குலசேகரப்பட்டினம் தெய்வசிகாமணிக்
கவிராயர் இயற்றிய
அறம்வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ்
aRam vaLartta nAyaki piLLaittamiz by
teivacikAmaNik kavirAyar
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
குலசேகரப்பட்டினம் தெய்வசிகாமணிக் கவிராயர் இயற்றிய
அறம்வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ்
Source:
குலசேகரப்பட்டினம் தெய்வசிகாமணிக் கவிராயர் இயற்றிய
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம்
அறம்வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ்
பதிப்பித்தோன்: கம்பபாதசேகரன், ஆதீன சமயப் பரப்புனர், நெல்லை .
குலசேகரப்பட்டினம், புதுத்தெரு, பாம்பே பிள்ளை வீடு,
தெய்வத்திரு. வீ. ஆறுமுகநயினார் பிள்ளை - தெய்வத்திரு. ஆ.உலகம்மாள்
தம்பதியர் குடும்பத்தாரின் பேருதவியுடன்
விளைநலம் பதிப்பிக்கத் துடங்கிய 46 - ஆம் ஆண்டு மலர்
பிள்ளைத் தமிழ் களஞ்சியம் - 5
கம்பன் இலக்கியப் பண்ணை
ஆனந்தவல்லி அம்மன் கோயில் தெரு, (மீனாட்சியம்மன் கோயில் அருகில்)
ஆரல்வாய்மொழி - 629301. வடக்கூர். குமரி மாவட்டம்.
க.ஆ. 1132 ---ஓம் --- விளைநலம் 185
வள்ளுவம் 2050ம்ளுசுறவம் 7ஆம் தேதி கழை(21.01.2019)
---------------
குலசை தெய்வசிகாமணிக் கவிராயர் வரலாற்றுக் குறிப்பு
இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் வேளாளர் குலத்தில் தோன்றினார். இப்பகுதி குறுநில மன்னர் செந்தில் காத்தமூப்பனாருக்கு தோழராகவும், புலவராகவும் விளங்கினார்.
ஒருசமயம் அயல்நாட்டு புலவன் வாதிட வந்தான். அவனை புலவார் அறம் வளர்த்த நாயகின் திருநீற்றினை ஒரு சிறுவனுக்கு அளித்து, அவனையே வாதாடச் செய்து வென்றார். தமக்கு வரும் பொருட்களை எல்லாம் அந்த சிறுவனுக்கும் அதன் பின் அவன்வழி மரபினருக்கும் பெறும்படி திட்டங்களை வைத்தார். அது இன்று வரை நடைபெற்று வருகிறது. இப்புலவர் இவ்வூருக்கு தெற்கே உள்ள சிதம்பர ஈசுரர் திருக்கோயில் கட்டப்பட்டு வழிபாடு விழாக்களுக்கான வழிகளும் செய்வித்தார். இவரைப் பற்றிய முழு வரலாறுகள் கிடைக்கவில்லை.
ஓம்
1. காப்புப் பருவம்
திருமால்
நீர்கொண்ட தண்டுழாய்த் திருமாலை மாலயன்
நிலாமாலை மாலைவண்ண
நித்தன்முத லெத்தனை உயிர்த்தொகுதி யத்தனையு
நீபெற்றதா யென்றுசொற்
சீர்கொண்ட நான்மறை பராவும்பஞ் சாட்சரச்
செல்வியைத் தென்குலசையூர்ச்
சிவகாம சுந்தரியை யறம்வளர்த்த வளைமக
தேவியைக் காக்கபரவைப்
பார்கொண்ட சிற்றடிச்சு வடுகவ டில்லாத
பத்தர்சித்தத் திருத்திப்
படைப்புயிர் அனைத்துமோர் தினைத்துணைப் பொழுதினும்
பழதிலாமல் பரித்துத்
தார்கொண்ட குழலிரு வரூடா மநீடூழி
தான்வீற்றிருக் குமமுதத்
தண்கலைச் சுடர்வா னிலொண் கதிர்ச் சுடர்வீசு
சங்குசக்கர பாணியே! 1
-------------------------------
சிவபிரான்
வேறு
கருவிமுகில் தவழ்பொருப் பைவலிதிற் பெயர்த்துநீள்
கடலகடு கிழியநட்டு முறையிற் திருப்பவே
கடவுளர்கை விடவுதித்த கடுவைத் தடக்கியே
கறைமிட றதுடைய கர்த்தரெனு மற்புதத்தினார்
திரிபுரமும தனு(ம்)முற்று மொழியக்கணத் திலேசினவு
திருநகைநு தற்கண்ணினர் பத்தரத் தனார்
திகழ்கயிலை மலையிருப்பர் பொருகைக் கணிச்சியார்
திரிபதகை யவள்மணத்த சிவனைத்து திப்பம்யாம்
நரமிருக வடிவெடுத் திரணியனைக் குறைத்தமால்
நளினமுத லெவர்களுக்கு முதன்மைச் சிறப்பினால்
நலியுமடியவர் நினைக்கு மளவில்செலச் செய்வான்
நனவுகனவினும் பத்தரிதயத் தினுட்படாள்
குருமணிகண் மரைமலர்த்து வெயிலொத் தெறிக்கவே
குடவளைகு வளைமலர்த் துநிலவைப் பரப்பவே
குலவுபக லிரவொழித்த வுலகத்து யர்ச்சிசேர்
குலசைநக ரறம்வளர்த்த கொடியைப் புரக்கவே! 2
--------------------------------
விநாயகர்
வேறு
நெடியமதி ளில்பொன்மண் டபநிலைபெற் றிருக்கும்வான்
எழுபிறைமருப் பொடைந்துகை நிலைபெற்ற வெற்பனான்
முடிவிலடி யர்க்குநன்க ருள்முளரிப்ப தத்தினான்
முதுமறை வழுத்துகுஞ் சரமுகனைத் துதிப்பநீள்
குடிலர்சடி லத்தர்நஞ் சிடுகுவளைக் கழுத்தினார்
குலசைவரு கச்சிகொண்ட வர்குழையச் செய்மைக்கணாள்
தடவரை கள்சுற்றுமம் புவிதருமப் பெருக்கினாள்
தமிழறம் வளர்த்தசுந் தரிதமிழைப் புரக்கவே! 3
--------------------------------------
முருகன்
வேறு
அடலசுரர் படமகிழ்ச்சி யண்டருக் காக்கிட
அமர்செய யில்கையிலெ டுத்துவந்த சத்தார்த்தனை
யமலனைஎன் உளம்இருக்கும் அன்பனைத் தோட்டுறு
கடல்விடமது வெனவுதித்த கஞ்சனைத் தேய்த்திடு
கருணைமுகின் மருகனைப் பிரபந்தனைக் கூத்துறு
கலபமயில் தனைநடத்து கந்தனைப் போற்றுதும்
வடவரைவில் லினர்மணத்த மன்றலுக் கேற்றவள்
வழிபெறுமெய் யருள்விசிட் டரின்புறப் பார்த்தவள்
மனதிலடிய வர்நினைக்கு மன்பெனப் பூத்தவள்
குடவளைவெண் மதிமணல்செய் குன்றினிற் கோட்டுறு
குளிர்தரள முடுநிகர்ப்ப துண்டெனக் காட்டிய
குலசைநக ரறம்வளர்த்த கொம்பினைக் காக்கவே! 4
--------------------------
இலக்குமி
வேறு
கடலைக் கவியினடைத் தடைத்த
கல்லணையி லடல்படை நடத்தியே
கரபத்திரு தசமுகத்தன் மக்களொடு
அழியவொழித் தமரருக் குநீள்
கவலைத்துயர் களகற்றி நற்குண
விபீசண னுக்கரசி யற்றிமா
வடவெற் பெனத்தனுவெடுத்த லக்குமணனு(ம்)
மிதிலைப் பொனும்வரத் தமூர்
மகிழத்தய வினர்வரச் செய தற்புத
மணிமுடி வைத்துல களித்த மால்
மருமத்துற விருக்கு மிலக்குமி
வனசமலர்ப் பதம் வழுத்துவாம்
நடனக்களி மயினடத்து சுப்பிர
மணியனை ஒக்கலை யிருத்தியே
நகிலத்தெழு வமுதுளத்து மெய்ப்பொருள்
விளையவு ணப்பணும் விருப்பினால்
நகையிற் றிரிபுர மெரித்த முக்கணன்
முதலினர் முத்தொழில் முளைத்தவோர்
கொடியிற் குழையு(ம்) நுசுப்பி ளைத்திட
வளருமி ணைக்கன தனத்தினாள்
குரவைத்தொனி குடவளைக் கிளைத்தொனி
மணிமுரசத் தொனிம கிழ்ச்சிசேர்
குலசைப் பதியறம் வளர்த்த பொற்கொடி
யினிமை யிசைத்தமிழ் தழைக்கவே! 5
--------------------------------
வீரமனோகரி
வேறு
முத்தலை வேற்படை நீலிகலாதரி
முரிதிரைக் கடல்வளை நிலத்தொடு
முச்சகமேற் கொடிதா மயிடாசுரன்
முடியினிற் சரணுற மிதித்தவள்
முக்கணி நாற்புயன் மானதபூரணி
முனைமுறுக் குளபிறை யெயிற்றின
ளுத்தியினாற் பலவாகம மெய்யறி
வுடையவித்த கருளமி ருப்பவ
ளொத்தநிலாச் சடையார்தமை யாடல்செ
யுரிமைமுற் றியபெருமை பெற்றவள்
ளுத்தரவாய்ச் செல்வி வீரமனோகரி
யுபயபொற்பத மலர்வழுத் துதும்
நித்தியவாழ்க் கையர்கார ணகாரியர்
நிமலையற்புத கமல லக்குமி
நிச்சயவாக்கி னாள்நான்மறை நூன்முறை
நிறுவுமெய்ப்பொ ருளருளி சைக்குயில்
னெட்டுள மாக்கொடி யூர்தியதாமெனி
னிலைநிறுத் தயிலறுமு கற்கனை
யுத்தமிலாச் சொலினோர் செயுமாணவ
மறம்வெறுத் தவள்புவன ரட்சகி
யற்பர்தன் நாட்டமடாத வள்பேருண்மை
அடியருட் டனிகுடி இருப்பவள்
ளத்திரவாட் கணிவாண கைவாணுத
லறம்வளர்த்த வள்தமிழ் தழைக்கவே! 6
-----------------------------------
பைரவர்
வேறு
உருமுக் குரல்படு துடிவைத் தொருகர
மொளிரக்கனல் விழியூக்கியே
யுறுமுத் தலையடு கழுமுட் படையொரு
கையினிற்றிரிய வுலாத்தியே
உதயக் கதிரென மணிநெட் டரவணி
ஒருகைத்தலமிசை சேர்த்தியே
மரையிற் குடிபுகு விதிகட் டலைமலை
வளர்கைத்தல மெதிர்காட்டியே
மலைசுற் றுலகினில் ஞமலிப் பரிமிசை
வருமுக்கிரபுய வீட்டினான்
வடிவிற் கரியவ னடியற் குயிரென
வடுகக்கடவுளை வாழ்த்துவா
மரவப் பகிரதி சுழலச் சடையுடை
யவிழப்பரிபுர மார்க்கவே
யணுகிச் சிவசிவ வெனுமுத்தர் கள்வினை
யகலப்பத மெதிர்தூக்கியே
யணிபொற் சபைமுழ வதிரச் சகதல
மதிரப்பவரித கூத்தனார்
குருகிற் பொலிகர மலர்தொட் டணைசிறு
குதலைக்கிளியெனை ஆட்கொடாய்
குணவிற் புரையிரு புருவப்பெ டைமயில்
குயில்முத்தமிழிசை வேட்கையான்
குலசைப் பதியுமை யவள்முப் படிதரு
கொடியைப்பரி வொடுகாக்கவே! 7
-------------------------------------------
ஐயனார்
வேறு
புள்ளரசின் மேற்கொண்ட பூவரசி கொண்கனும்
பொன்னரசு நாடுகாக்கும்
புருகூதன் முதலமர ரமுதுண்ண விடமுண்ட
புண்ணியனு முதவுசுதனை
வள்ளமுலை யிருவருக் கொருகொழு நனைச்சாத
வாகனனை யயிராணிதன்
மரபுகாத்த வனைத்தமிழ்க் குலசை நகர்வாழ
வந்தவய்ய னைத்துதிப்பாம்
கள்ளவிழ் மலர்ப்பொழி லெழிற்சிமய விமயமேற்
கைப்பிடித்திடு கணவர்பொற்
கால்பிடித் தம்மிமிசை வைத்தருந் ததியன்று
காட்டவெதிர் கண்டவவளைத்
தள்ளரிய கற்புநிலை பெற்று மலைவற்று
முச்சகம் எலாம் போற்றமுற்றுந்
தாபித்த மகதேவி யம்மையுமை யறம்வளர்த்தவ
ளிசைத்தமிழ் தழைக்கவே! 8
---------------------------------
நாமகள்
சித்தமும் புத்தியு(ம்) மனமுமாங் காரமுஞ்
செயலுமுரை யும்பொருந்தித்
திரிபுவன வுயிர்தொறு மிருந்து விளையாடியுந்
தெரியாத சின்மயத்தைக்
கொத்தலர்க் கொந்தளச் சிந்துரத் திருநுதற்
குறுநகைப் பெண்ணரசியைக்
குலசேகரப் பட்டினத் தறம்வளர்த் தபொற்
கொடியைப்பு ரக்கவிசையுஞ்
சத்தமுஞ் சகலகலை யத்தமுஞ் சாவித்திரி
காயத்திரி மந்திரமுமுச்
சங்கத்த மிழ்ப்பனுவ லாட்டியெனு நாமமுஞ்
சட்சமய முழுது மெழுதும்
வித்தகம் விரித்துத் தரித்தகர மும்படிக
மெய்யுமெய் யும்படைத்த
மெல்லரும் பலர்வட்ட வெள்ளிமண் டபமொத்த
வெள்ளைவெண் கமலத்தளே! 9
----------------------------------------------
இந்திரன்
வெண்டிரைத் தமரக்கருங் கடல்செய் துவரின்
விழுதுபட் டொளிபழுத்து
மின்னுபின் னற்குடில மோலிப்ப ரானந்த
வெள்ளத்தினுள் ளத்தின்மேற்
கொண்டிருக் கும்பொருளை வரபூத ரத்தைக்
குணக்கடலை வேதமுடிவைக்
குலசேகரப் பட்டினத் தறம்வளர்த் தபொற்
கொடியைப் புரக்கவேலை
மண்டலத் துறுசிகர வரைகள் மேற்கொண் டெழாமல்
சிறகறுத் திருத்து
வச்சிரத் தாற்பொருது விருதுகொண் டெதிரிட்டு
வந்தவரை வென்றடக்கி
யண்டருக் குமிந்தி ராணிக்கு நாலுகோட்
டயிராபதத் துக்குநீ
டைந்துதரு வுக்குமின் னமுதுக்கும் வேந்தான
வாகண்டலக் கடவுளே! 10
----------------------------------------
முப்பத்து மூவர் - பிரமன்
ஆதித்தர் பன்னிருவர் காளகண்டத் திறைவ
ரைந்தாறு பேர்வசுக்கள்
ளானாத வெண்ம ரெழுமேனா ளிலன்
றவதரித்தவச் சுனியிருவரும்
போதிற்பொ ருந்தியிர ணியகற்ப முஞ்செய்து
புவனப்படைப் புயிர்கடம்
புண்ணிய பாவத்தின் வழியொழுக வெழுதியவிதிப்
புத்தேளிருங் காக்கபொற்
சோதிக்கொ ழுங்கதிர் விரிக்கும் வடவெற்
பெடுத்துக்குனித் துச்சிரித்துத்
துட்டர்புரம் வெந்துபொடி பட்டொழிய வடும்விடைச்
சோதிசெம் பாதியுடலு
மாதிக்கச் சகமனைத்து நின்றொளிர் பச்சை
மரகதச் சுடர்பரப்பி
வந்துகுடி கொண்ட மகதேவி சுந்தரி
யறம்வளர்த்த தேவியைமுழுதுமே! 11
---------------------------------
2. செங்கீரைப் பருவம்
விம்பச் சிவந்தவா யம்மை மேனாதேவி
வெற்பரசி கற்பரசிபொன்
மேகலை யொதுக்கிமடி மீதுறவிருத் திமுலை
விம்மிவழியும் பான்முதற்
கம்பிக்கும் வேலைத்த ரைப்பெய்து பெய்த
சங்கைக்கொண்டு பால்புகட்டிக்
கைச்சங்கை மும்முறை சிரஞ்சுற்றி யொருமுறை
கவிழ்த்தியுட லங்குலுக்கிக்
கும்பக்க ளிற்றெருத் தத்திற்றி ருத்தமொடு
கொணருநீ ராட்டிமஞ்சட்
குளிர்நிலக் காப்பிட்டு நெய்பொத்தி வட்டக்
குதம்பையிரு குழையிலிட்டுச்
செம்பொற் பசுந்தொட்டில் வைத்துவைத் தாட்டுமயில்
செங்கீரை யாடியருளே!
சீரைவள நாட்டுதமிழ் வீரைவள நாட்டரசி
செங்கீரை யாடியருளே! 12
--------------------------------------
பொன்குலவு செங்கமலமுங் குவளையும் சுரும்புங்
கரும்பும் பகழிநாண்
போர்விலென வுருவிலிக் குதவுசுனை வயலயலோர்
பொம்மலிற் கயல்குதித்து
மின்புரை கனிக்கதலி மடலொடித் துக்கமுகின்
மிடறுதடவிக் கதிர்நிலா
மேகமட் டுஞ்சென்று மீண்டுமட வார்கள்நீர்
விளையாடும் வாவிபுக்குத்
தன்பெரு மையைச்சிறு மையாக்கும் விழியார்விழி
தனக்கொதுங் கிப்பதுங்கும்
தாமரையில லுறையுஞ் சகோரம் பறந்துவ
தனத்தைமதி யென்றுலாவுந்
தென்குலசை நகரறம் வளர்த்தசிறு பெண்பிள்ளை
செங்கீரை யாடியருளே!
தெய்வநா யகியறம் வளர்த்தநா யகிதேவி
செங்கீரை யாடியருளே! 13
நீரைவள மாக்குசெங் கமலமுங் குவளைகளு
நிறைமடுவி லொருபருவரா
னெரிமருப் பெருவிழிக் கவையடிப் பகடுகண்
ணீரினிற்படிய வெடிபோ
யூரைவள மாக்குமதி மண்டலத் தொடுபலவி
னுட்கனியு முட்கனியுடைத்
தூடுருவி யாடுதிரை வானதிபு குந்துவரி
யுண்டுசூல் கொண்டெழுந்து
பாரைவள மாக்குமைக் கொண்டல்கிழி யச்சென்று
பாய்ந்ததிற் றோய்ந்ததுளியின்
பண்டைச் சுனைப்புனலில் வந்தச்ச மற்றுப்
பரர்க்கேற்றெந் நாளும்வாழுஞ்
சீரைவள நாட்டுதமிழ் வீரைவள நாட்டரசி
செங்கீரை யாடியருளே!
திறம்வளர்த் தருள்வளர்த் தறம்வளர்த் தருள்தேவி
செங்கீரை யாடியருளே! 14
--------------------------------------
ஒற்றைவட மேருவொரு காலெனநி றுத்திமே
லொளிரும்வெளி முகடுமூடி
யுகந்தொறு முகந்திடும் பிரளயச் சலதிகளும்
புதுக்கும் புவனமே
சுற்றிலுங் கலெனவ டுக்கிவைத் தண்டச்
சுவர்க்குளேழு வரைகணட்டுச்
சுடர்விளக் கிட்டெண் டிசைத்தலை வர்தம்மை
யத்தொன்மையிற் சூழநிறுவிப்
பெற்றவுயி ரெண்பத்து நான்கு நூறாயிரப்
பெயர்குறை படாமலூட்டிப்
பித்தர் திரியம்பகக் கத்தர்க்கு மின்பப்
பெருக்கமு தளித்தளித்துச்
சிற்றில்விளை யாடும்வளை யாடுகைப் பெண்பிள்ளை
செங்கீரை யாடியருளே!
தென்குலசை நகர்வாழ வந்தவ தரித்தபரை
செங்கீரை யாடியருளே! 15
------------------------------------------
தலைவனைத் தன்னைவினை யைக்கண்டு சட்சமய
தர்க்கமெல் லாமறிந்து
சரியைகிரி யையோக ஞானந்த ரும்பதந்
தனையுமறி வாலறிந்து
தொலைவரி யமாயப் பிரபஞ்சப் பகட்டுத்
துடக்கைக்க டக்கவிட்டுச்
சுகானந்த வெளியொளியி லசையாது நிலைநின்ற
சுத்தர்சித்தத் திலமுதக்
கலைமதியும் நதியுமிலை பொதியுமித ழியும்வேய்ந்த
கற்றைச்சடா தரரெனும்
கண்டிதாண் டிதக்கடவு ளொடுகுடி கொண்டு
கால்கொண்டு கதிகொடுக்குஞ்
சிலைநுதல் கயல்விழித் துடியிடைப் பெண்ணரசி
செங்கீரை யாடியருளே!
தெய்வநா யகியறம் வளர்த்தநா யகிதேவி
செங்கீரை யாடியருளே! 16
-----------------------------------------
அன்றிற்க ரும்பெண்ணை யடியினு மடம்பினு
மலைகடல் கரைதிரையினு
மவரவர் கள்கொடுவந்த சீனிசீ னாம்பர
மடங்கியவிடங் கடொறுநீள்
குன்றைப் பெரும்பல கலன்களிலும் வெண்மணற்
குன்றினுங் கைதைகளினுங்
குளிர்நிழற் சோலையினும் வலைஞர்வலை யினுமளவர்
குடிலினும் பண்டம்விற்கு
முன்றிற் பெருஞ்சாலை நிலையினும் பலர்சிலர்கள்
முந்திவரு சந்திகளினு(ம்)
முள்வாய் முனைச் சங்கமாயி ரஞ்சுற்றிட
முழங்கொலி வலம்புரிவலஞ்
சென்றிட்ட முடனுலவு தென்குலசை யுமையம்மை
செங்கீரை யாடியருளே!
சிவசத்தி சிவஞான சத்திவா லாசத்தி
செங்கீரை யாடியருளே! 17
----------------------------
கருந்தலைச் சாரிகைகள் செவ்வாய்ப் பசுங்கிள்ளை
கற்பனைச் சொற்சுவைபெறாக்
கந்தருவ ரேழிசைகள் சூழிசையினி யாழிசைகள்
கரநரம்பலது தொனியாய்ப்
பொருந்தும் புழைக்குழலி னொலியுங் கடிப்பிடும்
பொம்மலுஞ் செம்மையல்ல
பொருவருங் கஞ்சத்தெ ழுந்தொனி விருப்பிலம்
புதிதன்று தேவபாணி
பருந்துநிழ லுங்குழலு மோசையும் போலவிப்
பகிரண்ட கோடியெல்லாம்
படரும் பரஞ்சோதி யிச்சித்த நிச்சயப்
பழுதின் மொழிதொழுது வேட்டோம்
திருந்துசெம் பவளவிதழ் வெண்முறுவல் வாய்விண்டு
செங்கீரை யாடியருளே!
தென்குலசை நகரறம் வளர்த்த மகதேவிநீ
செங்கீரை யாடியருளே! 18
--------------------------------
வேறு
கால்வளை தண்டைசி லம்புசதங்கை
கலின்கலி னென்றாடக்
கைவளை யாடக்கிரண வளைந்த
கலன்கள் புரண்டாடச்
சூல்கலை புயலென வுச்சிமி
லைச்சிய சூழியமீதாடச்
சுட்டியும் ரத்னப் பட்டமு மாடச்
சுற்றிய பட்டாட
வேல்வளை கண்ணி யர்பண்ணி யரன்பு
மிகுந்து புகுந்தாட
மெய்யெ ழிலாடப் பொய்யிடை யாடிட
வேர்வை துளித்தாட
வால்வளை நிழலெனவுல குபுரந்தவ
ளாடுகசெங்கீரை!
அறத்தைவ ளர்த்தத மிழ்க்குல சைப்பரை
யாடுகசெங்கீரை! 19
-------------------------------------
மின்புரை சிற்றிடை மங்கையர் முப்பொறி
வென்றார் நின்றார்ப்பார்
மேலம ரேசர்கள் காமலர் தூய்மறை
விண்டே கண்டார்ப்பார்
அன்பர்வி ருப்பளவுங் கிருபை வைத்தவ
ரன்பால் முன்பானார்
ஆகம வேதபு ராணிகர் தாடொழு
தந்தா வந்தார்பார்
நன்கும தித்துமி குந்தக வித்துவர்
நங்காய் இங்கானார்
நாவலர் காவலர் நாடொறு நீசெயு
நன்றாய் கின்றார்கேள்
தென்குல சைப்பர மன்கை பிடித்தவள்
செங்கோ செங்கீரை!
தேவர்கள் மூவர்கள் யாவரு மானவள்
செங்கோ செங்கீரை! 20
---------------------------------
புன்சென னத்தனு ளம்புகு விச்சை
புரிந்தாய் செங்கீரை!
புண்டரி கப்பிர மன்பரி சுத்தர்
புகழ்ந்தாய் செங்கீரை!
தன்கண வர்க்குநல் லின்பம ளித்திசை
தந்தாய் செங்கீரை!
தண்துள வத்தொடை விண்டவ னுக்கொரு
தங்காய் செங்கீரை!
வன்பகை யில்சுழ லன்பர்த மக்கெதிர்
வந்தாய் செங்கீரை!
மண்டல வட்டம ழிந்தலை புக்கினு
மங்காய் செங்கீரை!
தென்குல சைப்பதி யம்புய லட்சுமி
செங்கோ செங்கீரை!
திங்கண் முடித்த சிவன்கை பிடித்தவள்
செங்கோ செங்கீரை! 21
------------------------------------
3. தாலப் பருவம்
காரார் குவளைத் துணைவிழியைக்
கையாற் பிசையச் செங்குவளை
கடுத்துக் கலங்கிப் புனல்ததும்பக்
கண்டு முலைத்தாய் மலைத்தாய்தன்
வாரார் முலையூடெ டுத்தணைத்து
வதனத்த ணைத்து முத்தமிட்டு
வயிறு நிரம்பப் பால்புகட்டி
மடிமீதிருத் தித்திருத் தியொலி
சீராரருவி நீராட்டித் திறம்
பாராட் டிப்பணி பூட்டித்
திருக்கண் மலர்க் கஞ்சனம்தீட்டிச்
செம்பொற் றிருமாலிகை சூட்டி
யாராரெ னத்தாலாட் டியகண்
ணாட்டி தாலோ தாலேலோ!
அறத்தை வளர்த்த வறம்வளர்த்த
வம்மா தாலோ தாலேலோ! 22
---------------------------------
நந்தா யிருநூற்றி ருபத்து
நாலுபுவ னத்தெண் பத்து
நான்குநூ றாயிரமு யிர்க்கும்
நடுநின்றெ வர்க்குமி தமகிதம்
முந்தா தகன்று பிந்தாது
முன்னை வினையின் படிநடத்தி
முறையாய் நடத்தும் விளையாட்டு
முழுது நடத்திச் சகம்புரந்த
சிந்தாமணி யே!நீல ரத்னத்
தெய்வ மணியே! கண்மணியே!
தெள்ளித் தெளித்த தெள்ளமுதே!
தேனே! மானே! முக்கண்முக
மைந்தா மொருவர் காமவெப்ப
மாற்று மருந்தே! தாலேலோ!
யறத்தை வளர்த்த வறம்வளர்த்த
வம்மா தாலோ தாலேலோ! 23
-------------------------------
வெப்பான் மெலியும் வழுதிதன்பால்
விருப்பாய்ப் புகுந்து சிவசமய
வெறுப்பா லழிந்துவெ றுப்பான
வீண்பாதக ராஞ்சம ணர்தம்மை
யிப்பார றியவென் றுசமண்
எண்ணா யிரருங்கழு முனையில்
லிருப்பாரெ னும்சொற் படிகழுவி
லேற்றிச் சைவநெறி ஒழுங்கு
தப்பாத மைத்து வெண்ணீறு
தரிப்பா ரிடத்தில் குடியிருக்கும்
தமிழ்ப் பாவலனைச் சண்முகனைச்
சம்பந்தனை மைந்தனை முலைப்பால்
லப்பா வரசேயுண் ணெனும்பெண்
ணரசே தாலோ! தாலேலோ!
அறத்தை வளர்த்த வறம்வளர்த்த
வம்மா தாலோ தாலேலோ! 24
--------------------------------------
வடக்குங் குமக்கொங் கைகள்குலுங்க
மணிவாய் வெளுப்பக் கண்சிவப்ப
மடுவில் படுநீர் குடைந்தாடு
மகளிர்விழி யின்மருண் டுளஞ்சிக்
கிடக்குஞ் சினக்கெண் டைகளிலொரு
கெண்டை குதித்துக் கற்பகப்பூங்
கிளர்கொப் பொசித்துக் காமவல்லி
கிளையுந் தழையுங் கடந்துநிலா
நடக்குங் ககனமிறைஞ் சிவிண்மீ
னாண்மீன் கோண்மீ னொடும்பொருது
நந்தாமக ராலய மிதெனு
நாமமறிந் துவந்து புகுங்
கடற்குண் டகழிசூழ் குலசேகரப்
பட்டினத் தாய் தாலேலோ!
கங்காதரர் பங்கான வின்பக்
கனியே தாலோ! தாலேலோ! 25
---------------------------------------
அத்தாயி னும்சீரசோ தைத்தா
யணித்தாய்க் களவுகண் டுமத்தா
லடித்தாய் மகனே களவுசெய்தா
யாயினி னமும டித்தாயா
கொத்தா யிருக்குஞ் சபையறியக்
கூறிவிடு வேன்மா றிவிடு
குலத்துக் கீனமுறை யலநான்
கொடுப்பன் வேணதுனக் கெனுஞ்சொ
லெத்தாலு ரைத்தா ளித்தாயென்
றெண்ணாத னேகந்திரு விளையாட்
டெல்லாம்புரி வோனுடன் பிறந்திங்
கெண்ணான் கறமுவ ளர்த்திடுசெங்
கைத்தாய் புவனத் தாய்குலசே
கரம்பட் டினத்தாய் தாலேலோ!
கங்காதரர் பங்கான வின்பக்
கனியே தாலோ! தாலேலோ! 26
------------------------------------------
வேறு
மங்குறவழ்ந் திடுமதிளில் கோபுர
வாயிலில் வீதிகளில்
வண்டலைதண் டலைநிழலில் கடலலை
வாய்க்கரை யில்திரையில்
கொங்கலர்பங் கயமடுவில் தொடுவில்
குமரர்க டம்தெருவில்
குவளைக்குழி யிற்கழியிற் புளினக்
குன்றினில் முன்றில்களில்
றிங்களி ளம்பிறை நுதலியர்
பரதச்சிர மக்கூடத்திற்
சீனத்தவர் மலையாளத் தவர்பலர்
சிலர்வரு சாலைகளில்
சங்குமுழங் குவளங் குலவுங்
குலசைத்தாய் தாலேலோ!
சங்கரன்பங் கினுமெங் குநிறைந்
தவள்தாலோ! தாலேலோ! 27
----------------------------------
போதுகள் மேய்ந்திடு மேதிகள்வாவி
புகுந்து மிகுந்தசுவைப்
புனல்பரு கிப்பருகிக் கன்றுள்ளிப்
பொழியும் பால்பெருகிச்
சீதநிலா விரியும் பாற்கடலிற்
செறியக் கயமுழுதுஞ்
செங்கால னமதுகண் டுமகிழ்ந்
திச்சித்துச் செந்தமிழுக்கு
ஆதரமாகிய சொல்லும் பொருளு
மறிந்து பிரிப்பவர்போ
லாவிப்புனல் புறநீவிப் பயமுண்
டாசைப் பெடையுடனே
தாதவிழ் பங்கயமீ துறையுங்
குலசைத் தாய்தாலேலோ!
சங்கரன் பங்கினு மெங்குநிறைந்
தவள்தாலோ! தாலேலோ! 28
-------------------------------------
கந்தமலர்க் குவளைத் தளிர்மென்றிரு
கடைவாய் தேன்சொரியக்
கவையடி மேதிகள்நிறை புனலோடைக்
கயமதி றங்கவெருண்
டந்தமில் சங்கம கன்றுநிலாமணி
யணியணி யாகவுமிழ்ந்
தன்னச் செந்நெற் கதிரரிவிரிவய
லத்தனை யும்புகுதப்
புந்திமகிழ்ந் தரிவாரிக் கட்டிப்
போர்செயு மள்ளர்வளைப்
புதுமுத் தொடுநெற் பழமுத்துதிரப்
புதிதெனு மவைமுழுதும்
சந்திரனிற் கதிர் தந்ததமிழ்க்
குலசைத் தாய்தாலேலோ!
சங்கரன் பங்கினு மெங்குநிறைந்
தவள்தாலோ! தாலேலோ! 29.
----------------------------------------
துளவமுடித்த பண்ணவன் முதன்மற்றவர்
தூராய் வேராவாய்
துன்பம றும்படிவந் தருளென்றடி
சூழ்வார் பால்வாழ்வாய்
களபமுலைத் துணையுனது பதத்துணை
காணார் காணாதாய்
கருணைம ணங்கமழ் தருமலர் வந்துயர்
காவாய் பூவாவா
யளவிடுதற்க ரிதரிதெனு மெய்ப்பொரு
ளாவாய் தேவாவா
யம்புலிதண் புனல்வெந் தழல்வாடையொ
டானா வானாவாய்
தளவநகைக் குயில்குல சைநகர்ப்பரை
தாலோ! தாலேலா!
சங்கரிவா லசவுந் தரிசுந்தரி
தாலோ தாலேலோ! 30
------------------------------
வேறு
கொடுமுனைத் திரிசூலீநீலீ தாலேலோ!
குமரனைப் பெறுதாயேசேயே தாலேலோ!
பிடிநடைக் குலமாதேபோதே தாலேலோ!
பிரணவப் பொருளாமாமாயீ தாலேலோ!
வடிதமிழ்க் குபகாரீநாரீ தாலேலோ!
வாதிசத்தி கல்யாணீவாணீ தாலேலோ!
அடியருக்குயி ராவாய்பாவாய் தாலேலோ!
அறம்வளர்த்த மானே!தேனே! தாலேலோ! 31
----------------------------------
4. சப்பாணிப் பருவம்
எண்டிசைக் கைவரைகள் பதறாம நிலைநின்ற
எழுவரை நடுங்கிடாம
லிதுவரையு மெலியாத வடவரை குலுங்காம
லெவ்வரையு மதிராமல்மேல்
விண்டலத் தவர்விழிகள் முகிழாம லலைவாரி
வெள்ளங் கலங்கிடாமல்
வேதனிலை வைகுண்ட நாதனிலை கயிலாச
விமலனிலை அசையாமலேழ்
மண்டலத் துறுசராசர வுயிர்த்தொ கையெலாம்
மருளாமலு லகமமெல்லாம்
மறுகாமனா டோறு மயங்கா வனந்தனு
மனந்தளர்ந் தஞ்சிடாமல்
தண்டளிர்க் கைத்துணை வருந்தாமல் மெல்லநீ
சப்பாணி கொட்டியருளே!
தமிழறம் வளர்த்தவுமை குலசைநக ருக்கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 32
-----------------------------------------
மண்டார்க லித்திரைக் குண்டகளி நாப்பணொரு
வரைகொண்டு நட்டுவிட்ட
மதிநடுத் தறியெனக் குழியினி னிறுத்திநெடு
வாசுகிக் கயிறுபூட்டி
யுண்டான தானவர்க ளொருபக்கம் வானவர்க
ளொருபக்க நின்றுசுற்றி
யோடதி கொடுத்துக் கடைந்திடக் கடல்வயி
றுடைந்ததில் கோபவிடமேற்
கொண்டார வச்சங்கொ டுத்தாரை யுஞ்சென்று
கொல்லத் தொடர்ந்தகடுவைக்
குடங்கையி லெடுத்துணக் கண்டுபத றிக்கடவுள்
குருமணி மிடற்றடக்குந்
தண்டாம ரைக்கரங் கொண்டாத ரித்துநீ
சப்பாணி கொட்டியருளே!
தமிழறம் வளர்த்தவுமை குலசைநக ருக்கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 33
-----------------------------------------
குமிழ்மா மதித்தில தவதன முஞ்சூழியக்
கொண்டையுங் கெண்டைவிழியுங்
கொப்பிட்ட குழையுநில வொப்பிட் டமூரலும்
கோலமுந் திருவுதரமுஞ்
சிமிழா மெனச்சிறுத் துப்பெருக் குந்தனச்
செப்புமணி யாபரணமும்
செய்யபட் டுடையுமிடை யுங்கடக மிட்டபொற்
செங்கையும் தாட்கமலமு
மமுதான மென்மதுர வார்த்தையுங் கண்டுகேட்
டம்பரத் தும்பரொடும்வந்
தன்றைக்கு மின்றைக்கு மவிர்மணிக் கைதொட்ட
வத்தர்பரி சுத்தர்கயிலைத்
தமிழா ரணத்தலை வர்பிரியா திருக்குமுறை
சப்பாணி கொட்டியருளே!
தாயறம் வளர்த்தமக தேவிகுலசைக் கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 34
---------------------------------------
குருமாமணித் திரள்கள் புரளவிரு கரையுங்
கொழிக்கும் பெருக்காறுசங்
குத்தொனியொ டுந்தரங்கத் தொனியொ டுந்திரை
குரைகடல் எனப்பரந்து
வருமார வாரப்புதுப் புனல்நி றைந்தேரி
மடைகடை திறந்துவெள்ள
மட்டினினி றுத்தியணை கட்டிமுட் டாதகால்
வழிவழி திறந்துபாயப்
பெருமாக மட்டுவளர் செந்நெல்முத் துங்கரும்பின்
கணுவெ டித்தமுத்தும்
பேரோசை வெண்சங் கின்முத் துந்துலங்கிப்
பிறங்கிச் சிறந்தசெல்வந்
தருமான வீரைவள நாட்டரசி தேவரசி
சப்பாணி கொட்டியருளே!
தமிழறம் வளர்த்தவுமை குலசைநக ருக்கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 35
----------------------------------
விழுதுங் கொழுந்து மிளவெயிலும் பிறங்கியொளிர்
விரிசடைக் கிடைகிடக்கும்
வெண்டிரைக் கங்கைவெள் ளந்துள்ள வானந்த
வெள்ளமேற் கொள்ளவுலக
முழுதுங்கு லுங்கவட வரையுங்கு லுங்கமணி
முடியரவு நெறுநெறென்ன
முப்பத்து முக்கோடி தேவர்களு முனிவர்களு
முறைமுறை வலஞ்செய்துதாள்
தொழுதுந் துதித்து மரகரசம்பு வேயருள்
சுரந்தருள் புரிந்திடென்ன
சுத்தநிர்த் தம்புரியு மத்தனுக் கின்பச்
சுவைத்தேன் கொடுத்தடுத்துத்
தழுவுந்து ணைத்தாம ரைக்கரங் கொண்டுநீ
சப்பாணி கொட்டியருளே!
தமிழறம் வளர்த்தவுமை குலசைநக ருக்கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 36
---------------------------------
பானற்கருங் கட்சிவந்த வாய்வெண்ணிறப்
பதுமாசனத் திருக்கும்
பாமாது தனதுநுனி நாமாதெ னக்கொண்ட
பழமறைக் கிழவன்முடிமே
லூனப்ப டப்புடைத் துலகப்ப டைப்பெலாம்
ஒக்கப்ப டைத்திசைபடைத்
துலகம்ப ரிக்குநாட் பிரமன்சி றைத்துயர்
ஒழித்திட வெளிக்குள்வந்த
கூனற்ப சுங்காயெ ருக்கலர்மு டித்திடும்
கோடீரன் மடியில்வைத்துக்
கொண்டுசெவி தாழ்த்துக் கொடுக்க வுபதேசங்
கொடுத்த குருபரனுக்குமுத்
தானக்க ளிற்றுக்கு முலைஊட்டு மலைவல்லி
சப்பாணி கொட்டியருளே!
தமிழறம் வளர்த்தவுமை குலசைந கர்க்கிறைவி
சப்பாணி கொட்டியருளே! 37
--------------------------------------
வேறு
வம்பைத்தரு வெண்டும்பைச் சிறுமலர்
வானதி நுரையெனவே
மறுகிச்சித றப்பதறிக் குளிர்தரு
மதிதடு மாறிமனம்
வெம்பிச்சுழ லச்சுலவும் பணிமணி
வெயில்விரி மின்பிறழ
வெண்டலை மாலைகளொன் றினொடொன்
றலைமீத டிபடவருமைச்
செம்பொற் சரணப்பரி புரமதிரத்
திசையதி ரச்சபையிற்
றிருகும் பவுரித்திரு நடனம்புரி
சிவன் மருமந்தனிலே
கும்பத்தன மதழுந்தப் புணர்பவள்
கொட்டுக சப்பாணி!
குலசைத்திரு நகர்குடிபுக் கிடுமுமை
கொட்டுக சப்பாணி! 38
--------------------------------
அருஉருவா யுடல்தொறு முயிராய்நடு
வாதியு மந்தமுமா
யதுவிது வென்னுஞ்சுட் டாய்முட்டா
வன்பர் பெறுங்கதியா
யொருபொரு ளாகியுமுறு பலபொருளா
யுள்ளது மில்லதுமா
யுணரும்பதி பசுபாசத் தில்பதியுள்
ளுறை சின்மயமாய்த்
தெரிவரு மைம்பத்தோ ரட்சரமாய்ச்
சிவனயன் மாலெனு
முத்தேவரு மாயுல கெங்கு நிறைந்த
திகம்பரி சுந்தரிநற்
குருபரனைக் கயமுகனைப் பெற்றவள்
கொட்டுக சப்பாணி!
குலசைத்திரு நகர்குடிபுக் கிடுமுமை
கொட்டுக சப்பாணி! 39
-----------------------------------
மலர்சுற் றியசுருணெ கிழக்குறு
வெயர் வைத்துளிமுத்தாட
மதுரித்திடு சிறுகுதலைக் கிளியினி
மைச்சொல வாக்கோவை
யிலவத்துவ ரிதழமுதத் துளிவட
மிட்ட வுரத்தூர
விருகட் கடைகுழை சருவிச்சிறிய
வெழிற் குமிழிற்றாவ
வொலிபற் றியபுது வளைசுற்றிய
துணையுட் கைசிவப்பேற
ஒளிர்சுட் டியுமணி யணிபட்டமு
நுதலுக் கிடைகொட்டாட
குலசைத்திரு நகர்குடிபுக் கிடுமுமை
கொட்டுக சப்பாணி!
குகனைப்பு கார்இபமுக னைத்தருமுமை
கொட்டுக சப்பாணி! 40
-------------------------------------
அருளில்பெரி யவளடியர்க் கெளியவள்
அத்துவி தக்கோவை
அழகுக்கழகு செய்யிளமைச் சிறுகுயில்
அற்புத மெய்ச்சோதி
கருணைக்கட லைக்கடலமுதச் சுவையுயர்
கற்பக நற்போது
கமலத்தொ ளிர்பதவுகளக் கிளியிரு
கண்பிடி பொற்பூவை
பெருமைப்பிர ணவவருமைப் பொருளிசை
பெற்ற தமிழ்த்தேறல்
பிறைவைத் திடுசடைமுடி முக்கணர்நிறை
பெட்டிற ழப்பேடு
குருகில்பொலி தளிரிருகைத் துணைகொடு
கொட்டுக சப்பாணி!
குலசைத்திரு நகர்குடிபுக் கிடுமுமை
கொட்டுக சப்பாணி! 41
-----------------------------------
5. முத்தப் பருவம்
உப்பத்தி யிப்பிமுத் தூனிப்பொ திந்தமுத்
துயர்திரை மடக்கினிலிருந்
தூசலா டுங்குடக் கூநந்து தந்தமுத்
தொளிர்குன் றுவெளியமுத்துக்
கொப்பத்தி றங்கிபக் கோட்டுமுத் தரிகொலோ
குப்புற்று திர்ந்தமுத்துக்
கோகனக முத்துவண் டறுகால்து வைக்கக்
குழைந்தமுத் துச்செந்நெல்முத்
திப்பத்தி னாலுலகில் யாவருங் கைக்கொண்ட
வெளியமுத் துக்கன்னல்முத்
தெம்முத்தி னுங்கூட வெண்ணுமுத் திவையெலா
மென்னமுத் திவைவிரும்போ
முப்பத்தி ரண்டறம் வளர்த்த மகதேவியுன்
மூரல்வாய் முத்தமருளே!
முத்தமிழ்க் குலசேகரப் பட்டினத் திறைவி
மூரல்வாய் முத்தமருளே! 42
------------------------------------
தத்துந்தி ரைக்கடற் பள்ளத் திறங்கிச்
சலாபங்கொ ழிக்குமுத்துச்
சங்கீன்ற முத்துக்கு திக்கும்பெ ருஞ்சுறாத்
தாய்முத்து, வேய்முத்துமீன்
கொத்துங்கு ரண்டவெண் டலைமுத்து மைப்புயக்
குளிர்முத்து, வேழமுத்துங்
குழையும்ப சுஞ்சாலி முத்தும தவாரணக்
கோட்டில்விளை முத்துமதனன்
புத்தம்பெ னுங்கமல முத்துமடல் விரிபசும்
பூகத்தின் முத்துமின்னார்
பூணிட்டகள முத்துயா மிட்டமெ னுமுரை
பொருந்தோ மலைக்குட்படா
முத்தம்ப தித்தசெம் பவளவெள் ளத்தைநிகர்
மூரல்வாய் முத்தமருளே!
முத்தமிழ்க் குலசேகரப் பட்டினத் தரசி
மூரல்வாய் முத்தமருளே! 43
---------------------------------------------
கோண்டழு வுமிருகோட் டொருபிறை தரித்திடுங்
கோடீரர் பாரகட்சி
கொண்ட பாண்டீசுர ரளந்தவிரு நாழிநெல்
கொண்டறம் வளர்க்கும்விரதம்
பூண்டவ ரவர்க்குள் ளபடியில் ளெள்ளவும்
புறம்போய் விடாமலூட்டிப்
பூகண்ட நவகண்ட வாகண்ட லன்றிருப்
பொன்னுலகு மெவ்வுலகமும்
நீண்டகட லுந்திரையு மணியுமொளி யும்பொழிலு
நிழலுமென வெக்காலமும்
நீங்காமல் நின்றுவிளை யாடும்ப ராசத்தி
நித்திய கல்யாணிபஞ்ச
பாண்டவர் கள்தூதான வாண்டவர் சகோதரி
பவளவாய் முத்தமருளே!
பரவுகுல சேகரன்பட் டினத்துமை யம்மை
பவளவாய் முத்தமருளே! 44
-----------------------------------
காயுங்க திர்க்குவாய் விள்ளுமள் ளற்பசுங்
காற்கமல மேகறித்துக்
காவிவா விப்படிந் தெழுமேதி தன்குழக்
கன்றுக் கிரங்கியோடிப்
போயுந்தி வெள்ளங்க டந்துமுலை விம்மிப்
பொழிந்த பால்முழுதும்வாசப்
பூவுடைந் தொழுகுதே னாற்றொடு கலந்துமைப்
பூகத்தி டம்புகுந்து
சாயுங்குலைச் செந்நெல் வயறொறு நடந்து
செந்தாம ரைக்குளநிரப்பித்
தண்கத லிவைப்பெ லாஞ்சென்று மகராதிகள்
சலஞ்சலம் வலம்புரியுணப்
பாயுந் திரைக் கடல் குலசேகரப்
பட்டினத்தரசி முத்தமருளே!
பாண்டவர் தூதான வாண்டவர் சகோதரி
பவளவாய் முத்தமருளே! 45
-----------------------------------------
வேறு
ஈரப்பிறை வாணுதற் கனியே!
யினியசு வையற் புதக்கனியே!
யெண்ணெண் கலையுமு டையவளே!
யிருநாற் றிசையு முடையவளே!
பாரக் கதிர்வேற் படையனமே!
பதுமா சனத்தின் புடையனமே!
பையநடந் துவரும் பிடியே!
பரவார் சுழல வரும்பிடியே!
காரிற் பிறழுங் குழலாளே!
கருப்பம் புகுந்தங் குழலாயே!
கையாற் றொழுவார் மருங்கணியே!
காத்தாண் டருளம ருங்கணியே!
தாரப் பொருப்பார் விருப்பமுறுந்
தனத்தாய் முத்தந் தருகவே!
தமிழ்த்தென் குலசையறம் வளர்த்த
தாயே முத்தந் தருகவே! 46
---------------------------------
புலவே கமழும் புனல்வாரி
புதுமுத் தெறியுங் கரைவாரி
புவன முழுதும் விரும்பவளம்
பொருந்தும் பொருந்து மரும்பவளம்
பலதே சமுஞ்செய் தொழில்புரியும்
பயிலுஞ் சங்கு வலம்புரியும்
பாதை பசும்பொன் மணித்துவரும்
பலபண் டமும்கொண் டணித்துவரு
மலர்மான் கலாப மம்புயப்பூ
மன்னர் பொறுக்கு மம்புயப்பூ
மதுரத் தமிழு மெய்யிருக்கு
மணக்கு மனுநூல் குடியிருக்கும்
குலசே கரப்பட் டினஞானக்
கொழுந்தே முத்தந் தருகவே!
குயிலே யறத்தை வளர்த்தகுலக்
கொடியே முத்தந் தருகவே! 47
------------------------------------
நாரத் தரங்கத் திரைப்பரவை
நலியக் கடைந்த சுராசுரர்க
ணடுங்கப் பிறந்த விடநுகர்ந்து
நகையிற் பகைஞர் புரமெரித்தும்
வீரத் துயில்மா லயனறியா
வேடமெ டுத்துமய மெடுத்தும்
வெள்ளைப் பிறையைச் சடைக்கணிந்தும்
வீயப் பிறையை யுடம்பளித்தும்
பாரக் கரியை யுரித்துயமன்
பதைக்க வுதைத்து மிசைமிகுதி
படைத்த கடவு ளுடலிலொரு
பாதி பகிர்ந்து கொண்ட நிலா
மூரல் கனிவா யிதழ்குவித்து
முத்தந் தருக! முத்தமே
முகுந்தற் கிளைய வறம்வளர்த்த
முத்தே முத்தந் தருகவே! 48
-------------------------------------
விளரிச் சுரும்ப ரிசைமுரலும்
விரைப் பூங்கமலத் தவிசிருக்கும்
விதியு நதியு மதியுமணி
வேணிப் பிரானுஞ் சுதரிசனத்
துளவப் புயலும் புரந்தரனுந்
துழைக்கைக் களிற்றா னென்றுநறை
தூற்றுங் கடம்பே சனுமதனுஞ்
சுற்றுந் திசையெண் மருந்தனத்திற்
றளர்சிற் றிடைப்பொன் முதன்மடந்தையரு
முயரு மறையு மொழி
தருமுச் சுடரு முயிர்த்தொகை
யத்தனையு நினையும் பொருளான
முளரிப் பதத்தாய் மறுவின்மதி
முகத்தாய் முத்தந் தருகவே!
முகுந்தற் கிளைய வறம்வளர்த்த
முத்தே முத்தந் தருகவே! 49
--------------------------------------
வேறு
செக்கமலத் தவிசில் குடிபுக்குயர்
சித்திர லட்சுமியே!
சித்தம கிழ்ச்சிவரப் பரவிப்புகழ்
சிட்டரு ளத்தமுதே!
மைக்கண ருட்கடையில் சகமொக்க
வளர்த்திடு மெய்ப்பொருளே!
மட்டவிழ் கட்டலர் சுற்றிமுடித்த
மலர்க்கு ழல்முத்தரசே!
சக்கரவத் தனொடுற் பவநித்திய
தத்துவ வற்புதமே!
சட்சமயத் தினுமற்றினு மொத்துறை
தற்சொ ரூபத்தினளே!
முக்கண ரிச்சைமி குத்தவிசைக்குயில்
முத்தம ளித்தருளே!
முற்றுத மிழ்க்குல சைப்பதியுத்தமி
முத்தம ளித்தருளே! 50
----------------------------
வேறு
பிறைநுதற் சுந்தரி யருட்கண்
பெருக முத்தந்தருகவே!
பிழைபொ றுத்தன்பரை வளர்க்கும்
பெரியள் முத்தந்தருகவே!
பொறைநிலத் தொன்றிமைய வெற்பின்
புதல்வி முத்தந்தருகவே!
புகழ்கொ டுக்கும்பொருள் கொடுக்கும்
புவனி முத்தந்தருகவே!
சருவருக்கும் பொதுவில் நிற்கும்
தலைவி முத்தந் தருகவே!
தளிரடிப் பெண்கொடி மணிப்பைந்
தருணி முத்தந் தருகவே!
கறைமிடற் றெண்புயன் மணக்குங்
கவுரி முத்தந்தருகவே!
கருணைகைக் கொண்டறம் வளர்க்குங்
கருணி முத்தந்தருகவே! 51
--------------------------
சொற்கொண் டவேதாந்த மருவுசித் தாந்தந்
துவாதசாந் தங்கடந்து
துரியங்க டந்துபரநாத வெளிமேற் கொண்ட
சோதியைய னாதியைத்திண்
கற்கொண் டெறிந்தி டும்பத்த ருக்கும்பர
கதிப்பொருள் கொடுக்குமுதலைக்
கண்ணுக்கு மெண்ணுக் குமெட்டா தமூன்று
கட்கனியை ஞானக்கொழுந்தை
விற்கொண்ட திருநுதற் கயல்விழியின் வெண்ணகையின்
மெள்ளவுள் ளாக்கியழியா
மெய்யும்பகிர்ந் துபணிசெய் யும்படிக் கருள்செய்
வித்தாரி விதரணிமெய்பூண்
மற்கொண்ட தோட்டுணைத் தாசரதி பின்வந்த
மாசரதி யேவருகவே!
மங்களகல் யாணியே தென்குல சைநகரறம்
வளர்த்ததிரு வேவருகவே! 52
----------------------------------
வாலப்பி றைச்சிந்து ரத்திருநு தற்றெய்வ
மகளிரொடு எதிர்த்திருந்தம்
மனைபந் துபொற்க ழங்காடி விளையாடி
வளையாடுங் கரஞ்சிவப்ப
வேலக்கு ழற்சுற்றுநெ கிழவிரு கைவழியி
னிருவிழிகள் போகமீள
விடுபாத தண்டை யம்மா மெல்லமெல்
லென்றிரங்க யிமயத்தாயறிந்
தாலற்க ருங்கணீர் நீங்குமென வாங்குபந்
தம்மனைகழங் கொளித்தங்
கப்பருவ மிப்பருவமல வென்றெடுத் தணைத்
தச்சமற வுச்சிமோக்குங்
கோலப்ப சுங்கிளிப் பிள்ளையே வரிசைக்
குலக்கொழுந் தேவருகவே!
குலசேக ரப்பட்டி னத்திலே வந்துகுடி
கொண்டநாயகி வருகவே! 53
-------------------------------------------
பதுமமலரே மலரின் மணமே மணக்கும்
பசுந்துழாய்க் கன்றேதருப்
பந்தரில் படருமி ளவஞ்சியே! கிஞ்சுகப்
பவளவாய்ப் பைங்கிள்ளையே!
கதிரொளி விரிக்குமொரு கடவுண்மணியே! மரகதக்
கொழுந்தே! செழுந்தேன்
கனியுமினி மைச்சுவைக் கனியே! திருப்பாற்
கடற்குளெழு தெள்ளமுதமே!
சதுர்மறை யின்மூலமே! அறிஞர னுகூலமே!
தண்கலை நிறைந்தமதியே!
தன்மார்த்த மோட்சமே! சாலோக சாமீப
சாரூப சாயுச்யமே!
மதுரகவி வாணியே மங்கள கல்யாணியே!
மகதேவியே வருகவே!
வாடாமல் வீரைவள நாடாள வந்தறம்
வளர்த்தசுந் தரிவருகவே! 54
-----------------------------
வேறு
தண்டையும் பரிபுரமு நவமணி தரித்திடு
சதங்கையு மிரங்க விருதாட்
டாமரைகன் றக்குரம்பை செய்துசெய் துகைத்
தளிர் சிவப்பச் சூழியக்
கொண்டையுஞ் சுற்றவிழ நுதலிருவி ளிம்பினும்
குறுவெ யர்துளிப் பரத்னக்
கொப்பசைய மிக்கமூக் குத்திமுத் தொளிவிடக்
கொடியிடை துவண் டுமறுக
விண்டைவந் துயரிமய வெற்பின் முற்றத்தினும்
வீதியினு மோடி யோடி
விளையாடி மேனியெல் லாம்புழுதி யடுதிநீ
விளையும்வி ளையாட்ட யர்வொழிந்து
வண்டையுந் தேனையுந் தணவாத பூங்கூந்தல்
மலரன் னமே வருகவே!
வைத்தபடி நாலரையின் முப்பத்தி ரண்டறம்
வளர்த்த சுந்தரி வருகவே! 55
-----------------------------------------
நீடாழியுல கத்துநடு நின்றவட வரையை
நிமிர்தனு வெனக்குனித்து
நெட்டுடற் றுளையெயிற் றரவைநா ணாக்கிவின்
னிறைய முறையிற் பூட்டிமே
லோடாத வொழியாத தாரணித் தேரணிய
துச்சியிற் பாதம் வைத்திவ்வுலகும்
விண்ணுல குமுண்டுமி ழுந்துழாய்ப் பகழி
யொன்றெ டுத்தெக் காலமும்
வீடாத வேதமு முப்பத்து முக்கோடி
மெய்த் தேவரும் பராவ
வெப்புநாண் கொண்டோம்பு வீறுநினை யாமலது
வேளையின் மறுத்தொ றுத்துக்
கூடார்புரத் தைச்சிரித் தெரித்தவ ரிச்சை
கொண்ட சுந்தரி வருகவே!
குலசேகரப் பட்டினத் துக்குள் வந்துகுடி
கொண்ட நாயகி வருகவே! 56
------------------------------------
வேறு
சலசேகர வாரிதித் திரைவெண்
டரளங் கொழிக்குங் கரைதொறுஞ்
சஞ்சரிக்குங் கவைக்கால் வரியலவன்
றாளாற் கிளைத்த குழியிடறி
நிலவே பொழியுங் குடவளைக
ணிலையு மலையுங் கடந்துவளை
நிழலிற் றவழ்ந்து கமலமடு
நீரிற் புகுந்து பகிர்ந்துழவின்
பலசீர் நடக்கும் வயனடவிற்
பரந்து நிரந்த வீதியிற்போய்ப்
பருமுத் துமிழ வந்தமுத்தம்
பகலும் புகல்தண் கதிர்பரப்புங்
குலசேகரம் பட்டினத்து வஞ்சிக்
கொடியே பிடியே வருகவே!
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
கொண்டா ரிடத்தாய் வருகவே! 57
-------------------------------------------
உலகத் துறுதி யறிஞருளத்
துள்ளே ருசிக்குந் தெள்ளமுதே!
யொக்கப் படைத்துக் காத்தழிக்கும்
மொழியாத் தொழின் மூன்றுடையவளே!
பல கற்பனையு நடத்திய
சிற்பரையே யுரையே சதுர்மறைகள்
பாடித் துதிக்கும் பழம்பொருளே
பசுக்கள் பதியே பரசமையே
கலகக் கொடியார ளந்தறியாக்
கருணைக் கடலே குணமலையே
கண்ணின் மணியே பசியமரகதப்
பூங்கொ ழுந்தே தொழுந் தலைமைக்
குலகற் பகமே படரும்வஞ்சிக்
கொடி யேபிடி யேவருகவே
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
கொண்டா ரிடத்தாய் வருகவே! 58
------------------------------------------
புலசட் சமயவொ ழுக்குவளம்
பொலிய வருக தரளவடம்
பூட்டவ ருகநுதற் றிலதம்
பொறிக்க வருககுறிக் குமுண்மைப்
பலசற் சனங்க ளுன்வரவு
பார்க்க வருக சதங்கையிரு
பாதச்சி லம்பு கலின்கலெனப்
பையந டந்துவருக செம்பொற்
கலசச்சு வைப்பாலுண் டிமையாக்
கண்கள் வளர வருகமுழுக்
காதலடி யார்கேட்ட வரம்கைமேல்
கொடுக் கவருக தமிழ்க்
குலசைப் பதிவா ழறம்வளர்த்த
கொடி யேபிடி யேவருகவே
கொன்றை முடித்துக் கொண்டகச்சி
கொண்டா ரிடத்தாய் வருகவே 59
------------------------------
மறுமுகத் தொளிர் சிறுபிறைச்சடை
வரதர் கைக்கொளு மமுதமே!
வடிவுடைச் சுரர்மகளிர் கற்பக
மலரெ டுத்தணி சரணியே!
குறுமுகைச் சததளம் விருப்பொடு
குடியி ருக்கும் வெள்ளெகினமே!
குவலயத் தடியவர் தமக்குறு
குறைத விர்த்திடு மிறைவியே!
யுறுமுனைப் படை யனையதுட்டரை
யொருவு முத்தம வரதியே!
யுடலுயிர்த் தொகை வகைபிரித்தவ
னுடனு தித்த பெண்ணரசியே!
யறுமுகத் தொருகட வுளைப்பெறும்
அமலை சிற்பரை வருகவே!
யருள்வளர்த் துயர்பர கதிப்பொரு
ளறம் வளர்த் தவள்வருகவே! 60
--------------------------------------------
பிரமனுக் குமிதரி தெனப்புகல்
பிரணவப் பொருள் வருகவே!
பிடிநடைக் குளிர் தளிரடிச்சிறு
பிறைநுதற் கொடி வருகவே!
தரணியிற் சதுர் மறைவழுத்திடு
தருமவர்த் தினி வருகவே!
சகளநிட்கள யுகள பொற்பத
சததளத் தினள் வருகவே!
சிரகரத் தரவணி பொறுத்திடு
சிவன்மனைக் கிளி வருகவே!
திருமுகத் திருவிழியின் முத்தொழில்
செயுமிசைக் குயில் வருகவே!
யரவணைத் துயில் பரனுக்கிளை
யவளெனக் குயிர் வருகவே!
யமலைநித் தியவரதி யுத்தமி
யறம்வ ளர்த்தவள் வருகவே! 61
-----------------------------------------------
7. அம்புலிப் பருவம்
நாளினம் பரவ*வரு வாய்நீயு மிவளுமே
நாளினம் பரவ* வருவாள்,
நச்சுவார் பணியுளுறு வாய்நீயு மிவளுமே
நச்சுவார் பணியு ளுறுவாள்
வாளுமானுங் கண்ணி லுடையைநீ யிவளுமே
வாளுமானுங் கண்ணி னுடையாள்,
மாதிரவ மறுவையுடை யாய்நீயு மிவளுமே
மாதிரவ மறுவை யுடையாள்,
கோளினோர் பானிலா மானநீ யிவளுமே
கோளினோர் பானிலா மான்
குவலயம் விரித்தகலை யுடையைநீ யிவளுமே
குவலயம் விரித்த கலையா
ளாளுமுலகு காயுமொரு நீயுநிகர் வேறல்ல
வம்புலீ யாட வாவே!
யருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாட வாவே! 62
*பரவை என்றும் பாடபேதம்
-----------------------------------------
முற்பக்க மூவைந்து பிற்பக்க மூவைந்து
முப்பது தினந்தி னத்தின்
முன்பின் வாழ்வுந்தாழ் வுமுடையை நீயிவள்நான்
முகப்பிர மர்கொடு முடியையுங்
கற்பக்க டைக்கணெல் லாங்கண்டு கண்டுதன்
கண்ணருளி லெண்ணு யிரெலாம்
கட்டளைப் படிபெற்று முற்றுமுற்றா மல்வளர்
கன்னிவிட மொழுகு பகுவாய்ப்
பற்பக்க மடையவங் காந்துகவ் வுங்கொலைப்
பாந்தட் பழம்ப கையைநீ
பாந்தளெல் லாமிறைவி காந்தனுக் கணியு
மாபரண நீயறிவை பகலும்
மற்பக்க முங்கதிர் பரப்புமிழை யவளுட
னம்புலீ யாட வாவே!
யருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாட வாவே! 63
--------------------------------------
ஓராழி யெழுபரித் தேராழி யுடனுறைந்
தொளிமட் குநாளி றைவித
னுதயாதி வருபருதி யாயிரமெனக் கிரண
முமிழ்பா ததண்டை யருகே
நேராக வருவதெப் படியென்றுள் ளஞ்சலை
யுன்னி லவாயிரத் தினுந்த
ணிறைகதிர் பரப்புநகை நிலவுண்டு தேவிமுக
நிலவுண்டு தம்ப முன்பின்
பாராமல் வாராதி ருந்தமதி யேதுகுறை
பட்டமதி யிவணி னைத்தாற்
பண்டுபோற் றிருப்பாற் கடல் கடைந்து
சம்பாதிப் பதருமை அல்ல
வாராயு மறுபத்து நாலுகலை வல்லியுடன்
அம்புலீ யாட வாவே!
யருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுடன்
அம்புலீ யாட வாவே! 64
------------------------------------
மடலேறு கட்டைமுட் டாட்பாச டைக்கமல
மானனார் தம்மறு விலா
மதிவதன ராசிக்கு நாணியுஞ் சந்நிதியில்
வருமாதர் கையினி லெடுத்தூ
ருடலேறு கறைதுடைத் தொளியேறு வள்ளமென்
றுள்ளியெள் ளுவர்க ளென்றும்
ஓராடி யொன்றானி செய்துபோ டுவதென்று
முத்திகொண் டஞ்சி யஞ்சிக்
கடலேறி மலையேறி விடையேறு மிறைசடைக்
காடேறி மறுகி மறுகிக்
கள்ளரைப் போற்றிரிய வேண்டா முனக்கொரு
களங்கமு மடாது வந்தா
லடலேறு வேற்படைக் கந்தனைத் தந்தவளொ
டம்புலீ யாட வாவே!
யருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாட வாவே! 65
-------------------------------------
வித்தகர் விதித்தபடி வங்களி லடங்காத
வீரபத்திர வவதார
வேகப்பிரளை யச்சண்ட மாருதம்வெ ளிக்கொண்டு
வேள்வியைய ழித்தங்கிதன்
கைத்தலந் துண்டமிட் டாயிரஞ் செங்கதிர்க்
கடவுடன் பல்லுகுத்துக்
கமலத்த யன்சிரம றுத்திசை சிறுத்த
தக்கன்சென்னி கீழ்ப்படுத்தி
புத்தமுத முண்ணும்பு ரந்தரனும் வேறுருப்
பூண்டொழித் திடவடுத்துப்
புகழ்வாணி மூக்கையும் போக்கியுன் னுடலுமண்
புரளப்புரட் டும்வேகம்
மத்தனையு மான்மருட் டிவள்பொருட் டல்லவோ
வம்புலீ யாடவாவே!
அருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுடன்
னம்புலீ யாடவாவே! 66
----------------------------------
கும்பக்க ளிற்றுரியி னேகாச வாகீசர்
குஞ்சிதப் பாதர்கச்சி
கொண்டபாண் டீசர்திரிப தகையவள் குடிகொண்ட
கோடீர மவுலிதாழ்த்துச்
செம்பொற் பதத்துணை வணங்கப் பிணங்கிச்
சினத்துதைப் பப்பதைத்த
சீரடி சிவக்கநீ சிறுபிறைக் கோடுறச்
செய்தநோ யையுமறந் து
விம்பக் கனிச்செய்ய வாய்விண் டுன்யோகபலன்
மேற்கொண்ட நல்லகாலம்
விளையாட வாவென்ற ழைத்தனள் பிழைத்தனை
யிவ்வேளை யினிநாளையென்னா
தைம்பத் தொரட்சரச் சட்சமயநா யகியொ
டம்புலீ யாடவாவே!
அருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுடன்
னம்புலீ யாடவாவே! 67
----------------------------------
வேறு
வெளியாடு பொற்சபையின் மீதாடு பாகத்தர்
விரிசடைக் கங்கையென்னு
மிக்கபகை யாட்டியொ டிருந்துறவு பாராட்டி
வீறுபாராட் டினதுமின்
னொளியாட கச்சிலம் பிடுதாள் சிவந்திட
வொறுத்ததுவு மிவள்முகத்துக்
கொப்பெனப் பெயர்படைத் ததுவுங்க ளங்கமென்
றுள்ளஞ்சி யலைமலைத்து
வளியாடு பஞ்சென்ன அங்குமிங் குந்திரியு
மதியற்ற மதியேசும்மா
வரவரிற் றாழ்வுக ளெலாம்தீர்த் துநீடுழி
வாழ்வுதருவா ளிசைச்சீ
ரளியாட லலங்கற் குழற்றெய்வ நாயகியொ
டம்புலீ யாடவாவே!
அருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாடவாவே! 68
--------------------------
வரசுதரிசன னுமவனுதர மடுவினில் வளரும்
வனசத்து தித்தவனுமோர்
மைக்கண்ணி யாலழகு மெய்க்கணெல் லாமுறு
மலர்க்கண் ணனுங்கணபணச்
சிரசினவிர் மணியுடைய வரவெட்டு மெட்டுத்
திசைக்கரியும் வரைகளெட்டும்
திரையுததி யுஞ்சகல வுலகுமுயி ரும்பவுரி
திரியவிரி சபையினின்று
பரசுதா ணடமிடப் பன்னகப் பின்நலப்
பணியொடுஞ் சுலவமலைவாய்ப்
பதறிவெண் டலைமுழைக் குள்ளேப துங்குவை
பதுங்காமல் வாழலாந்தேவ
வரசிகுல சேகரப்பட் டினப்பெண் மயிலொ
டம்புலீ யாடவாவே!
அருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாடவாவே! 69
------------------------------------
பூரணப் பேர்பெற்ற தொருநாளி ரண்டுநாட்
போக்குவர வறியாதநாட்
பூரணப் பேர்பெற்ற நாளும்ப ழம்பகைப்
பொங்கரவின் வாய்ப்புகுதுநாள்
வாரணத் துரியுத்தரீ யன்சடைக் கண்ணில்
வைத்தநாண் முதலுனக்கு
வளர்வுத ளர்வின்றி நீசுகமே யிருந்துதான்
வாழ்ந்தநா ளெந்தநாண்முற்
காரணச் செல்விதிரு நாரணற் கிளையமயில்
கண்முன்வர பெண்முன்வந்தாற்
கண்ணருளி லெண்ணரிய கவலை யுந்தீராக்
களங்கமும் தீர்ப்பளொருநா
ளாரணத் தலைவிபரி பூரணக் கவுரியுட
னம்புலீ யாடவாவே!
யருட்கருணை மாதறம் வளர்த்த மகதேவியுட
னம்புலீ யாடவாவே! 70
------------------------------
வேறு
கமலலக் குமியுட னுதித்துல
கம்புகு மிசையாலே
கயிலை வெற்பிறை யடிமுடிக்
கடைகண்ட வுள்ளுறையாலே
குமரனைப் பெறுமிவள் முகத்தெழில்
கொண்டுள வழகாலே
குவலயத் தெவர்களும் விருப்பொடு
கும்பிடு மதனாலே
சமர்விளைத் திடுமதன னுக்கொரு
தண்குடை யெனலாலே
தரணியிற் பலவுட லுயிர்க்க
மிர்தந்தரு கலையாலே
அமலைதற் பரைதயவு வைத்தன
ளம்புலீ யாடவாவே!
அறம்வ ளர்த்தவள்திரு முனிப்பொழு
தம்புலீ யாடவாவே! 71
---------------------------------
8. அம்மானைப் பருவம்
பம்பரஞ் சுற்றுவ தெனச்சுற்றி யின்னுயிர்ப்
பாங்கிய ரம்மனையெடுத்துப்
பாடியா டக்கண்டு கூடியா டுந்தொழில்
பருவமறி யாளிவளென
உம்பரிங் கிகழ்வர வர்நிகரல்ல வவரைவிட்
டும்பர்மன முங்குலுங்க
உலகத்தி லெண்பத் துநான்கு நூறாயிர
முயிர்த்தொகை யெலாங்குலுங்க
நம்பரமர் புகழ்பாடி நம்பரமர் செயல்பாடி
நம்பரமர் கருணைபாடி
நம்பரமர் செம்பொனம் பலநின்று கூத்தாடு
நடனப்ப தங்கள்பாடி
யம்பரம் பொருவிழி பரந்தாட வொலியாடு
மம்மானை யாடியருளே!
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
னம்மானை யாடியருளே! 72
-----------------------------------
குயின்மொழிப் பூமங்கை கயல்விழிப் பாமங்கை
கொடுவரம் மனையுநீகைக்
கொண்டவம் மனையுமுக் குணவிறை வரிற்பணி
குயிற்றியவம் மனைதனையுநீ
கயிலெடுத் தாடியிட சாரிவல சாரிவரு
காலைநீலக் கணொளியும்
கனிவாயின் மூரலுங்க துவவவை புயல்மதி
கலந்தென நலந்தழைத்து
மயிலியற் சாயலுங் கைவரச் செம்மையாம்
வகைகண்டு தேவியுன்னம்
மனையெம தம்மனை நிறம்பெற்ற தென்னென்ன
வம்மனையாடு மரசியின்ன
மயில்விழிக் கடைதொடர் நகைமதிக் கதிர்படர
வம்மானை யாடியருளே!
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
னம்மானை யாடியருளே! 73
---------------------------------------
புண்டரம்புனை சிறியதுண்ட வெண்பிறை வெயர்ப்
புத்துளிக்கத் தமிழ்த்தேன்
பொழியுஞ்செ ழுங்குமுத வாய்மல ரின்முல்லைப்
புதுப்பூ வரும்புவிரிவாய்
விண்டலர்ந் திடுகாந்தண் மெல்விரல் சிவப்பவிரு
விழியொளி பரப்பவாசம்
வீசுகுழன் மேகமுக பந்தியவி ழத்தவள
வெண்டரள வடமலங்கப்
பண்டருமொ லிப்பாத கிண்கிணி யொலிப்பமைப்
படிவவடி வந்துதுளங்கப்
பருவமின் னிடைதுவண் டொசிய விருதாளைப்
பதித்துப்பெயர்த் துவைத்திங்கு
கண்டரண் டங்களு மசைந்தாட ஒலியாடு
மம்மானை யாடியருளே!
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
னம்மானை யாடியருளே! 74
----------------------------------
செங்கரம் சங்க பற்பம் குலவவேதம்
சிலம்பச் சிலம்பு கண்ணின்
செம்மையும் கருமையும் வெண்மையும் இறைவர்
முத்தேவர் மெய் எழில் கொடுப்பக்
கொங்கரும் புந்துணைக் கோங்கரும் பன்னபொற்
கொங்கைமணி யொளிவிரிப்பக்
குளிர்பசுந் தருவண்ண மரகதத் திருமேனி
கூறமாறா தெவர்க்கும்
கங்கணங் கட்டிக்கொ டுக்குமருள் சுரபியைக்
காட்டநிதி மறையிறைவர்
தங்கதிர் மணித்தரு காமதேனு முதலானவிக்
கவினெலாங் கொண்டவுன்
பொன்னங்க மெங்குங்கு லைந்தாட நகைநிலவாட
வம்மானை யாடியருளே!
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
னம்மானை யாடியருளே! 75
--------------------------------------
செம்பதும னுங்கரும் பதுமனுஞ் சொற்றிருச்
செங்கணெடி யவனுமடியும்
திருமுடியும் வெவ்வேறு வடிவுகொண் டினமினந்
தேடியுங் காணப்படா
வம்படரும் வெண்டும்பை யம்படரு மதிவேணி
வரதர்பங் கினுமுகைப்பூ
மடல்விண்டு நறைமண்டு சிறைவண்டு குடிகொண்ட
வனசப் புதுகவிலுந்
தம்பமென நம்புமெய் யடியரிதய முமுதிய
சதுர்மறையு நிறையுமுலகச்
சரவசர வுயிர்களுங் குறையாத வாழ்வுகதி
தருமந்திர ரூபவடிவா
மைம்பத்தெண் ணேழற்ற கோணத்து வாழுமுமை
யம்மானை யாடியருளே!
அறம்வளர்த் துலகாளு மறம்வளர்த் தவளேபொன்
னம்மானை யாடியருளே! 76
---------------------------------
வேறு
இன்னிசைச் சொற்சுவைப் பசியவஞ் சுகமே!குயிலே!
இயலிசை நாடகமூன் றுமெழுதி வைத்தபடமே!
பன்னக பூசணர்விர கந் தீர்க்கும லைமருந்தே!
பதினாறு நான்காகப் பணித்த கலைமானே!
பொன்னவிரு நூற்றுக்காற் பூங்கோவின் மயிலே!
புவனவுயிர்க் குயிராகப் பொருந்து மொருபொருளே!
அன்னநடைப் பெண்ணரசே! அம்மனை யாடுகவே!
அறம்வளர்த் தநாயகமே! அம்மனை யாடுகவே! 77
---------------------------------
கைம்மலர்ப் பைந்தளிர் சிவக்கிற்ற ளிர்களெல் லாஞ்சிவக்குங்
கருணைவிழி கலங்கி யெழுகட லுநிலை கலங்குஞ்
செம்மணித் தாட்டுணை பெயர்க்கிற் சேடன்முடி பெயருஞ்
சிற்றிடைப் பொற்கொடி நுடங்கிற் கொடிகளெல் லாநுடங்கு
மைம்மழைக் கொந்தளங் கலையின் முகில்களெல் லாங்கலையு
மரகதமெய் குலுங்கி லுயிர்வருக் கமெல்லாங் குலுங்கும்
அம்மனை நீயறிந்து மெல்லொன் றம்மனை யாடுகவே!
அறம் வளர்த்த நாயகமே அம்மனை யாடுகவே! 78
-----------------------------------
வேறு
நாடகத்தாட் கடவுண்மன நடந்துதொ டர்ந்தாட
நடப்பநிற்ப வானசரா சரவருக் கமாடச்
சூடகக்கைத் தளிராடவ ளைகளொ லித்தாடச்
சோதிமுகம் வெயர்வாடத் துடியிடை தள்ளாட
வேடகப்பூங் குழலாடக் குறுமுறு வலாட
விருவிழிகை வழிபோய் வந்தெழிற் குழையூடாட
வாடகக்கொப் பசைந்தாட வம்மனை யாடுகவே!
அறம்வளர்த் தநாயகமே அம்மனை யாடுகவே! 79
----------------------------
வேறு
சேறடிதொட் டலர்கமலத் தயனுஞ்
சிவனுந் திருமாலுஞ்
சிந்தையில்வந் தனைபண்ணிப் பண்ணித்
தேடிய மெய்ப்பொருளே!
பேறடியார் கள்பெறும் படிவந்து
பிறந்தபெ ருந்தவமே!
பெற்றும்வளர்த் துங்கன்னி யெனப்பெயர்
பெற்றகு லக்கொடியே!
யீறடிநடு வெனுமூன்று மறிந்தவ
ரிதயத் தெழுசுடரே!
யிகபரமென் னுமிரண்டி னுமொன்றி
யிருந்தவ ளேகுழன்மே
லாறடி வண்டுகள் ஏழிசை பாடிட
வாடுக வம்மனையே!
அத்தர்தமிழ்க் குலசைப் பதிஉத்தமி
யாடுக வம்மனையே! 80
---------------------------------
வேறு
தண்டமிழ் தந்தென்முன்வந் துசொல்லென்றவ
ளம்மனை யாடுக வம்மனையே!
சாமளரூப சுபாவ சவுந்தரி
யம்மனை யாடுக வம்மனையே!
கொண்டலி னின்றுலகங் கள்புரந்தவ
ளம்மனை யாடுக வம்மனையே!
கும்பிடுமன் பருளங்குடி கொண்டவள்
ளம்மனை யாடுக வம்மனையே!
மண்டலம் விண்டலமெங் குநிறைந்தவ
ளம்மனை யாடுக வம்மனையே!
மாமறைநூன் முறைகூர் பரிபூரணி
யம்மனை யாடுக வம்மனையே!
அண்டர்கள் தொண்டர்கள் துன்பமகன்றிட
வம்மனை யாடுக வம்மனையே!
அத்தர்தமிழ்க் குலசைப்ப தியுத்தமி
யம்மனை யாடுக வம்மனையே! 81
--------------------------------
9. நீராடற் பருவம்
கங்கைசரசு வதியமு னைவேகவ திகாவிரி
கதிப்பொ ருநைசிந் துவுந்தி
காளிந்திநீ ளுந்தியெத் தனைசொ லத்தனை
கணக்கிலா நதிகள்புயலிற்
பொங்கிமேற் கொண்டுவே லிறைநிலங் கன்னியெப்
போதும்விழை வுறுநிலங்கைப்
போராழிமாற னிலமோரா யிரங்கண்
புரந்தர னிலந்தலங்க
ளங்குமிங் குங்குளிர் புனற்கிறை நிலங்காறு
மெய்திச்செ ழித்துலகெலா
மீடேறநிலை பணிக்கணி பாலைமுல் லைமல
ரேந்தித்தி ரைக்கையினாற்
பங்கயம டற்கைதை தந்துவந் தனைசெயும்
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப்ப திகவுரி
பரவைநீ ராடி யருளே! 82
--------------------------
செக்கச்சி வந்தசெம்ப வளமிதழ் காட்டமுரி
திசைபுருவ வடிவுகாட்டச்,
சிறுதரளமறு வில்குறுந கைகாட்ட, மோட்டாமை
செய்யபுற வடிகாட்டநே
ரொக்கபொ ருங்கயல்கள் கண்காட்ட வொலிகாட்டி,
யொளிகாட்டி, வெளிகாட்டுநீ
ருட்கிடக் குஞ்சங்கமணி மிடறுகாட் டமலை
யொலியலை யின்முழுகுகுவடு
முக்கட்ப ரம்பரம ரிச்சித்தி ணங்குமிரு
முகிழ்முலைப் பெருமைகாட்ட,
மோதியசை வலமுழுது மோதிவிரி வதுகாட்ட
முளரிப்பதங் கள்பரவிப்
பக்கத்தி னின்றரம்பை யராடல் காட்டநீ
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப்ப திக்கவுரி
பரவைநீ ராடியருளே! 83
--------------------------------------
நீலகண்டன் சதுர்மு கப்பதும யோனிதிரு
நின்றுவிளை யாடுமார்ப
னிலைநின்ற முப்பத்து முக்கோடி தேவரொடின்
னீணிலத் தெவரையுமெணா
மாலகமிகத் திரண்டொருவ டிவுகொண் டுதான்
வந்துல கழித்தசூரன்
மதமறத் துணைவரற வளமறச் செய்துசூர்
மாவெனுங் கொடியனைச்செவ்
வேலகமு றச்சென்றி ரண்டுபங் கிட்டவ்
வேலையிலி ரண்டிலொன்று
விருதுகொடி யொன்றூர்தி யொன்றுகைக் கொண்டுபுகழ்
மிக்கசெந் தூரில்வாழும்
பாலகன்சந் நிதிமுகா ரம்பகுண திசைப்
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப் பதிக்கவுரி
பரவைநீ ராடியருளே! 84
---------------------------------------
துத்திவிரி படமகுட விடமொழுகு பகுவாய்த்
துளைக்கொலை யெயிற்றுநெற்றிச்
சூட்டரா வணிபொதுவி லாட்டரா கம்மறைத்
துறையறியு மறிஞருக்கு
முத்திதரு மைந்துமுக முக்கணெண் டோற்கயிலை
முழுமுதற் பொருள்பிடித்த
மோகத்தி னாகத்தோர் பாகத்தின் வைத்தநாண்
முதலறம் வளர்க்கும்விரத
நித்தியமு றைப்படி நடத்திமுச் சகநிலை
நிறுத்தி யெல்லாவுயிர்க்கு
நேர்நின்று நானென்று நீயென்றும் வேறன்று
நின்றபரை யேபராவும்
பத்தியடி யவர்செயும் பவமறக் கதிபெறப்
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப்ப திக்கவுரி
பரவைநீ ராடியருளே! 85
-------------------------------
சோமன்க திர்ப்பருதி சுற்றும்வட வரைவில்லி
சொல்லுமுக முடிவிலெல்லாந்
தொலைவில் லிகயிலாச வில்லியொரு பொருளினுஞ்
சோர்வில்லி கைப்பிடித்த
மாமங்க லச்சுமங்க லியானவுன் கருணை
வாரிப்பெ ருக்கினகமாய்
மண்டலமும் விண்டலமு மெண்டிசையு மெவ்வுயிரும்
வைத்தறம் வளர்த்தவுமைநீ
காமன்ப தித்திலோத் தமைவுருப்ப சிமேனகைப்
பெண்ண யிராணிமுதலாங்
கன்னியர் கள்சாந்து பொற்சுண்ண மவையேந்தி
யிருகை கொண்டுகால்வணங்கப்
பாமங்கை பூமங்கை மார்செங்கை பற்றியே
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப்ப திக்கவுரி
பரவைநீ ராடியருளே! 86
-------------------------------------
மதியரவு விரவியணி வரதருத் தரகோச
மங்கைத்த லத்திருந்து
மறைமுடிவு நொடியுமொரு பொருளினடி முடிதெரிய
வாய்திறந் தன்றுனக்குக்
கதிபெறவு ணர்த்திடுமவ் வேலைவே லைக்கொண்டு
கரியபெரி யவரைநிகர்செங்
கட்சூர னைத்தடிந் திடுகடவு ளுன்குழல்
கண்ணிலறு காலளியின்வந்
ததிசயமெய் யுரையெனுமவ் வுரைகேட் டிருந்ததை
யறிந்திருவ ருக்குமன்றைக்
கருளிச்செய் சாபமோ சனமாம் படிக்கு
விளையாடல்புரி யமலனருள்சேர்
பதிகரச முதியதமி ழதியரச னருமைமகள்
பரவைநீ ராடியருளே!
பலருக்கு முத்திதரு குலசைப்பதிக்கவுரி
பரவைநீ ராடியருளே! 87
--------------------------
வேறு
தவளத்தர ளத்திழைத் ததொட்டி
றன்னிற் கிடந்து கண்வளர்ந்து
சற்றேயுத ரப்பசி யரும்பச்
சதங்கைத் திருத்தா ளுதைந்துதைந்து
குவளைக் கருங்கண் பிசைந்தழுது
குறுவேர் துளிக்கப் பளிக்கறையிற்
குலவிச் சுலவும் இளமயிலிற்
குழைந்தங் கெழுந்த குறிப்பறிந்து
கவளக் களிற்று மலையரசன்
காதன் மனைவி வந்தெடுத்துக்
கண்ணீர் துடைத்தும டியில்வைத்துக்
காமர்மு லைப்பா லூட்டவுண்ட
பவளக் கனிவாய்ப் பசுங்கிளியே!
பரவைத் திரைநீ ராடுகவே!
பரையே குலசைப் பதித்தாயே
பரவைத் திரைநீ ராடுகவே! 88
---------------------------------
கிடந்துத வழுங்குட வளையாற்
கிரண மெறிக்கு நிலாக்குவளை
கிடங்குக டந்துகொ டிக்காலின்
கேணிக் கேறியூ றியதேன்
றொடர்ந்து சொரியமு கைவிரியும்
துணர்ப் பூங்கமலத் தடம்புகுந்து
துள்ளிக் கயல்கள் குதிக்குமந்தச்
சுனைச்செங் கமலமிசை விசும்பி
னடந்து திரியுஞ் சுடரினொன்று
நாளிலி ருந்தும றுகில்வந்து
நகைவெண் டரளத்திர ளுமிழ்ந்து
நன்னீர்க் கயத்தின் மகிழ்ச்சியிற்போய்ப்
படர்ந்த குலசைப் பதித்தாயே!
பரவைத் திரைநீ ராடுகவே!
பரையே! அறத்தை வளர்த்தவளே!
பரவைத் திரைநீ ராடுகவே! 89
-------------------------------
புகலுங் கருணைப் பெருங்கடலே!
புகலப் படாத குணமலையே!
போற்றா ரகலச் சுழல்காற்றே!
புகழ்வோர் தழைக்கப் பெயுமழையே
யிகலும் வினைநோய்க் கொருமருந்தே
யிகழாநின் றோர்க் குறும்பிணியே
யெழுதுந் தமிழினி சைக்கிசையே
யெழுதா மறைக்குள் ளுறைபொருளே
யகலு முடம்பி னுயிர்க்குயிரே
யகலா வறிஞர கத்தமுதே!
யறத்தை வளர்க்கு மணிவிளக்கே!
யருவே யுருவே யம்மேநீ
பகலு மிரவுமு ழங்கியெழும்
பரவைத் திரைநீ ராடுகவே!
பரையே! குலசைப் பதித்தாயே!
பரவைத் திரைநீ ராடுகவே! 90
------------------------------
வேறு
தானமுறப் பெரியோர் பரவப்பர
வைப்புன லாடுத லாடுகவே!
சங்குமுழங்கு முழங்கு திரைப்பர
வைப்புன லாடுத லாடுகவே
தேனிதழித் தொடையார் மகிழப்பர
வைப்புன லாடுத லாடுகவே
தென்றன்ம லர்த்துகள்சிந்த வலைப்பர
வைப்புன லாடுத லாடுகவே
யானவி சைத்தமிழ் வாழ்வுபெறப்பர
வைப்புன லாடுத லாடுகவே
யன்பர்தழைக் கநிலம்பொ லியப்பர
வைப்புன லாடுத லாடுகவே
வானவர்பொற் றொடிமாதர் கையில்பர
வைப்புன லாடுத லாடுகவே!
மன்குல சைப்பதி வந்ததிருப்பர
வைப்புன லாடுத லாடுகவே! 91
---------------------------
10. பொன்னூசற்பருவம்
மாமகநடக் குவிண்மட்டு மெட்டுய ரூஞ்சல்
மண்டபச்சுற் றுநாப்பண்
மன்னுமின் னெல்லாந் திரண்டிரண் டுருவாகி
வந்ததென நின்றமுந்நீர்க்
காமர்செம் பவளக்கொ ழுங்கால் நிறுத்திமர
கதவிட்ட மிசைகடாவிக்
கங்குலும் பகலென வெறித்திடுஞ் செம்மணிக்
கதிர்மணி வடங்கள்பூட்டித்
தாமவெண் டரளவச் சிரமழுத் திடுபசுந்
தமனியப் பலகைசேர்த்துத்
தமனியச் சுழுகிட்ட தவிசிட் டுமேல்
விதானஞ்செய்து கலைமகளுடன்
பூமகளுமே வடந்தொட் டாட்டநி லைபெற்ற
பொன்னூச லாடியருளே
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
பொன்னூச லாடியருளே 92
-------------------------------
விண்ணினயி ராணிமுதன் மங்கையர் கள்செங்கை
தலைமேற் கொண்டுதாள் வணங்கி
விரைகமழ் புதுப்பனீர் கொடுவந்து நீராட்டி
மிக்கசெம் பட்டுடுத்துக்
கண்ணின் மையெழுதிக் கருங்குழ றிருத்திக்
கவின்பெற முடித்தெடுத்துக்
காமர்திரு வும்பிறையு முறையிற்ற ரித்துவான்
கற்பகவலங் கல்சுற்றிப்
பண்ணிசை தரும்பாத கிண்கிணி யணிந்துகைப்
பணிகுழைப் பணியணிந்து
பைம்பொற் பதக்கம் வெண்டரள வடமிட்டுப்
பசுஞ்சாந்து வேய்ந்துபரவும்
புண்ணிய வதிபாக்ய வதியதிரூப வதியழகு
பொன்னூச லாடியருளே!
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
பொன்னூச லாடியருளே! 93
---------------------------
இங்கிதச் சொற்சுவை பொருட்சுவை பதச்சுவை
யிசைச்சுவை யலங்காரமும்
மெள்ளளவு மொருவாது திருவாத வூரன்முன்
னியம்பும்வா சகமுமந்நாள்
சங்கிலித் தளையிட்ட மாறனையு மெண்ணாது
தண்பரவை யிற்படிந்து
சந்தப்பொ ருப்பிடைகண் வளருமொரு புயல்பொழி
தமிழ்ப்பெ ருக்கமுமடத்திற்
கங்குலிற் றழலிட்ட சமணரைக் கழுவேற்று
காரணப் பிள்ளைகவியும்
கற்றூண் மிதக்கமிசை வந்தும கராலயக்
கரைசேர்ந்த புலவனியலும்
பொங்கிசை மிகும்புரா ணங்களு முழங்கிடப்
பொன்னூச லாடியருளே!
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
பொன்னூச லாடியருளே! 94
--------------------------------
பாதார விந்தச் சிலம்பொ லித்தாடப்,
பணைத்துப் புடைத்தகொங்கைப்
பங்கயத் துணையாட, ஒட்டியா ணத்தினொடு
பட்டுத்தரீ கமாடக்
காதாரு மகரகுண் டலமாட, வில்லிதழ்க்
கனியின்மணி முறுவலாடக்,
கைவளை யொலித்தாட, மைவளையு மிருவிழிக்
கடையின்மெய்க் கருணையாட,
ஆதார மண்டலமு மெண்டிசையு மெவ்வுயிரு
மாடவேட னையளித்தோ
ராகமுந் தொலையாத மோகமுங் கூடநின்
றாடவாபர ணமாடப்,
போதாச னத்திலுறை மழலைக்கி ளிப்பிள்ளை
பொன்னூச லாடியருளே!
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
பொன்னூச லாடியருளே! 95
-----------------------------
மின்னலம் பாயுலவு சாலிற்கி டந்துள்ளி
வெள்ளிடை யிலொருபருவரால்
வெடிபோய் விண்மேகத்தி னகடுகிழி யப்பாய்ந்து
மீண்டுநீண் டோங்கிலைப்பூங்
கன்னலைக் கதலியைக் கமுகைப் பலாவைக்
கடந்துசுனை யிற்புகுந்து
காவிக்க யம்படிந் தெழுமேதி தன்குழக்
கன்றின்மடி முட்டமுட்டச்
சொன்னலந் தருசுவைப் பால்சுரந் துள்ளே
சொரிந்திட விரிந்தபாலைத்
தோலடிப் பாலன்ன முண்டுபெடை யொடுமடற்
றூய்மலர்ப் பள்ளிவளரும்
பொன்னலந் தருமான வீரைவள நாட்டரசி
பொன்னூச லாடியருளே!
புவனவுயி ரத்தனையு மருளறம் வளர்த்தவுமை
பொன்னூச லாடியருளே! 96
-------------------------------
வேறு
கருந்தாத னையகொடி மனக்கரனைக்
கரிய திரிசிரனைக்
கருந்தூடண னைத்தொலைத்தி லங்கைகலங்கக்
கடலைக்கடந் துசென்றங்
கிருந்தார்தம் மில்வந்த வனையல்லா
லிரங்காவ ரக்கரென்று
எதிரிட்டன் றேயமர்விளைத் தவெல்லாப்
பொல்லாக் குணமுடைய
பொருந்தார் மடியப்பொரு துவென்றுபுருகூ
தனுக்கும் புலவருக்கும்
பொன்னாடளித் துச்சனகி யொடும்புகட்
டம்பியினோ டயோத்தியினில்
வருந்தாச ரதிசகோதரி யே!மணிப்
பொன்னூச லாடுகவே!
மயிலே!யறத் தைவளர்த் தவளே!மணிப்
பொன்னூச லாடுகவே! 97
------------------------------
நம்பவளமே கொடுப்பவளே! நம்பார்தம் பாலடாதவளே!
நால்வேதம் சொல்பொருளே! நாட்பூமலரே! மலர்மணமே!
கும்பம்வளர்ந் ததனத்தாயே! குலசேகரப்பட் டினத்தாயே!
கூற்றையுதைத் தாரகத்தமுதே! குறையாநிறையாப் பெருவாழ்வே!
அம்பவளவாய் விழிமானே! அளக்கப்படாத குணக்கடலே!
அணுவாய்மலை யாயகம்புறமாய் அளவுக்களவா யிருந்தவளே!
செம்பவளவாய்ப் பசுங்கிளியே! திருப்பொன்னூச லாடுகவே!
செகத்திலறத்தை வளர்த்தவளே! திருப்பொன்னூச லாடுகவே! 98
------------------------------
தருமந்தழைப் பச்சிவசமயந் தழைப்பத்திருநீற் றொளிதழைப்பத்
தானந்தழைப் பப்பரிகலத்தார் தழைப்பப்பர வுதொண்டர்செய்யும்
கருமந்தழைப்ப விசைத்தபிள்ளைக் கவிதைதழைப் பக்கல்விகவி
கற்றோர்தழைப் பப்புகழ்க்குல சேகரப்பட்டின முந்தழைப்ப
இருபெருமண்ட லங்காத்தருள்வேந் தர்பிடித்தசெங்கோல் தழைப்பமுக்கட்
பெம்மான்கைமான் தரித்தவிடைப் பெருமான்பூட்டும் உன்னுடைய
திருமங்கலப் பூண்டழைப்பவம்மா திருப்பொன்னூச லாடுகவே!
செகத்திலறத்தை வளர்த்தவளே திருப்பொன்னூச லாடுகவே! 99
இப்பருவத்தில் இரண்டு பாடல்கள் கிடைத்தில.
முற்றும்.
-------------------------------