pm logo

கோனேரியப்பவனயங்கார் பாடிய
சீரங்கநாயகியாருசல்


Srirangka nAyakiyaarUcal
by kOnErippavana aiyangkAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for assistance in the preparation of the soft copy of this work for Project Madurai.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோனேரியப்பவனயங்கார் பாடிய
சீரங்கநாயகியாருசல்.

Source:
திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார் அருளிச் செய்த அஷ்ட பிரபந்தம் திருவல்லிக்கேணி வை.மு. சடகோபராமானுஜசாரியரும், சே. கிருஷ்ணமாச்சாரியாரும், வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியரும் இயற்றிய விரிவான உரையுடன் சென்னை கணேச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. நள வருடம், விலை அணா ----------

காப்பு.
முருகூரு மகிழ்மாலை யணியுமார்பன்
      முத்தமிழன் கவித்தலைவன் முனிவர்வேந்தன்
றிருகூரு மனத்திருணீக் குதயபானு
      சீபராங் குசயோகி திருநாவீற
னருகூருந் தண்பொருநை வழுதிநாட
      னஃகமலம் பாடினா னன்னமேறி
குருகூரன் சடகோபன் காரிமாறன்
      கோகனக மலரடியின் குணங்கள்போற்றி
-------------

நூல்.
1. நீராழிநிறத் தரங்கரடி கள்வாழ
      நெடுமகுடப் பணிவாழக் கருடன்வாழப்
பேராழிசெலுத் தியசேனையர் கோன்வாழப்
      பேய்பூதன் பொய்கைமுதற் பதின்மர்வாழ
வோராழிக் கதிர்வாழத் திங்கள்வாழ
      வும்மடியார் மிகவாழ வுலகம்வாழச்
சீராழிசங்கு கதைசிலை வாள்வாழச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

2. துங்கமலர்ப் பந்தரின்கீழ்ப் பதுமராகத்
      தூணிறுத்தி வயிரவிட்டந் தொகுத்துமீதிற்
றங்கநெடுஞ் சங்கிலிவிட்ட தின்மாணிக்கத்
      தவிசுபுனைந் தலங்கரித்தவூ சன்மீதின்
மங்கலநாண் டிருவாவா ராடிரூசல்
      மதிலரங்கர் தமக்கினியா ராடிரூசல்
செங்கமல மாளிகையா ராடிரூசல்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

3. கடிமலரு மதுகரமுங் குழலிலாடக்
      கத்தூரியுடன் வேர்வு முகத்திலாட
நெடுவிழியு மணித்தோடுஞ்* செவியிலாட
      நேர்வளையுஞ் சூடகமுங் கரத்திலாட
வடமணியுங் கண்டிகையுந் தனத்திலாட
      மாகலையு மேகலையு மருங்கிலாடத்
திடமறையும் பரிபுரமும் பதத்திலாடச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.
(* ‘குழையிலாட' என்பது, பாடாந்தரம்.)

4. கலைமடந்தை வணங்கியொரு வடந்தொட்டாட்டக்
      கற்புடைய வள்ளியொரு வடந்தொட்டாட்ட
மலைமடந்தை பரிவிலொரு வடந்தொட்டாட்ட
      வானவர்கோன் மடந்தையொரு வடந்தொட்டாட்ட
வலர்மடந்தை நிலமடந்தை யுலகம்வாழ
      வருண்மடந்தை பொருண்மடந்தை யழகார்நெற்றிச்
சிலைமடந்தை திருமடந்தை யாடிரூசல்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

5. காரனைய திருவரங்க மணவாளர்க்குக்
      கண்களிப்ப மனமுருக வறிவுசோர
மூரலெழப் புளகமுறப் புயம்பூரிப்ப
      முகமலர மெய்குழைய மோகமேற
வாரமுதே பசுங்கிளியே முத்தேபொன்னே
      யன்னமே யென்னம்மே யழகின்பேறே
சீரியசிற்றிடை யணங்கே யாடிரூசல்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

6. வீறுபொய்கை பூதத்தாரிரு பான்ஞான
      விளக்கேந்த மயிலையர்கோன் வியந்துகாண
மாறன்மறைத் தமிழ்மதுரகவி நின்றேத்த
      வாழ்குலசேகரன் பாணன்கலியன் போற்ற
வாறுசமயத் திருந்தோனருகில் வாழ்த்த
      வணிபுதுவை வேதியன் பல்லாண்டுபாடத்
தேறுதொண்ட ரடிப்பொடிதா ரடியிற்சூட்டச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

7. நாதமுனி தவமாக மாறன்பாட
      னயந்தெழுத வேதனெழுத் தழிந்தவாறும்
போதனெதி ராசன்வளை யாழிமண்ணோர்
      புயத்தெழுதக் கூற்றினெ ழுத்தழிந்தவாறு
மேதமில்கூ ரத்தாழ்வான் பதக்குண்டென்றே
      யெழுதிடவா தியர்களெ ழுத்தழிந்தவாறுந்
தீதில்குணத் தடியார்கடி ரண்டுவாழ்த்தச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

8. தருக்குடனே யுமதுதிருவுளத் துக்கேற்கத்
      தங்கடங்கள் பணிவிடைகடலை மேற்கொண்டு
வருக்கமுடன் பத்துவகைக் கொத்துளோரு
      மற்றுமுள்ள பரிகரமும் வந்துசூழ
வருக்கனென முடிவிளங்க வழகுவீற
      வண்டர்கள்பூ மழைபொழிய வடியார்போற்றச்
செருக்கி விளையாடியுகந் தாடிரூசல்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

9. மின்றாவு கொடிமதில்சூழ் கூரவேந்தன்
      வேதாசாரி யனன்னை யாட ரூசல்
பின்றாத பரசமயக் குறும்பறுக்கும்
      பெரிய நம்பியுளத்துறை வாராடிரூசல்
கந்தாடைக் குலத்தில்வரு மழகோன்வாழக்
      கருணை விழிக்கடையருள்வா ராடிரூசல்
செந்தாரும் பசுந்தாரும் புடையுலாவச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

10. ஆரணஞ்சேர் வில்லிபுத்தூ ருறையூர்வாழ
      வவதரித்த நாயகியா ராடிரூசல்
பேரணிபூ ணழகுடையார் தாமேயென்னும்
      பெண்டுகடந் நாயகியா ராடிரூசல்
நாரணர்பூ ரணர்பெரிய பெருமாளெங்க
      ணம்பெருமா ணாயகியா ராடிரூசல்
தேரணியு நெடுவீதியுடை சூழ்கோயிற்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

11. கோலமந்தா நிலமுலவ வதனாலாடுங்
      கோகனகத் திருந்தாடு மன்னம்போல
மாலரங்கர் திருமேனி வண்மையாலு
      மழைமுகில்கண் டுகந்தாடு மயிலும்போல
வேலைகடைந் திடவதனி லெழுந்தபோது
      வெண்டிரைமே லசைந்தாடும் வீறுபோலச்
சீலமுடன் மாணிக்கத் தவிசிலேறிச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

12. குடமாடிச் சீராடி வெண்ணெய்க்காடிக்
      குரவைதனைப் பிணைந்தாடிக் கோளராவின்
படமாடி விளையாடு மந்நாளந்தப்
      பரமனுரத் திருந்தாடும் படியேபோல
வடமாடக் குழையாட விடைதள்ளாட
      வளையாட விளையாடி மாலையாடத்
திடமாடக் கொடியாடத் திகழுங்கோயிற்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

13. கொந்தாருங் குழலசைய வாடிரூசல்
      குலமகரக் குழையசைய வாடிரூசல்
நந்தாருங் கரமசைய வாடிரூசல்
      நல்கியநூ லிடையசைய வாடிரூசல்
சந்தாருந் தனமசைய வாடிரூசல்
      தரளமணி வடமசைய வாடிரூசல்
செந்தாளிற் சிலம்பசைய வாடிரூசல்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

14. கரியகுழலசை யுமெனவரிவண் டார்ப்பக்
      கழையணிதோ ளதிருமெனத் தொடிகளார்ப்ப
மருமலர்க்கை யலங்குமென வளைகளார்ப்ப
      வடிவமெலாம் வருந்துமென மறைகளார்ப்ப
விருமுலைகள் குலுங்குமென வடங்களார்ப்ப
      விடையொசிந் தேற்றுமென மேகலைகளார்ப்பத்
திருவடிகள் சிவக்குமெனச் சிலம்புமார்ப்பச்
      சீரங்க நாயகியா ராடிரூசல்.

15. மேவியபங்கயன் றவஞ்செய்திறைஞ் சுங்கோயில்
      வேணியரன் புராணநால்விளம் புங்கோயில்
தாவுதிரைக் காவேரிபுடை சூழ்கோயில்
      சந்திரவாவி யின்மருங்கு தழைத்தகோயில்
பாவளர்சத் தாவரண முடையகோயில்
      பணியணி சேரோங்கார மானக்கோயில்
தேவர்தொழுந் திருவரங்கம் பெரியகோயில்
      சீரங்க நாயகியா ராடிரூசல்

தாரங்கத் திருவரங்கர்க் கூசல்பாடிச்
      சாத்தினான் பேரனெனுந் தன்மையாலு
மாருங்கண்டே தெளியுமவன் சொல்பாட்டி
      னதிசயத்தை யறிவனென் னுமாசையாலும்
பாரெங்கும் புகழ்வேத வியாசபட்டர்
      பதம்பணிகோ னேரியப்பன் புன்சொல்லாகச்
சீரங்கநா யகியார்க் கொருபத்தைந்து
      திருவூசற் றிருநாமஞ் செப்பினானே.

---------------xxxx---------

This file was last updated on 12 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)