திருச்செங்கோட்டுக் குமரர் பிள்ளைத்தமிழ்
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)
tiruccengkOTTuk kumarar piLLaittamiz
(author not known)
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Mrs Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருச்செங்கோட்டுக் குமரர் பிள்ளைத்தமிழ்
(ஆசிரியர் யார் என தெரியவில்லை)
Source:
திருச்செங்கோட்டுக் குமரர் பிள்ளைத்தமிழ்
இது திருச்செங்கோடு தி. அ. முத்துசாமிக்கோனாரால்
சித்தளந்துந்தூர் மிட்டாஜமீந்தார் ஸ்ரீமான் சு. முத்துசாமிக் கவுண்டரவர்கள் விருப்பத்தின்படி
தமது விவேக திவாகரன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
குரோதன- வரு சித்திரை மாதம் 1925
----------------------------------------------
முகவுரை.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழுக்குரித்தான தொண்ணூற்றாறு பிரபந்தங்களிலொன்று. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பெண்பாற் பிள்ளைத்தமிழென இருவகை. திருச்செங்கோட்டுக் குமாரக்கடவுளைக் கூறுதலின் இது ஆண்பாற் பிள்ளைத்தமிழாம். ஆண்பாற்பிள்ளைக் கவியின் இலக்கணம் இரண்டா மாதத்திற் காப்புக் கூறுதலும், ஐந்தா மாதத்திற் செங்கீரை கூறுதலும், எட்டாமாதத்தில் தாலாட்டுதலும், ஒன்பதாமாதத்திற் சப்பாணிகொட்டுதலும், பதினொராமாதத்தில் முத்தங்கூறுதலும், பனிரண்டா மாதத்தில் வாரானை கூறுதலும், பதினெட்டாமாதத்திற் சந்திரனையழைத்த லும், இரண்டாம் ஆண்டிற் சிறுபறை கொட்டலும், மூன்றும் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும், நான்காம் ஆண்டில் சிறு தேருருட்டலுமெனப் பத்துப்பருவங்களாக அவ்வப்பருவத் தொழிலுக்குத் தகுவனவாகக் கூறுவதாம்.
காப்புப்பருவம்: - பாட்டுடைத்தலைவரைத் திருமால் முதலியோராற் காப்புப் புரிவித்தல்
செங்கீரை: - செவ்விய மதுரச்சொற்களைப் பேசும் பருவம், கீர்- சொல்.
இப்பருவத்தின் செயல், ஒருசாலே மடக்கி ஒருகாலை நீட்டி இருகைகளையும் நிலத்திலூன்றித் தலை நிமிர்ந்து முகமசைய ஆடுதல்.
தாலாட்டு: - ஓர் வகையாக நாவசைத்துப்பாடும் பாட்டு,
சப்பாணி: - இருகரங்களையும் ஒருங்கு சேர்த்துக் கொட்டுவது
முத்தம்: - முத்தங்கொள்ளுதல்.
வாரானை: - வருதலை விரும்புதல்.
அம்புலி: - சிறிய தோற்கருவி தட்டி விளையாடல்.
சிற்றில்: - மகளிர் கட்டிவிளையாடுஞ் சிறுவீட்டை அழித்தலான சிறுகுறும்பு.
சிறுதேர்: - கைத்தேர் உருட்டிவிளையாடல் ஆம்.
இந்நூல் நாமகள் துதியில் 'வீரை வரு சிவஞானவாரிதி பணிப்ப வென்பாலடைந்து’ எனக்கூறியிருப்பினும் இயற்றினார் இன்னாரென நன்குவிளங்கவில்லை. மிகுவிரைவாக அச்சிடவேண்டி நேர்ந்தமையால் அச்சுப்பிழைகளிருக்கக்கூடும். அறிஞர்கள் திருத்தி வாசிப்பார்களென வேண்டுகிறேன்.
இத்தலத்துக்கு முருகர் பிள்ளைத்தமிழ் என மற்றொரு வேறு பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தமுமிருக்கிறது. பழைய ஏடு நைந்துதொட்டால் உதிர்ந்துவிடும் நிலையுற்றுளது. யாவரே ஆயினும் இதனை அச்சிடுவித்த சித்தளந்தூர் மிட்டா ஜமீன்தார், ஸ்ரீமான் சு. முத்துசாமி கவுண்டரவர்களைப்போலத் தமிழபிமானமுற்று அச்சிடுவிப்பார்களாயின் மிகுந்த புண்ணியம் பெறுவார்கள். நல்லோர்க்குப் புகழும் புண்ணியமும் கிடைக்குமென்பதிற் சந்தேகமில்லை. குமாரக்கடவுளின் துதியாகிய இந்நூலை எழுதி அச்சிடும் இத்திருத்தொண்டை அடியேனுக் கீட்டிய நாகாசல வேலனது சீபாத கமலங்களைச் சிந்தித்து வந்திக்கின்றேன். சுபம்.
பிரதி உதவினோர்.
குமரமங்கலம் மகா - ஸ்ரீ ப. ஆறுமுகம் பிள்ளையவர்களால் திருச்செங்கோடு, வேட்டுவர் மடம் முத்தயத் தம்பிரான் குமாரன் ஏகாம்பரம் கையெழுத்துப்பிரதி என்றுள்ள பிரதி.
1. பெருமாக்கவுண்டன்பட்டி, வைத்தியம் மகா ளா- ஸ்ரீ செங்கோடப்பலவர் அவர்கள் பிரதி.
1.
குரோதன வரு சித்திரை மா) தி. அ.முத்துசாமிக் கோனார்.
4-4-25. )
--------------
திருச்செங்கோட்டுக் குமாரர் பிள்ளைத் தமிழ்.
முருகன்றுணை.
பாயிரம்.
ஆசிரிய விருத்தம்.
விநாயகர் துதி.
நீர்கொண்ட செஞ்சடைக் காட்டினிற் கட்டுபிறை
நிலவுக்குறுந் திவலைவெண்
நித்திலஞ் சொரிவதென அமுதொழுகு சீகர
நெடும்பாந்த தணுகரவிதழித்
தார்கொண்ட தோண்மிசையி னேறிநின் றதுகண்டு
தறுகணுற் றிடர்தரவேரீஇத்
தரங்கவானதிபுக் கொளிப்ப வவிர் மூரல்புரி
தந்தாவளந் துதிப்பாஞ்
சூர்கொண்ட செங்கைவே லெனநாக வல்லியின்
றொல்லிலை விடுப்பவெதிருஞ்
சோரனுடல் போழ்ந்துயிர் கவர்ந்துமெய் பனிப்புறும்
தோகைதன் றுயரகற்றிக்
கார்கொண்ட சூன்மழை கடுப்பக் கடைக்கணாற்
கருணைவெள் ளங்கொழிக்கும்
காங்கேய னைப்பணி கிரிக்கிறையை வாழ்த்துமென்
கவிநாடொறுந் தழையவே.
வார்புனற் கங்கைபணி திங்களணி யெம்பிரான்
மகுடகோ டீரத்தின்மேல்
வைத்தபொற் றாமரைச் சிற்றடித்துணைவினை
வழுத்துதமி முள்ளுமன்பன்
ஏரெழு பதச்சேறு மயிடக்க ரும்போத்தி
னிருகுளம் பெறிகுழம்பு
மெழில் கெழுமுபைந்துகின னைந்துபின் பின்சென்ற
தேய்க்குமரை முதுவனீன்ற
பார்மிசைத் தென்மொழித் தமிழ்முறை விரித்தமுனி
பரணர்முதலாம் புலமையோர்
பரவுநற் கீரனா ரருணகிரி நாதர்மொழி
பாட்டமுதமூட்டு செவியில்
சீர்பரவு செஞ்சொலின் றிச்சிறிய புன்சொலாற்
சிற்றறிவினன் சொற்றமிழ்த்
தீங்கடு வருத்தியது பூங்கடம் போங்கிவளர்
திண்புயக் குமரேசனே.
________________________
1. காப்புப் பருவம்.
திருமால்.
திருவறை செழும்பதும மார்பினிற் றேங்கலுழ்
திருத்துள வலங்கதூங்குஞ்,
செங்கண்மா லைப்புவன மெங்குளபல் லுயிர்களுஞ்
சிந்தைதளராது கருணை,
யருள்விழி பொழிந்துண் டுறங்கும் படிக்குநின்
றகிலம்பு ரக்குமிறையை,
யஞ்சனமி லைஞ்சகரு மஞ்சனவி சஞ்சலநி
ரஞ்சனனை யஞ்சலிப்பாம்,
முருகவிழ் கதம்பமஞ் சரிதுதையு மீராறு
மொய்ம்புமுறை தங்குபடையு,
முழுமதிய மாறனைய திருமுகச் சோதியு
முழுக்கருணை விழிமுனான்கும்,
பொருகய லிரண்டனைய விழியுமை யிடத்துவகை
பொங்கத் தவழ்ந்துமூரல்,
பொதிநிலவு கொப்பளிக் கும்புனிற் றின்மடப்
புதல்வற் புரக்கவென்றே. (1)
பிரணவம்.
அறுபதப் பொறியுடற் சுழல்விழி வரிச்சிறைய
வரிபிடரின் ஞிமிறுகுமுறி,
யம்போ ருகச்செழிய நாண்முகை முறுக்கவிழ்ந்
தலரப்பிலிற்று நறையுண்
டொறுமிசைத் தொழில்பயின் றாடகப் பூண்மினார்
துணைவிழி யெனக்கடுக்குந்,
தோடலர்க லாரமிசை துயிலரத் தாத்திரிச்
சூர்ப்பகைவனைப் புரக்க,
மறைமுதற் றிசைமுகக் கடவுண்மொழி யச்சுருதி
வண்மையுரை புகறியென்று,
வன்சிறைக் கூடத்து வைப்பமான் முதலியர்ம
யங்கவெள் விடையூர்திநீ,
யுறுபொரு ளுணர்த்தவென வடிகளா யவனடிக்
கோங்குதிரு வடிசூட்டியே,
ஒப்பரிய நெறிவேத னருள்செயும் பிரணவத்
தோரெழுத்துற்ற பொருளே. (2)
நாரிகணபதி.
தான தனதன தான தன தன தான தனதன தாத்தன.
தோகைமயினட மாடமழைமுகில்
சோலைதொறு முழவார்த்தெழத்
தூமெனறுமலர் கோதுமளியிசை
தோடிசுதியொடு பாட்டயர்
நாககிரிமிசை மேவியெமதிடர்
நாசமுறவொரு கோட்டடர்
நாரிகணபதி பாதமலருள
நாடிமகிழ்கொடு போற்றுதும்
பாகின்மொழிமலை மாதுகவுரியோர்
பாகமுடையபி ரார்க்கெதிர்
பாரமயின்மிசை யேறிநொடியொரு
பாதிசெல வெழுதாத்திரி
யோகையொவல மாகவரவிறை
யூறுகருணையி னாற்றழீஇ
யோசைபெறுகனி நீயென்முருகனை
யூழிமுறைமுறை காக்கவே. (3)
வேறு - பிரமன்.
கோதண்ட பாணிநெடு நாபித்தடம்பூத்த
கோகனக மலரின்வைகிக்
குலவு புவனமுமண்ட பகிரண்ட மூதண்ட
கூடமுமமைத் ததன்கண்
வேதண்ட மதமா முதற்பிபீலிகைகடை
விரிந்தொளிர் சராசரமதில்
மேவுயி ரனைத்தும் படைத்திடு மொருத்தனிரு
மென்பதத் தன்புபுரிவாந்
தாதண்டு வெட்சிப்புயா சலனை முக்கணன்
றருபனிரு நாட்டத்தனைத்
தமரவேலை யுநெடுஞ்சூத முஞ்சூர ருஞ்சைலமு
மடர்த்த செங்கைப்
போதண்டு சத்தியனை முத்தமிழ் முனிக்கருள்செய்
புங்கவனை யெங்களரசைப்
பொறிபடப் பணிகிரியின் வாமபா கத்திறைவி
புதல்வர்ப்புரக் கவென்றே. (4)
br>
தேவேந்திரன்
வேறு
தன தன தனதன தன தத்த தத்தனன.
கரைகவுழ் மதமலை யருவிக்கெ திர்த்திகல்செய்
களிறுகடவி வருககனத்த வர்க்கிறையை
வரைசிற கரியுமொர் வயிரத்த டக்கையனை
மகிழ்வினொடனு தினமனதிற் றுதித்தெழுதுங்
குரைகட லகடுகிழிய விட்டசத்தி கொடுகுலகிரி
யொடவுணர் குலமுட்கி டச்சமர்செய்
சரவண பவனை விணமார்க் கருட்கருணை
தருமழகுழவியை யினிதிற் புரக்கெனவே.(5)
கார்த்திகை மாதர்கள்
வேறு.
விண்முக டளந்தக டுழக்குஞ் செழுஞ்சாலி
விளையுங் குரற்கற்றைமா
மேருவரை சூழ்வருந் தபனனிர தத்திட்ட
விற்பசுந்தூக்க நிகராப்
பண்முக மிழற்றளி துவைத்தபைம் பொற்றாது
பாசடையின் மிசையுதிர்க்கும்
பரூஉக் கருங்கோட்ட சுரபுன்னைசெறி பணிமலைப்
பரன்மதலையைப் புரக்க
மண்முதல் விளங்குமிரு நூற்றொ டிருபானான்கு
வகைய புவனத்துயிரெலாம்
வழிவழிபயந்தினந் தெருளாத கன்னியாய் வளர்
சரவணப் பொய்கையின்
கண்முகைய விழ்க்குஞ் சரோருகப்பா சிலைக்கண்
பயந்திடவறுவர் போய்க்
காலை யினெடுத்துமுலை யமுதருத் திப்பொங்கு
கருணைமொழியனை களிப்பே. (6)
நாமகள்.
மறிதிரைக் கார்க்கட லுடுத்தபார் கண்டமுது
மான்மகற்குறு தலைவியாய்
வாலிதழ்ச் சததளத் தம்புயத் திடைவந்து
வண்கலை யனைத்துமோர்ந்து
பறிதலைக் கண்ட கர்த னாவகன் றரனடி
பழிச்சேத்து வதிந்து
பாகைவரு சிவஞான வாரிதி பணிப்பவென்
பாலனதறிவு றீஇச்
செறிதமிழ்க் கலைபல வுணர்த்திவாழ் வித்துலவு
செந்நாமடந்தை பதுமச்
சீரடி யுளங்கொண்டு முப்பொழுது மேத்துதுதுஞ்
செங்கோட்டு வளர்குமரனைப்
பொறிமயிற் பரியூர் விசாகனைக் கந்தனைப்
புத்தேள்வ லாரிபரவும்,
புதுமலர்ப் பதயுகள வுரககிரி முருகனைப்
புனிதனைக் காக்கவென்றே. (7)
அழகு நாச்சியார்.
வேறு
தனதன தானன தனதந்த தத்தன.
புகலிநீயலதிலைமற்று னக்கெதிர்புகலவு
நாவிலையென வுட்கிமட்கிடு
பொழுதினில்வரலுளை யரியுற்றிகைத்திகல்
புரிகுவன்யானென யெழுமுற்கதத்துட
னகல்புவிவானுல கடையச்செருச்செயு
மரர்முனோடி வென்னிடமுத்தலைக்கழு
வடல்பயில்தாருகன் மருமத்தழுத்தியவழகிய
நாயகியடியைப் பழிச்சுதும்
முகில்புரை மேனியள் வெளெயிற்றரக்கிதன்
முலையிணைநாசியு மரியச்சினத்தொடு
முனைகரதூடணன டன்முச்சிரத்தவன்
முடியறவோர்கணை முடுகித்தசச்சிர
னகலமுநீடனுசனுமிக்க புத்திர
ரனைவருமாருயி ருகவெற்றிட்டபண்
ணவர்பணிமாதவனரிசக் கரக்கரனழகிய
கேசவன் மருகற்புரக்கவே. (8)
சத்த மாதர்கள் முதலியோர்
வேறு.
கலைவாணி வாராகி கௌமாரி யயிராணி
கண்கண்மூன் றுடைமகேசி
காத்தளிக் கின்றவை ணவியுடன் சாமுண்டி
கழறுமெழு மாதரோடு
நிலமேவு நால்வகைய முப்பத்துமூ வர்கணெடும்
பொன்னிலக் கடவுளோர்
நீர்மலி சரோருகத் தாண்மலர்க ளன்பினொடு
நெஞ்சமகலா துவைப்பாங்
கொலைமேவு கடரக் கடாங்கவிழ்த் திழியுங்
குறுங்கவுட் செறிகிம்புரிக்
கூர்ங்கோட்டு வெண்ணிறக் கோக்களி றுவந்தீன்ற
கூந்தலம் பிடியையம்பொன்
மலைமேவு திண்புயத் தகலம்பு ணர்ந்தசிறு
மதலைப்ப சும்குதலைவாய்
மதகளிற் றுக்கிளைய மழகளிற் றைத்தினம்
மகிழ்ந்தினிது காக்கவென்றே. (9)
அஷ்டவயிரவர்.
தாற்றுக்கு லைக்குதலி நெட்டிலைச் சுருணெடுந்
தாழைப்பசுங் குரும்பை
தவழ்குறுங் காற்பைஞ் சிறைச்செழுந்து திர்முகச்
சாறுவிண் மிசையெடுத்த
கீற்றுப்பசுக் காம்பி னச்சுக்குழற் பொருங்
கிளர்குலைச் செம்பழுக்காய்
கேழொளிய வுண்டைசெய் தமைத்ததொக் கும்பணக்
கிரிக்குமர னைப்புரக்க
ஆற்றுச் செழுஞ்சடை யொருத்தன் கடைக்கா
லகண்டபகி ரண்டாண்டமீ
தனைத்துயிரு முற்றிடநி னைக்குநாண் முத்தலைய
வைநுதிச் சூலமேந்தி
வேற்றுப் பருத்தநு வெடுத்துநிரு வாணமாய்
வேதன் கபாலங்கொடு
வெண்பொடி திமிர்ந்தழ னடக்குந் துணைச்சரண்
வியக்கும்வ யிரவரெண்மரே. (10)
தெய்வயானை.
வேறு.
வாரும் வடமுந்து தைந்தசைய வளருங் குரும்பைக் களபமுலை
வனசமலர் மண்டபமிருந்த வனிதையுறையு நறைத்துளபத்
தாரும ணியும்பிறழ் மருமத்தாமோ தரன்றன் மருகோனைத் தரைவெண்மணி
மால்வரைவரு சேந்தனைக் கந்தனைக் குகனைக்காக்கப்
பாரும் விசும்பும் படைத்தளித்துப் பயின்றாண் டளிக்கு மொருமூவர்
பரிவினுதவும் பெருவரமும் பகையுநிசிதர் குழுவுமறச்
சீருஞ் சிறப்பு மகபதிக்குச் செருக்கா னயந்து திருமணஞ்செய்,
சிறுகட்டளைக் கரிணிதருஞ் சிறுமிபெருங் கற்புடைமையதே. (11)
வள்ளி நாயகி.
அழற்கட் பொருந்து நுதற்பெருமா ளசலமயிலுக் கொருபாக
மளித்தற் பொருட்டாற் கயிலைபிரிந் தணிகூர்கச்சிப் பதிநண்ணிப்
புழற்கட் டிறந்து பணிவரையிற் போதென்றருளச் சிவையவணம்
புகுமுற்பு குந்துபரன் மலர்த்தாட் பூசைபுரிவோன் றனைக்காக்கக்
குழற்கட் டுவர்ச்செவ் வாய்மடுத்துக் குழக்கன்றினங்கா லிபநிரையு
குழுமிக்குழுமிச் செவிமடுப்பக் குறிக்குஞ் சாதாரியை மதலை
நிழற்கட் சிறந்தோர் பதங்குனித்தன்னிலைநின் றிசைப்போன் றிருவுதர
நீத்துக்குறவர் தழைக்குரம்பை நிலைப்போ டிருமங்கல நாணே. (12)
வேலாயுதம்.
கடியார் நனைவிண் டொழுகுறும்பொற்
கடவுண்மத லைச்சடைப் பெருமான்
கவுரிக்கொ ருபாகங் கொடுப்பக்
கலந்தீருரு வோருரு வாய்நின்
றடியார் பரவு மபிராமத்
தருள்கூர்ந் தமரும் பிரமநகத்
தண்ணற் குமரப் பெருமாளை
யலர்ந்தோர் துணையைத் தனிகாக்கப்
படியா தெழுந்த மீச்சடையும்
பார்கீண் டிழிந்த கீழிணரும்
படித்தப் படிவக் கோக்கவுணப்
பகையும் பரவைக் குலமுழுதும்
விடியா விருண்மாயைக் கிரியும்
விழித்து துகளாம்படி யுமையாள்
விதித்துத் தனது திருப்பெயரால்
விதித்துத் தருஞ்செவ் வேற்படையே. (13)
தகர் வாகனம்.
வேறு
காமர்வெண் டிங்களங் குழவிதவழ்
கொடுமுடிக் கதிர்மணிச் சிகரகூடக்
கணபணக் கட்செவிக் கார்வரைக்
கிறைவனைக் கந்தனைக் குமரவேளைத்
தாமரைக் கண்ணனின் றன்புபுரி
பலிகொண்ட சாம்பவி யிடப்பாகனார்
சார்வுறும் விண்டுகிரிவளர் கார்த்திகேயனைச்
சண்முகனை யினிது காக்கப்
பூமகன் வழிவந்த நாரதப்பேரிருடி
பொருவருங் கிருது வேட்பப்
பொற்பினுயர் பொருவலிய வருமறைத்
திருவுருப் பொலியவங் கழலுதித்துக்
கோமதப்பேரருவி வெள்ளம் பரந்திழி
குறுங் கவைக்காற் றழற்கட்
கூற்றாயிரங்குடி யிருந்தனைய திரிபுரிக்
கோட்டுவெண் டகரின் வலனே. (14)
எழுபெயர்ப் பெரும்பதி.
வேறு.
அண்ணற்படிவப் பசுநிறத்த வம்பொற்சிமய மடவரல்சேப்
பமைத்துப்பணைத்த முதுசூற்கொண் டடிபாரித்த களபமுலைக்
கண்ணுய்த்தரு டீம்பால்பருகிக் காத்துமுரத்துந் தோண்மீதுங்
களிக்குமொரு செஞ்சுடர்மணியைக் கதிர்வேன்முருகன் றனைக்காக்க
விண்ணத்துயரும் பிரமகிரி விண்டுவரைதுற் காசலங்கார்
விடங்கூருரகப் பெருநாகம் விபுதர் பணியேரகங்கோதை
மண்ணிற்றமிழ் மூவருமொழியுங் கொடிமாடச் செங்குன்றூராய்
வழங்கித்தொழுவோர் பழயவினையை மாற்றுமெழுபேர்ப் பெரும்பதியே. (15)
மலை காவலர்.
தனனா தனனா தனன தனனா தனனா தனனா தனா
அகல்வா னளவாய் நிவர்தா ழையினோ
டலர்கே சரமீதெழா
வடர்சோ லையினூ டுலவோர் சிறுகா
லணிவீதியின் வாய்புகா
மகடாட வர்மோ கமொடே மகிழ்கூர்
மணநாடொறு மாறலா
வளர்கோ தையுளான் முருகோ னுறைமால்
வரைகாவல ராயினோர்
புகல்நீள் கலிநாள் யவனோ ருருவே
புனைடாதக ராயினோர்
புவிமீ தரன்மால் பதிசேரவுமோர் பொடியா
யடுவே லைவாய்
மகதே வர்மகா பதியீதழியா வருபோ
துயிர் போயினார்
மகவா னரசோ டிகலாவுலகாள் மலைகா
வலர் மூவரே. (16)
காப்புப் பருவம் முற்றிற்று.
_________________________
2. செங்கீரைப் பருவம்.
வேறு.
மைக்குன் றிடைச்செக்கர் வான்பரந் ததனுழை
வயங்கிய சுடர்க்கதிரெனா
வான்றிருவு ருச்சரோ ருகமார்ப கத்தின்மா
மணிமாதவக் கடவுளுங்
கைக்குஞ் சரத்துரி புனைந்துவரி யுழுவையதழ்
கஞ்சுகி யணிந்தமதலைக்
கடவுளுந் தனியுவப் பக்கருணை வெள்ளமிரு
கட்கடை பொழிந்தொழுகவெற்
பொக்கும் புயங்குலுங் கத்தாளு தைந்துவயி
றெக்கியிருகர முட்டியுற்
றொளிமிகுங் கந்தர நிமிர்த்திதழ் குவித்தம்மை
யுடனொக்க வுலகுய்யவெண்
டிக்கும் பரந்திசை விளங்கமணி வாய்விண்டு
செங்கீரை யாடியருளே
செந்திருவு வந்தபணி மந்தரம மர்ந்தகுக
செங்கீரை யாடியருளே. (1)
வஞ்சப் பெரும்பிணிக் குறுமருந்தே யம்மருந்து
வந்துதவு குணமே
வண்குணக் குரவர்புரி தவமே தவத்தவர்கை
வருபெரும் பேறேயருட்
டுஞ்சுற்ற வப்பேறளிக் குமொரு காட்சியே
சோர்விலக்காட்சி யொளியே
துவக்கரும் பேரொளியி னுருவமே யருவமே
சொற்குரிய வுருவருவமே
கஞ்சப் பொகுட்டலர்த் திசைமுகத் தருமறைக்
கடவுணவில் வடமொழியெலாங்
காகத்தின் மொழியெனக் குயிலிசைய வினியமொழி
சுருதிமூவரு முணர்கலாச்
செஞ்சொற் றமிழ்க்குறு முனிக்குணர்த் தியவறிஞ
செங்கீரை யாடியருளே
செந்திரு வுவந்தபணி மந்தர மமர்ந்தகுக
செங்கீரை யாடியருளே (2)
குடகுவ டிடித்துத் தளிர்த்த சந்தனவனங்
குவியத்துமித் தொடித்துச்
குறும்பலவின் முட்குடக் கனியுடைந் துயர்வரைக்
குறவர்குடில் சூறையாடிப்
படர்கொலை யிபக்கோ டுகுத்தவெண் டரளமும்
பணைவெடித் துமிழ்முத்தமும்
பைப்பணச் சுடிகைப் படப்பாந்த ளீன்றமணி
பைஞ்சிறை மயிற்பீலியு
மடையவும் வரன்றித் தழைக்குடில் சிதைத்துமழை
யருவிவெள் ளந்திரட்டி
யயலிரு கரைக்குரம் பழியப் பெருக்கெடுத்
தாறலைத்தடவி சாய்த்துத்
திடப்பட வரைக்குவ டுளக்குபொன் னித்துறைவ
செங்கீரை யாடியருளே
செந்திரு வுவந்தபணி மந்தரம மர்ந்தகுக
செங்கீரை யாடியருளே (3)
குறுந்தாட் குடச்செருத் தற்றிருகு புரிதுணைக்
கோட்டுக்கருங் கவரிவாய்
குதட்டுஞ் செழுந்தா மரைப்பொருட் டுகுகின்ற
குளிர்முத்து நுணுகிடைபொறா
திறுந்தாழ் குழற்சுமை முலைச்சுமை மிகப்பார
மென்றுநூ புரமிசை
விளமழ வனப்பேடை யெனநனி நடந்துசெலு
மேந்திழை மினார்களணியப்
பெறுந்தாழ் வடத்தரள மும்புடவி யுடுவிற்
பிறங்கமல நறவுபாய்ந்து
பெய்வளைக் கைக்கடைசி மார்கடப் பருவம்
பிறந்துவிளை செஞ்சொலியின்
செறுதாள ரிந்துபோ ரிடுமே ரகத்தரசு
செங்கீரை யாடியருளே
செந்திருவு வந்தபணி மந்தரம மர்ந்தகுக
செங்கீரை யாடியருளே. (4)
துத்திப்பை நாகப்பணச் சுடிகை யிற்கதிர்ச்
சுடர்மணித் தொட்டிறுயிலும்
துயிலுணர்ந் திருதாளு தைந்தளவி னன்னையுமை
துகில்வளைக்கர மொதுக்கிப்
பத்தித்து வர்க்குமுத வாய்மலர்ந் தேனெனப்
பங்கயானன நோக்கிநீ
பசியாகி நின்பெரு விரற்சுவைத் தழுதுமெய்
பதைப்பச் சிரித்திதழ்குவித்
தத்தத் தெடுத்துக் குடங்கையில ணைத்துமுலை
யமுதமுன்பீர் போக்கிமற்
றருத்திக் களத்திடைய ழுக்குத்து டைத்துமீண்
டணையாடை மீப்படுத்தச்
சித்தக்க ளிப்புடன் விளையாடு சிறுமதலை
செங்கீரை யாடியருளே
செந்திருவு வந்தபணி மந்தர மமர்ந்தகுக
செங்கீரை யாடியருளே (5)
வேறு.
அறுகாற் சுரும்பாற் குடைந்துமுகை யவிழ்க்குஞ் சடைப்பா சடைக்கமலத்
தலர்வாய் பிலிற்றுஞ் செழுந்தேற லகல்வானிடுவிற் கொருகணைவாய்த்
துறுகால் கிளைத்துவளர் கணையின் றூற்றிற் பரந்து பசும்புனிறை
துணைத்தா ளுழுநர் குயந்தீட்டுஞ் சுரிசங் கிளத்து வரம்புதத்தி
மறுகா நடவுந டுஞ்சேற்று வயலிற் புகுந்துமுடி புனைந்து
வழிந்து பெருங்கால் வழிமடுப்ப மலர்த்தண் டலையின றைமுகந்து
சிறுகா னடக்குந் தமிழ்க்கோதைச் சேயே செங்கோ செங்கீரை
தேவர்க் கமரா பதியளித்த தேவே செங்கோ செங்கீரை. (6)
வார்க்குங் குமக்கோட்டிள முலைக்கு மலர்ப்பூம் பிணையற் கருங்குழற்கு
மருங்குறு வண்டு நுடங்கிடவே மழவோ திமம்பி னடைபயில
ஆர்க்குஞ் சிலம்பு சிலம்பமணி யணிமே கலையின் மணியலம்ப
வசைந்து சிறுகாற் பொசிபொலங் கொம்பன்னார் பெருகந டைபெயரல்
போர்க்கின் றெழுதற் கிருஞ்சிலைவேள் புறப்பா டெனமுன்றூ துணர்த்தல்
போலுமறுகாற் கருஞ்சுரும்பர் புரிபாண் மடவா ரியற்றிசைநேர்
சேர்க்குந் தமிழ்க் கோதைப்பதி வாழ்சிறுவா செங்கோ செங்கீரை
தேவர்க் கமரா பதியளித்த தேவே செங்கோ செங்கீரை (7)
வேறு.
விரிக்குங் கலபப்பைந் தோகையின்மணி மிடறுபழுத்தனைய
மிளிர்பாசொளி மரகதமக ரக்குழை மென்காதூதாட
நெரிக்குஞ் சிறுகுஞ்சியி னணிசுட்டியி னெட்டிதழைந்தாட
நிலவுமிழ் மதிமுகமண் டலமோகையி னிகழ்புன்னகையாட
வரிச்செங் கமலவிழித் துணைகருணை வழிந்துபெருக்காட
மார்பிடை தவழுமதா ணியோடங்கத வாகுவசைந்தாட
அரிக்கிண் கிணியரை ஞாணொலியாடிட வாடுகசெங்கீரை
பாரண நூல்பயி லேரகநாயக வாடுகசெங்கீரை (8)
பொங்கர வத்தொளி பூத்தபணாமணி புதுமழ வெயிலுறழப்
பொதியூ னொடுதவழ் சுரிமுகவால்வளை புணர்முதிர் சூலுளையா,
வங்கணெ டும்புவி யீன்றிடுவெண்டா ளத்தொளி நிலவுமிழ,
வரையொர் பதத்தெழு பரிதியுமதியு மகன்றுயர் தண்டலையிற்,
றங்கிருள் சீப்பநறும் புனல்வாவிச் சலசங்குவ ளைமுகை,
தனியவிழ்தரவு ளயிர்த்திட மால்வரை தலைய புதுப்புனனீர்,
அங்கரை மோதுபொன் னித்தண்டுறை யினனாடுக செங்கீரை,
யாரண நூல்பயி லோகநாயக வாடுக செங்கீரை (9)
கண்டன் முடித்தலை தருமுண் மருங்கிதழ் கமலமலர்க்கிழவற்
கரிகூறியகொடு முனிவொட கன்றுகனற் கிரிவப்பெருமான்
துண்ட மதிப்பிளை வண்டுழுகொன்றைத் தொடர்வெளி ணர்ப்புன்னை
தொக்குநெ ருங்கிய செஞ்சடையூ டுதுளும் பியலம்பு துறை
மண்டுதி ரைப்புனன் மந்தாகினிநதி வந்தவடித் துணையம்
மாவெலி முன்றிலிரந்து நடந்து வளர்ந்தநெ டும்படிவத்
தண்டம லர்ந்திகல் கொண்டல்வணன்மரு காடுகசெங்கீரை
யாரண நூல்பயி லோகநாயக வாடுக செங்கீரை (10)
செங்கீரைப்பருவ முற்றும்.
ஆகச் செய்யுள் 28
-----------------------------------
3. தாலப் பருவம்.
வேறு.
வெளிவான் றடவும்ப சுங்கமுகின்
மிடறுகிழிக் குஞ்செ ழும்பாளை
மேருவலஞ்சூ ழுறுங்கதிர்கால் விகர்த்தன்
பசுங்கொய் யுளைப் புரவிக்
கொளிர்சா மரையின்புடை யிரட்டி
யெழுவெண் மதிபோழ்ந் துடைந்தமுத
மொழுகல் பொரத்தா ழையின்குரும்பை
யுடைத்துச் சிறுபுன் குரங்கயில
அளியாண் மிழற்றுந் தண்டலையூ
டலர்வா வியின்மீன் றூண்டிலறுத்
தகல்வான் வெடிபோன் றிழிமறுகி
னரம்பைக் குலைப்பைங் கனியூழ்த்த
தெளிதேன லவனயில் கோதைச்
செவ்வேள் தாலோ தாலேலோ
செங்கோட் டிறைவா மங்கையுமை
சிறுவா தாலோ தாலேலோ. (1)
பண்டைப் பழநான் மறைநவிற்றும்
பதியின் பசுபாச முமாக்கி
பண்பாந் தளின்மோட் டிருஞ்சூட்டுப்
பரிக்கும் புவனமனைத் தினுளுங்
கொண்டெப் படிமுன் றொடர்பாசக்
குறிப்பின் வழிபக்குவ ராகிக்
குணமு நிறமும் பலவழியாய்க்
கூறுஞ்சமயர் தமின் மயங்கக்
கண்டித் தருமாமறைக் கிழவன்
கடிபுக்கிட வைத்தெவ ருளத்துங்
கருதற்கரிய பொருட்ப ணிப்பூட்
கடவுட் குரைப்பத் திருவுருவங்
கொண்டப் படிவந் தெனையாண்ட
குழகா தாலோ தாலேலோ
கோதைப்ப திக்கும்பாங் கிரிக்குங்
கோவே தாலோ தாலேலோ (2)
நறவுகமழ் முட்டாட் கமல
நாட்போ துகுத்த பசுந்தேற
னாரத்தடத் தினுவட் டெடுத்து
நறைக்கான டவுவளர்த் தயலிற்
புறவுபாந் தசடைப் பழுத்த
புறமுட் கனியூழ்த் தழிகடிநீர்
புணர்ந்தாற் றெடுக்கும் பெரியாறு
புடையிற் கருங்காற் கழைசாடிச்
சுறவு முகந்து வாய்மடுத்துச்
சுவைத்துண் டகத்துக்களி பெருக்கிச்
சுரிச்சங் குடைத்துப் புதுப்புனனீர்
துறைசேர் பொன்னிக் கலவமலைக்
குறவரயி னீர்நறை கெழுமு
கோதைப் பதியாய் தாலேலோ
கொடி மாடச்செங் குன் றூரா
குமாரா தாலோ தாலேலோ. (3)
புழைமாறடக் கைக்கறை யடிக்கும்
புரிக்கோட் டயிராபதப் பாகன்
புரிபேரர சுநெடும் பதியும்
பொலிவு மிழந்து கடிபுகுந்த
முழைவாய் பொருவுஞ் சிறைக்கூட
மூரிக்கத வந்தாட் டிறந்து
முன்னைப் பதியும் பேரரசு
முடியுங்கொ டுப்பவ வன்பணிவுற்
றிழைபூண்டு வள்குங்குமச் செழுஞ்சே
றெக்கரிடு பொற்கலச முலை
யேலக்குழற் பூம்பிடியை நல்க
வியைந்த மணங்கூர் குழகவளந்
தழைபூந்து றைநாட்டவர் தொழும்பொற்
றாளாய் தாலோ தாலேலோ
சற்பகிரி யாயற்ப விடைத்
தையன் மதலாய் தாலேலோ. (4)
அலர்பூந் துணர்க்கற் பகநாட்டிற்
கரசு புரியுஞ் சதமகத்தோ
னவுணர் வலத்தா லீடழிவுற்
றம்பொற் கிரியைத்த னிக்குனித்த
சிலையான் கயிலைய டைந்திரப்பச்
செங்கைப் பரசோனிந் தியத்தைத்
தேவர்க் கிறைவன் காத்தளிப்பச்
செழுமாத வர்பன்னி யர்க்குதவ
நிலையா வகழ்நீர்ச் சரவணத்தி
னேர்ந்து பயந்து தமினகல
நிமலை யெடுத்துமு லையருத்தி
நிவர்தா ளுடறைவர வளர்ந்து
தலையா றிருமுவி ரட்டியுறுந்
தடந்தோண் முதலே தாலேலோ
சங்கத்த மிழ்தேரி யற்கோதைதக்
தலைவா தாலோ தாலேலோ. (5)
வேறு
வண்டலி ழைத்திடு தண்டுறை யிற்புனல் வழியிற்சுழியிற்றே
மாநிழலிற் கமுகாடவியிற் குழன்மான் மதகிற்கயலே
தெண்டிரை யெற்றிவ ழிந்தபுலிற்பொலி செஞ்சாலிச் சிவையிற்
றேமலிவாசப் பூமலிவாவித் தின்கரையிற் றரையிற்
பண்டெரி வண்டுகளுண் டுதிரண்டெ ழுபைம்போ திற்றாதிற்
பதுமத்தலரிற் சினைமுற்று முடப்பணிலக் குழுவேறி
தண்டா ளஞ்சொரியும் பொன்னிநாடா தாலோ தாலேலோ
சற்பகிரிக்கும ரப்பெருமாளே தாலோ தாலேலோ. (6)
சுடர்மணி நூன்முறை யுணரும்வ ளஞ்சியர்
தொல்குடியிற் றோன்றிச்
சொற்றமிழ் தேர்வுறு பொருணிலை வழுவத்
தொல்வழு தியர்கோமா
னுடைய பிரான்கோ யிற்படி வாயிலி
னொருதிரு முறையுய்ப்ப
வழையணி செங்கைய னன்பினைந் திணையென்
றோதியது ணர்வரிதாய்ப்
படர்தமி ழுணர்சங் கத்துறை பாணர்மு
தற்புலவோர் வினவப்
பரனரு ளாலுரை பகர்புல வாதண்
பாசடை நளினமலர்த்
தடமலி கோதைப் பதிவளர் முருகா
தாலோ தாலேலோ,
சற்பகி ரிக்கும ரப்பெரு மாளே
தாலோ தாலேலோ (7)
குரவ முதிர்ந்த பசுந்தண் டலையின் குளிர்நிழன் மயிலாடக்
குழைதளி ரீன்றவ முட்பல ஆழ்த்தொளிர் குடமுட் கனிபீறி
கரிய முகத்த முசுக்கலை சூலிள மந்திகரத் துதவக்
கண்ணுறி ளம்பறழ் சென்றுகை பற்றிக் கடிதுபரித் துணவும்
பரிவி னொடக்கடு வன்பொலி பொற்களை பற்றியெடுத் துதவப்
பானிற வெகினப் பேடைசே வலுமெதிர் பார்த்துளு வந்துநகத்
தரணி பணிந்தெழு கோதைப் பதியாய் தாலோ தாலேலோ
சற்பகி ரிக்கும ரப்பெரு மாளே தாலோ தாலேலோ (8)
வேறு.
குரைதிரை புரட்டிநறு முகைகரை படுத்துமொரு
குளிர்சரவணப் பொய்கையி னோர்கூலங்,
குலவரசு குத்தவிலை தரைபடிவுறிற் பறவை
குடைபுன லறிற்கயலதா மோர்நாட்
பரவொரிலை மட்பகுதி யறல் பகுதியுற்றவது
பறவையுட னுற்றவட லொர்வேறு
பறவை வெளிபற்றமறு கயல்புன லிழுக்கவது
ளயிர்கொடுறு நிட்டைகெட மாமூக
மருளினொ டெடுத்துமலை முழையினிட வச்சமொடு,
வரைபக வெடுத்தவயில் வேல்பாடி
வடிதமிழு ரைத்தமுது புலவனைய ளித்துரிய
வரமுமுதவிச் சொன்மொழி தாவாது
தரையினடி யர்க்குதவி யருண்மடை யுவட்டியுயர்
தழைபணி கிரிக்கிறைவ தாலேலோ
தலையருவி வெற்பினுயர் குடுமியை மொடித்தவனி
தவழ்வரு பொனித்துறைவ தாலேலோ (9)
குளிர்நிழல் பரப்பு பொழி னறுமலர்ம துத்துளிகொள்
குறுமுகை வெடித்தபுனை நீடாது
கொடிபடு நுசுப்புவறி திறுமென வடிக்கடிமெய்
குலைபரி புரத்தினொ லிநேர்கூறக்
களிகொடளி படகுமிறு மலர்ததைய நெய்த்தகுழல்
கருமுகிலெ னப்பசிய வார்தோகைக்
களிமயின டிப்பவிழ வணிதெரு நடித்துலவு
கயல்விழி மடக்கொடி நல்லார்பூசு
பளிதநறை துற்றியெழு முறைமுறைய ரைத்தொளிறு
பசியநிற முற்றுசுண மேமானப்
பணைகளை பறிக்குமன நடைபயி லுழத்தியர்கை
படர்கவடு விட்டுவளர் தேமாவின்
தளிரெதிர் சிவத்தொளிரு முருகசயி லத்தமுது
தமிழுரை விரித்தகுக தாலேலோ
தலையருவி வெற்பினுயர் குடுமியை யொடித்தவனி
தவழ்வரு பொன்னித்துறைவ தாலேலோ (10)
தாலப்பருவ முற்றிற்று.
ஆகப்பருவம் 3-க்குச் செய்யுள் 36.
______________________________
4. சப்பாணிப் பருவம்.
வேறு.
வரிச்சரி முகக்குடக் கன்பணில முதிர்சூன்
மலிந்து வயிறுளைய வோடை
வளர்குளிர் வளைப்புகக் கமடமள் ளற்புக
வளைந்து செஞ்சாலி படியப்
பருத்தக் கலிக்குலையி னேகவக் கனிவிழப்
பலா முட்புறக் கடக்காய்ப்
பசுங்கனியு டைந்துதேன் கொப்பளிப் பச்செம்
பழுக்காய்க் குறுங் குடும்பு
தெருக்குற வுழுக்கடைஞா லம்விடக் கடைசியர்
தெரிந்தச் சமுற்ற கலநீ
ணெடுவரா லுகளுந் தடம்பணை வெளிடையற
நெருங் குறப்பார்ப் பொடன்னந்
தரிக்குகளி னத்தடஞ் சூழ்தமிழ்க் கோதையாய்
சப்பாணி கொட்டி யருளே,
சயிலமக ளுக்குமந் தாகினிக்குஞ் சிறுவ
சப்பாணி கொட்டி யருளே. (1)
பொருமாற டக்கரிக டாங்கவிழ்த் தனமழைப்
பொங்கருவி தூங்குகுடுமிப்
பொன்னம் பொலங்குவட் டயர்குறவர் வள்ளிப்
புதுக்கிழங்க கழவேனற்
றருமாவெ னப்பழய முதுகிழங் ககழ்கின்ற
சாரலிற் புண்டரீகர்
தவழ்பறழ்க் கின்னமுத முலையருத் திப்புதர்த்
தனித்துயா றத்தேம்பழுத்
தொருமாப ணைப்பூவு மொருகவட் டுறுவடுவு
மோர்சாகை யிற்காயுமற்
றோர்கனியு மாயம்பர் நாட்டுயர் தருந்தருவி
னுதவியாணர்க் குமரிதாய்த்
தருமாவிளக் குசெங்கோ டாளுமொரு மதலை
சப்பாணி கொட்டியருளே,
சயிலமக ளுக்குமந் தாகினிக் குந்தலைவ
சப்பாணிகொட்டியருளே. (2)
முதுமறைத் திசைமுகப் பதுமபீடி கையின்மா
முனிவரனுதித்த செங்கேழ்
முளரிப்பொ குட்டுந்தி யந்தடம் பூத்துயர்
முராரிமகி டாரிநாகம்
விதிமுறை யியற்றுபலி கொண்டுதனை யரையுதவி
மிளிர்வந்தியா குன்றமும்
மிகுகுரு குலத்தைவர் வதிகுன்ற முங்கூனன்
மென்கிடை பிலத்துவாரம்
நதிதருஞ் சாரறிக்கெண் ணாயிரஞ் சுனைவயங்
குழியுமெந்தை திருமெய்
வழிவரைஞ் சோதியெதிர் கூவமுங் கேணியும்
வாவியும ருங்குசூழ்ந்து
தைவரும் நெடும்பாந் தளங்கிரிய மர்ந்தகுக
சப்பாணி கொட்டியருளே
சமிலமக ளுக்குமந் தாகினிக்குந் தலைவ
சப்பாணி கொட்டியருளே. (3)
குறுநடைப் புறவினுக் குறுசீரைபுக் கவக்கொழிய
கோமகன் பார்க்கொடுங்
கோல்களைந் தரியசெங் கோன்முறை நடாத்தக்
குறுங்கவைக் காற்கரும்போத்
துறுகுளம் பெறிசே தகவாறு திக்கலவை
யுழவன்பதத் துணைச்சே
றுனதுபரி வட்டநனை யக்கண்டி தென்கொலென்
றுள்ளநீ பசரீரியாய்
மறுவறு குணத்தன்முன் வருநெறி யுரைப்பவம்
மன்னன்வே ளாண்டலைவனார்
வன்கலிக டிந்துதிரு வுதவவருள் கூர்முருக
வானிறக்கூர் மருப்புத்
தறுகண் மால்யானை வளரேரகத் திறைவனே
சப்பாணி கொட்டியருளே,
சயிலமக ளுக்குமந் தாகினிக் குஞ்சிறு
சப்பாணி கொட்டியருளே. (4)
கடவுட்கொ ழுந்தாழை பாளைவிட் டீன்றபைங்
காய்க்கு லைமுறிந்து சிதறக்
கவட்டுக் குறும்பலா வூழ்த்தமுட் கூன்குடக்
கனியுடைந் திடவா ழையின்
படுபொற் கனித்தாறு திர்ந்துவீ ழக்கரும்
பச்சிளங் கன்னல் வேலிப்
படப்பை கீழ்படியத் தடத்துமீன் றூண்டிற்
பறித்துவெடி போய்மீண் டுசென்
றடைநெற் கதிர்ப்போர் துதைத்தயற் சாலிவய
வள்ளற் படுத்தி யுகளித்
தாற்றிற் படிந்துபெரு நீத்தத்தி னிருகரை
யலைத்துவ ருபொன் னிநாட
தடவச்சி னைச்சூத வனமருவு குமரேச
சப்பாணிகொட் டியருளே,
சயிலமக ளுக்குமந் தாகினிக்குந் தலைவ
சப்பாணிகொட்டி யருளே (5)
வேறு.
மண்டியகார் புவிகண்ட வனீடுரு
வங்கொடு வேலைமுநீர்
வந்துபடிந் தறலுண்டுல குண்டவன்
வண்கொரு பங்கோடுந்
தண்டமெழுந் துசெயுந் தருமந்தவ
மம்புவியுய்ந் திடநின்
றதிரமுழக் கிவிழிந்து நெடுங்குள
னாறொடு கேணிதடா
மெண்டிசை யெங்குநிரம்பி யிருங்கரை
பொங்கிநெ டும்புனல்பெய்
திம்பருமும் பருமெம்பரு நன்குசிறந்
திடவின்பு தழீஇக்
கொண்டலு லாவியதண் டலையோக
கொட்டுக சப்பாணி
குரவமணத் திடுமரவ கிரிக்கிறை
கொட்டுக சப்பாணி (6)
மங்குறிரண் டுநெருங்கி யிருண்வெ
ளர்த்துநெ ரித்தகுழன்
மண்டமறைந் துவகிர்ந்து விளஞ்சசி
வாணுதல் வானின்முழுத்
திங்களெ ழுந்துவிளங் கியவதனச்
செந்துவர் வாய்த்தரளச்
சிறுமுறுவற் குமிழ்நாசிய ணைப்பொரு
செய்யதொடிப் பைந்தோட்
பங்கயவங் கைமடந்தையர் பண்ணை
பரந்து புனற்படியும்
பைங்களபக் கலவைச்சே தகமொடு
பாட்டாளியின் செங்காற்
குங்கும நாலுதடஞ் சுனையோக
கொட்டுக சப்பாணி
குரவமணத் திடுமரவ கிரிக்கிறை
கொட்டுக சப்பாணி. (7)
நவநிதியே மணியேயொ ளியேபழ
நான்மறை யின்பயனே
நக்கர்தமக் குபதேசம ளித்தரு
ணாயகமே புரிவோர்
தவவடிவே யடிபோற்றடி யார்தம்வழித்
துணையே கருதார்
தங்கண்மனங் கலராதகல் கின்றதனித்
தமமமே சுடரே
பவநனிதீர் மறையோர் திருவீதிபரிந்
துதொழும் புசெய்வோர்
பண்பமருந் திருவாவண மங்கையர்
பாடல்பயிற் றிடமேழ்
குவலயமும் பரவும்புக ழேரக
கொட்டுக சப்பாணி
குரவமணத் திடுமரவ கிரிக்கிறை
கொட்டுக சப்பாணி (8)
மஞ்சரிமிஞ்சி மலைந்துமி லைந்துவ ளர்ந்துசு ருண்டகுழன்
மங்கையர்கொங் கைமதர்த்தத யிர்த்தும ருண்டலமந் தமுகைக்
கஞ்சமுடைந் துவழிந்த நறுந்தெளி கால்பெருகிப் புடைசூழ்
கன்னல லைத்தெழு கோதைவளம் பதிகாவல சேவலவ
மஞ்சுவளர்ந் திடமீவளர் சேணின்வ லாரியுதைத் தெழுவெண்
மத்தகயப் பிடிபெற்று வளர்த்த வடுக்குவ டுத்தறுகட்
குஞ்சரிகும் பமுலைத் தைவருகா கொட்டுக சப்பாணி
குரவமணத் திடுமரவ கிரிக்கிறை கொட்டுக சப்பாணி (9)
மேக்குற மாலையெழுந்த குறும்பிறை மேயவெயிற் றிளிளமான்
மென்பிணை வண்டுமருண் டனபார்வை விழிக்குழி கண்ணகடுத்
தாக்குறு தோண்முலை யவணமடந் தையர்தங்கள மங்கலநான்
றறிபடமாவுட லெறிபட வேல்விடு சமரசிகா மணிதேன்
வாக்குறி கும்பநிரைத்து மலர்த்தொடர் மண்டம லைந்துமுது
மங்கையை யன்பிநிறீஇ யியல்பாடியுண் மாந்திமெய் வெறியயருங்
கோக்குற மங்கைகு யந்தழுவும்புய கொட்டுக சப்பாணி
குரவமணத் திடுமரவ கிரிக்கிறை கொட்டுக சப்பாணி (10)
சப்பாணிப்பருவம் முற்றிற்று.
ஆகப்பருவம் 4-க்குச் செய்யள் - 46.
---------------------
5-வது முத்தப்பருவம்
வேறு
கிழங்குங்கனியும் விளைந்துதிர்ந்த கிளைநெல்லிடியும் பசுந்தேனுங்
கிளையினோடு மிருந்தயின்முன் கிடைத்தவதிதிக் கினியபலி
வழங்குங்குறவர் வதிசாரன் மன்னிப்பதினெண் கணத்தவரும்
வருநூல்வகையிற் கடவுளரும் வணங்கிப்பரவ வளர்கயிலைப்
பழங்குன் றகன்றுமலைமகட்கோர் பாகங்கொடுப்பப் பலவுயிரும்
படைப்போன் படைப்பவளிக்கும் விடைப்பாக னடந்துவதியமழை
முழங்குங்குடுமிச் செங்குன்றூர் முருகாமுத்தந் தருகவே
முருகுகமழும் பசுங்கடம்பார் மொய்ம்பா முத்தந்தருகவே (1)
சுழியுந்தியதண் புனற்படத்துச் சுரும்பர்பறந்து பாண்மிழற்றிச்
சுழலுஞ்சிறைக்கான் முகையவிழ்ப்பத் துதையங்கமலத் தலரினின்று
வழியும்பசுந்தேன் பெருக்கெடுத்து வரம்புகடந்து படுகரிடும்
மஞ்சட்பரந்து செஞ்சாலி வரன்றியெடுத்து வரையருவி
யிழியுந்தெளி நீருடன்கலவு மெழிலேரகத்துக் கொருமுதலே
யிறைஞ்சுங்கலசக் குறுமுனிவற் கினியவியற்சொற் றனிபுணர்ந்து
மொழியுங்கனிவாய் தமிழ்மணக்கு முருகா முத்தந்தருகவே
முருகுகமழும் பசுக்கடம்பார் மொய்ம்பா முத்தந்தருகவே. (2)
சகடுதுகள்பட்டிட வுதைத்த தண்டாமரைக்கட் டிருநெடுமா
றானேபடைத்துக் காத்தளந்துண் டுமிழ்ந்துமறித்து மளித்தலை
யகடுகிழித்துச் சடைபழுத்த வமுழ்தினினிய குடப்பலவி
னழிதேம்பழுத்த விதழூற லரிவைமகளிர் கரடரடப்
பகடுபருமத் தகமனையபனை மென்முலைக்கட் கறுத்ததெனப்
பரற்கிண்கிணிவாய்ப் பசுங்காய பைங்கோங் கரும்பின்பரியமும்
முகடுபமரந் துயில்கோதை முதல்வா முத்தந்தருகவே
முருகுகமழும் பசுங்கடம்பார் மொய்ம்பா முத்தந் தருகவே (3)
இளைக்குந் துடிநுண் மருங்கிறுமென் றிருதாண்மணிநூ புரமிரங்க
விறுமாந் தடிப்பாரித்து வளர்ந்தெழுந்த துணைப்பூண்முலை .னுங்க
வளைக்குங் குமிழ்க்கு மறிந்தெறியும் வரிக்கட்டுணையார் பதம்பெயர்த்து
மறுகுநடிக்கும் புயங்மலை வள்ளலிடப்பாகம் பகிர்ந்து
களைக்கும் பசியதொடித் துணைத்தோட் கவுரிதளிர்க்கை விரித்தழைப்பச்
கருணைமழை யாருயிர்தழைப் பக்கசிந்து விளைக்குஞ் சிறுமூரல்
முளைக்குஞ் சிறுவெண் பிறைகடுக்கு முகிழ்வாய் முத்தந்தருகவே
முருகுகமழும் பசுங்கடம்பார் மொய்ம்பா முத்தந்த ருகவே. (4)
பனியுந்திய வெண் டயிர்நேயம் பருகப்பொதுவர் மகளிருளம்
பதறிப்பிடித்துச் சிறுதாம்பிற் பராஅரைக்கறை யிற்பிணிப்பீர்த்துக்
தனியுந்தியவான் மருதொடித்துச் சகடொன்றுதைத்துப் புள்வாயும்
தாளாற்கிழித்துப் பெரும்பூதத் தனமுண்பதுபோன் றுயிர்கவர்ந்து
கனியுந்தியவான் கன்றெறிந்து கரடக்கடவாரண மிறுத்துக்
கஞ்சனுயிரும வன்கிளையுங் கடியுந்திருமாற் கொருமருகா
முனிபுங்கவர் போற்றிடுகோதை முருகா முத்தந்தருகவே
முருகுகமழும் பசுங்கடம்பார் மொய்ம்பா முத்தந்தருகவே. (5)
வேறு.
சுருட்டுத் திரைப்பரவை போயாறு படிகின்ற
துறைமுகத்தி ப்பியீனுஞ்
சோதிமுத் தஞ்சங்கு மிழ்ந்தமுத் தங்கமஞ்
சூன்மழைசொ ரிந்தமுத்தம்
மருட்டும் படப்பையா ரரவின்முத் தம்பூக
மடல்விரிக ளத்தின்முத்தம்
வளர்சாலி யின்சிவை கழைக்கணுத் தாமரைம
லர்ப்பொகுட் டுக்குரண்டம்
தெருட்டுஞ் சுதைத்துளி தெளிக்குமுது மதியினிற்றி
கழ்முத்தமி வையனைத்துந்
சேரக்கடைந் தொப்பமிட் டுடைந்தொளி மழுங்கித்
தேயுமவை விரும்பேம்
அருட்டங்கு நின்பவள விதழ்திறந் திளாகைய
ரும்பமணி முத்தமருளே
யரவாசலத் தருமை யொருபாகர் சித்தமகி
ழழகாநின் முத்தமருளே (6)
…………தடிப்பாரித்து வனமுலைச் சைலமகளும்
………ட்டு மோட்டுப்பெ ரும்பாந்தள் வாலிளம்பிறை துளும்ப
……..ண்ண ணங்குமழ னெற்றிக்கணி றையுமகிழ்வா
…….டைப் பொங்கியோங் கப்பரிவி னின்மருங் குற்றிருந்து
……….துததை யீராறு தடவப்பு யம்பழிச்சித்
…….ற்றம் விரித்துரைப் பச்சதம கன்விபுதர் முனிவர யன்மால்
……வு மேலேரகத் துவள ராறுமுக முத்தமருளே
யரவாசலத் தருமை யொருபாகர் சித்தமகி ழழகாநின் முத்தமருளே (7)
(......... மூலப் பிரதியில் பக்கத்தில் இவ்விடம் கிழிந்துள்ளது)
தடக்குஞ்ச ரானனத் துனதுதம யன்களி
தளும்பநின் றினிதுவப்பத்
தமனியம ணிப்பசுங் கொன்றைச் சடாடவித்
தாதையொருபா னகையுறக்
குடக்குங் குமக்கொங்கை வரைமடந் தையுமுளங்
கூரன்பு முகமலர்த்தக்
கோகநக மமர்மாமி யும்பாமடந் தையுங்குறு
முறுவல்கொண் டிரந்துன்
றிடக்குன் றமனைய தோளாலவ ணருயிருந்
திரைக்கடலு மாவும்வரையுஞ்
சேரத்துளைத் தடுங்கூர் வேலெடுத் துத்திறம்பா
துநின்று பகையை
யடக்கும் பெருந்திற லிசைத்துவேண் டினருன்ற
னருமைவாய் முத்தமருளே
யரவாசலத் தருமை யொருபாகர் சித்தமகி
ழழகாநின் முத்தமருளே. (8)
கற்பகக்கா வும்பொனா டுமமரா பதிக்கடி
நகருமயி ராணியாங்
காமக்கிழத் தியிணைவி ழைவும்விண் ணவர்மகளிர்
கைகாட்டு பேரேவலும்
பொற்பகத் துயர்நலமு மரியணை யுமகபதி
பொருந்திடக் கொடியவவுணர்
போகமும் பெருவரமு முயிருங்க வர்ந்தவேற்
புனிதசூன்ம ழைதழைகுழல்
விற்பகப் பொருதுதற் குறமகட் கிறைவகடு
விடவரவு மிழ்ந்தமணியும்
வெண்ணிறத் திப்பிகான் றொளிர்மணியு மிளநிலவு
வெயிலுமோர் பதம்விரிப்ப
வற்பகற் றெரிவரிய கோதைப் பெரும்பதிக்
கரசேநின் முத்தமருளே
யரவாசலத் தருமை யொருபாகர் சித்தமகி
ழழகாநின் முத்தமருளே (9)
வண்டறா நறவப்ப சுந்துளிய லங்கலின்
மதுத்துளி முகந்துமலய
மாருதங் கமலத் தணங்கு முலைமூசு
மேகாசவாசந் துவைக்குங்
கொண்டறா வுண்டமெய்த் தாமரைக் கண்ணனுங்
குறுநகைவி ளைத்துநின்
குறையிரந் தனனன்றி யடியமும் பிறவிக்
கொடும்பவப் பிறவியேற
கண்டறா வருள்பொழி கடைக்க ணோக்குதவிக்
கசிந்தொழுகு மமுதவூறல்
கவுரிதிரு மடிநனைப் பத்துவர்ப ழுத்தனைய
கனிவாய்திறந் திதழ்விரித்
தண்டர்மா தவர்பரவு மேலோ கப்பதிக்
கரசேநின் முத்தமருளே
யரவா சலத்தருமை யொருபாகர் சித்தமகி
ழழகாநின் முத்தமருளே (10)
முத்தப்பருவ முற்றிற்று.
ஆகப்பருவம் 5-க்குச் செய்யுள் 56.
---------------
6. வாரானைப் பருவம்.
வேறு.
மழகுன் றனையப ணைப்புயமு
மணிப்பூண்டயங்குந் திருமார்பும்
வனசம லர்ப்பேரறு முகமும்
வயங்குங் கருணைப்புன் னகையும்
அழகுங் கடவுட் சிறுபிடியு
மசலக் குறவர் மடமகளு
மப்போதப் போதுளங் களிப்புற்றகத்
திற்புளக மயிர் பொடிப்பப்
பழகுஞ் சிறுபுன் மதித்தாயர்
பனிநீ ராட்டிப் பழுத்தாறும்
பசியபொடி மெய்திமிர்ந் துபல
பணியுந் திருத்தற் கழைத்தனரேல்
மழவின் விளையாட் டியைந்திருத்தல்
மனமோ வரசே வருகவே
மடவார் நடமாடி டுங்கோதை
வள்ளல் வருக வருகவே. (1)
தண்ணங் கதம்பப் பசுந்தொடையல்
தளிர்க்குஞ் சிறுகுஞ் சியைமுடிந்து
சாத்தவருக நுதற்சுடிகை தரிக்க
வருகப் பணிக்கு தம்பைப்
பண்ணுண் டிருபாப்புறுங் குழையிற்
பரிக்கவ ருகமதா ணியுரம்
பரப்பவ ருகமணிக் கடகம்
பாணிவனை யவருக விடைச்
கண்ணின் றொளிர்கிண் கிணியரைஞாண்
கவினவ ணியவரு கபதங்
கழலுஞ் சிலம்புஞ் சதங்கையுநேர்
கலிப்ப வணிய வருகவெழில்
வண்ணம் படுகண் ணேறகல
மைக்காப் பணிய வருகவே
மடவார் நடமாடி டுங்கோதை
வள்ளல் வருக வருகவே. (2)
முழங்குங் கமஞ்சூன் மழைமுழவ
முழக்கவெ ழுஞ்சாதகங் கவுத்த
முன்னன் றியம்பப் பசுங்கதலி
முடங்கா தவிழ்ந்தபா சடைபிற்
றழங்குஞ் சிறுகால சைத்தெழினி
தயக்கப்பொறி வண்டிசை மிழற்றத்
தடந்தா மரையின் மடப்பெடை
யைத்தழீஇய சிறையோதி மமிருந்து
செழுங்கன் பாப்பத் தோகைமயிற்
சிறைமீ விரித்து நடம்பயிலச்
சிந்தைக ளித்துமுக மலர்ந்து
திரட்டாட் கொன்றைக் கனகமெதிர்
வழங்கும் பணப்பாந் தளஞ்சிகரி
வாழ்வே வருக வருகவே
மடவார்ந டமாடிடு கோதை
வள்ளல் வருக வருகவே. (3)
குடக்குன் றிடித்துநி லங்கிழித்துக்
குறுங்காற் சவரிநெட் டொருத்தற்
குழவிக்கல பம்பிடித் துடரக்
குலையப்பாட் டிக்கரை யுடைந்து
முடக்குங் குடக்காய் பலவொடித்து
மூரிப்ப சுங்காய்த் தாழைவன
முழுதுமலைத் துக்கழைப் படப்பை
முதலைக் களைந்து வயற்காலி
திடர்க்கட் படுத்துக் கடைசியர்க
டிடுக்குற் றோடப்பெருக் கெடுத்துச்
செழித்துந டத்தும்பொ னித்துறைவ
திரண்டு கவின்கொண் டொளிர்தரள
வடக்குங் குமப்பூண் முலைக்கவுரி
மகவே வருக வருகவே,
மடவார்ந டமாடிடு கோதை
வள்ளல் வருக வருகவே (4)
கருதுங் களிற்றினெ திர்கடந்து
கராவைய டைந்துவெரு வகற்றிக்
கடைக்கட் கருணை கரிக்குதவி
கமலத்திறை தேர்ந்தறி வரிதாய்ப்
புரியுந்த வத்தினுறு பயனும்
பொரவில் பெருவீடினி தளித்துப்
புலம்புந் தெரிவைக் கவைநாப்பட்
புனைபைந் துகின்மா றாதுதவிப்
பெருவஞ் சகத்தாட கையுடலம்
பிளந்து சிலையாய் வழிக்கிடந்த
பேதைய ருஞ்சாபமு மகற்றிப்
பெருமாத வன்பின் மிதுலைநகர்
மருவியிருஞ் சாபமுமி றுத்தோன்
மருகன் வருக வருகவே
மடபான் குழலித ழீஇயபுய
மழவன் வருக வருகவே. (5)
வேறு.
முருகுகமழ் தருகரிய சுரிகுழன்
முகிழ்மென்முலை யிளவனிதையர்
முறுவல்கொடு திருவிழவின் மருகிடை
முறையகளி மயினடமெனப்
பருமமணி துகில்விரிய நிழலிடு
படியின்முறைமுறை நடமிடப்
பதுமபதயுக பரிபுர முமெதிர்
பதறியிடைவறி தெனலெனத்
தருவினறும லரினைபி ணையலணி
தரவளகமிசை துயில்வரத்
ததையமடநடை புரிவின ரிவையர்
தமதுநடைசில பயில்வபோற்
குருகுநடை பெயரரவ கிரிமிசை
குலவுகருணையன் வருகவே
குறவர்மடமக ளிதணி னிழலிடு
குமரகுருபரன் வருகவே. (6)
தளவநகை யிலவிதழி னிலகிதழ்
தமரவிசைமுரல் பமரமார்
தகரமொழு கியசுரியல் சரியமெய்
தளருமுடையொரு கரமிசை
யளவமொரு தலைசெருகி யுருபணி
யணியவமைதியு மிலையென
வகல்பொன்மலை யெனநிலவு முயர்நிலை
யணுகிநிரைகொடு தெரிவைமார்
களவுகொடுகுற மகளை யிவனெனல்
கவருமொருகள் வனெனவொருக்
கனியரிரிதர முனிய மதகரி
கடவிமறுகிடை நடவிடுங்
குளவகுக வறுமுகவ பணிகிரி
குலவுகருணையன் வருகவே.
குறவர்மடமக ளிதணி னிழலிடு
குமரகுருபரன் வருகவே. (7)
அரவமறி கடலகடு கிழிபட
வமரினெதிரதி ரிகல்செய்மா
வவுணனுட லுயிர்நிவரு நெடுவரை
யகலமொரு வழிபகநெறி
விரவவயி றொடுகரப னிருபுய
விமலவடியவர் தமதுள
வினைக டுருவுமோ ரரவமரகத
விமலைகுமர பதுமமலர்
மருவுமரசிள வனமுமுறு பெடையனமு
மகிழ்கொடு கலவிட
மகளிர்குமரர்க ணுறலுமகு துனிமயிர்
புளகமுறு களிவரக்
குரவமலர் நறைகழும ரவகிரிகுலவு
மிளையவன் வருகவே
குறவர்மடமக ளிதணி னிழலிடு
குமரகுருபரன் வருகவே. (8)
தவளவிள நிலவுமிழு முழுமதி
தவழுமிரசத கிரிமிசைத்
தபனனுழு மழவெயிலி னொலிகெழு
தனுவினொடுவிடை கடவுமோர்
பவளவரை யிடைபடரு மொருசிறு
பசியகொடியென நுணுகிடைப்
பரைவிமலை சிவைகவுரி பயிரவி
பகவதிகுமரி யானுடல்
கவருமுமை யொருபுடையி னெழிலுறு
கலசமுலைவழி யமுதுநீ
கருணைமொழி குறுமுறுவல் கொடுநனை
கவினுமதிமக மலர்வதோர்
குவளையென வளர்பனிரு நயனமெய்
குளிர்பணிமலை மன்வருகவே
குறவர்மடமக ளிதணி னிழலிடு
குமரகுருபரன் வருகவே. (9)
அமுதகலை மதிதவழ வரைமுக
டசையவமுத கலசமெலா
மகடுபுழைபட வழிவெ ளருவியி
னரமகளிர்புனல் குடைதொறுங்
கமலமொரு புடைசெவலி யொருபுடை
கரியகுவளை யுமொருபுடை
கவினவலர் மெய்திகிரி யனையபுள
கமலமறிதிரை மிசையெழ
விமிதமுடனுட றிமிருமரிசன மிசையகல
வையினறை யெலாம்
விரைவின தியுறுகயல்க ளெதிர்கொடு
விமலநதிதலை யுகடரக்
குமுதசக னறைகம ழரவகிரி
குலவுமிளையவன் வருகவே
குறவர்மடமக ளிதனி னிழலிடு
குமரகுருபரன் வருகவே. (10)
வாரானைப்பருவ முற்றும்.
ஆகப்பருவம் 6-க்குச் செய்யுள் 68
---------------------------------------------
7. அம்புலிப்பருவம்.
மாகமுகடண வும்வரைச்சா ரன்மேயும் வெடிவாற்ற
லைக்கன்று தவுமோர்
வளைகருங் கோடுடைச் செங்கட் கருங்கவரி
மழவிளங் கன்றையுள்ளி
நாகநிழ னின்றுபடி கப்பாறை யிற்பொழி
நறும்பால் பெருக்கெடுத்து,
நலியும்பு லிப்பறழ ருந்தமுழை புக்கிழிய
நானிலத் தருவிபெருகிச்
சீகரமெ திர்ந்தெறி தரங்கம் பெரும்புனற்
றெருவிதி பாவமுதநின்,
தெள்ளமுத கலசங்கு றைந்திடினு மிதுகொண்டு
தினநிரப் புற்றுநின்ற
னாகமது தளராம லொருதன்மை யாகலா
மம்புலீ யாடவாவே
ஆடிமறை பாடியரு ணீடுசெங் கோடனுட
னம்புலீ யாடவாவே (1)
சோதிடமு நூன்முறையு ணர்ந்துகரை கண்டமேற்
றொல்பிறப் பந்தணாளர்
சொற்படிவழா து பூரணைநாளி னின்னைத் தொடர்ந்
தெழுபெரும் பாந்தளால்
வாதனையு றாதவகை மயிலுண்டு தானவர்
மறுத்துந்தொ டர்ந்திடாமல்
வைநுதிச் செவ்வே லிவன்கரத் துண்டுநீ
மாகத்துழன்று சிந்தை
பேதமையு றாமலிவன் மீதுரைத் திடுகின்ற
பிள்ளைத்தமிழ்ப் பனுவலின்
பெய்முதுக் குறைவுண்டு கவிராச ராசன்
பெரும்புராணச் செய்யுளுண்
டாதரவி னோடுதேர்ந் தின்புற்று வாழலா
மம்புலி யாடவாவே,
யாடிமறை பாடியரு ணீடுசெங் கோடனுட
னம்புலீ யாடவாவே. (2)
வண்டுமொண் டுண்டுபண் கண்டுசிறை விரிதோறு
மடலவிழ்த் தரவிந்தநாண்
மலர்விரிந் திழிபசுந் தேறல்கால் பெருகியவ்
வாவியிற் றேங்கவாளை
யுண்டுடல் களித்துவெறி கொண்டுநின் றுகளமீ
தோடிமீண் டடர்தாழைவா
யுதிர்காயு திர்ப்பக் குடப்பலா வின்கனி
யுதிர்த்துப்ப சுங்கதலியின்
கொண்டபைந் தாறூழ்த் திடைப்பழ முதிர்த்தயல்
குளப்பெருந் தாங்கல்புக்குக்
குடைந்து பைம்புட்குல மெழுப்பிவிளை யாடிவளர்
குளிர்புனற்சொரி கோதைவாழ்
அண்டர்மண் டெண்டிசையர் மண்டலந் தொழுமிவனோ
டம்புலீ யாடவாவே
ஆடிமறை பாடியரு ணீடுசெங் கோடனுட
னம்புலீ யாடவாவே. (3)
முருகோடு பொற்றா துகுங்குறுந் தாட்புன்னை
முத்தம்ப ரப்பியும்பர்
மூசுந்து ணர்ப்பந்த ரிற்பாட்ட ளிக்குல
முழக்கமழை முழவமார்ப்பக்
குருகோடு டன்றெழு மகன்றில்கா ளங்கொளக்
கோட்டிளைய கோட்டுமேதி
குளிர்நிழல் வதிந்துகண் களிகொண் டுபோக்கக்
குழக்கன்று துள்ளியாட
வெருகோடி ளங்கருப் பைப்பறழ் பனிப்புறா
விளையாடவேங் கையுறையுள்
வெருஉஞ்சிறுபுல் வாய்துயில் வடுபகை தணிந்தபணி
வெற்பிறைவ நின்னையன்பின்
அருகோடி ருந்துவிளை யாடற்கு வேண்டினா
னம்புலி யாடவாவே
ஆடிமறை பாடியரு ணீடுசெங் கோடனுட
னம்புலீ யாடவாவே. (4)
ஓகைகொண் டிரவுவந் தடைவைநீ யிவனிரவை
யோடத்து ரந்துகாப்ப
னுலகெங்கு மவிரொளி விளைப்பைநீ நின்மனத்
தோங்கொளிய ளிப்பனிவனே
சாகையுறு நானாக லைக்குரியை நீயிவன்
சகலகலையும் தெரிந்தோன்
றாளான் மழுக்குண்ட தொருமுக முனக்கது
தளிர்க்கவள ராறுமுகவன்
மாகமுய ரமரருக் குபகாரி நீபுவன
மன்னுயிர்க் குபகாரிகாண்
வாளெயிற் றரவினுக் கஞ்சுறுவை நீயந்த
மாசுணவரைக் கிறையவ
னாகையா லிவனரு கிருந்து தனிவாழலா
மம்புலீ யாடவாவே
யாடிமறை பாடியரு ணீடுசெங் கோடனுட
னம்புலீ யாடவாவே. (5)
வேறு.
முருகளைந் திடுசுரி குழன்மங்கையர்
முகமிணை யுறநாணி
முயலுறுஞ் சிறுமறுவத டைந்தனை
முதுபெரும் பணப்பாந்த
எரியநின் றனையெளி தெடுத்துண்ணவு
மஞ்சிமெய் குறைகின்றா
யதுவுமன் றிநின்முகம ழுக்குண்டது
மவனியா ரறியாரே
பெருமிதந் தருபொருளு ணரிவனைநீ
பிள்ளைமை கருதாது
பிரியமுற் றதேயமையு மென்றுள்ளினிற்
பிரிகலா தெஞ்ஞான்று
மருகிருந் துநின்குறை முழுதுந்தளு
மம்புலி வருவாயே
யயிலவன் பணிச்சயில நின்றழைத்தன
னம்புலி வருவாயே (6)
விண்டரா தலமடங்கலு மிவன்பதி
வெற்பெலா மணிமாட
மேருமால் வரைமேனி லந்திகிரிமா
விண்கேற்றி டுநாஞ்சிற்
பண்டைநான் மறைப்பொருளெலா மிவன்புகழ்
பண்ணவர் முதலேனோர்
பழந்தொழும் பினர்வான நாட்டிமையவர்
பரிசனப் பரியாளந்
துண்டநாண் மதிசூடி மாலயனிவன்
சொற்படிய மைச்சேகாண்
சோதிவான வனிவன லான்மற்றது
சொற்றிடற் கமையாதால்
அண்டர்நா யகனுடனிருந் தாடுதற்
கம்புலி வருவாயே
அயிலவன் பணிச்சயிலநின் றழைத்தன
னம்புலிவருவாயே (7)
கருணையுங் களவுங்கொலை யும்பொயுங்
கட்கடைக் குடிகொண்ட
கவரிதழ்த் துவர்வாய்ச் சிறுபுன்னகைக்
கலசமென் முலைமாதர்
சுருணறுங் குழற்கோ தியரானநெய்
துதைமலர்ப் பதந்தோய
துடிநுசுப்பி டைநுடங் கநூபுரத்தொடு
சோருமே கலையேங்கத்
தெருநடந் துநீர்த்துறைப் படிகுங்குமச்
சேதகமண நாறுஞ்செழுந்
தடங்கரைப் பொய்கைசூழ் கோதையர்
திருப்பெரும் பதியாளன்
அருணயத் துனைக்கடைக்க ணுற்றனனித
மம்புலிவருவாயே
அயிலவன் பணிச்சயில நின்றழைத்தன
னம்புலிவருவாயே. (8)
வண்டறா மலகரிமி ழற்றம்புயமல
ரவிழ்ந்தெ ழில்கூரும்
வாவியுஞ் செழுஞ்சாலி யின்பழனமும்
வளர்கருப் பங்காடுங்
கொண்டறா வுபைஞ்சந்தனச் சோலையுங்
குரம்பொதுக் கியகால்வாய்க்
கூலமுங் குளனுங்க மஞ்சூற்குடக்
கூன்வளை தவழ்ந்தேறி
மண்டுசூன் முதிர்ந்தீன்ற நீன்மணிநிலா
வழங்கவெண் பணிகான்ற
மணிக்குழா மிளவெயில்விடா வனர்கொடி
மாடச்செங்குன் றூர்வாழ்
அண்டர் நாயகனுட னிருந்தாடுதற்
கம்புலி வருவாயே
பயிலவன் பணிச்சயில நின்றழைத்தன
னம்புலி வருவாயே (9)
கார்விடுத் திகல்புரி வயிரப்படைக்
காவலன் முனிவோர்கள்
கடவுளோர் முதலாகவன் னேர்வதி
கடிநகர் சிறைமூடப்
போர்விடுத் தெழுபுவன முமரசுமுற்
புரிதயித்தி யனாவி
பொருதடக் கைவேல்கொண்டு கொண்டவனிவன்
புனிதவேள் புவிமீதில்
ஊர்விடப் பணிமலைக்கு கனிங்ஙன
முற்றுனை வாவென்றா
னுற்றிடாயெனி லப்பணி வந்துநின்
னுடன்முழு துண்டாலு
மார்விலக் குதற்குரிய ரென்றுணர்கிலை
யம்புலி வருவாயே
யயிலவன் பணிச்சயில னின்றழைத்தன
னம்புலீ வருவாயே (10)
அம்புலிப்பருவம் முற்றிற்று
ஆகப்பருவம் 7-க்குச் செய்யுள் 78
-----------------------------------
8. சிற்றிற்பருவம்.
வேறு
சுழிக்குந் தரங்கத் திரிபதகைத்
தெண்ணீர்ப் பெருக்கிற் பதந்தரிக்குஞ்
சுடர்கால் மணிப்பைச் சூட்டகிக்குத்
துணுக்குற் றிளவெண் பிறையொதுங்க
விழிக்குங் குளத்தீக் கொழுந்தெனமேல்
விரிக்குஞ் சுடர்ச்செஞ் சடைப்பெருமான்
மெய்யோர்ப குதிகரந் துறையும்
விமலைமலர்க் கட்டுணை களிப்ப
வழித்தொண் டரைக்கிண் கிணியாற்றி
மணிவாய் முறுவற் சிறிதரும்ப
மகிழ்வி னடந்தங் குடனுறைந்து
மணற்சோ றயிறல்க டனன்றாற்
செழிக்குந் தமிழ்க்கோ தைப்பதிவாழ்
தேவே சிற்றில் சிதையேலே
தெய்வப் பிடிக்குங் குறமகட்குஞ்
சேர்ப்பா சிற்றில் சிதையேலே. (1)
தறுகட் சிறுகட் புகர்முகத்துத்
தடவெண் மருப்புப் பணைக்கைநெடுஞ்
சயிலங் கரைக்கு மதக்கலுழித்
தாரை பெருக்குற் றிழியருவி
மறுகிற் குறுகிப் பெரிகியமம்
வழக்குற் றிளைஞரி ழுக்குறநாண்
மலர்ப்பூங் குழலார் சிலைக்காமன்
வசந்தத் திருப்பேர் விழவினெடுத்
திறுகுற் றிறைக்கும் பசுங்களபத்
தெழில்கூர் நறுஞ்சந் தனப்பொடியா
லிருஞ்சே தனமுற் றரசர்திண்டே
ரெதிரோட் டுறுபைந் துகட்சிறுகால்
செறுகுற் றொளிர்சூ ழிகைக்கோதைத்
தேவே சிற்றில் சிதையேலே
தெய்வப் பிடிக்குங் குறமகட்குஞ்
சேர்ப்பா சிற்றில் சிதையேலே. (2)
தூக்கின் றொகுதி யரங்குதொறுஞ்
சொல்லு மிசையுஞ் சுதியுமிடை
தொகுத்தும் வகுத்தும் விரித்துமலர்த்
தோட்டுக் கமல வீட்டுவதி
தாக்கும் வியக்கும் வனமுலையார்
தத்தங் குழுமி முத்தமிழுந்
தாவா விருந்து பாராட்டத்
தழைக்கும் புகட்கங் குரியாக
வாக்கு மகனட் டிலிற்பதத்தி
னடுத்து வடித்த வெயவாகு
வருவிப் பெருக்கி னுவட்டியெடுத்
தமலை விளைத்துக் கமலையுடன்
றேக்கும் பழனத் திகழ்கோதைத்
தேவே சிற்றில் சிதையேலே
தெய்வப் பிடிக்குங் குறமகட்குஞ்
சேர்ப்பா சிற்றில் சிதையேலே. (3)
கழிக்கண் டலில்வண் டலின்மறுகிற்
கரையிற் றுறையிற் குறையினடுங்
கழையிற் றழையுஞ் சொலினடலிற்
கமரிற் குமரிச் செறுந்தூற்றிற்
சுழிக்கும் புனலற் றிடுங்குழியிற்
சுழியிற் கமலக் கமலநெடுஞ்
சுனையிற் கமஞ்சூல் வயறுளைந்த
சுழிக்குங் குடக்கூன் முடப்பணிலங்
கொழிக்குந் தாளம்பழுத் தபைந்தாட்
கொழுஞ்சா லியின்செங் குரலரியுங்
கொற்றுக் களப்ப வதுவடித்துக்
குடிக்கு நறவுத் கெதிரளந்து
செழிக்குந் தமிழ்க்கோ தைப்பதிவாழ்
தேவே சிற்றில் சிதையேலே
தெய்வப் பிடிக்குங் குறமகட்குஞ்
சேர்ப்பா சிற்றில் சிதையேலே. (4)
அறுகா லளியாண் மிழற்றமுகை
யவிழ்ந்து பசுந்தா துகுந்தெரிய
லசைந்து பசந்த கருங்கூந்த
லமுத மனையார் முலைபெரிது
மறுகால் வருத்தம் கிடையிடையோர்
மாற்றங் கிடையா தெனவணிபு
மணிமே கலையு நூபுரமும்
வாய்விட்டிரங்க நடை பெயர
வறுகா முகர்கண் டுளமயங்கி
யொருபா னெருங்கித் தொடர்ந்துசெல
வுறுதி முரசங் கலிப்பமத
னுறுத்துச் சமர்க்கென் றெழுந்தூர்ந்த
சிறுகால் வழக்குத் தமிழ்க்கோதைத்
தேவே சிற்றில் சிதையேலே
தெய்வப் பிடிக்குங் குறமகட்குஞ்
சேர்ப்பா சிற்றில் சிதையேலே. (5)
வேறு
தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதான
அருமறை வகுத்த முதுமக னுரைத்த
வரியசொ லினுற்ற பொருள்பாநீ
அறை ………………………………..
…………………………………..[*]
விரிபுவி படைத்த லொழிபவ தின்முத்தொ
ழிலுமற வனைத்து முளமாழ்கி
விடைகட வொருத்த னிடமுறை யிடத்தன்
விரகினொ டுமுற்றி வரலாறே
துரையென நவிற்ற வவன்வர லுணர்த்த
வுளமகிழ்கொ டப்பொருளை யோதென்
றுழையணி கரத்து மழவிடை யுயர்த்த
வொருமுதல் வணக்க மொடுதாழக்
குருவடி வமுற்று மலைவனி தைபெற்ற
குமரனெமர் சிற்றில் சிதையேலே
குறமுனி துதிக்க முதுதமிழ் விரித்த
குழகனெமர் சிற்றில் சிதையேலே (6)
[*]மூலப்பிரதியில் எழுத்துக்கள் சிதைந்துள்ளன.
---------------------------------------------------------------
அலர்திரை புரட்டு மறிகட லுடுத்த
வகிலர்க கனத்த ருரகேச
ரவணிவ னெனற்சொற் றிடனற நெருக்கி
யடியணை பழிச்சி முடிதாழ
வலைபொரு தறுத்து வளர்கிளை கிளித்து
மலைகுமி ழடர்த்து மறுகூடே
வருமிளை ஞரைக்க றுவியெதிர் சினத்து
மதர்கொடு சிவத்து முறைமாறிக்
கலகமி டுமைக்க ணரிவையர் களித்த
கலபமயி லொப்ப நடமாட
சதிர்மணி கொழிக்கு நதியெதிர் செலுற்ற
கயல்களு களித்து முகில்மீறுங்
குலமழை வழுத்து மரவம லையுற்ற
குமரனெமர் சிற்றில் சிதையேலே
குறுமுனி துதிக்க முதுதமிழ் விரித்த
குழகனெ மர்சிற்றில் சிதையேலே (7)
பொருதிரை திரட்டு கழைமணி மதர்த்த
புகர்முக மருப்பி னுகுமாரம்
பொறியர வுகுக்கு கதிர்மணி பரப்ப
புதுவயிர மொப்பின் மணிநீல
முருவம ணரித்த பொனினறல் கொழிக்கு
மொளிகெழு பொனித்து றைறையினூடே
யுருவசியை யொத்த வரிவையர் குளித்த
வுயர்கல வைமிக்க மணநாற
லருகிருக ரைக்கண் மகிழ்சுர புனைத்தொ
குதிமரு தணித்தண் மலர்மீதே
யறுபத மிரைத்து மலகரி தெரிப்ப
வடரிருடுரப்ப வகல் சோதிக்
குருமணி விளக்க முறுபணி கிரிக்கு
மரனெமது சிற்றில் சிதையேலே
குறுமுனி துதிக்க முதுதமிழ் விரித்த
குழகனெமர் சிற்றில் சிதையேலே (8)
வேறு
தனதன தனத்த தனதன தனத்த தனதான.
அரிவத னமுற்ற வவுணன வனுக்கி ளையசூர
னடருளை முகத்த மலைதிரள் புயத்த சுரரோடு
முரியகி ளைமுற்று மொருநொடி யிலுற்றோ ருழைமாகா
வொளிவுறு தயித்தி யனுமுவ ரிவெற்பு முதுமாவு
பரிதா விடுக்கு மொளிரி லையசத்தி தரநீநின்
னடியிணை வழுத்து மலர்பவ மகற்றல் நெறியாமே
பரிவினொ டியற்றி வதியுமெ மர்சிற்றில் சிதையேலே.
பணிகிரி விளக்கு முருகனெ மர்சிற்றில் சிதையேலே (9)
மதுமலரு குக்கும் வகுளநிழ லிற்றண் மணல்கோலி
வரைமனை யினட்டி யிடுகுழி சியிற்பெய் யுலைநீர்நற்
புதுநற வினிற்ற ரளவல்சிபு கட்டி யடுசோறு
புதுவர வினுற்ற நுதுமலோ டிருத்தி யயிலாமே
அதுமென வழிப்ப வவுண ரசியற்று பதியோமுன்
கடவுள ரசுற்ற கடிமனை யெனக்க ருதியோநின்
பதமலர் சிவப்பு மிழவெம துசிற்றில் சிதையேலே
பணிகிரி விளக்கு குகனெம துசிற்றில் சிதையேலே (10)
-------------------
சிற்றிற் பருவ முற்றிற்று.
ஆகச் செய்யுள் 88
------------------------------
9. சிறுபறைப்பருவம்.
வேறு
ஆரணம னைத்தும் நின்றுனதிசை முழக்கமல
ரம்புயன் றுதிமுழக்க
வண்டரா கண்டல னெதிர்ந்தடி பணிந்துபே
ராவலமு ழக்கநேமி
நாரணன் பாற்கடன் மதித்தவமு தொடும்வந்த
நளினமினொ டும்பிறந்த
நனிதீர்வ லம்புரி முழக்கவி ணரம்பையர்
நடித்துநின் றிசைமுழக்க
வாரணமு கத்துனது தமையன் களிப்போடு
மதத்தொனி முழக்கநாளு
மண்மடந் தையர்பாட நீடொலி முழக்கவளர்
மறுகெங்க ணும்வளங்கூர்
சீரணவு செந்தமிழ்க் கோதைப் பதிக்கிறைவ
சிறுபறை முழக்கியருளே
திரிபதகை தருமுருக வரிமருக பரிவினொடு
சிறுபறை முழக்கியருளே (1)
வாரிசம டந்தைமண முண்டமண மார்பத்து
மாதவக் கடவுணெருனன்
மல்லற்பு யத்தவுணன் மேதினி சுருட்டிமா
பாதலம் புக்கஞான
பாரியவ ராகவவ தாரமாய் மண்கீன்று
பருமருப் பினிலெடுத்த
பார்மக ளுடுத்தபாய் திரைநெடுங் கார்க்கடல்
படிந்துவர் கடிந்துபோக்கி
வாரமுத யின்றுசூன் முதிரமெய் கறுத்தேறி
வானெழுந் தகடுவீங்கி
வலவருத் துற்றந் தரத்துலைந் தகல்பாழி
வாய்திறந் தண்டமண்டி
சோரவெழு கார்முழக் கிடுபணி கிரிக்கிறைவ
சிறுபறை முழக்கியருளே
திரிபதகை தருமுருக வரிமருக பரிவினொடு
சிறுபறை முழக்கியருளே (2)
போதுற்ற கற்பகச் செழுநறுந் தொடரும்
புவிப்பது மலர்த்தாமமும்
பொலிவுற வுதிர்ந்தவிதழ் பொன்வினை ஞர்கைபுகாப்
புனையிழை மணிக்குழாமுங்
காதற்ப டித்திரும டந்தையர ணிந்தசிறு
கலனும்ப னீர்குழைத்த
கலவைப் பசுஞ்சே தகப்பொடிகை புனைகலாக்
கடவுட்கொழுஞ் சுண்ணமும்
மாதர்ப் பிடிக்குலமு மாமகளி ருஞ்சமர்
மலைந்தவுண் செற்றசெவ்வேல்
வாழிபா டித்தமிழ் முழக்கிடுங் குரவையின்
மறுகெங்க ணுந்துவைபடச்
சீதப்பு னற்றிரை முழக்குசெங் கோட்டிறைவ
சிறுபறை முழக்கியருளே
திரிபதகை தருமுருக வரிமருக பரிவினொடு
சிறுபறை முழக்கியருளே (3)
கன்னற் கழித்துங் கரும்பால மிட்டுங்
கனிந்தசா றட்டுவட்டுக்
கண்டும் பழுக்காய் கறித்தரித் தும்பசுங்
கதலியங் குலைதடிந்துந்
துன்னுற்ற முட்குடப் பலவின் பழங்கிழித்
துஞ்சுளைய ளைந்தெடுத்தும்
துணைக்க வைக்காற் கரும்பகடலம் பூட்டியேர்த்
தொழுதுழுது மஞ்சடொட்டும்
பன்னற் கிழங்கிஞ்சி நீரிறைத் துஞ்செழும்
பழனத்து நடவுநட்டும்
பல்வினைக் கைவினை முடித்துடன் முழக்கிடப்
பருமுத்த மெதிரளந்து
செந்நெற் கதிர்ப்போ ரிடுங்கோதை வளர்குமர
சிறுபறை முழக்கியருளே
திரிபதகை தருமுருக வரிமருக பரிவினொடு
சிறுபறை முழக்கியருளே. (4)
எழுதாத முதுநூலு மாகமப் பகுதியுட
னிதிகாச மங்கமாறு
மினியமுத் தமிழின் பெருங்காப்பி யத்தொடியாப்
பிலக்கணப் பகுதிகீதத்
தொழிலே ழிசைத்திறந் துத்தமொ டுதாரந்
துலங்குகைக் கிளைமந்தரந்
தொடர்மத்தி மந்தரா கத்துயர் விகற்பமுஞ்
சுதிகொணா டகவகுப்பிற்
கொழுவாறு நிலையுநற் றொழிலாறு சுரமுங்
குறிக்கு மூவகையங்கமுங்
கூறுமக மார்க்கமும் புறமார்க்க விதமுங்குறிக்
கொண்டுணர்ந் தனுதினஞ்
செழுமாட மாளிகைமு ழக்குகோ தைக்கிறைவ
சிறுபறைமு ழக்கியருளே
திரிபதகை தருமுருக வரிமருக பரிவினொடு
சிறுபறை முழக்கியருளே. (5)
வேறு.
தகரப்புரி குழன்மங்கை யர்கொங்கை
தனக்கிணை யொவ்வாமற்
சலிலத்தி டைமுதுபங் கமடைந்து
கடம்பன மேரீணீ
ரகடுக்கி ழியவளந் தெழுஞாள
மரும்பிய டிப்பாரித்
தம்பிசைமு கையுளம்வெம் பியுயிர்ப்ப
வலர்ந்தம லர்ப்போதிற்
பகர்தற் கரியசுவைத்தெ ளியுண்டு
பசந்து களிப்பேறிப்
பரியவிரா லுகளும்பொய் கைமேவு
பழம்பதி யேரகம்வாழ்
குககட்செவி மலையுமைபெற் றமதலை
கொட்டுக சிறுபறையே
குக்குடதுவ சமயிற்பரி யுகைபவ
கொட்டுக சிறுபறையே. (6)
கங்குறிரண் டுருவங்கொ டெழுந்த
கடுத்தகல் வானேறிச்
சால்கொடு கார்மழை பெய்தகடும்
புனல்காடு பறம்புகொளா
தெங்குநிரம் பியெடுத்த பெருக்கி
னிருங்குட கிற்றலைசாய்த்
திருநில முந்திய பொன்னிநடந்த
வெழிற்பூந் துறைநாடா
திங்கள்வ கிர்ந்துகவுட் கண்மடுத்த
மருப்பிவர் வெண்கரியின்
தெய்வப் பிடியுதவுஞ் சிறுமங்கை
திரண்ட முலைக்கலபக்
குங்கும பங்கம ளைந்ததடம்புய
கொட்டுக சிறுபறையே
குக்குடதுவ சமயிற்பரி யுகைபவ
கொட்டுக சிறுபறையே (7)
மன்றலளைந் துதடம்பணை நீரொடு
வாவியி னீரளவி
மாளவ ருக்கையி லாங்கலி
பூகவனத்தி னிழற்றடவிப்
புன்றலைவந் துவிரிந்த கொழுத்
தளிரும்பூவும் வருடிப்
பூசன்மதன் சமர்வேளை யுணர்ந்து
புதுத்தோ டெதிர்சிந்தி
தென்றலிளஞ் சிறுகான் மறுகூடு
செழும்பி வருங்கோதைத்
திருநகரா ளவருந்த வர்சிந்தை
தெரிந்துறை பேராள
குன்றமெறிந் துதடிந்த செவ்வேலவ
கொட்டுக சிறுபறையே
குக்குடதுவ சமயிற்பரி யுகைபவ
கொட்டுக சிறுபறையே (8)
கண்டனறுந் தளிருச்சி வெடித்தசு
கந்த நெடும் போதிற்
கடிகொள்ப ராகமும்வளை சுரபுன்னைக்
கமழ்தா துங்கெழுவி
முண்டகநாண் மலருகுதண் டேறலின்
மொய்த்தந லேனலிடி
முன்புறவுண் டுசுரும்ப ரெழுந்து
முழங்கிய பாணொலியிற்
தெண்டிரை யந்தியவோதை முழாவொலி
செய்யமயிற் பெடைசூழ்
சேவலிளந் தோகைக்கு லமாடச்
சினைமுதிர் சரியநிறக்
கொண்டலு றங்கியதண் டலையேரக
கொட்டுக சிறுபறையே
குக்குடதுவ சமயிற்பரி யுகைபவ
கொட்டுக சிறுபறையே (9)
மாகமளந்து வளர்ந்தெழு பொந்தை
மகன்றி லிரந்துத
மாழையிளஞ் சினையூடு கருங்குயின்
மன்னிசை யின்கூவப்
பாகமைமென் சொன்மடந்தை யர்பொய்தல்
படர்ந்து துடர்ந்தவரப்
பாவைமுழங்க மதன்சமர் மேல்கொடு
பையவருஞ் சிறுகா
லோகையோ டூர்ந்தக லாவணமன்றி
னுலாவரல் கண்டுமகிழ்ந்
தோடைதடம் பொய்கைவா வியுமகமுக
முற்றும லர்ந்ததெனக்
கோகனகம் பொலிகோ தையர்நாயக
கொட்டுக சிறுபறையே
குக்குடதுவச மயிற்பரி யுகைபவ
கொட்டுக சிறுபறையே. (10)
----------
சிறுபறைப்பருவம் முற்றிற்று.
ஆகச் செய்யுள் 98.
----------------------------
10. சிறுதேர்ப்பருவம்.
வண்டோ லிடுந்தண் டலைப்புது மலர்த்தொகுதி
மதுநீர்தெ ளிப்பவாடை
வந்துகாட் டுக்களைய மணிவாயி றோரணமு
மல்குகேதன முநாட்டிப்
பண்டோ ரளிக்குல முழக்குபூ கக்கொழும்
பாளையு மலர்த்தாமமும்
பாங்கினொடு துளையுறத் தூங்கநாற் றிச்செம்
பழுக்காய்க்கு டும்புதூக்கித்
தண்டே ரரம்பைப் பழக்குலைநிறீ இப்பசுந்
தமனயத் தகடழுத்தித்
தழைப சும்பட்டி னிற்றூக்க முங்கொடியுந்
தனித்தனி பகுத்துநிறுவித்
திண்டேர் நடாத்துதிரு விழவறாக் கோதையாய்
சிறுதேரு ருட்டியருளே
தேவரபயங் காத்த தெய்வப்ப சுங்குழவி
சிறுதேரு ருட்டியருளே. (1)
மாதர்மதர் நோக்கிற குடைந்தமான் கன்றுமெழில்
வாணுதற் கண்டுவெஃகு
மதியிளங் குழவியும் புயமூர லுக்கஞ்சி
மறையுங்குத லையுமுள்ளம்
பேதமையு றாவகை யளித்தபய நல்குமெம்
பெருமானிடம் பகுந்த
பெருமலைக் கரையனருள் பணிமலைவி ளங்கும்
பிராட்டியங் கையினெடுத்துச்
சூதடர்ந் தெழுமுலைப் பானிலத் திட்டுவெண்
சுரிமுகச் சங்கினூட்டித்
தொகுசங்கு முச்சியிற் பண்டியிற் சேர்த்துடற்
சுற்றிக்க விழ்த்துமேனி
சீதளந றுஞ்சண்ண நீராட்டி வளர்குமர
சிறுதேரு ருட்டியருளே
தேவரப யங்காத்த தெய்வப்ப சுங்குழவி
சிறுதேரு ருட்டியருளே. (2)
பட்டவிழ்த் தலரிதழி யந்தொங்க றூங்குசெவ்
வானறல் கொழித்ததேய்ப்ப
வளர்செஞ்ச டாமுடியொ ருத்தன்றி ருத்தகும
டங்கலூர் பகவதியுடன்
வட்டமொத் திடநட்ட மிடுஞான்று குலகிரியு
மறிகடலுமண் ணும்விண்ணும்
மாதிரமு மண்டரா கண்டலனு நிலைதட்டு
மாறிச்சு ழன்றாடமேற்
கட்டுசெஞ் சடையினிற் றிங்களா டப்புனற்
கங்கையா டப்படப்பைக்
கட்செவி திளைந்தாட நின்றாடு காட்சியிற்
காணநாடண் டபாதந்
திட்டமிட் டாடும்பி ரான்றந்த முருகேச
சிறுதேரு ருட்டியருளே
தேவரப யங்காத்த தெய்வப் பசுங்குழவி
சிறுதேரு ருட்டியருளே (3)
மருமணக் கெழுமுபூந் தொடர்துயில் வருங்குழன்
மடந்தையர்க டைந்தவடிவாண்
மைக்கணுந் திக்கெனுஞ் சக்கரம திக்கவிகை
மதவேண் மனங்கறுத்து
பொருநெடுஞ் சிலையினா ணேற்றிக்கு ணத்தொனி
புதுக்கிக் கரத்தடுக்கிப்
புங்கம்ப தித்துத்தொ டுத்துவிடு பகழியும்
பூசல்கொண் டெதிரமலைந்தும்
பெருநெறி விலங்காது மறுநெறி விளக்கிப்
பிறங்குபூந் துறைசைநாட்டிற்
பேராக மத்தொடு தமிழ்ப்பெருங் காப்பியப்
பெற்புக்கற் றுணர்ந்து
திருவிளங் கியநியம மருவுதென் கோதையாய்
சிறுதேரு ருட்டியருளே
தேவரப யங்காத்த தெய்வப் பசுங்குழவி
சிறுதேரு ருட்டியருளே. (4)
செய்க்கட் பசுந்தாட் சரோருகம லர்ந்துபொழி
தேன்செழுஞ் சாலிவயலிற்
றேக்கிப் பரந்திடத் தாழைக்கு டும்பிளஞ்
செம்முகப் பசுநிறத்த
முக்கட் குரும்பையை யுடைத்திளஞ் சூற்பிணவை
முதுமந்தி நீரருத்தி
மூரிக்க ரும்பக டுழஞ்சா லெறிந்திட
முடங்கலம் விட்டுழுனர்போ
யிக்குப்ப டப்பையுட் புக்கொளிப் பப்பண்ணை
யிளநாறு நடுநடைசிமார்
இழிவாந கைத்துக்கை கொட்டியா டவர்திற
மிழுக்கியார்த்திடு நல்லோதை
திக்கெட்டி னும்பரவு கோதையம் பதிமுருக
சிறுதேரு ருட்டியருளே
தேவரப யங்காத்த தெய்வப் பசுங்குழவி
சிறுதேரு ருட்டியருளே (5)
பாடளி மொய்த்தெழு தண்டலை யூடலர்
பைம்போத் தெதிர்கொய்யும்
பாவைம றைந்தய னீழல்வ திந்துறை
பண்புடை நாதனையோர்
சேடிம றைத்தரு குறவிரு குவளை
செழுந்தா மரைமுக
செய்கையி னோடிரு கண்புதை கொள்ளச்
சிந்தையு றுகாவா
லாடகமணி யொளிர் கடகச் செங்கையி
தாரென லும்புலரா
ஆயிழை சீற்ற மிழந்தடி யன்பிழை
யாயிர மும்பொறென,
வூடல்தி ருக்திடு கோதைக் கிறைவவு
ருட்டுக சிறுதேரே
யுமையொரு பாகரு வந்தருள் பாலனு
ருட்டுக சிறுதேரே. (6)
கோங்கின ரும்பன முலைமட மங்கையர்
கொலைவேல் விழிதாவுங்
குழையணி தண்டர ளந்துவல் வருமொளி
குளிர்வெண் ணிலவீன
வீங்குமு லைக்கணி களபஞ் செக்கர்
விரிப்ப மதாணிமணி
வெயிலுமி ழத்தமின் மனமகிழ் கொண்டு
விழாவணி பாராட்டி
வாங்கு மருங்குறு வண்டிட முன்றிலின்
வள்ளைவ ளம்பாடி
மன்ற லியற்றிய பொங்கொலி யார்கலி
மன்னுமு ழக்கமென
வோங்கி வளங் கெழுகோ தைக்கதிப
னுருட்டுக சிறுதேரே
யுமையொ ருபாக ருவந்த ருள்பால
னுருட்டுக சிறுதேரே (7)
பாசடை முள்ளரை மெயநா ளச்செம்
பங்கய மலரமளிப்
பார்ப்பினை வெஞ்சிறை யூடுது யியற்றிய
பானிறமட வன்னம்
நேசமு றுஞ்சே வலினரு காசு
நிலைஇய பெரும்பான்மை
நீனில வேந்தரு டன்பெண் ணரசு
நிகழ்த்திள வரசினொடுந்
தூசிமு டங்குளை யரியணை பொலியுந்
தோற்றமெ னக்ககனத்
தூய்ம லர்க்கற் பகமி சைவல்
லிதுடங்கி நுடங்கியபச்
சூசலின் மயிலுகை கோதைக் கதிபவு
ருட்டுக சிறுதேரே
உமையொ ருபாகரு வந்தருள் பாலனு
ருட்டுக சிறுதேரே. (8)
கற்றைநி லாவுமி ழுஞ்செழு மாமதி
கார்வரை யின்குடுமிக்
கண்டவ ழக்கலை தேய்ந்தொ ழுகமுதங்
சால்கொடு பேரருவி
முற்றிவ ளம்பதி யாவண மண்டி
முழுச்சசா யுப்பெருக
முருகுக மழ்ந்தெழு பொங்கரி னாண்மலர்
முகைவிண் டிழிதேறற்
கொற்றம னோசன் வசந்த விழாவிற்
குங்கும பங்கமொடு
கொடிநுண் ணிடைமட வார்கட கக்கை
கொழிக்குஞ் சிவிறியினீ
ருற்றும ணங்கெழு கோதைக் கதிப
னுருட்டுக சிறுதேரே
யுமையொ ருபாகரு வந்த ருள்பால
னுருட்டுக சிறுதேரே (9)
அலர்கதிர் ஞாயிறு சினகர நீண்முடி
யணவுதொ றுஞ்சுடர்கா
லம்பொன் மணிக்குட விம்பம டக்கிய
வகல்பா தலவளவா
யிளகி விளக்க மணிச்சுடி கைப்பணி
யீன்றபிரபைச் செம்மணி
யெதிரொளி சிந்தவ ளர்ந்தெ ழுகோபுர
மெழுகுரவோர் வதியும்
பலநிரை மாளிகை சூளிகை தானிகர்
பலகலைதேர் மாடம்
பரிகல மங்கை யர்தெரிப ணரங்கு
பசும்பொனின் மேனிலமும்
முலகமு வந்தொ ளிர்கோ தைக்கதிப
னுருட்டுக சிறுதேரே
யுமையொரு பாகரு வந்த ருள்பால
னுருட்டுக சிறுதேரே. (10)
ஆகப்பருவம் 10-க்குச் செய்யுள் 108.
திருச்செங்கோட்டுக் குமாரர் பிள்ளைத் தமிழ் முற்றிற்று.
--------------------
விநாயகன்றுணை.
சித்தளந்தூரைச்சார்ந்த புளியம்பட்டி என்கிற சஞ்சீவி கரணி புரத்து
முத்து விநாயகர் ஏகாதச மாலை.
இது தி. அ. முத்துசாமிக் கோனார் இயற்றியது
கட்டளைக் கலித்துறை
பொன்னாரும் நீள்சடைக் கூன்மதிக் கோடும் பொருமருப்பும்
முன்னாலு வாயும் புழைக்கையுஞ் சேப்பு முறிசெவியுந்
தன்னே ரிலாத்தடந் தோள்குறுந் தாளுந் தயைமுகமும்
மின்னாருங் காணவந் தாண்டாளும் முத்து விநாயகனே. (1)
நாயக னேயெங்க ணற்றுணை யேதவ ஞானருனுந்
தூயமு தேயெது வேண்டினு மீயுந் துளிர்த்தருவே
வேயுறு தோளி யுமையீன்ற முத்து விநாயக நின்
ஆயலர்ச் சேவடி யன்றியின் றெற்கா மருந்துணையே. (2)
துணை வேண் டியுநற் சுதர்வேண் டியும்பொன் றுலங்குமரி
யணைவேண் டியும்பிற தேவரை வேண்டுந ரஃதடைய
இணையீடி லாதமுத்தைங்கர முன்னினை யேத்தியுய்வார்
பணைமேவு சித்தைசஞ் சீவகரணிப் பதியரசே (3)
பதியர சாளினு மையம் புகினும் பகைவரிசை
சதிமுறை யாற்சிறை மேவினு நோயாற் றளர்வுறினும்
மதிமுக மேனி வளரினு முத்து மதகளிறே
கதிதரு நின்கழ லெப்போதும் நெஞ்சிற் கருதுவவே. (4)
கருதியு மாலயஞ் சூழவு மேலைக் கதிதருநூல்
இருசெவி கேட்கவும் பாடவு நெய்விளக் கேற்றவுநின்
றிருவடி யார்களைப் போற்றவு நல்லருள் செய்கழையுங்
கருவிள வுங்கொளு முத்து விநாயகக் கார்முகிலே (5)
கார்முகி லோனும் விதியுங் கருமனுங் கைபிசைந்தன்
றோர்முக மாநினை வேண்டக் கயனை யொறுத்தவகோக்
கார்முகங் கோட்டிப் புரமட்ட வன்சுத காவெமைமாச்
சீர்முக முத்து வினாயக விண்ணவர் தேசிகனே. (6)
தேசிக னாநம்பி யாண்டார்நம் பிக்குத்திருத் தொண்டர்சீர்
பேசிய வாகா விரிநதி கொங்கிற் பெருகவிசை
வாசக மேயெளி யேன்றனை யாள்முத்து வாரணமே
ஆசறு மும்மல நீக்கத்துக் கேற்ற வருமருந்தே . (7)
மருந்து மணியுநீ மந்திர நீயுயர் வானமரர்
அருந்துமவிநீ யரும்பத நீமெய்ய டியவர்க்குத்
தருந்தரு நீயுனை யன்றிப் பிறிதில்லை சற்குருவாய்
அருந்துயர் தீர்முத்துக் குஞ்சர மேயெனை யாண்டருளே (8)
அருமை பெறுமிவ் வுடல்வீழுமென்ன வறநெறியுன்
றிருவடிப் பத்தி தனைப்போற் பிறவெனுஞ் சீவதயை
பெருகுநல் லோருளம் வாழ்வா யலாமலிப் பேயயுமாள்
கருநிகர் முத்து விநாயக னேயெந் தனித்தெய்வமே. (9)
தெய்வப் பொருள்நசை கொண்டேன டியர்க்குத்தீங் கிழைத்தேன்
மெய்வத் துவினிலை தேறேன் கனவில் விநாடியிறை
சைவத் திருமுறை கேளேன்பொல் லேனெனைத் தள்ளிவிடா
துய்வித் தருள்புரி முத்துவிநாயக வோங்கொளியே (10)
ஒளியே யகன்று நடைதளர்ந் தூணலு றக்கமற்றுட்
களியே மிகுந்துணர் வேகிடுங்கா லுன்சர ணினைப்ப
தெளியேன் வசமல்ல வென்றே யின்றே நினையேத்தி வைத்தேன்
அளியேறி யவிறையே யன்றுவந்தெனை யாட்கொள் பொன்னே (11)
முற்றிற்று.
--------------------xxxxx---------------
This file was last updated on 22 June 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)