pm logo

யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய
இந்தியச் சரித்திரக் கும்மி


intiyac carittirak kummi
by yOki cuttAnanta pAratiyAr
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft
copy of this work for publication
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய
இந்தியச் சரித்திரக் கும்மி

Source:
இந்தியச் சரித்திரக் கும்மி
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
அன்பு நிலயம்
இராமச்சந்திரபுரம்: திருச்சி ஜில்லா
பதிப்புரிமை
முதற் பதிப்பு: பிப்ரவரி, 1947
கமர்ஷியல் பிரின்டிங் அன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை 1.
MS. 120A- For Anbu Nilayam Ty-58
விலை ரூ. 1/4
-----------------------------------------------

பதிப்புரை

இந்தியச் சரித்திரக் கும்மி என்னும் இந்நூல், இந்தியாவின் பூகோளத்தையும் சரித்திரத்தையும் இனிய இன்னிசைக் கும்மிகளாகப் பல வண்ணங்களில் விளக்குகிறது. இக்கும்மிகளை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள், மாணவர்களுக்கும் பொதுஜனங்களுக்கும் சரித்திர ஞானம் உண்டாகவே பாடினார்கள்.

திருநாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் இவற்றைப் பாடி வட்டமிட்டுக் கும்மி யடிக்கக் கேட்டால், தேசாவேசம் பிறக்கும். இக்கும்மிகளில், தமிழ் நாட்டிலிருந்தே இந்திய சரித்திரம் தொடங்குகிறது. தமிழர் பெருமை, தமிழ் வீரர் கீர்த்தி, ஆரிய வேதகாலம் முதல் ஹர்ஷன் காலம் வரையில் பாரததேசம் அடைந்த முன்னேற்றம், பிறகு அன்னியப் படையெடுப்புகளால் அதற்கு நேர்ந்த சிறுமை, இஸ்லாமிய ஆங்கிலேய அரசுகளின் பான்மை, இனி எல்லா இந்தியரும் ஐக்கியமாக வாழும் வழி, காங்கிரஸ் செய்துள்ள தேச சேவை, தேசியத் தலைவர் பெருமை - எல்லாம் இக்கும்மிகளில் கோவையாகக் காணலாம்.

தமிழர் தெருத்தெருவாக இக்கும்மிகளைப் பாடி முழக்கி, நாட்டன்பை வளர்ப்பார்களாக!
எந்தாய் வாழ்க! வந்தே மாதரம்!

இராமச்சந்திரபுரம்) அன்பு நிலயத்தார்.
21-2-1947 )
--------------------
பொருளடக்கம்
பதிப்புரை
1. பாரத பூமி 2. தமிழர் வரலாறு 3. வேத பாரதம்
4.. பௌத்த இந்தியா 5.. சந்திரகுப்த ராஜ்யம் 6. இந்து மன்னர்
7. கனிஷ்கன் 8. குப்தரும், வர்த்தனரும் 9.. இஸ்லாம் இந்தியா
10. பாரத வீரர் 11. வீர சிவாஜி 12. குரு கோவிந்தசிங்கன்
13. தென்னாட்டின் பெருமை 14. கும்பினி இந்தியா 15. காங்கிரஸ் இந்தியா
-----------------------

இந்தியச் சரித்திரக் கும்மி
1. பாரத பூமி

இ - ம்: செஞ்சுருட்டி]       (ரூபக தாளம்
வந்தே மாதரம்!
சந்தம்
[ தன்னன தான தனதன தான
தனதன தான தனதான ]

வேத நிலம்
புண்ணிய பூமி, புராதன பூமி,
      புலவர்கள் போற்றிப் புகழ் பூமி;
கண்ணிய மாகிய கற்பகப் பூமியின்
      கதையைப் பாடிக் களித்திடுவோம்.

வீரரும் தீரரும், வித்தகச் சித்தரும்,
      வேந்தரும் போற்றிய வேத நிலம்;
பாரத பூமியில் நம்மைப் படைத்த
      பரமனைப் பாடிக் குதித்திடு வோம்.

கொண்டை அசைந்து மலர்சொரியக்-கனக்
      கொங்கை அணிகள் குலுங் கிடவே,
தண்டை சிலம்பு கலீர் கலீரெனத்
      தாவியே கும்மி யடித்திடு வோம்.

எல்லை
முப்புறம் ஆழி முரசடிக்கும் - கன்னி
      முனைக்கும் கௌரி முடிக்குமிடை
எப்புறம் பார்த்தாலும் இன்பந் தவழ்ந்திடும்
      இந்திய நாடெங்கள் சொந்த நிலம்.

வானம் அளாவும் மலைகளிலே-நதி
      வளர்க்கும் பச்சை வனங்களிலே,
தேனுங் கனியும் தெவிட்டாது கொட்டிடும்
      தேசமிதே, திரு வாசமிதே!

மலைகள்
வெள்ளிப் பனிமலை, ஹாலாய், சுலைமான்,
      விந்தியம் மேற்குக் கிழக்குத் தொடர்,
துள்ளும் அருவிகள் தோத்திரம் பாடிடத்
      துலங்கும் குறிஞ்சிநன் னாடிதுவே!

ஆறுகள்
கங்கா, யமுனை, பிரம்மபுத்ரா,- சிந்து,
      காவேரி, வைகை, பொருநை, பெண்ணை,
துங்கா, கோதாவரி, கிருஷ்ணா, மஹாநதி,
      சுரக்கும் மருதநன் னாடிதுவே!

மொழிகள்
ஆரியம், செந்தமிழ், ஆங்கிலம், வங்காளம்,
      கன்னடம், இந்தியுடன்
மாரதங் கேரளம், கூர்ச்சர மாம்பல
      வாழ்த்திடும் நாடிதுவே!

கவிகள்
வேத வியாஸர், சுகருடன், வால்மீகி,
      சங்கரர், காளிதாஸன்,
வாதவூரார் திருவள்ளுவர் கம்பர்
      வரகவி பாடிய நாடிதுவே!

மாகாணங்கள்
செல்வத் தமிழகம் ஆந்திரம் கன்னடம்
      சேரம் மராடியம் சிந்து வங்கம்
பல்வளக் கோசலம் பாஞ்சாலங் கூர்ச்சரம்
      பாங்காக நேபாளம் பாருங்கோடீ!

ஊர்கள்
செஞ்சி, திருப்பதி, சென்னை, திருச்சி,
      சிதம்பரம், காஞ்சி, திருவரங்கம்,
தஞ்சை, மதுரை, திருவாங்கூர், கொச்சி
      தங்க மைசூரையும் பாருங்கோடீ!

காசி, குருநிலம், கல்கத்தா, டில்லி,
      கான்பூர், லக்னோ, கயா, பூரி,
நாசிகை பூனா நகரம் பலகண்டு
      நல்ல கலைச்செல்வங் கொள்வோமடீ!

எட்டுத் திசையும் எழிலடியோ- இதன்
      இயற்கை யெங்கும் அழகடியோ;
பட்டண மெல்லாந் தொழிலடியோ-அங்கே
      பாட்டுடன் வேலை பழகடியோ!

எண்ணப் பரவசம் ஆகுதடீ - இதை
      இசைத்தாற் கவலையும் போகுதடீ!
விண்ணின்பம் வந்துள்ளே தாக்குதடீ - எங்கும்
      வேத ஒளி நம்மை ஊக்குதடீ!

மரபுகள்
தெருக்குத் தெருவாம் திருக்கோயில் - இங்கே
      திண்ணைக்குத் திண்ணை திருப்பாடல்;
உருக்க ளெல்லாம் கலைச் சிகரம் - இதன்
      ஊர்களெல்லாம் பெரியார்களம்மா!

செந்தமிழ்ப் பாண்டியர், சேர சோழருடன்
      தெலுங்கர், பல்லவர், ஒய்சளரும்
சந்திர சூரியர் மோரியர் குப்தரும்
      தருமந் தாங்கிய நாடிதுவே!'

வித்தகச் சித்தர் விதி வகுக்க - நல்ல
      வேந்தர் செங்கோலற மேந்திடவே,
சத்திமிகு வீரர் காத்திடவே - இசை
      தழைத்த பாரத நாடிதுவே!

எத்தனை ஞானிகள் எத்தனை பக்தர்கள்
      எத்தனை வெற்றி வினைவீரர்.
எத்தனையோ கவி யோகிகள் வேந்தர்கள்,
      இந்திர போகிகள் வந்தனரே.

காலம்
தென் குமரி கண்டம் எக்காலம் - வெள்ளிச்
      சிகரங் கண்டதும் எக்காலம்!
தொன்மை நிறைந்து துலங்குமிப் பாரதந்
      தொல்லுலகத் தொடுந் தோன்றியதே.

முன்னிங் கிருந்தவர் செந்தமிழர்-அவர்
      முற்றுமித் தேசத்தை ஆண்டிருந்தார்.
பின்னிங்கு வந்தவர் ஆரியர் சோனகர்
      பின்னிக் கொண்டாரவர் நம்முடனே!

ஆரிய திராவிடச் சண்டையில்லை - இனி
      ஆத்தும நேயர் அனைவருமே;
பாரத நாடெல்லாம் ஓர் குலமே - அதன்
      பாக்கியமெல்லாம் பொதுநலமே!

அந்தண்மை வீரம் அறிவு கலை தொழில்
      ஆகுமெல்லோர்க்கும் பொதுவுடைமை;
இந்திய ருக்குள் இறைவனுந் தோட்டியும்
      ஏகக் குடும்பத்தின் பாகமென்போம்!
---------------------

2. தமிழர் வரலாறு

இராகம்: செஞ்சுருட்டி] [திரிபுடை தாளம்
தன்னன தானன தானன தனான
தன்னன தானானனா - தங்கமே
தனதன தானானனா!

பக்குவ மாகவே
      பண்டைச் சரிதையைப்
பகருவேன் கேளடியோ- தங்கமே
      பாராண்ட நாளடியோ!

தெற்கத்திச் சீமையிலே,
      தென் குமரி கண்டத்திலே,
செந்தமிழ் நாடடியோ-மனிதர்
      செனித்த நல் வீடதுவே!

இந்து கங்கைக்கும் முன்னே
      இமய மலைக்கும் முன்னே
இலகு தமிழ்க்கண்டமே - இந்தியா
      இதிலிருந்த துண்டமே.

விந்தியம் நீலகிரி
      மேற்குக் கிழக்குத் தொடர்,
விரிந்த குமரிகண்டம் - தன்னிலே
      மிஞ்சி யிருந்தவையே.

சோமசுந்தர னென்னும்
      சூரனிக் கண்டத்தை
மாமதுரைப் பதியில்- தங்கமே
      மங்களமாய்ப் புரந்தான்.

எத்தனையோ மன்னர்
      எத்தனையோ வீரர்
எத்தனையோ புலவர் - தங்கமே
      இலகி வளர்ந்த நிலம்.

வெள்ளக் கடல் விம்மி
      வீறிப் புயலடித்தே
அள்ளி விழுங்கிய தே-நம்
      அருமைத் தமிழகத்தை.

அள்ள அள்ளக் குவியும்
      அருமைத் தமிழ்க் கலையை
வெள்ளம் விழுங்கிடினும் --சகியே
      வீறு குறைந்திடுமோ!

புகழ் மிகு பாண்டியர்
      புதிய மதுரை கட்டி
மகிழ்வுடன் ஆண்டு வந்தார்- இமய
      மலையிற் கொடியேற்றினார்.

அரசின் அறத்தினிலும்,
      ஆண்மைத் திறத்தினிலும்,
முரசின் அதிர்ச்சியிலும் - வெற்றி
      முழங்கிப் பொலிந்தோமடி.

செந்தமிழ் வீரரென்றால்
      செகமுந் தலைவணங்க
முந்து புகழ்சிறந்தார் - தங்கமே
      முன்னேறிச் சென்றாரடி.

பொங்குந் தமிழ்க் கலையை
      புலவர் வளர்த்திடவே
சங்கம் அமைத்தாரடீ - தங்கமே
      சகம்புகழ் பாண்டியரே.

தெய்வத் திருக்குறளும்,
      சிலம்புடன் மேகலையும்
துய்ய சிந்தாமணியும் - தங்கமே
      தொல்காப்பியத் தமிழே,

பத்துப்பாட் டெட்டுத் தொகை
      பதினெண் கீழ்க்கணக்கு
முத்து முத்தாய்ச் சொல்லுமே - தங்கமே
      முத்தமிழர் பெருமை!

அன்பு மணி வாசகம்,
      ஆழ்வாரின் பாசுரம்
கம்பன் கவியமுதம் - தங்கமே
      கடவுட் கலைவிருந்தாம்!

கல்வி தொழில் வளமை,
      கப்பல் சுமந்து வரும்,
செல்வ வளமையிலே - தங்கமே
      செழித்தது செந்தமிழே.

செழியருடனே வீரச்
      சேரரும் சோழரும்
அழியாப் புகழ் விளங்க- தங்கமே
      ஆண்டனர் நீண்டயுகம்.

வீர நெடுஞ் செழியன்
      வெல்லுந் திருவளவன்
சேரன் செங்குட்டுவன் போல் - தங்கமே
      சிறந்த நல் வேந்தர்கள் யார்?

எங்கும் அறிவோங்க,
      எங்கும் இன்பம் பரவச்
செங்கோல் பிடித்தாரடி- தங்கமே
      செந்தமிழ் நாட்டரசர்.

மீனும் வில்லும் புலியும்
      விளங்கு மணிக்கொடியை
வானுயர நாட்டினார் - தங்கமே
      வாகை மிகுந் தமிழர்.
-----------

3. வேத பாரதம்

இ-ம் : நாதநாமக்ரியை] [ஜம்பை தாளம்
தன்னன தானா - தனதன - தன்னன தானா
தன்னன தன்னன தன்னன தன்னன
தன்னன தன்னன தனதன தனதன
தந்தன தானா.

செந்தமிழ் நாட்டின்- பழம்பெரும்
      சீர்த்தியைப் பார்த்தோம்!
விந்தியந் தாண்டி விளங்கிய நம்புகழ்
      வேதகாலம் முதல் ஓதுவேன் கேளடி
விமரிசையாக.

இந்தியா முழுதும்--ஒருகாலம் - இருந்தவர் தமிழர்
சிந்து வெளியில் மகேஞ்சதாரோவிலே
      தேடக் கிடைத்திடும் சின்னங்க ளேயிதைச்
செப்பிடுந் தோழீ!

ஆரியர் வந்தார் அவர்களும் - ஆசியத் தோழர்;
ஆரியர் என்றிடிற் சீரியர், நேரியர்,
      அன்புள்ள நேயர்கள் என்பதுவே பொருள்;
அறிவாய் நீ தோழீ!

தந்தை தமிழே-ஆரியந்- தாயென லாமே:
இந்த மொழிகள் இரண்டு வளர்த்ததே
      இந்திய நாகரிகம்; அதை யெண்ணுவாய்
      இனிப்பிரி வுண்டோ?

பண்டுயர் நாடு - பழம்புவி- பாராட்டும் நாடு
வென்றி மேல் வென்றி விளைந்து சிறந்திட
      வேதமுனிவரும் ஆகமச் சித்தரும்
      விளங்கினர் தோழீ!

ஆனந்தப்பரமன்-அவன் ஆத்தும நாதன்
ஆனந்தமே உயிர் வாழ்வென நித்திய
      கானஞ்செய் வேதத்தை ஞானரசம் பொழி
      கனியெனச் சுவைப்போம்.

நீயது வென்றே -முழங்கிடும் துயநல் வேதம்;
தாயமு தாகிய தாரக மாகவே
      தழைத்தது பாரத தர்மம்; அதன் பயன்
      சாற்றுவேன் கேளாய்.

வான்மீகி வ்யாசன்- சுகர்யாக்ஞ-வல்கிமைத்ரேயி
ஆன மகாத்மாக்கள் ஆக்கிய வாக்குகள்
      அகிலமெல் லாம்புகழ் அத்யாத்மப் பொக்கிஷம்
      அனுபவிப் போமே!

ஆரிய ராமன் ஜயம்பெறும் - வீரவில் லேந்தி
கோரவரக்கர் குமையத் தருமத்தைக்
      குலமகள் கற்புடன் நலம்பெற நாட்டிய
      கொள்கையைக் காணாய்!

தரும விஜயர்- கண்ணன் - சாரதியாக
திருவிலிக் கௌரவர் தீமையைப் பல்லாண்டு
      பொறுமையாய்ப் பொறுத்தபின்
      போர் செய்து வென்றதைப்
புகலுவோம் தோழீ.

மோதிய போரில் - வீரன்-வாதனை கொள்ள
கீதையினாற் கர்ம யோகத்தைப் போதித்தான்
      கிருஷ்ண பகவான்; அவன்மொழி பாரத
      வேதமென் றோதாய்!

ஆத்தும வீரர்-ப்ரம்மசர்யங்-காத்தபுலவர்
சாத்வீக சக்தியும் தார்மீக ஜீவனும்
      பூத்தவர் பாரத புங்கவர் தம்மைநாம்
      போற்றிசெய் வோமே!
------------------------

4. பௌத்த இந்தியா

இ-ம் : புன்னாகவராளி) (ஆதி தாளம்
தன்னன தானனனா - தன
தன்னன தானனனா
தன்னன தானனனா தன
தனதன தந்தனனா.

புத்தர்
ஆருயிர்க் கருணையினால்-சகியே
      ஆவி துடிதுடித்தே
பேருபகாரஞ் செய்த- புத்தர்
      பெயரினை யார் அறியார்?

சித்திர மாளிகையும் - சகியே
      சிங்கார வாழ்வினையும்
பத்தினி தோளினையும் - அவன்
      பட்டெனத் துறந்து சென்றான்.

அரசடி வீற்றிருந்தே- நாளும்
      அமைதியாய்த் தியானஞ் செய்தே
நரசமு தாயத்திற்கே - ஒரு பெரு
      நல்வழி கண்டெழுந்தான்.

அகந்தையைச் சுட்டுவிட்டால்--பே
      ராசையை விட்டுவிட்டால்,
சுகம் பெறலாம் எனவே ஞானச்
      சுடர்மணி முரசடித்தான்!

சாதி வித்யாசமில்லை - வீண்
      சடங்குகள் யாவுமில்லை
போதியின் ஜோதியிலே--இந்தப்
      புவியெல்லாம் வாழ்த்திடலாம்.

தருமத்தைப் பரப்பிடவே- புத்த
      சங்கம் உலகமெல்லாம்
ஒருமனத் துறவிகளால் - நன்றாய்
      ஓங்கி வளர்ந்ததுவே.
ஐம்பது கோடி மக்கள் - புத்தன்
      அறவழி வாழுகின்றார்.
பண்புடன் புத்தமதம் - இங்கே
      பல்லாண்டு வாழ்ந்ததுவே.

மஹா வீரர்

துறவினிற் பெரியவனாம்- மனத்
      தூயன் மஹாவீரன்.
அறநெறிச் செல்வனவன் - எங்கும்
      அஹிம்ஸையைப் பரப்பி வந்தான்.

அமைதியாய்த் தவம்புரிந்தே- அவன்
      அருகனாய் மிகப்பொலிந்தான்
சமவசரணம் அமைத்தே - தரும
      சாதனத் தொண்டு செய்தான்.
-----------------------

5. சந்திரகுப்த ராஜ்யம்

அலெக்சாந்தர்

நந்தரின் ஆட்சியிலே - நாம்
      நலமுற வாழ்கையிலே
வந்தனன் ' அலெக்சாந்தர் '- நம்
      வாளுடன் வாள் தொடுத்தான்.

அடிக்கு நல்லடி கொடுத்தே - நாம்
      அமர் செய்த வேளையிலே,
கொடிய துரோகி வழி - காட்டிக்
      கொடுத்தனன் பகைவருக்கே.

அன்னியரை வணங்கும் - வீண்
      அலிகளைப் புறமொதுக்கி,
முன் புருஷோத்தமனே - பகை
      முறிந்திடப் போர் புரிந்தான்.

கிரேக்கர்கள் சிலகாலம் - இங்கே
      கீர்த்தி நிருபருடன்,
ஆக்கிரமித்துக் கொண்டே-நாட்டை
      ஆண்டிடப் போட்டியிட்டார்.

சந்திரகுப்தன்

சந்திர குப்தனையே போற்றிச்
      சாணக்யனெனுந் தமிழன்
தந்திர மந்திரியாய்ப் - பெரும்
      சமர்செயத் தூண்டிவிட்டான்.

சாணக்யன் உபதேசம்

"நாசஞ்செய் நந்தர்களால் அறம்
      நலிந்தது, சந்திரனே:
தேசத்தைக் காத்திடவே-வீரத்
      தீயெனப் படையெடடா!

அன்னிய யவனர்களும் - நம்மை
      அடிமை செய்திட முயன்றார்.
உன்னத ஹிந்து தர்மம்-வாழ
      ஒளிமணிக் கொடி உயர்த்தாய்.

பிறரிடம் பிடிபட்டால்-நம்
      பெருமை யழிந்து போகும்;
அறிவுடை ஆண்மகனே-வா
      அறச் சமர் புரிந்திடுவோம்!

நடைகெடு பேடிகளால் - இந்த
      நாடு தளர்ந்ததடா!
படையெடு படையெட்டா- கடும்
      பகைவரை முன் சுடடா!

தாயினை யிழிவுசெய்தே-நம்
      தருமத்தைக் கைவிடுத்தே
நாயென வாழுவமோ-இந்து
      நாகரிகம் விழுமோ?

சாதியைப் பாராதே- வீண்
      சமுசயம் கொள்ளாதே;
நீதியை நிலைநிறுத்த- நீ
      நேர்மையாய்ச் சமர்புரிவாய்."

தந்திரச் சாணக்யன் - இவை
      சாற்றிடச் சமர்புரிந்தே
சந்திர குப்தனங்கே-பகை
      சாய்ந்திட முடிதரித்தான்.

எதிர்த்த *செலுக்கசெனும் - பெரும்
      யவனனை முறியடித்தே
புது மௌரிய வமிசம் -- இங்கே
      புகழுற நாட்டிவிட்டான்.
[* Salucus Nicator.]
வீரத்தைக் கண்டதுவும்- பகை
      வேந்தர் பணிந்து விட்டார் - இவன்
பாரசிகம் வரையில் கொடி
      பறந்திடப் புரந்தனனே.

சௌரியமும் திருவும் ஜய
      சக்தியும் பெருகிவரும்
மௌரியர் மாண்புகளை - அன்று
      மகாஸ்தனிஸ் எழுதி வைத்தான்.

மன்னுயிர் தன்னுயிராய்- குப்த
      மன்னவன் ஆண்டரசைத்
தன்மகனுக் களித்தே-ஜைன
      தருமத்தை மிக வளர்த்தான்.

தெளிவுள துறவிகளால் - சமணம்
      தென்புறம் பரவிடவே
*வெளிகுள மலையினின்றே - இவன்
      விரதங்கள் பல புரிந்தான்.

நீண்ட பல்லாண்டுகளாய் இங்கே
      நிலவிய பிறமதத்தைப்
பாண்டியன் சுரந்தவிர்த்த ஞானப்
      பாலகன் வென்றுவிட்டான்.

[*சிரமண பௌகோளா மைசூரிலுள்ளது. 7,000-ம் சமணத் துறவிகளுடன் சந்திரகுப்தன் மதப் பிரசாரம் செய்து இறுதியில் 20 நாள் உபவாசம் இருந்து இறந்தான். சமணர் சந்திரகுப்தனை ''சேடக ராஜன்" என்பர். (வேள் குளம் என்றும் கூறலாம்.) ]

அப்பரின் அருள் வலியால்- உள்
      ளன்பரின் அருட்பணியால்,
முப்பொரு ளுண்மையினால் - இங்கே
      முகிழ்த்தது சிவமணமே.

அசோகன்

சந்திரகுப்தன் மகன் - பிந்து
      சாரன் புகழ்சிறந்தான்.
வந்தனன் அவன் மகனாம் - அசோகன்
      வளர்பிறைச் சந்திரன் போல்.

மன்னன் எனில் இவனே- என
      மன்னுயிர் போற்றியவன்
பொன்முடி புனை துறவி-அசோகன்
      புகழினைக் கேளடியோ!

வலிமிகு வாலிபத்தில் பெரு
      மல்லனிவன், படையால்
கலிங்கத்தை வென்றதுவும் போர்க்
      களத்தினைப் பார்த்தயர்ந்தான்.

எத்தனை பேரைக் கொன்றேன்-அந்தோ
      ஏதுக்கிப் போரெனவே
கத்தியை விட்டெறிந்து புத்தர்
      கருணையைச் சரண்புகுந்தான்.

பொன்னி வள வனைப்போல் ரோமா
      புரியின் அகுஸ்தனைப்போல்,
மன்னுயிர் வளம்பெறவே - இந்த
      மன்னவன் ஆண்டிருந்தான்.

பங்களூரிலிருந்து- இவன்
      பலுசிஸ்தானம் வரையில்
செங்கோல் செலுத்தி வந்தான்- புவி
      செழித்திடத் திருவுடனே.

சிங்களம் சிங்கநகர்-தெற்குத்
      தீவுகள் சீனம் ஜப்பான்
எங்குமே புத்தமதம் - பரவி
      எழில்பெறச் செய்தனனே.

பாரசீகம் யவனம் - ரோம் க்ரீஸ்
      பண்டை யுலகமெல்லாம்
வீரத் துறவிகளால் - அற
      விளக்கினை ஏற்றிவைத்தான்.

தருமச் சோதியாலே - இவன்
      சகத்தினை வென்றுவிட்டான்;
கரும வீரனானான்-அசோகன்
      கருணை சாது மன்னன்.

நாட்டி லெங்குந் தூண்கள் - மிக
      நாட்டியே நல்லுரைகள்
ஏட்டைப் போலத்தீட்டி- அறம்
      இலகிட நீதிசெய்தான்.

அசோகன் அறிக்கை

"எந்த வேளையேனும்- இடர்
      எய்த மாந்தர் என்முன்
வந்து சொல்லி நன்மை- பெற
      வாசலைத் திறந்தேன்.

உண்ணுகின்ற போதும்- நான்
      உறங்குகின்ற போதும்
எண்ணுகின்ற போதும்- உங்கள்
      இன்னல் தீர வாரீர்.

உண்மை பேசிடுங்கள் - பிற
      உயிரை நேசியுங்கள்
நன்மை செய்திடுங்கள் - தூய
      ஞானம் போற்றிடுங்கள்.

தருமங் காத்திடுங்கள் - இயன்ற
      தானம் செய்திடுங்கள்
கருணை கொண்டு நிதமும்- பொதுக்
      கடமை காத்திடுங்கள்.

; கொலைபுரிய வேண்டாம் - பிறரைக்
      கொள்ளையடிக்க வேண்டாம்
கலகஞ் செய்யவேண்டாம்- மாதரைக்
      கற்பழிக்க வேண்டாம்.

தன்னுயிரைப் போலே - பிறர்
      தம்முயிரைப் பேணீர்.
இன்னல் செய்திடாதீர்” என்றே
      எழுதி ஆணையிட்டான்.

பிறருக்கென்று வாழ்ந்தான்- புத்த
      பிக்ஷுவாக வாழ்ந்தான்
அறத்திற் கென்று வாழ்ந்தான்-அசோகன்
      அன்பு மன்ன னானான்.

சுதந்தரத் தமிழகத்தில் - புத்தத்
      துறவிகளும் புகுந்தார் அந்த
மதத்தினர், இலங்கையிலே-அசோகன்
      மகளை யுப சரித்தார்.

போதிக்கிளை வளர்த்தார்- எங்கும்
      புத்தமதம் வளர்த்தார்
மாதவி மகளுமிங்கே - புத்தர்
      மலரடி தொழுதனளே.

மணித்திரு வாசகனார்- புத்த
      மதத்தினை வாதில் வென்றார்.
தணிந்தன பிறமதங்கள் - சிவந்
      தழைத்தது தமிழகத்தில்.

அக்கக்கா கேளடியோ-நம்
      அசோகனுக்குப் பிறகு
சக்கரச் சுழல்போலே -அரசின்
      சரிதையும் மாறியதே.
----------------------------

6. இந்து மன்னர்

இராகம் : கேதாரம்)       (தாளம் ஆதி

தன்னன தனதனனா - தன
தன்னன தன்னன தானனனா - தன

காலச் சுழலினிலே - இந்தக்
      காசினி வாழ்வொரு
      தூசியாய்ப் போகுதே - அதன்
கோலத்தைக் கேளடியோ- மயூரக்
      குலநலங் குலைந்தொரு
[1]கொலையினில் முடிந்தது.

தளபதி புஷ்யமித்ரன் - பிருஹத்ரதன்
      தலையினைச் சீவித்தன்
      சங்க மரபினை
வளம்பெற நாட்டிவிட்டான் - அவன்
      மகன் அக்னி மித்திரனும்
      புகழ் சிறந்தான்.

சிங்கம்போல் ஆந்திரர்கள் - வீரச்
      சிமுகனின் தலைமையில்
செயக்கொடி நாட்டியே
சங்கரை முறியடித்தார் - இவர்
      [2] சதவாகன மரபை
      இதமுற நாட்டினார்.

கலிங்கத்துக் கரவேலன் - மிகக்
      கடுமையாய் மகதரைக்
      கவிழ்த்து விட்டான்;
வலிமிகு கானவர்கள் - சில
      வருஷங்கள் ஆண்டனர்
      பெருமிதமாய்!

[3]துங்கத் தமிழரசர்-வீரத்
      தோள் புடைத் தெழுந்துல
      காளக் கிளம்பினர்
சங்கத் தமிழரசர்- இந்தச்
      சகத்தினிலே புது
      யுகத்தினை நாட்டினர்.
-----------
[1]. *[*பிருஹத்ரதன் என்பவன் கடைசி மயூரன்; அவனைச் சேனாபதி புஷ்யமித்திரனே கொலை செய்து, தனது சங்கவம்சத்தை நாட்டினான்.]
[2]. சதவாகன ஆந்திரர், 500 ஆண்டுகள் ஆண்ட னர் : தமிழகம் தவிர மற்ற இடங்களில் செல்வாக்குப் பெற்றனர். சங்க வமிசத்தை இவர்களே வீழ்த்தினர். அசோகனுக்குப் பிறகே ஆந்திரர் சுதந்தரமாகக் கிளம்பினர். புலமாயி, பாலாஜீ, கௌதமி புத்ரன் சதகர்ணி முதலிய ஆந்திரப் பெயர்கள் புகழ் பெற்றவை. ஆந்திரரே, கிரந்த எழுத்தைக் கையாண்டனர். கி.பி. 3 ஆ-ம் நூற்றாண்டுவரையில் ஆந்திரர் தழைத்தனர்; அவர்களைத் தமிழர் வென்றனர்.]
[3]. ஆந்திரர் தமிழர் பெருமையைப் பிளீனி, டாலமி (Ptolemy) முதலிய ரோமப்
புலவர் குறிக்கிறார்கள். இக்காலந்தான், சேரன், சேழியன், வளவன் முதலிய
தமிழ் வேந்தர் வட நாட்டிலும் படை நடத்திப் புகழ் பெற்றனர்.]
---------------

7. கனிஷ்கன்.

[இந்து தேசச் சரித்திரத்தை எழுதியவர்கள், நமது தென்னாட்டுப் பெருமையைச் சிறிது கூட மதிக்காமல் வரைந்திருக்கிறார்கள். ஆராய்ச்சியில் வடநாட்டை விடத் தென்னாடே, அதிலும் நமது தமிழகமே, சுதந்தரக் கொடி பற்றி, பாரத நாகரிகத்தைக் காத்து நின்றது, நிற்கிறது எனத் தெரிகிறது. அசோகன் நாளிலேயே தமிழகம் முழுதும் ஒரு பெரிய வல்லரசு நாடாயிருந்தது. சேர, சோழ, பாண்டியர் ஒற்றுமையாயிருந்து நாடெல்லாம் தமிழ்க்கொடி நாட்டினர். அசோகனுக்குப் பிறகு சக்தி பெற்றிலகிய இந்திய ராஜ்யங்கள் இரண்டே. ஒன்று சதவாஹன ஆந்திரராஜ்யம்; மற்றொன்று தமிழர் அரசு. பிற்காலம் தமிழ் மன்னர் ஆந்திரரையும் வென்று வடக்கேயும் படை யெடுத்து வென்றனர். தமிழரசு வெற்றிக்கொடி நாட்டி ஆண்டகாலத்தில், வடநாட்டு நிலைமை பரிதாபமாயிருந்தது. அங்கே சீன, ஹுண, துருக்கி, யூனானி தேசங்களிலிருந்து பகைவர் ஓயாது படையெடுத்தனர். சகர், ரிஷிகர் (யூசி), குஷானர், ஹுணர் முதலியோர் வந்தனர். இவர்களை ஹிந்து மன்னர் எதிர்த்தனர். 2000-ம் ஆண்டுகளுக்கு முன், விக்கிரமாதித்யன், சகரை முறியடித்து விக்கிரமாதித்ய சகாப்தம் ஏற்படுத்தினான். ஆனால் குஷானர், தாராளமாக உள்ளே வந்து அரசை நாட்டினர். குஷான் அரசருள், கனிஷ்கன் புகழ்பெற்றவன். அவனுக்குப் பிறகு, குப்த மன்னர், ஹர்ஷன் முதலியோர் புகழ் பெற்றனர். அசோகன் காலத்திலும், பிறகும், உலகை 'மாயை', 'மலடி மகன்' என்று பொய் வேதாந்தம் பேசும் துறவிகள் நாடெங்கும் நிரம்பி விட்டார்கள். அநித்திய ‘உலகை யார் ஆண்டாலென்ன' என்ற நுனிப்புல் வேதாந்தம், வடநாட்டைப் பற்றிக்கொண்டது. ஆதலால், அங்கே க்ஷத்திரிய பலம் குறைந்தது. மேலும் பெஷாவர், காண்டஹார், காம்போஜ நாடுகளில் நம்மவர் சரியான பாதுகாப்பு வைக்கவில்லை. அங்கேயும் 'உலகம் துன்பக் கனவு' என்ற கொள்கை பரவியிருந்தது. இதனால் நாட்டிற் புகும் அன்னியரை, "எமக்குள்ளதை நீயும் சாப்பிட்டுப் போயேன்-யார் வாழ்வு சதம்?" என்ற சத்திரத் திண்ணை மனப்பான்மையுடன் நம்மவர் உள்ளே விட்டுவிட்டனர். தமிழரே இந்தப் பொய் வாதத்தை வேரோடொழித்தவர். வடக்கே ஒரு கரிகாலனோ நெடுஞ்செழியனோ செங்குட்டுவனோ இருந்திருந்தால், அன்னியரை மறுபடி எட்டிப் பாராமல் ஓட்டியிருந்திருப்பார்கள். இக்காலச் சரித்திரத்தை ஐரோப்பியர் Tangled Tales (சிக்கலான கதை) என்பதும் பொருத்தமேயாகும், இதன் முதன்மையான சந்தர்ப்பங்களைப் பாடுவோம்.]

யூனானி ஆரியரும் - சீனரும்
      ஊணரும் சகருடன் பகலவரும்
சேனைகள் கொண்டு வந்தார் - அவரைச்
      செயித்தனர் நம்மவர் செருக்களத்தே.

உச்சினி விக்கிரமன்-சகரை
      உக்கிரப்போரிலே தொக்கிமிதித் தழித்தே
மெச்சுற வெற்றிபெற்றே - நாட்டிய
      விக்கிரம சகத்தை நாமறிவோம் - தோழி!

சாலியவாகனனும் - பாஞ்
      சாலத்திற் சகர் முதல் அன்னியரை
வேலினால் வேர் பறித்தே - ஒரு
      வியன்பெருஞ் சகத்தினை விளக்கிவிட்டான்.

காந்தாரத்திலிருந்து - மகதம் வரை
      கனிஷ்கக் குஷானனும் ஆண்டுவந்தான்
வேந்தனிவன் பெருமை - புத்த
      விளக்கொளி போலெங்கும் விளங்கியதே!

தேவபுத்திரன் என்னும் - இந்தத்
      திருவுடை மன்னவன் செகமுழுதும்
ஆவலாய் புத்தமதம் - பரவவே
      அறவோரை ஆதரித்தனுப்பி வைத்தான்.


அச்வகோஷன், சரகன் - முதல்
      அரும்பெரும் புலவரை ஆதரித்தே
விச்வ வித்யாலயங்கள் - கண்டு
      வியன் கலை போற்றிய வேந்தனிவன்.

கல்லா தவரில்லை தொழிற்
      கலை யறியாதவர் இல்லையடி-சகி
எல்லாரும் இன்புறவே ஆண்ட
      இந்திய மன்னர் சுதந்தர வீரரே!
--------------------

8. குப்தரும், வர்த்தனரும்

[கனிஷ்கனுக்குப் பிறகு, நாகர், குப்தர், வாகாடகர், ஹுணர், வர்த்தனர், பல்லவர், சலுக்கியர் முதலியோர் சரித்திரவானில் மின்னுகின்றனர். இவருள் குப்த மன்னரும், ஹர்ஷவர்த்தனனும் மிகப் புகழ் சிறந்தனர்; குப்தருள் சமுத்திரகுப்தனும், விக்ரமாதித்யனும் திக்விஜயம் செய்தனர். இவர்கள் காலத்தில் ஹிந்து தருமம் வீறு பெற்றோங்கியது. குஷாவனரையும், பாரசீகரையும் வென்று இந்தியாவில் நுழைந்த கொடிய ஹூணர்களை, குப்த மன்னன் முறியடித்தான். ஆயினும் ஹுணர் மறுபடியும் வந்து புகுந்தனர்; மறுபடியும் தோற்றோடினர். ஹர்ஷ வர்த்தனன் காலத்தில் நமது தேசம் பலம் பெற்றிருந்தது; ஆரியக் கலைகள் வளர்ந்தன. இந்தக் கால நிகழ்ச்சிகளையும், நிலைமைகளையும், நமது நாட்டின் சிறப்பையும் பாகியன், ஹியான் ஸியாங் என்ற இரண்டு சீன யாத்திரிகர்கள் குறித்து வைத்திருக்கிறார்கள்.]

ஆரிய குப்தர்களின் வீர
      அரசருள் அரசனாய்
      அசுவமேதம் செய்த
தீரன் சமுத்ரகுப்தன்-நாட்டைத்
      திக்விஜயம் செய்து
      சிறப்புடன் ஆண்டனன்.

சந்திரன், குமரன், கந்தன்-புதன்
      ததாசுதன் பானுகுப்
      தர்களுமே
சந்ததி பரம்பரையாய் - இங்கே
      சரித்திரப் புகழ் பெறச்
      சகம் புரந்தார்.

இரத்த வெறி பிடித்த - ஹுணர்
      இகல் செய்ய வந்தனர்;
      பகலின் முன் இரவென
உரத்த படை வலியால் குப்தன்
      ஊணர்களை முறியடித்
      தோட்டி விட்டான்.

மீண்டும் வந்தூன்றிக் கொண்டே-ஆண்ட
      மிகிராகுலன் மரபும்
      மிஞ்சவில்லை;
தூண்டிய வீரவொளி-நந்
      தொல்பெரு நாட்டினை
      வல்லர சாக்கியதே!

சில்லரை அரசர் பலர்- இங்கே
      செயமுர சடித்தனர்
      சில காலம் - பின்னே,

*வரகவி பாணன் சொல்லும் - ஹர்ஷ
      வர்த்தனன் சக்கிர
      வர்த்தி யென-மிக
பிரபலமாய் ஆண்டு வந்தான்-பகை
      பிறகிட வெற்றிகள்
      பிறங்கிடவே.

தன்பொருள் அனைத்தினையும் கலை
      தழைத்திட ஹர்ஷனுந்
      தானஞ் செய்தான்;
**இன்னிசை நாடகங்கள் - மூன்றை
      எழுதி நல்லிலக்கியப்
      பணி புரிந்தான்.
[*பாணனின் ஹர்ஷ சரித்திரம்.
**ஷர்ஷன் இரத்தினாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா ஆகிய மூன்று நாடகங்களை எழுதினான்.]

1பாகியன் இயன்சங்கெனும் - இரு
      பண்டிதச் சீனர் நம்
      பாரத நாட்டினை
ஏகமாய்ப் புகழ்ந்ததனை-சகியே
      இன்னமும் படிக்கலாம்
      பொன்னெழுத்தால்!

கலைகளைச் சொல்லிடவோ?- நம்
      காளிதாச கவியைச்
      சொல்லிடவோ!
விலையில்லா ஞானவெள்ளம் - இந்த
      வித்தக நாடெங்கும்
      விளங்கியதே-சகி!

கதிரவன் ஒளியினைப்போல் எங்கும்
      கல்வியும் கலைகளும்
      காண்பமடீ -சகி
நிதி மிகு தொழில் வளமை - இங்கே
      நிலத்திலுங் கலத்திலும்
      நிறைந்ததடீ - சகி!

சத்திய சந்தர்களாய்- ரிஷி
      தருமத்தைப் பாலித்த
      இந்தியர்கள்
ஒத்தொரு குலமெனவே-ஆன்ம
      ஒருமையில் வாழ்ந்ததன்
      அருமையைப் பார்!
[1Fa-Hein& Hiuen-Tsang.]
----------------------------------

9. இஸ்லாம் இந்தியா

[1055-ஆண்டுகள், இஸ்லாமியர் ஆட்சி நடந்தது. இஸ்லாமியர் நம்மவருள் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயினர். கஜினி, கோரி, லோடி, கில்ஜி, துக்ளக் முதலிய பட்டாணியரும், முகலாயரும் இந்தியாவை ஆண்ட நாட்களில் நமக்கெய்திய நன்மைகளை மட்டுமே இங்கே சொல்ல முடியும். இந்தியாவுக்கு உரமான இந்துஸ்தானி பொதுமொழியானது; நடனம், கீதம், சிற்பம் சித்திரம் ஆகிய கலைகள், இஸ்லாமியர் ஆட்சியில் நல்ல வளர்ச்சி பெற்றன. அக்காலம் எழுந்த கவிகளும், பாடல்களும், சிற்பச் செல்வங்களும் இன்றும் உலகில் ஒப்புயர்வற்று விளங்குகின்றன. அக்பரும் தாஜ்மஹாலும் இஸ்லாமிய அரசின் சிறந்த வெற்றிச் சின்னங்கள். இஸ்லாமியர் நமது வேதக்கலைகளையும் பார்ஸியில் எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, தாரா என்பவன் உபநிஷத்தை மொழி பெயர்த்தான்; அவன் சிறந்த வேதாந்தியாக விளங்கினான்.)

1. அல்லாஹு அக்பர்
இராகம் காம்போதி]       [தாளம் ரூபகம்
தன்னான தான தன
தனன தன தானா.

அல்லாஹு அக்ப ரென்றே
      அரபி நாட்டில் எழுந்தே,
அல்குரானைத் தந்த நபி
      அருள் சிறந்த வீரர்.

இத்தலத்தை வென்றிடவே
      ஈமான் கொண்ட பேரைச்
சக்தி பெற்ற இஸ்லாமியச்
      சங்கமெனச் செய்தார்.

மதமுடனே அரசியலை
      வளரும் வகை செய்தே,
பதமுடனே காலிபாக்கள்
      பாதுகாப்பில் அமைத்தார்.

அபுபக்கர், உமர், உஸ்மான்,
      அலி முதலாம் அன்பர்,
நபி வாக்கை ஞாலமெல்லாம்
      நம்பப்பணி செய்தார்.

பண்புடனே கலிபாக்கள்
      பாக்தாதில் இருந்தே
எண்டிசையும் குரான் ஷெரீப்
      எதிரொலிக்கச் செய்தார்.

கிழக்கினிலும் மேற்கினிலும்
      கிளர்ந்தெழுந்த இஸ்லாம்,
வழக்கமாக வென்று கொண்டே
      வந்ததுநம் மருகே.

சிக்கந்தர்வந்தவழி
      சிந்துநதிக் கரையில்
இக்கணமே இபின் காசிம்
      இஸ்லாம் கொடி நட்டான்.

கஜினி வந்தான்; கோரி வந்தான்;
      கனக வெள்ளங் கொண்டார்
அசினிபோலப் படையுடனே
      அல்தாமஷ் வந்தான்.

கில்ஜி மன்னர் துக்ளக் மன்னர்
      கிளர்ந்தெழுந்தே ஆண்டார்;
அல்லாவுதீன் கில்ஜி மிக்க
      அன்புடைய மன்னன்:

தென்னாட்டு வித்தகரைத்
      தில்லியிலே கூட்டி,
இன்னிசைக் கலை வளர்த்தான்
      இணையில்லா ரசிகன்.

பட்டாணியர் ஆண்ட பின்பு
      பண்பார் முகலாயர்
எட்டுத் திக்கும் இசை பரவ
      இந்தியாவை ஆண்டார்.

பலமிகுந்த பேபருடன்
      பரிவுள ஹுமாயூன்
நலமிகுந்த அக்பர் இந்த
      ஞாலப் புகழ் பெற்றார்.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையும்
      இனியசம ரஸமும்
சிந்தையுயர் கலைவளமும்
      செழித்ததிவர் அரசில்.

துன்பமெனக் கேட்டதுவுந்
      தொண்டுசெய்ய வருவான்
அன்புமிகும் அரசருள்ளே
      அக்பரைப்போல் உண்டோ?

ஷாஜிஹானின் மயிலணையுந்
      தாஜ்மஹால் அழகும்
காசினியில் அற்புதமாம்
      காட்சியெனச் சொல்வோம்.

அல்லாவிடம் அன்புமிகும்
      அவுரங்க ஜீபு,
குல்லா செய்து குரானெழுதிக்
      கொள்கைக்கே வாழ்ந்தான்.

வரிப்பணத்தைக் குடிகளுக்கே
      வழங்கி நலம் புரிந்தே,
அரிய தூய எளிய வாழ்வில்
      ஆலம்கீர் வாழ்ந்தான்.

இத்தகைய பெருமைமிகும்
      இஸ்லாமிய மன்னர்
சித்திரமும் இசைக்கலையும்
      சிற்பமுடன் வளர்த்தார்.

அன்னவர்கள் அமைத்தளித்த
      அரசியலின் ஒழுங்கே
இன்னமும் வழங்குகின்ற
      தென்றறிவாய் தோழீ!

ஹிந்துஸ்தானி பொதுமொழியாய்
      இலகியதும் இவரால்;
சந்ததமும் இவர்பெருமை
      சாற்றிடுவோம் தோழி!

கலையுடனே வீரமிந்தக்
      காலத்திலே விளைந்த
நிலையினை நீ கேளடியோ
      நேர்மையுள்ள தோழீ!
------------

10. பாரத வீரர்

[இந்தியாவின் வீரச்சுடர் என்றுந் தணிந்ததில்லை; காலத்திற்கேற்ற உருவுடன் அது விளங்கியது. இக்காலம், இராஜபுத்திரர், மராட்டியர், சீக்கியர் ஆகிய மூன்று வீர சமுதாயத்தார் எழுந்தனர். இவர்களுடைய வீரக் கலையைத் தூண்ட அருட்கவிகளும் குருமார்களும் புதிய உணர்வுடன் எழுந்தனர். அவர்கள் வரலாறுகளைப் பாரத சக்தியில் விரிவாகப் பாடி வைத்திருக்கிறேன். இச் சிறு கும்மியில் சில வீரர் பெயரையே குறிக்க இட முண்டு. துளசிதாஸ், ராமதாஸ், துகாராம், கபீர், நானகர், மீராபாய், ரவிதாஸ் முதலிய கவிகள் பக்திரசப் பாடல்களால், ஹிந்து தர்மத்தைப் பிரசாரம் செய்தார்கள். கபீரும், நானக்கும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடிப் பணி செய்தனர். மேவாரில் மீராபாய் கண்ணனைப் பாடினாள்; அவள் குலத்தில் வந்த ராணா பிரதாபசிங்கன் கடுமையான வீரத்தவம் புரிந்து சுதந்திரப்போர் நடத்தினான். நானகர், தியாக வீரரை சிருஷ்டித்தார்; இவரைத் தொடர்ந்து பத்து குருமார் வந்தனர்; அவருள் ராமதாஸும், தேஜ் பகதூரும், குருகோவிந்த சிங்கனும் ஒப்பற்ற தியாக தீரர்கள். குரு கோவிந்தன் அகாலிகளை ஆக்கி தேச சுதந்தரத்திற்காகப் போர் புரிந்தான். மஹராஷ்டிரத்தில் சமர்த்த குரு ராமதாஸ் எழுந்து பக்தியும் வீரமுந் தூண்டினார். அவர் சிஷ்யன் சிவாஜியே, இந்திய வீரருள் மிகச் சிறந்தவன். அவன் தர்மாவேசங்கொண்டு புதிய ஹிந்து ராஜ்யத்தையே நிலை நாட்டினான். சிவாஜிக்குப் பிறகு அவன் மந்திரிகளான பேஷ்வாக்கள் எழுந்து நாட்டைக் காத்தனர். இச்சமயம் இஸ்லாம் ஆட்சி மறைந்து, ஆங்கிலக் கொடி வெல்லத் தலை தூக்கியது.]
--------------
1. பாரத நாட்டினிலே
இராகம்- காபி)       (தாளம் - ரூபகம்

தன்னன தானனனா -- தனதனா
தன்னன தானனனா
தன்னன தானனனா தனதனா
தன்னன தானனனா.

பாரத நாட்டினிலே-கலைப்
      பண்பு குறைந்திடுமோ!
வீரங் குறைந்திடுமோ-சுதந்தர
      வேட்கை குறைந்திடுமோ!

பக்தர் எழுந்திருந்தார் - அருட்கவி
      பாடிப் பணி புரிந்தார்
சித்தர் எழுந்திருந்தார்-சகியே
      தீரரைத் தூண்டி விட்டார்.

துளஸி காவியமும் - கபீர்
      துகாராமின் பாட்டும்
உளவி சாலமுடன்-நானகர்
      ஓதிய கீதங்களும்,

கண்ணனன் பிற்கரைந்த- மீராவின்
      கனிரசப் பாட்டும்,
புண்ணிய பாரதத்தின் தெய்விகப்
      புகழைக் காத்தனவே.

பத்திக் கலையுடனே-நாட்டுப்
      பணி புரிந்திடவே
சத்திமிகு வீரர் - தம்மைச்
      சாதுக்கள் ஆக்கினரே.

2. ராணா பிரதாபசிங்கன்

ஓம் ஜய பவானி- என்றே
      ஓதி ப்ரதாபசிங்கன்
மாமலை மீதினிலே-வீர
      மல்லர் படை சேர்த்தான்.

வறுமை வாட்டிடினும் - இடர்கள்
      வந்து குவிந்திடினும்
சிறுமை நாடாது -தேச
      சேவைக் குயிர் கொடுத்தான்.

பில்லர் படையுடனே-சாம்ராஜ்யப்
      பெரும் படைக்கடலை
ஹல்தி கட்டத்திலே - எதிர்த்தே
      அஞ்சாது போர் புரிந்தான்.

காட்டு வறட்சியிலே-புலி
      கரடிகளிடையே
வாட்டும் பசி பொறுத்தும்- தேச
      மானத்தைக் காத்து நின்றான்.

பாரத தர்மத்திற்கே- இவன்
      பாடுபட்டுச் செய்த
வீரத் தவம் பலித்த நாளில்
      வெற்றி முரசடிப்போம்!
------------------

11. வீர சிவாஜி

[வீர சிவாஜி உலக வீரருள் ஒப்புயர்வற்றவன். ஸீஸர், நெப்போலியன், சிக்கந்தர் அனைவரும் தமது நாட்டைக் கவனிக்காமல், அன்னிய நாடுகளைப் படையெடுத்து வாள் வரிசை மட்டும் காட்டிக் கொன்று குவித்துச் சென்றனர். அவர்களுக்குப் பிறகு வாள் வெற்றி நிலைக்கவில்லை. மூவரும் பரிதாபமாக இறந்தனர். சிவாஜியின் வாள் பாரத தர்மத்தையே காத்தது; பாரத சாம்ராஜ்யத்தை நாட்டியது; சிவாஜி இராமதாஸர் உபதேசம் பெற்ற பக்தனாக, ராஜரிஷியாக வாழ்ந்தான். அவனைப் போன்ற வீரன் உலக சரித்திரத்தில் இல்லை.]

1. வீர சிவாஜி

இராகம்: செஞ்சுருட்டி)       (தாளம்: ரூபகம்

தானன தானான - தனதனா
தானன தானான - தனனா
தானன தானான தனதனா
தானன தானான.

வீர சிவாஜி யென்றால் - சுதந்தர
      வேகம் பிறக்குதடீ -சகியே
பாரினி லில்லையடீ - இந்தப்
      பாரத வீரனைப் போல்!

தேச விடுதலைக்கே - எழுந்த
      சிங்க மிவன் பெயரை
ஆசையாய் சொல்லுகின்ற - அலிக்கும்
      ஆண்மை பிறக்குமடி

பன்னிரண் டாண்டினிலே- பெரிய
      படை நடத்தியவன்;
சொன்னதைச் சொன்னபடி- செய்யும்
      சூரப் புலியிவனே!

தவக்கன லளித்த ராம
      தாசரின் தாஸனடீ;
சிவக்கனல் போலே-அடிமைச்
      சிறையைச் சுட்டெரித்தான்!

தேவி பவானி சக்தி-துணையால்
      தேசந் தலை நிமிர
ஆவியைத் தந்துமிவன்-சகியே
      ஆயிரம் போர் புரிந்தான்!

நெஞ்சகர் தூயவரை-மிக
      நேயமுடன் காத்தான்-நய
வஞ்சகக் கும்பல்களை - இவன்
      வஞ்சகமாய்ப் புடைத்தான்.

வேடப் பகைவர்களை - மாறு
      வேடம் புனைந்தழித்தான்;
காடு மலைகளிலே அரண்
      கட்டிச் சமர் புரிந்தான்.

தில்லிச் சிறையினின்றும் - தப்பிச்
      சிவத் துறவியைப் போல்
மெல்லப் பதுங்கி வந்தே- சிங்கம்
      மீண்டுந் தலை நிமிர்ந்தான்!

வீர மராடியனை-டில்லி
      வேந்தனும் பாராட்டி
ஆரிய சத்ரபதி- வாழ்கநின்
      அரசுரிமை யென்றான்.

வேதக் கலை வளர- பாரத
      வீரக் கலைவளர- குரு
*போதக் கலைவளர-சிவாஜி –
      புண்ணியங்கள் புரிந்தான்.

பத்திலொரு கடமை வாங்கி
      பகுத்து நன்மை செய்து
சத்துருக்கள் நடுங்க - சிவாஜி
      தருமங் காத்து நின்றான்.

தேச நலத்தினுக்கே - வாழும்
      தீரர்படை வகுத்தே
நாசகரை நலித்தே - சிவாஜி
      நல்லவரைக் காத்தான்.

தந்திரமுந் திரமும்-வீரத்
      தணலும் பெற்றொளிரும்
மந்திரி மார்களிடம்-அரசை
      மாண்புறத் தந்து சென்றான்.

ஆண்மை யுருவானான்-நாட்டை
      ஆண்மை யுறக்காத்தான்;
ஆண்மையரைப் படைத்தான் - சிவாஜி
      ஆண்மைக் கனலானான்!

*சமர்த்தகுரு ராமதாஸ் அருளிய தாஸபோதமே சிவாஜியின் வேதம்
------------------

12. குரு கோவிந்த சிங்கன்

[இந்திய தேசாபிமானிகளுக்கு ஆவேசம் அளித்த முன்னணி வீரன், குரு கோவிந்த சிங்கன். வீரமணி வ. வே. சு. ஜயருக்கு. குரு கோவிந்தனே ஆதர்ச புருஷன்; அவன் செய்த ஜய சண்டி ஓம் சண்டி என்ற மந்திரத்தையே ஐயரும் இறுதிமட்டும் செபித்தார். தமிழரை அகாலிகள் போல் ஆக்கவேண்டும் என்றே ஐயர் தமிழ்க் குருகுலம் அமைத்தார். உலக வீரருள் கடுந் தவத்தால் சக்தி பெற்று ஒரு வீர ஜாதியைப் படைத்துத் தனியே ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போர் புரிந்தவன், குரு கோவிந்தன் ஒருவனே! சிவாஜிக்கு மராடியரின் கட்டுப்பாடும் ஒத்துழைப்பும் இருந்தது. குருவின் முயற்சியை துரோகிகள் புகுந்து முறியடித்தனர். துரோகந்தான் என்றும் சுதந்திரத்துக்கு தடை செய்து நிற்கிறது. என்றாலும், குரு கோவிந்தனைப் போன்ற அற்புத சக்திவீரர்கள், உலக சரித்திரத்தில் இந்தியாவிலேதான் விளங்கினார்கள்; இது நமக்குத் தனி பெருமையே.]

கோவிந்த சிங்கனைப்போல்-சகியே
      குருமணியு முண்டோ?
ஆவியை நாட்டினுக்கே-அவன்
      அள்ளி அளித்தானடீ!
ஞான சிகாமணியாம் - ஒருமை
      நாட்டிய சத்குருவாம்
நானக னின்மரபில் - வந்த
      நாயக வீரனிவன்.

தீரத்திலே சிறந்தான் - வாழ்வைத்
      தியாக பலியாக்கிப்
பாரத தர்மத்தினைப் - பரி
      பாலிக்க வேயெழுந்தான்!

கடுந்தவம் புரிந்தே - யமுனைக்
      காட்டிற் பல்லாண்டுகளாய்
விடுதலைக் கனலால் - அகாலி
      வீரர்களைப் படைத்தான்.

பொங்கும் புயவலியும் - ஆவேசப்
      புயலுங் கொண்டெழுந்தே
சிங்கன் சமர்புரிந்தான் - சு
      தேச விடுதலைக்கே!

ஆனந்தக் கோட்டையிலே - உலகம்
      அதிசயித்திடவே - தேச
மானத்தைக் காத்து நின்றான் - எதிர்
      மல்லர் மல்லாந்திடவே!

நாட்டைக் காட்டிக்கொடுக்கும் - பொல்லா
      நாசத் துரோகிகளால்
கோட்டையிழந்து மிவன் - மீண்டும்
      குதித்துப் போர் புரிந்தான்!

மக்கள் பலியானார் - வீர
      மாணவரும் இறந்தார் - இன்னும்
உக்கிரப் போர்புரிந்தே - குரு
      உலகம் போற்ற நின்றான்.

பாதுஷாவும் மெச்சி - இவனைப்
      பட்சமுடன் விடுத்தான்
கோதாவரிக் கரையில் - குரு
      கோவிந்தன் வாழ்ந்திறந்தான்.

தியாகக் கனலினிலே - தெறித்த
      தீப்பொரி மின்னலென
வேகமுள்ள குருவின் - சக்தி
      வீரத்தை வாழ்த்திடுவோம்!

இப்படிப் பட்டவர்கள் - பலர்
      இந்திய நாட்டினிலே
ஒப்பற்ற தீரர்களாய்ப் - புகழ்
      ஓங்கிச் சிறந்து நின்றார்.

முகலவர் அரசும் - இத்துடன்
      முடிந்து விட்டதம்மா;
இகலவர் இன்றி - இந்தியாவை
      இந்தியரே ஆண்டார்.

சிவாஜியின் மரபார் - மீண்டும்
      தில்லியினைப் பிடித்தார்.
எவரெதிர்ப்பு மின்றி - சுதேசம்
      எழில் சிறந்ததடீ!

உத்தர பாரதத்தின் - சரித்திரம்
      ஓதி முடித்துவிட்டோம் - இனி
வித்தகத் தென்னாட்டின் - சரித்திர
      வீரத்தைக் கூறிடுவோம்.
-----------------------

13. தென்னாட்டின் பெருமை

[வடநாடெல்லாம் அன்னியர் போர்க்களமாய் அடிமைப் பட்டிருந்தபோது, தென்னாட்டில் சுதந்தரக்கொடி யாடியது. சோழர், பாண்டியர், பல்லவர் - மூவரும் இங்கே வீறுபெற்றோங்கினர். மார்கோ போலோ, யவன சீனப் பிரயாணிகள் முதலியோர், தமிழர் பெருமையை எழுதி வைத்திருக்கிறார்கள் 14-ஆம் நூற்றாண்டு மட்டும் தமிழர் சுதந்தரராகவே யிருந்தனர்.]

1. தீந்தமிழ் பேசிடும்

இராகம் - பைரவி)       (தாளம் - ரூபகம்

தன்னன தன்னன தானானா - தன
தன்னன தன்னன தானானா
தன்னன தன்னன தன்னன தனனன
தன்னன தன்னன தானானா.

தீந்தமிழ் பேசிடுந் தென்னாடே - இசைத்
      தென்றல் பரவிடுந் தென்னாடே
ஆந்திரர் கன்னடர் துளுவர் கேரளர்
      அன்புடன் வாழ்ந்திடுந் தென்னாடே,

வேதக் கலையினைக் காத்ததுவும் - வெற்றி
      வீரக் கலையை வளர்த்ததுவும்,
நாதக் கலையிற் சிறந்ததுவும் - ஜன
      நாயகர் வாழ்ந்ததுந் தென்னாடே!

வெற்றிச் செங்கோலர் விளங்கியதும் - போரில்
      வீரச் செருக்குடன் ஓங்கியதும்
கற்றுத் தெளிந்த கடவுட் புலவர்கள்
      கவிதை செய்ததுந் தென்னாடே.

அன்னியருக்கு வடநாடு - தோழி!
      அடிமைப்பட்டுக் கிடக்கையிலே,
உன்னத மான உரிமைக் கொடியினை
      உயர்த்தி யாண்டதும் தென்னாடே.

மிக்க மிடுக்குடனே புகுந்த - பகை
      மேட்டிமை வேரறுத் தோட்டியவர்,
தக்கண தேசத்து வீராடீ - அவர்
      தருமப் போரில் கைகாரரடீ!

சளுக்கப் புலிக்கேசி வாழியவே - காஞ்சிச்
      சைவன் மகேந்திரன் வாழியவே!
வலுத்த ராஜராஜன் ராஜேந்தரன் - சடா
      வர்மனும் வீரனும் வாழியவே!

பல்லவர் செய்வித்த சிற்பங்களும் - சோழ
      பாண்டியர் செய்வித்த காவியமும்
எல்லா வுலகமும் இன்னும் புகழ்வதை
      இயம்பிப் புயங்கள் உயர்வோமடீ!

நிலத்தை வெல்லும் படையுடையார் - அவர்
      நித்திலச் செல்வ மிகவுடையார்;
கலத்திருவுடன் கடற்படையினாற்
      கண்கண்ட தேசங்கள் வென்றனரே.

சிங்களம் சாவகம், சிங்கபுரம் - பர்மா
      *செல்வம் மணிலம் முதலாகச்
சங்கையற்ற பல நாடுகளில் அன்று
      தமிழர் மணிக்கொடி நட்டனரே!
*Celebes.

ஆருக்கும் அஞ்சாத வீரரம்மா-கலை
      அறிவு மிக்க புலவரம்மா!
      பாருக்குள்ளே பணக் காரரம்மா - என்றே
பகர்ந்த அன்னியரும் பலரே

சீனர் யவனரும் சோனகரும் - இந்தச்
      செந்தமிழ் நாட்டுச் சிறப்புகளைத்
தேனமுத மொழி தேர்ந்து புகழ்ந்ததைச்
      செப்புவோம் வாடி சகத்தினுக்கே!

முத்துக்குவை செல்லும் கப்பல்களும் - துணி
      மூட்டைகள் சென்றிடும் கப்பல்களும்
வித்துப்பொன் கொண்டுறும் கப்பல்களும் - வெற்றி
      வீரர் முரசொலிக் கப்பல்களும்,

குதிரைப்படைவரும் கப்பல்களும் - போரில்
      குதித்து வென்றிடும் கப்பல்களும்
மதுரைச் சாயவேட்டிக் கப்பல்களும் - தமிழ்
      வலைஞர் சென்று றும் கப்பல்களும்,

காணக் காணக்கண் குளிருமடீ - நம்
      கன்னித் தமிழிசை என்ன சொல்வேன்!
பாணர் ஒருகோடி பாடினாலும், இன்னும்
      பரந்து நிற்கும் தமிழிசையே!

தமிழருக்கும், தெலுங் கருக்கும் - சில
      சண்டை யிங்கேயுண்டு என்றாலும்
தமிழர்வீரந் தளரவில்லை - பிறர்
      தந்திரமிங்கே வளரவில்லை.

வெற்றி மிகுந்த விசயநகர் - நம்
      வீறுமிகுந்த தமிழ்நாட்டைப்
பற்றிப்புரந்த தொருகாலம் - அந்தப்
      பற்றுந் தளர்ந்த தொருகாலம்.

வடுகர் கீர்த்தி மறைந்ததுவே - தமிழ்
      மன்னவர் கொற்றமும் அற்றதுவே!
விடுதலைக்கொடி வீழ்ந்ததுவே - இங்கே
      வேறிருவர் வந்து சேரவுமே.

தில்லித் துருக்கரும் வந்தார்கள் - இங்கே
      தீரமராடியர் வந்தார்கள்;
எல்லாரையும் மிஞ்சி வெள்ளைக்காரர் - இங்கே
      ஏற்றமடைந்ததைச் சாற்றுவமே.
---------------------------

14. கும்பினி இந்தியா

["இந்தியா" என்றால் நீண்டகாலமாக வெள்ளைக்காரருக்கு 'ஒரு கனவுலகம், பொன்னுலகம், முத்தும் மணியும் குலுங்கும் செல்வப் பொழில்' என்ற நம்பிக்கையிருந்தது. இந்தியாவின் (முதன்மையாக நமது தமிழகத்தின்) முத்தும் துணியும் வாசனைத் திரவியமும் உலகெங்கும் பரவியிருந்தன. சாசர், ஷேக்ஸ்பியர் முதலிய கவிகளெல்லாம் இந்திய முத்தையும் பொன்னையும் மெச்சினார்கள். நீண்ட காலமாக ஐரோப்பியரும் யவனரும் பாரசீகம் வழி, தரைமார்க்கமாக இந்தியாவிற்கு வந்து வாணிகம் செய்தனர். சில ஐரோப்பியர் இந்தியாவிற்குக் கடல்வழி காண முயன்றனர். அக்காலம் போர்ச்சுகல் தேசம் சிறந்து விளங்கியது. கொலம்பஸ் என்ற வீரர், 'நான் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறேன்' என்று கிளம்பிப் படகைச் செலுத்தி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். வாஸ்கோடிகாமா என்பவர் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு அரபிக்கடலுக்குத் தாவிக் கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அன்று முதல் இந்தியாவில் ஐரோப்பியர் வந்து நிலம் பெற்றனர். போர்த்துகீசியரை நம்மவர் பறங்கியர் என்றனர். பறங்கியர் இந்திய வியாபாரத்தில் பணங் குவிப்பதைக் கண்டு, டச்சுக்காரர் வந்தனர்; பிறகு ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் வந்தனர். இவ்விருவரும் சென்னையிலும் புதுச்சேரியிலும் ஊன்றிக்கொண்டனர். மற்ற வெள்ளைக்காரர்களைப் போட்டிபோட்டு ஒடுக்கி இருவரும் போட்டிப்போர் நடத்தினர். கிளைவ், தூப்ளே ஆகிய இருவரும் கொடி நாட்டப் போராடினர். இருவரும் சுதேசமன்னர் பக்கம் சேர்ந்து, மெல்லமெல்ல அரசியல் ஆதிக்கம் பெற்றனர். முடிவில் ஆங்கிலேயர் கைதான் ஓங்கியது. கும்பினி ஆட்சி பலமானது. முன்னிருந்த தில்லி, ஆர்க்காட் நவாபுகளின் ஆட்சி ஒடுங்கியது. ஆங்கிலேயர் கை ஓங்கியது. கிளைவ், ஹேஸ்டிங்ஸ், காரன்வாலிஸ், வெல்லஸ்லி, மிண்டோ, பெண்டிங்கு, கானிங் முதலியோர் போர் நடத்தியும், தந்திரம் செய்தும் மெல்ல மெல்ல இந்தியாவை வசமாக்கினர். ஐதர், திப்பு, தமிழ் வீரர், மராடியர், பாஞ்சாலர், வங்கர் முதலியோர் எதிர்த்துப் போர்புரிந்தனர். அதிட்ட சக்கரம் ஆங்கிலேயர் பக்கம் திரும்பியது. ஆங்கில ஆட்சியே நாட்டில் ஊன்றிக்கொண்டது. அதனால் இந்தியா உலகுடன் உறவு கொள்ளப் பல நலங்களை அடைந்தது; எனினும், அடிமை நாடாகித் தன் பொருளையும் கலையையும் கொள்ளை கொடுத்தது.]

1. பொன்னும் நவ மணியும்
இராகம் செஞ்சுருட்டி]       [ஆதி- தாளம்
தன்னன தானான
தன்னன தானான
தன்னன தானானன - தங்கமே
தன்னன தானானனா.

பொன்னும் நவமணியும்
      பொலியுந் திருநாடு
என்ன நம் இந்தியாவை - தங்கமே
      ஈரோப்பியர் மதித்தார்.

உண்ண நல்ல பொருளும்
      உடுத்த நல்லாடைகளும்
எண்ணறத் தந்ததெல்லாம் - தங்கமே
      இந்திய நாடல்லவோ!

பாரசீகத்தின் வழி
      பரதேச வாணிகர்கள்
பாரத நாட்டினுக்கே- வந்து
      பண்டங்கள் கொண்டு சென்றார்.

கப்பல் வழியைக் கண்டு
      கனக நாட்டை யடைந்தால்,
எப்போதும் இன்பமென்றே சிலபேர்
      எண்ணி முயன்று வந்தார்.

நமது தேசத்தைக் காண
      நாவாயில் கொலம்பசும்
அமெரிக்கா கண்டத்தினைத் தங்கமே
      அதிசய மாகக் கண்டான்.

துள்ளி யெழுந்த - *காமா
      சுற்றி ஆப்பரிக்காவை,
கள்ளிக் கோட்டைக்கு வந்தே- வழி
      காட்டினன் வெள்ளையர்க்கே!

*வாஸ்கோடி காமா.

மெல்ல மெல்லப் புகுந்து
      வியாபாரஞ் செய்ய வந்தே
இல்லத்தைப் பற்றிக்கொண்டார்- தங்கமே
      எத்தரவ் வெள்ளையரே.

போர்த்துகீசர், உலாந்தர்
      போட்டி முடிந்த பின்பு
கூர்த்த மதிமிகுந்த ஆங்கிலக்
      கும்பனிக் காரர் வந்தார்.

நாட்டில் விளைசரக்கை
      நல்ல விலைக்கு வாங்கி
மூட்டை சுமந்துவிற்றார்- தங்கமே
      முன்வந்த வெள்ளையரே.

கோட்டை கட்டிக்குவித்த
      கும்பினிக் காரருடன்
போட்டி போடப்புகுந்தார் - தங்கமே
      புதுவைப் பிரெஞ்சுக்காரர்.

வாணிகப் போட்டி முற்றி
      வலிய சண்டை பெருகிக்
காணிக்குப் போட்டியிட்டார்- இந்தக்
      கட்டற்ற நாட்டினிலே.

      ஆளுக் கரசனெனும்
ஆர்க்காட்டு நவாபுடன்
தோளுக்கு மிஞ்சிவிட்ட- வெள்ளையர்
      தோழரெனக் கூடினர்.
-------------------------------------
2. ஆனந்த ரங்கர் தினசரி

இ-ம்: சிந்துபைரவி]       [ஜம்பை தாளம்

தானானன தன்னதன தனதானா
தன்னான தந்தனனா தான தனா.

ஆனந்த ரங்கபிள்ளை தினசரியில்
      அந்தக்காலக் கூத்தையெல்லாம் காணடியோ!
மானமுள்ள இந்தியர்கள் தலை குனிய,
      மன்னவரும் சூழ்ச்சியிலே மாட்டிக்கொண்டார்.
மதிமிகுந்த புதுச்சேரி துப்ளேயும்
      சதிமிகுந்த கிளைவுடனே சண்டை செய்து,
நிதிமிகுந்த நிலத்தினிலே பிரெஞ்சுக்கொடி
      துதிமிகுந்து துலங்கிடவே கனவுகண்டான்.

[1748-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நைஜாமுல்மல்க் இறந்தான். அவன் இரண்டாம் பிள்ளை நாஜிர் ஜங் சுபேதாரானான். இவ னுடைய சகோதரி மகன் முஜபர் ஜங் அரசிற்குப் போட்டியிட்டான். இவனைப் பிரெஞ்சுக்காரர் ஆதரித்தனர். முஜபர் ஜங் தனது சூழ்ச்சி நிறைவேற டூப்ளேயிடம் புதுச்சேரிக்குக் சென்றான். இச்சமயமே ஆர்காட் நவாபு தோஸ்தாலி இறந்தான். மகன் அன்வாருடீன் நவாபானான். தோஸ்தாலியின் மாப்பிள்ளை சந்தாசாகிப் இவனுடன் போட்டியிட்டான். சந்தாசாகேப் முன்னே மராதியரிடம் கைதியானான். பெருந்தொகை தந்து பிரெஞ்சுக்காரர் அவனை விடுவித்து, ஆர்க்காட்டில் திருவிளையாடலைத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர் நாஜிர் ஜங்கையும், முகம்மதலியையும், பிரெஞ்சுக்காரர் சந்தாசாகெப் முஜபர் ஜங் ஆகிய இருவர் சேனையுடனும் படை யெடுத்து, ஆம்பூரில் அன்வாருடீனைக் கொன்றனர். உடனே சந்தா சாகேபு ஆர்காட் நவாபானான். அன்வாருடீன் மகன் முகம்மதலி திருச்சிக்குச் சென்று ஆங்கிலேயரைச் சரண் புகுந்தான். நாஜிர் ஜங்கும் அவ்வாறே. இவர்கள் சேனை பலத்தால் ஆங்கில மேஜர் லாரென்ஸ் புதுச்சேரியைத் தாக்கி பிரெஞ்சுக்காரரை முறியடித்து முஜபர் ஜங்கைக் கைதியாக்கினான். நாஜிர் ஜங் ஆர்க்காட்டிற்குச் சென்றான். அங்கே சதிகாரர் அவனைக் கொன்றனர். உடனே பிரெஞ்சுக்காரர் முஜபர் ஜங்கை விடுவித்து அழைத்துச் சென்று ஐதராபாது நவாபாக்கி விட்டனர். அவனையும் சதிகாரர் கொன்றனர். பிரெஞ்சுக்காரர் அவன் மகன் ஸலபத் ஜங்கை நவாபாக்கி ஐதராபாதில் ஆதிக்கம் பெற்றனர். சந்தா சாகெபு தனக்குப் போட்டியாய் ஆங்கிலேயருடன் சேர்ந்த முகம்மதலியை ஒழிக்கத் திருச்சிக்குச் சென்றான். ஆங்கிலேயர் ஆபத்திலிருந்தனர். அப்போதே கிளைவ் என்னும் தந்திரகாரன், ஒரு படை கொண்டு ஆர்க்காட்டை முற்றுகையிட்டான். ஐம்பது நாள் முற்றுகை போட்டு, படாதபாடு பட்டு, கோட்டைக்குள்ளிருந்த சுதேசிகளால் உயிர் பிழைத்து, கிளைவ் ஆர்க்காட்டைப் பிடித்தான்; முகம்மதலியை நவாபாக்கினான்; சந்தா சாகெபைக் கைதியாக்கித் தண்டித்துக் கொன்றான். இத்துடன் பிரெஞ்சு ஆதிக்கம் தேய்ந்தது. இந்த ஆர்க்காட்டு முற்றுகையே பிரிடிஷ் ஆட்சியின் அடிப்படையானது.]

ஐதரா பாத்தினிலே நைஜமுல்மல்க்
      அல்லாபதம் அடைந்ததுவும், அவன் மகனாம்
இதமான நாஜிர்ஜங் இறை யானான்;
      இவனுடனே முஜபர் ஐங் இகல்தொடுத்தான்

ஆர்க்காட்டில் அத்திம்பேர் சந்தாசாகேப்
      அன்வாருடீன் அரசனுடன் போட்டியிட்டான்!
பேர்வழிகள் சண்டையிலே பிரெஞ்சுக்காரர்
      பெரியதனம் செய்திடவும் உரிமை கொண்டார்.
ஆம்பூரில் அமர்களத்தில் சந்தாவும்,
      அன்வாரைக் கொன்றரசன் ஆகிவிட்டான்.

அன்வார் மகன் முகம்மதலி திருச்சியிலே
      அடைக்கலமாய் ஆங்கிலேயர் துணைபெற்றான்.
பான்மையுடன் அன்னவரும் ஆர்காட்டைப்
      படையெடுத்துப் பகைவென்றே கொடி நட்டார்.

கைகார க்ளைவங்கே, ஐம்பது நாள்
      கருணையுடன் செந்தமிழர் கைதரவே
தைரியமாய்ச் சமர்புரிந்தே கைதிசெய்து
      சந்தாவைக் கொன்றொழித்தான் சதிவாளால்.

அன்று முதல் பிரஞ்சமுலும் அழிந்திடவே,
      ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுத்ததுவே,
நன்றி கெட்ட துரோகிகளின் சேட்டையினால்
      நாடிழந்தோம், பீடிழந்தோம், வீடிழந்தோம்!

நாஜிரும் முஜபரும் கொலையுறவே
      நைஜாமாய் ஜலபட்ஜங் ஆண்டிருந்தான்.
ஆசையுடன் பிரெஞ்சுக்காரர் அமுல் செலுத்தி,
      ஆங்கிலரின் போட்டியினால் நீங்கினாரே.

[ஆர்காட்டிற்குப் பிறகு 1752-ல் கிளைவ் இங்கிலாந்து சென்று திரும்பினான். அச் சமயம் வங்காளத்தில் அலிவர்டிகான் சுயாட்சியைப் பலமாக நட்டுத் தன் பேரன் சூரஜ் டௌலாவிற்களித்துச் சென்றான். சூரஜ்டௌலா கல்கத்தாவைப் படையெடுத்து ஆங்கிலேயரை முறியடித்து ஒழித்தான். (ஆங்கிலேயர்களை இருட்டறையிட்டுக் கொன்ற கதை தற்போது மறுக்கப் பெற்றுள்ளது.) கிளைவும் வாட்ஸனும் கப்பற்படையுடன் கல்கத்தா சென்றனர். வலுத்த சண்டை நடந்தது. அதனால் கும்பினிக்காரருக்கு இருக்க இடம் கிடைத்தது. கிளைவ் மெல்ல சூரஜ் டௌலாவின் படைத் தலைவனான மீர் ஜாபருக்கு ஆசைகாட்டி வசப்படுத்திக் கொண்டு, பிளாசியில் டௌலாவை எதிர்த்துப் போர் புரிந்தான். கிளைவும், 1,100 ஆங்கிலேயரும், 2,000-ம், தென்னிந்தியச் சிப்பாய்களுமே இருந்தனர். சூரஜ் பக்கம் 18,000-ம் வீரர் இருந்தனர். கொடிய போர் நடந்தபோது, மீர்ஜாபர் நரி வேலை செய்து, கிளைவின்பக்கம் தன் சேனையைத் திருப்பிவிட்டான். சூரஜ் தோற்றோடினான். அவனை ஆங்கிலேயர் பிடித்துக் கொன்றனர். மீர் ஜாபரை அவர்கள் பொம்மை சுபேதாராக்கி, வங்காளத்தில் அமுல் செலுத்தினர். பிறகு இவனையும் கீழே இறக்கிப் பெருந்தொகை தந்த மீர்காசிமை சுபேதாராக்கினர் தில்லியிலிருந்த கடைசி சுல்தானிடம் 26 லட்ச ரூபாய் கிஸ்தி தருவதாகச் சொல்லி வங்காளம் பீஹார் ஒரிசா மூன்றையும் வசப்படுத்திக் கொண்டான், கிளைவ். இறுதியில் லார்டு கிளைவே முதல் கவர்னரானான்; முன்னே அயோத்தி நவாபு வாஜிருடன் போர் செய்து வென்றதில் வந்த 50 லட்சமும், வியாபார உரிமையும் பெற்றான்.]
வங்கத்திலே சூரஜ்டெளலா வலிமையுடன்
சிங்கமெனப் பிளாசியிலே செருத்தொடுத்தான்;
அங்குமொரு மீர்ஜாபர் அகப்படவே,
ஆங்கிலேயர் ஆதிக்கம் ஓங்கியதே!

மீர்ஜாபர் விதிதனையும் கதறவிட்டு,
மீர்காசிம் வெள்ளியினை மிக ஏற்று,
பேருக்கே அரசாக்கி, பின் பிறக்கி,
பெற்றாரே கும்பினியார் வங்கமெல்லாம்.

[இந்தமாதிரியே கும்பினிக்காரர் வியாபாரத்தை நாடெங்கும் விரித்தனர். துறைமுகங்களையெல்லாம் வசப்படுத்தினர். எந்த சுதேசராஜ்யத்தில் இரண்டு கட்சி இருந்தாலும், அங்கே அமைதி நாட்டுவதாகச் சென்று, ஒருபக்கம் சேர்ந்து இருபக்கமும் வென்று அரசைத் தமதாக்கினார்கள்; தமது ஆட்சிக்குத் தடையானவர்களையெல்லாம் மற்றொரு பகைமூட்டிச் சதுர்வித உபாயங்களாலும் மடக்கினர்; பிள்ளையில்லாச் சொத்தெல்லாம் தமதாக்கினர். இவ்வாறு வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளக் கவர்னராகி, அயோத்தி மகராஷ்ட்ரம், ரோகில்லா, மைசூர் அரசுகளில் படையெடுப்பு நடத்தினான்; அயோத்தி பீகம்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தான். நந்தக்குமாரிடம் ஏராளமான பொருள் லஞ்சம்வாங்கி மறுத்தான். அவன் மேல் சீமையில் ஏழாண்டுகள் வழக்கு நடந்தன. இந்தியாவில் சேர்த்த பணமெல்லாம் அதில் இழந்து அவன் வறுமையுற்றான். ஹேஸ்டிங்க்ஸ் காலத்தில் ஐதராலி கிளம்பி, பிரெஞ்சுக்காரரையும் கூட்டிக்கொண்டு

கடும்போர் செய்தான். முடிவில் மங்களூரில் உடன்படிக்கை நடந்தது. ஹேஸ்டிங்கிற்குப் பிறகு காரன்வாலிஸ் கவர்னரானான். திப்பு சுல்தான் சுதந்திரப்போர் புரிந்தான்; நைஜாம் மராதியர் உதவியால், காரன் அவனை முறியடித்தான். இவன் காலம் சென்னை மாகாணம் ஆங்கிலேயருக்கானது. வந்தார் வெல்லஸ்லி பிரபு-(1798-1805). திப்பு, பிரெஞ்சுக் குடியரசு (நெப்போலியன்), மராடிய நானாபர்நாவிஸ், நைஜாம் ஆலி முதலிய வர்களின் கூட்டுறவால், ஆங்கிலேயரை இந்தியாவைவிட்டே துரத்தப் பெரும்போர் கிளப்பினான். 1799-ல் வெல்லஸ்லி அவனை ஸ்ரீரங்கபட்டணத்தில் வீழ்த்தினான். திப்பு இறந்தபிறகு, மைசூரின் இந்து ராஜ மரபில் வந்த கிருஷ்ணராஜ உடையாருக்குப் பட்டங்கட்டி, ஆங்கிலேயர் சர்வாதிகாரம் பெற்றனர். மைசூர் போர்களால் சென்னை மாகாணம் முழுதும் ஆங்கிலேயருக்கானது. நல்ல துறைமுகங்கள் அவர்கள் கைக்குவந்தன. நவாப் ஆட்சி போய்விட்டது. 1801-ல் கர்னாடகம் முழுதும் ஆங்கிலக்கொடி பறந்தது.

நவாப் வாஜிரை வசப்படுத்தி, வெல்லஸ்லி ரோஹில்கண்டைப் பிடித்துக் கொண்டான். மராடியர் தில்லியைக்கூட வென்று மீண்டும் தமது சாம்ராஜ்யத்தை நாட்டப் பெருமுயற்சி செய்தனர். ஆங்கிலேயருடன் பாஜிராவ் பலபோர்கள் புரிந்தான். ஹோல்காரும் சேர்ந்து போராடினான். ஆர்தர் வெல்லஸ்லி மராடியரை அஸ்ஸே, அரகான் முதலிய இடங்களில் முறியடித்து, நாடெல்லாம் பிரிடிஷ் ஆதிக்கத்தை நிலைநாட்டினான். சிந்தியா போன்ஸ்லே, கைக்வார், ஐதராபாத் ஸமஸ்தானங்களிலெல்லாம் ஆங்கிலத் துருப்புக்களும் ரெஸிடென்ட் என்னும் ஸ்தானிகரும் இருந்து தமது செல்வாக்கை நிலைநாட்டினர்.

1805-ஆம் ஆண்டில், வெல்லஸ்லி சீமைக்குத் திரும்பியபோது, இந்தியா முழுதும் பெரும்பாலும் ஆங்கிலேய மயமானது. மார்கிஸ் ஹேஸ்டிங்ஸ், மூன்றாவது மராட்டியப் போர் நடத்தி, பேஷ்வாக்களின் அரசையெல்லாம் பிடித்துக் கொண்டான். பம்பாய் மாகாணம் பிரிட்டிஷாருக்கானது. மின்டோப் பிரபு சாமாதானம் நாட்டினார். சண்டைக்கு இனி யாருமில்லை. பெண்டிங்கு பிரபு நாட்டுக்கு நல்ல சீர்திருத்தங்களைச் செய்தான். இவருக்கு ராஜாராம் மோஹன் ராய் தக்க துணை செய்தார். டல்ஹௌஸி பிள்ளையில்லாச் சொத்தையெல்லாம் பிரிட்டிஷ் சொத்தாக்கிவிட்டார்; கானிங் காலத்தில் இந்தியா பிரிட்டிஷாரின் கொடிக் கீழ் வந்துவிட் டது. இப்போதுதான் அங்குமிங்கும் பல சுதந்தரக் கிளர்ச்சிகள் நடந்தன. 1857-ல் நானாசாகெபு, தாதியாதொபே, அகமது மௌல்வி, ராணி லக்ஷ்மிபாய் முதலியோர் விடுதலைப்போர் நடத்தினர். அது கொடுமையாக அடக்கப்பட்டது. தென்னாட்டில் கட்டபொம்மு, ஊமையன், மருதுக்கள் முதலியோர் போர் நடத்தி வீழந்தனர். இனித் தடையென்ன? யூனியன் ஜாக், குசாலாகப் பறக்க வேண்டியது தானே! அதைப்பாடுவோம்:]

வாரன் ஹேஸ்டிங்ஸ் காரன் வாலிஸ் வெல்லஸ்லி,
      ஹேஸ்டிங்சு பெண்டிங்கு டல்ஹௌசி,
பாரத நன்னாட்டிலெழும் வீரர்களை
      படுகளத்தில் படுத்தியிங்கே கொடி நட்டார்.

வலிமிகுந்த ஐதராலி மைசூரில்,
      புலியெனவே திப்புசுல்தான் போர்புரிந்தார்.
சலியாது மூன்று முறை சண்டை செய்தே,
      சக்திமிகு மாரதரும் தாழ்ந்துவிட்டார்.

சிங்கமெனும் சீக்கியரும் பர்மியரும்,
      தீரமிகு கோசலரும் திறமழிந்தார்.
தங்கம் விளை நாடெல்லாந் தமதாக்கித்
      சள்ளையின்றி அரசாண்டார் வெள்ளையரே.

மருதுவுடன் பொம்மு வீர மறவர்படை
      மாசில்லா வீரமுடன் மல்லாண்டு,
பொருகளத்தில் வீழ்ந்தபின்பு தென்னாட்டிற்
      போராட்டம் ஒழிந்ததெனப் புகலுவரே.

கானிங்கு காலத்திலே கனலுடனே
      கத்திகொண்டு சுதந்தரத்தைக் கண்டிடவே,
நானாராயன் லஷ்மீபாய் தாதியா
      நாட்டுக்குப் போர்புரிந்தார் கூட்டமுடன்.

மீரட்டில் கான்பூரில் டில்லியிலே,
      வீரப்போர் வென்றுவெறி கொண்டவரை
பீரங்கி வாயினிலே பிணமாக்கிப்
      பெருங்கலகம் பயங்கரத்தால் ஒடுக்கினரே.

சாலைமரம், சோலையெல்லாம் தூக்குமரம்;
      சண்டையென்ற ஊர்களெல்லாம் குண்டுக்கிறை,
நீலுடனே லாரென்சும் ஹாவ்லக்கும்
      நீறுசெய்தார், வடநாட்டைக் கூறுசெய்தார்.

பாரதத்தின் வீரவிளக் கணைந்ததம்மா;
      பந்தனைநம் சுதந்தரத்தைப் படுத்ததம்மா.
கோரமெல்லாம் ஒழிந்ததுமே கும்பினியும்,
      கொற்றவர்க்கை இந்தியாவைக் கொடுத்ததுவே.

பக்குவமாய்ச் சரிசமனாய்ப் பரிவுடனே
      பாரதரை நடத்திடுவோம் பாரிலென்றே,
விக்டோரியா ராணிசெய்த விளம்பரத்தால்
      விருப்புடனே நம்மவரும் ஒருப்பட்டார்.

இரக்கமுள்ள விக்டோரியா, எட்வேடு,
      ஏற்றமிகு ஜார்ஜ்மன்னன் ஆற்றலுடன்,
பறக்கவிட்ட கொடியின்கீழ் பாரதரும்
      பட்டதெல்லாம் போதும் பராபரமே!
---------------------------------
3. அறிவிலும் தொழிலிலும்
[எதிலும் நலமும் தீதும் உண்டு. ஆங்கில ஆட்சி நமது வாழ்வை விசாலமாக்கியது. உலகுடன் நாம் பழக ஒரு மொழியைத் தந்தது. கலகக்காடாயிருந்த இந்தியாவின் ஆயுதத்தைப் பிடுங்கி, அமைதி நாட்டியது. ஆட்சிமுறையை ஒழுங்காக அணிவகுத்து நடத்துவதில் ஆங்கிலேயருக்குச் சமானமில்லை. நமது நாடு காலத்திற்கேற்ற கல்வியும் யந்திர சாதனங்களும் பெற்றது. ரயில், மோட்டார், டிராம், கப்பல், விமானம், தந்தி, போன், ரேடியோ, ஒலிப்பெருக்கி, பேசும் படம், இவையெல்லாம் ஸயன்ஸ் நமக்குத் தந்த அற்புதங்களே. இவற்றைக்கொண்டு ஆங்கிலேயர் நம்மை அடக்கியாண்டார்கள், நமது பொருள்களெல்லாம் கப்பலேறிச் சென்றன. நமக்குரிய கைத்தொழில்கள், யந்திரங்களுடன் போட்டி போட முடியாது நலிந்தன. நமது தாய்மொழி, செல்வாக்கற்றது. ஆங்கிலக் கல்வி நம்மை அடிமை வேலைக்கே தயாரிக்கிறது. நமது சமயாசாரங்களெல்லாம் போய், பிறமதங்கள் பரவி வருகின்றன. இந்திய சமுதாயம் ஒற்றுமையிழந்து, பிரிவினையால் நலிகிறது. சுதந்தர இந்தியா அடிமையானது.

இராகம்: செஞ்சுருட்டி]       [திஸ்ர ஏகதாளம்

தன்னன தானான தன்னன தானான
தன்ன தானானன தனனா
தன்ன தானானனா.

அறிவிலும் தொழிலிலும் அரசியற் சூழ்ச்சியிலும்
      ஆற்றல் மிகுந்தவரே - அந்த
      ஆங்கிலர் நீங்கிலரே.

பொறிகளும் வாணிகப் போட்டிகளுடன் சட்டப்
      பூட்டுகளுந் தினமும்- நம்மை
      ஆட்டிவைக் கின்றனவே!

கப்பலும் ரயிலும்வி மானமும் கார்களும்,
      கம்பியும் வானொலியும்- அச்சுக்
      காகித நூல் வகையும்,

அற்புதம் அற்புதம் அற்புத மாகவே --
      ஆண்டான் அடிமைத்திறம் காட்டி
      அடக்கின நம்மவரை.

தந்தியிற் செய்திகள் தாவிப் பறந்துவரும்,
      தாராள வேகத்துடன்-படைகள்
      தாண்டவமாடி வரும்.

சந்ததம் இந்தியா சந்தையாய் உதவவே,
      சரக்குகள் வந்திறங்கும்-சகியே
      தனக்குவை ஏறிச் செல்லும்.

ஊகமும் வேகமும் ஊக்கமும் கொண்டவர்கள்,
      ஊட்டினர் ஆங்கிலத்தை-அடிமை
      உத்யோக வேட்டைக்கடீ.

தாகங்கொண்டு தவிக்குந் தாய்மொழி தத்தளிக்க,
      தழைத்தது கல்விமுறை ஆங்கில
      சத்தம் வலுத்ததடி.

இந்தியர் பணத்துடன், இந்தியர் படையுடன்,
      இந்தியாவைப் பிடித்தே- தங்கமே
      இங்கிலாந் தாண்டதம்மா.

சொந்த நிலத்தினிலே வந்தவர்க் கடிமைய
      சுதந்திரங் கெட்டோமடி-சகியே
      சூழ்ச்சியிற் பட்டோமடி!

அன்னியக் கல்வியுடன் அன்னியச் சமயமும்,
      அன்னிய மோகமுடன்-சகியே
      அன்னியர்க் காளாயினோம்.

இன்னலைப் போக்கிடவும், இன்பத்தை ஆக்கிடவும்,
      எழுந்தது காங்கிரஸே-சகியே
      ஒழிந்தன தீங்குகளே!
-----------------

15. காங்கிரஸ் இந்தியா

[இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுச் சீர்குலைந்தாலும் வேர்குலையவில்லை. ஆங்கிலக் கல்வியால் நாடு புதிய விழிப்படைந்தது. யந்திர நாகரிகத்தால் நாடு புதிய தந்திரத்தை நாடியது. நாம் எதனால் நாட்டையிழந்து அடிமைப்பட்டோம் என்ற காரணத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு, இந்தியர் புதிய விழிப்படைந்து, உலகில் புகழ்பெறத் தலைப்பட்டனர். இந்தியாவிற்குரிய புலமையும் தெய்வத்தன்மையும் மங்கவேயில்லை. சமுதாயம் அரசியல், கல்வி தொழில் கலை அனைத்திலும் காலத்திற்கேற்ற சீர்திருத்தங்கள் வந்தன. அச்சம் ஒழிந்தது. சுதந்தர வீறெழுந்தது. ராஜாராம் மோஹன்ராய், வள்ளலார், பரமஹம்ஸர், விவேகானந்தர். ராமதீர்த்தர், அனிபெசண்டு, திலகர், தயானந்தர், லாலாஜி, அரவிந்தர், பால், பாரதி, சாவர்க்கார், ஐயர், காந்தி, முதலியோர் நவ இந்தியச் சுடர்களாய் விளங்கினர். காங்கிரஸ் நாட்டிற் பெருஞ் செல்வாக்குடன் தியாக வழியில் வளர்ந்து வருகிறது. மஹாத்மாவின் சத்தியாக்கிரகம் உலகிற்கே புதுவழி காட்டியது. இன்றுலகம் இந்தியாவின் புனிதப் பெருமையைப் போற்றுகிறது.]

1. வீரங் குறைவதும் உண்டோ?

இராகம்: காபி ]       [ரூபக தாளம்
தன்னன தன்னன தானா- தன
தன்னன தன்னன தானா

வீரங்குறைவதும் உண்டோ -நம்
      வீறு தளர்வதும் உண்டோ?
பாரத சக்தி யெழுந்தே-மீண்டும்
      பாரினை வென்றிடக் காண்போம்.

தட்டுத்தடைகளை உடைத்தே-வேத
      தர்மம் முன்னேறிடக் காண்போம்.
எட்டெட்டுத் திக்கிலும் சகியே-நம்
      இசைபெருக்கிட உழைப்போம்.

இருளைப் பிளந்தொளிர் கின்ற-ஞான
      இரவியைப் போன்ற மகான்கள்,
அருட்சுடர் வள்ளல்கள் வந்தார் -மீண்டும்,
      ஆத்மசக்தியினைத் தந்தார்.

சாதிமதத் தொல்லையின்றி-என்றும்
      சமரஸ ஒற்றுமை நாட்டி,
நீதியுடன் ஆணும் பெண்ணும் வாழ
      நெறியளித்தனர் பெரியார்.

கிழக்குடன் மேற்கலை சேரப்-பழங்
      கேடுகள் யாவையும் தீர,
உழைத்த ராம் மோகனன் புதிய - காலை
      ஒளிக் கதிரென வந்தான்.

சாதிமதத்தொல்லை யின்றி - சுத்த
      சன்மார்க்க சங்கமாய் வாழ - அருட்
சோதி நிரம்பிய வள்ளல்-வாக்கு
      தொட்டு வளர்ந்ததெம் உள்ளம்.

வீறுபெற்ற தயானந்தர் - தூய
      வேதசன் மார்க்கத்தை நாட்டி,
வேறுபடுத்தும் பொய் யெல்லாம் இங்கே
      வீணுறச் செய்ததைக் காணாய்.

பலமதங்களும் ஒன்றே என்னும்
      பரமஹம்ஸரின் சுடராய்
இலகும் விவேகானந்தன் ஞான
      இசைநமக்கெனத் தந்தான்.

அன்னி பெசண்டம்மை யாரும் நம்
      அருட்கலைகளை வளர்த்தாள்.
இன்னும் பலபெரியார்கள்-நம்
      இந்திய ஊழிய ரானார்.

ஆரியப்ரம்மச மாஜம் -ராம
      கிருஷ்ணர் அருள் பெற்ற சங்கம்,
நேரிய சன்மார்க்க சங்கம்-ப்ரம்ம
      ஞானத திகழுறும் சங்கம்.

பாரத சக்திக் கதிரை- இந்தப்
      பாரெங்கும் வீசிடக் கண்டோம்;
வீரசுதந்தரம் விளங்க- செயல்
      வேகமளித்தது காங்கிரஸ்.

கவிரவீந்திர நாதர் - இயற்
      கலைப்புலவன் இராமன்
நிலவு நோபில் பரிசு- பெற்று
      நிலம்புகழ்ந்திட வாழ்ந்தார்.

சாதி மத பேத மில்லை - இதில்
      சாத்திர கோத்திர மில்லை- பொது
நீதி நிலவிடும் அன்பே வளர்
      நித்திய சத்தியச் சபையே!

இந்து முஸல்மான் கிறிஸ்து-பார்ஸி
      இன்னும் பலசமயத்தார்,
சொந்தவீடெனக் கொண்டாடும்-இது
      தூய சமரஸ நிலையம்.

இந்தியா இந்தியர்க் காக-இதை
      இந்திய ரேயர சாள,
பந்ததொந்தமெல்லாந் தீர-இந்தப்
      பாரிலே நாடுமுன் னேற,

கல்வி தொழில்வளம் பெருக - நல்ல
      கைத்தொழிற் செல்வம் பெருக,
சொல்லுஞ் செயலுடன் பொருந்த- இது
      தொண்டுசெய் வீரரின் கூட்டம்.

பாலகங் காதர திலகர்- தாதா
      பாயுடன் பால் அரவிந்தர்,
லாலாஜி, சாவர்கார் ஐயர்- இதன்
      லட்சியங் காத்த மகான்கள்.

வெட்டர்பன், ஹ்யூமுடன் ப்ராட்ஷா-முதல்
      வெள்ளைக்காரர் பலர் போற்றும்,
கட்டுப்பா டாகிய சங்கம்- இந்த
      காங்கிரஸ் ஒன்றெனக் காண்பாம்.

சய்யது பத்ருடீன், அல்ஹக்-அன்
      சாரி அரிய அசாது- முதல்
செய்ய இஸ்லாமியர் தாங்கும் சபை
      சீர்பெறும் காங்கிரஸ் ஒன்றே.
----------

2. எண்ணிய காரியம் (காந்தி சகாப்தம்)

இ-ம் : செஞ்சுருட்டி)       (ஆதி- தாளம்
தன்னன தானான தன்னன தானான
தன்னன தானானனா -- தங்கமே
தன்னன தானானனா.

எண்ணிய காரியம் - ஏற்றம் பெருகிடவே
புண்ணிய காந்திமகான் எழுந்தார்
பூரணச் சந்திரன் போல்.

சாந்தக் கதிர்கள் வீசிச் சத்தியாக் கிரகத்தை
ஏந்திமுன் வந்தாரடீ-சகியே
இணையற்ற காந்திமகான்.

மோதி ஜவஹர்லால், முதிய சரோஜினி,
முகம்மது சௌக்கத்தலி- தாஸ், போஸ்
முன்னணி சேர்ந்தாரடீ.

சீனிவா சைய்யங்கார், செந்தமிழ் ராஜாஜி
தீரன் ராஜன் பாபும்- இன்னும்
செகம்புகழ் வீரர் பலர்,

காந்தியின் சாத்வீக சத்திய சேனையில்
கலந்து பணிபுரிந்தார் - தியாகக்
கனலிற் குளித்தெழுந்தார்!

அச்ச மொழிந்ததடி-ஆண்மை பிறந்ததடி,
உச்சப் புகழடைந்தோம்-சகியே
உலகெல்லாம் கொண்டாடவே.

ஆகாச குண்டுகளால்
அணுவெடிக் கொடுமைகளால்,
ஏகாதிபத்தியங்கள்-சசியே
இடிந்து மடிந்தனவே.

சத்ய தருமத்தால்-சாத்வீக வழியினால்,
சுத்த சுதந்திரத்தை- அடையத்
துணிந்தித் தேசம் ஒன்றே,

யந்திரப் போரிலும்- இணையில்லை யென்று சொல்ல
வந்தபெரும் போரிலும்-சகியே
இந்தியா முந்தியதே!

வங்கத்தைத் தாக்கிநின்ற வலியப் பகைவரையும்
சிங்கம்போல் வென்றோமடீ-சகியே
ஜெகப்புகழ் கொண்டோமடி.

அடிமைத் துயரமில்லை; மடமை யிருளுமில்லை;
வெடித்தது பாரடியோ-சகியே
வெற்றிக் கதிரொளியை.

பாரத சக்தியொன்றே பாருக்கு நன்மைதரும்
பரமாத்ம சக்தியென்றே-சகியே
பாடிக்கொண் டாடிடுவோம்.

சக்தி ஓம் சக்தியென்றே-சகமெல்லாம் இந்தியாவை
சாற்றிட நாற்றிசையும்-வாழ்க!
சரித்திரக் கும்மியடி-சகியே
சத்தியக் கும்மியடி...!

முன்னேற்றத்தைத் தடுத்த
முட்டுக்கட்டைக ளெல்லாம்
சின்னா பின்னமாகவே சசியே
ஜெயக் கொடி நட்டோமடி!

பாரும் வியந்து மெச்சப்
பாரத நாட்டினிலே
நேரு சர்க்கார் வந்ததே- அதன்
நேர்மையைப் பாரடியோ:

எங்கும். சமவுரிமை
எங்கும் தோழில் வளமை
பொங்கும் கலை முழக்கம்-சகியே
புண்ணிய நாட்டினிலே!

பூரண சுதந்தரம்
புன்னகை புரிகின்ற
பாரத தேசத்தினை-சகியே
பாரெல்லாம் போற்று தடீ!

சாந்தமு தித்ததடீ
சத்தியம் வென்ற தடீ!

காந்தி சகாப்தத்தினை-சகியே
சந்தோஷமாய் வாழ்த்துவோமே!

இந்தியச் சரித்திரக் கும்மி முற்றிற்று


This file was last updated on 1 Dec 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)