பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
முல்லைக்காடு
mullaikkATu (poems)
by pAratitAcan
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
முல்லைக்காடு
Source:
முல்லைக்காடு
பாவேந்தர் பாரதிதாசன்
முதல் பதிப்பு மே 1993, விலை ரூ. 7.50
மணிவாசகர் பதிப்பகம்,
55 லிங்கித் தெரு, சென்னை 600001
பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பனார் மணிவிழா ஆண்டு வெளியீடு
பாவேந்தர் பாரதிதாசன் (1891 -1964)
----
முல்லைக்காடு - உள்ளடக்கம்
1. இயற்கைப் பகுதி
2. தமிழகப்பகுதி
3. உலக சமாதானம்
4. காதற் பகுதி
5. நகைச்சுவைப் பகுதி
6. சிறுவர் பகுதி
7. பொங்கற் பாட்டுகள்
-----------
செழுமையான வளமான தூய தமிழ் மரபினை பாவேந்தர் உருவாக்கினார். பெருமைமிகு தமிழ் மரபில் போத்துக்குலுங்கும் புதுமலர்கள் பலவாகும்.
தமிழ் உணர்ச்சியும், தமிழ்ப் பற்றும் பெருக்கெடுக்கும் தமிழியக்கண்ட தலைமகனார் பாவேந்தர். தமிழின் பன்முக நலங்களை அவரைப்போல பாடியவர் இவர். தமிழை வழிபடுந்தெய்வமாகி வழிபட தமிழ் அடியார் திருக்கூட்டத்தை உருவாக்கினார். துறைதோரும் தமிழுக்குப் புதுமை சேர்க்க ஆற்றல்மிகு இளைஞர் அணியை உருவாக்கிய பெருமை பாவேந்தரையே சாரும். அவர் காலத்து இதழ்கள் அவரைப் புறக்கணித்தாலும் தமிழ் அறிஞர்களும், புலவர்களும், பேச்சாளர்களும் மேடைகள் தோறும் பாவேந்தரின் பாடல்களை முழக்கம் செய்தனர். வெள்ளம் போல் பரவிற்று பாவேந்தர் பாடல்கள். பாவேந்தரும் பெருமை பெற்றார். பாடல்களைப் பரப்பிய வரும் பெருமை பெற்றனர். சிற்றூர்கள் பேரூர்கள் பாவேந்தரின் பாடல்களுக்குத் தவம் கிடந்தன. நவம்பர் 1991-இல் பாவேந்தர் பாட்டுச் செல்வம் நாட்டுடைமை யாக்கப்பட்டது. தமிழர் உள்ளங்கள்தோறும் இல்லங்கள் தோறும் பாவேந்தர் பாடல்கள் சென்று சேர மணிவாசகர் பதிப்பகம் பெரும் திட்டம் வகுத்து பிழையற்றா அழகிய செம்பதிப்புகளாக மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மொழிக்கும் பாவேந்தருக்கும் பெருமை சேர்க்கிறது.
------------
1. இயற்கைப் பகுதி
1. 1. அதிகாலை
கொக்கோ கோகோ என இனிமையின்
குரல் மிகுத்திடல் கூவல் -- செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்! 5
திக்கார்ந்திடும் இருள் விலகிடும்
சிறு பறவைகள் கூவும் -- நல்ல
திரைக்கடல் மிசை எழுந்திடும் முனம்
செழுங் கதிரொளி தூவும்! 10
தக்கோர் கண்ணில், தெளியுளமதிற்
தகு புதுமைகள் உதிக்கும் -- நல்ல
தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல
எருதுகள் சதி மிதிக்கும்! 15
செக்காடுவார் திகு திடு கிறு
கீச்சென வருஞ் சத்தம் -- நல்ல
சேரியின் துணை கோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும். 20
கண்மாமலர் விரிந்திடும், பெண்கள்
கரம், கதவுகள் திறக்கும் -- மிகக்
கருத்துடனவர் முன்றில் விளக்கக்
கால் சிலம்பொலி பறக்கும்! 25
உண்ணா துண்டு துயில் கிடந்திடும்
உயிர் நிகர்த்த குழந்தை -- விரைந்
தோடித் தனது பாடம்படிக்க
உவகை கொண்டிடும் தந்தை.
விண்ணேறிடும் பகலவன் கதிர்!
விளங்குறும் திசை முகமே! -- தகு
வினை தொடங்குது கிடுகிடுவென விரி மனித சமுகமே!
---------
1.2. அந்திப் போதின் கதி!
அந்தியும் மேற்கில் மறைந்தாள் -- அவள்
ஆடையெனும் கருவானம்;
எந்தத் திசையிலும் காற்றில் -- பறந்
தேறிடும் காட்சியும் கண்டீர்!
சிந்திய முத்து வடந்தான் -- ஒளி
சேர்ந்திடு நட்சத்திரங்கள்!
சிந்தையிற் கோபம் அடைந்தாள் -- அந்தி
சின்முகம் இங்குத் திருப்பாள்.
பாடுங் கடற்பெரு வேந்தன் -- தன்
பங்கில் இருந்தன னேனும்,
நாடும் உளத்தினில் வேறு -- தனி
நங்கையை எண்ணிடலானான்.
ஏடு திருப்பிப் படித்தால் -- அந்தி
எப்படி ஒப்புவள் கண்டீர்!
ஆடி நடந்து வந்திட்டாள் -- அதோ
அந்தியின் நேர் சக்களத்தி!
கன்னங்கறுத்த நற்கூந்தல் -- அந்தி
கட்டவிழ. நடந்தாளே!
சென்னி புனைந்த கிரீடம் -- மணி
சிந்திட ஓடிவிட்டாளே!
கன்னியுளம் வெறுத்தாளே -- கடற்
காதலன் போக்கினை எண்ணி
என்ன உரைப்பினும் கேளாள் -- அந்தி
இன்முகம் கீழ்த்திசை காட்டாள்!
ஏடி ஒளிமுகத்தாளே! அந்தி
என்னை மறந்தனை என்றே
கோடிமுறை அழைத்திட்டான் -- உளம்
கொந்தளிப் புற்று புரண்டாள்
வாடிய அந்தி நடந்த -- அந்த
மார்க்கத்திலே விழி போக்கிப்,
பீடழிந்தான் அந்த நேரம் -- ஒரு பெண்வந்து பின்புறம் நின்றாள்.
வந்திடும் சோதி நிலாவைக் -- கடல்
வாரி அணைத்தனன் கண்டீர்!
அந்தி பிரிந்ததினாலே -- கடல்
ஆகம் இருண்டது; பின்னை
விந்தை நிலாவரப் பெற்றான் -- கடல்
மேனியெலாம் ஒளிபெற்றான்!
சிந்தையை அள்ளுது கண்டீர்! -- அங்குச்
சீதக் கடல் மதிச் சேர்க்கை!
-------
1.3. நிலா பாட்டு
நிலவே நிலவே, எங்கெங்குப் போனாய்?
உலகம் முற்றும் உலவப் போனேன்.
உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
காடும், மலையும் மனிதரும் காண.
காண்ப தெதற்கு களிக்கும் பூவே?
சூரிய வெப்பம் நீங்கிக் குளிர,
குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே?
செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க,
சித்தங் களிக்கச் செய்வ தெதற்கு?
நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த.
நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க.
அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க.
குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த.
சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
ஏய்ந்திடும் உயிரெலாம் இன்பமாய் இருக்க.
பதந்தனில் இன்ப வாழ்வுதான் எதற்கோ?
சுதந்தர முடிவின் சுகநிலை காணவே!
-------------
1. 4. சோலை
விரைமலர்த் தேன்வண் டெல்லாம்
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைபடுத் திடத், தடாகக்
கரையினில் அலைகரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!
வானவில் ஏந்தக் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆநந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாலை
மல்லிகை சிரிக்கும் சோலை!
நெல்லியும் கமுகும் ஆலும்
நெடுங்கிளைக் கரம் வளைத்துச்
சொல்லுக இரண்டி லொன்று
தொட்டிழுத்திடுவோம் என்ன,
நல்ல மாதுளம் நடுங்கும்;
நறுவிளா நடுங்கும்; கொய்யா
வல்லி என் மார்போ கொய்யாக்
கனியென வழுத்தும் சோலை!
மாணிக்க அலகிற் கொஞ்சும்
மரகதக் கிள்ளைக் கூட்டம்
ஆணிப் பொன் னூசலாட,
அணிக்கிளை அசைக்கும் தென்றல்!
தூணிட்ட பச்சைப் பந்தல்
சூழ்கிளை மஞ்சத்தின்மேல்
ஆணொடு பெண்சிட்டின்பம்
மொட்டு மொண்டருந்தும் சோலை!
பறிபடாப் பசும்புற் பூமி
பட்டுத் தைத்திட்ட பெட்டி
திறந்த அப் பெட்டி யெங்கும்
சேர் பனி வயிரக் குப்பை!
அறைமணிக் குப்பை யெல்லாம்
அருக்கனின் ஒளிப் பெருக்கம்!
பறிபடாப் புற்கள் கண்ணைப்
பறித்திடச் சிறக்கும் சோலை!
------------
1. 5. குவட்டாவில் கூட்டக் கொலை
எந்த நிமிஷத்திலும் -- சாதல்
ஏற்படக் காரணங்கள்
ஐந்து லஷம் உளவாம் -- இதில்
ஐயமுற வேண்டாம்.
இந்த உலகத்திலே -- ''நீ
இருத்தல்'' என்பதெல்லாம்
வந்த விபத்துனையே -- கொஞ்சம்
மறந்த காரணத்தால்!
வானமும் மண்ணகமும் -- உண்டு;
மத்தியில் நீ யிருந்தாய்.
வானிடைக் கோடிவகை -- ''நிலை
மாற்றம்'' நிகழ்வதுண்டாம்.
ஆனஇம் மண்ணகத்தே -- பதி
னாயிரம் உற்பாதம்!
பானை வெடிக்கையிலே -- அதிற்
பருக்கை தப்புவதோ!
நாளைய காலையிலே -- இந்த
ஞாலம் உடைவதெனில்,
வேளை அறிந்ததனை -- நீ
விலக்கல் சாத்தியமோ?
ஆளழிக்கும் விபத்தோ -- முன்
னறிக்கை செய்வதில்லை
தூளிபடும் புவிதான் -- இயற்கை
சுண்டுவிரல் அசைத்தால்!
மானிடர் மானிடரைக் -- கொல்லும்
வம்பினை மானிடர்கள்
ஆனபடி முயன்றால் -- பகை
அத்தனையும் விலகும்.
மானிடன் கொன்றிடுவான் -- எனில்
மந்த மனிதனைத்தான்!
மானிடன் மானிடனின் -- உயிர்
மாய்ப்பதும் மிக்கருமை!
தல்ல குவட்டாவில் -- உன் நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன் -- அவர்
இல்லை எனக்கேட்டோம்.
சொல்லத் துடிக்குதடா -- உடல்!
தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின் -- வயிற்றில்
அகப்பட்டறைப் பட்டார்.
ஆகும் ஐம்பத்தாறா -- யிரம்
அன்பு மனிதர்களைப்
பூகம்ப உற்பாதம் -- மண்ணிற்
போட்டு வதைத்ததுவாம்!
சோகம் புலம்புமடா -- இந்தத்
தொல்லைச் செயல்கண்டால்
ஊகத்தில் இக்கோரம் -- தோன்றி
உள்ளம் அறுக்குதடா!
மாடம் இடிந்தனவாம்! அவை
மண்ணிற் புதைந்தனவாம்!
ஆடும் தரையோடும் -- மெத்தை
அடுக்கொடிந்தனவாம்!
கூடத்து மக்களெலாம் -- எழிற்
கொஞ்சிப் பழம்போலே,
வாட நசுங்கின ராம் -- ரத்த
வாடை எடுத்ததுவாம்!
பெற்ற குழந்தைகளைத் -- தினம்
பேணவரும் தாய்மார்,
சிற்றெறும்புக் கடிக்கே -- அழும்
திவ்ய அன்புடையார்!
வெற்றிக் குவட்டாவை -- இயற்கை
வேரறுக்கும் சமயம்
பெற்ற பிள்ளை துடிப்பும் -- பிள்ளை
பேணும் அன்னை துடிப்பும்,
எண்ணச் சகிக்கவில்லை! -- நகர்
எங்கும் சுடுகாடாம்!
கண்டவர் செத்திருப்பார் -- இந்தக்
ஷ்ட நிஷ்டூரமெலாம்!
அண்டை அயலிருப்பார் -- அவர்
அன்பினிற் செத்திருப்பார்!
எண்டிசை கேட்டிருக்கும் -- இதை!
ஏக்கம் அடைந்திருக்கும்
இன்றிரவே நமது -- நிலைமை
ஏதுகொல் என்றெண்ணும்
தின்றுபடுக்கு முனம் -- உயிர்
தீரும்என நடுங்கும்!
நன்று புவிவாழ்வு -- மிக
நன்று மிகநன்று!
மென்று விழுங்கும் ''புலிப் -- பெருவாய்''
மேதினி என்று பொருள்;
தம்பிஉனக் குரைப்பேன் -- நீ
சஞ்சலம் கொள்ளுகின்றாய்!
வெம்புகின்றாய் உளந்தான் -- இந்த
வேதனைச் செய்தியினால்!
அம்பு தொடுக்காமல் -- கா
லாட்படை ஏவாமல்,
கும்பலிற் சாகும் வகை -- இயற்கை
கோடிவகை புரியும்!
பூகம்ப லோகத்திலே -- தீயும்
புனலும் வாழ்புவியில்,
வேகும் எரிமலைகள் -- நல்ல
வேட்டையிடும் புவியில்
நோகும்படி தோன்றிக் -- கொல்லும்
நோய்கள் ஒருகோடி
ஆகுமிப் பூமியிலே -- நீ
அன்புறு வாழ்க்கையுற
மன மிருந்தாலோ -- ஒரு மருந்துனக் களிப்பேன்
தினமிரு வேளை -- அதைத்
தின்றுவர வேண்டும்.
எனை வெறுக்காதே -- மருந்
தின்னதெனச் சொல்வேன்
தினையள வேனும் -- அதைச்
சீயென்று ஒதுக்காதே!
சாவது நிச்சயமாம் -- நான்
சாவது நிச்சயமாம்
சாவது நிச்சயமாம் -- என்ற
சத்திய வார்த்தையினைக்
கூவுதம்பி கூவு! -- இந்தக்
குவலயம் கேட்கக்
கூவுக லக்ஷமுறை! -- உன்
கொச்சை மனந்தெளியும்!
அந்தத் தெளிவினிலே -- உனக்
காண்மை உதித்துவிடும்!
சொந்த உலகினிலே -- என்றும்
தொல்லை விளைவித்துவரும்
எந்த மனிதனையும் -- நீ
ஏறிக் கலக்கிடுவாய்!
சந்ததம் இன்பத்திலே -- புவி
சாரும் வகைபுரிவாய்!
மக்களுக் கிங்குழைப்பாய் -- இங்கு
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்,
தக்கன செய்வதெற்கே -- மனம்
சலித்தல் விட்டொழிப்பாய்!
அக்கினி மத்தியிலும் -- நீ
அஞ்சுதல் நீக்கீடுவாய்!
புக்க மனிதரெல்லாம் -- ஒற்றைப்
போகமுறை உழைப்பாய்!
-------------
2. தமிழகப்பகுதி
2.1 தமிழ்த்தொண்டு
இயற்கை அன்னை அருளிய இன் தமிழ்!
அயல்மொழி வேண்டா ஆர் எழில் சேர் தமிழ்
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்றுகுறிக்கும் தனித்தமிழ்!
தமிழர் வாழ்வின் தனிப்பெருமைக்கும்
அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்!
அந்த நாளில் அறிவுசால் புலவர்
எந்நாள் தோன்றியதோ எனும் பழந்தமிழ்!
தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில்
அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்
தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று --
இமையாது முயன்ற அயலவர் எதிரில்,
இறவாது நிற்கும் ஏற்றத் தமிழன்
பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே!
அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி
இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள
பொன்றா ஆதரவு -- அன்றோ காரணம்?
அயல்மொழி எல்லாம் அண்டையில், கண்ணெதிர்
வியக்கு முறையில் மேன்மை பெற்றன;
என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்!
இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர்
தமிழிடம் காட்டும் தயவு போதுமா?
தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக!
"தமிழர் பொருளெல்லாம் தமிழுக்குத் தந்தார
"தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார
என்ற சொல் நாட்டினால், இறவா நற்புகழ்
நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு --
அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே?
ஆவன தமிழுக்கு ஆற்றுதல் சிறிதே
ஈவது சிறிதே இன்ப மொழிக்கு!
வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா?
ஒருவர் ஒன்று தமிழ் நலம் உன்னி
இயற்ற முன் வந்திடில், இடையூறு பற்பல
இயற்ற முன்வருவதை என்ன என்பது!
சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா? அன்றிக்
காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம்
செய்தும் திரிதல் சிறப்பா? செப்புக!
குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத்
தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில்
அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும்,
தென்பா லெழுந்த தீந்தமிழ்ச் சுடரை
வானிடை எழுமோர் வண்ணச் சுடராய்ச்
செய்யுமுன் வருக தமிழரே,
உய்ய நம்மவர்க்கிங்கு உறுதுணை அஃதே!
----------
2.2 நமது நாடகம், சினிமா
சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்
கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால்
கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்
பழமையினை நீக்கி நலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின்றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்,
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும்,
பெருநோக்கம் பெரு வாழ்வு கூட்டு தற்கும்,
பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன்
திருநாட்டில் பயனற்ற நாடகங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னேத் தள்ளும்!
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பா திப்போர்
தமிழ்ப்பாஷையின் பகைவர்; கொள்கை யற்றோர்;
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்;
இதம் அதகிம் சிறிதேனும் அறியா மக்கள்!
"தமைக்காக்க! பிறர்நலமும் காக்க" என்னும்
சகஜகுண மேனுமுண்டா? இல்லை இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாடகங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை இல்லை.
முன்னேறறங் கோருகின்ற இற்றை நாளில்
"மூளிசெயல் தாங்காத நல்லதங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தை காட்டுகின்றார் சிணிமாக்காரர்!
இந்நிலையில் நாடகத்தின் தமிழோ, "காதை
இருகையால் மூடிக் கொள என்று சொல்லும்.
தென்னாட்டின் நிலை நினைத்தால் வருந்தும் உள்ளம்!
செந்தமிழின் நிலைநினைத்தால் உளம் வெடிக்கும்!
-------------
2.3 நல்வாழ்வு
[மாமயிலேறி நீ வா மகானுபாவா என்ற மெட்டு]
பல்லவி
நோயினைப் போய் அழிப்பாய்
நூறாண்டு வாழ்வாய்!
சரணம்
ஆயநன் னெஞ்சில் வேண்டும்நல் வீரம்
தேயத்தில் தேகத்தில் வேண்டும்சுகா தாரம் (நோ)
அசுத்தமும் இருட்டும் புறத்தும் நல் லகத்தும்
அகற்றுக நீ தமிழா ஆநந்தம் உனை நத்தும் (நோ)
வாழ்க்கையின் நடுவே வரஎண்ணும் சாவை
போக்கிட நோய்களில் அசுத்தத்தில் "தீ" வை!
அயர் வினில் தொடரும் துயரெனும் சேதி
அறிவுலகினில் இல்லை; ஏறடா அதன் மீதில்! (நோ)
---
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள்
கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள்,
காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி, மிகு
சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி,
வீணை எடுத்தாள்! விளைத்தாள் அமுதத்தை!
ஆணழகன் தன் நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்
காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள்
சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப்
பாடினார்! பாடிப் பனிக்காலைப் போதுக்குச்
சூடிஅழைக்கச், சுடரும் கிழக்கினிலே
செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்!
அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள்
பிள்ளைகளைக் கூட்டிப்போய் பீடத்தி லேயமைத்துப்
பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு,
நல்ல கதையுரைத்து ஞாலப் பதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள், தோயன்பு நாதன் முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார். மக்களெலாம்
கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப்பொத்தலெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுததி்விட்டாள்; தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆன பல ஆலோசனை பேசி
நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த
போதில், வெளியூர்ப் புறத்தி லிருந்து தன்
வீட்டுக்கு வந்த விருந்தாளி, வீதியிலே
போட்டிருந்த கல் தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால்
மண்டை யுடைந்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால்
அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை
தக்கபடி புரிந்தாள். தன் நாதன் வீடுவந்தான்.
ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு
நல்லசுகாதாரம் நாடிச் சமைத்திருந்த
பல்லுணவும் இட்டாள்! பகல் கணக்கும்தான் எழுதிச்
சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி
வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து
வாசித்தாள். நல்ல வடிவழகன் பேச்சமுதை
ஆசித்தாள், இன்பம் அடைந்தாள். சிறிதயர்ந்தாள்.
பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான் வந்து
சொக்கர் திருவிழாச் சோபித்ததைச் சொல்லி,
வருவோம் நாம் போய் வருவோம்; மாலை திரும்பி
வருவோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட
இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள்;
நல்ல விழாவைத் தன் நாவால் மறுப்பாளா?
வந்த விருந்தாளி பருவதத்தின் வார்த்தைக்குத்
தந்த பதில் இதுவாம்:- "தையலரே கேளுங்கள்!
சங்கீத கோகிலத்தைத் -- தாவும் கிளையினின்று
அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ?
மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக்
கக்கும் அனலின் கசக்க அழைப்பீரோ?
தையற் றொழில் அன்னம் தாமரைப்பூ வைமறந்து
வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ?
வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழவில்
போட்டுக் குலைக்கப் பெறாமை உமக்காமோ?
காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்ல நல்ல,
ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை
வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர்?
அம்மைமீர், நல்ல அறிவும் திருவுமுறும்
சீமாட்டிதன்னைத், திருவிளக்கைக் கல்வியென்னும்
மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச்
சொந்தக்கணவனுடன் சேய்கள் தொடர்பறவே
எந்தநிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன்.
நிர்மலமாங் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி
சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை
ஊமைஎன இருந்தாள் உங்கள் அழைப்புக்கே!
தீமை புரியாதீர்' என்று தெரிவித்தான்!
இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை
முல்லை மலர்ந்த சிரித்த முகங்காட்டி,
தோழி, விழாவுக் கழைத்தாய் அதுவேண்டாம்;
வாழி உலகென்றாள் வாய்ந்து.
----------
2.4 தழிழர் எழுச்சி!
உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை!
அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை
ஆழ்வது தமிழர்கள் கடமை!
புயல்நிகர் பகைமையும் வேரோடு மாளும்
தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்!
வெயில்முகம் சுளித்தால் அகிலம் துாளாம்
மேன்மையை முழக்குக முரசே!
பழமையில் இங்குள அன்புறு காதற்
பயனுறும் அகப்பொருள் காப்போம்!
அழகிய தமிழ்நடை யாற்புதி யனவாய்!
ஆயிரம் கலைநூல் சேர்ப்போம்!
அழுதிட ஒருவன்மற் றொருவனை மேய்க்கும்
அதருமம் அனைத்தையும் மாய்ப்போம்!
முழுதுல கப் பயன் உலகினர் சமம்பெற
அன்பினில் மனிதரைத் தோய்ப்போம்!
முழக்குக எங்கணும் முழக்குக முரசே
முழக்குக தமிழர்கள் பெருமை!
வழங்கிடும் அங்கையர் வாளுயர் தோளினர்
வாய்மையின் வாழ்பவர் தமிழர்!
எமுந்துள வீரம் தமிழரின் மூச்சில்
எழுந்தது வாமென முழக்கே!
அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும்
அன்புத் தமிழர்கள் வாழ்வு!
மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேலோர்
மாபெரும் கவிஞர்கள் கூட்டம்,
அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம்,
ஆவது தமிழர்கள் ஈட்டம்!
பணிகுதல் இல்லை அஞ்சுதல் இல்லை
பாய்ந்திடும் ஒற்றுமை யாலே!
தணியாக் காதல் நிறைவா மின்பம்
தமிழர்க்கு இப்புவி மேலே!
------------
3. உலக சமாதானம்
3.1 உலகப் பொதுச்சேனை
படை நடத்தல்
நானிலத்தின் மேனிலைக்குச்
சேனை கூட்டினோம்! -- பொதுச்
சேனை கூட்டினோம் -- வெறி
நாய்கள் ஒக்கப் போர்தொடுக்கும்
ஈனம் ஓட்டினோம்! -- கெட்ட
ஈனம் ஓட்டினோம்.
தேனடைக்குள் ஈக்கள் ஒப்பர்
பூதலத்தினோர்! -- இந்தப்
பூதலத்தினோர் -- அவர்
சீவனத்திற் பேதம் வைத்துப்
பாழ்படுத்தினார்! -- துஷ்டர்
பாழ்படுத்தினார்.
ஆனதுஷ்டர் தீயதன்மை
சாகடிக்கும் நாள் -- முற்றும்
சாகடிக்கும் நாள் -- இது
வாகும் என்று தீவிரத்தில்
வாளெடுக்கும் தோள்! -- கூர்
வாளெடுக்கும் தோள்!
மேனிலைக்கண் மாநிலத்தை
ஏற்றுவிப்பீரே -- விரைந்
தேற்றுவிப்பீரே -- நீர்
மேல் நடப்பிர்! மேல் நடப்பிர்!!
மேல் நடப்பிரே!!! -- உடன்
மேல் நடப்பீரே
3.2. உலக முன்னேற்றம்
உலகமே உயர்வடைவாய்!
உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்!
நலந் தரும் சமத்வம்
நாடுதல் மகத்வம்
நண்ணுவாய் சுதந்தரத்வம்! (உலக)
கலகமேன்? சண்டைகளேன்?
கருத்தெலாம் பேதம் கொள்வதேன்?
கலன் செல்லும் பாதையின்
காரிருள் வெளிக்குக்
கல்வியே சுடர் விளக்கு! (உலக)
--------------
3.3. கொடை வாழ்க!
எக்காளக் குயில்
வெண்பா
நின்றசெங் காந்தட்பூ நேரிற்கை யேந்தநெடுங்
கொன்றைமலர்ப் பொன்னைக் கொட்டுகிறாள் -- என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணிற்
கொடைவாழ்க என்று குறித்து. 235
-------------
4. காதற் பகுதி
4.1 கண்டதும் காதல்
(வண்ணம்)
ஸ்ரீமதி இவளார்? உலகிடை
மானிடமதிலேதிவள்?
ஒரு சேலிணையினை நேரிருவிழி
கோகனகவி நோதஅதரம்
மாமதிநிகர் ஓரிளமுகம்
வானுறுமழை தானிருள் குழல்
வாழ்மதுரகரகம் ஊதிடுமலர்
சூடியமுடி யோடிவளிரு
மத்தக மொத்த தனத்தொடு சித்தமி
னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்!
மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ?
தோய்மதுமலர் மாலையைநிகர்
ஆகியஒரு தேகவனிதை
தீவிரநடம் ஆடியமயி
லேஎ னுமொரு சாயலினொடு
மாசறுகலை மானெனமருள்
வாளவள்நடை யோ அனநடை
வாழுலகினி லேஇவளரு
ளால திசுக மேபெருகிடும்!
வைத்திடு புத்தமு தத்தையெ டுக்கம
றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்
மதுவோடையைமொண்டுணவாக்கு நல்காளோ?
மாமயலெனும் ஓர் அனலிடை
யே எனதுளம் நோயடைவதை
மாதிவளறி யாள் இதை எவர்
போயவளிட மே புகலுவர்?
ஆம். அவள் தரு வாயிதழமு தே இதுததி மா அவுஷதம்!
ஆவியுமவ ளே உடைமைக
ளாதியுமவ ளேயுலகினில்!
அற்புத சித்திர சிற்ப கலைக்கொரி
லக்கியம் வைத்தசி லப்புமி குத்திடும்
அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ?
காமுறுதமிழ் நாடெனுமொரு
தாயுறுபுக ழோ! இனிதென
நாவலர்களு மேதுதிநிதம்
ஓதிடுதமிழோ நவநிதி
யோ! முழுநில வோ! கதிரவ
னோ! கவிதையி லேவருசுவை
யோ! இதுகன வோபுதுயுக
மோ! வடிவழ கே வடிரசம்
மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி
வைத்த தெனச் சொல விட்டசு கக்கடல்!
மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே!
-------
4.2. கண்டதும் காதல்
(அடாணா இராகம். அடதாளம்.)
பல்லவி
களிப்பில் ஆடும் கான மயிலோ
காதாரும் பண் பாடும் குயிலோ? (களிப்)
அனுபல்லவி
துளிக்கும் மது மலரின் தேகம்
சுகம் தரும் இவள் அளிக்கும் போகம்! (களிப்)
சரணம்
பளிக்குமேனி கண்டு மனந்தத்
தளிக்குதுடல் கொப்பளிக்குதே!
ஒளிக்குதே இம் முகவிலாசம்
உளத்தில் மோகம் தெளிக்குதே
வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம்
வையம் விளங்க ஏற்றும் தீபம்! (களிப்)
கலைத்துக் கலைத்து வரைந்த சித்திரமோ
கவினுறும் விழி வேலோ!
ஒலிக்கெலாம் உயிர் தரும் இவள் மொழி
இனிப்புச் சேர்த்திட்ட பாலோ!
தலைக்கேறுதே கொண்ட மோகம்
தகிக்குதே இதென்ன வேகம்! (களிப்)
----------
4.3 நாணிக்கண் புதைத்தல்!
தலைவன் கூற்று.
இராகம்; கமாஸ்
(ஏனிந்தப்படி மனம் கலங்கலானீர் மன்னா என்ற
மெட்டிற் சிறிது பேதம்)
தாமரைமுகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி -- இளந்தையலே!
பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம்
புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே! (தாமரை)
விழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி -- இளந்தையலே!
பிழிந்த அமுதமதைப் பிசைந்த கனிரசத்தை
விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனதே (தாமரை)
நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி -- இளந்தையலே
காணப்படும் நிலவைக் கரம்பொத்தி விடுவதில்
ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி! (தாமரை)
மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம் --
இளந்தையலே!
இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம்
இணைத்திணைத் திழுத்திழுத்தணைத் தணைத் தமுதளி!
(தாமரை)
-----------
4.4 தலைவன், தலைவி தந்த சுகம் நினைத்துருகல்
(ஸ்ருங்காரலகரி என்ற மெட்டு)
பல்லவி
செந்தேனோ தமிழோ அவளுதவிய சுகம் (செந்)
அனுபல்லவி
முந்தோர் நாள் தானே வந்தெதிர்
குளிர் சோலையில் முழு நிலவினில்
கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக்
[சிட்டா ஸ்வரத்திற்கு]
கோ-கனகவி தழ்குவிய முகமே என
தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு
புளகமெய் தனிலுற இருவரொருவ ராக ஆவலொடு
கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம்
கொஞ்சத்தினில் நெஞ்சத்தைவிட்டு
நிமிஷமும் அரை நிமிஷமும்
விலகுதல் அருமை விரைவினில் அவள்பிரி
வினைமனது பொறுத்திடுவது சுகம்
வெறுப்பதுவாகும் மலர்ச் (செந்)
சரணம்
சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியாள்
சுகுணாலயம் அன்னவள்!
எந்த வனிதை அவளோடு இணைபெற வருவாள்?
கந்தக் களப உடலாள்! அதிசோபித
கண்ய மான அதி புண்யவதி சுநிதி! (செந்)
------------
5. நகைச்சுவைப் பகுதி
5.1. பறக்கும் மிளகு!
பூமியில் மிளகு புள்போல் பறக்குமா?
புதுவை மிளகோ புள்ளாய்ப் பறக்கும்!
சீர்புதுச் சேரியில் தெரிந்த வீடு
சென்றேன் சென்றமாதக் கடைசியில்!
கூடம் நிறையக் கொட்டியிருந்த
கொட்டை மிளகைக் கூட்டிவார
எண்ணினேன், வீட்டார் இல்லை யாதலால்!
எழுந்து துடைப்பம் எடுத்து நாட்டினேன்
பூமியில் மிளகு புள்போற் பறக்குமா?
புதுவை மிளகு புள்ளாய்ப் பறந்ததே!
எனக்கும் ஆயுள் எண்பது முடிந்ததாம்;
இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்!
பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்;
போன மிளகு பூமியில் வந்தது!
கூட்டப் போனேன் கூட்டமாய்ப் பறந்தது!
கூட்டாப் போது பூமியில் குந்தும்!
வீட்டுக்காரி வந்து
பாட்டாய்ப்பாடினாள் "ஈ"ப் படுத்துவதையே
-----------
5.2. பழய நினைப்பு
நேற்றவன் சேவகனாம் -- இன்று
நீங்கிவந் திட்டாண்டி!
ஏற்றம் இறைத்திடவே -- உச்சி
ஏறி மிதித்தாண்டி!
சேற்று நிலத்தினிலே -- ஒரு
சின்னஞ்சிறு குறும்பன்
தோற்றி மணியடித்தான் -- அந்தத்
தொல்லை மணி ஓசை.
பழைய சேவகனின் -- காதிற்
பட்டதும் வண்டி என்றே
பழய ஞாபகத்தில் -- செல்லும்
பாதை குறிப்பதற்கு
முழுதும் கைதூக்க -- அவன்
முக்கரணம் போட்டு
விழுந்து விட்டாண்டி! -- அவன்
வீணில் கிணற்றினிலே!
-------------
5.3. கொசு! உஷார்!!
(கும்மி மெட்டு)
கும்பகோணத்திற்குப் போகவேணும் -- அங்குக்
கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும்
சம்பள வீரர் பிடிக்கவேணும் -- அங்குச்
சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்
கும்பலும் வீரரும் ஏதுக்கென்பீர்? -- நல்ல
கும்பகோணத்தினில் என்ன என்பீர்?
அம்பு பிடித்த கொசுக் கூட்டம் -- அங்கே
ஆட்களை அப்படியே புரட்டும்!
-------------
5.4. சென்னையில் வீட்டு வசதி
ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!
திருவரங்கப் பெருமாள் நீரே!
சென்னையில் உங்கள் சிறந்த நாமம்
தெரியாதவர்கள் ஒருவருமில்லை!
பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்
பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்
தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி
சேகரித்தேன்! ஆகையால் அதனை
வீட்டில் வைத்து வெளியிற் சென்று
விடிய வந்து எடுத்துக்கொள்கிறேன்.
வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்
"பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!
படித்தினைக் கிடமிருந்தால்,
குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப்பேனே!!"
--------------
5.5. ஏற்றப் பாட்டு
ஆழஉழுதம்பி அத்தனையும் பொன்னாம்!
அத்தனையும் பொன்னாம் புத்தம்புது நெல்லாம்
செட்டிமகள் வந்தாள் சிரித்துவிட்டுப் போனாள்!
சிரித்துவிட்டுப் போனாள் சிறுக்கி துரும்பானாள்!
ஆற்று மணல்போலே அள்ளி அள்ளிப் போட்டாள்
அத்தனையும் பொன்னாம் அன்புமனந்தாண்டி!
கீற்று முடைந்தாளே கிளியலகு வாயாள்
நேற்றுச் சிறுகுட்டி இன்று பெரிசானாள்!
தோட்டங் கொத்தும் வீரன் தொந்தரவு செய்தான்
தொந்தரவுக் குள்ளே தோழிசுகம் கண்டாள்!
-------------
5.6. அம்மானை ஏசல்
(எல்லாரும் போனாப் போலே என்ற மெட்டு)
மந்தை எருமைகளில்
வளர்ந்திருந்த காரெருமை
இந்தவிதம் சோமன் கட்டி
மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர் மாமா -- எங்கள்
இன்ப மயிலை நீர் மணக்கலாமா?
ஆந்தை விழி என்பதும்
அம்மிபோன்ற மூக்கென்பதும்!
ஓந்தி முதுகென்பதும்
உமக்கமைந்து கிடப்பதென்ன? மாமா -- எங்கள்
ஓவியத்தை நீர் மணக்கலாமா?
கோடாலிப் பல் திறந்து
குலுங்கக் குலுங்க நகைக்கையிலே
காடே நடுங்கிடுமே
கட்டை வெட்டக் கூடுமென்று! மாமா -- எங்கள்
வாசமலரை நீர் மணக்கலாமா?
வெள்ளாப்பம் போலுதடு
வெளுத்திருக்கும் வேடிக்கையில்
சொள்ளொழுகிப் பாய்வதுதான்
சொகுசு மிகவும் சொகுசு சொகுசு மாமா -- எங்கள்
சுந்தரியை நீர் மணக்கலாமா?
ஆனைக்குக் காதில்லையாம்
அளிப்பதுண்டோ நீர் இரவல்!
கூன்முதுகின் உச்சியிலே
கொக்குக்கழுத்து முளைத்ததென்ன? மாமா -- எங்கள்
கொஞ்சுகிளியை நீர் மணக்கலாமா?
எட்டாள் எடுக்க ஒண்ணா
இரும்புப் பீப்பாய் போலுடம்பு
கொட்டாப்புளிக் கால்களால்
குள்ளவாத்துப் போல் நடப்பீர் மாமா -- எங்கள்
கோகிலத்தை நீர் மணக்கலாமா?
--------------
5.7. அண்ணியை ஏசல்
(கத்தாழம் பழமே உனைநத்தினேன் தினமே என்ற மெட்டு)
அண்ணி வந்தார்கள் -- எங்கள்
அண்ணாவுக்காக -- நல்ல (அண்ணி)
கண்ணாலம் பண்ணியாச்சு!
கழுத்தில் தாலி கட்டியாச்சி!
பிண்ணாக்குச் சேலை பிழியப்
பெரியகுளமும் சேறாய்ப் போச்சு! (அண்ணி)
எட்டிப் பிடித்திடலாம்
இரண்டங்குலம் ஜடை நுனிதான்
பட்டி வெள்ளாட்டு வாலைப்
போல மேலே பார்க்கும்படி! (அண்ணி)
நத்தைப்பல் சொட்டை மூக்கு
நாவற்பழ மேனியிலே
கத்தாழை நாற்றம் எங்கள் கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! (அண்ணி)
அழுக்குச் சுமந்து செல்லும்
அழகு வெள்ளை முகக்குதிரை
வழுக்காது நடப்பதுபோல்
வாய்த்தநடை என்னசொல்வேன்? (அண்ணி)
கோல்போல் இடுப்புக் கொரு
கோல ஒட்டியாணம் செய்யப்
பேல்கட்டு வாங்க வேண்டும்
பிரித்துத் தகட்டை எடுக்கவேணும்! (அண்ணி)
பக்குவமாயப் பேசும்போது
பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,
செக்காடும் சங்கீதமே
செவியில்வந்து துளைத்திடுதே! (அண்ணி)
-----------
6. சிறுவர் பகுதி
{ மகாவதி குண மதா வேகமாய் என்ற -- மெட்டு }
{ தந்தை தனயனுக் குரைத்தல் }
6.1. கல்வி
கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்
கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை
இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்
-------------
6.2. பிள்ளைக்கு நீதி
{ ஆனந்தக் களிப்பு மெட்டு }
சோம்பிக் கிடப்பது தீமை -- நல்ல
தொண்டு செயாது கிடப்பவன் ஆமை!
தேம்பி அழும் பிள்ளைபோலே -- பிறர்
தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை
( 20 )
புதுமையிலே விரைந்தோடு -- ஒன்று
போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு!
எதிலும் நிசத்தினைத் தேடு -- பொய்
எவர் சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு
தேகத்திலே வலி வேற்று -- உன்
சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று
ஊகத்திலே செயல் ஆற்று -- தினம்
உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று
பசிவந்த போதுண வுண்ணு -- நீ!
பாடிடும் பாட்டினி லே சுவை நண்ணு!
வசித்திடும் நாட்டினை எண்ணு -- மிக
வறியர்க்காம் உபகரணங்கள் பண்ணு ( 30 )
பொய்யுரைப் போன் பயங்காளி -- பிறர்
பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும் -- நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி
---------------
6.3. வறுமையில் செம்மை
{ தாய் -- மகள் சம்பாஷணை }
சகானா ஆதி ( 35 )
மகள் சொல்லுகிறாள்:
அம்மா என் காதுக்கொரு தோடு -- நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது -- நான்
சொல்லி விட்டேன் உனக்கிப்போது! (அம்)
தாய் சொல்லுகிறாள்:
காதுக்குக் கம்மல் அழ கன்று -- நான்
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகு பணிவாய் -- நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய் (கா)
மகள் மேலும் சொல்லுகிறாள்:
கைக் கிரண்டு வளையல் வீதம் -- நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல் லோரும் -- என்
பாடசாலையிற் சொல்ல நேரும்! (கைக்)
தாய் சொல்லும் சமாதானம்:
வாரா விருந்து வந்த களையில் -- அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு -- பெண்ணே
அவர் சொல்வதுன் கைகட்கு விலங்கு! (வாரா)
பின்னும் மகள்:
ஆபர ணங்கள் இல்லை யானால் -- என்னை
ஆர் மதிப்பர் தெருவில் போனால்
கோபமோ அம்மா இதைச் சொன்னால் -- என்
குறை தவிர்க்க முடியும் உன்னால் (ஆப) (55)
அதற்குத் தாய்:
கற்பது பெண்க ளுக் கா பரணம் -- கொம்புக்
கல்வைத்த, நகை தீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு -- தன்
கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அன் போடு! (கற்) (60)
---------------
6.4. மாணவருக்கு எழுச்சி
{ கல்யாணம் செய்துக்கோ என்ற மெட்டு }
நிற்கையில் நிமிர்ந்து நில்! -- ந
டப்பதில் மகிழ்ச்சி கொள்!
சற்றே தினந்தோறும் விளையாடு.
பற்பல பாட்டும் பாடிடப் பழகு! -- நீ
பணிவாகப் பேசுதல் உனக்கழகு! (நிற்)
கற்பதில் முதன்மை கொள்
காண்பதைத் தெரிந்து கொள்
எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே!
சுற்றித் திரிந்திடும் துஷ்டர்! சிநேகிதம்
தொல்லை என்பதிலென்னசந்தேகம்? நீ (நிற்) (75)
சித்திரம் பயின்று வா
தேன் போன்ற கதை சொல்
முத்தைப்போலே துவைத்த உடையணிவாய்
புத்தகம் உனக்குப் பூஷணம் அல்லவோ?
போக்கடிக்காதே இதை நான் சொல்லவோ -- நீ (நிற்) (80)
பத்திரி கைபடி நீ
பலவும் அறிந்து கொள்
ஒத்துப் பிறர்க்கு நலம் உண்டாக்கு!
நித்தமும் இந்தத் தேசம் தன்னை
நினைத்துப் பொதுப் பணிசெய்
அவளுனக்கு அன்னை (நிற்) (85)
--------------
6.5. நல்லினஞ் சேர்தல்
{ பக்ஷமிருக்கவேணும் மன்னனே என்ற-மெட்டு }
சேரிடம் அறிந்துசேர் எந்நாளும் -- மைந்தா
தீயரை அணுகிடிற் பழி மூளும்!
சீரிய ஒழுக்கம் சிறந்தநூற் பழக்கம்
ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே -- சினேகம்
ஆகுதல் அல்லவோடா உன் கடமை! (90)
மண்ணின்குணம் அங்குள்ள நீருக்குண்டு -- மைந்தா
மாலையில் மலர்மணம் நாருக்குண்டு.
திண்ணம் பன்றி யொடும்
சேர்ந்த கன்றும் கெடும்!
கண்செய்த பாவம் தீயர் தமைக்காண்டல் -- மைந்தா
கைசெய்த புண்யம் நல்லார் அடி தீண்டல் (100)
சடுதியிலே துஷ்டர் சகவாசம் -- பிராமண
சங்கடம் உணர் இந்த உபதேசம்.
தடையிதில் ஏது
தாய் எனக் கோது?
சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து -- மைந்தா
சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து! (சேரிடம்) (105)
--------------
6.6. வழி நடத்தல்
{ சென்ற கனி பறித்துக்கொண்டு என்ற-மெட்டு }
மரங்கள் அடர்ந்திருக்குங் காடு -- கரு
வானில் உயர்ந்த மலை மேடு -- தம்மில்
பிரிந்து பிரிந்து செல்லும் வரியாய் -- நாம்
பிரியத்துடன் நடப்போம் விரைவாய்
பெருங் குரலில் பாட்டும்
பேச்சும் விளையாட்டும் -- நம்மை
விரைவில் அவ்விடம் கொண்டு கூட்டும்! (110)
இளமை தன்னில் வலிமை சேர்ப்போம் -- நாம்
எதிலும் தைரியத்தைக் காப்போம் -- நாம்
அளவில்லாத நாள் வாழ -- உடல்
அழகும் உறுதியு முண்டாக,
ஆசை கொண்டு நடப்போம்
அச்சமதைத் தொலைப்போம் -- நம்
நேசர் பலரும் மனங்களிப்போம். (மரங்கள்)
-------------
7. பொங்கற் பாட்டுகள்
7.1 பொங்கல் வாழ்த்து (அறுசீர் விருத்தம்)
தைத்திங்கள் முதல் நாள் என்றார்!
தமிழர்கள் திருநாள் என்றார்!
புத்தமு தாக வந்த
பொங்கல் நாள் என்றார்க் கின்றார்!
கைத்திற ஓவி யங்கள்
காட்டுக வீட்டில் என்றார்!
முத்தமிழ் எழுக என்றார்!
முழங்குக இசைகள் என்றார்!
கொணர்கவே புதிய செந்நெல்
குன்றாக என்றார் ! பெண்கள்
அணிகள், பொன் னாடை யாவும்
அழகாகக் குவிக்க என்றார் !
மணமலர் கலவை கொண்டு
மலைஎனக் குவிக்க என்றார்
கணுவகல் கரும்பும் தேனும்
கடிதினிற் கொணர்க என்றார் !
எழுத்தாளர் பொங்கல் வாழ்த்தே
எழுதுக ஏட்டில் என்றார் !
பழச்சுமை வருக என்றார் !
பட்டியல் எழுதிச் சென்று
வழக்கத்துக் கடைச்ச ரக்கு
வாங்கிவந் திடுக என்றார் !
முழுக்குலை வாழை மாவின்
தோரணம் முடிக்க என்றார் !
எழுந்தது கீழ்க்க டல்மேல்
இளங்கதிர், மூசைத் தங்கம்
பொழிந்தது! விண்ணும் மண்ணும்
பொலிந்தது தமிழர் நாடு!
வழிந்தது பொங்கல் பொங்கி!
வாழ்த்தினர் பரிதி தன்னைத்
தழைத்தது நெஞ்சில் இன்பம்,
தமிழர்கள் பொங்கல் உண்டார்,
வாழிய பொங்கல் நன்னாள்
வாழிய திராவி டந்தான்!
வாழிய புதுமை நூற்கள்? வாழிய தமிழ்க் கலைகள்!
சூழிய மணிமு கில்கள்!
துலங்குக நன்செய் யாண்டும்
ஆழ்கடல் மிசை எழுந்த
அழகிய பரிதி வாழ்க
------------
7.2 பொங்கல் வாழ்த்து (அகவல்)
பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே.
உண்ணும் விழிகள் உவக்கும்ஓ வியமே,
முன்னைக்கு முன்னர் முளைத்தமூ தொளியே,
இந்நாள் மட்டும் இளமைமா றாமல்
புதிது புதிதெனப் போற்றும் பரிதியே,
இந்நாள் புதுமையிற் புதுமை இயற்றினாய். !
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க, நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே,
ஆடல்வா ழியநின் அழகு வாழிய!
புத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து
தித்திக் கும்பால் செம்மையின் அளாவ
அலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல
இலகெரி அடுப்பில் ஏற்றிய பானை,
பொங்கிடப், "பொங்கலோ, பொங்கலென் றார்த்தே
புரைதீர் வெல்லம், புலிப்பல் போன்ற
ஏலம், பருப்புச் சேலத்து நறுநெய்
நன்று சேர்த்துக் குன்றென இறக்கித்
தேன்பெய்து, முக்கனி சேர்த்து விருந்துடன்
ஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்
திருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி
அருள்தேக் குழவர் வாழ்த்தி அந்தமிழ்
வாழ்வினை வாழ்த்தி வாழ்த்தி
மூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே!
-----------------
7.3 திராவிட நாட்டுப் பொங்கல் வாழ்த்து
(எண்சீர் விருத்தம்)
அகத்தியனும் காப்பியமும் தோன்று முன்னர்!
அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்!
மிகுத்தகடல் குமரியினை மறைக்கு முன்னர்!
விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்
பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப்
பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துக்
திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில்
திராவிடநாடு எனப்போற்றும் என்றன் அன்னாய்,
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செய்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார்
சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை!
நலங்கெட்டுப் போனதில்லை, அதனா லென்ன?
நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ?
கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால்
கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்?
இலங்குதிரு வே, வையம் செய்த அன்னாய்
எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே!
தமிழகமே, திராவிடமே, தைம்முதல் நாள்
தனிலுன்னை வாயார வாழ்த்துகின்றேன்.
அழிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை
எனும் உணர்வால் வாழ்துகின்றேன்; வாய்ப்பேச்சல்ல.
அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டு வன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான். அதைப்போ லத்தான்
இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தி னான்போல்
நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப் பெற்றோயே
நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை
பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின் வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத்தேன் நன்றுவாழ்க.
-------------------
7.4 பொங்கல் பொங்கிற்றா
(கலிவெண்பா)
உலகுநலம்காண உழவன் விதைத்தும்
இலகு மணிக்கதிர் ஏறப்-பொலிதோள்
கவிழக் கதிரடித்துச் சேர்த்திட்ட செந்நெல்
குவித்து நிமிர்ந்தான்! குளியில்-அவிழ்த்த
கதிர்ச்செல்வன் தானும் கடல்மேல் நிமிர்ந்தான்!
"இதுகேள் உழவனே, இந்த-முதுவையத்
தாட்சிஉனக் காகுக, என்று கதிரவன்
மாட்சியுடன் வாழ்த்தி மகிழ்கின்றான்-கேட்ட
உழவன். 'நிறைநாளின் செல்வனே உன்றன்
எழில்வாழ்க." என்னுமோர் வார்த்தை மொழிகின்றான்.
துய்ய உடம்புதான் சோர்வதே இல்லாமல்
வையகம் வாழ்ந்திட வாழும் அம்-மெய்யு ழவன்,
பொன்னின் புதுப்பரிதி வாழ்த்தியுளம் பூரித்துச்
செந்நெல்கொண் டில்லத்தே சேர்த்திட்டான்-என்னே!
உயர்நெல்லைத் தீட்டும் உலக்கைப்பா டல்கள்!
அயில்விழிமாதர் அடுப்புயர்த்த பானைப்-பெயலான
பாலோடு முத்தரிசி மேலெழுந்து பாடி வர
ஏலங்கற் கண்டுநெய் இட்டபடி -- மேலும்
தழுவித் தேன் பன்னீர் சுளைக்கனி யாவும்
இழைய இழையத், தமிழால் -- அழகுறவே
பொங்கலோ பொங்கல் என ஆர்த்தார்க்குச் செங்கரும்பும்
தங்கம்நேர் மஞ்சள் விளைச்சலும் -- எங்கணும்
மாவிலைத் தாரும் மலியக், குருத்தி லையைத்
தாவி விரித்திட்ட தையலர்கள்-ஆவலொடும்
அள்ளிவட் டித்திட்ட பொங்கல் அமிழ்தத்தைப்
பிள்ளைகள், பேரர், பெருமான்கள்-உள் அன்பார்
அன்னைமார் எல்லோரும் ஆரஉண்டார்கள்!
ஒருவீடு போலத் தெருவீ டுகளும்,
தெருவீ டுகள்போலத் தென்னாட் டிருக்கின்ற
வீடெல்லாம் இன்ப விளையாட்டாம், வீட்டிலுள்ள
மாடுகன் றுக்கெல்லாம் மாச்சிறப்பாம்! சோடிப்பாம்!
மங்காத செந்தமிழீர் வாரீர் நும் வீட்டில்பால்
பொங்கிற்றா? வாழ்க பொலிந்து. !
-------------
7.5 பொன்னாடு வெல்கவே
(எண்சீர் விருத்தம்)
உண்டாயா நீபொங்கல்? வீட்டிற்பால் பொங்கிற்றா?
உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர்
பண்தழைத்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன்
பழநாட்டார் உள்ளத்தின் ஒலிஅதுதான் தம்பி!
பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று
பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள
எண் தவிர்த்தார் எல்லாரும், ''எங்கள்திராவிடந்தான்
என்றுவிடு தலையடையும்'' என்கின்றார் அன்றோ!
பனியில்லை; குளிரில்லை; இருள்கிழித்துக் கொண்டு
பகலவன்தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி
இனியில்லை மடமைஎன ஆர்த்தாயே தம்பி
இரு! பார்இ தோஅறிவுக் கண்ணாடி பூண்பாய்!
முனைக்குமரி விந்தியத்தின் இடைப்பாங்கு வாழும்
முத்தமிழர் எல்லாரும், இத்திரா விடந்தான்
இனியடிமைத் தளையறுத்து விடுதலையே கொள்ள
ஏற்றசெயல் செய்கின்றார் தெரிகின்றது அன்றோ!
தைத்திங்கள் முதல்நாளின் திருவிழா, என்றன்
தனிமையினை நீக்கித், திராவிட ரெல்லாரும்
எத்தாலும் ஒன்றொன்று காட்டிற்றுக் கண்டாய்!
இனத்துநினை வெல்லாம்உன் மனத்தளவே அன்றோ?
முத்துநிறை கீழ்க்கடல், மேற்கடல், தெற்கேகுமரி
முன்வடக்கில் விந்தியமாம் மேவுதிரா விடர்கள்
ஒத்திந்த நாட்டினது விடுதலைக்கே என்றும்
உழைக்கின்றார் நிலங்குலுங்க! உற்றறிநீ தம்பி!
என்நாடு பிரிகெனப் பணிசெய்கின் றாய்நீ
எதிர்ப்போனும் அதைத்தானே செய்கின்றான் தம்பி!
பொன்னாடு திராவிடமாம் என்கின்றாய் அஃது
புன்நாடென் றுரைப்பானும் பொன்னாடென் போனே!
தென்னாட்டிற் கிளர்ச்சியினைச் செய்கின்றாய் நீதான்
சிரித்தபடி நிற்பானும் அதைத்தான்செய் கின்றான்
இன்னதனை நீயுணர மாட்டாயா தம்பி?
இனிவெற்றிக் கொடியேற்றல் ஒன்றுதான் பாக்கி!
மடமைஎன ஒன்றுண்டு! வாய்பெரிது! கையில்
வாள்ஒன்று வைத்திருக்கும் சிறைவீட்டு வாயிற்
படிமீது நிற்கும்! பல் லாற்பல்லை மெல்லும்
பார்என்று கூச்சலிடும்! போர் நிறுத்தக் கெஞ்சும்!
விடேன்என்று மேற்செல்வாய்! விடுதலையைச் செய்வாய்
வீறிட்டும் பாயும்உன் உடற்குருதி யால்உன்
கடமைசெய்வாய்! அம்மடமை தலைகவிழ்ந்து போகும்.
கண்மூடி யிருந்திட்டால் மண்மூடும் உன்னை!
உன்நாட்டை மீட்கநீ உயிர்நீக்கப் பெற்றால்
உயிர்நீங்கச் செய்தானும் உன்நாட்டை மீட்டோன்!
தென்னாட்டிற் பிறந்தாயா? இல்லையா? நீஇத்
திருநாட்டின் மறவனா? இல்லையா? வீரர்
கல்நாட்டிக் கல்நாட்டிக் காலமெலாம் குருதிக்
கடலேமுக் கடலாகப் புகழ்நாட்டி னார்இப்
பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்!
புதியதிரா விடம் வாழ்க பொங்கலோ பொங்கல்!
------------
7.6 தைத்திரு நாளே மகிழ்ச்சி கொண்டுவா
(எண்சீர் விருத்தம்)
அரிசில்லை விறகில்லை கறியில்லை நல்ல
அரசில்லாக் காரணத்தால் இவ்வளவு தொல்லை!
வரிசையொடு வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள்!
மன்னவர்கள் அந்நாளில் முறைசெய்த தாலே!
பரிசில் பெறும் தமிழ்ப்புலவர் அந்நாளில் வாழ்ந்தார்
பைந்தமிழ்வாழ்ந் ததுவாழ்ந்த திப்பெரிய வையம்
வருவாய்நீ தைப்பொங்கல் திருநாளே வாவா!
வறுமைஅறத் துன்பமற மகிழ்ச்சி கொண்டு வாவா?
வெட்டவெளி வானத்தை மாணிக்கம் ஆக்கும்
செங்கரும்பு நாட்டினிலே வெல்லமில்லை; வாழ்வை
எட்டிக்காய் ஆக்கிவிட்டார் ஆளவந்தார்! மானம்
இருப்பதாய்ச் சொல்கின்றார் அறிவற்ற பேச்சே!
எட்டுகின்ற பாங்கெல்லாம் தமிழர்புகழ் அன்றி
இல்லாமை என்னுமொரு பேச்சிருந்த தில்லை
மட்டற்ற செல்வமே ''தைப்பொங்கல் நாளே''
வறுமையறத், துன்பமற நீ வந்தாய் வாவா!
தமிழ் இகழ்ந்தார் கல்சுமக்கும் படிசெய்த இந்தத்
தமிழ் நாட்டில் தமிழர்க்கோர் ஆதரவும் இல்லை;
தமிழறியார் ஆளுகின்றார் அதனாலித் தொல்லை,
தமிழ்அறிந்தார் ஆட்சியினைக் கண்டார் அந்நாளில்!
கமழ்கின்றகருத் துண்டா இந்நாளில்? இன்று
கண்குழிந்த ஆளவந்தார், வடநாட்டின் அடியார்!
அமிழ்தேவா! தைப்பொங்கல் திருநாளே வாவா,
அகமகிழ்ச்சி கொண்டுவா எல்லார்க்கும் இங்கே!
ஏர்தட்டா துழுதுழுது பயன்விளைக்கும் உழவர்
எழில்நாட்டின் முகத்தினிலே அழகில்லை, நாட்டை
ஓர்தட்டாய்த் தட்டிப்போய்த் தாம்வாழ எண்ணும்
ஆளவந்தார் செய்கையினால் உற்றதிந்தத் தொல்லை
போர் தட்டும் முரசொலிக்கத் தமிழ்நாட்டில் இந்நாள்
பொதுத்தொண்டு வெல்கவே வெல்கவே என்று
மார்தட்டி வந்தாய்நீ தைப்பொங்கல் நாளே
வறுமையறத் துன்பமற மகிழ்ச்சிகொண்டு வாவா!
இருட்கடலும் ஒளிக்கடலே! புதுப்பரிதி, முகத்தை
எதிர்காட்டி ஆயிரம்செங் கதிர்க்கைகள் நீட்டி
அருட்பெருக்கால் வருகின்றாய் ஆண்டுக்கோர் நாளே!
அன்னையே தமிழரெல்லாம் உன்னருமை மக்கள்!
பிரிக்கின்றார் எம்மையெல்லாம் யாம்பிரிய மாட்டோம்!
பிழைசெய்தார் யாம்சிறிதும் பிழைசெய்ய மாட்டோம்!
உருப்பட்டோம் உன்வரவால்! பொங்கலோ பொங்கல்!
உயர்வாழ்வு நிலைநிற்க! வாழியநீ வாழி.!
-----------
7.7 பொங்கலோ பொங்கல்
(வண்ணம்)
தந்நாந தந்த -- 9 தந்தத்தத் தானா -- 1
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என்றுபா டுங்கள்
மன்றிலா டுங்கள்
எங்கள்நா டெங்கள்
அன்புநா டென்று
நன்றுபா டுங்கள்
பொங்கியா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
தங்கமே தங்கம்
மண்டுநீ ரெங்கும்
இங்கும்வா னெங்கும்
நன்றுகா ணுங்கள்
மிஞ்சியா டுங்கள்
சிந்துபா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
எங்கும் ஆதந்து
லந்தபா லுங்க
ரும்பினோ டும்க
லந்துமே பொங்க
நைந்தவா கும்ப
ழங்கள் தே னுங்க
லந்துவா னுங்க
மகிழ்ந்தவா றுண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
இங்குநா மின்று
கண்டபே ரின்பம்
என்றுமே கொண்டி
லங்குவோம் நம், பி
றந்தநா டும், கி டந்த சீ ரும்பொ
ருந்தவே நன்று
முந்தையோர் கண்ட
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!
-------------
பொங்கல் வாழ்த்துக் குவியல்
7.8 வாழ்க தமிழர் திருநாள்
(வண்ணம்)
தனனதந்த தத்தத்தனந்த தனதானா
தனனதந்த தத்தத்தனந்த தனதானா
தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானா
தளையவிழ்ந்து செக்கச்சி வந்த மலர் போலே
தமிழ்நிலஞ்சி றக்கப்பு ரந்த இறைபோலே
தலைசிறந்த முத்தைச் சொரிந்த அலைமேலே கதிர் காணீர்!
தவழ்குழந்தை கொட்டிப்பு ரிந்த நகைதானோ!
அழகுமங்கை நெற்றிக் கிருந்த ஒளிதானோ!
தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ அறிவீரோ?
இளையசெங் கதிர்க்குப்பரிந்து தொழுவாரே
இதுவிதெங்கள் தைக்குச்சிறந்த முதல்நாளே
எனவிளைந்த நெற்குத்தி எங்கும் மகிழ்வாரே மடவாரே!
இலைமாங்கு ருத்துக்கள்தெங்கு கமுகாலே
எழிலுறும்செ ழிப்புற்எக்கள் தமிழ்நாடே
இசைஎழுந்து திக்கெட்டுமுந்தும் அதனூடே மகிழ்வோடே!
வளமிகும்பு லத்திற்றிரிந்து வருமாடே
வகையொடுங்க லத்திற்கறந்து தருபாலோ
டரிசியும்சு வைப்புக் கரும்பு பிழிசாறோடோ டனலாலே!
இனிதுபொங்க வைத்துக்கமழ்ந்த பொடியோடே
மலிவொடும்ப ருப்புச்சொரிந்த கடிதேனோ
அளவநன்றி றக்கிருந்திருந்தும் இளவாழை இலைமேலே!
உளவிருந்தி னர்க்குப் பகிர்ந்து பரிவாலே
உடனிருந்து ணப்பெற் றடைந்த சுவையாலே
உளமகிழ்ந்த தைச்சற் றியம்ப முடியாதே ஒருநாவால்!
உழவரன்பு ழைப்பிற் பிறந்த பருவாழ்வே
தழைக நன்றெ மைப்பெற்பு வந்ததமிழ்தானே
தழைக எங்கள் வெற்றிக்குகந்த பெருநாளே திருநாளே!
------------
7.9 உழவர் திருநாள்
உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்
உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!
உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்ய தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே!
தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய் -- பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன் மணக்கவைத்தனரே!
அழகின் பரிதி உயிர்; அவ் உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகுதாய்! வளர்ப்புப் பாலே பயன்! நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!
ஆடை எல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடை எனப் பாலும், உயர் குன்றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!
இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுகஉண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!
------------
7.10 பொங்கல் நாளில் அவர்
(சிந்து கண்ணிகள்)
செங்கதிர் எழுந்ததடி
எங்கும் ஒளி ஆனதடி
பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி -- அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி
தெங்கில்இளம் பாளையைப் போல்
செந்நெல்அறுத் தார் உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி -- அவர்
சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி.
கட்டடித்தே நெல்லளந்தே
கட்டை வண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி -- அவர்
தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி.
கொட்டு முழக் கோடு நெல்லைக்
குற்றுகின்ற மாத ரெல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி
என்னருந் தோழி -- பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி
என்னருந்தோழி.
முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக் கருவி
முத்தரிசி பாலில் இட்டார்
என்னருந் தோழி -- வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார்
என்னருந் தோழி.
தித்திக்கும்தே னும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக் கலந்துண்டா ரடி
என்னருந் தோழி -- அவர்
ஒக்கலும் மக்களு மாக
என்னருந் தோழி.
எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல் பாடல்
பொங்கலோ பொங்கல் என்றார்
என்னருந் தோழி.
பொங்கிற்றடி எங்குமின்பம்
என்னருந் தோழி.
திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிது போல் என்றைக்குமே
என்னருந் தோழி
இன்பம் நிலைகொள்ள வேண்டும்
என்னருந் தோழி.
--------------
7.11 தங்கக் கதிர் வாழ்க
(சிந்து கண்ணிகள்)
கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்
கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி
காடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்ல
களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்
கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே
கட்டாக ஏருழவர்
பட்டாளம் கிளம்பிற்றே -- கட
கடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)
எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு
மங்கையர்கள் செந்தமிழில் பாடினார் -- நல்ல
திங்கள் கிடந்ததுபோல் எங்கும் அரிசியடி
தீம்பாலில் இட்டதனை மூடினால் -- மிகு
தித்திப்பிறிகொ தித்த அந்த முத்துக்கடல் பொங் கிற்றடி
எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு
மங்கையர்கள் செந்தமிழில் பாடினார்!
தென்னா டெல்லாம் பொங்கல்
பொன்னாய் விளைந்ததுவே பல
தெருவிலுந் தமிழிலும் கருவிகள் தருமிசை (கங்)
அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி
அன்பும்சி றந்தபடி உண்டனர் -- நமை
அண்டும் பகைவறுமை கண்டு நடுங்கும்படி
யான மனமகிழ்ச்சி கொண்டனர் -- அவர்
ஆடுவதும் பாடுவதும் அரங்கினிற் றென்பாங்கே
அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி
அன்பும்சிறந்தபடி உண்டனர்
தெங்கு கமுகு வாழை
சிறப்பினைச் செய்தன இளஞ்
சிறுவர்கள் சிறுமியர் நெறிதோறும் மகிழுவர்! (கங்)
மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப்
பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே -- அவை
அங்கு மிங்கும் ஓடக்கொங்குமலர் மாலை
ஆடிக் குலுங்கும் அவை கொம்பிலே இன்று
வாய்ந்த மகிழ்ச்சிஎன் றும் வாய்ந்தபடியே யிருக்க
மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப்
பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே நம்
வளநாட்டில் செந்தமிழே
வாழ்கவே வாழ்கவே மிகு
மனநல மொடுதமி ழர்கள் நலமுறவே! (கங்)
-------------
7.12 புது நாளில் புது வாழ்வு
(சிந்து கண்ணிகள்)
பகற்பொழுதிற் பொங்கற் புதுப்
பானை வாங்கி வருகையி லே
நகைத்தபடி என்னை அவன் பார்த்தான் -- நான்
நாணத்தினால் உள்ளமெல்லாம் வேர்த்தேன்.
முகமறியாப் பெண் முகத்தில்
முத்துநகை வந்து மொய்த்தால்
மகளிரெல்லாம் என்ன நினைப்பார்கள்? -- என்
மனநிலையில் ஐயமுங் கொண்டார்கள்.
சேவல் கூவக் -- கீழ்க்கடலில்
செம்பரிதி தோன்ற -- அந்த
நாவற்குள நீரெடுக்கச் சென்றேன் -- அவன்
நம்திருநாள் இன்றல்லவோ என்றான்.
காவலுண்டு பற்பல பேர்
காணலுண்டு காளையின் மேல் --
ஆவலுண்டு காட்டிக்கொள்ளவில்லை -- அவன்
அகம் புகுந்தான் அதுமட்டுந்தான் தொல்லை.
நாட்டி லெங்கும் பொங்கல் வாழ்த்து
நடப்பதெலாம் தைத் திருநாள்
வீட்டினில்நான் பொங்கலுண்ணும் வேளை -- அதில்
வெல்லமாய் விளைந்தான் அந்தக காளை.
தோட்டத்திலோர் ஊஞ்சலிட்டுத்
தோகையரோ பாடுகையில்
பாட்டினில்ஓர் செந்தமிழும் ஆனான் -- அந்தப்
பண்ணிலெல்லாம் நல்லிசையாய் ஆனான்.
ஆடலிலும் பாடலிலும்
அன்னவனே என்நினைவில்
கோடைமழை போற் குளிரச் செய்தான் -- என்
கொள்கையிலே காதலினைப் பெய்தான்.
ஆடியபின் வீடு வரும்
அவ்விருண்ட தோப்பினிலே
ஓடிவந்தே கட்டிமுத்தம் தந்தான் -- அது
பொங்கல் திருநாள்அளித்த செந்தேன்.
-------------
7.13 அன்பர் வருநாள்
(அறுசீர் விருத்தம்)
பொங்கல் நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக வாழ்க!
இங் கெனைத் தனிவி டுத்தே
ஏகினார் வருவா ரன்றோ?
அங்கையிற் பெட்டி தூக்கி
ஆளிடம் மூட்டை தந்து
பெங்களூர்த் தெருக்க டந்து
பெரு வண்டி நிலையம் சேர்வார்!
தைவிழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தளிர்க்க! வாழ்க!
மெய் இங்கே உயர் அங் கென்றே
சென்றவர் மீள்வார் அன்றோ?
உய் என்று சீழ்க்கை காட்ட
உட்கார்ந்த படிஎன் அன்பர்
தையலை எண்ண, மெல்லத்
தவழ்ந்திடும் புகைத்தல் வண்டி!
தமிழர் நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தழைக! வாழ்க!
அமிழ் தூறத்தழுவுந் தோளார்
அகன்றனர் வருவா ரன்றோ?
சுமை 'எரிமலை' ஒன் றங்குத்
தொடர்மலை இழுத்த தென்ன
இமைப்பிற்பக் கத்தூரில் வண்டி
இச்சிச் சென்றோடி நிற்கும்!
தைப் பொங்கல் வருக! கீழ்ப்பால்
தனிக் கதில் எழுக! வாழ்க!
ஒல்பிலா அன்பர் என்றன்
உயிர்காக் கவருவா ரன்றோ?
இப் பக்கம்வரும்அவ் வண்டி
எதிர்ப்பக்கம் ஓடும் காடு
உட்பக்கம் பார்த்தால் வண்டி
ஓடும்! ஓடாது காடு!
உழவர் நாள் வருக; கீழ்ப்பால்
ஒளிச்செல்வன் எழுக! வாழ்க!
வழங்காமல் சென்றார் இன்பம்
வழங்கிட வருவா ரன்றோ?
முழங்கியே நிற்கும் வண்டி
முறுக் கோமப் பொடி ஆரஞ்சிப்
பழம்விற்பார் -- செய்தித்தாள்தான்
பசிதீர்க்கும் அத்தா னுக்கே!
பாற்பொங்கல் வருக! கீழ்ப்பால்
பகலவன் எழுக! வாழ்க!
வேற்றாள் போல் சென்றார் அன்பு
விளக்காக வருவா ரன்றோ?
நேற்றேறி இருப்பார்! இவ்வூர்
நிலையத்தை அடைவார் இன்று
நூற்றைந்து கூலியாட்கள்
நுழைவார்கள் கூலி என்றே!
பெரும்பொங்கல் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் பிறக்க! வாழ்க!
இரும்பு நெஞ்சத்தார் சென்றார்
இன்புறவருவா ரன்றோ!
திரும்பிய பக்க மெல்லாம்
தெரிந்தவர் காண்பார்! அத்தான்
பதிந்துகட் டணச்சீட் டீந்து
பின்புற முகப்பில் நிற்பார்.
திருவிழா வருக! கீழ்ப்பால்
செங்கதிர் எழுக! வாழ்க!
உருமழைத் துறைவார் என்றன்
உளம்பூக்க வருவார் அன்றோ?
தெருவெல்லாம் வண்டி நிற்கும்
நல்லதாய்த் தெரிந்து சத்தம்
ஒரு ரூபாய் பேசி, மூட்டை
யுடன்எறி அமர்வார் அத்தான்!
பொன்விழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக! வாழ்க!
அன்பிலார் போற் பிறந்தார்
ஆர்வத்தால் வருவா ரன்றோ?
முன்னோக்கி வா என்பார் வண்
டிக்காரர்! முன்நகர் ந்தால்
பின்னோக்கிக் குதிரை போகும்
பிழை செய்தார் நெஞ்சம் போலே!
இனிக்கும்நாள் வருக! கீழப்பால்
இளங்கதிர் எழுக! வாழ்க!
தனியாக்கிச் சென்றார் உள்ளம்
தவிர் த்திட வருவார் அன்றோ?
புனையப் பொங்கற் புத்தாடை
வாங்கிடப் போவார் அன்பில்
நனையத்தான் வேண்டும் என்பேன்
நன்மாலை வந்ததாலே!
--------------
7.14 வாழிய செந்தமிழ்
(எண்சீர் விருத்தம்)
சிரித்தபடி புறப்பட்டான்! அவன்
சிரித்தனவே மலரெல்லாம்! சோலையெல்லம்!
ஒருத்தன் அவன்! அன்றன் றுபுதியன்! இந்நாள்
உவகைதரும் தைப்பொங்கல் நாளைச் செய்தான்!
விரித்தபடி புறப்பட்டான் ஒளியை; வாழ்வை
விளைத்தபடி எழுந்திட்டான் கடலின் மேலே!
தெருத்தோறும் தமிழர்விழா விளைக்கவந்த
சீரானை வாழ்த்திநாம் நீராடோமோ!
வானெல்லாம் ஒளியாக்கி வையத் துள்ள
மலையெல்லாம் கடலெல்லாம் வயல்க ளெல்லாம்
கானெல்லாம் மூவேந்தர் வழியில் வந்ந
கடும்போரில் இடம்பெயராத் தமிழ்மக்கள்
ஊனெல்லாம் உள்ளத்தின் உள்ள மெல்லாம்
ஒளியாக்கி உயர்ந்தானை வாழ்த்தி வாழ்த்தித்
தேனெல்லாம் வண்டுண்டு யாழ்மி ழற்றும்
செந்தா மரைக்குளத்தில் நீராடோமோ.
(அறுசீர் விருத்தம்)
செங்கதிர் வாழ்த்தி மாதர்
செழும்புன லாடு கின்றார்!
அங்கோர்பால் நன்செய்ச் செல்வம்
அறுவடை செய்த டித்து
வங்காளக் கோணியிட்டு
மலைநிகர் மாடிணைக்கப்
பொங்கல்நாள் வாழ்க என்று
புறப்படும் புதுநெல்வண்டி.
இன்புறக் கூடந் தன்னில்
இறக்கிய மூடை கொட்டி
அன்புடன் பொங்கற் கென்றே
அளந்திடும் மணாளர் தோள்கள்!
மன்னுந்தோள் வாழ்த்தி அள்ளும்
மங்கைமார் மலர்ச்செங் கைகள்!
தென்பாங்கு பாடு கின்றார்
நெற்குற்றும் சேயிழை மார்!
(பஃறொடை வெண்பா)
விந்தியத்தின் தென்பால்
விரி்முக் கடல் முழங்கும்
முந்தைத் தமிழர்
முதுநா டணிநகர்கள்,
சிற்றூர், தெருக்கள்,
திகழ்இல்லந் தோறுமே
குற்றிய தும்பைப்பூப்
போல் அரிசி கொண்டமட்டும்
ஆப்பயந்த பாலில்
அமிழ்தாகப் பொங்கிவரப்
பூப்பயன்வாய் மாதர்கள்
பொங்கலோ பொங்கலென்று
வெல்லம் நறுநெய்
விரைப்பொடியோ டிட்டிறக்கி
நல்லதேன் முப்பழங்கள்
நல்கி, விருந்தோடும்
உள்ளம் மகிழத் தாம்
அள்ளூர உண்பவர்,
வாழியர் எங்கள்
வளநாட்டுச் செந்தமிழர்!
வாழிய செந்தமிழ்' என்றார்!
-------------
7.15 செங்கதிர் வாழ்க
பொங்கற் புதுநாள் முகமலர்த்திப் பொன்னான
செங்கதிர்ச் செல்வன்திரைகடலின் மேலெழுந்தான்;
எங்கட்குப் புத்துயிரும் நல்கிப் பெருவாழ்வு
தங்கப் புரிந்த தகைமையினை வாழ்த்துவமே!
மூடு பனிவிலக்கி மொய்த்த குளிர்விலக்கி
நாடு நினைத்தஎலாம் நன்கு தொழிற்படுத்தித்
தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெய்யில்தூவு கின்றார்
வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவமே!
சேற்றிற்செந் தாமரைபோல் செங்கதிர்க்க ருங்கடலில்
தோற்றஞ்செய் தான்எங்கள் தோகையர்கள் நீராடி
மாற்றுப்பொன் னாடை மடிப்பு விரித்துடுத்தே
ஊற்றியபாற் பொங்கல் உவந்துவந்து வாழ்த்துவமே!
அரும்பும் இளநகையார் அங்கங்கே செந்நெல்,
கரும்பு, கனிவாழை, தேன்நெய், தயிர்பால்
தரும்பயன்மேற் பொங்கும் தைப்பொங்கல் உண்ண
வரும்பரிதி நாம்பாடி வாயார வாழ்த்துவமே!
காடெல்லாம், நாடுநகர், வீடெல்லாம், வீட்டுமேல்
ஓடெல்லாம் பொன்னாக்கி ஆர்கலிமேல் உற்றகதிர்,
ஆடலினால் பாடலினால் ஆர்த்த பெரும் பொங்கல்
கோடல் மகிழ்ச்சியினால் கூடிநாம் வாழ்த்துவமே!
-----------
7.16 வருவாய் கதிரே
வருவாய் வருவாய் கதிரே -- தை'ம்
மதியே ஒளியே வருவாய்
திருவே உணர்வே வருவாய் -- எம்
செயலின் தெளிவே வருவாய்
இருளும் பனியும் குளிரும் -- பல
இடரும் தொடரா வகையே
புரிவாய் சுடரே வருவாய் -- எம்
பொங்கற் புதுநாள் வருவாய்!
விலகாப் பாசிப் பொய்கை -- மிசை
விரியும் செந்தாமரை போல்
அலைசேர் நீலக்கடல் மேல் -- கதிர்
அவிழும் பகலே வருவாய்
கலையின் முதலே வருவாய் -- எம்
கண்ணிண் மணியே வருவாய்
மலையும் காடும் தெருவும் -- ஒளி
மருவப் புரிவாய் வருவாய்!
காவிரி ஆற்றுத் தண்ணீர் -- எம்
கழனிகள் தோறும் பாய்ச்சி
ஆவலின் நாட்டைப் பாடி -- நல்
அடைவுறும் எருதால் உழுதே
தூவிய விதையும் காத்தோம் -- வயல்
சுற்றிலும் வேலி அமைத்தே!
ஆவன செய்தோம் மடைநீர் -- வடி
வாக்கித் தேக்கியும் வந்தோம்!
ஆழக் கிடங் கெடுத்தே -- நிறை
வாகத் தண்ணீர் தேக்கி
வாழை, கரும்பு, நட்டோம் -- கால்
வைத்தே சாரம் செய்தோம்
தாழப் புகைத்த மஞ்சட் -- பயிர்
தழையத் தழையக் காத்தோம்!
வாழ்வின் பயனைக் கோரி -- உன்
வரவை நோக்கி யிருத்தோம்!
வருவாய் வருவாய் சுடரே -- பனி
மாற்றித் தோன்றிய மணியே
புரைதீர் வாழ்வின் பயனே -- யாம்
புதுநெல் அறுவடை தெய்தோம்
கரும்பு வெட்டி சேர்த்தோம் -- செங்
கனியோடு வாழை சாய்த்தோம்
திரும்பும் இடம் எங்கெங்கும் -- நல்
திருவே புரிவாய் வருவாய்!
எருமைக் கண்போல் நாவற் -- கனி,
இலந்தை. மாதுளை, கொய்யா,
பெருமுந்திரியின் பருப்பும் -- தேன்
பிழிவும் யாண்டும் கொழியும்!
மருவின் தொழுந்தும் மலரும் -- மணம்
மருவத் திருவே வருவாய்
வருவாய் வெயிலே அழகே -- எம்
வாழ்த்துக் குரியோய் வருவாய்!
புதுநெல் லரிசியினோடு -- பால்
பொங்கல் பொங்கிட எங்கும்
அதிர்வளை மங்கைமார்கள் -- தம்
அன்பும் தேனும் கலந்து
முதிரா வழுக்கை இளநீர் -- நனி
முற்றற் கழையின் சாறும்
உதிர்மா துளையின் முத்தும் -- தந்
துவக்க உலக்க நின்றார்!
பொன் வண்ணப்புத் துருக்கு -- நெய்
புறங்கை ஒழுகப், பொங்கல்
இன்பம் பொறுமா றுண்போம் -- எம்
இனிதாம் பொழுதே வருவாய்
சொன்னோம் பொங்கல் வாழ்த்தே -- எம்
தூய்மைத் தமிழால் நாங்கள்
தென் பாங்கடைந்த செல்வம் -- எம்
திராவிடம் வாழிய நன்றே!
---------------
7.17 பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர்
பொன்னூசல்
பொன்னூசல் எல்லோரும் ஆடுவமே -- நல்ல
பொங்கற் புதுநாளைப் பாடுவோமே
தென்னாடு வாழிஎன் றாடுவமே -- நல்ல
செம்பரிதி வாழிஎன் றாடுவமே! (பொ)
கன்னடம் தெலுங்குமலை யாளம் துளுவம் -- நல்ல
கன்னல்நிகர் செந்தமிழும் ஒன்றென்றே
மன்னிய திராவிடர்கள் எல்லோரும் -- பிறர்
வந்தசைக்க ஒண்ணாத குன்றென்றே! (பொ)
சந்தனப் பொதிகைமலை எங்கள் உடைமை -- வெண்
சங்கெறியும் தென்குமரி எங்கள் உடைமை
வந்தசைக்க ஒண்ணாத மறவர் நிலம் -- நல்ல
வங்கம்வரை எங்கள்நிலம் வாழிய என்றே! (பொ)
முத்தெடுக்கும் மூன்றுகடல் நட்டநடுவில் -- நல்ல
மூல்லைமரு தம்குறிஞ்சி நெய்தல் கிடந்தே
மெத்தநலம் செய்திடும் திராவிடநிலம் -- நன்கு
வெல்கவெல்க வெல்கவெல்க வெல்கஎனவே! (பொ)
-------------
7.18 பந்தாடல்
(எடுப்பு)
[ பொங்கல் திருநாளில் பூப்புனை பந்தாடிச்
செங்கதிர் வாழ்த்திடுவோம் -- நாம்
செங்கதிர் வாழ்த்திடுவோம். (பொ)
(உடனெடுப்பு)
தங்கவெயில் ஒளிதன்னில் குளிப்போம் -- செந்
தமிழில்பாடி உள்ளம் களிப்போம் (பொ) ]
(அடிகள்)
அங்கங்குப் பாடகளும் அங்கங்கு நல்லிசையும்
அள்ளூறச் சொல்லுகின்ற போது -- இங்
கெங்கும் நறும்புகையும், பூவிங்கலவையும்
ஏறிக் கமழும் விண் மீது
சங்கை அலையெறியும் தண்கடல் நாட்டிலே
தாம்தாம் தாம் என்றே நாமும்குதித்தே. (பொ)
விட்டெறிந்த பூப்பந்து சிட்டாய்ப் பறந்ததுகண்
எட்டாத உயரத்தில் சென்றே -- நம்
பட்டாடை பறக்கக் கூந்தல் பறக்கமுற்
பட்டுப் பிடிப்போம் அதைநன்றே.
கட்டாணி முத்துநகை மங்கையரே கைப்பந்து
கட்டுத் தளரும்வகை விட்டடிப்போம் தொடர்ந்து. (பொ)
-------------
7.19 பொங்கல் விளையாட்டு
தையும் பிறந்தது நன்றாம் -- நாம்
தைதை தைஎன்றாடு கின்றோம்
வைஇங்குப் பொங்கலை என்றோம் -- நாம்
வாயார அள்ளி உண்கின்றோம்.
நெய்யில் மிதக்கின்ற பொங்கல் -- பால்
நிறைய வார்த்த புதுப் பொங்கல்
செய்யில் விளைந்த முத்தரிசி -- நறுந்
தேனாய் இன்க்கின்ற பொங்கல்.
முந்திரிப் பருப்புமிட்ட பொங்கல் -- கொடி
முந்திரிப் பழங்களிட்ட பொங்கல்
சிந்தாமல் கையில் அள்ளும்போதே -- வாய்
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்.
இந்த மட்டுந்தானா சேதி? -- பார்
இவ்வளவு செங்கரும்பு மீதி.
முந்தி இதில் நீயும் ஒருபாதி -- எடு
மொய்த்திருக்கும் எறும்பினை ஊதி.
-------------
7.20 பொன் கொடிக்குப் பொங்கல் வாழ்த்து
(எடுப்பு)
திராவிட நாட்டு மணிக்கொடிக்கே நாம்
பெரும் பொங்கல் வாழ்த்துரைப்போம் (தி)
பொன் கொடிக்குப் பொங்கல் வாழ்த்து
(எடுப்பு)
திராவிட நாட்டு மணிக்கொடிக்கே நாம்
பெரும் பொங்கல் வாழ்த்துரைப்போம் (தி)
(உடனெடுப்பு)
கருமுகில் கருங்கடல் பரப்பினில் மாணிக்கப்
பரிதி முழுவட்டம் ஒளிசெய்தல் போன்ற (தி)
(அடிகள்)
திருவும் திருவும் அரிய செயல்களும் ஓங்குக
திராவிட நாட்டினில் எங்கும்!
அருவியைப் போலும் அறிஞரின் உள்ளம்
அழகிய நூல்பல நலிக!
திரைகடல் மூன்றொடு வங்க வடக்கெல்லை
சேரும் திராவிடநாடு செழித் தோங்க. (தி)
பொங்கற் புதுநாளைத் தோற்றி எழுந்த
பொன்வெயில் வாழிய நன்றே!
தெங்கு, கழுகு, செங்கரும்பும் விளைக! நன்
செய்யும் வளங் கொழிக்க என்றும்
எங்கள் விடுதலை மறுப்பவர் ஒழிக
இன்பத் திராவிடம் வாழிய நன்றே! (தி)
-------------
7.21 பொங்கற் பாட்டு
பொன்னோ, பொன் ஏடவிழ்ந்த
பூவோ "எழுந்தகதிர
தென்னாடு பூரித்தது தோழி -- இருள்
சென்றே மறைந்த தென்ன தோழி?
இன்னாத ஆட்சி எனில்
வாழாது வாழிய நாம்
தென்னாட்டு விடுதலை தோழா -- புதுச்
செம்பரிதி பூரித்தது தோழா.
தைப்பொங்கல் இன்பம்
தரும்பொங்கல் உண்டாடப்
பொற்பந்தல் வானோடு தோழி -- கதிர்
போடும் வியப்பென்ன தோழி?
முப்பாங்கும் ஆழாழி
முன்விந் தியக் குன்றின்
இப்பாங்கு நம் ஆட்சித் தோழா -- கதிர்
இட்டான் விழாப் பந்தல் தோழா.
செந்நெல் அடித்ததுவும்
செங்கரும்பு வெட்டியதும்
பொன்னங் கதிர் விளைவு தோழி -- பால்
பொங்கிவரும் பொங்கலென்ன தோழி?
தன்னல் நீக்கி! நல்ல
தைப் பொங்கல் இட்டே வரும்
தென்பாங்கு பாடுவதில் தோழா -- இன்று
சேர்ந்தின்பம் எய்திடுவர் தோழா.
மூடுபனிப் பகையின்
மூட்டறுத்துக் கீழ்க்கடலில்
பாடி எழும்பரிதி தோழி! -- அந்தப்
பாட்டுக்குப் பொருளென்ன தோழி?
கூடு திறந்திடவும்
கொஞ்சு தமிழ்க் கிளிகள்
காடு பழம்பழுக்கத் தோழா -- மிகக்
'கிண்ணா யிருக்க' என்னும் தோழா!
ஆவின் நறும்பால், நெய்
யாழியுள் முத்தரிசி
தூவும் பருப்பேலம் தோழி -- வெல்லம்
தோய்ந்த சுவைப் பொங்கலென்ன தோழி?
நாவலந் தீவினிலே
நம்கல்வி நம்ஒழுக்கம்
தேவைசிறந்த வென்று தோழி -- நன்கு
செப்புவது தைப்பொங்கல் தோழா!
தேனோடு முக்கனிகள்
தென்னாட்டுப் பண்ணியங்கள்
ஏனோடி பொங்கலுடன் தோழி -- சுவை
ஏற்றி நுகந்தார்கள் தோழி?
மீனோடு வில் புலியும்
மேவு கொடி மூவரசின்
மேனாள் சுவையுணரின் தோழா -- நமை
விட்டுப்பிரிந்திடுமோ தோழா
எல்லார்க்கும் நல்லாடை
எல்லார்க்குமே போங்கல்
இல்லாமையே இல்லை தோழி -- எனில்
என்றைக்கும் வாய்க்குமோ தோழி?
பொல்லாத ஆட்சியினைப்
போக்கித் திராவிடரின்
செல்வாக்கில் இற்றைநிலை -- தோழா
தேயாது செய்திடுவோம் தோழா.
எங்கும் மகிழ்ந்தாடி
இன்பத் தமிழ் பாடி
மங்கையர் ஆடவர் தோழி -- இன்ப
வாழ்விற் பொலிந்தனர் என் தோழி?
அங்கங்குப் பொன்னூசல்
அங்கங்குக் கச்சேரி
பொங்கலோ பொங்கல் என்தோழா -- பாற்
பொங்கல் நான் வாழ்க என்தோழா!
------------------
7.22 திராவிடப் பொங்கல் வாழ்த்து
(எழுசீர் விருத்தம்)
பொங்குற்றுப் பால் இனிது
குழைந்தது முத்தரிசி
புத்துருக்குநெய் புறங்கை ஓழுகத்
தங்கத்தைத் தூவு கதிர்
வாழ்த்தியே பாற் பொங்கல்
தைத்திரு நாளில் உறவுடன் உண்பீர்
இங்கிந்த நாள்போல
என்றுந் திராவிடர்
இடர்கள் நீங்கி விடுதலைஎய்தி
வங்கத்தை முக்கடலை
மறவர்தோள் காத்திட
வந்திடும் புகழ்க்குலம் மகிழ்ந்து வாழியவே!
---------------
7.23 திராவிடர் மீட்சி
(எழுசீர் விருத்தம்)
ஒன்றுநம் உள்ளம்; ஒன்றுநம் மகிழ்ச்சி;
ஒன்றுநாம் உண்டதீம் பொங்கல்;
ஒன்றுநாம் அனைவரும்; ஒன்றுநம் உறவும்
உணர்ந்தனம் பொங்கல் நன் னாளில்!
இன்றுபோல் என்றும் இன்பம் ஓங்கிடுக!
இன்பத் திராவிட நாட்டை
நன்றுநாம் மீட்க உறுதிமேற் கொள்வோம்!
நனிவாழ்க திராவிட நாடே!
ஐந்தாம்படை அழிக
அமிழ்தென்று தைப்பொங்கல் உண்டோம்இந் நாளே
தமிழென்று போர்தொடுப்போம் தாவி -- நமை நலிப்பார்
உள்ள பகைவரல்லர்; உட்பகையே ஆம் என்றே
உள்ளுக வாழ்க உயர்ந்து.
---------
7.24 வாழிய பொங்கல் நற்றிருநா
(எழுசீர் விருத்தம்)
வாழிய வாழிய திராவிட மக்களே!
வாழிய பொங்கல்நற் றிருநாள்!
வாழிய தமிழாம் திராவிட நன்மொழி!
வாழிய திராவிடர் உரிமை!
ஏழியல் நரம்பின் யாழுநல் லிசையும்
என்னவே தலைவியர் தலைவர்
சூழுறு காதல்இன்பத் தியைந்த
தூயவாழ் வோங்குக நன்றே.
வாழ்த்து
(வெண்பா)
வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்!
வெல்க தமிழர் விடுதலை! -- பல்க
தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும்
தமிழர்நல் வாழ்வு தழைத்து.
---------------
This file was last updated on 07 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)