pm logo

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
கண்ணகி புரட்சிக் காப்பியம்


kaNNaki puratcik kAppiyam
by pAratitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாரதிதாசன் எழுதிய ‌
கண்ணகி புரட்சிக் காப்பியம்
(சிலப்பதிகாரக் கண்ணகியின் கதை)

உள்ளடக்கம்
1. பதிகம் (இயல் 1 - இயல் 3)
2. புகார்க் காண்டம் (இயல் 4 - இயல்-30)
3. மதுரைக் காண்டம் (இயல் 31 - இயல் - 62)
4. வஞ்சிக் காண்டம் (இயல் 63 - இயல் - 95
-----------

கண்ணகி புரட்சிக் காப்பியம்
1. பதிகம்

இயல் 1

மலைநாட்டு நெடுவேள்குன் றத்தின் வேங்கை
மரநிழலில் கண்ணகிதன் வந்து நின்று
கலகலெனக் கண்ணீரால் அருவி செய்து
குறவர்களின் மனமதுவும் கரையச் செய்தாள்!
'கொலைசெய்யப் பட்டான்என் கணவன் கண்டீர்
குற்றமொன்றும் செய்தறியான்; குன்றத் தோரே!
இலைஉலகில் பருவுடல்தான் எனினும் அன்னோன்
என்னுள்ளதத்து உள்ளிருத்தல் காணுவீரோ'!

'முலைதோன்றி முற்றாமுன் தொட்டுச் சென்றான்
முறையில்லா ளிடம்கிடந்தான், இறுதி யாய்என்
தலைவாயி லிற்கண்டேன் தாவ லானேன்;
தன்வறுமை கூறினான், என்செய் வேன்நான்!
கலைச்செல்வி மாதவியின் முத்தம் வாங்கக்
கைப்பொருள்கேட் டான்போலும் என்றே எண்ணி
நலம்பெய்த என்சிலம்பு தரஇசைந்தேன்'
'நாமிருவர் இன்புற்று வாழ்வோம்' என்றான்.

மதுரையிலே வாணிகமே புரிவோம்; நீயும்
வாராயோ என அழைக்க விரைந்து சென்றேன்
இதன்பின்னர் என்காதல் நோய்மருந்தை
இருதுண்டாய்க் கண்டவள் நான்; வாழேன் என்றாள்!
எதிரேறும் இளங்கொடி தான் கொழுகொம் பற்றே
விழந்ததையும் இறந்ததையும் கண்டு ணர்ந்தே
அதிர்ந்தஉளத் தோராகிக் கண்ணீர் மல்க
அறஞ்செய்து புறஞ்சென்றார் குன்றவாணர்.
--------------

இயல் 2

குன்றத்துக் குறவரெலாம் கைகள் கூப்பிக்
கோமான்நின் திறல்வாழ்க! செங்கோல் வாழ்க!
என்றைக்கும் தமிழ்வாழ்க என்று வாழ்த்த
'எல்லீரும் நலஞ்சார வாழ்கின்றீரோ ?
இன்றுங்கள் முகத்திலொரு புதுமை என்ன
என்றசெங் குட்டுவன்பால் குன்ற வாணர்
'ஒன்றுண்டே ஒன்றுண்டே உலகுக்கெல்லாம்
உணர்வளிப்ப தொன்றுண்டென' றுரைக்க லானார்,

ஆடலுற்ற பெண்கட்குத் தோற்றுப் போன
அழகான பச்சைமயில் எதிரிற் கண்ட
காடுபெற்று தீயில்விழும் வேள்குன் றத்தில்
கண்ணகிதான் கோவலனை உள்ளத் தேந்தி
வீடுபெற்ற தைமன்னன் திருமுன் வைத்தோம்
மெய்ம்மைஇது வென்றுரைக்க உயர்க ருத்தில்
ஈடுபட்டு உள்ளத்தானாகிமன்னன்
இன்னுமுள வரலாற்றை அறியச் சென்றான்

அவ்வாறு குட்டவன்சென்றிடஇளங்கோ
அடிகளிடத் தும்சொல்லக் குன்ற வாணர்
செவ்வையுறு குணவாயிற் கோட்டம் நோக்கிச்
சீரூரில் உள்ளவர்கள் அனைவ ரோடும்
பெய்வளையின் கோவலனின் செய்தி ஏந்திப்
பேருளத்திற் பெறுஞ்செய்தி ஆவல் ஏந்தி
எவ்வாறு மலையருவி செலும்? அவ்வாறே
ஈரமலைச் சாரல்கடந்தேகினார்கள்
---------------

இயல் 3

குன்றத்துக் குறவரெலாம் வழிந டந்து
குணவாயிற் கோட்டத்தைச் சேர்ந்து - இளங்கோ
என்றுரைக்கும் அடிகளிடம் நெடுவேள் குன்றில்
இரண்டுள்ளம் ஒன்றிலொன்று இணைந்த வண்ணம்
சென்றனவே! கோவலனை ஏந்தும் நெஞ்சச்
சேயிழையாள் கண்ணகியைப் பெற்ற தான
நான்றான வீட்டுலகம் இன்று பெற்ற
நற்புகழை முன்பெற்றதில்லை என்றார்.

அந்நேரம் செங்குட்டு வன்பாற் சென்றே
அடிகளிடம் வந்திருந்த சாத்த னாரும்
முன்நிகழ்ந்த கண்ணகியின் செய்தி யெல்லாம்
மு¬யாகக் கேள்வியுற்ற படியே சொல்ல
இந்நிகழ்வைக் காப்பியமாய் இயற்ற வோநான்?
எனக்கோட்டார் அடிகளார்! "நன்று நன்று
முந்நாடு பற்றியதாம் அதுமுடிக்கும்
முழுத்தகுதி நுமக்கென்றார்" சாத்தனாரும்

புலப்பெரியார் சாத்தனார் இருந்து கேட்டார்
புரைதீர்த்த அடிகளார் உரைத்தார்! அந்தச்
சிலப்பதிகா ரப்பருநூல் எனை அழைத்துத்
தனித்தமிழில் சிலபாட்டால் அடிகள் உள்ளம்
கலப்பற்ற பசுப்பாலே யாக மக்கள்
கவிந்துண்ணத் தருகஎனச் சொன்ன தாலே
சொலப்புகுந்தேன் என் தமிழர் இருந்து கேட்பார்
தூயதமிழ்ச் சுவைசுண்டு வாழ்வார் நன்றே!
---------------

2. புகார் காண்டம்

இயல் 4

வரம்பற்ற செல்வத்தான் வாய்மை மிக்கான்
மாசாத்து வான்உரைப்பான் "பெரியீர்! என்றன்
திருமகனாம் கோவலற்கு மாநாய் கர்தம்
செல்வியாம் கண்ணகியைக் கொடுப்ப தற்குப்
பெருமனது கொள்கின்றார் மகன்ம ணந்தால்
பெருமைஎன் கின்றேன்நான் ஆத லாலே
திருமணத்தை முடித்துவைப்பீர்" என்று சொல்லச்
சேந்தனார் எழுந்திருந்து செப்பலுற்றார்.

செந்தமிழ்நான் மறைமுறையும் செத்த தேயோ?
செம்மலுளம் மங்க¬யுளம் ஒன்று பட்டால்
அந்நிலைதான் மணமென்பார் அதனை விட்டே
அப்பன்மார் ஒப்புவதால் ஆவ தென்ன?
தந்தைதரப் படும்பொருளா மங்கை நல்லாள்?
தகுவதன்றே தகுவதன்றே என்று சொன்னார்
வந்திருந்த ஆரியனும் நடுநடுங்கி
வாய்திறந்து தமிழ்குலைக்கத் தொடங்கலானான்

சாகுமுன்வி வாஹத்தை நடத்திக் கண்ணால்
தரிசிக்க வேணுமென்று நாய்கர் சொன்னார்
ஆகாகா எண்றேன்நான் ஆரியர்கள்
அப்பன்மார் உடம்பட்டாள் விவாஹம் செய்வாள்.
ஆகாது த்ரமிளர்க்கே இவ்வி வாஹம்!
ஆணதிணாள் எணை அளைத்தார் நாணும் வந்தேன்!
போகாயோ என்றுரைத்தாள் போகிண் றேணே
புன்னாக்க வேண்டாம்என் உடம்பை என்றான்
-------------

இயல் 5

கண்ணகிஎன் றொருபெண்ணை மணப்பாய் என்றேன,
கட்டளையை என்மகனும் ஒப்பி னான்இவ்
வண்ணாந்தான் திருமணத்தை முடித்து வைப்போன்
ஆரியனே ஆதலினால் அவனை வைத்தேன்,
கண்ணிருக்கும் போதேநான் காண வேண்டும்
காளையுடன் பாவையினை மணவ றைக்குள்
எண்ணநிறைவேற்றிவைப்பீரெனக்கும் பிட்டான்!
மாசாத்து வான்சொல்லை ஏற்றார் ஊரார்!

ஆயினுமச் சேந்தனார் எழுந்தி ருந்தார்
அத்தனையும் ஆரியமாய் இருக்கவேண்டாம்
தீயவிளை வுண்டாகும் ஆத லாலே
செந்தமிழால் அவையத்தால் வாழ்ந்த லன்றி
நாயைப்போல் குரைப்பதனால் நம்பால் வேண்டாம்!
நரியைப்போல் ஊளையிடல் நம்பால் வேண்டாம்!
நீயென்ன சொல்லுகின்றாய் என்று கேட்க
நின்றிருந்த ஆரியனும் நிகழ்த்தலானான்.

மந்த்ரங்கள் ஆரியத்தால் செய்ய வேண்டும்
மட்டுமுள்ள சடங்குகளும் அப்ப டித்தான்
பிந்திஅந்த வதூவரரை ஒன்று சேர்க்கப்
பெரியதொரு சடங்குண்டே! மந்த்ர முண்டே
அந்தஎலாம் செய்யத்தான் வேண்டும் ஆனால்
பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும்
எந்தமட்டும் குடுக்கனுமோ குடுக்கவேனும்
என்றுரைத்தான் எல்லாரும் சிரிப்பில் ஆழ்ந்தார்
-------------

இயல் 6

சோடித்த யானையின்மேற் பொன்னம் பாரி
தூக்கிஅதில் மாநாய்கன் பாக்கி யத்தை
ஈடில்மா சாத்துவான் இளங்க ளிற்றை
இழையாலும் பட்டாலும் பூக்க ளாலும்
மூடியுடல் மூடாத இருமுகங்கள்
முத்துநிலா பொற்சுடரே எனவிளங்க
நாடிநகர் வலம்புரிந்தார் பல்லியங்கள்
நாற்றிசையும் அமிழ்தென்று பாய்ச்சு வித்தார்

ஆடிக்கொண் டேசென்றார் அழகு மாதர்
அசைந்துகொண் டிருந்ததுவே மக்கள் வெள்ளம்!
பாடிக்கொண் டேசென்றார் பழந்த மிழ்ப்பண்!
பறந்தனவே புலிக்கொடிகள் வான ளாவிப்
பீடுடைய ஓரறிஞன் இங்குக் காணும்
பெருங்கற்புக் கண்ணகிதான் கோவலன்தான்
நாடுடையீர்! இந்நாளே மணங்காண்பார்கள்
நன்மணத்தை வாழ்த்திடவே வருவீரென்பான்!

மணிக்குவியல் மீதிலொரு மலர்முகத்தில்
வந்துவந்து வழுக்கிவிழும் இரண்டு கண்கள்
அணித்திருந்து பார்த்தவர்கள் 'அன்புளங்கள்
அணைந்துவரும் நிலைஇதுவாம்' எனவி யப்பார்!
பணித்திடினும் பணிவல்லார் இயற்ற ஒண்ணாப்
பாவைஒன்றும் வீரம்ஒன்றும் பெண்மாப் பிள்ளை!
மணக்கின்றார் வாழியவே என்பார் கண்டோர்;
மணமக்கள் நகர்சுற்றி இல்லம் சேர்ந்தார்.
--------------

இயல் 7

மணம் நடக்கும் மணிவீடும் பல்லியத்தால்
மணமுரசால் பூமழையால் வான்வ ரைக்கும்
இணைந்த பெரும் பந்தரினால் முத்துத் தொங்கல்
இனியநறும் பூத்தொங்கல் கமுகு வாழை
அணைந்ததனால் நகர்நடுவில் அழகின் காடே
அணைவாரின் கண்கவர்ந்தே மனம்கவர்ந்தே
இணையற்ற தாயிற்று! நாட்டு மக்கள்,
ஏந்திழைமா ரோடுவரத் தொடங்கினார்கள்!

மாசாத்து வானோடு மனையும் மற்றும்
மாநாய்க னோடுதன் மனையும் ஆகத்
தேசுற்ற மணவீட்டின் வாயில் முன்னே
தெருநோக்கி வருவாரின் வரவு நோக்கிப்
பூசற்கு நறுந்தேய்வும் பூணத் தாரும்
போடற்கு நறுஞ்சுருளும் வணங்கக் கையும்
பேசற்குச் செந்தமிழும் முற்படுத்திப்
பின்பாரார்; நின்றிருந்தார் அன்பார்ந்தாராய்!

தெருமறையத் தௌ¤த்திருந்த பசுங்கோரைப்புல்
சேவடியும் பூவடியும் மேல்வருங்கால்
சரசரெனும்! பூவடிகள் சிலம்பு பாடும்!
தத்தும்பொற் குத்துவிளக் காம்இ ளைஞர்
விரைந்தோட மார்பணிகள் கணக ணென்னும்!
வெறுவெளியில் பெருகுபுனல் மணிவெள் ளம்போல்
அரிவையுடன் அழகன்என நாட்டு மக்கள்
அனைவருமே மணவீட்டை அடைகின்றார்கள்.
---------------

இயல் 8

அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன்
ஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லான்
தென்னழகு தமிழப்பன் முத்து முல்லை
தேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன்
பொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன்
புத்தமுது தமிழரசு தங்கம் சோழன்
இன்பத்தேன் இளவழகன் ஒளவை வேந்தன்
இருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி,

திருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல்
தேனருவி அருளப்பன் தோகை பாரி
மருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல்
மல்லிகை மாவளவன் காவேரி சிங்கம்
கரும்புபெருந் தகைமுத்தப் பந்தல் சேந்தன்
கயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன்
முருகாத்தாள் புகழேந்தி தேனி மானன்
முத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன்

அழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல்
ஆரமுது தமிழத்தொண்டன் இலந்தை பொன்வேல்
மழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி
மணியம்மை பொன்முடிதே னாறு தென்னன்
மொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன்
முத்துநகை மாவரசு முதலியோரை
அழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள்
அணிஅணியாய் அனைவருமே உட்சென்றார்கள்
-----------------

இயல் 9

வாழியவே மணமக்கள் என்று சான்றோர்
வாழ்த்தியபின் வாழ்வரசி மாரும் மற்றும்
வாழ்விலுயர் பெரியோரும் அமளி நோக்கி
கோவலனைக் கண்ணகியை வருக என்றார்
நாழிகையின் அரைக்காலிற் முக்காற் பங்கும்
நஞ்சென்பார் பஞ்சணைக்கா வரமறுப்பார்?
யாழ்ஒன்றும் இசைஒன்றும் அமளி ஏற
எல்லாரும் வாழ்த்துரைத்துத் திரும்பலானார்?

திருந்துண்ட மணமக்கள் இருவ ரோடும்
சேர்ந்துண்ட நாட்டுமக்கள் தேய்வு பூசி
வருந்துண்ட அடைகாயின் சுருளை மென்று
வாய்நிறைத்து முகமுயர்த்தி இதழ்விள் ளாமல்
விருந்துண்ட சிறப்பினையும் விரிக்கலானார்
விழும்எச்சில் கண்டவர்கள் சிரிக்கலானார்
0மருந்துண்டேன் விருந்துண்கி லேன்நான் என்றோன்
மலைவாழை மட்டும்நூ றுண்டேன் என்றான்

கறிவகையும் பண்ணியத்து வகையும் நல்ல
கனிவகையும் என்நாவைக் கவர்ந்த தாலே
நிறைமூக்கைப் பிடிக்கநான் உண்டு விட்டேன்
நிலைகடுமை என்றுமதி அழகன் சொன்னான்
நிறைவயிறு குறைவதற்கு நீள்துரும்பை
நீஉள்ளே செலுத்தென்று தென்றல் சொல்லச்
சிறுதுரும்பு செல்லஇடம் இருந்தால் வட்டில்
தேம்பாகை விட்டிரேன் என்றான் அன்னோன்.
--------------

இயல் 10

கடைத்தெருவில் நடுத்தெருவில் காட்டில் மேட்டில்
கால்நடையால் ஊர்திகளால் செல்வோர் யாரும்
படைத்திட்ட உணவுகளைப் புகழலானார்
பாங்கெல்லாம் புதுப்பாங்கென்பான்ஒருத்தன்

வடையினிலே நெய்ஒழுகிற் றென்றான் திண்ணன்
நெய்யினிலே வடைஒழுகிற்றென்றான் வேங்கை!
குடத்தளவு முக்கனியா என்றான் முத்தன்!
குண்டான்தே னாஅதற்கே என்றான் எட்டி!

இந்நாட்டு விருந்துமுறை மாற வேண்டும்
இங்குண்டோம் வீட்டுக்கும் எடுத்துச் சென்று
பின்னாளும் வைத்துண்போம் என்ப தில்லை!
பேராசை கொண்டிவ்வாறுரைத்தான் பொன்னன்!
பின்னாளில் பிறர்வீடு செல்க என்று
பெரியண்ணன் சொல்லவே பொன்னன், "ஏடா!
இந்நாட்டில் எவன்வீட்டில் புத்துருக்கில்
இலைசோறு, கறியெல்லாம் மிதக்கும்" என்றான்!

அவரைக்காய் உப்புநெய் கடுகு தேங்காய்
ஐம்பொருளைக் கூட்டமுதில் அறியலானேன்
அவற்றோடு மற்றொன்றும் உண்டு போலும்!

எனினுமதன் பேரறியேன் என்றான் ஆண்டான்!
அவைஐந்தின் கூட்டத்தால் மற்றொன்றுண்டாம்;
அதன் பெயர்தான் உயிர்ச்சுவைஎன்றுரைத்தான் தேவன்
எவைஎவையோ பேசுவார் அவற்றிலெல்லாம்
இன்விருந்தைப் புகழாத எழுத்தே இல்லை!
-------------

இயல் 11

முகில் தழுவும் எழுநிலைமாடத்துக் கட்டில்
முழுநிலவு முகத்தாளை அழகன் தான்தன்
அகம்தழுவிச் சிறப்புறுங்கால் சாளரத்தால்
அசைந்துவரும் நறுந்தென்றல் இனிமை வார்க்க
மகிழ்ந்தவராய்க் காதல்மிகப் பட்டாராகி
மாடத்தின் நிலாமுற்றும் வந்து சேர்ந்தார்
தகைசிரித்தான் நாணமுற்றி ருந்தாள் மங்கை!
தடங்கைகள் நீட்டினான் அவற்றில் சாய்ந்தாள்!

தழுவும்உடற் கூட்டத்தில் தனிமை காணார்
தமைஇழந்தார்; இன்பத்தின் எல்லை கண்டார்!
முழுநிலவைத் தன்இடது கையால் ஏந்தி
மூடவரும் சுரிகுழலை விலக்கி ஆளன்,
அழகுக்கோர் இலக்கணமும் நீயோ கண்ணே!
அன்புசெய வாய்ந்தஇலக் கியமோ! என்றன்
அழல்நீக்கும் குளிர்நிழலே இன்பப் பாவாய்!
அனைத்தும்பெற்றேனுன்னைப் பெற்றதாலே!

என்வாழ்வில் நிறைஅமிழ்தே நினைக்கும் தோறும்
இனிப்பவளே! வாய்திறந்து பேசுந் தோறும்
தென்தமிழின் நறுஞ்சாறாய்த் தித்திப் போளே!
தீண்டுதொறும் ஐம்புலனும் இன்பில் ஆழ்த்தும்
பொன்னே! நன் முத்தே! என் பூவே! என்பான்!
புதிதொன்று பழைதாக மேலும், மேலும்
இன்பத்தில் ஆழ்ந்திடுவான் மீள்வான் பின்னும்
இன்பத்தில் ஆழ்ந்திடுவான் கோவலன்தான்!
-------------

இயல் 12


பாட்டொன்று கேட்டுப்போ என்று சொல்லிப்
பாவையினை அழைத்திட்ட கோவலற்குக்
கூட்டொன்று விருந்தினர்க்குப் பண்ணு கின்றேன்
கூவாதீர் என்றுரைத்தாள். அடிஎன் பாட்டைக்
கேட்டலினும், விருந்தினர்க்குக் கூட்டுச் செய்தல்
இனியதோ கிளத்தென்றான் கோவலன்தான்!
பாட்டுக்கும் நம்காதல் கூட்டி னுக்கும்
பாகற்காய்க் கூட்டுமுறை இனிதே என்றாள்

நூற்றுக்கு மேற்பட்டோர் பகல்விருந்தாய்
நோக்குவார் மனமகிழ வருகை தந்தார்
ஆற்றுநன் ஆற்றிஅவர் அமர்வதற்கும்
ஆடற்கும் உதவுதற்கும் பாடுதற்கும்
காற்றுக்கும் காட்சிக்கும் வகைபுரிந்து
கலந்துண்ண வாரீரோ எனஅழைக்கச்
சோற்றுக்கும் சாற்றுக்கும் கறிக்கும் எண்ணத்
தூய்மைக்கும் தாய்மைக்கும் வியந்தார், உண்டார்!

சாப்பிட்டார் கமழ்தேய்வு நிறக்கப் பூசிக்
கண்மலர்த்தேன் மழைநனைந்தே அடைக்காய் மென்றே
வாய்ப்புக்குப் பற்பலவும் கேட்டு நாட்டு
வளம்பேசிச் செந்தமிழ்நூல் இன்பந் துய்த்து
மாப்பட்டு மெத்தையிலும் சாய்ந்திருக்க
வய்ப்புற்ற கட்டிவிலும் அமைந்தார் தம்மில்
கூப்பிட்டாள் ஒருமுதியோன் கால்நோய் என்றே
குறுக்கோடிக் கண்ணகிதான் கால்பிடித்தாள்!
---------------

இயல் 13


கால்பிடித்த கண்ணகியின் கைப்பிடித்தே,
கண்ணகிக்கு மாமியவள் கோவலன்தாய்
தோல்பிடித்தும் விதைமுதிராப் பயற்றங் காயைத்
துவட்டுமுறை எவண்கற்றாய்? தாயூட்டிட்ட
பால்பிடித்த கறைமாறா இதழினாளே!
பாங்கடிநின் மனையறந்தான் மகிழ்ச்சி என்றாள்!
சேல்பிடித்து வைத்தனைய விழிவியக்கத்
திடுக்கிட்டாள் கண்ணகிதான் பறந்தாள் ஓர்பால்

அத்தான்நும் அம்மாஎன் அருமை மாமி!
அதோகாண்பீர்! விருந்துண்ட மகளிர் தம்மில்
முத்தொன்றைச் சிப்பிமறைத்ததுபோல் நன்கு
முக்காடு முகமறைக்க அமர்ந்துண் டாரே!
அத்தகையோர் இத்தகையோர் எனக்காண் கில்லோம்
அறையினின்று கால்வலியாம் என்றனழக்க
எத்தாயோ என்படுமோ என்று சென்றேன்
இருகாலைத் தொட்டேன்என் இருகை தொட்டார்

என்றேகண்ணகிகூற அதேநேரத்தில்
எதிர்வந்தாள் கோவலனின் அன்னை தானும்!
சென்றுவணங் கினர்இருவர் அன்பால் அள்ளித்
தென்னகத்துப் பண்பாட்டுப் பொன்வி ளக்கைக்
குன்றிலிட்டீர்! நன்றாக வாழ்க நீவீர்
கொண்டுவந்தேன் பல்பொருள்கள் கொள்க கொள்க
என்றுரைத்தாள்! அங்கிருவர் எதிரிற் கண்டார்
இருநூவண்டிகளில் பல்பொருள்கள்!
-------------

இயல் 14

காவிரிப்பூம் பட்டினத்தின் கண்ணும் காதும்
கலைவெறிதான் தலைக்கேற நிலைகு லைந்து
மீவிரித்த வளைவுக்கும் மணிமே டைக்கும்
நடுவினிலே மின்னலோ கொடியோ சான்றோர்
பாவிரித்த இலக்கணமோ குழலோ யாழோ
பைந்தமிழோ நன்னிலவோ யாதோ என்று
நாவிரிக்க மாதவிதான் ஆடுகின்றாள்
நானிலமே மகிழ்ச்சிக்கூத்தாட ஆட !

முழவினோன் முழவின்மேல் ஒற்றும் கையும்
மொய்குழலாள் அடைவுபெற மிதிக்கும் காலும்
வழிஒத்தி ருக்குமிது கூர்ந்து காணின்
வையத்துக் கொருபுதுமை ஆகும் என்று
பிழைபாட்டு வடவர்களும் பேச லானார்!
பிறநாட்டின் அறிஞரெலாம் பிற்றை நாளும்
அழகிருந்த தமிழ்நாட்டின் ஆடற் பாங்கை
அறிவதெனில் அருமையே எனப்புகன்றார்.

கருவிழிகள் கடையோடி விரலின் காதற்
கருத்துரைத்துச் செவ்விதழில் மின்னக் கண்டோர்
இருதோளும் சிற்றிடையும் அடித்த பூப்பந்
தெழில்மார்பின் மேற்குலுங்கும் புதுமை காணார்
இருந்தபடி வலம்புரிதான் இருக்க மேலே
இடம்வலமாய் ஒருநிலவு மிதக்கக் கண்டோர்
சுரும்பிருந்து பாடுமலர்ப் பின்னற் பாம்பு
துடியிடையைச் சுற்றுவது காணுகில்லார்.
-------------

இயல் 15

இயலிசைநா டகமூன்றும் இந்தா என்றே
இவ்வுலகு கண்டுகேட் டுணர்ந்து வக்கக்
கயல்விழியால் மலர்வாயால் சுவடிக் காலால்
கடிதீந்த திறம்அரிது நாம்இ தன்முன்
குயில்கேட்டோம் கிளிஅறிந்தோம் மயிலைப் பார்த்தோம்!
கூற்றும்பாட் டும்கூத்தும் ஒருங்கு காணோம்
அயலார்பால் கண்டவெலாம் சுண்டைக் காய்கள்
அரிவயைால் பெற்றதுதேன் வாழை யாகும்!

இவ்வாறு புகழ்ந்தானாய் மன்னர் மன்னன்
இந்தாடி என்கண்ணே பச்சை மாலை
செவ்விதின்நீ தலைக்கோலி ஆக! மேலும்
தேடரும்பொன் ஆயிரத்தெட் டுக்க ழஞ்சே
எவ்வாறும் விலைபெறும்என் றான்அ ளித்தான்
இருந்தவர்கள் எல்லாரும் மகிழ்ந்தா ராகி
அவ்வளவும் தகும்தகும்என்றுரைத்தார் ஆங்கே
மற்றவரும் தகும்பரிசில் அடைந்து வந்தார்!
-----------------

இயல் 16

கடைஓடி நொடிமீளும் கண்ணென்ன கண்ணோ!
காப்பியத்தின் பொருள்முடிக்கும் விரலென்ன விரலோ!
துடைஅரங்க மின்னிநெளி இடைஎன்ன இடையோ!
தூண்டாத மணிவிளக்கின் ஒளிப்பிழம்பு காற்றால்
அடைவதென அடைவுபெறும் உடலென்ன உடலோ!
ஆடிக்கொண்டும்பாடிக் கொண்டுமிருந் தவளை
விடைகொடுத்துப் பரிசளித்து நம்வேந்தர் வேந்தன்
விரைந்தனுப்பினான் அவளும் செல்லுகின்றாள் அந்தோ!
எனக்கூறி மனம்செல்லக் கண்களெலாம் செல்ல
இன்பத்தை விடாதுபற்றும் இயற்கைஉயிர் செல்ல
இடம்தொடரச் செல்கின்ற மாதவியி னோடே,
எல்லாரும் செல்லலுற்றார் ஆயிரங்கண் அன்னாள்
இனியதேன் இதழினிலே ஒருங்கோடி மொய்க்கும்!
இரண்டாயி ரங்கண்கள் சண்ணீலத் தேனில்
உனக்கெனக்கென் றேஓடி மொய்க்கும் மிகு மக்கள்
ஒருகடலே; மாதவிதான் நடுவில்ஒரு புள்ளி!

அவள்முதுகின் பின்னிருந்த ஓர் ஆள் கழுத்தை
அணுகிஅவள் மலர்முகத்தை உற்றுப்பார்க் கின்றான்
துவளுகின்ற பின்னலினைத் தொடுகின்றான் ஒருவன்
சுடர்ப்பொன்னோ மின்னலோ என்றுடலை ஒருவன்
கவலையுடன் பார்த்தபடி நடக்கின்றான் மற்றும்
கரத்துறுத்தும் காதலால் வஞ்சியவள் முதுகை
அவுக்கென்று தொட்டுநக்கிச் சுவைக்கின்றான் ஒருவன்
அவள் ஆடை மேற்பறக்கச் சோலைஎன்றான் ஒருவன்
--------------

இயல் 17

நகரமக்கள் நெருக்கத்தில் மாத விக்கு
நலிவுவரா திருக்கவே பல்லோர் சேர்ந்து
தகுநெடுங்கை கோத்துமா வட்டம் ஆக்கித்
தையலினை நடுவினிலே நடத்திச் சென்றார்
திகழ்தருமோர் தனைச்சூழ்ந்த ஆட வர்கள்
முகவரிசை மேற்றனது விழிசெலுத்தும்
வேளையொரு காளைதன் நெஞ்சைத் தொட்டான்!

காவலரும் கடன்கேட்கும் செல்வர் பிள்ளை;
கட்டழகன்; கண்ணகியை மணந்த செம்மல்;
பாவலரும் பொருள் கேட்கும் தமிழ்வல் லாளன்
பலரோடு மாதவியின் ஆடல் காணும்
ஆவலினால் அங்குவந்தோன் வெளியிற் சென்ற
அன்னாளின் பின்சென்றான் கடைக்கண் பிச்சை
ஈவாளா எனக்கிடந்தான் ஈந்தாள்; ஏற்றான்
இரண்டுள்ளத் திறப்புவிழா இதுவாம் என்க.

கண்ணைக்கண் மனத்தைமனம் கன்னம் வைக்கும்
கதைமுடிந்து போனவுடன் மங்கை சார்பில்
நண்ணிஒரு கூனிதான் ''ஒன்று கேட்பீர்!
நம்மன்னர் உவந்தளித்த நன்மா லைக்கே
உண்ணசையால் ஆயிரத்தெண் கழஞ்சு தகந்தோன்
ஓவியத்தை மாதவியைப் பெறுக'' என்றாள்!
ஒண்ணுதலும் அவன்தோளில் மாலை போட்டாள்;
உவப்போடு கோவலன்பொன் ஈந்தான் கையில்!

ஓடுகின்றார் ஓடுகின்றார் இருவர் தாமும்!
உடனிருந்த கூட்டத்தார் ஏமாந் தார்கள்!
வாடுகின்றார் அவர்களிலே சில்லோர்! சில்லோர்
மகிழ்கின்றார் அவ்விருவர் மகிழ்ச்சி கண்டு,
பாடுகின்றார் சில்லோர்அப் பாவையாட்கும்
பைந்தமிழ்ச் செம்மலுக்கும் பொருத்தம் என்றே!
ஓடுகின்றார்; மாதவியின் வீட்டுக்கூட்டின்
உள்ளடைந்தாள் மாதவிகோவலன்அன்றில்கள்!
----------------

இயல் 18

உட்புகுந்து கூடத்தின் நடுவில் நின்றே
ஒண்டோடியின் முகம்பார்த்தான்; வீட்டைப் பார்த்தான்
சுட்டினான் பஞ்சணையின் அறையை! அன்னோன்
எட்டினான் பஞ்சணையை! உடன்ப றந்தாள்!
இருபெருக்கின் ஒருவெள்ளப் புனலே யானார்
கட்டிக்க ரும்படிஎ னத்தொ டங்கும்
கவிக்கிடையில் முகத்தில்முகம் கவிழ்க்க லானான்

புதுத்தேனில் ஊறவைத்த கனியு தட்டைப்
புகல்என்றான் கண்ணகியை மறந்தே போனான்!
எதிர்ப்பாரும் நட்பாரும் இலாத தான
இன்பஉல கிதுவென்றே அவள்தோள் சாய்ந்தான்
இதற்குத்தான் நான்பிறந்தேன் இவ்வை யத்தில்
என்பான்போல் தழூஉமார்பை விடாதி ருந்தான்
முதற்றொடங்கும் முத்தமழை கடைசி யூழி
முடியுமட்டும் முடியாது போலும் அங்கே!

கைந்நொடியை ஓரிலக்கம் பொன்னாற் போக்கிக்
கைப்பொருளைப் போக்கிவரும் நாளில் அன்னோன்
தன்அறையின் பஞ்சணையில் அவளின் தோளில்
சாய்ந்தபடி பலகணியால் தெருவிற் சென்ற
சின்னவனைக் கண்டிட்டான்; கோவ லன்தான்,
திடுக்கிட்டான்; உடலதிர்ச்சி உணர்ந்த மங்கை
என்னஎன்றாள்; என்போன்றான் துணைவி இன்றி
எவ்வாறு தனித்தும்உயிர் வாழ்ந்தான்?- என்றான்.
---------------

இயல் 19

காதற்பாட் டேயன்றிப் பிறபாட் டில்லை
கட்டிலிலே உண்பதன்றி இறங்கல் இல்லை
மோதல்வரக் காரணமே இருந்த தில்லை
முத்துநகை இதழுக்குள் மறைந்த தில்லை
ஈதலில்லை ஏற்றலில்லை இன்பப் பொய்கை
இறங்கினோர் கரையேறும் நினைப்பே இல்லை
ஈதில்லை என்பதில்லை கோவ லற்கே
இவளிருந்தாள் மாதவிக்கே அவனிருந்தான்

அந்நாளில் மாதவிநி லாமுற் றத்தில்
அன்பனிடம் இன்பமே நுகர்தல் போல
பன்மகளிர் மணாளர்தோள் ஒடுங்கு வார்கள்!
பாவைகண் ணகிமட்டும் கொழுந னின்றித்
தன்பாற்பொங் கலைஇழந்த உழவ னைப்போல்
தளர்வுற்றாள் பஞ்சணையிற் புரள லுற்றாள்
இன்கண்ணில் மைஎழுதாள் பொட்டும் வையாள்
இருண்டகுழல் நெய்யணியும் இன்றிச் சோர்வாள்

மங்கலத்தின் அணியன்றி அணிம றந்தாள்
வழக்கத்தால் செய்கின்ற ஒப்ப னைகள்
மங்கைதான் செய்தறியாள் செந்த மிழ்தான்
மாப்புலவர் இழப்பின்உயர் விழத்தல் போலே
எங்குமுள்ளார் தம்மிற்கண் ணகியே என்ன
இணைபிரிந்து சீரற்றார் பலரா னார்கள்
திங்கள்ஒன்றே குளிர்கொண்டும் அழகு கொண்டும்
சிலர்க்கல்லல் சிலர்க்குநலம் செயல்வியப்பே.
--------------

இயல் 20


பூவிரிந்து வானெங்கும் தேன்வி ரிந்து
பொன்விரிந்தாற் போலுநறும் பொடிவி ரிந்த
காவிரிதல் போலெங்கும் விரித லாலே
காவிரிஆ றென்றார்கள்; அதன்தொ டர்பால்
காவிரிப்பூம் பட்டினம்என் றேமுன் நாளில்
கவிவிரியும் நாவினோர் நகரைச் சொன்னார்;
மூவிரிநூற் றமிழ்வேந்தர் மூவருள்ளும்
முந்துபுகழ் மாவளவன் அதற்கு மன்னன்

காளைக்கு நாளெண்ணிக் காத்தி ருக்கும்
காதலிபோல், இனிப்பான பதநீர்த் தென்னம்
பாளைக்குக் காத்திருக்கும் ஊரார் போல்,அப்
பட்டினத்து வாழ்கின்ற மக்கள் யாரும்
வேளைக்கு வேளைஇதோ வந்த தென்று
விளம்புமொரு காவிரிவி ழாநெ ருங்க
நாளைக்கே என்றுமகிழ் கொண்டார், காலை
நடுப்பகல்; இராப்போது நகர்ந்த பின்னே,

பழாமரத்திற் பழுத்தஒரு மாம்ப ழம்போல்
பாசிபடர் குளத்தி லொரு தாம ரைபோல்
முழாக்கண்ணில் கையுற்ற வௌவடுப்போல்
மொய்த்தகருங் குழற்கிடையில் மகள்முகம்போல்
எழாஉளத்தும் மகிழ்ச்சிஎழ இருளின் நாப்பண்
எழுந்தஇள ஞாயிற்றின் ஒளியில் யாண்டும்
விழாப்பெருநாள்; காவிரிநற் றிருநாள் என்று
வேந்துமுரசானையின்மேல் அறைந்தான் வீரன்
---------

இயல் 21


காவிரிபூம் பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம்
கடற்கரையை ஒட்டியதோர் பகுதி யாகும்
மாவிரியும் மன்னர்பிறர் வாழ்தெ ருக்கள்,
பட்டினப்பாக் கப்பகுதி இவற்றின் மேன்மை
யாவரியம் பிடவல்லார் புலவர் வேந்தன்
இளங்கோதான் இயம்பினான் அவைகொண் டேநான்
ஆவலினாற் சிலசொல்வேன் முழுதும் வேண்டின்
அவருள்ளார் நீவிருள்ளீர் கண்டு கொள்க

அரபியரும் கிரேக்கர்களும், வாணி கம்செய்
அயல்நாட்டு மாந்தர்களும் கலந்து வைகும்
தெருவரிசை கண்கவரும்! வண்ணம் சுண்ணம்
செஞ்சாந்து மலர்பலவும் கூறி விற்போர்
திரிகின்ற தெருக்களெலாம் சிறக்கும்! ஈண்டு
திகழ்பட்டுச் சாலியர்கள் நகைக்க டைகள்
விரும்புகன் னார்தட்டார் தச்சர் கொல்லர்
விளங்குகூ லக்கடைகள் தகுதி காட்டும்,

ஏழிசையும் வழுவால் குழலும் யாழும்
இசைக்கின்ற பாணர்களும் சிறப்பின் வாழ்ந்தார்
வாழ்வினையே இன்புறுத்தும் கலைஞர் வாழ்ந்தார்
வளமிக்க அம்மருவூர்ப் பாக்கந் தன்னில்!
மாழ்கல்இலார் பட்டினப்பாக் கத்தில் உண்டு;
மன்னர்தெரு! அறிஞர்தெரு! மருந்தர் கூத்தர்
நாழிகைக்க ணக்கர் நாற் படைவல்லாரும்
நாற்புறத்தும் குறைவின்றிச் சூழ்ந்திருந்தார்.
-------------

இயல் 22

நன்மருவூர்ப் பாக்கம்பட் டினப்பாக் கத்தின்
நடுவினிலே வளர்மரங்கள் கால்க ளாகக்
கன்மிகுக்கக் கட்டியதோர் நாளங் காடி
கால்நடையாய்க் கண்டுவர ஓராண் டாகும்!
இன்றேறும் சரக்குயரம் பொதிகைக் குன்றம்
இறக்குமதிச் சரக்கெல்லாம் யானைக் குன்றம்!
பொன்வரவு செலவெழுதும் கணக்கர்க்கு ஓலை
பொழுதெல்லாம் தந்தபனந் தோப்பே மொட்டை!

நாவாய்கள் வரவெண்ணி வாணி கத்தார்
நாவாய்கள் வராதவராய்த் தறைமு கத்திற்
போவாய்என் றொருவர்பின் ஒருவ ராகப்
போவாரின் கூட்டத்தை முத்த மிழ்வாய்
முழங்குகடல் எழுந்ததென மொழிவா ரானார்!
ஈவாய்த்தே னால்நனைக்கும் வெல்லத் தைப்போய்!
இல்லைஎன்ப தில்லைஎன்னும் நாளங்காடி!

பொன்னாடை ஆயிரமும் பன்னி றத்துப்
பூவாடை ஆயிரமும் நாடோ றும்போய்த்
தன்மையினில் வண்டிகளில் ஏற்றி மீள்வார்
தலைப்பாகை வரிசைஒரு கல்லின் நீளம்!
பின்னோடும் மிளகுவண்டி அதன்பின் ஓடும்
பெருஞ்சீர கத்துவண்டி அதன்பின் ஒடும்
தென்னகத்துச் சரக்கேற்றி இலக்கம் வண்டி
சேர்ந்தவண்டி பின்கூட்டம் ஊர டைக்கும்!
நாட்டிலுள்ள ஆடவரும் மகளிர் தாமும்
நலங்கொழிக்கும் காவிரியை வாழ்த்தித் தம்தோள்
நீட்டித் ,தாய் எனத்தழுவி அன்பால் மூழ்கி
நிலைபெயரும் மலைகள்போல் நிலாக்க ளேபோல்
வீட்டிலுற்றே உடைமாற்றி அணிகள் பூண்டு
வேந்தனைப்போய் மனமார வாழ்த்திப் பின்னர்
கேட்டாலும் நாவூறும் பண்ணியங்கள்
கிடைப்பரிய அப்பங்கள் வெண்ணெய்ப் பிட்டே;

தேங்குழல்நற் பொரிவிளங்காய் பலாமா வாழை
தேன்பால்நெய், நறும்பாகு, முதிர்ந்தி, லாத
தீங்கிலவாம் வழுக்கைஇள நீர்ப ருப்புச்
சேர்க்கையினால் பொங்கியதோர் ஓவப் பொங்கல்
யாங்கிருந்தும் கொணர்ந்திட்ட காய்க றிக்கே
இங்கிருக்கும் தமிழரன்றிப் பிறர்கா ணாத
பாங்கிலுறு பச்சடிகள் குழம்பு கூட்டுப்
பல்வகையின் வற்றல்கள் வறுவலோடும்

வெண்பட்டுக் குருத்திலைகள் மிகவிரித்தே
விருந்தினரைக் கையேந்தி அழைத்த ழைத்துக்
கண்பட்டால் ஒளிதெறிக்கும் கைவளைகள்
கவிபாடும் எழில்மடவார் இடஉ வந்து
புண்பட்டுச் சாவஅஞ்சும் ஆரியர்கள்
புகார்என்னும் பூம்புகார் அரசை வாழ்த்தி
உண்கவே எனஇடுவார் இட்டிட் டேங்க
உண்டார்கள் ஒவ்வொன்றின் சுவையுணர்ந்தே
-------------

இயல் 23


நாட்டிலுள்ள ஆடவரும் மகளிர் தாமும்
நலங்கொழிக்கும் காவிரியை வாழ்த்தித் தம்தோள்
நீட்டித்' தாய் எனத்தழுவி அன்பால் மூழ்கி
நிலைபெயரும் மலைகள்போல் நிலாக்க ளேபோல்
வீட்டிலுற்றே உடைமாற்றி அணிகள் பூண்டு
வோந்தனைப்போய் மனமார வாழ்த்திப் பின்னர்
கேட்டாலும் நாவூறும் பண்ணி யங்கள்
கிடைப்பரிய அப்பங்கள் வெண்ணெய்ப் பிட்டே;

தேங்குழல்நற் பொரிவிளங்காய் பலாமா வாழை
தேன்பால்நெய், நறும்பாகு,முதிர்ந்தி, லாத
தீங்கிலவாம் வழிக்கைஇள நீர்ப ருப்புச்
சேர்க்கையினால் பொங்கியதோர்ந்திட்ட காய்கறிக்கே
யாங்கிருந்தும் கொணர்ந்திட்ட காய்க றிக்கே
இங்கிருக்கும் தமிழரன்றிப் பிறர்கா ணாத
பாங்கிலுறு பச்சடிகள் குழம்பு கூட்டுப்
பல்வகையின் வற்றல்கள் வறுவ லோடும்

வெண்பட்டுக் குருத்திலைகள் மிகவி ரித்தே
விருந்தினரைக் கையோந்நி அழைத்த ழைத்துக்
கண்பட்டால் ஒளிதெறிக்கும் வைவ ளைகள்
கவிபாடும் எழில்மடவார் இடஉ வந்து
புண்பட்டுச் சாவஅஞ்சும் ஆசி யர்கள்
புகார்என்னும் பூம்புகார் அரசை வாழ்த்தி
உண்கவெ எனஇருவார் இட்டிட் டேங்க.
உண்டார்கள் ஒவ்வொன்றின் சுவையு ணர்ந்தே.
----------------

இயல் 24

இறவாத புகழுடைய படைமு தல்வர்
யானைமேல் குதிரைமேல் தேர்மேல் ஏறி
முறையாகப் படைதொடர நகரைச் சுற்ற
முன்விட்டுப் பின்னோடு காலாள் கூட்டம்
உரைகழற்றித் தூக்கியவாள் மின்னும் வண்ணம்
ஊர்வியக்கச் சென்றார்கள்! சோலை தோறும்
பிறைநுதலார் பொன்னூசல் ஆடலுற்றார்
பெரும்பந்து காளையரும் அடித்தார் ஒர்பால

சாகுமட்டும் சண்டையிடும் சேவற் கோழி
தலையுடையும் வரைமோதும் ஆடு-கொண்டு
போகின்றார் சண்டைக்கே! போர்மு டித்துப்
போந்ததெனக் கேவெற்றி என்றான் ஓர்ஆள்;
ஏகுமுயிர் ஏங்காமல் மேமே என்றே
இயம்புகின்ற ஆடுடையான் தோற்றேன் என்றான்
ஏகெடுவீர்.தோல்விவெற்றி உமக்கே கண்டீர்
இவைஇன்னும் காண்கிலஎன்றான்ஒர் வீரன்

இமைநேரம் ஒழிவின்றி வெளியில் ஆடி
இருந்தவரிற் சிலர், வீடு வந்த போதில்
எமைமறந்த தேன் என்று மனைமார் சில்லோர்
எரிவுற்றார்! காதலரின் இருதோள் பெற்றே
தமைமறந்தார் மாதவியைப் போலே சில்லோர்
தன்அன்பன் கோவலனைப் பிரிந்தி ருந்த
அமைவுள்ள கற்புறுகண் ணகிதும் பத்தின்
அடிவீழ்ந்து கிடந்திட்டாள் விழாநாள் உள்ளும்!
-------------

இயல் 25


இந்நாளே நிறைநிலா என்று நாட்டார்
எல்லாரும் கடலாடச் செல்ல லுற்றார்!
அந்நாளின் கடலாடும் காட்சி காண
அழகுடைய மாதவியும் அவளை விட்டே
எந்நாளும் பிரியாத செம்மல் தானும்
எழிலான ஊர்தியினில் ஏறிக் காலை
முன்னான போதினிலே கடற்கரைபோய்
முழுதுமணற் பரப்பினிலே புன்னை நீழல்;

அடிவளைத்த திரைக்கிடையில் இட்ட கட்டில்
அமர்ந்தார்கள் அங்கதன்பின் தோழி கையில்
நெடிதிருந்த யாழ்அதனை மங்கை வாங்கி
நேர்செய்தே இசைஎழுப்பிச் செவியின் ஓர்ந்தே
முடிவாக்கிக் கோவலன்பால் நீட்ட, அன்னோன்,
முன்னங்கை ஏந்தியே தன்ன கத்தின்
வடிவாகப் பாடுவது தொடக்கம் செய்தான்
மாதவியும் வரும்பாட்டில் செவியைச் சாய்த்தாள்

ஆரியரை அறவென்று வடக்கு நாட்டை
அடிப்படுத்திக் கங்கையினை அகப்ப டுத்திச்
சீரியசெங் கோற்சோழன் புணர்ந்திட் டாலும்
திருவாரும் காவிரிநீ வருந்தாய்! வாழி!
ஆரியத்துக் கங்கைதனைப் புணர்ந்திட்டாலும்
அகம்நோவா திருந்ததுன்றன் கற்பே என்று
தேரினேன் காவிரியே வாழி! - என்றே
தேனென்று செந்தமிழைப் பாடலுற்றான்
-------------------

இயல் 26

இவ்வாறு பாடியது கேட்டாள்; அன்னோன்
எண்ணந்தான் வேறொருத்தி மேல தென்றே
ஒவ்வாது மனம்கொதித்தும் உவந்தாள் போல
ஒளிவிழியாள் மாதவிதான் யாழை வாங்கிக்
"கவ்வியதேன் மலர்மழையே பொழியும் சோலைக்
காவிரியே பூவாடை அசையச் சென்றாய்
செவ்விதின்வா ழியநீதான் செல்வ தென்ன?
செம்மலுக்கே உளம்பதைத்தாய் வாழி!" என்றாள் !

நான்ஒன்று பாடினேன் அவளும் அஃதே
நவிலாமல் வேறொன்று நவில லானாள்
தான்என்னை மறுத்தஒரு குறிப்புக் காட்டித்
தனிக்கின்றாள் என்றுகோ வலன்நி னைந்து
மீனவிழி மேல்இணைத்த கைவி லக்கி
விரைந்து சென்றான் ஏவலர்கள் சூழ்ந்து செல்ல!
ஆனதினால் மாதவியும் வண்டி ஏறி
அகன்றாள்தான் பெற்றசெல்வம் அகன்றாளாகி,

அவள்வருந்த இவண் அடைந்தான், அறமறந்தான்!
அறமறந்தான் அறிவிழத்தல் வியப்பே அன்று!
நுவன்றமொழிக் கருத்தறியாள் அவள்! இவன்தான்
நுவலுவதைச் செவ்வையுற நுவன்றா னில்லை;
அவனுந்தான் அவளுந்தான் இழைத்த தீமை
அழகுதமிழ் அன்னைக்கே ஆயிற்றென்றால்
எவன்சொல்வான் இவர்நன்றே வாழ்வார் என்றே?
இன்தமிழ்ச்செந் தமிழ்ப்புலவர் வாழ்க நன்றே!
-----------------

இயல் 27

இளவேனில் வந்ததென்று குயிலும் கூவ
ஏகியஓர் மாதவிதன் மேன்மாடத்தின்
ஒளிநிலா முற்றத்தில் யாழெ டுத்தாள்;
ஒருபண்ணாற் குரலெடுத்தாள்; பிறிதில் வீழ்ந்தாள்
கிளிப்பெண்ணாள் மற்றொன்றும் தொட்டாள் கெட்டாள்
"கேளாயோ தோழியே என்றன் எண்ணம்
துளியில்லை என்னிடத்தில் பொறுக்கொணாத
துன்பத்திற் புரளுகின்றேன் ஆத லாலே;

அவன்காணத் திருமுகம்ஒன் றெழுது கின்றேன்
அளிக்கின்றேன் உன்னிடத்தில்! அவன்பால் சேர்த்தே
நவில்என்நிலை; கையோடு கொணர்க என்று
நற்றாழை வெள்ளேட்டில் எழுது தற்கே
கவினார்பித் திகையரும்பே ஆணியாகக்
கடிதேசெம் பஞ்சியிலே தோய்த்தெடுத்துத்
துவரிதழில் எழிலாட வருங்கருத்தைச்
சொல்லிக்கெண் டேமங்கை எழுது கின்றாள்;

'இளவேனில் முறையறியா இளைய மன்னன்;
இளமதியும் காலமறி யாத பையல்
எளியேனை அவர்வருத்தல் புதிய தாமோ
இதைநீவிர் அறிந்தருள்க' இதனைத் தோழி
களியோடு கையேற்று வெளியிற் சென்றாள்;
கையிரண்டாற் கண்பொத்தி மெய்து டிக்க
அளியாரோ அடைந்தவரை ஆடவர்கள்
அன்பிலையோ எனப்பஞ்சணைமேல் வீழ்ந்தாள்;
------------

இயல் 28


செங்கதிர் போய் மறைந்திட்ட மாலைப் போதில்
தேவந்தி என்னுமொரு பார்ப்ப னத்தி
மங்கைஎழிற் கண்ணகியை இந்நாள் உன்றன்
மனக்கவலை யதுதீரத் திங்கட் குண்டம்
பொங்குகதிர்க் குண்டமெனும் இருபொய் கைக்கும்
போய்த்தெய்வம் தொழுதுநீ மூழ்க வேண்டும்
இங்கிதனைச் செய்கஎன்றாள்; கண்ணகிக்கே
இன்னலின்மேல் மற்றுமோர் இன்னல் சேர்த்தாள்.

தெய்வமெனல் நலஞ்செய்யும் என்கின் றாய்நீ?
தெய்வத்தைத் தொழவேண்டும் என்கின் றாய்நீ!
தெய்வமென நீசொல்லும் பொருள்எங் கேயோ
திரைமறைவில் இருப்பதெனச் சொல்லு கின்றாய்
மெய்வைத்த தமிழ்ர்களின் ஒழுக லாற்றை
மிகச்சிறிதும் அறிகிலாய் ஆரி யர்தம்
பொய்வைத்த வாழ்க்கையினை நன்றே என்று
புளுகுவார் புளுகல்லாம் ஏதும் காணாய்!

செந்தமிழ்ச் செல்வியரின் ஓழுக லாற்றில்
தெய்வத்தை நீகண்ட துண்டு போலும்!
முந்துநாள் முதல்இந்த நாள்வ ரைக்கும்
மொய்குழலார் தமக்கெல்லாம் எல்லா மாகி
வந்தோர்கள் வருகின்றோர் வருவார் யாவர்?
வாழ்தந்தை தாயரல்லர் கணவர் ஆவார்!
நொந்துள்ள நிலைகண்டுன் தீயொழுக்கம்
நுழைப்பதுண்டோ என்னுளத்தில் இவ்வாறென்றாள்
--------------

இயல் 29

கோணல்மனப் பார்ப்பனத்தி போதல் கண்டாள்;
கோவலனும் தலைவாயில் புகுதல் கண்டாள்;
வாணுதலாள் கண்ணகிதான்! எதிரில் ஓடி
"வருகவே என் அத்தான என்ற ழைத்தாள்!
ஆணழகன் "மாதவியின் வலையில் வீழ்ந்தேன்
அரியபொருள் அத்தனையும் தோற்றேன என்றான்;
"ஆணிமுத்து நகைவாங்கப் பணமில்லாமல்
அல்லலுற்றான் போலும என நினைத்தான் மங்கை

நகைகாட்டி இருசிலம்பாம் நகையும் காட்டி
நன்றுகொள்க எனநீட்டக் கோவ லன்தான்
"தகையுடையாய் இச்சிலம்பை முதலாக் கொண்டே
தமிழ்வளர்த்த மதுரைபோய் வாணிகத்தில்
மிகுபொருளைத் தேடலாம் வருக நீயும்
விரைவாக" என்றுரைத்தான்; நன்றே என்று
தொகையான மகிழ்ச்சியினை நெஞ்சந் தன்னிற்
சுமந்தபடி அன்பனொடு செல்ல லானாள்.

கதிர்எழுந்து விடியலினைச் செய்யும் போதில்
காதலின் மங்கையர்கள் கண்வி ழித்தே
எதிருற்ற கணவர்தமைத் தொழுத வண்ணம்
எழும்போதில் ஊர்க்கோழி கூவும் போதில்
முதிராத சிற்றடிகள் விடாது பற்ற
முன்நடந்தான் கோவலனே! இருவர் தானும்
அதிர்காவி ரிக்குவட கரையி னூடே
ஆனமேல் திசையிலொரு காதம் சேர்ந்தார்
-------------

இயல் 30

நடந்ததில்லை இத்தொலைவு நடந்தாள் மேனி
நலிந்ததில்லை இவ்வாறு நலிந்தாள்; "அத்தான்
அடைந்ததில்லை மாமதுரை அணித்தோ" என்றாள்
"ஆம என்றான் கோவலனும் நகைபுரிந்தே!
கடந்தார்கள் சிறுதொலைவு உறையும் பள்ளி
அடிகளே மாமதுரை செல்ல வேண்டும்
அருளுகவே நன்னெறிதான் எனப் பணிந்தார்.

அருகனுறு சமையத்துக் கவுந்தி அம்மை
அவர்கட்கு வாழ்த்துரைத்து, யானும் அங்கே
பெரியார்பால் அறிவுரைகள் கேட்க வேண்டும்
பிழைதீர்த்த அறிவனைநான் ஏத்தவேண்டும்
வருகின்றேன் என்றுசொல்ல மகிழ்ச்சி கொண்டார்
வழியோடு மூவருமே மேற்கண் நோக்கி
மருமலர்ப்பூங் காவயல்கள் வளங்கள் கண்டு
மகிழ்வில்நலி மறந்து சென்றார் நாளோர் காதம்

செல்லுகையில் தமிழ்ச்சான்றோர் தம்மைக் கண்டார்
செம்மைநெறி இன்னதெனக் கேட்டு வந்தார்:
அல்லலிலா அருகனையும் ஏந்தி நின்றார்;
அங்கிருந்தே ஓடத்தால் ஆறு தாண்டி
நல்லதொரு தென்கரையிற் பூம்பொழிற்கண்
நலிதீர்ந்தார்! தீயோரால் நண்ணலுற்ற
பொல்லாங்கெல்லாம்தவிர்ந்தார் உறையூர் சேர்ந்தார்;
பொழுதிருந்து வைகறையில் தென்பால் சென்றார்.
--------------

3. மதுரைக் காண்டம்

இயல் 31

தென்திசைநோக் கி்ச்சென்றோர் வளநீர்ப் பண்ணை
திகழ்பொய்கை சூழ்ந்தஓர் மலர்ப்பூங் காவில்
நன்றிருந்தார்! அப்போதில் ஒருபார்ப் பான்தான்
நண்ணலுற்றான் ஊர்யாது வந்த செய்தி
என்னஎன்ற கோவலற்கே குடம லைநாட்
டின்மாங்கா டென்னுமூர் உடையேன் இங்கே
நன்றான திருவரங்கம் வேங்க டம்காண்
கின்றஓர் நசையாலே வந்தேன் என்ன;

மதுரைக்கு வழிகேட்டான் கோவ லன்தான்
மற்றிந்த நெடுவழியைக் கடந்து சென்று
முதுகொடும்பா ளூர் அடைந்தால் அங்குத் தோன்றும்
மூவழியில் வலப்பக்க வழியே சென்றால்
மதிதென்னர் சிறுகுன்றம் தோன்றும் அஃது
வலந்தள்ளிச் செல்லுவீர் இடப்பக் கத்தின்
அதர்ஏகத் திருமால்குன் றத்தைக் காண்பீர்
அங்குண்டோர் பிலம்; அதன்கண் மூன்று பொய்கை;

முதற்பொய்கை மூழ்கினால் ஐந்தி ரத்தை
முழுதுணர்வீர் மற்றொன்றால் பழம்பி றப்பும்
அதன்பின்ன தால்விரும்பும் பேறும் காண்பீர்;
அவ்வழியே மதுரைக்குச் செல்லல் நன்றாம்.
இதுவன்றி நடுவிலுள வழியே சென்றால்
இடர்உண்டாம் என்றுரைத்து நகைவி ளைத்தான்
மதியுடைய கோவலனும் நகைத்தா னாகி
வழுத்துவான் பார்ப்பனனும் விழித்தா னானான்.

படிவதனால் பொய்கையிலே ஐந்தி ரத்தைப்
படித்தநிலை வந்திடுமோ! ஆரி யத்தைப்
படிப்பதனால் ஆவதென்ன? பழம்பி றப்புப்
படுபொய்யோ உண்மையோ முடிவார் கண்டார்?
முடிவில் ஒன்றால் விரும்புவது கிடைக்கு மென்றால்
முழுப்பொய்யை நம்புவார் உள்ளார் போலும்!
நடப்பார்ப்பான் ஆரியத்தைப் பிறர்உள் ளத்தில்!
நாம்நடப்போம் நடுவழியே என்றார். ஆங்கே.
-----------------

இயல் 32

வேட்டுவர்ஓர் குமரிக்குக் கோலம் செய்து
விழாநடத்தும் அதனையே முகந்தி ருப்பி
நீட்டுவிழிக் கண்ணகிதான் பார்த்த வண்ணம்
நேயனொடும் கவுந்தியொடும் நடக்கலானாள்
வாட்டமுறு பொதிகையினிற் தோன்றித் தென்னன்
மதுரையினில் வளர்தென்றல் வீச, மற்றும்
ஊட்டுகுளிர் வானிலவு பகலைச் செய்ய
ஒழுக்கமிலாப் பார்ப்பனர்வாழ் புறத்தே சேர்ந்தார்.

கவுந்தியினைக் கண்ணகியைக் காலை ஓர்பால்
காப்பான வேலிசூழ் நல்இடத்தில்
உவந்திருப்பீர் என்றுரைத்து நீர்நி லைதான்
உள்ளஇடம் தேடியே நெடிது சென்றான்;
"அவண்தனித்த மாதவியே இந்நே ரத்தில்
அல்லலென்ன உற்றனையோ" என்னும் ஓர்சொல்
வணிருந்து வந்ததெனக் கோவலன்தான்
எண்ணினான் ஓர்பார்ப்பைக் கண்ணிற் கண்டான்.

ஏதுரைத்தாய் அதன்பொருள்தான் என்ன என்றே
எதிர்வந்த பார்ப்பனனைக் கோவ லன்தான்,
ஒதென்ன "மாசாத்து வானும் அன்னோன்
உயிரனையாள் தானுமவர் உறவி னோரும்
போதெல்லாம் துன்பமெனும் கடலுட் பட்டுப்
புறமீள வகையின்றிக் "கோவலன்தான்
யாதுற்றான்! எங்குள்ளான என வையத்துள்
எப்புறத்தும் தேடவிட்டார என்று சொன்னான்.
------------

இயல் 33


முன் அதனைக் கூறினோன் பின்னும் "ஐயா
மொய்குழலாள் மாதவிதான் எனைஅ ழைத்தே
தன்எழுத்துத் திருமுகத்து என்பால் தந்து
'தருகஎன் கோவலனைத் தேடி' என்றாள்
சொன்னமொழி கொண்டும்மைக் கண்டு கொண்டேன்
தூயோரே எனத்தந்தான்! கோவலன்தான்
மன்னஞ்சல் திறக்குங்கால், மண்ணழுத்தில்
மாதவியின் மேனிமணம் மருவ லானான்

பெற்றவர்கள் தம்முயிரைப் பிரிந்து போகப்
பெற்றவர்கள் ஆனார்கள்; மற்றுமுள்ள
உற்றவர்கள் தாம்பெற்ற செல்வம் ஏகல்
உற்றவர்கள் ஆனார்கள்; நாட்டிலுள்ள
கற்றவர்கள் எல்லாரும் அழுது பாடக்
கற்றவர்கள் ஆனார்கள்; துறவு கொண்ட
நற்றவர்கள் உமைத்துறக்க ஆற்று கில்லார்
நங்கையுடன் சென்றீரே எனைப்பி ரிந்து!

சூழலுற்ற கோவலன்தான் அங்கு வந்து
சூழலுற்ற பாணருடன் மகிழ்வினோடும்
யாழிசைத்தே மதுரைதான் எங்கே என்ன
இதுமதுரைத் தென்றலே அஃதண் மைத்தே
வாழ்கஎன்றார்; மூவருமே வழிகடந்து,
வையையினைப் புணைமரத்தால் கடந்தே ஆற்றின்
வீழ்புனலின் தென்கரையை மேவி ஆங்கே
விரிமதுரை மதிற்புறத்தோர் சேரி புக்கார்.
--------------------

மதுரைக் காண்டம்

இயல் 34

புக்கிருந்த புறஞ்சேரிச் சார்பில் உள்ள
பூம்பொழிலில் வளவயலில் புள்ளி னங்கள்
ஒக்கவே எழுந்தார்ப்ப வைக றைக்கண்
ஊர்ச்சாந்த பொய்கைத்தா மரைஅ ரும்பின்
மிக்கனவாம் இதழ்விரித்த இளஞா யிற்றின்
மென்கதிரின் பொன்னொளிபோய் இன்னல் காணா
மக்களினைத் துயிலெழுப்ப, முரசால் சங்கால்
மதுரைபெற்ற மங்கலம் இவ்வுலகர் பெற்றார்!

மதுரைநகர்ப் பாங்குகண்டு மக்கள் வாழ்வின்
வகைகண்டு வருவேண்இங் கிருக்க என்று
முதிர்அன்பு மங்கையால், அடிக ளின்பால்
மொழிந்தானாய்ச் சொல்லுகின்ற கோவ லன்தான்
மதிக்கலுறும் மறந்துறையின் விளங்கின்ற
மன்னவனின் கோயிலையும் அமைச்சர் ஒற்றர்
பதிபலவும் அவண்வருவார் போவார் நெஞ்சப்
பாங்கினையும் கண்டுமேற் கொண்டு சென்றான்

மாண்அகத்துத் தமிழ்ப்புலவர் பேர வைகள்
வான்எட்டும் மாடங்கள் மலிதெ ருக்கள்
வாணிகத்து நிலையங்கள் அறமன் றங்கள்
மான்எட்டும் விழிமாதர் ஆடும் பூங்கா
பூண்அகத்துப் பூண் அதுதான் கல்வி என்று
புடைஎட்டும் கழகங்கள் கண்டான் மேலும்
காண்அகத்தான் தொழில்பலவும் காணச் சென்றான்
கண்டவர்கள் கோவலனைப் பின்தொடர்ந்தார்!
-------------

இயல் 35


இதுவென்ன? எனக்கேட்பான் கோவலன்தான்!
இன்னதென விளக்குவார் ஆயிரம்பேர்!
புதிதென்ன இன்னும்எனில் ஆயிரம் பேர்;
போம் வழினயக் காட்டுதற்கே முன்நடப்பார்.
எதுவேனும் அவன் சொன்னால் சொல்இருந்த
இனிதான உளங்கொண்டு மகிழா நிற்பார்;
மதுஓடும் பக்கமெலாம் கூட்ட மான
வண்டோடிக் கொண்டிருந்தல் வியப்பே அன்றாம்!
சூழ்ந்திருந்த நல்லோரிற் சில்லோர் கேட்கத்
தூயமனம் வருந்தாமை கருதித் தான்முன்
வாழ்ந்திருந்த வரலாற்றுச் சுருக்கம் சொல்லி
மற்றுந்தான் காணுவன கண்டே, அஞ்சி
வீழ்ந்தணரோ சேரியிலே தங்கி யுள்ளார்
விரைந்துநான் சென்றிடத்தான் வேண்டு மென்றே
ஆழ்ந்துள்ள எண்ணத்து மக்கள் தம்பால்
அறிவித்து நெறிபற்றித் தனியே சென்றான்!

விடிந்துவிடும்முன் அகன்று வெங்க திர்போய்
விழுந்தபின்னும் வரவிலையே!; என்கண் ணீர்தான்
வடிந்துவிடும் எனுங்கருத்தோ! துணைபி ரிந்தும்
வாழ்ந்திருப்பேன் எனுங்கருத்தோ! எனஉயிர்தான்
முடிந்துவிடு மோஎன்னும் நிலை யடைந்து
மொய்குழலின் மலர்சிதற ஐயோ என்ற
ஒடிந்துவிழும் பூங்கொடியைத் தாங்கி நின்றான்
உள்ளத்தும் கண்ணகியைத் தாங்கும் செம்மல்.
----------------

இயல் 36


ஊர்ஏகிப் புறஞ்சேரி மீண்ட செம்மல்
உயர்மதுரைச் சிறப்பினையும் பாண்டி மன்னன்
சீர்மிக்க வெற்றியையும் கவுந்தி யின்பால்
செப்புகையில் தலைச்செங்கா னத்து வாழ்வோன்;
ஓர்பார்ப்பான் மாடலன்தான் குமரி ஆடி
உடன்மீள்வோன் கவுந்தியினைக் காணு தற்கு
நேர்வந்தான். கோவலனும் வருக என்றான்
நெஞ்சத்து மிகமகிழ்ச்சி கொண்டான் பார்ப்பான்

வரவேற்றான் கோவலனை மாட லன்தான்
வண்மையிலும் தன்மையிலும் நிகரி லாதீர்!
மருமலர்த்தார் மார்பனீர் நீவிர் இந்த
மாணிக்கக் கொழுந்தோடு வந்த தென்ன
உரைக்கஎனக் கோவலன்தான் ஐயா இங்கே
உற்றதொன்று பெரிதன்றே வரவி ருக்கும்
ஒருபெரிய தீங்குண்டு போலும்! எண்ண
உளநடுங்கும் கனவொன்று கண்டேன் என்றான்.

அடிகள்தாம் அதுகேட்டுக் கூறு கின்றார்
''அறங்காணாப் பார்ப்பனர்கள் ஊர்ந்த ஊரில்
குடிபுகுந்தீர் அச்சத்தில் குடிபு குந்தீர்
கொள்நினைவே கனவாகும் ஆத லாலே
நொடியில்இவ் விடம்விட்டு மதுரை செல்க''
நுவல இது! கோவலனும் நன்றே என்றான்.
அடிகளிடம் மாதரிவந் தாள்அந்நேரம்!
அன்னவள்ஓர் ஆயர்மகள்; முதியோள்; நல்லாள்!
------------

இயல் 37


கொடுமையிலா வாழ்க்கையினை உடையாள் ஆப்பால்
கெண்டளிக்கும் குடியுடையாள்;முதியாள்; நல்லள்
நடுநிலையாள் மாதரிபால் அன்பு மிக்க
நங்கையினை இருத்தலாம் எனக் கவுந்தி
அடிகள்தாம் உரைத்தவுடன் கோவ லன்தான்
அன்னாய்என் கண்ணகியாம் மனைவி தான்நின்
அடைக்கலமே எனவுரைத்து மனையாள் கையை
அவள்கையில் பிடித்தளித்துக் கண்ணீர் வார்த்தான்!

கனவெண்ணி நெஞ்சத்தில் கலக்கம் வைத்தும்
கண்களிலே அருவிவைத்தும், சூழ்ந்தி ருந்த
அனைவோரின் நடுவின்மா தரிதான் ஏந்தும்
அங்கையினாற் செங்கைதான் பற்றப் பட்டும்
முனம்மறந்து பின்நினைந்து வந்து, காட்டா
முகம்காட்டிச் சாவாளை வாழ வைத்த
இனியவனை இனிப்பிரிதல் உண்டு போலும்
என்றெண்ணிக் கண்ணகிதான் ஏங்கலுற்றாள்;

ஏங்கினாட் கேங்கினான் கோவ லன்தான்!
ஏங்கினார் அங்கிருந்த மக்கள் யாரும்!
தீங்கற்றான் தீங்கற்றாள் இன்ன வண்ணம்
சிறுமையினில் ஆழ்கின்ற நிலையை எண்ணி
ஆங்கிருந்த துறந்தாளும் அழுதிருந்தாள்
'அடிகளே வணக்கம்' என்றான் செம்மல்! மங்கை
நீங்கினிரோ எனத்தொழுதாள்! நடக்கலுற்றார்
நேயந்து மாதரியினோடு நேரே,
------------

இயல் 38

மாதிரியின் இல்லத்திற் சேர்ந்தார் ஆக
மாதர்இயற் றும்பணியை நான் நான் என்று
மாதரிந்து காய்கறியைச் சமையல் முற்றும்
மாதரிவை செயற்கரிய எனமு டித்தே
ஓதரிய குணமுடைய கோவ லற்கே
உணவிட்டு வெற்றிலைபாக் கீந்து நிற்கக்,
காதலியைக் கோவலன்தான் கேட்ட தான
காற்சிலம்பி ரண்டிலொன்று கழற்றித் தந்தாள்.

கண்ணகியே என்னோடு காட்டி லெல்லாம்
கால்நோவ நடந்ததனை என்பெற் றோர்கள்
எண்ணியே என்னதுயர் எய்தி னாரோ!
யானும்உனக் கிழைத்ததுயர் சிறிய தன்று!
பண்ணரிய பொற்பாவாய்! நான்சு மந்த
பழுதகற்ற வந்தவளே அழுதல் வேண்டாம்
நண்ணிடுவேன் விரைவாக இதனை விற்றே
நல்லவளே எனச்செம்மல் சொல்லிச் சொன்றான்.
கலம்பாடிச் சரக்கேற்றி அயலில் விற்கும்!
கலம்பாடிச் சரக்கேற்றி நாடு மீளும்!
இலம்பாடி வந்தோர்க்கே இல்லை என்னார்!
இனம்பாடும் புலவர்க்கே எல்லாம் என்போர்!
நலம்பாடும் செல்வமெலாம் கடல்போற் கொண்ட
நாட்டுக்குப் பாடுபடு வாரின் மைந்தன்
சிலம்பொன்றின் விலைபாடச் சொல்லும் காட்சி
சிறுமைக்குக் கண்ணாடி என்றார் கண்டோர்!
---------------

இயல் 39

நிலம்பிரித்து நாலானாற் போலும், தண்மை
நீர்பிரிந்து மூன்றானாற் போலும், ஒண்மைப்
பொலம்பிரிந்து பல்அணிகள் ஆகி; வண்ணப்
பூவுடம்பெல் லாம்குலுங்கப் பெற்ற மன்னி
புலம்பிரியா மணவாளள் பஞ்ச ணைக்கண்
புனருங்கால் பட்டுறுத்தும் என்று, பூண்ட
சிலம்பிரண்டை யும்கழற்றி அணிந்திருந்த
திருப்பள்ளிப் பெட்டகத்தின் மீது வைத்தாள்!

மணம்வேண்டும் நாமொன்றி வாழவேண்டும்;
மனம்வைப்பாய் எனக்கேட்ட வஞ்சி தன்னைப்
பணம்வேண்டும் எனக்கேட்டான் கருங்கை என்பான்
பள்ளியினில் துயிலெழுப்பும் போதில் கண்ட
வணம்சிறந்த சிலம்பிரண்டில் ஒன்றெ டுத்து
வந்துகருங் கையிடத்தே வஞ்சி நீட்ட
இணங்கிஎன் கண்ணாட்டி உன்னை மன்னி
எடுத்தாயா எனக்கேட்டால் இல்லை என்க.

இன்னுங்கேள் வஞ்சியே இக்கள் ளத்தை
இம்மியள வுரைத்தாலும் நம்இ ரண்டு
முன்னங்கை கால்கட்டித் தீயில் இட்டே
முழுதுடம்பும் பொரித்தெடுத்துத் தெருவில் எங்கும்
'இந்நங்கை! இம்மைந்தன்! காண்பீர்'' என்பார்.
என்றுரைத்தான்! ''செத்தாலும் சொல்லேன்'' என்றாள்
''நன்மணந்தான் என்றென்றாள் 'இச்சிலம்பு
நமக்குறுதி யானவுடன் நடக்கும்'' என்றான்
-----------------

இயல் 40

நம்கோப்பெ ரும்பெண்டின் சிலம்பெங்கென்ன
நானறியேன் நானறியேன் என்று கோயில்
தங்குவார் தனித்தனியே சொல்லப் பின்னர்த்
தயங்கிநின்ற வஞ்சியினைக் கேட்டபோதில்
''எங்கள்மணம் முடிப்பதற்கும் காசே இல்லை
என்கருங்கை மாப்பிளைக்கும் வேலை இல்லை!
உங்கள்சிலம்பெங்களிடம் இருந்திருந்தால்
உடனேஎம் மணமுடியும் அன்றோ'' என்றாள்

ஆகாமல் இருக்குமா மணந்தான்? - என்றே
அத்தமுறச் சொல்லிவிட்டேன் என்றாள் வஞ்சி!
''ஏகேடி என்பெயரை ஏன்இ ழுத்தாய்!
இலைமறைக்கக் காம்பையும்நீ காட்ட லாமா?
நீகூறி னாய்நீட்டி நீட்டிக் கேட்டே
நிறுத்திக்கொண் டார்அவர்தம் பேச்சை என்றாய்
காகாஎன் பதைநிறுத்திக் கொண்ட காக்கை
கருத்தையெல்லாம் துப்பறியச் செலுத்திற்றாகும்!
---------------

இயல் 41


ஐயப்பாகு என்மீது கொள்ள வைத்தாய்
அரசர்விடும் உளவறிவோர் உளவ றிந்தால்
வையப்பா சிலம்புதனை என்பார்; வைத்தால்
வந்திடப்பா வஞ்சியையும் அழைத்துக் கொண்டு
நையப்போ டப்படப்பா தலையைத் துண்டாய்
நறுக்கிப்போ டப்படப்பா என்பார் என்றான்
செய்யப்போய் நலமொன்றைத் தீயைப் போய்நீ
திருடிவந்தாய் வஞ்சிஎன்றான் வருந்தி நின்றான்

மடமையினால் இச்செயலைச் செய்தோம் என்றான்
மக்கள்நமை மதியாரே என்று நைந்தான்
உடைமையினை உடையவர்பால் சேர்த்தே எம்மை
ஒன்றும்செய் யாதீர்கள் என்போம் என்றான்
மடமடென வேநடந்தான் சிலம்பெ டுத்தான்
மற்றுமதை நோக்கினான் மார்பில் வைத்தே
மிடிபோக்கும் செல்லமே என்று கூறி
மீண்டுமதை இருந்தஇடம் தன்னில் வைத்தான்

மிகப்பெரிது நமக்கெல்லாம் இச்சி லம்பு
வேந்தர்க்குச் சிறுதுரும்பே ஆத லாலே
அகத்தியமாய்த் தேடிடார் எனநி னைப்பான்
அரசியார் திருவடியின் மங்க லத்தைப்
பகுத்துணராப் பாவியினைத் தேடு தற்குப்
பத்தாயிரம் பேரைப் போவீர் என்று
தகத்தகெனக் குதித்திடுவார் வேந்தர் பல்லைத்
தடதடெனக் கடித்திடுவார் எனநினைப்பான்
-------------

இயல் 42

வீட்டையும்வந் தாராயக் கூடும் என்றே
வேலங்காட் டிற்சிலம்பைப் புதைத்து வைத்தான்
காட்டையும் ஆய் வாரென்று சிலம்பைத் தோண்டிக்
கடிதோடி இடுகாட்டில் புதைத்து வைத்தான்.
நாட்டிலுள்ள எவர்களையும் உளவு காணும்
நாட்டத்தார் எண்றெண்ணி நடுக்கம் கொள்வான்
தோட்டத்து வேலையினில் எட்டிப் பார்ப்பான்
தொலைநோக்கித் தெருக்குறட்டில் நிற்கும் போதில்

அத்தெருவில் ஆயிரம்பேர் நடுவிற்செல்லும்
ஆணழகன் ஒருசிலம்பும் கையு மாக
இத்தெருவில் இதுகொள்வீர் உள்ளீர் கொல்லோ
எழிற்சிலம்போ சிலம்பென்று கூறக் கேட்ட
நத்தைவிழிக் கருங்கையான் ஓடி ஐயா
நம்அரசி யார்க்கொன்று வேண்டும்; நீவீர்
வைத்திருக்கும் சிலம்பினுடன் இந்தக் கோவில்
வாயிலிலே நின்றிருப்பீர் என்று சொன்னான்

யார்நீவிர் எனக்கேட்ட கோவ லற்கே
யான்இந்த அரசவையின் பழம்பொற் கொல்லன்;
பேர்கருங்களை; இந்நாட்டின் மன்னி யார்தாம்
பின்னுமொரு பொற்சிலம்பு தேவை என்று
நேர்என்பால் சொல்லிவைத்தார் அதனா லன்றோ
நீவிர்இதை வைத்திருப்பீர் என்று சொன்னேன்
ஓர்நொடியில் இதுசொல்லி மீளுகின்றேன்
உரைத்தவிலை பெறுகீர்என்று விரைந்து சென்றான்
-----------------

இயல் 43

வெப்புக்கும் மாற்றளித்தேன்; குளிர்மை காட்டும்
மேலுக்கும் மாற்றளித்தேன் வேந்தே, அன்னை
எய்ப்புக்குத் தீர்வில்லை என்ன என்றேன்
இப்புக்க நோய்மனநோய் என்றன் தோழி
செப்புக்கும் இளநீர்க்கும் கொங்கை ஒக்கும்
சேலுக்கும் வேலுக்கும் கண்கள் ஒக்கும்
உப்புக்கும் துப்புக்கும் இதழ்கள் ஒக்கும்
ஊற்றுக்கும் சாற்றுக்கும் சொற்கள் ஒக்கும்

என்றுரைத்த என்உடையார் எவள்பால் கண்டார்?
யானிருக்க அவளிடத்தில் இவர்க்கேன் நாட்டம்?
என்றிவ்வாறு உரைத்தழுதாள் தேற்றத் தேறாள்
எனைத்தள்ளி அறைக்கதவின் தாழும் இட்டாள்,
அன்றில்களில் ஒன்றங்கே ஒன்றிங்கேயா?
ஆருயிரும் பேருடலும் பிரிவ துண்டா
இன்றுதான் காண்கின்றேன் புதுமை என்றே
எழில்வேந்தர் வேந்தனிடம் தோழி சென்னாள்.
பாட்டொன்று பாடினேன் அவைக்கண் இன்று!
பாங்கிருந்தார் தம்மிலொரு பாவா ணர்தாம்
கேட்டொன்று நன்றென்று விரைவிற் சென்று
கிளிஒன்று மொழியார்பால் கிளத்த லானார்
போட்டொன்று கொன்றாளே என்னை மன்னி!
புல்லொன்று மலையாகச் செய்கின்றாளே.
ஊட்டொன்று கன்றும்தாய் தனைம றக்கும்
உணர்வொன்று பேரின்பம் மறவாதென்றான்
--------------

இயல் 44

பாண்டியன்நெ டுஞ்செழியன் தோழி யின்பால்
இவ்வாறு பகர்ந்தேன் இருக்கை நீங்கி
ஆண்டியன்ற பெருங்கோயில் மன்னி கொண்ட
ஊடலினை அகற்றுதற்குச் செல்லும் போதில்
ஆண்டவரே நும்கோயில் ஒருசி லம்பைத்
திருடியவன் அடியேனின் குடிலில் உள்ளான்
ஈண்டுளதே அக்குடிலும் அச்சிலம்பும்
இருக்கின்ற தென்றுரைத்தான் கருங்கைத் தீயன்

அன்றுபோய் இன்றுவரும் காற்சி லம்பும்
அவள்ஊடல் நெருப்பணைக்க ஏற்ற தாகும்
என்றுபோய்க் கொண்டேதன் எதிரில் வாளால்
ஏவல்செயும் காவலரை நோக்கி ''ஆளைக்
கொன்றந்தச் சிலம்புதனைக் கொணர்வீர் என்றான.
கோவலனை நோக்கியந்தக் காவலாளர்
பின்தொடர முன்நடந்தான் கருங்கைத் தீயன்
பெருமகிழ்ச்சி உள்ஊரக் கைகள் வீசி.

கோவலனை அணுகினார்; கருங்கைத் தீயன்
கோமானின் ஏவலால் சிலம்பு காணும்
ஆவலினால இவர்வந்தார் காட்டும்; என்றே
அன்புரைபோல் வன்புரையை அமைத்துக் சொன்னான்
காவலரோ ''கோவலனின் முகத்திற் கள்ளம்
காணவில்லை யேஎன்று கருதிச் சொன்னார்
தாவலுற்ற ஊராரும் கருங்கையானின்
தலைவாங்கும் எற்பாட்டின் நிலையறிந்தார்
-------------------

இயல் 45

முகத்திலொரு நல்லகுறி தோன்றிற்று என்றால்
முழுத்திருடன் தனித்திறமை அதுதான். அன்னோன்
அகத்திலொரு தீயகுறி உணர்தல்வேண்டும
அதுவன்றோ கையிலுள்ள காற்சி லம்பு!
மிகுத்திவ்வா றுரைத்தஉரை கேட்டோ ரெல்லாம்
மேலோர்மேற் பழிசுமத்தும் நூலோ என்றார்
பகுத்துணராப் பாவிஒரு காவ லன்தான்
பட்டென்று கோவலனை வெட்டிச் சாய்த்தான

நடுங்குகின்றார் கொலைகண்டு மதுரை மூதூர்
நலங்களெல்லாம் கொலையுண்டு போன தென்றே;
ஒடுங்குகின்றார் நாணத்தில் உடம்பின் செந்நீர்
ஊர் ஆறாய் ஓடுவது கண்டார்; பல்லோர்
அடுங்கள்அப் பாவிகளைக் கருங்கை யானை
ஜயகோ என்றார்கள்! மற்றும் ஓர் ஆள்
விடுங்கள்எனைப் பழிதீர்ப்பேன் என்றான் தன்னை
விடாதிருந்த பல்லோரை நோக்கி ஆங்கே.

வல்லான் வகுத்ததெல்லாம் வாய்க்கால் போலும
வாய்மையினைக் கொன்றிடவும் வல்லான் போலும்!
நல்லான்தான் என்றிருந்தோம் வேந்தன் தன்னை!
நாணாதான் நடுவுநிலை கோணு தற்கே!
தொல்லாண்மை இழந்தானை மதுரை அன்னை
சுமப்பாளோ பழிமூட்டை சுமப்பா ளோதான்!
இல்லான்தான் கோவலனே எனினும் அன்னோன்
இருப்பான்தான் இல்லாட்சி தொலைத்த பின்னும்
--------------

இயல் 46

மன்றத்துப் புலவரெலாம் வந்து கண்டு
மனந்துடித்தார் மன்னவன்சீர் மறைந்த தென்றார்!
குன்றத்து வாழ்மக்கள் நெய்தல் மக்கள்
குளிர்முல்லைப் பெருமக்கள் மனனமா ரோடு
ஒன்றொத்துப் பொன்நெடுந்தேர் சாய்ந் துடைந்த
ஒருதுன்பக் காட்சிகண்டு தமிழ கந்தான்
தென்றற்கும் செந்தமிழ்க்கும் தாயாய், இந்தச்
சிறுசெயற்கும் மடியேந்தல் உண்டோ என்றார்.

அன்பென்ற நீர்ப்பாய்ச்சி அறம்வ ளர்த்தே
அவனுயர்ந்தான் இவன்தாழ்ந்தான் என்பதான
துன்பின்றித் தமிழ்ச்சான்றோர் பலரைப் பெற்றுத்
தொல்லுலகுக்கு ஒழுக்கநெறி பயிற்று வித்துத்
தென்பென்றால் தென்னாட்டின் வீரம் என்றும்
திறம்என்றால் அறப்போரின் திறமே என்றும்
இன்பென்றால் இவைஎன்றும் அருளிச் செய்யும்
எழில்நாட்டில் படுகொலையா என்றார் நல்லோர்

இழந்ததுவே இவ்வுலகோர் மாணிக் கத்தை!
இழந்ததுவே இந்நாடு பெற்ற சீர்த்தி;
பழந்தமிழர் பலரோடும் பகைத்தா ராகிப்
பல்காலும் பலரோடும் பேசி நைவார்
குழந்தைகளும் கோவலனின் உடல்வெட் டுண்ட
கொடுங்கனவே காணுவார் ஆனார் என்றால்
முழங்குவன மும்முரசா அன்றி ஆட்சி
முடிகஎனும் பெருமுழக்கா என்றார் சான்றோர்
-------------------

இயல் 47

மாதரிதான் வையைநீர் ஆடச் சென்றான்
மதுரையினின் றங்குவந்த மாதொ ருத்தி
தீதறியான் கோவலனாம், நாட்டு மன்னி
சிலம்புதனைத் திருடியதாய்த தீயோர் ஏதோ
ஓதியது கேட்டரசன் கொல்வித் தானாம்
ஊரெல்லாம் இதுகுறித்த இரக்கம் கேட்கும்
காதெல்லாம் இரங்குவன என்றால் நான்உள்
கலங்குவதில் வியப்புண்டோ என்று சொன்னாள்

வெட்டுண்ட கோவலனைக் காணு தற்கும்
விளைவென்ன என்பதனை அறிவ தற்கும்
எட்டுண்டு திரையென்றால் அங்கங் குள்ளார்
எல்லாரும் வந்துற்றார் கடலைப் போல்வார்
திட்டுண்டான் மன்னவனே கூட்ட மக்கள்
செப்பியவை அக்கடலின் இரைச்சல் போலும்
முட்டுண்டேன் நான்மக்கள் நெருக்கத் தாலே!
முறிவுண்டேன் உளம்சேதி கேட்டே என்றாள்

தண்ணீரில் மூழ்குமுனம் இதனைக் கேட்ட
தையலாள் மாதிரிதான் அழுகை செய்த
கண்ணீரில் மூழ்கினாள் விரைந்தாள் இல்லம்!
கண்ணகிகண் டாள் அவளை நீரா டற்கும்
எண்ணீரோ? என் உற்றீர்? யாது கேட்டீர்
என்னுடையார் ஏதுற்றார்? அம்மா என்றன்
உண்ணீர்மை நலமில்லை உழலுகின்றேன்
உரைப்பிரென்றாள் மேற்பேசும் ஆற்றல் அற்றாள்;
----------------

இயல் 48

கைச்சிலம்பு மன்னியவள் சிலம்பே என்றும்
கள்ளம்செய் தான்அதனை என்றும் சொன்ன
பொய்ச்சொல்லை நம்பியே மன்னன் ''கொன்று
போடச்சொன் னான்செம்மல் தன்னை'' என்றே
அச்செழுநீர்ப் பொய்கைக்கண் மதுரை வாழ்வாள்
அறிவித்தாள், நீராடேன்; உன்பால் வந்தேன்;
இச்சேதி நானுரைக்கலாயிற்றென்றே
எதிர்வீழ்ந்தாள் மீது,மாதரியும் வீழ்ந்தாள்

ஆஐயோ எனவீழ்ந்த கண்ண கிப்பேர்
ஆடுமயில் தோகைநிகர் குழல் விரிந்தே
சாவாஎன் அன்புக்கு? வாழ்வார் வாழ
தமிழ்காத்தார் வழிவந்தும் அறத்தைக் கொன்றோன்
கோவா? அக்கொடுங்காலன்? கோத்த சொல்லால்
கொலைசெய்யச் சொன்னானே? குற்ற முண்டோ?
ஓவானே? காற்றே! செங் கதிரே! சொல்வீர்
ஒன்றுண்டோ நீவீர் அறியாத செய்தி?

ஆம்ஆம்ஆம் அவன்ஓழிவான் நாடும் தீயும்
அறம்திறம்பா என்அன்பைக் கொன்றான் வாழ்வு
போம்ஆம்ஆம் பொய்ஏற்பான் ஆட்சி அற்றுப்
போம்ஆம்ஆம் தமிழ்ப்பழங்கு டித்த லைக்கோர்
தூமணியைப் பழிமாசு துடைப்பேன் என்று
மாதரிஐ யைஇருந்தார் இடம் உரைத்தே
பூமணிக்கை முகத்தறைந்து மங்கை போனாள்
புறந்திருந்தார் செயலற்று நின்றிருந்தார்.
--------------

இயல் 49

செஞ்சிலம்பே ஒன்றோடி ரண்டு கண்ணின்
முந்நீர்போய் நானிலமே செறியக், கண்டோர்
அஞ்சுவான் ஆறுபார்த் தெழுவகைத்தாய்
எட்டீகைத் தொண்டுவளர் திசைகள் பத்தும்
பஞ்சாக்கும் வெஞ்சினத்து நுதல்நெறிப்பின்
பறக்கும்எரி யொடுமதுரைத் தெருக்கள் தோறும்
நஞ்சுபாண் டியற்கமுது மகளிர்க்காக
நான்காணீர் கொலையுண்டோன் மனையாள் என்றாள் !

என்சிலம்பே எடுத்துவந்தது அம்மை மாரே
எவள்சிலம்பும் நமறியோம் அம்மை மாரே
என்சிலம்பைத் தன்சிலம்பென் றுரைக்கக் கேட்டோன்
இருதுண்டாய் வெட்டுவித்தான் துணையை! மன்னன்
புன்செயலால் இவ்அமைதி யுலகம் என்ற
பூஒன்றில் இதழ்ஒன்று போயிற் றன்றோ!
தென்னாட்டு வாழ்வரசி எதிர்பார்க்கின்ற
திருவெல்லாம் வேரோடு சாய்ந்த தன்றோ?

பன்னாளும் பரத்தையிடம் வாழ்ந்தோன்;செல்வம்
பறிகொடுத்தோன் என் அடைந்தென் சிலம்பில் ஒன்றை
இந்நாளில் விற்றிங்குப் பிழைக்க வந்தோன்
இனத்திலுயர் தமிழ்ப்பழங்கு டிப்பி றந்தோன்;
என்வாழ்வை இனித்துலக்கும் பொன்வி ளக்கை
இருதுண்டாய்க் காணுவதோர் இடமும் காணேன்,
என்னாமுன் கண்ணகியை எவரும் சூழ்ந்தார்
யாம்பட்டோம் நீபட்ட துன்பம் என்றார்.
--------------

இயல் 50

கண்ணகியை அழைத்தேகி உடல் கிடந்த
காட்சியினைக் காட்டுதற்கு நெருங்கும் போதில்
புண்நகும்அப் பொன்னுடைலைச் சூழ்ந்திருந்த
பொங்குகடல் மக்களிலோர் புலவன் நின்று
மண்ணகத்தின் தமிழரசன் பாண்டி யன்தான்
மதிகேடன்;கொடுங்கோலன்; என்று காட்டும்
திண்ணகத்தான் எவனுள்ளான் என்ப தெண்ணிச்
செத்தாய்நீ என்றான்மற்றொருவன் சொல்வான்.

பாதியுடல் கண்ணகிக்கும் மற்றும் உன்றன்
பாதியுடல் மாதவிக்கும் ஆனாய் என்றால்
சாதிஒழிப் பான்ஒருவன் வேண்டு மென்று
தவங்கிடக்கும் தமிழகத்தின் குறைத விர்க்க
ஏதுடலம் எதுதொண்டு எவ்வா றுய்தல்?
இனிதான தமிழ்ப்பண்பாடுயிரே என்போய்
தீதறியாய்! மன்னனுனைக் கொன்றான்! உன்றன்
சாகாத புகழுடம்பாற் சீரழிந்தான்

இவ்வாறு பெருமக்கள் பலவாறாக
இறந்தவனுக் கிரங்கலுற்றார் அறநெறிக்கே
ஒவ்வாத மன்னவனைப் பழித்தல் செய்தார்
''ஒதுங்கிடுக! வழிவிடுக'' என்ப தாம்ஓர்
செவ்வொலியின் நடுவினின்று திருந்து கற்புச்
சேல்விழிதான் கார்குழல்தான் என்று காட்டும்
அவ்விளைய கண்ணகிதான் கோவலன்தன்
அழகுடலின் மேல்விழுந்து புரளலுற்றாள் .
--------------

இயல் 51


என்செய்வேன் என்துணையே? வாழ்க்கை தன்னில்
ஏதுண்டாம் எனக்கினிமேல்? இந்நிலத்தில்
பொன்செயலாம் பொருள்செயலாம் சாத லுற்றுப்
போனஉனை நான்இனியும் படைத்தல் உண்டோ!?
மன்செய்த இக்கொலைத்தீர்ப் புக்கு முன்னே
மாண்டஒரு மாசிலனை மீண்டும் ஆக்கல்
ஒன்றுமட்டும் முடியாதே என்ப தெண்ணி
இருப்பானேல் ஓவியத்தை இழவேன் என்றாள்.
முகம்காண்பாள் அவன்காண முகங்காணாதாள்;
முகம்கண்டு முகங்கண்டு முகத்தை ஒற்றி
அகம்கண்ட துயர்ப்பெருக்கே கண்ணீராக
அகம்,கண்டம, முகம், தோள்கள் தழுவிக் காலின்
நகம்கண்ட கால்கண்டு கைகள் கண்டு,
நடுக்குற்று விரலாலி கண்டு வீழ்ந்தாள்
நகம்கண்டு சொன்னகனத ஆழி சொன்ன
நடந்தகதை எண்ணிஎண்ணி அலறலாளாள்.

இன்னநடந் தனவென்று சொல்லீர் போலும்!
ஏன்கொன்றான் என்பதையும் விளக்கீர் போலும்!
கன்னமிட்டான் கொளத்தக்க கொடிய தீர்ப்பின்
காரணத்தை நானறியச் சொல்லீர் போலும்!
மன்னவனைக் கண்டுநான் நம்கு டிக்கு
வாய்த்தபழி தீர்ப்பேன்என் றெண்ணீர் போலும்!
என்றுரைத்த கண்ணகியை நோக்கி ஆங்கே
இருந்தவர்கள் நிகழ்ந்தவற்றை உரைக்கலானார்.
---------------

இயல் 52


அம்மையீர் உம்ஒருகாற் சிலம்பை ஊரி
னகத்துவிலை காணுகையில் கருங்கை என்போன்
நம்அரசி இவ்வாறொன் றெனக்கு வேண்டும்
நாடுகெனச் சொன்னதாய்ச் சொல்லி இந்தச்
செம்மலினைத் தன்னில்லத் தெதிர்த்த கோயில்
தெருப்பக்கம் இருப்பிர்எனச் சொல்லி ஓடி
அம்மன்னர் இடம், திருட்டுப் போன தான
அருஞ்சிலம்பும் கையும்ஆய் உளான்ஆள் என்றான்.

அப்பாவி அதுகேட்டே ஆரா யாமல்
அவற்கொன்று சிலம்புகொண்டு வருக என்றான்
இப்பால்அக் கருங்கையன் காவ லாளர்
வந்தார்கள் காவலரும், ''குறிநன் றானார்
எப்படிநாம் கொல்லுவோம்'' எனஇருந்தார்.
கருங்கையான் ''இவன்திருடன் திறமை மிக்கான்
தப்பாது கொல்க'' என்றான் நாங்க ளுந்தாம்
சரியல்ல எனமறுத்தோம் அதேநேரத்தில்;

காவலரில் ஒருமுரடன் வாளாற் கொன்றான்
கருங்கையன் யாவன்எனில், மன்னியாரின்
கோவிலிலே அவர்சிலம்பைத் திருடி வந்த
கொடுவஞ்சி மணந்துகொளக் கெஞ்சப் பட்டோன்;
ஆவலினால் கருங்கையன் அதைம றைத்தான்.
அச்சத்தால் இச்சிலம்பை அதுதான் என்றான்
யாவும்இவை எனக்கேட்டாள இறந்தவர்தாம்
எழுந்துவந் துரைத்தவைஎன்றெண்ணிச் சென்றாள்.
----------------

இயல் 53

பாண்டியனெ டுஞ்செழியன் மனைவி யின்பால்
பரிவோடு வருகைதந்தான்; நாட்டு மக்கள்
ஈண்டினார் எங்கணுமே நம்மைப் பற்றி
இழிவுரைத்தார் என்றுநான் கேள்வி யுற்றேன்;
ஆண்டுநாம் இட்டதென்று சொல்லும் தீர்ப்பும்
அறக்கேடே ஆயிற்றாம் கொலையுண் டானோர்
மாண்புடையான்; குற்றமிலான் என்றெல்லோரும்
வருந்துகின்றார் என்பதையும் யுணர்ந்தேன் என்றாள்.

கொலையுண்டோன் மனைவிஒரு கற்பின் மிக்காள்
கூறுகின்றார் இவ்வாறு! மங்கை உள்ளம்
அலையுண்டால் நம்நிலைமை என்ன ஆகும்?
அறம்பிழைத்தா யார்வாழ்ந்தார்? என்றன் உள்ளம்
நிலைகலங்க லாயிற்றே? அச்சம் என்ற
நெருப்பிலொரு புழுவானேன்; நாட்டார் கூட்டம்
புலிவாயில் நம்வாழ்வு மானே ஆனாற்
போலுமொரு மனத்தோற்றம் உடையேன் என்றாள்.

கோமகள்தான் இவ்வாறு கூறும்போது
கோடிமக்கள் கூடிவர உடன் நடந்த
மாமயிலாள் கையிலொரு சிலம்பி னோடும்
மடித்தஇதழ் எடுத்தநுதல் விழியி னோடும்
வெம்மனத்தில் னோடும், எம்குடியின் சீர்த்தி
வீழ்த்தினோன்; என்துணையை வீழ்த்தி னோனின்
தீமையுறு கோயிலெங்கே? என்று கேட்டாள்
சென்றவர்கள் ஓடிவர முன்விரைந்தாள்!
---------------------

இயல் 54

சிங்கம்சு மந்திருக்கும் இருக்கை யின்மேல்
சேர்ந்திருக்கும் நெடுஞ்செழியன் கடைகாப் போனை
அங்கழைத்துப் பெருமக்கள் கூட்டத் தோடும்
அவள்வருவாள்; புகக்கேட்பாள்; என்னி டம்வா
பொங்கிவரும் கடற்கஞ்சேல் தணலுக் கஞ்சேல்
புகல்என்பால் இடும்ஆணை தவறிடாதே
அங்கேசெல் என்றுசொன்னான் கடைகாப்பாளன்
அப்படியே அப்படியே என்றான் சென்றான்

பெருமக்கள் பின்னிருக்க முன்னே வந்து
''பிழைசெய்தான் கடைக்காக்கும் காவ லோயே!
ஒருசிலம்பும் கையுமாய் ஒருத்தி வந்தாள்
உயிர்போன்றான் தனைஇழந்த ஒருத்தி வந்தாள்
உரைபோய்நீ என்றுகண் ணகிஉரைக்க
ஒடினான் ''ஒருத்திமட்டும் வருக உள்ளே
உரைபோய்நீ'' எனமன்னன் உரைக்கக் கேட்டே
ஓடிவந்தான், கண்ணகிக்கும் மக்களுக்கும்

தொழுதெழுந்து ''தாயேஎன் தாயே நீவீர்
ஒருவர்மட்டும் உட்செல்க மன்னன் ஆணை;
எழுந்தருள்க! நாட்டவரே மன்னர் ஆணை;
என்விருப்பம்போல் நடத்தல் நன்றோ என்றான்.
தொழுதானைக் கையமைத்து மக்கள் தம்மைத்
தொழுதுகை கண்ணகிதான் தனிய ளாகப்
பழுதுடையான் பாண்டியனின் அவையின் நாப்பண்
பழுதில்லாக் கற்புடையாள் சென்று நின்றாள்.
-------------------

இயல் 55

என்னநீ சொல்வதென மன்னன் கேட்டான்
என்சிலம்பை விலைகூறி இங்குற் றோனை
என்னநீர் கொன்றதென மங்கை கேட்டாள்.
இடர்விளைக்கும் கள்வனைநான் கொல்வித் தேன்,மற்
றென்னஎன் செங்கோல்தான் செய்யத் தக்க
தென்றுரைத்தான் மன்னன்தான்! மங்கை நல்லாள்
என்னநீர் ஆராய்ந்தீர் சிலம்பைப் பற்றி?
என்னநும் செங்கோல்தான் என்று கூறி,

கள்வனைநீர் கண்டீரோ, விற்க வந்தோன்
கைச்சிலம்பை ஆய்ந்தீரோ மாசி லாதோன்
விள்வதனைத்தும் கேட்டீரோ ஒருதீ யோன்தான்
விண்டதனை ஆயாமல் கொல்வீர் என்று
விள்வதுவும் தக்கதென எண்ணிட்டீரோ?
விளைவுண்மை காணீரோ? வாழ்கை இன்பம்
கொள்வாளும் கொள்ளாமல் செய்தீர்! என்னைக்
கொண்டானைக் கொன்றீரே! என்று கூறி;

உம்சிலம்பைக் கொணர்விப்பீர் என்சி லம்பும்
உள்ளதிதோ! என்றுரைக்க மன்ன வன்தான்
வெஞ்சிலம்பைக் கொணர்வித்து முன்னே வைத்தான்.
வேந்தரே உம்சிலம்பின் பரல்கள் என்ன
அஞ்சாமல் செல்கஎன்று மங்கை கேட்க
'எம்சிலம்பின் பரல்முத்தே 'என்றான் மன்னன்
வஞ்சமிலாக் கண்ணகிதான் 'என்சிலம்பின்
மாணிக்கம் பார்க்கப்போ கின்றீர்' என்றாள்,
----------------

இயல் 56

எனைப்பிரிந்தாய் என்துணைவன் கையிற்சென்றாய்
இம்மதுரைத் தெருவினிலே உலவி வந்தாய்
உனைப்பிரிந்த என்துணையின் உயிரைப் போக்க
ஊராள்வோன் அரண்மனையில் இருந்தாய் என்றன்
மனப்புயலை எழுப்பினாய் மன்னர் மன்னன்
மாட்சியிலே வடுவொன்றும் தோன்றச் செய்தாய்
இனிதான என்சிலம்பே வாவா என்றாள்
ஏந்தலவன் முகம்நோக்கிக் கூறலுற்றாள்.

உம்சிலம்பென் றீர்இதனை என்சி லம்பே
என்றுரைத்தே அதைஎடுத்தாள் உடைத்தாள் போட்டே
செஞ்சிலம்பின் மாணிக்கம் சிதறி மன்னன்
விழிக்கெதிரில் உருக்காட்டிச் சென்று வீழ
நும்சிலம்பே கொணர்கஎனக் கொண்டுடைக்க
நுறுங்காத வெண்முத்தும் சிதறப் பின்னும்
கொஞ்சுகிளி கைச்சிலம்பும் போட்டுடைத்துக்
குண்டுமாணிக்கங்கள் கண்டீர் என்றாள்!

அதுகண்டான் பாண்டியன்தான் மனம்பிளந்தான்;
"ஐயகோ ஐயகோ தீயன் சொல்லால்
இதுசெய்தேன் உயிர்பறித்தேன் நானே கள்வன்;
யான்துணிந்த கோவலனோ கள்வன் அல்லன்;
முதியவெலாம் தம்மினுமோர் முதியதென்னும்
முன்னான தென்னாட்டின் வழிவந்தே,மன்
பதைக்காக்கும் முறைபிழைத்தேன என்றான் வீழ்ந்தான்.
பதைக்காமல் துடிக்காமல் இறந்துயர்ந்தான்.
-------------

இயல் 57

பாண்டியனெ டுஞ்செழியன் இறந்தான் என்றால்
பாண்டியனின் உயிர்போன்றாள் இருப்ப துண்டோ?
ஈண்டினோர் இரங்கிடவே தானும் ஆங்கே
இறந்திட்டாள்! 'நத்தம்போற் கேடும் மற்றும்
ஆண்டுளதாம் சாக்காடும் வித்த கர்க்கல்
லாலரிது' வள்ளுவனார் அருளும் இச்சொல்
காண்டிரென எடுத்துக்காட்டானார் போலும்,
காதல்வாழ் வியல்காட்டிச் சென்றார் போலும்.!

மாணிக்கப் பரலிட்டு பொன்னும் மற்றும்
மணியிட்டுப் பணியிட்ட பாணி கண்டார்;
ஆணிப்பொன் னேஎன்னும் வெண்க லத்தின்
அழகான சிலம்பிட்டுப் பாண்டி யன்தான்
கோணிட்ட நெறிவென்றும் அன்னோன் அன்பின்
கோமாட்டி உயர்வென்றும் அவை அகன்றே
ஏணிட்ட வாயிலினின்றப்பு றத்தே
என்என்ற பெருமக்கட் கடல்அ டைந்தாள்.

என்நல்லான் கள்வனல்லன் யானே கள்வன்
என்றுரைத்தான் உயிர்பிரிந்தான் மன்னன் அன்பு
மன்னியுந்தான் உயிர்பிரிந்தாள் எனினும் என்றன்
மணவாளன் உயிர்பெற்று வருதல் உண்டோ?
மன்னிறந்தான் ஆனாலும் அவன் வழக்கம்
மற்றரசின் துறைதோறும் படிதலாலே
இன்னலினைச் செய்யாதோ அருமை மக்காள்
எவ்வாறு வாழுவீர் இனிமேல் இங்கே?
------------------

இயல் 58

அரசனவன் பொதுச்சொத்தை இழக்கவில்லை
அரசனவன் தன்பொருளை இழந்திருந்தான்;
அரசனவன் அந்நிலையில் அரசன் அல்லன்;
அரசனவன் வழக்காளி; தனியாள்! என்றால்
ஒருதனியாள் தன்வழக்கைத் தானே தன்பால்
உரைத்துக்கொள் வதும்தீர்ப்பும் தானே கூறி
அருந்துணையைக் கொல்லுவதும் முறையோ? தீய
அரசன்விளை யாட்டெல்லாம் சட்டம் தானோ?

அமைச்சர்கள் அவையத்தார் படைத்த லைவர்
அரசனுக்கே ஆட்களென்றால் அறம்என் னாகும்?
அமைச்சர்களை அவையினரை படைமே லோரை
ஆதரிப்ப தும்பணமா? அவன்கைக் காசா?
அமைச்சர்களால் அவையினரால் படைமே லோரால்
அழிவுக்கே துணைபோக முடியும் என்றால்
அமைச்சர்ஏன்? அவையினர்ஏன்? படைமே லோர்ஏன்?
அரசனோடு பொறுக்கித்தின்பதுவா நோக்கம்! ?

சமையப்பற் றோதீய சாதிப் பற்றோ
தந்நலப்பற் றோமற்றும் எந்தப் பற்றும்
உமியளவும் இல்லாத தமிழச்சான் றோர்கள்
உதவியது சட்டம்! அதில் உள்ள வாறே
அமையும்வகை ஓரெழுத்தும் தவறா வாறே
ஆட்சியினை நடத்துவோன் அரசன்; ஐயோ
தமியேனின் அருந்துணையைக் கொன்று போட்டான்
சட்டம்எங்கே? சட்டநெறி நின்ற தெங்கே?
------------

இயல் 59


அரசனது விளையாட்டே சட்ட மானால்
அச்சட்ட மேநாட்டை ஆளு மானால்
அரசனவன் அதிகாரம் பரவல் ஆனால்
அந்தோஅந் தோஎன்றன் அன்பு மிக்க

பெருமக்காள் என்துணைவர் பட்ட திங்கே
பெறவேண்டும்! அவரன்பு மனைவி மாரே!
இருக்கின்றீர் என்போலும் மங்கலத்தை
இழப்பீரோ? காதலின்பம்! இழக்க லாமோ!?

என்நிலையைப் பாருங்கள்! என்து ணைதான்
இழக்கப்பெற் றேன் இனிநான் பெறுவதென்ன?
பொன்னெனக்கும் ஒருகேடா கழுத்த ணிந்த
பூமாலை ஒருகேடா எனக்க ளைந்தாள்;
மின்னென்மேல் விட்டெறிந்தான்! மேலும் என்ன
விளைந்திடுமோ எனமக்கள் ஆஆ என்றார்
என்இளமை ஏன்என்றாள் விரிந்த கூந்தல்
இழுத்திழுத்துப் புய்த்துப்புய்த் தேஎ றிந்தாள

அம்மாஎம் அம்மாஎம் அம்மா என்றே
அங்கைஏந் திப்பல்லால் கெஞ்சு வாரை
இம்மிஅவள் கருதவில்லை என்கண் ணாளன்
வலதுகையால் முதல்ஏந்தும் இடது கொங்கை
விம்மல்ஏன் எனஅதனைப் புய்த்தெ றிந்தாள்;
வீறுகொண்ட மக்கள்எலாம் மதுரை தான்ஏன்?
வெம்மைசேர் அரண்மனைஏன்? படைஏன் வீடேன்?
அமைச்சகத்தின் தேவைஏன் என்றெ ழுந்தார
---------------

இயல் 60

அறம்கொன்ற பாவிக்குத் துணையி ருந்த
அமைச்சனார் வீடில்லை அவரும் தீர்ந்தார்
திறங்காட்டும் மறவரில்னல படைவீ டில்லை;
சிறிதுச்சிக் குடிமியினோர் எவரு மில்லை
உறங்கினார் போலிருப்பார் என்பதில்லை
ஒருகுன்றச் சாம்பலாய்க் காணப் பட்டார்
முறஞ்செவிகள் முதல்யாவும் இறக்கக் கண்டார்
முன்னின்ற கண்ணகிபு ரட்சிக் காரர்.
------------

இயல் 61

"இருவேமாய் இந்நகரிற் புகுந்தோம் அந்தோ!
ஏகலுற்றேன் இதைவிட்டுத் தனியள் ஆகத்
திரிகின்றேன்; வஞ்சிக்கே செல்வேன்; அன்பன்
திருப்புகழில் எனக்கும்இடம் தேடிக் கொள்வேன்!
எரியுண்ட மதுரையிலே வாயில் இல்லை.
என்னுடையான் தனைச்சேர வழியு மில்லை
பெருமகிழ்ச்சி உலவாத நாட்டில் யாரும்
பிறந்தாலும் இறந்தாலும் பெருமை இல்லை.

பிறந்தவர்கள் இறக்கும்வரை பெறுவ தெல்லாம்
பெருந்துன்பம் என்றாலும் பண்டு தொட்டே
சிறந்தொருவற் கொருத்திஒருத் திக்கொ ருத்தன்
எனவாழும் தென்னாட்டுத் தமிழர் யாரும்
பிறழ்ந்தறியா அறம்அன்பு வாய்மை கொண்டு
பேருலகில் வாழ்வாங்கு வாழ்வா ராயின்
பிறந்தவர்கள் பெருந்துன்பம் அடையார்; அன்னோர்
பிள்ளைகளும் துன்பமே பெறமாட்டார்கள்.

உலகுதொடங் கியநாளாய்த் தமிழ கத்தில்
உருப்பெற்ற ஒழுகலா றுகள்தாம் நன்றே
நிலைபெறலால் ஒழுக்கமெனல் இதுவாம் என்றே
நீணிலத்து மாந்தரெல்லாம் மேற்கொண் டார்கள்
இலகுமிவ் வொழுக்கந்தான் உயிரின் மேலாய்
எண்ணியே ஓம்பிடுக என்றார் தேவர்:
எலியானார் ஒழுக்கத்தால் புலிகள் ஆவர்
எளியாரும் வலியாரால் இறப்பதில்லை"
----------------

இயல் 62

மதுரையிலே தீமூளும் முன்பே தீய
மன்னவனின் மதுரையேன் என்ற கன்றார்.
இதுநன்றே என்றாராய்ச் சேர நாட்டை
எய்தினார் மகளிர்சிலர் மக்கள் சில்லோர்;
எதுநாடு? தீதாட்சி இன்மையாலே
அதுநாடே என்றுசிலர் சேர்ந்தார்; சில்லோர்
மிதித்தகிளை பிடித்தகிளை அற்றார் ஆகி
வீழ்ந்தார்கள் விலகிவாழ் ஆரியர்பால்;

குன்றேறி வாழ்ந்திடலாம் என்று சென்றோர்
குறுக்கினிலே திரும்பினார் தீயொ ழுக்கம்
ஒன்றேறும் நாகரிவர் என்று கண்டே!
ஓட்டாறு காட்டாறே எனினும் சில்லோர்;
சென்றேறிக் குடித்தனமும் செய்ய லானார்.
செந்தமிழர் சேருமிடம் காடோ மேடோ
நன்றேறும் என்றார்கள் போலும் சென்றார்;
நாடோறும் நன்றுழைப்பார் நன்றே காண்பார்;

தாயகத்தை விட்டகல எண்ணார் சில்லோர்,
தாயகத்தில் மூள்தணலும் நன்றே என்று
தீயகத்திற் புகுந்தார்கள்! தாய கந்தான்
தென்னாடு பொன்னடென் றோர்தீத் தப்பிப்
போயடைந்தார் சோணாடு சேர நாடு
புறம்போக்கும் மலைநாடு யாண்டும் நன்றே
தூயானைத் துறந்திடடுத் துயரில் மூழ்கித்
தோகையவள் என்ஆனாள் காண்போம் இங்கே!
---------------

4. வஞ்சிக் காண்டம்

இயல் 63

கெண்டைவிழி ஊற்றுநீர் ஆறே ஆகக்
கிளிப்பேச்சும் அழுதழுதே ஒலிஇ ழக்கத்
தொண்டையினில் நீர்வற்றக் கால்க டுக்கச்
சுடுவெயிலும் படுகுழியும் வெள்ள நீரும்
கண்டையோ எனக்கதறிக் கதறித் தாண்டிக்
களைப்போடும் இளைப்போடும் சேர நாட்டில்
அண்டைநெடு வேள்குன்றின் வேங்கை நீழல்
அடிநின்றாள்; குன்றத்தூர் வருதல் கண்டாள்.

நெஞ்சத்தே வழிந்துவரும் துன்பச் செய்தி
நெடிதுரைத்தாள்; நின்றிருந்தாள் வீழ்ந்தி றந்தாள்
நஞ்சொத்த நடுக்கத்தை நன்னீர் ஒத்த
இரக்கத்தை நண்ணினோர் ஆகித் தென்னன்
வஞ்சத்தை வேண்மாளோடிருந்த சேர
மன்னவனாம் செங்குட்டுவன்பால் சொன்னார்
கொஞ்சத்தை அழுதபடி கேட்ட மன்னன்
கொள்ளாத ஆவலுற்றான் பிறவும் கேட்க

தொன்மதுரை ஆசிரியர் சாத்த னார்தாம்
தோன்றலொடு வீற்றிருந்தார் அறிவோம் என்று
முன்னடைந்த பிறவெல்லாம் கூறி நின்றார்;
முடிதாழாக் குட்டுவனும் முடிதாழ்ந் தான்!அம்
மன்னியவள் வாடாத முகம்வா டுற்றாள்;
மனமிரங்கி னார்இருவர் கண்ணீர் விட்டார்!
அன்புடையாய் உன்மனத்திற் பட்ட தென்ன
அறிவிப்பாய் எனக்கேட்டான் குட்டுவன்தான்.
---------------

இயல் 64

தனித்திருந்தான் தலைவனயல் வாழ்நா ளெல்லாம்
தன்னைத்தான் காத்துக்கொண் டாள்அ தன்பின்
இனிக்கவந்தே இல்லாமை சொல்லிக் கேட்டான்
எழிற்சிலம்பை! அளித்தேதன் அன்பு மாறா
மனத்தோடு மாமதுரை சென்றே வாய்த்த
மாப்பழிச் சொல் தீர்த்துமணந்தான்சீர் காத்தாள்;
அனைத்துலகும் புகழ்தமிழர் குடிச்சீர் காத்தாள்;
அல்லலெண்ணாள்; அவனிறந்தான் எனஇறந்தாள்.

ஒருநாளும் பெறத்தக்க இன்ப வாழ்வும்
பெற்றறியாப் பொற்பாவை தன்ம ணாளன்
ஒருநாளில் படுகொலைக்குள் ளாகத் துன்பம்
உன்றான்என் றாலும், அவன்பெற்ற தீச்சொல்
வருநாளும் நில்லாமல் விரைந்து சென்று
வழக்கிட்டுப் பாண்டியனைச் சிலம்பால் வென்ற
திருநானள வாழ்த்தாமல் இருந்த நாள்தான்
சிறுநாளே எனினும் அதுதீயநாளே

முற்கண்ட நாளிலெல்லாம் அரிது செய்த
மொய்குழலார் உருவெழுதி இயற்றும் தச்சுக்
கற்கண்டு பெற்றதுவே கற்பாம் என்று
கடல்கண்ட குமரிநா டியம்பும் உண்மை
பிற்கண்டோம் கண்ணகியின் அரிய செய்கை
பிழைகண்ட பிறநாட்டு மகளிர் காணத்
தெற்கண்டை வஞ்சியிலே வஞ்சியாளின்
திருவுருவக் கல்நாட்டல் நன்றே என்றாள்.
----------------

இயல் 65

மிடியிழுத்துக் கட்டிச்சாக் காட்டில் தள்ளி
வில்லிழுத்துக் கட்டித்தன் திறத்தால் மற்றக்
குடியிழுத்துக் கட்டித்தூய் ஆட்சி காட்டக்
கொடியிழுத்துக் கட்டியதென் னவனைச் சீறி
மடியிழுத்துக் கட்டித்தன் மார்பின் கச்சு
வாரிழுத்துக் கட்டியகண் ணகிசீர் வாழ்த்தும்
படியிழுத்துக் கட்டிடுவேன் உலகை என்றான்
பனையிழுத்துக் கட்டியபூந்தாரன் சேரன்

இல்ஒன்று வாழ்வின்பம் அளியான் சொல்லின்
எழுத்தொன்று தள்ளாத இளைய பெண்ணாள்
வெல்ஒன்று மாள்ஒன்று பாண்டி யன்பால்
விலைக்கொன்று போகாமற் றொருசி லம்பில்
எல்ஒன்று மாணிக்கம் காணக் காட்டி
இழுக்கொன்று காத்தாட்குக் கற்பின் தாய்க்குக்
கல்ஒன்று நாட்டெனும்உன் சொல்ஒவ் வொன்றின்
கால்ஒன்று கோடிபெறும் கழிவொன்றில்லை

தெள்ளிவைத்த தமிழினிலே நற்க ருத்தைத்
திருத்திவைத்த சொல்லாளே பொன்னா லாகிப்
புள்ளிவைத்த பசுந்தோகை மயிலே! நீதான்
புகழ்ந்துரைத்த கண்ணகியை மறவேன்; என்று
வெள்ளிவைத்த தேர்ப்படியிற் கால்வைத் தேதன்
வேண்மாளை வாணுதலை இன்ன மிழ்தை
அள்ளிவைத்துச் செலுத்தென்றான் கோயிலின்முன்
அணைத்துவைத்த படிபொன்னை இறக்கி வைத்தான்.
-----------------

இயல் 66

இளங்கோவேண் மாள்தானும் அமைச்சனான
எழில்வில்லவன்கோதை சாத்தனாரும்

விளங்கோவ மணிமன்றில் தனிஇருந்தே
மென்கோவ லன்வாய்மை காக்கத் தென்னன்
உளங்கொள்ள வழக்குரைத்துச் சிலம்பால் வென்ற
உலகத்து மாதர்மணி ஆம்அவட்கே
வளங்கோயிற் பேரரசு "கல்லே கற்பு
வரலாறு பேசும்வகை உருவம் நாட்ட;

எண்ணிமுடித் தோமென்று குட்டுவன்தான்
இயம்பிமுடித் தான்கேட்ட மக்கள் மேலோர்
கண்ணிமுடித் தேன்வண்டு வண்ணம் பாடக்
கவித்தமுடி மன்னவா, வாழ்க! நீவிர்
பண்ணிமுடித் தோமென்ற முடிவை வாழ்த்திப்
பாடிமுடித் தோம்என்று பதில்முடித்தே
மண்ணிமுடித் தேபெற்ற மணிச்சி லம்பின்.
வஞ்சியொடு வஞ்சிதான் வாழ்க என்றார்

"ஒருபாதி ஆடவர்கள் வாழ்கின் றார்மற்
றொருபாதி மாதர்களும் வாழ்கின் றார்இவ்
விருபாதி யும்வாழும், இந்த நாட்டில்
இருக்குமனை யின்கணவன் இருவர் தம்முள்
ஒருபாதி நான்என்று மனைவி சொல்வாள்
ஒருபாதி நான்என்பான் கணவன் என்றால்
ஒருபாதி பெற்றதுயர் பிறபாதிக்கும்
உண்டென்போம்; கண்ணகிபால் கண்டோம என்றான்.
----------------

இயல் 67

கொண்டவன்தன் கைப்பிள்ளை பாலில் லாத
குறைதாங்க முடியாமல் செத்தான் என்றால்
கொண்டவள்தன் மார்படித்துத் தலைவிரித்துக்
கூத்தாடி பாட்டொன்று நீளப் பாடி
அண்டைஅயல் மாதர்களை வரவேற் றுத்தன்
அல்லல்விரித் திருப்பாள்பால் இல்லாப் பிள்ளை
தொண்டைவறண்டு ஒழியவைப்பாள்; மனஇ ருட்ட
தோகையள் கண்ணகிஓர் சுடர்விளக்கே!

தனைஅயலான் நெருங்காமல் தனைம ணந்தான்
தனைத்தீமை நெருங்காமல் தன்குடிச்சீர்
தனைக்கெடுப்பான் நெருங்காமல் முயல்வாள் நெஞ்சம்
தனைச்சோர்வு நெருங்காமல் காப்பாள் இல்லாள்!
புனைஆடை அணிகுவதும் கூத்துப் பார்க்கப்
போவதுமே கடமைஎன எண்ணு கின்ற
மனக்கப்பல் துயர்கடலைத் தாண்டிச் சேர
மங்கைஓரு கலங்கரைவிளக்க மன்றோ!

இறந்தானுக்குதவிஎனல் இருந்த போதில்
இருந்தபொதுக் குறைநீக்கல் ஆகும்; அன்றி
இறந்தானின் உடலுக்குத் தேரும் தாரும்
ஏற்பாடு செய்வதுவும் வேறிடத்தில்
சிறந்தான்என் றெண்ணுவதும் அங்கே அன்னோன்
சீரடைய இங்குள்ள பார்ப்பனர்க்கு
முறங்காணும் அரிசிமுதல் செருப்பு ஈறாக
முடிதாழ்த்துக் கொடுப்பதுவும் மடமை என்றான்.
----------------

இயல் 68


சோணாட்டிற் பிறந்துபின் பாண்டி நாட்டில்
தோகைதான் பட்டதெல்லாம் சொல்லு வாள்போல்
சேணுள்ள நம்அருமை வஞ்சி நாட்டைச்
சேர்ந்தாள்இப் பாரெல்லாம் செல்லும் கற்பு
வாணுதலாள் திருவுருவம் அமைப்ப தற்கு
வாய்ப்பான கல்எங்கே எடுப்பதென்று
காணுங்கால் இமையத்துக் கல்லே என்று
கண்டுவைத்தோம் காரணம்உண்டதற்கும் என்றான்.

''தெற்குமலைக் கல்லைப்போல் முதிர்ச்சி யில்லை
வடக்குமலை யிற்காணும் கல்லில்! ஆனால்
தெற்குமலை நம்முடமை அதனைக் காப்போர்
செந்தமிழர் நமையிகழும் பகைவர் அல்லர்;
தெற்குடைய தமிழிகழ்ந்த வடக்கர் தம்பால்
திறங்காட்டிக் கொள்ளுங்கல் சிறப்பிற் றென்றான்''.
மற்றுமுள்ளோர் பல்யானை இடையாட் டுக்கும்
வால்குழைக்கும் வரிப்புலியே வெல்க என்றார்.

ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் ஈங்கு வந்தார்.
ஆரியர்கள் தமிழ்பழித்தார் என்று சொன்னார்.
தீங்குள்ளார் கனகனொடு விசயன் என்றார
'செந்தமிழர் திறங்காட்டா திருந்தோ மானால்
ஆங்கிருக்கும் தமிழ்ச்சான்றோர் நெஞ்சம் என்ஆம்
அனைத்துலகில் தமிழன்சீர் என்ஆம்' என்றான்
'யாங்குள்ளான் தமிழ்பழித்தான் ஆங்குச் சென்றே
அழித்துயர்க' என்றார்அங்கிருந்தோர் யாரும்.
---------------

இயல் 69

இவ்வாறு குட்டுவன்தான் பெருமக்கள்பால்
இயம்பினோன், தன்னருமை முதலமைச்சர்
வெவ்வேலிற் கண்வைத்தால் தெவ்வர் அஞ்சும்
வில்லவன்கோ தைதன்னை நோக்கி "எண்ணம்
எவ்வாறு மேல்நடப்ப தென்ன" என்றான்
யாண்டுபல வாழ்கநின் கொற்றம் என்றே
அவ்வமைச்சன் கார்முகிலாய்க் கண்கள் மின்னக்
குரலிடித்துச் சொன்மாரி பொழிவானாங்கே.

''வாளெடுத்து வரிப்புலியார் கயலார் நும்பால்
மாறுபட்டார்; கொங்கர்செங் களத்தில் வந்தார்;
தோளெடுத்த எடுப்பினிலே தோல்வி கண்டார்.
தொகுத்தெடுத்தே இருகொடியும் நும்பால் தந்த
நாள்எடுத்த ஓட்டத்தைத் திசைகள் எட்டும்
நன்றெடுத்துக் கூறுவன. கொங்க ணர்க்கள்
கோளெடுத்த கலிங்கர், மறக் கருநாடர்கள்
கொடும்பங்க ளர்,கங்கர் கட்டியர்கள்,

ஆரியர்க ளுடன் தமிழர் கைகலக்கும்
அப்போரில் நும்மரிய யானை வேட்டை
நேரிருந்து நான்அன்று கண்டேன்; இன்றும்
நெஞ்சரங்கில் காணாத நேர மில்லை!
ஊரிருந்து பார்த்துவர எம்கோ மாட்டி
உடன்சென்ற விற்கொடிக்கீழ் உமைஎ திர்த்த
ஆரியத்து மன்னர்தோள் அறுதல் கண்டார்
ஆயிரம்தோள் பறந்தவிடம் காணுகில்லார்.
-----------------

இயல் 70

அத்தகையீர் கடல்சூழ்ந்த இந்நி லத்தை
அந்தமிழ்நா டாக்குவதாம் இந்தக் கொள்கை
எத்தகுதி எவருடையார் இதைஎ திர்க்க?
எந்நிலத்து நல்லாரும் எய்தத் தக்க
மெய்த்தகுதி யாம்கற்பு விளக்க அன்றோ
வில்லெடுத்தீர் இமயத்துக் கல்லெடுக்க!
வைத்தெழுதுவீர் அஞ்சல் உங்கள் கொள்கை
வடபுலத்து மன்னர்க்கு வருகை ஏற்க,

இந்நாட்டில் இதுகுறித்துப் பறைமு ழக்கம்
எழப்புரிவீர்; பன்னாட்டின் ஒற்றர் யாரும்
தம்நாட்டிற் கறிவிக்கக் கடமைப் பட்டார்!
தமிழ்எழுக வீரமிலா வடக்கு நோக்கி!
அந்நாட்டார் நமைஎதிர்க்க எண்ணுவாரேல்
அவருண்டு நமையறிந்த மூத்தோ ருண்டு
தென்னாட்டின் பழவீரம் அன்றும் இன்றும்
என்றுமே உணடெ''ன்றான் எடுத்த தோளான்

மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட மன்னன் "எங்கே
மாவீரர் எங்கேநாற் படைத்த லைவர்?
பட்டத்து யானைஎங்கே? ஆகஆக
பறையறைவிப் பீர என்றான் நாட்டி லெங்கும்
'குட்டுவனார் நம்மன்னர் வாழ்க நாளும்
கோதைஉருக் கல்கொணர வடக்குச் செல்வார்
வட்டத்து மன்னரெலாம் திறைகொணர்க
வரவேற்க'' என்றுபறை முழக்கம் கேட்டான்.
-----------

இயல் 71

தந்தத்தன தந்தத்தன தான தான
தந்தத்தன தந்தத்தன தான தான

வஞ்சிக்கிறை செங்குட்டுவன் வாழ்க! வாழ்க!
மன்பொற்கொடி திங்கட்குடைவாழ்க! வாழ்க!
மிஞ்சிச்செலும் வெங்கட்படை வாழ்க! வாழ்க!
நெஞ்சொக்கமு ழங்கப்பறை வாழ்க! வாழ்க!
நின்றெக்களி சங்கத்திரு வாழ்க! வாழ்க!
துஞ்சத்தகு வெங்கட்பகை வீழ்க! விழ்க!
வஞ்சிப்படை வென்றிப்படி வாழ்க நேரே.

தனதனதன தனதனதன தத்தத் தத்தா
தனதனதன தனதனதன தத்தத் தத்தா
வழிகுழிபெற நிலநெளிவுற எட்டுத் திக்கே
மலிபொடிஎழ மிசைஇருள்பெற ஒட்டுப் பட்டே
விழிஎரிதர மடமடஎன முற்பட் டுத்தோள்
விடுபடைஎறி படைதொடுபடை எட்டத் தொட்டே
ஒழிவதுபகை ஒழிவதுபகை தட்டுக் கெட்டே
உறுவதுபுகழ் எமதிறைஎன வெற்றிச் சொற்கே
மொழிஎனஒரு தமிழர்கள்படை முற்பட் டுத்தீ
முடுகியதென விரைவதுவட வெற்புக் கற்கே.

ஆடிநடந் தனபரிகள்; அணியா னைகள்
அசைந்துநடந் தன,தேர்கள் கலக லென்று
பாடிநடந் தனதேர்கள் கலக லென்று
படைதொடங்கித் தேர்ப்படையின் கடைவ ரைக்கும்
ஓடித்தான் பார்ப்பதென எண்ணி னோர்கள்
ஓடுகின்றார் ஓடுகின்றார் காணார் இன்னும்!
ஓடிக்கொண்டேஇருக்கின்றார்கள் என்றால்
படைநீளம் நீலமலை வரைக்கும் உண்டாம்.
-----------

இயல் 72

கண்டதிரும் நீலமலைப் புறத்தே தானை
கடும்பகலில் பாடிவீ டிறங்க மன்னன்
அண்டையினோ ருடன்இருக்கை வீற்றி ருந்தான்;
அவிழ்த்துவிடப் பட்டன,தேர்ப் பரிகள் எல்லாம்.
விண்தொடும்போர் யானைளும் கரும்பு வாழை
விளாவீழ்த்திப் பலாப்பழத்தோ டுண்டு லாவத்
திண்டிறலோர் நீராடி உடைகள் மாற்றித்
தெங்கிளநீர் முதிராவழுக்கை உண்டார்.

அரசரொடு போர்மறவர் எவரு மாக
அடியரிந்த நரம்பகற்றிக் குருத் திலைகள்
வரிசையினில் இட்டுச்சோ றிட்டு நெய்யா
றதுபாய்ச்சிக் கறிவகைகள் பண்ணி யங்கள்
பரிமாறிச் சுவைநீரும் அருகில் வைக்கப்
பார்அங்கே பாரிலுள்ளோர் இங்கே என்ன
இருவரிசை மூவாயிரங்கோல் நீளம்
இருந்துண்டார் எழுவர்என எட்டவில்லை.

வயிறொன்று தனிப்பெட்டி யாய்இருந்தால்
வந்தஎலாம் வரவுவைத்துத் தோளில் தூக்கி
உயிரச்சம் இல்லாமல் செல்லலாமென்று
உரைத்தவனை மற்றொருவன் நோக்கி அண்ணே
துயர்என்ப தொன்றில்லை என்றிருந்தால்
தொண்ணூறு வடைஒன்றும் பண்ணா என்றான்.
அயல்நின்றான் கைப்பற்றி நின்றான் ஓர்ஆள்
அயலானைத் தூக்கிவிட்டு வீழ்ந்தான் ஓர்ஆள
---------------

இயல் 73

குடக்கோமான் உணவருந்தி அமைச்சர் யாரும்
கொண்டாட வீற்றிருக்கும் போதில், ஐயா
வடக்கிருந்து வந்துள்ளார் காண்பதற்கு
வரவிடவோ? என்றொருவன் வணங்கிக் கேட்க,
மடக்கிவைத்து ஆராய்க என்று மன்னன்
வாயெடுக்கத் "தமிழ்பேசும் துறவோர் ''என்று
நடுக்குற்றே அவன்சொல்ல வேந்தர் வேந்தும்
நடுக்குற்றான் ஓடினான் வணங்கி நின்றான.

''பார்துறந்தும் தமிழ்துறவாத் துறவீர் என்றன்
படிமீதில் அடிவாழ்க'' என்றழைத்துச்
சீர்புரிந்து நின்றபடி என்பால் என்ன
திருவருளோ எனக்கேட்க "மன்னர் மன்னா
ஆர்வருந்தார் அங்கிருக்கும் தமிழர் கொண்ட
அல்லல்சொல்லக்கேட்டால்? கற்கோள் எண்ணாத்
தேர்பரிகா லாள்யனை சேரச் சென்று
செயல்முடிப்பீர்! தமிழர்களின் குறையும் கேட்பீர்!

ஒன்றன்று பலகுறைகள் உண்டு நீவிர்
உயர்தமிழர் யாவர்க்கும் காட்சி தந்து
நன்றொன்று செய்வீரெல், நன்றாம என்றார்
நகைஒன்று புரிந்தரசர்க்கரசன் அந்தப்
பன்றியுண்டார் கண்காணத் தமிழர் கட்குப்
பரிவொன்று காட்டுவது கடமை என்றான்
என்றென்றும் வாழியவே வேந்தே என்றே
இரும்'' என்று சென்றார்கள் துறந்த மேலோர்.
---------------------

இயல் 74

வண்கொங்கர் ஆடல்கண்டும் திறைகள் பெற்றும்
மன்னன்தான் விரல்அசைக்க வீரர் சில்லோர்
கண்டனர்போய்ப் பறையறைந்தார் சங்கெடு த்தார்
கணம்ஒன்றில் வரிசையுற நாற்ப டைகள்
உண்டென்றார் போல்நின்றார். மன்னர் மன்னன்
ஒருதேரில் ஏறினான் ஏறு கென்றான்
பண்டுமுதல் கொண்டுதமிழ் மறவர் பாடும்
படைப்பாட்டில் நடைபோட்டார் வீரர் யாரும்.

தனதத்தத் தனதானா தான தந்தா
தனதத்தத் தனதானா தான தந்தா
தமிழர்க்குப் பகையானோர் வாழ்வ தெங்கே?
தலையற்றுக் குவியாதோ ஊது சங்கே!
எமைநந்திப் பிழையாதார் போவ தெங்கே,?
இடருற்றுக் கெடுவாரே ஊது சங்கே!
குமிழொத்துத் திரிவோரே வாழ்வும் ஒன்றோ?
பெருவெற்றிக் குடையாரே சேரர் அன்றோ?
தமிழ்வெற்றித் திருநாளே வாழ்க என்றே
திசைஎட்டப் படிமீதே ஊது சங்கே.!

கங்கையாற் றைக்கடந்தார் நண்பர் ஆன
கன்னயநூற் றுவர்கொணர்ந்த ஓட மேறி
அங்குள்ள பகைநாட்டிற் புகுந்து நன்றே
அமைத்தஒரு பாசறையில் இனிதிருந்தார்
தங்கியது கேட்டார்கள்; ஆரியர்க்குத்
தலைவராம் கனகவிச யர்கள், மன்னர்
'இங்கிருந்தத் தமிழர்களின் ஆற்றல் காண்போம்'
என்றாராம் தமிழரசும் 'நன்றென்றானா'ம்.
---------------

இயல் 75

ஆரியநாட் டரசர்களின் படைவீ ரர்கள்
கனகவிச யர்படையோ டொன்று சேர்ந்து
போரிடுவார் திரைகடலே போன்றார். சங்கும்
போர்ப்பறையும் முழங்கினார் முழக்கம் கேட்டே
ஆரியரா? தமிழர்களா? வைய கத்தை
ஆளுவோர் யார்என்றார் பன்னாட் டாரும்?
சேரர்படை புகக்கண்டார் தேரினின்றே
சிங்கமொன்று புகக்கண்டார் பகைப்படைக்குள்!

அவர்வாளும் தமிழ்மறவர் எடுத்த வாளும்
அவர்வீச்சும் தமிழ்மறவர் விரைந்த வீச்சும்
தவறொன்றும் வீழ்ந்ததலை நூறும் ஆகச்
சாய்குருதி மிதப்பனவாம் பிணம லைகள்!
இவர் எங்கே ஓடுகின்றார் கூட்டத் தோடே
எனத்தொடர்வார் வில்லேந்து தமிழர் ஓர்பால்;
'அவன்கனகன் அவன்விசயன்' என்பார் ஓர்பால்!
அரைநாளில் தமிழ்வெற்றித் திருநாள் கண்டார்.

ஓரைம்பான் இருமன்னர் உருவம் மாற்றி
ஒளிந்தவரும் சடைமுடிகள் ஒட்டி னோரும்
கூரம்பால் மூகம்கீறி அம்மா பிச்சை
கொடுப்பீரெனத் திரிந்தோரும் ஆனாரமன்னன்
நேரந்தக் கனகவிசயர்கள் கட்டி
நிறுத்தப்பட்டார்பல்லோர் துரத்தப் பட்டார்
''ஆரங்கே வில்லவன்கோதை கற்கொள்க!
கங்கைநீ ராட்டுவிழா முடிக்க'' என்றான்.
---------------

இயல் 76

கனகனையும் விசயனையும் கல்சுமக்கக்
கையோடு கூட்டியே தமிழ வீரர்
அனைவரொடும் இமயமலை தனைஅடைந்தான்
அறிவமைச்சன் வில்லவன் கோதைதான் அங்கு
வினைமுடித்தே அவர்தலையில் கல்லை ஏற்றி
வீரரையும் உதவிக்குக் கங்கை ஆட்டிப்
புனைவில்லும் பொற்கயலும் புலியும் வானின்
பூண்என்ன நீள்கொடிகள் மின்னைச் செய்ய;

சங்கொலிக்கப் பறைமுழங்க ஆடல் பாடல்
கதையுரைக்கப் பரியானை தேர்கா லாட்கள்
பொங்குகடல் நடந்ததெனப் புகல வையப்
புகழ்சுமந்த வில்லவன்கோ தைதன் னோடும்
எங்குள்ளோ ரும்காணக் கற்சு மந்தே
என்செய்வோம் எனக்கனக விசயர் கூற
அங்கங்கு நின்றுவரும் ஊர்வலத்தில்
''ஆரியம்தோற் றது,தமிழே வென்றதெ'ன்பார்!

பாசறையில் குட்டுவன்தான் வடக்கில் வாழும்
பைந்தமிழ்ப் பெரியோரை வரவேற் றுப்பின்
பேசுகையில் தமிழ்நெறியின் பெற்றி கூறிப்
பிறர்போக்கின் சிறுமையினை எடுத்துக் காட்டி
வீசுதலை விழும்போதும் தமிழர் நாக்கு
வெல்கதமிழ் எனவேண்டும் எனவு ணர்த்தி
ஆசையுடன் வருகின்ற ஊர்வலத்தை
அருகோடி வரவேற்று வாழ்க என்றான்.
---------------

இயல் 77

வஞ்சிக்கு வரவில்லை என்ம ணாளன்!
மங்கைக்கு முகம்காட்ட எண்ண வில்லை
கஞ்சிக்கு வழியில்லான் தேளுங் கொட்டக்
கலங்குகையில் கடன்காரன் வந்தாற் போல்என்
நெஞ்சுக்கு நெருப்பாக வந்த வட்ட
நிலவுக்குத் தப்புவதும் எளிதோ தோழி?
பஞ்சுக்கு நிகரான என்உ டம்பு
பற்றிற்றே எனத்துடித்தாள் இளங்கோ வேண்மாள்.

மாலைதான் ஏன்அனுப்பும் தென்றற் காற்றை?
மல்லிகைதான் ஏன்அனுப்பும் நறும ணத்தை?
சோலைதான் ஏன்அனுப்பும் குயிலின் பண்ணை?
தொல்கடல்தான் ஏன்அனுப்பும் பெருமு ழக்கை?
ஓலைதான் வருகின்றேன் எனென் அன்பன்
ஒன்றுதான் வரவிட்டால் அவை நடத்தும்
வேலைதான் செல்லுவதும் உண்டோ தோழி
விளம்பாயோ எனஅழுதாள் இளங்கோ வேண்மாள்.

மண்ணுக்கு நன்மணிகள் வேண்டும்; வைய
மகளிர்க்குக் கற்பொழுக்கம் வேண்டும்; காணும்
விண்ணுக்கு வெண்ணிலவு வேண்டும்; வாழும்
வீட்டிற்குச் சுடர்விளக்கு வேண்டும்; நல்ல
பண்ணுக்கு மூன்றுதமிழ் வேண்டும்; நீர்சூழ்
பாருக்கு நல்லோர்கள் வேண்டும்; என்றன்
கண்ணுக்குக் கண்ணாளன் சேரர் தோன்றல்
கட்டாயம் வேண்டுமென்றாள் இளங்கோ வேண்மாள்.
------------------

இயல் 78

யார்வந்து கேட்டாலும் இல்லை என்னா
இசைவந்த குடிவந்த பெண்ணே இந்த
ஊர்வந்தும் தெருவெல்லாம் திரும்பி வந்தும்
ஊர்வலத்தை முடித்துவரும் கண்ணொப் பாரின்
தேர்வந்த தாஎன்று பார்போய்; வந்தால்
திரும்பிவந்து சொல்லேடி என்றால், என்றன்
நீர்வந்த கண்துடைத்து நிற்கின் றாயே
நெஞ்சுவந்ததாஎன்றாள் இளங்கோ வேண்மாள்.

வாராத நேரமெலாம் துன்ப நேரம்
வாராயே கண்ணாட்டி என்றன் தோளைச்
சேராத நேரமெல்லாம் உயிரி னுள்ளே
தீராத நோயொன்று திருகும் நேரம்
பாராயோ அன்னவரை வழிமேற் சென்று?
பற்றித்தான் வாராயோ பற்றி லாரை?
ஆராயா திருந்தாயே என்நி லைதான்
அழிவுநிலை என்றுரைத்தாள் இளங்கோ வேண்மாள்.

மிகப்பூவை பாடியதால் கூட்டில் ஓடி
மெல்லிஎனைக் கொல்வதுமுன் கருத்தா என்றே
புகப்பூவை நிகர்கைகள் நீட்டும் போதில்
புதுநிலவை முகின்மறைத்த தெனப்பின் நின்று
முகப்பூவை இருகைப்பூவால்மறைத்தே
முந்துபுகழ்க் குட்டுவன்தான் 'நான்யார்' என்றான்.
அகப்பூவில் வீற்றிருப்பார் என்றார் வேண்மாள்.
அல்லிப்பூ இதழ்முத்தம் ஐந்து வைத்தான்.
----------------

இயல் 79

பூம்புகார் பூவைக்குப் புகழெடுக்கப்
போனீரே பின்னடந்த தென்ன என்று
பாம்புகார் சடைக்குழலி கேட்டாள் ஆங்கே
படைச்செயலும் நடப்பெவையும் விரித்து ரைத்து
வேம்புதா ராத்திபுனை தமிழ்வேந் தர்க்கும்
விற்சுமந்த பகைவர்தாம் கற்சு மந்து
தாம்புகார் எனினும்அவர் புகுந்த செய்தி
சாற்றுகென ஆள்விட்டேன் என்றான் மன்னன்.

பீடுறுகண் ணகிகோவ லன்தந் தைமார்
பெருஞ்சிறப்புத் துறவடைந்தார்! இருவர் தாய்மார்
நீடுமகிழ் சிறப்புலகைச் சேர்ந்திட் டாராம்
நெடியமுடிச் சோழனவன் ஆட்சி நன்றாம்
மாடலனே இவ்வாறு சொன்னான் என்றான்
''வாழியவே நம்சீர்த்தி வருக வேநீர்
ஆடிடுவீர் அமுதுண்பீர்'' என்று மன்னி
அழைத்திட்டாள் மன்னவனும் நன்றே என்றான்.
-----------------

இயல் 80

அரசியல்மா மன்றத்தில் குட்டுவன்தான்
அமர்ந்திருக்க நீலன்முதல் மெய்காப் பாளர்
வரலுற்றார்; வாழ்த்துரைத்துச் சொல்ல லுற்றார்;
மன்னவரே பாண்டியர்பால் சோழ னார்பால்
வரிசையுற வடநாட்டுச் செலவும், கல்லை
மன்னராம் கனகவிசயர்சுமந்து
வருமாறு புரிந்ததுவும் சொன்னோம் கேட்ட
மன்னர்அவர் சொன்னவுரை நன்றன் றென்றார்.

எம்மிடத்தில் தோற்றவரை மீண்டும் போருக்கு
இழுத்ததுவே சிறுமையாம் சேர வேந்தர்
தம்மிடத்தும் அவர் தோற்றார் எனில் வியப்போ!
தலைமறையப் புறங்காட்டி ஓடி னோரைச்
சும்மாடு தலைவைத்துக ல்லை ஏற்றிச்
சுமந்துவரச் செய்ததுவும் பெருமை தானோ?
நம்மிடத்தில் கனகவிசயர்கள் என்ற
நாய்க்குட்டிக் கதையுரைக்க வேண்டாம் என்றார்.

மெய்காப்பார் இதுசொல்லக் கேட்ட வேந்தன்
''மீன்கொடியார் புலிக்கொடியர் பொறாமை கொண்டார்;
துய்யவரே வறுமைபெறச் செய்த ஆட்சி
துடுக்காகக் கோவலனைக் கொன்ற ஆட்சி
செய்தவர்கள், கண்ணகிக்கும் கோவலற்கும்
செயத்தக்க செய்தஎனை இகழ்ந்தாரென்றால்
வெய்யவர்க்கு வெய்யவரே புகழ்ச்சி பாட
வேண்டும் போலும்காணீர்'' என்று சொன்னான்.
--------------

இயல் 81


கல்லினில்அக் கண்ணகியைக் கற்பின் தாயைக்
கண்ணுறுதல் வேண்டுநாம்! கற்றச் சர்பால்
சொல்லிடுக! விரைந்துபணி முடிக்கச் செய்க!
துய்தான கல்நாட்டு விழாநாள் தன்னை
எல்லார்க்கும் தெரிவிக்க வருவார்க் கெல்லாம்
எல்லாமும் முன்னேற்பா டாக்கி வைக்க;
வில்லவனே கனகவிசயர்கள் தம்மை
விரைவினிலே வரவழைக்க என்றான் மன்னன்.

''வந்துநின்ற இருவரையும் வேந்தன் நோக்கி
மலைஇருந்த இடமெல்லாம் கடலும் ஆகும்.
பொந்துநின்ற இடமெல்லாம் மலையும் ஆகும
பொழில்நின்ற இடமெல்லாம் பாலை யாகும்;
வெந்துநின்ற இடமெல்லாம் நகரும் ஆகும்.
விரிந்துநின்ற இடஞ்சுருங்கல் ஆகும்; ஆனால்
செந்தமிழின் உண்மைநிலை எந்த நாளும்
சிறிதேனும் மாறாது நினைவில் வைக்க.

தேவரென்றும் உவப்பென்றும் ஆடு வெட்டும்
சிறுசெயலைத் தமிழரெல்லாம் வெறுக்கின் றார்கள்.
ஆவலுற்றே ஒருமகளைப் பலர்ம ணத்தல்
அறம்என்னும் தீயாரை உமிழ்கின் றார்கள்.
யாவருமே பிறப்பினிலே நிகர்என் பாரை
எதிர்ப்பாரைத் தமிழரெலாம் எதிர்க்கின்றார்கள
காவாத கொலைஞனுக்கும் கழுவாய் பேசும்
கயவர்களைக் கழுவேற்றச் சொல்வார்'' என்றான
-------------------

இயல் 82

திருடித்தான் வாழ்ந்திடுதல் வேண்டும் என்றால்
செத்துத்தான் புகழ்காப்பேன் என்று சொல்வோன்.
இருள்தீர்ந்த பழந்தமிழன்!. ஆரி யன்தான்
இடரென்றால் திருடுவதும் நன்றே என்போன்;
குருடகல வடக்கரெலாம் மருந்துண்டு அணாமல்
குக்கலெனத் தமிழர்களைக் குரைத்தல் நன்றோ!
துகள்தீர்க என்றுநான் பணித்த தாகச்
சொல்லுகபோய் திருந்தாஉம் இனத்த வர்க்கே.

அருந்தமிழ்நான் மறைகண்டு மறைகண் டீர்கள்
அறம்பொருளின் பம்வீடு காணு கில்லீர்!
செந்தமிழர் துணைமறைகள் செய்தும் தந்தார்
சிறிதேனும் ஒழுக்கநெறி கண்டீர் இல்லீர்
எந்தமிழை எம்மருமை இலக்கி யத்தை
ஈடழித்தே எம்மன்னை நாட்டைப் பற்றிக்
குந்தியுண்ணத் திட்டமிட்டீர் அதன்முன் உங்கள்
குதிகாலைக் காத்துக்கொள் வீர்கள் என்றான்.

புறங்காட்டி ஓடிடவே பலநாட் டின்கண்
புலிகளையும் எலிகளே ஆக்கி எங்கள்
திறங்காட்டி ஆளுவதோர் அறமும் காட்டித்
திரும்பினோம் அல்லால்எம் கொடியை அங்கே
நிறங்காட்டச் செய்தோமா? மக்கள் செல்வ
நிழல்காட்ட ஒதுங்கியதும் உண்டா? தீய
குறுங்காட்டு நரிகளே செல்க'' என்றான்
கும்பிட்டுப் போனார்கள் ஆரியர்கள்.
---------------------

இயல் 83

உலாவந்தும் உற்றாரைக் கண்டு வந்தும்
கண்ணகிக்கே இயற்றுகின்ற உருவம், கோயில்
எலாமுடியப் பணிமுடியும் ஊக்கம் தந்தும்
இல்வந்தே இன்னடிசில் முடித்தும் நல்ல
பலாவாழை மாஆன முக்க னிக்குட்
படாததாம் பெரியசுவை வேண்மாள் தன்னை
விலாஅணைய அணைத்தபடி நிலாமுற்றத்தில்
விடாக்காதற் சொற்பொழிவை நடாத்தென்றான்மன்

''வெண்ணிலவு பேசிக்கொண் டேஇ ருக்கும்,
விரிவானம் பேசாமல் இருக்கும், மேலும்
வெண்ணிலவு உள்ளன்பு நிறைந்ததன்று
விரிவானே அன்புடையதாகும்'' என்றாள
''உண்ணிறைந்த காதலிலே ஆணும் பெண்ணும்
ஒன்றேயாம்'' எனவேந்தன் உரைத்தான ''இல்லை
பெண்ணுள்ளம் நிறைகாதற் பேழை'' என்று
பிளந்தபாளைச்சிரிப்புக்காரி சொன்னாள

பேரின்பத் துறையினிலே காத லிக்குப்
பேச்சில்லை என்றுரைப்பார் நன்று! பெண்ணே,
பாரினிலே இன்பமெனல் ஆட வர்பால்
பாவையரும் பாவையர்ஆ டவர்தம் பாலும்
ஆருவதொன் றேதானா? என்று கேட்டான்.
ஐந்தடுக்கு மாளிகையி னின்று கீழே
பார்வையினைப் போகவிட்ட இளங்கோ வேண்மாள்
பச்சைமயில் இவளொருத்தி யார்யார் என்றாள்
--------------------

இயல் 84


வேண்மாளும் குட்டுவனும் உரும றைத்தே
விரைந்துசெலும் அவ்வொருத்தி யைத்தொ டர்ந்தார்;
தூண்மாளும் வேலைஒரு புறத்தே! ஓவச்
சுவர்எழும்பும் மற்றொருபால்! கோயில் தன்னைக்
காண்பாரின் உளம்பறிப்ப தாம்மேற் கட்டுக்
கற்றச்சர் இன்கனவை உண்மை ஆக்கும்
வேண்மாளும் குட்டுவனும் அவற்றைத் தாண்டி
விள்ளரிதாம் ஒருவிடுதி உள்ளே சென்றார

கண்ணகிக்குக் கல்லுருவம் அமைப்பான் அங்கே
காலைபோம், நடுப்பகல்போம், மாலை யும்போம்,
எண்ணத்தை மீட்கவில்லை; கண்ணும் கையும்
எடுத்ததில்லை வேறுபுறம்! மனைவி யான
வண்ணமயில் எதிர்வந்தாள் பார்க்க வில்லை;
வாய்ப்பாட்டும் கேட்கவில்லை, ஆடலானாள்
உண்ணின்ற உயிரிருத்தும் உணர்வில்லாமல்
ஒழிந்ததுண்டோ எனமீண்டும் ஆடு கின்றாள்;

பண்ணடிக்கும் முழவடிக்கும் தக்க தாகப்
பச்சைமயில் ஆடிக்கொண் டேஇ ருக்க
விண்ணடிக்கும் மழைக்கசையாக் குன்றம் போல
விழிதிருப்பாக் கற்றச்சன் பணியே ஆனான்
கண்ணடித்தாள் பச்சைமயில் முகம்அ டித்துக்
கண்ணடித்துத்துக் கொண்டிருந்தான் கல்றச்சன்தான்
மண்ணடித்துப் போயிற்றோ காதல் என்றாள்;
மனமடித்துப் போயிற்றுக் கலைதான் என்றான்,
------------------

இயல் 85


அலைமனது காதலின்பம் தனைத்தள் ளாதே!
அவ்வின்பம் மறப்பதுண்டோ என்றாள் மஞ்ஞை!
கலைஇன்பம் ஒன்றுதான் கலைஞர்க் கின்பம்
கவிஇன்பம் கவிஞனுக்கே ஆனாற் போலே?
தலைவனுமே தலைவியுமே பிரியும் போது
காதலின்பம் அவர்தவிர்ந்தும் வாழ்தல் கூடும்
கலையுமொரு கலைஞனுமோ பிரிதல் இல்லை.
கலைஞன்வாழ் நாளெல்லாம் இன்ப நாளே!

கலைஞனுக்கு மனைவிதோள் ஓய்வு மெத்தை!
கைக்காத இன்பமிந்தக் கருங்கல் என்று
தலைகுனிந்தான் சிற்றுளியை எடுத்தான் கல்லின்
தையலும்தன் கண்ணுமாய்ப் பணிதொ டர்ந்தான்
வலைவீசும் விழியாளே என்கேள் விக்கு
மறுமொழியும் இதுதானா என்றான். மன்னி
மலைபேச வைக்கின்றான் கல்தச்சசன்தான்
வந்துநிலை யறிந்ததெனக் கின்பம் என்றாள்.

கற்றச்சுக் கலைஞனே வாழ்க உன்றன்
கைத்திறத்தை விரைவினிலே முடித்து வைக்க
மற்றந்தப் பெருங்கோயில் பணியும் தீர்க்க
மன்னிஇவள் முடிந்துவரும் கலைகா ணற்கே
உற்றதோர் ஆசையினை என்ன சொல்வேன்
உயிர்வாழ்ந்தாள் எனில்இந்தக் கண்ண கிக்குக்
கற்காணும் விழாமுடிக்க வாழ்ந்தாள் என்று
காவலன்சென் னான்அரசியோடு சென்றான
---------------

இயல் 86

நாட்டுக்கு முரசறைந்தார் உலகுக் கெல்லாம்
நல்லோலை செல்லவிட்டார் மகளிர் கற்பின்
காட்டுக்குக் கண்ணகியின் கல்நாட்டென்றார்;
கண்டவரும் கேட்டவரும் நமது வஞ்சி
நாட்டுக்கு வரஇன்றே கிளம்பி னார்-உள்
நாட்டாரும் ஆயத்தம் ஆகின் றார்கள்
வீட்டுக்குவீ டிந்த மகிழ்ச்சிப் பேச்சாம்
விளையாட்டுப் பாட்டும்கண்ணகியின் பாட்டே.!

அயல்நாட்டு மன்னவரும் பிறகு வந்தால்
அமைவதற்கும் ஆடுதற்கும் பாடு தற்கும்
துயில்வதற்கும் குளிப்பதற்கும் வெயில்ப டாமல்
சுற்றுதற்கும் மற்றெதற்கும் தகுதி யான
இயலமைந்த கருவிகளும் பொருளும் செய்தார்
இல்லையெனச் சொல்லாமல் எல்லாம் வைத்தார்
வயலெல்லாம் வழிநாளில் புத்து ருக்கே
வரப்பெல்லாம் புத்துருக்கின் மிடாவி ளிம்பே.

செங்கதிரும் வேறுவழி செல்ல வேண்டும்
செல்லாக்கால் சோற்றுமலை இடிக்கும் மற்றும்
இங்குள்ள பெருங்குளத்து நீர்இ றைத்தே
எம்மருங்கும் கரையெடுத்துத் தயிரைத் தேக்கித்
தங்கமலை மாடெல்லாம் தரும்பால் தேக்கத்
தடங்கடலை இடங்கேட்க வேண்டு மன்றோ
செங்குட்டு வன்பாலிவ் வாறு சொன்னார்
செயல்துறையின் மேலோர்கள் இன்னும் சொல்வார்.
--------------------

இயல் 87

காய்கறிகள் தோட்டங்கள் நூறு போதும்
கமழ்ஏலம் முதலியன ஐந்து வீடு
வாய்படுமுன் குடல்இனிக்கும் கரும்பின் கட்டி
வண்டிஐ யாயிரமே முன்ஏற் பாடு.
வேய்பிளந்த பெருமத்து விளைத்த வெண்ணெய்
வெற்பளவு! நல்லெண்ணெய்க் குடம்இ லக்கம்!
நோய்தீர்ந்த இளந்தேங்காய் உரிப்பார் ஓர்பால்
நூறுவண்டி காத்திருக்கும் மட்டை ஏற்ற.

பருப்பெல்லாம் இருப்பாக்கி மாஇ டித்துப்
பையாக்கி நெல்லெலாம் அரிசி ஆக்கி,
விருப்பாக்க விருந்தினரைக் கடுகும் ஈர்த்து
வீணாக்கி டாதுவெயிற் காய்ச்ச லாக்கி
நெருப்பாக்கி டாதுளுத்தம் பயற்றை எல்லாம்
நெடியாக்கும் பொன்வருவல் ஆக்கித், தாளிப்
புரித்தான எல்லாமும் தூய்மை யாக்கி
உயர்ந்தபாக் கியமாக்கி வைத்தார் என்றார்.

குளிப்பார்க்கு நறும்பொடிகள. தூங்கு தற்கும்
குடிப்பதற்கும் சுவைநீரே நீட்டு தற்கும்
விளிப்பார்க்கே இதோவந்தேன் என்பதற்கும்
வெந்நீரே கேட்பார்க்குத் தருவ தற்கும்
வெளுத்தாடை தரக்கேட்டால் வெளுப்ப தற்கும்
வியர்வென்றால் அயராமல் விசிறு தற்கும்
ஒளிப்பின்றி ஒருவருக்கோர் ஆள்வி ழுக்காடு
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-----------------

இயல் 88


மேல்நோக்கும் கீழ்த்திசையாம் கோவில் ஒன்றின்
வெளிக்கதவு திறந்திடவும் பரிதி தோன்றும்!
ஆனஇமைக் கதவுதிறந் திடவும் கண்கள்
அனைவோர்க்கும் வெளித்தோன்றும்! சோர்வே என்ற
ஊனநெடுங்க கதவுதிறந் திடவும் யார்க்கும்
உணர்வுதோன் றும்!தோன்ற உலகோர் வாழ்த்த
வானுயர்ந்த கண்ணகியின் பெரிய கோயில்
மணிக்கதவு திறந்திடவும் கற்புத் தோன்றும்.

திறல்வேந்தன் குட்டுவன்அப் பெரிய கோயில்
திருக்கதவு திறக்கவைத்துக் கேளீர் கேளீர்
பிறர்நெஞ்சு புகாள்;புகார் பெற்ற செல்வம்
பிழைஒன்றும் அறியானைத் தான்வாழ் வுக்கே
உறவானைப் பழிகூறிக் கொன்றோன் நாட்டோடு
ஒருபுரட்சித் தீயிவிட்டாள்: ஊன்உ டம்பை
அறநீக்கிக் கற்பினாற் புகழடைந்தாள்
அவள்இவளே உலகீரே காண்மின் என்றான

வாழியவே கண்ணகியின் சீர்த்தி என்று
வாழ்த்தினார் நாட்டாரும் வந்தோர் யாரும்
ஆழிசூழ் உலகத்து மகளிர்க் கெல்லாம்
அகமுடையான் பேர்காத்தல் அறமாம் என்னும்
வாழுநெறி காட்டினாள் கற்பின் அன்னை,!
வாழியவே எனவாழ்த்தி நின்றாள் வேண்மாள்;
வாழியவே தமிழ்என்றார்! மகிழ்ந்தாராகி
மலர்மாரி இசைமாரி பெய்திருந்தார்.
--------------------

இயல் 89

மாதரியும் ஐயையும் தேவந்தி தானும்
மற்றவரும் கண்ணகியைத் தேடித் தேடி
ஈதறிவோம் என்றவரின் வாய்ச்சொல் கேட்டே
இங்குவந்தோம் மன்னவரே மன்னி யாரே!
ஏதுற்றோம் யாம்பொறோம் என்றே ஓடி
எதிர்நின்ற கண்ணகியின் அடியில் வீழ்ந்து
தீதுற்றாய் என்றலைந்தோம் எனினும் அன்னாய்
திருவுற்றாய் புகழான உருவம் உற்றாய்!

என்றழுதார் திருமுகம்பார்த் தேங்கி ஏங்கி!
எழில்மன்னன் அன்னவர்பால் பலவும் கேட்டே
நன்றான கோவலனின் கூத்தி யான
நங்கைநிலை ஏதென்றான். அவர்கள் "வேந்தே
முன்தானை கோவலர்க்கு விரித்த தன்றி
முகமொன்றும் அறியாத மாத விக்கே
ஒன்றான மகள்மணிமே கலையும் நெஞ்சம்
ஒன்றானாள் துறவில்தன் இளமை பெய்தாள்.

எனக்கேட்ட மன்னவனும் வியப்புற் றானாய்
எதிரிலுறு கண்ணகியை நோக்கி நின்றான்;
புனைதாரன் இலங்கைக்கோன் கயவா கென்பான்
பூண்முடிஆ ரியவேந்தர் குடகக் கொங்கர்
மனமுயர்மா னலவேந்தன் வணங்கி வாழ்த்தி
வஞ்சியர்க்கு வாழ்வளிக்க வந்த அன்னாய்
இனிதாக எம்நகர்க்கும் எழுந்தருள்க
எனச்சொல்லித் திருமுகத்தில் விழிவைத்தார்கள்.
-------------------

இயல் 90

நின்றிருந்த கோலத்தைப் பல்லோர் தாமும்
நெடுநேரம் பார்த்தபடி இருந்தார்; நெஞ்சம்
ஒன்றொன்றும் கேட்டதனைப் பெற்று மீளும்
உதவமறுத் தாள்என்ப தொன்று மில்லை.
இன்றொன்றை நாமளித்தால் நாளைக் கொன்றை
எமக்களிப்பாள் எனும்மடமை எழவே இல்லை.
குன்றுதரும் அருவிபோல் அழகு வெள்ளம்
கொழிப்பனவாம் உறுப்புக்கள் யாவும் ஆங்கே.

பேசிக்கொண்டேயிருக்கும் இரண்டிதழ்கள்!
பீரிட்டுக் கொண்டிருக்கும் அருளைக் கண்கள்!
வீசிக்கொண் டேயிருக்கும் ஒளியை நெற்றி!
விளைத்துக்கெண் டேயிருக்கும் நகைம கிழ்வைக்!
கூசிக்கொண் டேயிருக்கும் மகளிர்கொல்லாம்
கொடுத்துக் கொண்டேயிருக்கும் புருவம் வீரம்!
ஏசிக்கொண்டேயிருக்கும் ஆரியர்க்கே
இயம்புவது தமிழறத்தை முழுமைத் தோற்றம்.

வில்லவன்கோ தைதன்பால் ஆட்சி நல்கி
வேண்மாளோ டிங்கிருந்து மக்கள் தொண்டைப்
புல்லுகஎன் றருளினாள் அன்னை என்று
புதுக்கோயில் மனைவியுடன் வாழ்ந்தான் மன்னன்
செல்லுமுன் மன்னனிடம் இளைய ஐயை
முதலானோர் செப்பினார் எங்கள் அன்னை
நல்லகத்தில் துணையிருப்பேன் என்றாள் என்று
நடந்தார்கள் ஊர்நோக்கி மகிழ்ச்சி யோடே!
------------

இயல் 91


வஞ்சியிலே ஒருபடிவம் உலக மக்கள்
மனத்திலெலாம் ஒழுக்கவர லாறு வைத்த
எம்சிறந்த தமிழ்வேந்தே வாழ்க நீவிர்!
எம்நாடும் கற்பரசி அடியில் வாழத்
தம்சிறந்த துணைவேண்டும் இதனைச் செய்த
தலைசிறந்த கலைவல்லோர் கற்றச் சர்தாம்
வஞ்சியினை அங்கங்கு வைப்பார்! நீவிர்
வாழ்ந்தீர்போல் யாமெல்லாம் வாழ்வோம் என்றே

சீரிலங்கைக் கயவாகு செப்பி நின்றான்;
சீரியதே அஃதென்றார் உடனிருந்தோர்.
பாரிலங்கு குட்டுவனும் நன்றே மற்றிப்
படிவத்தால் நீவிர்உற்ற தென்ன என்றான்;
ஆரிலங்கைக் கேதுபுகல் என்றேன் அன்னை
அஞ்சலென்ற தன்வலக்கை தூக்கி நின்றாள்;
நேரிலங்கு நின்றிருந்தோள் நெஞ்சில் வந்தாள்
நீடூழி வாழ்கஎன வாய்மலர்ந்தாள்;

என்றுபல கயவாகு சொல்ல மற்றும்
இருந்திட்ட ஆரியனும் கல்தச் சார்தாம்
அன்னையினாள் நெஞ்சத்தைத் தன்நெஞ் சாக்கி
அதன்பின்னர் அவளழகைக் கல்லில் தேக்கித்
தின்னுமுன்னே சுவையூட்டும் தேன்கு ழல்போல்
திரும்புமுன்னே அறிவூட்டி அழகைக் காட்டும்
இந்நிலத்துக் கொருபடிவம் ஆக்கிப் பண்டே
இருந்ததமிழ்க் கலைக்குமுடி கவித்தார் என்றான்.
-------------

இயல் 92

வந்தாரின் மனமலரிற் போனா ளேனும்
வஞ்சியினை வஞ்சியா ளாயி ருந்தாள்;
இந்தாரும் எனவீடெ லாம்அ ழைக்க
ஏன்காணும் என்றுள்நாட்டாரும் சென்றார்.
முந்தாநாள் காணடித்த சின்ன பிள்ளை
முக்கூட்டுத் தெருவிலொரு வீட்டினின்று
செந்தாழை தான்பெற்று வீடு சேர்ந்தாள்
செவிடனைப்போய் வழிகேட்டுச் சிரித்தான் ஓர்ஆள்

தங்கஇடம் தந்தானின் தங்கை கொண்டான்
தங்கைகள் கூப்பிவிடை கேட்கும் போதில்
இங்கையா மணம்நடக்க வேண்டும் என்ன
இருக்கின்றோம் எனஉரைத்துப் போகும் போதில்
எங்கையா போகின்றீர் என்று கேட்க
ஏங்கையா எங்கள்மணம் ஆங்கென்றார்கள்
தங்கையா ஒப்பினாள், என்றான் தங்கை
தங்கையா எனச்சென்றாள் தங்காளாகி.

கருவூரின் ஒருமுதியோள் விருந்திற் பெற்ற
கனிவாழைத் தார்பலாச் சுளைகள் மற்றும்
ஒருநூறு கொய்யாமா முப்பத் தைந்தும்
ஒன்றாகக் கட்டி, அதைப் பேரர்க் கென்றே
இருகையால் தூக்குவாள் முடிய வில்லை;
இருக்கவிட்டுப் போகமனம் வரவு மில்லை;
பெருங்குரங்கு பத்துவந்து விழுங்கித் தீர்த்தும்
பின்னும்உண்டோ எனக்கேட்கும் கிழக்குரங்கை
-------------------

இயல் 93

கண்ணில்விழா நேரமில்லை உருவம்! வாழ்த்துக்
காதில்விழா நேரமில்லை நாள்க டந்தும்
எண்ணில்விழாக் காணவந்தோர் தம்ஊர் நோக்கி
ஏகுவார் பன்னாளும் வாய்தி றந்து
கண்ணகியின் புகழ்வாழ்க என்று சொல்லக்
காதாரக் கேட்டுக்கேட் டங்கி ருந்த
வண்கிளையிற் பறவைகளும் அதையே சொல்லும்.
வான்பருந்தும் செந்தமிழாம் தேனைச் சிந்தும்.

பானைமுதற் செய்கின்ற குலாலர் தாமும்
பண்ணியங்கள் செய்கின்ற இல்லோர் தாமும்
யானைமுதற் செய்கின்ற வினைவல்லாரும்
இரும்புமுதல் வார்ப்படத்துக் கன்னார் தாமும்
தேனைமுதல் சிறிதெடுத்தே இதழ்கள் செய்தும்
சிரிப்புமுதற் செய்துபின் மூக்கும் காதும்
மானைநிகர் திருவிழியும் செய்து கற்பு
மணிசெய்து பின்தொட்ட பணிசெய்வார்கள்.

உழவுதொழில் வாணிகமே தச்சுக் கல்வி
உயர்வரைவே எனும்ஆறின் வகையின் வாழும்
பழங்குடியாம் தமிழரெல்லாம் இல்லந் தோறும்
பகல்தோறும் இரவுதொறும் காணு கின்ற
ஒழுகலா றுகள்தம்மிற் சிறப்பி லெல்லாம்
ஒண்டொடியாள் கண்ணகியே வந்து நிற்பாள்!
மழைதென்றல் பெண்குழந்தை தமிழ்நலத்தை
வாயூறி அடடாகண்ணகிதான் என்பார்.
----------------------

இயல் 94

செந்தமிழ்நான் மறைமறைக்க, வையம் கேட்டால்
சிரிப்பதோர் ஆரியநான் மறையைச் செய்தோம்,
தந்ததிரு வள்ளுவன்நூல் மறைக்க நான்கு
சாதிசொல்லும் மனுநூலைச் செய்தோம். மற்றும்
எந்நூலும் தமிழ்நூலே எனல்ம றைக்க
இழிநூலாற் கலப்படத்தைச் செய்தோம்; இந்தக்
கல்நூலைக் கண்ணகியை மறைக்க இந்நாள்
காணும்நூல் எதுஎன்றார் ஆரியர்கள்.

"தமிழ்ஒழுக்க வேர்இருக்கும் வரைதமிழ்ச்சீர்
தடங்கிளையும் அடிமரமும் இருக்கும். இந்நாள்
தமிழ்ஒழுக்க வேரழிந்தால் தமிழர் வாழ்வு
தலைகவிழும எனும்முயற்சி கைகூடுங்கால்
அமைவுடைய நெடுஞ்செழியன் நான்கு சாதி
அறம்என்றான்; நாட்டோடும் அழியச் செய்தாள்;
தமிழரசி கண்ணகியைத் தொலைப்பதெந்நாள்
தமிற்கூடி ஆரியர்இவ்வாறு ரைத்தார்.

செம்பிலும், கல்லிலும் மஞ்சள் சாணி,
சேற்றிலும் எவனமைக்கும் உருவி னுக்கும்
நம்பெரியோர் ஆரியர்கள் மறையைக் கொண்டே
நல்லுயிர்ஏற்றுதல்வேண்டும் என்ற சட்டம்
பொய்ம்மைஎன் றாக்கியே கண்ண கிக்கும்
பொலிவுறவே உயிரமைத்தான் தமிழத் தச்சன்
நம்பொய்மை கற்கோட்டை தூளாயிற்று
நாளைநிலை என்என்றார் ஆரியர்கள்
-------------

இயல் 95

வாயழிகண் ணகிகற்பு! வைய மெல்லாம்!
வாழியசெந் தமிழ்மாண்பு! தமிழ கந்தான்
வாழிய!வா ழியதமிழர்! யாண்டும் நன்று
வாழுகின்ற தமிழரெலாம் தமிழர் ஆட்சி
ஆழ்கடல்சூழ் தமிழ்நிலத்தில் நிலவச் செய்தல்
அறம்என்று திறங்காட்டும் தோள்கள் வெல்க
வாழியவே புலி, கயல் வில் ஒருங்கியன்ற
மணிக்கொடிதான்! வாழ்கஅறம் வாழ்க நன்றே!

கண்ணகி புரட்சிக் காப்பியம் முற்றிற்று
-------------

This file was last updated on 06 August 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)