அ.க. நவநீத கிருட்டிணன் எழுதிய
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
muttamiz vaLartta munivarkaL (essays)
by A.K. navanIta kiruTTiNan
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அ.க. நவநீத கிருட்டிணன் எழுதிய
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
Source:
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
ஆசிரியர் : திருக்குறள் மணி, வித்துவான் அ.க. நவநீத கிருட்டிணன்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6., சென்னை -1.
முதல் பதிப்பு, அக்டோபர் 1966
அங்கப்ப பிள்ளை நவநீதகிருட்டிணன் (1921 - 1967)
கழக வெளியீடு 1294
-----------------
அணிந்துரை
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்' என்னும் இச் சிறு நூல் நடுநிலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்க்குப் பயன் தரும் வகையில் எளிய நடையில் எழுதப் பெற்றது. உலகப் பற்றை ஒழித்த முனிவர்களும் நம் உயர்ந்த தாய் மொழியாகிய தமிழ்டத்தில் கொண்ட பற்றை விட்டொழிக்க முடியாது கற்றுத் தேர்ந்து புலமை பெற்றனர். அவர்கள், 'தாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெற்று மகிழ வேண்டும்' என்ற உயர்ந்த எண்ணத்தால் அரிய பாடல்களையும் நூல்களையும் ஆக்கியுள்ளனர். அவ்வாறு புனைந்த பாக்களும் நூல்களும் தமிழ்த் தாய்க்கு அணிகளாக விளங்குகின்றன. அத்தகைய தமிழ்த் தொண்டு ஆற்றிய தவமுனிவர்களின் வரலாறுகள் பத்தினை இந்நூலிற் காணலாம்.
இந்நூலை எழுதுமாறு எளியேனைத் தூண்டியும் வேண்டியும், என்னை எழுத்துப் பணியில் ஊக்கமும் ஆக்கமும் எய்துமாறு செய்து உதவிவரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் மாட்சிமிகு வ. சுப்பையா பிள்ளை யவர்கட்கு யாது கைம்மாறு செய்ய வல்லேன்?
என் நூல்களைப் பலகாலும் போற்றித் தத்தம் பள்ளிகளில் பாடமாக்கி, என்னைத் தமிழ்ப் பணியில் எந்நாளும் ஊக்கிவரும் பள்ளித் தலைவர்கட்கும் தமிழ்ப் புலவர்கட்கும் நான் என்றும் நன்றியுடையேன். இந் நூலையும் தங்கள் பள்ளிகளில் பாடமாக்கி ஆதரித்தருளப் பணிகின்றேன்.
தமிழ் வெல்க! அ. க. நவநீத கிருட்டிணன்.
-------------------
உள்ளுறை
1. தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர்
2. முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர்
3. அறநூல் தந்த அருந்தவர்
4. மந்திரம் தந்த மாமுனிவர்
5. முருகன் அருள் பெற்ற முனிவர்
6. தமிழ் அகராதியின் தந்தையார்
7. தமிழ் வளர்த்த தம்பிரான்
8. தவஞானச் செல்வர் சிவஞான முனிவர்
9. தமிழ் மாணவர் போப்பையர்
10. தெய்வத் தமிழ் வளர்த்த தாயுமானவர்
கட்டுரைப் பயிற்சி
---------------
முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
1. தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர்
தமிழின் பழைமை
நம் தாய் மொழியாகிய தமிழ் மிகவும் பழைமை வாய்ந்தது. இம்மொழி எப்பொழுது தோன்றியது என்று எவரும் கண்டு கூறவில்லை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே முன் தோன்றி மூத்த குடியினரால் பேசப்பெற்ற பெருமையுடையது. இத்தகைய பழைமையான தமிழை வளமைப் படுத்துவதற்காகத் தமிழ் நாட்டு மன்னர்கள் சங்கம் அமைத்தார்கள். அம் மன்னர்களில் தலைமையானவர் பாண்டியர் ஆவர்.
தமிழ் வளர்த்த தலைச்சங்கம்
காய்சின வழுதி என்னும் பாண்டிய மன்னன் பழைய தென் மதுரையில் தலைச் சங்கத்தை அமைத்தான். அச்சங்கத்திற்குக் சிவபெருமான் தலைமைப் புலவராக விளங்கினார். அச் சங்கத்தில் பல புலவர்கள் கூடிக் தமிழை ஆராய்ந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் நூல்களை இயற்றினர். சிலர் இலக்கிய நூல்களை இயற்றினர். வேறு சிலர் இலக்கண நூல்களை இயற்றினர்.
ஆதியில் தோன்றிய முத்தமிழ் இலக்கணம்
தலைச்சங்கத்தில் இருந்த புலவர்களுள் சிறந்தவர் அகத்தியர் என்னும் அருந்தவ முனிவர் ஆவர். அவரைத் தமிழ் முனிவர் என்றும், குறு முனிவர் என்றும் புலவர்கள் போற்றுவர். அகத்தியர் முத்தமிழுக்கும் சிறந்த இலக்கண நூலை இயற்றினார். அந்நூல் ’அகத்தியம்' என்று கூறப்படும். அஃது இக்காலத்தில் முழு வடிவத்துடன் கிடைக்கவில்லை. ஆயினும் சில சூத்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அகத்தியம் என்ற இலக்கணமே தமிழில் தோன்றிய ஆதி இலக்கண நூலாகும். அது பன்னிரண்டாயிரம் சூத்திரங்களை உடையது என்பர்.
பொதிகைத் தமிழ்ச் சங்கம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒருபகுதி பொதிகை மலை என்று கூறப்படும். அப் பொதிகை மலை அடிவாரத்தில் பாவநாசம் என்ற தலம் ஒன்று உண்டு. அத்தலத்தில் அகத்தியர் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தினார். அச் சங்கத்தில் அகத்தியரிடம் பன்னிரண்டு மாணவர்கள் தமிழ் பயின்றனர். அவருள் முதன்மையானவர் தொல்காப்பியர். அவரே தொல்காப்பியம்' என்னும் இலக்கணத்தை இயற்றினார். அதங்கோட்டாசான் , பனம் பாரன், துராவிங்கன், செம்பூட்சேய் . வையா பிகன், வாய்ப்பியன், கழாரம்பன், அவிநயன், நத்தத்தன், வாமனன், பெரிய காக்கைப் பாடினி ஆகிய புலவர்கள், தொல்காப்பிய ருடன் பயின்ற பிற மாணவர்கள் ஆவர்.
தமிழ் மலையின் தனிச்சிறப்பு
பொதிகை மலையில் அகத்தியர் வந்து தங்கிய காரணத்தால் அதனை அகத்திய மலை என்றும் போற்றுவர். அம் முனிவர் தங்கித் தமிழ் வளர்த்த காரணத்தால் 'தமிழ் மலை’ என்றும் கொண்டாடுவர். இத்தகைய சிறப்புக்களால் அம்மலை 'மலையம்' என்றே போற்றப்படும். அங்கிருந்து எழுந்து உலவி வரும் மெல்லிய பூங்காற்றை ' மலைய மாருதம்' என்பர் புலவர்.
அகத்தியரைப் பற்றிய புராணக்கதை
அகத்திய முனிவர் பொதிகை மலையில் வந்து தங்கியதற்குப் புராணக் கதையொன்று வழங்குகின்றது. இமயமலையின் சிகரங்களில் ஒன்று கயிலாயம். அக்கயிலாயச் சிகரமே சிவ பெருமான் உறைவிடம் ஆகும். இமய மலைக்கு அரசனாக இமவான் என்பான் இலங் கினான். அவன் மகள் பார்வதி என்பாள் பர்வதராசனாகிய இமவான், தன் மகளைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். அத்திருமணச் சிறப்பைக் காண் பதற்கு மக்கள் திரள் திரளாகக் கூடினர். தென்னாட்டு மக்களும் வட நாட்டு இமயமலையில் திரண்டனர்.
அகத்தியர் தென்னாட்டை அடைதல்
அதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அவ்வாறு உயர்ந்த தென்னாட்டைச் சமன் செய்ய வேண்டுமென்று சிவபெருமானிடம் தேவர்கள் யாவரும் வேண்டினர். அதற்கு இணங்கிய சிவபெருமான் தவத்தில் சிறந்த அகத்திய முனிவரை அழைத்தார். ’நீர் தென்னாட்டிற்குச் சென்று பொதிகை மலையில் தங்குவீர்' என்று கட்டளை யிட்டார். அகத்தியர், ’அந்நாட்டில் கங்கை இல்லையே’ என்று வருந்தினார்.
கமண்டலத்தில் கங்கை நீர்
சிவபெருமான், முனிவரின் துயரைப் போக்கத் திருவுளம் கொண்டார். கமண்டலம் ஒன்றில் கங்கை நீரை முகந்து கொடுத்தார். ’நீர் இந்த நீரை எவ்விடத்துச் சிந்தினாலும் அவ்விடத்தினின்று கங்கை பெருகியோடும்' என்று திருவருள் செய்தார். கமண்டல நீரைப் பெற்ற முனிவர் தென்னாடு நோக்கிப் புறப்பட்டார். அவர் வரும் வழியில் விந்த மலை அவர் வேகத்தைத் தடுத்தது. அம் மலையை அடக்கித் தென்னாட்டை அடைந்தார். அதனால் ’விந்தம் அடக்கிய வித்தகர்' என்ற சிறப்பைப் பெற்றார்.
காகம் கவிழ்த்த கமண்டலம்
ஒரு நாள் காலை வேளையில் அகத்தியர் குடகு மலையை அடைந்தார். அம் மலைச் சாரலில் இடைச் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அகத்தியர் அச்சிறுவனை அழைத்து அவன் கையில் கமண்டலத்தைக் கொடுத்தார். ’இதனைச் சிறிது பொழுது வைத்திரு' என்று சொல்லிக் காலைக்கடனை முடிக்கச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் இடைச் சிறுவன் கமண்டலத்தைக் கீழே வைத்தான். அப்போது காகம் ஒன்று அக்கமண்டலத்தின் மீது வந்து அமர்ந்தது. கமண்டல நீரில் பாதியைக் கவிழ்த்து விட்டது. அவ்விடத்திலிருந்து ஆறொன்று தோன்றி ஓடத் தொடங்கியது. அதுவே காவிரியாறு எனப்பட்டது. காகம் விரித்துத் தோன்றிய காரணத்தால் காவிரி என்று பெயர் பெற்றது என்பர்.
விநாயகர் விளையாட்டு
ஆனைமுகக் கடவுளாகிய விநாயகன் அகத்தியரிடம் சிறு வேடிக்கை செய்ய விரும்பினான். அவனே இடைச் சிறுவன் வடிவில் வந்தான். முனிவரின் கமண்டலத்தைக் கையில் வாங்கினான். அவர் அகன்றதும் கமண்டலத்தைக் கீழே வைத்துக் காகத்தின் வடிவெடுத்தான். அக்கமண்டல நீரைக் கவிழ்த்துக் காவிரியாறு பெருகச் செய்தான் முனிவர் எஞ்சிய நீருடன் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு நடந்தார். தென்னாட்டுப் பொதிகை மலையை அடைந்தார்.
பொதிகை மலையில் பொருநை
அம்மலையினை அடைந்த அருந்தவ முனிவர் மலைமேல் இருந்த பாறை யொன்றின் மீது எஞ்சிய கமண்டல நீரைக் கவிழ்த்தார். தாமிரக் கமண்டலத்திலிருந்து பெருகிய தண்ணீர் தாமிரவருணியாகப் புறப்பட்டது. அவ்வாற்றுநீர் எப்போதும் தண்மை மாறாது இருந்தது. அதனால் அவ்வாற்றைத் 'தண் பொருநை' என்றும் மக்கள் போற்றினர். பொருநையாற்று நறுநீரில் அகத்தியர் அக மகிழ்ந்து நீராடினார். அந்நீரை அள்ளியள்ளிப் பருகிப் பெருமகிழ்வு கொண்டார். ஆற்றின் கரையிலேயே அருந்தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைத்தார். தம்மை நாடி வந்த மாணவர்க்கு நற்றமிழைக் கற்றுக் கொடுத்தார்.
குறுமுனி அகத்தியர்
இவ்வகத்தியர் கோடைக் காலத்தில் குற்றாலத்தில் சென்று தங்கினார். அதனால் குற்றால் முனி என்றும் பெயர் பெற்றார். அப் பெயரே குறுமுனி என்று குறுகி வழங்கத் தொடங்கியது. இவர் தென்றமிழ் நாட்டில் இருந்ததால் ’தென்முனி' என்றும் கூறப்பட் டார். இவ்வகத்தியர் ’குடத்தில் பிறந்தவராதலின் குடமுனி' என்றும் பெயர் பெற்றார். ஒரு சமயம் இவர் கடல் நீர் முழுவதையும் கையில் உளுந்து அளவாக்கி உண்டார் என்று புராணக் கதை வழங்கும்.
முத்தமிழ்ப் பணிபுரிந்த முதல் முனிவர்
இத்தகைய முனிவர் ஆகிய அகத்தியர் முத்தமிழ் இலக்கணத்தை வகுத்தருளினார். தமிழ்ச் சங்கம் அமைத்துத் தொல்காப்பியர் போன்ற மாணவர்க்குத் தமிழ் இலக்கணத் தைக் கற்பித்தார். தமிழை வளர்ப்பதையே முத்தமிழ் வளர்த்த முனிவர்கள் தலையாய கடமையாகக் கொண்டு தொண்டு புரிந்தார். ஆதலின் அகத்தியர் முத்தமிழ் வளர்த்த முனிவர்களுள் முதன்மையானவர் ஆவர்.
----------------------
2. முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர்
தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு
'ஐம்பெருங் காவியங்கள்' என்று போற்றப்பெறும் ஐந்து அரிய நூல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் சிறந்தது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் ஆகும். இது கண்ணகி என்னும் கற்பரசியின் காற்சிலம் பால் விளைந்த கதையை விளக்கும் நூலாகும். தமிழில் தோன்றிய முதல் காவியம் இச்சிலப்பதிகாரமே. இஃது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவிய முத்தமிழ்க் காவியம் ஆகும். அதனால் இந்நூலை ’இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்று அறிஞர் போற்றுவர். இதனைத் தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு என்றே புலவர் போற்றுவர். ’நெஞ்சை - அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு' என்று இந்நூலைக் கவிஞர் பாரதியார் பாராட்டினார்.
சிலம்பைப் பாடிய இளங்கோ
இத்தகைய முத்தமிழ்க் காவியத்தைப் பாடிய புலவர் ஒரு முனிவர் ஆவர். சேர நாட்டு வேந்தனாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு மைந்தர் இருவர். மூத்தவன் செங்குட்டுவன், இளையவன் இளங்கோ . இவ் விளங்கோவே இளம் பருவத்தில் துறவு பூண்டமையால் இளங்கோவடிகள் எனப்பட்டார். இவரே சிலப்பதிகாரக் காவியத்தைப் பாடிய செந்தமிழ் முனிவர் ஆவர்.
அரசவையில் நிமித்திகன்
ஒரு நாள் சேர வேந்தனாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் அத்தாணி மண்டபத்தில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் மைந்தர் இருவரும் அமர்ந்திருந்தனர். அமைச்சரும் பரிவாரத்தாரும் புடை சூழச் சேரன் வீற்றிருந்தான். அவ்வேளையில் வேந்தனைக் காண நிமித்திகன் ஒருவன் வந்தான். அவன் மைந்தர் இருவருடன் மன்னன் வீற்றிருப்பதைக் கண்டான். அம்மூவரையும் நிமித்திகன் கூர்ந்து நோக்கினான். முடி மன்னனாகிய சேரலாதனை நோக்கி, 'அரசே! தங்கட்குப் பின்பு முடி சூடும் தகுதியுடை யவன் இளங்கோவே' என்று இயம்பினான்.
தம்பியின் தவக்கோலம்
அதைக் கேட்ட மூத்த மைந்தனாகிய செங் குட்டுவனுக்குச் சினம் பொங்கியது. அதைக் கண்ட இளங்கோ, தமையனின் சினத்தைத் தணிக்க நினைத்தார்; அவன் மனத்துயரை அப்பொழுதே மாற்ற எண்ணினார். உடனே ஆசனத்தை விட்டு எழுந்து அரண்மனையுள் புகுந்தார். சற்று நேரத்தில் காவியுடையுடன் முற்றுந் துறந்த முனிவராகக் காட்சி யளித்தார். தம்பியின் தவக்கோலத்தைக் கண்ட தமையனின் சினம் தணிந்தது; துயரமும் தொலைந்தது. இளங்கோவின் தவக்கோலத்தைக் கண்டு தந்தை சிந்தை கலங்கினான். தம்பியின் தியாக உள்ளத்தைக் கண்டு தமையன் கண்ணீர் சிந்தினான். தம்பியாகிய இளங்கோவைத் தன் மார்போடு சேர்த்துத் தழுவிக் கொண்டான்.
குணவாயில் கோட்டத்தில் தவமுனிவர்
தவக்கோலம் பூண்ட முனிவராகிய இளங்கோவடிகள் அன்றே அரண்மனை வாழ்வைத் துறந்தார். வஞ்சி மாநகரின் கீழ்த்திசையில் திருக்குணவாயில் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் சமணர் வாழும் தவப் பள்ளியொன்று விளங்கிற்று. அது குணவாயிற் கோட்டம் என்று கூறப்படும். அரச வாழ்வைத் துறந்த அடிகள் அக்கோட்டத்தில் சென்று தங்கினார், அவர் தம் தவவாழ்வைத் தமிழ் வாழ்வாக மாற்றினார். சீத்தலைச் சாத்தனாரைத் தமக்குத் தமிழாசானாகக் கொண்டார். அவர் பால் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இனிது கற்றுப் பெரும் புலமை பெற்றார்.
மலைவளம் காண மன்னன் புறப்படல்
தமிழ்ப்புலமை பெற்ற தவ முனிவராகிய இளங்கோவடிகள் இடையிடையே வஞ்சி மாநகருள் புகுவார். தமையனாகிய செங்குட்டுவனின் அரசவையில் கலந்து மகிழ்வார். ஒரு சமயம் செங்குட்டுவன், தன் நாட்டு மலைவளத்தைக் காணப் புறப்பட்டான். அவன் தன் பட்டத்தரசியாகிய வேண்மாளுடனும் தம்பியாகிய இளங்கோவுடனும் மலை நாட்டிற்குச் சென்றான். அங்குள்ள பேரியாற்றங்கரை மணல் மேட்டில் அனைவரும் தங்கினர். அவர்களுடன் தமிழாசிரியராகிய சாத்தனாரும் வந்து தங்கினார்.
மலைநாட்டில் வேட்டுவரைக் காணல்
செங்குட்டுவன் மலைவளம் காண வந்திருக்கும் செய்தியை மலையில் வாழும் வேட்டுவர் அறிந்தனர். மலையிலுள்ள அரிய பொருள்களை யெல்லாம் அரசனுக்குக் கையுறையாக எடுத்துக் கொண்டு வந்தனர். பேரியாற்றங் கரையில் வீற்றிருந்த வேந்தனைக் கண்டு களித்தனர். அவனை வாழ்த்தி அடி பணிந்து நின்றனர். குன்றக் குறவர் வரவினைக் கண்ட செங்குட்டுவன் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். அவர்களை நோக்கி, ’இம்மலை நாட்டில் ஏதேனும் சிறப்பு உண்டோ ?' என்று கேட்டான்.
நெடுவேள் குன்றில் கண்ட காட்சி
அவ்வேட்டுவர் நெடுவேள் குன்றத்தில் அரிய காட்சி யொன்றைக் கண்டனர். அதனை அரசனுக்கு அறிவிக்கும் பொருட்டே அவ் வேட்டுவர் அங்கு வந்தனர். அவர்கள் அரசனை வணங்கி, 'அரசே! தங்கள் திருமுன்பு தெரி விக்க வேண்டிய அரிய செய்தியொன்று உண்டு. திருச்செங்குன்று மலைமேல் ஒரு வேங்கை மரம் உள்ளது. அம்மரத்தின் நிழலில் மார்பு ஒன்றை இழந்த மங்கை ஒருத்தி வந்து நின்றாள். அவள் விரித்த கூந்தலோடும் பெருத்த கவலையோடும் காணப்பட் டாள். அவளைக் கண்ட யாங்கள் அவள் பக்கத்தில் சென்று, நீர் யார்?' என்று கேட்டோம். அவள், "மாடமதுரையோடு மன்னன் கேடுற ஊழ்வினை வந்து உருத்தியது; அதனால் அந் நகரில் கணவனை இழந்து இங்கு வந்த தீவினை யேன் யான்" என்று பதில் கூறி நின்றாள்.
அன்று மாலையில் விண்ணிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதில் தேவர்கள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அப்பெண்ணின் மீது மலர் மாரி சொரிந்தனர். அவ்விமானத் தில் இருந்த அவள் கணவனைத் தேவர்கள் அவளுக்குக் காட்டினர். கணவனைக் கண்ட அப்பெண் களிப்புடன் அவ்விமானத்தில் ஏறிக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவ் விமானம் விண்ணில் பறந்து மறைந்தது. அந்தப் பெண், தெய்வமாகவே திகழ்ந்தாள். அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளோ? யார் பெற்ற மகளோ? நாங்கள் அறியோம். இச் செய்தியை அரசராகிய தங்களிடம் அறிவிப்ப தற்காகவே நாங்கள் இங்கு வந்தோம்' என்று கூறி வாழ்த்தி நின்றனர்.
புலவரின் புன்சிரிப்பு
குன்றக்குறவர் கூறிய செய்தியைக் கேட்டுச் செங்குட்டுவன் முதலானோர் வியப்புக் கொண்டனர். அப்போது அங்கிருந்த தமிழாசிரியராகிய மதுரைச் சாத்தனார் அச்செய்தியைக் கேட்டு வியப்புறவில்லை. அவர் சிறிதே புன்சிரிப்புக் கொண்டார். அதைக் கண்ட செங்குட்டுவன், புலவரின் புன்சிரிப்புக்குக் காரணம் யாதெனக் கேட்டான். அங்கிருந்த இளங்கோவடிகளும் உண்மையை உணர விரும்பினார். கோப்பெருந்தேவியாகிய வேண்மாளும் புலவரின் சொற்களைக் கேட்கப் பெரிதும் விரும்பினாள். அமைச்சர் முதலான சுற்றத்தார் எல்லோரும் புலவரின் கருத்தை அறியும் விருப்புடன் இருந்தனர்.
சாத்தனாரின் விளக்கம்
சாத்தனாராகிய புலவர் அங்கிருந்த எல்லோருடைய உள்ளத்தையும் அறிந்து கொண்டார். குன்றக்குறவர் கண்ட கற்பரசியின் வரலாற்றை விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார். "மதுரை மாநகரில் அரசன் ஆணையால் கண்ணகியின் கணவன் கொலை யுண்டான். அதனால் கடுந்துயரம் அடைந்த கண்ணகி, மன்னன் முன்னே சென்று வழக்காடினாள். தன் கணவன் கள்வன் அல்லன், குற்றமற்றவன் என்று நிலைநாட்டினாள். தவறுணர்ந்த அரசன் சிங்காதனத்திலிருந்து மயங்கி வீழ்ந்து மாண்டான். பின்பு கண்ணகியின் கற்புத் தீயால் மதுரை மாநகரம் எரிந்தது'' என்று கூறி முடித்தார்.
கண்ணகிக்குக் கற்கோவிலும் கலைக்கோவிலும்
இவ்வாறு சாத்தனார் வாயிலாகச் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் கண்ணகியின் வரலாற்றைத் தெரிந்தனர். செங்குட்டுவன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு வஞ்சி மாநகரில் கோவில் அமைக்க எண்ணினான். இமயமலையில் சென்று கல்லெடுத்தான். அக்கல்லைக் கங்கையாற்றில் நீராட்டினான். வஞ்சி மாநகரில் கட்டிய கோவிலில் அமைத்து விழா எடுத்தான். தமிழ்ப் புலவராகிய இளங்கோவடிகள், தமையன் கற்கோவில் கட்டிய சிறப்பைக் கண்டு மகிழ்ந்தார். அவர் அக்கற்புத் தெய்வத்திற்குக் கலைக்கோவில் அமைக்க விரும்பினார்.
சிலப்பதிகாரம் செய்து முடித்தல்
இளங்கோவடிகள் தம் விருப்பத்தைத் தமிழாசிரியராகிய சாத்தனாரிடம் தெரிவித் தார். அவரும் அவ்வாறே செய்தருளும்படி வேண்டினார். கண்ணக் காவியத்தை ஆக்குதற்குத் தாமும் தக்க துணையாக இருந்தார். அடிகளாருக்கு வேண்டிய செய்திகளை எல்லாம் சேகரித்துக் கொடுத்தார். கண்ணகியின் சிலம்பு காரணமாக நிகழ்ந்த கதையாதலின் ’சிலப்பதிகாரம்' என்று காவியத்திற்குப் பெயர் கொடுத்தார். நூலைப் பாடி முகத்துச் சாத்தனாரிடம் அதனை வாசித்துக் காட்டினார்.
இரட்டைக் காவியங்கள்
சாத்தனார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய மணிமேகலை வரலாற்றைப் பாடினார். அதனைத் தம் நண்பரும் மாணவருமாகிய இளங்கோவடிகளிடம் வாசித்துக் காட்டினார். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலத்தில் தோன்றிய இரட்டைக் காவியங்கள் ஆகும். இவை இரண்டும் ஐம்பெருங்க காவியங்களைச் சேர்ந்தன ஆகும்.
இளங்கோவின் இனிய உள்ளம்
இளங்கோவடிகளின் தூய்மை வாய்ந்த உள்ளம் சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்கும். அவர் அக்காவியத்தின் இறுதியில் ’பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்' என்று தொடங்கிச் செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்' என்று முடிக்கும் செய்யுள் அவர் உள்ளத்தைத் தெள்ளிதில் காட்டும். நல்வினை செய்தவர் நன்மையே அடைவர். ஆதலால் நல்லறமே செய்து உய்யுமாறு உலக மக்களை அவர் வேண்டுகிறார்.
தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலன்
சேர நாட்டு இளங்கோவாக விளங்கிய முனிவர் இனிய செந்தமிழ்ப் புலவர் ஆவர். அவர் தமிழ்ப் பெருங்காவியம் ஆகிய சிலப்பதிகாரத்தை இயற்றித் தமிழ்த்தாய்க்குச் சிறந்த அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்தார்.
-----------------------
3. அறநூல் தந்த அருந்தவர்
திருக்குறளும் நாலடியாரும்
அருந்தமிழ் மொழியில் அறம் உரைக்கும் நூல்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் முதன்மை வாய்ந்தது திருக்குறள் என்னும் அறநூலே ஆகும். அது 'அறநூல்' என்றே அறிஞரால் போற்றப்படும். அதற்கு இணையாக வைத்து மதிக்கப்படும் மற்றொரு நூல் 'நாலடியார்’ என்னும் அறநூல் ஆகும். இவ் விரண்டு நூல்களின் பெருமையையும் அறிந்த அறிஞர்கள் இவற்றை ஒன்றாகவே சேர்த்துப் பாராட்டினர்.
இரு நூல்களின் பெருமை
தமிழ்ச் சொல்லின் அருமையைக் காண வேண்டுமாயின் திருக்குறளையும் நாலடியாரையும் கற்கவேண்டும் என்று கருதினார் ஒளவையார். ஆதலின்’ பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் பார்மின்' என்று பாடினார் அப் பெண்பாற் புலவர். நாலென்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இந்நூல்களின் சிறப்பை உணர்ந்த நம் முன்னோர், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று பழமொழியாக வழங்கிப் பாராட்டி னர். அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கும் உறுதிப் பொருள்கள் ஆகும். அவ்வறுதிப் பொருள்களைத் தெளிவாக விளக்கும் திறமுடைய நூல்கள் திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.
நூலின் பெயர்க் காரணம்
இவ்வாறு பாராட்டப்படும் அறநூல்களில் ஒன்றாகிய நாலடியார் நானூறு பாடல்களைக் கொண்டது. அதனால் 'நாலடி நானூறு' என்றும் அந்நூலுக்குப் பெயர் உண்டு. இதனை ’வேளாண் வேதம்' என்றும் ஓதுவர். வேளாளர்க்குரிய அறங்களைப் பெரிதும் விளக்கும் காரணத்தால் அப்பெயர் பெற்றது என்பர். தமிழில் உள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று வெண்பா ஆகும். அவ்வெண்பாவம் பலவகைப்படும். அவற்றுள் நாலடி கொண்ட வெண்பா ஒரு வகையாகும். அத்தகைய நாலடி வெண்பாக்களால் ஆகிய நாலே நாலடியார் ஆகும்.
பாண்டிய நாட்டில் சமண முனிவர்
இந்நூல் தோன்றியது குறித்து வரலாறு ஒன்று வழங்குகின்றது. பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பல நாடுகள் பஞ்சத்தால் வாடின. அந்நாளில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் தத்தம் நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டை அடைந்தனர். அந்நாட்டின் தலைநகரம் ஆகிய மதுரை மாநகரைச் சேர்ந்தனர். அந்நாளில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதி என்பவன் அவன் அம்முனிவர்களை எல்லாம் அன்புடன் வரவேற்றான். அவர்கட்கு உண்டியும் உறையுளும் உதவிக் காத்தான்.
மன்னன் வருத்தம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நாடுகள் செழிக்குமாறு நன்மழை பொழிந்தது. தத்தம் நாடு வளம் பெற்றதை முனிவர்கள் அறிந்தனர். தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்பிப் பாண்டியனிடம் விடை தருமாறு வேண்டினர். கவி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த அம்முனிவர்களைப் பிரிவதற்குப் பாண்டியன் பெரிதும் வருந்தினான். அனால் அவர்கட்கு விடை கொடாது காலம் கடத்தி வந்தான்.
முனிவர்கள் மறைதல்
மன்னன் எண்ணத்தைச் சமண முனிவர்கள் அறிந்தனர். எண்ணாயிரம் முனிவர்களும் தனித்தனியே அறம் உரைக்கும் வெண்பா ஒவ்வொன்று பாடி ஏட்டில் எழுதித் தாம் தங்கி யிருந்த இடத்தில் வைத்து விட்டு மறைந்து போயினர். எல்லோரும் தத்தம் நாடு நோக்கி நடந்தனர். பொழுது புலாந்ததும் முனிவர்கள் மதுரையை விட்டு நீங்கிய செய்தியை மன்னன் தெரிந்தான் அவர்கள் தனித்தனியே தங்கியிருந்த இடத்தைச் சென்று கண்டான். ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் ஏட்டைக் கண்டான். எண்ணாயிரம் முனிவர்களும் இருந்த இடத்தில் எண்ணாயிரம் ஏடுகளை கண்டு எடுத்தான். அவ்வேடுகள் ஒவ்வொன் றிலும் ஒவ்வொரு வெண்பா எழுதியிருப்பதைக் கண்டான்.
வெள்ளத்தில் ஏடுகளை வீசுதல்
பாண்டியன் அப்பாடல்களை உற்று நோக்கினான். அவைகள் ஒன்றற்கு ஒன்று தொடர்பு இல்லாதனவாக இருத்தலை அறிந்தான். ஆதலின் அவ்வேடுகளை எடுத்துச் சென்று வையை மாற்று வெள்ளத்தில் வீசுமாறு பணித்தான். அங்ஙனமே வேலையாட்கள் அவ் வேடுகளை அள்ளி வீசினர். அவ்வாறு வீசப்பெற்ற எண்ணாயிரம் ஏடுகளுள் நானூறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்து வந்து கரையேறின. அச்செய்தியை அறிந்த மன்னன் மிகவும் வியந்தான். கரை சேர்ந்த ஏடுகளைத் தொகுத்து நோக்கினான். அவை கருத்துத் தொடர்புடைய பாடல்களாகக் காணப்பட் டன. அவற்றைப் பதுமனார் என்னும் புலவரிடம் கொடுத்துத் தொகுத்தும் வகுத்தும் தருமாறு வேண்டினான்.
‘மன்னன் வழுதியர்கோன் வையைப்பே ராற்றின்கண்
எண்ணி இருநான் கோடாயிரவர் - உன்னி
எழுதியீடும் ஏட்டில் எதிரே நடந்த
பழுதிலா நாலடியைப் பார்.
இது நாலடியார் தோன்றியதை விளக்குகிறது.
நாலடி நூலின் அமைப்பு
இந்நாலடியாரும் திருக்குறளைப் போன்றே அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் பதின்மூன்று அதிகாரங்களை உடையது. பொருட்பால் இருபத்து நான்கு அதிகாரங்களைக் கொண்டது. இன்பத்துப்பால் மூன்று அதிகாரங்களைப் பெற்றது. அதிகாரம் ஒவ்வொன்றிலும் திருக்குறளைப் போன்றே பத்துப் பத்துப் பாடல்கள் உள்ளன. நாற்பது அதிகாரங்கள் கொண்ட நாலடியார் அறநூல் ஆகும். செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ் வல்ல சமண முனிவர்களால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்டுள்ளது அந்நூல்.
--------------
4. மந்திரம் தந்த மாமுனிவர்
பெரிய புராணத்தில் திருமூலர்
தமிழில் புராண நூல்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று பெரிய புராணம் எனப்படும். அது சிவனடியார்கள் ஆகிய பெரியவர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் பக்தி நூல் ஆகும். அதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். அந்நூலில் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வரலாறுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று திருமூல நாயனார் புராணம் ஆகும். அத்திருமூலரே மந்திரம் தந்த மாமுனிவர் ஆவார்.
தமிழ் மூவாயிரம்
சைவ சமயத்தில் தோத்திர நூல்களாகப் பன்னிரண்டு திருமுறைகள் உள்ளன. அவற்றுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரம். அந்நூல் மூவாயிரம் பாடல்களை உடையது . ஆதலின் அது 'தமிழ் மூவாயிரம்' என்றும் கூறப்படும். 'திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்' என்பதனால் அதன் பெருமை விளங்கும். இத் திருமந்திர நூலைப் பாடியவரே திருமூலர் என்னும் முனிவர் ஆவார்.
கயிலையில் குருகுலம்
சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் இடம் கயிலைத் திருமலை ஆகும். அங்கு நந்தியம் பெருமான் குருகுலம் ஒன்றை நடத்தினார். அக் குருகுலத்தில் பயிலும் மாணவர்க்கு இறைவன் திருவருள் பெறுவதற்குரிய ஞான நூல்கள் கற்பிக்கப்பட்டன. அதில் எட்டு மாணவர்கள் பயின்றனர். அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் , சிவ யோகமாமுனி , பதஞ்சலி, வியாக்கிரமர், சுந்தர நாதர் என்போர் ஆவர். இவ்வெட்டுப் பேர்களுள் ஒருவராகிய சுந்தரநாதரே பின் நாளில் திருமூலர் ஆயினார்.
சுந்தரநாதர் தென்னாட்டிற்கு வருதல்
சுந்தரர், கயிலைக் குருகுலத்தில் ஞான நூல்களைப் பயின்று தேர்ந்தார். அதன் பயனாக 'நாதன்' என்னும் பட்டத்தைப் பெற்றார். சுந்தர நாதர் என்று சிறப்பாகக் குறிக்கப்பட்டார். இவர் ஒரு முறை பொதிகை முனிவராகிய அகத்தியரைக் கண்டு அளவளாவப் புறப்பட்டார். வழியில் உள்ள திருக்கேதாரம் முதலிய தலங்களைத் தரிசித்து மகிழ்ந்தார். கங்கையில் நீராடிக் களித்தார். தென்னாடு நோக்கி நடந்து இடையில் உள்ள சிவத்தலங்களை எல்லாம் சேவித்தார். சோழ நாட்டுக் காவிரியாற்றில் நீராடித் திளைத்தார் .
காவிரிக் கரையில் கண்ட காட்சி
சுந்தரநாதர் சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையை அடைந்தார். அத்தலத்தின் மீது அவருக்கு அளவில்லாத காதல் எழுந்தது. எனினும் நண்பராகிய அகத்தியரைக்காணும் அவாவால் காவிரிக்கரையின் வழியே நடந்தார். அவர் செல்லும் வழியில் உள்ளத்தை உருக்கும் காட்சி ஒன்றைக் கண்டார். அக் காட்சி, அவரை மேலே செல்ல விடாமல் தடுத்து விட்டது.
மூலனைச் சூழ்ந்த பசுக்கள்
காவிரியாற்றின் கரையில் அந்தணர் வாழும் சாத்தனூர் என்னும் நகர் ஒன்று இருந்தது. அந்நகரில் மூலன் என்னும் இடையன் ஒருவன் வாழ்ந்தான். அவன் அவ்வூர்ப் பசுக்கூட்டத்தை மேய்ப்பவன். அவன் அப்பசுக்களை மிக்க அன்புடன் மேய்த்து வருவான். அன்று மேய்க்க வந்த இடத்தில் திடீரென்று உயிர் நீத்து விட்டான். இறந்துபோன அவனைச் சூழ்ந்து பசுக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு நின்றன. அதுதான் சுந்தரநாதரின் சிந்தையை உருக்கிய காட்சி ஆகும்.
சுந்தரநாதர் திருமூலராதல்
அன்பு நிறைந்த இடையனைப் பிரிந்த பசுக்கள் வருந்திக் கதறுவதைச் சுந்தரநாதர் கண்டார். அவைகளுக்கு அவனிடம் இருந்த அன்பைக் கண்டு மனம் கசிந்து உருகினார். அவன் உயிர் பெற்று எழுந்தால் அன்றி அப் பசுக்கள் இரையும் தீண்டா என்று தெரிந்தார். அருள் நெஞ்சம் கொண்ட முனிவர் அவைகட்குத் தொண்டு செய்யத் துணிந்தார். அவர் தவத்தில் சிறந்த யோகியார். ஆதலின் அவர் தம் உடம்பை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார். தமது உயிரை அம்மூலன் உடலில் புகுத்தினார். உறங்கி எழுந்தவரைப் போல எழுந்தார். சுந்தரநாதர் திருமூலர் ஆனார்.
துயரம் நீங்கிய பசுக்கள்
இடையன் மூலன் உயிர்பெற்று எழுந்தான் என்று பசுக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தன. திருமூலரின் உடலைத் தம் நாவால் நக்கின ; நெருங்கி நின்று அவர்மீது உராய்ந்தன ; கனைத்தன ; வாலை அசைத்துத் துள்ளிக்குதித்து ஓடின. அவற்றின் அளவற்ற மகிழ்ச்சியைக் கண்ட முனிவர் வியப்பும் திகைப்பும் கொண்டார். அவர் அப் பசுக்கள் மேயும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று அவற்றின் பின் நின்றார். நீரூட்டி நிழலில் அடையவிட்டார். மாலை வேளை யானதும் அவற்றின் பின்னே சென்றார். அவைகளை உடையவர் வீடுகளில் சேர்த்தார். பின்பு, தாம் ஓர் இடத்திலே இருந்தார்.
மூலன் மனைவியின் நினைவு
இடையன் மூலனுக்கு அன்புடைய மனைவி ஒருத்தி இருந்தாள். அவள் தன் கணவன் அடைந்த நிலையை அறியாள். பசுக்களின் பின் வந்த இவரே தம் கணவர் என்று கருதினாள். அவருக்கு உடல் ஒன்றே தவிர உயிரும் அறிவும் வேறுபட்டன. அந்த உண்மையைப் பேதைப் பெண் எவ்வாறு அறிவாள்? தன் கணவர் ஏதோ கவலையுடன் இருக்கிறார் என்று எண்ணினாள். அவர் பக்கம் சென்று, அவரைக் கையைப் பற்றி அழைக்க முற்பட்டாள்.
திருமூலர் திருமடத்தில் புகுதல்
திருமூலர் அவள் நிலையை அறிந்தார். பசுக்களின் துயரத்தைப் போக்க முயன்ற அம் முனிவர், அவளைத் தெளிவிக்க முடியாமல் திகைத்தார் அவள் கணவன் மெய்யுடன் இருக்கும் முனிவர் அவளது கருத்தை மாற்றும் வகை அறியாது வருந்தினார். எனினும் அவளுக்கும் தமக்கும் மாசை விளைவிக்க முனிவர் விரும்புவாரோ? ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டிற்கு வரமுடியாது என்று மட்டும் மறுத்து விட்டார். பின்பு அங்கு இருந்த திருமடம் ஒன்றில் புகுந்து யோகத்தில் அமர்ந்தார்.
உறவினர் கண்டு உண்மை உரைத்தல்
இடையன் மனைவியும் அம்மடத்தில் புகுந்தாள். அன்று இரவெல்லாம் உறக்கமின்றி உள்ளம் வருந்தி இருந்தாள். தன் கணவன், தன்னை ஏன் மறுத்தான் என்று கலங்கிக் கிடந்தாள். மறுநாள் பொழுது புலர்ந்தது. இடையன் மனைவி, தன் உறவினரை அடைந்து உற்ற செய்தியை உரைத்தாள். ஓவென்று கதறி ஓலமிட்டு அழுதாள். அவர்கள் அவளுடன் திருமூலர் இருந்த திரு மடத்தை அடைந்தனர். அவருடைய உயர்ந்த நிலையைத் தெரிந்து திகைத்தனர். அவளிடம், 'உன் கணவர் துறவியாகி விட்டார்; ஆதலின் அவரைத் திருப்ப முடியாது' என்று கூறிச் சென்று விட்டனர். அது கேட்ட இடைப் பெண், தன் கணவனுக்குப் பித்துப் பிடித்தது என்று எண்ணினாள் தானும் பித்துப் பிடித்த வளாய் வீட்டை அடைந்து வெதும்பி வாடினாள்.
திருமூலர் ஆவடுதுறையை அடைதல்
திருமூலர் மீண்டும் பசுக்கள் வந்த வழியே சென்றார். மறைவில் வைத்து வந்த தமது உடலைத் தேடினார். அதனைக் காணவில்லை. யோகத்தில் அமர்ந்து ஆராய்ந்தார். இதுவும் சிவபெருமான் திருவருள் என்று தெரிந்தார். இறைவன் அருளிய ஆகமப் பொருளைத் தமிழில் ஆக்குவதற்காக அப் பெருமான் அருளிய ஆணையெனத் தெளிந் தார். தம்மைத் தொடர்ந்து வந்த இடையர் களுக்குத் தாம் இன்னாரென விளக்கினார். அவர்களிடம் விடைபெற்றுத் திருவாவடு துறையை அடைந்தார்.
தமிழ் மூவாயிரத்தைத் தருதல்
அங்குள்ள திருக்கோயிலை அடைந்து சிவ பெருமான் திருவடியைப் பணிந்தார். அக் கோயில் திருமதிலுக்கு வெளியே மேற்குத் திசையில் விளங்கிய அரச மரத்தின் கீழே அமர்ந்தார். அன்று முதல் மூவாயிரம் ஆண்டு கள் அவ்விடத்திலேயே அருந்தவம் புரிந்தார். ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் ஒரு நாள் தவத்தினின்று நீங்குவார். அன்று தாம் ஆராய்ந்து கண்ட அரிய உண்மையை அரிய திருமந்திரப் பாடலாகப் பாடுவார். பக்கத்தில் அமர்ந்த அவர் மாணவர் நால்வர் அப்பாட்டின் நான்கு அடிகளையும் ஏட்டில் தவறாது எழுதிக் கொள்வர். அவ்வாறு தாம் தவம் கிடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் மூவாயிரம் மந்திரப் பாடல்களைத் தந்தருளினார். அவையே தமிழ் மூவாயிரம் என்று போற்றப் பெற்றன. அவற்றைப் பாடி முடித்த பின் திரும்பவும் திருக்கயிலையை அடைந்தார்.
மந்திர நூலைச் சம்பந்தர் வெளிப்படுத்தல்
இத்திருமூலர் பாடிய திருமந்திரம் ’திரு மந்திரமாலை' என்றும் போற்றப்படும். இந் நூலை எழுதிய ஏடு, திருவாவடு துறைக் கோயிலுள்ளே பலிபீடத்தின் அருகில் புதைந்து கிடந்தது. திருஞான சம்பந்தர் அக் கோயிலுக்கு வந்தபோது பலிபீடத்தின் பக்கமாக வணங்கி எழுந்தார்.திருவருளால் அவருக்கு ஓர் உணர்வு தோன்றிற்று. உடனே, ’இங்குத் தமிழ் மணம் கமழ்கிறது; தோண்டிப் பாருங்கள்' என்றார். அவ்வாறே தோண்டின பொழுது திருமந்திர நூல் கிடைத்தது என்று அறிஞர் கூறுவர்.
வேதத்தைத் தமிழில் விளக்கியவர்
தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர நூலைப் பாடினார் திருமூலர். அவர் உடலால் திருமூலராயினும் உயிராலும் ஞானத்தாலும் சுந்தரநாதர் என்னும் செந்தமிழ் முனிவர் ஆவர் அவர் நந்தியின் அருளைப்பெற்ற 'நாதர்' என்ற சிறப்புக்கு உரியவர். அவர் வடமொழி வேத உண்மைகளைத் தமிழில் விளக்கிய தவமுனிவர் அல்லரோ?
---------------------
5. முருகன் அருள்பெற்ற முனிவர்
தமிழ்க்கடவுள் முருகன்
தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாகப் போற்றி வழிபடும் தமிழ்க்கடவுள் முருகன் ஆவான். அப்பெருமானைக் குறிஞ்சி நிலமாகிய மலைநாட்டுத் தெய்வமாக மக்கள் போற்றுவர். அதனால் அப்பெருமானைக் ’குறிஞ்சிக் கிழவன்' என்றே கொண்டாடுவர். முருகப்பெருமான் சிறப்பாக ஆறு தலங்களில் அமாந்து அருள் செய்கின்றான். அவை ’ஆறு படைவீடுகள்' என்று கூறப்படும்.
ஆறுபடை வீடுகளில் ஒன்று செந்தூர்
பகைவரை அழிக்கும் வலிமை வாய்ந்த படைகள் தங்கும் இடத்தைப் படை வீடு என்றும், பாடி வீடு என்றும் கூறுவர். முருகப் பெருமான் ஆகிய வேல்வீரன், தன் படைகளுடன் அப் பாடி வீடுகளில் தங்கினான் என்பர். தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிப்பதற்காக அப்பெரு மான் வேற்படையுடன் புறப்பட்டான். அவன் தங்கிய ஆறுபடை வீடுகளுள் முதன்மை வாய்ந்தது திருச்செந்தூர். அது கடற்கறையில் அமைந்துள்ளது.
பொருகையின் கரையில் வைகுண்டம்
தென்பாண்டி நாட்டில் உள்ள முருகப் பெருமான் உறையும் தலங்களில் தலைமை வாய்ந்தது திருச்செந்தூர். அத் திருச்செந்தூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் அமைந்த ஊர் சீவைகுண்டம். அது தண்பொருநையாற்றின் தடங்கரையில் அமைந்த ஒரு தலமாகும். அந்நகரின் வடபகுதி கயிலாசம் என்றும், தென்பகுதி வைகுந்தம் என்றும் வழங்கப்படும். சீவைகுண்ட நகரின் கயிலாசப் பகுதியில் வேளாளர் குல மக்கள் வாழ்கின்றனர்.
கவிராயருக்கு ஊமைப் பிள்ளை
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சீவை குண்ட நகரின் கயிலாசப் பகுதியில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்னும் சைவ வேளாளர் ஒருவர் வாழ்ந்தார். அவர் சிவகாம சுந்தரி என்னும் மங்கை நல்லாரை மணந்து மனையறத்தை இனிது நடத்தி வந்தார். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாகப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. அதனால் அவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை வேண்டித் தவங்கிடந்தனர். அவர்கள் செய்த அருந் தவத்தின் பயனாக ஆண்பிள்ளை ஒன்று பிறந்தது. முருகனைப் போன்று அழகு வாய்ந்த அக் குழந்தை ஐந்து ஆண்டுகள் கழிந்தும் வாய் பேசாமல் இருந்தது. அதனைக் கண்ட பெற்றோர் பெரிதும் வருந்தினர்.
பெற்றோர் உறுதியும் பெருமான் அருளும்
மீண்டும் அவர்கள் திருச்செந்தூரையே அடைந்தனர். முருகப்பெருமான் திருமுன்பு அக்குழந்தையைக் கிடத்தி நாற்பது நாள் பட்டினி இருந்தனர். ’குறிப்பிட்ட நாளில் குழந்தை பேசவில்லையானால் குழந்தையுடன் கடலில் விழுந்து மடிவோம்' என்று உறுதி கொண்டனர். அப்பெற்றோரின் உறுதியைச் செந்தில் முருகன் உணர்ந்தான். அவர்கட்கு அருள்புரிந்தான். நாற்பத்தோராம் நாள் காலையில் பொழுது விடிவதற்கு முன் அக் குழந்தையை முருகப்பெருமானே எழுப்பினான். ’குமரகுருபரா!' என்று பெயர் சூட்டி அழைத் தான். 'நம்மைத் தரிசிக்க வருக!' என்று அருள் புரிந்தான். 'உன் வாக்கிற்குத் தடை ஏற்படும் பொழுது, அதற்குக் காரணமாக இருந்தவனையே நீ ஞானாசிரியனாகக் கொள்க!' என்று கூறியருளி மறைந்தான்.
முருகன் மீது பாடிய கலிவெண்பா முதல் நூல்
முருகன் அருள் பெற்ற குழந்தை, தன் பெற்றோரைத் தட்டி எழுப்பியது. 'கடலாடிக்
முருகன் அருள் பெற்ற முனிவர் கந்தனைத் தரிசிப்போம்' என்று கூறியது 'விசுவரூப தரிசனத்திற்கு விரைந்து செல்வோம்!' என்று விருப்புடன் உரைத்தது. குழந்தையின் பேச்சைக் கேட்ட பெற்றோர் பேருவகை அடைந்தனர். குழந்தையுடன் சென்று கடலில் நீராடினர். கோவிலுள்ளே சென்று முருகப்பெருமானைத் தரிசித்து, அவன் திருவருளை வியந்து போற்றினர். அப்பொழுதே குழந்தையாகிய குமரகுருபரர் முருகன் மீது பாமாலை தொடுக்கத் தொடங்கினார். ’கந்தர் கலிவெண்பா ' என்னும் செந் தமிழ்ச் சிறு நூலைப் பாடி முருகனை வழிபட்டார். பின் பெற்றோருடன் குமரகுரு பரர் தம் ஊரை அடைந்து சிலகாலம் உறைந்தார்.
குருபரரின் தலயாத்திரை
முருகன் அருள்பெற்ற குமரகுருபரர் தம் ஐந்தாண்டுப் பருவத்திலிருந்தே துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தமது ஊரை அடைந்த அவர் அங்குள்ள கயிலை நாதரை நாள்தோறும் சென்று வழிபட்டார். அப் பெருமான் மீது ’கயிலைக் கலம்பகம்' என்னும் சிறு நூல் ஒன்றைப் பாடினார். சில ஆண்டுகள் கழிந்த பின் குமரகுருபரர் தம் பெற்றோரிடம் விடை பெற்றுத் தலயாத்திரை செய்யப் புறப்பட்டார். திருநெல்வேலி, திருக்குற்றாலம், திருச்சுழியல், திருக்கானப்பேர் முதலிய தென்னாட்டுத் தலங்களைத் தரிசித்தார். திருப்பரங் குன்றத்தில் சில நாள் தங்கினார். அந்நாளில் மதுரை மாநகரில் எழுந்தருளிய அங்கயற்கண் அம்மை மீது பிள்ளைத் தமிழ் நூல் ஒன்றைப் பாடினார்.
அங்கயற்கண்ணியின் அருள்
அப்போது மதுரைமா நகரில் திருமலை நாயக்கர் என்னும் மன்னர் அரசு வீற்றிருந்தார். அங்கயற்கண்ணி , அம்மன்னர் கனவில் தோன்றியருளினாள். 'திருப்பரங்குன்றத்தில் குமரகுருபரன் என்னும் புலவன் தங்கியுள்ளான்; அவன் முருகன் அருள்பெற்ற முனிவன்' ஆவான்; அவன் என் மீது பிள்ளைத் தமிழ் நூல் ஒன்று பாடியுள்ளான்; அதனை நான் கேட்க விரும்புகிறேன்’ என்று கூறி மறைந்தாள்.
அரசன் முனிவரை வரவேற்றல்
உடனே திருமலை நாயக்கர் படுக்கை விட்டு எழுந்தார். அமைச்சர் முதலானோரைக் கூவி அழைத்தார். பல்லக்குடன் சென்று திருப்பரங்குன்றத்தில் தங்கியிருக்கும் குமரகுருபரரை அழைத்து வருமாறு ஆணையிட்டார். தாமும் பரிவாரத்துடன் முனிவரை எதிர் கொண்டு அழைக்கப் புறப்பட்டார். அவரை அன்புடன் வரவேற்றுப் பிள்ளைத் தமிழ் நாலை மீனாட்சியம்மையின் திருமுன்பு அரங்கேற்று மாறு வேண்டினார். குமரகுருபரர் அம்மையின் திருவருளை நினைந்து மகிழ்ந்தார்; நூலை அரங்கேற்றுவதற்கு இசைந்தார்.
பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்
பிள்ளைத்தமிழ் நூல் நாறு பாட்டுக்களை உடையது. பத்துப் பருவங்களை உடையது. பருவம் ஒவ்வொன்றும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டது ஆகும். காப்பு, செங் கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி , அம்மானை, நீராடல், ஊசல் என்னும் பத்துப் பருவங்களை உடையது. மீனாட்சி யம்மையின் திருமுன்பு பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாகக் குமர குருபரர் விளக்கம் செய்து கொண்டு வந்தார்.
குழந்தை வடிவில் மீனாட்சி
வருகைப் பருவத்தில் ’தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே !' என்று தொடங்கும் பாடல் ஒன்று உள்ளது. அதனைக் குமரகுருபரர் உள்ளம் குழையுமாறு பாடி விளக்கம் செய்யத் தொடங்கினார். அப்பாட் டைக் கேட்ட மீனாட்சியம்மை, கோவில் அர்ச்சகரின் குழந்தை வடிவத்தில் ஓடோடி வந்தாள். திருமலை நாயக்கர் ஆகிய அரசர் மடியில் அமர்ந்து அப் பாடலை அகமகிழ்வுடன் கேட்டருளினாள்.
குருபரருக்கு அம்மையின் பரிசு
குமரகுருபரர் அப் பாடலை விளக்கம் செய்து முடித்தார். உடனே மன்னரின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தைக் கழற்றினாள். முனிவர் கழுத்தில் அணிவித்து மறைந்தாள். அக்காட்சியை அவையினர் அனைவரும் கண்டு வியந்தனர். மீனாட்சியம்மையே அர்ச்சகரின் மகள் வடிவில் வந்தாள் என்று அறிந்து வியந்தனர். முனிவராகிய குமரகுருபரரின் திருவருள் திறத்தைப் பாராட்டினர்.
அரசன் பரிசுகள்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் இனிது முடிந்தது. திருமலை நாயக்க மன்னர் குமரகுருபரரைத் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். பொன்னால் செய்த ஆசனம் ஒன்றில் அமரச் செய்தார். அவர் திருமேனியைப் பொன்னாலும் மணியாலும் முழுக்காட்டினார். அவர் திருவடியில் வீரக் கழலை அணிவித்தார். யானை, குதிரை, பல்லக்கு, குடை, கொடி முதலிய விருதுகளை விருப்புடன் அளித்தார். அவரைத் தம்முடன் சில நாட்கள் தங்குமாறு பணிந்து வேண்டிக்கொண்டார்.
நீதிநூல் ஓதுதல்
மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சில நாட்கள் மதுரையில் தங்கினார். அங்குத் தங்கியிருக்கும் நாளில் அங்கயற்கண்அம்மை மீது மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை முதலிய நூல்களையும் பாடினார். மன்னரின் விருப்பப்படி 'நீதிநெறி விளக்கம்' என்னும் அரிய நீதிநூல் ஒன்றையும் பாடிக் கொடுத்தார் இந்நூலுக்குப் பரிசாக அரியநாயகிபுரம் என்னும் ஊரையே மன்னர் மனம் உவந்து வழங்கினார். அவ்வூர் ஆண்டு ஒன்றுக்கு இருபதினாயிரம் பொன் வருவாய் உடையது.
திருச்சிராப்பள்ளியில் குருபரர்
இத்தகைய பெரும் பரிசைப் பெற்ற முனிவர் மதுரையில் எழுந்தருளும் சோம சுந்தரப்பெருமான் மீதும் நூல் பாடவேண்டும் என்று விரும்பினார். அதனால் 'மதுரைக் கலம்பகம்' என்ற நூலைப் பாடினார். பின்பு திருச்சிராப்பள்ளியை அடைந்தார். அங்கிருந்த நாயக்க மன்னராலும் போற்றப்பெற் றார். திருவரங்கத்தில் வாழ்ந்த வைணவப் புலவராகிய பிள்ளைப் பெருமாள் அய்யங்காரைக் கண்டு உரையாடனார். இருவரும் நாயக்க மன்னரைச் சந்தித்தனர். மன்னர், அவர்களிடம், ''அரசாங்க நாணயத்தில் எவ்வடை யாளம் பொறிக்கலாம்" என்று கேட்டார். அதற்கு ’ஐயங்கார் கருடன்' என்றார். முனிவர் ’விடை' என்றார். மேலும் அவர், 'கருடன் வட்டமிட்டுப் பறந்து சென்று விடும்; விடையோ முட்ட முட்டச் செல்லும் வேகம் உடையது' என்று நயம்படக் கூறினார். அது கேட்ட மன்னர் காசுகளில் விடையையே பொறிக்குமாறு கட்டளையிட்டார்.
தருமையில் குமரகுருபரர்
பின்பு குமரகுருபரர் தருமபுர ஆதீனத்தை அடைந்தார். அப்போது ஆதீனத் தலைவராக மாசிலாமணி தேசிகர் என்பவர் விளங்கினார். அவரை வணங்கி அண்மையில் அமர்ந்தார். அவர். குமரகுருபரரை நோக்கி, 'ஐந்து பேரறிவு' என்று தொடங்கும் பெரிய புராணத் திருப்பாட்டின் அனுபவப் பொருள் யாது?’ என்று வினவினார். அப்போது முனிவர்க்குத் திகைப்புத் தோன்றியது. உடனே திருச்செந்தூரில் முருகன் அருளிச்செய்தது அவர் நினைவுக்கு வந்தது அப்போதே தேசிகர் திரு வடியில் விழுந்து வணங்கினார். அடியேனை ஆட்கொண்டு உண்மையறிவைத் தந்தருளும் என்று வேண்டினார்.
முத்துக்குமரன் காட்சி
குமரகுருபரரின் நிலையை அறிந்த தேசிகர் சிதம்பரம் சென்று திரும்புமாறு பணித்தார். அவ்வாறே புறப்பட்ட குமரகுருபரர் தருமை யாதீன முதல் தலைவரின் தலமாகிய திருவாரூரைத் தரிசிக்க விரும்பினார். அத்தலத்தை அடைந்து தியாகேசரைப் பணிந்தார். அங்குத் ’திருவாரூர் நான்மணி மாலை' என்னும் நூலைப் பாடி அரங்கேற்றினார். பின்பு புள்ளி ருக்கும் வேளுரை அடைந்தார். அவ்வூர்க் திருமடத்தில் அவர் தங்கி இரவில் துயில் கொண்டார் அப்போது அங்கு எழுந்தருளிய முருகனாகிய முத்துக்குமரன் முனிவானவில் தோன்றினான், ’நீ இங்கு என்னைப் பாடாது போவதற்குக் காரணம் என்னை?’ என்று வினவித் திருநீறு அளித்து மறைந்தான்.
தில்லைக்குச் செல்லுதல்
உறக்கம் நீங்கி எழுந்த குமரகுருபரர் முருகன்திருவருளை வியந்தார். ’முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்' என்னும் பத்திச் சுவை மலிந்த சிறு நூலைப் பாடித் திருமுன்பு அரங்கேற்றினார். பின்பு, தில்லை என்னும் சிதம்பரத்தலத்தை அடைந்தார். அங்குப் பொன்னம் பலக் கூத்தன் திருக்கூத்தைத் தரிசித்து மகிழ்ந்தார். 'சிதம்பர மும்மணிக் கோவை' என்னும் பாமணி மாலையைப் பாடிக் கூத்தப் பெருமானுக்குச் சாத்தினார். அங்கிருந்த புலவருட் சிலர் ’முனிவர் யாப்பிலக்கணம் அறிவாரோ?' என்று ஐயம் கொண்டனர். அவ்வையத்தை நீக்க நினைத்த முனிவர் ’சிதம்பரச் செய்யுட் கோவை' என்னும் நூலைப் பாடினர். அங்கு எழுந்தருளியுள்ள சிவகாமியம்மையின் மீது 'சிவகாமியம்மை இரட்டை மணிமாலை' என்னும் நூலையும் பாடினர்.
தேசிகரின் ஆணையும் காசியை அடைதலும்
ஞானதேசிகரின் ஆணைப்படி தில்லையைத் தரிசித்த முனிவர் மீண்டும் தருமபுரம் அடைந்தார். அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்புவித்தார். அவர் மீது ’பண்டார மும்மணிக்கோவை' என்ற பைந்தமிழ் நூலைப் பாடினார். குமரகுருபரர் தாம் பெற்ற பொருளையெல்லாம் தேசிகர் திருவடியில் வைத்து வணங்கினார். அதனைத் தேசிகர் முனிவரின் கையிலேயே திரும்பக் கொடுத்தார். காசிக்குச் சென்று பல அறங்களையும் செய்யுமாறு பணித்தார். தேசிகரின் கட்டளைப்படி பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு காசி மாநகரை அடைந்தார்.
கலைமகளின் கருணைக் காட்சி
காசியில் பல அறங்களையும் புரிவதற்குத் தக்க இடம் ஒன்றைத் தேடினார். அந்நகர் மன்னனைக் கண்டு, அவனிடம் அதனைப் பெற எண்ணினார். அவன் முகலாய மன்னன் ஆதலின் அவனோடு உரையாடுதற்கு இந்துத் தானி மொழியை அறிய விரும்பினார். அன்று இரவே கலைமகள் திருவருளைப் பெறுவதற்காக, அவள் மீது 'சகலகலாவல்லி மாலை' என்னும் சின்னூலைப் பாடினார். முனிவரின் கனிந்த பாடலைக் கேட்ட கலைமகள் காட்சி
அளித்தாள். அவருக்கு இந்துத்தானி மொழியை அறிவுறுத்தினாள்.
காசியில் திருமடம் அமைத்தல்
முகலாய மன்னனுடன் உரையாடும் திறத்தைப் பெற்ற முனிவர், அவன் அரசவையை அடைந்தார். உயிருள்ள சிங்கத்தின் மீது அமர்ந்து அவன் அவையினை அடைந்தார். முனிவர் வரவைக் கண்டான் முகலாய மன்னன். அவர் இந்துத்தானி மொழியில் உரையாடும் திறத்தை உணர்ந்தான். முனிவர் வேண்டிய இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டான். அவ்வாணையைப் பெற்ற குமரகுருபரர் காசியில் திருமடம் ஒன்றை அமைத்தார். அதில் தங்கி அறங்கள் பலவற்றைச் செய்தார். கங்கைக்கரையில் அமைந்த திருக்கேதாரநாதர் திருக்கோவிலைச் செப்பனிட்டார். தென்னாட்டுப் பூசனை முறைகளே அங்கு நடைபெறுமாறு செய்தார்.
காசியில் முனிவர் பணி
குமரகுருபர முனிவர் காசியில் அமைத்த திருமடம் ’குமாரசாமி மடம்' என்று கூறப்படும். அதில் பல்லாண்டுகள் தங்கி இந்துத் தானி மொழியில் சொற்பொழிவு புரிந்தார். வடநாட்டு மக்களுக்குக் கம்ப ராமாயணத்தின் சிறப்பினை அறிவுறுத்தினார். முனிவரின் உரையைத் துளசிதாசர் என்னும் வடநாட்டுப் புலவர் ஒருவர் நாள்தோறும் கேட்டு உவந்தார். அதனை இந்துத்தானி மொழியில் இராமாயணமாகப் பாடினார். அதுவே இன்று ’துளசிதாசர் இராமாயணம்' என்று வழங்குகிறது. இவ்வாறு தமிழையும் சைவத்தையும் வளர்த்த முனிவர் காசி மாநகரிலேயே இறைவன் திருவடி அடைந்தார்.
-----------
6. தமிழ் அகராதியின் தந்தையார்
தமிழில் முதல் அகராதி
தமிழின் முதல் எழுத்து அகரம் ஆகும். ’அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது வள்ளுவர் வாக்கு. தமிழில் உள்ள சொற்களை அகர முதலாக வரிசைப்படுத்தித் தொகுத்த நூலே ’அகராதி' எனப்படும். தமிழில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிவதற்கு முற்காலத்தில் நிகண்டு' என்னும் ஒரு வகை நூல்களே உதவி வந்தன. செய்யுட்களாலான அவையெல்லாம் குறைந்த அறிவுடையார்க்குப் பயன்படவில்லை. இந்தக் குறையைப் போக்க எழுந்ததே அகராதி என்னும் நூலாகும். அத்தகைய ’சதுரகராதி’ என்னும் நூலைத் தமிழில் முதன் முதல் தொகுத்து உதவியவர் வீரமாமுனிவர் ஆவர். அவரையே அறிஞர்கள் ’தமிழ் அகராதியின் தந்தை' என்று போற்றி வருகின் றனர்.
ஊரும் பேரும்
வீரமாமுனிவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். அங்குள்ள மாந்துவா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காஸ்திரியோனே என்னும் சிற்றூரில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் தந்தையார் 'கண்டோல் போ பெஷி' என்பவர். இவர் தம் மகனுக்குக் ’கொன்ஸ்டான்ஸ் ஜோசப்’ என்று பெயர் சூட்டினர். ’கொன்ஸ்டான்ஸ்’ என்னும் சொல்லுக்குத் தைரியம் என்பது பொருள் ஆகும். ஆதலின் வீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது, தம் பெயரைத் ’தைரிய நாத சுவாமி' என்று அமைத்துக் கொண்டார். அவருடைய தமிழ்ப்புலமையைக் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அவரை ’வீரமா முனிவர்' என அழைத்தனர்.
முனிவரின் தமிழ்ப் புலமை
தமிழ் நாட்டில் இயேசு மத உண்மைகளைப் பரப்புவதற்காக அயல்நாட்டு அறிஞர்கள் பலர் வந்தனர். அவர்களில் முதன்மையானவர் வீரமாமுனிவர். அந்நாளில் சிறந்த தமிழாசிரியராக விளங்கியவர் சுப்பிரதீபக் கவிராயர். அவரிடம் வீரமாமுனிவர் முறையாகத் தமிழ் நூல்களை ஓதி உணர்ந்தார். திருக்குறள், சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நூல்கள் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. சிந்தாமணியைப் போன்று கிறித்து மதச் சார்புடைய ஒரு காவியம் செய்ய விரும்பினார். அதன் பயனாகத் ’தேம்பாவணி' என்னும் காவியத்தைப் பாடி முடித்தார்.
தேம்பாவணி நூலின் திறம்
இந்நூல் இயேசுவின் காவல் தந்தையாகிய சூசையப்பரின் வரலாற்றைச் சொல்லுவதாகும். இதில் விவிலிய வேதத்தின் உண்மைகள் விளக்கப்படுகின்றன, சுத்தலிக்கத் திருச்சபையின் கொள்கைகள் கூறப்படு கின்றன. வழிபாட்டு முறைகளும் அறிவுரைகளும் கதை வடிவாகக் கூறப்படுகின்றன. இது சிந்தாமணியின் நடையை ஒட்டிய செந்தமிழ்க் காவியம் ஆகும். இந்நூலில் திருவள்ளுவர், சேக்கிழார், மாணிக்கவாசகர், கம்பர் முதலான புலவர்களின் சொல்லும் பொருளும் இடம் பெற்றுள்ளன. மேல் நாட்டுப் பெரும் புலவர்களின் கருத்துக்களையும் இந்நூலில் புகுத்தியுள்ளார். ஹோமர், வர்ஜில், தாந்தே, தாசோ போன்றவர் கருத்துக்களைத் தேம்பா வணியில் காணலாம். ஆதலின் தேம்பாவணி , கிறித்தவர்க்குக் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது.
தமிழ்ச் சங்கத்தார் தந்த பட்டம்
வீரமாமுனிவர் விரைவாகக் கவிதைகளைச் சொல்லுவார். நான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து, ஒவ்வொரு வரியை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவர். ஐந்தாவது மாணவன் நான்கு அடிகளையும் சேர்த்து எழுதிப் பாட்டு வடிவத்தில் காட்டுவான். இவ்வாறு எழுதப் பெற்றதே தேம்பாவணிக் காவியம். இந்நூலை வீரமாமுனிவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அங்கு வீற்றிருந்த சங்கப் புலவர்கள் நாலின் நயத்தைப் பாராட்டினர். அப்போது 'வீரமாமுனிவர்' என்னும் பட்டத்தைச் சூட்டினர் என்பர்.
திருக்காவலூரில் தேவமாதா
கொள்ளிட நதியின் வடகரையில் ஏலாக் குறச்சி என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூரில் தேவ மாதாவாகிய மரியம்மைக்குச் சிறந்த கோயில் ஒன்றை முனிவர் கட்டினார். அக்கோயிலில் மரியம்மையின் திருவுருவத்தை அமைத்தார். அடியாரைக் காத்து அருள் புரியும் அம்மாதாவை ’அடைக்கலமாதா’ என்று அழைத்தார். அம்மாதாவின் காவலில் அமைந்த இடத்திற்குத் ’திருக்காவலூர்’ என்று பெயரிட்டார். அத்தலத்தின் பெருமையை அன்பர்கள் அறிய வேண்டும் என்று விரும்பினார். அதனால் 'திருக்காவலூர்க் கலம்பகம் என்னும் நூலைப் பாடினார். அதனை அடைக்கல மாதாவின் பாதங்களில் அணிந்து மகிழ்ந்து வழிபாட்டிற்கும் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார்.
இலத்தீன் மொழியில் திருக்குறள்
தமிழ் நூல்களில் தலைசிறந்து விளங்குவது திருக்குறள் ஆகும். அந்நூலை மேலை நாட்டினர்க்கு முதன் முதல் காட்டியவர் வீரமாமுனிவரே. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாக விளங்குவது. முதல் இரு பகுதிகளாகிய அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் முனிவர் மொழி பெயர்த்தார். அந்நூலே மற்ற ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்ப்பதற்கு வழிகாட்டியாக உதவியது.
முனிவர் உரைநடை நூல்
வீரமாமுனிவர் தமிழ் வசன நடையை வளர்க்க விரும்பினார். கிறித்துமத போதகம் செய்யும் குருமார்களுக்கு அவர் ஓர் உரைநடை நூலை வரைந்தார். அதற்கு 'வேதியர் ஒழுக்கம்' என்று பெயரிட்டார். அந்நூலே முனிவர் இயற்றிய உரைநடை நூல்களில் மிகவும் உயர்ந்தது.
சமயவாதமும் தமிழ் உரைநடையும்
சமய சம்பந்தமாக வாக்கு வாதம் புரிவதிலும் எழுத்து வாதம் நிகழ்த்துவதிலும் முனிவர் தனிவல்லமை யுடையவர். தரங்கம்பாடியில் தேனிய சங்கத்தைச் சார்ந்த கிறித்தவர்கள் இருந்தனர். அச்சங்கத்தார்க்கும் வீரமாமுனிவர்க்கும் சமயவாதம் நடந்தது. அச்சங்கத்தாரின் கொள்கைகளை மறுத்து, முனிவர் ஒரு நூல் எழுதினார். அதற்கு ’வேத விளக்கம்' என்று பெயர். தேனிய சங்கத்தாரும் வேதவிளக்கத்தை மறுத்துத் ’திருச்சபை போதகம்' என்னும் சிறு நூல் ஒன்றை வெளியிட்டனர். அதனையும் முனிவர் மறுத்துப் ’பேதகம் அறுத்தல்' என்னும் கட்டுரை ஒன்று எழுதினார். இவ்வாறு வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் வளர்ந்து வந்தது.
சமயவாதத்தில் வெற்றி
இவ்வாறு வீரமாமுனிவர் பல வாக்கு வாதங்களைச் செய்தார். ஒரு சமயம் முனிவரை வாதில் வெல்லக் கருதி ஒன்பது சடைப் பண்டாரங்கள் வந்தனர். அவர்கள் திருக்காவலூரை அடைந்து ஒரு மாத காலம் தங்கி, முனிவருடன் வாதம் புரிந்தனர். இறுதியில் தோல்வியுற்ற அப்பண்டாரங்களில் அறுவர் இயேசு மதத்தை ஏற்றுக்கொண்டனர். மற்ற மூவரும் தம் சடையை அறுத்தெறிந்து விட்டுப் போயினர் என்பர்.
முனிவர் இயற்றிய இலக்கணம்
வீரமாமுனிவர் தமிழ் இலக்கணத்தை நன்றாக ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் நன்னூல் இறுதியாக உள்ள இலக்கண நூல்களை எல்லாம் இனிது கற்றார். ’தொன்னூல் விளக்கம்’ என்னும் பெயரால் தமிழ் இலக்கணம் ஒன்றைச் செய்தார். அது பெரும்பாலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை ஒத்துள்ளது. நன்னூலில் எழுத்திற்கும் சொல்லிற்குமே இலக்கணம் கூறப்படும். வீரமாமுனிவர் இயற்றிய தொன்னூலிலோ எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன.
காவலூரில் கல்லூரிப் பணி
ஏட்டுத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை வீரமாமுனிவர் உணர்ந்தார். அவ்விரு தமிழுக்கும் உரிய இலக்கணத்தைத் தனித்தனியே இலத்தீன் மொழியில் எழுதினார். அந்நூல் இரண்டும் இந்நாளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இருவகை இலக்கணத்தையும் கிறித்தவ மத வேதியர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முனிவர் விரும்பினார். திருக்காவலூரில் அவ்வேதியர்க்காகக் கல்லூரி ஒன்றை அமைத்தார். அதில் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணத்தைக் கற்பித்தார். இவருடைய உரைநடை நூல்களில் ஒன்று 'பரமார்த்த குருகதை'. அது மிகவும் நகைச்சுவை நிரம்பியது. பஞ்ச தந்திர நூலைப் போன்று பல நீதிகளை விளக்குவது ஆகும்.
முனிவரின் பணியும் தமிழ்த்தாயின் அணியும்
இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர், தம் அறுபதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் அம்பலக் காட்டில் உள்ள கிறித்தவ மடத்தில் தங்கியிருந்த பொழுது அவரது உயிர் பிரிந்தது. அவர் பாடிய தேம்பாவணி, தமிழ்த்தாயின் கழுத்தில் வாடாத மாலையாக விளங்குகிறது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சி தருகிறது. தொன்னூல் விளக்கம் பொன் னூலாகப் பொலிகிறது. அகராதி முத்தாரமாக அழகு செய்கிறது. வீரமாமுனிவர் தமிழ் வளர்த்த முனிவர்களுள் ஒருவராக விளங்கு கிறார்.
-----------------
7. தமிழ் வளர்த்த தம்பிரான்
களத்தூர்ப் பெருமை
’தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று தமிழ் மூதாட்டியார் பாராட்டினார். அத்தகைய தொண்டை நாட் டில் தென்களத்தூர் என்னும் திருப்பதி ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் அவ்வூரைச் சூழ்ந்த நிலங்களில் நெற்கதிர் பொற்கதிர் போல் பொலிந்தது. அதனால் அவ்வூரைப் ’பொன் விளைந்த களத்தூர்' என்று புலவர்கள் போற்றினர்.
தமிழ்ப் புலமை பெறுவதில் விருப்பம்
இத்தகைய களத்தூரில் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ப் புலவர் ஒருவர் தோன்றினார். அவர் செங்குந்தர் மரபைச் சேர்ந்தவர். அவர் உள்ளூரில் பள்ளிக் கல்வியைக் கற்று முடித்தார். பின், புலமைக் கல்வி கற்றுப் புலவராக எண்ணினார். அந் நாளில் திருவாரூரில் வைத்தியநாத நாவலர் என்பார் பெரும்புலவராக விளங்கினார். அவர் இலக்கிய இலக்கணங்களில் வல்லவராக இருந் தார். அவரே இலக்கண விளக்கம்' என்னும் சிறந்த நூலைச் செய்தவர்.
நாவலரின் நன்மாணவர் ஆதல்
நாவலரின் நற்றமிழ்ப் புலமையைப் பற்றிக் கேள்விப்பட்டார் களத்தூர்ப் புலவர். அவரிடம் சென்று தமிழ்ப் புலமை பெற வேண்டும் என்று விரும்பினார். திருவாரூரை அடைந்து நாவலரைக் கண்டு வணங்கினார். தமது விருப்பினை நாவலரிடம் பணிவாகத் தெரிவித்தார். அவரும் களத்தூர் இளைஞரை மாணவராக ஏற்றுக்கொண்டார். முறையாக இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்தார். நுண்ணிய அறிவும் திண்ணிய மனமும் படைத்த இளைஞர் மிக விரைவில் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். செய்யுள் இயற்றும் சிறந்த புலவரும் ஆனார்.
புலவரின் இல்லற வாழ்க்கை
சிறந்த புலமை பெற்ற இளைஞர் , ஆசிரியரிடம் விடைபெற்றுத் தமது ஊரை அடைந் தார். திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். அவர் மனைவி முதல் மகனைப் பெற்றெடுத்தாள். அப் பிள்ளைக்குப் போதுமான தாய்ப்பால் இல்லை. புலவரிடம் பாற்பசு வாங்குவதற்கும் பணம் இல்லை. வறுமையால் புலவர் மிகவும் வாடினார். வள்ளல் எவரிடமேனும் சென்று இரப்பது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது வல்ல மாநகர் என்னும் ஊரில் காளத்தி பூபதி என்னும் வள்ளல் ஒருவர் வாழ்ந்தார். அவர் புலவர்களின் வறுமைப் பிணி போக்கும் மருத்துவராக விளங்கினார். இதனை அறிந் தார் களத்தூர்ப் புலவர். ஒரு நாள் வல்லமா நகருக்குச் சென்று வள்ளலைக் கண்டார். தமது வேண்டுகோளைப் பாடல் ஒன்றால் பணிவுடன் தெரிவித்தார்.
'பெற்றாள் ஒருபிள்ளை என்மனை
யாட்டி, அப் பிள்ளைக்குப்பால்
பற்றாது; கஞ்சி குடிக்குந்
தரமன்று : பாலிரக்கச்
சிற்றாளும் இல்லை; இவ் வெல்லா
வருத்தமுந் தீர ஒரு
கற்றா தரவல்லை யோ? வல்ல
மாநகர்க் காளத்தியே!'
என்னும் பாடலை அவ்வள்ளலிடம் பாடிக் கொடுத்தார்.
வள்ளலின் கொடைத்தன்மை
காளத்திபூபதி, புலவரின் பாட்டைக் கேட்டார். 'கற்றாதர வல்லையோ' என்ற தொடரின் நயத்தை அறிந்தார். கன்றுடன் கூடிய பசுவைக் ’கற்றா' என்பர். 'பால் தரும் பசு ஒன்றைத் தரமாட்டாயோ?' என்பது ஒரு பொருள். 'நீ கல்வியின் பெருமையை அறிந்தவன் அல்லவா? ஆதலால் கற்றவர்க்கு ஆதரவாக இருப்பவன் அல்லனோ?' என்பது மற்றொரு பொருள். இவ்வாறு நயம்படப் பாடிய நாவலரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றினார். நன்றாகப் பால் கறந்து கொண்டிருந்த பசு ஒன்றையும் பெரும் பொருளையும் புலவர்க்குப் பரிசாக வழங்கினார். பரிசைப் பெற்ற புலவர் அவ்வள்ளலின் கொடை உள்ளத்தைப் பாராட்டிப் பாடினார்.
தில்லையில் அம்மை திருவருள்
களத்தூர்ப் புலவர் ஒரு சமயம் தில்லையை அடைந்தார். அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். நாள்தோறும் திருக்கோயிலுக்குச் சென்று பொன்னம்பலக் கூத்தனை வழிபட்டு வருவார். அவரை அங்கும் வறுமை வாட்டியது. அதனால் ஒருநாள் கூத்தப் பெருமானை வணங்கிக் கொண்டிருக்கும் போது, சிவகாமி அம்மையை நோக்கிப் பாடல் ஒன்றைப் பாடினார்.
'தாயே! திருச்செந்தூர் முருகனுக்கு வேல் கொடுத்தாய் நின் கணவனாகிய சிவபெருமானுக்குத் திருமண நாளில் அம்மியின் மேல் வைப்பதற்குக் கால் கொடுத்தாய் கவுணியர் குலத்தில் உதித்த சம்பந்தருக்குப் பால் கொடுத்தாய். மன்மதனுக்குத் தேவர் மூவரும் அஞ்சுமாறு செங்கோலாகிய கரும்பு வில்லைக் கொடுத்தாய். எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே' என்னும் பொருள் கொண்ட பாடலைப் பாடிச் சிவகாமியம்மையை வேண்டினார்.
புலவர் படிக்காசு பெறுதல்
உடனே, சிவகாமியம்மையின் திருவருளால் அப்பொன்னம்பலத்தின் பஞ்சாக்கரப் படியில் ஐந்து பொற்காசுகள் காணப் பெற்றன. புலவர்க்கு ’அம்மையின் பொற் கொடை' என்ற ஒலி , எல்லோரும் கேட்குமாறு எழுந்தது. அது கேட்டுப் புலவர் அக மகிழ்வு கொண்டார். தில்லைவாழ் அந்தணர் அப் பொற்காசுகளைப் பொன் தட்டில் வைத்துக் கோயில் சிறப்புடன் புலவரிடம் வழங்கினர். அன்று முதல் தான் களத்தூர்ப் புலவர் ’படிக்காசுப் புலவர்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். அவர் மேலும் பல நாள் அவ்வாறே படிக்காசு பெற்றுத் தில்லையில் சில காலம் தங்கி இருந்தார்.
கருப்ப முதலியார் செய்த சிறப்பு
தொண்டை மண்டலத்தில் மாவண்டூர் என்ற ஊர் ஒன்று உண்டு. அவ்வூரில் கறுப்ப முதலியார் என்னும் செல்வர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். அவர் தொண்டை மண்டலத்தின் பெருமைகளை எல்லாம் தொகுத்து, ஒரு நூல் பாட வேண்டும் என்று படிக்காசுப் புலவரை வேண்டினார். புலவரும் அதற்கு இசைந்து 'தொண்டை மண்டல சதகம்' என்ற நூலைப் பாடி, அவர் முன்பு அரங்கேற்றினார். அச்சதக நூலைக் கேட்டு மகிழ்ந்த கறுப்ப முலியார் புலவருக்குப் பெரும் பொருளைப் பரிசாக வழங்கினார். புலவரைப் பல்லக்கில் ஏற்றி நகர்வலம் செய்வித்தார். அப் பல்லக்கைத் தாமும் தாங்கிப் புலவரைப் பெருமைப் படுத்தினார்.
சேது மன்னர் சிறப்புச் செய்தல்
பின்பு படிக்காசுப் புலவர் இராமநாத புரத்தை அடைந்தார். அந்நாளில் சேது மன்னராகத் திகழ்ந்தவர் இரகுநாத சேதுபதி என்பார். அவர் தமிழ் அறிவிலும் தமிழ் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கினார். அவரைப் படிக்காசர் சென்று கண்டார்.
"தமிழ் நாட்டு மூவேந்தர்களும் அழிந்தார்கள். தமிழ் வளர்த்த மூன்று சங்கமும் அழிந்தன. முதல் இடை கடை வள்ளல்கள் ஆகிய இருபத்தொரு மன்னர்களும் மறைந்தனர். அதனால் புலவர்கள் வறுமையால் காற்றில் பஞ்சாகப் பறக்கின்றனர். இத்தகைய கொடிய நாளில் சேது மன்னர் கற்பகத்தரு வாய்ப் புலவர்க்குக் காட்சி தருகிறார்? என்னும் பொருள் கொண்ட பாடல் ஒன்றைப் பாடிச் சேது வேந்தரைப் படிக்காசர் பாராட்டினார். படிக்காசரின் புலமையைக் கண்டு மகிழ்ந்தார் சேதுபதி. அவரைப் பல நாள் தம் அரண்மனையிலேயே தம்முடன் தங்குமாறு செய்து பரிசுகள் பல வழங்கினார்.
சீதக்காதி வள்ளலைப் போற்றுதல்
சில நாள் இராமநாதபுரத்தில் தங்கியிருந்த படிக்காசர் சேதுபதியிடம் விடை பெற்றுக் காயற்பட்டினத்தை அடைந்தார். அவ்வூரில் சீதக்காதி என்னும் முகம்மதிய வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் தமிழை நன்கு உணர்ந்தவர். தமிழ்ப் புலவர்களைப் போற்றும் தண்ணருள் நிறைந்தவர். புலவர் அவ்வள்ளலைச் சென்று கண்டார். அந்நாளில் இராமநாதபுரப் பகுதியில் உள்ளவர்களைக் கொடிய பஞ்சம் வாட்டியது. பல ஆண்டுகளாக மழை பெய்யாமையால் மக்கள் பெரிதும் வருந்தினர். அதனால் பொன்னிற்கு ஒப்பாக நெல்லை மதித்தனர். அத்தகைய பஞ்ச காலத்தில் வள்ளல் சீதக்காதி நெஞ்சு உவந்து, வந்தவர்க்கெல்லாம் அன்னதானம் வழங்கினார். அவரது கொடைத் திறத்தைக் கண்ட படிக்காசர் பெரிதும் வியந்தார். அவரது உயர்ந்த பண்பைப் பாராட்டிப் பாடினார்.
"ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டியபஞ்ச காலத்தி லே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டி னுந்தட்டு வாராம லே அன்ன தானத்திற்கு
மார்தட்டியதுரை மால் சீதக் காதி வரோதயனே.''
வள்ளல் மறைவும் புலவர் துயரும்
இப்பாட்டைக் கேட்ட வள்ளல், படிக்காசரைத் தம்முடன் பல நாள் தங்குமாறு செய்தார். பரிசுகள் பலவற்றைக் கொடுத்துப் பாராட்டினார். புலவர் அவ் வள்ளலிடம் விடைபெற்றுப் பல தலங்களுக்கும் சென்று தரிசித்தார். திருச்செந்தூரை அடைந்து அறுமுகப்பெருமானைத் துதித்துப் பாடினார். மீண்டும் சீதக்காதி வள்ளலைக் காணவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எழுந்தது. பல நாள் வழி நடந்து காயற்பட்டினத்தை அடைந்தார். வள்ளல் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்தார். அவர் அடைந்த துயருக்கு அளவில்லை. அவ் வள்ளலின் சமாதியைச் சென்று கண்டார். அவ்விடத்தை அடைந் ததும் புலவர் தம்மை அறியாது புலம்பி அழுதார். அவரது லப்பம் அழகிய பாட்டாக வெளிவந்தது.
"தேட்டாவன் காயல் துரைசீதக் காதி சிறந்தவச்ர
நாட்டான் புகழ்க்கம்பம் நாட்டிவைத் தான் தமிழ் நாவலரை
ஓட்டாண்டி யாக்கி அவர்கள் தம் வாயில் ஒரு பிடி மண்
போட்டான் அவனும் ஒளித்தான் சமாதிக் குழி புகுந்தே .''
சீதக்காதி வள்ளல் புகழாகிய தூணை நாட்டி மறைந்தான். தமிழ்ப் புலவரை எல்லாம் ஓட்டாண்டி ஆக்கிவிட்டான். அவர்கள் வாயில் மண்ணைப் போட்டுச் சமாதிக்குழியுள் மறைந்தான்' என்று புலவர் புலம்பிக் கதறினார்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
படிக்காசர் இப்பாடலைப் பாடியதும் அச் சமாதிக்குழியின் ஒரு பக்கம் வெடித்தது. அவ் வெடிப்பின் வழியே வள்ளலின் வைர மோதிரம் அணிந்த கை வெளியே வந்தது. 'மோதிரத்தை எடுத்துக் கொள்க!' என்ற ஒலி எழுந்தது. அதைக் கண்டு புலவர் வியப்பும் திகைப்பும் அடைந்தார். வள்ளலின் ஆணைப்படி மோதிரத்தைக் கழற்றிக் கொண்டார். 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று வாயாரப் புகழ்ந்து போற்றினார்.
தருமை ஆதீனத் தம்பிரான்
பின்பு படிக்காசர் இல்லற வாழ்வைத் துறந்து துறவியாக எண்ணினார். தருமபுரத்தில் இருந்த சைவத் திருமடத்தை அடைந்தார். அத்திருமடத் தலைவரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரிடம் ஞானோபதேசம் பெற்றுக் காவியாடை அணிந்தார். அன்று முதல் தமிழ் வளர்க்கும் 'தவமுனிவர்' ஆனார். 'படிக்காசுத் தம்பிரான்' என அவர் பெயர் மாறியது. தருமை ஆதீனத் தலைவர், படிக்காசுத் தம்பிரானைத் திருப்புள்ளிருக்கு வேளூர்க் கட்டளைத் தம்பிரானாகப் பணி புரியுமாறு கட்டளையிட்டார்.
கலம்பக அரங்கேற்றம்
புள்ளிருக்கு வேளூரை அடைந்த புலவர் ஆகிய தம்பிரான் திருக்கோயில் பணிகளைச் செவ்வையாக நடத்தி வந்தார். அவ்வூர் மக்கள் அத்தலத்தில் எழுந்தருளும் மருந்தீசராகிய வைத்திசுரப் பெருமான் மீது நூல் ஏதும் பாடியருள வேண்டும் என்று தம்பிரானை வேண்டினர். அவ் வேண்டுகோளின்படி 'புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்' என்னும் நூலைப் பாடிப் பெருமான் திருமுன்பு அரங்கேற்றினார்.
தில்லையில் படிக்காசர் மறைவு
இவ்வாறு இறைபணியும் இனிய தமிழ்ப் பணியும் புரிந்து வந்த தம்பிரான் இடையிடையே தில்லைக்குச் செல்லுவார். தில்லைக் கூத்தனையும் சிவகாமியம்மையையும் தரிசித்துத் திரும்புவார். பல்லாண்டுகள் கட்டளைத் தம்பிரானாகப் பணிபுரிந்த படிக்காசர் இறுதியில் தில்லையிலேயே சென்று தங்கினார். அங்கு இருக்கும் போது தில்லைக்கூத்தன் திருவடியை அடைந்தார்.
தம்பிரான் தமிழ்ப் புலமை மாண்பு
படிக்காசர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். அதனைப் பிற்காலப் புலவர் அறிந்து போற்றினர். 'பண்பாகப் பகர் சந்தம் படிக்காசலால் ஒருவர் பகரொணாதே' என்பது அவர் கவித்திறத்தை விளக்கும். சொக்கநாதப் புலவர், இவர் பாட்டின் சிறப்பை இனிது விளக்குகிறார். ’படிக்காசர் பாட்டை எழுதிய ஏட்டைப் பட்டுத்துணியில் சுற்றி வைத்தாலும் அதன் மணம் மூன்று உலகங்களிலும் கமழும். அந்த ஏட்டைத் தொட்ட கைகளும் மணம் கமழும். பாட்டைச்சொன்னால் வாய்மணக்கும். சேற்றில் கொண்டு நட்டாலும் அவ்வேடு தமிழ்ப் பயிராய் விளையும்' என்று அவர் பாராட்டினார்.
---------------
8. தவஞானச் செல்வர் சிவஞான முனிவர்
பொதிகைச் சாரலில் புண்ணியத்தலம்
தென்பாண்டி நாட்டில் திகழ்வது பொதிகை மலை ஆகும். அது திங்கள் முடி சூடும் மலை, தென்றல் விளையாடும் மலை, தங்கு முகில் குழும் மலை, தமிழ் முனிவன் வாழும் மலை, பொங்கருவி தூங்கும் மலை என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது. சந்தன மரங்கள் நிறைந்த அம்மலையினைச் 'சந்தனப் பொதிகை' என்றும் செந்தமிழ்ப் புலவர் போற்றுவர். அம்மலையிலிருந்துதான் தண்பொருநையாறு தவழ்ந்து வருகிறது. மலை அடிவாரத்தில் அவ்வாற்றின் கரையில் அமைந்த சிவத்தலம் பாவநாசம் ஆகும்.
சிவஞான முனிவரின் பெற்றோர்
பாவநாசத்தின் கிழக்கே அமைந்த சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் வேளாளர் குல மக்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் ஆனந்தக் கூத்தர் என்னும் தமிழறிஞர் ஒருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவர் மயிலம்மை என்னும் மங்கை நல்லாரை மணம் புரிந்து இல்லறத்தை இனிது நடத்தினர். இவர்கள் இருவரும் நடத்திய இல்லறத்தின் பயனாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அகத்தியர் அருள்பெற்ற குடும்பம்
பாவநாசத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் முக்களாலிங்கர் என்பது ஆகும். மூன்று களாமரங்களின் நிழலில் இறைவன் இலிங்க வடிவில் தோன்றினார். அதனால் முக்களாலிங்கர் என்று மக்களால் போற்றப்பெற்றார். ஆனந்தக்கூத்தர் , தமக்குப் பிறந்த ஆண்பிள்ளைக்கு அப்பெருமான் பெயராகிய முக்களாலிங்கர் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ஆனந்தக்கூத்தரின் குடும்பம் பொதிகை முனிவராகிய அகத்தியரின் அருளையும் வரத்தையும் பெற்றது. அத்தகைய சிறப்பினைப் பெற்ற குடும்பத்தில் ஏழாவது தலை முறையில் பிறந்த பிள்ளையே முக்களாவிங்கர் ஆவார்.
பிள்ளையின் தூய உள்ளம்
முக்களாலிங்கர் தமது ஐந்தாண்டுப் பருவத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துறவிகள் சிலர் பாவநாசத் துறையில் நீராடுவதற்குச் சென்றனர். அவர்கள் திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த துறவிகள் ஆவர். அவர்களை முக்களாலிங்கர் கண்டார்; பணிவுடன் வணங்கினார் ; தம் வீட்டிற்கு வருமாறு அன்புடன் அழைத்தார். பிள்ளையின் அன்புள்ளத்தைக் கண்ட அப் பெரியார்கள் அவருடன் வீட்டிற்குச் சென்றனர். துறவிகளை அழைத்துவரும் பிள்ளையின் தூய உள்ளத்தைக் கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர்.
உவகையால் வந்த கவிதை
முக்களாலிங்கரின் விருப்பப்படியே அவருடைய தாயார் துறவிகளை உபசரித்தார். அறுசுவை உண்டியை உண்டு களித்த துறவிகள் ஆசனங்களில் அமர்ந்தனர். இந் நிகழ்ச்சிகளைக் கண்டதும் முக்களாலிங்கருக்கு மிக்க உவகை பொங்கியது. அந்த உவகையினை முக்களாலிங்கர் பாடல் ஒன்றால் வெளிப் படுத்தினார்.
''அருந்ததியென்னம்மை அடியவர்கட் கென்றும்
திருந்த அமுதளிக்கும் செல்வி - பொருந்தவே
ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செயும்
மானம் தவாத மயில்"
என்னும் இனிய பாடலைப் பாடித் தம் அன்னை யாருக்கு நன்றி செலுத்தினார்.
முத்தமிழ் வளர்க்கும் முனிவன்
இவ்வாறு முக்களாலிங்கர் தமது ஐந்தாண்டுப் பருவத்திலேயே அரிய தமிழ்ப் பாடலைப் பாடினார். கருவிலேயே திருவுடைய பிள்ளையின் தெய்வப் புலமையைக் கண்டு அத் துறவிகள் வியந்தனர். அவர் திருமுகத்தில் விளங்கிய சிவஞானப் பொலிவைக் கண்டு போற்றினர். முக்களாலிங்கன் முத்தமிழ் வளர்க்கும் முனிவன் ஆவான் என்று மனம் கனிந்து வாழ்த்தினர். அவ்வாழ்த்தைக் கேட்ட பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கோ அளவில்லை.
பிள்ளை, துறவிகளுடன் செல்லுதல்
முன்னை நல்வினைப் பயனால் முக்களாலிங்கருக்கு அம்முனிவர்களுடன் செல்லவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அவர்களுடன் சென்று மெய்ஞ்ஞான நூல்களைக் கற்கவேண்டும் என்ற கருத்து உதித்தது. முக்களாலிங்கர் தம் விருப்பத்தைப் பெற்றோர்க்கு அறிவித்தார். சிறுபிள்ளையாகிய அவரைப் பிரிவதற்குப் பெற்றோர் பெரிதும் வருந்தினர். பின்னர் ஒருவாறு துணிந்து பிள்ளையை அத் துறவிகளுடன் அனுப்பினர்.
வேலப்ப தேசிகரைப் பணிதல்
ஆதீனத் தம்பிரான்கள் முக்களாலிங்கரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சுசீந்தரத்தை அடைந்தனர். அவ்வூரில் உள்ள ஆதீனத் திருமடத்தில் வேலப்ப தேசிகர் என்பார் சின்னப்பட்டமாக வீற்றிருந்தார். அவர் சிறந்த செந்தமிழ்ப் புலமை நிறைந்தவர். தம்பிரான்கள் முக்களாலிங்கருடன் சென்று அவரைக் கண்டு வணங்கினர். தேசிகர் அத் தம்பிரான்களிடம் 'உடன் வந்திருக்கும் சிறு பிள்ளை யார்?' என்று வினவினார். அவர்கள் நிகழ்ந்ததைத் தெரிவித்தனர். தேசிகர், முக்களாலிங்கரின் பக்குவ நிலையைக் கண்டு பாராட்டினார். அவருக்குக் காவியுடை அளித்துக் காட்டுமாறு செய்தார். மெய்ஞ்ஞான நூல்களைக் கற்பித்தார். அன்று முதல் 'சிவஞானத் தம்பிரான்' என்ற திருப்பெயருடன் மு.களாலிங்கர் திகழ்ந்தார். அப்பெயரே பிற்காலத்தில் ’சிவஞான முனிவர்’ என்று வழங்கத் தொடங்கியது.
முனிவர் இருமொழி கற்றல்
சிவஞான முனிவர், வேலப்ப தேசிகரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவாகக் கற்றுத் தெரிந்தார். தமிழில் உள்ள சமய நூல்களையும் கற்றுத் தெளிந்தார். வடமொழியையும் கற்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அம்மொழியில் உள்ள சிவாகம நூல்களைக் கற்க விரும்பினார். தக்க வடமொழி வாணர்களிடம் பயின்று அம்மொழியிலும் வல்லவர் ஆனார். அதனால் அவரை 'வடநூற் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்தவர்' என்று போற்றினர்.
இராசவல்லிபுரத்தில் முனிவர்
வேலப்ப தேசிகர், ஆதீனத் தலைவரைக் காண விரும்பினார். சிவஞான முனிவரையும்
தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். செல்லும் வழியில் உள்ள சிவத்தலங்களில் இறைவனை வழிபட்டார். தண்பொருநைக் கரையில் அமைந்த செப்பறைப் பதியை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தரையும் வழிபட்டார். பின்னர் அண்மையில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரை அடைந்தனர். அத்தலத்தில் விளங்கும் அகிலாண்டநாயகி மீது, வேலப்ப தேசிகரின் விருப்பப்படி பதிகம் ஒன்று பாடினார். அதனைத் தேசிகர் முன்பு அரங்கேற்றினார். பின்பு இருவரும் கொங்குநாட்டுப் பேரூரை அடைந்தனர். அங்கு இருக்கும்போது வேலப்ப தேசிகர் இறைவன் திருவடி அடைந்தார்.
தலங்கள் பல தரிசித்தல்
பின்பு, சிவஞான முனிவர் தம்முடன் வந்த துறவிகள் சிலருடன் திருவாவடு துறையை அடைந்தார். அங்குப் பட்டத்தில் இருந்த வேலப்ப தேசிகரைக் கண்டு வணங்கினார். அவரிடம் சின்னப்பட்டம் வேலப்ப தேசிகர் மறைந்த செய்தியைத் தெரிவித்தார். அங்கேயே தங்கியிருந்து பல நூல்களை இயற்றினார். சிவத் தலங்கள் பலவற்றிற்கும் சென்று இறைவனை வழிபட விரும்பி ஆதீனத் தலைவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு தம் மாணவர் பலருடன் பல தலங்களுக்கும் சென்று தரிசித்தார்.
புலியூரில் புலவர் அவை
ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தை அடைந் தார். அங்குள்ள திருக்கோயில் மண்டபத்தில் புலவர் பேரவை ஒன்று கூடியிருந்தது. அந்த அவையில் புகுந்த செல்வர் ஒருவர் நூறு பொன் கொண்ட முடிப்பு ஒன்றைப் புலவர்கள் முன்னே வைத்தார். 'கரையேற விட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண்டாமோ?' என்ற அடியைக் கடைசி அடியாகக் கொண்டு பாடல் ஒன்றைப் பாடுமாறு வேண்டினார். அதனைப் பாடித் தருவார்க்கு அப்பொன் முடிப்பு உரியதாகும் என்று அறிவித்தார்.
அந்தணன் பரிசுபெறுமாறு அருளுதல்
அவையில் இருந்த புலவர்கள் அன்று முழுவதும் முயன்றனர். எவரும் அச் செல்வர் உவக்குமாறு பாடலைப் பாடித் தரவில்லை. அவ்வூரில் ஓர் ஏழை அந்தணன் இருந்தான். அவன் சிவஞான முனிவரை அடைந்து பணிந்தான். அத்தகைய பாட்டைத் தனக்குப் பாடித் தருமாறு வேண்டினான். அந்தணன் வறுமையைக் கண்டு முனிவர் மனங் கசிந்தார். அழகிய பாட்டைப் பாடி அவன் கையில் கொடுத்தார். அந்தணனும் அந்தப் பாடலை அவையோரிடம் கொண்டு சென்று படித்துக் காட்டினான். செல்வரும் அப் பாட்டைக் கேட்டு அகமகிழ்ந்தார். அந்தணன் பொன் முடிப்பைப் பெற்று வறுமை நீங்கப்பெற்றான்.
மாபாடிய நூலை ஆக்கி உதவல்
இச் செய்தியை அறிந்த சிவஞான முனிவர் மகிழ்ந்தார். திருப்பாதிரிப்புலியூரை விட்டுப் புறப்பட்டுக் காஞ்சிமாநகரை அடைந்தார். சைவ சமயத்தின் சிறந்த தத்துவ நூல் ’சிவஞானபோதம்’ எனப்படும். அது மெய்கண்டார் என்னும் அருளாசிரியரால் இயற்றப் பட்டது. அந்நூலுக்குச் சிறந்த உரை ஒன்று வரையவேண்டும் என்று நீண்டகாலமாக முனிவர் நினைத்திருந்தார். காஞ்சியில் இருக்கும் போது அவ்வெண்ணததை நிறைவேற்றிக் கொண்டார். அதுவே 'சிவஞான போதமா பாடியம்' என்று சைவர்கள் போற்றும் அரிய நூலாகும். இந்நூலை எழுதியதனால் அவரை 'மாபாடியகர்த்தா' என்று மக்கள் போற்றத் தொடங்கினர்.
-
சோமேசர் முதுமொழி வெண்பா
சிவஞான முனிவர் தாம் சென்று வணங்கிய தலங்கள் பல. அவ்வத் தலங்களில் தங்கி இருக்கும் போது அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் மீது சிறுசிறு நூல்களைப் பாடுவார். அவ்வாறு அவர் பாடிய நூல்கள் பல ஆகும். அவர் குளத்தூரில் தங்கியிருந்த பொழுது ’சோமேசர் முதுமொழி வெண்பா’ என்ற நூலைப் பாடினார். அந்நூல் திருக்குறள் ஆரிய முதுமொழியின் பொருளை வரலாற்றால் விளக்கும் ஓர் அரிய நூல் ஆகும். திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்திலிருந்தும் ஒவ்வொரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்தார். அங்ஙனம் தொகுத்த நூற்று முப்பத்து மூன்று திருக்குறளையும் தனித் தனி வரலாற்றுடனமைத்து நூற்று முப்பத்து மூன்று வெண்பாக்களை இயற்றி விளக்கும் திறம் வியப்பைத் தரும்.
காஞ்சிப் புராண அரங்கேற்றம்
சைவ சமய உண்மைகள் பலவற்றையும் தெளிவாக விளக்கும் திறம் உடையது காஞ்சிப் புராணம். அஃது அரிய கற்பனை நயங்கள் நிறைந்தது. அப் புராணத்தின் முதற் காண்டத்தை முனிவர் பாடி முடித்தார். அதனை அந்நகரில் கூடிய பேரவை ஒன்றில் அரங்கேற்றினார். காஞ்சிப் புராணத்தில் முதலில் கூத்தப் பெருமானுக்கே வணக்கம் கூறப்பெற்றுள்ளது. அதனைக் கேட்ட புலவர் சிலர் மறுத்தனர். முதலில் இத் தலத்திற்கு உரிய ஏகம்பநாதருக்கு வணக்கம் கூறாமல் தில்லைப் பெருமானுக்கு வணக்கம் சொல்லி யமைக்குக் காரணம் என்ன?' என்று கேட்டனர்.
தடை கூறியவர்க்கு விடை
சிவஞான முனிவர் தடை கூறியவர்களுக்குத் தக்கவாறு விடைகூற விரும்பினார். காஞ்சியின் ஓதுவார் சிலரை அழைத்துவரச் செய்தார். அப் பதிக்கு உரிய தேவாரத்தை ஓதுமாறு வேண்டினார். அவர்களும் பாடத் தொடங்கினர். முதலில் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லித் தேவாரத்தைப் பாடத் தொடங்கினர். சிவஞான முனிவரின் உள்ளக் குறிப்பை அங்கு இருந்த அவரது மாணவராகிய கச்சியப்பத் தம்பிரான் கண்டுகொண்டார். அவ் வோதுவார்களை மேலே பாடாத வாறு நிறுத்தினார். "இவர்கள் இத் தலத்திற்கு ஏற்றவாறு 'பிருதிவியம்பலம்' என்று ஏன் கூறவில்லை? திருச்சிற்றம்பலம்' என்று கூறுகிறார்களே. இவர்கள் செயல் உங்களுக்கு உடன்பாடுதானா!" என்று தடை கூறியவர்களை நோக்கி வினவினார். அவர்கள் விடை கூற வகையறியாது விழித்தனர். மெல்ல அந்த அவையினை விட்டும் வெளியேறினர். புராண அரங்கேற்றமும் இனிது முடிந்தது. அப் புராணத்தின் பிற்பகுதியை முனிவரின் முதல் மாணவராகிய கச்சியப்பத் தம்பிரான் பாடி முடித்தார்.
சிவஞான முனிவரின் மறைவு
இவ்வாறு தமிழ் நாடெங்கும் சிவஞான முனிவர் தமிழ்மணமும் சிவமணமும் கமழச் செய்தார். இறுதியில் திருவாவடுதுறைக்கு எழுந்தருளினார். அங்குத் தங்கித் துறவிகளாகிய மாணவர் பலருக்குத் தமிழ் நூல்களையும் சமய நூல்களையும் கற்பித்து வந்தார். கி. பி. 1785 இல் சித்திரைத் திங்கள் ஆயில்ய நாளில் சிவனடி அடைந்தார்.
---------------
9. தமிழ் மாணவர் போப்பையர்
சாயர்புரத்தில் கல்லூரி
திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு அது கிறித்தவ நாடார்கள் நிறைந்த சிற்றூர் ஆகும். அவ்வூருக்குச் சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து போப்பையர் கிறித்தவமத போதகராக வந்தார். அவ்வூரில் உள்ள சிறுவர்களின் அறிவைப் பெருக்கு வதற்குக் கல்லூரி ஒன்றை அமைத்தார். அங்குச் சிறந்த ஆசிரியர்களையே வேலையில் அமர்த்தினார்.
கல்லூரியில் கல்விநிலை
அக்கல்லூரியில் பல கலைகள் கற்பிக்கப் பட்டன. தமிழ், இலத்தீன், கிரீக்கு , ஈபுரு போன்ற பல மொழிகளும் கற்பிக்கப் பெற்றன. கணிதம், தருக்கம், தத்துவம் போன்ற கலைகளும் கற்றுக் கொடுத்தனர். இவற்றைக் கற்றுக்கொடுப்பதற்குப் பகற் பொழுதும் காணவில்லை. ஆகலின் இரவிலும் நெடுநேரம் கல்லூரி நடைபெற்றது. சாயர் புரக் கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டும் என்று போப்பையர் விரும்பினார்.
சமயப்பணியும் தமிழ்ப்பணியும்
இளமையிலே துறவு பூண்ட போப்பையர் தமது பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டிற்கு வந்தார். தக்க நல்லறிஞர்களிடம் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். நெல்லை நாட்டுச் சாயர்புரத்தில் தங்கிச் சமயப்பணி புரிந்து வந்தார். அறுபது ஆண்டுகள் வரை அவர் அங்கேயே தங்கிக் கிறித்தவப் பணியாற்றினார். பின்பு தம் தாய்நாட்டிற்குச் சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக அமர்ந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் ஆசிரியராக விளங்கினார். அப் பதவியில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டு செய்தார். தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார்.
தமிழில் நீதி நூல்கள்
தமிழ்மொழிக்குப் போப்பையர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த சிறந்த நூல்களை அவர் ஆராய்ந்து கற்றார். தமிழில் உள்ள நீதி நூல்களைக் கண்டு வியந்தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் 'அறஞ்செய விரும்பு , ஆறுவது சினம்' என்று பாடம் ஓதுகின்றார்கள். அறிவு வளர வளர மூதுரை, நல்வழி, நன்னெறி, நாலடியார் போன்ற நூல்களை ஓதுகின்றனர். இங்ஙனம் படிப்படியாக நீதிநூல்கள் தோன்றி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்நீதிநூல்களில் திருக்குறளும் நாலடியாரும் சிறந்தன என்பதைத் தெரிந்தார். இவ்விரண்டு நீதி நூல்களையும் ஓதி உணர்ந்தார். அவற்றில் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்து அறிந்தார். அவ்விரண்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டார். அவ்வாறே மொழி பெயர்த்து உலகிற்கு உதவினார்.
திருக்குறள் மொழிபெயர்ப்புக்கள்
இவர் காலத்திற்கு முன்பே திருக்குறள் சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டிருந்தது. வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட் பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்திருந்தார். செர்மானிய மொழியில் கிரால் என்பவர் நூல் முழுவதையும் மொழிபெயர்த்திருந்தார். ஏரியல் என்பார் பிரஞ்சு மொழியில் திருக்குறளின் ஒரு பாகத்தை மொழி பெயர்த்திருந்தார். ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாகவே ஆக்கியிருந்தனர். எல்லீசர் என்பார் பதின்மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்திருந்தார். துருவர் என்னும் பாதிரியார் அறுபத்து மூன்று அதிகாரங்களை மொழிபெயர்த்திருந்தார். எனவே ஆங்கிலத்தில் திருக்குறள் நூல் முழுவடிவில் மொழி பெயர்க்கப்படவில்லை. இந்நிலையில் இருந்த திருக்குறளைப் போப்பையர் நன்கு ஆராய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்நூலை முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த பெருமை போப்பையருக்கே உரிய தாகும்.
வள்ளுவர் உள்ளமும் இயேசுவின் இதயமும்
போப்பையர் திருக்குறளை மொழி பெயர்க்கும் பொழுது, இயேசுவின் இனிய கருத்துக்களும் வள்ளுவர் கருத்துக்களும் சில இடங்களின் ஒத்து வருவது கண்டு உவந்தார். தீயவர் பலர் இயேசுநாதரைத் துன்புறுத்தினர். அவரைக் கழியால் அடித்தும் காறி உமிழ்ந்தும் இகழ்ந்தனர். இவ்வாறு அவரைத் துன்புறுத்திய அற்பர்கள் ஒரு நாளை இன்பத்தையே பெற்றார்கள். ஆனால் அத்துன்பத்தை எல்லாம் பொறுத்திருந்த இயேசுநாதரோ உலகம் உள்ளளவும் அழியாத உயர்புகழைப் பெற்றார். இக்கருத்தைத் திருக்குறளில் போப்பையர் கண்டு உள்ளம் பூரித்தார்.
''ஒறுத்தார்க் கொருநாளை இன்பம்; பொறுத் தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"
என்ற குறள் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
இன்னா செய்தவர்க்கும் நன்னயம் செய்தல்
’தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும்' என்பார் திருவள்ளுவர்.
'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
என்பது அப்புலவர் பெருந்தகையின் வாக்கு. இயேசுநாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்து இரக்கம் சிறிதுமின்றி வருத்தினர். அப்பொழுது இயேசுநாதர் பேசிய வாசகத் தின் பொருளும் திருவள்ளுவரின் குறளும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு வியந்தார் போப்பையர். பகைவர்கள் இயேசுவின் கையிலும் காலிலும் இருப்பாணி அறைந்து பொறுக்க முடியாத துயரத்தை விளைத்தனர். அப்பொழுதும் பகைவரை இயேசுநாதர் வெறுக்கவில்லை. சினத்தால் சபிக்கவும் நினைக்க வில்லை. அவர்களிடம் இரக்கமே கொண்டார். அவர்களை மன்னிக்கும்படி ஆண்டவனை வேண்டினார். இச்செயல் இன்னா செய்தார்க் கும் நன்னயம் புரியும் நற்செயல் அன்றோ !
திருவாசகத்தை மொழிபெயர்த்தல்
மேலும், போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டில் திருவாசகத்திற்குப் பெருமதிப்பு உண்டு. படிப்பவர் உள்ளத்தை உருக்கிப் பத்தியைப் பெருக்கும் பான்மை உடையது அந்நூல். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' என்பது இந்நாட்டில் வழங்கும் பழமொழி ஆகும். தேனூறும் திருவாசகப் பாடல்கள் அறுநூறும் போப்பையர் ஆராய்ந்து கற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்தபோது அந்நூலை மொழிபெயர்க்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு எழுபத்தேழு வயது. இவ்வளவு முதுமைப் பருவத்தில் தொடங்கிய பணி இனிது முடியுமோ? என்று ஐயுற்றார்.
அன்பர் உரைத்த உறுதிமொழி
ஒருநாள் மாலையில் போப்பையர் தம் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்து உரைத்தார். 'இத்தகைய நூலை முழுதும் முடித்து என் வாழ்நாளில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்; எனது வாழ்நாள் அதுவரை இருக்குமோ?’ என்று கவலையுடன் கூறினார். அதுகேட்ட நண்பர் , ''அறிஞரே ! ஒரு சிறந்த வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்கு உரிய வழி ; அவ்வேலை முடியும் வரை உயிர் இருந்தே திரும்" என்று உறுதி யாக உரைத்தார்.
திருவாசக மொழிபெயர்ப்பும் அறிஞர் பாராட்டும்
நண்பரின் உறுதியான மொழியைப் போப்பையர் உயர்ந்த மந்திரமாகவே மதித்தார். அதனை நினைத்து ஊக்கமும் உறுதியும் கொண்டார். தமது எண்பதாவது பிறந்த நாள் அன்று திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை அச்சிட்டு வெளியிட்டார். அந்தப் பெரும்பணியைச் செய்து முடித்த பொழுது அவர் மனம் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தது. தோன்றாத் துணையாக நின்று உதவிய இறைவன் திருவருளை வாயார வாழ்த்தினார். தம்மை ஊக்கப்படுத்திய தம் நண்பரை நினைந்து மனம் கசிந்து உருகினார். போப் பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர் கள் ஏற்றுப் போற்றினர். அந்நாளில் பாரிசு நகரத்தில் தேசியக் கலாசாலையில் சூலியன் வின்சன் என்பவர் பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு தமிழ்ப் பாட்டால் ஐயரைப் பாராட்டினார்.
"இருவினை கடந்த செல்வன் இசைத்தவா சகத்தை எல்லாம்
வருவிளை யாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்.''
என்பது வின்சன் தமிழ் வாக்கு. தமிழ் நாட்டுப் புலவர்களும் ஐயர் திருவாசகத்தைப் பாட்டாலும் உரையாலும் புகழ்ந்தனர்.
பயன் கருதாப் பணி
இவ்வாறு போப்பையர் அரிய தமிழ் நூல்கள் மூன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவற்றைத் தம் கைப்பொருளைச் செலவு செய்து சிறந்த முறையில் அச்சிட்டார். அவற்றை ஆங்கிலேயர் வாங்கி ஆதரிக்கமாட்டார் என்பதை அவர் அறிவார். எனினும் தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வத்தால் இப்பணியில் பெரிதும் ஈடுபட்டார். பயன் கருதாது தமிழ்மொழிக்குப் பணிபுரிந்த பெரியார்களில் போப்பையரும் ஒருவர் ஆவார்.
தமிழ்ப்பணிக்குத் தங்கப்பதக்கம்
ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் போப்பையரைப் பெருமைப்படுத்த முன் வந்தது. விக்டோரியா மகாராணியாரின் வைரவிழா நினைவுக்குறியாக அந்நாட்டில் தங்கப்பதக்கப் பரிசு ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசினை வழங்குவர். 1906 ஆம் ஆண்டில் அப்பரிசுக்கு உரியவராகப் போப்பையர் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அப்பொழுது இந்திய நாட்டு அமைச்சராக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் பேரவை கூடியது. போப்பையர் தமிழ்ப் பணிகளைத் தலைவர் போற்றிப் பேசித் தங்கப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக அளித்தார்.
ஐயரின் தமிழ் ஆர்வம்
அடுத்த ஆண்டில் போப்பையர் இவ்வுலக வாழ்வை நீத்தார். தமது கல்லறையில் ’போப்பையர் - ஒரு தமிழ்மாணவர்' என்ற வாசகம் எழுதப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவ்வாறே பொறிக்கப் பெற்ற கல்லொன்று அவர் கல்லறையைக் காட்டிக் கொண்டு நிற்கிறது. போப்பையரின் தமிழ்ப் பற்றுக்கு இதுவும் தக்க சான்றாகும் அன்றோ ?
---------------
10. தெய்வத் தமிழ்வளர்த்த தாயுமானவர்
சோழ நாட்டின் பெருமை
'சோழ வளநாடு சோறுடைத்து' என்று புலவர் போற்றும் புகழ் வாய்ந்தது சோழ நாடு. வான் பொய்த்தாலும் தான் பொய்யாத காவிரியாறு பாயும் நீர்வளம் உடையது அந்நாடு. அங்கேதான் தெய்வத் திருக் கோயில்கள் மிகுதியாக உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களும் அந் நாட்டில் தான் மிகுதி. சைவத் திருமடங்களும் பல அந்நாட்டில் இருக்கின்றன.
வேதாரணியத்தில் கேடிலியப்பர்
இத்தகைய சோழ நாட்டில் திருமறைக் காடு என்னும் சிவத்தலம் ஒன்று உண்டு. அதனை இந்நாளில் வேதாரணியம் என்று கூறுவர். அத்தலத்தில் இறைவனை வேதங்கள் பூசித்து வழிபட்டமையால் அதற்கு 'வேதா ரணியம்' என்ற பெயர் ஏற்பட்டது. அவ்வூரில் கேடிலியப்பா என்னும் பெயருடையார் ஒருவர் வாழ்ந்தார். அவர் சைவவேளாளர் குலத்தில் உதித்த உத்தமர். கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். செய்வன திருந்தச் செய்யும் செயல்திறம் படைத்தவர். இத்தகைய கேடிலியப்பர் திருமறைக்காட்டில் உள்ள திருக்கோயிலின் அறத்தலைவராக விளங்கினார்.
மறைக்காட்டில் நாயக்க மன்னர்
அந்நாளில் திருச்சிராப்பள்ளியில் நாயக்க மன்னர் ஆட்சி புரிந்து வந்தனர். விசய ரகுநாத சொக்கலிங்க நாயக்கர் என்பவர் அப்போது அரசராக விளங்கினார். அவர் நன்னாள் ஒன்றில் கடல் நீராடுவதற்காகத் திருமறைக்காட்டிற்கு வந்தார். அவர் கடலாடி விட்டுத் திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்தார். அம்மன்னரைக் கேடிலியப்பர் எதிர்கொண்டு சிறப்பாக வரவேற்றார். மறைக்காட்டு இறைவனை இனிய முறையில் வழிபட்டு மகிழுமாறும் செய்தார்.
சம்பிரதி கேடிலியப்பர்
திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்த மன்னர், கேடிலியப்பரின் திறமையைக் கண்டு மகிழ்ந்தார். அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அரசாங்கத்தில் தலைமைக்கணக்கர் என்னும் உயர்ந்த பதவியில் அவரை அமர்த்திச் 'சம்பிரதி’ என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கிப் பாராட்டினார். சம்பிரதியாகிய கேடிலியப்பர் அரசாங்கச் சிறப்புக்களுடன் பெருமையாக வாழ்ந்து வந்தார். அரசர் தமக்குத் தந்த பணியைத் திறமையாகச் செய்து அவரை மகிழ்வித்து வந்தார்.
கேடிலியப்பர் மகப்பேறு வேண்டுதல்
கேடிலியப்பருக்கு ஆண்குழந்தை ஒன்று இருந்தது. அப்பிள்ளைக்குச் சிவசிதம்பரம் என்பது பெயர். கேடிலியப்பரின் தமையனார் நீண்ட நாளாகப் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினார். அதனால் கேடிலியப்பர், தம் மகனாகிய சிவசிதம்பரத்தைத் தமையனாருக்கு வளர்ப்பு மகனாகக் கொடுத்தார். பின்பு தமக்கு ஒரு மகப்பேறு வேண்டும் என்று எண்ணினார். திருச்சிராப்பள்ளியை அடைந்த கேடிலியப்பர் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி மகப்பேறு அருளுமாறு வேண்டிக் கொண்டார்.
சிராப்பள்ளிக் குன்றுடையான்
திருச்சிராப்பள்ளியில் சிறிய குன்று ஒன்று உண்டு. அக்குன்றின் மேல் திருக்கோயில் ஒன்று விளங்குகின்றது. அக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவன் என்னும் திருப்பெயர் உடையான். அப்பெருமானுக்குத் தாயுமானவன் என்ற பெயர் ஏற்பட்டதற்கு வரலாறு ஒன்று வழங்குகிறது.
செட்டிப் பெண்ணின் தாய்
காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்த செட்டிப் பெண் ஒருத்தி திருச்சிராப்பள்ளியில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். அப்பெண் தலைப் பிள்ளையைப் பெறும் காலம் நெருங்கியது. பிள்ளைப் பேறு பார்ப்பதற்குப் பக்கத்தில் அவளுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. ஆதலின் உதவி செய்ய வருமாறு காவிரிப்பூம் பட்டினத்தில் இருக்கும் தன் தாய்க்குச் செய்தி யனுப்பியிருந்தாள். அச்செய்தி கேட்ட தாய் திருச்சிராப்பள்ளியை நோக்கி வந்தாள்.
தாய், இறைவனை வேண்டுதல்
திருச்சிராப்பள்ளியின் வடபால் காவிரி யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லுகின்றது. அவ்வாற்றின் வடகரையை அடைந்த அத்தாய் தென்கரையில் உள்ள திருச்சிராப்பள்ளிக்கு வர முடியாது வருந்தினாள். வெள்ளத்தைக் கடப்பதற்கு வகை தெரியாது உள்ளம் வெதும்பினாள். பெற்ற மகளுக்கு உற்ற சமயத்தில் உதவ முடியாது போயிற்றே என்று ஏங்கினாள். எதிர்க் கரையில் நின்ற வண்ணம் குன்றமர்ந்த ஈசனைக் குறையிரந்து வேண்டினாள். என் மகளை நீரே காத்தருள வேண்டும்' என்று மனம் கசிந்து வேண்டினாள்.
இறைவனாகிய தாயும் உண்மைத் தாயும்
அன்புடன் வேண்டுவார்க்கு அருள் புரியும் ஆண்டவன் அத்தாயின் வடிவை மேற் கொண்டு சென்று பிரசவ வேதனையால் வருந்தும் செட்டி மகளுக்கு உதவினான். அப்பெண் ஆண் மகவைப் பெற்று மகிழ்ந்தாள். தக்க சமயத்தில் வந்து உதவிய தாயின் பேரன்பைப் பாராட்டினாள். மறுநாள் காவிரியில் வெள்ளம் சிறிது வற்றியது. அதன் பின்னர் வெள்ளத்தைக் கடக்கப் படகு விடத் தொடங்கினர். எதிர்க் கரையில் நின்ற தாய் படகில் ஏறித் திருச்சிராப்பள்ளியிலுள்ள தன் மகள் வீட்டை அடைந்தாள். அடைந்ததும் அவள் முந்திய நாளே குழந்தை பிறந்த செய்தியைத் தெரிந்தாள். ஊரிலிருந்து ஓடோடி வந்தும் மகளுக்கு உதவ முடியாது போயிற்றே என்று உள்ளம் உலைந்தாள்.
இறைவன் தாயுமானவனாதல்
வருத்தத்தோடு உண்மைத்தாய் வீட்டினுள் வருதலும் முன்னே தாயாக வந்து உதவிய இறைவன் மறைந்தான். அத்தாயின் வருத்தத்தைக் கண்ட மகள் மிகவும் திகைத்தாள். இதுவரை தாயின் வடிவோடு இருந்தவர் இறைவனே என்று எண்ணி மனம் பூரித்தாள். திருச்சிராப்பள்ளிக் குன்றில் அமர்ந்த சிவபெருமானே எனக்குத் தாயுமா னான் என்று உள்ளம் உருகினாள். அன்று முதல் அத்தலத்தில் அமர்ந்த இறைவனுக் குத் தாயுமானவன்' என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது.
கேடிலியப்பருக்குத் தாயுமானவர்
அத்தாயுமானவர் அருளால் கேடிலியப்பருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குத் 'தாயுமானவன்' என்றே பெயர் சூட்டினார். அக்குழந்தை வளர்ந்து ஐந்தாண்டுப் பருவத்தை அடைந்தது. தந்தையார் தாயுமானவனைப் பள்ளிக்கு வைத்தார். பள்ளிக் கல்வி முடித்த பிள்ளையைத் தக்க நல்லாசிரியரிடம் விடுத்தார். தாயுமானவர் தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் தக்கவாறு கற்றுத் தேர்ந்தார். தேவாரப் பாடல்களின் தீஞ்சுவையைப் பருகினார். திருவாசகப் பாடல்களின் கனிவை அனுபவித்தார். இறைவன் திருவருளை நினைந்து உருகினார்.
தாயுமானவர் தலைமைக் கணக்கர்
இவ்வாறு தாயுமானவர் கற்றுத் தேர்ந்து விளங்கும் நாளில் தந்தையார் இறந்தார். தலைமைக் கணக்கரை இழந்த நாயக்க மன்னர், தாயுமானவரை வரவழைத்தார். அவருடைய அரிய திறமையை ஆராய்ந்து அறிந்தார். தந்தையார் பதவியில் மைந்தரை இருக்கச் செய்தார். தாயுமானவர் தாம் ஏற்ற அரசாங்கப் பதவியைத் திறமையுடன் நடத்தினார். எனினும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பதவியில் பற்றில்லாது இருந்தார். உயிருக்கு உறுதியைத் தரும் உயர் வழியில் செல்லும் நாளையே எதிர்நோக்கி இருந்தார்.
மன்னர் மறைவு
அக்காலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்னும் பெரியவர் திருச்சிராப்பள்ளிக்கு வந்தார். அவர் தாயுமானவர் திருக் கோயிலில் சில நாள் தங்கியிருந்தார். அவருடைய திருவருள் ஒருநாள் தாயுமானவர்க்குக் கிடைத்தது. இந்நாளில் நாயக்க மன்னர் உயிர் நீத்தார். அவருக்கு மக்கட் பேறு இல்லை. ஆதலின் அவருக்குச் செய்ய வேண்டிய கடன்களை எல்லாம் அரசியே செய்து முடித்தாள். அதன் பின்னர் அரசாங்கக் காரியங்களையும் அவளே கவனித்து வந்தாள்.
தாயுமானவர் பதவியை வெறுத்தல்
அரசிக்கும் அரசியற் பணியை நன்கு திறம்பட ஆற்றிவந்த தாயுமானவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. கருத்து வேறுபட்ட நிலைமையில் பணிபுரிந்து வருவது தக்கது அன்று என எண்ணித் தாயுமானவர் உடனே புறப்பட்டுச் சென்று இராமநாத புரத்தை அடைந்தார்.
தமையனார் வேண்டுகோள்
தமையனார் ஆகிய சிவசிதம்பரம் பிள்ளை திருச்சிராப்பள்ளியில் நடந்த செய்திகளை அறிந்தார். அவர் உடனே புறப்பட்டு இராமநாதபுரத்தை அடைந்தார். தம் தம்பியாராகிய தாயுமானவரைக் கண்டார். ’நம் குலம் தழைக்கத் திருமணம் புரிக! இல்லறத்தில் இனிது வாழ்க!' என்று தம்பியாரை அன்புடன் வேண்டினார். அவரைத் திருமறைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார். தாயுமானவர் இயற்கையிலேயே துறவுள்ளம் பூண்டவர். திருமணம் செய்து கொள்வதைப் பெரிதும் வெறுத்தார். ஆயினும் தமையனாரின் வற் புறுத்தலுக்கு இணங்கினார். அவர் ஞானாசிரிய ராகிய மௌன குருவும் அவ்வாறே ஆணை யிட்டார்.
தாயுமானவர் இல்லறம்
உறவினர் விருப்பத்திற்கு இசைந்த தாயுமானவர், மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணம் செய்து கொண்டார். சில காலம் அவ்வம்மையாருடன் இல்லறத்தை இனிது நடத்தினார். அந்நாளில் தாயுமானவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குக் கனகசபாபதி என்று பெயரிட்டனர். ஒருநாள் தம் ஞானாசிரியராகிய மௌனகுருவைத் தரிசித்தார். அவர் தாயுமானவரைத் துறவறத்தை மேற்கொள்ளுமாறு தூண்டிச் சென்றார்.
பாமாலை புனைதல்
சில நாட்கள் கழித்துத் தாயுமானவர் துறவறம் பூண்டார். தம் வீட்டை விட்டுப் புறப்பட்டார். திருவாரூர், தில்லை, திருவண்ணா மலை, மதுரை முதலிய சிவத்தலங்களைத் தரிசித்தார். இறைவன் மீது பல வகையான தோத்திரப் பாடல்களைப் பாடியருளினார். தெய்வத் தமிழ்ப் பாமாலைகளைப் புனைந்தார். சிவபெரு மானுக்கு அணிந்து சித்தம் மகிழ்ந்தார். கடைசியில் இராமேச்சுரத்தை அடைந்தார்.
மழை பெய்யுமாறு பாடுதல்
தாயுமானவர் அத்தலத்தை அடைந்த போது மழையின்றி மக்கள் வாடி நிற்பதைக் கண்டார். அவர்களின் துயரத்தைக் கண்ட தாயுமானவர் மனம் இரங்கினார். அப்போது,
"சைவ சமயம் சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறைசூடும் தெய்வமெனில் - ஐவரைவென்
றானந்த இன்பத் தழுந்துவதே முத்தியெனில்
வானங்காள் ! பெய்க மழை!"
என்ற திருப்பாட்டைப் பாடியருளினார். உடனே பெருமழை பொழியத் தொடங்கியது. அங்குள்ள மக்கள் தாயுமானவரின் பெருமையைத் தெரிந்து போற்றினர்.
மாணவர்க்கு மெய்யறிவு
பின்பு தாயுமானவர் அங்கிருந்து புறப் பட்டு இராமநாதபுரத்தை அடைந்தார். அவரைப் பிரியாது அருளையர், கோடிக்கரை ஞானியார் முதலிய நன்மாணவர் சிலர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கட்குத் தாயு மானவர் மெய்யறிவை ஊட்டினார். பின்னர் கி. பி. 1662 ஆம் ஆண்டில் தைத்திங்கள் விசாக நாளில் இறைவன் திருவடி அடைந்தார்.
தாயுமானவர் திருப்பாடல்
தாயுமானவர் பல சமயங்களில் பல தலங்களில் பாடியருளிய தெய்வத்தமிழ்ப் பாடல்கள், அவருடைய மாணவர் அருளையர் என்பவரால் தொகுக்கப் பெற்றன. அவைகள் 'தாயுமானவர் திருப்பாடல்கள்' என்று வழங்கப்படுகின்றன. அப்பாடல்கள் எல்லாம் இனிய எளிய நடையில் அமைந்தவை. சித்தாந்த வேதாந்தக் கருத்துக்கள் செறிந்தவை. பல சமயத்தாராலும் போற்றிப் படிக்கப்படும் பொதுமறையாகத் திகழ்கின்ற ன.
------------
கட்டுரைப் பயிற்சி
1. தமிழ் இலக்கணம் தந்த தவமுணிவர்
1. அகத்தியர், பொதிகையில் வந்து தங்கியது ஏன் £
2. காவிரியாறு எவ்வாறு தோன் றியது?
3. பொருநை பிறந்த விதம் யாது”
2. முத்தமிழ்க் காவியம் பாடிய முணிவர்
1. சிலப்பதிகாரத்தின் சிறப்புக்கள் யாவை
2. இளங்கோ தவக்கோலம் பூண்டது ஏன்?
3. செங்குட்டுவனிடம் மலைநாட்டில் வேட்டுவ கூறிய செய்தி என்ன?
4. சாத்தனார், செங்குட்டுவன் முதலானவர்க்குக் கண்ணகியைப் பற்றிக் கூறியது என்ன!
3. அறநூல் தந்த அருந்தவர்
1. தமிழில் உள்ள சிறந்த அறநூல்கள் எவை! அவற்றின் சிறப்புக்கள் யாவை?
2, நாலடியாரைக் குறிக்கும் பிறபெயர்கள் யாவை? அப்பெயர்கள் வரக் சாரணம் என்ன 1
3. நாலடியார் தொகுக்கப்பட்டது எவ்வாறு?
4. மந்திரம் தந்த மாமுனிவர்
1. சுந்தரநாதர் காவிரிக்கரையில் கண்ட காட்சி என்ன?”
2. சுந்தரநாதர், திருமூலரானது எவ்வாறு?
3. திருமந்திர நூல் எவ்வாறு கிடைத்தது?
5. மூருகன் அருள் பெற்ற முனிவர்
1, குமரகுருபரர் ஊமை நீங்கியது எப்படி?
2.. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறியது எவ்வாறு?
3. குமரகுருபரர் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடியது ஏன்?
4. குமரகுருபரர் காசியில் எவ்வாறு திருமடம் அமைத்தார்:
6. தமிழ் அகராதியின் தந்தையார்
1. தேம்பாவணி நூல் எவ்வாறு தோன்றியது?
2. தேம்பாவணி நாலின் திறத்தை விளக்க எழுதுக,
3. திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பின் எறப்புஎன்ன!
4. வீரமாமுனிவர் தமிழ் வசனகடை வளர்த்தது எப்படி?
5. வீரமாமுனிவர் நடத்திய சமயவாதமும் அதன் முடிவும்யாவை ?
6, வீரமாமுனிவர் செய்த கல்லூரிப் பணியாது?
7. தமிழ் வாளா்த்த தம்பிரான்
1. களத்தார்ப் புலவர் படிக்காசரானது எவ்வாறு?
2. சீதக்காதியின் கொடைத்திறம் யாது?
3. “செத்தம் கொடுத்தான் சீதக்காதி? என்ற பழமொழி எவ்வாறு எழுந்தது? '
4, படிக்காசர் துறவியானபின் செய்த தொண்டுகள் யாவை!
5. படிக்காசரின் புலமைச் சிறப்பு யாது?
8. தவஞானச் செல்வர் சிவஞான முனிவர்
1, முக்களாலிங்கரின் தூய உள்ளத்தை எதனால் அறியலாம்?
2. முக்களாலிங்கர், சிவஞானத்தம்பிரான் ஆனது எவ்வாறு?
3. சிவஞான முனிவர், அகிலாண்டநாயகி பதிகம் பாடியது ஏன்?
9. தமிழ் மாணவர் போப்பையார்
1.. தமிழ்மொழிக்குப் போப்பையா செய்த தொண்டுகள் யாவை ?
2. இயேசுவின் கருத்துக்களும் வள்ளுவர் கருத்துக் கருத்துகளும் ஓத்திருக்கும் இடங்களை விவரி.
3. போப்பையரின் தமிழ்ப் பற்றுக்கு ஒரு சிறந்த.எடுத்தக்காட்டு கூறுக.
10. தெய்வத் தமிழுவளா்த்த தாயுமானவர்
1. இறைவன் தாயும்ஆன வரலாற்றைச் சுருக்கி எழுது.
2. தாயுமானவர் இராமராதபுரம் சென்றது ஏன்?
2. தாயுமானவரின் துறவற நிலைபம்றி எழுது,
4. தாயுமானவர் பாடல்--குறிப்பு எழுது.
--------------------------
This file was last updated on 24 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)