pm logo

சங்கரமூர்த்திப் புலவரால் இயற்றப்பெற்ற
மாணிக்க வாசகர் அம்மானை


mANikka vAcakar ammAnai by
cangkaramUrtip pulavar
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work and to
Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மாணிக்க வாசகர் அம்மானை
(சங்கரமூர்த்திப் புலவரால் இயற்றப்பெற்றது)

Source:
மாணிக்க வாசகர் அம்மானை
(சங்கரமூர்த்திப் புலவரால் இயற்றப்பெற்றது)
MANIKKA VACAKAR AMMANAI
BY SANKARAMURTI
Edited By T. CHANDRASEKHARAN, M.A.L.T.
CURATOR, GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS.
Under the orders of the Government of
Madras, 1951
Price Rs. 1-2-0
Government Oriental Manuscripts Series No. 15
---------------------------------------------

Introduction

This work presents in an easy style the life of MANIKKAVACAKAR alias VADAVURAR or THENNAVAR. He is the son of Sambupadacariyar an ardent leader of Saivism and Sivajnanavatiyar.

The history of Manikkavacakar is also given in chapters 58-61 of the Thiruvilaiyadal Puranam of Paranjoti and in chapters 27-30 of Tiruvalavayudaiyar Tiruvilaiyadaj Puranam of Perumparra Puliyur Nambi. It is also contained in the Purana of Tiruvadavurar etc.
This work mainly follows the Purana of Tiruvadavurar with some alterations, for example the well known incident that the Pandiya king caned the Lord is stated as though Vadavurar himself caned the Lord.

The fact that Manikkavacakar cured the dumbness of the daughter of the Chola king is stated as though the daughter of Mechari, king of Madras, was cured of the same defect.
This work is also conspicuous for the ommissions of some very famous incidents or events. The fact that Manikkavacakar defeated the Buddhists is not at all mentioned in this. But strange information is given that Manikkavacakar assumed the form of a deer.

As could be seen from the above instances, this gives a slightly different account of the life of Manikkavacakar.
The work is titled “Ammanai” merely due to the fact that the word “Ammanai” occurs frequently even though it does not conform to the definition of Ammanai in respect of contents or composition.

AUTHOR.
This work is said to be composed or written by one Sankaramurti, son of Nallur Nalla Thambi and the younger brother of Namaccivayar. Besides this, no information is found about the author, his literary and religious merits or qualifications.
The names of places referred to in this work are:

1. Vadhavoor (Thiruvathur). 16. Piranmalai.
2. Nalloor. 17. Cholapuram. (1)
3. Kalainagar. 18. Thiruvegambam.
4. Uttarakosamangai. 19. Thirukkulathangarai.
5. Avudaiyar Koil. 20. Vadakkoor.
6. Nelveli. 21. Thirumeyyam.
7. Thiruvedagam. 22. Okkur.
8. Thiruvadanai. 23. Ainnurrumangalam.
9. Punalvasal. (1) 24. Kannangudi.
10. Ramesvaram. 25. Cholapuram. (2)
11. Dhanushkoti. 26. Mandiyur.
12. Agnithirtham. 27. Perunturai.
13. Punalvasal. (2) 28. Chidambaram (Thillai
14. Madurai. or Ponnambalam).
15. Tiruppattur. 29. Chennappattanam.

The names of gods mentioned in this work are:- .
1. Ganapathi. 11. Aparanji.
2. Velavan. 12. Pazhambodinathar.
3. Sarasvathi. 13. Iramanayakar.
4. Kalainayagar. 14. Parvathavarthini.
5. Chokkar. (1) 15. Kalavairavan.
6. Somanayagar. 16. Puvanalingam.
7. Mangaibaganathar. 17. Chokkar. (2)
8. Nelvelinathar.. 18. Minakshi Amman.
9. Kanthimathi Amman. 19. Vairavamoorthi.
10. Adanainathar. 20. Avudaiyar.
.
This work is: printed from a paper manuscript available in the Government Oriental Manuscripts Library Madras, bearing R. No. 1541 in the, Triennial Catalogue-Paper 181"X 9Z" Fol. 49, lines 20. in a page, in Tamil and in good condition, which was restored in 1946-47 from a Palmleaf manuscript described under R. No. 499 (a). This palmleaf manuscript was presented to this library in 1921-22 by Sri Virana Pillai, son of Mariappa Pillai of Tiruvadavoork kottai, Melur Taluk in Madura District.
My thanks are due to Sri. V. R. Kalyanasundaram Pandit of the library for preparing the Press copy of the work and to Sri. V. S. Krishnan, Tamil Pandit of the library for correcting the proof.
Madras. 8-11-1951 T. CHANDRASEKHARAN
CURATOR.
------------------------------------------------

முன்னுரை

இந்நூல், பாண்டிய மண்டலத்தைச் சார்ந்ததாய், வைகையாற்றங் கரையின் கண்ணே உள்ள 'வாதவூர், என்னும் ஊரில் சம்புபாதாசாரியர் என்னும் சைவப் பெருந் தலைவனுக்குச் சிவஞானவதியார் என்னும் சைவத்தலைவியிடம் அவதரித்து வாதவூரர், அல்லது, தென்னவர்; அல்லது மாணிக்கவாசகர் என்னும் பெயர்களால் வழங்கப்படாநிற்கும் சிவமகாபக்தரது வரலாற்றினை எளிய நடையில் உணர்த்துகின்றது.

இவரது வரலாறு, பரஞ்சோதி திருவிளையாடற் புராணம் 58-61 ஆம் படலங்களுள்ளும், பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 27 - 30 ஆம் படலங்களுள்ளும், கடவுள்மாமுனிவர் திருவாதவூரர் புராணத்துள்ளும் ஏனைய சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

இந்நூல், பெரும்பாலும், திருவாதவூரர் புராணத்தைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது. உதாரணமாக:- மண் சுமந்த படலத்தில் பாண்டியன், பரமனைப் பிரம்பு கொண்டு அடித்ததாகப் பிரசித்தமாய்க் கூறப்படும் வரலாறு இந்நூலில் திரித்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வாதவூரரே பரமனை அடித் ததாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கொப்ப முன் வரலாறும் சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேமுறைதான் திருவாதவூரர் புராணத்திலும் கையாளப்பட்டுள்ளது.

மற்றும், ஊமையான சோழன் மகளைப் பேசவைத்ததாகக் கூறப்படும் செய்தி மாற்றப்பட்டுச் சென்னப் பட்டணத்து அரசனான மேசரி என்பவனது மகளைப் பேச வைத்ததாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

புத்தரை வாதில் வென்றதாகக் கூறப்படும் செய்தி இந்நூலுள் கூறப்படவில்லை.
மாணிக்கவாசகர் மானுருவம் பெற்றிருந்ததாக முன்பு கூறப்படாத செய்தியொன்று இந்நூலுள் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இந்நூல், முன்னூல்களில் கூறப்பட்டுள்ளதை அவ்வாறே சிலவிடத்துத் திரித்துக் கூறுவதாகவும், சிலவிடத்துக் கூறியதை விடுத்துக் கூறுவதாகவும், சிலவிடத்துச் சுருக்கியும் சிலவிடத்து விரித்தும் கூறுவதாகவும், சிலவிடத்துக் கூறாததைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

இந்நூலுக்கு அம்மானை என்னும் பெயர், ஏனைய அம்மானை நூல்களுக்கு உளது போலில்லாமல், அங்கங்கே சிலவிடத்தில் அம்மானை என்னும் பதம் உபயோகிக்கப்பட் டிருப்பதால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாய்த் தோன்றுகிறது.

நூலாசிரியர்
இந்நூல் சங்கரமூர்த்தி என்னும் ஒரு புலவரால் பாடப் பெற்றதென்றும், அவர் 'நல்லூர் நல்ல தம்பி' என்பவரது திருக்குமாரரென்றும், நமச்சிவாயர் என்பவரது இளைய சகோதரர் என்றும் இந்நூலின் முன்னுரையால் தெரியவருகிறதேயன்றி, நூலாசிரியரைப் பற்றிய வேறு செய்தி ஒன்றும் புலப்படவில்லை.

இந்நூலுள் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களும் ஊர்களும் :
1. வாதவூர் (திருவாதூர்) 16. பிரான்மலை
2. நல்லூர் 17. சோழபுரம் (1)
3. காளைநகர் 18. திருவேகம்பம்
4. உத்தரகோசமங்கை 19. திருக்குளத்தங்கரை
5. ஆவுடையார் கோயில் 20. வடக்கூர்
6. நெல்வேலி 21. திருமெய்யம்
7. திருவேடகம் 22. ஒக்கூர்
8. திருஆடானை 23. அஞ்ஞற்றுமங்கலம்
9. புனல்வாசல் (1) 24. கன்னங்குடி
10. இராமேசுவரம் 25. சோழபுரம் (2)
11. தனுஷ்கோடி 26. மண்டியூர்
12. அக்கினி தீர்த்தம் 27. பெருந்துறை
13. புனல்வாசல் (2) 28. சிதம்பரம் (தில்லை
14. மதுரை பொன்னம்பலம்)
15. திருப்பத்தூர் 29. சென்னப்பட்டணம்

தெய்வங்கள்
1. கணபதி 11. அபரஞ்சி
2. வேலவன் 12. பழம்போதிநாதர்
3. சரசுவதி 13. இராமநாயகர்
4. காளை நாயகர் 14. பருவதவர்த்தனி
5. சொக்கர் (1) 15. காலவைரவன்
6. சோமநாயகர் 16. பூவாணலிங்கம்
7. மங்கைபாகநாதர் 17. சொக்கர் (2)
8. நெல்வேலிநாதர் 18. மீனாட்சியம்மன்
9. காந்திமதியம்மன் 19. வயிரவமூர்த்தி
10. ஆடானை நாதர் 20. ஆவுடையார்

இந்நூலைப் பதிப்பிக்கத் துணையாயிருந்த பிரதி, இந்நூல் நிலையத்து மூவருடக் காட்லாக்கு 1541-ஆம் நம்பரில் வருணிக்கப்பட்டுள்ளது. 98 பக்கங்கள் கொண்டது. இது, மூவருடக் காட்லாக்கு 4990 ஆம் நம்பரில் வருணிக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடியைப் பெயர்த்து எழுதிவைக்கப் பெற்றதாகும். அந்த ஓலைப் பிரதி 1921-22-ஆம் வருஷத்தில், மதுரை ஜில்லா, மேலூர் தாலூகா, திருவாதவூர்க் கோட்டையைச் சார்ந்த மாரியப்பப் பிள்ளையவர்களின் திருக்குமாரர் வீரணப்பிள்ளை யென்பவரால், இந்நூல் நிலையத்துக்கு வெகுமதியாக அளிக்கப்பட்டதாகும். 82 ஏடுகளைக் கொண்டுள்ளது. 22-ஆம் ஏடுமட்டும் காணப்பெறவில்லை. ஆயினும், கதைத் தொடர்ச்சி விடுபட்டதாகத் தெரியவில்லை. 64 முதல் 82 வரையான ஏடுகளுக்கு, அவ்வோலை எழுதினோரால் எண்ணிக்கை கொடுக்கப்பெறாது, வேறொருவரால் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அப்பொழுது ஏடுகள் பிறழ்ந்து இருந்த நிலையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஏடுகள் கதைத் தொடர்புடன் இருக்கின்றனவா என்பதை நோக்கி வரிசைப் படுத்திக் கொடுக்கப்பெறவில்லை. ஆகையால், அப்பக்கங்களிலுள்ள கதைப் பகுதி முன்னும் பின்னுமாக மாறுபட்டுளது. இக்குற்றம், இதைப் பெயர்த்து எழுதிய பிரதியிலும் 79-98-ஆம் பக்கங்களில் காண்கிறது. ஆயினும் அப்பகுதி இந்நூலில் ஒழுங்குபடுத்தப்பட்டு முறையாகவே வெளியிடப்பட்டுள் ளது.
மூவருடக் காட்லாக்கு 4996 ஆம் நம்பரில் மற்றோர் பிரதியுமுள்ளது. அது முற்றுப் பெறாததாம். 1-13 ஏடு களே உள.

இதனை மூலச்சுவடியிலிருந்து பிரதிசெய்து, அச்சிடுவதற்கு உரிய முறையில் திருத்தம் செய்து தந்த இந்நூல்நிலைய பண்டிதர்கள் ஸ்ரீ V. R. கல்யாணசுந்தரம், ஸ்ரீ - V. S. கிருஷ்ணன் ஆகியோர்க்கு என் நன்றி உரியதாம்.

சென்னை. 8-11-51       தி. சந்திரசேகரன்.
--------------------------------------------------------

"மாணிக்கவாசகர் அம்மானை"
அல்லது "தென்னவர் வரலாறு"

காப்பு
தென்னவன் பிரமாதி ராயன் திருக்கதை யம்மானை யாகச்
சொன்னபின் றுயரம் நீங்கிச் சுகமுடன் வாழ்ந்து நன்றாய்
மன்னவன் செங்கோ லோங்கி மகிழ்ச்சியா யிருப்ப தற்குக்
கன்னமா முகத்தோன் றொந்திக் கணபதி காப்புத் தானே.

முன்னுரை
வாதவூர் தன்னில் மறையோ னெனவேதான்
வேதியர்கள் தங்கள்குலம் விளங்கவே வந்துதித்த
சைவத் தலைவன்றன் தேவியவள் தன்வயிற்றில்
தென்னவனார் தாம்பிறந்த செல்வத் திருக்கதையை
5. யெல்லோரும் தான்கேட்க வின்பமுடன் பாடுதற்குச்
சுத்தன் றிருமகனே ஆயோன் மருகோனே
வெற்றிமயி லேறிவரும் வேலவர்க்கு மூத்தோனே
சத்திக் கணபதியே தையநல்லாள் புத்திரனே
. அப்ப மதிரசந்தா னவல்பொரிக ளெள்ளுருண்டை
10. எப்போதும் நான் படைக்க வெனக்குவிடை தாருமையா
கன்னமதக் களிறே கற்பகமே முன்னடவாய்
ஐங்கரனுக் கிளைய வையா பழநிமலை
முத்திக்கு வெற்றி மயிலேறுஞ் சேவகனே
வேறுவினை வாராமல் வேலவனே முன்னடவாய்
15. இந்தக் கதையை யெளியேன் நான் பாடுதற்கு
வாக்குமிகத் தந்தருளும் வாலை சரச்வதியே
என்றன் குருவேயெனை யீன்றெடுத்த சற்குருவே
நல்லூரி னல்லதம்பி தருநமச்சி வாயனுக்குச்
சகோதரமாய்ப் பின்னுதித்த சங்கர மூர்த்திமைந்தன்
20. பாடு மடியேன் பரங்கிரிநா தன்றுணையாய்
அறிந்து மறியாம லடியே னுரைத்ததமிழ்
புன்சொல்லே யானாலும் புலவோர் பொறுத்தருள்வர்
பாடும் புலவோர்க்குப் பதம்பணிவேன் நானடியேன்
பெரியோர்கள் பாதமதைக் கொண்டே நான் திருமுடிமேல்
25. தென்னவனார் தாம்பிறந்த செல்வத் திருக்கதையை
எல்லோரும் தாங்கேட்க வின்பமுடன் பாடுகிறேன்.
முடைய ணிைப்போது மிகவாங்கள் சொல்லாமான்

நூல்
திருவாதூர் வாழ்கின்ற செல்வப் பிராமணரில்
சாதி மறையோன் சைவத் தலைவனவன்
சைவத் தலைவன் றன்தேவி மின்னனையாள்
மண்ணனையாள் தன்னுடனே வீற்றிருந்தான். அம்மானை
5. இருவருமாய் வாழ்ந்து விருந்தார்கள் சிலகாலம்
பாதி வயதளவும் பாலகரு மில்லாமல்
சாதி மறையோரிற் சைவத் தலைவனவன்
சலித்து முகம்வாடத் தானிருக்கும் வேளையிலே;
தவசியின் வரவு
வந்தா னொருதவசி மாயோகி யந்நேரம்
10. கண்டான் றலைவன் கருணையுள்ள யோகிதன்னை
பாதம் பணிந்தவரைப் பன்முறையுந் தண்டமிட்டு
புத்திரவாஞ் சையெனக்குப் பொறுக்க முடியவில்லை
சந்ததியு மெந்தனுக்குத் தானருள வேண்டுமென்றான்
அந்த மொழி கேட்டு அருள்புரிவார் யோகியுந்தான்
15. தப்பாம லுன்றனுக்குச் சந்ததியு முண்டாகும்
அப்பால்நா முன்றனுக்கு ஓரறிவு சொல்லநீகேள்
நம்முடைய கையில் நல்ல செம்பொ னொன்றுண்டு
இருப்பதுகா ணிப்போது ஈகுவோ முன்றனுக்கு
அந்தப் பொருளை யறிவால் மிகவாங்கி
20. உற்றதொரு பொருளை யொருவருக்குஞ் சொல்லாமல்
பத்திரமாய் வைத்திருக்கப் பாலகனும் தான் பிறப்பான்
பாலக னவன்றனது பதினைந்தாம் வயது தன்னில்
பத்திரமாய் வைத்தவிதை பாலகனுக்கு நீகொடென்று
கொடுத்துவிட்டுப் போனார் கோலத் தவசியுந்தான்;

தென்னவர் பிறப்பு
25. சந்நியாசி யார்கொடுக்கத் தான்வாங்கிப் பத்திரமாய்
வைத்திருந்தா னேதலைவன் மாயோகி சொற்படியே
சொல்லியவர் போயும் துலங்க வெகுநாளாய்
சந்ததியு மில்லாமல் சலித்து முகம்வாடத்
தன்றேவி மின்னனையைத் தானே வரவழைத்துச்
30. சந்நியாசி யார்மொழியுந் தவறிற்றே நங்கைநல்லீர்
புத்திரனு மில்லாமற் போனோ மிளங்கொடியே
என்றுசலிப் பாயவனு மேந்திழைக்குத் தானுரைக்கத்
தலைவ னுரைத்தமொழி தையல்நல்லாள் தான்கேட்டுச்
சந்நியாசி யார்மொழியிற் தப்பிதங்கள் வாராது
35. ஈசுவரனே யுண்டென்று இருந்தோமே யாமாகில்
சந்ததியு முண்டாகுந் தலைவரேநீர் மயங்காதீர்
என்று அவள்கூற வின்பமுடன் தென்னவனும்
மெய்யென்று எண்ணி மீண்டுமவ னீதுரையான்
புத்திரனை வேண்டிப் புரிசடையோ னைநோக்கி
40. மெத்தத் தவசிருந்து மெய்நோன்பு தானிருந்து
ஈசுவரனே நீர்தாமு மெனக்குதவி செய்யுமென்று
பாரமவர் மேற்போட்டுப் பாங்காய்த் தவசிருந்தார்
ஈசுவரரு மப்பொழுது விவர்க்குதவி செய்தனரால்
மின்னனையாள் வயிற்றில்மிக்க கருப்பமது முண்டாச்சு
45. தன்மனையாள் தன்வயிற்றில் கருப்பமுண் டானதனால்
தலைவன் மனமகிழ்ந்து தானிருந்தான் அம்மானை
பத்துமா தஞ்சுமந்து பாவையரு மப்பொழுது
புத்திரனை யீன்றெடுத்தாள் பூவையரு மப்பொழுது
பிள்ளை பிறந்தசெய்தி கேட்டுப் பிரியமுடன்
50. தலைவன் மனமகிழ்ந்து தானிருந்தான் அம்மானை
சந்தோஷ மாகத் தானங்கள் பண்ணவெண்ணிச்
சாதி மறையோரைத் தானே வரவழைத்துத்
தானங்கள் பலகொடுத்துத் தானனுப்பி வேதியரைப்
பிள்ளைமுகம் பார்த்துப் பிரியமுடன் தானிருந்தான்.

நாமகரணம்
55. பிள்ளைக்குத் தான்வயது பிரியமுட னொன்றாச்சுப்
பேரிட வேணுமென்று பெரியோரைத் தானழைத்து
நாண்முகூர்த்தும் பார்த்து நலமா யுரையுமென
வப்பொழுது வேதியர்க ளனைவோருந் தாங்கூடிப்
பஞ்சாங்கந் தானெடுத்துப் பார்த்தார்க ளப்பொழுது
60. ப....ரைகள் வைத்துப் பார்த்துக் கிரகநீதி
ஆராய்ந்து நன்றா யவரீது சொல்லுகையில்
புதன்வார நாளும் பூசநட் சத்திரமும்
விடிந்தைந்து நாழிகை மீனலக் கினமதுவும்
பொருந்து மிவருக்குப் பேரிட வென்றுரைத்தார்
65. அந்த முகூர்த்தமதி லனைவோரை யுமழைத்துத்
'தென்னவன் பிரமராயன்’எனத் திருநாமஞ் சாத்தினராம்
பேரிட் டுலகறியப் பேச்சிட்டார் அம்மானை
பேரிட்டுப் பிள்ளைதனைப் பிரியமுட னேவளர்த்தார் :

மகவின் வளர்ச்சி
போற்றி வளர்த்தார்கள் புதுமையுள்ள மைந்தனையும்
70. காதுகுத்தி வாளியிட்டுக் கைக்குவெள்ளிக் காப்புமிட்டுக்
காலுக்குத் தண்டையிட்டுக் கண்ணுக்கு மையுமிட்டுக்
கண்ணேறு வாராமற் கத்தூரிப் பொட்டுமிட்டுத்
தூங்குமஞ்சத் தொட்டில் தனில் சுகமாய் வளர்த்தார்கள்
வளருகின்ற மைந்தன் வயதிரண் டானதுமே
75. தவழ்ந்து விளையாடித் தரையிற் றிரிகிறதைக்
கண்டு தலைவனவன் கருணை மிகப்பெருகி
மைந்தனுக்குத் திருட்டிசுற்றி மடிமீது வைத்துவைத்துத்
தலைவன் மனமகிழ்ந்து சந்தோஷ மாயிருந்தான்
சந்தோஷ மாயிருக்கத் தலைவன் மகன்றனக்கு
80. வயது மொருமூன்று வந்ததுகாண் அம்மானை
தத்தி யடியிட்டுத் தடுமாறித் தள்ளாடி
ஆவலுடன் பாலனவ னய்யர்மேற் றான்விழவே
வாரி யெடுத்தணைத்து மழலைச்சொற் றான்கேட்டுப்
புளகித் திருபுயமும் பூரித்தான் அம்மானை:

செம்பொன்னைத் தேவியிடமீதல்
85. இப்படியே யிவர்க ளிருக்கின்ற நாளையிலே
சைவத் தலைவருக்குத் தன்னறிவு தான்தோன்றித்
தன்றேவி மின்னனையைத் தானே யருகழைத்துச்
சந்நியாசி யன்றொருவர் தானருளிப் போனதொரு
செல்லாப் பணமென்று செம்பொன் னிருக்குதுகாண்
90. உந்த னுடையமைந்த னுற்ற ஆளானதன்பின்
இந்தச் செழும்பொன்னை யவர்க்கீயு மென்றுரைத்தார்
பத்திரமாய் வைத்திருந்து பாலனுக்கு நீகொடென்று
தன்றேவி கையிற் றான்கொடுத்தார் அம்மானை
தன்கணவன் றான்கொடுக்கத் தையல்நல்லாள் தான்வாங்கிப்
95. பத்திர மாய்ப்பேணிப் பதனமாய் வைத்திருந்தாள்
வைத்தே யிருந்தவர்கள் வாழ்கின்ற நாளையிலே;

தேவியின் கனவு
கன்னியவள் மின்னனையாள் கண்தூங்கும் வேளையிலே
கண்டாள் கனவதொன்று காரிகையு மந்நேரம்
ஊருக்கு மேற்குநின்ற வுயர்ந்ததோ ராலமரம்
100. வேருடனே சாய்ந்து விழக்கண்டாள் அம்மானை
கண்டவுட னேயவளுங் கலக்கமுற்றுத் தானெழுந்து
தன்கணவ னோடேதானுரைத்தா ளந்நேரம்
கேட்டுத் தலைவனவன் கிலேச மிகப்பெருகிக்
கிலேசத்தை விட்டுக் கிளிமொழிக்கு ஈதுரைத்தான்
105. கோட்டு முலைமாதே கூறக்கேளிப்பொழுது
கண்டகனா மெய்யாகாக் காரிகையே நீகேளு
களவுகண்ட பொன்னுக்குச் சவுடியுண்டோ காசினியில்
மனக்கவலை வையாதே மறந்துவிடு இப்பொழுதே
இப்படி யேயிவர்களிருக்கின்ற நாளையிலே;

சைவத் தலைவன் மறைவு
110. சைவத் தலைவனுக்குத் தான்சுரமுங் கண்டதுவே
சுரமுமது பாராமல் தோஷமிகக் கண்டதுவே
வாக்குமது குளறி வாங்கியதே சீவனுந்தான்
சென்றான் காண்சைவத் தலைவன் சிவலோகம்
அந்நேரம் மின்னனையு மலறி விழுந்தழுது
115. குத்தி விழுந்து கோவென்றாள் கொம்பனையும்
மயிரை விரித்தலறி மண்மேல் விழுந்தழுது
அய்யோ சிவனேநீ யநியாயஞ் செய்தாயே
மைந்தன் றேட்டுண்ண மகாப்பிரியமா யிருந்தீரே
மைந்தன் வளருமுன்னே வானுலகம் போனீரே
120. பாதிநாள் வாழப் பகவான் பொறுக்கலையே
என்ன செய்வேனென் றேங்கிவிழி நீர்சொரிய
குத்தி விழுந்தழுது கூவென்றாள் கொம்பனையும் :

ஈமக்கடன்
அந்நேரம் வேதியர்க ளனைவருந் தாங்கூடி
மின்னனையைத் தானமர்த்தி வேதியர்க ளெல்லோரும்
125. சைவத் தலைவனையும் தாமே யெடுத்தடக்கிச்
செய்யுஞ் சடங்குஞ் சிறப்பாய் முடித்தார்கள்
பனிரெண்டு நாட்சடங்கைப் பாங்காகத் தான்முடித்துக்
கருமாதி யெல்லாங் கணக்குடனே தான்முடித்தார்
பண்ணுஞ் சடங்கெல்லாம் பண்ணி முடித்தபின்பு
130. மின்னனையாள் தன்மகனை விரும்பி வளர்த்திருந்தாள்:

மகன் பள்ளி சேர்தல்
வளருகின்ற மைந்தனுக்கு வயதைந்து மானதுவே
ஐந்தாம் வயதுதன்னி லழகுள்ள மைந்தனுக்குச்
சிறுகுடுமி வைக்கவென்று சிந்தைதனி லேநினைந்து
வேதியரைத் தானழைத்து மிக்கமுகூர்த் தங்கேட்டு
135. நன்முகூர்த்த வேளையிலே நன்றாய்க் குடுமிவைத்து
பள்ளிக்கு வைத்தார்கள் பன்னுந் தமிழறியத்
தாயாரை யுந்தொழுது தன்குருவைத் தெண்டனிட்டுப்
பள்ளியிலே தானிருந்து படித்தான்கா ணம்மானை
பள்ளிக்குச் சென்று படித்துவரும் நாளையிலே
140. பிள்ளைகளுந் தாங்கூடிப் பிரமரா யனைப்பார்த்து
தகப்பன் றனையறியான் தறுதலைய னென்று சொல்லி
கொட்டி யடிக்கவவன் கூவென் றழுதுகொண்டு
தாயாரி டத்தில் வந்து தானீது செப்பலுற்றான்
என்றன் றகப்பனெங்கே யிருக்கின்றார் மாதாவே!
145. என்றனக்கு நீரீதை யிதமா யுரையுமென்றான்
மைந்த னுரைத்தவிதை மாதாவுந் தான்கேட்டு
இந்நாள் வரையில்நீ யிப்படியே கேட்டறியாய்
இன்றைக்கு நீதானு மிப்படித்தான் கேட்டதென்ன
சொல்வாய் மகனேயென்று துயரமுட னேகேட்டாள்
150. தாயா ரவள்கேட்கத் தானேது சொல்லுவனாம்
இன்றைக்கு நானித மாகப் பள்ளியிலே
பாலர்கள் தம்முடனே படித்து யிருக்கையிலே
எந்தனையு மவர்பார்த்து எல்லோருந் தாங்கூடி
தகப்பன் றனையறியான் தறுதலைய னென்றுசொல்லி
15. பையன்க ளென்றலையில் பண்புடனே தானடித்தார்
ஆகையினா லிதையறிய வேணுமெனக் கேட்டேன்நான்
என்றுமகன் சொல்ல வெழுந்திருந்து மாதாவும்
மைந்தனைத் தானெடுத்து மடிமீதிற் றானிருத்தி
உச்சிதனை முகர்ந்து வுடம்பெல்லாம் தான்றடவி
160. மெத்த மனமுடைந்த மெல்லியளு மப்பொழுது
இந்த வசனமென் காதினிலே கேட்கவென்று
ஈசுவரனு மென் றலையி லிட்டவிதி யிப்படியோ
என்று மனதுநொந்து யேந்திழையு மந்நேரம்
மைந்தன் முகந்தடவி மைந்தனுக் கீதுரைப்பாள்
165. உன்றகப்ப னார்செய்தி யுரைக்கக்கே ளென்மகனே
சாதி மறையோரிற் சைவத் தலைவனென்று
பெரும் புகழுடையான் பிரபலனவ னுன்றகப்பன்
பாதி வயதளவும் பாலகரு மில்லாமல்
மெத்தத் தவசிருந்து மெய்நோன்பும் தானிருந்து
170. பெருந்தவத்தின் பயனாகப் பெத்தார்கா ணுந்தனையும்
உன்றேட்டுக் காணுமுன்னே உந்தனய்யர் தானுமவர்
சென்றார் சிவலோகஞ் சேர்ந்தார்கா ணுன்றகப்பன்
என்றுசொல்ல மாதாவு மியல்புடனே தான்கேட்டு
என்றலையி லிட்டவெழுத் திதுகாண் மாதாவே
175. நீர்சலிக்கக் காரணமென் நின்புதல்வ னானிருக்கச்
சலிப்பதனை விட்டுவிடும் தாயேநீ ரென்றுசொல்லி
மெத்த மனம்நொந்து மீண்டுபோய்ப் பள்ளியிலே
சரித்து முகம்வாடித் தானும் படித்துவந்தான்
படிக்கும் பயல்களுக்குள் பத்திரட்டி புத்தியுடன்
180. சகலகலை வல்லவனாய்த் தான்படித்தான் அம்மானை
படித்துவரும் பாலனுக்குப் பண்பாய்வய தேழாகத்
தாயா ரதுவறிந்து தன்மகனார் பாலனுக்குப்
பூணூற் கலியாணம் பொருத்தமுடன் செய்வதற்கு
நாள் முகூர்த்தம் பார்த்து நலமா யுரையுமென்றாள்
185. முகூர்த்தமவர் பார்த்துரைக்க மொய்குழலா ளப்பொழுது
பூணூற் கலியாணம் பொருத்தமுடன் செய்தனளாம்
பனிரெண்டு வயதளவும் படித்தான்காண் பள்ளியிலே
வேதம் புராணங்களும் மிக்கநல்ல சாஸ்திரமும்
காவியங்க ளுள்ளதெல்லாங் கற்றறிந்தா னம்மானை
190. சகலகலை வல்லவனாய்த் தான்படித்தான் பாலகனும்:

தாயிடம் செம்பொன் பெறுதல்
பதினைந்தாம் வயதுதன்னிற் பாலக னவன்றனது
தாயார் தனைத்தொழுது தானீது கேட்கலுற்றான்
என்றகப்ப னார்தாமு மிறந்துவிட்டார் மாதாவே
அவர்தேடுந் திரவியங்க ளுண்டோ வெனக்கேட்டான்
195. மைந்த னவன்கேட்க மாதாவு மீதுரைப்பாள்
உன்றகப்ப னார்தானு முயிர்போகும் வேளையிலே
செல்லாப் பணமொன்று சிக்கெனவே தான்கொடுத்து
உன்றன் மகனார்க்கு உற்றபொரு ளிதுவெனவே
200. அந்தப் பொருளொன்று அடைவா யிருக்குதப்பா
உன்றகப்ப னார்தா னுனக்குவைத்துப் போனதொரு
செல்லாப் பணமொழியத் திரவியங்கள் வேறிலையே
யென்று சலிப்பா யெடுத்துரைத்தாள் மாதாவும்
அந்தமொழி கேட்டவுட னறிவு மிகத்தோன்றி
205. யொன்று மறியாம லுரைத்தாயே மாதாவே
செகமுழுது மிந்தச்செம் பொன்னுக்குத் தான்சரியோ
வென்று சொலித்தானு மின்பமுடன் றான்வாங்கி
யன்பாய் முடிந்துகொண்டு மற்றுமவ னீதுரைப்பான்:

தீர்த்தயாத்திரை
அன்னையரே நீருமெங்க ளையருமாய் வாழ்க்கையிலே
210. புத்திரனை வேண்டிப் புரிசடையோ னைநோக்கி
மெத்தத் தவமிருந்து மெய்நோன்புந் தானிருந்து
என்னையுந் தான்பெற்று இன்பமுடன் றானிருக்க
என்றேட்டுக் காணுமுன்னே யிறந்தாரே யெங்களையர்
எங்களையன் தானுமிப்போ யீசர் பதம்பெறவே
215. பாண்டித் தலங்கள் பதிநாலு நான்பார்த்துக்
குருவினுடைச் சீர்பாதங் கொண்டு சிரசதன்மேல்
தீட்சையுந் தான்பெற்றுச் செல்லாப் பணஞ்செலுத்திச்
சொக்கரையுந் தான்றொழுது சுகமாய் வருவதற்கு
எனக்கு விடைதந்து இன்பமுடன் தானனுப்பு
220 மென்றுசொல்லித் தாயா ரிணையடியைப் பூண்டுகொண்டு
என்னுடைய மாதாவே யெனக்குவிடை தாருமென்றான்
மைந்த னுரைத்தமொழி மாதாவுந் தான்கேட்டு
மகனுடைய வல்லமையை மனத்தில் மிகவறிந்து
ஈசன் மலரடிக்கு யிசைந்திருப்பா யென்மகனே
225 பூலோகத் தார்தொழவே புண்ணியனாய் நீயிருப்பாய்
போய்வருக வென்று பொருந்த விடைகொடுத்தாள்.
தாயின் விடைவாங்கித் தான் நடந்தான் அம்மானை
சென்றான் காணப்பொழுது சீக்கிரமாய்க் காளைநகர்
காளைநா யகரையும் கருத்தான சொக்கரையும்
230 சோமநா யகரையுந் தொழுதுமிகச் சேவைசெய்து
ஆங்குமோ ராசானை யடிவணங்கித் தெண்டனிட்டுக்
குருதட்சிணையும் வைத்துக் கும்பிட்டானடி வணங்கி
கேட்டா னுபதேசங் கிருபையுடன் சொல்லுமென்று
தட்சிணையைப் பார்த்தவவர் செல்லா தெனவேதான்
235 வாங்கி முடிந்துகொண்டு மற்றுமவ னீதுசெய்தான்
உத்தர கோசமங்கை யுடனே யவனும்வந்து
மங்கைபாக நாதரையும் மலர்ப்பாதஞ் சேவைசெய்து
அங்குமோ ராசானை யடிவணங்கித் தெண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
240 உபதேசஞ் சொல்ல வுற்றசெழும் பொன்னதுதான்
சொல்லா தெனவேதான் திரும்பக் கொடுத்துவிட்டார்
இவர் நமக்கு ஆசா னில்லையென்று தான்நினைந்து
வாங்கி முடிந்துகொண்டு மற்றுமவ னீதுசெய்தான்
வந்தான்காண் ஆவுடையார் வாழுஞ்சிவ னாரிடத்தில்
245 சிவனார் தனையுந்தன் சிந்தைதனி லேநினைந்து
அங்குமோ ராசானை யடிவணங்கித் தெண்டனிட்டு
தட்சிணையை வைத்துச் செப்புமுப தேசமென்றார்
தட்சிணையைப் பார்த்துச் செல்லா தெனவேதான்
வாங்கி முடிந்துகொண்டு வந்தான்காண் நெல்வேலி
250 நெல்வேலி நாதரையும் நெஞ்சில் மிகவிருத்திக்
காந்திமதி யம்மனையும் கைதொழுது பூசைபண்ணி
அங்குமொரு ஆசானை யடிவணங்கித் தண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
255 உபதேசஞ் சொல்ல வுற்ற செழும் பொன்னதுவும்
செல்லா தெனவே திரும்பக் கொடுத்துவிட்டார்
வாங்கி முடிந்துகொண்டு வந்துதிரு வேடகத்தில்
திருவேட கத்தி லுரை சிவனாரைப் பூசைபண்ணி
யங்குமொரு ஆசானை யடிவணங்கித் தண்டனிட்டுத்
தட்சிணையை வைத்துச் செப்புமுப தேசமென்றான்
260 உபதேசஞ் செய்ய வுற்றசெழும் பொன்னதுதான்
செல்லாதென வேயாசான் திரும்பக் கொடுத்து விட்டார்
ஆசான் கொடுக்கவவன் வாங்கி முடிந்துகொண்டு
யிவர் நமக்கா சானில்லை யென்றுமிகத் தான்நடந்து
ஆடானை நாதரையு மபரஞ்சி யம்மனையும்
265 இருவர்தம் பாதமதை யின்பமுடன் பூசைபண்ணி
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
அங்குமவர் செம்பொன்னைச் செல்லா தெனக்கொடுத்தார்
திரும்ப வதைவாங்கித் தீரமாய் முடிந்துகொண்டு
270 வந்தான்புனல் வாசல்மகா வீசானன் சந்நிதிக்கே
பழம்போதி நாதரையும் பாங்குடனே பூசைபண்ணி
அங்குமொரு ஆசானை யடிவணங்கித் தெண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
அங்குமவர் செம்பொன்னைச் செல்லா தெனக்கொடுக்க
275 வாங்கி முடிந்துகொண்டு மற்றுமவ னீது செய்தான்
நடந்தான்காணிராமேசுரம் நாயகனூர் சந்நிதிக்கே
தனுக்கோடி யாடித் தலதீர்த்த முள்ளதெல்லாஞ்
சென்று வணங்கித் தீர்த்தங்க ளுள்ளதெல்லாம்
அக்கினி தீர்த்தமாடி ஐந்துநா ளங்கிருந்து
280 இராம நாயகரையும் பருவத வர்த்தனியையும்
காலவயி ரவனையுங் கைதொழுது பூசைபண்ணி
அங்குமொரு ஆசானை யடிவணங்கித் தண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
உபதேசஞ் சொல்ல வுற்ற செழும் பொன்னதுதான்
285 செல்லா தெனவே திரும்ப வவர்கொடுக்க
வாங்கி முடிந்து கொண்டு வழிநடந்தான் றென்னவனும்
வந்தான் புனல்வாசல் வாழுஞ்சிவ னாரிடத்தில்
பூவாண லிங்கத்தின் பொற்பாதஞ் சேவை செய்து
அங்குமொரு ஆசானை யடி வணங்கித் தண்டனிட்டுத்
290 தட்சிணையை வைத்துச் செப்புமுப தேசமென்றான்
அங்குமந்தச் செம்பொன்னைச் செல்லா தெனக்கொடுக்க
வாங்கி முடிந்து கொண்டு வந்தான்காண் மதுரைக்கு
மதுரை தனில் வாழும் மன்னவனார் பாண்டியனார்
பாண்டிக் குமாரி பார்வதிமீ னாட்சிதன்னைத்
295 தண்டனிட் டவனுடைய சீர்பாதம் போற்றிசெய்து
சொக்கரையுந் தான்றொழுது தன்றுயரமெல் லாஞ்சொல்லி
இருபதுநா ளங்கிருந்து இன்பமுட னவருடைய
சீர்பாதந் தன்னைச் சிறப்புடனே பூசைபண்ணி
அங்கு வெகுபேர்க ளாசான்க ளென்போரைக்
300 கண்டு தொழுதவர்கள் கால்களிலே தான்வீழ்ந்து
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
தட்சிணையைப் பார்த்துஅவர் செல்லா தெனக்கொடுக்க
வாங்கி முடிந்து கொண்டு வழிநடந்து தென்னவனும்
வந்தான் திருப்பத்தூர் வாழுஞ்சிவ னாரிடத்தில்
305 சிவனாரைப் பூசைபண்ணி சிந்தைதனி லேநினைந்து
வயிர மூர்த்தியுடை மலர்ப்பாதந் தண்டனிட்டுத்
அங்குமொரு ஆசானை யடிவணங்கித் தண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றார்
அந்தச் செழும்பொன்னை யவர்செல்லா தெனக்கொடுக்க
310 வாங்கி முடிந்து கொண்டு மாதுயரப் பட்டவனும்
வந்தான் பிரான்மலையில் வாழுஞ்சிவ னாரிடத்தில்
சிவனாரைப் பூசைபண்ணிச் சிந்தைதனி லேநினைந்து
அங்குமொரு ஆசானை யடிவணங்கித் தண்டனிட்டுத்
தட்சிணையும் வைத்துச் செப்புமுப தேசமென்றான்
315 அங்குமந்தச் செம்பொன் செல்லா தெனக்கொடுக்க
வாங்கி முடிந்து கொண்டு மாதுயர்ப் பட்டவனும் :

தாயிடமேகல்
இத்தனைபேர்கள் தம்மில்நமக் கேற்றகுரு வில்லையென்று
நம்மையா ளுங்குருவை நான்காண்ப தெப்பவென்று
எண்ணி மனந்தனிலே யேங்கியே தானவனும்
320 மன்னும் மனந்தேறிப் பிரியமுடன் தென்னவனும்
என்றைக்கு ஆனாலு மென்குருவு மென்னிடத்தில்
வந்து வெளிப்படுவா ரென்ன மனந்தேறி
வந்தான் திருவாதூர் மாதாவின் றன்னிடத்தில்
மாதாவைக் கண்டு அவர்பாதந் தண்டனிட்டார்
325 தண்டனிட்ட மைந்தனையுந் தேன்மொழியாள் தானெடுத்துக்
கட்டி யணைத்துக் கன்னத்திலே முத்தமிட்டுப்
போய்வந்த பொழுதுகண்ட புதுமைகளைச் சொல்லென்றாள்
மாதாவுந் தான்கேட்க மைந்தனுந் தானுரைக்கக்
கேட்டவந்த மாதாவுங் கிலேச மிகத்தீர்ந்து
330 வாட்டமறச் சிலநாள் வாழ்ந்திருந்தா ரம்மானை:

பாண்டியனைக் காணுதல்
வாழ்ந்திருக்கும் நாளையிலே மைந்தனு மீதுரைப்பான்
என்னையின் னாள்வரையி லிதமாய் வளர்த்தீரே
உம்மையுநா னிரட்சிக்க வேண்டாமோ உத்தமியே
பாண்டிய னார்கிட்டே பரிவுடனே நான்போகச்
335 சந்தோஷ மாகவே தானனுப்பும் மாதாவே
மைந்தன் மொழிகேட்டு மாதாவுமீ துரைப்பாள்
என்மகனே ! நீதா னின்னஞ் சிறியவன்றான்
பாண்டிய னார்கிட்டே பயமில்லா மல்நீயும்
பேசி வருவாயோ பிரியமுட னென்மகனே
340 இராசாவைக் காணவிது நல்லவய தில்லையப்பா
இன்னஞ் சிலநாட்கள் சென்றால்நீ அப்பொழுது
போகலா மென்மகனே யிப்பொழுது வயதல்ல
வென்ற மொழிகேட்ட வவனீது தானுரைத்தான்
எந்தன் றிராணிகண்டு மிப்படிநீர் சொல்வீரோ
345 மறுத்துமொழி பேசாமல் மனதா யனுப்புமென்றான்
அந்தமொழி கேட்ட மாதாவு மப்பொழுது
போய்வரு வாயென்று பொருந்த விடைகொடுத்தாள்
மாதாவின் விடைவாங்கி வந்தான் மதுரைக்கு
மதுரைதனில் வந்து மன்னவனாம் பாண்டியருள்
350 பாண்டியனைக் கண்டான் பாங்குடனே தென்னவனும்:

பதவி பெறுதல்
வந்து கண்ட தென்னவனை மன்னவன் றான்பார்த்தான்
அவருடைய தீரமுந் திருவழகுங் கண்டபின்பு
நம்முடைய தேசத்திற்கு நல்லவதி காரஞ்செய்ய
வல்லவ னிவனேயென்று மனதில் நினைந்துகொண்டு
355 தென்னவனைப் பார்த்துச் செப்பினார் பாண்டியனார்
நம்முடைய தேசத்திற்கு நல்ல வதிகாரம்
நாமுமக்குத் தான்கொடுக்க எண்ணுகிறே னிப்பொழுது
உம்கருத் தெனவெமக்கு நீருரையு மென்றுரைத்தார்
ஏற்றதைநா னப்படியே செய்திடுவே னென்றுரைத்தான்
360 என்று அவனுரைக்க வீதுசெய்தார் பாண்டியனார்
தென்னவனார் தன்னைத் திருமுன் னருகழைத்துத்
தும்பிப் பதக்கமுடன் சொர்ண கடையங்களும்
பெரிய சாம்பளியும் பீதாம் பரத்துடனே
முன்கை மூதாரியு முருக்குவளை மோதிரமும்
365 முத்துக் கடுக்கன்கள் முகமிலங்கத் தான்பூட்டி
நாலுவகை வத்திரமும் நலமாகத் தான்கொடுத்து
முத்திரை மோதிரமும் முறையுடனே தானீந்து
யானையின்மேல் வைத்தவனைப் படையதுவுந் தான்சூழத்
தாரைசின்னந் தான்முழங்கத் தம்பட்டந் தானதிர
370 நடநாடக சாலை நாட்டியங்க ளாடிவர
பேரிகை டமாரம் பெரிய துடிமுழங்க
நகரை வலஞ்சுற்றி நரபாலன் முன்புவந்தான்
முன்வந்த தென்னவனை முகநோக்கிப் பாண்டியனார்
ஆசாரந் தனிலிருந்து அதிகாரஞ் செய்யுமென்றார்
375 போமென் றருள்புரிந்தார் புதுமையுள பாண்டியனார்
ஆமென் றவன் சொல்லி யாசார வாசல்வந்து
அதிகாரஞ் செழித்திருந்தா னன்பாகத் தென்னவனும்:

பாண்டியனேவல்
அப்படியே சிலநா ளதிகாரஞ் செய்கையிலே
குதிரைகொள வேணுமென்று கோமானுந் தாம்நினைந்து
380 ஒருகோடி பசும்பொன் னெடுத்துமுடிப் புக்கட்டி
தென்னவனைத் தானழைத்துச் செப்புவார் பாண்டியனார்
தேசத்துக்குக் குதிரைகள் சீக்கிரமாய் வரவழைத்துக்
கட்ட வேணுமென்று நம்முடைய கருத்திதுகாண்
உம்மா லொழியமற் றொருவராலீ தாகாது
385 குதிரைகள் தான்வாங்கிக் கொண்டுவாரு மென்றுசொல்லி
வெகுமதியுஞ் செய்து தானனுப்பத் தென்னவனும்:
தென்னவன் புறப்பாடு
குதிரைகள் வாங்கவெண்ணிச் சென்றடைந்தான் தன்னூரைத்
தன்னூரில் தானிறங்கிச் சேர்ந்தான் தன்மாளிகையை
மாளிகையிற் சென்று மாதாவைத் தண்டனிட்டார்
390 தண்டனிட்டு வீழ்ந்த திருமகனைத் தானெடுத்து
வாழ்வாய் வளர்ந்திருப்பாய் வருவாய்நீ யென்மகனே
ஈசன் மலரடியை யின்பமுடன் பற்றிவாழ்வாய்
பிள்ளை பெறுவாய் பெருமாள் பதம்பெறுவாய்
என்றுசொல்லி வாழ்த்தி யெடுத்தணைத்து மாதாவும்
395 சந்தோஷ மாகவே தானிருந்தாள் அம்மானை:

தாயிடம் விடைபெறுதல்
ஐந்துநா ளங்கிருந்து ஆறாம்நா ளாம்பொழுது
தாயா ரிடந்தனிலே தானுரைத்தான் றென்னவனும்
வந்தாறு நாளாச்சு மாதாவே யிப்பொழுது
கோமா னிதைக்கேட்டால் கோபிப்பா ரெந்தனையும்
400 என்றுமகன் சொல்ல வேந்திழையுந் தான்கேட்டு
மனதுமிக மகிழ்ந்து கிருபைக் கடலாகிக்
கோட்டுமுலை மாது கூறுவா ளப்பொழுது
மாடுதனி லேறும் மாதேவர் தன்னருளால்
வேறுவினை வாராமல் வெற்றிகொள்வா யென்மகனே
405, தேசமதிற் சென்று திறமாய்ப் பரிகள்கொண்டு
சீக்கிரமாய் வாவென்று திருவாக்குத் தான்கொடுத்தாள்:

பரியாத்திரை
தாயிடம் விடைவாங்கித் தானும் வெளியில்வந்து
வான்பரியின் மீதேறி வலுச்சேனை தான்சூழ
நடந்தான்காண் தென்னவனும் நல்ல வழிகூடி
410 சென்றான்காண் சோழபுரம் தென்னவனு மப்பொழுது
அன்றைக் கதிலிருந்து ஆதித்தன் தோன்றியபின்
மற்றாம்நா ளாம்பொழுது மாசேனை தான்சூழத்
தம்பட்டந் தாரைசின்னந் தவில்முரசு தான்முழங்க
கட்டியங்கள் கூறக் கவிவாணர் பாடிவர
415 ஆனை யதிர ஆனபரி கொக்கரிக்கச்
சேனை தளத்துடனே தென்னவனு மப்பொழுது
திருமாது தானுறையுந் திருவேகம் பத்தில்வந்து
கூடாரந் தானடித்துக் கூவென் றிறங்கினன்காண்
இறங்கி யதிலிருந்தா ரின்பமுடன் அம்மானை
420 ஐந்துநா ளங்கிருந்து அலைகதிரோன் றோன்றியபின்
கூடாரந்தான் பிடுங்கிக் கோமானுந் தான்நடந்தான்
வெகுவேக மாய்நடந்து வந்தான்திருக் குளத்தங்கரை
திருக்குளத்தங் கரைதனிலே சென்றடித்தார் கூடாரம்
பாளையமும் தானிறங்கிப் பண்பா யிருந்தனர்காண்
425 அந்தநா ளங்கிருந்து அலைகதிரோன் றோன்றியபின்
தண்டிகையின் மீதேறித் தானு மவர்தளமும்
நக்கூரு மூரணியு முயர்ந்ததிடற் சோலைகளும்
மத்தியானம் போயிருந்து மன்னவனு மப்பொழுது
தானபா னங்களையுஞ் சடுதியிலே தான்முடித்துப்
430 போசனமுஞ் செய்து புறப்பட்டான் தென்னவனும்
போனான் முரசை பொன்வளர் நெத்திதன்னில்
சென்றே யடித்தார்கள் திக்கெங்குங் கூடாரம்;

ஆசான் கண்படுதல்
அடித்தங் கவரிருக்கப் புதுமைகேள் அம்மானை
வந்தார்காண் ஆவுடையார் மறையோன் வடிவாகக்
435 கங்கைப் பிராமணன்போல் கிழவன்போல் வயதாகி
புத்தகமும் பூநூலும் போதக் கிழவனுமாய்க்
கோலூன்றித் தள்ளாடிக் கோலப் பிராமணனும்
வந்தார்காண் வேதியன்போல் வாகான தென்னவன்முன்
கண்டான்காண் தென்னவனும் கண்குளிரப் பிராமணனை
440 எங்கிருந்து வாரீர்க ளேழைப் பிராமணரே
யென்றுசொல்லித் தென்னவனு மின்பமுடன் றான்கேட்கக்
கங்கையில் தீர்த்தமாடிக் கிருபையுடன் வருகிறேன்காண்
வந்தொரு மாதமாக வனமிதிலிருக் கின்றேன் நான்
என்று வேதியனார் சொல்ல வின்பமுடன் தென்னவனும்
445 நன்றின்று நமக்கிப்போது ஒருகுறைவு மில்லையென்ன
நன்றாக நீரிருக்க நான் வந்தேன் கண்டீரே!


குருந்தடியேகல்
என்று வேதியனு மின்பமுடன் தென்னவனும்
இந்த வனந்தனிலே யிருக்கிறோ மென்றீரே
நீரிருக்கு மிடந்தனிலே நியமமுடன் பூசைபண்ண
450 நல்ல தலமொன்று நமக்குண்டோ வெனக்கேட்டான்
நல்ல தலமொன்று நலமா யிருந்ததுகாண்
வாருமென வழைத்து வனந்தனிலே போனார்காண்
போனார் வெகுதூரம் புதுமையுள்ள வவ்வனத்தில்
சென்றார் குருந்தடியில் செல்வப் பிராமணனும்
455 குருந்து தனிலிருந்து கோலமுள்ள வேதியரும்
தென்னவனைப் பார்த்துத் தென்புறத்தில் நீயிருந்து
பூசைபண்ண நல்ல தலமிதுகாண் புண்ணியனே
என்றுசொல்ல வேதியனு மின்பமுடன் தென்னவனு
மிந்த விடந்தனிலே யிருப்போம்நா மென்றுசொல்லிக்
460 கூடாரங் கொண்டுவந்து கொத்தவனும் போடுமென்றான்
அப்படியே கொண்டுவந்து அடித்தார்கள் கூடாரம்
சேனைதள மத்தனையுஞ் சேர வரவழைத்துக்
கூடா ரமுமடித்துக் கூட்டிவந்தார் பாளையத்தை,

உபதேசம் பெறுதல்
யப்பொழுது வேதியரு மவனை யருகழைத்துக்
465 காதி லுபதேசங் கருத்துடனே சொன்னார்காண்
உபதேசங் கேட்டவுட னுத்தமனார் தென்னவனுஞ்
சகலகலைக் கியானந் தகைமையுடன் தானறிந்தான்
செல்லாப் பணமுஞ் சென்றதுகா ணம்மானை
அப்பொழுது தென்னவர்க்கு அறிவு மிகத்தோன்றி
470 இன்றைக்கே யென்குருவு மெதிர்ப்பட்டீ ரென்குருவும்
எந்தன் குருவுமென் சாமியும் நீரேகாண்
என்றுசொல்லித் தண்டனிட்டு இன்பமுடன் சந்தோஷமாய்
குருவினது சீர்பாதங் கும்பிட் டடிவணங்கி
அனுதினமும் நான்மறவே னையரே உம்பாதம்
475 எந்தன் குருவே! யெனையாளுஞ் சற்குருவே
என்றுசொல்லி யவருடைய விருதாளைப் பூண்டுகொண்டு
நின்று தொழுதிறைஞ்சி நெத்திநேர்த் தென்னவனும்

சிவதரிசனம்
நிற்கவந்த வேதியனு மகமிக மகிழ்ந்துகொண்டு
அவ்வேஷம் மாறி யரன்வடிவ மானார்காண்
480 மானும் மழுவுந் தரித்துச் சிவனாரும்
காளகண்ட முந்தரித்துக் கருத்துட னீசுவரரும்
இரிஷப வாகனத்தின் மேலே யெழுந்தருளிக்
காட்சி கொடுத்தார்காண் கருணையுடன் றென்னவர்க்கு
கண்டான்கா ணீசுவரரைக் கருணையுள்ள தென்னவனும்
485 ஈசுவரரின் பாத விணையடியைப் பூண்டுகொண்டு
மாலயனுங் காணாத மலர்ப்பாதம் நாயடியேன்
காணுதற்கு என்ன தவங் கண்ணுதலே செய்தேனோ
என்றுதான் தென்னவனு மேத்திப் பலதொழுது,

சிவன் துதி
மான்மழுவுந் தரித்த வள்ளலே போற்றியென்றான்
490 மார்க்கண்ட னுக்காக மறலிதன்னை யப்பொழுது
தீர்க்கமாய்த் தானுதைத்த சிவனாரே போற்றியென்றான்
காமன் தனையெரித்த கண்ணுதலே போற்றியென்றான்
சுந்தரர்க்குத் தூது சென்ற சோதியே போற்றியென்றான்
எட்டறியே னிரண்டறியே னேழை யடியேனை
495 ஆட்கொள்ள வந்த அய்யனே போற்றியென்றான்
மங்கையிடப் பாகம்வைத்த வள்ளலார் பாதமதைச்
சென்றுதான் தென்னவனுஞ் சிக்கெனவே பூண்டுகொண்டு
தோத்திரங்கள் செய்து தொழுதான்காண் தென்னவனும்:

சிவனார் திருவாக்கு
அப்பொழுது ஈசுவரனா ரன்புடனே தான்மகிழ்ந்து
500 தென்னவனைப் பார்த்துச் சிவனாருமீ துரைப்பார்
தப்பாம லுந்தனுக்குத் தருவோ மிணையடிதான்
பாண்டியனா ரிடத்திற் பரிகொள்வோ மென்றுசொல்லித்
திரவியங்கள் தான்கொடுக்கத் தென்னவனே வாங்கிவந்தாய்
அந்தப்படிக்கு அவர்க்குப்பரி கொண்டு சென்று
505 பாண்டியனார் தமக்குப் பண்பாக வேசெலுத்திப்
பின்னுஞ் சிலநாட்தான் பூமியிலே தானிருந்து
உன்னையப்பால் நாமழைத்து உற்றுபதம் தந்தருள்வோம்
என்றுறுதி சொன்னா ரீசுவரருந் தென்னவர்க்குப்
பின்னுமிர கசியமாய்ப் பிரியமுட னீ துரைப்பா
510 இப்போநீ கொண்டுவந்த ஏழுகோடி திரவியத்தைத்
தப்பாம லிவ்விடத்திற் றானே திருப்பணிகள்
செய்யுமென் றீசுவரனார் திருவாக்குத் தானருளி
வான்பரிக்கு நாமும் வகைசொல்வோம் தப்பாமல்
என்றுதான் தென்னவர்க்கு ஈசுவரனார் தாமுரைத்த
515 அன்றுமுதற் றென்னவனு மரனார் திருவடியைச்
சென்றுகருத் தில்வைத்துச் சிவஞானி யானார்காண்:

வேதியர் வருகை
இப்படியே தென்னவனு மிருக்கின்ற நாளையிலே
திருப்பணிகள் செய்யவென்று சிந்தைதனி லேநினைந்து
வேவுக்கா ரர்களை விரைவாய் வரவழைத்து
520 வடக்கூர் தனிலிருக்கு மாமறையோர் தம்மையிப்போ
கூட்டிவர வேணுமென்று கூறினார் தென்னவனும்
அப்போது தூதுவர்க ளரைநொடியிற் சென்றுகண்டு
தென்னவனார் கூட்டிவரச் சொன்னார்காண் சீக்கிரமாய்
என்று சொல்லத் தூத ரெழுந்திருந்து வேதியரும்
525 வந்துகண்டார் தென்னவனை மாமறையோ ரெல்லோரும்:

கோயில் திருப்பணிக்கு நாள்பார்த்தல்
வந்தவொரு வேதியரை வாருமென்று தென்னவனும்
வேதியரைப் பார்த்து விருப்பமுடன் தென்னவனும்
இந்த விடந்தனிலே யிதமாகத் திருப்பணிகள்
நாம்செய்ய வேணுமென்று சிந்தித் திருக்கின்றோம்
530 நாள்முகூர்த்தம் பார்த்து நன்றா யுரையுமென்றார்
அப்போது வேதியர்க ளனைவோரும் தாங்கூடிச்
செப்பமுடன் பஞ்சாங்கம் தீர்க்கமாய்த் தான்பார்த்துச்
சாத்திரங்கள் பார்த்துத் தானுரைத்தார் வேதியர்கள்
சுக்கிர வாரநாள் சுபயோக லக்கினத்தில்
535 அந்தநாளதைச் செய்தா லரிய சுவராகும்
என்றுசொல்லி வேதியர்க ளின்பமுடன் வீற்றிருக்க
நல்லதென்று சம்மதித்து நலமுடனே தாமிருந்தார்:

தென்னவன் கட்டளை
சுக்கிரவாரநாள் தோன்றியபின் தூதுவரை
நலமாகத் தானழைத்துச் சொல்லுவான் தென்னவனும்
540 வேதியர்கள் சொற்படியே விடிந்தைந்து நாழிகையில்
வரச்செய்ய வேணுமென்று சடுதியிற் றானோடி
வேதியர்கள் தங்களையும் மிகுந்தஆ சாரியையும்
கூட்டிவர வேணுமென்று கூறினார் தென்னவனும்
விடைபெற்றுத் தானோடி விரைவா யழைத்துவந்தார்
545 வந்தவரைப் பார்த்துவகை யீதுசொன்னான் தென்னவனும்
திருப்பணிகள் நன்றாகச் செய்யுமென்றார் தென்னவனும்;

விநாயகர் பூசை
நல்ல லக்கினத்திலே நாள் முகூர்த்தஞ் செய்வதற்கு
பிள்ளையார் வைத்துப் பூமலர்கள் தான்சூட்டிப்
பச்சரிசி தேங்காய் பயறுபணி யாரமுடன்
550. அப்பமவல் பொரிகள் அதிரச மெள்ளுருண்டை
வான்கரும்பு தான்முதலாய் வைத்து விநாயகர்க்குத்
தட்சிணையும் வைத்துத் திசைநோக்கித் தெண்டனிட்டுத்
தேங்கா யுடைத்துச் சிறப்பாகத் தான் படைத்து
நாள் முகூர்த்தஞ் செய்தார்கள் நல்லதொரு வேளையிலே
555 முகூர்த்த மவர் செய்து முடிந்தபின்பு தென்னவனும்;

காளியாசாரி வருகை
காளியா சாரிதன்னைக் கடுக வரவழைத்துத்
திருப்பணிகள் செய்து சீக்கிரமாய்த் தான்முடிக்க
வேணுமென்று சொல்லி வெகுமதியுந் தான்கொடுத்தார்
ஆமென்று வாங்கி யவனீது சொல்லலுற்றான்
560 கல்லுவந்து சேர்ந்தால் செய்யலாந் திருப்பணிகள்
கல்லு யிருக்குமிடங் காளியா சாரிதன்னைச்
சொல்லுமென்று கேட்கச் சொல்லுவா னாசாரி
திருமெய்யம் தனிலேபோய்ச் சென்று மலைபிளந்து
வண்டியின்மே லேத்தி வரவேணு மென்றுசொன்னான்
565 அந்தப்படியே யனுப்பு மென்றான் தென்னவனும்
அப்பொழுது காளியா சாரி யவன்றானும்
ஐநூறு தச்சு அடைவாய் வரவழைத்துத்
திரும்பவுமே யாசாரி செப்புவான் றென்னவர்க்குப்
பெரியமலை யானதினால் பின்வழக்கு வாராமல்
570 ரொக்கவிலை கொடுத்து நூற்போட்டு மலைபிளந்து
கொண்டுவர வேணுங் கோமானே யென்றுரைத்தான்
ஆமென்று சொல்லி யதற்கிசையத் தென்னவனும்;

திருமெய்யஞ் செல்லுதல்
கோடித் திரவியமும் வாங்கிச்சென்றான் திருமெய்யத்தில்
போயவர்க ளங்கே பெரியமலை பார்த்து
575 மலைக்கு விலைகொடுத்து வாங்கினர்காண் அம்மானை
மலையை விலைக்குவாங்கி மலையருகே போயிருந்து
கல்லைப் பிளந்து கணக்கதிகா ரப்படிக்குச்
சேர்மானம் பார்த்துச் சேர்த்தார்காண் அம்மானை
உடனுக் குடனே ஒட்டர் வசப்படுத்திக்
580 கல்லுவந்து தான் விழவே கண்டானே தென்னவனும்
கண்ட வுடனே கட்டியக்கா ரனையழைத்துக்
காளியா சாரிதன்னைக் கடுக வழையுமென்றான்:

காளியாசாரி திரும்ப வருதல்
விடைபெற்றே னென்று விரைவா யவனோடி
ஆசாரி தனைநோக்கி யருளிப்பா டென்றுரைத்தான்
585 உரைத்த வுடனே துணுக்கென் றெழுந்திருந்து
ஓடிவந்த ஆசாரி உடனே யடிபணிந்தான்
வந்துகண்ட ஆசாரி மதிமுகம்பார்த் தீதுரைத்தான்
கல்லுவந்து சேர்ந்ததுகாண் காளியா சாரியென்றும்
திருப்பணி வேலைகள் சீக்கிரமாய்த் தான்முடிக்க
590 வேணுமென்றுஞ் சொன்னார்காண் வெற்றியுள்ள தென்னவனும்:

கோயிற்றிருப்பணி
அப்போது ஆசாரி அன்புடனே தானெழுந்து
கோலளந்து நூற்போட்டுக் குற்றமொன்று மில்லாமல்
வானம் பிரித்து வகைவகையாய் மண்போட்டு
பாரமலை யிடித்துப் பழுதொன்றும் வாராமல்
595 கல்லுகள் சேரக் கணக்கதிகா ரப்படிக்குக்
கொண்டுவந்து சேர்த்துக் கொழுகினர்காண் அம்மானை
வாணமது வெட்டி வகைவகையாய்க் கல்சேர்த்து
குமுதவரிப் படியலுங் கொடுங்கை மிகச்சேர்த்து
ஆளி வரியு மலங்கார மாய்ச்சேர்த்துக்
600 கொடுங்கைமுதல் மேல்வரியும் கோப்பாகத் தான்சேர்த்துச்
சிகரமுதல் தூபிச் சிறப்பாகத் தான்சேர்த்துத்
திருநிலைக்கால் நிறுத்திச் சிறப்பாய்க் கதவுவைத்து
நந்திகே சுவரனார் நாயகனார் தானிருக்க
நாலுகால் மண்டபமும் நலமாகத் தான்முடித்துக்
605 கருடகம்பக் கொடியுங் கெட்டியாய்த் தான்முடித்து
யோகநாயகி யம்மன் யோகத்தில் தானிருக்க
அம்ம னிருக்க வலங்காரக் கனககபை
செம்பொன் தகடதனாற் சிறப்பாகத் தான்முடித்துப்
பார்க்கின்ற பேர்களுக்குப் பலவணியுந் தான்சமைத்துப்
610 படியுமது கட்டிப் பழுதொன்றும் வாராமல்
கம்பத்தடி மண்டபமும் கணிசமாய்த் தான்சமைத்துக்
குருந்தடியைச் சுற்றிக் கோலத் திருமதிலுங்
குருந்தடியில் வீற்றிருக்குங் கோமா னவர்தமக்குக்
கனக சபையுங் கனரத்ன மேடைகளும்
615 பள்ளி யறையும் பளிங்குமா மண்டபமும்
சுத்தித் திருமதிலுஞ் சூழ்கோபுர வாசல்களும்
கோபுரமுந் தான்முடித்துக் குடவரையுந் தான்சமைத்து
ஆயிரக்கான் மண்டபமும் ஆள்பள்ளி மாளிகையும்
அறைகள் களஞ்சியமு மலங்கார மாய்முடித்து
620 மண்டபங்கள் கட்டளைகள் வரிசையுட னேமுடித்துத்
திருநிலைக் காலிட்டுச் சிறப்பாய்க் கதவுவைத்துத்
தேரோடும் வீதியுஞ் சிறப்பாய் வகுத்தார்கள்:

தென்னவர்பாற் குறைகூறல்
அப்பால் நடந்தகதை யன்புடனே சொல்லுகிறோம்
தென்னவனார் கூடவந்த சந்நிதி யதிகாரிகள்
625 எல்லோருங் கூடியங்கே யீதுசெய்தா ரம்மானை
பாண்டியனார் தாமும் பரிவாங்கி வாவெனவே
தென்னவனார் கைக்கொடுத்த திரவியங்க ளத்தனையும்
சேரச் செலவழித்துத் திருப்பணிகள் தான்முடித்துத்
தென்னவனார் தாமுஞ் சிவஞானி யானார்காண்
630 ஆகையினாற் பாண்டியர்க்கு அறிக்கை செய்ய வேண்டுமென்று
வேவுகா ரரையழைத்து விரைவா யனுப்பினர்காண்
அனுப்ப வவனோடி யான மதுரையிலே
சென்றுதான் பாண்டியர்க்கு செப்பலுற்றான் அம்மானை
ஆண்டவரே நீங்க ளானபரி கொள்ளவென்று
635 கொடுத்த பணமெல்லாங் கோயில் திருப்பணிக்குச்
சேரச் செலவழித்துத் தென்னவனார் போட்டார்கள்:
பாண்டியன் தென்னவனையழைத்தல்
என்றுசொலத் தூத ரெழில்மாறன் றான்கேட்டுக்
கண்கள் சிவந்து கடுங்கோப முண்டாகி
மாலுதா ரியையன்று வாகுடைய பாண்டியனார்
640 சீக்கிரமாய் நீங்கள்போய்த் தென்னவனை யிப்பொழுது
வான்பரியுங் கொண்டுவரச் சொல்லியே யிந்நேரம்
கையோடு கூட்டிவர வேணுமென்றான் காவலனும்

தூதுவன் வருகை
விடைபெற்று அந்நேரம் மீனவனார் தாள்பணிந்து
வந்தார் பெருந்துறைக்கு வலுவேக மாயவர்கள்
645 தென்னவனார் தம்மைச் சீக்கிரமாய்க் கண்டார்கள்
வந்தமாலு தாரிகளை வாரு மெனவழைத்து
வந்தவகை சொல்லுமென்று வாகுடனே அவர்கேட்டார்
அப்போது மாலுதாரி யன்புடனே சொல்லலுற்றான்
குதிரைகள் வாங்கவெனக் கோமானவர் கொடுத்த
650 திரவியங்க ளனைத்தையுஞ் செலவுபண்ணிப் போட்டீரென்று
அரிக்காரர் வந்து ஆண்டவர்முன் சொன்னதனால்
பாண்டியருந் தம்மேல் பதறவே கோபமுற்றுக்
கூட்டிவரச் சொன்னார்கள் குதிரையுட னுங்களையுஞ்
சீக்கிரமாய் வாருமெனச் சினமா யழைக்கலுற்றான்:

தென்னவனுரை
655 அப்பொழுது தென்னவனு மவனுடைய முகம்பார்த்து
வான்பரிகள் வாங்கிவரப் போன மனிதர்கள்தான்
வருகிறோ மெனவேதான் வந்ததுதான் ஓலையிப்போ
தம்பக்கவர் வந்து தானொருவன் சொன்னதினாற்
கோமானுங் கேட்டுக் கோபமாய் நம்மிடத்தில்
660 நம்மை யழைத்துவரச் சொன்னதுவும் நல்லதுதான்
இன்னம்பத்து நாளையிலே யியல்பரியும் வந்திடுங்காண்
வந்த வுடனேநாம் வருகிறோங்காண் தப்பாமல்
இப்படியே தென்னவனா ரியல்பாகத் தானுரைக்க;

தூதுவன் மறுத்துரை
மாலுதாரி கேட்டு மறுவார்த்தை யீதுரைப்பான்
665 மன்னவனார் சொன்ன வார்த்தை மறவோங்காண்
தென்னவரே யிப்பொழுது சீக்கிரமாய் வாருமென்றான்
மாலுதாரி சொன்ன வார்த்தை தனைக்கேட்டு

தென்னவனேங்குதல்
நல்லதென்றே யதற்கு நலமாக வார்த்தை சொல்லிப்
போசனமுஞ் செய்து பிறகுநீ வாவென்று
670 வந்தவனைத் தானனுப்பி வகையேது செய்வோமென்று
தென்னவனார் தாமும் சென்றார்தம் கூடாரம்
இந்தவகைக் கேது செய்வோ மீசுவரனே
என்று மனதுநொந்து யிருக்குந் தருவாயில்;
சிவனார் வருகை
675 தென்னவனைப் பார்த்துச் சிவனாரு மீ துரைப்பார்
ஒன்றுக்கு மஞ்சாதே யுனக்குதவி நாமிருப்போம்
என்றுசொல்லித் தாமொருகல் லெடுத்து முடிந்தவரும்
முத்திரையும் போட்டு முடிப்பையவர் கைக்கொடுத்து
உம்முடைய பாண்டியர்க்கு உடனே அனுப்புமென்று
680 கொடுத்துவிட்டுப் போனார்காண் குருந்தடியி னீசுவரரும்

தென்னவன் ஓலையனுப்புதல்
முடிப்பையவர் வாங்கி முறுவல் செய்து தென்னவனும்
வந்தமாலு தாரிதன்னை வாகாக வரவழைத்து
முத்திரையும் போட்டு முடிப்பையவன் கைக்கொடுத்து
இன்னும் பத்து நாளையிலே யிதமாக நாமுமங்கே
685 வான்பரியுங் கொண்டு வருவோம்கா ணென்றுசொல்லி
ஓலையுந் தாமெழுதி உற்றவர்கள் கைக்கொடுத்துப்
போமென்று சொல்லிப் பொருந்த வனுப்பினர்காண்
ஆமென் றவர்களதற்கிசைந்து தான் வாங்கிச்
சென்றார் மதுரைக்குச் சீக்கிரமா யம்மானை
690 மதுரை தனிற்சென்று மன்னவனார் தாள்பணிந்து
தென்னவனார் தாமுரைத்த செய்தியெல்லாஞ் சொல்லியவர்
முடிப்பையவர் ஓலையுடன் முன்பாக வைத்தார்கள்
வைத்த முடிப்பை வாகுடனே பாண்டியனார்
பார்த்த வுடனே பளீரென் றிரத்தினக்கல்
695 கண்ட வுடனே கனமா யகமகிழ்ந்து
குச்சலியர் தன்னைக் கூட்டிவரச் சொல்லியபின்
சேட்டிகளைக் கூடச் சீக்கிரமாய்க் கூட்டிவந்தார்
வந்ததொரு சேட்டிகளை வாகா யவர்பார்த்து
கல்லை விலைபார்த்துக் கண்டிப்பாய்ச் சொல்லுமென்றார்
700 அப்பொழுது சேட்டிகளு மந்தக்கல் லைப்பார்த்து
இதற்கு விலை சொல்ல வெங்களாற் கூடாது: (1)

ஆவுடையார் நம்பி
நல்லதொரு பூசைமணி நவரத்தினக் கற்பதித்துக்
கற்பூரத் தட்டு கனத்ததொரு காளாஞ்சி
ஐந்தடுக்கு ஏழடுக்கு ஆனதொரு தீபமுடன்
705 புருஷர் மிருகத்துப் பொன்னாகத் தீபமுடன்
உருக்கு வளையு மோரிஷபத் தீபமுடன்
ஆலாத்தி தீபமுட னானதொரு கைவிளக்கு
கண்டியுஞ் சிறுமணியுஞ் செம்பொற் றளிகையுடன்
தோரண நல்விளக்குத் தூண்டா மணிவிக்கு
(1) இவ்விடத்தில் கதை தொடர்பற்றுக் காண்கிறது.
710 திருமஞ்சன மெடுக்கச் செப்புக் குடமுதலாய்ப்
பூசக்கிரக் குடையும் போற்றிய வெண்குடையும்
காவிக் குடையுங் கனக விசிறிகளும்
வெண்சா மரையும் விதமான நற்சிவிகை
ரிஷப வாகனமு நீலகிரி வாகனமும்
715 ஆனபரி வாகனமு மடர்க்கமல வாகனமும்
அன்ன வாகனமும் ஆனமயில் வாகனமும்
எல்லாமுஞ் சோடிணையா யியல்பாய் முடித்துவைத்தார்
அப்பொழுது தென்னவனு மாண்டவர்க்குப் பூசைபண்ண
யாரை யழைத்துவைப்போ மெனவே யவர்நினைந்து
720 ஆவுடையார் நம்பிதனை யருகே வரவழைத்துப்
பூசைபண்ணச் சொல்லிப் பொருந்த விடைகொடுத்தார்
அந்தப் படியே அவர்பூசை பண்ணினார்காண்

பாண்டியன் மறுபடி தூது அனுப்புதல்
பாண்டியனார் செய்தி பகரக்கேள் அம்மானை
பரிகொண்டு வாவெனவே பணங்கொடுத்து நாமனுப்பி
725 வருஷமு மொன்றாச்சு வரவில்லை யிதுவரைக்கும்
மனிதர்தமை முன்னனுப்பி வரவழைக்கப் போனதற்கு
இன்னம்பத்து நாளையிலே யின்பமுடன் வருவோமென்று
ஓலையி லெழுதிவிட்டா னுற்றதொரு தென்னனும்
மாதமு மூன்றாச்சு வரவில்லை யென்றேதான்
730 தென்னவன் மேற்கோபம் தீர்க்கமாய் வந்தவர்க்குக்
கண்கள் சிவந்து கடுங்கோப மாகியவன்
வாசலூழி யக்காரன் வைத்தியநா தனையழைத்து
நீயுமுன் சேவகரும் நிமிஷத்திற் றானோடிச்
சீக்கிரமாய்ச் சென்று தென்னவனை யிப்பொழுது
735 மடிபிடியாய்க் கொண்டவனை வரவேணு மென்றுசொல்லிப்
போவென் றவனுக்குப் பொருந்த விடைகொடுத்தார்.
வைத்தியநாதன் வருகை
கோமா னுரைகேட்டுக் கோட்டைக்கு வெளியில் வந்து
தன்னுடைய சேவகரைத் தானழைத் தப்பொழுது
நடையன மேலேறி நடத்தினா னந்நேரம்
740 நடந்து பெருந்துறைக்கு நலமாக வந்தார்கள்
வந்து கண்டான் றென்னவனை வைத்தியநா தன்றானும்
கண்டவனுஞ் செய்தி பலகரும மெலாமுரைத்து
திண்டுமுண் டாகவவன் சேதி பலவுரைத்து
மீனவனா ரும்மை விரையவரச் சொன்னார்காண்
745 வருவ தொழிய மறுவார்த்தை பேசாதே
சீக்கிரமாய்ப் பயணஞ் செல்லா திருந்தக்கால்
பாண்டியனார் மேலாணை பகரவே வைப்பேன்நான்
மடிபிடித்துத் தானிழுப்பேன் மரியாதை வையேன்நான்
என்றவன் கோபமுட னெடுத்துரைத்தான் அம்மானை .

தென்னவன் ஏங்குதல்
750 கேட்டவந்தத் தென்னவனுங் கிலேச மிகப்பெருகி
பாண்டியனா ரவர்நம்மேல் பகையாகச் சொன்னதனால்
இந்த வுத்தரங்க ளிவனுரைத்தா னென்றெண்ணி
மெத்த மனம்நொந்து வேதனையுந் தானாகிப்
போசனமும் பண்ணாமல் போது மனதுநொந்து
755 ஈசுவரனே தஞ்சமென்று யேங்கி முகம்வாடிப்
பள்ளியறை புகுந்து படுத்திருந்தா னப்பொழுது,

சிவனார் வருகை
வந்தார் குருந்தடியில் வாழுஞ் சிவனாரும்
தென்னவனார் கிட்டவந்து சிவனாரு மீதுரைப்பார்
ஒன்றுக்கு மாஞ்சாதே உமக்குதவி நாமிருப்போம்
760 குதிரைகொண்டு நாமும் கூட்டமாய் வருவோங்காண்
பயணம் புறப்படு நீ பயப்படவும் வேண்டாங்காண்
நாளை வருவோம்நாம் நன்றாக நீதானும்
ஒக்கூர் குடிதனிலே உசந்த திடலதிலே
பாளையமுந் தானிறக்கிப் பண்பாகநீ பாரென்று
765 போனார்கா ணீசுவரனார் பெரிய குருந்தடிக்கு
ஈசுவரனார் போனதன் பின் னீதுசெய்தான் தென்னவனும்:
தென்னவன் ஒக்கூர் செல்லுதல்
முறுவல் கொண்டு தானெழுந்து முகமலர்ந்து போசனங்கள்
அருந்தியவன் பாக்கிலையு மன்பாகத் தானிருந்து
கட்டியக் காரர்தன்னைக் கடுக வரவழைத்துப்
770 பாண்டியனாரிடத்திற்குப் பரிகொண்டு நாம்போகப்
பயணமது இப்பொழுது பண்பாய்நாம் வருவோம்காண்
தளத்தைப் பெருக்கித் தளசேனை ராணுவமும்
ஆயுதப் பாடாக வழைத்தோடி வாருமென்றார்
விடைபெற்றுக் கட்டியனும் விரைவா யவனோடிப்
775 பாளையக்காரருக்கும் படைமன்னர் தங்களுக்கும்
ஒட்டகைக் காரருக்கு மூழியக் காரருக்கும்
மற்றுமுள்ள சேனைகட்கும் வான்பரிதன காரருக்கும்
பாளையக் காரர்க்கெல்லாம் பயணமென்று சொல்லிவிட்டான்
சொன்னவுடன் பாளையமுஞ் சோடியா யப்பொழுது
ஆனையின்மேல் டம்மார முலகெங்குந் தானதிர
கொம்புதப்பு வீணை குமரி முழங்கிடவே
780 தம்பட்ட மெக்காளம் தவில்முரசு தான்முழங்க
யானை யலங்கரிக்க வடல்பரிகள் கொக்கரிக்க
சேனை யலங்கரிக்கத் திறல்வேந்தர் கொக்கரிக்க
இப்படியே சேனைதள மியல்பாகச் சோடிணையாய்
கூடார வாசலிலே கும்புசெய்தார் அம்மானை
785 அப்போது வைத்தியநாத னவசரமா யோடிவந்து
வான்பரிக ளெங்கே வகையெமக்குச் சொல்லுமென்றான்
இன்றைக்கு நாம்போ,யிறங்குவோம் ஒக்கூரில்
நாளைக்கு ஒக்கூரில் நல்லதொரு வான்பரியும்
வந்துதான் சேருமங்கே வருமளவும் நாமதிலே
790 போயிருப்போ மென்றுசொல்லிப் புறப்பட்டான் தென்னவனும்
முண்டாசு கட்டி முத்திரைமோ திரந்தரித்துக்
கொத்துமுத்துத் தாழ்வடமுங் கோல சரப்பளியும்
தும்பிப் பதக்கமுடன் சோடுவை டூரியமும்
தங்கக் கடையமுடன் தாயித்துந் தான்பூண்டு
795 சோம னுடுத்திச் சொக்காயும் மிகத்தரித்துத்
தண்டிகையின் மீதேறித் தளமுழுதுஞ் சுற்றிவந்து
தன்குருவைத் தானினைந்து தானடந்தான் அம்மானை
நடந்தேதான் ஒக்கூரில் நலமுடனே சேர்ந்தார்காண்
ஒக்கூர் குடிதனிலே யுயர்ந்தமரச் சோலையிலே
800 ஊரணிவா விக்கரையி லுயர்ந்ததிடல் மேடைதன்னில்
பொங்கமுடன் பாளையமும் போயிருந் தம்மானை

பரிகளின் வரவு
தென்னவனார் போயிருக்கக் சிவனாரு மீதுசெய்தார்
நரிக்குடியில் வந்து நல்ல சிவனாரும்
நரிகள் தனையழைத்து நல்ல பரியாக்கித்
805 தேவாதி தேவர்களைச் சீக்கிரமாய்த் தானழைத்துப்
பட்டாணி மாராக்கிப் பரிமே லிருங்களென்று
தானுமொரு வான்பரிமேற் சவுதா கிரியானார்
அந்தநா ளங்கிருந்து ஆதித்தன் தோன்றியபின்
மற்றநாள் அஞ்ஞூற்றின் மங்கலத்தில் வந்திருந்து
810 எழுநூறு வான்பரிக ளின்பமுடன் கொண்டுவந்தார்:

பிரமராயன் வினாவல்
சவுதா கிரியவரைத் தான் பார்த்துத் தென்னவனும்
இத்தனை நாள் வரையி லிருந்தீரே வாராமல்;

சௌதாகிரி விடையளித்தல்
என்று அவன்கேட்க இதமா யவருரைப்பார்
பாச்சாவில் நல்ல பரிகள் கிடையாமல்
815 தேசமதிற் சென்று சிறிதுநா ளங்கிருந்து
அதற்குந்தா னப்பாலே நெடுந்தூரம் நான்சென்று
அப்புற தேசமதி லடைவாய்நாம் போயிருந்து
நல்லபரி பார்த்து நான் வாங்கி வருவதற்கு
இத்துணைநாள் சென்றதுதான் என்றுரைத்தா ரம்மானை;
வைத்தியநாதன் பரிகளைக் காணுதல்
அந்த மொழிகேட்டு அப்பொழுது தென்னவனும்
வைத்திய நாதனையும் வரவழைத்துச் செய்திசொல்லிப்
பாண்டியனார் தாமும் பரிவாங்கத் தந்தவருந்
திரவியங்கள் சேர்த்து சிலவுபண்ணிப் போட்டோமென்று
825 கோபமா யென்னைக் கூட்டிவரச் சொன்னாரே
வந்ததுதான் வான்பரியும் வாகுடனே பாருமென்றான்
தென்னவனார் தாமுரைக்கச் சீக்கிரமாய்த் தானெழுந்து
வந்த பரிகளைத்தான் வைத்தியநா தன்பார்த்து
சந்தோஷ மாகத் தானுமவ னப்பொழுது
830 பாண்டியனார் தமக்குப் பண்பாக வோலையுந்தான்
எழுதி யனுப்பவேணு மென்றெண்ணி மனந்தனிலே,
வைத்தியநாதன் பாண்டியனுக்கு ஓலை அனுப்புதல்
ஓலையுந் தானெடுத்து உடனே யெழுதலுற்றான்
தேவரீர் சீர்பாதந் திசைநோக்கித் தண்டனிட்டு
அடியேன்வைத் தியநாதன் செய்யும் விண்ணப்பமொன்று
835 மதுரை தனிலிருந்து உம்முடைய வாக்கின்படி
தென்னவனார் தம்மைச் செல்வப் பெருந்துறையில்
கண்டுநான் செய்திசொல்லிக் கோபமா யுரைத்து
ஆண்டவனா ரென்னிடத்தி லறிக்கையிட்ட சொற்படியே
மடிபிடித்துத் தானிழுப்பேன் வாரீ ரெனமொழிந்தேன்
840 நான்மொழிந்த வப்பொழுதே யெழுந்திருந்து தானவரும்
பாளையங்கள் தங்களுக்குப் பயணமென்று தானருளி
ஒக்கூரிற் பாளையங்க ளுடனேதான் வந்திருந்தோம்
மற்றையநாள் வான்பரியும் வாகுடனே கொண்டுவந்தார்
இருவருமாய்ப் பேசி யிருந்தார் வெகுநேரம்
845 பேசி முடிந்தபின்பு பிரமரா யன்றானும்
சவுதா கிரியவரைத் தான்பார்த்து ஈதுசொல்வான்
பயணமது சீக்கிரமாய்ப் பாங்குடனே வாருமென்றார்
அந்தமொழி கேட்டு அப்பொழுது தாமுரைப்பார்
இன்றைக்குப் பாளையமு மிங்கேதா னேயிருந்து
850 நாளை புறப்பட்டு நலமாகப் போவோ மென்றார்
நல்லதென்று சொல்லி நடந்தார்கள் கூடாரம்:

தென்னவன் புறப்பாடு
அப்படியே தானவர்க ளன்றைக் கதிலிருந்து
மற்றநாள் பாளையமும் வழிநடந்தா ரம்மானை
சவுதா கிரியவருந் தான் புரவி மீதேறி
855 வான்பரிகள் கொஞ்சி வகையுடனே சூழ்ந்துவர
நடத்தினா னப்பொழுது நல்லதொரு வான்பரியை
தென்னவனார் கண்டு சிரித்து முகமலர்ந்து
குதிரை தளத்துடனே கூட நடக்கலுற்றார்
நடந்து வழிகூடி நல்லபெருஞ் சேனையுடன்
860 கனவேக மாய்நடந்து கன்னங் குடியில் வந்தார்
வந்திரண்டு நாளதிலே யின்பமுடன் தானிருந்தார்
மூன்றாம்நா ளாம்பொழுது முகமலர்வாய்த் தானடந்து
திருவேகம் பத்தில்வந்து நலமா யிறங்கினர்காண்
இறங்கி யதிலே யின்பமுடன் வீற்றிருந்தார் :

பாண்டியன் வரிசை யனுப்புதல்
865 இவர்களிங்கே யிருக்க விதமாய் மதுரையிலே
பாண்டியனார் செய்தி பகரக்கேள் அம்மானை
வைத்திய நாதனெழுதி வரவிட்ட ஓலைதன்னை
வாசித்து வாசித்து மனமகிழ்ந்து பாண்டியனார்
தென்னவனை நாமுந் தெரியாம லப்பொழுது
870 கேள்வி வசனத்தைக் கேட்டு அவன்மேலே
கோபமாய் நாமவனைக் கூட்டிவரச் சொன்னதனால்
வைத்திய நாதனும்போய் மடியைப் பிடித்திழுக்க
மனது கிலேசமதாய் வருவா னெனநினைந்து
வேண்டும் வரிசைகள் விதவிதமாய்த் தான்கொடுத்துத்
875 தென்னவர்க்கு இப்பொழுது சீக்கிரமாய்க் கொண்டுசென்று
தூதுவனே நீகொடுத்துக் குணமாக வார்த்தைசொல்லிப்
பூண்டுகொள்ளச் சொல்லென்று போகவிட்டார் அம்மானை:

தூதுவன் வரிசைவழங்குதல்
பாண்டியனார் தாங்கொடுக்கப் பரிவுடனே தூதுவனும்
வாங்கி வரிசைதன்னை வழிநடந்தா னந்நேரம்
880 சீக்கிரமாய்ச் சென்று திருவேகம் பத்தில்வந்து
தென்னவனார் தம்மைத் தண்டனிட்டுத் தூதுவனும்
பாண்டியனார் தாங்கொடுத்த வரிசைக ளத்தனையும்
தென்னவர்க்குத் தான்கொடுத்து நின்றான்காண் அம்மானை
தூதுவனைப் பார்த்துச் சொல்லுவான் தென்னவனும்
885 ஏதடா! தூதுவனே யிதுவந்த வாறேது
உள்ள படியேநீ யுரைக்கவே வேணுமென்ன
அப்பொழுது தூதுவனு மவர்முகம்பார்த் தீதுரைப்பான்
வான்பரிகள் கொண்டுநீர் வாரீ ரெனக்கேட்டுச்
சந்தோச மாகவே தார்மார்பன் பாண்டியனார்
890 பூண்டுகொள்ளச் சொல்லிப் பிரியமுடனே கொடுத்தார்
கொண்டுவந் தேனையா கொற்றவனே யென்றுரைத்தான்.
தென்னவன் தன் வரிசையைச் சவுதாகிரிக்குக் காண்பித்தல்
அந்தமொழி கேட்ட வப்பொழுது தென்னவனும்
மெத்த மனமகிழ்ந்து மெள்ள நகைபுரிந்து
வந்ததொரு பூஷணத்தை வாகுடனே தானெடுத்துச்
895 சவுதா கிரியவர்க்குத் தானறியப் பண்ணவெண்ணி
கூடாரந் தனைநோக்கிக் கொற்றவனுந் தானடந்தான்
நடந்தே யவரிருக்கும் நல்ல கூடாரமதில்
சென்றுஅவர் முன்பாகத் தென்னவனு மப்பொழுது
பாண்டியனா ரனுப்பிவைத்த வரிசைக ளத்தனையுஞ்
900 சவுதா கிரியார்முன் சந்தோச மாகவைத்தான்
வைத்தவொரு பூஷணத்தை வாகாகத் தான்பார்த்துப்
பூஷணங்கள் தான்வந்த புதுமைகளைச் சொல்லுமென்றார்
வான்பரிகள் நாம்கொண்டு வாரோ மெனக்கேட்டுப்
பாண்டியனார் தாங்கொடுத்துப் பாங்கா யனுப்பிவைத்தார்
905 என்றுசொன்னான் தென்னவனு மீசர்சவு தாகிரியும்
வந்தவகை தன்னை வாகா யவரறிந்து
உந்தனுக்கு வந்த உடுவரைக ளத்தனையும்
நீரெடுத்துக் கொள்ளுமென்று நீதியுடன் சொன்னார்காண்
என்று சொல்லக்கேட் டெழுந்திருந்து தென்னவனும்
910 தன்னுடைய கூடாரந் தான்போ யிருந்தனர்காண்:

தென்னவன் மண்டியூரையடைதல்
மற்றைநா ளங்கு வாகுடைய தென்னவனும்
சவுதா கிரியவரும் தன்புரவிச் சேனையுடன்
சேரவொரு முகமாய்ச் சென்றே நடந்தார்கள்
சோழ புரந்தனிலே சோடியாய்ச் சேர்ந்தார்கள்
915 ஆதித்தனு மப்பொழுது அத்த கிரியடைந்தான்
அந்தநா ளங்கிருந்து ஆதித்தன் தோன்றியபின்
மற்றாநா ளாம்பொழுது வரிசையுடன் தென்னவனும்
சவுதா கிரியவரும் தன்புரவிச் சேனையுடன்
நடந்தார் வழிகூடி நல்லதொரு சேனையுடன்
920 சென்றே திருவாதூர் சேர்ந்தார்காண் அம்மானை
சேர்ந்திரண்டு நாளிருந்து இன்பமுடன் தென்னவனும்
மற்றாநாள் பாளையமும் வழிநடந்தா ரம்மானை
சென்றார்காண் மண்டியூர்த் தெப்பக் குளத்தருகே
தெப்பக் குளத்தருகே சென்றடித்தார் கூடாரம்
925 அந்தநா ளங்கிருந்து ஆதித்தன் தோன்றியபின்;

பாண்டியன் பேட்டிக்கு நாள் பார்த்தல்
மற்றநாளாம் பொழுது மன்னவனார் தென்னவனும்
சவுதா கிரியவரும் தங்களுட் தான்பேசிக்
கூடாரந் தனிலிருந்து கொற்றவனு மந்நேரம்
கட்டியக் காரரையுங் கடுக வரவழைத்துப்
930 பாண்டியனார் பேட்டிக்குப் பண்புடனே நாம்போக
நாண்முகூர்த்தம் பார்த்து நலமா யிருப்பதற்கு
வேதியரைத் தாமழைத்து விரைவாக வாருமென்றார்
விடைபெற்றுக் கட்டியனும் வேதியரைத் தாமழைத்துக்
கூட்டிவந்து விட்டான்காண் கொற்றவனார் முன்பாக
935 வந்த வேதியரை மன்னவனுந் தான்பார்த்துப்
பாண்டியனார் பேட்டிக்குப் பரிகொண்டு நாம்போக
நாண்முகூர்த்தம் பார்த்து நலமா யுரையுமென்றார்
அந்தமொழி கேட்ட வேதியரு மப்பொழுது
பஞ்சாங்கந் தானவிழ்த்துப் பார்த்து அவர்தாமும்
940 விடிந்தைந்து நாழிகையில் மீனவனைத் தான்காண
நல்ல தினமென்று நாள்பார்த் துரைத்தார்காண்
ஆமென்று தான் பொருந்தி யப்பொழுது தென்னவனும்
போமென்று வேதியர்க்குப் போக விடைகொடுத்தான்.

வைத்தியநாதன் மதுரைக்கேகல்
வைத்திய நாதனையும் வாவென் றருகழைத்து
950 விடிந்தைந்து நாழிகையில் மீனவனைப் பேட்டிசெய்ய
வாரோ மென்றுநாமும் வகையுட னுரைப்பதற்கு
முன்னமேநீர் போமென்று சொன்னார் தென்னவனும்
அப்படியே நான்போ யறிக்கைசெய்வே னென்றுசொல்லிப்
போனான் வைத்தியநாதன் பொருத்தமுட னந்நேரம்:
பாண்டியனுக்குச் செய்திகூறல்
950 மதுரை தனிற்சென்று மன்னவனார் தாள்பணிந்து
வான்பரிகள் கொண்டுநாளை வாரார்க ளாண்டவனே
நாளை வருவார்கள் நன்றாகப் பேட்டிசெய்ய
என்றே உரைத்தவனும் ஏகினன்கா ணம்மானை

தென்னவன் மதுரைக்கு செல்லுதல்
சவுதா கிரியருகே தான்சென்று தென்னவனும்
955 பாண்டியனார் பேட்டிக்குப் பரிகொண்டு நாம்போக
வேணுமே அய்யா விரைவா யுரையுமென்றார்
நல்ல தெனவே நகைபுரிந்து ஈசுவரனும்
அப்படியே போவோமென் றருள் புரிந்தா ரம்மானை
நாளைப்பயணம் நன்றாய் விடிந்த பின்னர்
960 வேதியர்கள் சொற்படியே விடிந்தைந்து நாழிகைக்குள்
வான்பரிகள் சேர வாகா யலங்கரித்து
சவுதா கிரியவரும் தாமுமொரு வான்பரிமேல்
ஏறியவர் கைதனிலே எரியீட்டி தான்பிடித்து
புறப்பட்டா ரப்பொழுது பெரியதொரு வைகைதன்னில்
965 பார்த்துநின்ற தென்னவனும் பார்மீதிற் கொண்டாடி
சவுதா கிரியருகே தானுமொரு வான்பரிமேல்
ஏறியே வானவர்க ளிருபுறமுஞ் சூழ்ந்துவர
நடந்தார்கா ணப்பொழுது நல்ல தளத்துடனே
பரிகள் வருகிறதைப் பார்க்கவெனப் பாண்டியனும்
970 மேடையின் மேலேறு விருப்பமுடன் பார்த்திருந்தான்
செந்தூ ளெழும்பியது செங்கதிரோன் றான்மறைய
வான்பரி களைக்கொஞ்சி வரிசையுடன் வருவதைத்தான்
கண்டானே பாண்டியனுங் கண்குளிர வப்பொழுது
சந்தோஷ மாகப் பாண்டியன் பார்த்திருக்க .
975 வான்பரி களைக்கொண்டு வந்தார்கள் கோட்டைக்குள்ளே;

தென்னவன் பாண்டியனைக் காணுதல்
கோட்டைக்குள் வந்தபின் கோமானைக் காண்பதற்கு
சவுதா கிரியவரைத் தானிறுத்தித் தென்னவனும்
பாண்டியனார் தம்மைவந்து பரிவுடனே கண்டார்காண்
கோமா னவர்தமக்குக் கூறுவான் தென்னவனும்
980 பரிக்குச்சவு தாகிரியாய்ப் பண்புடனே வந்தவர்தான்
இந்தத்தே சத்திருக்குஞ் சவுதா கிரியல்லர்
தெய்வ வளநாட்டில் சிறப்பா யிருக்குமவர்
அவனி முழுது மவர்வசமாய்த் தானிருக்கும்
அவர்க்கு நிகர்தானும் யாருமில்லை வையகத்தில்
985 ஆகையினால் கொற்றவர்தா மாண்டவரே நீருமிப்போ
சரிபேட்டி யாகத்தான் செய்யவே வேணுமென்று;

பாண்டியன் சவுதாகிரியைக் காணுதல்
தென்னவனார் சொல்லத் தென்மதுரைப் பாண்டியனும்
நல்லதென்று சொல்லி நலமா யுரைக்கலுற்றான்
தென்னவனார் போன தன்பின் தென்மதுரைப் பாண்டியனும்
990 பரிகள் தமைப்பார்க்கப் பண்பாக மீனவனும்
வேணுமென்று சொல்லி வெளியிலே வந்தவனும்
உயர்ந்ததொரு வான்பரிமேல் வாகாகத் தானேறி
சவுதா கிரியருகே தான்சென்றான் பாண்டியனும்
பாண்டியனார் வருகிறதைப் பார்த்துநின்ற தென்னவனும்
995 சவுதா கிரியவரைத் தான்பார்த்துச் சொல்லலுற்றான்
பாண்டியனார் வருகின்ற பவுசுதன்னைக் கண்டீரோ
குதிரையின் மேலேறிக் கோமா னும்மிடத்தில்
பேட்டிபண்ணத் தானும் பிரியமுடன் வருவதுகாண்
போவீ ரெனவுரைக்கப் புன்முறுவல் செய்தவரும்
1000 நல்லதென்று மெள்ள நடத்தினார் வான்பரியை
பாண்டியனார் தாமும் பரிக்குச்சமன் கிட்டவந்தார்
சவுதா கிரியவரும் தார்மார்பன் பாண்டியனும்
இருவருமாய்ப் பேட்டி செய்து இருந்தார்கா ணம்மானை.

பாண்டியன் பரிகளைக் காணுதல்
அப்பொழுது பாண்டியனா ரகமிக மகிழ்ந்து
1005 சவுதா கிரியவரைத் தானழைத்துக் கொண்டாடி
ஆயிரக்கான் மண்டபத்தி லன்புடனே போயிருந்து
குதிரைகளை யெல்லாங் கொண்டுவரச் சொல்லியவர்
வான்பரிகள் சேர வரிசையுட னேபார்த்து
சவுதா கிரியவரைத் தான்புகழ்ந்து கொண்டாடிக்
1010 குதிரை விலையறியக் கோமானும் வேணுமென்னத்
தமதுசவு தாரிகளைத் தானழைத்து வாருமென்றான் .
அந்தப் படியே யழைத்தோடி வந்தார்கள்
வந்தசவு, தாரிகளை வாகா யவர்பார்த்து
இன்னவிலை யென்று எமக்குரையு மென்றுரைத்தார் ,
1015 அந்தமொழி கேட்டு ஆனசவு தாரிகளும்
விலைமதிக்க வான்பரியை விபரமுடன் பார்த்தவர்கள்
பாண்டியனார் தாங்கொடுத்த பணத்திற்குப் பத்திரட்டி
காணுமென வவர்கள் கணக்காக வேயுரைத்தார்
அந்தமொழி கேட்டு அப்பொழுது பாண்டியனும்
1020 சந்தோஷ மாகத் தானிருந்தா ரம்மானை.

கயிறு மாற்றுதல்
அந்த நல்ல செய்தி யறிந்துசவு தாகிரியும்
கொண்டுவந்த வான்பரியைக் கொற்றவனுக் கொப்புவித்தார்
நல்லதொரு வேளையிலே நற்கயிறு மாற்றினர்காண்:

பரிகளை இலாயத்திற் கட்டுதல்
அப்பொழுதே பாண்டியனா ரந்நேரம் வான்பரியை
1025 இலாயமதிற் கொண்டுபோய் நன்றாகக் கட்டுமென்றார்
நரபாலன் சொற்படியே நல்லதொரு வான்பரியை
கொண்டுபோ யிலாயத்திற் கூசாமற் கட்டினர்காண்
வான்பரிக ளிலாயமதில் வகையுடனே சேர்ந்தபின்பு,

சவுதாகிரி விடைபெறுதல்
பாண்டியனார் தம்மைப் பார்த்துச்சவு தாகிரியும்
1030 வந்து வெகு நாளாச்சு மன்னவனே நான்போக
வேணுமென வுரைத்தார் விருப்பமுட னப்பொழுது
அந்தமொழி கேட்டு அன்புடனே பாண்டியனார்
வந்தவுடனே நீரும் வகையுடனே போரோமென்றீர்
இன்னம்பத்து நாள்தா னிங்கே யிருமெனவும்
1035 வேண்டியவா பரணமிக வரிசைக ளுங்கொடுத்து
அனுப்புகிறோ மென்று மன்பாகத் தாமுரைத்தார்
அந்த வசன மவருரைக்கத் தான்கேட்டு
உன்தேசந் தானு மொருதுரும்பு விலையுமில்லை
உன்னாலொன் றும்நமக்கு ஒருகுறையு மில்லையென்றார்
1040 வருடமு மொன்றாச்சு மன்னவனே தேசம்விட்டு
இன்றைக்கே யிப்பொழுதே நம்பயணம் போவமென்றார்;

பாண்டியன் பரிசளித்தல்
அந்தமொழி கேட்டு அப்பொழுதே பாண்டியனார்
பொக்கிஷத்தைத் தான்திறந்து பூஷணங்க ளுள்ளதெல்லாம்
நாலுவகை வத்திரமும் நலமாகத் தானெடுத்துக்
1045 கொண்டுவரச் சொல்லிக் குணமுடனே தாமெடுத்து
இந்தாரு மென்றுஅவ ரிருகையாற் றான்கொடுக்க
கொடுத்த வெகுமதியைக் கோல்நீட்டித் தான் வாங்கிக்
குதிரைமேற் குனிந்து குதிரைக்குப் பின்னாலே
போட்டார்சவு தாகிரிம் போட்டவந்தப் புதுமைகண்டு
பாண்டியன் கோபம்
1050 நாமுங்கை யாற்கொடுக்க நற்கோலி னால்வாங்கிக்
குதிரைக்குப் பின்தட்டில் போட்டானே யென்றுசொல்லிப்
பாண்டியனா ரப்பொழுது கோபமுற்றார் கண்சிவந்து,

தென்னவன் தேற்றுதல்
அந்த நிலையறிந்து தென்னவனும் பாங்காக
முன்னாலே யும்மிடத்தில் மொழிந்தே னவர்செய்தி
1055 அவனி முழுதாளு மரசர்க ளெல்லோரும்
இவர்கொடுக்க வாங்குவதே யல்லாம லிவர்தானும்
வேறொருவர் கொடுக்க வாங்குவது யில்லைமன்னா
பாண்டியன் குமாரத்தியைப் பண்பாகப் பெற்றதனால்
நீர்கொடுக்க வாங்கியதை நிசமாகக் கண்டேன்நான்
1060 என்றுசொல்லிக் கோபமதை யின்பமுட னாற்றிவிட்டான்.

சவுதாகிரி புறப்பாடு
அந்த வசனமதை யறிந்துசவு தாகிரியும்
புன்முறுவல் கொண்டு போய்வாரோ மென்றுசொல்லி
விடையைத்தான் வாங்கிக்கொண்டு நடந்தார்கா ணம்மானை.

தென்னவன் பின் தொடர்தல்
சவுதா கிரியவரைத் தானனுப்பி வருவேனென்று
1065 பாண்டியனார் தம்மிடத்திற் பரிவாய் விடைவாங்கித்
தென்னவனு மப்பொழுது சென்றான்கா ணம்மானை.
தென்னவர்க்குச் சவுதாகிரி செய்தி சொல்லல்
இருவருமா யொருதலத்தி லின்பமுடன் தானிருக்கச்
சவுதா கிரியருகே தானிருந்த தென்னவனைப்
பாங்காக வேபார்த்துச் சிரித்துமெள்ளச் சொல்லலுற்றார்
1070 பாண்டியனார் தமக்குப் பரிகள்நாம் கொண்டுவந்து
உன்றன் கடனொழிய வொப்புவித்தோ மிப்பொழுது
பெருந்துறைக்குத் தென்னவனே புறப்பட்டோ நாமெனவே
சொன்னவதைக் கேட்டு இடிவிழுந்த மாமரம்போல்
நின்று மயங்கி நெடுமூச்சுந் தானெறிந்து
1075 என்னுடைய பங்கா யிருக்குஞ் சிவனாரே
உம்முடைய சீர்பாத மெப்பொழுதும் நான்மறவேன்
உம்மைவிட்டு யான்பிரியே னுத்தமரே யெந்நாளும்
என்னையுங் கூடவழைத் தேகுமென்றான் தென்னவனும்
அப்பொழுது சிவனாரு மவரை யருகழைத்து
1080 ஒன்றுக்கு மஞ்சாதே யுனக்குதவி நாமிருப்போம்
இன்னஞ் சிலகால மிவ்விடத்தில் நீயிருந்து
மன்னவனை நீசெய்யும் மாபாடு மிகவுண்டு
பாடொழுயப் பட்டுப் பயமும்நீ தெளிந்தபின்பு
நாடியே யுன்னையங்கே நன்றாய் வரவழைத்து
1085 அப்பொழுது உனக்கு அதிகவரம் நாந்தருவோம்
என்று சிவனாருஞ் செப்பமுடன் தாமுரைத்தார்

தென்னவன் ஏங்குதல்
அந்தமொழி கேட்டு அறிவழிந்த தென்னவனும்
படும்பாடு மெத்தவென்று பாங்குடனே சொன்னீரே
அடியேன் படுந்துயர மாரறியப் போகிறார்கள்
1090 துணையொருவ ரில்லாமல் துன்பப் படுவேனோ
அடியே னுயிரை யழித்திடுவ னென்சாமி.
என்றுசொல்லி மனம்நொந்து ஈசரடி பூண்டுகொண்டான்;

சிவனார் தேற்றுதல்
அப்பொழுது ஈசுவரனு மன்புடனே ஈதுசொன்னார்
ஒன்றுக்கு மஞ்சாதே யுனக்குதவி நாமிருப்போம் .
1095 சொக்கருந் தானுனக்குத் துணையாக வேயிருப்பார்,

சிவனார் மறைவு
என்று சொல்லி யீசுவரனு மின்பமுட னப்பொழுது
உபதேசஞ் சொல்லியுற்ற வெண்ணீறுந் தான்கொடுத்துத்
தென்னவனைத் தான்நிறுத்திச் சென்றார்கா ணம்மானை.

தென்னவன் திரும்புதல்
சென்ற சிவனாரும் பொருந்த விடைகொடுக்க
1100 விடைபெற்ற தென்னவனும் மீனவனை வந்துகண்டான்
வந்துகண்ட தென்னவனை வகையுடனே பாண்டியனும்
சவுதா கிரியவரைத் தானனுப்பி வந்தாயோ
என்றுபரி வாய்க்கேட்க வின்பமுடன் தென்னவனும்
அனுப்பிவைத்து வந்தே னாண்டவனே யென்றுரைத்தான்
1105 பாண்டியனுங் கொலுமுடிந்து பள்ளியறை போய்ச்சேர்ந்தான்
தென்னவனும் மாளிகைக்குச் சென்றான்கா ணம்மானை.

பரி நரியாதல்
பாதிநல்ல சாமத்திலே பரிகள் நரியாகி
முன்னிருந்த வான்பரியை முறித்திரத்தம் தான்குடித்துக்
குடலைப் பிடுங்கிக் கூக்குரலு மிட்டனகாண்
1110 பட்டண மெங்கும் பருநரிகள் ஊளையிட
வேதாளப் பேய்கள்விருந் துண்டனகா ணம்மானை

பாண்டியன் ஏக்கம்
கங்கு லதுப்பட்டுக் கதிரோனுந் தோன்றியபின்
சாணிமா ரெல்லோருந் தலையிலே கையைவைத்துப்
பாண்டியனார் தமக்குப் பரிவிசனஞ் சொல்லவென்று
1115 ஒன்றாகக் கூடி நரபாலன் முன்வந்து
ஆண்டவனே யிப்பொழுது அடியேங்கள் விண்ணப்பம்
வான்பரிகள் வந்தவெல்லாம் வகைவகையாய்க் கட்டிவைத்தோம்
பாதிநல்ல சாமத்திலே பரிகள் நரியாகி
முன்னிருந்த வான்பரியை மூளை தனையுறிஞ்சி
1120 குடலைப் பிடுங்கிக் கூக்குரலு மிட்டன காண்
பட்டண மெங்கும் பருநரிகள் ஊளையையா
என்றுசொல்லச் சாணிமா ரேங்கியே பாண்டியனும்,

தென்னவன் வருகை
தென்னவனை யிப்பொழுது தேடி யழையுமென்றான்
ஓடி யழைத்துவந்தா ரொருநொடியிற் றூதுவர்கள்;

பாண்டியன் வினாவல்
1125 வந்து நின்ற தென்னவனை வாகா யவர்பார்த்து
எழுகோடி செம்பொன்னை யிதமாக நாங்கொடுத்துக்
குதிரைகொண்டு வாவெனவே குணமா யனுப்பியதும்
இலாயமதிற் சென்று நன்றாகக் கட்டுமென்று
நாமுமுரை செய்ய நன்றாகக் கட்டினதும்
1130 பாதி நல்ல சாமத்திற் பரிகள்நரி யானதுவும்
பழைய புரவிகளைப் பரலோகஞ் சேர்த்ததுவும்
காரணங்க ளாகக் கதையாய் முடிந்ததுவும்
நம்முடைய திரவியத்தை நலமாகவே வாங்கிக்
கொண்டுபோய் நீயுமங்கே கோவில்கள் கட்டுவிக்கத்
1135 திரவியங்க ளத்தனையுஞ் சிலவுநீ பண்ணியதும்
வான்பரியுங் கொண்டு வந்தேன்நா னென்றுசொல்லி
மாரீச வஞ்சனையாய் மயக்க முறநமக்கு
மாயக் குதிரைகளைக் கொண்டுவந்து நீகொடுத்து
இலாயதில் முன்னிருந்த நல்லதொரு வான்பரியைச் .
1140 சேரக் கொடுக்கவென்று தென்னவனே யிப்பொழுது
கொண்டுவந்து வான்பரியைக் கொடுத்துக் கெடுத்தாயே
என்று சொல்லிப் பாண்டியனு மெரியெனவே கோபமுற்றுத்
தின்றுவிடு வார்போலச் சினமா யவருரைக்க,

தென்னவன் விடைகூறல்
வாய்புதைத்துக் கட்டி மறுவார்த்தை யீதுசொல்வான்
1145 தேசமதிற் சென்று திரவியமும் நான்கொடுத்துத்
தேவரீர் தம்முடைய சித்தத்திற் கேற்றபடி
வான்பரியும் வாங்கிவந்து மன்னவனே கட்டினேன்நான்
ஈசுவரனார் தஞ்செய லிப்படியே தானிருந்தால்
யாரென்ன செய்வார்க ளடியேன்மேற் குற்றமென்ன

இரத்தினப் பரீட்சை
1150 என்றுசொல்லித் தென்னவனு மெரியெனவே பாண்டியனார்
மாமாய வித்தைகளும் மாரீச வஞ்சனையும்
பொய்யுங் கவடும் பொருந்து மிவனிடத்தில்
இந்திர சாலவித்தை யிவனிடத்தி லுண்டெனவே
மயக்கம் பெரிதாகி மன்னவனு மப்பொழுது
1155 தென்னவனை முன் நமக்குத் தீரமா யனுப்பிவைத்த
கல்லைத்தான் பொக்கிஷத்திற் காவலரே வைத்தோமே
முழுதும் புரட்டாக முடிந்ததோ நாமறியோம்
பொக்கிஷத்தைத் திறந்தே போயெடுத்து வாருமென்றார்
அந்த மொழிகேட்டு அரைநொடியிற் றானோடிப்
1160 பொக்கிஷத்தைத் திறந்து போத வெடுத்துவந்தார்
எடுத்துவந்த முடிப்பதனை யிதமாகப் பாண்டியன்மு
வைத்தார் முடிப்பதனை வாகா யவிழ்த்தவரும்
பார்க்கும் பொழுது பருங்கல்லா யிருந்ததுவே
கண்டவுடன் பாண்டியனார் கருணை முகம்வாடிப்;

பாண்டியன் தண்டனை
1165 பார்த்து மனதேங்கிப் பகரலுற்ற ரப்பொழுது
கொண்டுபோய்த் தென்னவனைக் குறடாவா லடித்துத்
திரவியங்கள் சேரச் சீக்கிரமாய் வாங்குமென்றார்
சொன்னவுடன் தென்னவனைச் சுருக்காகக் கூட்டிப்போய்
அடித்தார்க ளப்பொழுது அருங்குருதி தானோட:

தென்னவன் புலம்பல்
1170 அடிபட்டுத் தென்னவனு மாத்தாம லப்பொழுது
சிவனே சிவாயவென்று சிந்தைதனி லேயுருகி
வாய்விட்டுத் தானழுது வருத்தமுட னப்பொழுது
என்னுடைய பங்கி லிருக்குஞ் சிவனாரே
இப்பாடு நான்படவோ யென்தலையில் விதித்தீர்
1175 என்னதவக் குறைகள் செய்தாலு மிப்பொழுது
வந்துதவ வேணு மெனையாளுஞ் சிவனாரே
என்னுடைய சீவ னிப்போ யிறக்குதுகாண்
இறந்தாலு மென்சீவ னிணையடியை நான்மறவேன்
சொக்க ரெனக்குத் துணைசெய்வா ரென்றீரே
1180 ஒருவரையுங் காணே னொப்பில்லா வீசுவரரே
என்று நினைந்தசந்து தென்னவரும் விழுந்தனர்காண்:
பாண்டியனிடம் சிவனார் வேதியராய் வருதல்
இந்தத் துயரமதை யீசுவரனார் தாமறிந்து
அவன்றுயரை யாற்ற வப்பொழு தரனாரும்
பாண்டியனார் தமக்குப் பஞ்சாங்கஞ் சொல்லுமந்தப்
1185 பார்ப்பான் வடிவாகப் பாண்டியன்முன் வந்தார்காண்
வந்தவொரு வேதியரை வாருமிரு மென்றுத்தான்
உரைத்தவுட னிருந்து சொன்னார்காண் பஞ்சாங்கம்:

பாண்டியன்வினாவல்
அப்பொழுது வேதியரை விளம்பலுற்றான் பாண்டியனும்
தென்னவனார் தம்மிடத்தில் திரவியங்கள் தாங்கொடுத்துப்
1190 பரிவாங்கி வாருமெனப் பாங்கா யனுப்பியதும்
மாயக் குதிரைதன்னை மார்க்கமாய்க் கொண்டுவந்து
தென்னவன் கொடுத்ததுவு மிலாயத்தில் கட்டியதும்
பாதிநல்ல சாமத்திலே பரிகள்நரி யானதுவும்
முன்பிருந்த வான்பரிகள் பரலோகஞ் சேர்ந்ததுவும்
1195 தமக்குத் தெரியாமல் தான் மங்கிப் போனதுவும்
காரணங்க ளின்னவென்று கண்டிப்பா யிப்பொழுது
வேதியரே சொல்ல வேணுமென்னப் பாண்டியனும்;

வேதியர் விடை புகலல்
அந்தமொழி கேட்ட வேதியரு மப்பொழுது
பாண்டியனார் தமக்குப் பாங்கா யுரைக்கலுற்றார்
1200 நாமுரைக்க நீகேளாய் நலமாகப் பாண்டியனே
ஈசன் செயலொழிய வேறில்லை மன்னவனே
இன்னம்வெகு காரியங்க ளிதமாய் நடக்குமென்றார்
உந்தனுக்குப் பின்னாலே வொப்புவித்துத் தாரோங்காண்
தென்னவனார் தம்மாலே செய்தித்தாழ் வொன்றுமில்லை 1
1205 தென்னவனும் நன்றாகச் சிவனடிமை யாயிருக்க
உம்மேல்தான் குறையதுவும் வருங்காணு முத்தமனே
ஆகையினா லவனையிப்போ அடிக்கவும் வேண்டாங்காண்
அடியை விலக்கி யவனைச்சிறைச் சாலையிலே
போட்டு வையுமென்று புகன்றனர்காண் வேதியரும்
1210 நாலிரண்டு நாளையிலே நலமான காரணங்கள்
உந்தனுக்கு நாமு மொப்பித்துத் தாரோங்காண்
என்றுசொல்லி வேதியரு மிதமாகத் தானிருக்கப்
பாண்டியனார் தாமும் பண்புடனே தான்கேட்டுக்
காரணங்க ளின்னவென்று காண்போம்நா மென்றுசொல்லிக்
1215 காவலிலே வைக்கக் கட்டளையு மிட்டார்காண்:

தென்னவனைச் சிறையிலிடுதல்
அப்பொழுகு வேதியனா ரன்புடனே தாமெழுந்து
சென்றார்காண் தென்னவனைத் தண்டிக்குங் கூடமதில்
தென்னவனார் தம்மைத் தண்டிக்குஞ் சேவகரை
வாருமெனத் தானழைத்து வல்லவராம் வேதியனார்
1220 தென்னவனார் தம்மைச்சிறைச் சாலையிலே போட்டுவைக்க
அரச னுரைத்திடலா லடியாமல் தென்னவனை
கூட்டிப்போய்க் காவற் கூடத்தில் சேருமென்றார்
வேதியனார் சொல்ல வியசனமது தான்கேட்டுச்
சிறைக்கூடந் தனிலவரைச் சேர்த்தார்கா ணம்மானை.
வேதியர் தென்னவனைத் தேற்றுதல்
1225 அப்பொழுது வேதியரு மன்புடனே தென்னவனை
நலமாக வேபார்த்துச் சிரித்துமே வாய்திறந்து
வாகாக வப்பொழுது வியசன முரைக்கலுற்றார்
தென்னவனே நீயுமிப்போ சிறையிலே தானிருந்து
கஷ்டமொன்றும் படாமல் காக்குறோ முந்தனையும்
1230 என்றுறுதி சொல்லி யேகினா ரம்மானை.

தென்னவன் வெறுப்பு
காவலிலே தானிருந்த கருணையுள்ள தென்னவனும்
ஈசரது பாதமதை யிதயத்தி லேநினைந்து
பூசையும் பண்ணாமல் போசனமு மில்லாமல்
ஆறிரண்டு நாளா யப்படியே தானிருந்தான்
1235 இத்துயர் தீர்ப்பதற்கு ஈசுவரனே தஞ்சமென்று
எட்டென்றா லிரண்டறியே னேழை யடியேன்நான்
இப்பாடு நான்படவே யென்னகுறை செய்தேன்நான்
இன்னம் வெகுபா டியல்பாகப் பட்டாலும்
உம்முடைய சீர்பாத மொருநாளும் நான்மறவேன்
1240 என்னுடைய சென்மத்தை யீடேற்றிக் கொள்ளுமையா
வந்தென்னை யாட்கொள்ள வாராமல் நீரிருந்தால்
எந்தனுயிர் தன்னை யியல்பாக விட்டிடுவேன்
காவலிலே தானிருந்து கஷ்டப்பட மாட்டேன்நான்
ஈசுவரனு மிப்பொழுது எனக்குதவி செய்யவில்லை
1245 என்றுசொல்லித் தன்னுயிரை யிறக்கச்செய்ய வேணுமென்று
உன்னி யெழுந்திருந்தா ருற்றவந்தத் தென்னவனும்;

சிவனார் தோன்றுதல்
அந்நேரம் சொக்கலிங்க மன்புடனே யோடிவந்து
தென்னவரைப் பார்த்துச் சிரித்துமவ ரீதுரைப்பார்
உனக்குதவி நாமிருக்க உன்னுயிரை யிப்பொழுது
1250 விட்டுவிடக் காரியமென் வேண்டா மெனவிலக்கி
நாளைக்கு உன்காவல் நன்றாய் விடுதலையாம்
என்றுறுதி சொல்லி ஈசுவரருந் தாமுரைக்க,
தென்னவன் சிவனைப் போற்றுதல்
உரைத்தமொழி கேட்டு உற்றவனாந் தென்னவனும்
சொக்கர்தம் பாதமதைத் தொழுதீது சொல்லலுற்றான்
1255 விருத்தகுரு சங்கராபோற்றி போற்றிசம்பு வேபோற்றி
எங்கள் நாயகனேபோற்றி யெழிற்பெருந்துறை யாபோற்றி
மங்கைபங்காளா போற்றி மான்மழு தரித்தாய்போற்றி
எங்குமாய் நின்றாய்போற்றி ஈசனே போற்றிபோற்றி
என்றுசொல்லிப் போற்றி ஈசுவரனே தஞ்சமென்று
1260 தாளிணையி லேவிழுந்து தஞ்சமென்று சொன்னவனைச்,

சிவனார் தென்னவனைத் தேற்றுதல்
சொக்கர் மனமகிழ்ந்து சொல்லுவா ரப்பொழுது
உனக்குதவி நாமே யுண்மையிது சொல்லுகிறோம்
நாளை பகற்பொழுது நம்மாணை நிச்சயங்காண்
காவல் விடுவிப்போம் கலங்காதே தென்னவனே
1265 என்றுறுதி சொல்லியவ ரேகினர்கா ணம்மானை.
சிவனார் வைகையில் வெள்ளம் வரவழைத்தல்
தென்னவற்குத் தான்சிவனார் திடஞ்சொல்லிப் போனதனால்
காவல் விடுவிக்கக் கருத்திலே தானினைந்து
வைகைதனில் வெள்ளம் வரவழைத்தா ரம்மானை
வெள்ளம் வருகின்ற வேகமதைச் சொல்லுகிறோம்
1270 இருகரையு மொருகரையா யேகமாய்த் தான் பரந்து
கங்குகரை கொள்ளாமற் கரைபுரண்டு வந்ததது
பாண்டியனுக்கு அறிவித்தல்
வெள்ளம் வருகிறதை வேந்தனிடந் தான்சென்று
எள்ளளவு பூமி யிடையறவே தான்பரந்து
நாலுபனை யுயரம் நன்றாய் வருகுதையா
1275 கோட்டையுங் கோபுரமும் கோமா னரண்மனையும்
பட்டணமும் தான்முழுகிப் போகுமே பாண்டியனே!

பாண்டியன் ஆளனுப்புதல்
என்றுசொன்னா ரப்பொழுது எழில்வேந்தன் தான்கேட்டுத்
தம்முடைய காரியப்பேர் தம்மை வரவழைத்து
வெள்ளம் மிகுந்து வெகுகோபங் கொண்டெழுந்து
1280 வருகிறதைக் கண்டு வந்துசொன்னா ரிப்பொழுது
ஆனதினால் நீங்களிப்போ அவசரமாய்ச் சென்றோடிப்
பட்டணத்தி லுள்ள பரிகுடிக ளத்தனையும்
நம்முடை சேனைதள மவ்வளவும் வரவழைத்துச்
சேர வொருமுகமாய்ச் சென்றேதான் போயிருந்து
1285 ஆத்துக்குத் தென்கரையி லானவெள்ளம் வாராமல்
கரைகட்டி நன்றாகக் காருமென்றார் பாண்டியனார்
வேந்த னுரைக்க வெகுசனங்கள் தானோடி
அப்படியே சென்று அடைத்தார்க ளப்பொழுது,

அடங்கா வெள்ளம்
கூவென் றடைக்கவெகு கோபமாய் வெள்ளமது
1290 அடைக்க அணைபரவி யவர்கள்தமைக் கண்டவுடன்
வேகமாய் வெள்ளமது மிகுந்துவரக் கண்டவர்கள்
மிக்க மனங்கலங்கிப் பயந்தவர்கள் தானோடி
பாண்டியனார் முன்னேகிப் பலபேரு மீதுரைப்பார்
ஆண்டவனே வெள்ள மடைக்கவுங் கூடவில்லை
1295 யுகாந்த வெள்ளமாக யுகமுடிவாய்த் தோன்றுதையா
பார்க்கப் பயமாக விருக்குதையா யெங்களுக்கு
என்றுசொல்லி யவர்க ளேகினர்கா ணம்மானை.
மறையோன் வரவு
கேட்டவர்கள் தம்மொழியைக் கிலேசமிக வுண்டாகி
மனங்கலங்கிப் பாண்டியனார் மயங்குகின்ற வேளையிலே
1300 வந்தார்காண் சொக்கலிங்கம் மறையோன் வடிவாக;

பாண்டியன் அச்சம்
வேதியரைக் கண்டவுடன் விளம்பினார் பாண்டியனார்
வேதியரே யிப்பொழுது வெள்ளமது வருவதனால்
வெள்ளமதைத் தடுக்க வேதுசெய்வோம் வேதியரே
ஈசன் செயலோ யிறையவனார் கற்பனையோ
1305 சேர விறந்து சிவலோகம் சேருவமோ
இன்னபடி யென்று எமக்குரையும் வேதியரே
என்றுசொல்லிப் பாண்டியனு மின்பமுடன் தானுரைக்க,
மறையோன் பாண்டியனைத் தேற்றுதல்
வேதியனா ரப்பொழுது மீனவனுக் கீதுரைத்தார்
ஒன்றுக்கும் நீமயங்க வேண்டாங்கா ணுத்தமனே
1310 வெள்ளந் தனைமறிக்க விதமுறைப்போ முந்தனுக்குத்
தென்னவனை யிப்பொழுது சீக்கிரமாய்த் தானழைத்து
வெள்ள மறிக்கவென்று வெகுமதியும் பண்ணிவைத்துச்
சீக்கிரமே தானனுப்பு சொன்னோம்நா முந்தனுக்குச்
க்ஷணிகமொரு நாழிகைதான் தாமதமே யானாலும்
1315 பட்டணமு மும்முடைய பளிங்குமா மண்டபமும்
சேர விடிப்பட்டுத் திருநீறாய்ப் போய்விடுங்காண்
உனக்காக வேநாமு முண்மையது சொன்னோங்காண்:

தென்னவன் விடுதலை
என்று சொல்லப் பாண்டியனா ரின்பமுடன் தான்கேட்டுத்
தென்னவனைச் சீக்கிரமாய்ச் சென்றழைத்து வாருமென்றார்
1320 அந்நேரந் தானோடி யழைத்துவந்தா ரம்மானை.
பாண்டியன் தென்னவனை யணைகட்ட வனுப்புதல்
அழைத்துவந்த தென்னவனை வள்ளலுந் தான்பார்த்தது
ஆற்றுவெள்ள மிப்பொழுது அடர்ந்தேறி வருவதனால்
சீக்கிரமாய் நீர்போய்ச் சென்றுகரை கட்டிவைத்துப்
பட்டணமும் நம்முடைய பளிங்குமா மண்டபமும்
1325 சேர விடிபட்டுச் சீரழிந்து போகுமுன்னே
காக்கவே வேணுமென்று கனவரிசை செய்தருளி
வெகுமதியுஞ் செய்து விடைகொடுத்தா ரம்மானை.

தென்னவன் வெள்ளமடைத்தல்
விடைபெற்றுத் தென்னவனும் விரைவுடனே தான்நடந்து
பட்டணத்தி லுள்ள பலகுடிக ளத்தனையும்
1330 எண்ணிக்கை தான்பிடித்து எல்லோரையு மழைத்துத்
தன்கையிற் தானிருக்குந் தன்பிரப்பங் கோலாலே
சனத்துக் கொருகம்பு தானளந்து போடுமென்றான்
சொன்னபடியே சுருக்க வளந்து விட்டார்
கோலளந்து தான்போடக் கூவென் றடைக்கலுற்றார்;
அடங்கிய வெள்ளம்
1335 தென்னவனார் தம்மைக் கண்டவுடன் வெள்ளமது,
கோபந் தணிந்து குறுகியதே யம்மானை
வெள்ளந் தணிந்து உருண்டோடிப் போனதைத்தான்
தென்னவனும் பார்த்துச் சிரித்துமெள்ள வாய்திறந்து
சுருக்கா யடையுமென்று தூண்டினான்கா ணம்மானை
1340 அந்நேரஞ் சென்று அடைத்தார்க ளெல்லோரும்
அணையுமவர் கட்டி யாற்றுவெள்ளம் வாராமல்,

தென்னவன் அணையைப் பார்வையிடுதல்
அடைத்த வணைவழியே யவரோடிப் பார்த்துவந்தார்
சேர விடுபட்டுச் சிறுவாய்க்கா லோடியதும்
அங்கே யொருவிடத்தி லடையாம லிருந்ததுவும்
1345 கண்ட வுடனே கருணையுள்ள தென்னவனும்
இவ்விட மடையாம லிருக்கவந்த காரியமென்
யாருடைய பங்கிதென நமக்கறியச் சொல்லுமென்றார்
சொன்னமொழி கேட்டுச் சொல்லுவா ரனைவோரும்
பிட்டுவிற்பாள் பங்கென்று சொன்னவுடன் தென்னவனும்;
பிட்டு விற்பாள் வருகை
1350 அப்பொழுதே யவளை யழையுமென்றான் அம்மானை
ஓடி யழைத்துவந்தா ருற்ற கிழவிதன்னை

தென்னவன் வினாவுதல்
வந்தவளைப் பார்த்து வலுக்கோப மாயுரைத்து
உன்னுடைய பங்கு அடையாமற் போனதென்ன
என்றுவெகு கோபமதா யெடுத்துரைத்தா ரம்மானை:

பிட்டு விற்பாள் விடைகூறல்
1355 அப்பொழுது கிழவியுந்தா னறிவிழந்து சொல்லலுற்றாள்
நானொருத்தி யல்லாமல் நாயகனே யெந்தனுக்கு
வேறு உதவியில்லை வேந்தனே நீர்கேளும்
என்னுடைய பங்கு அடையாமற் போனவதை
கூலிக்கு ஆளமர்த்திக் கூப்பிட் டொருவனைத்தான்
1360 உதிர்ந்தபிட்டு நான்கொடுத்து வுடைப்பைநீ யடையென்ன
ஆமென் றவன்சொல்லி யிசைவாகத் தான்போனான்
என்ன விதமாகச் செய்தானோ நானறியேன்
நான்சுட்ட பிட்டெல்லாம் பொடியா யுதிர்ந்ததுதான்
பொடியா யுதிரவவன் போடுபோ டென்றுசொல்லி
1365 வாங்கியே தின்றுவிட்டு வன்கரையுங் கட்டாமல்
என்னையுந் தானவனு மேசரதெல் லாமேசி
வலுக்கோப மாயுமவன் வாயா லதட்டுகின்றான்
தண்டித்துக் கொள்ளுமையா தென்னவரே யென்றுரைத்தாள்:
தென்னவன் பரமனைப் பிரம்பாலடித்தல்
அப்பொழுது தென்னவரு மவனை யருகழைத்துக்
1370 கூலியும் வாங்கிக் குறுக்கணையும் போடாமல்
ஏனிருந்தா யென்று யெரியெழவே கோபமுற்று
தென்னவன்கைப் பிரம்புகொண்டு சீக்கிரமாய்த் தானடித்தான்
அடிபட்டுத் தானலறி அப்பாலே யோடலுற்றான்;

உலகுக் கடிவிழுதல் .
சொக்கர்திரு மேனியிலே துய்ய பிரம்படிதான்
1375 சிக்கெனவே தான்படவே செகமுழுதும் பட்டதுதான்
அங்கயற்கண் மீனாட்சி யம்ம னவள்மேலும்
பாண்டியனார் தம்மேலு மவர்பட்ட மகிஷிமேலும்
பட்டணத்தி லுள்ள பலகுடிகள் தம்மேலும்
சேனைபரி காவலர்கள் தென்னவனார் தம்மேலும்
1380 சேரவொரு நிறையாய்ச் சென்றுபட்ட தம்மானை.

பாண்டியன் உணர்வு
பாண்டியனார் தம்மேலே பாரவடி பட்டதனால்
சோர்ந்து விழுந்தவருஞ் சோர்வு தெளிந்தெழுந்து
காரியப்பே ரத்தனையுங் கடுக வரவழைத்து
நம்மேலே யிப்பொழுது நல்ல பிரம்படிதான்
1385 படவந்த காரியமென் பகருமெனக் கேட்டார்
அப்பொழுது சொல்வார்க ளறிந்தவர்க ளெல்லோரும்
வைகைதனி லேவெள்ள மகாதமாய் வந்ததனால்
எங்கள் தமையழைத்து ஏவநீ ரப்பொழுது
நல்ல தெனவேபோய் நாங்களும் வைகைதனிற்
1390 சென்றே யடைக்கச் சினமாக வெள்ளமது
எங்கடமைக் கண்டவுட னெழும்பிவெகு கோபமுடன்
கங்குகரை கொள்ளாமல் கரைபுரண்டு வந்ததனால்
எங்களா லாகாம லெல்லோரு மோடிவந்தோம்
1395 தென்னவனார் தமையனுப்பச் சென்றா ரவருமங்கே
தென்னவரைக் கண்டவுடன் சீறிவந்த வெள்ளமது
பொங்கு திரையமர்ந்து பின்தங்கிப் போனதுமே
கரையுமவர் கட்டக் கரைமேல் வருகையிலே
பிட்டுக்கு மண்சுமந்தார் மறியலவர் கட்டாமல்
1400 இருந்ததனால் தென்னவர்க்கு இனியதொரு கோபம்வந்து
சொக்கர்திரு மேனியிலே துய்ய பிரம்புகொண்டு
அடித்தார் சினமுடுகி யப்பொழுது தென்னவனார்
சொக்கரடி பட்டதனால் தொல்புவியோர் தானறிய
வேணுமென்று சொல்லி வேடிக்கை பார்த்தார்காண்
1405 தென்னவனு மிப்பொழுது சிவனடிமை யல்லாமல்
எங்களைப் போலே யிவரு மொருத்தரென்று
எண்ணி மனந்தனிலே யிருக்காதே மன்னவனே
உள்ள கரும முரைத்தோ மென்மொழிந்தார்:

தென்னவர்பால் பாண்டியன் பேரன்பு
அந்தமொழி கேட்டு அப்பொழுது பாண்டியனார்
1410 இந்தநினை வுள்ளதென்று இருந்தவரு மந்நேரம்
தென்னவனார் தம்மைச் சீக்கிரமாய்த் தானழைத்து
வேண்டும் வரிசைகள் விதமாகத் தான்கொடுத்து
அதிகார முந்தனுக்கு அன்புடனே நாந்தருவோம்
எப்பொழுதும் போலே யிருந்துநீர் பாருமென்று,
தென்னவன் பதவியைக் கைவிடுதல்
1415 சொல்லவே தென்னவனார் சோர்வடைந்து சொல்லலுற்றார்
அதிகார மெந்தனுக்கு ஆகாது மன்னவனே
சரியான பேர்களுக்குத் தானருளு மென்றுரைத்தார்
வேண்டாங்காண் தென்னவனே விசாரமதை விட்டுவிடும்
எப்பொழுதும் போலே நீ ரிருமென்று தானுரைக்க
1420 அந்தமொழி கேட்டு அவரீ துரைக்கலுற்றார்
சிவவேடந் தான்தரித்த சிவனருள் பெற்றவர்க்கு
அதிகாரஞ் செய்ய வடைவில்லை மன்னவனே
சென்றுநான் பெருந்துறைக்குச் சிவனாரை பூசைபண்ணப்
போகவிடை கொடுத்துப் பொருந்த வனுப்பிவைத்தால்
1425 மார்க்கண் டனைப்போலே வாழ்ந்திருப்பாய் மன்னவனே!
தென்னவன் பாண்டியனிடம் விடைபெறுதல்
என்றுதான் தென்னவனா ரடித்துரைத்த வார்த்தைதனை
மன்னவனுங் கேட்டு மனமகிழ்ந்து கொண்டாடி
அப்படியே போமென்று அனுப்பினர்கா ணம்மானை.

தென்னவன் தன் தாயைக் காணுதல்
விடைபெற்றுத் தென்னவனும் வீதிபல கடந்து
1430 வந்தார்காண் தன்னுடைய மாளிகைக்கு அம்மானை
மாளிகை வந்துதான் மாதாவைத் தண்டனிட்டு
போசனமுஞ் செய்து போத விளைப்பாறிப்;
தென்னவன் சொக்கரிடம் விடைபெறுதல்
போனார்காண் சொக்கரது பொற்பாதங் காணுதற்குச்
சொக்கரடி தொழுது சொல்லுவார் தென்னவரும்
1435 என்னால் முடியாது ஈசுவரனே யென்றுரைத்து
நன்றாக நாயடியேன் நலமாகத் தொண்டுபண்ண
எனக்கு விடையருளு மீசுவரனே யென்றுரைத்தார்
அப்பொழுது சொக்க ரவரும் மனமகிழ்ந்து
இங்கே உனக்கு இனிமோட்ச மில்லைமன்னா
1440 பெருந்துறையி லுந்தனுக்குப் பொற்பாதம் நாந்தருவோம்
என்றுசொக்கர் சொல்ல வியல்பாகத் தான்கேட்டு
அந்தப் படியே யடியேன் பெருந்துறைக்குப்
போய்வாரே னென்று பொருந்த விடைவாங்கி
வந்தார்கா ணப்பொழுது மாளிகைக்கு அம்மானை.
தென்னவன் தாயிடம் விடை கேட்டல்
1445 வந்துதன் மாளிகையில் மாதவைத் தான்பார்த்து
பெருந்துறையி லீசுவரனார் பொற்பாதஞ் சேவைபண்ண
போகநான் மாதாவே பொருந்தவிடை தாருமென்றார்:

தாயின் மறுப்புரை
அந்தமொழி கேட்டு அவர்தாயு மீ துரைப்பாள்
என்னுடைய பாலகனே யென்மொழியைக் கேட்டருள்வாய்
1450 என்னுடைய பர்த்தாவை நானு மிழந்துவிட்டேன்
அன்றுமுத லுந்தனையே நம்பியிருந் தேன்மகனே
என்னைப் பிரிந்துசெல்ல வேற்குமோ உன்மனந்தான்
நீபோனா லெந்தனுக்கு யார்துணை யென்மகனே
தீக்கடனும் நீர்க்கடனுஞ் செய்வதா ரெந்தனுக்கு
1455 எந்தனுயிர் போனதன்பின் னேகுமென்றாள் மாதாவும்
தாயா ருரைக்கத் தான்கேட்டுத் தென்னவனார்
மனதுமிக நொந்து மயக்கமுற்றா ரம்மானை
தாயார் மொழியைத் தட்ட முடியாமல்,
இருந்தார் நெடுநாள்வரை யின்பமுட னம்மானை
1460 சிவனருளி யாகச் சிவக்கருத்தைச் சிந்தைவைத்து
வேறுசிந்தை வையார் விசனமொன்றுந் தானறியார்;

தாயின் பிரிவு
இப்படியே தென்னவனா ரிருக்கும் நினைவுதன்னை
தாயா ரவளறிந்து சலித்து முகம்வாடிப்
புத்திர வாஞ்சையும் பொறுக்க முடியாமல்
1465 நாளுக்கு நாள்சீவன் நலமாய்க் குறைவுற்று
இந்தப் படியே யிருந்து சிலகாலம்
இதுவே நினைவாக யிருந்தாள்கா ணம்மானை.
தென்னவன் தாய்க்கு ஈமக்கடன் செய்தல்
தாயார் சிவலோகஞ் சேர்ந்தபின்பு தென்னவனார்
மாதாவை நல்லடக்கஞ் செய்தார்கா ணம்மானை
1470 தாயார் தமக்குள்ள சடங்கு மவர்முடித்துப்
பனிரெண்டு நாட்சடங்கும் பாங்கா யவர்செய்து
தான தருமங்கள் தயங்காமல் தான்செய்து
பிராமணர் போசனமும் பண்ணி முடித்தபின்பு
தேடிய திரவியங்கள் சேரச் சிலவழித்து
1475 செய்வன வெல்லாஞ் செய்து முடித்தபின்பு,
தென்னவன் பெருந்துறைக்குச் செல்லுதல்
நடந்தார் பெருந்துறைக்கு நலமுடனே தென்னவனார்
நடந்து பெருந்துறையிற் செல்வக் குருந்தடியைக்
கண்டு வலம்வந்து கைதொழுதா ரம்மானை
தொழுதவரு மப்பொழுது சொல்லுவார் வார்த்தையொன்று.
1480 வந்தேன்நா னும்முடைய மலர்ப்பாதங் காணுதற்கு
தந்தே யெனையாளுந் தற்பரனே யென்றுரைத்தார்
என்றுரைத் தீசனது யிணையடியைப் போற்றிசெய்து;

வேதியரைக் காணுதல்
தென்னவனு மங்கிருக்கத் திறமாய்க் குருந்தடியில்
வீற்றிருந்த வேதியர்சொல் விளம்பக்கே ளம்மானை
1485 மாலும் பிரமாவும் மற்றுமுள்ள தேவர்களும்
சந்திரருஞ் சூரியருந் தானவரும் செயசெயென
முழங்குவதைத் தென்னவன்றான் முறைமையுடன் தன்செவியில்
நாராசங் காய்ச்சி நன்றாக விட்டதுபோல்
கேட்டவுடன் தென்னவனார் கிலேச மிகப்பெருகி
1490 வந்தார் குருந்தடியில் வார்த்தையொன்றுஞ் சொல்லாமல்
குருந்தை வலமாகச் சுற்றிவந்து தண்டனிட்டார்
தண்டனிட்டு வந்த தென்னவனை வேதியரும்
ஏது நிமித்த மிங்குவந்த வாறேது
என்றுசொல் வாயென்று யின்பமுடன் தான்கேட்கச்
1495 சொல்லுவான் தென்னவனுஞ் சுவாமி தனைப்பார்த்து
உம்முடைய பங்கில் நானிருக்கிறே னென்குருவே
என்னுடைய பங்கில் நீரிருப்பீரோ என்குருவே
உம்முடைய விடத்தில்நா னுண்மையுடன் சேவைபண்ண
வேணுமென்று வந்தேன் வேதியரே யென்றுரைத்தார்
1500 அந்தமொழி கேட்டு அகமகிழ்ந்து வேதியரும்
நல்லதப்பா வென்று நகைசெய்தார் வேதியரும்
அந்நேரம் தென்னவனும் அறிவுடனே தானெழுந்து
குருதட்சிணையும் வைத்துக் கும்பிட்டான் தென்னவனும்
பாதம் மிகப்பணிந்து பண்புடனே தென்னவனும்
1505 பரியும் கரியும் பத்திரமாய்க் காருமென்றான்
அப்படியே தானு மிருந்தனன்கா ணம்மானை.

சிவனார் வருகை
குருந்தடியில் வீற்றிருந்த குஞ்சிச் சடையோனும்
கேட்டு மனமகிழ்ந்து கிருபைக் கடலாகி
வந்தார்கா ணீசுவரனார் வரமவர்க்குத் தான்கொடுக்க
1510 கண்டான்காண் தென்னவனுங் கருணையுள்ள வீசுவரனை
கண்டு மலர்ப்பாதங் கருணையுடன் தான் தொழுது
மாலயனுந் தேடியே காணாத பொற்பாதம்
நாயடியேன் காண்பதற் கென்னதவஞ் செய்தேனோ
வன்பிறப்பி லழுந்தி வன்னரகில் வீழாமல்
1515 எந்தனுக்கு மோட்ச மிப்பொழு தருளுமென்றான்
இன்னம் பிறவி யிறந்து பிறவாமல்
உம்முடைய சீர்பாத மருளுமென்றார் தென்னவனும்
அருளுமென்ற சொற்கேட்டு அப்பொழுது ஈசுவரனார்
சிரித்துப் புரமெரித்த சிவனாரு மீ துரைப்பார்
1520 தென்னவனைப் பார்த்துனக்குச் சிதம்பரத்தில் மோட்சமல்லால்
இத்தலத்தில் மோட்ச மில்லைகா ணுந்தனுக்கு
அங்கே நீ போவென்று அருளினர்கா ணம்மானை.

தென்னவன் தில்லைக்கேகுதல்
தென்னவனு மப்பொழுது சிவனார் விடைவாங்கிப்
போனார்கா ணப்பொழுது பொழன்னம் பலந்தனக்குச்
1525 சென்றே சிதம்பரத்தில் தென்னவனு மப்பொழுது
மன்று தனிலாடு மாதேவர் பாதமதை
நின்று வணங்கி நெடுநா ளிருக்கையிலே,

தில்லை மூவாயிரவர் இடையூறு செய்தல்
தென்னவனைக் கண்டு தில்லை மூவாயிரவர்
கிட்டேவர வொட்டாமல் செய்தனர்கா ணம்மானை
1530 அப்பொழுது தென்னவனா ரவர்கள் தமைப்பார்த்து
சன்னியாசி யோடு தாட்டீகள் செய்வதென்ன
என் வழியே செல்லுகைக் கீடல்ல கண்டீரோ
என்று யிவர்சொல்ல வின்பமுடன் கேளாமல்
கோபித்துக் கண்சிவந்து கொடுமை யுரைத்திடவே
1535 தென்னவனா ரப்பொழுது சிவனாரைச் சிந்தைவைத்து
நின்று வணங்கி நெடுமூச் செறிகையிலே,

தென்னவனார் மானுருவடைதல்
சிவனா ரதுவறிந்து தென்னவனைத் தானழைத்து
மானாகப் பிறந்து வனத்திலே போயிருநீ
பிறகு வரவழைத்துக் கொள்ளுவோ முந்தனையு
1540 மென்று சிவனாரு மிதமா யுரைக்கலுற்றார்
தென்னவனு மப்பொழுது சிவனார் விடைவாங்கி
வனத்திலே தான்போய் மான் வடிவங் கொண்டிருந்தான்
மானாகப் பிறந்தவரும் வனத்திலே போயிருக்கச்,

மேசரி மக்கட்பேறு பெறுதல்
சென்னப் பட்டணத்தில் திறமான மேசரிதான்
1545 புத்திரரு மில்லாமல் பெருந்தவசு தானிருந்து
பெற்றா ரொருபெண்ணைப் பேருலகந் தானறியப்
பெற்ற மதலைதன்னை பேடியென்று பேருமிட்டு
இன்ப முடனே யினிதாய் வளர்த்தார்கள்
தவழ்ந்து விளையாடித் தள்ளுநடை யிட்டுவர
1550 மதலையின் சொற்கேட்க மன்னவனுந் தான்மகிழ்ந்து
பிள்ளையுடன் வார்த்தை பிரியமுடன் தான்கேட்க,

மகளின் மாற்றுநிலை கண்ட தாய்தந்தையர் வருத்தமுறுதல்
அப்போது பிள்ளை யதுவொன்றும் பேசாமல்
ஊமை யதுவாகி ஒன்றுமுரை யாததனால்
பிள்ளைதனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவனும்
1555 மன்னவனு மப்பொழுது மனஞ்சலித்துக் கொண்டிருந்தான்
சித்தாடை கொண்டு கொடுத்தார்க ளம்மானை
சீலைதனை வாங்கித் தெருவி லெறிந்துவிட்டாள்
சீலையுங் கட்டாமல் திரிந்ததுகா ணம்மானை
பித்தாயங் கொண்டு பிள்ளை திரிந்ததனால்
1560 பிள்ளைதனை வன்சிறையில் வைத்திருந்தா ரம்மானை
பனிரெண்டு வயது பக்குவமா யாச்சுதுகாண்
அப்பொழுதுஞ் சேலைபோல் பிள்ளை யிருந்ததனால்
மகளுடைய பாதகத்தை மாதாவுந் தான்பார்த்துக்
1565 குத்தி விழுந்தழுது கூவென்று தானலறித்
தன்கணவ ரோடே சலித்தழுதா ளம்மானை.

மகளின் மாற்றுநிலைக்குக் காரணமறிதல்
மன்னவனுங் கேட்டு மனதிற் கிலேசமுற்று
பாராத வைத்தியங்கள் பார்த்துச் சலித்துமவன்
இதற்கேது செய்வமென்று யெண்ணி மனந்தனிலே
1570 பெரியோர் களையழைத்துப் பேசினான்கா ணம்மானை
அந்தமொழி கேட்டு அவரீது சொல்லுவராம்
தவத்தினால் தான்வந்த குறையீது மன்னவனே
தீரும் படிக்குத் தீர்க்கமாய்ச் சொல்லுகிறோம்
சிதம்பரத்திற் சென்று சிவனாரைத் தான்தொழுதால்
1575 தீருங்கா ணிக்கருமஞ் செல்லுங்காண் மன்னவனே
என்றே யவர்சொல்ல வியல்வேந்தன் தான்கேட்டு
நல்லதென்று சம்மதித்து நாம்போக வேணுமென்று
தன்மனைவி தன்னுடனே தானுரைத்தா ரம்மானை.

மேசரி தில்லைக்குச் செல்லுதல்
உரைக்க அவள் கேட்டுஉள்ளபடி யாமெனவே
1580 மன்னவருந் தேவியரும் மகளுடனே மூவருமாய்ச்
சென்றார்கா ணப்பொழுது சிதம்பரத்திற் கம்மானை
சிதம்பரத்திற் சென்று சிவனாரைத் தானினைந்து
பாரமவர் மேல் போட்டுப் பாங்குடனே தானிருந்தார்:

சிவனார் தில்லை மூவாயிரவரை அழைப்பித்தல்
இவர்க ளிருக்கிறதை யீசுவரனார் தாமறிந்து
1585 தில்லை மூவாயிரவரைத் திட்டமா யப்பொழுது,

ஊமையைப் பேசவைக்கச் சொல்லுதல்
தானே வரவழைத்துத் தாமீது சொல்லலுற்றார்
ஊமையாய் வந்த உற்றதொரு பேடிதன்னைப்
பேசுவிக்க வேணுமென்று பெருமையா யிப்பொழுது
நம்முடைய பேரில் பழியவனுந் தான்போட்டு
1590 மேசரியும் வந்து இருக்கிறான் கண்டீரோ
ஊமைதனைப் பேசவைக்க வுங்களா லாமோதான்
என்று சிவனா ரெடுத்துரைக்கத் தான்கேட்டுத்
தில்லைமூ வாயிரவர் சேர ஒருமுகமாய்க்,

மூவாயிரவர் முடியாதெனக் கூறுதல்
கூடி யவரீது கூறினர்கா ணம்மானை
1595 ஈசுவரனே நீர்தாமு மிட்டதொரு சாபமது
ஊமையாய்த் தான் பிறக்கக் கற்பித்தீ ரிந்நாளில்
உம்முடைய சாபமதைத் தள்ளிவைத்துப் பேசவிக்க
எங்களுக்கு வல்லமைதா னுண்டோகா ணீசுவரரே
உம்முடைய செயலை யொருவருங் கண்டறியார்
1600 எங்களால் முடியாது ஈசுவரரே யென்றுரைத்தார்:

தென்னவனை யழைத்துவரச் சிவனார் கட்டளையிடுதல்
அந்த மொழி கேட்டுச் சிவனாரு மப்பொழுது
வந்துஒரு மாதவசி யிருந்தானே நம்மிடத்தில்
இருந்தவனை நீங்க ளெல்லோருந் தாங்கூடிக்
கூடித் துரத்திவிட்டீர் கோலத் தவசிதன்னை
1605 அவனே யிருந்தக்கா லிச்சாபந் தீருமென்றார்
அவனைத் தேடியழைத்துத் திரும்புமென்றா ரம்மானை
அந்த மொழிகேட்டு அவரீது சொல்லுவராம்
தேசாந் தரந்திரியுஞ் செல்வத் தவசிதன்னை
எங்கே யென்றுதேடி யழைப்போம்நா மீசுவரரே
1610 இருக்குமிட மின்னதென்று எமக்குரைப்பீ ராமாயின்
அப்படியே சென்று அழைத்தோடி வருவோமென்றார்:

தென்னவனிருக்குமிடம் முதலிய கூறல்
அந்தமொழி கேட்டு அய்யரு மீதுரைத்தார்
மானாகத் தான்பிறந்து வனத்திலே வாழுகின்றான்
போயழைத்து வாருமெனச் சொன்னார்கா ணம்மானை
1615 வனத்திலே வாழுகின்ற மானிலக்ஷங் கோடியுண்டு
எந்த மானென் றழைப்போம்நா மீசுவரரே
என்றவர்கள் சொல்ல வீசுவரரு மீதுரைப்பார்
வனத்திலே வாழுகின்ற மான்றிரள் கூட்டத்தில்
செல்வக் கலையாகித் திரிகின்றான் காணுங்கள்
1620 வனத்திலே நீங்கள்போய் மான்றிரளைக் கண்டவுடன்
கூட்டமான் கள்சேரக் குதித்தோடிப் போய்விடுங்காண்
செல்வக் கலையதுதான் தீர்க்கமா யுங்கள்தமைப்
பார்த்துவெகு கோபமுடன் பரிதவித்து நிற்குமது
அப்பொழுது நம்முடைய வடையாள மானதொரு
1625 மாலையைத் தான்போட்டால் மான்வடிவந் தான்மாறிச்
சிவஞானி யாகித் தென்னவனுந் தான்தோன்ற
உங்கடமைக் கண்டவுடன் கோபித்துக் கண்சிவப்பான்
அறிந்து மறியாம லடியேங்கள் செய்தகுற்றம்
பொறுத்தருள வேண்டும் புண்ணியனே யென்றுசொல்லிப்
1630 பாதம் பணிந்தால் பராக்கிரமம் விட்டுவிடும்.
சென்றழைத்து வாருமென்று சிவனாருந் தாமுரைத்தார்.

மூவாயிரவர் தென்னவரைக் காணுதல்
அந்தப் படிக் கனைவோருஞ் சம்மதித்துச்
சிவனார் விடைவாங்கிச் சென்றார் வனந்தனிலே
வனமெல்லாந் தேடி வந்தா ரொருவனத்தில்
1635 வாவி தனிற்சென்று வாகாக நீர்குடித்துத்
தேடி யலுத்துத் திகைத்திருக்கும் வேளையிலே
கூட்டமான் கள்கூடிக் குளக்கரையில் வந்தனவே
கண்டார்கள் மான்திரளைக் கனபிரிய மாய்மகிழ்ந்து
கொண்டாடிப் பார்த்திருந்தார் குளக்கரையி லம்மானை
1640 மானெல்லாம் வந்துவிடாய் தீரவே நீர்குடித்துச்
சேர வொருநிழலில் சென்று படுத்தனகாண்
மாயக் கலைக்கூட்ட மான்களும் நாலாறு
சூழவே காவலாய்ச் சுற்றிநின்ற தம்மானை
அப்படியே சேரத் திரண்டிருக்கும் வேளையிலே
1645 தில்லை மூவாயிரவர் சேர வொருமுகமாய்ச்
சங்கீதந் தனைப்பாடத் தனமான்க ளோடினவே
கலைமான் வடிவுகொண்டு நின்றிருந்த தென்னவனு
மோடா மலேநின்று உற்ற செவியெடுத்து
தில்லை மூவாயிரரைச் சீறியே பார்த்திடவே
1650 அப்பொழுது தில்லை மூவாயிரவர் தாம்பார்த்துச்
சிவஞானி யானவொரு தென்னவனா ரிதுவெனவே
அறிந்துமலர்ப் பாதமதி லனைவோரும் போய்விழுந்து
அறிந்து மறியாம லடியேங்கள் செய்தபிழை
பொறுத்தருள வேணும் புண்ணியரே யென்றுசொல்லிச்
1655 சிவனார் கொடுத்ததொரு செங்கழுநீர் மாலைதன்னை
கலைமான் வடிவுகொண்ட காரணவர் முன்போட்டுச்
சிவனாரு மும்மைச் சீக்கிரமாய்த் தானழைத்துக்
கூட்டிவரச் சொன்னார் கோலக் கலைமுனியே
என்றவர்கள் சொல்ல வெழின்மான் வடிவுவிட்டுத்
1660 தென்னவனார் தோன்றி நின்றார்கா ணம்மானை.

தென்னவர் தில்லைக்கு வருதல்
தோன்றிநின்ற தென்னவனைத் தில்லைமூ வாயிரவர்
வாருமென்று சொல்லி யழைத்துவந்தா ரந்நேரம்:

சிவனாரைக் காணுதல்
வந்தார் சிதம்பரத்தில் வாழுஞ்சிவ னாரிடத்தில்
சிவனாரைக் கண்டு தென்னவனுந் தான்பணிந்து
1665 எந்தன் குருவே எனையாளுஞ் சற்குருவே
எந்தனையு மிப்பொழுது நீரழைத்த பணிவிடையென்
என்று அவருரைக்க வீசுவரருந் தான்மகிழ்ந்து
நன்றுநன்று யிப்போ நாமுரைக்க நீகேளாய்
சென்னப் பட்டிணத்தில் திறமான மேசரிதான்
1670 பிள்ளைத் தவமிருந்து பெற்றா ரொருபெண்ணை
வாயுமவள் பேசாமல் வன்துகிலுங் கட்டாமல்
பித்தாயங் கொண்டு பெருக்கத் தவித்ததனால்
நம்முடைய பேரில் பாரமவன் போட்டு
வந்திருக்கான் நம்மருகே வாகாய்நீ போயிருந்து
1675 பிள்ளைதனைப் பேசவைத்து வாருமென்றா ரம்மானை

தென்னவன் மேசரியைக் காணுதல்
சிவனா ருரைக்கத் தென்னவனுந் தான்மகிழ்ந்து
போனான்கா ணப்பொழுது பொற்கொடியாள் தன்னிடத்தில்
மேசரியுந் தான்கண்டு மெத்த மனமகிழ்ந்து
வாரு மிருமென்று வரிசையுடன் தானழைத்துத்
1680 தன்முன்னே தானிருத்திக் கொண்டார்கா ணம்மானை
தென்னவனா ரப்பொழுது சிவனார் துணையெனவே
மன்னவனார் முன்னிருந்து வாகா யுரைக்கலுற்றார்
வாருங்காண் மேசரியே வாகாயுன் பிள்ளைதனைத்
தெரிந்து கலையுடுத்தித் தேன்போலும் வாய்திறந்து
1685 பேசவே செய்து பெருமையாய்த் தானிருக்கப்
பண்ணிவைத்து வாவெனவே பரமனா ரென்னைவிட்டார்
ஆகையினால் நாமிங்கே வந்தோங்காண் மன்னவனே
என்றுசொல்லக் கேட்டு இதமாக மேசரிதான்
சந்தோஷ மாகத் தானிருக்கும் வேளையிலே;

சாபம் நீங்குதல்
1690 தென்னவனார் தம்மைப் பேட்டியவள் கண்டவுடன்
வேகமது தோன்றி வெடுவெடென்று தானெழுந்து
தாயார் பிறகேபோய்த் தானொளிந்தா ளம்மானை
ஈசுவர ரன்று இட்டதொரு சாபமது
பெண்கொடியாள் தன்னைவிட்டுப் போனதுதா னம்மானை .

தென்னவன் ஊமையைப் பேசவைத்தல்
1695 தென்னவனா ரப்பொழுது தேன்மொழியைத் தான்பார்த்து
வண்ணத் துகிலொன்றை வாகா யெடுத்தவரும்
இந்தத் துகிலை யெடுத்துநீர் கட்டுமென்று
வண்ணத் திருமகள்முன் வாகாகத் தான்போட்டார்
பெண்கொடியு மப்பொழுது சீக்கிரமாய்த் தானெழுந்து
1700 வண்ணத் துகிலைவரிந்து உடுத்தினள்கா ணம்மானை
சேலை யுடுத்தினயின் தென்னவனா ரப்பொழுது
பெண்ணை யருகிருத்திப் பேசவைக்க வேணுமென்று
பாங்காக வேதாமுஞ் சிரித்தீது செப்பலுற்றார்
பெண்ணே நீரிப்பொழுது பேசா திருப்பதென்ன
1705 வாயைத் திறந்து வழக்கா யுரையுமென்றார்
சொன்னவுட னேயவளுஞ் சோலைக் கிளிபோலே
வாயைத் திறந்து பேசினள்கா ணம்மானை

மேசரியின் மகிழ்ச்சி
மன்னவனு மதைக்கண்டு மனமகிழ்ந்து கொண்டாடிச்
சிதம்பரத்தில் வாழுஞ் சிவனாரே யல்லாமல்
1710 வேறுஒரு தெய்வ மில்லையென நிச்சயித்துத்
தோரணத்தி னாற்சபையுஞ் சோடித்தா ரம்மானை
தென்னவனார் தமக்குச் செய்யும் வரிசையெல்லாம்
எந்தனுயிர் தந்த யீசுவரருக் கெனவெண்ணி
நீர்செய்த உதவிக்கு நானீது செய்கிறேன்காண்
1715 என்றுமன் னவன்கூற வீதுரைத்தார் தென்னவனார்
ஈசன் செயலொழிய வென்னால் முடிவதுண்டோ
நீர்தரும் வரிசையெல்லாம் தானங்கள் பண்ணிவிடும்
சன்னாசி யெந்தனுக்குத் தான்வாங்கிக் காரியமென்
என்றுசொல்லிப் போட்டு எழுந்திருந்து தான்போனார்
1720 சென்றார்காண் மேசரியுஞ் சிறப்பாகத் தன்பதிக்கு:

தென்னவன் சிவனைக்காணுதல்
தென்னவனார் சென்று சிவனா ரடிதொழுது
எந்தன் பிறவிதனை நீர்நீக்க வேணுமென்று
சிந்தைதனி லெண்ணித் தெளிந்திருந்தா ரம்மானை.

தென்னவர் பெருந்துறைக்குச் செல்லுதல்
இந்தப்படி யெண்ணி யிவரிருக்கும் வேளையிலே
1725 மாணிக்க வாசகர் என்றுதிரு நாமமது
சாத்தியவர் தம்மைச் சடுதியிலே தானழைத்துப்
பெருந்துறையி லீசுவரர்க்குப் பெற்றபிள்ளை நீயாகி
அங்கே நீபோயிருந்து அரசாளு மென்றுரைத்தார்
சிவனார் விடைவாங்கிச் சென்றார் பெருந்துறைக்குப்
1730 பெருந்துறையி லீசுவரனார் பொற்பாதம் போற்றிசெய்து
தண்டனிட்டுத் தென்னவனும் நின்றார்கா ணம்மானை
தண்டனிட்ட தொண்டனையுஞ் சிவனார் மிகத்தழுவி
இந்நாள் வரையிலெனை மறந்துநீ யிருந்ததென்ன
என்று சிவன்கேட்க வீதுரைத்தான் தென்னவனும்
1735. வன்பிறப்பி லழுந்தி வன்னருகில் வீழாமல்
சிதம்பரத்தில் மூழ்கிச் சிவனா ரடிதொழுது
மான் பிறவியாகி வனத்தில் திரிந்தலுத்துப்
பேடிதனைப் பேசவைத்துப் பெண்பிறவி தானகற்றி
மாணிக்க வாசகர் என்றே யவரெனக்குப்
1740 பேருமினி தாய்வைத்துப் பெருந்துறைக்குப் போவெனவே
விடைகொடுக்க வாங்கி வந்தேன்நா னீசுவரரே
என்று இவர்கூற வீசுவரரும் தான்மகிழ்ந்து
தானீகர் தம்மைத் தாமே வரவழைத்துச்
சந்நிதி முன்பாகத் தான்மேற் புறமாக
1745 மாணிக்க வாசகர்க்கு மண்டபமுங் கட்டுமென்றார்
தாமே யவருரைக்கத் தானே வரவழைத்துத்
திருப்பணியுஞ் செய்து முடித்தார்கா ணப்பொழுது
திருப்பணியுஞ் செய்து கட்டி முடித்தபின்பு
மாணிக்க வாசகரை மலர்க்கரத்தி னாற்றழுவி
1750 கூட்டியவர் சென்று கோயிலுக்குட் டானேகி
அபிஷேகம் நைவேத்திய மவர்கையாற் றானருள
ஆவுடையார் நம்பியவர் தம்மை வரவழைத்து
பூசைபண்ணச் சொல்லி யருளுமவர் தான்புரிந்து
இன்பமுட னவ்விடமே யிருந்துவந்தா ரம்மானை
1755 அந்தப் படியே யவரிருக்குந் வேளையிலே,

ஆவுடையார் வருகை
வந்தார்கா ணாவுடையார் மறையோனைப் போலவால்
கண்டார்காண் தென்னவருங் கண்குளிர வம்மானை
வேதியரைக் கண்டு விளம்புவான் தென்னவனும்
எங்கிருந்து வாரீ ரேழைப் பிராமணரே
1760 என்று விளம்பவே யியம்புவார் வேதியரும்
மதுரை தனிலிருந்து வாரேன்காண் தென்னவனே
என்றுசொல்ல வேதியருந் தென்னவனு மீதுரைப்பான்:

தென்னவன் மதுரைச் செய்தி கேட்டல்
மதுரை தனிலிருந்து வாரீரே வேதியரே
அங்கே யதிசயங்க ளுண்டோ வெனக்கேட்டான்
அதிசயங்க ளின்னவென்று அறிவிப்பீ ராமாயின்
1765 சொல்லுகிறோ முந்தனுக்கு சொல்லுமென்றா ரம்மானை
தென்னவனு மப்பொழுது தேசிகரைத் தான்பார்த்து
தென்னவனா ரிங்கிருந் தெங்கேயோ யேகினரே
ஏகினார் வருவாரோ வென்றுமந்தப் பட்டணத்தில்
1770 சொல்லுகிற பேர்க ளுண்டோ வெனக்கேட்டார்:

ஆவுடையார் மதுரைச்செய்தி யுரைத்தல்
அந்தமொழி கேட்ட வேதியரு மப்பொழுது
தென்னவனைப் பார்த்துச் சிரித்தீது செப்பலுற்றார்
பட்டணத்திலுள்ள பலசனங்க ளெல்லோரும்
பாண்டியனார் வாசற் பரிவார மத்தனையும்
1775 இன்று பிறந்த விளங்குழந்தை தான்முதலாய்த்
தென்னவனார் தம்மைப்போல் தேசத்திற் கிட்டாது .
போனார்வரு வாரோவெனப் புலம்புவா ரெல்லோரும்
இன்று தவிக்குதுகாண் நினைவு தடுமாறிப்,
ஆவுடையார் தென்னவனை மதுரைக்கழைத்தல்
போனால்நீ யிப்பொழுது புதுமையுள்ள பாண்டியரு
1780 தேசவதி காரஞ் செலுத்துமென்று தாமுரைப்பார்
வாரீரோ நாம்போவோம் மதுரைதனக் கிப்பொழுது;

தென்னவன் மறுப்பு
என்றுசொல்லக் கேட்ட தென்னவனு மீதுரைப்பான்
ஒன்று மறியாம லுரைத்தீரே வேதியரே
சிவஞானி யெந்தனுக்குச் சிற்றாசை வேண்டாங்காண்
1785 குருந்தடியி லீசுவரருங் கொடுத்த வரப்படியே
பொன்னம் பலத்தையர் பொற்பாதம் விட்டொருநாள்
வருவேனோ வாரேன்நான் வார்த்தையினி யுரையாதீர்
இந்தமொழி தன்னை யிப்பொழுதே விட்டுவிடும்.
என்றுசொல்லத் தென்னவனா ரீதுரைப்பார் வேதியரும்:

ஆவுடையார் தென்னவனைக் கொண்டு கோவைபாடுவித்தல்
1790 ஈசர் மலரடியை யிதயத்தில் தான்வைத்து
ஈசர்மேற் கோவை எழுதநீர் வல்லவரோ
என்றே யவர்கேட்க யியம்புவார் தென்னவரும்
உம்மைப்போல் வேதியர்க ளெழுதவே யுண்டானால்
கோவைநா மிப்பொழுதே சொல்லுவோ மென்றுரைத்தார்
1795 உரைத்த வதைக்கேட்ட வெழின்மறையோன் தானுமப்போ
இப்பொழுதே நீர்சொன்னா லெழுதுவோ மென்றுரைத்தான்
அந்தமொழி கேட்டுத் தென்னவனு மப்பொழுது
ஆனந்த மாச்சரிய மெனவே மனமகிழ்ந்து
ஈசர்மலர்ப் பாதமதை யிதயத்தி லேநினைந்து
1800 கோவையவர் பாடக் கோமா னெழுதினராம்

ஆவுடையார் திருக்கோவையைச் சிற்றம்பலத்துள் வைத்தல்
எழுதி முடித்தவரு மெண்ணிலக்கந் தான்போட்டுப்
புத்தகமுஞ் சேர்த்துப் பெருங்கயிறுந் தான்போட்டுத்
தில்லைச் சிவனார்தம் கையெழுத் தீதெனவே
கடையேட்டிற் றானெழுதி வைத்தார் சிதம்பரனார்
1805 எழுதின புத்தகத்தை யீதுசெய்தா ரம்மானை
பஞ்ச கேந்திரப் படிதனிலே புத்தகத்தை
வைத்துக் கதவடைத்து வந்தார்கா ணம்மானை.

ஆவுடையார் மறைவு
வந்த மறையோனும் மாயமாய்த் தான்மறைந்தார்
தென்னவனு மப்பொழுது தேடி யலுத்தவனாய்
ஈசரது மாய மிதுவெனவே தானறிந்து
1810 என்னைநீர் சோதனைகள் செய்யவென வந்தீரோ
ஈசுவரரே உம்முடைய மாயையீ தென்றுசொல்லிப்
போனவிடங் காணாமல் போதப் பரிதவித்து
நின்றுநெடு மூச்செறிந்து நின்றார்கா ணம்மானை
என்னை மயங்கவைத் தேகினீ ரீசுவரரே
1815 உம்முடைய சீர்பாத மொருநாளும் நான்மறவேன்
என்னுடைய சனனமதை யீடேற்றிக் கொள்ளுமையா
என்று புலம்பி யிவரிருக்கும் வேளையிலே;

மூவாயிரவர் திருக்கோவையைக் கண்டு திகைத்தல்
தில்லை மூவாயிரம் பேரி லொருவனவன்
தில்லைச் சிதம்பரர்க்குச் சிறப்பாகப் பூசைபண்ண
1820 வேணுமென்று சொல்லி விரைவாகத் தானும்வந்தான்
வந்து கதவுதனை வாகாய்த் திறந்திடவே
பஞ்ச கேந்திரப் படிதனிலே புத்தகத்தைக்
கண்ட வுடனேயவன் கலக்கமுற் றீதுசொல்வான்
களவாணி வந்திங்கே களவுபோ யிருக்குதென்று
1825 எண்ணி யவன்மனதி லிப்புறத்தே வந்தவனும்
திறந்த கதவடைத்துத் தீவரமா யெண்ணியவன்
தில்லைமூ வாயிரர்க்குச் சேதிசொன்னா னப்பொழுது
அந்தமொழி கேட்டு அனைவோரு மங்குசென்று
கதவுதனைத் திறந்து கண்டார்கள் புத்தகத்தை
1830 இந்த நல்ல புத்தகந்தா னிவ்விடத்தி லுள்ளதல்ல
மாயமா யிதுவிங்கே வந்திருக்கு தென்றுசொல்லிப்
புத்தகத்தைத் தானெடுத்துப் பேணியவர் பார்த்தபின்பு
அவையடக்க மென்பதற் கர்த்தம்வெளி யாகாமல்
நின்று மயங்கி நினைவுவந் தீதுரைப்பார்
1835 தென்னவனா ரிப்பொழுது சிவனா ரடுமையல்லோ
அவரைநாம் போய்க்கேட்டா லர்த்தம்வெளி யாமெனவே,

மூவாயிரவர் மாணிக்கவாசகரைக் காணுதல்
எல்லோருந் தென்னவரை வந்துகண்டா ரம்மானை
கண்டுமவர் தம்மோடு கரும முரைக்கலுற்றார்
கண்ணாரக் கண்டதையுங் கருணையுள்ள தென்னவனார்
1840 ஈசுவரனார் மாயமிதை யேதென் றெடுத்துரைப்போம்
வேதியனார் தம்மிடத்தி லிருந்ததொரு புத்தகந்தான்
இவர்கையிற் றானுளது விதுமாய மென்றெண்ணி
தில்லைமூ வாயிரரைச் சிறப்பாகத் தான்பார்த்து
ஏதுசொல்ல வேணு முங்கடமக் கிப்போவென
1845 விந்தநல்ல புத்தகத்தின் பொருள் நமக்குச் சொல்லுமென்றார்:
மாணிக்கவாசகர் தில்லையையடைதல்
பொருளுமக்கு நாமும் பொருந்த வுரைக்கின்றோம்.
வாருங்க ளிப்பொழுது வாகாக நம்முடனே
என்றுசொல்லித் தென்னவனுந் தில்லையைத் தானடைந்து;

மாணிக்கவாசகர் சிவசாயுச்சிய மடைதல்
தில்லை மூவாயிரவ ரெல்லாம் வரவழைத்துச்
1850 சென்று சபைமுன்னே திறமாக வந்துநின்று
பொருளிதுவே நீர்காணும் புண்ணியரே யென்றுசொல்லிச்
சபையையவர் கைகாட்டிச் சென்றார் சபையினுள்ளே
சபைதனிலே தான்சென்று சாயுச்சிய பதமடைந்தார்
தென்னவனைக் காணாமல் தில்லை மூவாயிரவர்
1855 தேடி யலுத்தவர்கள் சிந்தை யதுகலங்கி

சிவனாரைப் போற்றிச் சிந்தை தெளிவுறவே
ஈசுவரரே நாங்க ளனைவோரு மிப்பொழுது
சேரவிறந் திடுவோஞ் சீக்கிரமாய்க் காட்டுமென்றார்
அப்பொழுது சிவனாரு மவர்கடமைப் பார்த்து
1860 தென்னவனும் நம்முடைய சீர்பாதஞ் சேர்ந்தான்காண்
வீணுக்கு நீங்க ளிறக்கவந்த காரியமென்
என்றுசிவ னாரருள வேகினர் தம்பதிக்கு.

பயனுரைத்தல்
மாணிக்க வாசக ரம்மானை கேட்போர்கள்
காணிக்கை யாகக் கைலாயஞ் சேர்வார்கள்
1865 கற்றுப் படிப்பவர்கள் காதாரக் கேட்பவர்கள்
பெற்றுப் பெருகிப் பெரியகுடி யாயிருப்பார்
பாடினவர் கேட்பவர்கள் பயனெடுத்துச் சொல்வோர்கள்
இந்தக் கதையை யெழுதிப் படிப்பவர்கள்
இன்னமின்னஞ் சொல்லுமென்று இன்பமாய்க் கேட்போர்கள்
1870 இந்தக் கதையை யெழுதிக் கொடுத்தவர்கள்
இன்பசுக மெல்லா மினிப்பெருகி வாழியவே.
-----------------------------
BULLETIN OF THE GOVERNMENT
ORIENTAL MANUSCRIPTS LIBRARY, MADRAS.
----------------------
AN APPEAL.
The Government Oriental Manuscripts Library, Madras, is unique in point of variety and vastness of collections covering a very wide field of Indian Literature in Sanskrit, Tamil, Telugu, Kannada, Malayalam, Mahratti, Arabic, Persian and Urdu. The dates of several of the manuscripts go back to many hundreds of years. From an academic point of view, these collections contain some very interesting specimens of Literary, Scientific, Historical and Artistic importance. A large number of them have not yet been printed and some of them are available only in this Library. With a view to placing these manuscripts in the hands of the public in a printed form, the Government of Madras were pleased to sanction the starting of a BULLETIN under the auspices of the Government Oriental Manuscripts Library. For the present only two numbers are issued in a year. They contain critical editions of original works in Sanskrit, Tamil, Telugu, Kannada, Malayalam, Mahratti, Persian and Urdu. The annual subscription is only Rs. 4 inland and 8 shillings foreign. Scholars, Patrons of Culture, Universities, Public Libraries and Educational Institutions are requested to enrol themselves as susbscribers for this Bulletin and thus encourage the cause of Oriental Studies and Culture.


This file was last updated on 22 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)