பிள்ளைப்பெருமாளையங்கார் பாடிய
ஸ்ரீசீரங்க நாயகரூசல்
Srirangka nAyakar Ucal by
piLLaip perumAl aiyangkAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for assistance in the preparation of the soft copy of this work for Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பிள்ளைப்பெருமாளையங்கார் பாடிய
ஸ்ரீசீரங்க நாயகரூசல்
Source:
திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்
அருளிச் செய்த அஷ்ட பிரபந்தம்
திருவல்லிக்கேணி வை.மு. சடகோபராமானுஜசாரியரும்,
சே. கிருஷ்ணமாச்சாரியாரும்,
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியரும்
இயற்றிய விரிவான உரையுடன்
சென்னை கணேச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன.
நள வருடம், விலை அணா
------------
ஸ்ரீசீரங்க நாயகரூசல்.
(பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது )
சீரங்கநாயகரைப்பற்றிப் பாடிய ஊசல் என விரியும். ஊசலாவது - ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல், 'ஆடிரூசல்,' 'ஆடா மோவூசல்,' ஆடுகவூசல்' என ஒன்றால் முடிவுறக் கூறுவது; இது, தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்று.
தனியன்.
அண்டப்பந் தரிற்பற்றுக் கால்களாக
வறிவுவிட் டங்கரணஞ் சங்கிலிகளாகக்
கொண்டபிறப் பேபலகைவினை யசைப்போர்
கொடுநரக சுவர்க்கப்பூ வெளிகடம்மிற்
றண்டலிலேற் றம்மிறக்கந் தங்கலாகத்
தடுமாறி யிடருழக்கு மூசன்மாறத்
தொண்டர்க்கா மணவாளர் பேரர்கூடித்
தொகுத்திட்டார் திருவரங்கத் தூசறானே.
(இ - ள்.) அண்டம் பந்தரில் - உலகமாகிய பந்தலிலே, பற்று - பாசமே, கால்கள் ஆக – (விட்டத்தைத் தாங்குவதற்கு உரிய) தூண்களாகவும், - அறிவு - அறிவே, விட்டம் (ஆக) - (சங்கிலியை மாட்டுதற்கு உரிய) உத்தரமாகவும், கரணம் - இந்திரியங்களே, சங்கிலிகள் ஆக - சங்கிலிகளாகவும், - கொண்ட பிறப்பே - எடுத்த பிறவியே, பலகை (ஆக) - ஊஞ்சற்பலகையாகவும், வினை - இருவினைகளே, அசைப்போர் (ஆக) - (அவ்வூஞ்சலை ) ஆட்டுபவராகவும்,- கொடு நரகம் - கொடிய நரகமும், சுவர்க்கம் - சுவர்க்கமும், பூ - பூமியும், (ஆகிய), வெளிகள் தம்மில் - வெளியிடங்களில் (செல்லுதலே), இறக்கம் - இறங்குதலும், தண்டல் இல் ஏற்றம் - தடையின்றி ஏறுதலும், தங்கல் - நிலைபெறுதலும், ஆக - ஆகவும்,- (இவ்வாறு), தடுமாறி - அலைந்து, இடர் உழக்கும் - துன்பமனுபவிக்கின்ற, ஊசல் - ஊசலாட்டம், மாற - நீங்கும்படி, - தொண்டர்க்கு ஆ - அடியார்கள் அநுசந்திக்குமாறு, - மணவாளர் - அழகிய மணவாளதாசரும், பேரர் - (அவரது) திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்காரும், கூடி - சேர்ந்து, திருவரங்கத்து ஊசல் ஸ்ரீரங்கத்தைக் குறித்ததான ஊசலென்னும் பிரபந்தத்தை, தொகுத்திட்டார் - பாடியருளினார்; (எ - று.). இது, சீரங்கநாயகரூசல், சீரங்கநாயகியாரூசல் என்ற இரண்டு பிரபந்தங்கட்குந் தனியனாகும். அதுபற்றியே, ‘திருவரங்கத்தூசல்' எனப் பொதுப்படக் கூறினர். பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது - சீரங்கநாயகரூசல் என்றும், அவரது திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்கார் பாடியது சீரங்கநாயகியாரூசல் என்றும் அறிக. உயிர் ஊசலாடுவதுபோல அலைகிற பிறவித் தடுமாற்றத்தினின்று நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு இந்த இரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன வென்க. ஊசல் நீங்க ஊசல் பாடினார் என்ற நயம் கருதத்தக்கது; இது - தொடர்பின்மையணி யெனப்படும்; வடநூலார் இதனை அஸங்க்யத்யலங்காரமென்பர்: ஒன்றைச் செய்யத்தொடங்கி அதற்கு மாறான செயலைச் செய்தல், இதன் இலக்கணம். பிறவித்தடுமாற்றத்தை ஊசலாக உருவகஞ் செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும், பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிக ளாகவும், பிறப்பைப் பலகையாகவும், வினைகளை ஆட்டுபவராகவும், நரக சுவர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும் உருவகஞ் செய்தனரென்க; முற்றுருவகவணி. நரக சுவர்க்க பூ வெளிகள் என்றதற்கு ஏற்பக் கூறாது ஏற்றமிறக்கம் தங்கல் என மாற்றிக்கூறியது - எதிர் நிரனிறைப் பொருள்கோள். தான், ஏ - ஈற்றசைகள்.
--------------
காப்பு
புதுவைநகர்ப் பட்டர்பிரான் சரண்கள் போற்றி
பொய்கைபூ தன்பேயார் பாதம் போற்றி
சதுமறைச்சொற் சடகோபன் சரணம் போற்றி
தமிழ்ப்பாணன் றொண்டரடிப் பொடிதாள் போற்றி
முதுபுகழ்சேர் மழிசையர்கோன் பதங்கள் போற்றி
முடிக்குலசே கரன்கலியன் கழல்கள் போற்றி
மதுரகவி யெதிராசன் கூரத்தாழ் வான்
வாழ்வான பட்டர்திரு வடிகள் போற்றி
(இ - ள்.) புதுவை நகர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தருளிய, பட்டர் பிரான் - பெரியாழ்வாருடைய, சரண்கள் - திருவடிகள், போற்றி - வாழ்வனவாக, பொய்கை - பொய்கையாழ்வாரும், பூதன் - பூதத்தாழ்வாரும், பேயார் - பேயாழ்வாரும், (ஆகிய முதலாழ்வார்களுடைய), பாதம் - திருவடிகள் போற்றி; சதுமறை சொல் - வடமொழி நான்கு வேதங்களின் பொருளையும் தமிழ்ச்சொல்லாற் பாடியருளிய, சடகோபன் - நம்மாழ்வாரது, சரணம் - திருவடிகள், போற்றி; தமிழ் பாணன் - செந்தமிழ்ப்பாடலில்வல்ல திருப்பாணாழ்வாரும், தொண்டர் அடிப்பொடி - தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆகிய இவர்களது, தாள் - திருவடிகள், போற்றி; முது புகழ் சேர் - பழமையாகிய கீர்த்தி பொருந்திய, மழிசையர்கோன் – திருமழிசைப் பிரானுடைய, பதங்கள் - திருவடிகள், போற்றி; முடி குலசேகரன் - கீரிடமணிந்த (அரசரான) குலசேகராழ்வாரும், கலியன் - திருமங்கையாழ்வாரும், (ஆகிய இவர்களது), கழல்கள் - திருவடிகள், போற்றி; மதுரகவி - மதுரகவியாழ்வாரும், எதிராசன் - உடையவரும், கூரத்தாழ்வான் - கூரத்தாழ்வானும், வாழ்வு ஆன பட்டர் - நல்வாழ்வு பெற்ற பட்டரும், (ஆகிய இவர்களது), திருவடிகள் போற்றி; (எ - று.)
---------------------
நூல்.
1. திருவாழத் திருவாழி சங்கம்வாழத்
திருவனந்தன் கருடன்சேனை யர்கோன்வாழ
வருண்மாறன் முதலாமாழ் வார்கள்வாழ
வளவில்குணத் தெதிராச னடியார்வாழ
விருநாலு திருவெழுத்தி னேற்றம்வாழ
வேழுலகுநான் மறையுமினி துவாழப்
பெருவாழ்வுதந் தருணம்பெரு மாளெங்கள்
பெரியபெரு மாளரங்க ராடிரூசல்.
(இ - ள்.) திரு - இலக்குமி, வாழ - வாழவும், திரு ஆழி சங்கம் - சங்க சக்கரங்கள், வாழ, திரு அனந்தன் - திருவனந்தாழ்வானும், கருடன் - பெரிய திருவடியும், சேனையர்கோன் - சேனை முதலியாரும், வாழ, அருள்மாறன் முதல் ஆம் ஆழ்வார்கள் - (எம்பெருமானது திருவருளைப் பெற்ற நம்மாழ்வார் முதலாகிய ஆழ்வார்கள் பன்னிருவரும், வாழ ; அளவு இல் குணத்து எதிராசன் - எல்லையில்லாத நற்குணங்களையுடைய எம்பெருமானாரும், அடியார் - (அவரது) அடியார்களும், வாழ, இரு நாலு திருவெழுத்தின் ஏற்றம் - திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தின் சிறப்பு, வாழ, ஏழ் உலகும் - மேலேழ் கீழேழ் என்ற பதினான்கு லோகங்களும், நால்மறையும் - நான்கு வேதங்களும், இனிது வாழ - இனிமையாக வாழவும், பெரு வாழ்வு தந்தருள் - பெரியவாழ்ச்சியைக் கொடுத்தருள்கின்ற, நம்பெருமாள் - நம்பெருமாளே! எங்கள் பெரிய பெருமாள் - எமது பெரிய பெருமாளே! அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் - ஊசலாடுவீராக; (எ - று.)
'வாழ' என்னும் எச்சங்கள் யாவும் 'பெருவாழ்வு தந்தருள்' என்பதனோடு இயையும். வாழ ஊசலாடிர் என இயைப்பினுமாம். (1)
2. உயரவிட்ட கற்பகப்பூம் பந்தர்நீழ
லொண்பவளக் கானிறுவியூ டுபோட்ட
வயிரவிட்டத் தாடகச்சங்கிலி கணாற்றி
மரகதத்தாற் பலகைதைத்த வூசன்மீதே
தயிரிலிட்ட மத்துழக்கும் வெண்ணெய்க்காடித்
தடமறுகிற் குடமாடித் தழல்வாய்நாக
மயரவிட்டன் றாடிய நீராடிரூச
லணியரங்க நம்பெருமா ளாடிரூசல்.
(இ - ள்.) உயர இட்ட - உயரமாகச் சமைத்த, கற்பகம் பூ பந்தர் நீழல் - கற்பகச்சோலை போன்ற பூப்பந்தலின் நிழலில், ஒள் பவளம் கால் நிறுவி - ஒளியுள்ள பவழத்தாலாகிய கால்களை நிறுத்தி, ஊடு போட்ட - (அவ்விரு கால்கட்கும்) நடுவில் அமைத்த, வயிரம் விட்டத்து - வஜ்ரத்தினாலாகிய விட்டத்திலே, ஆடகம் சங்கிலிகள் நாற்றி - பொற்சங்கிலிகளை மாட்டித் தொங்கவிட்டு, மரகதத்தால் பலகை தைத்த ஊசல் மீதே – மரகத ரத்தினத்தாலாகிய பலகையைக் கொண்டு செய்த ஊசலின் மீது ஏறி, அன்று - அக்காலத்தில் கிருஷ்ணாவதாரத்தில், தயிரில் இட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி - தயிரின்கண் இடப்பட்ட மத்தினாற் கடைந்தெடுத்த வெண்ணெயைப் பெற்ற மகிழ்ச்சியினால் கூத்தாடி, தட மறுகில் குடம் ஆடி - பெரிய தெருக்களிற் குடக்கூத்தாடியும், தழல் வாய் நாகம் அயர இட்டு அன்று ஆடிய - விஷாக்கினியைக்கக்குகின்ற வாயையுடைய (காளியனென்னும்) பாம்பு சோர்ந்து போம்படி (அதன் முடிமீது திருவடிகளை) வைத்துக் கூத்தாடிய, நீர், ஊசல் ஆடிர்; அணி அரங்கம் நம்பெருமாள் - அழகிய திருவரங்கத்தி லெழுந்தருளிய நம்பெருமாளே! ஊசல் ஆடிர்; (எ - று.)
வெண்ணெய்க்கு ஆடி என்பதற்கு - வெண்ணெய் பெறுதற்பொருட்டுக் கூத்தாடி என்று உரைப்பினுமாம். (2)
3. மீன்பூத்த விசும்பதுபோற் றரளங்கோத்து
விரித்தநீலப் பட்டுவிதா னந்தோன்ற
வான்பூத்த கலைமதிபோற் கவிகையோங்க
மதிக்கதிர் போற்கவரியிரு மருங்கும்வீசக்
கான்பூத்த தனிச்செல்வன்சிலை யுண்மின்னற்
கருமுகில்போற் கணமணிவா சிகையினாப்பண்
டேன்பூத்த தாமரையாண் மார்பிலாடத்
தென்னரங்க மணவாள ராடிரூசல்.
(இ-ள்.) மீன் பூத்த விசும்பு அது போல் - நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம் போல, தாளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற - முத்துக்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், - வான் பூத்த கலை மதி போல் - ஆகாயத்தில் தோன்றி விளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய பூர்ணசந்திரன் போல, கவிகை ஓங்க - வெண்கொற்றக்குடை உயர்ந்து விளங்கவும், மதி கதிர் போல் - சந்திரனுடைய கிரணங்கள் போல, கவரி இரு மருங்கும் வீச - வெண்சாமரங்கள் இரண்டு பக்கத்திலும் வீசப்பெறவும், கான் பூத்த தனி செல்வன் சிலையுள் - கற்பகக் காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தையுடையவனான இந்தி ரனது தனுசின் மத்தியில் தோன்றுகின்ற, கருமுகில் மின்னல் போல் - காளமேகத்து மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகையின் நாப்பண் - கூட்டமாகிய நவரத்தினங்களினாலியன்ற மாலையினிடையிலே, தேன் பூத்த தாமரையாள் - தேன்நிறைந்த செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரிய பிராட்டியார், மார்பில் ஆட -(தேவரீரது) மார்பில் அசையா நிற்கவும், தென் அரங்க மணவாளர் - தெற்கின்கணுள்ள திருவரங்கம் பெரிய கோயிலிலெழுந்தருளிய அழகிய மணவாளரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
கான்பூத்ததனிச்செல்வன் சிலை - இந்திரதநுசு. பல நிறங்களையுடைய இந்திரதனுசு - பலவகையிரத்தினங்களினாலியன்ற வாசிகைக்கும், கருமுகிலில் தோன்றும் மின்னல் - அத்திருமாலினது மார்பில் தோன்றுகின்ற பெரிய பிராட்டியார்க்கும் உவமை. (3)
--------------
4. பூசுரரும் புரவலரும் வானநாட்டுப்
புத்தேளிர் குழுவுமவர் பூவைமாரும்
வாசவனு மலரயனு மழுவலானும்
வணங்குவா னவசரம்பார்த்தி ணங்குகின்றார்
தூசுடைய கொடித்தடந்தேர் மானந்தோன்றச்
சுடரிரண்டும் பகல்விளக்காத் தோன்றத்தோன்றுந்
தேசுடைய திருவரங்க ராடிரூசல்
சீரங்க நாயகியோ டாடிரூசல்.
(இ - ள்.) பூசுரரும் - பூமியில் தேவர்போல விளங்குகின்ற பிராமணரும், புரவலரும் - காத்தல் தொழிலில் வல்ல அரசர்களும், வானம் நாட்டு புத்தேளிர் குழுவும் - வானுலகத்தவரான தேவர்களின் கூட்டமும், அவர் பூவை மாரும் - அத்தேவர்களது மனைவியரும், வாசவனும் - (அத்தேவசாதியார்க்குத் தலைவனான) தேவேந்திரனும், மலர் அயனும் - (திருமாலின் நாபித்)தாமரைமலரில் தோன்றிய பிரமதேவனும், மழுவலானும் - மழுவென்னும் ஆயுதத்தை யேந்திய சிவபிரானும், (ஆகிய இவர்கள் யாவரும்), வணங்குவான் - (தேவரீரைத்) தொழுதற்காக, அவசரம் பார்த்து - சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டு, இணங்குகின்றார் - கூடுகின்றார்கள்; (அவர்கள் சேவிக்கும்படி), தூசு உடைய கொடி தட தேர் - சீலையினாலியன்ற துவசங்கள் கட்டிய பெரியதேரின் மீதும், மானம் - விமானத்தின் மீதும், தோன்று - காணப்படுகின்ற, அ சுடர் இரண்டும்- (சூரியன் சந்திரன் என்ற) அந்த இருசுடர்களும், பகல் விளக்கு ஆ தோன்ற - பகற்காலத்தில் ஏற்றிய விளக்குப்போல (த் தேவரீரது ஒளிக்கு முன்னே) ஒளிமழுங்கும்படி, தோன்றும் – விளங்கிக் காணப்படுகின்ற, தேசு உடைய - பேரொளியையுடைய, திருவரங்கர் - ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர்; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர்; (எ - று.)
தேரின் மீது வருகின்ற சூரியனும், விமானத்தின் மீது வருகின்ற சந்திரனும், கோடி சூரியபிரகாசரான பெருமானது பேரொளிக்குமுன்னே பகல்விளக்குப்போலத் தோன்றுவ ரென்க. அ - உலகறிசுட்டு. மானம் - விமான மென்பதன் முதற்குறை. (4)
5. மலைமகளு மரனுமொருவடந் தொட்டாட்ட
வாசவனுஞ் சசியுமொருவடந் தொட்டாட்டக்
கலைமகளு மயனுமொருவடந் தொட்டாட்டக்
கந்தனும்வள்ளி யுங்கலந்தோர்வடந் தொட்டாட்ட
வலைமகரப் பாற்கடலு ளவதரித்த
வலர்மகளு நிலமகளு மாயர்காதற்
மலைமகளு மிருமருங்கி லாடவெங்க
டண்ணரங்க மணவாள ராடிரூசல்.
(இ - ள்.) மலைமகளும் - பார்வதியும், அரனும் - (அவளது கணவனான) சிவபிரானும், ஒரு வடம் தொட்டு ஆட்ட - ஒருசங்கிலியைப் பிடித்து ஆட்ட, சசியும் - இந்திராணியும், வாசவனும் - (அவளது கணவனான) இந்திரனும், ஒரு வடம் தொட்டு ஆட்ட, கலைமகளும் - சரசுவதியும், அயனும் - (அவளது கணவனான) பிரமனும், ஒரு வடம் தொட்டு ஆட்ட , வள்ளியும் - வள்ளியம்மையும், கந்தனும் - (அவளது கணவனான) சுப்பிரமணிய மூர்த்தியும், கலந்து - ஒன்று கூடி, ஓர் வடம் தொட்டு ஆட்ட, அலைமகரம் பாற்கடலுள் அவதரித்த அலர்மகளும் - அலைகளையும் சுறாமீன்களையுமுடைய திருப்பாற்கடலில் (கடைந்தபோது) தோன்றியவளாகிய தாமரைமலரில் வாழ்கின்ற திருமகளும், நிலமகளும் - பூமிப்பிராட்டியும், ஆயர் காதல் தலைமகளும் - இடையராற் பெற்றுவளர்க்கப்பட்ட அன்பிற்கு உரிய தேவியாகிய நீளாதேவியும், இரு மருங்கில் ஆட - (தேவரீரது) இருபக்கத்திலும் உடனிருந்து ஆடும்படி, எங்கள் தண் அரங்கம் மணவாளர் - எமது குளிர்ந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள அழகிய மணவாளரே! ஊசல் ஆடிர்; (5)
6. திருவழுதிவள நாடன்பொரு நைச்சேர்ப்பன்
சீபராங்குசமுனி வன்வகுளச் செல்வன்
றருவளருங் குருகையர்கோன் காரிமாறன்
சடகோபன் றமிழ்வேதந் ததியர்பாடக்
கருணைபொழி முகமதியங்குறு வேர்வாடக்
கரியகுழல் கத்தூரி நாமத்தாட
வருகிருக்குந் தேவியர்களது கொண்டாட
வணியரங்கத் தெம்பெருமா னாடிரூசல்.
(இ - ள்.) திரு வழுதி வளம் நாடன் - வளப்பமுள்ள பாண்டிய நாட்டில் திருவவதரித்தவரும், பொருதை சேர்ப்பன் – தாமிரபரணி நதியின் கரையில் வாழ்பவரும், சீபராங்குசமுனிவன் - (அந்யமதஸ்தராகிய யானைகட்கு அங்குசம் போன்றிருத்தலால் ஸ்ரீபராங்குசனென்று திருநாமம் பெற்ற யோகியும், வகுளம் செல்வன் – மகிழமலர் மாலையையணிந்த சிறப்புடையோரும், தரு வளரும் குருகையர் கோன் - மரச்சோலைகள் ஓங்கி வளர்தற்கு இடமான திருக்குருகூரிலுள்ளார்க்குத் தலைவரும், காரி மாறன் - காரி யென்பவர்க்குத் திருக்குமாரராய் மாறனென்று ஒரு திருநாமம் பெற்றவரும், சடகோபன் -சடகோபனென்னுந் திருநாமமுடையவருமான நம்மாழ்வார் அருளிச்செய்த, தமிழ் வேதம் - வடமொழி வேதத்தின் சாரமாகித் தமிழ் மொழியினாலியன்ற திருவாய்மொழி முதலிய திவ்யபிரபந்தங்களை, ததியர் [ததீயர்) பாட - பாகவதர்கள் பாடாநிற்கவும், - கருணை பொழி முகம் மதியம் - திருவருளைச் சொரிகின்ற பூர்ணசந்திரன் போன்ற திருமுகத்திலே, குறு வேர்வு ஆட - சிறிய வேர்வைநீர் தோன்றி அசையவும், கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட - கருங்குழற்கற்றையும் கத்தூரித்திருநாமமும் ஒருசேர அசையவும், அருகு இருக்கும் தேவியர்கள் அது கொண்டாட - இருமருங்கிலுமுள்ள தேவிமார்கள் அந்த வைபவத்தைக் கண்டு கொண்டாடவும், - அணி அரங்கத்து எம்பெருமான் - அழகிய திருவரங்கநாதனே! ஊசல் ஆடிர்;
நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் - திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என நான்காம். (6)
7. வையமொரு பொற்றகட்டுத் தகளியாக
வார்கடலே நெய்யாக வதனுட்டேக்க
வெய்யகதிர் விளக்காகச் செஞ்சொன்மாலை
மெல்லடிக்கே சூட்டினான் மேன்மைபாடத்
துய்யமதி மண்டலத்தின் மறுவேயொப்பச்
சோதிவிடு கத்தூரி துலங்குநாமச்
செய்யதிரு முகத்தரங்க ராடிரூசல்
சீரங்க நாயகியோ டாடிரூசல்.
(இ - ள்.) வையம் - நிலவுலகத்தையே, ஒரு பொன் தகடு தகளி ஆக - ஒப்பற்ற பொன் தகட்டினாற் செய்த அகலாகக்கொண்டு, வார் கடலே - நீண்ட சமுத்திரத்தையே, நெய் ஆக, அதனுள் தேக்கி - அவ்வகலில் நிறைத்து, வெய்ய கதிர் - உஷ்ணகிரணனான சூரியனையே, விளக்கு ஆக – விளக்காகக் கொண்டு (இவ்வாறான பொருளைத் தெரிவிக்கின்ற பாடலைத் தொடங்கி), செஞ்சொல்மாலை - செவ்விய தமிழ்ச்சொற்களினாலாகிய பாமாலையை மெல் அடிக்கே சூட்டினான் - மேன்மையான (தேவரீரது) திருவடிகளில் அணிந்தவராகிய பொய்கையாழ்வார் அருளிச்செய்த, மேன்மை - (தேவரீரது) மேன்மையைத் தெரிவிக்கின்ற திவ்யப்ரபந்தத்தை, பாட - (ததியர்) எடுத்துப்பாடாநிற்க, துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்ப - பரிசுத்தமாகிய சந்திர மண்டலத்திலுள்ள களங்கத்தைப் போல, சோதி விடுகத்தூரி நாமம் துலங்கு - ஒளிவிடுகின்ற கஸ்தூரிதிலகம் விளங்கப்பெற்ற, செய்ய திருமுகத்து - அழகிய திருமுகத்தையுடைய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் சல் ஆடிர்; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர்; (எ - று.)
முதலாழ்வார் மூவரும் திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் மழைக்காலத்து ஒருநாளிரவில் தங்கியிருக்கையில், எம்பெருமான் இருட்டில் அவர்களோடு தானும் ஒருவனாய் நின்று நெருக்க, அப்பொழுது பொய்கையாழ்வார் "வையந் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்யகதிரோன் விளக்காகச் செய்ய, சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை, யிடராழி நீங்குகவே யென்று' என்று முதல் திருவந்தாதிப் பிரபந்தத்தைத் தொடங்கி வெய்ய கதிரினால் விளக்கேற்றின ரென்க.
கீழ்ச்செய்யுளில், ‘சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாட' என்று கூறியதற்கு ஏற்ப, இச்செய்யுளிலும் 'ததீயர்' என்று வருவித்துப் பொருளுரைக்கப் பட்டது; மேலும் இங்ஙனமே கூறப்படும். இப்பொருளில், மேன்மை - மேன்மையான பிரபந்தத்திற்கு, இலக்கணை; இனி, பொய்கையாழ்வார் தேவரீரது மேன்மைகளைப் பாட என்றும், பொய்கையாழ்வாரது மேன்மையைத் ததீயர்பாட என்றும் கூறுவாருமுளர்; மேலும் இங்ஙனமே காண்க. (7)
8. அன்பென்னுநன் பொருளோர் தகளியாக
வார்வமே நெய்யாக வதனுட்டேக்கி
யின்புருகுசிந் தையிடுதிரி யாஞானத்
திலகுவிளக் கேற்றினானி சையைப்பாடப்
பொன்புரையும் புகழுறையூர் வல்லியாரும்
புதுவைநக ராண்டாளும் புடைசேர்ந்தாட
முன்பிலும்பின் பழகியநம் பெருமாடொல்லை
மூவுலகுக் கும்பெருமா ளாடிரூசல்.
(இ - ள்.) அன்பு என்னும் நல் பொருள் - அன்பு என்கிற நல்ல பொருளையே, ஓர் தகளி ஆக - ஒரு அகலாகக் கொண்டு, ஆர்வமே - பக்தியையே, நெய் ஆக, அதனுள் தேக்கி - அவ்வகலுள் நிறைத்து, இன்பு உருகு சிந்தை ஆனந்தத்தினாலே உருகுகின்ற மனத்தையே, இரு திரி ஆ - அதிலிட்ட திரியாகக்கொண்டு, ஞானத்து இலகு விளக்கு ஏற்றினான் – தத்துவ ஞானத்தினால் விளங்குகின்ற விளக்கை ஏற்றினவராகிய பூதத்தாழ்வாருடைய, இசையை - புகழ்பெற்ற திவ்யப்ரபந்தத்தை, பாட – (ததீயர்) பாடா நிற்கவும், பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும் - பெரியபிராட்டியாரைப் போன்ற கீர்த்தியையுடைய திருவுறையூர் நாச்சியாரும், புதுவைநகர் ஆண்டாளும் - ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த ஆண்டாளும், புடை சேர்ந்து ஆட - தேவரீரது இருபக்கத்திலும் சேர்ந்து ஆடவும், முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் - முற்பக்கத்திலும் பிற்பக்கம் அழகியவரான நம் பெருமாளே! தொல்லை மூவுலகுக்கும் பெருமாள் - பழமையான மூன்று லோகங்களுக்கும் நாயகரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
"அன்பே தகளியா வார்வமே நெய்யாக,
இன்புருகுசிந்தையிடுதிரியா - நன்புருகி,
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு,
ஞானத்தமிழ் புரிந்த நான்' என்பது, பூதத்தாழ்வார் அப்போது அருளிச்செய்த இரண்டாந் திருவந்ததியின் முதற்பாசுரம். (8)
9. திருக்கண்டேன் பொன்மேனிகண் டேனென்ற
திகழருக் கனணிநிற முந்திகிரிசங்கு
மிருட்கொண்ட கருங்கங்கு லிடையேகோவ
லிடைகழியிற் கண்டபிரா னேற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின்மேலான்
வானவர்கோன் முதலானோர் மகுடகோடி
நெருக்குண்ட தாளரங்க ராடிரூசல்
நீளைக்கு மணவாள ராடிரூசல்.
(இ - ள்.) இருள் கொண்ட கருங் கங்குலிடையே - அந்தகாரம் மிகுந்த கரிய நடுராத்திரியில், கோவல் இடைகழியில் - திருக்கோவலூரிலுள்ள ஓர் இடைகழியிலே, "திரு கண்டேன் - இலக்குமியைக் கண்டேன், பொன் மேனி கண்டேன் - அழகிய திருமேனியைக் கண்டேன், திகழ் அருக்கன் அணி நிறமும் - விளங்குகின்ற சூரியன் போன்ற அழகிய திருநிறத்தையும், திகிரி சங்கும் - (திவ்வியாயுதங்களாகிய) சக்கரத்தையும் சங்கத்தையும், (கண்டேன்) என்ற - என்று பாடினவரும், கண்ட - (திரு முதலானவர்களை நேரில்) தரிசித்தவருமாகிய, பிரான் - தலைவரான பேயாழ்வாருடைய, ஏற்றம் - சிறப்புள்ள பிரபந்தத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - மரு கொண்ட கொன்றையான் - வாசனையையுடைய கொன்றை மலர்மாலையைத் தரித்த சிவபிரானும், மலரின் மேலான் - தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனும், வானவர் கோன் - தேவராசனாகிய இந்திரனும், முதலானோர் - முதலிய அடியவர்களது, மகுடம் கோடி - கிரீடங்களின் வரிசைகள், நெருக்குண்ட - (அந்தத் தேவர்கள் கீழ்வீழ்ந்து தேவரீரைச் சேவிக்கும்போது) நெருங்கப்பெற்ற, தாள் - திருவடிகளையுடைய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர்; நீளைக்கு மணவாளர் - நீளாதேவிக்கு மணவாளரே! ஊசல் ஆடிர் ; (எ - று.)
"திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் றிகழு,
மருக்கனணிநிற முங்கண்டேன் - செருக்கிளரும்,
பொன்னாழிகண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன்,
என்னாழிவண்ணன் பாலின்று' என்பது, பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந் திருவந்தாதியின் முதற்பாசுரம். (9)
10. நான்முகனை நாரணனே படைத்தானந்த
நான்முகனு நக்கபிரானைப் படைத்தான்
யான்முகமா யந்தாதியறி வித்தேனென்
றியார்க்கும்வெளி யிட்டபிரா னியல்பைப்பாடப்
பான்முகமார் வளைநேமி படைகள்காட்டப்
பாசடைகடி ருமேனிப்படி வங்காட்டத்
தேன்முகமா முளரியவய வங்கள்காட்டச்
செழுந்தடம் போலரங்கேச ராடிரூசல்.
(இ - ள்.) 'நாரணனே - நாராயணனே, நான்முகனை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை, படைத்தான் - சிருஷ்டித்தான்; அந்த நான்முகனும் - அந்தப் பிரமனும், நக்கபிரானை படைத்தான் - சிவபிரானைச் சிருஷ்டித்தான், (என்கிற இந்த அர்த்த விசேஷத்தை), யான் - (எம்பெருமானது நல்லருளாலே தத்துவஞானம் உதிக்கப்பெற்ற) நான், முகம் ஆய் - (பிரசாரஞ்செய்வதில்) முக்கியனாய்க்கொண்டு, அந்தாதி - அந்தாதியென்னும் பிரபந்தத்தினால், அறிவித்தேன் - (அஞ்ஞான உலகத்தோர்க்குத்) தெரிவிக்கலானேன்,' என்று - என்று தொடங்கி, யார்க்கும் வெளியிட்ட - யாவர்க்கும் (தத்துவத்தை) வெளியிட்டருளிய, பிரான் - திருமழிசைப் பிரானது, இயல்பை - சிறந்த தன்மையுள்ள பிரபந்தங்களை, பாட - (ததீயர் ) பாடாநிற்க, - பால் முகம் ஆர் வளை - பால்போன்ற வெண்ணிறத்தைக் கொண்டுள்ள சங்குபூச்சிகளும், நேமி - சக்கரவாகப் பறவைகளும், படைகள் - (தேவரீரது ) திவ்வியாயுதங்களை, காட்ட - காட்டா நிற்கவும், பசு அடைகள் - பசிய தாமரையிலைகள், திருமேனி படிவம் காட்ட - (தேவரீரது ) திரு மேனிநிறத்தைக் காட்டாநிற்கவும், தேன் முகம் மாமுளரி - தேனைக் கொண்ட சிறந்த தாமரைமலர்கள், அவயவங்கள் காட்ட - (தேவரீரது திருக்கை திருவடி முதலிய) திருவவயவங்களைக் காட்டா நிற்கவும், செழுந்தடம் போல் - செழித்த தடாகத்தை யொத்திருக்கிற, அரங்கேசர் - ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
"நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்,
தான்முக மாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் - யான் முகமாய்,
அந்தாதிமேலிட் டறிவித்தே னாழ் பொருளைச்,
சிந்தாமற்கொண்மினீர் தேர்ந்து" என்பது, திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன் றிருவந்தாதியின் முதற்பாசுரம். இதுவன்றி, இவ்வாழ்வார் திருச்சந்த விருத்தம் என்னும் பிரபந்தமும் அருளிச்செய்திருக்கின்றனர். "மாயக்கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண்கை கால், தூயசெய்ய மலர்களாச் சோதிச்செவ்வாய் முகிழதாச், சாயச் சாமத்திருமேனி தண்பாசடையாத் தாமரை நீள், வாசத்தடம் போல் வரு வானே யொருநாள் காணவாராயே" என்ற பாசுரம் பின்னிரண்டடிகளில் கருதத்தக்கது. (10)
11. மருளிரிய மறமிரிய வனைத்துயிர்க்கு
மயலிரிய வினையிரி யமறையின்பாட
லிருளிரிய வென்றெடுத் துத்தொண்டர்தங்க
ளிடரிரிய வுரைத்தபிரா னிட்டம்பாட
வருளிரிய வறமிரிய வுலகையாண்ட
வாடகத்தோ னகம்பரனென் றபிமானித்த
பொருளிரியச் சொல்லிரிய மார்வங்கீண்ட
பொன்னிசூழ் திருவரங்க ராடிரூசல்.
(இ - ள்.) அனைத்து உயிர்க்கும் - எல்லாச்சீவராசிகளுக்கும், மருள் இரிய - அஞ்ஞானம் நீங்கவும், மறம் இரிய - கொடுமை நீங்கவும், மயல் இரிய - (அஞ்ஞாநத்தினால் விளைகின்ற) மதி மயக்கம் நீங்கவும், வினை இரிய - இருவினைகளும் நீங்கவும், மறையின் பாடல் - வேதத்தின் பொருளமைந்த பாடல்களை, இருள் இரிய என்று எடுத்து, - "இருளிரிய" என்று தொடங்கி, தொண்டர் தங்கள் இடர் இரிய - (அதனைப்பாடுகின்ற) அடியார்களது பிறவித்துன்பமெல்லாம் நீங்கும்படி, உரைத்த - (பிரபந்தத்தைத்) திருவாய் மலர்ந்தருளிய, பிரான் - குலசேகரப்பெருமாளுடைய, இட்டம் - விருப்பான பெருமாள் திருமொழியென்னும் பிரபந்தத்தை, பாட - (ததீயர்) பாடா நிற்க, - அருள் இரிய - கருணையில்லாமற் போக, அறம் இரிய - தருமம் விலகும்படி, உலகை ஆண்ட - மூவுலகங்களையும் (தானொருவனாகவே) தனியரசாட்சி செய்த, ஆடகத்தோன் - இரணியன், அகம்பரன் என்று அபிமானித்த பொருள் இரிய - 'நான் தான் பரதேவதை' என்று செருக்கியிருந்த தன்மை ஒழியுமாறும், சொல் இரிய - (அப்பொருளுக்கு இடமாகிய) சொற்களும் ஒழியுமாறும், மார்வம் கீண்ட - (அவ்வசுரனது) மார்பத்தை (நரசிங்க ரூபியாய்த் தோன்றிப்) பிளந்தழித்த, பொன்னி சூழ் திருவரங்கர் – காவேரி நதியினாற் சூழப்பெற்ற திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர். (எ - று.)
"இருளிரியச் சுடர்மணிக ளிமைக்குநெற்றி யினத்துத்தி யணிபணமாயி ரங்களார்ந்த, அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்று மணிவிளங்கு முயர்வெள்ளை யணையைமேவித், திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளிகொள்ளுங், கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்றுகொலோ களிக்குநாளே" என்பது, குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியின் முதற்பாசுரம். ஹாடகம் - பொன். நரசிங்க மூர்த்தியாய் இரணியாசுரனது மார்பைக் கீண்ட மாத்திரத்தில் அகம்பரனென்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன வென்க.
(11)
12. அரனென்று மயனென்றும் புத்தனென்று
மலற்றுவார் முன்றிருநா ரணனேயாதி
பரனென்று மறையுரைத்துக் கிழியறுத்த
பட்டர்பிரான் பாடியபல் லாண்டுபாடக்
கரனென்ற மாரீசன்கவந் தனென்ற
கண்டகரா ருயிர்மடியக் கண்டிலங்கா
புரம்வென்ற சிலையரங்க ராடிரூசல்
புகழுறையூர் வல்லியோ டாடிரூசல்.
(இ - ள்.) (பரதேவதை), அரன் என்றும் - சிவபெருமானே யென்றும், அயன் என்றும் - பிரமதேவனே யென்றும், புத்தன் என்றும் - புத்தனே யென்றும், அலற்றுவார் முன் - (இவ்வாறு தமக்குத்தோன்றியவாறெல்லாம் வாயினாற்) பிதற்றுகின்ற அந்யமதஸ்தர்கட்கு எதிரில், திருநாரணனே ஆதி பரன் என்று – ‘ஸ்ரீமந்நாராயணனே முதலாகிய பரதேவதை' என்று, மறை உரைத்து - (அதற்கு ஆதாரமாகிய) வேதபிரமாணங்களை எடுத்துக்கூறி, கிழி அறுத்த - (வல்லபதேவபாண்டியன் வித்யாசுல்கமாகக் கட்டிவைத்த) பொற்கிழியை அறுத்துக்கொண்ட, பட்டர்பிரான் - (அவ்வாறு அந்யமதஸ்தரான வித்துவான்களை யெல்லாம் வென்றிட்டதனால்) பட்டர்பிரானென்று பட்டப்பெயர்பெற்ற பெரியாழ்வார், பாடிய - திருவாய் மலர்ந்தருளிய, பல்லாண்டு - 'திருப்பல்லாண்டு' என்னுந் திவ்யப்ரபந்தத்தை, பாட - (ததியர்) பாடாநிற்க, - கான் என்ற (கண்டகன்) - கானென்று சொல்லப்பட்ட கொடியவனும், மாரீசன் கவந்தன் என்ற கண்டகர் - மாரீசன் கவந்த னென்ற கொடியவரும், ஆர் உயிர் மடிய கண்டு - அருமையான உயிர் மடியும்படி கொன்று, இலங்காபுரம் வென்ற இலங்காபட்டணத்தைச் சயித்த, சிலை - (கோதண்ட மென்னும்) வில்லையேந்திய, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் - புகழ் உறையூர் வல்லியோடு - புகழ்பெற்ற உறையூர் நாச்சியாரோடு, ஊசல் ஆடிர். (எ - று.)
பல்லாண்டு - முதற்குறிப்பால், ‘பல்லாண்டு' என்று தொடங்கிய பிரபந்தத்தைக் காட்டும். இவர் பாடிய பிரபந்தங்கள் - திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும். (12)
13. மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு
வைகறையில் வந்துதிருத் துயிலுணர்த்தித்
திருமாலை திருவடிக்கே சூட்டிநிற்குந்
திருமண்டங் குடிப்பெருமான் சீர்மைபாடப்
பெருமாலை யடைந்துலக மதிமயங்கப்
பேணாதார் படக்கதிரோன் காணாதேக
வொருமாலை பகலிலழைத் தொளித்தநேமி
யொளியுள்ளா ரரங்கேச ராடிரூசல்.
(இ - ள்.) மரு மாலை - (திருமகளோடு) மருவியுள்ள திருமாலை, பசுர் துளவம் தொடைகளோடு - பசுமையாகிய திருத்துழாய் மாலையுடனே, வைகறையில் - விடியற்காலத்தில், வந்து - (சந்நிதிக்கு வந்து, திருதுயில் உணர்த்தி - (திருப்பள்ளியெழுச்சி பாடித்) துயிலுணரச்செய்து, திருமாலை - திருமாலையென்னுந் திவ்விய பிரபந்தத்தை, திருவடிக்கே சூட்டி நிற்கும் - திருவடிகளிற் சமர்ப்பித்து நிற்கின்ற, திருமண்டங்குடி பெருமான் - திரு மண்டங்குடியில் திருவவதரித்த தொண்டரடிப் பொடியாழ்வாரது, சீர்மை சிறப்புள்ள பிரபந்தங்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - உலகம் - உலகத்திலுள்ளார், பெருமாலை அடைந்து - பெரிய மயக்கத்தையடைந்து, மதி மயங்க - அறிவு கலங்கவும், பேணாதார் பட - பகைவர்கள் அழியவும், கதிரோன் காணாது ஏக - சூரியன் தோன்றாது மறையவும், ஒரு மாலை - ஓரிரவை, பகலில் - பகற்பொழுதிலே, அழைத்து - வருவித்து, ஒளித்த - (சூரியனை) மறைத்த, ஒளி நேமி உள்ளார் - கோடி சூரிய பிரகாசமான திருவாழியாழ்வானை யுடையவராகிய, அரங்கேசர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர். (எ-று.)
இனி, மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு - நறுமணமுள்ள மாலைக் ளாகிய திருத்துழாய் மாலைகளோடு என்று பொருளுரைப்பாருமுளர். தொண் டரடிப் பொடியாழ்வார், ஸ்ரீரங்கநாதனுக்குத் திருத்துளவத்தொண்டு செய்து வந்ததோடு, திருப்பள்ளியெழுச்சி, திருமாலை என்னும் திவ்யப்ரபந்தங்களையும் பாடினரென்க. தொண்டரடிப் பொடியாழ்வார் திருவவதார ஸ்தலமாகிய திருமண்டங்குடியென்னுந் தலம், சோழநாட்டில் கபிஸ்தலத்திற்கு வடகிழக்கேயுள்ளது. 'நிரவதிக தேஜோரூபமான திருவாழியாலே ஆதித்யனை மறைத்தாலும் லோகத்துக்கு மிகவும் வெளிச்சிறப்பு உண்டா மித்தனையன்றோ? ஆதித்யன் அஸ்தமித்தானென்னும்படி கண்களுக்கு இருண்டு தோற்றுவான் என்' என்னில், - இந்த ஆதித்யனுடைய தேஜசு கண்ணாலே முகக்கலாம் படி அளவுப்பட்டிருக்கையாலே தமஸ்ஸு போம்படியாயிருக்கும்; அங்ஙனன்றிக்கே, திருவாழியாழ்வானுடைய தேஜசு நேர்கொடுசேர் கண்கொண்டு பார்க்கவொண்ணாதபடி மிக்கிருக்கையாலே பளபளத்துக் கண்ணையிருளப் பண்ணிற்று என்பவாதலால், 'ஒருமாலை பகலிலழைத்தொளித்த நேமியொளியுள்ளார்' என்றார். (13)
14. காரங்கத் திருவுருவஞ் செய்யபாத
கமலமுதன் முடியளவுங் கண்டுபோற்றச்
சாரங்கமுனி யையூர்ந்த மலனாதி
தனையுரைத்த பாண்பெருமா டகைமைபாட
வாரங்கொள் பாற்கடல் விட்டயனூரேறி
யயோத்திநக ரிழிந்துபொன்னி யாற்றிற்சேர்ந்த
சீரங்க மணவாள ராடிரூசல்
சீரங்க நாயகியோ டாடிரூசல்.
(இ - ள்.) கார் அங்கம் திரு உருவம் - காளமேகம் போன்ற திருவுருவத்தை, செய்ய பாத கமலம் முதல் - செந்நிறமாகிய திருவடித்தாமரை யென்ற உறுப்பு முதல், முடி அளவும் - திருமுடிவரையிலும், கண்டு போற்ற சேவித்துத் துதிக்கும்படி, சாரங்கமுனியை ஊர்ந்து -லோகசாரங்க மகாமுனிவர்மேல் ஏறிவந்து, அமலனாதிதனை உரைத்த - அமலனாதிபிரான் என்று தொடங்கும் பிரபந்தத்தைப் பாடியருளிய, பாண்பெருமாள் - திருப்பாணாழ்வாரது, தகைமை - பெருமையுள்ள (‘அமலனாதிபிரான்' என்னும்) பிரபந்தத்தை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடா நிற்க, - ஆரம் கொள் பாற்கடல் விட்டு - முத்துக்களையுடைய திருப்பாற்கடலை விட்டு நீங்கி, அயன் ஊர் ஏறி - பிரம தேவனது நாடாகிய சத்தியலோகத்திற் சென்றிருந்து, அயோத்திநகர் இழிந்து - திருவயோத்தியில் இறங்கிச் சிலகாலம் வாழ்ந்து, பின்பு), பொன்னி ஆற்றில் சேர்ந்த - உபயகாவேரியின் மத்தியிற் சேர்ந்த, சீரங்கமணவாளர் - ஸ்ரீரங்கஷேத்திரத்திலெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் - சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர். (எ - று.)
லோகசாரங்கமகாமுனிவர் திருவரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துவரும் நாளில் ஒருகால் திருமஞ்சனங்கொணருமாறு தென் திருக்காவேரிக்குச் செல்லுகையில், வீணையுங் கையுமாய் மெய்ம்மறந்து ஸ்ரீரங்கநாதனைப் பாடிக்கொண்டிருந்த திருப்பாணாழ்வார் திருவடிகளில் அபசாரப்பட்டு, அந்த அபசாரம் தீருமாறு ஸ்ரீரங்கநாதனது நியமனத்தால் அவ்வாழ்வாரைத் தமது தோளின் மேலெழுந்தருளப் பண்ணிக்கொண்டு ஸ்ரீரங்கநரதனது திருமுன்பே விட, அவ்வாழ்வார் "அமலனாதி பிரானடியார்க் கென்னையாட்படுத்த, விமலன் விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மான், திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றவே" என்று தொடங்கிப் பாதாதிகேசாந்தமாக அப்பிரானை அநுபவித்தனரென்க. பிரமதேவன் திருப்பாற்கடலினின்று ஆவாகனம்பண்ணிப் பிரதிஷ்டை செய்த விஷ்ணு மூர்த்தியைத் திருவாராதனஞ் செய்துகொண்டிருக்க, பின்பு, சூரிய வமிசத்துத் தோன்றிய இக்ஷ்வாகுமன்னன் அப்பிரமனிடத்தினின்று அப்பெருமானைப் பெற்றுத் திருவயோத்தியில் திருவாராதனஞ் செய்துவர, பிறகு குலமுறையாகத் தனக்குக் கிடைத்த அப்பெருமானை இராமபிரான் தனக்கு அந்தரங்கனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தந்தருள, அவன் அப்பிரானை எழுந்தருள்வித்துக்கொண்டு தனது இலங்கை நோக்கிச் செல்லுகையில், அப்பெருமான் இடைவழியில் உபயகாவேரி மத்தியிலே புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினான்; அவ்விடமே ஸ்ரீரங்க மெனப்படுவது. (14)
15. விழிபறித்து வெள்ளியைமா வலியைமண்ணும்
விண்ணுலகும் பறித்தகுறள் வேடத்தும்மை
வழிபறித்து மந்திரங்கொண் டன்பர்தங்கள்
வல்வினையைப் பறித்தபிரான் வண்மைபாடச்
சுழிபறித்த கங்கைமுடியடி யிற்றோயத்
தொழுதிரக்கு முக்கணனான் முகனைச் செய்த
பழிபறித்துப் பலியொழித்தா ராடிரூசல்
பள்ளிகொண்ட திருவரங்க ராடிரூசல்.
(இ - ள்.) வெள்ளியை - சுக்கிராசாரியனது, விழி - ஒற்றைக்கண்ணை, பறித்து - (தருப்பைப்புல் நுனியாற்) குத்திக்கிளறி, மாவலியை – மகாபலிச் சக்கரவர்த்தியி னிடத்தினின்றும், மண்ணும் - பூலோகத்தையும், விண் உலகும் தேவலோகத்தையும், பறித்த - தன்னுடையனவாக்கிக் கொண்ட, குறள் வேடத்து - வாமந வடிவத்தையுடைய , உம்மை, தேவரீரை, வழி பறித்து (மணவாளக் கோலத்தோடு திருமணங்கொல்லையிற் சென்றபோது) இடைவழியே மடக்கி(த்தேவரீரது) பொருள்களைக் கவர்ந்து, மந்திரம் கொண்டு - (தேவரீரிடத்தில்) திருமந்திரோபதேசம் பெற்றுக்கொண்டு, அந்தத் திருமந்திரத்தினால்), அன்பர் தங்கள் வல்வினையை பறித்த - அடியார்களது கொடிய இரு வினைப்பற்றையும் ஒழித்தருளிய, பிரான் - திருமங்கையாழ்வாரது, வண்மை சிறந்தபாடல்களை, பாட - (ததீயர்) பாடாநிற்க, - சுழி பறித்த கங்கை முடி சுழிகளினாற் கல்லுந் தன்மையுள்ள (சுழிகளையுடைய) கங்காநதியைத் தரித்த சிரசானது, அடியில் தோய - திருவடியிற் பொருந்தும்படி, தொழுது இரக்கும் - (தேவரீரை) வணங்கிப் பிரார்த்திக்கின்ற, முக்கணன் - மூன்று கண்களையுடைய சிவபிரான், நான்முகனை செய்த - நான்கு முகங்களையுடைய பிரமனது சிரசைக் கொய்ததனாலுண்டாகிய, பழி - பிரமகத்திதோஷத்தை, பறித்து - நீக்கி, பலி ஒழித்தார் - (அச்சிவபிரான் தனது பிரமகத்திதீருமாறு செய்த) பிக்ஷாடநத்தைத் தீர்த்த நம்பெருமாளே ! ஊசல் ஆடிர். பள்ளி கொண்ட திருவரங்கர் - (திருவநந்தாழ்வான் மீது) பள்ளி கொண்டருளிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர். (எ - று.)
திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தங்கள் - பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல் என்னும் ஆறுபிரபந்தங்கள்; இவை - நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமாக அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்கட்கு ஆறு அங்கம் போலுமென்பர். விழிபறித்து மண்ணும் விண்ணும் பறித்த தேவரீரிடத்துத் திருமங்கையாழ்வார் வழிபறித்து உலகோர் இருவினையைப் பறித்தார் என்னும் நயமும், மாவலியினிடத்து இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலைப் போக்கினீர் என்னும் நயமும் கருதத்தக்கன. பறித்த என்ற சொல் ஒரு பொருளிற் பலமுறை பயின்று வந்தது - சொற் பொருட்பின்வருநிலையணியாம். (15)
16. போதனார் நெட்டெழுத்து நமனாரிட்ட
குற்றெழுத்தும் புனலெழுத்தாய்ப் போகமாறன்
வேதமாயிரந் தமிழுமெழு தியந்நாண்
மேன்மை பெறுமதுரகவி வியப்பைப்பாட
வோதமார் மீன்வடிவா யாமையேனத்
துருவாகியரி குறண்மூவி ராமராகிக்
கோதிலாக் கண்ணனாய்க் கற்கியாகுங்
கோயில்வா ழரங்கேச ராடிரூசல்.
(இ - ள்.) போதனார் நெட்டெழுத்தும் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் விதித்து எழுதிய நெட்டெழுத்தும், நமனார் இட்ட குற்றெழுத்தும் - யமன் எழுதிய குற்றெழுத்தும், புனல் எழுத்து ஆய் போக - நீரில் எழுதிய எழுத்துப்போல மறைந்து விடும்படி, மாறன் வேதம் ஆயிரம் தமிழும் எழுதி - நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் பட்டோலை கொண்டு எழுதி, (அதனால்), அ நாள் மேன்மை பெறு - அக்காலத்திற் பெருமைபெற்ற, மதுரகவி - மதுரகவிகளது, வியப்பை - கொண்டாடத்தக்க பாடல்களை, பாட - (ததியர்) பாடா நிற்க, - ஓதம் ஆர் மீன்வடிவு ஆய் - கடலில் திரிகின்ற மத்ஸ்யத்தின் வடிவாகியும், ஆமை ஏனத்து உரு ஆகி - கூர்மம் வராகம் இவற்றின் உருவமாகியும் அரி குறள் மூ இராமர் ஆகி - நரஸிம்ஹமும் வாமமும் பரசுராமரும் தசரத ராமரும் பலராமரும் ஆகியும், கோது இலா கண்ணன் ஆய் - குற்றமில்லாத கிருஷ்ணனாகியும், கற்கி ஆகும் - கல்கியாகத் திருவவதரிக்கவும் போகின்ற, கோயில் வாழ் அரங்கேசர் - திருவரங்கம் பெரியகோயிலில் வாழ்கின்ற ஸ்ரீ ரங்கராஜரே! ஊசல் ஆடிர். (எ - று.)
ஓருயிர் பிறப்பது முதல் இறக்குமளவும் அநுபவிக்கவேண்டியவை முழுவதையும் விதித்துப் பிரமன் எழுதியது விரியுமாதலால், அதனை 'நெட்டெழுத்து' என்றும்; யமன் தண்டனை விதித்தற்பொருட்டாக அவனது கணக்கனாகிய சித்திரகுப்தனென்பவன் ஒருயிர் செய்கின்ற பாவத்தை மாத்திரங் குறித்துக்கொள்வது பிரமனது எழுத்துப்போல அத்துணை விரியாதாகலின், அதனை குற்றெழுத்து' என்றுங் கூறினார். நம்மாழ்வார் வேதத்தின் சாரமாக அருளிச்செய்த திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களையும் அவரது சீடரான மதுரகவியாழ்வார் பட்டோலை கொண்டனரென்க. மதுரகவியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம், கண்ணிநுண் சிறுத்தாம்பு எனப்படும். இது - பகவானது அமிசமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியது ஆதலாலும், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் புத்ரஸ்தாநீயராதலாலும், இப்பாசுரத்தைப் பாடுவதனால், ஸ்ரீரங்கநாதர் திருவுள்ள முவப்பரென்க. "தேவுடைய மீனமா யாமையா யேனமா யரியாய்க் குறளாய், மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் ,... அரங்கமே" என்ற பெரியாழ்வார் பாசுரத்தை அடியொற்றியன, இச்செய்யுளின் பின்னிரண்டடிகள். (16)
17. ஆரமுதினின்ப மிகுசடகோ பன்சொல்
லாயிரமுந்தெ ரிந்தெடுத்தே யடியார்க்கோதி
நாரதனு மனமுருக விசைகள்பாடு
நாதமுனி திருநாம நலங்கள்பாடப்
பாரதனிற் பாரதப்போர் முடியமூட்டிப்
பகைவேந்தர் குலந்தொலையப் பார்த்தன்றெய்வத்
தேரதனில் வருமரங்க ராடிரூசல்
சீரங்க நாயகியோ டாடி ரூசல்
(இ - ள்.) ஆர் அமுதின் அருமையாகிய தேவாமிருதத்தைக்காட்டிலும், இன்பம்மிகு - இன்சுவைமிக்க, சடகோபன் சொல் ஆயிரமும் நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய ஆயிரம் பாடல்களையும், தெரிந்து எடுத்து - கண்டு எடுத்து, அடியார்க்கு ஓதி - பக்தர்களுக்கு (அவற்றை) உபதேசித்து, நாரதனும் மனம் உருக இசைகள் பாடும் - (இசைபாடுதலில் வல்ல) நாரதமுனிவனும் மனங்கரையும்படி தேவகானத்தாற் பாடுகின்ற, நாதமுனி – ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்துள்ள, திருநாமம் நலங்கள் - (எம்பெருமானது) திருநாம வைபவத்தைப் புலப்படுத்துகின்ற பாடல்களை, பாட - (ததியர்) பாடாநிற்க, - பார் அதனில் - பூமியிலே, பாரதம் போர் முடிய மூட்டி - பாரதயுத்தத்தை (ப் பூமிபாரம்) தொலையும்படி மூள்வித்து, பகை வேந்தர் குலம் தொலைய - பகையரசர்களாகிய துரியோதனாதியரது வம்சம் அழியும்படி, (ஸ்ரீகிருஷ்ணவதாரத்திலே பார்த்தன் தெய்வம் தேர் அதனில் வரும் - அருச்சுனனது (அக்கினியாற் கொடுக்கப்பட்டுத்) தெய்வத்தன்மையமைந்த தேரின் மீது ஏறிச் சாரத்தியஞ்செய்த, அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் - சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர். (எ - று.)
மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் திவ்ய ப்ரபந்தத்தை நாதமுனிகள் பன்னீராயிரம்உரு தேவகானத்தாற் பாடி நம்மாழ்வாரது திருவருளைப் பெற்று அவர் முகமாகத் திருவாய்மொழி முதலானவற்றையடைந்து உலகோர்க்கு உபசரித்தனரென்க. நாதமுனி திருநாம நலங்கள் என்பதற்கு - நாதமுனிகளது திருநாமச் சிறப்பை யென்று பொருள் கூறினுமாம். (17)
18. வம்பபருஞ் சிகைமுந்நூ றரித்தஞானி
வாதியரை வெல்லாள வந்தார்க்கன்பா
மெம்பெருமா னார்க்கெட்டு மிரண்டும்பேசி
யிதமுரைத்த பெரியநம்பி யிரக்கம்பாடத்
தும்புருநா ரதர்நாத கீதம்பாடக்
தொண்டர்குழா மியல்பாடச்சு ருதிபாட
நம்பெருமா டிருவரங்க ராடிரூசல்
நான்முகனார் தாதையா ராடிரூசல்.
(இ - ள்.) சிகை - குடுமியையும், முந்நூல் - யஜ்ஞோபவீதத்தையும் தரித்த, வம்பு அமரும் - புதுமை பொருந்திய, ஞானி – தத்துவ ஞானமுடையவராகிய, வாதியரை சொல் - (தம்மோடு) வாதஞ் செய்ய வருபவர்களை யெல்லாம் வென்ற , ஆளவந்தார்க்கு - ஸ்ரீ ஆளவந்தாரிடத்தில், அன்பு ஆம் பக்தியுடையவராகிய, எம்பெருமானார்க்கு - உடையவர்க்கு, எட்டும் – திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தையும், இரண்டும் - திருத்வயத்தையும், பேசி - உபதேசித்து, இதம் – நன்மை பயக்கத்தக்க சரமச்லோகத்தையும், உரைத்த - உபதேசித்த, பெரியநம்பி – பெரியநம்பியென்னும் ஆசாரியர் அருளிச் செய்த, இரக்கம் - (பகவானது) கிருபாவிசேஷத்தைத் தெரிவிக்கும் பாடல்களை, பாட - (ததியர்) பாடாநிற்கவும், தும்புரு நாரதர் - தும்புரு நாரதர் என்கின்ற இருவரும், நாத கீதம் பாட - இன்னோசையுள்ள கீதங்களைப் பாடவும், - தொண்டர் குழாம் - அடியார்களின் கூட்டங்கள், இயல் பாட - இயலுக்கென்று அமைந்த திவ்யப்ரபந்தங்களை யெடுத்துப்பாடவும், பின்னும் சில அடியார்களின் கூட்டங்கள், சுருதி பாட - வேதபாராயணஞ்செய்யவும், நம்பெருமாள் - நம்பெருமாளே! திருவரங்கர் - ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர்; நான்முகனார் தாதையார் - நான்கு முகங்களையுடைய பிரமனுக்குத் தந்தையாரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
விசிஷ்டாத்வைத ஸந்யாசிகள் மற்றைச் சன்னியாசிகள் போலவல்லாமல் சிகாயஜ்ஞோபவீதங்களைப் பெற்றிருப்பராதலால், அவ்வகையிற் சேர்ந்த ஸ்ரீ ஆளவந்தாரை சிகை முந்நூல் தரித்த ஞானி' என்றார். வம்பமரும் ஞானிக்கு அடை, அவர் வாதியரை வென்றமையை, ஆக்கியாழ்வானை வென்று ஆளவந்தாரென்று பெயர் பெற்றவிடத்துங் காண்க. ஆளவந்தார் திருநாடலங்கரித்த போது அவர் கொண்டிருந்த மூன்று குறைகளையும் எம்பெருமானார் நீக்கியவராதலால், ‘ஆளவந்தார்க்கன்பா மெம்பெருமானார்' என்றார்.
பெரிய நம்பி ஸ்ரீராமாநுசனுக்குத் திருவிலச்சினை சாதித்துத் திருமந்திரம் யவற்றை உபதேசித்தனராதலால், ‘எம்பெருமானார்க்கு எட்டுமிரண்டும் பேசியித முரைத்த பெரிய நம்பி' எனப்பட்டார். இங்குக் கூறியவற்றின் விவரங்களையெல்லாம் குருபரம்பரா ப்ரபாவத்திற் பரக்கக்காணலாம். எட்டு இரண்டு என்பன - எண்ணலளவையாகு பெயர்கள். இதமுரைத்த என்பதற்கு - ஆத்மஹிதமான அர்த்தவிசேஷங்களை உபதேசித்த என்று பொருள் கூற இடமுண்டு. இயல் என்பது - இயற்பா; அன்றி, எம்பெருமானுக்கு முன்பு சேவிக்கப்படுகின்ற தமிழ் வேதபாராயணமுமாம். பெரிய நம்பி இரக்கம் - பெரிய நம்பிகளது கிருபாவிசேஷத்தை, பாட - (ததீயர்) பாடாநிற்க என்று உரைத்தல் சாலும். (18)
19. ஐங்கோலு மொருகோலு நீர்க்கோலம்போ
லழியமுனிந் தறுசமயமகற்றி யெங்கள்
செங்கோலே யுலகனைத்துஞ் செல்லமுக்கோ
றிருக்கையிற் கொளெதிராசன் செயத்தைப்பாடச்
சங்கோல மிடும்பொன்னித் துறையினின்றே
தவழ்ந்தேறி மறுகுதொறுந் தரளமீனு
நங்கோயி னம்பெருமா ளாடிரூசல்
நக்கன் மூதாதையா ராடிரூசல்.
(இ-ள்.) ஐங்கோலும் - (மன்மதனது) பஞ்சபாணங்களும், ஒருகோலும் - (அத்வைத ஸந்யாசிகட்கு உரிய) ஏகதண்டமும், நீர் கோலம் போல் அழிய - நீரிலிட்ட கோலம் போல அழியும்படி, முனிந்து - கண்டித்து, அறு சமயம் அகற்றி - (புறச்சமயங்களாகிய) ஷண்மதங்களையும் நிரஹித்து, எங்கள் செங்கோலே - வைஷ்ணவர்களாகிய எங்களது செவ்விய ஆட்சியே (வைஷ்ணவமதமே), உலகு அனைத்தும் செல்ல - உலக முழுதுஞ் சென்றுபரவும்படி, முக்கோல் திரு கையில் கொள் - திரிதண்டத்தைத் தமது திருக்கையிற் கொண்டுள்ள, எதிராசன் - ராமாநுஜமுனிவரது, செயத்தை - வெற்றியை, பாட - (ததீயர்) எடுத்துப்பாடா நிற்க, - சங்கு - சங்குப்பூச்சிகள், ஓலமிடும் பொன்னி துறையினின்று - ஒலிக்கின்ற காவேரியின் துறையிலிருந்து, தவழ்ந்து ஏறி - ஊர்ந்து ஏறிவந்து, மறுகு தொறும் - தெருக்களிலெல்லாம். தரளம் ஈனும் - முத்துக்களைப் பெறதற்கு இடமான, நம் கோயில் - நமது திருவரங்கம் பெரியகோயிலிலெழுந்தருளியுள்ள, நம்பெருமாள் - ஊசல் ஆடிர்; நக்கன் மூதாதையார் - சிவபெருமானுக்குப் பாட்டனாரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
உடையவர் மன்மதபாணங்கட்கு இலக்காகாது விரக்தராய், அத்வைத நிரஸநம் செய்து வேதபாஹ்ய மதங்களின் கொண்டாட்டத்தையும் ஒழித்து, உலகமெங்கும் வைஷ்ணவமதத்தைப் பரவச்செய்து தமது ஜயஸ்தம்பத்தை ஸ்ரீரங்கத்தில் நாட்டியமை முதலிரண்டடிகளில் விளக்கப்பட்டது. எதிராசன் செயத்தை என்பதற்கு உடையவர் அருளிச்செய்த (எம்பெருமான் விஷயமான) வெற்றிப்பாடல்களைத் ததீயர்பாடா நிற்க என்று உரைப்பாருமுளர். நக்கன் - நக்கன் : திகம்பரன். 19
20. அவத்தப்புன் சமயச்சொற் பொய்யைமெய்யென்
றணிமிடறு புழுத்தான்றன் னவையின்மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்றுதீட்டுந்
திருக்கூர வேதியர்கோன் செவ்விபாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந்தூரப்
பரமபதங் குடிமலியப் பள்ளிகொள்ளு
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரியமேனி
நம்பெருமா ளரங்கேச ராடிரூசல்.
(இ-ள்.) அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை - பயனற்றதும் இழிந்ததுமாகிய சைவசமயத்தைச் சார்ந்த பொய்ச்சொற்களையெல்லாம், மெய் என்று - மெய்ப்பொருளென்று நம்பி, (அதனால் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் அபசாரப்பட்டு, அத்தீவினையின் பயனாக), அணி மிடறு புழுத்தான் தன் – அழகிய கழுத்துப் புழுத்தவனாகிய கரிமிகண்ட சோழனது, அவையில் - சபையிலே, மேவி - தாம் எழுந்தருளி, 'சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு' என்று, தீட்டும் - எழுதின, திரு கூர வேதியர் கோன் - திருக்கூரமென்னும் ஊரிற் பிறந்த பிராமண சிரேஷ்டரான கூரத்தாழ்வானது, செவ்வி - சிறப்புக்களை, பாட - (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, பவம் துக்கம் பிணி நீங்க - இப்பிறவியில் நேரக்கூடிய துன்பமும் நோயும் நீங்கவும், நரகம் தூர - நரகக்குழிகள் தூர்ந்து போகவும், பரமபதம் குடி மலிய - பரமபதத்தில் குடிகள் நிறையவும், பள்ளி கொள்ளும் - சயனத்திருக்கோலமாகச் சேவைசாதிக்கின்ற, நவம் துப்பு செங்களி வாய் - புதிய பவழத்தையும் செந்நிறமுள்ள கொவ்வைக்கனி போன்ற வாயையும், கரிய மேனி - கார்நிறமுள்ள திருமேனி நிறத்தையுமுடைய, நம்பெருமாள் அரங்கேசர் ! ஊசல் ஆடிர் (எ-று.)
ஒரு சோழன் கள்ளப் பொய்ந்நூலாகிய சைவாகமத்தை மெய்யென்றும் நம்பி, சிவனுக்கு மேற்பட்ட பரம்பொருள் இல்லை என்னும் பொருளுள்ள சிவாத் பரதரம் நாஸ்தி' என்னும் வாக்கியத்தை எழுதி வித்வான்களிடம் நிர்ப்பந்தித்துக் கையெழுத்து வாங்கி வருகையில், தன் சபைக்கு வருவித்த கூரத்தாழ்வானையும் அதனிற் கையெழுத்திடும்படி நிர்ப்பந்திக்க, சிவமென்பதற்கு - குறுணியென்னும் பொருளும் உள்ளதாதலால், அச்சிவத்துக்குமேல் பதக்கு என்பது உண்டு என்னும் பொருளுள்ள 'த்ரோணம் அஸ்தி தத பரம் என்னும் வாக்கியத்தை எழுதிக் கூரத்தாழ்வான் கையெழுத்திட்டன ரெனக. சோழன் செய்கின்ற உபத்திரவம் தாங்கமாட்டாது ஸ்ரீஉடையவர் அவன் மிடறுபுழுத்துச் சாகும்படி அபிசாரம் செய்ததனால், அவன் மிடறுபுழுத்து க்ரிமிகண்டனாயினனென்பது, இங்கு அறியத்தக்கது. 'திருக்கூரவேதியர் கோன் செவ்விபாட' என்பதற்கு - கூரத்தாழ்வான் அருளிச்செய்த அழகிய தோத்திரப் பாடல்களைத் ததீயர் பாடாநிற்க என்று பொருள் கூறவும் இடமுண்டு. (20)
21. சந்தாடும் பொழிற்பூதூர் முக்கோற்செல்வன்
றன்மருக னாகியிரு தாளுமான
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான்
கடன்ஞாலந் திருத்தியருள் கருணைபாடக்
கொந்தாருந் துளவாடச் சிறைவண்டாடக்
குழலாட விழியாடக் குழைக்காதாட
நந்தாடக் கதையாடத் திகிரியாட
நன்மாடத் திருவரங்க ராடிரூசல்
(இ - ள்.) சந்து ஆடும் பொழில் - அழகு நிறைந்த சோலைகளையுடைய, பூதூர் - ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த, முக்கோல் செல்வன்தன் - திரிதண்டத்தை யேந்திய உடையவரது, மருகன் ஆகி - மருமகனாய், இரு தாளும் ஆன - (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய, கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் – கந்தாடைக் குலத்திற்கு விளக்குப் போன்ற முதலியாண்டான், கடல் ஞாலம் திருத்தி அருள் - கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்திலுள்ளாரை வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய, கருணை - கிருபாவிசேஷத்தை, பாட - (ததியர் எடுத்துப்) பாடாநிற்க, கொந்து ஆரும் துளவு ஆட - கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய் மாலை அசையவும், சிறை வண்டு ஆட - (அந்தத் திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும், குழல் ஆட - (அத்திருத் துழாய்மாலையைச் சூடிய) திருக்குழற்கற்றை அசையவும், விழி ஆட - திருக்கண்கள் அசையவும், குழை காது ஆட - குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும், நந்து ஆட - (இடப்பால் மேல் திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும், கதை ஆட - (இடப்பாற் கீழ்க்கரத்திலேந்திய கௌமோத யென்னும் கதாயுதம் அசையவும், திகிரி ஆட - (வலப் பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும், நல் மாடம் திருவரங்கர் - அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் - (எ-று.)
எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் - உடன் பிறந்தாள் குமாரன். (21)
22. திருக்கலியன ணுக்கர்திருப் பணிசெய்யன்பர்
சீரங்கநான் மறையோருள் ளூர்ச்செல்வர்
தருக்குமிசைப் பிரான்மார்பா ரளந்தார்பாதந்
தாங்குவோர் திருக்கரகந் தரித்துநிற்போ
ரிருக்குமுதல் விண்ணப்பஞ் செய்வோர்வீரர்க்
கிறையவர்கள் சீபுண்டரீகர் மற்றும்
பெருக்கமுள்ள பரிசுரங்க டொழுதாட்செய்யப்
பிரமமாந் திருவரங்க ராடிரூசல்.
(இ - ள்.) திருக்கலியனணுக்கர் - திருக்கலியனணுக்கரும், திருப்பணி செய் அன்பர் - திருப்பணி செய்யன்பரும், சீரங்க நான் மறையோர் - சீரங்க நான்மறையோரும், உள்ளூர்ச் செல்வர் - உள்ளூர்ச்செல்வரும், தருக்கும் இசைப்பிரான்மார் - (இசைபாடுவதிற்) சிறந்தோரான இசைப்பிரான்மாரும், பார் அளந்தார் பாதம் தாங்குவோர் - (திரிவிக்கிரமனாகி) உலகங்களையளந்த நம்பெருமாளது ஸ்ரீபாதந்தாங்குவோரும், திருக்கரகம் தரித்து நிற்போர் - திருக்கரகந் தரித்து நிற்பவரும், இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் – இருக்கு முதலிய வேதவிண்ணப்பஞ் செய்பவர்களும், வீரர்க்கு இறையவர்கள் - வீரர்க்கிறையவர்களும், சீபுண்டரீகர் - ஸ்ரீ புண்டரீகரும், (ஆகிய பத்துக்கொத்துப் பரிஜநங்களும்), மற்றும் பெருக்கம் உள்ள பரிகரங்கள் - மற்றும் மிகத்தொகுதியான அனைத்துக் கொத்துப் பரிஜநங்களும் தொழுது - வணங்கி, ஆள் செய்ய - (தம்தமது) கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருக்க, பிரமம் ஆம் திருவரங்கர் - பரப்பிரமமாகிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
திருக்கலியனணுக்கர் என்ற கொத்து - குறட்டு மணியகாரர் முதலிய பிரதாந கைங்கரியபரர்கள் அடங்கிய தொகுதியென்று தோன்றுகின்றது. திருப்பணி செய் அன்பர் என்ற கொத்து - இப்போது ஆயனார் கொத்து என்னும் பெயரோடு நீர் தெளித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுங் கொத்து என்பர். சீரங்க நான் மறையோர் - அத்யாபகர். உள்ளூர்ச் செல்வர் - ஸ்தலத்தார். இசைப்பிரான்மார் - அரையர் பாதந்தாங்குவோர் - ஸ்ரீபாதந்தாங்கிகள். திருக்கரகம் தரித்து நிற்போர் - பரிசாரகர் என்னலாம். இருக்கு முதல் விண்ணப்பஞ் செய்வோர் - பட்டர். வீரர்க்கு இறையவர் - வாளும் கையுமாய் எம் பெருமானுக்குத் திருமேனிக்காவல் புரிபவர். ஸ்ரீ புண்டரீகர் - பந்தம் பிடித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுந் தாசநம்பிகள் என்பர். இவர்கள் பத்துக்கொத்தாக ஸ்ரீஉடையவர்காலத்தில் தொகுக்கப்பெற்றார்கள்: அம்முறை காலக்கிரமத்திலே சிற்சில மாறுபாடுகளை யடைந்தது. மற்றும் பெருக்கமுள்ள பரிகரங்கள் என்பது - வேத்ரபாணியுத்யோகம் ஸம்ப்ரதியுத்யோகம் அமுது படியளந்து கொண்டுவரும் உத்யோகம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும் அடியார்களின் வகைகளைக் குறிக்கும். 22
23. உடுத்திரளோ வானவர்கள் சொரிந்தபூவோ
வுதித்தெழுந்த கலைமதியோ வும்பர்மாத
ரெடுத்திடு கர்ப்பூரவா ரத்திதானோ
யாந்தெளியோ மின்றுநீடிருக் கண்சாத்திப்
படுத்ததிருப் பாற்கடலு ணின்றுபோந்து
பாமாலை பூமாலை பாடிச்சூடிக்
கொடுத்ததிருக் கோதையுட னாடிரூசல்
கோயின் மணவாள ரேயாடிரூசல்.
(இ-ள்.) (வானத்தில் இப்போது திரள் திரளாகத் தோன்றுபவை), - உடு திரளோ - நட்சத்திரங்களின் கூட்டங்களோ? (அன்றி), வானவர்கள் சொரிந்த பூவோ - (தேவரீரைச் சேவிக்கின்ற) தேவர்கள் (மிக்க அன்போடு) சொரிந்த மலர்களோ? - (இப்போது ஒளிப்பிழம்பாகத்தோன்றுவது), உதித்து எழுந்த கலை மதியோ – உதயமாகி விளங்குகின்ற பதினாறு கலைகளும் நிரம்பிய சந்திரனோ? (அன்றி), உம்பர் மாதர் எடுத்திடு கர்ப்பூரம் ஆரத்தி தானோ - தேவமாதர்கள் (மங்களார்த்தமாக) எடுத்துச் சுழற்றிய கர்ப்பூர வாரத்தித் தட்டேயோ? யாம் தெளியோம் - யாம் இன்னதென்று உணர்ந்திலோம்; (இப்படிப்பட்ட பெருவிபவத்துடன்), இன்று - இப்போது, நீள் திருக்கண் சாத்தி படுத்த - நீண்ட திருக்கண்கள் மூடி யோக நித்திரை செய்வதற்கு இடமான, திருப்பாற்கடலுள் நின்று - திருப்பாற்கடலிலிருந்து, போந்து - எழுந்தருளிவந்து, (சேவைசாதிக்கின்ற நம்பெருமாளே!) பாமாலை பூமாலை பாடி சூடி கொடுத்த - பாமாலைகளையும் பூமாலைகளையும் (முறையே) பாடியும் சூடியும் சமர்ப்பித்த, திருக்கோதையுடன் - ஸ்ரீ ஆண்டாளோடு, வாசல் ஆடிர்; கோயில் மணவாளரே - ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளிய அழகிய மணவாளரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
இரவில் வானத்தில் தோன்றும் நக்ஷத்திரக் கூட்டங்களை உடுத்திரளோ? வானவர்கள் பக்தியோடு திருவரங்கநாதனுக்காகச் சொரிந்த பூத்திரளோ? என்று ஐயவணி தோன்றக் கூறினர். ‘உடுத்திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ' என்ற தொடர், "இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவர் நாள், மறைமுறையால் வானாடர் கூடி - முறைமுறையின், தாதிலாகிப் பூத்தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின், மீதிலகித் தான் கிடக்கும் மீன்" என்ற பாசுரத்தை ஒருவாறு ஒத்து வந்தது. இவ்வாறே, வானத்தில் தோன்றிய முழுமதியைத் தேவமாதர்கள் ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களார்த்தமாக எடுத்துச் சுழற்றிய கர்ப்பூரவாரத்தித் தட்டேயோ முழுமதியோ எனக் கூறினார்: இந்த ஐயவணியால், அந்த எம்பெருமான் தேவர்களும் தேவமாதர்களும் வழிபடுமாறு உள்ளா னென்பது, தொனிக்கும். (23)
24. வென்றிவேற் கருநெடுங்கண்ண சோதைமுன்னம்
வேர்வாட விளையாடும் வெண்ணெயாட்டுங்
குன்றுபோ னாற்றடந்தோள் வீசியாடுங்
குரவைதனைப் பிணைந்தாடுங் கோளறாட்டு
மன்றினூடு வந்தாடுமரக் காலாட்டும்
வலியரவிற் பாய்ந்தாடும் வடுவிலாட்டு
மன்றுகாணா விழந்தவடி யோங்காண
வணியரங்க ராசரேயாடி ரூசல்.
(இ-ள்.) அணி அரங்கராசரே (நீர்), வென்றி வேல் கரு நெடுங்கண் - வெற்றி பெற்ற வேலாயுதம் போன்று கருமையாகி நீண்ட கண்களையுடைய, அசோதை - யசோதையினது, முன்னம் - எதிரில், வேர்வு ஆட - வேர்வையுண்டாகும்படி, விளையாடும் - விளையாடின, வெண்ணெய் ஆட்டும் - வெண்ணெய்க்கு ஆடின கூத்தாட்டையும், குன்றுபோல் - மலைகள் போல, நால் தட தோள் - (தேவரீரது ) நான்கு பெரிய தோள்களையும், வீசி ஆடும் - வீசிக் கொண்டு கூத்தாடுவதற்கு உரியதான , பிணைந்து - (பலமங்கையரோடு) சேர்ந்து, குரவைதனை ஆடும் - குரவைக்கூத்தை ஆடுகின்ற, கோள் அறு ஆட்டும் - குற்றமற்ற ஆட்டத்தையும், மன்றின் ஊடு உவந்து ஆடும் - (பலர்கூடும்) பொதுவிடத்தில் மனமகிழ்ந்து ஆடுகின்ற, மரக்கால் ஆட்டும் - மரக்கால்கூத்தையும், வலி அரவில் பாய்ந்து ஆடும் - வலிமையையுடைய (காளியனென்னும்) பாம்பின் மீது தாவியாடின, வடு இல் ஆட்டும் - குற்றமற்ற நர்த்தனத்தையும், அன்று - அவ்வவ்வாடல்கள் நடந்த காலங்களில், காணா(து) - தரிசிக்கப் பெறாமல், இழந்த, அடியோம் - அடியோங்கள், காண - (இன்று) தரிசிக்கும்படி, ஊசல் ஆடிர்; (எ - று.)
முன்பு தேவரீர் பல ஆடல்களை ஆடியுள்ளீர்; அவ்வாறு ஆடிய ஆடல்களை அவ்வக்காலத்தில் தரிசிக்கப்பெறாத அடியோங்களது குறை தீருமாறு இன்று ஊசலாட வேண்டுமென்பதாம். 'மரக்காலாட்டு' என்பது, பதினோராடலுள் ஒன்று. 'கோளராட்டு' என்ற பாடத்துக்கு - (மாதரிடத்துப்) பற்றுள்ளவர் ஆடுகின்ற குரவைக்கூத்தையும் என்றும், 'வடிவு இல் ஆட்டு' என்ற பாடத்திற்கு - குறைதலில்லாமல் தொடர்ச்சியாக ஆடுகின்ற கூத்தை என்றும் பொருள் கூறுவர். ‘மடுவிலாட்டும்' என்று பாடம் ஓதுவாரும் உளர். (24)
25. ஆரணங்க ளொருநான்கு மன்பர்நெஞ்சு
மணிசிலம்பு மடிவிடா தூசலாட
வாரணங்கு முலைமடவார் கண்ணும்வண்டும்
வண்டுளவும் புயம்விடா தூசலாடக்
காரணங்க ளாயண்டரண்ட மெல்லாங்
கமலநாபியிற் படைத்துக் காத்தழிக்குஞ்
சீரணங்கு மணவாள ராடிரூசல்
சீரங்க நாயகனா ராடிரூசல்.
(இ-ள்.) காரணங்கள் ஆய் - மூவகைக்காரணங்களுமாகி, அண்டர் அண்டங்களிலிருப்பவர்களும், அண்டம் - உலகவுருண்டைகளும், எல்லாம் ஆகிய எல்லாவற்றையும், கமலம் நாபியில் படைத்து - திருவுந்தித்தாமரையிற் சிருஷ்டித்து, காத்து - பாதுகாத்து, அழிக்கும் - (பிரளயகாலத்தில்) ஸம்ஹாரஞ்செய்கின்ற, சீர் அணங்கு மணவாளர் - சிறப்புப் பொருந்திய தெய்வமகளாகிய இலக்குமிக்குக் கணவரே! - ஆரணங்கள் ஒரு நான்கும் - நான்கு வேதங்களும், அன்பர் நெஞ்சும் - அடியார்களது மனமும், அணி சிலம்பும் - அழகிய சிலம்புகளும், அடி விடாது - (தேவரீரது) திருவடிகளை விடாமலிருந்து, ஊசல் ஆட - ஊசலாடவும், வார் அணங்கு முலை மடவார் கண்ணும் - (தமது சம்பந்தத்தாற்) கச்சு நிறம் பெறும்படியான (தம்மீது அணியப்பெறுதலாலே கச்சுக்கு அழகையுண்டாக்குகிற) தனங்களையுடைய இளமகளிரது கண்களும், வண்டும் - வண்டுகளும், வள் துளவும் - வளப்பமான திருத்துழாய் மாலையும், புயம் விடாது - திருத்தோள்களை விடாமலிருந்து, ஊசல் ஆட - ஊசலாடவும், ஊசல் ஆடிர்! சீரங்கநாயகனார் - ஸ்ரீரங்க நாதரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
வேதங்கள் நான்கும் அடிவிடாதிருத்தலாவது - நான்கு வேதங்களும் எம்பெருமானது ஸ்வரூபத்தையே நாடிச்சொல்லுதலாம். திருவடியைச் சொன்னது - திருமேனிக்கும் உபலக்ஷணம். சேஷபூதர் (அடியவர்) இழியுந்துறை சேஷியின் (தலைவனது) திருவடியே யாதலால், அன்பர் நெஞ்சு அந்தப்பரமனது திருவடியை விடாது பற்றுவதாயிற்று. அணிசிலம்பு - அப்பெருமானது திருவடியி லணியப்பெற்ற அழகிய பாததண்டைகள், இளமகளிர் எம்பெருமானது தோளழகில் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால், மடவார்கண் ஊசலாடும் புயமென்றார். வண்டு - திருத்துழாய் மலர்மாலையில் மொய்த்தற்காக வந்த வண்டு என்றாவது, தலைமகளிரால் தூதுவிடப்பட்ட வண்டு என்றாவது கொள்க. சீரணங்கு மணவாளர் என்பதற்கு - தமது குணங்களால் (யாவரையும்) விரும்பும்படி செய்கின்ற அழகிய மணவாளரே என்றும் பொருளுரைக்கலாம்.
காரணங்கள் மூன்று வகைப்படும்; அவையாவன – முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம் என்பன . முதற்காரணமாவது - பானையுண்டாவதற்கு மண்போல உபாதானமாயிருப்பது; துணைக்காரணமாவது - அப்பானையுண்டாவதற்குத் தண்டசக்கரங்கள் போல ஸஹதாரியாயிருப்பது; நிமித்தகாரணமாவது அப்பானையுண்டாவதற்குக் குயவன் போல நிமித்தமாயிருப்பது: இவ்வாறே ஸ்தூலமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய இவ்வுலகம் உண்டாவதற்குப் பரப்பிரமம் மூன்று காரணமாயும் இருக்குமென்றும், அவற்றுள் ஸுமமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய பிரமம் முதற்காரணமாமென்றும், ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்களுடன் கூடிய பிரமம் துணைக்காரணமாமென்றும், "பஹுஸ்யாம் (பகுவாக ஆகக்கடவேன்)" என்ற ஸங்கல்பத்துடன் கூடிய பிரமம் நிமித்தகாரணமாமென்றும் வேதாந்தங்களினால் உணரலாம். (25)
26. அடித்தலத்திற் பரிபுரமுஞ் சிலம்புமாட
வணிமார்பிற் கௌத்துவமுந் திருவுமாடத்
தொடித்தலத்தின் மணிவடமுந் துளவுமாடத்
துணைக்கரத்திற் சக்கரமுஞ் சங்குமாட
முடித்தலத்திற் கருங்குழலுஞ் சுரும்புமாட
முகமதியிற் குறுவேர்வுங் குழையுமாடக்
கடித்தலத்தி லரைநாணுங் கலையுமாடக்
காவிரிசூ ழரங்கேச ராடிரூசல்.
(இ-ள்.) காவிரி சூழ் அரங்கேசர் – திருக்காவேரி நதியாற் சூழப்பெற்ற திருவரங்கத்திற்குத் தலைவரே! அடி தலத்தில் - திருவடிகளில், பரிபுரமும் - கிண்கிணிகளும், சிலம்பும் - பாததண்டைகளும், ஆட - அசைந்தாடவும், அணி மார்பில் - அழகிய திருமார்பில், கௌத்துவமும் - கௌஸ்துபரத்தினமும், திருவும் - இலக்குமியும், ஆட - அசைந்தாடவும், தொடி தலத்தில் - திருத்தோள்களில், மணி வடமும் - இரத்தினவாரமும், துளவும் - திருத்துழாய் மாலையும், ஆட - அசைந்தாடவும், துணை கரத்தில் - இரண்டு திருக்கைகளிலும், சக்கரமும் சங்கும் - திருவாழியுந் திருச்சங்கமும், ஆட - அசைந்தாடவும், முடி தலத்தில் - திருமுடியில், கரு குழலும் - கரிய மயிர்முடியும், சுரும்பும் - (அதில் அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற) வண்டுகளும், ஆட - அசைந்தாடவும், முகம் மதியில் - பூர்ணசந்திரன் போன்ற திருமுகமண்டலத்தில், குறு வேர்வும் - சிறுத்து அரும்புகின்ற வேர்வை நீரும், குழையும் - காதணிகளும், ஆட - அசைந்தாடவும், கடி தலத்தில் - திருவரையில், அரைநாணும் கலையும் - திருப்பரியட்டமும், ஆட - அசைந்தாடவும், ஊசல் ஆடிர்; (எ - று.) (26)
27. பரந்தலைக்கும் பாற்கடலுட் பசுஞ்சூற்கொண்டல்
படிந்ததெனக் கிடந்தபடி படிமேற்காட்டி
வரந்தழைக்க விரண்டாற்றி னடுவேதோன்றி
மண்ணுலகை வாழவைத்த வளத்தைப்பாடப்
புரந்தரற்கும் பெருமாளே யாடிரூசல்
போதனுக்கும் பெருமாளே யாடிரூசல்
லரன்றனக்கும் பெருமாளே யாடிரூசல்
லணியரங்கப்பெருமாளே யாடிரூசல்.
(இ - ள்.) பரந்து அலைக்கும் பாற்கடலுள் - பரவி அலைவீசுகின்ற திருப் பாற்கடலிலே, பசு சூல் கொண்டல் படிந்தது என - கரிய நீர் கொண்ட மேகம் படிந்தாற்போல, கிடந்த - சயனத்திருக்கோலமாக எழுந்தருளியுள்ள, படி - தன்மையை, படிமேல் காட்டி - நிலவுலகத்திற் பிரதியக்ஷமாக்கி, வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி - (அன்பர்களது) வேண்டுகோளை மிகுதியாகத் தந்தருளுமாறு உபயகாவேரி மத்தியில் (ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் அர்ச்சாரூபியாக) ஆவிர்ப்பவித்து, மண் உலகை வாழவைத்த - நிலவுலகத்தை வாழச்செய்த, வளத்தை - பெருமையை, பாட - (அடியோங்கள்) பாடாநிற்க, - புரந்தரற்கும் பெருமாளே – தேவேந்திரனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர்; போதனுக்கும் பெருமாளே - பிரமதேவனுக்குத் தலைவரே! ஊசல் ஆடிர்; அரன் தனக்கும் பெருமாளே - சிவபெருமானுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர்; அணி அரங்கம் பெருமாளே - ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர்; (எ - று.) (27)
28. உடுமாயக் கதிருதிரச் சண்டவாயு
வுலகலைப்ப வடவைசுட வுத்தியேழுங்
கெடுமாறு திரிதருகா லுயிர்களெல்லாங்
கெடாதுவயிற் றுள்ளிருத்துஞ் சீர்த்திபாட
நெடுமாயப் பிறவியெல்லாம் பிறந்திறந்து
நிலத்தோடும் விசும்போடு நிரயத்தோடுந்
தடுமாறித்திரி வேனையருள் செய்தாண்ட
தண்ணரங்க நாயகனா ராடிரூசல்.
(இ - ள்.) உடு மாய - நக்ஷத்திரங்கள் அழிந்தொழியவும், கதிர் உதிர - சூரியசந்திரர்கள் உதிரவும், சண்ட வாயு - பிரசண்டமாருதம், உலகு அலைப்ப - வீசி உலகங்களை யழிக்கவும், வடவை சுட - வடவாமுகாக்கினி எரித்தழிக்கவும், உத்தி ஏழும் - கடல்களேழும், கெடும் ஆறு - (இவ்வண்ட மெல்லாம்) அழியும்படி, திரிதரு கால் – பொங்கிப் பரவுங் காலத்தில், உயிர்கள் எல்லாம் - (அவற்றிலுள்ள) ஜீவராசிகளெல்லாவற்றையும், கெடாது - அழியாமல், வயிற்றுள் இருத்தும் - திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கின்ற, சீர்த்தி - (தேவரீரது) பெருங்கீர்த்தியை, பாட - (அடியோங்கள்) எடுத்துப் பாடாநிற்க, நெடு மாயம் பிறவி எல்லாம் - பெரிய மாயையையுடைய எல்லாப்பிறவிகளிலும், பிறந்து, இறந்து, நிலத்தோடும் - நிலவுலகத்திலும், விசும் போடும் - வானுலகத்திலும், நிரயத்தோடும் - நரகத்திலும், தடுமாறி திரிவேனை – தடுமாறித் திரிகின்ற என்னை, அருள் செய்து ஆண்ட - கருணை செய்து ஆட்கொண்ட, தண் அரங்க நாயகனார் - குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர்; (எ - று.)
அநாதியான புண்யபாபங்களினாலும் பிறந்து இறக்கும்போது இடையிடையே நேர்கிற புண்ய பாபங்களினாலும் சுவர்க்க மத்திய பாதாளங்களிற் பலபிறவி பிறந்து இறந்து அலைச்சற்பட்ட தமது நிலையைப் பின்னிரண்டு அடிகளினால் விளக்கினார். (28)
29. முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லைபாய
முல்லைநிலத் தயிர்பானெய் மருதத்தோட
மருதநிலக் கொழும்பாகு நெய்தற்றேங்க
வருபுனற்கா விரிசூழ்ந்த வளத்தைப்பாடக்
கருமணியே மரகதமேமுத் தேபொன்னே
கண்மணியே யாருயிரே கனியேதேனே
யருள்புரிவா யென்றவர்தம் மகத்துள்வைகு
மணியரங்க மாளிகையா ராடிரூசல்.
(இ-ள்.) கருமணியே - நீலமணிபோன்றவனே! மரகதமே - பசசையிரத்தினம் போன்றவனே! முத்தே - முத்துப்போன்றவனே! பொன்னே - பொன் போல் அருமையானவனே! கண்மணியே - கண்ணிற்குள்ளிருக்குங் கருவிழி போன்றவனே! ஆர் உயிரே - அருமையான உயிர்போன்றவனே! கனியே - இனிய கனி போன்றவனே! தேனே - தேன்போல் மதுரமானவனே! அருள் புரிவாய் - (எம்மீது) கருணை புரிவாயாக,' என்றவர் தம் - என்று பிரார்த்தித்தவரது, அகத்துள் - மனத்தில், வைகும் - (அவர் நினைந்த வடிவோடு) தங்கியிருக்கின்ற, அணி அரங்கமாளிகையார் - அழகிய திருவரங்கந் திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானே! - முருகன் உறை குறிஞ்சி தேன் - முருகக்கடவுள் வாழ்கின்ற குறிஞ்சி நிலக்கருப்பொருளாகிய தேன், முல்லை பாய - முல்லை நிலத்திற் பாயவும், முல்லை நிலம் - முல்லை நிலத்துக் கருப்பொருளாகிய, தயிர் பால் நெய் - தயிரும் பாலும் நெய்யும், மருதத்து ஓட - மருதநிலத்திற் பெருகியோடவும், மருதம் நிலம் கொழும்பாகு - மருதநிலத்தில் விளைகின்ற கரும்பின் சாற்றைக் காய்ச்சியதனாலா கியவளமுள்ள வெல்லப்பாகு, நெய்தல் தேங்க - நெய்தல் நிலத்தில் தேங்கிநிற்கவும், வரு - பெருகுகின்ற, புனல் - நீரையுடைய, காவிரி – காவேரி நதியினாலே, சூழ்ந்த - சூழப்பெற்றுள்ள, வளத்தை - வளப்பத்தை, பாட - (அடியோங்கள்) பாடாநிற்க, ஊசல் ஆடிர் ; (எ - று.)
இதனால், காவிரிபாயப்பெற்ற இந்நாட்டில் நான்கு நிலங்களும் அமைந்திருத்தல் கூறினார். தொல்காப்பியத்தில், "முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே'' என்றவிடத்து, சொல்லாதமுறையாற் சொல்லவும் படு மென்று பொருள்படுத்தல் பற்றி, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என முறைப்பட வைத்தார். கலித்தொகையிலும், ஐங்குறுநூற்றிலும் பிறவற்றிலும் வேறுபடக் கோத்தவாறுங் காண்க. நெடுந்தூரத்தும் விளங்குதலின் மலையாகிய குறிஞ்சி நிலத்தை முன்னும், மலையைக் காடும், காட்டை நாடும், நாட்டைக் கடலும் அடுத்துண்மையால், அவற்றை அதனதன் பின்னும் வைத்தனரென்க. நீரும் நிழலுமில்லாத பாலை நிலம் மனிதசஞ்சாரத்திற்கு இடமாகாது ஆகலின், நீக்கப்பட்டது. பாலைக்கு நிலமில்லை யென்றும், மற்றைநிலங்கள் தம் நிலை திரியின் அதுவே பாலையாமென்றும் சில ஆசிரியர் கொள்கை "சேயோன் மேய மைவரையுலகமும்" என்பதனால், முல்லைக்கு முருகன் தெய்வமாதல் பெறப்படும். (29)
30. புண்டரிகத்தவன் றவஞ்செய்தி றைஞ்சுங்கோயில்
புரிசடையோன் புராணஞ்செய் தேத்துங்கோயில்
பண்டிரவி குலத்தரசர் பணிந்தகோயில்
பரிந்திலங்கைக் கோன்கொணர்ந்து பதித்தகோயில்
மண்டபமுங் கோபுரமுமதிலுஞ் செம்பொன்
மாளிகையுந் தண்டலையு மலிந்தகோயி
லண்டர்தொழுந் திருவரங்கம் பெரியகோயி
லமர்ந்துறையும் பெருமானாராடி ரூசல்.
(இ-ள்.) புண்டரிகத்தவன் - (திருமாலின்) நாபீகமலத்தில் தோன்றியவனான பிரமதேவன், தவம் செய்து, இறைஞ்சும் - பிரதிஷ்டைபண்ணித் திருவாராதனஞ்செய்து வணங்கின, கோயில் - கோயிலும், புரிசடையோன் - முறுக்கிவிட்ட சடைமுடியையுடைய சிவபிரான், புராணம் செய்து, ஏத்தும் - துதித்த, கோயில் - கோயிலும், பண்டு - முன்னே, இரவி குலத்து அரசர் - சூரிய குலத்து ராஜாக்கள், பணிந்த - வணங்கிய, கோயில் - கோயிலும், இலங்கை கோன் - இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான், பரிந்து - விரும்பி, கொணர்ந்து பதித்த - கொண்டுவந்து தாபித்த, கோயில் - கோயிலும், மண்டபமும் - மண்டபங்களும், கோபுரமும் - கோபுரங்களும், மதிலும் - மதில்களும், செம் பொன் மாளிகையும் - சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட மாளிகைகளும், தண்டலையும் - சோலைகளும், மலிந்த - நிறைந்துள்ள, கோயில் - கோயிலுமான, அண்டர் தொழும் - தேவர்கள் யாவரும் வணங்குகின்ற, திருவரங்கம் பெரியகோயில் - திருவரங்கம் பெரியகோயிலில், அமர்ந்து உறையும் - பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற, பெருமானார் - நம்பெருமாளே ! ஊசல் ஆடிர் (எ - று.)
இங்கு 'கோயில்' என்று கூறியது, அத்திருப்பதியி லெழுந்தருளிய ஸ்ரீரங்கநாதனையும் உபலக்ஷணவகையாற் குறிக்கும். பிரணவாகாரமான ஸ்ரீரங்க விமானத்திலே ஆதிசேஷசயனத்தில் திருமகளும் நிலமகளும் திருவடி வருடப் பள்ளி கொள்ளுந் திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில் பிரமனது திருவாராதனத் திருவுருவமாக இருந்ததனால், ‘புண்டரிகத்தவன் தவஞ்செய்து இறைஞ்சுங்கோயில்' என்றார் . சிவபிரான் ஸ்ரீரங்கமாஹாத்ம்யத்தை நாரதமுனிவர்க்கு எடுத்துக் கூறியதாகப் புராணம் இருப்பதால், ‘புரிசடையோன் புராணஞ் செய்து ஏத்துங் கோயில்' எனப்பட்டது. சூரிய குலத்து மநுகுமாரனான இக்ஷவாகுமகாராஜன் பிரமனைக் குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம் புரிந்து அத்தேவனருளால் அவ்வெம்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து திருவாராதநஞ் செய்து வந்தனன்; அந்த ஸ்ரீரங்கநாதனே இக்ஷவாகு முதல் இராமபிரான் வரையிலுள்ள இரவிகுல மன்னவரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினானாதலால் 'பண்டிரவிகுலத்தரசர் பணிந்த கோயில்' என்றும், இராமபிரான் வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல் கடந்து இலங்கை சேர்ந்து இராவணாதி ராஷஸ சங்காரஞ் செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ் செய்துகொண்டபின்பு சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும் பொழுது, தனது திருவாராதன மூர்த்தியான நம்பெருமாளைத் தனக்கு மிகவும் அந்தரங்கனாகிய விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்து வரும்படி நியமித்து அனுப்ப, அங்ஙனமே அவ்வரக்கர் பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கை நோக்கிச் செல்லும் பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினனாதலால், ‘பரிந்திலங்கைக்கோன் கொணர்ந்து பதித்த கோயில்' என்றும் கூறினார். (30)
31. அருவரங்கட ருபராங்கு சனேயாதி
யாழ்வார் கடம்பிரா னாடிரூச
லிருவரங்க வொளிக்ககலா விருளகற்று
மெதிராசன் றம்பிரானாடி ரூசல்
தருவரங்க ணீர்பொழிற் கூரத்துவேதா
சாரியனார் தம்பிரானாடி ரூசல்
திருவரங்கத் தணியரங்கன் றிருமுற்றத்துத்
தெய்வங்கடம் பிரானாடி ரூசல்.
(இ - ள்.) அரு வரங்கள் தரு - (தன்னையடைந்த அடியார்க்கு) அரிய வரங்களைக் கொடுக்கின்ற, பராங்குசனே ஆதி - நம்மாழ்வார் முதலாகிய, ஆழ்வார்கள் - ஆழ்வார்கட்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர்; இருவர் அங்கம் ஒளிக்கு அகலா - (சூரிய சந்திரர் என்னும்) இருவருடைய மேனியிலிருந்து வீசுகிற (வெயில் நிலவு என்கின்ற) ஒளிக்கும் போகாத, இருள் - அஜ்ஞாந அந்தகாரத்தை, அகற்றும் - நீக்குகின்ற, எதிராசன் - எம்பெரு மானார்க்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர்; தரு வரங்கள் நீள் பொழில் - சிறந்த மரங்கள் மிகுதியாக நீண்டு வளரப்பெற்ற சோலைகள் சூழ்ந்த, கூரத்து - திருக்கூரமென்னுந் தலத்தில் அவதரித்த, வேத ஆசாரியனார் - வேதத்தில் தேர்ந்த ஆசிரியராகிய கூரத்தாழ்வானுக்கு, தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர்; திருவரங்கத்து - திருவரங்கம் பெரியகோயிலிலேயுள்ள, அணி அரங்கன் திருமுற்றத்து தெய்வங்கள் - திருவரங்கன் திருமுற்றமென்னும் இடத்தில் வந்து வணங்குகின்ற தெய்வங்கட்கெல்லாம், தம்பிரான் - தலைவரே! ஊசல் ஆடிர்; (எ - று.) (31)
32. உணராத மதலையிளங் குதலைச்சொல்லை
யுளமுருகித் தந்தைதாயுவக் குமாபோற்
றணவாமற் கற்பிப்பார் தஞ்சொற்கேட்டுத்
தத்தையுரைத் தத்தையாதரிக்குமா போற்
பணவாளரா முடிமேற்படியேழ் போற்றும்
பட்டர் திருத்தாட்கடிமைப் பட்டகாதன்
மணவாளதா சன்றன்புன் சொற்கொண்ட
மதிலரங்க மணவாளராடி ரூசல்.
(இ - ள்.) உணராத - நன்றாகப் பேசத்தெரியாத, மதலை - சிறுகுழந்தையின், இள குதலை சொல்லை - நிரம்பாத மழலைச்சொல்லை, தந்தை தாய் - (அக்குழந்தையைப் பெற்ற) தாய்தந்தையர், உளம் உருகி – மனங்கரைந்து, உவக்கும் ஆ போல் - சந்தோஷிப்பது போலவும், தணவாமல் - இடை விடாமல், கற்பிப்பார் - கற்பிப்பவர், தம் சொல் கேட்டு - தாம் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு, தத்தை உரைத்தத்தை - கிளி பேசினதை, ஆதரிக்கும் ஆ போல் - விரும்பி மகிழும் விதம்போலவும், பணம் வாள் அரா முடிமேல் - படமும் ஒளியுமுடைய ஆதிசேஷனது முடிமேலுள்ள, படி ஏழ் - எழுதீவுகளிலுள்ளாரும், போற்றும் – வணங்கித் துதிக்கின்ற, பட்டர் திருத்தாட்கு - ஸ்ரீ பராசர பட்டரது திருவடிகட்கு, அடிமைப்பட்ட - அடிமையாகிய, காதல் - பக்தியையுடைய, மணவாளதாசன் தன் - அழகிய மணவாளதாசனென்னும் அடியேனது, புல் சொல் - இழிவான சொல்லாகிய பிரபந்தங்களையும், கொண்ட - ஏற்றுக்கொண்டருளிய, மதில் அரங்கம் மணவாளர் - ஸப்தப்ராகாரங்கள் சூழ்ந்த திருவரங்கத்தி லெழுந்தருளிய அழகிய மணவாளரே! ஊசல் ஆடிர்; (எ - று)
தாம்பாடிய பிரபந்தங்களை ஸ்ரீரங்கநாதன் அங்கீகரித்தருளியதற்கு, சிறு குழந்தையின் குதலைச்சொற்களைப் பெற்றதாய் தந்தையர் கேட்டு மகிழ்தலையும், கிளியின் சொற்களைக் கற்பிப்பவர் கேட்டு உவத்தலையும் உவமை கூறினர். மணவாளதாசன் – தன்மைப்படர்க்கை. (32)
33. போதாரு நான்முகனே முதலாயுள்ள
புத்தேளிர் தொழுநாதன் புவனிக்கெல்லா
மாதார மாந்தெய்வ மானநாத
னனைத்துயிர்க்கு நாதனணி யரங்கநாதன்
சீதார விந்தமலர்த் திருவினாதன்
றிருவூசற்றிரு நாமமொரு நாலெட்டும்
வேதாசா ரியபட்டர்க் கடிமையான
வெண்மணிப் பிள்ளைப்பெருமாள் விளம்பினானே.
(இ-ள்.) போது ஆரும் நான்முகனே முதல் ஆய் உள்ள - தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவன் முதலான, புத்தேளிர் - தேவர்கள் யாவரும், தொழும் - வணங்குகின்ற, நாதன் - தலைவனும், புவனிக்கு எல்லாம் - எல்லாவுலகங்கட்கும், ஆதாரம் ஆம் தெய்வம் ஆன - ஆதாரமாகவுள்ள தெய்வமாக இருக்கின்ற, நாதன் - தலைவனும், அனைத்து உயிர்க்கும் – ஜீவ வர்க்கங்களெல்லாவற்றிற்கும், நாதன் - தலைவனும், சீத அரவிந்தம் மலர் திருவின் நாதன் - குளிர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமிக்குத் தலைவனுமான, அணி அரங்கம் நாதன் - அழகிய திருவரங்க நாதனைப்பற்றி, திருவூசல் திருநாமம் ஒரு நால் எட்டும் - திருவூசல் என்று பெயர்பெற்ற முப்பத்திரண்டு பாடல்களையும், வேத ஆசாரியபட்டர்க்கு அடிமைஆன வெள்மணிபிள்ளைப்பெருமாள் - வேதத்தில் தேர்ந்த ஆசாரியரான பட்டர்க்குச் சிஷ்யராகிய வெண்மை நிறமுள்ள மணிபோலச் சத்துவகுணம் மிகுந்த பிள்ளைப்பெருமாளையங்கார், விளம்பினான் - பாடினார்; (எ-று.)
நூலாசிரியர் தம்மைப் பிறன் போலக் கூறிய தற்சிறப்புப்பாயிரம், இது. கூரத்தாழ்வானது திருக்குமாரர்க்கு வேதாசார்யபட்டரென்று ஒரு திருநாமமுண்டெனக் கொள்ளினுமாம்.
சீரங்கநாயகருசல் முற்றும்.
அஷ்டபிரபந்தம் முற்றிற்று.
This file was last updated on 12 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)