஆக
வந்தனன் அதேநே ரத்தில்
சில்லிமூக் கப்பன் என்பான்
திடுக்கிட்டாள் மங்கை கண்டே!

"நாணப்ப டாதே பெண்ணே!
நம்மரண் மனைப் பணிக்கு
வாணாளை ஈந்தோன் இந்த
மனிதன் பேர் சில்லி மூக்கன்
வீண்ஐயம் இவனி டத்தில்
உனக்கொன்றும் வேண்டாம்; நெஞ்சம்
கோணுதல் இல்லான். உன்றன்
கொள்கைக்கு மாறு செய்யான்!"

திரையன்இவ் வாறு கூறிச்
சில்லியை நோக்கி, "நீபோய்த்
தெருவினர் உள்வ ராமல்
திறம்படக் காவல் காப்பாய்;
வராதேநீ இனியும் இங்கே"
என்றனன் சில்லி சொல்வான்;
"வருவேனோ வராத செல்வம்
வந்துசேர்ந் திட்ட தன்றோ?"

"அரசியே உன்போல் நல்ல
அழகொன்று வேண்டு மென்று
கருதியே தவங்கி டந்தார்:
கடைசியிற் பெற்றார் உன்னைத்
தரத்தினில் மிகவுயர்ந்த
சரக்குநீ! இதற்கு முன்னே
அரசர்க்கு மனைஒருத்தி;
அவள்அழ கிலாதாள்!; என்றான்.

ஆடையைத் திருத்தும் கைகள்
அதிர்ந்தன; வாய்இ தழ்கள்
முடிய நிலைஉ டைத்தே
'ஆ!' என்றோர் முத்து டைக்க-
நீடிய சினத்தால் வேந்தன்,
"நிறுத்துடா!" என்றான சில்லி.,
"தேடரும் செல்வமாக
அரசர்க்கோர் மகன்தான்' என்றான்.

சில்லிதான் இந்தப் பேச்சை
முடிக்குமுன் திகைத்த வேந்தன்;
"இல்லைஅப் பையன என்றான்.
"ஆமாம் தன் மாமன் வீட்டில்
வில்லேந்து கல்வி ... " என்று
விளம்பினன் சில்லி!. மன்னன்,
"கல்விகற்றிருந்த பையன்
கண்மூடி ... " என்று சொன்னான்!

கண்மூடித் திறக்கு முன்னே
கடிதேகி, "அருமை மாமன்
தண்நீழல் விளாமாவட்டம்
தான்சென்றே ஆசை யோடும்
எண்ணிலாக் கலைப யின்றே
இருக்கின்றான்; இந்தச் செய்தி
திண்ணமே" என்றான் சில்லி!
திருடனாய் விழித்தான் மன்னன்.

"மிகநன்றி சில்லி யப்பா
போ" என்று விநோதை சொல்ல.
"மகளேநான் வருகின் றேன்போய்
வருகின்றேன்!" என்று சென்றான்
"மகிழ்ந்திட எனக்கே இன்னும்
மணமாக வில்லை என்றீர்!
உகுமலர்க் குறிஞ்சி சென்றே
உனைமணந் திடுவேன் என்றீர்.

உன்வயிற் றிற்பி றக்கும்
பிள்ளைக்கே உரிய தாம்இப்
பொன்வயற் குறிஞ்சி', என்று
புளுகினீர்! இனிநான் வாழேன்;
என்கழுத் தறுத்துக் கொள்ள
ஓர்கத்தி இருந்தால் தாரீர்.
பின்புநான் இறந்ததைஎன்
பெற்றோருக்கறிவிப் பீர்கள்!

இன்னலில் மாட்டிக்கொண்டேன்.
வாழ்வதில் இனிமை இல்லை"
என்றுதன் முகத்தை மூடி
'ஏ' என்று கூச்சள்லிட்டான்.
புன்தொழில் விநோதை தன்னைப்
புரவலன் நெருங்கிப் பற்றி.
"அன்பேஎன் பிழைபொறுப்பாய்
அனைத்தும்நின் உடைமை'' என்றான்

அரசன் மேலும் கூறுவான் ..

"பெண்டாட்டி இருந்தால் என்ன?
பிள்ளைதான் இருந்தால் என்ன?
திண்டாடத் தானே வேண்டும்?
திருவிளக் கேநீ என்னால்
கொண்டாடப் படுவ தேமெய்!
குறைவுக் கொன்று மில்லை;
அண்டையில் வா!அ தோபார்
ஆண்சிட்டின் ஆடல் பாடல்!"

என்றனன் திரையன்; கண்டாள்.
"இதுதானா ஆடல் பாடல்?
குன்றாத காதலால்ஆண்
கொஞ்சுதல் குலாவுதல் அன்றோ?"
என்றனள் விநோதை! மன்னன்
இன்முகம் நோக்கி நின்றான்!
அன்னவன் தோளிற் சாய்வாள்
அரசனை நோக்கிச் சொல்வாள்!

எண்சீர்விருத்தம்

''கல்லிலிருந்து மெய்வருத்தும் கடியதிண்ணை
கடந்திடுவோம் அத்தான்!'' என்றுரைத்தாள் நங்கை
''மல்லிகையின் புதர்நடுஓர் மலர்ப்ப டுக்கை
அதோஅதுதான் வேண்டுமா! மங்கை யேபார்!
புல்வளர்ப்புத் திரைநடுவில் குளிர்ச்சி மிக்க
புதியதா மரைஇலைகள் பரப்பி வைத்த
நல்லவிடுதி தேவையா? மாங்கிளைகள்
நாற்புறமும் புடைசூழப் புட்சி றைகள்

''பரப்பியதோர் படுக்கைஅதோ தேவை தானா?
பாய்புலியின் தோலுரித்துப் பதப் படுத்தி
நிரப்பாக நாற்புறமும் மான்தோல் தட்டி
நிறுவியதோர் தனிஅறையும் பாராய் பெண்ணே!
கரடித்தோல் ஆட்டுத்தோல் படுக்கை யும்பார்!
கைகாரர் பின்னிவிட்ட வலையூஞ்சல்கள்
மரப்பந்தர் இடைத்தொங்கும்; அவற்றின் நாப்பண்
மரவுரியும் மெத்தென்று போட்டி ருக்கும்.

''எதுதேவை எனக்கேட்டான் மன்னன்!'' மங்கை
''என்நாட்டில் கற்சுவரின் கட்ட டங்கள்
மதிப்படைவ தல்லாமல் இலைப்படுக்கை
மலர்ப்படுக்கை முதலியவை கொள்வ தில்லை;
புதுப்போக்கைக் காணுகின்றேன் இங்கே'' என்றாள்
''பூங்காவை அடுப்பெரிப்பார் அந்த நாட்டில்
உதைத்தெழுந்து வானளாவும் காடு கண்டால்
ஒன்றாக்கிக் கரிசுடுவார் அந்த நாட்டில்!

''வெயிலடித்து நிழல்பொழியும் தழைம ரங்கள்
வீண்என்று சொல்லிடுவார் அந்த நாட்டில்!
குயில்கூவும் வயற்புறங்கள் அங்கே இல்லை
குள்ளநரி ஊளையிடும் அந்த நாட்டில்!
மயிலாடும் சோலையின்கீழ்த் தெருக்கள் இல்லை!
வடுப்பன்றி அடிக்கீழே தெருக்கள் காணும்;
அயலின்றி இருநெருப்புச் சட்டி தீய்க்கும்
அப்பங்கள் அங்குள்ள கட்டடங்கள்!

மேலும்கீ ழும்கொதிக்கும்! வீட்டுக் குள்ளும்
மின்இயக்க விசிறிகளும் அனலைத் தள்ளும்!
ஆலுமர சும்விளவும் மாவும் இல்லை;
ஆற்றோரம் காற்றில்லை; அனைத்தும் பாலை,
ஏலுமோ உன்னாட்டில் இயற்கை தந்த
இவ்வகையாம் விடுதிகளின் அழகு கொள்ளல்?
வேலைப்பா டமைந்த கட்டடங்கள்
மிகவும்உள அந்நாட்டில் அவைகள் எல்லாம்.

''தேவைக்காம் அளவினவாய் அமைந் திருக்கும்,
சேர்குடும்பப் பொருளெல்லாம் மழைப டாமல்
வாழ்வதற்கே வீடல்லால் நிலப்ப ரப்பை
வளைக்க அல்ல வீடுகட்டல் குறிஞ்சி நாட்டில்!
காவலனார் கொலுவிருக்கை ஆலின் கீழே
கடற்கரையில் பூங்காவில் இன்ப வாழ்க்கை!''
.........................................................
........................................................
இதுகேட்ட விநோதைதான் அதோஅஃ தென்றாள்;
ஏறினார் இருவரும் விடுதி தன்னில்
புதுப்பாடல் தொடங்கிற்று வண்டின் கூட்டம்!
பொருந்த அதிர்ந் தனமுழவு குயிலின் கூட்டம்,
உதிர்த்ததுவே மலர்ப்பொடியை மென்மைக் காற்றும்
தோகைமயில் ஆடக்கண் டுவகை யாகிக்
கொதித்ததுபெண் மயில்! காதல் தீக்குத்தக்
குதித்தனஇன் பக்குளத்தில் ஆணும் பெண்ணும்!
----------

பிரிவு -- 8

(மறுநாட் காலை தரும இல்லத்து நீராடு விடுதியில் விநோதை குளிக்கிறாள். மன்னன் அவளுக்கு முதுகு குழப்புகிறான். அதன்பின் விநோதை போ என்று கூற மன்னன் ஓருபுறம் போகின்றான்.)

குளித்துக் கொண்டிருக்கிறாள் மறுநாட் காலை!
குழப்பி கொண்டிருக்கிறான் மன்னன் அன்னாள்
ஓளிப்பான பொன்முதுகை விடைகொ டுத்தாள்
"ஒருபுறத்தில் விலகிடுக'' எனும்சொல் கேட்டுப்
புளிப்பாகி ஒருமாவின் அடியிற் குந்திப்
புறப்பட்டு வரும்கிளிக்குக் காத்திருந்தான்.
வெளிப்பட்ட தாமரையாள் என்னும் தோழி
விரைந்துவந்து மன்னனிடம் கூறு கின்றாள்;

'அயல்நாடு சென்றதுவும் அறமோ ஐயா?
ஐம்பதுநாள் பிரிந்ததுவும் அறமோ ஐயா?
அயலாரோ டிங்குவந்த தறமோ ஐயா?
அரண்மனைக்கு வாராததறமோ ஐயா?
துயிலாமல் உண்ணாமல் உம்மை எண்ணித்
துயர்நெருப்பில் துடிப்பாளை மறந்தீ ராகி
அயலவர்பால் தருமஇல்லம் தன்னில் தங்கி
அகத்தன்பை உகுத்ததுவும் அறமோ ஐயா?

''மனவிருப்பம் போல்நடத்தல் அறமோ ஐயா?
மனைவிருப்பம் அறியாத தறமே ஐயா?
இனவிருப்பம் மதியாமை அறமோ ஐயா?
இடவிருப்பம் இல்லையோ அவளுக் கின்பம்?
புனல்விருப்பம் உள்ளதொரு பூங்கொ டிக்கே
புதுநெருப்பை வேரிலிடல் விருப்ப மானால்,
தனிவிருப்பம் வேறொருத்தி இடத்தில் தானோ?
சற்றிதனைத் கேட்டுவரச் சொன்னாள் மன்னி."

''உடலினின்றும் உயிர்பிரிந்தால் அவ்வுடற்கோ
உணர்வில்லை; ஆதலினால் துன்பம் இல்லை.
தொடல்இன்றிக் கைபிரிந்தால் துன்பம் தாளாத்
தோகையினை நீர் பிரிந்தால், அந்தத் தோகை
விடல்தகுமோ? விட்டாலும் உணர்வுநீங்கா
மெல்லுடலும் நல்லுயிரும் துன்புறாவோ?
கடல்நடுவில் கையோய்ந்து போன காதற்
கரும்புதனைக் கரையேற்ற வாரீர்!'' என்றாள்.

அடுத்து அரசன் சொல்லுவது;-

"காதலுக்கோர் கரைகாணத் துடித்த மன்னி,
கடற்கரைக்கு வரவேற்க வரவே யில்லை;
சாதலுற்றால் எனக்கென்ன? சாதலின்றித்
தளர்வுற்றால் எனக்கென்ன. பிரிந்து நெஞ்சம்
மோதலுற்றால் எனக்கென்ன. நெடும்பூச் சாண்டி
மொழிதலுற்றால் எனக்கென்ன? வரவே மாட்டேன்!
போதோழி போதோழி அவளிடத்தில்
புகலுவாய் என்சொல்லை'' என்றான் மன்னன்.

தோழி உரைப்பது;-

போகின்றேன்! உடனழைத்துப் போக வந்தேன்
போகின்றேன்! வரேனென்றார் என்று ரைக்கப்
போகின்றேன்! போகாத உயிரைப் போக்கப்
போகின்றேன்! அவள் இறந்தால் நான்சா கத்தான்
போகின்றேன்! ஓர் ஐயம்! அதையும் கேட்டுப்
போகின்றேன்! கேட்கவா!'' என்றாள் தோழி.
போகின்றேன் போகின்றேன்!! என்று ரைத்தாய்
போகவில்லை அதையும்நீ புகல்வாய் என்றான்.

அடுத்துத் தோழி கூறுதல்;-

''அரசாங்க ஆட்சிஅங்கே அரசி அங்கே
அரசியினால் வரும்பெருமை அருமை அங்கே
வரிசைஅங்கே வாழ்வங்கே விருப்பத் திற்கு
வாய்ப்பான உணவங்கே மங்கை அன்பின்
முரசமங்கே உண்டன்றோ? ஏது மில்லா
முதியோர்க்குச் சோறுதரும் இல்லம்
சரிஎன்று சப்பணம்போட் டுட்கார்ந் தீரே
காரணந்தான் சாற்றுவிரோ? என்று கேட்டாள்!

அடுத்து அரசன் சொல்லுவது;-

''உலகத்தின் தோற்றம்நிலை இறுதி ஆன
ஒருமூன்றின் தனிமுதலை உணர்தல் வேண்டும்;
சிலபெரியோர் என்னுடன் வந்திருக்கின் றார்கள்
செல்வமெலாம் சிறப்பெல்லாம் பெற்றேன் மற்றும்
உலர்ந்தமலர் உதிர்ந்தனைய உடம்பு பெற்றேன்.
என்னபயன்? உண்மையினை உணர்தல் வேண்டும்
நவமில்லை மாதர்தரும் இன்பம் தோழி!
நடஎன்றான்!" நல்லதென நடந்தாள் தோழி!

தனித்தவளாய் அரண்மனையின் மகளிர் இல்லம்
அடைந்திட்ட தாமரையை மல்லி கைதான்
''எனைத்தழுவும் பதைபதைப்பால் அந்த மன்னர்
இனிவருவ தாய்ச்சொல்லி உனை அனுப்ப,
நனிமகிழ்ச்சி யோடுநீ வந்தாய் போலும்!
நடக்குமா உன்நினைப்பும் அவர்நினைப்பும்?
சுனைப்புனலும் நானல்லேன் நாவறண்டு
துள்ளுமான் எண்ணமெலாம் செல்லா திங்கே.

''அயல்நாட்டில் இத்தனைநாள் என்ன செய்தார்?
அயலாரை ஏனிழுத்து வந்தார்? வந்து,
புயல்தவழும் மாளிகைக்கும் அயலிற் சென்ற
புதுப்போக்கில் அவர்காட்டும் கதைப்போக் கென்ன?
கயல்விழிகொள் தாமரையே இவற்றை எல்லாம்
காவலரைக் கேட்டாயா? என்ன சொன்னார்?
நயம்படநீ உரைக்குமட்டும் திருந்த மாட்டார்
நறுக்காக நான்குசொற்கள் நவில வேண்டும்.''

என்றுபல இயல்பினாள் மல்லி கைதான்,
'இல்லை! இல்லை, வரமாட்டேன் என்றார் மன்னன்,
மன்னவரைக் கடற்கரைக்குச் சென்று நாமே
வரவேற்க இல்லையன்றோ?'! என்றாள் தோழி.
தென்றலுக்கு நடுங்குகின்ற மரைஇதழ்போல்
திருமேனி நடுக்கமுற்ற மன்னி, ''ஐயோ
சென்றுவர வேற்காத சிறுபிழைக்கா
செங்காந்த ளைவெறுக்கும் தங்க வண்டு?

''அமைவான நல்லுருவை அன்பு வாழ்வை
அடியோடு நீக்கிற்றா நான்பு ரிந்த
உமியளவு சிறுகுற்றம்? கடற்க ரைக்கே
ஒவ்வொருநா ளும்சென்றேன்; ஐம்பதாம்நாள்
இமைநலிவால் போகவில்லை; கார ணத்தை
எனைக்கேட்டால் சொல்லேனா? அங்கிருந்து
சுமத்துகின்றார் பெருங்குற்றம் என்மேல்! என்ன,
செய்வதிந்தத் தொல்லைக்கே? என்று கூறி,

சாய்வாள்போய்ப் பஞ்சணையில்! எழுவாள் பின்னும்
தலைதாழ்த்தி இதற்கென்ன செய்வேன் என்று
பாய்வாள்பின் தஞ்சாவூர்ப் பாவை யானாள்.
'வாய்வாளா திரு!நாளை இரவு நாமே
மன்னனிடம் நேரேபோய் மன்னிப்பொன்று
ஓய்வாகக் கேட்கலாம்'' என்றாள் தோழி!
ஒண்டொடியும் ''சரி'' என்றாள், கண்ணீர் விட்டாள்.

மீண்டும்மன்னி பரபரப்போ டெழுந்தி ருந்து.
''மெல்லியே இதுகேட்பாய் என்நெஞ் சத்தைத்
தூண்டும்ஓர் எண்ணம்தான்! விளமா வட்டம்
சென்றுநீ தோகைஎன்றன் நிலையைச் சொன்னால்,
ஈண்டுவந்தென் உடன்பிறந்தார் என்துன் பத்தை
இல்லாமற் செய்வாரே'' என்றாள்! தோழி,
''வேண்டாம்என் அரசியே, வேண்டாம் வேண்டாம்!.
விரைந்தோடி வந்திடுவார் திண்ணனாரும்!

''வெளியினின்று வந்தவரைக் கொலையே செய்வார்;
வேந்தரையும் தூக்கி அடித்திடுவார் மண்ணில்!
கிளிப்பேச்சுக் காரியே உன்றன் பிள்ளை
அங்குள்ளான் இங்கிதனைக் கேட்பா னாகில்
துளிப்பொறுக்க மாட்டானே! உன்றன் காதல்
துறைதூர்ந்து போகாதோ! மரக்கி ளைமேல்
தளிர்ஒன்றில் புழுக்கண்டால் வேரை வெட்டும்
தன்மைஅன்றோ உன் எண்ணம்.'' என்று சொன்னாள்.

''மன்னவரால் எனக்கென்ன நேர்ந்திட் டாலும்
மற்றவர்தாம் பெருந்தீமை இழைத்திட் டாலும்
அன்புடையாய் விளாவட்டம் ஆளு கின்ற
அண்ணனிடம் சொல்லவே கூடா தன்றோ?
அன்னவர்ஓர் பெருஞ்சினத்தர்; முரடர்; அங்கே
அவருடன்வாழ் என்பிள்ளை அவருக் கப்பன்;
மன்னிப்புக் கேட்டிடுவோம் மன்னர் இங்கு
வந்திடுவார் வந்திடுவார் பொறுப்போம்'' என்றாள்!
----------

பிரிவு -- 9

(குறிஞ்சித் திட்டைத் தம் அடியில் ஆழ்த்த வேண்டும். அதற்கு மதங்களைக் குறிஞ்சித் திரட்டில் பரப்ப வேண்டும். பரப்புமுன் மன்னனை மதத்தில் மூழ்கச் செய்ய வேண்டும். ஆதலின், விநோதை சிவாநந்தர் முதலியோர், மத விளக்கம் செய்கிறார்கள். ஆயினும் தமக்குள் கருத்து வேற்றுமை உண்டாகிறது.)

(அகவல்)

தருமஇல் லத்தின் பெருங்கூ டத்தில்
திரைய மன்னன், விநோதை, சில்லி
ஒருபு றத்தில் உட்கார்ந் திருந்தனர்.
சிவாஅ நந்தர் சிவசம் பந்தர்
இருவர் எதிர்ப்புறம் வீற்றிருந்தனர்;
மடத்தம்பி ரானும் மாலுக் கடிமையும்

இடத்தில் ஒன்றும் வலத்தில் ஒன்றுமாய்
மாறு பட்ட மாடென அமர்ந்தனர்.
சிவாஅ நந்தர் மாணவரான
சிவசம் பந்தர் செப்பு கின்றார்;
''ஸ்ரீகை லாச பரம்பரை ஜன''
என்று துவக்கினார். இருந்த மன்னனுக்கு
ஏதும் புரிய வில்லை. அதன்மேல்,
''ஸ்மர்சனா நந்தமு சேயவல மீரு''
என்றதும் திரையன் இடைம றித்துத்
''தமிழில் பேசுதல் தக்க'' தென்றான்;
"வெள்ளைத் தமிழிது" என்றாள் விநோதை;
'தமிழ்தான்'' எனது தம்பிரான் சொன்னான்.
மாலுக் கடிமை வலக்கை அசைத்தே.
''இல்லை இல்லை இல்லை இந்தியும்
தெலுங்கும் வடசொலும் தேடி அள்ளிக்
கல்கிக் கூட்டம் கலக்கிய சேறிது!

தம்பி ரான்கள் சருக்கிய வழிஇது!
சுதேச மித்திரன் தொடரும் நடைஇது!
கலைமகள் தேளின் கடுக்கும் கொடுக்கிது!
தினமணிப் பாம்பு திரட்டிய நஞ்சிது!
யானோ தென்கலை இலக்கியம் காட்டும்
வழியே சென்று பழியாப் பெரும்பொருள்
அடைய எண்ணும் அருமைத் தமிழன்''
என்றுதன் தூய்மையை எடுத்துரைத்தான்!
மென்றான் பல்லைப் பல்லால் தம்பிரான்!

''தென்கலைப் பார்ப்பான் வடகலைப் பார்ப்பான்
சைவப் பார்ப்பான் எப்பார்ப் பாரும்
தமிழர் தலைதட வப்பார்ப் பாரே!''
தம்பிரான் இப்படிச் சாற்றிய வுடனே
சிவாஅ நந்தன் செப்பு கின்றான்;
''பார்ப்பனர் தம்மை இழிவு படுத்திடப்
பார்ப்பான் தன்னைப் பழிவாங்கிடுவேன்.
பார்ப்பனர் நான்முகன் படைப்பில் உயர்ந்தவர்

முதலில் நான்முகன் முகத்தில் வந்தவர்;
அவன்தோளி னின்றே ஆளுவோன் வந்தான்;
வசையுடன் இடுப்பில் வணிகன் வந்தான்;
காலிற் பிறந்த கழிவிடை அல்லவோ
தறுதலை யான தம்பிரான் நீயே?"
என்றனன், தம்பிரான் இயம்புகின்றான்;
''முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையிற் பிறப்பார் உட்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை எலாம்போக் கிலியே!
குறிஞ்சித் திட்டும் நாவலங் கூறும்
உள்ளிட்ட குமரி நாட்டினில் உற்றேன்.

எச்சிலைக் கண்ட இடத்து நக்கும்
நாய்போல் எங்ஙனோ இருந்து பிழைக்க
இங்கு வந்த இழிஞன் நீதான்!''
என்றனன் முடிக்குமுன்! ஏந்தல்
''நாழிகை ஆனது நங்கை விநோதையே
வா'' என்று மையல் மிகுதியால் கூறினான்.
''இன்று பிரசங்கம் இல்லை'' என்று
விநோதை சொன்னாள்; வேந்தன் "விநோதையே
பிரசங்கம் என்ற' பேச்சின் பொருள்தான்
விளங்கவில்லை" என்று விளம்பினான்.
ஏதும் சொல்ல இயலா திருந்தாள்!
''பிரசங்கம் என்றால் உபந்யாசம்!'' என்று
சிவாஅ நந்தன் என்பான் செப்பவே,
அதுவும் புரியா தரசன் விழித்தான்.
சிவசம் பந்தன் செப்புகின்றான்;

''உபந்யாசம் என்றால் உயர்ந்தோர் சொல்வது;
சொற்பொழி வென்பது தாழ்ந்தசொல்'' என்றான்
எட்டித் தலையில் உதைத்தான் ஏந்தல்!
''சேவடி வாழ்க!'' என்றான் சில்லி!
"தமிழ்வாழ்க! என்று சாற்றினான் தம்பிரான்!
விநோதையும் வேந்தனும் ஒன்றை ஒன்று
பற்றிச் செல்லும் பட்டுப் பூச்சிகள்
போல எழுந்து சென்றனர்.
மாலைப் பொழுது வரவேற்றது அவரையே!
--------------

பிரிவு -- 10

(தொழிலாளர்கள் தம் குறைகளை அரசனிடம் தெரிவிக்கின்றார்கள். சேந்தன் என்னும் படைத்தலைவன் அமைதி படுத்துகிறான்)

(அறுசீர் விருந்தம்)

பஞ்சைநூலாக்கும் ஆலைப்
பழந்தொழிலாளர் எல்லாம்
கெஞ்சினார்; கூலி ஏறக்
கேட்டனர்; முதலா ளர்கள்,
மிஞ்சினார் ; ''ஒப்போம்'' என்றார்.
வேலையை நிறுத்தம் செய்து,
''கஞ்சிக்கு வழிசெய்'' கென்று
கழிறிடக் கோயில் வந்தார்.

கோயிலில் கோவும் இல்லை;
கோரிக்கை என்ன?'' என்று
வாயிலில் இருந்தோன் கேட்க
வந்தவர், ''மன்னர் எங்கே
போயினர்?'' என்றி கேட்டார்
''புகலுவீர் என்பால்'' என்று
வாயிலோன் சொன்னான்; வந்தோர்
வாய்விட்டுச் சிரிக்கலானார்.

''மன்னவன் நீயோ?'' என்று
மற்றங்கே ஒருவன் கேட்டான்.
''உன்னைப்போல் கூலிக் காரர்
உரைப்பதை நான் கேட்டுத்தான்
மன்னர்பால் உரைக்க வேண்டும்;
மற்றேதும் விளம்ப வேண்டாம்!
சொன்னாற்சொல், இல்லை யேல்போ!
என்றான்அவ் வாயில் காப்போன்!

''ஐயா யிரம்பேர் நாங்கள்!
ஒருவன்நீ ஆத லாலே
செய்வதை எண்ணிச் செய்க;
செப்பலில் எளிமை வேண்டும்.
துய்யது மீறினால்நீ
துன்பத்தை அடைவாய்!'' என்று
ஐயாயி ரம்பேர் தம்மில்
ஒருகுள்ளன் அறிக்கை செய்தான்;

அரசனார் சொன்ன தைத்தான்
அறிவித்தேன்? நான்துன் புற்றால்.
அரசனார் துன்பு றுத்தப்
பட்டார்என் றாகும் அன்றோ?
ஒருவனை ஒருகூட்டத்தார்
எதிர்ப்பதில் உயர்வே இல்லை
அரசரோ இங்கே இல்லை
இருப்பவர் அமைச்சர்!" என்றான்.

''அமைச்சரைப் பார்க்க வேண்டும்;
அனுமதி கேட்பாய்!'' என்ன,
இமைப்பினில் வாயி லோன்பொய்,
இவண்வந்து. ''போவீர்!'' என்றான்
''எமக்குற்ற குறைகள் கேட்பீர்''
எனத்தொழிலாளர் சொல்ல,
அமைச்சனார், ''சொல்க?'' என்றார்;
அறைகின்றார் தொழிலாளர்கள்;

'மழையில்லை விளைவு மில்லை;
வாய்ப்பான உணவின் பண்டம்
பழமைக்குப் பத்துப் பங்கு
விலையேறப் பார்க்கின்றீர்கள்;

பிழையில்லை எங்கள் மேலே.
கூலியைப் பெருக்கச் சொன்னோம்;
விழவில்லை அவர்கள் காதில்,
வேலையை நிறுத்தம் செய்தோம்!
''ஆவன செய்ய வேண்டும்
அரசர்பால் எடுத்துச் சொல்லி!
தாவும்எம் குழந்தைக் கெல்லாம்
தாயிடம் பாலும் இல்லை!
ஓவெனக் கதறும் தாயார்
உயிர்க்காக்கச் சோறும் இல்லை;
சாவுண்டு மலிவாய்! நெஞ்சில்
சலிப்புண்டு வாழ்வில்'' என்றார்.

செழும்படைத் தலைவனான
சேந்தனும் அங்கு வந்தான்,
அழும்படி தொழிலாளர்கள்
அறிவிப்பைக் கேட்டிருந்தான்.
புழுங்கினான் நெஞ்சம், ''போவீர்,
நாளை இப் பொழுது வாரீர்!
ஒழுங்குசெய் திடுவோம்!'' என்றான்.
தொழிலாளர் ஒதுங்கிச் சென்றார்.
----------

பிரிவு -- 11

(அரண்மனை மகளிர் இல்லத்தில் மல்லிகை அழுது கொண்டிருக்கிறாள். அவள் தோழி தாமரை வருகிறாள்)

மகளிர்இல் லத்தில் ஓர்பால்
மல்லிகை அழுதி ருந்தாள்,
புகன்றிடும் தரும இல்லம்
பூங்காவில் விநோதை, மன்னன்
மிகமிக மகிழ்ந்தி ருந்தார்!
வெண்ணிலா முகில்கி ழித்து
நகைக்காமல் லிகைந லிந்தாள்!
நலம்நுகர்ந் தாள்வி நோதை!

மென்காற்றுத் தணலா யிற்று
மெல்லியல் மல்லி கைக்கு!
மன்னவன் விதோதை இன்பம்
அயர்வதில் வியர்வை மாற்றிப்
பொன்னாக்கிப் புதிதாக் கிற்றுப்
பொழுதினைக் குளிர்பூங் காற்று!
மன்னிநா வறள்வாள்! மன்னவன்
மலரிதழ்த் தேன்கு டிப்பான்!

தாமரை வந்து பார்த்தாள்
தையலின் நிலைக்கு வேர்த்தாள்
''நாமினிச் செய்வ தென்ன?''
என்றனள் தோழி ''நங்காய்!
மாமன்னர் மகிழ நாம்போய்
மன்னிப்புக் கேட்ப தொன்றே
நீமைபோம் படிநாம் இன்று
செயத்தக்க'' தென்றாள் மன்னி!

''முக்காட்டை எடுத்து வந்து
முகமலர் மறையப் போர்த்து!
நிற்காதே! நிலவும் வான
நீலத்தைப் போர்த்த தைப்பார்!
தக்கது நேரம், அந்தத்
தருமஇல் லத்துள் உள்ள
அக்கார அடிசி லைநான்
அடைவனேல் வாழ்வேன்!'' என்றாள்.

போர்வையைக் கொணர்ந்தாள் தோழி;
பொழிந்தது மழையை வானம்?
''கார்வைத்த குழலாய்! உன்றன்
கண்ணீரால் நனைந்த மேனி
நேரிட்ட மழைநீ ராலும்
நனையுமே! கிணற்று நீரை
ஊரிட்ட வெள்ளங் கொண்டு
போகா''தென்றுரைத்தாள் தோழி.

''கருப்பட்டிக் கட்டி அல்ல
என்மேனி; கரைந்திடாது
உருப்பட்டி ராதே என்று
நீஎன்னை உரைத்தாய் போலும்!
ஒருப்பட்டு வாஎன்னோடே''
எனக்கூறி ஒருத்தி யாகத்
தெருப்பட்ட தனித்தேர் போலச்
சென்றனள் தனியே மன்னி.

''பிழைபொறுத் திடுவாய்!'' என்று
பின்தொடர்ந் திட்டாள் தோழி!
மழையும்நின் றது தொடர்ந்து
மன்னியும் தோழி தானும்
நுழையாத தரும இல்லம்
நுழைந்தனர்; அறையின் சன்னல்
முழுமையும் திறந் திருக்க
உடல்ஒன்று முகம்இரண்டு

கண்டனள் மல்லி கைதான்!
காணாத காட்சி கண்டு
துண்டிரண் டானாள் மேனி.
துணுக்குற்றாள் நெஞ்சம். ''நான்தான்
கண்டது கனவா? என்றன்
கருத்துரு வப்ப திப்பா?
அண்டிற்றா என்றன் வாழ்வில்
அனற்காடு? செத்தேன்!'' என்றாள்.

அரசனா என்று மீண்டும்
அரசிதான் நன்கு பார்த்தாள்.
தெரிசுடர் விளக்கின் முன்னே
செந்தாமரைமுகத்தை
ஒருமங்கை தானா என்றே
உற்றுப் பார்த்தாள்! தோழி
அருகினிலே நின்றாள் அன்றோ!
அவள்தோளில் முகம்க விழ்ந்தாள்.

''உண்டோடி வாழ்வெ னக்கே
உலகினில்!'' என்றாள் மன்னி.
வண்டோடி அரங்கு செய்யும்
மலரோடும் குழலாள் தோழி
தண்டொடிந் திட்ட செய்ய
தாமரைப் பூவைத் தோளில்
கொண்டேகி மகளிர் இல்லம்
கொண்டபஞ்சணையில் போட்டாள்!

''வரவேற்க வில்லை என்று
வருந்திய தாய்உரைத்த
உரைஏற்க வேண்டு மோ? பொய்
உரையன்றோ உரைத்த தெல்லாம்?
வரவேற்க முடியாக் காதல்
ஒருத்திமேல் வைத்த தற்குத்
திரையேற்றி மறைவி லேதம்
திருக்கூத்தை நடத்தலானார்.

''காதலால் இருவர் தம்முள்
கருத்தொரு மித்தார். பின்னர்
சாதலால் பிரிவ தன்றித்
தாம்பிரிந் திடுதல் உண்டோ?
ஈதொரு வியப்புத் தோழி!
எனைப்பிரிந் திட்ட மன்னர்
மாதொருத் தியையும் கொண்டார்;
குறிஞ்சிக்கோர் வடுவைச் சேர்த்தார்.

''முன்னைக்கு முன்அ றங்கள்;
முளைத்ததும், ஆரி யர்க்கே.
தன்னைக்கொடுத்த றங்கள்
தவிர்ந்ததும், தமிழாம் எங்கள்
அன்னைக்கிருந்த சீர்த்தி
அழித்ததும், ஆன அந்தச்
சென்னைக்குச் சென்றார்; கையிற்
சென்னையைக் கொண்டு வந்தார்.

''சிவனொரு கடவுள் என்றும்
திருமாலோர் கடவுள் என்றும்
அவர்பெண்டிர் உறவி னோர்கள்
ஆகியோர் கடவுள் என்றும்
நவிலுமோர் சென்னை தன்னில்
நம்மன்னர் கூத்தி தேடத்
தவங்கிடந்திடவா வேண்டும்?
தரகர்க்கும் குறைவே தங்கே?

''நாவலூர் தனிற்பி றந்த
நடைகெட்ட சுந்த ரன்தான்
காவலார் திருவாரூரிற்
கற்பிலாரிடைப்பி றந்த
ஆவலூர் பாவை தன்னை
ஆலயம் எனும்ஓர் காமக்
காவலிற் கண்டு மையல்
கொண்டானாம் சிவன்கண்டானாம்!

''மணஞ்செய்து கொளச்செய்தானாம்.
மாப்பிள்ளை மற்றும் ஓர்நாள்
அணங்குசங்கிலியாள் தன்னை
ஒற்றியூர் ஆலயத்தில்
வணங்கையில் கண்டிட்டானாம்
மையலும் கொண்டிட்டானாம்!
தணியாத காமத் தீயன்
தம்பிரான் தோழன் ஆங்கே,

''சங்கிலி இடம்உரைப்பான்;
'தையலாள் பரவை தன்னை
அங்கொரு நாள்மணந்தேன்
அதுமெய்தான்; எனினும் உன்பால்
தங்குவ தன்றி அந்தத்
தையலை இனிமேல் நண்ணேன்;
இங்கிதே உறுதி யாகும்
என்றானாம்? 'சரி'என்றாளாம்,

''சிறுமியைக் கெடுத்தான்: பின்னர்த்
திருவாரூப் பரவையாள்பால்
உறுமையல் உறுதி சொன்னான்;
உரைத்தஓர் உறுதி எண்ணான்.
பிறைநுதற் பரவையாளும்
பிணங்கிநீ வராதே என்றாள்.
மறைகண்ட சிவனும் அன்னாள்
மனமாற்றிச் சேர்ப்பித் தானாம்.

''ஒருத்தியை மணந்தோன் பின்னும்
ஒருத்தியை மணப்ப தென்னும்
திருத்தமோ அன்பு கொல்லும்
'தீ' அங்கே சிவமாய் வாழ்ந்தால்,
உருப்படா நாட்டில் எந்த
உருப்படி உரிமை யோடு
கருப்பெறும்? பெறும்பிள் ளைகள்
கடப்பரோ அடிமைச் சேற்றை?
-----------

பிரிவு -- 12

(தீமைகளும் தமிழ் இனப் பண்பாட்டுச் சீரழிவுகளும் தொகுத்துப் பார்க்கும் அரசி மல்லிகை, தன் அண்ணனுக்கு மடல் அனுப்புகிறாள்.)

"பலபெண்கள் ஓர்ஆண் கொள்ளும்
பழிச் செயல் தன்னை மன்னர்
சிலநாளிற் கற்ற தோடு
செயலிலும் காட்டினாரே!
அலாதன செய்யும் சென்னை
என்னும்ஆ சிரியன் வன்மை,
உலகமே வியப்பதன்றோ
ஒன்றிது; மற்றொன் றுங்கேள்;

"வையகம் வியக்கும் வண்ணம்
அகப்பொருள் வளர்ந்த நாட்டில்
ஐவரை மணந்தாள் ஓர்பெண்!
அவளைப்போல் படிவம் ஒன்று
செய்யவும் சொல்லிக் கோயில்
செய்தங்கே வைக்கச் சொல்லி,
உய்யவே வணங்கச் சொல்லி.
ஊரெலாம் ழுழக்கஞ் செய்தார்.

"நல்லொழுக் கம்காணாத
நாட்டினர் ஆரி யர்தம்
புல்லொழுக்கத்தை அங்கே
புகுத்தினார்; வேண்டாம் என்ற
சொல்லும்கே ளாமல் ஆண்டு
தோறும்அத் துரோபதைக்கு
நில்லாமல் மணவிழாவும்
கூசாமல் நிகழ்த்துகின்றார்.

"பகர்உருக்குமணி மற்றும்
பாமையாள் இருபெண் டாட்டி
நுகர்பவன் நாளடைவில்
மகளிர்கற் பழித்தான் நுகலும்பல்லாயி ரம்பேர்
அன்னோன்
மக்களைக் காப்போன் என்று
புகல்கின்றார்; படிவம் வைத்துப்
பூசனை புரிகின்றார்கள்.

"அறுபதினாயிரம்பேர்
கற்பினை அழித்தா னாம்ஓர்
தறுதலை! அவனைத் தூக்கித்
தலையில்வைத் தாடு கின்றார்!
உறுதியில் லாது வாழும்
தழிழர்கள்! ஒழுக்கத் திற்கோர்
இறுதியைச் செய்தார்; முன்னாள்
உலகுக்கே ஒழுக்கம் ஈந்தார்.

"எண்ணமும் செயலும் இவ்வாறு
இருந்திடும் நாட்டில் வாழ்வின்
கண்ணெனும் பெண்ணி னந்தான்
கடைத்தேற வழியு முண்டோ?
மண்ணினும் கேடாய் அன்றோ
மதிக்கின்றார் பெண்ணினத்தை!
எண்ணினும் மானக்கேடாம்
இன்னொன்று சொல்வேன் கேட்பாய்;

"உடையிலா இளைய மாதர்
ஓவியம் எழுதச் சொல்லிக்
கடையிலும் வீட்டினுள்ளும்
கட்டியே தொங்க விட்டுப்
படையுடன் ஆடவர்கள்
பார்த்துள்ளம்களிப்ப துண்டாம்!
மடந்தைக்கு மனம்வேண்டாமாம்!
எடுத்தாள உயிரே போதும்.

"ஒருத்தியின் ஆடை தன்னை
ஒருதீயன் ஒதுக்கு கின்ற
திருந்தாஓ வியத்துக் கெல்லாம்
தேர்கோயில் ஆம்இடங்கள்
பொருத்தம்என் பாராம் மேலும்
புதுக்கலை இதுஎன் பாராம்.
சிரிப்பாகச் சிரிக்கும் அங்கே
சேயிழையாரின் மானம்.

"நூலெலாம் பெண்ணைத் தாழ்த்தும்;
நுண்ணறி வாளர் என்போர்
காலெலாம் கைஎ லாம்பெண்
கண்ணிலே மண்ணைத் தூவும்!
பாலெலாம் பாலோ! பெண்பால்
பழிக்கடையாளம் என்பார்;
தோலெலாம் குருதி யுண்டோ
இலையோஅத் தொழும்பர் கட்கே?

"இவ்வகை யாக நாட்டில்
இழிநிலை ஏற்ப டுத்தி,
அவ்வகை நிலையைத் தங்கள்
ஆசைக்குப் பயன்படுத்தும்
தெவ்வர்கள் செயலைச் சற்றே
செப்புவேன்! அதையும் கேட்பாய்;
செவ்விதழ் மாதர்க் கெல்லாம்
விளம்பரம் செய்வாரங்கே.

"கோடம்பாக் கத்தில் ஓர்எண்
குறிப்பிட்ட மாடி வீட்டில்,
'வாடம்பர்' என்ப தாம்ஓர்
வாணிக நிலையம் உண்டு.
'பாடங்கள் நடக்கும் ஆங்கே
படத்தொழில் ஆதரிக்கக்
கூடங்கள் நிறைய வந்து
கூடுங்கள் குயிலினங்காள்!'

"எனஏட்டில் படிப்பார் பெண்கள்;
எழிலான பட்டுடுத்தி,
இனமானம் தனைய கற்றி
வாடகை வண்டி ஏறி,
தனைஒப்பித் தம்மே லாடை
ஒருபுறம் தளர்த்திச் சோற்றுக்
கனவுக்குத் துணிவு கூறிக்
கடாக்களின் இடம்செல்வார்கள்.

"முதலாளி முதலா ளிக்கு
முழந்தாளி படநு ணுக்க
மதியாளி, பணம்ப டைத்த
அறிவாளி அமர்ந்தி ருப்பார்;
புதுவாளி விழிமா தர்கள்
போயங்கே சிரித்து நிற்பார்;
முதலாளி தானே தன்னை
முன்னறி வித்துக் கொள்வான்.

"அமருங்கள் என்று சொல்வான்.
அங்குள்ள படக்கணக்கன்;
'உமக்குள்ள உயரம் காண
ஒருபக்கம் நிற்பீர்' என்பான்;
தமக்குள்ள பெருமை சொல்வான்;
தமிழ்தெரி யாமை சொல்லிச்
சுமையாக ஆங்கிலத்தைச்
சுமந்ததை விரிவாய்ச் சொல்வான்.

"முதலாளி சொன்ன வண்ணம்
முழந்தாளி சுவைநீர் ஈவான்;
முதலாளி பாடச் சொல்வான்;
முன்னிற்போர் 'ஆம்ஆம்' என்பார்;
முதலாளி ஆடச் சொல்வான்;
முட்டாளோ, 'எழுக' என்பான்.
முதலாளி விருப்பம் சொல்வான்;
மாமாக்கள் முடித்து வைப்பார்!

'பொழுதுபோம்! தூங்கிப் போகப்
புகலுவார் மாமா மார்கள்!
கழுகுகள் கருத்தறிந்தும்
கன்னியர் ஒப்புவார்கள்!
மழை நீராய்ப் பொழியும் புட்டில்;
புலாற்சோறு மலையாய்ச் சாயும்;
கழிந்திடும் உணவு! மேலே
கயவருக் கென்ன வேலை?

"மன்னவர் பொறிஇ யக்க
வண்டியில் ஒருத்தி யோடு
சென்னையின் கடற் கரைக்குச்
சொல்லுவார்; அமைச்ச ரானோர்,
'பொன்னேஎன் கண்ணே! உன்னைப்
புதுப்படந் தன்னில் நாளை
நன்னிலை தருவேன்; இன்று
நடத்துநம் படத்தை' என்பார்.

"நடைக்கட்டில் மாடிக் கூட்டில்
இத்தீமைச் செயல்கள் யாவும்
முடிக்கட்டும் என்று கீழ்ப்பால்
முளைத்திடும் இளங்க திர்தான்!
படத்தினில் இடங்கேட் டார்க்குப்
படக்கணக்கன் புகல்வான்;
'உடற்கட்டே எதுவு மில்லை;
உதவாய்நீ படத்திற் கென்றே!'

"மடத்தினுக் குடலை விற்கும்
மாதர்கள் கூட்டம் ஒன்று!
கொடுத்தவன் வாழ்வைத் தீர்க்கக்
கோயிலுக் குடலை விற்கும்
நடக்கையார் கூட்டம் ஒன்று!
கலைக்குத்தான் நம்வாழ் வென்று
படத்தொழிற் குடலை விற்கும்
பாவையர் கூட்டம் ஒன்று!

"காணுமிக் கூட்டம் மூன்றும்
களையெனக் கிளைக்கு மாங்கே!
நாணமில் லாத பல்லோர்,
நாளுமிக் களைகள் ஓங்க,
ஊணுறக் கங்க ளின்றி
உழைப்பது வியப்பே யாகும்;
பூணூலார் இவ்வாறான
படங்களைப் புகழ்ந்து வாழ்வார்!

"கள்ளவா ணிகர்கள் மக்கள்
உழைப்பினைக் கவர்ந்து நாளும்
கொள்ளைகொள் செல்வர் எல்லாம்
கொடியதோர் படத்தொ ழிற்கே
வெள்ளையாய்த் தொண்டு செய்வார்;
வெறுப்பினை நீக்க என்ன
உள்ளதென்றாய்வு செய்யார்;
திருத்தவும் உள்ளம் கொள்ளார்!

"வடக்குவிந்தியமும் தெற்கில்
வளர்கும ரியுமாய் இன்று
முடக்கப்பட் டிருப்ப தான
முதியதோர் நிலத்தினுக்கே
இடப்பட்ட பெயர்த மிழ்நா
டெழில்திராவிடநா டாகும்;
நடப்பதோ ஆரியத்தின்
நாகரி கந்தான் அங்கே!

"தமிழ்நாட்டில் தமிழுக் கன்றோ
தலைமைதந் திடுதல் வேண்டும்?
தமிழ்நாட்டில் தமிழ னன்றோ
தலைமைதாங் கிடுதல் வேண்டும்
தமிழ்நாட்டில் பிறமொழிக்கே
தலைமைதந் துயிர்வாழ் கின்றார்!
தமிழ்நாட்டில் தலைமை யாவும்`
தமிழரின் பகைவர் கையில்!

"தமிழ்நாட்டில் வடமொழிக்கே
விளம்பரம் தருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழைத் தாழ்த்தும்
தாழ்ந்தவர் உயர்ந்தோரங்கே;
தமிழ்நாட்டில் தமிழப்பண் பாடு
தலைகாட்ட வழியே இல்லை.
தமிழிரின் இலக்கி யங்கள்
தலைகீழாய்க்காணு மங்கே!

"வடசொல்லைத் தமிழ்ச்சொல் என்று
வழுத்திடும் நரிகட் கெல்லாம்
வடசொல்லும் தெரிவதில்லை;
வாழ்வதும் அதனா லல்ல!
வடசொல்லைத் தாய்ச்சொல் லென்பார்
தமிழால்தான் வாழுகின்றார்.
வடசொல்லால் வாழா நாய்கள்
தமிழ்ச்சொல்லைக் குரைப்ப துண்டோ?

"வடநாட்டில் தமிழைத் தாங்கி
வாழ்ந்தவ னில்லை. ஆனால்,
வடசொல்லைத் தமிழர் நாட்டில்
வரவேற்க, ஆதரிக்க,
மடத்தம்பி ரான்கள் உண்டு;
வயிற்றுச்சோற் றுக்கே நாளும்
துடைநடுங் கிகளே ஆன
தூயதமிழ்ப் புலவருண்டு.

"தமிழ்வள்ளல் என்று தன்னால்
தனிப்பட்டம் பெற்ற பார்ப்பான்
அமைவாக இட்ட சோற்றில்
சுவைகண்டான் அன்ன வன்தான்
தமிழச்சுவை மணியாம் அங்கே!
தமிழரின் பகைக்கூட் டத்தை
உமிழாமல் அதற்குழைக்கும்
ஒருவன்தான் தமிழராட்சி

"அமைப்பவ னாம்அந் நாட்டில்!
அறிஞர்கள் பார்ப்பா ரெல்லாம்
நமர்அல்லர் என்னா நாமக்
கல்லான்ஓர் கவிஞன் அங்கே!
சுமக்கொணா வறுமை நல்கும்
வைதிகம் தோய்ந்த வாழ்வே
தமக்கென்னும் தேசிகங்கள்
தமிழ்க்கவி மணிகள் அங்கே'!

மதிப்புள்ள தமிழப் பிள்ளை
ஆயினும், தமிழந் என்றால்
கொதிப்புள்ள பார்ப்பா ரென்ற
கூட்டத்தார் தம்கைப் பிள்ளை!
குதிப்புள்ள வடமொ ழிக்குக்
குளிர்தமிழ்ப் பிள்ளை என்னும்
புதுப்பிள்ளை யான வையா
புரிப்பிள்ளை வாழ்வாரங்கே!

"சென்னையின் தீமை எல்லாம்
நமக்கென்ன தெரியும்? நந்தம்
மன்னரே எடுத்துரைப்பார்
அவண்சென்று வரும்போ தெல்லாம்!
முன்னெலாம் அவர்க்கெவைகள்
தீமையோ பின்ன வைகள்
நன்மையாய்ப் போன துண்டோ?
நங்கையே வியப்பே அன்றோ!

"அணுவொவ் வொன்றுந்தீ மைகள்
அணுகும்அச் சென்னை தன்னை
அணுகியங் கிருந்தாராம்நம்
அணுக்கரை அத்தீ மைகள்
அணுகாவோ? நம்மை அன்னார்
அணுகாத வகைசெய்தாளை
அணுவேனும் பழியோம்! சென்னை
அணுகினார் பிழையே எல்லாம

எனக்கூறி மல்லிகைதான்
இருந்தபஞ் சணையில் துன்ப
மனத்தொடும் புரள லானாள்.
மனம்பொறாத் தோழி ஓர்பால்
சினத்தொடும் ஓடி அஞ்சல்
தீட்டியே அதனை ஏந்தித்
தனக்கொரு பணியாள் வேண்டித்
தெருநோக்கித் தனித்து நின்றாள்!

வந்துகொண் டிருந்தான் சில்லி.
"வருகநீ அண்ணா வாழ்க!
நைந்தாருக் குதவ வேண்டும்;
பொதுவறம் இதுவாம்! நாமோ
இந்தநல் அரண்மனைக்கே
உழைப்பதை இனிதாய்க் கொண்டோம்;
குந்தாதே விளாமா வட்டம்
கொண்டுபோ அஞ்சல என்றாள்.

நடுங்கினான் சில்லி; அந்த
நடுக்கத்தை மறைத்தானாகி,
"நடந்தவை என்ன தோழி
நவிலுக" என்று கேட்டான்.
"மடந்தையாள் ஒருத்தி யோடு
மன்னர் பஞ்ச ணைமேல்
கிடந்ததை மன்னி கண்டாள்,
துடிக்கின்றாள் புழுபோல என்றாள்.

"தன்னண்ணன் இடத்தி லேதான்
சாற்றுதல் வேண்டும்; நாட்டில்
பின்எவர் இந்தத் தீமை
நீக்குவார என்று பெண்ணாள்
தன்னிடம் இருந்த அஞ்சல்
சடுதியில் வாங்கிச் சென்றான்.
முன்நிற்கும் குறைபா டெல்லாம்
முடிந்ததாய் நினைத்தாள் தோழி.
-----------

பிரிவு -- 13

(அஞ்சலைச் சில்லி நேரே சென்று விநோதையிடமே கொடுத்து விடுகிறாள்.)

அஞ்சலை விநோதை தன்பால்
அளித்தனன்! "மல்லி கைதான்
பஞ்சணை தன்னில் நீயும்
மன்னனும் படுத்தி ருந்த
நெஞ்சொவ்வாச் செயலைத் தானே
நேரினிற் கண்டாள என்ற
நஞ்சொத்த செய்தி தன்னை
நறுக்காகச் சொன்னான் சில்லி;

பிரித்தனள் அஞ்சல் தன்னைப்
பெருவியப் படைந்தா ளாகி
சிரித்தனள் "தன் அண் ணன்தான்
திறன்மிக்கான் எனினும், மன்னன்
இருக்கின்றான் ; இருக்கின் றேன்நான்;
என்செய்வான் என்னை?" -- என்றாள்.
"ஒருத்திநீ இல்லை. மன்னன்
ஒருவனும் அல்லன், கேட்பாய் :

"உலகமே எதிர்த் திட்டாலும்
ஒருவனாய் நின்றெ திர்க்கும்
வலியுளான் திண்ணன் என்பான்!
வந்தாய்நீ அறிய மாட்டாய்.
கலகமேன்? ஏன்சாக் காடு?
விரகொன்று காண்பாய என்றான்.
தலையினை அசைத்தாள்; "கேட்பாய்
சாற்றுவேன என்று சொல்வாள்;

"தோள்வலி எல்லாம் சின்னத்
துப்பாக்கி முன்நில்லாதே!
ஆள்வலி அமைத்த கோட்டை
அணுகுண்டுக் குப்ப றக்கும்!
நீள்வலி யுடைய மன்னன்
நீராவி ஆற்ற லுக்கு
மூள்வலித் திண்ணன் என்பான்
முதுகுதான் எந்த மூலை?"

இப்பேச்சைக் கேட்ட சில்லி
விநோதைபால் இயம்பு கின்றான்;
"துப்பாக்கி மிகவும் உண்டு;
சுடுபவர் அரசர் தாமோ?
மெய்ப்பான அணுகுண் டுண்டு;
வீசுவோர் அரசர் தாமோ?
அப்பாலும் உண்டு; மன்னர்
அவற்றைக்கை யாள்வதுண்டோ?

''ஒருவனைச் சிறைப் படுத்த
அல்லது சாக டிக்க
இருநூறு துப்பாக் கிக்கும்
இருநூறு பேர்கள் வேண்டும்
பெருங்கோட்டை ஒன்றைத் தாக்கப்
பெருமக்கள் வேண்டும்; மன்னர்
இருக்கின்றார். இருக்கின்றார்என்
றியம்புதல் சரியா அம்மா?

"தூக்குங்கள் என்றால் ஆட்கள்
துப்பாக்கி தூக்கி டாரோ?
தாக்குங்கள் என்று மன்னர்
சாற்றினால் தாக்கிடாரோ?
ஆக்குங்கள் தூளாய் என்றால்
அணுகுண்டை எறிந்திடாரோ?
போக்குங்கள் உயிரை என்றால்
போக்காரோ? என்று சொன்னாள்.

"தூக்குதல் தாக்கல் போக்கல்
தூளாக்கல் எனும்ஆற் றல்கள்
ஆர்க்குண்டு? மக்க ளுக்கே
அவைபொது வான துண்டு!
தேக்குண்ட திலைமன் னன்பால்
தேளிடம் நஞ்சு போல!
வாய்க்குண்டிங்கு அதிகாரந்தான்
என்பாய்நீ மறுக்கின் றேன்நான்.

"அரசனின் அதிகா ரந்தான்
அரை நாளில் மாளக் கூடும்;
அரசனாய் இருப்போன் நாளை
ஆண்டியாய் அலையக் கூடும்;
அரசனின் அதிகா ரத்தை
அறத்தொடும் ஒத்துப் பார்த்துச்
"சரி இரு; கீழிறங்கு
சடுதியில், என்பார் மக்கள்.

"அயலானைத் தொலைப்ப தற்கே
ஆற்றல்சேர் ஆளைத் தங்கள்
செயலாற்றும் நிலையில் சேர்த்தான்
திகழ்அம ரிக்கா ஆண்டான்;
முயன்றஅவ் வாறே தாங்கள்
முற்றுந்தம் ஆளைக் கேட்க
இயலுமோ? மக்க ளால்தாம்
இயலுமென் பதைஉணர்ந்தான்.

"ஆயுதம் செய்தோ ரெல்லாம்
அந்நாட்டின் தொழிலா ளர்கள்!
ஆயுதம் இயக்கு வோர்கள்
அந்நாட்டின் தொழிலா ளர்கள்!
மாயவே அயலார் நாட்டை
மண்ணாக்கு வீர்கள் என்பான்
தீயவன்! செயற்படுத்தத்
தெரிந்தாரும் தீயரல்லர்.

"மக்களை மக்களாலே
மாய்த்திட எண்ணு வோனை
மக்களும் விட்டு வையார்;
மனச்சான்றும் விடுவ தில்லை.
மக்களை மரங்க ளாக
மதித்தநாள் மலைஏ றிற்று;
மக்கட்குத் தொண்டு செய்தே
தனிமகன் வாழ வேண்டும்.

"திண்ணனோ அறத்தில் மேலோன்;
சீற்றமும் அறமே செய்யும்!
மன்னவன் அவனை நேரே
மாய்ப்பது முடியா தென்றேன்;
மன்னவன் ஆணை யாலோ
மற்றவர் மாய்ப்ப ரென்று
சென்னையார் எண்ணுவார்கள்;
எண்ணாது செங்கு றிஞ்சி!"

என்றனன் சில்லி மூக்கன்.
விநோதைதான் இயம்பு கின்றாள்;
'உன்னைக்கொண் டவனை மாய்க்க
ஒண்ணாதோ எனக்கு? நீதான்
என்னைக்கொண் டெல்லாம் செய்ய
எண்ணுகின் றாயே' என்றாள்.
"அன்னை நீ மகளும் நீயே
உன்ஆணைக் கடியேன என்றான்.

அஞ்சல்

"மன்னிய விளாமா வட்ட
மன்னர் திண்ணர் தாளை
என்தலை சூடி அஞ்சல்
எழுதினேன்; தாம ரைநான்
மன்னியின் துன்ப வாழ்வை
வந்துநீர் மாற்ற வேண்டும்;
இன்னமும் சில்லி சொல்வார்;
சுருக்கமே எழுதி னேன்நான்?

"என்னுமிவ் வஞ்சல் தன்னைத்
தோழியே எழுதி னாளா?
மன்னிதான் எழுதச் சொல்ல
மற்றவள் எழுதினாளா?
ஒன்றுமே புரிய வில்லை;
உனக்கொன்று சொல்வேன், நீ போய்
அன்னசின் னண்ணன் ஊரில்
இல்லைஎன் றறை அவள்பாள்;

என்றனள் விநோதை சில்லி,
"இவ்வாறு நான்உ ரைத்தால்,
இன்றந்தத் தோழி ஏகித்
தொலைப்பேச்சுப் பொறியைக் கொண்டே
அன்னவன் ஊரில் உள்ள
சேதியை அறிந்து கொண்டால்,
என் வாழ்வு மண்ணே அன்றோ?
இதற்கென்ன செய்வேன்? என்றான்.

"ஆவண செய்வேன்; நீயும்
அதுவரை இங்கி ருப்பாய்;
நாவினால் இதையார் பாலும்
நவிலாதே" என்று கூறிப்
பாவைஅவ் விநோதை சென்றாள்
பஞ்சணை அறையை நோக்கி!
காவலன் நீராடிப்பின்
கண்ணே என்றங்கு வந்தான்!
-----------

பிரிவு -- 14

(திண்ணனுக்குக் குறிஞ்சித் திட்டின் நிலை தெரியாமற் செய்ய ஏற்பாடு செய்ய விநோதை வேண்டுகின்றாள்.)

சிற்றுண்டி அருந்த வாடி
செந்தேனே" என்றழைத்தான்.
"சிற்றுண்டி பிறகாகட்டும்;
திண்ணனால் நீயும் நானும்
எற்றுண்டு மாயு முன்னர்
ஏற்றது செய்ய வேண்டும்.
ஒற்றரை அரண்மனைக்குள்
உலவிடச் செய்ய வேண்டும்.

"அரசியோ தோழியோமற்று
அறங்குளார் எவரோ யாரும்
தெருச்செல்ல முடியா வண்ணம்
செய்திட வேண்டும்; மேலும்
ஒருத்தரும் விளாமா வட்டம்
ஓடாமற் பார்க்க வேண்டும்;
உரைத்தவாறிவற்றைச் செய்ய
ஒண்ணுமோ உம்மால்? என்றாள்.

"சின்னமைத் துனனுக் கிந்தச்
செய்தியே எட்டா வண்ணம்
என்னென்ன செய்யவேண்டும்
அதையெல்லாம் இன்றே செய்வேன்!
கன்னலின் கட்டி யேநீ
கடிதினில் உண்ண வாடி!"
என்னலும், மன்னனோடு
விநோதையும் எழுந்து சென்றாள்.
----------

பிரிவு -- 15

(விநோதை மன்னனிடம், சில்லி அமைச்சன் வருவது கூறுகிறான்.)

"யாழும் விரலும் எழிற்றமிழும் நின்நாவும்
வாழும் படிசெய்யும் மாமருந்து! நானவற்றை
உண்ணாத நேரம் உயிர்நீத்த நேரமடி!
கண்ணே உடன்என்னைக் காப்பாற்றவேண்டு" மென்று
மன்னவன் தன்கையால் மங்கைமுக வாயேந்த -
மின்னொடு மெல்லிடையாள் மேலாடை தான்விரித்துக்
கண்ணீர் ஒளிசிந்த காதல் நகைசிந்த,
மண்ணில் முகிற்கூந்தல் வண்டோடு பூச்சிந்த,
ஆடி நடக்குங்கால் அழகுசிந்த, நல்யாழை
மூடிட்ட பட்டோடு தாங்கியே முன்னிட்டுத்
தேர நரம்பு தெரித்து முறுக்காணி
சேரத் திருகியே சீர்செய்து, பட்டோடு
பண்ணிட்டுப் பாவொடு தேனிட்டிருக்கையிலே.
புண்ணிட்டான் நெஞ்சிற் புகுந்தானங்கேசில்லி!

"அம்மா அமைச்சர் வருகின்றார் நின்பாட்டைச்
சும்மா நிறுத்திச் சுருக்காய் மறைந்து கொள்வாய்;
ஏனென்றால் நீ அயலாள்; இந்நாட்டுக்காரியல்லள்;
ஊனம் வருமன்றோ, உண்மை தெரிந்துவிட்டால்?
அந்த அமைச்சர் அடாச்செயல்கள் செய்பவர்,
இந்தமன்ன ரேஎனினும் இம்மியும் தாங்கார்!"
எனச்சொல் வளர்த்திட்டான்; ஏந்தலுக்கு வந்த
சினத்தீ மிகுதி எனினும், செயலொன்றும்
செய்யஇது நேரமல்ல என்றெண்ணிச் "சில்லிநீ
பைய அமைச்சரைப் பார்க்க அழை" என்றுரைத்தான்.
சில்லி மெதுவாகச் சென்றான்; அறைக்குள்ளே
மெல்லியும் சென்றாள் விரைந்து.

வேறு; (அகவல)

"அரசியைப் பிரிந்துநீ அயல்நாடு சென்றாய்;
அரசி உயிரின் அரைப்பங்கு தீர்ந்தது;
வந்தாய்; அரண்மனை வாராததால் காற்பங்கு
வெந்தது! வேந்தே வேறோரு பெண்ணுடன்
உன்னைக் கண்டால் மீதியும் ஒழியும்!
மன்னியின் முழுதுயிர் வளர்க்க வருவாய்.
பாவை தனக்கிவ் வுலகில் தேவை
சோறன்று; மிளகின்சாறன்று; தமிழ்ஒன்றே!

அத்தமிழ், மாதர்க் கருளுவ தென்னெனில்
தற்காத் துத்தற் கொண்டான் பேணித்
தகைசான்ற சொற்காத்துச்சோர் விலாள்பெண்
என்ப தாகும், இதனை அறியீரோ?
இல்லாள் கடமை இவைகளாம்; அவற்றைஅந்
நல்லாள் நடத்தவும் தவறாள் அன்றோ?
தன்னைக் காத்துக் கொண்ட தையல்
உன்னைக் காக்கும் உறுதி பூண்டாள்;
அன்றியும் தன்குடிக் கமைந்த பெருமைக்கும்
ஒன்றும் கேடு வராவகை உணர்ந்தவள்
இவைகளில் சோர்வு கொள்ளுவாளில்லை.

தவறென் றதனைச் சாற்ற லாமோ!
அறவழி மறந்தாய்; பிறவழி அடைந்தாய்!
இருதா ரம்கொளல் நம்குடிக் கேற்றதோ?
அயலாள் ஒருத்தி உன்னை அணுகி
மயலால் உன்றன் மனம்கெடுக்கின்றாள்.
அன்னவள் தொடர்பை அகற்றி அதன்பின்
அரசி யிடத்தில் அதனைச் சொல்ல
விரைவில் எழுந்துவா; விழுந்தவள் எழுவாள்;
அயலான் தன்னை அழிக்க அரசி
தூக்கிய வாளை தொப்பென்று போட்டாள்
ஏனெனில் நீ அவ் வேந்திழை மேலே
உயிர்வைத் திருப்பதை உணர்ந்தால் ஆதலால்!

உண்ண மறுத்தாள்; உறங்க மறுத்தாள்;
உயிரை வெறுத்த கார ணத்தால்
தன்னுயிர் விடுவதே உன்னைக் காப்பதாம்
அவளுயிர் பிரிந்தால் அரசநீிருந்துதல்
முடியும்; அல்லது நின்னுயிர் முடியும்!
ஏனெனில் நீசெய்த மானமி லாச்செயல்
மக்கள் அறியும் வழியொன் றேற்படும்.
சிக்கென உன்னைத் திருத்த முயல்வார்;
இன்றேல் உன்னை அன்றே அழிப்பார
என்று கூறினான். அமைச்சன் இயம்பிய
தரசன் நெஞ்சில் அச்சுறுத்தியதே!

"உண்ணவும் உறங்கவும் மறுத்தன ளாஎன்
எண்ணத் தினிலே இருந்திடும் அரசி?"
என்றான். "ஆம என் றிசைத்தான் அமைச்சன்.
விரைவில் எழுந்தான்; மிகவும் இரக்கம்
காட்டிக் கொண்டான்; கடிது சென்றான்,
அமைச்சன் முன்னே செல்ல,
இமைப்பினில் அரண்மனை தன்னை நோக்கியே.

----------------

பிரிவு -- 16

(ஆலைத் தொழிலாளர் அரண்மனையைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அக்கூட்டத்தைத் தாண்டிக் கொண்டு அரசி மல்லிகையிடம் செல்கிறாள்.)

ஆலைத் தொழிலாளர் அன்னார்க் குடன்வருந்தி
வேலைநிறுத் தம்செய்த வேறு தொழிலாளர்
ஆனபெருங் கூட்டம் அரண்மனையைச் சூழ்ந்திருக்க
வான உடுக்களிடை வட்டநிலாப் போல்சேந்தன்.
"மன்னர் வருவார்; வழிசெய்வார்; நீங்களெலாம்
இன்னலின்றிக் காத்திருங்கள என்று தெளிவுரைத்து
நின்றிருந்தான்! நேர்வந்த மன்னனும் தன்மக்கள்
கூட்டத்தைத் தாண்டி அரண்மனைக் கூடத்தின்
நீட்டம் கடந்து நிலாமுற்ற முங்கடந்து
தக்க மகளிரில்லம் சார்ந்த அறையொன்றில்
மிக்க துயரும் மெலிந்த உடலும்நிறை
கண்ணீரும் கம்பலையும் ஆகஒரு பஞ்சணையில்
பெண்ணிற் பெருந்தகையாள் பேரரசி தான்கிடக்கச்
சென்று நின்றான் வேந்தன் "திரும்பி எனைப்பாராய்
மன்றின் விளக்கே மல்லிகையே? என்றுதன்
அங்கையினால் அன்பின் அரசி முகம்திருப்பத்
திங்கள் முகத்தாள் செழுந்தீயைக் கக்கலுற்றாள்;

பெண்ணினத்தின் குன்றாய் பெருமைதனை நீ தோன்றி
மண்ணாக்கி விட்டாய்; மரம்கணவன் வேர்மனைவி!
வேரை மரம்வெறுத்தால் வீழ்ந்திடுமன் றோகுடும்பம்!
பண்டுமுதல் இந்தநாள் மட்டும் பழங்குறிஞ்சி
கண்டதுண்டா ஆடவ னிரண்டுபெண்டு கொண்டதனை?
என்ன நினைத்தாய்? அறநெறியை ஏன்மறந்தாய்?
மன்னவன்ஏ தும்செயலாம் என்றால் குறிஞ்சிக்கும்
சென்னைஎன்று சொல்லுமந்தத் தீயவரின் நாட்டுக்கும்
என்னதான் வேற்றுமை என்கின்றாய்? எண்ணிப்பார்.

மன்னிநான் இங்கிருக்க மற்றொருத்தி யோடுநீ
பின்னிய தோளில் பிழைசுமந்தாய். அங்கவளைக்
கட்டிய தோளில் கறை சுமந்தாய் காமத்தால்.
எட்டிய தோளினிலே ஏச்சுச் சுமந்தாய்
அயலாளை நாட்டை அழிப்பாளைத் தீய
மயலால் அணைத்தஉன் மார்பிற் பழிசுமந்தாய்.
இவ்வுலகம் தோன்றியநாள் தொட்டிந்த நாள்மட்டும்
ஒவ்வாச் செயல்செய்யா உன்றன் பழங்குடியின்
கீர்த்திக்கும் செந்தமிழ் அன்னைக்கும் நாட்டுக்கும்
வாய்த்தாய் பெருவாழ்வை வாட்டும் மதம்போலே
தோய்த்தாய் சுவைப்பாலில் நச்சுக் கொடியைத்
துறைதோறும் உள்ள தொழிலாளர் எல்லாம்
இறைவன்எங் கேஎங்கே என்றேங்கும்போது

திருவரங்கச் சேரியிலே சென்னைத் தமிழன்
இரவைக் கழிப்பதுபோல ஏனோ மறைந்துறைந்தாய்?

கட்டத் துணியளித்தார். கல்லுழுது நெல்லளித்தார்.
வெட்டிக்கா டெல்லாமே வீடாக்கித் தந்தார்!
எருக்கு முளைக்கும் இடர்ப்பாம்பின் பல்போல்
பருக்கைக்கல் வாய்த்தும் படுபள்ளம் வாய்த்தும்முள்
முட்டுநிலம் நேராக்கி முல்லை பரப்பியதோர்
பட்டு மெத்தை போன்றநிழற் பாதை யளித்தார்.
தரைமீது பட்டணங்கள் தந்தார்; கடலின்
திரைமீது பட்டணங்கள் செல்லும்படி அமைத்தார்
வானத் தெருக்களிலே மாமுகிலின் சோலையிலே
போனேன் இதோ என்னும் புள்ளூர்தி செய்தளித்தார்

அப்போதைக் கப்போதில் ஆசையுற்ற எப்பொருளும்
தப்பாது செய்தளித்தார் தங்கள்செல் வாக்கைஎல்லாம்
இந்நாட்டை நீயாள ஈந்தார் தலைமீது
பொன்முடியைச் சேர்த்துப் புகழ்ந்தார்; அவர்களைநீ
மாந்தர் எனவும்
மாந்தர் எனவும் மதிக்கவில்லை; உன்னையவர்
வேந்தர் எனவும் மதிப்பாரோ? வேல்எடுத்துக்
கொந்தும் வறுமை கொளுத்தும் பசிக்கொடுமை
இந்தநே ரத்திலுமா கூத்தியிடம்இன்பம்!
நாய்திருந்துங் குள்ள நரிதிருந்துங் காஞ்சிரங்

காய்ந்திருந்தும் எட்டிக் கனிதிருந்தும் சென்னையினை
ஆளுவதாய்ச் சொல்லி இனந்தாங்கும் அன்பிலாத்
தேளும் திருந்துமினி நீதிருந்தப் போவதில்லை!
தீங்கு செய்தாய் செய்கின்றாய் செய்வாய்! இதோ நொடியில்
ஈங்குன்னைக் கொல்ல முடியும்என்னால் என்றாலும்
கோதை நலத்துக்குக் கொன்றாள் என் றிவ்வுலகம்
ஓதும் அதனால் உலகம்அழிக் கட்டுமுனை?
என்றாள் இடையில் இருந்த பெருங்கத்தி
ஒன்றால் உயிர்பிரிந்தாள் நற்பண்பின் ஓவியத்தான்.
நெஞ்சம் திடுக்கிட்டான் நேரிலுள்ள எல்லாமும்
அஞ்சப் புரிந்தன! ஆஎன்றான் ஓ என்றான்!
தன்பிழைகள் எல்லாம் தனித்தனியே ஆளாகி
உன்னைவிட மாட்டோம் ஒழிந்துபோ என்பதுபோல்
தன்நேரில் தோற்றும், தனிமன்னன் தாள்நெருங்கி

என்னசெயல் செய்தேன் தான்! என்னசெயல் செய்தேன்நான்!
மன்னவர்க் குள்ளபெருமாண்பு குறைந்தேனே!
பண்டைப் பெருமைஎலாம் பாழாகச் செய்தேனே!
அண்டை அயலார்கள் தூற்றுவரே! அன்புடைய
என்மனைவி இந்தநிலை எய்தப் புரிந்தநான்
இன்னும் உயிரோ டிருத்தல் சரியாமோ??
என்றான் எடுத்தான் உடைவாள் உயர்த்துகையிலே,
நின்றாள் அங்கோடி வந்து நீள்வாளைத் தான்பிடித்தே
?எண்ணித் துணிந்திடுக!? என்றாள், விநோதையவள்

கண்களின் முன்னேயும் கண்டு பழகிய ஓர்
பொன்னிலே புத்தொளியை அப்போதும் கண்டேஅப்
புன்னைகையில் நெஞ்சத்தைப் போக்கி உடைவாளை
அன்னவளே கொள்ள அவள்தோளில் தோளிட்டே,
?மன்னி பொறாமை மடித்த தவளை? என்று.
சொல்லி இனித்தொல்லை ஒழிந்ததென்று துள்ளியே
மெல்லி விநோதையுடன் சென்றான் விடுவிடென்று!

?நல்லாரால் அன்றோ நடக்கின்ற திவ்வுலகம்!
எல்லாரும் ஏத்தும் அரசி இறந்தாளே?!
என்றங் கிருந்தவர்கள் எல்லாரும் கைகட்டி
ஒன்றும்பே சாமலே கண்ணீர் உகுத்திருந்தார்;
ஏங்கின நெஞ்சம்; எரிமலைபோல் மூச்சுக்கள்
வாங்கின; மார்பு வணங்கின அத்தலைகள்!
நாளை நடப்பதென்ன என்றந்த மெய்த்துன்ப
வேளை மிகவும் நடுங்கிற்று
-------------

பிரிவு -- 17

(மன்னனும் விநோதையும் போகின்றார்கள். மன்னியின் உயிர் போனதைக் காணுகின்றாள் தோழி தாமரை; அவள் கூந்தல் அவிழ்கின்றது. கண்ணிர் பெருகின்றது. அவள் வெளியிட ஓடுகின்றாள் -- இதை விரித்துரைக்கின்றது இப்பிரிவு.)

எண்சீர் விருத்தம்

?போகின்றாள் பழிகாரி! போகின் றாளே
பொன்னான என்னரசி பதைப தைத்துச்
சாகின்றாள் என்பதையும் எண்ணி டாமல்,
தாய்நாடு துடிப்பதையும் எண்ணி டாமல்,
வேகின்றார் இனமக்கள் எனஎண் ணாமல்,
வேந்தனார் உள்ளத்தைப் பிரித்தெ டுத்துச்
சாகின்றார் சாகட்டும் எனஅ தோபார்
போகின்றாள் பழிகாரி! அவள்கை கோத்துப்
போகின்றார் வேந்தனார் நன்றோ? நன்றோ?

?நாட்டாரின் உள்ளமெலாம் சீற்றம் வைத்து
நடக்கின்றாள்! அவள்கொண்ட இறுமாப் புக்கு
நீட்டாண்மைக் காரராம் இந்த வேந்தர்
நெடுந்துணையும் ஆனாரே! அறம்போ யிற்றே!
போட்டாளே இந்நாட்டின் இன்பவாழ் விற்குப்
புதுநச்சுக் குண்டுதனை! வேந்தர் தாமும்
ஆட்பட்டார்! அரசிக்கு வைத்த அன்பை
அப்படியே கூத்திக்கே ஆக்கினாரே!

?நெறியதனை இடைமறித்தாள்! அழித்தாள் நாட்டை!
நேரரசின் உளம்ஒடித்துத் தின்றாள் என்று
பொறையுளத்து மன்னியார் பொறுமை நீத்தார்;
பொன்னான தன்வாழ்வை நீத்தார் அந்தோ
திறலில்லேன் அரசனார் கையினின்று
தீயாளைப் புறம்போட்டுக் கொன்றே னில்லை!
இறக்கவில்லை இருக்கின்றேன்! இழிவு கொண்டாள்
இறப்புக்கு வழிதேடிச் சாவேனாக!?

அகவல்

கையோடு கையும் காதற் பாட்டுமாய்
ஐயனும் அவளும் ஆடிச் சென்றனர்.
கால்தள் ளாடக் கைகள் ஓயச்
சீறு கின்ற சிற்றிதழ் துடிக்கத்
தாமரை அங்குத் தமரை யெல்லாம்
அழைத்தா ளாகி, அழுதா ளாகி,
அங்குளார் அஞ்சி நடுங்குதல் அறிந்து,
வாழைநார் போலத் தரையில்
வீழுவாள் விம்முவாள் உயிர்பிரிகிலளே.

------------------

பிரிவு -- 18

(விளா மாவட்டத்திலுள்ள திண்ணனுக்கும், இளந்திரையனுக்கும் மல்லிகை இறந்த செய்தி எட்டுகிறது. அவர்கள் வருகின்றார்கள். வருகையில் இரண்டு பெண்களின் அழுகுரல் கேட்கிறது. அவர்களைத் துன்பத்தினின்று மீட்க முயன்றதில், திண்ணனும் இளந்திரையனும் கொல்லப்படுகின்றனர்,)

அறுசீர் விருத்தம்

சென்றது விளாமாவட்டத்
திண்ணனாருக்கும் மன்னி
சென்றஅச் சேதி மற்றும்
சிலவிடங் கட்கும் ஆங்ஙன்!
குன்றினை முகில்ம றைத்துக்
கொண்டாற்போல் குறிஞ்சி நாட்டை
வன்துயர் மறைந்த தங்கே!
மகிழ்ந்தது தரும இல்லம்!

?அரியஎன் தங்கையே! என்
றழுகுரல் ஒன்றும், ?என்னைப்
பிரிந்தாயே அம்மா? என்ற
பெருங்குரல் ஒன்றும் தாங்கி,
விரைந்தது நகரை நோக்கி
வெண்ணிறப் பொறி இயக்கம்!
வருகையில் மாந்தோப்பொன்றில்
வாய்த்ததோர் துன்பக் காட்சி!

இளமையும் அழகும் வாய்ந்த
இருபெண்கள் குழல்விரித்துக்
குளப்பெரு வாய்க்கால் போலக்
குளிர்விழி நீர்பெருக்கி
வெளியுல கைவெறுத்து
வெள்ளுடை புனைந்தாராகி
வளர்ந்ததீ யிற்குளிக்க
வலம்வந்து கொண்டிருந்தார்!
விழப்போன இளையாள் தன்னை
விலக்கினான் அரசன் மைந்தன்!
விழப்போன மூத்தாள் தன்னை
விலக்கினான் திண்ணன் என்பான்!
?ஒழிப்பானேன் உங்கள் ஆவி?
உற்றதை உரைப்பீர்? என்ன,
விழப்போன இரண்டு பேரும்,
?விடுங்கள்எங் களை? என்றார்கள்.

?உண்மையில் லாத இந்த
உலகினில் வாழ மாட்டோம்;
பெண்மைக்கே மதிப்பில் லாத
பித்துல கத்தை எங்கள்
கண்ணாலும் காண மாட்டோம்;
கைகளை விடுங்கள்!? என்று
திண்மையால் விலக்கு தற்குச்
செயல்திறம் காட்டினார்கள்

திண்ணனோ கெஞ்ச லானான்!
?சேயிழை யாளே! சாக
ஒண்ணுமோ? உலக மெச்சும்
ஓவியம் மறைய லாமோ?
கண்ணான தமிழ்ம றைந்தால்,
கருகாதோ தமிழர் வாழ்வே?
பண்ணான வாய்திறந்து
நடந்தது பகர்க!? என்றான்,

மூத்தவள் மொழிய லானாள்!
?முதியபாண் டியன்என் தந்தை
நீத்தான்இவ் வுலக வாழ்வை!
நீள்புகழ்க் குறிஞ்சி நாட்டைக்
காத்திடும் திரைய மன்னர்
கடிதினில் அங்கு வந்தார்
?வாய்த்தமைத்துனற்கு நானே
மணமுடித் திடுவேன்? என்றார்.

?இவள்என்றன் அண்ணன் பெண்ணாள்;
இவளைத்தம் மகனுக் கென்றே
உவப்புடன் அழைத்து வந்தார்
ஊர்வந்தோம்; ஊரார் எல்லாம்

'இவர்கள்ஏன் இங்கு வந்தார்?'
என்றனர்! எதிர்க்க லானார்!
அவனுள்ளான் ஓரமைச்சன்
எதிர்ப்புக்குத் தலைவன் அன்னான்.

'தொழிலாளர் எல்லாம் எம்மைத்
தொலைத்திட ஓடிவந்தார்.
வழிதேட நாங்கள் அந்த
மன்னர்பால் சொன்னோம்; மன்னர்
அழலானார்; அமைச்ச னுக்கே
அஞ்சினார். 'எம்மணாளர்
எழிலான முகமும் பார்க்க
இல்லையே காட்டும்' என்றோம்.

'அவர்களால் உம்மைக் காத்தல்
ஆகாது; மன்னி வீட்டின்
சுவர்க்கோழி போல ஒட்டிக்
கொள்ளுக என்று சொன்னார்.
அவர்சொன்னவாறு செய்தோம்.
வந்தனர் பகைவர் அங்கும்;
கவலையால்மன்னி யாரும்
எங்களைக் கைவிட்டார்கள்.

'எங்கேனும் கண்கா ணாத
இடத்தினில் மறைந்தி ருப்பீர்;
உங்களைச் சிறிது நாளில்
உங்களின் மணவாளர்பால்
மங்காமல் கூட்டி வைத்து,
மகிழுவேன் என்றார் மன்னர்
இங்குவந் திருந்தோம், மன்னி
இறந்தது கேள்வி யுற்றோம்.

'வீழ்வதா இந்தத் தீயில்?
அல்லதித் தீய நாட்டில்
வாழ்வதா? உம்மை நாங்கள்
வரம்ஒன்று தரக்கேட் கின்றோம்.
வாழ்வைஇன் புறுத்தும் எங்கள்
மணாளரில்லாஇந் நாட்டில்
விழச்செய் திடுக! இத்தீ
சந்தனச் சோலை'' என்றாள்.

''நான்தான்உம் மணாளன்'' என்று
நவின்றனன் திண்ணன் என்பான்!
வான்போலும் உயர்வு மிக்கான்
மன்னவன் மகனும், ''நான்தான்

தேன்போலும் மொழியாய்! உன்றன்
திகழ்மண வாளன்! இன்னும்
ஏன் அழு கின்றாய்?'' என்றான்.
இளையாள்பால் அரச மைந்தன்.
''குறிஞ்சிநாட் டுக்கு மன்னி
என்தங்கை என்ற பேச்சு
மறைந்தது; எனக்கிருந்த
மரியாதை அவள்இறக்கப்
பறந்தது; மணந்தேன் உன்னைப்
பார்க்கவு மில்லை, அன்னாள்
இறந்தது குறிஞ்சி யின்சீர்
இறப்பதற் காகும்'' என்று.

திண்ணன் தான் நடக்க, மூத்த
சேயிழை தொடர்ந்தாள்! அங்கோர்
வண்ணப்பூங் கிளைகள் தாழ்ந்த
மாவின்கீழ் உட்கார்ந்தார்கள்.
''பண்ணாத துடுக்கெல்லாம்நான்
பண்ணுவேன், திரைய மன்னன்
அண்ணாந்து பாரான்; என்னை
ஏன் என்று கேளான் அன்றோ?

''தங்கையால் தனக்கு வாய்ந்த
சலுகைகள் கொஞ்ச மல்ல;
இங்கென்னை மறந்தாள் தங்கை!''
என்றுதன் கண்துடைத்தே.
அங்கந்த மூத்தாள் தோளில்
அணிதிகழ் தன்தோள் சேர்ப்பான்.
''தங்கையின் மனத்தின் வண்ணம்
தார்வேந்தன் செய்தி ருந்தால்,

''நானன்றோ குறிஞ்சி மன்னன்
நங்கைக்கு நாணிப் பூவின்
தேனன்றோ?'' என்று கூறிச்
சேயிழை கூந்தல் நீவி.
மீனன்றோ விழிஉ னக்கே!
மின்னன்றோ இடை யுனக்கே!
கோன் என்றால் நானே! நீயோர்
கோமகள் அன்றோ!'' என்று.

கன்னப்பூக் கிள்ளிக் கிள்ளி
கைவிரற் சுவைத்தேன் உண்பான்.
''என் அத்தான்!'' என்றாள்; ஆவி
உடல்பொருள் இன்றோடெல்லாம்

உன்னைத்தான் சேரும் என்றிம்
மாம்பழம் உனக்க ளித்தேன்;
என்னைத்தான் காதலித்தாய்
என்றிதை உண்ண வேண்டும.

எனக்கூறி மாம்ப ழத்தை
ஈந்தனள்; திண்ணன் உண்டான்!
அனைத்துவேர் அற்று வீழும்
அரசென வீழ்ந்தான் மண்ணில்!
தினைத்துணை உயர்வு மின்றித்
தீர்ந்தது திண்ணன் வாழ்வு!
மனத்தினில் மகிழ்ச்சியோடு
மற்றவள் வருகை பார்த்தாள்.

"அன்னவள் மன்னன் மைந்தன்
தீர்ந்தனன்!" எனப்பதைத்தே,
"உன்னவன் செய்தி என்ன?
உரை" என்று கேட்டு வந்தாள்.
"அன்னவன் தானும் செத்தான்;
முழுவெற்றி அடைந்தோம்!" என்று
இன்னலே உருவாய் வந்த
விநோதைதான் இயம்பினாளே.

மங்கையர் பொறியி யக்க
வண்டியை இரண்டு டம்பை
அங்குள்ள குளத்திலிட்டே.
அறஞ்செய்தார் போல்ம கிழ்ந்தே.
திங்கள்வெள்ளாடை நீக்கிச்
செழியபொன்னாடை பூண்டு.
தங்கள் ஒர் வண்டி ஏறித்
தகதக என்று சென்றார்.
---------------

பிரிவு -- 19

(இலவந்தோப்பில் செழியன் முதலியோர் போகின்றனர்.)

நிலவின் ஒளியில், இலவந்தோப்பில்
அறிவ ழகனெனும் அமைச்சனும், படையின்
தலைவ னான சேந்தனும், தக்க
செழியன் என்னும் சேந்தனின் நண்பனும்
வல்லான் துணைப்படைத் தலைவனும் வந்தே,
அரசியல் நிலையை ஆய்வாரானார் ;
அமைச்சன், "அன்புறு தோழரே! அரசரின்
தமிழத் தன்மை சரிந்தது. நாடு
மொழிகலை ஒழுக்கம் நாகரிகம்
ஆகிய வற்றில் அக்கறை ஒழிந்தது,
ஒன்றுக்கு மன்னர் உயிர்வாழ் கின்றார்;
அவ்வொன்று விநோதை அடியிற் கிடத்தல்.

அரசி யாரை அணுக வில்லை;
அரசர் செய்கை பெருவியப்பன்றோ?
அரசியார் சாகக் காரணர் அரசர்!
குறிஞ்சி கண்ட தில்லைஇக் கொடுமை!
அரசியார் தற்கொலை அடைந்தார்; அரசரும்
தற்கொலைக் காகத் தாங்கிய வாளும்
தையல் விநோதையால் தடைபட்ட தென்றால்
மன்னனுக் கென்றோர் மனமே இல்லை.
அவள்மனம் அரசர் மனமாயிற்று.
மன்னியார் மாண்டதைத் திண்ண னுக்கும்
இளந்திரை யனுக்கும் சொன்னோம். இருவரும்
தொலையொலிக் கருவியால் வருவதாய்ச் சொல்லினர்
இங்குவரவில்லை, அங்கும் இல்லை!
வழியில் அவர்களை மாய்த்தவர் யாவர்?

அன்று விநோதையும் அம்புயந் தானும்
பொறி இயக்க வண்டியிற் பொருந்தி
நகர்ப்புறம் நோக்கிச் சென்ற தாய்நம்
துப்பறி கின்றவர் சொல்லக் கேட்டோம்.
வழிம டக்கி அவர்களை மாய்க்கும்
ஆற்றலோ அந்த மங்கையர்க் குண்டு?
திண்ணன் என்னுமச் சின்ன அண்ணனும்
இளந்திரை யன்எனும் ஏந்தல் மகனும்
உயிருடன் இருப்பதாய் உரைத்தார் இல்லை.
அறத்தின் தலைவி அரசி இல்லை;
திண்ணன் இல்லை; சீற்ற வேங்கையை
எற்றிய இளவர சிளந்திரையனில்லை.
நாமிருக் கின்றோம என்று நவின்றான்.

சேந்தனின் நண்பன் செழியன் சொல்வான்;
"நாமிருக் கின்றோம தோழரே! நாட்டினர்
தாமிருக் கின்றார்; தாக்குவோம் பகையை!
நெஞ்சம் என்னும் நன்செய் நிலத்தில்
நடவுக்கு மதமெனும் நாணல் சேர்த்த
விநோதையைத் தாக்குவோம்! விநோதை யாளின்
கூட்டம் கூட்டோடும் ஒழியத் தாக்குவோம்!
கருப்பையால் வராததும் விருப்பொன் றிராததும்
உருக்கொ ளாததும் ஆகிய ஒருபொருள்.
தெருத்தொறுங் குந்தி இருக்குமென் றுரைக்கும்
உருப்படாக் கோயில் உருப்படக் கண்டால்
தாக்குவோம்! தாய்க்குத் தனிப்புகழ் ஆக்குவோம்
வந்துள நோய்க்கு மருந்து கொடுப்போம்!
அந்நோய் மீண்டும் அணுகாதிருக்க
ஓர்நல் மருந்து குடியரசொன்றே!"
என்று கூறிய அளவில்
சென்றனன் பேச்சு மன்றில் சேந்தனே.

சேந்தன் மன்றில் பேசுகின்றான்

எண்சீர் விருத்தம்

'வல்லானின் உணர்ச்சி வெள்ளம் வரம்பு மீறி
வாய்க்காலை யுடைத்துக்கொண்டோடக் கண்டோம்!
செல்லுமா வல்லானின் எண்ண மெல்லாம்?
திடீரென்று பகைவர்களைத் தாக்கு தற்கே
எல்லாரும் ஒப்புவரா? படைவீரர்கள்
இன்றைநிலை அறிவாரோ? மன்னனைப் போய்க்
கொல்லுகஎன் றால்கொல்ல ஒப்புவாரோ?
கொடுமைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.

''தோழர்களே! மன்னவனும் விநோதை தானும்
தூய்மையிலா மற்றவரும் குறிஞ்சித் திட்டு
வாழாத வகைபுரிந்து வருகின் றார்கள்;
மாற்றியமைத் திடவேண்டும் ஆட்சி தன்னை;
ஏழைமுதல் எவருமுணர்ந் திடுதல் வேண்டும்;
பெரும்பாலோர் நம்கருத்தை ஏற்க வேண்டும்;
சூழ்நிலையை எண்ணாத மறவன் கையில்
துப்பாக்கிக் குண்டெல்லாம் சுண்டைக் காயே!

''எழிலான இளந்திரையன் திண்ணன் என்ற
இருவருமே வரும்வழியில் விநோதை தானும்
அழகுடையை அம்புயமும் நடித்துத் தங்கள்
அழகாலே வஞ்சித்துக் கொன்றி ருந்தால்
கழிவியப்புக் கொள்ள அதில் என்ன உண்டு?
கையாலா காதவர்க்கு வஞ்சம் ஒன்றே
வழிகாட்டும்! வஞ்சகரை வீரர் என்று
நம்அமைச்சர் சாற்றினார் சரியே அல்ல.

''நம்மனோர் மிகவிழிப்போ டிருக்கவேண்டும்;
நாம்இதிலே ஒருசெய்தி அறிய வேண்டும்.
அம்மாதர் பலவஞ்சம் புரிதல் கூடும்
அவ்வகையால் விழிப்புடன்நாம் இருக்க வேண்டும்.
இம்மண்ணில் ஆடவர்க்குப் பெண்என் றாலே
எஃகுமனம் மெழுகாகும்! அதிலும் அப்பெண்
செம்மையுற இளமைஎழில் பெற்றிருந்தால்
திருக்குறிப்புத் தொண்டர்தாம் சேயிழைக்கே!

''ஆதலினால் விநோதையிடம் அணுகு வோர்கள்
அடகுவைத்து விடவேண்டாம் தம்நெஞ் சத்தை
யாதுசெய்ய வேண்டுமினித் திட்டம் ஒன்றே
ஏற்படுத்திக் கொளவேண்டும்; திட்டம் இன்றி
மோதுவது காரிருளில் கண்ணில்லாதான்
மோதுவதாய் முடியும் நகையாடும் வையம்;
தோதாக ஆலையிலே வேலை செய்யும்
தொழிலாளர் தமைமுதலில் தொடுதல் வேண்டும்.

''பயிர்த்தொழிலா ளிகள்செய்தி பொத்தற்கூடைப்
பயறாகும்; நிலைமையிலே சிறிது யர்ந்து,
வயல்வரப்பில் குடைபிடித்து நின்று கொண்டு
வசைபாட்டுப் பாடிடுவார் தொழிற்கூட்டத்தை
வெயில்தனிலே துடிக்கின்ற குறிஞ்சித் திட்டை
விடுதலைசெய் வோம். உடைமை பொதுவாய்ச் செய்வோம்!
அயலார்கள் நம்திட்டம் தன்னிற் சேர்த்தே
அவர்களையும் இந்நாட்டுக் கொடியில் சேர்ப்போம்!

தனிமனிதன் ஆட்சியினி வேண்டாம்!'' என்று
படைத்தலைவன் சேந்தன்தான் சாற்றி நின்றான்

''இனிதென்றார். தீமையிரா தென்றார்,'' அங்கே
இருந்தவர்கள் எல்லோரும்! "விநோதை கூட்டம்
நினைவதென்ன, நிகழ்த்துபவை என்ன? என்று
நேரிற்சென் றறிவதற்குத் தோழர் சில்லோர்
தனித்தனியே திரிந்துவர வேண்டும்! என்றார்;
தமிழ்வாழ்த்தி நிறுவனத்தை வாழ்த்திச் சென்றார்.
-----------------

பிரிவு -- 20

(தரும இல்லத்தில் வேந்தனும் விநோதையும்)

அறுசீர் விருத்தம்

தருமஇல் லத்தில் ஓர் நாள்
தார்வேந்தன் விநோதை யோடு
பெருமகிழ் வோடி ருந்தான்;
வயிற்றினைப் பிசைந்த வாறே
ஒருகூட்டத் தார்பு குந்தார்;
''கூலியை உயர்த்த வேண்டும்;
விரைவாக ஆலைக்காரர்க்
கறிவிப்பு விடுப்பீர்!'' என்றார்.

''குறைபாட்டை முதலா ளிக்குக்
கூறுவேன்; அவள்எண்ணத்தை
மறையாமல் உமக்குச் சொல்வேன்.
மற்றுநான் உம்கருத்தை
நிறைவேற்ற முடிவ தில்லை.
நீங்களோ என்னைப் பற்றி
முறையற்ற வகையில் பேச
முயல்கின்றீர்! என்றான் மன்னன்.

பதைக்கின்றோம்! வயிற்றுக் கின்றிப்
பதைக்கின்றோம்! உம்மைக் காண
உதைக்கின்றார். அரண்ம னைக்குள்
ஒற்றைஆள் நுழையச் சென்றால்!
கதைக்கின் றான் ஆலைக்காரன்.
காட்டடா இரக்கம் என்றால்!
இதற்கெல்லாம் காரணம் யார்?
ஏந்தலே! நீவிரன்றோ!

ஏற்றடா கூலி! என்று
மன்னவர் இயம்பும் ஓர்சொல்
சோற்றுக்கு வழியும் செய்யும்;
சோர்வினைப் போக்கும், யாரும்
கூற்றுக்கே இரையாகார்கள்;
குழந்தைகள் அழுகை வீழும்;
வீற்றிருக் கின்றீர் அங்கே
விளைவினைச் சொல்வதெங்கே?

''எருமைபோல் குடிசைச் சேற்றில்
புரளவும் அட்டி இல்லை;
ஒருமையாய் நாங்கள் எல்லாம்
உறங்கவும் அட்டி இல்லை.
எரியினை மிதித்த வர்கள்
எதிர்நோக்கிக் குதித்த தைப்போல்
தருமஇல்லம்குதித்தோம்,
தணற்பசி எரித்ததாலே!

''உமை நாங்கள் திட்டவில்லை;
உயிர்போகும் நிலையை நாங்கள்
எமக்குள்ளே பேசிக் கொண்டோம்;
எவர்களோ அதனை மாற்றி
நமக்குள்ளே பகையை மூட்ட
நவின்றனர் போலும்! நீரும்
உமக்கொவ்வாச் செயல்செய்கின்றீர்
உரைப்பதை நம்புகின்றீர்!''

என்றிவ்வா றுரைக்கும் போதே
ஏந்திழை விநோதை, அங்கே
வன்றிறல் படைத் தலைவன்
சேந்தனை வரும்படிக்குப்
பொன்றாது தொலைவில் பேசும்
பொறிவழி யாய் அழைத்தாள்.
நன்றுற வந்தான் சேந்தன்!
நடுக்குற்றார் அரசும், மாதும்!

''சேந்தனே. தொழிலாளர்கள்
திடுக்கிடச் செய்கின்றார்கள்!
தீர்ந்ததென் பெருமை இந்தத்
தீயரால்! என்றன் ஆட்சி
தேய்ந்திடச் செய்வ தற்கும்
திடிரென்று தாக்கு தற்கும்
போந்தனர் தரும இல்லம்,
வருவதைப் புகன்றாரில்லை.

''வந்தனை நல்ல வேளை;
வராவிடில் செத்தி ருப்போம்!
இந்தத்தீ யோரை யெல்லாம்
இழுத்துப்போய்ச் சிறையில் போடு;
முந்தின நாளில் இன்னார்
முயல்போல இருந்தார் இன்று
கொந்திடும் புலியாகின்றார்!
காரணம் புரிய வில்லை!

''இழுத்துப்போ என்றன் ஆணை!''
என்றனன் திரைய மன்னன்
கழுத்தினில் கைகொடுத்துக்
''கடிதினில் போவீர்!'' என்று
முழுப்படைத் தலைவன் கூற
முற்சென்றார் தொழிலாளர்கள்;
தழைத்தது நாட்டில் எங்கும்
தனிச்சிறை நிறைந்த செய்தி!

அங்கவர் சென்ற பின்னர்,
விநோதையை அரசன் கேட்பான்.
''இங்குளார் எனக்கடங்கார்;
எவருக்கும் நானடக்கம்!
எங்கணும் நடவாச் செய்தி
இங்குகாண் கின்றேன் என்னில்
நங்கையே உன்கண் நேரில்
நடந்ததற் கென்ன சொல்வாய்?

''சேந்தனை அழைக்கச் சொன்னீர்,
தெரியாமல் அழைத்தேன்! வந்தான்;
நேர்ந்ததை உரைத்தீர், அன்னோன்
நெட்டித்தள்ளிச்சென்றான்,அம்
மாந்தரும் அடங்கிச் சென்றார்.
மற்றிதைத் தொடர்ந்தே தேனும்
வாய்த்திட்டால் தொல்லை ஒன்றும்
வராவகை செய்தல் வேண்டும்.

"திருக்கோயிற் பணிமுற்றிற்றுத்
தெருவெலாம் முரச றைந்தே
வரச்சொல்லி ஆணை இட்டேன்;
வருவார்கள் கோயி லுக்கே.
அரசரங் கெழுந்த ருள்க!
அமைச்சரும் வருதல் வேண்டும்.
பெரும்படைத் தலைவன் சேந்தன்
பிறருமங் கிருத்தல் வேண்டும்."

என்றனள் விநோதை! மன்னன்
"எனக்கெனச் செயல்ஒன் றில்லை.
உன்எண்ணம் என்றன் எண்ணம்.
உயிர்நீதான் நான் உடம்பே,
இன்றல்ல நாளை அல்ல
என்றைக்கும் குறையா இன்பத்
தென்றலே, வாடி! உன்றன்
திருமேனி பூசென் மேலே!"

எனஇவர் இங்கி ருக்க,
யானைமேல் முரச றைந்தே,
"அனைத்துயிர் ஆக்கிக் காத்தே
அழித்திடும் பெருந்தெய் வந்தான்,
தனித்திட்ட நம்மனோர்பால்
தளிர்த்திட்ட அருளி னாலே.
தினைக்கொல்லை தனிலமைத்த
திருக்கோயில் வந்த துண்டு!

"திருப்பெயர் ஒன்றும் இல்லான்,
சிவன்என்னும் பேர்பு னைந்தான்!
இருப்பிடம் ஒன்றும் இல்லான்!
இக்கோயில் இடமாக் கொண்டான்.
விருப்பென்ப தொன்று மில்லான்
நமைக்காக்கும் விருப்பம் கொண்டான்,
உருப்பாடொன்றில்லான்; நாட்டார்
உருப்பட உருவங் கொண்டான்.

"திருக்கோயில் வருக யாரும்!
திறப்புநல் விழாஇன் றேதான்.
இருக்குமங் காடல் பாடல்;
இன்பநல் ஓவி யங்கள்!
விரித்திடும் மலர்மணத்தை
விரைந்திடும் நறும்பூசைதான்;
அருந்தமிழ்ப் புலவர் ஆங்கே
சொற்பெருக்காற்று வாரே!

"ஆடவர் வருக, மாதர்
அனைவரும் வருக! வந்து
தேடரும் அருளை அங்கே
சிவன்தரப் பெறுவீ ராக!
பாடெவர் படுவார் அப்பன்
பழவடி சேரா விட்டால்!
ஈடெவர் அவன் அன்பர்க்கே.
எல்லாரும் வருக!" என்றான்.

தெருவெல்லாம் முழக்கம் கேட்டோர்
சிரித்தனர் பலபேர்! சில்லோர்,
"இருக்குமோ இருக்கும் காணா
திருக்குமோர் கடவுள்! நம்மேல்
இருக்குமோர் அருளால், நம்பால்
இருக்குநோய் தீர்க்கக் கட்டி
மாந்தரும் அடங்கிச் சென்றார்.
மற்றிதைத் தொடர்ந்தே தேனும்
வாய்த்திட்டால் தொல்லை ஒன்றும்
வராவகை செய்தல் வேண்டும்.

"திருக்கோயிற் பணிமுற்றிற்றுத்
தெருவெலாம் முரசறைந்தே
வரச்சொல்லி ஆணை இட்டேன்;
வருவார்கள் கோயிலுக்கே.
அரசரங் கெழுந்த ருள்க!
அமைச்சரும் வருதல் வேண்டும்.
பெரும்படைத் தலைவன் சேந்தன்
பிறருமங் கிருத்தல் வேண்டும்."

என்றனள் விநோதை! மன்னன்
"எனக்கெனச் செயல்ஒன் றில்லை.
உன்எண்ணம் என்றன் எண்ணம்.
உயிர்நீதான் நான் உடம்பே,
இன்றல்ல நாளை அல்ல
என்றைக்கும் குறையா இன்பத்
தென்றலே, வாடி! உன்றன்
திருமேனி பூசென் மேலே!"

எனஇவர் இங்கி ருக்க,
யானைமேல் முரசறைந்தே,
"அனைத்துயிர் ஆக்கிக் காத்தே
அழித்திடும் பெருந்தெய் வந்தான்,
தனித்திட்ட நம்மனோர்பால்
தளிர்த்திட்ட அருளி னாலே.
தினைக்கொல்லை தனிலமைத்த
திருக்கோயில் வந்த துண்டு!

"திருப்பெயர் ஒன்றும் இல்லான்,
சிவன்என்னும் பேர்பு னைந்தான்!
இருப்பிடம் ஒன்றும் இல்லான்!
இக்கோயில் இடமாக் கொண்டான்.
விருப்பென்ப தொன்று மில்லான்
நமைக்காக்கும் விருப்பம் கொண்டான்,
உருப்பாடொன் றில்லான்; நாட்டார்
உருப்பட உருவங் கொண்டான்.

"திருக்கோயில் வருக யாரும்!
திறப்புநல் விழாஇன் றேதான்.
இருக்குமங்கு ஆடல் பாடல்;
இன்பநல் ஓவி யங்கள்!
விரித்திடும் மலர்மணத்தை
விரைந்திடும் நறும்பூசைதான்;
அருந்தமிழ்ப் புலவர் ஆங்கே
சொற்பெருக்காற்று வாரே!

"ஆடவர் வருக, மாதர்
அனைவரும் வருக! வந்து
தேடரும் அருளை அங்கே
சிவன்தரப் பெறுவீராக!
பாடெவர் படுவார் அப்பன்
பழவடி சேரா விட்டால்!
ஈடெவர் அவன் அன்பர்க்கே.
எல்லாரும் வருக!" என்றான்.

தெருவெல்லாம் முழக்கம் கேட்டேர்
சிரித்தனர் பலபேர்! சில்லோர்,
"இருக்குமோ இருக்கும் காணா
திருக்குமோர் கடவுள்! நம்மேல்
இருக்குமோர் அருளால், நம்பால்
இருக்குநோய் தீர்க்கக் கட்டி
இருக்குமோர் கோயில் வந்தே
இருந்தாலும் இருக்கும்!" என்றார்.

அரண்மனை வாயில் தன்னில்
அழுது கொண்டிருந்த தோழி
முரசொலி கேட்டாள்; வாயின்
முழக்கமும் கேட்டாள்; "நாட்டில்
அரசென ஒன்றி ருந்தால்
அறத்தினைக் கொல்லுவாரோ?
உருவிலாப் பொருளு மிங்கே
உருவுடன் வருவதுண்டோ?

"பேரிலாப் பொருளு மிங்கே
பேருடன் வந்த தென்ன?
ஊரிலாப் பொருள்தான் இங்கே
உற்றதும் வியப்பே அன்றோ?
வேரிலே விருப்பம் மற்ற
வெறுப்புமில் மரத்தில் அந்த
ஈரிலை தளிர்ப்ப துண்டோ?
இலாமையில் உண்மை உண்டோ?

''குறிஞ்சித்திட்டினாலே குந்திக்
குறைதீர்க்க எண்ணுமானால்,
குறுகாத 'செம்மை' தன்சீர்
குன்றிடும் அன்றோ? முன்னாள்
அறம்சொன்ன வள்ளுவர்தாம்
கோயிலை அறிவித் தாரா?
வெறுஞ் சொல்லால் வலைவிரித்து
மக்களை விழுங்கப் பார்ப்பார்.

''அறிவொன்றே தெய்வம் என்றே,
அறிந்திடும் குறிஞ்சித் திட்டில்,
அறியாமை ஒன்றே தெய்வம்
ஆக்குவார் செயல்ஈ தாகும்!
அறமொன்றே ஆற்றல் என்றே
அறிந்திடும் குறிஞ்சித் திட்டில்,
அறமன்றே ஆற்றில் என்பார்
அடாச் செயல் இஃதே யாகும்!

"மன்னியின் உயிர்கு டித்த
மானமில் லாத சில்லோர்
இன்னும்இந் நாட்டை மாய்க்க
எண்ணிய எண்ணம் தன்னில்
முன்முனை கோயி லாக
முளைத்தது! மூடச் செய்கை
தன்னம்பிக் கைஇலாமை,
கலகங்கள் மேல்தழைக்கும்!

''மதம்என்ற கருங்கற் பாங்கில்
மல்லிகை பூப்ப தில்லை!
மதியினில் மயக்கம் என்ற
நஞ்சொன்றே மலரும்! நாட்டில்
புதியதோர் பொல்லாங் கென்னும்
எரிமலை புகையும்! மக்கள்
இதுநலம் இதுதீ தென்னும்
எண்ணமும் இழந்து போவார்!

''என்செய்வேன்? நாட்டைக் காக்க
எவருளார்? தமிழ்ச்சான் றோரும்
மன்னவன் கொடுமைக் கஞ்சி
வடத்கிருந் துயிர்நீத்தாரோ?
புன்செயல் தீர்ந்த தில்லை,
புலவர்கள் விழிக்க வில்லை,
நன்செயில் நடவு மில்லை,
நாய்வாலும் நிமிர்வ தில்லை!

"என்கடன் என்ன? நெஞ்சே!
பணிசெய்து கிடப்ப தொன்றே
தனிக்கடன்; இந்த நாட்டைத்
தலைகீழாக் கித்தன் வாய்ப்பை
நன்கடைந் திடநி னைக்கும்
நடைகெட்ட நாய்விநோதை
தன்கொடுஞ் செயலறுக்கத்
தமிழரே எழுவீர்!" என்றாள்.
------------------

பிரிவு -- 21

மக்களின் எழுச்சியைக் கூறுவது.

தோழிதா மரை இவ்வாறு
சொன்னதைக் கேட்டி ருந்தோர்,
''வாநீ அம்மா! நாட்டின்
வடுப்போக்க வேண்டும், தாயே!
கோழியே குஞ்சு கட்குக் 5
கொடுமையும் விளைப்ப துண்டோ?
ஏழைமக்கட்கு மன்னன்
இன்னலைச் சூழ்ந்தா னம்மா?

''பன்னூறா யிரவர் மக்கட்
படையுண்டு, நீட்டும் கையில் 10
நன்னீரும் சோறும் நல்க
நான்குபேர் இராரோ? யாமும்
உன்னோடு தொண்டு செய்ய
வருகின்றோம் உயர்கு றிஞ்சி
நன்னாடு வாழ்தல் இங்கு 15
நாம்வாழ்தல் அன்றோ?'' என்றார்.

''எழுந்தது பெண்பட் டாளம்!
வாழிய குறிஞ்சி!'' என்றே
எழுந்தது சொல்மு ழக்கம்!
எழுந்தது மீட்சி ஆர்வம்! 20
கொழுந்துவிட் டெறிந்தது அங்கே
கொடியவர் மீது சீற்றம்
வழிந்தது பொங்கி அன்பே
வண்டமிழ் வாழ்க என்றே!
-----------

பிரிவு -- 22

(தினைப்புனத்தைக் கோயிலாக மாற்றினார்கள்.)

(எண்சீர் விருத்தம்)

திைபை்புனத்தின் நிலைஒழித்து நான்குசுவர் எடுத்துத்
திகழுமதில் நாற்புறத்தும் பெருவாயில் தூக்கித்
தனித்தனியே கல்தச்சு மரத்தச்சோ வியங்கள்
தமிழ்ப்பாடல் ஆடல்எனும் சாகாத கலைகள்
எனைத்துண்டோ அனைத்தையுமே இணைத்தபெருங் கோயில்
எழிற்கொடிக்கை நீட்டித்தன் கலைத்தடங்கண் காட்டி,
இனித்தஇசை வாய்திறந்தே ''எல்லாரும் வாரீர்''
எனஅழைக்க, ஊர்மக்கள் எல்லோரும் சென்றார்.
-------------

பிரிவு -- 23

(கோயிலின் கலை நிகழ்ச்சிகளும், குழப்பங்களும் சொற்போரும் நடைபெறுகின்றன.)

(எண்சீர் விருத்தம்)

மன்னவனும் தானிருந்தான், விநோதையவளோடு;
மங்கையவள் அம்புசமும் ஆடுகின்றாள் அங்கே!
பின்னிருந்து சம்பந்தன் பாடுகின்றான் பாட்டு;
பெரும்பாட்டுத் தமிழினிலே வடமொழியின் குளறல்;
அன்னதற்குப் பின்னிசையும் தாழ்ந்தவட பாங்கே!
அச்சஇடை நச்சுவிழி அங்குமிங்கும் ஓடப்
பின்னலொன்று பின்னசையக் காற்சிலம்பு கொஞ்சம்
பிழையின்றித் தமிழாடல் பெற்றனர் வந்தோரே!

தமிழாடல் நன்றென்று தாம்மகிழ்ந்தார் மக்கள்;
தவறான பிறவெல்லாம் சீஎன்றி கழ்ந்தார்!
'நமப்பார்வ தீபதையே!' என்றுசிவா நந்தர்!
நடுவினில்வந் துட்கார்ந்தார்; நகைத்தார்எல் லோரும்
சுமந்துவந்த சொற்பொழிவை இறக்கிவைப்பா ராகிச்
சொல்லலுற்றார். 'நமப்பார்வ தீபதையே' என்றே!
எமக்கேதும் புரியவில்லை என்றதொருகுரல்தான்;
'இதுதமிழே இதுதமிழே' என்றான்அன்னோனே!

'தமிழறியார் தமிழ்ச்செயலில் தலையிடுதல் சரியா?
தாம்திருந்தார் பிறர்திருந்தச் சாற்றவரல் தகுமா?
தமிழர்களின் நாகரிகம் தக்கதுவா? அன்றி
ஆரியரின் நாகரிகம் தக்கதுவா? என்றே
அமிழ்தத்தை மொழியாக்கி அம்மொழியில் எதிர்ப்பாம்
அணுகுண்டின் வலிசேர்த்தே தாமரையாள் கேட்டாள்
''தமிழ்தெரியும் எங்களுக்குத் தமிழர்களே நாங்கள்!
தமிழர்களின் நாகரிகம் மட்டம்'' என்றாள் விநோதை.

''ஒருத்தியை ஐவர்மணப்பது உங்கள்நாகரிகம்!
பிச்சைபுகல் உயர்வென்னல் உங்கள்நாகரிகம்!
வருபசிக்கு மானம்விடல் உங்கள்நாகரிகம்!
உயிர்கொன்று வேள்விசெயல் உங்கள்நாகரிகம்!
உருவணக்கம் செய்குவதும் உங்கள்நாகரிகம்!
மங்கயரை இழிவுசெயல் உங்கள்நா கரிகம்!
பெருமக்கள் ஒருதாயின் மக்களெனச் சொன்னால்,
பெருந்தொகைவேற் றுமைநாட்டல் உங்கள்நாகரிகம்!

"பழியாயி ரம்செய்தும் கழுவாய்தேடிடவே
பார்ப்பானை ஒப்புவதும் உங்கள்நாகரிகம்!
எழுத்தினிலே தலையெழுத்தொன் றுள்ளதாம் என்றே
ஏய்ப்பானை ஏற்பதுவும் உங்கள்நாகரிகம்!
பிழிந்தெடுத்த பொய்நூல்கள் மெய்நூல்கள் என்று
பிறநாட்டார் நம்பவைத்தல் உங்கள்நாகரிகம்!
அழியாத தமிழ்நாட்டில் தமிழாலே வாழ்ந்தும்
அழியட்டும், 'தமிழ்' என்ப துங்கள்நாகரிகம்!

"காதல்மனம் தீதென்ப துங்கள்நாகரிகம்!
காட்டுவிலங் கைப்புணர்தல் உங்கள்நாகரிகம்!
மோதிடவே இப்பிறப்பில் முற்பிறப்பு மற்றும்
மறுபிறப்புக் கரடிவிடல் உங்கள்நாகரிகம்
ஓதவரும் நீதியெலாம் பொதுவென்ப தன்றி
ஒருகுலத்துக் கொருநீதி உங்கள்நா கரிகம்!
மாதருக்குக் கற்பின்மை உம்நாகரிகமே!
வாய்த்தமிழ் நாகரிகம் மட்டமல்ல!'' என்றாள்,

என்றுரைத்த அந்தநல்ல தாமரையாள் தன்னை
''எது உங்கள் நாகரிகம்?'' என்றாள்விநோதை.
''என்னவறு மைவரினும் இன்னல்பல வரினும்.
ஏற்றல்இழி வென்பதுவே எங்கள்நாகரிகம்!
இன்னாத செய்துபசித் தீயடக்கல் தனினும்
இறத்தல்புகழ் என்பதுவே எங்கள்நாகரிகம்!
கன்னியர்தம் உயிரினிலும் கற்புயர்ந்த தென்று
கருதியே வாழ்வதுதான் எங்கள்நாகரிகம்!

''ஒருத்திஒருத் தனைமணத்தல் எங்கள்நாகரிகம்!
ஒருத்தன்ஒருத் தியைமணத்தல் எங்கள்நாகரிகம்!
ஒருத்தன்ஒருத் திக்குநிகர் எங்கள்நாகரிகம்!
உலகமக்கள் நிகர்என்ப தெங்கள்நாகரிகம்!
கருதிச்செய் தீமைக்குக் கழுவாய்ஒன் றில்லை;
காவலனின் பொறுப்பதெனல் எங்கள்நாகரிகம்
பெருத்தஉடல் வீழ்ந்தபின் பெரியநிலை தேடல்
பெருந்தவறே என்பதுதான் எம்நாகரிகமே!

''ஆதியினின் றுலகம்உயிர் அத்தனையும் தோன்ற
அடைவதறி வேஎன்ப தெங்கள்நாகரிகம்!
சாதிஇல்லை என்பதுதான் எங்கள்நாகரிகம்!
சமயமில்லை என்பதுதான் எங்கள்நாகரிகம்!
நீதியும் ஒழுக்கமுமே யார்க்கும் நிகர் என்போம்!
நிறைகல்வி நிறைசெல்வம் யார்க்கும்நிகர் என்போம்.
சாதிக்கொன் றுரையாமை எங்கள்நாகரிகம்!
தனிப்புகழே நிலைஎன்ப தெங்கள்நாகரிகம்!

''தமிழரது நாகரிகம் மட்டமென்று சொன்னாய்,
தார்வேந்தர் ஆதரவு பெற்றிருப்ப தாலே!
கமழ்தென்றல் தீதென்றாய்! கடல்சிறிய தென்றாய்.
காவின்மலர்த் தேன்கசக்கும் கரும்பெட்டி என்றாய்!
தமிழரது நாட்டினிலே தமிழ்க்கள் நடுவில்
தமிழ்நாக ரிகம்மட்டம் என்றுரைத்தாய் என்றால்,
தமிழர்களின் நிலைமைதனை நன்கறிந்தா யில்லை;
தப்புக்கணக் கிட்டாய் விரைவில்அறிந்திடுவாய்!

''உன்துடுக்கும் உன்துடுக்கின் உள்வலியும் காண்பார்;
உயிர்அற்றுப் போகவில்லை இங்குள்ள தமிழர்!
மின்துடிப்ப தைப்போல மனம்துடிக்கின் றார்கள்.
வீணாகிப் போகாது தமிழர்களின் சீற்றம்!
பின்துடிப்பாய் இந்நாட்டுப்பெருமக்கள் அடக்கம்
வரும்போரின் தொடக்கமே. இதைமறந்தாய் பேதாய்!
என்துடிப்பு மட்டுமே இதைக்கூறவில்லை.
இனத்தாரின் துடிப்பும் என்பேச்சும் ஒன்றே!'

தாமரைஇவ் வாறுரைக்கத் தார்வேந்தன் சொல்வான்
''தாமரையும் விநோதையும் தணிந்திடுக மாற்றம்.
நாமிங்கு வந்தோம்! விழாப்பார்க்க அன்றோ?
நடத்திடுவீர் சொற்பொழிவை நல்லதமிழாலே.
தீமைசெய வேண்டாமே சிவானந்தரேநீர்
செந்தமிழில் பேசிட்டால் இன்னதென்று தெரியும்.
ஆமாங்கா ணும்துவக்கும என்றரசன் கூற,
ஆஆஎன் றாநந்தர் அழத்தொடங்கினாரே.

"நமப்பார்வ தீபதையே" எனப்பின்னும் நவின்றார்.
நகைத்தார்கள் எல்லோரும் நிறுத்தென்றான் மன்னன்.
"தமிழ்வருமோ" திருமாலுக் கடியாரே' நீவிர்
சாற்றிடுக நல்லுரைகள்!" என்றுரைக்கக் கேட்டு
"நமக்குவரும் கோவிந்த நாமசங்கீர்த் தனமே!"
இவ்வாறு நாய்குலைக்க; நிறுத்தென்றான் மன்னன்;
"தமிழ்வருமே நமக கென்றான் தம்பிரான்! மன்னன்
"சரிபேசும என்றுரைக்கத் தம்பிரான் சொல்வான்.

"எங்கும்நிறைந் திருக்கின்ற ஒரு பொருள்தான் இங்கே
எழுந்தருளி இருந்ததுவாம் சிவமெனும்பேர் தாங்கி'
தங்கியஇக் கோயிலுக்கு நாடோறும் வந்து,
சிவனாரின் தாள்தொழுதால் வேண்டுவது தருவார்.
உங்களுக்கெ லாம்அவரே உடையவராம்; நீங்கள்
உயிர்வாழ்வ தவ்வடியார்க் குதவிசெயும் பொருட்டே.
எங்கேனும் என்போன்ற அடியாரைக் கண்டால்,
இட்டுவந்து கும்பிட்டுச் சோறிடுதல் வேண்டும்.

"நாடோறும் சிவபெருமான் கோயிலுக்கு வருக!
நாடோறும் சிவனார்க்குப் பூசைகள் நடக்கும்.
நாடோறும் பூசையின் நடைமுறையின் செலவை
நாடோறும் அவரவர்கள் கொண்டுவரும் காசால்
நாடோறும் நிறைவேற்றி நன்மைபெற வேண்டும்.
நாடோறும் உழைத்திடுக! நல்லபணம் பெறுவீர்.
நாடோறும் இரண்டுபணம் நம்பெருமானுக்கே
நல்குவதால் நானூறு பணம்தருவார் உமக்கே."

தானிவ்வா றுரைத்திட்டான் தம்பிரான் ஆங்கே;
தாமரையாள் உடனிருந்த தலைக்கொழுத்தான் ஒருவன்.
"ஏனையா நானூறு பணத்தைமுன் தந்தால்,
எடுத்தெடுத்து நான்குபணம் தந்திடுவோம் நாளும்
ஆனதினால் இப்போதே அருளச்சொல் லுங்கள்.
அதிலுமக்கும் தரகுதர அட்டியில்லை" என்றான்.
கோனான திரையனுக்குத் தோன்றவில்லை எதுவும்;
"கொடுப்பாரோ சிவபெருமான்?" என்று கேட்டானே;

"நாலுபணம் நாம்கொடுத்தால் கண்ணுக்குத் தெரியும்
நானூறு சிவனருளால் நாள்செல்லத் தெரியும்,
நாலுபணம் பணவுருவில் நாம்கொடுத்தால், அவரோ
நானூற்றை வேற்றுருவில் நமக்கருள்வார என்றான்.
"நாலுபணத் தைச்சிவனார் என்னசெய்வார்?" என்று
நவின்றதொரு குரலங்கே. "நமச்சிவனார் தொண்டர்
பாலுக்கோ பழத்திற்கோ பசுநெய்க்கோ மற்றும்
பருப்புக்கோ செருப்புக்கோ செலவாகும்'' என்றான்.

''மற்றவைகள் நடக்கட்டும்; இனியாரும் இங்கே
வாய்திறந்தால் படைத்தலைவன் சிறைபடுத்த'' என்று
கொற்றவனும் சொல்லிவிட்டான், விநோதை சொற்படியே,
கோயிலிலே சிவபூசை தம்பிரான் தொடங்க,
உற்றநாய்ச் சோற்றுக்கோர் ஊர்நாய்வந்ததுபோல்
''ஓய்உள்ளே போகாதீர் பிராம்மணன்நான்'' என்றே
முற்சென்றான் கோயிலுக்குள் சிவாநந்தன் என்பார்
முடுகினார் சிவனார்மேல் முட்டிவிழுந்தாரே.

சிவபெருமான் எனுமந்தச் சிறுகல்லும் பெயர்ந்து
திடீரென்று விழுந்ததனால் இடிவிழுந்ததைப்போல்
கவலையுற்றாள் விநோதையவள் கவிழ்ந்தடித்து வீழ்ந்து
கடகடெனப் புரண்டபடி சிரித்தானங் கொருவன்.
அவன்சொன்னான் சிவனென்ற குழவிக்கல் காணீர்;
அடிபுதையாக் காரணத்தால் முடிசாய்ந்து போனார்!
அவரடியை அடைந்தார்க்கே ஆவதென்ன? இங்கே
அவரடியார் அடிதாழ்ந்தால் ஆவதென்'' னென்றானே:

''இடையிற்பே சிடுவோரைச் சிறையிலிட வேண்டும்
என்றேனே சேந்தனே ஏன்விட்டாய்?'' என்றே,
மிடலுடைய வேந்தனும் கூறியது கேட்ட,
மேன்மையுறு சேந்தனவன் விரைவினிலே அங்குச்
சிடுசிடுத்துக் குறிக்கிட்ட சிவாநந்தர் தனையும்
திறப்பேச்சும் பேசியஓர் தீயனையும் கட்டி
நடத்தினான் சிறைநோக்கி விநோதை இதைக் கண்டு.
''நம்நண்பர் சிவாநந்தர் விடுக'' என்றாளே!

ஒருவனல்ல இருவரையும் விடுவித்தான் மன்னன்.
"ஒருவருமே இனிக்குறுக்கே பேசற்க'' என்றான்.
தரைவீழ்ந்த சிவபெருமான் தம்மிடமும் பெற்றார்.
தம்பிரான் பூசைசெய ஒப்புதலும் பெற்றான்.
திருஅகவல் தம்பிரான் செப்பிநலம் பெற்றான்.
''செத்தானாம் அங்கொருவன பாம்புகடித்ததனால்;
அருளாயோ சிவனேஎன் அப்பா!'' என்றொருவன்
அவனைஎழுப்பித்தரவே அழுதுதுடித்தானே!

தப்பிரான் அவ்வுடம்பைத் தனிஒருபால் வைத்தே
சாக்காட்டை நீக்கிஉயிர் தரவேண்டி நின்றான்.
தெம்பின்றி ஒருவனங்கே தேம்பிஅழ லானான்
''சிவனேஎன் வயிற்றுவலி தீர்!'' எனவேண் டிடுவான்.
தம்பிரான் அவனுக்கும் சாம்பர்அணி வித்தான்
சரியாயிற் றென்றவனும் மகிழ்வோடே சென்றான்.
நம்பினார் பற்பலரும் செத்தவன் எழுந்தான்
'நட' என்றான் தம்பிரான் நடந்தான்செத்தவனே!

''கண்தெரிய வில்லை'' என்று கண்ணப்பன் வந்தான்?
கையாலே தம்பிரான் திருநீறு தந்தான்.
''கண்தெரிந்து போனதெ''ன்று கண்ணப்பன் போனான்
''காதுசெவிடானதெ''ன்று கன்னியப்பன் வந்தான்.
வெண்ணீ் றுதந்தவுடன் தீர்ந்ததென்று போனான்;
விலாஎலும்பு மறைந்ததுபின் மீண்டதொருத் திக்கே!
--------------

பிரிவு -- 24

(தெய்வ நம்பிக்கை யூட்டுதல்)

(எண்சீர் விருத்தம்)

அங்கிருந்த அம்புசத்தின் முடியின் மீதில்
அடிவைத்தான் சிவபெருமான் ஆத லாலே!
தங்காமல் ஒருபக்கம் அங்கு மிங்கும்
தடதடென ஓடுகின்றாள் ஒருபால் நின்றே
''எங்கேடா முத்தலைக்கோல்'' என்றே ஆடி.
முன்னோடி அன்னதனை எடுத்துக் கண்ணை
எங்குமுள மக்கள்மேல் உருட்டி. ''என்னை
என்னடா கேட்கின்றாய்?'' என்று கேட்டாள்.

"இதுஎன்ன?" எனக்கேட்டான் குறிஞ்சி மன்னன்.
"இவரன்றோ சிவபெருமான்?" என்றாள் மங்கை.
"மதிமுகத்தாள் அம்புசமன்றோஇந்தப்பெண்?
மற்றிவளைச் சிவனென்ப தென்ன:" என்றான்.
"பொதுச்சிவனும் அம்புசத்தின் உடலுயிர்க்குள்
புகுந்ததானால் அம்புசமே திப்போ" தென்றாள்.
"குதித்தாளே! அது என்ன?" என்றான் மன்னன்?
"கூத்தாடல் சிவபெருமான் வழக்கம என்றாள்.

வேந்தனும்வி நோதையுமே பேசு மட்டும்
வேலையற்று நின்றிருந்த சிவனார், பின்னர்:
,'சார்ந்ததுண்டோ உன்றனுக்குக் கவலை?" என்றார்.
"தார்வேந்தன் நிலையுரைப்பீர்'? என்றாள் மங்கை.
"ஏந்தலுக்கே எக்குறையும் இருக்கா" தென்றார்.
"என்சாவி காணவில்லை எங்கே?" என்வாள்.
"ஆய்ந்துபார் கைப்பேழை தன்னில என்றார்.
அதில்கண்டாள் சாவிதனை அவ்விநோதை!

"என்அன்பர் இழந்தபொருள் என்ன?" என்றாள்.
"எழிலான மல்லிகைதான்! வாள்தான்!" என்றார்.
மன்னவனும் "வாளெங்கே?" என்று கேட்டான்.
"மலர்வனத்துக் கிணற்றினிலே ஒருவன் போட்டுப்
பின்னதனை அவனுடைய எண்ணங் கொண்டான்;
பெருங்கிணற்றில் இப்போதே பெறுவீர என்றார்.
அன்னதனை இப்போதே ஆட்கள் தேடி
அரசனிடம் கொடுத்தார்கள் மகிழுமாறே.

"என்பிள்ளை காணவில்லை" என்றான் ஓர்ஆள்;
"இப்போதே வரும என்ன. அவனும் வந்தான்;
"பொன்னாக வேண்டுமிந்த மண்ணாங் கட்டி
புரிந்திடுக அரு"ளென்றான் ஓர்ஆள் தந்தே!
தன்மார்பில் அதைவைத்துச் சிவனார்; "இந்தா
தங்கத்தின் கட்டி" எனறார்! எவரும் கண்டார்.
"இன்னுமிந்த முடியினிலே இருக்க மாட்டேன்.
இறுதியாய் நானுரைத்தல் கேட்பீர என்றார்;

சிவபெருமான் சொல்லுகின்றார், "குறிஞ்சி நாட்டைச்
சேர்ந்தவரே! என்மக்காள்! சிவனார் நாமே,
சிவனாரைத் தொழுபவர்கள் சைவர் ஆவார்.
நீங்களெலாம் சைவர்களாய்த் திகழ வேண்டும்
சிவமதமே எம்மதங்க ளுக்கும் மேலாம்.
சிவமதமொன் றேஇருக்க வேண்டுமிங்கே.
அவன்சொன்னான் இவன்சொன்னான் என்று வேறே
எம்மதமும் சேர்க்காதீர் அதுவு மின்றி

"நாடோறும் கோயிலுக்கு வருதல் வேண்டும்;
நல்லநல்ல காணிக்கை கொணர்தல் வேண்டும்;
தேடியஉம் சொத்தெல்லாம் நம்சொத்தேயாம்.
தேர்என்றும் திருவிழா என்றும் நீங்கள்
வாடாத மனத்தோடு நடத்த வேண்டும்
கோயிலினால் வாழ்வோர்கள் இருக்கின்றார்கள்.
ஈடேற வேண்டுமென்றன் அடியாரெல்லாம்
இகழாதீர் எரிச்சல்வரும் நமக்கே இன்னும்.

"தெருவெல்லாம் சிவன்கோயில் கட்ட வேண்டும்!
"தெருவெல்லாம் சிவனடியார் பெருக வேண்டும்
உருவெல்லாம் சிவனாரை நிறுவ வேண்டும்.
ஊரெல்லாம் நம்முருவே நிறைந்த பின்னர்,
இருபிள்ளை எமக்குண்டு வைத்துக் கொள்க,
எழில்மனைவி இருக்கின்றாள் வைத்துக் கொள்க.
உருவெல்லாம் கல்லுருவே என்பதில்லை.
ஓவியமும் எழுதலாம் நம்மைப் போல!

நாளெல்லாம் நம்பெயரை நவில வேண்டும்;
நவிலுகநம் திருவிளையாடல்கள் வேறே.
கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோ னாட்சி
குண்டாட்சி, புகையாட்சி, குறுக்கிலேபூ
ணூலாட்சி, என்றபல ஆட்சி பற்றி
நுவலுநூல் வெளிவருதல் கூடா திங்கே
வாலாட்டும் பகுத்தறிவை வளர்க்குமந்த
வதைப்பேச்சும் வெளிவருதல் வேண்டாம், வேண்டாம்.

"எங்கணுமே நமதுகுறி இலக வேண்டும்.
எழிலான பசுமாட்டின் கழிவை ஏந்தித்
திங்களைப்போல் வெண்மையதாய்ச் சுட்டெடுத்துத்
திருநீறென் றதற்குமொரு பேரு மிட்டே
அங்கையிலே நீரிட்டுக் குழைத்துக் கொண்டே,
முறத்திற்குக் கட்டிட்ட வண்ணம் ஆக,
செங்கைவிரல் மூன்றாலே நெற்றி தன்னில்
'சிவசிவ' என் றமைத்தல்குறி ஆகும் காணீர்.

'அச்சாம்பல் அள்ளியே உடம்பு நெற்றி
அழகுபெறப் பூசுவதும் நமக்கு வப்பே!
மெய்ச்சாம்பல் குழைத்திட்டுப் பட்டை தன்னை
மேல்முகட்டில் கீழ்த்தரையில் சுவரில் எல்லாம்
பொய்ச்சலின்றி அடிக்கொன்றாய நிறையப் போட்டால்
போதும்இனிக் கதவுநிலை தட்டு முட்டுக்
கைச்சாத்துக் கணக்கேட்டுச் சுவடி பெட்டி
காடிஉப்புச் சட்டிகூழ்ப் பானை சீப்பே,

"கண்ணாடி குமிழ்ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின்விசிறி மின்வி ளக்கு
நண்ணுமதின் மேற்கவிப்புத் துடைப்பக் கட்டை
நடையன்கள் மாடாடு தொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற்போர் பந்தல் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறுசாக் கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்.

"கற்றவர்கள் தொழுசாம்பல் பொடியை வாங்கிக்
கக்கூசில் போடுவோன் கழுதை யாவான்
நெற்றியிலே இடும்சாம்பற் பொடியை நன்செய்
நிலத்தினிலே எருவிடுவோன் நரியே ஆவான்.
நற்பாலும் நறுங்கனியும் நலமோ செய்யும்?
நாலுபடிச் சாம்பலுண்டார் நம்தாள் சேர்ந்தார்."
மற்றிவ்வாறுரைத்துப்பின் சிவபிரானார்
மலையேறினார். பிறகோர் கூச்சல் அங்கே:-

திருமாலுக் கடியாரின் முடிமேல் ஏறித்
திருமாலும் கூச்சலிட்டார். "யார் யார்?" என்று
தெரிவை அவள் விநோதைதான் கேட்கலானாள் :
"திருமால்நான என்றுதிருமாலும் சொன்னார்.
"திருமாலே பிறகொரு நாள்வரலாம்; இன்று
திரும்பிப்போய் விடவேண்டும என்றாள் மங்கை.
"ஒருபோதும் போகேன்நான் சிவனை மட்டும்
ஒருமணிநேரம்வரைக்கும் பேச விட்டீர்.

"நான்மட்டும் தாழ்ந்தவனா? திருமால் என்றால்
நான்முகனைப் பெற்றவனாம்! நான்முகன்தான்
வான்செய்தான்; மண்செய்தான்; நிலவைச் செய்தான்;
வான்பரி தியைச் செய்தான்; கடலைச் செய்தான்;
ஊன்செய்தான்; உயிர்செய்தான்; மக்கள் என்றே
உருச்செய்தான்; செல்வமெல்லாம் செய்தான்; விண்மேல்
மின்செய்தான்; தேன்செய்தான்; எல்லாம் செய்தான்.
மேலோனைக் கைவிடுதல் நன்றோ? நன்றோ?

"எவ்வுயிரும் காப்போன்நான்; ஆக்குவேன்நான்;
அழிப்பவனும் இத்திருமால் ஒருவன் தானே!
அவ்வெறியன் சிவபெருமான் பெருமானல்லன்;
அவன்ஒருநாள் வெறிபிடித்துத் திரிந்தபோது,
செவ்வையுறச் செய்தவனும் நான்தான் என்றால்,
இல்லைஎன்று செப்புவோன் எதிர்வரட்டும்!
எவ்வகையிற் பார்த்தாலும் கடவுள் நானே!
என்னோடு போட்டியிட எவனாலாகும்!

"திருமாலை விட்டுணுஎன் றுரைப்ப துண்டு,
செப்புமந்த விட்டுணுவைத் தொழுவோர் தம்மை
உரைப்பதுண்டு வைட்டினவர் என்று நாட்டில்
உள்ளவர்கள் வைட்டினவர் ஆக வேண்டும்.
பெருநாட்டில் வைட்டினவ மதமே யல்லால்,
பிறமதங்கள் எவற்றையுமே ஒப்ப வேண்டாம்.
.................................................................
..................................................................
திருநாமம் எனக்குள்ள குறியே யாகும்.
திருநாமம் திருமண்ணே இரண்டு கோடு
திருச்சுண்ணாம் பாலாகும்; நடுவில் ஒன்று
செந்தூரத் தாலாகும்; குறுக்கில் அல்ல.
திருநெடுக்கில் நின்றதிருக் கோலமாகத்
திகழவே நெற்றிதலை கழுத்துத் தோள்கள்,

முதுகுவயி றெவ்வுறுப்பும் சாத்தவேண்டும்.
முன்இங்கே சிவன் சொன்ன தைப்போல் வீடு
மதில்தோட்டம் பல்பொருள்கள் எவற்றின் மேலும்
பளபளென நாமத்தைச் சாத்த வேண்டும்.
எதிரிலொரு நாமமில்லான் செல்லக் கண்டால்
இழுத்துவந்தே நாமத்தைப் போட வேண்டும்
பொதுச்சொத்தாம் மலைஒன்றில் நாமம் போட்டுப்
போனபல நூற்றாண்டாய் வைட்டினர்க்கே,

"மலைஉரிய தென்றுரைக்க வேண்டும். என்றன்
மனங்களிக்கத் தெருவெல்லாம் கோயில் வேண்டும்.
இலைஎன்றால் இந்நாடு நலமுறாதே!"
என்றவுடன் விநோதைதான். "ஐயா போதும்

மலைஏற வேண்டு" மென்று சொல்ல, ஏழு
மலையானும் மலையேறித் தொலைந்தான்; அங்கே!
தலைகுனிந்து கொண்டிருந்தான் மன்னன்;மக்கள்
சதைகிழியச் சிரிப்பை உள்ளே அடக்கினார்கள்.

"வையகத்தில் நல்வாழ்வு வாழ்வதற்கு
மதம்வேண்டும். மதமில்லை யாயின் மக்கள்
உய்யத்தான் முடியுமா? இருமதங்கள்
உரைத்தார்கள் விட்டுணுவும் சிவனு மிங்கே!
மெய்யான மதங்களே இரண்டு்ம்! மக்கள்
மேற்கொள்ள வேண்டுமென விளம்பு கின்றேன்.
'தெய்வமிக ழேல்' என்றார் ஒளவை யாரும்.
சிறிதுமிங்கே நடந்தவற்றை இகழவேண்டா!"

என்றுரைத்த, விநோதைதான், எனக்குப் பின்னால்
இவைபற்றி மன்னரும்தங் கருத்தைச் சொல்வார
என்றுரைக்க, மன்னவனும் இயம்பு கின்றான்;
"எல்லார்க்கும் மதவாழ்வு வேண்டும். ஆனால்,
ஒன்றிருக்க மற்றொன்று ஏன்?" என்றானவ்
வொண்டொடியாள் மன்னவனின் இடையிற் கிள்ள,
,'நன்றுதீ தறிவதற்கே இரண்டும் வேண்டும்;
நடத்துவோம் இரண்டையுமே" எனமுடித்தான்.

மீண்டுமந்த விநோதைதான் எழுந்திருந்து,
"வேந்தர்மேல் அன்புடைய அமைச்சர் தாமும்
ஈண்டுத்தம் கருத்துரைப்பார என்று கூற,
அறிவழகன் எனுமமைச்சன் எழுந்து சொல்வான் :
"வேண்டுவது கல்விஒன்றே! நம்மேல் வந்து
விழாதிருக்க வேண்டுவது மதமே ஆகும்!
மாண்புடைய கல்வியினால் அறிவும் அன்பும்
மனநலங்கள் உண்டாகும். வாழ்க்கை நன்றாம்!

மதமான பேய்பிடியா திருக்கவேண்டும்.
மதம்பார்ப்பான் கல்வியினை மாய்க்கப் பார்ப்பான்.
இதோ அந்தச் சென்னையிலே நடப்ப தென்ன?
இருந்தமத நம்பிக்கை குறைந்த தாலே
மதத்தால்வாழ் வார்தலைவன் அமைச்ச னாகி,
வளர்ந்துவரும் கல்விதனைப் பாதி ஆக்கிக்
கொதித்தெழுந்த தமிழர்களைச் சுட்டுத் தள்ளிக்
குதிக்கின்றான் தோற்பாவை குதித்தல் போலே!

"அதிகாரக் கயிறறுந்து போவதற்குள்
அகத்துறையின் அதிகாரர் அனைவருந்தம்
மதிக்கிசைந்து வருபவராய் இனஞ்சார்ந்தாராய்
வாருங்கள் வாருங்கள் என்று கூவிப்
பதைப்போடும் அழைக்கின்றான். மதம் வளர்ந்தால்
படுபாழாம் பகுத்தறிவு! வாழ்வார் பார்ப்பார்!

எதற்கிந்த மதம்கோயில் இழவு வேண்டாம
என்றுரைத்தான் அறிவழகன்! விநோதை சொல்வாள்.

"அவனருளால் அருஞ்செயல்கள் நடக்கக் கண்டோம்.
அவன்வாழ்வே நம்வாழ்வென்றறிந்து கொண்டோம்.
'அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை;
என்றுரைப்பார் அறிஞரெலாம் அறிவோம் நாமும்.
சிவன்இங்கே எழுந்தருளத் தவந்தான் என்ன
செய்தோமோ? அமைச்சரிதை மறுக்கலாமோ?
அவர்கருத்தை நாமறிந்தோம். சேந்தனாரின்
அறிவிப்பை நாமறிய வேண்டும என்றாள்!

"என்னருமைத் தோழியரே, தோழன் மாரே
என்கருத்தை யானுரைக்க வேண்டு" மென்றார்.
"சென்னையிலே மதமென்றும் கோயி லென்றும்
சிவனென்றும் மாலென்றும் மலரோன் என்றும்
அன்னவரின் மக்கள் என்றும் மனைவி என்றும்
இன்னுமிவர் போல்இரிசன் மாடன் காடன்
சின்னாண்டான் பெரியாண்டான் பிச்சை யாண்டான்
சிவப்பாண்டான் கறுப்பாண்டான் வெள்ளை யாண்டான்;

"கருப்பாயி காட்டேரி காளி கூளி
கருமுத்து மாரிஇரங் காளி காய்ச்சல்
பொறுப்பாளி பீனிசத்தாள் கண்நோய் அம்மன்
புரையாளி பிளவையம்மன் தொண்டைப் புற்றாள்
குறிசொல்லி மலைக்கன்னி கொல்லி என்றும்
கூறுமிவர் ஊர்திகளாம் ஆடு மாடு
சிறுத்தைஅரி மாகுரங்கு கோழி காக்கை
சிறுகழுதை பெருச்சாளி கழுகு நாய்பேய்;

"என்றுமவர் அடியார்கள் அடியார்க்காக
இளமனைவி தனையளித்தான். கல்லில் மோதித்
தன்குழந்தை தலையறுத்தான். கல்லில் மோதித்
தலையுடைத்தான். மூக்கறுத்தான் கண் அகழ்ந்தான்
மன்னவன்போல் பொதுப்பணத்தை வஞ்சம் செய்து
மாக்கோயில் கட்டினான் என்று கூறி
மன்னுபகுத் தறிவழித்து மானம் போக்கி,
மறைக் காட்டித் தமிழ்நூற்கள் கருத்தை மாற்றி;

தீமைஎலாம் தமிழருக்கே, நன்மை எல்லாம்
தங்களுக்கே! வறுமைஎலாம் தமிழ ருக்கே
ஆமந்தச் செல்வமெல்லாம் தங்க ளுக்கே!
அடிமைநிலை தமிழருக்கே; ஆட்சி எல்லாம்
வாய்மிகுந்த தங்களுக்கே! சிறுமை எல்லாம்
வாயற்ற தமிழருக்கே; பெருமை எல்லாம்
வாய்மை அற்ற தங்களுக்கே! எனும்நி லைமை
குறிஞ்சியிலும் குடிபுகுந்து விடக்கூடாதே!

"என நினைத்து விநோதைஅம்மா சென்னை தன்னில்
இழிவுநடை படைஎடுக்கும்வ ரலா றெல்லாம்
மனதினிலே நமக்கெல்லாம் படும்படிக்கு
மாத்தமிழில் நாடங்கள் நடத்தினார்கள்.
இனத்தாரே பார்த்தீரா, உருவம், கோயில்
எம்பெருமான் முடிமீதில் ஆடுங் கீழ்மை
நினைத்தாலும் அருவருப்பே அன்றோ? துன்ப
நிகழ்ச்சிகளைக் கான்றுமிழ்வோம்!" என்று சொன்னான்.

"மிகநல்ல நாடிந்தக் குறிஞ்சி நாடு.
விளைநிலங்கள் மிகவுண்டு; வயல்கள் உண்டு;
தகுமாறு நாற்புறமும் கடல்கள் உண்டு;
தங்கவயல் உண்டு; பழத்தோட்ட முண்டு;
பகையஞ்சும் இயற்கையரண் உண்டு வண்டு
பாடுகின்ற பூங்காவனங்கள் உண்டு;
அயலிடங்கள் உண்டு. மக்களிடத்தில் மட்டும்
அறிவுதா னிலை!" என்று விநோதை சொன்னாள்

கண்ணெலாம் தீப்பிறந்த தங்குள் ளார்க்கே
கைகள்உடை வாள்தடவும்! விலகும்! அந்த
மண்ணாண்டா னிடம்வணக்கம் காட்டி வந்த
வழக்கமெனும் ஒழுக்கத்தை மறித்த தேனும்;
அண்டையிலே இருந்திட்ட செழியன், "பெண்ணின்
அழகுக்கோர் தனியாற்றல் கண்டேன்!" என்று
புண்பட்ட நெஞ்சத்தாற் சிரித்துச் சொன்னான்.
"பொறுப்பாய என்றான்சேந்தன். செழியன் மேலும்

"குழிநெருப்பின் நடுவினிலோர் விளாம்பழத்தில்
குதித்திட்ட குரங்கேபோல் மன்னர் இப்பெண்
இழிநடத்தை நடுவினிலோர் அழகில் வீழ்ந்தார்!
இனத்தாரின் தமிழரசர் இறந்தார்! நாட்டின்
அழிவுக்கு வலைவீசும் ஒருத்தியைப்போய்
ஆதரிக்கும் அரசர்உள்ளார் என்றால். நாம்நம்
விழிமூடி இருக்கும்நாள் அவள்விழாநாள்!
விழாமங்கை விழும்நாள்நம் விடுதலைநாள்!

"கொடியவளை ஆதரிக்கும் கொடியோய்!" என்று
கொலைவாளைத் தான்எடுத்தான் செழியன் ஓடி
"விடுவாளை" எனமறித்து வீழ்ந்தான் மண்ணில்;
"வேண்டாம் என் றிடைமறிந்தான் அமைச்சன்;
வீழ்ந்தான்
அடிநால்வர், இடைபதின்பர், தோளைப் பல்லோர்
அழுந்தும்வகை யேபற்றி, "ஐயா! மன்னர்
முடிவுநாள் இதுவல்ல; உணர்வில் மக்கள்
முழுத்திருநாள் அண்மையிலே!" எனத்தடுத்தார்.

"வாட்படைக்கு நம்மாணை! செழியன் வீழ்க!"
என்றுசொல்லி விநோதையுடன் மன்னன் சென்றான்.

"ஆட்படையும் அழிக்கட்டும எனவி நோதை
அகலுகையில் நடுக்கமுடன் கூவிச் சொன்னாள்!
காட்டுழுவை அசைவினிலே முயற்கூட்டம்போல்
கைப்பற்றி னோர்சாயச் செழியன் ஓடி
நீட்டியவாள் வீச்சுக்கே அவர்கள் தப்ப,
நெடுங்கற்கால் இருந்துண்டாய் விழுந்ததங்கே!

"புறங்காட்டி ஓடினான் தமிழன்; அந்தப்
புத்தமிழ்தில் தலைக்கிறுக்கும் பிறந்த தாலே
திறங்காட்ட அஞ்சினான்! விரிந்த வானும்
வெஞ்சுடரும் வெண்ணிலவும் உடுக்கள் தாமும்
நிறங்காட்ட அஞ்சிடுமோ? அலைகொள் வாரி
நீர்காட்டப் பின்வாங்க லுண்டோ? அன்னார்
அறங்காட்டும் வழியினி்லே அடிவைத்தற்கே
அஞ்சினான்! இறக்குகின்றேன் அவளிடக்கே!"

எனும்பேச்சோடு அங்குநின்றான் செழியன் தானும்!
"என்தோழா! நாட்டன்பா! வன்மைத் தோளா!
பனங்காயைப் பதம்பார்த்து வெட்ட வேண்டும்!
பத்துக்கோர் ஆறான விழுக்காடேனும்
இனமக்கள் பழம்போக்கில் மாற வேண்டும்;
இவளுளத்தில் நல்லுணர்வு பிறத்தல் வேண்டும்;
அனைவோரும் நம்செயலை ஒப்ப வேண்டும்?
அவண்வருக! வழிப்பேச்சைக் கேட்டுப் பார்ப்போம்''

என்றுரைக்கச் சேந்தனவன் செழியனோடே
ஏகினான்! கோயிலைவிட்டேகு மக்கள்
நன்றாகத் தம் கருத்தை நவிலலானார்;
'நல்லதுதான் கோயிலெ'ன ஒருவன் சொன்னான்;
'என்றுமது தீயதப்பா' என்றான் ஓர்ஆள்;
'எங்குமுள்ளான் இங்குவந்து குந்திக் கொண்டால்,
பின்பங்கே எதுவும்நடக் காதே' என்று
பேசினான் முன்னொருவன். 'என்றன் கேள்வி

அதுதானே, என்றுரைத்தான், அதனைக் கேட்டான்!
'ஆடினான் சிவபெருமான் முடியில் வந்தே;
எதற்காக இங்குவந்தான்? யார ழைத்தார்?'
எனக்கேட்டான் ஒருவன்மற் றொருவனைத்தான்!
'புதுமைபல செய்யஎன்னால் முடியு மென்று
படித்தவரை, நம்பவைப்ப தற்கே' என்று
பதில்கிடைக்க, நம்பவைத்து நாடினோரைப்
பழிவாங்கும் கருத்துண்டோ அவனுக்'கென்றான்!

'மன்னவர்ஏன் அயலாரைக் குறிஞ்சி நாட்டில்
வரச்செய்தார்? தீயையன்றோ வரச்செய் திட்டார்!'
என்றொருவன் சொல்லிவிட்டான். 'அதனா லென்ன?
எல்லார்க்கும் நல்லதுதான் செய்கின்றார்கள்'

எனஒருவன் கூறினான். 'விநோதை என்பாள்,
அறிவில்லார் இந்நாட்டார் என்ன லாமோ?'
எனக்கேட்டான் ஓர்மானி; அதற்கும் ஓர்ஆள்.
'இல்லாத தில்லை!' எனச் சொன்னான் அங்கே!

அரசனையும் செழியனவன் கொல்லப் போனான்
அதுசரியா? துடுக்கன்றோ? என்றான் ஓர்சேய்!
'தெரியாமல் செய்துவிட்டான்; வெகுண்டோ ரெல்லாம்
தீயிலும்போய்க் குதிப்பார்கள்' என்றான் ஓர்சேய்!
உரைபலவும் கேட்டிருந்த செழியன், சேந்தன்.
'உணர்வுபெற வேண்டுமிந்த நாட்டு மக்கள்;
திருந்தும்வகை பெருந்தொண்டு செய்ய வேண்டும்;
திருந்திடுவார்!" என்றுதம்முள் பேசிச் சென்றார்.
--------------

பிரிவு -- 25

(சில்லி வீட்டில் செழியனைப் பிடிக்கச் சூழ்ச்சி நடைெபறுகிறது)

அகவல்

சில்லி வீட்டிக்குச் சேயிழை விநோதை
மெல்ல வந்தாள் நல்லுரு மறைத்தே!
சில்லி யின்பால் செப்பு கின்றாள்;
"சேந்தனின் நண்பன் போலும் செழியன்!
மாந்தரில் அவனோர் மடத்தனம் மிக்கவன்!
கோணாஎன் தொண்டுக்குக் குறுக்கில்நிற்கின்றான்!
அவனுக் கென்றன் அன்புபரி சுதந்து,
கவலை ஒழிக்கக் கருது கின்றேன்.
முத்துப் பந்தர்வான் முழுநிலாக் குடைக்கீழ்
மென்காற்று வீசுமுன் வீட்டின் அறையில்
என்னைக் காண இசைவா னோ அவன்?"
செப்பு மிதுகேட்ட சில்லி சொல்வான்;
"இருபத் தைந்தாண் டெய்திய மகனை
உடையேன் முதியேன்; உன்றன் அழகு
மடையேறிப் பாய்ந்து பயிரேற்று நீர்போல்
என்மனத் தேறி இளமை ஏற்றினால்,
பெண்ணின் இன்பம் கண்டறியாத
திண்தோள் இளைய செழியன் உன்றன்
கடைக்கண் வலையில் கவிழவா மாட்டான்?"
என்று கூறியது கேட்ட ஏந்திழை,
"இப்போ தெங்கே இருப்பான்?" என்றாள்!
"அப்பனுக் குணவை அருத்தி, அன்னை
இட்ட உணவை அருந்தி, இளைய
கட்டுடல் பட்டு மெத்தையில் கிடத்தி,
நாட்டின் நல்லது நாடி இருப்பான்!
புல்லினும் மெல்லடிப் பூனைபோல் சென்றுநான்
செழியன் காதில் செப்புதல் செப்பி; நீ
உமிழ்ந்த எச்சில் உலருமுன் இங்குக்
கொணர்வேன் அவனை; இங்கிரு,
இணையிலாய்!" என்று சென்றான் சில்லியே!
--------------

பிரிவு -- 26

(செழியனிடம் சில்லி பொய்க் காரணம் கூறி, அவனை விநோதை இருப்பிடம் கூட்டி வருதல்.)

(அறுசீர் விருத்தம்)


" ஆலைமுதலாளிக்கு முதலாளி
என்வீட்டில் உன்னைக் காண
நாலைந்து நாழிகையாய்க் காத்திருக்க,
நீஎங்கே நடந்து சென்றாய்?
வேலையின்றித் தொழிலாளர் வாடுகின்றார்;
அவர்நலத்தை விரைந்து காக்க
ஏலுமன்றோ செழியனே! ஏற்கும்வகை
செய்யலாம், வருக!" என்றே.

"வெண்ணிலவில் வெண்பட்டு மேலிருந்து
முத்துத்தேர் வெளிவந்தாற்போல்
கண்ணிரண்டும் தன்தோழர் காத்திருக்கும்
இடம்செல்லக் கடிது செல்லும்
திண்டோளன் செழியனிடம் சொல்லிநின்றான்!
செழியனுமே மகிழ்ந்தா னாகி,
"அண்ணாநீ முன்செல்; நான் ஆலைமுத்த
னிடம்சென்று மீள்வேன என்றான்!

மின்விளக்குப் பகல்செய்ய; பொன்னுடம்பு
மெல்லுடைமேல் விளக்கம் செய்யப்
பன்மணிகள் இழைஒளியோ பார்ப்பவரின்
பார்வையினை அள்ளக் கள்ளப்
புன்னகையோ இதழ்க்கடையில் பூரிக்க,
விழிமலரோ கூம்ப, அன்னாள்
தன்முகவாய் மலர்மீது செங்காந்தள்
விரல்ஊன்றித் தனித்தாள் அங்கே.

செழயன் வந்தான்; வரவேற்றான் சில்லி,
இல்லில் "முதலாளி எங்கே?" என்ற
மொழிவிடுக்க,மறுநொடியில்; முதலாளி
கட்குமுதலாளி அந்த
எழிலறையில் இருப்பதனை நீயேபோய்க்
கண்டிடுக!" என்றான் சில்லி
செழியன்தான் உள்சென்றான்; பொன்னழகின்
செப்பத்தைத் துயிலில் கண்டான்!

"புகைஎனினும் பொருந்திடுமென் கருங்கூந்தல்
முகிலின்கீழ் புதுநிலாவின்
நகைஎனினும் செய்யதாமரைஎனினும்
பொருந்துமுக இதழின் ஓரம்
தகைஎனினும், நன்மணிதான் எனினும்அமை
யச்சிரித்துத் தூங்குவாள் என்
பகைஎனினும், என்காதற் பதைப்புக்குப்
பகையல்லள்!" என்று நின்றான்.

எண்ணினான்: "துயில்வாளை எழுப்புவது
சரியாமோ? என்னை இங்கு
நண்ணுமாறு உரைத்ததுவும் என்னுறவை
நாடித்தான் போலும்! அல்லால்
பெண்ணொருத்தி இரவினிலே இளைஞன்
என்பால் பேசுதற்குக் கருதுவாளா?
கண்ணுறக்கம் காட்டுவதும் நாடகமோ?"
என்றுவிரல் நொடித்தான் நன்றே!

குளிர்க்கையால் மலர்விழிகள் தடவி, ஒரு
கொட்டாவி வாங்கி; மெல்ல
விளக்குமுகம் திருப்பியவன் விழியினிலே
பட்டவிழி விரைந்து மீட்டு:
"வெளிச்சென்றான் சில்லியவன் உமையழைக்க;
நீர்வருமுன் விழிதுயின்றேன்;
துளிச்சினமும் கொள்ளற்க! செழியனே,
அமர்க!" என்று தோகை சொன்னாள்.

(வேறு) வெண்பா

நெஞ்சணையும் காதல் நெருப்பணைய, அச்செழியன்
பஞ்சணையில் அன்னவளின் பக்கத்தில் -- நஞ்சணையும்
கண்பார்க்க உட்கார்ந்தான், கட்டமுதக் கைதாவி
உண்பார்க் குதவியது போல்.

"இரவழைக்கும் கூகைபோல் ஏந்திழையே என்னை
வரவழைத்தாய், வல்லிருளில்! என்ன -- தர அழைத்தாய்!"
என்று மொழிந்தான்; இசைந்தானென் றெண்ணியவள்
ஒன்று மொழிந்தாள் உவந்து.

என்னைத் தரஅழைத்தேன் கண்ணாளா! என்றனுக்கே
உன்னைத் தரநீயும் ஒத்துக்கொள் -- பின்னை
முரசு பெறுவாயில் அரண்மனையின் முந்த
அரசு பெறுவாய்என்னால்!"

"ஏய்தரஓர் வேங்கைக்கு யானைஅடித் தேசிறிய
நாய்தரவும் ஒண்ணுமோ நங்கையே! -- நோய்தருமிச்
சொல்லைச் சிரித்துநீ சொல்லாதே! -- தோகைஉன்
முல்லைச் சிரிப்புவாய் மூடு.

"தன்னிற் சிறந்த தமிழும், தமிழ்வளர்த்த
எண்ணிற் சிறந்த மறவர்களும் -- பொன்னிற்
பொலிவுமுள்ள தாய்நிலத்தைப் புன்செயலால் மாற்றும்
வலிவுமுள்ளதோஉனக்கு மற்று

"சேறும்செந் தாமரையும் போலே செறிந்தஇடை
ஊறும் உறுப்பழகும் உள்ளவள்நீ -- கூறும்
இடையூறு பட்டேன் எதிரி இதழின்
கடையூறு தேனேஎன் காப்பு!"

எனக்கேட்ட மங்கை இனிஆவ தெண்ணி,
மனக்கோட்டம் தீர்ந்தாள்போல வாய்ச்சொல் -- தனைக்காட்ட
உன்கருத்தே என்றன் உயிர்வாழ்க்கை அல்லாமல்,
என்கருத்தே ஒன்றுமில்லை இங்கு."

என்று செழியன் இருதோள் கமழ்தேய்வில்
சென்று புதைந்தாள்! சிறந்தஅறை -- நன்று
கதவடைக்கப் பட்டது: காதற்றேன் ஆற்றின்
மதகுடைக்கப் பட்டது வந்து

(வேறு)

செங்கதிர் எழுந்தது! சில்லி எழுந்தான்!
தன்மகன் தங்கவேல் எங்கென்று தேடினான்
சாத்திய அறையின் சாவித் தொளையில்
கண்இட் டிருந்தான்; காதைப் பிடித்தே
இழுத்து வந்தே, "என்னபார்க்கின்றாய்?
செழியன் விநோதை!" என்று செப்புமுன்,
தங்கவேல் தன்கையால் தந்தைவாய் மூடினான்;
இங்கிக் கூக்குரல் எழுப்பவே, அறையில்
மங்கையும் செழியனும் மலர்ந்த விழிகள்
மீண்டும் கலந்தன! பிரியவும்
தூண்டின! அறையைத் துறந்தனர் துயர்ந்தே!
----------------------

பிரிவு -- 27

(அரசனிடம் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பண நெருக் கடிபற்றிக் கூறுகின்றார்கள்), அனமச்சனும், படைத்தலைவனும்.

(அறுசீர் விருத்தம்)


அரசனும் அமைச்சன் தரனும்
சேந்தனும் அரண்ம னைக்கண்
உரையாடும் போத மைச்சன்,
"(1) உழவொன்று (2) கல்வி ஒன்று
(3) வரைவொன்று (4) தொழிலென் றொன்று
(5) வாணிகம் ஒன்று (6) தச்சொன்

றரசேஇவ் வறுது றைக்கும்
பணமில்லை" என்று சொன்னான்.

"தகுகல்வித் துறைக்கு நானே
தலைவனா தலினால், அஃது
புகலுவேன்; பள்ளி எல்லாம்
புதுக்கிட வேண்டும்; கற்போர்
தொகைமிக்க தாத லாலே,
புதுப்பள்ளி துவக்க வேண்டும்:
நகும்படி வரும்ப டிக்கு
நம்கணக் காயர் நைந்தார்.

"தரைப்படை, குதிரை, யானை,
தரையூர்தி, வான ஊர்தி,
திரைகடல் ஊர்தி, மற்றும்
செழும்படை, இவற்றிற் கான
பெரும்பொருள் இல்லை; சட்டை
பெட்டிகள் புதுக்க வேண்டும்;
கருவிகள் திருத்த வேண்டும்;
படைவீடு கட்ட வேண்டும்!"

என்றனள், மருந்து வத்தின்
இயல்பினன் அழைக்கப் பட்டான்
"இன்றைய நிலையிலே, மன்னா!
எழில்மருத் துவத்து றைக்கே
ஒன்று பல்லா யிரம்பொன்
உடன்தேவை! மருந்துமில்லை;
நன்றான கருவி இல்லை;
நாம் வாங்கவேண்டும்!" என்றான்.

துறைமுகத் தலைவன் வந்தான்.
"மதகுகள் உடைசல், வாய்க்கால்
பழுது, நல் வடிகால் தூர்ப்பு,
வயற்காவல் மிகஇ ழுப்பு!
மழைஇல்லை! பொறிகள் இல்லை;
மண்ணீரை மேலெ ழுப்ப!
உழவர்க்குக் கடனகொடுக்க
ஒருகாசும் இல்லை!" என்றான்.

வாணிகத் துறைத்த லைவன்
வந்துவேந் தனைவணங்கி,
"மாண்புறு தொழிலாளர்கள்
வயிற்றிலே ஈர மில்லை;
பேணும்எப் பொருள்விளைவும்
பெருகிட வில்லை நாட்டில்!
நாணமாம் வெளியிற் சொன்னால்!
நம்மிடம் ஒருகாசில்லை!

"வரும்படி அதிக மாக
வரும்படி செய்ய வேண்டும்;
தரும்படி செய்ய வேண்டும்.
செலவுக்குத் தகுபொருள்கள்;
இரும்படித் தொழிலா ளர்கள்,
இனும்பல தொழிலா ளர்கள்,
பெரும்படி யாப்பொருள்கள்,
பெருக்கவே! இதுவு மன்றி,

"துன்பம்வந் துற்ற போது
தொழிலாளர் தங்கட் கெல்லாம்
அன்புகாட்டுவதாய்ச் சொல்லி,
அரைவயிற் றுக்கூ ழுக்கும்
வன்புசெய் கின்றார் ஆலை
மடையர்கள் என்றால், அன்னார்
என்பினை உடைக்க வேண்டும்
எழில்நாட்டை ஆளவந்தார்!

"அதுமட்டும் போதா தென்பேன்;
ஆலையின் தொழிலா ளர்க்கே
எதை? என்று? தருதல் வேண்டும்
அதை அன்றே தருதல் வேண்டும்;
பொதுநிதி எங்கே? நாட்டைப்
பொசுக்கிடும் பசியைப் போக்க
அதுவன்றோ தேவை? இன்றேல்
அழிவன்றோ தாய்நாட்டிற்கே!"

சொல்லினான் இவ்வா றேபின்
தொழிற்றுறைத் தலைவன் வந்தான்.
"அல்லல்நீக் குந்தொ ழிற்கே
அடிப்படைப் பொருள்கள் எல்லாம்
இல்லை! உண்டாக்கக் காசும்
இல்லை! ஓர் எடுத்துக் காட்டு
நல்லவாறுரைப்பேன் கேட்க!
நடுமண்ணுக்குள் புகுந்தே.

"பொன்னெடுத் திடஉ ழைப்போர்
பொதுத்தொழி லாளர் அன்றோ?
மன்னவர் அவர்கோ ரிக்கை
மறந்ததும் வியப்பே அன்றோ?
என்னதான் செய்தீர்! பின்னர்
இதைவிடப் பெரிய வேலை?
பொன்வேண்டும் தொழிற்று றைக்கே
பொழுதுவீ ணாயிற் றெ"ன்றான்.

வரைவெனும் துறைத்த லைவன்
வந்துநின் றுரைக்க லானான்;
"தெருவெலாம் சேறும் மண்ணும்,
தெருச்சாலை தரையுள் மட்டம்
நரிஎலாம் ஊளைப் பாடல்
நடத்திடும் அலுவல் இல்லில்
உரைப்பதேன் ஒருநூ றாயி
ரம்பொன்கள் தேவை!" என்றான்.

உயர்தச்சுத் துறைத்த லைவன்
உரைக்கின்றான எனது மன்னா!
புயல்தொடும் கட்ட டங்கள்
புதுக்கிட வேண்டும் என்றீர்
அயலுள மலையை நன்செய்
ஆக்கிட வேண்டு மென்றீர்
பயில்பள்ளி எல்லாம் தச்சுப்
பயிற்றிட வேண்டும் என்றீர்!

"ஓவியம் நாட்டி லெங்கும்
ஓங்கிட வேண்டும் என்றீர்
பாவியம் பியப டிக்கே
பற்பல செய்யச் சொன்னீர்.
கோவிலில் கோன்இ ருக்கை
குளமிவை இயற்றச் சொன்னீர்.
ஆவியிங் கிவைகட் கெல்லாம்
பொருளன்றோ அறிக!" என்றான்.

இன்ன வேளையிலே வாயில்
காப்பவன் "ஏந்த லேஎன்
அன்னையார் விநோதை இங்கே
அனுப்பிய சிலபேர் உங்கள்
முன்னிலை பெறவி ழைந்தார
என்றனன் முடுகி மன்னன்
"அன்னவர் வருக." என்றான்.
சுமையுடன் அவர்கள் வந்தே,

பெட்டியைத் திறந்தார், மன்னன்
பெருவியப் படைந்தான், வானை
எட்டிய ஒளியும் ஆசைக்
கெட்டாத விலையு முள்ள
கட்டித் தங்கத்தில் மின்னும்
பன்மணி நகைகள் காட்டி
வெட்டொன்று துண்டி ரண்டாய்
விலையையும் கூறினார்கள்.

"இழைபல இவைபோல் வீட்டில்
இருக்கஏன் இவைகள் எல்லாம்
பொழுதொடு போய்வா ருங்கள
என்றனன் திரைய மன்னன்,
"வழியினில் மன்னி யார்தாம்
கண்டனர்; வையம் மெச்சும்
கழுத்தணி இதனை வாங்கக்
கருதியிங்கு அனுப்பினார்கள்!"

என அந்த வணிகன் சொல்ல
வேந்தனும் எரிச்ச லோடு
"நனிஆசைக் காரி அந்த
நங்கைஓர் பகட்டுக் காரி!
தனியான போக்குக் காரி!"
எனப்பல சாற்றும் போதே,
தனிமொழி காற்சி லம்பு
பாடிடக் கடிதில் வந்தாள்!

பார்க்கும்போ தெல்லாம் நெஞ்சைப்
பறிக்கின்ற முகக் கருக்கில்
தார்க்குன்றத் தோளன் மையல்
தலைக்கேற, இருகை தாவி
வேர்க்கின்ற முகந்து டைத்து
விலகிய கூந்தல் நீவி,
சேர்க்கின்ற இடந்து டைத்தே
சிறக்கத்தன் அருகில் சேர்த்தான்.

கழுத்தணி தன்னை மன்னன்
கைநீட்டி வாங்கி, அன்னாள்
கழுத்தினில் இட்டுக் கண்ணால்
கண்டுகண் டகம கிழ்ந்தே
"முழுத்தொகை தருக" என்றான்.
அமைச்சனும் முடிச்ச விழ்த்தான்.
"எழுத்தெல்லாம் இனிமை யாக்கும்
தமிழ்ப்பாட்டே அழகி தெ"ன்றான்.

வணிகர்க்கு விலைகொ டுத்து
வந்தனன் அமைச்ச னங்கே
"பணமில்லாப் போதில் உள்ள
பணத்தையும் செலவு செய்ய
இணங்கினான் மன்னன் என்றான்
இவளுக்கேன் பொறுப்பே இல்லை?
அணங்கின்பால் அரசர்க்குள்ள
ஆசையும் அறுதல் வேண்டும்!"

என்றனன் அமைச்சன், மங்கை,
என்னாசைக் காக நான்போய்
ஒள்றுமே வாங்கேன்; மன்னர்
உள்ளத்தை நிறைவு செய்தல்

என்கடன், மன்னர் ஆசை
என்ஆசை, அமைச்சன் என்பால்
அன்புகாட்டாதிருக்க
வேண்டு"மென் றாள்அவ் வஞ்சி!

"நெருக்கடி யான நேரம்!
நிறுத்துக தனிமைச் செய்தி!
தெருக்களில் தொழிலா ளர்கள்
திடுக்கிடுமாறு மேனி
உருக்குலைந்து அலைகின் றார்கள்;
உணவிட்டுக்காக்க வேண்டும்;
பெருத்தஆலைக்காரர்தம்
பிழையையும் திருத்த வேண்டும்.

"வீணாகச் சிறைப்பட்டோரை
விடுதலை செய்ய வேண்டும்;
காணாதார் போலும், கேட்கக்
காதிலார் போலும் மன்னர்
வாணாளைக் கழிப்ப தென்றால்,
வையகம் நகைக்கும் நம்மை
கோணாமல் நெஞ்சு வந்து
ஒருதொகை கொடுப்பீர்!" என்றான்

"தொழிலாளர் வீடு தோறும்
சோறிட்டு வருவேன் நானே!
எழிலான அத்தான்! நீங்கள்
முதலாளி யிடம்போய், நல்ல
மொழிகூறி அமைதிக் கான
முடிவினைச் செய்ய வேண்டும்.
பழியின்றிச் சிறைப்பட்டாரைச்
சேர்ந்தனார் விடுத்தல் பாங்கே!"

என்றனள் "இருப்ப தெல்லாம்
இழிவெய்தும் தொழிலாளர்க்கு
நன்றாகச் செலவு செய்க
நங்கைஎன் விநோதை! மற்றும்
இன்றுநான் ஆலைக் காரர்
இடர்செய்யா வகைசெய் கின்றேன்;
பின்பொரு திட்டம் காண்போம்
அரசியற் பெருந்தொகைக்கே!"

அரசனிவ் வாறு கூற
அமைச்சனும் பிறரும் ஆங்கே
பெருமகிழ் வெய்தி னார்கள்.
பெண்ணரசாம் விநோதை
"விரைவினில் செல்ல வேன்டும
எனக்கூறி வெளியிற் சென்றாள்.
பிரிவினைப் பொறாத மன்னன்
கையினைப் பிசைந்தி ருந்தான்.

வாட்டத்தில் இருந்த ஏழை
மக்கட்குத் தணிவு கூறி
"வீட்டுக்கு வீடு சோறு
விநோதைவந் தளிப்பாள்!" என்று
கூட்டத்தில் சேந்தன் பேசிக்
கொண்டிருந் திட்ட போது
"தோட்டத்தில் விநோதை உம்மை
அழைத்தனள என்றாள் தோழி.

தோழிஅம் புயமு ரைத்த
சொற்கேட்ட சேந்தன் "மக்கள்
வாழநல் லுணவ ளிக்கும்
வகைகேட்க எண்ணம் போலும்.
நாழிகை ஆகு முன்னே
நண்ணுவேன்!" எனந டந்தான்;
ஆழத்தில் சுழல்கா ணாதான்
ஆழ்கடல் முழ்கலானான்.
-------------------

பிரிவு -- 28

(சேந்தனுக்கு விநோதை விரித்த வலை கிழிகின்றது.)

(எண்சீர் விருத்தம்)

புறஞ்சுவரின் நிலைக்கதவு திறந்து கொண்டு
பூங்காவின் உட்புறத்தில் புன்னை நீழல்
மறைப்பினிலே பின்கைகள் சேர்த்து லாவி
மங்கைவரும் வழியினிலே விழியைச் சேர்த்தான்.
வெறுப்புற்றான். மங்கைமேல்; 'என்னை இங்கு
வீணாகக் காத்திருக்க வைத்தாள்!" என்றான்.
குறுக்கிட்டாள் அம்புயந்தான்; அவளைச் சேந்தன்
"கொழுக்கட்டைக் கண்ணாளே!" என்றழைத்தான்.

"எங்கேடி உன்தலைவி?" என்று கேட்டான்.
"எதற்காக காத்திருக்க வைத்தாள்?" என்றான்.
"உங்கள்வீட் டுப்பிழுக்கை நானா?' என்றான்.
"உயிர்குடிக்கும் படைத்தலைவன்!" என்று சொன்னான்.
"மங்கையவள் விழியிமைக்கா தும்மைக் காண
வழியினிலோர் அறைதனிலே இருக்கின் றாளே;
அங்குநீர் எழந்தருள வேண்டும்!" என்றாள்.
"இதுதானா முறை?" என்று சேந்தன் சென்றான்.

"வந்தாரை வழிவந்து வருக என்னும்
மரியாதை தெரியவில்லை உனக்கே!" என்று
நொந்தானாய் விநோதையிடம் நுவன்றான் சேந்தன்.
"நோய்காணா மருந்துவனின் மருந்து போல
வந்தீர்என் கைப்புறத்தில் சாய்வீராயின்
மனவருத்தம் தணிந்துவிடும்!" எனந கைத்துக்
"கொந்தாதீர் என்மையல் தீர்ப்ப தற்கே
கொணர்வித்தேன்!" எனச்சொன்னாள், கொதித்தான் சேந்தன்.

"கழிவடையில் குளிப்பதற்கா? ஒருவன் வேறே
கண்டறிவாய் நானல்லன்!" என்று சேந்தன்
விழிசிவந்தான்; விநோதையவள் மனந்தீ யானாள்.
"வேலை இருந் தாற்பாரீர், போவீர்!" என்றாள்.
பொழிதேனில் புதுமலரில் ஒன்றைக் கிள்ளி்
மோந்தபடி முறுக்காகப் போனான் சேந்தன்.
அழித்துவிட்டு மறுவேலை! என்றன் மையல்
அழியானை அழியாமல் வாழேன்!" என்றாள்.
---------------

பிரிவு -- 29

(சேந்தனை ஒழிக்கச் சில்லியிடம் திட்டம்.)

(அகவல்)

"சேந்தனை ஓழிக்க என்ன செய்யலாம்?"
சில்லியைக் கேட்டாள் இவ்வாறு சேயிழை!
"இங்குவா, உட்கார் இப்படி நங்கையே!
சேந்தனை ஒழிக்க என்ன செய்யலாம்?
என்று கேட்டாய் இயம்பு கின்றேன்;
தெருக்கதவு திறந்திருப்பது பெரும்பிழை! மூடிவா!
நானொரு நல்ல ஆணுனக்கெ" ன்றான்.
"சீநீ செருப்பென்று!" திட்டினாள் விநோதை.
"நீயோ எனக்கு மகள்!" என நிறுத்தியப்
பேச்சை முடித்தான்; பிழையுணர்ந்த தவளாய்

"அதுசரி அதுசரி ஐயா!" என்றாள்.
"இப்போ தென்னை என்ன கேட்கிறாய்?"
என்று கேட்டான். எரிச்சலொடு மங்கை
"சொன்னேன்; சொன்னதை நீயும் உரைத்தாய்;
இன்னும் கேட்ப தென்ன மடமை?"
என்றாள். "பெண்ணே கேளிதை!" என்றே
"சேந்தனை ஓழிப்பதா ஒளிப்பதா? செப்புவாய்!"
என்று கேட்டான் சில்லி என்பான்!

"ஒளிப்ப தென்றால் என்ன உரை" என்று
நவின்றாள் மங்கை! "நாடு கடத்தல்
ஒளிப்பது! நல்லுயிர் மாய்ப்பது ஒழிப்பது!
யாதுன் விருப்பம்? என்று கேட்க
"மாய்க்க வேண்டும்!" என்றாள் மங்கை
"மாய்க்கவோர் மறவன் வேண்டும்!" என்றான்!
அதேநேரத்தில் அவன்மகன் தங்கவேல்
குருதி கொட்டும் ஒருகத்தியுடன்
குறுக்கிலோடி அறையின் கதவை
மூடினான்! அவனை மொய்குழல் பார்த்தாள்.
சில்லியும் பார்த்தான்! சேயிழைக் குரைப்பான்;
"அவன்என் பிள்ளை; அருந்திறல் மறவன்;
அவனைக் கொண்டே சேந்தனை அழிப்போம்!"
என்றொரு போடு போட்டான். ஏந்திழை
என்னுடன் அவனை அனுப்புக!"
என்றாள். நன்றென அனுப்பினான் சில்லியே!

(வேறு) பஃறொடை வெண்பா

பொன்னார் பொறியியக்க வண்டியிலே பூங்கொடியும்
தன்மான மில்லாத தங்கவேல் என்பவனும்
சென்றார்கள். அங்கோர் தெருவினிலே முன்னமே
ஒன்றாக ஏழைமக்கள் கூடி உவப்புடனே
"இன்று நமக்குணவாம்!" என்றெல்லாம் பேசுகையில்

கன்றோடு தாய்போலக் கட்டழகி பையனுடன்
வந்திறங்கி னாளங்கே. வந்தனர்பின் வண்டியிலும்
"நொந்தே இருப்பீர் நுவலுவதைக் கேட்டிடுவீர்;
நான்தான் அரசி; குறிஞ்சிக்கு நான் தலைவி!
நான்தான் உமக்கெல்லாம் நல்லுரையை நல்க
நினைத்தேன்; நினைத்தபடி சொல்கின்றேன். உங்கள்
மனச்சோர்வை மாற்றுவேன் வண்டியிலே நல்லுணவும்
ஏற்றினேன். என்னோடே ஓட்டிவந்தேன் வண்டிகளை!
சோற்றைப் பெறுங்கள்; கறிபெறுங்கள்; தோய்தயிரும்
நின்றுகுவளை நிறையப் பெறுங்கள என்றாள்.

'நன்றுநன்றெ'ன்று நடுத்தெருவில் கையேந்த
ஆட்கள் உணவுகறி அள்ளிஅள்ளித் தந்தார்கள்.
நாட்கள் பலவாக நல்லுணவு காணாதார்
வாட்டும் பசிதீர வாங்கியுண்ண ஆளானார்கள்.
காட்டுக் குயில்மொழியாள் கண்டு மகிழ்ந்து நின்றாள்.
தங்கவேல் அங்கே தனித்திருந்த ஓர்ஏழை
மங்கைமேல் கண்ணாய் மதிஒன்று மில்லானாய்
மாட்டுத் தொழுவத்தில் மங்கைதனைக் கூட்டிப்போய்
ஏட்டை அவிழ்த்தான்; இடர்ப்பட்டான் தோதின்றி!

"வேண்டுமட்டும் நான் தருவேன்; வெல்லமே நீ எனக்கு
வேண்டுமட்டும் இன்பம்விளை!" என்று ரைத்திடவே
"ஐயையோ!" என்றழுதாள் அங்கிருந்தோர் ஓடிவந்து
மெய்யறிந்து கொண்டு விநோதையிடம் சொல்ல, அவள்
உள்ளம் மகிழ்ந்தாள்; "தங்கவேல்! உன்னாசை
வெள்ளம் அணைகடக்க வேண்டாம்; சிறிதுபொறு.
ஏதுமறி யாதவனென் றெண்ணினேன்! என்றனுக்குத்
தோதுதான் நீ என்று தோன்றிவிட்டது ஆகையினால்,

வண்டியிலே குந்தியிரு! வாராத பெண்களைநீ
அண்டுவது நன்றல்ல; அன்பனே." என்றவனின்
கண்ணின்கீழ்க் கிள்ளித்தின் கைவிரற்கு முத்தமிட்டு
பெண்ணினத்தின் பேர்கெடுக்கும் பேதை அவள்என்ன
உண்டு மகிழ்ந்திருந்த மக்களிடம் ஒடிவந்து
"தொண்டர்களே! ஆலைத் தொழிலாளரே! நீவிர்
என்றனுக்கும் மறவார்க்கும் கட்சிஒன் றேற்பட்டால்
என்றனையே ஆதரிக்க வேண்டுகின்றேன் உங்களை!
இன்னும் பலதெருக்கள் யான்போக வேண்டுமன்றோ?
சென்று வருகின் றேன்!" என்றாள்.
--------------

பிரிவு -- 30

(தங்கவேல் என்பவன் சில்லியின் மகன். அவனுக்கும் விநோதைக்கும் ஏற்பட்ட தொடர்பு வெளிப்படுகின்றது.)

(அகவல்)

சில்லி வீட்டுக் கொல்லை நடுவிலோர்
நெல்லி மரத்தின் நிழலில் தங்கவேல்
தூக்கினான்; அவனுடம்பு துவளும் மிலாறு!
வீங்கிய கண்இமை சிவப்புவெண் காயம்!
சுருண்ட தலைமயிர் சுவைத்த பனங்கொட்டை!
திறந்த உதட்டுவாய் சேற்றுச் சாக்கடை!
இறந்த நாயை இன்னொரு நாய்வந்து
மோந்தது போல்ஒரு முட்டாள் வந்து,
தங்கவேல் முகத்தில் தன்முகம் வைத்துத்
"தூக்கமா?" என்று கேட்டான்; தொட்டான்!
உருட்டினான்! கதிரவன் உச்சியில் இருக்க
"இருட்டு வெளுக்குமுன் ஏனடா எழுப்பினாய்?"
என்று தங்கவேல் எழுந்துட் கார்ந்தான்.
கொட்டாவி முடிந்த்பின் கூறுகின்றான்;

"வெந் நீருக்கு பன்னீர் வாங்கிக்
குளிக்கும் ஒருத்தியின் கூட்டுறவு கிடைத்தது.
கதிரவன் மின்னும் கதிர்கொண்டு நெய்ததோ
என்னும் பொன்னுடை உடுத்திவந் தென்னுடன்,
விளையாட்டு விழாவை முடித்தபின், இரவே
அலுப்புடன் வந்து, கண்ணை மூடினேன்.
வந்துநீ எழுப்பினாய் என்றான்! வந்தவள்
மெல்லியர் போற்றும் விநோதை!" என்றான்.

"மெரும்புளியங்கொப்பு பிடித்து விட்டாய்!
வரும்படிஇன்ப வாய்ப்பு மிகுமினி!
நண்பினாலிந்த நாட்டுக்கும் நலமே!"
என்றான். "போய்வா எல்லாம் தெரியும்!"
என்று தங்கவேல் இயம்பிட வந்தவன்
சென்றான், வழியில் அவனைச் சின்னான்
கண்டான். வந்தவன் தங்கவேல் கதையை
விண்டான். சின்னான் வியப்புடன் செல்கையில்:
பொன்னனைக் கண்டு தங்கவேல் புதுமையைச்

சொன்னான், பொன்னன் போகும் போது
நன்னனிடத்தில் நடந்தது நவின்றான்.
நன்னன் இரவு நாடகம் பார்க்கையில்
சொன்னான் எவர்க்கும், எவரும்
பின்பு பலரிடமும் பிரித்தார் கட்டினையே!
-------------------

பிரிவு -- 31

( சில்லியிடம் குடன் கடனாகப் பணம் கேட்கின்றான். இந்தப் பேச்சில் திடுக்கிடும் உண்மைகளை அறிகின்றான் சில்லி. )

(அறுசீர்வீருத்தம்)

'குடன்' என்பான் சில்லி யின்பால்
வந்தனன். "கொல்லை யின்மேல்
'கடன்நூறு பொன்னே வேண்டும்;
கட்டாயம் தருவாய் என்றுன்
னிடம்வந்தேன். வட்டி யோடே
முதலையும் எடுத்து வந்தே
உடன்தந்து விடுவேன்! இந்த
உதவிசெய்!" என்று சொன்னான்.

"அங்குப்போ இங்குப் போஎன்
றரசினர் சொல்வார். அந்த
மங்கைக்குத் தொண்டு செய்வேன்.
மட்டான வருவாய் உண்டு.
எங்கப்பா என்னிடத்தில்
நூறுபொன் இருக்கும்? நீசொல்.
பொங்குமா வெறும்பா னைதான்
போ!'? என்று சொன்னான் சில்லி,

திருமகள் அரசன் போற்றும்
செழுமகள் விநோதை தான்உன்
மருமகள்! வாய்தி றந்து
கேட்டதைக் கேட்ட வண்ணம்
தருமகள்! உன்றன் பிள்ளை
தங்கவேல் உயிர் தான் என்னும்
பெருமகள்! இருக்க நீபொய்
பேசாதே!?' என்றான் வந்தோன்.

"அப்படி ஒன்று மில்லை;
அரசியின் பேரை வைத்தே
இப்படிச் சொல்வார் நாட்டில்
இருப்பாரேல், அவரும் சாவார்
தப்பொன்றும் செயாவிட் டாலும்
தங்கவேல் உயிரும் போகும்;
எப்படிச் சொன்னாய், மங்கை
என்மகன் தொடர்புண் டென்றே"

என்னலும் "கூத்துப் பார்த்த
இரிசன்பால் இதனை மெய்யாய்
நன்னனே சொன்னான என்று
குடம்என்போன் நவிலச் சில்லி.
"என்னடா, பெரிய தொல்லை!
எழுந்துபோ, பிறகு வா நீ!
இன்னது கேட்க வேண்டும்!"
எனச்சொல்லி எழுந்து போனான்.

தெருவினிற் கடைசி வீட்டின்
தென்புறச் சுவரில் ஓர் ஆள்
ஒருபெருந் தாளை ஒட்டப்
போகையில் காவ லாளன்
தெரிந்துகொண் டதனை வாங்கிப்
படித்தனன்; திகைக்க லானான்
"அரண்மனைச் செய்தி தன்னை
அம்பலம் ஆக்க லாமோ?"

என்றந்த ஆளைக் கட்டி,
இழுத்துப்போய்ச் சிறையில் தள்ளி,
மின்தந்த இடையாள் ஆன
விநோதைபால் தாளைத் தந்தான்.
பொன்தந்தே, "எவரி டத்தும்
புகலாதே? சிறைப்பட் டோனை
இன்றைக்கே விடுத லைசெய்!"
எனச்சொல்லி அனுப்பிப் பின்னே

அம்புயம் தனை அழைத்தாள்.
"அழைத்துவா தங்க வேலை.
இம்மெனு முன்னே!" என்றாள்.
அம்புயம் ஏக லானாள்.
செம்பிலே நஞ்சும் பாலும்
சேர்த்துத்தன் அறையில் வைத்தாள்
வம்பனை எதிர்பார்த் தாளாய்
வாயிலில் நின்றிருந்தாள்!

(வேறு) அகவல்

தங்கவேல் வீடு சாத்தி இருந்தது.
தட்டினாள் தங்கவேல் சாற்று கின்றான்;
"வெளியிற் செல்ல வேண்டாம் என்றே
என்றன் தந்தைஉள்ளடைத்தான்.
வெளியில் சென்றால் வீணர்கள் என்னைக்
கொன்று போடுவர் என்று தந்தை
விளம்பினான் ஒன்றும் விளங்கவில்லை.
அவளிடம் வரஎனக் காசை உண்டு.
வரும்வகை தெரிய வில்லை; வஞ்சியே.
வாய்ப்பொன்று கூறு, வருவேன்!" என்றான்.
"கொல்லைச் சுவரில் மெல்ல ஏறிக்
குதிக்க முடியுமா?" என்றாள்.
குதித்தோடினான்அக் கோதை அருகே!
-----------------

பிரிவு -- 32

( சில்லி மகனைத் தேடி. விநோதையைக் கேட்டான். கொல்லையிற்பார் என்றாள். கொல்லையில் மகனின் பிணத்தைக் கண்டு திடுக்கிட்டாள். )

(எண்சீர் விருத்தம்)

கதவுதிறந் துட்சென்று பார்த்தான் சில்லி
காணவில்லை தங்கவேல் கைநொ டித்தே
எதுநடந்த தோஎன்றான். விநோதை இல்லம்
ஏகினான் "என்மகளே! தங்க வேலன்
குதித்தோடி னான்இங்கே வந்த துண்டோ?
கூறம்மா!" எனக்கேட்டான்! "கொழுத்த வாயன்
எதுபெறுவான்? கூச்சல் வேண்டாம்; அதுபெற்றான்.
கொல்லையிலே சென்றுபார்! என்றாள் வஞ்சி.'

கொல்லையிலே தங்கவேல் கிடக்கக் கண்டான்.
கொதித்தோடி அவனுடம்பைப் புரட்டிப் பார்த்தான்.
தொல்லையொடு மூக்கில்கை வைத்துப் பார்த்தான்.
துடைமார்பு கையெல்லாம் தொட்டுப் பார்த்தான்.
"சொல்லியதைக் கேட்டாயா அப்பா! உன்னைத்
தொலைத்தாளே! என்பேரைச் சொல்லப் பிள்ளை
இல்லையடா!'! எனப்புரண்டான்; எழுந்துட் கார்ந்தான்
பிணத்தின்மேல் கையூன்றிச் சூளுரைப்பான்;

"பிறர்தடுக்க முடியாத வகையில் அந்நந்
தணற்குநிகர் கொடியாளை விநோதை தன்னைச்
சாகும்வகை நான்புரிவேன். அதனால் என்னை
மணக்கவரும் தூக்கினையும் மகிழ்வாய் ஏற்பேன்,
வானறிக; இஃதுறுதி!'' எனஎ ழுந்து,
துணைக்குரியார் எவருமின்றிக் குழியும் வெட்டி,
உடல்வீழ்த்தி மண்ணிட்டுத் தூர்த்து நின்றே,
"கணமும்மற வேல்நெஞ்சே! அவளைக் கொன்று
கடைத்தெருவில் பிணம்நாறச் செய்வேன்!" என்றான்.
-----------

பிரிவு -- 33

( தம்பிரான் அம்புயம் மன ஒற்றுமை. )

தருமஇல் லத்தின் சோலை
தனிஒரு மாலைப் போதில்,
இருமினான் மறைவில் குந்தி
இருமினான் மீண்டும். ஓர்பெண்
திரும்பினாள் கண்டாள் அங்கே
திருமடத் தம்பிரானும்
வரும்படி விரலசைத்தான்.
வந்தனள் அம்புயந்தான்!

"ஈண்டுநாம் வந்தோம்; சோறுண்
டிருக்கின்றோம்; உறங்கு கின்றோம்.
தூண்டும்நம் உணர்வு காதற்
சுவைகண்டு மகிழ்ந்த தில்லை.
ஏண்டிஎன் மயிலே! இன்ப
வாழ்க்கையோ வேண்டாம் என்பாய்?
தாண்டிவா! தழுவு! தாவு!
சாய்; கொடு, முத்தம்?" என்றான்.

"மன்னவர் வழிவந் தோர்க்கு
மணஞ்செய்து வைப்ப தாகச்
சொன்னஅவ் விநோதை பேச்சைத்
துறந்துநான் உனைமணந்தால்
என்னதான் செய்யாள் என்னை?!'
என்றனள் அம்புயந்தான்!
தன்மான உணர்வு தோன்றத்
தம்பிரான் உரைக்கலானான்!

"குறிஞ்சிநா டாகும் பாலில்
சென்னையாம் கொடிய நஞ்சை
மறந்தும்நாம் கலக்க வேண்டாம்.
மனச்சான்று நம்மைக் கொல்லும்
மறந்தும்நாம் கலப்ப தற்கு
முயன்றாலும் வாய்மை மிக்க
குறிஞ்சிஒப் பாது, பெண்ணே!
ஒப்பாது குறிஞ்சி நம்மை!

"தீயும்ஒப் பாத செய்கை
செய்பவள் சுமந்து பெற்ற
தாயும்ஒப் பாத காமச்
சழக்கி, அன்னாள்பேர் சொல்ல
வாயுமொப் பாத வஞ்சி
யுடன்வந்தோம்; தெருவில் ஓடும்
நாயுமொப் பாது நம்மை!
குறிஞ்சியா ஒப்பும். பெண்ணே!

"தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ்உண்டா? தமிழ்ஒ ழுக்கம்
அமைவுறச் சிறிது முண்டா?
அன்றைய மறத்த னந்தான்
கமழ்ந்திடல் உண்டா? கல்வி
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளிவிலேனும்
ஒற்றுமை உண்டா, பெண்ணே?

"தனித்தமிழ் இயல்புக் கான
சலுகைதான் உண்டா நாட்டில்?
இனத்தாரின் மேன்மை தன்னை
எண்ணத்தான் உரிமை உண்டா?
உனக்கென்ன வாழ்வென் பாரை
உதைக்கத்தான் உணர்ச்சி உண்டா?
தனக்கொன்று பிறக்கொன்றென்பான்
தனைவீழ்த்த எழுதல் உண்டா?"

"தாய்மொழி நாய்மொழிக்குத்
தாழ்வென்பான் ஒழிந்த துண்டா?
வாய்மொழி வடமொ ழிக்கு
மட்டென்பான் மாய்ந்த துண்டா?
பாய்மொழி வாழ்மொ ழிக்கு
மருந்தென்பான் மாய்ந்த துண்டா?
தூய்மொழி யாளே: இன்னும்
சொல்லுவேன் உற்றுக் கேட்பாய்:

"ஏதுண்டு நம்மிடத்தில்?
இனியும்நான் உருப்படாமல்
மோதுண்டு நம்மில் நாமே
மொத்துண்டு பூணூல் காரன்
தீதுண்டாம் ஆட்சி யின்கீழ்ச்
சி்க்குண்டு, பாடை ஏறும்
போதுண்டாம் நிலைதான் உண்டு!
புயலுண்ட குழலாய்! கேட்பாய்;

"வந்தநாள் தொடங்கி இந்நாள்
வரைக்கும்நாம் கழிந்த தான
அந்தநாள் எண்ணி எண்ணி
அழாதநாள் உண்டா? மெய்யாய்
அந்தநாள் தொடங்கி யேநாம்
இற்றைநாள் வரைக்கும் இங்கே
எந்தநாளும்பெறாத
இன்பநாள் காண வேண்டும்:

"அறஞ்செய்வோம்; மறம்வி டுப்போம்
அடைந்திட்ட இடமேன் மைக்குப்
புறம்பான செயலைச் செய்வோம்,
புற்றுப்பாம் போடு சேர்ந்து,
முறம்பட்டுத் துடைப்பம் பட்டு,
நாட்டாரால் முதுகின் தோலின்
நிறம்கெட்டுப் போக மாட்டோம்
நிரம்பட்டும் நமது வாழ்க்கை.

"சொன்னபின் உணரு கின்றாய்,
துயர்கின்றாய், கண்ணீர் கொண்டாய்!
என்னென்ன செய்தாய் நீயும்?
இளந்திரை யனுக்கு நஞ்சை
உன்கையால் இட்டுக் கொன்றாய்.
தங்கவேல் உயிரை மாய்க்க
முன்ஓடி அழைத்து வந்தாய்.
மூளிக்கே தாளம் போட்டாய்!"

தம்பிரான் இவைபுகன்றான்.
கதைஎலாம் நடுநடுங்க
அம்புயம் சொல்லு கின்றாள்
"அறம்செய்வேன்; மறமே செய்யேன்!
வெம்புலி அவள்க ருத்தை
வியந்திடேன், இனிமே லிங்கே!
தம்பிரான் நீயும் என்றும்
தறுதலைத் தனத்தை நீக்கி,

"குழவிக்கல் வண்ணம் நீக்கி;
வாயிலே சாம்பல் கொட்டும்
வழக்கத்தை அறவே நீக்கி
வரிப்பாயின் கோரை போல
வன்தலை பறட்டை நீக்கத்
தனிஒரு குச்சு நாய்போல்
விழுமயிர்த் தாடி நீக்கி,
வெறுங்கோயில் புகழ்தல் நீக்கி,

"சென்னையில் ஊரை ஏய்க்கும்
செயலினை இங்கே நீக்கி,
என்னையா வரும்வ ணங்க
வேண்டுமென் பதையும் நீக்கிக்
கன்மனத் தாள வந்தார்
காலடி நக்கல் நீக்கிப்
பொன்னையே கொட்டி மாதர்
கற்பினைப் போக்கல் நீக்கி,

"விநோதைகள் உடன் அழைத்தால்
விரைந்தோடி வருதல் நீங்கி,
'கனாக்கண்டேன் சிவனார் வந்தார்'
என்னும்பொய்க் கதைகள் நீக்கி,
மனத்தினில் எந்த நாளும்
மடத்தினை அறவே நீக்கி,
உனக்குள்ள மதத்தை நீக்கி,
உள்ளவேற்று மைகள் நீக்கி,

"அதன்பின்பு மணக்க வாராய்.
அழகனே!!' என்றாள் மங்கை;
இதுகேட்டுத் தம்பி ரான்தன்
எண்ணமும் உரைக்க லானான்:
',எதுநீக்க வேண்டும் இன்றே
அதுநீக்க ஒப்புக் கொண்டேன்.
மதிநீக்கும் செயலை எல்லாம்
வஞ்சியே செய்ய மாட்டேன்,

"தாடியை நீக்கச் சொன்னாய்,
பறட்டையைத் தவிர்க்கச் சொன்னாய்,
ஏடிநீ பார்ப்பாய்!" என்றே
பறட்டையைத் தாடியைமேல்
மூடியை எடுப்ப தைப்போல்
எடுத்தவள் முன்னே வைத்தான்.
ஈடற்ற அழகு கண்டாள்.
தழுவினாள் இருகை யாலும்!
---------------------

பிரிவு -- 34

சேந்தனை ஒழிக்கச் செழியன் துணையா? அவன் ஒப்பவில்லை:

(அகவல்)

தருமஇல் லத்தில் தனியறை தன்னில்
செழுமல ரணையில் செழியனை விநோதை
நன்றுவர வேற்று நவிலு கின்றாள்;
"சேந்தன் நமக்குத் தீமை செய்கின்றான்,
மாந்தரில் அவனோர் மடையன். ஏனெனில்,
நண்பனை விநோதை நாடு கின்றாள்.
விநோதை யைநண்பன் விரும்பு கின்றான்
என்று மகிழ்தல் இயற்கை யாகும்.
அன்றிப் பொறாமை அடைவது நன்றா?

என்னை இகழ்வதும் அன்பரை இகழ்வதும்
என்ன மடத்தனம் என்பது? கேட்பீர்!

இந்த நாட்டில் கலகம் ஏற்படுத்தி
முந்த அரசனின் உயிரை முடித்துத்
தானே அரசனாய்த் தலையில் முடியுடன்
திரிவ தென்பதே சேந்தன் எண்ணம்.
அவனை ஒழிக்க ஆதரவு தருக!"
என்றாள். செழியன் எழுந்தான் எரிமலை
நிற்கும் வண்ணம் நின்றான் எரியைக்
கக்கும் வண்ணம் கழறுகின்றான்;

"மண்புரண் டெதிர்ப்பினும் மாய்க்கும் சேந்தன்
பண்பு பாருக் கணிகலம் அன்றோ!
மறைவில் என்னைநீ மகிழ்வதைச் சேந்தன்
அறிகிலான்; பொறாமை அவனுக்கு விலக்கு!
அகத்தில் அறக்குடி புகாத உன்றன்
முகத்தில் விழிப்பது முறைஅன் றென்று"
போனான், களிறு போல!
மானாள் கற்படிவம் ஆனாள் மயங்கியே!
--------------

பிரிவு -- 35

( விநோதை சில்லியிடம் சேந்தனை ஒழி எனல். )

(பஃறொடை வெண்பா)

"கேட்டாயோ சில்லி கிழக்குமேற் கானகதை.
கோட்டான் செழியன் கொடுஞ்சொற்கள் கொட்டி,
முகத்தில் விழியேன் எனவும் மொழிந்து,
புகைச்சல் விழிகள் புறம்பார்க்கச் சென்றான
எனவுரைத்தாள். சில்லி, "நடந்ததென்ன?" என்றான்.
அனைத்தும் சுருங்க அறிவித்தாள் மங்கையவள்
"சேந்தன் செருக்கெல்லாம் செப்பினேன்; சேந்தனுயிர்
தீர்ந்தால் நமக்கும் குறிஞ்சிக்கும் சீர்என்று
தக்க படியுரைத்தேன்; தாங்கா தவனாகித்
திக்கென்று பற்றியதோர் தீயானான்!" என்றுரைக்கச்
சில்லி சிரித்து "திருமகளே! சேந்தனிலை
எல்லாம் அரசனிடம் சொல்; அவனைக்
கொலைத்தீர்ப்பால் கொன்றிடலாம். கொன்றால் எவர்க்கும்
நல" மென்றான்; நங்கை நடந்தாள்.
--------------------

பிரிவு -- 36

( சேந்தனைக் கொல்ல அரசனுக்குச் சொக்குப் பொடியா? )

(அறுசீர் விருத்தம்)


பஞ்சணையில் படுத்திருந்த அம்புயத்தை
விநோதையவள் "என்ன?" என்றாள்;
வஞ்சிவள், "காரணமும் தெரியவில்லை
யோஉனக்கு? மன்ன வன்பால்
மிஞ்சுமென்றன் நலக்கேட்டை விளக்கிடுவாய்
நீசென்றே!" என்று சொல்ல,
நெஞ்சத்துச் சிரிப்பையெலாம் நேரிற்காட்
டாமலிதழ் நெருக்கிச் சென்றாள்.

"நாழிகைஒன் றாகவில்லை நாம்பிரிந்தே;
அதற்குள்ளே காத லின்ப
ஆழியிலே மூழ்குதற்கு நீயழைத்தாய்
போலும்!" என்று மன்னன் சொன்னான்.
"தோழியவள் சொல்லவில்லை யோ? அழுகின்
றேன்நானே?"என்றாள் தோகை;
ஆழூழ்என்றேகூவி அழுதுகொண்டே,
"ஏனழுதாய என்றான் மன்னன் !

"இன்றுள்ள ஆட்சிதனை அழித்திடத்தான்
வேண்டுமாம்; இன்னும் நம்மைக்
கொன்றிடத்தான் வேண்டுமாம்; சேந்தனிது
கூறுகின்றான்; அன்பின் ஆர்ப்பே!
என்றுமே இங்கிருந்த மக்களைக்காத்
திடவேண்டும் எனநினைத்தேன்;
ஒன்றந்த சேந்தன்செத்திடவேண்டும்
அல்லதுநான் சாகவேண்டும்!

"நாடுமுற்றும் நான்சுற்றி மக்களுக்கு
நல்லுணவுப் படைய லிட்டேன்;
ஈடுசொல்ல முடியாத அன்பென்மேல்
வைத்தார்கள் மக்கள் எல்லாம்;
கேடுகெட்ட சேந்தனவன் சூழ்ச்சியெலாம்
சொன்னார்கள் என்னி டத்தில்;
கூடுகட்டிக் குடிபுகுமுன் கொட்டுகின்ற
கருவண்டைக் கொல்ல வேண்டும்!

"இன்னுமொன்று கூறுகின்றேன்; யாரிடமும்
சொல்லாதீர்; என்னை அந்தச்
சின்னமதிச் சேந்தனவன் என்னிடத்தில்
தன்காதல் தெரிவித் திட்டான்;
"இந்நிலத்தில் குறிஞ்சிநில மன்னவனாம்
ஒருவனையே அன்றி, மெய்யாய்
எந்நிலத்தும் எவனையுமே எவற்றாலும்
நினையாதென் உள்ளம என்றேன்!

"சேந்தனெனும் படைத்தலைவன் உங்கட்கு
வேண்டுமா? வேண்டு மாநான்?
சேந்தன்தான் வேண்டுமெனில் மகிழ்ச்சியுடன்
கூறுகின்றேன்; அன்றி இந்த
ஏந்திழைதான் வேண்டுமெனில் இப்போதே
போயந்தத் தீயன் சேந்தன்
மாய்ந்திடவே செய்திங்கு வரவேண்டும்;
அல்லதிங்கு வராதீர என்றாள்.

இளைஞர்இடறும் பெரிய பந்துபோல்
இங்கிருந்தான் அங்கே வீழ்ந்தான்.
மளமளென அரண்மனையின் அலுவலினோர்
அனைவரையும் அழைத்த மன்னன்
குளறலுற்றான். "கூப்பிடெ" ன்றான், யாரை?" என்றான்;
"சேந்தனைத்தான என்று சொன்னான்.
உளமறிந்து நல்லமைச்சன் "வழக்குளதோ,
சேந்தன் மேல என்று கேட்க,

"ஆம்அவன்மேல் உண்டவன்மேல் வழக்கவன்மேல்
தவறவன்மேல் ஆத லாலே,
நாமவன்மேல் நடவடிக்கை உடனெடுக்க
வேண்டுவது கடமை அன்றோ?
போமவனைக் கட்டிவர ஆள்அனுப்பு
வீர்உடனே அமைச்சே!" என்றான்;
"தீமையிலே எழுவதுதான் கிளர்ச்சி!" யென
அறிவழகன் அறையலுற்றான்;

"விலங்கிட்டுக் கொண்டுவரப் பலமறவர்
சென்றார்கள்; அவர்க்கு முன்னே
நலங்கெட்டுப் போகுமென்றே அம்புயமும்
சேந்தனிடம் விரைந்து சென்றே,
கலங்கட்டும் தொழிலாளர் நடுவிருந்த
சேந்தனிடம் நிலையைச் சொன்னாள்.
துலங்கட்டும் குறிஞ்சிநிலம் எனவுழைக்கும்
தொண்டரெலாம் கூட்ட மிட்டார்!

"நாட்டார்கள் நம்பக்கம்; நாவலர்கள்
நம்பக்கம்; நாட்டின் நன்மை
வேட்டாரும் நம்பக்கம்; வீரரெலாம்
நம்பக்கம்; தொழில்செய் துய்யும்
வீட்டாரும் நம்பக்கம்; 'அரசனழைப்
பைமதிக்க வேண்டா'மென்று
கூட்டான தோழரெலாம் தாய்மையுடன்
சேந்தனிடம் கூறினார்கள்.

"இன்றிருந்தார் நாளைஇரார்; என்றுமே
வாழ்வார்கள் உலகில் இல்லை.
நன்றுக்கு நாளையிறப் பதைவிடநான்
இன்றிறக்க நடுங்க லாமோ?
அன்றியும்இந் நாட்டுமக்கள் அனைவரையும்
உணர்வுபெறச் செய்ய வேண்டின்,
நின்றார்போற் செல்லுவதும் நிலைத்தபுகழ்
நிறுத்துவதும் வேண்டும என்றான்!

நல்லதுணைப் படைத்தலைவன் வல்லானும்
மற்றவரும் வந்து சேர்ந்தார்.
"பொல்லாத வேந்தனுமைப் பிடித்துவரச்
சொல்லி விட்டான். தலைவ ரே!நாம்
எல்லோரும் மன்னவனை எதிர்த்துப்போ
ராடிடுவோம்! என்சொல்கின்றீர்!
வல்லாரை எதிர்பார்க்கும் குறிஞ்சிநிலம்
உமைக்கொன்று வாழ்வ துண்டோ?

எனச்சொன்ன வல்லானின் மனத்திண்மை
வாழ்கஎனச் சேந்தன் வாழ்த்தி,
"தனக்குள்ள நல்லுணர்வு நாட்டன்பு
மற்றவரக்கும் உள்ளதென்று
நினைக்கின்றாய்; என்கட்டை அனற்ப டட்டும்;
மக்கள்மன மதில்முளைத்த
மனக்கொதிப்பே குறிஞ்சியினை விடுவிக்கும்
உறுதி" என்றான் மகிழ்ந்து சேந்தன்!

அறமென்றொன் றிருக்கையிலும் இருகையிலும்
அறிஞனுக்கு விலங்கிட் டார்கள்.
மறமென்றொன் றிகுக்கையிலும் மக்களதை
மாற்றாத வையந் தன்னில்
திறமொன்றொன் றறியாத மன்னவன்
முன்னிலையில் சேந்தன் நின்றான்.
இற! மன்னன் என்தீர்ப்பாம். இற நீதான்
இதைமறுக்க எண்ண முண்டோ!

"அரண்மனையும் உன்கொடிய புறங்கூறல்
பெற்றதன்றோ? ஆட்சி தன்னை
இருண்டபடி ஆக்கிஉனக் கிசைந்தபடி
கூத்தாட எண்ணி விட்டாய்;
திருந்தஇனி எண்ணமுண்டா? சாகத்தான்
எண்ணமா? செப்ப வேண்டும்;
புரண்டிவிடும் இந்நாடு நின்னாலே
புதுமைபெறும் என்றாய என்றான்.

"நம்நாடு தமிழ்நாடு: நாமெல்லாம்
தமிழ்மக்கள்; இன்பம் கோரி
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே!
அம்மூச்சுத் தமிழே! அந்தப்
பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர்
புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே
இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டும்; அதை
இகழ்வானை ஒழிக்க வேண்டும்;

''சட்டமென்பார்; உலகியற்றி யாள்என்பார்;
அடியளந்தான் என்றும் சொல்வார்.
சட்டந்தான் தொழத்தக்க தென்றுரைப்பார்;
தமிழ்ச்சட்ட உண்மை கண்டும்,
கட்டறுந்த காளையைப்போல் கண்டதெலாம்
வழிஎன்று கெட்டலைந்தால்
பட்டணத்து முதலமைச்சும் பழங்குறிஞ்சிப்
பெருவேந்தும் ஒன்றே அன்றோ?

புதுநாளின் போக்குக்குப் பழஞ்சட்ட
வரிகள்சில பொருந்தா விட்டால்
எதனாலும் ஒருநொடியும் தாழ்க்காமல்
எழில்மக்கள் எண்ணம் ஆய்ந்து
புதுக்காத மன்னவனைப் பொறுக்காது
தாய்நாடு; தொழிலாளர்கள்
கொதிக்கின்றார் கூலியின்றி மதிக்கின்றீர்
இல்லையே! கொடுமை யன்றோ?

நாட்டினிலே விளைவில்லை, மழையில்லை.
அரிசிவிலை நான்கு பங்கு!
கூட்டிவிட்டார் என்செய்வார்? கூலிஉயர்
வாக்கிடவே சட்டம் வேண்டும்.
பாட்டாளி மக்கட்கே அதுவன்றி
அரசினரும் பணம் கொடுத்தே
நாட்டிவர வேண்டும்நல் லாதரவும்;
இவைகளெலாம் கருதவில்லை.

அரசியலின் எத்துறையும் பணமின்றி
அழிகையிலே கோயி லுக்கும்
உருவவழி பாட்டுக்கும் மதங்கட்கும்
அயலார்க்கும் உள்ள பொன்னை
வரவெண்ணிப் பாராமல் செலவிட்ட
மனப்பான்மை கொடிதே அன்றோ?
வரிசைகெட்ட அயலாரை இங்கழைத்த
தேன்ஐயா? வாழ்வதற்கா?

வண்டியிலே சோறெடுத்துத் தெருவெல்லாம்
மக்களுக்கு வழங்கி னாளே.
உண்டாரே ஏழைமக்கள் ஒருநாளே
அல்லாமல் மறுநாள் உண்டா?
வண்டாரும் குழல்தான் சோறுதர
ஏன்போனாள்? மக்க ளின்பால்!
பண்டுசெய்த கொலைமறக்கப் படுகொலைகள்
பலசெய்ய அன்றோ ஐயா!

''பொறுப்புள்ள அலுவலெலாம் தனக்கான
மனிதருக்குத் தான ளித்தாள்.
வெறுப்படைந்த அறிஞர்களைத் தனக்கொத்து
வராதென்று தூக்கி லிட்டாள்!
இறப்புக்குத் தள்ளினாள் இளவரசைத்
திண்ணர்தமை ஒளிக்கும் அம்பின்
குறிக்கெதிரில் கண்மூடி நிற்குமர
சரைக்கொள்வாள்; கொல்வாள் நாட்டை.

''நீரறியீர்; நானறிவேன் இனிநடக்கப்
போவதெல்லாம்! அறிந்த வண்ணம்!
ஊரறிய நகரறிய நாடறிய
முரசறைந்தே உணர்ச்சி வெள்ளம்
நேரெழுந்து கிளர்ச்சிசெயப் புரட்சியினால்
இந்நாளின் ஆட்சி தன்னை
வேரறவே ஒழிப்பதெனும் குற்றமதை
நான்செய்தேன்; வேந்தே என்னை

''ஒழித்தீர்கள்; விழித்தார்கள் நாட்டார்கள்!
நான்மகிழ உள்ளம் கொண்டீர்.
பழித்தார்கள் உம்செயலைப் பறிப்பார்கள்
உம்முடியை. மக்க ளாட்சி
செழிப்பாகும் இதோஎன்றன் இல்லம்போய்ச்
சாகின்றேன் யாரும் காண
எழிற்சாறு கழைச்சாறு நானடையச்
செய்தீர்கள்; செல்வேன்'' என்றான்.

''விடிவதற்குள் உயிர்சாய வேண்டும் நீ;
இவ்வுறுதி விளம்பிச் செல்க.
மடிவதற்கு மகிழ்கின்றாய் வருந்துகின்றேன்;
நீநாட்டில் வாழ்வ தற்கு
முடியும் ஒரு மன்னிப்புக் கேட்டுக்கொள்
மன்னனிடம்'' என்றுரைக்க
''விடிவதற்குள் மாய்வதுதான் உறுதி'' யென்று
சென்றிட்டான் வீரச்சேந்தன்.

நல்லாரும் உடனிருந்த எல்லாரும்
அழுதார்கள் நாட்டு மன்னன்,
''செல்வீர்கள் சேந்தனுடன் சாகு மட்டும்
உடனிருப்பீர்; செல்வீர் என்றான்!
நல்லாரும் உடனிருந்த எல்லாரும்
அழுதபடி நின்றதன்றிப்
பொல்லாத வேந்தனிட்ட கட்டளையும்
புகவில்லை அவர்கள் காதில்!

(எண்சீர் விருத்தம்)

இதைக்கேட்ட தோழரெலாம் சேந்தன் இல்லம்
ஏகினார். சேந்தனவன் இல்லம் சார்ந்த
மதில்வளைத்த தோட்டத்தில் புறாக்கட் கெல்லாம்
மகிழ்வோடு தீனிதந்து கொண் டிருந்தான்.
''ஏதுநீவிர் செய்த பிழை? ஏன்ஒறுத்தான்?
ஏன்நீவிர் ஏற்றுக்கொண்டீர்! எதிர்த்திருத்தால்
மதியற்ற மன்னவன் என்ன செய்வான்?
வாழ்வதற்கு நாமிட்ட பிச்சை அன்றோ?''

நல்லமைச்சன் அறிவழகன் நவிலு கின்றான்;
''நானறிவேன் சிலநாளில் அவனை மக்கள்
கொல்லுவார் என்பதனை! நீயி ருந்து
கொலைக்குப்பின் நிகழ்வதனைப் பார்க்கும் வாய்ப்பும்
இல்லையே எனநினைத்தே இரங்கு கின்றேன்.
இறத்தல்வரு மேனும்நல் லொழுக்கம் குன்றாச்
செல்வமே! சிரிக்கின்றாய். சாங்காலத்தும்!
செய்வதென்ன நாங்களினி்ச் சொல்வாய்'' என்றார்.

அறிவழகன் இதைச்சொல்லி முடிப்ப தற்குள்
அங்குவந்த தோழர் ஓராயி ரன்பேர்
நிறையவிழி நீர்உகுக்க; வல்லான் வந்து,
நின்றபடி அழுகின்றா! பெண்கள் பல்லோர்,
பிறைநுதலும் மீன்விழியும் முல்லைப் பல்லும்
பிளப்பார்போல் தளிர்க்கையால் முகத்தை மோதிப்
''பெறஅரிய என் தலைவா! அறிஞன் உன்போல்
பிறப்பதில்லை; பிறந்ததுவும் இல்லை'' என்றார்.

அம்புயத்தாள் அங்கொருபால் நின்றவண்ணம்
அணிமுகத்தில் துணிசேர்த்து ''வாழ்வேன் என்று
நம்பினேன்! ஐயாஇந் நாட்டை என்னை
நட்டாற்றில் கைவிட்டுப் போகின்றீரே?
சிம்புளொன்றும் போய்விட்டால் வெறிபிடித்த
சிற்றரிமா வுக்கென்ன செய்வோ மிங்கே?
அம்பெடுக்க வேண்டாம்நீர் குண்டு வீசி
அல்லலுற வேண்டாம்நீர் இருந்தால் போதும்!

''இசையாதா ஓர்நொடியில் பகையை வீழ்த்த!
இசையாதா நலங்காக்க! அடிவ யிற்றைப்
பிசைவார்கள் பசியாலே; அவர்கட் கெல்லாம்
பெருவாழ்வைத் தரஇசையும் ஐயா!'' என்றாள்,
அசையாமல் நின்றபடி அம்பு யத்தின்
அன்புகண்டார் எல்லோரும்! சேந்தன் சொல்வான்,
''பசையற்ற நெஞ்சினாள் விநோதைக் கேநீ
பாங்கியன்றோ? தமிழ்ப்பாங்கும் உண்டோ?'' என்றான்.

''பாங்கறியா விநோதையவள் பாங்கி ருந்த
பாங்கிதான் அன்னவளின் பழிச்செயல்கள்
தாங்கியே ஒத்திருந்த பாங்கி யேதான்.
தார்வேந்தன் தம்மனைக்குப் பரிந்து வாளை
ஓங்கிவந்த இளந்திரையன் நஞ்ச ருந்தி
ஒழியும்வகை செய்தகொடும் பாங்கி நான்தான்;
தீங்கற்ற திண்ணனைஅவ் வாறே கொன்ற
தீயாளின் பாங்கிருந்த பாங்கி நான்தான்!

''சில்லிமகன் தங்கவே லுக்கு நஞ்சைப்
பாலினிலே சேர்த்தளிக்க விநோதை ஏவ
இல்லத்தில் சென்றவனை அழைத்து வந்தே
இனமழித்த கோடரியாள் பாங்கி நான்தான்!
எல்லாம்செய் திட்டாளிப் பாங்கி; நீவிர்
எண்ணியவா றயலினத்தாள் அல்லேன்! இங்கே
செல்லாதென் றாலும்நான் வடக்கி அல்லேன்;
என்பாங்கு மெய்யாகத் தென்பாங்கையா!

''ஏழைப்பெண் அழகுடையேன் என்று தீயாள்
எனைஇங்கே ஏமாற்றிக் கூட்டி வந்தாள்;
வாழவைப்ப தாய்க்கூறிக் கூட்டி வந்தாள்;
மன்னவனைக் காட்டிஎனைக் கூட்டி வந்தாள்;
தாழ்வில்லா மன்னவனின் வழியில் வந்த
தமிழ்மகற்குக் கூட்டுவதாய்க் கூட்டி வந்தாள்;
தோழிஎன்றாள்; எனைஇங்கே தன்சூழ்ச் சிக்குத்
தோதாக வைத்திருந்தாள். சிலநாளின்முன்,

''இக்குறிஞ்சி நாட்டார்க்கு நானி ழைத்த
இன்னலெலாம் எண்ணினேன் தமிழத் தன்மை
'எக்காலும் பிழைசெய்தாய் இனிமே லேனும்
இன்பங்கொள்! அறஞ்செய்வாய்!' என்று சொல்ல,
அக்காலே இந்நாட்டுத் தொண்டராற்றும்
அருந்தொண்டில் மனம்வைத்தேன். எனைவி நோதை
செக்கிலிட்டும் ஆட்டிடுவாள் அவள்கை வென்றால்
செங்குறிஞ்சி தனில்வாழ்வேன் நீவிர் வென்றால்!"

மங்கையின்இம் மொழிகேட்டான் சேந்தன். மற்றும்
வந்திருந்தோர் கேட்டார்கள். விநோதை என்பாள்
இங்குவரும் வழியினிலே திண்ணன் தன்னை
இளந்திரைய னைக்கொன்ற தெண்ணி எண்ணி
அங்கிருந்தார் அனைவருமே உளந்துடித்தார்.
அறமுணர்ந்த சேந்தனவன் செப்பு கின்றான்;
பொங்குகின்றீர் பொங்குகின்றீர் கடுஞ்சினத்தால்
பொறுத்திருங்கள்! பொறுத்திருங்கள்.'' என்றேசொல்லி.

''அம்மாநீ ஒன்றுகேள். உன்றன் பேரை
அழகுதமிழ் 'அல்லி' என்று மாற்றிக் கொள்வாய்.
தம்பிழையைத் தாமுணர்ந்தார் தூய்மை யுற்றார்.
தமிழர்இன்றும் தமிழர்களே. அயலார் ஆகார்.
எம்மினமும் உன்னினமும் ஒன்றே; ஆனால்
எண்ணிப்பார் இன்றுள்ள நிலைமை தன்னைச்
செம்மையுறு தமிழ்நாட்டை அயலார் தங்கள்
தீயொழுக்கம் மறைத்தவர் செயலும் பெற்றார்!

''இந்நாடும் தமிழ்நாடே! இடையில் காணும்
இருங்கடலால் தமிழ்க்குருதி மாறிடாது!
பொன்நடுவில் சிற்றெறும்பின் சாரை செல்லும்
இருமருங்கும் பொன்னன்றி வெள்ளியாமோ?
ஒன்னலர்கள் தமிழழிக்கப் பலபல் ஆண்டாய்
ஒன்றல்ல பன்னூறு தரம்மு யன்றும்
பொன்றவில்லை இன்றுமிருக் கின்றாள் அன்னை
புனற்கடலும் புகைக்கடலும் என்ன செய்யும்?

''தகுகுறிஞ்சி நாட்டினிலே இருக்கின் றாய்நீ.
தாய்நாடாம் தமிழ்நாட்டில் இருக்கின் றாய்நீ.
புகுந்தநா டல்ல இது பிறந்த நாடே!
பொல்லாங்கு கனவினிலும் எண்ண வேண்டாம்.
நகும்படியோர் தமிழறிஞன் தமிழர்க் கின்னல்
நாடுவனேல் அவ்வறிஞன் முட்டாள் ஆவான்.
இகழ்மிக்க ஒருமுட்டாள் தமிழர்க் கின்னல்
எண்ணானேல் அம்முட்டாள் அறிஞனாவான்!

''வடநாட்டுச் சிறுக்கியந்த விநோதை! அன்னாள்
பொய்மையினை நீயுரைத்தாய் என்ன செய்தாள்!
அடல்நாட்டம் கொண்டிருந்தாள்! குறிஞ்சி நாட்டைக்
கண்டறிய நின்றிருந்தாள். மன்னன் சென்னை
நடமாட்டம் கேட்டறிந்தாள். மன்ன னைப்போய்
நாயாய்த்தான் வால்குழைத்துக் கைப்பிடித்தே
உடன்ஆட்டம் போடலுற்றாள்! குறிஞ்சித் திட்டில்
மன்னவனின் உறுதுணையைச் சாகச்செய்தாள்.

''மன்னவனின் இருதோளும் வாங்கு தல்போல்
வரிப்புலிகள் இரண்டுயிரும் வாங்கி விட்டாள்.
இந்நாட்டைத் தன்கைக்குள் அடக்குதற்கும்
இங்குள்ள ஒற்றுமையைக் கெடுப்ப தற்கும்
மன்னும்ஒரு பகுத்தறிவை மாய்ப்ப தற்கும்
பெருங்கோயில் கட்டுவித்தாள். மக்கள் வாழ்வைத்
தின்னுமதம் பரப்புவித்தாள். அவளின் நோக்கம்
திருநாட்டை அவள்நாட்டுக்கு அடிமையாக்கல்!

''தன்னினத்தைத் தன்னாட்டை உயர்த்து தற்குத்
தரைகடந்தும் கடல்கடந்தும் உறவை நீத்தும்
என்னென்ன பாடுபடு கின்றாள் அந்த
ஏந்திழையாள் படும்பாட்டில் ஆயி ரத்தில்
ஒன்றான பங்கேனும் ஒரு நாளேனும்
ஒருதமிழன் ஒருமறவன் நல்ல தான
தன்னினத்தைத் தன்னாட்டை உயர்த்துதற்குச்
சற்றெழுந்தால் தமிழர்குறை முற்றுந் தீரும்.

தோழியாம் அல்லிக்குச் சொல்லி யேதன்
தோழருக்கும் இனிதாகச் சொல்லலானான்;
''நாழிகையும் ஆயிற்று; விடை கொடுப்பீர்.
நானுமக்குக் கடைசிமுறை யாகச் சொல்வேன்
வாழவைப்பீர் குறிஞ்சியினைத் தலைவன் சொல்லை
மறக்காமல் நடந்து கொள்க! புலிபொறித்த
ஆழிஇதைக் காட்டுபவன் தலைவன் என்றே
அறிந்துகொள்க; வெல்கதமிழ்! குறிஞ்சி வாழ்க!''

எனமுடித்தான எல்லாரும் நடப்ப தென்ன
எனப்பார்க்க ஆவலுற்றார். சேந்தன் அங்கே
தனியாக அமைச்சனையும் வல்லான் என்னும்
தன்துணைப்ப டைத்தலைவன் தனையும் கூவி
''அனல்பெருக்கக் கமழ்தேய்வின் கட்டை சேர்ப்பீர்;
அதில் விழுந்தே உயிர்விடுதல் வேண்டு'' மென்றான்.
புனல்பெருகும் விழியோடும் அழுகை யோடும்
புறம்சென்றார் கட்டைகொணர் விப்பதற்கே!

''என்தோழா, என்னுறவே, தீய மன்னன்
இப்படியா தீர்ப்பளித்தான்!'' எனத் துடித்தே
அன்புடைய செழியனங்கே ஓடி வந்தான்;
அழுதபடி சேந்தனைப்போய் அணைத்து நின்றான்.
"என்னஇதில் அழத்தக்கதுண்டு தோழா!
இனிச்சாவேன்; இன்றைக்கே செத்தால் என்ன?
மனத்தெளிவு கொள்வாய்நீ. மாய்வேன் இன்று;
மக்களெலாம் உ.யிர் பெறுவீர் நாளை!'' என்றான்.

செழியனைஓர் தனியிடத்தில் அழைத்துச் சென்றான்.
''திருநாட்டில் குடியரசை நிறுவ வேண்டும்
அழகியஇப் புலிபொறித்த ஆழி தன்னை
அடையாளம் காட்டினால், தொண்டர்! உன்றன்
மொழிகேட்பார்; தலைவனென ஒப்புக் கொள்வார்.
முன்னின்று புரட்சிதனை நடத்துவிப்பாய்.
தழைகஎழிற் றாய்நாடு; தமிழே வெல்க!
தணல்அணையும் இரவுமிதோ!'' என்று சொன்னான்.

மணந்துடித்தான் செழியனவன். ''அந்தோ! அந்த
மங்கையினால் விளைந்ததிது நீஇ றந்தால்
இனந்துடிக்கும்; இளைஞரெலாம் துடிது டிப்பார்.
அதோ அந்தத் தீயாளைக் காண்பேன்'' என்று
முனம்பாயும் வேங்கையைப்போல் பாய்ந்து சென்றான்
முழுநிலவு விண்ணெல்லாம் முத்துக்குப்பை
தனியான குளிர்செய்ய நடுத்தோட் டத்தில்
தணற்காடு மூட்டுகின்றார் சேந்தன் தோழர்!
----------------

பிரிவு -- 37

( விநோதையும் செழியனும் மாடியில் உலாவல். செழியன் வருத்தம். )

சிந்தியல் வெண்பா

சிலந்தி இழைபோலும் செம்பொன் னிழையால்
நலந்திகழ் ஆடை நலங்கா -- மலே உடுத்துப்
பட்டரைக்கை மேற்பட்ட பன்மணிகள் மின்ன, மணி
எட்டரைக்கும் மேல்மாடி ஏறினாள் -- தொட்டரைத்த
பூச்சுமணக் கக்குழலில் பூக்காடு தான்மணக்கக்

கீச்சுக் குரல்பாடிக் கிள்ளையவள் -- நீச்சுநினை
வில்லா இருகெண்டை உண்கண் எதிர்செலுத்தி
நில்லா இருகால் நிலைக்கவைத்துப் -- புல்லாய்
இடைசுருக்க நின்றாள். செழியன் இருகண்
கடைசுருங்க வந்தான்! களித்த -- நடையன்னம்
''பஞ்சணையில் மன்னன் படுத்துறக்கம் கொள்ளஒரு
நஞ்சணைந்த மாம்பழத்தை நல்கிப்பின் -- நெஞ்சணைந்த
காதல் துரத்தக் கடிதாக மேல்மாடி
மீதில்வந்து மெல்லிநான் நின்றேனிப் -- போதுநான்
இங்குன்பால் இன்பமுற எண்ணினேன், என்செய்வேன்!

அங்கவனைத் தூக்கத்தில் ஆழ்த்தினேன் -- எங்கும்
ஒருவர் மகிழ்ச்சிஎனில் மற்றொருவர் துன்பம்.
இருவர் மகிழ்ச்சியில் நேற்றுன் -- திருவிரலின்
தூயநகம் பட்டதனால் தோகைஎன் மார்பினிலே
நோயடைந்தேன் இங்க தனைநோக் குங்கால் -- ஆயஇன்பம்
நீர்கொள்ள நேரிழையாள் துன்புற்றேன்'' என்றுரைத்து
மார்பை மறவனுக்குக் காட்டிநிற்க -- நேர்ச்செழியன்
கண்டான்; கருதிவந்த செய்தியையும் தான்மறந்து
வண்டாகி மங்கை மலரிதழ்த்தேன் -- உண்டும்.

உலவியும் ஓடியும் ஆடியும் பாடி
நிலவைப் புகழ்ந்தே நெடிதே -- குலாவுகையில்
வந்து கொண்டிருந்த குளிர்காற்றில் மணமேமி --
தந்து கொண்டிருந்ததனை மெல்லியவள் -- 'இந்த மணம்
எங்கிருந்து வந்ததோ?' என்றாள், செழியனுளம்
பொங்கி, ''கொடியவளே போக்கிவிட்டாய் -- தங்கத்தை
நாட்டில் மிகுந்த நரிதொலைக்கக் கற்றவனை
ஈட்டி முதுகில் எறிந்து கொன்றாய் -- காட்டுப்

புலிக்குக் குழிதோண்டிப் பொத்தெனவே வீழ்த்தி
நலிக்குள்ளா கச்செய்தாய் நாட்டைக் -- கொலைகாரி
அந்தோ, அதோ சேந்தன் வேகின்றான்! அப்புகைதான்
சந்தனத்து நன்மணத்தைத் தாங்கிவந்த -- திந்தநிலை
எந்தவகை பொறுப்பேன்? ஏனோநான் வாழுகின்றேன்!
நைந்தேனே! நான்செய் கடமைமறந்துவிட்டேன்,
பெண்புரிந்த வஞ்சத்தால் பேதுற்றேன் -- மண்புதையக்
கண்ணொப்பாய் என்றன் கருத்தொப்பாய் -- துண்ணென்று
வேகின்றாய்'' என்று விரைவாய்ச் செழியனவன்
போகின்றான் கண்ணீர் பொழிந்து.
-------------------

பிரிவு -- 38

( அரசனிடம் விநோதையின் வேலைப்பாடு. )

(அறுசீர் விருத்தம்)

மலர்ந்தது காலை! மன்னன்
மலர்ந்தனன் விழிகள்! வஞ்சி
''புலர்ந்ததே பொழுது! நீங்கள்
புதுத்தூக்கம் தூங்கலானீர்!
அலைந்ததென் காதலுள்ளம்
அருகினிற் காத்தி ருந்தேன்.
பலமணி நேரம் பார்த்தேன்.
எழவில்லை! படுத்துக் கொண்டேன்!''
என்றனள் விநோதை மன்னன்,

''என்னமோ தெரிய வில்லை.
..................................................
உன்அரு மாம்பழத்தை
உண்டதே அறிவேன்! பின்னர்
என்னதான் நடந்த தென்றே
அறிகிலேன்! யான் விரும்பும்
கன்னலே! என்பொ ருட்டா
இரவெல்லாம் காத்தி ருந்தாய்?''

எனக்கேட்டான் மன்னன். 'ஆமாம்!
இருட்காட்டில் பசித்த ஓர்பெண்
தினைக்கூட்டுத் தேனை எண்ணித்
திகைக்கமாட் டாளா?" என்றாள்.
"மனக்காட்டில் உனைம றந்து
மலர்விழி மூட வைக்கும்
சுனைக்காட்டுத் தழையு முண்டோ?
தோகையே!" என்றான் மன்னன்.

"உண்ணாமல் என்னை வைத்தே
உறக்கத்தில் சென்ற நீங்கள்
பண்ணாத தீமை ஒன்றைப்
பண்ணினீர்! இத்தீ மைக்குக்
கண்ணாள ரோடு நானே
கடலிலே படகிலேறி
எண்ணாத முத்தெ டுக்க
எண்ணினேன என்றாள் மங்கை!

"குலைப்பழம் வேண்டா மென்னும்
குரங்கைநீ கண்ட துண்டோ?
மலைப்பழ இதழ்ப்பெண்ணாளே!
வாகடற் கரைக்கு; காதற்
கலைப்பழக் கத்தைச் செய்வோம்.
கனற்கதிர் பழுக்கு மட்டும்!
நிலைப்பழச் செய்யும் காலை
நிகழ்ச்சியாய் அதை முடிப்போம்!

'நடுப்பகல் வீடு வந்து
நடத்துவோம் ஆடல் பாடல்!
எடுப்பான அழகு நங்காய்!
எழு! நட! போவோம்!" என்றான்.
"படைத்தலைவன்மடிந்தான்;
பலதலை வர்கள் குந்தி
அடுத்தஓர் கிளர்ச்சிக் கான
திட்டமொன்று அமைக்கின்றாராம்!

"நடுங்கிடு கின்றோ மாம்நாம்
தலைவர்கள் நவிலு கின்றனர்.
நடுக்கம்நம் மிடத்தில் இல்லை;
அவரிதை அறிய வேண்டும்
இடும்பைசேர் சேந்தன் செத்த
இடத்தில்நம் மணவி ழாவை
நடத்திடல் செய்தல் வேண்டும்.
நடுங்காமை காட்டுதற்கே!"

தொன தொன என்று பேசித்
தொலைக்கின்றாய் நேரந் தன்னை!
இனிதான செய்தி சொன்னாய்
எழுந்திரு கடலுக் கென்றால்
கனியின்மேல் கனிவைக் கின்றாய்
கடிமணம் புரிவ தென்றால்
பனிமலை தாழ்த்தல் என்று
பாவைநீ நினைக்கின் றாயா?

"நாளைஓர் நாளைத் தள்ளி,
மறுநாளே மணத்தைக் காலை
வேளையே புரிந்தால், எந்த
வீரப்பன் தடுப்பான்? எந்தக்
கோளன்தான் கிளர்ச்சி செய்யக்
கூட்டத்தை நடத்தி னான்? அவ்
வாளைத்தான் பார்க்க வேண்டும்;
அச்சத்தால் இளைக்காதேநீ!"

என்றனன் இருவர் தாமும்
கடற்கரை ஏகினார்கள்.
நின்றது படகு. வேந்தன்
நேரிழை இருவர் ஏறச்,
சென்றது படகு, மங்கை
சிரிப்பினை இதழிற் கூட்டி.
ஒன்றென்றாள் விரலை நீட்டி!
நீபாடென்று உரைத்தான் மன்னன்.

"காற்றொன்று மறிக்கும் இங்கே!
கடலொன்று முழங்கும் இங்கே!
தாற்றுக்கோல் துள்ளு காளைப்
படகொரு பக்கம் இங்கே!
நேற்றுப்பா டியதே பாட
நினைக்கின்றேன்!" என்றாள்; வானத்
தூற்றலொன் றங்கே காற்றின்
துடுக்குமங் கெழுந்த போது,

"இடிமின்னல் காற்று மாரி!
ஐயையோ!" எனவி நோதை;
மடியினில் மன்னன் ஏந்த,
மலர்முகம் கவிழ்ந்தாள். அந்தப்
படகொரு கூத்தா டிற்றே
கதகளிப் பாங்காய்! ஆட்கள்
"எடுபிடி" என்றார்! மேலும்
இடிமின்னல் காற்று மாரி!

"அடங்கிற்றா மழைதான்! மேலும்
அகம்நடுங் கிடவே மேலும்
தொடங்கிற்றா! மணப்பெண் அன்றோ!
தொட்டது கலங்கி டாதோ!
படகினில் மீகா மன்காள்,
பாரிரோ?" என்றான்; அன்னார்
'எடு பிடி' என்றார்! கண்டார்
இடிமின்னல் காற்று மாரி!

'நின்றது மழை,என், கண்ணே!
நீஅஞ்சேல்; காற்றும் 'நின்றேன்'
என்றது. இடிஇ லேசு
கொண்டது மின்னல் இல்லை!
நன்றுநீ எழுந்தி ருப்பாய்;
நடுக்கத்தை லிடுவாய் பெண்ணே!"
என்றனன்; எழுந்து கண்டாள்
இடிமின்னல் காற்று மாரி!

துன்பமே அறியேன், என்றன்
தோகைநீ கிடைத்த பின்னர்;
இன்பமே இடைவி டாமல்
எய்திடு கின்றேன்; இந்த
நன்றான நிலையைக் காண
நாங்களா பொறுத்தி ருப்போம்.
என்றன, பாழாய்ப் போன
இடிமின்னல் காற்று மாரி!"

அழுதானிவ் வாறு கூறு
அரசனும், ஆட்கள் யாரும்
"மழைதானும் மட்டு! மின்னல்
மட்டடி மட்டுக் காற்றே!
கழிமட்டும் படகின் ஆட்டம்
கண்டமட்டுமட்டெ"ன்றார்; ஏந்
திழைகண்டாள் இரண்டு பங்காம்
இடிமின்னல் காற்று மாரி!

"போயி்ன நமது வாழ்வே!
போயின இன்பம்!" என்றே
சேயிழை விநோதை தானும்
திகைத்தாளாய்த் திட்டுகின்றாள்;
"நாயொன்று கழுதை ஒன்று
நலமிலாப் பன்றி ஒன்றாம்.
ஈயொன்றாம் இங்கே இந்த
இடிமின்னல் காற்று மாரி!"

(வேறு)

மக்களுயர் மன்றத்தில் மக்கள் கூடி,
வாயார வாழ்த்தினார், மழையைக் காற்றைத்
தக்கபேரிடியைஎழில் மின்னல் தன்னை
தரையெல்லாம் வயலெல்லாம் ஏரி எல்லாம்
மிக்கபெரு வெள்ளத்தைக் கண்டு கண்டு
மேனிஎலாம் ஒளிசிறக்க மகிழ்ச்சி கொண்டார்;
"புக்கஒரு வறுமைநிலை போயிற்றெ"ன்றார்,
"பொதுவாழ்வும் உயரு" மெனப் புகன்றார் யாரும்!

அப்போது சில்லியங்கே ஓடி வந்தே,
"அரசரொடு விநோதையம்மை கடலிற் சிக்கி,
இப்போது தொல்லையில் இருக்கக் கண்டோம்.
நம்கடமை என்ன" வென்றே எரிந்து வீழ்ந்தான்.
சப்பாணி, "சரி போடா!" என்று சொன்னான்.
சந்தப்பன், "சாகட்டும்!" என்று சொன்னான்.
"எப்போது மழை நிற்கும்?" என்றான் முத்து,
"மழைநின்றால், வந்திடுவார என்றான் தொப்பை.

"பெரிதப்பா என்கேள்வி! சின்ன தல்ல!
பெரியவர்கள் பதில்சொல்ல வேண்டும என்றே
உரிமையுடன் சில்லிசொல்ல, அமைச்சன் சொல்வான்
"உனக்கெப்ப டித்தெரியும் அரசன் தொல்லை!'
"வரிசையற்ற கேள்விஇது! நான்தான் கேட்டேன்.
வானாற்றுத் தொலையொலியில என்றான் சில்லி.
"சரி அடடா வல்லானே! உதவிக்காகத்
தக்கபடி செல்க!" என அமைச்சன் சொல்ல,

"நான்செல்ல அட்டியில்லை; நடுமார் புக்குள்
நண்டொன்று புகுந்துவிளை யாடு தல்போல்,
மேன்மேலும் பெருகிற்றோர் குத்த" லென்று
விளம்பினான் நல்லபடைத் தலைவன் வல்லான்;
"தான்போக லாம்,கிழவன் ஆத லாலே,
முடியாதே!" என அமைச்சன் தானும் சொன்னான்-
"ஏன்போனார், மன்னவனும் அயலாள் தாமும்?"
எனக்கேட்டுச் சிரித்திட்டான் செழியன் ஆங்கே!

சில்லியவன் தலைமையிலே படைவீரர்கள்
செல்லட்டும்; வல்லோனே ஏற்பா டொன்று
நல்லபடி செய்தனுப்பு; மழையும் காற்றும்
நள்ளிருள்போல் வல்லிருட்டும் வருதல் கண்டோம்!
செல்லப்பா!" என்றமைச்சன் சொல்ல, வல்லான்,
மூடுவண்டி தனிலேறிச் செல்லலானான்;
சில்லிசொன்னான், "எனக்கிந்தப் பெருமை தந்தீர்!
நன்றிஐயா நன்றி" என்று சொல்லிச் சென்றான்.

சரியாக நான்குமணி மாலை யாகத்
தையலுடன் மன்னவனும் ஏறிச் சென்ற
ஒருபடகு கரையினிலே வந்து சேர,
ஒருவருமே தனக்குவராக் கார ணத்தால்
பெரும்படகின் ஆட்களே இறங்கிச் சென்றே,
அரண்மனையின் தனிஅறையைப் பெருக்கிக் கூட்டி.
இருவரையும் படுக்கவைத்தார்; அமைச்சன் வந்தான்.
"ஏன்எவரும் இங்கில்லை?" என்றான் மன்னன்.

"சம்பள மில்லாமல்அலு வல்பார்ப் பாரோ?
நம்வீட்டில் வெறும்பானை பொங்கு மோ?இவ்
வம்புசெய வேண்டாங்காண், மன்னா! இந்த
மங்கையுடன் விளையாடல் ஒன்றே உன்றன்
செம்மைநெறி என்றெண்ணி இருக்கின்றாயா?
சின்னசெயல் விடுக!" என அமைச்சன் சொன்னான்.
"எம்மைநீ கடலினின்று காப்ப தற்கே
ஏன் ஆட்கள் அனுப்பவில்லை" என்றான் மன்னன்.

"யாருக்குத் தெரியும்நீ சென்றசேதி?
எவனுக்குத் தகவல்தந்தாய் கடலினின்று?
பாருக்குள் வியப்பன்றோ உன்செயல்கள்?
பகர்ந்தனைநீ வானாற்றுக் கருவி யாலே
யாரைஅழைக் கச்சொன்னாய்? சில்லி தானா
உனக்கமைச்சன்? கூறிடுக! எனினுமந்த
ஊரைஏமாற்றுகின்ற சில்லியோடே
ஒருபடையும் அனுப்பிவைத்தேன என்றான் மூத்தோன்

நெறுநெறுவென்றேபல்லைக் கடித்தான் மன்னன்!
நேரிழையாள் மன்னவன்வாய் அடங்கும் வண்ணம்
குறுக்கினிலே புகுந்திதனைச் சொல்ல லானாள்:
.......................................................
"வெறுக்கும்வகை மன்னர்நடப் பதுபிழைத்தான்;
மேலுமிது போல்நடக்க மாட்டார்; உங்கள்
குறிப்பைப்போல அரசியலை நடத்த" என்றாள்,
கூறினான் மன்னவனும், "ஆம்ஆம என்றே!

"என்குறிப்புப் போல்நடக்க இசைந்த தற்கே
இந்நாட்டின் பேராலே நன்றி சொன்னேன்;
முன்குறிப்பேன் மன்னனிடம் என்கு றிப்பை
முடித்திடுவேன் அதன்பிறகு செயல்ஒவ் வொன்றும்!
புன்னெறியை விடவேண்டும்! வையம் மேலும்
புகழவே செய்கைதனைச் செய்தல் வேண்டும்!"
மன்னவன்பால் இதுகூறி விடையும் பெற்று
மகிழ்ச்சியுடன் நடப்பான்போல் அமைச்சன் சென்றான்.

அமைச்சனவன் சென்றவுடன் விநோதை அங்கே
அரசனிடம் சொல்லுகின்றாள்; அருமை அத்தான்!
அமைச்சன்மேல் உனக்கெழுந்த சினமோ அந்த
அமைச்சனுயிர் குடிப்பதுவாம்; நான்த டுத்தேன்;
அமைச்சனைநாம் வெளிப்படையாய் வெறுத்தல் தீமை
அமைச்சனைக்கொண் டேமணத்தை முடிக்க வேண்டும்.
அமைச்சனுரை கேட்டதனால், அவனைச் சார்ந்தோர்
அகமின்ன தென்றுநாம் அறிந்து கொண்டோம்.

"திருமணத்தை முடித்திடுவோம்? அதன்பின் னேநாம்
செயத்தக்க தின்னதென்று செப்பு கின்றேன்.
ஒருபயலும் நமக்கிங்கே உதவ மாட்டான்.
நம்மையெலாம் ஒழிப்பதுதான் அவர்கள் எண்ணம்.
இருக்கட்டும் சில்லி நமைத் தேடிவந்தான்,
என்றுரைத்தான் அமைச்சனவன், எங்கே சென்றான்?
பெருங்கடலில் பெருந்தொல்லை பெற்றான் போலும்?
என்றுரைத்தாள், மங்கையவள்! சில்லி வந்தான்.

"அவ்வளவு பெருங்கடலில் எங்கும் தேடி
அலைந்தோமே! எங்கிருந்தீர் அவ்வெள் ளத்தில்
எவ்வளவு சிறுபொருளும் துழாவிப் பார்த்த
என்கையில் கிடைத்திருக்கும் நீங்கள் மட்டும்
இவ்வழியாய் வந்திருக்க வேண்டும என்றே
இடதுகையை வேறுபக்கம் வளைத்துக் காட்ட
'மௌவலூர் நேர்க்கரையை நோக்கி நாங்கள்
வந்திட்டோம் அதுபற்றி வருத்தம் இல்லை!

"அலைகடலில் எங்கள்நிலை தன்னை நீவிர்
அமைச்சனிடம் சொன்னீரா? என்ன சொன்னான்?
தலைக்கொழுப்பாய் ஏதேனும் சொன்ன துண்டோ?
சாற்றிடுவீர்!" என மங்கை சாற்றச் சில்லி
"தலைக்கொழுப்பு மட்டுமல்ல வாய்க்கொ ழுப்பும்
தன் கொழுப்பும் பிறர்கொழுப்பும் சொல்லக் கேட்பாய்!
'அலைகடலில் ஏன்போனான் மன்னன்?' என்றான்;
ஆர்என்றால் அவன்றானே செழியன் என்பான்!
"மக்கள்பொது மன்றத்தில் அமைச்சன் மற்றும்
வல்லானோ டாயிரம்பேர் இருந்த போது
இக்கதையை நான்சொன்னேன். என்னை நோக்கி
எளிதாகப் பலநாய்கள் பேசக் கண்டேன்;
செக்காடும் பொன்னன் மகன் வல்லான் என்ற
சிறந்ததுணைப் படைத்தலைவன் கேலி யாக
"மிக்கவலி மார்பினிலே ஆதலாலே
மேவாது, வரமாட்டேன என்றுரைத்தான்!

"போனவர்கள் சாகட்டும் அதனா லென்ன?
போடாநீ!" என்றுரைத்தான் அங்கோர் முட்டாள்.
'தேனடா மங்கைஅந்த மன்னனுக்கு?
சென்றவர்கள் ஒழியட்டும்; அதனா லென்ன?
நீநாய்போல் ஏன்வந்தாய் என்றான் ஓர்ஆள்!
நீர்ப்பெருக்கு விழிமறைக்க அழுதேன்; பின்பு
நானந்த அமைச்சனிடம் கடைசி யாக
'நடப்பதென்ன?' எனக்கேட்டேன்; அவனுரைத்தான்;

"உன்னுடம்பு சரியில்லை; படைவீ ரர்கள்
உயர்அறிஞர் சில்லியுடன் போக வேண்டும்;
என்ஆணை -- அவர்களிடம் சொல்லிக் காட்டி
இப்போதே அனுப்பென்றான்; அதுபோல் வந்தேன்.
என்னென்றன் கருத்தென்றால் விநோதை யம்மா
வீரத்தில் நல்லறிவில் மிகுந்த மன்னி!
அன்பில்லாச் செழியனொடு வல்லான் மற்றும்
அமைச்சன்முதல் அனைவரையும் ஒழிக்க வேண்டும்.

"இச்செயல்கள் விநோதையால் முடியும்; வேறே
இசைவான ஆட்களையும் அவ்வேலைக்கே
மெச்சும்வகை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீண்காலம் போக்குவதில் பயனே இல்லை.
பொய்ச்சிரிப்பும் பொறாமையுமே உருவாய் வந்த
பொறுக்கிகளை ஒருசிறிதும் நம்பவேண்டாம்
எச்சரிக்கை அல்ல இது; மன்னவர்பால்
என்தாழ்ந்த விண்ணப்பம்!" என்றான் சில்லி.

"அஞ்சாதே சில்லியப்பா! நடப்ப தெல்லாம்
அரசர்க்கு நன்றாகத் தெரியும்; ஒன்றும்
மிஞ்சிவிட மாட்டார்கள்; தீய வர்கள்
முறுக்குகின்ற மீசையிலே தீயே மூளும்!
நெஞ்சார நீர்மட்டும் அப்ப கைவர்
நிற்கு மிடந்தனிலேயும் நிற்க வேண்டாம்.
பஞ்சிழைக்குப் பட்டப்பொறி உடனிருந்த
பட்டுக்கும் பட்டுவிடும் அன்றோ?" என்றாள்.

புகழ்ச்சியினை மேலாக்கும் பிள்ளை தன்னைப்
புதைத்துவிட்ட விநோதைமேல் உள்ள தான
இகழ்ச்சிதனை உள்ளுக்குள் வைத்த சில்லி,
இட்டதொரு கட்டளையை முடிப்ப வன்போல்
"மகிழ்ச்சியம்மா மகிழ்ச்சியம்மா! என்று சொன்னான்
மன்னவனும் சேயிழையும் திரும ணத்தின்
நிகழ்ச்சிமுறை அழைப்புமுறை மணத்தின் பின்னர்
நிலைக்குமுறை! இவைபற்றிப் பேசி நின்றார்.
---------------

பிரிவு -- 39

( தரும இல்லத்தின் நிலை )

(அகவல்)

தரும இல்லம் உருமழுங்கிற்றே
தெருப்புறம் ஏழைகள் செங்கை ஏந்தித்
தலைகாட் டுவதும் இல்லை; கொலை, கவர்
பொதுமக ளிர்தரும் புதுவி ருந்துகள்
நாடொறும் நடைபெறும் வீடா யிற்றே!
நட்ட நடுவிற் பட்டப் பகல்போல்
மின்வி ளக்குகள் விளைத்தன ஒளியை!
மணிப்பொறி பன்னிரண்டு மணிஅ டித்ததே.
அணித்தாய்ச் சுற்றிலும் அமைந்த அறைகளில்
ஒன்று கவறா டுமிடம்; மற்றொன்று
கட்கு டிக்கு மிடமே; கட்டில்கள்
இட்டபொது மக்கள் நட்பிடம் ஒன்று;
கழக உறுப்பினர் காத்திருப்ப தொன்று;
நடுக்கூடம் ஆடல் பாடல்
நடக்கும், ஆயிரம்பேர் நண்ணு மிடமே!

--------------------

பிரிவு -- 40

( ஒழுக்கக்கேட்டின் கோட்டையே தரும இல்லம். )

(அறுசீர் விருத்தம்)


தரும இல்லத்தை நோக்கித்
தமிழச்சி மடவார் தோழி
இரவினில் ஒரும ணிக்கு
நடக்கின்றாள்! இடையில் பல்லோர்
"அருந்தமிழ் மங்கையேநீ
அங்கேசெல் லாதே அம்மா!
திருநாட்டின் ஒழுக்கம் காப்பாய்!"
என்றனர். அவளுரைப்பாள்;

"நடப்பதை அறிதல் வேண்டும்
நடப்பினிற் சேர்தல் தீதே
படைவலி யுடையான் மன்னன்
பாவையாள் சில்லிக் கேதான்
இடப்பட்ட வேலை தன்னை
இயற்றுவான், என்னிடத்தில்
தடுக்காமல் தரும இல்லம்
சற்றுவா" என்று சொன்னான்.

"போகின்றேன்; தோழ ரேநீர்
இங்கிரும்; போக வேண்டாம்.
ஏகிடும் என்போன் றோரை
'ஏகாதீர்' என்று சொன்னால்,
'சாகின்றோம்!' என்பார். சாகா
திருப்பார்கள் அன்றோ?" என்று
போகின்றாள் மடவார் தோழி,
போக்கற்ற கூட்டம் நோக்கி.

தீதற்ற தமிழர் தாமும்,
சிவானந்தர் சிவசம் பந்தர்
மாதர்மேல் மைய லாகி,
மறைமுக மாகப் போனார்.
மாய்தரும் கள்ளை எண்ணி
மாலுக்கோர் அடிமை சென்றான்.
வாய்திறக்காதி ருந்தார்
வழியினில் தோழரெல்லாம்!

சுவரோடும் சில்லி தானும்
சுற்றுமுற் றும்பார்த் தானாய்க்
கவறாடும் எண்ணத் தோடு
கடிதாகச் செல்லும் போதில்,
"எவர்போவார்?" என்று கேட்டார்
வழிநின்ற இளைஞர் சில்லோர்
"எவர்கேட்பார்?" என்றான் சில்லி
இருந்தவர் இயம்பு கின்றார் :

"இங்கொரு மங்கை உள்ளாள்
ஏதேனும் பொருள் கொடுப்பார்
தங்கட்குத் தன்னை ஈவாள்
சடுதியில் வரவி ருப்பம்
உங்கட்கும் உண்டோ?" என்றார்.
"இல்லை!" என்றோடிப் போனான்.
செங்குத்தாய் நின்ற தென்னை
வீழ்ந்தாற்போற் சிரித்தார் வீழ்ந்தே!

பொய்க்காடு வஞ்சக் குன்று,
புன்செயற் பெருக்கு நெஞ்சில்
எக்கேடும் நிறைந்த பள்ளம்,
இரக்கமொன் றில்லா ஏரி!
முக்காடு போட்ட வண்ண
முகமலர் மறைத்த வண்ணம்
நிற்காமல் சென்றாள், நின்றோர்
"யார்?" என்று கேட்க லானார்.

"நானன்றோ அல்லி!" என்று
நடந்தனள் விநோதை! ஓர்ஆள்
"ஏனந்த அல்லி அங்கே
ஏகுவா ளானாள்?" என்றான்.
"ஊனந்தான் அவளு ரைத்தாள்.
உண்மையில் அல்லி அல்லள்,
ஆனமுக் காட்டை நீக்கி
அறிகின்றேன்!" என்றான் ஓர்ஆள்.

"கானத்தைக் கையால் தள்ளிக்
கடலைக் காலால் கலக்கும்
ஆனையை அறைந்து கொல்லும்
அருந்திறற் செழிய னுக்குத்
தேன் அவள்! விநோதை யாள்பால்
செல்லாதே!" என்றான் ஓர்ஆள்
"ஏனினி இங்கிருத்தல்?"
என்றனர் ஒருங்கு சென்றார்!
--------------------

பிரிவு -- 41

( தரும இல்லத்தில் தமிழ்ச்சுவையும் இருந்தது. பல தீச் செயல்கள் நடைபெற்றன. )

(அறுசீர் விருத்தம்)

கூடமோர் ஆடரங்கு!
கொடியிடை துவளும் வண்ணம்
ஆடுமோர் அல்லி காற்றால்
ஆடுமோர் அலரிக் கொம்பு!
பாடுமோர் குறிஞ்சிப் பாட்டுத்
தமிழ்மேன்மைக் கெடுத்துக் காட்டு!
வாடுங்கால் கலைநுகர்ந்து
மகிழ்ந்தது தரும இல்லம்!

ஆடலும் முடிந்த பின்னர்
அனைவரும் கள்ளை மொண்டார்!
ஓடையில் பிடித்து வந்து
பொரித்தமீன் உண்டார் சில்லோர்!
ஓடியே ஆட்டி றைச்சி
சிவாநந்தர் மகிழ்வாய் உண்டார்!
சாடிக்கள் தலைக்கறிக்கே
தக்கதாம் சம்பந்தர்க்கே!

கவலையை புறத்தில் தள்ளிக்
கள்ளிலே மனத்தைத் தள்ளிச்
சுவைகாண்பார் தம்மில் ஓர்பெண்
துயர்வாய்ந்த முகத்தா ளாகி
அவைக்கொரு புறத்தில் குந்தி
இருந்தனள்; அவளை அந்தச்
சிவாநந்தர் திரும்பிவந்து
திருப்பினார, மலர்முகத்தை!

திருமாலுக் கடிமை அங்கோர்
திருக்குடத் திருக்கள் எல்லாம்
திருவாய்க்குள் சேர்த்தாராகித்
திருமண்ணில் கவிழ்த்து வைத்துத்
"திருவேங்க டத்தோய்! உன்றன்
திருவருள் வேண்டி நின்றேன்.
திருக்கள்ளுக் குடமாய் உள்ள
திருமாலே அருள்வாய்." என்றான்.

"தழையாக்கிப் பூவும் ஆக்கிச்
சாலைகள் சோலை ஆக்கிக்
கழையாக்கும் திருமா லேநீ
கருந்தேள்போல் கடுக்கும் கள்ளை
மழையாக்கி என்றன் வாயை
மடையாக்கி அருள் புரிந்தால்,
பிழையாக்குவாரோ உன்றன்
பெருமையை" எனக்கும் பிட்டான்!

"உளமாக்கி, உயிரை ஆக்கி,
உயர்ந்திடும் ஆசை ஆக்கி,
வளமாக்கி, வாயும் ஆக்கி,
வாங்கிடக் கையுமாக்கி,
இளமாதர் தம்மை ஆக்கும்
என்கண்ணா! புளித்த கள்ளைக்
குளமாக்கி என்றன் வாயைக்
குடமாக்கி அருள்வாய என்றான்;

அழைத்தஅச் சிவாநந் தன்மேல்
அசைந்துவீழ்ந் தெழுந்து, வேறு
கொதித்தஓர் காளை யின்தோள்
குலுக்கினான் அதேநே ரத்தில்
உழைப்பாளர் தலைவ னான
செழியனங் கோடி வந்து
"விழற்காடே! வெறிபிடித்த
விநோதையே!" எனப்பிடித்தான்!

பிடித்தஅப் பிடியைத் தள்ளி
"என்பெயர் அல்லி" என்று
முடித்தாளாய் ஓர்அறைக்குள்
முன்ஓடிப் புகமு யன்றாள்.
படித்தாளாய் அங்கி ருந்த
பாவையாம் மடவார் தோழி
இடித்துத்தள்ளிட விநோதை
எதிர்நின்ற கூடம் சேர்ந்தாள்!

கூடத்தில் விநோதை யாளின்
முக்காடு குலையச் செய்து
"ஓடிப்போ நாயே!" என்று
கீழ்த்தள்ளி உதைத்துச் சென்றான்:
ஈடற்ற செழியன்! மங்கை
எழுந்தனள் அறைக்குச் சென்றாள்.
மாடப்புறாபோல் அங்கே
இருந்தனள் மடவார் தோழி!

விநோதைதன் இடுப்பி னின்று
வெடுக்கெனச் சுழல்துப்பாக்கி
தனைத்தூக்கிச் சுட்டுத் தீர்த்தாள்.
தலைசாய்த்த மடவார் தோழி,
அனல்மனப் பார்ப்பால் சுட்ட
அண்ணலாம் காந்தி ஆனாள்!
மனம்பட்ட அச்சம் அங்கே
வானையே நடுங்கச் செய்யும்!

பழுபனை மட்டை வாலில்
பசங்கள்தாம் கட்டி விட்ட
கழுதைபோல் விநோதை ஓடி
அரண்மனைக் கதவை மூடி
விழிதுயில் அரசன் மேலே
விழுந்தனள், அவன்விழித்தே,
"அழைத்தேன்முன் உன்னை" என்றான்!
"அதற்குத்தான் வந்தேன்,' என்றாள்!

அரசன்பால் வழக்கு ரைக்க
வந்தனர் சிலபேர், அங்கே
அரசனும் அமைச்சன் தானும்
அவைஉறுப் பினரும் கூடி
"உரைப்பீர்கள் வழக்கை" என்ன!
உரைக்கின்றார், "மடவார் தோழி
இரவொரு மங்கை யாலே
இறந்தனள். அந்த மங்கை;

இவ்வரண் மனையில் வந்து
புகுந்தனள்; வியப்பீதன்றோ?
செவ்விதின் அவளைத் தேடி,
ஒறுத்தலும் செய்ய வேண்டும்.
ஒவ்வாத செயலால் எங்கள்
ஒருமகன் மனைஇ ழந்தான்.
அவ்விளையோன் இழப்புக்
காயிரம் பொன்னும் வேண்டும்!"

என்றனர் அமைச்சன், "அவ்வா
றியற்றிய கொடியாள் எங்கே?
நன்றாக அரண்மனைக்குள்
தேடுக!" எனநவின்றான்.
சென்றார்கள் பல்லோர். அந்தத்
தீயாளைத் தேடினார்கள்.
வந்தாள்அவ் விநோதை அங்கே,
மன்னன்பால் உரைக்கலானாள்;

"அல்லியை மடவார் தோழி
முக்காட்டை அகற்றி மானம்
இல்லாமற் செய்ததாலே,
எரிச்சலால் சுட்டுக் கொன்றாள்.
நல்லதோர் அல்லி என்பாள்
என்னிடம் அதைநவின்றாள்.
வல்லிநான் அன்னவட்கு
மன்னிப்பும் தந்து விட்டேன்!

"முடிந்தது வழக்கு; மற்றும்
முறையீடு செல்லா திங்கே!
கடிந்தொன்றும் பேச வேண்டாம்.
கடைகட்டிப் போவீர என்றாள்.
மடிந்தவள் உறவினோர்கள்
மன்னனின் முகத்தை நோக்க,
"முடிந்தது வழக்கு; மற்றும்
முறையீடு செல்லா" தென்றான்!

"ஆட்சியும் உண்டா நாட்டில்?
அறங்காக்க ஆள்தான் உண்டா?
மாட்சிமை யுடைய மன்னர்
வழிவந்தும் அழிவைச் செய்யும்
காட்சியும் கண்டோம் மக்கள்
கண்ணீரைக் கண்டோம் மக்கள்
மீட்சிதான் என்றோ?" என்று
விளம்பினார் உளம்பதைத்தே!

தெருவெலாம் அழுத கண்ணீர்
சிந்திற்றுத் தெருவா ரெல்லாம்
வெருவியே என்ன என்று
வினவினார். நிலைஅறிந்தார்.
பெருவியப் படைந்தார். நாட்டின்
பேரழிந் ததுவோ!" என்றார்
அருகினில் தம்பிரானும்,
சொல்லிய அனைத்தும் கேட்டான்;

அளவிலா வருத்த முற்றான்.
அளவிலாச் சினம டைந்தான்.
தளிர்மேனி இளமை கொண்ட
தையலாள் தரும இல்லக்
களியாட்டில் கண்ட தெல்லாம்
கண்டிராச் செய்கை என்று
குளிரிதழ் அல்லியின்பால்
கொடுஞ்சினத்தோடு சென்றான்.

"இரவினில் மடவார் தோழி
என்பவள் உன்னா லன்றோ
ஒருகுண்டால் கொல்லப் பட்டாள்!
ஒழிந்தனள் அன்றோ மங்கை?
தருமஇல்லத்தை நீயேன்
சார்ந்தனை, மான மின்றி!
அரண்மனை செல்வ தாக
அறிவித்தாய என்று கேட்டான்!

"மெல்லாடை முள்ளில் பட்டால்,
மெதுவாக வாங்க வேண்டும்;
பொல்லாதாள் செல்வாக் கில்லம்
புகுந்திட்டோம், மீள்தற்கு
நல்லதோர் காலம் வேண்டும்;
வரும்வரை நாம்அவட்கு
நல்லவர் போல்நடத்தல்
நம்கடன் அன்றோ அத்தான்!

"தேங்கிய பள்ளத் தண்ணீர்
திடீரென்று வற்றும்! மங்கை
தாங்கிய அதிகாரந்தான்
சரியில்லா தெனினும், அற்றுப்
போங்காலம் விரைவிற் காண்போம்.
பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
ஓங்கியோர் அடியில் பாம்பை
ஒழித்தல் மேல்! எழுப்பல் தீது!

"தீமைசெய் திடுதல் கண்டும்
சென்னையில் பார்ப்பானைப்போய்
சாமியென் றுரைக்கும் மக்கள்
தன்மைபோல் படைவீரர்கள்
ஆமைபோல் அடங்கு கின்றார்.
அரசனின் தீமை கண்டும்.
காமாலைக் கண்ணர் மக்கள்!
கரிப்பொடி மஞ்சள் என்றார்!

"தொண்டர்கள் தொண்டு செய்வார்.
தொழும்பர்கள் அதைஎ திர்ப்பார்.
மண்டுகள் திருந்து கின்றார்
மதியுளார் பெருகு கின்றார்
கண்டவர் காணார்க் கெல்லாம்
குறிஞ்சியின் நிலைமை கூறிப்
பண்டைய நிலையில் நாட்டைப்
பார்த்திட அவாவுகின்றார்.

"மணியோசை கேட்டோம். யானை
வருவது மெய்யே அன்றோ?
தணிவது மெய்யே, மக்கள்
தணியாத துன்பம் எல்லாம்.
பிணியில்லை மூப்பு மில்லை
பெற்றவள் செந்தமிழ்த்தாய்.
அழியாத ஒழுக்கத்திற்கோர்
அழிவில்லை உரிமை வந்தால்!

"தருமஇல் லத்துக் கேதான்
தவறாமல் வருதல் வேண்டும்.
வருவது மட்டு மின்றி
வந்தவர், மகிழும் வண்ணம்
அரும்குறிஞ்சிப்பண்பாடி,
ஆடவும் வேண்டு மென்று,
பெரியதோர் ஆணை யிட்டாள்.
மறுத்துநான் பேச வில்லை.

"ஆடலும் முடிந்த தங்கே;
விநோதையும் முக்கா டிட்டு
வாடிய முகத்தா ளாகி
வந்தனள் வந்தா னங்கே
தேடிய சிவாநந் தன்தான்,
திருப்பினான் அவள் முகத்தை!
ஓடினாள் சம்பந்தன்பால்
செழியனங் கோடி வந்தான்!

"முக்காட்டை நீக்கப் போனான்.
'அல்லிநான்' எனமொ ழிந்தே
அக்கட்டில் அறையிற் செல்ல
அங்குள்ள மடவார் தோழி,
'இக்கட்டில் வராதே' என்றே
எற்றினாள்! விநோதை கொண்ட
முக்காட்டை விலக்கிக் காலாற்
புடைத்தனன் செழியன்! சென்றாள்.

"தலைஇன்னாள் என்று காட்டத்
தள்ளிய மடவார் தோழி
யினைச்சுட்டு வீழ்த்தி விட்டாள்,
எதற்குமஞ்சா விநோதை.
அனற்காட்டில் குளிர்காய் வார்போல்
ஆடலை முடித்து வீட்டில்
உனைக்கண்டேன் வந்து மாமா!
இதுவன்றோ உண்மை!" என்றாள்.

"ஆடலும் இனிமேல் வேண்டாம்;
அத்தீயர் நடுவில் சென்று
பாடலும் வேண்டாம். அந்தப்
படுகாலி இனிஅ ழைத்தால்,
'வாடிய துடம்பு! மெய்யாய்
வயிற்றிலும் வலியே!' என்று,
போடொரு போடு நீதான
என்றுதம் பிரான்புகன்றான்.
----------------

பிரிவு -- 42

கடற்கரை தனைஅடுத்துக்
கட்டிய பெருமன் றத்தில்,
தடுத்திட்ட ஆற்று வெள்ளம்
ததும்பிட நின்ற தைப்போல்,
உடுத்திய மக்கட் கூட்டம்
ஒன்றினைக் காட்டிச் சில்லி
அடுக்கிடு கின்றான் சொல்லை
அனைவரும் மகிழும் வண்ணம்;

"தோழியீர், தோழன் மாரே!
சொற்பெருக்காற்றி நாட்டை
வாழவைத் திடுவாய் என்று
மங்கைஅவ் விநோதை சொன்னாள்
ஏழையான் மறுப்பே னானால்,
யான்படல் நாய்படாது
தோழியீர், தோழன் மாரே!
தொடங்குவேன் சொற்பெருக்கை;

"மன்னரும் விநோதை தானும்
மகிழ்ச்சியால் வாழ வேண்டும்
இன்னலை நாட்டு மக்கள்
இன்பமாய்க் கொள்ள வேண்டும்.
மன்னர்பால் படைகள் உண்டு,
மக்கள்பால் என்ன உண்டு?
புன்மைபேசாமல் மக்கள்
புற்றுப்பாம்பாக வேண்டும்.

"அரசரின் தீயொழுக்கம்
அரசியைக் கொன்ற தென்று
ஒருசிலர் சொல்லும் சொல்லில்
உண்மையே சிறிதும் இல்லை!
அரசியின் தலையில் முன்பே
அப்படி எழுதி வைத்த
ஒருவனை வெறுக்க வேண்டும்;
மன்னனை வெறுத்தலுண்டோ?

"அரசியார் இறந்தார் என்ற
சேதியை அறிந்தாராகித்
திருவிளா மாவட்டத்துத்
திண்ணனும் இளைய வேந்தும்
வரும்போது, விநோதை தானும்
வாய்வல்ல குமுதம் தானும்
மருந்திட்டுக் கொன்றார் என்று
மக்களிற் சிலர்சொல்கின்றார்,

"சேல்விழி விநோதை என்றன்
செல்வனை காதலித்தாள்
ஏலவே அவனிடத்தில்
இன்பமே அடைந்து தீர்த்தாள்.
மேல்ஒரு நாள்அப் பையன்
அதையெலாம் வெளியிற் சொன்னான்
பாலிலே நஞ்சை இட்டுப்
படுகொலை செய்தாள் என்பர்.

"இதைஎலாம் நம்ப லாமா?
இப்படி இனிச்செய் தாலும்
அதைஎலாம் மக்கள் யாரும்
அறிவிலா மக்கள் யாரும்
அதுவரை செய்து தீர்ந்த
தீமையை எடுத்துச் சொல்வார்.
அதையெலாம் நம்பலாமா?
நம்பினால் ஆவதென்ன?

"கோயிலைப் பெரிதாய்க் கட்டிக்
கொழுக்கட்டைப் பாவை வைத்து;
வாயினால் வேண்டச் செய்து
மறையவன் தன்னை அங்கே
நாயைப்போல் குலைக்கச் சொல்லி
நமைக்கூலி கொடுக்கச் சொன்னாள்.
ஆயவை அனைத்தும் மக்கள்
அழிவுக்கா செய்து வைத்தாள்?

"அரசியாற் செல்வ மெல்லாம்
அரோகரா ஆயிற்றென்றால்
வருநூற்றாண் டுக்கும் பின்னும்
வராமலா போகும்? நாட்டில்
அரிசிக்குப் பஞ்சம் என்றால்,
அனைவரும் ஒழிந்தா போனார்?
இருக்கின்றோம் சாக வில்லை
இதையாரும் நம்ப வேண்டும்.

"விநோதைதான் சேந்தனாரை
விரும்பினாள். 'ஒப்பேன்' என்றார்
தனதுமன்னவனைக் கொண்டு
தணலிடை வேக வைத்தாள்.
இனையதோர் செய்தி கேட்டோர்
எல்லாரும் அழுதாரென்றால்,
விநோதையும் அழுத துண்டோ?
வீணுக்கேன் புளுக வேண்டும்?

"நான்சொல்லி வந்த தென்ன?
சுருக்கமாய் நவிலுகின்றேன்.
தேன்கேட்கும் வண்டு! பிள்ளை
தின்னக்கேட்கும் வெண் கொக்கு
மீன்கேட்கும், குரங்கு வாழைப்
பழங்கேட்கும் விநோதை தன்னை
ஏன்கேட்க லாகா திங்கே
இருகையை நீட்டிச் சோற்றை!

"தலைவனால் எறியப் பட்ட
தனித்தவேல் பாய, நெஞ்சு
குலையாத குலைநாய் சற்றும்
குலையாமல் வாலை யாட்டும்.
விலையிலா மாணிக்கத்தாள்
விநோதைதான் உதைத்திட்டாலும்;
குலையாமல் உதைத்த காலுக்கு
ஒருமுத்தம் கொடுக்க வேண்டும்!'

என்றொரு நகைச்சு வைதான்
எழுந்திடப் பேசும் போது,
நின்றொரு தோழன் கேட்டான்;
"எம்நலம் குறித்த பேச்சா?
மன்னரின் நலம்குறித்த
பேச்சாநீர் நவின்ற தெல்லாம்?''
என்றனன். சில்லி "என்பேச்சு
இருபாலும் மகிழ்வதென்றான்.

"விநோதைக்கும் உனக்கும் ஏதோ
பகையென விளம்பு கின்றார்,
எனிலது மெய்யா?" என்றான்
இன்னொரு தோழன்! சில்லி,
"தனிப்பகை பொதுவில் காட்டல்
தகைமையே அல்ல" என்றான்.
"இனிப்பகை வருமோ?" என்றான்.
"இனிப்பகை இனிப்பே!' என்றான்.

"இன்னுமோர் சொல்லைச் சொல்லி,
என்னுரை முடிப்பேன் கேளீர்?
மன்னனை ஆத ரிப்பீர்,
விநோதையை மறக்க வேண்டாம்!"
என்றனன், சென்றான் அங்கே.
இருந்தவர் கைகள் கொட்டிப்
"பொன்னான சில்லி பேச்சில்
பொதுநலம் மிகுதி" என்றார்!
----------------

பிரிவு -- 43

( செழியன் மேல் நினைவு )

(அகவல்)

மாலையில் குளிர்த்த சோலையில் விநோதை
ஆலை உருளையின் கரும்புபோல் அகமொடிந்து,
'செழிய னன்றித் தேற்றுவாரில்லை.
விழியின் எதிரில் விளையாடு கின்றான்.
நினைப்பினைக் கவர்ந்தான் நிறைந்த அன்பினன்.
எனக்கென்று வாய்த்த இன்ப மணாளன்,
இந்த மாலையில் அந்தச் செழியன்,
என்றன் தோளில் எழிற்றோள் சாய்த்துத்
தன் அன்பு சேர்ந்த தமிழ்ச்சொல் ஒன்று
சொல்லக் கேட்டால் தொல்லை போ'மென,
எண்ணிப் பெருமூச் செறிந்தாளாகி,
அண்மையி லிருந்த அல்லியை அழைத்தாள்.

"செழியனை அழைத்ததாகச் சொல்லுக,
வழிபார்த் திருப்பேன் விரைவில் வருக!"
என்றாள். அல்லி ஏகினாள் பின்னும்
அங்கு வந்த சில்லியை அழைத்துச்
"செழியனைக் கெணர்க!" என்று செப்பினாள்.
நல்ல தென்று நடந்தான்
பொல்லாப் பசியினள் போன்றாள் விநோதையே!
-------------------

பிரிவு -- 44

( சில்லியின் எண்ணம். )

(அகவல)

செழியனைத் தோழர் சில்லோர் கண்டு,
சில்லியின் சொற்பொழிவு சொல்லி இருந்தனர்.
'சில்லி அஞ்சு கின்றான் சிலநாள்
செல்லு மாயின் திருந்துவான்; அவன்தான்
விநோதையின் பகைவன்; மேலுக்குத் தன்னை
விநோதையின் நண்பனென்று விளம்பு கின்றான்."
என்றுகூறி, "இருங்கள் வருவேன
என்று வீட்டினுள் ஏகினான்; அல்லியும்,
சில்லியும் அங்குச் சேர்ந்தனர். சில்லி
இருக்கும் தோழர்பால் இயம்பு கின்றான்;

"எங்கே செழியனார்? அங்கே சோலையில்
அரசி விநோதை அழுதிடு கின்றாள்.
அழுகையால் அவளின் விழிநீர் நிலத்தில்
விழும்நிலை அடைந்தது. விரைவில் செழியனார்
வந்தால் நிலைக்கும் வஞ்சி யின்னுயிர்
உட்சென்று நீவிர் ஒருசொல் சொன்னால்
சட்டென்று வரவும் சரிப்படும்!" என்றான்.
அதற்குள் செழியன் அங்கு வந்தான்.

"தனிமையிற் பேசுதல் தக்கது. சற்றே
அருள்கூர்ந்து நீவிர் அமைக!" என்றான்.
ஒப்பினான் செழியன். "உங்கள் காதலி
உடனே உன்னரும் உயிர்க்கு மருந்தாய்
உடனே அழைத்து உடனே வரும்படி
என்னை உடனே அனுப்பினாள் சோலையில்
புன்னை அருகே புதுக்கிய திண்ணையில்
காத்திருக் கின்றாள என்று கழறினான்.
"பார்க்கின் றேன்என்று பகர்வாய்!" என்று
செழியன் சொல்லச் சில்லி நடந்தான்!
அல்லியும் சென்றாள். அங்குள்ள தோழர்கள்
செழியனை நோக்கிச் செப்பு கின்றனர்.

'நச்சும் நம்தாய் நாட்டு வாழ்வின்
அச்சை முறிக்கும் விநோதையின் அழகு
விலைக்குவாங்கிற்றா உன்னை? விடுதலை
குலைக்கும் கொடிய கோடாரிக் காம்பே
போ!" எனப் பேசிப் போனார் தோழர்.
செழியன் வருவதோர் பழியையும் அவளைவிட்
டொழிவதால் வருவதோர் ஓயாத துன்பையும்
எண்ணி உலவி இருந்தான். விநோதையின்
வெண்ணிலாமுகம், சிரிப்பு விழிஇவை
மண்ணிலாருக் குவரும் என்று.
நண்ணினான் விநோதை நண்ணிய சோலைக்கே!
------------------

பிரிவு -- 45

விநோதையின் சூழ்ச்சி

தத்தும் தவளையாய்த் தாவிச் செழியன்மேல்
தொத்தினாள், தோகை அழுதாள். "துடித்தேன்
ஏன்மறந்தீர என்றாள் உடன் அணைத்துத்
தான்முந்தித் தந்த தனிமுத்தம் ஒன்றுக்குப்
பத்தாகப் பெற்றாள்; ஓடிப் பாவைக்கே நீநாளும்
ஒத்துவந்தால் ஆவி உலகில் இருக்கும்.
வெறுத்தால் உயிரும் வெறுக்கும் இனிமேல்
பொறுப்பதில்லை. நாமிருவர் பூப்போல் மணம்போல்
இருள்மாற்றும் இன்ப நிலைபோல் குளிர்போல்

ஒருமித்தல் வேண்டும் எனக்கும் அவனுக்கும்
திருமணம் என்னுமொரு திட்டமுண்டு. நான்என்
ஒருமனத்தை உன்மேல் வைத்தேன்; உறுதியிது.
பூணாக் குரங்குக்குப் பூமாலை நான் என்றால்,
வீணாய் இறைத்த விழலுக்கு நீரன்றோ?
என்மாசுக் காக எனைவெறுத்தல் இல்லாமல்
பொன்மாசு தீர்க்கும்ஒரு பொற்கொல்லன்போல்
என்னை மணக்க இசைந்திடுதல் வேண்டும். இனி
மன்னன் ஒருமனத்தை மாற்றும் வகைதன்னை
நான்புரிவேன் வாரீர் அறைக்கெ''ன்ற மங்கையுடன்
தேன்புரியும் தாரான்சென்றான்!

--------------

பிரிவு -- 46

(மன்னனிடம் விநோதை)

அறுசீர் விருத்தம்

மகளிரில்லத்தில் மன்னன்
மடிமீது தலையை வைத்து
நகுநகு என நகைத்தாள்.
ஏனென்று மன்னன் கேட்டான்?
"திருமணம் முடிந்த பின்னர்
தையல்பின் உன்அன் பால்ஓர்
மகன்தோன்றி. என்வயிற்றை
வண்ணான்சால் ஆக்கி வைப்பான்!

"கண்ணாடி தன்னில் என்னைக்
காணுவேன்; சிரிப்பேன்!" என்றாள்.
"பெண்ணே நீஅதைநினைந்தா
பெருநகை கொண்டா" யென்றான்.
"திண்ணமே!" என்று நங்கை
ஒருசெய்தி உரைக்கலானாள்;
"கொள்மணம் கொள்ளு முன்னே
கோள்நிலை பார்த்தல் வேண்டும்.

"சிவாநந்தர் தமைஅ ழைத்தால்
தெளிவுறச் சொல்வார என்றாள்.
சிவாநந்தர் அழ்க்கப் பட்டார்.
"திருமணம் பொருத்தம் மற்றும்
இவரெதிர் காலம் என்றன்
எதிர்காலம் பார்க்க!" என்றாள்.
அவரவர் பிறந்த நாளை
அறிவிக்கத் தெரிந்து கொண்டு

நடப்பதைச் சொல்லிப் பின்பு்
ஏடுகள் நாலைந் தாறு
படபட எனத்தி ருப்பிப்
பலகையில் எழுதிப் பார்த்து
நெடுந்தொகை விரலால் எண்ணி,
நெற்றியை வருடிப் பின்னர்
"கடுந்துன்பம் அடைவார்; ஆனால்!
கடப்பார்பின், இன்பங் கொள்வார்!

"நன்மணங் கோயி லுக்குள்
நடைபெறும். அதைத் தொடர்ந்து
முன்னுற்ற பகைவன் வீட்டில்
முறையாக ஆடல் பாடல்
இன்னும்பல் வேடிக் கைகள்
இயன்றிடும்; நாலு நாட்பின்,
கன்னியை மணந்த காளை
கட்டாயம் இறப்பான்!'' என்றான்

"ஐயையோ!" என்று தையல்
அழுதுமண் ணிற்பு ரண்டாள்
"வையத்தில் எனக்கேன் வாழ்வு
மன்னவர் இறப்பா ரானால்
உய்ந்திட வழிவே றுண்டா?
உரைக்கமாட் டீரா?" என்றாள்.
"நைவதேன் அதற்குப் பின்னே
நடப்பதைக் கேட்பாய என்றான்;

"மணந்தவன் இறந்த பின்நீ
மறுமணம் செய்து கொண்டு்,
பிணங்குதல் பிரிதல் இன்றிப்
பேரின்பப் பெருவாழ் வாற்று.
மணல்போலப் பல்லாண்டிங்கே
வாழுவாய என்று சொல்ல,
அணங் "கெனக் கிவர்தாம் வேண்டும்
ஐயோ!" வென்றழுது நின்றாள்!

"அழுவது மடமை அம்மா!
அறிவிக்கின்றேன் அதைக்கேள்;
மழைபோலும் இன்பம் நல்கும்
மன்னரைப் பின் மணப்பாய்,
பழியில்லை; முதலில் நீஓர்
பகைவனை மணப்பாய், அன்னோன்
ஒழியட்டும் நாலு நாளில்
உனக்கென்ன? என்று ரைத்தான்,

"ஒருவனை முதல் மணப்பேன்
அவனுடன் உறவு கொள்ளேன்,
சரிதானே" என்றாள் தையல்
"சரிதானென் றுரைத்தான், பார்ப்பான்.
"வருவாரா ஊரார்?" என்றாள்.
"வருவார்கள் நிறைய" என்றான்
"பெரியதோர் மகிழ்ச்சி செய்தீர்!
"போய்வாரும்!'. என்றாள் பெண்ணாள்.

போயினன் சிவாநந் தன்தான்;
போனபின் வேந்தை நோக்கித்
"தூயஎன் அன்பே! என்ன்
சொல்கின்றீர்? பகைவ னான
தீயஅச் செழியன் தன்னைத்
திருமணம் முதலிற் செய்தால்
மாயத்தான் நேரும். நாமும்
மறுமணம் புரிந்து தேனில்
ஈயொத்து வாழக் கூடும்!"

என்றனள்..".அவ்வாறேசெய்
இன்புற்று வாழ்தல் ஒன்றே
என்எண்ணம்! மேலும் அந்த
இழிவுறு செழியன் தன்னை
முன்மணம் புரிந்து கொள்ள
முடிவுசெய் தாயன்றோநீ?
என்னதான் சொல்வேன் உன்றன்
புலமையை!" என்றான் மன்னன்.
--------------------

பிரிவு -- 47

(முரசு அறைதல்.)

(அறுசீர் விருத்தம்)

யானையின்மேல் முரசறைவோன் இசைக்கின்றான்
"விநோதைக்கும் செழிய னுக்கும்
ஆனசிவன் கோயிலிலே திருமணந்தான்
விடியுங்கால் ஆகு மென்றே!
போனவரும் அவ்வழியே வந்தவரும்
இதுகேட்டார்; "புதுமை" என்றார்.
ஏனிவனும் அவள்வலைக்குட் பட்டுவிட்டான்;
நாட்டுக்கும் இழிவே அன்றோ?

குடியாட்சி கோருகின்ற தொண்டரெலாம்
இதுகேட்டுக் கொதிக்க லானார்;
முடியாட்சி இருந்தபடி இருப்பதுவே
நன்றென்று முழங்கும் சில்லோர்
"பொடியாயிற்று அவரியக்கம்!" என்றார்கள்;
அறிஞரெலாம் புலம்ப லானார்!
இடியாயிற் றமைச்சருக்கும் அலுவலகத்
தாருக்கும்; 'ஏஏ' என்றார்!

"அரசன்கை உயர்ந்ததென்றும் மக்கள்கை
தாழ்ந்ததென்றும் அறைந்தார் பல்லோர்.
உரன்மிக்க செழியனுக்கு விநோதையினை
உடன்கூட்டித் தன்கட் சிக்கோர்
பெருவலியைத் தேடினான், மன்னவனும்!
அவன் பெருமை பிரிந்த தெ"ன்று
தெருவிலுளோர் ஊரிலுளோர் நகரிலுளோர்
பெரும்பாலோர் செப்பினார்கள்;

"அயல்நாட்டாள் என்னுமோர் பழியினின்று
நீங்கினாள் அதுவு மின்றிப்
புயலெழுந்து படியெழுந்து பொதுமக்கள்
எதிர்ப்பினையும் போக்கிக் கொண்டாள்;
துயிலுகின்ற மன்னவனின் துணைகொண்டு,
படைவீரர் துணையும் கொண்டாள்!
இயல்பிலுயர் வலியுடையான் செழியனையும்
கணவனென இழுத்துக் கொண்டாள்!

"நெறிதவறி நடப்பவளை நிறையில்லா
விநோதையினை நாட்டு மன்னர்
முறைதவறித் திருமணமே முடித்துக்கொள்
வார்என்று முன்நினைத்தோம்.
குறிதவற வில்லையன்றோ? கொள்கைவிட
வில்லையன்றோ? என்றார் சில்லோர்.
"மறந்துவிட்டான் தன்நிலையைச் செழியனினி
வாழான என் றுரைத்தார் சில்லோர்?

ஈப்பறக்கும் ஒலியுமில்லை! இருபதினா
யிரந்தொண்டர் பொதுமன்றத்தில்
தீப்பறக்கும் விழியோடு, சினம்பறக்கும்
நெஞ்சோடு சென்றுட் கார்ந்தார்.
நாப்பறக்கும் சொற்களிலே நெடுமாறன்
எனும்மறவன் சொல்ல லானான்;
"வாய்ப்பறஅவ் விநோதையினைச் செழியன்மணந்
திடல்சிறிதும் வாய்மை இல்லை;

"விநோதையிடம் இருந்திந்தக் குறிஞ்சியினை
மீட்பாரை விட்டு நீங்கி,
இனத்தாரை ஏமாற்றிக் குறிஞ்சிபெற்
நினைப்பாரை ஆத ரித்தான்!
தனதெனஓர் கொள்கையிலான்; தன்னலமே
பெரியதென்பான்! செழியனைப்போல்
மனத்தாரால் தீமையலால் இனத்தார்க்கு
வருநன்மை சிறிது முண்டோ?

"அருந்திறனும் பெரும்பண்பும் உடையனெனும்
புழுக்கோர் அழிவைச் சேர்ந்தான்,
இருந்திடலும் தீமைஎன நாமெலாம்
எண்ணும்வகை இழிவைக் கொண்டான்
பெருந்தவறாய்க் கோயிலிலே திருமணமும்
புரிவதென உறுதி கொண்டான்
திருந்திடவும் நாம்சொன்னால் தெளிந்திடவும்
முடியாத நிலையடைந்தான்!

"இதுசெய்வான் செழியனென்று நாமெல்லாம்
கனவினிலும் எண்ண வில்லை
பதைபதைக்கச் சேந்தனுயிர் மாய்த்தவளை
மணக்கின்றான்; பாவி யானான்
மிதிபட்டுச் சாவதற்கும் மேம்பட்டு
வாழ்வதற்கும் கார ணந்தான்
மதிஅல்ல. தலைஎழுத்தே என்பவனை
ஒருதமிழன் மதிக்க லாமா?

(வேறு) அறுசீர் விருத்தம்

என்றனர் புலம்பி னார்கள்;
இன்னும்அங் கொருவன் சொல்வான்;
"சென்றநம் சேந்த னார்தம்
புலிபொறித் திட்ட ஆழி்
தன்னையாரிடத்தி லேதான்
தந்துசென் றார்!ந மக்கே
இன்றெவர் தலைவர்? நம்மை
யாவர்தாம் காக்க வல்லார்?

"தக்கான்பால் அன்றி வேறு
தகாதான்பால் ஆழி தன்னை
வைக்கிலார் சேந்த னார்தாம்!
ஆழியை வைத்தி ருப்போன்
எக்காலம் புரட்சிக் காலம்
என்பதை அறிவானன்றோ?
அக்காலம் அதைந டத்த
ஆழியைக் காட்டு வானோ?"
-----------------

பிரிவு -- 48

(செழியன் விநோதை பார்ப்பனத் திருமணம்.)


அறுசீர் விருத்தம்

கோயிலின் கூடந் தன்னில்
மணவறை அமைத்தி ருந்தார்.
ஏயும்அம் மணவ றைக்கே
எதிரினில் அரசாணைக்கால்.

தீயிடச் சுள்ளி, சால்கள்!
திருவிளக் கம்மி ஆப்பீ
தோய்தயிர் நெய்பால் மற்றும்
தூயதேன் கருப்பஞ் சாறு,

முக்கனி அரிசி மூட்டை
மும்முழக் குருத்து வாழை
மிக்கபூ சிவப்பு மஞ்சள்
வெண்ணீறு கரித்தூள் சோறு
செக்கெண்ணெய் சீயக் காய்த்தூள்
மிதியடி பனிரண் டாறு
பைக்குளிக் கறிகள் காய்கள்
பனைமடல் விசிறி தேங்காய்,

பயறுகள் குடைபொன் வெள்ளிப்
பலபொருள் முறம்து டைப்பம்!
பயின்றிடும் அன்பு வெள்ளம்
படிவதாம் மணத்தினுக்கே
வியந்தஇப் பொருள்கள் எல்லாம்
விழலென்னும் விழலின் கற்றை
முயன்றுமே பரப்பி வைத்தார்.
முழங்கின இசைகள் முற்றும்.

நெற்றிமுப் பட்டை, மார்பில்
நெடியமுப் பட்டை, தொப்பை
மற்றுமுப் பட்டை, தோளில்
மூன்றுமுப் பட்டை, உச்சி்
பிற்கழுத் தின்முப் பட்டை,
பெருமுழந் தாள்முப் பட்டை,
சிற்றின சாம்பற் பட்டைச்
சிவாநந்தன் வந்து உட்கார்ந்தான்!

ஒருபுறம் சிவசம் பந்தன்;
திருமாலுக் கடியான் ஓர்பால்!
அரிவையாம் அல்லி ஓர்பால்;
அழுமூஞ்சிச் சில்லி ஓர்பால்
வரைவிலாப் படைத்த லைவன்
வல்லான்ஐந் தாறு வீரர்
இருந்தனர். மணத்தின் மக்கள்
இனிவர இருக்கின் றார்கள்.

"துவக்கவா" என்றான் பார்ப்பான்
துவக்குக!" என்றான் சில்லி
தவளையின் கத்தல் போலக்
கத்தினான்! கடிந்து சில்லி
"கவலையேன் தமிழி ருக்கக்
கழறுக!" என்று சொன்னான்.
"இவைஎலாம் மந்திரங்கள்
தமிழினில் இல்லை!" என்றான்.

"தமிழனில் இலாத ஒன்று
தமிழருக் கேதுக கென்றான்
அமைதியை எண்ணி ஆங்கே
அவைகளை நிறுத்தம் செய்து,
"அமைவுறு பெண்மாப் பிள்ளை
இருவரை அழைப்பீர என்றான்.
தமிழனும் விநோதை தானும்
சார்ந்தனர், மணவ றைக்குள்!

"ஆப்பீஏன், அடிமுட் டாளே!
அகறறென்றான் மணமாப் பிள்ளை
"ஆப்பீயின் மந்திரத்தால்
அமைப்பேன்அப் பிள்ளை யாரின்
காப்புவேண் டாமா?" என்றான்
"காப்புமேன், கொலுசு மேன்காண்!
தோப்பினில் கொண்டு போட்டுத்
தொலை!" என்று செழியன் சொன்னான்;

மஞ்சளால் மந்திரித்தான்.
மாத்தெய்வம் ஆக்கல் என்னும்
வஞ்சத்தைச் சூழ்ச்சி தன்னை
மறுத்தனன் செழியன்! பார்ப்பான்
நெஞ்சத்தால் நெருப்பானான்போல்,
நெருப்பினை வளர்க்க லானான்.
"தம்சேர்க்கை தொடங்கு வார்முன்
தணல்ஏன்?" என்றான்மாப்பிள்ளை!

தாலியைக் கையி லேந்தித்
தமிழனின் கையில் தந்து,
"சேலிணை விழிவிநோதை
கழுத்தினில் சேர்ப்பாய்!" என்று,
நூலினை அணிந்த பார்ப்பான்
நுவலவே, செழியன் போதும்;
பாலுள்ள அன்பே போதும்
பழுதைஏன்?" என்று கேட்டான்.

"திருமணம் நடத்த வந்தேன்.
திருவடி தொழுவீர்!" என்றான்.
சரேலென முகம்சுருக்கிச்
செழியனும் சாற்று கின்றான்;
"பெருமக்கள் வாழ்த்தி னார்கள்;
பின்னும்நீ இங்கேன் வந்தாய்?

ஒருநொடி இராதே; இங்கே
இருந்திடில் உதைதான்!" என்றான்.

பார்ப்பனன் ஓடிப் போனான்
அங்குள்ள பலசரக்கும்
நீர்ப்பட்ட வண்ணம் வாரிச்
சென்றனர். வேறு பாங்கில்.
வார்ப்படப் படிவம் போன்றாள்
விநோதையின் விரலில் ஆழி
ஊர்ப்புற மக்கள் வாழ்த்த
உவப்புடன் இட்டான் நன்றே!

அவள்ஆழி செழியற் கிட்டாள்.
இன்பத்தில் தோய்வ தெண்ணிக்
குவளையங் கண்ணாளோடு
குன்றத்தோள் செழியன் சென்றான்.
அவரவர் வாழ்த்தினார்கள்.
"அன்பினால் வாழ்க!" என்றே.
அவரவர்க்கு அடைகாய் ஈந்தார்;
அவர்களும் வாழ்த்திச் சென்றார்.
-------------------

பிரிவு -- 49

(சேந்தன் செத்த மாளிகையிலேயே நம் மணவிழாத்
தொடர்ச்சி நடக்க வேண்டும் என்று செழியனைத் தன் பக்கம்
திருப்பினாள் விநோதை.)

பஃறொடை வெண்பா

"எனக்கு மணவாளர், இந்தக் குறிஞ்சி
தனக்குமே தார்வேந்தர் நீர்!" என்று தையல்நல்லாள்
தாவி அணைத்துத் தனிப்பஞ் சணைசேர்த்துப்
பூவிலொரு பூப்போல் அவன்முகத்தில் தன்முகத்தை
நன்று புதைத்து நவிலுவாள் ஓர்செய்தி;
"இன்றந்தச் சேந்தன் எழில்மனையி லேநமக்கு
நல்ல மணவிழா நாட்டார் நடத்துவதால்
செல்லல் நமதுகடன், நீர்என்ன செப்புகின்றீர்?
ஆடல் நடக்கும்!" அருந்தமிழில் நல்லநல்ல
பாடல் நடக்கும்; பலர்க்கும் விருந்து
நடக்கும்!" எனப்பெண் நவின்றாள். செழியன்.
"அடுக்குமா? என்நண்பன். இந்நாட்டின் ஆவியொப்பான்
செத்தானே! என்று திடுக்கிட்ட மக்கள்உளப்
பித்தும் பெருஞ்சினமும் மாறலில்லை. அங்கிதற்குள்
நாம்போய் விழாநடத்தல் நாட்டுமக்கள் கூட்டமெனும்
பாம்பை எழுப்புவ தாகும். பலதலைவர்
சேந்தன் எரியணைந்த வீட்டின்முன் வாயிலிலே
பாய்ந்த கண்ணீரும் பழிவாங்கும் வாளுமாய்.

உன்னையும் மன்னனையும் ஒட்டஉயிர் வாங்குவதாய்ச்
சொன்னதொரு சூள்காக்கக் காத்திருத்தல் நீயறிவாய
என்றான் செழியன். இதுகேட்ட மங்கையவள்
நின்றாள், நிலைதளர்ந்தாள் நீருகுத்தாள் கண்களிலே!
அன்றுநான் அந்த அறிவிலார் தம்எதிரில்
"என்றன் மணவிழா இவ்விடத்தில் நானிகழ்த்திக்
காட்டேனேல் நானோர் கழுதைமேல் ஏறியே
நாட்டை வலம்வந்து நரிக்கென் உடல்தருவேன்?"
என்றதோர் சூளுரைத்தேன், என்துணையே உம்மைநம்பி!

என்றன்சூள் தோல்விபெறல் என்வாழ்வு தோல்வி பெறல்
அன்றோ அடலேறே! என்னை விடலாமோ?
நன்றோ? என் மேல்வைத்த அன்புதான் நஞ்சோ"
எனத்துடித்தாள்! கண்ட செழியன்," "இனிக்கும்
கனியே அழாதே! கடிது நடத தென்றான்.
விநோதை விழாவைத் தொடர்ந்திடவே, ஆட்கள்
அனைவர்க்கும் ஆணையிட்டாள் சென்று!
----------------------

பிரிவு -- 50

(சேந்தனின் இல்லத்தில் மணவிழா நடைபெறுகிறது.
மக்கள் எதிர்க்கிறார்கள்.)

பஃறொடை பெண்பா

சேந்தனில்லம் நோக்கி மணமுரசும்; தேவைக்கு
வாய்ந்த பொருள்பலவும் வண்டிகளில் ஏற்றியே,
ஆட்கள் பலபேர் அணுகுவதைச் சேந்தனின்
வீட்டினைக் காப்போர்கள் கண்டார். விடோமென்றார்
முன்வாயில் தன்னை மிதித்தால்எம் துப்பாக்கி்
தன்வாயில் குண்டு தடுப்பரிதாம்!" என்றார்கள்.
"மன்னவனின் ஆணை!" என்று வந்தவர்கள் தாமுரைத்து
அன்னதொரு வீட்டை அணுகிவரக் கண்டவுடன்;
வேலனவன் விண்ணில் எழுப்பினான் வேட்டொன்று!
வாலடங்கி வண்டிகளை விட்டகன்றார் வந்தவர்கள்.

வேட்டொலி கேட்டபலர் சேந்தனின் வீடுவந்து
"நாட்டை அயலார்க்கு நாம்விடுதல் இல்லைஎனில்
விட்டகன்ற சேந்தனார் வீட்டைஅய லார்க்குவிடோம்
எட்டிநிற்க வேண்டாம் எதிர்வருக மன்னன்!" என்றார்.
இவ்வாறு சொல்லுகையில் இன்னும் பலரோடும்
அவ்வேலைக் காரர் அவரெதிரில் வந்து நின்று;
"மன்னவனின் ஆணை மறுக்கின் றீர், தீங்கடைவீர்
இன்னும்ஒரு நாழிகையில் இங்கு மணவிழா
நன்றுதொடங்க வருதல் நலம்!" என்றார்.
கேட்டார்கள் காவலர்கள். 'கீழ்மைச் செயலுடையீர்
மூட்டாதிர் இங்கே முழுச்சினத்தீ. போய்விடுங்கள்.
அந்த விநோதை அனுப்பினால் உம்மைஎனில்,
எந்தவகை நீங்களும் இங்குவர ஒப்பினீர்?
நீவிர் தலைவரன்றோ? நீள்நாட்டின் மக்களன்றோ?
மாவீரன் செத்தான்; வழிகின்ற கண்ணீரும்
நின்றபா டில்லை! நினைவு மறந்ததில்லை.
இன்றிந்த வீட்டில் விழாமகிழ எண்ணும்
விநோதை எங்கே? அன்னவளின் வேந்தன் எங்கே? மற்றும்
கனவுலகில் நாடாளக் காணும் செழியனெங்கே?
மேலும் அவர்கள் பெரும்படையின் வீரரெங்கே?

ஆறு துறையும் அழிந்துபடல் கண்டிருந்தும்
ஊறுபடு மக்கள் உயிர்விடுதல் கண்டிருந்தும்
நல்ல குறிஞ்சி நலங்கெடுதல் கண்டிருந்தும்
செல்வம் அனைத்தும் சிலர்சுரண்டக் கண்டிருந்தும்
வாடல் தவிர்க்காமல், வஞ்சியின்பால் கெஞ்சிக்கூத்
தாடல்என்ன? பாடலென்ன அன்புடையீர்!'' என்றந்த
வேலன் உரைக்க; விநோதையின் ஆட்களெல்லாம்
வேலர்கள் ஆகிவந்த வேலையையும் விட்டு,
-------------------------------------------------
"விழாநடத்த என்றிந்த வீட்டிலேஎந்த
உழாக்கலப்பை வந்தாலும் ஒரடியில் சாகடிப்போம்!
என்று முழங்கி, இருதோளும் தாம்தட்டி,
நின்றார்! கடமை நினைந்து.
-----------

பிரிவு -- 51

(சுட்டுத்தள்ள மன்னன் ஆணை)

(அகவல்)

சில்லி மன்ன னிடத்திற் சென்று
"விநோதை வாழ்வு வீணாகின்றது.
கழுதை ஒன்று கடிதில் கொணர
ஆள்தேடு கின்றாள். அரசே!" என்றான்.
"விளங்க வில்லை விரித்துரை" என்றே
அரசன் கூற, அறைவான் சில்லி;
"சேந்தன் வீட்டில் திருமண விழாவை
நடத்துவேன்; நடத்த முடியா தாயின்
கழுதைமே லேறிக் கடிநகர் சுற்றி,
என்னுடல் நரிகள் தின்ன மாய்வேன்?
என்று சூளுரை இயம்பினாள் அன்றோ?

சேந்தன் இல்லம் சென்ற முரசும்
பிறவும் பகைவரால் மறுக்கப் பட்டன.
மணவிழா நடக்க வழியே இல்லை.
ஆதலால் உயிர்விட அவள் முயல்கின்றாள்!'
என்றான். மன்னன் எழுந்தான், பதைத்தே!
".எங்கே வல்லான்? எங்கே அமைச்சன்?"
என்று கூச்சல் இட்டான்! வத்தனர்.
"சேந்தன் வீட்டில் சேர்ந்த தீயரைச்
சுட்டுத் தள்ளச் சொன்னேன்; செய்க!
எனப் பணித்து, விநோதை இருப்பிடம்
ஓடினான். ஒண்டொடி கட்டிலில் கிடத்தல்
கண்டு, செய்தி கழறினான்! விநோதை.
"சேந்தன் வீட்டில் தீயர்
மாய்ந்தால் வாழ்வேன என்று சென்றாளே!
----------

பிரிவு -- 52

(மக்கள் எதிரப்பு.)

அறுசீர் விருத்தம்

"கால்மணி நேரத் திற்குள்.
சேந்தனின் வீடு காக்கும்
நோன்பினர் விடிக. நோன்பை
இல்லையேல் படையால் மாய்க.
கோன்தந்த ஆணை இஃதே!
என்னுமோர் கொடிய அஞ்சல்
மேன்மைசேர் வேலன் கையில்
தந்தானோர் வேலைக் காரன்.

நடுநகர் மதிலை நோக்கி
நடந்தனன் வேலன்! அந்த
நெடுமதில் தலையில் ஏறி
நின்றனன்; குறுதி தோய்ந்த
கொடியினை வீச லானான்;
கூறுவான்; "சேந்த னாரின்
உடலினை எரித்த வீட்டில்
உவப்புறும் விழாச்செய் வாராம்.

"மறுத்தனம்; எம்மை மாய்க்க
மறவர்வள் வருதல் கேட்டோம்.
உறைகின்றீர் வீட்டி னுள்ளே
வாரீரோ, உறவி னோரே!
அறிவிலான் அறத்தைக் கொன்றான்.
அயலாரின் அடிவீழ்ந் தான்! ஆம்
முறைசெய்யா மன்னன் ஆடசி
முடித்திட வாரீர்!" என்றான்.
மாநகர்ப் பலபாங் குள்ள்
மக்கள்வந் தார்கள். " மன்னன்.
தீநகர் எண்ணம் வீழ்க;
திடுநாடு வாழ்க!" என்று
வானுற முழக்கஞ் செய்தார்.
"மக்களை மதியா தான்கீழ்
ஏனின்னும் பொறுமை? வாழ்வோம்.
அன்றிதாம் இறப்போம்." என்றார்.

"குண்டென்னும் கருவி கொண்டு
கொக்வதே மக்க ளுக்கென்
தொண்டென் னும் ஆட்சியாளன்
தொலையவும் ஒருகுண் டோராள்
உண்டென்னும் உண்மை தன்னை
உணர்கிலான் இற்றை நாளைப்
பண்டென்று நனைத்தான். செங்காய்
பழுக்காதென் றெண்ணு கில்லான்

"நீர்மட்டம் இமய மாக
நிமிர்ந்தது நீணி லத்தில்
ஓர்நாற்பத் தொன்பான் நாடும்
ஒழிந்தன நீரால் என்றால்,
யார்மட்டம்? எவரு யர்வு்
நிலைத்திடும்? ஆள வந்தான்
பேர்மட்டும்? நிலையோ? வீசும்
பெருங்காற்றில் சிறுதுரும்பாம்!'

என்றனர் -- மீண்டும் வேலன்
இயம்புவான்; "கால்ம ணிக்குள்
கொன்றிடும் கூட்டம் இன்னும்
கொன்றிட வாரீர்!'' என்றே
வரவில்லை: நாமே சென்று,
கூவிடு வோமே" என்றான்.
"நன்றென்றார மக்கள் யாரும்
நடந்தனர் படை வீட்டுக்கே!"
---------------

பிரிவு -- 53

(மக்கள் படை அடக்கப்பட்டது)

(எண்சீர் விருத்தம்)

வல்லானைப் படைவீட்டில் விநோதை கண்டு
"வாரீரோ படைகூட்டி!" என்று கேட்டாள்.
வல்லானும் படைவீட்டின் தலைவன் தன்னை
"வாரீரோ படைவீட்டைத்திறக்க! ' என்றான்.

நல்லதொரு படைவீட்டின் தலைவன், இங்கு
நல்லநல்ல துப்பாக்கி, நச்சுக் குண்டு,
வில்வேல்வாள் உண்டெனினும், சாவி இல்லை,
வீரரெலாம் காத்திருக்க வேண்டும் என்றான்."

படைவீடு திறப்பானை நேரிற் கண்டு
"படைவீரர் காத்திருக்க நீஏன் இந்தத்
தடைபோட்டு நீற்கின்றாய்?" என்று கேட்க
"பத்துமணி முன்கூட்டி மன்னர் ஆணை
இடவேண்டும். இடவில்லை" என்றான் ஆங்கே
ஏழாயிரம் பேர்கள் நாட்டு மக்கள்
தடதடென்று வருவதையும் விநோதை கண்டாள்.
தனித்துமயில் நடந்திட்டாள், வண்டி ஏறி

படைவீட்டைச் சூழ்ந்துநின்ற வெறுங்கை வீரர்
பத்தா யிரம்பேரும் கேட்கும் வண்ணம்
நடைபோட்டு வந்தஏ ழாயி ரத்தார்
நடுவினிலே கையுயர்த்தி வேலன் சொல்வான்:
"படைஏந்தும் மறவர்களே! இந்நா ட்டன்பீர்!
பழந்தமிழர் வழிவந்தீர்! உடன்பி றந்தீர்
அடைகாத்த தாய்ப்பறவை செத்த காட்டில்
ஆடலுண்டோ பாடலுண்டோ குஞ்சு கட்கே?

"தாய்நாட்டைத் தன்னடிக்கீழ் ஆக்கு தற்கே
அயல்நாட்டார் தாம்விட்ட தைய லாளைப்
போய்நாட்டில் அழைத்துவந்த பொல்லா வேந்தன்
பேக்கினுக்குப் புதுவாழ்வைப் பெற்ற தான்
தூய்நாட்டைக் காணுமோர் திட்ட மிட்ட
தூயானை, நமக்குற்ற தலைவன் தன்னை
வாய்த்துடுக்கு மன்னவனே சாகச் சொன்னான்.
மறநாட்டார் அதுகேட்டும் வாழு கின்றோம்!

"நாட்டுமக்கள் உள்ளமெலாம் வீற்றி ருந்த்
நல்லானைக் கொல்லவந்தாள், நாட்டு மக்கள்
கூட்டத்தைக் கொல்லவந்தாள் அன்றோ? அந்தக்
கொடியவளை ஆள்பவளாய்க் கொள்ள லாமோ?
பாட்டாளி மக்களெலாம் பதைபதைக்கப்
படுகொலையே நல்லதெனச் சொன்ன வண்ணம்
தோட்டத்தில் கனல்வளர்த்து வீழ்ந்தான் சேந்தன்.
தூயவனை நாமிழந்து துடிக்கும் போதில்,

'அவனிறந்த இடத்தினிலே விழா நடத்தி
அரசனுள்ளம் விநோதையுள்ளம் மகிழ்வதென்றால்,
எவன் ஒப்ப முடியுமதை? எதுநமக்குத்
துன்பமது யாமெல்லாம் மகிழ்வதற்கே?

கவலையெலாம் நமக்களிக்கச் சேந்தன் தன்னைச்
சுட்டெரித்த காரணந்தான் என்ன என்றால்,
அவள்விருப்பம் நிறைவேற வைப்ப தொன்றே!
அவள் அயலாள்! ஒழுக்கமிலாள்! பெரும்பரத்தை.

"நம்தலைவன் அவள்பகைவன்; செழியன் அன்னான்
நமக்கும்நம் தலைவனுக்கும் எதிரி யாவான்.
நம்தலைவன் இறந்தஇடம் தனிலே அன்னாள்
நடத்தவரும் விழாவினையாம் தடுத்தோம்! மன்னன்
நம்தலையை வாங்கிவிட ஆணை யிட்டான்.
நம்தலையை நம்மவரே வாங்கு வாராம்!
இந்தநிலை தன்னைநீர் வரவேற்பீரோ?
இனத்தாரே ஏதுரைப்பீர்?" என்றான் வேலன்.

படைவீரர் தம்தலைவன் முகம்பார்த் தார்கள்
படைத்தலைவன் சிரித்தபடி உலவ லானான்.
படைவீடு திறந்தபா டில்லை இன்னும்
பாய்ந்திடுமுன் இருந்தபுலி போலி ருந்தார்.
நடைபோட்டு வந்தவர்கள்! வேலன் தன்னை,
"நடப்பதினி என்ன?" வென்று நண்ணலானார்.
படைவீடு திறக்குமொரு சாவி யோடு்
பத்துப்பேர் அங்குவரப் பார்த்தான் வேலன்.

பத்துப்பேர் கால்கைகள் கட்டப் பட்டார்!
பார்த்திருந்த படைவீரர் தம்மில் ஓர் ஆள்,
"இத்தோழர் மன்னவரின் ஆணை யாலே
இங்கு வந்தார்; உன்செய்கை ஏற்கா" தென்றார்.
இத்தோழர் அச்சொல்லை முடிக்கு முன்பே
எட்டிஉதைக் கப்பட்டார். இடுப்பின் மீது
முத்தோழர் முன்வந்தார். மூக்கு டைந்தார்.
மூண்டதங்குப் பெருஞ்சண்டை! படைக ளின்றி!

வலக்கூன்கை எதிர்மார்பின் மீதில் ஆழ்
வருமுன்னே இடப்பெருங்கை தடுக்கும் ஆங்கே;
இலக்கென்று விலாப்புறத்தில் பாயும் காலை
இடதுகால் தடுத்தடக்கும்! தோளில் போட்ட
வலக்கைமேல் கையூன்றி முறிக்கும், மேலே
படுங்காலை எதிரியின்கால் பாய்ந்து தட்டும்;
தலையுடையும்; தலையுடைத்து முறியும் முன்கை?
தடுப்பரிதாய்த் தளராப்போர் நடக்கும் போதில்,

படக்கென்று படைவீட்டின் கதவை ஓர் ஆள்
பாங்காகத் திறந்துவிட இருசா ராரும்
வெடுக்கென்று பாய்ந்தார்கள், படைவீட்டுக்குள்,
வெறுங்கைகள் துப்பாக்கிக் கைகள் ஆக
வெடித்ததொரு முதல் வெடிதான். "சண்டை ஒன்றும்
வேண்டாம என் றொருகுரலைக் கேட்டார் யாரும்!
அடுத்துநின்ற வண்டிக்குள் இருந்த ஓர்கை
அடையாளப் புலியாழி காட்டி அங்கே.

வல்லானின் கையி லொன்றும் நின்றிருந்த
வடிவேலன் கையிலொன்றும் அறிக்கை நீட்ட,
எல்லாரும் கேட்கும்வகை படிக்க லானார்;
"இன்றுவிழா நடக்கட்டும் சண்டை வேண்டாம்
நல்லதொரு புலிஆழி கண்டீர்!" சேந்தன்
நல்கியதோர் அவ் ஆழி! நான்த லைவன்!
சொல்லியதை மறுக்காதீர்!" இதனைக் கேட்ட
தூயவரும் வேலவனும் வியப்பில் ஆழ்ந்தார்!
------------------

பிரிவு -- 54

(திருமண விழாவில் பெருங் கலகம்.)

அகவல்

சேந்தன் இல்லம் சிறப்புற் றிருந்தது.
வாய்த்தமின் விளக்குகள் வல்லிருள் கடிந்தன
கூட நடுவில் ஆட ரங்கம்;
அமைந்தது. கட்டில்கள் அழகுற அமைந்தன.
இசையில் வல்லார் எவரும் வராததால்,
"ஆடல் துவக்கம் ஆகுக!" என்றே
விநோதை அங்கு விளம்பி அமர்ந்தாள்.
அவளுடன் செழியன் அமரந்தி ருந்தான்.
படையின் வீரர் பற்பலர் இருந்தனர்.
சில்லி ஒருபுறம் செயலற் றிருந்தான்.
அல்லிஎல் கேஎன முணுமு ணுத்தனர்.
ஆட்கள் அல்லியை அழைக்கச் சென்றனர்.

தம்பிரான் தாடி மீசை தள்ளி
அழகொடு முன்வர, அப்பொழு தல்லி
வந்தாள் விநோதை வா "ஆடெ" ன்றாள்
ஆட இசைந்த அல்லியை. "ஆடேல
என்று தம்பிரான் இயம்பித் தடுத்தான்.
சில்லி, "நீ யார்?" என்று செப்பினான்.
தம்பிரான். "நான் தான் தம்பிரான என்றான்.
அனைவரும் வியப்பில் ஆழ்ந்தி ருந்தார்.

"தம்பிரனுக்கும் தைய லுக்கும்
என்ன தொடர பென இருத்தவர் கேட்கச்
சில்லி தம்பிரானிடம் செப்பு கின்றான்;
"நாட்டாருக்கும் நங்கைவிநோதைக்கும்
விளைந்த போரில் விநோதை வென்றதை
நீயறி வாயே! விநோதையை நீஏன்
பகைத்துக் கொள்ளும் பாங்கில் பேசினாய்?
ஆடா தேஎன அவளைஏன் தடுத்தாய்?

ஆடும் படிநீ அறிவி" என்றான்.
"ஆடினால் உடல்நலம் அழியும என்று
தம்பிரான் தயங்காது சாற்றி நின்றான்.
விநோதை வெகுண்டு, " விரைவில் அவனைச்
சிறையல் அடைக்க!" என்று செப்பினாள்.
காவலர் இருவர் கடிதில் வந்து
தம்பி ரானைப் பற்றினார் தளராது.
அல்லி ஓடி அவனை மீட்டாள்.
விநோதை, "அல்லியை விலக்கி, அவளின்
கையை இறுகக் கட்டிக் கிடத்துக!"
என்னலும் அவ்வா றியற்றினர்! தம்பிரான்
சிறைக்குச் சென்றான்! விநோதை செப்புவாள்;

"கலகக் காரர் கைவலுத் துள்ளதே!
ஆதலால் என்றன் ஆணையை மறுத்தனர்;
நாளைக் கறிவார் நம்செல் வாக்கை;
நாளை மன்னர் தோட்ட நடுவில்
இவ்விழாத் தொடர்ச்சி இனிது நடக்கும்!
நாட்டு மக்கள் வருவார்! நன்று
பாட்டும் கூத்தும் பலவும் நடைபெறும்!
நீவிர் அனைவரும் வருக!
ஆவலோடு விருந்துண்டு செல்க இன்றே!"
-------------

பிரிவு -- 55

(மக்கள் ஐயம்.)

அறுசீர் விருத்தம்

"அன்றுநம் நாட்டில் அன்பர்
அனைவர்க்கும் நடுவில் வந்து,
நன்றுதன் உருமறைத்தும்
நலமிலா அறிக்கை தந்தும்
பொன்றிகழ் புலியின் ஆழி
காட்டியும் போனான் அன்றோ?
அன்னவன் யாவன்? ஒன்றும்
அறிகிலேம்!' என்றான் வேலன்.

"வண்டிக்குள் தலைம றைத்த
வகையென்ன? தன்னை யாரும்
கண்டிரா வகைபு ரிந்த
காரணம் அதனை நோக்கின்,
திண்டிறல் செழியன் என்றே
செப்புதல் வேண்டும் மேலும்
பண்டுநம் சேந்தனார்தம்
பழநண்பன் செழிய னன்றோ;"
எனஒரு தோழன் சொன்னான்,
"இருக்கலாம என்றார் சில்லோர்.
"விநோதைக்குத் தன்னை விற்ற
வீணனோ நம்த லைவன்?"

எனஒரு தோழன் கேட்டான்.
"இருக்கலாம்!" என்றார் சில்லோர்.
"அனைத்தையும் போகப் போக
அறியலாம என்றான் ஓர் ஆள்!
எண்ணத்தில் ஆழ்ந்த வேலன்
இயம்புவான், 'படைவீ ரர்க்குள்

எண்ணினால் நூற்றுக் கைவர்
ஏந்தலை ஆத ரிப்பார்.
மண்ணகம் புகழும் வல்லான்
நாட்டிற்கே வாழு கின்றான்,
தண்ணருங் குறிஞ்சித் திட்டில்
சரிபாதி நமது கட்சி!"

"கைப்பாக்கி மக்கள் நெஞ்சைத்
களிப்பாக்கித் தன்னி னத்தைத்
தப்பாக்கும் வழியிற் செல்லும்
தலைக்கொழுப் பாளை, வந்தாள்
எப்பாக்கி தானும் இன்றி
இருப்பினும், அவனைக் கொல்லத்
துப்பாக்கி ஒன்று போதும
என்றான்ஓர் துணிவு மிக்கான்.

"நாலுதுப் பாக்கி உண்டு.
நம்மிடம்! நோன்பு கொண்ட
நூறாயி ரம்பேர் உள்ளார்
நம்பங்கில்! படைவீ ரர்கள்
வேறல்லர்! பெரும்பா லோர்கள்
நம்நோக்கம் விரும்பு கின்றார்,
ஏறுவோம் பகையை நோக்கி,
இரண்டுநாள் கழிந்த பின்னர்.

"நாளைக்குத் தோட்டந் தன்னில்
நடந்திடும் விழாவில், நாமும்
வேளைதாழ்க் காமல் செல்ல
வேண்டுமென றுரைத்தான் வேலன்.
காளைகள் தோளு யர்த்திக்
"கனிதமிழ் வெல்க வெல்க
ஆளவந் தார்கள் வாழ்க!
அறம் வாழ்க வாழ்க!" என்றார்.
----------------

பிரிவு -- 56

(விநோதையின் உள்ளம்.)


விநோதை. செழியன்! தனியறை, பஞ்சணை,
கனிபால், பண்ணியம் கமழும் கலவை!
அழகிய காட்சி! அழகிய காட்சி!
செழியனின்அழகிய திருமேனி தொட்டு
நலம்செய்தாள்;பின் நறுங்கனி பிளந்து
வாயினில் ஊட்டினாள். மகிழ்ச்சியால் உண்ட
செழியன் விழிகள் சுழன்றன! தூக்கம்
மழையில் புல்லென வளர்ந்தது. படுத்தான்.

விநோதை அயலில் விரைந்து செல்கையில்,
வழியிலோர் வளைவில் சில்லி கிடப்பதைக்
கண்டாள். கண்களைக் கசக்கிச், "சில்லியா!"
என்று பார்த்தாள். "தூக்கமா?" என்றாள்.
விழித்தான் சில்லி. விநோதைஎன்றறிந்து,
விழித்த விழியை விரைவில் மூடித்
தூங்குவான் போல இருந்தான்! தோகை
தூங்கினான் என்று போகத் தொடங்கினாள்.
மெல்லி அரசனை அடைந்தாள். இங்கே
சில்லி பஞ்சணை அறையைத் திறந்தான்.
செழியன் தூக்கம் சேயிழை செயலென
உணர்ந்தான். ஓடினான். வெளியில்! மருந்து
கொணர்ந்தான். மூக்கில் இணைய வைத்தான்.

செழியன் எழுமுன் சில்லி மறைந்து,
நடப்பது காண மறைவை நாடினான்.
விழித்த செழியன், "விநோதையே! என்றான்.
வீடெலாம் தேட விரைந்து செல்கையில்,
வளைவில் சில்லியைக் கண்டொன்று வைத்தான்.
"கேளுங்கள், கேட்டபின் அடியுங்கள என்ற
சில்லியை நோக்கி செழியன், "சொல எனச்
சில்லி சொல்கின்றான்; 'விநோதை மன்னவன்
அரண்மனை நோக்கி, அதோசெல்கின்றாள்
தற்செயலாகத் தங்கள் அறைக்குள்
புகுந்தேன். துயிலில் புதைந்து கிடந்தீர்.
மூச்சில் மருந்து பாய்ச்சி எழுப்பினேன்.
இங்கே வந்தேன். மறைவினி லிருந்தேன்,
விநோதை சென்றதைப் பார்த்தேன், விநோதை
தனியே அரண்மனை சார்ந்ததும் கண்டேன
என்று சொன்னான். செழியன்.
"நன்றெ"ன நடந்தான். அரண்மனை நோக்கியே!
----------------

பிரிவு -- 57

(விநோதையின் கோள்.)

(அறுசீர் விருத்தம்)

மன்னவன் தனைவி நோதை
மார்புறத் தழுவி, "என்றன்
அன்பே! என் உயிர்ம ருந்தே!
அங்கந்தச் செழிய னைநான்
முன்மணம் முடிக்க வேண்டும்
என்பதால் முடித்தேன். அந்தப்
புன்மைசேர் செழியன் என்னைப்
புணர்வது கருதி வந்தான்.

"மன்னவன் அன்றி வேறோர்
மகனைநான் தொடுதல் இல்லை!"
என்றேன்நான். அதன்பின் அன்றோ
இணங்கினான் ஒப்புக் கொண்டான்
என்றனள். மகிழ்ந்து மன்னன்,
"நல்லிருள் போதில் வந்தாய்,
கன்னலே நன்றி! என்றன்
காதல்நோய் தீர்ப்பாய்!" என்றான்.

இவ்வாறு பேசி அன்பில்
இணைந்தனர் மறைந்து நின்று
செவ்விதின் இவற்றைக் கேட்ட
செழியனும் வீடு வந்து,
'பொய்வாழ்க்கை விநோதையாள்ஓர்
பொதுமகள் என்ற செய்தி்
எவ்வாற்றானும் பொருந்தும
என்றெண்ணி எண்ணி நைந்தான்.

"பஞ்சணை நலம்புரிந்தாள்,
பழம்தந்தாள்; எனை மறந்தேன்
வஞ்சனை புரிந்தாள் அந்த
மன்னனை அடைந்தாள் அங்குக்
கொஞ்சினாள்; பொய்புகன்றாள்.
புகழ்ந்தனள்! எனைஇகழ்ந்தாள்!
நெஞ்சுதீ! ஆனால், அன்னாள்
முகம்மட்டும் நிலவே அன்றோ?

"திருமணம் புரிந்தும், என்னைத்
தீண்டவே இல்லை யாம்! நான்
மருவிட அழைத்தபோது,
;மன்னனை அன்றி மண்ணில்
ஒருவனைத் தொடவும் மாட்டேன்'
என்றாளாம்! என்ன பொய்கள்!
இருளவள் நெஞ்சம்! ஆனால்,
இதழ்மட்டும் அமிழ்தின் ஊற்றே!

"அயலவர் குறிஞ்சி நாட்டை
அடைந்திட எண்ணி, இந்தக்
கயல்விழியாளை இங்கே
கடத்திஆழம்பார்க் கின்றார்!
முயல்கின்றாள், இந்த நாட்டின்
முறுக்கினை உடைப்பதற்கே;
புயலவள் நெஞ்சம்! ஆனால்,
பொன்னவள் இன்ப மேனி!

"அரசியைச் சாகச் செய்தாள்;
அவள்மகன், திண்ணன் ஆன
இருவீரர் தம்மைக் கொன்றாள்.
என்நண்பன் சேந்தன் தன்நேர்
பெரும்பகை எனநினைத்துப்
பிரித்தனள் ஆவி தன்னை!
இரக்கமே அறியாள்! ஆனால்,
இரண்டுகண் இரண்டு கெண்டை!"

தேம்பிடும், மறுகணத்தில்
சிரித்திடும் பிள்ளை போல --
வேம்பென்பான் விநோதை தன்னைக்
கரும்பென்பான் மறுகணத்தில்;
பாம்பென்பான்; மறுகணத்தில்;
பன்மலர் மாலை என்பான்!
பூம்பொழில் தவிர்வான்; பாலை
புகல்ஆவான் செழியன் ஆங்கே!
---------------

பிரிவு -- 58

(தாமரையும் சில்லியும் பேசுகின்றனர்.)

(அகவல்)

"தாமரை கேட்பாய், தாமரை கேட்பாய்!
காம விநோதை செழியனைக் கடிமணம்
புரிந்தான். அவனொடு கலவி புரிந்தாள்
அங்ஙனே அந்த இரவே செழியனை
மருந்தால் மயக்கி, அரசனை அணுகினாள்.

"அழகின் அரசே! செழியனை நான்
மணந்ததன்றி மருவினேன் இல்லை'
என்று கூறி, இன்பந் தந்தாள்
அப்படி விநோதை இயம்பு வதனைச்
செழியன் தெரிந்து கொண்டான்; எனினும்
அவளின் அழகை விடமனமின்றி
அதோநிற்கின்றான் பதைத்தல் இன்றி;
புலனை வென்றவன் வீரன்; நலனுற்று
நம்பிய நாட்டை நட்டாற்று விட்டு
மறுபுலப் பொதுமகள் மலரடி வீழ்வது
பேடிமை அன்றோ? பேடிமை அன்றோ''
என்று கூறினான் சில்லி.
'நன்றெ'னத் தாமரை சென்றாள் ஆங்கே!
----------------

பிரிவு -- 59

(விநோதை நடுக்கம்)

(அகவல்)

உறக்கம் ஒருபுறம் இழுக்க, விழிப்பு
மறுபுறம் இழுக்க மன்னன் கட்டிலில்
புழுவென நெளியும் போதில் அன்னவன்
விழிமேல் கனப்பொருள் ஒன்று விழுந்தது.
கையால் எடுத்தான். கடிது பிரித்தான்
அஞ்சலை அவாவுடன் படிந்தான்: "விநோதையே!
விநோதையே!" என்று விளித்தான்! விநோதை
கனவில் மன்னன் கழறிய தென்று
நின்றவள் நின்றபடி நின்றாள்! பின்னும்
'ஏமாற்றுக் காரி எங்கே சென்றாய்?
செழியனோ உனக்குத் தேவை? அழிவினாய்!"
என்று கூறினான். ஏந்திழை நடுங்கினாள்.
அடியெடுத்து வைக்க அவளால் முடிகிலை.
அங்குச் செழியனால் அழிவைப் பெறுவதா?
இங்கு மன்னனால் இறப்பைப் பெறுவதா?
இப்புறம் அப்புறம் இருவிழி செலுத்திச்
செப்புப் படிவம் தன்னை
ஒப்ப நின்றாள், ஒழுக்கமிலாளே!
------------

பிரிவு -- 60

(சிவன் பெயரைச் சொல்லி விநோதை மன்னனை ஏமாற்றுதல்)

மன்னனைக் கண்ணெதிர் கண்டாள் மங்கை;
"மன்னரே என்னிடம் சிவனார் வந்தார்;
எழுப்பினார்; எழுந்தேன்; இட்டு வந்தார்,
விழிப்புறு செய்திகள் பலப்பல விளம்பினார்.
'அருட்படி ஆகுக' என்றேன். அப்பர்
உருமறைந்தார். உள்ளம் கனிந்து
தொழுதுநிற்கின்றேன், தொடாதீர்!" என்றாள்
"அரசனைத் தொட்டே அணைத்த கையால்
செழியனைத் தொட்டது தீதே என்று
சிவனார் உனக்குச் செப்பினாரா?
அல்லது அவரும் உன்றன் வஞ்சம்
நல்லதே என்று நவின்று சென்றாரா?
என்று மன்னன் இயம்பிய அளவில்,
விநோதை தரையில் விழுந்து புரண்டு,
"என்றன் கற்புக்கிழுக்குப் பேச
ஒப்பிற்றேயோ உங்கள் மலர்வாய்?
தீண்டா நெருப்பைத் தீண்டுவார் யாவர்?
இப்பழி சுமந்துநான் இனியும் வாழ்வதோ?

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!
என்னைக் காப்பது உன்றன் கடனே!"
பொய்ப்பழி போக்கல் உன்றன் கடனே!"
என்று கோவென அழுதெ ழுந்து்
அன்பரே! என்றன் அழகு மணவாளரே!
உம்மை அல்லால் ஒருவரை நினைக்கிலேன்.
இதனை நாளை எம்பெருமானின்
திருவாயாலே திருக்கோயிலிலே
செப்பும் வண்ணம் செய்திடு கின்றேன்
அப்போ தொப்புக!" என்றாள்
எப்போ தும்பொய் இயம்பும் விநோதையே!

(வேறு) (அறுசீர் விருத்தம்)

இதுகேட்ட திரைய மன்னன்
எண்ணத்துக் கடலில் ஆழ்ந்தான்.
"புதிதாக விநோதை சொல்லும்
புத்தேள்ஒன்றில்லை யானால்,
அதைஇவள் நம்புவாளா?
அச்சிவன் வாய்தி றந்தும்
எதிர்வந்தும் பேசு மென்றே
இயம்பவும் துணிகுவாளா?

"விநோதைதான் செழியன் தன்னை
விரும்புவ தில்லை என்று
தனிஎதிர் வந்து நின்று
சிவத்தெய்வம் சாற்று மென்றாள்.
அனையதும் நாளை என்றாள்
அதையும் நான் காண்பேன். அஃது
புனைசுருட்டாகு மாயின்,
பொய்க்காரி சாகத்தக்காள்."

என இவ்வாறெண்ணி மன்னன்
"ஏந்திழையாய், அப்படிச்செய்!
எனச்சொன்னான். விநோதை, "ஐயா!
இதோ நாளைக்கேஎண்பிப்பேன்.
இனிஅது வரைக்கும் உண்ணேன்,
இன்பத்தை உம்பால் கொள்ளேன்.
தனித்திருந் திடுவேன்!" என்று்
தமியளாய் ஒருபாற் சென்றாள்;
--------

பிரிவு -- 61

(செழியனை நோக்கிச் செல்லும் விநோதையிடம் ஓர் உரு, அஞ்சல் ஒன்றைக் கொடுத்து மனறக்ன்றது. அதைப் படித்த விநோதை நடுங்குகின்றாள். செழியனை நீ வஞ்சித்ததால் உன்னை அவன் கொல்ல இருக்கிறான் என்பதே அந்த அஞ்சலின் செய்தி.)

(அகவல்)

மீண்டும் விநோதை செழியனை நோக்கி!
வந்துகொண் டிருந்தாள்; வழியில் தாமரை
தன்னுரு மறைத்துத் தனியோர் அஞ்சலை
அவனிடம் தந்தே அப்புறம் சென்றாள்.
விநோதை அஞ்சல் படித்தாள். விழித்தாள
திடுக்கிட் டாள், பின் சென்றாள்! நின்றாள்.
பின்னும் அஞ்சலைப் பிரித்துப் படித்தாள்.
"செழியற்குவஞ்சம் செய்தனை அதனால்
செழியன் உன்னை ஒழிக்க
வழியில் வந்துகொண்டிருக்கின்றானே.
------------

பிரிவு -- 62

(ஓர் உரு செழியனிடம் அஞ்சல் தருதல்)

அகவல்

அழகில் நெஞ்சை அனுப்பித் தனியே
இழிவு கருதாது செழியன் இருக்கையில்
உருமறைந் தொருத்தி அஞ்சல் அளித்தாள்.
படித்த செழியன்வாய் பதறலா யிற்று!
"நாயா சிங்கப் பிடறி நறுக்கும்?
நரியா வேங்கையைக் கொல்ல நணுகும்?
என்னையா கொல்ல முடியும் இவளால்?
கற்பைக் கெடுக்கக் கருதினேன் என்றால்,
கற்பும் அவளிடம் கடுகள விருந்ததா?
குள்ளச் செடியின் களாப்பழம் கொள்வார்
குருதி கொட்டும் புண்ணும் கொள்வார்.
என்னுயிர் கொள்வாள் இறப்பே கொள்வாள்,
அழகு முதற்பொருள் ஆக்கிப் பிழைஎனும்
முழுக்கடை விரித்து முட்டுப்பாடின்றி
மக்கள் உயர்வை மான மதனை
ஒழிப்பதே அவளின் ஊதியம் போலும்!
சாவு தனியே இருக்க வேண்டும்.
என்னிடம் அதனை அவள் அனுப்பினால்
என்னை அஃது தழுவட்டும் இனிதே!
நான்அதை அவளுக்கனுப்பினால் அவளைத்
தழுவிக் கொள்வதில் தடைவேண் டாமே!"
என்று செழியன் இருந்தான்,
இன்னும் விநோதை வந்திலள் இங்கே!
-------------

பிரிவு -- 63

(விநோதை கொலை செய்யப்பட்டாள்)

(அறுசீர் விருத்தம்)

தருமஇல் லத்தில்ஒரு தனியறையிலே
அம்புயமும் தம்பிரானும்
பெருமகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்
வேளையில் பெண்விநோதை.
உருமறைய முக்காட்டை ஒருகையால்
பற்றிமற்றொரு கையாலே,
"திருக்கதவு திறப்பீரோ" எனத் தட்டி
நின்றிருந்தாள், தெருக்குறட்டில்
"யார்?" என்றான் தம்பிரான்! "விநோதை" என்
றுரைக்கவே, அம்புயத்தை.
"நேர்நிற்றல் ஆகாது; மறைந்து கொள்வாய்
தனிஅறையில என்ற னுப்பி,
ஈரடியில் ஒருதாண்டாய்த் தாழ்திறந்
துள்ளழைக்க, எழில்வி நோதை,
"சீரடிக்கு வணக்க" மென்றாள்' "செத்தேனுக்
குயிர்கொடுக்க வேண்டு" மென்றாள்;

"பட்டாளம் தானிருக்க வேந்தனார்
தானிருக்கப் பைங்குறிஞ்சித்
திட்டாளும் வாய்ப்பிருக்க, அம்மையே
தீமைஉனக் கென்ன?" என்று
முட்டாமல் நயம்பேசி உள்ளத்தில்
முற்பகைமை மூடி வைத்தே,
இட்டான்ஓர் நாற்காலி தம்பிரான்
"எழுந்தருள வேண்டு" மென்றே!

(வேறு) (அறுசீர் விருத்தம்)

"பெரியவர், சிறியர் செய்த
பிழைஎலாம்
பொறுப்பார் அன்றோ?
தெரியாமல் நுமக்கு நான்செய்
சிறுபிழை பொறுத்ததாகத்
திருவுள்ளம் காட்ட வேண்டும்.
செய்தருள் புரிக ஐயா!
வரநேர்ந்த காரணத்தை
மறுபடி உரைப்பேன என்றாள்;

தீமனத் தாள்இவ் வாறு
செப்பிடத் தம்பி ரானும்,
'தீமையை மறந்தேன் செய்த
நன்மையை மறந்தே னில்லை!
ஆம்இது மெய்ம்மை! அம்மே
அடைந்ததீங்குரைத்தல் வேண்டும்
தாம என்றான் தம்பிரானே!
"சரி" என்றாள் விநோதை தானும்,

தாம் - நீங்கள்

வெற்பென நிமிர்த்த தோளன்
வேந்தனும், ஐயா! என்றன்
கற்பினில் ஐயப் பட்டான்!
கழறினேன் அவனை நோக்கி
'நற்கடல் ஓரக் குன்றில்
நாம்செய்த கோயில் தன்னில்,
உற்றநற் சிவனே நற்சான்
றுரைத்திடச் செய்வேனென்றே!'

வெற்பு - மலை

"எனக்கிந்த உதவி செய்க
எனைக்காத்தல் கடன் உமக்கே!
மனத்துயர் நீக்க வேண்டும்
மானத்தைக் காக்க வேண்டும்
எனக்கிது செய்வீராயின்,
எனைஉமக் கீவேன்'' என்றாள்!
எனக்கேட்ட தம்பிரானும்
'ஈஈஈ!' எனஇளித்தான்

இன்னவாறிவள் செப்புங்கால்
தெருவினில் இருந்தொ ருத்தி
தன்தோழி அம்புயத்தின்
தனியறை தனில்நுழைந்தாள்.
அன்னதைத் தம்பி ரானும்
விநோதையும் அறிந்தாரில்லை!
ஒன்றினில் உளம்சென்றால்மற்
றொன்றினில் விழிகள் செல்லா!

வலைவீச்சுத் தொடங்க லானாள்;
தம்பிரான் மனமீன் பற்ற!
எலிஒன்று பழம்பெற்றாற்போல்
எனைஉமக் கீவேன் என்று
சொல்லக்கேட்ட தம்பிரானும்,
சுழன்றனன்; சூழ்ச்சி தன்னைத்
தலைசாய்த்தே எதிர்பார்த்திட்டான்.
தயங்கிட வில்லை மங்கை!

நாற்காலி நகர்ந்த தங்கே!
நகைத்தன உதடிரண்டு!
வேற்கண்கள் ஓடி இன்ப
விண்ணப்பம் செய்யக் கண்டான்.
ஏற்காத தம்பி ரானும்
ஏற்றனன் இருகை நீட்டி!
மேற்சென்று தோளில் வீழ்ந்தாள்,
மேல்வரு விளைவு நோக்காள்.

மேல்வரும் விளைவு - மேலே வர இருக்கும் சாக்காடு

பாய்ந்ததே ஈட்டி ஒன்றப்
பைந்தொடி விலாப்புறத்தில்
சாய்ந்தனள்! சாயாக் குன்றும்
சாய்ந்தது போல்விநோதை!
"சாய்ந்தாயா!" என்று கூறித்
தாமரை எதிரில் வந்தாள்
"ஆய்ந்தாயா அறத்தின் ஆற்றல
எனவந்தாள் அம்புயத்தாள்!

"எனைக்கொன்றிடாத ஈட்டி
இனிக்கொல்லக் கூடும்!'' என்ற
நினைப்புடன் உடல் நடுங்க
நின்றதம்பிரான் புகல்வான்;
"மனைபற்றி எரிக்கும் தீயை
மங்கையீர் அவித்து மக்கள்
அனைவரும் வாழச் செய்தீர்!
அறம்செய்தீர்! புகழைப் பேற்றீர்!

"அதுமட்டு மன்று! தீயேன்
அனலிடை வீழா வண்ணம்
எதிர்வந்து காத்தீர்! என்றும்
இந்நன்றி மறவேன்; எங்கே
புதைக்கலாம் இப்பிணத்தை?
விரகொன்று புகல்வீர் நீரே!
இதையாரும் அறியாவண்ணம்
நெஞ்சத்துள் இருத்தல் வேண்டும

விரகு -உபாயம்

எனச்சொன்ன தம்பிரானைத்
தாமரை இனிது நோக்கி,
"இனிஇந்தப் பிணத்தை இங்கே
எவருமே அறியா வண்ணம்
தனிக்குழி தோண்டி இன்றே
புதைப்பதே தகுதி யாகும
எனச்சொன்னாள். இதே நேரத்தில்
சில்லியும் கதவிடித்தான்.
----------

பிரிவு -- 64

(சில்லியால் மேல் நடக்க இருப்பவைகளை அறிந்து கொள்ள முடிந்தது தாமரையால்.)

(அகவல்)

தையலாரும் தம்பிரானும்
விநோதை உடலை வேறுபுறத்தில்
மறைத்துச் சில்லிக்கு வரவேற்பளித்தனர்.
சில்லி செப்பு கின்றான் -- செழியன்
விநோதையை வெறுத்து விட்டான். மன்னன்
அவளை மாய்ப்பதே நோக்கமாய் அலைந்தான்.
வெறுப்புச் சுமந்த விநோதை இனிமேல்
இறப்பைச் சுமக்க நேரும் என்று
மறைவினில் வாழுகின்றாள். அவளைத்
தேடுதல் நம்கடன்: தேடிக் கொன்று
போடுதல் நம் கடன்:'' என்று புகன்றான்.

தம்பிரான் பேசத் தொடங்கினான், தாமரை
இடைமறித்தே இயம்பலானாள்;
"செழியனை விநோதை சேர்ந்தாள் என்று
மன்னர் எண்ணினார், மாய்க்க நினைத்தார்,
விநோதை மன்னனை நோக்கி, வீணாய்
என்றன் கற்பில் இழிவைச் சுமத்தினர்.
சிவபெரு மானின் திருவா யாலிதை
மெய்ப்பிக் கின்றேன்' என்று விளம்பினாள்,
'அப்படி யானால் ஒப்புவேன்' என்றே
அந்த அறிஞரும் அறிவித்து விட்டார்!

'கடலோரத்து மலைக்கோயிலிலே
அரசர் வருவார்; அவருடன் விநோதை
வருவாள், சிவனை நோக்கி மன்னர்,
'விநோதையின் கற்பில் வேறுபாடுண்டா?
என்று கேட்பார் சிவன்பதில் இசைப்பான்?
கற்புக் கெட்டதாய்ச் சிவனே உரைத்தால்,
அரசர் விநோதையை அங்ஙனே கொல்லுவார்.
இவையே இன்று நடக்க இருப்பவை.
விநோதை மறைவாய் இருப்பதாய் விளம்புதல்
சரியே இல்லை தனித்தோர் இடத்தில்
தையலிருந்து தவம்புரி கின்றனள்.

இன்று மாலை கோயிலில் இருப்பாள்,
சிவனும் தையல் பாங்கில் இருப்பான
என்று தாமரை இயம்பிய அளவில்,
சில்லி கலகல வென்று சிரித்தான்.
அன்னவன் அவர்பால் அறிவிக்கின்றான்;

"வாழ்நிலை மாற்றுதற்குச் சூழ்நிலை
ஏற்றதாயிற்றென் றெண்ணி மகிழ்ந்தேன்.
மங்கை இனியும் மன்னனை ஏய்த்து
வாழஓர் வகையும் வகுத்துக் கொண்டாள்.
தீந்தமிழ் கொல்லச் சிலபார்ப்பனரும்,
குறிஞ்சி கொல்ல விநோதை ஒருத்தியும்,
போதும் என்பதில் ஏதும் பொய்யில்லை!
தமிழும் குறிஞ்சியும் தழையப் பார்ப்பும்
விநோதையும் வீழ்ச்சி அடைதல் வேண்டும்!
தம்பிரானாரே! தாமரை அம்மையே!
அம்புயத்தாரே! அறிக, இதனை;
உருவிலான் எங்கும் உள்ளான் பெயரிலான்
சிவன்நான் என்றா செப்புவான் இங்கு?

மேலும் அன்னவன் விநோதை பங்கில்
காலும் வைப்பானோ கடுகள வேனும்?
குறிஞ்சி மன்னர்க்கு அறிவிருந்ததா?
விநோதையும் கற்பும் மேற்கும் கிழக்கும்!
விநோதை கற்பில் ஐயம்வி ளைந்ததாம்!
ஆளிலாப் போதில் அகப்பட்ட என்றன்
காளைபாற் காமம் தீர்ந்து கையுடன்
என்மகன் சாக மருந்து இட்டுக்
கொன்று கொல்லையில் போட்ட கொடியாள்!
சேந்தனும் சில்லியும் தவிர மற்றையோர்க்கு
மங்கை யுடம்பு வாடகை வீடே!
நாட்டின் வேரிற் புகுந்த கேட்டை
எண்ணி எண்ணி அழுதுகொண் டிருப்பதால்
பயன் என்? பகையின் முதுகெலும் புடைத்து
வரும்சாக் காட்டையும் வரவேற்க வேண்டும்!

உயர்பண் புடையீர்! நீங்கள்ஓர் உதவி
எனக்குப் புரிதல் இன்றியமை யாததாம்
என்கையால் விநோதையைக் கொல்வேன் என்றே
அன்றொரு நாள்நான் அறைந்த சூளுரை
நிறைவே றும்படி நீவிர் எல்லீரும்
தருதுணை புரிகெனத் தலையால் வணங்கினேன்,
மீளா விடைபெற்றுச் செல்லு கின்றேன்.
இன்று மாலை குறிஞ்சியின்
வென்றி விளக்கேற்றுந்திரு நாளே!''

(வேறு) (அறுசீர் விருத்தம்)

இவ்வாறு சில்லி சொல்லி
ஏகினான் உயிர் வெறுத்தே.
அவ்வெழில் தாமரைதான்
அம்புயம் காதில் ஏதோ
செவ்விதின் உரைத்துச் சென்றாள்!
சென்றது காலைப் போதும்
எவ்வாறோ அறிந்தார் நாட்டார்
ஏகுவார் கடலின் ஓரம்!
------------

பிரிவு -- 65

(செழியனின் அறிவுரையும் மறைவும்)

(எண்சீர் விருத்தம்)
முப்புறத்தும் தரைசூழக் கீழ்ப்புறத்தில்
ஆழத்துக் கடல்வெள்ளம் முழக்கம் செய்யக்
கப்புகின்ற முகிற்கூட்டம் தவழும் உச்சிக்
கடலோர மலைக்கோயில், குறிஞ்சித் திட்டில்
இப்போது கட்டியது விநோதை யாலே
இக்கோயில் உட்பரப்பும் எட்டுக் கோலே
கைப்புறத்துப் பிள்ளை யோடும் கணவரோடும
மங்கைமார் கணக்கற்றோர் சூழ்ந்தார் அங்கே!

இளைஞரெலாம் அங்குற்றார்; முதியரானோர்
எல்லோரும் அங்குற்றார்; மலைக்கோயிற்கண்
விளைவொன்று பெரிதென்று விரைந்து சென்றார்.
"வேந்தனுக்கே இறுதிநாள்! ' என்றோர் சில்லோர்.
"களைநீக்கிப் பயிர்காக்கும் கால" மென்று
களிப்புற்று நடந்தார்கள் பலபேர். "காலில
தளையிட்டாள் குறிஞ்சிக்கே விநோதை! அன்னாள்
சாகாளா, வாழாமோ!" என்றார் பல்லோர்.

எள்விழவும் இடமில்லை மலைக்கோயிற்குள்!
ஏறுகின்ற படியெல்லாம் நிறைந்தார் மக்கள்!
கொள்ளாத பெருமக்கள் அடிவாரத்தும்
குவிந்தார்கள். அப்போது திரைய மன்னன்,
தள்ளாடிப் பலர்சுமக்கும் சிவிகை தன்னில்
தனியாகச் செல்கின்றான் மலைமேல்; தூண்டும்
உள்ளாவலாற்செழியன், அமைச்சன் மற்றும்
உள்ளாரும் சிவிகையிலே ஏறிச் சென்றார்.

"திருக்கோயிற் கருவறைஏன்திறக்க வில்லை?
சிவனார்க்குப் பூசைஏன் தொடங்க வில்லை?
குருக்களெங்கே? இதுவென்ன கொடுமை!" -- என்று
குதிக்கின்றான். மன்னன்வரக்கண்ட ஓர் ஆள்,
வரிப்புலிபோல் அவண்பாய்ந்த மற்றும்ஓர் ஆள்
"வராததென்? நம் அரசி?" -- என்று கேட்டான்.
கருவறையைத் திறந்திட்டான் திரைய மன்னன்!
கண்டதென்ன? தெற்கடியில் வடக்கைக் கண்டான்.

தெற்கணத்துச் சிவனெனும்அப் படிவத்தின்கீழ்
விநோதையினைச் சிறுபிணமாய்த் திரையன் கண்டான்.
மற்றும்ஒரு முறைநோக்கி, "விநோதை!" என்றான்.
வாள்எடுத்தான். "இதுசெய்தான் யாவன்?" என்றான்.
"கற்பழிக்க எண்ணிநீ செழியா உன்றன்
கைவரிசை காட்டினாய் பெண்ணிடத்தில்!
சொற்படிசெய்! விநோதையினைக் கொன்ற வாளைத்
தூக்கிக்கொள்; நின் என்முன்!" என்று சொல்லி,

மாச்செழியன் நின்றிருந்த இடத்தை நோக்கி,
அடிபெயர்த்து வாளோச்சு கின்றான் தன்னை
"நாய்ச்சிறுநா உன்கைவாள்! அறமிலாத
நரிப்புறங்கால் வீச்சேஉன் வாளின் வீச்சு!
போய்ச்சிறிது புறத்தேநில எனவாள் பற்றிப்
பொதுக்கெனவே இடைமறித்தே அமைச்சன் நின்றான்.
"வாய்ச்சதுநம் சூள்முடிக்க நேரம்!' ஏன்று
மேலெழுந்த மக்களையும். "பொறுப்பீர என்றான்.

நல்லமைச்சன் இதுசொல்லத் தாமரைபோய்.
"நான்கொன்றேன்; மன்னவனே எனைக்கொல்!" என்றாள்.
"இல்லாத கற்பவள்பால் இருப்பதாக
யார்சொன்னார் உமக கென்றாள். குமுதம் என்பாள்;
வல்லவன்ஓர் நாற்காலி தூக்கி வந்து,
"மக்களுக்குத் தலைவரே அமர்க!" என்று
சொல்லிப்பின் செழியன்தோள் தொட்டிழுத்தான்.
"நான்தலைவன் அல்லன்!" என்று செழியன் சொன்னான்.

"செழியனார் இவ்வாறு செப்ப லாமோ?"
எனக்கேட்டான் நெடுமாறன்! "பாம்புக் கூட்டம்
ஒழிவதுதான் எவ்வாறு விட்டு வைக்க
ஒருகணமும் ஒப்பார்கள் குறிஞ்சி மக்கள்.
மொழிஒன்றே! ஆம்என்க தலைவர்! தீமை
முற்றும்தூள்!" எனத் துடித்தான், வேலன் என்பான்.
வழிசெய்வேன் பொறுப்பீர என்று செழியன்
சொன்னான்.

மாலடியார், சிவாநந்தர், சிவசம்பந்தர்.
வெளிச்செல்ல முயலுவதைச் சில்லி கண்டு,
"வேந்தர் தமை விட்டுப்போகாதீர என்றான்.
கிளிப்பேச்சுத் தாமரையை நோக்கி அன்னோன்
கிளத்தினான்; "விநோதையைநீ எதற்குக் கொன்றாய்?"

அளித்திட்டாள் அவளும் விடை: "நீ கேட்காதே."
"அம்மையே நான்கேட்க உரிமை உண்டு;
துளிப்பேச்சுத் தவறாமல் உன்னிடத்தில்
சொல்லியுள்ளேன்: என்மகனை அவ்விநோதை.

"வலிதிழுத்துப் புணர்ந்தபின்பு நஞ்சு தந்து
மாய்த்தாளே! என்கையால் அத்தீயாளைக்
கொலைசெய்யக் காலம்பார்த்திருந்தேன்; நீயே
கொன்றாயே? என்கொள்கையும்கொன்றாயே.
எலிஒன்று குண்டான்சோறு ருட்டக் கண்டும்
எலிப்பிழுக்கைக் காகக்காத் திருந்த இந்தப்
புலிச்செழியர் போல்நீயும் பொறுத்தாலென்ன!
விநோதையவள், அன்றன்று புதுமணப் பெண்!

"வடநாட்டிற் பலர்முகர்ந்த மல்லி கைப்பூ!
வழிப்போக்கர் உமிழ்வட்டில் சென்னை தன்னில்,
நடையறிந்தும் அவற்றையெல்லாம் பொறுத்தா ரன்றோ
நம்மன்னர்! குறிஞ்சியிலே நுழைந்த அந்தக்
கடைச்சரக்கோ, 'செழியனைப்போய் மணப்பேன்'
என்றாள்.
எடுத்தாரா தமிழரசர் கையில் வாளை?
இல்லையே! செழியனைப்போய் மணந்த அன்றே
இதழ்விற்றுத் தான்பெற்ற எச்சில் ஈரம்

காயுமுன்பு காரிருளில் வேந்தை நோக்கிக்
கடிதோடி 'நெஞ்சை நனை' என்றதோடு,
தீயன்அவன் செழியன்எனைத் தீண்ட வந்தான்;
திருமார்பே துணையாக ஓடி வந்தேன்
தோய்க்கவே நல்லின்பன்' என்னும் போதே
தொடர்ந்துவந்து கேட்டிருந்த செழிய வீரர்
மாயும்வகை செய்தாரா? அதுபோல் நீயும்
மாய்க்காமல் இருந்திருந்தால் நல்ல" தென்றான்.

ஆழிஇந்தா நெடுமாறா! தலைவன் நீதான்;
அறிவிழந்தேன்; அறமறந்தேன்; சேந்தன் என்றன்
தோழன், இந்த நாட்டுக்கே தனித்தலைவன்.
தொலையும்வகை செய்தாளின் தோளைத் தொட்ட
கோழைநான். இந்நாட்டின் பண்பா டெல்லாம்
கொன்றாளைக் கொல்லாமல் விட்டேன். நாட்டின்
பீழைநான். என்பிழைகள் பொறுக்க வேண்டும்.
பெரியோரே தாய்மாரே இன்னும் ஒன்று;

'அயலவன் உறவினன் ஆகான்; உறவினன்
அயலவன் உறவுபெற் றானெனில், அவனை
உறவின னாக உரைத்தலும் தீதே.
தமிழனும் தமிழும் தணலும் சூடும்.

அமிழ்தமே ஆயினும் அயல்மொழி அயல்மொழி!
அயல்மொழி தமிழை அண்டும் விழுக்காடு.
தமிழ்மொழி தாழும்! தமிழன் தாழ்வான்!

தமிழை வடமொழி தாவும் நோக்கம்
தமிழை அழிப்பதும் தான்மேம் படுவதும்!
வடமொழி அதனின் வழிமொழி எதுவும்
தமிழ்மேல் சந்தனம் தடவவே வரினும்,
ஒழித்து மறுவேலை உன்னுதல் வேண்டும்.
தமிழ்தமி ழினம், தமிழிலக்கியம் இவற்றில்
ஒன்று போம்எனில், மற்றவும் ஒழியும்.
நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்.

உரிமை இழந்த ஒருகிளிக் குஞ்சுக்குக்
கனியும், வெளியும் காட்டி, 'எதுவுனக்குத்
தேவை?' என்றால் சிறகடித்து வெளியில்
செல்லவே துடிக்கும்! சின்ன மக்கள்
அடிமை வாழ்வின் இழிவை அறிந்தும்,
விடுதலை வேண்டா திருந்தனர் என்றால்,
மண்ணில், பொன்னில், பெண்ணில் அவர்மனம்
அடியுறப் புதைந்தது காரணம் ஆகும்!

மனங்கவர் பொருளாம் மங்கையை ஒருவன்
ஆன்ற ஒழுக்கொடும் அறிவொடும் அணுகுக.
ஆடவர் பெண்எனும் அழகுக்கு அழகுசெய்து
ஒளிபெறச் செய்வதில் அளவு வேண்டும்.
அணங்கொடு மக்களை அனுப்புவோன். சொன்னான்:
கலைத்தொண்டு செய்வதாய் -- கலப்பிலாப் பொய்இது.
கலையன்று வாழ்க்கை. அறிவிற் கமழ்வதே!
கலையின் உண்மை நிலையினைக் காணின்
கலைக்கும் பொய்மையே கடைக்கால் என்க.

கோனாட்சி, குடிக்கோனாட்சி, மற்றும்
குடியாட்சி என்று முறைபல கூறுவர்.
திரையன் செழியன் செல்வாக் குடைய
எல்லா ஆட்சியைப் பார்க்கிலும், இங்கே
அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் ஆர்ந்த
மக்களின் உள்ளம் கவரத் தக்கோன்
இட்டதே சட்டம் என்னுமோர் ஆட்சியே
விழுந்த குறிஞ்சிக்கு வேண்டும் இந்நாள்."
இவ்வாறறிவுரை நீள இயம்பி,
விரைந்து கிழக்குப் புறத்தை மேவிப்
பருந்தெனப் பறந்த செழியன் பருவுடல்
ஆழக் கீழ்க்கடல் ஆழ்ந்தது,
"வாழகெனக் கதறினர், குறிஞ்சி மக்களே!
---------------

பிரிவு -- 66

(செழியன் இவ்வாறு கடலில் வீழ்ந்து இறந்தான். திரையனும் அமைச்சனும் கூறுதல்.)

(அறுசீர் விருத்தம்)

"என்னநீ எண்ணு கின்றாய்?
திரையனே!" என்று கேட்ட
தன்அமைச்சனையும் மக்கள்
தம்மையும் நோக்கி, "நாட்டை
நன்னிலைப் படுத்து தற்கு
நான்மாள வேண்டும்!" என்றான்.
சொன்னதோர் சொற்புகழ்ந்தார்!
தொல்பிழை எலாம்மறந்தார்.

மக்களின் உள்ளம் கண்ட
அமைச்சன்கொள் மகிழ்ச்சி சொல்லத்
தக்கதோ! அவனுரைப்பான்:
"திரையனே, சென்னை சார்ந்தாய்.
இக்குற்றம் பெரிதன்றேனும்,
சென்னையை இவண்கொணர்ந்த
அக்குற்றம் பெரிதே அன்றோ?
அறத்தையே நடுங்கச் செய்தாய்.

"பரத்தையின் வலையில் வீழ்ந்தாய்
அவள்நோக்கம் பார்த்த பின்னும்
துரத்தினாய் இலை; மணந்த
தூயாளைத் துன்பத் தீயில்
பொறுத்தினாய் அன்பு டம்பின்
பொற்றுகள் ஒவ்வொன் றாக
உருக்குலைந்து உருகிச் சாகக்
கண்டனை உவப்பில் ஆழ்ந்தாய

இதுகேட்டான் திரையன்; நின்றோன்
உட்கார்ந்தான் தரையில்; "என்றன்
மதிஎன்னே? ஒழுக்கம் என்னே?
மன்னனும் நானோ?" என்று
முதியோனின் கருத்தில் ஆழ்ந்து,
முகம்நாணித் தளர்ச்சி எய்தி,
"கொதிக்கின்றேன், பழிசுமந்தேன்.
கொல்லீரோ என்னை!" என்றான்.

வாய்ந்தசீர் அமைச்சன் மேலும்
மன்னனை நோக்கிச் சொல்வான்;

"மேய்ந்தவள் பல்லோர் மார்பை
மேய்ந்துமேய்ந் துடம்பு நாளும்
தேய்ந்தவள் சொல்லைக் கேட்டுத்
திறற்புலி அறத்துச் செம்மல்
சேந்தனைச் சாகச் செய்தாய்!
செயத்தக்க செயலோ ஐயா?"

நிலைசாய்ந்த திரைய மன்னன்.
அமைச்சன்தான் இதுநி கழ்த்தத்
தலைசாய்ந்தான் சாகானாகித்
தாழ்குரல் தழுத ழுக்கக்
"கொலைசெய்வீர் என்னை!" என்று
கூப்பினான் செங்கை; கண்ணீர்
அலைகண்ட மக்கள் யாரும்
செழியனை அகத்துட் கண்டார்.
ஓதுவான் அமைச்சன் மேலும்;
"ஒன்றென நின்ற குன்றை

மோதிப்பல் கூறு செய்ய
எண்ணினும் முடிக்கும் தீய
சாதியால் தமிழர் கோட்டை
தகர்த்திடும் சழக்கிச் சொற்குக்
காதீந்தாய்! பறவைக் கூட்டைக்
கலைத்திடக் கோலும் ஈந்தாய்!

"மழையில்லை விளைச்சல் இல்லை
மக்கட்குக் கட்டப் பஞ்சின்
இழையில்லை கருவூலத்தில்
ஒருகாசும் இல்லை. உண்ணத்
தழையில்லை காட்டில்! சாவத்
தடையில்லை. வரவே யில்லை.
விழவில்லை உன்றன் காதில்
ஏழைகள் விண்ணப்பங்கள்.

"இருந்தனை. இராம லில்லை;
இந்நாட்டார் துயருக் கெல்லாம்
மருந்தனை யான்நீ அன்றோ?
மறந்தனை! 'விநோதை வாய்நீர்
வருந்தேனே; எவர்மாய்ந் தாலும்
வருத்தேனே எனக்கி டந்தாய்.
எரிந்தனை இகழ்ச்சி பட்டே
புகழையும் இகழ்ந்த பாவி!"

என்றனன் அமைச்சன் ஆங்கே
இறந்தனன் திரைய மன்னன்.

நின்றுள சில்லி, "கம்பி
நீட்டிட முயலுகின்ற
புன்தொழிற் சிவசம்பந்தன்
முதலோர்க்குப் புகல்என்?" என்றான்
"சென்றிடு மாறு செய்க
சிறைக கென்றான் அமைச்ச மேலோன்.

(நெடுமாறன்தான் நல்லுரை நிகழ்த்துதல்.)

அகவல்

"அரசன் மனிதன்! மனிதன் அரசனா?
அரச பதவியும் மனிதனும் அரசன்.
ஆதலால்,
அரச பதவியை அழித்து மக்கள்
சரிநிகர் என்பதைச் சமைக்க வேண்டும்
விடாது பெய்த கனலில் வெந்தோம்
அடாது செய்தானை அழிக்கத் துணிகிலோம்.
ஏனெனில் அரசன்! எல்லாராலும்
மதிக்கத் தக்கவன்! என்ன மடமை!
அறிவு பெற்றோம்; ஆண்மை பெற்றோம்.
நெறியின் நின்றோம்: உணர்வு நிறைந்தோம்.
மக்கள் வாழ்க்கை வண்டியின் அச்சை
கைக்குள் வைத்துள மனிதன் கண்ணெதிர்
பசியாற் படுபிணம் தூக்க வலியிலா
நம்நிலை கண்டும் நடுக்குறாமல்,
'பொன்னே' என்றும், 'பூவே' என்றும்
பன்னி, அன்னவள் மாங்கில் இன்புறும்
மனிதனை அடக்க வல்லமை இழந்தோம்.

மன்னன் அன்றோ! என்ன மடமை!
ஆலிலை அடுக்குமேல் அம்மிக் கல்லென
அரச பதவிஏன்? நாம்அவற் கடக்கமேன்?
அடங்கி அடங்கி அடங்கி அடங்கும்
ஆமை நிலைஏன் நமக்கு? மன்னற்குத்
தீமைசெய்து சிரிக்கும் நிலைஏன்?
தாவிய கொடுந்தீதானே நி்ன்றது.

நம்மால் ஒன்றும் நடக்கவில்லை.
சாவை விளைத்தவன் தானே மாண்டான்.
நம்மால் ஒன்றும் நடக்கவில்லை
நம்நிலை நகைக்கத் தக்கதன்றோ!
இந்நி லைக்குக் காரணம் என்ன?
அவனோர் அரசன் நாமெல்லாம் அடங்குவோர்'
எனநெடு மாறன் இயம்பி, மேலும்
அமைச்சன் முன்னே அறைதலுற்றான்;

"நல்லதோர் திட்டம் அமைத்தல் நம்கடன்.
அல்லன அனைத்தும் அழித்தல் நம்கடன்.
செல்வம் நாட்டிற் சேர்ப்பது நம்கடன்,
செந்தமிழ் காத்தல் சிறந்த கடன் நமக்கு.
மதம் அகன்ற சாதி மறைந்த
அரசு கடந்தஓர் வாழ்க்கை அமைப்பது
நம்கடன்! குறிஞ்சித் திட்டு
செம்மை எய்துக!" என்றான்.
மெய்மை வெல்க!" என்றார் மக்களே!
----------------
குறிஞ்சித் திட்டு முற்றும்

This file was last updated on 03 June 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)