pm logo

இலஞ்சி பிரம்மஸ்ரீ றாமுஅம்மாள் எழுதிய
பார்வதி கல்யாணக்கும்மி


pArvati kalyANakkummi
by prammasri Ramu ammAL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft
copy of this work for publication
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இலஞ்சி பிரம்மஸ்ரீ றாமுஅம்மாள் எழுதிய
பார்வதி கல்யாணக்கும்மி.
(விக்கினேஸ்வரர் ஸ்தோத்திரத்துடன்)

Source:
பார்வதி கல்யாணக்கும்மி.
இலஞ்சி, பிரம்மஸ்ரீ றாமுஅம்மாளால் இயற்றப்பெற்று,
தென்காசித்தாலூகா மேலகாம், புஸ்தக வியாபாரம்.
க. ச. சுப்பிரமணியபிள்ளை அவர்களின் பொருளுதவியின் பேரில்.
தென்காசி
ஸ்ரீராமாநுஜம் அச்சு ஆபீஸில் பதிப்பிக்கப்பட்டது.
1931.
[அணா 4.
காபிரைட். பிரஜோத்பத்தி வரு
-------------------------------------------

பார்வதி கல்யாணக்கும்மி.


சிவமயம்.
விநாயகர் வணக்கம்.
அரிஹர அயனின்றும் என்ற வர்ண மெட்டு.

குன்னக்குடியில் வாழும் குஞ்சராறு முகனே என்
குருவாக வந்தெனக்கு அருள்வீர்
அப்பம்வடை எள்ளுருண்டை அதிரசமோதகமும்
தப்பாமல் முப்பழமும் ஸந்நதியில் நான் படைப்பேன். (கு)
நந்தவனச்சோலையும் நதிக்கரை வாய்க்காலும்
வாழையடி தன்னிலே வசதியாய் வாசஞ்செய்தீர்
வழியில் வருபவர்க்கு வரங்கள் தருவதற்கு
பாலா கணேசா நீரும் பரமானந்தமாயமர்ந்தீர். (கு)
-------------------

கட்டம் 1.
சாஸ்தா ஸ்தோத்திரம்.

அல்லியென்றும் சொல்லிடுவான் என்ற வர்ணமெட்டு.

ஆனைமுகன் தன் பிறப்பே ஐந்தருவி ஐயனாரே
அனாதை என்னைக் கார்க்கவேணும் அரிஹானார் புத்திரனே.

கைலாச மலையடியில் கார்த்திருக்கும் குளத்தூரனே
கன்னிகை எந்தன் மனதில் காவலாக வசிக்கவேணும்.

திருகூட மலையடுத்தா தேவாலயம் மேற்குதிக்கில்
தேக்குமரச் சோலைதன்னை செழிக்கவைத்த சாஸ்தாவே நீர்

ஆறென்றருவி ஐந்தாய் அறிய வைத்தாய் ஐயனாரே
அவனிமுதல் செழிக்கலென்று அவ்விடத்தில் வாசஞ்செய்தீர்.

செந்நெல் விளையவைப்பீர் சிற்றாற்றைப் பெருக்கவைப்பீர்
குட்டைக் குளக்கரையில் குடியாய் வசிப்பவரே

சுடலையில் உதித்ததொரு சுடலனுட சொல்பிறப்பே நான்
சொன்னதொரு சொற்பொருளை மெய்ப்பொருளாயருளவேணும்.

கோரினதோர் கோரிக்கையில் குற்றமொன்றும் வந்திடாமல்
குலதெய்வமாயிருந்து காக்கவேணும் குளத்தூரனே.
------------------

கட்டம் 2.

சேலையைக் காணலையே என்ற வர்ணமெட்டு.

மூலாதாரப்பொருளே அந்த முத்திதரும் விக்கினேசனே
முன்னடக்க வேணுமிப்போ நான் முக்காலம் அடிபணிந்தேன்.

சுவாதிஷ்டான சத்பொருளே அந்த சதுர்முகனார் தேவியரே
தத்துவத்துக்குள் பொருளே எந்தன் நாவில்வர வேணுமம்மா.

மணிப்பூரக மணிமாயனே அந்த மஹாலெஷ்மிப்ராணேசனே
வந்துதவ வேணுமிப்போ என் வக்ஷஸ்தல வாசனே

சத்சங்கசாவகாசத்தில் என்னை சதாகாலமும்தவறாமலே
சாதனை செய்யவேணும் என் தயவுள்ள பெரியோரே.

பார்வதியாள் கல்யாணத்தை நான் பத்தினிமார் பாடவென்று
பக்தி வினயத்துடன் பணிந்தேன் பரப்ரம்மத்தை

குருவாய் நின்ற குமரேசனே சிவன் குழந்தைவடி வேலவனே
பேதை பிரித்தக்கவியில் பிழைபொறுப்பாய் வேலவனே.
------------------

கட்டம் 3.

காலையில் கண்ணனெழுந்திருந்து என்ற வர்ணமெட்டு

பூலோக கைலாசகிரிதன்னில் சிவன்
பெண்மணி தாக்ஷாயணி யுடன்கூட
பொங்கி மகிழ்ச்சியுடன் பரமசிவனப்போ
பூரித்து ஆனந்த மனமகிழ்ந்தார் சிவன் (பூ)

கொஞ்சிக்குலாவி யிருக்கிறவேளையில்
குவலயத்திலுள்ள தேவர்களும்
கைலாசநாதரைக் காணவேணுமென்று
கடுகியே தேவர்கள் கூடிக்கொண்டாரங்கே. (பூ)

தேவேந்திரன் முதல் தேவர்களுடன் கூட
தெக்ஷனப்போ ஒரு சேதி சொல்வார்
ஏகமாயெல்லோரும் எக்கியம் செய்வோமென்று
எச்சரிக்கையிட்டார் தெக்ஷனப்போ ஒரு (பூ)

தெக்ஷனுரைக்கிசைந்த தேவர்களுமந்த
சிவனாரை தெரிசித்து வருவோமென்று
சேகரமாகவே சேர்ந்து கொண்டார் அந்த
சிவனடிபாதத்தில் சேவித்தார்கள் அந்த (பூ)

வருகிறவழியில் தெக்ஷணப்போ ஒரு
மார்பாடாகவே மன திலெண்ணி
மருமகனை வணங்கக்கூடாதென்று சொல்லி
வாசப்படி தன்னில் நின்றுவிட்டான்-தெக்ஷன்
வாசப்படி தன்னில் நின்று விட்டான். (பூ)

வாருங்காண் ஈஸ்வரரை வணங்கவென்று அந்த
தேவர்கள் தெக்ஷனை அழைக்கலுற்றார்
மான்மழு தரித்ததோர் மருமகனை நான்
வணங்கேனோருக்காலு மென்றுரைத்தான்- தெக்ஷன்
வணங்கேனோருக்காலு மென்றுரைத்தார் (பூ)

ஈஸ்வரரை வணங்காமல் இனியிருந்தீரானால்
எக்ஞம் நிறைவேற மாட்டாதென்றார்
ஈசனை வணங்கினால் இழிவில்லையென்று சொல்லி
தேவர்கள் தெக்ஷனுக் கெடுத்துரைத்தார் - அந்த
தேவர்கள் தெக்ஷனுக் கெடுத்துரைத்தார். (பூ)
மருமகன் மாமனை வணங்குவது என்றும்
வழக்கமுண்டு எந்த உலகத்திலும்
மாமன் மருமகனை வணங்குவது ஒரு
வகையில்லையென்று திரும்பிவிட்டான் தெக்ஷன். (பூ)
---------------------

கட்டம் 4.

சத்தியமாய் அரசன் சொல்ல என்ற வர்ணமெட்டு.

திரும்பினதோர் தெக்ஷகனும் சிந்தை தெளிய
வந்தார் தெய்வலோகம் சேர்ந்தார் நிர்மலரை
நிந்தித்தோமென்று நினைத்து மனமகிழ்ந்தார். (தி)

ஈஸ்வரரும் வராவிட்டால் எக்ஞம் திறைவேறும்
இக்ஷணத்தில் பாரும் என்று சொல்லி
தெக்ஷருடன் எழுந்தார் அனைபேரும். (தி)

தெய்வலோக தெக்ஷகர்தான் செய்யப் போறார் யாகம்
சித்தித்தது யோகம் எவரெவர்கள்
வருவார்களோ அவர்கள் இஷ்டபாகம். (தி)

என்று சொல்லி தெக்ஷனப்போ எழுதிவிட்டாரோலை
எச்சரிக்கை மேலே எக்ஞத்துக்கு வரா
விட்டால் என்றுஞ்சிரச்சாலை. (தி)

வந்ததொரு ஓலை தன்னை வக்கணையைப்பார்த்து
வானுலகத்தார் திகைத்து
மகன் மக்கள் பெந்துக்களுடன் வந்தார்கள் பூரித்து, (தி)

சப்தலோக தேவரிஷி சதகோடி பேரும்
ஜல்தியிலே சேரும்
எக்ஞத்துக்குப்போகாவிட்டால் இடர்வந்து நேரும். (தி)

என்று சொல்லி தேவர்களும் எழுந்திருந்துவந்தார்
எக்ஞசாலைப் புகுந்தார்
அவரவர்க்குத் தகுந்ததொரு ஆசனத்திலமர்ந்தார். (தி)
--------------------

கட்டம் 5.

நின்றதொரு பாலகனை என்ற வர்ணமெட்டு.

அந்தப்படி தானிருக்கா       தெக்ஷகர்
யாஹோமப்பிர காரப்படி       தெக்ஷகர்
ஓமகுண்டம் வளரச்செய்தார்       தெக்ஷகர்
ஒகமாதி யில்லாமலே       தெக்ஷகர்

அதையறிந்த நாரதரும் அந்த
தாக்ஷாயணி யிடத்தில் வந்து உன்னைப்
பெற்றெடுத்த தந்தையரும் பெரிய
யாகமொன்று செய்கிறாரே.

தெரிந்திருந்தும் நீயுமிப்போ தேன்மொழியே
தெக்ஷன் செய்யும் யாகத்திற்கு
போகாமலிருந்ததொரு காரணத்தை
பொற்கொடியே உரையுமென்றார்.

நாரதர் உரைக்கலுமே நாயகியாள்
நானறியேன் என்றுரைத்தாள்
போகவேணும் எக்ஞத்துக்கு என்று சொல்லி
போய்ப்பணிந்தாள் ஈஸ்பரரை.

ஏதடியோ கண்மணியே உனக்கிப்போ
இந்தவிதம் யாருரைத்தார்
அப்படிக்கி உண்டானால் உன் தந்தையரும்
அறிக்கையிட்டுப்போகாரோ

ஈஸ்வரர் உரைத்திடவே ஏந்திழையாள்
எக்ஞத்துக்குப் போவோமென்று
வருந்தி அழைக்கலுற்றார் மன்னவரை
பக்தி வணக்கத்துடன்.

அழையாத யாகத்திற்கு அன்னமே
நாமிருவர் போனோமானால்
மதியாமல் இருந்திடுவார் அன்னமே
வரமாட்டேன் என்றுரைத்தார்.

எந்தவிதமானாலும் எந்தனுட
தந்தை செய்யும் யாகத்திற்கு
போய்வருவே னென்று சொல்லி தாக்ஷாயணி
போய்பணிந்தாள் பர்த்தாவையும்.

மதிக்கவில்லை யென்று சொல்லி மாதரசே
வரக்கூடாது இனிமேலிங்கே
அப்படிக்கி வந்தையானால் உன்னை நானும்
வருத்துவதும் இல்லையென்றார்
----------------------

கட்டம் 6.

அதட்டியெழுந்தார் என்ற வர்ணமெட்டு,

தந்தை செய்யும் யாகத்திற்கு தந்தை செய்யும் யாகத்திற்கு
தாக்ஷாயணி வந்து சேர்ந்தாள்
வந்ததொரு தன் மகளை தெக்ஷகர்
வாவென்றழைக்கவில்லை. (த)

யாஹோம மந்திரத்தால் யாஹோம மந்திரத்தால்
அவர் அழைக்கவில்லையென்று
அம்மாளிடம் போய்வருவோமென்று சொல்லி
அருகில்வந்து நின்றுகொண்டாள் (யா)

பெற்றதாயும் பெண்ணுடன் பெற்றதாயும் பெண்ணுடன்
பேசாமல் இருந்துவிட்டாள்
பின்னுமுள்ள கங்கைமார்கள் பிறப்புடன்
பேசாமல் தானிருந்தார். (பெ)

இனி மேலென்ன செய்வோமென்று இனிமேலென்ன செய்வோமென்று
ஏந்திழையாள் ஏக்கத்துடன்
ஈஸ்வர ருரைத்ததெல்லாம் நமக்கிப்போ
இன்று சரியாச்சுதென்றாள். (இ)

இனி திரும்பக்கூடாதென்று இனிதிரும்பக்கூடாதென்று
ஏந்திழையாள் எண்ணத்துடன்
எக்ஞத்துக்குள் பிரவேசித்தாள் தாக்ஷாயணி
இனிமேல் அவதரிப்போமென்று. (இ)

பிரவேசித்த தாக்ஷாயணி பிரவெசித்த தாக்ஷாயணி
பூலோகத்தில் போய்புகுந்து
பெருந்தவசு புரியலுற்றாள் பொற்கொடியும்
பரமசிவனைப் பற்றவென்று. (பி)
------------------------

கட்டம் 7.

அழைத்துவரச் சொன்னாரடி என்ற வர்ணமெட்டு.

இதுதெரிந்த ஈஸ்வரரும் எக்ஞக்தை அழிக்கவென்று
வீரத்தன்மை யுள்ளதொரு வீரபத்திரனை யழைத்தார். (இ)

விஸ்வேஸ்வரரும் வேகத்துடன் வீரபத்திர காளிகையை
விரைவில்வர வேணுமென்று விரும்பியவர் அழைக்கலுற்றார். (வி)

இருபேர்களு மாகவந்து ஈஸ்வரரைத் தான்பணிந்து
என்னசெய்ய வேணுமென்று ஈஸ்வரரைக் கேட்கலுற்றார் (இ)

தெய்வலோகம் சென்றுநீங்கள் தெக்ஷன்யாக சாலைதன்னில்
அங்கிருந்த தேவர்களை அறிந்துவிட்டு வாருமென்றார். (தெ)

அந்ததெக்ஷன் சிரசையரிந்து யாகம்நிறை வேறச்செய்து
இருபேர்களும் வாருமென்று ஈஸ்வரருரைக் கலுற்றார். (அ)

அப்படியே நல்லதென்று அந்ததெய்வ லோகம்சென்று
தெக்ஷனெங்கே யென்றுசொல்லி தேடிவந்தாரிரு பேர்களும். (அ)

அந்தசேதி தானறிந்து அந்தபிரும்மா விஷ்ணுவுடன்
வந்துதிப்போ மோசமென்று வானுலகம் ஓடிப்போனார் (அ)

மற்றுமுள்ள தேவர்களும் மகரிஷிகள் கூட்டத்துடன்
ஒளியயிட மில்லாமலே ஒதுக்கத்துடன் நின்றுவிட்டார் (ம)

வீரபத்திர காளிகையும் வேகத்துடன் ஓடிவந்து
அத்தனை பேர்களையும் அரிந்துவிட்டா ளரைக்ஷணத்தில் (வீ)

அந்தவீர பத்திரனும் ஆட்டுடலை ஓமம்செய்து
அந்ததெக்ஷன் சிரசையரிந்து யாகம்நிறை வேறச்செய்தான். (அ)

இருபேரும் ஏகிவந்து ஈஸ்வரரைத் தான்பணிந்து
நடந்ததொரு சேதியெல்லாம் நாதருடன் உரைக்கலுற்றார். (இ)
------------------------------

கட்டம் 8.

இந்தவிதம் ஸகுந்தளை என்ற வர்ணமெட்டு.

உரைத்த வீரபத்திரனை உத்தமர் பார்த்து
ஓடியந்த தெய்வலோகம் தன்னிலே சென்று
விழுந்தவர் உடல்சிரசை ஒன்றாகச் சேர்த்து
ஒட்டிவிட்டு வாருமென்று உருதியு ரைத்தார்.

அப்படியே நல்லதென்று அந்தவீரனும்
அவர்களுடல் சிரசையும் ஒன்றாகச் சேர்த்து
யாகசாலையருகில்வந்து பார்க்கும்போது
அந்த தெக்ஷன் சிரசு ஒன்றைக் காணவில்லை.

அந்தவேளை தன்னிலந்த வீரனுமப்போ
அங்கே ஒரு ஆட்டுத்தலை உருளக்கண்டான் அந்தத்
தலையையெடுத்து தெக்ஷ னுடலில்
ஒன்றாகச் சேர்த்துவிட்டு ஓடியேவந்தான்.

ஓடிவந்த வீரனையும் உத்தமர் பார்த்து
வாழ்த்தியே விடைகொடுத்து அனுப்பிவிட்டார்
வீரபத்திரக்காளிகையை அந்தப்படிக்கு
விஸ்வேஸ்வரும் விடைகொடுத்து அனுப்பிநின்றார்.
----------------------------

கட்டம் 9.

கும்மி ராகம்.

சிவத்துரோகம் செய்ததோர் தேவர்களும் அந்த
சிவனை வந்து வணங்கினார்கள்
செய்த அபராதம் தீர்க்கவேணுமென்று
தெண்டனிட்டுக் கேட்டார் தேவர்களும். (சி)

தெக்ஷண காசியில் செண்பகாருண்யத்தில்
தேவர்களே நீங்கள் தபசு செய்தால்
அவ்விடம் வந்து நான் முத்திதருவேனென்று
ஆனந்தமாகவே தானுரைத்தார். (சி)

உரைத்தந்த ஈசரும் தபசு செய்யவென்று
வடமுகமாகவே தானிருந்தார்
தவக்கோலம் நீங்கியே தாக்ஷாயணிவந்து
தான்செய்த அபராதம் தீருமென்றார். (சி)

பர்வதராஜர்க்கு பாலகியாகவே
வந்து விளையாடி வளரும் போது
உன்னைவந்து நானும் மணம்புரிவேனென்று
உரைத்தந்த ஈஸரும் தபசு செய்தார் (சி)

உரைத்தந்த வார்த்தையை உருதிதானென்றெண்ணி
தாமரைத் தடாகம் தன்னில்வந்து
தானொரு குளந்தையாய் ரூபமெடுத்து
தாமரை புஷ்பத்தில் அவதரித்தாள். (சி)

கட்டம் 10

சோமசேகரனருளும் பாலாவேலா என்ற வர்ணமெட்டு.

பார்வதியாள் லீலை தன்னைப் பாடிடுவோம்
பாரெங்கிலும் புகழ்பெறவே கூடிடுவோம்
உள்ளமகிழ்ந் தானந்தங்கொண் டாடிடு வோம்
பாரிலொப்பி லாக்கல்யாணமிதை கூறிடுவோம் தேவி. (பா)
பர்வதராஜரென்றும் வழக்கம்போலவே
ப்ராதஸ்நானம் செய்யவென்று நினைத்துக்கொள்ளவே
தாமரைத் தடாகந்தன்னில் வந்துசேரவே அங்கே
தாமரை புஷ்பத்திளொழி ஒலிக்கவே தேவி (சா)

குவாக்குவாவென்று அந்தக் குழந்தையழுகவே
கோடி சூர்யகாந்திபோலே மின்னல் மின்னவே
என்றுமில்லா இந்தசப்தம் இன்று கேட்கவே
இப்பொயிதையறிந்து பார்ப்போமென்று ராஜன்வருகவே. தேவி (சா)

அரைவடமுங் கிங்கிணியும் அசைந்து தவிழவே
அவள் அங்கமெல்லாம் தங்கமயமாயிருக்கவே
ஆதித்தன் ஒளிவோவென்று ராஜன் திகைக்கவே
அப்போ தன்புடனே குழந்தை தன்னை எடுத்துக்கொள்ளவே. தேவி (சா)

அந்தராஜன் குழந்தைதன்னை கண்டுமகிழவே
அவர் அரண்மனைக்குள்ளே வந்து ராஜன்சேரவே
பருவதரும் பத்தினியை வாவென்றழைக்கவே அப்போ
பாக்கியம் இந்தா என்று சொல்லி கையில் கொடுக்கவே தேவி (சா)

ஏது இந்த பாக்கியந்தான் என்று கேழ்க்கவே
ஈஸ்வரர் கொடுத்தாரென்று ராஜன் உரைக்கவே
அந்த உரையைக் கேட்டு பத்தினி அகமகிழவே அப்போ
ஆனந்தமாய் குழந்தை தன்னை வாங்கிக்கொள்ளவே தேவி(பா)
-------------------------

கட்டம் 11

அப்போதந்த நாரதரும் என்ற வர்ணமெட்டு.

வாங்கியந்தக் குழந்தை தன்னை வண்ணமணிகைகளாலே
முகத்தோடு சேர்த்தணைத்து முத்தமிட்டு கொஞ்சியிருந்தாளே.
முன் செய்ததோர் பாக்கியந்தான் என்றுரைத்தாளே.

குழந்தை தன்னைக் கண்டவுடன் கோதையற்கு பால் சொரிய
பத்தினியும் புத்திரிக்கு பாலமிர்தம் அளித்திருந்தாளே
பாவசமாய் உச்சிதன்னை மோந்து பார்த்தாளே.

பூவுலகம் புகழும்படி புத்திரோத்ஸவம் செய்துராஜன்
பார்வதிதேவி யென்று நாமகாணம் செய்வித்தாரப்போ
பருவதரும் மனமகிழ்ந்து பூரித்தாரப்போ,

மற்றுமுள்ளதேவஸ்திரீகள் மங்களங்கள் பாடிடவே
ஆலாத்திகாப்புமிட்டு ஆனந்தமாய் மகிழ்ந்திருந்தாரே
அந்தணர்க்கு வெகுதானங்கள் செய்திருந்தாரே.
-------------------

கட்டம் 12

பன்னக சயனர் பாதம் என்ற வர்ணமெட்டு.
புத்திரோத்ஸவம் செய்து ராஜன் பூரித்திருந்தார்
பாலவிளையாடல் தன்னைப் பார்த்து மகிழ்ந்தார் (பு)

தண்டைச்சிலம்பு முதல் சலசலென்கவே
தவிழ்ந்துவரும் பாவனையை தானவர் கண்டார், (பு)

பச்சைமணிதாவடமும் பதைக்கம் அசைய
பாய்ந்து பாய்ந்து நீந்திவரும் பாவனையைக்கண்டார் (பு)

கொத்து சரப்பளியும் குண்டலம்மின்ன கோடி
சூரியகாந்திபோலே குழந்தையைக் கண்டாள் (பு)

முத்துச்சுட்டியும் நவரத்தினக்கொண்டையும்
முகந்தன்னிலே திலகப்பொட்டு மின்னலைக்கண்டாள் (பு)

கண்ணுக்குமையெழுதி கண்டுகளித்தாள்
திஷ்டி யொன்றும் வாராமலே திருநீருமிட்டாள் (பு)

கொஞ்சிக் கொஞ்சி நடந்து குழந்தை தாயிடம்வாராள்
இருகரத்தால் குழந்தை தன்னை எடுத்துமேகொண்டாள். (பு)
------------------------

கட்டம் 13

வாரும் வளையல் செட்டியாரே என்ற வர்ணமெட்டு.

பர்வதரும் பார்வதிக்கு பிறந்தநாளும் செய்தாரப்போ
பின்னும் அஞ்சு சென்றவுடன்
பொற்கொடியும் பந்தடித்தாள்
பொற்கொடியும் பந்தடித்தாள்

தேன்மொழியும் செண்டெடுத்து தெருவில்
விளையாடிவந்து அம்மானை சோழியுடன்
ஆடிவந்தாள் பார்வதியும்
ஆடிவந்தாள் பார்வதியும்

பத்து வயதான உடன் பாங்கிமார்கள் உடனே சென்று
பலவித கலைஞானமும்
படித்துவந்தாள் பார்வதியும்
படித்து வந்தாள் பார்வதியும்

சகலவித சங்கீதம் தம்புரு சுருதிகளுடன்
வீணை புல்லாங்குழலும்
விந்தையாகப் படித்து வந்தாள்
விந்தையாகப் படித்து வந்தாள்
-----------------------

கட்டம் 14

நாராயணாவென்ற நாமத்தைச் சொன்னால் என்ற வர்ணமெட்டு.

இந்தவிதமாக இருக்கிற வேளையில்
நாரதமகாமுனி நடந்தாரங்கே
பருவதராஜர் அரண்மனை தன்னிலே
பார்ப்போமென்று முனிவர் வந்தார். இ

வந்ததோர் முனிவரை வாருமென் றழைத்து
ஆஸனம் தன்னில் உட்காரச்செய்தார்
அர்க்கிய பாத்திரமளித்து ஆஜமன்னியங்கொடுத்து
ஆதரவாகவே பேசிநின்றார். இ

அந்த சமயத்தில் அந்தபதிவிருதை
பார்வதிதேவிக்குப் பிரியமாக
கோதித்தலைவகுத்து கோடாலி முடிச்சிட்டு
கொடமல்லிப்பூவை மடித்துவைத்தாள் இ

கொழையக் கொழையக் கொண்டையினழகும்
புஜங்கள் இரண்டிலும் புரண்டசையா
பளபளெனப் பவன்மாலையின் அழகும்
பட்டுப்புடவை ஒளிதவழ. இ

பருவதராஜரும் பார்வதிதேவியை
பெரிய மகாமுனிக்குப் பணியுமென்றார்
பாதசரம்பீலி பாதத்தில் இலங்கவே
பார்வதி தேவியும் பணிந்து நின்றாள். இ

வணங்கினவுடனே வாழ்த்தியே நாரதர்
ஈசரையடைவாய் என்றுரைத்தார்
பார்வதிதேவிக்கு பரமேசுவரர் பர்த்தாவென்று
பர்வதரிடம்முனி சொல்லிப்போனார் இ

பர்வதராஜரும் நாரதர் உரைத்ததை
பகவான் செயலென்று நினைத்துக்கொண்டார்
பார்வதி செய்ததோர் பாக்கியந்தானென்று சொல்லி
பரவசம் ஆனந்தமாயிருந்தார். இ
-----------------------------

கட்டம் 15

பூமி புகழும் ஸ்ரீபுண்ணிய முனியாம் என்ற வர்ணமெட்டு.

பார்வதி தேவிக்குப் பனிரெண்டும் சென்றபின்
பக்குவகாலங்க ளாச்சுதென்று
பத்திரமாகவே கார்க்க வேணுமென்று
பத்தினியுடன் ராஜன் சொல்லிடவே

பூங்காவனந்தனில் புஷ்பமலர் சோலையில்
பாங்காக பங்களாவில் அமரச்செய்தார்
பாங்கிமார்களையும் பாதுகார்க்கச் சொல்லி
பருவதராஜரும் திட்டம் செய்தார்.

பருவதர் திட்டப்படி பார்வதி தேவியும்
பாங்கியுடனே சென்று ஊஞ்சல் ஆட
குயில் போன்ற குரலுடன் சங்கீத சாரத்தை
தத்துவாமிருதமாய் தான் பொழிந்தாள்.

இந்தக்குரல் தன்னைக் கேட்டந்த நாரதர்
இனியகுரல் இங்கே கேட்குதென்று மயிலோ
குயிலோவென்று மதித்தந்த நாரதர்
பூங்காவனந்தன்னைத் தேடிவந்தார்.
---------------------

கட்டம் 16

ஏழையை பீமனுக்குத் தரலாமோ என்ற வர்ணமெட்டு.

திருலோக ஸஞ்சாரி முனிவரானா அந்த முனிவரானா
தீர்க்கமாய்ப் பார்வதியிடத்தில் வந்து
தம்புரு சுருதியை மீட்டிக்கொண்டார் - அந்த
தையலர் வாசலில் வந்து நின்றார்
தானவர் வீணையைப் பாடிக்கொண்டார். (தி)

பாடின சப்தத்தைக் கேட்டவுடன் அப்போ கேட்டவுடன்
பார்வதி தேவியும் எதிரில்வந்து
எந்தஊரு எந்ததேச மென்றாள் அவள்
எங்கிருந்து இங்கே வந்தீரென்றாள்
எனக்கரிய அதைக்கூறு மென்றாள். (பா)

பரமசிவனுட பக்தனம்மா சிவபக்தனம்மா
பாரெங்கிலும் சஞ்சரிப்பவர் தான்
நாட்டுவழக்கர் தன்னை யறிந்திடுவேன்- சிவ
நாதரிடம் போய் உரைத்திடுவேன்
நலம்பெறவே எங்கும் செய்திடுவேன். (ப)

பெரியமகாமுனி உரைத்திடவே அப்போ உரைத்திடவே
பேரின்பம் கொண்டந்த பார்வதியும்
கைலாசநாதரைக் காண்பீரோ- நீரும்
கடுகியே அவரிடம் செல்லுவீரோ
கன்னிகை மொழி தன்னைக் கூறுவீரோ. (பெ)

கன்னிகை என்றால் பயந்திடுவார் அவர் பயந்திடுவார்
காதினில் கேட்டால் அஞ்சிடுவார்
காவிவஸ்திரந்தன்னை தரித்திடுவார் - அவர்
கையில் கமண்டலம் பிடித்திடுவார்
கடுந்தபசுபுரிய சென்றிடுவார். (க)

எந்த விதத்திலும் ஈஸ்வரரை இப்போ ஈஸ்வரரை
என்னை மணம்புரிய உரையு மென்றாள்
இஷ்டமாய் வசனத்தைக் கூறுமென்றாள்
அவள் இன்பத்தை மேலிடப்பாரு மென்றாள்
இங்கேவரும்படிச் செய்யுமென்றாள். (எ)
------------------------

கட்டம் 17

எந்த ஊரோ யாதுபேரோ என்ற வர்ணமெட்டு.

எத்தைக்கண்டு இச்சைக்கொண்டாய் ஏந்திழையாளே
எந்தனுடன் சொல்லுமிப்போ ஏந்திழையாளே. எத்தைக்

அழகில் அவர் அதிகமென்று ஆசைக்கொண்டாயோ
ஜடைவிரித்து ஸர்ப்பாபரணம் தரித்திருப்பாரே. எத்தைக்

உருவஸ்ரூபம் தன்னைக்கண்டு உள்ளமகிழ்ந்தாயோ
ருத்திராக்ஷமாலை பூண்டு வெண்ணீர் பூசுவார். எத்தைக்

மனதின்படி மங்கை நீயும் மணம்புரிந்தாலும்
ஜெடையில் ஒளித்து மரைத்து ஸ்திரீயை வைத்திருப்பாரே எத்தைக்

வஸதியாக வாசஞ்செய்து வருவோமென்றாலும்
ஸதாசர்வகாலம் வாஸம் ருத்திர பூமியில். எத்தைக்

பூமிபொருள் பதார்த்தம் உண்டு என்றிருந்தாலும்
மண்டை ஓட்டை கையில் பிடித்து வருவாரடி வீதியில், எத்தைக்

காய்கனிகள் பழவர்க்கங்கள் புசிப்போ மென்றாலும்
அவர் புசிப்பது அத்வைதப்பழம் யார் புசிப்பார்கள் எத்தைக்

பெந்து வர்க்கம் உண்டு என்று பயமில்லையென்றால்
ஆடுமாடுமேய்க்கும் இடையன் அவர் தோழனம்மா. எத்தைக்
-------------------------

கட்டம் 18

நாதன்வந்து நாவில் உதித்த என்ற வர்ணமெட்டு.

ஆரடியிந்த முனிநாதரை அப்பால்வெளியில் தள்ளடி- இப்போ
அப்பால் வெளியில் தள்ளடி
இடும்பு ரொம்ப பேசிக்கொண்டு
இவிடம் தன்னில் என்வந்தார் முனி
இவிடம்தன்னில் என்வந்தார். (ஆ).

பரமசிவனைப்பழித்து இங்கே பரதூஷணைசெய்குறார்
பாங்கிமாரே பிடித்தபிடியில்
பாதைக்கப்பால் தள்ளடி- இப்போ
பாதைக்கப்பால் தள்ளடி. (ஆ).

வேண்டாம் வேண்டாமென்றிருந்தேன் வீம்புரொம்பபேசுறார்
வேகமாக விரட்டிவிட்டு
வெளியில் தள்ளிவாருங்கள் - இப்போ
வெளியில் தள்ளி வாருங்கள். (ஆ).

பார்வதி யுரைத்திடவே பாங்கிமார்களன்னேரம்
முனிநாதரை முடக்கித் தள்ளி
முன்போல் வாஸம் செய்தார்கள்-அவாள்
முன் போல் வாஸம் செய்தார்கள். (ஆ).

நாரதரும் நடந்தசேதியை நாதரிடம் உரைத்திட்டார்
நாதரிடம் உரைத்திட்டார்
நல்லசமயம் வாய்த்ததென்று
நாதர் வெளியில் புறப்பட்டார்-ஸிவ
நாதர் வெளியில் புறப்பட்டார், (ஆ).
-----------------------

கட்டம் 19

ஆனந்தக் களிப்பு மெட்டு.

சிவசிவசிவசிவன் ஆண்டி - சதா
சிவசிவசிவசிவன் ஆண்டி (சிவ)

சிங்காவும் கிஞ்சராவும் ஏந்தி
கரத்தினால் எடுத்துக்கைகொட்டியே வந்தார், (சிவ)

பிக்ஷாண்டி வேஷம் தரித்து- பார்வதிக்ரகம்
தன்னில் பாடியே வந்தார்
அரஹர மஹாதேவாவென்று-ஆனந்தக்
களிப்புடன் ஆடியேவந்தார். (சிவ)

சொரக்குடுக்கை கையிலேந்தி
சொல்லுத்தடுமாறி சோர்ந்துமே வந்தார்
தள்ளாடித் தள்ளாடி நடந்து
தாயேபிக்ஷையென்று தயவுடன் கேட்டார். (சிவ)

ஆறோபரதேசியென்று ஆயாசப்
பட்டிங்கே வந்தாரே என்று
காய்கனி பழவர்க்கத்துடனே
பார்வதி தேவியும் பிக்ஷையளித்தாள். (சிவ)

பிக்ஷையை வாங்கிக்கொண்டாண்டி
பேரின்பமனதில் பெருமை கொண்டாண்டி
வெகுநாளாய் வேண்டி வந்தேண்டி
வேடிக்கையாகவே விளையாடத்தாண்டி. (சிவ)

கோடிநாள் தவஸிருந்தேண்டி
கோரிவந்துன்னைக்கை கொள்ளவேவேண்டி
ஆனந்தமாய் என்னைப்பாரு உன்
அமிருதவசனத்தை அன்புடன்கூ று, (சிவ)
------------------------

கட்டம் 20

வாராரே செந்தூர் வேலன் எந்தன் ஸகியே என்ற வர்ணமெட்டு,

ஆரோவொரு ஆண்டிவந்து எந்தன்ஸகியே
ஆடாதோடி பேசுகிறான்.
பிச்சாண்டி போலவே வந்து எந்தன்சகியே
பேச்சுரொம்ப பேசுகிறான்.
பரதேசி என்று சொல்லி எந்தன்ஸகியே
பிக்ஷையளிக்கப்போனேன்.
வம்பான வார்த்தை சொல்லி எந்தன்ஸகியே
இடும்புகள் எடுத்துரைத்தார்.
பரதேசியென்றிருந்தால் எந்தன்ஸகியே
பரிகாஸம் பேசுவாரோ.
பித்துப் பிடித்தவண்டி எந்தன்ஸகியே
பிடித்தங்கே தள்ளிவாடி.
தள்ளிக் கதவடைத்து எந்தன்ஸகியே
தாப்பாள் இட்டு வாங்கள் என்றாள்.
அப்படிக்கி இல்லாவிட்டால் எந்தன்ஸகியே
ஐயரை யழையு மென்றாள்.
அழையுமென்று சொன்னவுடன் அந்தஸகிகள்
அந்தப்புரம் போய்நடந்தாள்.
இதுவே ஸமயமென்று அந்தசிவனும்
எடுத்துக்கொண்டார் ஸ்வயரூபத்தை,
-----------------------

கட்டம் 21

ஸ்ரீ ராமச்சந்திரனே என்ற வர்ணமெட்டு.

பூலோக சுந்திரண்டி பூரணச் சந்திரண்டி
பொற்கொடியே என் னுருவைப் பார் பார் பார். பூ

மானைப்பிடித்தவண்டி மழுவைதரித்தவண்டி
மகாதேவன் நான் தாண்டி பார் பார் பார். பூ

முக்கண்ணுடையவண்டி மூன்றாம்பிரை தரித்தவண்டி
முடியில்கங்கை வைத்தவண்டி பார் பார் பார். பூ

ஆதிபரஞ்சோதியடி அச்சுதர்க்குத் தோழனடி
அமர்புரிய வந்தேனடி பார் பார் பார். பூ
--------------------

கட்டம் 22

பெற்றெடுத்த தந்தை யென்று என்ற வர்ண மெட்டு.

பார்த்த உடன் பார்வதியும் சற்றே
ஒன்றும் தோன்றாமலே நின்றாள்
தலைகுனிந்து கூச்சத்துடன்
தனையாருட பாதந்தன்னில் பணிந்தாள்.

பணிந்ததொரு பார்வதியே
பரிகாசமாய் சிலமொழிகள்
பேசிபதற வேண்டாம் பாவையரே
பிரியமாக மணம்புரிவேனென்றார்

என்றவுடன் பார்வதியும்
இருகரத்தைக் கெட்டியாகப்பிடித்து
அறியாமல் செய்த பிழையை
ஆதரிக்கவேணுமென்று உரைத்தாள்.

போடி போடி பொற்கொடியே
போய்வருவேனென்று சொல்லிமறைந்தார்
பருவதரும் பாங்கிகளும்
பார்வதியிருக்குமிடம் வந்தார்.

ஏதடியோ குழந்தாய் நீயும்
இந்தவிதம் வாடியிருப்ப தென்ன
எந்தனுடன் உரைத்தாயானால்
இஷ்டப்படி செய்திடுவேன் என்றார்.

கல்யாணம் வேணுமென்று
கருத்தினில் நான் நினைத்துக்கொண்டேன் ஐயா
பரமேஸ்வரர்க்கு பாரியாக
பாணிக்ரஹணம் செய்யவேணுமென்றாள்,

உரைத்தவுடன் பருவதரும்
உள்ள மகிழ்ந்து பத்தினியுடனுரைத்தார்
அரண்மனை வாஸலெங்கும்
அலங்காரம் செய்யவென்று நினைத்தார்.
----------------------

கட்டம் 23

காந்தி மஹாத்மா என்ற வர்ண மெட்டு.

அலங்கரித்தாரே இமையபருவதமெங்கும் ராஜன்
அலங்கரித்தாரே இமையபருவதமெங்கும்.
வாழைக்கமுகுகளும் வாடாத பூச்சாரமும்
மாவெலைத் தோரணமும் மாங்கனியும் தேங்கனியும் (அ)

பவழத்தாலே கால் நிறுத்தி பட்டாலே பந்தலிட்டு
மாணிக்க மரகதத்தால் மணவிடையை ஜோடித்தார்கள் (அ)

பச்சையாலே ஊஞ்சல்காலும் பளபளென சங்கிலியும்
சொர்ணத்தாலே பலகைகளும் ஜோடித்தார்கள் ஊஞ்சல் தன்னை. (அ)

மாணிக்க தீபங்களும் மணிவிளக்கும் அணிவிளக்கும்
கொடிவிளக்கும் குளோப்புகளும் கொட்டகை சிங்காசம் செய்த. ( அ)
---------------------

கட்டம் 24

ராஜாத்தி ராஜமகாராஜ தர்மரும் என்ற வர்ணமெட்டு.

ராஜாத்தி ராஜரங்கே வந்து சேர்ந்தாரே
இமையகிரி தாங்காமலே எங்குங்கூட்டமாய்.

கொச்சி கொங்கண தேசராஜமன்னரும்
குந்தள தேசத்து ராஜர் கூட்டம் கூட்டமாய்
ஆடம்பரத்துடனே அணி அணியாய் நிற்கவே
அதிக சந்தோஷமாகவே ஆஸனத்தில் வீற்றிருந்தார். (ரா)

மற்றுமுள்ள தேவர்களும் மகரிஷிகளும்--மஹா
விஷ்ணு பிரம்மாவுடன் வந்து சேர்ந்தாரே
பதினாறு வயதுள்ள பாலபுருஷன் போலவே
கல்யாணக்கோலத்துடன் கைலாசநாதர் வந்தார். (ரா)

பூமிபாரம் பொறுக்காமலே பூமிதாழ்ந்திட
பரமசிவனும் பார்த்துமதை திகைத்து நின்றிட
இமையகிரி தாழ்ந்திட கைலயங்கிரி உயர்ந்திட
எங்கும் சமமாகவே ஏகுமென்றார் அகஸ்தியர் தன்னை. (ரா)

அந்தஈசர் உரைத்திடவே அகஸ்தியருமப்போ
கல்யாணக்கோலந்தன்னை காண்பதெப்போநான்
என்றகஸ்தியர் உரைத்திட ஈசரதைக்கேட்டிட
கைலாஸகிரியில் வந்து காக்ஷியையளிப்பேனென்றார். (ரா)
----------------------------

கட்டம் 26

ஆராரிருந்தென்ன என்ற வர்ணமெட்டு.

கொட்டகை யடங்காமலே
கோடிஜனங்கள் வந்திருக்க
பார்வதி கல்யாணமென்று
பாங்கிகள் பிரியத்துடன் வந்து நின்றார். (கொ)

தையலர்க்கு அந்த வேளை
தையிலஸ்நானம் செய்துவைத்து
விதவிதமாய் பட்டுடுத்தி தேவியும்
வேணபணி பூண்டு கொண்டாள் (கொ)

ஜீரகமும் சர்க்கரையும்
இருகரத்தி லேந்திக்கொண்டு
பரமசிவனை தியானம் செய்து
பார்வதி பக்தியுடன் தவசுசெய்தாள் (கொ)

தவசு செய்த பார்வதியை
தாயம்மாள் அழைத்துவந்து
மணவிடையிலுட்காரசெய்தார்
தேவியை வைபவங்கள் செய்யவென்று. (கொ )

மஹாவிஷ்ணு லெக்ஷிமியுடன்
மஹேசுவரர் கைதன்னிலே
கன்னிகையை தானம் செய்கார்
விஷ்ணுவும் கங்கைரைத்தாரை வார்த்தார் (கொ)

மகேசுவரரும் மகேசுவரிக்கு
கணபதியை பூஜை செய்து
திருமங்கலிய தாரணம் செய்தார்
தேவிக்கு மனமகிழ்ந்து மணம்புரிந்தார். (கொ)
------------------

மங்களம்.

ஆனந்தம் ஆனந்தம் என்ற வர்ணமெட்டு

அருந்ததிமாரெல்லாங் கூடினார் அங்கே
ஆனந்தமானந்தம் பாடினார்.
மகேஸ்வரிக்கும் மகேஸ்வரர்க்கும் மங்களங்கள் ஆச்சுதென்று (அ)

பொரியாலே ஓமங்கள் செய்திட்டார் பின்னும்
பார்வதிபாதம் அம்மி ஏற்றி விட்டார்
மூன்று தரம் சுற்றி வந்தார் முனிவர்களெல்லாம் மகிழ (அ)

பரவேச ஓமங்கள் செய்திட்டார் பின்னும்
அருந்ததியைக்கண்ணாலே கண்டிட்டார்
அஞ்சு நாளும் ஊஞ்சலாடி ஆனந்தமாய் மகிழ்ந்திருந்தார். (அ)

தெக்ஷிணாகாசியில் வந்திட்டாள்-அவள்
தேவாள்க்கும் முக்தி யளித்திட்டாள்
அகஸ்தியர்க்கும் ஆனந்தமாய் கல்யாணக்காக்ஷியளித்தார். (அ)

கைலாஸகிரிதன்னில் வந்திட்டாள் அவாள்
களிப்புடன் தாம்பூலம் அறிந்திட்டாள்
அஷ்டலெக்ஷிமிவாஸம் செய்ய ஆனந்தமாய் வாழ்ந்திருந்தார். (அ)

பார்வதி கல்யாணம் முற்றிற்று.
----------------------------

சிவமயம்
இரண்டாம் பாகம்.

விக்கினேஸ்வரர் ஸ்தோத்திரம்.

உன்னாலேயல்லவோ உலகத்தை ஆள்வது சகுனி மாமா என்றவர்ணமெட்டு.
வேடித்தினே நின்னு வேகமே ராவையா-விக்கினேசா
நீவுவிடலி ஒச்சினா விபமுலு தீர்ச்சாவே. (வே)

தினமுதினமுமின்னு தெண்டமுபெட்டி தி- விக்கினேசா
நீ தெரிசனமுலுயிச்சி தயதோனுசெச்சிச்சுவிக்கினேசா. (வே)

பலபலவி தமுக பக்தித்தோ ப்ரார்த்திந்து- விக்கினேசா
போதாம்புஜயிச்சி பலமுலுசாயவே விக்கினேசா. (வே)

கட்டம் 1

ஆறுமுகவடி வேலவனே கலியாணமும் செய்யவில்லை என்ற மெட்டு.

ஓவைக்காணாமலே ஊரெங்கும் சுற்றுதே
ஓஹோ நான் என்ன செய்வேன்--ஒரே
உள்ளிருக்கும் பொருளையறியாமல்
ஓடுதே என்ன செய்வேன் ஓ

நாவைக்காணாமலே நாடெங்கும் சுற்றுதே
நாதாநான் என்ன செய்வேன்--நடு
நாதந்தோன்றாமலே நாலெட்டுவந்தென்னை
நாடுதே என்ன செய்வேன் ஓ

மாவைக்காணாமலே மலையெங்குஞ் சுற்றுதே
மறையோனே என்ன செய்வேன்- இந்த
மண்ணென்று பொன்னென்று மாய்கையில்
அகப்பட்டு மயங்குதே என்ன செய்வேன். ஓ

சிவத்தைக்காணாமலே சிதறியலையுதே
சித்தனே என்ன செய்வேன்- சிரஞ்சீவி
ஒன்றென்று சிந்தித்துப் பாராமல்
சித்துதே என்ன செய்வேன். ஓ

வாவைக்காணாமலே வலைகொண்டுவீசுதே
வாஸனே என்ன செய்வேன்-வந்த
வழிகண்டு ஒடுங்கத் தெரியாமல்
வாடுதே என்ன செய்வேன். ஓ

யாவைக்காணாமலே யகங்கொண்டுலாவுதே
ஐயனே என்ன செய்வேன்
ஐந்தெழுத்தைக்கண்டு அடங்கத்தெரியாமல்
அலையுதே என்ன செய்வேன். ஓ
------------------------

கட்டம் 2

நலங்கிட வாடி எந்தன் பெண்னே என்ற வர்ணமெட்டு.

இன்னம் பராமுகம் ஏதோ சிவ
ஏழையின் மேலின்னும் வாதோ. (இ)

அஞ்ஞான இருள் விண்டு ஆனந்தம் உட்கொண்டு
மெஞ்ஞான பொருள் பூண்டு மௌனநிலை தன்னைக்காண. (இ)

சஞ்சித கர்மத்தை நீக்கி சாஸ்வத நிலையிலாக்கி
தொந்த பெந்தங்கள் போக்கி ஜோதிர்மயமாகதேக (இ)
--------------------------

கட்டம் 3

வண்ணத்தாமரை என்ற வர்ணமெட்டு.

பாசி படர்ந்திருக்கும் நீரைத் தள்ளி
படியேற வழியை மெள்ளக்கூறாய்- இந்த
தாழ்வையுள்ள அகழந்தன்னில் தவிக்கிற
ஜீவனிதைப் பாராய் அருள்சீராய். பாசி

சேற்றி லழுந்தும்பூச்சி மேலேயது
தெளிந்து எழுந்து வரும் போலே - ஜகத்
தாசையென்ற அழுக்குத் தன்னையலசி
நீரில் எழுப்பயிப்போ பாராய் பதம் சேராய் பாசி

தூசிநிறைந்திருக்கும் பளிங்கம் அதை
துடைத்தா லொளியைக்காட்டும் போலே-இந்த
ஸ்தூலஜடந் தன்னை விட்டு சுத்தவெளி
தன்னைக்கட்ட பாராய் முக்தி தாராய். பாசி
------------------------------

கட்டம் 4

ஜெர்மென்னுக் கண்ணாடி என்ற வர்ண மெட்டு,

எங்கெங்குந் தேடிபார்த்தேனே உன்னைத்தானே நம்பினேனே
எந்தன் இடரைத் தீர்க்குங் குருபரனே
ஆறுமத வாதியே அப்பாலே தள்ளியே
அவரோக்ஷ ஞானத்தைத் தருவாய் அன்றுவருவாய் அருள்புரிவாய்
அந்த அகண்டவீதிவழி கூறுவாய்.

ஆசைப்பிசாசையும் ஓட்டி அகம் காட்டி அன்பைஊட்டி அந்த
அக்ஞானத்தாழ்வாசல் பூட்டி
அஞ்சுபஞ்ச பூதத்தை அடித்து விரட்டியே
ஐயன்குருபாதம் சேர்ப்பாய் அப்போபார்ப்பாய் அறிவையளிப்பாய்
அந்த அகண்ட பிரும்ம ரசம் கொடுப்பாய்.
--------------------

கட்டம் 5

எங்களை அடிமை கொண்டு என்ற வர்ணமெட்டு.

தேடித்தேடி ஓடிஓடி பாடிப்பாடி பார்த்துவந்தேன்
பரம குருபாதம் கிட்டவில்லையே-பர
பிரும்மசுயரூபம் எட்டவெகு தொல்லையே தேடி

எஷணைகள் எட்டைத்தள்ளி இந்திரியத்தை ஒட்டித் தள்ளி
எட்டிப்பார்ப்போம் என்றால் வெகு கஷ்டமே
அங்கு மட்டிலாமனக்குரங்கு கிட்டுமே. தேடி

எட்டியெட்டிப் பார்த்து விட்டால் தொட்டுதொட்டு தானிழுத்து
மட்டிலா வலைக்குள்ளே தள்ளுதே - அதை
விட்டுவர ரொம்ப வெகு தொல்லையே. தேடி

காட்டுகள்ளர் கூடிக்கொண்டு கண்டேனென்று சொல்லிக்கொண்டு
ஆசையென்ற அன்புரசம் ஊட்டுகிறார் அப்போ
பாசமென்ற கயிற்றைக்கொண்டு காட்டுகிறார். தேடி
------------------------

கட்டம் 6

பாராகுஜே என்ற வர்ணமெட்டு.
பாராயோ என்குருவே எந்தனை பா

தீராதோ இது என் துயாம் ஜன்மவலை
தன்னை விட ஹரனே பரனே.

ஆசைதன்னை விட்டு ஆனந்தந்தொட்டு
ஹரஹர சிவாய வென்று துதிசெய்து
ஆத்மா நிலை தன்னைக்காண ஆத்மாநிலைகாணவென்று
ஆவல் கொண்டேன் ஹரனே பரனே. பா.

இந்த ஜீவன் மேலே இரக்கங்களாலே
ஏமாற்று செய்யாமலே வருவாயே
பக்ஷம்வைத்து பாவை மீதில் பக்ஷம்வைத்து பாது கார்ப்பாய்
பராபரனே ஹரனே பரனே. பா
-------------------

கட்டம் 7

ராகம் நொண்டிச்சிந்து.

ஜீவப்பெண்ணுரையைக் கேட்டு- சிவ
னாமருத்திரரும் சுய ரூபத்தைக்காட்ட

வேஷத்தை மாறலுற்றார்- விதிப்படி
வேதாந்த முறை தன்னைக் கூறலுற்றார்

முக்குணத்தைத் தள்ள வேண்டும்-- முடிவில்
மூர்க்க நிலை தன்னைத் தேடவேண்டும்

அகந்தன்னை அடிக்கவேண்டும்--இகத்தில்
ஆத்ம நிலை தன்னைக்காணவேண்டும்

பற்றற்று இருக்க வேண்டும்--பரத்தில்
பரப்பிரும்ம ரூபத்தைப் பார்க்க வேண்டும்

இது தான் போகவழி-ஏகமென்ற
பிரும்மத்தைக்காண இதுவேவழி

போகலாம் ஜீவப்பெண்ணே.
-----------------------

கட்டம் 8

கொண்டு வா கொண்டு வாடி எந்தன் கோபாலனை என்ற வர்ணமெட்டு,

வருவாய் வருவாயே எதன் ஜீவப்பெண்ணே வ
உச்சிமலை ஏறவேண்டி ஒய்யாரமாத்தாண்டி வரு
மூலா தாரம் இது தாண்டி எந்தன் ஜீவப்பெண்ணே
மூன்றிதழ் புஷ்பமடி மூர்த்தி விநாயகரும் முத்தி தருவாரடி வரு

நால்சதுரக் கமலமடி எந்தன் ஜீவப்பெண்ணே
நாலிதழ் புஷ்பமடி
நகாரவென்ற அக்ஷரத்தில் நான்முகனார் வாசமடி வரு

தேஜோன்மணி பூர்வமடி எந்தன் ஜீவப்பெண்ணே
தெசாவதாரசடி
மகாரவென்ற அக்ஷரத்தில் மகாவிஷ்ணு வாசமடி வரு

சித்தாந்த மண்டபமடி எந்தன் ஜீவப்பெண்ணே
சித்தியார் வாசமடி
சிவனாமம் சொல்பவர்க்கு சித்திக்குமடந்தாண்டி. வரு

வேதாந்த மண்டபமடி எந்தன் ஜீவப்பெண்ணே
வேதியர்கள் சாலையடி
வேண்டிவந்த பேர்களுக்கு வேதாந்தம் உரைப்பாரடி வரு

அறுகோணச்சக்கரமடீ எந்தன் ஜீவப்பெண்ணே
அஷ்டதள அம்புஜத்தில்
சதாசிவ சக்தியுடன் சித்தமாக வாசம் செய்வார். வரு

விசுத்தி என்ற மண்டபமடி எந்தன் ஜீவப்பெண்ணே
வேதம் உற்பத்தியடி
பதினாறு தளத்தினில் பரப்பிரும்ம வாசமடி. வரு

ஆதியில்லை அந்தமில்லை எந்தன் ஜீவப்பெண்ணே
அன்புடையாள் வாசமில்லை
ஜோதியுண்டு ஸ்வரூபமுண்டு சிரத்தையுடன் சேர்ந்திடுவோம். வரு
-----------------

கட்டம் 9

கிளிக்கண்ணி மெட்டு.

இருபேரு மாகக்கூடி இருபேரு மாகக்கூடி
ஏகாந்தமாயிருந்து பிரும்மநிலை தன்னைக்கண்டாள்
ஜீவப்பெண்ணும் பேரின்ப ரசத்தையுண்டாள் (இரு)

விஷயதுகளைவிட்டு விஷயதிகளை விட்டு
வேதாந்தங்கற்றுணர்ந்து ஆத்மநிலை தன்னைக்கண்டாள்
ஜீவப்பெண்ணும் அகண்ட ரசம் தன்னையுண்டாள் (இரு)

இரண்டாம் பாகம் முற்றிற்று.
------------------

This file was last updated on 27 Nov. 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)