pm logo

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
காதல் பாடல்கள்


kAtal pATalkaL
by pAratitAcan
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Bharathidasan University for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
காதல் பாடல்கள்

உள்ளடக்கம்
பாகம் -1

அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள் - அவளின் சொல்! - அவள் .... எனக்கா? - முகவரி தேவை - பறந்து வந்த கிளியே - வருந்தி அழைத்தாள் - சிரிப்பே குத்தகைக் சீட்டு - அவள் கொண்ட ஆமைகள் - தமிழுண்டு நானுண்டு - அவள் புன்னகை - மறப்ப தெப்படி? - தெரிந்துகொள் - காதல்பசி - காதல் தீயின் களிப்பு - ஆம்! ஆம்! யாம்! யாம் ! - காதல் - தோப்புக்குள்ளே மாப்பிள்ளை - ஒட்டாரம் செய்வது என் போங்காலம் - அவள்மேல் காதல் - தமிழ் மகளே வேண்டும் நீ என்மேல் ஆசை வைக்காதே - அவள் துடிப்பு
------
பாகம் -2
காதல் பாடல்கள் - திருக்குறள் படித்தான் - இரும்பினும் பொல்லாத நெஞ்சினள் - தலைவி தோழிக்கு - அவள் இல்லை - பழங்குப்பை பஞ்சுமெத்தை - அக்கா என்பதற்கு - அவளையா மணப்பேன்? - அவன் எனக்குத்தான்! - என் அத்தான் எனக்குப் பொன் அத்தான் - லம்பாடி வேண்டாம் - கலப்பு மணம் வாழ்க - திருமணம் எனக்கு! - அவனை அழைத்து வா! - புது நாளில் புது வாழ்வு - சோறல்ல கோவைப்பழம் - எனக்காகப் பிறந்தவள்! - நானும் அவளும் - தொழிலாளியின் தோள் - கூவாயோ குயிலே ? - வண்டி முத்தம்
-----------
பாகம் -3
போ என்றாள். பின், வா என்றாள். - அழுதேன் பிறகு சிரித்தேன் - வந்தாள் - தலைவி வருத்தம் - தமிழ் வாழ்க்கை - தாய்தன் குழந்தையை - அவன் வராதபோது - தோழி கூற்று - அட்டி சொல்லலாமா? - ஒருத்தனுக்கு ஒருத்தி - என் அக்கா - கண்ணபிரானே! - பொழுது விடியவில்லை - இடர் வந்து சேராதே - இன்பத்தில் துன்பம் - ஒருத்தியின் நெற்றி - ஒருத்தியின் நெற்றி - நல்ல நெஞ்சன் - சேவலைப் பிரிந்த அன்றில் பேடு - எவை இருந்தால் என்ன? அவள் இல்லையே! - காதல் வலி - மங்கைமார் உறவு
-----------
பாகம் -4
தொட்டாலும் தேனோ! - அன்பர் வருநாள் - எதிர்பார்க்கும் ஏந்திழை - அன்பன் வந்தால் அப்படி! - நான் வாழக் காரணம் - பால்காரன்பால் அன்பு - கற்பே உயிர் - உடைத் திருத்தம் - ஒத்து வாழாத ஆண்கள் - மணவாளனைப் பறிகொடுத்த மங்கை அழுகின்றாள் - விடுத்தானோ
----------
பாகம் -5
கள்ளி - திருமண வாழ்த்து - போருக்கு வேண்டும் பிள்ளை - பெண்களே! - வானப்பெண் - அவள் அடங்காச் சிரிப்பு - இன்பம் - அன்னம் பந்தைத் தேடச் சென்றாள் - அயலார்க்கு வேலையில்லை - பொந்தில் இருவர் கைகள் - நான் போகவேண்டும் - சோலையில் தோழிமார் - அன்னம் பந்து கொடுத்தாள் - வேலன்மேற் குறை - தொட்ட இன்பம் - என்னைக் கருப்பஞ்சக்கை யாக்கினான் - புதுப்பந்து தந்தான் - நான்போதும் - பள்ளிக்குப் போகும் புள்ளிமான் - வெப்பத்திற்கு மருந்து - என்னைக் கருப்பஞ்சக்கை யாக்கினான் - எது பழிப்பு? - இன்றைக்கு ஒத்திகை, நாளைக்குக் கூத்து
-------------

அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்

அவளின் அழகு

வஞ்சிக்கொடி போல இடை
அஞ்சத்தகு மாறுளது
நஞ்சுக்கிணையோ, அலது
அம்புக்கிணையோ, உலவு
கெண்டைக்கிணையோ கரிய
வண்டுக்கிணையோ, விழிகள்
மங்கைக்கிணை ஏதுலகில்
அங்கைக்கிணையோ மலரும்?

வானரசு தானிலவு போலுலக மாதரசு
நானினிது வாழும்வகை ஆனதிரு வானஉரு
மேனி அதுவோ அமிழ்து, வீசுமண மோமிகுதி
கானிடை உலாவுமயில் தானுமெனையே அணைய
        -- நினையாளோ?


அவளின் சொல்!


கொஞ்சுப்பரி மாறுமொழி
பண்டைத்தமிழோ, அலது
கொம்பிற்கனி யோ எளிதில்
உண்டற் கமுதோ, அரசி
மிஞ்சிச்சுவை தோய்உதடு
பஞ்சைக்கொரு வாழ்வினிய
கொண்டற்கிணை யானகுழல்
இன்பச்சுனை யாடுவது
கூடுமெனிலோ பெரியபேறு பெறுவேன் அலது
நீடுதுயரே அடைவேன் ஈடுசொலவோ அரிது,
தேடுபொருள் யாதுமிலை, சீருமிவளே, உறவு
யாவுமிவளே, இனிய தேனிவளில் ஈ எனவும்
        -- அமிழ்வேனோ
பஞ்சுக்கிணை யான அடி
அன்புக்குரி தானதுணை
மின்பட்டது போல்மெருகு
பொன்பட்டது போல் ஒளிசெய்
அன்புற்றிடு மாது நகை
இன்புற்றிடு மாறுளது
பண்புக்கினிதாய் ஒழுகும்
நண்புக்கினி யான் எழுது

பாடலவள் நான்ந(ல்)லுரை ஆடலவள் நானடையும்
ஓடைமல ரே அரசி ஊறுமணம் நானுமதில்
நீடவரும் யாழுமவள், நீர்மை இசை நான்அதனில்
ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன
        -- அமைவாளோ

அவள் .... எனக்கா?

நெஞ்சிற்குடி யேறிநிலை
நின்றிட்டன ளே உயிரில்
அஞ்சத்தகு மோஅவளின்
அண்டைச்செல வேஇனியும்
என்சொற்படியே அவளும்
இன்சொற் சொலுமோ அலது
வன்சொற் சொலுமோ அழகு
மங்கைக்கெவர் போயறைவர்?

மானமவளே, எனதின் ஊனுமவளே. எனுயிர்
தானுமவளே, புகழ்மை மானமவளே, கொடிய
ஏழமை எலாமரசி தோழமையினா லொழியும்
மாமழையி னாலுலகு தானமழையுமாறு நலம்
        -- அருள்வாளோ ?
-------------

முகவரி தேவை

தகவல் தெரியவில்லை -- அவளின்
முகவரி அறிந்துவா ஒற்றா! (தகவல்)

அகல நெற்றி நிலாப்பிறை! கண்கள்
அப்பட்டம் ஒப்பற்ற நீலம்! (தகவல்)

முகம், அன்றவர்ந்தசெந் தாமரை! -- எழில்
முத்தைப் பழித்த பற்கள்!
தகுமேனி பத்தரை மாற்றுத் தங்கம் -- அவள்
சரிகுழல் மலையின்வீழ் அருவி?
புகை வண்டியில் என் மேற் புன்னகை
பொழிந்து நடுவே இழிந்து போனாள். (தகவல்)

எதிரில்வந் தமர்ந்தாள் அப் பாவை -- அடடா
அதைவிட எனக்கென்ன தேவை?
சிதைந்தது முதற்பார்வை? -- காதற்
சிரிப்போடு பார்த்தாள் பிற்பாடு!

மிதந்து வந்த தங்கத் தோணி எனைவிட்டு
மறைந்தது! காதல் வெள்ளத்தில் நொந்தேன், (தகவல்)

சென்ற புகைவண்டி நில்லாது சென்றால் -- அங்கே
தெரிவை இறங்கா திருப்பாள் -- நானோ
தின்றால் உயிர்வாழ்வேன் கொல்லிமலைச்
செவ்வாழைக் கனிச்சுவை இதழை!
அன்னவள் என்னுளத் தழுத்திய உருவின் -- நல்ல
அடையாளப்படி தேடிவா! (தகவல்)
-------------

பறந்து வந்த கிளியே

பறந்து வந்த கிளியே!
திறந்த என் மனக்கூடு புகுவாய்!
பறந்து வந்த கிளியே?

பிறந்த பெண்கள் பல கோடி -- உன்போல்
பெண்ணொருத்தி தேடி -- நான்
இறந்துபோகுமுன் னாடி -- மில
எழில் சுமந்தபடி என்னை நாடிப்
பறந்து வந்த கிளியே!

பெற்றெடுத்த ஒரு பொன்னை -- மண்மேல்
பிரிந்த தென்ன அன்னை!
கற்றுணர்ந்த என்னை -- நீ
கண்டதில்லை எனினும் என் முன்னே
பறந்து வந்த கிளியே!

இலங்கைதனில்இருந் தாயா? -- அவர்செய்
இழிவு கண்டு நைந் தாயா? -- நீ
கலங்கி இங்குவந் தாயா? -- என்
கைகள் உன்னைக் காவாத தீயா?
பறந்து வந்த கிளியே!

உள்ள குறைகள் நான் தீர்ப்பேன் -- தமிழ்
உலகை மீட்டுக் காப்பேன்.
தெள்ளு தமிழர் எங்கிருந்தாலும் -- அவர்க்குத்
தீமை செய்வாரை ஒருகை பார்ப்பேன்.
பறந்து வந்த கிளியே!


வருந்தி அழைத்தாள்

கொஞ்சும் -- கிளிக்கும்கொப் பளிக்கும்என் காது!
நில -- வொளிக்கும் தத்தளிக்கும் இம் மாது!

தென்றல் -- தெளிக்கும் கனலைஎன் மேலே
மிகப் -- புளிக்கும், இனிக்கும் பசும் பாலே
அதோ -- விளிக்கும் நெருங்கி எனைச் சாவே
நான் -- களிக்க வருக என்ஐயாவே!

பூத் -- துளிக்கும் தேனும்படு வேம்பு
நான் -- குளிக்கும் புனலும் கொடும் பாம்பு
வந்து -- சுளிக்கும் முகத்தைஎன் வாழ்வே
நான் -- சுளிக்க வருக என்ஐயாவே! ( 100 )

சிரிப்பே குத்தகைக் சீட்டு

சோலை வழியில்
தொடுக்கும் மணிக்கிளைசூழ்
ஆலின் அடியில்
அமைந்தி்ட்ட திண்ணையிலே
நண்பன் வருகையினை
நான்பார்த் திருக்கையிலே
வெண்பல்லைப் பூவிதலால்
மூடியொரு மெல்லிதான்
போனாள் இடதுகை
பொற்குடத்தைப் போட்டணைத்தே
நானே அப் பொற்குடமாய்
நாட்டில் பிறந்தேனா?

தோகையவள் போகையிலே
துள்ளும் வளர்ப்புமான்
பாகல் கடித்த
படிகசப்பால் ஓடிவந்தே
அன்னாளை அண்டி
அழகு முகம் எடுக்கப்
பொன்னான முத்தமொன்று
பூவை கொடுத்தாளே,
அந்தமான் நானாய்
அமைந்தேனோ? இல்லையே!
எந்த வகையிலே
ஏந்திழையை நான்பிரிவேன்?

நீர்கொண்டு நேரில்வரும்
நேரிழையைக் கண்டணைத்தாள்
பேர்கொண்ட நேரிழையாள்
பெற்றதைநான் பெற்றேனா!
மங்கை வழிநடந்து
சோலை மணிக்குளத்தில்

தங்குநீர் வெள்ளம்
தழுவி மலர்மேனி
ஆழம் மறைக்க
அவள் மூழ்கி னாள் அந்த
ஆழப் புனலும் நான்
ஆனேனா? இல்லையே

தாழ உடைஉடுத்துத்
தண்ணீர்க் குடம்தாங்கி
வந்தாள். வரும்வழியில்
வந்துநான் காத்திருந்தே
செந்தாழை பூத்துச்
சிரிக்கச் சிரிப்பொலியாய்ப்
பொற்பொடியை உணடள்ளிப்
பூவை வழிமறைக்க
நற்கையால் தான்துடைத்தாள்,
நான்நிற்பதைக்கண்டாள்.
கொந்தெடுத்த கோவைப்
பழஉதடு தான் திறந்தே
முத்தெடுத்து நான்மகிழ
முன்வைத்தாள்! அன்பின்
இருப்பெல்வாம் நீஆள்க
என்றாள்! அவளின்
சிரிப்பதற்குக் குத்தகைச்
சீட்டு!
---------------

அவள் கொண்ட ஆமைகள்

கொஞ்சாமை ஒன்று மகிழாமை
ஒன்று குளிர் தமிழால்
கெஞ்சாமை ஒன்று கிடவாமை
ஒன்று கிளைஞர் தமக்கு
அஞ்சாமை ஒன்றாசை ஆற்றாமை
ஒன்றதன் மேலுமின்றே
துஞ்சாமை பாடையில் தூக்காமை
உண்டு துடிஇடைக்கே.

அவன் அடைந்த ஆமைகள்

பாராமை ஒன்று பகராமை
ஒன்றுகைப்பற்றிஎனைச்
சேராமை ஒன்று சிறவாமை
வாழ்விற் சிறப்பளிக்க
வாராமை ஒன்று மகிழாமை
ஒன்று வரவிடுத்தாய்
ஓராமையேபொறேன் ஆறாமை
யேற்றினை ஓண்டொடியே!
---------
தமிழுண்டு நானுண்டு

சரிதாண்டி போடி -- அடி
தங்க வானம்பாடி
சரிதாண்டி போடி!

சிரிக்கும் பாவை, நடை ஓவியம்,
செந்தேன் என்று நினைத்தேன் -- நீ
திரும்பிப் பார்க்க மறத்து விட்டாய்
திடுக்கிட்டு மனம் கொதித்தேன்
பருக்கைக் கல்லும் உருகிவிடும்
பாட்டில் ஒன்று கேட்டால் -- அப்
பைந்தமிழின் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி)

பச்சிளநீர், வெண்ணிலவு,
பாங்கி என்று நினைத்தேன் -- எனைப்
பார்த்திடவும் மறுத்து விட்டாய்
பதறி மனம் கொதித்தேன்
நச்சரவும் மகிழ்ந்திருக்கும்
நாட்டுப் பாட்டுக் கேட்டால் -- அந்த
நற்றமிழின் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி)

தேனருவி, பூந்தோட்டம்,
செல்வம் என்று நினைத்தேன் -- நீ
சிறிது பேச மறுத்துவிட்டாய்
தீயால் நெஞ்சு கொதித்தேன்,
ஆனை ஒன்றும் மதம் அடங்கும்
அருமைப் பாட்டைக் கேட்டால் -- அவ்
அன்னை தமிழ் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி)
---------

அவள் புன்னகை

நூறா யிரமும் என்நோய் போக்காது
பேறெனில் அவளன்பு பெறுவ தாகும்
அன்னவன் புன்னகை மின் விளக்கு
மன்னும்என் காதல் வாழ்வுக்குப் போதுமே!
-----------
மறப்ப தெப்படி?

அவன் மேல் தானே நானே
ஆசை வைத்தேன் மானே! (அவன் மேல்)

கவலை மாட்டை ஓட்டிச் சென்றான்
கண்ணை அதோ காட்டிச் சென்றான் (அவன் மேல்)

முல்லை மலர் ஏந்தி வந்து
முன் அதற்கு முத்தந் தந்து
அல்லல் எல்லாம் கண்ணிற் காட்டி
அகன்றிடுவான் உள்ளம் நொந்து. (அவன் மேல்)

ஆடச் சென்றால் அங்கிருப்பான்
அருமை கண்டால் அவன் சிரிப்பான்
கூடைப் பூவை என் எதிரில்
கொண்டு வந்து கடை விரிப்பான்! (அவன் மேல்)

புதிய புதிய வெளியீடு
போட்ட விலை மதிப் போடு
மிதி வண்டியில் வாங்கி வந்து
மிகக் கொடுத்தல் அவன்பாடு! (அவன் மேல்)

வழுக்கிய குளத்துப்படி
வந்தணைத்தான் அதே நொடி
மழையும் பயிரும் அவனும் நானும்
மறைப்பதென்றால் அது எப்படி? (அவன் மேல்)
-----------

தெரிந்துகொள்

நான் உன்னைக் காதலித்தால்
நீ என்னைக் காதலிப்பாய்;
தேனும் தினையாவோம் என்று
தென் பாங்கிசை பாடவில்லை தோழி -- இதைத்
தெரிந்துகொள் புரிந்துகொள் தோழி!

காதலிப்ப தென்இயற்கை
காதலிலே உன்னையன்றி
மாதரசி வேறறியேன்!
மதிபோன்ற நின்முகத்தின் சிரிப்பு -- எனை
மதிமயக்கும் அன்பின் வலைவிரிப்பு!

உன்னைக் காணும் பொருட்டுநான்
ஓடிவரும் அருவியன்றி
என்னை உன்முன் காட்டுதற்காய்
என்றும் வந்து நிற்கமாட்டேன் தோழி -- நமை
ஒன்றிணைத்த இயற்கைத்தாய் வாழி!

யாருமில்லை

கூடத்திலே வந்த மாடப்புறா! -- கூடிக்
கொஞ்சும் கிளி என்னை வஞ்சிப்பதா?
கூடத்திலே வந்த மாடப்புறா?

மன மாடத்தில் எரியும் மணிவிளக்கே!
வாராய் என் பசிக்கே உணவளிக்க,
கூடத்திலே வந்த மாடப்புறா!

கோடைதனைத் தணிக்கும் மலர்ச்சோலை -- உன்
கூந்தல் பறக்குமா என்மேலே?
ஆடை அழைத்ததடி நமை மாலை
அதைவிட உனக்கிங்கே என்ன வேலை?
கூடத்திலே வந்த மாடப்புறா!

சிரிப்புக்கு முகத்தினில் என்ன பஞ்சம்?
தீயாய் இருக்குமோடி உன் நெஞ்சம்!
திருப்படி சேயிழை உன் முகத்தைக் கொஞ்சம்
சிலம்பு பாடும் அடிக் கடியேன் தஞ்சம்!
கூடத்திலே வந்த மாடப்புறா!

தானே கனியவேண்டும் நெஞ்சக்கனி
தடிகொண்டு கனிவிக்கலாமோ? இனி
மானே, அகப்பட்டாய் என்னிடத்தினில்
வா நாம் இவ்விடத்தில் தன்னந் தனி!
கூடத்திலே வந்த மாடப்புறா!
---------------

காதல்பசி

நேற்று வந்தேன் இல்லையே -- நான்!
நீ இல்லையே!
காற்றுவந்த சோலையில் எனைக்
கண்டுசிரித்த முல்லையே! (நேற்று)
ஆற்றங்கரையின் ஓரம் -- மாலை
ஆறுமணி நேரம் -- நீ
வீற்றிருப்பாய் என நினைத்தேன்
விளைத்தாய் நெஞ்சில் ஆரவாரம்! (நேற்று)

புல்லாங்குழல் சொல்லை -- உன்
புருவமான வில்லை -- முத்துப்
பல்லை, இதழை, முகத்தைத் தேடிப்
பார்த்தேன் இல்லை -- பட்டேன் தொல்லை. (நேற்று)

இன்பமான நிலவு -- நீ
என்னைப்பற்றி உலவு -- நான்
துன்பப்பட்ட நேரமெல்லாம்
தொலைந்தது பார்; கொஞ்சிக் குலவு!
நேற்றுவந்தேன் இல்லையே -- நீ
இல்லையே!

காதல் தீயின் களிப்பு

அன்புடையாளே
        அருமைத்தோழி ;
        என்னைப்பற்றி
        நினைக்காதே!
உன்றன் கருத்தை
        ஒப்பும் படி நீ
        அறிவுரை ஏதும்
        உரைக்காதே?
உயிரும் உணர்வும்
        உள்ளத்துள்ளே
        ஓங்கும் புயலாய்
        அடிக்கிறது!
உயரும் காதல்
        உணர்ச்சி நெருப்பாய்
        ஓன்றையும் காணா
        துயர்கிறது!

சாதி, குலம், மதம்,
        சீலம், மானம்
        சார்ந்த காதல தீயினிலே
வேதியனைப்போல்
        விரகிட்டல்ல
        காதல் தீயில்
        எரித்திட்டேன்!
காதலை அறியாக்
        கயவர் கூட்டம்
        கண்டதையெல்லாம்
        கத்தட்டும்!
மோதும் அலையில்
        உப்பைக் கொட்டும்
        மூடர்கள் ஏதும்
        செய்யட்டும்!

இளமை என்னும்
        அருவிப் பெண் நான்
        இளைஞன் என்னும்
        பேராற்றில்
உளங்கொண்டாடி
        என்னை இழந்தேன்!
        ஊராராம் நாய்
        குலைக்கட்டும்.
உண்ணும் போதும்
        உயிர்க்கும் போதும்
        காதலை யன்றி
        ஒன்றறியேன்!
பண்ணும் தொழிலில்
        பாட்டிக் காதல்
        மன்னவனன்றி
        வேறு அறியேன். ( 285 )
----------

ஆம்! ஆம்! யாம்! யாம் !

ஆடுகின்ற மாமயிலும்
பாடுகின்ற பூங்குயிலும்
கூடுகின்ற சிட்டுமவள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
கொண்டாட்டம் போடுவதும் யாம் யாம் யாம்!
தண்டமிழ்த்தேன் சொற்கரும்பு
கொண்டினிக்கும் குற்றாலம்
தொண்டை, தோளில்
பெண்கனியாள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
தொந்தரவில் உண்பதுவும் யாம் யாம் யாம்!

முத்துநிலா மூரலினாள்
முத்தழிழை வெல்லப் பார்ப்பாள்
கட்டளைக்கல் அழகியவள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
கள்மயக்கில் துள்ளுவதும் யாம் யாம் யாம்!
குறிஞ்சி நிலம்போல் நலத்தாள்
வெறிமுல்லைபோல் அழகாள்
முறிமருதம்போல் வளத்தாள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
முத்தெடுக்கும் இன்பக்கடல் யாம் யாம் யாம்!
-------------
காதல்

அவள்;

        என் உதட்டைக் கடித்தது
        வண்டென்று எண்ணினேன்
        நீங்கள் தாமா? -- அட!

அவன்;
        பசிக்குக் கிடைத்தது பலாச்
        சுளை என்று எண்ணினேன்
        உன் உதடுதானா? -- அட!

தோப்புக்குள்ளே மாப்பிள்ளை

        மாப்பிள்ளை வந்தான் -- மாந்
        தோப்பிலே நின்றான் -- உன் (மாப்பிள்ளை வந்தான்)

கூப்பிடும்படி சொன்னான் உன்னை
கும்பிட்டானே அவனும் என்னை! (மாப்பிள்ளை வந்தான்)

        தாய் விழித்தாலும் -- அவள்
        வாய் மடித்தாலும் -- வழி
        நாய் குலைத்தாலும் பொய்ப்
        பேய் மறித்தாலும் நீ
போய்வா அவன் சாகுமுன்னே
பொய்யல்லவே என் பொன்னே! (மாப்பிள்ளை வந்தான்)

        இருட்டிருந்தாலும் -- பாரை
        உருட்டிருந்தாலும் -- வழியில்
        திருட்டிருந்தாலும் -- வெளியில்
        மருட்டிருந்தாலும் நீ
உயிருக்குத் தங்கக் கட்டி அவன்
உயிருக்கு நீ வெல்லக் கட்டி! (மாப்பிள்ளை வந்தான்)

        மழை இருந்தாலும் -- கிளை
        தழை விழுந்தாலும் -- அவன்
        பிழை புரிந்தாலும் -- புலி
        வழியில் வந்தாலும் அடி
அழகான மயிலே உன்மேல்
ஆசை வைத்தான் உண்மையிலே! (மாப்பிள்ளை வந்தான்)

        மலை தடுத்தாலும் -- அருவி
        அலை தடுத்தாலும் -- வழியின்
        தொலை தடுத்தாலும் -- மனத்தின்
        நிலை தடுத்தாலும் நீ

தலை காட்ட வேண்டும் அவன்
சாக்காட்டை நீக்க வேண்டும்! (மாப்பிள்ளை வந்தான்).


ஒட்டாரம் செய்வது என் போங்காலம்

பட்டாணி வன்னப் புதுச் சேலை -- அடி
கட்டாணி முத்தே உன் கையாலே -- எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை -- உடல்
பட்டாலும் மணக்கும்அன் பாலே!

எட்டாத தூரம் இருந் தாலும்உனை
எட்டும் என் நெஞ்சம் மேன்மேலும் -- அது
கட்டாயம் செய்திட வந்தாலும் -- நீ
ஒட்டாரம் செய்வதென் போங்காலம்!.

ஆவணி வந்தது செந்தேனே -- ஒரு
தாவணி யும்வாங்கி வந்தேனே -- எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே -- செத்துப்
போகவும் மனந்துணிந்தேனே.
பூவோடி விழிக் கெண்டையிலே? -- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே? -- நீ
வாவா என்றன் அண்டையிலே? -- என்று
கூவா யோகருங் குயிலே!
----------

அவள்மேல் காதல்

உண்டாலே தேன் மலரின் தேன் -- இவள்
கண்டாலே தித்திக்கும் தேன்!
வண்டால் கெடாத தேன்!
வையம் காணாத தேன்!
மொண்டால்கு றையாத தேன்! -- நானே
மொய்த்தேன் பேராசை வைத்தேன்! (உண்)

கண்ணொவ் வொன்றும் பூவே
கை ஒவ்வொன்றும் பூவே
பொன்னுடம் பெல்லாம் பூவே -- நான்
பெறுவேன் அப்பூங் காவே!
ஆளுக்குக் குளிர் சோலை
தோளுக்குப்பூமாலை
நாளும் என் மனம் வெம்பாலை -- அதன்
நடுவில் அவள் கரும்பாலை? (உண்)

கோவைஇதழ் சுவையூட்டும்
கொஞ்சுமொழி அமுதூட்டும்
பாவிவைத்தேன் இதில் நாட்டம் -- காதற்
பசிக்கிவள் பழத்தோட்டம். (உண்)
-----------

தமிழ் மகளே வேண்டும் நீ என்மேல் ஆசை வைக்காதே

அவன்;
என் மீதில் ஆசை வைக்காதே -- மயிலே
என்னைப் பார்த்தும் சிரிக்காதே
உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை -- நீதான்
உண்மையிலே தமிழ்மகள் இல்லை. ஆதலால் (என்மீதில்)

அவள்;
மக்களில் வேற்றுமை ஏது? -- காதல்
வாழ்க்கையிலே நாம்புகும் போது?
அக்கால மனிதரும் நாமோ? -- என்னை
அயலாள் என விலக்கிடலாமோ? உலகத்து மக்களில்

அவன்;
சாதிகள் வீழ்ந்திட வேண்டும் -- பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்?
மாதொருத்தி வேண்டும் எனக்கும் -- தமிழ்
மகளா யிருந்தால்தான் இனிக்கும்! ஆதலால், (என்மீதில்)
அவள்;
என் உதட்டில் கசிவதும் தேனே -- உண்மையில்
என் பேச்சும் உன் தமிழ்தானே?
பொன்னேட்டில் புகழ் தீட்டுவோம் -- இன்பப்
புதுவாழ்வை நிலை நாட்டுவோம்! உலகத்து மக்களில்


அவன்; தமிழ், உடல், உயிர் யாண்டும் -- ஒரு
தமிழ்மகளாய்ப் பிறந்திட வேண்டும்
அமிழ்தில் நாளும்நான் மூழ்க -- எனக்
காசை உண்டு! தமிழகம் வாழ்க!
--------

அவள் துடிப்பு

படித்தும்பந் தடித்தும் இருந்தவள் தானே -- அந்தப்
பாவிஎன் உள்ளம் கவர்ந்தானே! (படித்தும்)

துடித்தறியாத உள்ளம் துடித்தது -- காளை
தொடுவதெப் போதடிஎன் தோளை? (படித்தும்)

விடிந்தால் அவன் உருவிலேஎன் விழிதிறக்கும் - என்
வேலைக்கிடையில் நினைவெல்லாம் எங்கோ பறக்கும்
கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுளம்
இறக்கும் -- பின்
கொஞ்சவருவான் எனஅது மீண்டும் பிறக்கும் (படித்தும்)

மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை -- அந்த
வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை!
உறங்கும்போதும் இமைக்குள்ளும் செய்குவான்
தொல்லை -- என்

ஒளிஇதழ் அடையுமா அவன்முத்துப் பல்லை? (படித்தும்)

காலைக் கதிர்வந்து பலகணி இடுக்கிலே சிரிக்கும் -- அது
காளை எட்டிப் பார்ப்பது போலவே இருக்கும்.
சோலைக் குளத்தில் செந்தாமரை இதழ்விரிக்கும் -- அது
தூயவன் முகமென என்உளம் ஆர்ப்பரிக்கும்! (படித்தும்)
-------------

காதல் பாடல்கள்

பாட்டுப் படிக்கத் தெரிந்தால் வா
இல்லாவிட்டாள் போ -- என்றாள்

        பாட்டுப் படியானாம்;
        பத்திலக்கம் உள்ளவனாம்
        வீட்டுப் படியேற
        வேண்டாம் என்றோட்டினாள்;
        வள்ளுவன்ப டித்தேன்என்
        றான்! நீ வழங்கிடு! நான்
கொள்ளுவன்படித்தேன் என்
        றாள்.

(பாட்டுப் படித்துச் சுவையாதவன் என்றும் ஆனால் பத்து
இலக்கம் (நூறாயிரம்) சொத்துடையவன் என்றும் கேள்விப்
பட்ட காதலி, அவனை என் விட்டுப் படியேற வேண்டாம்
என்று ஒட்டி விட்டாள். அவன் ஓடிப்போய் திருவள்ளுவர்
செய்த திருக்குறளைப் படித்துத் தெளிந்தேன் என்று திரும்பி
வந்தான். அப்படியானால், நீ கொடு நான் உன்னிடமிருந்து
படித்தேன். ஒரு படித்தேனளவான இன்பத்தைக் கொள்ளுவேன்
என்றாள் காதலி. கொள்வன் -- கொள்ளுவேன்.

வழங்கிடு -- கொடு, பின்னடியிலுள்ள படித்தேன் -- ஒருபடி அளவுள்ள
தேன்.)
( 1 )
---------

திருக்குறள் படித்தான்

மரத்தின் நிழலில் நின்றுகொண்டு
வந்த என்னை நீயும் கண்டு
வானம் பார்க்க என்ன உண்டு நல்ல
பருத்தி புடவை காய்த்ததடி பொன்வண்டு -- நீ
பக்கத்திலே நின்றாயடி கற்கண்டு.

பார்த்ததில்லை என்கண்ணாலே
பாரினிலே உன்னைப் போலே
படித்த தில்லை இதுமுன்னாலே
ஏத்தி ஏத்தித் தொழுவதும் உன்காலே -- கொஞ்சம்
இசைந்து வாடி மயிலேஎன் பின்னாலே

வைய கத்தில் ஏன்பி றந்தாய்?
வாழ்க்கை இன்பம் ஏன்து றந்தாய்?
மங்கை கடன் ஏன்ம றந்தாய்?
ஐயையோ அழகி லேநீ சிறந்தாய்! -- எனை
அலைய விட்டால் நீ வீணில் இறந்தாய்!.

நீ பத்தரை மாற்றுத் தங்கம்
நிறைபேச்சு மதுரைச் சங்கம்
நினைத்து நினைத்து வேகும் என்அங்கம்
ஊர் பழிக்கும் என்மனமும் கசங்கும் -- அடி
உண்டோ சொல் எனக்கேடி நிகரெங்கும்!
------------

இரும்பினும் பொல்லாத நெஞ்சினள்

இழையினும் மெல்லிடையாள்;
கயற்கண்ணினாள்; ஏற்றிடுசெங்
கழையினும் இன்மொழியாள்
வள்ளைக் காதினாள், காரிருள்செய்
மழையினும் கன்னங் கருங்
குழலாள்; என் மனம்நலிந்து
நுழையினும் ஏற்காத நெஞ்சினாள்!
என்ன நுவலுவதே?

பஞ்சினும் மெல்லடியாள்; பசுந்
தோகையின் சாயலினாள்;
நஞ்சினும் கொல்லும் விழியுடையாள்;
ஒரு நன்னிலவின்
பிஞ்சினும் ஒண்மைசேர் நெற்றியி
னாள்; அவள் பின்நடந்து
கெஞ்சினும் ஏற்காத நெஞ்சினாள்!
என்ன கிளத்துவதே?

முத்தினும் முல்லை அரும்பினும்
ஒள்ளிய முரலினாள்;
சொத்தினும் சீரினள்; சோட்டுப்புறாக்
கூட்டு மார்பகத்தாள்;
வித்தினும் மாணிக்க மேமிகும்
பொன்வயல் மேனியினை
நத்தினும் ஏற்காத நெஞ்சினாள்!
என்ன நவிலுவதே?

வேயினும் பொன்னெடுந் தோளுடை
யாள்; ஒரு வேளையிலே
தேயினும் தேயா முழுநிலாப்
போன்ற திருமுகத்தாள்;
ஆயினும் ஆய்ந்தாய்ந் தியற்றிய
பாவை! என் விண்ணப்பமே
ஈயினும் ஏற்காத நெஞ்சினாள்!
என்ன இயம்புவதே?

கரும்பினும் தித்திக்கும் சொல்லொன்று
சொல்லிஎன் காதலினை
விரும்பினும் அன்றி விரும்பா
விடினும் விளக்கிவிட்டால்
துரும்பினும் துப்பிழந்தேன் வாழுவேன்
அன்றிச் செத்தொழிவேன்
இருப்பினும் பொல்லாத நெஞ்சினாள்!
என்ன இயம்புவதே?
-----------

தலைவி தோழிக்கு

சகியே தாளேன் நான்
வாதே -- செய்யொண்ணாது!
சதா என்நினைவு காதலால்
மகாசோகம் அடைதல் நன்றோ! (சகி)
மிகு விரைவினில் நீயே அதி
சோகம் தவிரத் துரை வரவே
தோது செய்வாய் உயிர் மீட்பாய்
இங்கினிப் பொறாது நெஞ்சம் (சகி)
மாமயிலும் இதோ பார் வண்
கோகிலமது விரசமாய்ப்
பாவையெனை மிகுகேலி
பண்ணுதேடி தாங்கொணாது!
சகியே தாளேன் நான்


அவள் இல்லை

பழகுதற்குத் தோழருள்ளார்; கிளைஞர் உள்ளார்;
பல்பொருளும் இல்லத்தில் நிறையக் கொண்டாய்;
விழியினிலே ஒளியிழந்த தென்ன' என்று
விளம்பினை நீ உளம்ஒத்த தோழா கேளாய்;
எழுதுகின்றேன் ஓடவில்லை இறகு! கண்கள்
எதிலேயும் பொருந்தவில்லை என் அகத்தை
அழகுசெய்து நாளும்என்பால் அன்பு செய்வாள்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை!

'புகழ்வந்து மலைமலையாய்க் குவிய, வாய்த்த
புதையலைப்போல் வருவாயும் கொட்ட, நீயேன்
இகழ் அடைந்த தமிழரசு போல நெஞ்சம்
இளைக்கின்றாய்' என்கின்றாய் தோழா கேளாய்:
பகற்பனியும் காயவில்லை இரவில் தூக்கம்
பகையாகும்! என்உளமாம் கருங்கல் மேட்டை
அகழ்ந்ததிலே இன்பமென நிறைந் திருந்த
அவள் இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை;

'அடுக்களையில் எழும்புகையே அமுதாய் நாற
அண்டையிலே பணிசெய்வோர் உன்வாய் பார்த்து
நடுக்கமுறும் நிலையுடையாய் நலிவேன்' என்று
நவிலுகின்றாய் தோழனே புகலு கின்றேன்;
கடைக்கேகக் காலினிலே ஓட்ட மில்லை
கண்ணுக்குள் மூடிவைத்துக் காத்திருந்த
அடிச்சிலம்பின் இசையாளைத் தாய் அழைத்தாள்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை;

'தென்றல்வரும் வழியினிலே அமைந்த வீடும்
செந்நெலினைக் குவிக்கின்ற நன்செய் தானும்
என்றைக்கும் உடையாய்நீ என்ன ஏக்கம்'
என்றுரைத்தாய் நன்றுரைப்பேன் கேளாய் தோழா.
ஒன்றிலுமே பொருந்தவில்லை என்றன் காதும்
உயிர்போன்ற மங்கையினை அண்டை வந்தே
அன்றழைத்துச் சென்றாள் என் அருகில், வீட்டில்
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை!

'புருவம் நெறித்தால் உலகம் பொடியாய்ப் போகும்
போஎன்றால் செங்கதிரும் போக்கில் மாறும்
பெருமறவா ஏன் நலிந்தாய்' எனக்கேட் கின்றாய்
பெறற்கரிய தோழனே இதைக்கேட் பாய்நீ
ஒருநினைவும் ஒருசெயலும் இலாதொழிந்தேன்
உயிர்வாழ் கின்றேன் இதுவும் புதுமையேஆம்!
அருந்துனையை அன்னைவந்து கூட்டிச் சென்றார்!
அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை.
-----------

பழங்குப்பை பஞ்சுமெத்தை

        ஆருமில்லா நேரத்திலே
        'வா' என்றால் வருவதில்லை
        அம்மா இருக்கும் நேரத்திலா
        கும்மாளமா? -- அவள்
        அடியைத் தாங்க என்முதுகு
        பெரிய மேளமா?

        தேரும் இல்லை திருவிழாவும்
        இப்போதில்லை தெருவிலே
        சிவன் கோயில் தானுண்டு
        வரச்சொல்லடி இரவிலே.
        ஆரிருப்பார் ஊஊ ஊஉம்
        அவனும் நானும் தாமிருப்போம்
        ஆசைதீரக் கூடலாமே
        அதிகாலையில் பிரியலாமே! (ஆருமில்லா)

        ஆயிரங்கால் மண்டபத்தில்
        போயிருப்பேன் முன்னாடி,
        அழகுதுரை முகத்தை மூடி
        வந்திடட்டும் பின்னாடி,
        பாயும் படுக்கத் தலையணையும்
        இல்லாவிட்டால் என்னாடி?
        பழங்குப்பை எங்களுக்குப்
        பஞ்சுமெத்தை அன்றோடி? (ஆருமில்லா)

-------------

அக்கா என்பதற்கு

அக்கக்கா என்றது கிளிக்கழுதை!

        கட்டழகி நான் நாளும்
        காத்திருந்தேன்; ஓர் நாள்என்
        கிட்டவந்தான்! இந்தக்
        கிளிக்கழுதை மட்டின்றி
        அக்கக்கா என்றதனால்
        தெக்குவாய்த் தங்கை வந்தாள்;
        எக்கேடோ என்று பறந்
        தான்.

(கிளிக்கழுதை என்றது கிளியை ஏசியபடி! மட்டின்றி-
அளவில்லாமல்.)
அரி்தில் வந்த காதலன், அக்கக்கா என்று கிளி கத்தியதால்
தெக்குவாயுடைய தங்கை போலும், அவள் இங்கு வருகின்றாள்
போலும், அதனால் எக்கேடு வருமோ என்று காதலன் பறந்து
போய் விட்டான் என்பது பின் இரண்டடிகளின் கருத்து.)
----------------

அவளையா மணப்பேன்?

மேனி யெல்லாம் வெளியில் தெரிய
வெங்காயத்தோல் சேலை கட்டி
மானமெல்லாம் விற்பவளா பெண்டாட்டி? -- அவள்
மாந்தோப்பில் எனை அழைத்தாள் கண்காட்டி!
தேனிருந்தால் அவள் பேச்சில்
சிரிப்பிருந்தால் அவள் உதட்டில்
நான் மயங்கி விடலாமா சொல்லையா? -- அவள்
நடத்தை கெட்டுப் போவாளா இல்லையா?

கமழ்விருந்தால் கூந்தலிலே
கலையிருந்தால் நடையினிலே
அமைவிருக்க வேண்டாமா தென்பாங்கே -- கேள்
ஆர் பொறுப்பார் அவள் கொடுக்கும் அத்தீங்கே?
அமிழ்திருந்தால் கண்களிலே
அழகிருந்தால் முகத்தினிலே
தமிழர்க்குள்ளே மான உணர்ச்சி வேண்டாமா? -- நாம்
தலைகுனிந்து வாழும் நிலை பூண்டோமா?
-------------------

அவன் எனக்குத்தான்!

எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!
என்னைத்தான் அவன் காதலித்தான்.
தனித்திருக்கையில் புன்னை யடியில்
சாய்ந்திருக்கையில் என்னைக் கண்டவன்
மனத்திலிருந்த தன் காதலை
வாரிக் கண்ணால் நேரில் வைத்தான்.
        எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

மயிலிறகின் அடியினை அவன்
மலருதட்டின் நடுவிற் கண்டேன்!
வியப்பிருந்தது கண்குறிப்பில்
விருப்பமிருந்தது புன்சிரிப்பில்
        எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

எப்படி இருக்கும் செந்தாமரை
அப்படி இருக்கும் செங்கைநிரை
கைப்பட என்னை அணைக்கும்போது
கணமும் பிரிய மனம் வராது.
        எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!

இரண்டு தோளும் இரண்டு பொன்மலை
எவள் அடைவாள் இந்தச் செம்மலை?
வருத்தம் இனியும் என்னிடத்திலா?
மனஇருள் கெட வந்தவெண்ணிலா!
        - எனக்குத்தான் அவன் எனக்குத்தான்!
--------------

என் அத்தான் எனக்குப் பொன் அத்தான்

எனை,
மணக்கத்தான் பணத்தைத்தான்
குவிக்கத்தான் புறப்பட்டான்
மறப்பானோ தோழிப் பெண்ணே!
        என் அத்தான் -- மனம்
மாறமாட்டான் மாற்றுயர்ந்த பொன் அத்தான்!

நல்ல,
குணத்தில்தான் செயலிற்றான்
அணைப்பில்தான் மிகுந்திட்டான்
குற்றமில்லான் தோழிப் பெண்ணே
        என் அத்தான் -- ஓரு
கோவைப் பழத்தைக் கிளிவிடுமா தின்னத்தான்?

என்,
சீரைத்தான் கோரித்தான்
தேரிற்றான் ஏறித்தான்
திரும்புகின்றான் தோழிப் பெண்ணே
        என் அத்தான் -- அவன்
விரும்புவதும் உலகத்திலே என்னைத்தான்!

என்,
பேரைத்தான் எண்ணித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் தோழிப் பெண்ணே
        என் அத்தான் -- நீ
துயரத்தில் ஏன் தள்ளிக் கொண்டாய்
உன்னைத்தான்?
--------------

லம்பாடி வேண்டாம்

கணவன் : பார்ப்பானைக் கூப்பிடு! பஞ்சாங்கம் பார்த்திடு!
மனைவி : ஏய்ப்பானைக் கூப்பிடுவே தேதுக்கு? கெட்ட
        கூப்பாடு வேம்புதான் காதுக்கு!

கணவன் : தாழ்ப்பாள் திறந்திடு! சண்டை மறந்திடு!

மனைவி : தீர்ப்பாகச் சொல்லிட்டேன் உன்னிடம் -- அந்தப்
        பார்ப்பானைச் சொல்லாதே என்னிடம்.

கணவன : பெண்எந்த ஊரிலே? கேட்போமே நேரிலே!

மனைவி : மண்ணாந்தைக் காதெரியும் மட்டியே
        வாராய்இங் கேசிங்கக் குட்டியே!

மனைவி : கண்ணுண்டு பையனுக்குக் காலுண்டு தேடுதற்கு.

கணவன் : தொண்ணூறு சாதியடி நாட்டிலே -- அவன்
        தொலைவானே தாழ்ந்தவரின் வீட்டிலே

மனைவி : எல்லாம் ஒரே சாதி எல்லாம் தழிழ்ச்சாதி,

கணவன் : இல்லையடி ஊருக்குள்ளே லம்பாடி?
        என் பிள்ளைகைக் காப்புச் செம்பாடி?

மனைவி : பொல்லாத சாதிஏது? போகாத சாலைஏது?

கணவன் : கொல்லவந்த பார்ப்பனத்தி கூடுமா?பெட்டைக்
        கோழிவந்து நம்வீட்டில் ஆடுமா?

மனைவி : நல்லதொரு சாதிதான் நம்தமிழ்ச்சாதிதான்!
கண்வன் : கொல்லுவது பாப்பாரச் சாதியே -- இங்குக்
        கூறாதே நீ அந்தச் சாதியே.

இருவரும் : லல்லல்ல லாலலா லல்லல்ல லாலா
        லல்லல்ல லாலலா லாலல்லா -- நமக்
        கெப்போதும் லம்பாடி கூடாது.
----------------

கலப்பு மணம் வாழ்க

எனக்குப் பகைமேல் உனக்குக் காதலா?
என்று ''மன்று ளா டியார'' இயம்பவே,
புதுப்பூ முத்துநகை புகலு கின்றாள்:
எதற்குநீர் எதைப்புகல் கின்றீர் அப்பா
அவர் உமக்கே அன்றுபோல் இன்றும்
பகையாய் இருப்பதைப் பாவைநான் என்றும்
எதிர்ப்பதே இல்லை. நீங்களும் என்போல்
மாதுநான் அவர்மேல் வைத்த காதலை
எதிர்க்க வேண்டாம்! ஏனெனில் அப்பா
எட்டிய தென்மனம் அந்த இளைஞரை
ஒட்டியது மீட்க ஒண்ணுமோ சொல்லுக.

ஒழுக்கம் உடையவர்; கல்வி யுடையவர்
பழுத்த தமிழன்பு படைத்த மேலோர்;
நான்அவ ராகி விட்டேன்; நான் என
வேறொன் றில்லை, அவரும் வீணாய்த்
தனித்தே இருந்து சாக எண்ணிலர்,
என்று சாற்றினாள்! தந்தை இயம்புவான்:

'நமது சாதி வேறு: நல்லோய்,
அவனது சாதி வேறென் றறிகிலாய்'
என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான்,
மங்கை இனிய வகையில் சொல்லுவாள்;
அப்பா உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்!
காக்கை அல்லர்; கரும்பாம் பல்லர்!

என்று கூறத் தந்தை இயம்புவான்;
மனிதரில் சாதி இல்லையா மகளே?
என்று கேட்க -- மங்கை இயம்புவாள்;
'சாதி சற்றும்என் நினைவில் இல்லை
மாதுநான் தமிழனின் மகளாத லாலே;
என்றாள் செந்தமிழ் இலக்கியப் பைங்கிளி.
தந்தை,
மக்கள் நிகர்எனும் தனது
சொந்த நிலையில் தோய்ந்தே
அந்த வண்ணமே வாழ்கஎன்றானே. ( 255 )
-----------------

திருமணம் எனக்கு!

பார்க்காதவன் போலே
பார்த்துப் போனாண்டி--அந்தப்
பாவிஎன் மனத்தினில்
ஆசையைத் தூண்டி (பார்க்காதவன்)

தீர்க்காத வன்போல்தன்
ஆவலைத் தீர்த்தே,
சிரிக்காத வன்போலே
மறைவாய்ச் சிரித்தே! (பார்க்காதவன்)

ஐந்தாறு பேரோ டசைந்தாடிச் சென்றான்,
ஆதலால் தன்எண்ணம் கண்ணால் புகன்றான்.
செந்தாம ரைகாட்ட வந்தால் இருந்தேன்
சீராளன் வாராவிட்டாலோ இறந்தேன். (பார்க்காதவன்)
உள்ளத்தில் உள்ளம் கலந்தபின் அங்கே
உடம்புதான் என்செய்யும் வாராமல் இங்கே?
தெள்ளு தமிழன்தோள் நான் பெற்ற பங்கே
திருமணம் எனக்கென்றே ஊதாயோ சங்கே! (பார்க்காதவன்) ( 290 )
--------------

அவனை அழைத்து வா!

காசுபணம் வேண்டாமடி தோழியே -- அவன்
கட்டழகு போதுமடி தோழியே!
ஆசைவைத்தேன் அவன்மேலே தோழியே -- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!
ஓசைபடா தென்வீட்டில்ஓர் இரவிலே -- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே!
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே -- நான்
இவ்வுலகுக்கு அஞ்சேனடி தோழியே.

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் -- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் -- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!
ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே -- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சிதந்த கண்ணாளன் -- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழியே!

என்பார்வை அவன்பார்வை தோழியே -- அங்கே
இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே,
தன்அழகின் தாக்கடைந்த என்வாழ்வில் -- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே
பொன்னான நாளடியே என்தோழி -- ஒருவாய்
பொங்க லுண்டு போகும்படி சொல்வாயே.
இந்நாளும் வாழுகின்றேன் தோழியே -- அவன்
எனைமறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!
--------------------

புது நாளில் புது வாழ்வு

பகற்பொழுதிற் பொங்கற்புது
பானை வாங்கி வருகையிலே
நகைத்தபடி என்னை அவன் பார்த்தான் -- நான்
நாணத்தினால் உள்ளமெல்லாம் வேர்த்தேன்!
முகமறியாப் பெண் முகத்தில்
முத்துநகை வந்து மொய்த்தால்
மகளிரெல்லாம் என்ன நினைப்பார்கள்? -- என்
மனநிலையில் ஐயமுங் கொண்டார்கள்.

சேவல் கூவக் -- கீழ்க்கடலில்
செம்பரிதி தோன்ற -- அந்த
நாவற்குள நீரெடுக்கச் சென்றேன் -- அங்கு
நம் திருநாள் இன்றல்லவோ என்றான்.

காவலுண்டு பற்பலபேர்
காணலுண்டு காளையின்மேல்
ஆவலுண்டு காட்டிக் கொள்ளவில்லை -- அவன்
அகம்புகுந்தான் அதுமட்டுந்தான் தொல்லை!

நாட்டிலெங்கும் பொங்கல் வாழ்த்து
நடப்பதெல்லாம் தைத் திருநாள்
வீட்டினில் நான் பொங்கலுண்ணும் வேளை -- அதில்
வெல்லமாய் விளைந்தான் அந்தக் காளை!
தோட்டத்திலோர் ஊஞ்ச லிட்டுத்
தோகையரோ பாடுகையில்
பாட்டினில் ஓர் செந்தமிழும் ஆனான் -- அந்தப்
பண்ணிலெல்லாம் நல்லிசையால் ஆனான்.

ஆடலிலும் பாடலிலும்
அன்னவனே என்நினைவில்
கோடை மழைபோற் குளிரச்செய்தான் -- என்
கொள்கையிலே காதலினைப் பெய்தான்.
ஆடியபின் வீடுவரும்
அவ்விருண்ட தோப்பினிலே
ஓடி வந்தே கட்டிமுத்தம் தந்தான் -- அது
பொங்கல் திருநாள் அளித்த செந்தேன்! ( 330 )
-------------

சோறல்ல கோவைப்பழம்

அவன்;

வேலை விட்டு வீடு வந்தேன்
மெல்லி உன்னைக் காணவில்லை
சாலையில்இ ருப்பாய் என்று வந்தேனே -- அடி
தங்கமே இதோ உன்னைக் கண்டேனே!

அவள்;

ஆலை விட்டு நீ வரவே
ஐந்துமணி ஆகுமென்றே
ஆலிலை பறிக்க இங்கு வந்தேனே -- என்
அத்தானே உன்னை இங்குக் கண்டேனே!

அவன்;

தாங்க முடியாது பசி
சாப்பாடு போட்டுவிடு
ஏங்கமுடி யாது பெண்ணே என்னாலே -- அடி
என்னாவல் தீர்க்க முடியும் உன்னாலே!

அவள்;

தாங்கமுடி யாதென்றால்
சாலையிலா சாப்பாடு? வாங்கால் இலைப றித்துக் கட்டுக்கட்டி -- வீடு
வந்திடுவேன் பொறுத்திரு என் சக்கரைக்கட்டி.
        (வாங்கு -- சுழிமுனைக்கத்தி)

அவன்;

கேட்டதுவும் சாப்பாடா?
கொஞ்சுவதும் பாற்சோறா?
காட்டுக்கிளி நான்கேட்டது கோவைப்பழந்தான் -- என்
கண்ணாட்டியே இங்குவாடி உண்ணத்துடித்தேன்!
--------------

எனக்காகப் பிறந்தவள்!

எனக்கொன்று தெரியும் -- நீ
எனக்காகப் பிறந்தவள்;
உனக்கொன்று தெரியுமா? -- நான்
உனக்காகப் பிறந்தவன்.
இனிக்க இனிக்க நாம் திருமணம் புரிவோம்
இன்ப உலகில் கைகோத்துத் திரிவோம்.
தனித்துவாழும் வாழ்வு நமக்கல்ல
சாவும் மனிதர்க்கது சொந்தம் மயிலே! (எனக்கொன்று)

மக்கள் ஒன்று சேர்வதைப் -- பிறர் தடுக்க முடியும் பேண்ணே,
மனம் ஒன்று சேர்வதை -- யார்
தடுப்பா ரடி கண்ணே!
துய்க்கின்றோம் உன்னைநான் -- என்னை நீ,
துயரில்லை அயர் வில்லை மறிப்பேது மானே?
தக்கது செய்தோம் காதலின் புறுவோம்
தப்பாதுரையடி ஒப்பிலாதவளே! (எனக்கொன்று)
---------------

நானும் அவளும்

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
        நானும் அவளும்!

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
        - நானும் அவளும்!

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
        -அவளும் நானும்!

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
        -அவளும் நானும்!
---------------

தொழிலாளியின் தோள்

தொழிலாளியின் தோள்களைத்தான் அணைப்பேன் -- அவன்
தொடத் தொடத்தான் இன்பம் திளைப்பேன்
விழிக்கவன் கைகளோ வலிய இரும்பு -- கைசெய்
வினையெலாம் உலகுக்குக் கரும்பு! (தொழிலாளி)

தொழிலாளி அவன் இன்றேல் வாழுமா உலகம்?
சோம்பேறி யாயிருந்தால் தோன்றுமே கலகம்!
விழியாளி அவன் விரல்கள் என்னுடல் பழகும்,
வெட்கமெல்லாம் அவன்கை பட்டாலே விலகும்! (தொழிலாளி)

இரும்புப் பட்டறையில் ஓங்கும் ஒவ்வோர் அடியும்
எத்திச் சுரண்டுவார்க்கு இடியாக முடியும்!
பெருமைகொள்வேன் அவன்தலை தாங்கும் என்மடியும்
பேசொணா இன்பங்கள் பருகுவோம் விடியும்! (தொழிலாளி)

மக்கட் குழைப்பவதற்கு நான்ஒரு துணைவி
மகிழ்ச்சி அளிப்பதில் மகிழ்ந்திடும் மனைவி!
எக்காலமும் அவன் முரட்டுக்கை அணைப்பு
ஏங்கும் என் உளம் உடல் அன்புறும் இணைப்பு! (தொழிலாளி) ( 425 )
--------------

கூவாயோ குயிலே ?

குயிலே குயிலே கூவாயோ?
கொழுநன் வருகை கூவாயோ?
வெயிலில் உழைத்து
வியர்வை சிந்தி

உயிராய் உலகுக் குழைக்கும் கணவன்
உண்டின் புறவே
ஒளிக்கண் குயிலே கூவாயோ!

கருமைக் குயிலே கூவாயோ?
கணவன் வருகை கூவாயோ?
அருமைத் தொழிலால்
உலகம் அனைத்தும்
பெருமைக் குரித்தாய் உழைக்கும் அன்பன்
பிள்ளையோ டுவக்கப்
பெட்டைக் குயிலே கூவாயோ!

மாங்குயிலே நீ கூவாயோ?
மணாளன் வருகை கூவாயோ?
நீங்கா உழைப்பால்
நீளுல குயர்த்த
ஓங்கும் தொழிலைப் புரியும் தோழன்
உறவுற்றிடவே
ஓலிக்குரல் எடுத்துக் கூவாயோ!

பாடல் குயிலே கூவாயோ?
பாட்டாளிவரக் கூவாயோ?
பாடுபடும் தொழி
லாளிகளே ஒன்று
படுவீர் என்று பசிநோய் தீர்ப்போன்
பசியாறிடவே
பண்ணார் குயிலே கூவாயோ!
--------------

வண்டி முத்தம்

அவள் :

வந்து விட்டேன் இந்த மட்டும்
        வழிதெரிய வில்லை -- ஏ
வண்டி ஓட்டிப்போகும் ஐயா
        எங்கே உள்ளது தில்லை?

அவன் :

குந்திக் கொள்வாய் வண்டியிலே
        என்னத்துக்குத் தொல்லை? -- அதோ
கொய்யாத் தோப்பைத் தாண்டிவிட்டால்
        தெரியும் உன்னூர் எல்லை.

அவள் :

பஞ்சி கூட நெருப்பிருந்தால்
        பற்றிக் கொள்ளக் கூடும் -- இந்தப்
பச்சைக்கிளி நொச்சிக் கிளையில்
        தொத்திக் கொள்ளக் கூடும்.
அவன் ;

நெஞ்சிருக்க நினைவிருக்க
        உடம்பெங்கே ஓடும்? -- அம்மா
நீ குந்து நான் ஓட்டுவேன்
        நன்றாய் ஓடும் மாடும்!

அவள் ;

நல்லதையா குந்திக் கொண்டேன்
        நானும் இந்த ஓரம் -- இனி
நடந்திடுமோ ஒற்றை மாடு?
        நாம் அதிக பாரம்.

அவன் :

இல்லைபெண்ணே இப்படி வா!
        இருந்தது பின் பாரம் -- உம்
இப்படிவா! இப்படிவா!
        இன்னம் கொஞ்ச நேரம்.

அவள் :

ஏறு காலின் ஒட்டினிலே
        இருந்து சாக லாமா? -- நீ
இப்படிவா இப்படிவா
        என்னருமை மாமா.

அவன் :

ஆறு கல்லும் தீர்ந்தாலும் தம்
        ஆசை தீர்ந்து போமா? -- வை
அன்பு முத்தம் நூறு கோடி!
        அதை மறப்பவர் நாமா?
--------------

போ என்றாள். பின், வா என்றாள்.

        'வயலாள் விரல்படினும்
        மாசுபடும் ஆப்பால்!
        அயலாள் விரல்பட்ட
        ஆள்நீ, -- மயலாகி

        நண்ணாதேபோ' என்றாள்.
        நன்றென்றான். 'இல்லை வா
        கண்ணாளா' என்றாள்
        கரும்பு.

(வயல் ஆள் -- வயலில் வேலை செய்து சேற்றிற் படிந்த
ஆள். கரும்பு -- கரும்பு போன்ற காதலி.)
--------------------

அழுதேன் பிறகு சிரித்தேன்

அழுதுகொண் டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே.
அம்மா வருத்தப் பட்டாள் என்றே
அடுத்த சோலையில் தனித்து நின்றே
        -அழுது கொண்டிருந்தேனே

வழிமேலே விழியை வைத்தே
வஞ்சகனையே நினைத்தே
தொழுதிருந்தேன் பின்னால் வந்தே
தோளில் சாய்ந்தான் முகம் இணைத்தே

அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!

குறித்த இடம் இந்தப் புன்னை!
கோரிவந் தடைவான் என்னை!
மறித்துவேலை இட்டாள் அன்னை
வந்தேன் பெற்றேன் இன்பந் தன்னை.

அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!

புன்னைமரப் பந்தர் ஒன்றே
புன்னையின்கீழ்த் திண்ணை ஒன்றே
இன்னொன்றே என்றே அன்பன்
இட்டமுத்தம் இருபத் தொன்றே!

அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!

மாலை போய் மறைந்த துண்டு
வாய்த்த இன்பம் தெவிட்ட வில்லை
காலை மட்டும் யாம்பயின்ற
கன்னல் தமிழ் மறப்பதில்லை.

அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!
------------------

வந்தாள்

தாய் வீடு போய் விட்டாய் -- மானே
தனிவீ டெனைப்படுத் தும்பாடு காணாய்!
நாய்வீடு, நரிவீடு நீ இலாவீடு
நடுவீடு பிணம்எரிக்கும் சுடுகாடு!
        தாய்வீடு போய்விட்டாய்

சாய்வுநாற் காலியிற் சாயமுடியாது
தனியாகப் பாயிலும் படுக்கஇய லாது
வாயிலில் நான் போய்ப்போய் மீளவலி ஏது?
மனம்பட்ட பாட்டுக்கு முடிவென்ன ஓது?
        தாய்வீடு போய்விட்டாய்

முறுக்குசுட் டுக்கொண்டு வந்ததாய்ச் சொன்னாய்
முத்தமல் லால்வேறு கேட்டேனா உன்னை?
குறுக்கில் ஒருகணம் வீணாக்கி என்னைக்
கொல்ல நினைத்தால் நீ ஒரு செந்நாய்!
        தாய்வீடு போய்விட்டாய்

எனக்கும் உனக்கும் இடையிலே சிறிதே
இடுக்கிருந் தாலும் துன்பம் பெரிதே.
அனுப்பு கின்றனை முல்லைச் சிரிப்பை
அதனால் என்மேல் சொரிந்தாய் நெருப்பை!
        தாய்வீடு போய்விட்டாய்
---------------

சொந்த வீட்டைவிட்டு வெளியேறுகின்ற
நைந்த உள்ளம் பாடுகின்றது


அழகிய இல்லமே பழகிய செல்வமே
அஞ்சுமே உனைப்பிரிய நெஞ்சமே!
அண்டி இருக்க ஆசை மிஞ்சுமே!
அழைத்தால் வருவாயோ அன்பே புரிவாயோ
ஆடிப்பா டிக்கிடந்த கூடமே!
அன்றாடம் நான்படித்த பாடமே!
பெற்றனை அன்னையே! வளர்த்தனை என்னையே
பிள்ளைதா யைப்பிரியக் கூடுமோ?

பிரிந்தால் மனம்ஒன்றிலே ஓடுமோ?
கற்சுவர்க்கட் டிடமே கண்ணே வண்ணப் படமே
கல்லெல்லாம் என்னைக்கண் காணிக்கும்
கண்ணைப்பறிக் கும்ஒவ்வொரு மாணிக்கம்.
தெற்கில் இருந்தனை தென்றல் பயின்றனை
தேடக் கிடைக்காத குன்றமே!

சீராய் அமைந்த மணிமன்றமே!
கற்றேன்உன் மடியிலே வாழ்ந்தேன் உன்இடையிலே
கண்கள் மறந்திடுமோ உன்னையே?
கணமும் மறப்பதுண்டோ என்னையே?

சொந்தஎன் வீடென்றால் செந்தமிழ் நாடன்றோ?
தொல்லை கடத்துகின்ற ஓடமே!
தூய்மை உடைய மணிமாடமே!
சந்தை இறைச்சலோ சாக்கடை நாற்றமோ
சாரா இடத்தில்அ மைந்தனை
சந்தனம் பன்னீர்க மழ்ந்தனை!
----------------

தலைவி வருத்தம்

போனால் போகட்டுமே -- பசும்
பொன்னா யிருந்தவன் பித்தளையாய் அங்கே
        போனால் போகட்டுமே.

ஆனாலும் என்றன் அன்பை மறந்தான் -- அந்த
ஆந்தைக் கூட்டிற் புறாவாய்ப் பறந்தான்
ஊனாய் வற்றிய பசுவைக் கறந்தான் -- அவன்
உள்ளன்பிலாதவளால்சீர் குறைந்தான்.
        போனால் போகட்டுமே.

வாழ்கையி லே பங்கு கொண்டவள் நானா -- அன்றி
வரவுக்கோர் இரவென்னும் அம்மங்கைதானா?
தாழ்வுற்ற நேரத்துத் தளர்ச்சியுற்றேனா -- அவன்
தழைத்திருந்த போதும் தலைநிமிர்ந்தேனா?
        போனால் போகட்டுமே.

காலிற்பட் டதுரும்பென் கண்ணிற்பட்ட இரும்பு -- தான்
கடிந்து பேசினாலும் அதுஎனக்குக் கரும்பு.
தோலுக்குப் பிறக்குமா தேனீஎன்னும் சுரும்பு?
சோலையிலன்றோ இருக்கும்முல்லை அரும்பு?
        போனால் போகட்டுமே.
----------------

தமிழ் வாழ்க்கை

இரண்டடிதான் வாழ்க்கைத்துணை
என்றானே -- என்னை
ஏரெடுத்துப் பார்க்காமலே
சென்றானே.
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
கூத்துண்டா -- அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
கற்கண்டா?
        (இரண்டடிதான்)

மேகலையும் கையுமாக
வாழ்கின்றான்--என்
விருப்பம் சொன்னால் சீறி
என்மேல் வீழ்கின்றான்
சாகையிலும் அவன் அகமே
தாழ்கின்றான்--அவன்
தமிழ்மடந்தை புறப்பொருளே
சூழ்கின்றான்.
        (இரண்டடிதான்)

தமிழ்மணத்தில் என்னையும்வை
என்றேனே -- அவன்
தனிமனத்தில் இருநினைவா
என்றானே.
தமியாளும் இந்தி அன்றோ
என்றேனே -- நான்
தமிழனடி என்று சொல்லிச்
சென்றானே
        (இரண்டடிதான்) ( 100 )
---------------

தாய்தன் குழந்தையை

பாலைப் பருகும் மடியிற் குழந்தை
சேலைப் போல்விழி திறந்துதன் தாயை
நோக்கிச் சிரித்தது! கண்ட அன்னை
உன்னால் அல்லவா உன்றன் தந்தை
இரவில் என்னை அணுகாதிருந்தான்,
எந்த நேரமும் எனைப்பிரியாதவன்
ஐந்தாறு திங்கள் அகன்றனன்! யாரால்?
காதல் வாழ்வை கத்திகொண்டு அறுத்தாய்,
மோதல் வாழ்வை முன்னின்று நடத்தினை
என்று முனிந்தே இருகை யாலும்
கீழடிப் பாள்போல் மேலே தூக்கி என்
போராய்க் குவிந்த பொன்னே,
வாராய் என்று மார்பணைத்தனளே!
---------------

அவன் வராதபோது

முல்லை எனை நகைக்கும்; மூன்றுதமி ழும்தெவிட்டும்
தொல்லைமிக விரிக்கும்
தோகைமயில்! -- சொல்லை
வெறுப்பேற்ற பேசும் கிளிதான்: என் காதற்
பொறுப்பேற்றான் வாராத போது.

தென்றல் புலிபோலச் சீறும் மலரிலுறு
மன்றல் பிணநாறி

மாற்றமுறும் -- குன்றல் இலாத்
தீப்போல்வான் தோன்றுநிலா! சேயிழைநெஞ் சக்குளத்திற்
பூப்போல்வான் வாராதபோது.

பாலும் புளிக்கும்நறும் பண்ணியங்கள் வேப்பங்காய்.
தோலும் எரியவைக்கும்
தோய் கலவை! -- மேலும்
அலவனார் ஆர்கலியும் கொல்லும்! என் காதற்
புலவனார் வாராத போது.

வண்டு வசைபாடும்! மாங்குயிலும் வாயாடும்!
மண்டுகுளிர் சோலை
எரிமலையாம் கண்டுவக்க
மின்னா வான் மீன் எல்லாம்! மெல்லி வறுமைக்குப்
பொன்னாவான் வாராத போது.

பஞ்சும் பரப்பிய பூவும் படுநெருஞ்சி!
கொஞ்சும் என்பாங்கி
கொலைகாரி! -- நஞ்சுமிகும்
தீண்டவன் பாம்பு அதுதான் தேமலர்த்தார்! என் அன்பு
பூண்டவன் வாராத போது. ( 140 )
----------------

தோழி கூற்று

உயிரே பிரிந்தால் உடல்வா ழாது
வெயில்நுதல், அயில்விழி, வெண்ணிலா முகத்து
நேரிழை தனையும் நீர் அழைத் தேகுக
என்றேன் நீ அதற்கு இயம்பியது என்ன?
உப்பு வாணிகர் ஒன்றிப் பிரிந்த
வெப்பு நிலம்போல் விரிச்சென்ற ஊர்போல்
இருக்கும் பாலை நிலத்தில் என்னுடன்
மருக்கொழுந்தும் வருவதோ என்று
தனியே செல்வதாய்ச் சாற்றினீர்! உம்மை
மாது பிரிந்து வாழும் வீடுதான்
இனிதோ சொல்க என்று
துனிபொறாது சொன்னாள் தோழியே.
( துனி-துன்பம் )

(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய
தலைவன் பாலை நிலம் இவள் வருவதற்கு உரியதன்று.
இன்னாமை யுடையது என்றுகூற, தலைவரைப் பிரிந்தார்க்கு
வீடுமட்டும் இனிமை உடையதோ என்று வினவு முகத்தால்
தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி
அறிவித்தது)
(பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடிய குறுந்தொகை
124-ஆம் பாட்டைத் தழுவியது.) ( 165 )
-------------

அட்டி சொல்லலாமா?

அலமேல்(உம்) அலமேல்(அந்த) அலமேல்--அவள்
ஆசைப்பட்டாள் மாணிக்கத்தின் மகன் மேல்!
குலுக்கு(உம்) குலுக்கி(உடல்) குலுக்கி--அந்தக
குப்பைனையே நேறில் கண்டாள் சிறிக்கி!

மாமா(உம்) மாமா(ஓ) மாமா--என்னை
மணந்து கொள்ள அட்டி சொல்லலாமா?
ஆமாம்(உம்) ஆமாம்(பெண்ணே) ஆமாம்--மெத்த
அன்புக்குடித்தனம் செய்வோமே நாம்.

சிரித்தான்(உம்) சிரித்தான்(அவன்) சிரித்தான்--அவன்
சிவந்த உதட்டுப் பழக்கத்தின் சாறு சுவைத்தான்.
திருநாள்( உம்) திருநாள்--ஊம்
தெரிந்த பாக்கு வழங்கியதே மறுநாள்!
--------------

ஒருத்தனுக்கு ஒருத்தி

சின்னவள் மேலவனுக் காசை -- நான்
சிரித்தாலும் விழுந்திடும் பூசை! (சின்ன)

கன்னத்தில் அவளுக்கே முத்தங் கொடுத்த ஓசை -- என்
காதல் விழுந்ததென்று துடிக்கும் அன்னவன் மீசை!

பொன்னென்பான் கண்ணென்பான் அவளை -- அவளோ
பொத்தலான ஈயக் குவளை!
தின்று கிடக்கஎண்ணி வந்துவாய்த்தவளை -- ஒரு
தென்பாங்கு பாடென்று கெஞ்சும் இந்தத் தவளை. (சின்ன)

வயிர அட்டிகை, காசு மாலை -- நல்ல
வகைவகை யான பட்டுச் சேலை -- அந்த
மயிலுக்கு வாங்கிவந்து போடுவதவன் வேலை
வாராய் சாப்பிட என்றால் உரிப்பான் எனது தோலை. (சின்ன)

என் நிலைக்கு நான் அழ வில்லை -- நாட்டில்
எத்தனை பெண்கட் கிந்தத் தொல்லை!
கன்னி ஒருத்திதான் ஒருவனுக் கென்னும் சொல்லை
கட்டாயம் ஆக்கினார் ஏதென் மகிழ்ச்சிக்கு கெல்லை. (சின்ன)

அறுபதி னாயிரம் பெண்டாட்டி -- மாரை
அடைந்தானாம் முன்னொரு காமாட்டி -- பெண்கள்
குறைபா டெல்லாம் இன்று தீரச் சட்டந் தீட்டிக்
கொடுத்த அரசுதன்னைக் கும்பிட்டேன் பாராட்டி! (சின்ன)
-------------

என் அக்கா

ஆயினும் அவர்கள் என்அக்கா அத்தான்,
நாயினும் கேடாக என்னை மதித்தார்கள்.
அவமானச் சேற்றிலே என்னை மிதித்தார்கள்
        ஆயினும் அவர்கள் என் அக்கா, அத்தான்.

கோயிலில் தமிழ்ப்படும் பாடு -- நான்
இவர்களாலே பட்ட பாடு -- தந்தை
தாயாய் எண்ணியதோடு -- பொருள்
தந்ததும் கொஞ்சமோ திரும்பினேன் வீடு!
        ஆயினும் அவர்கள் என் அக்கா, அத்தான்.

இரும்புதானோ இவர்கள் நெஞ்சம் -- அவர்க்கு
என்மீதில் ஏணிந்த வஞ்சம்?
வரும்போது வாஎன்று கொஞ்சம்
மகிழ்ச்சிக்குமா வாயில் செந்தமிழ்ப் பஞ்சம்?
        ஆயினும் அவர்கள் என் அக்கா அத்தான்.
--------------

கண்ணபிரானே!

வாரும் கண்ண பிரானே -- எங்கே
வந்தீர் கண்ண பிரானே?
சேரும் கோபிகை மார்கள் -- இருப்பார்
செல்லும் கண்ணபிரானே! மெல்ல (வாரும்...)

வந்த முகவரி தப்பு -- பொது
மகள் இவளெனும் நினைப்பு;
செந்தமிழ் நூற்படிப்பு -- இருப்பார்
சிறிதுமில்லாதது வியப்பு! சும்மா (வாரும்...)

ஒருத்தியை மணந்த பின்பு -- வே
றொருத்தியிடத்திலா அன்பு? -- இது
பொருத்தமா அறத்தின் முன்பு? -- ஏ
புதிய தமிழரே, போவீர் எழுந்து. சும்மா (வாரும்...)
---------------

பொழுது விடியவில்லை

பொழுதும் விடியவில்லை
பொற்கோழி கூவவில்லை
வழிபார்த்த விழியேனும்
மறந்தும் உறங்கவில்லை
பழிகாரன் வருவது திண்ணமா? -- இல்லை
பாவை என்னைக் கொல்ல எண்ணமா?
விளக்கிலுற நெய் இல்லை
வெள்ளி முளைக்கவில்லை
களம் காப்பவன் குறட்டை
காதுக்குப் பெருந்தொல்லை
இளக்காரம் இத்தனை ஆயிற்றோ? -- காதல்
ஏரியின் நீர்வற்றிப் போயிற்றா?
கிளியும் விழிக்கவில்லை
கிட்ட எவரும் இல்லை
உள்ளத்தில் அமைதிஇல்லை
உறவும் அழைக்கவில்லை
துளிஅன்பும் என்மட்டில் பஞ்சமா? -- என்
தோழன் தனக்கிரும்பு நெஞ்சமா?
மறக்க முடியவில்லை
வாழ்வில் மகிழ்ச்சிஇல்லை
இறக்கவும் மனம் இல்லை
இருந்திடில் இந்தத் தொல்லை
பெறத்தகு மோஅவன் வரவு? -- வரப்
பெற்றால் கழியும் இந்த இரவு!
------------

இடர் வந்து சேராதே

முல்லை மலர் கேட்டேன்
இல்லை என்று சொல்லாமல்
முடித்துக்கொள் என்றாரடி தோழி!
கொல்லையில் வளர்ந்தாலும்
புல்லில் மணமிராதே;
கொடுந் தொலைவில் அடர்ந்து
படர்ந்து கிடந்த நறு (முல்லை மலர் கேட்டேன்)
மாங்கொம்பைத் தழுவிக் கொண்டிருக்கும் -- இந்த
மலர்க் கொடியை அறுப்பார் உண்டோ?
பூங்காட்டில் உலவிடும் வண்டைப் 'போ
போ' என்றார் என்னபயன் கண்டார்?
தூங்கா விளக்கும் சுடருக்கும் ஏற்பட்ட
தொடர்பை அறுப்பதாலே இடர் வந்து சேராதோ?
(முல்லை மலர் கேட்டேன்
-----------------

இன்பத்தில் துன்பம்

இருந்தபடி என்றன்
        நெஞ்சை இழுக்கும்
இருவிழி இன்பம்
        செய்யும் எனில் அவர்
திருந்துபடி ஓவியன்
        தீட்டிய ஓவச்
சேயிழை தன்னை
        திரும்பிப் பார்க்கும்
அவ்விரு விழியேதுன்பம்
        செய்வன! எவ்வகை
        உய்வேன் தோழியே!

        ஓவச்சேயிழை-பெண்ணின் படம்
        உய்வேன் -பிழைப்பேன்
----------------

ஒருத்தியின் நெற்றி

தலைவன் கூற்று:

வாட்டம் ஏன் என்று
        கேட்ட பாங்கனே,
கேட்கஎட் டாம்பிறை
        கடலில் கிளைத்தல்போல்
கரிய கூந்தல்
        அருகில் தோன்றிய
ஒருத்தியின் நெற்றி
        பிணித்தது -- என்
கருத்தோ கடிது
        பிடிபட்ட யானையே!

கருத்து-உள்ளம் - கிளைத்தல்-தோன்றுதல்

தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக்
கண்ட பாங்கன் 'நினக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக்
காரணம் யாது' என்றவழி ஒரு மங்கையது நுதல் என் உள்ளத்
தைப் பிணித்தது என்று தலைவன் கூறியது,

(கோப்பெருஞ்சோழன் பாடிய குறுந்தொகை 129-ஆம்
பாட்டின் தழுவல் இது)
---------------

வருவார்

தலைவி கூற்று:

கிளி உண்ட தனால்
        கதிரிழந்து கிடந்த
தினைத்தாள் செத்துப்
        போகாது; நல்ல
மழைவர இலைவிட்
        டதுபோலே என்
புதுநலம் உண்டதாற்
        போகும்என் நல்லுயிர்,
& வருவார் என்னும்
        நினைவால்
இருந்தது தோழி
        என்றாள் தலைவியே.

தலைவர் அருள் செய்வார் என்று இன்னும் உயிர் தாங்கி
நிற்கிறேன் என்று தோழிக்குத் தலைவி சொன்னது.

உறையூர் முதுகண்ணன் சாத்தன் பாடிய குறுந்தொகை
133-ஆம் பாட்டின் தழுவல் இது.
--------------

நல்ல நெஞ்சன்

தோழி கூற்று:

காந்தளின் இதழ்க்கதவு
        திறக்கும் வரைக்கும்
காத்திராது வண்டு
        பாத்திறம் காட்டத்
தக்கோர் வருகை
        கண்டெதிர் கொண்ட
மிக்கோர் போல
        மெல்லிதழ் திறந்தது.
அத்தகு சிறந்த
        மலையுடை அன்னவன்
நல்ல நெஞ்சம்
        உடையவன் என்க;
பெருமணம் புரியாது
        பிரிந்ததை உன்னிக்
கதறும் உன்நிலை
        கதறினேன்
மணக்கவே என்றான்
        மற்றவன் நாணியே.

(திருமணச் செலவுக்கும் திருமணம் ஆனபின் வாழ்க்கைச் செலவுக்கும் பெரும் பொருள் வேண்டும் அல்லவா? அதற்காகத் தான் தலைவன் பிரிந்தான். அது தெரியாமல் தலைவி வருந்தினாள். அவனுக்குத் தோழி சொல்வது இது.

கருவூர் கதப்பிள்ளை அருளிச் செய்த குறுந்தொகை 265-ம் செய்யுள், அதன் கருத்தைத் தழுவி எழுதப்பட்டது.

வண்டு பாடினால் அரும்பு மலரும் என்ற உண்மை இப் பாட்டால் தெரிகின்றது.)
--------------

சேவலைப் பிரிந்த அன்றில் பேடு

ஏண்டி போனார் திருவரங்கம்? -- அவர்
என்னாசைத் தங்கச் சுரங்கம்!' ஏண்டி போனார்?

என்

வேண்டுகோளைத் தாண்டி -- மலை
தாண்டி, ஆற்றைத் தாண்டி அவர் ஏண்டி போனார்?
நான்

எட்டிப் பிடித்த வட்டநிலா -- நல்ல
இனிப்பினிலே பழுத்த பலா!
வட்டி கொடுத்தாலும் வாராச் செல்வம்
வாழ்ந்த வாழ்வும் இந்த மட்டிலா? ஏண்டி
அவரும் நானும் பூவும் நாரும்
பிரிந்த தில்லை நொடி நேரம்;
எவர்க்குத் தெரியும் திருவரங்கம்!
இங்கிருந்து பத்துகாத தூரம் ஏண்டி போனார்?
அன்றில் பறவை பிரிந்ததில்லை,
ஆண் பிரிந்து பெண் வாழ்ந்ததில்லை,
என்ற சேதி தெரியாதா? -- நான்
எப்படிப் பொறுப்பேன் இந்தத் தொல்லை?
ஏண்டி போனார்?

[மாமி அழைத்தாள் என்று சென்று திரும்பிய தலைவியிடம் தோழி, உன் துணைவர் திருவரங்கம் போயிருக்கிறார் என்று கூறிய அளவில், தலைவி தோழியிடம் வருந்திக் கூறிய பாட்டு இது.]
---------------

எவை இருந்தால் என்ன? அவள் இல்லையே!

மணமும் தென்றலும் குளிரும் வாய்ந்த
மாலையும் சோலையும் இருந்தும் பயனில்லை;
குணமும் அழகும் வாய்ந்தான் காதல்
குயில்இங்கிருந்தால் ஒருகுறையும்இல்லை. (மணமும்)

அணங்கும் நானும் ஒன்றாய் இருந்தே
அடைந்தால் பெருமை அடையும் நறுமணம்
பிணத்திற்கு நலம்ஒரு கேடா, அவளைப்
பிரிந்த எனக்கு மணமா குணம்தரும்? (மணமும்)

ஒன்றில் ஒன்று புதையும் முகங்களைச்
சேராமல் செய்யும் கோடைக் கொடுமையைத்
தென்றல் காற்றுக் குளிர்செய்யும் ஆயினும்
சேயிழை இல்லை, பயன்ஒன்றும் இல்லை. (மணமும்)

தனிமையில் எனக்கா இன்பக்கண் காட்சி?
தளிர்ஆல வட்டம் என்ஒரு வனுக்கா?
இனிய பொன்மேடை அவளுடன் நானும்
இருந்தின்பம் அடையவே; அதுவன்றோமாட்சி! (மணமும்)
-----------------

காதல் வலி

அன்பே உடலுயிர்
        ஆக்கும் போலும்!
அன்பே காதல்
        ஆகும் போலும்!
கழறும் அக் காதல்
        வலியது போலும்!
மதின்மேல் இருந்த
        வரிஅணிற் காதலி
கிரிச்சென்று தன்னுளம்
        கிளத்திய அளவில்
வான்கிளை யினின்று
        மண்ணில் வீழ்ந்த
சிற்றணிற் காதலன்
        செத்தொழி யாமல்
வில்லெறி அம்பென
        மரத்தில் ஏற
இரண்டும் காதற்
        படகில் ஏறின;
இன்பக் கடலின்

        அக்கரை எய்தின,
அதோ என் காதலி
        கைக்குழந்தை
மதியை வாஎன்று
        அழைத்தது பாடியே!
------------

மங்கைமார் உறவு

பொழுது மலர்மணம் மருவி -- நம்மேல்
ஒழுகும் தென்றல் அருவி!
பொழுது மலர்மணம் மருவி!

பொழிலிடை தழையெலாம் அசையப்
பொன்னிறப் பறவைமெய் சிலிர்க்கப்
பொழுது மலர்மணம் அருவி!

எழுதஒர் உருவிலாக் காற்றால் -- நமக்
கின்பமே தான்குளிர் ஊற்றால்!
கழைமொழி மங்கையார் உறவும் -- குளிர்
காற்றுக்கு நிகரில்லை அன்றோ!

பொழுது மலர்மணம் மருவி!
--------------

தொட்டாலும் தேனோ!

நாட்டு மாதரே -- அறுவடைப்
பாட்டு பாடுவோம்.
நாட்டு மாந்தரே!
ஆட்டமயில் கூட்டமாக
அங்கே செல்லுவோம். (நாட்டு)

தங்கக் கதிர்தான் -- தன்
தலை சாய்த்ததே;
சிங்கத் தமிழர் -- தம்
செல்வம் உயர்ந்ததே!
பொங்கும் சுடர்ப் பொன்னரிவாள்
செங்கை பிடிப்போம்;
போத்துக் கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவோம். (நாட்டு)

கட்டழகுத் தாளின் -- கட்டுக்
கண்ணைப் பறிக்கும்;
சிட்டாய்ப் பறப்போம் -- களத்தில்
சென்று சேர்ப்போம். (நாட்டு)
கட்டடிக்கும் ஆளும் தோளும்
பட்டாளந்தானோ? -- அவர்
காதலிமார் ஆசையோடு
தொட்டாலும் தேனோ?
----------------

அன்பர் வருநாள்

பொங்கல்நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக வாழ்க!
இங்கெனைத் தனிவி டுத்தே
ஏகினார் வருவா ரன்றோ?
அங்கையிற் பெட்டி தூக்கி
ஆளிடம் மூட்டை தந்து
பெங்களூர்த் தெருக்க டந்து
பெருவண்டி நிலையம் சேர்வார்!

தைவிழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தளிர்க்க! வாழ்க!
மெய்இங்கே உயிர்அங் கென்றே
சென்றவர் மீள்வார் அன்றோ?
'உய்' என்று சீழ்க்கை காட்ட
உட்கார்ந்த படி என் அன்பர்
தையலை எண்ண, மெல்லத்
தவழ்ந்திடும் புகைத்தல் வண்டி.

தமிழர்நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தழைக! வாழ்க!
அமிழ்தூறத் தழுவுந் தோளார்
அகன்றனர் வருவா ரன்றோ?
சுமை 'எரிமலை' ஒன் றங்குத்
தொடர்மலை இழுத்த தென்ன
இமைப்பிற்பக் கத்தூரில் வண்டி
இச்சிச்சென்றோடி நிற்கும்.

தைப்பொங்கல் வருக!
கீழ்ப்பால் தனிக்கதிர் எழுக! வாழ்க
ஒப்பிலா அன்பர் என்றன்
உயிர்க்காக்க வருவா ரன்றோ?
இப்பக்கம் வரும்அவ் வண்டி
எதிர்ப்பக்கம் ஓடும் காடே
உட்பக்கம் பார்த்தால் வண்டி
ஓடும்! ஓடாது காடு!

உழவர்நாள் வருக! கீழ்ப்பால்
ஒளிச்செல்வன் எழுக! வாழ்க!
வழங்காமற் சென்றார் இன்பம்
வழங்கிட வருவா ரன்றோ?
முழங்கியே நிற்கும் வண்டி
முறுக்கோமப் பொடி ஆரஞ்சிப்
பழம் விற்பார் செய்தித்தாள்தான்
பசிதீர்க்கும் அத்தானுக்கே!

பாற்பொங்கல் வருக! கீழ்ப்பால்
பகலவன் எழுக! வாழ்க!
வேற்றாள்போல் சென்றார் அன்பு
விளக்காக வருவர ரன்றே!
நேற்றேறி இருப்பார்! இவ்வூர்
நிலையத்தை அடைவார் இன்று!
நூற்றைந்து கூலியாள்கள்
நுழைவார்கள் கூலி என்றே.

பெரும்பொங்கல் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் பிறக்க! வாழ்க!
இரும்பு நெஞ்சத்தார் சென்றார்
இன்புற வருவா ரன்றோ!
திரும்பிய பக்க மெல்லாம்
தெரிந்தவர் காண்பார்! அத்தான்
பதிந்துகட்டணச்சீட்டு ஈந்து
பின்புற முகப்பில் நிற்பார்!

திருவிழா வருக! கீழ்ப்பால்
செங்கதிர் எழுக! வாழ்க!
உருமறைத் துறைவார் என்றன்
உளம் பூக்க வருவார் அன்றே?
தெருவெலாம் வண்டி நிற்கும்
நல்லதாய்த் தெரிந்து சத்தம்
ஒருரூபாய் பேசி, மூட்டை
யுடன் ஏறி அமர்வார் அத்தான்.

பொன்விழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக! வாழ்க!
அன்பிலார் போற் பிரிந்தார்
ஆர்வத்தால் வருவா ரன்றோ?
முன்னோக்கி வாஎன்பார் வண்
டிக்காரர்! முன்நகர்ந்தால்
பின்னோக்கிக் குதிரை போகும்
பிழைசெய்தார் நெஞ்சம் போலே!
இனிக்கும் நாள் வருக! கீழ்ப்பால்
இளங்கதிர் எழுக! வாழ்க!
தனியாக்கிச் சென்றார் உள்ளம்
தவிர்த்திட வருவார் அன்றோ!
புனையப் பொங்கற் புத்தாடை
வாங்கிடப் போவார், அன்பில்
நனையத்தான் வேண்டும் என்பேன்
நன்மாலை வந்த தாலே!
----------------

எதிர்பார்க்கும் ஏந்திழை

சிரிப்பென்ன? கலிப்பென்ன?
சேயிழையே மடமானே -- புகழ்
பரப்பும் சேரன் மகன்
வரக் கேட்ட நற்சேதி தானே?

கரிப்பைச் சுவைத்த பிள்ளை
போலே இருந்ததுன்றன் கன்னம் -- விண்
விரிக்கும் நிலவே என்று
விளம்ப முடியவில்லை இன்னம்.

தெருவை நோக்கி மீண்டும்
வருவை அறைக்கு மீண்டும் அன்னாய் -- அவன்
உருவை மனத்திற் கண்டே
வருக வருக என்று சொன்னாய்.

இருவிழி அனுப்பினை
இரண்டரைக் கல்தூரம் நீயே -- உடன்
வரவேற்பு வாழ்த்துரை
தொடக்கமும் செய்தனை தாயே.

அருகில் அவனும் இல்லை
அணைத்திடத் தாவினை தங்கமே -- பின்
கருகின விழிமலர்
காணுகிலான் அவன் எங்குமே!

சருகு சலசலக்கும்,
தாவும் உனது மலர்க் காலம்மா -- அவன்
வருகை பாடின உன்
கைவளை சிலம்பவன் மேலம்மா!
----------------

அன்பன் வந்தால் அப்படி!
(நான் சொன்னால் செய்யாதவள்)

'புளியிற் கோது நீக்'கெனப் புகல்வேன்!
கிளியோடு பேசக் கிளம்புவாள் என்மகள்!
'வெந்தயம் புடை' எனில் வெடுக்கெனப் பகடைப்
பந்தயம் ஆடப் பறப்பாள் அப்பெண்;
விழுந்தி ருக்கும் மிளகையும் பொறுக்க
எழுந்திருக்க ஒப்பா தவள் அவள்.
அப்படிப் பட்டவள், கைப்படக் காதல்
அஞ்சல் அவளுக் கெழுதிய அன்பன்
என்னை 'மாமி' என்று கூவி
வீட்டில் நுழைந்ததைக் கண்டமெல்லியள்
அம்மியை அயலில் நகர்த்தி, மிளகாய்
செம்மையில் அரைத்துச் சேர்த்துக் காய்கறி
திருத்திக் குழம்பு, பச்சடி தென்முறைக்
கூட்டு முதலான குறைவர முடித்து,
யானைத் தலையினும் பெரிதாய் இருந்த
பானையில் வெந்ததைப் பதுமுற வடித்துக்
குருத்தரிந் துண்போன் கருத்தறிந்து முக்கனி
உரித்துத் தேன்வைத்து -- உருக்கு -- நெய் வைத்துச்
சமையல் ஆகட்டும் என்று சாற்றிய
என்னிடம் ஆயிற்று -- என்றே இயம்பி,
எட்டி, அவன்முகம் நோக்கி இனிதே
மூகிலைக் கண்ட தோகைபோல்
தகதக என்றாடினள் அத்தையலே!
-------------

நான் வாழக் காரணம்

மதச்சிறை இடித்துத் தள்ளி
மனச்சிறை புகுந்த அன்பன்
புதுத்தமிழ் அழிக்கும் இந்திப்
போரினில் சிறைச் சென்றிட்டான்;
எதற்கு நான் வருந்த வேண்டும்?
என் உளச் சிறையிருந்து
மதுத்தமிழ் வழங்குகின்றான்
மருவுதல் ஒன்றா இன்பம்?

சாதியின் விலங் கொடித்துத்
தமிழர் நாம் என மணந்தான்,
மோதினான் இந்திப் போரில்
முத்தழிழ் காக்க வீரன்,
வீதியில் விலங்கை பூட்டிச்
சிறையினில் விடுத்தார் ஆள்வோர்;
சேதிகேள், தோழி அத்தான்
செத்தாலும் தமிழ் சாகாதே.

என்னுயிர் அவன் உயிர்வே
றென்றெண்ணாத் தமிழ்ப் பிணைப்பு
நின்றெமில் வாழும் போதில்
நெடுஞ்சிறை, தளைகள் எல்லாம்
குன்றெறி மலையின் முன்னர்
கூத்திடும் பஞ்சுக் கூட்டம்;
அன்புயிர் தமிழே வெல்லும்
ஆதலால் வாழ்கின்றேன் நான்.
---------------

பால்காரன்பால் அன்பு

கண்ணன்பால் மிகஅன்பால் வேலைக்காரி
கையிற்பால் செம்போடு தெருவிற் சென்றாள்;
திண்ணன், பால் வாங்கென்றான் கரியனும் பால்.
தீங்கற்ற பாலே என் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
'சீ' என்பால் நில்லாதீர் போவீர் அப்பால்,
கண்ணன்பால் நான்கொண்ட களிப்பால் அன்னோன்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்.


கற்பே உயிர்

அவன்:
தயிர் விற்கப்போனவளே
தட்டானிடம் பேச்சென்ன?
மோர் விற்கப் போனவளே
முத்தனிடம் பேச்சென்ன?

அவள்:
தட்டானிடம் பேசாமே
தயிர் விற்ப தெப்படியாம்?
முத்தனிடம் பேசாமே
மோர் விற்ப தெப்படியாம்?

அவன்:
தயிர் விற்க மட்டுந்தான்
தட்டானிடம் பேசலாம்;
மோர் விற்க மட்டுந்தான்
முத்தனிடம் பேசலாம்

அவள்:
தயிர் விற்க மட்டுந்தான்!
மோர் விற்க மட்டுந்தான்!
உயிர் விற்க என் மனந்தான்
உடன்படுமா சொல்லத்தான்?
-------------

உடைத் திருத்தம்

உப்பு விற்கும் குப்பு -- நீ
ஒழுங்கை விட்டது தப்பு!
செப்புப்போல் உறுப்பு! -- வெளித்
தெரிவதே நகைப்பு -- தலையில் ( உப்பு விற்கும் குப்பு )

விற்குமே அரைக்கை -- உள்ள
மேலுக்கிர விக்கை? -- ஊர்
ஒப்பவே உடுக்கை -- அன்றோ
ஒழுங்கானந டத்தை -- தலையில் (உப்பு விற்கும் குப்பு)

தமிழ்ப் பெண்ணின் துப்பு -- நீ
தவறுவதா செப்பு?
அமைவான உடுப்பு -- நீ
அணிவதுதான் கற்புத் -- தலையில் (உப்பு விற்கும் குப்பு)

சார்ந்த நாக ரீகம் -- நம்
தமிழர் கண்ட தாகும்
மார்பு தெரிய விடுதல் -- தமிழ்
மாண்பினைக் கைவிடுதல்--தலையில் (உப்பு விற்கும் குப்பு )
--------------

ஒத்து வாழாத ஆண்கள்

அழகால் ஓடும் அருவி
அங்கே ஒரு குருவி
அழைத்ததே தன் ஆணை
ஆணின் நெஞ்சோ கோணை!

விழியை மற்றொரு பெட்டை
மேல், ஆண் வைத்த குட்டை
முழுதும் கண்ட பின்பும்
முற்றாதா தன் துன்பம்?

அத்தான் அத்தான் என்றே
அந்தப் பெட்டை நன்றே
முத்துக் குரல் தாவி
மூன்று முறை கூவி,

"ஒத்து வாழா ஆண்கள்
உயிரில் லாத தூண்கள்
செத்தேன என்றே அருவி
சேர்ந்த தந்தக் குருவி!
---------------

மணவாளனைப் பறிகொடுத்த மங்கை அழுகின்றாள்

இருப்பீர் என்றிருந்தேனே
இறந்தீரோ அத்தானே,
ஒரு பானை வெண்ணெயும் கவிழ்ந்ததோ?
உண்ணவே அணைத்த கை அவிழ்ந்ததோ?

சிரிப்பாலும் களிப்பாலும்
சேயிழையை வாழவைத்தீர்,
முரித்தீரோ என் ஆசையை அத்தானே?
முத்து மழையில் வாழ நினைத்தேனே.

வெண்ணெய் படும்நேரத்திலே
தாழிஉடைந் திட்டதுவோ?
கண்ணொளியை இழந்தேனே அத்தானே
காவலற்ற பயிரானேன் அத்தானே.

கண்ணுக்கே மையானீர்
கார்குழலில் பூவானீர்
மண்ணாகிப் போனதுவே என்வாழ்வு,
மறப்பினும் மறக்கவில்லை உம் சேர்க்கை.


விடுத்தானோ

தினம் -- மதன துரையை நாடி
மனது மிகவும் வாடி
வசமிழந்தேனென் சேடி! (தினம்)

மஞ்சமிசை வந்து கொஞ்சிக்கு லாவி
மகிழ்ந்திடப் பறந்திடுதென் ஆவி!
மாதென் செய்குவேன்?
மதிமயங்கி இப் பாவி! (தினம்)

காதலின் ஆழத்தில் என்னையும் தள்ளிக்
கடிதினில் அவன் வேறொரு கள்ளி
மீதில் மையல் கொண்டே
விடுத்தானோ எனைத் தள்ளி? (தினம்) ( 250 )
-------------

கள்ளி

'கள்ளி கள்ளி' எனஊர்க் காவலன்
துள்ளிக் கோடம் பாக்கம் தொடர்கையில்
ஒருவனை அறியா தொருவனை நாடும்
கள்ளி ஓடிடத், திருவக்
கள்ளி நிற்பது கண்டான் மகிழ்ந்தே.


நிலவு கேலி செய்தது

வருவதாய்ச் சொன்னவர் வந்திருப் பார்என்று
தெருக்கதவு திறந்து பார்த்தேன்; தென்னையை
'அத்தான்' என்றழைத் திட்டேன். அதற்கு
முத்தொளி சிதறிட முழுநிலா என்மேல்
கேலிச் சிரிப்பை வீசி
நாலுபேர் அறியச் செய்தது நங்கையே!
---------------

திருமண வாழ்த்து

வாழ்க தம்பதிகள்
வாழ்கவே வாழ்கவே!
வண்புனற் கங்கையென நன்றெலாம் சூழ்கவே!

ஆழ்கடல், ரவி, மதி,
வான் உள்ள காலம்,
ஆயுள் அடைக! ஓங்க அநுகூலம்.

ஆலெனத் தழைத்தும்
அறுகென வேறிழிந்தும்
மேலுக்கு மேலின்பம் மிகும்அன்பிற் பிழிந்தும் -- வாழ்க!

வேலைச் சுமக்கும்
பிள்ளைமிகும் எழிற்கிள்ளை
காலமெல்லாம் குடி கனத்தோங்க.

அடிமையும் மிடிமையும்
ஆண்மையால் மாற்றியே
ஆவியினும் இனிதாய்த் தேசத்தைப் போற்றியே -- வாழ்க!

கடமை நினைந்திரு
கையின்மேல் உரிமை
கண்டுயர் வெய்துக இத்தரை மேல்!

வாழ்க தம்பதிகள்
வாழ்க நற்சுற்றமே!
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!

வாழ்க நற்பாரத
தேசமும் புவியும்!
வாழ்க எவ்வுயிரும் நனி வாழ்க!
------------

போருக்கு வேண்டும் பிள்ளை

அந்மிழ்க் 'காத்திடப் போராம்
அன்பநீ செல்லுகின் றாயாம்,
வந்தது சேதி மகிழ்ந்தேன்.
வாழ்வில்என் காதலர் சீர்த்தி
இந்ததாள் எய்திட வேண்டும்;
இன்பமுத் தம்ஒரு கோடி
செந்தமிழ் வீரத்தில் சேர்ப்பேன்;
செங்களப் பிள்ளைகள் ஈவேன்.

இங்குள வண்டமிழ்க் கில்லா
எவ்வளம் கண்டனர் ஆள்வோர்;
எங்குள வைய மொழிக்கும்
ஈன்றதாய் நந்தமிழ் அன்றோ?
மங்கல நாணின்மேல் ஆணை,
மார்புறச் சேர்ந்துபின் செல்க,
தங்கும்என் சூலுள பிள்ளை
தங்களின் பின்வரும், வெல்லும்!

முத்தமிழ் நாட்டினில் இந்தி
முற்றுகை என்றொரு பேச்சும்
எத்திசை வந்ததோ போருக்
கிங்குநாம் ஒன்றெனச் சேர்ந்தீர்;
பெற்றிடும் பிள்ளையும் நாளை
பீடுடன் வென்றிட வேண்டிச்
சுற்றுக என்தமிழ்த் தோளை,
தோன்றுவன் போர்க்களம் தன்னில்!

வண்டமிழ் நாட்டில்தி ணிக்கும்
வன்செயல் தீர்த்திட இந்நாள்
கொண்டெழும் போர்க்குணக் குன்றே,
கோளரி யேஉயிர் அன்பே!
பெண்டகை யாள்வயி றீனும்
பிள்ளையும் வாகையைச் சூடக்
கண்ணுறங் காய்உயிர் எச்சக்
கால்முளை தோன்றிட வேண்டும்.

தென்மொழி காக்கும்பு ரட்சித்
தேரினை ஓட்டிடும் அன்ப,
நன்மொழி கொஞ்சிடும் ஆண்பெண்
மக்களின் நல்வர வேற்பை
என்விழி காணவும் வேண்டும்,
ஏமுறும் வெற்றியில் பூத்த
நின்இரு தோளினில் மக்கள்
ஏறிட என்னுடல் தோய்வாய்!
------------

பெண்களே!

பெண்களே உலகப் பெண்களே!
பிழைகள் செய்பவர் ஆண்கள் அன்றோ?
அழிவை அடைபவர் நீங்கள் அன்றோ? (பெண்களே!)

அன்பு மனைவியைப் பிரிய நேர்ந்தால்
அன்றிற் பறவையும் உயிரை விடுமே
அதுவு மிலையே ஆடவரிடமே. (பெண்களே!)

'என்னுடம்பில் நான்பாதி மனைவி பாதி'
என்று சொல்லும் ஆடவர்கள் மறுவினாடி
தன்மையிலா கோவலன் களாகின்றார், என்ன நீதி?
துன்பம் எல்லாம் மாதருக்கோ?
இன்பம் எல்லாம் ஆடவர்க்கோ?
என்று தொலையும் இந்த ஆட்சி? (பெண்களே!)

காதல் உணர்வோ உயிரின் இயற்கை.
மாதர் மட்டும் சூளைக் கல்லோ? (பெண்களே!)

பெண்களிடம் கற்பைஎதிர் பார்க்கும் ஆண்கள்
பெண்களையே கற்பழித்துத் திரியலாமோ?
பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்பு பொதுவன்றோ?

மாதருலகை ஆளவந்தார்
மமதையால் இரு கண்ணவிந்தார்
மனவிளக்கும் அவியலாகுமோ?

ஆடவர்க்கொரு நீதியோ -- எழில்
மாதர்கட்கொரு நீதியோ! (பெண்களே!)

யாமரத்தின் தோலுரித்துப்பெண் யானைக்கே
ஆண்யானை நீரூட்டும் இயற்கை அன்பும்
தாமணந்த மனைவியர்மேல் காட்டுவாரோ?

நங்கைமார்க்கிடர் செய்யும் ஆடவர்
நாட்டில் வாழ்வது தீமையே.

'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்றார் வள்ளுவனார்,

இக்கால
ஆடவர்கள் பெண்ணுயர்வை எண்ணுவரோ? (பெண்களே!)
---------------

வானப்பெண்
(ஒரு காட்சி சிறு நாடகம்)

முதுமாலை தழுவிய ஒரு சோலையில் மொய்குழல் ஒருத்தி ஐயனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். காதல் கனலாகிறது.

அவள் வானை நோக்குகின்றாள். வானில் பூரித்த மீன்களை நோக்குகின்றாள்.

பாட்டு 1

மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே? -- எங்கும்
வெண்முத் திறைத்தனவோ வானப்பெண்ணே?
'நானே வரேன்' என்று வாராததால் -- அவன்
நாளோடு தோளை வந்து சேராததால்
மேனிகொப் பளித்ததோ வானப் பெண்ணே?

{ மாமரத்தின் பின் ஒளிந்துகொண்டிருந்த குறும்புக்காரத்
தலைவன் அவளை எட்டிப் பார்த்துச் சிரித்துப்
பாடுகின்றான் }

ஏனோடி பூவில்லை கொண்டையிலே? அடி
இங்கே பார் மாமரத்து அண்டையிலே,
தேனோடைப் பக்கம் திரும்பாததால் -- தேன்
திரும்பி அருந்திட விரும்பாததால்
மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே?

{ திரும்பிப் பார்த்தவள் விரும்பி ஓடிவரவில்லை. வந்தவன்
நேரே ஓடிவராமல் மாமரத்தைத் தழுவியது வருத்தத்தை
அளித்தது. அவள் பாடுகின்றாள் }

பாட்டு 2


மாவேஅக் காளைக்குக் காப்பிட்டதோ? 'மா
மா வா வா' என்றுதான் கூப்பிட்டதோ?
சாவோடு மாரடிக்கும் பெண்ணாததால் -- இங்குத்
தாவிப் பறந்துவர எண்ணாததால்
மேனி கொப்பளித்ததோ வானப்பெண்ணே?

{ மா அதாவது மாமரத்துக்கும் அவனுக்கும்
உண்டாயிருந்த தொடர்பு பற்றி இழித்துக் கூறிய தலைவியை
நோக்கி, 'நீ மட்டும் சாவோடு கொண்ட தொடர்பு
சரியா? நீ அதை விடு. நான் மாவோடு கொண்ட
தொடர்பை விடுகின்றேன்' என்று பாடுகின்றான் தலைவன். }

பாட்டு 3


மாவை நான் விட்டிடுவேன் வஞ்சிக்கொடி -- கெட்ட
சாவை நீ விட்டு விட்டு வா இப்படி;
வாழ்வோடும் இன்பத்தைக் காட்டாததால் -- இங்கு
வந்தேறும் துன்பத்தை ஓட்டாததால்
மேனி கொப்பளித்ததோ வானப்பெண்ணே!
        { இருவரும் கூடி இன்புறுகின்றனர் }
-------------

அவள் அடங்காச் சிரிப்பு

ஏரிக்க ரைமீது தோழி -- நான்
இருந்தேன்என் கால்இட றிற்று,
நீரில் விழுந்திட்டேன் தோழி -- அந்த
நிலையிலும் நீரினை நோக்கிப்
''பாரிலுன் சாதிதான் என்ன'' -- என்று
பாவை நான் கேட்டிடல் உண்டா?
யார் சொன்ன சொல் இது என்றால் -- என்னை
ஈன்றவர் சொன்னது தோழி!

''என்நிலை'' என்பது கேட்பாய் -- அதை
ஏரிக்கரை என்று சொன்னேன்,
என்நிலை தப்பினேன் தோழி -- ஒர்
இன்பத் தடந்தோளில் வீழ்ந்தேன்.
அன்னதன் காரணம் கேட்பாய் -- என்
அறிவின் திறம் பெற்ற காதல்
மின்னல் வெளிச்சமும் வீச்சும் -- வேறு
வேறென்று சொல்பவர் உண்டா?

மலர் என்பார் காதல் வளத்தை -- அதன்
மணம் என்பர் அவன் தோளில் வீழ்தல்!
தலை நான்கு பெற்றவன் சொன்ன -- நான்கு
சாதிக்கிங் கேஎன்ன வேலை?
உலகினில் சாதிகள் இல்லை -- என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்றன்ற சாதி -- என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?

அதிகாரி கட்குத்தன் பெண்ணைக் -- கூட்டி
அறையினி லேகொண்டு சேர்த்து
மிதிமிதி என்று மிதிக்கப் -- பின்
விளைந்த விளைச்சலே பார்ப்பான்!
முதிர்ந்து முதிர்ந்து வரும் காமம் -- கொண்ட
முனிவர்கள் இருடிகள் தந்த
பதர்களே ஆரியர் சொல்லும்
சத்திரி யர் என்பதும் பார்த்தோம்.

இந்நாட்டு வணிகர் எல்லாம் -- பிரமன்
இடுப்பில் பிறந்தாராம் தோழி,
என்ன புளுகுகள் தோழி -- இதை
ஏன்நம்பு கின்றனர் பெற்றோர்?
தொன்மைத் தமிழக மாந்தர் -- நாம்!
சூத்திரர் என்றனர் நம்மை!
பொன்னுக்குப் பித்தளைமெருகா? -- தமிழ்ப்
பூணெல்லாம் பித்தளை தானா?

சந்தனச் சோலை நான் தோழி -- தென்றல்
தழுவத் தழுவினேன் தோழி,
அந்தச் செயல் கேட்ட பெற்றோர் -- அவன்
ஆர்? அவன் எச்சாதி என்றார் இந்தாடி அன்புள்ள தோழி -- எனக்
கெப்போ தடங்கும் சிரிப்பு?
வந்தவன் ஆண் சாதி என்றால் -- அவனை
மணந்தவள் பெண்சாதி தானே?
-----------

இன்பம்

சோலையில் தோகைமார்

சிந்தொன்று வண்டு பாடும்
சோலையில் செங்கையிற் பூப்
பந்தொன்றை எறிந்தாள் அன்னம்
''பார்'' என்றாள்! பறந்ததென்றாள்;
பொந்தொன்றில் சோலைக்கப்பால்
போயிற்றே என்று நைந்தார்!
பந்தில்லை என்றார் கிள்ளை
பார் என்றாள்! பறந்த தென்றாள்!


அன்னம் பந்தைத் தேடச் சென்றாள்

அன்னத்தைப் பழித்தாள் கிள்ளை
ஆதலால் அழுத அன்னம்
முன் அதைக் கொணர்வேன் என்று
முடுக்கொடு வெளியிற் சென்றாள்!
தென்னந் தோப்பொன்று கண்டாள்;
சிறுபந்தைத் தேடும் போதில்
புன்னையின் மறைவினின்று
பொலிந்தன இரண்டு கண்கள்.


வேலன் உதவிக்கு வந்தான்

குனிந்தனள், குனிந்த வண்ணம்
கூனிய முதுகின் மீது
புனைந்தனள் இரு மலர்க்கை!
பொன்முகம் கவலை நீரால்
நனைந்தனள்! ''என்ன தேடி
நலிகின்றாய்!'' என்று வேலன்
முனம்வந்து கேட்டான். அன்னம்
முகத்தினில் நாணம் பூத்தாள்.


அயலார்க்கு வேலையில்லை

சோலையில் அடித்த பந்து
தொலைவிலே -- இங்கு வீழ்ந்த
தாலதைத் தேடு கின்றேன்
அயலவர்க் கிவ்விடத்திலே
வேலை ஏதென்று வேலன்
விலாப்புறம் வேல் பதித்தாள்!
''நூலிடை முறியும் என்று
நுவல்வதும் பிழையா? என்றான்.

பொந்தில் இருவர் கைகள்

வேலனும் பந்து தேட,
அன்னமும் முயலுகின்றாள்,
ஆலின் வேர்ப் பொந்து கண்டார்
எதிரெதிர் அன்னம் வேலன்
ஏலவே நுழைத்த கைகள்
ஒன்றில் ஒன்றிழைந்த தாலே
மூலத்தை மறந்தா ராகி
நகை முத்தை முடிய விழ்த்தார்.


நான் போகவேண்டும்

''மேழியை உழவர் தூக்கி
வீட்டுக்குத் திரும்பும் நேரம்!
கோழிகள் சிறகு கூம்பி
அடைந்தன கூட்டுக்குள்ளே!
தோழிமார் பந்து கேட்பார்
தொலைந்தது தெரிந்தால் என்மேல்
ஏழிசை கூட்டிக் கேலிப்
பண்பாடி இழிவு செய்வார்!''


வேலன் அணைப்பு

இது கேட்ட வேலன் அன்பால்
இடதுகைப் புறத்தில் அன்னம்
புதைந்திட அணைத்த வண்ணம்
''போகலாம்'' என்று சொன்னான்!
எதற்கென்று மங்கை கேட்டாள்
''இதற்கல்ல; வீட்டிலுள்ள
புதுப்பந்து தரத்தான்!'' என்றான்;
அன்றில்கள் போக லானார்.

சோலையில் தோழிமார்


அன்னத்தைத் தேடும் கண்கள்
அழுதன. கிள்ளை என்பாள்
என்னோடி அன்னந் தன்னை
இன்னலில் தோய்த்த தென்றாள்
முன்னாக அன்னந் தன்னைத்
தேட நாம் முயல வேண்டும்
என்றனன் வஞ்சி, ஆங்கே
எழுந்தனர் பெண்கள் யாரும்!


வேலன் விலகினான்

''தோழிமார் வருகின்றார்கள்
தொலைவினில்!'' என்றாள் அன்னம்,
''வாழிய அன்பே!'' என்று
வேலனும் வாழ்த்திச் சென்றான்.


அன்னம் பந்து கொடுத்தாள்

நாழிகை ஆயிற்றந்தோ
நான் செய்த தொன்று மில்லை
பாழ்மகன் செய்த வேலை!
பந்திதோ!'' என்றாள் அன்னம்.

இது நம் பந்தல்ல

பொழிலிடை ஒருபாற் குந்திப்
பூப்பந்தை ஆராய்ந்தார்கள்
''எழிலான பந்தே, ஆனால்
இப்பந்து நம்பந் தன்றே?
விழிக்கின்றாய் அன்னம் என்ன
விளைந்தது சொல்க?'' என்று
கனிமொழிகேட்டாள்! அன்னம்
கண்ணீரால் சொல்லலுற்றாள்;

வேலன்மேற் குறை

தென்னந் தோப்புக்குச் சென்று
பந்தினைத் தேடும் போதே
புன்னைக்குப் பின்னிருந்து
பொதுக்கென எதிரில் வந்தே
''இன்னந்தான் தேடுகின்றாய்!
யான் தேடுகின்றேன்!'' என்று
கன்னந்தான் செய்தான். அந்தக்
கள்வன் என் கையைத் தொட்டான்.


தொட்ட இன்பம்

புறங்கையை விரலால் தொட்டான்
அதிலொரு புதுமை கேளீர்;
திறந்தது நெஞ்சம்! உள்ளே
சென்றனன் அந்தக் கள்வன்.
மறந்திட்டேன் உலகை, அந்த
மாக்கள்வன் இடு மருந்தால்
பறந்தது நாணம் பட்ட
பாட்டையார் அறிவார்?'' என்றாள்.

என்னைக் கருப்பஞ்சக்கை யாக்கினான்

பூப்பந்து கிடைக்க வில்லை
போதுபோயிற்றே! அங்கே
கூப்பிடு வார்கள் தோழமைக்
குயில்களும் என்று சொன்னேன்.
காப்பாக என் இடுப்பைக்
கைப்புறம் இறுக்கி, ஆலை
வாய்ப்பிலே கருப்பஞ் சக்கை
ஆக்கினான் வஞ்ச நெஞ்சன்.

புதுப்பந்து தந்தான்

அணைத்திட்ட அணைப்பில் என்னை
வீட்டுக்கே அழைத்துச் சென்றான்;
முணுமுணுத்தேன் அப்போதென்
முகத்தோடு முகத்தைச் சேர்த்தான்;
அணிமலர்ப் பந்து தந்தான்!
''அதே இது''! என்றாள் அன்னம்,
மணப்பந்தல் இடுதல்தான் நம்
மறுவேலை என்றாள் கிள்ளை!

நான்போதும்

''நாளையே பந்து தேட
நாமெல்லாம் போக வேண்டும்
காளையை அங்குக் கண்டால்
கடுஞ் சொல்லை உகுக்க வேண்டும்
''வேளையோ டேகு வோம்நாம்
வீட்டுக்கே!'' என்றாள் முல்லை
''நாளைக்கும் பந்து தேட
நான் போதும்!'' என்றாள் அன்னம்.
-------------

பள்ளிக்குப் போகும் புள்ளிமான்

திருநாளில் என்னைத் திரும்பிப்பார்த் தாள்பின்
ஒருநாள் உரையாடத் தானும் -- உரையாடி
நான்நகைக்கத் தானும் நகைத்தாள் அதனாலே
வான நிலவும் மனமொத்துப் -- போனாள், என்
இன்பத்தை வாழ்வில் இணைஎன்றேன், அன்னவள்
துன்பத்தை என்வாழ்வில் தூர்த்துவிட்டாள் -- இன்னும்
படித்துப் படிப்படியாய் முன்னேற்றத் திட்டம்
முடித்துநான் வாழு முறைக்கு -- முடிவொன்று
பண்ணுவ தென்றும் பகர்ந்திட்டாள்; இன்றதனை
எண்ணுவ தென்ப திழுக்கென்றாள் -- கண்ணிலே
சற்றும் தொடர்பின்றித் தன்கருத் திற்கும்ஒரு
முற்றுப்புள் ளிக்குறியும் முன்வைத்தாள் -- உற்றுக்கேள்
கண்ணப்பா நானவளைக் கட்டாவிட் டால்வாழ்வு
மண்ணப்பா என்றுரைத்தான் மன்னாதன் -- ''மன்னாதா,
பார்த்தாள் பகர்ந்திட்டாள் பற்காட்டி னாள்என்று
கூத்தாடு கின்றாய்க் குரங்காகக் -- கோத்த
பவழம் சிரிக்கும், பறிக்க முயன்றால்
அவிழ விடுமா அதற்குள் -- தவழ்சரடு?
பள்ளிக்குச் செல்லுமொரு செந்தமிழ்ப் பாக்கியத்தை
அள்ளிப், பெண் முற்போக்கில் ஆறாத -- கொள்ளிவைக்க
எண்ணாதே எல்லாரும் அண்ணன்மார் என்றெண்ணும்
பெண்ணாத லாலும், இரும்புமனம் -- பண்பாடு
பெற்றுள்ள தாலும் அவள் பேசினாள் உன்னிடத்தில்,
முற்றிய கல்வி முயற்சியே -- நற்றவம்
என்று நினைக்கும் இளைய பெருமாட்டி!
கன்றாத் தமிழ்வாழைக் கன்றின்கீழ்க் -- கன்றுதனை
அன்னை என்று போற்றப்பா'' என்றேன் அம் மன்னாதன்
பின்ஓடி னான் அறிவு பெற்று!
------------

வெப்பத்திற்கு மருந்து
{ பொன்னியும் வெற்றியும் பேசிப் போகிறார்கள் }

''ஏதிந்த நேரம் பெண்ணே
எங்கே நீ செல்லு கின்றாய்?
ஓதென்றான் வெற்றிவேலன்,
''உடைவாங்க'' என்றாள் பொன்னி
''தீதானே வெயிலும் உன்னைத்
தீய்க்காதோ'' என்றான் வெற்றி.
''போதோடு சேலை தேவை
புறப்பட்டேன் வெயிலில்'' என்றாள்.

''உலையிலே இரும்பு போல
வெயிலிலே உடல் வெதும்பும்
நிலையிலே என்ன செய்வார்
நீணில மக்கள்'' என்றான்.
''இலையாட வில்லை கொண்ட
புழுக்கத்துக் கெல்லை யில்லை,
அலைமோதும் கடலோ ரத்தும்
அணுக்காற்றும் இல்லை'' என்றாள்.

''என்குடை நிழலில் வந்தால்
எனக்கென்ன குறைந்து போகும்?
பொன்போல வரலாம், மேனி
பொசுங்கிட வேண்டாம்'' என்றான்.
நன்றென நெருங்க லானாள்,
நடந்தனர் இரண்டு பேரும்;
குன்றும் பூங்கொடியும் போல;
அருகினில் கடைகள் கண்டார்.


''இக்கடை களிலே உள்ள
சேலைகள் மட்டம்'' என்றாள்,
''அக்கடை தொலைவா னாலும்
அங்குதான் நல்ல சேலை
விற்கும்என் றுரைக்கின் றார்கள்,
விலைமலி வென்கின் றார்கள்,
கைக்குடை உண்டு பெண்ணே,
கடிதுவா போவோம்'' என்றான்.

உழவனும் உழத்தி தானும்
ஒவ்வாத உளத்த ராக
அழலெனத் தாம்சி னந்தே
அடுக்காத மொழிகள் பேசி
வழியினில் வரலா னார்கள்;
உழத்தியோ வெயிலால் வாடி
தழைத்த ஒர் மரத்தின் கீழே
சாய்ந்தனள், அவனும் சாய்ந்தான்.

இரங்கிடத் தக்க காட்சி
இருவரும் கண்டார் பொன்னி
''மருந்துண்டோ வெப்பத் திற்கு
மாய்கின்றார் இவர்கள்'' என்றாள்.
சரேலென வெற்றி வேலன்
தையலோ டங்கே சென்றே
''எரிந்திடும் வெயிலால் நேர்ந்த
இன்னலா?' என்று கேட்டான்


''வெய்யிலில் சாகின் றேன் நான்
மெய்ம்மைதான் பிழைக்க அந்தத்
தையல்பால் மருந்தி ருந்தும்
கொடேனென்று சாற்று கின்றாள்,
ஐயனே, அவள் உளத்தின்
அன்பள்ளித் தன்கை யால்என்
மெய்தடவி விட்டால் வெப்பம்
தீரும்'' என்றுழவன் சொன்னான்.

''உனக்கென்ன துன்பம் என்றே''
உழத்தியைப் பொன்னி கேட்டாள்;
''எனையலால் வேறு பெண்ணை
எண்ணுவ தில்லை என்று
மனமார உழவன் இங்கு
மாறிலா உறுதி சொன்னால்
கனல்வெயில் குளிரும்'' என்றாள்.
வியப்பிடைக் கலந்தாள் பொன்னி.

உழவனும் உறுதி சொன்னான்,
உழத்தியும் உளம் மலர்ந்தே
தழைஅன்பால் எழுக என்றே
தளர்க்கையால் தொட்டி ழுக்க
மழையிடை எருமை கள்போல்
மகிழ்வொடும் நடந்து சென்றார்;
வழியிலே வெப்பம் தீர்க்கும்
மருந்தினை இருவர் கண்டார்.

பொன்னியின் இரண்டு கைகள்
வெற்றியின் பொன்னந் தோளில்
மன்னிட, இருவர் நோக்கும்
மருவிட, வெப்பத் திற்கோர்
நன்மருந் தருந்தி னார்கள்
நாளெல்லாம் வெப்பம் ஏதும்
ஒன்றாத இன்ப வாழ்க்கை
ஒப்பந்தம் ஒன்றும் கண்டார்!
--------------

பேசுதற்குத் தமிழின்றிக் காதலின்பம் செல்லுமோ?

நெஞ்சில் நிறைந்த காதலால் அந்த
நேரிழை, தன்னை எனக்களித் தாளே.
அஞ்சினாள் என்றும், தந்தையின் வறுமை
அகற்ற எண்ணி வேலனுக் கேதான்
தஞ்ச மாயினாள் என்றும்நீ சொல்கின்றாய்;
சாவுக்கும் எனக்குந்தான் திருமணம் போலும்!
வஞ்சிக் கொடிபோல்வாள் வஞ்சியா? அன்றி
வஞ்சிப்பாள் வஞ்சியா? ஐயுற வைத்தனள்!.

கூடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள
கொஞ்சு கிள்ளை இல்லை என்கின்றாளா?
வீடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள
மேலோன் இல்லைஎன் கின்றாளா அவள்?
தேடி என்னைத் தன்னெஞ்சில் வைத்தவள்
திறந்துவிட் டாள்எனில் இறந்துபட் டிருப்பாளே!
ஈடிலாக் கற்பினாள் என்றுநான் நம்பினேன்,
இல்லை என்றால் தமிழுக்கே நாணமாம்,

தன்னு ளத்தில் ஒருவனுக் கிடந்தந்து
மற்றொருத்தனைத் தாவுவ தென்பது
தென்னவர் கற்பன்று! கற்பை இழந்தவள்
தீந்தமிழ் நாட்டினள் என்றும்எண் ணப்படாள்.
புன்னை கொய்துகொண் டிருந்தாள் எனைக்கண்டு
புன்னகைப்பினால் போட்டுக் கொலைசெய்தாள்
பின்னொரு நாளிலே தன்வீட்டுத் தோட்டத்தில்
பொத்த லாம்படி என்றன் கன்னத்தைக் கொத்தினாள்.

தமிழினும் இனியதோர் மொழிதேடித் திரிவேனைத்
தடுத்தாட் கொண்ட பெருமாட்டி தான்தன்னை
அமிழ்தென்று காட்டி உண்ணவும் நீட்டினாள்.
அவள்பிறனுக்கா அளித்தாள் எச்சிற் பண்டத்தை?
உமிழாதா வையகம்? கதிர்மதி ஒழிந்தாலும்
ஒழியாப் புகழுலகில் கால்வைக்க ஒண்ணாதே.
அமிழ்ந்ததா என் ஆசை அவள்வஞ்சக் கடலினில்?
அடைந்திட்டதா மாசும் தமிழ்ஒழுக்கந்தன்னில்?


வந்த ஆளிடம் இவ்வாறு கூறித்தன்
வயிற்றை நோக்கினான்; கத்தியைத் தூக்கினான்;
கொந்து முன்னர்க் கத்திதூக் கியகை
குறுக்கில் மறிக்கப் பட்டது! குரல்ஒன்றும்
"அந்த மங்கைதான் நான என் றெழுந்ததே!
அன்பு மங்கையைக் காதலன் கண்ணுற்றான்;
இந்தியாவில் மறைந்திட்ட தமிழகம்
எதிரில் வந்ததுபோல் மகிழ்ந்தான் அவன்.

நீஎனக்குத் தானேடி கிள்ளையே
நின்ற வாறு நெஞ்சைக் கலக்கினாய்,
"நேயத் தமிழே என்தோளில் சாய என்று
நீட்டு கின்ற கரும்பான கைகளைத்
தூய நங்கை விலக்கினாள் சொல்லுவாள்:
தொன்மையும் மேன்மையும் உடையவள் ஆந்தமிழ்த்
தாயிருந்தனள், தமிழகக் காதலர்
தமிழிற் பேசித் தமிழின்பம் உற்றனர்.

நாமும் இன்று தமிழ்பேசி இன்ப
நல்ல வாழ்வின் வழிநோக்கி நடக்கின்றோம்;
தீம னத்து வடக்கர்நம் தமிழினைத்
தின்றொழிக்க ஒவ்வொரு பல்லையும்
காயமாட்டித் துறட்டுக் கோலால் நீட்டிக்
கால்மாட்டில் நிற்கின்றார்! பேசு தற்கே
தேமதுரத் தமிழின்றிக் காதல் இன்பம்
செல்லுமோ? செல்லுமோ தமிழ வாழ்வு?"

உரை கேட்டான், உரைகின்றான் தமிழ வேங்கை;
ஒருமொழிவைத் துலகாண்ட தமிழ னைப்போல்
ஒருநாவ லந்தீவை வென்றே னுந்தன்
ஒரு மொழிவைத் தாட்சிசெயக் கனவு கண்ட
பெருவேலான் அசோகனால் நெருங்க ஒண்ணாப்
பெருநெருப்பைத் தில்லிஎனும் சிறு துரும்பா
நெருங்கும் நீ? தொடக்கம்செய் என்று சொன்னான்!
நெருங்கினார் குளிரருவித் திருக்குற்றாலம்!
--------------

எது பழிப்பு?

1

பத்து வயதில் பழனியப்பன் வீட்டினிலே
முத்தம்மை என்னும் முதிராத செங்கரும்பு
வேலைசெய்தி ருக்கையிலே வேம்பென்னும் தாயிறந்தாள்;
மேலுமோர் ஆண்டின்பின் தந்தையாம் வீரப்பன்
தானும் இறந்தான். தனியாக முத்தம்மை
கூனன் வரினும் குனிந்துபுகும் தன்குடிலில்
வாழ்ந்திருந்தாள், அண்டைஅயல் வாழ்வார் துணையோடு
தாழ்ந்திடுதல் இன்றியே தன்வருமா னத்திலே
நாளைக் கழித்துவரும் நங்கை பருவமுற்றாள்
தோளை அழகு வந்து சுற்றியது; முத்தம்மை
கண்ணை ஒளிவந்து கௌவியது; முன்னிருந்த
வண்ண முகமேதான் வட்டநிலா ஆகியது;
மொட்டு மலர்ந்தவுடன் மொய்க்கின்ற வண்டுகள்போல்
கட்டழகி அன்னவள்மேல் கண்வைத்தார் ஆடவர்கள்.

2

அச்சகத்தில் வேலைசெய்யும் அங்கமுத்துத்தான் ஒருநாள்
மெச்சுமெழில் முத்தம்மை மெல்லியினைத் தான்கண்டு
தன்னை மணந்துகொண்டால் நல்லதென்று சாற்றினான்;
இன்ன வருமானம் இன்னநிலை என்பவெல்லாம்
நன்றாய்த் தெரிந்துகொண்டு நல்லதென்றாள் முத்தம்மை.
ஊரார்கள் கூடி ஒருநாள் திருமணத்தைச்
சீராய் முடித்தார்கள். செந்தமிழும் பாட்டும்போல்
அங்கமுத்து முத்தம்மா அன்புடனே வாழ்ந்துவந்தார்.
இங்கிவர்கள் வாழ்க்கை இரண்டாண்டு பெற்றதுண்டு;

3

வாய்ச்சொல்லாய்த் "தோளில் வலி" என்றான்; மட்டாகக்
காய்ச்சல்என்று சொன்னார் மருத்துவரும் கைபார்த்து!
நாலுநாட் பின்னை நளிர் ஏற நாவடங்கிப்
பாலும் உட்செல்லாத பான்மை அடைந்தே
இறந்துவிட்டான் அங்கமுத்து. முத்தம்மை மார்பில்
அறைந்தபடி கூவி அழுது புரளுகையில்
அண்டை அயலுள்ளார் அங்கமுத்தின் மெய்கழுவி
தொண்டர் சுமக்கச் சுடுகாட்டை எய்துவித்தார்.
நாட்கள்நில் லாது நடந்தன! முத்தம்மை
வாட்டுகின்ற ஒவ்வோர் நொடிக்கும் மனம்பதைத்தாள்.
அங்கமுத்து மாண்டான். அறுபதுநாள் சென்ற பின்னும்
எங்கும் அவனே எனஅழுதாள் முத்தம்மை!
மாதங்கள் மூன்று மறைந்தபின்னும், அங்கமுத்தின்
காதில்விழும் என்றழைப்பாள் 'கண்ணாளா' என்று!

4

துணைவனைச் சுட்ட சுடுகாட்டை நோக்கி
இணைவிழிகள் நீர்பெருகச் சென்றாள். இடையிலே
நள்ளிரவில், மக்கள் நடப்பற்ற தோப்பினிலே,
பிள்ளையின் பேர்சொல்லிக் கூவினாள் அங்கொருத்தி
'தங்கமுத்தே தங்கமுத்தே' என்ற பெயர் தான் கேட்ட
மங்கையவள் முத்தம்மை வந்தான் கணவனென்று
நின்றாள்; விழியாள் நெடிதாய்வாள் தோப்பெல்லாம்.
தன் துணைவன் போல தனியாக வந்துநின்றான்.
யார்? என்று கேட்டாள், நீ யார்? என்றான், வந்தவனும்;
தேரோடும் போதே தெருவில் அது சாய்ந்தது போல்
மாண்டார்என் அத்தான் மறைந்தார்; சுடுகாட்டில்
ஈண்டுநான் வந்தேன் எதிரில் உமைக்கண்டேன்;
உம் பெயரை யாரோ உரைத்தார், அது துணைவர்
தம்பேர்போல் கேட்டதனால் தையலுளம் பூரித்தேன்;
என்பெயரோ முத்தம்மை என்றாள் அது கேட்டுத்
தன்பெயர் தங்கமுத் தென்றான்; தளர்வுற்றாள்.
தூயோன் எரிந்த சுடுகாடு போகலுற்றாள்.
"நீஏன் சுடுகாட்டை நேர்கின்றாய் மங்கையே
தச்சுவே லைசெய்யும் தங்கமுத்துப் பேர்சொன்னால்
மெச்சாதார் யாருமில்லை, மெய்ம்மைஇது கேட்டுப்பார்;
தன்னந் தனியாய் நீ வந்ததுவும் தக்கதல்ல,
உன்வீடு செல்வாய்நீ, நானும் உடன் வருவேன
என்றான். அவளும் எதிரொன்றும் கூறாமல்
சென்றாள்; உடன் சென்றான். செங்கதிரும் கீழ்க்கடலில்
தோன்றியது தோகைக்கும் தங்கமுத்தின் மேல்உள்ளம்
ஊன்றியது; தாமே உறுதிசெய்தார் தம்மணத்தை.
தங்கமுத்தின் அன்னை தளர்ந்த பருவத்தாள்,
மங்காத செல்வம்போல் வாய்த்த மருமகளைக்
காணும்போ தெல்லாம் மகிழ்ச்சிக் கடல்படிவாள்.
ஆணழகன் தன்மகனும் அன்பு மருமகளும்,
வேலையிலாப் போது விளையாடல் தான்கண்டு
மூலையினில் குந்தி முழுதின்ப மேநுகர்வாள்.
ஆண்டொன்று செல்லஅவள் ஆண்குழந்தை ஒன்றுபெற்றாள்-
ஈண்டக் குழந்தைக் கிரண்டுவய தானவுடன்
தங்கமுத்து மாண்டான்; தளர்ந்தழுதாள் முத்தம்மை.
மங்கை நிலைக்கு வருந்தினாள் அக்கிழவி,

5

மாமிதன் வீட்டினை நூறு வராகனுக்குச்
சாமியப்ப னுக்குவிற்றுத் தையலிடம் தந்து
கடையொன்று வைக்கக் கழறினாள். அன்னாள்
உடனே கடைதிறந்தாள், ஊர் மதிப்பும் தான்பெற்று.
வாழ்கையில் ஓர்நாள், மனைவி தனைஇழந்த
கூழப்பன், மங்கையிடம் தன்குறையைக் கூறலுற்றான்,
"மாடப் புறாப்போல், மயில்போல், குயில்போலத்
தேடி மணந்தேனா பத்தாண்டும் செல்லப்
பிள்ளையில்லை, வேறே ஓர் பெண்ணையும் நீ மணந்து
கொள்' என்றாள்; 'கோதையே, நீஇருக்கு மட்டும்
எவளையும் தீண்டேன்நான்' என்று முடித்தேன்;
அவள் அன்று மாலை அனல்மூழ்கி மாண்டுவிட்டாள்.
இப்படிச்செய் வாள்என் றெனக்குத் தெரிந்திருந்தால்
அப்படிநான் சொல்ல அணுவளவும் ஒப்பேன்.
மணம்புரிய வேண்டும் நான் மக்கள்பெற வேண்டும்.
தணல்மூழ் கினாளின் எண்ணமிது தான என்றான்.
கேட்டிருந்த முத்தம்மை கிள்ளிஎறி பூங்கொடிபோல்
வாட்டம் அடைந்தாள்; மனமெல்லாம் அன்பானாள்,
"என்னை மணப்பீரோ என்றன் அருமைமகன்
தன்னைஉம் பிள்ளையெனத் தாங்கத் திருவுளமோ?
ஐயாவே" என்றாள். உடனே, அருகிலுறும்
பையனை அன்னோன் தூக்கிப் பத்துமுறை முத்தமிட்டான்.

6

தங்கமுத்தின் தாய்கண்டாள், கூழப்ப னின்உருவில்
தங்கமுத்தைக் கண்டாள்! தணியாத அன்பினாள்
வாழ்த்தினாள் முத்தம்மை கூழப்பன் மாமணத்தை!
வீழ்த்தினார் அவ்விருவர் மேல்வீழ்ந்த துன்பத்தை!
பூவும் மணமும்போல் பொன்னும் ஒளியும்போல்
கோவையிதழ் முத்தம்மை கூழப்பன் இவ்விருவர்
ஒத்தின்ப வாழ்வில் உயர்ந்தார். வாணிகமும்
பத்துப்பங் கேறியது. பையன் வயதும்
இருப தாயிற்று மணம் செய்ய எண்ணிப்
பெருமாளின் பெண்ணைப்போய் பேசுவதாய்த் திட்டமிட்டார்.

7

மாலையிலே முல்லை மலர்ப்பொடியைத் தானள்ளித்
சோலையெலாம் வண்டிருந்து சூறையிடும் தென்றலிலே
மேலாடை சோர விளையாடும் தோகைஎதிர்
வேலன் வரலானான். கண்டாள் விளம்புகின்றான்;
உம்மைக் கடைத்தெருவில் கண்டேன் நெடுநாள்பிள்
மெய்ம்மறவர் வாழ்தெருவில் கண்டு வியந்ததுண்டு.
எந்தப் பெண்ணுக்காக இவ்வுலகில் வாழ்கின்றீர்?
அந்தப் பெண் உம்மை அடையப் புரிந்ததவம்
யாதென்றாள். வேலன் இயம்பத் தலைப்பட்டான்;
காதலெனும் பாம்புக் கடிமருந்து நீ என்று,
தேடிவந்தேன் ஒப்புதலைச் செப்பிவிடு. நீ வெறுத்தால்
ஓடிஇதோ என் உயிர் மாய்த்துக் கொள்ளுகின்றேன்.
என்றான். "உனக்குநான என்றாள். உவப்புற்றான்;
நின்றாளின் நேர் நின்றான்; நீட்டியகைம் மேல்விழுந்தாள்.
மாலை மறைந்ததையும், வல்லிருட்டு வந்ததையும்
சோலை விளக்கம் தொலைந்ததையும் தாம் உணரார்.
குப்பத்து நாய்தான் இடிபோற் குரைத்ததனால்
ஒப்பாமல் ஒப்பி உலகை நினைத்தார்கள்.
விட்டுப் பிரியமனம் வெம்பிப் பிறர் விழிக்குத்
தட்டுப் படாதிருக்கத் தத்தம் இடம்சேர்ந்தார்.

8

பெருமாளிடம் சென்றான் கூழப்பன், "பெற்ற
ஒருமகளை வேலனுக்கே ஒப்படைக்க வேண்டு" மென்றான்,
"தாயோ பழியுடையாள தந்தையும் நீயல்லை,
சேயோ திருவில்லான்," என்றான் பெருமாள்.
"மருமக னாவதற்கு வாய்த்தபல பண்புகள்
பையனிடம் உண்டா எனப்பாரும் மற்றவரை
நைய உரைத்தல் நலமில்லை" என்றுரைத்தான்.
விண்ணில் இருக்கின்றாள் தோகை, பழிவேலன்
மண்ணில் கிடக்கின்றான்; மாற்றம் உணர்ந்தாயோ
என்றான் பெருமாள். எதிரே ஆள் நீள் அஞ்சல்
ஒன்றைப் பெருமாள்பால் நீட்டிவிட் டோடிவிட்டான்.
வீட்டின் ஒரே அறைக்குள் வேலனும் தோகையும்
காட்டுப் புறாக்களைப்போல் காதல்நலம் காணுகின்றார்:
ஒத்த உளத்தை உயர்ந்த திருமணத்தைப்
பத்துப்பே ரைக்கூட்டிப் பாராட்ட எண்ணமுண்டோ?
பாராட்டு நல்விழா எந்நாள்? இருபெற்றோர்
நேரே உரைத்திடுக. நெல்லிமர வீட்டினுள்ளார்
இங்ஙனம் தோகையாள் வேலன் இருவர்ஒப்பம்.
அங்கே இதைப்படித்தான் ஆம்ஆம் பொருத்தம்என்றான்.
வேலவன் தோகை விழைவின் விழாவையே
ஞாலமே வாழ்த்தியது நன்று.
----------------

இன்றைக்கு ஒத்திகை, நாளைக்குக் கூத்து

மாணிக்கம் தன்வீட்டு
மாடியின் மேற்குந்தி
தோணிக்கா ரத்தெருவின்
தோற்றத்தைப் பார்த்திருந்தான்.
பொன்னிதன் வீட்டுக்
குறட்டினிற் பூத்தொடுப்பாள்.
தன்விழியைத் தற்செயலாய்
மாடியின் மேல்எறிந்தாள்!

பார்வை வலையில்ஒரு
பச்சைமயில் பட்டதனால்
யார்வைத்த பூங்கொடியோ
என்றிருந்தான் மாணிக்கம்!

பூத்தொடுக்கும் கைகள்,
புதுமைபார்க் கும்கண்கள்,
நோக்குவதும் மீளுவதும்
ஆக இருவரின்
உள்ளம் இரண்டும்
ஒட்டிக் கிடக்குமங்கே!
"தள்ளுவளா? ஒப்புவளா
தையல எனும் ஐயத்தை
மாணிக்கம் எண்ணி
மணிக்கணக்காய்த் துப்புற்றான்.
ஆணிப்பொன் மேனியினாள்
எண்ணமும் அப்படித்தான்.
அன்னைதான் பொன்னியினை
உள்ளிருந்தே "உண்ணாமல்
என்னசெய் கின்றாய என்
றேசினாள் பொன்னி
இதோவந்தேன் என்பாள்;
எழுந்திருக்க மாட்டாள்.
இதுவெல்லாம் காதினில்
ஏறுமா? மாடியினைப்
பார்ப்பாள்; சிரிப்பாள்!
அதேநேரம் பச்சையப்பன்,
ஊர்ப்பேச்சு பேசுதற்கே
உள்வந்து மாடியிலே
மாணிக்கம் செய்திகண்டு
"மங்கையிடம் என்னகண்டாய்?
காணிக்கை வைத்தாளா
தன்நெஞ்சைக் காட்டென்றான்.
"பெய்வளைதான் தன்மீது
பெய்துள்ள அன்பினிலே
ஐயமில்லை" என்றே
அறிவிப்பான் மாணிக்கம்.
"துத்திப்பூக் கொண்டையும் நானும்நல் துய்க்கின்ற
ஒத்திகை இன்றைக்கு
நாளைக்குக் கூத்து!"
---------

This file was last updated on 08 August 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)