pm logo

புதுமைப்பித்தன் கவிதைகள்
(தொகுத்தவர்: ரகுநாதன்)


poems of putumaippittan
(compiled by Raghunathan)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

புதுமைப்பித்தன் கவிதைகள்
தொகுத்தவர்: ரகுநாதன்

Source:
புதுமைப்பித்தன் கவிதைகள்
தொகுத்தவர்: ரகுநாதன்
ஸ்டார் பிரசுரம் ,
மேலக்கோபுரத் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5 , மதுரை
முதற்பதிப்பு: ஜூன் 1954, இரண்டாம் பதிப்பு : நவம்பர் 1957
விலை ரூ 2.00
STAR PUBLICATIONS.
TRIPLICANE, MADRAS-5 / WEST TOWER ST., MADURAI
தமிழன் அச்சகம், சென்னை-14
-----------------------

பதிப்புரை

தமிழ் மொழி பல்லாயிரக்கணக்கான வருடங் களாகப் பல துறைகளில் புகழுடன் வளர்ந்து வந்திருக் கிறது- அவற்றுள் கவிதைத் துறை மிகக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. சங்க கால முதல் இன்றுவரை எத்தனையோ தரப்பட்ட கவிதை முறைகள் தமிழ் நாட்டில் தோன்றி வளர்ந்து வந்துள்ளன. அந்தக்
காலத்திற்கும், கவிஞர்களின் ஆற்றலுக்கும் அவர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து, பாவம் முதலியவற்றிற்கும் ஏற்றவாறு பாவினங்களை இயற்றி வந்தனர். இவ்வாறு வளர்ச்சி பெற்று வந்த கவிதைத் துறையின் ஒரு கிளை தான் புதுமைப்பித்தன் கவிதைகள்.

இந்தத் தலைமுறையில் தமிழ் மக்களது பெரு மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர் புதுமைப் பித்தன். அவரது சிறு கதைகள் தமிழ் மொழியின் பெருமை மிக்க பொக்கிஷமாகும்.

சிறு கதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித் தந்த புதுமைப்பித்தன் கவிதைத் துறையிலும் புதுச் செல்வம் தேடித் தந்திருக்கிறார்.

அவ்வப்பொழுது பத்திரிகைகளில் வந்த கவிதைகள் பல. வானொலி நிலையத்தில் ஒலி பரப்பப்பட்டவை சில. இவை தவிர புதுமைப்பித்தனால் எழுதப்பெற்ற கடிதங் களிலும், சிறு சிறு நறுக்குகளிலும் காணப்பட்டவை அவற்றையெல்லாம் தேடிச் சேகரித்துத் திரட்டிக் குறிப்புக்களுடன் நமக்குத் தருகிறார் ரகுநாதன்.
தமிழுலகம் ரகுநாதன் அவர்களையும் நன்கு அறியும். புதுமைப்பித்தனின் உள்ளப் பண்பையும் இலக்கிய சிருஷ்டியின் சூக்ஷ்மத்தையும் நன்கறிந்த ரகுநாதன் எழுதியுள்ள முன்னுரையும் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன் தரும் என்று நம்புகிறோம். புதுமைப்பித்தன் கவிதைகளைத் தொகுத்துக் குறிப்பெழுதி நல்ல முறையில் வெளிவருவதற்குப் பேருதவி புரிந்த ரகுநாதன் அவர் கட்கு எங்கள் நன்றி.

இடைவிடாது எங்கட்காதரவு காட்டி உற்சாகமூட்டி வரும் தமிழ் மக்கட்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்.

கண. இராமநாதன்
பதிப்பாசிரியன்.
----------------------

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள்.
கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவி யாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன ? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு.
ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கி விடாது. கவிதையின் முக்கியபாகம் அதன் ஜீவ சக்தி. அது கவிஞனது உள் மனத் தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது.

-புதுமைப்பித்தன்
---------------------

பொருளடக்கம்
1.முன்னுரை 12. கடவுளுக்குக் கண்ணுண்டு
2. நிசந்தானே சொப்பனமோ ! 13. பொங்கல் நம்பிக்கை
3. ஓடாதீர்! 14. அல்வா
4. உருக்கமுள்ள வித்தகரே ! 15. காலைக்கடல்
5. காதல் பாட்டு 16. அசரீரி
6. மாகாவியம் 17. பாரதிக்குப் பின்
7. இணையற்ற இந்தியா 18. கங்கை நதி
8. தொழில் 19. பாட்டுக் களஞ்சியமே !
9. இருட்டு 20. உதிரிக் கவிகள்
10. பாதை 21.குறிப்புக்கள்
11. திரு.ஆங்கில அரசாங்கத் தொண்டர்
---------------------

முன்னுரை


கவிதை என்றால் என்ன ?
'எதற்கும் இந்தச் சலித்துப் போன பழங்கேள்வி ?' என்று முணு முணுக்கும் குரல் குறுக்கிட்டு வழிமறிப்பது எனக்குக் கேட்கத்தான் செய்கிறது. எனினும், புதுமைப் பித்தனின் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதப்புகும் நான் இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பத்தான் வேண்டி யிருக்கிறது; அதைப் பற்றி என் அபிப்பிராயத்தையும் ஓரளவு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

ஏன் என்றால், புதுமைப்பித்தனின் கவிதையைப் பற்றி இரண்டுவிதமான தப்பபிப்பிராயங்கள் தமிழ் நாட் டில் உண்டு; அவற்றைத் தெளிவு படுத்தாமல் புதுமைப் பித்தனின் கவிதையை அறிமுகப் படுத்தி வைக்க முடியாது.

அவை என்ன ?

புதுமைப்பித்தனைச் சிறந்த சிறுகதை ஆசிரியராக இன்று தமிழகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அவரைச் சிறுகதை ஆசிரியராகவே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய,மறுத்த இலக்கியவர்க்கமும் தமிழகத்தில் இருக் கத்தான் செய்தது.

சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் சாதித்தது என்ன?

சிறுகதை என்ற இலக்கிய உருவம் மேலை நாட்டி லிருந்து நாம் இறக்குமதி செய்துகொண்ட சரக்கு. சிறு கதை என்பதற்கு இதுதான் இலக்கணம் என்று மேலை நாட்டாரும் இலக்கணம் வகுக்கவில்லை. கதாசிரியனின், மனோபாவத்துக்குத் தக்கவாறு பற்பல சிறுகதை உருவங் கள் அங்கு கிளைத்தன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேலைநாட்டு இலக்கிய கர்த்தாக்கள் பல சிறுகதைகளை எழுதி நடைமுறையில் அமைத்துக் கொடுத்த அனுபவ சித்தாந்தம்தான் சிறுகதையின் மரபி லக்கணமாக அமைந்தது. எனினும், வேறு பல சிறுகதை உருவமரபுகளும் தோன்றி வந்தன ; வருகின்றன. மேலை நாட்டுமுறையைத் தழுவி, தமிழில் சிறுகதைகளைப் படைத்த முதல்வர் வ.வெ.சு. அய்யர்தாம் என்றாலும், புதுமைப்பித்தன்தான் சிறுகதைக்குப் பல புதுப் புது உரு வங்களைத் தந்து, சிறுகதைக்கு இலக்கிய உலகில் சிறந்த தொரு ஸ்தானத்தை, அந்தஸ்தைத் தேடி வைத்தார். சிறு கதை உலகில் புதுமையையும் புரட்சியையும் உண்டு பண்ணினார். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளி வந்த காலத்தில், அவற்றை வரவேற்றவர்களும் உண்டு; புறக்கணித்தவர்களும் உண்டு.

மணிக்கொடி பரம்பரை என்று சொல்லிவந்த எழுத் தாளர்கள், அதாவது ஆங்கிலங் கற்று மேல்நாட்டு இலக் கியப் பரிச்சயம் பெற்று அதைப்போல் தமிழிலும் புதுமை யான இலக்கிய உருவங்களைப் படைத்து வந்தவர்கள் புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் உருவ அமைப்பை வரவேற்றுப் புகழ்ந்தார்கள். அதே சமயத்தில் தமிழ் இலக்கணத்துள் கூறப்படாத எந்த இலக்கிய உருவத்தை யும் தெரிந்துகொள்ளும் விருப்போ, ஒப்புக்கொள்ளும் திராணியோ, புரிந்துகொள்ளும் திறமையோ அற்ற இலக் கியச் சனாதனிகள் புதுமைப்பித்தன் கையாண்ட உருவங் களைக் கண்டு, "கதையா இது? தலையுமில்லை, வாலு மில்லை !'' என்று கூறி, அவற்றைப் புறக்கணித்தார்கள். எனினும் புதுமைப்பித்தன் கையாண்ட சிறுகதையின் உருவ விஸ்தாரங்கள் அவர் காலத்திலும், அவருக்குப் பின் இன்றும் பல இலக்கிய கர்த்தாக்களுக்கு ஆதர்ச ஜோதி யாய் நின்று நிலவுகின்றன. இன்றுவரை தோன்றியுள்ள சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தன் தன்னிகரில்லாத் தலைவனாக விளங்குகிறார் என்ற உண்மையை இன்று யாரும் மறுக்கமுடியாது. இந்த உண்மை சிலருக்குக் கசப் பானதா யிருந்தபோதிலும், இதை அவர்கள் மென்று
விழுங்கித் தின்று தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானதையும் சமீபகால நிகழ்ச்சிகளில் நாம் கண்ணாரக் கண்டிருக்கிறோம்.

புதுமைப்பித்தன் சிறுகதைக்கு எப்படிப் புதுப் புது உருவ அமைப்புக்களை உண்டாக்கித் தந்தாரோ, அது போலவே அவர் தாம் எழுதிய கவிதைக்கும் புதிய உருவ அமைதியை உண்டாக்கித் தந்திருக்கிறார். இந்த உருவ அமைதியையும் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரவேற்றார் கள்; அதேமாதிரி, தமிழ்ச்செய்யுள் இலக்கணத்துக்குப் புறம்பானதாக, அவரது உருவ அமைப்பைக் கருதும் பண்டிதர்கள் அவரது கவிதையின் உருவ அமைப்பை, செய்யுள் உருவமாக ஒப்புக்கொள்ளவில்லை ; வரவேற்க வில்லை.

மணிக்கொடி பரம்பரை எழுத்தாளர்கள் வசன இல லக் கியத்தைப் பொறுத்தவரை ஓரளவு வெற்றியும் தெளிவும் பெற்றவர்கள்; ஆனால் கவிதை இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழர்க்கென ஒரு மரபும், பேரிலக்கியங் களும் உண்டு என்பதை உணராதவர்கள்; உணர்ந்தும் பொருட்படுத்தாதவர்கள். எனவேதான் அவர்களில் சிலர் வசன இலக்கியத்தில் சிறுகதையைப் படைத்தது போல், வசனத்திலேயே கவிதையையும் படைக்கும் புதுமை'யைத் தமிழுக்குக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் இயற்றிய 'வசனகவிதை 'ப் புதுமை இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனினும் அந்த எழுத்தாளர்களில் சிலரும், அவர் தம் முயற்சியை ஒட்டித் தாமும் 'வசனகவிதை' இலக்கியம் படைத்து வந்த எழுத் தாளர்கள் சிலரும் புதுமைப்பித்தனின் புதிய கவிதையைக் கண்டு, அதன் உருவ அமைப்பைக்கண்டு, 'இதுவே வசன கவிதையின் வெற்றி. வசனத்திலும் கவிதை இயற்ற இய லும் என்பதற்குப் புதுமைப்பித்தனின் கவிதையே தக்க சான்று. புதுமைப்பித்தன் கவிதையில் இலக்கண அமைதி இல்லையே. எனினும், அது கவிதையாக விளங்கவில்லையா?' என்று கேட்கிறார்கள். புதுமைப்பித்தனின் வெற்றியைக் கொண்டு தமது தோல்வியை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.

இவர்களைப் போலவே புதுமைப்பித்தனின் கவிதை யில் யாப்பிலக்கண அமைதி இல்லை என்பதால், புதுமைப் பித்தனின் கவிதையை 'லகு கவிதை' (Free verse) என் றும், 'வசன கவிதை' என்றும் கூறி, அது தமிழ்மரபுக்கு ஒவ்வாத முயற்சி யென்றும், எனவே அது கவிதையாக என்றும் கருதி, அதைப் புறக்கணிக்கிறார்கள். புதுமைப் பித்தனின் கவிதை தமிழ்மரபை மீறிய, புறக்கணித்த கவிதை அல்ல என்பதையும், அதேமாதிரியே அது 'வசன கவிதை' என்னும் 'இல்பொருள்' விவகாரமும் அல்ல என்பதையும் விளக்கிக் கூறவே இந்த முன்னுரையை எழுதுகிறேன். எனவேதான் மேற்கூறிய இருவித தவ றான அபிப்பிராயங்களையும் தெளிவுபடுத்தி முடிவு கூறு வதற்காகவே 'கவிதை என்றால் என்ன?' என்ற அடிப் படைக் கேள்வியையே எழுப்பிக் கொள்கிறேன்.

சரி. கவிதை என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு அகராதி பாஷையிலே அர்த்தம் சொல்லிப் பார்த்தால்?

கவிதை என்பது இலக்கியத்தில் ஒரு துறை.

சரி, இலக்கியம் என்றால் என்ன?- இலக்கியம் என் பது மொழியின் துணைகொண்டு உணர்ச்சிகளுக்கு உருக் கொடுக்கும் சிருஷ்டித் தொகை.

மொழி என்பது என்ன?- மொழி என்பது மக்கள் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உபயோகிக்கும் ஒரு பரிவர்த்தனை சாதன

எனவே கவிதை என்பதும் கவிஞன் என்பவன் பிற ரிடம் தன் கருத்துக்களைச் சொல்லுவதற்காகப் பயன் படுத்தும் பரிவர்த்தனை சாதனம் இல்லையா !

மொழியைக் கவிஞன் எப்படிப் பயன்படுத்துகிறான்? இந்தக் கேள்விக்கு மேற்கூறியவாறு அகராதி பஷையிலே விளக்கம் கூற முனைவது தவறு என்று தெரியும். எனவே கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

எந்த ஒரு சிருஷ்டிகர்த்தாவுக்கும் தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு சாதனம் தேவை. சிற்பி கல்லைப் பயன் படுத்துகிறான்; சைத்திரிகன் வர்ணத்தையும் திரைச்சீலை யையும் பயன்படுத்துகிறான். எனினும் கலைஞர்கள் பயன் படுத்தும் சாதனங்கள் அனைத்தும் அதனதன் அளவில்சில குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்டவை. அந்தத் தன்மை களுக்கு உட்பட்டுத்தான் கலைஞன் தன் சிருஷ்டியை உருவாக்க முடியும். உதாரணமாக, ஒரு சிற்பி,காற்றிலே அலைந்தாடும் ஒரு பெண்ணின் கருங்குழல் கற்றையை இழை இழையாகக் கல்லில் உருவாக்க முடியுமா? எனி னும், அவனால் கண்டவர்களைக் காலடியில் விழுந்து கிடக் கச்செய்யும் மோகனாகாரம் படைத்த கொல்லிமலைப்பாவை யைச் சிருஷ்டிக்க முடிகிறது. அதுபோலவே, சைத்திரி கன் தான் தீட்டும் பெண்ணின் திருமுகத்துக்கு, தனது வர்ணத்தாலேயே மஸ்லின் துணிநெய்து திரையிட்டு மூட முடியுமா? முடியாது. எனினும், அவன் தன் வர்ணத் தைத் துல்லியமாக அளந்தறிந்து உபயோகிப்பதன் மூலம், அந்தத் திருமுகத்தை மெல்லிய சல்லாத்துணியிட்டு மூடிய தைப் போன்ற பிரமையை அவனால் உண்டாக்க முடி கிறது. அந்தச் சல்லாத்திரையை நீக்கிவிட்டு அந்த முகத் தின் பூர்ணப் பொலிவையும் காணவேண்டுமென பார்ப்ப வர்களின் கையும் மனமும் நீளும்படியான ஒரு மயக் கத்தை, கவர்ச்சியை இல்லையா?

அவனால் உண்டாக்கமுடிகிறது.

இவற்றை யெல்லாம் அந்தக் கலைஞர்கள் எவ்வாறு சாதிக்கிறார்கள்? தாம் உபயோகிக்கும் மூலப் பொருளின் தன்மைகள் அனைத்தையும் நன்கறிந்து, அவற்றுக் குக் கட்டுப்பட்டு, அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து கொண்டே, அந்த மூலப் பொருளைத் தமது கருத்தைத் தெரிவிக்கும் பணியில், கூடிய பட்சம் எவ்வளவு முடி யுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைப்போலவே கவிஞனும் தனது சாதனமான மொழி யின் வேகம், சொல் நயம், தாளலயம் முதலிய சகல தன் மைகளையும் நன்கறிந்துகொண்டு, அதைக் கூடியபட்ச அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறான். அதாவது மொழிக்குள் அடங்கியுள்ள கூடியபட்ச வேகத்தையும், கூடியப்பட்ச நயத்தையும், கூடியபட்ச லயத்தையும் அவன் தனது கவிதையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறான்; அதன் மூலம் தான் கூறவந்த கருத்தை அழுத்தமாகக் கூறுகிறான்.

மொழிக்கு, அதாவது அதன் அங்கங்களானவார்த்தை களுக்கு இந்தக் கூடிய பட்ச சக்தி எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? ஒரு வார்த்தை வேறு பல வார்த்தை களின் துணையோடும் கூட்டுறவோடும் வரும்போது, பிற வார்த்தைகள் சுற்றுப் பரிவாரம்போல் சூழ்ந்துவர, ராஜ கம்பீரம்போன்ற அந்தஸ்தும் ஸ்தானமும் பெற்று வரும் போது, அதன் வலுவும் வேகமும் சராசரி நிலையைவிட அதிகமாகி விடுகிறது. உதாரணமாக, 'பாழ்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். பாழ் அடைந்த கிணறு என்று கூறும்போது அந்த வார்த்தை சாதாரண அர்த்த பாவத்தோடு ஒரு பொருளை விளக்க உதவுகிறது. ஆனால் அதே வார்த்தையை ஆத்திரத்தில் 'பாழாய்ப் போக !' என்றும், வயிற்றெரிச்சலில் 'பாழாய்ப்போச்சு!’ என்றும் பிரயோகிக்கிறோம். ஆத்திரமும் வயிற்றெரிச் சலும் அந்த வார்த்தையைப் பிரயோகிக்கும்போது, ஆத்திரத்தையும் வயிற்றெரிச்சலையும்:அந்த வார்த்தை பிரதி பலிக்கும்போது, அதன் வேகம் முதலில் கூறிய உதார ரணத்திலிருந்ததை விட அதிகரிக்கிறது; இரண்டாவது உதாரணத்தில் அதன்வேகம் திமிறிக்கொண்டு வெளிப்படு கிறது. சரி, இதே வார்த்தை ஒரு கவிதையிலே வந்தால்?

பாட்டைப் பார்க்கலாம்:

எந்த ஊர் என்றீர்;
      இருந்த ஊர் நீர் கேளீர்.
அந்த ஊர்ச் செய்தி
      அறியீரோ?-அந்த ஊர்
முப்பாழும் பாழாய்
      முடிவி லொரு சூனியமாய்
அப்பாலும் பாழ் என்று
      அறி.

முதலில் குறிப்பிட்ட வசனச் சேர்க்கைகள் எவற்றி லும் இல்லாத புதிய வேகமும், புதிய பொருளும், புதிய லயமும், புதிய நயமும் பாழ் என்ற அதே வார்த்தைக்கு இந்தப் பாட்டிலே ஏற்பட்டுவிடுவதை நாம் காண்கிறோம். நமது சொல் வழக்கிலேயே நித்த நித்தம் எப்படி யெப்படி யெல்லாமோ பிரயோகித்துப் பழகிப் பழகி மெருகேறிப் போன ஒரு வார்த்தை கவிதையிலே வரும்போது ஏதோ ஒரு புதிய வார்த்தையைப் போல், புதிய பொருளைக் கூற வந்த சங்கேத வார்த்தையைப்போல் நம்மையே பிரமிக்க வைப்பதற்குக் காரணம் என்ன ? ஏனெனில் அந்த வார்த்தை கவிதையில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தை, அந்தஸ் தைப் பெறுகிறது; தன்னுடனே சார்ந்து நிற்கும் பிற வார்த்தைகளின் கூட்டுறவில் தான் மட்டும் பேராட்சி பெறுகிறது. எனவே அதன் சக்தியும் வேகமும் கூடு கிறது ; கவிதை என்ற இந்தக் கட்டுக்கோப்பிலிருந்து, அதன் சக்தி பன்மடங்காகத் திமிறி வெளிப்பட்டு வியா பகம் பெறுகிறது.

இப்படிப்பட்ட வேகம் மொழியின் பலதுறை இலக்கி யங்களையும்விட கவிதை இலக்கியத்தில் தான் அதிகப்படி யாக, கூடியபட்ச வலுவோடு பிரதிபலிக்கிறது; அந்த வலு நமது நெஞ்சிலே பதியும் வண்ணம், மனப்பாடம் ஆகும் வண்ணம், பாட்டை உருவேற்றுகிறது. எனவே இலக்கியத் துறைகளில் கவிதைத் துறையே தலை சிறந்த தாக விளங்குகிறது. கவிதைத்துறைக்கு இந்த சக்தியைத் தருவது எது? கவிதைக்கென கவிஞன் கையாளும் இலக் கணம், அதாவது உருவ அமைப்பு ஓரளவு பயன் படு கிறது. பெரும்பாலான பழந்தமிழ்க் கவிதைகள் யாப் பிலக்கண அமைப்புக்குக் கட்டுப்பட்ட உருவ அமைதி களைக்கொண்டிருப்பதால், இலக்கணத்தையே முதலும் முடிவுமாகக்கொள்ளும் பண்டிதர்கள் இலக்கணக் கட் டுப்பாடு ஒன்று தான் கவிதைக்குப் பெருவலி தருகின்றது என்று கருதுகின்றனர். இதைப் பின்னர் விளக்கலாம். செய்யுளுக்கு அமைகின்ற இலக்கணம் வசனத்துக்குரிய இலக்கணத்தைவிட, அதிகமான கட்டுப்பாடுகளை, குறு கிய எல்லைகளைக் கொண்டது. எனவே அந்தக் கட்டுப் பாட்டுக்குள்ளிருந்து வார்த்தைகள் திமிறி வெளிப்படும் போதுதான் அவற்றுக்கு வேகம் பிறக்கிறது. சதுரங்கம் விளையாடும்போது ஒவ்வொரு காய்க்கும் சில அதிகாரங் களை நாம் வழங்கி அவற்றை ஒரு குறிப்பிட்ட அரங்க எல்லைக்குள் விளையாட விடும்போது, அந்தக் காய்கள் சமயத்துக்குச் சமயம் எப்படி யெப்படிப் புதுப்புது வலி மையையும் முக்கியத்துவத்தையும் பெற்றுச் சிறக்கின் றனவோ அதுபோலவே வார்த்தைகளும் பாட்டின் உருவம் என்ற கட்டுக்கோப்புக் குள்ளிருந்து சிறந்த ஸ்தானங் களைப் பெறும்போது அவற்றின் வலுவும் வேகமும் முக் கியத்துவமும் அதிகரிக்கின்றன.

கல்லை வயிர மணியாக்கல் செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்க ஏறாக்கல்

என்று பாரதி பாடினானே, அது போன்று சாதாரணமான எளிமையான வார்த்தைகளையும் கூட மகத்தானதாக வலிமைமிக்கதாகச் செய்யும் சக்தியைத்தான் பாட்டு என்ற உருவம் கவிதைக்கு அளிக்கிறது.

'கவிதைக்குரிய உருவ இலக்கணம் கவிதைக்கு வேகம் மட்டும்தான் தருமா? வேகத்தை மட்டுப்படுத்த வும் செய்யாதா?' என்ற கேள்வி சிலருக்கு எழலாம். உவமான பூர்வமாக விளக்க முயல்கிறேன். பாபநாசம் அணைக்கட்டையும், ஒரு மானாமாரிக் குளத்தையும் எடுத் துக்கொள்ளுங்கள். பாபநாச மலையில் மேலிருந்து பெருகி வரும் வெள்ளம் வேகத்தோடு வருகிறது; பேரளவில் வருகிறது. வருகிற வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி, குறுகிய கால்வாய்களின் மூலம் நீரை வெளியிடுகிறது அணைக்கட்டு. அப்படி, வெளிவரும் நீர் தனது சக்தியை யெல்லாம் பிரயோகித்துக்கொண்டு திமிறி விம்மிப் பாய் கிறது. அதன் அசுரசக்தி ராட்சஸவேகத்தில் வெளிப்படு கிறது. அதே சமயம், மானாமாரிக்குளமும் தன்னிடத்தே வந்து சேரும் நீரை அணை கடந்துவிடாமல் அணைத்துச் சுற்றித்தான் வைத்திருக்கிறது. இருப்பினும் அதன்கட்டுக் கிடையான நீரில்
பாபநாச மலைநீரின் ராட்சஸ வேகம் காணப்படுமா? கிடையாது ஏன்? இரண்டும் நீருக்குவகுத்த வரம்புகள் தாம் எனினும் ஒன்றில் வரம்பை மீறிக்கொண்டு நீர் வெளிவரத் திமிறுகிறது; மற்றொன்றில் வரம்பையே தொடுவதற்குச் சக்தியற்று ஆழக்குழியில் நீர் தேங்கிக் கிடக்கிறது. இதைப்போலவே இலக்கணக் கட்டுக்கோப் புக்குள் வரும் வார்த்தைகள் எந்த அளவுக்கு அந்தக் கட்டுப்கோப்புக் குள்ளிருந்து கொண்டு அதிகப்படி யான சக்தியை வெளியிடுகின்றனவோ அந்த அளவுக்கு அவ்வார்த்தைகள் வேகம் பெறுகின்றன; வலுப்பெறு கின்றன; கவிதை ஆகின்றன. இலக்கணக் கட்டுக்கோப் புக்குள் சிக்கிய பாவத்தைத் தவிர, வேறு ஒன்றுமே அறி யாது அப்பாவியாக அடங்கிக்கிடக்கும் வார்த்தைகள் வேகம் பெறுவதில்லை; வலுப் பெறுவதில்லை; கவிதை ஆவதில்லை.

இரண்டு உதாரணங்கள்:

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு ஏழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன் -பன்னி
ரண்டுபதின் மூன்று பதிநான்குபதி னைந்துபதி
னாறுபதி னேபதி னெட்டு
உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி
எரிவதவியாது என் செய்வேன்? - வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப்பெண் பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

இவ்விரு பாடல்களிலு முள்ள வார்த்தைகள் வெண்பாவெனும் கட்டுக்கோப்புக்குள் தான் அடங்கி யிருக்கின்றன. எனினும் முதற் பாடலில் உயிரில்லை; உணர்வில்லை; வேகமில்லை ; அர்த்தம்கூட இல்லை. கார ணம், ஒன்றிலிருந்து பதினெட்டுவரை ஒரு பாவிலே வரப் பாடிய இலக்கண வித்தை அது. ஆனால் இரண்டாவது பாடலிலோ உயிர் உண்டு; உணர்வுண்டு; வேகமுண்டு; அர்த்தமும் உண்டு. காரணம், அந்தக் கட்டுக்கோப்பி லிருந்து மீறி அதிலுள்ள வார்த்தைகள் நம் மனத்தில் புதிய வேகத்தைப் பாய்ச்சுகின்றன. எனவே அது கவிதையாக விளங்குகிறது.


ஒரே மாதிரியான கட்டுக்கோப்புக்குள், அதாவது வெண்பாவெனும் யாப்பமைதிக்குள் சிக்கிய இரண்டுவித மான பாடல்களை உதாரணம் காட்டினோம். அவற்றில் ஒன்று வெறும் இலக்கணப்பந்தலாகவும், மற்றொன்று சிறந்த கவிதையாகவும் விளங்குவதையும் பார்த்தோம். அப்படியானால், வார்த்தைகள் எப்படிக் கவிதையாக மாறுகின்றன? அதற்கு இலக்கணக் கட்டுக்கோப்பு எந்த அள வில் துணை செய்கிறது?- என்பதையும் நாம் விசாரணை செய்தால்தான் இலக்கணத்தையே விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கும் நபர்களின் அபிப்பிராயத்தில் தவறு என்ன என்பதைக் கண்டுணரமுடியும்.

"நாற்சீர் முச்சீர் நடுவில் தனிச்சீர்" ஆகவரும் மேற் கூறிய வெண்பாக் கவிதையையே எடுத்துக்கொள்வோம். சீர் அளவினால் பாட்டிலே தாளலயம் பிறக்கிறது. அந்த லயம் பிறப்பதற்கு எதுகை மோனைகளும் உதவுகின்றன. எதுகைமோனை முதலியவற்றின் தாளலயத்தில் வார்த்தை கள் வலுப்பெறுகின்றன. அந்த வலுவின் காரணமாக, சொல்லவந்த கருத்தின் பாவலயம் கணீரென்று ஒலிக் கிறது. எனவே,

'நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்'

என்ற அலங்காரச் சீர்களோடு மேளம் கட்டி வரும் மூன் றாவது அடி 'நெஞ்சிலே இட்ட' என்ற எதுகைத்தொடரை இழுத்து வரும்போது, இரண்டு எதுகைகளும் ஒன்றுக் கொன்று அழுத்தம் கொடுத்து உதவுகின்றன.

கடைச்சீரான 'நெருப்பு' என்ற வார்த்தை 'நெஞ்சி' லிருந்து பிறந்த அழுத்தவேக மோனை வலுவோடு முத் தாய்ப்பாக விழுந்து முற்றுப்பெறுகிறது. அப்படி முற் றுப்பெறும்போது, நமது மனத்திலே அந்த வார்த்தை கிளப்பிவிடும் உணர்ச்சி அலைகளால்தான், அது கவிதை யாக முடிகிறது.

எனவே இலக்கணக் கட்டுக்கோப்பு என்பது கவிஞன் சொல்லவிரும்பும் கருத்தை பாவலயத்தோடும் தாளலயத் தோடும் சொல்வதற்கும், அந்த லயங்களின் மூலம் வார்த்தைகளுக்குத் தனிவேகம் தருவதற்கும் உதவுகிறது; உதவவேண்டும். வேறு மாதிரியாகச் சொன்னால், ஒவ் வொரு வார்த்தையும் அதனதன் அளவில் ஒரு அர்த்தத்தையும் சப்தலயத்தையும் கொண்டது. இந்த அர்த்தபாவத்தைப் பரிபூரணமாக வெளிப்படுத்துவதே பாவலயமாகவும், சப்த லயத்தை வெளிப்படுத்துவதே தாளலயமாகவும் அமைந்து கவிதை உருவாக வேண்டும். அதாவது 'ரிதும்' என்று சொல் லப் படும் மனோபாவ லஹரியை உண்டாக்கிக் கேட்பவர் களைத்தன்பால் ஈர்த்துக்கொள்வதே கவிதையின் மோஹன ரகசியம் ; வசீகரண தந்திரம். எனவே இலக்கணம் என்பது இந்த லயக்கவர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு உதவவேண் டுமே தவிர, அதைக் குறைக்கவோ கறைப்படுத்தவோ கூடாது.

இலக்கணம் ஒன்றை மட்டுமே பார்க்கின்றவர்கள் இந்த உண்மையை மறந்துவிட்டால், அவர்களால் செய் யுள்தான் இயற்ற முடியுமே ஒழிய, கவிதை இயற்ற முடி யாது. மேலும் பண்டைத் தமிழர் கண்டு கூறிய யாப்பிலக் கணம் ஒன்றே கவியுருவத்துக்குரிய இலக்கணம் என்று சொல்லமுடியாது.
யாப்பிலக்கணம் சில குறிப்பிட்ட செய்யுள் வகை இலக்கணத்தை மட்டுமே கூறுகிறது; வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா, மருட்பா என்னும் செய்யுள் வகைகளுக்கும், தாழிசை, துறை, விருத்தம் முதலிய பாவினங்களுக்கும் மட்டுமே இலக் கணம் வகுக்கிறது. இந்தப் பாவினங்களைத் தவிர தமிழ் இலக்கியத்தில் பல எண்ணற்ற அரிய கவியுருவங்களும் தோன்றி வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், யாப் பிலக்கணத்தில் கூறப்பட்டுள்ள செய்யுள் வகைகளே கவிஞனின் மனோபாவத்துக்குத் தக்கவாறு, பல்வேறு ரூப விலாசங்களோடு தோன்றிச்செழித்திருக்கின்றன.'விருத்த மெனும் ஒண்பாவில் உயர் கம்பன்' என்று புகழ்பெற்ற தமிழ்க்கவிதையின் சீமந்த புத்திரனான கம்பநாடன் விருத் தத்தைத் தனது மனோபாவத்துக்குத் தக்கவாறு எவ்வெவ் வாறெல்லாமோ பயன்படுத்திப் பல கவிதா விகாசங்களை உண் டாக்கியிருக்கிறான். திரிகூட ராசப்பனின் குற்றாலக் குறவஞ்சி, திருக்கச்சூர் நொண்டி நாடகம், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து முதலியன அற்புதமான சந்த நயத்தோடுவிளங்குகின்றன. இவையெல்லாம்யாப்பிலக்கண அமைதிக்குக் கட்டுப்படவில்லை என்ற காரணத்துக்காக, நாம் அவற்றை ஒதுக்கிவிட்டோமா? ஒதுக்கிவிடத்தான் முடியுமா? எனவே இலக்கணம் என்பது ஆசிரியனுடைய கருத்துக்குப் பலமூட்டும் தன்மையில்தான் இருக்க வேண்டுமே ஒழிய, அவனுக்குத் தடையாக இருக்கக் கூடாது; ஆசிரியனின் மனோபாவத்தைச் சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது. அப்படி யிருந்தால், ஆசிரியன் தனது மனோபாவனைக்குத் தக்கவாறு இலக்கணத்தை மாற்றி யமைத்துக்கொள்வதிலோ, புதிய உருவங்களைச் சமைத் துக்கொள்வதிலோ' யாரும் குறுக்கே நிற்கக்கூடாது; நிற்க முடியாது.ஆனால், அப்படி அவன் உருவாக்கித் தருகின்ற உருவம் சந்த லயத்தையும், முக்கியமாக பாவ லயத்தை யும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். அந்த உரு வத்தில் சந்த லயம் பாவ லயத்தைத் தோற்றுவிக்கலாம்; அல்லது பாவலயம் சந்தலயத்தைத் தோற்றுவிக்கலாம். இந்த இரண்டு லயங்களில் எதை யெதை எப்படி எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாண்டு, கவிதைக் குரிய 'ரிதும் ' என்ற பூரண லய லஹரியை வெளிப்படுத் தும் புதிய உருவங்களை உண்டாக்கலாம்.

வார் என்றால் வர் என்பேன் வாள் என்றாள் வள் என்பேன்
நார் என்றால் நர் என்பேன் நன்.

என்று என்று எவரோ நாராயணனை 'நராயணன் ' பாடியதைக் கண்டு, காளமேகப்புலவர் நையாண்டிசெய்து பாடும் அளவுக்கு, செய்யுள் விகாரங்களுக்கு இடம் கொடுத்து யாப்பமைதியைப் பாதுகாக்க முனையும் தமிழ் இலக்கணம், செய்யுளின் உருவ அமைப்பிலே இலக்கண விகாரமாகப் படக்கூடிய ஒரு சொல் அல்லது தொடர் உண்மையிலேயே பாவாயத்துக்குப் பிரயோஜனப்படக் கூடிய வகையில் அமைந்திருப்பதை அனுமதிப்பதால், ஒன் றும் குடி முழுகிப் போய்விடாது. 'இலக்கணக் கொலை!' என்று சொல்லக்கூடிய ஒரு புதிய கவியுருவம் பாவலயத் தின் சிகரமாக விளங்கினால், அந்தக் கவிதைக்கு அதுவே இலக்கணம் எனக் கொள்ளவேண்டும். எனவே இலக் கணத்தில் சனாதனப் பிரேமைகொண்டு, கவிஞனுக்கோ கவிதை வளர்ச்சிக்கோ விலங்கிட முனைவது தவறு. புது மைப்பித்தனின் கவிதையில் இலக்கண அமைதி இல்லை என்று சொல்பவர்கள் இந்த உண்மையை மறந்துவிடு கிறார்கள். எனவேதான் அவர்கள் புதுமைப்பித்தனின் கவிதையை 'கவிதை' என்றே ஒப்புக்கொள்ளவும் மறுக் கிறார்கள் 'வசன கவிதை' என்று தாமும் பேரிட்டு அதை ஒதுக்க முனைகிறார்கள்.

புதுமைப்பித்தனின் கவிதையை வசன கவிதை என்று கூறி ஒதுக்குபவர்களுக்கு மேலே விளக்கம் கூறி னேன்; இனி அவரது கவிதையை 'வசன கவிதை' என் கூறி வரவேற்பவர்களைப் பார்க்கலாம்.

தமிழில் இந்த 'வசன கவிதை' விவகாரம் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?

தமிழில் 'வசன கவிதை' என்ற இலக்கிய முயற்சி யைத் தொடங்கி வைத்துத் தோற்றுப்போன புண்ணியம் மணிக்கொடி பரம்பரை எழுத்தாளர்களைச் சாரும். மேலை நாட்டு இலக்கிய முறைகளைப் பின்பற்றி, தமிழில் இலக் கியம் செய்ய முனைந்த மணிக்கொடி. எழுத்தாளர்களில் சிலர் சிறுகதை எழுதுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மேலைநாட்டில் புதுமை முயற்சியாகத் தோன்றிய 'Vers Libre' என்னும் வசன கவிதை முயற்சியையும் தொடங்கி வைத்தார்கள். வால்ட் விட்மன், டி. எச். லாரென்ஸ் போன்றவர்கள் ஆங்கிலத்தில் வசன கவிதை எழுதினார் கள். எனினும் வால்ட் விட்மனின் கவிதையை விரும்பிப் படிப்பவர்கள் அதில் அமைந்துள்ள பொருளமைதிக்காகத்தான் படித்தார்களே ஒழிய, அதன் கவிதா நயத்தை உணருவதற்காகப் படித்தார்கள் என்றோ, உணர்ந்தறிந்து கொண்டார்கள் என்றோ சொல்ல முடியாது. ஆங்கிலம் தெரிந்த இலக்கிய கர்த்தாக்கள் இந்த வசனகவிதை முயற் சியில் ஏன் இறங்கினார்கள் என்று பார்க்கலாம்.

'அமெரிக்க நாட்டுப் புதிய பாடல்கள் ' என்று மகுடமிட்ட ஒரு நூலுக்கு முன்னுரை எழுதும்போது, டி.எச். லாரென்ஸ் வசன கவிதையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"ஆனால் நாம் (வசன கவிதைக்கு) எந்தவித இயக் கத்தையும், தாள லயத்தையும் விதிக்க முடியாது. நாம் என்னென்ன புதியவிதிகளை வகுத்தாலும், கண்டுபிடித் தாலும் - அவை யனைத்தும் சாராம்சத்தில் ஒன்றுதான் அவையனைத்தும் வசன கவிதையைச் சிருஷ்டிக்கத் தவறி விடும். அவை ஏதாவதொரு விதத்தில் கட்டுப்பாடும், அளவமைதியும் கொண்ட உருவ அமைப்பைத்தான் உண்டாக்கும்.

"வசன கவிதையைப் பற்றி நாம் சொல்லக்கூடிய தெல்லாம் வசன கவிதையில் கட்டுப்பாடான கவிதையின் தன்மையே இராது என்பதுதான். அது நினைவு கூரும் தன்மையைக் கொண்டதல்ல. நமது கைத்திறமையால் சென்றுபோன செய்திகளைப் பரிபூரண எழிலோடு பொக் கிஷப் படுத்தும் தன்மையையும் அது கொண்டதல்ல. அதுபோலவே, நாம் கனவு கண்டு உற்று நோக்கும் எதிர் கால திருஷ்டியின் ஸ்படிகத் தெளிவுகொண்ட உருவமும் அல்ல.....

ஆனால், நாம் வசன கவிதையில் காண்பதெல்லாம் அந்தக்ஷணத்தின் புரட்சிகரமான, பிறந்த மேனியான நாடித் துடிப்பைத்தான் காண்கிறோம். செய்யுள் இலக்கி யத்தின் அழகிய உருவைச் சிதைத்து, துண்டு துக்காணி களைப் புதிய பண்டம்போல் ஒட்டவைத்துக் காட்டுவதே வசன கவிதை என்று கருதி, பல வசன கவிதைக் கவிஞர் கள் எழுதி வருகிறார்கள். வசன கவிதை என்பது தனக் குத்தானே ஒரு தனித் தன்மையைக் கொண்டதென் பதையோ, அது ஒரு தாரகையோ, தரள மணியோ அல்ல என்பதையோ, அது திடீரென்று உருவாகும் உருவ அமைப்பு என்பதையோ அவர்கள் தெரிந்துகொள்ள வில்லை. அதற்கு ஆதியந்தமென்ற எல்லைகள் கிடையாது. அதற்கு முடிவு என்று ஒன்றில்லை...'

மேலே காட்டிய விளக்கத்தால் வசன கவிதை என் பது மேலைநாட்டு இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கே புரி யாத சரக்கு என்ற உண்மை தெளிவாகிறது. அதுமட்டு மல்ல. வசனகவிதைக்கு 'அந்த க்ஷணத்தில் 'தோன்றும் உருவ அமைப்புத் தவிர, அதற்கென இலக்கண பூர்வ மான உருவ அமைப்புக் கிடையாது என்றும் தெரிகிறது. அப்படியானால், வசன கவிதை என்பது என்ன ? எழுதுப வன் தன் மனத்தில் தோன்றியதை பட்டை பிடிக்காமல், மெருகு தீட்டாமல், தூசு தும்பு துடைக்காமல், குறை நிறை நிரவாமல் அப்படியப்படியே பிறந்த மேனியாகப் படைத்துவிடுவது என்பதுதான். ஆனால் கவிதை என்பது இதுதானா? உள்ளத்தில் தோன்றும் ஊமைக் கனவுகளை, கற்பனையை, மன உளைச்சலை, மன மகிழ்ச்சியை உருக் கொடுத்து வெளியிட முடியாது தவிக்கும் மனி தர்கள் நிறைந்த சமூகத்திலே, அவற்றுக்கு ஒரு கலை வடிவம் கொடுத்து, இசைப்பொலிவு அளித்து, உணர்ச்சி களை எழுத்தோவியமாகப் பண்ணும் திறமைதானே கவி ஞன் என்ற பெருமையை ஒருவனுக்குத் தேடித் தருகிறது? அப்படி யிருக்கும்போது, வசனகவிதை என்ற ரூப அமை தியற்ற முயற்சியால் கவிதை பிறக்குமா? தமிழ் மரபை அறிந்த, தமிழ் இலக்கிய பரிச்சயமும் கொண்ட எவரும் இந்தக் கேள்விக்கு 'பிறக்காது' என்றுதான் பதிலளிக்க முடியும்.

சரி. அப்படியானால், மணிக்கொடி எழுத்தாளர்கள் வசனகவிதை என்று ஏன் ஒன்றை எழுதத் துணிந்தார்கள்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. மேல் நாட்டு இலக்கி யப் புதுமையை நமது நாட்டிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் காரணமல்ல. தமிழில் கவிதை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஆங்கிலத்தில் எவ்வ ளவு பரிச்சயமும், பயிற்சியும் இருந்ததோ, அந்த அளவுக் குத் தமிழ் உலகம் பண்டுதொட்டுப் படைத்து வந்த இலக் கியங்களிலோ, இலக்கணங்களிலோ கிடையாது. பண்டு தொட்டு வளர்ந்து வந்துள்ள இலக்கிய மரபை அறிந்து ணர்ந்துதான் புதியஉருவங்களைச் சமைக்கவேண்டும் என்ற உண்மையை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். அது மாத்திரம் அல்ல, இலக்கணத்துக்குக் கட்டுப் பட்டு அவர் கள் பாட்டு எழுத விரும்பவில்லை; இயலவில்லை. இதற்கு வசன கவிதை' எழுத்தாளர்கள் எதுகை மோனைகளோடு பாட்டெழுத முயன்ற பல பாடல்களை உதாரணம் காட் டலாம். இலக்கணக் கட்டுக்கோப்புக்குள் குறைந்த அள வுக்கேனும் அடைபட்டுநின்று கவிதை புகலமுடியாத கார ணத்தாலும், அவர்கள்
வசன கவிதை' யைச் சரண் அடைந்தார்கள். மூன்றாவதாக, பாரதியின் கவிதைத் தொகுதியில் காற்று, சக்தி முதலியன பற்றி பாரதி எழுதி யுள்ள வசனப் பகுதிகள் இடம் பெற்று விட்டதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். 'பாரதி கூடத்தான் வசன கவிதை எழுதியிருக்கிறார்' என்று கூறி, 'பாரதியின் அடிச்சுவட்டிலே' பாடல்கள் எழுதுவதாகவும் இவர்கள் பாவனை பண்ணினார்கள்.
.
பாரதி வசனத்தில் 'கவிதை' எழுதினானா? இல்லை. பார தியின் காவியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள வசனப் பகு திகள் உண்மையிலேயே அழகிய வசன இலக்கியம்தான். எனினும் அவை கவிதை அல்ல. பாரதியும் அவற்றைக் கவிதை என்று கூறவில்லை. வடமொழி வேதங்கள், உப நிஷத்துக்கள் முதலியவற்றைப்படித்து அநுபவித்த பாரதி அதிலுள்ள சிறந்த கருத்துக்களை நமக்குப் படைக்க எண்ணியிருக்கிறான். ஆனால், அவற்றின் பூரணப் பொலி வையும், அர்த்த பாவத்தையும் கவியுருவத்தில் கொண்டுவர முனைவதில், பாரதிக்குத் தனது திறமையிலும் வாக்கு வன் மையிலும் நம்பிக்கை குறைந்திருக்கக்கூடும். எனவே தான் பாரதி அவற்றை அழகிய வசனத்திலேயே எழுதியிருக்கி றான். இதுதான் உண்மை.

இதைக் கேட்டவுடன் சிலருக்கு பாரதி என்ன அவ்வ ளவு திறமையற்றவனா என்று எதிர்க் கேள்வி போடத் தோன்றும். மொழியின் தன்மைகளை அறிந்து அதற்குக் கட்டுப்பட்டு, அதன் கூடியபட்ச வேகத்தை எந்த அளவுக் குக் கவிஞன் கொண்டு வருகிறானோ அந்த அளவுக்குக் கவி ஞன் வெற்றி காண்கிறான் என்று ஆரம்பத்தில் கூறினேன். அப்படி வெற்றி காண முடியாமற்போகும் நிலைமை எந்தக் கவிஞனுக்கும் ஏற்படக்கூடும். இதற்கு பாரதி மட்டும் விதிவிலக்கல்ல.

உதாரண பூர்வமாகப் பார்க்கலாம்.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக் கொள் வோம். சூழ்ச்சிப் பருவத்தின் கடைப் பகுதியில், பாண் டவர்கள் 'நரி வகுத்த வலையினிலே தெரிந்து விழும் சிங்க' மாகப் பயணமாகிச் செல்கிறார்கள். போகின்ற வழியில் அர்ஜுனன் ஒரு பூம் பொழிலில் அமர்ந்து, திரௌபதி யைத் தன் மடிமீது தாங்கிக்கொண்டு, ஏகாந்த இன்பத்தில் திளைத்திருக்கிறான். சூரியாஸ்தமன சமயம் அர்ஜுனன் திரௌபதிக்கு அந்தி வானின் புதுமையை யெல்லாம் வியந்து கூறுவதாகப் பாரதி பாடத் தொடங்குகிறான்.

'பாரடியோ வானத்துப்
புதுமை யெல்லாம்'

என்று தொடங்குகிறது பாட்டு.

அடிவானத்தே யங்கு பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவி னொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளி மின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே மொய்குழலாய் சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவான தொன்றாகத் தகடிரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்!

என்றெல்லாம் அற்புதமான கற்பனையோடு உருவாகிப் பாடல்கள் வருகின்றன. எனினும் இத்தனை திறமை வாய்ந்த பாரதியால், தாம் எடுத்துக் கொண்ட எண்சீர் விருத்த அமைப்பில் (பாடல்கள், 148-151) நாலு பாடல் களுக்கு மேல் பாட முடியவில்லை. எனவே பாரதி எண்சீர் விருத்தத்தைக் கைவிட்டு விட்டு 152-வது பாட்டை அதை விட எளிமையான இலக்கணம் கொண்ட அகவல் கட்டுக் கோப்பில் தனது கற்பனையைச் சிறையிட்டு உருவாக்க முயல்கிறான். அதிலும் அவனுக்குப் பூர்ண திருப்தி ஏற்பட வில்லை. எனவே யாப்பு முறையையே கைவிட்டுவிட்டு, சூரியாஸ்தமனம் பற்றித் தாம் பாடலாக்க விரும்பிய அனு பவத்தை, அந்த அனுபவத்தின் உருவத்தை நூலுக்குரிய பின் குறிப்புக்களோடு சேர்த்துவிட்டான். பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் 'சூர்யாஸ்தமனம்' என்ற தலைப் பில் காணப்படும் பகுதி அதையே சுட்டிக் காட்டுகின்றது.

'உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலம் தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட் டங் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. ஸஹோதரா, சூரியாஸ்தமனத்தின் விநோதங்களைச் சென்று பார், ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி யென்ற குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண்கொண்டு பார்க் காதே" என்று பாரதி எழுதியுள்ள பகுதி, தான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் தனது பாட்டுத்திறத்தால் பெற இயலாமல் போகிறதே என்ற அங்கலாய்ப்பில் பிறந் ததுதான் என்பதை நாம் நன்குணர முடிகிறது.
,
'வசன கவிதை' இலக்கிய கர்த்தாக்களின் இலக் கணப்படி பார்த்தால், பாரதி சூர்யாஸ்தமனத்தைப்பற்றி எழுதியுள்ள அழகிய வசனப் பகுதியும் 'வசன கவிதை' தான். ஆனால், பாரதி அந்த 'வசன கவிதை'யை ஏன் 152-வது பாடலுக்குப் பின்னர் சேர்க்காது, குறிப்புக்க ளோடு சேர்த்தான்? வசனத்திலே கவிதை பிறக்காது என்ற உண்மை பாரதிக்கு நன்கு தெரியும்; எனவேதான் சூர்யாஸ்தமனம் பற்றிய தன் அனுபவத்தைப் பாட லாகவே எழுத முனைந்தான். பாரதி தமிழ்மரபும், தமி ழின் கவிதைப் பண்புகளையும் நன்கறிந்தவன். எனவே தான் அவன் தன் "பாட்டுத் திறத்தாலே இந்த வையத் தைப் பாலிக்க' விரும்பினான் ; மந்திரம் போன்று "தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல்'லை வேண்டினான். எனவே 'வசன என்பது சப்த ஜாலத்திலும் தாள பாவ லயத்திலும் ஊறிப்போன தமி ழர் மரபுக்கு ஒவ்வாத விவகாரம்; வெற்றிகாண முடியாத வீண் முயற்சி.

இதனால்தான் வசன கவிதை எழுதி வந்த எழுத்தாளர்கள், புதுமைப்பித்தனின் புதுமுறைக் கவியுருவையே 'வசன கவிதை' என்று சொல்லி, தங்கள் மானபங்கத்தை மறைக்க முயல்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் புதுமைப் பித்தன் 'பாட்டும் அதன் பாதையும்' என்ற கட்டுரையில் தாமே பதிலுரைக்கிறார்:

யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத் திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமே யொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைக் கோப்பதல்ல. வசனம் சமயத்தில் பேச்சு முறைக்குச் சற்று முரணான வகையில் கர்த்தாவைக் குறிப் பிடுவதற்குப் பதிலாக, செயலை விளக்கும் நிலை அவசிய மாகும் பொழுது பின்னிக் கிடந்து, வார்த்தைகளை அதன் பொருள் இன்னது என்று விலங்கிட்டு நிறுத்தும். அதா வது சட்ட ரீதியான தத்துவரீதியான நியாயங்களைப்பற்றி விவாதங்கள் நடத்தும்பொழுது வார்த்தைகளின் பொருட் திட்பம் இம்மியளவேனும் விலகாது இருப்பதற்காக, இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள்தான் என்று வரை யறுத்துக்கொண்டு, அவற்றின் மூலமாக செயல் நுட்பங் களை நிர்த்தாரணம் செய்து, மனித வம்சம் நிலையாக வாழ் வதற்குப் பூப்பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் வாழையடி வாழையாகப் பின்பற்றப் பட்டு வரும் செயல் வகுப்பு வசனத்தினால்தான் இயலும். இந்த விதமான வாக்கிய அமைதிகளை மட்டுமே நாம் வசனமெனக் கொள்ளலாமே ஒழிய,குறிப்பிட்ட நாமறிந்த யாப்பு அமைதிகளுக்குப் புறம்பான யாவும் வசனம் என நினைத்துவிடக்கூடாது. யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரூபங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி,பழக்கத்தி னாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு விடும்பொழுது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதை யுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என் றும் கொள்ள வேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமாயிரமான ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதையெனச் சிலர் எழுதி வருவது, இன்று எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும் பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம் பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் எனக்கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுது கிறார்களென்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதை யென்ற தலைப்பில் வெளி வரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல."

கவிதை பற்றிய இந்த முன்னுரையோடு நாம் இனி புதுமைப்பித்தனின் கவிதை உருவத்துக்கு வருவோம். "எவற்றை யெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை'த் தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார். எனவே அவரது கவிதை பண்டிதர்கள் கருதுவது போன்றோ, அல்லது மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் கருதுவது போன்றோ வசனகவிதைஅல்ல. இந்த உண்மையை ஒரு சில எழுத்தாளர்கள் உணரப் போய்த்தான் வசன கவிதை என்ற வேண்டா முயற்சியில் தெரியாத்தனமாய் மாட்டிக் கொண்டதை உணர்ந்து, புதுமைப்பித்தனின் உருவ மரபை ஒட்டிக் கவிதை எழுத முன்வந்தார்கள். எனினும் அவர்களுக்கும் தமிழ் இலக் கிய மரபும், பரிச்சயமும் பற்றாக்குறையா யிருந்ததால், அவர்களால் புதுமைப்பித்தனின் வழியிலும் வெற்றி பெற இயலவில்லை; வேறு சிலரும் இதே மரபை ஒட்டி நல்ல கவிதைகளை எழுதி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சி இங்கு தேவையில்லை.

புதுமைப்பித்தன் தந்துள்ள கவி உருவம் தமிழுக்குப் புதியதொரு வசதியையும் கவிதை இலக்கணத்தையும் தந் திருக்கிறது. ஆங்கிலத்தில் 'லிரிக்' என்னும் 'ஒரு பொருள் கவிதை' எழுதுவதற்குப் பல்வேறு ரூபங்கள் உண்டு. அதிகமான கட்டுப்பாடுகள் கொண்ட யாப்பமைதியில், இப்படிப்பட்ட ஒரு பொருள் கவிதையை இன் றைய சூழ்நிலைக்கும் தேவைக்கும் தக்கவாறு அமைப்பது சிரம சாத்தியமான காரியம். புதுமைப்பித்தன் உருவாக் கிக்கொடுத்த புதிய ரூபம் குறிப்பிட்ட விஷயம் பற்றி ஒரு கவிதையை இயற்றுவதற்கு வசதியான வாய்ப்பான ஒரு சாதனம் என்றே சொல்லவேண்டும். இந்த உருவ அமைப்பு காவிய ரீதியில் செல்லும் நீண்டவிஷயங்களையும் கருத்துக் களையும் தாங்கி நிற்பதற்குச் சக்தியற்றதுதான். ஆனால், ஒரு பொருள் கவிதைக்கு இந்த ரூபம் சிறந்ததொரு புதிய உருவ அமைதியாக விளங்குகிறது என்பதற்குப்புதுமைப் பித்தனின் கவிதைகளே சிறந்த அத்தாட்சி.

புதுமைப்பித்தனின் உருவ அமைப்பு எப்படிக் கருத் துக்கு வலுக்கொடுக்கிறது? இதை வெறும் வியாக்கியான பூர்வமாய் விளக்கிவிட முடியாது. உதாரணங்கள் மூலம் பார்ப்போம் :

வட்ட முலை மின்னார்
வசமிழந்த காமத்தால்
நீல மணி மாடத்து
நெடிய தொரு சாளரத்தைத்
தொட்டுத் தடவி வந்து
தோயும் நிலாப் பிழம்பை
எட்டி, எடுத்து
இடை சுற்றி, சேலையென
ஒல்கி நடப்பதாய்
உவமை சொல....

இந்தப் பகுதியில் 'வட்ட முலை மின்னார்' வன்று தொ டங்கும் அடியின் எதுகைக்கு, மறு எதுகை ஐந்தாவது வரி யில்தான் வருகிறது. அதே சமயத்தில் மூன்றாவது வரி, வகர மோனை பெறவில்லை. எனினும் பாட்டின் முதல் ஆறு வரிகளில் அமைந்துள்ள தாள லயம், தாள லயத் தோடு ஒட்டிவரும் பாவ லயம் நம்மை இந்த எதுகைமோனைகளையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது. அதே சமயத் தில் 'தொட்டுத் தடவி' என வரும் எதுகை, எடுத்த எடுப் பில் காதில் விழுந்த முதல் எதுகையின் மங்கிய எதிரொலி யால் இயல்புக்கு மீறிய அழுத்தம் பெற்று ஒலிசெய்கிறது. இதுபோலவே ஏழாவது வரியில்வரும் 'எட்டிஎடுத்து' என் றதொடர் தாள லயத்தில் குறைப்பட்டபோதிலும், நிலாப் பிழம்பைத் தட்டுத்தடுமாறி எடுத்துடுக்க முனையும்பாவைய ரின் தயக்க பாவம் அந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது. எட்டி, எடுத்து என்ற குறுகிய தாள அளவை கொண்ட வார்த்தைகளைத் தனித்தனியே நிறுத்திச் சொல்லும்போது, எடுத்துக் கொண்ட கருத்தின் பாவலயம் வெளிப்படுகிறது. அந்த பாவ லயம் வெளிப்படும் அதே சமயத்தில், தாள லயக் குறைவு சமன் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, அடுத்து வரும் 'இடை சுற்றி' என்ற தொடர் அதே பாவ லயத்தைத் தொடர்ந்து கொண்டு சென்று விடுகிறது.

இன்னொரு உதாரணம்:

இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று; ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி
கல்லில் வடித்து
வையாதீர்!
வானத்து அமரன்
வந்தான் காண்
வந்தது போல்
போனான் காண் என்று
புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்

இந்தப் பாடல் பகுதியிலும் சில புதிய ரூப அமைதி களைக் காண்கிறோம். 'இத்தனைக்கும்' என்று வல்லின எது கையோடு அழுத்தமாகத் தொடங்குகிற வரி 'செத்ததற்கு' என்ற மறுவெதுகையில் மேலும் வலுப்பெற்றுஓங்குகிறது. ஆனால், 'செத்ததற்கு' என்ற எதுகைக்கு 'திரட்டாதீர்' என்ற வார்த்தை மோனையாக அமைந்தபோதிலும், அடுத் துவரும் வரி 'நிதிகள்' என்ற வார்த்தையை யொட்டி அதையே எதுகையாகக்கொண்டு, 'நினைவை' என்று எழு கின்றது. இந்தப் புதுமையை அதைத் தொடர்ந்து வரும் அதிகப்படியான வார்த்தைகளின் பாவ லயம் மூடி மறைத்து விடுகின்றது. அதுபோலவே 'வானத்து' என்ற வார்த் தைக்கு அதற்கடுத்த நாலாவது வரியில்தான் 'போனான்' என்ற எதுகை பிறக்கிறது; அடுத்த 'அத்தனையும்' என்ற சொல் எழும்போது, 'இத்தனைக்கும்' என்று முதலில் எடுத்த எடுப்புக்கு ஒரு முடிப்பு வழங்கும் முத்தாய்ப்பு எதுகையாக அது அமைந்து கவிக்கு அசாதாரண அழுத்தம் தருகிறது இல்லையா ?

இதுபோன்ற புதுமைப்பித்தனின் மனோபாவனைக்குத் தக்கவாறும், எடுத்துக்கொண்டுள்ள தக்கவாறும் உருவ அமைப்புக்கள் பல்வேறு லயவின்னியா சங்களைப் பரிமாறுவதை, அவரது கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாய்விட்டுப்படித்தால், நீங்கள் அனை வருமே உணர்ந்து கொள்ள முடியும். 'நாழி முகவாது நானாழி' என் பது அனுபவ வாக்கியம். புதுமைப்பித்தனின் கவிதையின் ரூப நயங்களை யெல்லாம் என்னால் இந்த முன்னுரையில் முழுதும் கூறிவிட முடியாது. புதுமைப்பித்தனின் புதிய முறைக் கவிதையை அனுபவிப்பதற்கு இந்த முன்னுரை யில் கூறியுள்ள கருத்துக்கள் ஓரளவு வாசகர்களுக்கு உத வும் என்றே நம்புகிறேன்.

இந்த முன்னுரையில் நான் புதுமைப்பித்தன் கவிதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட உருவ அமைப்பையும், சம்பந்தப்பட்ட சில கருத்துக்களையும் தான் கூற முனைந் தேனே தவிர, அவர் எடுத்தாண்ட கருத்துக்களைப்பற்றி நான் இங்கு எதுவும் கூறவில்லை. அவற்றை வாசகர்களின் மனோபாவத்துக்கும் பக்குவத்துக்கும் ரசனைக்குமே விட்டு விடுகிறேன்.

இந்தக் கவிதைத் தொகுதியை உருவாக்குவதில் எனக்கு உதவி புரிந்த நண்பர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

ஒன்று சொல்ல மறந்தே போய்விட்டேன். 'புதுமைப் பித்தன்' எப்போது கவிதை எழுதினார் என்ற வியப்பு யாருக்கேனும் ஏற்படுகிறதா? அப்படியானால் சொல்லி விடுகிறேன். வேளூர். வெ. கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் கவிதை எழுதிவந்த அதே நபர்தான் 'புதுமைப் பித்தன்!'

நெல்லை, }
ஜூன், 1954 ரகுநாதன்
--------------------------

நிசந்தானோ சொப்பனமோ!

1
பட்டமரம் தழைக்க,
பைரவியார் சன்னிதியில்
வெட்டெருமை துள்ள,
விளக்கெடுக்க,

வட்டமுலை மின்னார்
வசமிழந்த காமத்தால்,
நீலமணி மாடத்து
நெடியதொரு சாளரத்தைத்
தொட்டுத் தடவிவந்து
தோயும்நிலாப் பிழம்பை,
எட்டி, எடுத்து,-
இடைசுற்றிச் சேலையென
ஒல்கி நடப்பதாய் உவமை சொல,
நோட்டெழுத, சீட்டெழுத
நூறுநுணாப் பேய்விரட்ட, உடுக்கடித்து—
உள்ளத்தனல் அடிக்கும்
கடுப்புக் கதைசொல்ல,

காவிரியின் வளமை சொல,
வடுப்படாக் காதல்
வானுலகத் தெழில்படர,
பூவிரிந்த பந்தரிலே
புது மணத்தின் தேன் நுகர,

சித்தம் பரத்துச்
சிவனார் நடங்கூற,
வத்திவச்சுப் பேச,
வாய்ப்பந்தல் தானெடுக்க,

செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பவனிவர,
உவப்புடனே நீயிருந்து

முத்தமிழை-
பாலித்து, பயிராக்கி,
பசிய உயிர் தான் தோன்ற
வளர்த்து வரும் வார்த்தை
நிசந்தானோ ?
சத்தியமாய்க் கேட்கின்றேன்
சரஸ்வதியே நிசந்தானோ?
நிசந்தானோ சொப்பனமோ !

2
கள்ளம் விளைந்த களர்
கவியா மோ ? காவியங்கள்,
நொள்ளைக் கதை சொல்லி
நோஞ்ச நடை பயின்று
உன்னை வணங்கிடுமோ ?
ஒரு வார்த்தை,
நிசமாகக் கேட்கின்றேன்
ஒரு வார்த்தை!
துச்சா சனனுரிந்த
துகில்என்ன சருகென்ன,
தொட்டுரிய, தொட்டுரிய,
தோன்றாத சூனியமாம்
ஒன்று மற்ற பாழ் வெளியை
உள்ளடக்கும்
வெங்காயம் போல்
விகற்ப உலகமென
வித்தகர்கள் சொல்வதுபோல்,
நீயுமிருத்தல், நினைவணங்கே,
நிசந்தானோ ?
நீயுமிருத்தல் நிசந்தானோ ?
உள்ளத்து ஊஞ்சலினை
உந்தி உவகை துள
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ ? சிரிக்காதே,
சிந்தும் சிரிப்பெல்லாம்
சொப்பனமோ ?
------------------------

ஓடாதீர் !

1
ஓகோ, உலகத்தீர்,
ஓடாதீர்!
சாகா வரம் பெற்ற,
சரஸ்வதியார் அருள்பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல,
உன்னிப்பாய்க் கேளுங்கள்,
ஓடாதீர் !
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல.
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்;
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம்புரியும்
வளமை கிடையாது!

2
உம்மைப்போல் நானும்
ஒருவன் காண் ;
உம்மைப்போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கட்டிவைத்துக்காசை,
ஏமாந்தால், -
கறந்திடுவேன்.
ஊருக்கு மேற்கே
ஊருணியில் கண்டவளை
ஆருக்கும் வாய்க்கா
அரம்பை என்று,
கனவென்று,
சொல்லில் வனைந்திடுவேன்
சோற்றுக்கு அலைக்காதீர்.
“கன்னி எழில் வேண்டாம்;
காதல் கதை வேண்டாம் ;
சொன்னபடி, தேச
பக்தி எழுப்பிடுவாய்,'
என்றக்கால்,
“அப்படியே, ஆஹா
அடியேன் இதோ " என்று
கல்லும் உயிர் பெற்று
காலன் போல் நடமாட
" வெல்லு, வெல்லு ” என்று குத்தும்
வீறாப்புத் தார்க்குச்சி
எத்தனை வேணும் ? - செய்து
இணையளயில் வைத்திடுவேன்.

3
சற்று, பொறும் ஐயா
சங்கதியைச் சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது; இனிமேலே
என்றைக்கோ, எப்போதோ
எதிரில் எளைக்கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை.

4
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று : ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர் !
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண் ! வந்ததுபோல்
போனான்கான்” என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டு விடும்.
--------------

5
சித்தே பசியாற
செல்லரிக்கும் நெஞ்சாற
மெத்தப் பழங்கதைக்கு
மெத்தப் பழங்கதையை
புத்திதடுமாறிப்
புகன்றாலும்,
அத்தனையும், ஐயோ,-
அவையாவும் லட்சியங்கள் !
வானத்துக் கற்பனைகள் !
வையம் வளர்க்க வந்த மோகன மந்திரங்கள் !
மோட்சவழிக்காட்டிகள், ஓய்!
அத்தனையும் உங்கள்
அறிவை வளர்க்க வந்த சொத்துக்கள் ஓய் !...

சொல்லுக்குச் சோர்வேது
சோகக்கதை என்றால்
சோடி ரெண்டு ரூபா !
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும் !
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றதுபோல் ;
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை.
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டிவைக்க முடியாது!
காசைவையும் கீழே,-பின்
கனவுதமை வாங்கும்,-
இந்தா !....இது
காலத்தால் சாகாது
காலத்தின்
ஏலத்தால் மலியாது !
ஏங்காணும் ஓடுகிறீர்!
ஓடாதீர்!
உம்மைப்போல் நானும்
ஒருவன் காண்!
ஓடாதீர் !
----------------------

உருக்க முள்ள வித்தகரே !

1
ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழு மென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே !
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்லவந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கடப்பாடு

2
குப்பைகூளம், செத்தை
கூட்டி வைத்த
தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும் —
உப்பு, பருப்பு,
உளுத்தம் பயறு
சித்தரத்தை, புளி
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக் (கு) !
ஒத்து வருமோ
உயர் கவிதை ?

புத்தி சொலவந்தவர் போல்,
ஏனையா ?
வித்தாரக் கவிதை
கையாண்டீர்
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு ;
உமக்கேன் இப்
பொல்லாப்பு!

3
விட்டு விடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும் !
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்!
ஆசைக் கன வெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா,
கவைக்குதவா,
கவிதையிலே
செல்லாதீர்!
புத்திசொல வந்தவரே
புத்திதடு மாறிவிட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும் ?
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டுவிட்டு
பெட்டியடி சொர்க்கத்தில்
புகுந்துவிடும் !

4
கொட்டிக் கிடக்கும்
கைத்தொழில்கள் கைவிட்டு
வெட்டிப் பேச்சுப் பேசி
வீண் கதைகள் சொல்லி
தட்டிக் கழிப்பதுபோல்,
ஏனையா ?
தவிக்கின்றீர்?

5
யோக்கியமாய்
வாழ இங்கே
எந்தத் தொழில்
உண்டு ?
பாரளந்த மாயோன் படியளக்க பக்கத்தில்,
வேறொருவன் வீற்றிருக்கும்
மாட்சி தெரியலையோ?

வேற்றரசர் நிழலிலே,
வேலைக்கும் வழியுண்டு !
கூடை முறம் பின்னிடலாம்;
தேசத்து லெச்சுமியை,
மானத்தை,
கவுரவத்தை,
கூட்டிக் கொடுத்திடலாம்;
நச்சி வந்த பேருக்கு
நாமங்கள் சாத்திடலாம்!
வேற்றரசர் ஆட்சியிலே
வேலைக்கும் வழியுண்டு
கூலிக்கும் அட்டியில்லை.

இந்தத் தொழில்செய்ய
எத்தனையோ பேருண்டு ;
இந்தத் தொழில்செய்ய
என்னை அழைக்காதீர் !

6
நிற்க.
ஊருணிக் கரையருகே
உட்கார்ந்து கொண்டு
ஊர்வம்பு பேசுவதாய்
ஏனையா உளறுகிறீர் ?
உருக்கமுள்ள வித்தகரே
ஊருணிக் கதை யெல்லாம்
ஊரறிந்த ரகசியம்காண் !

அன்றொரு நாள்,
உம்முடைய மச்சாவி
ஊருணிக் கரையருகே
உட்கார்ந்திருந்தானாம்;
உப்பிலியின் கோயில்
உப்புக் குறத்திமகள்
உள்ளான் பிடிக்க வந்தாள்;
உள்ளான் பிடிக்க வந்த
'ஊர்வசி'யின்,
உள்ளம் பிடிக்க எண்ணி
உம்முடைய மச்சாவி
கன்னங்கரிய திரள்
மேனியிலே கை வைத்தான் !
தத்துப்பித்தென்று ஏதோ
தடமாடிப் பேசிவிட்டான் !

இந்த
ஊருணிக் காதை
ஊரெல்லாம்!-
சிரிப்பாய்ச் சிரித்ததுகாண் !
அந்தக் கதையைத்தான்
அடியேன் குறிப்பிட்டேன் !

7
ஏனையா? உமக்கிந்த
நொள்ளாப்பு?
போமையா போம் !
நும்முடைய
பெட்டியடி சொர்க்கத்தில்
புகுந்துவிடும் !
உருப்படியாய் வாழும் ;
உலகத்தைக்
கட்டியழும்.
இடுப்பில் வலி இல்லாதான்
இராமேசுரம் போனால்
'புள்ளை' வரம் பெற்றிடலாம்
புத்தைக் கடந்திடலாம்

என்பதுபோல்-
சொத்தைக் கதை எல்லாம்
அளக்காதீர்

ஒற்றைச் சிதையினிலே
உம்மெல் லோரையும்
வைத்து எரித் திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது!
--------------------

காதல் பாட்டு

1
நிலவு வரவேண்டும்;
நீலமணிக் குயிலோசை
காதில் விழவேண்டும் ;
தென்னங்கீற்றும் சற்றே
சலசலக்கும் பாவனையில்
தென்றலுமாங்கே சற்று
திரிந்திடவும் வேண்டும்.
நிச்சயமாய்க் காதல்வரும்,
நீர் இருந்து பாரும் ! நிச்சயமாய்க் காதல்வரும்
நீர் இருந்து பாரும்!

2
ஆறுகெஜச் சேலை
அங்கமெலாம் கவ்வி
தோளில் உலாவி
தோகையவள் மேனிதனை
விள்ளாமற் சொல்லி
வினயமாய் அழகிழைக்கும் !

கரும்பட்டுப் பின்னல்வலை
காரிகையின் கூந்தலினை
கபோலச் சுருள்மட்டும்
காற்றிலசைந் தாடவிட்டு
பெட்டிக் கருநாகம்
பிறழுவது போலடக்கும்.

விற்புருவம் கோணாமல்
விதானம் எடுக்கையிலே,
இமை ரோமப்பந்தி
ஏந்திழையாள் கண்ணழகை
'கார்மன் மிராண்டா
கல்ச்சர்'க் கிசைந்தபடி
வெட்டிக் குதித்து
விளையாடும்.

காதல்மது வூறுகின்ற
கன்னக் குழிவினிலே
காற்றிழைக்கும் நினைவினைப்போல்
கிரீமின் மணங்கமழும்

அதரச் சாயம் அன்னாள்
ஆதாரக் காதலுக்கு
வெறியூட்டி, வெற்றிக்
களியூட்டி,
அருல்கி, வாவென்று
அவசரமாய் அழைக்கும் ;
அஞ்சிருக்கும் மாரன்
அரங்க அணங்கினுக்கு
நெஞ்சிருக்கும் நேர்த்தி
நிகழ்த்த இயலாதே !
எங்கோ, எப்போதோ,
எவ்விடத்தோ
கேட்ட கருத்து
குடியேறும் பாவனையில்
செல்காற்றுச் செத்தையாய்,
சென்மாந்தர வாசனையாய்,
இருந்தும் இல்லாததுபோல்,
இல்லையெனச் சொல்வதற்கும்
வலாமல்,

அச்சம், மடம், நாணம்,
என்றினைய அத்தனையும்
ஒருங்கே குடிபுகுந்த
ஓரிடமாய்
ஜம்பருக்குப் பின்னால்-
சங்கரனார் நடம்புரிந்த
தில்லைத் தலத்துத்
திரைக்குப்பின் மந்திரமாய்,
கன்னியவள் கட்டழகை
கார்வையிட்டுக் காட்டும்.
காதல் மணங்கமழும்
காலேஜுக் கன்னி; பேபி எனப்பெயராள்

பெதும்பைப் பருவத்தாள்
கைப்பையும் வாட்சும்
கால்செருப்பின் நாஸுக்கும்
தரையின்தவம் என்ன. தார்ரோட்டுக் கனவென்ன,
வெற்றிப் பராக்கு சொல
வேகமாய் நடந்துவந்தாள்.

3
ஒற்றைக் கையுரிந்து
ஒய்யாரக் கோட்டு
ஒற்றைத்தோள் சுமக்க
ஓர்மையாய் திசை நோக்க,
வெள்ளெழுத்துக் கண்ணாடி.
வெட்டிச் சிரிப்புடனே
வேற்றூரான் பாசையிலே
வித்தாரக் காதல் சொலி
கிட்ட நெருங்கிவந்த
கண்ணனுடன்-
எட்டி அடியெடுத்து
யாருமிலா ஓரிடத்தில்
உட்கார்ந்து,
உள்ளத்துக் காதல்
உற்றவிகாரம் எலாம்
விள்ளத் துணிந்துவிட்டார்—
வீற்றிருந்து கேட்டிடுவோம் !
காதல் இதுகாதல்! ஆமாம்
காதல் இது காதல்!

4
கண்ணன் கழறிடுவான்:
"காரிகையே !
கச்சேரி வேலை அது !
நிச்சயமாய் நீ நம்பு.
முப்பது ரூபாய்க்குக் மோசமிலை;
அலவன்சும் உண்டு.
அடியே பேபி! உன்னை
சினிமாவுக்கத்தனைக்கும்
சோர்வு சற்றும் காட்டாமல்,
அழைத்தழைத்துச் சென்றிடுவேன் ;
இனியும் கவலை உனக்
கெதற்கு?
தயக்கம் எதற்கு?
தர்மம் விளைந்த
தமிழ்நாட்டுக் கன்னிக்கு
தயக்கம் எதற்கு ?
கையடித்துக் கொடுத்தால்
காலேஜு வாசலிலே
கண்ணடித்த பயனடைவேன் !"

5
கண்ணன் உரைத்திடவும்
காரிகையும் தானுரைப்பாள்:
"பண்ணமைந்த காதல்
பரமபதம் கிடைக்கப் பதைக்கின்றேன்.
ஆனாலும்—
பாங்கியிலே கொஞ்சம்
பணம் ஏதும்வேண்டாமா ?
காதல் பெரிது !-
அதுதான் எனக்கும் தெரிகிறது !
காசு பெரிதென்பதை நீ
கருத்திலேன் கொள்ளவில்லை ?
காசு இல்லாமல் என்ன
கதை நடக்கும் ?”

6
கண்ணன் மறுபடியும்
கருத்தை உருக்கிடுவான்.
போடி போ ! பேதாய் !
பேசத் தெரியாமல்
பிதற்றாதே!
காசுக்கு என்ன பிரமாதம்?
கடன் வாங்கினால் போச்சு ;
கல்யாணம் எப்போது?"

7
"அப்பாவைக் கேட்டிடுவோம்
அதற்கென்ன அவசரம்காண்!
தொல்லை வராமல்நாம்
தொட்டுப் பழகிடுவோம்;
எல்லை தெரியாதா நமக்கெல்லாம்?”
என்றிட்டாள்.
பின்னர்,
அன்றுவந்த மாடல்
அதிரூப வல்லியவள்
கொன்றுவிடும் பார்வையுடன்
கொவ்வை இதழ் பூக்க
நின்று,
நினைவு எங்கோ நடமாடி
சாயக்
கட்டி யெடுத்து
கனிவாய் இதழ் பொருத்தி
முத்தமிட்டு முத்தமிட்டு
மோகக் கருத்தை யங்கே
மோத விடுவது போல் வேகத்துடன் தீட்டி
விளக்கிட்டாள்!

ஏதோ நினைத்தவள்போல்
கைவாட்சைப் பார்த்து
கருத்தில் கனிவூறி
"சீனுவுடன் நாளைக்கு
சினிமாவுக்குப் போறேன் ;
நாளைக் கியலாது; மறு
நாளைக்கு மப்படியே.
வீணுக்கு அலையாதே
வீட்டுக்குப் போ" என்றாள்.

8
காதல் இதுகாதல் !
ஆமாம்.
காதல் இதுகாதல் !
------------------------

மாகாவியம்

மகா காவியம்

காளான் குடை நிழலில்
கரப்பான் அரசிருக்க,
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலை தூக்க
காட்டெருமை புறத்தேறி
சிட்டுக் குருவியவள்
சிங்காரப் பாட்டிசைத்தாள்.

வரிசை வைக்கும் பாங்கிமார்
வலசாரி இடசாரி
சில்லென்ற ரீங்கார
சிலம்புச் சிறகோடு
பம்புக் கருமேகப்
பந்தல் எடுத்து வர
ஆறாயிரம் பூச்சி
அமர்ந்த சபை நடுவே
அத்தாணி மண்டபத்தின்
அரியாசனத் தருகே
பல்லி யமர்ந்திருந்து
பதிவாய்க் குறிசொல்லும்.
உள்ளகுறி யத்தனையும்
உண்மை யுண்மை என்பது போல்
ஓணான் தலை அசைத்து
மண்ணாளும் மாராசன்
மனசைக் கவர்ந்திருக்கும்.
அச்சமயம்,-
உயரப் பறந்து வரும்
வண்ணாத்திப் பூச்சியவள்
வாகாய் விலகி, ஒரு
தும்பை மலர் அமர்ந்து
துதி நீட்டத் தேன் எடுக்க,
தேனெடுக்கும் வேளையிலே
தெய்வச் சினத்தாலோ,
தேவர் அருளாலோ,
மண்டு மகரந்தம்
மங்கையவள் நாகியிலே
சுழிமாறிப் போனதினால்
சுருக்கென்று தும்மல்வர,
தும்மல் வரத் தும்மல்வர
தும்மல் பெருகிவர,
அத்தாணி மண்டபமே
அதிர நடுங்கிற்று!

அத்தாணி மண்டபத்துக்
கணியாய் இலங்கி நின்ற
கொற்றக் குடையும்
கோணிச் சரிந்தது காண்!
கோணிச் சரிந்த குடை
கொற்றவனார் தன் தலையில்
வீழ்ந்து பொடியு மும் வீரத் திரு மார்பன்
வீசி நடந்து,
வியன் சிறகைத் தான் விரித்துப்
பல்லிக்கு எட்டாத
பாழ்த்த இடுக்கினிலே
ஒண்டி உயிர் காத்து
உடல் நடுங்கி நின்றாரே !

சிங்காரப் பாட்டிசைத்த
சிட்டுக் குருவியவள்
சிரிப்பாணி மண்ட,
சிறகு விரித்து, அலகில்
நெளியும் புழுவேந்தி
நீள்வெளியில் தான் பறக்க
வந்திருந்த மந்திரிமார்
வரிசை பல கொணர்ந்த
குடிபடைகள் யாவருமே
உடற்பாரம் காக்க,
ஓடி ஒளித்தனரே!
காளான் நிழல் வட்டம்
கண்ணுறங்கிப் போயிற்றே !
வேளான் குடியூரில்
வெள்ளெருக்கு மூட்டருகே
கள்ளி தலை தூக்கும்
கரை யருகே,
ஆளற்றுப் போச்சுது காண்,
அந்தோ அரசாட்சி !

2
மகா ரசிகர்

"வாரும்வோய் கவி ராயரே நுமது
கவியோ விதென்ன புகலும்?
வாக்கிலே பொருளிலே கருதி நீர் மறைவாக
வைத்ததெப் புதையல் ஐயா ?
மாகாவியம் என, மனசிலே கொண்டு நீர்
மார் தட்டி வந்து நின்று,
கோரிய காசிலே குறிவைத்து எம்மை நீர்
குடுசங்கி போட வந்தீர் ?

அங்குமிங்கும் ஓடும் அரணையைப் பல்லியை
அல்திணை ராசி ஒன்றை
அரியா சனத் தேற்றி அதனிலும் கடையான
அருவருப் பைக் கவியிலே
சிங்காரமாய்க் கூட்டிச் சின்னத் தனமிகு
சிறுமையைக் காட்டி விட்டீர் !

ஆலால முண்டவன் அற்றை நாள் மதுரையில்
அணி செய்த தமிழ ணங்கை,
வாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை
வாரிச் சொரிந்த கவியே!

ஏலாத செயலிலே ஏனையா முயலுதீர்?
ஏதும் பிழைக்க மார்க்கம்
அறியாது, அறியாத அவலட்சணத் துறை
அதிசயக் கருவின் விளைவை
மூலைக் கொருத்தராய் மூச்சுத் திணரவே
முயன்றிடில் கவி யாகுமோ ?"

3
மகா கவி :

"தாளால் உலகளந்தான்
தனை மறந்து தூங்கி விட்டான்.
மூளாத சீற்ற
முக்கண்ணனும் இன்று
ஆளாக்கு அரிசிக்காய்
அல்லாடித் திரிகின்றான்.

காளான் அரசாட்சி
கசப்பாகத் தோற்றுகிற
ஆளான பெரியவரே,
அடியேன் ஒரு வார்த்தை.

இன்றைக்கு,
யாரையாகாட்டுக்கு
அப்பன் மடத்தனத்தை
அப்படியே ஏற்றுத்தன்
பெண்டாட்டி கைப்பிடித்து,
பெரிய நிதியிழந்து, திண்டாடி நின்று,
தீமைதனைச் சங்கரிக்க,
ராவணனார் காதுக்கு
'ரதி போல்வாள் என் மனைவி'
என்பதனைச் சொல்லுதற்கு
இடும்பு பல புரிந்து,
அன்னவளைத் தானிழந்து
அதற்கப்பால்! மதியிழந்து
போகும் வழியினிலே
பொல்லாப்புக் கச்சாரம்
வாலி வயிறெறிய
வாங்கிச் சுமந்துகொண்டு,
பெரிய கடல்கடந்து
பெண்ணை, தன் நாயகியை
வில்லால். திறத்தால்,
விதிவலியால், மீட்டுப்பின்
அன்னவளைத் தீக்குழியில்
அருகிருந்தோர் நம்புதற்காய்
இறக்கி, தருமத்தை
ஏந்தி, எடுத்து
அரியாசனத் தேற்றும்
அதிசயங்கள் உண்டோகாண்!

கரப்பான் அரசிருக்க
கடுக்குதோ, உம்மனசு?
கரப்பானைப் போன்ற பல
காலறுவான் எத்தனைபேர்
மொண்டி யரசாட்சி
மூடக் குரோதமுடன்
தண்டெடுத்து,
தானே யறிந்த
தற்பெருமைச் சூனியத்தை,
பிறக்கும், இறக்கும்பின்
பேதுற்று மாளுகின்ற
அண்டாண்ட மூலத்தின்
அழியா விதி போல
நினைத்துத் தருக்கி
நடப்பதுவும் சரிதானோ ?"
---------------------

இணையற்ற இந்தியா”

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம் ! - என்று
யாங்களு மறிவோம் - வெள்ளை
ஆங்கில ரறிவார் - பிள்ளைத்
துருக்கனு மறிவான் - அறிவால்
சூழ்ந்தது தொல்லை.

வேறு
சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செவ்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும் !
"எந்தையவர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு !
இமவானின் ஆதரவில் இருந்துவரும் நாடு !
கந்தமலர் பூச்செறிவில் கடவுளர்க ளோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு”
என்றுபல சொல்லியதை சொல்லளவில் நம்பி,
எவனுக்கும் மண்டியிடும் ஏந்துபுய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!

வேறு
வேதம் படித்திடுவோம் வெறுங்கைமுழம் போட்டிடுவோம்
சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்! [
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம் /

இந்தியா தேசம் - அது
இணையற்ற தேசம் !
----------------------

தொழில்

எழில் எடுத்த மலர்க்கமல ஏந்திழையாள் சன்னதிக்கு
தொழில் அடுத்து நல்ல கவி சொல்லணுமாம் - அழல் அடுத்த
கண்ணுதலான் தன் மகனே! காய்சினத்து வேலுடையாய்
வண்ணத் தமிழ் எனக்குத் தா. 1

கந்தா, கடம்பா, கதிர்வேலா, கட்டழகா
சந்தார் தடந்தோளா சட்டுணுவா - இந்தவூர்
ரேடியோக் காரரெனை நெருக்குகிறார்; 'லேட்'டாச்சாம்;
ஓடியா, ஓடியே வா. 2

வந்தாலும் போதாது வாகைபுனை வேலவனே
சொந்தமாய்க் கவியேதும் தோணுதிலை - செந்தமிழில்
பாட்டு ரெடிமேடாய்ப் பண்ணிவச்சால் கொண்டு வந்து
லேட்டேதும் பண்ணாமற்றா. 3

கும்பிடுவார், குழைவார், கூத்தாடப் பல்லிளிப்பார்
வம்பிடுவார் பின்னால் வழக்கிடுவார்—அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாகப் பண்ணிவச்சேன்
என்னமோ காணாமல் போச்சு. 4

கப்பி யடித்திட்டேன், கயிறுதிரித்து வச்சேன்
எப்படியோ பாட்டென் றெழுதினேன் - அப்படியும்
வாகையடி முக்கிலது வந்து குடி போட்டதடா
தோகை மயிலேறி வா. 5

நாலே வினாடி தான், நல்லதால் ஒன்று சொலு
ஏலே, முருகையா! எத்தாதே ! வாலே!
வந்து இருந்திங்கே வக்கணையாய்ப் பாட்டெழுது
தெந்தனங்கள் பண்ணாதே! வா. 6

துருப்பிடித்த வேலைத் தூரஎறி; இங்கே வா
உருப்படியாய் பாட்டொன்று சொல்லு - விருப்புடனே
கவியரங்கம் கூட்டிக் கன்னித்தமிழ் வளர்ப்பார்
செவிக்கமுதமாய் ஒன்று சொல்லு. 7

வேலன் உரைக்கின்றான்: "வேளூரா ! இன்னமு நீ
காலம் கலி என்றறியாயோ? - ஆலம்
உண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்
அண்டிவந்து கேட்பவரார் சொல் ? 8

"பண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்
கண்ணைச் சொருகிக் கவி என்பார் - அண்ணாந்து
கொட்டாவி விட்டெதல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு ?" 9

உழைப்புக்குப் பாட்டன்றேன்; ஓங்கும் சினம் எடுத்து
பிழைப்புக்கே ஆபத்தாய்ப்பண்ணிவிட்டான் - அழைத்த
வல்லவரே, தமிழின் நயங்கள் வளர்ப்பவரே
கொல்லாதீர் என்னை விடும். 10
----------------------------

இருட்டு

நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகின்றேன்,
நடந்தேன், நடக்கின்றேன்,
நடந்து நடந்தேகுகின்றேன்,

செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு.

நடையால் வழிவளரும்
நடப்பதனால் நடை தொடரும்;
அடியெடுத்து வைப்பதற்கு
ஆதிவழி ஏதுமில்லை.

சுமையகற்றிச் சுமையேற்றும்,
சுமைதாங்கியாய் விளங்கும்
சுமைக்குள்ளே தானியங்கிக்
சுமையேற்றும் சும்மாடே!

'எங்கு, எதற்கு
ஏனெ'ன்று கேட்டக்கால்
'எங்கு எதற்கு
ஏனெ'ன்றே கேள்வி வரும்.

என்னை அணைத்தேகும்
இருட்டுக் குரல் தானோ ?
என்னை அணைக்க வரும்
மருட்டுக் குரல் தானோ?

நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகின்றேன்,
நடந்தேன், நடக்கின்றேன் 18
நடந்து நடந்தேகுகின்றேன்.
------------------

பாதை

மண்டும் பெரு இருட்டு
மானுடவர் தம் நினை வில்
கண்டும் அறியாத
காரிருட்டு

மேலே இருள் முகடு
மேவிஎனைச் சூழ
நாலு திசையினிலும்
இருட் படலம்

செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு

பாதம் இயங்குவதால்
பாதை பிறக்கின் றதுவால்
வீதி எனத் தனியாய்
வகுத்த வழி ஏதுமில்லை.

சாக்காடு எனும் தூக்கம்
சலித்திடும் என் கால்களுக்கு
நோக்காடு போக்கும்
நொடிப் பொழுது சத்திரங்கள்

எங்கு, எதற்கு
ஏனென்றறியேனை
"தங்கு" எனக்கூறத்
தனியொருவனாருமில்லை.

நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகின்றேன்
நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகின்றேன்.
------------------

திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்

[ஸ்ரீயப்பதியாய் ஸிம்லாச் சிகரத்தில் எழுந்தருளா நின்ற அரசாங்க ஈச்வரன் வில்லிங்டன் மூர்த்தியாய் சேவை காட்டிய திருக்கல்யாண குணங்களையும், வீரப் பிரதாபத்தையும், தான் சரண்புகுந்து உஜ்ஜீவித்ததையும் பாடுகிறார்.]

பதிகம்

1. உற்றாரை யான்வேண்டேன், ஊர்வேண்டேன். பேர்வேண்டேன்,
மற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்,
பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு சர்விஸில்
சிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ

2. விந்தையுறு மானிடனோர் வேடிக்கைத் துணியதனால்
இந்தியராம் உன்னடியார் உனைமறக்கச் செய்தவனை
தந்தியைப்போல் பாயுமுன தவசரச்சட்டமதனால்
சிந்தியே நிலைகுலையச் செய்தவினை மறவேனே.

3. வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்
மீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை
ஆளாக்கி வருத்திடினும் அதனையும்யான் பரவுவனே!

4. ஊனேறு செல்வத் துடன் பிறவி யான்வேண்டேன்
தேனார் மொழிக்கிள்ளை தேவியரும் யான்வேண்டேன்
வானோங்கு புகழ்மிகுந்த நின்வாயி லிட்டுண்ணும்
மீனாய்ப் பிறக்கும் தவமுடைய னாவேனோ.

5. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்.
எந்தமரே ஏமாற எப்பதவி சொல்லினுநின்
அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டேனே.

6. வேலைக்குக் கூலிதந்து அப்புறமும் பாதிதந்த
சீலத்தைப் போற்றுதற்கு சிறுவாயும் போதுமோ!
ஞாலத்தை யொருகுடைக்கீழ் நடத்துநின் சீலத்தை
காலைக்கதிரழகின் கற்பனை என்றோதுவனே !

7. மன்னியதண்சாரல் சிம்லாவில் உறைவான்றன்
பொன்னியலும் சேவடியில் அமர்வான் புரிந்திறைஞ்சும்
சென்னியன்சீர் தொண்டரடிப்பொடியான் சொல் வார்த்தைகளை.
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பக்தர்களே!

ஆள்வார் திருவடிகளே சரணம்.
-------------------

கடவுளுக்குக் கண்ணுண்டு

கடவுளுக்குக் கண்ணுண்டு
கண்ணோ, நெருப்பு வைக்க ;
தலையில் பிறையுண்டு-
தணல் கையில் உண்டுண்டு ! 1

கங்கை முடிசூடி
கால்தூக்கி ஆடுவதால்
அங்கை மழுவை
ஆரும் மறப்பாரோ ? 2

பேய்க்கணங்கள் சூழப்
பித்தாடும் வேடமிட்டால்
வாய்க்கும் சுடலையிலே
வளரும் பொருள் எதுவோ ? 3

கரிக்காலன் பாதம்
கைலாசம் காட்டிற்றாம்
நரிக்கால் நடமிட்ட
நான்மாடக் கூடலிலே ! 4

நீடு பொருள் கண்டு
நிமலன் அருள் கண்டு
வீடு பெற நின்ற
வித்தகர்கள் கண்டாராம்! 5

பாம்புக்குப் பல்லில்
பரனுக்குக் கண்டத்தில்
தங்கும் விஷம் தரணி
தங்கும் விஷம் அம்மா ! 6

பூத்திருக்கும் பொட்டுப்போல்
பொறி கனலும் நெற்றிக்கண்
காத்திருக்கும் பூத
கணங்களுக்கே கைலாசம்! 7
----------------

பொங்கல் நம்பிக்கை

குட்டுதற்கும் வெட்டுதற்கும்
கூட்டமுடன் அன்னவரைச்
சுட்டு எரித்துத்
தகிப்பதற்கும்—வெட்டரிவாள்
பாட்டுண்டு; நானுண்டு ;
நீயுண்டு; பாவறியா
மோட்டெருமைக் கவிராயன்
உண்டு. 1

மோட்டெருமைக் கவிராயன்
'முக்காரம்' கேட்டால்தான்
நாட்டமுள்ள பாட்டின்
நயம் தெரியும்-பாட்டுள்ள
ரகுநாதா, நெஞ்சே
ரவை வைத்துப் பாட்டிசைக்கும்
ரகுநாதா, ஏங்காதே நீ ! 2
--------------------

'அல்வா'

அல்வா எனச்சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே!-அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான், 1

சென்னைக்குப் பதினேழில்
சீட்டுக் கொடுத்துவிட்டு
உன்னைப் பிறகங்கே
சந்தித்து-பின்னை
ஊருக்குப் போவேன்
உறுதியாய் வாஅங்கே
நேருக்கு மற்றவையப் பா. 2
------------------------

காலைக் கடல்

1

கதிரவன் உதயமாகவில்லை.
மோகனமான இருள் உன்னைத் தழுவுகிறது.
உன்னைத் தன்னுள் ஆக்குகிறது.
காதலின் திரையா?
உன் வதனத்தில், உன் கண்களில்
உறக்கத்திலும் விழிப்பிலும்
என்ன சாந்தி !
இந்தச் சப்தமற்ற ஒளியில், காணும் இருளில்
உன் முகத்தில், உன் கண்களில்
என்ன சாந்தி !

என் வார்த்தைகள், என் கவிதை
இந்தக் காலையில்
தடுமாறுகின்றன.
நான் உனக்கு இளையவன் அல்லவா?
உனது கனிந்த பார்வை
என்னைச் சில சமயங்களிலாவது
நோக்காதா?
உன் ஹ்ருதயத்தில் ஒலிக்கும் கவிதை
என் உள்ளத்திலும்
ஒலி செய்கின்றது.
---------------------

அசரீரி

தருமத்தின் நெறி தொடர்ந்து
தருமம் தன் நெறி தொடர
நிருமித்த உலகம் தன்
நீள் வலியால் நிலை கலங்க
வாள் விசித்த வயவேந்தர் வலியொடுங்க
தோள் அசைத்து நிலைநின்ற துயரத்தோன்றல்
கோள் இசைத்த குறுமதியை மதியாத்தோன்றல்
நாள் பசப்பும் நமன் வலியை நகைத்த தோன்றல்
ஒன்றிடுக்கண் உண்டெனவும்
ஓயாது துயர் எனவும்
நின்றெடுத்த தனி வலியால்
நிலையாது வலியெனவும்
மன்றடுத்துச் சொன்னவரை
மதி நுட்பம் கொண்டவரை
கொன்றடுக்கும் சீற்றத்தால்
கோட் புலிபோல் இடித்துதறி உலகீன்ற அம்மையுடை

உலகீன்ற துயர் ஏற்று
உலகீன்ற துயர் ஏற்ற
உயர்தோள் வாலி
பலகாலம், பலகாலம்
பயன் நைந்த பலகாலம்
உலையாத தனிக் கருணை
உன்மத்தன் வருங்காலம்
நலியாத நம்பிக்கை
நலியாதோர் தனிக்காலம்
சலியாத பெருந்தவத்தால்
சார்ந்ததொரு நற்காலம்

உருவு ஆயது உறவு பெற்றது
உறவு நீத்தது உறவு மாய்த்தது
கனிவு கொண்டது கான் நடந்தது
கரவு செய்தது கரவு செய்தது
கரவு செய்து கைவிலேந்தியே
வெருவு தம்பியை அணுகி நின்றது


சித்தங் கலங்கச் சிலையெடுத்து
சித்தங் கலங்கச் சினமெடுத்து
உத்தமத் தொழில் புரிந்து
ஊனுடைத்து உணர்வுதந்து
வந்தது சென்றது சென்றதென
சந்ததம் சொல்பவர் சொல்லிடவே
நொந்த மனத்தவர் சொல்லெனவே
அந்த மறிந்தவர் சொல்லெனவே
கனவின் நெறி பயின்ற
நனவின் நெறி தொடர்ந்து
நலிவுற்று நிலைபெற்ற
உயர் தோள் வாலி
நலிவுற்று நிலைபெற்ற
உயர்தோள் வாலி
-------------------

பாரதிக்குப்பின்

பாரதிக்குப் பின் பிறந்தார்
பாடை கட்டி வச்சி விட்டார்

ஆரதட்டிச் சொல்வார்
அவரிஷ்டம் - நாரதனே
* * *
* * *

வேளைக்கு வேளை
விருதாக் கவிசொல்லி

நாளும் பொழுதும்
கழிஞ்சாச்சே-ஆழாக்குப்

பாலுக்கோ விதியில்லை ;
பச்சரிசிக்கோ தாளம் ;

மேலுக் கேன் ஆசாரப்
பேச்சு ?
-------------------

கங்கை நதி

கங்கை நதி,-
கடவுளர்கள் வாழுகிற
பனிக் கோட் டிமயம்
என்பார்
பார்வதியார் தந்தை
இமவானே ஈசனுக்கு
ஈந்த மலை என்பார்
அந்த மலைமுகட்டின்
அரனார் பிறைக் கொழுந்தின்
சின்னச் சிரிப்பான
சிங்கார நிலவெல்லாம்
சங்கரனார் தன் சிரிப்பாய்
சகல நிலைக்கும் எமனாய்
அழிப்பதே ஆனந்தம்
என்பது பின்பற்றாமல்
உமையவளின்
உள்ளம் மலர்ந்ததினால்
உவகை நிலவு - அம்மா !
வெள்ளம் எனப் பொங்கிவர
விரைந்து அதனைத் தழுவி
ஒன்றாய் உறைந்த
உறைபனிப்பா றைமிகுந்த.
வெள்ளிமலை என்பார்
விரிகதிரோன் சந்நிதியில்
சொர்ணமலை என்பார்
பின்
சொர்க்கமலை என்பார்
வர்ணக் கலவை
மயக்கால் மதுவேறி
-------------------------

பாட்டுக் களஞ்சியமே

வாக்கின் முதுகினிலே
வந்துவிழும் நினை வெல்லாம்
கற்பனை யென்றே சொல்லிக்
காலமெனும் வீதியிலே
அந்திச் சரக்குவிற்கும் அங்காடிக்காரிகள் போல்
முதுசொற் புலவோர்கள்
முன்பெழுதி முன்பெழுதி
முறைமுறையாய்த் தானெழுதி கருத்தை எலும்பாக்கி
காசநோய் பற்றிய போல்
தன்னுருவைத் தானிழந்து
தத்துவத்தால் மேதினியில்
தன்னை யழித்தவர்போல்
தன்னிலே சூனியத்தைக் காட்டிப் பின்-
சொல்வோர் முகத்தில்
சோதி ஒளிகாட்டியந்தச்
சொல்லில் படுவோர்
சொல்லிலதோ உண்டென்று
வரட்டெலும்புதான் கடித்து
வாலாட்டிப் பொழுதயரும்
அலர்மகளின் அட்டமத்துச்
சனியான
அருமைத் திருமகனே !
பாட்டுக் களஞ்சிய மே
பலசரக்குக் கடைவையேன் !
இருக்கின்ற துன்பத்தை
எடுத்தேந்தும் வல்வினையே !
சற்றேநீ மவுனம்
சாதித்தால் போதுமடா!
எழுத்தை மறந்துவிடு
எருவடுக்கிப் பிழையப்பா!
கிடக்கட்டும்
*
*

அடடா ! சண்டாளா !
சரஸ்வதியாள் சனிவீடே !
ளகர லகரம் புரியா
நினக்கோ
லகரத்தில் அர்ச்சனை செய்
சடையப்ப வள்ளல்பலர் !
ஏண்டா இடும்பு ? இந்த
சோலிக்கு ஏன்வந்தாய்? உடும்புப் பிடியாலே
ஊட்டிதனை நெருக்கும்
*
*

நாட்டுக்கவி யென்பார்
நாகணவாய்ப்புள் என்பார்
கோட்டுக்குயில் என்பார்
குருக்கத்திப்பூ என்பார்
பட்டணத்துப் பஸ்எல்லை
தாண்டி யறியார்தமை
தண்டியெனவே புகழ்வார்
பகவானருளால்
பகல்குருடர் சஞ்சீவி-
புளிய மரத்தைப்
புத்தகத்திலே மட்டும்
பார்த்தறிந்த பண்டிதரின்
பக்கபலமாய் விளங்கும்
அபிதான சிந்தா
மணியடித்து
கிராமக் கவிதைஎனும்
கிண் ணாரக் குப்பைதனை
ஊரில் சுமடேற்றும்
உண்மைசொல யாருண்டு ?
கும்பல் கோமாளியைப்போல்
வேடமிட்டே நடந்தால்
கோமாளிக்கார் சிரிப்பார் ?
ஊரே திரண்டு * *
* *
----------------------

உதிரிக் கவிகள்

1
சிக்கறுக்க வந்தோர்
சேதி புரியாமல்
வக்கரித்த புத்தி
வழிமாறிப்போன மனம்
கொக்கரிக்க, கூடி
கூனல் மனிசரெலாம்
பொக்கை முழம் போடும்
புன்மை இயல்பம்மா !
வய்யம் சமைக்க வந்தோர்
'வளமை' புரியாமல்
பொய்யில் குளித்து, விஷப்
புகை மண்டும் கேலியம்பு
நொய்யல் மனிசர் விட
நூறாய்க் குமையுமம்மா!

2
வண்ண மதுக் கிண்ணம்
வார்த்த கவிதை யெலாம்
எண்ணக் குகையினிலே
எதிரொலித்து விம்முதடா

3
ஏட்டையா வந்துவிட்டார்
எழுந்திரடா, நில்லு
'ஏ' வகுப்புக் கைதியென்று
இடையிடையே சொல்லு !

4
உண்ட விஷம்போக
உள்ள விஷம் அத்தனையும்
கண்டு முதல் செய்தான் அக்
கண்ணுதலோன்-கொண்ட விழி
மானே அனைய அம்
மாதேவியும் அதனை
ஏனோ தரித்தாள்
கரு ?

பாம்புக்குப் பல்லில்
பரனுக்கோ கண்டத்தில்
வீம்பு மனிசருக்கு
என்றாலோ ?-ஓம்பும்
தருமத்தில் உண்டு
தனி விஷம்தான் அந்த
மருமத்தை யாரறிவார்
இங்கு ?

5
அரும்பு மலர்வதென
ஆசை முகம்தான் விரிய
விரும்பு விவாகம்
மணம்தரவே -கரும்பினிய
வாழ்வரசி கைப்பிடித்து
வளரும் நலம் பெற்று
வாழ்கவே சண்முக
நண்ப.

6
அவ்வை எனச்சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டுக்
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா ?-சவ்வாது
பொட்டுவச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடைகட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.

7
திருச்சிக்கு என்றான்;
தென்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கோட்டாயோ?-உரிச்சி
வச்ச மடையா ? வக்கு
அத்த மடையா ! எச்சிற்
காசுமடையா ! போ
டா!

8
வருகின்றேன் சென்னைக்கு;
வந்தவுடனே கதையைத்
தருகின்றேன் ; தவணை சொலித்
தப்பாதே-உருவான
பாதிக்கதை இங்கே
பஞ்சணையின் கீழிருக்கு ;
மீதிக்கதை அங்கே
வந்து!

9
பண்ணாத வம்பெல்லாம்
பண்ணிவச்சி இன்னைக்குக்
கண்ணால மின்னா
கசக்குதோ!-அண்ணாத்தே !
ஆயா வந்தாலுன்னை
அடுப்பில் முறிச்சி வைப்பாள்
போயேன் தொலைஞ்சி
போயேன்.

10
கையது கொண்டு மெய்யது பொத்தி
போர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென
சுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை
லொக்கு லொக்கென இருமிக்கிடக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே !

11
பசியா வரம் அருள்வாய் அல்லால்
நசியா நலம் அருள்வாய் முருகா

சரணம்
கருணைமலர் பாதம் விட்டு
காதகர்கள் வாசல்தொட்டு
கையேந்தி நின்று நின்று
மெய்யேந்து மாசைகொன்று
கைவேல் எடுத்து வருவாய்
மைவேல் குறத்திமுருகா!
*

12
எங்கும் பராசக்தி கோலம்-அவள்
எழில் இளமை இந்த்ரஜாலம்
*
வண்ணத் தாமரையைக் கண்டு
சொக்கிப் பாடும் கருவண்டு
*
சிந்தும் மழைமலரில் நின்று
சிற்பக் கலாபமயில் ஆடும்
கூடும் மரக்கிளையில் அன்றில்பேடு
நடமாடும் மயிலைக்கண்டு வாடும்.
*
--------------------------

குறிப்புக்கள்


1. நிசந்தானோ, சொப்பனமோ ?

இந்தப் பாடல் 'சிவாஜி' 12-வது ஆண்டு மலரில் (1946-ம் ஆண்டில்) வெளி வந்தது. கவிதா தேவியான சரசுவதியை முன்னிறுத்திக் கேட்கின்ற பாவனையில் பாடப்பெற்றது. மந்திரம்,தந்திரம், செய்வினை செய் பவன் முதலியோரைப் போலவே, 'கள்ளம் விளைந்த களரை'ப் பரப்பி 'நொள்ளைக் கதை சொல்வோரும் கூடத்தான் சரசுவதியைக் கலாதேவியாகக் கொண்டாடு கிறார்கள். இத்தனை சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு, கலாதேவி உயிர்வாழ முடியுமா? அல்லது இந் தப் புன்மைகள் எல்லாம் தன்னை வணங்க, அவள் கொலு அமர முடியுமா? - இது ஆசிரியரின் சந்தேகபாவம்; பாடல் கருத்து. புதுமைப்பித்தனின் சிறந்த பாடலில் இது ஒன்று. 'வட்ட முலை மின்னார் ஓல்கி நடப்ப தாய் உவமை சொல' என்ற வரிகள் கலிங்கத்துப் பரணி கடைதிறப்புப் பாடலில் 'கலைபோயகன்ற தறியாமல் நிலவைத் துகிலாய் எடுத்துடு ' ப்பதாய்ச் சொல்லப்பட் டுள்ளது பற்றிய குறிப்பு.

2. ஓடாதீர்!

இந்தப் பாடல் 1944-ம் ஆண்டில் 'கிராம ஊழியன் ஆண்டு மலரில் வெளி வந்தது. வேளூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில் திய முதல் பாட்டு இதுதான். வருவற்குச் சில மாதங்களுக்கு
'புதுமைப்பித்தன்' எழு இந்தப் பாடல் வெளி முன்னர்தான் கு. ப. ராஜகோபாலன் காலமானார். அவர் இறந்த பின்னர் அவரது குடும்பத்துக்குத் தமிழ்நாடு சகாய நிதி திரட்ட முன் வந்தது. தமிழர்களின் இந்த தாராள மனப்பான்மை கொண்ட நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிற்றெரிச் சலைத்தான்,

ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!

என்ற வரிகள் பிரதிபலிக்கின்றன.

கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த வீறாப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.

3. உருக்கமுள்ள வித்தகரே !

ஓடாதீர்!' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத் தாளர் 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார் ' என்ற புனைபெயரில் ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது." என்று புதுமைப்பித்தனின் பாணியிலேயே புதுமைப்பித்தனின் பாடலுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி, 'கலாமோஹினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியா'ருக்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில்தான் 'உருக்கமுள்ள வித்தகரே!' என்ற பாடல்.

4. காதல் பாட்டு

இது 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது.
இன்றைய நவநாகரிக யுவ யுவதிகளின் வாழ்வில் காதல் என்பது எவ்வளவு மலிவாக, இழிவாகப் போய்விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக எழுதப்பட்ட நையாண்டிப் பாடல் இது. இந்தப் பாடலுக்கும் ஒரு எதிர்ப் பாடல் வந்தது. 'துறைவன்' என்ற புனை பெயரில் கவிதை எழுதும் ஒரு கவிஞர் 'பத்திரகிரிக் கும்பல்' என்று மகுடமிட்டு அந்தப் பாடலை எழுதினார். அந்தப் பாடல் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்தது. எனினும் அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை.

5 மாகாவியம்

இது திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் வெளியிட்ட 'கவிக்குயில்' மலரில் வெளிவந்த பாடல். இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் புதுமைப்பித்தனும் நானும் சென்னை 'தமிழ்ப் புத்தகாலய' மாடியில், புத்தகாலய அதிபர் கண. முத்தையாவுடன் பேசிக்கொண்டிருந்த போது எழுந்தன; எதையோ கிண்டல் செய்வதற்காக, பேச்சு வாக்கில் இந்தப் பாடல் அவரது வாக்கில் எழுந் தது. எனினும் 'மாகாவியம்' திருவனந்தபுரத்திலேதான் பூர்ண உருப்பெற்றது ; உருப்பெற்ற வரலாறும் ருசிகர மானது. அது பற்றி நான் எனது 'புதுமைப்பித்தன்' நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். (பக். 134-35)

இந்தப் பாடலில் ராம காதையைப் பற்றிப் புதுமைப் பித்தன் பாடியுள்ள பகுதி ராமாயண ரசிகர்களுக்கு ஒரு கேள்விக் குறியையே எழுப்பக்கூடியது. தருமத்தை நிர்த் தாரணம் செய்ய வந்த தெய்வதப் பிறவியின் தர்மா தர்மத்தைப்பற்றிய சர்ச்சையை அந்தப் சர்ச்சையை அந்தப் பகுதி கிளப்பி விடுகிறது.

அன்னவளைத் தீக்குழியில்
அருகிருந்தோர் நம்புதற்காய்
இறக்கி, தருமத்தை
ஏந்தி, எடுத்து
அரியாசனத் தேற்றும்
அதிசயங்கள்

பற்றிய விசாரணைதான் புதுமைப்பித்தன் எழுதிய 'சாப பிரதி விமோசனம்' என்ற அகலிகை பற்றிய கதையிலும் பலிக்கிறது.

6. இணையற்ற இந்தியா

இந்தப் பாடல் 'கலா மோஹினி பத்திரிகையில் வெளிவந்தது. 1945-ம் ஆண்டில் எழுதியது. 'இந்தியா தேசம் - இணையற்றதோர் தேசம்!' என்ற அடிகளில் சிலேடை, நையாண்டி பாவத்துக்கு
பொதிந்துள்ள மேலும் வலுக் கொடுக்கிறது. நமது நாடு இருந்த இழி நிலையைக் குத்திக் காட்டும் நையாண்டிக் கவிதை இது.

7. தொழில்

14-10-1945 அன்று திருச்சி ரேடியோ நிலையத்தார் 'தொழில்' என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடத்தினார் கள். அந்தக் கவியரங்கில் புதுமைப்பித்தன் அரங்கேற்றிய பாடலே இது. தொழிலைப் பற்றி எதுவும் சொல்லாமலே, 'கொல்லாதீர் என்னை விடும்' என்று சமத்காரமாக விடை பெறுவதும், கவியரங்கின் முன்னிலையிலேயே,

கொட்டாவி விட்ட தெல்லாம்
கூறுதமிழ்ப் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

என்று அறைந்து கேட்பதும் ரசிக்கத்தக்க விஷயங்கள்.

வாகையடி முக்கு: இது திருநெல்வேலி ரதவீதி மூலை களில் ஒன்று; தேர்த் திருவிழாவில் தேர் திரும்பவேண்டிய முதல் திருப்பம் இது. அதாவது நாலு ரத வீதிகளையும் சுற்றிவர வேண்டியதேர் முதல் திருப்பத்திலேயே சக்கரம் புதைந்து கிளம்ப மாட்டாமல் தவிப்பது போல், எடுத்த எடுப்பிலேயே, அதாவது பாட்டின் நான்கு அடிகளில் முதலடியிலேயே பாட்டுத் தடைபட்டு நின்று விட்டது என்ற அங்கலாய்ப்பைப் புலப்படுத்துவதற்காகக் கை யாண்ட உருவகம் இது.

8. இருட்டு

புதுமைப்பித்தன் கவிதைகள்
இது புதுமைப்பித்தன் என்னிடம் எழுதிக் கொடுத்த பாடல். அவர் முதலில் எழுதிய 'பாதை' என்ற பாடலின் மறு உருவம். இரண்டிலும் கருத்து ஒன்று தான். பாதை என்ற பாடல் அவருக்குத் திருப்தியளிக்காததால், அதை வேறுவிதமாக எழுதியதன் பலன் இந்தப் பாடல். 'இருட்டு' என்ற தலைப்பு நான் கொடுத்தது. இந்தப் பாடல் புதுமைப்பித்தன் காலமான சமயத்தில் 'சக்தி' பத்திரி கையில் வெளிவந்தது. இந்தப் பாடலின் கருத்தைவிட, உருவம்தான் அதி அற்புதமாக விளங்குகிறது.

9. பாதை
'இருட்டு' என்ற பாடலின் முந்திய உருவம்; இது இப்போதுதான் முதன் முறையாக அச்சேறுகிறது.

10. திரு ஆங்கில அரசாங்கம்

இது 'ஊழியன்' பத்திரிகையில் வெளிவந்த பாடல். மகாத்மா காந்தியின் தேசிய இயக்கம் உச்சநிலையில் இருந்த சமயத்தில், 1934-ம் ஆண்டில் எழுதப்பட்டது. சமயாசார்யப் புலவர்களின் பதிக முறையைப் பின்பற்றிப் பாடிய நையாண்டி இது. 'ஆள்வார்' என்ற சொல்லில் உள்ள சிலேடை பாடலுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

11. கடவுளுக்குக் கண்ணுண்டு

இந்தப் பாடல் 'கிராம ஊழியன்' ஆண்டு மலரில் வெளி வந்தது. தெய்வத்தைப் பற்றிய கற்பனையைக் கொண்டு, தெய்வத்தைப் பற்றிய ஒரு எச்சரிக்கையை விடுக்கிறது இந்தப் பாடல்.

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானும் உன்றன் சிரிப்பிலே -தீத்தானுன்
மெய்யெல்லாம் புள்ளிருக்கும் வேளூரா, உன்னையிந்தத்
தையலாள் எப்படிச் சேர்ந் தாள் ?

என்ற காளமேகக் கவிராயரின் பாடல், 'கடவுளுக்குக் கண்ணுண்டு ' என்ற இந்தப் பாடலுக்குரிய கற்பனையை புதுமைப்பித்தனுக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

12. பொங்கல் நம்பிக்கை

1946-ம் வருஷத்தில் நான் பொங்கல் தினத்தன்று பொங்கல் செய்தி' என்ற தலைப்பில் 'குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியனாரிங்கில்லை...' என்ற பாடலில் சில திருத்தங்கள் பலருக்கு அனுப்பிவைத்தேன். அவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். அதற்கு அவர் எழுதிய பதிலே 'பொங்கல் நம்பிக்கை' என்ற பாடல். இந்தப் பாடலுக்கு நானும் நாலு வெண்பாக்களில் அவருக்குப் பதில் எழுதினேன். அந்தப் பதில் இங்கு தேவையில்லை அல்லவா? இதுபற்றி விவரமாக நான் எனது "புதுமைப்பித்தன்" சரிதையில் (பக். 174-175) குறிப்பிட்டிருக்கிறேன்.

13. அல்வா

இந்தப் பாடலும் 1946-ம் ஆண்டில் புதுமைப் பித்தன் எனக்கு எழுதிய பாடல்தான். 'திருநெல்வேலி அல்வா வாங்கிவா' என்று எனக்குக் கட்டளையிட்டுவிட்டு, விருதுநகர் ஸ்டேஷனில் தம்மைச் சந்திக்குமாறு தெரி வித்து எழுதிய சீட்டுக்கவி இது. இது பற்றிய ருசிகர விவரங்களை 'புதுமைப்பித்தன்' சரிதையில் (பக்கம் 172–73) காணலாம்.

14. காலைக் கடல்

இது 'மணிக் கொடி' பத்திரிகையில் வெளிவந்த வசன கவிதை ! வசன கவிதையில் புதுமைப்பித்தனுக்கு நம் பிக்கை கிடையாது. எனினும், மணிக்கொடி எழுத்தாளர்கள் தமிழில் வசன கவிதை என்ற புதிய சோதனையைச் சிருஷ்டித்து வந்த காலத்தில், புதுமைப்பித்தன் இந்தப் பாடலை ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்த்து உரை நடை உருவத்தில் எழுதினார். எனினும் இந்தப் பாட லுக்கு வசன கவிதை என்று மகுடமிட்டு, 'மணிக்கொடி' யாளர்கள் பதிப்பித்திருந்ததால், இந்தத் தொகுதியில் இந்தப் பாடலும் இடம் பெறுகிறது!

15. அசரீரி

இது ஒரு முற்றுப் பெறாத கவிதை முயற்சி. வாலி வதையைக் கருத்தாகக் கொண்டு புதுமைப்பித்தன் எழுத முயன்ற ஒரு கவிதை நாடகத்தின் தொடக்கம் எனத் தெரியவருகிறது. பாடலுக்கு முன்னர் கீழ்க்காணும் முன்னுரை காணப்படுகிறது.

முதல் காட்சி
கிஷ்கிந்தை மலைச்சாரல். நேரம் இரவு. வாலிக்குப் பிறகு அரசுரிமை வகித்து வரும் சுக்ரீ வனுடைய தலைநகரின் கோட்டை கொத்தளங் கள், மலைப் பாறைகள், குன்றுகளுக் கிடையே தூரத்தில் தெரிகின்றன. இருட்டு என்ற அரக் கன் தனது தோள்மீது தூக்கிச் சுமக்கும் மாயக் கோட்டைபோல, இருட்டுக்கு மேலிருட்டாகத் தூரத்தில் தெரிகிறது.

வலது பக்கத்தில் செங்குத்தான பள்ளத்தில் பம்பைப் பொய்கை; கொடிகளும் மரங்களும் இச்சைப்படி வளர்ந்து செறிந்த காடு. அதனி டையே மேடை போன்ற கற்பாறையும் அதை யடுத்த குகையும் இருட்டுக்குள் இருட்டாக அமைந்து மயக்குகிறது.

இரவில் புயல் சங்கார மூர்த்தி போல நடம் புரிகிறது; சிங்கநாதம் செய்கிறது; சிரிக்கிறது. பிரளயகாலருத்திரனதுபேய்க்கணங்கள் போல மரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. எலும்புக்கூடுகள் நெறுநெறன இற்று விழுவது போல, மரக்கிளைகள் ஒடிந்து விழுகின்றன. சங் காரமூர்த்தியின் கற்றைச் சடையில் தேங்கிய கங்கை, கூத்தின் வேகம் தாங்க முடியாது சிதறு வதுபோல, மழைத்தாரைகள். சடையுடன் நெரிந்து சீறும் நாகத்தின் சீறல் போன்ற காற் றின் ஊங்காரம்; சிவன் சிரிப்புப் போன்ற மின்னல்; இடி.

இந்த முன்னுரையின் வசனமும், கற்பனை வளமும் ரசிகர்களுக்குப் பெரு விருந்து. 'அசரீரி' என்ற தலைப்புடன் இசை நாடகம் தொடங்குகிறது.பாடலின் போக்கையும், உருவத்தையும் பார்த்தால் மறைமுகமான பல குரல்கள் அசரீரி போன்று மாறி மாறி ஒவ்வொரு அடியையும் பாடிவரவேண்டும் என்று புதுமைப்பித்தன் கருதியிருக்க லாம் என நினைகிறேன். வாலியின் புகழை மாறி மாறிக் குரல் மாற்றத்தோடு
உண்மையான வேகம் தொனிக்கும்.

16. "பாரதிக்குப் பின் ”

இது பாரதியைப் பற்றி நானும் புதுமைப்பித்தனும் சென்னை டிராம் ஸ்டாப்பில் கொண்டிருந்தபோது, அவர் கூற நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கூற முனைந்த பாடலின் குறையுருவம். இதுவும் முற்றுப்பெறாமலே நின்றுவிட் டது ; அகப்பட்ட நறுக்குத் தாளிலும் இந்தக் கவிதை அபூர்ணமாகவே உள்ளது.

17. கங்கை நதி

கங்கை நதியைக் கருப் பொருளாகக் கொண்டு புது மைப்பித்தன் பாடிய அரைகுறைக் கவிதை. இந்தப் பாடல் நறுக்குத்தாளில்தான் காணப்பட்டது. புதுமைப் பித்தன் புனாவில் இருந்த சமயத்தில் எழுத முயன்ற முயற்சி என்று தெரிகிறது.

18. "பாட்டுக் களஞ்சியமே "
இந்தப் பாடலும் 'சங்கை நதி'யின் நறுக்குகளுட னேயே காணப்பட்டது. தனித்தனித் தாள்களில் அரை யும் குறையுமாகப் பல பகுதிகள் காணப்பட்டன. அவற் றைக் கூடியவரை தொடர்புறுத்திய வரிசைதான் இதி லுள்ள பகுதிகள். இந்தப் பாடலும் புதுமைப்பித்தன் புனாவில் இருந்தபோது எழுதப்பட்டதெனத் தெரிகிறது. பாடல் பகுதிகளைப் பார்க்கும்போது, புதுமைப்பித்தன் இந்தப் பாடலை யார்மீதோ பிரயோகித்துப் பாட முயன்ற தாகவே தெரிகிறது. எனினும் அந்தப் 'பாட்டுடைத் தலைவன்' யாரெனப் புரியவில்லை.

19. உதிரிக் கவிகள்

புதுமைப்பித்தன் தம் வாழ்நாளில் எழுதிய கடிதங் களில் கூட சில கவிதைகளைத் தீட்டிவிடுவார். சில சக் தர்ப்பங்களில் ஆசுகவிபோலப் பாடல்கள் சொல்லு வார்; எழுதுவார். அப்படிப் பல பாடல்கள் உண்டு. மேலும் அவர் எழுத முயன்ற பல பாடல்கள் உருப்பெறா மல் இடைவழியில் நின்று போனதுமுண்டு. அப்படிப் பட்ட பாடல்களே இந்த உதிரிகள்.

1. "சிக்கறுக்க வந்தோர்..."
இந்தப் பாடலை எப்போது எதற்காக எழுதினார் என்று தெரியவில்லை. ஒரு துண்டு நறுக்குத் தாளில் இந்தப் பாடல் காணப்பட்டது. கூனல் மனிசரின் பொக்கை முழம்போடும் புன்மை' யைப் பற்றிய பாடல்இது.

2. " வண்ண மதுக்கிண்ணம்..."
இந்தச் சிறுபாடல் 'சோமு'வின் 'இளவேனில்' என்ற பாடல் தொகுதியைப் பாராட்டி, புதுமைப்பித்தன் எழுதிய கடிதத்தில் உள்ளது. 'முல்லை'யில் வெளிவந்தது.

3. "ஏட்டையா வந்துவிட்டார்..."
இதுவும் 'சோமு'வுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் உள் ளது. அஞ்சியஞ்சிச் சாகும் தமிழரின் 'ரெண்டுங்கெட் டான்
நிலையைச் சுட்டிக்காட்ட எழுதியது. 'கலைமகள்' பத்திரிகையில் வெளிவந்தது.

4. "உண்ட விஷம்போக..."
இந்த இரு பாடல்களும் 'சோமு'வுக்கு எழுதிய வேறொரு கடிதத்தில் காணப்படுபவை. 'ரிப்பேர் செய்ய வும்' என்ற குறிப்புடன் அனுப்பப்பட்ட பாடல்கள். இதுவும் 'கலைமகள் ' பத்திரிகையில் வெளிவந்தது.

5. 'அரும்பு மலர்வதென..."
இது சென்னை நவயுகப் பதிப்பகத்தின் உரிமையாளர் ராம. சண்முகத்தின் திருமணத்துக்கு அனுப்பிவைத்த வாழத்துப் பா. எழுதிய தேதி 22-8-47.

6. “ அவ்வை எனச் சொல்லி...'
ஜெமினியின் அவ்வையார் படத்துக்கு புதுமைப் பித்தன் கதை வசனம் எழுதி வந்த காலத்தில் எழுதிய பாடல் எனத் தெரிகிறது; அவர் கைப்பட எழுதிய ஒரு நறுக்குத் தாளில் காணப்பட்டது.

7. "திருச்சிக்கு என்றான்..."
இது ஒரு ரேடியோப் பேச்சுக்காக எழுதப்பட்ட கட்டுரையில் உள்ள பாடல். இந்தப் பாடலை அவர் ஏன்
எழுதினார் என்ற விவரம் 'புதுமைப்பித்தன்' சரிதையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (அத்.17. பக்கங் கள் 101-103).

8. "வருகின்றேன் சென்னைக்கு..."
புதுமைப்பித்தன் ஒரு சினிமாப் படத்துக்கு வசனம் எழுதுவதற்காக மதுரை சென்றார். கூட்டிச்சென்ற நபர் குறிப்பிட்ட காலத்தில் புதுமைப்பித்தனைச் சந்தியாத காரணத்தால், புதுமைப்பித்தன் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டார். வரும் சமயம், மதுரையில் தமது ஜாகையில் அந்த நபருக்காக புதுமைப்பித்தன் விட்டு வந்த நறுக்கு இது. 1947-ம் ஆண்டில் நடந்தது.

9. “பண்ணாத வம்பெல்லாம்...”
இந்தப் பாடலும் அவர் ஒரு சமயம் வேடிக்கையாகச் சொன்ன பாடல்தான். இது பற்றிய குறிப்பையும் 'புது மைப்பித்தன் ' சரிதையில் (பக். 180-81) காணலாம்.

10. " கையது கொண்டு...'
தற்சமயம் கோயமுத்தூர் சக்தி காரியாலய அதிபரா யிருக்கும் கே.டி.தேவர் பம்பாயிலிருந்த காலத்தில் புது மைப்பித்தன் புனாவிலிருந்து எழுதிய ஒரு கடிதத்தில் உள்ள வரிகள் இவை. அந்தக் கடிதத்தில்:

"......பழைய காலத்துத் தர்பாராக இருந்தால், மதுரை மண்டபத்தில் முடங்கிக்கிடந்து நாரை மூலம் தூது விடலாம்'' என்ற வரிகளோடு இந்தப் பாடலை எழுதி “ என ஒரு ரங்கூன் வைரத்தைத் தயார் செய்து அனுப்பி அவளைத் திருப்தி செய்விக்கலாம். ஆனால் இது தபால் யுகமாச்சுதே!' என்று புதுமைப்பித்தன் முடித்திருக் கிறார். காச நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலும் அவரிடம் ஹாஸ்ய உணர்ச்சி எப்படியிருந்தது என்பதை நிரூபிக்கும் அத்தாட்சி இந்தப்பாடல். "நாராய், நாராய், செங்கால் நாராய்!” என்று தொடங் கும் சத்திமுத்தப் புலவரின் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நையாண்டி இது.

11. "பசியா வரம் அருள்வாய்... "

வாக்கும் வக்கும்' என்ற தமது நாடகத்தில் சேர்த் துக்கொள்வதற்காக, புதுமைப்பித்தன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் என்று தெரியவருகிறது. (வாக்கும் வக்கும் - பக்- 15 ஐப் பார்க்கவும்.) புதுமைப்பித்தன் சாகித்யங்கள் கூட எழுதியிருக்கிறாரா என்று பலர் வியக் கலாம். சாகித்ய இலக்கணத்துக்கு இந்தப் பாடல் கட் டுப்பட்டால், இது சாகித்யம்தான். ஏனெனில் புதுமைப் பித்தனின் சங்கீத ஞானம் அப்படி. அதைப்பற்றிய ருசி கரமான தகவல்களை அறிய விரும்புவோர் புதுமைப்பித் தன் சரிதையில் (அத். 20 பக். 150-153) படித்து ரசிக்கலாம்.

12. "எங்கும் பராசக்தி கோலம்..."

இந்தப் பாடலும் 11-வது பாடலைப் போன்றதொரு முயற்சிதான். புதுமைப்பித்தனின் 'பர்வதகுமாரி புரொ டக்ஷன்ஸ்' படத்துக்காக எழுதிய பாடல் என நினைக் கிறேன். 'பர்வதகுமாரி' பற்றிய விவரங்கள் புதுமைப் பித்தன் சரிதையில் (அத். 15.) விரிவாகக் காணப்படும்.

-ரகுநாதன்
----------------------

புதுமைப்பித்தனின் இதர நூல்கள்

புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் கட்டுரைகள்
புதிய ஒளி
வாக்கும் வக்கும்
அன்று இரவு
சிற்றன்னை
நிச்சயமா நாளைக்கு
நாரத ராமாயணம்
சித்தி
ஆண்மை
மணியோசை
தெய்வம் கொடுத்த வரம்
முதலும் முடிவும்
உலக அரங்கு
பளிங்குச்சிலை
பிரேத மனிதன்
புதுமைப்பித்தன் வரலாறு (ரகுநாதன்)

ஸ்டார் பிரசுரம்
திருவல்லிக்கேணி.சென்னை-5
மேலக்கோபுரத் தெரு. மதுரை
------------------

This file was last updated on 19 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)