pm logo

சரோஜா ராமமூர்த்தி எழுதிய
அவள் விழித்திருந்தாள் ( நாவல்)


avaL vizittiruntAL (novel)
by carOja rAmamUrti
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

அவள் விழித்திருந்தாள் ( நாவல்)
சரோஜா ராமமூர்த்தி

Source:
அவள் விழித்திருந்தாள்
சரோஜா ராமமூர்த்தி
சமுதாயம் பப்ளிகேஷன்ஸ்
பிரைவேட் லிமிடெட், தியாகராய நகர்- சென்னை 600017
சமுதாயம் வெளியீடு: 12 முதற்பதிப்பு பிப்ரவரி 1987
விலை: ரூ.6-00
மகாத்மா பிரிண்டிங் பிரஸ், சென்னை -88.
-----------------

அவள் விழித்திருந்தாள்

அத்தியாயம் 1

அயல் நாட்டு சென்டின் மணம் குபீரென்று வீடெங் கும் பரவியது. அந்த வாசனை அவன் வரும்போது மட்டும் வரும் வாசனை. ஊரெங்கும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த வீடு மட்டும் இருண்டு கிடந்தது. 'வீட்டில் ஏன் அஸ்தமித்த பிறகு கூட விளக்கு ஏற்றவில்லை' என்று தன்னையே சேட்டுக் கொண்டு பட்டப்பா ஜன்னல் வழியாகக் காமரா அறைக்குள் வருகிற வெளிச்சத்தில் அங்கு கிடந்த மேஜை மீது பூப்பொட் டலத்தையும், பலகாரங்களையும் வைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். காரை பெயர்ந்த சுவரில் 'ஸ்விட்ச்' லொட லொடவென்று ஆடிக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக அதைத் தட்டிவிட்டதும் அறையில் விளக்கு எரிந்தது.

கூடத்தைத்தாண்டி வெனிச்சம் லேசாய்ப்பரவி சமையல் றையில் அவள் தரையில் படுத்திருப்பதைக் காட்டிக் கொடுத்தது. சரிந்து கிடந்த மலர்க்குவியல் மாதிரி இருந்தாள் அவள். பின்னல் தரையில் புரள, அதிலிருந்து மலர்ச்சரம் துவண்டு விழ, ஒரு சித்திரம் போல் இருந்தாள் நர்மதா. இனிமேல் ஒளிந்து கொள்வதில் லாபமில்லை என்று நினைந்து நமர்தா வெளியே வந்து நின்றாள். அவனிடமிருந்து வீசும் வாசனையை முகர்ந்து முகம் சுளித்தாள் அவள். பட்டப்பா மட்டும் தன்மனைவியை ஆசையோடு, ஆவலோடு ஏற இறங்கங் பார்த்தான். வெட வெட வென்று ஒரு கொடிபோல செக்கச் செவேல் என்று சிலைமாதிரி இருந்தாள். அவள் வெடுக்கென்று மூகத்தைத்திருப்பிக்கொண்டாள்.

"என்ன நர்மதா வந்திருக்கிறவனை வாங்கன்னு சொல்ல மாட்டேங்கறே- அவள் முகம் சிவந்தது.

"உங்களை இங்கே வரச்சொல்லி யார் கூப்பிட்டது?"

"உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருந்தது நர்மதா. எப்பப்பாத்தாலும் ஒன் நெனப்புத்தான் எனக்கு. "

அவள் சூள் கொட்டினாள். கைகளைத் தூக்கி நெட்டி முறித்தாள்.

"பாத்தாச்சோல்லியோ? போங்களேன். "

பட்டப்பா அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். மேஜை மீது வைத்திருந்த பூவையும், பொட்டலங்களையும் எடுத்து வந்து, இந்தா ! இதை வாங்கிக்கோ. பூ வைச்சுக்கோ. நீ தலை நெறய பூ வச்சுண்டா ஜம்முன்னு இருக்கு. நாம ரெண்டு பேருமாவே டிபன் சாப்பிடலாம். இன்னிக்கி புதுப்படம் ரிலீஸ். உன் அண்ணாவும் மன்னியும் போயிருப்பான்னுதான் தைரியமா வந்திருக்கேன்-"

நர்மதா பரிதாபமாக அவனைப்பார்த்தாள். ஓட்டிப் போயிருக்கும் கன்னங்கள். சோகை வெளுப்பாக ஓர் அசட்டு வெளுப்பு.பூனைக்கண்கள். மழ மழவென்ற முகம். வளைந்த மூக்கு. செம்பட்டை பறக்கும் கிராப்பு வேற. ஆண்மையின் கம்பீரம் லவ லேசமும் இல்லாமல் ஆணாகப் பிறந்து விட்டிருந் தான் அவன். தொள தொளவென்ற ஷர்ட்டும், தெருவைப் பெருக்குகிற வேஷ்டியும் கட்டியிருந்தான்.

அவன் அவளுக்கு அருகில் நெருங்கி வந்து நின்றான். மேலும் சென்டின் மணம் குபீரென்றுவீசியது. அவள் நகர்ந்து நின்றாள். எதுக்கு இப்படி நாட்டுப் புறத்தான் மாதிரி செண்டை ஊத்திண்டு வரேள்? சாராய நெடியே தேவலாம் போல இருக்கு -',

"அப்ப நாளைலேருந்து குடிச்சிட்டு வாங்கறயா?"

''உக்கும்... இதுக் கொண்னும் கொறச்சல் இல்லை-"

அவனுக்கு ஆசை அடித்துக்கொண்டது. அவளைத்தொட் டுப்பார்க்க வேண்டும். அந்த நீண்ட பின்னலை வருட வேண்டும். கொழு கொழு வென்றிருக்கும் கன்னங்களை வருட வேண்டும்.

அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள். கோவிலிலிருந்து நாதஸ்வர ஒலி கேட்டது

"கடவுளே! கடவுளே! என்னை ஏமாத்தினது போதும் இதை இந்தஜடத்தை இங்கேயிருந்து போகச்சொல்லேன்- அவள் திடீசென்று உரத்தக்குரலில், 'வந்தாச்சு,பாத்தாச்சு போங்க இங்கேயிருந்து என்றாள்.

கையில் பிரித்து வைத்துக் கொண்டிருந்த அல்வாப் பொட்டலம் பிரித்தபடியே இருந்தது.

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

நர்மதாவின் மனசில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்கவேண்டும். "சர்ப்பிட்டுட்டுப்போறேளா?" என்று மெதுவாகக்கேட்டாள்.

"உம்" என்றான் பட்டப்பா.

அலமாரியின் கீழே இருந்த தட்டை எடுத்து வைத்துப்பரி மாறினாள் அவள். பரிந்து பரிந்து சாதம் போட்டாள். மள மளவென்று சாப்பாடு ஆயிற்று.

"கிளம்பட்டுமா நர்மதா?"

""உம்... கிளம்புங்கோ இன்னும். கொஞ்ச நாழியானா எங்கம்மா வந்துடுவர். அப்புறமா அண்ணாவும், மன்னியும் வருவா..." மறுபடியும் அவன் அவள் அருகில் நெருங்கி வந்து தீன்றான்.

ஓ! இது என்ன ஆசை? ஆண்பிள்ளை என்று உருவத்தில் இருந்து விட்டால் போதுமா? நர்மதா வெடுக்கென்றுமுகத்தைத் திருப்பிக்கொண்டு வாசற்கதவைத் திறந்தாள்.

அவன் படியிறங்கி, தெருவில் நடந்துசென்றபோது அவள் மனம் வேதனைப்பட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. ஒரு ஆண்மகனின் நெருக்கம் அவள் மீது நெருப்பாகத் தகிப் பதை அவள் உணர்ந்தாள். மட மடவென்று பலகாரப் பொட்டலங்களை எடுத்துத் தெருவில் வீசினாள். புஷ்பத்தை எடுத்து எங்கோ வைத்து விட்டாள். பட்டப்பா வந்ததோ போளதோ தெரியாமல் கும்மட்டியைப் பற்றவைத்து குறைந்திருந்த சாதத்துக்குப்பதிலாக சமைத்தும் வைத்தாள்.

அம்மா, அண்ணா மன்னி வருவதற்கு வெகுநேரம் இருந்தது. காமரா அறைக்குள் சென்று ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். கடைத்தெருவிலிருந்து போகிறவர்கள் பூப்பொட்டலங்களும், காய்கறிகளும் வாங்கிப் போனார்கள். வீட்டிலே மகளுக்கோ, மனைவிக்கோ, போகிறார்கள். தாய்க்கோ எல்லோரும் பூ வாங்கிப் போகிறார்கள்.

அம்மா ஆசை ஆசையாக இந்தக் கல்யாணத்தை அந்த அழகான புருஷனோடு நடத்தி வைத்தாள். அவள் கண் டாளா பட்டப்பாவின் குறையைப்பற்றி?

நர்மதாவின் நெஞ்சத்தில் அந்த நினைவுகள் பொங்கி எழுந்தன.சில நினைவுகள் மனதில் நிலைப்பதில்லை. சிலநிலைத்து நின்று விடுகின்றன. கண்ணீர் பெருகத் தேம்பித் தேம்பி அழுதாள். இந்த மனுஷன் எதற்காக என்னைத்தேடி வரு கிறான்.? என்னைத்தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிறான்? அதற்கு மேலே இந்த உடம்புக்கு ஒரு தேவை இருக்கிறதே. அதை அதை ..இவனால்?...

வாழ்க்கையைச் சுவையோடு அனுபவிக்க அவளுக்கு ஆசை. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் அவளுக்கு காரில்போக ஆசை. நகை நட்டுகள் பூட்டிக்கொள்ள ஆசை. பட்டுப்பட்டாக உடுத்திக்கொள்ள விருப்பம். கண்ணும், மன மும்நிறைந்த கண்வளை அடைய விருப்பம்.

இத்தனை எண்ணங்களும், கனவுகளும் சரிந்து போயின. திடும்மென்று அம்மா கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்தாள். நம்பஅந்தஸ்த்துக்கு இந்த வரன் கிடைச் சதேபெரிய பாக்கியம் என்றாள்.

நர்மதாவின் நெற்றியெங்கும் வியர்வைத்துளிகள் அரும்பின. முந்தானையால் நெற்றியைத் துடைத்துக்கொண்டு அழிந்துபோன பொட்டைச் சரிசெய்து கொண்டாள்.

தெருவில் போவோர் வருவோர் குறைந்து விட்டது யார் வீட்டிலிருந்தோ ரேடியோவில் பாடல் கேட்டது. எதிர் வீட்டுத் தென்னை மரத்தின் கீற்றுகளுக்கிடையே நிலா தெரிந்தது.

அந்தத்தனிமையும், இரவும் அவளுக்குக் கசந்தது. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
----------------

அத்தியாயம் 2

அவளுக்குத் திருநீர்மலையில் கல்யாணம் நடந்தது. முதன் முதலில் பட்டப்பா அவள் கையைப் பிடித்தபோது அது ஒரு பெண்ணின் கையைப்போல மெத்மெத்தென்று மிருதுவாக இருந்தது. ஆண்மகனின் அழுத்தமான பிடியாக இராமல் தோழிப்பெண் ஒருத்தி மிக நளினமானக் கையைப் பிடித்து வருடுவதுபோல இருப்பதை உணர்ந்தாள். பட்டப்பா அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. விளையாட்டுப் பையன் போல எதை எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தான். நர்மதாவுக்கு பிள்ளைவீட்டார் போட்டிருந்த நகை களைப் பார்த்து பூரித்துப்போனாள் அவள் அம்மா.

சிவப்புக்கல் நெக்லஸ், இரட்டைவடம் சங்கிலி, காதில் நவரத்தினத்தோடுகள், கையில் நாலைந்து தங்க வளையல்கள், ஒரே சமயத்தில் ஐந்தாறு பட்டுப்புடவைகள். என்னவோ திடீரென்று அஷ்டலெஷ்மிகளின் சாந்நித்தியம் தன் வீட்டில் ஏற்பட்டு விட்டமாதிரி அந்த அம்மாள் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.

கல்யாணத்தன்று பகலே திருநீர்மலையிலிருந்து எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். திடீரென்று ஓர் அதிஷ்ட தேவதை தன் மீது ஈருணை மழை பொழிந்து தன்னைப் பணக்காரியாக்கி விட்டதை நினைத்து மலைத்துப் போயிருந்தாள் நர்மதா. எல்லாப்பெண்களையும் போல அவள் புக்ககம் புறப்படும்முன் கண்கலங்கினாள்.

அவள் அம்மாவும், மன்னியும், அண்ணாவும் அழுதார்கள். நர்மதாவால் தனக்கு விடிவுகாலம் வந்து விட்டது என் அவள் அம்மா பெரிதும் நம்பினாள்.

வளைந்து வளைந்து போகும் அந்தச்சாலையில் எல்லோரி டமும் விடைபெற்றுக்கொண்டு தன் கணவனுடன் அவள் பஸ்ஸில் புறப்பட்டாள். கொஞ்சம், கொஞ்சமாக திருநீர் மலையின் தோற்றம், கோயில் எல்லாம் பின் தங்கின.

அடுத்து ஒரு ஊரில் பஸ் நின்றபோது பட்டப்பா அவளுக்கு ஆசையாக ஒரு பந்து மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தான். பான்ட்டா உடைத்து எடுத்து வந்தான். பழம் வேண்டுமா என்று கேட்டான்.

அவள் எதிர்பார்த்தது வேறு. அவனிடம் ஒரு நெருக்கம். ஒரு ஆவலானபார்வை. குறைந்தபட்சம் மேலே ஒட்டியாவது உட்காருவான் என்கிற எதிர்பார்ப்பு. ஊஹும்..

பஸ்ஸின் ஆட்டத்தில் பட்டப்பா தூங்கி வழிந்தான். அந்த சமயங்களில் அவன் தலை லேசாக அவள் தோளின் மீதும், கன்னங்களின் மீதும் சாய்ந்து சாய்ந்து நிமிர்ந்தது. அவள் சிலிர்த்துப்போனாள். அவன் சட்டென்று விழித்தபோது அவளைப்பார்த்து அசடு வழியச் சிரித்தான். ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்ட குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டான்.

ஒரு பெண்ணின் இயல்போடு கூடிய ஆண்மகனாக அவன் இருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

எதிர் பெஞ்சில் இருந்த அந்த நடுத்தரவயதுத்தம்பதிகள், அவர்களின் பேச்சு, பார்வை பறிமாறல், நெருச்சும், கம்பீர மான அவன் தோற்றம், வலுவான அந்தக்கரங்கள், தீட்சண்மான பார்வை

நர்மதாவின் கழுத்தில் இருந்த அத்தனை நகைகளும், உடலைச்சுற்றிக் கொண்டிருந்த பட்டுப்புடவையும் சுமையாக இருந்தது.

ஆயிற்று, ஊர் வந்தது. ஊருக்குப்பெயர் என்ன வைத்து வாழுகிறது? ஏதோ ஒரு ஊர். தெருவே அவளையும், அவனை யும் வேடிக்கை பார்த்தது. "பட்டப்பா பெண்டாட்டியைப் பாருடி... ராஜாத்தியாட்டம் இருக்கா. இதுக்குப்போய் இப்படி ஒருத்திவந்து வாச்சிருக்குப்பாரு..."அவர்கள் உரக்கப் பேசாவிட்டாலும் 'கிசு கிசு' வென்று பேசிக்கொண்டார்கள்.

பட்டப்பாவின் அக்கா விதவை. பக்கத்து வீட்டுப்பூரணி வாய் கொள்ளாச்சிரிப்புடன் தட்டுநிறைய ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்தாள். வாசலில் பெரிசாகப் படிக்கோ லம்போட்டு, செம்மண் இட்டிருந்தது. குலையோடு வாழை மரங்கள் சாய்ந்து நின்றன மாவிலைத் தோரணங்கள் அசைந்தன.

"பெண்டாட்டி கையைப் புடிச்சுக்கோ பட்டப்பா.. கிழக்கே பார்த்து நில்லுங்கோ" என்றபடி பூரணி வந்தாள். அவள் மெட்டி குறிங்கியது. தாளமிட்டது. ஆரத்தியைச் சுழற்றிக்கொண்டே நர்மதாவை நிமிர்ந்து பார்த்தாள். சொக்கிப்போனாற்போல ஒரு பார்வை. சந்திரகலை மாதிரி வளைந்த நெற்றி. அதில் படிந்த சுருட்டைக் கூந்தல். எடுப் பான மூக்கு. வைரம் மின்னியது. மூக்குத்தி சில பேருக்கு டம்போடு பிறந்த மாதிரி ரொம்பப் பொருந்திப்போய் விடுகிறது.

கங்கம்மா தம்பியையிம், தம்பி மனைவியையும் ஆசைதீரப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பு கட்டிவிட்டது.

“வலது காலை எடுத்து வைச்சு வாம்மா-"

நர்மதர் உள்ளே வந்தாள். கூடத்தில் பளபளவென்று சங்கிலிகள் கோத்த ஊஞ்சல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. சுவர் நிறைய தஞ்சாவூர் படங்கள். எதிர் பக்கத்து அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. புது மெத்தைகள் சுருட்டி வைத்திருந்தார்கள்.

"உள்ளே வாம்மா... மொதல்லே காப்பி சாப்பிடு...அப்பு றமா வீட்டைச்சுத்தி பாக்கலாம்" என்று பரிவோடு கங்கம்மா நர்மதாவை உபசரித்தாள்.

நுரை ததும்பும் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பட்டப்பா இவளைக்கவனிக்காமல் என்னவோ பேசிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

சமையலறையிலிருந்து கம்மென்று பாயசம் மணத்தது. கசகசர் தேங்காய் அரைத்த பாயசம். கூடவே நெய்யும் விட் டிருப்பார்கள் போலிருக்கிறது.

நர்மதா குளிக்கப் புறப்பட்டாள். ஊர் நாட்டுப்புறம் மாதிரி இருந்தாலும், கங்கம்மா தன் வீட்டில் எல்லா வசதிக ளும் செய்திருந்தாள். குளியலறை வசதியாக இருந்தது. அங்கே. அம்மா ஊரில் விடிய நாலு நாழி முன்பே எழுந்தி ருந்து யாரானும் வராளா வராளான்னுபார்த்துண்டு அவசர அவசரமா குளிச்சுட்டு வந்து பழக்கம். ஆசை தீர ஜலமா கொட்டிண்டு குளிக்கணும்னு அங்கே தொட்டியில் தளும்பிய தண்ணீரைப் பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் நர்மதா. கிணற்றிலிருந்து இரைத்துக் கொட்டினால் உள்ளே தொட்டி யில் குபு குபுவென்று ஜலம் விழும்படி கட்டி இருந்தார்கள்.

பட்டப்பா உள்ளே இருந்து 'பாரின்' சோப்புக்கட்டி ஒன்று எடுத்து வந்தான். ரேழியிலேயே அந்தச் சோப்பு கம் மென்று மணந்தது 'இந்தா' என்று கொடுத்தான். அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது. விரலகள் அவன் கையை வருடுகிற மாதிரி சோப்பை வாங்கிக்கொண்டாள். "மஞ்சள் பூசிக்கிற வழக்கம் உண்டா" என்று கேட்டான்.

அவள் தலையை ஆட்டியவுடன் உள்ளேயிருந்து ஒரு டப்பா நிறைய கஸ்தூரி மஞ்சள் பொடியை எடுத்துக்கொண்டு வந் தான். "பட்டணத்துலே கந்தசாமி கோயில்கிட்டே வாங்கி னது. தண்ணி போறுமா இல்லை இன்னும் இரண்டு வாளி இரைச்சு ஊத்தட்டுமா" என்று கேட்டான்.

அவளுக்கு உடம்பை என்னவோ செய்தது. தண்ணி வரும் அந்த இடுக்கு வழியாக அவன் அவள் குளிக்கிறதைப் பார்க்க ஆசைப்படறான் போல இருக்கு... என்று நினைத்துக் கொண்டாள்.

"வாண்டாம்...நிறைய தண்ணி இருக்கு-'

அவள் உள்ளேபோய் கொஞ்சம் கொஞ்சமாகக் கதவைச் சாத்தியபடி கதவின் இடைவெளி வழியாக அவனைப் பார்த்தாள்.

உஹும்..ஒரு வேலைக்காரன்-இல்லை ஒரு வேலைக்காரி கேட்கிற மா திரி தண்ணிவேணுமா, மஞ்சள் வேணுமா என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டான்.

வெற்று உடம்பில் சோப்பைக் குழைத்துப் பூசி நுரை வழியும் தன் உடம்பிலே லயித்துப்போனாள். அப்படியொரு நிறம். செந்தாழைபோல ஒரு மஞ்சள் மினுமினுப்பு. வெறும் பழயதுக்கும், எரிச்சக்குழம்புக்குமே இப்படி ஒரு மினுமினுப்பு படர்ந்து கிடந்தது.

தலையைச்சுற்றித் துண்டைக்கட்டிக்கொண்டு, புடவையைச் சுற்றியபடி உள்ளே வந்தாள். கங்கம்மா அவள் கால்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். வாழை மரத்தின் அடித் தண்டுபோல் உறுதியாக, வர்ளிப்பாக இருந்தன. கல்யாணத் தில் இட்டிருந்த நலங்குப்பூச்சு லேசாகக் கலைந்திருந்தது.

” இந்த உள்ள போய்க் கட்டிக்கோ. சுவாமிகிட்டே தட்டில் புதுப்புடவை, ரவிக்கை இருக்கு-”

வெள்ளித்தட்டில் தாமரை வர்ணத்தில் ஜரிகைக்கரை போட்ட புடவை இருந்தது. ரவிக்கை இருந்தது.

நெற்றிக்கு இட்டுக் கொண்டவுடன் திரும்பி சுவாமி படங் களைப்பார்த்தாள். மூக்கில் நத்து சிரிக்க சாரதாம்பிகை நடு நாயகமாய்க் கொலுவிருந்தாள். சந்திரகலை, அக்ஷமாலை, சுவடி ஹே அப்பா! அம்பாளின் கரங்களில் எதுதான் பொருந்த வில்லை. கரும்பு வில்லும், கிளியும், பாசாங்குசமும் எல்லாமே பொருத்தம்தான்.

நெற்றி தரையில்பட விழுந்து நமஸ்கரித்தாள். படத்தில் தொங்கிய சண்பக மாலையைக்கிள்ளி எடுத்து முடிந்த கூந்த லில் தொங்கவிட்டபடி வெளியே வந்தாள்.

துக்க
அந்தத்தெருவின் பெண்கள் ஏதோ தா சாக்கு சாக்குவைத்துக் கொண்டு வந்து வந்து போனார்கள். கங்கம்மாவின்கிட்டே போய் தாழ்ந்தகுரலில் நர்மதாவின் அழகை வர்ணித்தார்கள்.

கூடத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பட்டப்பாவை ஒருத்தி சீண்டினாள்.

"இன்னிக்கி எங்காத்துல பூக்கற குண்டு மல்லிப் பூவைப் பறிச்சுண்டு வந்து..."

"ஹீ..ஹீ..." என்றான் பட்டப்பா

"வாடி போகலாம். அதுக்கு ஒண்ணும்புரியலை -" என்றாள் இன்னொருத்தி.

"இவனுக்குப் புரிஞ்சர் என்ன புரியாட்டா என்ன? அவ புரியவச்சுட மாட்டா? ஹும் தங்கசிலையாட்டமா அப்படி ஒரு மினு மினுப்புங்கறேன்-”

சாப்பாடு ஆயிற்று. கட்டித்தயிரைஊற்றி கைவழிய சாப்பிட்டு எழுந்தபோது நர்மதாவுக்கு ஊரில்அம்மாவின் நினைவுவந்தது. யார் வீட்டிலோ அடுப்படியில் நாள் பூராவும் வேகு வேகு என்று வெந்து கொண்டிருக்கிறாளே.

பகல் தூக்கத்தில் கனா கூட வந்தது. பட்டப்பா அவளிடம் நெருங்கி வந்து.. அப்பாடா! எப்படி வேர்த்துக்கொட்றது?...
-------------------------

அத்தியாயம் 3

நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது."இந்தப் பொண்ணுக்கு எப்பவிடியப்போறதோ" என்று சொல்லிக்கொண்டேதான் நர்மதாவின் தாய் வெங்கு லட்சுமி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொருவளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங் களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர். அதிலே சாயிராம் என்று ஒருத்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.

நர்மதா? ஒரு டம்ளர் பானை ஜலம் கிடைக்குமா? நர்மதா? சூடாகாப்பி இருந்தா கொடேன்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து உட்காருவான். வெங்குலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வரும். சந்தனச்சிலைக்கு தைத்துப்போட்ட மாதிரி கைபிதுங்கி வழிய ரவிக் கை போட்டுக் கொண்டு அவ னுக்கு பானை ஜலமும், சூடான காப்பியும் கொண்டு வந்து கொடுப்பாள் நர்மதா. அவன் தயவு அவர்களுக்கு வேண்டி இருந்தது. பெரிய பெரிய புள்ளிகள் அவனுக்கு இநேகம். அவர்களின் வீட்டில் சமைக்க பொரிசு செய்து அனுப்புவான்.
"நீயும் கூட. ப்போயேன் நர்மதா எண்பான் சாயிராம் "

எல்லாங்கிடக்க அவன் எதுக்கு.."

"வரட்டும் மாமி! நாறு பெரிய மலுஷஞான் தெரிஞ்கண்டா நல்லதுதாவேt''

அவ எந்த மனுஷாளையும் தெரிஞ்சுக்க வாண்டாம் "

நர்மதாவுக்கு சினிமா என்றால் உயிர். ஓசிப் பாஸ் கொண்டு வந்து கொடுப்பான் சாயிராம்.

ஒரு தடவை வெங்குலட்சுமி தலையில் மடேர் மடேர் என்று போட்டுக் கொண்டு ஊமை அழுகையாக அழுதாள்.

"பாவிப்பெண்ணே! உடம்பும்,நீயும் செதுக்கின பொம்மை மாதிரி இருக்கியே. அதைப்பாத்துட்டு அவன் இளிச்சிண்டு இளிச்சிண்டு வராண்டி. ஏமாந்துடாதேடி சினிமாவும் வேண் டாம். இனிமே அவன் பாஸ் குடுத்து நீ போனே..."

நர்மதா பயத்துடன் தாயைப் பார்த்தாள்.

'நான் ஒரு முழம் கயித்துலே தொங்கிடுவேன்-" என்று முடித்தாள் வெங்குலட்சுமி.

இதெல்லாம் என்னம்மா அமர்க்களம்? சினிமாவுக்குப் போனால் என்னவாம்?" என்றான் நர்மதாவின் அண்ணா கிச்சாமி.
.
போவேடா! நீ ஒலகத்தாரைப்போல கல்யாணம் கார்த் தீன்னு பண்ணின்டு போறே. இவளுக்கு ஒரு வழி பொறக்க வாண்டாமா?"

தங்கையின் அழகை முதலாக வைத்து கிச்சாமியும், அவன் மனைவியும் தங்கள் சினி மா அபிலாஷைகளை பூர்த்தி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சிச்சாமி சாயிராமின் பர்ஸில்சினிமா பார்க்க முடியவில்லையே என்று வருந்தவில்லை. எப்படியோ அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

வெங்குலட்சுமி எங்கேயோ க்ஷேத்ராடனம் கிளம்பிப்போனாள். பத்து நாளைக்கு ஹாய்யா பகவத் தரிசனம் பண்ணிண்டு 'இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பிடர் என்று கடவுளை வேண்டிக்கொள்ளக் கிளம்பிவிட்டாள்.

திரும்பி வரும்போது தான் கங்கம்மாவை ரயிலில் சந்தித் தாள். முதலில் அவள்தானா என்பதே சந்தேகமாக இருந்தது. ஒடிசலாய் இருந்தவள் சதை போட்டிருந்தாள். விதவைக் கோலம் வேறு. பட்டுச்சுங்கடிப் புடவை, நவரத்தினமாலை, புதையப்புதைய தங்க வளையல்கள் என்று அமர்க்களமாக இருந்தாள் கங்கம்மா. "நீங்க எந்த மட்டும்?" என்று கேட் டாள் கங்கம்மா. குரலும் கங்கம்மா குரல்தான்; ஒரு மாதிரி ''கீச் கீச்' சென்று

"நீங்க... கங்கம்மா இல்லே?'

ஆமாம். நீ வெங்குதானே? அப்பவே நெனச்சேன். இந்த மாதிரி பரங்கிப்பழம் போல ஒரு சிவப்பை நான் அப்புறம் யார்கிட்டேயும் பார்க்கலை."

இருவரும் நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள்.

"சிவப்பாவது மண்ணாவது! எல்லாம் போச்சு. அவர் போனப்பறம் எத்தனையோ திண்டாட்டம். கிச்சாமியைத் தான் உனக்கு தெரியுமே. சரியாப்படிக்காம இப்ப பலகாரம் போட்டு டவுன் ஸ்டால்லே கொண்டுபோய் விக்கறான். அவ னுக்குக் கல்யாணம் ஆயிடுத்து. எம் பொண் நர்மதாவை நீ பாத்திருக்கமாட்டே...'

"பொண் பொறந்துதா?"

பொறந்து, சாறகாலத்துலே எங்கழுத்தை அறுத்துண்டு இருக்கு-'

''சீ..சீ அப்படியெல்லாம் பேசாதே. படிக்க வக்கிறது தானே. வேலைக்குப்போயி சம்பாதிச்சுட்டுப்போறா-''

"படிப்பு ஏறினாத்தானே? கதை புஸ்தகம் தான் படிப்பர் அதுவும் சினிமா கதை புஸ்தகம். நன்னா சினிமா பார்ப்பா"

கங்கம்மா சிரித்துக் கொண்டாள்.

"இப்ப யார்தான் சினிமாவுக்கு போகாம இருக்கா? அதை விடு. நான் உன்மாதிரி இல்லை. வசதியா இருக்கேன். நீதான் ரெண்டாந்தாரமாபணக்காரனுக்குவாழ்க்கைப்படறதைவிட பால்யமா இருக்கிறவனுக்கு மொதல் தாரமா வாழ்க்கைப் பட்டே வறுமை, இல்லாமைன்னு அனுபவிக்கிறே. நான் அப்படியில்லே. அறுபது வயசுக்காரருக்கு மூணாந்தாரமா கமுத்தை நீட்டினேன். ஐஞ்சாறு வருஷம் வாழ்ந்திருப்பேன். வாழ்க்கைனு என்ன அனுபவிச்சேன்? ஒன்னுமே இல்லை. அவர் தெருக்குறட்டிலே படுக்கையும், நான் கூடத்து உள்ளே படுக் நையுமா கழிஞ்சுது. எனக்கு உடம்புக்கு தேவைங்கற ஆசை இல்லை ... நகை நட்டு, பூமி காணிங்கற ஆசைதான் அதிகம், இரண்டு தாரங்களும் கழட்டி வச்சுட்டுப்போன நகைகளை அப்படியே எடுத்து எங்கிட்டே குடுத்தார். எங்கேட்டேர்ந்து ஒண்ணையும் எதிர்ப்பார்க்கலை.'

வெங்குலட்சுமி ஆச்சர்யமாக கங்கம்மாவைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

"வயசுக்காலத்துலே தனக்கு சிச்ருஷை செய்ய பெண் டாட்டின்னு ஒருத்தி இருந்தாத்தான் ஊருக்கும், தர்மத்துக் கும்பயந்து நடப்பான்னு என்னைக்கல்யாணம் பண்ணிண்டா ராம். வாய்க்கு ருசியா சமைச்சுப்போட்டேன். கம்பீரமா அவ்ளோ பெரிய வீட்டுலே மகாராணி இரும்புச்சாவிகள் குலுங்க வளையவந்தேன். நெல்லும், வாழையும், பலாவும், மாவும் கொட்டிக் கிடக்கிற வீட்டிலே நடந்து வளைய வறதே ஒரு பாக்கியமா பட்டுதுடி வெங்கு. நான் என் பொறந்தாத் துலே பாதி நாள் பட்டினியர் இருந்தவ. இப்படி அஷ்டலட் சுமிகள் நர்த்தனமிடும் வீட்டிலே நான் மகாலட்சுமியா இருந் தேன். அவர் நன்னாந்தான் இருந்தார். திடும்னு உடம்புக்கு முடியாமப் போயிடுத்து "கங்கம் மா! உன் மாதிரி ஒரு திட வைராக்கிய சாலியை நான் பார்த்ததில்லை. சரீர சுகம்தான் பிரதானம்-ஏன் அது இயற்கையானதும் கூட என்று நினைக் கிற பால்ய வயசு உனக்கு. அந்த ஆசைகளை பொசிக்கிண்டு றேழு வருஷமா நீ நெறஞ்ச மனசோட எங்கிட்டே ருக்கியே"ன்னு அழுதார். வேண்டிய பணம காசு இருக்கு இஷ்டபடி இருக்கலாம்"ன்னு வேற சொல்லிட்டுப்போனார்.

ரயில் ஏதோ ஒரு ஐங்ஷனில் நின்றது. மேலே பலகையில் படுத்திருந்த பையனை கங்கம்மா எழுப்பினாள். பையன் பூஞ்சை யாகஇருந்தான். "போயி, நாலு பொட்டலமும், காப்பியும் வாங்கிண்டுவாடா..." என்று வெள்ளிக்கூஜாவைக் கொடுத்து அனுப்பினாள். "என் தம்பி... எங்கம்மா அப்பாவுக்கு நான் மூத்தவ. இவன் கடைசி. இவன் பொறக்கறத்துக்கு முன்னா டியே நீ ஊரை விட்டுப்போயிட்டே. "

"படிக்கிறானா?"

"ஏதோ படிச்சான், சிலபேருக்கு எங்கே படிப்பு ஏர்றது, என்னோட துணையா இருக்கான். என் சொத்தையெல்லாம் யார் ஆளப்போறா, அவனுக்குத்தானே?...'

வெங்குலட்சுமி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

சினிமா பாஸ் கொடுத்து அவளை வளைக்கப்பார்க்கும் சாயிராம். எதிர் வீட்டு காலேஜ் பையன் வீசும் கண் வீச்சு. கல்யாணமான பக்கத்து வீட்டுக்காரர் 'அடியே நர்மதா! இங்க சித்தே வந்துட்டுப்போயேன். மாமி ஒண்டியா அடுப்ப டியிலே கஷ்டப்படறா பாரு. தொட்டில்லே குழந்தை கிடந்து கத்தறது பாரு என்று விடுக்கும் அழைப்பு. அவர் மனைவிக் குத்தெரியாமல் வாங்கி வந்து கொடுக்கும் மல்லிகைப்பந்து.

“ஏதுடி இவ்வளவு பூ?"

அவள் விழித்திருந்தாள்

"பக்கத்து வீட்டு மாமா வாங்கிக்கொடுத்தார்"

"அவர் ஏண்டி உனக்கு பூ வாங்கித்தரனும்? அப்படி யெல்லாம் வாங்கப்படாதுடி. "

"வாங்கிண்டா என்ன? அவர் ஆசையா வாங்கிண்டு வந்து குடுக்கறார். மாமிக்கு சொல்லாதே. என்னைக்கொன்னுபுடு வாங்கறார். நான் ஏன்சொல்லப்போறேன்மாமான்னுட்டேன். நீதான் ஒரு முழம் பூ வாங்கி எனக்கும் மன்னிக்கும் கிள்ளிக் குடுக்கிறியே" தலை நிறைய பூ வைத்துக்கொள்ளும் ஆசையில் இந்தப்பாவிப் பொண் ஏமாந்துட்டு நிக்கப்போ றதே" என்று எத்தனை நாளைக்கு மருக முடியும்?

கங்கம்மா கூடையிலிருந்து பழங்களை எடுத்து வைத்தாள். தம்பி வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள்.

"என்ன வெங்கு! ரயில்லே ஒண்ணும் சாப்பிடமாட்டியா? மடி ஆசாரமெல்லாம் வச்சுண்டு இருக்கியா?"

"சே...சே...அதெல்லாம் ஒண்ணும் இல்லேடி.'

“அப்ப சாப்பிடு..."

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். மெதுவாக வெங்கு லட்சுமியே பேச ஆரம்பித்தாள்.

நர்மதா ஒருத்திதான் தனக்குப் பாரமாக இருப்பதாகச் சொன்னாள். பெண்ணின் அழகைப்பற்றி வர்ணித்தாள். அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்து விட்டால் வேறு எது வும் தனக்குத்தேவையில்லை என்று பேசினாள்.

பட்டப்பா அவசர அவசரமாகத்தின்று விட்டு காப்பியைக் குடித்தான். அழகான பெண் என்று காதில் விழுந்ததும் அக்கர்வையும், வெங்குலட்சுமியையும் மாறி மாறிப் பார்த்தான்.

ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வருவதாகவும் கங்கம்மா சொன்னாள்.

பெண் பார்க்க வந்த அன்றே கங்கம்மா தன் பணப்பெரு மையைப் பறைசாற்றிக்கொண்டாள். தட்டு தட்டாகப் பழமும் புஷ்பமும், உயர்தரமான ரவிக்கைத் துண்டும், எட்டு குடுத்தனங்களும் மூக்கில் விரலை வைத்தார்கள். சட்டென்று திருநீர்மலையில் கல்யாணமும் ஆயிற்று. செலவெல்லாம் கங்கம்மாவினுடையது. பெண் வீட்டார் கைகளை வீசிக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.

சாயிராமும் வந்தான். பட்டுப்புடவையும், ப்ளவுஸும் ஆசீர்வாதம் பண்ணினான். "மாப்பிள்ளை சார்!. நீங்க கொடுத்து வச்சவர் பூஜை பண்ணியிருக்கனும் எங்க நர்ம தாவைக் கல்யாணம் பண்ணிக்க. கொஞ்சம் விட்டுக்கொடுத் திருந்தா அவளைப்பெரிய ஹுரோயின் ஆக்கி இருப்பேன்... ஹும்..." என்று நெடிய மூச்சு விட்டான்.

உண்மையிலேயே அழகியான நர்மதா அந்த அழகைத் தான் ஆராதிக்கப் போகிறான் என்று பகலெல்லாம் கனவில் லயித்திருந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை. அந்த வயதுக்கே உரிய போக்குதான் அது.
---------------------------

அத்தியாயம் 4

கூடம் பூராவும் பூ மணந்தது. தட்டு நிறைய ஜாதி மல்லிகை அரும்புகளை வைத்துக்கொண்டு நெருக்கமாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டுப் பூரணி. தூக்கம் கலைந்து எழுந்துவந்த நர்மதாவைப் பார்த்து அவள் விஷமமாகச் சிரித்துக்கொண்டே, "என்ன இன்னிக்கே இப்படிப் பகல்லே தூங்கறே!" என்று சேட்டாள்.

நர்மதாவுக்கும் அவள் கேள்வி புரிந்தது. அவளும் வெட் கத்துடன் சிரித்துவிட்டு கொல்லைப்பக்கம்போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். லேசாகப்பவுடர் போட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டாள்.

"காப்பி சாப்பிட்டுட்டு வா. தலை பின்னி பூ வைக்கிறேன். ராத்திரி அசட்டுப் பிசட்டுன்னு இருக்காதே உம் போ" என்றாள் பூரணி.

"என்னது..." என்றாள் நர்மதா.

"என்னதா? ஒன்றும் தெரியாதமாதிரி"

இருவரும் சேர்ந்தே சிரித்தார்கள். அதற்குள் பூரணியைத் தேடிக்கொண்டு அவள் கணவன் பாலு வந்தான். சாப்பாட்டுக்கு 'பாக்டரி' யிலிந்து லேட்டாக வந்திருக்கிறான்.

ஆள் நல்ல உயரம். வாட்டசாட்டமான தேகம்.அரும்பு மீசை. சுருட்டை கிராப் இத்யாதி.

அவன் மனைவியைப் பார்த்துக்கொண்டே ஓரக்கண்ணால் நர்மதாவை அளந்தான். தலையிலிருந்து படிப்படியாக அவன் பார்வை மார்பில் இறங்கி அங்கே நிலைத்து நின்றது.

பூரணி இதை கவனித்து விட்டாள்.

"நர்மதா? இவர்தான் எங்காத்துக்காரர்"

சட்டென்று நர்மதா குனிந்து அவரை நமஸ்கரிக்கவும், 'ஓ ஹோ! பட்டப்பாவின் மனைவியா?" என்று கேட்கவும் சரியாக இருந்தது.

த்தோ வந்துட்டேன், கங்கம்மமா பூக்கட்ட கூப்பிட்டா" என்ற டி. பூரணி கிளம்பும்போது கங்கம் மாவே அடுக்களையிலி ருந்து வெளியே வந்தாள்.

"இங்கதான் சாப்பிடறது. பட்டப்பா கல்யாணத்துக்கு தான் நீ வரலை. இங்கே சாப்பிடேன். இலைபோடுடி நர்மதா '

இலை போட்டாயிற்று. நர்மதாவே சாப்பாடும் போட்டாள்.

இப்படி வாழைத்தண்டு மாதிரி கைகளா? நீண்ட நீண்ட விரல்களா? நெற்றியிலே தவழும் கூந்தலா? அதிர்ஷ் டம் சிலபேரை எப்படி வளைச்சு பிடிக்கிறது பார்த்தியா? இத்த நோஞ்சான் பட்டப்பாவுக்கு இப்படி வெண்ணெய்ச் சிலை மாதிரி வழ வழன்னு ஒரு மனைவி கிடைச்சிருக்காளே'

"சரியாச் சாப்பிடுங்கோ. பாயசம் எங்கயோ ஓடறது"

பூரணியின் குரலில் கடுமை ஏறியது. மனைவியின் கடுமை யான குரலையும், முகத்தையும் பார்த்தவாறு பாலு சாப்பிட்டு முடித்தான். இருந்தாலும், அவன் பார்வை அடிக்கடி நர்மதாவின் பக்கமே சென்றது.

நர்மதா வெற்றிலைத்தட்டில் அழகாக இரண்டு "பீடாக்கள்" செய்து எடுத்து வந்து,

"பூரணி அக்கா! உங்களுக்கும், அவருக்கும்..." என்று கொடுத்தாள்.

இதற்குள் வெளியே போயிருந்த பட்டப்பா ஒரு கட்டு மல்லிகைப் பூவோடு வந்து சேர்ந்தான்.

“பூரணி அக்கா! இந்தாங்க. ஜடை தைக்க”

"யாருக்குடா பட்டப்பா"

அவன் நெளிந்து கொண்டே சிரித்தான்.

ஒண்ணும் தெரியாதாக்கும்” என்றான். "உக்கும்... பாலுவும், பூரணியும் கண் சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள்.

நர்மதா வெட்கத்தால் சிவந்துபோனாள்.

அன்று இரவு எல்லா இரவுகளையும்போல் அல்லாமல் புது மையாக இருந்தது. நிலவு, மலர்கள், சந்தணம் என்று மனசுக்குப் போதையை ஊட்டும் எல்லாமே அந்த அறையில் இருந்தன. ஜன்னல் பக்கமாக வைத்திருந்த கண்ணாடியில் பிறைச்சந்திரன் தெரிந்தது.

அவள் வெகுநேரம் நின்றிருந்தாள். பட்டப்பா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். நர்மதா மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். பாலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பூரணிதான் காலையிலிருந்து "முதலில் பாலைத் தரவேண்டும்" என்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறாளே.

பாலை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டான் அவன்.

ஒரு வேளை உடம்பு சரியில்லையோ? "

"உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா" என்று அவன் நெற்றியில் கை வைத்துப்பார்த்தாள் அவள். அந்த ஸ்பரிசம் கொஞ்சமும் அவன் உடலிலோ, உள்ளத்திலோ சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை.

நர்மதா அலுப்புடன் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அடுத்த வீட்டு மாடியைப் பார்த்தாள். திறந்த மாடியில் பூரணியும், பாலுவும் உட்கார்ந்திருந்தார்கள். பாலுவின் மடியில் அவள் படுத்துக்கிடந்தாள். அந்த நெருக்கம் தரும் சுகத்தில் அவன் மயங்கிக்கிடந்தான்.

"சே! என்ன வந்தது இந்த மனுஷனுக்கு?”

அவன் திரும்பிப் பார்த்தபோது, நர்மதாவும் அவனைப் பார்த்தாள். இருவர் பார்வைகளும் மோதின. அவன் தன் பூனைக் கண்களால் அவளை ஊடுருவிப் பார்த்தான்.

"சரிதான், கல்யாணத்தன்றே அவள் "உன் ஆத்துக்காரருக்குப் பூனைக்கண்ணுடி, ராத்திரியிலே பார்த்து பயந்துக்கப் போறே.. நீ பார்க்கலைன்னு கேட்டது சரியாகத்தான் இருக்கு. இனிமே கண்களை மாத்தமுடியுமா? எப்படியோ இருந்துட்டுப்போகட்டும். அன்பர் இருந்தாச்சரி."

அவள் சிரித்தபடி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பால் கிண்ணத்தை அவனிடம் கொடுத்தபடி, "ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க. எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச் சிருக்கு. பெரிசா, அழகாருக்கு. ஒண்டுக் குடித்தனத்துலே இருந்து அலுத்துப்போச்சு" என்று பேச ஆரம்பித்தாள்.

அவள் அவனிடம் எதிர்பார்ப்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். அலுத்துப்போனவளாக “மணி ரொம்ப இருக்குமே... என்று அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள்.

அப்போது பட்டப்பா. கண்களில் நீர் ததும்ப அவளை இரக்கத்துடன் பார்த்தான்.
அவளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதான்.

"நர்மதா! நீ ஏமாந்துட்டே. எனக்கிருக்கிற பலஹீ னத்தைப்பத்தி உங்கிட்ட சொல்லவே வெக்கமா இருக்கு. பணத்தைப்பாத்து மயங்கி உங்கம்மா உன்னை என் கழுத்தில் சுட்டிட்டாங்க. நீ எங்கேயோ எப்படியோ வாழவேண்டியவ. தைக் காலையிலே எடுத்துப்போய் படி. ராத்திரி ராத்திரி இந்த அறைக்குள்ளே பல ஆசைகளோட வராதே.'

அவள் முன்பாகக் கிடந்த அந்தக் கடிதத்தை அவள் வெறுப்புடன் பார்த்தாள். கணவனும், மனைவியும் முதன் முதலில் சந்திக்கும்போது கடிதம்என்ன வேண்டிக்கிடக்கி கிறது?

மறுபடியும் அவள் அடுத்த வீட்டு மாடியைப்பார்த்தாள்.

பூரணியும், பாலுவும் அறையில் மங்கிய ஒளியில் படுத்தி ருப்பது தெரிந்தது. எத்தனை நெருக்கம்? முடிவற்ற குழப்ப மான சிந்தனைகள் அவளை வாட்டி எடுத்தன. என்ன கடித மாக இருக்கும்? ஒரு வேளை அவன் யாரையாவது காதலித்து இருக்கலாம்.

நீண்டு கொண்டே வந்த இரவு எப்போது தொலைந்தது என்பது தெரியாமல் அவள் தூங்கிவிட்டாள். விழித்தபோது பட்டப்பா அறையில் இல்லை.

முதல்நாள் ஸ்வப்பனபுரியாகக் காட்சிதந்த வீடு இன்று அவள் வரைக்கும் வெறுமையாக இருந்தது.
---------------------

அத்தியாயம் 5

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவளை கங்கம்மா கனிவுடன் பார்த்தாள். தம்பியின் மனைவி. தனக்கு அப்புறம் இந்த வீட்டை நிர்வகிக்கப்போகும் எஜமானி. முத்து முத் தாகக் குழந்தைகள் பெற்று, தன்னை அத்தை" என்று அழைக்க வைக்கும் பெண். அவளை உள்ளம் நலுங்காமல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைபட்டாள். பரிவுடன் சிரித்தபடி, “நர்மதா! மொதல்லெ வாசல்லே ஒரு கை ஜலம் தெளித்து கோலம் போட்டுடு. நீதான் இந்த வீட்டு கிருஹ லட்சுமி. அப்படியொரு சம்பிரதாயம் இருக்கு... இந்தா...” என்று வாளியில் ஜலம் கொண்டு வந்து வைத்தாள்.

நர்மதா கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார் த்தாள். கண் இரப்பைகள் சிவந்து கிடந்தன. பேசாமல் வாளி ஜலத்துடன் வாசலுக்குப் போய் ஜலம் தெளித்து, இழை இழையாகக் கோலம் போட ஆரம்பித்தாள்.

அப்போது பக்கத்து வீட்டு வாசற்கதவு திறந்தது. பாலு பாக்டரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். இவளைப்பார்த்துச் சிரித்தபடி அதுக்குள்ளே எழுந்தாச்சா? பூரணி இன்னும் எழுந்திருக்கலை என்று சொல்லிக் கொண்டே அவளைத் தாண்டி நடந்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நெடிய உருவம். கப்பீரமான உருவம். ஓர் ஆணின் ஆளுமை முழுமையாகத் தெரியும் தோற்றம். இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவள் உள்ளே திரும்பி பட்டப் பாவின் தோற்றத்தையும் நினைத்துப் பார்த்தாள்.

நர்மதா கொல்லைப்பக்கம் போனாள். தோட்டம்பூராவும் எலுமிச்சை, நார்த்தை, மற்றும் மலர்ச்செடிகள் நிரம்பிக் கிடந்தன. கம்மென்று மணம் வீசிக்கொண்டிருந்தது. கிணற் றில் பாறை இடுக்குகள் வழியாக நீர் குபு குபுவென்று கசிந்து கொண்டிருந்தது.

முகம் கழுவினாள். சில்லென்று நீரை வாரி வாரி முக மெங்கும் வழிய விட்டு முதல்நாள் ஏற்பட்ட மன உளச்சலை தீர்த்துக்கொள்ள முயன்றாள். உள்ளே வந்தாள்.

கங்கம்மா சுடச்சுட காப்பி கலந்து எடுத்து வந்தாள் "இன்னும் பால், சர்க்கரை ஏதாவது வேணுமாச்சொல்லு',

"சரியா இருக்கு. நான் இவ்வளவு பெரிய டம்ளரிலே காப்பி சாப்பிடறதில்லை. ரொம்பப்பெரிய டம்ளர்”

"நன்னா சாப்பிடணும். அரை வயித்துக்குச் சாப்பிடறதை இனிமே விட்டுடு. உனக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லை. வீட்டிலே சகல சாமானும் கொட்டி வச்சிருக்கு- சமையல் பண்றேன். நீ கடந்து சஷடப்படாதே. கூட மாட நானே சை பண்ணு போறும். என்ன சமைக்கலாம்?' என்று சொல்லிக் கொண்டே கூடை நிறைய காய்கறிகளை எடுத்து வந்து வைத்தாள்.

கறிகாய், சமையல் என்று எதிலும் பற்று இல்லாமல், 'உங்க இஷ்டம் போல பண்ணுங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிக்கிறதும் பிடிக்காததும் மனசைப்பொறுத்த விஷயம்" என்று ஏதோ பேசினாள்.

"அப்படியில்லைடி நர்மதா! எனக்கு இருக்கிறது ஓரே தம்பி. அவனும் நீயும் சந்தோஷமர் இருக்கிறதுதான் எனக்கு முக்கியம். அவன் கொஞ்சம் அசடு. இந்தக்காலத்து பிள்ளை கள் மாதிரி இருக்க மாட்டான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பொறுத்துண்டு போகணும்."

நர்மதா குனிந்தபடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் முன்னே பின்னே என்றால், புரியமாட்டேன் கிறது. அழகின் பரவலாய், ஒரு ஆடவனை மயக்கும் சக்தி இந்த கண்களுக்கு, அதரங்களுக்கு இருக்கிறது. அவள் படுக் கையில் சாய்ந்து கிடந்தபோதும், ஒருக்களித்து இருந்த போதும் அவன் விலகி விலகி ஒதுங்கிப்போகக்கூடிய அசடனா கவா இருக்கிறான்? ஐயோ கடவுளே! இந்ந அசடை எப்படி சமர்த்தனாக்குவது?”

கங்கம்மா ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டி ருந்தாள். பெரிய அளவில் வெங்கடாஜலபதியின் படம் மாட்டியிருந்தது. மிக சாந்நித்தியமாக இருந்தது அவர் தோற்றம். வெள்ளிக்குத்து விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி இருந்தாள்.

"இந்தப் படம் என் புருஷன் திருப்பதியிலேருந்து வாங் கிண்டுவந்து கொடுத்தார். அவருக்கு ஒரு புள்ளை வேணும்னு ரொம்ப அசை. ஆனா. என்னவோ அவருக்கு சபல புத்தியே இல்லை. நான் ஆசை ஆசையாய் கர்த்திருந்த நாட்களில் அவர் ஏகாதேசி, அமாவாசை என்று சொல்லிண்டு வாசல் திண்ணைக்குப் போயிண்டிருந்தார். நான் அலுப்போடு இருந் தப்ப அவர் ஆசையோடிருந்தார், என்னவோ பொறக்கலை. பொறி இருந்தாத்தான் பிள்ளை பிறக்கும். எத்தனை வயசானா லும் விடாது. எப்படியோ உன் வயத்துலே நாலு பொறந் தாச்சரி.
நீ பிரசவத்துக்கு. உங்க வீட்டுக்குப்போக வேண்டாம். நான் செய்யறேண்டி "

நர்மதா வேதனையுடன் கங்கம்மாவைப் பார்த்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டு மிகுந்த பரவசத்துடன் சுவாமியின் எதிரில் நின்றிருந்தாள். பகவானே! எப்படியும் நீ இந்த பொண்ணுக்கு நாலைஞ்சு குழந்தைகள் அனுக்ரகம் பண்ணனும் என்று கேட்கிற தோரணையில் இருந்தாள்.

ஆஹா! இந்த நம்பிக்கைதான் மனிதனை எப்படியெல்லாம் நடக்க வைக்கிறது? சிந்திக்க வைக்கிறது? செயல்பட வைக் கிறது? மனித சக்திக்கே நம்பிக்கைதான் மூலகாரணமாக இருக்கிறது?

நேற்றிரவில் கணவன் கொடுத்தகடிதத்தை இடுப்பில் சொருகி யிருந்த இடத்தில் தேடினாள் நர்மதர். பத்திரமாக இருந்தது. உறுத்திக் கொண்டேயிருந்தது. உடனே படித்துவிட வேண் டும் என்று மனசைத் துடிக்க வைத்துக்கொண்டு புடவையின் மடிப்பில் ஒளிந்து கொண்டிருந்தது.
ஏதோ பூச்சி ஊர்வது போல் ஒரு சமயம் வேதனையைத் தந்தது. "கடுதாசி யாவது ஒண்ணாவது! தாலி கட்டிய பொண்டாட்டி கிட்டே வாயைத்திறந்து பேசாம கடுதாசி என்ன வேண்டிக்கிடக்கு? எந்த அந்தரங்கமும் அவர்களிடையே அந்தரங்கமாக இருக்க முடியாதே! மனம், வாக்கு, காயத்தால் பிணைக்கப்பட்டவர் களிடையே கடுதாசியாவது இன்னொண்ணாவது?

கறி காயை நறுக்கி வைத்துவிட்டு தயிர்கடைய ஆரம்பித் தாள். வெண்ணெய் திரண்டு பொங்கிவந்தது. அதைவழித்து வெள்ளிக்கிண்ணத்தில் போட்டு சுவாமி கிட்டெ கொண்டு வந்து வைத்தாள் கங்கம்மா.

"சமத்தா எல்லாக் காரியமும் செய்யறே. உங்கம்மா நன்னா காரியம் செய்வா, நன்னா சமைப்பா. ஊறுகாய் போடுவா"

திரும்பத் திரும்ப சமையலும், சாப்பாடும் பற்றியபேச்சு அவலுக்கு அலுப்பைத்தந்தது. எழுந்து வெளியே வந்தாள். பட்டப்பா குளித்துவிட்டுவந்தான். பளிச்சென்று நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணினான்.

"நீ குளிக்கலை"

"இல்லை "

"என்னடா இப்போ குளிக்க அவசரம்?" என்று சொல்லி சுங்கம்மா நர்மதாவுக்குப் பரிந்து பேசினாள்.

நர்மதா குளிக்கப்புறப்பட்டாள். குளியளறைக்கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த கடிதத்தை எடுத்தாள். மேலே இரண்டு குருவிகள் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தன பெண்குருவி நொடிக் கொருதரம் தன் உடம்பைக் கோதிக் கோதி அழகுபடுத்திக்கொண்டு தலையைச் சாய்த்து ஆண் குருவியை 'கீச் கீச்" என்று அழைத்தது. ஆண் குருவி வேக மாக கூடு கட்ட வைக்கோலைத் தூக்கிக்கொண்டு பறந்து வந்தது.

"கீச் கீச்" என்று பெண் குருவி கத்தியது. கூடு கட்டு வதற்காக வைக்கும் புல்லும், வைக்கோலும் கீழே உதிர்ந்து கொண்டிருந்தன. அழகா இருக்கே நீங்க கூடு கட்டற லட்சணம். இந்த லட்சணத்தில் காதல் வேறே" என்று அது "கீச் கீச்" என்று கத்தியது.

ஆண் குருவுயும் பலத்த சத்தத்துடன் "காச் காச்” என்று கத்தித்து.

"ரொம்பத்தான் துள்ளர்தே. உட்காந்த இடத்துலே என்ன அதிகாரம் வேண்டி இருக்கு. காதலியாச்சேன்னு பார்க்கிறேன். இல்லைனா தொலைச்சுப்புடுவேன்.'

பிறகு இரண்டும் சல்லாபிக்க ஆரம்பித்தன.

நர்மதா வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

பெண் குருவியே ரொம்பதுணிச்சலாக நடந்து கொண்டது. அதுவே வலுவில் போய் ஆண் குருவியைச் சீண்டியது. பிறகு இரண்டும் பறந்து போயின.

நர்மதா கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள நர்மதா,

உன்னைப் பார்க்கும்போது மனசில் ஏற்படுகிற பரவசம் அப்படியே தேங்கித் தடைபோட்டதுபோல் நின்றுவிடுகிறது. பிறவியிலேயே ஆண்மையற்ற என்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. ஆசைகளைத் தேக்கி வைத்திருக்கும் உன்னை, கோழையாக்கி ஏமாற்றிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உனக்கு விருப்பமில்லாவிட்டால் என்னை விட்டுப்போய்விடு.

பட்டப்பா

நர்மதா சிலையாக நிள்றாள். மரமாகிப்போனாள். கண்கள் வரண்டு போயின ஆண்மையற்றவன்... ஏன்தான் இந்த ஆண்கள் எதிலுமே இப்படி மெத்தனமாக இருக்கிறார்களோ? பெண்களை குரூரமாக வதைக்கிறார்களோ?

இனிமேல் என்ன செய்யவேண்டும்? புருஷன் உதவாக்கரை என்று இரைந்து சொல்லிக்கொண்டு வாசல்லே இறங்கி நடந்துவிட முடியுமர்? சமையல்காரியின் பெண்ணாகிய தனக்கு கோர்ட்டும், கொத்தளமும் ஏற முடியுமா? இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும்?

"நர்மதா! பூரணி வந்திருக்கா பார். குளிச்சாச்சோ இல்லையோ?" என்று கங்கம்மா குரல் கொடுத்தாள்.

அன்று அவள் அவசரமாகக் குளித்தாள். சோப்பு தேய்த் துக்கொள்ளவில்லை. வாசனை என்ன வேண்டிக்கிடக்கு?

புடவையை அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளை பட்டப்பா ஆவலுடன் பார்த்தான், மனைவி என் கிற முறையில் அவளை சுவாதினமாகப் பார்த்துச் சுவைக்க அவன் காத்திருப்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்.

பூரணி வழக்கம்போல பூச்சரம் கொண்டு வந்திருந்தாள்.

குளியல் என்ன வெண்ணீரிலேயா, பச்சைத்தண்ணியா?'

"நெருப்பிலே'

"சீ பைத்தியம்! உளர்றியே'

"ஆமாம் இப்படி உள்ளே வாங்க"

இருவரும் உள்ளே போனார்கள்.

"ராத்திரி ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தாப்பலே இருக்கே"

"நீ பார்த்தியா என்ன? எங்களையா கவனிச்சிண்டு இருந்தே" என்று கேட்டாள் பூரணி.

ஆமாம்... மத்தவங்களை கவனிச்சுதானே ஆகணும்? இங்கதான் ஒண்ணும் இல்லியே"

"என்னடி சொல்றே"

நர்மதா மிக ரகசியமாகப் பட்டப்பாவின் அலட்சியத் தைப்பற்றி கூறினாள்.

"போடி- மொதல்லே சில ஆண்கள் வெட்கப்படற மாதிரி இருக்கும். நீதான் சரிகட்டணும். மெதுவாக கிட்ட நெருங்கி உம் புருஷனைத் தொட்டுப்பாரு.."

''அவரே என்னைத்தொட்டு அணைச்சுக்கிட்டாரு"

"அப்புறம்?"

"அப்புறம் ஒண்ணுமில்லே. உங்க வீட்டு மாடியைப் பார்த்து உட்காந்து இருந்தேன். அவர் தூங்கிட்டார். நீங்களும், உங்க அவரும் கட்டில்லே ரொம்ப நெருக்கமா...

சீ சீ, மறந்துபோய் ஜன்னலை சாத்தாம இருந்துட்டேன் போல இருக்கு. ராத்திரி முழிப்பு வரும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் எனக்கு. பட்டப்பா ஒருமாதிரிபையன் ஆச்சே. பொம்பளை மாதிரி இருப்பானே...ன்னு நெனச்சுகிட்டேன் என்றாள் பூரணி.

என்ன காரணமேர் நர்மதா பூரணியிடம் பட்டப்பா கொடுத்த கடிதத்தைக்காட்டவில்லை. ஒரு மனுஷன் ஆண் மையற்றவனாக இருப்பதுபற்றி அவள் நடுத்தெருவில் நின்று கூச்சல்போட முடியுமா? வீட்டுக்குள்ளேதான் இரைந்து கத்தி ரகளை பண்ணமுடியுமா?

கடவுளே! இப்படியும் நடக்குமா? எங்கேயோ யாத்திரை போய்விட்டு வந்த அம்மா வரனைத் தேடிப் பிடித்துக்கொண் வந்தாள்.

அவளுக்கு அந்த சாயிராமின் பேரில் சந்தேகம். இவளைச் சுற்றி சுற்றி வருகிறானே. என்னிக்காவது தன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இவளை இழுத்துக்கொண்டு நாலு மாசம் வைத்திருந்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விடுவானே என்று அம்மா மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருந்தாள். வறுமைச் சேற்றில் மலர்ந்த தாமரைப் சாப்பிட்டே பளபளவென்று வளர்ந்து போல பழையது நின்றாள் நர்மதா.

கங்கம்மா இரட்டை வடம் சங்கிலியும், நாலு வளையல் களும், முத்துத்தோடும் எடுத்து வந்து நிச்சயதார்த்தம் நடத் தினாள். வெங்குலட்சுமி நகைகளின் மதிப்பில் மயங்கிப்போ யிருந்தாள். எப்படியாவது சாயிராமின் பார்வையிலிருந்து தப்பி நர்மதா கல்யாணமாகிப் போனால் போதும் என்கிற நிலை.

முதலில் அம்மாவின் பேரில் வந்த ஆத்திரம் படிப்படியா கத்தணிந்தது.
---------------------------

அத்தியாயம் 6

இப்படியே பல இரவுகள் போயின. வெறும் நெருக்கம் தான். வேறே ஒண்றும் இல்லை. அத்துடன் அவன் தூங்கி விடுவான். இவள் தனக்குள் வெந்து கொண்டிருந்தாள். பெருமூச்சுகள் கண்ணீர், விரக்தி என்று அவளை வாட்டி எடுத்தது. புதுச்சேலை கட்டுவதில்லை. அதிகமாய் பூ வைத்துக் கொள்வதில்லை. முகத்திலே ஏக்கம் ததும்பி நின்றது.

ஊரிலிருந்து அம்மா கடிதம் போட்டிருந்தாள்.

"நீ குளிச்சிண்டு இருக்கியா? சமத்தா நடந்துக்கிறியா? அங்கம்மாவின் மனசு கோணாமல் நடந்துக்கோ... நான் முடியறச்சே உன்னை வந்து பார்க்கிறேன். உன் அண்ணாவும் மன்னியும் இப்போ சினிமா பார்க்கிறது அதிகமாயிடுத்து. படத்துக்காவது ஒரு நாளைக்குக் கொறஞ்சது இரண்டு போயிண்டிருக்கா"

நர்மதா கொல்லையில் உட்காரும் போதெல்லாம் கங்கம்மா முகம் சிணுங்கினாள். "ஏழுமலைவாசா! இப்படிஎன்னை சோதிக் றீயே. இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடக்கூடா துன்னு உன் எண்ணமாக்கும்?"

பூரணி மசக்கை என்று சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். கங்கம்மா மாங்காய்த் தொக்கும், மிளகாய்ச் சட்டினியுமாய்ப் பண்ணி நர்மதா விடம் கொடுத்தனுப்புவாள்.

"பாத்துக்கோ! அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு வரு ஷம்தான் ஆச்சு. அவள் சமத்தைப் பாத்துக்கோ... அவளண் டைகேட்டுத் தெரிஞ்சுக்கோடி புருஷன் கிட்டெ எப்படி நடந் துக்கிறதுன்னு அவன் வேணும்ங்கச்சே நீ வேண்டான்னு இருப்பே. நீ வேணுங்கச்சே அவன் வேண்டாம்னு இருப்பான் போல இருக்கு. ஏறக்கொறைய எங்கதைதான்... பண்ணின
பாவம். என் தலைலே இப்படி விடிஞ்சிருக்கு'

நர்மதா பூரணியிடம் நாத்தனார் பேசுவதைச் சொல்லி அழுதாள்.

"சீ.. சீ... அந்த அம்மாவுக்கு நீ இன்னும் 'உண்டாகலை' யேன்னு இருக்கு. கல்மிஷமில்லாத ஜன்மம். தப்பா எடுத்துக்காதே"

பாலு வழக்கம் போல பகல் சாப்பாட்டுக்கு வரும்போது பூரணி மசக்கை மயக்கத்தில் படுத்திருப்பாள்.

'நீங்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுங்கோ..."

"நீ தயிர் வச்சிருக்கிற இடம், ஊறுகாய் வச்சிருக்கிற ஜாடி, நெய் இதெல்லாம் தேடிண்டு இருக்க வேண்டியிருக்கு ..உன்னாலே முடியலைன்னா எல்லாத்தையும் எடுத்து 'டைனிங்'
டேபிள்ளே வச்சுடறதுதானே?"

"நான் போடட்டுமா பூரணி அக்கா?" என்று நர்மதா கேட்டாள்.

"போடேன்"

பாலு கை கால் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தான்.

நர்மதா பரிமாறினாள். அவன் அவளை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்.

"நீ என்ன சோப்பு 'யூஸ்' பண்றே"

நீ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது

கேமி*

''ஃபாரினா?"

"ஆமாம் அவர் வாங்கிண்டு வந்தார். "

"பேஷ்...அப்படித்தான் இருக்கணும். எஞ்ஜாய் யுவர்ஸெல்ப்”

நர்மதா சோகமாகச் சிரித்தாள். மிளகாய் சட்டினி, தொக்குஎல்லாம் பரிமாறினாள்.

"பூரணி அக்காவுக்காக எங்க நாத்தனார் பண்ணி அனுப் பினது. மசக்கையோன்னோ "

இவளுடைய வெகுளித்தனம் ஊரில் சாயிராமுக்குப்பிடித் திருந்தது. இப்போது பாலுவுக்குப்பிடிக்க ஆரம்பித்திருந்தது.

''உனக்கும் கூடிய சீக்கிரம் மசக்கை வரணும்னு ஆசீர் வாதம் பண்ணவா? இல்லை லேட்டா வரணும்னு ஏதாவது ஃபாமிலி ப்ளானிங்லே இறங்கி இருக்கீங்களா?" என்று துணிச் சலாகக் கேட்டான் பாலு.

நர்மதாவுக்கு வாயைவிட்டு வென்று அழவேண்டும் போல இருந்தது. எப்பவுமே ஃபாமிலி ப்ளானிங்தான்னு கத்தவேண்டும் போல இருந்தது. வெட்கமாக இருந்தது. வேதனையாக இருந்தது. சில விஷயங்கள் நெஞ்சுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளியே வரமுடியாமல் முரண்டு பண் ணும். இந்த விஷயம் அடி வயிற்றிலேயே புகுந்து கொண்டு கிடந்தது.

பூரணி 'ஹோவ்' என்று கொட்டாவி விட்டாள். விரல் களைச்சொடுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பெண் களுக்கு மசக்கை வந்து விட்டால் புருஷனைக் கவனிப்பது குறைந்துவிடும். வயிற்றில் வளரும் சிசுவின்மீதே ஞாபகம். ஆணா, பெண்ணா, கருப்பா சிவப்பா? ரொம்ப வலிக்குமா? கத்த வேண்டியிருக்குமா? என்று பல கேள்விகள். ஆராய்ச்சிகளில் நினைவு மோதிக்கொண்டிருக்கும்.

"சாப்பிட்டாச்சா?" என்று கணவனைக் கேட்டாள்.

'ஓ! உன் சிநேகிதி பரிஞ்சு பரிஞ்சு சாதம் போட்டாள்"

'அப்படியாடி? எனக்கும் கையிலே பிசைந்து போடேன்'

நர்மதாவும், பூரணியும் சாப்பிட்டார்கள்"

"ஏண்டி! ஒரு மாதிரியா இருக்கே”

'ஒண்ணுமில்லே”

"எங்கிட்டே மறைக்கிறே. பட்டப்பா உங்கிட்டே ஆசையா இருக்கானோல்லியோ?"

அவள் மௌனமாக இருந்தாள். பாலு படுக்கையில் படுத்தப்படி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்.

"சொல்லேண்டி... ரொம்ப இளைச்சுப்போயிட்டே"

* போனாப்போறேன். எப்படியோ இந்த உலகத்திலேருந்து போனாச்சரி...

"சீ...சீ...வாயப்பாரு...எங்கிட்டே செல்லேண்டி "

"ஒரு ஆசையுமில்லை,ஒரு மண்ணுமில்லை. கல்லுக்காவது கசிவுஇருக்கும். ஈரம்இருக்கும். இந்த மனுஷன் ஒண்ணும் பிரயோஜனமில்லை."

பாலு தூங்குவதுபோல இருந்தான்.

" அடடா! காட்டிலே காய்கிற நிலாதான்.. அதான் இந்தப்பொண் வாடி வதங்கிப்போயிருக்கு" என்று நினைக்துக் கொண்டான்.

பூரணி திடுக்கிட்டுபோய் உட்கார்ந்திருந்தாள். கள்தான் பல விதங்களிலும் கோளாறுகள் உள்ளவர்கள் என்று தீர்மானித்து இந்தச்சமூகம் அவர்களையே ஏசிக்கொண் டிருக்கிறதே. ஆண்களின் சரீர அமைப்பிலும் எத்தனையே கோளாறுகள் இருக்கக்கூடும் என்பதை வைத்தியர்கள் தவிர மற்றவர்கள் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி சந்தேகப்படுவதுகூடஇல்லை.

கொஞ்சநேரம் அங்கே மௌனம் நிலவியது.

"நான் போயிட்டு வரேன்" என்றபடி நர்மதாகிளம்பினாள்

பாலு அரைக் கண்களால் அவளை முழுமையாகப் பார்த் தான். நன்றாகப் பார்த்தான்.

பூரணிக்கு திகைப்பு அடங்கவே சிறிதுநேரம் பிடித்தது. ரொம்பவும் முன்னேறி விட்டோம். விமன்ஸ் லிப்" என் றெல்லாம் வாய் கிழிய பேசும் இந்த நாட்களில்கூட படித்த பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் என்றால் பூம் பூம் மாடு கள் மாதிரி பிள்ளைவீட்டார் கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, பாடத்தெரியாவிட்டாலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு பெண் சுளுக்குத்தான் துணிச்சல் இருக்கிறது. பாடத்தெரியாது என்று சொல்கிறார்கள்.

நர்மதா பட்டப்பாவிடம் என்ன கேள்விகள் கேட்டிருக்கப்போகிறாள்?

நன்றாக மூன்று வேளைகள் சாப்பிட, விதவிதமான துணி சுட்ட நகைகள் பூட்டிக்கொள்ள வசதியான குடும்பம். பையன் வெளித்தோற்றத்தில் பெண்மைகலந்த ஆணாக இருந் தான். ஆண்மை கலந்த பெண்கள் இல்லையா என்ன? அட் டமும் சட்டமுமாய் உயரமாய் எத்தனை பெண்கள் ஆண்களை மிஞ்சிய ஆண் தோற்றத்துடன் இல்லை. அப்படி ஆணும் பெண்களைப்போல இருக்கிறான்.

இனிமேல் இந்தப் பொண்ணுக்கு விடிவு காலம் ஏற்படப் போறதா? எப்படி? இவனை விட்டு விட்டு ஓடிப்போவதா? வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதா? அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? கழுத்திலே தாலியும், காலிலேமெட்டியும் குலுங்கினால்கூட அந்தப்பெண் வேறு இடத்தில் ஓதுங்கினால் 'சைட்' அடிக்கிற காலம் இது.

ராமராஜ்யமா பாழாய் போகிறது?

பூபாணி குலுங்கி அழுதாள். பல விதங்களில் வெள்ளைக் காரர்கள் தேவலை. உண்டு இல்லை என்று கத்தரித்துக்கொள் வார்கள். இங்கே தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு என்று பிரத்யேசமாக விதிக்கப்பட்ட ஸ்திரீ தர்மம். இதன் பெயரில் இதன் நிழலில் எண்ணற்ற கொடுமைகள் பெண்களை எதிர் கொள்கின்றன.

பாலு இப்போது நன்றாக விழித்துக் கொண்டான். அவன் சாப்பிட்டு அரையோ முக்கால் மணியோ ஆகியிருந்தாலும் "பாக்டரி" க்குக் கிளம்புமுன் சூடாகக் காப்பி சாப்பிட
வேண்டும்.

பூரணி பொன் நிறத்தில் நுரை தளும்ப காப்பியை ஆற் றியபடி. முத்து முத்தாக வியர்க்கும் வியர்வை நெற்றியுடன் அவனிடம் காப்பி தரும்போது அவன் அவள் அழகில் லயித்துப் போவான். லேசாக 'சென்ட்" கமழும் கை குட்டையால் வியர்வையை ஒற்றி விடுவான். கன்னத்தைக் கிள்ளுவான். இன்னும் இத்யாதி இத்யாதி.

இன்று பூரணி கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தாள்.

பாலு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். உடுத்திக்கொண்டான்

"காப்பி டியர் "

"காண்ட்டீன்லே சாப்பிடுங்கோ. எனக்கு உடம்பு சரியில்லே "

"சிநேகிதியோட பேசிண்டிருக்கச்சே நன்னாத்தானே இருந்தே. கமான்! நீ போடற காப்பிதான் வேணும்”

"என்னாலே முடியாது முடியாது இதென்ன நொள்ளை அதிகாரம்?

பொம்மனாட்டினா புருஷன் அதிகாரம் பண்ணித்தான் தீரணுமா? ”

"காப்பி கேட்டால் அதிகாரமா? ப்ச்... உனக்கு 'மூட் அவுட் நீயும் உன் சிநேகிதியும் பேசின ரகசியம் எனக்கும் கேட்டுது, பட்டப்பா ஈஸ் நாட் பிட் இனப்”

''ஐயோ, ஐயோ! இரைஞ்சு பேசாதீங்கோ. நர்மதா வந்து தொலையப்போறா...பாவம்,"

” என்ன பாவம்? போடா முண்டம். என்று விட்டு வெளியே நடக்கட்டும். இஷ்டமானவனோட இருந்துட்டுப் போறா ...”

''என்ன? என்ன? இஷ்டமானவனோட இவள் இந்த முண் டம் கட்டின தாலியோட இருந்துட்டுப் போகட்டும்.. எத்தனை நாளைக்கு, எத்தனை மாசம், எத்தனை வருஷங்களுக்கு? அப்புறம்?- ”

பூரணியின் கண்களில் ஆத்திரம் கொந்தளித்தது.

விவாக பந்தத்தில் தோற்றுவிட்ட ஒரு பெண்ணின் எதிர் காலம் எத்தனை இருள் சூழ்ந்ததாக இருக்கிறது? அவள் தன் நியாயமான ஆசைகளை கருக்கிக்கொண்டு படித்து வேலைக்குப் போய்ப்பிழைத்துக் கொண்டால், ஒரு வேளை இந்த சமூகம் பாலு சொல்வதைப் போல
ஒத்துக் கொள்ளலாம். இருப்பதை...

"காப்பி நான் போடறேன்" என்று பாலு காஸைப் பற்றவைத்தான். பாலைச்சுட வைத்து இரண்டு தம்ளர்களில் காப்பி எடுத்து வந்தான். கோபப்பட்டு சிவந்துபோயிருந்த மனைவியை பரிவுடன் அணைத்தவாறு காப்பியை அவளிடம் கொடுத்தான். இருவரும் சிரித்தார்கள்.

அன்று அரைநாள் "பாக்டரி” க்கு மட்டம். வாசலில் நிழல் தட்டும் போதெல்லாம் அவன் நர்மதாவை எதிர் பார்த்தான்.
--------------------

அத்தியாயம் 7

மாலை நான்கு மணிக்கு பட்டப்பாவும், நர்மதாவுமே வந்தார்கள்.

"அக்கா எங்களை சினிமாவுக்குப் போகச்சொன்னா என்றான் பட்டப்பா.

"நல்ல காதல் சினிமாவா கூட்டிண்டு போ..." என்றான் பாலு.

"காதல்லே நல்ல காதல், கெட்ட காதல்னு இருக்கா என்ன? ஓண்ணு காதல்னு இருக்கு, இல்லை காமம்னு கேட்டிருக் கேன். முந்தினது உயர்வானது. பிந்தியது மட்டமானது" பூரணி சிரித்தபடி சொன்னாள்.

”இப்ப சினிமாவிலே காதல் வரதில்லை. காமம்தான் ஜாஸ் இயா இருக்கு. அதுவும் ஆண்கள் கற்பழிக்கவே - அந்த ஒரு காரணத்துக்காகவே பிறந்தமாதிரி - பிறந்தவர்கள் என்கிற நிலையில், 'ரேப்' காட்சிகள் இல்லாமல் சினிமா இல்லை. நடிப் பாக இருந்தாலும் அந்தக் காட்சிகளில் எனக்கு வருத்தமாக இருக்கும். கடவுள் பெண் வர்க்கம் என்று ஒன்றை ஏன் திருஷ்டி செய்தான் என்று நினைப்பேன். பொம்மனாட்டியை மிகவும் கேவலப்படுத்தற மாதிரி சம்பந்தமில்லாம இந்தக் கண்றாவியைப் பார்க்க வேண்டியிருக்கு திரும்பவும் படபட வென்று பேசினாள் பூரணி.

பேச்சிலே அவள் ரொம்பக்கெட்டிக்காரி. நர்மதா அசந்து போய் நின்றாள்.எந்த விஷயத்தையும் லஜ்ஜைப்படாமல், வெகுளித்தனமாய் அவள் பேசுவதை ரசித்தாள்.

"நீங்களும் வாங்கோ” என்று அழைத்தாள் நர்மதா.


"நீ போடி... நாங்க எதுக்கு? ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ஞ்சு ஒரு பிள்ளை பெத்துக்கப்போறேன். கொஞ்சம் நிம்மதியா படுத்துத்தூங்கணும். இவர்காப்பி காப்பின்னு எடுத்துட்டார். நீ ஜாலியா போயிட்டு வா'

"நீங்க வாங்களேன் சார்" பட்டப்பா பேசினான்.

"போயிட்டு வாங்க... கொஞ்சம் அவாளைத்தனியா விட் டுட்டு உட்காருங்கோ"

சினிமா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ஒரு வரிசையில் கடைசியில் ஒரு சீட் காலியாக இருந்தது. பின் புற வரிசையில் இரண்டு 'சீட்'கள் இருந்தன. முதலில் பட்டப்பாவும், நர்ம தாவும் பின்புற வரிசையில் உட்கார்ந்தார்கள். கடைசி சீட்' காலியாக இருந்ததில் பாலு உட்காரச் சென்றான். அந்த வரிசையில் பெண்களே இருந்ததால் இவன் வருவதை அவர் கள் விரும்பவில்லை. ஆகவே, நர்மதா அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்தாள். தனியாக உட்கார்ந்திருக்க நர்மதா வுக்கு என்னவோபோல் இருந்தது.

விளக்குகள் அணைந்தன. படம் ஓட ஆரம்பித்தது. வழக் கமான 'டூயட்'. ஓடிப்பிடித்தல், அனைத்தல். பின்புறமிருந்து ஒரு கை இருட்டில் அவள் தோளைத்தொட்டது. நர்மதா புல் லரித்துப்போனாள். கணவன்தான் என்று நினைத்தாள். அந்தக் அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியை வருடிக் கொடுத்தது.

பிறகு சிறிதுநேரம் ஒன்றுமில்லை. திரும்பவும் தன்னை அந்தக்கரம் தொடவேண்டும் என்று ஏங்கினாள் அவள்.

இடைவேளையின்போது 'சீட்டில் பட்டப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். இவளைக் குறும்புடன் திரும்பிப் பார்த்த பாலு "கூல் ட்ரிங்ஸ்' சாப்பிடறியா?" என்று கேட்டான்.

நர்மதா குழப்பத்துடன் தவித்தாள். கணவன் தூங்குகிறான். “உம்” என்று தலையை ஆட்டி வைத்தாள். இதற்குள் பட்டப்பா விழித்துக்கொண்டுவிட்டான்.

"ரொம்ப நாழியா தூக்கமோ?"

என்னவோ அப்படி அசந்து போச்சு...எனக்கு இதெல்லாம் பிடிச்சிறதேயில்லை. அக்கா தொத்தரவு பிடிக்காம வந்தேன்' என்றான் மனைவியிடம்.

'இருட்டில் தன்னைப்பரிவுடன் தொட்ட அந்தக்கை பாலு வினுடையதா? என்ன தைரியம் இருந்தால் இப்படித்தொட முடியும்? தொட்டா என்ன? எத்தனை நாளைக்கு இப்படி கரு கிண்டுஇருக்கிறது? அந்த சாயிராமே தேவலை. அவர் பேச்சைக் கேட்டுண்டு சினிமாவிலே சேர்ந்திருந்தா எத்தனை பெரிய நடிகரெல்லாம் என்னைத்தொட்டிருப்பா.."

மறுபடியும் இருட்டு. இப்போ முதல் இரவு, வழக்கம் போல் பால் பழம். கஷ்டம் கஷ்டம். இதெல்லாம் காண்பிக் விட்டால் என்ன தலையா வெடித்து விடும்? பல வீடுகளில் இதெல்லாம் இப்போது கிடையாது. மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுகிறான். நர்மதா சலித் துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்களும் இதை விரும்பவில்லை. 'நம்பப் பெண்ணுகூட உட்காந்து சினிமா பாக்கமுடியலை இப்போ. மானம் போவுது...' என்று ரகசியக் குரலில் ஆங்காரமாகப் பேசினாள் அந்த மூதாட்டி.

முதல் இரவில் ஆரம்பித்த காட்சிகள் படிப்படியாக மனைவியைக் கொடுமைப் படுத்துவது வரையில் நீண்டன.

"என்ன கதைன்னு சினிமா எடுக்கிறான்கள்? ஒண்ணு காதலும் ஊதலும். இல்லைன்னா பொம்மனாட்டி பிழியப் பிரிய அழுதுண்டு நிக்கணும். அதைப்பார்த்துட்டு நாம்பளும் அழணும். ஆதியிலே சீதை, திரௌபதி அழுதது போறலை. ன்னி வரைக்கும் நாமும் அழணும்னே கதை எழுதி படம் டுக்கிறாங்க...'' மூதாட்டியே பேசினாள்.

பாலுவுக்குப் படத்தைவிட நர்மதாவே சுவாரஸ்யமாக இருந்தாள்.

அவள் தலையிலிருந்து கட்டு மல்லிகை கும்மென்று மணத்தது.

"பட்டப்பா! உம் பெண்டாட்டி ரொம்ப அழகுடா என்றான், அவனை ரகசியமாகக் கிள்ளியபடி.

"அப்படியா?''

"அப்ப உனக்கு ஒண்ணும் தெரியலையா? ஆறு மாசத்துக் குமேலா அவளோட குடித்தனம் நடத்தறே. இந்த மாதிரி அழகு தெய்வத்தைக் கீழே நடக்கவே விடக்கூடாதுடா. கையிலே வச்சுண்டு தாங்கணும்...”

"அவகிட்டே நான் ஆசையாதான் இருக்கேன்''

அதற்குமேல் அங்கே அதிகமாகப்பேச முடியவில்லை. கத்தில் எதிர் 'சீட்' பெண்களை ஏதோ ஒரு சாக்கில் காலால், கையால், விரல்களால் தொடவிரும்பும் ஆண்கள். ஒரு பெண் படீரென்று திரும்பி வெடுக்கென்று ஒருத்தனை முறைத்துப் பாத்துவிட்டு தன் பின்னலை எடுத்து முன்னே போட்டபடி 'தூ! மானங்கெட்ட ஜன்மம்" என்று சற்று உரக்கவே முணு முணுத்தாள்.

'திரையில் எத்தனை விகாரமான காட்சிகள் ஓடினாலும் மனதைக்கட்டுப்படுத்தத் தெரியாத விகார வக்ர புத்தி மலிந் தவர்கள்,நாட்டில் மலிவாக இருப்பதே இதற்குக் காரணம் படித்தவள், மிகப்படித்தவள் மாதிரி இருந்த ஒரு அம்மாள், பின்னலைப் போட்டுக்கொண்ட பெண்ணிடம் சொன்னாள்.

பாலுவுக்கு சுரீர் என்றது. நர்மதா மறுபடியும் அந்தக் கரம் தன்னைத் தீண்டவேண்டும் என்று விரும்பி அடிக்கடித் திரும்பிப் பார்த்தாள். பட்டப்பா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் வீடு திரும்பும்போது பூரணியும், கங்கம்மாவும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். கவிந்திருந்த பன்னீர் மரத்தில் வெள்ளை மலர்கள் வாசம் வீசீன. மரத்தில் அடைந் திருந்த குருவிகள் பொழுது விடிந்துவிட்டதாக நினைத்துக் கத்தின.

'அதோ வந்தாச்சு" என்றபடி கங்மம்மா கிளம்பினாள்.

"ரொம்ப சோந்து போயிருக்கே, மோராவது சாப்பிட்டுத் தூங்கு" சொல்லிக்கொண்டே கங்கம்மா தன் வீட்டுக்குள் சென்றாள்.

பூரணி உண்டாகியிருப்பதுபோல் நர்மதாவும் இருக்க வேண்டும் என்று அவள் ஆசைபட்டாள்.

"ஏழுமலையானே! கண் திறடா அப்பா"

மங்கிய நெய் விளக்கின் ஒளியில் ஏழுமலையான் நகைசிந் திக்கொண்டிருந்தான். "ஸ்ரீயக் காந்தாய” என்று கங்கம்மா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் பலகாரம் பண்ணியாச்சு. நீங்க சாப்பிடுங்கோ. நர்மதா ! மறக்காம பாலை எடுத்துண்டு போ..."

படத்தின் முன்பாக சீனியிட்டு, ஏலம் போட்டு காய்ச்சிய நைவேத்தியம் பண்ணிய பால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

நர்மதா கணவனுக்குப் பரிமாறினாள். “நீயும் என்கூடவே உக்காந்துரு" என்று அவளை வற்புறுத்தி தன் பக்கத்தில் உட் காரவைத்துக் கொண்டான்.

"உனக்கு நல்ல புடவையா நாலு வாங்கலாம்னு பார்க்கிறேன். காஞ்சீபுரம் போய் பட்டுப் புடவைகளா வாங்க லாமா, இல்லை இங்கேயே வாங்கவா” என்று கேட்டான் பட்டப்பா.

"எனக்குப் புடவை வேண்டாம்."

"ஏன்?"

“இருக்கிற புடவைகளே பீரோவிலே மக்கிண்டு இருக்கு. மேலே மேலே வாங்கி மக்க வைக்கணுமா?"

பட்டப்பா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

அளவற்ற சேர்கம், ஏமாற்றம் அந்த முகத்தில் அப்பிக் கிடந்தது. “இப்படியெல்லாம் என்னை ஏமாற்றமுடியாது. இனிமேல் இந்த உலகத்திலே நான் ஏமாறுவதற்கு என்ன இருக்கு? புடவையும், நகையும், வேளாவேளைக்குச் சோறும் வாழ்கையில் நிறைவைத் தந்து விடாது."

நர்மதா கண்கலங்கியபடி எழுந்து விட்டாள்; பாதிச் சாப்பாட்டிலேயே.

"சாப்பிடு நர்மதா...ப்ளீஸ்... உக்காரு. தெரியாமக் கேட் டுட்டேன். உனக்கும் பசிக்கும் நர்மதா. ராத்திரி தூக்கமே வராது..."

அவளுக்குக் கோபம் வந்தது. பரபரவென்று எல்லாவற் றையும் எடுத்து மூடி வைத்தாள். சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியப்பாலை மட்டும் சாப்பிட்டாள். அதில் கொஞ்சம் மீற்றி அவனிடம் கொடுத்தாள்.

"நீ சரியாச் சாப்பிடவில்லையே. பாலையாவது சாப்பிடேன்"

இப்போது இருவரும் படுக்கை அறைக்குள் இருந்தார்கள்.

"பகவானின் பிரசாதம் சாப்பிட்டாலாவது என்னுடைய தகிப்பு அடங்குமோன்னு பார்க்கிறேன்”

பட்டப்பா விக்கித்துப்போய் நின்றான்.

அவனுக்குப் புரிந்தது.

"நர்மதா! உன்னை நான் வேணும்னு ஏமாத்தலை. எனக்கு இப்படியொரு குறை இருக்குன்னு எங்க குடும்பத்திலே யாருக்கும் தெரியாது. வெளியிலே சொல்லக்கூடிய குறையில்லை இது. எனக்கு அம்மா அப்பா இல்லை. அக்கா வீட்டிலே வளர்ந்தேன். பெரிய படிப்பாளியுமில்லை. நிறைய சிநேகிதர்கள் என்கிற வியாபகமும் கிடையாது. பெண்களைக்கண்டால் மனசிலே ஒரு மலர்ச்சி ஏற்படும். அவர்களின் சௌந்தர்யத்திலே ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். சரீர சுகத்திலே திளைக்கவேண்டும் என்கிற நினைப்பே எனக்கு எழவில்லை “

"எனக்கு ஆசை இருக்கிறதே. என்னை அது சுட்டுப் பொசுக்குகிறதே" என்று அவள் அலற நினைத்தாள். ஆனால், தேம்பித் தேம்பி அழுதாள்.

இரவு நகர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

பூரணி பாலுவிடம், "பாவம்! அந்தப் பெண் எப்படி எப் படியோ இருக்க வேண்டியவள். இந்தக் குரங்கிடம் அகப் பட்டு கசங்கறது." என்று சொல்லிக் கொண்டிருந்தாள். பாலு நர்மதாவின் நினைவாகவே இருந்தான். பூரணியின் பக்கத்தில் மிக நெருக்கமாக நின்றாலும், அவள் நர்மதாவைப் போலவே தோன்றினாள்]

திடும்மென்று நர்மதா கேட்டாள்.

“நான் எங்கம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்..."

"சரி .. எம்ப வருவே?

அவள் பதில் பேசவில்லை.

"வருவியா நர்மதா?"

"உம்..."

அவள் இப்போது கண் கலங்கினாள். அவள் திடீரென்றுக் குலுங்கிச்சிரித்தாள்.

"அம்மாவானா ஒவ்வொரு கடுதாசியிலேயும் 'நீ குளிக் கிறியான்னு எழுதிண்டு இருக்கா. உங்கக்கா தினமும் ஏழுமலையானை என் வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகணும்னு வேண்டிக்கிறா .. எனக்கு சிரிப்பா வரது "

"பிள்ளைப்பேறு இந்தக் காலத்துக்கு அனாவசியமா க இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து மனுஷர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்...அவா எதிர்பாக்கறதிலே ஒருதப்பும் இல்லை."

மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம். பட்டப்பாவும் நர்மதாவும் படுத்து விட்டார்கள்.

பாலு பூரணியை நச்சரித்தான்.

"சே... சே... மசக்கையிலே சோறு தண்ணி இல்லாம அவஸ்தப்படறேன். இப்ப என்ன வேண்டிக்கிடக்கு" என்று விட்டு அவள் தள்ளிப்போனாள்.

பொழுதும் விடிந்தது.
---------------------

அத்தியாயம் 8

கங்கம்மா விதவிதமாகப் பலகாரங்கள் செய்து நர்மதா வையும் பட்டப்பாவையும் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

"மசக்கைன்னு பொறந்தாத்துத்குப்போவா. மனே போறே. திரும்பி வரச்சேயாவது.
நீ வெறுமனே போறே. திரும்பி வரச்சேயாவது.... "

நர்மதாவுக்கு கேட்டுக்கேட்டு இந்த வார்தைகள் அலுப்பைத் தந்தன. பூரணியும் இதைக்கேட்டு மனம் சலித்து நின்றாள்.

திடீரென்று வந்து நிற்கும் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் பார்த்து வெங்குலட்சுமி பூரித்தாள். "நன்னாப்பெருத் துட்டேடி. புதுசிலே அப்படித்தான் இருக்கும்... அவன் தான். அப்படியே இருக்கான். அவனுக்கும் சேர்ந்து நீ பெருத்துட்டே"

நர்மதா எப்போதும்போலத்தான் இருந்தாள். மகளின் சோர்வைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அண்ணாவுக்குப் பணக்காரத் தங்கை வந்திருக்கிறாள். அவள் செலவில் நிறைய சினிமா பார்க்கலாம் என்று நினைத் தான். பட்டப்பா உடனே கிளம்பிவிட்டான். அங்கே இங்கே கடன் வாங்கி மாப்பிள்ளைக்கு விருந்து வைத்தாள் வெங்குலட்சுமி.

நர்மதா வந்திருப்பது எப்படியோ சாயிராமுக்குத்தெரிந்து விட்டது.

"என்ன சமர்ச்சாரம்?" என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தான்.

"சொல்லுங்கோ"

"நீதான் சொல்லணும். புதுாச கல்யாணம் பண்ணிண்டு புருஷனோட இருந்துட்டு வந்திருக்கே. புதுப்புது அனுபவங்கள்"

'இந்த அனுபவங்களை அயலானோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் .... சே... என்ன கேவல் மான புத்தி..."

"என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறே? பெரிய பணக் காரியாயிட்டே. அப்படியே தகதகன்னு ஜொலிக்கறே. முன்னே மாத்திரம் என்ன? கொத்திண்டு போற லட்சணம். அடிச்சான் ப்ரைஸ்..."

"நீங்க வெளியே போங்க" என்று சுட்டு விரலை உயர்த்தி அவனுக்கு வாசலைக் காண்பித்து விடலாம். ஆனால், எதுக்கு இந்த அல்பனோட வியவகாரம்? என்று பேசாமல் இருந்தாள்.
"என்ன, வந்ததும் வராததுமா உன்புருஷன் கிளம்பிட்டார்?"

"அவருக்கு ஊரிலே எத்தனையோ ஜோலி..."

"உன்னை விட்டுட்டு"

நர்மதாவுக்கு அதற்கு மேல் கேட்கப்பிடிக்கவில்லை.

"அம்மா' கடைத்தெருவுக்குப் போகணும்னியே"

''அப்ப நான் வரேன்” என்றபடி சாயிராம் எழுந்தான் "உன்னை மறக்கலேடி நான்" என்று கருவிக்கொண்டு போகிற மாதிரி அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே வெளி யேறினான்.

வெங்குலட்சுமி அவள் சமைக்கிற வீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள்.

"இந்த உடம்பைப் பார்க்க எத்தனைபேருக்கு ஆசை? இங்கே சாயிராம். அங்கே பாலு. நடுவிலே தாலிகட்டிய கணவன் ஒன்றுக்கும் உதவாதவன்... ஆண்கள் மீதே பழி தீர்த்துக் கொள்ளலாமா? அவர்களை அணு அணுவாக வதைக் கலாமா? ஆசை காட்டி ஏமாற்றலாமா?" மனம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போயிற்று.

சாயிராமோ. பாலுவோ யாரோடாவது சிநேகிதமாக இருந்து ஒரு பிள்ளையைப் பெற்று கங்கம்மாவிடம் "இந்தாங்கோ உங்க மருமான்...” என்று மடியிலே போட்டு விடலாமா? 'இந்தாம்மா உன் பேரன்" என்று அம்மாவின் மடியில் போடலாமா? தம்பி பிள்ளைன்னு அந்த அம்மாள் சீராட்டிட்டு சாகட்டுமே பெண் ஒழுங்காகப் பெத்தது என்று இந்த அம்மா சீராட்டிப் பாராட்டட்டுமே.

அவள் பாரதம் படித்திருக்கிறாள். “இப்படியும் உண்டா? எப்படி இதை ஒத்துக்கொண்டார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். அந்தப்பெண்களுக்கு ஏற்பட்ட துர்பாக் கியத்துக்கு விடிவு மோட்சம் இருந்தது. அவர்களையும் ஏசுகி றவர்கள் ஏசினார்கள். போற்றினவர்கள் போற்றினார்கள்.

இன்னும் கொஞ்ச நாழி மனசை இப்படி அலையவிட்டால் தானே போய் வலுவில் சாயிராமிடம் சரண் அடைந்து விடு வோம் என்று அவளுக்குத்தோன்றியது. அம்மாவுக்குத்தெரிந் தால் கன்னம் கன்னம் என்று அறைந்து கொள்வாள். 'அடி தட்டுவாணிச் சிறுக்கி! உனக்குப் பழைய புத்தி போகலைடி. பணக்காரனா, சாயிராமவிட சின்னவனா புருஷன் கிடைச்சும் உன் ஈனபுத்தி போகலையே .." என்று மோதிக்கொள்வாள்.

"தேடினியே அழகான மாப்பிள்ளையை. பிணத்தைக் கொண்டுபோய் உடைப்பிலே போடு அதுக்கு மேல் என்ன சொல்லமுடியும்?

நர்மதா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினாள்.

நேராக அம்பாள் சன்னிதிக்குப் போனாள். எந்தக்கஷ்ட மும். குறையும் அம்மாவிடம் சொன்னால் தீர்ந்து போகும். பளு குறைந்துவிடும். என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்கிறதில்லையா? வெறும் அம்மாக்களே குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருக்கிறபோது ஜகன் மாதாவாக உலகத் துக்குத் தாயாக இருக்கிறவள் எப்படிப்பட்ட காருன்ய மூர்த்தியாக இருக்க வேண்டும்?

சன்னதியில் கூட்டமில்லை. ஒற்றை முல்லை சரம் கழுத் தில் துவள, தங்கப்பொட்டு மின்ன, அரக்குப் பாவாடை கட்டிக்கொண்டு பரம சாந்தமாக அவள் நின்று கொண் டிருந்தாள்.

விளக்குக்கு எண்ணெய் விட்டாள். திரியைத் தூண்டி விட்டாள்.

இரண்டு மூன்று சின்னப்பையன்கள் பிள்ளையார் சன்ன தியில் யாரோ உடைக்கிற சிதர்க்காயைப் பொறுக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். குருக்கள் தூணில் சாய்ந்தபடி யாரோடோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

பெரிய மனுஷாளாத்துப் பையன் ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணோட சிநேகமாக இருக்கிற சமாச்சாரமாக இருக்கவே, குருக்கள் உம் போட்டு அக்கறையாகக் கேட்டுக் கொண்டி ருந்தார். நடு நடுவில் "நமக்கேன்யா வம்புன்னு வேறே பேசிக்கொண்டிருந்தார்.

நர்மதா விளக்குச் சுடரில் அம்பாளைத் தீர்கமாகப்பார்த்தாள்.

"அடியே அம்மா! உன்னை எத்தனை தரம் சுத்திச் சுத்தி வந்திருக்கேன். எத்தனை பூ வாங்கிப் போட்டிருக்கேன். நல்ல ஆம்படையானா வருவான் னு இதோ உனக்குப் பூஜை பண்றாரே இந்த குருக்கள் மாமா எத்தனை தரம் சொல்லி யிருக்கா? இவர் சொன்னதும் பொய், நீயும் பொய்*

யாரோ ஒரு பக்தர் பாடிக்கொண்டே வந்தார்.

வந்தெனது முன் நின்று-மந்தாரமுமாக

வல்வினையை மாற்றுவாயே...
ஆரமணி வாளினுறை தாரைகள் போல நிறை
ஆதி கடவூரின் வாழ்வே...
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாணி அபிராமியே..

பூர்விகல்யாணி குழைந்து குழைந்து தென்றலாக வீசியது. அம்பிகை மந்தகாச முகத்துடன் பக்தரைப் பார்த்தாள். நர்மதாவுக்கும் அவளுடைய சிரிப்பு புரிந்தது.

அவர் நகர்ந்தவுடன் மறுபடியும் இவள், "சிரிக்காதே! எதுக்கும் சிரிப்புதான். துன்பம், இன்பம், வாழ்வு, தாழ்வு எதுக்கும் சிரிப்புதான். இப்ப உன்னால நான் பாவம் பண்ணி டுவேனோன்னு பயந்து செத்துண்டிருக்கேன் ஒவ்வொரு நாளும் வெந்து தணியறேன். ஆம்பளைன்னா தேவடியா வீட்டைத்தேடிண்டு போயிடுவான். அதுக்கொரு நியாயம் சொல்லுவான். அவன் மேலே ஒண்ணும் ஒட்டறதில்லையாமே சாஸ்திரம் சொல்றதாம், பொம்மனாட்டி நெருப்பு மாதிரி இருக்கணும்னு... நெருப்பா இருந்தாத்தானே சட்டுன்னு எரிஞ்சும் போயிடலாம்.

நெஞ்சுக்குழி விம்ம விம்ம மனசுக்குள் மனசுக்குள் அறற்றியவள் விம்மி அழுதாள்.

"அழறயா என்ன?”

இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாருடைய நினைவு மளசைப் போட்டு உலுப்பறதோ அந்த சாயிராம் சிரித்துக்கொண்டே எதிரில் நின்றான்.

'இல்லியே. கண்ணிலே என்னவோ விழுந்துட்டாப்பல இருக்கு"

சொல்லிக்கொண்டே தூணில் தூணில் இருந்த குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டபடி வெளியே வந்தாள்.

சுவாமி சன்னதியை அதற்குள் பூட்டி விட்டார்கள். வரும்படி இருந்தால் சுவாமி சற்று நல்ல காற்றை சுவாசிக்க திறந்து வைப்பது வழக்கம். இல்லையெனில் அவரைக் கம்பிக் கதவுக்கு அப்பால் தள்ளி விடுவது.

அப்புறம் சுற்றுக் கோவில்களில் விளக்கே இல்லை. நல்லெண்ணெய் இருபது விற்கிறபோது யார் தீபம் போடப் போறா... ஒண்ணும் தெரியலை. பிள்ளையாரா, தணாக்ஷிணாமூர்த் தியா, துர்க்கையா? எல்லாம் ப்ரும்மம்தான்... என்று ஒரு கிழம் சொல்லக்கொண்டு போயிற்று.

"கொஞ்சம் உட்காருவோமே.." அங்கேயிருந்த கல்லில் உட்கார்ந்தான். அவளும் எதிரில் உட்கார்ந்தாள். இந்த மூக்கும், கண்களும், உதடுகளும் எப்படி இவ்வளவு அளவோடு இவளுக்கு வாய்ச்சுது... என்று அதிசயித்தான் சாயிராம்.

ஆத்துக்காரர் இல்லாம விட்டுட்டுப் போயிட்டான்னு. அம்பாள்கிட்டே சொல்லிண்டு அழுதையாக்கும். எங்கிங்டே மறைக்கிறே...அவன் ஒரு ரசனை கெட்ட ஜன்மம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?"

அவள் கீழேகிடந்த குச்சியால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

"அதானே கோபம்?"

"ஊஹும்...

"பின்னே”

'அவர் எங்க இருந்தா என்ன?""

சாயிராமுக்கு சுவாரஸ்யம் தட்டியது.

"என்ன அப்படிச்சொல்றே. பணக்காரன். கனகாபிஷேகம் பண்ணியிருக்கான். கழுத்திலே, கையிலே, காதுலே பள பளன்னு போட்டுண்டு சாஷாத் அந்த அம்பாளாட்டமா ஜொலிக்கிறே..."

'ஐயோ! என்னைப்போய் அவளோட ஒப்பிடாதீங்கோ... நான் பாவம் பண்ணிய மனுஷ ஜன்மம். வெளியிலே பவித் ரமர் இருக்சிறாப்போல இருந்துண்டு மனசால கெட்டுண்டு இருக்கேன்”

"அப்போ அவனைப் புடிக்கிலையா உனக்கு. ஏத் தவன் இல்லைதான். உனக்கு உனக்குப் புடிச்சவனா என்னை மாதிரி இருந்தா இப்படி தங்கமா இழைச்சுக்க முடியுமா? நல்ல புடவையா வேணா வாங்கித்தருவேன். நகை நட்டு, ஏ அப்பா! இந்த விலையிலே என்னாலே வாங்கிப்போட முடியுமா?"

நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தது.

"நகையும் நட்டும்" என்று முணு முணுத்தாள். அதற்கு மேல் குருக்கள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

கோவில் வாசல்படியில் பூக்காரி இரண்டு முழத்தை வைத்துக்கொண்டு, "வாங்கிக்குடேன் சாமி' என்றாள்.

வாங்கினான். அவளும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.

இருவரும் வெவ்வேறாகப் பிரிந்து நடந்தார்கள்.
-------------------

அத்தியாயம் 9

ஊரில் பட்டப்பாவுக்கு நர்மதா இல்லாமல் ஒன்றும் பிடிக்கவில்லை. அவளை ஏமாற்ற வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. பெண்கள் ரொம்பவும் சரீர சுகத்துக்கு ஏங்க மாட்டார்கள். அவர்கள் கவனமெல்லாம் நகை நட்டு, வீடு வாசல் என்றுதான் இருக்கும் என்பது அவன் கணிப்பு. கங்கம்மா இல்லையோ? அத்திம்பேரும், அக்காவும் ஒரு நாள் உள்ளே சேர்ந்து படுத்திருந்து அவன் பார்த்ததில்லை. அவர் காற்றுக்காக வாசல் திண்ணையோ, மொட்டை மாடிக்கோ போய்விடுவார் அவள் இடுப்பில் சாவிகள் குலுங்க கார்வார் பண்ணிக்கொண்டு வீட்டிலே வளைய வருவாள். அறுவடை யாகி நெல் வந்தால் களஞ்சியத்தில் கொட்டிக்கொட்டி மூடு வாள். பணத்தை எண்ணி எண்ணி பீரோவில் வைப்பாள். ஒவ்வொரு பண்டிகைக்கும் பட்டுப்பட்டாக வாங்கிக் கட்டிக் கொள்வாள், வித விதமாக சமைப்பாள். பலகாரங்கள் செய்வாள். அவ்வளவுதான்.

அத்திம்பேர் பக்கத்தில் வந்தால் கூட அவள் எட்ட நின்றே பேசுவாள். இப்படி ஒரு சூழ் நிலை.

வீட்டிலே பஜனை, பாட்டு என்று அமர்க்களப்படும்... அப்படியே அவள் காலம் போய்விட்டது. கணவன் இருந்த தற்கும், இல்லாததற்கும் அதிகமான வித்தியாசம் எதையும் அவள் உணரவில்லை.

நர்மதா ஒவ்வொரு இரவும் அழுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். பக் த்துவீட்டு பாலுவை ஆவலுடன் பார்ப்பாள். வெறிபிடித்தவள் மாதிரி இவனை இறுக அணைத்துக்கொள்வாள். ஒன்றிரண்டு தடவை என்னை ஏமாத்தறயே . பாவி என்னை ஏமாத்தறயே ஏழைன்னு என் தலையிலே நெருப்பை அள்ளிப் போட்டுட்டுயே நான் வாசல்லே நின்னு சத்தம் போட்டு உன்னை அவமானப்படுத்தறேன்பாரு" என்று ஆங்கார ஹும்காரந்துடன் படுக்கையறையில் அவனை ஒருமையில் ஏசிப் பேசுவாள்.

அவனுக்குப் புரிந்தது; எவ்வளவு பெரிய தப்பு பண்ணி விட்டோம் என்று. அந்தரங்கமாக பாலுவிடம் போய்ச் சொல்லி இதற்கு வைத்தியம் கியித்தியம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தான். போய்ச் சொல்லவும் செய்தான்.

பூரணி எங்கோ போயிக்கும்போது அவன் பாலுவைத் தேடிபபோனான். வெகு நிதானமாக பாலு மாடியில் நாற்காலியில் சாய்ந்தபடி அறைகுறை நிர்வாணப் படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

பட்டப்பாவுக்கு வெட்கமாக இருந்தது.
-
''சீச்சீ என்ன ஸார் இது? கண்டதுகளைப் போய்ப்பார்க் கிறீங்க'

அவன், 'ஓஹ்ஹோ" என்று சிரித்துவிட்டு, "கண்டதா? இதுகான் வாழ்க்கை. உங்கப்பா, உங்க தாத்தா,முப்பாட்டன் எல்லாரும் ரசித்த விஷயம். அவாள்ளாம் கோயிலுக்கு சுவாமி பாக்கவா போனா. இந்த மாதிரி சிற்பங்களைப் பார்க்க்கப்போனா. இப்ப ரொம்ப சௌகர்யமர் "போட்டோ"வா வந்திருக்கு வா உட்கார்ந்து நீயும் பாறேன்'

இதையெல்லாம் பார்க்கறதிலே என்ன புண்ணியம் சார்?

"புண்ணியமாவது பாவமாவது? இன்னும் ரசனையோடு வாழ்க்கையைச் சுவைக்கலாம்'

''எனக்கு ஓண்ணும் தோணலை சார் என் பிறவியே வேறே. இதிலெல்லாம் எனக்கு நாட்டமே இல்லை"

"புரியறது"

"என்ன சார்?"

"உன்னைப்பத்தி புரியறது பாவம்! அந்த அழகானப் பொண்ணை இப்படி ஏமாத்தி இருக்க வாண்டாம் முட்டாள்."

"மருந்து கிருந்து இருக்கா சார்? சாப்பிட்டு பார்க்கிறேன்"

"அதான் போடறானே. முத்து பஸ்பம், தங்கபஸ்பம்னு டிரை பண்ணு "

"பொறவியே இப்படி .."

"அப்ப அவ கழுத்துலே ஏன் சுருக்கு கயிர் மாதிரி போட்டே",

அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். முகம் பூரா வும் வியர்த்து விட்டது. மழ மழ வென்று பெண்மையான முகம்.

"மருந்து சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றேளா?"

"எனக்குத் தெரியாது அப்பா. டிரை பண்ணுன்னேன். இந்த மாதிரி விஷயங்கள்ளே மனசைச் செலுத்திப்பாரு. கோயில் குளம், புராணம், இதிகாசம்னு போயிண்டிருக்காதே. இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போயிடும்"

"அப்ப அவளப்போய் அழைச்சுண்டு வந்துருவா?'

"பேஷா.. அவ இல்லாம நன்னாவே இல்லை. இல்லியா?''

"ஆமாம் சார்... நாளைக்குப் போறேன்''

பட்டப்பா அயல் நாட்டு "சென்ட்" மணம் கமழ நர்ம தாவைத்தேடி வந்தான். இதற்குள் இங்கே நர்மதாவின் வீட்டில் ஒரு பிரளயமே வந்தது. சாயிராம் தினம் வர ஆரம்பித்தான். ஜாதி மல்லிகையிலிருந்து புடவை ரவிக்கை என்று வாங்கி வந்தான்.

நர்மதா அவளையும் அறியாமல் மாலை நேரங்களில் அவன் வருகையை எதிர்பார்த்தாள். அழகு படுத்திக்கொண்டாள். அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

"ஒரு விதத்தில் நான் நன்றாக ஏமாந்தவள். இனி நான் என் உணர்ச்சிகளை ஏமாற்ற விரும்பவில்லை.

சாயிராம் உயர் வகுப்புக்கு இரண்டு சினிமா டிக்கட்டுகள் வாங்கி வந்தான். "கிளம்பு கிளம்பு போகலாம்"

"அம்மா வர்ற நேரம்"

"அவபாட்டுக்கு வந்துட்டுப்போறா. நான் என்ன அசலா அன்னியமா? ஒண்ணும் சொல்லமாட்டா சீக்கிரம் கிளம்பு "

நர்மதாவுக்கு பயமாக இருந்தது. ஏதோ அசட்டுத் துணிச்சலில் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டாள். அவள் வாசல் பக்கம் வரவும் நர்மதாவின் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

தெருக்கோடியில் போய் நின்றுகொண்டிருந்தான் சாயிராம்.

"எங்கேடி கிளம்பரே?"

"சினிமாவுக்கு"

"யாரோட...?"

அவள் பேசாமல் தெருவில் நிற்கும் அவனைச் சுட்டிக் காட்டினாள்.

"உன் சின்னபுத்தி,அல்பபுத்தி உன்னை விட்டுப்போகலையே. இப்ப நீ கல்யாணம் ஆவை. அவனுக்குத் துரோகம் பண்ணப் படாதுடி"

“ நான் யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணவில்லை...அவர் தான் எனக்குத் துரோகம் பண்ணியிருக்கார்'

'சொல்லுவேடி சொல்லுவே. நம்ப கெட்ட கேட்டுக்கு பணமும் காசுமா கிடைச்சான் பார். சொல்லுவே "

நர்மதா சீறினாள். "பணம், பணம் காசு, காசு! நீ சாகச்சே எல்லாத்தையும் எடுத்துண்ட போகப்போறே... இந்தா இப்பவே எடுத்துக்கோ" என்றபடி கழுத்திலிருந்த சங்கிலி, வளை யல்கள் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டாள்.

''என்னடீ இது ..?" என்று மாய்ந்துபோனாள் வெங்குலட்சுமி.

"நீ பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சியே... மாசா மாசம் குளிக்கிறியான்னு வேறே கேட்டுத் தொணப்பறையே. அந்த மனுஷன் ஆம்பிள்ளையே இல்லை. எனக்கு இந்த ஐன்மத் துலே குழந்தை பிறக்கவே பிறக்காது”

முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் நர்மதா.

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. இனி நர்மதா சினிமாவுக்கு வரமாட்டாள் என்று நினைத்தபடி சாயிராம் கிளம்பினான்.

வெங்குலட்சுமி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள்

கங்கம்மா எப்படி ஏமாற்றி விட்டாள் பார்த்தாயா? பணத்தையும், பவிஷையும் காட்டி!

இதைப்பற்றி யாரிடம்போய் விவாதம் பண்ணமுடியும்?

வெளியே சொல்லச் சொல்ல நர்மதாவுக்குத்தானே கெடுதலாக முடியும்?

இந்தப் பெண்ணை இனிமேல் இங்கே வைத்திருக்கக்கூடாது. இன்னும் கொஞ்சநாளில் சந்தி சிரிக்க அடித்து விடுவாள். ல்லை ஒரு முழம் கயிற்றில், பாழும் கிணற்றில், மூட்டைப் பூச்சி மருந்தில் தன்னை மாய்த்துக் கொள்வாள். அவளை அங்கேயே அனுப்பிவிட வேண்டும்.

அம்மாவும் பொண்ணும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

''என்னவோ நடந்துபோச்சு. அதுக்காக நம்ப கெட்டுப் போறதா என்ன? நான் கூட சின்னவயசுலே வீணாப்போனவ தான்...அப்புறமா புருஷனைப்பத்தி நெனச்சிருப்பேனா''

நர்மதா பேசாமல் இருந்தாள். நாலு பெற்றவள் புரு ஷன் செத்துப்போனபிறகு புருஷனை நெனச்சுண்டு இருந்தேனா என்கிறாள்.

பட்டப்பா வந்தவுடன் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அவன் வெங்குலட்சுமியின் கண் களில் படுவதை இவள் விரும்ப வில்லை. ஆகவே, அவன் வந் துவிட்டுப் போன மறுநாளே நர்மதா 'நான் ஊருக்குப் போறேன்" என்று மொண்ணையாக அம்மாவிடம் சொன்னாள்.

"அங்கேதானே போறே?".

"பின்னே எங்கே போவேன்? எவனோடும் போயிடமாட்டேன். உனக்கு இருக்கிற நம்பிக்கையெல்லாம் எனகும் இருக்கு. நம்ப பெண்கள் நம்பற எல்லா தர்மங்களையும் நானும் நம்பறேன். இங்கே இருக்கப்பிடிக்கலை எளக்கு”

"சரி..."

பஸ் ஸ்டாண்ட் வரை வெங்குலட்சுமி வந்தாள். பிழியப் பிழிய அழுதாள். வழி நெடுக, "ஏமாந்துட்டேண்டி" என்று மன்னிப்பு கேட்பதுபோல பேசினாள். நர்மதாவுக்குப் பாவ மாக இருந்தது. நினைவுதெரிந்த நாளாய் அம்மா யார் வீட்டிலோ அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். அவளை சுகமாக வைத்துக்கொள்ள வேண்டும். என்று அண்ணா நினைக்கவில்லை.

"நீ ஏனம்மா இந்த வயசிலே வேலைக்குப்போகவேண்டும்? பேசாம நான் போடற கஞ்சியோ கூழோ சாப்பிட்டுட்டு ரேன்” என்று உரிமையாகப்பிள்ளை ஒருநாள் சொன்னதில்லை. அவனும், அவன் மனைவியும் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதென்ன வருவதென்ன என்று இருந்தார்கள். மாசக் கடைசியில் அம்மாவிடமே சில்லறை கேட்பான் பிள்ளை.

நர்மதா வந்திருந்தநாட்களில் அவளிடம் ஐந்து பத்தென்று கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பஸ் கிளம்ப ஆரம்பித்தது.

"போயிட்டு வரேன் . "

'சரி' என்று தலையசைத்தாள் கிழவி. கன்னங்களில் கோடாகக் கண்ணீர் வழிந்தது. அவசரமாகப் பூ விற்றவளி டம் இரண்டு முழங்கள் பூ வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

அம்மா தூரத்தில் புள்ளியாக மறைந்துபோனாள். தன்னை மறந்து சிறிதுநேரம் நர்மதா வெளியே பார்த்துக் கொண்டி ருந்தாள்.

அன்று வந்திருந்த பட்டப்பாவை அவ்வளவு தூரம் விரட்டி மிக்கவேண்டாம் என்று அவளுக்குத்தோன்றியது. அவனிடம் அந்தக்குறை ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவளிடம் உயிராக இருக்கிறான்.

பஸ் ஏதோ ஊரில் நின்றது. அவளுக்கு பஸ்ஸின் உள்ளே திரும்பியவுடன் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

பாலு ஏறிக்கொண்டிருந்தான். அவனும் அதிர்ச்சி யடைந்தான்.

"கோபம் தீர்ந்து வறாப்லே இருக்கு'' என்றான் அவன் பக்கமாக நின்றுகொண்டு. அவனுக்கு உட்கார இடம் டைக்கவில்லை. முன்னாடி ஒருகிராமத்தான் தூங்கிவழிந்தான்

"கோபமா? யார் சொன்னது?"

"பட்டப்பாதான். அவரமாகச் சாப்பாடு போட்டு வீரட்டிட்டான்னான். பாவம்!'"

நர்மதாவின் பக்கத்தில் இருந்த பெண் இறங்குவதற்கு எழுந்தாள்.

"உட்காரலாமா?" என்று கேட்டான் பாலு.

''உம்" என்று நகர்ந்து உட்கார்ந்தாள் அவள்.

"எங்கே போயிட்டு வரேள்?''

"உன் பூரணி அக்காவை ஊர்லே கொண்டுபோய் வீட்டுட்டு வரேன்"

"ஏன் உடம்பு சரியில்லையா?'

"அவ ரொம்ப மாறிப்போயிட்டா. எப்பப்பாத்தாலும் படுக்கைதான். கங்கம்மாவும் இந்த சமயத்திலே பொறந் தாத்துலே இருக்கட்டும்பா... அனுப்பேன்னு சிபாரிசு பண்ணவே அழைச்சுண்டு போனேன்.

வண்டியின் ஆட்டத்தில் இருவரும் நெருங்கவே ஆரம்பித் தார்கள். நர்மதாவின் மேலிருந்து லேசானமணம் கமழ்ந்தது. புடவைத்தலைப்பு அவன்மேல் உராசியது. இன்னொரு ஆளும் இருக்கிற இடத்தில் உட்கார வரவே, மூன்று பேர்கள் உட்காருகிற சீட் ஆனதால் பாலு மேலும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பையும் உணர்ந்தான்.

இருவரும் இறங்கி ஏதோ ஓர்ஊரில் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டார்கள். அவள் பஸ்ஸில் ஏற அவன் கீழே நின்று அவளைப் பார்த்தபடி சிகரெட் பிடித்தான்.

மனசிலே ஏகப்பட்ட உளைச்சல். இப்படியே இரண்டு பேரும் எங்கேயாவது போய்விடலாமா? இந்த நிமிஷத்திலே நினைக்கிறதும், வாழ்கிறதும்தான் நிஜம். மற்றதெல்லாம் பொய். நர்மதாவும் புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பஸ்ஸில் ஓட்டுநர் வந்து உட்கார்ந்ததும் பாலு உள்ளே வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

"ஊருக்குப்போய் ரொம்ப நாள் இல்லே போல இருக்கே? 'போர்' அடிச்சுதா?
பட்டப்பாவை விட்டுட்டு இருக்க முடியலே இல்லே.."

அவன் ஆழம் பார்க்கிறான் என்பது இவளுக்குப்புரிந்தது.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே. அங்கே இருக்கப் பிடிக்கலே. பூரணி அக்கா மாதிரி எனக்கு யாரும் பேச்சுத் துணைக்குக் கூட இல்லை..."

"முன்னே கல்யாணத்துக்கு முன்னே யார் இருந்தார்கள்? "

"சாயிராம்னு ஒருத்தர் வருவார். இப்ப அவர் வந்தா எங்கம்மாவுக்குப் பிடிக்கலை"

வெளியே வெயில் குறைந்து வந்தது. விளக்கேற்றுகிற நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்குள் அவள் வந்ததும், "என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? நீ வரப்போறேன்னு பட்டப்பா சொல்லலையே" என்று கேட்டாள் கங்கம்மா.

பாலுவைப் பார்த்து, "நீயும் இப்பத்தான் வரியா? ராத்திரி இங்கேயே சாப்பிட்டுடு...'' என்றாள்.
---------------------

அத்தியாயம் 10

பட்டப்பாவுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூரணி உண்டாகி மசக்கையாகப் பிறந்த வீட்டுக்குப்போய் இருக்கிறாள். நர்மதா மட்டும் மரம் மாதிரி நிற்பது கங்கம்மாவுக்கு வேதனையை அளித்தது.

அன்று பொல்லென்று பொழுதுவிடியும்போதே நர்மதா கொல்லையில் கிணற்றங்கரையில் கல்லில் உட்கார்ந்திருந்தாள். கங்கம்மாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

"உக்காந்தாச்சா?"

அவள் பேசாமள் இருந்தாள்.

''ஊருக்குப் போயிட்டு வந்தியே, எங்கேயர்வது நல்ல டாக்டரிடம் காட்டி ஏதாவதுவழி கேட்டுண்டு வரதுதானே?"

பாலுவின் தலை அந்தக் காலை நேரத்தில் பக்கத்து வீட்டு வேலி வழியாக எட்டிப்பார்த்தது. அர்த்தத்தோடு புன்ன கைத்தான். அவள் மேலும் பேசாமல் இருக்கவே கங்கம்மா பக்கெட்டை நக்கென்று வைத்தாள். ஆத்திரத்துடன் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள்.

"பாக்கறதுக்கு உடம்புதான் தளதளன்னுநன்னா இருக்கு. அத்தனையும் மலட்டுச்சதை.."

பாலு வேலிக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாவமாக இருந்தது. கண்களால் ஏதோ ஜர்டை செய்தான் "வாயைத் திறந்து ஏதாவது சொல்லு" என்று அதற்கு அர்த்தமாக இருக்கலாம்.

கங்கம்மா உள்ளே போய்விட்டாள். நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தன.

வேலியோரமாக வந்து நின்ற பாலு, "உங்க தம்பியைக் கேளுன்னு சொல்லேன், பயந்து சாகறியே” என்று இவடித்தான்.

அப்போதும் நர்மதர் பேசாமல் இருக்கவே, "பெர்ம்மனாட்டிகளுக்கு இருக்கிற நெஞ்சாழம் எங்களுக்குக் கிடையாது. நல்ல ஜன்மங்கள்!” என்று சொல்லிவிட்டுப்போனான்.

நர்மதா வேதனைப்பட்டாள். பூரணியிடம் அந்தரங்கமர்க நம்பிக்கையுடன் இந்த ரகசியத்தைச் சொல்லிக்கொண்டது வினையாகப்போயிற்றே என்று நினைத்தாள். அதனால்தான், பாலு பஸ்ஸில் மிக உரிமையோடு பக்கத்தில் நெருக்கமாக ட்காரும் அளவுக்கு துணிச்சலும் பெற்றான் என்பதும் தெரிந்து போயிற்று. தன்னுடைய கணவனும் அவனிடம் போய் தன் குறையை, இயலாமையைச் சொல்லியிருக்கிறான் என்று இவளுக்குத்தெரியாது.

படுக்கை உள் அலமாரி பூராவும் பஸ்பங்களும், லேகியங் ளும் அடுக்கி வைத்திருந்தது. பட்டப்பா காலையில், பகலில் இரவில் என்று எதையாவது (மருந்து) சாப்பிட்டுக் கொண்டி ருந்தான். வாதாம்பருப்பை அரைத்து பாலில் கரைத்துக் குடித்தான். உடம்பு தள தளன்னு ஆயிற்று

அன்றும் அதிகாலையில் ஒரு வைத்தியரைப் பார்க்கப் ாேவதாகச் சொல்லிவிட்டு வெளியே போயிருந்தான், இணற்றங்கரை பாரிஜாதம் பொல்லென்று பூத்துக் கொட்டி யிருந்தது. ராத்திரி முழுக்கப் பெய்த மழையால் மழை நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

டம்ளரில் காப்பி கொண்டுவந்து நர்மதாவுக்குச் சற்று தொலைவில் வைத்தாள் கங்கம்மா.

"சொல்றேன்னு கோவிச்சுக்காதே. இந்த நாள்ளே கல்யாணம் ஆன சுருக்கில் குழந்தை பிறந்துடணும். இல்லைன்னு ஆனா அப்புறமா பிறக்கறதேயில்லை.
அதான் எனக்கு வேதனையா இருக்கு. உன் வயித்துலே ஒண்ணு பிறந்து பாத்துட்டேன்னா போறும்.

அவளுடைய ஆசை நியாயமானது என்று அவளுக்குப் பட்டது.காப்பியை எடுத்துக்குடித்தாள். பக்கத்து வீட்டில் கிணற்றடியிலேயே பாலு குளித்துக் கொண்டிருந்தான். பாட்டு வேறே கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சுரணை சுரணையாய் அந்தக் கைகளும், ரோமம் அடர்ந்த மார்பும், நீண்டகால்களும் நர்மதாவுக்கு ஏதோஒரு வேகம் ஏற்பட்டது.

'இந்த மாதிரி ஜோடி சேர்ந்திருந்தா தேவலை'

இப்படியே மூணு நாளும் கங்கம்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்புறம் ஒய்ந்து விடுவாள். இந்த கெடுவுக்கு மேல் இனிமேல் குளிக்கமாட்டாள் என்று நினைப்போ என்னவோ.

குளித்த அன்று தலை கொள்ளாத ஜாதி மல்லிகையும், அலங்காரமுமாகத்திகழ்ந்தாள் அவள். "ஸ்வாமிக்குப்பால் நைவேத்யம் பண்ணிட்டு அவன் பிரசாதமாக உள்ளே எடுத் துண்டு போ. சரியா நடந்துக்கோ.”

கொஞ்சம் கூட தம்பியின் மேல் சந்தேகம் வரவில்லை அவளுக்கு. எல்லா பழி பாவங்களும் பெண்களைச்சார்ந்தவை என்கிற குருட்டு நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

பாலு வேலைக்குப் போகாத நாட்களில் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தான்.

"பூரணி இல்லாம ரொம்ப இளைச்சுட்டே” என்று கங்கம்மா அவனுக்கு உபசாரம் செய்தாள்.

''உன் பொண்டாட்டியோட இவளும் போட்டிபோடணும்னு பார்க்கிறேன். இவளானால் மாசம் தவறாம கொல்லை யில் போய் உட்காந்துடறாள்.

"கொஞ்சநாள் போட்டமே. இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் ப்ரீயா இருந்துட்டுப்போறா” என்றான் பாலு அழுத்தமான சிரிப்புடன்.

'போகலாம்தான். ஆனாக்க எனக்கு எனக்கு வயசாயிண்டு வரதேப்பா. அடிக்கடி தலையைச் சுத்தறது. படபடப்பா வேறே இருக்கு. எதுவுமே காலத்துலேபூக்கணும்,காய்க்கணும். கொல்லையிலே பாரிஜாத மரத்தைப் பார்த்தியோ? ஒரு தூத்தல், வர்ஷிக்க வேண்டியதுதான். பூவாப் பூத்துக்கொட் டறது. என் கதை வேறே. கிழவனைக்கட்டிண்டு...என்னத் தைக்கண்டேன். இவா இப்படியில்லையே.

பாலுவிக்கு அவள் பேரில் இரக்கமாக இருந்தது. "பகவான் தான் வழி காட்டணும்” என்று பரமார்த்தமாக, சாதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

அன்றைக்கு என்னவோ விசேஷம். போளி பண்ணியிருந் தாள் கங்கம்மா. சமையலறைக்குள் போனவள், "அடடே! அந்தப் பையனுக்கு நாலு குடுத்திருக்கலாமே! மறந்து போச்சே, நீ போய்க்குடுத்துட்டு வாயேன்" என்றபடி தட்டில் எடுத்து வந்தாள்.

"நான் போகலை..."

"போனா என்னடி? உன் கூடப்பொறந்தவன் மாதிரி"

நர்மதா பாலுவின் வீட்டுக்குள் போனாள்.

அவன் அவளை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் பார்த்து "என்ன கொண்டு வந்திருக்கே?"

"போளி.. அக்காதான் அனுப்பினா'

மேஜை மீது வைத்தாள்.

“நான் போயிட்டு வரேன்" பூரணி அக்கா எப்போ வருவா?" என்று கேட்டாள்.

"மசக்கை, மயக்கம் எல்லாம் தெளிந்தப்புறம்தான். என்னை நாலஞ்சுமாசமா பட்டினி போட்டுட்டா...

மத்தியானம்கூட எங்க வீட்லே சாப்பிட்டீங்க. பட்டினியா?'

நான் அந்தப் பட்டினியைச் சொல்லலே. வேறே பட்டினி!"

நர்மதாவுக்குப் புரிந்தது.

"போளிக்கு நெய் போட்டுண்டா நன்னா இருக்கும். சமையல் உள்ளே இருக்கு''

நர்மதா போனாள். அலமாரியிலிருந்து நெய் புட்டியை எடுக்கும்போது பாலுவின் கரம் அவள் தோளைப்பற்றி அழைத்தது.

''வேண்டாங்க"

" என்னது”

"வேண்டாங்க. உங்களைப் பார்க்கச்சே யெல்லாம் மனசாலே பாவம் பண்ணிண்டு இருக்கேன்'

"அதுதான் பெரிய்யதப்பு"

கைகளின் அழுத்தம் அதிகமாகியது. இருவரும் பேர்ளி, நெய் என்கிற விஷயங்களை மறந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நர்மதா கனவில் நடப்பது போல அவனுடன் படுக்கை அறைக்குள் சென்றாள். அவளுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு பலிஷ்டனான ஆணின் ஸ்பரிசத்தால் கொழுந்து விட்டுஎரிய ஆரம்பித்தது. பாலு அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை தீர்க் கமாகப் பார்த்தான்.

" நர்மதா! ஏன் இப்படி ஏமாந்தே?"

"எனக்கு என்ன தெரியும்? இதையெல்லாம் கல்யாணத் துக்கு முன்னே எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?"

அவள் அழுதாள். கண்களின் மை கரைந்து கன்னத்தில் கோடாக இறங்கியது.

'இப்ப ஒண்ணும் முழுகிப்போகலை. நீயும், நானும்..."

'அதெல்லாம் பாவம்க... பரம சாதுவாக, ஒண்ணு தெரியாத மனுஷனை நான் ஏமாத்த விரும்பலே"

"நீ எப்படியும் யார்கிட்டேயாவது ஏமாறத்தான் போறே"

பாலுவின் கரங்கள் அவளை வலுவாகப்பற்றிக் கொண்டி குந்தன. மங்கிய விளக்கொளியில் அவள் தேவதையாகத் திகழ்ந்தாள். சினிமாவில் தொட்டுப்பார்த்த அவன், பஸ்ஸில் நெருங்கி உட்கார்ந்த அவன், இப்போது வெகுசுவாதீனமாக அவளை நெருங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது பட்டப்பா உள்ளே மனைவியைத் தேடிக் கொண்டு வந்தான்.

இருவருக்கும் நெருப்பில் சுட்டுக்கொண்டமாதிரி இருந்தது.

"நீ இங்கயர் இருக்கே?"

"அக்கா பேர்ளி குடுத்துட்டு வரச்சொன்னா"

அவள் பயந்தாள். நாக்கு உலர்ந்து விட்டது.

"ஒண்ணுமில்லை பட்டப்பா! பூரணி கிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அதைத் தேடிண்டு இருந்தோம்."

நர்மதா போய்விட்டாள். இரவு கங்கம்மா, "சுவாமி பாலை எடுத்துண்டு போ... குருவாயூரப்பனுக்கு தொட்டில் வாங்கிவைக்கறேன்னு வேண்டிருக்கேன்" என்றாள்.

பகவானின் நைதேத்யமான பாலை எடுக்க அவள் கூசினாள்.

"அப்பனே! நீயும் சேர்ந்துதானே என்னை ஏமாத்தி இருக்கே"

உள்ளே பட்டப்பாவின் முகம் வாடிக்கிடந்தது.

"இந்தாங்க பால் சாப்பிடுங்கோ"

'நீ'

"நான் சாப்பிடக்கூடாது. இனிமே அதைத் தொடக் கூட எனக்கு அருகதை இல்லை"

அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான்.

''எனக்கு உன் மேலே கோபமே இல்லை. நீ ப்ரீயர் இருந் திருக்கலாம். எத்தனை நாளைக்குதான் உன்னையே நீ எரிச்சுக்க முடியும். காமம் தீ போன்றது. அது அணு அணுவாக உன்னைத் தின்று விடுமே "

அவள் மிகுந்த வியப்புடன் அவனைப்பார்த்தாள். ஆண்களிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் பெண்கள் கற்புள்ள வர்களாய், தங்கள் உணர்ச்சிகளை அழித்துக்கொண்டு சன்னி யாசிகளாய், பவித்ரமாய், கண்ணகியாய் இருக்க வேண்டும் என்கிற நியாயம் கற்பிக்கப்பட்டு செயல் முறையில் பல ஓட்டை உடைசலோடு செயல்பட்டு வரும் இந்த நாட்களிலே இப்படி ஒரு மனுஷனா?

"நான் பலவீனப்பட்டுப்போனேன். என்னை ஒரு மயக்க நிலை ஆட்கொண்டிருந்தது. நான் ஒரு தப்பும் பண்ணலை. அவருடைய ஸ்பரிசம் ஒன்றைத்தான் அனுபவித்தேன்"

பட்டப்பா ஆதுரத்துடன் அவளைப்பற்றி தன் அருகில் அமர்த்திக்கொண்டான்.

"இப்ப ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"

"உம் சொல்லுங்கோ"

"நீ இங்கே இருக்கச்சே பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊருக்குப்போனா சாயிராமோடு சிநேகமா இருக்கலாம். நான் உன்னை ஏமாத்தினதுக்கு இதுதான் பரிஹாரம். இதனாலே பிரளயமோ. பூகம்பமோ, ஊழிக்காற்றோ வந்துடாது. எல்லாம் அனுபவிக்கிறவாளே இப்படி அப்படி இருக்கிறதா கேள்விப்படறேன் நீ வந்து.."

அவள் அன்று முதன் முதலாகக் கணவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். அவன் கைகளைப்பற்றி வருடினாள். 'இத்தனை மருந்து சாப்பிடறேளே. குணம் தெரியறதா?" என்று கேட்டாள்.

அவன் சலிப்புடன் "ஊஹும்” என்று தலையை ஆட்டினான்.

"அதனால என்ன? நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் குழந்தையா இருந்துட்டுப் போறோம். உங்கக்கா நச்சரிப்புதான் தாங்கலை"

"நீ குழந்தை பெத்துக்கலைன்னா அவ எனக்கு வேறே பொண்டாட்டி கட்டி வைக்கப்பார்ப்பா.
ஆனா, உனக்கு வேறே புருஷன்கிறதை இந்த சமூகம் ஒத்துக்காது"

மனைவி தனக்குள் தான் தீய்ந்து கருகி வருகிறாள் என்பதும், அதற்குத் தானே தான் காரணம் என்பதும் பட்டப்பாவுக்குப் புரிந்தது.

வெகுநேரம்வரை இருவரும் பேசாமல் இருந்தார்கள். பிறகு தூங்கிப்போனார்கள்.
----------------

அத்தியாயம் 11

இப்போது கங்கம்மாவின் மனசில் நிராசை நிரம்பி விட்டது. பூரணி பிரசவித்து அழகான ஆண் குழந்தையோடு கணவனிடம் வந்து சேர்ந்தாள். பெருமை முகத்தில் கொப் பளிக்க அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அடிக்கடி நர்மதாவைத்தேடி வருவாள். குழந்தையும் நர்மதாவிடம் ஒட்டிக்கொண்டது.

வழக்கம்போல் அந்த மாசத்தில் நர்மதா வெளியில் உட்கார்ந்தவுடன் கங்கம்மா வெடித்துச் சீறினாள்.

"கர்மம்...கர்மம்! என்னிக்கி என்னுடைய ஆசை விடியப் போறது? உக்காந்தாச்சா? உடனொத்தவள் திரும்பவும் குளிக்காம இருக்கா. குழந்தைக்கு ஏழெட்டு மாசம் கூட ஆகலை. பூக்கிறதுதான் பூக்கும். காய்க்கிறதுதான் காய்க்கும். எட்டி பழுத்தா என்ன'ங்கற மாதிரி தள தளன்னு இருத் துட்டா போதுமா? வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகலை.

பட்டப்பா ரொம்பவும் வேதனைப்பட்டான். காரணமில்லாமல் மனைவி ஏச்சு கேட்கிறாளே என்று வருந்தினான்.

அன்று அவனுக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டே, 'நான் சொல்றேன்னு நெனக்காதே.இவ இனிமே உண்டா வான்னு எனக்கு நம்பிக்கை போயிடுத்து. வேறே நல்ல பொண்ணா பார்க்கிறேன்"

நர்மதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

"ஆமாண்டா! பொண் அழகிலே கொறச்சலா இருந்தாலும், வயிறு திறந்து இரண்டு பெத்தாப்போறும். நான் தான் இப்படி நின்னுட்டேன். நீயும் இப்படி நிக்கமுடியுமா?"

பட்டப்பா சாதத்தை அளைந்து கொண்டு உட்கார்ந்தி ருந்தான்.

"என்ன சொல்றே? அவ அழகிலே, உடம்பிலே மயங்கிக் கிடக்கிறே. என்ன பிரயோஜனம்? பேர் சொல்ல ஒண்ணு இல்லே ..

நர்மதா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அடுத்த வீட்டுக்காரனோட சிநேகமாயிரு. ஊரிலே இருக்கிறவனோட எப்படி வேணா இரு. இல்லைன்னா எங்கக்கர் எனக்கு இரண்டாந்தரம் கட்ட ஆரம்பிப்பான்னு' முழங்கின வீரதீரப்பரதாபன் வாயடைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

அவள் ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. உண்மை யைச் சொல்லித்தானே ஆகணும்? எத்தனை நாளைக்கு மறைச்சு வச்சு மன்னாட முடியும்? நான் நன்னாத்தான் இருக்கேன். எனக்குப் பத்து குழந்தைகள் கூடப்பொறக்கும். உங்க தம்பிதான் அதுக்குலாயகில்லை. நான் என்ன பண்ணட்டும்?"

கங்கம்மா அப்படியே நின்றவள் நின்றவள்தான். எப்போதோ சின்ன வயசில் அவள் அம்மா பட்டப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த பையன் பெரியனாகிக் குழந்தை குட்டி பெத்தால்தான் இவனை ஆம்பளைன்னு ஒத்துக்கமுடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மா எப்படியோ கண்டுபிடித்திருக்கிறாள். அக்கா இதையெல்லாம் புரிந்துகொள்ளுமுன் பட்டப்பாவும் வளர்ந்து விட்டான்.

பட்டப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டான். அவன் நன்றியோடு நர்மதாவைப் பார்த்தான். மனம் லேசாகி விட்டதை உணர்ந்தான். மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை எத்தனை லாவகமாக இறக்கி வைத்து விட்டாள்?

கங்கம்மா ஏழுமலையான் படத்தின் முன்பு போய் நின்றாள்•

'இனிமே உனக்கு பாலும் கிடையாது ஒண்ணும் கிடையாது. கொஞ்ச பசும்பாலா, கல்கண்டா, குங்குமப்பூவா சாப்பிட்டிருக்கே? நன்னா என்னை மொட்டை அடிச்சாச்சு. உனக்கு அதுவே வழக்கமாயிடுத்து.'

டம்ளர் பாலை எடுத்து சாக்கடையில் வீசினாள். இளம் மஞ்சள் நிறத்தில் பால் கசிந்து கசிந்து முற்றத்தில் வழுந்தது.

அந்த வீட்டில் மயான அமைதி நிலவியது. கங்கம்மா அடுத்த இரண்டு நாட்கள் ஸ்னானம் செய்யவில்லை. ஜபதபங் கள் இல்லை. சாவிக்கொத்தை ஆணியிலிருந்து இடுப்பில் சொருகிக் கொள்ளவில்லை. பூரணியோடு பேசவில்லை. பாலுவை நிமிர்ந்து பார்க்கவில்லை. "அத்தே" என்று வரும் பூரணியின் குழந்தையை தூரத்தள்ளிவிட்டு பிரமைபிடித்த மாதிரி இருந்தாள். தலைவலி என்று படுத்தாள். ஒரு கையும் காலும், வாயின் ஒரு பக்கமும் கோணலாகி பேசும் சக்தியை இழந்தாள்.

சிறுவயதிலிருந்து தன்னை வளர்த்தவள் பேசும் சக்தியை இழந்து படுக்கையில் கிடந்தபோதுதான் பட்டப்பா தன் தவற்றை முழுமையாக உணர்ந்தான். இவன் தன் சங்கோ சத்தை விட்டு அக்காவிடம் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதே.

விதவிதமாகச் சமைத்துப் பரிமாறியவள், பாலை விழுங்கும் சக்தியையும் இழந்திருந்தாள். மெதுவாக மிகுந்த சிரமத்துடன் பாலை சிறிதளவே சாப்பிட முடிந்தது.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, "ஸ்ட்ரோக்' என்று சால்லி மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நாள் கணக்கிலும் இருப்பாள், மாசக்கணக்கிலும் இருப்பாள் என்று சொன்னார்.

பாலு அடிக்கடி வர ஆரம்பித்தான். ஆனால் நர்மதாவின் மனதில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனிடம் அதிகம் பேச்சு கொடுக்காமல் இருந்தாள்.

''என்ன? வீட்டுப்பக்கம் வரதேயில்லை. பூரணியால் ஒண் டியாகக் குழந்தையை சமாளிக்க முடியலெ''

''அக்காவை விட்டுட்டு எங்கே வரது?"

"நீ ரொம்ப மாறிப்போயிட்டே. முன்னே மாதிரி இல்லை"

"மாறத்தானே வேண்டும்? ஆரோக்யமா நடமாடிண்டு இருந்த அக்கா இப்படி படுத்தப்புறம் எனக்கு ஒண்ணும் பிடிக்கலை.”

பாலுவுக்குச் சப்பென்று போய்விட்டது. திடீரென்று இந்தப்பெண் ஏனிப்படி மாறவேண்டும்? அவளுடைய சிரிப்பு எங்கே போயிற்று? இவனிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்த அவளுடைய வெகுளித்தனம் எப்படிமாறியது

சில நாட்களில் நன்றாக உடுத்திக்கொள்கிறாள் பல நாட்கள் ஏனோதானோ என்று இருக்கிறாள். ஓயாமல் கங்கம் மாவின் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடை பண்ணிக்கொண் டிருக்கிறாள். அவனுக்குப் புரியவில்லை.

ஊரிலிருந்து அம்மாவை வரவழைத்தாள் நர்மதா. ரயிலில் தன்னுடன் கொள்ளைப்பேச்சு பேசிய சிநேகிதி வாயடைத்துப் போய் மு நம்கோணி படுக்கையில் கிடப்பதைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய வீட்டையும், அதில் நிறைந்திருந்த செல்வத் தையும் பார்த்து அதிசயித்தாள்.

"கங்கம்மா]இவ்வளவு பணக்காறியா? பட்டப்பாவுக்குத் தான் இத்தனை சொத்தும் சேரப்போகிறதா? உக்கிராண உள் பூராவும் அரிசி மூட்டைகளும், மற்ற சாமான்களும் நிறைந்திருந்தன.

கொல்லையில் பூவாய்ப் பூத்தது. எலுமிச்சை, நாரத்தை என்று காய்கள் குலுங்கின.

தன் அருகில் உட்கார்ந்திருந்த சிநேகிதியின் கைகளை சுவாதீனமாக இருந்த ஒரு கையினால் பற்றினாள். கண்களிலி ருந்து கண்ணீர் வழிந்தது. நர்மதாவையும் பட்டப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பார்வையில் மன்னிப்பு கேட்கும் பாவம் தெரிந்தது.

'உனக்கு தெரிஞ்சா பண்ணினே? அதெல்லாம் எனக்குக் கோபம் இல்லே வருத்தப்படாதே" என்றாள் வெங்குலட்சுமி.

நர்மதாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது. நாம சொல்லாம இருந்திருந்தா இந்த மனுஷி நன்னா இருந்திருப்பாளே. வாக்குலே சனியன் மாதிரி உளறி வைச்சோம்.

வெகு நாட்களுக்குப் பிறகு அன்றிரவு நர்மதர் படுக்கை அறைக்குள் போனாள். கங்கம்மா நோயாய்ப் படுத்த பிறகு அவள் உள்ளேபோய் படுப்பதில்லை. தாபத்தீயினால் உடலைப் பொசுக்கிக் கொள்வதில்லை.

பூரணி மட்டும் இவளிடம் ரகசியமாகக் கேட்டாள்.

"இப்படியே உங்காலத்தை ஓட்டப்போறியா?"

"பின்னே''

"ரொம்ப கஷ்டம். வாழ்ந்து அனுபவிச்சவாளாலேயே முடியாது".

''முடியத்தான் இல்லே. அதுவும் அந்த மனுஷன் அடிக்கடி ஞாபகப்படுத்தி விடறார்; தன் இயலாமையைச் சொல்லிச் சொல்லி".

''பாவம் பேசாம இருந்திருக்கலாம்"

''உம். இப்படி எத்தனையோ பேர் ஏமாந்திருப்பா. அதுலே நானும் ஒருத்தி. இல்லை ரகசியமர் யாரோடயாவது நேகம் வச்சிண்டிருப்பா"

பூரணி பல்லைக்கடித்தபடி சொன்னாள்.

'அப்படித்தாண்டி செய்யணும். இவன் என்ன பண்ணிப் பிடுவான். "

இருவரும் மாலை மங்குகிற நேரத்தில் கிணற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்ததை பட்டப்பா கேட்டுக் கொண்டு வந்தான்.

"உண்மைதான். அவள் எப்படி நடந்துக்கொண்டாலும் கேட்பதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அவ பாலு வோட சிநேகமா இருக்கலாம். ஊரிலிருக்கிற சாயிராமோட வும்இருக்கலாம். தப்பே கிடையாது. மனைவி பிரசவத்துக்குப் போயிருந்தால் ஊர்மேயும் ஆண்கள் கூட்டத்தை மன்னிக்கும் சமூகம், இதைக் கேட்டால் அலறித்துடிக்கும்.

நர்மதா வழக்கம்போல பால் டம்ளருடன் உள்ளே வரவில்லை. அந்த நாடகமெல்லாம் ஓய்ந்துபோய் மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.

படுக்கையை எடுத்துத் தரையில் போட்டுக்கொண்டாள்.

"நர்மதா!"

"உம்...

"உங்கிட்டே ஒண்ணு சொல்லணும். உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். நீ இஷ்டபடி இருக்கலாம். இப்ப அக்கா வுக்கும் வாயடைச்சுப்போச்சு"

"என்ன சொல்றேள்?"

கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவோட ஊருக்குப் போயிட்டுவாயேன் "

“எதுக்கு”

ஒரு மாறுதலுக்கு"

"இங்கே அக்காவை யார் பாத்துப்பா?

"ஒரு ஆளைப்போட்டு நான் கவனிச்சுக்கறேன்"

“நான் போகலை"

"'ஏன்?""

'பிடிக்கலை...அக்காவை விட்டுட்டுப்போறது பாவம்."

"நான் பண்ணியிருக்கிற பாவத்துக்கு முன்னாடி இதெல்லாம் பாவமில்லை. போயிட்டு வாயேன்”

நர்மதா விருட்டென்று எழுந்தாள். கணவனிடம் சென்று அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டாள். அவள் இந்தமாதிரி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
குமுறி அமுதாள்.
------------------

அத்தியாயம் 12

கங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பனி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் எண்ணக் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.

பட்டப்பா துடிதுடித்துப்போனான். தாயைவிடப்பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப் பார்த்து. அது நிறைவேறாமல் நிறைவேறாது என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு அதிர்ந்துபோய்,பேசும் சக்தியை இழந்து அவள் நாலைந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஓய்ந்தும் போனாள்,

பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசிபோல் சாவிகள் குலுங்க வளைய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பக்ஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் காடுப்பாள். பாலுவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.

நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்துவீட்டுப் பூரணியோடு பேசினாள். பட்டப்பாவோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத்தானே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்துபோனாள் நர்மதா.

வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷயங்களையும் கேள்விப் பட்ட சாயிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்.


வீட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட்சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நில புலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக்கொண்டி ருந்தான். எல்லாவற்றுக்கும்மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரமரகசியமான விஷயத்தை இவனிடம் தெரிவித்தான்.

"அப்படியா?" என்று வியந்துபோனான் சாயிராம்.

"பின்னே ... அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிறா. எம் பொண்டாட்டி பிரசவத்துக்குப் போனப்ப சாப்பாடு போட் டிருக்கிறா அப்ப அவ கையைக்கூடப் பிடிச்சுப்பார்த்தேன். விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

ஊர்க்காரன் ஆயிற்றே என்று இரண்டு வேளைகள் சாப் பாடுபோட்டாள். பட்டப்பா வெளியில் போயிருந்த சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட் கார்ந்திருந்தாள்.

"என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ"

"வாண்டாம்... அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே"

"ஏன்னு கேக்கிறேன்? ஊர் உலகத்துலே நாத்தனார் செத்துப்போறதில்லையா? இப்படி அதுக்காக விரக்தியா இருந் துட முடியும்?"

நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது கோபமாக வந்தது.

"வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா..."

பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், "என்ன சார்! நர்மதா இளைச்சிருக்கா?" என்று கேட்டான்.

"அதான் தெரியலை. ஊருக்கு வேணா போயிட்டு வான்னு சொல்றேன். கேக்கலை"

"என்னோட அனுப்புங்கோ"

"பேஷா...எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தாச்சு. அவதான் இப்படி இருக்கா.

"எனக்கு ஊர்லே என்ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப் போங்க. எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப வரேன்."

சாயிராம் கிளம்பிப் போய்விட்டான்.

"நாய் ஜன்மங்கள். ஏன்தான் இப்படி கிடந்து அலைய றதுகளோ தெரியலை."

இங்கேயானால் பாலு ஜாடைமாடையாகத் துரத்துகிறான். பூரணிக்குத் துரோகம் பண்ணிக்கொண்டு எப்படி இவனால் இப்படி இருக்க முடியறதோ? ஊருக்குப்போனால் சாயிராம் வந்து விடுவான். அரசல் புரசலாக இல்லாமல் தன் வாழ்க் கையில் குறிக்கிட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்களும் விஷயத்தை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எங்கேயாவது கண்காணாத ஊருக்குப் பட்டப்பாவுடன் போய்விட வேண்டும். இப்போதெல்லாம் ஒரு விரக்தி மனசில் படிந்து விட்டது.

எவனைப் பார்த்தாலும் மனம் மரத்துக்கிடக்கிறது.

நர்மதா யோசித்தாள்.
-----------------

அத்தியாயம் 13

கணவனும், மனைவியும் கருத்தொருமித்து வாழ்வதுதான் இல்லறம். அந்த வீட்டில் கருத்து ஒருமிப்பதற்கு இடமே இல்லை நர்மதாவும், பட்டப்பாவும் வட துருவமும், தென் துருவமுமாக இருந்தார்கள். சரீர இச்சையைக் கடந்துவிட்ட ஞானி என்று சொல்லமுடியாது. அந்தஏக்கம் அவளைத்தின்று கொண்டேயிருந்தது. மனைவி ரகசியத்தில் எப்படியோ இருந் துட்டுப்போகட்டும். அது ஒன்றும் தன்னை பாதிக்காது. ஊர் உலகத்தின் முன்னால் கணவன் மனைவியாக வாழவேண்டும்.

இப்படியொரு போலித்தனம். அவள் வர வர எதிலுமே பிடிப்பற்றுப்போனாள். தலை சீவிக்கொள்வதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. சில நாட்களில் ஊஞ்சலில் படுத்திருப்பாள். சில நாட்கள் சமயலறை வாசற்படியில் படுத்துத்தூங்கி விடுவாள். உள்ளே கட்டிலில் அவர்களுக்காக கங்கம்மா தைத்து வைத்த மெத்தை தூசு படிந்து கொண்டிருந்தது.

அந்த அறைக்குள் அவள் போவதில்லை. போனால்தானே பக்கத்து வீட்டு மாடியைப் பார்க்க வேண்டியிருக்கிறது? பூரணியும், பாலுவும் ஏகாந்தமாக இருப்பதும் கண்ணில் படுகிறது. அந்தப் பக்கத்து ஐன்னலை அறைந்து மூடினாள்.

இந்தத்தடவை பூரணி இரண்டாவது பிரசவத்துக்கு ஏழு மாசங்கள் கழித்துப்பிறந்த வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் முன் நர்மதாவைத்தேடி வந்தாள் அவள்.

"இங்கேயே இரேன் பூரணி அக்கா! நான் பிரசவத்துக்கு செய்யமாட்டேனா?" என்றாள் நர்மதா.

"அதெல்லாம் முடியாது நர்மதா அம்மா இல்லாமல் என்னால் தைரியமா இருக்கமுடியலை நான் போயிட்டுவறேன். எதுக்கும் நீ எந்தக் காரணத்தைக்கொண்டும் எங்கவீட்டுக்குப் போகவேண்டாம்."

ஏன்?”

'காரணம் உனக்கே தெரியும். நான் சொல்லணுமா?"

நர்மதா தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். பூரணி அரை மனசோடு போகிறாள் என்பதும் புரிந்தது.

அன்று பட்டப்பா சாப்பிடும்போது, "நாம இரண்டு பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே இருந்து அலுத்துப்போச்சு" என்று நர்மதா கேட்டாள்.

"எங்கே போகிறது?"

"போறத்துக்கு இடம்தானாஇல்லை? இப்படி காசி ராமேஸ்வரம்னு போறது. பணமா இல்லை. அக்காபோய் இரண்டு வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை"

"எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. இவ்வளவு பெரிய வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன் வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா போயிட்டு வாயேன். எந்தனையோ 'டூரிஸ்ட்' பஸ் போறது."

அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக்கூப்பிட அவன் தட்டிக்கழிக்க, இப்பயே நாட்கள் ஓடின.

முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திரமாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டுவிட்டுப் போவான். இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்திருந்தாள்.

'காரணம் உனக்கே தெரியும்" சே! எத்தனை பெரிய வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரிய மில்லை. என் பேரில் பழியை போட்டுவிட்டுப் போகிறாள் நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க முடியும்.சே!..."

பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான். தப்பித் தவறி வரமாட்டாளா?

கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், "சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்பான். "ஓ! ராத்திரி எட்டு மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்'

பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை. நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம்பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள் நுழைந்தாள்.

சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள். முரட்டுத்தனமாக அவள் உடலை அணைத்தார்கள்.

பாலு! பாலுதான்!

'அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி சொல்லிட்டுப் போயிருக்காளே. அவளுக்கு துரோகம் பண்ணச்சொல்றியா?"

இதிலே என்ன துரோகம் இருக்கு? உனக்கு தேவை இருக்கா இல்லையா?''

"தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விஷயம். என்னைப்போல இன்னொரு பெண்ணை நான் ஏமாத்த விரும்பலே"

பாலு ஒரு மிருகம்போல தோற்றமளித்தான்.

நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.

"கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே. நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்"

"சொல்லிக்கோ”

"நிச்சயமாகச்சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில் இருக்கமாட்டே."

வாசற்கதவை யாரோ தட்டினார்கள். பாலு போய்த் திறந்தான் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா அறையிலிருந்து வெளியே வந்தாள். தேம்பி அழுதபடி பட்டப்பாவிடம் வந்தாள்.

பட்டப்பா வேறு தினுசாகப்புரிந்து கொண்டான்.

"ஏன் அழறே! உனக்குத்தான் பூரண சுதந்திரம் குடுத்திருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண வேண்டாமோ."

"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..." அவள் அழுதாள்.

"இருந்தாத்தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக் கொண்டே இருக்கே?"

அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம் பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின் உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த் துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன் றியது. அந்தப்பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.

கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?

அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப்போய்விட வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவ தில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில் லாமல் இருக்கிறது. நர்மதாவைப்பார்த்தால் கூடப் பிடிக் கவில்லை.

கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடலாமா? எங்கேபோவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனா லும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை. சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள் வெந்துகொண்டிருக்கிறாள்.

நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல் இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப்
போட்டான்.

''நான் ஊரைவிட்டுப் போகிறேன். உன் இஷ்டப்படி இருக்கலாம்." இப்படி ஏழெட்டு முறைகள் எழுதி எழுதிக் கிழித்தான். அவள் மாறமாட்டாள். உணர்ச்சிகளுடன் போராடிக்கொண்டு, கணவனை நினைத்துக்கொண்டு அணு ணுவாகச் செத்துக்கொண்டிருப்பாள். இந்த மாதிரி சரீர இச்சைக்கு முக்யத்வம் கொடுக்கிறதானால் இந்த நாட்டில் இப்போதும் ஆயிரக்கணக்கான விதவைகள் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான வித வைகளிலே நூற்றுக் கணக்கில்கூட மறுமணம் நடைபெறுவதில்லை. ஏதோ ஓர் உன்னதமான உணர்வு அவர்களின் மனசில் நிலையாக இடம் பிடித்திருப்பதனால்தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது.

வெளியே வானம் நிர்மலாக இருந்தது. நஷத்திரங்கள் பொரிந்து கிடந்தன. சுகமான காற்று வீசியது. யார் வீட்டு ரேடியாவோ தன்யாசியை மீட்டிக்கொண்டிருந்தது. இரவின் முதல் ஜாமத்தில், ஊரடங்கிக் கிடக்கும்போது ஒலித்த சுஸ் ஸ்வரமான சங்கீதம் அவனை அழ வைத்தது. இறைவன் தாமத்தை மனமாறப் பாடிக் கேட்கும்போது ஏற்படுகிற உணர்வு இருக்கிறதே-சுகம் இருக்கிறதே - அதற்கு ஈடு இணை இல்லை. அவன் நாத வெள்னத்தில் லயித்துப்போயிருந்தான். இப்படி பாடிக்கொண்டு கோகுலம், பிருந்தாவனம், மதுரை என்று போய்விடலாமா? மேவாரின் அரசியாக இருந்த மீரா உலக பந்தங்களின் தளைகளை உடைத்துக் கொண்டு சுதந்தி ரமாக ஒரு பறவைபோல், காற்றுவெளியில் மிதக்கிற சுகானு பவத்தை நுகர்ந்து கொண்டு பிருந்தாவனத்துக் கண்ணனை தரிசிக்கப்போனாளாமே. அம்மாதிரி ஒரு உணர்வு தனக்கும் ஏற்பட்டு இப்போதே இந்த வீடு, வாசல், நர்மதா எல்லோ ரையும் மறந்து அவனை நாடிப்போனால் இதற்குப் பரிகாரம் கிடைக்குமோ!

நக்ஷத்திர ஒளியை, வைகறை என்று நினைத்து ஒரு பறவை ஜிவ்வென்று பறந்து போயிற்று.எல்லா ஜீவராசிகளையும்விட பறவை இனங்களுக்கு இயற்கையிலேயே ஒரு வரப்பிரசாதம் உண்டு. விண்வெளியில் சுத்தமான காற்றை உட்கொண்ட படி பறந்து திரியும் சுகம் அவைகளுக்கு உண்டு.

மேஐைக்கருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் அப் படியே தூங்கிப்போனான்.
-----------------

அத்தியாயம் 14

பொழுது விடிந்தது. பொழுது போயிற்று. இப்படியே மாதங்கள் ஓடின. இருவருக்கும் இடைவெளி அகலமாகிக் கொண்டிருந்தது. நர்மதா தன்னை விட்டுப் போய்விட வேண்டும். அவள் இஷ்டம்போல அவளுடைய யெளனவத்தையும், அழகையும் வைத்துக்கொண்டு ஜம்மென்று வாழலாம். ஏனிப்படி இந்த வீட்டில் நடைப் பிணமாக உலாவி வருகிறாள் என்பது அவனுக்கே புரியவில்லை.

ஒரு நாள் சாப்பிடும்போது சொன்னான், ''உன் பேரிலே ரொக்கமா ஐம்பதினாயிரம் பாங்கில் போட்டிருக்கிறேன். ஊர்க்கோடி தென்னந்தோப்பை வித்தாச்சு.'

அவள் ஒன்றும் பேசவில்லை.

"நான் பண்ணினது சரிதானே?"

"தெரியலையே... நான் எப்படி இந்தச்சொத்தை அனுபவிக்கலாம்?"

'"ஏன்? நான் உனக்குப் பண்ணிய துரோகத்துக்குப் பணத்தைக்கொடுத்து ஈடுகட்ட முடியுமா? என்னவோ தோணித்து உன் இஷ்டம்போல அதிலே வ ர வட்டியை வச்சுண்டு இருக்கலாம்.

"என்னை எங்கே போகச்சொல்றீங்க?" அவள் கண்கள் கலங்கின.

"இஷ்டப்படி எங்கே வேணுமானாலும் போயிட்டு வரலாம். இப்படி எங்கிட்டே அடிமையா இருக்கணும் நீ என்று நான் எதிர்ப்பார்க்கலை. உனக்குன்னு எத்தனையே ஆசைகள் இருக்குமே”

"எனக்குப்பொதுவா ஆம்பிள்ளைகளைக் கண்டாலே பிடிக்கலை"

"பாலுவை? சாயிராமை?

"பாலுவையா? பொண்டாட்டியை ஏமாத்தறவனையா? அவனைப்பிடிக்கறதா?"

''சாயிராம்?'

நர்மதா பேசாமல் இருந்தாள். பட்டப்பா கை அலம்பிக் கொண்டு அவள் அருகாமையில் வந்தான். "நீ கல்யாணத் துக்கு முன்னே அவனைக்காதலிச்சே. அது உன் மனசில் புகைஞ்சுண்டே இருக்கு. ஊருக்குப்போனா எங்கேயாவது அவன்கிட்டே ஏமாந்துடப்போறோம்னு பயப்படறே. அதான் போகமாட்டேங்கறே.'

அவள் தன் எதிரில் இருந்த சுவரைப்பார்த்தபடி நின்றாள்.

வாஸ்தவம்தானே? சாயிராம் வீட்டுக்கு வரும்போதெல் லாம் அவளுக்குள் ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அவன் அவள் அழகை வர்ணித்த போதெல்லாம் அவள் மகிழ்ந்து போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்ப தற்குமுன்பே அம்மா இந்தக்கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்துவிட்டாள். சொப்பனம் போல கல்யாணமும் நடந்து விட்டது. 'நான் சொல்கிறது உண்மைதானே?" என்று தூண்டித்துருவிக் கேட்டான் அவன்.

"ஆமாம் அவர் மேலே எனக்கு ஆசை இருந்தது. ஆனா. உங்களைக் கல்யாணம் பண்ணிண்ட அப்புறம் அதைப்பத்தி நினைக்கலை. நான் மறந்தே போயிட்டேன். அவர் இங்கே ஒரு தரம் வந்தப்ப கூட என் மனசிலே ஒன்றும் விகல்பமா ஆசை எழலை. எப்படியோ என் தலை எழுத்து இப்படியாயிடுத்துன்னு விரக்தி பண்ணிண்டாச்சு. திரும்பத் திரும்ப என் சரீர இச்சையைப் பத்தியே பேசிண்டிருக்கீங்க. எனக்குன்னு ஒரு சுத்தமான மனசு இருக்காதா? இருக்கக் கூடாதா? உலகத்துலே எத்தனையோ வித பசிகள் இருக்கு. அந்த மாதிரி உடற்பசியும் ஒண்ணு. இன விருத்திக்காக மிருகங்கள், மற்ற ஜீவன்களைப் போலத்தான் மனுஷன் பெண்ணை நாடிப்போகிறான். இதுக் குப்போய் இத்தனை கவலையும், குழப்பமும் ஏற்படுவானேன்?'

அவளை வியப்புடன் பார்த்தான் பட்டப்பா. வேடிக்கையான பெண். அதுவும் இந்தக் காலத்தில் தெருத்தெருவாய் கண்டபடி சினிமா போஸடர்கள் சீரழியும் இந்த நாட்களில் இப்படியும் ஒருத்தி!

"அப்ப என்னதான் பண்ணப்போறே?"

"இப்படியே இருக்கிறது. என்னைப்போல கல்யாணம் ஆன பெண்கள் சவரணையா இருந்தா மூணு குழந்தைகள் பெத்துண்டு இருப்பா. அதுகளுக்கு வியாதிவரும். டாக்டர் வீட்டுக்குப்போவாள் கணவன் தன்னை நெருங்கி வரும்போ தெல்லாம் தன் மூணு குழந்தைகளைக் காட்டிக்காட்டி விலகிப் போயிண்டு இருப்பா. அவன் அடுத் த வீட்டிலே. எதிர் வீட்டிலே யாராவது கிடைப்பாளான்னு பார்த்திண்டிருப் பான். இப்போ எனக்கு இந்தச் சள்ளையெல்லாம் இல்லை." அவள் பளிச்சென்று சிரித்தாள்.

"நீ இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கே."

"எப்படி இருக்கிறது? நன்னாத்தானே பளிச்சுனு இருக்கேன்?”

"அதான் என் மனசைச் சங்கடப்படுத்தறது; இத்தனை அழகும் வீணாப்போறதேன்னு. "

"அழகு எப்படி வீணாப்போகும்? அது பால்யத்திலே ஒரு தினுசா சரீரக் கவர்ச்சியோட இருக்கும். நடுத்தர வயசில் தாய்மையாகப் பிரகாசிக்கும். வயசானப்புறம் அனுபவமா முதிர்ந்துபோகும். எல்லா வயசிலும் அழகு நிலையாத்தான் இருக்கும். உங்கக்கா கங்கம்மா நன்னா அழகாத்தான் இருந்தா வியாதி வந்து படுத்துண்டப்புறமும் நன்னாத்தான் இருந்தா. பொணமானப்புறமும் பளிச்சுன்னு இருந்தா. அழகுங்கறது மனசிலே இருக்கு. "

பட்டப்பா அவளுடன் வாக்குவாதம் புரிவதை நிறுத்திக் கொண்டான். இவள் தன்னைவிட்டு அகலமாட்டாள் என்பது திடமாகப்புரிந்தது. இனி தான் தான் இவளை விட்டுப்போக வேண்டும். அவள்புத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கணவனுக்கு எதிரில் தன்னை ஒரு பதிவிரதையாக. மகத்தான வளாக, ஒழுக்கமுள்ளவளாக இன்னும் எப்படியெல்லாமோ இருக்க ஆசைபடுகிற ஜன்மம் அவன் அந்த வீட்டில் இருக்கிற வரையில் நர்மதா தனக்குள் கருகித் தீய்ந்துதான் போவாள் என்பது அவனுக்குத் தெரிந்துபோயிற்று

வழக்கம்போல ஒரு நாள் காலையில் காப்பி சாப்பிட்டு ஊஞ்சலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் வட இந்திய யாத்திரை ஸ்பெஷல் ஒன்றைப்பற்றிப் படித்தான்.

"நான் ஏன் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு போய் விடக்கூடாது?" வெளியே புறப்பட்டுப் போனான். திரும்பி வந்தான். பையில் கொஞ்சம் துணிமணிகள். அவ்வளவுதான்.

அவன் எங்கே போனாலும்,எப்போ வந்தாலும் அவள் அதிகமாகக்கேள்விகள் கேட்பது வழக்கமில்லை. "எங்கேயாவது போவார்" என்று நினைத்துக்கொள்வாள். அப்படியே அன்று சாப்பிட்டபிறகு கிளம்பினான். ஊஞ்சலில் தூங்கும் மனைவியை ஆசை தீரப்பார்த்தான். ஆறேழு வருஷங்களாக அறிமுகமான ஒருத்தரைப் பிரிந்துபோசிற அளவே அவனுள் ஒரு ஏக்கம் எழுந்தது. அவளிடம் ஒரு மரியாதை, பக்தி ஏற்பட்டது இன்றுவரை இவள் என்னுடையவள் என்கிற பெருமை ஏற்பட்டது.

கொஞ்சநேரம் நின்று பார்த்து விட்டு வாசற்கதவை லேசாகத் திறந்துகொண்டு வெளியே வந்தான். பக்கத்து வீட்டில் பூரணி பிறந்த வீட்டிலிருந்து மற்றொரு குழந்தையுடன் வண்டியில் வந்து இறங்கினாள். இவனைத் திரும்பிப் பார்த்தாள். பாலுவிடம் குழந்தையைக் கொடுத்தாள். இருவரும் உள்ளே போய்விட்டார்கள்.

அவன் தெருவில் இறங்கி ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வுடன் கிளம்பிப்போய்க் கொண்டிருந்தான்.

நர்மதா விழித்தபிறகு வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டாள்.

பக்கத்து வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. பார்க்கப்போனாள். முதல் குழந்தையைவிட இது நன்றாக இருந்தது.

"எப்படி இருக்கேடி நர்மதா” என்று கேட்டாள் பூரணி.

"அப்படியேதான் இருக்கேன்"

"நீ எப்பப்பாத்தாலும் கதவை அடைச்சுண்டு கிடக்கிற யாமே... இவர் சொன்னார்".

"பின்னே என்னபண்றது? எங்காத்துகாரர் வீட்டிலேயே தங்கறதில்லை. ஒண்டியா வாசக்கதவை திலந்து வச்சுண்டு உக்கார முடியுமா?"

"வாஸ்தவம்தான். கண்டவா உள்ளே வந்துட்டா?"

நர்மதா திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் இவளைக் கவனிக்காமல் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"நான் போயிட்டு வரேன்."

"அப்பப்ப வந்துண்டு போயிண்டிரு..."

"பார்ப்போம் "

இருவரிடமும் முதலில் இருந்த நட்பின் ஆழம் குறைந்து ஏனோ தானோவென்றே பேச்சு நடந்தது.

மாலை வந்தது. விளக்கேற்றியாயிற்று. வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பலதடவைகள் அலைந்தாள். இரவும் வந்தது தனியாக அவ்வளவு பரிய வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது.

மறுநாள். அதற்கடுத்த நாள். நாலு நாளைக்குமேல் ஆயிற்று. பூரணியைத் தேடிப்போனாள்.

"என்ன நர்மதா இப்படி இளைச்சுப்போயிட்டே. பட்டப்பா எங்கே காணோம். "

''நாலு நாளுக்குமேலே ஆச்சு. ஒரு தகவலும் தெரியலை"

"நான் வந்தன்னைக்கு பை நிறைய சலவைத் துணியாபளிச் ஈனுஎடுத்துண்டு கிளம்பிப்போனாரே. எங்கேயாவது ஊருக்குப் போறாராக்கும்னு பாத்த்தேன். நாலு நாளாய்த் தனியாவா இருந்தே.நீ ரொம்பவும் மாறிப்போயிட்டே. மனசைவிட்டு எங்கிட்டே இப்பவெல்லாம் பேசறதில்லை...வரதில்லை "

"பேசறதுக்கு என்ன இருக்கு? நான வாழ்கையிலே தோற்றுப்போனவ. ஆனால், ஒரு நிர்ணயத்தோடு அதில் எதிர் நீச்சல்போட்டு ஒழுங்கா வாழ நினைக்கிறேன். அவர்தான் என்னை அடிக்கடி. 'உன் இஷ்டம் போல யார்கூட வேணா நான் ஒண்ணும் கண்டுக்க மாட்டேன் நான் உதவா. கரைன்னு தெரிஞ்சப்ப, உன்னை அடக்கி வைக்க எனக்கு உரிமையில்லைன்று' பேசிண்டிருக் கார். உங்காத்தக்காரர் மேலேகூட அவருக்கு சந்தேகம். ஊர்லே சாயிராம்னுஒருத்தர். அவர் இங்கேயே என்னைத்தேடிண்டு வந்துட்டார். மேலேயும் சந்தேகம். நான்தான் இதிலெல்லாம் எனக்கு இருந்த ஆசை எப்போதோ போயிடுத்து. இப்ப நான் இந்த டம்புக்கு பிரதானம் கொடுக்கலை. சுத்தமா இருக்க நினைச்சு அதைப் பழக்கப்படுத்திண்டு வரேன். அவர் என்னை அப்படியெல்லாம் தூண்டாதீங்கோன்னேன். அப்புறமா அவர் என்னோட இரண்டு நாள் பேசாம இருந்தார். என் புடவைகளோட இந்த பாங்க் புஸ்தகம் இருக்கு. ரொக்கமா ஐம்பதினாயிரம் எம்பேர்லே போட்டிருக்கார்.

பூரணி திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"வேறே கடுதாசி கிடுதாசி ஒண்ணும் இல்லை."

"எங்கே போயிருப்பார்?”

"அதானே புரியலை. நான் எப்படி தனியா இவ்வளவு பெரிய விட்டிலே இருக்கிறது? பயமா இருக்கு .."

"ஒண்ணு பண்ணு. ஊர்லேந்து உன் அம்மாவை வர வழைச்சு வைச்சுக்கோ. பாவம், இந்தத் தள்ளாத வயசுலே யாராத்துலேயோ சமைச்சிண்டிருக்கான்னு சொல்றியே..."

“அப்படித்தான் பண்ணனும் .."

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது பாலு வந்தான் இப்போதெல்லாம் அவனுக்கு நர்மதாவைப்பற்றி ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அன்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டபிறகு அவளிடம் அவனுக்கு ஒரு பயமே ஏற்ப்பட்டது.

நர்மதாவும் சட்டென்று எழுந்து விட்டாள்.

நர்மதா விரிவாக அம்மாவுக்கு எழுதினாள்.

"உன் மாப்பிள்ளையை ஒரு வாரமாகக் காணவில்லை. நான் தனியாக இருக்கேன். கிளம்பி வரவும்..."

சிலரால்தான் ரகசியங்களை காப்பாற்றமுடியும். பலரால் காப்பாற்றமுடியாது.

வெங்குலட்சுமி எட்டு குடித்தனங்களுக்கும் தெரியும்படி இரைந்து கத்தினாள்.

"படுபாவி! எம்பொண்ணை - கிளியாட்டமா இருக்கிற ஏமாத்திக்கல்யாணம் பண்ணிண்ட பாவம் போதாதுன்னு அவளை விட்டுட்டு ஓடியும் போயிட்டான்!"

சாயிராம் சிந்தித்தான். என்ன ஏமாற்றினான்? புரிந்து போயிற்று.

நர்மதா அன்று இருந்ததுபோலவே இன்றும் இருக்கிறாள். வாடாமல் வதங்காமல், கசங்காமல் அப்படியே புதியவளாக.

கிழவிக்குத் தான் துணை வருவதாகச் சொல்லிக்கொண்டு சாயிராம் வெங்குலட்சுயோடு வந்து சேர்ந்தான்.

நர்மதா அம்மாவைக்கொல்லைப்பக்கம் அழைத்துப்போய் ரசசியமாக, அண்ணாவை அழைச்சுண்டு வரதுதானே? இவனைப்போய்த் துணைக்கு அழைச்சுண்டு வந்தியே” என்று கேட்டான்.
..
"அண்ணாவா? அவன்தான் பொண்டாட்டியோட் பட்ட ணம் போயிட்டானே. சினிமாவுக்கு ஆள் பிடிச்சுக்கொடுக் கிறதாம். அவன் பொண்டாட்டி சினிமாவிலே நடிக்கப் போறாளாம்."

தள்னுடைய நிலைமை நர்மதாவுக்கு நன்றாகப்புரிந்தது. தகுந்த துணை என்று சொல்லிக்கொள்ள அம்மாவைத் தவிர வேறு யாருமே இல்லை.

சாயிராம் என்னென்னவோ கேட்டான்.

"எப்பப்போனான், என்னிக்கி வருவான்? பணம் காசு குடுத்துட்டுப் போயிருக்கானா?
இல்லையன்னா கிளம்பு. அன்னிக்கே சொன்னேன். லட்சணத்துக்கு இத்தனை நாள் பெரிய ஸ்டாரா ஆகியிருக்கலாம், ஹூம்...

அவள் இதெற்கெல்லாம் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“நீங்க இந்த வீட்டிலே இருக்கிறது சரியில்லை. ஊருக்குப் போங்க''

போய்விட்டான். அம்மாவும் பெண்ணும் சமைத்தார்கள். சாப்பிட்டார்கள், பேசினார்கள். அவள் தினமும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள்.

பட்டப்பா அன்று கிளம்பியவன் நேராக வாரணாசிக்குப் போனான். மனம்போனபடி சுற்றித் திரிந்தான். அவனைப் போல அங்கு எத்தனைபேர்? மன சாந்தியைத்தேடி, கங்கா ஸ்னானம் பண்ணுவதற்கு, மூதாதையர்களுக்கு சிரார்த்தம் பண்ண, வாழ்க்கையை வெறுத்தவர்கள், ஊரில் வீடு வாசல் மனைவி குழந்தைகள் இருந்தும் ஏதோ ஒரு பிரமை தங்களைப் பிடித்து ஆட்டுவதுபோல் உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெறத்துடிப்பவர்கள்.

அவன் ஒருநாள் மணிகர்ணிகை கட்டத்தில் இருந்தான். இன்னொரு நாள் கேதர் கட்டத்தில் இருந்தான். அடுத்த நாள் ஹரிச்சந்திர கட்டம். அப்புறம் ஹனுமான் கட்டம் இன்னொருநாள் அஸ்ஸி கட்டம், ஆஞ்சநேயர் கோயிலில் உட் கார்ந்திருந்தான்.

அந்தக் கட்டத்தில் பிணம் தின்னும் கழுகுகள் பிணங்களைக் கொத்தித்தின்பதை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தான்.

"உடம்புக்கு இவ்வளவுதானா மதிப்பு? அதான் நர்மதா சொன்னாளே.'' திடும்மென்று அவன் அவளுக்குக் கடிதம் எழுதினான்.

இரண்டு மாதங்களுக்குப்பிறகு அவளுக்குக்கடிதம் வந்தது.

'நான் உயிரோடு இருக்கிறேன். நீ சுமங்கலிதான் பயப்படாதே. நான் எங்கங்கோ அலைந்து கொண்டிருக் கிறேன். இதை ஒரு சோதனைபோல நடத்தவே அங்கிருந்து கிளம் பினேன். என்னுடைய பிரிவுக்கு அப்புறம் உன் மனசிலே படியப்போகும் எண்ணங்கள் வேறாக இருக்கலாம் என்று எனக்குள்ளே ஒரு அனுமானம். அது பொய்யோ, நிஜமோ, நான் கர்சிக்குப்போய் இருத்தேன். இந்த க்ஷேத்ரத்தில் சங்க மிருக்கும் மனோ விகாரங்கள், மனோ லயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனுஷாள்ளே முக்கால்வாசிப்பேர் நிம்மதிக் காக அலைவதும் புரிந்தது ஏதோ ஒரு குறை எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. எனக்கு எப்போதாவது திரும்பி வர வேண்டும்போல் இருந்தால் ஊருக்கு வருவேன், றால் இல்லை. என்
கையில் கொண்டுவந்த பணம் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதுவும் செலவழிந்து விட்டால் அப்புறம் என்ன பண்ணுவேன் என்று யோசிப்பாய். பரந்த இந்த நாட்டில் என்
பொழுது எப்படியோ போய்விடும். எங்காவது வேலைசெய்வேன், கர்மண்யவே அதிகாரய...' என்கிறான் பசுவான். வேலைக்குக் கூலிகிடைக்க அவன் பார்த் துக்கொள்வான். உன்னோடு வாழ்ந்த இந்த ஆறேழு வருஷங் கள் என் வாழ்க்கையில் இனிமையான காலம் அதற்கு முன் பும் நான் அவ்வளவு இனிமையோடு இருந்ததில்லை பின் பு எப்படி இருக்கப் போகிறோனோ. நர்மதா! என் இனியவளே! புண்ணிய நதியின் பெயரைத் தாங்கியவளே! அவளைப்போல புனிதமானவள் நீ. நன்றாக இரு

கல்லாகச்சமைந்து உட்கார்ந்திருந்தாள் அவள் வெகுநேரம். தாபால்காரர் பதினோரு மணிக்குக் கடிதம் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு மணிவரை அந்தக் கடிதத்தையே திருப்பித் திருப்பிப் படித்தாள். பிறகு எந்த ஊரிலிருந்து வந்திருக் கிறது என்று சுவரின் மேல் முத்திரையைக் கவனித்தாள். அழிந்த நிலையில் சந்த்ராபூரோ, சீதாபூரோ எதுவுமே சரியா
தெரியாதபடி எழுத்துக்கள் காணப்பட்டன

வெங்குலட்சுமி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். உழைத்து உழைத்து ஓடாகிப்போன உடம்பு சுகம் இன்ன தென்று அறியாத மனம். சுகமாக மகளின் வீட்டில் இரண் டொரு மாதங்களாகத் சங்கியிருப்பதில் மிகவும் சந்தோஷப் பட்டாள். வி த விதமாகச் சமைத்தாள். தேங்காயைப் பறிக்கச் சொன்னாள். நெற்களஞ்சியத்தில் நெல் நிரம்பி வழி வதைப் பார்த்து மகிழ்ந்தாள். பெண் இப்படி இருக்கிறாளே என்று அவளுக்குத்தோணவில்லை

''ஊரை விட்டு ஓடிப்போனா அவ என்ன பண்ணுவாள்? இத்தனை சொத்தையும் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை.”

இதைக்கேட்டு பூரணி அதிசயித்தாள். ஊரிலே அவளு டைய சிநேகிதி ஒருத்தி பால்யத்தில் விதவையானபோ துக்கம் கேட்கவந்த ஒரு அம்மாள், "வெறுமனே அழுதுண்டி ருக்காதே. கொஞ்சமாவா வச்சுட்டுப் போயிருக்கான்? மூணு லட்சமாமே? தங்கம் போல இரண்டு குழந்தைகள் இருக்கு ஹும் " என்று வெகு அழகாக துக்கம் விசாரித்தாள்.

இதெல்லாம் உலகத்தில் சகஜம் என்பது போல பூரணி சிரித்தபடி, போய்விட்டாள்.

''இத்தனை சொத்தையும் கட்டி ஆள தன்னால் முடியாது. அம்மாவுக்கு வயசாகி விட்டது. அதோடு கங்கம்மாவின் காசை எடுத்து என் அண்ணனுக்கும், அவன் மனைவிக்கும் கொடுப்பது தர்ம விரோதம். இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்!

மறுபடியும் அவள் பல மாதங்களுக்கு அப்புறம் பாலுவைத் தேடிப்போனாள். கடிதத்தைக் காட்டினாள். பாலு நெகிழ்ந்து போனான். தான் எத்தனை அற்பமானவன் என்று யோசித்தான். பட்டப்பாவால் ஆளமுடியாத பெண்ணை தான் அனுபலித்துவிட வேண்டும் என்று தீவிரம் கொண்டிருந்தது அவன் நெஞ்சை அறுத்தது. அவனா ஆண்மையற்றவன்? உண்மையில் அவன் தான் நல்ல ஆண்மகன். மனைவியைப் பலர் முன்பாகக் கோர்ட் கொத்தளம் என்று கொண்டு வந்து நிறுத்தா மல், பெருந்தன்மையுடன் அவளுக்கு விடுதலை வழங்கியவன்.

நர்மதா தலைகுனிந்து நின்றிருந்தாள். சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் பூமியில் விழுந்து தெரித்துக்கொண்டிருந்தது. பூரணி நன்றாகத்தேம்பி அழுதாள்.

''இப்போ நான் என்னசெய்யணும்?" என்று கேட்டான்பாலு.

"ஒரு வக்கீலப்பாத்து, என் பேரில் அவர் போட்ட ரொக்கத்தைத்தவிர, மற்றதை கங்கம்மா பேரில் ஒரு டிரஸ்ட் ஆக மாத்தணும். ஆஸ்பத்திரிகளுக்கு, கல் வி நிலையங்களுக்கு, குழந்தைகள் விடுதிக்கு அந்த வருமானம் போகிற மாதிரி பண்ணணும்."

''நீ என்னம்மா பண்ணப்போறே?"

அம்மா என்கிற சொல்லைக்கேட்டு அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சினிமா போஸ்டர்களில் சீரழியும் பெண்கள், இரவில் கொஞ்சம் நேரம்கழித்து வீதியில் நடந்தால் 'லிப்ட்' கொடுப்பதாகச் சொல்லிக் கூப்பிட்டு, அவர்களைக் கேவலப்படுத்த எண்ணும் ஆண்கள். பெண்! அவள் தாயாக, அக்காவாக, மகளாக இன்னும் பலப்பல உறவுகளுடன் இருப்பவள். அவளை மனைவியாக மட்டும் நினைக்கிறதை, மதிக்கிறதை...''

''நானும் அம்மாவும் வடக்கே போகலாம்னு இருக்கோம். பத்ரி வரை போய்ப்பார்க்கிறது. எனக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவரை எங்கேயாவது பார்க்கமுடியும் ..''

பாலு கலங்கினான். இவள் தன்னிடம், தன் ஆண்மையிடம் சரண் அடைந்து விடுவாள் என்று நினைத்திருந்தவன், கண் கலங்க உட்கார்ந்திருந்தான்.
---------------

அத்தியாயம் 15

சொத்துக்களைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க ஒரு மாதத்துக்குமேல் ஆயிற்று. இன்னொரு கடிதம் வராதா என்று எதிர்ப்பார்த்தாள். ஏமாந்தாள். ஒன்றும் தகவல் இல்லை.' இந்த மட்டும் தற்கொலையில் இறங்காமல் உசிரோட இருக்கேன் என்று கடுதாசி போட்டாரே" என்று சந்தோஷப் பட்டாள் நர்மதா.

வெங்குலட்சுமிக்குக் காசிக்குப் போகப்போகிறோம் என்றவுடன் உற்சாகம் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது. அங்கே சமைத்துச்சாப்பிட அது இது என்று நாலைந்து டப்பாக்களை நிறப்பிக்கொண்டாள், சிலருக்கு அதிக துக்கம் ஏற்பட்டு விட்டால் மனசு கல்லுப்பட்டுப் போய்விடுமாம்.

நாரத்தங்காயிலிருந்து சுண்டைக்காய்வரை எடுத்து வைத்தாள். நர்மதா சுத்தமாக எல்லா நகைகளையும் கழற்றி "பாங்க்கின் பாதுகாப்பில் வைத்தாள். திருமாங்கல்யச் சரடு, கண்ணாடி வளையல்கள், ஒற்றை மூக்குத்தி, தோடுகள், நாலு நூல் புடவைகள்.

"என்னடி வேஷம் இது? அவன் எங்கேயாவது நன்னா இருக்கவேண்டாமோ?"

"இதோ" என்று திருமாங்கல்யத்தைக் காண்பித்தாள்.

"நன்னா இருக்கு! பளிச்சுனு இருந்தாத்தான் நாலுபேர் மதிப்பா. போற இடத்திலும் மதிப்பு கிடைக்கும். "

அம்மாவோட என்ன தர்க்கம் வேண்டியிருக்கு. அவ மனசு அப்படி என்று அவள் அதிகம் பேசவில்லை.

"இரண்டு நாள் என்னோடு இரேன்" என்று பூரணி கூப் பிட்டாள்.

"உன்னை மறந்துடவா போறேன், எல்லாத்தையும் கவ னிச்சுக்கோ... தேங்காய் பறிச்சுக்கோ... ஒரு நல்ல நாளாப் பார்த்துண்டு இந்த வீட்டுக்கு வந்துடுங்கோ. கங்கம்மா குழந் தைகளுக்கு ஆசைபட்டாள். ஒங் குழந்தைகள்தான் ஓடி விளையாடட்டுமே வேணா இன்னும் இரண்டு பெத்துக்கறது..." என்று கிண்டல் பண்ணினாள்.

"பெத்துக்க வேண்டியதுதான்!"

"பாரேன். நான் திரும்பி வரச்சே உனக்கு நாலுக்குமேலே இருக்கப்போறது!"

“போடி..."

பூரணி சிரிக்கவில்லை. துயரம் தாங்காமல் நர்மதாவைக் கட்டிக்கொண்டாள்.

கிளம்புகிறதற்கு முதல்நாள் வரையில் நர்மதா அம்மா கட்டி வைத்திருக்கும் மூட்டை முடிச்சுகளைக் கவனிக்கவில்லை. நாலைந்து தகரடப்பாக்கள். நார்மடிக்கூடை. பெட்டிவேறே.

"பெட்டியிலே என்னம்மா?”

‘ஒனக்கு நாலு பட்டுப்புடவை எடுத்து வச்சிருக்கேன்.”

"போருமே. எல்லாத்தையும் எடுத்து உள்ளே வை. இல்லைன்னா யாரையாவது கூப்பிட்டுக் குடுத்துடுவேன்."

கிழவி முணு முணுத்துக் கொண்டே எடுத்து வைத்தாள்.

கங்கா காவேரியில் ஜன்னல்ஓரம் உட்கார்ந்திருந்த நர்மதா வெகுநேரம் வரையில் பேசவில்லை. ரயில் கிருஷ்ணா நதியைத் தாண்டி, விரைந்து கொண்டிருந்தது பொங்கித் தளும்பி பிரவகிக்கும் தண்ணீரைக் கண் கொட்டாமல் பார்த்தாள். எத்தனை பேருடைய தாபத்தை. பாபத்தை இந்தப் புனிதநதி போக்கியிருக்கும்? ரயிலின் ஓரமாக மலைகள் வந்தன. சமவெளி வந்தது. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. இரவில் சந்திரிகை பிரகாசித்தது.

அவள் தன்னிடமிருந்து ஒரு பாரம் குறைவதை உணர்ந்தாள்.

வானத்து நிலவு தாவள்யமாகப் பிரகாசித்துக் கொண் டிருந்தது.

அவள் மனசில் ஒளிந்துகொண்டு ஆட்டம்போட்ட எண்ணங்கள், மனதை இருட்டாக அடித்த சபலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகவிலக அவளுக்குள் ஒரு விழிப்புஏற்பட்டது.
பெட்டியில் எல்லோரும் தூங்க, அவள் விழித்திருந்தாள்.

அவள் விழித்திருந்தாள் முற்றிற்று
------------------------

This file was last updated on 20 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)