pm logo

அடிமுடி தேடிய அரியயன் சண்டை அம்மானை
செஞ்சி ஏகாம்பர முதலியாரவர்களால் இயற்றப்பெற்றது


aTimuTi tETiya ariyayan caNTai ammAnai of
cengci EkAmpara mutaliyAr
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work and to
Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அடிமுடி தேடிய அரியயன் சண்டை அம்மானை
(செஞ்சி ஏகாம்பர முதலியாரவர்களால் இயற்றப்பெற்றது)

Source:
திருமலைச் சருக்கமென்னும்
அடிமுடி தேடிய அரியயன் சண்டை அம்மானை.
இவை-செஞ்சி ஏகாம்பர முதலியாரவர்களால் எழுதப்பட்டு,
மகா--ஸ்ரீ. தி. சின்னசாமிப்பிள்ளையவர்களால் பார்வையிட்டு,
பூவிருந்தவல்லி சுந்தர முதலியார் குமாரர் பூ. சு. குப்புசாமி முதலியாரது
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
1906,
சென்னை : புரசை;
REGISTERED COPY RIGHT:
-------------------

கடவுள் துணை.

திருமலைச்ச ருக்கமென்னும்
"அடிமுடி தேடிய அரியயன் சண்டை அம்மானை".

விநாயகர் காப்பு.
வெண்பா.
மார்க்கண்ட மாமுனிவர் மகிழ்ச்சியுடன் தான் கேட்கத்
தீர்க்கமுடன் நந்திதேவர் தானுரைத்த-ஏர்க்கையுள
அரியயன் சண்டைதனை அம்மானை யாயோதக்
கரிமுகவன் பொன்னடியே காப்பு.

விநாயகர் தோத்திரம்.

முந்திமுந்திவி நாயகரே முக்கணனார் தன்மகனே
தந்திமுகத் தோனே தர்ப்பரியாள் புத்திரனே
தொந்திவ யற்றோனே தொழுகைக்கு முன்னோனே
மூலாதாரப் பொருளே மூஷிகவாகனரே
சோதியாய் நின்றவரே சுத்தப்பரி பூரணரே
ஆதியாய் நின்றவரே யறுமுகர்க்கு மூத்தவரே
வேதமுதலானவரே வித்தைக்கு கந்தவரே
பாகமுட னுலகைப் பரிவாய்ப் படைத்தவரே
ஆகமமானவரே யங்குசப்பாசனரே
ஐந்துகரத்தோனே யன்பர்க் குகந்தோனே
தொந்திவயற்றோனே தும்பிமுகத் தோனே
நினைத்த வரமளிக்கும் நிர்த்தக் கணபதியே
சீர்பாதம் யான்மறவேன் செல்வக் கணபதியே
அரியயன் சண்டைதனை யம்மானையான்பாட
பிரியமுடன் னாவில் புகழாய் குடியிருந்து
குற்றங்கள் நேராமல் குறையொன்றும் வாராமல்
நினைவு பிசகாமல் நிலையாக முன்னிருந்தும்
பாடவர மருள்வாய் பாதஞ் சரணமையா.

சுப்பிரமணியர் தோத்திரம்.

ஆதிசிவன்மகிழும் அம்பிகையாள் புத்திரரே
ஆறுமுக மானவரே ஆனைமுகர்க் கிளையவரே
தெய்வானை வள்ளிமகிழ் தேவர்க்கதிபதியே
சேவற் கொடியுடைய சிங்கார வேலவரே
தோகைமயி லேறுந் திருமால் மருகனரே
அழகுவேல் கையேந்து மரியின் மருகனரே
வேதனைச் சிறையிலிட்ட வீராருக் கையனரே
சோதி சுரூபமுள்ள சுப்பிர மண்ணியரே
சூரசம் மாரனரே சுத்தபரி பூரணரே
வள்ளியைச் சிறையெடுக்க வனவேட ரானவரே
வேங்கைமரமாக வளர்ந்தங்கே நின்றவரே
வளையல்கார செட்டியைப்போல் வடிவுகொண்டு வந்தவரே
அகத்தியர் தனக்குமல்லோ அருந்தமி ழுரைத்தவரே
தந்தைக் குபதேசந் தானுரை செய்தவரே
அரியயன் சண்டைதனை யம்மானை யான்பாட
கந்தரேயித்தருணம் வந்தருள் செய்யுமையா.

பரமசிவன் தோத்திரம்.

சந்திரசடாதரரே சந்திரசேகரரே
விந்தையுடன் கையிலை விளங்கும் விமலனரே
மான்மழு தரித்தவரே மகிழ்கையிலை வாசகரே
சத்தியுமை மகிழும் நித்தபரி பூரணரே
கங்கை தரித்தவரே கீர்த்தியு டையவரே
ஆனைமு கனோடு அறுமுகனை யீன்றவரே
முக்கண்ணு டையவரே முத்தியளிப்பவரே
அரவாப ரணனரே ஆதிசிவனாரே
பாம்பா பரணனரே பரமசி வனாரே
கேட்டவ ரமளிக்குங் கிருபையு டையவரே
ஆனையு ரித்தவரே அழகுதிரு மேனியரே
எமனையு தைத்தவரே யெருதின்மே லேறுபவரே
காமதக னனரே காட்சிய ளிப்பவரே
இஷ்டமுட னுமையவட்கு யிடபாக மீந்தவரே
அரியயன் சண்டைதனை யம்மானை யான்பாட
வரமருளயித் தருணம் வந்தருள் செய்யுமையா.

விஷ்ணுவு தோத்திரம்.

ஆதிவைகுந்தனரே யகிலமளந்தவரே
மங்கைலட்சுமி தன்னை மார்பிலணிந்தவரே
சங்குசக்கரந் தன்னைச் சதுராய்த் தரித்தவரே
எங்கும் நிறைந்தவரே யெழில்மால ளந்தவரே
காமனை யீன்றவரே காசாம்பு மேனியரே
குன்றை யெடுத்தவரே கோவுகளைக் காத்தவரே
ஆதியென்ன யானைத்துயர் அடவாகக் காத்தவரே
திருப்பாற் கடலதனில் தேடிபள்ளி கொண்டவரே
ஆயன் பெருமாளே ஐவர்சகாயனரே
பஞ்சவரைக் காத்தவரே பாரளந்த மாயவரே
கஞ்சனை வதைத்தவரே காளிங்க நிர்த்தனரே
கூரனிர ணியனைக் கொடுமார்ப் பிளந்தவரே
கொத்தோடு யிராவணன்தன் பத்துமுடிக் கொய்தவரே
அரக்கர்குலக் காலனரே யன்பரைக் காப்பவரே
அரியயன் சண்டைதன்னை யம்மானை யான்பாட
கரியமா லானவரே காத்தருள வேணுமையா.

உமையவள் தோத்திரம்.

ஆதிசிவ னார்மகிழும் அம்பரிப் பரம்பரியே
சோதியு மையவளே சுத்தபரி பூரணியே
உம்பரி யானவளே யுலகம்ப டைத்தவளே
அம்பரியா னவளே யகிலம்ப டைத்தவளே
மகிடனைக் கொன்றவளே மாயவன் தங்கையரே
ஈசனார் தான்மகிழ யிடபாகம் பெற்றவளே
சத்திச் சடாதரியே சகலவுயர் நாயகியே
அகிலமீ ரேழளித்த வங்கமழு பாணியரே
செகமெங்குந் தானிறைந்த சிதம்பரி திகம்பரியே
உதகமுடி யுடைய வுமையபரஞ் சோதியரே
கரிமுகனோட றுமுகனைக் களிப்பாக யீன்றவளே
தக்கனுட யாகமதைத் தானழித்தசோதியரே
மலையரையன் தான்மகிழ மகவாயு தித்தவளே
யெங்கும் நிறைந்தவளே யேகபரி பூரணியே
அரியயன் சண்டை தன்னை யம்மானை யான்பாட
இச்சமயம் நீயிருந்து யீஸ்வரியே காருமம்மா.

லட்சுமிதோத்திரம்.

செந்திரு வானவளே செகமெங்கும் நிறைந்தவளே
விஷ்ணுவுட மார்பதனில் விளங்குந் திருமகளே
கஷ்டங்கள் தீர்ப்பவளே கலியைத் தவிர்ப்பவளே
அஷ்ட லட்சுமியெனு மாதார மானவளே
ஸ்ரீராமர்தான் மகிழச் சீதையாய் வந்தவளே
ஆயனார் தான்மகிழும் அலமேலு மங்கையரே
மாயவனார் தான்மகிழும் மங்கை லட்சுமியரே
செந்தாம ரையதனில் சிறப்பாய் வீற்றிருப்பவளே
அரியயன் சண்டைதனை யம்மானை யான்பாட
பிரியமுட நீயிருந்துப் புகலவரந் தருவாய்.

சரஸ்வதி தோத்திரம்.

வேதனார் தான்மகிழும் வெண்டாமரையாளே
ஆயனுட னாவுதனில் அமர்ந்த பெரும்வாழ்வே
நான்முகனார் தேவியரே நல்லகலை வாணியரே
வாணிச ரஸ்வதியே வாக்கருள வேணுமம்மா
அரியயன் சண்டைதன்னை யம்மானை யான்பாட
பிரியமா யென்னாவில் பிரியாமல் தானிருந்து
யேடுத வறாமல் யெடுத்தசொல் மாறாமல்
கூறுமொழி பிசகாமல் குற்றங்கள் வாராமல்
நாவிற்கு டியிருந்து நடத்துமம்மா யிக்கதையை
குரலில் குடியிருந்து கூறுமம்மா யிக்கதையை
பிழைகளொன் றும்வாராமல் பெற்றவளே காருமம்மா
மறையவனார்தேவியரே மலரடிக்கு யான்சரணம்.

ஸ்தோத்திரங்கள் - முற்றிற்று.

கதையின் வரலாறு.

மார்க்கண்டேயர் நந்திதேவரைக்கேட்குதல்.

மார்க்கண்ட மாமுனிவர் மகிழ்வாகத் தானுமன்று
நந்திதேவர் தம்மை நாடிமிகத் தொழுதுக்
கைகட்டிவாய் பொற்றி காலில்மிகப் பணிந்து
தொந்தமுட னெதிரில்நின்று தொழுதுமே எதுகேட்பார்
ஐயாபெ ரியவரே யருள்நந்தி தேவரேகேள்
அருணாசலத் தலத்தின் அருள்மகிமை யானதெல்லாம்
அருமையுட னீருரைக்க அடியேன் கேட்டு மகிழ்ந்தேன்
பெருமையுட னின்னமொன்று புகலவேணு மெந்தனுக்கு
பரமசி வனாரும் பரிவாகத் தானுமல்லோ
அக்கினி மலையாக வருளாக நின்றதுவும்
அம்மலையி னடிமுடியை யறியக்கூ டாதலாலும்
பிரமனும் விஷ்ணுவுமே போய்தேடி வருத்தப்பட்டு
காணாமல் நின்றவர்க்கு கங்காத ரனுமன்று
அனுக்கிரகஞ் செய்ததுவும் அடியேன் தனக்குமிப்போ
ஆதியோ டந்தமாக யறியவே நன்றாக
திருவுளம் பற்றவேண்டுந் தேவரீர் சுவாமியென்ன

மலையுண்டான விபரத்தை
நந்திதேவர் மார்க்கண்டே யருக்குரைத்தல்.

அம்மொழிதான் கேட்டு யருள் நந்திதேவருமே
சிந்தைமிகக் கூர்ந்துச் சிவனடி தோத்தரித்து
மார்க்கண்ட மாமுனிக்கு மகிட்சியுட னேதுரைப்பார்
அக்கினி மலைப்பெருமை யன்பாக விப்பொழுது
எனக்குத் தெரிந்தமட்டு மின்பமுடன் சொல்லிவாரேன்
சித்தமுடன் செவிகொடுத்து சீராகக் கேட்டிடுவாய்
சர்வசங்காரக் காலமதில் சதுராய் முறைப்படியே
பேசும்பலவுயிரும் பிரமனிடமே யொடுங்கி
பிரமனும் விஷ்ணுவிடம் போயல்லோ தானொடுங்கி
விஷ்ணுவும் ருத்திரனிடம் வந்தெல்லோ தானொடுங்க
ருத்திர னானவரும் மகேசுரனிட மொடுங்க
மகேசுரன் தானுமல்லோ சதாசிவத் திலொடுங்க
சதாசிவன் தானுமல்லோ விந்துவிட மேயொடுங்க
விந்துவுந் தானுமல்லோ நாதத்திட மொடுங்க
நாதமுந் தானுமல்லோ சத்தியிட மேயொடுங்க
சத்தியுந் தானுமல்லோ பரமசிவத்தி லொடுங்கி
அந்தபரமசிவம் அன்பாய் திருவுளங்கொண்டு
எல்லாங் கடந்ததொரு யெழில் தத்துவ முடிவில் நிற்கும்
ஒன்றாயப் படிக்கெல்லா மொடுங்கியக் காலத்திலே
தனியாக நின்றதொருத் தர்ப்பரம சிவனாரும்

உலகமுண் டாக்கவென்று உத்தமரு மெண்ணங்கொள்ள
கொண்டய ளவிலேதான் குறிப்பாக வட்சணமே
அந்தசி வனிடத்தில் அருளாகத் தோன்றியதோர்
பராசத்தித் தன்னிடத்தில் பண்பாகச் சொல்லுவன்கேள்
குடிலையெ னுஞ்சத்திதோன்றி கூறுவேன தில்தானும்
மற்றுமுள்ள தத்துவங்கள் மகிழாயுண் டாயினபின்
பஞ்சக்கிருத் தியங்களால் பரிவாகத் தானுமல்லோ
முன்னே யொடுங்கியவர் முறையா யுண்டாயினார்கள்
விண்டுவின் புத்திரனாம் வேதநந்தப் பிரமநப்போ
மாவுலகம் சிருஷ்டிக்க மனதிலவ ரெண்ணிடவே
அப்படி நினைந்தவுடன் அருளாகத் தானுமல்லோ
மரீசி ஆங்கிரசர் புலத்தியர்ப் புலவருடன்
கிருதுயத் திருசன பதியென்று சொல்லும்
ஏழுரிஷிகளுமே யெழிலாகப் பிறந்தார்கள்
தக்கன்வலதுகால் பெருவிரலிலே பிறந்தான்
பிருகுரிஷி யென்பவனும் பிறந்தானே மார்பிடத்தில்
தருமதே வதைகளும் தான்பிறந்தார்முகமதனில்
இப்படியாக வல்லோ யிவர்கள் பிறந்தவுடன்
பிரமனிடப் பிள்ளைகளாம் புகழான யேழுவரில்
மரீசிதன் னிடத்தில் மகிழ்காசி பர்பிறந்தார்
தக்கனென் பவனப்போ தான்பெற்ற னன்பதுபெண்
அந்தநல்ல பெண்களிலே யானபதிமூன் றுப்பெண்ணை
காசிபர்தா னுமல்லோ கலியாணஞ்செய்து கொண்டார்
அதில்மூத்தோ ளாகியதோர் அதிதியவள் வயற்றில்
முப்பத்து முக்கோடி தேவர்களுந்தான் பிறந்தார்
அதிதிக்கி ளையவளாம் திதிமங்கைத் தன்வயற்றில்
இரணியன் இரணியாட்சன் எனயிருவர் பிறந்தார்
பிரசித்தமா கவல்லோ பெற்றயி ருவர்களில்
இரணிய னானவனு மெழிலாகத் தானுமப்போ
பிரகலாதன் முதலாகப் பெற்றா னைந்துப்புதல்வர்
அந்தப்பிரகலா தன் அருந்தவமேபுரிந்தும்
மூன்று நல்லப்பிள்ளைகளை முசியாமல் பெற்றெடுத்தார்
வீரமுள்ளமூவர்களில் விரோசனனென்பவனும்
மாவலி யென்பவனை மகிழ்சியுடன் பெற்றெடுத்தான்
மாவலி யென்பவனு மகிழ்வாக வப்பொழுது
வாணா சூரனையும் வண்மையுடன் பெற்றெடுத்தான்
அந்த நல்லவாணாசூரன் அருந்தவங்க ளேபுரிந்து
பரமசிவனிடத்தில் பாங்காய்வரங்கள் பெற்று
பிரமன்தொழும்படியாய் பெருவாழ்வு பெற்றிருந்தான்
மலைகள் சிறகருக்க மகிழ்வாகவப்பொழுது
இந்திரர்க்கு முதுகெலும்பை எழிலாகத் தான்கொடுத்து
தேகத்தைவிட்டுமல்லோ திகழாகப்பேறும் பெற்ற
ததீசிரிஷி யானவர் தகுதியாய்த் தானுமல்லோ
சம்பரன் முதலாகச் சதுராகப்பத்துபேர்கள்
அசுரர்கள் தங்களையும் அடுக்காகப்பெற்றெடுத்தார்
சீராகப்பெற்றதிலே சிங்கிகையென்பவளும்
இராகுமுதல் நான்குப்பிள்ளை எழிலாகப்பெற்றெடுத்தாள்
அவளுக்கிளையவளும் அசுரர்மூவரைப்பெற்றாள்
காலையவளென்பவளுங் காலக்கேயர்களான
ஆறுபேர் தங்களையும் அடுக்காக யீன்றெடுத்தாள்
நீண்டசிரகுடைய கெருடனோடு அருணனுடன்
விளங்கவே நான்குபிள்ளைவிந்தையவள் பெற்றெடுத்தாள்
விஷங்களையொத்ததொரு விழிகளைத்தானுடைய
சத்தியவளென்பவளும் சர்ப்பங்களை பெற்றெடுத்தாள்
அருட்டையவள் தன்னிடத்தி லடுக்காகத் தானுமல்லோ
அரம்பையூர்வசிமுத லானதோர் பெண்கள் பிறந்தார்
இலங்கினியென்பவளும் முனிவருடக்கிருபையினால்
கருதும்பதினாருவகை கந்தருவரையும் பெற்றாள்
கபிலையாள் தன்னிடத்தில் காளை பத்துபேர் பிறந்தார்
அங்கிரீசிசனபதியா மானயிருவர்களும்
காந்துருவர்தங்களையும் களிப்புடனே பெற்றார்கள்
அத்திரியென்பவரும் அருளாகத்தானுமல்லோ
சூரியச்சந்திரரைச் சுத்தமுடன்பெற்றெடுத்தார்
புலத்தியரானவரும் பெற்றவகைக்கேளும்
இராட்சதர்வானவர் கின்னரிவர்களைப்பெற்றார்
புலகரிஷியானவரும் பெற்றவகை சொல்லுவேன்கேள்
கிம்புருடறோடுமல்லோ மிருகங்களையும் பெற்றார்
சனபதியானவரும் தருணம்பொருந்திபின்னும்
அஷ்டவசுக்களையும் அடுக்காகத்தானும் பெற்றார்
பிருகுரிஷியென்பவரும் பேசக்கேளப்பொழுது
கலியென்பவளோடுச் சவுனகரையும் பெற்றார்
இவர்களைப் பெற்றது மல்லாம லின்னமுந்தான்
இலக்குமி தன்னையும் நலமாகப்பெற்றெடுத்தாள்
அப்பருவம் பொருந்தியரோ ரானதொரு பெண்களிலே
கலியென்பவளுமல்லோ களிப்பாய் சுக்கிரனைபெற்றாள்.
சூரியன் தன் மனையாளை சேருவதர்க்காக
எத்தனப்பட்டபோது யவளதற்குப் பொருந்தாமல்
பெண்குதிரைரூபங்கொண்டு பேதையவளோடையிலே
சூரியனுமாண்பரியாய் துடர்ந்துமேதான் துரத்த
அப்போது பெண்பரியு மானவள் திரும்பிபார்க்க
கண்டெல்லோசூரியனுங் கடுகெனவேயப்பொழுது
இரண்டு நல்ல நாசிதனில் இந்திரியந்தனையூற்ற
அசுவனிதேவரிருவர் அடுக்காகப் பிறந்தார்கள்
அவர்கள் பிறந்தவுடன் அச்சமுண்டாயினவாம்

பிரம்மதேவன் மமதை கொள்ளல்.

இப்படிக்காகவல்லோ யிருக்கின்றக்காலமதில்
சகலமுமுண்டாக்கின சதுர்முகதேவனவன்
இந்தவுலகமெல்லா முண்டானது நம்மாலென்று
தன்னையறியாமலே தான் கொண்டுவாங்காரம்
தனக்கு நிகரில்லையென்று தலைக்கீழா துள்ளியல்லோ
வைகுந்தந்தனைத்தேடி வலுவினில்போயெதிர்த்து
பகையதுக் கொள்ளும்படி பரிவாகயெண்ணங்கொண்டு
வாகாய்ச்சங் கீதம்பாடும் வண்டுகள் தான்சூழ்ந்த
துளபமாலை தரித்து துலங்கியேவாழுகின்ற
விஷ்ணுவைத்தான் பார்த்து வேதனுமப்பொழுது
அவமதித்துச்சிலவார்த்தை அயனுமேயே துரைப்பான்,
விஷ்ணுவே நீகேளும் விளங்கவேயிப்பொழுது
ஈரேழுப்பதினாலு யெழிலானலோகங்களும்
காணவேதான்விளங்கும் கருத்ததோர்மேகங்களும்.
சதுராகத்தான் விளங்கும் சத்தசமுத்திரமும்
சாற்று முதன்மையான சத்தகுலப்பருவதமும்
உண்டாகும்படியாக யுகந்துமனதால்படைத்து
இப்போதுவாழ்கின்ற எல்லாவுயிர்களையும்
உண்டாக்கவலுமையது வுரிதியுடன் தானமர்ந்த
மரீஷிமுதலான ரிஷிகளையுந்தானும் பெற்றேன்
என்னுடையப்பிள்ளைகட்கு பிள்ளைகளானதொரு
பிரகஸ்பதியுடனே புகழ்மற்றதேவர்களும்
சந்திரசூரியர்களும் சார்ந்தவசுரர்களும்
கெந்தருவர்கிம்புருடர் சித்தர்கண நாதர்களும்
தேவேந்திரன் முதலாய் திக்குபாலரெட்டுபேரும்
இருக்கின்றவர்களெல்லா மென்னாலுண்டாகினர்கள்
ஆனதால்விஷ்ணுவே யரையுமென்மொழிகேளும்
குறையில்வாசகலத்திற்குங் கூறுமுதலானக்
கர்த்தனானென்பதுவும் கடவுளுநானென்பதுவும்
என் பிள்ளைத்தான் பிரமன் யென் றுவுரைப்பதையும்
இன்றுமுதலாக யியம்பாமல்மரந்துவிடு
என்னுடையக்கைனாலே யிவ்வுலகம் படைக்காவிட்டால்
எப்படிக்கு நீயிருந்து யாவரையுங்காப்பாற்றுவாய்
செவுரிருந்தாலலவோ சித்திரங்களெழுதலாகும்
செவுரில்லாயெழுதுகின்ற சித்திரமுந்தானுமுண்டோ
யெழிலாகயாவையுமே யிரட்சிக்கின்றோமென்றக்
கருவமதை விட்டுவிடு கேவலமாய்ப் பேசாதே
அப்படிக்கு விடாமல் போவையே யாமானால்
உன்னுடைய வுத்தியோகத்தை வுடனேநான் வாங்கிவிட்டு
வேறொரு வன்றன்னை விளங்கவுண் டாக்கிவைத்து
இரட்சிக்குந்தொழிலுக்கு நிட்சயமாய் நேமிப்பேன்
என்னுடையப்புத்திரர்கள் பௌத்திரர்களானதொரு
தேவர்க்கூட்டங்களுன்னைத் தேடியேவந்துமிப்போ
வல்லுயிரைவாங்கும்படி வளைத்துக்கொள் வதற்குமுன்னே
திருப்பாற்கடலுக்குள்ளே தேடியே போய்குதித்து
ஒருவர்க்குந்தெரியாமல் ஓடியொளித்துக் கொள்வாய்
ஞானச்சொரூபியான நர்ப்பிருகுரிஷியவரும்
இட்டதொருசாபத்தாலே யிரந்திரந்து பூமியிலே
பத்து தரம்பிரந்தாயே பகுத்தரியவில்லையோ நீ
யாவையும் நான்படைத்து என்னுடையக் கைகளெல்லாம்
காப்பேறியெப்படிப்பார் கருத்துயிருக்கின்றது
ஆனாலுமின்னமுந்தா னரையுவேன் கேள் விஷ்ணுவேநீ
நாபிக்கமலத்திலே நான் பிறந்தனென்றுமேதான்
நிந்தனைச்சொல்லாதே நீருமேமுன்னாலே
தூணினிடத்திலே துலங்கவேபிறந்தாயே
அத்தூணுமுந்தனுக்கு ஆகுமோதந்தை தயுந்தான்
அல்லதுதாயென்று அரையப்படுமோசொல்
அத்தூணுனக்குத்தந்தை யாகுமேயாமானால்
எனக்கு நீதந்தையென்று யியம்புவதுவுண்மையாகும்
அரியவேமூங்கிலிடம் அக்கினியுந்தான் பிறந்து
அம்மூங்கில் தனைகொளித்திப் போடுவதுமறியாயோ
அப்படிக்குவுன்னிடத்தில் யான் பிறந்திருந்தாலும்
உன்னையுமிப்பொழுதே வுலகமறியும்படி
அழித்துமேபோடுகிரேன் அரைநொடியில் பாறுமென்று
பிரமனுமப்பொழுது பேசினானகடாக
அந்தமொழிகேட்டு ஆதி நாராயணர்க்கு
அவ்வலரிக்கண்கள் ரெண்டும் செவ்வலரிப்போற்சிவந்து
ஈயத்தைக்காய்ச்சியல்லோ யிருசெவியில் விட்டாப்போல்
கோபமிகப்பெருகி கொக்கரித்துப்பற்கடித்து
புகைகளெழும்பும்படி பெருமானவர் நகைத்து
இவனுக்குமிந்தகெர்வம் எவ்விதத்தில்வந்ததென்று
ஆலோசித்துமப்பொழுது ஆதிமூலமேது சொல்வார்

மகாவிஷ்ணு பிரமனைக்கேட்குதல்.

கேளுமடா பிரமாவே கேவலமாய்பேசவந்தாய்
மதியாமலென்னையும் நீ மடத்தனமாய் பேசவந்தாய்
அரியாமலெந்தனை நீ அகங்கொண்டுபேசுகுறாய்
தெரியாமலென்னையும் நீ திறமையிலாபேசவந்தாய் நீ
வந்தவழியதனை நினைவிலையுமெண்ணவில்லை
என்னுடைய நாபியது யுனக்குத்தா யென்றுமேதான்
சற்றுமாலோசியாமல் சதுர்முகனேபேசவந்தாய்
பிள்ளைகள் செய்தபிழை பொருப்பதுதந்தைகடன்
என்றெண்ணியிதுவரைக்கு மிருந்தேனான் பேசாமல்
பெற்றபிள்ளையென்றெலவோ குற்றம் நினையாதிருந்தேன்
இப்படிக்கொற்றவார்த்தை யினிபுகல்வை யாமானால்
சற்றும் பொறுக்கமாட்டேன் சதுர்முகனேயின்னங்கேள்
கோபத்தையுடையதொரு கூரானமதுவவனும்
யானையைப்போல் விளங்கு மந்தக்கையிடவனும்
புகழானயிவரிருவர் பிள்ளையெனக்கல்லவா
என்னையிகழ்ந்தவர்கள் யெதிர்த்தப்படியினாலே
கோபம் பெருகியல்லோ கொன்றுவிட்டேனவர்களையும்
மனமரிந்துத் தீங்குசெய்தால் மகனென்றுபார்ப்பதுண்டோ
தேகத்தினிடமாகத் தானொறுகட்டிகண்டால்
அதையுமருத்தெரிந்து யாக்கிடுவார்சொஸ்தமுடன்
இப்படிமனுஷருடயியற்கையதுத்தானிருக்க
கேளடாபிரமனே நீ கேவலமாய்பேசவந்தாய்
பயித்தியக்காரனந்தப் பரமசிவந்தானும்
உன்னுடையத் தலையிலொன்றை யுமாபதியுந் தான் பிடிங்கி
அன்றெறிந்தக்காலத்தில் அத்தலையை மறுபடியும்
உண்டாக்கிக்கொள்வதற்கு யுனக்குவகை யில்லையேதான்
உன்னையெப்படித்தலைவ னென்றுமே சொல்குறது
இத்தலையைக்கொண்டுதானோ யியம்பக்கேள் பிரமனே நீ
ஆதிசேஷன் முடிதனிலே யன்பாகவிருக்கின்ற
இந்த நல்லப்பூமிதனை எழிலாக நீபடைத்தாய்
சோமுகாசூரனெனுஞ் சுத்தமுளவீரனவன்
உன்னிடத்தில் வேதங்களை ஒருமிக்கப் பிடிங்கிக்கொண்டு
போனபோது நீயும் நின்றுப் புலம்பித் தவிக்கையிலே
மச்சவதாரமும் நான் மகிட்சியுடன் தானெடுத்தும்
அடவாகயட்சணமே யவ்வசுரன்தன்னைக்கொன்று
வேதங்களைவாங்கிவந்து விளங்கவுனக்குத்தந்தேன்
அதுகளுமில்லாமல் அயனே நீயின்னமுங்கேள்
அதிகசாமார்த்தியமுள்ள அசுரர்களையுங்கொன்று
தேவர்களோடுவுன்னை தீங்கில்லாக்கார்த்துவந்தேன்
எட்டிமரமானாலும் யிருந்தால்தான்வைத்ததாக
அதனையுமுலகுதனில் வெட்டத் துணியார்கள்
அப்படிப்போலாக யானுமனதிலெண்ணிப்
பிள்ளையென்று நானினைந்து கொல்லமன துவல்லை
கொல்லக்கூடாதேயென்று கூசிப்பயப்படுரேன்
என்றுமேவிஷ்ணுவப்போ எடுத்துமிகக்கூற
இப்படிக்காகவல்லோ யிருவர்களுமப்பொழுது
எத்தனையோவார்த்தைகளை எடுத்துமிகவுரைத்தார்
அப்பால் நடக்குங்கதை யறைகுவேன் கேள் மார்க்கண்டரே

பிரமனும் விஷ்ணுவும் உத்தம் செய்தல்.

ஒருவர்க்கொருவரப்போ யுதாசினங்கள் பேசிக்கொண்டு
கோபமிகப்பெருகிக் கொக்கரித்துப்பற்கடித்து
புஜங்களைத் தட்டியப்போ போர்கோல மாகவல்லோ
நின்றவர்கள் கெர்ச்சித்து நேராகவப் பொழுதும்
பேரிடிபோல் சத்தமிட்டு பூமியில் குதித்தார்கள்
நெருங்கினார் நின்றார்கள் நெருப்புப்பொறிபரக்க
விழிகளைத்திரந்தலவோ வெகுகோபமாகப்பார்த்து
சதுர்முகனும் விஷ்ணுவுமே சண்டைகள் செய்யயிலே
புகலொணாமலைகளெல்லாம் பொடிபொடியாயினவாம்
அண்டம்படாலென்று யப்போதுதான் வெடித்து
பற்பலகிரணமுடையப் பரிதியோடுச்சந்திரனும்
ஒளிய துத்தான் மயங்கி யோடியொளித்தார்கள்
ஆதிசேஷன்பாரமதை யவனும் பொருக்காமல்
மெற்றவருத்தமுற்று மெய்யை நெளித்துக்கொண்டான்
அப்போதுதேவர்களும் அலரிமிகப்பயந்து
கர்ப்பகாலம்வந்துமிப்போ கணக்காகத்தான் தோன்றி
உலகமழியுமென்று வொருமிக்கத்தானினைந்து
கண்களை மூடிக்கொண்டார் கனமுள்ளதேவரப்போ
பலபலென்று நட்சத்திரம் பாரிலுதிர்ந்தனவாம்
கருமேகக்கூட்டமெல்லாங் கலங்கித் தவித்தனவாம்
உலகமெலாந்துன்பமுற்று வொருமிக்கத் தானுமப்போ
அடுக்கதுத்தான்குலைந்து யடியோடே தான்விழுந்து
செந்தூளுங்கருந் தூளுஞ் சேர்ந்து யெழும்பினவாம்
கெங்கைமுதலானதொரு கீர்த்தியுள நதிகளெல்லாம்
தண்ணீர்களில்லாமல் தான்வற்றிப்போயினவாம்
அஷ்டதிக்கினிலுள்ள யானைகள் திடுக்கிடவும்
ஒருவரையோர்மேலே ஓங்கிதூக்கியெறிவார்கள்
மறுபடியுங்கீழேவந்து மண்மேல்விழுவார்கள்
விழுந்தெழுந்து ஓடிவந்து விரைவாக யெதிரில் நின்று
ஒருவர்க்கொருவரங்கே யோங்கிகுத்து விடுவார்கள்
மடியைப்பிடித்தெலவோ மல்லாடியிருவர்களும்
சூறைபோலனேகவிசைச் சுழன்றுத் திரிவார்கள்
பகலுமிரவுமங்கே பார்க்கவலமிடமாய்
வருவதுப்போலாக வாகாயிருந்தனவாம்
அந்த நல்லவேளையிலே யானவுலகமதில்
ஊர்வனப்பரப்பேன தவிழ்வன நடப்பேனெனும்
அறையுஞ்சீவராசிபோலே ஆகாயம்பரந்தனவாம்
நிலையாக நின்றதொரு நீண்டவிருட்சங்களும்
நிலையதுத்தான் தவரி நீடித்திரிந்தனவாம்
திரளாக நிரைந்ததொரு திகழைந்துலகையாகும்
தேவக்கருக்களெல்லாந் தவுடுபொடியாயினவாம்
எவ்விடமுமகங்காரம் எழிலாய் நிரைந்ததங்கே
ஆனமகமேருகிரி யசைவுற்று நின்றனவாம்
சத்தசமுத்திரமு சேராகிப்போயினதாம்
சர்வசங்காரக்காலம் சார்ந்ததென்று சொல்லும்படி
இருவருஞ்சண்டை செய்யும் எழிலானவேளையிலே

தேவர்கள் தேவேந்திரனிடஞ்சென்று தங்கள் துக்கத்தைக் கூறல்.

அந்த நல்லவேளையிலே அண்டமுளத் தேவரெல்லாம்
கண்டுப்பயந்துமல்லோ கடுகெனவேயொன்றுகூடி
தேவேந்திரனிடத்திற்கு திரமாகப்போய்ச்சேர்ந்து
தங்களுடத்துக்கமதை தாமெடுத்துக்கூறுமுன்னே
இரு தேவேந்திரனார்பட்ட துன்பமெலா மெடுத்துச்சொல்லி
பின்புதேவரைப்பார்த்து பிரியமுடனே துகேட்பார்
நீங்கள்வந்தக்காரியத்தை நிகழ்த்துவீரெந்தனுக்கு
அப்போதுதேவரெல்லாம் அடைவாகயே துரைப்பார்
தேவர்க்கதிபதியே தெரியவே சொல்லுவோம்கேள்
பிரமாவிஷ்ணுக்களெனும் புகழானயிருவர்களும்
பூமியிலேயிரங்கிப் பூலோகந்தத்தளிக்க
செப்பொணாயுத்தமதுச் செய்துவருகிறார்கள்
அதினாலேயெங்களுக்கு யரைகுவோங்கேளுமிப்போ
பிழைக்கத் தகுந்தமார்க்கம் புண்ணியரே வேரேயில்லை
யெல்லார்க்குங்காரணமா யிருக்கின்றப்பொருளான
பரமசிவனடியைப் பாங்காகவேதொழுதும்
இந்தவொருசேதிதன்னை எடுத்துமிகக்கூறுவதே
காரியமென்றெலவோ யென்மார்கள் தேவரப்போ
அமராபதியோனும் அம்மொழிக்குச் சம்மதித்து

தேவர்களோடு தேவேந்திரனும்
பரமசிவனிடம் வந்து கூறல்.

தேவர்கள் தன்னோடு திகழாகத்தானெழுந்தும்
கயிலையங்கிரி நாடிக் கடுகெனவேதானடந்து
பரமசிவனுடையப் பரிசுத்தமானதொரு
தாமரைமலர்ப்போன்ற தாளிணைமிகத்தொழுது
தேவேந்திரன் முதலான தேவர்களெல்லோரும்
ஆதிசிவன் முன்னே யன்பாகவே துரைப்பார்
மங்கையுமையவளும் மகிழ்கின்றபாகனரே
வஞ்சகங்கொண்டுமல்லோ விஷ்ணுவும் பிரமனுமாய்
சண்டைகள் செய்வதினால் சகலர்க்கும் வருத்தமாச்சு
அவ்வருத்தந்தீர்க்கவேண்டும் ஆதிப்பரம்பொருளே
பிள்ளைக்குத்தாயன்றி பெரிய துணைவேறுமுண்டோ
அன்னையில்லாதுவேறு யாதரிப்பாறுமுண்டோ
உருண்டுகொண்டுப்போகின்ற வண்டியின் சக்கரம் போல்
அஞ்சானம்பொருந்திய யப்பிரப்பிரப்பையுமே
மாறிமாறிப்பிறந்து வருத்தமனுபவியாமல்
மோட்சமதனைப்பெற யுனக்கடுமையாய்புகுந்து
ஆனவுன துடைய யளவில்லாக்கிருபையுற்ற
கடலில்குளித்தலவோ களித்தடைக்கலமானோம்
அளவற்றப்புழுக்களுமே யடைவாகத் தான் சேர்ந்து
குடைத்துக்கொண்டிருக்கின்ற கூறாமுடல் பாரத்தைப்
பொறுக்கமுடியாத புழுக்காகியேவிளங்கும்
அஞ்ஞானந்தானோட யருள்புரியுந் திருவே
கிருபைப்புரிகின்றக் கீர்த்தியுளப்பரம்பொருளே
பெறியசமுத்திரத்தில் போயிமுழுகினாலும்
போகாதமும்மலமாம் பொருந்துமழுக்கையுமே
போக்கடிக்குமுந்தன் திருப் பொன்னடியாம்சேர்ந்தோம்
இனிமேலுமெங்களுக்கு யாலோசனைவேறுமில்லை
அனுக்கிரகஞ்செய்யவேண்டு மாதிபரஞ்சுடரே
என்றெல்லோதேவர்களு மெழிலாய்தோத்திரஞ்செய்ய
அப்போதுபரமசிவன் யாலோசனைப்புரிந்தும்
அரியயன் தனக்குவந்த யச்சண்டைமூலமதை
தெரிந்தெல்லோபரமசிவன் திகழாகவப்பொழுது

பரமசிவன் தேவர்களுக்கு மூவருக்கும் விடைகொடுத்தல்.

நடுக்கமடைந்ததொரு நன்முனிவர் தேவர்க்கெல்லாம்
கார்ப்பேனென்றுயவர்களுக்கு கனத்தவுருதிசொல்லி
போகவிடையளித்துப் புகழாகவப்பொழுதும்
தேவர் முனிவர்பயம் தன்னையொழித்திடவும்
விஷ்ணுக்கும் பிரமனுக்கும் வந்தபகையொழித்திடவும்
அடுக்குக்குலையாமல் அண்டமிருந்திடவும்
கிருபையதுச்செய்யவெண்ணி கீர்த்தியுடனப்பொழுது
தடுத்தாட்கொள்வதற்கு தயவதுதான் துடர்ந்து
அக்கினிசொரூபத்தோடு யளவாகக்கூடியதோர்
மலையாகிப்பரமசிவன் மகிட்சியுடனப்பொழுது
இவ்விருவர் தங்களையும் எழிலாகத் தடுக்கும்படி
எழுந்தருளினாருமப்போ ஈஸ்வரனார் மனது கூர்ந்து
அம்மலையினபிரதாபம் அரியவே சொல்லுவேன்கேள்
பாதாளலோகமுள்ளப் பாம்புகளானதெல்லாம்
அம்மலை தனக்குசல்லி வேராகத்தோன்றினவாம்
அதின்கீழ்பருத்தவேரும் யடைவாகத்தானோடி
பூமிப் பெருதாகப் புகழாகதான்கிளைத்தும்
தேவலோகங்களெல்லாந் திகழாகத்தான் தாண்டி
பிரமலோகமுகட்டைப் புகுந்துமிகவுடைத்து
அண்டகடாகவெளி யடவாகத்தான்கடந்து
அப்பாலிருக்கின்ற யப்பெரும் வெளிக்குமேலாய்
இருக்கின்றயிடத்திற்கு மெழிலாக யூடுரிவி
அக்கினி சொரூபமுள்ள யானமகமேருவிற்கு
அடுத்ததென்றுச்சொல்லும்படியடவாய்வளர்ந்ததுவே
நெடுந்தூரங்கிரணங்களை நேராகவீசுகின்ற
சூரியன் தன்னுடைய தேரினிற்கட்டியதோர்
குதிரைகள் சஞ்சரிக்கக் கூடாதவுலகமெல்லாம்
ஓடிக்கிளைத்ததொரு நீலமணியைப்போலும்
இருளையுமோட்டுதற்கு ஏற்றிவைத்த விளக்கைப்போல்
புகழாக நின்றெலவோ பிரகாசிப்பதினாலும்
இயம்பும்படியான யேழுசமுத்திரத்தும்
வடவாமுகாக்கினியும் வாகாய்ப்பரந்தாப்போலும்
சிவப்பு நிரம்பொருந்தி சமுத்திரங்களிருந்தனவாம்
சத்தகுலப்பர்வதங்கள் சதுராகத்தானுமல்லோ
இந்தப்பிரகாசத்தினால் யிருந்தனவாம்சிவப்பாக

அக்கினிமலையைக்கண்டு பிர்மா விஷ்ணு
அடிமுடிகாண சம்மதப்படுதல்

ஆச்சரியமாகவல்லோ ஆகாயப்பரியந்தமும்
அக்கினிசுரூபமா யம்மலையிருக்கக்கண்டு
பிரமனும் விஷ்ணுவப்போ பயப்பட் டொதிங்கி நின்று
என்னென்றுவப்பொழுது யியம்புவாரிருவர்களும்
ஞானக்கண்ணுடையவர்கள் காணுவதில்லாமல்
ஈனக்கண்ணுடையவர்கள் காணவரிதாகும்
நம்முடையப்பரமசிவன் னறிவு சொரூபமென்றும்
கண்களுக்குயெட்டாத தூரம்வளர்ந்தோங்கும்
இயம்பமுடியாத யிம்மலையைத்தான் பார்த்தும்
துன்பமுடையவராய்த் தானந் தயிருவர்களும்
அடியாவதுயலது முடியாவதுகேளும்
அரிந்துவருபவரே யவரேபெரியோரென்று
ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டுயிருக்கையிலே
அப்போதுத்தானுமல்லோ சர்ப்பசயனனறும்
ஸ்ரீமகாவிஷ்ணுவவர் சிந்தை கூர்ந்துயே துரைப்பார்
இந்தமலையடியை யானறிந்துவாரேனென்றார்
அப்போதுபிரமதேவன் அடவாகயே துரைப்பான்
இந்த மலையின்முடி யானறிந்துவாரேனென்றான்
இப்படிக்காகவல்லோ யிருவருஞ்சபதமிட்டு
விஷ்ணுவவர்வராகமதாய் விளங்கவே வடிவெடுத்தார்
அயனவன் அன்னபட்சி யாகவடிவெடுத்தான்
இருவரும்வடிவெடுத்து எழிலாகவப்பொழுது
ஆதிசேஷன் தாங்குகின்ற அடவாகும்பூமி தன்னை
அறைநொடிக்குள்ளாக ஆயிரங்காதந்துளைத்தும்
விஷ்ணுவுந்தானுமல்லோ விரைவாகத் தான்போனார்
அரைக்ஷணத்திற்குள்ளாக ஆயிரங்காதம்பரந்து
அயனுமேயாகாயம் ஆவலோடுப்போனான்

விஷ்ணு பூமியைத் துளைத்துக்கொண்டு போகுதல்.

இப்படிக்காகவல்லோ யிருவரும் போகையிலே
விஷ்ணுவர்க்கீழாக விளங்கவேபோகின்றது
எப்படிக்காகவல்லோ யிருந்ததென்றால்கேளும்
அம்மலை தங்கமய ராட்டணப் பூட்டைப்போலும்
அதிலிரைக்கக்கட்டியதோர் நீலரத்தினதொட்டிபோலும்
முத்திழைத்தத்தோண்டிபோலுஞ் சுத்தமுடனிருந்தனவாம்
வராகவடிவெடுத்த வைகுந்தவாசகரும்
கீழேழுலோகமதைக் கிண்டித்துளைத்துச்சென்று
மாவலிசக்கிரவர்த்தி காவலிலேயிருக்கின்ற
போகவதிபட்டணத்தைப் புகழாகத்தான் தாண்டி
அப்புரம் போகையிலே அறியவே சொல்குரேன்கேள்
தேவர்கள் தான்வணங்கும் பிரமசொரூபமுள்ள
ஆடைகேசுரமதை யன்பாகத்தானுங்கண்டு
கையாலுஞ்சிரத்தாலுங் களிப்புடனேவணங்கி
முன்னமேமூன் றுலகை முசியாதளந்தவரும்
ஏழுலகந்தானளந்து யீசனடிக்காணாதானார்
இப்படிக்குத்தேடுகின்ற யெழிலானக்காலமதில்
வளர்பிரைப்போல் நாளுக்கு நாள் வளற்சியுற்ற கொம்பிரண்டும்
தேய்ப்பிரைப்போல் குறைந்து தேய்ந்துமயங்கினவாம்
அப்போதுவிஷ்ணுவவர் யாராத் துயரங்கொண்டும்
நூறுவருஷகாலந் தேடியுங்காணாமல்
பின்பு தெளிவுவந்து பெருமாளுமாலோசித்து
சிவனுடையச்செயலென்று சித்தத்திலே நினைத்து
அன்பாகவப்பொழுது அரனாரைத் தியானஞ்செய்து
இளைப்பும் சலிப்புமது யில்லாமற்ரானீங்கி
கீழேழுலகமதைக் கடந்துப்பூலோகம்வந்து
அக்கினி மலையடியில் அன்பாகவந்து நின்று
என்னயோசனையது எம்பெருமாள் செய்யலுற்றார்
அயனிந்தமலைமுடியை யறியவேதான்மாட்டான்
என்று நிட்சயஞ்செய்து யெழில்மாலளந்தவரும்
பரமசிவன் தனையும் பலதரம்வந்தனஞ்செய்து
உளமதுத்தானுருகிப் பரவினார்விஷ்ணுமவர்

ஆகாயமேகின பிரமனுடையக் கதை கூறுதல்.

இந்தப்பிரகாரம் இங்கிருக்க விஷ்ணுவவர்
அக்கினி மலைமுடியை யறிவனென்று முன்னமேதான்
அன்னபட்சி ரூபெடுத்து ஆகாயம் போனபிரமன்
அரைக்ஷணத்திலாயிரங் காதவழியாய் பறந்தும்
அண்டகோள மதனை யடவாகத் தான்கிழித்து
நூறாயிர வருஷம் தேடியே மனதுவேர்த்து
எத்தனை நூறாயிரங் காதவழிப் போய்ப்பார்த்தாலும்
முதல்பார்த்தவை போலவே முற்றுமிருக்கக் கண்டு
அன்னமாய்ப் போனபிரமன் அகமது தான்வேர்த்து
உற்ற சிறகனைத்தும் வொடிந்துமிகப் போயின
விசையுமடங்கியல்லோ வேர்த்து முகம்வாடி
பெருகிய துக்கமொடுப் பெருமூச்சுத் தானும் விட்டு
மனக்குறையைச் சொல்வதற்கு மங்கொருவரில்லாமல்
ஒண்டி வொருவனாக நின்று பிரமனப் பொழுதும்
சிலவற்றை மனதிலெண்ணி சிந்தைமிகக் கலங்கி
அக்கினி மலையடியை யறிந்திருப்பானோவிஷ்ணுவும்
தேடி போய்கொஞ்சந்தூரம் திரும்பிவந்திருப்பானோ
யென்னமோவறியேனென்று ஏங்கி மனம்வாடி
தீயிலிட்டமெழுகதுபோல் தியங்கிபிரமனே துரைப்பான்
இம்மலையைச் சிவனென்று யானறியாமற்போனேன்
பகைத்துக்கொண்டவிஷ்ணுவையு முறவுகொள்ளாமற் போனேன்
என்னுடைய சிறியபுத்தி யியம்பியதனாலையோ
பூர்வத்தில் நான் செய்த பாவமதனாலையோ
விளைந்தது வென்றுரைத்து விசனங்கள் தானடைந்தும்
எண்ணாதுமெண்ணியல்லோ பிரமனு மேதுரைப்பான்
இத்தனைத் தூரமது யேகியே தேடிவந்தும்
முடியையறியாமல் முனையுங் குலையலானேன்
விஷ்ணுவின் தன்னிடத்தில் விளங்கவே சென்றுமிப்போ
பார்த்தேனென்று பொய் சொன்னால் பக்க துணையுமில்லை
என்று விசனமிட்டு ஏங்கியயன் நிற்கையிலே
அந்தச் சமயமதில் ஆகாயந் தனிலிருந்து
தாழமடலொன்றுத் தவறியிறங்கப்பார்த்தான்
அப்போது பிரமதேவன் அதிகசந்தோஷமாகி
இந்த நல்லத் தாழமடல் எங்கிருந்து வருகுதென்று
ஆலோசிக்குமுன்னே அந்தவோர்தாழமடல்
பிரமனுக்குச் சமீபமாக புகழாகத்தானும்வர
அப்போதயனாரும் அதனைக்கையால் பிடித்தான்
பிடித்தவுடன் தாழம்பூ பிரமனிடமேதுரைக்கும்
சிவனுடையச் சிரமதனில் சீராக நானிருந்தும்
தவறிவிழுந்தெலவோ தடமாடிமெய்சோர்ந்து
வருத்தப்பட்டு யான்வாரேன் மடக்கியென்னை பிடிப்பதென்ன
சீக்கிரத்திலென்னைவிடும் செல்லவேணு மென்றுரைக்க
அம்மொழியைக்கேட்டு அயனவனு மேதுரைப்பான்
அழகானத் தாழம்பூவே யரையுமென் மொழிகேளும்
எங்கிருந்து யிங்குவந்தாய் எனக்கறியவுரையுமென்றார்
அந்தமொழி கேட்டு அழகானத் தாழம்பூவும்
அயனாரைநோக்கியல்லோ அப்போது யேதுரைக்கும்
அரியயன் காணாத ஆதிசிவன் முடிமேல்
பிரியமுடன் வீற்றிருக்கும் புகழான தாழம்பூயான்
தவறிவிழுந்தலவோ தான்வாரேன் நானுமிப்போ
கொன்றைமாலையணிந்த சுவாமிமுடிமேலிருந்தும்
நானுந்தவறி விழுந்து நாற்பதினாயிர வருஷம்
காணவேகாலமது கடந்தல்லோ யிங்குவந்தேன்
இன்னமும்பூமியை நான் எழிலாகக் காணவில்லை
அதிகவருத்தத்தோடு யானும் வருகின்றேனிப்போ
என்னைப்பிடிக்க வேண்டா மிட்சணமேவிட்டு விடும்
என்றல்லோ தாழம்பூவும் யியம்பிடவே யப்பொழுது
கேட்டல்லோ பிரமனவன் கீர்த்தியுட னப்பொழுது
சுவாமியைத் தேடுவதை தானுமவன் வெறுத்தும்
சித்தமுடனப் பொழுது சிலவார்த்தை யேதுரைப்பான்
எந்தன் சமீபமதில் எழிலாகவந்தபூவே
என்யெண்ணம் முடியும்படி எனக்குத் துணை யாயிருந்து
இன்னமு நான் தேடி ஏங்கியலையாமல்
எந்தன் வருத்தந்தன்னை எழிலாக நீக்கினால் நீ
உன்னைப்போல்வுயிர்போன்ற வுறவு துணைவேறில்லை
அன்னிய னுநானல்ல அன்னபட்சியுமல்ல
என்பெயரோபிரமன் எழிலாக நீயறிவாய்
நானும்விஷ்ணுவுங்கூடி நண்ணியேசபதமிட்டு
அக்கினிமலையினுட அடிமுடியைக்காணவென்றும்
இந்தமலையளவை யறிந்துகொள்ள வெண்ணியும்
பூமியைத் தேடிக்கொண்டு போனானே விஷ்ணுவுந்தான்
பாவியாகிய யானும் பாரமலை முடியை
காண வெகுகாலம் கருதியே தேடியுமே
இன்னமுங் காணாமல் ஏங்கித்தவிக்கு றேனான்
ஆதியோடந்தமாக யறியவே நீயும் நன்றாய்
நடந்த செய்தியிதுதான் நலமுள்ள தாழம்பூவே
அதைக்குறித்துப் பேசுவதா லாவது வொன்றுமில்லை
பெருமை பொருந்தியவுன் புகழான நல்வரவால்
நினைத்த காரியமுடிந்தால் நேராகுமெந்தனுக்கு
அரிய பூமியளந்த யந்தநல்ல விஷ்ணுவுடன்
பகையதுக கொண்டெலவோ பறவையு ருவெடுத்து
இந்தநல்ல பிரமதேவன் யெழிலாக வேபறந்து
சிவனுடைய முடியறிந்து சிறப்புடன் வந்தானென்று
எந்தனுக்கு நீசாக்ஷி எடுத்துவுரைக்கவேண்டும்
என்றுரைத்துப்பிரமதேவ னின்னமு மேது சொல்வான்
கேளாவோய் தாழம்பூ கீர்த்தியுள்ள யிம்மொழியை
வஞ்சனைத் தொழிலென்று வைத்து நீதள்ளாதே
யாதோவொரு துன்பமடைந்தவர்க்கு சொல்லுவன் கேள்
உயிர்ச்சேதம் வருமானால் வுகந்தல்லோ யவர்களுக்கு
அதை தப்பிவைக்கும்படி யானதோர்முயற்சியுடன்
பெரிதான பொய்யதனை பேசாமற் றானுமேதான்
பயப்பட்டு வோர்வார்த்தை பழியாகச் சொல்வதெல்லாம்
வளமாக யான்சொன்ன வார்த்தைக்கோர் பயமுமில்லை
அன்பன் சினேகன்வார்த்தை யடவாய்விரும்பினவர்
விஷத்தையு மீந்தாலும் விரும்பித்தின்ன யிசைவார்
பரமசிவன் முடியில் பரிவாக வாழுகின்ற
அழகான தாழம்பூவே யறையுமென் மொழியை நம்பு
வேறொரு யாலோசனை எண்ணங்கள் செய்யவேண்டாம்
இதற்குடன்பட்டு நீயும் யியம்புவாயென்று சொல்ல
அம்மொழி தான்கேட்டு அழகான தாழம்பூவும்
அயனுடைய வார்த்தைக்கு அடவாகத் தானிசைந்து
ஆகாயந்தன்னை விட்டு அதிசீக்கிரமாக வப்போ
பிரமனும் பூவுமாகப் பூமியிலேயிறங்கி
விஷ்ணுவிடமாக வேந்தனும் வந்துசேர்ந்தான்

விஷ்ணுவினிடம் பிரமன்வந்து
பரமசிவன் முடியைக் கண்டேனெனக்கூறல்.

சேர்ந்தெல்லோபிரமனுமே சேதியதுயேது சொல்வான்
விஷ்ணுவே யென்னுடைய விளங்கும் நல்வரவைக்கேளும்
நூறாயிரங்காதம் நொடியிலே யான்பறந்தும்
எல்லோர்க்கு மாதியான யீசனுட முடியை
பரிவாக நானுமிப்போ பார்த்துவந்தே னென்றுரைத்தான்
அருகிருந்த தாழம்பூவும் அடவாகயே துரைக்கும்
அயனுமேயரன் முடியை யறிந்துவந்தது நிசந்தான்
பக்கத்தில் நானிருந்து பார்த்துவந்தே னென்றுரைக்க
அயனாருஞ் சந்தோஷித்து அன்பாக நிற்கையிலே
அக்கினி மலையதுவும் அட்சணத்தில்தானுமல்லோ
பாரயிடிபோலே படீலென்றுமேவெடிக்க
வெடித்ததோர் சத்தத்தாலே ஈரேழுலகிலுள்ள
தேவர்களும் ராட்சதரும் திடுக்கிட்டு வுயர்சோர்ந்தார்
திக்கிலுள்ளயானைகளும் ரத்தங்களைக் கக்கினவாம்
வானத்துப்பிரகாசம் வழிந்துமழங்கினவாம்
முருக்கம்பூயிதழதுவும் கறுக்கும்படியாகவும்
சிவந்த நிறமானச் சிவபிரான் தன்னொளியும்
விபூதியினாலுமப்பேர் வெளுத்துமே தோன்றினவாம்
அக்கினிமலைவெடிப்பில் அரனாருந்தானும் நின்று
விந்தையுடனுமல்லோ விளங்கவேயெழுந்தருளி
நின்றதோர் சிவபெருமான் நிலைமைவுளயவர் முகத்தில்
முப்புரத்தை எரித்தநகை செப்பமுடன் தோன்றினவாம்

பரமசிவன் பிரமனைநோக்கிக் கேட்குதல்.

இப்படிக்காகவல்லோ யீசரவரெழுந்தருளி
பிரமனைநோக்கியல்லோ பரமசிவனே துரைப்பார்
அயனேகேளுன் னுடைய அகங்காரந்தன்னாலே
சொன்னமொழியுமது நன்றாயிருக்கின்றது
என்று சொல்லிப்பரமசிவன் எழிலா நகைத்தபோது
அண்டபகிரெண்டங்களும் அடவாகத்தானுமப்போ
கிடுகிடுவென்றெலவோ கீழ்மேலும் நடுங்கினவாம்
உலகமுழுதுமல்லோ வொடிங்கியேபோயினவாம்
சூரியர் சந்திரரிட மொளியுமழுங்கினவாம்
மேகங்களேழுமல்லோ யோடிமறைந்தனவாம்
சிறந்து நிலையாக யிருக்கின்றவைகளெல்லாம்
இறந்தும டிந்தெலவோ மிதமாறிப் போயினவாம்
நிறைந்தவ கைகளெல்லாங் குறைந்துமேபோயினவாம்
குறைந்தவ கைகளெல்லாம் நிறைந்து விளங்கினவாம்
திரைகூட்டமானதொரு திக்குகளலைந்தனவாம்
காணும்மரங் களெல்லாங் கருந்தெரிந்துப்போயினவாம்
அப்போது தேவரெல்லாம் அடவாக யேது சொல்வார்
இன்றே பிரமதேவன் ஈடழிந்துப் போனானென்றும்
பூமிபள்ள மாகும்படி புஷ்பங்களைப் பொழிந்தார்
அப்போதுவிஷ்ணுவிற்கு அதிகசந்தோஷமாச்சு
பிரமனுக்குமுன்னிருந்த ஆங்காரமானவிருள்
அப்போதுத் தானுமல்லோ அடவாக நீங்கிப்போச்சு
தெளிவைய டைந்திருந்தத் திருமாலுந்தானுமப்போ
அக்கினிம லையினிட யருகாகத் தானிருந்தும்
எழுந்தருளித் தானுமல்லோ மிதமாகவப் பொழுதும்
பரமசிவந் தனையும் பாடிவந்தனஞ் செய்தார்
பரவசங் கொண்டெலவோ பாரளந்தோன் தானுமப்போ
நாலுதிக் குமோடி நலமாகக் கூத்தாடியும்
அரியவே யாவராலும் அளவிடக் கூடாதயிந்த
சுவாமியைக் கண்டேனென்று தாமவருஞ் சந்தோஷித்து
என்னவரங் கேட்போ மெம்பெருமாள் தானுமப்போ
அடவாகத் தானுமல்லோ ஆலோசனைகள் செய்தார்
இப்படிக் காகவல்லோ யிருந்துமே விஷ்ணுவவர்
மிகுந்தபத் தியினாலே மெய்யதுத் தானுருகி
இருக்குமடு மைதிரத்தை யீஸ்வரனார் தாமறிந்து
கேட்டவரங் களெல்லாங் கிருபையுடன் தானளித்து
அன்பாக விஷ்ணுவிற்ரு அனுக்கிரகஞ் செய்தபின்பு
பிரமனுமப் பொழுதுப் புகழாகவரங் கேட்க
அப்போது பரமனுக்கு அதிககோ பந்தானாகி
பிரமனைப் பார்த்தெலவோ பரமசிவனே துரைப்பார்
ஆங்காரங்கொண்டெல்லோ அயனே நீ பொய் சொன்னாய்
இன்று முதலுந்தனுக்கு யெழிலானவுலகமதில்
கோவிலுமில்லாமல் கோரும்பூசையில்லாமல்
போகக்கடவது மல்லாமலின்னமுங்கேள்
பூலோகந்தன்னிலே பிராமணனாய் நீ பிறந்து
புலச்சித்தனைச்சேர்ந்து பிள்ளைகளேழும் பெற்று
கானகத்திலேயெழுந்து களிப்புடன்வந்தையானால்
எப்போதும்போலுனக்கு யளிப்பேன் பிரமபட்டம்
என்றெல்லோபிரமனுக்கு எழில்சாபமிட்டு பின்பு
தாழம்பூதனையழைத்து தர்ப்பரனாரே துரைப்பார்
பிரமனோடு நீசேர்ந்துப் பொய்யதுச் சொன்னதினால்
பயமில்லாப் பொய்சாட்சி பதறியுரைத்ததினால்
இன்றுமுதலுந்தனையான் யெடுத்துமேதான் தீண்டே
காசினியிலேபிறந்துக் கழுதை புட்டை யாய்ப்போவாய்
என்றெல்லோசாபமது மிட்டாரேதாழம்படற்கு

பிரமதேவன் சுவாமியைத் தோத்தரித்தல்.

அரனாரின் கோபமதை யறிந்தல்லோ பிரமதேவன்
ஏக்கமது கொண்டு யேங்கிமனங்கலங்கி
பிரமனுட தேகமதுப் பூமியிலேதான்படிய
வாகாகத்தான் விழுந்து வந்தனங்கள் செய்துமப்போ
அரனாரைத் தோத்திரங்கள் அன்பாக செய்யலுற்றான்
நீரதுமுடிய நெருப்பையொத்த சுவாமியேநீர்
சண்டாளத் தத்துவங்கள் சதியாக வேபூண்டும்
ஆணவமென்கின்ற அசடானச் செடிமூடி
அவிவிவேகங் கொண்டிருக்கு மடியேனொரு பொருட்டோ
உரிமையுடையவரே யுத்தமரே யுமாபதியே
அகண்டவெளி யானவரே அன்பர்க் குகந்தவரே
நன்றாய்த் தெளிவருளும் நான்குவேதமானவரே
நான்குவேதத்தினிட யந்தரங்க மானவரே
ஓதவேசகலமும் ஒப்பற்ற முதலானவரே
குழந்தையாகிய யென்மேல் கோபிக்கவேண் டாஞ்சுவாமி
எல்லா நதிகள் நீரும் யேகியொன் றாய்க்கலந்து
ஏழுசமுத்திரமும் யேகமாய்த் தான்காய்ந்து
வென்னீராய்ச் சுட்டாக்கால் யாற்றவோர் சலமுமுண்டோ
உமக்கேயிப் படிப்பட்ட யுற்றதோர் கோபம்வந்தால்
வாழுஞ்சீவராசிகள் வையகத்திலெவ்வார் பிழைக்கும்
அலைகடலிலே பிறந்த ஆலகால விஷத்தை
அள்ளியுண்ட மூர்த்தியே அடியேன்மே லிப்பொழுது
கொடுமையா யென்மீது கோபித்துக் கொள்ளாதே
மூன்றாம் பிறையாயும் பூரணச்சந் திரனாயும்
பெண்ணாவு மாணாவும் புஷ்பமாயுந் தேனாயும்
மலையாயும் மகமேராயும் மாதவப் பொருளாயும்
கிருபாவிருட் சத்தைப்போல் கீர்த்தி பொழிகின்ற
மேலாகத்தான் மொழியும் மேகங்கள் தானாயும்
நவிலுகின்ற சொல்லாயும் நாகமதுவாகியும்
மற்றும் நானாவிதமாய் மருவும் ரூபமாகியும்
இருக்கின்ற மூர்த்தியே யுமக்குமுறையோ முறையோ
என்னைக்கோ பிக்கவேண்டாம் அடியேனை சபிக்கவேண்டாம்
மிகுந்ததோர்வெட்பமதை மேலாகக்கொடுக்கின்ற
புஷ்பபாணங்களையும் புகழாகத்தானுடைய
மன்மதன்போலொத்த தேகமிது வல்லவே
தாருகாவனத் துரிஷி தான்விடயியம் பினதோர்
கலையுமாரு போன்ற மத்தகத்தை யுமுடைய
கோபமாகியபெருங் குஞ்சரமு மல்லவே
அந்தரிஷிகள் விட்ட யருஞ்சிகப்புக் கிளியலவே
கொலைசெய்யுந் தொழிலுடைய கூற்றுவ னுமலவே
தீம்பாக நின்றதொரு திரிபுரமுந் தானலவே
எவ்வளவு உமக்கு நான் ஈசாகோபஞ்செய்யவேண்டாம்
யாவராலுமறியாத யன்பானவுன் முடியை
அறிகிறே னென்றபோதே யானேன் பரவையுரு
சிக்கிய துக்கமுடன் சிறுமையுந் தானடைந்த
என்மீதில் கிருபைசெய்யும் யீசாவென் றேயுரைத்து
விசனப்பட்டு வயனும் வேண்டித்து திக்கையிலே

சிவபெருமான் பிரமதேவனை அனுக்கிரகித்தல்:

அப்போது பரமசிவன் யருள்கூர்ந்து மனங்குளிர்ந்து
சந்தோஷந் தானாகிச் சதுர்முகனுக் கேதுரைப்பார்
கேளாய்வோய் பிரமனே கீர்த்தியுள்ள யென்மொழியை
இனிமேல் நீபயப்படாதே எழிலாக சொல்வதைக்கேள்
பூமியில் பிராமணர்க்கு புகழாச்செய் யும்பூசை
உன்பூசை யாகக்கொண்டு யுளமது தான்களித்து
பாப்பானாய் நீபிறந்து பரச்சித்தனைச் சேர்ந்து
ஏழுபிள்ளைகள் பெற்று எறிந்துவிட்டு கானகத்தில்
என்னை நினைந்தையானால் யெழிலாக வந்துனக்கு
காட்சி கொடுக்கின்றேன் களிப்பாக யதின் பின்பு
எப்போதும்போலே நீயெழில் பிரமயுல கையாண்டு
ஏழுலக மதனை எப்போதும் போல்படையும்
என்றெல்லோ யீச்வரனார் யெழிலாக வருளிச்செய்தார்
அப்போது அயன்நாவில் அன்பாகத்தான் விளங்கும்
சரஸ்வதியாள் தானுமல்லோ சடுக்கென்று தான்குதித்து
பூமியிலே தானிறங்கி பரமனையுந் தோத்தரித்து
கிளிபோன்ற வாய்திறந்துக் கீர்த்தியுட னதுகேட்பாள்
அயனார் வருமளவும் யானெங்கு வீற்றிருப்பேன்
எனக்கருள் செய்யுமென்று யீஸ்வரனைக் கேட்கையிலே
கேட்டல்லோ பரமசிவன் கலைவாணிக் கேதுரைப்பார்
அயனுடைய நாவினிலே யமர்ந்துமே நீயிருந்து
பொய்யையு ரைத்ததினால் புகலுவேன் சாபமுந்தான்
பூலோகந் தன்னிலேநீ புலச்சியாய் நீபிறந்தும்
பாப்பானை நீபுணர்ந்து பாலரேழும்பெற்றெடுத்து
கானகத்தி லெறிந்துவிட்டு களிப்புட னெனைநினைந்தால்
எப்போதும் போலாக யெழில்மறை பிரமனுக்கு
பாரியாளா கியல்லோ பட்சமுடன் வாழ்ந்திருப்பாய்
என்றெல்லோ யீஸ்வரனார் மிதமாகத் தானுரைத்து
அனைவருக்கும்விடையதுவும் அரனாருந்தான் கொடுத்து
அப்பால் நடக்குங்கதை யறைகுவேன் மார்க்கண்டரே

பரமசிவனுரைத்தவண்ணம் அவரவர்கள் யேகுதல்.

மாயன் பெருமாளும் மகிழ்ச்சியுட னப்பொழுது
வட்டமாங் கெருடனேறி வைகுந்தம் போய்ச்சேர்ந்தார்
அரனிட்ட சாபப்படி அயனாருஞ் சரஸ்வதியும்
பூலோகந் தன்னிலேயும் புகழாகத் தானும்வந்து
அயனாரு மப்பொழுது அன்பாகத் தானுமல்லோ
புத்தூர் அக்கிராரமதில் புகழாகத் தான்விளங்கும்
பேராழிமுனி யென்னும் பிராமணனார் தன்மனைவி
சேஷியென் னுமாது சிறந்ததோர் கெர்ப்பமதில்
அயனாரும்போயலவோ யடவாகத்தான் தரித்து
பத்துமாத முஞ்சென்று பரிவாகத் தானுமல்லோ
சேஷியெனு மாதுச் செல்வனையு மீன்றெடுத்தாள்
அப்போது பேராழி முனிவன்சந் தோஷமாகி
அன்பாகப் பாலனுக்கு பட்சமுட னப்பொழுதும்
பகவனென் னும்பேரும் பரிவாகத் தானுமிட்டு
ஜாதகங்க ளெழுதியல்லோ சதுருடன் பார்க்கையிலே
பதினாறு வயதினிலே பாலன்யி வன்தானும்
புலச்சியைச் சேருவதாய்ப் பலனதுத் தானிருக்க
கண்டல்லோபேராழி முனிகலங்கி மனம்வாடி
தவமாதவ மிருந்துத் தான்பெற்ற பாலனுக்கு
இப்படிக்கும் விதியும் யெழுதினானோ பிரமனென்று
எண்ணாது மெண்ணியவன் யேங்கி மனம்வாடி
சேஷியந்த மனையாளை சீக்கிரமாய்த் தானழைத்து
பாலனுடப் பலனைப் பரிவாகத் தானுரைத்தும்
மனையாளு டனேயப்போ மருமமாயே துரைப்பான்
இந்தநல்ல பாவமொழி யெழிலாகவிப் பொழுதும்
காசியாத்தி ரைக்குநான் கனமுடன் போய்வாரேன்
மைந்தனைவைத்து மகிழ்ச்சியுட நீயிருந்து
வாகாகவுறு திசொல்லி விடைகளது பெற்றுக்கொண்டு
பேராழிமுனி யவனும் போனானே காசியாத்திரை
சேஷியந்தப் பாலகனைச் சீராட்டிவளர்த் துவாராள்
இப்படி பகவனுமே எழிலாயிங்கு வளர
வாணியந்த சரஸ்வதி வாகாகவப் பொழுதும்
பாண்டியன் தேசமதில் பரிவாகத்தான் விளங்கும்
சித்தூரு சேரியிலே சிறப்புற்றுத் தான்வாழும்
வேம்பாந் தோட்டிமனைவி வேதியவள் தன்வயற்றில்
சரஸ்வதியாள் தானுமல்லோ சதுராகப் போய்ப்பிறந்து
ஆதியெனும் பேர்வகுத்து அங்கவள் வளர்ந்துவாராள்
இப்படிக்கா கவல்லோ யிருக்கின்ற நாளையிலே
பாலநந்த பகவனையும் பள்ளிக்கூடத் தில்வைத்து
பரிவாகக் கலைகள்யாவும் படித்துவ ருகையிலே
அப்போதொ ருநாளு மந்தப்பள்ளிக் கூடத்தில்
தகப்பனில்லாப் பிள்ளையென்று தலையில டித்தார்கள்
அப்போது பகவனுக்கு ஆயாசந் தானாகியும்
தாயாரிடத் தில்வந்துத் தனஞ்சய னேதுகேட்பான்
என்னுடைய தகப்பனெங்கே நீசொல்லு மென்றான்
அப்போது சேஷியரும் அருஞ்சுதனுக் கேதுரைப்பாள்
பாலாநீ பிறந்தபலன் பஞ்சாங்கம் பார்க்கையிலே
பதினாறு வயதில்நீயும் பரச்சியைச் சேருவதால்
ஜாதகத்தில் தானிருக்கக் கண்டல்லோ வுந்தன்தந்தை
இப்பாவந் தானொழிய எழில்காசித் தனக்குச்சென்றார்
என்றுமே தாயாரும் எடுத்துவு ரைக்கையிலே
மைந்தனந்த பகவன்கேட்டு மனமது மிகவாடி
அம்மணி யிப்பாவ மகலவே யானுமிப்போ
தந்தைபோன காசிக்குத் தான்போயி வாரேனென்ன
அந்தமொழி கேட்டு அன்னையந்த சேஷியவள்
போகவேண்டா மென்று புத்திசொல்லி மிகதடுத்தும்
சற்றுமவன் கேளாமல் சதுர்முகனாம் பகவனவன்
காசிப்பதி தேடிக் கடுக நடக்கையிலே
காணவே வழியிலுள்ளக் காடுசெடி தாண்டி
கானாறு மடுதாண்டிக் களிப்புடன் வருகையிலே
பாண்டிய தேசமதைப் பரிவாகத் தானடுத்தும்
வடிவாகப் பகவனுமே வருகின்ற வப்பொழுது
அரசநந்தப் பாண்டியனும் அன்பாயி வனைக்கண்டு
சேவகரை விட்டலவோ சித்தமுட னழையுமென்ன
அப்படியே சேவகர்கள் அடவாக வோடிவந்து
பகவனை யழைத்துச்சென்று பாண்டியனருகில் விட்டார்
பாண்டியனு மப்பொழுது பகவனையு மேதுகேட்பார்
எங்கிருந்து யெங்குபோய் எனக்கறியக் கூறுமென்றார்
அம்மொழி பகவன்கேட்டு அரசனிடமே துரைப்பான்
பதினாரு வயதிலேநான் பரச்சியைச் சேருவதாய்
ஜாதக மெந்தனுக்குச் சதியாக நேர்ந்ததினால்
அப்பாவந் தானொழிய அருள்காசி போரேனென்ன
அம்மொழித் தான்கேட்டு அரசனந்தப் பாண்டியனும்
பகவனை நோக்கியல்லோ பண்பாகயே துரைப்பான்
பாலவய துனக்குப் பதினாறாய் தோன்றுகுது
இந்த வயதினிலே எழில்காசிப் போரேனென்றாய்
வாட்டை வழிதனிலே வருவாரும் போவாருண்டு
கடக்கும் வழிதனிலே கன்னியர்கள் மெத்தவுண்டு
காமமது வந்துமூடிக் கண்ணை யிருட்டிவிடும்
நேமமது தவரி நிந்தனைக்கு மாளாவாய்
ஆனப்படி யினாலே யரைகுவேன் கேள்பகவனேநீ
இந்தநல்ல மண்டபத்தி லெழிலான யாகமொன்று
பத்தியொடுத் தான்வளர்த்தி பகவானைத் தோத்தரித்து
பாவமதை விலக்கிக்கொள்ளு பகவனே யென்றுரைக்க
அம்மொழிக்குச் சம்மதிக்க அருமரை பகவனுமே
பாண்டியனு மனமகிழ்ந்து பட்சமுட னட்சணமே
சேவகரைத் தானழைத்து சித்தமுடனே துரைப்பார்
யாகத்திற் குரியதொரு சாமான்க ளுள்ளதெல்லாம்
விரைவாக கொண்டுவந்து வேள்விக்கு கொடுங்களென்ன
அரசனுரைத்த வண்ணம் அடைவாகத் தானுமப்போ
வேள்விக்கு வுண்டான விளங்கிய சாமான்கள்
கொப்பெனவே கொண்டுவந்து கூசாமல் சேவகரும்
பாகஞ்செய் மண்டபத்தி லன்பாகச் சேர்த்தார்கள்
சமித்தோடு தர்ப்பைதனை சதுராகக் கொண்டுவர
வேம்பாந் தோட்டிதன்னை விரைவாகத் தானழைத்து
உத்திரவுதா னளித்தார் வுறுதியுடன் சேவகரும்
அப்படியே நல்லதென்று அவனுந்தன் மனைக்கேகி
வீட்டுக்கோர் ஆள்களையும் விரைவாய ழைக்கவந்தார்
தன்வீட்டி லாளிலாமல் தவிக்கையிலே வேமாந்தோட்டி
ஆதியெனும் பெண்ணவளும் அப்பனிட மோடிவந்து
நம்பளிட முரையாளுக்கு நான்போரேன் பயப்படாதே
என்றுரைக்க வேம்பாந்தோட்டி யிருபுஜமும் பூரித்து
ஆதியரைக் கூட்டியல்லோ யவர்களுடன் தானனுப்ப
கூடியனை வர்களுங் கூசாமல் வார்த்தையாடி
கானகத்தை நாடியல்லோ களிப்புடனே போய்சேர்ந்து
வேள்விக்கு ரியதொரு விறகெல்லாஞ் சேகரித்து
சதுராகச் சுமைகள்கட்டி சட்டமுடன வரவர்கள்.
தலைமீதுதா னெடுத்துத் தையலந்த ஆதியுடன்
ஏலங்கள் பாடியல்லோ யிசைந்துவ ருகையிலே
காணஅந்திப் பொழுதாச்சு கதிரவனும் போய்மறைந்தான்
அந்தச்ச மையமதி லடவாகத் தானுமல்லோ
சப்தமேகங் களங்கே சதுராய் வளைத்துக்கொண்டு
காத்துயிடி மின்னலுடன் கனத்தமழை பொழிய
ஓட்டம் நடையுமாக வோடிவந்து யனைவர்களும்
அவரவர் சுமைகளையு மன்பாகவப் பொழுதும்
சேர்த்தெல்லோ மண்டபத்தில் சேரிக்குப் போனார்கள்
ஆதியென்னும் பெண்ணவளு மச்சுமையைப் போட்டு
மழைதனக்கு அஞ்சியல்லோ மண்டபத்தி லிருந்தாள்

பகவன் யாகம் வளர்த்தல்.

இப்படியா கவல்லோ யிருக்குமந்த வேளையிலே
பகவனெனும் பாப்பானும் பரிவாக வப்பொழுது
அரனாரைப் பூசைசெய்ய யாகமது வளர்த்தி
பாவங்கள் தான்துலையப் பகவானைத் தோத்தரித்து
புலச்சியைச் சேராதிருக்க பெரும்யாக மேவளர்த்தி
ஆவினுட நெய்விட்டு யரன்பூசை செய்கையிலே
யாகவெளிச் சத்திலே ஆதியெனும் பெண்ணைக்கண்டு
கடுகெனவே யோடிவந்துக் கன்னியரைத் தான்பார்த்து
இருகண்ணுந் தானிருண்டு யிவளாரோ வென்றுஎண்ணி
காமரதி தானோ கைலைவாழ் பார்வதியோ
பூமகளிவள் தானோ பூவைசந் திரமதியோ
ஆரென்றும் நானறியே யரம்பையோ வூர்வசியோ
இந்தயீசா னியத்தில் யெழிலாக நிற்கின்றவள்
என்று பகவனுமே யேந்திழைமே லிச்சைவைத்து
யாகத்தைத் தானிறுத்திப் போகத்திற் கிச்சைவைத்து
ஆதியருகினிலே யன்பாகத் தானும் வந்து
ஈரவஸ் திரமதனை ஏந்திழையைக் களையச்சொல்லி
தன்னுடைய வேட்டிதனை தையலருக்கே கொடுத்து
உடுத்திக் கொள்ளச்சொல்லி யுத்தமனு மப்பொழுது
காமவெறியாலே கன்னியரைப் போய்தழுவிக்
கட்டியணைத் தலவோ கனிவாயில் முத்தமிட்டு
மதனும்ரதி போலே மருவிசு கித்தார்கள்
காமவெறி தெளிந்து காளையந்த பகவனுமே
கன்னிமுகம் பார்த்துக் களிப்புடனே துகேட்பான்
எந்தவூரு யெந்த நாடு எங்கிருந்து யிங்குவந்தாய்
உன்னுடைய பேருமென்ன உன்தாய்தந்தை பேருமென்ன
அறியவே நீயுரைத்தால் யாம்போவோங் காசிக்கிப்போ
தெரியவே நீயுரைத்தால் தீவிரமாய்போவே னென்றான்

ஆதியும் பகவனும் தர்க்கமிடுதல்.

அந்தமொழி கேட்டு ஆதியருமே துரைப்பாள்
சாதிகுலங் கேளாமல் சரசமுடன் நீரும்வந்து
கன்னிய ரென்னைக்கூடி கலந்து சுகித்துவிட்டு
இப்போது சாதிகுலம் யெந்தனையுங் கேட்கவந்தாய்
எப்படிக்கு நானுரைப்பேன் யெழில்மரை வேதியரே
என்றுரைக்க வாதியுமே யேதுரைப்பான் பகவனப்போ
அதினாலே குற்றமில்லை யரிவையே பெண்மயிலே
எப்படிக் கிருந்தாலும் யெனக்கொரு தோஷமில்லை
உள்ளபடி நீயுமிப்போ யுரைத்தையே யாமானால்
கைகோர்த்து நாமிருவர் காசிக்கே யேகிடலாம்
பொழுது விடிந்துதானால் பாண்டியனார் தாமறிந்தால்
ஆக்கினைகள் செய்திடுவா ரறியயி ருவரையும்
சீக்கிரத்தி லுரையுமடி சேரவேகாசி போவோம்
என்றுபகவன் கேட்க யேதுரைப்பா ளாதியரும்
ஆனால் கேள்மறையவரே யறைகுறேன் என்குலத்தை
என்பேருஆதியாகும் யென் தகப்பன்பேர் வேப்பாந்தோட்டி
தாய்பேருவேதியாகுந் தையலுடக் குலமிதுதான்
என்றுரைக்கப் பகவன் கேட்டு யிடிவிழுந்த மரம்போலே
பூமியிலேவிழுந்து புரண்டழுதுயேதுரைப்பான்
பாதகியெனக் கென்றுப் பழிகாரி யெங்கிருந்தாய்
தாய்சொல்லைத் தவறியல்லோ தனிவழியே யானும்வந்து
பாண்டியனார் சொல்லைநம்பி பாவந்து லைக்க வென்று
யாகமதை வளர்த்தி யோகமுடிக் கையிலே
சண்டாளியிங்குவந்து சனியன் போல் நின்றாயே
எத்தனை நாளெனக்கென்று யிங்குகாத் திருந்தாயோ
எதிரில் நில்லாதேபோடி யென்றுமே கோபித்து
சட்டுவத்தை நோக்கியல்லோ சடுக்கென்று தானடிக்க
அந்த அடியதுவும் ஆதிநெத் தியிற்பட
இதுதான் சமையமென்று யிந்தநல்ல பகவனுமே
காசிக்குத் தானோடக் காலெடுத்து வைக்கையிலே
கண்டெல்லோ ஆதியருங் கடுகெனவே யோடிவந்து
பகவனுட மடியைப் பற்றியி ழுக்கையிலே
அப்போது பகவனுமே யகம்வேர்த்து முகம்வாடி
தலையிலே போட்டவிதி தப்பாமல் நேர்ந்ததென்று
எண்ணாது மெண்ணியல்லோ யிதமாக வேதுரைப்பான்
ஆதியெனும்பெண்மயிலே யரிவையரே சொல்கிறேன்கேள்
பாப்பான் பழிப்பொல்லாது பாதகியெனை விடுவாய்
அறியாமல் செய்தபிழை யனைத்தும் மனம்பொறுத்து
எந்தனை விட்டுவிடு யேகுறேன் காசிக்கென்ன
அந்தமொ ழிகேட்டு ஆதியாளே துரைப்பாள்
கன்னியெனை கெடுத்துக் காசிக்குப்போறேனென்றீர்
அன்னீத மிதுவல்லவோ அடுக்குமோ வையகத்தில்
சேரியிலென் னையினி சேர்ப்பாரோ வேதியரே
நாயகரே வுன்பிறகே நானும்வாரேன் காசிக்கு
என்றுமே யாதிசொல்ல ஏதுரைப்பான் பகவனுமே
பாப்பானு டனேநீ பறச்சியும்வரலாமோ
காசிமறை யவர்கள் கண்டாக்கால் கொல்வாரே
புண்ணியமாய்ப் போகுதடி போகவிடை தருவாய்
பாண்டியன றிந்தாக்கால் பழிகள்வந்து நேருமடி
என்றுரைக்க பகவனுமே யேதுசொல்வா ளாதியரும்
பழிகள் வருமென்றுப் பாராமல் சொல்லவந்தாய்
ஆதியிலே யுங்கள்குரு வானதொரு வதிஷ்டரவர்
வேசியின் புத்திரனாய் விளங்கவே தான்தோன்றி
சக்கிலிப் பெண்ணைமணம் சதுராகச் செய்யலியோ
சத்தியமு னியவனும் சுத்தமுடன் பிறக்கலையோ
சங்கையில் லாமலேதான் புங்கனூர் புலச்சிதனை
சத்திய முனியவரும் சதுராகத் தான்கூட
பராசமுனி யவரும் பரிவாகப் பிறக்கலையோ
இப்படிக்கு வுங்கள்குலம் யேடாகூட மாயிருக்க
என்னையும் மோசஞ்செய்து யேகவும் பார்க்கிறீரோ
வாருங்கள் சேரிக்கு வளமாக நாமும்போவோம்
என்றுரைத்து யாதியரும் யிழுக்கவே மடிபிடித்து
பகவனுமப் பொழுது பதில்சொல்ல முடியாமல்
இவளைத் தப்பித்துப்போக ஏதுவழி யில்லையென்று
தர்க்கங்க ளாடிக்கொண்டே தானடந்தார் காசிக்கேதான்
காசித்தெ ருக்கோடிக் கனமாகப் போனவுடன்
பகவனும் மோசஞ்செய்ய பரிவாகமன திலெண்ணி
ஆதியைத் தான்பார்த்து அன்பாக வேதுரைப்பான்
பெண்மயிலே யாதியரே பைங்கிளியே சொல்லுறேன்கேள்
காசித்தெருக் கோடிக் காணவே வந்துவிட்டோம்
பட்டணத்திற் குள்ளாக பரச்சிவரக் கூடாது
கண்டாலே வேதியர்கள் கொன்று புதைத்திடுவார்
ஆலயத்திற்குள் சென்றா லரும்பாவம் வந்துவிடும்
ஆதலாலா தியரே யப்பழி நமக்குவேண்டாம்
தெருக்கோடி மூலையிலே திகழுடனே நின்றிருநீ
அரைநொடிக்குள் யான்சென்று யாலயத்தினுட் புகுந்து
காசிவிஸ்வே சுரரைக் கண்டுதெரி சித்துவாரேன்
உன்னாணை யென்னாணை உத்தமியே விடைதாரும்
கையதுப் போட்டுத்தாரேன் கன்னியரே விடைதாரும்
என்றெல்லோ தானுரைத்து மிதமாகக் கேட்கையிலே
எண்ணறக் கற்றுமல்லோ எழுத்தரப் படித்தாலும்
பெண்புத்திப் பின்னென்றுப் பேசும்பழ மொழிப்போல்
ஆதியாள் மனதிரங்கி யளிக்கவிடை யுமப்போ
இதுதான் சமயமென்று யெண்ணி பகவனுமே
ஆதியரை விட்டெலவோ யவனுமே தானோடி
காசிவிஸ் வேசுரரைக் கண்டுதரி சித்துமல்லோ
காசிக்கு வடக்கிருக்கும் கருதும் நல்லசித்தூராம்
சித்தூரக் கிராரமதில் சேர்ந்தெல்லோ பகவனுமே
சனியன் துலைந்துதென்றும் சங்கடந் தீர்ந்ததென்றும்
ஈஸ்பரன் கிருபையினா லினிபயமில் லையென்றும்
பழிகாரியா திசள்ளை வழியில் துலைந்ததென்றும்
இனிநமக்கோர் பயமுமில்லை யென்றுமன திலெண்ணி
அப்பையர் வீட்டிலேதான் அடவாகத் தானுமல்லோ
ஒப்பிய னைவர்களும் உள்ள மிகமகிழ
ஒப்பாரிக் கொண்டெலவோ யுறுதியுடன் பகவனுமே
பிள்ளையைப் போலாக பெருமையுடன் தானுமல்லோ
அப்பையர் வீட்டிலேதா னன்புடனே வாழ்ந்திருந்தான்

ஆதி பகவன் வாராமையைக் கண்டு காசி வீதியில் புலம்பல்,

இப்படிக் காகவல்லோ யிவனுமிருக் கையிலே
அரிவைப் பசுங்கிளியாள் ஆதியருந் தானுமல்லோ
காசிமுனைத் தெருவில் கன்னியவள் நின்றுகொண்டு
அந்திப்பொ ழுதளவும் நின்றகா லுங்கடுக்க
பகவன்மேல் சிந்தையதாய் பாவையரு மிருந்து
பார்த்தகண் ணும்பூர்த்து வேர்த்து முகம்வாடி
எண்ணாது மெண்ணியல்லோ யேந்திழை யாளாதியரும்
முத்துபோல் கண்ணீரை முகமெல்லாம் சோரவிட்டு
பவழம்போல் வாய்திறந்து பத்தினியா ளப்பொழுது
ஏங்கிமன முருகி ஏந்திழையாளேது சொல்வாள்
காசிவிஸ் வேஸாயுந்தன் கபடமோ யானறியேன்
தாயேவி சாலாட்சி தர்ப்பரியே யுன்செயலோ
ஏதுமறி யாத ஏந்திழையா ளென்னையுமே
பாண்டிய தேசமதில் பரிவாகத் தானுமல்லோ
அந்தண னொருவனுமே விந்தையு டனேமாத்தி
எந்தனையுங் கெடுத்து யிட்டுகொண்டு வந்துமிப்போ
அன்னை தந்தையர்களின் ஆசையை மறக்கவைத்து
பழிகாரப் பாப்பானும் பாதகன் தானுமல்லோ
ஏதேதோ யெந்தனுக்கு யிஷ்டமுடன் தானுரைத்து
உடலிரண்டு வுயிறொன்றா யொற்றுயிருப் போமென்று
ஆசையெனக் குரைத்து அனியாயமாக விப்போ
காசித்தெரு விலென்னை கலங்கி புலம்பவிட்டு
ஆணையுஞ் சத்தியமும் அடுக்காகத் தானுமிட்டு
கன்னியே யுனைமரவேன் கர்த்தனுட சாட்சியென்றும்
கையதுப் போட்டுதந்து காசிக்குள்ளே நுழைந்து
எங்கையோ வோடிப்போனா னின்னம்வ ரக்காணோம்
எப்படிக்கு நாமுமிந்த எழிலான காசிதன்னில்
இருந்துப் பிழைத்திடுவோ மெவ்விடத்தி லண்டிடுவோம்
பாப்பார வீதியிலே பாவையெப் படிபுகுவோம்
என்றுமே தானுறைத்து யேந்திழையா ளாதியரும்
கோடுகோ டென்றெலவோ கோதையரும் புலம்பையிலே .

காசி பிராமணப்பெண்கள் ஜலத்திற்கு வருகுதல்.

அந்தநல்ல காசிவாழும் அந்தணர் பெண்களப்போ
வேடிக்கை யாகவல்லோ விளங்கவே யவர்களுமே
ஒருவற்கொ ருவரவர் உல்லாசமா கப்பேசி
தங்கக்கு டமெடுத்து தையலர்கள் கக்கத்தில்வைத்து
கெங்கை கரைதேடி கீர்த்தியுடன் வருகையிலே
காசிதெரு கோடியிலே காணவேயப் பொழுது
அருங்கிளியா ளாதியரும் அழுதுப்புலம் பும்சத்தம்
ஆரியப் பெண்களெல்லா மருஞ்செவியில் தான்கேட்டு
கன்னியாளா ரோயிங்குக் கதறிப்பு லம்புகிறாள்
ஆகையால் நாமுமிப்போ அருகினில் போய்பார்ப்போம்
வாருங்கடியென்று வாகாகப்பெண் களெல்லாம்
ஒருமிக்கத் தானுமல்லோ உகந்துமே கூடிவந்து
ஆதியருகினிலே யன்பாகவந்து நின்று
வேதியர் பெண்களப்போ விளங்கவே யேதுகேட்பார்
ஆரம்மா தனியேநின்று அழுதுப் புலம்புகுறாய்
எந்தவூரு யெந்தநாடு எங்கிருந்து யிங்குவந்தாய்
பார்க்கசிறு கன்னியாக பாவையு மிருக்கின்றாய்
என்ன குலமுனது ஏங்காம லிப்பொழுது
தெரியவே யெங்களுக்கு தீர்க்கமுடன் சொல்லுமென்றார்

ஆதி அந்தணர் பெண்களிடம் தன்வரலாறு கூறுதல்.

அந்தமொழி கேட்டு ஆரணங்கு ஆதியரும்
அந்தணர்பெண்களெல்லாம் ஆச்சரியங் கொள்ளும்படி
அன்னம்போல் வாய்திறந்து ஆதியருமே துரைப்பாள்
என்னென்று யென்குறையை எடுத்துவுரைப் பேனம்மா
பாண்டிய தேசத்திலே பாவையரும் யான்பிறந்து
அருமையுடனே வளர்ந்து யானுமிருந் தேனம்மா
அன்னைதந் தையர்களுட ஆசையை மறக்கடித்து
அந்தண ரொருவரம்மா ஆசைவார்த் தைகள்சொல்லி
என்னைம யக்கியல்லோ யென்மதியை யுங்கெடுத்து,
மோசவார்த் தைப்புகன்று காசிக்க ழைத்துவந்து
இந்ததெரு கோடியிலே என்னையிருக்கச் சொல்லி
ஆணையுஞ் சத்தியமும் ஆனமட்டுமே செய்து
கையது போட்டுத்தந்து கடுகெனவே வாரேனென்று
நல்லவ சனமதைச் சொல்லியே யெந்தனுக்கு
காலையில் போனவரு மின்னம்வரக் காணோம்
பார்த்தகண்ணும் பூத்தெனக்கு பஞ்சடைந்து போகுதம்மா
நின்றகாலு மெனக்கு நேர்ந்துக டுக்குதம்மா
அருங்காசித் தன்னிலே அனாதியாய் நின்றேனம்மா
என்றுமே யாதியரு மியம்பிப்பு லம்பையிலே
அந்தணர் பெண்களெல்லா மடவாகத்தான் கேட்டு
பரிதாபப் பட்டுமல்லோ பாப்பாரப் பெண்களெல்லாம்
கூடியே யப்பொழுது கொப்பெனவே யதுகேட்பார்
பாவையரே வுன்னுடைய பண்பான பேருமென்ன
அறியவே யெங்களுக்கு அன்பாயு ரையுமென்ன
தெரியவே யெங்களுக்கு தீரமுடன் சொல்லுமென்ன
அப்போது யாதியரும் அருங்கிளியா ளேதுசொல்வாள்
அம்மணி என்னுடைய யரும்பெயரை சொல்கிரேன்கேள்
அருமையுட னெந்தனையு மன்பாகப் பெற்றெடுத்த
தாயுந்தகப் பனுமேதான் மகிழ்ந்து யெந்தனுக்கு
ஆதியென்று பெயருமிட்டு ஆசையுடனே யழைப்பார்
அம்மணி யென்பெயர் ஆதியாளா குமம்மா
என்றுமே யாதியரு மெடுத்து மிகவுரைக்க
வேதிய ஸ்திரீகளுமே விளங்கவே தான்கேட்டு
அனைவரு மப்பொழுது அதிகசந் தோஷமாக
அதிலொரு பிராமணப்பெண் அன்புமிகக் கூர்ந்து
ஆதியைத் தானழைத்து யறியவேயே துரைப்பாள்
உன்னுடைய துயரமதை உத்தமியே விட்டுவிடு
அரனாரெ ழுத்ததனை யாரால்வி லக்கக்கூடும்
நன்மையுந் துன்மையும் நாட்டமுடன் தானுமல்லோ
சமமாக விருக்கையிலே சஞ்சலப்படு குவானேன்
எல்லாஞ்சிவன் செயலென் றெண்ணியே யிப்பொழுது
என்னுடைய வார்த்தைதனை யேந்திழையே தள்ளாமல்
உந்தனை விட்டுப்போன உத்தம வேதியரும்
வாகாக உனைதேடி வருகின்ற வரையிலுமே
எங்களிட வாத்தினிலே யேந்திழையே வந்திரம்மா
என்றவர்கள் தானழைக்க யேந்திழையா ளாதியரும்
சந்தோஷ மாகியல்லோ சம்மதித்து வப்பொழுது
மங்கைலட் சுமியென்னு மாதவள் தன்னுடைய
அரண்மனை தன்னிலல்லோ ஆதியும் வாழ்ந்திருந்தாள்

பொது விருத்தம்.

இந்தவகை யாதியரும் யெழிலாய் தானும்
      இஷ்டமுடன் குப்பையர் வீட்டில் வாழ்க
தொந்தமு டன்காசி விஸ்வே சருக்கும்
      துலங்கவே யுச்சவமுந் தோன்றத் தானும்
அந்தமுடன் காசிநகர் வாழும் நல்ல
      அந்தணர்கள் யாவர்களு மொன்றாய் சேர்ந்து
சுந்தரமா முற்சவங்க ளான பின்பு
      சுத்தமுட னடக்கின்ற சரிதை கேளீர்.

அம்மானை.

இப்படிக்காக வல்லோ யிருக்கின்ற நாளையிலே
விளங்கவே காசிவாழும் விஸ்வேச நாதருக்கு
பிரமவுற் சவமதுப் புகழாகத் தான்வருக
காசிவாழ் வேதியர்கள் களிப்பாகத் தானுமல்லோ
அவரவர் முறைப்படியே யன்பாகத் தானுமல்லோ
பத்துநாள் உற்சவமும் பாங்காகத் தானடத்தி
வந்தவரும் படியை வாகாகத் தானுமல்லோ
பாகங்கள் தீர்த்துக்கொள்ள பாரமறை யோர்கள்
ஆயிரம் வேதியரும் அடங்கலு மொன்றாக
விஸ்வேச ராலயத்தில் விளங்கவே தான்கூடி
அவரவர்க் கேற்றபடி யானதோர் பாகமதை
கணக்கது தான்பார்த்து களிப்புட னப்பொழுது
பங்கிட்டுத் தானுமல்லோ பணங்களை யெடுத்துக்கொண்டு
போகுந்த ருணமதில் புகழாகத் தானுமல்லோ
அப்பைய ரென்னுமந்த அந்தணனு மேதுரைப்பான்
காசிவாழ் வேதியரே களிப்பாக விப்பொழுது
என்னிடத்தி லோர்பிள்ளை எழிலாய் வளர்ந்துவாரான்
ஆறுசாஸ் திரம்நாலு வேதமுந்தா னறிவான்
மற்றுமுள்ள கலைகள்யாவும் சுற்றமுடன் தானறிவான்
அந்தநல்ல பாலனுக்கு அடவாகசொல் லுவேன்கேள்
உங்கள் வசங்களிலே யுண்டோபெண் யென்றுகேட்க
அப்போது குப்பையர் அன்பாகயே துரைப்பார்
பஞ்சவர்ணக் கிளிபோலும் பதுமைச் சிலைபோலும்
படத்தினுரு வைப்போலும் பார்க்கயவ் வனமுடன்
என்னிடத்தி லோர்பெண்ணு மெழிலாக யிருக்குதுகாண்
என்றுமே தானுரைக்க யிதைக்கேட்டு அப்பையர்
நல்லதுயிரு வருக்கும் நடத்துவோம் விவாகமென்று
கூட்டங்கள் கூடியல்லோ குணமாக வப்பொழுது
நாளுகள் நேமித்து நன்றாகவப் பொழுதே
முகூர்த்தப் பத்திரிகையும் முடிவாகத் தானெழுதி
ஆலயத்தில் செய்யும்படி யனைவரு மொப்புக்கொண்டு
அவரவர்கள் மனைதேடி யன்பாகப்போய்ச்சேர்ந்தார்

பகவனுக்கும் ஆதிக்கும் விவாகம் செய்வித்தல்.

இப்படிக்காக வல்லோ யிருக்குமந்த நாளையிலே
முகூர்த்தங் குறித்தநாள் முடிவாக வந்திடவும்
அந்தணர்க ளெல்லோரு மடங்கலு மொன்றுகூடி
காசிநகர் முழுதுங் களிப்பாய லங்கரித்தும்
விஸ்வேச ராலயத்தில் விளங்கவே தானுமப்போ
பச்சைப்பந் தலுமல்லோ பாங்காகப் போடவித்து
விஸ்வோர் தனக்குமல்லோ வேணயபி ஷேகஞ்செய்து
அடவாக வாத்தியங்கள் அன்பாகத் தான்முழங்க
பகவனையு மாதியையும் பாங்காய லங்கரித்து
ஆலயத்திற் குள்ளாக அன்பாய ழைத்துவந்து
பச்சைப் பந்தலதில் பாங்காகக் குந்தவைத்து
ஓமமது வளர்த்தி உத்தம வேதியர்கள்
வேதமுறைப்படியே வேதமந்திரங்கள் சொல்லி
பகவனுடக் கைதனிலே பாங்காய்மங்கிலியமீந்து
ஆதியுடக் கழுத்தினிலே யன்பாகக் கட்டச்சொல்லி
மறையவர்க ளெல்லோரும் மங்களங்கள் தான்கூறி
ஆதியும் பகவனையும் அன்பாகத்தான் வாழ்த்தி
வந்திருந்த வேதியற்கு வளமாக வப்பொழுது
சந்தன புஷ்பமொடுத் தாம்பூலந் தான்கொடுத்து
ஆமவடை மோர்குழம்பு அதிரசமும் பாயாசம்
முத்துப்போ லன்னமிட்டு சுத்திலும் பதார்த்தம்வைத்து
பச்சடியோ டுமங்கே பதினெட்டு விதம்படைத்து
பொன்போல் பருப்புமிட்டு புத்துருக்கு நெய்வார்த்து
வந்திருந்த வேதியர்கள் உண்டு பசியாறி
ஆதியும் பகவனையும் அன்பாகக்கொண்டாடி
அவரவர்கள் ஆத்துக்கு அடங்கலும் போனபின்பு
ஆதியும் பகவனையு மன்பாகத் தானழைத்து
படுக்கையறை ஜோடித்துப் பாங்காகுப்பையராத்தில்
இருவரையு மறைக்குள்ளே யின்பமுடன் தள்ளிவிட்டு
ஆத்துக்கு அவரவர்க ளன்பாகப் போனபின்பு
படுக்கை யறைதனிலே பகவனு மாதியரும்
சரசசல் லாபமுடன் சதுராக விளையாடி
கொஞ்சிக்கு லாவியல்லோ கூடியிருக் கும்போது
பகவனாதி முகத்தைப் பார்த்திட்டா னுற்றுமப்போ
நெற்றியிலே யோர்வடிவு நேராகத் தான்விளங்க
பார்த்தெல்லோ பகவனும் பரிவாக வப்பொழுது
ஆதியரே பெண்மயிலே யாரணங்கே நீகேளாய்
உந்தனிட னெற்றியிலே யுற்றது யோர்வடிவும்
எந்தவகை வந்தது யெனக்கறியக் கூறுமென்ன
அப்போது ஆதியரும் ஆரிழையாள் தானகைத்து
மறந்தீறோ வேதியரே மங்கையரை செய்தசதி
வேள்வியது செய்கையிலே விட்டெறிந்த சட்டுவத்தின்
காயமது வல்லவோதான் காணாமல் கேட்கவந்தீர்
காசித்தெரு வில்விட்டுக் கைபோட்டு வோடினீரே
அன்றுகண்டவுன் முகத்தை யின்றுதான் கண்டேனென்றாள்
அம்மொழி பகவன்கேட்டு யாதியுடனே துரைப்பான்
அன்று யெழுதினது யாருக்குந் தப்பாது
தலையின் விதியை வெல்லத் தேவராலுமாகாது
போட்ட யெழுத்தையுமே பிரட்ட முடியாது
அன்னாளில் தானுமல்லோ வயனாருங் கணக்கெடுத்து
இன்னாருக் கின்னபடி யென்றெழுதி விட்டிருக்க
நம்மால் தடுப்பதற்கு யாகாதொ ருக்காலும்
ஏழரை நாட்சனி யெனக்குப் பிடித்திருக்க
வாழவே யோசித்தால் வாய்க்குமோ பெரும்வாழ்வு
காலைசுத்திய பாம்பு கடிக்காமல் தான்விடுமோ
என்றுரைத்த பழமொழியும் எக்காலும் பிசகாமோ
உன்னைவிட்டு நானோடி வொளித் துயிருந்தாலும்
என்னைப் பிடித்தசனி யிட்டுவந்து விட்டுவிட்டான்
இனிமேலும் யோசனைகள் என்ன யிருக்கின்றது
இந்தமரு மந்தன்னை எழில்காசி யோரறிந்தால்
பறச்சியென்று வுன்னையிவ்வூர் பாப்பாரறிந் தாரானால்
வெட்டிப் புதைத்திடுவார் வல்லுயிரை வாங்கிடுவார்
இன்னமுங் காசிதனில் நாமிருக்கப் போகாது
பொழுதுவி டியுமுன்னே புறப்பட்டு நாமிருவர்
கானகந் தன்னிற்சென்று களிப்பாக வாழ்வமல்லால்
ஊரிலிருந் தோமானா லுயிரது நில்லாது
என்று பகவனுமே யெடுத்துரைக்கும் வேளையிலே
ஆதியரு மப்பொழுது யம்மொழிக்குச் சம்மதித்து
பகவனு மாதியுமாய் பட்சமுடன் தான்கூடி
நடுராத்திரி வேளையிலே நலமாக யிருவர்களும்
காசிநகரை விட்டுக் கடுகெனவே தானடந்து
கானகந் தேடியல்லோ களிப்புடன் வருகையிலே
பகவனுக்கு மப்பொழுதுப் பரிவாகத் தானுமல்லோ
பூருவக் கியானமதுப் புகழாகத்தான் பிறக்க
அப்போது பகவனுமே யாதிமுகம் நோக்கி
தீர்க்கமுடன் செய்தி தெளியவேயே துரைப்பான்
ஆதியெனும் பெண்மயிலே யரிவையரே சொல்கிறேன்கேள்
அரனார் விதித்தபடி யடைவாக விப்பொழுது
ஏழுமக வதனை யின்பமுடன் நீபெறுவாய்
பெண்நான்கு ஆண்மூன்று பிரியமுடனே பிறக்கும்
அந்தநல்ல பிள்ளைகள்மேல் ஆசையது வையாமல்
ஈன்றவுடன் கானகத்தி லெறிந்துவிட்டு யாதியரே
என்பின்னே வந்தையானால் யெழிலாக நாமுமேதான்
பிரமலோ கந்தேடிப் புகழாகப் போய்சேர்ந்து
அயனுஞ் சரஸ்வதியாய் அமர்ந்துமே வாழ்ந்திருப்போம்
என்மொழியை யுறுதியாக ஏந்திழையே நீயும்நம்பி
வரவேண்டு மென்றெலவோ வயனான பகவன்கேட்க
அப்போது வாதியரும் அடிவணங்கி யேதுரைப்பாள்
பத்தாவேயுன் மொழிக்குப் பதில்மொழி வேறுமுண்டோ
கொண்டவர் சொற்படிக்கு குறுக்கே மொழியுமுண்டோ
உன்னுடைய மனதின்படி யுகந்துநான் வாரேனென்ன
இருவருஞ் சம்மதித்து யேகியே கானகத்தில்
மகிழ்வாகத் தானடந்து மனங்களித்து வரும்வழியில்

ஆதியும் பகவனுங் கூடுதல்.

பாணகர் சேரிதன்னில் பண்புடன் வந்துமப்போ
அங்கிருக்கு மண்டபத்தில் ஆதியும் பகவனுமே
கூடிசு கித்தவுடன் கொப்பெனவே யப்பொழுதும்
ஔவையெனும் பெண்குழந்தை யருளாகத் தான்பிறக்க
கண்டுமே தாயாருங் கலங்கிமிகத் தவித்தும்
என்னமாய் விட்டெலவோ யேகுவே னென்றழுக
அப்போ துவக்குழந்தை யன்னைமுகம் பார்த்து
அருளாகத் தானுமல்லோ யறைகுவதைக் கேளும்

ஔவை யென்னும் பெண்குழந்தை கூறிய வெண்பா.

இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.

1-வது. ஆதிசொல் விருத்தம்.

பரிவாகயாதியரு மீன்றெடுத்த
      பாவையெனுமௌவையந்த குழந்தையப்போ
நெரியாக நீதிமொழி கூறக்கேட்டு
      நேரிழையாளாதியரும் மனம்வெறுத்து
அரியவேபகவனா ருரைத் தவண்ணம்
      அக்குழந்தை தன்னையவ் வனத்தில்விட்டு
பிரியமனமில்லாமல் புலம்பிக்கொண்டு
      பேதையாள்பகவன்பின் னேகுவாளே.

அம்மானை.

அம்மொழித்தான்கேட்டு அன்னைம னந்துணிந்து
குழந்தைத னைவிட்டுக் கொப்பென வேயப்பொழுது
பகவனுடப் பின்னாலே பண்பாகத் தானடந்தாள்
அப்போதக் குழத்தைதன்னை யடைவாகத் தானுமல்லோ
அச்சேரிப் பாணகர்கள் அன்பாகத் தானெடுத்தும்
சீராட்டிக் குழந்தைதனை சிறப்புடன் வளர்த்துவந்தார்
இப்படித் தானிருக்க யெழிலாய்முன் சென்றதொரு
ஆதியும் பகவனுமே யக்கான கங்கடந்து
தொண்டனா டென்னுமந்த துலங்குநல் லூற்றுக்காட்டில்
விளங்கியதோர் மண்டபத்தில் வேதனு மாதியரும்
களிப்புடன் கூடியல்லோ கலவிப் புரிந்திடவே
உப்பையெனும் பெண்குழந்தை உகமையுடன் தான்பிறக்க
கண்டெல் லோவாதியருங் கன்னியெனுங் குழவிதன்னை
எப்படி விட்டேகுவேன் என்றெல்லோ தானழுக
அப்போது வக்குழந்தை அன்னைமுகம் பார்த்து
பிரியமுடன் வாய்திறந்து புகலுவதைக் கேளும்

உப்பையெனும் பெண்குழந்தை கூறிய வெண்பா.

அத்திமுத லெறும்பீறா றானவுயி ரத்தனைக்குஞ்
சித்தமகிழ்ந் தளிக்குந் தேசிகன் - முற்றவே
கற்பித்தான் போனானோ கார்க்கக் கடனிலையோ
வற்பனே வன்னா யரன்.

2-வது. ஆதிசொல் விருத்தம்.

ஏகியேபகவன்பின் னாதியாளும்
      இஷ்டமுடன்கூடிடவே யெழிலதாக
பாகமாயுப்பையென்னும் பெண்குழந்தை
      பண்பாகத்தான்பிறக்கக் கண்டுயாதி
தாகமாய்விட்டேக மனமில்லாமல்
      தையலாள்புலம்பையிலே குழவிதானும்
யோகமாய் நீதிகளை யுரைக்கக்கேட்டு
      யுளமகிழ்ந்துபகவன் பின் சென்றிட்டாளே.

அம்மானை.

இவ்வாறு தானுரைக்க வேந்திழையா ளாதியற்கு
மனமுந் துணிந்துமல்லோ மக்குழந்தை தன்னைவிட்டு
பகவனுடப் பின்னாலே பண்பாகத் தானடந்தாள்
அதன்பிறகு அக்குழந்தை அவ்வூரில்தான் வாழும்
வண்ணார்கள் தானெடுத்து வளர்த்துமே வந்தபின்பு
என்னாளுந் தெய்வமா யிருக்கின்றா ளவ்வூரில்
அதுநிற்க முன்புசென்ற ஆதியும் பகவனறும்
சோழதேசத் தருகிற் சுகமுடன் போய்சேர்ந்து
அங்குள்ளச் சோலையிலே யன்பாகத் தான்கூட
அதிகமா னென்னும்பிள்ளை யன்பாகத்தான் பிறக்க
கண்டெல்லோ தாயாருங் கலங்கி மிகவாடி
இக்குழந்தைத் தன்னையுமே எவர்கள் காப்பார்களென்று
நீங்கமன மில்லாமல் நின்றுதாய் தவிக்கையிலே
அப்போ துவக்குழந்தை யருளாக யேதுரைக்கும்

அதிகமானென்னும் ஆண்குழந்தை கூறிய வெண்பா.

கருப்பைக்குண் முட்டைக்குண் கல்லினுட் டேரைக்கும்
விருப்புற் றமுதளிக்குஞ் செய்ய - னுருப்பெற்றா
லூட்டி வளர்க்கானோ வோகெடுவாய் யன்னாய்கேள்
வாட்டமு னக்கேன் மகிழ்.

3-வது. ஆதிசொல் விருத்தம்.

சென்றுமே பகவனுடன் ஆதியாளும்
      செழிப்பாக மூன்றாவது தானுமல்லோ
நன்றாக யோர்வனத்தில் சேர்ந்தபோது
      நங்கையவள் நளினமுடன் தானுமல்லோ
குன்றா யதிகமான் றன்னையீன்று
      கோதைவிட்டு பிரியமன மில்லாவாட
அன்றுயக் குழவிஞான மறியவோத
      ஆதிகண்டு பகவனுடன் அடுத்துச்சென்றாள்.

அம்மானை.

இந்தவண்ணந் தானுரைக்க யெழிலான தாய்கேட்டு
மனமுந் துணிந்தலவோ மாதுயந்த வாதியரும்
பகவனுட பின்னாலே பண்பாகத் தானுஞ்சென்றாள்
அதன்பின்பு அக்குழந்தை அவ்வூரில் தான்வாழும்
சேரமா னெடுத்தெலவோ சீராகவளர்த்துக் கொண்டார்
அப்படியவர் வளர்க்க ஆதியும் பகவனுமே
பட்டணமாம் பட்டணமாங் காவரிப்பூப் பட்டணமாம்
காவரிப்பூப் பட்டணத்தில் களிப்புடன் போய்சேர்ந்து
அங்குள்ள வோர்மண்டபத்தில் அன்பாகக் கூடினார்கள்
உருவையெனும் பெண்குழந்தை யுடனேபி றந்தனவாம்
அக்குழந்தை தன்னைவிட்டு யகலமன மில்லாமல்
தாய்நின்று புலம்பையிலே யக்குழந்தை யேதுரைக்கும்

உருவையெனும் பெண்குழந்தை கூறிய வெண்பா.

அண்டைப்பைக் குள்ளுயிர்தன் றாயருந்தத் தானருந்தும்
அண்டத் துயர்பிழைப்ப தாச்சரிய- மண்டி
யலைகின்ற வன்னா யரனுடைய வுண்மை
நிலைகண்டு நீயறிந்து நில்.

4-வது. ஆதிசொல் விருத்தம்.

அடுத் துமேபக வன்பின்ஆதியாளும்
      அன்பா கத்தான் சென்று யருமையாக
தொடுத் துமேநான்கா வதுதான் கூட
      துலங்க வேயுருவை யெனும் பெண்பிறக்க
விடுத் தேகமனமில் லாதாதி யாளும்
      வெகுவாக நின்றங்கே புலம் பும்போது
எடுத் துமேகுழவி சில நீதிகூற
      ஏங்கி யேயா தியரும் ஏகிட்டாளே.

அம்மானை.

இவ்வாறு குழந்தையது யெடுத்து மிகக்கூற
அதுகேட்டுத் தாயாரு மவள்மனதுமே துணிந்து
பகவனுடப் பின்னாலே பண்பாகப் போனபின்பு
அக்குழந்தை தன்னையுமே யவ்வூரில் தான்வாழும்
கல்விப்போர் தாமெடுத்துக் களிப்பாய் வளர்த்தபின்பு
பாரத்தவஞ் செய்துப் பத்திரக் காளியாகி
சபானா தருடனே சதுராய் நடனஞ்செய்து
வீரபத்திரரை மணம்விளங்கச் செய்துவாழ்ந்து வாராள்
இக்கதை யிப்படியிருக்க யெழிலாய்முன் சென்றதொரு
பகவனு மாதியரும் பாங்காகத் தானுமல்லோ
திருவாரூரை யடைந்து திகழாமோர் மண்டபத்தில்
கலந்தெல்லோக் கூடுகையில் கபிலரவர்தான் பிறந்தார்
கண்டெல்லோ தாயாருங் காளையந்தக்குழந்தை தன்னை
யார்கார்ப்பா ரென்றுசொல்லி யன்னையரும் புலம்பயிலே
அப்போ துவக்குழந்தை யருளாகயே துரைக்கும்

கபிலரென்னு மாண்குழந்தை கூறிய வெண்பா.

கண்ணுழையாக் காட்டிற் கருங்கற் றவளைக்கு
முன்னும் படியறிந் தூட்டுமவர்- நண்ணு
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்கும் தொழிலென்ன தான்.

5-வது. ஆதிசொல் விருத்தம்.

காணவேஐந்தா வதுவனத்தில்
      களிப்பாகயா தியுடன்பகவன்கூட
பூணவேகபிலரெனு மாண்குழந்தை
      புகழாகபிறக்கயாதி கண்டுமப்போ
தோணவேவிட்டேக மனமில்லாமல்
      தோகையரும்நின்றுமே துயரங்கொள்ள
வேணவேஞானமதைக் குழவிவிள்ள
      விளங்கவேகேட்டாதி வெருத்திட்டாளே.

அம்மானை.

என்றுரைக்க வக்குழந்தை யேந்திழையா ளாதிகேட்டு
மனந்துணிந்து பகவன்பின்னே மகிட்சியுடன் சென்றபின்பு
அவ்வூரில் தான்வாழும் அந்தண ரானதொரு
பிள்ளையில் லாததொரு பாப்பைய னென்பவரும்
அக்குழந்தை தன்னையுமே யவரெடுத்து தான்வளர்த்தார்
அதுநிற்க முன்புசென்ற யாதியும் பகவனுமே
வெள்ளிமலைச் சாரலிலே வளமாக வந்துகூட
வள்ளியெனும் பெண்குழந்தை வளமாகத் தான்பிறக்க
இக்குழந்தை தன்னைகாற்போ ரெவரென்று தாய்கலங்க
அப்போது வக்குழந்தை யடைவாகவே துரைக்கும்

வள்ளியெனும் பெண்குழந்தை கூறிய வெண்பா.

அன்னை வயற்றி லருந்தீ வளர்த்தவன்னா
னின்னும் வளர்க்கானோ வென்றாயே - மின்னரவஞ்
சூடும் பெருமான் சுடுகாட்டி னின்றுவிளை
யாடும் பெருமா னவன்.

6-வது. ஆதிசொல் விருத்தம்.

வெருத்துமேயவ்வனமா மதனைவிட்டு
      விளங்கவேவெள்ளிமலை சாரல்வந்து
பொருத்தமுடனாதியொடு பகவன்கூட
      பெண்குழந்தைவள்ளியென பிறக்கவப்போ
திருத்தமாயக்குழந்தை தன்னைவிட்டுத்
      தான்பிரியமனமில்லா தவிக்கும்போது
கருத்தாகவக்குழந்தை ஞானமோதக்
      கண்டாதிமனந்திடங்கொண் டேகினாளே.

அம்மானை.

என்றுரைக்கத் தாய்கேட்டு யவள்மன முந்துணிந்து
பகவனுடன் கூடிப்பரிவாகச் சென்ற பின்பு
அக்குழந்தை தன்னையுமே யடைவாக வப்பொழுது
மலைக்குறவர் தாமெடுத்து மகிழ்ச்சியுடன் தான்வளர்த்தார்
ஆதியும் பகவனுமே யன்பாகத் தானுமப்போ
மயிலாப்பூர் யிலுப்பைத்தோப்பில் மறிவியங்கு தான்கூட
திருவள்ளு வருமப்போத் திகழாகத்தான் பிறந்தார்
கண்டெல்லோ யாதியருங் காளையந்தக் குழந்தைதன்னை
விட்டுப்பி ரியமன மில்லாமற் புலம்பையிலே
அப்போ துவக்குழந்தை அன்னையற்கு மேதுரைக்கும்

திருவள்ளுவ நாயனார்கூறிய வெண்பா.

எவ்வுயிருங் காக்கவொரு வீசனுண்டோ வில்லையோ
வவ்வுயிரில் யானெருவ னல்லவோ- வவ்வி
யருகுவது கொண்டிங் கலைவதே னன்னே
வருகுவது தானே வரும்.

7-வது. ஆதிசொல் விருத்தம்.

நலமாகத்திருமயிலை தனக்குவந்து
      நங்கையெனுமாதியரை பகவன்கூட
குலமாகவாண்குழந்தைப் பிறக்கவப்போ
      கோதையாதிவிட்டேக வாடும்போது
பலவாகஞானமது பாலன்கூற
      பரிவாகயாதியருங் கேட்டுமேதான்
தலமாகப்பாலனுட யாசைவிட்டு
      தையலாதிபகவன்பின் தான்சென்றாளே.

அம்மானை.

அம்மொழித் தான்கேட்டு யன்னையரும் மனந்துணிந்து
பகவனுடன் கூடிப் பரிவாகச் சென்றுமப்போ
ஆதிசிவன் றனையும் வன்பாக வப்பொழுது
இருவரு மாகவல்லோ யெழிலாகத் தோத்தரிக்க
பரமசிவ னாரும் பார்வதியாளப்பொழுதும்
முப்பத்து முக்கோடி முனிவருடன் தேவருமாய்
தெரிசினந் தந்தெலவோ திகழாக வப்பொழுது
பகவனுக்கும் ஆதியற்கும் பாரசாபத் தைநீக்கி
பிரமப்ப தியதனைப் புகழாகத் தானளித்து
வாழும்படியாக வரங்கொடுத்துத் தான் மறைந்தார்
தேவர்முனி வர்களும் தன்பதியைப் போய்ச்சேர்ந்தார்
அயனோடு சரஸ்வதியும் அன்னவா கனமேறி
பிரமலோ கந்தன்னைப் போய்ச்சேர்ந்தா ரப்பொழுது
அரியயன் சண்டையெனு மம்மானை யிக்கதையை
பாடிப்படித் தவரும் பட்சமுடன் தான்வாழி
பிரபலமாய்ச் சொன்னவரும் பிரியமுடன் கேட்டவரும்
யென்னாளு மிப்புவியில் யெழிலாகத் தான்வாழி
வாழிவாழி யென்றுசொல்லி வரமளித்தா ரீஸ்வரனார்.

வாழி விருத்தம்.

பரிதியொடு மதிவாழி பாரும் வாழி
      பரிவாகு மும்பரொடு சித்தர் வாழி
நெரியாகப் பலவுயிரும் நீடி வாழி
      நேரிழையா ளாதியொடு பகவன் வாழி
அரியயன் சண்டைதனை படித்தோர் கேட்டோர்
      அன்பாகப் புவியுள்ள மட்டும் வாழி
பிரியமுட னச்சிலிட்டோர் பெரு மையாக
      பேரான யஷ்டலட்சுமி பெருகி வாழி.

அரியயன்சண்டை அம்மானை முற்றுப்பெற்றது.This file was last updated on 17 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)